கொலுசு
கவிதைகள்
Backகொலுசு
மு. அறவொளி
Contents
கொலுசு பற்றி ....
ஆசிரியர் பக்கம்
1. வாட்ஸ்—அப் போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்
2. MBBS படிக்க
3. கொலுசு மின்னிதழ் சிறந்த விமர்சகர் போட்டி
4. கவிதை ரசனை - க. அம்சப்ரியா
5. வாட்ஸ்—அப் போட்டியில் தேர்வான கவிதைகள்
6. அமிர்தா முத்துவேலவன். (அம்மு) கவிதைகள்
7. குறுங்கவிதைகள்
8. கவிஜி கவிதைகள்
9. காளிமுத்து கவிதைகள்
10. கார்த்திகா AK கவிதைகள்
11. சுந்தரம் பிள்ளை (சிறுகதை) - அணில் நாச்சிமுத்து
12. சிதையாத சீதைகள் - தப்தி செல்வராஜ், சாத்தூர்
13. என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி ஜே பிரோஸ்கான்-இலங்கை
14. மகளிர் தினம் - செ.கார்த்திகா
15. தண்டவாளங்கள் - கவியழகன்
16. முயற்சி - ராம்க்ருஷ்
17. என் வீட்டு கண்ணாடி - துவாரகா சாமிநாதன்
18. இயற்கை - ச.ஜெய்
19. சிறை - ஜீவமணி
20. ஹே ராம் - கிருஷ்ணமூர்த்தி
21. இந்நேரம் - பாரியன்பன் நாகராஜன்
22. இப்படியாக கவிதை - இரா.சந்தோஷ் குமார்
23. சுகன்யா ஞானசூரி கவிதைகள்
24. வாழ்க்கை - உஷாதேவி
25. பிரட் அண்டு ஜாம் - கவிஞர் க .விக்னேஷ்
26. ஒரு நாளை மிதித்த ரத்த சுவட்டு பாதம் - ஆஸ்ட்ரோசிவம்
27. சாபம் - சீதா
28. நீயின்றி பெய்யும் மழை - சீனுவாசப்பிரபு
29. எஸ்.நாகலிங்கம் - கவிதைகள்
30. அவன் பந்து இனி என்ன செய்யும் (சிறுகதை) - கவிஜி
31. சமூகக் கரையான்கள் (கட்டுரை) - தங்கத்துரையரசி
32. பெண்ணிவள் அதிரை -கவியன்பன் கலாம், அபுதாபி
33. மதமாற்றம் மாற்றாகா - பாவலர் கருமலைத்தமிழாழன்
34. இளைப்பாறலின் சிறகு (கட்டுரை) - கவிஜி
35. நடிப்பு (சிறுகதை) - சி. அருள் ஜோசப் ராஜ்
36. சிந்திக்க வைத்துவிட்டான் (சிறுகதை) - பொன் குலேந்திரன் - கனடா
37. பேச முடியாத குழந்தைகள் (கட்டுரை) - ஹேமலதா
38. நினைவுகள் (சிறுகதை) - நறுமுகை
39. எட்டுக்காலியும் இருகாளியும் (நூல் விமர்சனம்) - கந்தகக் கவி பாண்டு
கொலுசு பற்றி ....
நிறுவனர் – ஆசிரியர்
மு. அறவொளி
9486105615
முதன்மை ஆசிரியர்
க. அம்சப்ரியா
ஆசிரியர் குழு
இரா. பூபாலன்
புன்னகைபூஜெயக்குமார்
இணையதளம்
www.kolusu.in
(இதழ் வெளியீடு : பிரதி மாதம் 10 )
படைப்புகள் அனுப்ப kolusu.in@gmail.com
(கடைசி தேதி : பிரதி மாதம் 25 )
படைப்புகள்பற்றியவிமர்சனங்களைஅனுப்ப
kolusu.fb@gmail.com
(கடைசி தேதி : பிரதி மாதம் 25 )
ஆசிரியர் பக்கம்
கொலுசு மின்னிதழ் தனது எட்டாவது இதழில் மகளிர் தின வாழ்த்துகளைக் கூறி உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது.
இந்த இதழிலிலும் சிறப்பான கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அருமையான படைப்புகளோடு உங்களை சந்திக்க வருகிறாள் கொலுசு.
படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் வாசகர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. வாசகன் இல்லையேல் படைப்பாளி மெல்ல மெல்ல தேய்ந்து, ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுவான்.
படைப்புகளையும், படைப்பாளிகளையும் மனம் திறந்து பாராட்டுங்கள். கொலுசில் பிடித்த படைப்பு பற்றிய உங்களின் மேலான விமர்சனங்களை kolusu.fb@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு ஐந்து வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்புங்கள். சிறந்த விமர்சனங்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.
கொலுசு தனது அடுத்த முயற்சியாக, பொள்ளாச்சி பகுதியில் மக்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த சுமார் 20,000 புத்தகங்கள் கொள்ளளவு கொண்ட ஒரு பொது நூலகம் ஒன்றை , அமைக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.
நூலகம் அமைப்பதற்கான ஆகும் முழு செலவுகளையும் கொலுசு மின்னிதழ் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், புத்தகங்களை தங்களிடம் இருந்து தான் எதிர்பார்க்கிறோம். தற்சமயம் எங்களிடம் 500 புத்தகங்கள் மட்டுமே உள்ளது. எங்களால் மட்டுமே 20,000 என்ற அந்த இலக்கை அடைவது சாத்தியமில்லை என்றும், தங்களின் ஆதரவோடு தான் அதை அடைய இயலும் என்பதை நாங்களறிவோம்.
எனவே, தங்களால் முடிந்த பழைய அல்லது புதிய கதை, கவிதை, கட்டுரை, நாவல், மற்றும் சிறுவர்களுக்கான நூல்கள் இப்படி எதுவாயினும் எங்களுக்கு தந்து உதவுங்கள்.
மு. அறவொளி
நிர்வாகி—ஆசிரியர்
1
வாட்ஸ்—அப் போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்
பூவா தலையா
பூ கேட்கிறாள்
விதவைஆனந்தன் மதுரை
என் கண்கள் பார்க்கும்
கவிதைக்குக்
கைதட்டுகின்றன
உன் இமைகள்திருஞானம்
மர இலைகளுக்கு
கொலுசினை
கட்டிச் சென்றது
காற்றுராஜதுரை. நா
2
MBBS படிக்க
3
கொலுசு மின்னிதழ் சிறந்த விமர்சகர் போட்டி
கொலுசு மின்னிதழ் படைப்பாளிகளை மட்டுமல்ல , வாசகர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் வாட்ஸ்-அப் கவிதைகளுக்கு வாசகர்களால் பாராட்டப்பட்டு அதிக வாக்குகள் பெறும் முதல் மூன்று வாட்ஸ்-அப் கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறோம்
கொலுசு மின்னிதழ் வாசகர்களை கௌரவிக்கும் விதமாக சிறந்த விமர்சகர் எனும் போட்டியை அறிவிக்கிறோம். இந்த பிப்ரவரி மாத (10-02-2016) இதழிலிருந்து இந்த போட்டி தொடங்குகிறது.
போட்டி:
கொலுசு மின்னிதழில் இடம் பெறும் கவிதைகள், கதைகள், கட்டுரை போன்றவற்றில் சிறந்த படைப்பை விமரிசித்து 5 வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்புங்கள்.
சிறந்த விமரிசனத்துக்கு கொலுசு மின்னிதழ் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.
விமர்சனங்களை அனுப்ப :
kolusu.fb@gmail.com (மின்னஞ்சல்)
விமர்சனங்கள் கிடைக்கப் பெற கடைசி தேதி :
ஒவ்வொரு மாதமும் 25ஆம் தேதி
குறிப்பு:
ஒருவர் எத்தனை விமர்சனங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
அனுப்பும் போது தங்கள் பெயர், அலைபேசி எண், புகைப்படம் (கட்டாயம் இல்லை) இவற்றையும் அனுப்பவும்
4
கவிதை ரசனை - க. அம்சப்ரியா
அறிதல்
நாட்களாயிற்றுகவிதை
எதைத்தான்எழுதுவது
இந்தக்காதலைவிட்டுவிட்டு
நான்இத்தனைகாதலாககனிந்திருக்கையில்
காதலின்வார்த்தைகள்தான்
என்னைசுடுகின்றன
என்னைத் தனிமைப்படுத்துகின்றன
காதல்இவ்விதமாக
துயரத்தைத்தந்தவண்ணம்இருக்கிறது
எத்தனைமுயன்றும்
காதலிலிருந்துவிடுபடஇயலாமல்இருக்கிறேன்
வாழ்நாள்முழுமைக்கானஒளி
அவனிடமிருந்தேபெற்றுக்கொண்டிருக்கிறபோதிலும்
அவனைநெருங்கவியலாபின்னொருநாளில்
அவன்சொல்லக்கூடும்
காதலின்கதையை
அப்பொழுதுநான்வெறுமனே
நகர்ந்துகொண்டிருப்பேன்அங்கிருந்து
– சக்திஜோதி
(தீஉறங்கும்காடு)
சமகால வாழ்வியல் தழும்புகளை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டு எதிர்காலச் சமுதாயத்திடம் கையளித்து விடுவது தான் சிறந்த படைப்பின் அடையாளம். காதல் கவிதைகள் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றது.
காதலால் ஒரு இனம் எதிர்கொள்ளும் பெரும் துயரங்களை வலியோடு எடுத்துச் சொல்கிற கவிதை
சிலம்பரசனின்காதல்
காதல் தோல்வியால்
மதுவுடன்
விஷமருந்தி மாண்டான்
எறும்பூர் சிலம்பரசன்
அவன் தொடங்கிய
முகநூல் தளத்தில்
தினமும் பூக்கிறதொரு
அயல்தேச காதல்பூ
********************
எறும்பூர்
பனஞ்சாலைவாய்க்காலில்
இன்னும்
காதலுடன்மிதக்கிறது
சிலம்பரசனின்
பிளாஸ்டிக்
மதுக்கோப்பை
-ஆழி. வீரமணி
(ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை)
ஒவ்வொரு நெடுஞ்சாலையிலும் நின்று போகிற கிராமத்துப் பேருந்துகள் வெறுமனே ஆட்களை சுமந்து செல்வதில்லை. ஓர் உண்மையான அன்பை, பிரியத்தை, நேசத்தை என்று ஒரு பட்டியலே போடலாம்.
பேருந்துக்குள் இசையை வழிகிற ஒரு காதல் சங்கீதத்தில் இன்றைய காதல்காரர்களும், நேற்றைய காதல்காரர்களும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள். பாடல் வரிகள் அவர்களை இணைத்து அணைத்துக் கொள்கிறது. காதலுக்கும் இலக்கியத்திற்கான தொடர்பு அதீத மைய இழையில் தான் நெருக்கமாகி விடுகிறது.
ஒரு மதியப் பொழுது, எழுதி வைத்திருந்த கவிதைகளை படியெடுத்துக் கொண்டிருந்தேன். துணைக்கு இளையராஜாவின் இசையில் கசிகிற காதல் பாடல்கள். அருகில் இருந்த தேநீர் கடைக்கு வந்த பெண்மணி ஒருவர் சற்றே நின்று நிதானித்தார். எப்போதாவது பார்க்கிற போது நலம் விசாரித்துக் கொள்கிற அளவில் மரியாதை கலந்த உறவுப் பெண்மணி.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எழுதிக் கொண்டிருக்கிற என்னருகில் வந்து அமர்ந்த அவர், விசும்பலாய் கசிந்தார். தனது பள்ளிக்காலம் பேருந்தில் காதலாகிக் கசிந்தது. உயிரின் உயிராய் பயணித்தது. வீட்டிற்குப் பயந்து, காதலை தொலைத்தது என்று என் விசாரிப்புகள் இல்லாமலேயே சொல்லத் துவங்கியிருந்தார். தனது ப்ளஸ் ஒன் படிக்கிற மகனின், பெயர்க் காரணத்தையும் விளக்க ஆரம்பித்திருந்தார். அவரின் இதயம் கவர்ந்த நாயகனின் பெயரையே சூட்டியிருந்தார் . திருமணமாகி இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் தன் காதலை இதயத்தின் ஓரம் பதுக்கி வைத்திருக்கிறார். அந்தப் பாடலைக் கேட்டதும் அவர் மனம் உடைந்து விட்டது.
ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு நினைவு மனதின் ஓரத்தில் நிலைத்து விடுகிறது. கவிதையின் வரிகளில் காதலும் நிலத்து விடுகிறது. காதலின் வரலாற்றை ஒரு கவிதை ஈர்த்தது.
உடன்போக்கு
இப்போதெல்லாம்
காவல்நிலையத்தில்
தஞ்சமடைகிறார்கள்
காதல் வேண்டியவர்கள்
“ஒருகுழந்தைபிறந்தால்
பெற்றோர் சேர்த்துவிடுவார்கள்”
என நம்பிக்கையூட்டுகிரார்கள்
எதிர்ப்புகளைமீறி
காதலைச்சேர்த்துவைப்பவர்கள்
மாலையும்கழுத்துமாக
வந்துநிற்கும்மகளைப்பார்த்து
மாலைமாலையாய்கண்ணீர்விட்டபடி
ஏற்றுக்கொள்கிறாள்ஒருதாய்
‘எங்களைச்சேர்த்து
வைக்கவில்லை என்றால்
காலம்பூராவும்இப்படியே
இருந்துவிடுவோம் ’ என
கண்ணீர்வடிப்பவர்களுக்கு
கூடிவிடுகிறதுகாதல்
பெற்றோர்சம்மதத்துடன்
எனினும்
எங்கேனும்ஓரிடத்தில்
இன்றும்பயணிக்கிறது
தண்டவாளத்தில்
காதல் ஜோடியைக் கொன்றபடி
ஒருகௌரவ ரயில்
– ஆதலையூர்சூரியகுமார்
கவிதைகள் புத்தக அலமாரிகளில் வீற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை கவிஞனின் காதலையும் சொல்வதில்லை. வாசகனின் காதலையும் சொல்வதில்லை. அதீதக் கற்பனையின் தீராத ஆசைகளை எழுத்துக்களாக வடித்திருக்கும் சொற்குவியல்களாகவே குவிந்திருக்கின்றன.
