காவிய உபதலைவன்


புனைக்கதைகள்

Back

காவிய உபதலைவன்
என். சொக்கன்


காவிய உபதலைவன்

என். சொக்கன்

 

 

 

 

1

‘மன்னா, உங்களைக் காண ஒரு புலவர் வந்துள்ளார். பார்ப்பதற்கு ரொம்பப் பரிதாபமாக இருக்கிறார். அவரை உள்ளே வரச்சொல்லலாமா?’

மகேந்திரன் மேடையேறிப் பேசியதிலேயே மிக நீளமான வசனம் இதுதான்.

அவன் நல்ல நடிகன்தான். ஆர்வம் உண்டு, உழைப்பு உண்டு, அதிர்ஷ்டம் இல்லை.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், உயரம் இல்லை, நிறம் போதவில்லை.

ஆகவே, அவனுக்குக் கிடைத்ததெல்லாம் சிறிய வேடங்கள்தான். ‘உத்தரவு மன்னா’ என்பதுபோல் தக்கனூண்டு வசனம் இருக்கும். சில நாடகங்களில் அதுவும் கிடையாது. சும்மா வந்துபோகவேண்டியதுதான்.

மகேந்திரன் ஒரு நாடக நடிகன்.

நாடகமென்றால் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமோ என்னவோ. உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால், பள்ளி ஆண்டுவிழாவில் 5 நிமிட டிராமா போடுவீர்களல்லவா? அதையே பெரிய கதையாக, பாட்டு, வசனம் என்று ஜோராக 4 மணி நேரம் நடிப்பார்கள்.

நாலு மணி நேரமா என்று வாயைப் பிளக்காதீர்கள், ராத்திரிமுழுக்க நடிக்கும் நாடகங்களெல்லாம் உண்டு. மக்கள் தூங்காமல் உட்கார்ந்து பார்ப்பார்கள்!

ஆனால் அதிலும், மகேந்திரனுக்குச் சின்ன வேஷங்கள்தான் கிடைக்கும். அதே தக்கனூண்டு வசனம்தான்.

சரித்திர நாடகம் என்றால் மகேந்திரன் காவலாளி, புராண நாடகம் என்றால் ஓரமாக நின்று கும்பிடும் பக்தன், சமூக நாடகம் என்றால் ‘பஸ் எத்தனை மணிக்கு வரும்?’ என்று விசாரிக்கிற பொதுஜனம்.

மகேந்திரன் மேடையில் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. யாரும் அவனைக் கவனிப்பதற்குள் காட்சி முடிந்துவிடும். இப்படியே பல ஊர்களில் நானூறு நாடகங்கள் நடித்துவிட்டான்.

அவனுடைய கனவு, கதாநாயகனாக நடிப்பது அல்ல. ஒரு நாடகத்தில் அவன் இரண்டு காட்சிகளில் ஒரே வேடத்தில் வரவேண்டும். அதைப் பார்க்கிற ஒருவராவது அவனை ஞாபகம் வைத்திருந்து கை தட்டவேண்டும். அவ்வளவுதான்!

ஒவ்வோர் ஊரிலும் நாடகம் நிறைவடைகிற நாளன்று அந்த ஊர் மக்கள் நடிகர்கள் எல்லாரையும் பாராட்டி மெடல் போடுவார்கள். விருந்து கொடுப்பார்கள்.

ஆனால் அதிலும் மகேந்திரன்மாதிரி சிறு நடிகர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் மாலைகூட கிடைக்காது. பிரியாணி சாப்பிட்டுவிட்டு அடுத்த ஊருக்குப் பெட்டியைக் கட்டவேண்டியதுதான்.

மகேந்திரனுக்கு மாலையோ மெடலோ வேண்டாம். அவனும் இந்த நாடகத்தில் நடித்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு ஒரு சின்ன சிரிப்பு, அங்கீகாரம், அதுகூட இல்லை என்றால் என்ன பிழைப்பு இது?

ஏதோ, வயிற்றுக்குச் சோறு கிடைக்கிறது. யாரும் கவனிக்காவிட்டாலும், விளக்கு வெளிச்சத்தில் மேடையேறுவதில் ஒரு சந்தோஷம். அதனால்தான் மகேந்திரன் இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறான்

2

ஆசிரியர் வந்திருக்கிறார்.

