எனக்கே எனக்காய்
காதல் கதைகள்
Backஎனக்கே எனக்காய்
என்.சி.மோகன்தாஸ்
(1)
அது சின்னஞ்சிறு கிராமம்.
பேருந்து நிறுத்தின் மரத்தடி சிமெண்டு பெஞ்சில் ஒரு கும்பல் அமர்ந்து வாட்ச்சையும், சாலையையும் வேடிக்கைப் பார்த்தது.
வெள்ளை வேட்டி அழுக்காகிவிடும் என்று சாமிநாதன் நின்றிருந்தார்.
ஓலை வேய்ந்த டீக்கடையில் அரசியல் விவாதம் நடந்தது. காலைச் செய்தித்தாள் பக்கம் பக்கமாய் படிக்கப்பட்டு விலாவாரியாகப் பேசப்பட்டது.
குடிநீர்க் குழாயில் காலிக் குடங்கள் நிரம்பின. கலப்பை, எருமை மாட்டுச் சவாரி, வேப்பங்குச்சியால் பல் துலக்குவது என்று கிராமம் இன்னுமும் பழையதை மறப்பேனா என்றிருந்தது.
``தம்பி.... எத்தனை மணிக்கு வருது?’’
பெரியவர் ஒருவர் கேட்டுவிட்டுத் தும்மினார். ``அம்மாடி! இப்போதுதான் அடைப்பு சரியாச்சு! கோபி தம்பியைத்தான் கேட்டேன். விமானம் எத்தனை மணிக்கு?’’
``திருச்சிக்கு பத்து மணி, அப்புறம் வெளியே வந்து வண்டி புடிச்சு வரணுமே!’’
``காரா...?’’
```ஆமா. துபாயில் வேலை பார்த்துட்டு பஸ்லேயா வர முடியும்?’’
``ஆமாமா...’’
சாமிநாதனுக்கு இளசுகளின் ரகளையைத் தாங்க முடியவில்லை. காரில் வரும் நேராக வீட்டில் வந்து இறங்கப் போகிறான். அப்புறம் எதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டும்? என நினைத்தார். வேட்டியை மடித்துக் காட்டிக் கொண்டு கிளம்பினார்.
வழியில் விசாரிப்பதற்கென்றே அவதாரம் எடுத்த மாதிரி , ```கோபி இன்னிக்குத்தானே வருது...? வந்திருச்சா? எப்போ?’’ என்று ரொம்ப கரிசனம் காட்டினவர்களுக்கு பதிலளித்து தெருவை அடைந்தபோது வீட்டின் முன் கார் நிற்பது தெரிந்தது.
பெட்டிகள் வேகமாக இறக்கப்பட்டன,``வந்துட்டானா... எனக்குத் தெரியாமால் எப்படி?’’ என்று யோசித்தபடி வேகமாய் நடந்தார்.
அதற்குள் வாசலுக்கு ஓடிவந்த கவுல்யா, ``ஏங்க அங்கே என்ன வாய் பார்த்துட்டு.... பெட்டியைப் பிடியுங்க!’’ என்று உத்துரவிட்டாள்.
``பார்த்து ...பத்திரம்!’’ சாமிநாதன், பெட்டியை இறக்கி வீட்டிற்குல் வைத்து மூச்சு வாங்கினார்.
அவருக்கு எப்போதுமே அப்படிப்பட்ட ராசிதான் மாய்ந்து மாய்ந்து வேலைகள் பார்ப்பார். ஆனால் கடைசியில் கெட்ட பெயர்தான் மிஞ்சும். இப்போதும் அந்த விதி தப்பவில்லை.
கோபியிடம் சொன்னார்.``நான் உனக்காகக் காத்திருந்தேன். நீ எந்த வழியா வந்தே?’’ என்றார் ஆர்வத்துடன்.
``ஆமா.. இப்போ அதுதான் முக்கியம்! அவன் களைப்பா இருப்பான். கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்!’’ என்று கவுசல்யா அவளை அழைத்துப் போய் அமர வைத்து, ``எப்படி இருக்கே....? சாப்பாடு தண்ணியெல்லாம் ஒத்திக்கிச்சா..அங்கே வெயில் கடுமையாமே!’’ என்று கண்கலங்கினால்.
``ஆமாம்மா.. கோடையில் கடுமையா வெயில் அடிக்கும். சரி பெட்டியெல்லாம் வந்திடுச்சா.....?’’
``ஆச்சு, எத்தனை உருப்படி ... நாலுதானே....!’’
``ஆமாம்ப்பா.....’’
``டாக்சிச்காரன் காத்துட்டிருக்கான்... அனுப்பிட்டேன்..!’’
கோபி வேகமாய் வெளியே வந்தான். ``மன்னிக்கணும்! அம்மாவைப் பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டேன்!’’
டாக்சி புழுதியைக் கிளப்பிக்கொண்டு போக, கிணற்றடியில் இருந்த பெண்களின் கண்கள் அவனை மொய்க்கத் தொடங்கின. தண்ணீர் இரைப்பதும், குடம் நிரம்புவதுமாயிருக்க, ``ஏய்.... உங்க ஆள்டி...!’’ என்று தாவணி ஒன்று இடிக்க-
அகல்யாவிற்குச் சிலிர்த்துப் போயிற்று. உடன் ஈரக் கூந்தல் நர்த்தனம் ஆட, இரவிக்கை இறுகிற்று. அப்போதுதான் குடத்துடன் அங்கே நுழைந்தவள் முகம் சிவந்து ,``எங்கே?’’ என்றாள் கிசுகிசுப்பாய்.
``அதோ... வாசலில்!’’
அவள் காட்டின பகுதியில் டாக்சி பரப்பிய புழுதிதான் மிச்சமிருந்தது. அதனிடையே கோபி சற்று சதை போட்டு, தங்கமூலம் பூசிய கடிகாரம், செயின் என்று பளபளப்பாக யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
அகல்யாவிற்குப் படபடப்பாயிற்று. அவன் தன்னைப் பார்க்கமாட்டானா? தன் பக்கம் திரும்பமாட்டானா? என்றிருந்தது.
இதோ-திரும்புகிறாள்! என்னைப் பார்க்கிறானா.... பார்த்துவிட்டானா? உடனே உள்ளே போகிறானே! ஒரு வேளை என்னைக் கவனிக்கவில்லையோ! அல்லது கவனித்தும், கவனிக்காதது போலப் போகிறானோ? ஏன்? ஏன் அப்படி?
வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதித்ததும் என்னை மறந்திருப்பானோ? நினைத்தவளின் முகத்தில் சிகப்பு மறைந்து, கவலை படர்ந்து, அதுவரையிருந்த வேகம் குறைந்தது.
கோபி, வருகிறான் என்று கேள்விப்பட்டதுமே தோழிகள்,``உங்காளு வருதாமே!’’ என்று சீண்டத் தொடங்கியிருந்தனர். அவளுக்கு அது சுகமாயிருந்தாலும்கூட வெளியே, ``சீ....!’’ என்று வெட்கப்படுவாள்.
`அவரு எப்படி எங்காள்ன்னு சொல்றீங்க....? என்ன நிச்சயமா பண்ணினாங்க.....?’’
``நிச்சயம்தான் உங்களுக்குள்ளே பண்ணிட்டீங்களே! ஏய்...உங்களோட திருட்டுத்தனம் எங்களுக்குத் தெரியாதா என்ன? அவள் பார்க்க, நீ பார்க்க, கோவில்-தியேட்டர் எல்லாம் உங்களோட திருவிளையாடல்களை எடுத்துச் சொல்லுமே! எல்லாம் பண்ணிட்டு இப்போ நழுவினால் சும்மா விட்டிருவோமா என்ன?’’
``ஆமான்டி! மாப்பிள்ளை பறந்து வர்றார்.. பெண்ணைப் பொன்னால் அலங்கரிச்சு கட்டிக்கிட்டு துபாய்க்குத் தூக்கி போயிடப் போறார்!’’
``சீ...’’
``என்னடி சீ! உன்னைக் கூட்டிட்டுப் போகத்தானே வர்றார்!’’
``ஏய்...அகல்யா! அங்கே போனதும் எங்களை மறந்துடாதடி! மறந்துடுவியா...?
``ஊகூம்....’’ என்று ஓடுவாள். அவர்கள் விடமாட்டார்கள்.
பின்னாலேயே துரத்திவந்து, ``கோபி கடிதம் போட்டாரா...?’’ என்பார்கள்.
``எங்க வீட்டுக்குப் போட முடியாதே...!’’
``அப்போ என் விலாசம் கொடு!’’ என்று மகிளா கொடுத்திருந்தாள்.ஆனால் அங்கும் கடிதம் வரவில்லை.
``ஏண்டி ...ஏன் அவர் கடிதம் போடலை’’ என்று அவர்கள் நச்சரிக்கவே, ``அவருக்கு ரொம்ப வேலையாம்... அதனால போன்ல பேசுறதோடு சரி!’’ என்று அகல்யா பொய் சொல்லி சமாளிப்பாள்.
``போன் எங்கே பேசினார்... உங்க வீட்டுக்கா...?
``ஆமா...’’
``வீட்டில் யாரும் எதுவும் சொல்லலையா...?
`` ``இல்லை...பேசுறது கோபின்னு அவங்களுக்கு தெரியாதே! நான் ஏதோ தோழியிடம் பேசுறமாதிரிதானே பேசுவேன்!’’
``அவர் என்ன சொன்னார்? என்ன பேசினார்?’’
``உம்...அதெல்லாம் தனிப்பட்ட விசயம்! அதெல்லாம் உங்களுக்கு ஏன்?’’
``பாத்தியா ...யோசனை சொன்னது நாங்க! துணைக்கும் தூதுக்கும் நாங்க வேணும்... மத்ததுக்கும் வேணாமா?’’
தோழிகள் விடமாட்டார்கள். அகல்யா அதற்கும் ஏதாவது சொல்லி சமாளிப்பாள். அவர்கள் திருப்தியடைந்து போய்விடுவார்கள். அடுத்தவர்களின் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்வதிலும், அதைக் கேட்டு, கிண்டல் கேலி பண்ணுவதிலும்தான் எத்தனை ஆர்வம்! இதெல்லாம் இயற்கையிலேயே ஊறிப் போய்விட்டதோ!
கோபி பேசினதாக சொல்வதெல்லாம் பொய் என்பது அவர்களுக்குத் தெரியாது. தோழிகளின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்கவேண்டி –கோபி பற்றி கதை கட்டியிருந்தாலும்கூட அந்தப் பொய், அகல்யாவை நெருப்பாய்ச் சுடும்.
`கோபி மெய்யாலுமே எனக்கு ஏன் போன் பண்ணவில்லை?’’’ என்று தோன்றும்.
அவன் ஆண், நிறைய சம்பாதிக்கிறான். வெளியூரில் சுதந்திரமாய் இருக்கிறான். கடிதம் போட நேரம் இல்லாமலோ, சோம்பேறியாகவோ இருக்கலாம்.
`போன் பண்ணுவதில் என்ன பிரச்சினையாம்? எங்கள் வீட்டிற்குப் பண்ணலாம். அப்பா-அம்மா எடுத்தால் வைத்து விடலாம். செலவைப் பார்க்கிறானா? செலவைப் பார்க்கிற அளவிற்குத்தான் எங்களுக்குள் பழக்கம் இருக்கிறதா? அப்படிக் கணக்குப் பார்க்கிறவனா இவன்?’ அவளுக்கு எதுவும் விளங்கவில்லை.
பணம் காசு வந்ததும் என்னை மறந்துவிட்டாளோ? அல்லது வேறு யாரையும் நினைக்கத் தொடங்கிவிட்டானோ என்கிறை இயல்பான சந்தேகம் அவளுக்குள் எழுந்து நெஞ்சைக் குடைந்தது.
இப்போது அதை அதிகப்படுத்துகிற மாதிரி –கோபி அவளைக் கண்டு கொள்ளவில்லை. `அலட்சியம்! ஏன்? ஏன் இப்படி மாறிவிட்டான்?’ அகல்யாவிற்கு அழுகை அழுகையாய் வந்தது.
(2)
கோபி குளித்துவிட்டு வருவதற்குள் சுதா, பொருட்களைப் பிரித்து கடைபரப்பிக் கொண்டிருந்தாள். அவளுக்கு பொறுமை காக்க முடியவில்லை. அதுவில்லாமல் கடைக்குட்டி; அதிலும் பெண் என்கிற செல்லம்!.
அப்பா பயந்து பயந்து ``அண்ணன் வரட்டுமே! அதுக்குள்ளே என்ன அவசரம்?’’ என்று கேட்டுவிட்டு,``அது என்னம்மா.... ரேடியோவா?’’
``இல்லைப்பா....சாக்லேட்.’’
``ஓ...புதுசு புதுசாய் என்னென்னமோ வருது!’’
சுதா, சேலைகளை எடுத்து தன் உடலில் வைத்து அழகு பார்த்தாள். நகைகளை எடுத்து,``ஐ! செயின்! அட! கம்மல்! அம்மா! இங்கே பாரேன்!
அண்ணனோட செலக்ஷன் சூப்பர்!’’ என்று நகைகளைப் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்து குதித்தாள். குதூகலித்தாள்.
ஒவ்வொன்றின் நேர்த்தியையும் பார்த்து ஆச்சரியப்பட்டவள், ஏதோ ஒன்றைப் பிரித்தபோது கோபி தலையை துவட்டிக் கொண்டு வர, ``இது என்னண்ணா?’’ என்றாள்.
அறை முழுக்க இறைந்து கிடந்த சாமான்களைப் பார்த்தவனுக்குச் சட்டென கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, ``பிஸ்கட்’’ என்றான்.
``பிஸ்கட்டா...நல்ல கனமா இருக்கு!’’
``கழுதை! அது சாதா பிஸ்கட் இல்லை, தங்கம்!’’
`` தங்கமா....?’’ சுதா கேட்டுவிட்டு உருகிப்போனாள்.
``ஆமாம். இருபத்து நாலு கேரட் தங்கம்.’’
அதற்குள் அம்மாவும் வந்து கண்விரித்து, ``அம்மாடி! சினிமாவுலதான் இது மாதிரி கட்டிக் கட்டியா பார்த்திருக்கேன். இவ்ளோவும் நமக்கா கோபி?’’
அந்தக் கேள்வியில் இருந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் அவனை உஷாராக்கிற்று. ``இல்லைம்மா. என் நண்பன் ஒருவனோடது. அவங்க வீட்டுக்கு வாங்கிக் கொடுத்திருக்கான்.’’
``இதெல்லாம் எத்தனை லட்சம் பெறும்னான்?’’
``சரியா தெரியலை. நிறைய இருக்கும். அம்மா! எனக்குப் பசிக்குது. சுதா! என்னைக் கேட்காம இனி எதையும் தொடாதே!’’
அந்தக் கண்டிப்பு அவளது முகத்தைக் கறுக்க வைத்தது.
இதுவரை வீட்டில் யாரும் சுதாவைக் கடித்து பேசினதில்லை. கோபியும் அப்படித்தான். இப்போது அவனுக்கு என்னாச்சு? பணம் வந்ததும் மாறிவிட்டானா என்று நினைத்தபோது சுதாவின் கண்கள் கலங்கிவிட்டன.
அவள், துணிமணிகளையும் பெட்டியையும் அப்படியே போட்டுவிட்டு அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள். சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிக்கொண்டிருந்த கவுசல்யாவிற்கு மனது இளகிப் போயிற்று.
கோபி எதைப்பற்றியும் சிந்திக்காமல் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.
வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு இரண்டு ஆண்டாயிற்று. துபாயில் எப்போதாவது நண்பர்களின் வீட்டில் சாப்பிடுவதுண்டு. மற்ற நேரங்களில் மெஸ்! கெட்டியான இட்லி, கடினமான பூரி, புட்டு, ப்ரோட்டா என்று வயிறு மரத்துப் போயிருந்தது. நாக்கில் உணர்வில்லை.
வேலைக்குப் போனால் `குட்பூஸ்’ எனப்படும் பிரட்! மிக மலிவாகக் கிடைக்கும். அதுதான் அங்கு வசதியில்லாத –சம்பளம் குறைந்த தொழிலாளிகளுக்கு உணவு. உயிரும்கூட.
அங்கே உடலும் மனமும் வசதிகள் தேடுவதில்லை. அதிகபட்ச வெயிலோ அதிகபட்ச குளிரோ எதுவானாலும் ஏற்று அடிமையாக நடத்தப்பட்டாலும்கூட பணம் வருகிறதா –அது போதும் என்கிற பக்குவம். நாம் சுகம் தேட வரவில்லை. சம்பாதிக்க, சம்பாதித்து ஊருக்கு அனுப்ப அங்கே நம்மை நம்பிக் குடும்பம்! தாய்-தந்தை, சகோதரிகள் என்ற நினைப்பும் எழும். பெரும்பாலான தொழிலாளிகளின் கனவும், கற்பனையும் இப்படிதான் இருக்கின்றன.
``இன்னும் கொஞ்சம் பொரியல் போடட்டுமா?’’
``என்னடி கேட்டுகிட்டு... அவனுக்குத்தான் வாழைக்காய் பிடிக்குமே. போடு!’’ சாமிநாதன் அதைத் தனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பாகக் கருதி மனைவியை விரட்டினார்.
``அப்படியே எனக்கும் கொஞ்சம் போடு!’’
கோபிக்கு சிரிப்புதான் வந்தது. அப்பாவுக்கு வேண்டும் என்றால் நேராகக் கேட்கவேண்டியதுதானே? பயம், தயக்கம்!
இதற்கிடையில் கவுசல்யா, சைகையில் அவரிடம் என்னவோ சொல்வதும், அவர் கண்களாலும் உதடுகளாலும் மறுப்பதும் அவனுக்குப் புரிந்தது. அவன் சட்டென நிமிர அம்மா பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்து அடுப்படிக்கு நழுவினாள்.
`` ``என்னப்பா?’’
``வந்து...நீ சாப்பிடு.”
``பரவாயில்லை...சொல்லுங்கப்பா!’’
``ஏரிக்கரை பக்கத்துல ஒரு இடம் வாங்கி வீடு கட்டினோமில்லே. அது இன்னும் பூர்த்தியாகலே. நீ திரும்பிப் போறதுக்குள்ளே முடிச்சு கிரகப்பிரவேசம் பண்ணிட்டா தேவலை...’’
``முடிச்சுடுங்களேன். அதுல என்ன சிக்கல்?’’
``பணம்...’’
``அதான் அனுப்பியிருந்தேனே!’’
``அது பத்தலை. மாடியையும் சேர்த்து முடிக்கணும்... இன்னும் ரெண்டு மூணு லட்சம் அதிகமாகும் போலிருக்கு...’’
கோபி அதற்குப் பதில் சொல்லவில்லை. கை கழுவி எழுந்தான். அம்மா சைகை காட்ட, அப்பா அவனிடம் தன் துண்டை நீட்டி,``அதுமட்டுமில்லாம-அந்த வீட்டோடு சேர்ந்த நிலத்தையும் பேசி அட்வான்ஸ் கொடுத்திருக்கோம். நீ வெளிநாட்டுக்குப் போனபின்னால் நம்ம குடும்பத்தோட கவுரவம், அந்தஸ்து எல்லாமே உசந்துபோச்சு! ஊரே உன்னைப் பற்றிப் பெருமையா பேசுது!’’
கோபிக்கு அந்த வார்த்தைகள் மகிழ்ச்சி தரவில்லை. `தறுதலை... பொறுப்பில்லாதவன் குடும்பத்துக்கு கிடைத்த சூனியம். பெத்தவங்களோட உயிரை வாங்குறான்’ என்று இதற்குமுன்பு சபித்த அதே வாய் இப்போது போற்றுகிறது. அதற்குக் காரணம் –பணம்!
பணம் தேவைதான். ஆனால் அதுவே ஒருவனின் தராதரத்தை எடை போடுவதாக அமைந்துவிடக்கூடாது! அவனுக்குப் புரிந்தது –இந்தப் பாராட்டும் புகழ்ச்சியும் தனக்கில்லை. தனது பணத்திற்கு என்று.
ஒருவன் என்றைக்குமே கெட்டவனாக இருந்து விடுவதில்லை.கெட்டவன் திருந்தலாம். நல்லவனாகலாம். சந்தர்ப்பச் சூழ்நிலையில் நல்லவர்கள்கூட கெட்டுப் போகலாம். ஊரார் அதைக் குற்றம் சொல்லலாம். புரளி பேசலாம். ஆனால், பெற்றோர் அப்படிச் செய்யக்கூடாது. தளர்ந்து போகும்போது தைரியம் சொல்லணும். தெம்பு தரணும். ஊக்கமும் உற்சாகமும் தந்து தூக்கிவிடணும்.
எத்தனை பெற்றோர்கள் இதைச் செய்கிறார்கள்? ஊக்கம் தராமலிருந்தாலும் பரவாயில்லை.... ஏச்சும் பேச்சும் கொட்டாமலிருந்தாலே போதும்!
பெற்றோர்கள், வேண்டும் என்றே பிள்ளைகளை வதைப்பதில்லை.அதிக எதிர்பார்ப்பு, ஆசைகளை, கனவுக் கோட்டைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்கள் அப்படிப் பேச வைத்துவிடுகின்றன. அவற்றைப் பெரிதுபடுத்தக்கூடாது. என்னைத் திட்டினாலும், எப்படி கோபித்துக் கொண்டாலும் அது அந்தந்த நேரத்துக்குதான். எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் வீணாகப் போகவேண்டும் என்று நினைப்பதில்லை.
அவன் முன் அறைக்கு வர, தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. சாமிநாதன், மகனுக்கெதிரே அமர்ந்து,``நீ இன்னும் பதில் சொல்லலே?’’ என்றார்.
``எதுக்கு...?
``நிலம்..வீடு!’’
கவுசல்யா, ஈரக் கையைத் துடைத்தபடி வந்தாள். ``அவன் வந்தாலும் வராததுமாய் ஏன் இப்படி தொல்லை பண்றீங்க! அவன் என்ன முடியாதுன்னா சொன்னான்? நீ ஓய்வு எடுத்துக்கோ! அந்த அறையில் படுத்துக்கோ!’’
``அங்கே சுதா, படுத்து அழுதுட்டிருக்கா!’’
``அவ ஏன்...அழணும்...?
``நீதான் அவளைத் திட்டிட்டியே!’’
``நான் திட்டினேனா...எப்போ...? அம்மா! அந்தக் கழுதையை இங்கே கூப்பிடு!’’
``ஏய் ... சுதா! அண்ணன் கூப்பிடுறான் பாரு...!
அவளிடமிருந்து பதிலில்லாமல் போகவே கவுசல்யா, அறைக்கதவைத் திறந்து உள்ளே போய்,``ஏய் ...என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்! முகத்தைத் துடைச்சுகிட்டு வெளியே வா!’’
அவள் என்னவோ முணுமுணுப்பதும், விசும்புவதும் கேட்டது. ``ஏய்! அதான் சொல்றேன்ல..... நம்ம அண்ணன்தானே! உனக்கில்லாம வேறு யாருக்குடி அவன் வாங்கித் தரப்போறான்? மனசுல எதையும் வச்சுக்காம வெளியே வா!’’
கவுசல்யா வெளியே வந்ததும் சுதா முகத்தைச் சுருக்கிக் கொண்டு வெளியே வந்து தெருவைப் பார்த்தபடி நின்றாள்.
``கோபி! ஆனாலும் உனக்குக் கோபம் ரொம்பவே வருது. பொட்டைப்புள்ள ஏதோ ஆர்வக்கோளாறுல சாமான்களை எடுத்துட்டான்னா அதுக்காக இப்படிதான் பேசுறதா? அவ யாரு. அன்னியமா? உன் தங்கைதானே! அவளைக் கூப்பிட்டு ஆறுதல் சொல்லு!’’
``ஏய் ..கழுதை! இங்கே வா! நான் அப்படி என்ன உன்னைத் திட்டிட்டேன்? பெட்டியில் இருக்கிறதெல்லாம் நம் பொருள் இல்லை. யார் யாருக்கோ கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொடுத்தனுப்பினது. மத்தவங்க பொருட்களை நீ பாட்டுக்குப் பிரித்து, வீணாக்கிட்டா அப்புறம் அதை எப்படி அவங்ககிட்ட கொடுக்க முடியும்? நம்மைத் தப்பா நினைக்க மாட்டங்க....?’’
``அது மத்தவங்க பொருள்னு எனக்கெப்படி தெரியுமாம்!’’’’
``அதானே நானும் சொன்னேன்! மத்தவங்க சாமான் எல்லாம் இருக்கு. கலைக்காதே! நான் வந்து எடுத்துத் தர்றேன்னு...சரி, இங்கே வா!’’ என்று கோபி அவளை அழைத்துத் தலையைக் கட்டிக்கொண்டு வருடினான்.
அதைப் பார்க்கப் பார்க்க சாமிநாதனுக்கும், கவுசல்யாவிற்கும் கண்கலங்கிப் போயிற்று.
கோபி மாறவில்லை, எதையும் மறக்கவில்லை என்கிற பெருமிதம் ஏற்பட்டது.
``ஏய் ...சுதா! இப்போ சமாதானமாயிடுச்சா.... என்னவோ பெரிசா பிணக்கிகிட்டுப் போனியே!’’ என்று அப்பா சீண்டினார்.
``அப்பா! அவ பிணக்கினா...யாருக்கு நஷ்டம்!இந்த ஜப்பான் சேலை! கொலுசு, நெக்லசெல்லாம்....’’
சுதா, `போண்ணா!’’ என்று சிணுங்கியபடி அவனது நெஞ்சில் பொய்யாய்க் குத்தினான். அவனது மார்பிலும்,கழுத்துப் பகுதியிலும் கறுப்பு கறுப்பாய் தழும்புகள் தெரிய ``என்னண்ணா இது.... அம்மை போட்ட மாதிரி...?