காதலைச் சொல்கிற கவிதைகள் காதலால் கனிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லும் காதலின் வருடலை, காதலின் வலியைச் சுட்டுவதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு கவிதை வாசிக்க நேர்ந்தது.
ஹ்ம்ம்…..
வராதகாதலனோடு
வாழ்பவளின்மூச்சு
வெளியேறி
உள்ளேறி
இழுத்துக்கொண்டிருக்கிறது
எங்கோஇருக்கும்
அவனை
-குமரகுருஅன்பு
(மணல்மீதுவாழும்கடல் )
காதலில் எழுகிற சிறு சிறு சங்கடங்கள், சலிப்புகள், யாவும் சில சமயங்களில் ரசனைக்குரியதாகவும், பல சமயங்களில் அதுவே பிரிவின் துவக்கப் புள்ளியாகவும் மாறிவிடுவதுண்டு.
லதா மகன் கவிதையொன்று ஈர்ப்பின் சுவை. எப்போதும் ஈரம் காயாத மழைச் சுவடு.
கோப்பைமுழுதும்மழை
உனக்கு நிறைய கேள்விகள்இருந்தன
நிறையசமாளிப்புகள்
நிறைய குற்றச்சாட்டுகள்
நிறையக்கோபங்கள்
நீ கை அசைத்துப் போகும்போது
என்னிடம் ஒருகாதல் இருந்தது
கொஞ்சம் தேநீர் இருந்தது
நிறைய மழை இருந்தது
– லதாமகன்
காதலும் கவிதையும் உச்சக்குளிரின் ககதப்பு, ஒன்றின் கரம் கோர்த்து, இன்னொன்று சுகப்படும் நெருக்கக்கனிவு. இரண்டும் உயிர்வரங்கள். காதலையும் கவிதையையும் எப்படித்தான் மறைக்க இயலும்
வெளிப்பாடு
காதலை
எவ்வளவுதான்
மூடிமூடிமறைத்தாலும்
குழந்தையின்ஆடைபோல்
அவிழ்ந்துவிடுகிறது
கவிதையொன்று !
-அசோக்பழனியப்பன்
காதலையும் கவிதையையும் நேசிப்போம் ! அது வாழ்வின் கரை சேர்க்கும்.
(தொடரும்)
5
வாட்ஸ்—அப் போட்டியில் தேர்வான கவிதைகள்
என் கண்கள்
பார்க்கும் கவிதைக்குக்
கைதட்டுகின்றன
உன் இமைகள்
திருஞானம்
* * *
வயிறில்லாத விவசாயி
தொப்பையுடன்
சோளக்கொல்லை பொம்மை
காஜா மைதீன்
* * *
காட்டு வேலை செய்து
களைத்துப் போனவள்
கொஞ்சம்
ஓய்வெடுக்கிறாள்.
வீட்டு வேலை செய்து
மகிவரன்.கோ
* * *
அம்மா அம்மா என்று
ஆசையாக
அழைக்கிறான்
தெருவில்
பிச்சைக்காரன்
ஜமால் முஹம்மது
* * *
அவள் சாலையை
கடக்கும் பொழுதுகளில்
அவளைக் கடக்கின்றது
சில நூறு பார்வைகள்
மணி பிரபு
* * *
மனிதனுக்காக
காத்திருக்கின்றன
மண்புழுக்கள்
சுமதி
* * *
அலாரம் கேட்டு
விழிக்கிறது
சேவல்
நிஷாந்தினி
* * *
என்னை மறந்து
உன்னைத் தேடினேன்
உன்னை மறக்க
பாண்டிய துரை
* * *
வியர்வை சிந்தி உழைக்கிறேன்
வெற்றியாய் நீ என்னை
என்றேனும் சந்திப்பாய் என்று
அருள் செல்வி
* * *
கருணை பொங்க ஒரு பார்வை
உருகும் உயிராய் ஒரு வார்த்தை
காதல் வழிய ஒரு தீண்டல்
நிகழும் – மறுநொடிமரணமெனில்
சாதலும் எனக்கு சம்மதமே
ரகுராமன்
* * *
குடித்துத்
தூக்கிப்போட்ட
மதுக்கோப்பைகளில்
வீசுகிறது
மரணத்தின் முதல் நெடி
சீனுவாச பிரபு
* * *
அடிக்கடி எட்டிப் பார்க்கிறது
தொலைந்து போன
என் கவிதைகள்
உன்கன்னக்குழிகளிலிருந்து
கோவை பிரபு
* * *
முதல் தோழி
தாய்
இரண்டாம் தாய்
தோழி
தரணி வேந்தன்
* * *
விரைத்துப்போய் நின்றன
இரவுநேர
கடும்பனியில்
மின்கம்பங்கள்
துரைவாணன்
* * *
காற்று குமிழிகளை
ஊதி விளையாடும்
குழந்தைகளை போல
உயிர் குமிழிகளை
உருவாக்கி ஊதி அலைய வைத்து
உடைத்தும் விளையாடுகிறாரா
– இறைவன்!
அன்பு தேவன்
* * *
திகில் பட போஸ்டர்
பயப்படாது நெருங்குகிறது
ஒரு கழுதை
சிம்மா
* * *
பொதி சுமந்த கழுதை
ஆறுதலடைந்தது
புத்தக மூட்டையுடன்
மழலைகள்
பெரியார் முரசு
* * *
பிடித்தவரின்
ஒருதுளி கண்ணீரில்
மரணமடைகிறது!
கொதித்தெழுந்த
கோவமும் ஆவேசமும்
சரண்யா
* * *
அந்தப் புல்லின்
கடைசி பனித்துளியும்
உருகிக் கொண்டிருக்கிறது
ஆனந்த் தமிழ்
* * *
பள்ளிநேரம் வேகமெடுக்கிறது
மாநகர பேருந்து
நிறுத்தத்தில் பிள்ளைகள்
அரவிந்த்
* * *
மர இலைகளுக்கு
கொலுசினை
கட்டி சென்றது காற்று
ராஜா
* * *
காலமெல்லாம் கைக்கூப்பி
மூலதனம் செய்து
கடவுளைக் காணும் முயற்சியில் தோற்றதே
இறுதி வரம்
ஜகதலப் பிரதாபன்
* * *
பேருந்து வரும்
பாதையைப் பார்த்தே
கடக்குமடி சில மணி நேரம்
கல்லூரி நினைவுகள்
பாஸ்கரன்
* * *
சிறகடிக்கத்
துணிந்த பின்
அலகேந்துவதில்லை
பறவைகள்
ஞான வெட்டியான்
* * *
என்ன செய்து விடும்
என்பவரையும்
ஏதாவது செய்து விட்டுத்தான்
போகிறது காதல்
கார்த்திகா சூலக்கல்
* * *
பூவா தலையா
பூ கேட்கிறாள்
விதவை
ஆனந்தன் மதுரை
* * *
சுடு நீர் கொட்டி
அணைந்தது
நெருப்பு
மணிரத்னம்
* * *
வாழ வழி இல்லை!
வழி தெரியவில்லை !
வழித்து விட்டான் மொட்டையாக!
வழிகேட்டது பேனும் ஈரும்.!
அப்துல் மாலிக்
* * *
6
அமிர்தா முத்துவேலவன். (அம்மு) கவிதைகள்
மன(குண) நலம்
பாவித்த ஞெகிழி
குவளையை மிகச்சரியாய்
குப்பைத்தொட்டியில் கொண்டு
போட்டாள் பைத்தியக்காரியொருத்தி
நின்ற இடத்திலேயே
குப்பையைப் போட்ட
நல்லவர்களில்
நானுமொருத்தி
* * *
துணை ஒன்று வேண்டும்
வாலிபத்தில்
ஊர் சுற்றமட்டுமல்ல
வயதானபின்பு
வீடு வீடாய்
சுற்றாமல்
இருப்பதற்கும்…
* * *
7
குறுங்கவிதைகள்
முரண்பாடு
*****************
வெட்டாதீர்கள் – மழை
தருவேன் என்கிறது
மரம்…!
வெட்டுங்கள் – மழை
நீரைசேமிப்பேன் என்கிறது
குளம்…!
ஆனந்தன், மதுரை
* * *
அவள் தந்த புத்தகத்தில்
தேடியும் காணவில்லை
காதல் கடிதம்
தூக்கியெறிந்தேன்
வெறுமையில்
காற்றில் படபடத்து
பறந்து காட்டிய
பக்கங்களில்
வட்டமிட்டிருந்தது
பக்கம் எண் – 143
தஞ்சை. சாயிராம்.
* * *
பசி
பக்கத்திற்கு ஆயிரம் கைகளாய்
இரு ஆயிரம் கைகளை துழாவி நீட்டி
விரல்கள் அனைத்தும் விரித்து
அனைத்தையும் உள் இழுத்துக்கொள்ளும்
அசுர வேகத்தோடு
துளி மணித்துளி தாண்டிய நொடி
துரிதமாய் செயல்படும்
பசி தாங்கா இப் பாழும் வயிறை
சபித்தால்தான் என்ன
அகராதி
* * *
பங்காளிச் சண்டை
விதைக்கப்படாத வயல்
சமாதானம் பேசும் கொக்குகள்
நிவேதா
* * *
மனக்குரங்கு
உன் நினைவு விழுதுகளைப்
பிடித்துக்கொண்டு
நாளெல்லாம்
ஆடுகிறது
மனக்குரங்கு.
இரா. திருஞானம்
* * *
உன் நகம்
பிரதியெடுத்து
மூன்றாம்பிறையென்றும்,
உன் முகம்
பிரதியெடுத்து
பௌர்ணமியென்றும்
கொஞ்சம் கூட
கூச்சப்படாமல்
அழகுப்பட்டம்
எடுத்துக்கொள்கிறது
இந்த அல்பநிலா.
இரா. திருஞானம்
* * *
மூங்கில் துளைகளில்
பதுங்கியிருக்கிறது
இசை
மன்னை சதிரா
* * *
8
கவிஜி கவிதைகள்
உடல் வாசிகளின் நாட்கள்
முகப் பூச்சுக்குள்
சிரித்துக் கொள்கிறார்கள்..
புது புது ஆடைகளுக்குள்
நிறைந்து கொள்கிறார்கள்…
அலைபேசிக்குள்
அரட்டை அடிக்கிறார்கள்…
உடல் மொழி நடையில்
நிரம்பி வழிகிறார்கள்
ரசனை செய்பவர்களாக
நிலவைப் பேசுகிறார்கள்…
தங்கள் உலகத்தை இரவாகவே
படைத்துக் கொள்கிறார்கள்…
சலித்துக் கொண்டாலும்
முகம் சிரிக்கும் உழைப்பாளிகளாகிறார்கள்…
இப்படியே
மாதம் முழுக்க உழைத்துக்
களைத்த அவர்கள்,
கொடியில் துணிகளோடு
சேர்ந்து காயும் உடலை
வேறு வழியேயில்லாமல்
அந்த மூன்று
நாட்களாக்குகிறார்கள்…
* * *
உதிர்கையில்
முதிர்கிறது
இலை
* * *
அள்ளி எடுத்த
கைகளில்
ஆற்றின் முகம்
* * *
நான் ஞாபகமற்றவன்
மீண்டும் உன்னையே
காதலிக்கிறேன்
* * *
பெரும்பாலும் ஜன்னலோரம்
அமர்ந்திருப்பவளையே
காதலிக்கத் தூண்டுகிறது
வழிப் பயணங்கள்
* * *
9
காளிமுத்து கவிதைகள்
அதனைப் பற்றி
விளக்க ஏதுமில்லை
சற்று நினைவூட்டல் போதுமானது
நம்மை
அவ்வறையின் கதவுகள்
மறைக்கப்பட்டிருந்ததையும்
நம் முனகல்களையறிந்த
அச்சுவர்களையும்
கோபித்தபடி
இரவினை விரட்டிய
மின் விளக்கையும்
சாமாளித்துவிட்ட
எனக்கு
எதிர்படாமல்
உங்களைக் கடத்தலில்
சிக்கலாகிறது.
* * *
பழியும் பலனும்
இதுவொன்றும்
அவ்வளவு கோரமானதல்ல
எல்லோரின் இயல்பென்றே
தேற்றுகிறீர்கள்.
அப்பழிக்கானதை
அனுபவித்தாக வேண்டுமென்கின்றனர்
சிலர்
என்னிடமிருக்கும்
ஒன்றிற்காகவே
இச்சமயம் வரையிலும்
ஒட்டியிருக்கிறீர்கள்
எதுவாயினும் என்னோடுதான்
என்கிறீர்கள்
உங்களுடைய பலம்
எனக்கானதல்ல
அவர்களின் குற்றச்சாட்டுகளே
மிகுதியானவைகள்.
இறுதியாக அவன் யார் பக்கம்?
