கொசு


புனைக்கதைகள்

Back

கொசு
பா. ராகவன்


கொசு

பா. ராகவன்

 

 

 

உள்ளடக்கம்

கொசு

ஒரு சொல்

1. அத்தியாயம் ஒன்று

2. அத்தியாயம் இரண்டு

3. அத்தியாயம் மூன்று

4. அத்தியாயம் நான்கு

5. அத்தியாயம் ஐந்து

6. அத்தியாயம் ஆறு

7. அத்தியாயம் ஏழு

8. அத்தியாயம் எட்டு

9. அத்தியாயம் ஒன்பது

10. அத்தியாயம் பத்து

11. அத்தியாயம் பதினொன்று

12. அத்தியாயம் பன்னிரண்டு

13. அத்தியாயம் பதிமூன்று

14. அத்தியாயம் பதினான்கு

15. அத்தியாயம் பதினைந்து

16. அத்தியாயம் பதினாறு

17. அத்தியாயம் பதினேழு

18. அத்தியாயம் பதினெட்டு

19. அத்தியாயம் பத்தொன்பது

20. அத்தியாயம் இருபது

21. அத்தியாயம் இருபத்தி ஒன்று

22. அத்தியாயம் இருபத்திரண்டு

23. அத்தியாயம் இருபத்தி மூன்று

24. அத்தியாயம் இருபத்தி நான்கு

25. அத்தியாயம் இருபத்தி ஐந்து

26. அத்தியாயம் இருபத்தி ஆறு

உங்கள் படைப்புகளை வெளியிடலாமே

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்

1


கொசு

நாவல்

பா. ராகவன்

Completed on 24th June 2007 – 02.00a.m.

வெளியீடு – http://freetamilebooks.com

மின் நூல் ஆக்கம், மூலங்கள் பெற்றல் – GNUஅன்வர்

ஒருங்குறி மாற்றம்: மு.சிவலிங்கம்

மின்னஞ்சல்: musivalingam@gmail.com

உரிமை -Creative Commons Attribution-Noncommercial-No Derivative License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்

2


ஒரு சொல்


திருட்டு பிடிஎஃப் என்பது தேசிய குணமாகிவிட்ட காலகட்டத்தில் முறைப்படி அனுமதி பெற்று புத்தகங்களை விலையற்ற மின்னூல்களாக வழங்கும் FreeTamilEbooks.com-இன் தன்னலமற்ற சேவையை விவரிக்கச் சொற்களில்லை. பெயர், புகழ், பணம், செருப்படி என்று நான் எழுத்தில் நிறைய சம்பாதித்தவன். இழந்தவனும் கூட. அச்சுப்புத்தகங்கள் சந்தையில் உள்ளபோதே திருட்டு பிடிஎஃப் வினியோக உற்சவங்களைக் கண்டுகளித்தவன். அச்சு நூல்களின் ராயல்டியையே பிச்சுப் பிறாண்டி வாங்கும் சூழல்தான் தமிழ் எழுத்தாளர்களுக்கு. அனைத்தும் பழகிவிட்டது. எல்லாவற்றின் உளவியலையும் அறிந்து தெளிய முடிந்ததுதான் இதில் என் லாபம்.

இன்றுவரை எழுத்தால் மட்டுமேதான் வாழ்கிறேன். இருப்பினும் இந்த இலவச மின்னூல் திருப்பணியில் அணிற்பங்களிப்பதில் மகிழ்ச்சியே.

இந்நாவல் அச்சுப் பிரதியாகவும் உள்ளது. அதை வாங்கிப் படித்தாலும் சரி, அல்லது இலவசமாக இதைத் தரவிறக்கிப் படித்தாலும் சரி. எனக்குப் பிரச்னையில்லை. ஓசிப் புத்தகம்தானே என்று நீங்கள் ஒரு எடிஷன் ப்ரிண்ட் போட்டு கடைக்கு அனுப்பாதவரைக்கும் யாருக்கும் எந்தப் பிரச்னையுமில்லை.

ததாஸ்து.

பா. ராகவன்

writerpara@gmail.com

1


அத்தியாயம் ஒன்று


அத்தியாயம் ஒன்று

கழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன.

“பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்சா பாத்தியா? இது பேதி கண்டு பட்த்துக்கினு இருக்கசொல்ல மட்டும் வைத்தியர் வூட்டுக்கு தூய்க்கினு ஓட நாம வோணும். போயி நாக்க புடுங்கறமாதிரி நாலு வார்த்த கேக்கத் தாவல? இங்க இன்னா பண்ணிக்கினுகிற?”

அவிழ்த்துக்கொண்டிருந்த துணி மூட்டையை மீண்டும் சேர்த்துக் கட்டி அதன்மீதே உட்கார்ந்தபடி நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள் பொற்கொடி. புசுபுசுவென்று மூச்சுவாங்க நின்றுகொண்டிருந்தாள் வளர்மதி.

“கண்டுகினுதானே வரப்போறான்? இப்பவேவா கொண்டுகினு வந்துருவான்? போவட்டும் விடு. நாலு தபா பொண்ணு பாக்கறேம்பேர்வழின்னு போயி காரியம் கைகூடாம வந்தாங்கல்ல? அந்த நெனப்பா இருக்கும். இந்தவாட்டியாச்சும் நல்லபடியா முடிஞ்சா சரி. காலீலயே நெனச்சேன். அவன் ஆத்தாக்காரி கடும்பாடியம்மன் கோயில்ல சுத்திக்கினு இருந்தா. இன்னாடா இது, திருவிழான்னாக்கூட கோயில் பக்கம் வராத பொம்பள இப்பிடி உருகி உருகி சுத்துதேன்னு பாத்தேன். கேக்கலாம்னுதான் நெனச்சேன். சர்தாம்போ, சரக்கு மலிஞ்சா கடைக்கு வருதுன்னு வுட்டுட்டு வந்தேன். இதான் சமாசாரமா? சர்தான்..”

எதிர்பார்த்த பதில் வராததில் வளர்மதிக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. விட்டுவிட முடியுமா என்ன?

“போடி இவளே.. ஊரான் துணி தோய்க்க நேரம் பார்த்தா பாரு.. வாடி என்னோட. அங்க அத்தினி பேரும் முத்துராமன் வீட்டாண்டதான் நின்னுக்கினுகிறாங்க. கட்சிக்காரப் பசங்க இந்தவாட்டி வீரத்திலகம் வெச்சி அனுப்பறதா ப்ளான் போட்டிருக்கானுக. செம காமடிதான் போ.”

பொற்கொடிக்குச் சிரிப்பு வந்தது. வீரத் திலகம். அ, அருமையான யோசனை. இதற்குமுன் ஏன் யாருக்கும் இது தோன்றாமல் போய்விட்டது? அவளுக்குத் தெரிந்து முத்துராமன் நான்கு முறை பெண் பார்க்கப் போய்விட்டு வந்திருக்கிறான். கிளம்புகிற ஜோர் பெரிதாகத்தான் இருக்கும். பேட்டையே அமர்க்களப்படும். திரும்பி வரும்போதே மாலையும் கழுத்துமாகத்தான் வருவான் என்பது போன்ற தோற்ற மயக்கம் அவசியம் உண்டாகிவிடும். கட்சி வேட்டி, கட்சித் துண்டுடன் அவனும் அவன் அப்பா, சிற்றப்பா வகையறாக்களும் மற்றவர்களும் வீதிக்கு வந்து நின்று இரு புறமும் ஒரு பார்வை பார்ப்பதென்ன, கம்பீரமாக வாடகை குவாலிஸில் ஏறி உட்காருகிற தோரணை என்ன, அவன் அம்மா அலட்டுகிற அலட்டல் என்ன, திருஷ்டி கழிக்கிற ஜோரென்ன, அவன் தங்கை முகத்தில் பொங்கி வழியும் பெருமிதமென்ன..

சந்தேகமில்லாமல் காலனியில் முத்துராமனின் வீடு ஒரு தனித் தீவு. அபூர்வமாக அவனை மட்டும் வீட்டில் படிக்க வைத்தார்கள். அந்தச் சனியன் மண்டையில் ஏறினால்தானே? பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயம் திருச்சியில் ஏதோ கட்சி மாநில மாநாடு என்று ரயிலேறிப் போய்விட்டான். ஆத்தாக்காரிதான் ஊரெல்லாம் கூட்டி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். இந்தப் புள்ளைக்கு ஏன் இப்படிப் போகிறது புத்தி?

“அட இவ ஒருத்தி வெளங்காதவ. தமிழரசன் புள்ளைக்கு புத்தி வேற எப்படிப் போவும்? இவங்கப்பன் ரயிலுக்கு முன்னால தலவெச்சி ரெண்டு வாரம் ஜெயிலுக்குப் போயி இருந்துட்டு வந்தவன் தானே? ஜெயிலுக்களி தின்னுட்டு வந்துட்டு வூட்ல சாம்பார் சோறு சரியில்லன்னு நொட்டு சொன்னவன் தானே? வேறெப்படி இருப்பான்?”

முத்துராமன் பொதுத்தேர்வு எழுதாதது பற்றி அவனது தந்தை ஏதும் விசாரிக்க வில்லை. ‘கூட்டத்துக்குப் போறன்னா சொல்லிட்டுப் போவறதுதானடா தறுதல? பஸ்ஸுக்கு சில்ற கூட கேக்காம அப்பிடி என்னா அவசரம் ஒனக்கு?’

“பஸ்ஸுல போவலப்பா. செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போனேன். அங்கேருந்து லாரில போயிட்டோம். எட்டு லாரிங்க. அறுநூறு பேரு. சோத்துப் பொட்லம் குடுத்துட்டாங்க. தண்ணி பாகிட் இருந்திச்சி. ஒண்ணும் கஷ்டம் இல்லப்பா.”

“தலைவரு சூப்பரா பேசினாரா?”

அருகே வந்து உட்கார்ந்து ஆர்வமுடன் கேட்டார் தமிழரசன்.

“தூத்தேறி. எந்திரிச்சிப் போய்யா அந்தண்ட. பரிட்சைக்குப் போவல அவன். அது ஏன்னு கேக்கத் துப்பில்ல. நீயெல்லாம் ஒரு தகப்பன்.”

மனைவியின் கோபத்துக்கு மதிப்பளிப்பதுபோல அவர் அந்தக் கணம் எழுந்து வெளியே போனாலும் மகனைத் தனியே கூப்பிட்டு முழு மாநாட்டு விவரங்களையும் கேட்காமல் விடவில்லை. அவர் போகாத பொதுக்கூட்டங்களா? விடிய விடிய குத்துக்காலிட்டு உட்கார்ந்து கேட்காத சொற்பொழிவுகளா? வாங்காத கல்லடிகளா? காலம் அவரது காலை உடைத்து உட்காரவைத்திருந்தது. காப்பிக்குக் கூட சர்க்கரை போட்டுக்கொள்ள வழியில்லைதான். ஆனாலும் சர்க்கரை நோயாமே? நிற்க முடியவில்லை. நடப்பது சிரமமாக இருக்கிறது. மேலதிகம் மூச்சு வாங்குகிறது. அடிக்கடி தலை சுற்றுகிறது.

வயது. ஆம். அதுதான் பிரச்னை. ஒரு மாவட்டச் செயலாளராகும் கனவு அவருக்கு ஐம்பது வயது வரை இருந்தது. சைதாப்பேட்டை அளவிலேயே முன்னிலைக்கு வர முடியாமல் போய்விட்டதற்கு யாரைக் காரணம் சொல்வதென்று தெரியவில்லை. கடவுளைச் சொல்லலாம். கட்சியில் மிகத் தீவிர உறுப்பினராக இருந்த காலம் வரை கண்டுகொள்ளாத கடவுள். அட, தலைவரே பொருட்படுத்தாத கடவுளைத் தான் என்ன கொண்டாடுவது? ஆனாலும் அடி மனத்தில் அவருக்கு உறுத்தல் இருக்கவே செய்தது.

“ஏன் கற்பகம், ஒருவேளை மெய்யாவே கடவுள் இருந்துட்டாருன்னா, செத்தப்பறம் என்னிய டீல்ல வுட்டுடுவாரோ? இந்த சொர்க்கம், அது இதுங்கறாங்களே.. அங்கெல்லாம் நம்மள சேக்கமாட்டேன்னு சொல்லிருவாங்களோ?”

“பின்ன? நீ செத்தா ஆவியாத்தான் அலையப்போற. இதுல இன்னா சந்தேகம். இதே ஆத்தங்கரையிலதான் சுத்திக்கினு இருப்ப. ஏந்தலையெழுத்து, அப்பவும் உன்னாட லோல் படணும்னு இருக்கோ என்னமோ?”

முத்துராமனின் அம்மா இந்த விஷயத்தில் மிகவும் தெளிவானவள். பிறந்து, புகுந்த குடிசைகள் இரண்டும் அடுத்தடுத்த சந்துகளிலேயே இருந்துவிட்டதில் வாழ்க்கையில் பெரிய மாறுதல்கள் எதையும் அவள் பார்த்ததில்லை. அவளது அப்பா காங்கிரஸ் அனுதாபி. சுதந்தர தினத்துக்கு மட்டும் வெள்ளைச் சட்டை போட்டு, கொடி குத்திக்கொள்கிற ஆசாமி. வாழ வந்த இடத்தில் அத்தனை பேருக்கும் தமிழ்ப் பெயர்களும் சிறை சென்ற சரித்திரமும் இருந்ததில் அவளுக்குப் பெரிய வியப்பு ஏதும் ஏற்படவில்லை.

“போவுதுபோ.. குடிச்சி சீரழிஞ்சி சுருண்டு கெடக்காம கட்சி, கட்சின்னுதானே அலையுதுங்க? அதுக்கு இது எவ்ளவோ மேல” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள். குடித்துச் சீரழிந்த சரித்திரக் கதைகள் அவளது வம்சத்தில் நிறைய இருந்தன. தனக்குப் பிறந்ததாவது படித்து முன்னேறுமா என்று கொஞ்சநாள் கனவு கண்டுகொண்டிருந்தாள். முத்துராமன் பன்னிரண்டாம் வகுப்புடன் முடித்துக்கொள்ள, அடுத்துப் பிறந்த இரண்டும் ஐந்தைத் தாண்டவே அடம் பிடித்ததில், அவள் கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு, கடனுக்குத் தையல் மிஷின் ஒன்றை வாங்கி வீட்டில் போட்டு வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

அளந்து அளந்துதான் ஆசைப்படவேண்டும். கவனமுடன் தான் கனவுகள் காண வேண்டும். கடவுள் முக்கியம். கட்சியும் முக்கியம். கணவனும் குழந்தைகளும் அதைவிட முக்கியம். என்ன செய்து யாரைத் தடுத்துவிட முடியும்? முத்துராமனைப் பின்பற்றி அவன் தம்பி தமிழ்க்கனல் கட்சிக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் போகத் தொடங்கியபோது கற்பகம் மறக்காமல் தினத்தந்தி பேப்பரில் நாலு இட்லி வைத்து மடித்துக் கொடுத்து அனுப்பத் தொடங்கினாள். தேர்தல் காலங்களில் அவர்கள் இரவு பகலாக வீடு வராமல் கட்சி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தானே தேடிப்போய் சாப்பாடு கொடுத்துவிட்டு வர ஆரம்பித்தாள். யார் கண்டது? தொடர் ஓட்டப்பந்தயத்தில் பாதியில் தன் கணவன் நின்றுவிட்ட இடத்திலிருந்து முத்துராமன் தொடரலாம். அவன் மாவட்டச் செயலாளர் ஆகலாம். தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆகலாம். அதிர்ஷ்டம் இருந்தால் அமைச்சரும் ஆகலாம். ஒருவேளை முடியலாம். சைதாப்பேட்டைச் செம்மல் என்று யாரும் பட்டம் கூடத் தரலாம். எதுவும் சாத்தியம்தான். கனவுகள் ஆசீர்வதிக்கப்படும்போது.

எதற்கும் இருக்கட்டும் என்றுதான் அவள் எப்போதாவது கையில் கொஞ்சம் காசு இருக்கும்போது கடம்பாடி அம்மனுக்கு அரை லிட்டர் பால் பாக்கெட் எடுத்துப் போய் அபிஷேகத்துக்குக் கொடுத்துவிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு வருகிறாள். இப்போதெல்லாம் முன்னைப்போல் கடவுளே இல்லை என்று புருஷன்காரன் அழிச்சாட்டியம் பண்ணுவதில்லை. கோயிலுக்கு ஆவின் பால் எடுத்துப் போகும்போது சண்டை பிடிப்பதில்லை. பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.

0

குவாலிஸ் புறப்பட இருந்த சமயம் பொற்கொடியும் வளர்மதியும் வேகமாக ஓடி வந்தார்கள்.

“டேய் முத்துராமா.. கொஞ்சம் இருடா.. பொண்ணு பாக்கப் போறியாம்ல?” என்று இடுப்பில் தயாராக முடிந்துவைத்திருந்த குங்குமப் பொட்டலத்தை எடுத்து அவன் சற்றும் எதிர்பாராதவிதத்தில் நெற்றியில் தீற்றினாள் வளர்மதி.

அவன் சிரித்தான். ‘இரு, ஒன்ன வந்து கவனிச்சிக்கறேன்.’

“அட எவண்டா இவன்? இப்பவும் வந்து எங்களத்தான் கவனிக்கணுமா? இந்தவாட்டியாச்சும் போன காரியத்த ஒர்க்கவுட்டு பண்ணிக்கினு வா. அப்பால கவனிக்க வேற ஜோலிங்க நிறைய இருக்கும்.”

முத்துராமனுக்கு சிரிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் வேண்டாம். ஒருவேளை அம்மாவுக்குப் பிடிக்காது போகலாம்.

“த.. தள்ளிப்போ. சும்மா கவாங்கவான்னுக்கிட்டு. வந்து பேசிக்கறேன். நீ ஏறுடா..” என்று போலியாகச் சிடுசிடுத்து அவனை வண்டிக்குள் தள்ளினாள் கற்பகம். வீதி நிறைத்து நின்ற ஜனம் கையசைத்தது. பொற்கொடியும் கையசைத்தாள். ஆனாலும் ஏனோ அவன் முகத்தை நேராக அவளால் பார்க்க முடியவில்லை. சற்றும் சாத்தியமே இல்லை என்றாலும், யாரிடமாவது சொல்லலாம் என்று பலகாலமாக நினைத்துக்கொண்டிருப்பதுதான். ஆனால் யாரிடம் சொல்வது? வாய் இல்லாத, காது மட்டும் உள்ள கொள்கலன் ஏதும் உண்டா என்ன?

தான் வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்தாள். இந்நேரம் அத்தனைத் துணிகளையும் அலசிப் போட்டிருக்கலாம். இந்தச் சனியன் பிடித்த வளர்மதியால் வந்த வினை. கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். எதற்காக வரவேண்டும்? ஆகப்போவது ஒன்றுமில்லை. வண்டியில் ஏறுபவனை வெறுமனே பார்த்துக் கையசைக்கிற வேலை. போர்க்களத்துக்குப் போகிறவனை வழியனுப்புகிற மாதிரியா? சே. என்ன அபத்தம் இது. எப்படியாவது இம்முறை முத்துராமனுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட வேண்டும் என்று அவள் மிகவும் விரும்பினாள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி படை திரட்டிக்கொண்டு போகிற அவஸ்தையிலிருந்து அவன் தப்பிப்பதற்காக மட்டுமல்ல. அதற்குப் பிறகாவது தனக்குள் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கும் மௌன ஓலத்தை அடக்கிச் சுருட்டி அழுத்திப் புதைக்கவும் கூட.

ஆற்றங்கரைக்குத் திரும்பப் போகிற வழியெங்கும் அவள் அதையேதான் நினைத்துக்கொண்டிருந்தாள். இந்த முறை எக்மோர் பெண்ணாமே? அடையாற்றுக்கரைவாசிக்கு கூவக்கரைப் பெண் சரியாகத்தான் இருக்கும். பளபளவென்று குவாலிஸில் போய் இறங்கும் முத்துராமன். குடிசை வாசலில் பெஞ்சு போட்டு உட்காரவைப்பார்களாயிருக்கும். பின்னே இத்தனை கூட்டத்துக்கு உள்ளே எங்கிருந்து இடம் இருக்கும்? த.. சட்னு போயி ஆறு டீ வாங்கியா.. யாரோ, யாரையோ விரட்டுவார்கள். யார் அந்தப் பெண்? கையில் டீ க்ளாஸுடன் வந்து முத்துராமன் எதிரே குனிந்த தலையுடன் எப்படி நிற்கப் போகிறாள்? என்ன சேலை உடுத்தியிருப்பாள்? அவளைப் பெற்றவள் நல்லவளாக இருக்கவேண்டும். முத்துராமனை அவள் அடிக்கடி கிண்டல் செய்திருக்கிறாள். பாத்துக்கினே இரு.. சினிமாவுல வர காந்திமதியாட்டம் ஒனக்கு ஒரு மாமியாக்காரி வந்து நிக்கப்போறா. கட்சியும் வேணாம், ஒரு கருமாந்திரமும் வேணாம்னு மெரட்டப்போறா. பொண்ணக் கட்டின பாவத்துக்கு சர்தான் அத்தன்னு சுருண்டு நிக்கப்போற..

முத்துராமன் இதற்கெல்லாம் பதில் சொன்னதில்லை. வெறுமனே சிரிப்பான். எல்லோருக்கும் எப்போதாவது ஒருநாள் திருமணம் ஆகத்தான் போகிறது. யாரோ ஒரு பெண். எங்கிருந்தோ வரப்போகிறவள்.

முத்துராமன் விஷயத்தில் அது ஏன் தானாக இருக்கக் கூடாது என்றுதான் பொற்கொடி நினைத்தாள். வேணாம்டி, நெனப்ப அழுத்தித் தொடச்சிரு என்று அம்மா சொன்னபோது அழக்கூடத் தோன்றவில்லை. துடைத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவனுக்குத் திருமணம் ஆகும்வரை தள்ளிப்போட்டால் தப்பில்லை என்று தோன்றியது.

2


அத்தியாயம் இரண்டு

இருபத்தி மூன்று வயதில் தனக்கு மீண்டும் வேறொரு பெயர் வைக்கப்படும் என்று சாந்தி நினைத்துப் பார்த்ததில்லை. இந்தப் பெயருக்கு என்ன குறைச்சல்? சிறியதாக, நன்றாகத்தானே இருக்கிறது? தவிரவும் அந்நாளில் சாந்தி நிலையம் என்ற படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் ஆசைப்பட்டு வைத்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். ரேஷன் கார்டில் இருக்கிற பெயர். பாதியில் விட்ட பள்ளிக்கூடம் கொடுத்தனுப்பிய சர்டிபிகேட்டில் இருக்கிற பெயர். வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கிற பெயர். ஊரும் உறவும் குறைந்தது ஒரு கோடி முறையாவது கூப்பிட்டுப் பழகியிருக்கக் கூடிய பெயர்.

“பேர மட்டும் தமிழ்ப் பேரா மாத்திருவோங்க. இந்த ஒரு கண்டிசனுக்கு நீங்க சம்மதிச்சித்தான் ஆவணும்.”

முத்துராமனின் அப்பா கிளம்புமுன் கைகூப்பியபடி சொல்லிவிட்டுப் போன காட்சி அவளுக்கு நினைவுக்கு வந்தது. தன்னையறியாமல் சிரித்துக்கொண்டாள். சா – ந் – தி. தமிழ்ப் பெயர் இல்லையா இது? வேறென்ன பெயர்? இங்கிலீஷா? இந்தியா? தெலுங்கு?

அவளது தந்தை சந்தேகமாகக் கேட்டபோது முத்துராமன்தான் விளக்கம் சொன்னான். அது வடமொழி. வடமொழி என்றால்?

“நமக்கு சம்மந்தமே இல்லிங்க. சம்ஸ்கிருதம்னுவாங்க. ஐயமாருங்க பாஷை.”

அட, இத்தனை நாள் தனக்கு இருந்தது சம்ஸ்கிருதப் பெயரா? சாந்திக்கு அது ஒரு செய்தியாக இருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த முத்துராமன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். தவிரவும் பெயரை மாற்றுவதில் அவனும் அவனது தந்தையும் கொண்டிருந்த தீவிரம் அவளுக்குப் புதிதாக இருந்தது. சிறு வயதுகளில் பொங்கலுக்கு முந்தைய தினம் இரவு அவளது அப்பா திடீரென்று நினைத்துக் கொண்டமாதிரி கடைக்குப் போய் அவளுக்கும் அவளது தங்கைக்கும் அம்மாவுக்கும் புதுத்துணி எடுத்துவரும் நாள்கள் நினைவுக்கு வந்தது. சந்தேகமில்லை. அவர்களுக்கும் பொங்கல் உண்டு. ஓரிரு மணி நேரங்கள் முன்னதாகத்தான் அது உறுதி செய்யப்படும் என்றபோதும், அந்த ஊரடங்கிய பொழுதில் அப்பா கொண்டுவந்து நீட்டும் பிளாஸ்டிக் கவரைப் பிரித்துத் துணியின் புதிய வாடையை நுகர்ந்து பார்த்து, தொட்டுத் தடவிச் சில நிமிடங்கள் சந்தோஷப்படும்போது அப்பா என்கிற நபர் மிகவும் இனிமையானவராகத் தோன்றுவார். அவர்தான் என்ன செய்வார்? விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல ஏழைமை. திணிக்கப்பட்டது. அவர் ஓட்டுகிற மீன்பாடி வண்டி தன் சக்திக்கு உட்பட்ட வருமானத்தைக் கொடுக்கவே செய்கிறது. ஆனாலும் நான்கு வயிறுகளுக்கு அது போதுமானதல்ல.

சாந்தியும் அவளது அம்மாவும் தெரிந்தவர்கள் வீட்டில் வேலை செய்யலாம் என்று முடிவு செய்து, தொடங்கியபோது அவளது தங்கை சரோஜாதேவி ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். முத்துராமனின் தந்தையைப் போல யாரோ ஓர் உள்ளூர் அரசியல்வாதிதான் அதட்டல் போட்டு அவளைப் பள்ளிக்குக் கொண்டுவிட்டது. படிப்பு வந்தால் படிக்கட்டும். குறைந்தபட்சம் ஒரு வேளை உணவு உறுதி.

சாந்திக்குச் சற்று வியப்பாகத்தான் இருந்தது. அவளது தந்தை எதையும் மறுத்ததில்லை. திணிக்கப்பட்ட எதையும். எப்போதும் ஒரு நூதனமான வெறுப்புணர்வுடன் வீட்டில் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும் அம்மா. பெரும்பாலான தினங்களில் காலியாகவே இருக்கிற பாத்திரங்கள், மளிகைச் சாமான்களுக்கான பிளாஸ்டிக் டப்பாக்கள். கிழிந்து தொங்குகிற சாயம் போன உடைகள். ஒரு சிறு தூறலுக்கும் தாக்குப் பிடிக்க வக்கில்லாத நொறுங்கிய குடிசை.

“த.. என்னா செலவானாலும் செரி. மொதல்ல ஓலைய மாத்திரணும். பொண்ணுக்குக் கல்யாணம்னு வெச்சிக்கிட்டு இப்பிடி உளுத்த ஓலையோட நின்னம்னா நாலு பேரு காறித்துப்புவானுங்க. வாழமண்டி கணேசன் நூத்தம்பது ரூவா தர்றேன்னான். நீ வேலை பாக்கற வூடுங்கள்ள கேட்டுப்பாரு. சோத்துப்பாடுதான் என்னிக்கும் இருக்குது. பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்கசொல்ல ஏன்னா கேக்கற? அந்தமாதிரின்னு வெச்சிக்க. ஆமா, சொல்லிட்டேன்.”

காது மடிப்பிலிருந்து பீடியை உருவிப் பல்லில் கடித்தவண்ணம் தன் முடிவைச் சொல்லிவிட்டு அப்பா குடிசைக்கு வெளியே போன காட்சி சாந்திக்கு நினைவில் நகர்ந்தது. அம்மா ஏதும் பேசவில்லை. ஓலை மாற்றுகிற விஷயத்தில் அவள் பெரும்பாலும் தேர்தல்களையே நம்பியிருப்பவள். வோட்டுக்கேட்டு வருகிற மகராசன்களில் யாராவது ஒருவர் இதுநாள் வரை அந்தப் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டிருந்தார். வீட்டுக்கு ஓலை. தண்ணிக்குக் குடம். சென்றமுறை யாரோ ஒருவர் சூட்கேஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனார்.

“பொட்டி எதுக்குன்னு யோசிக்காத தாயி. நீ வோட்டுப்போட்டு நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தா வீட்டுக்கு ஒருத்தருக்கு கவர்மெண்டு வேலை கேரண்டி. அப்பால உம்புருசன் சம்பளமாவும் கொண்டாருவான், கிம்பளமாவும் கொண்டாருவான். அது அவன் சாமர்த்தியம்.” வேட்பாளர் சிரித்தபடி கிசுகிசுத்தபோது, வெகுகாலம் கழித்துச் சிரிப்பவள் போல சாந்தியின் அம்மாவின் முகத்தில் புன்னகை எட்டிப்பார்த்தது.

“யாரு? இதுவா? சம்பாரிக்கறதா? தெனம் இருவத்தஞ்சு ரூவா கொண்டாருது. அதுக்கே முதுக வலிக்குது, மொழங்கால வலிக்குதுன்னு நைட்டு பூரா மொனங்கினு கெடக்குது. என்னமோ எந்தலையெழுத்து போன்னு நெனச்சிக்கினு இத்தினி வருசம் ஓட்டிட்டுப் பூட்டேன். நீதான் சொல்ற. மவராசன் கெலிச்சி எதனா நம்ம மக்களுக்கு நல்லது செய்யாமலா பூடுவ? வேல குடுக்கறியோ என்னமோ, ஊட்டுக்குள்ளாற வெயிலு, மள வந்து ஊத்தாம கூரை மாத்த கொஞ்சம் ஏற்பாடு பண்ணு கண்ணு. ஒனக்கு புண்ணியமாப் போவும். கண்டிசனா ஒனக்குத்தான் என் வோட்டு.”

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் குடிசையின் கூரையை அம்மா எத்தனை திறமையாக மாற்றிவிடுகிறாள்! சாந்திக்கு அது எப்போதும் தீராத வியப்பு.

“வேற வழியில்லடி. வாயுள்ள புள்ள பொழைக்கும். நாய் உள்ள வூட்லதான் திருட்டு நடக்காது. இந்த வூட்டுக்கு வாயும் நாந்தான், நாயும் நாந்தான். உங்க ரெண்டு பேத்துக்கும் எவனையானா ஒருத்தன புடிச்சி கட்டிவெச்சிட்டேன்னா போதும்.”

“எதுக்கும்மா? நீ ஒருத்தி படற கஷ்டம் போதாதா?”

“அடபோடி போக்கத்தவளே. கஷ்டக்கணக்கு பாத்திருந்தன்னா கால்வயிறு கஞ்சி கூட கெடைச்சிருக்காது. என்னா கெட்டுப்போச்சி இப்ப? த..ரெண்டு பேரும் பனமரத்துல பாதியா எந்திரிச்சி நிக்குறிங்கள்ள? நாம்பெத்ததுன்னு ஒரு இது மனசுக்குள்ளார வருதில்ல? இதுக்கு மேல இன்னா வோணும்? காசு பணம் பாதில போனாத்தாண்டி கஸ்டம். பாத்ததே இல்லன்னா, அதுவும் சாமி மாதிரிதான். எப்பயாச்சும் வரம் குடுக்கும்னு கனா கண்டுக்கினே போய்க்கினு இருக்கவேண்டியதுதான்.”

பெண் பார்க்க வந்திருந்த முத்துராமன் குடும்பத்தினரிடமும் அம்மா இதைத்தான் சொன்னாள். கோயிலில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றபோது மட்டும் முத்துராமனும் அவனது தந்தையும் மறுத்துவிட்டார்கள்.

“அதெல்லாம் வேணாம்மா. எங்க காலனில, எங்க பேட்டைல நடு ரோட்டுல மேடை போட்டு நடத்தறதுதான் எங்களுக்கு வசதி. ஏற்கெனவே எங்க மாவட்டச் செயலாளராண்ட பேசியிருக்கேன். வந்து நடத்திக்குடுக்கறேன்னிருக்காரு. மைக்கு செட்டு செலவெல்லாம் எங்களோடது. கட்சிக்காரங்க நூறு பேரு வருவாங்க. பிரியாணி போட்டா சந்தோசப்படுவாங்க. நாம சாம்பார் சாதம் போட்டாக்கூட போதும். அந்த செலவ மட்டும் பாதியா பிரிச்சிக்குவம்.” என்றார் முத்துராமனின் அப்பா.

தேர்தல் சமயங்களில் வோட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களைத் தவிர சாந்திக்கு அரசியலில் ஏதும் தெரியாது. தன் எதிர்காலக் கணவன் ஓர் அரசியல்வாதி என்பது அவளுக்குப் புதிதாக இருந்தது. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் வலம் வரக்கூடியவன். இப்போதைக்கு பைக் வைத்திருக்கிறான். சைதாப்பேட்டையில் நடக்கிற கட்சிக்கூட்டங்களில் முதல் வரிசையில் அவனைப் பார்க்கலாம். ஓரிரு முறை மேடை ஏறி யாரையோ வழிமொழிந்திருப்பதாகவும் சொன்னார்கள். எப்பிடியும் அடுத்த கார்ப்பரேசன் எலக்சன்ல கவுன்சிலராயிருவான் என்று அவனது அம்மா சொன்னபோது கேட்க வினோதமாக இருந்தது அவளுக்கு. எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் வரும்முன், மாப்பிள்ளை ஒரு டெய்லர் என்று மட்டுமே அவளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அதனாலென்ன? டெய்லர் கவுன்சிலராகலாம். கவுன்சிலர் சேர்மன் ஆகலாம். சேர்மன் எம்.எல்.ஏ. ஆகலாம். அதிர்ஷ்டம் மட்டும் உடன் வரவேண்டும்.

“அப்பிடி இல்லிங்க. இது உழைப்புங்க. ராப்பகலா உழைக்கணும். கஸ்டம் பாக்காம உழைக்கணும். அரசியல் சுலபமில்லிங்க. நான் டிரை பண்ணேன். மேலுக்கு வரமுடியல. எம்புள்ள வந்துருவான். அது நிச்சயம். அவன ஒரு எம்.எல்.ஏ ரேஞ்சுக்கு நிக்கவெச்சிப் பாக்காம இந்தக் கட்ட போய் சேராது. அது மட்டும் நிச்சயம்.”

கண்ணில் பற்றி எரிந்த கனவுடன் அவனது அப்பா பேசியது சாந்திக்கு வியப்பாக இருந்தது. புதிய மனிதர்கள். புதிய உறவு. புதிய இடத்துக்குப் போக ஆயத்தமாகவேண்டிய தருணம். பரவாயில்லை. ஓரளவு நல்ல குடும்பமாகத் தெரிகிறார்கள். ஒப்பீட்டளவில் சற்று வசதியானவர்களாகவும் கூட. ஆனால் விடாப்பிடியாக ஏன் பெயரை மாற்ற நினைக்கிறார்கள்?

“தப்பா நெனச்சிக்காதிங்கம்மா.. நம்மளுக்குத் தமிழ் தான் எல்லாம். எம்பேரு தமிழரசன். இவனுக்கு முத்துராமன்னு பேரு வெச்சது இவனோட அம்மா. மொத புள்ள பாருங்க.. அதத்தான் வெச்சித்தீரணும்னு கண்டிசனா சொல்லிட்டா. ரெண்டாவது புள்ளைக்கி தமிழ்க்கனல்னு தலைவர் வந்து பேரு வெச்சி முக்கா பவுன்ல செயின் போட்டுட்டுப் போனாரு. பொண்ணு பொறந்தா தமிழ்ச்செல்வின்னு வெக்கணும்னு நெனச்சேன். புள்ளையாயிட்டான். என்னோட மருவளா வரவளுக்குத் தமிழ்ப்பேரா இருக்கறதுதான் எங்களுக்குப் பெருமை, கௌரவம்.”

அப்பாவோ, அம்மாவோ இதற்கு லேசான மறுப்புத் தெரிவிக்கலாம் என்று சாந்தி நினைத்தாள். ஆனால் இருவருமே அமைதியாகத்தான் இருந்தார்கள். பரபரவென்று மேற்கொண்டு ஆகவேண்டியவை குறித்துப் பேசிவிட்டு, தை பிறந்ததும் திருமணம் என்று முடிவு செய்து, காப்பி சாப்பிட்டார்கள்.

“ஜனவரியில பாளையங்கோட்டைல ஒரு மாநாடு இருக்குதுங்க. இன்னும் தேதி முடிவாகல. அது தெரிஞ்சதும் சொல்லி அனுப்பறோம். அதுக்குப் பிரச்னை வராம கல்யாணத்தேதிய வெச்சிக்கங்க” என்று புறப்படும்போது முத்துராமன் சொன்னான்.

வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே வந்ததும் அம்மா அவளை இழுத்து திருஷ்டி கழித்தாள்.

“விடிஞ்சிதுடி ஒனக்கு. நல்ல எடம். மாப்ள படிச்சவரா இருக்காரு. கௌரவமான குடும்பம். அவங்கப்பாரு எவ்ளோ தன்மையா பேசுறாரு, பழகுறாரு பாத்தியா?”

“அதெல்லாம் சரிம்மா.. பேர எதுக்கு மாத்தணுங்கறாங்க?”

“இந்தப் பேர வெச்சிக்கிட்டு என்னா சொகத்த கண்டுட்ட? மாத்திக்கிட்டுப் போயேன். நான் அவங்கம்மாவாண்ட விசாரிச்சிட்டேன். இந்தப் பொண்ணு ஓகே ஆனா வள்ளி மயில்னு பேரு வெக்கறதா அவங்கப்பாரு முடிவு பண்ணியிருக்காராம். அதுவும் சாமி பேருதான். நல்லா இருக்கில்ல?”

வள்ளிமயில். அட! இது என்ன பெயர்? அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் சாந்தியை விடவுமா என்று தெரியவில்லை. முத்துராமன் தன்னை எப்படிக் கூப்பிடுவான்? வள்ளி என்றா? மயில் என்றா?

சாந்தி அனிச்சையாக எழுந்து கண்ணாடி முன் சென்று நின்று சில வினாடிகள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். பெரிய பேச்சுவார்த்தைகளோ, விவாதங்களோ, அபிப்பிராய மாறுதல்களோ இல்லாமல் சுமுகமாகத் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது அவளுக்கு மிகுந்த வியப்பைக் கொடுத்தது. நேற்று வரை நினைத்துப் பார்க்கவில்லை. எல்லாம் சடாரென்று கூடி வந்து, முடிந்துவிட்டது.

இனி என்ன? எக்மோரிலிருந்து சைதாப்பேட்டை. இருபத்தி மூணு சி இருப்பதாக அப்பா சொன்னார். ஏறி குந்திக்கினா அர அவரு. அவ்ளதானே?

“த.. பஸ்ஸு இன்னாத்துக்கு? அதான் மாப்ள பைக்கு வெச்சிக்கிறாருன்னு சொன்னாங்கல்ல?” என்றாள் அம்மா.

தன் மனத்தில் முத்துராமனும் அம்மாவின் மனத்தில் அவனுடைய பைக்கும் சரியாகப் பொருந்தி அமர்ந்தது பற்றி யோசித்துக்கொண்டே வெளியே வந்தாள் சாந்தி.

3


அத்தியாயம் மூன்று


வட்டச் செயலாளர் தூங்கி விழித்தபோது மணி மூன்றாகியிருந்தது. அவரைப் பார்ப்பதற்கு முத்துராமன் வந்திருப்பதாகப் பையன் வந்து சொன்னான். இப்ப நான் எங்க இருக்கேன் என்று தனக்குள் கேட்டுக்கொண்டார். தூங்கி எழும்போதெல்லாம் வந்துவிடுகிற குழப்பம். யாரும் கேட்பதற்கில்லை என்கிற சுதந்தரத்தில், வயசுக் காலத்தில் கையில் புரளத் தொடங்கியிருந்த காசு கொடுத்த தன்னம்பிக்கையில், தன் வாழ்வில் அவர் செய்துகொண்ட புதிய ஏற்பாடு தொடக்கத்தில் நம்பிக்கையளிக்கும் விதத்தில்தான் இருந்தது. தொழில் சிறந்த காலம் அது. சைதாப்பேட்டையின் காய்கறி மார்க்கெட் அநேகமாக அவரது முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. ஓடுகிற லாரிகளும் இறங்குகிற சரக்குகளை அடுக்கிப் பிரிக்கிற இடமும்.

பஜார் அப்போது பெரிய அளவில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துணிக்கடைகள். வீராச்சாமி முதலியார் நாட்டு வைத்தியக் கடை. பிராந்தியத்தில் ஒரிஜினல் சிட்டுக்குருவி லேகியம் விற்றுக்கொண்டிருந்த ஒரே வியாபாரி. அங்கே அரிசி மண்டி. இங்கே ஒரு பலசரக்குக் கடை. ஒரு ஹோட்டல் திறந்தால் லாபம் இருக்கக்கூடும் என்று வட்டச் செயலாளர் நினைத்தார்.

அடச்சே சும்மா கெட என்று அவருடைய அப்பா சொன்னார். ‘நம்மூர்ல ஓட்டல்ல துண்றவன் எத்தன பேரு? ஐயமாருங்க ஏரியா இது. காப்பி க்ளப்பு போடுறியா? செய்யின்னுவேன். ஆனா நம்மாளுங்க போடுற காப்பிய கழுனித்தண்ணின்னுடுவானுக. திராவகம் மாதிரி ஸ்டிராங்கா காப்பி போடத்தெரிஞ்ச ஆளு ஒருத்தன புடி மொதல்ல. அப்பால ஓட்டல் தொறப்பியாம்.’

ஆனால் வட்டச் செயலாளருக்குத் தன் தந்தையின் கணிப்பு காலம் புரியாதது என்று தோன்றியது. சண்டை போட்டுப் பணம் வாங்கி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நூறடி தொலைவில் ‘இனிய தமிழ் அசைவ உணவகம்’ என்று போர்டு போட்டுக் கடை விரித்தார்.

அப்போது அவர் வட்டச் செயலாளர் இல்லை. வெறும் தொண்டர். இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் கோஷமிட்டுக்கொண்டு பெருமாள் கோயில் தெருவுக்குள் போய் அழிப்பதற்கு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார். ஹிந்தி வாத்தியார் ஒருவரின் வீட்டு வாசலில் இருந்த டியூஷன் போர்டு தவிர வேறெதுவும் கண்ணில் படவில்லை. தவிரவும் தார் கொண்டு அழிக்க அதில் ஏதுமில்லை. தண்ணீர் தெளித்தால் அழியும் சாக் பீஸ் எழுத்துகள். ஆகவே அவர் ஹிந்தி வாத்தியாரை மட்டும் அடித்துவிட்டு நேரே போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்குப் போய் தயாராக இருந்தார்.

என்ன துரதிருஷ்டம்? தன்னை அடித்த ஒருவன் மீது புகார் கொடுக்கவேண்டுமென்று தோன்றாதா ஒருவருக்கு? ஒரு மணி நேரம் காத்திருந்தும் ஹிந்தி வாத்தியார் புகார் கொடுக்க வராத காரணத்தால் சிறை செல்லும் எண்ணம் வீணாகி, துக்கத்தைப் போக்கிக்கொள்ள அன்றிரவு பாரகன் டாக்கீஸுக்குப் போனார். ராஜ் கபூர் நடித்த படம். நர்கீஸும் ராஜ் கபூரும். எத்தனை அருமையான ஜோடி! லயித்துப் பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிவிட்டார்.

பிற்பாடு நிறைய கூட்டங்களில் தோரணம் கட்டி, கைக்காசைச் செலவழித்து உணவுப் பொட்டலங்கள் போட்டு, போஸ்டர் ஒட்டி, தலைவர் வந்தபோது ஓடிச்சென்று புதிய செவனோக்ளாக் பிளேடால் புறங்கையில் கீறி ரத்தத் திலகமிட்டுப் படிப்படியாக மேலுக்கு வந்தார். பேசத் தெரிந்திருந்தது. உணர்ச்சி கொப்பளிக்க. நரம்புகள் புடைக்க. கண்களில் நீர் மல்க. அவரை வட்டச் செயலாளராகக் கட்சி மேலிடம் நியமித்தபோது காய்கறி மார்க்கெட்டில் அவர் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்தார்.

எப்போதுமே முதலில் தொடங்குகிற எதுவும் எப்படியோ ஜெயித்துவிடுகிறது. காய்கறி மார்க்கெட்டுக்கென்றே அவர் ஓட்டத்தொடங்கிய லாரிகளைப் போல. பேட்டையின் முதல் அசைவ உணவகமாக அவர் தொடங்கிய இனிய தமிழைப் போல. மகன் தேறிவிட்டான் என்று அவரது தந்தை நிம்மதியாகக் கண்ணை மூடினார். வட்டச் செயலாளர் துணிந்து தன் வாழ்வில் இரண்டாவதாக ஒரு பெண்ணுக்கு இடமளிக்க முடிவு செய்து கிண்டி தொழிற்பேட்டைப் பகுதியிலிருந்து அழைத்து வந்தார்.

அன்பான மனைவி. ஆசைக்கும் ஆஸ்திக்குமாக இரண்டு பிள்ளைகள். அப்புறமெதற்கு இரண்டாவது என்று தெரிந்தவர்கள் கேட்டார்கள். செயலாளர் யாருக்கும் பதில் சொல்லவில்லை. பிரமாதமான காதலில் விளைந்த திருமணம் இல்லை அது. ஆனாலும் அது ஓர் அவசியம் என்று அவர் நினைத்தார். தவிரவும் பகுதியில் அதற்குமுன் யாரும் இரண்டாவது சம்சாரம் என்று வைத்துக்கொண்டிருக்கவில்லை. வியாபாரத்தைப் போல வாழ்க்கையும் ஒரு புதிய திருப்பம் காணும் என்று அவர் எண்ணியிருந்தார்.

மாறாக, பேட்டையில் அவருடைய செல்வாக்கு பலபேரால் பங்கிடப்படத் தொடங்கியிருந்தது. தொலைவில் தெரியும் லாரியின் முகப்பு விளக்கு மாதிரி இருக்கும். சடாரென்று பாய்ந்து கடந்து போய்விடுவார்கள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே அவருக்குப் புரியவில்லை. அவர் நீண்டகாலமாக வட்டச் செயலாளராக இருந்தார். அந்தப் பதவிக்குப் பிரச்னை இல்லை. ஆனால் மேலும் மேலுக்கு வரவிடாமல் தடுப்பது எது? வாழ வந்த முதல் மனைவி, ஆள வந்த இரண்டாமவளை அங்கீகரித்துவிட்டாள். மகன்கள் இருவரும் தலையெடுத்துவிட்டார்கள். தொழில் பெருகியிருக்கிறது. பணம் பெருகியிருக்கிறது. ஆனாலும் கட்சி தன்னை உரிய முறையில் பெருமைப்படுத்தவில்லை என்கிற எண்ணம் மட்டும் அவருக்கு இடைவிடாமல் அரித்துக்கொண்டிருந்தது. ஏதாவது செய்யவேண்டும். அத்தனை பேரும் கவனிக்கும் விதத்தில். கட்சி கொண்டாடும் விதத்தில். அடுத்த தேர்தலிலாவது ஒரு சீட் கிடைக்கிற விதத்தில்.

என்ன செய்யலாம்? தனது அடிப்பொடிகளுடன் அவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஒரு வார காலமாக. இரவு பகலாக. சிறியதொரு திட்டம் போலத் தோற்றம் தரவேண்டும். ஆனால் சில மாதங்களாவது இடைவிடாமல் நடந்தாகவேண்டும். பேசப்படத்தக்கதாக இருக்கவேண்டும். தனியொருவனாகத் தான் முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டுப் பெருமையைத் தலைவரின் காலடியில் சென்று வைத்துவிட வேண்டும். இது உதவும். காலடியில் வைக்கப்படும் பெருமைகளுக்குக் கண்டிப்பாகத் தலைவர் பதில் மரியாதை செய்துவிடுவார். என்ன செய்யலாம்?

அப்போதுதான் மாந்தோப்புக் காலனி வடிவேலு சொன்னான். அவருடைய எடுபிடி போல எப்போதும் உடனிருக்கும் தொண்டரடிப்பொடியன். “நம்ம முத்துராமன கூப்ட்டுப் பேசுங்க தலைவரே! உங்க கனவு ஒர்க்கவுட் ஆவணும்னா அவன் தான் சரி. திட்ட கமிஷன் துணைத்தலைவரு மாதிரி ஏகப்பட்ட ஐடியாங்க வெச்சிருக்கான். இன்னாத்துக்குடா இவ்ளோ யோசிக்கற, ஒடம்புக்கு ஒத்துக்காம, வயித்தால போயிடப்போவுதுன்னா சிரிக்கறான். மக்களுக்கு நல்லது செய்யணுங்கறான். நீங்க பாத்துப் பேசி திருத்தினாத்தான் உண்டு.”

அதனால்தான் வரச்சொல்லி இருந்தார். முத்துராமன். அட, பெண் பார்க்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தான் அல்லவா? பார்த்துவிட்டானா? திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டதா?

“அப்பிடியா? பய என்னாண்ட சொல்லவேயில்லியே?” என்றான் வடிவேலு.

“த.. ஓட்றா.. போயி நம்ம சுண்ணாம்புக்கடைக்காரராண்ட விசாரிச்சிட்டு பின்வழியா ஓடியா. அவருதான் அவன் பொண்ணு பாக்கப் போவ வண்டி குடுத்து அனுப்பிச்சாரு. வெவரம் தெரிஞ்சிருக்கும்.”

வடிவேலு தலைவரிடம் சில நுணுக்கங்களைக் கண்டு பிரமித்திருக்கிறான். அவற்றில் இதுவும் ஒன்று. தகவல் சேகரிப்பில் அவர் செலுத்துகிற ஆர்வம். எதிராளி எதிர்பாராத தருணத்தில் அதை லாகவமாக வெளிப்படுத்தி வியப்பூட்டும் அலகிலா விளையாட்டுக் குணம். வட்டம் என்றால் சும்மாவா? அவன் ஓடினான்.

அவர் எழுந்து சோம்பல் முறித்தார். தயாராக இருந்த காப்பியைக் குடித்துவிட்டு முகம் கழுவி குட்டிக்குரா பவுடரை மேனியெங்கும் தெளித்துக்கொண்டார். ஹேங்கரில் கழட்டி மாட்டியிருந்த வெள்ளைச் சட்டையை மீண்டும் எடுத்து அணிந்துகொண்டு தலையைச் சீவிக்கொண்டார். பழசாகிவிட்ட புதிய ஏற்பாடு, அவர் வெளியே கிளம்புகிறாரா என்று கேட்டது.

“அட ஆமா ஒரு முக்கியமான இது.. ஆறு மணிக்குள்ளார வந்துருவேன்.” என்று சுவரைப் பார்த்து பதில் சொன்னார்.

“நைட்டுக்கு சமைக்கணுமா வேணாமான்னுதான் கேக்குறேன். நீங்கபாட்டுக்கு இங்க வரேன்னிட்டு அங்க போயிட்டிங்கன்னா நாளைக்கு பழையத யாரு திங்கறது?”

சொல்வதற்கில்லை. டிபன் பாக்ஸில் போட்டு அந்த வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவாள் என்று அவருக்குத் தோன்றியது. எத்தனைக் காலமானாலும் பெண்கள் சில விஷயங்களில் மாறுவதே இல்லை. தவிரவும் வட்டச்செயலாளர் என்கிற பதவியையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

அவர் கண்டுகொள்ளாத மாதிரி வெளியே வந்தார். வாசலில் காத்திருந்த முத்துராமன் அவரைக் கண்டதும் சட்டென்று எழுந்து வணக்கம் சொன்னான்.

“நல்லாருக்கிங்களா தலைவரே? வரசொன்னிங்கன்னு சொன்னாங்க.”

“வாய்யா மாப்ள.. எப்பிடி இருக்கா நம்ம மருமவப் பொண்ணு வள்ளி மயில்?”

முத்துராமன் முகத்தில் மெல்லிய வியப்பும் சந்தோஷமும் வெளிப்பட்டது. காட்டிக்கொள்ளாமல் ‘ஆமா தலைவரே. நீங்கதானே சொல்லியிருக்கிங்க? நம்மாளுங்க கூட தமிழ்ப்பேரு வெக்கலைன்னா வேற எவன் வெப்பான்னு?’

