முதல் புத்தகம்
பொது அறிவு
Backமுதல் புத்தகம்
தமிழ்
உள்ளடக்கம்
முதல் புத்தகம்
நூற்குறிப்பு
உள் புகுமுன்…
நன்றி!
1. முதல் புத்தகம்
2. ஹைதராபாத் பிரியாணி
3. கருத்துச் சிதறல்கள்
4. உன்னதமான உறவு
5. தமிழை வளர்க்க என்ன வழி?
6. கிருஷ்ணனைத் தேடி...
7. ஒரு உரையாடல்...
8. ஒரு குறுக்குத் தெருவில்...
9. தஞ்சை வீணை
10. சட்டம்
11. வரலாறு
12. ரேண்டம்
13. கீச்சுக்களில் சில...
1
முதல் புத்தகம்
முதல் புத்தகம்
_______________
தேர்ந்தெடுத்த நுண்பதிவுகள் , குறும்பதிவுகள் , புனைவுகள்
_________
தமிழ்
2
நூற்குறிப்பு
முதல் புத்தகம்
( தேர்ந்தெடுத்த நுண்பதிவுகள் , குறும்பதிவுகள் , புனைவுகள் )
தமிழ்
அட்டை வடிவமைப்பு: தமிழ்
மின்னூல் வடிவமைப்பு: ஓஜஸ்
மின் பதிப்பு : செப்டம்பர் 2015
இம்மின்னூல் Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
படிக்கலாம் – பகிரலாம் – அச்செடுக்க, வணிக ரீதியில் பயன்படுத்த அனுமதியில்லை
Muthal puththakam
(Selective Tweets, Blog posts, Fictions)
Thamizh
Cover Design: Thamizh
Design: Ojas
Electronic Edition: September 2015
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
3
உள் புகுமுன்…
இது என் முறை. இது என் கணக்கில் முதல் வரவு. பலத்த யோசனைக்குப் பிறகே இந்த முதல் மின்னூல் வெளி வந்திருக்கிறது. வெவ்வேறு தலைப்புகளின் கீழ் யோசித்து விட்டு கடைசியாக இந்தப் பிரிவில் முதல் நூலைக் கொண்டு வந்திருக்கிறேன்.
சமீப கால மின்னூல்களில் இவ்வகை நூல்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆகவே இது என் கணக்கில் முதல் முறை.
இன்றைய சூழலில், சமூக வலைதளங்களில் எழுதுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தொடர்ந்த வாசிப்போ, மற்றவர்கள் போடும் RT யோ, Like/Share –ஓ , ஏதோ ஒன்று ஒரு சாராரை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாரெனில், மிகக் குறுகிய காலம் வலையில் கோலோச்சிய வலைப்பதிவர்கள்தான். ஒரு வலைப்பதிவு எழுதி அதை பிழை திருத்தி, பதிவேற்றுவதற்கு ஆகும் நேரத்தை விட ட்விட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ எழுதி வெளியிடுவது எளிது. உடனடி எதிர்வினையும் உண்டு.
இங்கு நான் தொகுத்திருப்பதும் கூட நான் பல காலம் (ஏறக்குறைய 3-4 ஆண்டுகள்) பல்வேறு சமூக வலைதளங்களில் என் கணக்கில் எழுதியவை.
இதன் சுதந்திரத் தன்மைதான் எழுதத் தூண்டுகிறது. மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத இடம் கொடுக்கிற சுதந்திரம். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ளவை அந்த சுதந்திரத் தன்மைக்கு எவ்விதத்திலும் பங்கம் செய்யாதவை. முகம் தெரியாத, முன் பின் அறியாதவர்களிடம் கூட சகஜமாக உரையாடக் கூடிய வாய்ப்பைத் தருகிறது, அறியாத, அரிதான புத்தகங்கள், சினிமா, என எல்லாமும் அறிய ஏதுவான சூழல் இப்போது நிலவுகிறது.
ஒருவகையில் இது நல்லது. இன்னொரு வகையில் கெட்டதாகவும் படலாம்.
இதைத் தொகுக்கையில் நிறைய மலரும் நினைவுகள் தோன்றின. நினைவுகள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
என் பெயர் கொண்டு ஒரு மின்னூலேனும் வர வேண்டும் என தொடர்ந்து என்னை செலுத்திய என் தோழர்கள் சிலருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்நூல் உருவாக்கத்திலும் அவர்களின் பங்களிப்பு உண்டு. இனி அடுத்தடுத்து நான் எழுதினாலும் அதிலும் அவர்களின் பங்களிப்பு இருக்குமென நம்புகிறேன்.
என்னைத் தொடர்ந்து இன்னும் நிறைய பேர் இதைப்போலவே மின்னூல்கள் வெளியிட்டால் மகிழ்ச்சியடைவேன். நானே மற்றவர்களைத் தொடர்ந்துதானே இப்படி ஒரு நூல் வெளியிட்டிருக்கிறேன். நான் வேறு யாருக்கேனும் ஒரு தூண்டுதலாக அமைவேன் என நம்புகிறேன்.
முதல் நூல் அளவில் சிறியதாக இருந்தால், அதன் மூலம் வாசிப்பவர்களின் வாசிப்பு நேரம் இந்த நூலுக்குக் குறைவாக பயன்பட வேண்டும். என்கிற ஒரே காரணமே இந்நூலின் அளவிற்கு காரணம்.
தொடர்ந்து எழுதும் நம்பிக்கையுடன்,
தமிழ்
செப்டம்பர் 06 2015
கருத்துக்களை அனுப்ப: iamthamizh@gmail.com
twitter.com/iamthamizh
thamizhg.wordpress.com
4
நன்றி!
என் முதல் மின்னூலை வெளியிட என்னைத் தொடர்ந்து செலுத்திய நண்பர்களுக்கு.
குறிப்பாக மதிப்பிற்குரிய த. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
1
முதல் புத்தகம்
எழுதுவதற்காக பேனாவும், காகிதமும் தயாராக இருக்கையில் ஏதும் தோன்றாமல் இருக்கிறது. அப்படி முற்றிலுமாக ஒதுக்கி விடவும் முடிவதில்லை. வெறுமைதான் இருக்கிறது. வெறுமை என்பது ஒன்றும் மோசமில்லை என்று படுகிறது. எதை வேண்டுமானாலும் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்.
*
இப்போதெல்லாம் நகைக்கடை விளம்பரங்களைப் பார்த்தால், குழாயடி-குடுமிப்பிடிச் சண்டைகள் தேவலாம் என்று தோன்றுகிறது.
*
யாரெல்லாம் நண்பர்கள் என்பதை விட ஒருவரை நண்பர் என்று உரிமையெடுத்துக் கொள்ள என்ன வரையறை?
சத்தியமாகத் தெரியவில்லை.
நண்பர் என நான் குறிப்பிடுகிறவர். ஒருவேளை அடிக்கடி என்னோடு உதவியவராக இருக்கலாம். பேசுகிறவர் – நான் உதவியவர் – ஏதோ ஒரு கணத்தில் என்னைக் கடந்தவர் – எங்கோ நான் கண்டவர் – சமயங்களில் இன்னொருவரின் நண்பராக இருக்கலாம். நண்பரின் நண்பராக இருக்கலாம்.
உண்மையில் எனக்கே ப்ரக்ஞை இல்லாமல்தான் எழுதுவதாக உணர்கிறேன். என்ன செய்யலாம்?
யாரெல்லாம் நண்பர்கள்? அவர்களுக்கு என்ன வரையறை வைத்திருக்கிறீர்கள்?
