அதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும்


தத்துவம்

Back

அதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும்
பேயோன்


முன்னுரை

துண்டிலக்கியம் என்பது முற்றிலும் புதியதொரு கூறுதல் முறை. ட்விட்டர் போன்ற சமூக ஊடக வலைத்தளங்களில் படைக்கப்பட்டாலும் அது ஒரு சுமாரான கவிதைக்கு எந்த விதத்திலும் கண்ணியத்தில் குறைந்ததல்ல. அதே சமயத்தில் "நன்றாகப் படித்த, அழகான, சிவப்பான எம்என்சி வரனுக்கு உடனடியாக O+ ரத்தம் தேவை. தொடர்புக்கு 98460 17863" என்று 'துவிட்டுவது' துண்டிலக்கியமாகாது. துண்டிலக்கியம் குறுகியகால நோக்கம் கொண்டது கிடையாது - அது எவ்வளவு உயரிய நோக்கமாக இருந்துதொலைத்தாலும்.

துண்டிலக்கியம் என்பது படைப்பிலக்கியத்தின் கிளைக் குழந்தை மாதிரியான ஒன்று. அதை உருவாக்குபவர்களும் படைப்பாளிகளே. ஒரு படைப்பாளிக்கு உள்ள எல்லாச் சவால்களும் ஒரு துண்டிலக்கியவாதிக்கு உண்டு. எப்படி ஒரு மரபார்ந்த படைப்பாளி விசயங்களைக் கவனித்து மாற்றங்களைப் பதிவுசெய்து தரத்தையும் கவனத்தில் கொண்டு படைப்புகளை உருவாக்க வேண்டுமோ, அதே (அல்லது அவைகளே) போல ஒரு துண்டிலக்கியவாதியும் செய்ய வேண்டும். மரபார்ந்த படைப்பாளியைவிடத் துரிதமாகவும் நேரடியாகவும் துண்டிலக்கியவாதியின் படைப்புகள் வாசகனைச் சென்றடைகின்றன. வழவழ மின்திரைகளைத் தேய்த்துத் தேய்த்து இவற்றைப் படித்தாக வேண்டும் என்றாலும் இது நல்லதுதான். ஆனால் இணையத்தில் கிடைக்கும் விமர்சனங்களைக் கண்டு சொக்கிப்போகவோ பாராட்டுகளைக் கண்டு தன்னம்பிக்கை இழக்கவோ கூடாது. முக்கியமாக, அவன் தன் எழுத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே மாதிரி எழுதிக்கொண்டிருக்கக் கூடாது. இல்லாவிட்டால் "அஞ்சாவதும் பொண்ணாப் போச்சே" என்பது போன்ற விமர்சனங்கள் எழும். இதுதான் இந்தப் புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரை.

பேயோன்

10-09-2015

சென்னை

 

ட்விட்டர் நுண்பதிவுகள்

சமைத்துப்போட, பணிவிடை செய்ய, உடலிச்சைக்கு மணம் புரியும் ஆண்கள் அந்த உறவை "platonic"-ஆக வைத்திருப்பதில்லை. அன்பு குறுக்கிட்டுவிடுகிறது.

*

கடமையைச் செய்து பலன் கிடைத்துதான் என்ன பிரயோசனம்? அது வெறும் கடமைதானே.

*

ஒரு நண்பர் பேச்சினூடே "எத்தன உளைப்பு வீணாகுது!" என்றார். நான் "உளைப்பு இல்ல, உளைச்சல்" என்றேன். தமிழே தெரியாமல் பேச வந்துவிடுகிறார்கள்.

*

1. முகம் சுளித்தல் 2. முகம் சுழித்தல்.

*

ஒரு சிறுகதைக்காக இத்தகவல் தேவைப்படுகிறது: நூறு பேர் சாப்பிடுவதற்குப் பொரியல் செய்ய இரண்டு அக்குரோணி சேனை போதுமாக இருக்குமா?

*

ஓட்டப் பந்தயங்களில் இவ்வளவு வேகமாக ஓடுகிறார்களே, பயமாக இருக்காது?

*

தன்னை சவுக்கால் அடித்துக்கொண்டு தர்மம் கேட்பவன் கை நீட்டினான். 10 ரூபாய் கொடுத்துவிட்டு "சரியான சவுக்கடி தோழர்" என்று நினைத்துக்கொண்டேன்.

*

"வணக்கம்! நல்லா இருக்கீங்களா?"

"எவஞ்சொன்னான்?"

*

என் கதை ஒன்றில் "டேய்" என்ற சொல் வருகிறது. இது ஆண்களைக் கேவலப்படுத்துவதுபோல் தெரியலாம். ஆனால் முழுக்கதையையும் படித்தால் அப்படித் தெரியாது.

*

மனைவி ஊரில் இல்லை. ஒரு கை ஒடிந்த மாதிரி இருக்கிறது. ஆனால் பத்து றெக்கை முளைத்த மாதிரியும் இருக்கிறது.

*

ராஜாசார் எத்தனை ஆங்கில ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார்? எனக்கு இரண்டுதான் தெரியும்: 1. How To Name It, 2. Nasal Drops.

*

தமிழ்ச் சூழலில் இப்போது வீசுவது மண் வாசனை அல்ல, அஞ்ஞாதவாசனை.

*

என் நண்பர்கள் இருவர் நேற்று திருப்பதி சென்றனர். ஒருவர் மொட்டை அடித்துக்கொண்டார். இன்னொருவர் "ட்ரிம்மிங்" மட்டும் செய்துகொண்டுள்ளார்.

*

பெண்களை எல்லாத் திறன்களோடும் படைத்த இறைவன், அவர்களைப் பழக்கிவைக்கும் திறனை ஆண்களுக்கு அளிக்கவில்லை என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்து.

*

வேறு எதையும்விட, நீண்ட பத்திகளைச் சில சிறு பத்திகளாகப் பிரிப்பதே சகமனிதரின்பால் நாம் செலுத்தும் அக்கறைக்கு அறிகுறி.

*

நான் கவனிக்காதபோதும் என்னிடம் ஒருமணிநேரமாகப் பேசிக்கொண்டிருக்கும் என் மனைவியின் அன்பு என்னை நெகிழச் செய்கிறது.

*

ஒரு ஆட்டோவுக்குப் பின்னால் பார்த்த ஆரூடம்: "மழை நீர் சேகரிப்பீர்!"

*

என் மனைவியோ மகனோ ஒருமுறைகூட ஜன்னலோர இருக்கையை எனக்கு விட்டுக்கொடுத்ததில்லை. #அர்த்தமிழக்கும்கைக்குட்டைகள்

*

குழந்தைகளைப் பற்றிய கவிதைகள் குழந்தைகளைவிடச் சூட்டிகையாக உள்ளன.

*

உண்மை சில சமயங்களில் தன்னை மறைத்துக்கொள்ளும், ஆனால் ஒருபோதும் பொய் சொல்லாது.

*

எதிர்த் தரப்பு உறவினர்கள் வந்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் கிளம்பிவிடுவார்கள் என்றெல்லாம் இல்லை. வந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

*

முன்பு எழுத்தாளனுக்கு மனவேதனை என்றால் மேஜைக்கடியில் சுருண்டுகொள்ள இடம் இருந்தது. இன்று அந்த இடத்தில் பிரின்டர், ஸ்கேனர், லொட்டு லொசுக்கு...

*

குழந்தையே பெற்றுக்கொள்ளாதீர்கள். அப்படியே பெற்றுக்கொண்டாலும் ஓசியில் யாருக்காவது கொடுத்துவிடுங்கள்.

*

எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் பேட்டி மாதிரி ஆகிவிடும்.

*

தேநீர்க் கோப்பையில் புயல் என்பது நாம்தான்.

*

நான் என் வாரிசை அடுத்த 50 ஆண்டுகளுக்குள் அழைத்துச் செல்ல முயல்கிறேன். அடுத்த 50 ஆண்டுகளோ அவனை 300 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.

*

வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பிரச்சினைகளும் அலுத்துவிடும். உள்ளம் புதிய பிரச்சினைகளுக்காக ஏங்கத் தொடங்கும்.

*

என் வீட்டில் என் மனைவிதான் டெசிசன் மேக்கர். நான் வெறும் டெசிசன்.

*

எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் மற்றவனெல்லாம் என்ன கேனையனா?

*

ஒசாகாவில் உள்ள அமாகவாஷினோமுராமோட்டோநகாடாரோஹாஷிபாட்டாஷினாமோரியாமாசாகிஹிகோவாராஹினாயோஷி எனது நண்பர்.

*

"நீங்க தூங்குனப்புறம் சொல்லுங்க. உங்கள எழுப்பி ஒண்ணு கேக்கணும்."

*

சரஸ்வதி பூஜை கேஸ்கள் எல்லாம் புத்தகங்களை எரிக்கின்றன.

*

போதுமென்ற மணமே பெண் செய்யும் மருந்து.

*

நலம் விசாரித்தவர் குத்திக் கொலை.

*

அழகிய பெண்களுடன் பேசும்போது கண்களால் நெளிகிறேன்.

*

பத்திரிகைகளுக்கு நான் அளிக்கும் பேட்டிகள் என் மனைவி என்னைப் புரிந்துகொள்ள ஓரளவு உதவுகின்றன.

*

பெண்கள் வேலைக்குப்போவது பற்றிப் புலம்பியவர்கள் ஓய்ந்துவிட்டனர். இன்று அவர்களது பேரன்கள் பெண்கள் லெக்கிங்ஸ் அணிவது பற்றிப் புலம்புகிறார்கள்.

*

பூக்கள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...

*

பொட்டு வைத்த முகமோ? கட்டி வைத்த குழலோ? பொன்மணிச் சரமோ, அந்தி மஞ்சள் நிறமோ? சயன்டிபிக் கம்யூனிட்டி திணறல்!

*

இன்றைக்கும் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் நான் இன்னும் உயிரோடு இருப்பதுதான்.

*

ஆட்டோவுக்குப் பின்னால் எழுதியிருக்கும் "Jesus loves you"வைப் பார்த்து வயதுப் பெண் போல் முகம் சிவக்கிறேன்.

*

எந்த இலக்கிய வம்பிலும் பங்கேற்காமல் தூள் மாற்றுவது, அழுக்கு நீரில் கழுவிய கிளாசில் டீ தருவது என்று இருக்கும் டீ மாஸ்டரைப் பாராட்டுகிறேன்.

*

வாண்டுமாமாவின் கதைகள் குழந்தைகளையும் சென்றடையும் வகையில் அவற்றை யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் போடலாமே.