“ரொம்ப கரெக்டு. எல்லாம் கேள்விப்பட்டேன். உன் கல்யாணத்த நான் நடத்திவெக்கறேன். எப்ப வெச்சிருக்காங்க?”

“ஜனவரில இருக்கும் தலைவரே. டேட்டு நான் அப்பால சொல்றேன்னிருக்கேன். மாநாடு வருதில்ல? அதுக்கு பாதிப்பில்லாம பாத்துக்கணும்னிட்டு ஒரு இது..”

“அதுவும் செரிதான். கட்சிக்காரனுக்கு சொந்த சந்தோசம், சொந்த துக்கமெல்லாம் ரெண்டாம்பட்சம். உங்கப்பா அந்தக் காலத்துல மூணு மாசத்துக்கு ஒருதபா தான் வூட்டுக்கே போவாரு, பாவம். செரி அத்தவுடு. ஒரு முக்கியமான காரியம். அதான் உன்னிய கூப்ட்டுவுட்டேன்.”

“சொல்லுங்க தலைவரே..!” முத்துராமன் கவனமுடன் அவரை நெருங்கி, கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.

வட்டச் செயலாளர் சுற்றுமுற்றும் பார்த்தார். “ம்ம்.. இங்க வேணாம்.. வா, நாம நம்ம ஆபீசுக்குப் போயிரலாம்..” என்று அவன் தோளில் கைவைத்து அழைத்துக்கொண்டு வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.

முத்துராமனுக்குப் பெருமையாக இருந்தது. எத்தனை நம்பிக்கை இருந்திருந்தால் தலைவர் தன்னைத் தனியே அழைத்துச் சென்று விவாதிக்க விரும்புவார்? கண்டிப்பாக அவன் மேலே வரப்போகிறான். சந்தேகமில்லை. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் சொல்லவேண்டும். எல்லாம் பெண் பார்த்துவிட்டு வந்த ராசி என்று சந்தோஷப்படுவாள்.

ஒரு வேளை அதுதான் உண்மையும் கூடவோ? இருக்கலாம். அவனுக்கு ஒரு நடை எக்மோர் சென்று சாந்தியை இன்னொருமுறை பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருந்தது. சே, வள்ளி மயில்.

4


அத்தியாயம் நான்கு


இனிய தமிழ் அசைவ உணவகத்தின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து, அதன் மேல் மாடியின் பின்புறம் அமைந்திருந்த வட்டச் செயலாளரின் அலுவலக அறையை எடைபோட்டுவிட முடியாது. ஸ்தாபிதம் 1967 என்கிற காரை பெயர்ந்த புடைப்பு எழுத்துகளைப் போலவே அவரது அறையும் அநேகமாகக் கண்ணில் தென்படாது. உடைந்து, கால் ஆடும் மேசைகளும் உட்புறம் பச்சை மிகுந்த தம்ளர்களும் அழுக்கும் ஈரமுமாகக் கால்வைக்க முடியாத அளவுக்குப் பராமரிக்கப்படுகிற கைகழுவும் இடமும் பசியோடு உணவருந்த வருகிறவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. சாப்பிட்ட பிரியாணிக்கோ, சாப்பாட்டுக்கோ பில் பணம் கொடுத்துவிட்டுச் சிறிய ஏப்பமுடன் பெருஞ்சீரகம் மென்றபடி வெளியேறும் கூட்டம் ஒருபோதும் அந்த மேல் மாடி அறை குறித்து நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

வட்டச் செயலாளர், வட்டச்செயலாளர் ஆன முதலாமாண்டு நிறைவை ஒட்டி அந்த அறையைக் கட்டினார். நாநூறு சதுர அடிகள் கொண்ட அறை. உள்புறம் முழுவதும் மரவேலைப்பாடுகள் செய்து சத்தத்தைத் தடை செய்திருந்தார். தரையில் விரித்திருந்த கம்பளம், கஸ்டம்ஸ் ட்யூட்டி கட்டாமல் எடுத்துவரப்பட்டது. ஒளிரும் சாண்டலியர் விளக்குகளும் கிரானைட் இழைத்த மேசையும் தந்தச் சிற்பங்கள் அணிவகுத்த குஷன் சோபாக்களும் இன்னபிறவும் அவரது ரசனைக்குச் சான்று சொல்பவை. இயற்கை அன்னையின் அழைப்புக்கு எனப் பிரத்தியேகமாக ஓர் ஓய்வறை இணைத்திருந்தார். பொதுவாக வட்டச் செயலாளர் செய்திகளை முந்தித்தரும் தினத்தந்தியை அங்கே அமர்ந்துதான் படிப்பது வழக்கம். முன்னதாக ஒவ்வொரு நாளும் அதிகாலை அவரது எடுபிடி வடிவேலு செய்தித்தாள் வந்ததும் ஸ்டேப்ளர் பின் அடித்து அங்கே ஷெல்பில் வைத்துவிடுவான். ‘எளவு அங்க குந்திக்கிட்டு படிச்சாத்தான் பேப்பர் படிச்ச திருப்தியே கிடைக்குது’ என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் வட்டம், பாத்ரூம் சுவர்களுக்கும் கிரானைட் பதித்த முதல் தமிழர் என்பது பலருக்கும் தெரியாது.

பட்டனை அழுத்தினால் நகர்ந்து வரும் மரத்தாலான மதுவறை, பணம் அடுக்கப் பிரத்தியேகமாக ஒரு கல் சதுரம், ரெக்கார்டிங் கருவி பொருத்தப்பட்ட ரகசியச் சுவர் என்று வளமான எதிர்காலத்தை உத்தேசித்து நிறைய சௌகரியங்கள் செய்துவைத்திருந்தார். தேர்ந்தெடுத்த சிலரை மட்டுமே தன் அலுவலக அறைக்கு அழைப்பார். விவாதிப்பவை எதுவும் வெளியே போகலாகாது. வட்டம் என்பவர் திட்டங்களின் நாயகன். அப்படித்தான் வருபவர்கள் நினைக்கவேண்டும். அதுதான் அவரது விருப்பம். என்றைக்கு இருந்தாலும் எம்.பி ஆகப்போகிறவர். என்றைக்காவது ஒருநாள் மத்திய அமைச்சராகாமல் உயிர்விடப் போவதில்லை. தவிரவும் பிராந்தியத்தில் மிகப்பெரிய லாரி முதலாளி. என்ன குறைச்சல்? ஆங்.. கொஞ்சம் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். கனவின் பெரும்பகுதி வெற்றி அதில் இருக்கிறது. எதிர்த்த ஹிந்தி என்றாலும் எதிர்காலம் அதில் இருப்பதாகத்தான் வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியன் சொல்லியிருக்கிறான். அரசியலில் எதிரி என்று எவருமில்லை. எப்படி நண்பர்களாகவும் யாருமில்லையோ அங்ஙனம். ஆகவே அவர்தம் சமஸ்தானங்களைத் தெளிவாகப் பிரித்துக்கொண்டு நிர்வகிக்கத் தொடங்கினார்.

உலகம் பார்ப்பதற்கு ஒளி விளக்கு ஏற்றப்பட்ட இரண்டு கட்டு வீடு. தழையத் தழையத் தமிழ்த்தாலியும் நெற்றி நிறைத்த குங்குமமும் அணிந்த மனைவி. வருபவர்களுக்கு அங்கே வாழை இலை போட்டு அவசியம் உண்டு வீட்டுச் சாப்பாடு. அம்மா கையால சாப்ட்டு எத்தினி நாளாச்சு என்று உறிஞ்சி உண்டவர்களில் பெரும்பாலானோர் அவரது இன்னொரு சிறிய இல்லத்துக்கு வரக்கூடியவர்கள் இல்லை. அதற்கொரு தனித்தகுதி வேண்டும். அதிலும் விஞ்சியவர்களை மட்டுமே பொதுவாக அவர்தம் பிரத்தியேக அலுவலகத்துக்கு அழைப்பார்.

முத்துராமனுக்கு அதுதான் வியப்பாக இருந்தது. அவனுக்கு வட்டத்தைத் தெரியும். கூட்டங்களில் பார்த்ததும் தோளில் தட்டி நலம் விசாரிக்கிற வட்டம். அப்பா எப்படி இருக்குறாரு என்று அன்புடன் இரண்டு சொற்கள். வீட்டுக்கு அழைத்ததில்லை. அதுவும் இரண்டாவது வீட்டுக்கு? வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இரண்டு இனிய இல்லங்கள் பற்றியும் மூன்றாவதான அந்த ரகசிய அலுவலகம் குறித்தும். என்றைக்காவது ஒருநாள் வட்டத்தின் அன்பு வட்டத்துக்குள் வரமாட்டோமா என்பதுதான் அவனது நீண்டநாள் ஏக்கமாக இருந்தது. ஆனால் விதி அவனை நகரச் செயலாளரைத் தாண்டவிடாமல் அடித்துக்கொண்டிருந்தது.

ஒரு சமயம் விளம்பர டிசைன் ஒன்றை வட்டத்திடம் காட்டி ஒப்புதல் பெறவேண்டியிருந்தது. நானே கொண்ட்டுபோய் காட்டிட்டு வந்துடறேங்க என்று அவன் நகரச் செயலாளரிடம் சொன்னான். உண்மையில் அப்போது முத்துராமனுக்கு உள்நோக்கம் ஏதுமிருக்கவில்லை. ஆனாலும் நகரம் கண்டிப்பாக மறுத்துவிட்டது.

“இந்தாபாரு முத்துராமா. நீ அரசியல்ல நாலு வருசமா இருக்க. நான் ஏளு வருசம். நமக்குள்ளார கண்ணாமூச்சியே வேணாம். இன்னும் மூணு வருசம் நீ எனக்கு சேவ செய்யி. அப்பால நீ வட்டத்தாண்ட போவலாம். அநேகமா அப்ப நான் வட்டமா இருப்பேன். உன்னிய நல்லாத் தெரிஞ்சவனா, லச்சணமா வாய்யான்னு கட்டிப்புடிச்சி வரவேற்பேன். என்னா நாஞ்சொல்றது புரியுதா?”

முத்துராமனுக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. இது அரசியல். மின்சாரத்தைவிடவும் அபாயம் பொருந்தியது. நெருங்குவதில் கவனம் வேண்டும். தொடுவதில் மேலும். சற்று அசந்தாலும் உருக்கிச் சுருட்டி எறிந்துவிடும். ஆகவே தவறிழைத்துவிட்டவன் போல் வாய்பொத்திப் பின்வாங்கிப் போய்விட்டான்.

என்றாவது ஒருநாள். எப்போதாவது ஒரு தருணம். கண்டிப்பாகத் தான் மேலே வந்தே தீரவேண்டும் என்பதே அவனது லட்சியமாக இருந்தது. படித்து முடித்து ஆபீசராகும் உத்தியோகமில்லை இது. தொண்டு செய்துதான் வந்தாக வேண்டும். அவனுக்குத் தெரியும் அது. எதற்கும் சளைக்காமல்தான் இயங்கிக்கொண்டிருந்தான். தீவிரமாக. மிகவும் உக்கிரமாக. அதிகநாள் அவகாசம் தேவைப்படும் என்று அவன் நினைக்கவில்லை. எப்படியும் பத்து வருடங்களுக்குள் தானொரு எம்.எல்.ஏ. ஆகிவிட முடியும் என்றுதான் நினைத்தான். பின்புலம் இல்லை. அதனாலென்ன? ஆர்வம் இருக்கிறது. கவனம் இருக்கிறது. நோக்கத்தில் திசை தடுமாறாத உறுதி இருக்கிறது. போதாது?

ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் அவன் காத்திருந்தான். ஒரு வகுப்பில் படிக்காமல் கடந்து மேலே போகிற சந்தர்ப்பம். திறமைக்குக் கிடைக்கிற அங்கீகாரம் போல உழைப்புக்கும் ஒருநாள் கிடைக்காமலா போய்விடும்?

“நீ வேலைக்காரன்னு உன்னிய கூப்புடல முத்துராமா. நீ மூளைக்காரன். அது எனக்குத் தெரியும். நம்ம பசங்களும் பல சந்தர்ப்பத்துல சொல்லியிருக்கானுக. போன எலக்சன் டயத்துல வீட்டுக்கு வீடு குங்குமச் சிமிழ் குடுத்தப்ப, நீதான் உள்ள குங்குமத்த ரொப்பி, ஒரு வெள்ளி காயின் வெச்சிக் குடுங்கன்னு சொன்னியாம்? வடிவேலு சொன்னான். என்னாமா ஒர்க் அவுட்டு ஆச்சு பாத்தல்ல? அதான். அதான் வோணும் எனக்கு. பொம்பளைங்கள கவர் பண்ணீரணும்டா. செலவு ஒரு மேட்டரே இல்லன்னு வையி. எனக்கு இப்ப என்னா வோணும்? ஒரு கவன ஈர்ப்பு. ஜனவரில கட்சி மாநாடு பாளையங்கோட்டைல நடக்கப்போவுது. மெயின் அஜண்டா இன்னா தெரியுமா? சென்ட் ரல் மினிஸ்டிரில ரெண்டு சீட்டுக்கு பை எலக்சன் வருதில்ல? அதுக்கு யாரப் போடலாம்னிட்டு முடிவு பண்ணப்போறாங்க..”

முத்துராமனுக்குக் குழப்பமாக இருந்தது. இவர் என்ன சொல்ல வருகிறார்? எப்படி இவரால் மத்திய அமைச்சர் பதவி வரை யோசிக்க முடிகிறது?

“புரியிதுரா.. நீதான் இன்னும் வளரணும். தபாரு.. லைனுகட்டி சொல்லிக்கினே வரேன். கரெக்டா பாயிண்ட புடிச்சிக்கிட்டே வா. புரியும். ரெண்டு சீட்டு அங்க வேகண்டு. ஆள் போட்டாவணும். யார போடுவாங்க? இது தினத்தந்தி படிக்கற எல்லாருக்கும் தெரியும். நான் அத்த சொல்லல. ரெண்டு தலைங்க புச்சா கேபினட்டுக்குள்ளார போச்சின்னா அந்த போஸ்டுக்கு இன்னும் ரெண்டு நவுரும். யார் அந்த ரெண்டு? ராஜ்ய சபாவுல வெத்துக்கு பல்லு குத்திக்கினு குந்திக்கினுகீதுங்களே, அதுங்கள்ள ரெண்டு. ஏன்னா நமக்கு லோக் சபா எம்பி பவர் வேற இல்ல. அப்பிடியே நவுந்து நவுந்து வந்திச்சின்னு வையி. எப்பிடியும் எங்கயாச்சும் அதே ரெண்டு சீட்டு வேகன்சி வந்துதான் ஆவும். என்னிய ராஜ்ய சபா எம்பி ஆக்குவாங்கன்னு கூட நான் எதிர்பார்க்கல. அட்லீஸ்டு, அதுக்கு பக்கத்து வூட்டு காம்பவுண்டு செவுரு மேல குந்திக்கற மாதிரியாச்சும் ஒரு சான்ஸ் இப்ப கிடைச்சாவணும். இத்த வுட்டேன்னு வையி. அடுத்த ரெண்டு வருசம் ஜென்ரல் எலக்சன் வர்ற வரைக்கும் இப்பிடியே வட்டமா சுத்திக்கினு இருக்கவேண்டியதுதான்.”

முத்துராமனுக்குப் பாதி புரிந்து, பாதி புரியாதது போலிருந்தது. ராஜ்ய சபா எம்.பிக்களில் இருவர் அமைச்சரானாலும் அங்கு வேகன்ஸி ஏற்பட சந்தர்ப்பம் இல்லையே? ஆனால் மேற்கொண்டு கேள்வி கேட்டு வட்டத்தை டென்ஷன் ஆக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ‘சொல்லுங்க தலைவரே, நான் என்ன செய்யனும்?’ என்றான் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு. வட்டம் எம்பி ஆகிறாரோ, என்னமோ, ஓரடுக்கைத் தாண்டித் தன்னுடைய தொடர்பு விரிவடையப்போகிற சந்தோஷம் அவனுக்குள் பரவியிருந்தது.

“எனக்கு ஒரு ஐடியா வோணும் முத்துராமா. மாவட்டச் செயலாளராண்ட நமக்கு நல்ல கனெக்சன் இருக்குது. வெவசாய அமைச்சரும் வேண்டப்பட்டவருதான். ஆனா பாரு.. பாத்தா நல்லாருக்கியான்னு கேக்கறாங்களே தவிர, எனக்கு நல்லது செய்யணும்னு அவிங்களுக்குத் தோணமாட்டேங்குது. நான் ஒருத்தன் முக்கியஸ்தன்னு புரியவெக்கணும். எனக்கு அப்பால வந்த நாலு பயலுவ மேல பூட்டானுங்க. இருவது வருசமா கட்சில இருக்கேன். என்னா சொகத்த கண்டுட்டேன்? இந்த நெனப்பு சாஸ்தியாயிட்டா தூக்கம் வரமாட்டேங்குது முத்துராமா. பதவிசொகம்னு இல்ல. எதுக்காக இத்தினி வருசம் உழைச்சோம்னு ஒரு கேள்வி வருதில்ல? சாமி இல்லன்னு சொல்லிட்டு, சாமி சொன்னமாதிரி, கடமைய செய்யி, பலன எதிர்பார்க்காதன்னு மேலிடம் சொன்னா கேக்கமுடியுமா?”

முத்துராமனுக்கு வியப்பாக இருந்தது. அவன் அதுநாள்வரை நான்கு வார்த்தைகளுக்கு மேல் மொத்தமாகப் பேசியிராத வட்டச் செயலாளர். இப்படிக் கூப்பிட்டு சோபாவில் உட்காரவைத்துவிட்டு எதிரே மேசைமீது சம்மணமிட்டு அமர்ந்து நூறு வருடம் பழகியவர்போல் பேசுகிற மனிதர். எத்தனை உரிமை, எத்தனை சுவாதீனம்? இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால் பேட்டையில் முத்துராமனின் மதிப்பு அந்தக் கணமே பலமடங்கு அதிகரித்துவிடும்.

“வேணாம் முத்து. உன்னோட வெச்சிக்க. நீ ரகசியம் காப்பேன்ற நம்பிக்கையில சொல்லுறன்.. எனக்கு ஒரு டக்கர் ஐடியா மட்டும் குடு. அது ஒர்க் அவுட்டு ஆயிருச்சின்னா நான் எங்கியோ போயிருவேன். எனக்கு ஹெல்ப் பண்ண உன்னிய மறக்காம கண்டிப்பா நல்லது செய்வேன். மாநாட்டுக்கு முன்னால நாம செய்யப்போற காரியம் ஹிட்டாகி, தலைவராண்ட போவணும். அட எவண்டா அவன், சூப்பரா ஒரு வேலை பண்ணிட்டானேன்னு அவரு ஆச்சர்யப்படணும். இன்னமே உப தேவதைங்கள நம்பி பிரயோசனமில்லன்னு முடிவுக்கு வந்துட்டேன்..”

முத்துராமனுக்கும் அதுவே சரியென்று பட்டது. அவனளவில் நகரம் ஒரு உப தேவதை. வட்டம் தேவதை. நாளைக்கு வட்டம் உபதேவதையாகும். மாவட்டம் தேவதையாகும். தேவதைகளின் வழியே தெய்வத்தை அடையவேண்டும். நீண்ட பயணம்தான். ஆனாலும் தொடங்குவதற்கு இதோ ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

பரபரவென்று யோசித்தான். ஒரு செயல். ஒரே ஒரு செயல். ஆனால் ஒட்டுமொத்த கட்சியாட்களின் கவனத்தையும் கவரவேண்டும். தலைவர் வரை சென்று தாக்கவேண்டும். வட்டம் சொன்னதுபோல, அந்தச் செயலின் வெற்றியை அவர் தலைவரின் காலடியில் சமர்ப்பித்து வணங்கும்போது அவருக்கு டில்லி செல்லும் விமானத்தில் ஒரு டிக்கெட் கிடைத்தாக வேண்டும். என்ன செய்யலாம்?

வட்டம் மேசையிலிருந்து கீழிறங்கி, நாற்காலிக்கு வந்தார். முத்துராமன் சடாரென்று எழுந்து அவரருகே சென்று கைகளைப் பிடித்தான்.

“ஒரு ஐடியா தலைவரே!”

“சொல்லு! சொல்லு!” என்று பரபரப்பானார்.

“கொசு!” என்றான் முத்துராமன்.

5


அத்தியாயம் ஐந்து


அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அண்டு நற்பணி மன்றம் (ரிஜிஸ்டர்டு) போர்டு வைத்துக் கொடி பறந்த தூண் அருகே வெளேரென்று வேட்டி கட்டி இரண்டு பேர் வந்து இறங்கினார்கள். பக்கவாட்டு ஸ்டாண்டு போட்டு நிறுத்திய பைக்கின் முன்புறம் சிறிதாகக் கட்சிக்கொடி பறந்தது. பன்னிரண்டு வருடங்களாகப் பறக்கிற கொடி. ஒரு லைசென்ஸின் பணியைச் செவ்வனே செய்யும் சிறந்த மாற்று. பின்னால் வந்து நின்ற வெள்ளை நிற அம்பாசிடரிலிருந்து வட்டச் செயலாளர் இறங்கினார். ஒரு பக்கத் துணையாக மேலும் நான்கு பேர் அவர் பின்னால் இறங்கிவந்து நின்றார்கள்.

இறங்கியவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். நூறு, நூற்றைம்பது குடிசைகள் இருக்குமா? அளவெடுத்துத் தைத்தது போல் முன்புறம் சரிந்த கூரைகள். வீதியில் காய்ந்த அலுமினியப் பாத்திரங்கள், துணிகள். எல்லாச் சந்துகளிலிருந்தும் புறப்பட்டு ஓடும் நிஜார் மட்டும் அணிந்த சிறுவர்கள். எங்கோ தூரத்தில் கேட்கிற பெண்கள் சண்டையொலி. அந்தப் பக்கம் ஓடுகிறது ஆறு. அடையாறு என்பார்கள். இனியும் வெட்டியெடுக்க மண் இல்லாத காரணத்தால் லாரி முதலாளிகளால் கைவிடப்பட்டு ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. முத்துராமன் சொல்லியிருந்தான். ‘வந்து பாருங்க தலைவரே.. துணி துவைக்கறவங்க பெரும்பாலும் கல்லு தேடுறதே கெடியாது. அப்படியே தரையில நாலு குமுக்கு குமுக்கி அலசிப் புழிஞ்சி போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க. அப்பால எங்கேருந்து தண்ணி தங்கும்?’

ஆ, ஏழைகளின் பிரச்னை. எத்தனை யுகங்களாக ஒரு ஜீவநதி போல் தழைத்துக்கொண்டிருக்கிறது? ஒரு சந்தர்ப்பம் கொடுத்து நாலு பேரைக் கூப்பிட்டு வைத்துப் பேசச் சொன்னால் மணிக்கணக்கில் பொழிந்து தள்ளிவிடுவார்கள். தேர்தல் தோறும் நடக்கிறதுதான். கேட்டீர்களா? இதெல்லாம் எப்படித் தீரும் என்று நினைக்கிறீர்கள்? எங்களுக்கு வோட்டுப் போட்டாலொழிய உங்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வேறு யாருமில்லை. ஆகவே என்னருமை மக்களே, மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்துவிடாதீர்கள்.

ஒரு சமயம் வட்டம், மாவட்டத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது மாவட்டம் பேச்சு வாக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்.

“இந்தா பாருய்யா.. ஒரு லாஜிக்கு இருக்குது. கஸ்டப்படறவன்னு நாலு பேரு இல்லன்னா நாமல்லாம் தலைல துண்டு போட்டுப் போய்க்கினே இருக்கவேண்டியதுதான். குறிப்பா படிக்காதவன். யோசிச்சிப் பாரு. படிச்சவன் எத்தினி பேரு நமக்கு வோட்டுப் போடுறான்? வுட்டா நெத்தில கொழச்சி நாமத்த போடுவான். ஒலகத்துல ஒரே ஒரு நியாயம்தான் நெரந்தரம். கடல் நெறைய மீனு இருக்கறது நாம திங்கறதுக்காக. கோழியும் ஆடும் கூட்டம் கூட்டமா உற்பத்தி ஆவுறது நாம திங்கறதுக்காக. கோழிக்கு தீவனம்தான் போடுவ. கோயிலா கட்டுவா? அதே மாதிரிதான். எலக்சன் டயத்துல சில்வர் குடம் குடு. சிரிப்பு மாறாம கைகூப்பு. ஆத்தா நீதான் வாழவெக்கணும்னு கால்ல வுழு. தப்பே இல்ல. ஆனா அத்தோட நிப்பாட்டிக்க. உன்ன முன்னேத்தறேன் பேர்வழின்னு போயி உஸ்கூலு தெறக்கறேன், ஆட்டோ வாங்கித்தரேன்னு ஆரமிச்சன்னா, அவன் காலு மேல காலு போட்டுக் கேள்வி கேக்க ஆரமிச்சிருவான். நாலு வார்த்த அவன் இங்கிலீசுல பேசினான்னா உன் நெஞ்சு தாங்குமாய்யா? அடைகாக்கணும்யா.. அப்பிடியே அலுங்காம குலுங்காம வம்சம் வம்சமா அவங்கள இருக்கறபடியே அடை காக்கணும். அவ்ளோதான்..”

ஒரு காலத்தில் மாவட்டம் நிறைய சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் வட்டமாக இருந்த காலம் அது. எப்போதும் ஏழெட்டு சீடர்கள் அவரைச் சுற்றி இருப்பார்கள். ஓய்வும் மூடும் வாய்த்தால் பொன்மொழிகளாக உதிர்த்துக்கொண்டே இருப்பார். நிறைய ரத்தினங்கள். நிறைய கெட்ட வார்த்தைகள். தடாலடி விமரிசனங்கள். அங்கே நக்கல் கொஞ்சம். இங்கே ஏக்கம் கொஞ்சம். அவருக்கும் கனவுகள் இருந்தன. யாருக்குத்தான் இல்லை? கழுதையாக மாறிக் காலமெல்லாம் சுமந்தேதான் தீரவேண்டியிருக்கிறது. சில சமயம் கழுதை உதைக்கும். சில சமயம் சுமந்த கனவை பத்திரமாக இறக்கிவைக்கும். அவர் மாவட்டமாகி, எம்.எல்.ஏவும் ஆகி அடுத்த வருடம் அமைச்சரே ஆகிவிடுவார் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

வட்டம் பெருமூச்சு விட்டார். தன் கழுதைக்கு உதைக்க மட்டுமே தெரிந்திருந்த அவலத்தை நினைவு கூர்ந்ததன் விளைவான பெருமூச்சு அது.

“எலேய், ஓடுடா. முத்துராமன் வூடு எதுன்னு கேளு, கேட்டுக்கினு வா.”

சட்டென்று தரையைத் தொட்டு உத்தரவிட்டார் வட்டம். இரண்டு பேர் ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். இது ஒரு முயற்சி. அநேகமாக அவரது வாழ்நாளில் மேற்கொள்ளப்போகிற மிகப்பெரிய முயற்சி. அசுர முயற்சி என்பார்களே, அது. தானும் தனக்கு வேண்டியவர்களுமாக நாள் கணக்கில் உட்கார்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோதெல்லாம் இப்படி ஒரு யோசனை தோன்றியதில்லை. ஒரு குப்பத்தைத் தத்தெடுத்து முன்னேற்றுகிற யோசனை. முத்துராமன் என்கிற சாதாரணத் தொண்டன் கொடுத்த யோசனை. நல்லது. தொண்டர்கள் யோசிப்பவர்களாகவும் இருப்பது உத்தமம். ஆனால் தலைவர்களுக்காக மட்டும்.

“எலேய், அந்த முத்துராமன் டெய்லர் வேல தானே பாக்கறான்? சரியாத் தெரியும்ல?” என்றார் திரும்பிப் பார்த்து.

“ஆமா தலைவரே.. அதனாலதானே தையல் மிசின் வாங்கி எடுத்தாந்திருக்கோம்?” என்றான் ஓர் அடிப்பொடி.

“ஆங்..” என்று எங்கோ பார்த்து என்னவோ சிந்திக்கத் தொடங்கினார் வட்டம். முத்துராமன் பேசியவை அனைத்தும் அவருக்கு மீண்டும் செவிகளில் ஒலித்தன.

“அரசியல் முக்கியம்தான் தலைவரே. முழிப்போட இருக்கறது முக்கியந்தான். ஆனா அப்பப்ப நாம மக்கள் பக்கம் இருக்கம்னு காட்டிக்கத்தாவலையா? நம்மூருல அரசியல்வாதிங்களவுட பிரசிடெண்ட ஏன் மக்கள் தெய்வமா நினைக்கறாங்க? யோசிச்சிப் பாருங்க. மத்திய பிரதேசத்துல எவனானா ஒரு எம்.எல்.ஏ., எம்.பிக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு நினைக்கறிங்க? சான்சே இல்ல.. தலையெழுத்தேன்னு ஓட்டு போடுறான். அந்தம்மா யாரு அது.. ஆங், மேதா பட்கர்.. அவங்க பின்னாடி எத்தினி பேரு கூட்டம் கூட்டமா போறாங்க பாருங்க.. இன்னாத்துக்காக அந்தம்மா அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கணும்? சொல்லுங்க பாக்கலாம்? காந்தி ஃபார்முலா தலைவரே.. என்னிக்கானாலும் ஃபெய்லியர் ஆவாத மேட்டர் அது. மக்களுக்காக நிக்கறேன்னு தெரிஞ்சாத்தான் அவன் நம்மள நம்புவான். ஓட்டுக்காக வரேன்னு தெரிஞ்சா முடிஞ்சவரைக்கும் கரந்துக்கிட்டு அனுப்பிரலாம்னுதான் பாப்பான்..”

வட்டத்துக்குப் புல்லரித்துப் போய்விட்டது. சாதாரண குப்பத்துவாசி. டெய்லராகப் பிழைப்பு நடத்துபவன். ஆனாலும் தவறாமல் தினத்தந்தி படிக்கிறான் போலிருக்கிறது. மேதா பட்கர்.. ஆங், தெரிந்த பெயர்தான். என்னமோ கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார் இல்லை?

“அதான் அந்த டேம் மேட்டரு தலைவரே. குஜராத்து, மத்தியபிரதேசம் நடுவால நர்மதா நதிமேல கட்றதா சொன்னாங்களே.. சர்தார் பட்டேலோ என்னமோ..”

அடச்சே, சர்தார் சரோவர். ஞாபகம் வந்துவிட்டது. என்ன அவஸ்தை இது. ஒரு தொண்டனின் உலக ஞானம் கூடத் தலைவருக்கு இல்லாமல் இருந்தால் பிறகு எப்படித் தான் பார்லிமெண்டுக்குப் போவது? தினசரி படிக்கும் தினத்தந்தியில் சினிமா பக்கங்களிலேயே புத்தி நிற்கிறது. மாற்றிக்கொள்ள வேண்டும்.

“வாங்க, வாங்க தலைவரே.. என்னாது இது சொல்லாம கொள்ளாம? ஒரு வார்த்த சொல்லிவுட்டிங்கன்னா நா வந்திருக்கமாட்டனா?” பதறிக்கொண்டு வந்து நின்றான் முத்துராமன்.

வட்டம் புன்னகை செய்தார். வண்டியிலிருந்து தையல் மிஷின் இறக்கப்பட்டது.

“வெச்சிக்க முத்துராமா.. ஒனக்குத்தான்”

கூட்டம் கூடிவிட்டது. வீதியில் நாற்காலி போடப்பட்டு தலைவர் உட்காரவைக்கப்பட்டார்.

“பாத்துக்கங்கடா.. ஊல ஒலகத்துல, தேர்தல் இல்லாத காலத்துல எந்தத் தலைவரு இப்படி நம்மளயெல்லாம் பாக்க வருவாரு? இந்த நெனப்பு எல்லார் மனசுலயும் எப்பவும் இருக்கணும்” என்றான் முத்துராமன். தலைவர் புன்னகை செய்தார். முத்துராமனின் அம்மா அவருக்கு காப்பித்தண்ணி எடுத்து வந்து கொடுத்தாள். அவனது தந்தை தள்ளாடி எழுந்து வந்து வணக்கம் சொன்னார்.

“நல்லா இருக்கிங்களா?’’

“ஐயா.. நீங்க உக்காருங்க.. நீங்க ஏன் எழுந்து வரணும்? நான் வரமாட்டனா?” என்று வட்டம் நம்பமுடியாத அடக்கம் காட்டிப் புல்லரிக்கச் செய்தார்.

“முடியலங்க.. சக்கர நோய்ன்னாங்க. அது என்னாவோ, என்ன எளவோ.. காலு ரெண்டும் வீங்கிக்கினு எளுந்து நடமாட முடியாம போயிடுச்சி. என்னிக்கிப் போய் சேரப்போறனோ..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. டேய் வடிவேலு.. ஐயா யாரு தெரியும்ல? நம்ம கட்சிக்காக அந்தக் காலத்துல மாடா உழைச்சவரு.. நானெல்லாம் அரசியல் படிச்சதே இவங்ககிட்டல்லாம்தான்..” சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள் கொஞ்சநேரம்.

முத்துராமன்தான் விஷயத்தை ஆரம்பித்தான். வட்டச் செயலாளர் வந்திருக்கும் விஷயம். கொசு ஒழிப்பு. யாரும் சிரிக்காதீர்கள். மிகப்பெரிய பிரச்னை அல்லவா அது? காலம் காலமாகப் பேட்டைவாசிகளை எத்தனை பாடு படுத்திவந்திருக்கிறது? அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எத்தனை நூறு பேருக்கு இங்கே யானைக்கால் நோய் இருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்.

“மருந்து அடிக்கப்போறாங்களாமா?” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

முத்துராமன் திரும்பிப் பார்த்தான்.

“ஆமா தல.. மருந்தடிப்பாங்க. மத்ததும் செய்வாங்க.. மூணு மாசம் டயம். நம்ம பேட்டைய தலைவரு சுவிட்சர்லாந்து மாதிரி மாத்திக்காட்டப்போறாரு பாருங்க.. டேய், நம்ம பேட்டைய தலைவரு தத்தெடுத்திருக்காருடா.. சொந்தக்காசுல அத்தினியும் பண்ணப்போறாரு..”

ஓவென்று சந்தோஷக் கூக்குரலிட்டது கூட்டம். சுவிட்சர்லாந்து எந்த நாட்டுக்குப் பக்கத்து நாடு என்று வட்டம் யோசித்துப் பார்த்தார். சரியாகத் தோன்றவில்லை. எதற்கு அதெல்லாம் என்று வேறு விஷயம் யோசிக்கத் தொடங்கிவிட்டார்.

அவரைப் பொறுத்தவரை அது வாழ்வா சாவா பிரச்னை. இதுதான். இது ஒன்றுதான் இறுதி முயற்சி. இங்கே தொடங்குகிற ஓட்டம் பாராளுமன்றத்தில்தான் போய் முடியவேண்டும். சாதனை செய்க பராசக்தி. துணிந்து எழுந்து அந்தக் குப்பத்தின் கொசுத்தொல்லையை ஒழிப்பதற்காகவும் இதர நலப்பணிகளுக்காகவும் பதினைந்து லட்ச ரூபாய் செலவிடவிருப்பதாக அறிவித்தார்.

கூட்டம் ஜோராகக் கைதட்டியது.

6


அத்தியாயம் ஆறு


குவார்ட்டர் விட்டது போல கிர்ர்ரென்றிருந்தது முத்துராமனுக்கு. ஆல்பர்ட் தியேட்டரில் டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்று நண்பர்கள் சொன்னபோது உடனே சாந்தியின் ஞாபகம் வந்தது பெரிய விஷயமில்லை. தியேட்டர் வாசலில் அவளைச் சந்திக்க நேர்ந்ததில்தான் அவன் திக்குமுக்காடிப் போயிருந்தான்.

பார்த்ததும் உடனடியாக ஒரு புன்னகை தருவதில் பிரச்னை ஏதுமிருக்கவில்லை. ஆனால் அடுத்தக் கணம் என்ன பேசுவது என்று புரியாமல் சற்றுத் திணறிவிட்டான். நல்லாருக்கியா என்று கேட்கலாமா? அபத்தம். பார்த்துவிட்டு வந்து மூன்று நாள்தான் ஆகிறது. அப்பா, அம்மா சௌக்கியமா? அது அதை விட அபத்தம். என்னமோ பிறந்ததிலிருந்து பழக்கம்போல் அப்படியெல்லாம் போலியாக விசாரிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. சரி, படம் பாக்க வந்தியா? அது, எல்லாவற்றையும் விட. தியேட்டருக்கு வேறு எதற்கு வருவார்கள்?

அவனது திணறலை சாந்தி மிகவும் ரசிப்பது போல் பட்டது. அவளும் யாரோ ஒரு பெண்ணுடன் தான் வந்திருந்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று முத்துராமன் அவசரமாக, ‘ஒரு நிமிஷம்’ என்று அவளிடம் சொல்லிவிட்டு, தன்னுடன் வந்திருந்த நண்பர்களைத் தள்ளிக்கொண்டு பத்தடி பின்னால் போனான்.

‘மாப்ள, இவதாண்டா.. இவளத்தான் போய் பாத்துட்டு வந்தேன். ஜனவரில கல்யாணம்னு சொல்லியிருக்கு.’

‘கொய்யால.. கணக்காத்தான் இங்க படம் பாக்க வந்திருக்க’ என்று சந்தோஷத்தில் அவன் தோளைத்தட்டி, ‘அண்ணிய அறிமுகப்படுத்திவெச்சிருடா.. அப்பால மறந்துடப் போறாங்க’ என்றான் கதிர்.

சட்டென்று முத்துராமனுக்குப் பேசுவதற்கு ஒரு விஷயம் அகப்பட்டுவிட்டதுபோலத் தோன்றியது. வா என்று அவர்களைத் தள்ளிக்கொண்டு அவளருகே போனான்.

‘சாந்தி.. இது கதிரு. என் சிநேகிதன். இவன் ரஜினி ராம்கி. அவன் ஜெயச்சந்திரன்..’

‘டேய், போரும்டா.. நீ பேசிட்டிரு. நாங்க அங்க நிக்கறோம். படம் ஆரம்பிக்க பத்து நிமிஷம்தான் இருக்கு’ என்று சந்தர்ப்பம் அறிந்த சொந்தச் சகோதரன் ஒருவன் திரும்பி நடந்தான். நண்பர்கள் சிரித்தபடி நகர்ந்து போனார்கள்.

முத்துராமன் கண்டிப்பாக அப்படியொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கவில்லை. சினிமா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று கட்டாயப்படுத்தி அவனது நண்பர்கள் அழைத்துவந்திருந்தார்கள். தலைவர் படம். கண்டிப்பாக வெகு சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று எல்லோரும் ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்த தலைவர். தனிக்கட்சியா, இருப்பதில் ஒன்றா என்று தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில் அந்த விவாதங்கள் நடந்தபோது முத்துராமன் கருத்து சொல்லியிருக்கிறான். வருவதும் வராததும் அவர் இஷ்டம். அவருக்காகத் தான் புதிய கட்சியில் சேர முடியாது. ஆனால் படம் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கிற வழக்கத்தில் மாறுதல் இருக்காது.

அவனுக்கு அவனுடைய அம்மாவும் சித்தப்பாவும் தாத்தாவும் பல சமயம் அந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். மாநகராட்சி மருத்துவமனையில் அவன் பிறந்தபோது, சொந்தக்காரப் பெண்கள் ஆளுக்கொரு கைத்தறிப் புடைவையை மடித்துக் கையில் வைத்துக்கொண்டு குழந்தையை எடுத்துக்கொள்ளத் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். டாக்டரம்மா அவனை ஒரு பூச்செண்டு போல் ஏந்தி எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ வேகமாக அவனுடைய தந்தை ஓடி வந்தார்.

‘ஒரு நிமிசம் டாக்டரம்மா..’

பாய்ந்து வந்தவர் கையில் புத்தம் புதிய கட்சிக்கொடி. ‘குழந்தைய என்கிட்ட குடுங்க. எம்புள்ள மவராசன் மேல மொத மொத இந்தக் கொடிதான் படணும்’

யாரும் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்காரக் குடும்பம்தான். தீவிரத் தொண்டர் வம்சம்தான். ஆனாலும் பிறந்த குழந்தையைக் கொடியில் ஏந்தும் அளவுக்கா விசுவாசம் இருக்கும்?

‘விசுவாசமில்ல டாக்டரம்மா.. எங்க சுவாசமே இதுதான்..’ முத்துராமனின் தந்தை, கையில் கிடந்த குழந்தையைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டுத் தலைவரின் பெயரைக் காதில் சொல்லி, ‘வாழ்க’ என்றபோது டாக்டரம்மா சிரித்தார்.

‘கட்சியெல்லாம் இருக்கட்டுங்க. புள்ள பொறந்திருக்கான். நல்லா படிக்கவைங்க மொதல்ல. படிச்சி பெரியாளாவட்டும்.’

‘அ.. அதெல்லாம் கரீட்டா செஞ்சிருவம்ல? எத்தினி படிச்சாலும் எம்புள்ள எங்க கட்சிதான். என்னால போவமுடியாத உயரத்துக்கு அவன் போவப்போறான் டாக்டரம்மா. பாத்துக்கினே இருங்க.. இதே ஆசுபத்திரிய இன்னும் பெரிசா மாத்திக்கட்டி தெறப்பு விழாவுக்கு அவன் வந்து குத்துவெளக்கேத்துவான்!’

என்னென்னவோ பேசினார். பேசிக்கொண்டே இருந்தார். மனத்தில் முட்டி மோதிக்கொண்டிருந்த மகிழ்ச்சிக்கு சொற்களும் அர்த்தமும் முக்கியமில்லை. வெளிப்பாடு போதும். அவர் கண்ணில் தெறித்த பரவசம் டாக்டருக்குப் புரிந்தது. ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

முத்துராமன் பலமுறை கேட்ட அந்தக் கதை இப்போது நினைவுக்கு வந்தது. ஏனோ அதை சாந்தியிடம் சொல்லவேண்டும்போலிருந்தது. ஏதாவது பேச விரும்பினான். அன்பாக. அல்லது தன்னைப் பற்றி. அவளைப்பற்றியும் கேட்கலாம். உட்கார்ந்து பேச அவகாசமில்லை. நண்பர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடக் கூடும். ஆனால் சடாரென்று கட்சிக்கொடியில் தன்னை வாங்கிக்கொண்ட தந்தையிடமிருந்தா தொடங்கமுடியும்?

‘எப்படி இருக்கே? படம் பாக்க வந்தியா?’

‘இல்ல.. எந்தங்கச்சி இங்க பாப்கார்ன் சப்ளை பண்ண வந்தா. அவள கூட்டிக்கினு போவலாம்னு வந்தேன்’

‘அட, பாப்கார்ன் பிசினஸ் பண்றிங்களா?’

‘இல்லல்ல.. செட்டியார் வூட்ல செஞ்சி பாகிட் பண்ணி குடுப்பாங்க. இவ எடுத்தாந்து இங்க போட்டுட்டுப் போவா. கூட மாட இருந்தா அஞ்சு பத்து கிடைக்கும்ல?’

தியேட்டரின் வராந்தாவில் ஐஸ் க்ரீம் கடை அவன் கண்ணில் பட்டது. அவளை அழைத்துப்போய் கோன் ஐஸ் வாங்கித் தரலாமா என்று நினைத்தான். ஏதாவது நினைத்துக்கொண்டுவிட்டால்?

‘கலர் குடிக்கறியா?’ என்று கேட்டான்.

‘ஐயே.. அதெல்லாம் வாணாம்.. நான்.. நான் வந்து..’ அருகே சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த அவளது தோழி ரகசியமாகச் சிரிப்பது போலப் பட்டது.

‘உன் ஃப்ரெண்டுக்கும் சேர்த்துதான் சொல்லுறேன்..’

‘எலேய் மாப்ள.. சைக்கிள் கேப்புல எங்கள மறந்துறாத.. சைதாப்பேட்டைலேருந்து உன்னிய வெச்சி மிதிச்சிக்கிட்டு வந்திருக்கோம்.. அது நெனப்புல இருக்கட்டும்..’

பின்னாலிருந்து நண்பர்கள் குரல் கொடுத்தார்கள். அவனுக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. கடவுளுக்கு நன்றி. இது எதிர்பாராதது. அர்த்தமற்ற சந்திப்புதான் என்றபோதும் ஆனந்தமாக இருக்கிறது. வெட்கப்பட்டுக்கொண்டு அவள் ஓடிவிட்டாலும்கூட சந்தோஷத்தில் குறைவிருக்காது என்று தோன்றியது. ஆனால் சாந்தி அநாவசியமாக வெட்கப்படுகிற பெண்ணாகத் தெரியவில்லை. தைரியமாகத்தான் இருந்தாள். முகத்தை நேருக்கு நேர் பார்த்துத்தான் பேசினாள். அவனுக்குத்தான் குறுகுறுவென்றிருந்தது.

‘நாளைக்கு எங்கப்பா உங்க வீட்டுக்கு வருவாரு.. நாள் பாத்திருக்காங்க. நீங்க சொன்னாப்புல ரெண்டு மூணு முகூர்த்த நாளா பாத்திருக்கு. உங்களுக்கு எது வசதின்னு கேட்டுக்கிட்டு செய்யலாம்னு..’

முத்துராமனுக்கு நெஞ்சு வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. எது வசதி? இப்போதே திருமணத்தை முடித்துவிடலாம். ஆல்பர்ட் தியேட்டர் வாசல். பின்னணியில் அவன் மனத்துக்குப் பிடித்த நடிகரின் மாபெரும் கட் அவுட். மக்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை. கூடி நிற்கச் சொல்லி ஒரு குரல் கொடுத்தால் கண்டிப்பாகக் கூடிவிடுவார்கள். நடுச் சாலையில் திருமணம். பக்கத்தில்தான் தினத்தந்தி அலுவலகம் இருக்கிறது. செய்தி பரவி யாராவது நிருபர் வந்து படமெடுத்துக்கொண்டு போனாலும் வியப்பதற்கில்லை. அந்தப் பட்சத்தில் சாந்தியையும் கட்சி மாநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம்.

ஆனால், நீ வருவியா என்று கேட்டபோது மாட்டேன் என்று தலையசைத்துவிட்டாள்.

‘ஏன்? அரசியல் பிடிக்காதா உனக்கு?’

‘தெரியாது’ என்று பதில் சொன்னாள். ‘நமக்கெதுக்குங்க அதெல்லாம்? வேளைக்கு சோறு கிடைக்கறது பெரிய விசயம். அப்பாவால இப்பல்லாம் முன்னமாதிரி மீன்பாடி வண்டி மிதிக்க முடியறதில்ல.. கால் நோவுதுங்கறாரு. மோட்டார் வெச்ச சைக்கிள் ரிக்சா வாங்கணும்னு ஆசைப்படறாரு.. பணத்துக்கு எங்க போவறது? பணம் சம்பாரிக்கறதுக்குக் கூட மொதல்ல போடக் கொஞ்சம் பணம் வேண்டியிருக்குது. யோசிச்சிப் பாத்தா கோழிலேருந்து முட்டை வந்ததா, முட்டைலேருந்து கோழி வந்ததாங்கறமாதிரி இல்ல?’

முத்துராமனுக்குப் பெரிய ஆச்சர்யமாகப் போய்விட்டது. என்னமாய்ப் பேசுகிறாள் இவள்? சாதாரண சொந்த, சோகக் கதை. ஆனால் எத்தனை பெரிய தத்துவங்கள் அடங்கியதாக அமைந்துவிட்டது? கண்டிப்பாக இதற்குமுன்னால் தன்னுடைய கட்சிக்கொடியில் பிறந்த கதை எடுபடப்போவதில்லை.

‘கவலப்படாத சாந்தி.. எல்லாம் சரியாயிரும். சரியாக்கிறலாம். எங்க ஏரியா வட்டச் செயலாளரு நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு.. இந்த வருசம் ரெண்டுல ஒண்ணு எதனா நல்லது செஞ்சே தீருவாரு.. கொஞ்சம் பொறுத்துக்க.’ என்று நம்பிக்கை தரும் விதத்தில் பேசினான்.

‘ஐயே.. அதுக்குள்ள மாமனாரு மேல அனுதாபம் வந்திரிச்சாக்கும்..’

சடாரென்று வந்துவிட்ட அவளது கேலியும் அவனுக்குப் பிடித்திருந்தது. யோசித்துப் பார்த்தபோது, தன்னுடைய பதில் சற்றே பொருந்தாத் தொனியில்தான் வந்திருக்கிறது என்பது புரிந்தது. சிரித்தான்.

‘எலேய் மாப்ள.. பெல்லடிச்சிட்டான். படம் பாக்க வரியா? இல்ல, படம் காட்டிக்கினே இருக்கப்போறியா? நாங்க போறம்..’

வரட்டுமா சாந்தி?

அவள் தலையசைத்தபோது வேகமாக யாரோ ஓடி வந்து அவளை மோதுவது போல் நிற்க, முத்துராமன் திரும்ப இருந்தவன் ஒரு கணம் தயங்கினான்.

‘சாந்தி, இங்கயா இருக்க.. உன்ன உங்கப்பாரு தேடிக்கிட்டிருக்காரு. குப்பத்துல எவனோ நெருப்பு வெச்சிட்டாண்டி.. ஆறு குடிசை எரிஞ்சிருச்சி.. சீக்கிரம் ஓடியா..’

7


அத்தியாயம் ஏழு


முதலில் புகைதான் தென்பட்டது. அர்த்தமற்ற கூச்சல்களும் தபதபவென்று ஓடும் சத்தமும் வெளியை நிறைத்திருந்தது. முத்துராமனும் சாந்தியும் குப்பத்தை நெருங்கியபோது ஒரு பாதி எரிந்து நாசமாகி சேறும் கரியுமாகக் கிடக்க, இன்னொரு பக்கத்தில் தீயை அணைக்க மக்கள் போராடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

வீதியெங்கும் துணி மூட்டைகளும் பாத்திரங்களுமாக உருண்டு கிடக்க, பெண்களின் ஒப்பாரியில் அடி வயிறு பிசைந்தது.

‘டேய், எல்லா குடிசைங்கள்ளயும் உள்ள பூந்து பாருங்கடா.. பெருசு எதாச்சும் தூங்கிக்கினு கெடக்கப்போவுது!’

யாரோ குரலெழுப்பியபடி ஓடினார்கள். வீசியடிக்கும் தண்ணீரில் அத்தனை பேரும் முழுதாக நனைந்திருந்தார்கள். கவலையும் வேதனையும் பதற்றமுமாக விரைந்த சாந்தி, தன் குடிசையை நெருங்கியபோது சட்டென்று ஒரு கணம் நின்று மூச்சு வாங்கினாள். கடவுளுக்கு நன்றி. அப்பாவும் அம்மாவும் வெளியே நின்றுகொண்டு இருந்தார்கள். ஆளுக்கொரு பக்கெட். முடிந்த அளவுக்கு முயற்சி.

‘சாந்தி.. வந்துட்டியா.. தங்கச்சி எங்கடி?’

‘தியேட்டர்ல இருக்காம்மா. அவள கூட்டிக்கினு வரலாம்னுதான் போனேன்..’

அவர்கள் அப்போதுதான் முத்துராமனைப் பார்த்தார்கள். சட்டென்று சாந்தியின் அப்பா, தூக்கிக்கட்டியிருந்த லுங்கியை இறக்கிவிட்டார்.

‘அ.. தம்பி.. வாங்க, இங்க..’

வரவேற்கக் கூட முடியாத சூழல் சட்டென்று தாக்கியது.

‘இருக்கட்டுங்க.. பக்கெட்ட என்னாண்ட குடுங்க.. உள்ள இருக்கற சாமான் செட்டெல்லாம் எடுத்துட்டிங்களா?’

கேட்டபடி வேகமாக குடிசைக்குள் ஓடினான்.

‘ஐயோ.. தம்பி, வேணாம்.. போகாதிங்க.. எல்லாம் எடுத்தாச்சு..’

சாந்தியின் அம்மா பேசி முடிப்பதற்குள் உள்ளே பாய்ந்து ஒரு பார்வை சுழலவிட்டு அவன் வெளியே வந்துவிட்டான்.