பள்ளி ஆசிரியர் அல்ல, கதாசிரியர். மகேந்திரனின் குழுவினர் நடத்தும் நாடகங்களையெல்லாம் அவர்தான் எழுதித் தருவார்.

அவர் பெரிய புத்திசாலி. நல்ல தமிழில் கேட்டாலே காதில் தேன் பாய்வதுபோன்ற இனிமையான வசனங்களை எழுதுவார். பாடல்களை அவரே எழுதி, தாளம் போட்டுப் பாடிவிடுவார்.

மகேந்திரனுக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரது மீசையைப் பார்க்கும்போது, இவரே ஒரு பெரிய ராஜா என்று நினைத்துக்கொள்வான். தமிழ் ராஜா.

ஆசிரியர் வருகிறார் என்றால், புது நாடகம் ஆரம்பம் என்று அர்த்தம். மொத்தக் குழுவும் பரபரப்பாகிவிடும்.

அன்று இரவு எல்லாரும் அவரைச் சுற்றி அமர்ந்துகொள்வார்கள். அவர் பையிலிருந்து கத்தையாகக் காகிதங்களை எடுத்து முன்னால் வைப்பார்.

ஆனால் அந்தக் காகிதமெல்லாம் மற்றவர்களுக்குதான். அவருக்கு எழுதியபோதே கதை, வசனம், பாடல்கள் எல்லாம் மனப்பாடமாகியிருக்கும். கடகடவென்று உணர்ச்சியோடு நாலு மணி நேரம் கதை சொல்வார். எல்லாரும் வியப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

அதன்பிறகு, ஒத்திகை தொடங்கும். அவரே எல்லாருக்கும் அழகாகப் பாடம் சொல்லித்தருவார். பிறகு பணத்தை வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்புவார். அப்போதே அவர் அடுத்த நாடகத்தைப்பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்.

அது சரி, இந்தமுறை என்ன புது நாடகம்?

‘ராமாயணம்’ என்றார் ஆசிரியர்.

‘அதான் ஏற்கெனவே போட்டாச்சே!’

‘இருக்கட்டுமே, இன்னொருவாட்டி புதுசா போடுவோம்!’

‘மக்கள் ரசிப்பாங்களா?’

‘தினமும் இட்லிதானே தின்னறோம்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ருசியா இருக்கே, சலிச்சுடுச்சா என்ன?’ என்றார் ஆசிரியர், ‘ராமாயணமும் அப்படிதான், விதவிதமா ருசிக்கலாம், ஒவ்வொருவாட்டியும் ஏதாவது புதுசு கிடைக்கும்.’

அவர் சொன்னதன் அர்த்தம் அப்போது புரியவில்லை. ராத்திரி எல்லாருமாக உட்கார்ந்து கதை கேட்டபோதுதான் புரிந்தது.

எல்லாருக்கும் தெரிந்த அதே ராமாயணக் கதைதான். இதே ஆசிரியர் ஏற்கெனவே எழுதி, அவர்கள் பலமுறை நடித்த கதைதான்.

ஆனால், இப்போது அதுவே புதுமையாகத் தெரிந்தது. அதுவும் ஆசிரியர் அதை விவரித்த அழகு… மகேந்திரன் அசந்துபோனான்.

அவரே தசரதன், அவரே வசிஷ்டர், அவரே கலைக்கொம்பு முனிவர், அவரே ராமன், அவரே லட்சுமணன், அவரே பரதன், அவரே சத்ருக்கனன், அவரே விஸ்வாமித்திரர், அவரே தாடகை, அவரே ஜனகன், அவரே சீதை, அவரே பரசுராமர், அவரே கூனி, அவரே கைகேயி, அவரே கோசலை, அவரே குகன், அவரே ஜடாயு, அவரே மாரீசன், அவரே ராவணன், அவரே அனுமான், அவரே சுக்ரீவன், அவரே வாலி, அவரே இந்திரஜித், அவரே விபீஷணன், அவரே கும்பகர்ணன், அவரே எல்லாம்…

ஒவ்வொரு பாத்திரமாக ஆசிரியர் நடித்துக்காண்பிப்பதை வியப்போடு பார்த்தான் மகேந்திரன். இந்தமாதிரி ஒரு வசன உச்சரிப்பு எனக்கு வருமா? இவரே மேடையேறாமல் கீழே உட்கார்ந்திருக்கிறார், எனக்கு எதற்கு நடிப்பு ஆசை?

