கருவே கதையானால்


புனைக்கதைகள்

Back

கருவே கதையானால்
நிர்மலா ராகவன்


கருவே கதையானால்

நிர்மலா ராகவன்

 

 

 

Contents

கருவே கதையானால்

முன்னுரை

நூலுரை

நன்றி

ஆசிரியர் பற்றி

உரிமை

1. இனம்

2. கடற்கரைப் பிள்ளையார்

3. கருவே கதையானால்

4. நெடுஞ்சாலையில் ஒரு பயணம்

5. ஆறாத மனம்

6. படப்பிடிப்பு

7. நிமிர்ந்த நினைவு

8. சுதந்திரம்

9. நேற்றைய நிழல்

10. தி.தி

Free Tamil Ebooks - எங்களைப் பற்றி

கருவே கதையானால்

கருவே கதையானால்…

ஆசிரியர் : நிர்மலா ராகவன்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

வகை : சிறுகதை

முன்னுரை


`எழுத வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு எப்போது ஏற்படுகின்றது?` என்று என்னைச் சிலர் கேட்டிருக்கிறார்கள்.

என்னை ஆத்திரப்பட வைக்கும், அல்லது கோபத்தையூட்டும் — பொதுவாக, ஆழ்ந்த உணர்ச்சிக்கு ஆளாக்கும் — எல்லா சந்தர்ப்பங்களிலுமே என் மனமும், கரமும் ஒருங்கே துடிக்கும். என் உணர்ச்சிகளை பக்கத்திலிருப்பவரிடம் கொட்டிவிட்டு, அவரும் சேர்ந்து துன்பப்படுவானேன்!

எழுத்தினால், பணம் வருகிறதோ, இல்லையோ, மனம் லேசாகிறது. எனக்குப் புரியாத சில மாந்தர்களையும், நிகழ்ச்சிகளையும்பற்றி எழுதியபின், ஒரு தெளிவு ஏற்பட, நிகழ்கால சமூகம் மேலும் ஆர்வத்தை ஊட்டுவதாக அமைந்துவிடுகிறது. எழுதியது எனது அங்கீகாரத்தைப் பெற்றால், நிறைவு. (நான் எழுதியவற்றை அஞ்சாமல் கண்டனம் செய்வது நானேதான்!)

சில கதைகளை ஏன் எழுதினேன் என்று வாசகருக்குத் தெரிவிக்க விழைகிறேன்.

(இப்போது கதைகளைப் படிக்க ஆரம்பியுங்கள். கீழே காணும் முன்னுரைப் பகுதியைப் பின்னுரையாகப் படிக்கலாம்).

முதலாவது கதை இனம். என்னை நெருங்கிய தோழியாகப் பாவித்து, தினமும் என் உதவியையும், பக்கபலத்தையும் நாடினாள் கானடா நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவள் (அறுபது வயதுக்குமேல் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளவும்). மலேசியாவில் அவளுக்கு நம்பகமாக வேறு யாரும் அமையவில்லை என்பாள். அவளுடைய நாட்டிற்கே சென்று, அவளுடன் மூன்று வாரங்கள் தங்கியிருந்தபோது, நான் பானங்களுக்கு நிறைய சர்க்கரை சேர்த்துக்கொள்கிறேன் என்று, `இந்தியன்` என்று பழித்தாள். அப்போது நான் அடைந்த அதிர்ச்சி, சில வருடங்கள் கழித்து, இக்கதையாகப் பரிணமித்தது.

இப்புத்தகத்தின் தலைப்பைக் கொண்ட கதை, குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒரு பதின்மவயதுப் பையனை பேட்டி கண்டதன் விளைவு. அவன் பெயரையோ, விலாசத்தையோ என்னிடம் கூறவேண்டிய அவசியமில்லை என்ற உறுதிமொழியுடன் அவனைச் சந்தித்தேன். (நான் பார்த்தபோது, அவன் திருந்தியிருந்தான், மதத்தின் உதவியால்).

அவன் செய்த வன்செயல்களை அனுபவித்து, உணர்ச்சியற்ற குரலில் அவன் கணக்கிட்டபோது, `உன் அம்மாவிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறாயா?` என்று கேட்டேன். அவன் ஆச்சரியத்துடன் விழித்தான். என் எண்ணத்தை மறுத்தான்.

எனக்குத் தெரிந்தவரை, பால்யப் பருவத்தில் தாங்கவொணா இன்னல்களை அனுபவித்தவர்கள்தாம் தீய வழியை நாடுவார்கள். பின் எதனால் அவன் நடத்தை இவ்வளவு மோசமாக, இல்லை, அவனுக்கே பொறுக்க முடியாததாக ஆகியிருக்கும் என்று சில வருடங்கள் யோசித்தேன். நமது கடந்த பிறவிகளின் தாக்கம்கூட நமக்கு உண்டு என்ற நிலையில், கருவாக இருந்தபோது அனுபவித்த, விளங்காத துன்பங்கள் அவனைப் பாதித்து இருக்கலாமோ என்றே கருவைக் கதையாக்கினேன். என்னை உலுக்கிய கதை இது.

படப்பிடிப்பு: கோயில் தெய்வத்தைத் தொழும் புனித இடம். இங்குள்ள ஒரு புனித தலத்தில் படப்படிப்பு நடந்ததைப் பார்த்தபோது, பெருமையாக இல்லை. மனம் கொதித்தது. ஆனால், அந்த நிகழ்வே கதாநாயகனைத் திருத்துவதாக எழுதியபோது, மனம் அமைதிப்பட்டது.

நிமிர்ந்த நிழல்: ஆணோ,பெண்ணோ, ஒருவரின் சுயமரியாதை, மற்றொரு பாலருடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் விதம் போன்ற பலவும் பாலியல் வதையின் விளைவாகும்.

கதாநாயகி எனக்கு நன்கு அறிமுகமானவள். ஒரு நாள் நள்ளிரவு, அவள் கணவர் அவளை மிகவும் கீழ்த்தரமான விதத்தில் சாடிக் கொண்டிருந்தபோது, (தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியாது என் கணவர் துணை வர), நான் உதவிக்குப் போனேன்.

`எனக்கு ஒன்றுமில்லை,` என்றாள் அவள், அழுகைக் குரலில்.

`எல்லாம் கேட்டது!` என்றேன் நான். (தெரு பூராவும் கேட்க, வசைபாடி இருக்கிறார் அந்த மனிதர்!)

`உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்!` என்று அவள் கணவர் என்னை விரட்ட முயன்றார்.

`எனக்கு இப்படி ஒரு கதி வந்தால், எவராவது உதவிக்கு வந்தால், மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன்,` என்று பிடிவாதமாக வெளியேற மறுத்தேன்.

சிறு வயதில் பாலியல் வதைக்கு ஆளாகும் பெண்கள் பல வருடங்களுக்குப் பின்னரும் அதன் விளைவில் பாதிக்கப் படுவார்களா என்ற கேள்வியை எழுப்பினார் ஒருவர், இக்கதையைப் படித்துவிட்டு.

`கண்டிப்பாக!` என்பதே எனது பதில். நடந்ததை ஏற்றுக்கொண்டு, சிகிச்சை பெறுபவர்கள் மட்டும் விலக்காக இருக்கலாம்.

சுதந்திரம்: நான் நீச்சல் குளத்துக்குத் தினமும் செல்கையில் சந்தித்தவன் அச்சிறுவன். எங்களுக்குள் ஒரு அபூர்வமான நெருக்கம் ஏற்பட்டது.

அவனுக்குப் பிடித்த நபர் என்னைப்போன்ற பெண்ணாக இல்லாது, ஒரு ஆணாக இருந்தால், அவர்கள் குடும்பத்தில் எத்தகைய குழப்பம் விளையும் என்று யோசித்தேன்.

ஆண் விமரிசகர்கள், `நம்மவர்களுக்கே உரிய பொறாமைக் குணம்,` என்று பையனின் தந்தையைச் சாடினார்கள்.

எல்லா ஆண்களுக்குமே உரித்தான குணம் என்றே நான் நினைக்கிறேன் — பெருந்தன்மையான மிகச் சிலரைத் தவிர்த்து.

தி.தி: `நான் அழகான பொண்ணைக் கல்யாணம் செய்துக்க மாட்டேம்பா. அப்புறம், அவள் ஒழுங்கா நடந்துக்கறாளான்னு கண்குத்திப் பாம்பா பாத்துக்கிட்டே இருக்கணும்!` பல ஆண்டுகளுக்குமுன், கோலாலும்பூர் ரெஸ்டராண்ட் ஒன்றில் இளைஞன் ஒருவன் தன் நண்பனிடம் கூறிக்கொண்டிருந்தான். இம்மாதிரியான பல முட்டாள்தனமான எதிர்பார்ப்புகளுடன் திருமணம் செய்துகொள்பவன் ஒருவனின் கதையை எழுதும்போதே எனக்குச் சிரிப்புப் பொங்கியது. படிப்பவர்களுக்கும் சிரிப்பு வந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

வணக்கம்.

நிர்மலா ராகவன்

நூலுரை


நா.கண்ணன்

கதைகள் உருப்பெறும் விதம் ஆச்சர்யமானது. சில சமயம் சொல்லியபடியே முழுக்கதையும் வாழ்வில் கிடைக்கும். பெயர்களை மட்டும் மாற்றவேண்டிவரும். சில நேரம் பிக்காசோ ஓவியம் போல் காட்சி கிடைக்கும். அதற்கு முன்னொட்டு, பின்னொட்டு போட்டு கதையை எழுத வேண்டும். சில நேரம் கதையின் காட்சி ஒன்று மட்டும் கிடைக்கும். அதை வைத்து ஒரு கதையைப் பின்னவேண்டும். கதைக்கரு கிடைக்கவில்லையே என வருந்துவோருக்கு தி.ஜானகிராமன் சொல்லுவார், ‘அப்படியே ஒரு நடை கடைத்தெருவிற்குப் போய் வாருங்கள், கதை கிடைத்துவிடும்!’ என்று. `உலகே ஒரு நாடக மேடை,` என்றார் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். உலக நாடகத்தின் முழுக் கதையமைப்பும் கிடைக்கவில்லையெனினும், அங்கொன்றும், இங்கொன்றுமென்று கதையின் அங்கங்கள் சிதறிக்கிடக்கின்றன. அதை வைத்து கதைக்குள் கதை உருவாகிறது.

வாழ்வை அப்படியே கதையாக்கிட முடிவதில்லை. நம் வாழ்வில் நமக்குக் கிடைப்பது நமக்கே நமக்கென்று உருவான காட்சிகள். அதற்கு தொடர்ச்சியுண்டா? நாம் பார்த்தபின் அக்காட்சித்தொடர் எப்படி அமையும் என்பது பிரம்ம ரகசியம். எனது ஆரம்பப்பள்ளியில் படித்த எவரையும் அந்தச் சில பள்ளியாண்டுகளுக்குப்பின் பார்த்ததில்லை. அவர்கள் வாழ்வு எப்படி அமைந்திருக்குமென்று எண்ணி, எண்ணி வியப்பதுண்டு. ஒருவரின் வாழ்வில் கடைசிவரை கூட இருப்பது இயக்கும் சக்தியான சைதன்யம்தான். அது கூட நம் கதையில் சுவாரசியம் கொள்ளுமா என்று தெரிவதில்லை. ஏனெனில் கர்ம பலனுக்கு அனுபவிக்கிறோமென்று ஆவிகூட விலகிக்கொள்கிறது. எனவேதான் சிறுகதைகள் முக்கியத்துவம் பெருகின்றன. ஆண்டவனுக்குக்கூட ஆர்வமில்லாத நம் வாழ்வின் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து கதையாக ஆக்கித்தருவோர் கதாசிரியர்கள்.

அந்த வகையில் நிர்மலா ராகவன் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்றாகிறார். ஒரு சிறு மானுடக்கரு, சிசுவாக வெளிவரும் நிலையில் என்ன யோசிக்குமென்று இவர் யோசிக்கிறார்.

பத்துக்கதைகள் கொண்ட தொகுப்பு இது. இக்கதைகளை வாசித்த போது என்னுள் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். எல்லாமே மலேசியக்கதைகள். மலேசிய மண்வாசனை கொண்ட கதைகள். தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி, தேவைகளுக்கு ஏற்ப கதைகளும் உருவாகின்றன. மு.வ எழுதிய கதைகளில் நிறையச் சமுதாய நெறி, ஒழுக்கம் பற்றிய சிந்தனை இருக்கும். நா.பார்த்தசாரதியின் கதைகளில் ஒரு ஆதர்சம் இருக்கும். ஒரு காவியத்தன்மை இருக்கும். அது போல் மலேசியச் சூழலுக்கு இன்னும் ஒழுக்கம், நெறி பற்றிய போதனைகள் தேவையாய் உள்ளன என்பதைச் சில கதைகள் நமக்கு சுட்டுகின்றன.

மலேசியா ஒரு சுவாரசியமான நாடு. மூன்று இனங்கள் வாழும் நாடு. வெவ்வேறு வர்ணங்கள். செம்புலப்பெயர் நீர் போல் கலந்துவிடாமல் அதனதன் வர்ணத்தைத் தக்க வைத்து வாழும் நாடு. ஆயினும் வர்ணங்கள் அருகில் வரும் போது சிறு கலப்பாவது நடக்காமல் இருப்பதில்லை. அவை பெரும்பாலும் கலாச்சார விழுமியங்களை ஏற்றுக்கொள்ளும் பாங்கில் அமைவதைக் காணலாம். சீனர்கள் அலகு குத்திக்கொண்டு தைப்பூசத்தில் பங்கு கொள்வது உலகப்பிரசித்தம். மிக அரிதாக பொட்டு வைத்துக்கொண்டு சீனப்பெண் தமிழ் நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருப்பதையும் இங்கு காணலாம். இத்தகையோர் தமிழ்ப் பெற்றோரால் தத்து எடுக்கப்படவர்களாக இருப்பர். இதை வைத்து ஒரு கதை. சீனப்பெற்றோர் மனம் மாறுவதற்குள் குழந்தையை அள்ளிக்கொண்டு வரும் தமிழ்த்தாய், வேற்றூருக்கு வந்து குடி கொள்கிறாள். தன் பெண்ணைச் சிலர் கேவலமாக ‘கிலிங்’(கலிங்கன்/இந்தியன்) என்று சொல்வதாக கதைப்பெண் முறையிடும்போது தமிழ்த்தாய் மெய்சிலிர்த்துப் போகிறாள். ‘நீ தமிழ்ப்பெண் தானே! உனக்கு அப்பண்பாட்டைக் கொடுப்பதற்கு நான் எவ்வளவு பாடு பட்டு இருக்கிறேன்’என்று பூரித்துப் போகிறாள். இது முரண்நகையாக இருந்தாலும், இன, ஜாதி பேதங்களுக்கு மேல் ஓர் உயிர் இன்னொரு உயிரின் மீது வாஞ்சை கொண்டு வாழவைக்கும் அதிசயத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. நிறம் என்பதுதான் நமது அடையாளத்தை உறுதியாகத் தீர்மானிக்கிறதா? என்ற ஆழமான கேள்வியை எழுப்பும் கதையிது.

இறைவனின் உவப்பிற்காகப் பிறப்பா? இல்லை பிறப்பின் உவப்பிற்கு இறைமையா? என சிந்திக்க வைக்கும் கதை ‘கடற்கரைப் பிள்ளையார்`.

மலேசிய சமூகக்குழுமங்களுக்கென்று தனித்தனியே சில குணங்கள் அமைகின்றன. சீனர்களெனில் சுறுசுறுப்பாக தன் கையே தனக்குதவி என்று வர்த்தக நோக்கில் வாழும் குடிகள் என்பதோர் கணிப்பு. பூமிபுத்ரா என்றழைக்கப்படும் மலேசியர்களோ, இப்பூமிக்கு நாம் சொந்தக்காரர்கள்; எனவே இருந்து அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பதுபோல் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு சொகுசாக இருப்பவர்கள் என்றொரு கணிப்பு. ஆனால் தமிழர்களின் இருப்பு அவர்களின் முன்னாளைய கொத்தடிமைத்தனத்தின் சாயலைக் கண்டு, சிலிர்த்தெழும் நோக்கில் வன்முறை அங்கங்கள் கொண்ட சமூகம் என்றொரு அபிப்பிராயமுண்டு. இதை ஒரு உயர் காவல்துறை அதிகாரியே சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழர்களிடத்தில் ஏனிந்த வன்முறை? இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழர்களின் கல்வி, மேம்பாட்டிற்கு அளிக்கப்பட்ட ஊக்கப்பங்கீடு அரசியல்வாதிகளால் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதொன்று. இதனால் மற்ற சமூகங்கள் கடந்த அரை நூற்றாண்டில் மடமடவென வளர்ந்து விட, தமிழ்ச் சமூகம் கொஞ்சம் பின் தங்கிய நிலையில் உள்ளது என்று கணிக்கப்படுகிறது. இன்று ரப்பர் தோட்டங்களெல்லாம் உருமாறி செம்பனை, ரியல் எஸ்டேட் என்றிருக்க, தோட்டத்தொழிலை நம்பி வந்த பலர் மாற்று வழி என்னவென்று தெரியாமல் திகைப்பது இன்றும் காணக்கிடைக்கிறது. சரியான கல்வி, சமூக மேம்பாடு, உளவியல் உந்துதல் இவையே முன்னேற்றத்திற்குத் தேவைப்படும் காரணிகள். ஆனால் அது இன்னும் முறையாக வழங்கப்படாததால் வன்முறை இன்றும் இவர்களிடம் அதிகமாக உள்ளதென்று அறியப்படுகிறது. இப்படியான சூழலை வைத்து வன்முறையில் ஈடுபட்டு கைதியாக மாறிய ஒரு மாணவனின் கதையை உளவியல் நோக்கில் சொல்ல முற்படுகிறது, `கதையே கருவானால்`.

நிர்மலா ராகவனின் நகைச்சுவை உணர்வை நன்றாகச் சொல்லும் கதை, ‘நெடுஞ்சாலையில் ஒரு பயணம்’. மிக இயல்பாக முதிர்ந்த தம்பதியரிடம் உள்ள குண நலன்களைப் படம் போட்டுக்காட்டும் கதை. ஒரு குழந்தையை அளிக்க முடியாத கணவன். அது குற்ற உணர்வாக அக்குடும்பத்தில் நிழலாடுவதை மெல்லிய கோட்டோவியமாக நிர்மலா வரைந்துள்ளார். அதை சமாளிக்கப் புறப்படும் பயணத்தைச் சொல்வதே கதை. வாழ்வின் சுவை, மனநிம்மதி என்பதைச் சார்புடையது. இச்சார்பை வெளிக்காட்டும் கதையிது.