ஒரு பத்து நிமிஷம் பதற்றத்தில் கரைந்ததும் பிராந்தியம் முழுவதும் குளித்து முழுகிக் கருகிக் கிடந்தது. ஓலங்களும் ஒப்பாரிகளும் தேய்ந்து முனகலாகிக்கொண்டிருந்தன. சாந்தியும் அவளது அம்மாவும் அப்பாவும் மூன்று மூட்டைகளில் பொருள்களைக் கட்டி எடுத்துக்கொண்டு மேட்டுப்பகுதிக்கு வந்து உட்கார, முத்துராமன் அவர்களுக்கு எதிரே உட்கார்ந்தான்.

‘பாருங்க தம்பி.. எம்.எல்.ஏ.வுக்கு சொல்லிவுட்டு அர அவரு ஆவுது. இன்னும் வரக்காணம்..’ என்றார் சாந்தியின் அப்பா.

‘ஊர்ல இல்லியோ என்னமோ.. போலீஸ்காரங்க வந்திருக்காங்களே. எம்.எல்.ஏ., வருவாரு. எப்பிடியும் வராம போவமாட்டாரு.’

எங்கோ பார்த்துக்கொண்டிருந்த சாந்தியின் அம்மா, சட்டென்று நினைவுக்கு வந்தவள் மாதிரி திரும்பிக் கேட்டாள்: ‘ஏண்டி சாந்தி.. இந்தவாட்டி ஆறு மாசத்துக்கு மேல ஆயிருச்சில்ல?’

ஒரு கணம் சாந்திக்குப் புரியவில்லை. புரிந்தபோது பதற்றமானாள். என்ன பேசுகிறாள் அம்மா? அதுவும் யார் எதிரே?

முத்துராமன் சிரித்துவிட்டான். ‘அப்பிடித்தாங்க. தீ கூட, பழகிருச்சின்னா தண்ணி மாதிரிதான். நம்மள மாதிரி குப்பத்து சனங்க இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு மூலைல குந்திட்டா அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்ணுறது? எம்.எல்.ஏ. வந்து என்னா குடுக்கறாருன்னு பாருங்க. எப்பிடியும் ரெகுலர் நஷ்ட ஈடு இருக்கும். அப்பால நாம பேசுறத பொறுத்து மேற்கொண்டு ஏதாச்சும் தேறும்.’

‘நீங்க ஒண்ணு தம்பி.. இங்க நாலு தலைங்க இருக்குதுங்க. கட்சிக்காரப் பசங்க. எல்லாம் பேசி வாங்கி எடுத்தாந்து தர்றது அவங்கதான். என்னா ஒண்ணுன்னா, ஒயுங்கா வர காசு வந்துருமே தவிர, மேல் காசு எல்லாம் அதுங்க பாகிட்டுக்குத்தான் போவும். அஞ்சு பத்து மேல குடுங்கடான்னு கேட்டாக்கா, இன்னா பெர்சு, பிசினசா பேசுறேன்னுவானுக. உங்க ஏரியாவுல எல்லாம் எப்பிடி தம்பி?’

முத்துராமனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. எத்தனை அபத்தமான அவலம் இது. ஒரு பிராந்தியமே பற்றிக்கொள்கிறது. அந்தக் கண நேரத்துப் பதற்றத்தில் போலித்தனம் கிடையாது. உயிரைக் காட்டிலும் பெரிது வேறென்ன? தப்பித்து விட்ட சந்தோஷம் கட்டாயம் உண்டு. ஆனால் கணப் பொழுதுதான். பதற்றம் தணிந்த உடனேயே மனம் கணக்குகளில் ஈடுபடத் தொடங்கிவிடுகிறது.

எப்போதும் போதிய இடைவெளிகளில் பற்றவைக்கப்படுகிற காலனிகள். வந்து பார்த்து ஆறுதல் சொல்லி, செய்தித்தாளில் இடம் பிடிக்கிற உள்ளூர் எம்.எல்.ஏ. நிவாரணத் தொகையும் சாம்பார் சாதப் பொட்டலமும். எண்ணி எடுத்து நீட்டும் பணத்துக்குக் கைநாட்டு வாங்கும்போது முகத்தை அருகில் பார்த்துக்கொள்ளும் கட்சிக்காரர்கள். சற்றுத் தள்ளி இருந்து வேடிக்கை பார்க்கிற ரெவின்யூ அதிகாரிகள்.

அரசாங்கமும் அரசியலும் வேறு வேறா? இல்லையா? நீண்ட நாளாக முத்துராமனுக்கு இந்தக் குழப்பம் உண்டு. அவனுக்கு இத்தகைய சம்பவங்களெல்லாம் அதிர்ச்சியளித்த காலம் மலையேறிவிட்டது. அடையாற்று ஓரத்தில் அவனது காலனியே ஒரு சமயம் பற்றவைக்கப்பட்டபோது முதல் நாள் இரவு அவனுக்குத் தகவல் தெரிந்துவிட்டது.

‘ஐயோ’ என்று அவனையறியாமல் பதறியபோது சட்டென்று சில கரங்கள் அவன் வாயை அடைத்தன.

‘த.. சும்மாருடா.. இவனே மாட்டிவுட்றுவான் போலருக்குதே.. எவண்டாவன்? இன்னா, இன்னா ஆயிருச்சி இப்ப? குடிசைன்னா பத்திக்கத்தான் செய்யும். சும்மா ஒண்ணுமில்ல. வூட்டுக்கு ஆயிரம் தந்துருவாங்க. கூரை மாத்திக் குடுத்துடுவாங்க. ரெண்டு நாளைக்கு சோத்துப்பொட்டலம், தண்ணி பாகிட் எல்லாம் உண்டு. அரசியல்னா நாலும் இருக்கத்தான் செய்யும். இன்னிக்கி அடிக்கிற கையி நாளைக்கி காலீல அணைச்சிரும். கவலையே படாத. போ.. போய் வூட்ல இருக்கற சாமான் செட்டெல்லாம் எடுத்து பேக் பண்ணி வெச்சிரு ரெடியா. பத்திக்கின வுடனே வெளில ஓடியா.. முன்னால வந்து மானத்த வாங்காத.’

முத்துராமனுக்கு அப்படியொரு அனுபவம் புதிது. கட்சிக்காரன் தான். கொடி கட்டக்கூடியவன் தான். மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ என்று மைக்கில் தன் குரலைக் கேட்டுத் தானே சிரித்துக்கொள்பவன் தான். தலைவர்கள் யார் வந்தாலும் வாழச்சொல்லிக் கோஷம் போடுகிறவன் தான். அரசியலில் எல்லாமே சகஜம் என்பதும் தெரியாதவன் அல்ல. ஆனாலும் நாளைக்காலை தன் காலனி பற்றி எரியப்போகிறது என்று கேள்விப்பட்டபோது அவனுக்குள் ஏற்பட்ட பதற்றத்தை அத்தனை சுலபத்தில் தணிக்க முடியவில்லை.

‘என்னண்ணே.. இப்பிடி சொல்றிங்க.. இதெல்லாம் தப்பில்லியா?’

‘தபாரு முத்துராமா.. உங்கப்பாரு மொத்தமா ஆயிரம் ரூவாவ பாத்து எத்தினி நாளாயிருக்கும்னு யோசிச்சிப் பாரு. அட அவர வுடு. நீ பாத்திருக்கியா? காலு ஒடிய ஒடிய மெசினு அடிக்கற. பேண்டு தெச்சா நாப்பது ரூவா, சட்டை தெச்சா இருவது ரூவா. உம்பேட்டைல எத்தினி தலைங்க பேண்டு போடுதுங்க. கழுத எல்லாம் லுங்கிய வழிச்சிக் கட்டிக்கினு சுத்தி வர்ற கூட்டம்தானே? சாப்பிடுய்யா.. ஆயிர ரூவா. எவன் தருவான்? குடிசைக்கு புச்சா கூரை போட்ருவாங்க. நிம்மதியா, சந்தோசமா இரு. அரசியல் தெரியணும்னா இந்த அடிப்படைல்லாம் புரிஞ்சிக்கணும் மொதல்ல..’

‘இருந்தாலும்..’

‘அட எவண்டாவன்? டாக்டருக்குப் படிக்கறவன் மொதல்ல தவளைய அறுக்கணும்டா.. போய் கேட்டுப்பாரு.. த.. சரி, உங்கப்பார கேளு. அவருக்குத் தெரியாத மேட்டரா? தெரிஞ்சவனாச்சேன்னு முன்கூட்டி சொல்லிவெச்சா ஏண்டா இப்பிடி ரவுசு பண்ணுற?’

முத்துராமனுக்கு அப்போதும் ஆறவில்லை. வீட்டுக்குப் போய் அப்பாவைத் தனியே கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி விசாரித்தான்.

‘அப்பிடியா?’ என்று சிரித்தவர், ‘ஒனக்குத்தாண்டா புச்சு. குப்பத்துல எந்தப் பெரிச வேணா கேட்டுப்பாரு.. சர்தான், செலவுக்காச்சுன்னுவானுக.’ என்று பேசியபடியே உள்ளே திரும்பி, ‘கற்பகம்.. ஏய், எங்கடி போய்த் தொலைஞ்ச.. காலீல பத்திக்குதாம். எல்லாத்தையும் ஏறக்கட்டு..’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு பீடியை எடுத்து வாயில் வைத்தபடி வெளியே போனார்.

அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. தனக்கு அரசியல் புரிந்துகொண்டிருக்கிறது என்றும் தோன்றியது. மறுநாள் காலை அவர்கள் பேசிய நேரத்துக்குச் சற்றும் தாமதமில்லாமல் யாரோ ஒருவன் பீடியை இழுத்து ஏதோ ஒரு குடிசையில் வீசிவிட்டுப் போக, அரைமணி நேரக் கூச்சல் குழப்பத்துக்குப் பிறகு நிவாரண உதவிகள் ஜீப்பில் வந்து இறங்கின. பேப்பர்காரர்களும் டிவிக்காரர்களும் வந்து சூழ்ந்துகொண்டபோது அழுதபடி அவனது தந்தையும் பேட்டி கொடுத்தார். எல்லாம் எதிர்க்கட்சி சதி.

‘த.. என்னா வளவளன்னு பேசிக்கிட்டு? தம்பி வந்திருக்காரு.. போய் ஒரு டீயானா வாங்கியாங்களேன்..’

சட்டென்று நினைவு கலைந்த முத்துராமன், சாந்தியின் தந்தை என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதை நினைவுகூரப் பார்த்தான்.

‘டீயெல்லாம் வேணாங்க.. பசங்களோட படம் பாக்கலாம்னிட்டு வந்தேன்.. தியேட்டர் வாசல்ல உங்க பொண்ண பாத்தேன். சௌக்கியமான்னு கேக்க வந்தா சட்டுனு பத்திக்கிச்சின்னு ஆளு வருது..’

சாந்தி சிரித்தாள். இப்படி ஒரு தருணத்தை அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. எதிர்பாராமல் சந்திப்பு. எதிர்பாராத தீவிபத்து. எதிர்பாராத வருகை. எல்லாமே சாதாரணம் போல உட்கார்ந்து பேசுகிற லயம். மாப்ள வந்திருக்காரு என்று பதறக்கூடிய அம்மா கூட அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக எதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாள். அத்தனை சுவாதீனம் எப்படி சாத்தியமானது? துக்ககரமான ஒரு சம்பவத்தில் இதெல்லாம் சாத்தியமே. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லி நெருங்கிவிட முடியும். கண்ணைத் துடைத்துவிட்டுக் கையைப் பற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் குப்பம் பற்றி எரிந்த சம்பவத்தை யார் இங்கே துக்க சம்பவமாக நினைக்கிறார்கள்?

அவள் நிமிர்ந்து சுற்றுப்புறத்தை ஒரு கணம் நோட்டம் விட்டாள். அத்தனை மக்களும் வீதியில் தான் இருந்தார்கள். அவரவர் குடும்பங்களுடன். அவரவர் உடைமைகளுடன். அழுதது உண்மை. பதறியது உண்மை. அது தீ என்னும் நிஜமான தகிப்பு கொடுத்த அழுகையும் பதற்றமும். ஆனால் தெரியாத தீ அல்ல. அறியாத சம்பவமல்ல. முன்பும் நடந்திருக்கிறது. முந்தைய தலைமுறையும் பார்த்திருக்கிறது. அதற்கு முந்தையவர்களும் கூட. சுதந்தர இந்தியாவில் பற்றிக்கொள்ளாத குப்பங்கள் கிடையாது. நிவாரணம் அளிக்காத அரசியல் கட்சிகள் கிடையாது.

ஆனால் இந்த சுவாதீனத்துக்கு இதுவா காரணமாக இருக்கமுடியும்? ம்ஹும். வேறென்னவோ தனக்குத் தெரியாத இழை ஒன்று குறுக்கே ஓடிக்கொண்டிருக்கிறது என்று சாந்தி நினைத்தாள். எதுவானால் என்ன? அந்தக் கணம் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. காண்பித்துக்கொண்டுவிடக்கூடாது என்றும் நினைத்தாள். சிரித்தாள்.

8


அத்தியாயம் எட்டு


மண்ணும் கல்லும் மனிதர்களும் லாரிகளில் வந்து இறங்கியபோது, முத்துராமன் வேட்டியை மடித்துக் கட்டி, வானம் பார்த்து வணங்கியபடி தன் குடிசையை விட்டு வெளியே வந்தான். பரபரவென்று லாரிகளின் பின்புறத் தடுப்புகள் திறக்கப்பட்டு பலத்த ஓசையுடன் கல்லும் மண்ணும் சரிந்தது. தேர்தல் இல்லாத நேரத்திலும் தெய்வம் கண் திறந்து பார்க்கும். யாரங்கே, கூப்பிட்டுக்கொண்டிருக்க அவசியம் இல்லை. வீட்டு வேலைகள் முடிந்தால் யாரும் வந்து உதவிக்குக் கைகொடுக்கலாம்.

முன்னதாகத் தன் காலனியின் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆற்றங்கரை ஓரத்தில் அணிவகுக்கச் செய்திருந்தான் அவன். இது நம் ஏரியா. நம் பேட்டை. உதவிக்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். நடக்கப்போவது நமது பணி. எடுத்துப் போட்டுக்கொண்டு முடிந்ததைச் செய்வதுதான் நாட்டுக்கும் காலனிக்கும் நல்லது. சுகாதாரத் துறையும் பொதுப்பணித்துறையும் நகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செய்வதற்கு எத்தனையோ உண்டு நலப்பணிகள். கசக்கி எறிந்த குப்பைக் காகிதம் போல ஆற்றங்கரை ஓரத்தில் நாற்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடக்கிற காலனி. காரணம் யோசித்துக்கொண்டிருக்க அவசியமில்லை. சற்றும் எதிர்பாராமல் வந்திருக்கும் வாய்ப்பு இது.

‘மாப்ள, நம்பவே முடியலடா. தலைக்குப் பத்து நூறு தேறிச்சின்னாக்கூட நல்லாத்தான் இருக்கும். பணப் பட்டுவாடா யார் பொறுப்பு? வட்டம் ஆள் அனுப்புறாரா? நம்மாண்டயே குடுக்குறாராமா?’

‘பிச்சிருவேன் மவனே. பத்து பைசா எவனும் தொடக்கூடாது சொல்லிட்டேன். ஆன செலவுக்கு கணக்கு எழுதி சப்ஜாடா செட்டில் பண்ணிரணும்னு சொல்லியிருக்காரு. அவரு சொல்லலைன்னாங்காட்லும் நான் அதத்தான் செய்யறதா இருந்தேன். ஊரான் வூட்டு நெய்யே எம்பொண்டாட்டி கையேன்னு எவனாச்சும் கோல்மால் பண்ண நெனச்சிங்கன்னா திரும்ப ஒருக்கா குப்பத்துப்பக்கம் வரமுடியாது சொல்லிட்டேன்..’

அவன் திடமாக, தீர்மானமாகச் சொல்லியிருந்தான். இரண்டு பெரிசுகளைக் கூப்பிட்டு, நதிக்கரை ஓரத்து அரசமரத்தடிப் பிள்ளையார் நிழலில் நாற்காலி போட்டு உட்கார வைத்து சம்பளமில்லாத தாற்காலிக மேஸ்திரி ஆக்கியிருந்தான்.

என்ன செய்யவேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது. முதலில் சாக்கடைகள். சாலைக்கு மேலே ஓடும் கழிவுகளுக்குச் சாலையோரத்தில் இரண்டு கால்வாய் கட்டி மேல் புறம் மூட காங்கிரீட் வசதி. தாற்காலிக வசதிதான் என்றாலும் செம்மண் கொட்டிச் சமப்படுத்திய சாலைகள். சீரழிந்த குடிசைகளுக்கு புதிய ஓலைகள். ஆற்றங்கரை ஓரத்தில் சிறியதொரு தடுப்புச் சுவர். அப்புறம் கொசுக்கள்.

மருந்தடித்து அழித்துவிடக்கூடிய வம்சம் இல்லை அது. மக்கள் மனோபாவத்தில் மாற்றம் வரவேண்டும் என்று வட்டச் செயலாளர் சொல்லியிருந்தார். கைதட்டிய கூட்டத்தில் பெரும்பாலும் யாருக்கும் புரியவில்லை.

‘சுத்தமா இருக்கணும்னு சொல்றாரு பாண்டியம்மா. குந்திக்கினு இருக்கற எடத்துலயே மூக்க சிந்திப் போட்டுட்டு முந்தானைல தொடச்சிக்காதங்கறாரு. புரியுதா?’

சிரித்தார்கள். யாரும் சிரிக்க வேண்டாம் என்று முத்துராமன் கேட்டுக்கொண்டான்.

‘சிரிச்சி சிரிச்சித்தான்யா சீரழிஞ்சி போயிருக்கோம். நம்மள்ள எவன் வூட்லயானா அரிசி களைஞ்சிட்டு தண்ணிய வாசல்ல கொட்டாம இருக்கமா? நைட்டுல பாரு.. வூட்டு வாசல்ல படுத்துக்கினு இருப்பான். அப்பிடியே திரும்பி பொச்சுனு எச்சி துப்புவான். எந்திரிச்சி நாலடி போய் ஒண்ணுக்கடிக்கறவன் எத்தினி பேர் இங்க? சுத்துமுத்தும் பாத்துட்டு அப்பிடியே நடு ரோட்ல குந்திக்கிரவேண்டியது. மாநகராட்சி நவீன கழிப்பிடம். இருக்குதில்ல? நம்ம ஏரியாதான அது? எவனாச்சும் எட்டிப்பாக்க முடியுதா? காலு வெக்க முடியாதமாதிரி அசிங்கப்படுத்திவெச்சிக்கிறோம். கழுவித்தள்ளக்கூட எவனும் வரமுடியாதுரா. அப்பால எப்படி கொசு வராம இருக்கும்?’

இதற்கும் கைதட்டினார்கள். வட்டம் சிரித்தார். பாத்துக்க முத்துராமா என்று தோளைத் தட்டிவிட்டு சுமோவில் ஏறி மிதந்து போனார். முத்துராமன் வெறி கொண்டவன் போல் உழைக்கத் தொடங்கினான். இப்படி ஒரு வாய்ப்பு இன்னொரு சந்தர்ப்பத்தில் கிடைக்காது. ஊருக்கு நல்லது. உள்ளபடி தனக்கும் நல்லதுதான். அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் தயங்காமல் கவுன்சிலருக்கு நிற்கலாம்.

பிற்பகல் வரை வேலை மும்முரமாக நடந்தது. சாக்கடைகள் கிளறப்பட்டதில் எழுந்த துர்நாற்றத்தில் குப்பம் முழுவதும் மூக்கை மூடிக்கொண்டது. குழந்தைகள் அழுதன. டர்ர்ர்ர்ர் என்று சத்தமுடன் வந்து நின்ற புல்டோசர், ஆற்றங்கரை ஓரத்துக் குப்பை மேடுகளை அப்புறப்படுத்தின.

‘தபார்றா.. நம்மாளுங்க ரேஞ்சே தனிதான் இல்ல.. காமசூத்ரா கவர் இருக்குது பாரு.. அந்தா பாரு.. எவனோ இங்க நாலு குவாட்டர் எம்ஜிஎம் அடிச்சிருக்கான். பாட்டிலு கெடக்குது பாரு. அவவன் ரெண்ருவா பாகிட் சரக்குக்கு வழியில்லாம அல்லாண்டு கெடக்கறான். எவந்தலையத் தடவி மொட்ட போட்டானோ..’

குப்பை மேடுகள் பல ரகசியங்களை உள்ளடக்கி இருக்கின்றன. கிளறும்போது சரித்திரத்தின் பல கிழிந்த பக்கங்கள் கிடைத்துவிடுகின்றன. பென்சிலில் எழுதிக் கசக்கிப்போடப்பட்ட ஒரு காதல் கடிதத்தை எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு அது யார் கையெழுத்து என்று கொஞ்ச நேரம் அலசிக்கொண்டிருந்தார்கள்.

‘டேய், போதும் எந்திரிச்சி வாங்கடா..’ யாரோ குரல் கொடுத்தார்கள். உழைத்தவர்களுக்கான சாம்பார் சாதப் பொட்டலங்களுடன் வட்டச் செயலாளர் புன்னகையுடன் கைகூப்பும் விசிட்டிங் கார்ட் பின் செய்யப்பட்டிருந்தது.

முத்துராமனுக்கு சாப்பிட நேரம் இருக்கவில்லை. தன் நண்பர்களுடன் அவன் இருட்டும் வரை ஓயாமல் காலனி முழுதும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு வீட்டிலும் சாக்கடைப் பாதைக்கான தடத்தை முடிவு செய்வது பெரிய காரியமாக இருந்தது. ஒரு ஒழுங்கில்லாமல் உருவாகியிருந்த காலனி. வாசல் புறம் மட்டுமே வழி இருந்தது. பின்புறம் என்று ஏதுமில்லாத இட நெருக்கடி. ஒவ்வொரு குடிசையின் பின்புறத்திலும் இன்னொரு குடிசை ஒட்டிக்கொண்டிருந்தது. அரையங்குல இடைவெளிகளில் அவர்கள் துணி உலர்த்திக்கொண்டார்கள். முறத்தில் மிளகாய் கொட்டி, கூரைச் சரிவுகளில் காயவைத்துக்கொண்டார்கள். ஒரு சாக்கடைக்கான நிரந்தர வழி என்று சிந்திக்க அவகாசமில்லாமலேயே நாற்பது வருடங்கள் சாக்கடையோடு ஓடிப்போய் அடையாறில் கலந்துவிட்டன. எத்தனை நூறு குழந்தைகள் அதற்குள் பிறந்து, வளர்ந்து ஆளாகிவிட்டன! இதே சாக்கடைதான். இதே குப்பம்தான். இதே கொசுக்கடிக்கு நடுவில்தான். துயரங்களைப் பொருட்படுத்தாமலிருக்க பழகிவிட்டது மனம். துயரமென்றே உணராத அளவுக்கு மரத்துவிட்ட மனம்.

அன்றைய பணிகள் முடிந்து ஆள்கள் கூலி வாங்கிக்கொண்டு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றபிறகு அவன் நிலவரம் சொல்வதற்காக வட்டத்தின் அலுவலகத்துக்குப் போனான். அரை மணி காத்திருக்க வேண்டியிருந்தது. பார்த்துப் பேசிவிட்டு, மறக்காமல் நன்றி சொல்லித் திரும்பி, மீண்டும் நண்பர்களுடன் மறுநாள் பணி குறித்துப் பேசிவிட்டு, ஒரு உற்சாகத்துக்கு தொண்ணூறு மில்லி மட்டும் சாப்பிட்டு மேலுக்கு அரைப் பொட்டலம் பிரியாணியை முடித்து, விடைபெற்று வீடு திரும்பும்போது மணி பதினொன்றாகிவிட்டிருந்தது.

வீதி அடங்கிவிட்டது. வாசல்களைக் கால்களும் நபர்களும் நிறைத்திருந்தார்கள். நாயொன்று விடாமல் ஊளையிட்டுக்கொண்டிருந்தது. த, சொம்மாகெட என்று சொல்லியபடி அதனைக் காலால் ஒரு உதை உதைத்து அவன் தன் குடிசையின் வாசலை அடைந்தான்.

அப்பா வெளியே படுத்திருந்தார். கயிற்றுக் கட்டிலில் கண்ணயர்வு. வழக்கம் அதுதான். அவனும் அப்பாவும் வாசலில் படுப்பது. தம்பியும் அம்மாவும் வீட்டுக்குள்ளே. பேசிக்கொள்ளப் பொதுவில் இருவருக்கும் ஏதும் இருந்ததில்லை. எப்போதாவது பேச வாய் திறந்தால், வலிக்குதுடா ரொம்ப என்பார் முதல் சொல்லாக. கிட்டத்தட்ட வாழ்ந்து முடித்துவிட்ட வாழ்க்கை குறித்த அதிருப்திகளிலேயே அவர் நோயாளி ஆகிவிட்டதுபோல அவனுக்கு எப்போதும் தோன்றும்.

சத்தமில்லாமல் உள்ளே போகப் பார்த்தான். ஆனால் அப்பா தூங்கியிருக்கவில்லை. புரண்டு படுத்தவாறு, இப்பத்தான் வரியா என்று கேட்டார்.

‘அ.. ஆமாப்பா..’ சே. ஒரு பீடா போட்டிருக்கலாம்.

அவருக்கு சுவாசித்த காற்றின் ஒரு துளி நாசியைத் தொட்டால் போதும். அவர் அடிக்காத சரக்கா? மறைக்காத லாகவமா? ஒளித்து வைக்க என்ன இருக்கிறது?

‘உக்காரு’ என்றார் மெதுவாக. ‘உள்ள போனன்னா உங்கம்மாக்காரி பொலம்ப ஆரம்பிச்சிருவா. சரக்கடிக்காதன்னு சொல்ல எனக்கு யோக்கியத இல்ல. சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு வராத. புரியுதா?’

அவன் பேசாதிருந்தான்.

‘சாப்ட்டியா?’

‘சாப்ட்டேம்பா.. படுக்க வேண்டியதுதான். உடம்பெல்லாம் வலிக்குது..’

இரண்டுக்குமாகச் சேர்த்துச் சொன்னான். சொல்லிவிட்டுத் தன் கட்டிலை இழுத்து அவருக்குச் சற்றுத் தள்ளிப் போட்டான்.

அவர் நெடு நேரம் பேசவில்லை. ஆனால் ஏதோ பேச விரும்புகிறார் என்று அவனுக்குத் தோன்றியது. பேசினால் பதில் சொல்லவேண்டியிருக்கும். ஆனால் தூக்கம் வருகிறது. உழைத்த களைப்பு. நாய் விடாமல் ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அதுவேறு எரிச்சலாக இருந்தது. இரவில் அமைதியைத் தவிர பொதுவில் இன்னொன்று சரிப்படமாட்டேனென்கிறது.

‘இன்னிக்கி அந்தப் பொண்ணோட அப்பாரு வந்துட்டுப் போனாரு.’ என்று சடாரென்று ஓரிடத்தில் தொடங்கினார்.

முத்துராமனுக்கு முந்தைய தினம் ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தபோது சாந்தி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆ, திருமணம்.

‘ஜனவரி கடேசில இருவத்தேழாந்தேதி வெச்சிக்கிரலாமான்னு கேட்டாரு’

பரபரவென்று அவன் கணக்குப் போட்டான். ஜனவரி இருபத்தி மூன்று, இருபத்தி நான்கு, இருபத்தைந்து மாநாடு. ஒரு பிரச்னையும் இல்லை.

‘வேலை நெறைய கெடக்குது. மொதல்ல மாவட்டச் செயலாளராண்ட சொல்லி அப்பாயின்மெண்டு கேக்கணும். நோட்டீஸ் அடிக்கணும். துணி எடுக்கணும். எல்லாத்துக்கும் பணம் வேணும் மொதல்ல. காதுல விழுதா?’

‘ம்..’ என்றான் மெதுவாக.

‘விளையாட்டில்லடா.. இது பெரிய காரியம். கல்யாணம் ஒருநாளோட செரி. வாழ்க்கை ரொம்ப பெரிசு முத்து.. சமயத்துல பேஜாரா தோணும். ஓடிரலாமான்னுகூட தோணும். உன் வயித்த நீ நெனச்சிப் பாக்கறது எப்பவாச்சும்தான். கல்யாணம்னு ஆயிடிச்சின்னா இன்னொரு வயித்துக்கு நீ பொறுப்பாயிருவ. மொத மாசமே கர்ப்பம்னிட்டான்னு வையி.. ஒண்ணோட ஒண்ணு இன்னொண்ணு.’

அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. அவனது அப்பா ஒருபோதும் இப்படியெல்லாம் பேசியவரல்லர். இப்படியெல்லாம் சிந்திக்கக் கூடியவர் என்றும் அவன் நினைத்ததில்லை. தன்னிடம் ஏதோ ஒன்று முக்கியமாக – மிக முக்கியமாக அவர் தெரிவிக்க விரும்புகிறார் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் ஆர்வமாகக் கேட்கத் தயாரானபோது பின்னால் யாரோ வருவது போலிருந்தது.

9


அத்தியாயம் ஒன்பது


முத்துராமனுக்கு அது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்த அவனுடைய அப்பா, ஒரு காலத்தில் மிகத் தீவிரமான கட்சிக்காரர். வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் இரவில் வீடு தங்குவார். அந்தத் தினங்களிலும் அவரைப் பார்க்க யாராவது வந்துவிடுவார்கள். வாசலில் இதே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அவர் கட்சி அரசியல் பேசிவிட்டு, வந்தவரை வழியனுப்பிவைத்துவிட்டு அப்படியே படுத்துவிடுவார். முத்துராமன் கண் விழிக்கும் காலைப் பொழுதுகளில் அநேகமாக அவர் வீட்டை விட்டுப் புறப்பட்டிருப்பார்.

கட்சியின் நம்பிக்கைக்குரிய பேச்சாளர்களுள் ஒருவராக அவர் பிராந்தியத்தில் பிரபலம். இரவு ஒன்பதரை மணிவாக்கில் மேடை ஏறி மைக்கைப் பிடித்தால் ஒன்று அல்லது ஒன்றரை மணிநேரம் நின்ற இடத்தில் ரவுண்டு கட்டி அடிப்பார் என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறான். கிண்டலுக்குப் பெயர்போன பேச்சாளர். எதிர்க்கட்சிக்காரர்களைப் பெயர் சொல்லி விளித்து, விரல் உயர்த்தி நக்கலடிக்கும் வித்தகர். இருபது பேர் கூடும் கூட்டத்தை நாற்பதாக்குவதற்குக் கண்டிப்பாக அவர் அந்தக் காலத்தில் தேவைப்பட்டிருக்கிறார்.

ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் நூற்று இருபத்தைந்து ரூபாய் அவருக்குக் கிடைக்கும். தவிரவும் ஒன்றிரண்டு சோடாக்கள். தமிழரசன் பேச்சுக்குத் தமிழ்நாட்டிலேயே எதிர்ப்பேச்சில்லை என்று மாவட்டச் செயலாளர் ஒருமுறை அவரைப் புகழ்ந்திருக்கிறார். கட்சிப் பத்திரிகையில் ஆறு முறை அவரது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூட்ட விவரம் வெளியாகியிருக்கிறது. இரண்டு முறை நெற்றியில் ரத்தம் வரும் அளவுக்கு அடிபட்டிருக்கிறார். கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் வீடு வந்து நலம் விசாரித்துப் போனதற்குச் சாட்சியாகப் புகைப்படம் இருக்கிறது.

ஒரு எம்.எல்.ஏ. ஆகியிருக்கலாம். ஏனோ முடியாமல் போய்விட்டதில் அவர் அரசியலிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு விட்டார். அந்த விஷயத்தில் குடும்பத்தில் அனைவருக்குமே வருத்தம்தான். முத்துராமனின் தாத்தா, சித்தப்பாக்கள், மாமன்கள் அனைவரும் காரணம் புரியாமல் பலநாள் இதுபற்றிப் பேசிப்பேசி மாய்ந்திருக்கிறார்கள்.

‘வுட்றா.. அவ்ளோதான். என்னால இதுக்கு மேல முடியல. எம்புள்ள சாதிப்பான் போ..’ என்று ஒரு வரியில் முடித்துக்கொண்டு எழுந்துபோய்விடுவார். முத்துராமன் ஒரு சமயம் தன் அம்மாவிடம் இது குறித்துப் பேசியிருக்கிறான்.

‘மருவாத இல்லாத எடத்துல என்னாத்துக்குப் பொழங்கிட்டுக் கெடக்கணும்? அவுரு வூட்லயே கெடக்கட்டும். என் ஒடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் நான் ஒழைச்சி சோறு போடுவேன்’ என்று சொன்னாள்.

அப்பாவின் அரசியல் துறவறத்துக்கு ஒரு வகையில் அம்மா காரணமாக இருந்திருப்பாளோ என்றுகூட முத்துராமன் யோசித்திருக்கிறான். ஆனால் பெண்கள் சொல்லி, விலகக்கூடிய விஷயம் அல்ல அது. ஒரு ஆர்வம் போலத்தான் மனத்தில் விழுகிறது. மெல்ல மெல்ல உடம்பினுள் பரவி ஒவ்வொரு நரம்பிலும் நிரம்பிவிடுகிறது. பிறகு கட்சிக்கொடியின் நிறம் மானசீகமாக ரத்தத்தில் தோய்ந்து ரத்தத்தின் நிறத்தை மாற்றித் தன்னுடைய நிறத்தை ஏற்றிவிடுகிறது. வெள்ளைச் சட்டைக்கும் வெள்ளை வேட்டிக்கும் மனம் விருப்பப்படுகிறது. படியச் சீவிய தலையில், பணிவு வரவழைத்துக்கொள்ளும் இரு கரம் கூப்பிய வணக்கத்தில் மேலான அரசியல்வாதியாக சித்தம் உணர்கிறது. யார் சொல்லியும் இதை மாற்றிக்கொள்ள முடியும் என்று முத்துராமனுக்குத் தோன்றவில்லை.

‘அப்படி நெனைக்காதடா.. உங்கம்மா என்னைத் தடுத்ததில்ல. ஆனா எல்லா பொம்பளைங்களும் உங்கம்மா மாதிரி இருந்துறமாட்டாளுங்க. புருசன் முந்தானைக்குள்ள இருக்கணும்னு நெனச்சாக்கூட பரவால்ல.. இப்பல்லாம் பொண்ணுங்க முந்தானையாவே அவந்தான் இருக்கணும்னு நெனைக்கறாங்க.. நாஞ்சொல்றது புரியுதா? தன்னைத்தவிர இன்னொரு விசயத்துல அக்கறை காட்ற புருசன யாருக்கும் புடிக்காம போயிருது முத்து..’

ஆடிப்போய்விட்டான் முத்துராமன். அவன் இப்படி உட்கார்ந்து சொந்த விஷயம் பேசக்கூடிய தந்தையை இத்தனை வருடங்களில் முதல் முறையாகச் சந்தித்திருந்தான். பரீட்சை எழுதாதபோது ஏன் எழுதவில்லை என்று கேட்காத தந்தை. கட்சிக்கூட்டங்களுக்குப் போகத் தொடங்கியபோது எச்சரிக்கையாகக் கூட ஏதும் சொல்லாத தந்தை. பலநாள் வீட்டுக்கே வராமல் சுற்றிக்கொண்டிருந்தபோதும் கண்டுகொள்ளாத மனிதர். ஒரு திருமணம் என்று நிச்சயமானதும் இத்தனை அக்கறை, இத்தனை கரிசனம் காட்டக்கூடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

‘புரியுதுப்பா.. ஆனா யாருக்காகவும் நம்ம லட்சியத்த விட்டுறமுடியாதில்ல? எனக்கு அரசியல்தாம்பா மொதல்ல. குடும்பமெல்லாம் அப்பாலதான்’ என்றான் மெதுவாக.

நீண்டநேரம் அவர் மௌனமாக அமர்ந்திருந்தார். ஒரு பெருமூச்சு எழுந்திருக்கவேண்டும். பிறகு மெல்லச் சொன்னார். ‘நானும் இப்படிச் சொல்லிக்கினு திரிஞ்சவன் தான். திரிஞ்சத நெனச்சி இப்பவும் வருத்தப்படல. ஆனா வூட்டுக்கும் கொஞ்சம் செஞ்சிருக்கலாம்னு எப்பவாச்சும் தோணுது. ப்ச்.. கட்சி, கடவுளெல்லாம் காலணா காசு கையில இருந்தா இன்னும் நல்லாருக்கும் முத்து. காசில்லாதப்பத்தான் நமக்கு இதுலல்லாம் புத்தி நிலைக்குது. தப்பிச்சிக்கத்தான் இப்பிடி அலையறமோன்னு சமயத்துல தோணிரும். எளவு, நம்ம கட்ன பாவத்துக்கு அவுங்களும் கஸ்டப்பட்டாவணும். உங்கம்மா எப்பவாச்சும் எரிஞ்சி வுளுந்தா நான் என்னிக்கானா பதில் பேசி பாத்திருக்கியா? எனுக்கு கட்சி இருந்தவரைக்கும் கட்சி. இல்லேன்னு ஆனப்பறம் காஜா பீடி. அவளுக்கு என்னா இருக்குது சொல்லு? பாவம், யாரப்போயி திட்டுவா? எப்பிடி தன்னோட ஆத்தாமைய தீத்துப்பா? சர்தான் கத்திக்கினு போன்னு சொம்மா கெடந்துருவேன். கவனிச்சிருக்கியா?’

கவனித்திருக்கிறான். ஆனால் அதற்கு இதுதான் அர்த்தமாக இருக்கும் என்று யோசித்ததில்லை. தனக்குத் தெரியாத நூலிழை ஒன்றில் தன் தந்தை ஒரு மாய மணி கோத்துக்கொண்டிருக்கிறார் என்று இப்போது உணர்ந்தான். ஆயிரம் கஷ்டங்களுக்கு இடையிலும் வீடு சிதறிவிடாமல் கட்டிக்காக்கிற மணி.

‘அதச் செய்யின்னுதான் உன்னாண்ட சொல்றேன். நீ இஸ்டப்பட்டபடி அரசியல்ல முன்னுக்கு வரணும்னுதான் நானும் நெனைக்கறேன். ஆனா வூட்ட லேசா நெனச்சிராத. ஒலகத்துல இருக்கற எல்லா பொம்பளைங்களும் நல்லவங்கதான். மாமியாராவும் மருமவளாவும் ஆகாத வரைக்கும். ஆயிருச்சின்னா எப்பவேணா பத்திக்கும். அப்பிடி ஒரு நெலம வந்து நீ வூட்ட பாக்காம ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தன்னா, மக்கி மண்மேடா ஆயிரும் முத்து. தனியா போவணும்னுவா. அவ மூஞ்சிய திருப்பிக்கினு பூச்சி காட்டுவா. இவ மூக்க சிந்திக்கினு ஒப்பாரி வெப்பா. பாக்க சகிக்காது..’

அவனுக்கு சுவாரசியம் வந்துவிட்டது. நெருங்கி அவரருகே அமர்ந்து, ‘நீ எப்பிடிப்பா சமாளிச்ச?’ என்றான் புன்னகையுடன்.

‘ம்ஹும். ரொம்பக் கஷ்டப்பட்டேன். கல்யாணம் கட்டிக்கினு ரெண்டரை வருசம் தனியாத்தான் இருந்தேன். கிண்டியாண்ட எஸ்டேட் தாண்டி ஆத்தங்கரைல குடிசை ஒண்ணு பதிமூணு ரூவாய்க்கு வாடகை. நீ பொறக்கற வரைக்கும் அங்கதான். அப்பால என்னிக்கோ ஒருநாள் ஒரு வேகம் வந்து, வாடி நம்மூட்டாண்டன்னு இஸ்துக்கினு வந்துட்டேன். கொஞ்சநாள் நல்லா நடிச்சேன் முத்து. வூட்டாண்ட வந்தாலே சவுண்டு வுட்டுக்கினுதான் வர்றது. ஐயோ வந்துட்டானேன்னு நெனப்பா உங்கம்மா.. என்னியவிட எங்கம்மா தேவலன்னு அவ நெனைக்கற அளவுக்கு நடந்துக்கிட்டேன். அப்பால அவளுக்கும் ஒறவு சனம் பழகிருச்சி. உன்ன எல்லாரும் தூக்கிக் கொஞ்ச ஆரமிச்சாங்களா? அவளுக்கு அது போதும்னு தோணிருச்சி. ஊர் மேயற புருசன். ஒறவாச்சும் ஒழுங்கா இருந்தா போதும்னு விட்டுட்டா..’

‘நெசமாவே மாமியார் மருமவன்னா ஒத்துப்போவாதாப்பா?’

‘தெரியலடா.. ஆனா அப்பிடித்தான் இருக்குது. பதறாம குந்திக்கினு யோசிச்சிப் பாத்தா ரெண்டு பேருமே தனித்தனியா நல்லவங்களாத்தான் தெரிவாங்க. நம்ம மேல அவுங்க வெக்கற ஆசைதான் அப்பிடி மோதிக்க சொல்லுதுன்னு நினைக்கறேன்.’

‘அப்பசெரி. புத்தரு கரீட்டாத்தான் சொல்லிக்கிறாரு.’

தமிழரசன் புன்னகை செய்தார். ‘அது தப்பிச்சிக்கினு ஓடசொல்றதுடா.. கோழையாட்டமா இருப்பாங்க? ஆசை வெக்காதன்னா கரீட்டா ஒண்ணுத்தும்மேல வெக்காதன்னு அர்த்தம். எல்லாத்தையும் ஆசைப்பட்டுட்டா பிரச்னையே வராது பாரு. தபாரு, பொறந்த பாவத்துக்கு வாழ்ந்து தீக்கணும். வாழறதுக்கு சாட்சியா நாலு நல்லது பண்ணணும். இவ்ளோதான் மேட்டரு. நடுவுல நாம சுருண்டு வுழறமாதிரி ஆச்சின்னா அதுக்கு நாமதான் காரணமா இருக்கணும். அடுத்தவங்கள உள்ளார வுட்றகூடாது. அவ்ளோதான். புரியுதா?’

பலதும் புரிவது போலவும் எதுவுமே புரியாத மாதிரியும் இருந்தது அவனுக்கு. வியப்புடன் அவன் தந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நண்பர்கள் அரக்க பறக்க ஓடிவந்தார்கள்.

‘இன்னாடா இந்நேரத்துல?’ வேகமாக எழுந்துகொண்டான் முத்துராமன்.

‘முத்து, கொஞ்சம் வரியா? ஒரு முக்கியமான சோலி..’ என்றான் ஜெயச்சந்திரன்.

அவன் திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான். அவர் சிரித்தார்.

‘மணி ஒண்ணாவுதேன்னு பாக்கிறியா? போபோ.. இதத்தான் இம்மாநேரம் சொல்லிக்கினு இருந்தேன். உங்கம்மாவுக்கு நீ வந்தது தெரியாதில்ல? அந்தவரைக்கும் ஓக்கே. புரியுதா இப்ப?’

அவனும் சிரித்தான். வரேம்பா என்று கிளம்பினான்.

‘டேய், திரும்பவும் தண்ணிகிண்ணி போடாதிங்கடா.. போட்டது போதும்’ என்று குரலெடுத்துக் கத்தினார் தமிழரசன். அவர்கள் திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாகப் போனார்கள்.

மாந்தோப்பு ஸ்கூல் அருகே வந்ததும், ‘இங்கியே உக்காரலாம்டா’ என்றான் முத்துராமன். சுற்றுச் சுவரில் தாவி ஏறி முதலில் அவன் அமர்ந்தான்.

‘கால் வலிக்குது. அதுவும் இல்லாம காலீல வேலைவேற இருக்குது. இன்னிக்கி மூணு தெருவுல ரோடு போடுறாங்க..’

‘மாப்ள ஒரு முக்கியமான விசயம்டா.. உங்காளு குப்பத்தாண்ட கொள்த்திப் போட்டது யாருன்னு தெரிஞ்சிருச்சி..’

முத்துராமனுக்குச் சட்டென்று அந்தச் சொற்றொடரின் அர்த்தம் முழுவதுமாக உள்ளுக்குள் இறங்கவில்லை.

உங்காளு என்பதைத் தன் எதிர்கால மனைவி என்று மொழிபெயர்த்து உணரச் சில வினாடிகள் தேவைப்பட்டன. உணர்ந்ததும் ஆர்வமாகக் கேட்டான். யாரு?

‘டென்சன் ஆவாத. நம்ம வெறகுமண்டி மருதன் தான். மேலிடம் சொல்லித்தான் செஞ்சிருக்கான்.’

தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.

10


அத்தியாயம் பத்து


பேசவேண்டும், வா என்று வரச்சொல்லி ஆளனுப்பியபோது சந்தோஷமாகத்தான் இருந்தது. வருவாள். பேசலாம். பேசாமலும் இருக்கலாம். ஆனால் பார்க்கலாம். பேச விருப்பமும் சந்தர்ப்பமும் கூடி வந்தால் பேசலாம். நினைத்ததைத்தான் பேச வேண்டுமென்பது கூட இல்லை. ஏதாவது பேசினால் கூட நன்றாகத்தான் இருக்கும். பேசாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுத் திரும்பினால் அதனைக் காட்டிலும்.

ஆனால் கிளம்பியபோது எதுவோ ஒன்று தடுத்தது. எதற்கு வரச்சொன்னோம் என்று நினைத்தான். பேசியே தீரவேண்டிய விஷயம் என்று ஏதுமில்லை. என்னமோ ஒரு பயம், பதற்றம், தவிப்பு. எனக்கு நீ சரியானவளா? இல்லை, இல்லை. உனக்கு நான் சரியானவனா என்று தெரியவில்லை என்று சொல்வதற்கா வரச்சொன்னோம்?

அவள் அச்சப்படலாம். கலவரப்படலாம். அல்லது ஏதுமற்ற வெறுமை வெளியில் தன்னைக் கரைத்துக்கொள்ளலாம். காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு இம்மாதிரியான சங்கடங்கள் நேர வாய்ப்பில்லை. திடீரென்று எங்கோ முளைத்து வளர்ந்த இரு செடிகளைப் பிடுங்கி ஒரு தொட்டிக்குள் நடுகிற வேலை இது. கொஞ்சம் சிக்கல்தான். ஆனால் ரயில் ஓடும் என்றுதான் அப்பா சொல்லியிருந்தார். அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.

ஆனால் தன் அரசியல் வெறிக்கும் வேகத்துக்கும் சாந்தி ஈடுகொடுப்பாளா என்கிற கவலை அவனை விடாமல் அரித்துக்கொண்டிருந்தது. என்னவாகப் போகிறோம் என்று தனக்கே தெரியாத சூழ்நிலை. உச்சிக்கும் அதலபாதாளத்துக்கும் மேலதிக தூர இடைவெளி பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தால், அடுத்த வீடாகத்தான் இரண்டுமே இருக்கின்றன. எங்கும் விழலாம். இரண்டில் எதுவேண்டுமானாலும் தன்னுடையதாகலாம். இரண்டுக்கும் அவன் தயாராகத்தான் இருந்தான். ஆனால் சாந்தி தயாராக இருப்பாளா?

அதுதான் கவலையாக இருந்தது. திருமணத்துக்குப் பிறகு தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று நினைத்துவிட்டால்?

பொதுவில் அவன் குப்பத்தைச் சேர்ந்த யாரும் இம்மாதிரியெல்லாம் யோசித்ததில்லை. ஆக்கிப்போட ஒருத்தி. அவ்ளோதானே? எல்லாத்துக்கும் சேத்துத்தாஞ்சொல்லுறேன் என்று பலபேர் அவன் காதுபடப் பேசியிருக்கிறார்கள்.

அவ்வளவுதானா? அவ்வளவு மட்டும்தானா?

இல்லை என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது. தன் தேருக்குச் சக்கரமாக அல்ல. தேரோடும் பாதையாக அவளால் இருக்க முடியுமானால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். பெருமூச்சு வந்தது.

மனிதன் சுயநலன்களால் ஆனவன். ரத்தமும் நரம்புகளும் உயிரும் உணர்வும் சுயநலத்தால் செய்யப்பட்டிருக்கிறது. பதிலுக்கு அவளுக்கு என்னவாகத் தன்னால் இருக்க முடியும்?

முத்துராமனுக்கு இந்தக் கேள்விதான் குடைச்சலைக் கொடுத்தது. பெரிய விஷயமல்ல. அடிப்படை மனிதாபிமானம். சக உயிரின் மீது கவியும் பரிவு. இதற்கு யாரும் மெடல் குத்தி, கைதட்டத் தேவையில்லை. ஆனால் தன்னால் அது முடியுமா?

அதுதான் தெரியவில்லை.

காத்திருந்தான். கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் நடுவே நின்றபடி தூரத்தில் விரையும் கார்களையும் பேருந்துகளையும் பார்த்துக்கொண்டிருந்தான். மேம்பாலங்களில் நிற்கிறபோது பாதுகாப்பாக இருப்பது போல் உணர முடிகிறது. கீழே விரையும் ரயில்களின் சத்தம் பாதுகாப்புப் படை வீரர்களின் அணி வகுப்புபோல் அவனுக்கு எப்போதும் தோன்றும். வீட்டில் இரவுப் பொழுதுகளில் தூக்கம் வராத போதெல்லாம் இதுதான் அவனுக்குத் தோன்றும். எட்டடி எடுத்து வைத்தால் வந்துவிடுகிற அடையாறு ஆற்றுப்பாலம். தடதடத்து ஓடுகிற ரயில்கள். நினைவு தெரிந்த காலமாக ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பாலத்தின் அடியில் இருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது.

அதிர்வுகளைத் தாங்குவதற்கு உயரங்கள் முக்கியம் போலிருக்கிறது. சட்டென்று ‘அவ அஞ்சடி ரெண்டங்குலம்’ என்று பெண்பார்த்துவிட்டு வந்ததும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. சிரித்துக்கொண்டான்.

ஒற்றைக் காகமொன்று உயரே பறந்து வந்து மின்சாரக் கம்பியில் அமர்ந்தது. முத்துராமன் திரும்பிப் பார்த்தான். சாந்தி நின்றுகொண்டிருந்தாள்.

புன்னகை இல்லை. பதற்றம் இல்லை. அச்சமோ, வெட்கமோ, ஏனென்ற கேள்வியோ எதுவுமற்ற முகபாவம்.

‘என்னமோ பேசணும்னு சொன்னிங்கன்னு உங்க சினேகிதக்கார் ஒருத்தரு வந்தாரு..’

‘அ.. ஆமா..’ என்ன பேசுவதென்று அவனுக்குச் சட்டென்று புரியவில்லை.

‘நல்லா புடிச்சீங்க சிநேகிதம். நேரா எங்கப்பாவாண்ட வந்து சொல்லிட்டாரு. அவரு என்னாடான்னா, மாப்ள பேசணும்னாருன்னா ஒடனே கெளம்புன்னு சொல்லிட்டு அவரும் கூட வந்திருக்காரு..’

சடாரென்று அதிர்ந்து நிமிர்ந்தான் முத்துராமன்.

‘அப்பா வந்திருக்காரா? எங்க?’

‘ஸ்டேஷனுக்கு வெளிய நிக்கிறாரு. நீ போயி பேசிட்டு வாம்மா, நா இங்கயே நிக்கிறேன்னாரு.’

முத்துராமனுக்கு பயமும் பதற்றமும் வெட்கமும் கலந்ததொரு உணர்ச்சி உண்டானது. என்ன மடத்தனம்!

‘இதென்னாடி புதுப்பளக்கம்னாங்க எங்கம்மா. சினிமாங்கள்ள பாத்திருக்கல்ல, சும்மாருன்னுட்டாரு அப்பா..’

‘சேச்சே.. அப்படியெல்லாம் இல்ல சாந்தி. நெசமாவே ஒரு முக்கியமான விசயம் பேசணும்னுதான் வரசொன்னேன். நான் பண்ணது தப்பு. பேசாம நேரா நானே உங்கூட்டுக்கு வந்திருக்கணும்’ என்றான் அவசரமாக.

அவள் ஒரு கணம் அவனை நிமிர்ந்து உற்றுப்பார்த்தாள். பெண் பார்க்க வந்திருந்த போதும் சரி, ஆல்பர்ட் தியேட்டர் வாசலில் பார்த்தபோதும் சரி. இவன் முகத்தில் இத்தனை பரபரப்பு இல்லை. பதற்றம் இல்லை. கவலை இல்லை. எனில், அப்படியென்ன தலைபோகிற விஷயம்?

அவன் தடுமாறினான். மிகவும் திணறினான். பேசத்தான் வேண்டும். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று புரியவில்லை. உனக்கு நான் சரியாக இருப்பேனா என்று சந்தேகமாக இருக்கிறது என்றா சொல்லமுடியும்? அல்லது என் கனவுகளுக்கு நீ குடை பிடிப்பாயா என்று கேட்கத்தான் முடியுமா?