``அம்மை இல்லே ...அங்கே வெயில் நாள்ல சூடு தாங்காம வரும் சூட்டுக் கொப்புளங்கள்!’’
``அங்கே அவ்ளோ வெயிலா...?’’
``ஆமா....!’’
``ஏசி இருக்குமே!’’
``கார் ஏசி ,வீடு ஏசி, கடைகள், அலுவலகங்கள் ஏசி ...ஆனா தொழிற்சாலையில் சுத்தணுமே! அதெல்லாம் போகட்டும் ...அம்மா... இந்தச் சாமானையெல்லாம் எடுத்து வை!’’ என்று கோபி அறைக்குள் போனான். ``சுதா கழுதே! நீ என் கூட வா....!’’
கோபி, கட்டிலில் தலையணையை வைத்துச் சரிந்து அமர்ந்து, ``அப்புறம்..? உன் படிப்பெல்லாம் எப்படியிருக்கு?’’ என்றான்.
``அது அப்படியேதான் இருக்குண்ணா.. இது தேறாத கேஸ்!’’
``ஏன் ...என்னாச்சு? பீஸ் கட்டணம்... புத்தகம் வாங்கணும்னு பணம் கேட்டுக் கேட்டு வாங்கினே....’’
``அதுக்கென்ன பண்றது.... பணம் கொடுத்தால் புத்தகம் கிடைக்குது. மூளை கிடைக்குமா? இந்த அம்மா வேற அப்பப்போ .... படிச்சு என்ன கிழிச்சுறப் போற... சமைக்கக் கத்துக்கோ.. துவைக்க .. கோலம் போடக் கத்துக்கோன்னு ஒரே இம்சை! எப்போ பார்த்தாலும் என் கல்யாணப் பேச்சுத்தான்!’’
அதைச் சொல்லும்போது அவளிடம் வெளிப்பட்ட வெட்கத்தைக் கோபி, கவனித்து ரசித்து,`` அம்மா சொல்றதும் சரிதானே! வாழ்க்கையில் கல்யாணமும் முக்கியமான ஒண்ணுதானே! அதுபோகட்டும்! ஊரில் வேற என்ன விசேஷம்?’’
``வேறு என்ன....? என் தோழிகளுக்கெல்லாம் என்னைப் பார்த்தா பொறாமை...உன் அண்ணன் வந்ததும் விருந்து தரணும், சினிமாவுக்குக் கூட்டிப் போகணும்னு தொல்லை பண்றாளுங்க.’’
``உம்..அப்புறம்?’’
``சினிமாவோட போச்சா? சாப்பாடும்....’’
``ஏய் ...மண்டு ‘’என்று கோபி தலையில் செல்லமாய்க் குட்டி’’ அப்புறம் ஊரில் வேறு என்ன விசேஷம்?’’
``அப்புறம் வேறு என்ன? பஞ்சாயத்துல நூலகம் தொடங்க இருக்காங்க. புதுசா டி.வி.வாங்கி வச்சிருக்காங்க. வந்து...சொல்ல மறந்துட்டேனே! உன்னோட வரவை எதிர்பார்த்து நாலைஞ்சு ஆசாமிங்க காத்திருக்காங்க!’’
``எதுக்கு?’’
``வேறு எதுக்கு? ஒரே அமுக்காய் அமுக்கத்தான்! அதுல ஒருத்தர் வாத்தியார். பள்ளிக்கூடத்துக்கு ஏதோ வேணுமாம். அப்புறம் கோவில் தர்மகர்த்தா...’
``உதவிதானே ...பண்ணினாப் போச்சு!’’
``எல்லாத்துக்கும் பண்ண உன்கிட்ட ஏது பணம்? நோட்டு அடிக்கிறியா?’’
கோபி சிரித்து, ``அப்புறம் வேறு எதுவுமே விசேஷமில்லையா?’’
``வேறு என்ன? உம்....’’என்று சுதா தன் விரலால் உதட்டில் தட்டி யோசித்தாள்.
``வேறு எதுவும் இல்லையே.’’
``அக்கம் பக்கம் ....?’’
``அக்கம் பக்கம்?உம்...பக்கத்து வீட்டுல ஒரு டிராக்டர் வாங்கி இருக்காங்க. நம்ம பசு, கன்று போட்டிருக்கு.’’
`ச்சை! பசு கன்று போட்டிருக்கு... பன்றி குட்டி போட்டிருக்கு! இதுவா எனக்கு முக்கியம்? வேற ஏதாவது...’’ என்று அவன் கண்சிமிட்டினான்.
``ஓ....ஓ...இப்போ புரியுது’’ என்று சுதா சிரித்தாள்.
``இப்போவாச்சும் புரிஞ்சுதே! சொல்லு! உன் தோழி எப்படியிருக்கா?’’
``என் தோழியா....அது யாரு?’
``ஏய் ... இந்தக் குசும்புதானே வேணாங்கிறது!’’ என்று அவளது காதைப் பிடித்துத் திருகினான்.
``அ...ம்...மா..’’
``ஏய் ..எதுக்கு இப்போ கத்துறே?’’
``அப்போ பயமிருக்கு’’
``பயப்படாம முடியுமா?’’
``அப்ப முதல்ல கையை எடு!’’
``எடுத்துட்டேன். பொறுமையைச் சோதிக்காம சொல்லு. அகல்யா எப்படியிருக்கா?’’
``ஓ..ஜோரா! நாலு கிலோ எடை ஏறி...விதவிதமா சுடிதார் போட்டு, அவங்களுக்கென்ன? பரமசுகம்!’’
``ஏன் உனக்குப் பெருமூச்சு?’’
``அண்ணா!அகல்யாவைப் பற்றி பேசுறதே வீண்... வேறு வேலை இருந்தா பாரு!’’
``ஏய்..ஏன் இப்படி சொல்றே?’’
``ஆமாண்ணா. அவளுக்கு வேறு வரன் நிச்சயிக்கப் பட்டுட்டதா கேள்வி!’’ சுதா சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
(3)
மோட்டார் சைக்கிள் நகரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. மதியின் தலைமுடி காற்றில் சிலுசிலுத்தது. அவனும் மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தான். மதியும் கோபியும் பால்யகாலம்தொட்டே நண்பர்கள்.
கோபி வருகிறான் என்றால் மதி, தன் வேலையெல்லாம் போட்டுவிட்டு துணைக்கு வந்துவிடுவான். அவன் விடுப்பு முடிந்து போகும்வரை இருவரும் ஒன்றாகவே சுற்றுவார்கள்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த கோபி, ``நாட்டு நடப்பெல்லாம் எப்படி?’’ என்றான். சாலையில் இரண்டு பக்கமும் காவிரியின் ஊட்டத்தில் தென்னையும் நெல்லும் பசுமை பரப்பியிருந்தன.
``ஏய்....எதுக்கு இந்த சுத்திவளைச்சு கேள்வி? நேராய் உன் அகல்யா எப்படியிருக்கான்னு கேளேன்!’’
``புரிஞ்சுக்கிட்டா சரி!’’
``நான் புரிஞ்சு வச்சு என்ன பண்றது? அவ புரிஞ்சுக்கலியே! கோபி! இனி அவளை நினைக்காம இருக்கிறது நல்லது!’’
``என்ன சொல்றே... அவளுக்கு வேறு வரன் நிச்சயமாச்சுன்னு சுதா சொன்னது?’’
``உண்மைதான்.’’
``ஏன்டா...ஏன்டா இப்படி? என்னால் நம்ப முடியலை ...அவ எப்படி?’’
``என்னைக் கேட்டால்? நீ கோபிக்கலேன்னா ஒரு விஷயம் சொல்றேன்.
``சொல்லு.’’
``அகல்யா நல்ல பொண்ணுதான்டா. அவங்க வீட்டிலும்கூட பிரச்சினையில்லை.
``அப்புறம்? அவளுக்கென்ன அவசரமாம்? என்பேர்ல நம்பிக்கையில்லையா?’’
``உண்மையைச் சொல்லணும்னா எனக்கே உன்னை நம்பமுடியாம இருந்தது. ஊரில் அந்த அளவுக்கு புரளி. உன் பேரில் புழுதி.’’
``என்னன்னு?’’
``நீ அங்கே யாரையோ கட்டிக்கிட்டேன்னு! உன்னைப் பற்றி நல்லவிதமா இதுவரை ஏதாவது உண்டா?’’
``அடப்பாவிகளா... இதெல்லாம் திரிச்சது யார்?’’
``அப்போ நீ அங்கே யாரையும் கட்டிக்கலியா?’’
``கோபி, ஓங்கி அவனது முதுகில் இடித்து, ``வண்டியை நிறுத்து!’’ என்று கத்தினான். `பைக்’ தடுமாறி –தளர்ந்து, கிறீச்சிட்டு –சாலை ஓரத்தில் இளநீர் விற்கும் மீசைக்கார நபரை மிரட்டி நின்றது.
``மகா பாவி! நீயுமா அதை நம்பினே? யார் இப்படி ஒரு வதந்தியை பரப்பினது?’’
``தெரில, வதந்தி-பேரு, முகவரி எழுதி வச்சுட்டா வரும்?’’
இளநீர்க்காரன், இதுதான் சந்தர்ப்பம் என்று ``இளநீர் சாப்பிடுங்க சார்!’’ சந்தில் சிந்துபாடி –அவர்களின் அனுமதிக்கு காத்திராமலேயே சீவினான்.
``இளநீர் எவ்வளவு?’’
``பத்து ரூபா.’’
இளநீர் குடிச்சிக் கிளம்பும்போது, ``மதி! இளநீர் பத்து ரூபான்னா அநியாயமில்லே?’’
``உன்னை மாதிரி நாலு துபாய்க்காரன் இருந்தால் ஏன் விலை ஏறாது?’’
``என்னடா சொல்றே ... நான் என்ன செய்தேன்?’’
``நீ எதுவும் பண்ணாம இருக்கலாம். ஆனா உன் குடும்பத்தினர்! கோபி நீ வருத்தப்பட்டாலும் சரி, ஒரு விசயத்தை நான் சொல்லியே ஆகணும். உங்க அப்பா, மாமாவோட தொல்லை தாங்கலே...’’
``ஏய்...அவங்க என்ன பண்ணினாங்க....?’’
``நீ துபாயில் சம்பாதிச்சாலும் சம்பாதிக்கிறாய்! ஊரில் விலைவாசி ஏத்துறதே அவங்கதான்! கூலி ஆட்களுக்கு வெளியே அம்பது ரூபாய் சம்பளமுன்னா இவங்க அறுபதுன்னு சொல்லி கூப்பிடுவாங்க. அப்புறம் மத்தவங்களும் அதே கூலி தரவேண்டியிருக்கும். உங்களுக்கு துபாய் பணம் வருது, சமாளிக்கலாம், வயலையும், மழையையும் நம்பி இருக்கும் ஏழைங்க என்ன பண்ணுவாங்க?’’
``...........................’
``இதுமட்டுமா ...நெல்லுக்கு விலை ஏத்துறது, ஒண்ணுக்கும் உதவாத நிலத்தை மூணு பங்கு விலைவச்சு பேசி முடிச்சிருக்காங்க. கேட்டால் சவடால்! முடிஞ்சா நீங்களும் அந்த விலை கொடுத்து வாங்குங்கன்னு ஊர்க்காரங்களோட சண்டை!’’
``........................’’
``இந்தப் போக்கு அத்தனை சரியில்லை. பணம் காசு வரலாம். போகலாம், அதுக்காக இப்படிக் குதிக்கிறதா....’’
``................................’’
``என்ன சத்தத்தையே காணோம்?’’
``இல்லை ....என்னால நம்ப முடியலே....எங்கப்பாவா இப்படி....? மாமா போகட்டும்! அவர் எப்பவுமே அப்படித்தான். அவரது பேச்சை யாரும் பொருட்படுத்துவதில்லை. அப்பா..... எப்படி மாறினார்? வீட்டில் பரமசாதுவாய் இருக்கார். அம்மா கிழிச்ச கோட்டைத் தாண்டுவதில்லை!’’
``அங்கே முடியலே....அதான் வெளியே ரொம்பவும் தாண்டுறார். இந்தச் சவடால் விசயத்துல உங்கப்பா மட்டுமில்லை, உங்க அம்மாவும் ஒண்ணும் குறைச்சலில்லை. அவங்களுக்கும் பேராசை! ஊர் முழுக்க வாங்கிப் போட்டுடணும்ங்கிற வெறி! இதெல்லாம் நல்லதுக்கில்லை. கொஞ்சம் கட்டுப்படுத்திவை. இல்லேன்னா யாராச்சும் பதம் பார்த்திருவாங்க. பணம் இருக்கலாம். கை –காலோ –உசிரோ போச்சுன்னா போனது போனதுதானே. அப்புறம் என்ன பண்ண முடியும்! ஆனா ஒண்ணு...’’
``என்ன....?’’
``தயவுசெஞ்சு நான் சொன்னதா அவங்களுக்குத் தெரிஞ்சிட வேணாம்!’’
``சீ ...எதுக்குடா பயம்?’’
``ஆமா. பயப்படாம முடியுமா? பணக்காரங்களாச்சே! மாடி மேலே மாடி கட்டுறீங்க! எனக்கொரு சந்தேகம்டா.... நீ அங்கே வேலை பார்க்கிறியா இல்லை, ரகசியமாய் வேற எதுவும் பண்றியா?’’
கோபி சிரித்து, ``உனக்கு சந்தேகமா? அது போகட்டும், நான் அகல்யாவைச் சந்திக்க என்ன வழி? முதல்ல அதைச் சொல்!’’ என்றான்.
`அதுக்கு வாய்ப்பேயில்லை. தேவையுமில்லை.’’
``ஏன்? நான் சந்திச்சா என்னவாம்?’’
``வேற ஒருத்தனை கட்டிக்கப் போறவளை சந்திச்சு நீ என்ன பண்ணப் போறியாம்...சரி, சரி முறைக்காதே! உன் பிடிவாதம் இன்னும் மாறவேயில்லை. அவளை வீட்டில் சந்திக்க முடியாது. வெளியே கிணற்றடி, ஏரி... ஊகூம்... வேணுமானால் கோவில்ல சந்திக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் அங்கே வருவா! முயற்சி பண்ணு!’’
(4)
ஏரிக்கரையை ஒட்டி நாவல் மரங்களும், அரசமரம், ஆலமரம் என எல்லாம் பெருகித் தழைத்திருந்தன. அதில் குரங்கள் ஊஞ்சலாட, காக்கைகள் அவற்றைத் துரத்த, குருவிகள் இன்னிசை பாட, ஏரிக்குள் இருந்த சொற்ப தண்ணீரில் மீன்களும், வாத்துகளும் நீச்சலடித்தன. ஆல மரத்தடியில் பிள்ளையார். அதன் கற்சுவர்கள் பெயர்ந்து, செடிகளும் புதர்களும் மண்டியிருந்தன. கொஞ்சம் தள்ளி பாலர் பள்ளி!
அதற்கு பின்புறம் நான்கு ஏக்கரில் முள் வேலி போடப்பட்டு நடுவில் அந்தக் கட்டிடம் வளர்ந்து கொண்டிருந்தது. கிராமத்தில் இத்தனை பெரிய பங்களா எதற்கு? என்று யாரும் கேட்கத் துணியவில்லை.
கோபிக்கே அதைப் பார்க்க பிரமிப்பாகத்தான் இருந்தது.
அவன் யோசனையுடன் நடக்க ``இடம் நல்லாயிருக்கா?’’ என்று சுவாமிநாதனும், கவுசல்யாவும் ஒரே குரலில் கேட்டனர்.
அவர்களுக்குப் பின்னால் வந்த மதி,`` இந்தப் பசுமையும், குளுமையும் கோபிக்கு பிடிக்காம போகுமா....? என்று ஒத்தூத, கோபி திரும்பி முறைக்க, அவன் வாயை மூடிக்கொண்டான்.
``கோபி! இந்த பங்களாவுக்கு அம்மா பெயரை வச்சிடலாம். இதுல சுதாவுக்கு ஒரு வீடு. உனக்கு ஒண்ணு, எங்களுக்கு ஒண்ணு, அப்புறம் இந்தப் பக்கம் கொட்டகை போட்டு மாட்டுப் பண்ணை வைக்கலாம். மாட்டுத் தீவனத்துக்குப் புல் வளர்க்க அந்த ரெண்டு ஏக்கர்! மீதி உள்ளதுல கரும்பு, பழ மரங்கள்! கரையோரம் தேக்கு பயிரிடலாம்! என்ன சொல்றே...? எல்லாம் பணப் பயிர்!’’
கோபி எதற்குமே வாய் திறக்கவில்லை. அவனுக்கு அவற்றை ஜீரணிக்க முடியவில்லை. அங்கு தெரிந்த பிரமிப்பை விட, அவனது நெஞ்சு முழுக்க அகல்யாதான் நிரம்பியிருந்தாள்.
அவளது அந்த ஒரப் புன்னகை! அழகான கேசம், தாவணியின் லாவகம்!
மதி அவனது மவுனத்தைக் கலைக்கும்வண்ணம், ``சாமி மாமா!உங்களை அடிக்சுக்க இனி இந்த ஊர்ல யாருமில்லை. சினிமா படப்பிடிப்பு நடத்தலாம் போல கண்கொள்ளாக் காட்சியா இருக்கு.’’
``சரியாச் சொன்னே மதி! உனக்குப் புரியுது. இந்த ஊர்க்காரனுங்களுக்குப் புரியலே.... நான் ஒண்ணும் மூளை இல்லாதவனில்லை. விபரம் புரியாதவனுங்க இவ்ளோ பெரிய வீட்டை டவுன்ல கட்டினா நல்ல வாடகை வருமேன்னு கேட்கிறானுங்க. என்னோட நோக்கமே சினிமாதான். இதைக் கட்டி முடிச்சுட்டோம்னு வச்சுக்கோ ..அப்புறம் ஒரு பயலும் பொள்ளாச்சிக்குப் போக மாட்டான். எல்லோரும் படம் எடுக்க இங்கே வந்திடுவானுங்க! அதுக்காகதான் இந்த ஏற்பாடு.’’
கவுசல்யா,``ஆமா கோபி, இது எங்க கனவு! இதை நீ நிறைவேற்றி வைச்சு..... இந்த ஊரே காலா காலத்துக்கும் எங்க பேரைச் சொல்லணும்!’’ என்று உருகினாள்.
``பெத்தவங்களோட கடமை பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்கிறதுதான்! எங்க பேச்சை நீ தட்ட மாட்டேன்னு தெரியும். இருந்தாலும் சொல்லி வைக்கிறோம். இது எங்க பெயர் சொல்ல மட்டுமில்லை. நம் வம்சம் காலா காலத்துக்கும் செழிக்கவும்தான். அதுக்காக நாங்க சில ஏற்பாடுகள் செஞ்சிருக்கோம். நீயும் அதுக்குத் தட்ட மாட்டேன்னு நினைக்கிறேன்!’’
``என்ன ஏற்பாடும்மா....?
``நேரம் வரும்போது அதைச் சொல்றோம்!’’ என்று மதியை ஓரக்கண்ணால் சாமிநாதன் பார்க்க, அவனுக்கு என்னவோ போலிருந்தது.
`ரகசியமா...எனக்குத் தெரியாமலா? நீ உன் மவன்கிட்ட சொன்னா அது என் காதுக்கு வராமலா போயிடும்!’ என்று மனதுக்குள் அவன் கெக்கலித்தான்.
(5)
கிராமத்துப் பெண்களுக்கு, கோயிலும், குழாயடியும்தான் சுதந்திரமாய் அனுமதிக்கப்பட்ட வெளியிடங்கள். மற்ற இடங்களுக்கு அவர்கள் தனியாகப் போக முடியாது. போனாலும் அவற்றிற்கு விபரீத அர்த்தங்கள் கற்பிக்கப்படும்.
அகல்யாவின் வீட்டினர் பெரிய வசதிபடைத்தவர்கள் என்று சொல்ல முடியாது. அப்பா –வாத்தியார், ஓய்வு பெற்றவர், பட்டப் படிப்போடு நிறுத்தப்பட்டு, ஆசிரியர் பயிற்சிக்காக அகல்யா காத்திருந்தாள்.
என்னதான் படித்திருந்தாலும், மகளின் நடத்தையின் மேல் எந்தவித அவதூறும் பரப்பப்பட்டு விடக்கூடாது என்று வாத்தியார் கவனமாயிருந்தார். அகல்யா மேற்கொண்டு படிக்கிறேன் என்ற போது , ``பேசாம ஆசிரியை பயிற்சி படிப்புக்குப் போ..... எப்படியும் நான்கைந்து ஆண்டுல வேலை வாங்கிடலாம்’’ என்று விண்ணப்பம் போட்டிருந்தார்.
`ஆசிரியை வேலைதான் பாதுகாப்பானது, குழந்தை, குடும்பத்தைப் பொறுப்பாய் பார்த்துக்கொள்ளவும் வசதியா இருக்கும். மாதம் பிறந்தால் சம்பளம்! வேலையும் கடினமாய் இருக்காது’ என்றும் சொல்லியிருந்தார்.
ஊரில் எத்தனையோ சாமிகள் இருந்தாலும், வயலின் நடுவே இருந்த அந்த எல்லைச்சாமிக்கு கிராமத்தில் எப்போதும் தனி மவுசு, வீட்டில் எந்த விசேஷம் என்றாலும், அங்கு பூஜை போடப்படும்.
அகல்யா அங்கே கிளம்பும்போது, `நீ உறுதியாத்தானே சொல்றே... மாப்பிள்ளை வீட்டுக்கு சம்மதம் சொல்லிடலாமில்லே .....?’’ என்றார்.
``சொல்லிடலாம்ப்பா....!’’
``இதை என் மகிழ்ச்சிக்காகவோ, இல்லை நிர்பந்தத்திற்காகவோ சொல்லலியே!’’
``இல்லைப்பா...நல்லா யோசிச்சுதான்...முழுமனதோடு சொல்றேன்!’’
``அகல்யா, இது வாழ்க்கைப் பிரச்சினை! வாக்கு கொடுத்தால் திரும்ப மாறக்கூடாது! விரும்பினது கிடைக்கலேன்னா கிடைக்கிறதை விரும்பணும்ங்கிற தத்துவம் உன்னதமான ஒண்ணு..இப்போ சரின்னு சொல்லிட்டா... அவங்க தேதி குறிச்சு.... மண்டபம் பார்த்து...பத்திரிகைகூட அடிச்சிடுவாங்க!’’
``எல்லாத்துக்கும் சம்மதம்ப்பா....’’
வயலுக்கு நடுவே ஒத்தையடிப் பாதையாய் வரப்பு. சுற்றிலும் நெல் வயல்கள். அதன் நடுவே தீவுப்போல அந்தக் கோவில் அமைக்கப்பட்டிருந்தது. வேப்பமரத்தின் அடிப்பாகத்தில் மஞ்சளும், குங்குமமும் எண்ணெயும் கலந்து தடவப்பட்டிருந்தன.
வேப்பமரக் கிளைகளில் விதவிதமாய் மணிகள் தொங்கின. காற்றி அவை ஆடி அசைந்து ஒன்றுக்கொன்று பேசிக் கொண்டன. சாமி சிலைகள் புத்துணர்ச்சியுடன் சிகப்புத்துண்டு போர்த்தப்பட்டு ஆங்கங்கே எலுமிச்சம்பழ விளக்குகள்.
பூசாரி மதியமே வந்து போயிருக்க வேண்டும்!
அகல்யா போனபோது அங்கு யாரும் தென்படவில்லை. அவளது மனது இறுக்கமாயிருந்தது. நான்தான் முடிவு பண்ணிவிட்டேனே! அப்பா திரும்பத் திரும்ப ஏன் கேட்கிறாராம்!
கோபி எனக்கில்லையென்று ஆகிவிட்டது. எனக்கு ஆசை காட்டிவிட்டு துபாயில் வேறு பெண்ணோடு வாழ்க்கை என்கிறார்கள். இங்கே டவுனில் வேறு பெண் பார்த்தாயிற்று என்கிறார்கள். அப்படி இருப்பவருடன் நான் எப்படி வாழ முடியும்? வந்து இரண்டு வாரங்களாகிறது. என்னைப் பார்க்க வரவில்லை. என்னுடன் பேசவில்லை. இன்னமும் இவரை நான் எப்படி நம்ப முடியும்?
அகல்யா, விளக்கு ஏற்றி வைத்து, சூடம் காட்டி விழுந்து கும்பிட்டு, கோவிலை விட்டு வெளியே வந்தபோது எதிரே கோபி வருவது தெரிந்தது. அவனுக்குப் பின்னால் ஒத்தையடி பாதையில் மதியும் நின்றிருந்தான்.
``கோபி! போ! போய் பேசு!’’ என்று அவன் பின்னாலிருந்து தள்ள.
``கிட்டே வரட்டும்டா....! என்று அவன் ஓங்கிக் குரல் கொடுத்தான்.
கோபியைப் பார்த்ததும் அகல்யாவிற்கு உள்ளுக்குள் ஆசை பொங்கினாலும் கூட அதை அடக்கிக்கொண்டான்.
அவனாகப் பேசட்டும் என்கிற வைராக்கியம். வீம்பு பெண்களுக்கே உரிய அழுத்தம்.
அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து, உடல் வியர்த்து, எந்தவிதச் சம்பவமும் நடக்காமல் போகவே ஏமாற்றம் ஏற்பட்டு, அதை மறைத்துக்கொண்டு அவனை ஏறிடும் ஆவலுடன் நிமிர்ந்தபோது எதிரே பள்ளி தலைமை ஆசிரியரும், பஞ்சாயத்துத் தலைவரும் வருவது தெரியவே முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.