குடும்பம் என்பது பெரும்பாலும் பெண்களால் கட்டமைக்கப்படுவதே. அதனாலோ என்னவோ நிர்மலா ராகவன் குடும்பச் சூழலை மிக நுண்ணிப்பாகக் கவனித்து தன் கதைகளை மெருகேற்றுகிறார். அப்பா, பிள்ளை உறவு என்பது எப்போதும் கொஞ்சம் சிக்கலானது. கே.பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’இதை நன்றாகப் படம் காட்டும். ‘ஆறாத மனம்’ கதையிலும்கூட இம்மாதிரி ஆறாத வடுவொன்று கதைக்கருவாகிறது.

குடும்பம் பெண்களால் கட்டமைக்கப்படும்போது தெய்வ நம்பிக்கை, சடங்குகள் என்பவை முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழகத்தில் வேண்டுமானால் பெண்கள் பின்நவீனத்துவ மார்க்கத்தில், ஈ.வே.ரா பெரியார் ஆசைப்பட்டது போல், விட்டு விடுதலையாகி மாற்று வாழ்க்கை வாழலாம். ஆனால் மலேசியாவில் இன்னும் பெண் என்றால் ‘பக்த கௌரி’ என்றே கணிக்கப்பட வேண்டும் எனுமோர் கருதுகோளை முன்வைக்கிறது ‘படப்பிடிப்பு’ எனும் கதை. வழக்கம் போல் தெய்வபக்தி இல்லாத கணவன், பக்த கௌரியான மனைவி எனும் சித்தரிப்பு. 60களில் வெளிவந்த தமிழ்த்திரைப்படங்கள் போல் பக்தி இல்லாத கணவனை மனைவி எப்படி அவனது பலவீனத்தைக் கொண்டு திருத்துகிறாள் என்பது கதை. கொஞ்சம் செயற்கையாகப் பட்டது எனக்கு.

இத்தொகுப்பில் மிக முக்கியமாக எனக்குப்படும் ஒரு கதை, ‘நிமிர்ந்த நினைவு’. பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை பற்றிய சூட்சுமமான ஒரு சித்தரிப்பு இக்கதை. டெல்லியில் ஒரு கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இறந்தபின், இப்பிரச்னை இன்னும் கூர்மை கொள்கிறது. பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் பாலியல் வறுமையுற்றுள்ளன. சமூகக் கட்டுப்பாடுகள் ஆணையும், பெண்ணையும் கூடி மகிழ வேண்டிய பருவகாலத்தில் சிறை வைக்க, பாலியல் கல்வியென்பது முற்றும் மறுக்கப்பட்ட நிலையில் இந்திய தாம்பத்தியம் மிகவும் ஆட்டம் கண்ட ஒரு நிலையில் உள்ளது. இந்த பாலியல் வறுமை குடும்பத்தில் வலுவான ஸ்தானத்திலுள்ள ஆணுக்கு குடும்பத்திலுள்ள பெண்களை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை அளிக்கிறது. இப்படி அவஸ்தைக்குள்ளாகும் பெண்கள் பாலியல் சார்ந்த கருத்தோட்டத்தில் பிறழ்ச்சியுற்று ஆரோக்கியமான பாலுறவு கொள்ள முடியாமல் தவிக்க, அதுவே

குடும்பத்தில் பிளவை உண்டு பண்ணுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பு குடும்ப உறவில் நடக்கும் பிறழ்வான பால் இச்சை வன்முறைகளே சமூக அளவில் காணும் பெரும் குறைகளுக்குக் காரணியாக அமைவதாகச் சொல்கிறது. இது மிகவும் சென்சிடிவ்வான விஷயம். அதை மிக அழகாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் நிர்மலா ராகவன்.

குடும்பம் எனும் நிறுவனம் மனிதக் கலாச்சார வளர்ச்சியின் ஒரு அங்கமாக செயற்கையாக உருவாக்கப்பட்டது. இதை நாம், நம் இதிகாச, புராணங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். இராமனின் தந்தைக்கு எண்ணிலடங்கா மனைவியர். மகாபாரத காலத்திலோ கண்ணனுக்கும், பார்த்தனுக்கும் கணக்குப் போட முடியாத மனைவியர். அதே நேரத்தில் ஒரு பெண்ணிற்கு ஐந்து கணவன்மார்கள். அதாவது, ஒரு ஆணுக்கு ஒரு பெண் எனும் சமகால குடும்ப நியதி உருவாகுவதற்கு முன்னுள்ள நிலை. உயிரியல் ஆய்வார்கள் கூட 99% பாலூட்டிகள் குடும்பச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இயற்கையான பாலுறவு கொண்ட உயிரிகளாக வாழ்வதாகச் சுட்டுகின்றன. கம்பன், ‘ஒரு இராமன், ஒரு பானம், ஒரு சொல், ஒரு மனைவி’ எனும் கருவில் இராமாயணம் செய்வதற்குக் காரணமாக இத்தகையதோர் ஒழுங்கற்ற சமூக அமைப்பு அவர் காலத்தில் தமிழகத்தில் இருந்ததாகவும், அதற்கான மாற்று ஆலோசனையாக இராமகாதையை முன்வைப்பதாகவும் சில ஆய்வாளர் சொல்வர். ‘சுதந்திரம்’ எனும் கதை ஒரு குடும்பம், ஒரு மனைவி, ஒரு கணவன், இவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டவர்கள் எனும் சமகால வாழ்வியலை மிக நாசூக்காக, ஒரு எள்ளலுடன் சொல்லும் கதை. பிள்ளை மீது அக்கறையில்லாத கணவன், மனைவிக்கு இன்னொரு ஆண் பரிச்சயமாகிறான் என்றவுடன், கூட வந்து இப்பெண்ணின் மீது தனக்குள்ள ஆளுமையை ஊர்ஜிதம் செய்வது கதையின் சுவையான பகுதி.

தமிழ்நேசனில் பரிசு பெற்ற மு.வ காலத்துக்கதை ‘நேற்றைய நிழல்’ எனும் கதை. கொஞ்சம் ‘குணா’ தமிழ்ப்படக்கதை போன்ற அமைப்புடைய கதை. இதுவும் உளவியல் சார்ந்த கதை. மலேசியச் சூழலில் விளைந்த கதை.

நிர்மலா ராகவனின் நகையுணர்வு மிளிரும் இன்னொரு கதை தி.தி என்பது. ஒருவகையில் நம் குடும்ப வாழ்வு என்பது எவ்வளவு நகைச்சுவைக்குரியது எனும் எள்ளல் தொனி கொண்ட கதை. மிகவும் நேர்த்தியான கதைப்போக்கு. வாழையடி வாழையென்று அப்பாவைப் போன்றதொரு பிள்ளை வந்து நிற்பது முத்தாய்ப்பு.

நிர்மலா ராகவன் எல்லோரும் சொல்லும் கதைக்கருவையும் கையாளுகிறார், அதே நேரம் பிறர் அஞ்சி ஒதுங்கும் கதைக்கருக்களையும் துணிந்து எடுக்கிறார். தி.ஜானகிராமனின் கதை மாந்தரைப் பற்றி தீவிர விமர்சனம் கொண்டவர் க.நா.சு. ஆயினும் இன்று தமிழன் நெஞ்சில் ஒரு கதை சொல்லி எனும் ஸ்தானத்தில் நீங்கா இடம் பெற்றவர் தி.ஜானகிராமன்தான் என்று சொல்லவும் வேண்டுமோ? அதே நளினம், கவனம் நிர்மலா ராகவனிடத்திலும் காணக்கிடைக்கிறது. கொச்சைப்படுத்தாமல் கையாளும் திறமை தெரிகிறது. இவரால் ஆண், பெண் எனும் வித்தியாசமில்லாமல் கதை மாந்தர் உள்ளத்துள் புகுந்து கதையைப் பின்ன முடிகிறது.

நிர்மலா ராகவன் மலேசியா போற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் எனும் தகுதியை எப்படித் தக்கவைக்கிறார் என்பதற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று.

நா.கண்ணன், PhD(Anal.Chem),PhD (Eco.Toxical)

பேராசிரியர்,

புத்ரா பல்கலைக்கழகம்,

செர்டாங், மலேசியா

நன்றி


இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை எழுதித் தர முடியுமா என்று நான் கேட்டபோது, சற்றும் தயக்கமோ, அல்லது, `எனக்கு வேலை வைக்கிறீர்களே!` என்பதுபோல் அயர்ச்சியோ காட்டாது, உடனே `சரி` என்று ஒப்புக்கொண்டு, நான் குறிப்பிட்ட தேதிக்குப் பத்து நாட்கள் முன்னதாகவே மிகச் சிறந்த முறையில் ஒரு நூலுரை கிடைக்கச் செய்து, என்னை ஆச்சரியத்துக்கும், நன்றிக்கடனுக்கும் ஆளாக்கிய பேராசிரியர் டாக்டர் நா.கண்ணன் அவர்களுக்கு.

நிர்மலா ராகவன்

ஆசிரியர் பற்றி


நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 171942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு


1967 தொடக்கம் இவர் மலேசிய தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் இவர் தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டு வருகின்றார்.

பரிசில்களும், விருதுகளும்


“சிறுகதைச் செம்மல்”விருது (1991)

“சிறந்த பெண் எழுத்தாளர்”விருது (1993)

சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006)

கல்வி: B.Sc., Dip.Ed

கர்னாடக இசை, பரதநாட்டியம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றவர். அவைகளுக்கான விமர்சனங்களை ஆங்கில தினசரியில் எழுதியுள்ளார். தொண்ணூறுக்கு மேற்பட்ட நாட்டியப் பாடல்களை இயற்றி, கர்னாடக இசை முறைப்படி அமைத்து, பதிவு செய்திருக்கிறார்.

மின்னஞ்சல் – nirurag@gmail.com

உரிமை

கருவே கதையானால் by நிர்மலா ராகவன்is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License

http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US


You are free to:


Share — copy and redistribute the material in any medium or format

The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms.

Under the following terms:


Attribution — You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.

NonCommercial — You may not use the material for commercial purposes.

NoDerivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material.

No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits.

1


இனம்


“டீச்சர் என்ன இனம்?”

தமிழிரசி அயர்ந்து போனாள்.

செல்வம் கொழிக்கும் மலேசிய நாட்டில், பள்ளிக்கூடங்களில் எல்லா முக்கியமான பாடங்களும் மலாய் மொழியில் இருந்ததால், `நீங்கள் எங்கள் மொழியைத்தான் பேச வேண்டியிருக்கிறது!` என்று அலட்டிக் கொள்வதுபோல் சில மாணவர்கள் நடந்து கொண்டார்கள். சீன, இந்திய இன ஆசிரியர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.

நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களிடையே மொழி, மதம் மற்றும் பழக்கவழக்கங்களில் பல்வித வேறுபாடுகள் இருந்தாலும், மேலோட்டமாக ஒற்றுமையும் இருந்தது.

பண்டிகை காலங்களில், பிற இன நண்பர்கள் வீட்டுக்குப் போவதன் சிறப்பை அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி, தாமும் அதன்படி நடந்து கொண்டதை ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த சந்தர்ப்பங்களில், பொங்கலுக்கு குர்த்தா, சீனப் புத்தாண்டுக்கோ சிவப்பு சாடின் துணியில், தொளதொளவென்ற முழுக்கையும், கழுத்தை மறைக்கும் `மாண்டரின்` காலரும் கொண்ட சட்டை என்று, இனத்துக்குத் தக்கவாறு உடை அணிந்துகொண்டார்கள். ரம்ஜானுக்கு, அவர்கள் வழக்கப்படி, மலாய் உடை — பட்டு வண்ணத் துணியில் சாரோங், அதே நிறத்தில் முழுக்கை சட்டை, இடுப்பில், சரிகை வேலைப்பாடு அமைந்த, அங்கவஸ்திரம் போன்ற ஒன்று, மற்றும் தலையில் குல்லா.

பண்டிகைகள் போதெல்லாம் குழந்தைகள் பாடு கொண்டாட்டம்தான். எந்தப் பண்டிகையாக இருந்தாலும், `அங் பாவ்` (ANG PAU) என்ற பெயரில், ஒன்று, இரண்டு, ஐந்து அல்லது பத்து ரிங்கிட்கூடக் கையில் கிடைக்கும், கொடுப்பவர்களின் வசதியைப் பொறுத்து. பக்கத்து வீட்டுக் குழந்தைகளைக்கூடக் கூப்பிட்டுக் கொடுப்பார்கள். சீனப் புத்தாண்டின்போது அவர்கள் வழக்கமாக இருந்தது இப்போது நாட்டின் பொது கலாசாரமாகிவிட்டது.

அவ்வளவு ஏன், இன ஒற்றுமைக்குச் சான்றாக அவளே இல்லையா?

ஒரு கீறலாக இருந்த கண்கள், மேடான கன்னம், கருத்த, நேராய்த் தொங்கும் நீளமான முடி என்று, தோற்றத்தில்தான் அவள் வேற்றினம். ஆனால், அவள் பெயரிலேயே தமிழ் இருந்தது. வளர்ப்புப் பெற்றோர்களின் உபயம்.

தமிழரசியைப் பெற்றவள், `ஏற்கெனவே மூணு பொம்பளைப் பிள்ளைன்னு மாமியார் என்னை ஏசிக்கிட்டே இருக்கிறா. இனிமே அடி, உதைதான்!` என்று அஞ்சி, அழுதாளாம். பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று நிச்சயிப்பது தந்தையின் விந்துதான் என்று அந்த பாமரப் பெண்மணிக்குத் தெரியவில்லை.

அவளுக்குப் பிரசவம் பார்த்த பொன்னம்மா, `எனக்குக் குடுத்துடேன், ஆ சௌ (மாமி)! நான் எடுத்துக்கிறேனே!` என்றெல்லாம் கெஞ்சி, வாங்கி வந்தாளாம்.

அப்போது அவளுக்கு நாற்பது வயது. கல்யாணமாகி `எத்தனையோ` வருடங்கள் கடந்திருந்தும், வயிறு என்னவோ திறக்கவில்லை. புறம்போக்கு நிலத்தில் அந்த `சீனச்சி` வைத்திருந்த சிறு மளிகைக் கடையில் பருப்பு வகைகளைப் புடைத்து, கல் பொறுக்கி, அவள் அறிவுரைப்படி சற்றே குறைத்து அளவிட்டுச் சாமான்களை விற்பதுமாக மாதம் அறுபது வெள்ளிக்கு வேலை செய்துகொண்டிருந்த சமயம் அது. பிறர் வீட்டு வேலைக்குப் போனாலும், இதே சம்பளம்தான் கிடைக்கப் போகிறது! இங்காவது, யார் கண்ணிலும் படாமல் அரிசி, முந்திரி என்று அவ்வப்போது வாயில் போட்டு மெல்லலாமே என்ற திருப்தி அவளுக்கு.

என்றாவது பெற்றவள் தன் உடைமையை திரும்பக் கேட்டுவிடுவாளோ என்று பயந்து, வேறு ஊருக்கு வந்துவிட்டதையும் பருமனான உடலதிரச் சிரித்தபடி கூறுவாள் பொன்னம்மா. இன்னாரிடம் என்றில்லை. அவள் சுபாவப்படி, நடந்து முடிந்ததை எல்லாம், மாடு அசை போடுவதுபோல், உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவள் பொழுதுபோக்கே அதுதான் — இடைவிடாது பேசிக்கொண்டிருப்பது. எங்காவது ஆரம்பித்து, எதிலாவது கொண்டு முடிப்பாள்.

அப்படித்தான் தமிழரசி தன் பிறப்பைப் பற்றி அறிந்துகொண்டாள். எத்தனையோ கதைகளுடன் அதுவும் ஒன்றாகிவிட, இயல்பாக ஏற்றுக் கொண்டிருந்தாள்.

பள்ளத்தாக்கில் அமைந்த புறம்போக்கு நிலத்தில், கோணல்மாணலாக அவரவர்கள் கட்டிக்கொண்டிருந்த, எங்கெங்கோ பொறுக்கிவந்த மரப்பலகைகளும், அலுமினியத் தகரங்களும் கொண்டு உருவாக்கப் பட்டிருந்த வீடுகளில் ஒன்று அவர்களுடையது.

தந்தை சின்னப்பன் லேரரி ஓட்டுநர். பிறரைப்போன்று சிகரெட், சம்சு (மலிவு ரக மது) என்று பணத்தையும், நேரத்தையும் வீணாக்காது, தன் வேலை உண்டு, தொலைகாட்சி உண்டு என்றிருந்தார். பிறரிடமிருந்து அவர் எல்லா விதத்திலும் வித்தியாசமாகத்தான் இருந்தார். `காது செவிடாறதுக்கா டி.வி. போடுவாங்க?` என்று, மறைமுகமாக அக்கம்பக்கத்தினர் தம் இல்லங்களிலும் அந்த விலையுயர்ந்த பொருள் இருக்கிற பெருமையைப் பறைசாற்றுவதைக் கேலி செய்வார். நேரம் கிடைத்தபோதெல்லாம், தமிழ், ஆங்கிலம் என்றில்லை, மாண்டரின், காண்டனீஸ் ஆகிய சீன மோழிகளுடன், கெரரியப் படங்களையும், பாடல் நிகழ்ச்சிகளையும்கூட விட்டுவைத்ததில்லை அவர். ஒலி அவர் காதிலாவது விழுமா என்பதே சந்தேகமாக இருக்கும்.

பள்ளி ஆசிரியைகள் எப்போதும், தம்மையுமறியாது, உரக்கப் பேசுவார்களாம். வகுப்பில் கத்தியே பழகிவிட்டதால் வந்த வினை.

சின்னப்பனோ, தாம் ஓட்டும்போது கடகட சத்தத்தை ஓயாது கேட்க நேரிட்டதாலோ, என்னவோ, எந்த ஒலியையுமே வெறுப்பவராக நடந்துகொண்டார். அவர் பேசுவதே அபூர்வம். எப்போதாவது வாயைத் திறந்தாலும், `தாமான்` (TAMAN) என்று வழங்கப்பட்ட, ஆயிரக்கணக்கில் விலைமதிப்புள்ள வீடு வாங்குவதைப்பற்றித்தான் இருக்கும்.

`தாமான் வீடுன்னா செங்கல்லாலும், சிமெண்டாலும் கட்டி இருப்பாங்க. சின்ன தோட்டமும் இருக்கும். மழை வந்தா, இப்படி வீட்டில இருக்கிற மங்கு, பாத்திரங்களை எல்லாம் தரையில வெச்சு, இருக்கிற வேலையையெல்லாம் விட்டுட்டு,கூரையைப் பிய்ச்சுக்கிட்டு ஒழுகற தண்ணியைப் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்டற பேஜார் பிடிச்ச வேலை இருக்காது,` என்று அடிக்கடி சொல்வார். ஏதோ நல்ல கனவு காண்கிற பாவத்தில் கண்கள் கிறங்கியிருக்கும்.