* * *
அது நிகழும்வரை
அவர்களுக்கும் எனக்குமொரு
வித்தியாசம் இருந்தது.
அவர்களுக்கும் எனக்குமாயிருந்தவொன்று
இப்பொழுது
நம்மிடம் இல்லை
சடலத்தின் முன்வினைகளுக்காய்
அலைமோதிக் கொண்டிருத்தலை
உணர்வீர்கள்.
அவர்கள் இடம்பெற்ற
கோர சம்பவங்களின் பட்டியலில்
தயவு செய்து
என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள்
* * *
10
கார்த்திகா AK கவிதைகள்
சப்தங்கள் உடைந்தால்
இருள் தின்னும்
மாலை மௌனித்ததொரு
கணப் பொழுதில்
பச்சைக் காய்கறிகளும்
நிறம் மாறாப் பூக்களும்
விலைபேசி விற்றுத்
தீர்ந்து கொண்டிருக்க
தெருவில் நாறும் வேசியவன்
தனங்களின் இடைவெளியை
உற்று நோக்கிய
அருவருப்பில்
உருண்ட
சதைக் கோளங்களைப்
பிய்த்தெடுத்து ரத்தம்
சொட்டச் சொட்ட
வழித்து அவன் முகத்தில்
விட்டெறிந்த போது
பிண வாடையை
முகர்ந்து மூச்சிலேற்றி
வெறி தீர்த்து
செத்துக் கொண்டிருந்தது
வன்புணர் மிருகம்!
அப்போதும்,
அதே மாலை
கவ்விய இருட்டோடு
சப்தம் தொலைத்து
மறைந்து கொண்டிருந்தது….
சதை பிறழ்ந்த
வெற்றுத் தனங்களை
உற்று நோக்குகின்றன
மீண்டும் அதே
வெறிப் பார்வைகள்..
* * *
நான் நிலா கொஞ்சம் நட்சத்திரங்கள்
இருள் வானின் நீள் பக்கங்களில்
சலனங்களற்றுத் திறக்கிறேன்
சுவடுகள் அற்ற என்
பாதங்களை தீண்டும் முன்பனி
கரங்களை சேர்க்கும்
குளிர்க் காதலன்
உயிர் இழையோடும்
மெல்லிய மூச்சுக் காற்று
நட்சத்திரங்கள் புடை சூழ
புவி வலம் வரும் நிலவில்
என் பெயர் எழுதி இருக்கிறது!
* * *
11
சுந்தரம் பிள்ளை (சிறுகதை) - அணில் நாச்சிமுத்து
நீங்கள் நிறைய மனிதர்களைப் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை, நீங்கள் உட்பட. ஆனால் அடிநாதமாக சில இயல்புகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். எந்த விதிக்கும் விலக்கிருப்பது போல் நம் கதையின் நாயகர் திருவாளர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தனி கேரக்டர். பிரம்மா படைப்பது உண்மை என்றால் அவருக்கும் கூட இனியொரு சுந்தரம் பிள்ளை படைப்பது மிகக் கடினம்.
பிள்ளை அவர்களுக்கு சாதி நம்பிக்கை அறவே இல்லை. அதற்காக புரட்சிவாதி பட்டியலில் அவரை தவறாக சேர்த்து விடாதீர்கள். அவரைப் பொறுத்தவரை மதமும் சாதியும் என்பது “பொருளீட்டல் மற்றும் கட்டிக் காத்தல்” என்பதற்கு ஒரு கருவி அவ்வளவே.
பிள்ளைவாள் அவர்கள் நெட்டையுமல்ல குட்டைமல்ல; சிவப்புமல்ல கருப்புமல்ல; குண்டுமல்ல ஒல்லியுமல்ல; எப்படியோ ஒரு கம்பீரத் தோற்றம் தொற்றிக் கொண்டது. கார்களின் பின்புறம் இருப்பது போல் நெற்றியில் சிகப்பு, வெள்ளை, மஞ்சள் குறிகள். திருநீரைக் கைகளிலும் அள்ளிப் பூசிக்கொள்வார். கட்டை விரலைத் தவிர்த்து எட்டு விரல்களிலும் வண்ண வண்ண கற்களைக் கொண்ட மோதிரங்கள். கையில் ஒரு காப்பு; கழுத்தில் தங்க குப்பாஸ் போட்ட ருத்திராட்சம்; தங்க நிற பிரேமில் கண்ணாடி. இவை தான் பிள்ளை அவர்களின் அடையாளங்கள்.
பிள்ளையவர்களின் ஆறு வாரிசுகளில் மூன்று ஆண்; மூன்று பெண். அரசின் பல கொள்கைகளில் அவருக்கு உடன்பாடில்லாதது போல் குடும்பக் கட்டுப்பாட்டிலும் உடன்பாடில்லை. மூத்தவன் வயது சுமார் முப்பது எனில் மற்றவர்கள் வயதை நீங்களே கணக்கிடலாம்.
குடும்பத்தில் எல்லாத் துறைகளுக்கும் அவர் தான் அமைச்சர். முதலமைச்சர் பதவியையும் அவரே வகித்தார். மனைவி உட்பட யாரையும் நியமிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.
குடும்பத்தில் யாருக்காவது ஒரு ரூபாய் முதல் ஓராயிரம் வரை தேவைப்பட்டாலும் குறைந்தது பத்து நாட்கள் முன்னரே அவரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பெரும்பாலும் விண்ணப்பத்தை அவரிடம் சேர்ப்பது அவரது துணைவியாரே. குறுக்கு விசாரணை, கேள்விகள் எல்லாம் நடைபெற்று அதற்கான பதில்கள் அவருக்கு திருப்தியாய் இருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்கப்படும். ஏற்றாலும் கேட்டத் தொகையே கிடைத்ததாய் இதுவரை சரித்திரமே இல்லை.
பிள்ளையவர்களை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். அவர் ஒரு சுபி – யைப் போல. ஆனால் அப்படி ஒரு சுபி தத்துவம் இருப்பது அவருக்குத் தெரியாமலேயே “அந்தக் கணத்தில்” வாழும் சுபியைப் போன்றவர். அதனால் அவர் எதிர்காலம் மற்றும் சாவையும் நோவையும் சிந்தித்தாரில்லை.
எப்போதாவது சற்று சோர்வு எட்டிப் பார்த்தால் திருமதி சுந்தரம் பிள்ளையவர்கள் மருத்துவரிடம் போக பரிந்துரைப்பார். அதை நம் கதாநாயகர் பொருட்படுத்தவே மாட்டார். காரணம் வெளிப்படை. எந்த மருத்துவர் “சும்மா” பார்ப்பார். அரசு மருத்துவமனை செல்வதிலும் அவருக்கு உடன்பாடில்லை. அங்கேயும் மருத்துவர் ஏதாவது டெஸ்ட் செய்யச் சொல்லி, அரசு மருத்துவமனையில் அந்த உபகரணம் இல்லாமல் வெளியே போக நேர்ந்தால், யார் பணம் அழுவது ?
இப்படிப்பட்ட பிள்ளையவர்கள் ஒரு அதிகாலைப் பொழுதில் கண் விழித்தப் போது என்னவோ ஒரு வேற்றுமையை உடலில் உணர்ந்தார். திருமதியை அழைக்க எண்ணி “ஏய்” என்று குரல் எழுப்ப முயன்றார். முயற்சி முற்றுப் பெறவில்லை. பேச்சு எழவில்லை. படுக்கையிலிருந்தும் எழ முடியவில்லை. திருவாளர் சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு கண்ணும் மூளையும் நீங்கலாக அனைத்து உறுப்புகளும் செயலிழந்தன.
ஐயோ நம் பிள்ளைகள் விழித்தெழுந்து நம் நிலை பார்த்து வருந்துவரே என எண்ணினார். ஆனால் நடந்தது வேறு … மனைவியைத் தவிர மற்ற எவரும் பெரிதாய் பாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை.
பிள்ளையவர்கள் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் கை விரித்தனர். இப்படியே வீட்டில் வைத்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றனர்.
வீட்டுக்குச் சென்றவுடன் பெட்டகச் சாவி மூத்தவன் கைக்கு மாறியது பற்றியோ இல்லை பிள்ளைகள் இலவச முதியோர் இல்லம் இருக்கும் முகவரி ஆராய்ந்தது பற்றியோ விழியோரம் நீர் கசிய மோட்டு வலையையே வெறித்து பார்த்து அசையாமல் படுத்துக்கொண்டிருக்கும் சுந்தரத்துக்கோ, தலை மாட்டில் நின்று கொண்டிருக்கும் அவர் தம் துனைவியாருக்கோ தெரியாது.
12
சிதையாத சீதைகள் - தப்தி செல்வராஜ், சாத்தூர்
இக்கால பெண்கள் யாரும்
சீதை இல்லை என்று
புலம்பிடும் நவீன ராமனே…
கவர்ச்சி நடிகையை சீதையாய்
கண்டு கழித்த உனக்கு
எப்படித் தெரியும்…..
தன் சுயத்தையும்
சொந்த குடும்பத்தையும் காக்க
படி தாண்டி பணி செய்திட…
தினம் நூறு ராவணன்களை
பார்த்து…பேசி…கடந்து…
பத்திரமாய்த் தன்னைக் காத்து
வீடு வந்து சேர்ந்திடும்
இக்கால நவீன சீதைகளை….!!!
அக்காலமோ இக்காலமோ
சீதையாய் இருந்தாலும்
சோதித்துப் பார்க்கும்
ராமன்களே இங்கு உள்ளனர்….!!!
சோதித்தாலும் சிதையாமல்
நெருப்பாய் நிரூபித்திடும்
சீதைகளும் இங்கு தான் உள்ளனர்..!!!
13
என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி ஜே பிரோஸ்கான்-இலங்கை
நீங்கள் என் சொற்களை வெறுக்கும் போது
நான் பல கவிதைகளை விசுவாசிக்க துவங்குகிறேன்.
சொற்களை வெறுத்து,நீங்கள் கவிதைகளை ஆராதிக்கும் போது
என் சிந்தனை வெளி ஆழமாக தெறிக்கின்றன.
அக்கணம் முதல்
என் முதுகுப்புறம் நின்று
ஒரு மரங்கொத்திப்பறவையாய் என்னை கொத்தத் தொடங்குகீறிர்கள்.
அப்போது சொட்டும் குருதித் துளிகளைக் கண்டு
காட்டேறிகள் போல உற்சாகம் பூண்டு
துரோகத்தை தின்று வளர்ந்த உதடுகளை
ஒரு மரங்கொத்தி போலே சுமந்து
தெருவில் நடக்குறீர்கள்
கறுத்த நாய்கள் சில
நாக்கைத் தொங்க விட்டு
பின் தொடர்கிறது உங்களை.
14
மகளிர் தினம் - செ.கார்த்திகா
பேருந்து நெரிசலில்
சில சகிக்க முடியாத
இடிகளையும்
சுரங்க நடைபாதை
இருளில் எல்லை
மீறிய தொடுதல்களையும்
பணிமனையில்
வரம்பு மீறிய
பாலியல் வன்முறையையும்
மறைத்து கொண்டு
எதற்கு தான்
கொண்டாடுகிறோம்
மகளிர் தினத்தை
15
தண்டவாளங்கள் - கவியழகன்
அருகருகே இருந்தாலும்
தொட்டுக் கொள்ளாத
இணை பிரியாக் காதலர்கள்!
இடைவெளி குறையாமல்
பெருகாமல்
நெருக்கப்பண்பாட்டைப்
பாதுகாப்பவை!
இரும்புப் பாதைக்கு
மனிதனிட்ட பெயர்
இருப்புப்பாதை!
நாட்டின் பொருளாதார
உடலுக்கு நரம்புகளாக
நற்பணி செய்கின்றன!
மின்கம்பியைத் தொட்டோடும்
மின்வண்டியோ!
எண்ணெயினால்
ஓடும் வண்டியோ!
இவையே தாங்கும்
தாய்மை வாளங்கள்!
காதல் தோல்வி, கடன் தொல்லை,
கழுத்தை நெரிக்கும்
மானப்பிரச்சினை
இப்படி எவர் வந்தாலும்
தலையை உடலை
தனித் தனியாய்
கழற்றித்தர உதவும்!
16
முயற்சி - ராம்க்ருஷ்
வாழ்வில் வெளிச்சப் புள்ளிகள்
தெரியும்போதெல்லாம்
வானில் கருமேகங்கள் விரைந்து
சூழ்ந்து விடுகின்றன
கருமேகங்கள் சூழ்கின்றனவே
மழையாவது பெய்யட்டும்
மற்றவர் வாழ்வாவது வளம்
பெறட்டும் மகிழ்வோமேயெனில்
சூரைக் காற்றில் சூல்மேகங்கள்
பறந்தோடி மறைகின்றன
இப்போது ஒளி கிட்டுமாயெனில்
இருள்சூழ்ந்து இரவாகிறது
தவறாது வானம் பார்ப்பதையும்
ஒளியைத் தேடுவதையும்
தொடரும் வழக்கத்தைமட்டும்
விட்டுவிடுவதில்லை அவன்.
17
என் வீட்டு கண்ணாடி - துவாரகா சாமிநாதன்
என் வீட்டின் பின்புறம்
108 வாகனத்தின் ஓயாத அழுகை
தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும்
எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும்
வாழ்வின் சித்திரங்களாக வரைந்து
காட்டியது
என் வீட்டு கண்ணாடி
வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின் வரிகளில்
எனது எல்லா பிம்பங்களும் தெளிவாய்த் தெரிகின்றன.