ஆசிரியர் கதையை முழுக்கச் சொல்லிவிட்டு, எல்லாரையும் சுற்றிப் பார்த்தார். குறிப்பாக, மகேந்திரனை.

அவருக்கு மகேந்திரன்மீது பிரியம் அதிகம். ‘என்னடா? எப்படி இருக்கு நாடகம்?’ என்றார்.

மகேந்திரன் பதில் சொல்லாமல் அவர் காலைத் தொட்டு வணங்கினான்.

‘கும்பிடு போடாதே, இனிமே நீ ராஜா’ என்றார் ஆசிரியர்.

‘என்னது? ராஜாவா?’

’ஆமா, இந்த நாடகத்துல நீதான் குகன், கங்கைக்கரைக்கே ராஜா! உனக்கு ஒரு பாட்டுகூட இருக்கு!’

3

மகேந்திரன் ஆனந்தத்தில் மிதந்துகொண்டிருந்தான்.

நேற்றுவரை அவனுக்குக் குகன் என்றால் பெரிய மரியாதையெல்லாம் கிடையாது. ஆனால் இன்றைக்கு, குகன்தான் ராமாயணத்திலேயே மிக முக்கியமான கதாபாத்திரம் என்று தோன்றியது.

ஆசிரியர் அவனுக்காக எழுதியிருந்த வசனங்களையும் பாடலையும் ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டான் அவன். அதைப் பலமுறை பேசிப் பார்த்து மகிழ்ந்தான்.

பொதுவாகவே அவனுக்கு நாடக வசனங்கள் மிகவும் பிடிக்கும். அடுக்குமொழி, கவிதைமாதிரி நடை, பல சொற்கள் அவனுக்குப் புரியாது. ஆனாலும் கேட்பதற்கு வசீகரமாக இருக்கும்.

இப்போது, குகன் பேசவேண்டிய ஒவ்வொரு வசனத்தையும் அவன் மிகக் கவனமாகப் படித்தான். ஆசிரியர் தனக்காகவே சிரமப்பட்டு இதை எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. இதைப் பேசும்போது மக்கள் கை தட்டப்போகும் ஒலியைஎண்ணி அவன் மனம் நிறைந்தது.

குழுவில் எல்லாருமே அவனைப்போல் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒத்திகையில் தங்களுடைய பகுதியை நடித்துக்காட்ட, ஆசிரியர் அவர்களைக் கவனித்துத் திருத்தங்கள் சொன்னார். சிலரைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். சிலரைக் கண்டபடி திட்டினார். அப்புறம் அவர்களைத் தேடிப்போய் ஆறுதல் சொல்லிக் கூடுதல் பயிற்சி தந்து நன்றாக நடிக்கவைத்தார்.

எல்லாம் ஒழுங்காகச் சென்றுகொண்டிருந்த நேரம், ராவணனைக் காணவில்லை.

அதாவது, ராவணன் வேஷத்தில் நடிக்கவேண்டிய பெரியண்ணனைக் காணவில்லை. ‘ஓடிப் போய்ட்டார்’ என்றார்கள்.

அதாவது, பெரியண்ணன் இன்னொரு நாடகக்குழுவில் சென்று சேர்ந்துவிட்டார்.

இப்போது அவருக்குப் பதிலாக இன்னொரு ராவணனை எங்கே தேடுவது?

ஆசிரியர் யோசித்தார், ‘நான் ஒரு வழி பண்றேன்’ என்று கைத் தொலைபேசியை எடுத்தார். யாரிடமோ பேசினார். பிறகு, ‘ராவணன் வருவான், நீங்க ஒத்திகையைத் தொடர்ந்து செய்ங்க’ என்றார்.

4

மறுநாள் காலை, ராவணன் வந்தார்.

பார்ப்பதற்கு மிகவும் முரடராகத் தெரிந்தார். ஆனால், ராவணனாக நடிக்க அது அவசியமாச்சே.