கோபி அதை எதிர்ப்பார்க்கவில்லை, வதந்தி, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, எழும் இயல்பான தயக்கத்தில் அவனிடமிருந்து பேச்சு வரவில்லை என்பதை உணராமல்.
கோபிக்குத் தன்னைப் பிடிக்கவில்லை, வேறு பெண் பார்த்துவிட்டார்கள். அதனால்தான் அவன் தன்னுடன் பேசவில்லையென்று அகல்யா நினைத்தாள்.
அதேமாதிரி –அகல்யாவிற்கு வேறு மாப்பிள்ளை முடிவு செய்துவிட்டார்கள். அதனால்தான் அவள் என்னைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிறாள் என்று கோபியும் நினைக்கும்படியாயிற்று.
`ஒரு பெண்ணிற்கு இத்தனை வைராக்கியமும், திமிரும் கூடாது! நான் என்ன எதிரியா? எதிரியென்றாலும்கூட –பேசவேணாம் –நலம் விசாரிக்க வேணாம்? முகம் கொடுத்துப் பார்க்கவுமா கூடாது? இந்த அளவிற்கு வெறுப்பதற்கு இவளுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்?
வந்து இரண்டு வாரங்கள் இவளுக்காக ஏரிக்கரை, கோயில்,பேருந்து நிறுத்தம் எனக் காத்திருந்து, ஏமாந்து, தொலைபேசியில் அழைத்தபோதெல்லாம் இவளின் அம்மா எடுக்கவே,- வைக்க வேண்டியதாயிற்று.
சரி, இங்காவது பேசலாம் என்று பார்த்தால்....
``ஏய் ...போறாடா, கூப்பிடு! கூப்பிட்டுப் பேசு’’ என்று மதி தூண்டிவிட, கோபி தன் ஆதங்கத்தை அடக்கிக்கொண்டு அவளை அழைக்கலாம் என்று திரும்பியபோது.
``கோபி தம்பி! செளக்கியமா .....எப்போ வந்தீங்க?’’
பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரும், பஞ்சாயத்துத் தலைவரும் அவனை மடக்கிக் குசலம் விசாரித்தனர்.
கோபிக்கு ஏமாற்றம், நண்பன் மதிக்குக் கடுப்பாக இருந்தது. குசலம் விசாரிக்க சரியான நேரம் பார்த்தார்களே!
பஞ்சாயத்துத் தலைவர், ``நல்லாயிருக்கியாப்பா? கொஞ்சம் குண்டு போட்டிருக்காப்ல இருக்கு’’ என்று வழிந்தார்.
``துபாய்ல வெயில், மழையெல்லாம் எப்படி?’’ தலைமை ஆசிரியர் தொடர்ந்தார்.
`ஆமாம்! துபாயின் மழைதான் இப்போ ரொம்ப முக்கியம்! அங்கே மழையைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்? அப்படியே அங்கு மழை பெய்தாலும் அதை இங்கு கொண்டு வரவா முடியும்? ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகப் பேசி –இருப்பவர்களின் கழுத்தை அறுக்க வேண்டியது! ஊரில் இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறார்களோ தெரியவில்லை!’
மதி கடுகடுவென நின்றிருந்தான். ``கோபி! சீக்கிரம் சாமி கும்பிட்டு வா, மழை வர்ற மாதிரி இருக்கு!’’
``மழையெல்லாம் இன்னிக்கு இல்லை. கோபி! உன்கிட்ட ஒரு விசயம் பேசணும். இப்படி உட்கார்!’’ என்று தலைமை அமர்த்தினார். கோபியின் பார்வை –சிந்தையெல்லாம் அகல்யாவின் மேலிருந்து அவள் போயே போய்விட்டாள்!
``தம்பி! வேறு ஒண்ணுமில்லை....பள்ளிக்கூடத்துக்கு போனவாட்டி தண்ணி வசதியெல்லாம் பண்ணிக் கொடுத்தீங்க. இப்போ பிள்ளைங்க உட்கார்ந்து படிக்க பெஞ்சும், கொஞ்சம் விளையாட்டுச் சாமான்களும் வேணும்!’’
``ஆகட்டும் சார்’’
உடனே பஞ்சாயத்துத் தலைவர், ``தம்பி...நம்மூர் கோவிலை மராமத்து பண்ணணும். கும்பாபிஷேகம் நடத்தணும். அப்புறம் ஆழ்குழாய் கிணறு...’’
தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, ``இவ்ளோதானா இன்னும் வேறு இருக்கா?’’ என்று சிரித்தான், கோபி.
``அப்புறம் தெருவிளக்கு...’’
கோபி அங்கே ஒரு யுத்தம் மூண்டுவிட வேண்டாம் என்று நினைத்தான்.``ஊருக்கு உதவி பண்ணுறதல எனக்கும் மகிழ்ச்சிதான். இப்போதைக்கு என்னென்ன அவசியத் தேவைன்னு பட்டியல் போட்டு அதுக்கு எவ்வளவு ஆகும்னு குறிச்சு மதிகிட்டே கொடுங்க. என்னால் முடிஞ்சதை நிச்சயம் செய்யிறேன்’’ என்று அவர்களை அனுப்பி வைத்தான்.
அவர்கள் போனதும் மதி, ``ஏன்டா டேய்! நீ என்ன மந்திரியா? அவங்க மனு கொடுப்பானுங்க.... நீங்க பரிசீலிப்பீங்களா....நடக்கிற காரியமா இதெல்லாம்? இதோ.... இன்னொரு கோஷ்டி வருது பார்! ஆகா...என்ன ஒரு மரியாதை! வரும்போதே பலமான கும்பிடு!’’
அவன் முணுமுணுக்க, வயலிலிருந்து வந்த அவர்கள். கோபியை நலம் விசாரித்து, `எங்க பசங்களுக்கும் துபாய்ல ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்!’’
`நல்லாத்தானிருக்கும்’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டு,``கோபி! பாவம் இவங்க! பசங்களை உன்னோட அழைச்சுப் போய் வைச்சுக்கோயேன்! அவங்களும் நம்மூரில் பங்களா கட்டட்டும்!’’ என்றான் மதி.
அவர்களிடம் பக்குமாய் பேசினான், கோபி, சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. முந்தி மாதிரி இப்போ அங்கே வாய்ப்பு இல்லை. சம்பளமும் இல்லை. சம்பளத்தைக் குறைச்சதோட இல்லாம அடிமை மாதிரி வேலை செய்யவேண்டியிருக்கு. அங்கே செலவு பண்ணிப் போய் குடும்பத்தைப் பிரிஞ்சு வெயிலில் கஷ்டப்படுறதுக்கு இங்கேயே மேல்! இங்கேயே ஏதாவது செய்யச் சொல்லுங்க’’ என்று நழுவினான்.
(6)
குழாயடிச் சண்டை, பேருந்துகளின் உறுமல், வாகனங்களின் புகை, சுவரொட்டிகளை மேயும் ஆடு மாடுகள் என்று அமளிப்படும் சென்னையின் புகழ்பெற்ற திருவல்லிக்கேணி.
அதன் சந்துக்குள் சந்து சந்தாக இருந்து தங்கும் விடுதி ஒன்றின் அறையில் –மின்சாரம் இல்லாமல் –ஓடாமல் அழுக்குடன் தொங்கிக் கொண்டிருந்த மின்விசிறியை வெறித்தபடி படுத்திருந்தான், கோபி.
அவனது முகத்தில் மூன்று வார தாடி மிச்சமிருந்தது. ஊருக்குப் போகவே வெறுப்பாயிருந்தது.
யோசித்துப் பார்த்தால் எல்லோருமே சுயநலத்துடன் செயல்படுவதாய்த் தெரிந்தது, துபாய் போகும்முன்பு வரை என்னை எப்படியெல்லாம் கரித்துக்கொட்டி இருப்பார்கள்! வீட்டினருக்கே நான் ஒரு பாரமாக இருந்தேன்.
எனக்குக் கஷ்டம் வந்த போது விலகியிருந்தவர்கள் இப்போது நெருக்கம் காட்டுகிறார்கள். கெட்ட பெயருடன் ஊரில் இருந்தபோது ஆதரவு கொடுத்த அகல்யா, நன்றாக இருக்கும்போது விலகிப் போகிறாள்.
அதுதான் அவனுக்குப் புரியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. அவளுடன் நான் எத்தனை நெருக்கமாக இருந்தேன்! ஏன் இந்த விரிசல்?
அதைத் தெளிவுபடுத்த முடியவில்லை. இதே பழைய கோபியாக இருந்திருந்தால், நேராய் வீட்டுக்குள் போய் அவளது கையைப் பிடித்து இழுத்து வந்து தாலிகட்டி இருப்பான்.
இப்போது பணம் மட்டுமில்லை, பக்குவமும் வந்திருக்கிறது. வெளியே போய் கஷ்டப்பட்ட பிறகு உலகம் புரிகிறது. ஊரில் இருக்கும்வரை குறுகிய சிந்தனை! அதுதான் உலகம் என்கிற தப்பான கண்ணோட்டம்.
படித்து முடித்த சமயத்தில் கோபி மிகவும் உணர்ச்சி வசப்படுபவனாக இருந்தான். சட்டென அவனுக்குக் கோபம் வரும்.
யாராவது தவறு செய்தால் சொல்லிப் பார்ப்பான். கேட்கவில்லை என்றால் –ஒரே அடி! யாருக்கும் அஞ்சுவதில்லை.
ரேஷன் கடைக்குப் போவான். அங்கே எடைக்கல்லில் ஏமாற்று நடக்கும். அரிசி கடத்தப்பட்டு மளிகைக்கடைக்கு விநியோகிக்கப்படும். காத்திருந்து அதைப் பிடித்து அதிகாரியிடம் ஒப்படைப்பான்.
பஞ்சாயத்துப் பணத்தைப் பொய்க் கணக்கு எழுதும் தலைவருக்கு இவன் எதிரி.
ஊரில் பேருந்தை நிறுத்தாமல் போகும் டிரைவருக்கு மண்டகப்படி! கோவிலில் பூஜை பண்ணாமல் சம்பளம் மட்டும் வாங்கும் பூசாரி இவனைக் கண்டு அஞ்சுவார்.
இப்படி தபால் பட்டுவாடா பண்ணாத தபால்காரர், சாராயம் காய்ச்சும் ரவுடி என்று அநியாயங்களைத் தட்டிக் கேட்பான். இளம் ரத்தத்தில் தொடக்கத்தில் இதெல்லாம் நன்றாகத்தானிருந்தன.
ஆனால், போகப் போக தொல்லைகளும், தலைவலிகளும் அதிகமாயின, அவனைக் கவிழ்க்கவும், வீழ்த்தவும் தருணம் பார்த்திருந்தனர். அதற்குப் பஞ்சாயத்து தலைவரும் உடந்தை.
அரிசி கடத்தும் நபர் ஒருநாள் ஆள் வைத்து –திண்ணையில் படுக்கும் கோபியை அடிக்க ஏற்பாடு செய்திருந்தார். அன்று பார்த்து –கொசுத் தொல்லை என்று கோபி உள்ளே படுத்திருந்தான்.
வெளியூர் போய்விட்டு தாமதமாக வந்த சாமிநாதன் வீட்டினரை எழுப்ப வேண்டாம் என்று அன்று அங்கே படுத்திருக்க –வந்த ரவுடிகள் கோபி என நினைத்து அவரைச் சாத்திவிட்டு ஓடிவிட்டனர். அந்தத் தாக்குதலில் சாமிநாதன் பேச்சுமூச்சில்லாமல் இரண்டு வாரம் படுக்கையில் கிடக்க வேண்டியிருந்தது.
கோபி ஆவேசப்பட்டு,`அப்பா! உங்களை அடிச்சது யாரு? சொல்லுங்க. கை காலை வாங்கிடுறேன்!’ என்று கிளம்பினான்.
கவுசல்யா, அவனை அடக்கி, `நீ கை காலை வாங்கிட்டா அப்பவுக்கு வலி போயிடுமா? ஏன்டா.... ஏன்டா இப்படி எங்களை வதைக்கிறே?’ என்று கரித்துக் கொட்டினாள்.
`நான் என்னம்மா தப்பு பண்ணினேன்?’
`எவனோ கொள்ளையடிச்சா உனக்கென்னவாம்?’
`இப்படி எல்லோரும் இருக்கிறதால்தாம்மா நாடு வீணாப் போகுது, அராஜகம் அதிகமாகிப்போச்சு!’
`ஆமாம் ....நீ தலையெடுத்துதான் அதையெல்லாம் அழிக்கப்போறியாக்கும்! ஒழுங்காய் போய் பிழைக்கப் பார்! ஒரு வேலை தேடிக்கத் துப்பில்லை. இவனெல்லாம் நியாயம் பேச வந்துட்டான்.’
`அம்மா! நான் வேலை தேடாமலா இருக்கேன்?’
`ஆமா... தேடி என்ன பயன்? போகிற இடத்திலும் தகராறு அப்புறம் யார் வேலை தருவா?’
`என்னம்மா? சம்பந்தமில்லாம `முயலுக்கு எத்தனை கால்! உன் தங்கச்சி முடி எத்தனை அடி’ ன்னெல்லாம், கேட்டால் கேட்டுகிட்டு சும்மா இருக்கணும்கிறியா?’
`ஆமா...நீ சும்மாயிருக்க வேணாம்! இப்படியே ஊர் முழுக்க சண்டை போட்டு எதிரிகளைச் சம்பாதிச்சிகிட்டுரு. தெருவுல போறவன் வர்றவனெல்லாம் எங்களை அடிச்சுப் போட்டுட்டு போகட்டும். அப்புறம் எங்களோட சமாதிமேல் நீ நேர்மை –நியாயம் பேசிகிட்டிருக்கலாம்.’
`ஏம்மா...ஏம்மா இப்படிச் சொல்றே? உங்க மேலயும் குடும்பத்து மேலயும் எனக்கு அக்கறையில்லையா?’
`அக்கறையிருந்தா முதல்ல நீ வேலை தேடிக்கணும். இந்த ஊரைவிட்டுப் போயிடணும்.’
`என் பேர்ல இத்தனை வெறுப்பா?’
`ஆமா, பெத்த கடனுக்கு வளர்த்துப் படிக்க வச்சாச்சு, இனி சம்பாதிச்சுப் போடாட்டியும் பரவாயில்லை, உபத்திரவம் கொடுக்காம இருந்தா போதும். இல்லாட்டி எங்களுக்கு மகன் பிறக்கலை, சுதா மட்டும்தான் பிள்ளைன்னு நினைச்சுட்டு இருப்போம்.’
பெற்றவர்களே தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்று அவன் வெந்து நொந்துபொயிருந்தபோ அவனுக்கு ஆறுதல் தந்தது இரண்டு பேர்தான்.
ஒருவன் –மதி. அடுத்தது –அகல்யா. படிக்கும் காலத்திலிருந்தே அவனுக்கு அவள் மீது அன்பு உண்டு. கோபி, படித்தது. அவளது அப்பாவிடம்தான். அவர் நேர்மையானவர். அந்த நேர்மை அவனது மனதில் பதிந்து வாழ்வில் முறைகேடுகளைச் சகிக்க முடியாமல் திண்டாடினான்.
அவன் சோர்ந்துபோய் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் அகல்யாதான் வந்து ஆறுதல் சொல்வாள். அப்போது அவள் பிளஸ் -2 மாணவி.
அவனைப் பார்க்கும்போது அவளுக்குள் மின்சாரம் பாயும்.
`இதுக்கெல்லாம் சோர்ந்துவிடலாமா? விநாயருக்குத் துணையாய் ஆலமரத்தடியில் போய் அமர்ந்திடலாமா?’ என்று அவனுக்கு பின்னால் நின்று கிச்சுக்கிச்சு மூட்டுவாள்.
``ஏய்....உதைபடுவே நீ!’
`பார்த்தீங்களா! மறுபடியும் உதை! எதுக்கு கோபம்?’
`அமைதியா சொன்னா எவன் கேட்கிறான்?’
`கேட்காட்டி போறான்! நீங்க உங்க வேலையைப் பார்க்கிறது!’
`எனக்கு ஏது வேலை?’
`தேடணும், முயற்சிக்கணும்!’
`தேடாமயா இருக்கேன்! விண்ணப்பம் போட வீட்டுல பணம் தரதில்லை. அப்புறம் வேலை எப்படி கிடைக்கும்?’
`சாருக்கு அதான் பிரச்சினையா? இனி கவலை வேண்டாம்! நான் பணம் தரேன்!’
`உனக்கேது?’
`அதைப்பத்தி சார் சிந்திக்க வேணாம், எங்க அப்பாகிட்ட வாங்கித் தருவேன்!’
`உனக்கேன் அக்கறை?’
`எல்லாம் காரணமாதான்!’
`என்ன காரணம்?’
`அதெல்லாம் சொன்னா இந்த மரமண்டைக்குப் புரியாது. அதுவும் இப்போ சுத்தமா புரியாது!’ என்று சிரிப்பான்.
கலகல, வெகுளிச்சிரிப்பு, அந்தக் கள்ளமில்லா உள்ளம், அவனை ஈர்க்கும். மயக்கும். `இந்த வயதில் இவளுக்கு இத்தனை வசீகரமா?’ என வியக்க வைக்கும்.
சொன்னபடியே அவ்வப்போது பணம் தருவாள்.
அகல்யாவின் உதவியாலும், ஊக்கத்தாலும் அவனுக்கு வேலை கிடைத்தது. அதுவும் பக்கத்து நகரத்தில்.
வேலைக்குப் போனால் கோபி மாறிவிடுவான் என்று பார்த்த அம்மாவுக்கு ஏமாற்றம். வேலை கிடைத்தும் கூட வீட்டில் மகிழ்ச்சியில்லை . அவன் இன்னும் அதிகமாக ஊர்க்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினான்.
வேலை முடிந்து வந்தால் பசங்களுடன் சுற்றக் கிளம்பி விடுவான். ஏரிக்கரை, தேநீர்க் கடையில் அமர்ந்து பஞ்சாயத்து பண்ணுவான்.
இது பகையை வளர்த்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வேலைக்கும் உலை வைத்தது.
திரும்பவும் வேலை தேடும் படலம்.
(7)
இருள் பரவியிருந்தது. தெருவில் காரணமேயில்லாமல் எதற்கோ சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
எழுந்து லுங்கியைச் சரி செய்தான், தண்ணீர்ப் பானையைப் பார்த்தான். வறட்சியாக இருந்தது. மணியடிக்க, உதவியாளன் ஓடிவந்து, ``டீயா சார்....? என்றான்.
``முதலில் தண்ணீர்!’
தண்ணீர் வந்ததும் குடித்தான். கண்ணாடியின் முன் போனான். அவன் கன்னத்துத் தாடி அவனுக்கே அருவெறுப்பாய் தெரிந்தது. `இதெல்லாம் தேவையா? இப்போது என்ன நடந்துவிட்டது? எதற்கு இந்தக் கோலம்?’
``என்ன நடக்கவில்லை?’
`எல்லோருக்கும் நான் போகப்பொருள் ஆகிவிட்டேனோ! எனக்கும் எனது உணர்வுகளுக்கும் இங்கு மதிப்பிலையோ! நான் ஓட்டாண்டியாக இருந்தபோது மிதிக்கப்பட்டேன். பணம் வந்ததும் மதிக்கப்படுகிறேன்.
நாளைக்கே பணம் இல்லாவிட்டால் திரும்பத் தூற்றப் படுவேனோ?’
`மதிப்பு-மரியாதை –கவுரவம்-அன்பு –பாசம் –நேசம் –நட்பு-உறவு எல்லாமே பணத்தின் அடிப்படையில்தானா? பணம்தான் எல்லாவற்றுக்கும் பாலமா?
`அதுதான் பிரதானம் என்றால் நான் ஏன் அதை வெறுக்க வேண்டும்?’
`எனக்குத் தேவை நிம்மதி. சுற்றியிருப்பவர்களின் மகிழ்ச்சி!’
`இல்லை –எக்காரணம் கொண்டும் நான் அவற்றை இழக்கக்கூடாது!’ முடிவெடுத்தான். உடை மாற்றினான். பெட்டியை எடுத்தான்.
அறையைப் பூட்டி வெளியே வந்தான். தெருவில் இறங்கி ஆட்டோ பிடித்து நெரிசலில் காணாமல் போனான்.
(8)
இரவு ஒன்பது மணிக்கு நண்பன் மதி, விடுதிக்கு ஆட்டோவில் வந்து இறங்கினான். மாடிக்கு போனான். அந்த அறையில் பூட்டு தொங்கியது.
`கோபி இல்லையா....?’ என்று கேட்டான்.
`அவர் வெளியே போனார்.’
`எப்போ வருவார்?’
`தெரியலை சார்...நீங்க யாரு...?’
`நீ புதுசா...?’ என்று அவனது வாயை அடக்கிவிட்டு சோபாவில் அமர்ந்து, அதில் கிடந்த பத்திரிகையைப் புரட்டினான்.
கோபி வர இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. மதி அவனைப் பாய்ந்து பிடித்து,``இது உனக்கே நல்லாயிருக்கா ...?’’ என்று கடிந்தான்.
``எது..?’’
``இப்படி யாருக்கும் தெரியாம ஊரை விட்டு வந்து அறை எடுத்து .... இது தேவையா...?
``யாருக்கும் தெரியாதுன்னு எப்படிச் சொல்ல முடியும்? உனக்குத் தெரிஞ்சிருக்கே!’’
``தெரிஞ்சு என்னடா பயன்? செல்போனில் பேசலாம்னு பார்த்தால் எடுக்கமாட்டேன்கிறாய்!’ ’
``தொல்லை வேணாம்னுதான்!’’
``கோபி! நானும் உனக்கு தொல்லையா போயிட்டேனா? ஏன்டா இப்படி நடந்துக்கிறே? நீ ஊரில் இல்லைன்னதும்... எங்கே என்கேன்னு....?’’
``எல்லோரும் கேட்கிறாங்களா.....?’’ என்று நாற்காலி எடுத்துப் போட்டான்.
``எல்லோரும் இல்லேன்னாலும் பஞ்சாயத்துத் தலைவரும், தலைமை ஆசிரியரும் கேட்கிறாங்களே!’’
``ரொம்ப மகிழ்ச்சி, அவங்களுக்காவது என்னை நினைக்க தோணுச்சே! சரி ...நீ சாப்பிட்டயா...?’’
``இல்லை ..உனக்காகக் காத்திருந்து, காத்திருந்து கொசுக்கடிதான் மிச்சும்! உனக்கு வேறு அறையே கிடைக்கலியா....?
``இது போதும்!’’ என்ற கோபி வெளியே போனான்.
``டிபன் வாங்கிவா!’’ என்று ஒரு சிறுவனை அனுப்பினான்.
``கோபி! உன்னை நினைச்சா எனக்கு பயமாயிருக்குடா....அகல்யாவை நீ எத்தனை நேசிச்சேன்னு எனக்குத் தெரியும். அதுக்காக? தாடி, சோகம் இதெல்லாம் தேவையா...?
``இது அதுக்காக இல்லை!’’
``அப்புறம்?’’
``உனக்கும் சொன்னபுரியாது. எனக்குள்ளேயே சில விசயங்கள் அடங்கிக்கிடக்கு. அதை ஆத்திக்க அவகாசம் வேணும்.’’
``அதுக்கு ஏன் உன்னை வருத்திக்காணும்? நல்ல வேலை! சம்பளம் இருக்கு. இவ போனா போகட்டும் இன்னொருத்தி வருவா!’’ என்று ஆறுதல் சொன்னான்.
அதற்குள் சாப்பாடு வந்தது. மதி சாப்பிட்டபடி, ``இவ்வளவு நேரம் உனக்கு வெளியே என்ன வேலை?’’ என்றான்.
``உம் ...? அவசியம் நீ தெரிஞ்சுக்கணுமா....?
``சரி ....நீ வந்த காரணத்தைச் சொல்லு?’’
மதி,சட்டெனக் கண் கலங்கினான். ``கோபி! எனக்கு மனசு கேட்கலே ...அகல்யா கிடைக்கலேன்னதும் நீ மனம் வெறுத்து மது –மாதுன்னு கிளம்பிட்டியோன்னு சந்தேகம், அதான் வந்தேன்’’ என்றவன், எழுந்து இலையை சுருட்டி கூடையில் எறிந்து கை கழுவினான்.
``இப்போ எனக்கு திருப்தி , நீ வீணாப்போகலே, அப்படியேதான் இருக்காய் சரி, கிளம்பு –காலையில ஊருக்குப் போகலாம்.’’
``நான் வரலே’’
`` ஏன்...ஊருக்கு வந்தால் அகல்யாவோட நினைவு உன்னைக் கஷ்டப்படுத்துமா...?
``இல்லை மதி! அகல்யா பறிபோனாதா நான் நினைக்கலே, அவ இந்த நிமிடம் வரை எனது உடைமைதான்!’’
``என்னடா சொல்றே ..அவளுக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்!’’
``இன்னும்தான் ரெண்டு மாசம் இருக்கே! நீ பேசாம படு....எனக்குத் தூக்கம் வருது!’’ என்று கட்டிலில் சரிந்தான், கோபி.
தூக்கம் வருகிறது என்று சொன்னானே தவிர,அவனால் தூக்கத்தை வரவழைக்க முடியவில்லை.
கண்களை மூடினால் அகல்யா சிரித்தாள், அவளது மென்மை! புன்னகை! அவளுடன் பழகின பழைய சம்பவங்கள் திரும்ப திரும்ப மனதில் வந்து மின்னல் அடித்தன.
(9)
முன்பு ஊரில் இருக்கும்போது –கோபிக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்காது வேலையை இழந்து வருமானம் இல்லாமல் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க முடியாது.