என்னை அப்படியே காட்டுகிறது மறைக்காமல்
என் பிம்பங்களின் பிரதிபலிப்பில்
இயற்கையும் அதனோடு கூடிய வாழ்வும்
என்னுள் பனி படலமாய்
கண்ணாடி விளிம்புகளில் புகையாய்
நானே இயற்கையுமாய்….
என் வீட்டு கண்ணாடியில் தெரிகிறேன்
எந்த அரிதாரமுமில்லாமல்
எதையுமே மறைக்காமல்
எனது உண்மை பிம்பம் உணரத்துகிறது
என் வீட்டு கண்ணாடி…..
18
இயற்கை - ச.ஜெய்
வகுப்பறை
ஓவியப்போட்டி
அதே வானம்
அதே மேகம்
அதே சூரியன்
அதே பறவைகள்
அதே மரம்
மலையிலிருந்து
விழும்
ஆற்றை மட்டும்
விட்டுவிட்டது ,,
இருப்பதாய்
பொய்
சொல்லத் தெரியாத
குழந்தை!
19
சிறை - ஜீவமணி
சிறைப்பட்டிருக்கிறேன் என்று
கதறிக் கூக்குரல் விடுக்கிறேன்,
கதவைத் திறந்துவிடுவாயென்று !
கதவருகில் வந்த நீயோ
நானெப்படி திறப்பேன் கண்ணே !
உள்ளே பூட்டிக்கொண்டிருப்பது
நீயேதானே என்கிறாய் ,
உன் மனம் இசைந்தாலல்லவா ,
உனக்காகப் பூட்டிவைத்துள்ள
என் இதயத்தின் கதவினை
எளிதாய்த் திறக்கமுடியும் !
நீ இசைந்தபிறகு
எளிதாய்த் திறப்பதற்கும் ,
நீ இசையாதபோது
மோதியே தகர்ப்பதற்கும்
வித்தியாசம் உண்டென்பது
நீ அறியாததா ,அன்பே !
20
ஹே ராம் - கிருஷ்ணமூர்த்தி
என் வழியில் கிடக்கும்
சிறு கல்லையும்
நீயாய் ஸ்பரிக்கிறேன்
அகலிகா ஏனிந்த சாபம்
கணவன் முனிவனானதால்
உன் உள்ளெழுந்த சபதம்
இந்திரனை உணர்த்தியதற்கா
மோகம் முகிழ்த்த போது
அவனே முனிவனாய் தெரிந்த
தோற்ற மாயயையா எனில்
புங்கவன் கமண்டலத்தில்
கொண்டு போயிருக்க வேண்டும்
காமத்தை
அசோகவனவாசத்தின் பின்
அக்னிக்குளியல் போயின
போயின யுகங்கள்
அன்றிலும் அதிக
ஜானகிகளும் அகலிகாக்களும்
கல்லாயும் தீயிலும்
ஹே ராம்!
21
இந்நேரம் - பாரியன்பன் நாகராஜன்
இந்நேரம்…
எப்.எம்மில் ஒலித்துக் கொண்டிருக்கும்
நல்லதொரு பாடல்.
சுவாமிக்கு அபிஷேகம் முடிந்து
ஆரத்திமணி எழும் கோவிலில்.
இதமான குளிர்க்காற்று
வீசிக்கொண்டிருக்கும் கடற்கரையில்.
உடல் சோர்வுக்கு
பில்டர் காபி தந்திருப்பாள் மனைவி.
என்னை இறுக்கியணைத்து
கன்னத்தில் முத்தமிட்டிருப்பாள்
என் இரண்டாவது மகள் சஞ்சனா.
நினைவுச் சுவடுகளைப்
புதுப்பித்துப் பேசியிருப்பான்
என் பால்ய நண்பன்.
என் வீட்டு தொட்டிச்செடியில்
மஞ்சள் வண்ணரோஜா
மொட்டவிழ்ந்து மலர்ந்திருக்கும்.
இவை அத்தனையும் இழந்து
ஈட்டுதலின் பொருட்டு
அலுவலக நாற்காலி இருக்கையில்
நசுங்கிக் கிடக்கிறது
என் வாழ்வு.
22
இப்படியாக கவிதை - இரா.சந்தோஷ் குமார்
சூரியன் உதயமாய்
ஒளிக்கைகளை விரித்தப்போது
என் கவிதை சொன்னது
”பகல் குழந்தை பிறக்கிறது “
சூரியன் அந்தியாய்
ஒளிக்ககைகளை மடித்தப்போது
என் கவிதை சொன்னது
”இரவு ஜீவன் பூப்படைகிறது ”
சந்திரன் தன் முழு முகத்தை
காட்சிபடுத்தும் போதெல்லாம்
என் கவிதை சொல்லும்
“நிலவின் வீட்டில்
கல்யாண வைபோகம் .”
சந்திரன் தன்னை அமாவாசையாக
பிரகனப்படுத்தினால்
என் கவிதை சொல்லும்
“வெண்ணிலா மாநிலத்தில்
மின் பற்றாக்குறை ”
என் கவிதை எப்போதும்
என்னையே எனக்கு
வினோதமாக செய்துக்கொடுக்கும்.
ஏனெனில்,
என் கவிதைக்கு
தமிழ் தெரியும்
எனக்கு தமிழ் புரியும்
23
சுகன்யா ஞானசூரி கவிதைகள்
அன்று
நம் முத்தத்தின் ஈரத்தில்
துளிர் விட்ட மரத்தின்
நிழலின் கீழ்தான்
இன்று விளையாடுகின்றனர்
என் குழந்தையும்
உன் குழந்தையும்.
* * *
குளிர்ச்சி யூட்டப்பட்ட காரினுள்
வண்ண உதட்டுச் சாயத்தொடும்
வாசனைத் திரவிய தேகத்தோடும்
பரிமாறிக்கொள்ளும் மேட்டுக்குடிக் காதலர்
கடலின் அலையைத் தொட்டபடி
உப்புச் சுவையோடு பகிரும்
உமிழ்நீர் முத்தச் சுவையின்
மெய்வாழ்வை அறிந்திடப் போவதில்லை
* * *
24
வாழ்க்கை - உஷாதேவி
எத்தனை விசித்திரம்
இந்த வாழ்க்கை!
எல்லாமே அதிசய
ஆரம்பம் -பின்
எல்லாம் வேடிக்கை, விநோதம்!
பார்த்ததும் ,கேட்பதும்
செய்தே
கண்ணாடி பிம்பமானது,
முன்னிளமை.
கனவும் காதலும்
குதூகலமும்
அடக்கிய
பின்னிளமை!
ஒவ்வா நிகழ்வும்
சோதனை
இழப்புகளும்
கூடி முட்டுச் சந்தாய் நெருக்க –
வராதா மீட்பு?
எங்கு மீண்டால்
விடுதலை?
போகுமிடம்
அறியா பீதி . . .
நரகமே யாயினும்
விட்டு வர
மனமில்லை –
வாழ்வை!
எத்தனை விசித்திரம்
இந்த வாழ்க்கை!
25
பிரட் அண்டு ஜாம் - கவிஞர் க .விக்னேஷ்
பசிக்கிறது
வெறும் பிரட்
மட்டும் தான்
இருக்கிறது என்றேன்
பிரட்டில் உன்
உதட்டைத் தடவித்
தருகிறாய்
சாப்பிட ஆரம்பிக்கும் முன்பே
இனிக்கிறது எனக்கு

26
ஒரு நாளை மிதித்த ரத்த சுவட்டு பாதம் - ஆஸ்ட்ரோசிவம்
வெளி விழுந்த பார்வையில் பட்ட ரத்த சுவட்டின் பாதம்
யாருடையதென ஆராயதொடங்கி
ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பென
நகராமல் கிடந்த இந்த நாளில்
உளி பிடித்த சிற்பியின் கவனத்தை திருப்பி
சிலையின் முகம் சிதைந்தது, மறுபடி யோசித்து
வடிவம் கொண்டுவர கால் இடறியது
துளிர் விடும் செடியை நீருற்றி வளர்க்கும்போது
ஆடு மேய்ந்தது போல்
எல்லாவற்றையும் மடக்கி இந்ந ரத்த சுவட்டு பாதம்
உள்ளிழுத்துக்கொண்டிருந்தது
நாய்களுக்கு தெரிந்தால் நக்கி சுத்தம் செய்திருக்கும்
ஈக்கள் மொய்த்து முகாமிட்டிருந்தன
ஈரத்தை வெயில் உறிஞ்சிட சிவப்பு மாறாமல்
பாதம் மட்டும் தனியாக கிடந்தது
ஒதுங்கிப்போன சிலரின் முகம் எதை எதையோ
யோசித்துச்சென்றது.
எனக்கு இன்னும் பிடிபடவில்லை
யாருடைய காலிலோ உடைந்த கண்ணாடி சில்லுகள் குத்தி
கவனிக்காமல் நடந்திருக்கலாம்
எது எப்படியோ
இந்த ரத்த சுவட்டு பாதம் இந்த நாளை போட்டு மிதித்தது மேலும்
சிவப்பாக கிடக்கிறது என்னை தவிப்புக்குள்ளாக்கி..
27
சாபம் - சீதா
ஏழை பெண்ணின் பெருத்த தொங்கிய
மார்பகங்களுக்கு முன் பெரிய கதையுண்டு
மார்புக் கச்சை கட்ட மறுக்கப்பட்ட காலங்களில்
அளவுகேற்ப வரி கட்டியவர்கள் அறியாத ஒன்று
சிகிச்சை செய்து பெருக்க வைத்து காட்சிக்கு பயன்படுத்தும்
பெண்கள் உணராத ஒன்று
இச்சைக்காக மேய்ந்து மனக்கண்ணீல்
துகிலுரிக்கும் ஆடவர்க்கு புரியாத ஒன்று
எடுப்பாக உடுத்தி அங்கங்கள் தெரிய திரையிட்டு
திரியும் மங்கையர்களுக்கு தெரியாத ஒன்று
உணவமுதை வெளி திரை மறைவில் ஊட்டியும் பெரும்
இன்பசுமை சுமக்கும் தாய்மார்கள் அனுபவித்த ஒன்று
மார்பக புற்றுநோய் நோயாளிகள்
அனுபவிக்கும் வலிகளில் ஒன்று
உடலென்பது ஐம்பூதங்களுக்கொப்பான இயற்கையின் விந்தையான கூட்டின் கூடமென்பதை உணர்த்தும் ஒன்று
பொருத்தமான அளவுடைய உள்ளாடையை வாங்க முடியாமல்மலிந்த தரமற்ற பொருத்தமற்ற ஒன்றிரண்டு உள்ளாடை வாங்கி மாற்றி மாற்றி அணிந்து நித்தம் நித்தம் அதை குறித்து சிந்தித்து
விழி நோக்க திராணியற்று அன்னியர் முன் தலைகவிழ்ந்து
படிப்பை இழந்து தன்னம்பிக்கையை வீழ்த்தி
வாழ்க்கைதுணையால் ஊரால் கேலிக்குள்ளாக்கும்
உணர்வுகளில் ஒன்று
தீர்வற்று யாதெருவர் மீதும்
குறை சொல்லும் சூழலில்லா
பார் சூழ்ந்த ஏழைகளுக்கான சாபங்களில் ஒன்று…
28
நீயின்றி பெய்யும் மழை - சீனுவாசப்பிரபு
சாரல் மழையாய் போகிற போக்கில் பெய்து நகர்கிறாய்
காய்ச்சலால் தகிக்கும் நிலம் அரைகுறை பாஷையில் மீண்டும் தகித்துத் துடிக்கிறது
வானவில் வண்ணங்கள் விட்டுப்போன மழைத்துளி இறுக்குகிறது கொஞ்சம் மண்ணின் பிடியை
வெடித்த நிலத்தின் வேறூண்றிய செடியில் மலர்ந்த இருமலர்கள் ஏகாந்தம் கலைக்கின்றன
நீண்ட நாள் மௌனிக்கும் மனங்களின் ஆழத்தில் துடிக்கும் , வார்த்தையின் வேட்கையினை கிளறிவிட்டுப் போய்விட்டது இந்த துளி;
சிறு சாரல் என்ன செய்யும் ?
மனதை புரட்டி எடுக்கும் ..
29
எஸ்.நாகலிங்கம் - கவிதைகள்
இலவசங்கள் அதிகம்
சற்று உற்றுப் பார்
அத்தனையும் போலி
* * *
தலையில் கரகம்
தண்ணீரில் விழுகிறது
மர நிழல்
* * *
குழந்தையின்
ஊஞ்சலில் அசைந்தாடுகிறது
பழைய பொம்மை
* * *
30
அவன் பந்து இனி என்ன செய்யும் (சிறுகதை) - கவிஜி
பிஞ்சுக் கால்களில், இல்லாத பந்தை இலகுவாக அவர்களால்தான் உதைக்க முடியும்…….
கனவுகளை வழியெங்கும் விதைத்து போகும் சின்ன சின்ன விடியல்களை விழிகளாக்கிக் கொண்டிருப்பவர்கள்…..குழந்தைகளின் தேசத்தில்..கிரகங்கள் பலூன்கள்…
குழந்தைகளுடன் இருப்பதே அத்தனை சுவாரஷ்யம் என்றால், குழந்தையாகவே இருப்பது…?
“எத்தனாவது பொறந்தநாளு குட்டி?”- பிஞ்சு விரல்கள் நீட்டிய இனிப்பை, இனிப்போடு பெற்றுக் கொண்ட பெட்டிக் கடை பெரிய தாத்தா, தன் பொக்கை வாய் புன்னகைக்க கேட்டார்……
“அஞ்சு தாத்தா…” என்றபடியே மீண்டும், குதி போட்டு, வீதிக்குள் நட்சத்திரங்கள் உதிர்த்துப் போய்க் கொண்டிருந்தான்…..