*
தொழில்நுட்பங்களை விட நான் மனிதர்களை நம்புவேன். எவ்வளவு ஏமாற்றப்பட்டாலும். அதை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை. நான் சில மனிதர்களை நம்பி நிறையவே இழந்திருக்கிறேன். அதைக் காட்டிலும் அதிகமாக பெற்றும் இருக்கிறேன். முக்கியமாக பயண வழிகாட்டுதல்களுக்கு நான் மனிதர்களை அதிகம் நம்புவேன். முக்கியமாக பெங்களூரில். நான் தனியாக பயணித்த இரண்டோ – மூன்றோ பயணங்களில் முழுக்கவே வெள்ளைத்தாளாகவே பயணித்தேன். யாரேனும் ஒருவர் எனக்கு வழிகாட்டிக் கொண்டேதான் இருந்தார்கள்.
*
பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் பாசம் இருக்கிறது என வாய் வார்த்தையாகச் சொல்லிக் கேட்டதே இல்லை. அவர்களின் செயல்கள் மூலம் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு முறையும் உணர்த்துவார்கள். நட்பிலும் கூட அப்படித்தான் என நம்புகிறேன்.
*
என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றான் நண்பன். படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். மேற்கொண்டு பேச நேரமெடுத்தான்.
என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றான் நண்பன். எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றேன். எழுந்து சென்றுவிட்டான்.
எனக்கே இப்படியிருக்கிறதே.. உண்மையிலே எழுத்தாளர்களானவர்கள் என்ன பதில் சொல்வார்கள். என்ன எதிர்வினை கிடைக்கும்?
*
பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்த பின் அதிரசம் கொண்டு வந்து தந்தார் ஒரு தோழர். வீட்டில் அம்மா கொடுத்தாலும் வாங்காத பண்டம் என்றால் அது அதிரசம் தான்.. ஏனோ பிடிக்காது.
அவர் கொடுத்ததும் சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும் நட்புக்கு மரியாதை!
கூடவே கொஞ்சம் மிக்சர், தட்டை தந்தார். மிக்சரை முடித்தபோது இன்னொரு தோழர் ‘பந்தார் லட்டு’ என்று ஒன்றைத் தந்தார். பாதி பாதாம் பருப்பை லட்டினுள் புதைத்து வைத்திருந்தார்கள். முழுக்க தின்பதற்குள் திகட்டி விட்டது.
நல்ல வேளையாக தட்டையை சாப்பிட்டு நியூட்ரல் நிலைக்கு வந்தேன்.
*
சின்னச் சின்ன ஆசை பாட்டு உருவான கதை சொன்னால் கூகுளில் தட்டினார் தோழர். அவுகளும் கேரளாதான் என்றதும் உளம் பூரித்தார்.
நதிநீர் இணைப்புத் திட்டத்தை கேரளா எதிர்க்குமா இல்லையா ? என்பதை பத்து நாட்களுக்கொருமுறை ஏதாவதொரு விதத்தில் விவரிக்கிறார்கள். தோழர் சொல்லும் மாஸ்டர் ப்ளானைக் கேட்டால் தலை சுற்றுகிறது…
*
இணையத்தினுள் செல்லாத நாட்கள் எல்லாம் இன்பமாகவே கழிகின்றன. இடைவெளி விட்டு இணையத்தினுள் நுழைந்தால் அதுவும் இன்பமாகத்தான் இருக்கிறது.
*
பெங்களூருவில் மழை சற்று கடுமையாக வருவதுபோல் இருந்தால் கூட மின்தடை ஏற்பட்டு விடுவது எழுதப்படாத விதி என்று எனக்கு செவிவழித் தகவல். அது எழுதப்பட்ட விதியாக இருக்குமோ என்பது என் ஐயம்.
*
கோடைகாலத்து திருச்சி மாநகர் போல உன் மனம் தகிக்கிறது என்று உவமையாகக் கூட எழுத இயலவில்லை. திருச்சியில் மே மாதம் கனமழை பெய்கிறதாம்.
*
விஷயம் தெரிந்தவர்கள் விளக்கம் கேட்காமலிருப்பது ஒருவகையில் வசதி. விஷயம் தெரியாதவர்கள் விளக்கம் கேட்பது ஒருவகையில் அசதி.
*
கேள்விகளைத் தடுக்கவே பதில்கள் பயன்படுகின்றன. தவிர்க்கப் பார்த்தால் அது எதிர்க்கேள்வியாகி விடுகிறது.
*
மழை நேரத்தில் அருந்துகிற சூடான தேநீருக்குத் தனிச்சுவைதான். தேநீருக்குத்தான் சொன்னேன். தேநீரின் வண்ணத்தில் தருகிற சுடுநீருக்கு அல்லவே!
*
மகிழ்ச்சிக்கான காரணம் சிறியதாகக் கூட இருக்கலாம். ஆனால் மகிழ்ச்சியின் அளவு எப்போதும் பெரியதுதான்.
*
மகிழ்ச்சி என்பதை அளவிடத்தான் கருவியேதும் கிடையாது. துக்கமும், சோகமும் கூட அப்படித்தானே!
*
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்றொரு தெலுங்கு படம். சேகர் கம்முலாவின் படமென்பதால் தயக்கமின்றிப் பார்த்தேன். அதில் வரும் மகள் கதாபாத்திரம் அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கும். அடுத்த ஒரு வருடம் முழுக்க அழமாட்டேன் என. அதை நேர்த்தியாக, கவனமாக கடைபிடிக்கும். இறுதியில் நம் கண்களை கலங்கடிக்கும் மகள் கதாபாத்திரம் அது. கிட்டத்தட்ட அதே மனநிலை தான் எனக்கும்.
*
மற்ற மொழிப்படங்கள் எல்லாம் யூட்யூபில் பெரும்பாலும் சப்டைட்டிலுடன் காணக் கிடைக்கையில் தமிழ்ப் படங்கள் மட்டும் ஏன் வெறுமனே கிடைக்கின்றன.. எங்கே பிரச்சினை இருக்கிறது?
*
பிறந்தநாள் வாழ்த்துகள் எழுதினாலும், அதிலும் ஒரு சிறிய மகிழ்ச்சி உண்டாகிவிடுகிறது.
எழுதுகிறோம் அல்லவா? அவ்வளவேதான்!
*
ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை உண்மையாக ஏதேனும் காரியம் செய்து முடித்தால், வாழ்நாளில் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகளை, வெட்டியாகவோ, தூங்கியோ கழித்து புஸ்வாணம் ஆக்கியிருக்கிறோம் என்று புரியும்….
Lets make a try!
*
வட இந்தியர்கள் பலரும், எலுமிச்சை சோற்றை காலை உணவாக எப்படித்தான் எடுத்துக்கொள்கிறார்களோ என்று எனக்குத் தோன்றவில்லை. நான் அதை பலகாலம் இரவு உணவாகச் சாப்பிட்டவன் என்பதால்!
*
ஆங்கிலத்தில் பேசினால் திரும்பி பேசுவார்களா? என்றொரு பயம். கர்நாடகத்தில் அது ஒரு தொல்லை. ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு உலகம் முழுக்க செல்லலாம் என்று சொல்லும் ஆசாமிகளை கர்நாடகத்தில் எங்காவது நிறுத்திவிட வேண்டும்.
*
எப்போதுமே கிறிஸ்துமஸ் நாட்கள் எனக்கு கொண்டாட்டமானவைதான்… வருட இறுதி என்பதாகவோ, தொடர் விடுமுறை நாட்கள் என்பதாகவோ எடுத்துக்கொள்ளலாம்!!