அம்மா –எதையாவது முணுமுணுப்பாள், இவன் பேரில் இருக்கிற கோபத்தைச் சுதா பேரில் காட்டுவாள். ``இந்த வீட்டுல என் பேச்சை யார் கேட்கிறா!’’ என்று பசுமாட்டை அடிப்பாள்.
அம்மாவுக்கு அவன் பேரில் அன்பில்லாமலில்லை. அளவுக்கதிகமான அன்பே ஆபத்தாகிவிடுகிறது. பிள்ளையின் எதிர்காலம் பாழாய்ப் போகுமோ என்கிற கவலையின் வெளிப்பாடு இது. அவன் சதா பொதுகாரியம் –பிறருக்கு உதவி எனத் திரிந்து சொந்தத் தேவைகளை மறக்கிறான். அவனது எதிர்காலத்திற்கு வேண்டிய வசதியையும் வாய்ப்பையும் தேடிக்கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம்.
`பொதுக்காரியமெல்லாம் செய்றது சரிதான் – நாளைக்கு ஒரு கஷ்டம்னா திரும்பிப் பார்க்க ஆள் இருக்காது’ என்று எச்சரிப்பாள்.
`எல்லோருமா அப்படியிருப்பார்கள்? எனக்கு உதவி செய்யவும் யாராவது வருவார்களம்மா...’
`நினைச்சுகிட்டே இரு. உதவி பண்ண மனசு இருந்தா மட்டும் போதாது. வசதி வேணும். அவங்க அவங்களுக்கு அவர்களுடைய வேலையே மூச்சு மூட்டும்போது, அடுத்தவர்களைக் கவனிக்க எங்கே நேரம்? வீண் தர்க்கம் வேணாம், பேசாம பிழைப்பைப் பார்!’ என்று விரட்டுவாள்.
அவனால் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியே வந்து விடுவான் இரவில் கூட தாமதமாக வீட்டுக்குப் போவான் சாப்பாடு போடும்போது அம்மாவின் அர்ச்சனை கிடைக்கும்.
`நேரத்துக்கு வந்து சாப்பிட முடியாதா? நான் தூக்கத்தை விட்டுட்டுக் காத்திருக்கணுமா?’
அவளது கேள்வியில் உள்ள நியாயம் அவனைச் சுடும். வேலை இல்லை என்று குத்திக் காட்டுவது அவளது நோக்கம் இல்லை என்றாலும் கூட அதுதானே உண்மை?.
வீட்டிற்கு எந்தப் பயனும் இல்லாமல், சாப்பாட்டுக்காக மட்டும் வீட்டுக்குப் போகவேண்டுமா? என்று சில நாட்களில் கோவில் மண்டபத்திலே படுத்துவிடுவான்.
கோவில் மண்டபத்தில் தூக்கம் என்பது கிராமத்தில் ஒன்றும் புதிய விசயமில்லை. காற்றோட்டமாய், ஊர்க் கதை பேசி, தூங்குவதற்கு அங்கே பெரிய கும்பலே காத்திருக்கும்.
இவன் அங்கே தூங்குகிறான் என்று தெரிந்ததும் அகல்யா ஓடிவருவாள்.``சாப்பிட்டீங்களா....’’ என்பாள்.
``உம்..’’ என்று தாடையைச் சொறுவான். வயிற்றுக்குள் பசி கிள்ளும். அதைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.
`ஏன் பொய் சொல்றீங்க?’ என்று முறைப்பாள்.
`நான் பொய் சொல்லலியே?’
`உண்மையா சாப்பிட்டீங்களா?’
`ஆமா.’
`எப்போ?’
`மதியம்.’
`நான் கேட்டதும் உம் கொட்டினீங்க!’
`சாப்பிட்டேனான்னு கேட்டாய். எப்போன்னு கேட்கலியே.’
`ஓ...அப்படிக் கேட்கணுமாக்கும்?’ என்று செல்லமாய் கன்னத்தில் இடிப்பாள்.
அது இனிக்கும். சுகமாக இருக்கும். கொஞ்ச நேரத்தில் சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பாள். அல்லது அவளது அப்பா எடுத்து வருவார்.
அவனுக்குச் சங்கடமாயிருக்கும். `அய்யோ...நீங்க எதுக்கு? உங்களுக்கு எதுக்கு சிரமம்?’
`எனக்கு எந்த சிரமமுமில்லை. சாப்பிடு ஒரு வேலையில்லாப் பட்டதாரியின் கஷ்டம் எனக்குப் புரியும் மனசுல எதையும் வச்சுக்காம சாப்பிடு!’ ஒரு வேலையில்லாப் பட்டதாரியின் கஷ்டம் எனக்குப் புரியும். மனசுல எதையும் வச்சுக்காம சாப்பிடு!’
ஒரு சமயம் அகல்யா சாப்பாடு பற்றிக் கேட்க, `எனக்கு வேணாம்’ என்றாள்.
`ஏன் துரைக்கு என்ன கோபமா?’
`ஆமா, நான் கோபமாதானிருக்கேன். சாப்பாடு எதுக்கு வாத்தியார்கிட்ட அனுப்புறே? உங்கப்பா உனக்கு வேலைக்காரரா?’
`ஏன் ...அவர் கொண்டுவந்தா என்னவாம்? பசிக்குச் சோறுதானே முக்கியம்?’
`என் பசி போக்க நீ யார்? உனக்கென்ன அக்கறை?’
`ஏன் ... எனக்கு அக்கறை இருக்ககூடாதா?’ என்று அவனது கவனத்தைத் திருப்பி தன் கண்களால் கவருவாள். அன்பெனும் அம்பு வீசுவாள். அவள் இமைகள் படபடக்கும்.
உடன் சுதாரித்துக்கொண்டு, `அதனை அக்கறை இருக்கிறவங்க. அவங்களே சாப்பாடு கொண்டுவரணும்.’
`ஓகோ...அப்படிப் போடு அரிவாளை! நோக்கம் அதுதானா? ஆசை! தோசை!’
`எங்கே இன்னொருவாட்டி சொல்லு!’
அவள் முதல் தடவை சைகையோடு சொல்வாள். அடுத்த முறை வசனம் மட்டும்தான் வரும். அவளது குறும்புப் பார்வையின் முன் வார்த்தை பிசிறும்.
`இன்னொருவாட்டி...’
`ஊகூம்...’
`என்ன...என்னாச்சு?’
`அக்கம் பக்கம் பார்க்கறாங்க.’
`பார்க்கட்டும்! அகல்யா நான் சாப்பிடாம இருக்கிறதே உன் கையால் சாப்பிடணும்னுதான்!’
`அதுக்கு என்னைக் கட்டிக்கணும்!’
`கட்டிக்கிட்டாப் போச்சு’ என்று அவள் கையைத் தொட முற்படுவான். அவள் பட்டாம்பூச்சியாய்ப் பறந்து விடுவாள். அந்தச் சிரிப்பு... அந்த நேரம் கன்னத்தில் விழும் குழி, அவனது நெஞ்சில் விழுந்த ஆழி!
அவர்களுடைய சந்திப்பைப் பற்றி முதலில் ஊரில் அத்தனை பேச்சு எழவில்லை. பிறகு பேச்சு புகைந்து, வாத்தியார் அதைப்பற்றிக் கவலைபடவில்லை. யார் யாரோ அவனைப் பற்றிப் பற்ற வைத்தனர்.
அவன் வேலையில்லாதவன் முகடு. சண்டைக் கோழி அது-இது என்று சொன்னார்கள்.
அவர் `பரவாயில்லை. அவன்தான் என் மருமகன் என்று எழுதியிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? நடக்கிறபடி நடக்கட்டும்’ என்று அவர்களின் வாயை அடைப்பார்.
அவரின் அந்தப் பெருந்தன்மையும், கோபியின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையும் அவனை நெகிழச் செய்யும். அந்த நம்பிக்கைக்கு எந்தவித இடையூறும் நேர்ந்து விடாதபடி அவன் கவனமாக அகல்யாவுடன் பேசுவான் பழகுவான்.
அவனது வீட்டைப் பொறுத்தவரை –கோபி `தண்ணி தெளிக்கப்பட்டவன்!’ வேலையில்லாமல் –சொரணை இல்லாமல் சுற்றுபவனுக்கு யாரும் பெண் தரமாட்டார்கள். யாரும் தராததற்கு வாத்தியார் மகள் பரவாயில்லை. சுமாரான வசதி உண்டு. அகல்யாவும் படித்திருக்கிறாள். பண்பானவள். இவனுக்கு அவள் கிடைத்தால் –அது அவனது அதிஷ்டம்! என நினைத்தார்கள்.
அதை ஏன் நாம் தடுக்க வேண்டும் என்று எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர்.
வாத்தியார் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தால் நமக்கும் செலவு மிச்சம் என்பதும் அவர்களது கணக்காக இருந்தது.
இதைப்பற்றியெல்லாம் கோபி கவலைப்படவில்லை. பந்தபாசம் மறந்து வீட்டினர் நடந்துகொள்ளும் விசயங்களில் உடன்பாடில்லாவிட்டாலும்கூட அவன் அவற்றைப் பெரிது படுத்த விரும்பவில்லை.
குடும்பம் என்றிருந்தால் கருத்து பேறுபாடுகள், மனத்தாங்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் போக போக சரியாகிவிடும்.
வேலைவெட்டியில்லாத கோபிக்கு அமையப்போகும் திருமணமும் ஊரில் புகைச்சலை ஏற்படுத்திற்று. இந்தத் திருமணம் நடந்துவிட்டால் அப்புறம் அவன் ஊரைவிட்டே போகமாட்டான் நமக்கு இடைஞ்சலாய் இருப்பான் என்று அவனது எதிரிகள் சதிச் செயலில் இறங்கினர்.
ஒரு முறை வெளியூர் போய்விட்டு பேருந்துக்காகக் காத்திருந்தபோது ஒரே கூட்டம்.
பெட்டியுடன் வேகமாய் வந்த ஒருவர். `இதைக் கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா? என்று கெஞ்சும் பாவனையில் சொன்னார்.
`நானும் பஸ்சுக்காகத்தான் காத்திருக்கேன். பஸ் வந்தால் உடனே போயிடுவேன்.’
`பிளீஸ் சார்... வயித்துல ஒரே கலவரம்!’ என்று அவர் நெளிந்தார்.
பாவமாயிருந்தது. மறுக்க முடியவில்லை. வலியப் போய் யார் யாருக்கே உதவி செய்கிறோம். ஒருவர் சின்ன உதவி கேட்கிறார். இதைச் செய்யாவிட்டால் எப்படி என்று சம்மதித்தான்.
`முன்பின் தெரியாத தன்னிடம் பெட்டியைக் கொடுத்து விட்டு போகிறார் என்றால் அவர் அப்பாவி! சரி, வரட்டும்’ என்று கோபி காத்திருந்தான்.
பத்து நிமிடமாயிற்று...பதினைந்து ...இருபது... ஊகூம் ...ஆளையே காணோம்.
இரண்டு பேருந்துகளைத் தவறவிட்டான். `இந்த ஆளுக்கு என்னாயிற்று? கழிவறையிலேயே குடியிருக்கிறானா? எதற்கும் போய் பார்க்கலாம்’ என்று அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்தபோது-
திடீரென அலறிகொண்டு போலீஸ் ஜீப் வந்து நின்றது.
அதிலிருந்து காவலர்கள் சட்டென குதித்து சொல்லி வைத்ததுபோல அவனை நோக்கி ஓடிவந்து, ``நீதானே கோபி?’ என்றனர்.
`ஆமாம் சார்’ என்று மிரண்டான்.
அவ்வளவுதான், `ஏறுடா!’ என்று அவனையும் பெட்டியையும் அள்ளிப் போட்டுக்கொண்டுபோய் `லாக்-அப்’பில் தள்ளினர். கோபிக்கு எதுவும் விளங்கவில்லை. `நான் என்ன தப்பு பண்ணினேன்? என்னை எதுக்கு...?’ என்று அவன் எச்சில் விழுங்கினான்.
`எதுக்கா...ராஸ்கல்!’ என்று ஓங்கி அறைந்து பெட்டியைத் திறந்தனர். உள்ளே அழுக்குச் சட்டையுடன் கட்டுக்கட்டாய் பண நோட்டுகள்!
உடன் போலீஸ்காரர், `இதோ சார்! கொள்ளை போன பணம் சிக்கிருச்சு! நமக்குக் கிடைச்ச தகவல் சரிதான்!’ என்று குதூலிக்க –இன்ஸ்பெக்டருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர் மளமளவென மேலிடத்திற்குத் தெரிவித்தார்.
`சார்...இது என் பெட்டியில்லை.’
`ஆமா. மாட்டிக்கிட்டா அப்படித்தான் சொல்வீங்க, வாயை மூடுடா!’ என்று கோபியை அடித்து அமர்த்தினர்.
சற்று நேரத்தில் அந்தச் செய்தி மாலைப் பத்திரிகைகளில் படத்துடன் சுடச்சுட வெளியாயிற்று.
ஊரில் ஒரே புகைச்சல்! வீட்டில் ஒரே அமளியாயிற்று.
`இவனால் நமக்குத் தலைகுனிவு! வேலையில்லாட்டியும் பரவாயில்லை. ஒழுங்காய் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே! எதற்காக கொள்ளையடிக்கப் போக வேண்டும்?
இவனைப் பெற்றதற்கு கல்லைப் பெற்றிருக்கலாம். இவனால் இனி என்னென்ன பிரச்சினைகள் வருமோ? சுதாவிற்கு வரன் கிடைக்காமல் போய்விடுமோ? கலங்கினார்கள்.
என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டினர் கதவடைத்து உள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.
அகல்யாவிற்கும் வாத்தியாருக்கும் அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை. கோபி அப்படிப்பட்டவன் இல்லை என்பது உறுதியாக தெரிந்தால், அந்தக் காவல் நிலையத்திற்குப் போய் அவனைச் சந்தித்து விபரம் கேட்டனர்.
அதை இன்ஸ்பெக்டரிடம் தெரிவிக்க, அவருக்குத் தர்ம சங்கடமாயிற்று.
ஒரு அப்பாவியைப் பிடித்து அவசரப்பட்டு செய்தி பரப்பியாயிற்று. இனி அதில் இருந்து பின்வாங்கினால் சிக்கல் என்று யோசித்தார்.
`இல்லை.. உங்கள் தவறால் ஒரு அப்பாவியின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது!’ என்று வாத்தியார் கெஞ்சினார், ஆனாலும், பலனில்லாமல் போய்விட்டது.
இரண்டு வாரம் கோர்ட்டுக்கு அலைந்து ஜாமீன் பெற்றார்கள்.
அப்புறம் விசயம் அடங்கி மறுக்கப்பட்டதும், மூன்று மாதம் கழித்து கோபி நிரபாரதி என்று தீர்ப்பு வந்தது. அதன் பிறகு ஊர் திரும்ப மனமில்லை.
மனமொடிந்து போயிருந்த கோபிக்கு அப்போதும் அகல்யாதான் ஆறுதலாக இருந்தாள். அவனது மனதைத் தேற்றினாள். துபாய்க்கு அனுப்ப, தெரிந்தவர் மூலம் விசா பெற்றாள்.
அதுவரை கிட்டே வராத அப்பாவும், அம்மாவும் மனம் மாறி வந்தனர். ``எங்களை மன்னிச்சிடு கோபி! நாங்க உன்னைத் தப்பா பேசிட்டோம்! எதையும் மனசுல வச்சுக்காதே!’’ என்று உருகினபோது அவனது மனதும் கரைந்துபோயிற்று.
``எல்லாம் உன் ஜாதக தோஷம். குருக்களிடம் கேட்டோம். உன் சனி தசை மாறி குருபலன் தொடங்கிடுச்சாம். இனி நீ சுபிட்சமாய் வருவாய். கோபி! நீ நல்லா வரணும். எங்களுக்கு உன் சம்பாத்தியம் வேணாம். ஊரைவிட்டுப் போய் நல்லா இருக்காய்னு கேள்விப்பட்டால் போதும்’’ என்று அவளை அனுப்பி வைத்தனர்.
இரண்டு ஆண்டு கழித்து சென்ற முறை விடுப்பில் வந்தபோது பழைய விஷயங்கள் மறக்கப்பட்டு அவன்பேரில் ஊரில் கரிசனம் பிறந்திருந்தது. எல்லாமே தலைகீழ் மாற்றம்.
அது தான் உலகம்!
சென்ற முறை விடுப்பில் வந்தபோது கோபிக்கும் அகல்யாவிற்கும் முன் அனுமதி கொடுத்தது போல எந்தப் பிரச்சினையுமில்லாமல் பழகினர். வெளியே சுற்றினர்.
`கல்யாணம் பண்ணிக்கப் போகிறவர்கள்தானே’ என்று வம்பு பேசும் ஊர் வாயும்கூட அடக்கியே வாசித்தது.
அப்போது அகல்யா, `கல்யாணம் முடிஞ்சு என்னை துபாய்க்கு அழைச்சுப் போவீங்களா?’ என்று கேட்டாள்.
`ஏன் அதுவரை காத்திருக்கணும். இப்போதே வாயேன்!’ என்று சிரித்தான்.
`இப்போ வந்து...எதுக்கு? கல்யாணம் பண்ணிக்க முடியுமா?
`ஏன் முடியாது? தூதரகத்துல வச்சு தாராளமாய் பண்ணிக்கலாம். அங்கே துபாயிலே வேலை பார்க்கிற இந்தியர்கள் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிறாங்களே!’
`அது எப்படி...சட்டப்படி செல்லுபடியாகுமா?’
`தூதரகத்துல நடக்கும்போது அது அதிகாரபூர்வம் தானே! அதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. கல்யாணம் பண்ணிக்க விரும்புபவர்கள் மனுக் கொடுக்கணும். அதைத் தூதரகம் புகைப்படத்துடன், `இவர்கள் திருமணம் செய்து கொள்வதில் யாருக்காவது ஆட்சேபம் உண்டா?’ என்று கேட்டு அறிவிப்பு போடும்.’
`அப்புறம்...?’
இரண்டு வாரங்களுக்குள்ளே எந்தவித மறுப்பும் வரவில்லை என்றால் திருமணம் செய்து வைத்து பாஸ்போர்ட்டுல மனைவி பெயரைச் சேர்த்துவிடுவாங்க.’
`எதுக்கு?’
`எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான்! நம்ம ஆளுங்க ஊர்ல ஒண்ணு வச்சுட்டு துபாயிலேயும் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது இல்லே. அதுக்குத்தான்!’
கோபி அந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு அப்போதே மறந்துவிட்டான். இரண்டு வாரம் கழித்து அகல்யா, மெல்ல அவனிடம்`பாஸ்போர்ட் எப்படியிருக்கும்? கொடுங்க பார்க்கணும்!’ என்றாள்.
`என்ன பார்க்கப் போகிறாய்?’
`சும்மாதான்..ஐயே! வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கட்டபோகிறாய். பாஸ்போர்ட்டு கூட இன்னும் பார்த்ததில்லையான்னு தோழிகள் கிண்டல் பண்ணுறாங்க!’ என்று சொல்லி அவனது பாஸ்போர்ட்டை வாங்கிப் புரட்டிப் பார்த்தபின்தான் திருப்தியடைந்தாள்.
`இப்போ என்ன தெரிஞ்சுக்கிட்டாயாம்?’
`நிறைய.’
`ஒண்ணே ஒண்ணு சொல்லேன்!’
`சொல்லட்டுமா? உங்களுக்கு இன்னமும் திருமணம் ஆகலே!’
`ஆகா.... பயங்கரமான கண்டுபிடிப்பு! அது உனக்கு எப்படி தெரியுமாம்?
`அதான் பாஸ்போர்ட்டுல மனைவி பெயர் இல்லையே! இனி நான் என் தோழிகளை விளாசப் போறேன்! எங்காளு மேல எப்படி நீங்க சந்தேகப்படலாம்னு!’
(10)
ஒரு வாரம் கழித்து-
மதியிடமிருந்து தொலைபேசி வந்தது. அவன் ஓடி வந்து மூச்சுவாங்கி ஆதங்கத்துடன்,``கோபி! உனக்கு விசயம் தெரியுமா?’’ என்று படபடத்தான்.
`என்ன....?
``அகல்யாவுடன் தொடர்ந்த காதல் முறிவுக்கு உன் துபாய் கட்டுக்கதை மட்டும் காரணமல்ல. எனக்கு இப்போதான் உண்மை தெரிஞ்சது. எல்லாம் உங்கப்பாவும், அம்மாவும் செய்த சதி. அவர்களே உனக்கு துபாய் பெண்ணுடன் கல்யாணம் முடிந்து விட்டதுன்னு கதை கட்டிவிட்டு நகரத்து நகைக் கடைக்காரரின் பெண்ணை உனக்குப் பேசி முடிச்சிருக்காங்க! அது இப்போதான் வெளியே வந்திருக்கு!’’
`அப்படியா...!’’
`ஆமாம், அதுக்கு பிரதிபலனாதான் இந்த பங்களா உருவாகுது. நீ துபாய்ல இருக்கிறதால இதுக்கு நீதான் பணம் அனுப்பறேன்னு ஊர் முழுக்க நம்பிகிட்டிருக்கு. ஆனா நகைக்கடை காசிநாதன்கிட்ட பெரிய தொகை சீதனம் வாங்கிதான் இதைக் கட்டுறாங்க. பணம்கூட பரவாயில்லைடா.. அந்தப் பொண்ணைப் பற்றிதான் என் கவலை, அதோட நடத்தை சரியில்லையாம். நான் போய் விசாரிச்சப்போ பகீர்ன்னு ஆயிடுச்சு, அகல்யா வேணாம்னா வேறு நல்ல பெண்ணா பார்க்கலாமே! பணத்துக்காக உன் வாழ்க்கையைக் காவு கொடுக்கணுமா?’’
``அது மோசமான பொண்ணுன்னு உனக்கு எப்படித் தெரியும்?’’
``தெரியும். நீ இப்படி கேட்பாய்ன்னுதான் –திருச்சிக்கு நேராய் போய் அக்கம் பக்கமெல்லாம் விசாரிச்சுட்டேன். கெட்டுப் போனவள் என்றால் சும்மா இல்லை... கர்ப்பம் வரை போயிருக்கு. அதுவும் ஒரு தடவையில்லை...இரண்டு தடவை! கருக்கலைத்த ஆஸ்பத்திரியிலேயே எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாங்க... சொல்லுடா! உனக்கு இப்படி ஒரு பெண் தேவையா....?’’ மதி பத்த வைத்துவிட்டு தொலைபேசியை வைத்தான்.
உடன் பழைய கோபி, விசுவரூபம் எடுத்து மனதிற்குள் தீயை உமிழச் தொடங்கினாள், மனசாட்சி, `அடக்கு’ ஆவேசம் வேணாம். வன்முறை வேணாம்’ என்று அடக்கிற்று.
நகைக்கடை காசிநாதன், கைதேர்ந்த வியாபாரி என்று முன்பே கோபி கேள்விப்பட்டிருந்தான். அவனது வியாபாரத்தை எங்கள் வீட்டிலும் காட்டியிருக்கிறான். என் பெற்றோருக்கு ஆசைகாட்டி, வீழ்த்திவிட்டான்.
அவர்களும் –இவனது பேச்சை நம்பி கெட்டுப் போனவளையும் மருமகளாக ஏற்று சம்மதித்திருக்கிறார்கள்! மகனைவிட, திடீர் வசதி, கிராமத்தில் பங்களா என்கிற ஆசைகள், அவர்களது கண்களை மறைத்துவிட்டனவோ?
எதற்கும் அவர்களை ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்க-
``ஆமாப்பா....’’
``அவர் எதுக்கு நமக்குப் பணம் தரணும்?’’
``அது வந்து ....’’ என்று அப்பா தடுமாற கவுசல்யா, `நீங்க சும்மாயிருங்க!... என்று ரிசீவரை வாங்கி, பேச்சைத் தொடர்ந்தாள். ``நகைக்கடை காசிநாதனுக்கு ஏகப்பட்ட வியாபாரம்! சொத்து, நகை நட்டுன்னு இருந்து என்ன பயன்? கவனிச்சுக்க ஆண் வாரிசில்லை...ஒரே பொண்ணு... தேவதை மாதிரி அழகா இருப்பா....’’
``அவர் பொண்ணை இங்கே எதுக்கு அனுப்பணும்?’’
``நல்லா கேட்டே போ! உனக்குக் கட்டிவச்சா அப்புறம் அவ இங்கேதானே இருக்கணும்....’
``நான் ..’
``கோபப்படாதேப்பா.... கல்யாணத்துக்கப்புறம் மருமகள் எங்ககூடதான் இருக்கணும்னு நான் உறுதியாச் சொல்லிட்டேன். சம்மந்திக்கு உன்னை வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்கணும்னு ஆசை. நான் ஒத்துக்கலே .. எங்களுக்கு ஒரே பையன்னு மறத்துட்டேன்....’’
கோபி வாயடைத்து நின்றிருந்தான்.
``ஆமா, கோபி.உன் நன்மைக்குத்தான். உனது எதிர்காலம் நல்லா அமையணும்னுதான். இந்த ஒட்டு வீட்டுலயும், சந்துலயும் வாழணும்னு நமக்கென்ன தலையெழுத்து! நீ அதிஷ்டக்காரன்! ராஜாவாட்டம் வாழவேண்டியவன்! அதையெல்லாம் யோசிச்சுதான் நாங்க இந்த முடிவுக்கு வந்தோம். இந்த பங்களா –வயல்- பண்ணைவீடு –எல்லாம் எங்களோட கனவு. இதை நீ நிச்சயம் நிறைவேத்துவேன்னு நம்பறோம். நீ நல்லவன் எங்களோட பேச்சைத் தட்டமாட்டேன்னு தெரியும்! என்ன சொல்றே...?