*

நலங்கெடாமல் புழுதியில் எறிய வழியுண்டா?

*

உன் கருத்தை நான் ஏற்காவிட்டாலும் அதைச் சொல்ல உனக்குள்ள உரிமைக்காகப் போராடுபவனை உள்ளூர ஆதரிப்பேன்.

*

ஆண்களுக்குப் பெண்கள் எந்த விதத்திலும் இளைத்தவர்கள் அல்லர். குறிப்பாகத் திருமணமாகாத ஆண்களைவிடத் திருமணமான பெண்கள்.

*

தினமும் தலைவலி, முதுகுவலி என்று புலம்பித் தீர்க்கும் மனைவி ஒருநாள் புலம்பாமல் விட்டால் பாவம் என்ன பிரச்சினையோ என்று கவலையாகிவிடுகிறது.

*

அதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும்.

*

இந்துகள் ஒன்றுபட வேண்டும் என்று மைக் மோகன் மேடையில் முயங்கும்போது அவர் இந்துமுந்துதல்காரர்களை மட்டுமே குறிப்பிடுகிறார் என்றறிக.

*

கேரளாக்காரர்கள் சொல்வது போல முல்லா பெரியாறு முஸ்லிம் நதியா?

*

நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தால் காலம் மிக மெதுவாகவே நகர்கிறது. ஆனால் கொஞ்சம் அசந்தால் பத்தாண்டுகள் ஓடிவிடுகின்றன.

*

நம் நிறைகள் என்று நாம் நினைக்கும் குணங்களை நம் மனைவிகள் குறைகளாகக் கருதுகிறார்கள். "அவரு எங்க வீட்டு மனுசங்களோட பழகவே மாட்டாரு."

*

மறந்துபோன தம்பதிகள் யாரேனும் மகளுக்குத் திருமணம் என அழைப்பிதழ் தரும்போதெல்லாம், ஓர் அறிமுகமில்லாக் காதலியை இழக்கிறோமே எனப் பதைக்கிறது மனம்.

*

கோபம் வரும்போது கட்டுப்படுத்திக்கொள்ள நான் பயன்படுத்தும் உத்தி: 1 முதல் 1,00,000 வரை எண்ணுவது. எண்ணி முடிப்பதற்குள் தூங்கிவிடுவேன்.

*

கடைந்தெடுத்த அயோக்கியர்கள்கூட நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் உண்மையே பேசுவதை கவனித்திருக்கிறீர்களா?

*

புத்தர் எதிரில் வந்தார். "அரிசிக்கு சொல்லச் சொன்னனே, சொல்லியாச்சா?" என்றார். "இதோ, அதுக்குத்தான் போயிட்டிருக்கேன். மறப்பேனா?" என்றேன்.

*

நடந்தோ பிறர் முதுகிலோ பயணித்து வாக்களிக்க வரும் நூற்றுக்கிழங்களைப் போல் உருக்கமான வேடிக்கை மனிதர்கள் யாருமே இல்லை.

*

எங்களுக்கு மட்டும் முகவாயைத் தோளில் இடித்துக்காட்டத் தெரியாதா? நாங்கள் செய்தால் நன்றாக இருக்காது என்பதால்தான் போகட்டும் என்று விடுகிறோம்.

*

@borehay ஐ பிரிபர் தி இங்லிஷ் வெர்சன்.

*

அடுத்தவனைக் குறை சொல்வதற்கு முன்பு, நம் குறைகள் அவனுடையதை நியாயப்படுத்திவிடாது என்று அவனுக்குப் புரியவைக்க வேண்டும்.

*

The Theory of Everything, ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி அவர் மனைவி எழுதிய நூலின் தழுவல் என்பதால் படம் ஹாக்கிங் பற்றி ஆழமாக எதுவும் சொல்லவில்லை.

*

தலைவலி மாத்திரையில் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. அதை எடுத்துக்கொண்ட அரை மணிநேரத்தில் தலைவலி சரியாகிவிடுகிறது.

*

ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடந்து செல்ல வேண்டிய நபர்களைத் திருமணம் செய்துகொண்டுவிடுகிறோம்.

*

அன்பார்ந்த அமெரிக்க மரைன் கார்ப் வாசகர்களே, secure the perimeter.

*

நம் மக்கள் ஏன் எப்போதும் மூன்றாவது பாராவிலிருந்து எழுதத் தொடங்குகிறார்கள்? மனதைக் கல்லாக்கிக்கொள்ளும் "stalling" உத்தியா?

*

தனித்திரு, விழித்திரு, பசித்திரு. இன்சுலின் இன்ஜெக்சனை அப்புறம் வாங்கிக்கொள்ளலாம்.

*

அவனவன் மதத்தை அவனவன் நோண்டி நுங்கெடுத்தாலே போதும். இன்னொருத்தன் மதத்தைத் திட்ட தைரியமுண்டா என்பதெல்லாம் வெட்டிக் கேள்வி.

*

பாரத் ரத்னா விருது வழங்குவது ஆவியெழுப்பும் நிகழ்வு மாதிரி ஆகிவிட்டது.

*

எந்தத் திடீர் உணர்வெழுச்சியையும் கவிதையாக எழுதினால் நீயும் என் நண்பனே. #நான்ஷெத்தப்புறம்

*

ஆக்கபூர்வ விமர்சனம் அன்பை முறிக்கும்.

*

நான் மட்டும் டாக்டராக இருந்தால் கிளினிக்கில் "தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போகுதம்மா!" என போர்டு மாட்டுவேன். கமல்சாரை அவ்வளவு பிடிக்கும்.

*

எங்கும் சுதந்திரம் என்பதே போச்சு. #மீள்பாரதி

*

நாம் எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு. #confirmed

*

கொஞ்சம் துணிவும் கொஞ்சம் தன்னம்பிக்கையும் போதும், மனிதன் எதையும் சாதிக்கலாம் நிறைய பணம் இருந்தால்.

*

பதேர் பாஞ்சாலி: இந்தியாவின் வறுமையை இதைவிடக் குத்துகிற மாதிரி, குடைகிற மாதிரி ராய் தவிர வேறு யாராவது காட்ட முடியுமா? பொளேர் பாஞ்சாலி!

*

அமுதசரஸ் பொற்கோவில்கூட ஏதோ இந்துக் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதுதானேஜி? #குருத்துவாரகா

*

தமிழ் வாசிப்புச் சூழலை வெகுஜன இதழ்கள் நாசமாக்கிவிட்டன. சிறுவயதில் எங்கள் வீட்டில் 'கசடதபற'வை முதலில் படிக்க அடித்துக்கொள்வோம்.

*

மற்றவர்கள் விரும்புவதை எழுதுவது ஒரு படைப்பாளியின் உண்மையான வளர்ச்சிக்குத் தீங்கு செய்யும். இது மற்ற படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.

*

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குள் ஒரு கையேந்தி பவன் உள்ளது. கம்மிய விலை, ஓரளவு நல்ல சுவை, ஆனால் பூரண வெஜிட்டேரியம்.

*

சேட்டுக் கடை ஊழியர் முதலாளியிடம் என்ன கேட்டார்? "சுட்டி கொடுங்கள்." #இந்தி

*

எங்கள் காலத்தில் பெற்றோரிடம் உதை வாங்கி அடங்கிய அதே குழந்தைகள் இன்று மால்களுக்குக் கூட்டிப்போ என அழுது புரண்டு பெற்றோரைச் சூறையாடுகின்றன.

*

வெல்டிங் குமார். #respect

*

உங்கள் எழுத்து என் பார்வையை மாற்றியது, வாழ்வைக் கற்பித்தது, ரிசப்சனை சிறப்பித்தது எனப் பொங்கிய வாசகரிடம் ஒரே ஒரு தகவல்தான் கேட்டேன்: "லூசா?

*

என் வாசகர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன்.

*

அதிசய ரோகம்... ஆனந்த ரோகம்... அழகிய ரோகம்... அபூர்வ ரோகம்... இந்தக் காதல்!

*

தர்மம் தளை காக்கும்.

*

குழந்தைகளின் மனங்கள் - கடவுள் புரண்டு விளையாடும் நிர்த்தாட்சண்ய வெளிகள்.

*

ஒருவேளைத் தனிமைக்காக எதையும் செய்வேன்.

*

சில வாசகிகள் தமிழில் படிக்கிறார்கள், ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

"ஹலோ, ஹவ் ஆர் யூ சார்?"

"ரெஸ்பாண்டிங் டு ட்ரீட்மென்ட், தேங்க் யூ."

*

ஓர் இயக்குந-நண்பருக்காகக் கேட்கிறேன்: துடுக்குத்தனமான கிராமத்துப் பெண்ணாக நடிக்க சிவப்பாக ஒரு வடநாட்டுப் பெண் தேவை. வெள்ளைக்காரியும் "ஓகே".

*

பயனில்லாத சொற்களைப் பேசாதே என அன்று சொன்னார் வள்ளுவர். இன்று நானும் அதைத்தான் சொல்கிறேன். நாங்கள் எப்போதுமே பேச்சு மாற மாட்டோம்.

*

வீட்டில் எனக்காகக் கோதுமை தோசை தயாராகிவருகிறது. அதைத் தின்ன ஆரம்பித்தால் அடுத்த அரை மணிநேரத்திற்கு படுபிஸியான எழுத்தாளன் ஆகிவிடுவேன்.

*

என் படைப்புகள் 2000 ஆண்டு நீடித்தால் கி.மு.4000இல் இன்ஸ்பெக்டர் குமார் விஷ்ணுவின் 13ஆம் அவதாரமாகக் கும்பிடப்படுவார் (11: புத்தர், 12: மோடி).

*

என் கண்ணில் படும் பெண்கள் எல்லாம் நிஜமாகவே அழகாக இருக்கிறார்களா, அல்லது எனக்குத்தான் வயதாகிவிட்டதா?

*

இந்து வாசகர்களே, உங்களுக்காக ஓர் எளிய புதிர்: அஸ்ஸலாமு அலைக்குமா அலைக்காதா?

*

வீட்டில் தினமும் கால் ஆழாக்கு சோற்றைக் குப்பையில் எறிய வேண்டியிருக்கிறது. அதைக் கோவில் உண்டியலில் போட்டால் புண்ணியமாவது கிடைக்கும்.

*

என் தெலுங்குக்கார நண்பர் ஒருவர் கம்யூனிஸ்ட். #செம்பாபு

*

சீரடி சாய்பாபா விருத்தம் எழுதியிருக்கிறாரா?

*

தெருவில் நின்று வருவோர் போவோருக்கு துண்டுப் பிரசுரம் தந்துகொண்டிருந்தவன் நான் கடந்தபோது எனக்குத் தராமல் விட்டுவிட்டான். Feeling blessed!