ஆசிரியர் அவரை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தினார். ‘இவன் பாலு, என்னோட சிஷ்யன், வேறொரு நாடகக் கம்பெனில இருந்தான். இங்கேயே வந்துடுடான்னு பேசிக் சம்மதிக்க வெச்சேன்.’

அந்த பாலு அபாரமாக நடித்தார். ஆசிரியரின் வசனங்களைச் சட்டென்று புரிந்துகொண்டு மனப்பாடம் செய்து இரண்டே நாளில் உணர்ச்சிகரமாகப் பேசிப் பழகிவிட்டார். ‘பெரியண்ணனை விட இவர் அருமையா நடிக்கறார்’ என்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள்.

பாலு பிரமாதமான ஓவியராகவும் இருந்தார். ராமாயணக் கதைக்கு ஏற்ப அவர் வரைந்த வண்ணமயமான பின்னணி ஓவியங்கள் எல்லாரையும் கவர்ந்தன.

ஒருநாள் , பாலு எல்லாரையும் உட்காரவைத்து பொம்மை செய்து காட்டினார். மான், மீன், குதிரை, அரண்மனை, சிம்மாசனம், இன்னும் என்னென்னவோ. ஒவ்வொன்றும் அத்தனை அழகு!

ஒரே பிரச்னை, ராவணன் ஒரு பொம்மைக் கலைஞனாக இருப்பதை அவர்களால் நம்ப இயலவில்லை.

இதைக் கேள்விப்பட்ட ஆசிரியர் சிரித்தார், ‘ராவணன் பெரிய வீணை வித்வான்னு சொன்னா நம்பறீங்க, அவன் பொம்மை செய்யக் கூடாதா?’

பொம்மை, கிம்மையெல்லாம் கீழேதான் மேடை ஏறிவிட்டால் பாலு அச்சு அசல் ராவணனாகிவிடுவார். அவரது கண்களில் தெரியும் கோபமும் வெறியும் பார்ப்பவர்களை பயமுறுத்தும்!

அடுத்த காட்சியில் சீதையிடம் கெஞ்சும்போது பாலுவின் வில்லத்தனமெல்லாம் காணாமல்போய்விடும். குழந்தைபோல விழுந்து புரண்டு அழும்போது தானாகப் பரிதாபம் வரும்.

நாடகத் தேதி நெருங்கியது. இப்போது எல்லாரும் உரிய உடைகளை அணிந்துகொண்டு ஒத்திகை பார்த்தார்கள்.

பாலு அணிந்துகொள்வதற்காக, பழைய ராமாயண நாடகத்தில் பெரியண்ணன் அணிந்து நடித்த ஒன்பது தலைக் கொத்து தரப்பட்டது. அவர் அதை அணிய மறுத்துவிட்டார்.

‘யோவ், ராவணனுக்கு ஒரு தலை போதாதுய்யா!’ என்றார் ஆசிரியர்.

‘தெரியும் வாத்யாரே, இந்த அழுக்குத் தலையெல்லாம் எனக்கு ஆகாது, நானே புதுசா ரெடி பண்றேன், ரெண்டு நாள் டைம் கொடுங்க.’

சொன்னபடி இரண்டே நாளில் அட்டகாசமாக ஒன்பது தலைகளைத் தயார் செய்துவிட்டார் பாலு. அதை அணிந்துகொண்டு அவர் கம்பீரமாக நின்றபோது, இந்த நாடகம் பெரிய வெற்றியடையப்போவது உறுதியாகிவிட்டது.

5

ராமாயண நாடகத்துக்காக எல்லாரும் மதுரைக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்துக்குப் பயணமானார்கள்.

முதலில் ரயில், அதன்பிறகு அங்கிருந்து பஸ். நாடக சாதனங்கள் எல்லாம் தனி வண்டியில் வந்தன.

அழகான கிராமம் அது. நாடக நடிகர்கள், பணியாளர்கள் எல்லாரும் தங்குவதற்கு ஊருக்குள்ளேயே ஒரு பெரிய வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தார்கள்.

மகேந்திரன் ஆர்வத்தோடு ஒத்திகைகளில் பங்கேற்றான். அவன் நடிக்கப்போவது இரண்டே காட்சிகள்தான் என்றாலும், அவனுக்கு அது பெரிய விஷயமல்லவா.