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. வார்த்தைகள் எதுவும் வரவில்லை. `எல்லாவற்றையும் முடிவு பண்ணி செயல்படுத்தி, ஒப்பந்தம் போட்டு பாதி கிணறு தாண்டும் நிலையில் நான் என்ன சொல்ல முடியும்?’
அவனுக்குக் கோபம் கோபமாய் வந்தது.
இதுவே பழைய கோபியாக இருந்திருந்தால் –நடப்பதே வேறு, இது புதிய கோபி, பக்குவம் –நாகரிகமும் வந்துவிட்டால், மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
தீயை கண்டு பொங்கி எழுந்து, துவம்சம் பண்ணின காலம் ஒன்று இருந்தது.
அது பழைய கதை. புதிய அத்தியாயத்தில் நேர்மை –நாணயம் வேண்டும் என்று நினைக்கும்போது இது என்ன சோதனை!
``கோபி! இது எங்க கவுரவப் பிரச்சினை. சம்பந்திகிட்ட கைநீட்டி பணம் வாங்கியாச்சு. வாக்கு கொடுத்தாச்சு. இனி-இது இல்லேன்னு ஆச்சுன்னா அப்புறம் எங்களை நீ உயிரோடு பார்க்க முடியாது! ஆமா சொல்லிவிட்டோம்!” என்று தொலைபேசியை வைத்தார்கள்.
(11)
மாக்கோலம், வாசலுக்கு அழகைத் தருகிறது. எறும்புகளுக்கு உணவளிக்கிறது. பெண்களின் கலை உணர்வை வளர்ப்பதுடன், அதிகாலையில் எழுந்து செயல்பட வேண்டும் என்கிற சுறுசுறுப்பையும் தருகிறது.
இந்தக் கோலம் போடுகிற வேலை மட்டும் இல்லாவிட்டால் சுதா, காலை எட்டு மணி வரை படுக்கையிலேயே கிடப்பாள்.
அன்று அவள், பனிக்காக தலையில் முண்டாசு கட்டி - வாளியும், துடைப்பமும் அருகில் காவலுக்கு இருக்க –ரோஜாப்பூக் கோலம் போட்டு எழுந்து அழகு பார்க்கும் போது, `சுதா! இன்னுமா முடியலே?’’ என்றாள், கவுசல்யா.
``இதோ ஆச்சும்மா!’’ என்று தாவணியைச் சரி பண்ணிக் கொண்டு வாளியை எடுத்து சந்து வழி நடந்த போது அறைக்குள் சென்ற பார்வையை அவளால் தவிர்க்க முடியவில்லை.
உள்ளே கட்டிலில் முழு உடலையும் போர்த்தியபடி ஒரு உருவம் மறைந்திருந்தது. பின்பக்கம் போனதும், கிணற்றடியில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா, `உங்க அண்ணன் என்ன ஆனான்? போய் எவ்வளவு நாள் ஆகுது? இன்னும் காணலே .....? என்று கவலைப்பட்டாள்.
``மெல்ல பேசும்மா..வந்திருக்கிற விருந்தாளியோட காதுல விழப்போகுது!’’
``இது யாரோ –எவரோ –வந்து நாலு நாள் ஆகுது. உங்க அண்ணனுக்கு கொஞ்சன்னாலும் பொறுப்பிருக்கா? அந்த நகைக்கடைக்காரரும் பணம் அனுப்புறேன்னு சொல்லிவிட்டு அனுப்பலே!’’ ’’
``அதுக்கு அண்ணன் என்ன பண்ணுமாம்?’’
``அவன் இருந்தா... என்னாச்சுன்னு பார்த்துவர அனுப்பலாமே!’’
``அண்ணனுக்கு என்ன பிரச்சினையோ!’’
``என்ன பிரச்சினை...? எனக்கென்னவோ பயமாயிருக்கு சுதா!’’
``என்னம்மா...?
``பழைய குணங்கள் அண்ணனுக்குத் திரும்ப வருதோன்னு!’’
``ஏன் ...வந்தா என்னவாம்? இதற்கு முன்பும் அண்ணன் யாரையும் கெடுத்ததில்லை. யார் பொருளுக்கும் ஆசைப்பட்டதில்லை. அண்ணனோட சேவை மனப்பான்மையும் தயாளகுணமும் வேறு யாருக்கும் வராதும்மா...!’’
``என் பயத்துக்கு காரணமே அதுதாண்டி! முன்பு அவன் கையில் எதுவுமில்லை. ஆனா இப்போ சம்பாதிக்கிறான். கையில் பணம் வச்சிருக்கும்போது யாராவது கேட்டால் தூக்கிக் கொடுத்து ஊதாரித்தனம் பண்ணிடுவான். அது மட்டுமில்லாம –சம்பந்தி வீட்டுக்குப் போய் பார்க்கணும்னு தோணுச்சா அவனுக்கு? அது என்ன மரியாதை? அதை மனசுல வச்சுகிட்டுதான் அவர் பணம் அனுப்பாம இருக்காரோ என்னவோ! கட்டிடத்துக்கு கம்பிக்கும் சிமெண்டுக்கும் பாக்கி நிக்குதுன்னு மேஸ்திரி சொல்லிவிட்டுப் போறான்!’’
``அம்மா! எப்போ பார்த்தாலும் உனக்குப் பணம்! பணம்தானா? போய் காபி போடு...விருந்தாளி எழுந்திடப் போறார்!’’ என்று சுதா, விரட்டினாள்.
அவள் விருந்தாளி என்று சொன்னது –குமரேசனை.
அவன் கோபியின் நண்பனாம். துபாயில் பணி புரிந்தவனாம். இருபத்தெட்டு வயதுதான் இருக்கும். மாநிறம் என்றாலும் கூட அவனிடத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்தது. அவனைப் பார்க்கும்போது உள்ளுக்குள் அவளுக்கு படபடப்பு. கண்கள் அலைபாயும்.
குமரேசன், அந்த அறையைவிட்டுத் தேவையில்லாமல் வெளியே வருவதில்லை. ஏதாவது படித்துக் கொண்டிருப்பான். அல்லது டி.வி.பார்ப்பான். அவள் பக்கம் நாட்டம் காட்டுவதில்லை. அதுவே அவளுக்கு ஏமாற்றமாயிருந்தது.
வயசுக்கு வந்த பெண் வீட்டிலிருக்கிறாள். அலங்கரித்துக் கொண்டு வளையவருகிறாள். மல்லிகைப்பூ சூடி மணக்க வைக்கிறாள். கொலுசுக் கால்களால் இசைக்கிறாள். அவனது கவனத்தைக் கவர –அம்மாவிடம் சப்தமாகப் பேசுகிறாள். செருமுகிறாள். ஆனாலும்கூட அவன் அவளைப் பொருட்படுத்துவதில்லை.
காபி கொடுக்கப் போனால், ``நன்றி! அப்படி வச்சிடு!’’ என்பான், அறையைக் கூட்டிப் பெருக்கலாம் என்று போனால், `நல்லாதானே இருக்கு. எதுக்கு உனக்கு சிரமம்!’’ என்பான்.
``தினம் ஒரு முறையாவது சுத்தம் பண்ணலேன்னா அம்மாவுக்கு பொறுக்காது. ``சோம்பேறிக் கழுதை’ன்னு திட்டுவாங்க!’’
``அப்போ சரி, என்னால் குடும்பக் கலகம் வேணாம். சீக்கிரம் ஆகட்டும்’’. என்று அறைவிட்டு வெளியே வந்துவிடுவான். அவளுக்கு ஏமாற்றமாயிருக்கும். அவன் யாரோ எவரோ என்கிற தயக்கம், முதலில் இருந்தது. ஆனால் போகப் போக- `யாரா இருந்தால் என்ன? அண்ணனின் நண்பன்! அண்ணனைப் பார்க்கவேண்டி வெளியூரிலிருந்து வந்திருக்கிறான். இவனைக் கவனிக்க வேண்டியது நம் கடமை. சரியாய் கவனிக்கலை என்று தெரிந்தால் அண்ணனுக்கு கோபம் வரும்.’
அறிமுகமே இல்லாதவர்கள்கூட வீட்டுக்கென்று வந்து விட்டால் அவர்களை உபசரித்து அனுப்பவேண்டும் என்பது கோபியின் கொள்கை. அம்மா, `ஏன் இப்படிப் பண்றே.....?’’ என்று முறைப்பாள்.
`அம்மா! நாம் போகும்போது என்னத்தைக் கொண்டு போகப் போகிறோம்? நம்மால் முடிந்த உதவி, அல்லது மகிழ்ச்சியை பிறருக்குக் கொடுத்துப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ளலாமே!’ என்பான்.
`அதுசரி, நீ காலாட்டிக் கிட்டு உட்கார்ந்திருப்பாய்! வீட்டுல உள்ள வேலை பத்தாதுன்னு போற வரவங்களுக்கெல்லாம் நாங்க அடுப்படியில் சாகணுமாக்கும்!’
அம்மாவின் வார்த்தைகளில் உள்ள உண்மை, அவனைச் சுடும். ஆமாம், பிறரை உபசரிக்கவேண்டி வீட்டிலுள்ளவர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். என்று வெளியே டீக் கடைக்கு அழைத்துப் போய்விடுவான். அப்படியும்கூட பிரச்சினை தீராது. அவன் விருந்தினரை அனுப்பிவிட்டு வந்ததும் அம்மா,`டீக்கடையில் எவ்வளவு ஆச்சு?’ என்பாள்.
`பதினைஞ்சு ரூபா....’
`பதினைஞ்சா ...?’’ என்று அம்மாவிற்கு மயக்கம் வரும் வீட்டில் டீ போட்டுக் கொடுத்திருந்தால், வீட்டிலேயே பால் இருக்கிறது. சர்க்கரை, டீத்தூள் இருக்கு, இரண்டு நிமிட வேலை! ஒவ்வொன்றுக்கும் கணக்கு பார்த்தாலும் ஐந்து ரூபாய்க்கு மேல் போகாது!
அவள் உடனே, `இனி யார் வந்தாலும் வெலியே அழைச்சுப் போகவேணாம். வீட்டுலயே கவனிச்சுக்கலாம்’என்று பழையபடி பேச்சைத் திருப்புவாள்.
கோபியும் மிகவும் அடக்கமாய், `சரிம்மா’ என்பான். சுதாவைப் பார்த்து புருவத்தை உயர்ந்துவான். அவளுக்குச் சிரிப்பாய் வரும்.
அம்மா முன்னாடி சிரித்தால் கடுப்படிப்பாள், `பொட்டைப் புள்ளைக்கு என்னாடி சிரிப்பு?’ என்று சொல்லி, `இந்தா ....மசமசன்னு நிக்காம போய் துணியை அலசிப் போடு!’ என்று தண்டனை தருவாள்.
அதானால் பின்பக்கமாய் ஓடிப்போய் சிரிப்பாள்.
அதானல் விருந்தோம்பலில் குறை வைக்கக்கூடாது என்று குமரேசனை நன்கு கவனித்து வந்தார்கள்.
கவுசல்யா, சாமிநாதனை அழைத்து,`தம்பி எதுக்கு வந்திருக்குன்னு மெல்ல விசாரியுங்களேன்!’’ என்றாள்.
அவர் அதற்கு லாயக்கில்லை என்று தெரியும். இருந்தாலுக் கூட ஒரு முயற்சி. அவர் போன வேகத்திலேயே திரும்பி வந்தார். ``பையன் கெட்டி. வாயே திறக்க மாட்டேங்கிறார். கோபி வந்திடட்டுமே!’’ என்று மென்று விழுங்கினார்.
``வயசுக்கு வந்த பெண் வீட்டுல இருக்கும்போது தொடர்ந்து வீட்டுல எப்படி... ஊர் தப்பாப் பேசாதா?’’
``ஊர் எதுக்குத்தான் பேசலை? நாம வீடுகட்டறதுக்குப் பேசலையா... இல்லை நகைக்கடை காசிநாதன் பொண்ணைப் பற்றிப் பேசலையா.....? பேசுவறவங்க ஏதாச்சும் பேசிகிட்டுதான் இருப்பாங்க. நீ உன் வேலையாப் பாரு!’’
சுதா, அந்த உரையாடலைக் கேட்டுவிட்டு, ``அண்ணனுக்கு பார்த்த பொண்ணு மோசம்னு எங்க காலேஜிலகூட பேசிக்கிறாங்கம்மா’’ என்றாள்.
``சும்மா இருடி! காலேஜில உங்களுக்கு வேற வேலை இல்லையா ...ஊர் வம்பு பேசத்தான் போறீங்களா... அவ கெட்டுப் போனவள்னு உங்க காலேஜீக்கு எப்படித் தெரியுமாம்?’’
``வந்து.... காலேஜ் வாத்தியார் ஒருத்தர்கூடதான் அவ சுத்தினாளாம்! வேணாம்மா...அந்தப் பொண்ணே வேணாம். அண்ணனோட மிடுக்குக்கும், சம்பாத்தியத்துக்கும் வேறு பொண்ணு பார்த்து....’’
``ஏய் ....அதிகப்பிரசங்கி! உன்கிட்டே நான் கேட்டேனா! நீ வாயை மூடு! என்னவோ பெரிய கிழவியாட்டம் உபதேசம் பண்ண வந்துட்டா! வேற பொண்ணு பார்க்கணுமாம்! கிடைக்குமாடி...லட்சம், லட்சமாய் எவன் தருவான்? இப்போ –கிராமத்துல பங்களா கட்டுறோம். அப்புறம் சம்பந்தியோட காலத்துக்குப் பின்னாடி நகைக்கடையும் நமக்கே வரப்போகுது!’’
``இருந்தாலும்...கெட்டுப் போனவளை அண்ணன் தலையில் கட்டுறது அநியாயம்!’’
``இனி ஒரு வார்த்தை பேசினா அறைவேன் கழுதை! ஏது...கொஞ்சம் இடம் கொடுத்தால் வாய் நீளுது! நியாயம் அநியாயம் பார்த்தா உன் கல்யாணம் நடக்குமாடி? உனக்குப் பவுன் போட்டு சீதனம் கொடுத்து அனுப்ப வேணாம்? உங்கப்பா அதுக்கெல்லம் சம்பாதிச்சு கொட்டி வச்சிருக்காரா?’’ என்று சாமிநாதன் பக்கம் பீரங்கியைத் திருப்பினாள்.
அவர், `என்னடா இது வம்பு?’ என்று சுதாவை கெஞ்சுகிற மாதிரி பார்க்க, சுதா அப்பாவைப் பலிகடா ஆக்க வேண்டாம் என்று, ``சரிம்மா...நான் இனி பேசலை’’ என்று நழுவினாள்.
அவளுக்குத் தெரியும் –கவுசல்யாவின் பிடிவாதம்.அவளிடம் பேசி வெற்றிபெற முடியாது. அப்படி தோற்கிற மாதிரி பேச்சு நகர்ந்தால் உடன் அழத் தொடங்கிவிடுவாள். அது அதைவிடக் கொடுமை! அந்த அழுகைக்குப் பயந்தே யாரும் அவளிடம் தர்க்கம் பண்ணுவதில்லை. அவளுக்காகவே விட்டுக்கொடுத்து விடுவார்கள். இந்தப் பேச்சுகள், அரசல் புரசலாய்க் காதில் விழுந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. குமரேசன் படுக்கையிலிருந்து பல் துலக்க வந்தவன், `நான் ஊருக்குப் புறப்படுகிறேன்!’’ என்றான்.
சாமிநாதன், கவுசல்யாவைப் பார்க்க, அவள்,``ஏன் தம்பி...என்ன அவசரம்? கோபியை நீக்க பார்க்க வேணாமா?’ என்றாள்.
``இல்லை.எனக்கு ஊரில் தலைக்கு மேல வேலை, அவன் எப்போ வர்றது...நான் பார்க்கிறது?’’
``இன்னும் ரெண்டு நாள் இருங்க, வந்திடுவான். நான் தகவல் சொல்லி இருக்கேன்!’’ என்று அவனைச் சமாதானப்படுத்தினாள்.
அவன் குளியலறைக்குள் நுழைந்ததும், சுதா கிசுகிசுப்பாய்,`` அண்ணன் எங்கே இருக்காருன்னு தெரியுமா உனக்கு?’’ என்றாள்.
``ஊகூம்...’’
``அப்புறம் தகவல் சொல்லி இருக்கேன்னுது....?’
``சும்மாதான் நீ போய் படிக்கிற வேலையிருந்தா பாருடி!’’ என்று அவளை விரட்டினாள்.
(12)
ஒரு மாதம் கழித்து ஊருக்குத் திரும்பும்போது கோபி, தாடி வழித்து, வழபழப்புடன் காணப்பட்டான். தனக்கு எந்தவித வருத்தமோ, சங்கடமோ இல்லை என்று வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியில் இருந்தான். ஆனால், கண்கள் மட்டும் ஒத்துழைக்க மறுத்தன.
அகல்யாவின் வீட்டைக் கடக்கும்போது நெஞ்சம் கொஞ்சம் கனத்தது. `எங்காவது அவள் தென்பட மாட்டாளா?’ என்கிற ஏக்கம். அதைப் புரிந்துகொண்டது போல குடம் சுமந்த பெண்கள் நமட்டுச் சிரிப்பு சிரிப்பது தெரிந்தது.
`அகல்யாவை ஏன் இன்னும் நினைக்க வேண்டும்? வேறு ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பின்பு அவளை நினைக்க நான் யார்? எனக்கென்ன உரிமை?’ ஊரை விட்டுத் தள்ளியிருந்தும்கூட எதையும் மறக்க முடியவில்லை.
ஆண்டுக்கணக்காய் பிரிந்து துபாயில் இருந்திருக்கிறேன். அப்போது தோன்றாத துக்கம் இப்போது ஏன்? அன்று தள்ளியிருந்தும்கூட –அகல்யா என்னவள் –எனக்காகக் காத்திருப்பாள் என்கிற சமாதானமிருந்தது. அதனால் ஆர்ப்பரிப்பில்லை. கிணற்று நீர் எங்கே போய்விடப் போகிறது’ என்கிற ஆசுவாசம் இருந்தது.
அவன் தெருமுனையில் நுழையும்போதே –வாசலில் படர்ந்திருந்த மல்லிகைப் பந்தலில் பூப்பறித்துக் கொண்டிருந்த சுதா கவனித்துவிட்டாள். பூரித்தாள், `அய்....அண்ணன்’’ என்று தாவிக் குதித்தாள்.
மடியில் சேகரித்திருந்த மொட்டுகளைக் கூடையில் கொட்டிவிட்டு, உள்ளே ஓடி,``அம்மா! அண்ணன் வந்தாச்சு ‘’ என்று தந்தியடித்தாள்.
``வரட்டுமேடி! அதுக்கு ஏன் சாப்பாடு போடுறே?’’ என்று கவுசல்யா தன் ஈரக் கையை முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.
`நான் அப்பவே சொல்லலே.....அண்ணன் வந்திடும்னு!’ சுதா திரும்பவும் வாசலுக்கு ஓடி, ``வாண்ணா!’’ என்று குதூகலித்து அவனது பெட்டியை வாங்கி, ``உனக்கொரு அதிர்ச்சி செய்தி’’ என்றாள்.
``என்னது?’’
``உனக்காக நம் வீட்டில் ஒரு ஆள் காத்துக்கிட்டிருக்கு.’’
``ஆளா?’’’’
``ஆமா. உன் நண்பர்!’’
``நண்பரா?’’ என்று அவன் யோசனையுடன் முன்னறைக்குள் நுழைந்தான் `யாராக இருக்கும்?’ யோசித்தான். பிடிபடவில்லை.
``ஏய் ...வந்ததும் வராததுமாய் எதுக்குடி புதிர்?’’
``கோபி! என்ன இது? இப்படிதான் ஒரேயடியாய் தலைமறைவாயிடறதா?’’
``தலைமறைவா...அப்படியெல்லாம் எதுவுமில்லேம்மா. கொஞ்சம் வேலை இருந்தது!’ என்று அவன் இங்குமங்கும் கண்களை அலையவிட்டான்.
சுதா, அதைப் புரிந்துகொண்டு, ``நீ யாரை தேடுறேன்னு தெரியும். அவரைத்தானே! அவர் இந்த அறையில்தான்’’ என்று அந்த அறையைத் திறந்தாள். உள்ளே கட்டில் காலியாக இருக்கவே, `அம்மா! அதுக்குள்ளே அவர் எங்கே போனார்?’’ படபடப்பாய் கேட்டாள்.
``தோட்டத்துல ஊஞ்சலாடுறார்!’’
``ஊஞ்சலா.....ஆடட்டும்! ஆடட்டும்! அண்ணா! அந்த ஆள் கல்லுளிமங்கன்! வாயைத் திறப்பதில்லை. ஆமாம்.... உன் நண்பர் யார்?’’ என்று அவனுக்குப் பின்னாலேயே நடந்தாள்.
``எனக்கொரு சந்தேகம்ண்ணா....’’
``என்ன?’’
``துபாய் ஆசாமிகளெல்லாம் இப்படிதான் மவுனச் சாமிகளாய் இருப்பார்களா?’’
``சுதா! தொடங்கிட்டியா? உன்னோட பெரிய ரோதனை’’ என்று கவுசல்யா அவளை அடக்கி,``அங்கே என்ன பண்றே.... இங்கே வந்து இந்த வேலையைக் கவனி’’ என்று தடை போட்டாள்.
கோபி, சிந்தனையுடன் பின்பக்கம் போனான்.
கிணற்றடி தாண்டி, மாட்டுத் தொழுவம்! அதற்கு அப்பால் வைக்கோல் போர்! அதில் கன்றுக்குட்டி முண்டிக் கொண்டிருந்தது.
தோட்டத்தில், தென்னைகள் கழுத்து வலிக்க உயர்ந்து மட்டைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.
அங்கு ஓரமாயிருந்த புங்கமரத்தின் பலகை ஊஞ்சலில் முதுகு காட்டியபடி இருந்த இளைஞனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. நெஞ்சுக்குள் படபடப்புடன் முன்னேறினான்.
அதற்குள் கிணற்றடியிலிருந்து சுதா, `அலோ...மிஸ்டர் குமரேசன்! அண்ணன் வந்துட்டார். இன்னும் எதுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு? முகத்தைக் காட்டுங்க’’ என்று கத்தி விட்டு உள்ளே ஓடினாள். அவளுக்கு அவசரம் தாங்கவில்லை. தானே முன்னின்று அவர்களை அறிமுகப்படுத்தி விடும் ஆர்வம்.
அடுப்பில் பால் பொங்கி வழியவே, தாவணியை உதறி பாத்திரத்தை பிடித்து இறக்கினாள். அலமாரியில் காபி தூள் இல்லை. ``அம்மா! காபி தூள் எங்கே?’’ என்று கத்தினாள்.
அறைக்குள் சேலை மாற்றிக்கொண்டிருந்த கவுசல்யா, ``அங்கேதான் அம்மி மேல வைச்சேன் பாரு’’.
``சே...காபிதூள் எதுக்கு அம்மிகல்லுக்குப் போகுது! இந்த அம்மாவுக்கு விவஸ்தையில்லை!’’ என்று எடுத்து தம்ளரில் போட்டு ஆற்றி, சர்க்கரை சரியாய் இருக்கிறதாவென பார்த்து, ``உம்...அருமை! அருமை!’’ என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டு, தாவணியைச் சரிபண்ணிக் கொண்டான்.
`ல......லா.....லா...’’ என்று மெட்டு போட்டபடி தம்பளர்களைப் பிடித்தபடி பின்பக்கம் வந்தாள். அங்கே ஊஞ்சலாருகே – கோபியும், குமரேசனும் இடைவெளிவிட்டு நின்று என்னவோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
``கோபி எங்கே கோபி எங்கே’ என்று ஆலாய் பறந்த குமரேசனிடம் அவனைப் பார்த்ததும் உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகவேணாமா? அவனது முகம் இறுகி இருந்தது.
கோபியின் முகத்தில் அதைவிட அதி இறுக்கம், சுதாவுக்கு எதுவும் விளங்கவில்லை. `இவர்களுக்குள் என்னாயிற்று?’
``அண்ணா! காபி!’’
அவளது குரலைக் கேட்டதும் கோபி வலுக்கட்டாயமாகப் புன்னகையை வரவழைத்து, ``அப்புறம் ....இவதான் என்று தங்கை.’’
`வாலில்லாத’ என்று சொல்ல வந்த குமரேசன், அதை அடக்கிக்கொண்டு புன்னகைத்தான்.
``அண்ணா! உங்க நண்பர்கூட ஆசைதீர பேசி முடிச்சாச்சா? `கோபி எப்போ வருவார் எப்போ வருவார்’னு எங்களைக் கேட்டு தொல்லை பண்ணிட்டார்!’’
சுதா சொல்லிவிட்டு குமரேசனைப் பார்த்து கண் சிமிட்டினாள். அதை ரசித்தாலும் கூட வெளிக் காட்டிக் கொள்ளாமல் ``கோபி! அப்போ என்னைக் கிளம்பச் சொல்கிறாய்?’’ என்றான்.
``ஆமாம். நான் எல்லாம் பார்த்துக்கிறேன். நீ தைரியமா புறப்படு!’’
``சரி, நாம் பேசினபடியே நடக்கட்டும். அதுல ஒண்ணும் மாற்றமில்லையே?’’
``இல்லை. நீ புறப்படு’’.
குமரேசன் கிளம்புகிறான் என்பதை ஆறிந்ததும் சுதாவுக்கு ஏக்கமாயிற்று.
அவன் வந்தபோது அந்நியனாகத் தெரிந்தான். ஆனால், நான்கு நாளில் அவன்பேரில் ஈடுபாடு ஏற்பட்டு நெஞ்சை என்னவோ பண்ணிற்று.