*

"நான் இல்லாட்டி ஒரு வேலையும் ஓடாது." - அன்பு

"எல்லாத்தையும் நானே செஞ்சாகணும்." - வெறுப்பு

"எல்லா எளவையும் நான்தான் நொட்டணும்." - காமம்

*

"ம்ம்ம்... ம்ம்... ஓ... ஆமா... (இதெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய் இதெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய் இதெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய்...)"

*

நேர்ப் பேச்சில் நம்மிடம் இனிக்க இனிக்கப் பேசுபவர்கள் நமக்குப் பக்கவாட்டில் நின்று பேசினால் அவர்கள் குரலை மட்டும்தான் கேட்க முடிகிறது.

*

"அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும்" என்ற பழமொழி, எல்லாப் பெண்களும் அழகானவர்கள் என்ற தவறான புரிதலில் பிறந்தது.

*

எதையும் தவறு என்று சொல்வதைவிட "அதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று கூறுவது பாதுகாப்பானது.

*

பாட்டி வடையை *சுட்டதால்*தான் வடையில் ஓட்டை இருக்கிறதா? #நகைச்சுவை

*

என்னை "சாவின் டைப்பிஸ்ட்" என்று விமர்சித்த அதே ஆள் இப்போது என்னை "மரண மகரிஷி" என்கிறார்.

*

"இவன் யாரென்று தெரிகிறதா?" பாட்டைக் கேட்கும்போதெல்லாம் 'நடிகர் கமல்ஹாசன். பல பத்தாண்டுகளாக நடிப்பவர்' என வாய் தன்னையறியாது முணுமுணுக்கும்.

*

நாவினால் வடு சுட முடியுமா?

*

"மரணத்தைத் தழுவினார்" என்றால் அவரே ஆசைப்பட்டு செத்தார் என்று பொருள் வருகிறது.

*

என் எதிர்த்தரப்பு உறவினர்கள் சிலர் மரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவர்கள் என்று நினைக்கிறேன்.

*

ச்சே, வியர்க்கிறது.

*

உருவில் சிறியார் எளிதில் தெரியார். - வள்ளுவர்

*

பவுலரும் ஃபீல்டரும்கூடத்தானே ஓடுகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் ரன் கிடையாதா? பிட்ச்சில் ஓடுபவர்களுக்குத்தான் ரன் தருவார்களாமா? அப்படியென்றால் எல்லோரையும் பிட்ச்சில் ஓட விடுவதுதானே? கால்பந்தாட்டத்தில் அப்படித்தான் செய்கிறார்கள்.

*

அநாவசியமான கேட்ச். பந்து வேறு எங்கேயோ போய்க்கொண்டிருந்தது. #கிரிக்கெட்

*

"உங்கம்மா எதுக்கு இங்க வர்றாங்க? இந்த ஏரியால அவுங்களுக்கு வேண்டியவங்க யாராவது இருக்காங்களா?"

*

சமைக்கக் கற்றுக்கொள்வது ஆண் விடுதலையின் முதல் படி.

*

பூக்களே, சற்று ஓய்வெடுங்கள். #மகளிர்தினம்

*

கூகுளிடம் ஒரு தேடல் இருக்கிறது.

*

நான்கு விசிலுக்குப் பின் அடுப்பை முடக்கச் சொல்லிப் பையுடன் கிளம்பி என்னிடம் பேசத் தொடங்கியவர் 11 விசில் தாண்டியும் பேசிக்கொண்டிருக்கிறார்.

*

மற்ற ஆண்களோடு பேசும்போது அடிக்கடி புடவைத் தலைப்பை சரிசெய்யும் பெரிய பெண்கள், என்னோடு பேசும்போது தாலியை வெளியே எடுத்து விட்டுக்கொள்வதோடு சரி.

*

நரேந்திர மோடி ஓர் அடால்ஃப் ஹிட்லர் என்றால் மோகன் பாகவத் ஒரு பெனிட்டோ மிசோஜினி.

*

"மூட மதியே, கோவிந்தா சொல்லு. நீ அதற்குதான் லாயக்கு" என அக்காலத்திலேயே இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தினார் 'ஜிகாதி'சங்கரர். #பஜகோவிந்தம்

*

சென்ற ஆண்டு 1,000க்கு மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் விற்றதாம். இப்படியே போனால் கவிதை எழுதுபவர்களைவிடப் படிப்பவர்கள் அதிகமாகிவிடுவார்கள்.

*

இணையத்தில் படிப்பதையெல்லாம் நம்பிவிடாதீர்கள். குறிப்பாகச் சிறுகதைகளை. அவை புனைவுகள்.

*

லபக்குதாசின் சிங்கப்பூர் மைத்துநர் அவரை சிங்கப்பூரில் வாழ அழைத்திருக்கிறார். லபக்குதாஸ் மறுத்துவிட்டார். "அங்கல்லாம் போனா மாட்டிக்குவோம்யா."

*

காலம் ஒழிக.

*

மதியநிழலில் நாயொன்று முன்னங்காலால் பிடறி சொறிந்துகொள்ளும் தெருவில் என்னைக் கடந்துசெல்லும் பெண்ணே, என்னால் உன்னைக் கடந்துசெல்ல முடியவில்லையே.

*

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கோமாதா பீஃப் ஸ்டால்களுக்கும் தடை!

*

காலங்களில் அவள் மதியம் சுமார் 2 மணி.

*

என் ரூ. 27000 ஃபோனை வைத்திருந்த குழந்தை அதைக் கீழே போட்டு சிதறடித்து "சாரி அங்கிள்" என்றது. அவ்வளவு கியூட்டாக ஒரு சாரி. :-)))))))))))))

*

நான்கூட I Stand For Women. குறிப்பாகக் கல்லூரிப் பருவத்தில் பேருந்து நிலையங்களில்.

*

சாம்ஸ்கிக்கு பீன்ஸ் பிடிக்குமாம். எனக்கு பீன்ஸ் பிடிக்காது. சாம்ஸ்கியுடன் முரண்படுகிறேன்.

*

வெள்ளைக்காரன் பெயரை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.

*

உங்கள் வாழ்க்கையில் இரு மாதங்களை எனக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருந்தால் மட்டும் "ஏன் டல்லா இருக்கீங்க?" என்று கேளுங்கள்.

*

"டிஸ்கொயட்டிங்"-ஆக எழுத வேண்டும். ஆனால் நாம் கொய்யட்டாக இருக்க வேண்டும். அதுதான் வித்தை.

*

நான் இறந்த பின்பும் என்னைப் பற்றி நாலு பேர் பேசுவார்கள். "எப்போது எடுப்பது?", "மூக்கில் வைத்த பஞ்சு விலகி முடி தெரிகிறது" என்கிற ரீதியில்.

*

இந்திய சுதந்திரத்தில் ஒரு பகுதி பூலித்தேவனுடைய கிருபையினாலே நெமக்குக் கிடைத்தது.

*

அண்ணாந்து நிலாவைப் பார்த்தால் பைத்தியக்காரனைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். நிலாவை ஓரக்கண்ணால் பார்க்குமளவு நான் உயரமும் இல்லை...

*

"எல்லாம் நாசமாய்ப் போயிற்று!" என்று ஒருநாள் தலைப்புச் செய்தி வரும் பாருங்கள்.

*

Hospitalityஇல் hospital என்று வருவதால் விருந்தோம்பலைவிட மருந்தோம்பல்தான் சரியான மொழிபெயர்ப்பு என்கிறார் #லபக்குதாஸ்.

*

அந்தக் காலத்தில் பெண்களை ஏன் தெரியுமா வீட்டில் அடைத்துவைத்திருந்தார்கள்? ஐடியல் ஹோம், ரியல் எல்டேட் வகை கண்காட்சிகளுக்கான சுவரொட்டிகள்.

*

22 பேர் எல்லாம் சட்டபூர்வமாகவே முடியாது நண்பா.

*

பெண் விடுதலை பேசுகிறோம். ஆனால் இங்கே பல பெண்களுக்குக் குரல் இல்லை. அந்தக் குரலை வைத்துக்கொண்டு சாமி பாட்டு பாடுகிறார்களே, அதுதான் கொடுமை.

*

என் மனைவியும் இதே வீட்டில்தான் இருக்கிறார் என்பது கிடக்க, எவ்வளவோ முயன்றும் என்னால் அவரை மறக்கவே முடியவில்லை. இதுதான் காதலா?

*

மிகவும் புகழ்கிறார்களே என ஓர் இளம் எழுத்தாளரின் புத்தகத்தைப் படிக்க முயன்றேன். ரொம்ப வேகமாக எழுதுகிறார்! படிக்க முடியவில்லை!

*

என் மனைவியே என்னை அழகன் என்று நினைக்காதபோது இன்னொருத்தன் மனைவி எப்படி நினைப்பாள்?

*

"ஜாதிகள் இல்லையடி பாப்பா" கொஞ்சம் "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" ரகம். கிடைத்துவிட்டதாகக் கற்பனை செய்துபார்த்துக் கொண்டாடுவது.

*

இனிமேல் நான் பயணக் கட்டுரைகள் எழுதக் கூடாது என்று என் மருத்துவர் கறாராகச் சொல்லிவிட்டார். Bed sore வருமாம். :-(

*

சம்பாதிக்கிறவன் கையில் பணம் தங்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.

*

சில எழுத்தாளர்களின் படைப்புகள் மக்களைச் சென்றடையாமலே மறக்கப்படுகின்றன. அவை நன்றாக இல்லை என்பதால் அல்ல, அவை மக்களைச் சென்றடையவில்லை என்பதால்.

*

என் மனைவி உம்மென்று இருக்கும்போது அவரை ஏதாவது நகைச்சுவைப் படத்துக்கு அழைத்துப் போவேன். ஏனென்றால் அவர்தான் எனக்கு ஜோக்குகளை விளக்குவார்.

*

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்சிடம் "யுலிசிஸ் நாவலை ஏன் எழுதினீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது, "மனசுக்குப் பட்டது, எழுதினேன்" என்றாராம்.

*

நேற்று யாரோ ஜெயிக்கிற மாதிரி கனவு வந்தது. எதில் என்று நினைவில்லை.

*

நல்லவேளையாக நான் நீதிபதியாக இல்லாமல் எழுத்தாளனாக இருக்கிறேன். இந்த வயதில் கோர்ட்டு, கேஸ் என்று அலைய முடியாது.

*

ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் டால்ஸ்டாய். இருவரும் நிறைய எழுதினார்கள், அரண்மனை மாதிரி வீடு, பணக்காரக் குடும்பம், தாடி...