*
2
ஹைதராபாத் பிரியாணி
நண்பர் ஒருவர் பிறந்தநாளின் பொருட்டு, என்னுடைய நீண்டநாள் விருப்பம் ஒன்றும் நிறைவேறிவிட்டது.
சில வாரங்கள் முந்தி ஹைதராபாத் பிரியாணி குறித்த பேச்சு எழுந்தது. எங்க ஊரும் பிரியாணிக்கு ஃபேமஸ் என்று குரல் உயர்த்தினாலும் இந்திய அளவில் அதுதான் ஃபேமஸ் என்ற வாதம்தானே வெல்லும்..
அப்போதிருந்தே ஒரு விண்ணப்பம் போட்டிருந்தேன். கடைசியாக நேற்று நிறைவேறியது.
ஹைதரபாதி பிரியாணி.
ஹைதராபாத் பிரியாணியின் சுவை தனித்து தெரிகிறது. சமைக்கும் முறை வித்தியாசம் என நினைக்கிறேன். அரிசியே தனி என நம்புகிறேன். (பாசுமதி அரிசி) அந்த கடை ஹைதராபாத் பிரியாணிக்கென்றே அமைக்கப்பட்ட கடை.. ஆந்திரஜோதி நாளிதழும் கூட இருந்தது!
சாப்பிடும் தட்டிலிருந்து எல்லாமே தரமாக, சிறப்பாக இருந்தது. பெங்களூரில் டிஷ்யூ கலாச்சாரம்தான் கொஞ்சம் அந்நியமாக இருக்கிறது.
சாப்பிட்டு முடித்தவுடன், ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரில் நறுக்கிய சிறிய எலுமிச்சை துண்டு வைத்து தந்தார்கள்.
அருகில் இருந்த தோழர் என்ன செய்தாரோ அதையே நானும் செய்யப் பிரயதனப்பட்டு, அவரை கவனித்துக்கொண்டேன். எனக்கும் ஒரு கிண்ணம் வைத்தார்கள்…
எனக்கு நெஞ்சுக்கு நீதி குறும்படம் நினைவிற்கு வந்தது! (இன்னொரு ஜூஸா?)
கழுவி முடித்ததும்., மருத்துவர் கு.சிவராமன் நினைவில் வந்தார். எலுமிச்சையின் மகத்துவம் பற்றி ஆறாம் திணையில் ரெண்டு பக்கம் எழுதியிருப்பார். அதில் இந்த கை கழுவும் முறையை கழுவி ஊற்றியிருப்பார்!
விடுங்கள்!
கை கழுவி முடித்ததும், டிஷ்யூவில் துடைக்க என்னவோ போல்தான் இருந்தது. என்னதான் ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு முடித்தாலும், கடைசியாக மனநிறைவோடு கை கழுவாமல் என்ன ப்ரயோஜனம்?
Cheeni kum படம் பார்த்த காலத்திலிருந்தே மனதில் நின்ற அடுத்த இலக்கு hyderabadi zafrani pulao!
இன்னொரு வாய்ப்பில் அதுவும் ஆகட்டுமாக!
*
3
கருத்துச் சிதறல்கள்
எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் கருத்து சொல்லியே பழக்கப்பட்டு விடுகிறது மனம். எங்கிருந்து தொடங்கியது இப்பழக்கம் என்றுதான் தெரியவில்லை. ஆட்டோவின் பின்னால் தொடங்கி, எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எழுதிக் குவிக்கிறார்கள்.
பொதுக் கழிப்பறை சுவர்களில் கூட, ‘தண்ணீரை வீணாக்காதீர்!’ குழாயை சரியாக அடைக்கவும் என விதவிதமாக காண நேர்கிறது. நான் முன்னெல்லாம் ஆட்டோக்கள் பின்னால் ‘குழந்தைத் தொழிலாளர்களை அனுமதியோம்!’, ‘பெண்ணின் திருமண வயது 18’ என்று மட்டுமே கண்டு வந்தேன். இப்போதெல்லாம் இன்னும் வித்தியாசமாக நிறைய காண நேர்கிறது.
லாரிகளில் தொங்கும் வாளிகளைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இப்போதெல்லாம் ப்ரொஃபைல் போட்டோக்கள், கவர் போட்டோக்கள் என கிடைக்கிற சின்ன இடைவெளிகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
வாட்ஸப் ஸ்டேடஸ்களில் கூட இப்போது நிறைய கருத்துச் சிதறல்கள் காணக் கிடைக்கின்றன. மனிதன் எப்படி வாழ வேண்டும்? எதற்காக வாழ் வேண்டுமென்று கூட எழுதத் தொடங்கிவிட்டார்கள். அது சரி! எதற்கு இப்படியெல்லாம் எழுதுகிறார்கள். யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறார்கள்.
நமக்காகத் தான் தோழா!
எல்லாமே நமக்காகத் தான் !
4
உன்னதமான உறவு
சென்ற ஆண்டு அலுவல் நிமித்தமாய் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சில ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற ஒரு தனியார் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்.
அவரோடு உரையாடியதிலிருந்து எனக்குத் தெரிந்தவை இவைதான்.
அவர் மகன் இந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவராகப்பட்டவர் பெங்களூரில் ஏதோ ஒரு படிப்பு படித்தவராம்.
பிறகு நானாக சில படிப்புகளைச் சொல்லி கடைசியாக அவர் ஒப்புக்கொண்டார். அவர் மகன் MS படித்தவராம்.
இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்கா போகப் போகிறாராம். இன்னும் சில மகன் பெருமைகளைச் சொல்லி பூரித்தார் அவர். பேசிக்கொண்டிருக்கையில் திடீரென அவருடைய செருப்பை சரிசெய்தார். அதாவது அவருடைய செருப்பு சேதமடைந்து இருந்தது.
எப்படி யோசித்தாலும், பல்லாயிரங்களில் ஊதியம் பெறுபவரின் அப்பாவின் நிலை எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
அப்பாக்கள் எப்போதும் உன்னதமானவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் எனக்கோ அவர் மகன் மேல் ஏதோ ஒரு இனம் புரியா கோபம் இருந்துகொண்டே இருக்கிறது இன்றுவரை.
5
தமிழை வளர்க்க என்ன வழி?
முதல் வழி பேசுவது.
நல்ல தமிழை எழுதவும் பேசவும் செய்தாலே அது வளரும். ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசப் பழக வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது கொஞ்சம் கடினமாகக் கூட இருக்கலாம். இது எல்லோருக்குமானது.
ஆனால் வளரும் தலைமுறைக்காரர்களிடம் நல்ல தமிழை விதைத்தால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும்.
நல்ல தமிழ்நூல்களை வாசிக்கப் பழக்கினால், அதன் சுவையில் அவர்களாகவே தமிழை உணர்ந்து படிப்பார்கள்.
குறளைச் சொல்லித் தருகையில் அதன் பொருளை நிதானமாக, அதன் பொருட்சுவையை அழகாக எடுத்துரைக்கும் தமிழாசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் பாடத்திட்டம் அத்னை அனுமதிப்பதில்லை. அங்குதான் முதல் அடி விழுகிறது.
திருக்குறள் என்பது ஏதோ மனப்பாடம் செய்ய முடியாத கடினமான ஒன்றாக மாணவர்கள் முன் நிற்கிறது. இதர செய்யுள்களுக்கும் அதே நிலைமை. உரைநடைப் பாடமென்பது தமிழின் உரைநடையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதாக அமைய வேண்டும். அங்கும் குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதிலாகவே அவை இருக்கின்றன.
அடிப்படையில் கேள்வித்தாள் என்பது மிகவும் நேரடியாக இருக்கிறது. மறைமுகமான கேள்விகளும், சிந்தித்து சுயமான விடையளிக்கும் வகையிலும் அமைய வேண்டும்.