‘எதுவானாலும் சொல்லுங்க.. டௌரி எதனா..’

‘ஐயோ.. சேச்சே..’ என்றான் அதே மாறாத பதற்றமுடன்.

‘அப்ப சரி. வேற எதுன்னாலும் ஓக்கேதான்’ சட்டென்று சிரித்தாள். அவனுக்கு சிரிக்கத் தோன்றவில்லை. தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். ஒரு விஷயத்தைப் புரியவைக்க வேண்டும். அந்த விஷயத்தில் தன் பயம் கலந்திருக்கிறது. சந்தேகம், கவலை இரண்டும் கூடக் கலந்திருக்கிறது. ஒரு பார்வையில் அது வெறும் அபத்தம். இன்னொரு பார்வையில் அர்த்தங்கள் பொதிந்தது. கவலைப்படாதே, நான் தயார் என்று அவள் சொல்லிவிடுவாளானால், மேற்கொண்டு ஒரு புன்னகையுடன் விடைபெற்றுவிடலாம். தன் கவலையை அவள் முகத்திலும் சிந்தையிலும் ஏற்றி அனுப்பிவிட்டு வீடு திரும்ப நேர்ந்தால் தூக்கம் வரப்போவதில்லை. அது நிச்சயம்.

‘நீங்க வேற யாரையாச்சும் லவ் பண்ணுறிங்களான்ன?’ என்றாள் திடீரென்று.

முத்துராமன் வியப்புடன் அவளைப் பார்த்தான்.

‘இல்ல.. டிவி சீரியல்ல நிறைய இந்தமாதிரி வருமில்ல? அதான் கேட்டேன்.

அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘அப்படி எதாச்சும் இருந்தா ஒனக்குப் பரவால்லியா?’

‘என்னா பண்ணமுடியும்? இதான் நம்ம தலையெழுத்துன்னு நெனச்சிக்கிட வேண்டியதுதான். இஸ்டமிருந்தா கட்டிக்கப்போறிங்க. இல்லன்னா, சர்தாம்போன்னு போவப்போறிங்க. அவ்ளோதானே?’

இவளிடம் பேசலாம் என்று சட்டென்று அவனுக்குத் தோன்றிவிட்டது. தடாலென்று, ‘உங்க குப்பத்துக்குத் தீவெச்சது யாரு தெரியுமா?’ என்றான் தொடர்பற்ற எல்லையிலிருந்து.

‘யாரு?’

‘எங்க கட்சிக்காரங்கதான்.’ சொல்லிவிட்டு அவள் முகத்தை உற்றுப்பார்த்தான். சலனமில்லை. வியப்பில்லை. அதிர்ச்சியில்லை. போன ஜென்மத்தில் அவள் ஒரு புத்தராகப் பிறந்திருக்கவேண்டும்.

‘ஓஹோ’ என்றாள் சாதாரணமாக.

‘ஒனக்கு இது ஷாக்கா இல்லியா சாந்தி?’

‘எதுக்கு? எல்லாந்தெரிஞ்சது தானே? உங்க கட்சிக்காரங்க இல்லாங்கட்டி வேற கட்சிக்காரங்க. ரெண்டும் இல்லன்னா பொறுக்கிப் பசங்க. வேற யாரு? எத்தினியோ வாட்டி பாத்தாச்சுங்க இதெல்லாம். பத்தவும் வெப்பாங்க. சோத்துப் பொட்டலம் குடுத்து மேலுக்கு எரநூறு ரூவா பணமும் குடுப்பாங்க. அவங்களுக்குப் பத்த வெக்கணும். நமக்கு பணம் வோணும். அவ்ளதானே!’

ஒரு கணம் அவனுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. நாளிதழ்களும் புறக்கணிக்கும் தீவிபத்துச் சம்பவங்கள் தினசரி எங்காவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் தீயைத் தண்ணீர் போல் அள்ளியெடுத்து முகத்தைக் கழுவிக்கொள்ளும் விதத்தில் அல்லவா பேசுகிறாள்.

அவனுக்குப் பேச்சு வரவில்லை. பேச ஏதுமிருப்பதாகவும் தெரியவில்லை. அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

சாந்திதான் பேசினாள். ‘இதான் உங்க கவலைன்னா விட் ருங்க. எங்களுக்கு இதெல்லாம் பழகிருச்சி.’

‘அதில்ல சாந்தி.. எங்கவல வேற. இன்னிக்கி என் கட்சிக்காரன் எவனோ உங்க குப்பத்துல வந்து நெருப்பு வெச்சிருக்கான். நாளைக்கு என்னை போயி வைடான்னாங்கன்னா நான் போயித்தான் ஆவணும். அதப்பத்தித்தான் யோசிக்கறேன்’ என்றான் அமைதியாக.

11


அத்தியாயம் பதினொன்று


எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை. ஆனால் கண் விழித்தபோது மணி ஏழரையாகியிருந்தது. விடிந்ததும் முதல் நினைவாக முந்தைய நாள் கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சாந்தியுடன் பேசியதுதான் முந்திக்கொண்டு வந்து நின்றது. ஆர்வமும் தயக்கமும் காரணமற்ற பயமும் பதற்றமுமாகப் பேசியதெல்லாம் சரிதான் என்று உறக்கம் வரும்வரை தோன்றியது. ஆனால் இதென்ன? விழித்து எழுகிற நேரத்தில் அத்தனையும் அபத்தமாக அல்லவா தெரிகிறது?

முத்துராமனுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. தன் தெளிவின்மையை வலுக்கட்டாயமாக அவளது சிந்தனைக்குள் திணித்துவிட்டோமோ என்று நினைத்தான். என்ன பெரிய அரசியல், புடலங்காய்? ஆபத்தும் பிரச்னைகளும் இல்லாத துறை ஏதுமுண்டா? முட்டி மோதி முன்னுக்கு வர விரும்புபவனுக்கு வலிகள் குறித்த ஞாபகம் வருவதே ஆடம்பரமல்லவா? என்ன அபத்தம்! தேரோட்டம் தாங்கும் பூமியாக ஏன் அவள் இருக்க வேண்டும்? ஏற்றி உட்காரவைத்து ஓட்டிப்போகிறேன் என்று சொல்லத் துப்பில்லாதவன் அரசியலில் மட்டும் என்ன கழற்றிவிட முடியும்?

உடனே ஓடிப்போய் முந்தைய நாள் பேசிய அனைத்தையும் அவள் மனத்திலிருந்து அழித்துவிட்டு புதிதாக ஒன்று எழுதி நிரப்ப முடியாதா என்று நினைத்தான். சிரித்துக்கொண்டான்.

குளித்து, சாப்பிட்டுக் கிளம்பும்போது அம்மா கேட்டாள்: ‘எப்படா வருவ?’

‘தெரியலம்மா.. எப்பவும்போலத்தான்.’

‘உங்க சித்தப்பா பேசணும்னிட்டுப் போனாரு. முடிஞ்சா வூட்டாண்ட ஒரு நடை வந்துட்டுப் போவ சொன்னாரு.’

‘வந்திருந்தாரான்ன?’

‘அக்காங். நேத்திக்கி வந்தாரு. நீ வர்றதே இல்லன்னிட்டு ஒரே பாட்டு. உங்கப்பாவுக்கு என்னாமோ மருந்து ஒண்ணு குடுத்துட்டுப் போனாரு. தேச்சி ஊறவெச்சிக் குளிச்சா குதிகால் வலி இருக்காதாமா.. போய்தான் பாத்துட்டு வாயேன் ஒருதாட்டி. இன்னா பெரிசா வெட்டி முறிக்கற?’

முத்துராமன் சிரித்தான். ஒரு வகையில் அவள் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை. வெட்டி முறிக்க ஏதுமற்ற வாழ்க்கையாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி, பொங்கல் வந்தால் துணி தைக்கும் வேலை சரியாக இருக்கும். சாதாரண தினங்களில் குப்பத்து மனிதர்கள் புதுத்துணி எடுக்கிற வழக்கமில்லாமல் இருக்கிறது. கிழிந்த துணிகளைத் தைத்துப் போட்டுக்கொள்கிறவர்களும் அரிதாகி இருக்கிறார்கள். வண்ணங்கள் மிகுந்த வாழ்வைக் கிழிசல்களின் வழியே தரிசிப்பது பழகிவிட்டிருக்கிறது.

பொதுவாக அவன் தையல் பணிகளை இரவுகளில் மட்டுமே வைத்துக்கொள்வான். ஊர் உறங்கிவிட்ட இரவுகள். ஓடும் தையல் இயந்திரத்தின் கைச்சக்கரத்துடன் தன் கனவுகளைச் சுழற்றியபடி பணியாற்றுவதுதான் அவனுக்கு வசதி. இத்தனை நாள் வாய்க்காத ஒரு சந்தர்ப்பம் இப்போது கூடி வந்திருக்கிறது. வட்டச் செயலாளருடனான நெருக்கம். தனிப்பட்ட லாபம் ஏதுமில்லாது போனாலும் குப்பத்துக்கு ஒரு தாற்காலிக விடிவு. இன்றைக்குக் கொசு ஒழிப்புப் பணிகள் ஆரம்பமாகப் போகிறது. சாக்கடைகளுக்கு சிமெண்ட் பூசிய கால்வாய். கால்வாய்களுக்கு காங்கிரீட் மூடி. சந்து தோறும் கொசு மருந்து. ஆற்றங்கரையோரம் குப்பை ஒழிப்பு.

எப்படியும் இரவாகிவிடும். இடையில் நேரம் கிடைத்தால் அவசியம் சித்தப்பாவைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்துக்கொண்டான். அவனது தந்தையைக் காட்டிலும் சித்தப்பாவுக்கு அரசியலில் வெறியும் வேகமும் அதிகம். அவர் மாற்றுக்கட்சி. அண்ணனும் தம்பியும் அரசியல் பேசிக்கொள்ளத் தொடங்கினால் பெரும்பாலும் சண்டையில் முடியும். ஒவ்வொருவரின் தலைவரும் அடுத்தவருக்கு ஏனோ பிடிக்காமலேயே இருக்கிறார்கள். தலைவர்களும் கொள்கைகளும். கொள்கைகளும் முழக்கங்களும்.

இருவரும் ஒருவரை ஒருவர் உருப்படமாட்ட என்றுதான் இறுதியில் ஆசீர்வதித்துக்கொள்வது வழக்கம். ஏழை சொல் அம்பலமேறாவிட்டாலும், ஏழையின் வாழ்த்து பலிக்கத்தான் செய்கிறது. இரண்டு பேருமே அரசியலில் இறங்கி உருப்படாமல்தான் போனார்கள்.

‘தபார் நாகராஜு. நாம அடிச்சிக்கிட்டு என்னா ஆவப்போவுது? எங்கட்சில என்னால மேல வரமுடியல. உன் கட்சில உன்னால மேல வரமுடியல. தொண்டனா இருந்து ரிடையர் ஆவுடா சோம்பேறின்னு நம்ம தலைல எழுதிவெச்சிட்டான் கம்னாட்டி. ஒண்ணு புரிஞ்சிருச்சி எனக்கு. கொள்கை பாத்து கட்சில சேந்த நாம ரெண்டு பேருமே வெளங்காமத்தான் இருக்கம். நாலு காசு சில்ற தேறுமா, ஒரு போஸ்டு கிடைக்குமான்னு கணக்கா ப்ளான் பண்ணி நமக்கு அப்புறம் உள்ளார வந்த அத்தினி பேரும் மேல பூட்டானுக. பத்து லட்சம் வாட்டி வால்க கோசம் போட்டிருப்பமா? நல்லாத்தான் வாழறானுக. நாம வாழறமான்னு கண்டுக்கத்தான் ஒரு நாதி இல்லாம பூட்ச்சி..’

நல்ல போதை ஏற்றிக்கொண்டு வீட்டில் சாப்பிட உட்கார்ந்த ஒரு தினத்தில் அவனது தந்தை தன் தம்பியிடம் பேசியது அவனுக்கு வரி வரியாக மனத்தில் ஓடியது. பரிமாறிக்கொண்டிருந்த அம்மா அவள் பாட்டுக்குப் புலம்பிக்கொண்டேதான் இருந்தாள் கடைசி வரை. எதுக்குய்யா இந்த சனிய கட்டிக்கிட்டு அல்லாடுறிங்க? விட்டுத் தொலைச்சிட்டு வேற எதுனா சோலி பாக்கவேண்டியதுதானே?

அன்றைக்குத்தான் அவன் முடிவு செய்தான். அரசியலில் அவனது நோக்கம் பதவி. மேலே வருவது. உதைத்துக்கொண்டு பாயும் ஒரு குதிரையைப் போல நிற்காமல் ஓடி வெல்வது. கொள்கைகள் அவசியம் வேண்டும். மேடைப்பேச்சுக்கு அது இல்லாமல் முடியாது. ஆனால் மேடைக்குப் பின்னால் வேண்டியவை என்னென்ன என்று தெரிந்துகொள்ளாமல் இருப்பது அபத்தம். இன்றைக்குக் கிடைத்திருக்கும் வட்டச் செயலாளரின் நெருக்கமும் அண்மையும் கண்டிப்பாகத் தன் வாழ்வில் ஒரு படி மேலேறச் செய்கிற விஷயம்தான் என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது. ஏறிய படியில் நிலைத்து நிற்க முதலில் கொசு மருந்து அடித்தாக வேண்டும். அப்புறம் சந்தர்ப்பம் கிடைத்தால் சித்தப்பாவைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது.

சித்தப்பா, நீங்களும் அப்பாவும் விட்ட இடத்தில் நான் ஜெயிக்கப் போகிறேன். தொலைத்த சில்லறையை நோட்டாக மாற்றி எடுக்கப் போகிறேன். நம்புவீர்களா? ஆசீர்வதிப்பீர்களா?

‘உருப்பட மாட்ட’

அவரது கரகரத்த குரல் மனத்துக்குள் ஒலித்தது. இப்போதும் சிரித்துக்கொண்டான்.

முத்துராமன் ஆற்றங்கரைக்கு வந்தபோது அங்கே வட்டச் செயலாளர் வந்து அமர்ந்திருந்தார்.

‘ஐயா.. வாங்க, வாங்க.. எப்ப வந்திங்க?’

‘இப்பத்தான் வரேன் முத்து.. உன்னியத்தான் கேட்டேன். இல்லடா?’ என்றார் பின்புறம் திரும்பி.

‘அ, ஆமாங்க. தம்பி எங்கன்னு கேட்டுக்கிட்டேதான் வந்தாரு.’

‘கொஞ்சம் தூங்கிட்டேங்க.. நைட்டு லேட்டாயிருச்சி..’

‘அதெல்லாம் பரவால்லப்பா.. எப்பிடி நடக்குது வேலைங்க? நேத்திக்கி கார்ப்பரேஷன் கமிசனர் பேசினாரு. சொந்தக் காசப் போட்டு நல்ல காரியம் பண்றிங்கன்னாரு. அதுக்குத்தானே பொதுவாழ்க்கைல இருக்கறது? என்ன நாஞ்சொல்றது?’

‘கண்டிப்பாங்க. நியாயமா பாத்தா கார்ப்பரேசன் செய்யவேண்டிய வேலைங்க இது. கொசு மருந்து அடிக்க சொல்லி எத்தினிவாட்டி மனு குடுத்திருப்பமோ கணக்கே கிடையாது. கரீட்டா தீவாளிக்கு மறுநாள் வந்து அடிப்பான். ஏழை பாழைங்க கிட்ட காசு கேக்க எப்பிடி மனசு வருதோ தெரியாது. என்னாத்த சொல்லி என்னங்க? உங்கள மாதிரி யாரானா பெரிய மனசு பண்ணாத்தாஞ்சரி.’

வட்டம் சட்டென்று எழுந்து அவன் தோளில் கைபோட்டுத் தனியே அழைத்துப் போனார்.

‘ஒரு விசயம் முத்துராமா.. நம்ம பசங்க செலராண்ட சொல்லி பத்திரிகைங்களுக்கு நியூஸ் வுட அனுப்பியிருக்கேன். எப்பிடியும் இன்னிக்கி நாளைக்குள்ள நாலஞ்சு பேரு வந்து பாப்பானுக. அந்த நேரம் நான் இங்க இருந்தா நல்லா இருக்காது. நீ என்னா செய்யி, யார் வந்து கேட்டாலும், கரெக்டா இந்த மேட்டர மட்டும் சொல்லிடு. நான் திங்கற சோறு, நம்ம தலைவர் போட்ட பிச்சை. மக்கள் குடுத்த வரம். என்னை வாழவெக்கற தலைவருக்கும் மக்களுக்கும் என்னால என்ன செய்யமுடியும்? நானும் ஏழைதான். கஷ்டப்பட்டு ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கறேன். அந்தப் பணத்த இந்தமாதிரி காரியங்கள்ள செலவு பண்றதுதான் நம்ம தலைவருக்கு சந்தோசம் தரக்கூடிய விசயம். முழுக்க முழுக்க தலைவர் பேராலதான் இத செய்யறேன். என் க்ரெடிட்டுன்னு இதுல ஒண்ணூம் கிடையாது. அப்பிடின்னு நான் சொன்னேன்னு சொல்லிரு..’

முத்துராமனுக்கு வியப்பாக இருந்தது. பேட்டிகள் வாய்ப்பு வரும்போது ஏன் தவிர்க்க வேண்டும்?

‘அட நீ ஒருத்தன்யா.. நான் பேசக்கூடாது முத்து.. இப்ப பேசினா அது நல்லாருக்காது. விசயம் பெரிசாவணும். அத்தினி பேரும் இத பாராட்டணும். நியூஸ் பாத்துட்டு தலைவர் கூப்டு பேசணும் என்னிய. நான் பேசி இதுவரைக்கும் ஒண்ணும் வெளங்கல. அவரு என்னிய கூப்ட்டு பேசினாத்தான் நான் நெனச்சது நடக்கும். புரியுதா?’

‘சர்தாங்க’ என்றான்.

‘பாத்துக்க. எங்கியும் போயிராத. மத்த பசங்கள பேச வுட்றாத. உன்னியத்தான் நம்பறேன்’ என்று தோளில் தட்டிவிட்டு வண்டியேறிப் போனார்.

மாலை வரை பம்பரமாகச் சுற்றி வேலைகளை கவனித்தான். குப்பத்தில் பாதி இடங்கள் முழு சுத்தமாகிவிட்டது போலிருந்தது. சாலைகள் திடீரென்று பளிச்சென்று தென்பட்டன. பல குடிசைகள் ஓலை மாற்றப்பட்டுக்கொண்டிருந்தன. மாற்றம் இப்படித்தான். திடீரென்று வரும். சொல்லாமல் கொள்ளாமல். ஆனால் வராமல் போய்விடுமா என்ன?

ஆறு மணி வாக்கில் அவன் சித்தப்பாவைப் பார்க்கப் போகலாம் என்று கிளம்பியபோது இரண்டு பைக்குகள் வழி மறித்தன. கட்சிக்கார ஆட்கள்தான்.

‘முத்து.. உன்னிய நம்ம தங்கவேல் அண்ணன் கையோட இட்டார சொன்னாரு. இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்திருக்காரு. அபீத் காலனியாண்ட இருக்காரு.’

எம்.எல்.ஏ.

முத்துராமன் உஷாரானான்.

12


அத்தியாயம் பன்னிரண்டு


எம்.எல்.ஏ. தங்கவேலு, அடுத்த தேர்தலுக்குப் பிறகும் எம்.எல்.ஏவாக நீடித்து கட்சியும் எந்தப் பிரச்னையுமின்றி ஆட்சியமைக்குமானால் கண்டிப்பாக அமைச்சராகிவிடப் போகிறார் என்று பேட்டையில் பேசாத வாய் கிடையாது. கட்சி பேப்பரில் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக அவர் கைகூப்பிய விளம்பரம் வெளியாகும். எதற்காவது தலைவரை வாழ்த்துவார். வாழ்த்துவதற்குத் தருணங்களா பிரச்னை? மனம் வேண்டும். எட்டு காலம் பன்னிரண்டு செண்டிமீட்டர் அளவுக்கு இடமெடுத்து வாழ்த்தப் பணம் வேண்டும். அவரிடம் இரண்டும் இருந்தது. இரண்டு பெட்ரோல் பங்குகளும் ஆறு ஒயின் ஷாப்புகளும். போதாது? தவிரவும் தேனிக்குத் தெற்காக அம்மாபட்டியைத் தொட்டுக்கொண்டு அவருக்கு ஒரு இருநூறு, இருநூற்றைம்பது ஏக்கரில் ஒரு எஸ்டேட் இருப்பதாகச் சொல்லுவார்கள். எம்.எல்.ஏ. அதனைத் தோட்டம் என்றே குறிப்பிடுவார். என்ன பயிரிடுகிறார் என்று யாருக்கும் தெரியாது. ‘மானம் பாத்த பூமில என்ன பெரிசா வெளஞ்சிரப் போவுது? நம்ம சொந்தக்காரப் பையன் ஒருத்தன் அங்க இருந்து பாத்துக்கிடுறான். அவனுக்கு ரெண்டு வேளை கஞ்சிக்காச்சேன்னு களுத, வாங்கிப் போட்டுவெச்சேன்’ என்பார்.

ரசீது நோட்டுடன் யார் வந்தாலும் ஐநூற்றி ஒரு ரூபாய், கூழ் ஊற்றும் திருவிழா என்றால் ஐயாயிரத்தி ஒரு ரூபாய், ஒரு பொதுக்காரியம் என்றால் முதல் வரிசையில் உட்கார்ந்து, திரும்பிப் பார்க்காதவர்களுக்குக் கூட இரு கரம் கூப்பிய வணக்கம் என்று பிராந்தியத்தில் அவர் ஒரு நிரந்தரப் பிரபலம். இரண்டு முறை எதற்கோ கட்சி சார்பில் சிறை சென்றிருப்பதாகச் சொல்லுவார். ஆனால் கட்சிப் போராட்டங்களின் வரலாறு என்று எழுதப்பட்ட சிறு வெளியீடுகளில் அவரது பெயர் ஏனோ விடுபட்டுவிட்டது. அதனாலென்ன? தலைவரின் நம்பிக்கைக்கு உரியவர். தவிரவும் ஒன்றிரண்டு அமைச்சர்களுக்கு வலக்கரம் மாதிரி செயல்படுபவர். சரித்திரம் இருட்டடிப்பு செய்தாலும் சமகாலம் சாதகமாகத்தான் இருக்கிறது.

ஆனால் எதற்காகத் தன்னைக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்? முன்பின் அறிமுகம் கிடையாது. பெயர் தெரிந்திருக்கக் கூட நியாயமில்லை. பேட்டையளவில் பிரபலம் என்று கூடச் சொல்லமுடியாது. கொடி கட்டி, விசிலடிக்கும் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரிசைத் தலைவர்கள் விற்பன்னர்கள் இல்லை. சில பொதுக்கூட்டங்களில் அவர்கள் சில உத்திகளைக் கையாள்வார்கள். முத்துராமன் ரசித்திருக்கிறான்.

‘நாஞ்சொல்றது சரியில்லே, தப்புன்னு யாரானா ஒருத்தர் சொல்லுங்க பாக்கலாம்? அந்தா.. உக்காந்துக்கினு இருக்குறாரே ராமசாமி.. அவர கேட்டுப்பாருங்க.. சொல்லு ராம்சாமி.. ஒனக்குத் தெரியுமில்ல? கேளுங்கப்பா.. இதுல என்னா வெக்கம்? அந்தா, அங்க..அங்க வெள்ள ஷர்ட்டு போட்டுக்கினு இருக்கறது.. லே.. நம்ம சுப்ரமணிதானே நீயி? நீ சொல்லேம்பா..’

நூற்றுக்கணக்கான மனித உடல்களால் நிரம்பிய மைதானத்தில் எப்போதும் உண்டு ஆயிரக்கணக்கான ராமசாமிகள் மற்றும் எண்ணிக்கையிலடங்கா சுப்பிரமணிகள். தன் பெயரைத் தலைவர் மைக்கில் உச்சரித்ததும் எழும் உத்வேகத்தில் எழுந்து நின்று வாழ்க, வாழ்க என்று கத்தும்போது எழும் உணர்ச்சி, கூட்டத்தின் ரத்த நாளங்களில் கலந்து நிறையும். ஆனால் ஒருபோதும் எந்த ராமசாமி, எந்த சுப்பிரமணி என்று யாரும் கேட்டுவிட முடியாது. இன்னொரு கூட்டத்துக்குப் போகவேண்டியிருப்பதால் தலைவர்தம் சிற்றுரையை அத்துடன் முடித்துக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய சூழல் ஏற்பட்டுவிடும்.

முத்துராமனுக்கு அதுதான் வியப்பு. தங்கவேல் அண்ணன் சரியாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆத்தங்கரைக் குப்பத்து முத்துராமன். தமிழரசனின் மூத்த மகன். டைலராக இருப்பவன். பெரிய கம்ப சூத்திரமில்லை. யாராவது சொல்லியிருப்பார்கள். வட்டத்தின் காசில் குப்பத்தைச் செப்பனிடும் வாலிபன். அண்ணன் ஏன் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. கண்டிப்பாகப் பொதுநல நோக்கம் தாண்டி ஏதாவது ஒரு புனிதமான நோக்கம் இருந்தே தீரவேண்டும். என்ன ஏது என்று கொஞ்சம் விசாரிக்க வேண்டியது ஜனநாயகக் கடமை.

வேறென்ன இருந்துவிட முடியும்? முத்துராமன் யோசித்தான். ஒருவகையில் இதைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றியது. எம்.எல்.ஏ. தங்கியிருந்த அபீத் காலனி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து, தான் வந்திருக்கும் விஷயத்தை வாசலில் இருந்த பையனிடம் சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தான்.

அது தங்கவேலு அண்ணனின் சகலை வீடு. முத்துராமனுக்குத் தெரியும். கடந்த தேர்தல் நேரத்தில் அங்கு வைத்துத்தான் பகுதிக்கான பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. பிரம்புக்கூடையில் கட்டுக் கட்டாகப் பணத்தை நிரப்பி, சோபாவுக்கு அடியில் வைத்திருந்தார் அண்ணன். கால் மேல் கால்போட்டு சோபாவில் அமர்ந்த வண்ணம் ஒவ்வொரு செயல்வீரராக அழைத்துப் பேசினார். பேச்சுவார்த்தையின் இறுதியில் திருப்தி ஏற்பட்டுவிடுகிற பட்சத்தில் சோபாவுக்கு அடியிலிருந்து பிரம்புக்கூடை வெளியே இழுக்கப்படும். ஒரு நோட்டு, இரண்டு நோட்டு, ஐந்து நோட்டு, பத்து நோட்டு. ஒரு நோட்டு என்பது ஒரு கட்டு. இதுதான் கணக்கு. ‘எலேய், ஆனைக்கு அல்வா வாங்கிப் போட்டாலும் ஒரு வரி எளுதி வெச்சிரு. முன்னமாதிரி இல்ல இப்பல்லாம். பாத்து நடந்துக்குங்கடா..’

பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்த சக தொண்டர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் பரவசத்தையும் தூர இருந்து முத்துராமன் பார்த்திருக்கிறான். அவனுக்கு அப்போது பணத்தைத் தொட்டுப்பார்ப்பதில் ஆர்வம் இருந்ததில்லை. தலைவரை அருகே பார்த்து வணக்கம் சொல்லி, பதில் வணக்கம் பெற முடிந்தால் பெரிய விஷயம் என்று நினைத்திருந்தான்.

அதே வீடுதான். அதே முத்துராமன் தான். அதே தங்கவேல் அண்ணன்தான். ஆனால் வந்திருக்கும் காரணம் வேறு. தவிரவும் ஓர் அழைப்பின் பேரில் வர நேர்ந்திருக்கிறது. இது விசேஷம். எதிர்பாராதது. ஏதாவது நடக்கும். நடக்கத்தான் வேண்டும். நகர்ந்துகொண்டிருப்பதாக உணர முடிந்தால் போதும். ஓட்டத்துக்கான காலம் வரும்போது யாராவது பிடித்துத் தள்ளிவிடுவார்கள்.

‘அண்ணன் உள்ள வரசொல்றாரு.’ குரலைப் பின்பற்றி அவன் உள்ளே போனான்.

விசாலமான வரவேற்பறை. பெரிய பெரிய அல்சேஷன் நாய்கள் மாதிரி அறையெங்கும் கனத்த சோபாக்கள் வியாபித்திருந்தன. நடுவே விரித்திருந்த பூப்போட்ட கம்பளத்தின்மீது ஒரு டீப்பாய். அதன் கண்ணாடி முகத்தின்மேல் கட்சிப் பத்திரிகை. மூலைக்கொரு அறை. நடு வீட்டில் நட்ட கொய்யாமரம் மாதிரி உயரே எழுந்து போன மாடிப்படிகள். பணத்தின் செழுமையில் பளபளத்த சாண்டலியர் விளக்குகள். இங்கே எடுபிடி. அங்கே நெற்றி நிறைய அகலக் குங்குமமிட்ட எம்.எல்.ஏ மனைவியின் சகோதரி.

‘வா முத்து.. நல்லாருக்கியா?’ என்றார் எல்.கே.ஜியிலிருந்து +2 வரை ஒரே ஸ்கூலில் படித்த பாவத்துடன்.

‘இருக்கேண்ணே. ஆத்துப்பக்கம் போனேன். நீங்க வரசொன்னிங்கன்னு ஆளு வந்து சொன்னதுல அப்புடியே ஓடியாந்துட்டேன். டிரெஸ்ஸு கூட மாத்தல.’

‘ஒழைக்கறவன் என்னிக்குய்யா வேளைக்கு ஒரு டிரெஸ்ஸு மாத்தியிருக்கான்? ஊரு முழுக்க தீவாளிக்கு துணி தச்சிக் குடுப்ப. என்னிக்கானா உனுக்குன்னு ஒண்ணு ஆசைப்பட்டு தச்சிருப்பியா? இல்லல்ல? அதான் சொல்றேன். உக்காரு. என்ன சாப்புடற?’

‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ணே. உங்கள பாத்ததே சந்தோசமாயிருச்சி.’

‘இருக்கட்டும். தங்கச்சி, நம்ம முத்துராமனுக்கு ஒரு காப்பி எடுத்தா..’ என்றார் உள்ளே பார்த்து.

காப்பி வந்து, அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை எம்.எல்.ஏ. பேசாதிருந்தார். முடித்துவிட்டு வைத்ததும், ‘குடிச்சிட்டியா? சரி, ஆரமிப்பம். சிங்காரம் என்னா சொல்றான்? அடுத்த எலக்சன்ல எம்.எல்.ஏ. ஆயிரணுமாமா? உங்க குப்பத்துல என்னமோ சமுதாய பொரச்சியெல்லாம் பண்றானாம்?’ என்று முதல் வரியில் விஷயத்துக்கு வந்தார்.

முத்துராமனுக்கு அதிர்ச்சியாக ஏதுமில்லை. ஆனாலும் சில வினாடிகள் தயங்கினான். இப்போது பேசுகிற ஒவ்வொரு சொல்லும் முக்கியம் என்று தோன்றியது. ஆகவே, ஜாக்கிரதையாக, ‘தெரியலண்ணே. அடிக்கடி போயிப் பாப்பம். ரொம்ப கஸ்டப்படுறோம், எதுனா செய்ங்கண்ணேன்னு கேப்போம். சர்தாண்டா செய்யிறேன், செய்யிறேன்னுவாரு. என்னா தோணிச்சோ, இப்பம் வந்து ரோடு போட்டுத்தாரேன், கொசு மருந்து அடிக்கறேன்னு செய்யிறாரு.. எல்லாம் முடிஞ்சதும் ஒரு நற்பணி மன்றம் மாதிரி ஆரம்பிச்சி, நம்ம தலைவரு பேரு போட்டு கல்லு தொறக்கணும்னு சொன்னாருண்ணே.’

‘ஓஹோ’

ஒரு கணம் யோசித்துவிட்டு ‘நீங்க சொல்லித்தான் செய்யிறாருன்னு நாங்க நெனச்சிக்கிட்டிருக்கம்ணே..’ என்றான்.

‘நாஞ்சொல்லீயா? நீவேற! பாரு, இந்தாளு செய்யறதெல்லாம் கார்ப்பரேசன் விதிமுறைங்களுக்கு எதிரா போவுது. என்னாத்த நெனச்சி செய்யறான்னே தெரியல. என்னாண்டகூட ஒரு வார்த்த சொல்லல. கமிசனரு என்னாண்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு முத்து.’

‘அடடா..’ என்றான் பட்டும்படாமலும்.

‘நான் தலைமையகத்துல விசயத்த சொல்லிட்டேன். இந்தமாதிரி ஸ்டண்டு அடிச்சிக்கினு இருக்காரு. பின்னால எதுனாச்சும் ப்ராப்ளம்னு வந்தா நான் பொறுப்பில்லன்னிட்டேன். செலவு பண்றது முளுக்க கள்ளப்பணம். மாட்னா அப்பன் தாவு தீந்துரும். அந்தாளுக்கு கட்சி மேலிடத்துல நல்ல பேரு இல்லய்யா.. இருவது வருசமா இருக்காரேன்னு, பாத்தா ஒரு வணக்கம் போடுவாங்க. அத்தோட செரி.’

முத்துராமன் உஷாரானான். மிகவும் கவனமாகக் குரலைத் தாழ்த்தி, ‘இதெல்லாம் தெரியாதாண்ணே.. நம்ம தொகுதில உங்க ஒருத்தரவிட்டா வேற யாருக்குமே செல்வாக்கு கிடையாதுண்ணே. போன எலக்சன எடுத்துக்கங்க. உங்களுக்கு பதிலா வேற யாருக்கானா டிக்கெட் குடுத்திருந்தாங்கன்னா டெபாசிட் தேறியிருக்குமா? நீங்களே சொல்லுங்க. உங்களுக்குத் தெரியாததில்ல. உங்க மூஞ்சிக்குத்தாண்ணே எல்லாம்..’

சட்டென்று எம்.எல்.ஏவின் முகம் ஒரு பூவைப்போல் மலர்ந்துவிட்டது. ‘பாரு. படிக்காதவன் ஒனக்குத் தெரியுது. அந்தப் பன்னாடைக்குத் தெரியல. ஒரு குப்பத்துல கொசு மருந்தடிச்சிட்டா அடுத்த எலக்சன்ல டிக்கெட் கிடைச்சிரும்னு நினைக்கறான்.’

முத்துராமன் தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

‘தபாரு முத்து.. உங்கப்பா காலத்துலேருந்து.. ஏன் அவங்கப்பா காலத்துலேருந்து உங்க குடும்பத்த எனக்குத் தெரியும். நீதான் இதுவரைக்கும் என்னாண்ட வராம இருந்துட்ட. இப்ப சொல்லுறேன். சிங்காரம் சங்காத்தம் ஒனக்கு வேணாம். அவன் என்னா செலவு பண்றான்ற வெவரத்த மட்டும் சப்ஜாடா என்னாண்ட வந்து சொல்லிரு. மத்தத நான் பாத்துக்கறேன்.. அதுசெரி.. நீ கார்ப்பரேசன் எலக்சன் வந்தா நிப்பியா? நான் டிகிட் வாங்கித் தரவா? இன்னும் மூணு மாசத்துல வந்துரும்யா..’

முத்துராமன் மனத்துக்குள் துள்ளிக் குதித்தான்.

13


அத்தியாயம் பதிமூன்று


முத்துராமன் வீட்டுக்கு வந்தபோது தம்பி மட்டும்தான் இருந்தான். குப்புறப் படுத்துகொண்டு சினிக்கூத்து படித்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய உலகம் சினிமா பத்திரிகைகளால் ஆனது. அக்கப்போர்களும் அடிதடி விவகாரங்களும். நடிகர்களின் சொத்து விவரங்களும் நடிகைகளின் காதல் மற்றும் விவாகரத்து சங்கதிகளும். தன்னைப்போல் அரசியலில் அவனுக்குக் கனவுகள் ஏதும் இருக்கிறதா என்பதை அறிய முத்துராமன் பல சமயம் முயற்சி செய்து பார்த்திருக்கிறான். கட்சி மீட்டிங்குகளுக்கு வருவதிலோ, தேர்தல்காலப் பணிகளை ஆர்வமுடன் பார்ப்பதிலோ அவன் குறை வைத்ததில்லை. ஆனால் அரசியலில் அவனது ஆகப்பெரிய லட்சியம் பிரியாணிப் பொட்டலமாக மட்டுமே இருக்கிறது என்று முத்துராமனுக்கு எப்போதும் தோன்றும்.

தொண்டனாக இருப்பதில் பிழையில்லை. ஆனால் சாமர்த்தியசாலிகளான தொண்டர்களுக்கு மட்டும்தான் பிரியாணிப் பொட்டலங்களும்கூடக் கிடைக்கின்றன. யாரிடமாவது சொல்லி அவனுக்கு ஏதாவது வேலை வாங்கித் தந்துவிட முடியுமானால் நல்லது என்று முத்துராமனின் அப்பா சில சமயம் சொல்லியிருக்கிறார். தானொரு எம்.எல்.ஏ. ஆகமுடிந்தால் தம்பியின் எதிர்காலம் குறித்த கவலைகள் இல்லாது போகும் என்று முத்துராமன் சில உறக்கம் வராத இரவுகளில் நினைத்திருக்கிறான்.

‘அம்மா எங்கடா?’

‘தெரியல. பக்கிடில துணி எடுத்துக்கினு வெளிய போனாங்க.’ என்று பதில் சொன்னான்.

பிறகெப்படித் தெரியாமல் போகும்? பக்கெட்டில் துணி எடுத்துக்கொண்டு இஸ்திரி போட யாரும் போகமாட்டார்கள். துணி துவைக்க என்று ஏன் இவனுக்குச் சொல்லத் தோன்றவில்லை? முத்துராமனுக்குத் தன் தம்பி குறித்த கவலைகளுள் இது பிரதானமானது. அது அலட்சியமா, உண்மையிலேயே அவன் சற்று மந்தமா என்று இதுவரை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. வீட்டில் பெரிய பிரச்னைகள் ஏதும் அவனால் கிடையாது. போடுவதைச் சாப்பிட்டுவிட்டு ஊரைச் சுற்றி வருகிறவன் தான். எப்போதாவது இஷ்டமிருந்தால் முத்துராமனுக்குத் துணி தைப்பதில் உதவிகள் செய்வான். காஜா எடுத்துக் கொடுப்பான். துணிக்குவியல்களை எடுத்து ஒழுங்கு செய்து வைப்பான். கட்சிப் போஸ்டர்கள் சிதறிக் கிடந்தால் எடுத்து மடித்து வைப்பான். தனக்கென அபிப்பிராயங்களோ, விமரிசனங்களோ இல்லாமல் இருபத்தைந்து வயது வரை வாழப் பழகிவிட்டவன். அடுத்தவர் அபிப்பிராயங்களுக்கும் அவனது வாழ்வில் பெரிய இடங்களேதும் கிடையாது.

எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் இவனுக்கு ஏதாவது செய்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு முத்துராமன் வேகமாக வெளியே வந்தான்.

0

மாநகராட்சி நவீன கழிப்பிடம். கட்டிய நாளாகக் கழுவப்படாத இடம். நாய்களும் நரகலும் பீடித் துண்டுகளும், எதற்குப் போடப்பட்டது என்றே தெரியாமல் ஆங்காங்கே திட்டுத்திட்டாக சேறில் படிந்த பிளாஸ்டிக் கவர்களுமாகப் பிராந்தியத்தை நாறடித்துக்கொண்டிருந்த கட்டடம். ஒருநாளும் சுத்தம் செய்யப்பட்டதில்லை. குப்பத்தின் கொசு உற்பத்தி பிரதானமாக அங்கிருந்துதான் தொடங்குவதாக முத்துராமன் நினைத்தான். ஆற்றங்கரைப் பணிகள் முடிந்தபிறகு இந்த இடத்துக்கு ஏதாவது செய்ய முடிந்தால் தேவலை என்று தோன்றியது.

ஆனால் என்ன செய்தாலும் இரண்டு நாள்தான். பினாயில் ஊற்றிக் கழுவ வேண்டிய இடம் வெளியில் இல்லை என்று நினைத்தான். ஒவ்வொரு வருடமும் மலேரியாவும் டெங்குவும் பருவகாலம் தவறாமல் அங்கிருந்து வந்து குப்பத்தைத் தாக்கிவிட்டுப் போகின்றன. ஏன் யாருக்கும் இது உறுத்தவே இல்லை?

அவனுடைய அம்மாவும் விலக்கல்ல. ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு ஜுரத்தைக் கொண்டுவருபவள் அவள்தான். ஆனாலும் தினம் தவறாமல் மாநகராட்சி நவீன கழிப்பிடத்தின் வாசலில் இருக்கிற அடிபம்பில்தான் அவள் துணி துவைக்கிறாள். அது குடிப்பதற்கான குழாயா, குளிப்பதற்கான குழாயா என்று இனிமேல் ஆராய்ச்சி மேற்கொள்வது சிரமம். நிறுவப்பட்டபோது சில நாள்களுக்கு நல்ல தண்ணீர் வந்தது. பிறகு கலங்கலாக வந்து விமரிசனங்களுக்கு உள்ளானது. திடீரென்று வண்ணமயமான தண்ணீரை குப்பத்துக்கு ஒருநாள் அறிமுகப்படுத்தியது. அப்புறம் தண்ணீர் வராத தினங்கள். நடுவில் யாரோ கைப்பிடியை உடைத்து எடுத்துப் போய் சந்தையில் போட்டுவிட்டு துணிப்பையில் அரிசி வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். ஏதோ ஒரு தேர்தல் சமயத்தில் மீண்டும் குழாய்க்குக் கைப்பிடியும் குழாயில் தண்ணீரும் சாத்தியமானது. மக்கள் துணி துவைக்கவும் குளிக்கவும் கைகால் கழுவவும் அதனைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

ஒரு சந்தர்ப்பம். ஒரே ஒரு சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்துவிட்டால் போதும் என்று மீண்டும் அவன் நினைத்தான். பெரிய புரட்சிகள் சாத்தியமாகாவிட்டாலும் சில அடிப்படைகளைத் தன்னால் மாற்ற முடியும் என்று தோன்றியது. அரசியல் ஒரு ஆயுதம். இரு புறமும் கூரான ஆயுதம். சரியாகப் பயன்படுத்தத் தன்னால் முடியும் என்று உறுதியாக நினைத்தான். எதிர்வரும் கார்ப்பரேஷன் தேர்தலில் நுழைய முடிந்துவிட்டால் போதும். எப்போதுமே தொடக்கம்தான் சிக்கல்களும் பிரச்னைகளும் கொண்டது. ஒரு படி ஏறிவிட்டால் போதும். பின்னால் வருபவர்கள் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.

தங்கவேல் அண்ணன் விளையாட்டாகக் கேட்டாரா, சீரியஸாகக் கேட்டாரா என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாய் வாலாட்டுவதற்கு உயரே கையைத் தூக்கிப் பொறையை ஆட்டுவது போலத் தன்னை கவுன்சிலர் தேர்தலுக்குத் தயாராகச் சொல்லியிருப்பாரோ என்றும் தோன்றியது. ஆனால் அப்படியாவது சொல்லும் அளவுக்குத் தனது முக்கியத்துவம் கூடியிருப்பது பற்றிய சந்தோஷமும் இருந்தது. பார்க்கலாம். ஒருக்கால் கட்சி சீட் கிடைக்காது போனால் சுயேச்சையாக நின்று பார்க்கலாமே? அதுவே கட்சியில் முக்கியத்துவம் பெற உதவி செய்யக்கூடுமல்லவா?

அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது. தனது வார்டில் கண்டிப்பாகத் தான் வெற்றி பெறுவதற்குப் பெரிய இடைஞ்சல்கள் இருந்துவிட முடியாது. இத்தனை வருடங்களில் தன்னைத் தெரியாதவர்கள் குப்பத்தில் யாரும் இருக்க முடியாது. நல்லவன். சமூக சேவகன். நேர்மையான டெய்லர். ஏன் வோட்டுப் போடமாட்டார்கள்? ஆனால் தேர்தல்களில் தனி நபர்களைவிடக் கட்சிகள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. அவரவர் தேர்வும் தீர்ப்பும். தவறில்லை. போராடிப் பெற்ற சுதந்தரமும் இலவச இணைப்பாகக் கிடைத்த ஜனநாயகமும் இதைக்கூடச் செய்யாவிட்டால் அப்புறம் எதற்கு?

சுயேச்சையாக நிற்பது குறித்த சிந்தனை இப்போதைக்கு வேண்டாம் என்று நினைத்தான். எப்படியாவது தங்கவேல் அண்ணன் சொன்னபடி சீட் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும். அவராக விரும்பி சீட் கொடுக்கிற அளவுக்கு ஏதாவது செய்யமுடிந்தாலும் தேவலை. என்ன செய்வது? ‘சிங்காரம் என்னா செலவு செய்யறான்? அந்தக் கணக்க கண்டுபிடி. அத்தினியும் கள்ளப்பணம்’ கேட்ட குரல் மீண்டும் மனத்தில் எதிரொலித்தது. கண்டுபிடிக்கலாம். பெரிய விஷயமில்லை. கணக்கெழுதி வைக்கும் பெரிசுகள் தனக்குச் சொல்லமாட்டேன் என்று கூறப்போவதில்லை. தவிரவும் மண் அடிக்கும் டிரைவர்கள் தெரிந்தவர்கள். கூலிக்கு வரும் ஆள்களையும் அவனுக்குத் தெரியும். பண பட்டுவாடா செய்யும் வட்டச் செயலாளரின் பி.ஏவும் அறியாத முகம் அல்ல. கூப்பிட்டு உட்காரவைத்து ஒரு ஹாஃப் ஊற்றிக்கொடுத்தால் வட்டத்தின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டங்களைப் பத்திரத்தாளில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடுவான்.

எதுவும் சாத்தியம். எல்லாமே சாத்தியம். ஆனால் இது ஒரு பெரிய காரியமா? தன்னிடம் தங்கவேலண்ணன் இவ்வளவுதானா எதிர்பார்ப்பார்? தன்னால் ஆகக்கூடிய இக்காரியத்தைச் சாதித்துக்கொள்ள அவருக்கு எத்தனை நேரம் ஆகிவிடமுடியும்? இருந்த இடத்திலிருந்து ஒரு கொசுவை ஏவிவிட்டால், அடுத்த வினாடி எடுத்துவந்து கடைவிரித்துவிடாதோ?

இல்லை. சற்றே பெரிய அளவில் தலைவர் விரும்பும்படி ஏதாவது செய்யவேண்டும் என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது. அதற்கான சந்தர்ப்பம் கண்டிப்பாகத் தனக்கு வரும் என்று நினைத்தான்.

குழாயடியில் துணி துவைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம் இது பற்றிப் பேசியபோது, ‘என்னமோ போ. உங்க வம்சமே ஆசப்பட்டு தோத்துத்தான் போச்சி. நீயானா செயிச்சி மேல வந்தன்னா சந்தோசம்தான்’ என்று சொன்னாள்.

‘அப்பிடி இல்லம்மா. அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் அரசியல்ல என்னா ஆவணும்னு ப்ளான் எதுவும் இல்லாம இருந்திச்சி. கொடி கட்னாங்க. மைக் செட் ஏற்பாடு பண்ணாங்க. எலக்சன் வந்தாக்கா, ரோட்டுல பெஞ்சு போட்டு உக்காந்து வார்டு வாரியா சீரியல் நம்பர் பாத்து சனங்களுக்கு சீட்டு எழுதிக்குடுத்தாங்க. எலக்சன்ல நாம நிக்கணும், மேலுக்கு வரணும்னு நெனச்சிப் பாக்கவே இல்லம்மா. அதுக்குன்னு வேலை செய்யாம ரிடையர் ஆனப்பறம் நான் முன்னுக்கு வரமுடியலன்னு அளுதா யாரு என்னா பண்ணமுடியும்?’

‘அதெல்லாம் எனுக்கு எதுக்குடா? தபாரு, நீ என்னா செய்யிறே, எப்பிடி செய்யறே, யாருக்கு வேலை செய்யிறேன்னு எனுக்கு தெரியாது. உங்கப்பாவுக்குத் தெரியுமோ என்னமோ. நாலு காசு சம்பாரிக்கிறியா? சந்தோசம். உன்னிய சுத்தி நாலு பேரு நிக்குறானுங்களா.. சந்தோசம். பதவிக்கு வரியா? ரொம்ப சந்தோசம். கடும்பாடி அம்மனுக்கு அங்கப்பிரதட்சிணம் செய்வேன். பொட்டச்சி எனுக்கு என்னாடா தெரியும் அரசியலும் மண்ணாங்கட்டியும்? உங்கப்பன கட்டிக்காம இருந்திருந்தன்னா, இப்ப தெரிஞ்ச அளவுக்குக் கூடத் தெரிஞ்சிருக்காது. எங்கப்பாரும் காங்கிரஸ்காரருதான். சொதந்தர தெனத்தன்னிக்கி முட்டாய் எடுத்தாருவாரு. அவ்ளோதான். கொடி குத்திக்கினு போவாரு. எலக்சன்னு வந்தா மொத ஆளா பூத்துல நின்னு ஓட்டு போடுவாரு. அவ்ளோதான் தெரியும். எனுக்கு என்னா வோணும்? நீ நல்லாருக்கணும். அவ்ளோதான்.’

‘நான் அத கேக்கலம்மா. இப்ப நான் மேல வரதுக்கு ஒரு சான்சு கிடைக்கறாப்ல இருக்குது. செல தப்புக்காரியம் செய்யவேண்டியிருக்கலாம். யாரையும் மிதிக்காம மேல வரமுடியாது போலருக்குதும்மா.’

அவள் முத்துராமனை சில வினாடிகள் உற்றுப்பார்த்தாள்.

‘செரி. அதுக்கு?’

‘இல்ல.. உம்புள்ள இப்பிடி ஒரு காரியம் செஞ்சிட்டான்னு நாளைக்கு யாரானா சொன்னாக்கா, நீ கஸ்டப்படுவியான்னு கேக்கறேன்?’ மிகவும் கவனமாக சிரித்து மழுப்பியபடி கேட்டான்.

அவள் சற்று நேரம் பேசாதிருந்தாள். பிறகு குரலைத் தாழ்த்தி, ‘கொலகில செய்யப்போறியான்ன?’ என்று கேட்டாள்.

முத்துராமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தான் என்ன சொல்ல வருகிறோம்,இவள் என்ன புரிந்துகொள்கிறாள்? எதை எப்படிச் சொன்னால் சரியாகப் புரியும்? யோசித்தான். பிறகு சொன்னான்:

‘கொல இல்லம்மா.. ஆனா அதவிடப் பெரிசா செலதுங்கள செய்யவேண்டியிருக்கும்னு தோணுது. ஒனக்கு எப்பிடி புரிய வெக்கறதுன்னு தெரியல..’

அவள் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினாள். பிறகு சொன்னாள்: ‘கடும்பாடி அம்மன் கோச்சிக்கறமாதிரி எதுவும் செஞ்சிராத. புரியுதா?’

14


அத்தியாயம் பதினான்கு


அம்மாவிடம், அப்பாவிடம், சாந்தியிடம், தம்பியிடம். இன்னும் யோசித்தால் வட்டச் செயலாளரிடம், எம்.எல்.ஏவிடம், நண்பர்களிடம் என்று தனக்குத் தெரிந்த வட்டத்தில் இருக்கிற அத்தனை பேரிடமும் பேசவும் விவாதிக்கவும் தெளிவு பெறவும் நிறைய விஷயங்கள் இருப்பதாக முத்துராமனுக்கு எப்போதும் தோன்றும். ஆனால் பேசத் தொடங்கியதும் ஏதோ ஒன்று தடுத்துவிடுகிறது. சொல்ல வருவதைப் பளிச்சென்று போட்டு உடைக்க முடிந்ததில்லை இதுவரை.

என்ன தயக்கம்? அதுதான் புரியவில்லை. அவன் தன் அம்மாவிடம் சொல்ல விரும்பிய விஷயம் மிக எளிமையானது. அம்மா, நான் அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்புகிறேன். மனச்சாட்சிக்கு இங்கே அதிக வேலை இருக்க வாய்ப்பில்லை. கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு வேலை பார்த்தாக வேண்டும். இன்னும் எளிமையாகவும் சொல்லலாம். வட்டச் செயலாளர் தொடர்பை வெட்டிவிடப் போகிறேன். இது சரியா?