இந்த நான்கு நாளும் அவனுக்காக உடை உடுத்தி அவனுக்காக அலங்காரம் செய்து, அவனுக்காகக் கோலம்! புதுப்புது சமையல்! இனம்புரியாத துள்ளலுடன் திரிந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்கிற மாதிரி இருந்தது.
யாராவது அவனைத் தடுத்து நிறுத்தமாட்டார்களா? என்கிற எதிர்ப்பார்ப்பு.
குமரேசன் அறைக்குள் போய் தன் துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து அடுக்க,``அவரை இருந்துட்டுப் போகலாம்னு சொல்லும்மா’’ என்று கவுசல்யாவிடம் கிசுகிசுத்தாள்.
ஏறக்குறைய அதே எண்ணத்தில் இருந்தாள் அவளும், குமரேசனின் பழக்கமும், பண்பும் , பேச்சும் அவளையும் கவர்ந்திருந்தன. அவனும் துபாயில் வேலை பார்ப்பவன் என்கிறபோது நிச்சயம் வசதியுள்ளவனாகத்தான் இருப்பான். பேசாமல் சுதாவுக்கு இவனை முடித்துவிட்டால் என்ன? இவளும் அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறாளே!
``கோபி! நீ வந்தவுடனேயே தம்பியை அனுப்பணுமா? இன்னும் ரெண்டு நாளைக்கு இருந்துட்டுப் போகட்டுமே.’’
``அம்மா....அவன் இங்கிருந்து என்ன பண்ணப் போறான்?’’
``தம்பி இதுவரை அறைக்குள்ளேயே இருந்துட்டுது. அப்படியே ஊரைச் சுத்திப் பார்த்துட்டு...’’
`சுத்திப் பார்க்க இங்கே என்ன இருக்கும்மா?’’
``ஏன் ...நம்ம புதுக் கட்டிடம் இருக்கே’’ என்று வார்த்தைகளைக் கொட்டின சுதா, சட்டென கவுசல்யாவுக்குப் பின்னால் மறைந்தாள்.
``அதையெல்லாம் அப்புறமாப் பார்த்துக்கலாம். அவனுக்கு நிறைய வேலை இருக்கு. ஏற்கனவே ஒரு வார வேலை நிக்குது!’’ என்று கோபி வலுக்கட்டாயமாய் அவனை அழைத்துப் போய் பேருந்து ஏற்றிவிட்டு வந்தான்.
சாமிநாதன், ``கோபி! நீ நடந்துக்கிறது கொஞ்சம்கூட நல்லாயில்லே! வந்த விருந்தாளியை இப்படித்தான் கழுத்தைப் பிடிச்சு தள்ளுற மாதிரி அனுப்பி வைப்பாங்களா?’’ என்றார்.
பெரிய மனித தோரனையில் கேட்டுவிட்டு கவுசல்யாவைப் பார்த்து `சரியாய்க் கேட்டேனா?’ என்று பார்வையால் கேட்டார், அவள் அதற்கு திருஷ்டு சுற்றாத குறைதான்.
கோபி, அவரைப் பொருட்படுத்தாமல் அறைக்குள் போக, பின்னாலே வந்தவரை நிறுத்தி,`இப்போ என்ன வேணும்?’’ என்றான்.
``அதில்லை...அந்த தம்பியைப் பற்றி எதுவும் சொல்லலியே? பையன் எப்படி? உனக்கும் அவனுக்கும் எப்படி உறவு?’’
``நல்ல உறவுதாம்ப்பா. எனக்குக் களைப்பா இருக்கு. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டுமா?’’
``ஓ....ஓய்வு எடுத்துட்டு அப்புறமா சொல்லு போதும், அவசரமில்லை!’’
கோபி, கட்டிலில் படுக்கையை விரித்துப் படுக்க, கவுசல்யா, ``அந்த நகைக்கடை காசிநாதனுக்கு என்ன வந்ததோ தெரியலை! நம்மகிட்டே முகம் கொடுக்காமல் நழுவுகிறார். முன்னைப் போல அவர் இல்லை, கல்யாணப் பேச்சு எடுத்தாலும் பதில் பேசுறதில்லை, என்ன காரண மோ தெரியலியே!’’ என்று புலம்பிக் கொண்டிருக்க –
கோபி,`எல்லாத்துக்கும் நான்தான்ம்மா காரணம்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு புன்னகைத்தான், அவனுக்கு காசிநாதனை பார்க்கப் போன விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
(13)
சில நாட்களுக்கு முன்பு...
திருச்சி பெரியகடை வீதியில் மலைக் கோட்டையைத் தரிசித்தபடி அந்த நகைக்கடை இருந்தது. எப்போதும் நெருக்கடியாய் இருக்கும் அந்தக் கடைவீதியில் எத்தனை துணிக்கடை, எத்தனை நகைக்கடை என்றாலும் கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது.
கோபி அங்கு போனபோது கடைக்குள் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் விளக்குகள் ஜாலம் பண்ணிக்கொண்டிருந்தன.நகையும் சதையுமாய் பெண்கள். காசாளரிடம், `காசிநாதனைப் பார்க்கணும்’’ என்றான்.
`நீங்க?’’
``வந்து... கோபின்னு சொல்லுங்க.’’
சற்று நேரத்தில் இண்டர்காமில் செய்தி பெற்ற காசிநாதன், தலையில் பாதி முடியுடனும், கை –கழுத்தில் தங்கம் மின்ன மாடியிலிருந்து இறங்கி வந்து கூட்டத்தில் அவனைத் தேடினார்.
காசாளர், ``அதோ அவர்தான்’’ என்று சோபாவில் அமர்ந்திருந்தவனைக் காட்ட, அன்பு பெருக்கெடுத்து ஓடி வந்தார். ``வாங்க மாப்பிள்ளை’’ என்று அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார்.
``போட்டோவுல பார்த்தது. சட்டுன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. வரீங்கன்னு சொல்லவே இல்லையே ..வாங்க, மாடிக்குப் போகலாம்’’ –அழைத்துப் போனார். அங்குதான் அவர் வீடு.
தனது ஏசி அறையைத் திறந்து, அமர்ந்தார். ``உட்காருங்க மாப்பிள்ளை’’ என்றவர், மனைவியை அழைத்து, `ஏய்..... மாப்பிள்ளை வந்திருக்கார். பொண்ணை அழைச்சு வா’’
``என்ன சாப்பிடுறீங்க மாப்பிள்ளை?’’ என்றார் பரிவுடன்.
``முதல்ல இந்த `மாப்பிள்ளை’யை `கட்’ பண்ணுங்க’’ என்றான், கோபி சூடாக.
காசிநாதன், அவன் தமாஷ் பண்ணுகிறான் என்று நினைத்து, ``அது மரியாதையா இருக்காதே தம்பி!’’ என்று வழிந்தார்.
`இல்லேன்னா அதைவிட அதிகமாய் மரியாதை கெட்டுப் போகும்.’’
அதற்குள் தொலைபேசி ஒலிக்க, எடுத்துப் பேசினான். ``தம்பி இங்கேதான் வந்திருக்கு...பேசுறீங்களா..?’’ என்று கேட்டவர், உடனே ரிசீவரை வைத்தார்.
``உங்களுக்குப் பொண்ணைப் பார்க்கணும்னு ஆவலா இருக்கும். கொஞ்சம் பொறுங்க!’’ கோபியைப் பார்த்து சொன்னார்.
``இல்லை, நான் பொண்ணைப் பார்க்க வரலை. நான் உங்களைப் பார்க்கதான் வந்தேன்!’’
``என்ன சொல்றீங்க?’’
கோபி எழுந்து கதவை மூடிவிட்டு, அவரிடம் வந்து, ``என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்....?’’ என்றான்.
``நல்லவர். துபாயில் வேலை!’’
``அதுதானே தெரியும்.....? அதுக்கு முந்தி நான் ரவுடியா இருந்தது. தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! என்னைத் திரும்பவும் ரவுடியாக்கிடாதீங்க! நான் ஜெயிலுக்குப் போனவர்ன். போகவும் அஞ்சாதவன்!’’
``தம்பி ....என்னென்னவோ பேசுறீங்க! எதுவுமே எனக்குப் புரியலை!’’ என்று அவரது வாய் குழறிற்று. நெற்றியில் வியர்வை அரும்ப காசிநாதன், மிரள மிரளப் பார்த்தார்.
``இதோ பார்! நீ பணக்காரனா இருக்கலாம். பெரிய வியாபாரியா இருக்கலாம். அதுக்காக் என் வாழ்க்கையை வியாபாரமாக்கிடுறதா?’’
``நான் வியாபாரமாக்கினேனா ....என் மகளைத்தானே உங்களுக்கு..’
``கெட்டுப் போனவளை!’’
``இல்லை, அது புரளி. நம்பாதீங்க!’’
``வேணாம், பொய், பித்தலாட்டம் வேணாம், என்னை மிருகமாக்கிடாம உண்மையை ஒத்துக்கணும். அவ கர்ப்பமானது, கரு கலைச்சதுக்கான ஆதாரமெல்லாம் திரட்டிட்டுதான் வந்திருக்கேன். உன் மகளைப் பற்றி பேசும் முன்பு என்னைப் பற்றி விசாரிச்சியா....?
``உங்க பெத்தவங்க சம்மத்தோடதானே.. இந்த ஏற்பாடு! அதுக்காகதானே இத்தனை லட்சங்களை முடக்கினேன்!’’
``லட்சங்கள் உன் சுயநலம். போலி கணக்கு காட்ட இடம் தேடினாய். ஏமாளிங்க கிடைச்சாங்க. அதெல்லாம் போகட்டும். இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கக்கூடாது!’’
``ஏன்?’’
``எனக்கு துபாயில் ஏற்கனவே கல்யாணமாயிடுச்சு....!
அவர் சுதாரித்து, ``இவ்வளோதானா....?’’ என்று நாற்காலியில் சரிந்தார்.
``பரவாயில்லை..அது பாட்டுக்கு அங்கே இருக்கட்டும். இங்கே ஊரில் என் மகள்...!
``யோவ்! இப்படிப் பேச வெட்கமாயில்லே உனக்கு? நீயெல்லாம் ஒரு அப்பான்! பெத்த மகளோட காரியத்துலயே இத்தனை அசிங்கம்!’’
``கோபி தம்பி! ஆவேசப்படாம அப்படி போய் உட்கார். சமாதானமாய்ப் போகலாம். வெட்கப்படவும், அசிங்கப்படவும் இதில என்ன இருக்கு? என் பேச்சை மீறி, எவனோடயோ ஓடினா. கர்ப்பத்தோட வந்தா. கலைச்சு –கண்டிச்சு- புத்தி சொல்லி வீட்டுல வச்சிருக்கேன். அவள் திருந்திட்டாப்பா. இனி எந்த தப்பு தண்டாவுக்கும் போக மாட்டா!’’
``அடச்சீ ...மனுசனா நீ கெட்டுப்போன பொண்ணு யாருக்குய்யா வேணும்...’
``அப்போ என் பணம்?’’
``யார்கிட்ட கொடுத்தாயோ....அவங்ககிட்டயே போய் வாங்கிக்க!’’
``யாரு... உங்க அப்பா –அம்மாகிட்டேயா... அவங்ககிட்ட வாங்க என்ன இருக்கு? உயிருதான்!’’
``ஏய் ...தொலைச்சிடுவேன் தொலைச்சி! எனது எதிர்காலத்தைக் கெடுத்ததுமில்லாம எகத்தாளமா பண்றே?’’
``இல்லை.....உண்மையைப் பேசுறேன். இதுவரை அங்கே பத்து லட்சம் வரை முதலீடு செஞ்சிருக்கேன்!’’
``உன் முதலீடு யாருக்கு வேணும்?எடுத்துட்டுப் போ!’’
``அதுல கொஞ்சம் சிக்கல்! ஒண்ணு –வருமான வரிக்கு `டேக்கா’ கொடுக்கவேண்டி உன் பேர்ல இடம் வாங்கி இருக்கேன். அடுத்தது. –என் மகளை நீ கட்டிக்கப் போவதாக எனது சுற்றங்களுக்குத் தெரிவித்துவிட்டேன்.’’
``மன்னிக்கணும். உங்க மகளை நான் கட்ட இயலாது. அதை மறந்துடலாம். அதுக்காக –அந்த இடத்தை உனக்குத் தரணும்ங்கிற அவசியமில்லை. காரணம்-அதை இழந்தால் அப்புறம் என் பெற்றோர் செத்துப் போவாங்க! அதையும் மீறி உன் மகளைக் கட்டணும்னா –கட்டலாம் –அதன்பிறகு அவளைக் கொடுமை பண்ணி, கொடுமை பண்ணியே சாகடிப்பேன்!’’
``அப்போ பணம் முடக்கின நான் மடையன்! பொண்ணையும் கட்டமாட்டீங்க! பணமும் தரமாட்டீங்க!’’
``அப்படி நான் சொல்லலே... முழு தொகையும் என்னால இப்போ தரமுடியாது. பாதி இப்போது, இதற்கிடையில் என் பெற்றோருடன் உள்ள உங்க தொடர்பை முறிக்கணும். நான் வந்ததோ, நமக்குள் நடந்த பேச்சோ வெளியே வரக்கூடாது. அவர்களுக்கும் தெரியக்கூடாது. நேரம் பார்த்து உன் மகளை எனக்குக் கட்டி வைக்க முடியாதுன்னு நீங்களே தெரிவித்துவிட வேண்டும்.’’
``அவங்க கேட்டா-நான் என்ன காரணம் சொல்றது?’’
``ஏதாவது சொல்லுங்க..... கோபி ரவுடி! ஒரு ரவுடிக்கு என் மகளைக் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க......’’
``அது என்னால் முடியாது. நான் விடமாட்டேன்.’’
``வேணாம் மாமனாரே! எந்த விபரீத சிந்தனையும் வேணாம். மீறி ஏதாவது முயன்றால் வினையாகிவிடும்! அந்த இடம் என் பெயரில் இருக்கு. உங்கப் பணம் முழுக்க கோவிந்தா! அது மட்டுமின்றி என்னைப் பழையபடி ரவுடியாக்கி ஜெயிலுக்குப் போக வைச்சிட வேண்டாம். நான் ஏற்கனவே சொன்னபடி ஜெயில் எனக்கு புதுசுமில்லை, அதற்காகப் பயப்படுறவனும் இல்லை. ஜாக்கிரதை.’’
கோபி அன்று போட்ட போடு, இன்று வேலை செய்தது. அது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. பணிந்து போவதைத் தவிர, காசிநாதனுக்கு வேறு வழியேயில்லை, சுமூகமாய் போனால் பணமாவது திரும்பக் கிடைக்கும் என்கிற புத்திசாலித்தனமான முடிவுக்கு அவர் வந்திருக்கலாம் என்று நினைத்து கோபி அதற்காக மகிழ்ந்தான்.
(14)
கோபியும், மதியும் இப்போது காவிரிக்கரையில் அமர்ந்திருந்தனர். படித்துறையில் சிலர் சிலிர்ப்புடன், தூரத்தில் கல்லணையின் சலசலப்பு கேட்டது.
தார்ச் சாலையில் பேருந்துகள் உறுமிக்கொண்டு ஓடின, கோபி.கல் பொறுக்கி-ஆற்றில் எறிந்துகொண்டிருந்தான். நெஞ்சில் அகல்யாவின் நினைவே ஓடியது. அவனது முகத்தில் வாட்டமில்லை.
மதி அவனது கையைத் தடுத்து, `ஏய்....கல் பொறுக்கிப் போடணும்னு என்ன பிரார்த்தனையா?’’ என்று புன்னகைத்தான்.``இப்போ என்ன செய்யப் போகிறாய்? அகல்யாவைப் பெண் பார்க்க இன்னிக்கு வராங்க. தேதியும் நிச்சயம் பண்ணிடுவாங்க, அதுக்கு முன்னாடி ஏதாவது செஞ்சாகணும்.’’
``உம்....’’
``இன்னும் ஏன் தாமதம்? வாத்தியார் உனக்கென்ன அந்நியமா? நேராய் அவங்க வீட்டுக்குப் போ. பேசு, இல்லாட்டி வர்ற மாப்பிள்ளைகிட்டே வழியிலேயே விபரம் சொல்லி கல்யாணத்தை நிறுத்து!’’
``எதுக்காக நிறுத்தணும்?’’
``அதை நிறுத்தினாதானே அகல்யா உனக்குக் கிடைப்பாள்?’’
``நிறுத்தினாலும் கிடைக்க வாய்ப்பில்லை!’’
``ஏய் ...என்ன சொல்றே நீ?’’
``ஆமாம் மதி, எங்க வீட்டுல பங்களா மட்டுமில்லை, பெரிய கனவுக் கோட்டையும் கட்டிகிட்டிருக்காங்க. என்னால் அதுக்கு முன்னாடி அவங்களுக்கு எந்தச் சுகமும் கிடைக்கலே. படிக்க வச்சதுக்கு எந்த பிரதிபலனும் தராம கெட்ட பெயரும், தொந்தரவும் தான் தந்திருக்கேன். இப்போ அவங்களை மகிழ்ச்சிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை ஏன் கெடுக்கணும்? அதனால் அகல்யா கல்யாணம் நடக்கட்டும். அதை நிறுத்தி அந்தப் பாவத்தை வேறு சுமக்கணுமா?’’
``அப்போ ....நகைக்கடைக்காரனின் கெட்டுப்போன மகளைக் கட்டிக்க முடிவுபண்ணிட்டியா? ஏண்டா...உனக்கு புத்தி பிசகிப்போச்சா? பணம்தான் முக்கியம்னா துபாயில சம்பாதிச்சு அனுப்பு. பங்களா கட்டிக்கொடு.’’
``இல்லை நீ நினைக்கிற மாதிரி துபாயில நான் சுபிட்சமாயில்லை. அந்த வேலை நிரந்தரமில்லை. எல்லாத்தையும் உதறிட்டு வந்திடலாம்னுதான் இருக்கேன்.’’
``அதுக்காக? அந்தக் கேடு கெட்டவனை கட்டிக்கிட்டு உன் வாழ்க்கையை நீ பாழாக்கிக்கணுமா?’’
``இல்லை. அவளையும் நான் கட்டிக்கப்போறதில்லை.’’
``நீ என்னடா சொல்றே? நகைக்கடைக்காரரோட பணம் வேணும், பங்களா வேணும், ஆனா, அவர் மகளைக் கட்டிக்க மாட்டாய்! இதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு எதுவுமே புரியலே!’’
``போகப் போக புரியும்.’’
``கோபி! உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. நீ இயல்பாயில்லை. மனசுல எதையோ வச்சுகிட்டு அல்லாடுறது புரியது. ஆனா என்னன்னு தெரியலை. என்ன பிரச்சினைன்னாலும் சொல்லு. என்னால் முடிஞ்ச அளவு உதவி பண்றேன்!’’
``மதி! உன்னோட உணர்வுக்கும் அன்புக்கும் நன்றி! நீ சொல்ற மாதிரி நான் ஒரு பிரச்சினையில், சிக்கல்ல மாட்டியிருப்பது உண்மை. இதுக்கு முன்னாடியெல்லாம் அடுத்தவங்களுக்காகத்தான் பிரச்சினைகளை ஏற்றுக்கிட்டு இருந்தேன். முதன்முதலா எனக்காக –என் குடும்பத்துக்காக ஒரு விபரீத சவால்! இது நானே விரும்பி ஏற்றுக்கிட்டது. இதுல நீ உதவுறதுக்கு எதுவுமில்லை!’’
``ஐயோ...ரொம்பவே குழப்புகிறாய் நீ!’’
``சீக்கிரம் எல்லாமே தெரியும்!’’
``ஆமாம். தெரியும்! அது எப்போ தெரியும்னுதான் நானும் காத்துகிட்டிருக்கேன். அதுக்குள்ளே வேறு சில விபரீதங்கள் நடந்துடுமோன்னு எனக்கு பயமா இருக்குடா!’’
``இப்போ ஏன் புதிர் போடுறே? விளக்கமா சொல்லு.’’
``சொன்னால் என்னைத் தப்பாய் நினைக்கமாட்டியே?’’
``நினைக்க மாட்டேன். தப்புன்னா –ஒரே அடிதான்! ஆல் காலியாயிடுவே! அடச்சீ....சொல்லுடா!’’
``வந்து ...’’ என்றவன், வந்து நின்ற பேருந்தைப் பார்த்தான். அதிலிருந்து இறங்கின மாணவிகளைக் கவனித்து பேச்சை நிறுத்தினான். பேருந்திலிருந்து சுதா இறங்கினாள். அவள் மிகவும் தளர்வாகத் தெரிந்தாள். மார்போடு புத்தகங்களை அணைத்துக் கொண்டு நடக்க,``பார்! அவளுக்கு நூறு ஆயுசு! அவளைப் பற்றிதான் பேச்செடுத்தேன். அவளே இறங்கிட்டா.’’
``அவளைப் பற்றி....?
``ஆமாம். கோபி! உன் தங்கைக்காக நீ உன் காதலை விட்டுக் கொடுக்கவும் முன்வந்திருக்கிறாய். ஆனா, சுதாவோட போக்கு அத்தனை சரியாகப் படலே....’’
``என்னடா சொல்றே?’’
``ஆமா கோபி. இதை உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தவிச்சுக்கிட்டிருந்தேன். உங்க வீட்டுக்கு வந்திருந்தானே-குமரனோ ..குமரேசனோ...அவன் யாரு?’’
``ஏன்? எனக்கு வேண்டியவன்தான்! அவனுக்கென்ன இப்போ..?
``அவன் ஆள் எப்படி? நல்லவனா? உனக்கு நல்லா தெரியுமா? எப்படித் தெரியும்? அவனோட ஊர் எது? என்ன தொழில் பண்றான்? ஜாதகம் என்ன?’’
``...........................’’
``ஏய்............ஏய்....! முறைக்கிறே பார்! அவன்கூட இவளுக்கென்ன பேச்சு....?’’
``வீட்டுக்கு வந்தவன்கிட்ட பேசுறது தப்பாடா.......?’’
``வீட்டுல சரி.....வெளியே?’’
``வெளியேவா.......எங்கே?’’
``கோபி! உனது கோபமும் அதிர்ச்சியும் புரிகிறது. ஆனால் உண்மையை நீ பார்க்கணும், ஜீரணிச்சுக்கணும். ஏற்கனவே ரெண்டு பேர் எங்கிட்ட சொன்னாங்க. நான் நம்பலே,அப்புறம் ,திருச்சி மாம்பழச்சாலை பக்கம் ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்ததால்தான் இத்தனை வற்புறுத்திச் சொல்றேன். சுதா படிக்கப்போறேன்னு சொல்லிட்டு அவன்கூட சுத்தறாடா! தப்பு நடக்கிறதுக்குள்ளே நீ......’’
கோபி, அவனுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை, அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான். அவனது கண்களில் காட்டமிருந்தது.
(15)
குமரேசன், திருச்சி ஓட்டல் ஒன்றில்தான் தங்கியிருந்தான். கோபி போனபோது அறைக்குள் புகைத்துக் கொண்டிருந்தான். குறுமேசையில் மது, சோடா புட்டிகள் காலியாக இருந்தன.
கோபி, கோபத்தை அடக்கிக்கொண்டு,``குமரேசா! உன் நோக்கம் என்ன...? என்றான்.
அவன் சிரித்தபடி, `என் நோக்கம்? உனக்குத் தெரியாதா ...என்ன?’
``நீ எதுக்கு இங்கே தங்கியிருக்கணும்? அதான் ஊருக்குப் போன்னு சொன்னேனில்லே...?
``அதெப்படி ...நீ போன்னா போயிடணுமா? ஏன்? உன் வீட்டுல இருக்கக்கூடாதுன்னே....அது உன் வீடு..என்னைத் துரத்த உனக்கு உரிமை இருக்கு! ஆனா இது ஓட்டல்! காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் இங்கு தங்கலாம்!’’
``உங்கிட்ட காசு இருக்குங்கிறதுக்காக என்ன வேணாலும் செய்வியா?’’ கேட்டவன், கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினான்.
``கையை எடுடா...! நான் என்ன அப்படி தப்பு செஞ்சுட்டேன்?’’
``குமரேசா! தயவுசெய்து என்னைச் சித்திரவதை செய்யாதே! நான் செஞ்சது தப்பு. ஒத்துக்கிறன். அதுக்கு நான் தான் பரிகாரம் செய்யணும். தண்டனை தர்றதானாலும் எனக்குதான் தரணும். அதைவிட்டு...என் குடும்பத்தில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம்....?’’
``தப்பு நீ பண்ணியிருக்கலாம். ஆனால், அனுபவிப்பது அவங்கதானே! எனக்கு உன் நிலைமை தெரியும்! தர்மசங்கடம் புரியது! நீ ராசியில்லாதவன்டா! குடும்பத்துக்கு நல்லது ஏதாவது பண்ணணும்னு நினைக்கிறாய் பார்...நீ பெரிய மனுசன்! நீ நல்லது பண்ணு! அதை நல்ல வழியில் பண்ணணும்.. இன்னொருத்தவனுக்கு துரோகம் செஞ்சு, நல்லது செய்யக்கூடாது! நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் கூடாது!’’
``சரி....சரி..நான் ஒத்துக்கிறேன்! ஆனா அதுக்காக.... என் தங்கை பாவம்டா...அவ அப்பாவி!’’
``அப்படின்னு நீ நினைச்சுக்கிட்டிருக்கே...நீ தான் ஏமாளி! பொண்ணுங்களுக்கு வயசு வந்துட்டா....அப்புறம் பாவமாவது அப்பாவியாவது! நம்மைவிட அவங்க வேகமாகவும், விவரமாகவும் இருக்காங்க. கவலைப்படாதே! அவள் விவரமாவே இருக்கா! என்னை மயக்குறா....மயங்குறா....!’