துணைப்பாடம் என்றொரு பகுதி உண்டு. சுவையான கதைகள் கொண்ட பகுதி.
தமிழ் இரண்டாம் தாளில் ஒரு வினா வரும். கற்பனையாக யோசித்து எழுதக் கூடிய பகுதி. ஒன்பதாம், பத்தாம் வகுப்பில் கவிதை எழுதக் கூட கேள்விகள் உண்டு. ஆனால் அவற்றுக்கெல்லாம் பதிலாக இன்னொரு கேள்வி(கள்) இருக்கும். அவற்றிற்கான நோக்கமே அழிந்திடும்.
இளவல் ஒருமுறை அந்த கற்பனையான கேள்விக்கு பதில் எழுதியமைக்கு ஆசிரியர் கண்டித்திருக்கிறார். அதற்கு பதிலாக நேரடியான கேள்விக்குப் பதில் எழுதப் பணித்திருக்கிறார். நானும் கற்பனையான கேள்விகளைத் தவிர்த்திருக்கிறேன். ஒரே காரணம் மதிப்பெண்.
தமிழை வளர்க்க நிறையவே வழிகள் உண்டு. அவை இப்போது அடைபட்டு நிற்கின்றன. ஒரு இரவில், ஒரு நாளில் மாற்றம் நிகழ்ந்து விடாதுதான். நாம் சிறிய அளவில் முயற்சியெடுத்தால் போதும். ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் இது சாத்தியமாகும்.
இங்கே நிறைய பழமைவாதிகள் உண்டுதான். அவர்களை மீறிக்கொண்டுதான் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.
பள்ளிகள் தமிழைப் பேசவும், எழுதவும், வாசிக்கவும் பழக்கும் இடமாக இருப்பின் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். பள்ளிப்படிப்பை முடிக்கிறவர்கள் துளியும் தமிழ் தெரியாமல் வெளிவருகிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் இப்போதைக்கு போதுமானது. அடுத்தது மதிப்பெண் குறித்த கவலைகள்.
6
கிருஷ்ணனைத் தேடி...
நானும், தம்பியும் சேர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு உள்ளூர் தொலைக்காட்சியில் பையா படம் ஓடிக் கொண்டிருந்தது. கிளைமாக்ஸ். எதேச்சையாக கொஞ்ச நேரம் பார்த்தோம்.
சண்டை!
கார்த்தி வீராவேசம் வந்தவரைப் போல அடித்து வெளுத்துக் கொண்டிருக்க, திடீரென ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை பார்த்ததும், எனக்கு என்னமோ ஒரு உணர்வு தட்டியது!
இது.. இது.. துரியோதனன் ஆச்சே!
ஆம். மகாபாரதம் தொடரில் அவர்தான் துரியோதனன். அம்மா கிருஷ்ணர் கதாபாத்திரத்துக்கான ஆள் நல்ல தேர்வு என்று சொல்லியிருந்தார்.
நான் கிருஷ்ணனைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்காவது பார்த்தால் சொல்லுங்கள்!
7
ஒரு உரையாடல்...
இதயம் எங்க இருக்குனு தெரியுமா?
இதென்ன கேள்வி? இடப்பக்கம் இருக்கு என கை வைத்துக் காண்பித்தேன்.
முட்டாள்! அப்ப நுரையீரல் எங்க இருக்குனு சொல்லு?
ஓஹோ! ஓகே..ஒகே.. இதயம் நடுவுல இருக்கு..
ம்ம்ம்.. கரெக்ட்..
அப்புறம் ஏன்யா எல்லா டாக்டரும் இடப்பக்கம் ஸ்டெத்த வச்சுப் பாக்குறாங்க?
8
ஒரு குறுக்குத் தெருவில்...
ஏதோ ஒரு சாதாரணமான, நினைவில் கொள்ள முடியாத நாளில், பகற்பொழுதில் அந்த குறுக்குத் தெருவை அடைந்தேன். அதைக் கடந்து நான் அடுத்த தெரு வழியாக முதன்மைச் சாலையை அடைய வேண்டும். வேலை இருக்கிறது.
குறுக்குத் தெருவில் நுழைந்த மூன்றாவது நொடியில் தெருவில் என்னமோ தங்களுக்குள்ளாக பேசி விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவன் என் முதுகுக்குப் பின் வந்து ப்ப்ப்..பே! என்றான்.
பூச்சாண்டி காட்டுகிறானாம். பயமுறுத்துகிறானாம். சின்னப்பயல். விளையாட ஆள் பிடிக்கிறான். வேலை இருக்கிறதடா தம்பி!
இன்னொருவன் தடதடவென எனக்கும் முன் சென்று மீண்டும் ரிவர்ஸில் ஓடி வந்தான். என் முன் திடீரென தடாலென தாவி குதித்து பயமுறுத்திப் பார்த்தான். உள்ளுக்குள் சின்னதாக நடுக்கம் இருந்தாலும் வெளிக்காட்டாமல் நடந்தேன். அப்படியே மெதுவாக பின்னால் திரும்பி கண்களால் முறைத்தேன். ஒரு பாதுகாப்புக்காக.
அவர்கள் பயப்படப்போவதில்லை. என்னை பயமுறுத்த விளையாடியிருக்கலாம். எனக்கும் பயம் இருந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் அந்த தெருவின் நிசப்தமும், இரண்டாம் சிறுவன் தடதடவென ஓடி வந்ததையும் இன்னொரு முறை நினைவில் கொண்டு வருகையில் மிஷ்கின் படம் போல காட்சி மனக்கண்ணில் ஓடியது. விரைவாக அந்தத் தெருவை கடந்தாக வேண்டுமென நான் நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
இன்னொரு சிறுமி, சாலையோரத்தில் மண்ணைக் கிளறிக்கொண்டிருந்தாள். நான் அருகில் செல்லும் ஓசை கேட்டதும், திரும்பிப் பார்த்தாள்.
தலைவிரி கோலமாய் என்னை நோக்கிய அவளின் கண்களைப் பார்த்ததும் எனக்கு திக்கென்றாகிவிட்டது. அவளின் கண்கள் என்னமோ உக்கிரமாயும், பாவமாயும் கண்டது போலிருந்தது. சட்டென்று ஹேராம் படம் நினைவுக்கு வந்தது. அப்படத்தில் ஒரு பார்வையற்ற சிறுமி பரிதாபமாக கமல் ஹாசனை பயமுறுத்துவாள். பயமும், பரிதாபமும் ஒருந்தே இணைந்த தருணம்.
எனக்கும் அதே போல் பயமாகி விட்டது. இந்த தெருவில் இன்னும் எத்தனை பேரைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற பயத்தில் இன்னும் இன்னும் வேகமாக நடந்து கடந்தேன்.
அடுத்த தெருவை அடைந்தாயிற்று. அங்கும் யாரையேனும் கண்டு பயந்து முதன்மைச் சாலைக்கு செல்ல வேண்டியிருக்குமோ என்று உள் மனம் சொல்லியிற்று.
அப்படியிருக்கப் போவதில்லை.
9
தஞ்சை வீணை
தஞ்சாவூரில் தலைமுறை தலைமுறையாக வீணைகளை உருவாக்கி வருகிறார்கள் நாராயணன் (65) குடும்பத்தினர். அவருடைய பணிக்கூடம் தஞ்சை தெற்கு மூல வீதியில் இருக்கிறது. அவர்கள் அங்கு மாதம்தோறும் நான்கு அல்லது ஐந்து வீணைகளை உருவாக்குகிறார்கள்.