கேட்க விரும்பியது இதைத்தான். ஆனால் கேட்கத்தான் வேண்டுமா என்றும் ஒரு கேள்வி இருந்தது. வாய்ப்புகள் எங்கிருந்தோ எதிர்பாராத விதத்தில் வருகின்றன. எதிர்பாராத நேரங்களிலும். எல்லாமே வண்ணமயமான எதிர்காலத்தைக் கையில் ஏந்திக்கொண்டு. எட்டாமல் போய்விடுமோ என்கிற பயம் இருக்கிறது. தன் தகுதி குறித்த நிச்சயமின்மையும்.

அ, என்ன பெரிய தகுதி என்று சமயத்தில் தோன்றும். படிப்பும் பின்னணியும் அரசியலில் பெரிய விஷயங்களாக இருந்ததில்லை எப்போதும். அடிக்கிற காற்றில் ஏறி மேலே அமரப்போகிறோமா, அடித்த வேகத்தில் விழுந்து சாகப்போகிறோமா, அல்லது காற்றின் வேகத்தில் சருகு போல் அலைந்து விழப்போகிறோமா என்பதுதான் விஷயம். ஒரு ஆட்டம் ஆடிப்பார்த்துவிடுவது என்று அவ்வப்போது அடி வயிற்றிலிருந்து ஓர் உணர்ச்சிப் பந்து எழுந்து குதிக்கும். கூடவே எழும் இன்னொரு தயக்கப்பந்து வேகத்தை மட்டுப்படுத்திப் பார்க்கிறது.

ஆனால் அம்மா தெளிவாகச் சொல்லிவிட்டாள். ‘தபாரு, உங்கப்பன் ஆடாத ஆட்டத்த நீ ஆடிறப் போறதில்ல. இதான் உன் தலையெழுத்துன்னா யாராலயும் மாத்திற முடியாது. என்னா செய்யணுமோ செய்யி. யாரானா ஒருத்தர நம்பு. அவங்களாண்ட செய்யிறது சரியான்னு கேட்டுக்க. என்னாண்ட கேக்காத. நான் என்னாத்த கண்டேன்? தோள்மேல துண்டப் போட்டு நீ எசமான் ரசினி கணக்கா போனன்னா, மோவாக்கட்டையில கைய வெச்சிக்கினு பாத்து ரெசிப்பேன். வேறென்னா தெரியும் எனுக்கு?’

சரிதான். இதற்குமேல் அவளிடம் கேட்க ஒன்றுமில்லைதான். ஆனால் யாராவது ஒருத்தரை நம்பச் சொல்கிறாளே? யாரை நம்பி ஆலோசனை கேட்பது?

‘மொதல்ல எலக்சன்ல சீட்டு கெடைக்குதா பாருடா. அப்பால ரோசிச்சிக்கலாம்’ என்றும் அவளே தீர்வைச் சொன்னாள். சிரித்துவிட்டு, அவள் துவைத்துவைத்த துணிகள் நிறைந்த பக்கெட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து உலர்த்தினான். மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு கொஞ்ச நேரம் படுத்து எழுந்திருத்து, முகம் கழுவி, தலை சீவி வெளியே வந்தான்.

பக்கத்துச் சந்தில் சாலை போடும் பணி நடக்கிற சத்தம் கேட்டது. முதலில் ஆற்றங்கரைக்குப் போய்விட்டு அங்கே வரலாம் என்று நினைத்துக்கொண்டு மேற்குப் பக்கம் பார்த்து நடக்க ஆரம்பித்தான்.

அங்காளம்மன் கோயில் சந்தில் திரும்பும்போதே எதிரில் திபுதிபுவென்று நாலு பேர் ஓடி வருவதைப் பார்த்தான். என்னவாக இருக்கும் என்று நினைத்து முடிப்பதற்குள்ளாக அவர்கள் அருகே ஓடிவந்து கையைப் பிடித்து இழுத்தார்கள்.

‘டேய் முத்து, எங்கடா பூட்ட? அங்க நம்மாளுங்கள அடிக்கறானுங்கடா..’

திக்கென்றிருந்தது அவனுக்கு. அடிக்கிறார்களா? யார்?

‘தெரியலடா.. குப்பை அள்ளிக்கிட்டிருந்த எடத்துல யாரோ நாலு பேர் சுமோவுல வந்தானுங்க. உருட்டுக்கட்டையும் கையுமா பாத்தாலே வம்புக்கு வர்றானுங்கன்னு தெரிஞ்சிது. நம்மாண்ட என்னா மேட்டர் இருக்கும்னு புரியல. வேலைய நிறுத்திட்டுப் போறிங்களா, ஆத்துல பொணமாத்தான் விழுவிங்களான்னாங்க. எங்களுக்கு ஒண்ணும் புரியல.. உன்னையும் காணோம். சிங்காரண்ணன் வீட்டுக்கு போன் போட்டா, அவரு திருச்சி போயிருக்கறதா சொன்னாங்க. ஒண்ணும் புரியலடா..’

பேச நேரமில்லை என்பது புரிந்தது. வேகப்பாய்ச்சலில் அவன் வேட்டியை மடித்துக் கட்டி ஓடினான். அவர்களும் பின்னாலேயே ஓடினார்கள்.

‘யாருன்னு கேட்டிங்களாடா?’

‘எவண்டாவன்.. பேச விடாம நேரா வந்து அடிக்க ஆரம்பிச்சிட்டானுங்கடா.. என்னாத்த கேக்கறது?’

‘மூதேவி.. நாலு பேருதானே? நீங்க எத்தினி பேரு இருக்கிங்க? போட்டு அமுக்கியிருக்க வேணாம்? பொட்டையாட்டம் ஓடியாறிங்களே?’

‘போடாங்.. வெண்ண.. வந்து பாரு தெரியும். அருவாளும் கையுமா நிக்கிறானுங்க. என்னாத்த போட்டு அமுக்கறது?’

அரிவாள். சட்டென்று அவன் தாமதித்தான். இது ஆபத்து. நிச்சயமாக ஆபத்து. இரண்டு வெட்டுக்காயம் விழுந்தாலும் பதற்றம் பற்றிக்கொள்ளும். கண்டிப்பாக போலீஸ் வரும். விசாரணை வரும். விவகாரம் வரும். தேவையற்ற தலைவலிகள்.

‘எத்தினி பேரு நீங்க அங்க இருக்கிங்க?’

‘ஆறு பேரு. நீ சொன்னமாதிரி மெயின் குப்ப மேட்ட க்ளியர் பண்ணிட்டோம். இன்னும் ரெண்டு குப்பமேடு இருக்குது. சாப்பாட்டுக்கு அப்பறம் முடிச்சிரலாம்னிட்டுத்தான் இருந்தோம். அதுக்குள்ள இவனுக வந்துட்டாங்க. என்னா ஏதுன்னு கூட கேக்கல முத்து.. வேலைய நிறுத்துங்கடான்னு கத்திக்கிட்டே வந்து அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. வண்டிக்குள்ளார இன்னும் எத்தினி பேரு இருப்பானுங்கன்னு கூட பாக்கமுடியல.’

கால் ஓடிய வேகத்துக்கு முத்துராமன் சிந்தித்துக்கொண்டிருந்தான். இது அரசியல். கண்டிப்பாக திட்டமிட்டு யாரோ செய்வது. எம்.எல்.ஏவாகவே இருக்கலாம். அல்லது வேறு யாரோ சிங்காரவேல் அண்ணனுக்கு வேண்டாதவர்கள். அல்லது அவரைப் பிடிக்காதவர்கள். அல்லது நடக்கிற பணிகளைத் தடுக்க விரும்புகிறவர்கள். இல்லாவிட்டால் கவனமாக அவர் ஊரில் இல்லாத நாளாகப் பார்த்து ஆளனுப்பியிருக்க முடியாது.

ஆற்றங்கரைக்கு அவன் வந்து சேர்ந்தபோது நிலவரம் மோசமாகியிருப்பதாகப் பட்டது. குப்பத்து இளைஞர்கள் பத்திருபது பேர் அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள். சுமோவில் வந்த குண்டர்களைத் தனியே பிரித்து அடையாளம் காண முடியவில்லை. குப்பை மேட்டின் அருகே யாரோ யார் யாரையோ போட்டுத் துவைத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள். உருண்டு புரண்டு சண்டை போட்ட இரண்டு பேரையுமே தனக்குத் தெரியும் என்பது போலத் தோன்றியது அவனுக்கு.

டேய், டேய் என்று கத்திக்கொண்டே முன்னால் பாய்ந்தான்.

‘முத்து.. அடிச்சிட்டான் முத்து. இவனுங்கள சும்மா விடக்கூடாது முத்து. நம்ம சுப்பிரமணி தலைல அடிச்சிட்டான் முத்து.. கட்டையால அடிச்சிட்டான்.. மவன டேய்.. உனுக்கு என் கையாலதாண்டி சாவு.. டேய், ஓடியாங்கடா..’ ஓடி வந்து ஏதோ சொல்லவந்தவன் பாதியில் மீண்டும் வேகம் மிகுந்து பாய்ந்து போனான்.

முத்துராமன் ஒரு கணம் தாமதித்தான். இந்த நிமிடம் சண்டையில் கலந்துகொள்வதைக் காட்டிலும் நிறுத்தப் பார்ப்பதே உத்தமம் என்று தோன்றியது. சூழ்நிலையை உற்று நோக்கியபோது, இரண்டு சுமோக்களும் ஏராளமான கட்டைகளும் கண்ணில் பட்டன. கண்டிப்பாக இது கலந்துகொள்ளக்கூடிய சண்டையாக இருக்கமுடியாது. தகவல் சொல்ல ஓடி வந்தவன் சண்டை தொடங்கியதும் புறப்பட்டிருக்க வேண்டும். ஒரு சுமோ இரண்டான விஷயம் அவன் அறிந்திருக்க முடியாது.

‘ஏ.. நிறுத்துங்கப்பா.. யாருப்பா அது?’

பொதுவில் குரல் கொடுத்தபடி சற்றே அருகே போகப்பார்த்தான். அந்நியர்களில் இருவர் திரும்பிப் பார்த்தார்கள்.

‘முத்து.. அடிச்சிட்டானுங்க முத்து..’

‘த.. சும்மாரு.. நீ என்னா பண்ணன்னு யாருக்குத் தெரியும். அவங்க யாரு, எதுக்கு வந்தாங்கன்னு கேப்பம். அலோ.. கொஞ்சம் பொறுங்க.. இங்க வாங்க.. அலோ..’

‘டேய், நீ யாருடா?’

கொத்தாக அவன் சட்டையைப் பிடித்து நெஞ்சோடு இழுத்தான் ஒருவன்.

‘டேய்.. கைய எடு மொதல்ல..’

முறைத்தான். ‘எடுன்னு சொல்றன்ல?’

முத்துராமனின் பார்வையில் தெரிந்த தீயில் சற்றே தயங்கியவன் பிடியை லேசாகத் தளர்த்தினான்.

‘பேசிக்கிட்டுத்தானே இருக்காங்க? என்னா மயித்துக்கு மேல கைய வெக்கற?’ அவன் சற்றும் எதிர்பாராவிதத்தில் பொளேரென்று அறைந்தான் முத்துராமன்.

அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சமாதானத்துக்கு வந்தவனை உத்தேசித்துத் தாற்காலிகமாகச் சண்டையை நிறுத்தியிருந்தவர்கள் இந்த எதிர்பாராத தாக்குதலில் சற்று நிலைகுலைந்தது போலப்பட்டது. முத்துராமன் அதைத்தான் எதிர்பார்த்தான்.

‘தபார்.. அடிச்சிக்கிட்டு சாக நான் தயாரில்ல. நீங்க யாரு, என்னா வோணும்னு சொல்லுங்க. இந்த வேலைய செஞ்சிக்கிட்டிருக்கறது நானு. வட்டச் செயலாளர் சிங்காரம் அண்ணன் சொல்லி, நான் செய்யிறேன். புரியுதா? நிறுத்தணும்னா, ஏன் நிறுத்தணும், யார் நிறுத்த சொன்னாங்கன்னு சொல்லு. சரியா இருந்திச்சின்னா நிறுத்தறேன். அத்த வுட்டுட்டு நேரா வண்டில வந்து எறங்கி அடிக்க ஆரம்பிச்சா என்னா அர்த்தம்? குப்பத்துல நூத்தி நுப்பது பேரு ஆம்பளைங்க இருக்காங்க. சேந்துவந்து அடிச்சா தாங்குவிங்களா? சொல்லுங்கடா!’

‘தபாரு முத்து.. உன்னிய எங்களுக்குத் தெரியும். நீ வீணா இந்த வெவகாரத்துல தலையிடாத. இது பெரிய எடத்து விசயம். நிறுத்துன்னு சொன்னா சர்தான்னு நிறுத்திட்டுப் போய்க்கினே இருக்கணும். உங்காளு என்னா பண்ணான் கேளு.. புல்டோசர எடுத்துக்கினு வண்டி மேல மோத வந்தான். வந்தானா இல்லியான்னு கேளு. பாத்துக்கினு சும்மா இருப்பமா?’

முத்துராமன் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தான். ‘யாருடா அது?’

முணு முணுவென்று பேச்சுச் சத்தம் எழுந்தது. ‘யாருன்னு கேக்கறேன்ல?’

அமைதி. ‘தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன் நாய்ங்களா. யாருன்றன்ல?’

அந்தக் குரலின் உச்சத்தை அதுகாறும் அவர்கள் பார்த்ததில்லை. முத்துராமனா இது? தாக்க வந்தவர்கள் தணிந்து, தள்ளி நின்றார்கள்.

இதுதான் சந்தர்ப்பம் என்று முத்துராமனுக்கு மிகத் தெளிவாகத் தோன்றியது.

15


அத்தியாயம் பதினைந்து


‘சரி வுடுப்பா. மேட்டரு இதான். வேலைய நிறுத்தணும். மேலிடத்து உத்தரவு. மீறி செஞ்சிங்கன்னா இன்னொருதபா சும்மா இருக்கமாட்டோம். டேய், வாங்கடா..’

அவர்கள் போய்விட்டார்கள். ஆற்றங்கரையில் குப்பத்து இளைஞர்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தார்கள். அதிர்ச்சி கலந்த வியப்பு. பதற்றம் கலந்த கவலை. கோபம் கலந்த குழப்பம். என்றைக்கோ யார் முயற்சியாலோ அந்தப் பிராந்தியத்தின் குப்பைகளைச் சேகரிக்கக் கொண்டுவந்து போடப்பட்ட குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து நாயொன்று தலைநீட்டி எட்டிப்பார்த்தது. ‘வழ்ழ்’ என்றது. குப்பைகள் தொட்டியை மீறத் தொடங்கும்போது, தொட்டிகள் நாய்களின் இல்லங்களாகிவிடுகின்றன. கூச்சலில் அமைதி குலைக்கப்படும்போது தொட்டிவாசிகள் கோபம் கொண்டுவிடுகிறார்கள்.

‘இன்னாடா ஆச்சு உனக்கு? சுயபுத்தியோடதான் இருக்கியா? இல்ல சரக்கேத்திக்கினு வண்ட்டியா?’ சடாரென்று கோபமுடன் நெருங்கி, கொத்தாகச் சட்டையைப் பற்றிய நண்பனை சிரமப்பட்டுத்தான் விலக்க முடிந்தது முத்துராமனால்.

‘ஏண்டா உனுக்கு அறிவில்ல? யாருடா அவனுங்க? எத்தினி பேரு? நாம எத்தினி பேரு? போட்டுத்தள்ள எம்மாநேரம் ஆவும்? பொட்டையாட்டம் சமாதானம் பேசிக்கினு கீற? கேட்டா, நம்மாளுங்களையே மொறைக்கற? அவனுங்க எதிர்ல நமக்குள்ள தகராறு வாணான்னுதான் சொம்மா இருந்தோம். இல்லேன்னா மவன, உனுக்கும் சேத்து வுழுந்திருக்கும்!’

‘அடச்சே, சொம்மா கெட!’ என்று சீறினான் முத்துராமன்.

‘போடு! போட்டுத்தள்ளு! உள்ள தள்னான்னா ங்கொப்பன் தாவு தீந்துரும். இன்னாத்துக்குடா வீண் வம்பு நமக்கு? அவனுங்க யாரு, என்னான்னு தெரியல. எவன் அனுப்பி வந்திருக்காங்கன்னு யாரானா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டிங்களா? நல்ல காரியம் நடக்குறத கெடுக்கணும்னு வாறவன், நல்லவன் அனுப்பியா வந்திருப்பான்? இந்தமாதிரி ஆளுங்க வந்தாங்கன்னு போயி தலைவராண்ட சொன்னா, அவரு பாத்துக்கறாரு. அத்தவிட்டுட்டு அவன் அடிக்க வந்தான்னு நீயும் திருப்பி அடிச்சேன்னா யாருக்குடா நஷ்டம்? படிக்காத சென்மங்கன்னுதானே இந்தாட்டம் ஆடப்பாக்குறானுங்க? ஆமா, நான் தற்குறிதான்னு தூக்கிக் காட்டணுமா?’

கூட்டம் சற்று யோசித்தது.

‘இருந்து இருந்து ஒருத்தன் நம்ம குப்பத்துக்கு நல்லது பண்றேன்னு வாரான். அதைக் கெடுக்கணும்னு ஒருத்தன் வர்றான். நமக்கு காரியம் பெருசா? வீரியம் பெரிசா? ஆமாடா. நீ பெரிய வீரன் தான். ஒப்புக்குறேன். இப்ப என்னா? யாரயானா அடிக்கணும், போட்டுத்தள்ளணும். அவ்ளோதானே? இந்தா.. நான் நிக்கறேன். அடி! அடிங்கடா! கம்னாட்டிங்களா..’

உரத்த குரலில் முத்துராமன் வெடித்தபோது அவர்கள் சற்றுப் பின்வாங்கினார்கள். முத்துராமனுக்கு உள்ளுக்குள் வியப்பு கூடிக்கொண்டே போனது. தனக்குள் இரண்டு நபர்களாகப் பிரிந்து நின்று செயல்படுவதுபோலச் சொற்களற்று உணர்ந்தான். இதற்கு முன் இப்படிப் பேசியதில்லை. இப்படி நடந்துகொண்டதில்லை. பல சண்டைகள் வந்திருக்கின்றன. எல்லாம் தெருத் தகராறுகள். அவற்றில் கலந்துகொண்டிருக்கிறான். நியாயம் பேசியிருக்கிறான். ஆனால் அதெல்லாம் கூட்டுக்குரல்களில் ஒன்றாகத்தான் அமைந்திருக்கிறது. இப்படித் தனித்து ஒலித்ததில்லை. பத்துப் பேர் கவனம் செலுத்திக் கேட்கத் தக்கதாக இருந்ததில்லை.

திடீரென்று தன் இருப்பின் அர்த்தமும் தன்மையும் மாறிவிட்டதா என்ன? வலுக்கட்டாயமாக மாற்ற விரும்புகிறோமா?

யோசித்துப் பார்த்தால், உண்மையில் அவனுக்குக் கோபமில்லை. யார் மீதும். சூழ்நிலையின் பதற்றம் அவனைத் தொடவேயில்லை. பழைய முத்துராமனாக இருந்திருந்தால், இப்படி முன்பின் தெரியாத நாலு பேர் தாக்க வந்தது தெரிந்தால் கொதித்துக் குமுறியிருப்பான். இப்போது எப்படியோ ஒரு அமைதி வந்து குடிபுகுந்துவிட்டது. தாக்கவந்தவர்களிடம் அமைதிப் பேச்சு நிகழ்த்தியபோதும் சரி, பின்னால் தன் சொந்த நண்பர்களின் கோபத்துக்கு பதில் கோபமாகக் கண்ணாமூச்சி ஆடியபோதும் சரி. சூழல் பாதிக்கவில்லை. தகிப்பு இல்லை. தவிப்பு இல்லை. பதற்றமோ, பயமோ அற்றுப் போயிருந்தது. எப்படி இது, எப்படி இது என்று உள்ளுக்குள் இன்னொரு மனிதன் வியந்துகொண்டே இருந்தான்.

அரசியலில் பயில வேண்டிய முதல் பாடம் இதுதானா? எதனாலும் பாதிக்கப்படாமலிருப்பது? எருமை மாட்டுத் தோலை இதயத்துக்கு அளிப்பது?

அப்படியும் தெரியவில்லை. தன் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இந்தச் சம்பவம் இடையூறாக இருந்துவிடக்கூடாது என்கிற முன் ஜாக்கிரதைதான் காரணம் என்றும் அவனுக்குத் தோன்றியது. குண்டர்களை அனுப்பியது யார்? எம்.எல்.ஏவாக இருக்கலாம். அவரது அடிப்பொடிகளில் யாராவதாக இருக்கலாம். அல்லது சிங்காரம் அண்ணனின் தனி எதிரிகள் யாராவது இருக்கலாம். ஒருவேளை கட்சி மேலிடமே நினைத்திருக்கலாம். இவன் எதற்கு இப்படி ஸ்டண்ட் அடிக்கிறான்? கொஞ்சம் தட்டி வைப்பது நல்லது.

நினைக்கலாமே? என்ன தப்பு? யாருக்கு வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம். நேற்று வரை இல்லாத சமூக அக்கறை திடீரென்று தலைவருக்கு முளைத்ததன் காரணமே சுயநலம்தான் அல்லவா? எம்.பி. சீட். அல்லது எம்.எல்.ஏ. சீட். பொருளுக்குரிய விலையாகத்தான் அவர் இந்தச் சீரமைப்புப் பணியை நினைத்தார். ஒளிவு மறைவு ஏதுமில்லை. தன்னிடமே வெளிப்படையாகத்தானே சொன்னார்? அப்புறமென்ன?

சொல்வதற்கில்லை. இம்மாதிரி இன்னும் நாலைந்து குப்பங்களைக் கூட அவர் தத்தெடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கலாம். அரசியலில் எதுவும் சகஜம். எல்லாமே சகஜம். நல்லதும் கெட்டதும். அன்பும் காழ்ப்பும். தழுவுதலும் தழுவிய கரத்தால் குத்துதலும்.

இந்த சூட்சுமம் தனக்குப் புரிந்துவிட்டதாக முத்துராமனுக்குத் தோன்றியது. சந்தோஷமாக இருந்தது. எத்தனை கவனமாகப் பேசித் தன் நண்பர்களை வாயடைக்கச் செய்துவிட முடிந்தது? பழைய முத்துராமனால் இது முடியாது. நிச்சயமாக முடியாது. அவன் சாது. நண்பர்களின் கோபத்தைத் தன் கோபமாக மாற்றிக்கொள்ளுபவன். அவர்களது சந்தோஷத்தைத் தன் சந்தோஷமாகக் கருதக்கூடியவன். இன்னும் அவன் இறந்துவிடவில்லை. ஆனால் உள்ளுக்குள் அடைத்துவைத்துவிட்டதாக நினைத்தான். தூங்கட்டும் கொஞ்சநாள். சாதுவாக, நல்லவனாக இருந்து சாதித்தது அதிகமொன்றுமில்லை. தையல் மிஷின் அடித்து மாதம் இரண்டாயிரம். கட்சி வேலை பார்த்து இன்னும் இரண்டாயிரம். அவ்வளவுதான்.

போக நினைக்கும் உயரங்களுக்குப் பொருத்தமில்லாத தொகை. வைத்துக்கொண்டு நாக்கு வழிக்கக்கூட முடியாது. இதோ, திருமணமாகப் போகிறது. சாந்தி. வருகிறவளுக்கு என்ன கனவுகள் இருக்குமென்று சொல்லமுடியாது. நிச்சயம் இருக்கும் ஏதாவது. கனவின்றி வாழத்தான் முடியுமா என்ன? தனக்கில்லையா? சடாரென்று அரசியலில் மேலே உயரும் கனவொன்று வந்து தீப்பொறி போல் பற்றிக்கொண்டதே. சென்ற வருடம் வரை அவன் நினைத்திருக்கவில்லை. நினைத்திருந்தாலும் நினைப்பை வலுப்படுத்தும் விதத்திலான வாய்ப்புகள் வந்ததில்லை.

வட்டச் செயலாளர் சிங்காரம் அண்ணன் அழைத்ததில் ஆரம்பித்தது. நினைத்துப் பார்த்திராத வேகத்தில் எம்.எல்.ஏ. அழைத்துவிட்டார். பேட்டையில் விஷயம் பரவிவிட்டது. முத்துராமனுக்குத் தனியொரு அந்தஸ்து உருவாகியிருந்தது. தலைவர்களுடன் நெருக்கமானவன். கூப்பிட்டு ஏதோ பேசுகிறார்கள். சாட்சிக்கு ஒரு சமூக நலப்பணி ஆரம்பமாகியிருக்கிறது. போதாது?

‘தபாருங்கடா. எனக்கு ஒண்ணுமில்ல. இத்தினி வருசமா கஸ்டப்பட்டுக்கிட்டு இருந்துட்டோம். எதோ சாமியே பாத்து அனுப்பிவெச்சமாதிரி தலைவரு கூப்ட்டு அனுப்பி காசக் குடுத்து குப்பத்த நேராக்குன்னு சொல்லி அனுப்பியிருக்காரு. எவனோ களவாணிப் பயலுக வம்பு பண்ண வர்றானுங்கன்னா, மொறையா நாம அத எப்பிடி தடுக்கணுமோ அப்பிடி தடுக்கணும். போலீசு கம்ப்ளைண்டு குடுக்கலாம். தலைவராண்ட போயி சொல்லலாம். அத்தவுட்டுட்டு திருப்பி அடிக்கறேன், போட்டுத் தள்றேன்னு எறங்கினா வேலையும் கெடும், பேரும் கெடும். நாளைக்கி இன்னொருத்தன் இந்தப் பக்கம் ஓட்டு கேக்கக்கூட வரமாட்டான். நாசமாப் போங்கடான்னு போய்க்கினே இருப்பான். மொத்தம் எத்தினி ஓட்டு? நூத்தம்பது தேறுமா? அத்த கள்ள வோட்டா போட்டுக்கிட்டு போவுறதுக்கு எம்மா நேரம் ஆவும்? யோசிச்சி வேலை செய்ங்க. அவ்ளோதான் சொல்லுவேன்!’

எச்சரிக்கும் விதத்தில் பேசிவிட்டு அவன் திரும்பி நடந்தபோது, ‘முத்து.. டேய், நில்லுடா.. நில்லுடாங்கறேன்ல? டேய்.. மன்னிச்சிருடா.. போவாத. போவாதடா..’

பின்னால் வந்த கூட்டத்தைத் திரும்பாமலேயே மானசீகமாக அவன் உணர்ந்தான். சடாரென்று முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது. கடவுளே! உனக்கு எப்படி நன்றி சொல்வேன்? இதையல்லவா இத்தனை காலமாக என்னவென்று புரியாமல் எதிர்பார்த்திருந்தேன்?

எல்லோருமே தெரிந்தவர்கள்தான். எல்லோருமே நண்பர்கள்தான். நல்லது சொன்னால் எடுத்துக்கொள்ளக் கூடியவர்களும் கூட. ஆனால் இப்போது பின்னால் வரும் தோரணை வேறாக அல்லவா தெரிகிறது? தலைவனின் பின்னால் திரளும் தொண்டர்களைப் போல?

என்றால் நான் தலைவராகிவிட்டேனா? நினைக்கவே அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது. அழுகை வந்தது. ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு கடும்பாடி அம்மன் கோயிலுக்குப் போய் அங்கப்பிரதட்சிணம் செய்யவேண்டுமென்று தோன்றியது. அடக்கிக்கொண்டான்.

‘நில்லுடாங்கறோம்ல?’

உரிமையில் எழும் ஓங்கிய குரல். அதுவும் அவனுக்குப் புரிந்தது. நின்றான். திரும்பினான்.

‘மன்னிச்சிட்டேன்னு சொல்லு. இதான் லாஸ்டு. இனிமேப்பட்டு நீ சொல்லாம எதையும் செய்யமாட்டோம்.’

‘சீ போடா. போய் வேலைய பாருங்க.’

அவர்கள் தயங்கினார்கள். ‘திரும்ப வந்தானுங்கன்னா?’

‘வரமாட்டானுங்க’

‘எப்படி சொல்ற?’

முத்துராமன் யோசித்தான். எப்படிச் சொல்கிறோம்? ஏதாவது செய்யவேண்டும் என்கிற உத்தேசம் இருந்தது. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. சிங்காரண்ணன் ஊரில் இல்லை. வெளியூர் சென்றிருக்கிறார். அதனாலென்ன? எம்.எல்.ஏவிடமே சென்று விஷயத்தைச் சொல்லலாம். யாரோ வந்து காரியத்தைக் கெடுக்கிறார்கள் என்று அப்பாவியாகப் பேசலாம். அவர்தான் ஏவியவர் என்று தெரியவந்தால், அதற்கு ஏற்ப அடுத்தக் காயை நகர்த்திக்கொள்ளலாம். நாளைக்கு வட்டம் ஊர் திரும்பி என்ன ஏது என்று விசாரித்தால், வேறு மாதிரியாகச் சொல்லிவிடலாம். அவர் இல்லாத காரணத்தால்தான் எம்.எல்.ஏவிடம் போகவேண்டியிருந்ததாக. பார்த்துக்கொள்ளலாம். என்ன இப்போது? இன்று என்பதைவிடவா நாளை பெரிது? நாளைக்குள் உலகமே அழிந்தாலும் அழியலாம். தனக்கே விடிந்தாலும் விடியலாம். ஒரு முடிவுக்கு வந்தவனாக நண்பர்களைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

‘பாத்துக்கறேன்னிட்டன்ல? விடு. நீங்கபாட்டுக்கு வேலைய பாருங்க. நான் எம்.எல்.ஏவ பாத்துட்டு வந்துடறேன்.’

சடாரென்று திரும்பி வேகமாக நடையை எட்டிப் போட்டபோது தன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக ஆரவாரமான பின்னணி இசையொன்று ஒலிப்பதாக உணர்ந்தான்.

16


அத்தியாயம் பதினாறு


எம்.எல்.ஏ.வின் வீடு வேளச்சேரிக்கும் மடிப்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகச் சமீபத்தில் முளைத்திருந்த ஒரு புதிய காலனியில் இருந்தது. நினைவு தெரிந்த நாளாக அந்த இடத்தில் மாபெரும் குப்பை மேடு ஒன்று காட்சியளிக்கும். எத்தனை நூற்றாண்டுகளாகக் கொட்டப்பட்ட குப்பை என்று கண்டுபிடிப்பது சிரமம். சென்னை நகரத்து மக்கள் தலைமுறை தலைமுறையாக வாங்கி உபயோகித்து வீசிய பொருள்களின் மிக நீண்ட பட்டியலை அங்கு ஓர் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் பெற்றுவிட முடியும். முன்பொரு காலத்தில் ஒரு வாரப்பத்திரிகை அங்கே தன் நிருபரை அனுப்பி அப்படியொரு பட்டியலை வெளியிட்டிருந்தது முத்துராமனுக்கு நினைவு வந்தது. சிறியதொரு குன்றுபோலத் தோற்றமளிக்கும் குப்பை மேடு. பன்றிகள் படுத்திருக்கும். ஜென்மாந்திரமாக அவற்றுடன் விரோதம் பாராட்டி அலுத்த நாய்களும் உடன் படுத்திருக்கும். வீதிக் குழந்தைகள் நிஜார் இல்லாமல் ஓரங்களில் அமர்ந்திருப்பார்கள். இருள் மங்கினால் சில பெண்களும். கடந்துபோகவேண்டிய நேரங்களில் கண்டிப்பாக மூக்கைப் பொத்திக்கொள்ளவேண்டியிருக்கும். வாரம் தோறும் குறிப்பிட்ட தினத்தில் அங்கே குப்பை லாரிகள் வந்து இறக்கிவிட்டுப் போகும். மாநகரக் குப்பை, மாபெரும் குப்பை.

திடீரென்று சில வருடங்கள் முன்பு அந்த குப்பை மேட்டை ஓர் எவரெஸ்ட் சிகரமாகக் கருதி யாரோ கொடி நட்டுவிட்டுப் போனார்கள். கட்சிக்கொடி. குறுகியகால இடைவெளியில் அந்தக் கொடி பிடுங்கப்பட்டு வேறொரு கொடி நடப்பட்டு, சிறியதொரு கலவரம் உருவானது. காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிறகு மேல்மட்ட அளவுக்கெல்லாம் விஷயம் போகாமல் உரசல், பைசல் செய்யப்பட்டது. யாருக்கு என்ன அளிக்கப்பட்டதென்று யாருக்கும் தெரியவில்லை. எம்.எல்.ஏ. தங்கவேலுவின் மச்சான் ஒருநாள் பேப்பரில் விளம்பரம் அளித்திருந்தார். சுத்தமான குடிநீர். மெயின் ரோடிலிருந்து ஐந்து நிமிட நடைதூரம். மிக வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியம். கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிலையம். பிரசித்தி பெற்ற தொழிற்கேந்திரங்கள் உதித்துக்கொண்டிருக்கும் பிராந்தியம். சதுர அடி அறுநூறு ரூபாய். பழனி தண்டாயுதபாணி நகர். வாரீர், வாரீர். முன்பதிவு நடைபெறுகிறது.

முத்துராமனுக்கு நிச்சயம் அது வியப்புத்தான். இன்றைய தேதியில் அந்த இடத்தில் அறுநூறு ரூபாய்க்கு அரையங்குல இடம் கிடைப்பது கூடக் கஷ்டம். அரசியல்வாதிகளுக்கு மிகுந்த தொலைநோக்கும் அவசியமாக இருக்கிறது. எம்.எல்.ஏ தங்கவேலுதான் முதல்முதலில் அங்கே வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தவர். வானளாவிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு உள்ளே சிறியதொரு நீச்சல் குளம், தோட்டத்துடன் நான்கு கிரவுண்டுகளில் கட்டப்பட்ட வீடு. கவனமாகப் பெயர்ப் பலகையில் தலைவரின் தந்தையார் பெயரைப் பொறித்து மரியாதை செய்திருந்தார். கிரகப்பிரவேசத்துக்குத் தலைவர் உள்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் சென்றிருந்தார்கள். எம்.எல்.ஏவின் தொடக்ககால அரசியல் வாழ்க்கையில் ஓரளவு வழிகாட்டிப் பங்களித்தவர் என்கிற வகையில் முத்துராமனின் தந்தைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. வெள்ளை வேட்டி, சட்டையுடன் புறப்பட்டவருடன் முத்துராமனும் சென்றிருந்தான். கட்சி மேடைகளில் மட்டும் பார்த்திருந்த தலைவர்களை அவன் நேருக்கு நேர் பார்த்த முதல் சந்தர்ப்பம் அதுதான்.

சுவாதீனமாக நீச்சல் குளத்தருகே நாற்காலி போட்டு அமர்ந்திருந்தவர்களின் பேச்சில் மேடையில் காணும் பொங்குதமிழ் இல்லை. வெகு அநாயாசமாகச் சென்னையின் பாரம்பரியம் மிக்க வசைச் சொற்கள் இறைபட்டுக்கொண்டிருந்தன. மாற்றுக்கட்சி நண்பர்களின் அந்தரங்கங்கள் குறித்து நகைச்சுவைத் துணுக்குகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. குளிர்பானங்கள் அருந்தி, விருந்து உண்டு, பல் குத்திக்கொண்டு, தங்கவேலுவுக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றுப் போனார்கள்.

காலனி வளர்ந்து, குப்பைமேடு குறித்த நினைவு அற்றுப் போகத் தொடங்கிவிட்டது. பின்னால் யாரோ முயற்சி செய்து அந்த இடத்துக்குப் பைசா செலவில்லாமல் பெருநகர வளர்ச்சி வாரியத்தின் அப்ரூவல் வாங்கிவிட்டார்கள். அனுமதி பெற்ற லே அவுட். சதுர அடி ஆயிரம் ரூபாய். இரண்டாயிரம் ரூபாய். மூவாயிரம். நாலாயிரம். ஏலத்தொகை போல் வளர்ந்து, ஒரு கட்டத்தில் இடமற்றுப் போனது. முதல் குடிமகனான எம்.எல்.ஏ. தங்கவேலு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் காலனியின் மறைமுக நிலக்கிழாரானார். தென் சென்னையின் நில மதிப்பை எந்த எல்லைவரையும் உயர்த்திக்கொண்டு போகமுடியும் என்று முதல் முதலில் நிரூபித்தவர் அவர்.

முத்துராமன் சென்றபோது எம்.எல்.ஏ. வீட்டில்தான் இருந்தார். முதல் மாடி பால்கனியில் ஈசி சேர் போட்டு, சாய்ந்து படுத்திருந்தார். அருகே அவரது உதவியாளர்கள் பேப்பர் படித்து விவரம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எதிரே இருந்த டீப்பாயில் நாலைந்து செல்போன்கள் கிடந்தன. அடித்த தொலைபேசிகளை ஒருவன் அணைத்து வைத்துக்கொண்டே இருந்தான்.

முத்துராமன் வந்திருக்கும் விவரம் அறிந்ததும் எம்.எல்.ஏ மேலே வரச்சொன்னார்.

‘உக்காருய்யா’

‘இருக்கட்டும்ணே. ஒரு முக்கியமான விஷயம். அதான் வந்தேன்.’

‘சொல்லு. சிங்காரம் கட்சி மாறிட்டானா?’

முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. பரபரப்பாக, ‘அது தெரியாதுண்ணே. ஆத்தங்கரைல வேலை நடக்குதில்ல? அங்க யாரோ நாலஞ்சு ரவுடிங்க வந்து பசங்கள போட்டு அடிச்சி, வேலைய நிறுத்தச் சொல்லி கலாட்டா பண்ணிட்டுப் போயிருக்காங்க. யாருன்னு தெரியல. சிங்காரண்ணன் ஊர்ல இல்ல. அதான் உங்களாண்ட விஷயத்த சொல்லி..’

தங்கவேலு யோசித்தார். உதவியாளப் பையனை கீழே அனுப்பி யாருக்கோ போன் செய்யச் சொன்னார். திரும்பவும் சில நிமிடங்கள் யோசித்துக்கொண்டே இருந்தார்.

‘பச்சையா சொல்லவா? நான் யாரையும் அனுப்பல.’

‘ஐயோ என்னண்ணே பேசுறிங்க? நீங்க செய்விங்களா? எனக்குத் தெரியாதா? உங்களுக்குத் தெரியாம, உங்ககிட்ட சொல்லாம அவுருதான் இந்தமாதிரி ஒரு வேலைய ஆரம்பிச்சிட்டாருன்னா, ஏதோ ஆர்வக்கோளாறு. உங்க அனுமதி இருந்திருந்தா இப்படி எவனும் வந்திருப்பானா?’

‘நம்மாளுங்க யாருக்கானா அடிகிடி பட்டிருச்சான்ன?’

அவரது அக்கறை முத்துராமனுக்கு மகிழ்ச்சியளித்தது. ‘பெரிசா ஒண்ணும் இல்லண்ணே. உங்களாண்ட சொல்லிருவேன்னு உரக்க சொன்னேன். அப்பால ஓடிட்டானுங்க.’

எம்.எல்.ஏ. சிரித்தார். ‘சிங்காரத்துக்கு நேரம் சரியில்லய்யா. கட்சில பலபேர விரோதிச்சிக்கிட்டிருக்கான். நான் எத்தினியோவாட்டி எடுத்து சொல்லிட்டேன். பொறுமையா இருந்தா கிடைக்க வேண்டியது கிடைக்கும்னு. அவனுக்குப் புரியல. அவசரப்படுறான். பாரு, பாளையங்கோட்டை மாநாட்டுக்கு தேதி அதிகம் இல்ல. என்னதான் அங்கத்தி மாவட்ட செயலாளர் உழைக்கறாருன்னாலும் எல்லாரும் அவங்கவங்களால ஆன உதவிய செய்யணுமா வாணாமா? நான் அஞ்சு லட்ச ரூவா நிதியுதவி செஞ்சிருக்கேன். தலைவருக்குத் தெரியும். எம்.எல்.ஏ. நிதி குடுக்கறது பெரிய விசயமில்லன்னு தோணும். ஆனா கட்சில வசதி உள்ளவங்க எல்லாரும் தர்றதுதான் வளக்கம். நம்ம சிங்காரத்தோப்பு முருகேசன் இல்ல? மூணு லட்சம் குடுத்திருக்காரு! அவரு என்ன பதவிலயா இருக்காரு? ஒரு வாரியம் கூடக் கிடையாது. நுப்பத்தஞ்சு வருசமா கட்சியே கதின்னு கெடக்கறவரு. ராயபுரம் காசிலிங்கம்? ஆறு லட்சமாம். மீன்பிடித் தொழிலாளிதான். என்னா பதவி அவருக்கு? ஒரு மண்ணும் கிடையாது. பதவியாய்யா முக்கியம்? கட்சி முக்கியம். தலைவரு முக்கியம். மத்த எதையும் நெனைக்காம எவன் கட்சிக்கு ஒழைக்கறானோ, அவனுக்கு கடவுள் பதவி குடுப்பாரு. இது புரியல அந்த சனியனுக்கு. சொம்மா பதவி பதவின்னு சொறி புடிச்சவனாட்டம் அலையுது.’

‘நீங்க இப்பிடி மனசுவிட்டு என்னாண்ட பேசுறது பெருமையா இருக்குண்ணே. உங்களப்பத்தி எங்கப்பா எப்பப்பாரு பெருமையா பேசிக்கினே இருப்பாரு. ஆரம்பத்துல சோறு தண்ணி பாக்காம கட்சிக்காக உழைச்சாரு, அதான் தலைவர் கூப்ட்டு சீட்டு குடுத்தாருன்னு. மூணு எலக்சன்ல தொடர்ந்து ஜெயிக்கறது வேற யாரால முடியும்?’

‘உங்கப்பாவுக்குத் தெரியுது. இந்தக் கழிசடைக்கு அதெல்லாம் எங்க தெரியப்போவுது? என்னப்பத்தி ரிப்போர்ட்டு தயார் பண்ணியிருக்குதாம் அனுப்பறதுக்கு. தொகுதிக்கு நான் ஒண்ணும் செய்யறதில்லைன்னு அங்கங்க போட்டோ புடிச்சி ஃபைல் பண்ணிக்கிட்டிருக்குதாம்.’

‘நாக்கு அழுகிரும்ணே. நீங்க இல்லன்னா எங்க பேட்டைக்கு தண்ணி ஏது? எங்க பேட்டைய விடுங்க. எல்லா எடத்துக்கும் ரோடு? குச்சி நட்டு பஸ் நிறுத்தம்னு போட்டிருப்பாங்க. இப்ப எங்கப்பாரு ஜம்போ சைசு பஸ் ஸ்டாண்டுங்க. நீங்க செய்யாம யாரு செஞ்சாங்களாம்?’

‘தபாரு முத்து, வெளிப்படையா சொல்றேன். உங்க குப்பத்துக்கு சிங்காரம் நல்லது செய்யறேன்னு கெளம்பினது எனுக்குப் புடிக்கலதான். என்னாண்ட ஒருவார்த்த நீங்க கேட்டிருந்தா நானே செஞ்சிருப்பேன். ஆனா அவன் மேல இருக்கற காண்டுல உங்காளுங்கள அடிக்க ஆளனுப்பற அளவுக்கு நான் கேவலமானவன் இல்ல. எனக்கு அவன் விரோதிதான். ஆனா இந்த சம்பவம் எனக்கு வேற ஒண்ண சொல்லுது. என்னியமாதிரி வேற யாரோ ஒரு பெரியாளூக்கும் விரோதியாயிருக்கான். அது யாருன்னு நான் கண்டுபுடிக்கறேன். இப்பவே தலைமையகத்துல பேசுறேன். ரெண்டு நாளைக்கு வேலைய நிறுத்திவெக்க சொல்லு. அவன் வந்ததும் கண்டின்யூ பண்ணிக்கிறலாம்.’

‘சரிண்ணே. ஆனா நீங்க எதும் தப்பா எடுத்துக்கக்கூடாது. உங்கள நாங்க கடவுளாத்தான் நெனைக்கறோம். இப்ப தோணுது. அவர் செய்யிறேன்னு வந்தபோது அண்ணனாண்ட ஒருவார்த்த கேட்டுடுங்கன்னு சொல்லியிருக்கணும்.’

‘பரவால்ல விடுய்யா. ஏளபாளைங்க நீங்க என்னா பண்ணுவிங்க? உங்களவெச்சி அவன் பெரியாளாவ முயற்சி பண்ணறான். அது உங்களுக்குப் புரிஞ்சா சரி.’

‘புரியுதுண்ணே. கண்டிப்பா நான் எங்க குப்பத்து ஆளுங்கள கூப்ட்டு எல்லா விசயத்தையும் புட்டுப்புட்டு வெக்கத்தான் போறேன்.’

எம்.எல்.ஏ. சில வினாடிகள் ஆழமாக யோசித்தார். சட்டென்று, ‘நீ ஒரு காரியம் பண்றியா? இன்னிக்கி நைட்டு கெளம்பி பாளையங்கோட்டை போறியா? ஒரு முக்ய ஜோலி இருக்குது.’

‘சொல்லுங்கண்ணே.’

‘ஒரு ஃபைலு தரேன். அதை கொண்ட்டுபோயி அங்க மாவட்ட செயலாளராண்ட குடுக்கணும். கொஞ்சம் அவசரம். யாரை அனுப்பலாம்னு யோசிச்சிக்கினு இருந்தேன். அந்த நேரத்துல நீ வந்த. நம்பகமான ஆளு. நம்மாளு வேற. என்னா சொல்ற?’

‘என்னண்ணே இப்பிடி கேக்கறிங்க? உங்க நெழல்ல வளர நாங்கல்லாம் குடுத்து வெச்சிருக்கணும்னே.’

‘சரி. இரு. எடுத்தார சொல்றேன். ஆனா ஒண்ணு. நீ பாளையங்கோட்டை போனன்னு சிங்காரத்துக்குத் தெரியணும். எதுக்குப் போனன்னு கேட்டான்னா மட்டும், சொல்லாத. சரியா?’

முத்துராமன் குழம்பினான். என்ன கணக்காக இருக்கும் என்று புரியவில்லை. நிச்சயம் ஏதோ விவகாரம் என்பது மட்டும் புரிந்தது.

17


அத்தியாயம் பதினேழு


வேண்டுமென்றேதான் அவனுக்கு இனிய தமிழ் அசைவ உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டுவிட்டுப் போனாலென்ன என்று தோன்றியது. முதலில் அங்கே சாப்பாடு. பிறகு இருபத்தி மூன்று சி பிடித்து எழும்பூர். ஆல்பர்ட் தியேட்டரில் இறங்கி நாலு தப்படி நடந்தால் சாந்தியின் குடிசைப் பகுதி. ஏனோ ஊருக்குப் போவதற்குமுன் ஒருமுறை பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தான். அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தான். சரியல்ல என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக மனம் இருப்பதில்லை, பெரும்பாலும். இப்படியும் சொல்லலாம். விரும்பக்கூடிய அனைத்தும் பெரும்பாலும் சரியானவையாக மட்டும் இருப்பதில்லை.

திடீரென்று வாழ்க்கையில் ஒரு பெண். எதிர்பாராதது என்று சொல்வதற்கில்லை. ஆனால் நினைக்கும் தருணமெல்லாம் மெல்லிய இனிப்புப் படலம் ஒன்று நெஞ்சுக்குள் படர்ந்துவிடுகிறது. வயது செய்கிற மாயம். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் பிடித்திருக்கிறது. எப்போதும் பரபரப்புடன் ஒரு ரயில் எஞ்சின் மாதிரி ஓடும் அரசியல் குறித்த நினைவுகளுக்கு நடுவே இளைப்பாறிச் செல்லும் ஸ்டேஷன் மாதிரி. சில கணங்கள்தான். அதுவேகூடப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

தயக்கமும் பயமும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் எப்போதும் உடனிருந்தாலும் நினைவின் மிருதுத் தன்மையை அவற்றால் எதுவும் செய்யமுடிவதில்லை. ஆமாம், என்ன பெரிய பயம்? ஆமாம், என்ன பெரிய எதிர்காலம்? ஆமாம், என்ன பெரிய கஷ்டம்? எதையும் சமாளித்துவிட முடியும் என்றுதான் எப்போதும் தோன்றுகிறது. சாந்தி குறித்து நினைக்கும்போதெல்லாம். ஆனால் நேரில் சந்தித்த இரண்டு தருணங்களிலும் பைத்தியம் மாதிரி உளறியிருக்கிறேன். என் அச்சத்தை எடுத்து அவளுக்குள் விதைக்கத்தான் பார்த்திருக்கிறேன். ஏன் இப்படி? அவனுக்குப் புரியவில்லை.

இனிய தமிழ் அசைவ உணவகத்தில் இருந்தான். அரை ப்ளேட் பிரியாணி சொல்லிவிட்டுக் காத்திருக்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வந்தன. கூடவே வட்டச் செயலாளர் ஊருக்கு வந்துவிட்டாரா, அதுபற்றிய சூசகத் தகவல் ஏதும் அங்கே கிடைக்குமா என்றும் பார்த்துக்கொண்டிருந்தான். செய்யப்போவது மிகப்பெரிய காரியம். வட்டச் செயலாளர் அளவில் அது ஒரு அத்துமீறல். முத்துராமனைக் கூப்பிட்டு எம்.எல்.ஏ. இரண்டொரு முறை பேசியிருக்கிறார் என்கிற தகவலே அவர் விரும்பக் கூடியதாக இருக்கமுடியாது. எதிரே கைகட்டி நிற்கிற வரை மட்டுமே நம்பிக்கைகள் கட்டிக்காக்கப்படுகிற துறை. கட்டிய கையை இறக்கினால் எதிரி. நகர்ந்து போய் நின்றால் துரோகி.

தன்னை அவர் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளமுடியும். ஆனால் தலைவரே, நான் துரோகியோ, எதிரியோ அல்ல. உங்களைப் போலவே அரசியலில் முன்னுக்கு வரத்துடிக்கும் ஒரு சராசரி கனவு சுமப்பாளன். நீங்கள் முப்பது வருடமாகச் சுமக்கும் கனவுகளை நான் மூன்றாண்டுகள் சுமந்து இறக்கிவைத்துவிட விரும்புபவன். உங்களால் என் குப்பத்துக்கு ஒரு விடிவு வரப்போகிறது. அவரால் என் வாழ்க்கைக்கு விடிவு வரப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு தேர்தல் வாய்ப்பு. போதும். நிரூபித்துவிட முடியும். தோற்கவே நேர்ந்தால் கூட மிகப்பெரிய அளவில் ஒரு கவன ஈர்ப்பைத் தந்துவிட முடியும். முத்துராமன் போராளி. உழைக்கத் தெரிந்தவன். அடுத்தமுறை கரை சேர்ந்துவிடுவான். போதும். பிழைத்துக்கொண்டு விடுவேன்.

சாப்பிட்டு முடிக்கும்வரை வட்டம் வந்துவிட்டதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை. ஓட்டலிலும் அவனுக்குத் தெரிந்த முகம் என்று ஏதுமில்லை. எனவே அர்த்தமற்ற காத்திருத்தலைத் தவிர்த்துவிட்டு எழுந்து அவசரமாக வெளியே வந்தான். ஒருவேளை வட்டம் அங்கே இருந்து, என்ன இப்படி என்று கேட்டிருந்தால் தான் என்ன சொல்லியிருப்போம் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். கண்டிப்பாக, திருநெல்வேலி போகிற விஷயத்தைச் சொல்லியிருக்க மாட்டோம். பொதுவில் ஊருக்குப் போவதாகச் சொல்லியிருக்கலாம். அல்லது வேறேதாவது. ஆனால் கண்டிப்பாக மாநாடு தொடர்பாக ஏதாவது பேசி, அவர் வாயிலிருந்து வெளிவரும் எந்தச் சொல்லையும் பத்திரமாகச் சேமித்து, எம்.எல்.ஏ.விடம் சொல்லியிருப்போம் என்று பட்டது. இது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் நினைத்தால் பதற்றம் அதிகரிப்பது உண்மை. நினைக்காதிருக்க முடியாது என்றும் கூடவே தோன்றியது.