``குமரேசா! வேணாம்... இந்த விளையாட்டு! அவளை ஒண்ணும் பண்ணிடாதே! ஏமாத்திடாதே.....!’’
``போடா, மடையா! அதான் சொன்னேனில்லே... சுதா விவரமா இருக்கான்னு! அவள் ரொம்ப உஷார்...கறார்..இதுவரை நானும் அவளைத் தொட்டதில்லை. அவளும் தொடச் சம்மதிச்சதில்லை. அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்காம். எனக்கும் மெல்ல மெல்ல பிடிச்சிகிட்டிருக்கு.அவளையே ஏன் கட்டிக்கக்கூடாதுன்னு தோணுது!’’
``கட்டிக்கவா...இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்!’’
``ஏம்ப்பா.... எனக்கென்ன குறை?’’
``புகைபிடிக்கிறாய் ....குடிக்கிறாய்...!’’
``இது கெட்டபழக்கம்தான் இல்லேங்கலே....ஆனால் இதுக்காக கல்யாணம் வேணாம்னு வைத்தால் உன் தங்கைக்கு வரன் கிடைப்பதே அபூர்வமாயிடும்! அவ்ளோதான்! நான் ஒண்ணும் உங்கிட்ட மறைக்கலியே! நீதான் மறைத்தாய்! எனக்குத் துரோகம் பண்ணினாய்! இதுவே, உன் தங்கையை கட்டிக்க வர்றவன் கல்யாணத்துக்குப் பிறகு குடிச்சால் என்னை பண்ணுவே? எனது நேர்மையை நீ ஏத்துக்கணும்! எங்கிட்ட வேற என்ன குறை இருக்கு?’’
``யாருக்குத் தெரியும்! உன்னைப் பற்றி இதுக்கு முன்னாடி எனக்கு எதுவுமே தெரியாது. ஏதோ எனது போதாத காலம்!’’
`சீச்சி....ரொம்ப சலிச்சுக்கிறியே....! இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலை...உன் தங்கை உடலளவுல பரிசுத்தமாதான் இருக்கா. மனசளவுல அது இல்லை. அவள் என்னைக் காதலிக்கிறதா! கல்யாணத்துக்கு என்னை நிர்பந்திக்கிறா...’’
``அவகிட்ட நான் பேசுறேன். இது நடக்காது!’’
``அப்போ எனக்குப் பரிகாரம்? பண்ணிடு... போயிடுறேன்...!’’
``என்ன...என்ன பரிகாரம்? சொல்லு ...உடனே செய்யிறேன்!’’
``வந்து ...வேற எதுமில்லை...புதுசா கட்டுற உன் பங்களா....!’’
குமரேசன் கேட்டதும் கோபி, வாயடைத்துப் போனான். `இவன் நாம் நினைப்பது போல சாதாரண ஆளில்லை, விளைந்தவன். நன்றாகத் திட்டமிட்டுதான் உள்ளே நுழைத்திருக்கிறான். நான் தவறு செய்தது உண்மை என்கிற போதும் அதற்குப் பரிகாரம் தேடும் பொறுப்பும் எனக்கிருக்கிறது.’
நல்லதோ கெட்டதோ பெற்றோர் இந்த பங்களாவுக்கு ஆசைப்பட்டுவிட்டார்கள். அதை நிறைவேற்றும் கடமையை ஏற்றிருக்கும்போது அடி மடியிலேயே கை வைக்கிறான்.
இவன் கேட்கும் விலை அதிகம்தான்.
ஆனால், அதைவிட இவனுக்கு நான் அதிக துரோகம் பண்ணியிருக்கிறேன்! கோபி அப்படியே நாற்காலியில் முகத்தை மூடிக்கொண்டு குனிந்து அமர்ந்தான்.
சில நிமிடங்களில் அவனது மனது தெளிவு பெற்றிருந்தது. முகத்தில் ஒரு மலர்ச்சியை வரவழைத்துக்கொண்டு, ``சரி, ஒத்துக்கிறேன்! ஆனால், அதற்குப்பிறகு என் தங்கையை மறந்திடணும். அவளைத் திரும்பிக்கூட பார்க்கக் கூடாது!’’
``சரி!’’
``மேலும் ஒரு விசயம்...!’’
``என்ன...?’’
``இந்த ஒப்பந்தம் இப்போதைக்கு நமக்குள்ளே இருக்கட்டும். வெளியே எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியவேணாம்!’’
``பின்னால் தெரியும்போது உன் பெற்றோரும் தங்கையும் உடைந்து போகமாட்டார்களா....?’’
``பார்த்தாயா ...மறுபடியும் என் தங்கைக்காகக் கவலைப்படுகிறாய். என் பெற்றோர் பற்றி உனக்கேன் அக்கறை...நீ வழிப்போக்கன்! வந்த வேலை முடிந்தா.... போய்க்கொண்டே இருக்கவேண்டியாதுதானே!’’
உறுதியாகச் சொல்லிவிட்டு கோபி அங்கிருந்து வெளியேறினான். பாரத்தை இறக்கி வைத்த மாதிரி அப்போது அவன் உணர்ந்தாலும், பாரம் இறக்கப்பட்டதா? இல்லை, ஏற்றப்பட்டதா? என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை.
எல்லாமே வேண்டாத விளையாட்டுகள்! பேராசை பிடித்த பெற்றோர். கலங்க வைக்கும் சுதா! வாழ்க்கையையும் வியாபாரமாகப் பார்க்கும் நகைக்கடை காசிநாதன்! அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் முன்பு நந்தியாகக் குறுக்கே நிற்கும் குமரேசன்!
இவற்றுக்கிடையில் அகல்யா இல்லை. மதியும் இப்போதெல்லாம் சரியாய் வருவதில்லை. அவன் இஷ்டத்திற்கு ஏதோ செய்துகொண்டிருக்கிறான். நான் மட்டும் பிரச்சினைகளை புதைத்துக்கொண்டு செக்குமாடு போல சுற்றிக்கொண்டிருக்கிறேன். உள்ளே புழுங்கினாலும்கூட வெளியே போலி –பகட்டுச் சிரிப்பு.
இதெல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு?
(16)
ஒரு வாரம் ஓடிப்போயிற்று.
பங்களாவிற்காக வந்து இறக்கப்பட்டிருந்த கம்பி, சிமெண்டு எல்லாம் திரும்ப ஏற்றப்பட்டுக் கொண்டிருக்க –தகவலறிந்து வீட்டினர் ஓடிப்போய் மறித்தனர்.
``இதெல்லாம் எங்கே கொண்டுபோறீங்க....நீங்க எல்லாம் யாரு....? என்று அலறினாள், கவுசல்யா.
``நகைக்கடை முதலாளிதான் எங்களை அனுப்பிச்சார்.....’’
``அவர் எதுக்கு உங்களை அனுப்பணும்?’’
``கம்பி, சிமெண்டுக்கு பணம் தரலையாமே... அதனால திருப்பி அனுப்பும்படி உத்தரவு.....”
``ஐயோ....ஐயோ...! இந்த அநியாயத்தைக் கேட்பார் இல்லையா....? என்று கவுசல்யா மார்பில் அடித்துக்கொள்ள, ஊர் மக்கள், வேடிக்கை பார்த்தனர். `இந்த பொம்பளை ஆடின ஆட்டம் என்ன...நல்லா வேணும்!’ என்று நினைத்தனர்.
சாமிநாதன் என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டு –மனைவிக்கு பயந்து ,``ஏய்....நிறுத்துங்கப்பா! என் மகன் வந்ததும் பணம் அனுப்புறேன்!’’ என்றார்.
``அவன் எப்போ வர்றது...?’’
``வெளியூர் போயிருக்கான் ..வந்திடுவான்...’’
``அதுவரை எங்களால காத்திருக்கமுடியாது’’ என்று அவர்கள் மேகமாகச் செயல்பட, சுதா ஓடிவந்து கவுசல்யாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.
உடன் அவளது முகம் மலர்ந்தாலும், சந்தேகம் வரப்பெற்று, ``செய்வாரா..?’’
``நான் பேசறேம்மா...”
``குமரேசன் இப்போ எங்கிருக்கார்? அதான் ஊருக்குப் போயிட்டாரே!’’
``இல்லை...இங்கே இருக்கார்.நான் பார்த்தேன்!’’
குமரேசனை சுதா ஏன் பார்க்கணும்..அவனது இருப்பிடம் இவளுக்கெப்படி தெரியும் என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. அவளுக்கு அப்போது தேவை பணம்! அதை யார் கொடுத்தால் என்ன...? நமது கவுரவம் காக்கப்பட வேண்டும் என்றே நினைத்தாள்.
``சுதா! போ....அவரைப் பார்த்துப் பேசு!’’
அவள்,குமரேசனைத் தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னாள்.
``அப்படியா...நீ எதுக்கும் கவலைப்படாதே! இன்னும் ஒரு மணி நேரத்துல நான் அங்கே பணத்தோடு வர்றேன்!’’
சுதா மகிழ்ச்சியுடன் திரும்ப வந்து, ``ஏய்....! எல்லோரும் தள்ளிப் போங்க..! யாரும் எதையும் இனி தொடக்கூடாது. ஒரு மணி நேரத்துல உங்க பணம் வரும். வாங்கிட்டு இடத்தைக் காலி பண்ணணும்....ஆமா சொல்லிட்டேன்!’’ என்று விரட்டினாள்.
கவுசல்யா, அவளை மலைப்புடனும், பெருமிதத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
(17)
நண்பன் மதி, செல்போனில் கோபியை அழைத்து, ``ஏய் ....நீ என்ன ஊரையே மறந்துட்டியா...?’’ என்றான்.
``இங்கே என்னென்னவோ நடக்குது. நீ என்னை மறந்தாலும் பரவாயில்லை. வீட்டையும் சுதாவையும்கூட மறந்துவிட்டாயா?’’
``சே! எப்பவும் புதிர் போடுறதே உன் வேலையாப் போச்சு! சுத்தி வளைக்காம நேரா விசயத்துக்கு வா!’’
``ஆமாம். ஆ...ஊன்னு என்மேல பாய்றே! அத்தனை சொல்லியும்கூட, கோட்டைவிட்டுட்டு நிக்கிறியே!’’
``யாரை .....அகல்யாவையா.....?’’’’
``இல்லை...அவலை நான் கவனிச்சுக்கிறேன். குமரேசனை! அதான்பா உன் துபாய் நண்பனை! வந்து வந்து கடைசில வீட்டுலேயே ஐக்கியமாயிட்டான்!’’
``ஏய்...என்ன சொல்றே நீ? அதுக்கு வாய்ப்பே இல்லை.’’
``சரி, வந்து நேராப் பாரு. அப்போதான் ஒத்துக்குவே. என்ன ஒரு உபசரணை! என்ன ஒரு அன்னியோன்யம்!’’
மதி அனாவசியமாய் பொய் சொல்லமாட்டான் என்று தெரியும். இத்தனை சொல்லியும்கூட வீட்டுக்குப் போகிறான். சுதாவுடன் பேசுகிறான் என்றால்....என்ன அர்த்தம்?
அந்தக் குமரேசனை சும்மாவிடக்கூடாது!
பயங்கரமாகப் பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கோபி வீட்டுக்குப் போனபோது, குமரேசன் முன்னறையில் அமர்ந்திருந்தான்.
அவனுக்கு அருகில் கவுசல்யா நின்றிருக்க, சுதா, அவனைப் படம்பிடித்துக்கொண்டிருந்தாள்.
அது, கோபி வாங்கி வந்த கேமிரா. `இதற்காகவா இவளுக்கு நான் கேமிரா வாங்கிக் கொடுத்தேன்?’’
``சுதா! இங்கே என்ன பண்றே...?’’
``படம் எடுக்கிறேன்...!’’
``காலேஜிக்குப் போகலியா.....? என்று கோபி, கேமிராவைப் பிடுங்கிக்கொண்டு குமரேசனைப் பார்த்து முறைத்தான்.
குமரேசன், அதைப் பொருட்படுத்தாமல், ``கோபி! கொஞ்சம் நகரு! டி.வி. மறைக்குது, நல்ல காட்சி!’’ என்று சிரித்தான்.
``சிரிப்புக் காட்சி! இப்போ இதுதான் முக்கியம்! சுதா வகுப்பு இல்லியா உனக்கு? போய் படிக்கிற வேலையைப் பார்!’’
`இந்த அண்ணனுக்கு என்னாச்சு....ஏன் இப்படி குலைக்குது?’ என்று முனகியபடி அவள் உள்ளே போக, அம்மா எழுந்து, ``கோபி! ஏன் இப்படி நடந்துக்கிறே? வரவர உன் போக்கே சரியில்லே! நல்லவனா மாறிட்டேன்னு பார்த்தா, பழைய நிலைக்கே திரும்பிடுவே போலிருக்கே!’’என்றாள்.
``நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்?’ படிக்கப் போ’ன்னு சொன்னது தப்பா? அவமேல எனக்கு அக்கறை இல்லையா? உரிமையில்லையா?’’
``அத்தனை உரிமையிருக்கிறவன், ஒரு வாரமாய் எங்கே போய் இருந்தாயாம்?’’
``ஏன் என்ன விஷயம்?’’
``இங்கே நாங்க வாழுறதா இல்லை சாவதான்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்போ... இந்த தம்பி வந்து தான் பணம் கொடுத்து உதவிச்சு! இவர் மட்டுமில்லேன்னா நாங்க மூணு பேரும்....’’
கவுசல்யா சொல்லிவிட்டு கண்களைக் கசக்கிக் கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள். கோபியின் ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று. `இவன் எதற்குப் பணம் தரவேண்டும்? பசப்புகிறானா?’ யோசித்தான்.
``கோபி! அந்தக் காசிநாதனை நல்லவருன்னு நினைச்சிருந்தேன். ஊர் மக்கள் அப்பவே சொன்னாங்க. அவர் ஏமாற்றுப் பேர்வழி –அவரோட நகைக்கடையும் போலின்னு. நான் தான் அதைப் புரிஞ்சுக்காம நம்பி ஏமாந்துவிட்டேன். அவர் ஆள் அனுப்பி மிரட்டுறார். சாமான்களையெல்லாம் திருப்பி எடுத்துட்டுப் போறார். இதுக்காக நாங்க இவ்வளவு பாடுபட்டோம்? ஊகூம்... அந்த சம்பந்தம் நமக்கு சரிப்பட்டு வரும்னு தோணலே.’’
கவுசல்யா, முந்தானையால் கண்களை ஒற்றிக்கொண்டு, ``நீ போய் என்ன சேதின்னு அந்தாள்கிட்ட கேளு!’’
``சரி, கேட்கிறேன், குமரேசா! இப்படி வா! உங்கிட்ட கொஞ்சம் பேசணும்’’ என்று கோபி, அவனை இழுத்துக் கொண்டு பின்பக்கம் போனான்.
``ஏய்...எதுக்கு இங்கே வந்தே?’’
````கோபி! முதல்ல சட்டையிலிருந்து கையை எடு! நான் ஒண்ணும் விரும்பி வரலை. உங்க அம்மாவும் சுதாவும் தான் கூப்பிட்டாங்க!’’
``கூப்பிட்டா.... உடனே வந்துடுறதா? நீ எதுக்காகப் பணம் தரணும்?’’
``பங்களா வளர வேணாமா?’’
`` அதுதான் நீ எதுக்கு தரணுமுன்னு கேட்டேன்!’’
``என்னடா இது...பங்களாவை எனக்குத் தரேன்னு சொன்னே. அதுக்குச் செலவு பண்ண எனக்கு உரிமையில்லையா?’’
``பங்களாவைத்தான் இன்னும் எழுதித் தரலியே! அப்புறம் அதுக்குள்ளே உனக்கென்ன உரிமை?’’
``ஓகோ.. அப்போ அன்னைக்குச் சொன்னதெல்லாம்? வெறும் வாக்குதானா? நான் என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா? எனக்கு இப்போ முடிவு தெரிஞ்சாகணும். அதை இப்பவே என் பேருக்கு மாத்தித் தரணும்!’’ என்று குமரேசன் உரக்கப் பேச-
``ஏய் ....ஏண்டா கத்துறே? மெதுவா பேசு.’’
``..............................’’
``இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடு.’’
``அதுவரை நான் இங்கேதான் இருப்பேன்.’’
அவர்கள் தனியாய் பேசிக்கொள்வது என்னவென்று அறியும் ஆவல் சுதாவுக்கு எழவே. அறைக்குள்ளிருந்து ஜன்னல் வழியாகக் கவனித்துக்கொண்டிருந்தான்.
`அண்ணனிடம் ஏதோ பிழை இருக்கிறது. அதனால்தான் திடீர் திடீரென கோபம் வருகிறது! அம்மா சொன்ன மாதிரி பழையபடியும் அண்ணன் தப்பு தண்டாவுல இறங்கிருச்சா?’
அப்போது வாசலில் அரவம் கேட்டது. வாகனம் வந்து நிற்பதும்,புழுதி பறப்பதும் தெரிந்தது. தொடர்ந்து தட்டப்பட்டது.
கவுசல்யா, யோசனையுடன் போய் திறக்க –வெளியே போலீசார் இருவர்,``இது கோபியோட வீடுதானே?’’ என்று அதட்டினர்.
அவள் மிரண்டு,``ஆமா...எ..என்ன விஷயம்?’’
``அவன் இருக்கானா?’’ என்று கேட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே நுழைந்தனர். ``எங்கே அவன்?’’
அவள் வார்த்தை வராமல் தடுமாறி, ``சார்...என் மகன் என்ன தப்பு பண்ணினான்?’’ என்றாள்.
`` அதை ஸ்டேஷன்ல வந்து கேட்டுக்குங்க! அவனை எங்கே ஒளிச்சு வச்சிருக்கீங்க?’’
``இல்லை. நாங்க ஒளிச்சு வைக்கலை. அவன் இங்கே இல்லை’’ என்று தோட்டத்தை மறித்தபடி பொய் சொன்னாள்.
அதற்குள், குமரேசன் போலீசைக் கவனித்து, `கோபி! போலீஸ்....போலீஸ்....’’ என்று கிசுகிசுத்தான்.``உன்னைத்தான் தேடுது.’’
``என்னையா...எதுக்கு?’’
``அதை அப்புறமா சொல்றேன். முதல்ல நீ தப்பிச்சு போயிடு!’’
`` நான் ஏன் போகணும்? நான் என்ன தப்பு பண்ணினேன்?’’
``விபரம் புரியாம பேசாதே? என் பேர்ல நான் புகார் கொடுத்திருந்தேன். ரெண்டு வாரம் கழிச்சு அவங்க சாவகாசமா இப்போதான் வர்றாங்க!’’
``என் பேரில் எதுக்கு புகார்? அதான் நான் சரின்னு சொன்னேனே!’’
``அதுக்கு முன்னாடி கொடுத்த புகார்! சொல்றதைக் கேளு. சீக்கிரம் போயிடு! இல்லேன்னா வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிடும்!’’
``நான் எங்கே போவேன்?’’
``என் அறையில் இரு. இவங்களைப் பேசி சமாளிச்சு அனுப்பிட்டு நானும் வர்றேன்!’’
(18)
அந்தச் சம்பவம், குமரேசனை அந்த வீட்டின் நாயகனாகவும், பாதுகாவலனாகவும் உருவகப்படுத்தி இருந்தது, சாமிநாதனுக்கும் கவுசல்யாவிற்கும் மகனைவிட அவன் பேரில் அத்தனை மதிப்பும் மரியாதையும் வந்திருந்தது.
பெற்று வளர்த்த மகன் – உதவாக்கரையாக இருக்கிறான். திரும்பத் திரும்ப குடும்பத்திற்கு அவனால் கெட்ட பெயர். எங்கிருந்தோ வந்தவன் நம்மைக் காக்கிறான். இது மாதிரி நமக்கு ஒரு பிள்ளை இல்லாவிட்டாலும் மருமகனாவது கிடைத்தால் தேவலாம் என அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.
அன்று போலீசைப் பார்த்து வீட்டினர் மிரண்டு போயிருக்க, குமரேசன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அவர்களை அணுகினான், அவர்கள் அவனைப் பார்த்ததும் பயம் தணிந்து பணிவுடன் பேசினர்.
இவன் நிச்சயம் பெரிய ஆள்தான். சுதாவுக்கும் இவனைப் பிடிக்கிறதால் மருமகனாக கிடைத்தால் நமது பாக்கியம்! மகனை போலீஸ் தேடுகிறது. அவன் எங்கே ஓடினான் என்கிற கவலையை விட `பசை’யுள்ள இவனது பக்கமே அவர்களின் நாட்டம் போயிற்று.
குமரேசனுடன் தனியாகப் பேசியபின் போலீஸ்காரர்கள் சமாதானமாகி, ``இவர் சொல்வதால் இப்போ போகிறோம். உங்கள் பையனைக் கண்டிச்சு வையுங்க’’ என்று கிளம்பினார்கள்.
சுதாவுக்கு அதைக் கேட்க பூரித்துப்போயிற்று; அண்ணனைத் தாழ்த்தின வருத்தத்தைவிட நேற்று வந்தவனைப் புகழ்வதைப் பார்த்து மனது மகிழ்வதன் நோக்கம் அவளுக்குப் புரியவில்லை.
கவுசல்யா, பயம் தெளிந்து,``சார் ...காபி குடிச்சிட்டுப் போங்க’’ என்று கெஞ்சி, ``சுதா ...சீக்கிரம் போய் பாலைச் சுட வை’ என்று விரட்டினாள்.
போலீஸ்காரர்கள், குமரேசனைப் பார்க்க, ``ஆமா சார்...இவங்களோட மகிழ்ச்சிக்காக’’ என்க. `சரி’ என்று அமர்ந்தனர். காபி கூட இவரைக் கேட்டுவிட்டுதான் குடிப்பார்கள் போல என அவள நினைத்தாள்.
தம்பி போலீஸ்ல பெரிய வேலையில இருக்குமோ!
அவர்கள் போனதும், ``தம்பி! போலீஸ் ஏன் கோபியை....’’
``அது வந்து... அது ஒண்ணுமில்லை. அதான் சரிபண்ணி அனுப்பிட்டேனே!’’
``சரிபண்ணினது உங்களது திறமை! பெருந்தன்மை. அதுக்கு நாங்க ரொம்ப கொடுத்து வைச்சிருக்கோம். ஆனா, என்ன விசயம்னு தெரிஞ்சாகணுமில்லே?’’
``தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? அதான் பிரச்சினை முடிஞ்சுபோச்சே.”
``இல்லை தம்பி.... இந்த பிரச்சினை முடிஞ்சிருக்கலாம். உடனே இன்னொன்ண்ணு கிளம்பாதுன்னு என்ன நிச்சயம்? பிரச்சினை வரும்போதெல்லாம் உங்களைத் தொந்தரவு பண்ணிகிட்டிருக்க முடியுமா?’’
``உங்கள் தொந்தரவுக்காக மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்.’’
``அதுக்கில்லை தம்பி, கோபியை நினைச்சா எங்களுக்கு பயமாயிருக்கு. துபாய் போறதுக்கு முன்னாடி யாருக்கும் பயனில்லாம தறுதலைய சுத்திகிட்டிருந்தான். அங்கே போனதும் திருந்திட்டான்னு நினைச்சு அவனுக்காக இடம் வாங்கி, பங்களா கட்டி, பெரிய இடத்துல பெண் ஏற்பாடு பண்ணினோம். அவனைப் பற்றி சம்பந்திக்கு தெரிஞ்சு போச்சோ என்னவோ தெரியலை..... எங்களோட உறவை முறிச்சுக்கிட்டார்.’’
``...........................’’
``அவன் திரும்ப பழைய ரவுடித்தனத்தைக் காட்டத் தொடங்கிட்டானோங்கிற பயம்...சொல்லுங்க, அவன் ஏன் தலைமறைவாகணும்? தப்பு பண்ணிலேங்கிறப்போ எதுக்காக போலீசைப் பார்த்து ஓடணும்?’’
``அதான் சொல்றேனே! வீட்டுல இத்தனை பேர் முன்னாடி போலீஸ் அவனைப் பிடிச்சுட்டுப்போனா ஊர் கேவலமா பேசாதா? அதனால் நான் தான் அவனை ஓடிப்போகச் சொன்னேன். அது சமயோசித நடவடிக்கை! அப்புறம் அவன் தப்பு பண்ணலியான்னு கேட்கிறீங்க?’’
``ஆமா...’’
``தப்பு அவன் பண்ணலேன்னு நான் பொய் சொல்ல விரும்பலே. தப்பு செஞ்சிருக்கான். அது அவனையும் மீறின தவறு. அவனே எதிர்ப்பார்க்காம –அவனது தலைக்குமேல் போன விசயம்...அதுகூட அவன் தனக்காகப் பண்ணலை, பிறருக்காகத்தான்!’’
``தெரியும் –அவனைப் பற்றி! தனக்காகப் பண்ணிக்கிட்டாதான் பரவாயில்லையே! இவனுக்கு எப்போதான் நல்ல புத்தி வருமோ தெரியலை’’ என்று கோபியை கரித்துக் கொட்டினர்.
கிராமத்தில் சின்ன விஷயம்கூட ஊர் முழுக்க வேகமாய் பரவிவிடுவது இயல்பு.
கோபியைத் தேடி போலீஸ் வந்த செய்தியும் சுவாரசியமாய் பரப்பப்பட்டது.
ஏற்கனவே சாமிநாதன் –கவுசல்யாவின் அலட்டல் தாங்காமல் பொறாமையில் தகித்திருந்தவர்களுக்கு இப்போது நல்ல தீனி கிடைத்தது.
`என்னவோ பெரிதாய் துபாய் பணம் என்றார்கள். இத்தனை பெரிய பங்களா கட்டுவதற்கு கோபி என்ன எண்ணெய் கிணறா வைத்திருக்கிறான்? நகைக்கடைக்காரனை ஏமாத்தி பணம் பிடுங்கினார்கள். கோபியும் என்ன குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தானோ தெரியவில்லை. வசமாய் சிக்கிக்கொண்டான்!’ என்றார்கள்.