ஒவ்வொன்றுக்கும் பல்வேறு திறன்வாய்ந்த கைவினைஞர்களின் உழைப்பு தேவைப்படுகிறது.
வீணை இந்தியாவின் தேசிய இசைக்கருவி. பழமையான ஒன்றும் கூட. ஆனால் தற்போது வீணை உருவாக்குபவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் குறைந்துகொண்டே வருகிறார்கள்.
தஞ்சையில் இப்போது ஏறத்தாழ பதினைந்து குடும்பங்கள் வீணையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அடுத்த தலைமுறையில் இது பாதியாக குறையக் கூடும்.
மூன்றாவது தலைமுறையாக வீணைகளை ’ட்யூன்’ செய்து வரும் கோவிந்தராஜன் (55), தனக்கு அந்தளவு கல்வியறிவு இல்லாவிட்டாலும் (இசை)சுருதி குறித்த ஞானம் உண்டு என்கிறார். இவர் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இப்பணியில் இருக்கிறார்.
இவரோடு இத்துறை அறிவு மங்கிவிடுமென சொல்கிறார். காரணம் – இவருக்கு மகன்கள் இல்லை. கற்றுக்கொடுக்க இவருக்கு விருப்பம் இருப்பினும், புதிதாக இதைக் கற்றுக்கொண்டு தொடர யாருக்கும் ஆர்வமில்லை.
வீணைகள் எப்பொழுதும் பலா மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படும். பழமையான வயது முதிர்ந்த கட்டைகளைக் கொண்டே செய்யப்படும். கட்டைகள் குறிப்பிட்ட வடிவில் தஞ்சையில் உள்ள சிவகங்கை தோட்டத்தில் அறுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன.
செந்தில்குமார் (34) எனும் ஐந்தாம் தலைமுறை கைவினைஞர் தனக்கு கிடைத்து வரும் வருவாய் தன் தாத்தாவின் கிடைத்த வருவாயைக் காட்டிலும் பத்து விழுக்காடு குறைவு என்கிறார்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு என காரணங்கள் உண்டு. மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம் என அனைத்துமே இருமடங்காகி விட்டது. ஆனால் வீணையின் விலை அப்படியில்லை.
வீணையை உருவாக்குவதென்பது உடனடியாக கற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பார்வைத் துல்லியமும், அனுபவமும் இரண்டறக் கலக்க வேண்டியது முக்கியம்.
நாராயணின் அப்பாவின் காலத்தில் பலாமரக்கட்டைகள் சுலபமாக கிடைத்து வந்துள்ளது. இப்போது அனைத்தும் வெட்டப்பட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது பலா மரக்கட்டைகள் வாங்க பண்ருட்டி வரை பயணிக்கிறார்கள். அதிலும் முப்பது முதல் நாற்பது வருடங்களான பலா மரக்கட்டைகளே தேவை.
அப்போதைக்கும் இப்போதைய காலத்துக்குமான ஒரே வித்தியாசம் அதன் தேவை. நிறைய இளைஞர்கள் இசைக்கருவிகள் கற்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் எங்களை எப்படி கண்டுபிடித்து வருவார்கள்? எங்களின் பணிக்கூடங்கள் சிறியது. இன்னும் சிலர் இதை குடிசைகளில் உருவாக்குகிறார்கள். ஆனால் வீணை வாங்குகிறவர்கள் குளிரூட்டப்பட்ட கடைகளில் வாங்குகிறார்கள். அங்குதான் வீணைகளை தேர்வு செய்யவும் முடிகிறது.
வீணை 12,000 ரூபாய் முதலாக 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கைவினைஞர் தோராயமாக நாள் ஒன்றுக்கு முன்னூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை ஈட்ட முடிகிறது. அது அவர்களின் அன்றாட செலவுகளை சமாளிக்கவே போதுமானதாக இருக்கிறது.
வீட்டிலிருந்து இத்தொழிலை நடத்துவது பெரும் கடினமான ஒன்று. தொழிலாளருக்கான சம்பள உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு தவிர, வணிக ரீதியான மின் கட்டன உயர்வும் கூட வரும் இலாபத்தில் கை வைக்கிறது.
நாராயணின் ஒரு சிறிய நம்பிக்கை, சமீபத்தில் தஞ்சை வீணைக்கு கிடைத்த புவிசார் குறியிட்டு விருதுதான். தஞ்சை வீணைதான் அரசின் புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக்கருவி. இவ்விருது வீணை உருவாக்குபவர்களின் வாழ்க்கைத்தரம் உயர உதவுமென நம்புகிறார்கள். வீணை என்றில்லாமல் இவ்விருது மூலமாக தஞ்சை வீணை என்கிற பெயர் உலகளாவிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.
ஆனால் மேற்கொண்ட வளர்ச்சிக்கு மாநில அரசை நாடுகிறார்கள். இப்போது சேவை வரி இல்லை. அதேபோல் அரசு இசைக்கல்லூரிகளின் மூலமாக ஓரளவு தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை. மூத்த கைவினைஞர்களுக்கான உதவித்தொகை, புதிய பயிற்சி நிலையங்கள் ஆகியனவும் முக்கியமானவை. அப்போதுதான் இக்கலையையும், தலைமுறையையும் பாதுகாக்க இயலும்.
சிறப்புத்தன்மை வாய்ந்த சில வீணைகள் 35,000 முதலாக 40,000 வரையாக விறபனையாகின்றன. ஆனால் இவற்றை வாங்குவது வெளிநாட்டினர் மட்டுமே. அவர்கள் நம்முடைய கைத்தொழியையும், தலைமுறைகள் கடந்து வீணைகளை முன்னெடுக்கும் நம் உழைப்பையும் பாராட்டுகிறார்கள். அது பாராட்டாக மட்டுமே இருக்கிறது. உண்மையில் இக்குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேலாக உயர்த்தினால் மட்டுமே இக்கலை உயிர்ப்புடன் இயங்கும்.
இன்றைய (12-07-2015) தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவந்த, அபர்ணா கார்த்திகேயன் என்பவர் எழுதிய தொடர் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் தமிழில்.
முழுமையான ஆங்கில மூலக்கட்டுரை: http://www.thehindu.com/features/magazine/the-veena-makers-of-thanjavur/article7407233.ece
படங்களில்: http://www.thehindu.com/features/magazine/the-veena-makers-of-thanjavur/article7407232.ece#im-image-0
10
சட்டம்
மிக எதேச்சையாக வலிய விஷயங்களைப் படிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி ஒரு விஷயம். குடும்ப வன்முறைக்கு எதிராக இந்திய அரசு 2005-ல் சட்டம் இயற்றியிருக்கிறது. அது குறித்து அறிய முற்படுகையில் கிடைத்த சில தகவல்கள் இங்கே.
• இந்தியாவில் நாளொன்றுக்கு 14 பெண்கள் தங்களுடைய புகுந்த வீடுகளில் கொல்லப்படுகிறார்கள்.
• இந்தியாவில் வரதட்சணை முறை சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் வருடத்திற்கு 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் புகுந்த விடுகளில் வரதட்சணைக் கொடுமையால் மட்டுமே எரிக்கப்படுகிறார்கள்.
• 1996-ல் உ.பி-யில் நடத்தப்பட்ட ஆய்வில் 45% ஆண்கள் தங்கள் மனைவிகளை வன்முறைக்கு ஆட்படுத்துவதாக ஒப்புக்கொண்டனர்.
• இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 10,000 பெண் சிசுக்கொலைகள் பதிவாகின்றன.