சின்னப்பனுடைய கனவு கனவாகவே போய்விட்டது.

அவளுக்குப் பன்னிரண்டு பிராயமாக இருந்தபோது நடந்தது அது. இரவு முழுவதும் வேலை செய்த களைப்பில், விடியற்காலையில் திரும்பும்போது, பேருந்துக்காகக் காத்து நின்ற ஐந்து பள்ளிச் சிறுமிகள்மேல் சின்னப்பன் மோத, தலத்திலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. தன் உடலில் ஒரு சிராய்ப்புகூட இல்லாமல் தப்பித்தது அவரது குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது. தூக்கக் கலக்கமோ, அல்லது பிரேக் பிடிக்கவில்லையோ, அது அப்போது முக்கியமாகவில்லை.

`நான் மகாபாவி! அந்தப் பிஞ்சுகளை அநியாயமா அழிச்சுட்டேனே!` என்று கதறியபடி, மார்பில் ஓங்கி அறைந்துகொண்டார், இதயமே நிற்கும்வரை. விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஒரு நாள்கூட அனுபவிக்காது, அந்த வகையில் குடும்பத்துக்குப் பழி நேராது போய்விட்டார் புண்ணியவான்.

சரிந்துவிட்ட தங்கள் குடும்ப நிலையைத் தான்தான் நிமிர்த்த வேண்டும் என்று அந்த இளம் வயதிலேயே தமிழரசிக்கு உறுதி ஏற்பட்டது. அவள் பிறந்த இனத்துக்கே உரிய அலாதி சுறுசுறுப்பும், எடுத்துக்கொண்ட எந்த காரியத்தையும் துல்லியமாக முடிக்கும் திறனும் அவளுடைய ரத்தத்திலேயே கலந்து வந்திருந்தன.

தந்தை இல்லாத குறை தெரியாதிருக்க, தாய் அவளிடம் இன்னும் பாசத்தைக் கொட்டினாள். `நான்தான் படிக்காத முட்டாளாயிட்டேன். நீயாவது நல்லாப் படிக்கணும், கண்ணு!` என்று நாள் தவறாது சொல்லிச் சொல்லி பொன்னம்மா அவளை வளர்த்ததில், இன்று தமிழரசி பட்டதாரி ஆசிரியை. பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தின் உபகாரச் சம்பளம் பெற்ற ஆயிரத்தில் ஒரு தமிழச்சி.

`எம்மக கவர்மெண்டு ஸ்கூல்லே படிச்சுக் குடுக்குது!` என்று பூரிப்புடன், அவள் காதுபடவே பொன்னம்மா பார்ப்பவரிடமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, வேண்டாத நான்காவது மகளாய், எங்கேயோ கிடந்து இடிபட்டிருக்க வேண்டிய தன்னுடன் பிறந்த அக்காமார்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் இருந்திருக்குமா என்று யோசித்துப் பார்ப்பாள் தமிழரசி.

அவர்கள் மேற்படிப்பு படித்திருப்பார்களா, அல்லது, `பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?` என்ற தாயின் சொற்களை ஏற்று, கடையில் எடையைக் குறைத்துப் போட்டு, பெருலாபம் பார்த்து, கடையை விரிவுபடுத்தியிருப்பார்களா?

`பெண்` என்றாலே பலருக்கும் அலட்சியம்.

கற்காலத்தில் கொடிய வனவிலங்குகளுடன் சண்டை போட்டு, தன் உயிரைப் பணயம் வைத்துக் கானகத்தில் உணவு தேடி வந்ததால், ஆண் வைத்தது சட்டமாக இருக்கலாம். இன்று என்ன வந்தது!

அவளுடைய பள்ளித்தோழி சியூ வா‹, எப்போதோ சொன்னது நினைவில் எழும். `மேலே படிக்கணும்னு நான் எவ்வளவோ ஆசைப்பட்டேன். ஆனா, `ஒருத்தரை படிக்கவைக்கத்தான் வசதி இருக்கு. அதனால, ஒங்கண்ணன் படிச்சா போதும்,`னுட்டாங்க எங்கம்மா. அவனுக்கோ படிப்பிலே ஆர்வமே கிடையாது. இதை நான் சுட்டிக் காட்டினதும், `அவன்தானே கடைசிக் காலத்தில் எங்களை வைச்சுக் காப்பாத்தப் போறான்! நீ எப்படியும், கல்யாணமாகி, இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போறவதானே!ன்னு அலட்சியமா சொல்லிட்டாங்க. `அவன் காப்பாத்துவான்னு என்ன நிச்சயம்?` அப்படின்னு நான் சண்டை போட்டுக்கூட பாத்துட்டேன். ஆனா, அவங்க காதிலேயே போட்டுக்கல,` என்று அவள் துக்கம் தொண்டையை அடைக்க சொன்னதை எப்படி மறக்க முடியும்!

நல்ல வேளை, அவள் குடும்பத்தினரோ, உறவினரோ, `நீ வெறும் பொம்பளைப் பிள்ளைதானே! எங்களைப்போலக்கூட இல்ல. ஒனக்கு மஞ்சத்தோலு. அதோட, பெத்தவங்க தூர வீசிட்ட பிள்ளை நீ!` என்றெல்லாம் ஒரு முறைகூட அவளைப் பழித்ததில்லை.

இப்போது, அவளுடைய இருபத்தாறாவது வயதில் ஒரு தறுதலை கேட்கிறான், அவள் என்ன இனம் என்று!

சமாளித்துக்கொண்டு, தமிழரசி பதில் சொல்வதற்குள், இன்னொருவன் உரக்கக் கூறினான், “சாரி கட்டி, நெத்தியில புள்ளி வைச்சிருக்காங்களே, தெரியல? கெலிங் (KELING) தான்!” என்று.

வகுப்பில் ஒரு கணம் மௌனம்.

`கலிங்கத்திலிருந்து வந்தவர்கள்` என்று பொருள்பட, தமிழர்களை, கெலிங் என்று குறிப்பிடுவார்களாம். முன்பு எப்போதோ. அது இப்போது கெட்ட வார்த்தையாக, ஒரு இனத்தையே கேவலப்படுத்தும் சொல்லாக மறுவிவிட்டது — `ஆப்பிரிக்க அமெரிக்கர்` என்பதுதான் சரி, `நீக்ரோ` என்ற பதம் அவமரியாதையாகக் குறிப்பது என்பதுபோல்.

அண்மையில், புதிய அகராதி ஒன்றில் `கெலிங்` என்ற அந்த கெட்ட வார்த்தை இடம் பெற்றபோது, மலேசியாவிலிருந்த எல்லா இந்திய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டனம் தரிவித்து, அதை அகற்றச் செய்திருந்தனரே!அதெல்லாம் இந்த மாணவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

அவள் சிறு வயதில் இருந்ததைப்போன்று, வறுமைக்கோட்டின்கீழ் இருந்தார்கள் அவர்கள். பதினான்கு வயதிலும், எந்த ஒரு எழுத்தையும் படிக்கத் தெரியாது, தம் பெயரைக்கூட எழுதத் தெரியாதிருந்த சிலரும் அவ்வகுப்பில் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதான். பெரும்பான்மைச் சமூகத்தினர் ஆனாலும், பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து போனவர்கள். சமூகத்தில் தமக்குக் கிடைக்காத மதிப்பை நிலைநாட்டிக்கொள்ள வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை, பாவம்!

இப்படியெல்லாம் அறிவு விவாதித்தாலும், தமிழரசிக்கு ஆத்திரமும், வருத்தமும் ஒருங்கே எழுந்தன.

“டீச்சர் இண்டியா!” என்று அவள் போதிக்கும் மலாய் மொழியில் பதிலளித்தாள். குரலில் ஆக்ரோஷம்.

மனம் சற்று கிலேசப்படும்போது, வேறு வேண்டாத நினைவுகளும் வந்து, இன்னும் குழப்பும்.

சமீபத்தில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி — எதிராளியின் தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதுபோல் — அமைந்ததே, அது எப்போது என்று அவள் யோசித்தாள்.

ஓ! நேற்று மாலை கோலாலம்பூருக்கு அருகில், கெப்போங்கில் சீ ஹாக்குடன் தேநீர் அருந்தியபோது!

சீ ஹாக் மலாயா பல்கலைக் கழகத்தில்அவளுடன் படித்தவன். அவர்களுடைய தொடர்பை நிரந்தரமாக்கிக் கொள்ளும் உத்தேசத்துடன் இன்னமும் அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் முறைப்படி லைசன்சுடன் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுக்கடை அது. ஓரடிகூட இடைவெளி இல்லாது, சிவப்பு நிறத்தில் மலிவான பிளாஸ்டிக் நாற்காலிகளும், விரிப்பற்ற மூளி மேசைகளும் (மேடு பள்ளமாக இருந்த சிமெண்டுத் தரையில் ஆடாமல் இருக்க அவற்றில் சிலவற்றின் கால்களுக்குக்கீழ் மடித்து வைக்கப்பட்ட, பழுப்பாக நிறம் மாறிவிட்ட பழைய சீன தினசரிகள்) நிறைந்த ஹாக்கர் ஸ்டால் (HAWKER STALL) அது. பூதாகாரமான மின்விசிறிகளைத் தரையில் வைத்திருந்தும், ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை.

வாழ்க்கையை வளப்பமாக ஆக்கிக்கொள்ள இவ்வளவு தூரம் சிரமப்பட்டுவிட்டு, இப்போது ஏன் பின்னோக்கிப் போவதுபோல் இந்த மாதிரி கடைக்குள் நுழைய வேண்டும் என்று அவள் தயங்க, “ஒரு தடவை வந்து சாப்பிட்டுப் பாரு! பெரிய ரெஸ்டாரண்டுகளில செய்யறதுபோல, அஜினோமோடோவை எல்லாத்திலும் போடறதில்ல இங்க. சைனாவில பண்ணறமாதிரியே விதவிதமா சாமான்களை இவங்களே அரைச்சுக்கிறாங்க. விலையும் கொள்ளை மலிவு!” என்று பலமாக சிபாரிசு செய்து, அவளை அங்கு அழைத்து வந்திருந்தான் கல்லூரி நண்பன். “முந்தி எங்க பாட்டி இருந்தப்போ, இப்படித்தான் சமைப்பாங்க!” என்று சேர்த்துக்கொண்டான், பழைய நினைவுகள் கிளப்பிவிட்ட ஏக்கத்துடன்.

தமிழரசி, `தே சீ` என்று, பால் கலந்த டீயைக் கேட்டு, ஏற்கெனவே ஊற்றப்பட்ட சீனிப்பாலுடன், ஓரிரு ஸ்பூன் சீனியும் கேட்டு வாங்கி, அப்படிக் கலந்த டீயை விரும்பிப் பருகினாள்.

சூப்புடன் கலந்து, வெடுக்கென்றிருந்த `வான் தான் மீ`யை சாப் ஸ்டிக் பாவித்துச் சாப்பிட்டான் சீஹாக். ஒரு பெரிய கிளாசில் வந்த `சைனீஸ் டீ`யை இடையிடையே குடித்தவனைப் பார்த்து, `இந்தக் கசப்பை எப்படித்தான் குடிக்கிறீங்களோ!` என்று தமிழரசி ஆச்சரியப்பட்டாள். `எனக்கு எல்லாமே இனிப்பா இருக்கணும்!` என்று அதே மூச்சில் தெரிவிக்கவும் செய்தாள்.

அவன் முகம் இறுகியது. “இண்டியன்!” என்று குற்றம் சாட்டுபவனைப்போல் கூறினான்.

அவளுடன் பூப்பந்து விளையாடும்போது, எதிராளியைத் தோற்கடிப்பதே குறியாக, `ஸ்மாஷ்` செய்வதைப்போன்று கடுமையாக வந்தது அச்சொல்.

தமிழரசி அயர்ந்து போனாள். பேச்சுவாக்கில் தான் ஏதோ சொன்னதற்கு இப்படி ஒரு எதிர்ப்பா!

தன்னை ஏன் எல்லாரும் வித்தியாசமகவே பார்க்கிறார்கள்?

கனத்த இதயத்துடன் பள்ளியிலிருந்து திரும்பியவளிடம் இருந்த மாறுதல் அன்புத் தாயின் கண்களுக்குத் தப்பவில்லை.”இன்னிக்கு வேலை அதிகமா, பாப்பா? முகமெல்லாம் வாடி இருக்குதே!”

அவளிடம் சொல்வதா, வேண்டாமா என்று ஒரு வினாடி யோசித்த தமிழரசி, “ஸ்கூல்ல ஒரு பையன் என்னை கெலிங்னு சொன்னாம்மா,” என்று குழந்தைபோல் தெரிவித்தாள். குரல் கம்மியது.

தான் பட்ட அவமானத்திற்காக தாயும் ஆத்திரப்படுவாள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளுக்குத் தோல்விதான்.

“எம்மக பின்னே யாரு?” பொன்னம்மா சிரித்தாள், கடகடவென்று. “ஒனக்குச் சின்னப் பிள்ளையிலிருந்தே கண்ணுக்கு மை பூசி, நெத்தியிலே பெரிய கறுப்புப் பொட்டிட்டு, கடலையெண்ணை வெச்சு தலைமுடியைச் சீவி, பின்னல்ல பூ வெச்சு, கைக்கு காப்பு மாட்டி — எவ்வளவெல்லாம் செஞ்சிருக்கேன்!” பெருமையுடன் நினைவுகூர்ந்தாள். கண்கள் கிறங்கின. அருமை மகளின் கன்னத்தைத் தடவி, நெற்றியின் இருபுறங்களிலும் காய்த்துப்போன விரல்களை வைத்து நெறித்தாள். “நம்பளைத் தவிர வேற யாரு இப்படி எல்லாம் அலங்காரம் செஞ்சுக்கிறாங்க இங்க? ஒன்னைப் பாக்கிறவங்க யாரும் — ஒன்னைப் பெத்த சீனச்சியே வந்தாக்கூட — தமிழவங்க வீட்டுப் பிள்ளைதான்னு சொல்வாங்க!” என்றவள், “போய், தண்ணி குடி, போ! சுடுதண்ணி போத்தல்ல விட்டு வெச்சிருக்கேன்!” என்று அந்தப் பேச்சை முடித்தாள். தினமும் செய்வதுதான். இருந்தாலும், வேண்டாத பேச்சை முடிக்க அது ஒரு நல்ல உபாயமாக இருந்தது.

கெட்டியாக, இனிப்பாக இருந்தது அம்மா கலக்கி வைத்திருந்த பானம். பெயர் மட்டும் கோப்பித்தண்ணி.

தமிழரசியின் உதடுகள் புன்னகையில் லேசாக விரிந்தன.

`பெயரில் என்ன இருக்கிறது!` என்று அவள் நினைப்பு ஓடிற்று.

நம்மைப் படைத்து, ஆட்டுவிக்கும் தெய்வம் என்னவோ ஒன்றுதான். ஆனால், இடத்துக்கு இடம் அதன் பெயரும், வணங்கும் முறைகளும் வேறுபடுகின்றன.

எங்காவது இரண்டு மனிதர்கள் ஒன்றுபோல் இருக்கிறார்களா! இருந்தாலும், தம்மைப்போல் அல்லாதவர்களை `மட்டம்` என்று பழித்துக் கேலி செய்வதில் ஒரு ஆனந்தம் பலருக்கு. பிறர் தாழ்ந்தால்தான் தாம் மேலே இருப்பதுபோல் பாவனை காட்ட முடியும் என்று நினைக்கும் அல்பங்கள்!

ஒற்றுமையை ஆதாரமாகக் கொண்டு, உறவை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, சிறு சிறு மாறுபாடுகளை எதற்காகப் பெரிது பண்ணுகிறார்கள்?

`இண்டியன்!` என்று அவளைப் பழிப்பதுபோலக் கூறிய சீ ஹாக்கையும், இனப் பெயரைக் கொச்சைப்படுத்திய மாணவனையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். பரிதாபம்தான் எழுந்தது.

கல்லூரி நண்பன் மறுநாள் காலை ஆறு மணிக்கே அழைத்தான், தொலைபேசிவழி.”ஹை, டமில்! ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டியா? நம்ப கல்யாணத்தைப்பத்தி என்ன சொன்னாங்க?” ஆவலுடன் விசாரித்தான்.

“அது நடக்காது, சீ ஹாக்!” என்றாள் தமிழரசி, உறுதியான குரலில்.

2


கடற்கரைப் பிள்ளையார்


1910

“டேய்! இந்தக் கல்லு முடியுமா, பாரு!”

“இதைத்தாண்டா இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருக்கோம். இனிமே இது வெறும் கல் இல்லே. சாமி!”

அந்தக் கருங்கல்லை ஒரு பெரிய மரத்தடியில் நட்டுவிட்டு, தயாராக வைத்திருந்த சிவப்புத் துண்டை அதன்மேல் போர்த்தினார்ககள். மண் தரையில் விழுந்து, தலைமேல் கைகூப்பிக் கும்பிட்டார்கள்.

அவர்களது குறைகளையும், அற்பசொற்ப ஆனந்தங்களையும் பகிர்ந்துகொள்ள பிள்ளையார் வந்துவிட்டார் என்ற திருப்தியுடன், பிறரிடமும் அதைப்பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்ளப் போனார்கள் அவ்விரு இளைஞர்களும்.

தீபகற்ப மலாயாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு அருகில் காடாக இருந்த பகுதியில் ஒரு புதிய கோயில் இப்படித்தான் உருவாயிற்று.

1960

பசுமையான மரங்கள் அடர்ந்திருந்த இடம் சிமெண்டுக் காடாக, வீடுகளும், பள்ளிக்கூடங்களும், ஓரிரு மருத்துவசாலைகளும் அதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அக்கம்பக்கத்தவர் நாடி வந்த அந்த பிள்ளையார் கோயிலும் வெறும் மரத்தடியாக இல்லாமல், செங்கல்லும், சிமெண்டும் சேர்ந்து, தூண் வைக்கப்பட்ட மண்டபமாக மாறியிருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முட்டை வடிவக் கல்லாக இருந்த பிள்ளையார் இப்போது யானை முகத்துடன் வீற்றிருந்தார். சரிகை போட்ட வேட்டியில் கம்பீரமாக இருந்தார்.