நாடகம் தொடங்கப்போவதற்கு முந்தின நாள், ஊர்ப் பெரியவர் அவர்களைப் பார்க்க வந்தார். ஒத்திகையை ரசித்துப் பார்த்தார்.

அதன்பிறகு, ஆசிரியரை நெருங்கி, ‘ஒரு விண்ணப்பம்’ என்றார்.

’சொல்லுங்க!’

‘நாடகத்தை தினமும் ரெண்டு மணி நேரத்துல முடிச்சுடுங்க, அதுக்குமேல இங்க யாரும் உட்காரமாட்டாங்க.’

‘அதெப்படிங்க? ராமாயணத்தை நாலு மணி நேரத்துல சொல்றதே கஷ்டம்.’

‘அது சரிங்க, பார்க்க ஆளில்லாம நீங்க சொல்லி என்ன பிரயோசனம்?’ என்று சிரித்தார் தலைவர், ‘இப்பல்லாம் நாடகம் பார்க்க ஆள் வர்றதே கஷ்டம், நாலு மணி நேரமெல்லாம் ஒக்காரமாட்டாங்க. போனவாட்டி இப்படிதான், காந்தி கதை சொல்றேன்னு ஒரு கம்பெனி நீட்டி முழக்க, அவர் உப்பெடுக்கும்போதே நம்மாளுங்க வீட்டுக்குப் போய்ட்டாங்க.’

அவர் கிளம்பியபிறகு ஆசிரியர் யோசித்தார். நாடகத்தில் கை வைக்க அவருக்கு விருப்பமில்லை. அதற்காக ஊரைப் பகைத்துக்கொள்வதும் சிரமம்.

‘முதல் நாள் முழு நாடகம் போடுவோம், சரிப்படாட்டி மாத்திக்குவோம்’ என்றார் ஆசிரியர்.

அந்த முதல் நாள், நல்ல கூட்டம். ஆனால், ரெண்டு மணி நேரம் கழித்து அனுமார் தோன்றியபோது அரங்கத்தில் இருந்தவர்கள் ஏழே பேர்.

அன்று இரவுமுழுக்க ஆசிரியர் தூங்கவில்லை.

சிரமப்பட்டு, காட்சிகளை வெட்டி, ஒட்டி மாற்றி இரண்டு மணி நேரத்துக்குக் கொண்டுவந்தார். அவருக்கு அதில் விருப்பமே இல்லை ஆனாலும் அதை கவனமாகவும் அக்கறையோடும் அழகோடும் செய்தார்.

இப்போது நாடகத்தில் பல காட்சிகள் இல்லை. குறிப்பாக குகன் வரும் காட்சிகள் அனைத்தும் வெட்டப்பட்டிருந்தன.

ஆசிரியர் அந்தப் புது நாடகத்தைப் பார்க்கக் கூட விரும்பவில்லை. மறுநாள் யாரிடமும் சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டார்.

6

குகன் வேஷத்துக்குப் பதிலாக, மகேந்திரனுக்கு ஒரு சிப்பாய் வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் தசரதன் சபையிலோ, ஜனகன் சபையிலோ அல்ல, ராவணன் சபையில்.

மகேந்திரனுக்கு ஏமாற்றம் புதிதா? வழக்கம்போல் அவன் சிப்பாயாக நடித்தான். ஆசிரியரின் வருத்தத்தைப் பார்த்தபிறகு, அவனுக்குத் தன்னுடைய வருத்தம் பெரியதாகத் தோன்றவில்லை.

இப்போது, ராமாயண நாடகம் நன்றாக நடந்தது. பல ஊர்களில் இருந்து மக்கள் வந்து பார்த்தார்கள். நல்ல வசூல்.

எட்டாவது நாள், கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அன்றோடு அந்த நாடகம் நிறைவு பெறுகிறது என்பதால், நிறைய பேர் கும்பலாக வந்திருந்தார்கள். நாடகக்குழுவினரும் அந்த ஊரிலிருந்து கிளம்பப்போகும் மகிழ்ச்சியில் நன்கு நடித்தார்கள்.

மகேந்திரன் சிப்பாய் வேஷத்தைப் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிப்பதற்காகக் கொட்டகையோரமாக நடந்தான். அவன் மேடையேறுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது.