முத்துராமன் எழும்பூரில் இறங்கி, சாந்தியின் குப்பத்தைத் தொட்டபோது, தண்ணீர் லாரி ஒன்று வழியெல்லாம் கொட்டிக்கொண்டே குறுக்கே போனது. ரயிலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் பத்து நிமிடமாவது சாந்தியிடம் தனியாகப் பேச முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

சாந்தி, ஒன்று சொல்கிறேன். ஒரு லட்சியத்துடன் மிகப்பெரிய காரியத்தில் இறங்கியிருக்கிறேன். நினைத்தது நடந்தால் ஒரு நாளில் பல படிகள் ஏறி மேலே சென்றுவிடுவேன். நடக்காது போனால் பெரிய நஷ்டமில்லை. தையல் மிஷினும் குடிசையும் குப்பமும் எப்போதும் இருக்கிறது. அதை நம்பித்தானே என்னுடன் வாழச் சம்மதித்தாய்? அது எப்போதும் இருக்கிறது. ஆனால் எனக்கொன்று தருவாயா? உன் நம்பிக்கையை. உன் வாழ்த்தை. உன் புன்னகையை. நான் ஜெயிப்பேன் என்று நீ ஏன் சொல்லக்கூடாது? உன் மனத்திலிருந்து அந்தச் சொல் பொங்கி வெளியேறும்போது என் சக்தி அதிகரிக்கும் என்று தோன்றுகிறது.

‘சரி, ஜெயிச்சிட்டு வாங்களேன்? அதுக்கென்ன இப்போ?’ என்று சாந்தி கேட்டாள். வீட்டில் அவளைத் தவிர வேறு யாருமில்லை. அது முத்துராமன் எதிர்பாராதது. அப்பாவும் அம்மாவும் பெரம்பூர் அத்தை வீட்டுக்குச் சென்றிருப்பதாக சாந்தி சொன்னாள். தங்கை வழக்கம்போல் ஆல்பர்ட் தியேட்டருக்கு பாப்கார்ன் எடுத்துச் சென்றிருப்பதாக.

மிகப்பெரிய வாய்ப்பு. அவன் நிச்சயம் நினைத்துப் பார்த்திராதது. அன்புள்ள சாந்தி, சற்று புரிந்துகொள். நான் எதிர்பார்ப்பது இப்படிப்பட்ட சொற்சேர்க்கைகளை அல்ல. உன் ஆத்மார்த்தமான விருப்பம். அதன் சரியான வெளிப்பாடு. கடவுளே, எப்படி உனக்குப் புரியவைப்பேன்?

அவன் தவிப்பு அவளுக்கு சொற்களற்றுப் புரிந்திருக்கவேண்டும். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

‘இந்தா பாருங்க.. எனக்கு நீங்க பேசுற அரசியலெல்லாம் புரியாதுங்க. நான் படிக்காதவ..’

‘நானும் படிக்காதவன் தான் சாந்தி. நம்மளவங்க யாரு படிச்சிருக்காங்க? அட, அரசியல்ல இருக்கறவங்கள்ளயே முக்காவாசி படிக்காத தற்குறிங்கதான். என்னா கெட்டுப்போவுது? எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க. எங்க தலைவரை எடுத்துக்க. ஏழாங்கிளாசு பெயிலு. நானே தேவல. பத்தாவது முடிச்சிருக்கேன். படிப்பெல்லாம் ஆபீசுல குந்திக்கிட்டு ஜோலி பாக்க நெனைக்கறவங்களுக்குத் தான் சாந்தி. அரசியலுக்கு அது வாணா. சனங்களுக்கு எதனா செய்யணும், நாமளும் நல்லா இருக்கணும்; நாலு பேரு நல்லா இருக்கணும். இப்பிடி நெனைக்கறவனுக்கு வாய்ப்புதான் வோணும், படிப்பெல்லாம் வாணா.’

‘ஓஹோ’ என்றாள் சாதாரணமாக.

அவனுக்கு அந்த ஓஹோ புரியவில்லை. பதிலுக்கு எங்கே தொடங்கலாம் என்று சட்டென்று பிடிபடவில்லை.

‘ஒருவேளை கல்யாணத்துக்கு முந்தியே நான் ஒரு எம்.எல்.ஏவா இருந்திருந்தா நீ என்னா நெனச்சிருப்ப?’ என்று கேட்டான்.

அவள் புன்னகையுடன் சில கணங்கள் அவனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு சொன்னாள்: ‘சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதிங்க. அப்பிடி நீங்க எம்.எல்.ஏ. லெவலுக்குப் போயிருந்திங்கன்னா, இந்தக் குப்பத்துக்கு ஏன் வந்து பொண்ணு எடுக்கப்போறிங்க? உங்க ரேஞ்சுக்கு வேற யாரையானாத்தான் பாத்திருப்பிங்க.’

சுரீலென்றிருந்தது. எத்தனை பெரிய உண்மை. ஆனால் உடனடியாக மறுக்கத்தான் தோன்றியது.

‘சேச்சே.. என்ன பேசுறே? அந்தஸ்து வந்ததும் அடியோட மாறிடற ஆள் இல்லம்மா நானு. எத்தினி ஒசரத்துக்குப் போனாலும் எங்க குப்பத்துலதான் என்னிக்கும் வாசம். நம்ம கஸ்டநஸ்டம் தெரிஞ்ச பொண்ணாத்தான் பாத்துக் கட்டிக்கிடணும்னு இத்தன வருசமா வெயிட் பண்ணிட்டிருந்தவன். இப்பிடி சொல்லிட்டியே..’

‘நான் ஒண்ணும் தப்பா சொல்லலிங்க. அப்பிடியே நீங்க கொஞ்சம் பணக்காரப் பொண்ணா பாத்துக் கட்டிக்கிட்டாலும் தப்பில்லன்னு சொல்ல வந்தேன்.’

அவனுக்கு சாந்தியைப் புரியவில்லை. பொதுவாகப் பெண்களைப் புரிந்துகொள்வது அத்தனையொன்றும் எளிதில்லை என்றே தோன்றியது. புரிந்துகொள்ள முயற்சி செய்யாமலேயே வாழ்ந்து முடித்துவிடுவதுதான் பெரும்பாலானோர் செய்வது. ஆனால் எந்தப் பெண்ணும் சற்றும் உணர்ச்சிவசப்படாமல் அனைத்தையும் செய்தியின் தொனியிலேயே உள்வாங்கி, வெளிப்படுத்துவாள் என்று அவனுக்குத் தோன்றவில்லை. விமரிசனங்களற்ற பெண்களை அவன் சந்தித்ததில்லை. அம்மா. பெரியம்மாக்கள். சித்திகள். அவனறிந்த உலகில் வாழும் பெண்கள் அனைவரும் விமரிசனங்களால் செய்யப்பட்டவர்கள். இது சரியில்லை, அது கோணல். இது தவறு. அது குற்றம். எனில் எது சரி, எது உன்னதம்?

அவனுக்கு அபிப்பிராயங்களைவிட ஆதரவும் அரவணைப்பும்தான் மேலதிகம் தேவைப்பட்டது. தன் தவிப்புகள் புரிந்த ஒரு ஜென்மமாக சாந்தி ஏன் இருக்கக்கூடாது என்று நினைத்தான். எத்தனை அபத்தம்! தனக்கும் அவளுக்கும் நேற்று வரை ஒரு தொடர்பும் கிடையாது. எனில், எப்படி என் தவிப்புகளை அவள் புரிந்துகொள்ள முடியும்? திருமணம் என்பது ஒரு ஏற்பாடு. சமூக ஏற்பாடு. அது நடந்தபிறகு விதிக்கப்பட்ட வாழ்வின் எல்லைகளுக்குள் அவள் ஓடியாடப் பழகிவிடக் கூடும். அதற்குமுன்பே எதிர்பார்ப்பது தன் தவறுதானோ?

‘சரி, நான் கெளம்புறேன் சாந்தி. ரயிலுக்கு நேரமாச்சி.. விடிஞ்சா பாளையங்கோட்டைல இருக்கணும். எம்.எல்.ஏ. ஒரு முக்கிய காரியமா அனுப்புறாரு. நல்லபடியா முடிச்சிட்டு வரணும். போறதுக்கு முன்னால உன்னாண்ட சொல்லிக்கினு போலாம்னுதான் வந்தேன்.’

‘ஒரு நிமிசம்’ என்று உள்ளே போனவள், திரும்பி வரும்போது சற்று பளிச்சென்று இருந்தாள். ‘வாங்க.. நானும் கூட வரேன்’ என்று புறப்பட்டவளை வியப்புடன் பார்த்தான் முத்துராமன்.

‘நெசமாவா? ரயில்வே ஸ்டேசனுக்கா?’

‘ஆமா. வாங்க..’

‘உங்க வீட்ல தேடமாட்டாங்க?’

‘எங்கம்மா வர டயம் ஆவும். தங்கச்சி வந்தா பக்கத்தூட்ல டிவி பாக்க போயிருவா. நீங்க வாங்க.’

வழியெங்கும் முத்துராமனுக்குத் தரிக்கவில்லை. பரபரவென்று என்னென்னவோ தோன்றியது. இதைத்தான், இதைத்தான் சாந்தி எதிர்பார்க்கிறேன். நீ என் உடன் வரவேண்டுமென்பது கூட இல்லை. வரத்தயார் என்று சொன்னால் போதும். நான் ஜெயிக்கவேண்டுமென்று நீ விரும்பக்கூடத் தேவையில்லை. ஆனால் ஜெயிப்பேன் என்று சொன்னால் போதும்.

சந்தோஷ மிகுதியில் அவனுக்குப் பேசவே தோன்றவில்லை. பிளாட்பாரத்தை அடைந்து வண்டியில் ஏறி உட்காரும்வரை ஒரு சொல்கூடப் பேசவில்லை. வண்டி புறப்படுவதற்கான விசில் ஊதப்படும் சத்தம் கேட்டது. சே, எத்தனை அபத்தம் என்று நினைத்தவனாக பரிதவிப்புடன் ஜன்னலுக்கு வெளியே சாந்தியைப் பார்த்தான்.

‘போயிட்டு வரேன் சாந்தி. வந்ததும் உன்னை வந்து பாக்குறேன். அப்பாவாண்ட சொல்லு. நீ வந்தது மெய்யாலுமே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது.’

அவள் பேசாதிருந்தாள். ஏதோ யோசிப்பது போலப்பட்டது. வண்டி மெல்லப் புறப்பட்டபோது சொன்னாள்: ‘நீங்க அரசியல்வாதி ஆனாலும் டெய்லராவே இருந்தாலும் எனக்கு ஒண்ணுதாங்க. என்னா ஒண்ணு, தப்பு தண்டா பக்கம் போவாம, நாம உண்டு, நம்ம குடும்பம் உண்டுன்னு நல்லவராவே கடேசிமுட்டும் இருந்துட்டிங்கன்னா அதுவே போதும்!’

18


அத்தியாயம் பதினெட்டு


முத்துராமன் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியபோது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மாநாடுகளுக்கும் மழைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்கக்கூடும். அவனுக்கு நினைவு தெரிந்து கட்சி நடத்திய முக்கிய மாநாடுகள் அனைத்துக்கும் மழை ஒரு தூறல் அளவிலாவது சாட்சியாக இருந்திருக்கிறது. பலத்த மழை பொழியும்போதுதான் மேடையில் தலைவர்களுக்கு வீரம் அதிகரித்தது. விரல் நீட்டி எச்சரிக்கும் சந்தர்ப்பங்களில் வாகாக ஒரு இடி இடித்தால் கூட்டத்தில் விசில் பறக்கும். வீர உரை சம்பவத்துக்கு பொருத்தமாக, இயற்கை வழங்கும் பி.ஜி.எம்.

எல்லாம் மாநாடு தொடங்கியதற்குப் பிறகுதான். ஏற்பாடுகளின்போது, மழை வருவது என்பது மாவட்ட செயலாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அங்கே இங்கே அலைந்து திரிந்து ஆபத்துக்கு பாவம் பார்க்காமல் பொண்டாட்டி, சின்ன வீடு, மாமியார், சொத்துவரை விற்று, காசைக் கட் அவுட்டுகளாக்கி, கலையுணர்வை வெளிப்படுத்தும் செயல்வீரர்கள். போட்ட காசை எடுத்துவிட முடியும்தான். மாநாடு ஒழுங்காக நடந்து முடிகிற பட்சத்தில்.

பெரிய பிரச்னை கூட்டம் வராது என்பது, சாலைகளை அடைத்து ஊர்வலம் என்கிற கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது அவனது கட்சித் தலைவர்தான். கிராமப்புறங்களில் வயசுக்கு வரும் பெண்களுக்கு மயில் ஜோடித்து அழகு பார்ப்பது போல ஜோடித்த திறந்த வாகனத்தில் கூட்டத்தில் நீந்தி தலைவர் மிதந்து வருவார். அந்தப் புன்னகை. அந்தக் கம்பீரம். அந்த எகத்தாளப் பார்வை. சடாரென்று யாரையோ பார்த்து கைகூப்பும் திடீர் பணிவு. பதிலுக்கு எழும்பும் வாழ்க கோஷம்.

தன் பின்னால் ஒரு மாபெரும் சமூகம் அணி திரள்கிறது என்கிற நினைவு தரக்கூடிய பலம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அது அதிர்ஷ்டத்தில் வந்ததல்ல. கால்நடையாகக் கட்சிக் கூட்டங்களுக்குப் போன காலத்திலிருந்து கார்களின் அணிவகுப்பு காலம் வரை உழைத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

முத்துராமனின் அப்பா பல முறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அந்தக் கனவு இருக்கும். மாநிலத்தின் தலைவராகும் கனவு. ஒவ்வொரு மாநாட்டின்போதும் அந்தக் கனவு பரிணாம வளர்ச்சி கொண்டு வீதி உலா போகும் தலைவனின் அருகே நிற்கும் வாய்ப்பு மாநாட்டை முன்னின்று நடத்தும் மாவட்ட செயலாருக்கே கிடைக்கும். பக்கத்தில் நிற்கும் தலைவரை மானசீகமாக சற்று நகர்த்தி வைத்துவிட்டு, அந்த இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்க்காத மாவட்டச் செயலாளர் இந்தியத் துணைக்கண்டத்தில் எங்கும் இருக்க முடியாது.

‘மேலுக்கு வரணும்னு ஆசைப்படாத மாவட்ட செயலாளர் இருக்க முடியாது முத்து. எத்தினி உழைக்கிறோங்கறதை பொருத்த விசயம் அது. ஆனா ஒண்ணு. அரசியல் வேணாம்ணு ஒதுங்கின காலத்துல நான் புரிஞ்சுக்கிட்டது, அதுக்கு உழைப்பு மட்டும் போறாதுங்கிறது. எல்லாத்துக்கும் மேல ஒரு நேக்கு வேண்டியிருக்குதுடா. மாவட்ட செயலாளர்னா எம்.எல்.ஏ. அது ஒரு அந்தஸ்து. அதுக்கு மேலே மினிஸ்டர் ஆவுறதுக்கு, கட்சியில முக்கியஸ்தன் ஆவுறதுக்கு, இன்னதுதான் செய்யவேண்டியிருக்கும்னு சொல்ல முடியாது. சில பேருக்கு குத்தாலச் சாரல் மாதிரி பருவம் தப்பாம தானா கிடைச்சுடும். இன்னும் சில பேரு சிங்கியடிச்சு மூக்கால அழுது காரியத்தை சாதிச்சுப்பான். நம்மூர்ல நேக்கு தெரிஞ்சவன் ரொம்ப கம்மி. மேல வரதுக்குள்ள முழி பிதுங்கிறும். உச்சத்துக்குப் போறதுக்கு ஒரு அதிர்ஷ்டம் வேணும்.’

முத்துராமன் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா சொல்வது சரியாகவே இருக்கக்கூடும். ஆனால், அதிர்ஷ்டத்தின் பங்களிப்பை யார் தீர்மானிப்பது? சில அதிரடி நடவடிக்கைகள் தீர்மானிக்கலாம். சாமர்த்தியமான தகிடுதத்தங்கள் தீர்மானிக்கலாம். மேலிடத்துக்கு நெருக்கமாவது என்பது அறுபத்து ஐந்தாவது கலை. எப்படியாவது அதைப் படிக்காமல் விடக்கூடாது என்று அப்போது முடிவு செய்ததுதான்.

நேற்றைக்குவரை, வட்டச் செயலாளர் சிங்காரண்ணன். இன்றைக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு. நாளைக்கு இந்த பாளையங்ககோட்டை மாவட்டச் செயலாளராக இருக்கலாம். யாரால் என்ன உபயோகம் என்று இப்போது சொல்வதற்கில்லை. யாரும் உதவாமலே கூட போகலாம். ஆனால், என் முயற்சி சோர்வடையக்கூடாது என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டான்.

ஜங்ஷனில் இறங்கியதும் ஸ்டேஷனிலேயே பல் தேய்த்து, காபி சாப்பிட்டான். ஊருக்குப் போகும் போது சாந்திக்கு மறக்காமல் இருட்டுக்கடை அல்வா வாங்கி செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அம்மாவுக்குக் கொடுத்தாலும் அல்வா இனிக்கத்தான் செய்யும். ஆனால், சாந்திக்கு வாங்கிச்செல்லவேண்டும் என்று நினைக்கும்போது தனக்கே இனிப்பதை சிறு புன்னகையுடன் நினைத்துப் பார்த்தான்.

வெளியே வந்து பஸ் பிடித்து, அரை மணியில் பாளையங்கோட்டை இறங்கினான். போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்திருந்தார்கள். சாலையோரங்கள், கட்அவுட்டுகளுக்கான கட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மாட்டு வண்டிகளில், பிளாஸ்டிக் நாற்காலிகள் போய்க்கொண்டிருந்தன. திருவிழாதான். சந்தேகமில்லை.

வழியில் தென்பட்ட மாநகராட்சி நவீன குளியலறையில் இரண்டு ரூபாய் கொடுத்து குளித்துவிட்டு வெளியே வந்து வெள்ளைச் சட்டை, கட்சி வேட்டிக்கு மாறினான். ஓட்டலில் இட்லி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கும் இடத்தில் கிண்ணத்தில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டான். எம்.எல்.ஏ. கொடுத்தனுப்பிய ஃபைல் பத்திரமாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டான். எடுத்து, பிரித்துப் பார்க்க விருப்பம்தான். தயக்கமோ என்னவோ தடுத்தது. அநேகமாக பயமாக இருக்கலாம். யாருக்குத் தெரியப்போகிறது? படித்துத்தான் பார்ப்போமே என்றும் உள்ளுக்குள் ஒரு கெட்டிச்சாத்தான் குரல் கொடுத்தது. பசி தீர்ந்ததும் புத்தி வேலை செய்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

ஓட்டலைவிட்டு வெளியே வந்து, பஸ் ஸ்டாண்டை ஒட்டிய குட்டிச்சுவரில் சாய்ந்தபடி பையிலிருந்து ஃபைலை எடுத்தான். பிரித்ததும் நிறைய எண்கள் கண்ணில் பட்டன. வசூல் விவரம். புரட்டப் புரட்ட, சில அறிக்கைகள், குறிப்புகள், கணக்குகள், மேலும் கணக்குகள் என்று பக்கங்கள் நீண்டன. இதெல்லாம் எப்போதும் இருப்பதுதானே? தலைபோகிற முக்கியம் என்று வேலைமெனக்கெட்டு தன்னைக் கூப்பிட்டு கொடுத்தனுப்புவானேன்?

முத்துராமனுக்குப் புரியவில்லை. அலுப்புடன் ஃபைலை மூடி பையில் வைத்தான். கட்சிக்கொடி கட்டிய ஜீப் ஒன்று சாலையில் விரைந்து கடந்தது. மாநாடு நடக்கவிருக்கும் திடலுக்கு வழி கேட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

ஒன்றிரண்டு தூறல்கள் விழுந்தன. திடலில் கூரை வேய்ந்துகொண்டிருந்த உழைப்பாளிகள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். முத்துராமன் அருகே சென்று ஒரு ஆளைப் பிடித்தான்.

‘வணக்கங்க. என் பேரு முத்துராமன். மெட்ராஸ்லேர்ந்து வரேன். எம்எல்ஏ தங்கவேலு அனுப்பினாரு.’ என்று சொன்னான்.

அந்த சகதொண்டன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். ‘சொல்லுங்க’

‘இங்க மாவட்ட செயலாளர பாக்கணும். ஒரு ஃபைலு கொடுத்தனுப்பிவிட்டிருக்காரு.’

‘அண்ணன் இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாப்ல. இப்பத்தானே போனாக.’

அண்ணன்கள் பெரும்பாலும் இப்படித்தான். தொண்டர்கள் தேடும்போதுதான் கிளம்புகிறார்கள். எங்கே பிடிக்கலாம் என்று முத்துராமன் கேட்டான்.

‘வீட்டு அட்ரஸ் தாரேன். ஆனாக்க, இப்பம் அங்க இருப்பாருன்னு சொல்லமுடியாது.’

‘வேற?’

‘மோகனசுந்தரம் கடைகிட்ட போய்ப் பாருங்க’ என்று அவன் சொன்னான். விலாசம் கொடுத்து வழியும் சொன்னான்.

ஆனால், மோகனசுந்தரம் யாரென்பதையோ, அவருடையது என்ன கடை என்பதையோ அவன் சொல்லவில்லை. சரவண பவன் மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். பெயர் சொன்னாலே போதும். எல்லாம் எளிதில் விளங்கும். மெட்ராஸ்காரனைத்தவிர மற்றவர்களுக்கு.

அவன் அந்த முகவரியைக் கண்டுபிடித்து போய்ச்சேர மணி பதினொன்றரை ஆகிவிட்டது. வருவது போல் இருந்த மழை இப்போது இல்லை. வெயிலடித்தது. வியர்த்தது. களைப்பாக இருந்தது. மோகனசுந்தரத்தின் கடையில் குறைந்தபட்சம் தனக்கொரு கோலி சோடாவாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால், அது ஒரு காயலான் கடையாக இருக்கும் என்று அவன் எண்ணிப்பார்க்கவில்லை. மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற காயலான் கடை போலிருக்கிறது. மாவட்டச் செயலாளர் உட்கார்ந்து மந்திராலோசனை செய்யுமளவுக்கு உள்ளே இடவசதி வேறு இருக்கிறது.

கடை வாசலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அண்ணனைப் பாக்கணும் என்று சொன்னபோது தடை ஏதும் இல்லாமல் பின்புறம் அனுப்பிவைத்தார்கள். சென்னை தூதுவன். வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது? ஆவலுடன் அந்தக் கடையைச் சுற்றிக்கொண்டு பின்னால் போனான்.

வழி முழுக்க பழைய செய்தித்தாள்கள். பழைய இரும்பு, ஈயம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள். உடைந்த பஜாஜ் ஸ்கூட்டரின் உதிரி பாகங்கள். க்ரீஸ் பூசிய சுவர்கள். பான்பராக் கறை படிந்த தரை. ஈக்களின் சாம்ராஜ்ஜியம். ஈரப்பதம் மிகுந்த சுற்றுச்சூழல். ஒரு மாதிரி நடனநங்கையின் நளினத்துடன் எதையும் மிதித்துவிடாமல் சுற்றிக்கொண்டு மந்திராலோசனை மண்டபத்துக்குப் போய்சேர்ந்தபோது, ‘செவிட்டு மூதி! கேக்கறன்ல? வாய தொறந்து பதில் சொல்லுல. நீ பேசாட்டி வீட்டுக்கு நீ போவ மாட்ட. ஒம் பொணந்தாம்ல போவும்.’

முத்துராமன் சூழல் புரியாமல் தயங்கி நின்றான். கோவக்கார எம்.எல்.ஏ. போலிருக்கிறது. ஒருவேளை, கோலி சோடா கிடைக்காமல் போகலாம்.

19


அத்தியாயம் பத்தொன்பது


‘அதுல பாருங்க தம்பி, ஆங்.. பேரென்ன சொன்னீக? முத்துராமன். நல்ல பேரு. நா என்ன சொல்லவாரேன்னா, அரசியலுக்கு வர்றதுன்னா பதினாறு வயசுல வந்துரணும். இருவது வயசுல செயிலுக்குப் போயி பாத்துரணும். அப்பத்தேன் முப்பதுல கட்சிக்காரன் மதிக்க ஆரம்பிப்பான். நாப்பதுல மக்களுக்கு நம்மளத் தெரிய ஆரமிக்கும். அம்பதுல மினிஸ்டர் ஆயி அறுவதுல சாவறதுக்குள்ள கொஞ்சம் சொத்து சேத்துவெச்சிட்டுப் போயி சேரலாம். நடுக்கா, நாலஞ்சு போராட்டம், தடியடின்னு பேப்பர்ல நம்ம பேரு வந்திச்சின்னா ஒரு கவனம் கெடைக்கும். எங்கப்பா பதிமூணு வயசுல எதிர்க்கட்சித் தலைவரோட கொடும்பாவிய எரிச்சிருக்காருன்னா பாத்துக்கிடு.’

முத்துராமன் கருத்தேதும் சொல்லாமல் கைகட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வியப்புதான். எம்.எல்.ஏ. தங்கவேலு கொடுத்தனுப்பிய ஃபைலை அவன் ஓட்டலுக்கு வெளியே நின்றபடி ஒரு புரட்டு புரட்டிவிட்டுத்தான் இந்த திருநெல்வேலிக்காரரிடம் கொடுத்திருந்தான். வித்தியாசமாக ஏதும் அவன் கண்ணில் தட்டுப்படவில்லை.

ஆனால் சொல்லிவைத்தமாதிரி இவர் ஃபைலைத் திறந்ததுமே பின்புறம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு தாளை நீக்கி அதன் அடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துவிட்டாரே!

நிதானமாக அதைப் படித்து முடித்து, மடித்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, ‘ம்.. அப்பறம்.. என்ன சாப்புடறீங்க தம்பி?’ என்று ஆரம்பித்தவரை அவனுக்குப் புரியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்னர்தான் யாரோ ஒரு தொண்டனை கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, ‘நாளைக்கி சுலோசனா மொதலியார் பாலத்துக்கு அடியில ஒம்பொணம் கெடக்கும் சாக்கிரத’ என்று எச்சரித்துவிட்டு வந்திருந்தார்.

அந்தக் கோபமும் உக்கிரமும் ஆங்காரமும் அவனுக்கு பார்த்தபோது மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது. ரொம்ப வெவகாரம் புடிச்ச ஆளா இருப்பாரு போலருக்கே என்று நினைத்துக்கொண்டான். மாட்டிக்கொண்டிருந்த அந்த இளைஞன் மிகவும் வத்தலாக இருந்தான். ஏதோ நிதி விவகாரமாகத்தான் இருக்கவேண்டும் என்று முத்துராமனுக்குத் தோன்றியது. தேன் அடித்தவன் புறங்கை நக்காமல் இருக்கமுடியாது. என்ன பத்திருபது எடுத்திருப்பானோ என்னமோ? அவன் முகத்தைப் பார்த்தால் அதற்குமேல் களவாட யோக்கியதை அற்றவனாகத்தான் தோன்றியது.

‘ஒரு ஒழுக்கம் இல்லாம என்னாத்த இவனுக அரசியலுக்கு வந்து சாதிக்கப் போறானுக?’ என்று பொதுவில் கேட்டபடி திருநெல்வேலிக்காரர் அவன் தோளை அணைத்து வெளியே வந்தார்.

‘ஐயா, தங்கவேலண்ணன் எதுக்கு என்னிய உங்களாண்ட அனுப்பிவெச்சாருன்னு எனக்குத் தெரியலிங்க. இந்த ஃபைலை கொண்டு குடுத்துட்டு வாடான்னாரு. குடுத்துட்டேன்..’ என்று நீட்டியபோது, அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

‘அப்பிடியா? ஒண்ணும் சொல்லலியா? லெட்டருல வேற என்னமோல்ல எழுதியிருக்காரு?’

‘என்னதுங்கய்யா?’

‘அட வேறென்ன? மாநாடு நடக்கப்போவுதில்ல? இங்க கொஞ்சம் எடுத்துப் போட்டு செய்யிற ஆளு பலம் கம்மி. வேலைக்காரனுக இருக்காங்க. இத்த செய்யி, அத்த செய்யின்னா மாடா ஒழைப்பானுக. ஆனா புத்திக்காரன் கம்மி. அதுவுமில்லாம இந்த மாநாடு கொஞ்சம் விசேஷமாட்டு. தலைவரு நாலஞ்சு முடிவுங்கள ஸ்டிராங்கா அறிவிப்பாருன்னு தெரியுது. தங்கவேலு சொன்னாப்ல. மெட்ராசுல பத்து நிமிசத்துக்கு ஒரு சேதி பொறக்குது. இங்க திருநவேலிக்கு வந்து சேர்றதுக்குள்ள எல்லாம் பழசாயிடுது.’

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அவர் பேசுவது போலிருந்தது அவனுக்கு. அவருடன் இருந்த நாலைந்து தொண்டர்கள் அசப்பில் தொண்டர்கள் போலில்லாமல் குண்டர்கள் போலிருந்ததையும் அவன் கவனித்தான். முரட்டு உருவமும் பொருந்தாத வெள்ளைச் சட்டையும் வேட்டியும் வார் செருப்புமாக. ஒவ்வொருவர் கழுத்திலும் அரை கிலோவுக்குக் குறையாமல் நகைகள் இருந்தன.

‘ஐயா, சொல்லுறன்னு தப்பா எடுத்துக்காதிங்க. நான் ரொம்ப புதுசு. எனக்குப் பெருசா ஒண்ணும் தெரியாது. அண்ணன் போயிட்டுவாடான்னாரேன்னு வந்தேன். நீங்க சொல்லுறத பாத்தா பெரிய பொறுப்பு ஏதோ தருவிங்க போலருக்குது. எனக்கு அதுக்கெல்லாம் தகுதி இல்லிங்கய்யா.’

திருநெல்வேலிக்காரர் மனம் விட்டு ரசித்துச் சிரித்தார். ‘அட இருக்கட்டும்லெ. தனக்குத் தகுதி இல்லைன்னு புரிஞ்சி வெச்சிருக்காம்பாரு, அதுதாம் மொத தகுதி. நான் கேக்குதேன், இங்க யாருக்கு என்ன தகுதி இருக்குது? தெரிஞ்சத செய்யிறோம். கோசம் போடுதோம். பழம் விழுந்தா திங்குறது. கல்லு விழுந்தா தேய்ச்சி விட்டுக்கிட்டு திரும்ப ஒருக்கா அடிச்சிப் பாக்குறது. அவ்ளதானே?’

‘இருந்தாலும்..’

‘அட பெரிசா ஒண்ணும் இல்ல தம்பி. மாநாட்டுக்கு அதிக நாள் இல்ல. இன்னும் எட்டே பகல். ஏழே ராத்திரி. டவுன்ல இருக்குற லாட்ஜெல்லாம் புக் பண்ணியாச்சி. தலைவர் குடும்பத்துக்கு மரகத வினாயகம் தோட்டத்துல கெஸ்ட் அவுசு ஏற்பாடு பண்ணியிருக்கு. நம்ம பசங்க எல்லாத்தையும் பக்காவா பாத்துக்கிடுவாங்க. ஒன்ன எதுக்காக தங்கவேலு அனுப்பிவெச்சாருன்னா, ஒரு காரியம் இருக்குது..’ என்று சொல்லி நிறுத்தியவரை கேள்வியுடன் பார்த்தான் முத்துராமன். என்ன காரியம்?

‘கட்சில இருவது வருசம் ஒழைச்சவனுக்குக் கூட கெடைக்காத பரிசுய்யா இது! மனசோட வெச்சிக்க. இப்பத்திக்கு மூச்சு விடாத. தலைவரு ஃபேமிலி தங்கப்போற கெஸ்ட் அவுஸுக்கு நீதான் மூணு நாளும் சூப்பர்வைசரு.’

‘ஐயா! என்ன சொல்லுறிங்க?’ பதறிவிட்டான் முத்துராமன்.

‘அட ஆமாங்கறேன். இதெல்லாம் கொஞ்சம் பெரிய எடத்து அரசியல். ஒனக்கு முளுக்க வெளங்குமான்னு தெரியல. தங்கவேலு என்னாண்ட சொல்லிவுட்டது இதான். அவரு நமக்கு நாப்பது வருச சிநேகம். ரத்தமும் சதையுமா வளந்துட்டம். இப்ப ஒரு காரியம் பண்ணலாம்னு யோசிச்சப்ப, சரியான ஆளா பாத்து அனுப்பு தங்கம்னு சொல்லியிருந்தேன். அதான் உன்னிய அனுப்பியிருக்காரு.’

‘என்னால நம்பவே முடியலிங்கய்யா. நான் ஒரு குப்பை. எங்கியோ குப்பத்துல கெடக்குறவன்.. என்னியப் போயி.. ஐயா, அதெல்லாம் போலீசு, செக்யூரிடி ஆளுங்க இருப்பாங்களேங்க?’

‘எவன் இருந்தா ஒனக்கென்னப்பு? தலைவர் ஃபேமிலிய பாத்துக்கிட வேண்டியது நம்ம பொறுப்பு. வேளைக்கு சாப்பாடு, டிபன், கூல் டிரிங்கு அப்பால என்ன கேக்குறாங்களோ அது ஒழுங்கா கிடைக்கணும். அசிஸ்டெண்டு மாதிரி உன்னிய போட்டுரசொல்லியிருக்காரு தங்கம்.’

‘இப்பமே தலை கிறுகிறுக்குதுங்கய்யா..’

‘பாத்து, பாத்து. ஒம்மேல எம்புட்டு நம்பிக்கை வெச்சிருப்பாருன்னு பாத்துக்கிடு. நீ யாரு என்னான்னு எனக்குத் தெரியாது. ஆனா தங்கம் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு தெரியும்.’

‘நான் வேற என்னா செய்யணுங்க?’

‘அட இந்த வேலை போதாதா ஒனக்கு? எம்புட்டு பெரிய காரியம் தெரியுமா? எளுவத்தேழுல இதே வேலைய ஒருக்கா நாம்பாத்திருக்கேன். அம்மிணிக்கு அப்ப பிரசவகாலம். வூட்டாண்ட சாதிசனம் குய்யாமுய்யான்னு கத்திக்கிட்டு இருந்ததுங்க. என்னா தகப்பண்டா இவன்னு காறித்துப்பினாங்க. கண்டுக்கலியே நான்? அப்ப அஞ்சுநாள் மாநாடு. முழுநாள் ஊர்வலம். தலைவரு வீட்டு அம்மாவுக்கு நெழலா இருந்தேன். பத்து நிமிசத்துக்கு ஒருக்கா எளநீர், வேளைக்கு மாத்திர மருந்துங்க, சாப்பாடு அது இதுன்னு பாத்துப்பாத்து செஞ்சேன். கண்ணசரல முத்து! என்னா ஆச்சு? எண்பத்திரெண்டுல சீட்டு கிடைச்சிது! பாடுபட்டு செயிச்சேன். இன்னிக்கிப் பாரு..? அட நாளைக்கி?’ என்றபோது அவர் கண்ணில் தென்பட்டு ஓடிவிட்ட கனவை அவன் கவனமாகக் குறித்துக்கொண்டான்.

‘சந்தோசமா இருக்குதுங்க. தங்கவேலண்ணன் எம்மேல இத்தினி நம்பிக்கை வெச்சிருக்காருங்கறதே எனுக்கு பெரிய விசயங்க. நீங்க அவரோட சிநேகிதரு. முன்னப்பின்ன தெரியாதவன்னு பாக்காம இம்மாம்பெரிய பொறுப்ப குடுத்திருக்கிங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணுறேங்கய்யா.’

‘அதான்யா வேணும். இங்க பாளையங்கோட்டைல இல்லாத ஆளா, இல்ல அவங்களேதான் கூட்டிக்கிட்டு வரமாட்டாங்களா? அப்பிடி இல்ல முத்து. ஒரு காரியம் நல்ல படியா, நெனச்சபடி முடியணும்னா நாமதான் மெனக்கெடணும்’

‘சொல்லுங்கய்யா’ என்றான் மேலும் நெருங்கி, தலையைக் குனிந்து அவரருகே காதைக் கொடுத்து.

‘கெட்டிக்காரனா இருக்குற. நல்லதுதான். இப்பம் வேணாம். நைட்டு நம்ம க்ளப் அவுசாண்ட வந்துரு. அங்க வெச்சி சொல்லுதன். இங்க தொண்டருங்க நெறையப்பேரு இருக்காங்க. ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணு நெனச்சிப்பானுக. இன்னாடா தலைவரு திடீர்னு மெட் ராஸ்காரன் ஒருத்தன புடிச்சிக்கிட்டு ரகசியம் பேசுதாரேன்னு தப்பா எடுத்துக்குவாங்க. தொண்டர்கள் இல்லாம நாம அரசியல் பண்ணிரமுடியுமான்ன? அவங்கதான் சீவாதாரமே. என்ன நாஞ்சொல்லுறது?’

‘அ.. ஆமாங்க’

‘சாப்டியா தம்பி?’

‘ரயிலடிலயே டிபன் சாப்டேங்க.’

‘அடச்சே.. என்னாய்யா நீயி. அங்க துண்ணா வயித்தால போவும். டேய், இவனே.. சங்கரபாண்டி, தம்பிய நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போப்பா. அம்மாவாண்ட சொல்லி சாப்பாடு போடசொல்லு. முத்து, நீ சாப்ட்டு கொஞ்சம் படுத்துத் தூங்கு. நான் ஆறுமணி சுமாருக்கு வந்துருதேன். வந்ததும் நாம க்ளப் அவுசுக்குப் போயிருவோம். என்ன?’

‘தூங்கல்லாம் வேணாம்ணே. உங்களோடவே இருந்துடறேனே?’ என்றான் மெல்லிய வெட்கமுடன்.

‘அதான் சொன்னன்ல? நம்ம பசங்க கொஞ்சம் குழம்பிருவானுகப்பா.. நான் அவங்களுக்கு எதனாச்சும் சொல்லி, சமாளிச்சி வெக்கணும். தலைவரு ஃபேமிலிய கவனிக்கற பொறுப்பு யாருக்கு வரப்போவுதுன்னு அத்தினிபேரும் சப்பு கொட்டிக்கிட்டு இருக்காக. இப்ப யாருக்கும் இல்லைன்னு தெரிஞ்சிட்டா வேலை கெடும். புரிஞ்சிக்கப்பா. நீ வீட்டாண்ட போயிரு. நான் வரேன்..’

மாநாட்டுத் திடல் களைகட்டத் தொடங்கியிருந்தது. லாரிகளில் வந்திறங்கிய கட் அவுட்டுகள் நிமிடப் பொழுதில் எழுந்து நின்றன. கைகூப்பிய தலைவர். கையாட்டும் தளபதிகள். புன்னகைக்கும் செயல்வீரர்கள். வாழ்த்தும் நெஞ்சங்கள். பந்தல் வேலை படு ஜரூராக நடந்துகொண்டிருந்தது. பந்து பந்தாகத் தாம்புக் கயிறுகள் உருட்டிவிடப்பட்டுக்கொண்டிருந்தன. வேட்டியை மடித்துக் கட்டி திருநெல்வேலிக்காரர் வேலைகளில் முழுகிவிட்டார்.

பிரமிப்புடன் பார்த்தபடி நடந்த முத்துராமன் தனக்கு என்ன நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதே புரியாமல் குழம்பினான். உடன் வந்த நெல்லைத் தொண்டன், தொண்டையைச் செருமிக்கொண்டு, ‘நீங்க செய்யப்போற வேலைலதாங்க உங்க ஊரு எம்.எல்.ஏ., எங்க ஊரு எம்.எல்.ஏ. ரெண்டு பேத்தோட எதிர்காலமே இருக்குது.’ என்று சொன்னான்.

மிரண்டு போனான் முத்துராமன்.

20


அத்தியாயம் இருபது


கடற்கரையில் அதிசயமாகக் கூட்டம் இல்லாதிருந்தது. தவிரவும் கவியத் தொடங்கியிருந்த இருளுக்குள் ஒளிய இடம் தேடி அலைகள் நெருக்கியடித்து முந்தியதில் கருமையின் இருவேறு வண்ணங்கள் மேலும் கீழுமாகக் கண்முன் விரிந்தன. உப்புச் சுவையுடன் வீசிய காற்றில் மேனி பிசுபிசுத்தது. இதமான சூழல் நிரந்தரமானால் எத்தனை நன்றாக இருக்கும் என்று முத்துராமன் நினைத்தான். பரவசத்தில் சட்டென்று அருகே அமர்ந்திருந்த சாந்தியின் இரு கன்னங்களை ஏந்தி முத்தமிட நெருங்குபவன் போல் அருகே தன் முகத்தைக் கொண்டுவந்தான்.

‘ஐயோ..’ என்றாள் சாந்தி.

சட்டென்று கரங்களை விலக்கிக்கொண்டவன், ‘மன்னிச்சிரு சாந்தி. ரொம்ப சந்தோசமா இருந்திச்சா? அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.’ என்று அரையடி நகர்ந்து அமர்ந்தான். இருளில் சாந்தி வெட்கப்படுவது போலிருந்தது. அழகாக இருந்தது. இன்னொரு முறை செய்யலாமா என்று யோசித்தான். வேண்டாம் என்று கட்டுப்படுத்திக்கொண்டு, அப்படியே சரிந்து படுத்து, தலைக்குக் கையை முட்டுக்கொடுத்தபடி அவளைப் பார்த்தான்.

‘நல்லாருக்கில்ல? ஆறு நாள்ள மாநாடு. பன்னெண்டு நாள்ல கல்யாணம்!’

சாந்தி சிரித்தாள். ‘எப்பப்பாரு மாநாட்டு நெனப்புத்தானா?’

‘இருக்காதா பின்ன? சொன்னேன்ல? எவ்ளோ பெரிய வேலை குடுத்திருக்காரு எங்க எம்.எல்.ஏன்னு யோசிச்சிப் பாரு. அவவன் இப்பிடி ஒரு சான்சு கிடைக்காதான்னு தேவுடு காத்துக்கிட்டிருக்கான் வருசக்கணக்கா. என்னமோ நமக்கு லக்கு. சடார்னு என்னென்னமோ நடக்குது வாள்க்கைல. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா செரிதான்.’

சாந்தி அவனை மிகவும் ஆழமாக ஊடுருவுவது போலப் பார்த்தாள். ஏதோ பேச விரும்புவது போலத் தோன்றியது. ஆனால் பேசத்தான் வேண்டுமா என்று தயங்குவதாகவும் பட்டது. பயம் அல்லது கவலை. அல்லது இரண்டுமே இல்லையோ? தனக்குப் புரியாத உலகம் குறித்த தயக்கமாக இருக்குமோ? எதுவானாலும் அவளுக்குத் தன் அரசியல் கனவுகளைப் புரியவைத்தே தீருவது என்று அவன் முடிவு செய்துகொண்டிருந்தான். அதனால்தான் திருநெல்வேலியிலிருந்து திரும்பியவுடன் மற்ற அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்திருந்தான்.

‘இந்தா பாரு. நான் சொல்ல நெனைக்கறதையெல்லாம் கடகடன்னு சொல்லிடுறேன். ஒனக்கு என்னா புரிஞ்சிதுன்னு சொல்லு. புரியலன்னாலும் பரவால்ல. கேட்டுக்க. இதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் கனாவுல கூட நெனைக்கல. என்னமோ வட்டச்செயலாளரு தயவுல குப்பத்துக்கு நாலு ரோடு வரும், தண்ணிக்கொழா வரும், கொசு மருந்து அடிப்பாங்க.. அத்தோட செரின்னு நெனச்சேன். அந்த வேலை அப்பிடியே நிக்குது இன்னிக்கி. எவன் என்னா செஞ்சான்னு தெரியல. ஆனா எம்.எல்.ஏ. கூப்ட்டுவிட்டு வேற வேல குடுக்குறாரு. பாளையங்கோட்டை மாநாட்டுக்கு வர்ற தலைவரு ஃபேமிலிய கவனிக்கற வேலை. அங்க இல்லாத ஆளா? அவனுகளுக்கு இல்லாத செல்வாக்கா? யோசிச்சிப் பாரு? குப்பை மாதிரி எங்கியோ மூலைல கெடக்குறவன். எனக்கு ஏன் இதெல்லாம் அமையணும்? சொல்லு? என் வாள்க்கைல என்னமோ மாறுதல் வரப்போவுதுன்னுதானே அர்த்தம்?’

‘அ.. ஆமா’ என்றாள் தயங்கியபடி.

‘நீ புரிஞ்சிக்கணும் சாந்தி. உம்புருசன் வெறும் டைலர் இல்ல. நாளைக்கு நான் கண்டிசனா எம்.எல்.ஏ. ஆவேன். அப்பால மினிஸ்டர் ஆவேன். எங்கப்பன், சித்தப்பன் கோட்டைகட்டி வீணா போன எல்லாத்தையும் சேத்துப் புடிப்பேன்.’

சாந்தி பேசாதிருந்தாள். சில வினாடிகள் அவனும் அமைதியாகவே இருக்க, மெல்லிய குரலில் அவள் தன் தயக்கத்தை வெளியே விட்டாள். ‘உங்க லட்சியமெல்லாம் நல்லாத்தாங்க இருக்குது. ஆனா நீங்க என்னா செய்யப்போறிங்கன்னு ஒரு செகண்டு யோசிச்சிப் பாருங்க? பச்சையா சொல்லணும்னா நெல புரோக்கர் வேலை! உங்க ஊரு எம்.எல்.ஏவும் அந்த ஊரு எம்.எல்.ஏவும் கொடநாட்ல நூறு ஏக்கரு வளைச்சிப் போட்டு வெச்சிக்கிறாங்க. அதை சல்லிசு ரேட்டுல புடிச்சிக் குடுத்துர முடியும். இத்த தலைவரு சம்சாரத்தாண்ட எடுத்து சொல்லி மேட்டர முடிச்சிக் குடுத்தா அவங்களுக்கு எதுனா நல்லது நடக்கும். இதானே?’

‘அப்பிடி இல்ல சாந்தி. இத அவங்களே கூட நேர்ல சொல்லிரமுடியும். எதுக்கு என்னை வுடறாங்க? அத்தை நீ யோசிச்சியா?’

அவள் யோசித்தாள். காரணம் ஏதும் தெரியவில்லை. ஆனால் முத்துராமன் சொன்ன காரணம் ஏற்கும்படியாக இல்லை.

இரு எம்.எல்.ஏக்களுக்கும் தலைவர் சம்சாரத்துடன் நேரடிப் பழக்கம் ஏதும் கிடையாது. முறையான அறிமுகம் இனிமேல் – இந்த மாநாட்டை ஒட்டி நேரப்போவதுதான். முதல் சந்திப்பிலேயே நூறு ஏக்கர் வருகிறது, வேண்டுமா என்று கேட்பதில் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது. தவிரவும் அவர்கள் வளைத்துப் போட்டிருக்கிற இடம். என்றால், வர்த்தகப் பேச்சாகிவிடும். மூன்றாம் நபர் ஒருவர் இடம் குறித்து எடுத்துச் சொல்லி, எம்.எல்.ஏக்கள் முன்னின்று முடித்துத் தருவார்கள் என்கிறமாதிரி விஷயத்தைத் திருப்பிச் சொன்னால் பலனளிக்கும்.

‘எனக்கு சுத்தமா வெளங்கல’ என்றாள் சாந்தி.

‘வெளங்கலியா? ரொம்ப ஈசி சாந்தி. எவனோ வெச்சிருக்கற நெலம்ங்கறமாதிரி ஒரு செட்டப்பு. நம்ம எம்.எல்.ஏங்க முடிச்சிக் குடுப்பாங்கன்னு சொல்லி நெருக்கமாயிட்டா அப்பால ஒரு தொடர்பு கிடைக்கும். இவங்க என்னா செய்யப்போறாங்க? பக்காவா ரிஜிஸ்டிரேஷன் முடிச்சிட்டு நயா பைசா வேணாம், அம்மிணிக்கு காணிக்கைன்னு சொல்லிருவாங்க.’

‘ஐயோ! நூறு ஏக்கரு காணிக்கையா?’

‘பின்ன? அரசியல் சாந்தி! நூறு ஏக்கரெல்லாம் ஒண்ணுமே இல்ல. ஆனா அந்த நிமிசம் அந்தம்மாவுக்கு எப்பிடி இருக்கும்னு யோசிச்சிப் பாரு. நூரு ரூவா நோட்டு ஒண்ண ஃப்ரீயா குடுத்தாலே மனுச மனசு திக்குன்னும். நூறு ஏக்கரு நெலம்னா சொம்மாவா?’

‘பதிலுக்கு என்னா கெடைக்கும்?’

‘அக்டோபர்ல மந்திரிசபை விஸ்தரிக்கப் போறாங்களாம். அப்பிடின்னு மேல்மட்டத்துல ஒரு பேச்சு இருக்குது. அத்த கணக்குப் பண்ணித்தான் இவங்க இந்த ப்ளான் பண்றாங்கன்னு நெனைக்கறேன்.’

அவளுக்கு உண்மையிலெயே ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள மிகவும் ஆசைப்பட்டாள். தலைவர் மனைவிக்கு நூறு ஏக்கர் தோட்டம் கிடைத்துவிட்டுப் போகட்டும். எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகட்டும். இவனுக்கு என்ன லாபம் அதில்?

‘தெரியல சாந்தி. மெய்யா சொல்லணும்னா தெரியல. கவுன்சிலர் ஆக்குவாரு. இப்பத்திக்கி அதுதான் முடியும். ஆனா கட்சில சீக்கிரம் பெரியாளாயிர முடியும். அடுத்த எலக்சன்ல சேர்மன் ஆனாலும் ஆயிருவேன். அஞ்சு வருசத்துல எம்.எல்.ஏ. ஆயிரணும்னு ஒரு இது இருக்குது.’

‘அது எப்பிடிங்க முடியும். இந்த எம்.எல்.ஏ. இப்பமே செல்வாக்கோடத்தானே இருக்காரு? மினிஸ்டர் ஆயிருவாருன்னு வேற சொல்லுறிங்க. அப்புறம் நீங்க எங்கேருந்து எம்.எல்.ஏ ஆவுறது? இவரு ரிடையர் ஆவுற வரைக்கும் காத்திருப்பிங்களா?’

முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. சரியான கேள்விதான். ஆனால் சரியான பதிலை இப்போது சொல்லிவிட முடியாது.

‘கேக்குறன்ல?’

‘என்னா சொல்லுறதுன்னு புரியல சாந்தி. அரசியலுங்கறது ஆபீசு உத்தியோகம் மாதிரி கெடையாது. எப்ப, எவனுக்கு பிரமோசன் கிடைக்கும்னு சொல்லமுடியாது. லக்கு வேணும். கொஞ்சம் நேக்கு வேணும். அப்பப்ப தப்புதண்டா செய்யவேண்டிவரும்.’

‘இப்ப என்ன தப்பு செஞ்சிருக்கிங்க? இதுவரைக்கும்?’

‘ஒண்ணுமில்ல சாந்தி. வட்ட செயலாளருக்கு இதுவரைக்கும் நான் திருநவேலி போயிட்டு வந்த மேட்டரு தெரியாது. என்னிய நம்பி அவர் வுட்டுட்டுப் போன குப்பத்து வேலைங்க அப்பிடியே கெடக்குது. ஏண்டா முடியலன்னு கேட்டாக்கா என்னா சொல்லுறதுன்னு தெரியல. தப்புன்னு பாத்தா அதுதான். ஆனா, வட்டத்துக்கு பயந்துக்கிட்டு இங்க இருந்திருந்தன்னா, எம்.எல்.ஏ. தொடர்பு கிடைச்சிருக்காது. அவரு சொன்ன ஜோலிய முடிக்கலைன்னா திரும்ப குப்பத்துல வந்து விழுந்திரவேண்டியதுதான்.’

சாந்தி வெகுநேரம் அமைதியாக இருந்தாள். பிறகு உறுதியான குரலில் சொன்னாள். ‘ஒண்ணு சொல்லட்டுங்களா? நீங்க என்ன வேணா செய்யிங்க. ஆனா சாக்கிரதையா இருங்க. எனக்கு இதெல்லாம் புரியல. உங்கள புடிச்சிருக்கு. கட்டிக்கிட்டா நல்லா இருப்பம்னுதான் தோணுது. ஆனா அரசியலெல்லாம் நம்மள மாதிரி சாமானியப்பட்டவங்களுக்கு சரிப்படுமான்னு ஒரு கவலை இருக்குது. உங்கள நான் எதுக்கும் தடுக்கமாட்டேன். ஆனா என்னியப்பத்தி எப்பவும் நெனைப்பிங்களா?’

முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. அவள் கண்ணோரம் திரண்டு நின்ற ஒரு துளியைச் சடாரென்று துடைத்து, நெருங்கி தோளில் கைவைத்து அணைத்துக்கொண்டான்.