நாட்டின் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, பௌத்த மதத்தைச் சேர்ந்த சீன இனத்துப் பக்தர்களுக்கும் `டோடோ` (TOTO) என்ற லாட்டரிவழி, ஒரு காகிதத்துண்டில் அவர்கள் குறித்துக் கொடுத்த நான்கு எண்களில் சிலவற்றையாவது சரியாக வரும்படி செய்து, தனக்கும் நல்ல வரும்படி தேடிக்கொண்டார். மாதமுழுவதும் பணத் தட்டுப்பாடு இல்லாமல் செய்த கடவுளுக்கு எல்லாரும் அள்ளிக் கொடுத்தனர். ஏதாவது ஒரு காரியம் கைகூட அதிகாரிகளுக்குக் கொடுப்பதில்லையா? அந்த வழக்கம்தான்.

ஒருவர் மட்டும்தான் பிள்ளையாரைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டார்.

அவர் — கணபதி. எல்லாம் தான் மாதமெல்லாம் உழைத்துச் சம்பாதிப்பதை இந்த குண்டுப் பிள்ளையார் உட்கார்ந்த இடத்தில் சதுர்த்தி தினங்களிலோ, அல்லது ஓரிரு வெள்ளிக்கிழமைகளிலோ சம்பாதித்து விடுகிறாரே என்ற ஆற்றாமைதான்.

`ம்! இவருக்கும் என் பெயர்தான். இவருடைய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தால்!`என்று தனக்குள் பொருமியவற்கு ஒரு உத்தி தோன்றியது. பிள்ளையாருடன் கூட்டு சேர்ந்துகொண்டால்?

தான் நினைத்ததைச் சாதிக்க முதல் படியாக, அனுதினமும் கோயிலுக்குத் தவறாது வந்தார் கணபதி.

நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டபடி, “பிள்ளையாரப்பா! பிழைக்கும் வழியைச் சொல்லப்பா!” என்று பலர் காதிலும் படும்படி மனமுருகி வேண்டினார். ஏதாவது பண்டிகை வந்தால், வரிந்து கட்டிக்கொண்டு, பொங்கல், புளியோதரை, கொழுக்கட்டை என்று (பிறர் கொண்டுவந்த) பிரசாதங்களை பக்தர்களுக்கு விநியோகிக்கவும் கணபதி தவறவில்லை.

சில மாதங்களிலேயே, கோயிலுக்கு வருகிறவர்களுக்கு, பிள்ளையாருக்கு அடுத்தபடி கணபதிதான் மிகவும் தெரிந்தவரானார்.

கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டபோது, எவ்வித தடங்கலும் இல்லாது, தலைவராக கணபதி தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமென்ன?

முதலில் ஒரு சொந்த வீடு வாங்கினார், “சாமி! ஒனக்கு நிரந்தரமா தங்க ஒரு இடம் இருக்கிறமாதிரி ஒன் பக்தனுக்கும் வேணாமா?” என்று முறையிட்டுவிட்டு. தான் செய்வது தவறில்லை என்று அந்த கேரரிக்கையிலேயே சமாதானம் ஏற்பட்டது.

“ஒனக்கென்னப்பா! மனைவியா, பிள்ளைக்குட்டியா! ஒரு பிடுங்கல் இல்ல!” என்று அங்கலாய்க்க, அடுத்த கட்டமாக, மனைவியின் வங்கிக்கணக்கு எகிறியது.

நல்ல வேளை, பிள்ளையார் இளைக்க வழி இருக்கவில்லை.

அர்ச்சனை, உண்டியல் ஆகியவற்றால் கிடைத்த பணம்தான் நம் வீட்டுக்குத் திருப்பப்படுகிறது என்று சந்தேகமறப் புரிந்ததும், “சாமி குத்தம்ங்க!” என்று பயந்த மனைவியிடம், “அடி பைத்தியமே! நமக்குக் குடுக்கத்தானே சாமியே இருக்காரு! இல்லாட்டி, ஒனக்கு ஒரு டஜன் தங்க வளையலுங்கதான் வாங்க முடியுமா?” என்று கணபதி விவரிக்க, அவள் அடங்கிப் போனாள்.

1997

`வர வர, எல்லாரும் கஞ்சனாயிட்டானுங்க!` என்று மனத்துக்குள் வைதுகொண்டார் கணபதி.

நாட்டில் பொதுவாகப் பரவியிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு கோயிலையும் விட்டு வைக்கவில்லை. கணபதியின் பேராசைக்கு உண்டியல் பணம் ஈடு கொடுக்கமுடியாது போயிற்று.

அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மை விளங்கியது: ஒரு சந்நதி, ஒரு உண்டியல் என்று இருப்பதால்தானே வரவு இவ்வளவு குறைவாக இருக்கிறது!

அடுத்த கூட்டத்தில், “நம்ப கோயிலுக்குச் சொந்தமா இவ்வளவு பெரிய நிலம் இருக்கு. பிள்ளையார், பாவம், தனியா இருக்காரு. அவரோட தம்பி முருகனுக்கும் ஒரு சந்நதி கட்டினா என்ன?” என்று, தொண்டையைக் கனைத்தபடி ஆரம்பித்தார்.

அவருடன் பங்கு சேர்ந்துகொண்டிருந்த மைத்துனர், “அருமையான யோசனை, மாமா. அப்படியே அவங்க அப்பா நடராஜனுக்கும், அம்மா சிவகாமிக்கும் சேர்த்தே கட்டணும்!” என்று ஆமோதித்தார்.

இன்னொருவர் அப்பாவித்தனமாக, “தில்லை நடராஜனே நமக்காக கடல் கடந்து மலேசியாவுக்கு வந்து தரிசனம் குடுக்கிறாருன்னு செய்தி பரப்பினா, நிறைய பேர் நம்ம கோயிலுக்கு வருவாங்க,” என்று திட்டம் வகுத்துக் கொடுத்தார்.

கோயிலை விரிவு படுத்துவதென்றால் சாமானியமா?

அந்த கைங்கரியத்துக்காக பக்தர்கள் உண்டி குலுக்கினார்கள், வீடு வீடாகச் சென்று. எதிர்பார்த்ததற்கு மேலேயே நிதி கிடைக்க, `போனால் போகிறது` என்று ஒரு கோபுரமும் கட்ட முடிவெடுத்தார் கணபதி. வரவு, செலவெல்லாம் அவர் கண்காணிப்பில்தான் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

எதிர்பார்த்தபடி, இரண்டு சந்நிதானங்களில் அமைந்த இரு உண்டியல்களால் நிறையப் பணம் கிடைக்கவில்லை. ஒன்றில் பணம் போட்டவர்கள், அடுத்த கடவுள் விக்கிரகத்துக்கு முன்னால் தரையில் விழுந்து கும்பிட்டதுடன் நிறுத்திக் கொண்டனர்.

கணபதி யோசிக்க ஆரம்பித்தார்.

2000

பிள்ளையார் கோயிலின் மகிமை சில ஆன்மிக சஞ்சிகைகளின் மூலம் அயல் நாடுகளுக்கும் பரவ, வெளிநாட்டவர்களின் வரவு அதிகரித்தது. அதிலும், இந்திய மொழி, அல்லது கலாசாரம் தெரியாத ஜப்பானியர்கள் போன்றவர்கள் வந்தால், அவர்கள் பிரத்தியேகமாகக் கவனிக்கப்பட்டார்கள்.

அதற்குக் காரணம் இருந்தது.

உள்நாட்டவர் அர்ச்சனைத் தட்டில் ஐம்பது காசு போட்டுவிட்டு, கடவுளிடம் அதற்கு ஈடாக ஐயாயிரம் ரிங்கிட் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தித்தனர். இந்தக் பேரமெல்லாம் அறியாத வெளிநாட்டவர்கள் ஐந்து, பத்து என்று பச்சை, சிவப்பு நிற ரிங்கிட் தாள்களை அள்ளி வீசினர்.

இனி நாம் பிழைக்க இவர்களை அண்டினால்தான் முடியும் என்று தீர்மானித்தார் கணபதி. கோயில் தலைவராக அவர் பதவியேற்று பல்லாண்டுகள் ஆகியிருந்தபோதும், அவரை எதிர்க்கும் துணிவு எவருக்கும் இருக்கவில்லை. அபூர்வமாக அவரைத் தட்டிக்கேட்ட ஓரிருவரும் சொல்லி வைத்தாற்போல் விபத்துக்குள்ளானார்கள். அதன் விளைவாக, `கணபதி தமது வலது கையாக இருப்பதைத்தான் பிள்ளையார் விரும்புகிறார். ஏனெனில், பெயர் பொருத்தம் மட்டுமின்றி, பெரிய பக்தராகவும், இடைவிடாது கோயிலை புதுப்பிக்க முடிவுகள் எடுத்து, அதற்காகக் கடுமையாக உழைப்பவராகவும் இருக்கிறார்` என்று செய்தி பரவிற்று.

கோயிலில் மண்டபங்களும், சந்நிதானங்களும் பெருக, வளாகத்தில் இருந்த அடர்ந்த மரங்களை வெட்டவேண்டியதாயிற்று. அங்கே வாழ்ந்து வந்த குரங்குக் கூட்டங்கள் கோயிலுக்குள்ளேயே வர ஆரம்பித்தன. குழந்தைகளும், பெரியவர்களும் அர்ச்சனை செய்து பெற்றிருந்த வாழைப்பழத்தையும், தேங்காய் மூடியையும் அந்தக் குரங்குகளுக்கு அளித்து மகிழ்ந்தனர். கருமித்தனம் செய்தவர்களின் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு, தாவியோடின அம்மிருகங்கள்.

இந்த வேடிக்கையை தமது புகைப்படக் கருவிகளிலும், வீடியோ கேமராவிலும் பதிவு செய்த வெளிநாட்டவர்களைப் பார்த்ததும் கணபதியின் கற்பனை கரைபுரண்டோடியது.

`கேவலம், குரங்கையே பார்த்து பிரமிக்கிறார்களே! மேல் நாட்டில் இல்லாத பாம்பு, தேள், மயில் போன்ற பிற ஜீவன்களையும் இங்கு கொண்டுவர முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!` என்று எண்ணமிட்டார்.

இப்போது, கோயில் மிருகக் காட்சிசாலையாக மாறியது. கோயிலின் முன் பகுதியிலேயே முதலை, ஆமை, வண்ணப் பறவைகள் என்று பலவும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன.

அவைகளுக்கெல்லாம் தீனி போட்டு, அந்த இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள காசு வேண்டாமா?

வேடிக்கை பார்க்க வந்தவர்கள் நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே போனார்கள். பொழுது நன்றாகப் போனதால், டிக்கட்டின் விலை அர்ச்சனை சீட்டைவிட பன்மடங்கு அதிகம் என்பதை யாரும் யோசிக்கவில்லை.

பின்புறத்தில் முக்கியத்துவம் குறைந்துபோய் கிடந்தது கடவுள் சந்நதி.

2004

பிள்ளையார் அதிர்ந்தார். தான் வெறும் குழவிக்கல்லாக இருந்தபோது பக்தி செலுத்தி அகமகிழ்ந்தவர்கள் போக, இப்போது பெயரளவில் மட்டும் தாம் இங்கு குடியிருப்பது குறித்து அவருக்கு வேதனை உண்டாயிற்று.

தன்னை வைத்து வியாபாரமா?

கடவுள் படைத்த பிற உயிர்கள் இப்பாழும் மனிதர்களை எதிர்க்க இயலாது, சுதந்திரமாக ஓடவோ, ஊர்ந்து செல்லவோ இயலாது சிறு கூண்டுகளில் அடைபட்டிருப்பது என்ன கொடுமை!

அது போதாதென்று, அங்கு ஒரு மேடை வேறு. கடவுள் பாடல்கள் என்ற பெயரில் திரைப்படங்களில் ஒலித்த குத்து நடனங்களை இளம்பெண்களும், ஆண்களும் வலிப்பு வந்தவர்கள்போல ஆட, அந்த கர்ணகடூரமான ஓசையானது தெய்வ சந்நிதானத்தில் பக்தர்கள் சிலர் மனமுருகிப் பாடும் இசையை மீறுதாக இருந்தது. பாதி பூசை நடந்து கொண்டிருக்கும்போது, காற்றில் மிதந்து வந்த திரைப்படப் பாடல்கள் பலரையும் ஈர்த்து, அவர்கள் கவனத்தைக் குலைத்தது.

பிள்ளையார் அழாத குறை. “உலகம் இப்படிக் கெட்டுப் போச்சே, மாமா!” என்று நாரத்தில் அயணம் செய்துகொண்டிருக்கும் (அதாவது, நீரில் சயனித்துக்கொணடிருக்கும்) தாய்மாமன் நாராயணனிடம் முறையிட்டார்.

“நான் காத்தல் கடவுள்தான். ஆனால், இனியும் பொறுமையாக இருக்க என்னால் முடியாது,” என்று ஆர்ப்பரித்த விஷ்ணு, ” மருமகனே! நீ பூலோகத்துக்குப் போய் பட்ட பாடெல்லாம் போதும். இந்த ஆண்டின் இறுதியில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டுகிறேன்,” என்று பூடகமாகச் சொன்னார்.

அவ்வருடம் டிசம்பர் இறுதியில் வந்த சுனாமி என்ற பேரலையால் அந்த வட்டாரமே, கணபதி குடும்பம் உட்பட, கடலுக்குள் அமிழ்ந்துவிட, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ஒரே ஒருவர் நம் பிள்ளையார்தான்.

3


கருவே கதையானால்


வளையல்களும், கொலுசும் குலுங்கும் சப்தம். ஐந்து மாதங்களுக்குமுன் ஒரு புள்ளியாக உதித்திருந்த நான் இருந்த இருட்டறைக்குள் அவ்வொலி கேட்டு விழித்தேன்.

அம்மாவின் உணர்ச்சிப் பெருக்கு என்னையும் பிடித்துக்கொள்ள, உருள ஆரம்பித்தேன் — எப்போதையும்விட பத்து மடங்கு வேகமாக.

யாரோ என்னை இடிப்பதுபோல் இருந்தது. எனது குட்டி வாயைத் திறந்து, `அம்மா!` என்று கத்தினேன்.

என் கத்தல் தன் காதில் விழாது போனாலும், என்னைத் தன்னுள்ளே சுமந்திருந்தவளும் `அம்மா!` என்ற உரக்க அழைத்தாள் — தன் தாயை.

ஏன் எல்லாரும் இப்படி என்னை அழுத்துகிறார்கள்? என் செவியில் விழும் எந்த சப்தமும் விரும்பத் தக்கதாக இல்லை.

கட்டைக் குரலில் யார் யாரோ அம்மாவை மிரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள்.

என்னை மிதித்து துவம்சம் செய்யப் பார்க்கிறார்கள்.

அம்மா ஏன் இதையெல்லாம் தாங்கிக் கொள்கிறாள்?

எனக்குப் பல விஷயங்கள் புரிவதில்லை.

`ஓய்வு, ஒழிச்சல் இல்லாம எவனாவது வந்துக்கிட்டே இருக்கான்!` என்று யாரிடமோ அம்மா அலுத்துக் கொள்வது கேட்டது.

`ஆண்` என்றாலே கட்டைக் குரலுக்குச் சொந்தக்காரன், பிறரைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவன் என்று எனக்கு அப்போதே தெரிந்து போயிற்று. அவர்களின் உருவம் எப்படி இருக்கக் கூடும் என்று புரியுமுன், அந்த இனத்தின்மேல் வெறுப்பு பொங்கியது.

`இந்தச் சனியன் வேற! ஓயாம, உருண்டு, பெரண்டுகிட்டு இருக்கு!`

அம்மா என்னைத்தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது. கவனமாகக் கேட்டேன்.

`பொறந்ததுமே இதை எங்கேயாவது தூக்கிப் போட்டுடப் போறேன்!`

எனக்கும் ஆத்திரம் வந்தது. நானா உன் வயிற்றுக்குள் வலியவந்து புகுந்தேன்?

ஆணோ, பெண்ணோ, நான் வாழப்போகும் உலகத்தில் எவரையுமே நம்ப முடியாது, நம்பவும் கூடாது என்பது புத்திசாலித்தனமாக அத்தருணத்தில் நான் எடுத்த முடிவுதான்.

“தாமஸ் புத்திசாலிதான். ஆனா, எதிலேயுமே ஒரு ஆர்வமோ, அக்கறையோ இல்லே. மத்தவங்களோட சேர்ந்து பேசறது, விளையாடறது எதுவுமே கிடையாது”.

என் அசாதாரண போக்கினால் குழம்பிய பள்ளி ஆசிரியர் என் தாயை வரவழைத்து, குற்றப் பத்திரிகை படிக்கும்போது எனக்கு வயது பத்து.

உதடுகளை இறுக்கி, முகத்தின் ஒரு பக்கத்தில் நீட்டினேன், இருவரையும் முறைத்தபடி. சினிமாவில் வரும் வில்லன்களின் இந்த முகபாவம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

“நான் சமையல் வேலை செய்யற அனாதை ஆசிரமத்திலேருந்து இவனை எடுத்து வளக்கிறேங்க. நானோ விதவை. வீட்டிலே ஒரு ஆம்பளைத் துணையோ, கண்டிப்போ இல்லாம..” அதன்பின் அவள் பேசியதெல்லாம் எனக்கு வேண்டாதது.

இந்த அம்மா என்னைப் பெற்றவள் இல்லையா?

என்னைச் சுமந்தபின், `வேண்டாம்` என்று யாரோ ஒருத்தி குப்பைத் தொட்டியிலோ, கழிப்பறையிலோ வீசியிருந்த என்னை பொறுக்கிக் கொண்டவளா?

மணியோ, கண்ணாடிச் சில்லுகளோ, எதுவோ குலுங்கும் ஓசை எனக்குள் கேட்டது. தலையின் இருபுறங்களையும் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். இல்லாவிட்டால், தலை வெடித்துவிடும்போல் இருந்தது.

`நான் ஏன் இப்படி யாருக்குமே வேண்டாதவனாக இருக்கிறேன்?` என்ற வருத்தம் திரண்டு எழுந்தது.

வருத்தம் வீறாப்பாகியது. யாரோ, ஏதோ செய்ததற்கு நான் ஏன் வருந்த வேண்டும்?

இருக்கட்டும், எனக்கும் காலம் வராமலா போய்விடும்! அப்போது காட்டுகிறேன் நான் யாரென்று.

கூடவே ஒரு பயமும் எழுந்தது. தனியனாக இருந்து நான் எதைச் சாதிக்க முடியும்?

அதனால்தான், “டேய் தோம! எங்களோட வர்றியா?” என்று என் பெயரைச் செல்லமாகச் சுருக்கி அழைத்து, என்னைவிடப் பெரிய பையன்கள் கூப்பிட்டபோது, அவர்களுடன் நடந்தேன். தலையை நிமிர்த்தியபடி. `எங்கே?` என்று கேட்கக்கூடத் தோன்றவில்லை. என்னையும் ஒரு பொருட்டாக மதிக்க ஆளில்லாமல் போகவில்லை. அவர்களைவிட நான் சற்று உயரமாக இருந்ததுவேறு பெருமையாக இருந்தது.