*

தவிர்க்கிறேன் / தவி(ர்)க்கிறேன். #காதல்கவிதை

*

இந்தக் கோடை பழைய தூர்தர்ஷன் நாடகங்களை நினைவூட்டுகிறது. "என்ன வெய்யில், என்ன வெய்யில்! சாரதா, கொஞ்சம் தண்ணி குடும்மா."

*

லபக்குதாசின் புதிய காதல் கவிதை ஒன்றில் "எப்படி நகர்த்துவாய் உன் காய்களை?" என ஒரு வரி. வேண்டாம், அசிங்கமாக இருக்கிறது என்றால் மறுக்கிறார்.

*

சமீபத்தில் சிறுகதை எழுதி நீண்டகாலம் ஆகிவிட்டது.

*

நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை. அவை என்னைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளை எனக்கு ஏற்படுத்துகின்றன.

*

ஒரு பெண் உன்னை நல்லவன் என்று நினைத்தால் அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்று பொருள்.

*

காலை 11 மணிதான் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் நேரம் என்று யாராவது சொன்னால் நம்பிவிடுவேன். #வெயில்

*

கோடை என்றால் புழுங்கும்தான், சரி. கொஞ்சம் சில்லென்று காற்றாவது வீசலாமல்லவா?

*

நோபல் பரிசு பெற எனக்குத் தகுதி இல்லை என்று கெக்கலி கொட்டும் நொண்ணைகளா, தகுதியில்லாதவன் நோபல் பரிசே வாங்கியதில்லையா?

*

கம்ம நாயுடு என்பதில் உள்ள 'கம்ம' ஒரு பௌத்தச் சொல் (கர்மா). கம்ம நாயுடுகள் ஆதி பௌத்தர்கள். இன்று அவர்கள் பௌத்தீக எல்லைகளைக் கடந்துவிட்டனர்.

*

தீவிரவாதிகள்... வெறுப்பின் தணலில் பூத்த கொடுமலர்கள்.

*

ஜன்னி வந்தால்தான் இந்த வெப்பத்திலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைக்கும் போல.

*

"இருத்தலின் கழுத்தினை நெரித்துவிடு" ரகப் புழுக்கம்

*

[Advt] சென்னையை Prestige™ குக்கர் கம்பெனிக்காரன் வாங்கிவிட்டானா? இப்படி வேகிறதே?

*

ஒரு சினிமா கதை வைத்திருக்கிறேன். பாட்டு, நடனம், சண்டை, பாசம், நகைச்சுவை, நல்ல இசை எல்லாம் உண்டு. ஆனால் எல்லாமே ஒரு கிணற்றுக்குள் நடக்கும்.

*

குளித்த பின்பும் வியர்த்து ஊற்றுகிறது. விடை தெரிந்திருந்தாலும் 'எதற்கடா குளித்தோம்' என்று மனம் கேட்கிறது.

*

"can't wait 2 rd ur nxt buk sir!!" முடியாவிட்டால் போடா.

*

வெகுஜன எழுத்துக்கு உதாரணம்: அ. தீவிர எழுத்துக்கு உதாரணம்: ௵.

*

வலைத்தளம் சொல்கிறது: "உன் மனிதத்தை நிரூபி: 5 + 2 = ?"

*

"உங்க ஓய்ஃப் சார்? அவங்க என்ன பண்றாங்க?"

"அவங்க ஒரு என்.ஜி.ஓ."

*

இளம் எழுத்தாளர்களுக்கு அறிவுரை: எந்தத் தருணத்திற்கும் உங்கள் படைப்பு ஒன்றை மேற்கோள் காட்ட இயலும் வரை எழுதிக்கொண்டிருங்கள்.

*

"மணி பதினொண்ரை ஆயிருச்சு!" என்று வியக்கிறார் மனைவி. இன்றைக்குப் பதினொன்றரை ஆகாது என்று நினைத்தாரா? எதை மறைக்கிறார் என்னிடமிருந்து?

*

முதலில் 'நமோ' என்று பெயரைச் சுருக்கிக் கொஞ்சுவதை நிறுத்துங்கள். ஹிட்லரை 'பப்லு' என்று அழைப்பது போல் இருக்கிறது.

*

அகண்ட் பாரத் சன்ஸ்கிருதி பச்சாவ் புரஸ்கார் ஆந்தோலன் விராட் சேனா பப்பி விநாஷ் யோஜ்னா சமிதி.

*

வெறும் கொசுவை 'நுளம்பு' எனும்போது மனதில் இந்த மாதிரிச் சித்திரம் எழுகிறது.

*

இந்தக் காலத்தில் எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருப்பதால் யாரையும் தெரிந்துகொள்ளாமல் இருக்க மெனக்கெட வேண்டியிருக்கிறது.

*

புத்தகக் காட்சிக்காக எழுதத் தொடங்கிவிட்டேன் "உருசியா: செம்பூமி".

*

மதியம் டீ சாப்பிடப் போனேன். வெயில் தாங்காமல் மயங்கி விழுந்து மருத்துவமனையில் கிடக்கிறேன். கோமா என்று சொல்கிறார்கள். பார்ப்போம்.

*

ஒப்ப(னைய)ற்ற கலைஞன் சத்யஜித் ரே மரணப் படுக்கையில் கிடந்தபோது மருந்து கொடுக்காமல் ஆஸ்கர் கொடுத்த கிறிஸ்தவ மிஷனரிகளின் குரூரத்தை வியக்கிறேன்.

*

பாருக்குள்ளே நல்ல மாடு, எங்கள் பாரத மாடு. - உமா பாரதியார்

*

இன்று கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒன்றில் பார்த்த இறந்துபோன ஆளுக்கு என் பெயர்தான். :-)

*

வேண்டாவெறுப்பாக எழுதும் சிறுகதைகள் சரியாக வருவதில்லை. தலையெழுத்தே என்று திரும்ப எழுத வேண்டியிருக்கிறது.

*

இந்த சமயத்தில் ஒரு தகவலைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் எழுதக் காரணமே 'வாத்தியார்'தான். எனது முதல் படைப்பு 'ரிக்‍ஷாக்காரன்' விமர்சனம்.

*

பாரதியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் 'நெஞ்சு பொறுக்குதிலையே'வை லூப்பில் போட்டுவிட்டு ஐரோப்பா மாதிரி எங்காவது போயிருப்பார்.

*

"காக்கைக் குருவி எங்கள் ஜாதி" - பாரதியார். காக்கைக் குருவி நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?

*

பவதி பீட்ஸாந்தேகி.

*

பைசா பெறாத விசயங்களைக்கூட மிகையாகப் பாராட்டுவதில் நமக்குக் கொஞ்சம் ஆன்ம பலம் கிடைக்கிறது.

*

லபக்குதாஸ் வீட்டில் விவாகரத்து மிரட்டல் தீவிரமாகிவிட்டது போல. சர்வதேச ஜீவனாம்ச நிதியத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

*

வெளுத்ததெல்லாம் பாலும் அல்ல, சாயமும் அல்ல.

*

ஒரு வியர்வைத் துளி காய்ந்தால் அதன் இடத்தில் நூறு வியர்வைத் துளிகள் வருகின்றன. புரட்சிப் புழுக்கம்.

*

அடிக்கடி நெஞ்சுவலி வருகிறதா? எப்போதும் முழு ஆடையில் இருங்கள். பிறர் பார்க்கப் பிறந்தமேனியாக செத்துக்கிடப்பது போல் அவமானம் வேறில்லை.

*

'ஆல்கெமிஸ்ட்' எழுதிய பாவ்லா கோகிலா, ஏழைகளின் மார்க்வெஸ்.

*

என் மணவாழ்க்கை என்றென்றைக்குமான ஒரு புரிந்துணர்வுப் பயணம் என்றே நினைக்கிறேன். தவறிப்போய் விவாகரத்து ஆகிவிட்டால் ஒரு மேக்புக் வாங்குவேன்.

*

வருங்கால ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு: கொலையைத் தவிருங்கள்.

*

ஒரு நைசில் பந்தல் பார்த்தேன்.

*

தவறு செய்வது மனித இயல்புதான். ஆனால் மன்னிப்பு கேட்க வேண்டிய அளவுக்குத் தவறு செய்யாதீர்கள்.

*

நான் ஆட்டோவில் செல்லும்போதுதான் டூவீலர் பெண்கள் என்னைத் திரும்பிப் பார்க்கிறார்கள்; என்னவோ ஆட்டோவில் போகிறவனெல்லாம் அழகுப் பதுமை மாதிரி.

*

இந்தி, வடமொழி, சொச் பாரத், யோகா எனப் பலதை நம் மீது திணிக்கும் பா.ஜ.க. அரசு, எப்போது லிங்க வழிபாட்டில் இறங்குமோ என்று கவலையாக இருக்கிறது.

*

கம்பராமாயணப் பாடல்களில் டியூனை பூதக்கண்ணாடி போட்டுத் தேட வேண்டியிருக்கிறது.

*

பொன்னியின் செல்வனை ஏழு முறைக்கு மேல் படித்ததில் வந்தியத்தேவன் என்ற பெயர் மனப்பாடமாகிவிட்டது.

*

சால்வடார் டாலி, பிகாசோவின் நண்பர் என இன்று அறிந்தேன், அதை லபக்குதாசிடம் பகிர்ந்தேன். "வெல், எனி ஃப்ரெண்ட் ஆஃப் பிகாசோ இஸ் வெல்கம்" என்றார்.

*

ஃபேஸ்புக்கில் லபக்குதாஸை மறைமுகமாகத் தாக்கிவரும் ஒருவரைப் பற்றி அவரிடம் சொன்னேன். "கொத்தித் திரியுமந்தக் கோழி!" என கர்ஜிக்கிறார் லபக்குதாஸ்.

*

சில்வியா ப்ளாத்தின் ஒவ்வொரு கவிதையும் "தட்ஸ் மை கேர்ள்!" என்று பெருமிதப்பட வைக்கிறது.

*

ஓர் இலங்கை நண்பர் சொன்னது போல, "ரூ மச் ரீவி இஸ் கில்லிங் திஸ் யெனரேடன்."

*

ஒரு நண்பரின் குழந்தைக்கு சந்தோசப்படும்போது கண்கள் விரிவதில்லையாம். மருத்துவரிடம் காட்டப்போகிறாராம். எல்லாம் பத்திரிகைகள் செய்கிற வேலை.

*

"என்னவோ எனக்கு ஃபிக்‍ஷனே ஆர்வமில்ல. நான்ஃபிக்‍ஷன்தான்!" என்பார் லபக்குதாஸ். சிலசமயம் உணர்ச்சியாகி "பெருமையா இருக்குய்யா!" என கத்திவிடுவார்.