தண்ணீர் குடித்துவிட்டு நகரும்போது, கொட்டகைக்கு வெளியே அந்தக் குரல் கேட்டது, ‘என்ன, ரெடியா?’

‘எனக்குப் பயமா இருக்குங்கண்ணா.’

‘என்னடா பயம்? நான் இருக்கேன்ல? நீ சும்மா கூட வந்தாப் போதும்!’

‘நீங்களே போய்ட்டு வந்துடுங்கண்ணா. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.’

‘மடப்பயலே, எனக்கு ஒத்தாசைக்கு ஒருத்தன் தேவைடா, உனக்குதான் பாதிப் பணம் தர்றேன்னு சொல்றேன்ல, அப்புறம் ஏன் பயந்து நடுங்கறே?’

’அண்ணா, திருடறது தப்பில்லையா? நம்ப கம்பெனிக்கு நாமே துரோகம் செய்யலாமா?’

‘என்னடா துரோகம்? உன்கிட்ட நூறு ரூபாய்க்கு வேலை வாங்கிட்டு அம்பது ரூபா தர்றான் முதலாளி. அது துரோகம் இல்லையா?’

‘இருந்தாலும்…’

‘பேசாம என்னோட வா’ என்று மிரட்டியது அந்தக் குரல், ‘இல்லாட்டி உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!’

இதைக் கேட்ட மகேந்திரனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

யார் இவர்கள்? என்ன திருடப்போகிறார்கள்? எப்போது திருடப்போகிறர்கள்? இந்த விஷயத்தை மற்றவர்களுக்குச் சொல்லித் தடுப்பது எப்படி?

குழப்பத்துடன் கொட்டகைக்கு வெளியே எட்டிப்பார்த்தான் மகேந்திரன். இரண்டு பேர் இருட்டில் நடந்து செல்வது தெரிந்தது. அவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் எங்கே போகிறார்கள் என்பது தெரிந்தது.

அவர்கள் இருவரும் இத்தனை நாள் நாடக வசூல் மொத்தமும் வைக்கப்பட்டிருக்கும் மேனேஜர் அறையை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி நடந்துகொண்டிருந்தார்கள்.

மகேந்திரனுக்கு அவர்கள் பின்னே சென்று நடப்பதைப் பார்க்கவேண்டும், இந்தத் திருடர்களைப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவர்களிடம் சிக்கினால் தன் நிலைமை என்ன என்கிற பயமும் வந்தது.

ஆகவே, சில நிமிடம் சென்றபின் அவர்கள் நடந்த அதே வழியில் இவனும் மெல்ல நடந்தான். மனம் திடுக்திடுக்கென்று அடித்துக்கொண்டது.

மக்களின் கவனம்முழுக்க நாடகத்தில் இருக்க, கொட்டகைக்கு வெளியே யாரும் இல்லை. பெட்டி வைத்திருக்கிற அறைக்கு வெளியே ஒரு காவலாளி இருப்பார். அவரையும் இப்போது காணவில்லை.

மகேந்திரன் பெட்டி அறையை நெருங்கினான். உள்ளே பேச்சுக் குரல் கேட்டது.

‘நீ பெரியாள்ண்ணே, இவ்ளோ பெரிய பூட்டை சுளுவாத் திறந்துட்டியே!’

‘இதெல்லாம் பிசாத்துப் பூட்டு, ஐயா ட்ரெய்னிங் செம ஸ்ட்ராங், மேகத்தைத் தொறந்து தண்ணி எடுத்துருவேன்!’ என்றது இன்னொரு குரல், ‘சரி, வேலையைக் கவனி, இந்தப் பணத்தையெல்லாம் ஒழுங்கா அடுக்கு!’

‘அது எதுக்குண்ணே? அப்படியே ஒரு கோணிப்பையிலே போட்டுக் கொண்டு போயிடலாமே.’

‘முட்டாள், புதுத் திருடன்ங்கறது சரியாதான் இருக்கு, அப்படிச் செஞ்சா நம்மை ரெண்டு நிமிஷத்துல பிடிச்சிடுவாங்க’ என்றது பூட்டைத் திறந்த குரல், ‘சின்னப் பொடியன்கூட திருடிடுவான், ஆனா மாட்டிக்காம திருடறதுதான் சாமர்த்தியம்.’