`நான் பிறவி எடுத்தது இதற்குத்தான்!` எனது புதிய நண்பர்களுடன் சேர்ந்து, சில பயந்தாங்கொள்ளிகளை அடித்து, அவர்களிடமிருந்த சொற்ப பணத்தைப் பிடுங்குகையில், உடலில் புதிய ரத்தம் ஓடுவதுபோல் இருந்தது.

வயதுக்கு மீறிய என் உடல்வாகு மேலும் வளர்ந்தது — வாழ்விலேயே முதன்முறையாக என்னை ஏற்ற நண்பர் குழாத்துடன் குடிக்க ஆரம்பித்ததும். பதினோரு வயதில் பதினாறு வயதுப் பையன்போல் இருந்தேன் என்று நண்பர்கள் புகழ்ந்தார்கள்.

ஆனால், வீடு திரும்பும்போது, தலையில் சூடேறி, வெடித்துவிடும்போல இருக்கும். பேசாமல் போய் படுத்துத் தூங்கிவிடுவேன். நல்லவேளை, அம்மாவுக்குச் சந்தேகம் எழவில்லை. `பிறவியிலேயே யாருடனும் ஒட்டாத குணம்! தனிமைதான் இவனுக்குப் பிடிக்கும்,` என்று அலட்சியமாக இருந்தது எனக்குச் சாதகமாகப் போயிற்று.

இப்போதெல்லாம் நான் முன்புபோல தனிமையை நாடவில்லை. நானும் ஒரு கூட்டத்தின் அங்கம் என்பதே பெருமையாக இருந்தது. எங்கள் பள்ளி மாணவர்கள் என்னைப் பார்த்து நடுநடுங்கியது எனது பலத்தை அதிகரிக்கச் செய்தது.

எங்களுக்கு பதினாறிலிருந்து இருபது வயதுதான் அப்போது. எங்கள் தலைவருக்கோ எங்கள் அப்பாவாக இருக்கக்கூடிய வயது. இருந்தாலும், எங்களை சமமாக மதித்து, ரொம்ப அருமையாகப் பேசுவார். தான் காவல்துறையின் கண்ணில் எப்படியெல்லாம் மண்ணைத் தூவி விடுகிறோம் என்று, சீனம் மாதிரி ஒலித்த மலாயில், அவர் வர்ணிப்பது கேட்டு விழுந்து விழுந்து சிரிப்போம்.

பத்து பேர் அவருக்கு மிகவும் உகந்தவர்களாக இருந்தோம். மாதாமாதம் சந்தா செலுத்த வேண்டும். அத்தகைய அஞ்சாநெஞ்சரைத் தலைவராகப் பெற எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாமே! பத்து வெள்ளி என்ன பிரமாதம்!

பள்ளியில் `பசை`யுள்ள மாணவர்களின் தலையில் சுருக்குப் பையைக் கவிழ்த்து, கழுத்தில் இறுக்கி விடுவேன்.

கட்டொழுங்கு ஆசிரியரிடம் அவர்கள் அடையாளம் காட்டிவிட்டால்? யாரால் அடி வாங்கிச் சாக முடியும்!

பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ஒரே ஓட்டம்தான்.

இதெல்லாம் சின்ன விஷயம். மீசை முளைத்ததும், தலைவர் சித்தம் எங்கள் பாக்கியம் ஆயிற்று. நாங்கள் மூன்று பேராகச் சேர்ந்துகொண்டு, யார் யாரையோ அடித்தோம் — அவர்களிடமிருந்து ஏதாவது தகவலைக் கறக்க. பின்பு, அது தேவைப்பட்டவருக்கு விற்கப்பட்டது. சிலருடைய `கதை`யையே முடித்திருக்கிறேன்.

மூன்று முறை!

தெரியுமா?

எங்களுடைய விசுவாசத்தால் `பெரிய மண்டை` பணக்காரராக ஆனார். கந்து வட்டிக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்தார். எங்களால் அவரடைந்த லாபத்தை நான் பெரிதாகப் பாராட்டவில்லை. அதனால் என்ன? உற்ற தோழனாக என்னை ஏற்று, ஒவ்வொரு இரவுப் பொழுதும் அவர் பக்கத்திலேயே உட்காரவைத்து, பியர் குடிக்கச் செய்து, டிஸ்கோவுக்கு எல்லாம் அழைத்துப் போனது இவர் மட்டும்தானே!

ஒவ்வொரு முறையும் யாரையோ அடிக்கும்போதோ அல்லது தீர்த்துக்கட்டும்போதோ, அந்தக் கண்களில் தெரியும் பயம் இருக்கிறதே, அந்த சுகத்தை அனுபவிக்க எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த மனித இனமே இடியோடு ஒழிந்தாலும் என் ஆத்திரம் தீராது.

ஒரு புல் பூண்டு விடாமல் ஒழித்திருப்பேன் — போலீசிடம் சிக்காதிருந்தால்.

“யாருடா ஒங்க பெரிய மண்டை?” என்று அவர்கள் என்னை எவ்வளவு சித்திரவதை செய்தபோதும் நான் மூச்சு விடவில்லையே! அவ்வளவு தூரத்துக்கு இழிந்து விடவில்லை.

அவர் எந்த வினாடியும் வந்து என்னைத் தன்னுடன் வெளியே அழைத்துப் போவார் என்று காத்துக்கொண்டே இருந்தேன்.

`வரவே மாட்டார்` என்று திட்டவட்டமாகப் புரிந்தபோது, மீண்டும் வளை, கொலுசு சத்தம் கேட்டது என் தலைக்குள். வலி தாங்காமல், நெற்றியைச் சிறைக்கம்பியில் முட்டிக்கொண்டேன்.

அம்மாதான் வந்திருந்தாள் நீதிமன்றத்துக்கு. `இவனுக்கு மனநிலை சரியில்லை` என்று என் தரப்பு வக்கீல் வாதாடியபோது, சிரிப்புதான் வந்தது.

`திட்டமிட்டு பல கொலைகள் செய்தவன்` என்று எனக்கு ஆயுள் தண்டனை விதித்தார்கள்.

“ஐயா, ஜட்ஜ் அவர்களே! எனக்குத் தூக்குத் தண்டனை கொடுங்கள்!” என்று கத்தினேன்.

கைகால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நான் அம்மாவைக் கடந்து செல்லும்போது, “நான் எங்கே தப்பு செய்தேன்னு தெரியலியேடா, ராசா!” என்று அழுதபடி என் கன்னத்தைத் தடவக் கையை உயர்த்தினாள். முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

யாருக்கு வேண்டும் அன்பும், பரிவும்?

போதும், தலைவரின் தலைவன் என்று நம்பி, ஒரு ஏமாற்றுக்காரனின் பசப்பில் நான் சீரழிந்தது போதும்.

சிறைச்சாலையில் குற்ற நிபுணர்களுக்கு ஒரு அபூர்வ பாடமாக அமைகிறேன்.

`உன் தாய் உன்னை அடித்ததே கிடையாதா?` என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

எதனால் இப்படி ஒரு கொடூரமான குணம் எனக்குள் பதிந்தது என்று ஆராய, ஹிப்னாடிசம்வழி என் ஆழ்நினைவுகளை தாயின் வயிற்றுக் கருவாக இருந்த நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

`இவனுடைய ஆத்மா இந்த உலகத்துக்கு வருவதற்குள், சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்துவிட்டது. உள்மனதில் படிந்த பயம் இப்போது எல்லோரையும் பயப்பட வைப்பதில் இன்பம் காண்கிறது!` என்று ஏதேதோ பேசுகிறார்கள், என்னை வைத்துக்கொண்டே.

இனி எனது நிரந்தர இருப்பிடம் மருத்துவமனைதான், சிறை இல்லை என்று மேல் கோர்ட்டில் முறையீடு செய்யப் போகிறார்களாம்.

எனக்கு ஒன்றுதான் புரிகிறது:ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப் போவது எளிது. வெளியில் போய், நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் இரண்டு.

ஒன்றுமறியாத பாலகனாக இருந்த என்னைத் தன் சொந்த லாபத்துக்காக இப்படி ஒரு குற்றவாளியாக மாற்றினானே அந்த மண்டை, அவன் கற்றுக் கொடுத்த பாடத்தை அவன் முடிவுக்கே பயன்படுத்தப் போகிறேன்.

இரண்டாவது வேலை என்ன தெரியுமா? என்னைத் தரித்தவளையும், அத்துடன், காசுக்கு சிறிது நேரம் அவளுடைய உடலில் சொந்தம் கொண்டாடி, அவளுடன் சேர்த்து என்னையும் கொடுமைப் படுத்திய கேடுகெடுகெட்டவர்களையும் ஒழித்துக் கட்டப் போகிறேன்.

இனி பிறக்கப் போகும் குழந்தைகளாவது என்னைப்போல் இல்லாது பிறக்கட்டும்.

4


நெடுஞ்சாலையில் ஒரு பயணம்


கண்ணுக்கு எட்டியவரை நீல வானும், நீலக் கடலுமாக அழகு கொப்பளித்தது அந்த இடத்தில். அந்த இனிமையைக் குலைப்பதுபோல், அபஸ்வரமாக ஒலித்தது விசாலியின் கட்டைக் குரல்.

ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா?

தன்னைத் தாக்கிய மனைவியின் குரல் காதில் விழுந்தும், தற்காலிகமாகச் செவிடாகி விட்டதுபோல் வாளாவிருந்தார் பராங்குசம். எல்லாம் முப்பது வருட இல்லற வாழ்வில் பெற்ற விவேகம்தான்.

ஆரம்பத்தில், `ஏன் தெரியாது? ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்கலே?` என்று வீராவேசமாகக் கேட்டுவிட்டு, அந்த வார்த்தைகளால் தோன்றிய பூரிப்பை மறைக்க முயன்றபடி, `போதும். ரொம்பத்தான் வழியாதீங்க!` என்று அவள் கடிந்துகொண்டது மறக்கக் கூடியதா!

அது ஏன், தான் எது செய்தாலும் இவளுக்கு மாற்றுக் குறைவாகவே படுகிறது என்று யோசித்து யோசித்து, அவர் முடியெல்லாம் உதிர்ந்ததுதான் கண்ட பலன். அவரால் விசாலியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

தன்னால் அவளுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மிக, அவள் தன்னைக் குறைத்து மதிப்பிடும்போது அசட்டுச் சிரிப்பு சிரித்துவிடுவது, இல்லை ஊமையாகிவிடுவது என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருந்தார்.

இதனால், மனைவியிடம் பராங்குசத்துக்கு அன்பு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது.

இல்லாவிட்டால், அவள் தற்செயலாகச் சொல்வதுபோல், “என் சிநேகிதி புவனா இருக்காளே, மாசாமாசம் மாரிப், போர்ட் டிக்சன் (PORT DICKSON), பங்கோர்னு (PANGKOR) ஏதாவது பீச்சுக்குப் போறாளாம். அவ மகனுக்கு ஆடிசம்னு ஏதோ வியாதியாம். தானே பேசிக்குவான். அப்படியே பேசினாலும், ரோபாட் பேசறமாதிரி, உணர்ச்சியில்லாமதான். யார்கிட்ட என்ன பேசறதுன்னு தெரியாது. டாக்டர் சொன்னாராம், அடிக்கடி கடல்ல குளிச்சா, நல்ல உடற்பயிற்சி, அதனால அவனும் கட்டுக்கடங்கி இருப்பான்னு!” என்று, விசாலி ஏக்கத்துடன் விவரித்தபோது, அவளைக் கேட்காமலேயே தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த செராட்டிங் (CHERATING) கடற்கரைக்கு அவளை அழைத்துப் போக திட்டமிட்டிருப்பாரா!

அவள் தோழி போகாத இடம் என்பதால், விசாலி அவளிடம் பெருமையாகப் பேசிக் கொள்ளவும் முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார்.

“இப்ப எதுக்கு கடலும், மண்ணாங்கட்டியும்?” என்று முதலில் பிகு செய்துகொண்டவள், கோலாலும்பூார் புடு (PUDU) பகுதியிலுள்ள வெளியூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்ததும் கலகலப்பானாள்.

`ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா?` என்று அன்று பூராவும் அவள் கேட்காததுபற்றி பராங்குசத்துக்கு ரொம்ப மகிழ்ச்சி. பேருந்தின் முன்னிருக்கையில் விரல்களால் தாளம் போடலானார்.

சும்மாவா நாட்டுக்கு `மலாயா` என்று பெயர் வைத்திருந்தார்கள்! மலைப் பாதையில் சுற்றிச் சுற்றிப் போனபோது, விசாலிக்குத் தலைசுற்றல் வந்தது. நல்லவேளை, அவர் தாராளமாக பன்னிரண்டு வெள்ளி கொடுத்து, ஒரு கிலோ திராட்சைப் பழத்தை வாங்கி வந்திருந்தார். மனைவி ஒரு விரலால் நெற்றியைச் சுட்டி, சுழற்றும் போதெல்லாம், ஒரு பழத்தை அவள் வாய்க்குள் போட்டார்.

பஸ்சிலிருந்து இறங்கியவுடனேயே விசாலிக்குத் தெம்பு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், “ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா? கடற்கரைக்குப் போக ஆசையா இருக்குன்னு ஒங்ககிட்ட வந்து நான் கேட்டேனா? வயத்தைப் புரட்டுது. டிவி தொடர்வேற விட்டுப் போயிடும்,” என்று பாய்ந்திருப்பாளா?

அவள் பழையபடி ஆனதில் அவருக்குத் திருப்தியாக இருந்தது.

`நான் என்னம்மா கண்டேன், இந்த பஸ்காரன் டோலுக்குப் பயந்து, இப்படி சுத்திச் சுத்தி வருவான்னு!` என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார். உரக்கச் சொல்லி, அதற்கு வேறு அவள் ஏதாவது பதிலடி கொடுத்து வைத்தால்?

`மௌனம் தங்கத்திற்குச் சமானம்,` என்று ஆங்கிலத்தில் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்!

கடற்கரையிலேயே அமைந்திருந்த சிறு சிறு மர வீடுகளுள் ஒன்றில் நுழைந்தார்கள். மலாய் கம்பத்து (கிராமிய) பாணியிலான குடில். தரையிலிருந்து மூன்றடி மேலே இருந்தது. எல்லாம், வருடம் முழுவதும் கொட்டும் மழைக்கான எச்சரிக்கைதான். வீட்டைத் தாங்க, நான்கு மூலைகளிலும் மரத்தூண்கள். அதன் அடியில், தாய்க்கோழியின் பின்னால், ஆசிரியரைப் பின்தொடரும் சிறு பிள்ளைகள்போல், கோழிக்குஞ்சுகள் அணிவகுத்துச் சென்றன.

அந்தப் புதுமாதிரியான சூழ்நிலையில், விசாலி குதூகலித்தாள். “தேவலியே! ஒங்களுக்குக்கூட உருப்படியா ஒரு காரியம் பண்ணத் தெரியுதே! எப்படி இந்த இடத்தைப் பிடிச்சீங்க?” என்று அவள் பாராட்டியபோது, சொர்க்கமே தெரிந்தது பராங்குசத்திற்கு.

காலையிலும், மாலையிலும் சமுத்திர ஸ்நானம், இடையில் சாப்பாடு, தூக்கம் என்று பொழுதை உல்லாசமாகக் கழித்தார்கள். இந்திய உணவு கிடைக்காததை விசாலி பெரிது பண்ணவில்லை என்பதுபற்றி பராங்குசத்துக்கு நிம்மதி.

சில சமயம், அவர்கள் குடில் வாசலிலிருந்த வராந்தாவில் போடப்பட்டிருந்த நிறம் மங்கிப்போன பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தார்கள், ஓய்வாக. ஜட்டி மட்டுமே அணிந்து, அல்லது முழு நிர்வாணமான மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், மணலில் வீடு கட்டி, அவைகளின்மீது சிப்பிகளையோ, அல்லது கடற்கரையைச் சார்ந்து இயற்கையாகவே வளர்ந்திருந்த சவுக்கு மரங்களின் கூரான இலைகளையோ வைத்து அழகுபடுத்துவதை கண்கொட்டாது பார்த்தபடி இருந்த விசாலி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

அதை ஓரக்கண்ணால் கவனித்த பராங்குசத்துக்கு அவள்மேல் பரிதாபம் பொங்கியது. `நல்லா தூங்கினியா?` `அடுத்த தடவை பினாங்கு போகலாம், என்ன? அங்க சாப்பாடு நல்லா இருக்கும்,` என்று பரிந்தார்.

மூன்று இரவுகள் போனதே தெரியவில்லை.

முதல்நாளே விசாலி கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள், “என்னால இனிமே அந்த பாடாவதி பஸ்சில ஏற முடியாது. ஏதாவது டாக்சி பாருங்க!` என்று.

அவளது கட்டளையைச் சிரமேற்கொண்டு, இந்த வாடகைக்காரை ஏற்பாடு செய்திருந்தார் பராங்குசம்.

வண்டியோட்டியை ஒரு பார்வை பார்த்தாள் விசாலி. அவ்வளவுதான். (இப்போது கதையின் முதல் வரியை நினைவுபடுத்திக் கொள்ளவும்).

கணவர் பரிதாபமாக, “இப்பல்லாம் இங்கேயிருந்து கே.எல் (K.L, கோலாலும்பூர்) போக நானூறு வெள்ளியாம். 280 கிலோமீட்டர் தொலைவில்ல! இவன் ஒருத்தன் மட்டும் முன்னூறு சொன்னான். அதான்..,” என்று இழுத்தார். `இதுக்கே பஸ் கட்டணத்தைவிட மூன்று மடங்கு அழணும், தெரியுமா? ஒன் பிடிவாதத்தினாலதான் இப்படி!` என்ற விமரிசனத்தை சாமர்த்தியமாக மறைத்தார்.

“இந்த ஆளோட முகமே சரியா இல்ல. எலும்பா இருக்கான். கண்ணு வேற கலங்கி இருக்கு. சரியான போதைப் பித்தன்! எப்படித்தான் அவ்வளவு தூரம் ஓட்டப் போறானோ!” டிரைவர் தமிழனில்லை என்ற தைரியத்தில், அவள் அங்கலாய்ப்பு உரக்கவே ஒலித்தது.

பராங்குசத்துக்குக் கூசியது. ஒருவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவரைப்பற்றி இழிவாகப் பேசுவது யாராக இருந்தாலும்… அது அவரது ஆசை மனைவியாகவே இருந்தாலும்… அது தப்புதான் என்று தோன்றிற்று அவருக்கு. ஆனால், அவள் வாயை அடக்கப்போய், அவள் ஏட்டிக்குப் போட்டியாக கத்த ஆரம்பித்தால்.., மொழி தெரியாதவராக இருந்தாலும், இன்னொருவரால் புரிந்துகொள்ள முடியாதா, என்ன!