பொதுவாக, அடிப்படையாக, மேலோட்டமாக சொல்வதானால்,
அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெண்களை எந்த வகையில் துன்புறுத்தினாலும் அது குடும்ப வன்முறையின் கீழ் வரும்.
#அவ்வளவுதான் சங்கதி
11
வரலாறு
சில விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் ஆச்சர்யம் அடங்காமல்தான் இருக்கிறது. பெரிய பெரிய நாவல்களையெல்லாம் விட சில சிறு விஷயங்கள் இன்னும் வசீகரமூட்டும். அவை கருத்துகளாகவோ, ட்வீட்களாகவோ இருக்கும். அந்த வகையில் இந்த கேள்வியும், பதிலும் (அதுவும் கேள்விதான்!) எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
ஏன் ஒருவர் வரலாறு படிக்கவேண்டும்? அதனால் என்ன பயன்?
இர்ஃபான் ஹபீப் (Irfan Habib)-ன் பதில் இது.
‘பிறகு எதற்காக ஒருவருக்கு நினைவாற்றல் இருக்கிறது?’
தமிழ்பேப்பரில் வந்த கட்டுரை ஒன்றின் துவக்கமே இது.
அதன் இறுதி வரிகளையும் இங்கே தருகிறேன்.
திரிக்கப்பட்ட போலியான வரலாறு முன்நிறுத்தப்படும்போதெல்லாம் சரியான வரலாற்று உண்மைகளை எடுத்து வைத்து வரலாற்றாசிரியர்கள் போராடுகிறார்கள். அந்த வகையில் உண்மையை நிலைநாட்டவும் பேரழிவைத் தடுக்கவும் வரலாறு அவசியமாகிறது. வரலாற்றை அதற்காகவேனும் நாம் வாசிக்கத்தான் வேண்டும்.
12
ரேண்டம்
ஒரு குறிப்பிட்ட தகவலைத் தேடி சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்கள் நூலைப் புரட்டினேன். பல இடங்களை எத்தனையாவது முறை மீண்டும் படித்தேன் என நினைவில்லை. பிற்பாடு கற்றதும் பெற்றதும் தொகுப்பிலும் துழாவினேன். நிறைய சுவாரசியங்கள் அகப்பட்டன. அதில் ஒன்று இங்கு..
குமுதம் ஆசிரியராக இருந்தபோது, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்காவுக்கு மூன்று இலவச டிக்கெட்டுகளைப் பத்திரிகைக்குத் தருவதாக ’ஏர் இண்டியா’ நிறுவனம் சொல்லிற்று. அவற்றைப் பரிசாக அறிவித்து ஒரு கவிதை, சிறுகதை, நாவல் போட்டி அறிவித்தோம். கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற இருவரில் ஒருவர் தாமரை. கோவையில் இன்ஜினீயரிங் படித்து முடித்த இளம் மாணவி. என்னை வந்து பார்த்தபோது, “நிறைய கவிதை எழுதுங்கள்” என்றேன். “அது என் குறிக்கோள் அல்ல; சினிமாவுக்குப் பாட்டு எழுதுவதுதான் என் விருப்பம்” என்று அப்போதே சொன்னார். இப்போது வசீகரமாக எழுதி வருகிறார். நா.முத்துக்குமாரும் அவரது ‘தூர்’ கவிதையைப் பாராட்டியபோது இதையேதான் சொன்னார். புதுக்கவிதையில் சில்லறை இல்லை.
##அதென்னமோ தெரியவில்லை. கடைசி வாக்கியத்தில் நச்சென்று புள்ளி வைக்கிறார். அதுதான் சுஜாதா!
13
கீச்சுக்களில் சில...
நான் ஏதாவது எழுதினா மட்டும் அடிக்கடி இந்த கேள்வி வருது!
#என்ன சொல்ல வர்ற?
*
தீண்ட மறுக்கிறது தென்றல். தகிக்கிறது உடல். தாகத்தால் காய்கிறது மனம். #வெயிலேதான்!
*
எனக்கான வாய்ப்புகளை எட்டிப் பிடித்திருக்கிறேன். விட்டுப் பிடித்திருக்கிறேன். தட்டி விட்டிருக்கிறேன். தவற விட்டிருக்கிறேன். #அவ்ளோதான்
*
குறிப்பிட்ட பதிலை எதிர்பார்த்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு, மாற்றி பதில் சொல்வதில் துவங்குகிறது உரையாடலுக்கான சுவாரசியம்!
*
”என்னடா துரும்பா இளைச்சுட்ட!” #அடேய்! நான் துரும்பா தான் இருக்கேன். இளைக்கவே இல்ல!
*
துன்பத்தினை இறக்கச் செய்வது இன்பம். இன்பத்தினை துறக்கச் செய்வது துன்பம்.
*
கவிதைகள் பிடிக்காவிட்டால் கசக்கி எறிவதில்லை! Backspace-ஏ போதுமானதாக இருக்கிறது.
*
நிறைய பதில்கள் இருக்கின்றன. கேள்விகள் அமையட்டும்.
*
இரவில் உணவாய் சப்பாத்தி
நடுவில் பதமாய் குருமாவும்
இணையும் நேரம் ஆனந்தம்
இதுவே இதுவே பேரின்பம்!
*
வட்ட வட்ட தோசை!
வண்ண வண்ண சட்டினி!
எண்ண எண்ண இனிக்கிறது!
ஏதோ மாயம் இருக்கிறது! #Breakfast
*
விண்மீன் கூட்டம்….இன்பம் கூட்டும்…!
*
வானில் பறக்கிறது கற்பனைச் சிறகு…!
தேனாய் இனிக்குது எழுதிய பிறகு…!
*
இப்போ மணி ஒண்ணு!
தூக்கத்தில் விழுது மண்ணு!
அது ஏனென்று நீயும் எண்ணு! #போதுமா?
*
சுமை யாவும் தாங்கிடுவாய்!
இமை மூடித் தூங்கிடுவாய்!
*
நற்செயல்கள் அனைத்தும் தற்செயலாகவே நடக்கின்றன. #ப.பி
*
பிறர் கோபங்களை புன்னகையாக்க எனக்குத் தேவையான அதே நம்பிக்கைதான், பிறர் புன்னகைகளைக் கோபமாக மாற்றிவிடக் கூடாதெனத் துடிக்கிறது!
*
வேளாங்கண்ணியிலிருந்து ஸ்பெஷல் தேங்காய் மிட்டாய் வாங்கிய நண்பர் எனக்கும் ஒரு பங்கைத் தந்தார். அளவு அரைச் செங்கலுக்கு சற்று குறைவு
*
நிறைய பேருக்கு, என் பெயரும் நினைவிருக்கிறது! சிலருக்கு என் பெயராவது நினைவிருக்கிறது!! #fb
*
சிலரின் பாராட்டுகள் ஒற்றை வார்த்தையாயினும், பிடித்திருக்கிறது. சிலரின் பாராட்டுகள் பற்பல சொற்களாயினும், பிடித்து அறுக்கிறது!! #fb
*
பெய்யென* பெய்யும் மழை! #அவ்வப்போது மட்டும்
*
ஒவ்வொரு பெருமழைக்கும் முன்போ, பின்போ ஒரு தேநீர்க்கோப்பையின் வெப்பம் வசீகரிக்கிறது…!
*
ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின் ’உயிருள்ள’ கடிதம் வாசித்து முடித்தேன். எழுதி அனுப்பிய தோழருக்கு நன்றி.
*
இன்றிரவு சமச்சீர் Supper! #Haa
*
செயப்பாட்டு வினையை விட ”செய்வினை” எளிதில் மனதில் பதிகிறது!