‘சே, என்னா பேசுற? சினிமா டைலாக்கு மாதிரி சொன்னாத்தான் லவ்வா? உன்னிய எப்பிடி நான் மறப்பேன்? பெரிசா ஆவணும்னு நெனைக்கறதெல்லாமே ஒனக்காகத்தான் சாந்தி.’

அவள் எழுந்து கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘சரி, எந்திரிங்க .நேரம் ஆயிருச்சி. போவோம்.’ என்று சொன்னாள்.

முத்துராமன் எழுந்துகொண்டான். எடுத்து வந்திருந்த பைக்கில் அவளை எக்மோர் குப்பத்தருகே கொண்டு இறக்கிவிட்டுவிட்டு திரும்ப வீடு வந்து சேரும்போது மணி ஒன்பதாகியிருந்தது. சாந்தியின் அப்பாவும் அம்மாவும், தான் இப்படி அவளை வெளியே அழைத்துச் சென்று வருவது குறித்து விமரிசனம் ஏதுமில்லாமல் இருப்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. ‘அட என்னா மாப்ள, வயசுக்காலத்துல நா அடிக்காத கூத்தா? நீங்க கட்டிக்கப்போற புள்ளதானே.. கூட்டிக்கிட்டுப் போங்க’ என்று சொன்னது மிகுந்த ஆறுதலாக இருந்தது. சற்று நேரம் பேசிவிட்டு, காப்பி குடித்துத் திரும்பி, வீடு வந்தபோது, வாசலில் இரண்டு கார்கள் நிற்பதைக் கண்டான்.

யாராக இருக்கும் என்று நினைத்தபடி உள்ளே போகவிருந்தவனை, தம்பி சடாரென்று வாசலிலேயே தடுத்து பின்பக்கம் தள்ளிக்கொண்டு போனான்.

‘என்னடா?’

‘உள்ள வராதிங்கண்ணே. சிங்காரண்ணன் வந்திருக்காரு.கையில அருவாளோட ரெண்டு பேரு கூட வந்திருக்காங்க. கொலவெறியில நிக்குறாரு. என்னா ஏதுன்னு புரியல. உன்னிய ரெண்டுல ஒண்ணு பாக்காம போவமாட்டேன்னு சொல்லுறாரு. ஒண்ணுமே புரியலண்ணே.’

21


அத்தியாயம் இருபத்தி ஒன்று


‘ஒனக்கு என்னா வயசாவுது? ஒவயசுல நான் மூணு புள்ள பெத்தவன். தெரியுமா? நீயாச்சும் குடிசைல வாள்றவன். நான் பக்கா ப்ளாட்ஃபார்ம். எங்கப்பன் எப்ப மச்சுவூடு கட்னான்னு தெரியுமா ஒனக்கு? எப்பிடி கட்டினான்னாச்சும் தெரியுமா? எங்கப்பன் வூடு கட்னது இருக்கட்டும். நான் எப்பிடி ஓட்டல் கட்னேன் தெரியுமா? அப்பன்காசுன்னு ஊருக்குள்ளார சொல்லுவாங்க. அது இல்ல நெசம். அடிச்ச காசு அது! எங்க அடிச்சேன், எப்பிடி அடிச்சேன், எவன் வயத்துல அடிச்சேன்னு தெரிஞ்சா பேதியாயிருவ சாக்ரதை! என்னாண்ட இந்த மாய்மால டிராமால்லாம் வாணா, ஆமா. தப்பு செஞ்சிட்டேன்னா, ஆமான்னு ஒத்துக்க மொதல்ல. நான் மன்னிக்கறனா, இல்லியாங்கறதெல்லாம் அப்பால. மொதல்ல நீ ஒத்துக்க. இல்ல மவன, ஒன்னிய போட்டுத் தள்ளிட்டு செயிலுக்குப் போனாலும் போவனேகண்டி வெறுங்கையோட திரும்பறவன் இல்ல நான்.’

சன்னதம் வந்தவர் போல் குதித்துக்கொண்டிருந்தார் சிங்காரவேலு. முத்துராமன் உள்ளுக்குள் பதறவில்லை. நிதானமாகத்தான் இருந்தான். இது ஒரு பிரச்னை. சற்றே பெரிய பிரச்னை என்றும் சொல்லலாம். அதனால் பாதகமில்லை. பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். தனது அதிகாரத்தை நிலை நிறுத்த சிங்காரண்ணன் வீடு வரைக்கும் அரிவாளெடுத்து வந்திருக்கிறார். நல்லது. அவருக்கு மங்களம் உண்டாகட்டும். ஆனால் இப்படிப் பேசுகிறவர் வெட்டக்கூடியவர் இல்லை. அது முத்துராமனுக்கு முதலிலேயே புரிந்துவிட்டது. இருப்பினும் ஒரு மரியாதை கருதி, பதற்றமுற்றவன் மாதிரி நடந்துகொண்டான்.

‘அண்ணே, என்னியவா சந்தேகப்படுறிங்க? உங்க உப்பத் தின்னவண்ணே நான்! நீங்க பாத்து வளர்ந்த புள்ள. சே.. என்னண்ணே நீங்க?’

‘டாய், வாணான்றன்ல? இந்த டகிள்காட்றதெல்லாம் வாணாம். உண்மைய சொல்லிரு. உசிரோட வுட்டுட்டுப் போயிடுறேன். பால் மாறிட்டதானே? அந்த எச்சிக்கல என்னாத்த போட்டான்? எலும்புத்துண்டா, பிரியாணியா?’

‘யாருண்ணே? எம்.எல்.ஏவ சொல்றிங்களா?’

‘டேய், ஒனக்குத்தாண்டா அவன் எம்.எல்.ஏ. எனக்கு என்னிக்கும் அதே நாயிதான்.’

முத்துராமன் சிதறிய சொற்களைச் சேமித்துக்கொண்டான். அவசியம் உபயோகப்படும்.

‘ஏண்டா பரதேசி, என் கைக்காச செலவழிச்சி உன் குப்பத்து கப்பெல்லாம் போவுறதுக்கு வேலை செஞ்சிக்கிட்டிருக்கேன். குப்ப மேட்ல கெடந்த ஒனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் குடுக்கப் பாக்குறன்.. என்னியவே நீ போட்டுப்பாக்குறியா? நுப்பத்தெட்டு வருசம்டா! எத்தினி? நுப்பத்தெட்டு வருசம்! அரசியல்ல கெடந்து புழங்கிட்டிருக்கேன். அத்தினி சீக்கிரம் அழிச்சிர முடியாதுரா.. நேத்து பெஞ்ச மழையில இன்னிக்கி மொளச்ச காளான் உங்க எம்.எல்.ஏ. நீ காளானுக்கு மேல கால் தூக்கி ஒண்ணுக்கடிக்கிற நாயி. என்னா செஞ்சிரமுடியும் உங்களால?’

‘அண்ணே.. ஒரு நிமிசம்ணே.. நான் சொல்றத மட்டும் கேட்டுட்டு அப்பறம் நீங்க என்ன செஞ்சாலும் ஏத்துக்கறேன். கண்டிப்பா நான் நியாயம் கேக்கத்தாண்ணே அவுரு வூட்டுக்குப் போனேன். அடியாளுங்கள அனுப்பி நம்ம குப்பத்து வேலைங்கள கெடுக்க நெனச்சிங்களே, நியாயமான்னு கேக்கத்தாண்ணே போனேன். சிங்காரண்ணன் ரத்தத்த சிந்தி பாடுபடுறாரு, இப்பிடி கெடுக்கப்பாக்குறிங்களேன்னு சட்டைய புடிக்கத்தாண்ணே போனேன். அவுரு துண்ட போட்டுத் தாண்டுறாருண்ணே.. அவர் அனுப்பவே இல்லன்னிட்டு..’

சிங்காரம் அவனை முறைத்துப் பார்த்தார்.

‘நம்புங்கண்ணே. எங்காத்தா மேல சத்தியம்ணே.. அம்மா, சொல்லேன் பாத்துக்கினு சும்மா நிக்கற?’ என்றான் அம்மாவின் பக்கம் திரும்பி.

முத்துராமனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சே வரவில்லை. திகைப்புற்று, அப்படியே சமைந்து நின்றிருந்தார்கள். என்ன நடக்கிறது, என்ன நடந்திருக்கிறது எதுவுமே புரியாமல் நின்றார்கள்.

‘தபாரு முத்துராமா. எல்லாம் எனக்குத் தெரியும். உங்கப்பாரு மூஞ்சிக்காக உன்னிய ஒண்ணும் பண்ணாம வுட்டுட்டுப் போறேன். ஆனா ஒண்ணுகண்டி தெரிஞ்சிக்க. எவன் தடுக்க நெனச்சாலும் என் லச்சியம் தோக்காது! இதே தொகுதிக்கு அடுத்த எம்.எல்.ஏ நாந்தான். எளுதி வெச்சிக்க. நலத்திட்டத்துக்கு இன்னிக்கி ஆளனுப்பின அதே சிங்காரம் அன்னிக்கி கொளுத்தறதுக்கும் ஆள் அனுப்புவான். அதையும் சொல்லுறேன். நோட் பண்ணிக்க.’

‘ஐயோ அண்ணே.. என்ன பேசுறிங்க? நீங்களா..’

‘அடச்சே சொம்மா கெட. ஒன்னையும் தெரியும். அவனையும் தெரியும்டா எனக்கு.’

‘சத்தியமாண்ணே.. நான் அங்க போனது..’

‘டாய், இதுக்கு மேல பேசாத. நீ எதுக்குப் போனங்கறது எனக்கு முக்கியமில்ல. எனக்குத் தெரியும்டா. அவன் ஆள் அனுப்பல. வேலைய கெடுத்ததும் அவன் இல்ல. அது எனக்குத் தெரியும்.’

ஒரு கணம் முத்துராமன் வாயடைத்துப் போனான். ‘அண்ணே, பின்ன..’

‘எதுக்கு கத்துறேன்னு கேக்குறியா? மொதல்லயே சொன்னேன்ல? நுப்பத்தெட்டு வருச அரசியல் சொல்லிக்குடுத்த பாடம்டா இது! இப்ப நான் ஒரு பாடம் சொல்லிக்குடுக்கறேன். நீ கத்துக்க. வேலைய கெடுக்க ஆள் அனுப்பினதே நாந்தான்!’

முத்துராமன் அதிர்ந்தான். ‘என்னண்ணே சொல்லுறிங்க?’

‘ஆமாண்டா. நாந்தான் அனுப்பினேன். நானே தொடங்கின வேலைய நானே நிறுத்தினேன். நிறுத்திட்டு என்னா செஞ்சேன்? கட்சிப் பத்திரிகை எடிட்டர நேரா போயி பாத்தேன். தலைவர் பேருல நான் தொடங்கின காரியத்த கட்சி ஆளூங்க சிலரே கெடுக்கறாங்கன்னு புகார் அறிக்கை குடுத்துட்டு ஊட்டிக்குப் போயி ஒரு வாரம் ரெஸ்டு எடுத்தேன். என்னா ஆச்சி தெரியுமா? நோட்டு வந்திருக்குது. தலைவர் என்னிய பாக்கணும்னு சொல்லியிருக்காரு. அவ்ளதாண்டா! இன்னமே கடவுளே நெனச்சாலும் என்னிய ஒண்ணும் பண்ணமுடியாது. போய் சொல்லு உங்க எம்.எல்.ஏவாண்ட. ஏற்கெனவே கட்சிக்குள்ளார அவனுக்கு ஏகப்பட்ட கெட்ட பேரு. தலைவருக்குப் பிடிக்காத ஆளுங்களோட சகவாசம் வெச்சிக்கினு ரியல் எஸ்டேட் பிசினசு பண்றான் கம்னாட்டி. இந்த வருசத்தோட அவன் ஆட்டம் க்ளோஸ். போய் சொல்லுடா பரதேசி!’

முத்துராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மண்டைக்குள் பரபரவென்று பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இது அரசியல், இது அரசியல் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டான்.

‘அண்ணே, நீங்க என்னாவேணா நெனச்சிக்கங்கண்ணே. நான் சொல்லுறது இதுதான். என்னிக்கி இருந்தாலும் நான் உங்க ஆளு. நீங்க செய்ய சொன்ன வேலைய செஞ்சேன். எவனோ தடுக்க வந்தப்ப, ஏண்டான்னு கேக்கத்தான் அவரு வூட்டுக்குப் போனேன்.’

‘எலேய், திரும்பத்திரும்ப அதையே சொல்லாத. எனக்கு வர்ற ஆத்திரத்துல ஒன்னிய போட்டு மிதிச்சிருவேன். வேலைய கெடுக்க ஆள் அனுப்பினதே நாந்தான்னு சொல்லிட்டன்ல? அப்பறம் என்ன அதையே சொல்லிக்கிட்டு? உண்மை உன் வாயிலேருந்து வருதான்னு பாத்தேன். வரல. சரி நானே சொல்லுறேன். நீ ஏன் அவன் வீட்டுக்குப் போனன்னு நான் கேக்கல. அவன் உன்னிய எதுக்கு திருநவேலிக்கு அனுப்பினான்னு கேக்குறன். அட, அனுப்பினான். போவசொல்ல என்னாண்ட ஒரு வார்த்த சொன்னியா?’

திடுக்கிட்டு விழித்தான் முத்துராமன். இதுவும் அரசியல். ஆனால் தன் சம்பந்தப்பட்ட அரசியல். சற்றே கவனமாக இருந்தாக வேண்டும்.

‘சொல்லாம இருப்பனாண்ணே? நம்ம ஓட்டலுக்கு ஒடனே ஓடியாந்தேண்ணே. நீங்க ஊர்ல இல்லன்னுட்டாங்க. எங்க போயிருக்கிங்க, போன் நம்பர் என்னா, எது கேட்டாலும் தெரியல. அவுரானா, அவசரப்படுத்தறாரு. சரி, கட்சிவேலதானே, நீங்க ஒண்ணும் சொல்லமாட்டிங்கன்னு தாண்ணே போனேன்.’

‘கட்சிவேலையா? டேய், எனுக்குத் தெரியாதாடா அவன?’ சிரித்தார். முத்துராமன் தலைகுனிந்து நின்றான்.

‘தபாரு முத்து. நீ எவனோட வேணா போ. எப்பிடிவேணா வீணா போ. எனக்குப் பிரச்னை இல்ல. ஆனா எனக்கு துரோகம் பண்ணணும்னு நெனச்சா வுடமாட்டேன். இன்னிக்கி ஹோல்டு நம்மாண்ட வந்திருக்குது. தலைவர பாத்துட்டு வந்துட்டன்னா தீந்துது விசயம். இத்தன வருசமா தவம் இருந்திருக்கண்டா.. சொம்மா இல்ல. இனிமே எவன் நெனச்சாலும் என்னிய அழிக்க முடியாது. போய் சொல்லு அவனாண்ட.’

பேசியபடியே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வேகமாக வெளியேறினார். அவருடன் வந்திருந்த இரண்டு பேரும் முறைத்தபடி பின்னால் போனார்கள்.

முத்துராமன் வியர்வையைத் துடைத்துக்கொண்டான். ‘என்னடா இது?’ என்றார் அவனது அப்பா.

‘வந்து சொல்றேம்பா’ என்று உடனே கிளம்பி வண்டியை எடுத்து வேறு வழியில் பாய்ந்தான். இருபது நிமிடத்தில் வேளச்சேரி. எம்.எல்.ஏ. வீடு. ஐயா இருக்காரா?

மேலெ வரச்சொன்னார். ‘சொல்லு முத்து’

‘அண்ணே ரொம்ப முக்கியமான விசயம்.. கொஞ்சம் தனியா பேசணும்’ என்றான் அருகே வந்து காலடியில் அமர்ந்தவாறு.

எம்.எல்.ஏ. தீர்த்தவாரியில் இருந்தார். அரை மயக்கம். அரை நிதானம். கையில் மினுங்கிய கிளாசில் ஆப்பிள் வாசனை கலக்கப்பட்ட வோட்கா. கண்ணைக்காட்டினார். அருகில் இருந்த எடுபிடி வெளியேற, முத்துராமன் இடைவெளியே விடாமல் நடந்த அனைத்தையும் ஒப்பித்தான்.

‘எனக்கு என்னா பண்றதுன்னே தெரியலண்ணே. இந்தாளு இப்பிடி ஒரு தில்லாலங்கிடியா இருப்பாருன்னு கனவுல கூட நெனச்சிப் பாத்ததில்லண்ணே.’

‘அப்பிடியா சொன்னான் அவன்? அடப்பாவி! அவனே ஆளனுப்பி வேலைய நிறுத்தினானாமா? அவ்ளோ மண்டை ஏதுரா அவனுக்கு?’

‘தெரியலண்ணே. தலைவராண்ட அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்காராம். என்னா தெனாவட்டுங்கறிங்க? ஒங்கள ஒழிக்காம ஓயமாட்டேங்குறாருண்ணே.’

தங்கவேலு யோசித்தார். இடையில் இரண்டு வாய் தீர்த்தம் சாப்பிட்டுக்கொண்டார். ஒரு முறுக்கை எடுத்துக் கடித்துக்கொண்டார்.

‘இப்பம் புரியுதுடா எனுக்கு. தலைமை அலுவலகத்துல நம்மளுக்கு சரிப்படாத ரெண்டு மூணு பெருச்சாளிங்க இருக்குது. எப்பப்பாரு எதுனா போட்டுக்குடுத்துக்கினே இருக்குங்க. அதுங்களோட இவன் நெருங்கிட்டான்னு நெனைக்குறேன். தலைவரு உத்தமருடா. அவருக்கு நம்ம முக்கியத்துவம் தெரியும். இப்பம் நான் சொன்னபடி பாளையங்கோட்டை மாநாடு டயத்துல நீ அந்த நெல விஷயத்த அம்மிணியாண்ட கரெக்டா பேசி என்னிய பத்தி நாலு வார்த்த எடுத்துவிட்டு, அம்மிணிய பாக்க அப்பாயின்மெண்டு வாங்கிட்டன்னு வையி. எல்லாத்தையும் தீத்துருவேன்.’

‘கண்டிப்பாண்ணே. எவ்ளோ பெரிய காரியம். என்னிய நம்பி குடுத்திருக்கிங்க. நல்லபடியா முடிச்சிருவண்ணே.’

‘அதுக்கு முன்னாடி இந்தப் பன்னாடையோட கதைய முடிச்சிட்டாக்கூட நல்லதுரா. ஒண்ணு செய்யிறியா?’

‘சொல்லுங்கண்ணே.’

‘கன்னு ஒண்ணு ரொம்ப நாளா வேலையில்லாம உள்ளார கெடக்குது. லைசென்சு இல்லாத கன்னு. எடுத்துட்டுப் போயி அந்தாள போட்டுத் தள்ளிட்டு வந்துரேன்?’

22


அத்தியாயம் இருபத்திரண்டு


‘சேச்சே. என்னண்ணே நீங்க? அந்தாளு ஒரு கொசு. அவனுக்குப் போயி துப்பாக்கி அது இதுன்னுகிட்டு. வெத்துவேட்டுண்ணே. இன்னியவரைக்கும் உங்க மூஞ்சி முன்னால வந்து நின்னு ஒரு வார்த்த பேசியிருப்பாரா? உங்கள பாத்தாலே பேதியாயிரும்ணே. தள்ளி நின்னுக்கினு கொலைக்கறாரு. தொண்டத்தண்ணி வத்தினா தன்னால அடங்கிருவாரு.’

முதலில் ஒரு கணம் பயந்தாலும் முத்துராமன் சுதாரித்துக்கொண்டான். கொன்றுவிடு என்பது ஒரு வெறுப்பில் சொல்லப்படும் வார்த்தை. அதன் பின்விளைவுகள் குறித்து யோசிக்கத் தெரியாத அளவுக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு அத்தனை அடிமுட்டாள் இல்லை. ஆனால் வட்டம் போகிற போக்கைப் பார்த்தால் எப்படியும் யாராலாவது பெரிய இழப்பு இருந்தே தீரும் என்றே அவனுக்குத் தோன்றியது. ஒரு பெரிய மாநாடு நடக்கப்போகிறது. மாநிலம் தழுவிய மாநாடு. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் முக்கியஸ்தர்களும் பங்குபெறப் போகிற மாநாடு. கட்சி வரலாற்றில் 1962க்குப் பிறகு அத்தனை பெரிய மாநாடு திட்டமிடப்பட்டதில்லை என்று பேசிக்கொண்டார்கள். சில மிக முக்கிய முடிவுகளை எடுக்கவிருப்பதாகவும் எம்.எல்.ஏ. சொன்னார். அதிலொன்று தலைவரின் ஓய்வு அறிவிப்பாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.

‘வயசாயிருச்சிரா முத்து. இதெல்லாம் காலாகாலத்துல கல்யாணம் மாதிரி நடந்துரணும். இல்லன்னு வெச்சிக்க, பின்னால ஒருத்தனும் மதிக்கமாட்டான். அதுவுமில்லாம ரெண்டாம் மட்டத்துல போட்டி பொறாமை சாஸ்தியாயிருச்சி. ஒருத்தனை ஒருத்தன் எப்ப, எப்படி கவுக்கலாம்னு பாத்துக்கினு கீறானுங்க. ஒண்ணு சொன்னா நம்புவியா? நம்ம பீர்க்கங்கரணை ஜெயபாலு, வேளச்சேரி ராமகிஷ்டன், மருங்காபுரி தணிகாசலம் மூணு பேரும் எதிர்க்கட்சிக்குப் போனாலும் போயிருவாங்க போலருக்குது.’

‘ஐயோ, என்னண்ணே சொல்றிங்க? நாம ஆண்டுக்கிட்டிருக்கம் இப்ப. எப்பிடி அவங்க..’

‘அதான் அரசியல். அடுத்த எலக்சன்ல செயிக்கமாட்டம்னு ஒரு கணக்கு. போறும் இவனுகளுக்கு வோட்டுப் போட்டதுன்னு மக்கள் நினைச்சிட்டாங்கன்னு வையி. அவ்ளோதான். நாம என்னா ஊழல் பண்ணமா, கொள்ளை அடிச்சமா, ஒண்ணுங்கிடையாது. ஆனாலும் சனங்களுக்கு சமயத்துல போரடிச்சிரும். மாத்திப் போட்டுப் பாப்பமேன்னு புத்திக்குள்ள ஒரு குட்டிச்சாத்தான் கொரலு வுடும். எத்தினிவாட்டி இப்படி நடந்திருக்குது தெரியுமா?’

‘அது சரிண்ணே. அதுக்காக கட்சி மாறுவாங்களா? ஒரு காரணம் வேணாங்களா? தலைவரு அவங்களுக்கு என்னா கொற வெச்சாரு? மூணு பேரும் மினிஸ்டராவுல்லா இருக்காங்க?’

‘அதான் சொல்லுறனே? போரடிச்சிரும். மினிஸ்டரா இருக்கறதும் போரடிக்கத்தான் செய்யும். கணக்குப் போட்டுப் பாரு. பத்தொம்பது வருசம் இருந்திருக்காங்க. அடுத்தக் கட்டம்னு ஒண்ணு கெடியாது. மினிஸ்டர். அவ்ளோதான். எப்ப ஆட்சி அமைச்சாலும் ஒரு சிட்டு கேரண்டி. ஒரு அம்பாசிடர் காரு கேரண்டி. ஒரு கட்டத்துக்குமேல பணம் கூட போரடிக்கும் முத்து. ஆறு மாதிரி ஓடிக்கினே இருந்துட்டு, சடாருன்னு குட்டையா குந்திக்கிட்டா எப்பவுமே பேஜாருதான். நானெல்லாம் நேத்திக்கி வந்தவன். நீ நாளைக்கு வரப்போறவன். நமக்கு இதெல்லாம் கெடியாதுன்னு வையி. கொட்டை போட்டவனுக நெலைமை கஸ்டம்தான்.’

‘என்னண்ணே இவ்ளோ சாதாரணமா சொல்லுறிங்க?’

‘சொல்லித்தான் ஆவணும். ஒனக்கும் தெரியணும்ல? கட்சில நெறைய பொகைச்சல் இருக்குதுய்யா. இந்த மாநாட்டுல தீத்துரணும்னு தலைவர் நினைக்கறாரு. நாலஞ்சு பேரை கட்சிப்பணிக்கு வாங்கன்னு ஓப்பனா கூப்ட்டுக்கிட்டு அவரும் ரிசைன் பண்ணிருவார்ன்னு சொல்றாங்க. புச்சா நாலஞ்சு மினிஸ்டர்ஸ் போடப்போறாங்க. அதுல ஒண்ணு நானு. இன்னொண்ணு பாளையங்கோட்டைக்காரரு. இது ஆல்மோஸ்டு ஃபிக்ஸ்டு. நடுவால கொஞ்சம் பேஜார் பார்ட்டிங்க தொந்தரவு இருக்குது. அதுக்குத்தான் உன்னாண்ட சொன்னேன்.’

‘அது ஒரு மேட்டரே இல்லண்ணே. நான் வெள்ளிக்கெழம போயிடுறேன். தலைவர் ஃபேமிலி முழுக்க என் மேற்பார்வைல தான் இருக்கும்னு அங்க அண்ணன் சொல்லிருக்காரு. ஜாலியா, தமாஸா பேசிக்கினே இருக்க சொன்னாரு. சுத்தி சுத்தி கொடநாடு எஸ்டேட்டு வெவகாரத்த வெளில எடுக்கணும்னாரு. நூறு ஏக்கரு ரெடியா இருக்குது, வேணும்னா முடிச்சிரலாம்னு எம்.எல்.ஏ. சொல்லிவுட்டிருக்காரும்மா, விருப்பமான்னு கேட்டுக்கறேன். சரின்னாங்கன்னா மிச்சத்த நீங்க பாத்துக்கப்போறிங்க.’

‘அதாண்டா. இப்ப நானே கேட்டுருவேன். அடுத்த மினிஸ்டரா ஆக்கப்போறாங்கன்னு கட்சிக்குள்ளார பேசிக்கிட்டிருக்கறப்ப, நான் போய் அம்மிணியாண்ட பேசினேன்னு தெரிஞ்சிதுன்னா,எவனாச்சும் குடிய கெடுப்பான். எனக்கு வேண்டப்பட்டவன், பக்கத்துலயே இருக்கறவன் எவனாச்சும் போனாலும் பிரச்னைதான். அதான் முன்னப்பின்ன மூஞ்சி தெரியாத ஒன்னிய இந்த வேலைக்குப் போட்டேன். அதுவுமில்லாம விசுவாசமானவன். உங்கப்பாரு காலத்துலேருந்து உங்க ஃபேமிலிய தெரியும். நீயும் நாலு காசு சேக்கவேணாமா?’

‘அதெல்லாம் இருக்கட்டும்ணே. உங்க உப்பத்தின்னு வளந்தவன். உங்களுக்கு ஒரு உதவி செய்யறதுன்னா மத்ததெல்லாம் அப்பறம்தாண்ணே. எப்பிடியாச்சும் நீங்க மினிஸ்டர் ஆயிட்டிங்கன்னா எங்க குப்பத்துக்கு அப்பவாச்சும் ஒரு நல்லது நடக்காமலா போயிரும்?’

தங்கவேலு சிரித்தார். ‘என்னா பயடா நீ? அப்பமும் குப்பத்தத்தானா யோசிப்ப? தபாரு. ஆட்சி கையில வந்திரிச்சின்னா மாநிலமே ஒரு குப்பம்தாண்டா. என்னாவேணா செய்யலாம்.’

‘பொதுவா அப்பிடித்தாண்ணே நினைக்கறது. ஆனா எப்பவும் குப்பங்கள யாரும் கண்டுக்கறதில்லண்ணே.’

‘சைசு பிராப்ளம்டா. எது செஞ்சாலும் நம்மாளுங்களுக்கு பெரிசா தெரியணும். நாப்பதுக்கு அறுவது சைசுல ஃப்ளெக்ஸ் அடிச்சி போர்டு வெக்கணும். கட்சியில ஒரு கவனம் கெடைக்கணும். உங்க குப்பத்துல மொதல்ல இருவதுக்கு இருவது போர்டு வெக்க எடம் இருக்குதா சொல்லு.’

முத்துராமன் அமைதியாக நின்றிருந்தான்.

‘அதான். எல்லா குப்பத்துலயுமே இதான் பிரச்னை. செய்யற வேலை வெளில தெரியாம போயிரும். ஒண்ணு சொல்லுறென். எந்த அரசியல்வாதியும் சனங்க நல்லா இருக்கணும்னு நினைச்சி வேலை செய்யறதில்ல இப்ப. இருவதாம் நூற்றாண்டு நடுவுலேருந்து ஒலக தருமம் மாறிடுச்சி. தான் நல்லா இருக்கணும். தின்னுட்டு ஏப்பம் வந்தப்பறம் கையில இருக்கற பொறைல கொஞ்சம் கிள்ளிப் போடுறது. தின்னது தெரியாம, போட்டது மட்டும் தெரியறமாதிரி நடந்துக்கறது. இது மக்களுக்கும் பழகிருச்சி. அவங்க கேள்வி கேக்கறதில்லடா. கேக்கலைன்னா கிடைக்காதுன்னு இன்னொரு தருமம் இருக்குது. அது இயேசுநாதர் காலத்துலேருந்து இருக்கற தருமம். தெரியும்ல?’

முத்துராமன் சிரித்தான். இதுதான் தன் சந்தர்ப்பமா? சரி கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து, ‘தப்பா எடுத்துக்காதிங்கண்ணே. நான் இப்ப கேக்குறேன். என்னிய ஒரு கவுன்சிலராக்குவிங்களா?’

தங்கவேலு அட்டகாசமாகச் சிரித்தார். ‘அப்பிடி போட்றா அருவாள. சரியாத்தான் வளத்திருக்காரு உங்கப்பா.’

‘இல்லண்ணே. நான்..’

‘டேய், இப்பிடி வெளிப்படையா பேசின பாரு. இதான் உன்னாண்ட எனக்குப் புடிக்குது. சேவைதான் செய்யிறேன், ஒண்ணும் வேணாம்னு டயலாக் வுட்டிருந்தன்னா உன்னிய நம்பியிருக்க மாட்டேன். இப்ப பேசுனபாரு. இது கரெக்டு. உன்னிய நம்பலாம். சாவறவரைக்கும் நம்பலாம். சொல்லு. என்னா வோணும் உனக்கு? கவுன்சிலர் ஆவணுமா?’

‘அப்படி இல்லண்ணே. நான் அரசியலுக்குப் புதுசு. எடுத்ததும் கட்சில பெரிய பதவியெல்லாம் நினைக்கவே முடியாது. உங்க நிழல்ல இருக்கணும். அதேசமயம் நானும் வளரணும். அப்பால.. கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்கண்ணே. மாநாடு முடிஞ்ச பத்தாவது நாள் கல்யாணம் நீங்கதான் வந்து நடத்திக்குடுக்கணும்.’

‘தெரியும் தெரியும். கேள்விப்பட்டேன். நல்லாரு. ஆனா ஒண்ணு தெரிஞ்சிக்க. கவுன்சிலர் ஆவுறது பெரிய விசயமில்ல. எப்ப அது பெரிய விசயமில்லியோ, அப்ப பெரிசா லாபமும் இல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணின்னா வேற ரூட்ல போட்டுருவேன். அரசியல்னு எறங்கிட்டா சம்பாதிச்சிரணும் முத்து. நாளைக்கு என்னா ஆவுமோ, ஏதொ? இருக்கறப்ப, கிடைக்கறப்ப சம்பாதிச்சிரணும்.’

‘புரியுதுண்ணே.’

‘எதுனா தொழில் வெச்சிக்கிறியா?’

‘ஒண்ணூமில்லண்ணே. டைலரிங் பண்ரேன். மாசம் அறுநூறு ரூவா வந்தா பெரிசு.

‘எனுக்கு பினாமியா வேலை பண்றியா? இங்க மடிப்பாக்கத்துல ஒரு லே அவுட் போடப்போறேன். ரியல் எஸ்டேட்டு. எடுத்து ஒழுங்கா செஞ்சிக்குடுக்கறியா? நல்ல சில்லறை வரும்.’

‘சரிண்ணே’ என்றான் உடனடியாக. அப்பிடியே அந்த கவுன்சிலர் போஸ்டு..’

‘செய்யலாம்டா. பெரிய விசயமில்ல. ஆனா அட் ரஸ் இல்லாம போயிருவ. கொஞ்சம் வெயிட் பண்ணன்னா பெருசா அறுவடை பண்ணலாம். படிப்படியா வரணுங்கறது ஒரு இது. டமால்னு வர்றது வேற வழி. என் வழி ரெண்டாவதுதான். படிப்படியா வரணும்னு நெனச்சித்தான் அந்தப் பரதேசி இன்னிக்கி வட்டச்செயலாளரா ரிடையர் ஆவப்போறான். அதுவும் சொம்மா இல்ல. நாறிப்போய் வெளில போவப்போறான் பாத்துக்கினே இரு.’

அவர் பேசிக்கொண்டே இருந்தபோது போனடித்தது. எடுத்து ஹலோ என்றார். அப்படியா, அப்படியா என்று கேட்டுக்கொண்டார். சந்தோஷமும் குழப்பமுமாக முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை முத்துராமன் கவனித்தான். வைத்ததும், என்னண்ணே என்று கேட்டான்.

‘அது ஒண்ணுமில்லரா. அந்தப் பரதேசியோட ஓட்டல எவனோ கொளுத்திட்டானாம். பத்திக்கிட்டு எரியுதாம். சைதாப்பேட்டையே வேடிக்கை பாக்குதாம். பாக்கட்டும், பாக்கட்டும். அதுக்கு வேண்டியதுதான். அத்தவிடு. நாளைக்கு காலைல இங்க வந்துரு. ஒரு முக்கியமான சோலி இருக்குது. தலைமையகத்துக்குப் போவணும். பெரிச பாத்துட்டு வரவேண்டியிருக்குது’ என்று அலட்சியமாகச் சொன்னார். முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. மேற்கொண்டு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வெளியே வந்து பைக்கில் தாவி ஏறி உதைத்தான். இருபது நிமிடத்தில் சைதாப்பேட்டை. கேட்டை கிராஸ் செய்து அந்தப் பக்கம் போய் மார்க்கெட்டில் நுழைந்து சந்துகளில் நெளிந்து ஹோட்டல் வளாகத்தைத் தொட்டபோது பாதி எரிந்துவிட்டிருந்தது. தீயணைப்பு வண்டி ஒன்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது.

பதறி அருகே ஓடியபோது வட்டம் அவனை வெற்றுப்பார்வை பார்த்தபடி நடுவில் நின்றுகொண்டிருந்தார்.

‘அண்ணே..’ என்று அருகே போனான்.

‘திருப்தியாடா இப்ப? கொளுத்திட்டல்ல? கொளுத்திட்டில்ல? அவன் சொன்னத முடிச்சிட்டல்ல? மறக்கமாட்டண்டா. சத்தியமா மறக்கமாட்டேன்!’ என்று காதோரம் சொன்னார்.

23


அத்தியாயம் இருபத்தி மூன்று


பயமும் கவலையுமாக இருந்தது. யோசித்துப் பார்த்தால் எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. திடீரென்று வாழ்க்கையில் நுழைந்த அரசியல்வாதிகளின் அத்தியாயம். இரண்டு பேர். இரண்டு துருவங்கள். இரண்டு வாய்ப்புகள் என்று முத்துராமன் நினைத்தான். இரண்டு பிரச்னைகளாக அவர்கள் இருந்தார்கள். பிரச்னை என்று நினைத்தால் வீடு உள்பட எதுவுமே பிரச்னைதான். ஏன் இது வாய்ப்பாக இருக்கக்கூடாது? இயல்பில் இல்லாவிட்டாலும் வாய்ப்பாக மாற்ற முடியாதா என்ன?

அப்படித்தான் அவன் நினைத்தான். அதையேதான் விரும்பவும் செய்தான். ஆனால் ஒன்றை அடுத்து இன்னொன்று, அதனை அடுத்து மற்றொன்று என்று ஏதாவது தலைவலி கொள்ள வந்துகொண்டேதான் இருக்கிறது. வட்டச் செயலாளர் சிங்காரத்தின் ஹோட்டல் பற்றி எரிந்து விட்டது. கண்டிப்பாகத் தானாக எரியக்கூடியதில்லை. யாரோ வேலை மெனக்கெட்டு மின்கசிவுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அல்லது பெட் ரோலை ஊற்றி வாகான இடங்களில் பற்றவைத்திருக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க இனிய தமிழ் அசைவ உணவகம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இயங்காது.

அட, இதையும் ஏன் அவரே பற்றவைத்துக்கொண்டிருக்கக் கூடாது? தோன்றிய மறுகணமே அவரிடம் கேட்டுவிட்டதுதான் பிழையாகிப் போனது.

‘மவன டேய், நேத்திக்கி பெஞ்ச மழைல இன்னிக்கி மொளச்ச காளான் நீயி. என்னிய பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்டுப்புட்ட இல்ல? வெச்சிக்கறேண்டா டேய். எனக்குத் தெரியும்டா. இதெல்லாம் அந்தக் கபோதி ஏத்தி வுட்டு அனுப்பினதுதானே? உன்னையும் தெரியும், அவனையும் தெரியும், அவங்கப்பனையும் தெரியும்டா எனக்கு. அளிவுகாலம் வந்திரிச்சின்னு போய் சொல்லு அவனாண்ட. நாளைக்கு தலைவர பாக்கப்போறேன். நாளையோட சரி அவன் கதை. சொல்லிவை. வேணா போஸ்டர் அடிச்சி பஸ் ஸ்டாண்டாண்ட ஒட்டு. எப்பெம் ரேடியோவுல போய் சொல்லு. என்னிய ஒண்ணும் ஆட்டிக்க முடியாது அவனால. சிங்காரம் சாது, அப்புராணி, பொலம்புவானே தவிர ஒண்ணும் பண்ணமாட்டான்னு மட்டும் நினைச்சிராதிங்க. இன்னிக்கி எரிஞ்சது என்னோட ஓட்டலு இல்லடா. என் வயிறு. முப்பது வருச அரசியல்வாதிடா நான். நெனப்புல இருக்கட்டும். நாள கழிச்சி தெரிஞ்சிரும் உங்க பவுஷு.’

தொடர்பற்ற சொற்றொடர்களில் அவர் உணர்த்த விரும்பியதெல்லாம் ஒன்றுதான். இனி நான் உன் நண்பனல்ல. முத்துராமனுக்கு அதுதான் வியப்பாக இருந்தது. ஒரு எதிரியாகப் பொருட்படுத்திப் பேசுகிற அளவுக்குத் தனக்கு என்ன முக்கியத்துவம் வந்துவிட்டது என்று யோசித்துப் பார்த்தான். அப்படியொன்றும் தெரியவில்லை. எம்.எல்.ஏ. தங்கவேலு கூப்பிட்டு அனுப்பிப் பேசியது, பாளையங்கோட்டைக்கு ஒரு நடை போய்வந்தது தவிர அரசியலில் தன் பங்கு கடுகளவு காணாது. இப்படி நட்டநடுச் சாலையில் நிற்கவைத்து, சட்டையைப் பிடித்து வீர சபதம் செய்யக்கூடிய அளவுக்குத் தான் செய்ததுதான் என்ன? ஒன்றுமில்லை. கண்டிப்பாக ஒன்றுமில்லை.

உருப்படியாக ஒரு சாதனை செய்வதற்கு முன்னால் அரசியலில் ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டுவிட்டதுதான் பெரிய சாதனை போலிருக்கிறது. கிளம்பும்போது எதற்கும் இருக்கட்டும் என்று அவன் சொன்னான்:

‘ஐயா, நீங்க என்ன நெனச்சிக்கினாலும் சரி. எம்மேல எந்தத் தப்பும் இல்ல. உங்க ஓட்டல கொளுத்தற அளவுக்கு நான் கீழ்த்தரமானவனும் இல்ல, அதுக்கு அவசியமும் இல்ல. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னுவாங்க. நீங்க பெரியவரு, அனுபவஸ்தரு. நீங்க இப்பிடி பேசினா நான் ஒண்ணுஞ்செய்ய முடியாது. எங்க குப்பத்துக்கு நல்லது செய்யறேன்னிட்டு வந்திங்க. எதோ வேலைய ஆரமிச்சிங்க. நீங்களே பாதில நிறுத்திட்டுப் பூட்டிங்க. அத்தப்பத்தி கேக்கலாம்னிட்டு வந்தேன். இனிமே உங்களாண்ட பேசி பிரயோசனமில்லிங்க. நான் வரேன்.’

‘போடாங்… பாத்துக்கினே இரு. உன் குப்பத்துல ஒரு போகி கொளுத்தறனா இல்லியா பாரு. பப்ளிக்கா இப்ப சவால் விடுறேன். முடிஞ்சா ஏம்மேல கேசு போட்டு அரெஸ்டு பண்ணு பாப்பம்.’

அதற்குமேல் முத்துராமன் அங்கே நிற்க விரும்பாமல் திரும்பி நடந்தான். வலித்தது. தன் கட்டுப்பாடுகளை மீறி என்னென்னவோ நடந்துகொண்டிருப்பதாக நினைத்தான். அவற்றில் ஏதாவது ஒன்றேனும் தனக்கு லாபகரமாக இருக்க முடிந்தால் நல்லது. எது இருக்கும்?

வீட்டுக்குப் போனபோது அப்பா வாசலில் நின்றுகொண்டிருந்தார். சுற்றிலும் ஏழெட்டு பேர் இருந்தார்கள். இங்கென்ன புதுக்கூத்து என்று நினைத்தபடி வந்தவனிடம், ‘வாடா. எம்.எல்.ஏ. ஆயிட்டியா?’ என்றான் சிநேகிதன் ஒருவன்.

‘அடச்சே சொம்மா கெட. மனுசன் என்னா பாடு படுறான்னு தெரிஞ்சி பேசுங்கடா.’

‘தபாரு குத்துராமா. இந்த டகிள்பாஜியெல்லாம் எங்களாண்ட வாணா. நாங்களும் பாத்துக்கினுதான் இருக்கோம். திடீர்னு எவனோ வட்டம் வந்து வேலை செய்யறான்ன. கல்லு மண்ணு கொண்டாந்து ரெண்டு ரவுண்டு போட்டான். ஆளுங்க நாலு பேரு வந்தாங்க. ரெண்டு நாள் வேலை நடந்ததோட செரி. தடால்னு எவனோ வந்தான், நடந்த வேலைய நிறுத்துன்னு சண்டைக்கு வந்தான். நீ வந்து பேசி என்னமோ செஞ்சி திருப்பி அனுப்பின. திருப்பி எப்ப ஆரம்பிக்கும்? அத்த சொல்லு மொதல்ல.’

‘தெரியலடா. அந்தாளுகிட்டதான் பேசலாம்னு போனேன். அவன் ஓட்டல் பத்தி எரிஞ்சிக்கிட்டிருக்குது.’

‘இதெல்லாம் வாணா. நாங்க வேற விசயம் கேள்விப்பட்டோம்.’

‘என்னான்னு?’

‘அவரு குடுத்த பணத்துல பாதிய நீ லவுட்டிக்கிட்டியாமே?’

‘டேஏஏஏஎய்..’ ஆக்ரோஷமாகப் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தான் முத்துராமன்.

‘டேய், சட்டைய விடுடா.. விடுறாங்கறேன்ல..’ அவனது அப்பா துள்ளி வந்து அவனை விலக்கினார். பல குடிசைகளுக்குள்ளிருந்து தலைகள் வெளியே நீண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கின.

‘தபாருங்கப்பா. எம்புள்ள பணத்த எடுத்திருந்தான்னா அது எனக்குத் தெரியாம இருக்காது. நீங்க என்னிய நம்புறிங்கல்ல?’

கூட்டம் பேசாதிருந்தது. ‘கேக்கறேன்ல? பொறந்ததுலேருந்து இங்க கெடக்குறவண்டா நான். சொல்லுங்க. என்னிய நம்புறிங்களா இல்லியா?’

‘தபார் பெர்சு. எங்களுக்கு உங்கமேல எந்த கம்ப்ளெயிண்டும் இல்ல. நம்ம மருதன் நேத்து அந்தாளு ஓட்டலுக்கு பிரியாணி துண்ண போயிருக்கான். அங்க கவுண்ட்டர்ல பேசிக்கிட்டாங்களாம். வட்டம் ஒரு நல்ல நோக்கத்தோடதான் இந்த குப்பத்துல வேலைங்க செய்ய ஆரமிச்சாரு. நடுவுல இவன நம்பி பணத்த குடுத்ததுலதான் பிரச்னை ஆயிருச்சாம். வேலைய கெடுக்க ஆளுங்க வந்திச்சில்ல? அத்த செட்டப் செஞ்சதே இவந்தான்னு சொன்னாங்க.’

அடிவயிற்றில் எரிந்தது முத்துராமனுக்கு. எத்தனை பெரிய பொய்! கடவுளே, எப்படி நிரூபிப்பேன்?

‘நீயே சொல்லு பெர்சு. இருந்து இருந்து நமக்குன்னு ஒருத்தன் வந்து வேலை செய்யறேன்னு வாரான். அத்தவிட்டுட்டு இவன் எதுக்கு நடுவால நாலு நாள் வெளியூர் எங்கியோ போவணும்?’

‘அடச்சே, நான் போவலடா. எம்.எல்.ஏ. அனுப்பினா மாட்டேன்னா சொல்லமுடியும்?’

‘த.. இத்தானே வேணாங்குறது? எம்.எல்.ஏவாண்ட இல்லாத ஆளுங்க. உன்னிய அனுப்புறாரு அவரு! டேய், கேக்கறவன் கேனயன் இல்லடா. நீ சிங்காரண்ணன் ஆளுன்னு தெரிஞ்சி எம்.எல்.ஏ. உன்னிய ஏண்டா அனுப்புறாரு? நீ கேனயனா? இல்ல அவரையே கேனயன்றியா?’

‘தபாரு கிஸ்டமூர்த்தி, வீணா சந்தேகப்படாத. உனுக்கு எதனா டவுட்டுன்னா நேரா எம்.எல்.ஏவாண்ட போயி கேளு. நீ நினைக்கறமாதிரி நான் சிங்காரண்ணன் ஆளும் இல்ல, எம்.எல்.ஏ. ஆளும் இல்ல. என்னா ஏதுன்னு விசயத்த முழுக்க தெரிஞ்சிக்கிட்டு பேசு.’

‘டேய் இதுக்குமேல இன்னாடா இருக்குது? எத்தினி லவட்டின? அத்த சொல்லு.’

‘வேணாம் மூர்த்தி. என்னிய சீண்டாத. நானே பேஜாராயி வந்திருக்கிறேன்.’

‘நீ என்ன ஆனா எங்களூக்கு என்னடா? நெனவு தெரிஞ்ச நாளா நாத்தத்துல வாழறோம்டா. நெனச்சிப் பாரு. எத்தினி எலக்சன் வந்து போச்சி? எத்தினி அரசியல்வாதிங்கள பாத்தோம்? எத்தினிபேருக்கு வேலை செஞ்சோம். எவனாச்சும் ஒருத்தன்.. ஒருத்தன் நமக்குன்னு ஒரு காரியம் செஞ்சிருப்பானா? கார்ப்பரேசன்ல பேசிக்குறாங்களாம். இந்த குப்பத்தையே இடிச்சிப் போடணும்னு. பட்டா வெச்சிக்கினா வாழுறோம்? பத்து பைசாவுக்கு வக்கில்லாதவங்கடா நாம! ஏன், நேத்திக்கி வரைக்கும் உன் கதி மட்டும் என்ன வாழ்ந்தது? நீயும் அன்னக்காவடிதானே? மொத்தமா பணத்த பாத்ததும் பால்மாறிட்ட? கரெட்டா?’

‘அடிங்..’ என்று பாய்ந்தவனை அவனது அப்பா மீண்டும் தடுத்தார். ‘முத்து, எதுன்னாலும் வாயால பேசு. அவன் கேக்குறதுல என்ன தப்பு? தடதடன்னு ஒரு வேலைய ஆரம்பிச்சிட்டு ரெண்டு நாள்ள நிறுத்திட்டுப் போனா என்னமோ ஏதோன்னு எல்லாருக்கும் தோணத்தானே செய்யும். மருதன் காதால கேட்டுட்டு வந்து சொல்லியிருக்கான். டேய், இங்க வாடா. என்னா கேட்ட நீ? எல்லார் முன்னாலயும் சொல்லு.’

‘அவங்க கேஷியரு பேசிக்கிட்டிருந்தாரு பெருசு. ரோடு போட, மருந்தடிக்க அண்ணன் அம்பதாயிரம் குடுத்துவிட்டிருந்ததாவும், அத்த முத்துராமன் சுட்டுட்டான்னும் பேசிக்கினாங்க.’

‘புழுத்துப்போவும்டா!’ என்றான் முத்துராமன்.

‘தபாரு. எங்களுக்கு என்னா தெரியும்? அவங்க பேசினத சொல்லுறேன்.’

‘என்னிய விட அவங்க பேசினது உங்களுக்குப் பெரிசாயிடுச்சி இல்ல? அம்பதாயிரம்! டேய், கனவுல கூட கையால தொட்டதில்லடா நான்! அந்தாள.. வெச்சிக்கறேன்..’ பல்லைக் கடித்தான்.

‘நீ வெச்சிப்பியோ, தச்சிப்பியோ, அது உம்பாடு. முன்னெல்லாம் ஒரு ஏமாத்தம்னா கேக்க ஒரு நாதி கிடையாது. இந்த விசயத்துல நம்ம குப்பத்துக்காரப் பய நீ முன்ன நின்னு செஞ்சியேன்னு சந்தோசப்பட்டோம்பாரு.. போலாம் வாங்கடா..’

முத்துராமனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. குவிந்திருந்த செம்மண் மேட்டின்மீது பன்றியொன்று ஏற முயன்று சறுக்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். அத்தனை ஆத்திரத்தையும் சேர்த்து ஒரு கல்லை எடுத்து அதன் மீது வீசினான். அது ழவ்வ் என்று குரல் கொடுத்தபடி ஓடிப்போனது. சட்டையைக் கழற்றியபடி குடிசைக்குள் நுழைந்தான்.

அம்மாவும் தம்பியும் உள்ளே உட்கார்ந்திருந்தார்கள். என்ன பேசுவதென்று தெரியவில்லை. பேசத்தான் வேண்டுமா என்றும் நினைத்தான். எல்லாவற்றையும் எல்லாரையும் விட்டுவிட்டுக் கண்காணாமல் எங்காவது போய்விட நினைத்தான். பாளையங்கோட்டைக்குப் போய்விடலாம். எம்.எல்.ஏ. கொடுத்த வேலையையாவது நல்லபடியாக முடித்துவிட்டு வந்தால் நல்லது.

‘சாப்புடறியா?’ என்று அம்மா கேட்டாள்.

‘பசிக்கல. நான் வெளில போறேன்.’

‘எங்க போனாலும் எக்மோருக்கு ஒருநடை போயிட்டுப் போ. சம்மந்தி வூட்டு மனுசங்க வந்துட்டுப் போனாங்க. கல்யாணம் வேணான்னா நேரா வந்து சொல்லிட்டுப் போவறதுதானே, எதுக்கு அரசியல்வாதிங்கள வுட்டு அனுப்பறிங்கன்னு கேட்டுட்டுப் போனாங்க. என்னா ஏதுன்னு எங்களுக்குப் புரியல. நீயேபோயி அங்கயும் புரியவெய்யி.’ என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு எழுந்துபோனாள்.

பிடறியில் பேயடித்தது போலிருந்தது முத்துராமனுக்கு. கழற்றிய சட்டையை அப்படியே மாட்டிக்கொண்டு வெளியே பாய்ந்தான்.

24


அத்தியாயம் இருபத்தி நான்கு


நிராயுதபாணியாகப் போர்க்களத்தில் நிற்பது போலிருந்தது முத்துராமனுக்கு. சுற்றி இருக்கிற அத்தனை பேரும் ஆயுதம் தரித்திருக்கிறார்கள். சொற்கள் சிலருக்கு ஆயுதங்களாகி இருக்கின்றன. செயல்கள் சிலருக்கு. அம்மாவுக்குக் கண்ணீர். அப்பாவுக்கு மௌனம். தன்னுடைய செயலற்ற தன்மை ஒரு மொண்ணையான இட்லித் தட்டு கேடயமாகப் பட்டது அவனுக்கு. ஆனால் கண்ணை மூடும் கணமெல்லாம் உள்ளுக்குள் தான் ஓயாமல் வாள் வீசிக்கொண்டிருக்கும் காட்சிதான் பிரதானமாகத் தென்படுகிறது. எதன்மீது என்பதுதான் புரியவில்லை. கனவுகள் சுவாரசியமாக இருக்கின்றன. எதிர்காலம் குறித்த கனவுகள். ஆனால் அதிலேயே வாழ்ந்துவிட முடிகிறதில்லை. உருவி வீசுகிற வாளை உறையில் போட்டுவிட்டுத்தான் கண்ணைத் திறந்தாகவேண்டியிருக்கிறது.