மௌனம் என்ற ஒன்றுதான் பல சமயங்களில் எப்படி கை கொடுக்கிறது என்ற அயர்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

காரோட்டி, “சாயா (நான்).. யா‹யா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையை நீட்டியபோது, விசாலி திகைத்துப்போனாள். ஒரு வினாடி தயங்கிவிட்டு, கையை நீட்டினாள்.

முன் கதவைத் திறந்து, பராங்குசம் ஏற யத்தனித்தபோது, “இந்த புரோடான் சாகா (PROTON SAGA, மலேசியாவில் தயாரிக்கப்படும் கார்), அதோட டிரைவர் மாதிரியே, பாத்தா பரிதாபமா இருக்கு. பின்னால ஒக்காந்தா, எனக்கு மறுபடியும் வயத்தைப் புரட்டும். என்னால முடியாதுப்பா!” என்றபடி, அவரைத் தள்ளாத குறையாக முன்னால் ஏறிக்கொண்டாள். `அம்பது வயசு ஆகப்போகுது. ஆம்பளைங்க பக்கத்தில ஒக்காந்தா, என்னா தப்பு! அதான் கையைக் குலுக்கியாச்சே!` என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

காரை ஓட்ட ஆரம்பிப்பதற்குள், காரோட்டி நிறைய நிபந்தனைகள் விதித்தார்.

“நான் மெதுவாத்தான் போவேன். முந்தி பென்ஸ் கார் வெச்சிருந்தேன். அதில நூத்துப் பத்து என்ன, நூத்து நாப்பதுகூடப் போகலாம். ஆனா, இதில..,” என்று சிரித்தவர், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்று ஏதோ சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தார்.

உள்ளே குளிர்சாதன வசதி இருந்ததென்று பெயர்தான். சன்னல் கண்ணாடியை முழுமையாக அடைக்க முடியாதுபோக, வெளியே வீசிய அனல்காற்றும், அந்த நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருந்த பிற வாகனங்கள் பெருமூச்சாக விட்ட புகையும் உள்ளே நுழைந்தன.

பற்களைக் கடித்துக்கொண்டு, விசாலி தூங்க முயற்சித்தாள். மனதுக்குள் சுலோகம் சொல்லிப் பார்த்தாள். இருப்பினும் ஒன்றரை மணிக்குமேல் அவளால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

“நல்ல காடி வெச்சிருக்கான் இந்த ஆளு! பஸ்சே தேவலாம்னு இருக்கு,” என்று, தலையைத் திருப்பி, கணவரிடம் கூறினாள்.

“என்ன சொல்றாங்க?” என்று விசாரித்தார் யா‹யா.

“பாத்ரூம் போகணுமாம்!” சமயோசிதமாகப் புளுகினார் பராங்குசம்.

“கே.எல் போக இன்னும் எத்தனை நேரமாகும்?” இத்தனை நேரம் டிரைவரின் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்ததில், அவருடன் பேசும் துணிவு வந்திருந்தது விசாலிக்கு.

“இன்னும் மூணு மணியாவது ஆகும். நாம்ப என்ன, வால்வோ காரிலேயா போறோம்?” என்று சிரித்துவிட்டு, “நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க,” என்று விடை கொடுத்தார்.

கதவை உள்பக்கத்திலிருந்து திறக்கும் சாதனம் உடைந்து போயிருந்தது. அசட்டுச் சிரிப்புடன், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்றபடி, யா‹யா வெளியே வந்து, திறந்துவிட்டார்.

“எனக்கென்னமோ சந்தேகமா இருக்குங்க. அந்த ஆளு பத்துப் பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒருவாட்டி எதையோ குடிக்கறான். எல்லாத்துக்கும் சிரிக்கறான். தண்ணியில ஏதாவது போதை மருந்து போட்டு கலக்கியிருப்பானோ?”

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது, “அந்தப் பக்கம் இருக்கு,” என்று அநாவசியமாக, பெண் படத்தைக் கதவில் தாங்கியிருந்த கழிப்பறையைக் காட்டிவிட்டு, தன்பாட்டில் விரைந்தார் பராங்குசம்.

விசாலி திரும்ப வரும்போது, அவள் கரத்தில் கொட்டையில்லாத கொய்யாத் துண்டங்கள் நிரம்பிய சிறிய பிளாஸ்டிக் கை.

“இந்தாங்க!”

கையை நீட்டினார் கணவர்.

ஆனால், அவள் யா‹யாவை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தாள்.

அவருடைய முகத்தில் நன்றி கலந்த முறுவல். “வேணாம்மா. என்னால சாப்பிட முடியாது!” என்றபடி, பல பற்களை இழந்திருந்த வாயைத் திறந்து காட்டினார். பின், “எனக்குத் தொண்டையில கான்சர்!” என்று அசாயாசமாகத் தெரிவித்தார். குரலில் வருத்தமில்லை. `இன்னிக்கு மழை வரும்,` என்று சொல்வதுபோல் இருந்தது.

விசாலி அதிர்ந்தாள். பையைத் தவறவிட்டாள். நல்லவேளையாக, அது அவள் மடியில் விழுந்தது.

“கீமோ சிகிச்சை குடுத்தாங்களா! அதில பல்லெல்லாம் போயிடுச்சு. என் வாயில உமிழ்நீர் சுரக்கிறதில்ல. அதனால, அப்பப்போ, கொஞ்சம் தண்ணியால நனைச்சுக்கணும்”.

வருடந்தவறாது, கடலில் இருபதாயிரம் மைல் நீந்தி, மே மாதம் முதல் செப்டம்பர்வரை, இரவு வேளைகளில் செராட்டிங் கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமையைப்போல, விசாலியின் தலை கழுத்துக்குள் நுழைந்தது.

அதைக் கவனியாது, தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார் மற்றவர். “தொண்டையில ஓட்டை போட்டு, சாப்பாட்டை உள்ளே இறக்கலாம்னாங்க. எனக்குப் பிடிக்கல. வெண்டைக்காய், கீரை, கோபீஸ் எல்லாத்தையும் வேகவெச்சு அரைச்சு, சாதத்தோட திரும்பவும் ஒண்ணா அரைச்சுடுவேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஒரு மணி நேரம் பிடிக்கும். அதனால வீட்டை விடறதுக்கு முந்தி சாப்பிட்டுட்டுத்தான் புறப்படுவேன்”.

“வீட்டுக்கு வெளியே வந்தா, என்ன சாப்பிடுவீங்க?” விசாலியின் குரல் மங்கியிருந்தது.

“ஐஸ்கிரீம். இல்லாட்டி, நல்லா மசிச்ச உருளைக்கிழங்கு — கெண்டகி சிக்கன் கடையில கிடைக்குதில்ல!” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

போத்தலைத் திறந்து ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரை அவர் வாயில் கவிழ்த்துக்கொண்டபோது, ஏதேனும் பேச வேண்டும்போல இருந்தது அவளுக்கு. “ஒங்க வீடு செராட்டிங்கிலேயே இருக்கா?” என்று கேட்டுவைத்தாள்.

“நான் கே.எல்.காரன்தாம்மா. ஒரு கார் கம்பெனியில பெரிய வேலையில இருந்தேன். என்னோட நிலைமை இப்படி ஆனதும், எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க — பெண்டாட்டி, பிள்ளைங்ககூட!” லேசான வருத்தம் குரலில். “பென்ஸ் காரையும் விக்க வேண்டியதாப்போச்சு. மத்தவங்க கையை எதிர்பாக்கறது அசிங்கம், இல்லியா? அதனால, இங்கேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருக்கேன்”.

“தனியாவா இருக்கீங்க?”

யா‹யா பெரிதாகச் சிரித்தார். “தனியாத்தானே வந்தேன்? தனியாத்தான் போகவும் போறேன்!” என்று தத்துவம் பேசிவிட்டுத் தொடர்ந்தார். “இது சின்ன கிராமம். அதனால மனுஷன் இன்னும் மனுஷனாவே இருக்கான். எனக்கு உடம்பு ரொம்ப முடியாட்டி, அக்கம்பக்கத்துக்காரங்க உதவி செய்வாங்க. நான் சொந்தமா தோட்டம் போட்டு, எனக்கு வேண்டியதைப் பயிரிட்டுக்கறேன். என் சிகிச்சை, மருந்துச் செலவுக்கு எல்லாம்… உடம்பு ஒத்துழைக்கறப்போ, இப்படி சவாரி ஏத்திக்கிட்டுப் போவேன். ஒரு நாளைக்கு ஐம்பது மாத்திரைகளை இல்ல விழுங்கித் தொலைக்க வேண்டியிருக்கு!”

அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. யா‹யா சொன்னவற்றை சீரணித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள் விசாலி. சிறிது யோசனைக்குப்பின், “நமக்கு ஏன் இப்படி வந்திடுச்சுன்னு ஒங்களுக்கு வருத்தமா இல்ல?” என்று துருவினாள்.

“வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது! சாகாம யாராவது இருக்காங்களா? நாம்ப சாகறதுக்கு ஏதோ ஒரு வழி. அவ்வளவுதான். ஒல்லியா இருந்தா, ஏன் இப்படி ஒடிஞ்சு விழறமாதிரி இருக்கேன்னு கேள்வி. முந்தி ரொம்ப குண்டா இருந்தேன். இருநூறு பவுண்டில்ல! அப்ப, `ஏன் இப்படி குண்டோதரனா இருக்கே?`ன்னு கேட்டாங்க!” சிரித்தார். “ஏன், ஏன்னு கேட்டுட்டு இருந்தா, அதுக்கு முடிவே இல்ல,” என்று அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிவிட்டு, “இப்படிப் பேசிக்கிட்டே மெதுவா கார் ஓட்டறது ரொம்ப ரிலாக்சிங்கா இருக்கு. நான் ஏத்திட்டுப் போறவங்க எல்லாருமே ஒங்கமாதிரிதான் — அன்பாப் பழகறாங்க. அவங்க கஷ்டத்தை எங்கிட்ட சொல்லிக்கிறாங்க. போன வாரம் பாருங்க..!” என்று ஆரம்பித்தார்.

பேசிக்கொண்டே வந்ததில், கண்ணாடி சரியாக மூடாத ஜன்னல்வழி உள்ளே வந்த புகையோ, வீடு வந்து சேர்ந்ததோ எதுவுமே தெரியவில்லை விசாலிக்கு. கைகளைக் கூப்பியபடி, யா‹யாவிடம் விடைபெற்றுக்கொண்டாள்.

“சாமானை நான் எடுத்துக் குடுக்கறேன்,” என்றபடி யா‹யா பின்னால் விரைந்தபோது, விசாலி கணவரைப் பார்த்து முறைத்தாள். “நீங்க போய் எடுங்க. அதான் மூணு நாள் ஒரு வேலையும் செய்யாம, ஜாலியா இருந்தாச்சில்ல! இன்னும் என்ன சோம்பல்?”

கார் கண்ணிலிருந்து மறைந்தபின், “எவ்வளவு குடுத்தீங்க?” என்று கேட்டாள். குரல் அனாவசியமாக, ரகசியமாக ஒலித்தது.

“அதான் அங்கேயே சொன்னேனே — முந்நூறுதான்!” என்று அவர் அலட்சியமாகக் கூறியபோது, சற்றும் எதிர்பாராதவண்ணம், அவர்மேல் பாய்ந்தாள் தர்மபத்தினி.

“நாம்ப எல்லாம் ஒரு தலைவலி, காய்ச்சலுக்கே என்ன அமர்க்களப்படுத்தறோம்! அவரு சொந்தக்காலில நிக்கறாரு, இவ்வளவு பெரிய வியாதியோட போராடிக்கிட்டு!” ஆத்திரத்தில் பெருமூச்சு வாங்கியது அவளுக்கு. “எதையுமே கூழா அரைச்சுத்தான் சாப்பிடுவாராமே, பாவம்! கூட ஒரு அம்பதோ, நூறோ போட்டுக் குடுத்திருந்தா குறைஞ்சா போயிடுவீங்க? ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா?”.

5


ஆறாத மனம்


செந்திலின் அலுவலகம் நாலு மணிக்கு முடிகிறதென்று பெயர்தான். ஆனால், என்னவோ சாமி ஊர்வலம்போல மிக மிக மெதுவாக கார்கள் சாலையில் ஊர்ந்துகொண்டிருந்தன.

நகரின் `முன்னேற்ற`த்திற்காக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதில், மழை பொய்த்திருந்தது.

சுயநலக்காரர்களான மனிதர்களின் போக்கு தனக்குப் பிடிக்கவில்லை என்ற சினத்தை சூரியன் காட்டிக்கொண்டிருந்தான், அந்த அந்திவேளையிலும் தகித்து.

கடந்த நிமிடத்துக்குள் கடிகாரம் மாறியிருக்குமோ என்று நப்பாசைப்படுபவன்போல், தன் இருக்கைக்கு முன்னாலிருந்த பச்சை நிற முள்ளில் மணி பார்த்தான் செந்தில். ஆறரை.

கோலாலம்பூரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது ராவாங். `முப்பதே நிமிடங்கள்தாம் இந்த தொலைவைக் கடக்க!` என்ற விளம்பரத்தைப் பார்த்து, விலையும் மலிவாக இருக்கிறதே என்று, தனது சக்திக்கு ஏற்றபடி, ஒரு சிறு வீட்டை வாங்கியிருந்தான். ஆனால், ஒவ்வொரு நாளும் வீடு போய்ச்சேர ஒன்றரை அல்லது இண்டு மணிநேரம் பிடித்தது. அவனைப்போலவே, மாதம் மூவாயிரம் ரிங்கிட்டுக்குள் சம்பாதிக்கும் சுமாரான உத்தியோகங்களில் இருந்த பலரும் அதே சமயத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்ததால், ஒரே நெரிசல்.

“முட்டாள்கள்! எல்லாருக்கும் காரை வித்துடறான்! ரோட்டையாவது அகலப்படுத்தறானா, அதுவும் கிடையாது!” என்று முகமறியாத யாரையோ திட்டியபடி ஒருவாறாக வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு பசியும், களைப்பும் ஒருபுறம். இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டிய அவசரம் இன்னொரு புறம்.

சந்தர்ப்பம் அறியாது, “என்னங்க! இன்னிக்கு அண்ணி வீட்டுக்குப் போயிருந்தன்ல! அவங்க கேட்டாங்க, முரளிக்கு மூணு வயசாகிடுச்சே, எப்போ அவனுக்கு ஒரு தம்பிப் பாப்பாவைக் குடுக்கப்போறேன்னு!” என்று, பூரிப்புடன் சொன்ன ரமாவின்மேல் ஆத்திரம் பொங்கியது.

“நமக்கு முரளி மட்டுமே போதும்னு ஒனக்கு எத்தனைவாட்டி சொல்லியிருக்கேன்!” என்று இரைந்தபடி உள்ளே ஓடினான்.

நாள் பூராவும் இடுப்பொடிய கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்துவிட்டு, அலுத்துச் சலித்து வீடு திரும்பியிருக்கிறார்! அவருக்கு வயிற்றுக்கு ஒன்றும் கொடுக்காது, தான் சாவகாசமாகப் பேச ஆரம்பித்தது தவறு என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் ரமா.

அவளுக்குத் தெரியாது, கணவனின் கோபத்திற்கான உண்மைக் காரணம்.

குடும்பத்தின் மூத்த மகனாகப் பிறந்த பாவத்திற்காக அவன் அனுபவித்த துன்பங்கள்.

ரமா மௌனமாக நீட்டிய சூடான டீ கோப்பையை கையில் எடுத்துக்கொண்ட செந்தில், தனிமையை நாடி, மொட்டைமாடிக்குப் போனான். பர்சை எடுத்துப் பிரித்தான். அதில், அப்பா அவனை அருமையாகத் தூக்கியபடி நின்றார்.

அவனுக்கு நினைவு தெரிந்து, அப்பா அவனைத் தொட்டதே கிடையாது — அடித்த தருணங்களைக் கணக்கில் சேர்க்காவிட்டால்.

படத்தில் அவனுக்கு இரண்டு வயதிருக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பிறகுதான் அப்பாவின் அன்பை பரிபூரணமாக ஆக்கிரமிக்க தம்பி பிறந்து தொலைத்துவிட்டானே!

பெற்ற மனம் பித்தாம். ஆனால், அந்தப் பிள்ளை மனம் கல்லாக, அவன் அயல்நாட்டுக்கே குடிபோய்விட்டான். பெற்றோருடைய திருமண நாளையும், பிறந்த நாட்களையும் நினைவு வைத்துக்கொண்டு, வருடந்தவறாது வாழ்த்து அனுப்புவதுடன் தன் கடமை முடிந்துவிட்டதென்று நினைக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் அவனும் ஒருவன்.

செந்திலும், பெற்றேரரிடமிருந்து விலகி, சொந்த வீடு வாங்கிக்கொண்டான்.

இப்போது, பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களாய், அம்மாவும், அப்பாவும்.

வேண்டும், அவர்களுக்கு இது நன்றாக வேண்டும்.

தானும் அப்பாவைப்போல் ஆகிவிடக் கூடாது. குழந்தை முரளியிடம் வைத்திருக்கும் பிரியம் எக்காரணத்தைக்கொண்டும் குறைந்துவிடக் கூடாது. நண்பனாய், அவன் தோளில் கைபோட்டுப் பேசிப் பழக வேண்டும்.

பத்து வயதானாலும்,செல்லப்பிள்ளையாய், உரிமையுடன் அவன் தன் மடியில் உட்கார வேண்டும். உட்கார்ந்து, இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரியோ, தவறோ, என்ன செய்தாலும், அதைத் தந்தையிடம் வெளிப்படையாக சொல்லும் தைரியசாலியாக அவன் வளர வேண்டும்.

இதெல்லாம் புரியாது, இந்த ரமா ஒருத்தி, வீட்டுக்குள் நுழையும்போதே தேவையில்லாததைப் பேசி, `மூடை`க் கெடுத்துவிட்டாள்!

ஒரு நாள், நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிவிட்டு, சைக்கிளில் வேகமாக வரும்போது கல் இடறி ரோட்டில் விழுந்தான். முட்டி பெயர்ந்துபோக, காலெல்லாம் ரத்தம் ஒழுக அழுதபடி வீடு வந்தவனை எதுவுமே கேட்காது, பெல்டால் விளாசி, உடலெல்லாம் ரத்தம் ஒழுகச் செய்தவர் அப்பா. எதற்கு அடிக்கிறோம் என்றே புரியாது வதைப்பவரெல்லாம் மனிதரோடு சேர்த்தியே இல்லை.