“என்ன….. அஞ்சா….? ….. போன வருசமும் இதத்தான்டா சொன்ன…..!” என்று முணங்கி சிரித்த தாத்தா வாய்க்குள் இனிப்பு வாழ்த்துக்களாய் நிறைந்து கொண்டிருந்தது…….
இறந்த காலம், எதிர்காலம் என்பது பற்றி எந்தவிதமான ஞாபக குறியீடுகளற்ற முகம் இன்று, பிறந்த நாளை மட்டுமே கொண்டாடுகிறது…..ஏன் பிறந்தோம்…… எதற்கு பிறந்தோம்….. எப்படி பிறந்தோம்…… என்றெல்லாம் இந்த உலகம் நாளை, அவனை தன் கோரப் பற்களால் பதம் பார்க்க காத்துக் கொண்டிருப்பதை, எந்த விதமான குறியீடுகளையும் கொண்டு அவனுக்கு உரைத்து விட, சிறு முயற்சியைக் கூட வீசுகின்ற காற்று எடுத்து விடவில்லை….அது தானாக வந்து போய்க் கொண்டிருந்தது… அது அப்படித்தானே என்பது போல… வீதியும்.. விதி செய்து கொண்டிருருந்தது……
உடல் நடுங்கிய பார்வையற்ற அந்த தாத்தாவின் கையில் ஒரு இனிப்பு இருக்க, நிற்காமல் அதே குதியாட்டத்துடனும் துள்ளல் உடல் மொழியிலும் குட்டி கடந்து விட்டிருந்தான்….எந்த பக்கம் பார்த்தாரோ, அந்தப் பக்கமே குட்டி போயிருக்க வேண்டும் என்பதாக கைகூப்பி நன்றி தெரிவித்து வாழ்த்திக் கொண்டு நின்றார், பாதாள சாக்கடையில் விழாமல் தப்பித்துக் கொண்ட கண் தெரியாத அந்த தாத்தா…..
சூரிய கதிர்கள், சுல்லென்ற சுகம் தருவது போல குட்டியின் விரல் பட்டவுடன் வீதியோரம் வளர்ந்து படுத்திருக்கும் தொட்டாசிணுங்கி உடல் சுருக்கி முறுவலித்தது……… அவன் சிரித்துக் கொண்டான்….. அல்லது சிணுங்கிக் கொண்டான்…. அது அப்படித்தானே தன் பாஷையில் நினைத்திருக்கும்……குழந்தைகளின் கால்கள்… நடப்பதைக் கூட ஓடித்தான் காட்டுகிறது…. குட்டி, ஓடி ஓடியே… நடப்பது போல… பாட்டி வீட்டுக்குள் நுழைந்தான்…
“வாங்கடி செல்லம்….. இன்னைக்கு தங்கத்துக்கு பொறந்த நாளாச்சே….. எங்கடா இன்னும் காணமேன்னு பாத்துட்டு இருந்தேன்.. வாங்க வாங்க.. தாத்தாக்கு முத்தா தாங்க……”- தாத்தா கொஞ்சிக் கொண்டே குட்டியை வாரி அணைக்க, பாட்டியும் சேர்ந்து கொண்டாள்…..அவர்கள் மூவரும்… சேர்ந்து கொண்டார்கள்…. சேர்ந்திருப்பதுதானே.. வாழ்வின்.. தத்துவம் என்பது போல…
“ஏய்…. அந்த புதுச் சட்டையை கொண்டா….. குட்டிப் பையனுக்கு போட்டு விடலாம்” என்று முகமெல்லாம் பூரிப்பாய் புன்னகைக்க, மீசை வளைந்து முத்தமாக்கினார் தாத்தா…..அவரின் உயிரின் சப்தம் முத்தமாய் வெளிப்பட்டிருக்கும்….
புதுத் துணியை எடுத்து வந்து தன் பேரனுக்கு ஆசையாய் போட்டு விட்டாள் பாட்டி….பின், ‘ம்ம்ம்ம்……..’ என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டு மெல்லமாக…..” அம்மா நல்லா இருக்காளா?” என்றாள்….அவளின் ஓரப் பார்வை தன் கணவனிடம் போய் வந்தது ஒருமுறை…..
சட்டென முகம் மாறிய தாத்தா…..”ஏன்… நல்லா இல்லாம……..!…. ஊரையே கொள்ளையடிச்சு சேர்த்து வைக்கறான்ல அவ புருஷன்….. அப்புறம் என்ன? பொய், பித்தலாட்டம், ஏமாத்து வேலை, கொள்ளை…….. ம்ம்.. கொலைதான் இன்னும் செய்யல.. அதையும் சீக்கிரம் பண்ணிடுவான்… உன் புள்ள தேடி புடிச்ச மவராசன்…..”- வெற்றிடம் முறைத்து கரைந்து கொண்டிருந்தார் தாத்தா….அது தீரா வலி என்பதை அவரின் திரும்பா முகம் காட்டியது… முறைத்த வெற்றிடத்தில் கூட தீ பற்றி எரிந்து விடும் போல்… அத்தனை சூடு அவரின் பார்வையில்…
“சரி சரி விடுங்க… குழந்த பாக்கறான்….”- என்றபடியே நூறு ரூபாயை குட்டியின் சட்டை பையில் வைத்து விட்ட பாட்டி….அவனுக்கு நெட்டி முறித்தாள்….முத்தங்களை அள்ளி அவன் மீது தெளித்தாள்….பின், “இரு சாமி சாப்ட்டு போ…”என்ற பாட்டியிடம்…”பாட்டி வரம் போதான் சாப்ட்டேன்… நான் அப்றம் வரேன்…”என்ற குட்டி…”சரி தாத்தா…. சரி பாட்டி….. நான் போய்ட்டு வரேன்…..” என்றபடியே குட்டி கிளம்ப எத்தனிக்க…..
“குட்டிப்பா…. சுடுகாட்டு வழியாவா வந்த….. எத்தன தடவ சொல்லிருக்கேன்… வரக் கூடாதுன்னு…… ம்ம்…… போகும்போது பெரிய வீதி வழியா போ… சரியா….” என்றார் தாத்தா….
சரி தாத்தா……” என்றபடியே அதே துள்ளலுடன், குதியாட்டத்துடன் நடக்க, ஓடத் தொடங்கினான் குட்டி….மௌன விரதம் போல வாய் மூடி நின்று கொண்டிருந்தது காற்று….. வெயிலின் உக்கிர நிழல்களை வியர்வையாக்கும் வித்தையை சரியாக செய்து கொண்டிருந்தான் சூரியன்….
குட்டியின் பாதங்கள், எதிர்கால நிமிடங்களுக்குள் எட்டு வைத்துக் கொண்டே இருக்க, சாம்பல் நிற மண் துகள்களின் குவியல் ஆங்காங்கே குழி மேடுகளாய் திட்டு திட்டாய் கிடந்தது…. அவன், அதே துள்ளலுடன் தொடர் நடை போட………………………………..
சடக் கென….. முன் வைத்த கால், தரையைத் தேடி, இன்னும் இன்னும் கீழ் இறங்க, செய்வதறியாமல் அடுத்த காலும் பின் தொடர்ந்தது……இருட்டின் தீவுக்குள் சிறகு முளைத்தவன் போல சர்……..ரென கீழ் நோக்கிப் போய்க் கொண்டே இருந்தான்….. காது அடைத்து, கண்கள் இருண்டு, உடல் இல்லாமல் போவதை உணரும் நொடிகளை காலம் நிறுத்திக் கொண்டது……
அழைத்த அலைபேசியை ஆன் செய்த அவன்….”ம்ம்ம்ம்…. சொல்லுப்பா” என்றான்…..
“சார்…… போன வாரம் அன்னை நகர் பெரிய வீதில ஆயிரம் அடி போர் போட்டும் தண்ணி வரலன்னு அப்பிடியே விட்டமே…. அங்க………, அதுல ஒரு சின்ன பையன் விழுந்துட்டான்”
போனைக் கட் பண்ணியவன், யோசித்தவாறே,………………………………………………………….. ” எழவெடுத்தவனுங்க… பார்த்து போக வேண்டியதுதான…. எவன் அவ்ளோ ஓரத்துல நடக்க சொன்னது…” என்று புலம்பிக் கொண்டே கூட இருந்த நண்பனிடம் விஷயத்தைக் கூறினான்…… மூளை அடுத்து என்ன செய்வதென்று யோசித்தது……..
” ஏம்பா……. எவ்வளவோ செலவு பண்ணி போர் போடறீங்க….. தண்ணி வரலனா அத மூடிட வேண்டியது தான……? காவாசி செலவுதான…. இப்ப பாரு போலிஸ் கேசுன்னு”- என்று தலையில் கை வைத்தான் நண்பன்…..
மீண்டும் செல் போன் கதற எடுத்து காதுக்கு கொடுத்தான்….
மறுபக்கம் ‘ஐயோ… …..ஐயோ’ என அவனின் மனைவி கத்திக் கொண்டே கூறினாள்…..
“ஏங்க……. சீக்கிரம் வாங்க…. நம்ம குட்டி போர் குழிக்குள்ள விழுந்துட்டான்…..”
……………………………………..??????
****
31
சமூகக் கரையான்கள் (கட்டுரை) - தங்கத்துரையரசி
அதுவொரு நாலைந்து அரசுவிடுமுறைகள் சேர்ந்து வந்த விடுமுறை தினம். குழந்தைகளின் விருப்பத்திற்கிணங்கி அவர்களை அழைத்துக் கொண்டு இரு இருசக்கர வாகனத்தில் அப்போதுதான் வெளிவந்திருந்த ஒரு புதிய திரைப்படத்தைப் பார்ப்பதற்காக திரையரங்கிற்குப் புறப்பட்டோம்.
புறப்படும் போதே மகன் தலைக்கவசத்தை நினைவூட்டினான். எனது தலைக்கவசமோ சற்றுப் பெரிது. ஆகையால் அவனது நினைவூட்டலுக்குச் சலித்துக்கொண்ட நான், “அதை அணிந்துகொண்டு செல்வதில் ஆட்சேபனை ஒன்றைமில்லையப்பா. படம் பார்க்கையில் கவனம் அதன்மேல் அல்லவா சிதறிக் கொண்டிருக்கும். திரையரங்கும் அருகில்தானே. இருக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம்” என்று மறுத்துவிட்டுக் கிளம்பினோம்.
திரையரங்கிற்கு ஒரு இருபதடி தொலைவிற்கு முன் ஐந்தாறு காவலர்கள் அவ்வழி சென்ற இருசக்கரவாகனங்களில் தலைக்கவசம் அணியாதவர்களையும் அவர்களது வாகனங்களையும் மறித்து நிறுத்தச் செய்தனர்.
நாங்களும் நிறுத்தப்பட்டோம். பெரும்பான்மை பெண்காவலர்களே இருந்த அக்குழுவினர் தங்கள் ‘வழக்கமான’ விசாரணைகளை மேற்கொண்டனர். முதன்முதல் அனுபவம் என்பதால் எனக்கு என்ன செய்யவேண்டுவதெனத் தயக்கம், குழப்பம், பயம், வெட்கம், மகன் பேச்சைக் கேளாது தலைக்கவசம் தவிர்த்துவந்த என்மீதே எரிச்சல்… இப்படிக் கலவையான மற்றும் கவலையான உணர்வுகளோடு என் அகன்ற கண்களை இன்னும் அகலமாக்கி விழித்துக்கொண்டிருந்தேன்.
மகனைப் பார்த்துப் பாவமாகக் கேட்டேன், “என்னடா செய்வது?!..”. அவன் தயங்காமல் கூறினான்,” அந்தப் பெண்காவலர்களிடம் பேசுங்கள் அம்மா. பயப்படவேண்டாம். திரைப்படத்திற்கு நேரமாகிறது என்று மட்டும் தெரிவியுங்கள்”, என்றான்.
தயக்கத்தோடு அவர்கள் அருகில் சென்ற நான் அச்சமயம் எனக்கே கேட்காத என் குரலில் மகன் சொன்னபடி கூறினேன். அவர்களுக்குள் பேசிக் கொண்டவர்கள் ஆறேழு வினாக்களையும் அதில் இரண்டு அறிவுரைகளையும் கலந்துகொடுக்கக் கூசிப்போனேன்.
என் மகன் பெயரில் ஒரு ரசீது இட்டு ரூ100 மட்டும் பெற்றுக்கொண்டு, எங்களை எச்சரித்து வாகனங்களோடு விடுவித்தனர். ‘அப்பாடா’ என்று ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, நீர்க்குருவியென சிலிர்த்து இல்லாத சிறகை இல்லாத நீரில் இருப்பது போல் கற்பனையோடு பறந்தேன்.
அத்தனை படபடப்பிலும் என் கவனம் ஈர்த்த ஒரு நிகழ்வு அப்போது தான் உருவில் மிகப்பெரிதாகி இராட்சத உருவில் வினாக்குறியாகி நின்றது மனக்கண்ணில்.
அந்த சில நிமிட களேபரங்களுக்கு நடுவில் சாலையின் இருபுறமிருந்தும் தலைக்கவசம் அணியாது வந்தவர்களில் ஓரிருவர் தலையசைப்பிலும், விழியசைப்பிலுமாக கடந்துசெல்ல அனுமதிக்கப்பட்டதேன் என்பதே அது.