*

"சாலையோரம் சோலை வந்து ஆடும்" என்ற வரியின் விசுவல் அழகிற்குச் சோரம் போன பின்பு அடுத்த வரிக்கு எப்படித் தாவுவதாம்?

*

"I only came to use the phone." இங்கே எல்லோரும் அப்படித்தான் தோழி.

*

சில விசயங்களை எவ்வளவு முறை வேண்டுமானாலும் படிக்கலாம். உதாரணமாக மகன் கோபத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகுமுன் எழுதிய குறிப்பை. அதிர்ச்சியுடன்.

*

அன்பும் அறிவும் - அன்பைக்கூட விட்டுவிடலாம் - எனதிரு கண்கள்

*

யோஜிம்போ திரையில் தோன்றி நடக்கிறார். அவர்மேல் டைட்டில் வருகிறது. இன்னும் நடக்கிறார். இன்னும் டைட்டில். 'படத்தப் போடுறா டேய்' என்கிறது மனசு.

*

நம்மைப் போன்ற பலருக்குத் தேவைப்படுவது உத்தியோகம் அல்ல, ஒரு சொகுசு இல்லத்தில் palliative care.

*

"டிரபுள்டு ஜீனியஸ்" ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?

*

"இந்தாளு வர மாட்டாரு. நானும் என் மவனும் வர்றோம்" என என் மனைவி யாரிடமோ போனில் சொல்கிறார். 'இந்த மனுசன்' என்பது நன்றாக இருந்த மாதிரி உணர்வு.

*

மனைவி என்னிடம் ஏதோ சொல்ல முயல்வதாகத் தோன்றுகிறது. அவரோ, அது என்ன என்று ஊகிக்க விடாமல் வெகுநேரமாக "ஏங்க, ஏங்க" எனக் கத்திக்கொண்டிருக்கிறார்.

*

இந்திய அரசியலின் மிகச் சமீபத்திய அவமானம் இந்த மேகி ஊழல்.

*

அச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் கவிதைத் தொகுப்பு வருவதைத் தடுக்கமுடிய வில்லையே. :-))

*

அர்த்தமில்லை, அர்த்தமில்லை, அர்த்தமென்ப தில்லையே

*

இன்று எனது பயண நூல் ஒன்று வெளியாகிறது. "தமிழகக் கோவில்கள்: தோராயமாக எத்தனை இருக்கும்?"

*

#Nowreading: From Bagala Bath to Blood Bath: the Revival of Hinduism in Tamil Land, Rajiv Malhotra

*

"கங்கை நதிப்புறத்து கோதுமைப் பஞ்சம்" என பாரதி பாடுகிறார் ("காவிரி வெற்றிலைக்கு மாறிக்குவோம்" என்ற வரிக்கு முன்பு). இது எப்போது? தரவு உண்டா?

*

பாகுபலி: நிலப்பிரபுத்துவ இதிகாச மசாலாவும் துகிலுரியும் காவிய நாயகர்களும்.

*

பாகுபலி: விட்டலாச்சார்யா சமாச்சாரத்தை கிராபிக்ஸ் மிரட்டலில் டெக்னாலஜி டெக்கிலாவாகத் தந்திருக்கிறார்கள். சர்க்கரைப் பாகுபலி!

*

என் கதைகளை ஆங்கிலத்தில் பிரசுரிக்கும்படி பெங்குவினிடம் கேட்டிருந்தேன். என் புத்தகங்களை அனுப்பச் சொல்கிறார்கள். 'பேக்கிரவுண்ட் செக்'காம்.

*

நெருங்கிய உறவினரின் பிறந்தநாள் வருகிறது. "உன் பிறந்தநாளுக்கு ஏதாவது ஸ்வீட் செய்து சாப்பிட்டுக்கொள்" என்று பங்களித்தேன்.

*

ரொம்பக் குறை சொன்னால் நாமே திருத்த வேண்டிவரும்.

*

ஃபேஸ்புக்கில் பொம்பளைப் பேர் வைத்திருப்பவனெல்லாம் ஆம்பிளைக்காரனாக இருக்கிறான்.

*

ஆஸ்கார் அப்பாடக்கர் சத்யஜித்ரேயின் 'அபூர் சன்சார்': மினியேச்சர் பட்ஜெட்டில் ஒரு பெங்காலி ரங்கோலி!

*

சினிமாக்களில் இன்னொரு பொறுப்புத் துறப்பும் போடலாம்: இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பேச்சுகள் எவையும் படக்குழுவினரின் கருத்துகள் அல்ல.

*

நீட்ஷே போன்ற தத்துவ அறிஞர்கள் பெண்களை வெறுத்தது ஏன்? நம் போன்ற சாதாரணர்களுக்குத் தெரியாதது என்ன இந்த மேதைகளுக்குத் தெரிந்துவிடப்போகிறது?

*

@paulocoelho ¿Me concede este baile?

*

என் முதல் கதையைப் பிரசுரித்தவரை லாமினேட் செய்து ஸ்டோர் ரூமில் வைத்திருக்கிறேன்.

*

"அறிவின் இடத்தை அன்பு எடுத்துக்கொள்ளட்டும்" என்று ஒரு புதுமணத் தம்பதியை வாழ்த்தினேன்.

*

ஒரு நூறு ரூபாய் நோட்டுக்கட்டை நேர்த்தியாக பைண்ட் செய்து அனுப்பிய வாசகருக்கு நன்றி.

*

பெண்களுக்கென்று ஒரு தனி வெளி இல்லை. அதனால்தான் திரையரங்கில் ஆண்களாகிய நாமும் முன்னூறு நகை விளம்பரங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.

*

இதைப் படிக்கும் திருமணமாகாப் பெண்ணே, இரவு நான் வீடு திரும்ப நேரமாகும். எனக்காகக் காத்திருக்காதே. நீ சாப்பிட்டுவிட்டுத் தூங்கு.

*

மின்வெட்டு அவ்வளவு ரொமாண்டிக்காக இல்லை. இருள் சூழ்வதற்கு பதிலாக வெளிச்சம் பொசுக்கென்று போய்விடுகிறது.

*

ரொம்ப நாள் மூச்சு விடாமல் இருந்தால் நாசித் துவாரங்களை ஒட்டடை அடைத்துக்கொள்ளுமா?

*

வண்ணஹாசன் என்ற பெயரில் நெகிழ்ச்சியாக எழுதும் மூத்த எழுத்தாளர் உண்மையில் கமல்சார்தானே?

*

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும். நான் சொல்லவில்லை, வள்ளுவர் சொல்கிறார்.

*

யாருடைய உயிரியல் மாதிரிகள் நாம்?

*

'எழுதித் தீர்த்துக்கொள்வோம்' என்று யாரும் சொல்வதில்லை.

*

தெரியுமா? "Ache Din"-இல் உள்ள இரு சொற்களுமே ஆங்கிலச் சொற்கள்தாம்.

*

என் குடும்ப/சமூகக் கடமைகள் அனைத்தையும் உக்கிரமாகச் செய்துவருகிறேன். எனக்குத் தற்போதிருப்பதைவிட நல்ல பிரதமரைப் பெறத் தகுதி இல்லையா?

*

எண்பது வரை இருப்பேன் / பின்பு காலி இடத்தை நிரப்புவேன்.

*

செல்பேசி ரேடியேசன் புதுக்கவிதையை பாதிக்குமா? கவிதை எழுதிய தாள்மீது செல்பேசியை வைத்தேன். சிறிது நேரம் கழித்துப் படித்தால் கவிதை நன்றாக இல்லை.

*

இறைவன்....! உன்னை படைத்த பின்பு....!

பூக்களை ஏன் படைத்தான்.....??

மாவு பாக்கி இருந்ததா.....?????

*

கண்ணே.... நீ அழும்போது.....!!

கண்ணீர் வருகிறது.....!!

உன் விழிகளில்....!!!!!

*

மகனின் பைக் சாவியை நகல் செய்தேன். காது குடைய. குடையாத நேரத்தில் காதிலேயே மாட்டிவைக்கலாம். ஆனால் எவனாவது என்னை ஓட்டிக்கொண்டு போய்விட்டால்?

*

புத்தகக் காட்சிக்குக் கவிஞர் வன்மதி மோகனின் கவிதைத் தொகுப்பு தயார். படித்தேன். நல்லதோர் வீண்-ஐ செய்திருக்கிறார்.

*

திருமணத்திற்கு முன்பு 'சாணக்கிய'னாக இருந்தவனெல்லாம் திருமணத்திற்குப் பின்பு 'ஜானகி'யனாகிவிடுகிறான்.

*

மொழிபெயர்ப்பு. n. ஆங்கிலத்தில் படித்தால் நன்றாக இருக்கும். தமிழில் படித்தால் சகிக்காது. காண்க: மொழியாக்கம், வாட்டர்போர்டிங்

*

என் குடும்பத்தின் "பெய்டு மெம்பர்" என்ற முறையில் எனக்கு உரிமைகள் போதவில்லை.

*

ஆண்டுதோறும் எனக்கே கிடைக்கும் விருது ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! "என்ன, இன்னும் வாங்கலியா?" "அதுக்குதான் போயிட்ருக்கேன். ஈவினிங் கால் பண்றேன்."

*

எல்லோரும் இன்புற்றிருந்தால் உனக்கு ரொம்ப அரிக்குமா பராபரமே?

*

ஆண்டவன் உலகை 'உள்ளபடியே' படைத்திருக்கிறான். அதனால்தான் நல்லது மட்டுமில்லாமல் கெட்டதும் இருக்கிறது.

*

உறவே.. எப்போது விழும்.....!!

என் தலையணையில்......!!!

உன் கண்ணீர் துளிகள்.......????

*

காதலே,,,,,,!!

ரோஜா பூ என்றல்லவா நினைத்தேன் உன்னை....!!

ஆனால் மறந்து விட்டேனடி மொத்தமாய்....!!

ரோஜாவிற்க்குள் முள் இருக்குமென்று....!!!!!

*

கே. இன்றைக்கு ஏன் நாக பஞ்சமி?

ப. ரத சப்தமி படுபிஸி.

#அறிவோம்ஹிந்துமதம்

*

எழுதிக்கொண்டிருக்கும்போது இடது காதில் சின்னதாக ஒரு "Do Not Disturb" பலகையைத் தொங்க விட்டுக்கொள்ள வேண்டும் போல.

*

மழையில் நனைந்த உன்னில் நனைந்த மழையில் நனைய உன் காலடியில் கிடக்கிறேன் காகிதப் படகுகளினூடே.