‘என்ன செய்யப்போறீங்கண்ணே?’

‘அப்புறம் சொல்றேன், முதல்ல பணத்தை அடுக்கிக் கட்டு.’

அடுத்த சில நிமிடங்களுக்கு உள்ளேயிருந்து சத்தமே வரவில்லை.பிறகு, திடுமென கதவு திறந்தது.

மகேந்திரன் இருட்டில் ஒளிந்துகொண்டான். வெளியே வருவது யார் என்று இன்னும் அவனுக்குத் தெரியவில்லை.

திருடர்கள் இருவரும் நாடகக் கொட்டகையை நோக்கி நடந்தார்கள்.

‘அண்ணே, காசை எடுத்துகிட்டு அங்கே போனா நம்மைப் பிடிச்சுரமாட்டாங்களா?’

‘மாட்டாங்கடா, அதுக்கெல்லாம் திட்டம் வெச்சிருக்கேன்.’

‘என்ன திட்டம்ணே? இப்பவாச்சும் சொல்லுங்களேன்.’

‘இன்னுமா புரியலை? காசை எடுத்துகிட்டு நாம ஓடப்போறதில்லைடா, அப்படி ஓடினா கண்டிப்பா பிடிச்சிருவாங்க. அதுக்குப் பதிலா காசை அங்கயே ஒரு எடத்துல ஒளிச்சு வெக்கறோம். எல்லாரும் தேடும்போது நாமும் தேடறமாதிரி நடிக்கறோம். அப்புறம் யாருக்கும் சந்தேகம் வராதபோது நழுவிடறோம். புரிஞ்சதா?’

‘புரியுதுண்ணே, ஆனா…’

‘நீ அடுத்து என்ன கேக்கப்போறேன்னு எனக்குத் தெரியும். யாராவது நாம ஒளிச்சு வெச்சதக் கண்டுபுடிச்சிட்டாங்கன்னா? அதானே?’

‘ஆமாண்ணே, அதையும் இந்த மரமண்டைக்குப் புரியறமாதிரி சொல்லிட்டீங்கன்னா, தைரியமா இருப்பேன்!’

‘கவலைப்படாதே, நான் பணத்தை ஒளிச்சுவைக்கப்போற இடத்தைப்பத்தி யாருக்கும் சந்தேகமே வராது, அதுக்கு நான் கேரன்டி!’

பேசிக்கொண்டே அவர்கள் கொட்டகையினுள் நுழைந்தார்கள். மகேந்திரன் மறுபக்கமாகச் சென்று கூரை இடைவெளியில் அவர்களைக் கவனித்தான்.

இப்போது, அவர்கள் யார் என அவனுக்குத் தெரிந்துவிட்டது. பணத்தை அவர்கள் ஒளித்துவைத்த இடத்தைப் பார்த்து வியப்பின் எல்லைக்கே போனான் அவன்.

7

மகேந்திரன் இன்னும் சில நிமிடங்களில் மேடையேறவேண்டும்.

அவன் பலத்த யோசனையில் இருந்தான். முதலாளியின் பெட்டியைத் திறந்து பணத்தைத் திருடியவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் திருடிய பணமும் இங்கேதான் இருக்கிறது.

ஆனால், அவனால் என்ன செய்ய இயலும்? திருடிய இரண்டு பேரும் முரடர்கள். அவன் உண்மையைச் சொன்னான் என்பது தெரிந்தால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவார்கள்.

அதற்காக, சொல்லாமல் இருக்க இயலுமா? ஏதாவது தந்திரம் செய்யவேண்டும். அவர்களைப் பிடித்துத் தரவேண்டும். திருடப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கவேண்டும்.

மகேந்திரன் யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவனுடைய முதுகில் யாரோ கை வைத்தார்கள், ‘என்னடா யோசனை? உள்ளே ஓடு! உனக்காக ராவண மஹாராஜா காத்திருக்காரு.’

எல்லாவற்றையும் மறந்து சிப்பாய் வேஷத்தில் மேடைக்குள் நுழைந்தான் மகேந்திரன். அதே கணத்தில், அவனுடைய புத்திக்குள்ளும் ஓர் விளக்கு எரிந்தது.