திரைப்படத்தில் லயித்திருந்த மகனைச் சுரண்டி என் ஐயத்தைக் கேட்டேன்.அவன் திரையிலிருந்து விழி அகற்றாமலே அலட்சியமாய் பதிலளித்தான், அடுத்த மணித்துளியே! “தெரிந்தவர்களாக இருந்திருப்பார்கள் அம்மா”.
மனது மாட்டின் வாயாகி அசைபோடத் துவங்கியது. அச் சிறுபையன் சுட்டிக்காட்டியது மனதில் மெல்ல வலி பரப்பியது.
சமூகம் எதிர்கொள்ளும் இன்றைய முக்கிய சவால்களாக வேலையின்மை, வறுமை, சாதி, ஊழல் போன்ற பல்வேறு சுவர்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. ஆனால் அச்சுவர்கள் எங்கும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் கரையான்கள். இந்த வேண்டியவர், வேண்டாதவர், தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடுகள்! எண்ணி எண்ணிப் பார்க்க நெஞ்சு பொறுக்கவில்லை. அலுவலகங்கள், வங்கி, மருத்துவமனை, பேருந்து, ஆலயம் என எதையும் விட்டுவைக்காமல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கரையானால் பயன்பெறுவோர் பட்டியலில் நாமும் பல சமயம் இருந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
தெரிந்தவர்கள்,வேண்டியவர்கள்,உறவினர்கள் யாருமற்ற எந்த இடத்திற்கும் செல்ல நம் மனமும் கால்களும் தயங்குகின்றன, நாம் அறிந்தும் அறியாமலும்!
மனிதர்கள் அனைவரிடத்தும் பேதங்களற்ற பொதுவான அன்பு, எதிர்ப்படும் அத்தனை பேரையும் உறவினராய்க் கருதும் மாண்பு ஆகியவை மனங்களில் விதைக்கப்படுவதே இக்கரையான்களுக்கான மருந்து.
யாதும் ஊராகி, யாவரும் கேளிர் ஆகும் போதே அது சாத்தியம். பெருகும் பொது அறிவும், எந்தச் சிக்கலுக்கும் தெளிவான தீர்வும்,பேராசைகளற்ற மனமும் இப் பாகுபாடுகள் என்னும் கரையான்களை முற்றுமாய் ஒழிக்கட்டும்! எளியோர்க்கும் வறியோர்க்கும் எல்லாமும் எப்போதும் கிடைக்கட்டும்!
32
பெண்ணிவள் அதிரை -கவியன்பன் கலாம், அபுதாபி
காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு
……கனவிலும் நினைவிலுமே
ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்
..ஒடுங்கிடத் துணையாக
ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்
….ஆறுதல் பெற்றிடத்தான்
போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்
….புரிந்தவர் வென்றனரே!
.
பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்
….பேச்சினில் புகழ்ந்ததுமே
பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப்
…பிறழ்ந்திடும் வேளையிலே
கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல
…காத்திட விரும்புவாளே
விண்ணின் தாரகை யல்லள் மேதினி கொள்ளும்
…விளக்கதன் சுடராவாள்!
பிள்ளை பெற்றிட மட்டும் இருப்பதாய் நினைத்தால்
….பிழைகளும் உன்னிடந்தான்
உள்ளம் உணர்வுகள் எல்லாம் உணர்ந்திட வேண்டி
….உதவிட ஏங்கிடுவாள்
கள்ளம் கபடமும் கொண்டு வாழ்ந்திட நினைத்தால்
….கனவிலும் மறந்திடுவாள்
வெள்ளம் போலவே கவலைப் பொங்கிடும் போதில்
…விவேகமாய் முடிவெடுப்பாள்!
33
மதமாற்றம் மாற்றாகா - பாவலர் கருமலைத்தமிழாழன்
மதமாற்றம் நடப்பதாலே மனிதர்க் குள்ளே
மனம்மாறிச் சமதர்மம் வந்த துண்டா
மதமாற்றம் நடப்பதாலே சாதி இல்லா
மனிதனாக மனிதனையே ஏற்ற துண்டா
மதமாற்றம் நடப்பதாலே கீழ்மை நீங்கி
மனமொன்றிக் கரங்கள்தாம் இணைந்த துண்டா
மதமாற்றம் நடப்பதாலே மாற்றம் வந்து
மனங்களுக்குள் மனிதம்தாம் பூத்த துண்டா !
அயல்மதங்கள் பெருமைதரும் என்றே எண்ணி
அடுத்தமதம் மாறியிங்கு சென்ற வர்கள்
வயல்தன்னை வீட்டுமனை ஆக்கி நல்ல
வாழ்வுவரும் எனவளத்தைத் தொலைத்த போல
பெயர்மாறிப் புதுப்பெயர்தான் வந்த தன்றிப்
பெருமாற்றம் வாழ்வினிலே வந்த தில்லை
மயல்கொண்டு இருந்ததையும் இழந்த தன்றி
மதமாற்றம் வேறெதையும் தந்த தில்லை !
இக்கரைக்கு அக்கரைதான் பச்சை யென்றே
இயல்புமாறிச் சென்றவர்கள் கண்ட தென்ன
தக்கபடி மதிப்பொன்றும் கிடைக்க வில்லை
தகுதிதனை உயர்த்தியாரும் கொடுக்க வில்லை
மக்கள்தம் மனங்களினை மாற்றி டாமல்
மதமாற்றம் மாற்றத்தைத் தருவ தில்லை
எக்காலம் ஆனாலும் மதத்திற் குள்ளே
ஏற்றமாற்றம் செய்தால்தான் பொதுமை பூக்கும் !
34
இளைப்பாறலின் சிறகு (கட்டுரை) - கவிஜி
பண்டிகைகள் இல்லாத வாழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாதுதானே…? அது இளைப்பாறலின் சிறகு……
ஓடி ஓடி உழைத்த மனதின் அமைதி…. சிரிக்க……சிந்திக்க… புரிந்து கொள்ள… புரிய வைக்க…. ஒரு தவம் கலைந்த கொண்டாட்டம்… உற்சாக நதியின் மொத்தங்களின் பக்கங்கள் அனைத்தும் கவிதையாய் கிறுக்கி விட்டு சிரிக்கும் பிள்ளையின் மனதுக்குள் திரும்பும் நமக்கான பாதை. குடும்பங்கள் பண்டிகைகளால் மகிழ்ந்தது….ஒரு காலத்தில்…ஆனால் இன்று ? …மனம் ஓடிய அளவுக்கு மூளை ஓடவில்லை.. அதற்கு தெரிந்து விட்டது…. தெரிவதெல்லாம் தெரிந்தது தானா என்ற தெரியாமையோடுதான் இங்கு பார்ப்பதும் பார்க்கப் படுவதும்….ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மாற்றம் வந்து கொண்டேதானிருக்கும்… அது இயற்கையின் வியப்பு…. இணுங்களின் உயிர்ப்பு போல…அன்றும் இன்றும் என்று இரண்டு காலங்களைப் பற்றியும் போகிற போக்கில் ஒரு சேரதான் பார்க்க வேண்டி இருக்கிறது.. அது அப்படித்தான்.. ஒரு கட் ஆப் தேதி கொண்டு பார்க்கும் படி காலத்தின் வலிமை பிரிந்து கிடைக்கவில்லை..அது தொடர் நீட்சி… எங்கு விட்டோம் என்று கூறுவதும் இயலாத ஒன்று.. பத்துக்கு எட்டுதான் சரியாக வரும்….இரண்டு தொக்கிதான் நிற்கும். இரண்டு என்று விட்டு விட முடியாது….. அது எல்லாக் கால வாழ்வியலின் சூட்சுமம்…
நிஜமாகவே அந்தக் காலம் என்பது.. மனதுக்குள் இதமாகி வருடும் மையிலிறகு காலம்தான்… அது மனது நிறைந்து வழியும்… பருவ மழை…. காற்றும் கவிதையும் மிதக்கும் கப்பலென காணும் விழி எங்கும் விழாக் கோலம் பூண்டு.. ஒவ்வொரு பண்டிகையையும்… மனத்தால் உளமார நடுவீ ட்டுக்குள் வைத்து தாங்கிய காலம்….மனங்கள் இணைந்து… கொண்டாடிய காலம் அது…. ஆனால் நுட்பமாக ஒன்றை கவனிக்க வேண்டும்…. அந்தக்காலம் என்று பேசுபவர்கள் அவர்களின் இளமை அல்லது பால்யத்தின் காலம்தானே அது.. அப்படி என்றால்.. இன்றைய குழந்தைகள், இளைஞர்கள், அவர்களின் காலத்தில் அந்தக் காலம் என்று பேசப் போவது இந்தக் காலத்தை தானே… ?அப்படி என்றால்.. காலத்தின் பொருள் என்ன…! அல்லது… கொண்டாட்டங்களின் பொருள் என்ன…?
‘அந்தக் காலம்…….. அந்தக் காலம்……. அந்தக் காலத்தில் 3 மணிக்கே எழுந்தோம்…. எண்ணை வைத்து குளித்தோம்… புதுத் துணி போடுவோம்…. பட்டாசு வெடித்தோம்….மாடு வளர்த்தோம்… மாட்டுக்கு வண்ணம் பூசினோம்…பொங்கல் வைத்தோம்… உறவுகள் சேர்ந்து உண்டு மகிழ்ந்தோம்…. மனது சந்தோசமாக இருந்தது…….” என்று கூறுகிறார்களே… இந்தக் காலத்திலும் 3 மணிக்கு எழுங்கள்.. யார் வேண்டாம் என்று கூறினார்கள்…. குளியுங்கள்… புத்தாடை அணியுங்கள்….பொங்கல் வையுங்கள்…. இன்றைய கால கட்டத்துக்கு தகுந்தாற் போல பட்டாசு வெடிப்பதற்கான கெடுவை கணக்கு பண்ணி வெடித்துக் கொள்ளுங்கள்… யார் தடுத்தார்….?.. பிரச்சினை காலங்களில் இல்லை… உங்களிடம் இருக்கிறது……..தனக்கு வயது ஆகி விட்டது என்ற தாழ்வு மனப்பான்மை ஆட்டிப் படைக்கிறது…….கையில் பொம்மை துப்பாக்கி வைத்துக் கொண்டு வெடித்து விளையாடினால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன நினைப்பான் என்கிற பயம்… எப்போது உங்களுக்காக இல்லாமல் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்காக வாழத் தொடங்கினீர்களோ அன்றே உங்கள் பண்டிகை மட்டுமல்ல.. சராசரி நாட்கள் கூட களவு போய் விட்டன…எப்பவும் மனதுக்குள் ஒரு குழந்தையை தவழ விடுங்கள் தோழர்களே…. தவிப்பும்.. மிதப்பும் இல்லாமலே போய் விடும்..
யாருக்குதான் பிரச்சினை இல்லை.. பொருளாதாரப் பிரச்சினை இருந்து கொண்டேதானிருக்கும்.. அது நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கை சார்ந்த விஷயம்…அவரவருக்கு என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு கொண்டாடுங்கள்… அது தான் உங்களின் கொண்டாட்டமாக இருக்கும்…..
எல்லாருக்குமே ஏன், அந்த காலம் பிடிக்கிறது….தெரியுமா…? ஏன்…. “’அப்போ அப்டி.. நான் சின்ன வயசுல வயசுல என்று தொடர்ச்சியாக கூறுகிறார்கள்… தெரியுமா…?..அது உங்கள் பெற்றோரின் காலம்… அப்போது உங்கள் அப்பா அம்மாவின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்தீர்கள்….. முடிவெடுக்கும் இடம் அவர்களுடையதாக இருந்தது….. ஆக… ஒவ்வொரு பண்டிகையும்.. கொண்டாட்டமாக இருந்தது…பாட்டியின் சுருக்கு பை… சுகந்தம் தான்… அதற்காக பணப் பை வேண்டாம் என்று கூற முடியுமா… அன்று விறகு எரித்தோம்… அதற்காக எரிவாயு வேண்டாம் என்று கூற முடியுமா…. நவீனம் கற்றுத் தரும் தொழில் நுட்பத்தைக் கொண்டாடுவோம்… பாரம்பரியத்தை பற்றிக் கொள்வோம்…
“அன்று அப்படி,,…….” என்று பேசுபவர்கள் இன்றும் அதை செய்ய ஏன் முன் வருவதில்லை… ஆரம்பம் ஒன்று வேண்டும் தானே… இந்த வருடம் நீங்கள் ஆரம்பியுங்கள்.. அடுத்த வருடம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் ஆரம்பிப்பான்.. உரலில் இடியுங்கள்… வீட்டு முறைப்படி பலகாரம் செய்யுங்கள்..வாசலில் மாவுக் கோலம் போடுங்கள்… சொந்த பந்தங்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்… நண்பர்களிடம் ஈகோ பார்க்காதீர்கள்….