*

'ஏழு' வயது முதல் காதலிப்பவனை..!

'ஏழரை' என்று விட்டாய்..!

'எட்டாத' உயரத்திற்க்கு சென்று விட்டாய்..!

என்னை 'ஒட்டாத' உறவுக்கு தள்ளி விட்டாய்!!!

*

அழகே உன் மனம்....!

கல்லாக இருப்பது ஏனோ....!?!?!?

நீ என் கடவுள் என்பதால் தானோ....????

*

தட்டிக்கொடுக்கத்தான் நினைத்தாய் பெண்ணே....!

ஆனால்.....!

ஸ்பரிசம் பிசகி.....!

ஓங்கி அறைந்துவிட்டாய்....!

*

மாதிரி வினா-விடையில் உள்ள கேள்விகளை மகனிடம் ஒவ்வொன்றாகக் கேட்கிறேன். விடைகளைப் பார்த்தால்தான் தெரிகிறது, நிறைய பொய் சொல்கிறான்.

*

அமெரிக்காவில் சுதந்திர தினத் தேதியைப் பச்சை குத்திக்கொண்ட தேசபக்த வாசகர் ஒருவர் எனக்கு இருக்கிறார். "08/15/1947".

*

15-08-1947தான் சுதந்திர தினம். நாம் வருடாவருடம் கொண்டாடுவது சுதந்திர தின நினைவு தினம்.

*

ஒப்பீடு இருக்கும் இடத்தில் நியாயம் இருக்காது.

*

"டூக்குடு" என்ற பெயரில் ஒரு படம் வந்திருக்கிறது. நாலே எழுத்தில் ஒரு மூட்டைத் தெலுங்கு.

*

"காலையில் எலி மருந்து சாப்பிட்டேன். வயிற்றுவலி தாங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் செத்துவிடுவேன்."

"Link plz"

*

ஊழிக்கும் ஊழியத்திற்கும் சொற்றொடர்பு இருக்கிறதா?

*

தூர எதிர்காலத்தில் எல்லா வீட்டுவேலைகளுக்கும் ரோபோக்கள் வந்துவிட்டால் மனைவிகளுக்கு வேலை போய்விடுமே! :-(

*

அம்மாவின் சமையலுக்காக ஏங்கும் சென்னைவாழ் வெளியூர்க்கார மேன்ஷன்வாசிகளுக்கு: மைலாப்பூரில் "மாத்ரு தேவோ பவன்" என்று ஒரு ஓட்டல் திறக்கிறார்கள்.

*

இன்று என் வீட்டுச் சமையல் கற்பனையைத் தூண்டுவதாக உள்ளது: "ஒருவேளை இன்றைய சமையல் நன்றாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்..."

*

ஜெயலலிதா வீட்டில் மோடி என்ன சாப்பிட்டார்? - "தினத்தந்தி"

*

இம்மாலைநேர இரைச்சல், இவ்வாயோயா மனித மந்தை என்னைத் தொடவில்லை. என்னுள் ஓடுவது உலகுக்கு வெளிச்சமில்லை. உண்மைதான், ஒவ்வொரு மனிதனும் ஓர் ஐலந்து.

*

முதலில் உடனடி நூடுல்ஸ் வேண்டாம் என்றார்கள். பின்பு போர்னோவை ஒழி என்றார்கள். பிறகு மதுவை ஒழி என்றார்கள். அடுத்து ஆண்களே கூடாது என்பார்கள்.

*

இனிமையான காதல் கதைகளைப் படிக்கப் படிக்க, அவை புனைவுலகை விட்டு வெளியே வருவதைப் பிடிவாதமாகத் தவிர்ப்பது தெரிகிறது.

*

இன்று மகனுக்குப் பிறந்தநாள் பரிசாக ஒரு ரூபாய் கொடுத்தேன். அவன் பிறந்த ஆண்டில் வெளியான அரிய நாணயம். காலையில் டீக்கடையில் கிடைத்தது.

*

When evil-doing comes like falling rain/What ate me up was the bedbugs. #மீள்Brecht

*

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. சௌரியமான இடத்திலிருந்து வேடிக்கை பாரு.

*

அதற்க்கு, இதற்க்கு, எதற்க்கு....!!

என எழுதிடவே உன்னைக் காதலித்தேனடி.....!!!

*

தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தால்...' - தமிழின் முதல் speculative fiction.

*

சிலர் மது அருந்தினால் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். விட்ட கள்ளும் பேசுமோ Nathan உள்ளிருக்கையில்?

*

நான் ஒரு தவறு செய்தால் அடுத்தவர் மீது பழி போட மாட்டேன். அந்தத் தவறை ஒப்புக்கொள்ளும் கியூவில் முதல் ஆளாய் நிற்பேன்.

*

அன்புக்கு இணையாக ஒன்றுமே இல்லை. அன்பின் கால்தூசையும் தொட இன்னொரு உணர்வு இல்லை. அது தேவையும் இல்லை. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் அன்பு.

*

மனிதன் பலவித இயல்புகளுடையவன். எனவே இரக்கம்தான் 'மனிதம்' என குறுக்காதீர்கள். உதவுவதும் மனிதம்தான், சிரியாவில் தலைகளை வெட்டுவதும் மனிதம்தான்.

*

சில நோய்களைக் காசு கொடுத்து வாங்க முடியுமா? சொந்த உபயோகத்துக்குத்தான்.

*

இண்ட்யூஸ்டு கோமா என்ன ரேட் சொல்கிறான்?

*

முதியோர் இல்லத்தில் சேரப் போனேன், வயது பற்றாது என்று விரட்டிவிட்டார்கள். என் வாசகியரிடம் கேளுங்களடா மண்டூகங்களா!

*

மக்களுக்குத் தன்னம்பிக்கைப் பொன்மொழிகள் தேவையில்லை. அவர்களுக்கு சிகிச்சையோ விடுமுறையோதான் தேவை.

*

🎶 சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, இந்தி தெரியுமா? 🎶

*

சவாலாக விசைப்பலகை பார்க்காமல் 30 நிமிடம் தட்டச்சு செய்து கவிதை எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால் ஒரு 'க்' மட்டும்தான் விழுந்திருக்கிறது.

*

அருகில் வா என்றேன்...!

அருகிவருகிறாயே.....!!!

குறும்படைப்புகள்

கல்லூரி விரிவுரையாளர்கள் என்று நான்கு இளம்பெண்கள் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார்கள். குறிப்பிடத்தக்க புதிய எழுத்தாளர்கள், அறியப்படாத ஆளுமைகள், சமீபத்திய அயல்மொழிச் சினிமாக்கள் என விரிந்தது தீவிரமும் கலகலப்பும் சிரிப்புமான எங்கள் உரத்த உரையாடல். இடையே மனைவிகூட வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார். இரண்டு மணிநேரம் பேசிய பின்பு எனது சமீபத்திய புத்தகங்களில் என் கையொப்பத்தை வாங்கிக்கொண்டு விடைபெற்றார்கள். ஒரு பெரிய அலை ஓய்ந்த மாதிரி இருந்தது. “மயக்குறாளுக” என்று நினைத்துக்கொண்டேன்.

*

உலகெங்கும் எண்ணற்றோர் பட்டினியாலும் இன்ன பல காரணங்களாலும் சாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவன் தங்கள் செகண்ட் ஸ்டாண்டர்டு குழந்தை வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவுவார் என்று எதிர்பார்க்கும் இளம் தாய்மார்கள் படு க்யூட்!

*

ஆள் அதிகமில்லாத ஏ.சி. அறையில் குளிர் அதிகமாக இருக்கும். சில பிராந்தியங்களும் அப்படித்தான். எ.கா., சைபீரியா, இமயமலை. ஆட்கள் சேரச் சேர குளிர் குறைந்துவரும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தினர் வேலைக்காக மேலை நாடுகளுக்குப் போவது அதிகரித்திருப்பதால் அங்குள்ள இயல்பான குளிர்ச்சி குறைந்திருக்கிறது. இதைத்தான் மேலை விஞ்ஞானிகள் உலகம் வெப்பமாதல் என்கிறார்கள். உண்மையில் இது மேற்குலகம் வெப்பமாதல்.

*

காலையில் லபக்குதாசின் மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்துப் புலம்பினார். நேற்று மாலை வெளியே சென்ற லபக்குதாஸ் இன்னும் வீடு திரும்பாத நிலையில் நள்ளிரவில் போலீஸ் அவருக்குப் போன் செய்து இப்படிச் சொன்னார்களாம்: “உங்கள் கணவர் சமரசமின்மையின் போதையில் மயங்கி ரோட்டோரம் விழுந்து கிடக்கிறார். வந்து வாரிக்கொண்டு போங்கள்.”

*

புளூட்டோ உள்ளிட்ட நவக்கிரகங்கள் நம் வாழ்க்கையில் ஆற்றும் பங்கு பற்றிப் பேசும் சோதிடம், ஒவ்வொரு கிரகமும் மிக அதிகமான வெப்பம் முதல் மிக உக்கிரமான காற்று வரை வெவ்வேறு விதமான வானிலைகளைக் கொண்டிருப்பதையும் சில கிரகங்களுக்குப் பல நிலவுகள் இருப்பதையும் பற்றி எதுவும் சொல்லக் காணோம். அத்துடன், நம்முடைய நிலவுதான் நம் வாழ்க்கையை பாதிக்குமா? நம்மை பாதிக்கும் கிரகங்களின் நிலவுகள் பாதிக்காதா? இது குறித்து வேத விஞ்ஞானமும் சர்ச் எரிப்பு சாஸ்திரமும் என்ன கூறுகின்றன?

*

வாக்கிங் போய்விட்டுத் திரும்பி வரும்போது மனைவி எதிரில் வந்தார். நான் பார்க்காத மாதிரிப் போய்விட்டேன். ஒரு இங்கிதத்துக்காக நலம் விசாரித்தால் பேசப் பிடித்துக்கொண்டுவிடுவார்.

*

நேற்றுத் திருவல்லிக்கேணியில் ஒரு கூட்டத்தை முடித்துக்கொண்டு நானும் லபக்குதாசும் அதன் தெருக்களில் உலாத்திக்கொண்டிருந்தோம். 'கோமாதாப்பட்டி' அல்லது 'ஜல்லிக்கேணி' என்று பெயர் மாற்றத்தக்க அளவுக்கு எங்கு பார்த்தாலும் மாடுகள், மாடுகள், இன்னும் பல மாடுகள். கோவில்கள், கன்னடத்து ஆண்டி மடங்கள் என்று வெளியிலிருந்து பார்க்க நிறைய இருந்தது.