மகேந்திரன் நேராக ராவணனுக்கு முன்னே சென்று நின்றான். வழக்கமான வசனத்தைப் பேசினான்.

‘அரசே, உங்களைக் காண இளவரசர் வந்திருக்கிறார்.’

‘வரச்சொல்’ என்றான் ராவணன்.

‘உத்தரவு அரசே’ என்று திரும்பிய மகேந்திரன் சட்டென்று தடுமாறிக் கீழே விழுந்தான், அதைப் பார்த்த அவையோருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அதே நேரம், மகேந்திரன் விழுந்தவாக்கில் முன்னே நகர்ந்து ராவணனின் காலைப் பிடித்து இழுத்தான்.

தபாலென்று கீழே விழுந்தான் ராவணன். அவனுடைய ஒன்பது பொம்மைத் தலைகளும் கழன்று இன்னொருபக்கம் விழுந்து உடைந்தன.

மறுகணம், மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகள் பறக்க ஆரம்பித்தன.

சட்டென்று திரை போடப்பட்டது. நாடகக் குழுவினர் ஓடி வந்து நோட்டுகளைப் பொறுக்கினார்கள்.

மேலாளர் ஓரமாக உடைந்து கிடந்த ராவணன் தலைகளை எடுத்துப் பார்த்தார். ஒவ்வொரு தலைக்குள்ளும் ஓர் ரகசிய அறை அமைத்து அதில் கட்டுக் கட்டாகப் பணம் பதுக்கப்பட்டிருந்தது. அந்தத் தலைகளை ராவணன்மீது வீசி, ‘நாயே, இதுக்குதான் பொம்மை செய்யறேன்னு பாவ்லா காட்டினியா?’ என்றார் அவர் கோபமாக.

நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. காவல்துறையினர் வரவழைக்கப்பட்டார்கள். ராவணன் கைது செய்யப்பட்டான்.

மேலாளர் மகேந்திரனை நெருங்கி, ‘சாதாரணமா யாராவது மேடையில தடுக்கி விழுந்தா நாங்க கோவப்படுவோம், இன்னிக்கு நீ தடுமாறி விழுந்ததும் நல்லதாப் போச்சு, இல்லாட்டி இந்தத் திருடனைப் பிடிச்சிருக்கமாட்டோம்’ என்றார்.

‘ஐயா, நான் தடுமாறி விழலை, வேணும்ன்னுதான் விழுந்தேன்’ என்றான் மகேந்திரன். ‘இந்த ராவணனும் நம்ம காவலாளி ஒருத்தனும் சேர்ந்துகிட்டு பணத்தைத் திருடினதையும் பொம்மைக்குள்ள பதுக்கினதையும் நான் பார்த்தேன். இவங்களை எல்லார் முன்னாடியும் பிடிச்சுக் கொடுக்காட்டி தப்பிச்சுடுவாங்கன்னு இப்படி ஒரு தந்திரம் செஞ்சேன்’

அவன் சொன்னது மைக்மூலம் அந்த அரங்கில் இருந்த எல்லாருக்கும் கேட்டது. அவர்கள் கை தட்டி அவனைப் பாராட்டினார்கள்.

நாடகத்தைப் பார்க்க வந்திருந்த ஜமீன்தார் எழுந்தார். ‘இந்த நாடகத்துல சிறப்பா நடிச்ச ராமன், சீதை, ராவணன் மூணு பேருக்கும் விலை உயர்ந்த நகைகளைப் பரிசு தரணும்ன்னு கொண்டுவந்திருந்தேன்’ என்றார். ‘அந்த நகையோட மதிப்பு, இந்த ராவணன் திருடின ரூபாயைவிடப் பல மடங்கு அதிகம்!’

’இப்போ, ராவணனுக்குப் பதிலா, அவனைப் பிடிச்சுக் கொடுத்த இந்தக் காவலாளிக்கு அந்த நகையை மெடலாப் போடறேன்’ என்று அணிவித்தார். அனைவரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்.

இப்படியாக, காவியச் சேவகன், காவிய உபதலைவன் ஆனான். என்றைக்காவது அவன் தலைவனும் ஆவான். அதுவரை அவன் பொறுமையாகக் காத்திருப்பான்.

(நிறைந்தது)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Vāḻkkaiyiṉ arttam