சாந்தியின் வீட்டுக்குப் போகிற வழியெல்லாம் குழப்பம் ஒன்றுதான் பிரதானமாக மனத்தை ஆக்கிரமித்திருந்தது. எல்லாமே சுலபம் என்பது போலிருந்தது. தனது ஆர்வமும் வேட்கையும் மட்டுமே தன்னை மிக உயரத்தில் கொண்டுபோய் உட்காரவைத்துவிடும் என்று திடமாக நம்பியிருந்தான். சந்தர்ப்பங்கள் எதுவும் வலிய வரவழைத்துக்கொண்டதல்ல. தன்னால் அமைந்தவை. உயிரும் உணர்வும் உள்ள ஒரு சாட்சியாகத் தான் சிலவற்றுக்கு அமைய நேர்கிறது என்றே சொற்களில்லாமல் உணரத் தலைப்பட்டிருந்தான். சந்தோஷமாகத்தான் இருந்தது. திருமணமும் அரசியல் வாழ்வும். அதிரடியும் திடீர்த் தென்றலும். இரண்டுமே தன் வாழ்வில் உண்டு என்பது அவனுக்குத் தெரியும் என்றாலும் ஒரே காலகட்டத்தில் வந்து மோதுமென்று நினைத்திருக்கவில்லை. வந்தபோது ஆர்வமாகத்தான் இருந்தது. எதையும் சாதித்துவிடமுடியுமென்று தோன்றியது. தன் தேரோட்டத்தைத் தானே விலகிநின்று சாந்திக்குச் சுட்டிக்காட்டி, அவள் ஒரு குழந்தைபோல் கைதட்டி ஆரவாரம் செய்யும் காட்சியை எப்போதும் விரும்பி அனுபவிக்கப் பழகியிருந்தான்.

கண்ணிமைக்கும் கணத்தில் ஒரு பதவியும் அந்தஸ்தும் கூடிவந்து, தனது திருமணப் பரிசாக அவளுக்கு அதைச் சமர்ப்பணம் செய்யும் கனவு சுகமாக இருந்தது. தன் வீட்டுக்கும் அது ஒரு அவசியத் தேவை என்றே கருதினான். ஐம்பதாண்டு காலமாக அரசியலில் ஈடுபட்ட குடும்பம். யாரும் தொண்டர் என்கிற கோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போனதில்லை. ஏற்றிய கொடிக்குக் கைதட்டும் கூட்டமாக மட்டுமே இருந்து பழகிவிட்டது. ஒரு மாறுதலை உத்தேசித்து பதவிக்குக் குறிவைத்ததில் பிழையேதும் இருப்பதாக அப்போதும் அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் அரசியல் சுலபமில்லை என்று மீண்டும் மீண்டும் தோன்றியது. விழிப்புணர்வுக்கு மேலாக வேறொன்று வேண்டியிருக்கிறது. முதுகில் ஒரு கண். மூளையில் ஒரு பிரத்தியேக மின்சார விளக்கு. சொல்லில் ஒரு சுடர்ப்பொறி. தவிரவும் சொல்பேச்சு கேட்க ஒரு கூட்டம்.

அங்கேதான் அவன் களைத்துப் போனான். தோளோடு தோள் நின்ற குப்பத்து நண்பர்கள் எதிரே நின்று சட்டையைப் பிடித்த கணம். நடந்ததை நம்பச் செய்வதில் சவால் இல்லை. தகர்ந்த நம்பிக்கையைத் தைக்கிற காரியம் ஒரு சராசரி டைலருக்கு முடியாததென்று தோன்றியது. வாழ்க்கை சுலபமானதுதான். பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத பட்சத்தில்.

அவன் சாந்தியின் வீட்டுக்குப் போனபோது அத்தனை பேரும் இடிந்துபோய் அமர்ந்திருந்தார்கள். என்ன, என்ன என்று நூறு முறை கேட்டபிறகுதான் வாய் திறக்கவே மனம் வந்தவர்களாக இருந்தார்கள்.

‘கல்யாணத்துக்கப்பறம் எம்பொண்ணு புது சேலைதான் உடுத்துவான்னு கனாக்காணுறவன் இல்ல நானு. ஆனா டைலர் மாப்ள கிளிஞ்ச சேலையோட வெளில அனுப்பமாட்டாருன்னு ஒரு நம்பிக்கை இருந்தது. ஏழைங்கதான்னாலும் மனசுக்கு ஏது தம்பி வேத்துமை? பெத்தவன் நான். எம்பொண்ணு நல்லாருக்கணும்னு நினைக்கமாட்டனா? வேணாம் தம்பி. நீங்க போயிருங்க.’

முத்துராமனுக்குத் தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. தன் கட்டுப்பாட்டை மீறி நடக்கிற காரியங்களை என்ன செய்து தடுக்கமுடியும் என்று புரியவில்லை. எதைச் சொல்லிப் புரியவைக்க முடியும் என்றும் தெரியவில்லை.

‘ஐயா நீங்க நினைக்கறமாதிரி நான் எந்தத் தப்பும் செய்யல. உங்களுக்கு யாரு என்னா சொன்னாங்கன்னு தெளிவா சொன்னிங்கன்னா நல்லது.’

‘இதுக்குமேல என்னாங்க சொல்லணும்? பாளையங்கோட்டைல பாக்கு வெத்தல மாத்திக்கிட்டு வந்திங்களாமே? இல்லேன்னப்போறிங்களா? நாலு பேரு வெள்ளையும் சொள்ளையுமா அட்ரஸ் விசாரிச்சிக்கிட்டு வந்து சொல்லிட்டுப் போனாங்க. நீங்க நல்லா அரசியல் பண்ணுங்க. பெரிய ஆளா வாங்க. எங்களுக்கு எந்தக் கஸ்டமும் இல்ல. உள்ளார போவறதுக்குள்ள ரெண்டு பொண்டாட்டி வோணுங்கறது உங்க அரசியல் கலாசாரமா இருக்கலாம். ஆனா அதுக்கு நாங்க ஆளில்ல. இத்தோட வுட்றுங்க.’

‘ஐயோ, சத்தியமா இல்லிங்க. எனக்குப் போய்.. ச்சே.. என்னங்க நீங்க? நான்..’

‘தபாருங்க தம்பி. காசு பணம் பாத்தோ, நீங்க நாளைக்கு எம்.எல்.ஏ. ஆவப்போறிங்கன்னு நெனச்சோ எங்க பொண்ணத் தரோம்னு சொல்லல. இன்னிய தேதிக்கு ரெண்டு வேளை ரசம் சோறு போடத் துப்பிருக்கான்னுதான் பாத்தோம். தப்பில்லையே? உங்க ஆளுங்கள்ள செலபேரு ஒண்ணுக்கு நாலு கல்யாணம் கட்டியிருக்கலாம். ஆனா ஒரே மேடையில ரெண்டுன்னு கனாக்கண்டிருக்க மாட்டாங்க. இப்பிடி செஞ்சித்தான் அரசியல்ல மேலுக்கு வரணும்னா அப்பிடியொரு நாறப்பொழப்பு எதுக்குன்னுதான் எங்க சனம் கேக்கும். உங்க சனமும் கேக்கும். சந்தேகமிருந்தா போய் உங்கம்மாவ கேட்டுப்பாருங்க.’

‘ஐயா.. தயவுசெஞ்சி அளந்து பேசுங்க. செத்தாலும் தப்பு செய்ய நினைக்கமாட்டேன் நான். கட்னா உங்க பொண்ணுதான்னு கடவுள் சாட்சியா மனசுக்குள்ள ஏற்கெனவே தாலி கட்டிட்டவன். எந்தக் கபோதியோ வந்து உங்க மனச கெடுத்துட்டுப் போயிருக்கான். என்னா ஏதுன்னு வெவரம் தெரியாம நீங்கபாட்டுக்கு பேசிக்கிட்டே போனா என்ன அர்த்தம்? புடிச்சி உள்ளாற போட்டுருவாங்கய்யா. தெரியுமா? நீங்க சொல்ற அதே ரசம் சோறு தின்றவன் தான் நானு. நாளைக்கு எம்.எல்.ஏ. ஆனாலும் பாயசத்துல சோறு திங்க முடியாது.’

சாந்தி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தக் கண்ணில் தென்பட்ட வெறுமை விலைமதிப்பற்றதாக இருந்தது. எப்போதும் தென்படுகிற வெறுமை. என்ன, என்ன என்று உள்ளுக்குள் குமையச் செய்கிற வெறுமை. வலிய வரவழைத்துக்கொள்வதா, அந்தக் கண் உதிக்கும்போதே அணிகலனாக உடன் பிறந்ததா என்று தெரியாத வெறுமை. இமைக்கக்கூட இமைக்காத வெறுமை. அதுதான் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. சே என்று அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு எழுந்து கண்காணாமல் போய்விடலாமா என்று யோசித்தான். அவள் உடன் வரச் சம்மதமென்றால் அது முடியும் என்று தோன்றியது. மனத்துக்குள் ஒரு மௌனக் கேவல் எழும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

‘ஐயா என்னிய அஞ்சு நிமிசம் பேசவிடுங்க. உங்களுக்குப் புரியவெக்கறேன். அப்பால என்ன முடிவு வேணாலும் பண்ணிக்கங்க. கொலக்குத்தம் செஞ்சவனுக்குக் கூட கோர்ட்டுல பேச ஒரு வாய்ப்புத் தருவாங்க. தெரியும்னு நினைக்கறேன்.’

சாந்தியின் அப்பா மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக்கொண்டார். மௌனமானார்.

‘நான் அரசியல்வாதி இல்லிங்க. சத்தியமா இன்னும் இல்ல. ஆனா அரசியல்ல சாதிக்கணும்னு ஆசை இருக்குது. ஒருஅடி எடுத்து வெச்சேன். அவ்ளோதான். இன்னும் அடுத்த அடிபத்தி நினைச்சிக்கூட பாக்கல. இந்த நிமிசம் வரைக்கும் ஸ்பீக்கர் கட்டி, போஸ்டர் ஒட்ற ஜாதிலதான் இருக்கேன். எடுத்து வெச்ச ஒரு அடிக்குக் கிடைச்சிருக்கற கூலி இது. சொன்னா வெளங்குங்களா உங்களுக்கு? நாளைக்கு எம்.எல்.ஏ. ஆவேன்னு நீங்களாச்சும் நம்புறிங்க. எனக்கு இன்னும் அந்த நம்பிக்கை கூட வரலிங்க. ஆனா எம்.எல்.ஏ. என்ன, மினிஸ்டரே ஆவணும்னு கனா இருக்குது. வெறும் கனாதாங்க. உங்க பொண்ணாண்ட நான் என்னா கேட்டேன்னு கேட்டுப்பாருங்க. என் கனவ அவ கிண்டல் பண்ணாம கேட்டுக்கிட்டா போதும்னுதான் எதிர்பாத்தேன். செலருக்கு பீடி, சிகரெட்டு. செலருக்குத் தண்ணி. எனக்கு அரசியல்டான்னு எங்கப்பா சொல்லுவாரு. எனக்கு அது பீடி, சிகரெட்டு இல்லிங்க. நீங்க சொன்ன ரசம் சோறே அதான். சின்ன வயசுலேருந்து பளகிருச்சி. என் தப்பில்லிங்க. எங்க குடும்பம் அப்பிடி. அத்தினி பேரும் அரசியல்ல தோத்தவங்க. என் தாத்தா தோத்திருக்காரு. எங்கப்பா தோத்திருக்காரு. சித்தப்பா தோத்திருக்காரு. அம்மா சைடுல கூட அரசியல் ஆர்வம் இருந்திருக்குங்க. யாரும் ஜெயிச்சதில்ல. வம்சமே ஒரு ரேசுல பணத்த கோட்டவிட்ட மாதிரி எனக்கு ஒரு நெனப்புங்க. அவங்க விட்டத நான் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். தப்பா? அந்த ஆசை இருக்கறவன் நீங்க சொல்றமாதிரி ஒரு தப்ப செய்வேங்களா?’

‘அதெல்லாம் வேணாம் தம்பி. நீங்க பாளையங்கோட்டை போனிங்களா இல்லியா?’

‘போனேங்க. உங்க பொண்ண கேட்டுப்பாருங்க. சொல்லிட்டுத்தான் போனேன். ஒரு வேலையா போனேன். கட்சி வேலை. எம்.எல்.ஏ. அனுப்பினாரு. வேணா என்னோட வாங்க. எம்.எல்.ஏவையே சொல்ல சொல்றேன்.’

அசுவாரசியமாகச் சூள் கொட்டினார் அவர்.

‘இதுதாங்க உண்மை. நம்பறதும் நம்பாததும் உங்க இஸ்டம். ஆனா ஒண்ணு. அரசியல்ல பிரச்னைங்க வரும்னு தெரிஞ்சவன் தான் நான். இந்தமாதிரி ஒண்ண எதிர்பாக்கலிங்க. இன்னொண்ணும் சொல்லுறேன். எவனோ சொன்னான்னு கேட்டுக்கிட்டு சட்னு ஒரு செகண்டுல எம்மேல உங்களுக்கு சந்தேகம் வந்திரிச்சி. தீக்குளிச்சாங்க நிரூபிக்க முடியும்? பேசுனா, அரசியல்வாதி பேச சொல்லித்தரணுமான்னுவிங்க. பேசாம திரும்பிப் போனா திமிரப்பாருன்னுவிங்க. நொந்துபோன மனச, அனுமாரு போட்டோமாதிரி பொளந்துகாட்டத் தெரியலிங்க எனக்கு. நான் வரேன்..’

கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு வெளியே வந்தான். அப்போதும் சாந்தி நின்ற இடத்திலேயே நின்றாள். ஒருவார்த்தை அவளிடம் கேட்கலாம் என்று நினைத்தான். வேண்டாம் என்றும் உடனே தோன்றியது. என்ன இது, என்ன இது என்று திரும்பத்திரும்ப மனத்துக்குள் ஒரு பறவையின் சிறகு அடித்துக்கொண்டே இருந்தது. வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் மாறிமாறித் தோற்றமளித்தது. சாந்திக்குமா புரிந்திருக்காது? அவள் பேசியிருக்க மாட்டாளா? புரியவில்லை. குழப்பமாக இருந்தது. வெளியேறியவனை அவர்கள் திரும்ப அழைக்கவில்லை என்பதும் உறுத்தியது. வீட்டுக்குப் போனால் அம்மா கேட்பாள். அப்பா கேட்பார். தம்பி கேட்பான். என்ன நடந்தது? எதைச் சொல்லமுடியும்? சொல்லத்தான் முடியுமா? இந்தக் கல்யாணம் நடக்காது. அதுதானா? அவ்வளவுதானா? முடியுமா தன்னால்? ஏன் இப்படி ஆகிப்போனது? சிங்கார வேலு அண்ணனா இதெல்லாம் செய்தது? அவரைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்? அப்படி என்ன விரோதம் வந்துவிட்டது? எம்.எல்.ஏ. கூப்பிட்டாரென்று போனதற்காகவா? கடவுளே. இன்னும் என்னென்ன இடங்களில் எத்தனை எத்தனை தோண்டிவைத்திருக்கிறாரோ? ஆத்திரமாக வந்தது. அடக்கிக்கொண்டான்.

வீட்டுக்குப் போவதைக் காட்டிலும் நேரே எம்.எல்.ஏவிடம் போகலாம் என்று தோன்றியது. அவருக்கு ஏதாவது தோன்றலாம். ஏதாவது உபாயம் சொல்லலாம். அல்லது பிரச்னைக்கு ஒரு தீர்வு. அங்கே பேசியதுபோல எம்.எல்.ஏவே சாந்தி வீட்டுக்கு வந்து விளக்கினால் ஒருவேளை புரியலாம். பெற்றவர்களுக்கு வேறு எதுவும் முக்கியமாக இருக்காது. பெண்ணின் வாழ்க்கை. அதற்குமேல் என்ன?

பசித்தது. எரிச்சலாக இருந்தது. எதுவும் சாப்பிடத் தோன்றாமல் ஒரு பாக்கெட் தண்ணீர் வாங்கிக் கடித்துத் துப்பிக் குடித்து, முகம் கழுவினான். பைக்கை உதைத்து நேரே வேளச்சேரி போனான். எம்.எல்.ஏ. வீட்டு வாசலில் புதிதாக இரண்டு கார்கள் நின்றுகொண்டிருந்தன. யாரோ வந்திருக்கிறார்கள். இந்நேரம் தான் உள்ளே போகமுடியுமா என்று சந்தேகமாக இருந்தது. காவலாளியிடம் சொல்லிவிட்டுக் காத்திருந்தான்.

பத்து நிமிடத்தில் வரச்சொல்லி அனுப்பினார். அதே மேல் மாடி. அதே அலங்கார அறை. எம்.எல்.ஏ. இருந்தார். பாளையங்கோட்டைக்காரர் வந்திருந்தார். முத்துராமன் சற்றும் எதிர்பாராவிதத்தில் சிங்காரவேலுவும் அங்கே இருந்தார். கையில் மதுக்கோப்பையோடு. முகத்தில் புன்னகையோடு. அவனைப் பார்த்ததும், ‘வாய்யா, ஜேம்சு!’ என்றார் அட்டகாசமாகச் சிரித்தபடி.

25


அத்தியாயம் இருபத்தி ஐந்து


வண்டியில் காற்று இறங்கியிருந்தது. ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த வண்டி. பஞ்சர் ஆகாமல் வெறுமனே காற்று மட்டும் இறங்குவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? டியூப் பலவீனமடைந்திருக்கலாம். யாராவது வேலை மெனக்கெட்டு காற்றைப் பிடுங்கிவிட்டிருக்கலாம். இயல்பாகவே காற்றழுத்தம் குறைந்திருக்கலாம். கவனிக்கத் தவறியிருக்கலாம். எதுவானாலும் கொஞ்சதூரம் தள்ளிக்கொண்டு நடந்துதான் ஆகவேண்டும். எனவே, நடந்தான்.

குழப்பமாக இருந்தது. கோபமும் துக்கமுமாகப் பொங்கிக்கொண்டு வந்தது. பச்சக் என்று பரோட்டா மாவைக் கல்லில் வீசி அடித்தமாதிரி முகத்தில் ஓர் அவமானப் படலம் படிந்து இம்சித்தது. திரும்பத்திரும்ப அழுத்தித் துடைத்துக்கொண்டான். ம்ஹும். உரிந்து வருகிற மாதிரி இல்லை. தோலே உரிந்துவிட்டால் கூடத் தேவையில்லை. அடையாளம் மறைத்துக் கொஞ்சகாலம் சுற்றிக்கொண்டிருக்கலாம். வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது. காரணமிருந்தாலும் இல்லாது போனாலும்.

‘தபாரு முத்துராமா. உனுக்கு வயசு கம்மி. அனுபவம் கம்மி. எள ரத்தம் பாரு.. சீக்கிரம் கொதிச்சிரும். இதெல்லாம் பொதுவாழ்க்கைக்கு சரிப்படாதுய்யா. எரும மாடு தெரியுமா எருமமாடு? அதுந்தோலு மாதிரி இருக்கணும். மானம் பொத்துக்கிட்டு ஊத்தினாலும் தென்னாடுடைய சிவனே போற்றின்னு சொல்லிக்கினே அடிப்பிரதட்சிணம் பண்ணத் தெரியணும். இப்ப என்னா ஆயிருச்சின்னு இந்த குதி குதிக்கிற?’ என்று கேட்டார் எம்.எல்.ஏ. தங்கவேலு.

உண்மையில் ஒன்றும் ஆகவில்லை என்றுதான் அவனுக்கும் தோன்றியது. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமே தற்செயலாக ஒரே மேடையில் சந்திக்க நேர்ந்தால் அன்பை வாரி இறைத்துக் கட்டிப்பிடித்துக் கொஞ்சம் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. கேவலம் ஒரு மாவட்டச் செயலாளரும் வட்டச்செயலாளரும் ஒன்று சேர்வதா பெரிய விஷயம்?

முதல் பார்வையில் பகீரென்றுதான் இருந்தது. எம்.எல்.ஏவின் கழுத்தை நெரித்துக் கொல்லும் ஆங்காரம் வந்தது. ஆனால் சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டான். சிங்காரம் அட்டகாசமாகச் சிரித்தபடி வாய்யா என்று வரவேற்றபோது, போன ஜென்மத்தில் கூட ஒன்றுமே நடவாதது போலத்தான் கைகூப்பி வணங்கி அருகே சென்று தரையில் அமர்ந்தான்.

‘என்னாய்யா பாக்குற? திருடனுக்குத் தேள் கொட்னமாதிரி இருக்க?’ என்றார் சிங்காரம். எம்.எல்.ஏ. சிரித்தார்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லிங்களேண்ணே. நீங்கதான் எப்பவும் என்னிய தப்பாவே புரிஞ்சிக்கறிங்க.’ என்று சொன்னான்.

‘தபாருய்யா தங்கம்! நான் தப்பா புரிஞ்சிக்கறனாம். என்னா புள்ளய்யா இது!’ என்று ஆச்சர்யப்படுவது போல் பாவனை செய்தார். தங்கவேலு சிரித்தார். ‘சரக்கு அடிக்கிறியாய்யா?’ என்று கேட்டார். சிநேக பாவம் மேலோங்கித் தழைக்கும் காலம் போலிருக்கிறது.

‘சேச்சே. அதெல்லாம் வேணாம்ணே.’

‘சரி, என்னா விசயம் சொல்லு.’

‘ஒண்ணும் இல்லண்ணே. கெளம்பிப் போனேன். சட்னு திரும்பவும் உங்கள பாக்கணும்போல தோணிச்சி. அதான் ஓடியாந்துட்டேன். இங்க வந்ததுல சிங்காரண்ணனையும் பாத்துட்டேன். மனசுக்கு நிறைவாயிருச்சிண்ணே. அண்ணன் என்னிய ரொம்ப தப்பா நெனச்சிக்கிட்டிருக்காரு. அவரு ஓட்டல நாந்தான் கொளுத்திட்டேன்னு ஒரு கோவம். நீங்கதாண்ணே எடுத்து சொல்லணும்.’

‘யாரு சிங்காரமா? யோவ் என்னாய்யா இது? நம்ம முத்துவ தெரியாது ஒனக்கு? பீடி பத்தவெக்கக்கூட குச்சி கிழிக்கத் தெரியாதுய்யா அவனுக்கு’ என்றார். சிங்காரம் இதற்கும் அட்டகாசமாகச் சிரித்தார். முத்துராமனுக்கு நரகமாக இருந்தது. எது இவர்களை இத்தனை தூரம் இணைத்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். புரியவில்லை. அருகில் இருப்பது வேதனை தருவதாக இருந்தது. ஓடிவிடலாம் என்று தோன்றியது. கண்காணாமல். முடிந்தால் சென்னையை விட்டே.

‘என்னப்பா நீ சின்னபுள்ளையா இருக்கே. ஏண்டா பத்தவெச்சன்னு நாலு பேரு எதிர்த்தாப்புல நான் கேட்டன்னா, அதுக்கே நீ எனுக்கு தனியா ஒரு டிரீட் வெக்கவேணாமா? அரசியல்ல இதெல்லாம் ஒரு ஸ்டேடஸ் கண்ணு. நீ எதிர்பாக்காத நேரத்துல உன் தலைமேல வந்து குந்திக்கற கிரீடம் மாதிரி. இந்த நிமிசம் எத்தினி பேர் மனசுல உன்னியப்பத்தி பெர்சா ஒரு இமேஜு டெவலப் ஆயிருக்கும் தெரியுமா? எனுக்கு ஓட்டல் எரிஞ்சது ஒரு ஸ்டேடசுன்னா, அதுக்கு நீ காரணம்னு நான் சொன்னது உனுக்கு ஒரு ஸ்டேடசு. புரியுதா?’

புரியவில்லை. சத்தியமாகப் புரியவில்லை அவனுக்கு. இதே சிங்காரம்தானே எம்.எல்.ஏவைப் பற்றி மேலிடத்தில் பேசி பதவிக்கே வேட்டு வைக்கவிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தவர்? இதே எம்.எல்.ஏ.தானே இந்த சிங்காரத்தை அரசியலைவிட்டே அப்புறப்படுத்த இருபத்தி நாலு மணி நேரமும் கனவுகண்டுகொண்டிருந்தவர்? என்ன ஆயிற்று?

‘தலைவரு சொல்லிட்டாரு தங்கம். இன்னமே நம்ம ஏரியாவுக்குள்ள ஒனக்கும் எனக்கும் ஒரு பிரச்னையும் வராது. நீ நெரந்தர எம்.எல்.ஏ. நான் நெரந்தர வாரியத் தலைவர். த.. இவன் இருக்கானே, சொன்னா சந்தோசப்படுவானே? தெரியுமா முத்து? இன்னமே ஐயாதான் கொசு ஒழிப்பு வாரியத் தலைவரு. தலைவரு பெருந்தன்மையா தூக்கிக் குடுத்திருக்காரு பதவி! மொதவேலை உன் குப்பத்த சரி பண்றதுதான்!’

தங்கவேலு புன்னகை செய்தார். ‘அதுக்கு என்னண்ணே? நீங்க பதவில இல்லாதப்பவே செய்ய நெனச்சதுதானே? எவனோ களவாணிப்பசங்க குறுக்கால பூந்து கெடுக்கப்பாத்தானுக. இன்னமே உங்க தேருக்கு ப்ரேக்கே கிடையாதுண்ணே. சும்மா அடிச்சி ஆடுங்க.’

மீண்டும் சிரித்தார்கள். முத்துராமனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. என்னவாவது செய்து இருவரையும் சாகடித்தால் மனம் அமைதியுறும்போலிருந்தது. ஆனால் கொல்வது எப்படி?

‘தங்கம் ஒரு விசயம் தெரியுமா ஒனக்கு? இன்னிக்கி காலைலதான் தோணிச்சி. ஒரு தத்துவ தரிசனம் மாதிரின்னு வெச்சிக்கயேன். தலைவர பாத்துட்டு வந்ததும் ஸ்டிரைக் ஆச்சு. ஒலகத்துலயே நெரந்தரமான பதவி எது தெரியுமா? கொசு ஒழிப்பு வாரியத் தலைவரு பதவிதான். ஆளு வேணா மாறலாம். இந்த டிப்பார்ட்மெண்ட இங்க ஒண்ணும் பண்ணமுடியாது.’

‘பின்ன? கொசுவ ஒழிச்சிர முடியுமாண்ணே? கல் தோன்றி மண் தோன்றாக்காலத்துலேருந்து இருக்குதில்ல? அட, ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னால திருவள்ளுவரே மலேரியா வந்துல்லா செத்திருக்காரு!’

‘இன்னாய்யா புதுசா சொல்ற?’

‘அடிச்சிவிடவேண்டியதுதானே? தபாருங்கண்ணே. மெட் ராசுல ஒரு குப்பத்த விடாதிங்க. டெய்லி மருந்து அடிக்கவைங்க. விழிப்புணர்வு கூட்டம் போடுங்க. புள்ளைங்களுக்கு ஹெல்த் செக்கப் முகாம் தொறக்க ஏற்பாடு பண்ணுங்க. நீங்க செஞ்சாத்தாண்ணே உண்டு. எம்.எல்.ஏன்னு பேரு. என்னா செய்ய முடியுது எங்களால? தெனம் சட்டசபைக்கு போயிட்டு வர்றதுக்குள்ளாரவே தாவு தீர்ந்துடுது. எப்பப்பாரு அடிதடி, ரகளை, சண்டை. நேத்திக்கி ஐயங்குறிச்சிப்பாளையம் சம்முகத்தோட அண்ட்ராயர உருவிட்டம்ல? தாளி சொம்மா ரவுசு உட்டுக்கினே இருந்தான். யாரையும் பேச வுடறதில்ல. பங்காளி கண்ண காட்னாரு. சர்தாம்போன்னு புட்ச்சி இழுத்துட்டேன்.’

‘பெரிய விசயம்யா. இன்னும் ஒரு மாசத்துக்கு பேப்பர்காரன் உன்னிய கவனிச்சிக்கினே இருப்பான். ஃப்ரீ பப்ளிசிடி. பேட்டி குடுக்கசொல்லமட்டும் சாக்கிரதையா இருந்துக்க. தமிழ்ப் பண்பாட்ட அதுல கரீட்டா மெயிண்டெயின் பண்ணீரணும். எப்பிடியும் நாளைக்கு மினிஸ்டர் ஆயிட்டன்னு வையி. இதெல்லாம் மறந்துரும். இல்லென்னா உன் இமேஜுக்கு உரமாயிரும்.’

சிரித்தார்கள். முத்துராமனுக்குக் கொஞ்சம் புரிவது போலிருந்தது. தங்கவேலு அமைச்சராவது உறுதியாகியிருக்கிறது. உள்ளூரில் பிரச்னையில்லாதிருக்க, சிங்காரத்துக்கு வாரியத் தலைமைப் பதவி. இருவரையும் ராசியாகப் போகச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டிருக்க வேண்டும். தன் குப்பம்? அதன் நலப்பணிகள்? பாளையங்கோட்டை மாநாடு? தலைவர் குடும்பத்துக்குச் சேவை செய்யும் திருப்பணிகள்?’

‘அ, முத்துராமா ஒண்ணு சொல்ல நெனச்சேன். மறந்தே போனேம்பாரு. கட்சி மாநாடு பாளையங்கோட்டைல நடக்குதுய்யா. உன்னிய மாதிரி புதுப்பசங்கள்ளாம் செலவு பாக்காம வரணும். நாலு மாநாடு பாத்தாத்தான் ஒரு இது வரும். என்னண்ணே நாஞ்சொல்றது?’

‘பின்ன?’ என்றார் சிங்காரம்.

‘அண்ணே.. நான்..’

‘அட நீ ஒருத்தன்யா. சும்மா போயிப்பாரு. மூணுவேளையும் மாநாட்டுப் பந்தல்லயே சாப்பாடு குடுத்துருவாங்க. கட்சி கார்டு வெச்சிருக்கல்ல. அது போதும். அங்க நம்ம சினேகிதங்க இருக்காங்க. நானும் சொல்லிவிடறேன். போயிட்டு வாயேன்? இங்க சொம்மா துணி தச்சிக்கினு நையிநையின்னு லோல் பட்டுக்கினு. ஒரு ரெண்டு நாள் ஜாலியா போயிட்டு வா.’

அவனுக்குப் புரிந்தது. வேறொன்றும் செய்வதற்கில்லை இனிமேல். தலைவர் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு தனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லாதபடிக்கு வேறென்னவோ நடந்திருக்கவேண்டும். பதவி உறுதியாகாமல் இந்த உறவு சாத்தியமில்லை. வேகமாக ஓடி மூச்சிறைத்து நின்று திரும்பிப் பார்த்தபோது டிரெடில் மெஷினில் ஓடியது போலிருந்தது. எப்படியானாலும் ஓடியதற்கு ஒரு பலன் இருந்துதானே ஆகவேண்டும்? மெஷினில் ஓடினால் உடம்பு இளைக்கும்.

‘ஏண்ணே, இப்பிடி செஞ்சா என்ன? நம்ம முத்துராமனுக்கு பத்திருவது தையல் மிஷின் வாங்கிக்குடுத்து ஒரு இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சிரலாமே நீங்க? சைடுல ஒரு பிசினஸ் ஆச்சு. பொறுப்பா பாத்துக்குவான். இவனும் நாலு காசு சம்பாரிச்ச மாதிரியும் இருக்கும்?’

‘செய்யலாமே? இவங்கப்பாரு அந்தக்காலத்துல கட்சிக்கு என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியும்ல? பெரியாளு தங்கம்! தியாகத்துல ஊறின பரம்பரை!’

முத்துராமன் எழுந்துவிட்டான். சாந்தி வீட்டில் தன் திருநெல்வேலிப் பயணத்துக்குப் புதிய அர்த்தம் சொல்லி திருமணத்தையே கெடுத்த சிங்காரம் குறித்துப் புகார் சொல்லத்தான் அவன் வந்திருந்தான். ஒருவேளை அந்தத் திருப்பணியை எம்.எல்.ஏவேகூடச் செய்திருக்கலாம் என்று இப்போது தோன்றியது. காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது. தனக்குத்தான் உலகம் புரியவேண்டும்.

எழும்பூருக்குத்தான் திரும்பவும் போனான். சாந்தியின் குப்பத்தை நெருங்கிய தருணத்தில் வண்டி அதிர, இறங்கிப் பார்த்தபோதுதான் காற்று தீர்ந்திருந்தது. தள்ளிக்கொண்டு போனபோது சாந்தி எதிர்ப்பட்டாள். நிம்மதியாக இருந்தது. கண்டிப்பாகப் பேசிவிட வேண்டும். நிறுத்தியபோது தடையேதும் சொல்லாமல் உடன் வந்தாள்.

என்னென்னவோ பேச நினைத்து எல்லாம் முட்டிமோதிச் சிதறிக்கொண்டிருந்தன. திரும்பவும் தோற்றுவிடுவோமோ என்று தோன்றியது. அழுகை வந்தது.

26


அத்தியாயம் இருபத்தி ஆறு


குளித்த ஈரத்தில் அடித்த விபூதி, பொழுதுபோல் மெல்லப் புலர்ந்தது. அம்மா அதிசயமாகப் பார்த்தாள். வாய்விட்டு முருகா என்று சொல்லிக்கொண்டு அவன் கண்மூடி விபூதி பூசியதில்லை. அவசரத்தில் ஒரு கோடு இழுத்துக்கொண்டே காலில் செருப்பை மாட்டிக்கொள்ளும் வேகம் அங்கே தினசரிக் காட்சி. உழைப்பே கடவுள். வியர்வையே விபூதி. ஒரு பதவி கிடைத்துவிட்ட பிறகு பளிச்சென்று வெள்ளைச் சட்டை அணிந்து விபூதி துலங்கத் தன் மகன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் காட்சியொன்றை முத்துராமனின் அம்மா அவ்வப்போது கனவு போல் தரிசிப்பது வழக்கம். சுகமாகத்தான் இருக்கும்.

எழுந்த பெருமூச்சு மகனுக்குத் தெரிந்துவிடக்கூடாதென்று கவனமாக வேறு புறம் பார்த்தபடி குடிசையைவிட்டு வெளியே போனாள்.

ஸ்டூலின்மீது ஆறிக்கொண்டிருந்த காப்பியை வாயில் ஊற்றிக்கொண்டபடிக்கு முத்துராமன் வெளியே வந்தான்.

‘நான் போயிட்டு வந்துடறம்மா. நோட்டீஸ் கட்டு வந்துருச்சி. உள்ளார வெச்சிருக்கேன். தம்பிய பேர் எளுதிவெச்சிர சொல்லு. லிஸ்டு தனியா பக்கத்துல வெச்சிருக்கேன்’

‘ரொம்ப தொலுவு போறியான்ன?’

‘பக்கம்தான்’ என்று ஒரு மாறுதலுக்குத் தன் பைக்கைத் தவிர்த்துவிட்டு, தம்பியின் சைக்கிளில் புறப்பட்டான்.

பொதுவாக பைக்கில் போகும்போதெல்லாம் ஒரு எம்.எல்.ஏ.வாக ஏனோ உணரத்தோன்றுகிறது. காற்றுக்குப் பறக்கும் வேட்டி. பின்பக்கம் பிய்ந்துபாயத் துடிக்கிற தலைமுடி. வேகம் கொடுக்கிற கற்பனை சுகம். விற்றுவிட்டுப் பணத்தில் வீட்டுக்கு நல்ல தரை போடலாம். எஞ்சிய பணத்தில் இன்னொரு சைக்கிள் வாங்கலாம். சைக்கிள் நல்லது. சுற்றுச்சூழலைக் கெடுக்காதது. தேக ஆரோக்கியத்துக்கு உகந்தது. தவிரவும் மேடுகளில் அழுத்தி மிதித்து முன்னேறும்போதெல்லாம் இருக்கிற வாழ்க்கையை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கக்கூடியது.

‘இன்னாடா இது பைக்க எடுத்துக்கிட்டு போவல?’

ஒரு கணம் தாமதித்தான். ‘போரடிக்குதும்மா. இன்னமே தம்பி ஓட்டட்டும். எனக்கு இது போதும்’

சட்டென்று வந்துவிட்ட சொல்லை நினைத்து சிரித்துக்கொண்டான். அவனுக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? கொஞ்சநாள் ஓட்டட்டும். அப்புறம் விற்றுவிட்டு வீட்டுக்குத் தரை போடலாம்.

ஏறி மிதித்ததில் சைக்கிள் அவனையறியாமல் எழும்பூருக்குத்தான் போனது. மூச்சிறைத்தது. முத்துக்களாக வியர்வை. நெற்றியில் அடித்த விபூதியை சட்டைக் கையால் துடைக்கவேண்டியதானது. எம்.எல்.ஏவின் வெள்ளைக் கைக்குட்டையை அவன் அடிக்கடி ரசிப்பதுண்டு. எடுத்து ஒற்றிக்கொள்ளும் லாகவம் அந்தஸ்துடன் இலவச இணைப்பாக வந்திருக்கும் என்று நினைத்துக்கொள்வான். சந்தேகமில்லை. அது ஒரு திறமைதான். கைக்குட்டையில் லாகவமாகத் துடைத்துக்கொள்வதல்ல. அரசியலில் நீந்திக் கரை சேர்வது. ஒரு பதவியில் தன்னை அச்சாக இணைத்துக்கொள்வது. ஓடுகிற வேகத்தில் சுழலத் தெரிவது.

வருத்தம் ஒன்றுமில்லை. ஆனால் ஓர் ஏமாற்றம் இருந்தது. அருவருப்புணர்வு கலந்த ஏமாற்றம். மிகச் சாதாரணமான ஒரு கடைநிலைத் தொண்டனைத் தூக்கிப் போட்டுப் பந்தாடிவிட்ட அரசியல்வாதிகள். தன் விஷயத்தில் இத்தனை மெனக்கெடுவது என்றால் அரசியல் சதுரங்கத்தின் சக்கரவர்த்திகள் மோதிக்கொள்ளும்போது எத்தனை திறமையும் தேர்ச்சியும் அவசியம்?

அவனுக்கு வியப்பாக இருந்ததெல்லாம் ஒன்றுதான். சிங்காரவேலு கொளுத்திப்போட்ட சந்தேகப் பொறி பற்றிக்கொண்டு தீயானபோதுகூட சாந்தி வீட்டில் அவனால் வெறுமனே ஊதி அணைத்துவிட முடிந்தது. ‘என் தரப்பு இதுதாங்க. ஒரு கல்யாணத்த நிறுத்த பெருசா மெனக்கெட வேணாம். நீங்க சொல்லுற ஒரு காரணம் போதும். இன்னொரு பொண்ண பாக்கத்தான் பாளையங்கோட்டை போனதா அவுங்க சொல்லியிருக்காங்க. நல்லவேளை அங்க ஒரு சின்னவூடு வெச்சிக்கினு இருக்கேன்னு சொல்லல. அந்தவரைக்கும் சந்தோசம்தாங்க. பத்திரிகை அடிக்க குடுத்திருக்குது. இப்பமே போய் நிறுத்திர சொல்லிடுறேன். தீவிர அரசியலும் கல்யாணமும் ஒரே டயத்துல நம்ம லைஃபுக்குள்ளாற நுழைஞ்சிது. ரெண்டும் ஒரே டயத்துல இப்பம் போயிட்டுவாடா வெண்ணைங்குதுங்க. சர்தான்னு போயிருவேன். ஒண்ணும் கஸ்டம் இல்லிங்க. என்னா ஒண்ணு, தோத்துப்போயி திரும்பினாலும் கெட்ட பேரோட திரும்பிடக்கூடாதுன்னு பாக்குறேன். கண்டிப்பா வர வெள்ளிக்கிழம திரும்ப பாளையங்கோட்டைக்குப் போவத்தான் போறேன். முன்னமே சொன்னமாதிரி கட்சி மாநாடுங்க. தந்தி பேப்பர்ல பாத்திருப்பிங்களே? அதான். மாநாட்டு மேடைல இருவத்தஞ்சி எலவச திருமணம் செஞ்சி வெக்கறாங்க. கவலப்படாதிங்க. அதுல கூட நான் கிடையாது. நம்ம ராசி எப்பவும் கீழ குந்திக்கினு விசிலு வுடறதுதான். வரட்டுங்களா?’

பல நிமிடங்கள் பேசாதிருந்துவிட்டு, சாந்தியின் அப்பா எழுந்துவந்து கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘மன்னிச்சிருங்க மாப்ள. நான் பொண்ண பெத்தவன். அரசியலெல்லாம் எங்களூக்குத் தெரியாது. வீடு தேடிவந்து உங்காளுங்களே நாலு பேர் இந்தமாதிரின்னு சொல்லிட்டுப் போனா வயிறு பகீருங்குது.’

‘அட நீங்க வேறங்க. வடபளனி பக்கம் போனா ஒன் அவருக்கு இத்தினி ரூவான்னு வாடகைக்கு கைக்குழந்தையே கிடைக்கும். வாங்கிட்டு வந்து நாம்பெத்ததுன்னுகூட சொல்லியிருப்பானுக. ஐயா, நம்பிக்கை வேணுங்க. நான் ஒலக உத்தமன்னு சொல்லிக்கல. அதே சமயம் கண்டிப்பா கேவலமானவன் இல்லிங்க. நீங்க நம்பறதுக்காக இத சொல்லல. எனக்கே ஒருக்கா சொல்லிக்க வேண்டியிருக்குதுங்க.’ என்று சாந்தியைப் பார்த்தான். புன்னகையற்ற அதே சாந்தி. அதே பார்வை. தன் விருப்பம் என்று ஒன்று இவளுக்கு இருக்கிறதா என்று அப்போதும் அவன் நினைத்தான். எப்போதும் அது இருந்ததில்லை என்றே தோன்றியது. பாதகமில்லை. அதுவும் ஒரு கொடுப்பினையாகத்தான் இருக்கவேண்டும்.

‘மறந்துடுங்க மாப்ள. நாங்க பேசுனது தப்பு. உங்கள நான் நம்புறேன். கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்’ என்று சொன்னார் சாந்தியின் அப்பா.

‘நல்லதுங்க. ஆனா நான் மாநாட்டுக்குப் போவுறது உறுதிங்க. அதுல எந்த மாறுதலும் இல்ல. சொன்னபடி போயிட்டு வந்ததும் கல்யாணம்.’ என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

பைக்கின் ஸ்டாண்டைத் தள்ளிய கணத்தில் உள்ளுக்குள்ளிருந்து ‘ஒரு நிமிசம்’ என்று குரல் கேட்டது. சாந்திதான். முத்துராமன் சற்று ஆச்சர்யப்பட்டான். நின்று திரும்பினான். அவள் வெளியே வந்தாள்.

‘நீங்க எம்.எல்.ஏ. ஆயிட்டிங்கன்னா இந்தமாதிரியெல்லாம் பிரச்னை வராதில்ல?’

ரகசியமாகச் சிரிக்கிறாளா என்ன? இந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியெல்லாம் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதற்கு மிகப்பெரிய நெஞ்சழுத்தம் வேண்டும். தருணம் எதுவானாலும் நிறுத்தி ரசித்து வரிசையில் அனுப்பப் பெரிய தேர்ச்சி வேண்டும். உணர்ச்சியற்றவள் என்று நினைத்தது தவறோ?

முத்துராமன் சிரித்தான். ‘இப்பவும் சொல்லுறேன் சாந்தி. எம்.எல்.ஏ. ஆவுறது பெரிய விசயமில்ல. அரசியல்வாதி ஆவுறதுதான் கஸ்டம். அது முடியுமான்னுதான் தெரியல.’

போய்விட்டான். எப்படியும் புரிந்திருக்காது என்று தோன்றியது. அவசியமும் இல்லை.

0

ஆல்பர்ட் தியேட்டர் வாசலில் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுக் காத்திருந்தான். சாந்தியை முதல் முதலில் தனியே சந்தித்த அதே இடம். அங்குதான் வரச்சொல்லி இருந்தான். நாலு வார்த்தை பேசுவதற்குள் அவளது குடிசை அப்போது பற்றிக்கொண்டுவிட்டது. அர்த்தமில்லாமல் பதற்றப்பட்டு, உடன் ஓடி, கருகி அணைந்த குப்பத்தின் வீதியில் ஒரு மணி நேரம் நின்று, ஆறுதல் சொல்லி…

பொதுவில் குடிசைகளும் குடிசைவாசிகளும் அதிர்ச்சிகளில் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஒப்பாரி முடிந்ததும் பைசல். அவலம் வாழ்க்கையாகிவிட்டபிறகு அதிர்ச்சி மதிப்புகள் ஒரு பொருட்டில்லை. சூட்சுமங்களும் சூழ்ச்சிகளும் அரசியல்வாதிகளுக்குத்தான். விளைவுகள் மட்டுமே அடித்தட்டை பாதிக்கின்றன. பாதிப்பு என்பது பெரிய சொல். தொடுகின்றன. அவ்வளவுதான். துடைத்துப் போட்டுவிட்டு எழுந்துபோகத் தெரிந்தவனுக்குக் காக்கை எச்சம் ஒரு பொருட்டில்லை.

சாந்தி வந்தபோது கையில் மாலை தினசரி ஒன்றை வைத்திருந்ததை அவன் கண்டான். புன்னகை செய்தான்.

‘உங்க கட்சி பேப்பருதான். உங்கள கட்டிக்கப்போறனில்ல? சரி, பேப்பராச்சும் படிக்கலாம்னு வாங்கினேன். சந்தோசமா?’

மீண்டும் சிரித்தான். அதைப் பிடுங்கித் தூரப் போட்டான்.

‘ஐய, இன்னா இது?’

‘வேணாம் சாந்தி. பேப்பர் படிச்சி ஒண்ணும் தெரிஞ்சிக்க முடியாது. பேப்பர்ல அரசியல் எதும் வராது. அறிக்கைங்கதான் வரும்.’

‘உங்க தலைவரோட சித்தப்பா புள்ள எம்.பி. ஆயிட்டாராமே?’

அவனுக்குச் சங்கடமாக இருந்தது. தனக்காக அரசியலில் நாலு வார்த்தை பேச விரும்புகிற பெண். இதுவும் வலிந்து வரவழைத்துக்கொண்டதாகத்தான் இருக்கும். ஐயோ பாவம் என்று தோன்றியது. வேறு ஏதாவது பேசலாம் என்று நினைத்தான். சேலை எடுக்க எப்ப போறிங்க என்று கேட்டான்.

‘அதெல்லாம் அம்மா பாத்துக்கும். நீங்க எதுக்கு வரசொன்னிங்க? அத சொல்லுங்க மொதல்ல.’

‘சும்மாதான். நாளைக்கு பாளையங்கோட்டை போறனில்ல? வர மூணு நாளாவும். பாத்துட்டுப் போலாம்னிட்டு..’

‘அதான் செவ்வாக்கெழம வண்டில காத்தில்லாம வந்திங்களே.’

‘இப்பம் பாக்கணும்னு தோணிச்சி. காத்தடிச்ச சைக்கிள்ள வந்திருக்கேன். கூட வரியா?’

‘சைக்கிள்ளயா?’ என்று சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்தாள். விரும்பினாள் என்று தெரிந்தது. பின்னால் ஏறப்போனவளைத் தடுத்து முன்பக்கம் பாரில் ஏறிக்கொள்ளச் சொன்னான். வெட்கப்பட்டாள். ஏறிக்கொண்டாள். ‘எங்க போறோம்?’

‘சும்மா ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வூட்டாண்ட கொண்டு விட்டுடுறேன். என்னமோ தோணிச்சி. உன்னிய பாக்கணும்னிட்டு.’

‘மாநாட்டு வேலைங்க இல்ல?’

முத்துராமன் வாய்விட்டுச் சிரித்தான். ‘தொண்டனுக்கு வேலை விசிலு வுடறதுதான் சாந்தி. அது வேல கூட இல்ல. ஒரு சந்தோசம். ரசிகர் மன்ற ஆளுங்க மாதிரி. செலருக்குப் புரியும். செலருக்குக் கேவலமா தோணும். எப்பிடி நெனச்சாலும் தப்பில்ல. செலபேருக்கு பீடி சிகரெட்டு. செலபேருக்குத் தண்ணி. எனக்கும் எங்கப்பாருக்கும் அரசியல்.’

‘ஏமாத்திட்டாங்களாங்க?’ சட்டென்று கேட்டாள். முத்துராமன் அமைதியாக மிதித்தான். ஏமாற்றம்தான். சந்தேகமில்லை. அந்த வேதனையைக் காட்டிலும் சாந்தி வீட்டைக் குறிவைத்து ஒரு சூழ்ச்சி வலை பின்னப்பட்டது மிகவும் வலித்தது. ஆனால் எளியவர்களால் சுலபமாக வலைக்குள்ளிருந்து மீண்டுவிட முடிகிறது. பற்றவைக்கப்பட்ட குப்பத்தை நீரூற்றி அணைத்துவிட்டு, எரித்தவர்கள் கொடுக்கும் காசைக் கையெடுத்துக் கும்பிட்டு வாங்கிக்கொண்டு வேறு ஓலை வேய்வது மாதிரி. எல்லாம் இயல்பு. எல்லாமே கடந்துபோகிறவை.

‘ரொம்ப கஸ்டமா இருக்குதுங்களா?’

‘இல்ல சாந்தி. தெளிஞ்சிட்டேன்.’

‘என்னான்னு?’

‘கண்டிப்பா நா சொன்னமாதிரி ஒருநாள் எம்.எல்.ஏ.ஆவேன். ஊருக்கு நல்லது செய்வேன். எப்பன்னு கேக்காத. தெரியாது. உம்புருசன் சாவறவரைக்கும் அரசியல்லதான் இருப்பான். அது மாறாது. ஆனா இவனுக பண்ற அரசியல கண்டிப்பா நாஞ்செய்யமாட்டேன்.’

‘அன்னிக்கி நீங்க முழுவெவரம் சொன்னப்ப பாதி புரிஞ்சிது. மிச்சத்த நைட்டு தூங்கசொல்ல யோசிச்சிப் புரிஞ்சிக்கிட்டேன். இன்னாத்துக்கு இப்பிடி ஒரு அப்பாவிய போட்டு பந்தாடணும்? மாறவேமாட்டாங்களா?’

‘கஸ்டம் சாந்தி. தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க குணம் கொசு மாதிரி. அப்பப்ப மருந்தடிச்சி வெக்கலாம். ஆனா கம்ப்ளீட்டா ஒழிச்சிரமுடியாது. கொசுவால மிஞ்சிப்போனா என்னா பண்ணமுடியும்? கடிக்கும். மலேரியா வரும். மருந்து சாப்டு சரி பண்ணிக்கிடவேண்டியதுதான். உங்கப்பாவாண்ட பேசி உன்னிய தள்ளிக்கினு வந்தேன் பாரு. அந்தமாதிரி.’

சாந்தி சிரித்தாள்.

‘ஒண்ணு பண்ணுறிங்களா? எனக்கும் அரசியல் கத்துக்குடுத்துருங்க. உங்களுக்கு சுளுவா இருக்கும்ல?’

முத்துராமன் சட்டென்று பிரேக்கை அழுத்தினான். வண்டி குலுங்கி நின்றது. சாந்தி திரும்பினாள்.

‘நெசமாத்தான் சொல்லுறியா?’

‘ஆமாங்க. யோசிச்சிப் பாத்தேன். உங்களுக்குப் பிடிச்சமாதிரி இருந்துடலாம்னு தோணிச்சி. எங்கூட்ல இருக்கறவரைக்கும் எங்கம்மா, அப்பாவுக்குப் புடிச்சமாதிரி இருக்கேன். உங்கூட்டுக்கு வந்தப்பால, உங்களுக்குப் புடிச்சமாதிரி இருக்கறதுல என்ன தப்பு?’

முத்துராமன் புன்னகை செய்தான். அவள் முகவாயில் திடமாகக் கைவைத்துத் திருப்பி, கண்ணை உற்றுப்பார்த்து சொன்னான்: ‘அப்படின்னா நீ அரசியல் கத்துக்கவேணாம். டைலரிங் கத்துத்தரேன். கத்துக்க. ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்வோம்!’

முற்றும்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III