*
இலக்கண’ பிழையோடு உருவாக்கப்படும் பாஸ்வேர்டுகள் ஆபத்தில்லாதவை !
*
(செம!செம!)புலாவ் + (கம!கம!)பால். இரவு உணவு இனிதே முடிந்தது!
*
தமிழோ? அழகோ? சொல் வேறு வேறோ? இரண்டும் இரண்டோ? பொருள் ஒன்றுதானே!
*
வெகு சாதாரணமாக உரையாடலைத் துவக்க, வாய் நிறைந்த புன்னகையோ, வணக்கமோ போதுமானதாயிருக்கிறது.
*
அவ்வப்போது ஏதோ துப்பறிந்து விட்டதாக ஒரு மனபிராந்தி!
*
சற்று முன் ஒரு “அறிவாளி” யோடு உரையாடினேன்! மனுஷன் கேள்வியா கேக்குறார்! பதிலே சொல்லல! #நான் முட்டாளாவே இருந்திடறேனே?
*
♫♫ நீதானே நாள்தோறும் நான் வாழக் காரணம்…! ♫ ♫
*
Save Our Tigers னா புலி வால்பேப்பரையெல்லாம் save பண்ற எஃபெக்ட்லயே இருக்கேன்…
*
மாக்ஸிம் கார்க்கி தனது படைப்புகளைப் பென்சிலால் எழுதுவதையே விரும்பினார். #Maxim Gorky
*
இதுலயும் முதல் அத்தியாயம் பூகம்பம்! #சந்திரிகையின் கதை #OMG
*
பிறந்தநாளன்று நல்ல உறக்கத்தைத் தாண்டி சிறப்பாக வேறெதைத் தந்துவிட முடியும் ஒருவனுக்கு? #நள்ளிரவு கொண்டாட்டங்கள் -:(
*
கேட்டவுடனே குழம்பும்படி ’பஞ்ச்’ சொல்வதெப்படி?-னு ஒரு Discussion. #ஹாஹா!
*
ராஜபோதை என்று சும்மாவா சொன்னார்கள்! #Exp#RQ365
*
கட்டி கட்டித் தயிரே தயிரே! கொடு ஆயிரம் சுவைகளையே!
*
வலிமை ஒரு அழகு. அழகு ஒரு வலிமை. #பாரதியார் உரைநடை
*
இந்த ஊர்லதான் இதுக்கு பேரு டீ! துபாய்லலாம் இதுக்கு பேரு சுடுதண்ணி!! #Moment
*
Tab duplicate Option இன்னைக்குதான் பாக்குறேன்! ச்சே! #Browser
*
மழை ஈரம் சகதி நனைதல்
*
பவதி பிக்ஷாந்தேஹி என்பதன் சரியான பொருள் என்ன? #Sanskrit?
*
மழையின் ஓசை கேட்கும் முன் அலையின் ஓசை!
*
மூணு மணி போல இல்லையே வானிலை ! I think விரைவில் மழை!!
*
இன்ஸ்பெக்டர் ஸார்! எனக்கு எப்பவும் கோணல் புத்தி. கெட்டதை நினைத்துவிட்டுதான் நான் நல்லதை நினைப்பேன். #CIDChandru
*
தடை இருந்தால்தான் தாண்டவே முடியும்! #Inspired
*
மாற்றந்தான் நல்ல மாற்றமா? அது நமக்கு வேணுமா? #SituationSong
*
ஒரு கவிஞன் poet ஆகிறான்!
*
இரவெல்லாம் உன் பாட்டுதான் இதயத்தை மீட்டுது!
*
@blue_bluefire வண்ணம் கொண்டு நிரப்பினால் ஓவியம். எண்ணம் கொண்டு நிரப்பினால் கவிதை… #TemplateTweet
*
புளிப்பான சோத்துக்கு, புளிப்பான சைடிஷ்ஷு! #ச்சை ரசனை!
*
ஒரு பாட்டு கேட்க ரெண்டு பாட்டு shuffle ! #Funny_Playlist#Keep_Touch
*
@oojass நமக்கு தமிழ் தா (தே)னே இனிக்கும்!
*
10 ரூபாய்ல விஜயகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாமாம் #IndiaPost
*
”காதலே இல்லாத தேசம்” பாட்டு ராஜா குரல் வித்தியாசமா இருக்கு! western touch with indian melody! #Raaja
*
@oojass பரிசில் ஏது சிறிசு? வாழ்த்த வேணும் மனசு! அந்த மனசுதானே பெருசு!
*
எப்பப்போ டைமிங் ட்வீட் எதிர்பார்க்கிறோமோ, அவ்வப்போது அதை நிறைவேற்ற யாரேனும் ட்வீட்டுகிறார்கள். #தத்துவ ட்வீட்!
*
ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.
*
வட்ட தோசை குட்டி தோசை ’கெட்டி’ தோசை தின்ன ஆசை! #Breakfast
*
வேளையில்லையென்றால்தான் வேலையே வரும்!
*
ஒரே நாள் – 244 பக்கங்களுக்கு கதை நடக்கிறது. #CIDChandru
*
அகால நேரத்தில் கூட வானத்தைப் போல படத்தினை ஊருக்கே ‘ஒலி’பரப்பும் ரசிகர்காள்! #ஸ்ஸ்ஸ் #மிடில
*
பிழைகளினாலும் பிழைக்கிறேன்! பிழைகளைத் தவிர்க்க உழைக்கிறேன்!! #TweetLikeOojass
*
நான் பெற்றவைகளை பெறாவிட்டாலும், பரவாயில்லை நான் இழந்தவற்றை அவன் இழக்காமலிருந்தால் போதும் #தம்பி
*
இப்ப ஒருத்தர் லஞ்சுக்கு போவார். நாம ப்ரேக்ஃபாஸ்ட்-க்கு போவோம்.. ரம்பம்பம் ஆரம்பம்!!
*
To task, First Job close all Twitter Tabs. ….#நன்றி
*
நானும் 180+ பக்கம் படிச்சுட்டேன்.. கதைல 1 1/2 நாள்கூட முடியல! #CIDChandru
*
ஞாயிறு மங்கினால் திங்கள் வரும்.
*
கோபப்படுகிறவர்களின் பெரும் பலவீனமே, அவர்களுக்கு மட்டுமே வாய் மற்றும் கை இருக்கிறது என்கிற நினைப்புதான்! #Exp
*
சமீபமாக தபேலாவின் இசையில் ஒரு கிறக்கம்.
*
படிச்சா(லும்!) புரியக்கூடாதுங்கிற லெவலில் ட்வீட்டுவது எப்படி?
*
(பாட்டுல மட்டும்தான்) அந்தி மழை பொழிகிறது! #CLT
*
இழப்பது என்று கௌரவமாக சொல்லிக் கொள்ள என் மொழி இடம் கொடுத்தாலும், தொலைத்துவிட்டேன் என்று சொல்வதில் ஒரு வலி கூடும். #Exp
*
ஒவ்வொரு நாளும் ராஜாவிடமிருந்தே தொடங்கும்.. அலாரமே அதான்யா!
*
ரொம்ப சொற்பமான நேரங்களில்தான் நல்ல உரைநடை அமைப்புகள் தோன்றுகின்றன.. #Exp
*
நிதானமாய் இருக்க காரணம் தேவை இல்லை. மகிழ்ச்சியான மனநிலை போதும். #!