இந்த அம்மா மட்டுமென்ன! அப்பா என்ன செய்தாலும் சரி என்பதுபோல் வாய் திறவாது இருப்பாள்.

`பெரியவங்க அடிச்சுத் திருத்தறப்போ நாம்ப குறுக்கே போனா, பிள்ளைங்களுக்கு அவங்கமேல இருக்கிற மரியாதை போயிடும்,” என்று அவள் அத்தையிடம் கூறியதை அவன் கேட்டிருக்கிறான்.

`இப்போது என்ன மரியாதை வைத்து வாழ்கிறதாம்!`

வருடத்துக்கு ஓரிரு முறை, அதுவும் சில நிமிடங்கள், அவர்களைப் போய் பார்ப்பதோடு சரி.

“யாரு வந்திருக்காங்க, பாருங்க!” என்ற ரமாவின் குதூகலமான குரல் ஒலித்தது.

இந்த இரவு வேளையில் யார் வந்திருக்கப் போகிறார்கள்? கசப்புடன் போட்டோவை பர்சினுள் உள்ளே செருகினான்.

அசுவாரசியமாக கீழே இறங்கி வந்தவன், தன் கண்களையே நம்ப முடியாது வெறித்தான்.

“என்னமோ, ஒன்னையும், முரளியையும் பாக்கணும்போல தோணிச்சு. அதான் அப்பாவையும் இழுத்துக்கிட்டு வந்துட்டேன்!” வாயெல்லாம் சிரிப்பாக அம்மா. பேசும்போதே மூச்சிரைப்பு. அளவுக்கு அதிக பருமன். பத்துப் பதினைந்து நிமிடங்கள் நடந்து வந்திருக்கிறார்கள் பேருந்து நிற்கும் பிரதான சாலையிலிருந்து.

பின்னால் விறைப்பாக அப்பா.

“ரெண்டு மணி நேரம் பஸ்சிலேயா அத்தை வந்தீங்க!” கரிசனமாகக் கேட்டாள் ரமா. பதிலுக்குக் காத்திராது, “ராத்திரிக்கு அரிசி உப்புமாதான் பண்ணினேன். ரெண்டு கத்தரிக்காயைச் சுட்டு, கொத்சு பண்ணிடறேன். நீங்க பேசிக்கிட்டு இருங்க,” என்றபடி சமையலறைக்கு விரைந்தாள்.

“வேலையெல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?” அப்பாவின் உபசார வார்த்தைகள்.

வேலையாம் வேலை, பெரிய்..ய வேலை! இவர் படுத்தின பாட்டில், படிப்பில் எங்கே கவனமோ, அக்கறையோ போயிற்று! நன்றாகப் படித்திருந்தால்தான், தம்பியைப்போல் அவனும் வெளிநாட்டுக்குக் கம்பிநீட்டி இருப்பானே!

தலையாட்டி வைத்தான், `இவரிடம் எனக்கென்ன பேச்சு!` என்பதுபோல்.

“முரளி! பாட்டி ஒன்னைப் பாக்க வந்திருக்காங்க, பாரு!” என்று உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தான்.

குழந்தை துள்ளியோடி வந்ததும், “அம்மா! புதுசா ரோஜாச்செடி வெச்சிருக்கேன். பாக்கறீங்களா?” என்று மாடிப்படியை நோக்கிப் போனான்.

கணவரை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்தாள் அம்மா. அவரால் படிக்கட்டில் ஏறமுடியாது. முழங்கால் வலி.

சாப்பிட்டு முடிந்த கையோடு, “போகலாமா?” என்று கேட்டுவிட்டு, வீட்டு வாசலுக்கு நடந்த அப்பாவுடன் தானும் விரைந்து சேர்ந்துகொண்டாள் அம்மா.

“இப்படி அவசரமா வந்துட்டுப் போறீங்களே, மாமா. ரெண்டு நாள் தங்கறமாதிரி வரக்கூடாது?” உரிமையுடன் கோபித்த மருமகளைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.

“பலகாரம் நல்லா இருந்திச்சும்மா,” என்றார் பதிலாக.

“அத்தையையும், மாமாவையும் நீங்க பஸ் ஸ்டாப்பில கொண்டு விடப்போறதில்ல?” சிறிது அதிர்ச்சியுடன் ரமா கேட்க, “எனக்கு நாளைக்குக் காலையிலேயே வெளியூர் கிளம்பணும். இப்பவே தூங்கினாத்தான் முடியும்,” என்று உரக்கச் சொன்னபடி, உள்ளே நடந்தான் செந்தில்.

6


படப்பிடிப்பு


பண்டிகை நாட்களில் கோயிலில் கூட்டம் நெரியும், அர்ச்சகர்கள் ஒலிபெருக்கியில் ஓதும் மந்திரங்களைவிட பக்தர்களின் அரட்டைக் கச்சேரி கூடுதலாக ஒலிக்கும் என்று எண்ணுபவள் நம் கதாநாயகி. அதனால், அக்காலங்களில் வீட்டிலேயே பூசையை முடித்துக் கொள்வாள்.

`கதாநாயகி` என்றதும், ஒர் அழகான இளம்பெண்ணை வாசகர்கள் கற்பனை செய்து கொண்டால், அதற்கு இந்த எழுத்தாளர் பொறுப்பில்லை.

வள்ளியம்மை — நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, இறுகப் பின்னிய, குட்டையான ஒற்றைப் பின்னல். உடல் இளைக்க, தரையில் விழுந்து கும்பிடுவது நல்ல வழி என்று யாரோ சொல்லக் கேட்டு, அந்த பழக்கத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவள்.

பண்டிகை இல்லாத வெகு சில நாட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு திங்கட்கிழமை காலை பதினோரு மணிக்கு கோயிலுக்குமுன் வாடகைக்காரில் வந்து இறங்கினாள் வள்ளியம்மை.

வீட்டில் இரண்டு கார் இருக்கிறதென்று பெயர்தான். லைசன்ஸ் எடுத்து, அதற்குப் பின் ஓட்டப் பயந்த பல பெண்களுள் அவளும் ஒருத்தி. கணவரோ, கோயில் இருக்கும் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்க மாட்டார்.

கோயில் வளாகத்தில் எப்போதும் தரையில் தத்திக்கொண்டும், பக்தர்கள் போடும் பெரரிக்கடலையை கொத்திக்கொண்டும் இருந்த புறாக்கள் பயந்து, அருகிலிருந்த மரக்கிளைகளின்மேல் அமர்ந்திருந்தன.

அவை இருந்த இடத்தில் இன்று காவடிகள்!

சீனப் புத்தாண்டின் சிறப்பு அம்சமான சிங்க நடனத்துக்கான வெள்ளை, சிவப்பு வண்ணச் `சிங்கங்கள்,` அவற்றுள் இரு ஜோடி மனிதக் கால்கள், மற்றும் பொய்க்கால் குதிரைகள், இன்னும் என்னென்னவோ அங்கு தென்பட்டன.

மஞ்சள் புடவை சுற்றியிருந்த பெண்கள் அனைவருமே ஒப்பனை அணிந்திருந்தார்கள். ஒப்பனை என்றால் வெறும் பவுடர் பூச்சு, கண் மை இல்லை. உதட்டில் சிவப்புச் சாயம். அவர்கள் கன்னங்கள் அலாதிச் சிவப்புடன் விளங்கின. கண் இமைகளோ நீலம்.

`இது என்ன கண்ராவி! சாமி கும்பிடக்கூடவா இப்படி அலங்காரம் பண்ணிக்கிட்டு வரணும்!` என்று தனக்குள் அங்கலாய்த்துக்கொண்டாள் வள்ளியம்மை.

அந்த இடம் ஒரே அமளியாக இருந்தது. பின்னணியில் கோபுரம் தெரிய, மூன்று பக்கங்களையும் தடுத்து, வேலிபோல் ஒரு கயிற்றால் கட்டியிருந்தார்கள். வேலிக்கு அப்பால் இருந்தவர்கள் உள்ளே நுழைந்துவிடாதபடி தடுப்பதற்கென

சீருடை அணிந்த காவல்காரர்கள்.

`இங்க அப்படி என்னதான் நடக்குது?` வள்ளியம்மை மனத்துக்குள் பேசுவதாக நினைத்து, வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

பக்கத்தில் நின்றிருந்த சிறுவன், “படம் புடிக்கறாங்கக்கா!” என்று தெரிவித்தான், குதூகலமாக.

“யாருடா நடிகர்?” என்று விசாரித்தாள், ரொம்ப தெரிந்தாற்போல். வள்ளியம்மை திரைப்படம் பார்த்தது எப்போதோ, அவள் கல்யாணத்துக்குமுன்.

“அது யாரோ தெரியலக்கா. ஆனா, மமதா காவடியாட்டம் ஆடப் போறாங்களாம். கதைப்படி, இன்னிக்கு தைப்பூசம். அதனால, அவங்களைச் சுத்தி, `வேல், வேல்`னு கத்திக்கிட்டும், ஆடிக்கிட்டும் போக பள்ளிக்கூடப் பசங்களைக் கூட்டி வந்திருக்காங்க. அங்க பாத்தீங்களா, மஞ்சள் சட்டை? என் தம்பிதான்!” பெருமையோடு தெரிவித்தான். பழனிக்கோ, திருப்பதிக்கோ போய், `மொட்டை போட்ட என் தம்பியைப் பாத்தீங்களா?` என்று கேட்பதுபோல் இருந்தது.

அவளையும் அச்சிறுவனது ஆர்வம் தொத்திக் கொண்டது.

ராட்சத கேமரா ஒன்று மேலேயிருந்து வளைந்து, எதையோ படமெடுத்துக் கொண்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தாள். சுற்றியிருந்த கும்பல் மறைத்ததில், யார், எங்கே, எப்படி நடிக்கிறார்கள் என்பதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை.

பாட்டின் ஒரே வரி, வாத்திய இசையாக திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தது. சூரியனும் நேர் எதிரே வந்தான், படப்பிடிப்பைக் காணும் ஆர்வத்துடன்.

பாட்டு தாற்காலிகமாக நின்றது.

`சாமி கும்பிட வந்திட்டு, என்னா செஞ்சுட்டு இருக்கிறேன்!` என்று தன்னைத்தானே நொந்தபடி, சந்நிதானத்தை நோக்கி நடந்தாள்.

`சினிமாவே பார்க்கக்கூடாது!`

வேலுவை மணந்த அன்றே அவள் செய்துகொண்ட சங்கல்பம். எல்லாம் கழுத்தில் தாலி ஏறிய கையோடு, அத்தை அவளைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய், காதில் ஓதியதற்குப் பிறகுதான்.

“வள்ளி! என் மகனைத் திருத்தறது ஒன் கையிலதாண்டி இருக்கு. இப்படி ஒரு நல்ல குடும்பத்தில இவனைமாதிரி தறுதலை எப்படித்தான் பிறந்திச்சோ!” என்று சொல்லிக்கொண்டு போனவளை, மருமகள் இடைமறித்தாள். “அத்தான் நல்லவர், அத்தை. சும்மா சொல்லாதீங்க!”

அத்தை புன்முறுவலை அடக்கிக்கொண்டு, தொடர்ந்தாள்: “பின்னே என்னடி? சாமி கிடையாது, பண்டிகை, பெருநாள் எதுவும் கிடையாது இவனுக்கு. நமக்கெல்லாம் சிவனும், முருகனும் கடவுளுன்னா, இவனுக்கு சினிமா நடிகனுங்கதான் தெய்வம். எல்லாப் படமும் வெளியான அன்னைக்கே பாத்தாகணும் இவனுக்கு. அப்புறம், அதில கதாநாயகன் பூப்போட்ட சட்டை போட்டிருந்தா, அதேமாதிரி தானும் ஒண்ணு வாங்கிக்குவான். மெல்லிசா, ஒடம்பைக் காட்டற கையில்லாத சட்டை, கட்டம் போட்ட கைலி, காதை மறைக்கிற நீட்டமான முடி — இப்படி எல்லாமே சினிமாவில கத்துக்கிட்டதுதான்!”

இதெல்லாம் தனக்கு ஏற்கெனவே தெரிந்த சமாசாரங்கள்தாமே என்று எண்ணமிட்டாள் வள்ளியம்மை.

முக்கியமான ஒன்றை அத்தை விட்டுவிட்டாளே! தான் நடிகரைப்போல் இருக்க ஆசைப்பட்டவர், தனக்கு வரும் மனைவியும் நடிகைமாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதினால்தானே அவர் அவளுக்குக் கிடைத்தார்!

“வள்ளி! நேத்து நம்ம வீட்டுக்கு வந்தானே, பாஸ்கர், அவன் சொல்றான், நீ அச்சு அசலா சிலுக்குமாதிரி இருக்கியாம். `சினிமாக்காரங்க பாத்தா, கொத்திட்டுப் போயிடுவாங்க`ன்னான்!”

தன்னுடன் உரையாடுகையில் அத்தான் முகத்தில் இவ்வளவு பூரிப்பை அவள் அதற்குமுன் பார்த்தது கிடையாது.

“அட, நம்ப சிலுக்கு சுமிதாவைத்தான் சொல்றேன். ரொம்பக் கொஞ்சமா டிரெஸ் பண்ணிக்கிட்டு, வளைஞ்சு, நெளிஞ்சு டான்ஸ் ஆடுவாளே, அவ! அவ கண்ணழகுக்கே கோடிகோடியா கொட்டிக் கொடுக்கலாம். அமெரிக்காவில பிறந்திருந்தா, எங்கேயோ போயிருப்பா. பாவிப்பொண்ணு, அநியாயமா தற்கொலை பண்ணிக்கிட்டா!” என்று காலங்கடந்து விசனப்பட்டான்.

தன்னை `முட்டைக்கண்` என்று பழித்த அத்தானா இது!

தான் அழகாயிருக்கிறோமாமே!

“காலாகாலத்தில வள்ளியை ஒருத்தன் கையில பிடிச்சுக் குடுக்கணும்,” என்று தாய் பேச்சுவாக்கில் சொன்னபோது, “ஏம்மா? கையில வெண்ணையை வெச்சுக்கிட்டுன்னு ஏதோ சொல்வாங்களே! அதான் முறை மாப்பிள்ளை நான் இருக்கேன்ல?” என்ற வேலுவைப் பார்த்து வள்ளியைவிட அத்தைதான் அதிகமாக ஆச்சரியப்பட்டாள்.

தமிழ்ப்பட ஷூட்டிங் பார்ப்பதற்கென்று விமானச் செலவு செய்து, சென்னை போய்வந்தவன். `நல்லவேளை, இந்தக் கிறுக்கு அங்கேயிருந்து எவளாவது சினிமாக்காரியை இழுத்துட்டு வரல,` என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், `அவர்களைவிட என் மருமகள் அழகி!` என்று பெருமிதம் கொண்டாள்.

முதலிரவன்றே மனைவியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான் வேலு: “இதோ பாரு, வள்ளி. நீ சாமி கும்பிட்டுக்க, கோயிலுக்குப் போ, ஏதோ செய். ஆனா, என்னை இதில எல்லாம் இழுக்கக்கூடாது”.

இந்தமட்டில் நம் சுதந்திரத்தைப் பறிக்காமல் இருக்கிறாரே என்ற மகிழ்ச்சிதான் அப்போது அவளுக்குள் எழுந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, `நாம் மலடியாக இருப்பது ஏதாவது தோஷத்தாலோ?` என்ற சந்தேகம் அவளைக் குடைந்து கொண்டிருந்தது.

ஆன்மிகப் பத்திரிகைகளில் ஏதேதோ போடுகிறார்களே! தமிழ் நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட சில கோயில்களில் புற்றுக்குப் பால் வார்த்தாலோ, அல்லது வேறு ஏதாவது பூசை, விரதங்களை அனுஷ்டித்தாலோ, மகப்பேறு உண்டாகிறதாம்.

இதை அத்தானிடம் எப்படிச் சொல்வது!

`நாம்ப பார்க்காத டாக்டரா, வைத்தியமா! விஞ்ஞானத்தால செய்ய முடியாததை ஒங்க சாமியும், பூதங்களும் செய்யப் போகுதாக்கும்!`என்று கேலி செய்வார்.

மகனுக்கும், கடவுளுக்கும் இடையே என்ன பிரச்னை என்று வேலுவின் தாயாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிறு வயதில், வருடம் தவறாது, அவனுடைய அப்பாவுடன் போய், பத்துமலையில் முடியிறக்கிக் கொண்டவன்தானே!

அவளுக்குத் தெரியாது, குழப்பமே அங்கேதான் ஆரம்பித்தது என்று.

தைப்பூசத்தை அடுத்த சில நாட்களில், அவனுடைய இயற்பெயர் அவனுக்கே மறந்துவிடும் அளவுக்கு, பள்ளியில் எல்லா மாணவர்களும் சொல்லிவைத்தாற்போல, அவனை, மொட்டை என்று பொருள்பட, `போத்தா` (BOTAK) என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

முடி வளர்ந்தது.

ஆனால், பெயர் நிலைத்தது.

`கோயிலுக்குப் போனதால்தானே இந்த அழகான சுருள் முடியை இழக்க நேரிட்டது,` என்று யோசித்தான். கடவுள் அவனுக்கு எதிரியாகிப் போனார். அவர் விட்டுச் சென்ற சூனியத்தை தமிழ் திரையுலகம், அடிக்கடி மாறும் அதன் நாயக, நாயகிகள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.

“நாளைக்குப் பெரிய பரீட்சைடா! நல்லா எழுதணும்னு சாமி கும்பிட கோயிலுக்கு வரல?” பதைப்புடன் கேட்டாள் தாய்.

“நான் ஒழைச்சுப் படிக்கிறேன், நான் நினைக்கிறதை கை எழுதிட்டுப் போகுது. பேனாவும் இருக்கு. இதில சாமி எங்கேயிருந்து வந்தாரு?”

`இள ரத்தம் முரண்டு பண்ணுது!` அதிகம் வற்புறுத்தினால், தெய்வ நிந்தனை செய்து, பாபத்தை அடைந்துவிடப் போகிறானே அருமை மகன் என்று அவனை அவன் போக்கில் விட்டது தப்பாகப் போயிற்று என்று தாய் குமைந்தாள்.

வேலு வளர வளர, அவனுடைய நாத்திகக் குணமும் வளர்ந்தது. தான் எப்படி மாறினோம் என்பது அவனுக்கு மறந்தே போயிற்று. கொள்கையை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டான்.

தன் கல்யாணம் எந்தக் கோயிலிலும் நடக்கக் கூடாது, பூசை முறைகளும் கூடாது, வெறும் பதிவுத் திருமணம் மட்டும் போதும் என்று வேலு கண்டித்துக் கூறிவிட, அவனைப் பெற்றவள் அதிர்ந்தாள். எந்த முகத்துடன் சொந்தக்காரர்களைப் பார்ப்பது! வேறு வழியின்றி, கண்ணீருடன் ஒப்பினாள். மருமகள்தான் இனி தன் மகனுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்று நிம்மதியுடன் தன் பொறுப்பை அவள் தலையில் சுமர்த்தினாள்.