இல்லாதவர்களுக்கு கொடுங்கள்…முகத்துக்கு ஒரு இன்ச் அளவுக்கு முகப் பூச்சு போடுவதை தவிருங்கள்.. சொந்த முகத்தில் உண்மை அகத்தை விதையுங்கள்…பேசிக் கொண்டே இருக்காதீர்கள்……இன்று, நம்மை தொலைக்கிறோம் என்றால் ‘அன்றை’ நாம் மீட்டேடுப்பதும் நம் கடமை… ‘இப்படி ஆகிடுச்சே.. இப்படி போச்சே’- என்று கூறிக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை… இன்றைய நாட்கள் அன்றைய நாட்கள் போல இல்லை என்றால் இன்றைய மனிதர்கள் சரி இல்லை என்றுதான் அர்த்தம், நாம் உட்பட…… முதலில் நாம் மாறுவோம்.. பண்டிகைகளை அன்றைய முறைப்படி செய்ய தொடங்குவோம் .. மாற்றம் இப்படித்தான் வரும்…… அன்றைய காலம்.. பசி ஆற்றும் காலம்.. இன்றைய காலம் வியாபார காலம்.. எல்லாமே சந்தையின் அடிப்படையில்தான் செயல் படுகிறது…. அதுவும் இந்திய சந்தை என்பது லட்டு மாதிரி ….அது தான் மொபைலயும் … மோட்டாரையும் இங்க வந்து கொட்டுகிறான்…… “ரெண்டு வாங்குனா ஒன்னு பிரீன்னு சொன்னா…” கண்ணை மூடிகிட்டு வாங்குகிற பழக்கத்தை விடுவோம்…அதன் பின் முக்காடு போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பது வியாபார தந்திரம்….கொள்ளையின் மந்திரம்…….
கலாசார சீரழிவு ஏற்படுகிறது என்றால் மாற்றுங்கள். போராடுங்கள்.. வீட்டில் டிவி பார்க்கவா விடுமுறை…முகநூலில் இருக்கலாம்…. காலத்தின் கட்டாயம்… ஆனால் முகநூலாகவே இருக்க கூடாது… ‘குளிக்க போறேன்.. டாய்லெட் போறேன்னு’ ஸ்டேடஸ் போடுவது எந்த வகையில் நியாயம்.. இன்றைய தொழில் நுட்பத்தை இவ்வளவு மொக்கையாக உபயோகிக்கும் நாம்தான்… அன்றைய காலம் என்று பேசிக் கொண்டு முகமூடி போட்டுக் கொண்டு திரிகிறோம்…வறுமை இரண்டு காலங்களிலும் இருக்கத்தான் செய்கிறது…. அந்த காலத்தில் செழிப்போடுதான் எல்லா குடும்பங்களும் பண்டிகை கொண்டாடினார்களா… இல்லை… இந்த காலத்தில்தான் எல்லாருமே கஷ்டப் பட்டுக் கொண்டு இருக்கிறார்களா ..? வறுமை, வாழ்வியல் பிரச்சினை… கொண்டாட்டம், வழக்கத்தின் பிரச்சினை… போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது……என்ன இருக்கிறதோ… அதற்குள்தான் உங்கள் கொண்டாட்டம் இருக்க வேண்டும்.. அதுதான் உண்மையும் கூட.. நாம் உண்மைக்கு மிக அருகில் சற்று வெளியில் நிற்பதையே நாகரிகம்.. வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் அன்றைய ஆட்களாகவே இருப்பது அன்பின் தொடர்பான ஒன்று…
அன்று ரவிக்கை போடாமல் இருந்தார்கள்.. அது இன்று ஸ்லீவ்லெஸ் ஆக விரிந்து இருக்கிறது… எல்லாமே ஒன்று தான்…. ‘அன்று’ இன்னொன்றாக மாறி ‘இன்று’ வருகிறது.. அவ்வளவு தான்… ஒன்று மட்டும் முக்கியம்.. மாறுவது…… மாற்றங்களோடு தன்னை நிலை நிறுத்திக் கொள்பவன்தான் அடுத்த நிலைக்கும் செல்கிறான்… இது கணக்கு…
அன்பையும் தூக்கி கொண்டே தொழில் நுட்பத்தோடு நடை பயில பழகுங்கள் தோழர்களே… வாழ்க்கை முழுக்க கொண்டாட்டம்தான்….இன்றைய கசப்புகளை விட்டெறிந்து விட்டு, இன்றைய தொழில் நுட்பங்களோடு…..இன்றைய.. வசதிகளோடு.. இன்றைய இலகுவோடு, இந்தக் காலத்தை அந்த காலம் போல மாற்றுங்கள், அன்றைய அன்பை போல.. அன்றைய ஒற்றுமையைப் போல…அன்றைய மனப்பக்குவத்தைப் போல… இந்தக் காலத்தை… பண்டிகைகளால் நிரப்பி கொண்டாடுங்கள் …இது டிஜிட்டலின் பொற்காலம்… நினைத்த இடத்தில எல்லாமே நடக்கிறது.. இது அறிவியலின் கொடை.. அற்புதத்தின் கைகளில் மனிதன் .. இதை மனதின் ஒவ்வாமைக்கு பலி கொடுக்க முடியாது…. புத்திசாலிகள் இன்றைய காலத்தின் வாசலில் அன்றைய வீட்டைக் கட்டுகிறான்… நீங்கள் புத்திசாலிகள் என்றே நம்புகிறேன்…
எல்லா காலத்துக்குள்ளும் ஓர் இந்தக் காலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது… அது மீண்டும் ஒரு அந்த காலத்தை விட்டு விட்டே நகருகிறது…அந்தக் காலத்தில் குடும்பம், குட்டி, உறவு..சொந்தம் என்று கூடி….யாவரும் வீடு முழுக்க அமர்ந்து தங்கள் கைகளால், மனத்தால் செய்யப் பட்ட பலகாரங்கள் கொண்டு .. அளவோடு முழுதாக உடுத்தி…அன்பைப் பரிமாறி…. ஆசுவாசம் நிரப்பி… நம்பிக்கை விதைத்து…. இளைப்பாரல் பூண்டு…. மீண்டும் உழைக்க, கைகள் கூடும்….ஒற்றுமை செய்து கொண்டாடிய பண்டிகைகளை இந்தக் காலத்திலும், கிடைக்கின்ற அறிவியல் வசதிகளை… அளவோடு.. நுட்பாக.. தேவைக்கேற்ப பயன் படுத்தி….பக்கத்து வீட்டுக்காரனின் முகம் பார்த்து….நிகழ்த்துவதே.. இந்த வாழ்வின் குறிகோளாக இருக்க வேண்டும் என்பதுதான்.. இங்கே முடிவும்…
35
நடிப்பு (சிறுகதை) - சி. அருள் ஜோசப் ராஜ்
அந்த ரயில் இன்னும் மூன்று நிறுத்தத்திற்குப் பிறகு உள்ள சந்திப்பில் தனது பயணத்தை முடித்துக்கொள்ள இருந்தது.
இன்ச்பெக்ட்டர் உடையில் மிடுக்காக இருந்த குமார் ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயில் மெல்ல நகரத்தொடங்கியது. பல பெட்டிகளில் ஒருசிலரே இருந்தனர்.
அவரது கண் லேடீஸ் கம்பர்ட்மென்ட் மீது விழுந்தது. அதில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருந்ததார்.
அவளை நோக்கி இரண்டு ஆண்கள் நெருங்குவது தெரிந்தது. ஒருவன் கையில் கத்தி இருந்தது. மற்றவன் கத்திப் பேசினான். அப் பெண்ணின் தடுமாறும் வார்த்தைகளில் இருந்து அவளது கெஞ்சலையும் பயத்தையும் குமாரால் உணரமுடிந்தது. “கத்தி பேசின என் கத்தி பேசும்” என்ற வார்த்தைகள் குமாரின் காதில் விழுந்ததுதான் தாமதம் குமார் அனிச்சையாக செயல் பட ஆரம்பித்தார் “டேய் எவண்டா அவன்” என்று கூச்சல் இட்டவாறே அந்த கம்பர்ட்மென்ட்குள் நுழைந்தார்.அவரைக் கண்டதும் அடுத்த வாசர்ப்படி வழியாக ஓடும் ரயிலில் இருந்து இறங்கினார்கள்.
அவர்கள் இருவரும் பயந்து ஓடும் சத்தத்தைக் கேட்ட அந்தப் பெண் தனது இரு கைகளாலும் தனது முகத்தை மூ டிக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். மெல்ல கண்களைத்திறந்து பார்த்தாள். “டேய் குமார் இது என்ன வேஷம்” என்றாள்.
அது அவனது பள்ளி தமிழ் ஆசிரியை.
“எங்க காலேஜ்ல கல்சுரல் டே நேரம் ஆனதால ட்ரைன்ல வந்து டிரஸ் மாத்திக்கலாம்ன்னு வேகமா வந்திட்டேன்” என்றான் குமார்.
இருவருக்கும் ஒரேமாதிரியான வியப்பு
“என்ன டீச்சர் நாங்க படிக்கும் போது முந்தானையை இடுப்பில் சொருகி ஜான்சிராணி கட்ட பொம்மன் மாதிரியெல்லாம் வீரமா வசம் பேசி நடிச்சு காண்பிப்பீங்க ஸ்கூல் ல போல்டா எல்லோர்கிட்டேயும் பேசுவீங்க. அந்த வீரம் இப்போ எங்கப் போச்சு டீச்சர். என்னால நம்பவே முடியல நீங்களா இப்படி ….உங்க நடிப்பை மிஞ்சின என்னோட நடிப்பைப் பார்த்திர்களா? என்றான். டிரைன் நிற்க இருவரும் இறங்கினார்கள்.
36
சிந்திக்க வைத்துவிட்டான் (சிறுகதை) - பொன் குலேந்திரன் - கனடா
மாணிக்கம் தம்பதிகளுக்கு பாலன் ஒரே மகன். விரைவாக வளர்ந்துவிட்டான். அவன் சிந்தித்து செயல்படுபவன். வயது பத்து. அவன் கேட்கும் கேள்விகளுக்கு மாணி;க்தத்தால் ; சில நேரங்களில பதில் சொல்லமுடியாது. பாலனுக்கு அதிக புத்தி கூர்மை.
பாலன் தன் பாட்டி மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தான். தினமும் பாட்டி அவனுக்கு; கதை சொல்லுவாள் அவனைத் தூங்க வைக்க. அது மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது, இப்போ பாட்டியால் பேரனுக்குக் கதை சொல்ல முடியாத நிலை. பாவம் அவள். அல்செய்மார் என்ற ஞாபக மறதி வியாதி அவளைப் பாதித்துவிட்டது. பாட்டி தேவையில்லாமல் பேசுவாள், அவள் பேச்சில் விளக்கம் இல்லை. சில சமயஙகளில் சாப்பிட மறுத்துவிடுவாள். எவ்வளவுக்குத் தான் அவள் செயல்களை மாணிக்கம் பொறுத்துக்கொண்டு இருப்பது.
மாணிக்கம் தன் தாயை முதியோரைப் பராமரிக்கும் விடுதி ஒன்றில்; சேர்த்து விட தீர்மானித்தார். தன் மனைவிக்குத் தன் திட்டத்தைச் சொன்னார். அவளுக்கும் அது சரியெனப் பட்டது. தந்தையும் தாயும் பேசியதை பாலன் கேட்டுக் கொணடிருந்தான்; .
அன்று பாலன்; படம் வரைவதை அவனின் தந்தை மாணிக்கம் கண்டார். அதிசயமான படம் அது. ஒரு பெரிய வீடும் ஒரு சிறிய வீடும் படத்தில் பாலன் வரைந்திருந்தான். எதற்காhக பாலன் அபடி பெரிதும் சிறிதுமாக இரு வீடுகளை வரைந்தான என்பது அவருக்குப் புரியவில்லை.
“ ஏன் பாலா இரண்டு வீடுகள் வரைந்திருக்கிறாய்”?
“அப்பா பெரிய வீடு நான் பொரிதாக வளர்ந்ததும் நான் வாழ.”
“ அப்போ அந்தச் சின்ன வீடு”
“அது நீங்களும் அம்மாவும் வயது வந்த காலத்தில் வாழ”
“அதேன் அப்படி”?
“ இப்போ பாட்டியை வேறு வீட்டுக்கு அனுப்பப் போகிறாயே அப்பா”
பாலனின் தந்தை தன் மகனின் பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
தன் தாயை முதியோர் விடுதிக்கு அனுப்ப இருந்த திட்டத்தை தான் கை விட்டதாக மனைவிக்குச் சொன்னார்.
37
பேச முடியாத குழந்தைகள் (கட்டுரை) - ஹேமலதா
நீண்ட நாட்களாக எனக்கு ஒரு மன உளைச்சல். நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம். நம் வசதிக்காக எத்தனையோ கண்டுபிடிப்புக்கள் அதில் இன்று நாம் குழந்தைகளுக்காக பயன்படுத்தும் நாப்கின் களை பார்ப்போமே
டாக்டர்களிடம் பெரியவர்களிடம் பிள்ளை களைக்கொடுக்கும் போதும் மிக அவசியமான நேரங்களிலும் பயன்படுத்தினால் நல்லது . மாறாக பெரியவர்களின் வசதிக்காகவும் முக்கியமாக நாகரீகமாகவும் 24 மணி நேரமும் குழந்தைகளுக்கு கட்டிவிட்டு விடுகிறார் களே
விளம்பரத்துக்காக 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி காண்பிக்கிறார்கள். சற்றே யோசியுங்கள். உங்களால் 6 முறை போய் கழுவாமல் இருக்க முடியுமா ? அல்லது ஓர் இரவு முழுதும் கட்டிக்கொண்டு அதிலேயே 1 , 2 போய் காலையில் கழுவிக் கொள்ள முடியுமா ? முன் போலில்லாமல் அதிகம் செல்லம் கொடுத்து பிள்ளை வளர்க்கிறீர் களே. உங்கள் செல்லத்துக்காக ஒரு நாள் செய்து பாருங்கள்
இப்போது புது விளம்பரம். மருத்துவர் கூறுகிறார் “மற்றவற்றில் வெளியில் ஈரப்பதம் தெரியாது. ஆனால் உள்ளே இருக்குமாம் இவர்கள் சொல்வதை வாங்கினால் இரவு முழுதும் போய் காலையிலும் சிரித்துக் கொண்டே விளையாடுமாம்”
அதற்கு எப்படி தெரியும்? 24 மணியும் கட்டி விட்டு விடுகிறார் களே. இது உடலோடுதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும். இதோடு பள்ளிக்கு வேறு அனுப்பி விடுகிறார்கள். இப்படிப் போனால் குழந்தைகள் எப்படி டாய்லட் போகக் கற்றுக்கொள்ளும் ?