*
இன்று அறிந்த தமிழ் வார்த்தை பௌவம். பௌவம் என்றால் கடல் என்று பொருள்
*
நான் விரும்பாததையும் விரும்ப உன்னால் மட்டுமே முடியும். #எ.கீ
*
மிளகுப்பால் குடிச்சா சளி போயிடும்! அட்வைஸ் பண்றது ஈஸி. மிளகுப்பால் குடிக்கிறது கஷ்டம்! #BrainVsMind
*
:”முட்டை சாப்பிட்டுட்டு பால் குடிக்கக்கூடாது?”
:“அப்டியா?”
:“சும்மா…சும்மா” #SupperTalks
*
@Sakthivel_twitt படித்து ரசிக்கவும்-க்கு பதிலா ரசித்துப் படிக்கவும் -னு இனிமே போடுங்க! @oojass
*
ஒற்றை அணைப்பில், அத்தனை தன்னம்பிக்கை கொடுக்க தந்தையால் மட்டுமே முடிகிறது. #Exp
*
முதலில் தவறினால் முற்றிலும் தவறுகிறது… #Exp
*
எளிய மனிதர்களின் புன்னகைகளைப் பெறுவது எளிது. நாம் முதல் ஆளாக அவர்களிடம் புன்னகையைக் கொடுத்தால் போதும். #Exp
*
”இன்னும் நெல்லு குத்தணும்,மாவரைக்கணும், புளி நறுக்கணும், மொளகா அரைக்கணும், ஊறுகா வேற போடணும், அய்யோ..அய்யோ..அய்யோ ! “ #CLT
*
@blue_bluefire ஏனுங்! ஏதோ சீட்டு விளையாடுறாப்ல ட்வீட்டு போட்ருக்கீங்! //ஒரு கை குறையுற மாறி இருக்கு @iamthamizh இல்லாம //
*
ஆயிரம் தொட்டால் அதுவும் ஆனந்தம்! #BlogStats
*
பேசாத பேச்செல்லாம் பேசப் பேச நிம்மதி! பேசாது போனாலும் நீ என் சங்கதி!! #lyric
*
@oojass படி என்றால் ஆங்கிலத்தில் photocopy
*
இந்த வருடம் படிச்சு முடித்த புத்தகங்களின் எண்ணிக்கையில் +1 ஏறிடுச்சு! #கிரஹாம் பெல் வரலாறு
*
இவருக்கு லஞ்ச்-னா நமக்கு ப்ரேக்ஃபாஸ்ட்! #வாங்கலே!
twitter.com/kanapraba/stat…
*
விலை அதிகமுள்ள புத்தகத்தை இரவலா தந்திருக்கேன்…. ஆண்டவா!! #Save
*
எத்தனையோ தருணங்களில் புன்னகையை மட்டும் சிந்திப் போகிற மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன் என்கிற நிறைவு இருக்கிறதே.. #divine
*
யாரோ ஒரு புண்ணியவான் என்னோட முதல் பதிவில் தொடங்கி படிச்சுட்டிருக்கார் (அ) படிச்சிட்டு போயிருக்கார். அவருக்கு நன்றி.
*
கடிதமும், பதிலும். இரு அத்தியாயங்கள். அலை ஓசை- 2-ம் பாகம்
*
புது இன்பாக்ஸ் வந்ததில் இருந்து எத்தன மெயில் வருது? எத விட்டுட்டோம்னு ஒண்ணும் புரில! #Gmail
*
போன வாரம் இதே நேரம் ரோட்டோரமா லூஸு மாதிரி உட்கார்ந்திருந்தேன். இப்ப நினைச்சாலும் சிரிப்புதான். ஆனாலும் ஒரு சின்ன வலி இருக்கு.
*
20/20 முடிச்சிருக்கார். நேரா tl போகணும்.. இல்லாட்டி நாளைக்கு எப்படியும் பதிவா வரும்.
*
#Random tweetகளின் அடிப்படை என்ன?
*
கவிதைங்கிறது இயல்பாவே வந்துடும்.. வலுக்கட்டாயமா வரவைக்காதேனு அடிக்கடி நிரூபணம் ஆகிடுது.
*
டம்…டம்… கதவும், காற்றும் பேசிக்கொள்கின்றன. #ஆடி
*
@ikulithalai சாரே! அகராதி படிச்சவனே இல்ல… அகராதி புடிச்சவனே-ங்கிற அர்த்தம் @oojass
*
மென்சன் வேறு…மேன்ஷன் வேறு. அதிகபட்ச புரிதலுக்கு அகராதிகளில் தேடவும். நன்றி.
*
லா.ச.ரா. கதைகளைப் படிப்பதற்கு முன்னால் வேறு யாருடைய கதையாவது படிக்கலாம் என்றொரு எண்ணம். சற்றே வித்தியாசமான நடையில் எழுதுகிறார் லா.ச.ரா.
*
நான் போனவாரம் இந்நேரம் எப்டி இருந்தேன்னு யோசிச்சேன்… ம்ம் Not Bad till now..
*
குத்துமதிப்பா கணக்கெடுத்தேன்… இந்த வருடம் 13 புத்தகம் இதுவரை படிச்சிருக்கேன். ஆனா தோராயமாவே 17 படங்கள் பாத்துட்டேன்… #So_Sad
*
ஆனந்த யாழை அக்கு-அக்கா பிரிக்கிறாங்க via #சவுண்ட்கிளவுட்
*
ஒல்லியான தேகம் கொண்டவர்களால்தான் ஆடிக்காற்றை அனுபவிக்க முடிகிறது. #அவதானிப்பு #புரிஞ்சா_சரி
*
எல்லா நாட்களிலும் குடிக்கிற தேநீரை மிஞ்சி விடுகிறது. ஒரே நாளில் பருகுகிற இஞ்சி தேநீர் !
*
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @ksnagarajan #உங்க மென்பொருளில் இதை எழுதி அனுப்புறேன். நன்றி.
*
@blue_bluefire@oojass கிர்ர்ர்ர்-னா என்ன?
*
@blue_bluefire கிர்- குஜராத் தானே? காஷ்மீரா?? ஓ! காமெடியா?? சுமைலி! @oojass
*
வாழ்க்கைக்கு முன்னுரை எழுதுகிறது அழுகை #எ.கீ
*
எவ்ளோ ட்வீட் பண்ணினாலும் சிக்க வைக்க ஏதுவான ட்வீட்கள் மட்டும் RT ஆவதன் மர்மம் பிடிபடவில்லை.
*
@oojass கோரா-வில் கேள். கோதாவில் அல்ல! #Quora
*
@blue_bluefire தமிழில் ஐ-க்கு பின்னால் ’ய்’ வரவே வராது. (வரக்கூடாது) என நினைக்கிறேன். சரிதானே! @oojass cc: @ikulithalai
*
36 is the number of degrees in the interior angle of each tip of a regular. நன்றி: வேர்ட்பிரஸ்.காம்!
*
@indirajithguru நாற்றம் என்றால் நறுமணம் என்றே பொருள். துர்நாற்றம் என்பதே இவ்விடத்தில் சரியாயிருக்கும். சரிதானே?
*
எப்போதெல்லாம் நடுநிசிப் பயணம் எனக்கு வாய்க்கிறதோ, அப்போதெல்லாம் ரணம் வந்து கவ்விப் பிடிக்கிறது -:(
*
ஞாயிற்றுகிழமையன்று எழ அலாரம் வைக்க வைத்த உம்மை வரலாறு மன்னிக்காது. #HeKnows
*
எந்தன் weekdays நீ!
உந்தன் weekend நான்..! #பழசா?
*
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு ஏதும் தோணல!
*
இனிதானதே யாவும்….! (இனிதானே யாவும்!!!)
*
இப்போது நிறைவு!
எப்போதும் நினைவு….!
***
கருத்துகள்
கருத்துரையிடுக