“என்னய்யா ஒரே 'நாம'கரணமா இருக்கு?” என்றார் லபக்குதாஸ் ஒரு பூசாரிக் குழுமத்தைப் பார்த்துவிட்டு.

“அட, அத ஏன் கேக்கிறீங்க?” என்றேன்.

“நானும் தெரியாமத்தான் கேக்கிறேன்” என்றார்.

இப்படியே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம் மாடுகளினூடே.

*

டிஜிட்டல் யுகத்தை ஆட்டிப்படைக்கும் நோய் எபோலாவோ விரைவீக்கமோ அல்ல. சக மனிதர்களின் மீதான அவநம்பிக்கைதான் அந்த நோய். இது போட்டியாலும் பாதுகாப்பின்மை உணர்வாலும் ஏற்படும் 1. இருப்பினும் விதிவிலக்காக, மானுடத்தின் மீது, அதன் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி நெகிழ்ச்சியூட்டும் அரிய மனிதர்கள் இல்லாமல் இல்லை. இம்மாதிரி யுகபுருஷர்களில் ஒருவரையாவது நான் எங்கு போனாலும் பார்க்கிறேன் நிலைக்கண்ணாடியில்.

*

இப்போதெல்லாம் லபக்குதாசிடம் கவிதை கொடுத்துக் கருத்துக் கேட்பது அவ்வளவு எளிதாக இல்லை. நபர் உஷாராகிவிட்டார்.

“சின்னதுதாங்க” என்றாலும் மறுத்துவிடுகிறார்.

“வேணாம்ங்க. டாக்டர் சொல்லிட்டார்” என்பார்.

அதிலிருந்து உத்தியை மாற்றிக்கொண்டேன்:

“கருத்து சொல்ற அளவுக்கு மட்டும் படிங்க போதும்.”

*

கடைக்குச் சென்று திரும்பி வரும் வழியில் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கி மனைவியிடம் கொடுத்தேன். இம்மாதிரி சிறுசிறு அபத்தங்கள்தாம் நம் அன்பை வெளிப்படுத்தி உண்மை நிலையைச் சோற்றில் மறைக்க உதவுகின்றன. ஆனால் இவை மனைவியின் மனப் பதிவேட்டில் என்ட்ரி போடப்படும் என்பது நிச்சயமில்லை.

*

பழைய நோக்கியா செல்பேசிகளுக்கும் ஐபோன்களுக்கும் முறையே இடதுகை-வலதுகை வேறுபாடு தெரியுமா? ஏனெனில் இடதுகையால் நோக்கியா செல்பேசித் திரையைத் தொட்டால் ஒன்றும் ஆவதில்லை. ஆனால் வலதுகையால் ஐபோன் திரையைத் தொட்டால் நிரல்கள் திறக்கின்றன.

*

என் பதின்ம வயதுகளில் நான் அழகாக இருப்பேன். என் தலைமுடி நன்றாகப் படியும். டிப்டாப்பாக ஆடை அணிவேன். சூரியன்கூட மேற்கே உதித்தாலும் உதிக்கலாம், நான் கழுத்து வரை சட்டைப் பொத்தான் போடத் தவறவே மாட்டேன். என் உறவினர் ஒருவர் – மூன்று குழந்தைகளையும் பெண்ணாகப் பெற்றுவிட்டவர் – ஒருநாள் என்னைப் பார்த்து அசந்துபோனார். 'சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வேண்டிய ஆளப்பா நீ' என்று சொல்ல வாயைத் திறந்தார். திறந்த வாய்க்குள் மின்னலாக ஓர் அம்பு பாய்ந்து ஆள் மரமாகச் சரிந்தார் – செவ்விந்தியர்கள்!

*

தெருக்களில் எவ்வளவு மோசமான நாவல்களெல்லாம் நடமாடுகின்றன பாருங்கள். அதுவும் பண்டிகைக் காலம் என்றால் அச்சேறாத புத்தகங்களின் திருவிழாதான். மோசமான பாத்திரப் படைப்புகள், பெரும்பாலும் உள்ளும் புறமும் அழகற்ற உள்ளீடில்லாப் பாத்திரங்கள், கேவலமான வசனங்கள், தர்க்கமே இல்லாத சம்பவங்கள், மிகையான மெலோடிராமா, சகிக்க முடியாத நாராசம், கூப்பாடு, மிக நீண்ட/மிகச் சிறிய, தேவையில்லாத அத்தியாயங்கள், சலிப்பூட்டும் இட/சூழல் விவரணைகள்… முடிவே கிடையாது. வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன. அத்தனையும் கீழ்த்தரமான படைப்புகள். எந்த மடையன் இவற்றை எழுதினான்?

*

வீட்டுக்கு வந்த ஒரு புதிய தற்குறி விருந்தாளி நான் என்ன செய்வதாக விசாரித்தார். எழுத்தாளன் என்றேன். சாலைகள் கண்டபடி தோண்டப்படுவது, ஒருவழிச் சாலைகளின் தொல்லை, அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்று அரை மணிநேரம் பொருமிவிட்டு “இதப் பத்தில்லாம் நீங்க எழுதுங்க சார்” என்றார். நான் ஓவியன் எனச் சொல்லியிருந்தால் “இதையெல்லாம் நீங்க வரைங்க சார்” என்றிருப்பார் போலும். வரைய முடியாது என்றில்லை. ஆனால் ஏன் என்கிறேன்.

*

ஒரு பணக்கார வாசகருடன் ஒடிசி புத்தகக் கடைக்குப் போனேன். சைனீஸ், மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்க வகைகளில் நான் கேள்விப்படாத விலையுயர்ந்த நூல்களை அரை டஜன் அள்ளினார். அலமாரியில் வைக்க எல்லாம் வாங்கியாகிவிட்டது என்று திருப்தியடைந்த பின்பு என் நினைவு வந்து “உங்களுக்கு ஏதாவது வேணுமா சார்?” என்றார். “ஒரு டம்ளர் தண்ணி குடுங்க போதும்” என்றேன், விழிக்கிறார்.

*

எனக்குத் தெரிந்த தீவிர பாரம்பரிய வெறி கொண்ட பிராமண நண்பர் ஒருவர் தமது வீட்டில் விமரிசையாக ஏதோ பூஜை நடத்துகிறார். இந்த அன்பர் கடும் வரலாற்று அபிமானிகூட. பூஜைக்கு இடுப்புத் துணி மட்டும் (முடிந்தால் விலங்குகளின் தோலால் செய்தது) அணிந்துவருமாறு எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார். பின்பூஜை சாப்பாட்டில் எல்லா வகை இறைச்சிகளும் பறிமாறப்படுமாம். “நம்ம ட்ரெடிஷ்னல் ஃபுட் சார்! ஜெயின்ஸ் வந்து கெடுத்துட்டா. ஹிண்டு கல்ச்சர் தப்பா எவால்வ் ஆயிடுத்து!”

*

ஓர் எழுத்தாளன் தெரியாத்தனமாய் செத்துத் தொலைத்தால் அவனைக் கொஞ்ச காலம் தனியாக இருக்க விடுங்கள் ஐயா! வருத்தப்பதிவுகள், புத்தகப் பரிந்துரைகள், மேற்கோள்கள், புகைப்படங்கள், சுட்டிகள் என்று பாவம், அவனும் மனுசன்தானே! கல்லறை மேல் புற்கள் வளரட்டும் / கட்டை வெந்த புகை மேகங்களில் கலக்கட்டும். எங்க ஆத்துக்காரரான அடியேனும் அவன் படைப்புகளை வாசித்திருக்கிறேனாழமாக நூலறிமுகங்கள் எழுதுவேன் என்று காட்டிக்கொள்ள அவகாசம் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு இதுதான் தருணம் என்று அநாகரிகமாக ஒரேடியாய் அவன் மேலேயே போய் விழுந்தால் எப்படி? செருப்பைக் கையிலெடுத்துக்கொண்டு ஓடி வர மாட்டான் என்ற தைரியமா?

*

இந்தப் பெற்றோர்தான் பொறுப்புகளை வைத்துக்கொண்டு எவ்வளவு சிரமப்படுகிறார்கள்! குழந்தைகளுக்கு ஜாதி உயர்வு-தாழ்வு, அழகான நிறம், அழகற்ற நிறம், வர்க்க எல்லைகள், நட்பு, பகைமை, புத்திசாலிகள், முட்டாள்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பல வேலைகளுக்கிடையே அவர்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது! வீட்டுக்குப் பின்னால் ஒரு கிணறு இருந்தால் நேரடியாகக் குழந்தைகளை அதில் போட்டுக் கொன்றுவிடலாம். சயனைடு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் கொடுத்துவிடலாம். இந்த வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் இப்படிப் பாடுபட வேண்டியிருக்கிறதே. :-(

*

எண்பதுகளின் ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்யப் படையெடுப்பின் பின்னணியில் ஒரு காதல் கதை படிக்க ஆசை. அதாவது எண்பதுகளில் ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்துகொண்டிருக்கும்போது நான் அங்கே இருந்துகொண்டு ஒரு காதல் கதை படிக்க வேண்டும்.

*

'பால்வீதி' எனப்படும் நமது சூரியக் குடும்பத்தில் ஒரே ஒரு சூரிய பகவான்தான் இருக்கிறார். மற்ற சூரியக் குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய பகவான்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கின்றன. இரண்டு சூரியன்களைக் கொண்ட புறக்கோள்கள் (எக்சோப்ளானட்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரிய பகவானாகவும் மற்றது சூரிய பகவதியாகவும் இருக்கலாம். இவர்களை வழிபட ஆள் இருக்கிறார்களா அல்லது இவர்கள் அனாதைக் கடவுளர்களா என்பதை அறிவியல் நமக்கு இன்னும் கண்டறிந்து சொல்லவில்லை.

*

நெருங்கிய உறவினர் தாய்வீட்டிலிருந்து கிளம்பும்போதே, 'சத்தியமாக பத்திரமாய் வீடு போய்ச் சேருவேன். இது உன் மேல் ஆணை. இனி அடுத்த சந்திப்பு வரை நீ யாரோ, நான் யாரோ' என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்து உறுதியளித்துவிட்டால் பிறகு இங்கு வந்து என் அருகில் நின்று தாயாரை ஃபோனில் அழைத்து எப்போது ரயில் வந்து சேர்ந்தது, ரயில் நிலையத்தில் எவ்வளவு கூட்டம், ஏயப்பா, ஆட்டோக்காரன் ஒவ்வொருத்தனும் எவ்வளவு கேட்கிறான் தெரியுமா, கடைசியாக ஏறிய ஆட்டோவின் காரன் மீட்டருக்கு மேல் எவ்வளவு கேட்டான், இறங்கும்போது எப்படித் தகராறு செய்தான், இவனை மாதிரி ஆட்களால் எப்படி ஒழுங்கான ஆட்டோக்காரர்களின் பெயரும் கெடுகிறது, வீட்டு வாசலில் பார்த்த லட்சுமணன் அம்மா என்ன பேசினார், லட்சுமணன் குடும்பத்தார் ஜூன் மாதம் எங்கு போகிறார்கள், அந்தப் பையனுக்கு விவரம் போதுமா முதலியவைகளை என் காதுபடப் பேசத் தேவையிருக்காது.