பெற்றவர்கள் சுயநல வாதிகள். அவர்கள் தூங்க வேண்டும். அப்போழுதான் அடுத்த நாளை ஓட்ட முடியும்.
ஆண்டவா நீ தான் இந்த பேச முடியாத குழந்தைகளை இந்த கொடிய தண்டணை யிலிருந்து காப்பாற்ற வேண்டும்
38
நினைவுகள் (சிறுகதை) - நறுமுகை
அலுவலக வேலையாக பதினைத்து நாள் இந்தியாவுக்கு வந்தேன். இரவு 11 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில் இறங்க, வெளியில் வந்தேன். சுற்றிலும் பார்க்கின்றேன். நான் 23 வருடம் வளர்ந்த நாடு. “மேடம் டாக்ஸி” என்ற சப்தம் கேட்டு நினைவுக்கு வந்தேன். ஏதோ ஒரு மன அழுத்தம்.
டாக்ஸி ஏறி நெகமம் என்றேன். இன்னும் ஒரு மணி நேரம் பயணம்.
இருட்டிலும் கோயம்புத்தூர் அழகாக இருந்தது. புதிது புதிதாக கட்டிடங்கள், மால்கள், ஹோட்டல்கள் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளோடு சாலையின் இருபுறமும் நகர்ந்தாலும், உடல் அசதியில் கண்களை மூடி, தூங்கலாமென உடலை பக்க வாட்டில் சற்று சரித்துக் கொண்டேன். மனதோ என்னை ஓய்வெ டுக்க விடாமல் என்னை பின்னோக்கி கவ்விச் சென்றது.
எனது 23 வது வயதில் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றேன். இன்று கிரீன் கார்ட் வாங்கி அமெரிக்க வாழ் இந்தியராய் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் போனதே தெரியவில்லை. வருடம் ஒருமுறை இந்தியா வருவேன். குடும்பத்தில் பண்டிகைகள், மற்ற நல்ல, கெட்ட காரியங்கள் எதிலும் பங்கு கொள்ளவில்லை. நான் இந்தியா வரும் ஒவ்வொரு முறையும் அம்மா, அப்பா, எப்பவாவது மாமா என அனைவரும் ஏர்போர்ட்டில் சந்தோஷ முகங்களோடு எனக்காக காத்திருப்பார்கள். பார்த்ததும் அம்மா கட்டிக் கொள்வார். அப்பா என் தலையைத் தடவி நல்ல இருக்கியாம்மா என்பார். கடந்த இரண்டு வருடங்களாக இவையெல்லாம் இல்லை. அப்பாவும் அம்மாவும் மறைந்த பின் எனக்கு இந்தியாவே சற்று அந்நியமாய்ப் போனது.
“அம்மா.. நெகமத்துல எங்க” என டிரைவர் கேட்க, நினைவு திரும்பினேன்.
வீட்டைத் திறந்து ஒரு குளியல் போட்டுவிட்டு அசதியில் படுக்கையில் தூங்கிப்போனேன்.
***
“டிங் டாங்”
படுக்கையிலிருந்து எழுந்தேன். பொழுது விடிந்ததே தெரியவில்லை என சொல்லிக் கொண்டே, கதவைத் திறந்தேன்.
“செல்லம்மா” வாசலில்
அவள் எங்கள் வீட்டு எஜமானி, வேலைக்காரி என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவள் வீட்டு வேலை, சாப்பாடு எல்லாம் செய்து விட்டு போகாமல் பல அறிவுரைகளையும் சொல்லுகிற, எதையும் எதிர்பார்க்காத கணவனை இழந்து எங்கள் குடும்பத்துடனேயே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நல்ல மனம்.
“நல்லா இருக்கீங்களாம்மா”
“இருக்கேன் செல்லம்மா “
“ஏம்மா இப்படி இளச்சிட்டீங்க” என்று சொல்லிக்கொண்டே, “டீ போடுறேம்மா” என்றபடி சமையலறை புகுந்தாள்.
அவளுடைய டீயுடன் எனது நாள் தொடங்கியது.
குளிப்பதற்கு ஷவரைத் திறந்த போது, பழைய நினைவுகள் ….
“வசு, ரொம்ப நேரம் குளிக்காதே. இன்னிக்கு தான் வந்திருக்கே, இந்த தண்ணீ பழக உனக்கு ரெண்டு நாள் ஆகுமே” என அம்மா சமையலறையிலிருந்து கத்துவாள்.
“ஒகேம்மா “ என்று வெளியே வந்தால்
“கண்ணு, போன்ல ஜெயராமன் (அப்பாவின் பால்ய சிநேகிதர்)” என்று அப்பா ரிசீவரைத் தந்தார்.
“என்ன மாமா, எப்படி இருக்கீங்க ?”
“நல்ல இருக்கேம்மா. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. சாயந்திரம் வீட்டுக்கு வா” என்றார்.
“அம்மா, யாரோ போன் “ என்று செல்லம்மா கத்த, நிஜத்திற்கு திரும்பியவளாய் குளித்து விட்டு வெளியே வந்து பார்த்தால் தோழி சவீதாவிடமிருந்து மிஸ்டு கால். கூப்பிட்டேன். “ குளிச்சிட்டு இருந்தேன். கண்டிப்பா மீட் பண்ணலாம் என்று சொல்லி போனை வைத்தேன்.
செல்லம்மா இட்லி, சட்னி செய்திருந்தாள், சாப்பிட்டு விட்டு ஊருக்கு வந்த வேலை விடயமாக வெளியே கிளம்பினேன்.
வேலைகளை முடித்துவிட்டு சுரேஷ் மாமா, மஞ்சு அத்தை, சவீதா வீடு என எல்லோரின் வீட்டுக்கும் சென்று வந்தேன். இரவு சவீதாவுடன் டின்னர். வீட்டுக்கு வந்த போது மீண்டும் தனிமை ஏதோ செய்தது.
மறு நாள் காலை பழனி முருகன் கோவிலுக்குப் போனேன். சன்னதியில் கண்ணை மூடினேன். மீண்டும நினைவுகள் அப்பா அம்மாவுடன் வந்த ஞாபகங்கள், அம்மாவுடன் துர்க்கை கோவிலுக்குப் போனது, அதற்கு இரண்டு வீடு தள்ளி நான் 5 வயதாக இருந்த போது குடித்தனம் இருந்தோம் என்று அம்மா சொல்லி, அந்த வீட்டை நின்று 2 நிமிடம் பார்த்தது. அடுத்து பத்து நாட்களில் நான் படித்த பள்ளி, கல்லூரி என ஏகப்பட்ட நினைவுகள், எல்லாவற்றையும் பார்த்தேன். சில ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். என்கிறது பண்ணைக்குச் சென்று அப்பா பார்த்து பார்த்துப் போட்ட தென்னையின் இளநீரை ரசித்துக் குடித்தேன்.
தொட்டியில் நீராடினேன். நினைவுகள் நெஞ்சை அழுத்த கிளம்பும் நாளும் வந்தது.
தோட்டப் பணியாளர் திருமலையிடமும், வீட்டு நிர்வாகி செல்லம்மாவிடமும் தலா 5000 ரூபாயைக் கொடுத்து கைச்செலவுக்கு வீட்டையும், தோட்டத்தையும் பார்த்துக் கொள்ளும்படி சொன்னேன். அவர்கள் கண் கலங்கியது. சட்டென்று செல்லம்மா “ஊர்ல அய்யாவையும், குழந்தையையும் கேட்டதாகக் சொல்லுங்கம்மா” என்றாள். “இங்க நம்ம அப்பா அம்மா ஞாபகம் ரொம்ப வருதுங்க” என்றாள். நான் ஒரு முறை செல்லம்மாவைப் பார்த்தேன். என் கண்கள் சிறிது கலங்கியது. சுதாரித்துக் கொண்டு அந்த நினைவுகள் தான் இனிமேல் நிஜம் என சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானேன்.
வசு “சாமி படத்துக்கு நமஸ்காரம் பண்ணிட்டு போம்மா “ என்று அம்மா எப்போதும் சொல்ல, நான் சட்டென்று அப்பா அம்மாவின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் நினைவு ஞாபகம் வர, மெதுவாக சாமி படத்திற்கு நமஸ்காரம் செய்து விட்டு காரில் ஏறினேன்.
தாய், தந்தை நம் சுற்றத்தையும் சூழலையும் சேர்த்து இணைக்கும் ஒரு குடும்பச் சங்கிலி. அது அறுபடுவது காலத்தின் கட்டாயம். ஆனால் அந்த சங்கிலி அறுந்த பின்,
சுற்றிப் பார்த்தாலூம் சுற்றம் தெரியாது
உறவுகள் இரவு போல் இருளும்
இரவுகள் பகல் போல் நீளும்
கண்களில் ஈரம்
மனதில் துயரம்
நெஞ்சில் பாரம்
ஆயிரம் கோடி மக்கள் இருக்கும் உலகில் யாரும் இல்லாதது போல் ஒரு வெறுமை, தனிமை அதிகரிக்கும். நினைவுகளைத் தேட ஆரம்பிப்போம்.
நினைவுகள் தான் நிஜமான சுகத்தை தரும். சுகமான அந்த நினைவுகளால் மனதை நிரப்பிக் கொண்டு, தாய் தந்தை இருக்கும் போதே தாய்நாட்டுக்கு அடிக்கடி சென்று வர, இதை நான் யாருக்குச் சொல்வேன்.
39
எட்டுக்காலியும் இருகாளியும் (நூல் விமர்சனம்) - கந்தகக் கவி பாண்டு
பொதுவாக எந்தவொரு கவிதைத் தொகுப்பிலும் நிலா, அருவி, ஆறு, கடல், காதல் பற்றி கவிஞன் குறைந்தது இரண்டு கவிதைகளையாவது தன்னை மறந்து கலந்திருப்பான். ஆனால் நமது கவிஞர் கந்தகக் கவி பாண்டூ அவர்களோ தனது “எட்டுக்காலியும் இரு காலியும்” தொகுப்பில் எழுதுகோலில் கந்தகத்தை நிரப்பி எழுதி இருப்பார் போல. தொகுப்பு முழுவதும் சமுதாயத்தில் புரையோடியுள்ள பலவற்றை எதிர்த்து மிகத் தைரியமாக சாட்டையடி கொடுத்துள்ளார்.
மர்புக்கவிதை, புதுக்கவிதை, நவீனக் கவிதை என எல்லாவற்றிலும் சுதந்திரமாய் நுழைந்து ஆனந்தத் தாண்டவமாடுகிறார்.
இவரது கவிதைகளில் என்னைக் கவர்ந்த ஒரு சில பகுதிகளை மட்டும் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்றைக்கு விவாதங்கள் என்ற பெயரில் மக்களை மூளைச் சலவை செய்யத் துடிக்கும் முதலாளி வர்க்கத்தின் கோர முகத்தை கண் முன்னே தோலுரித்துக் காட்டும் உச்சகட்டம் எனும் ஒரு கவிதையில்
ஆளாளுக்கு எழுப்பும்
கூச்சல் ஒலியில்
யார் காதுகளுக்கும் எட்டாமல்
கவனமாய்ப்
பார்த்துக்கொள்ளப்படுகிறது
உண்மையின் உயிர்வலி
பெண்களின் நிலையை விளக்குமொரு உயிர்த்தெழுதல் எனும் கவிதையில்
தப்பிக்கும் வாயிலற்ற
அந்த வன்-வலைப்
பின்னலில் பட்டாம்பூச்சியாய்ச்
சிக்கிச் சிறகசைக்கிறேன்
காதலைப் பற்றி முற்றிலும் புதிதாய் ஒரு கோணத்தில் விளக்குகிறார்.
பற்றிப் படர்ந்து விரியும்
மனிதமே
மகத்தான காதல்
இன்றைய நாட்டின் நிலையை நகைச்சுவையாய் இப்படி வினவுகிறார்.
முகவரி விசாரிப்புகளுக்கு
பாதை காட்டும்
அடையாளமாய்
நேற்று திரையரங்கு
இன்று டாஸ்மாக்
நாளை ?
நம்பிக்கை எனும் ஒரு கவிதையில் நமது மூடநம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டே வருகிறார். அதில் ஒரு இடத்தில்
தொடர் தோல்விகளைக்
கடவுளின் சோதனைகளென
நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம்
என்ற வரிகள் நம்மை மிகவும் கவர்கிறது.
முக்கியமாக காந்தி தேசமே, நீதிமான்களுக்கு வேலையில்லை, கி.பி. 3000, காடு vs நாடு போன்ற கவிதைகள் நம் சிந்தனையைத் தூண்டுகிறது.
கவிஞர் கந்தகக் கவி பாண்டூ அவர்களின் இந்தத் தொகுப்பு படிப்பவர் மனதில் நிச்சயம் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை. இது போன்ற தொகுப்புகளை அவர் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்பதே என் போன்றோரின் வேண்டுகோள்.
கருத்துகள்
கருத்துரையிடுக