கிராமத்தில் அன்பு –பாசம் –நேசம்-பற்றுதல் மனிதாபிமானம் –உதவும் குணம் எல்லாமே அதிகம். அதைவிட அதிகமாய் பொறாமையும்! அருகிலிருப்பவரின் வளர்ச்சியையும் உயர்வையும் சகித்துக்கொள்ளமுடியாத அவலத்தால் பலரும் பலமாதிரி பேசிக்கொண்டிருந்தனர்.
அதனால் கூச்சப்பட்டு, பேச்சு அடங்கட்டும் என்று கோபி நகரத்திலே தங்கியிருந்தான். அது மேலும் ஊர் மக்களுக்கு பேச வசதியாயிற்று.
`அவன் ஜெயிலில் இருக்கிறான். அதனால்தான் வரவில்லை. இனி வரவே முடியாத மாதிரி உள்ளே போட்டு விட்டார்கள். ஜாமீன்கூட கிடைக்கவில்லை’ என்றார்கள். அதை வீட்டில் உள்ளவர்களும் நம்ப வேண்டியதாயிற்று. அதெல்லாம் குமரேசனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
(19)
``ஏண்டா! சுத்தமா அழிஞ்சு குட்டிச்சுவராப் போறதுன்னே நீ முடிவு பண்ணிட்டியா.....?’’ மதி, கடுங்கோபத்துடன் தொலைபேசியில் கோபியைப் பிடித்து விளாசினான். இவன் பதில் பேசவில்லை.
``உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டிருக்கே! ஊர்ல என்னென்னவோ புகையுது. எதைப்பற்றியும் கவலைப்படாம அங்கே என்ன பண்ணுறே? தெரியாமத்தான் கேட்கிறேன்...’’
அதன்பிறகும் கோபி எதுவும் சொல்லாமல் மவுனமா இருந்தான்.
``கோபி! வெள்ளம் தலைக்கு மேல் போயிடுச்சு, அப்பவே உனக்கு நான் கோடிட்டுக் காட்டினேன். நீ எதுவும் பண்ணலே....உன் தங்கச்சியை அந்தக் குமரேசனுக்குக் கட்டி வைக்கப் போறதா ஊர் முழுக்கப் பேச்சு!’’
``அந்தப் பேச்சுக்கு பயந்துதானே....நானே ஒதுங்கியிருக்கேன்!’’
``இது கோழைத்தனம்....பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட்டுட்டு.....ஒடி ஒளிஞ்சா எல்லாம் சரியாயிடுமா? உடனே புறப்பட்டு வாடா....!’’
(20)
கோபியைப் பார்த்ததும் கவுசல்யா முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சுதாவின் முகத்திலும் அலட்சியம் தெரிந்தது. யாருடைய தயவும் இல்லாமல் பணக்கார -வசீகர இளைஞனைக் கட்டிக்கொள்ளப் போகும் கர்வம் மிளிர்ந்தது.
பொதுவாகவே பெண் என்பவள் –படிப்பு, பணம், கல்யாணம் எல்லாவற்றிற்குமே வீட்டில் பெற்றோர் அல்லது சகோதரனை எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்களை அனுசரித்துப் போனால்தான் காரியம் நடக்கும்.
இங்கே குமரேசனை –அவள் தன்னைத்தானே தேடிக் கொண்டதாகவும், இனி வேறு யாருடைய தயவும் தனக்குத் தேவையில்லை என்கிற மாதிரியும் அவள் நினைத்தாள். அது அவளது நடத்தையிலும் பிரதிபலித்தது.
``சுதா! நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா.....?’’
``என்ன கேள்விப்பட்டேன்னு சொன்னாதானே தெரியும்!’’
``உனக்கும் குமரேசனுக்கும் திருமணம் நிச்சயம் பண்ணப் போறாங்கன்னு...’’
``ஆமாம்...உண்மைதான். அதில் என்ன தப்பு? அவரை நான் நேசிக்கிறேன். நம்ம குடும்ப மானத்தைக் காத்தவர். எல்லாத்துக்கும் மேலாக உன் நண்பர்!’’
``சுதா! நான் உனக்கு எப்படி எடுத்துச் சொல்வேன்! நண்பன்னா அத்தனை நெருக்கம் ஒண்ணுமில்லை. அவன் யாரோ எவனோ! அவனது குடும்பப் பின்னணி என்னன்னு கூடத் தெரியாது!’’
``அதனால என்ன? குடும்பப் பின்னணி தெரிஞ்சு கிட்டா காதலிக்க முடியும்? எனக்கு மனசுக்கு பிடிச்சிருக்கு. பழகினேன். பழகும்போது இன்னும் அதிகமாய் அவரைப் புரிஞ்சுக்க முடிஞ்சது. அதனால என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை. நான் ஒண்ணும் பாப்பா இல்லை. அந்தக் காசிநாதன் பொண்ணு மாதிரி ஓடிப்போகலை!’’
``சுதா! இதோ பார்! நான் உன் அண்ணன்.... உனக்கு நல்லதையே நினைப்பவன்...’’
`சரிண்ணா ...நான் மறுக்கலே ....நல்லதை நினைக்கிறாய்.....ஆனால் செயல்படுத்தும்போது கோட்டை விட்டுவிடுகிறாய்.... நல்லதை நினைத்துக் கெடுதலை வரவழைத்துக்கொள்கிறாய். நல்லது நினைத்தால் மட்டும் போதாது... அதைச் செயல்படுத்துவதற்கு ஒரு துணிவும், பக்குவமும் வேண்டும். கோழைத்தனம் கூடாது. உங்கிட்ட அதுதான் அதிகமா இருக்கு. உதாரணத்துக்கு அகல்யா விசயம்.... பல ஆண்டாகச் சுற்றினீர்கள்.... கடைசியில் கல்யாணம் என்று வரும்போது பிரிவு... ஒதுங்கிவிட்டாய்!’’
``சுதா! மனசாட்சி இல்லாம பேசாதே! நானா ஒதுங்கினேன்? நம் பெற்றோர்தானே? பணம், பங்களா, பகட்டுன்னு மயங்கி என் வாழ்வைக் காவு கொடுத்தாங்க?’’
`எல்லாம் எனக்குத் தெரியும். பெற்றோர்கள் பலதும் சொல்வார்கள், செய்வார்கள். அவர்களின் கண்ணோட்டமும் அவர்களின் சிந்தனையும் வேறு. நீ மெய்யாலுமே அகல்யாவை விரும்பி இருந்தா.... அவளை விட்டிருக்கக்கூடாது....’’
``சுதா! நீயும் இப்படி பேசுகிறாய்? அதுவும் என்னைப் பார்த்து? பாவி! சின்ன வயசிலருந்து எனக்காக நான் எதுவும் கேட்டிருக்கிறேனா? உனக்காக! உனக்காக எத்தனை கஷ்டப்பட்டிருப்பேன்! உன்சுகம்! உன்தேவைகள்! உனக்குப் பிடித்தவைகள்! உன் நல்லதுக்கு என்று வாழ்ந்தேனே.... எல்லாவற்றையும் மறந்துவிட்டு தூக்கி எறிஞ்சு பேசுறியே....., இது நியாயமா...?
``..........................’’
``இப்போ ....இங்கே இந்தக் காசிநாதன் பொண்ணைப் பற்றிச் சொன்னியே! அவள் கெட்டுப் போனவன்னு தெரிஞ்சும்கூட எல்லோரும் சேர்ந்து என் தலைவலியில் கட்டி வைக்கப் பார்த்தீங்களே! நான் ஏன் அதற்கு மவுனம் காத்தேன்.....தெரியுமா.....?’’
``ஏன் ......பணம் வருதுன்னுதானே!’’
``அடி பைத்தியமே! இந்த அண்ணனை நீ புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா? இப்படி அமிலத்தை உமிழ்கிறாயே....? இது உனக்கே நியாயமா இருக்கா..?’’
``...........................’’
``நகைக்கடைக்காரன் பணம் கொடுத்தா........அதை வச்சு உனக்கு ஒரு நல்ல வாழ்வு தொடங்கலாம் என்றுதான், எனது மனசாட்சியையும் அடக்கி வெச்சிருந்தேன். அகல்யாவையும் துறக்க முன்வந்தேன். எல்லாம் உனக்காகத்தான்.....’’
``அண்ணா..! எனக்காக ....எனக்காகனு ரொம்ப பீத்திக்காதே எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. வரைமுறை இருக்கு. எனக்காக நீ சாப்பிட முடியுமா? எனக்காக நீ படிக்க முடியுமா? இல்லை....எனக்கு நோவுன்னா நீ மருந்து சாப்பிடமுடியுமா? சீராட்டி, பாராட்டி வளர்க்கிறதுக்கும் ஒரு பருவம் இருக்கு, அதுக்குமேல வரும்போது அவரவர்களின் ஆசாபாசங்களுக்கு மதிப்புக் கொடுத்து முடிவு எடுக்கணும்.’’
``..........................’’
``உன்கிட்ட அன்பு இருக்கு.... ஆனா அக்கறையில்லை! திறமை இருக்கு.... ஆனா உறுதியில்லை! இதெல்லாம் இருந்திருந்தா....உன்னையே நம்பியிருந்த அகல்யாவை இப்படி நட்டாற்றில் விடுவாயா? அவளும் ஒரு பெண்தானே! தங்கைக்காக தியாகமா? இந்த தியாகம் யாருக்கு வேணும்?’’
``என்ன சொல்றே?’’
``ஒண்ணை அழிச்சு இன்னொண்ணை உருவாக்குறதா? இல்லை....ஒண்ணு இருக்கும்போதே இன்னொருண்ணையும் ஆக்கணும்! அதுதான் திறமை... சாமார்த்தியம்! இங்கே எனக்காக அகல்யாவைக் காவு கொடுத்தேன் என்று சொன்னதையே நான் அவமானமாய் நினைக்கிறேன். அது உண்மை என்றால்...... அந்தப் பெண்ணின் மனசு எத்தனை பாடுபட்டிருக்கும்? அவளுடைய கனவு, உணர்வுகள், ஆசாபாசங்கள் எல்லாத்துக்கும் என்னை எதிரியாக்கி விட்டாய்!’’
``............................’’
``எதுக்கு எனக்கு இந்தப் பொல்லாப்பு? அந்தப் பழிபாவம் ....அது என்னை வாழ்நாள் முழுக்க துரத்தாது? அகல்யா மனது வெறுத்து சபித்தால் நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?’’
சுதா பேசப் பேச, கோபி வாயடைத்துப் போய் நின்றிருந்தான்.
`இவளா....என் தங்கையா பேசுகிறாள்? கடைசியில் நான் செய்ததெல்லாம் தவறாகப் பேசப்படுகிறதே! எனது நோக்கம், உணர்வுகள், ஆத்மார்த்தம் எல்லாமே சரியாய் புரிந்துகொள்ளப்படாமல் அசிங்கப்படுகிறதே! இதற்காகவா நான் இத்தனை கஷ்டப்பட்டேன்?’’
``சுதா! நீ ரொம்ப பேசுகிறாய்..... நன்றாவே பேசுகிறாய்....மகிழ்ச்சி! நான் செய்ததெல்லாம் தப்பாகவே இருந்துட்டுப் போகட்டும். எல்லாப் பழிபாவங்களையும் நானே ஏத்துக்கிறேன். ஆனால் அதுக்காக உன் வாழ்க்கையை நீ கெடுத்துக்க வேணாம்.... நான் சொல்வதைக் கேள்....... அந்தக் குமரேசன், நீ நினைக்கிற மாதிரி நல்லவனில்லை. அவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்தால், அவனது சுயநலம் புரியும். காசிநாதனுக்கு இவன் சளைத்தவனில்லை. இவனும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி! மிரட்டல்காரன்!’’
``அப்போ நீ......?’’
``நா....நான்....வந்து....’’
``அண்ணா! எதுக்கு இந்த வேஷம்? இன்னும் எத்தனை நாளுக்கு மறைத்து வைத்து, உன் மனசுலேயே போட்டு புகைஞ்சுகிட்டிருப்பாய்?’’
``சுதா! கஷ்ட நஷ்டம் என்னோடே போகட்டும். அது எதுக்கு உனக்கு?’’
``அண்ணா தர்க்கம் போதும். நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் குழந்தையில்லை. குமரேசனைப் பற்றி நீ என்ன சொல்ல வர்றியோ அது எல்லாம் எனக்குத் தெரியும்.’’
``எப்படி?’’
``அவரே மனம்திறந்து எல்லாம் சொன்னார். அதன்பிறகுதான் எனக்கு அவர்பேரில் மரியாதையே வந்தது. எல்லாம் தெரிஞ்ச பின்புதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்!’’
``சுதா ! உன்னை என்னால் புரிஞ்சுக்க முடியலே. இந்த சின்ன வயசுல இத்தனை பக்குவமா?’’
``நான் இவ்வளவு நேரம் பேசினது தப்பு இருந்தா மன்னிச்சுக்க. எப்போதும் பிறருக்குன்னு இல்லாம உனக்காகவும் வாழணும். பொதுநலத்திற்கிடையே சுயநலத்தையும் அடியோடு மறந்திடக்கூடாது. குமரேசன் சொல்றதுக்கு முந்திவரை நானும்கூட உன்னைத் தப்பாகத்தான் நினைத்திருந்தேன். அவர் சொன்ன பின்புதான் –நீ நம் குடும்பத்துக்காக எவ்வளவு சுமைகளைச் சுமந்து கிட்டிருக்கேன்னு புரிஞ்சுது. சுமைகளை ஏன் நீ மட்டும் சுமக்கணும் –கொஞ்சம் நாமும் பகிர்ந்துக்கலாமேன்னுதான் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிச்சேன். குமரேசனுக்கு இந்த பங்களா –இடமெல்லாம் எழுதிக் கொடுத்தாலும் தப்பில்லேண்ணா.’’
``.............................’’
``ஒரு நல்லவருக்குத்தான் உன் தங்கையைக் கொடுத்திருக்கிறாய் என்று நீ மகிழலாம். திருப்தியடையலாம். நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்ண்ணா. என்ன சொல்றே? இந்தத் தங்கச்சி எடுத்த முடிவு சரிதானே?’’
``ரொம்ப சரி’’ என்று கோபி தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான்.
`சே....என்னவோ நான் பெரிசாய் சாதிக்கிற மாதிரியும், தியாகம் பண்ணுகிற மாதிரியும் நினைத்துக்கொண்டிருந்தேன். இவள் எல்லாவற்றையும் உடைத்துவிட்டாள். நான் குமரேசனுக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு பங்களாவைக் கொடுத்தால் மட்டும் போதாது. சுதாவையும் கொடுப்பதுதான் சரியான பரிகாரமாய் இருக்கும். எப்படியோ –என் பேர் பழுதடைந்தாலும் பரவாயில்லை. இந்த நிச்சயதார்த்தமும் திருமணமும் எந்தவித பிரச்சினையுமின்றி நன்றாக நடக்க வேண்டும்!
கோபி, அதற்குக் கடவுளிடம் வேண்டினான்.
(21)
ஆனால், அந்தத் திருமணம் நடக்கக் கூடாது. அவர்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கக்கூடாது என்று நகைக்கடை காசிநாதன் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்.
`நான் என்ன இளிச்சவாயனா? கோபி –நேற்று பிறந்தவன்! என்னை எப்படி அவமானப்படுத்திவிட்டான்! என் மகள் கெட்டுப்போனவள்தான். மறுக்கலை, அதற்கு அவளை வேண்டாம் என்று சொல்.
ஆனால், நான் திட்டமிட்டு, முதலீடு செய்த அந்த பங்களா எனக்குக் கிடையாது என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?
நான் என்ன மடையனா?
எனது உழைப்பு –திட்டம் –முயற்சிக்கெல்லாம் என்ன விலை? இது கவுரவப் பிரச்சினை! எனது தந்திர முளைக்கு விடப்பட்ட சவால்! நான் பார்த்துப் பார்த்து வளர்ந்த கட்டிடம்! அத்தனை எளிதாய் இன்னொருத்தனுக்குத் தாரை வார்த்துவிட முடியுமா?
எனக்கில்லாமல் அதை வேறு எவரும் அனுபவிக்கக் கூடாது!
அவரது நெஞ்சில் குரூரம் உதித்தது. உடன் அடியாட்களை அழைத்தவர். ``அந்த பங்களாவை வெடிகுண்டு வச்சு தகர்த்துடுங்கடா’’ என்று விரட்டினார்.
(22)
மறுநாள் குமரேசனுக்கும் சுதாவுக்கும் நிச்சயதார்த்தம். அன்று ராத்திரி, வீட்டில் விருந்துகளின் கோலாகலம்! அதிகாலையில் எழ வேண்டும் என்று வேலையைச் சீக்கிரம் முடித்து , அனைவரும் படுக்கப்போயிருந்தனர்.
வெளியே கட்டிலில் கோபி, அகல்யாவை நினைத்தபடி தூக்கம் வராமல் வானத்து நட்சத்திரங்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தான். அப்போது நண்பன் மதி ஓடிவந்து,``கோபி, சீக்கிரம் வா’’ என்று பரபரந்தான்.
``என்னடா ...என்ன விஷயம்?’’
``அந்த காசிநாதன், ஆட்களை அழைச்சு வந்து பங்களாவைத் தகர்த்துக்கிட்டிருக்கார்.’’
``என்னது..?’’
உடன் கோபியின் ஆவேசம் பொங்கி எழுந்தது, அவனுக்குள் அடங்கிக் கிடந்த ஆத்திரம் வெடித்தது. லுங்கியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு முகட்டுவளையில் செருகப்பட்டிருந்த கொடுவளை எடுத்துக்கொண்டு ஓடினான்.(23)
அதிகாலை.
சுதா, ஐந்து மணிக்கெல்லாம் குளித்து, அலங்காரம் பண்ணிக்கொண்டிருந்தான். விருந்தினர்கள் பாதி பேர் வீட்டிலும், ஆண்கள் எல்லாம் காவிரியிலும் குளிக்கச் சென்றிருந்தனர்.
சுதா அலங்கரித்து, நகைகளைப் போட்டுக்கொண்டு அண்ணனிடம் காட்ட வேண்டும் என்று கோபியைத் தேடிய போது-
வாசலில் சலசலப்பு கேட்டது.
என்னவென்று எட்டிப் பார்க்க –மதி அவசர அவசரமாய் சைக்கிளில் வந்து இறங்கி,``சுதா! ஒரு விஷயம். யாருக்கும் தெரியவேணாம். இங்கே வா’’ என்று அழைத்து ``உங்க அண்ணனைப் போலீஸ் பிடிக்கபோயிருச்சு’’ என்றான்.
``ஐயோ.....ஏன்?’’
``அந்தக் காசிநாதனோட் கையை வெட்டிட்டான்!’’
அந்தக் தகவலை அந்தப் பக்கமாய் வந்த கவுசல்யா கேட்டுவிட்டு, ``கடவுளே.....மறுபடியும் இவன் அரிவாளை எடுத்துட்டானா? நாங்க பட்டதெல்லாம் போதாதா?’’ என்று ஒப்பாரி வைத்தாள்.
``இவன் திருத்தவே மாட்டானா? இவனால் எங்களோட நிம்மதி போச்சு’’ என்று அவள் மாரில் அடித்துக்கொண்டு அழுதாள்.
``என்ன இது கலாட்டா?’’ என்று மதி அவளைப்பிடித்து நாற்காலியில் தள்ளினான்.`விஷயம் புரியாம நீ பாட்டுக்கு உளறுறே! இதுவரை என்னென்ன நடந்ததுன்னு அவனைக் கரிச்சுகொட்டினாய். அவன் மட்டுமில்லேன்னா உன் குடும்பமே அழிஞ்சுபோயிருக்கும்!’’
சுதா இடைபட்டு, ``மதி வேணாம். பேசாம இருங்க’’ என்று தடுத்தாள்.
``நீ சும்மாயிரும்மா. என்னைக்கிருந்தாலும் உண்மை வெளியே வந்துதானே ஆகணும்? அவனும் மனுசன்தானே! அவன் யாருக்கு என்ன கெடுதல் பண்ணினான்? ஊருக்கு நல்லது பண்ணினதுக்கு யாரோ பழிவாங்கினாங்க. நீங்களும் அவனை சபிக்க விரட்டவே அகல்யாவோட உதவியோடு துபாய்க்கு போனான்.””
``.................................’’
``அங்கே போய் சம்பாதிச்சதும் அதன் பலனை அனுபவிச்சது பத்தாதுன்னு அகல்யாவை அவன்கிட்டேயிருந்து பிரிச்சீங்க. சம்பாத்தியத்துக்கு ஆசைபட்டு, நகைக்கடை காசிநாதனோட ஒப்பந்தம் போட்டு பங்களா கட்டத் தொடங்கினீங்க.’’
``......................................’’
``அகல்யாவைப் பிரிச்சதைக்கூட அவன் தாங்கிக்கிட்டான். ஆனா, கெட்டுப்போன பெண்ணை அவனுக்குப் பேசி முடிச்சதை அவனால் ஏத்துக்க முடியலே. காசிநாதன் கிட்ட பேசினப்போ –பங்களாவுக்கு அவர் கொடுத்த பணத்தை எல்லாம் வட்டியோட திருப்பித் தரலேன்னா, அந்த இடம், பங்களா எல்லாத்தையும் அபகரிச்சுடுவேன்னு மிரட்டினார். அப்போது அவன் உங்க ஆசை –கனவு-தங்கையோட எதிர்காலத்தைத்தான் நினைத்தான். பணத்தை திருப்பித் தரத் தீர்மானம் பண்ணி வழி தேடினப்போ –ஒரே ஒரு மார்க்கம்தான் தெரிஞ்சுது.’’
``அது –துபாயிலிருந்து குமரேசனின் அண்ணன், கோபிகிட்ட கொடுத்தனுப்பியிருந்த தங்க பிஸ்கட்டுகள்! லட்சங்கள் பெறும் அதைக் குமரேசன்கிட்ட உடனே சேர்க்காம –அவசரத்துக்கு அதை காசிநாதன்கிட்ட கொடுத்து சரி பண்ணினான், குமரேசனுக்கு துரோகம் பண்ணினாலும் கூட, உங்களோடா ஆசை நிறைவேறணும் –துபாய் போய் குமரேசனுக்குக் கொஞ்சம்கொஞ்சமா பணம் அனுப்பிடலாம்னு நினைச்சான்.’’
``...............................’’
``ஆனா, அதுக்குள்ளே குமரேசன் வந்து அவசரப்படுத்தவே, அந்தப் பங்களா வெளியே எங்கேயும் போகலே, தங்கையோட கணவனுக்குத்தானே போகுதுன்னு அவனுக்குக் கொடுக்க சம்மதிச்சான்.’’
``................................’’
``இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவீங்க. ஆசையாய் கட்டின பங்களாவையும் வேணாம்னு ஒதுக்கிடுவீங்க. பெத்தவங்களோட ஆசையை எப்படியாவது நிறைவேத்தணும்னுதான் எல்லாத்தையும் மறைச்சு வச்சான்.’’
``.............................’’
``ஆனா, அந்த பங்களாவையே காசிநாதன் அழிக்க வரும்போது அவனால் பார்த்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும்? தலையை வெட்டுறதுக்குப் பதில் கையை வெட்டிட்டுப் போயிருக்கான்! எல்லாத்துக்கும் காரணம் –உங்களோட பேராசை! அதை மறந்துட்டு கடைசியில கோபி மேலே பழிபோடுறீங்க.’’
மதி ஆதங்கத்துடன் முழங்க, வீட்டினரும் தெருவாசிகளும் விக்கித்து நின்றிருந்தனர்.
(24)
காவல் நிலையம்.
`என்னதான் நல்லதை நினைத்து –நல்லதையே செய்ய முயன்றாலும். கடைசியில் கெட்டபெயரும் –கெட்டதுமாகவே நிகழ்கிறதே’ என்கிற மனவருத்தத்துடன் கோபி, கைதி அறைக் கம்பிக்குள் அடங்கியிருந்தான்.
எப்போதும் பிறருக்காகவே சிந்திக்கும் எனக்குத்தான் யாருமில்லை’ என்று கலங்கிக்கொண்டிருக்கும்போது-
``இதோ நானிருக்கிறேன்’என்று சொல்லாமல் சொல்கிற மாதிரி அகல்யா, காரில் வந்து இறங்கினாள், அவளுடன் அவளது அப்பா வாத்தியாரும் வந்தார்.
கோபி, வியப்புடன் பார்க்க –ஆய்வாளரின் அனுமதியோடு அவனிடம் பேசினாள்,
``என்ன....அப்படிப் பார்க்கிறீங்க? என் திருமணம் நடக்கலே. அதுக்குக் காரணம் –உங்க நண்பர் மதி அவர்தான் எனக்குப் பேசின வரன்கிட்ட உங்களைப் பற்றி எடுத்துச்சொல்லி பின்வாங்க வைச்சுட்டார்! என்னை மன்னிச்சுடுங்க. உங்களைத் தப்பா புரிஞ்சுகிட்டு....’’ என்று கோபியின் கையைப் பிடித்துக் கொண்டு உருகினாள்.
மேற்கொண்டு அங்கே இடைஞ்சலாக இருக்க விரும்பாமல், வாத்தியார்,``ஜாமீன் எடுக்க வக்கீலை அழைச்சு வர்றேன்’’ என்று கிளம்பினார்.
கோபி, அகல்யா இருவர் முகத்திலும் நிறைந்த நிம்மதி பூத்தது.
(முடிந்தது)
கருத்துகள்
கருத்துரையிடுக