*

டீக்கடையில் கல்லாவுக்குப் பின்னால் அமர்ந்திருந்த நபரிடம் விளையாட்டாகக் கேட்டேன்: “இப்படி ஜாலியா சும்மா உக்காந்திருக்கீங்களே, இந்த வெயிலக் கொஞ்சம் குறைக்கலாம்ல?”

இதை ஏன் 'விளையாட்டாக' என்று சொல்கிறேன் என்றால், வெயிலைக் குறைப்பது நம் வேலையன்று என்பது மட்டுமல்ல, நம்மால் அது முடியாத ஒன்றும்கூட. இந்த உண்மையே கிடையாது என்பது போல, வானிலை வல்லுநர்களாலும் சுற்றுச்சூழல்வாதிகளாலும் அமைச்சர்களாலும் துரித எதிர்வினைக் கவிஞர்களாலுமே கட்டுப்படுத்த முடியாத வெயிலை ஒரு சாதாரண டீக்கடைக்காரரால் கட்டுப்படுத்த முடியும் என்பது போல சித்தரிப்பது மட்டுமின்றி, அவ்வாறு கட்டுப்படுத்தாமைக்காக அவரைக் கண்டிக்கிறேனே, அதுதான் இதில் நகைச்சுவை. முரண்நகை என்றும் சொல்லலாம்.

கல்லாக்காரர் என்ன சொன்னார் என்று சொல்லவில்லையே. அவர் எதுவும் சொல்லவில்லை. ஏன், உதடுகள்கூடத் துடிக்கவில்லை. என்னை வெறுப்புமிழும் கண்களால் (அவருடையவைதாம் அவை) பார்த்தார். ஏனென்றால் என்னுடைய நகைச்சுவை அவருக்குப் புரிய மறுத்துவிட்டது. ஆனால் அவர் கடையில் எப்போதும் போல் அமோகமாக போணி ஆகாமல் இல்லை.

*

நேற்றொரு கனவு. நாவல் கலை பற்றி மேடையில் பேசிக்கொண்டிருக்கிறேன். எல்லோரும் கட்டுண்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “எப்படி ஆரம்பத்திலிருந்தே சமூக விசயங்கள் தமிழ் நாவலில் இடம்பெற்று வந்திருக்கின்றனவோ…” என்று ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கிறவனுக்குத் திடீரென்று வார்த்தைகள் மறந்து திணறுகிறேன். “வந்திருக்கின்றனவோ…” என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அப்போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன், “மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி” என்று உரக்கப் பாடியபடியே மேடையை நோக்கி வந்து மைக்கைப் பிடுங்கிக்கொள்கிறார்.

*

ஒருவர் வேகமாக மோட்டார்பைக்கில் விரைவதைப் பார்த்து இன்னொருவர் தமது பைக்கைக் கிளப்பி அவரைத் துரத்திச் செல்கிறார். காடு மேடு எல்லாம் கடந்து சென்ற பின்பு ஒருவழியாக இன்னொருவர் ஒருவரை முந்திச் சென்று வழிமறிக்கிறார். ஒருவரின் ஹெட்லைட்டைக் காட்டி “லைட் எரியுது' என்று சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் செல்கிறார். அவர் மீது வானிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிகிறார்கள். சாலையெல்லாம் பூக்கள், பிறக்கும்போதே தரையில் மலர்ந்தவை போல.

*

எனக்கு அறிவில்லை என்று மனைவி சொல்லிவிட்டார். எனக்கு பயங்கரமாகக் கோபம் வந்து கொஞ்சம் சண்டையாகிவிட்டது. கடைசியில் எனக்கு நிறைய அறிவு இருக்கிறது, ஆனால் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்ற நடுநிலையாக ஒரு தீர்மானத்திற்கு வந்து சமாதானம் செய்துகொண்டோம்.

*

வெளியே கிளம்பும்போது மகனிடம் சொன்னேன்: “அப்பா வெளிய போயிட்டு வரண்டா. வர்றத்துக்கு மத்தியானம் ஆகும், சரியா?” மகனுக்குப் 17 வயது. நான் அவனுடைய அப்பா என்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும் ஒவ்வொரு முறை பேசும்போதும் தன்னை அப்பா என்று அவனிடம் நிறுவிக்கொள்ளும் என்னுடைய அவனது குழந்தைப் பருவப் பழக்கம் இன்னும் விடவில்லை. அதே வேகத்தில் மனைவியிடம் விடைபெற்றேன். “புருஷன் வெளிய போறேன். மதியம் வருவேன்.”

*

காலையில், தூக்கம் முற்றிலும் விடைபெறா நிலையில், தலைபோகும் தகவல்களைத் தாங்கிய செய்தித்தாளை என் கையிலிருந்து அலட்சியமாக விலக்கிப் பற்பசை வாசத்துடன் என் குழந்தை என் மடியில் தனது பெயர் பொறித்த திண்ணையில் போல் அமர்வதில் உள்ள உணர்வெழுச்சிக்கு ஈடு எது தெரியுமா? ஒரு கோடி ரூபாய். எல்லா கடனையும் அடைத்துவிடலாம்.

*

நீங்கள் எழுதிய சிறுகதையை எந்தப் பத்திரிகையும் போட மறுக்கிறானா? சில கோடிகள் செலவுசெய்து அந்தச் சிறுகதையைப் படமாக எடுங்கள். உங்கள் சிறுகதை எல்லாப் பத்திரிகைகளிலும் விமர்சன வடிவில் வெளியாகிவிடும். அது நீங்கள் எழுதிய சைஸில் (அ) வார்த்தைகளில் இருக்காது. ஆனால் ஒரே சமயத்தில் எல்லாப் பத்திரிகைகளிலும் பிரசுரமாகும். அது நல்லதுதானே.

*

பின்வரும் கதை யோசனையோடு மார்வெல் காமிக்ஸை அணுகவிருக்கிறேன்:

தனித்தனியாக விக்கினங்களைப் போக்கும் எல்லா மதக் கடவுளர்களும் இணைந்து 'அவெஞ்சர்ஸ்' போல் ஒரு சூப்பர்தெய்வீக அணியை உருவாக்குகிறார்கள். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளின் பெரும் பஞ்சங்கள், பேரழிவுகள், இரண்டு உலகப்போர்கள், ஏராளமான இன அழிப்புகள், அடிமை முறைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் ஆகியவை நிகழாமல் தடுக்கிறார்கள்.

*

என் கட்டுரையில் தகவல் பிழைகளா? சிறுகதையாகப் படியுங்கள். என் கவிதை ஒரே உரைநடையாகக் கிடக்கிறதா? சிறுகதையாகப் படியுங்கள். என் சிறுகதை தட்டையாக இருக்கிறதா? ஃபேஸ்புக் குறிப்பாகப் படியுங்கள். எனது நாவல் ரோமக் காடாக இருக்கிறதா? ஆனால் எவ்வளவு பக்கங்கள்!

*

என் பின்னே வராதீர்கள்; நான் வழிநடத்த மாட்டேன். என் முன்னே செல்லாதீர்கள்; நான் பின்தொடர மாட்டேன். என் அருகிலும் நடக்காதீர்கள்; சைக்கிள்காரனுக்கு வழி விடுங்கள்.

*

சமீபகாலமாகக் கடும் மன உளைச்சல். எதுவும் எழுதவில்லை. எண்ணங்களின் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. விசைப்பலகையில் எழுத்துகள் இருக்கின்றன, ஆனால் எதையும் படிக்கிற மாதிரி வரிசையில் கணினிக்குக் கொண்டுவர முடியவில்லை. பிறகு திடீரென்று வெறி வந்தது போல் தட்டச்சு செய்து ஒரு சிறுகதையை எழுதி முடித்தேன். அது எனக்கு மனப்பாடமாகத் தெரிந்திருந்த ஓர் அசோகமித்திரன் சிறுகதை. சொந்தமாக எழுத முடியவில்லை.

*

இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். முஸ்லிம், கிறிஸ்தவ (சீக்கியம், ஜைனம், பௌத்தம் போன்ற 'கிளை' மதங்கள் கணக்கில் வராது) மக்கள்தொகை வேகமாக வளர்ந்து இந்துக்களைச் சிறுபான்மையினராக்குவதைப் பார்த்த பின்பு நிம்மதியாகக் கண்மூட வேண்டும்.

*

“ஹை அண்ட் லோ”வில் ஒரு காட்சியில் நாயகர் தோஷிரோ மிஃபுனே ஒரு டி.வி. ஸ்டாண்டு மேல் சாய்ந்து நிற்பார். அவர் ஏன் அதற்கு பதிலாகப் பக்கத்து மேஜை மேல் ஏறி நிற்கவில்லை, அது ஏன் கதாபாத்திரத்தின் இயல்புடன் முரண்படும் என்பதற்கு ஆயிரம் காரணம் வைத்திருப்பார் அகிரா குரோசாவா. அதுதான் அகிரா குரோசாவா. அல்லது அவர்தான் அகிரா குரோசாவா. அதாவது அகிரா குரோசாவா என்ற பெயர் கொண்ட ஜப்பானிய இயக்குநர் அவர்தான். மற்றவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள்.

*

தெருவில் நடந்து போகும்போது ஏதோ ஒரு நினைவுக்குள் யாருக்கோ பதிலளித்து 'ஆம்' என்று நிஜத்தில் ஆமோதித்துத் தலையாட்டுகிறேன். பின்பு உலகம் கவனித்திருக்கக்கூடும் என்று உணர்ந்து வீடு வரும் வரை தலையை இடமும் வலமும் ஆட்டியபடியே நடக்கிறேன் – அதாவது நான் இயல்பாகவே அப்படித்தான், நான் திடீரென்று விநோதமாக எதுவும் செய்துவிடவில்லை, என்னை கிராக்கு எனக் கருதி ஒதுக்கிவைத்துவிடாதீர்கள் என்பது போல.

சுட்டிகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்