ஆயிற்று. அத்தைக்கு வாக்குக் கொடுத்து, பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. தன்னால் இன்னும் அத்தானைக் கோயிலுக்குள் வரவழைக்க முடியவில்லை.

பெருமூச்செறிந்தபடி, இறைவன் சந்நிதானத்தில் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்த வள்ளியம்மை மனதில் ஒரு பொறி தட்டியது.

கடவுள்மேல் அத்தானுக்கு என்னவோ வன்மம். அதுதான் கோயிலுக்குள் நுழைய மறுக்கிறார்.

ஆனால், கோயிலுக்குள் கடவுள் விக்கிரகம் மட்டும்தானா இருக்கிறது, இன்று?

தெளிவு உண்டாக, வள்ளியம்மை விழுந்து கும்பிட்டாள்.

போகும் வழியில், “யாரெல்லாம் நடிக்கிறாங்க, தம்பி?” என்று கவனமாகக் கேட்டு வைத்துக்கொண்டாள்.

அவள் வீடு திரும்பியபோது, கணவன் மத்தியான சாப்பாட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். வீட்டில் தவசிப்பிள்ளை இருந்தாலும், மனைவி கையால் சாப்பிடுவதுபோல் ஆகுமா!

“எத்தனை நேரமா காத்துக்கிட்டிருக்கேன்! பசி கொல்லுது. எங்கே போயிட்டே?” என்று ஆரம்பித்தவன், அவள் நெற்றியைக் கவனித்துவிட்டு, “கோயிலா?” என்றான், அசுவாரசியமாக.

“ஒரு அர்ச்சனை செய்துட்டு, ஒடனே வரலாம்னுதாங்க போனேன். ஆனா, அங்க பாருங்க, மமதா..,” கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக்கொண்டே சற்று நிறுத்தினாள் வள்ளியம்மை.

எவ்வளவோ முயன்றும், வேலுவால் தன் ஆர்வத்தை வெளிக்காட்டாது இருக்க முடியவில்லை. “எந்த மமதா?” என்றான் அவசரமாக.

“நான் என்னத்தைக் கண்டேன்! யாரோ சினிமாவில கவர்ச்சி நடனம் ஆடறவங்களாம். ஆனா, இன்னிக்கு குடும்பப் பாங்கா, மஞ்சள் சீலை உடுத்திக்கிட்டு, அவங்க அங்க காவடியாட்டம் ஆடினது இருக்கே!” என்று ஒரேயடியாக அளந்தாள்.

“நீ பாத்தியா?” கணவனின் குரலில் பொறாமை.

“நான் ஒருத்திதானா! கோலாலம்பூரில இருக்கிற தமிழவங்க யாரும் இன்னிக்கு வேலைக்கோ, பள்ளிக்கூடத்துக்கோ போகலபோல! அவ்வளவு கும்பல்! சாப்பாட்டுக் கடைங்களில வேலை செய்யறவங்க எல்லாம் ஓய்ஞ்சு போயிட்டாங்க, பாவம்!” இவள் எங்கே சாப்பாட்டுக் கடைகள் பக்கம் போனாள்! கணவனின் கவனத்தை ஈர்க்க, சில பொய்களைச் சொன்னால் தப்பில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள் வள்ளியம்மை.

வேலு அவசரமாக எங்கோ புறப்பட்டதைக் கண்டு, தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள். “சாப்பிடலே?”

“ஒரு முக்கியமான மீட்டிங். மறந்துட்டேன்,” என்றபடி பென்ஸ் காரில் பறந்தான் அவன்.

மமதா! இளைஞர்களின் இன்றைய கனவுக் கன்னி!

சூபர் டூபர் ஸ்டாருடனேயே ஆட்டம் போட்டவள். அவருடைய காதலி — `திரையுலகில் மட்டுமில்லை,` என்றது கிசுகிசு.

தான் இன்னும் இளம் வாலிபன் இல்லைதான். பெண்டாட்டியும் சிலுக்குமாதிரி இருக்கிறாள். ஆனாலும், ஆணாய் பிறந்தவன் ஒருவன் அழகான பெண்ணொருத்தியைப் பார்த்து ரசிப்பதில் என்ன தவறு?

இதுவரை மமதாவை திரையில்தான் பார்த்திருக்கிறோம். நேரில் இன்னும் அழகாக இருப்பாளாமே!

கோயிலிலிருந்த கும்பலிலும் ஒரு பிரமுகர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். “வாங்க, வாங்க! வராதவங்க வந்திருக்கீங்க. பூசைக்கு இருந்திட்டுத்தான் போகணும். இன்னிக்கு என்னோட உபயம்,” என்று ஆரவாரமாக வரவேற்றவர், “கதாநாயகி நம்ப வீட்டிலதான் தங்கியிருக்காங்க,” என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.

வேலுவுக்கு அதற்குமேல் எந்த உபசாரமும் வேண்டியிருக்கவில்லை.

படப்பிடிப்பு முடிந்து, வியர்வை பெருகிய முகத்துடன் வந்த குண்டுப் பெண்மணியை எங்கோ பார்த்த நினைவாக இருந்தது.

“தெரியுதில்ல?” என்று சிரித்த நண்பர், “இவரு ஞானவேலு. நம்ப நாட்டில பெரிய கோடீஸ்வரர்,” என்று அவளுக்கு அறிமுகப்படுத்த, அவள் கண்கள் விரிந்ததை வேலு கவனிக்கத் தவறவில்லை.

இவளா?

இவளா!

முகத்தில் அப்பியிருந்த வண்ணங்கள் குழம்பி, அவளைப் பரிதாபமாகக் காட்டின. இன்ன வயது என்று கணிக்க முடியாவிட்டாலும், இவள் ஒன்றும் சின்னப் பெண்ணில்லை என்று தெரிந்தது வேலுவுக்கு. வள்ளியைவிட மூத்தவளாகவே இருப்பாள் என்று எங்கோ ஓடியது எண்ணம்.

ஒரேயடியாக இளித்தபடி அவள் கூழைக் கும்பிடு போட்டபோது, தன்னையும் அறியாமல் வேலு பின்னால் நகர்ந்துகொண்டான். வியர்வையும், ஏதோ செண்டின் வாசனையும் சேர்ந்து, குமட்டலை வரவழைத்தன.

“வன்கம்!” அவள் குரலிலோ, உருவத்திலோ சத்தியமாக இனிமை இல்லை.

`இவள் எந்தப் படத்தில் சொந்தக் குரலில் பேசியிருக்கிறாள்!` என்ற எரிச்சல் எழுந்தது வேலுவுக்கு. யாரோ தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றியதைப் போல உணர்ந்தான். வருத்தமும், கோபமும் ஒருங்கே எழுந்தன.

திரையில் பார்ப்பதையெல்லாம் அப்படியே நம்பும் தன்னைப்போன்ற இளிச்சவாயர்கள் இருக்கும்வரை, பட உலகில் பித்தலாட்டங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

கோயில் சந்நிதானத்தில் வேலு நுழைந்தான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து செய்து, காற்றிலேயே ஓர் ஆன்மிக அலை கலந்திருந்தாற்போல் பட்டது வேலுவிற்கு. கண்கள் தாமாக மூடிக் கொண்டன. ஆகா! இந்த இடத்தில் நிற்பதே எவ்வளவு நிம்மதியாக, நிறைவாக இருக்கிறது!

ஏனோ, அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது. ஓரிரு முறை அழைத்துப் பார்த்துவிட்டு, அப்புறம் தன் போக்கிலேயே விட்டுவிட்டாளே!

ஏன், வள்ளி மட்டும் என்ன! ஒரு தடவையாவது, `நீங்களும் கோயிலுக்கு வாங்களேன்!` என்று அழைத்திருப்பாளா?

என்றோ தான் அறியாத்தனமாகச் சொன்னதை அப்படியே வேதவாக்காகப் பிடித்துக்கொண்டு, தனது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்துகொண்டு வருகிறாளே!

இப்படி ஒரு மனைவி அமைந்ததற்காவது படைத்தவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?

சாயங்காலம் வீடு திரும்பிய கணவனின் நெற்றியில் குங்குமம் இருக்கக்கண்ட வள்ளி அதிசயித்தாள். சாமியோ, மமதாவோ, இவர் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது யாராக இருந்தால் என்ன! இருவருக்குமே மானசீகமாய் நன்றி செலுத்தினாள்.

அவள் எதுவும் கேட்குமுன் முந்திக்கொண்டு, “இன்னிக்கு கோயில்ல நம்ப கூட்டாளியோட உபயமாம். ரொம்ப வற்புறுத்திக் கூப்பிட்டாரு. இவங்களைப் பகைச்சுக்கிட்டா, பிசினஸ் என்ன ஆறது! அதனால போய்வெச்சேன்!” என்ற வியாக்கியானம் எழுந்தது.

வள்ளியம்மை தனக்குள் சிரித்துக்கொண்டாள். குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான்.

“எப்படி இருந்திச்சு கோயில்ல?” என்று விசாரித்தாள், வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன்.

“எனக்கென்னமோ கோயில்ல இப்படியெல்லாம் அமர்க்களப்படுத்தறது பிடிக்கல. கோயிலுன்னா, சாமி கும்பிட வந்தவங்களை அமைதிப்படுத்தறமாதிரி இருக்க வேணாம்? பிராகாரத்தில பத்துப் பதினஞ்சு பையனுங்க கத்திக்கிட்டு, ஓடிப்பிடிச்சு விளையாடறானுங்க! நல்லா திட்டினேன்! குருக்கள் என்னைப் பாத்து சந்தோஷமா சிரிச்சாரு!”

“கோயில்னா அப்படித்தாங்க! சத்தமா இருக்கும்,” என்று ஏதோ சொல்லிவைத்தாள் மனைவி.

“நாம்ப ரெண்டுபேரும் ஜாலியா, பெரம்பானான் போகலாமா?” பேச்சு திசை மாறியது.

“ஜாவாதானே? அங்க என்னங்க?”

“ஆயிரம் வருஷத்துக்கு முன்னால சோழ ராஜாக்கள் கட்டின கோயிலுங்க. ரொம்ப காலமா காட்டில புதைஞ்சு கடந்திச்சாம். இப்போ, ஒவ்வொரு கல்லா வெளியே எடுத்து, திரும்பப் பொருத்தி இருக்காங்க. சிவன், விஷ்ணு, பிரம்மா மூணு தெய்வங்களுக்கும் தனித்தனியா, பெரிய கோயில். நம்ப அழகப்பன் போய் பாத்துட்டு வந்தாரு, எப்பவோ மூணு, நாலு வருஷத்துக்கு முந்தி. இன்னும் அதைப்பத்தியேதான் பேசிக்கிட்டு இருக்காரு!”

“அப்படியா!” வாயைப் பிளந்தாள் வள்ளியம்மை.

“இப்போ கோயில்ல பூசை கிடையாது. சுற்றுலாத்தலம் ஆக்கிட்டாங்க. அதனால என்ன ? சாமியோட மகிமை குறைஞ்சுடுமா? நமக்கு வேணுங்கிறதைக் கேட்டா, குடுக்காதா, என்ன!” என்று கண்ணடித்த வேலுவை, “போதும், போதும். எனக்கு மயக்கமா வருது!” என்று வாய்கொள்ளாச் சிரிப்புடன் தடுத்தாள் வள்ளியம்மை.

7


நிமிர்ந்த நினைவு


ஒரு பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில் பெரிய பூட்டு. ஏதோ சிறை போன்றிருந்தது.

அலுவலகத்தினுள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது. எதிரே, ரேணு — குனிந்த தலையுடன். நகத்தைக் கடிக்க வேண்டுமென்ற துடிப்பை அடக்கிக்கொள்ள பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டு.

“பெரிய படிப்பு படிச்சவங்க நீங்க! இந்த இடத்துக்கு வரலாமா?” அங்கலாய்ப்புடன் கேட்டாள் லீலா.

`என்றுமே என் உலகம் தனிதான்!` என்ற அயர்ச்சி எழ, ரேணுவின் முகத்தசைகள் இறுகின.

அவ்வீட்டில் பெண்களும், குழந்தைகளும் மட்டும்தான். பன்னிரண்டு வயதுக்குமேல் ஆன எந்த ஆணுக்குமே அதற்குள் நுழைய அனுமதி கிடையாது. அவளைப் போன்றே கணவனிடம் வதைபட்டு, காவல் துறை அனுப்பியதாலோ, அல்லது தன்னிச்சையாகவோ வந்திருந்த, மலாய், சீனர் உள்பட, மற்றும் இருபது பெண்கள் அந்த ஆதரவு மையத்தில் இருந்தாலும், அவர்களைப்போல் தன் மணவாழ்க்கையின் அவலத்தை உரக்கப் பகிர்ந்துகொள்ளவோ, அல்லது தினசரி யார் என்ன வேலை செய்வது என்று வாய்ச்சண்டையில் பொழுதைப் போக்கவோ அவளால் முடியவில்லை.

இல்லத் தலைவியான லீலாவின் பரிதாபத்தை எதிர்கொள்ள முடியாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ஏழெட்டு ஆண்டுகளாக பெரும்பாடுபட்டு மறைத்து வைத்திருந்த அவலம் இப்படி பகிரங்கமாகி விட்டதே என்ற அவமானம்.

காலையில் படுக்கையில் படுத்தபடியே கண்களைத் திறந்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்றுகூட புரியாது திகைத்துப்போய், சொல்லவொண்ணாத பயம் மேலெழ, மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

பயம்…பயம்…

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக. அதாவது, திருமணமாகி ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே, வேறு எந்தவித உணர்ச்சியுமே மனிதப் பிறவிக்குக் கிடையாது என்பதுபோல் அல்லவா பயம் அவளை அலைக்கழிந்திருந்தது!

`அது என்ன சில வருடங்கள்?` உள்மனம் கடுமையாக ஆட்சேபித்தது.

லீலா ஏதோ சொல்வதுகேட்டது. “சீனச்சி, `எதுக்கும் இருக்கட்டும்`னு புருஷனுக்குத் தெரியாம, அப்பப்போ கொஞ்சம் பணத்தைப் பதுக்கி வைச்சுக்குவா. பிள்ளைங்களுக்கு விவரம் தெரியற வயசு வந்ததும், அவங்ககிட்ட சொல்லிட்டு, தனியா போயிடுவா. ஆயுசு பூராவும் அடி வாங்கிச் சாக மாட்டா. மலாய், தமிழ்ப் பொண்ணுங்கதான் இப்படி — கட்டினவன் என்ன செஞ்சாலும், பொறுத்துப்போறது!” உணர்ச்சியற்ற குரலில் சொன்னதைக் கேட்டால், பலபேரிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கலாம் என்று ஊகிக்கும்படி இருந்தது. “ஒங்களுக்குத்தான் சுய சம்பாத்தியம் இருக்கே! தனியா போயிருக்கலாமே!”

ரேணு மௌனம் சாதித்தாள்.`அவர் மாறுவாரென்று நம்பிக்கிட்டு இருந்தேன்,` என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம் என்று அவளுக்கே புரிந்தது.

“ஒங்க வீட்டுக்காரருக்கோ வேலை இல்லை. என்னமோ தில்லுமுல்லு பண்ணினதில, வக்கீல் தொழில் செய்யற லைசன்சைப் பிடுங்கிக்கிட்டாங்க. நீங்க அப்படியா! சரி.. எப்படிப் பாத்தாலும், ஒங்க கைதானே ஓங்கியிருக்கணும்? ஆனா, நெசமாவே அவரோட கை ஓங்கி இருந்திருக்கு. அதுக்கு ஒங்க ஒடம்பு முழுவதும் அத்தாட்சி!” நம்ப முடியாதவளாக தலையை ஆட்டிக்கொண்டாள் லீலா. “எத்தனை எலும்பு முறிஞ்சிருக்கு! பொறுமைக்கும் ஒரு அளவு கிடையாதா, என்ன ரேணு? இங்க வந்து சேர்ந்திருக்காட்டி, ஒங்க உசிரே போயிருந்தாக்கூட ஆச்சரியமில்லை”. வதைபட்ட பெண்களுக்கு நல்வாழ்வு காட்டுவதிலேயே தன் காலத்தைச் செலவழித்திருந்தவள் லீலா. “இப்படி சுவரையே வெறிச்சுப பாத்துக்கிட்டிருக்காம, ஏதாவது பேசுங்க. நீங்க எல்லாத்தையும் மனம்விட்டுச் சொன்னாதான் நாங்க ஒங்களுக்கு உதவ முடியும். நீங்களும் ஒரு தீர்வு காண முடியும்”.

“தீர்வா?”

“அதான், திரும்ப ஒங்க கணவர்கிட்ட போகப்போறீங்களா, இல்ல விவாகரத்துக்கு மனு போடப்போறீங்களான்னு..”

“விவாகரத்து வேணாம்..” அவசரமாகச் சொன்னாள் ரேணு. கல்லூரி நாட்களில், அறிவார்த்தமாகத் தன்னுடன் பேசிப் பழகி, மரியாதையாக நடத்திய கிரியை இனி காண்போமா என்ற ஏக்கம் எழுந்தது.

“நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எங்க பக்கபலம் உண்டு. ஆனா, திரும்பத் திரும்ப ரத்தக்களரியா இங்கே திரும்பி வரமுடியாது. எங்க விதிப்படி, ஒருத்தர் மூணு தடவைதான் வரலாம்”.

உடல் உயரமாக இருந்தாலும், குறுகியபடி எதிரே அமர்ந்திருந்தவளின் மன இறுக்கத்தைக் குறைக்க ஒரே வழி தான் நிறைய பேசுவதுதான் என்று அனுபவத்தில் உணர்ந்திருந்த லீலா, “எனக்கு ஒண்ணுதான் புரியல. ஒங்களைப்பத்தி நீங்க பெருமையா நினைச்சு நடந்திருக்கணும். அது எப்படி ஒங்களை இவ்வளவு மட்டமா ஒருவர்.., அது ஒங்க கணவரே ஆனாலும், நடத்த விட்டீங்க? ப்ளீஸ் ரேணு! என்னை ஒரு தோழியா நினைச்சுச் சொல்லுங்க!”

தோழி!

இதுநாள்வரை தனக்கு நெருக்கமான ஒரு தோழிகூட கிடையாது என்ற உண்மை கசப்பாக அடிநாக்கில் படிந்தது. ரேணு விம்மினாள்.

அவளை அழவிட்டுக் காத்திருந்தாள் மற்றவள்.

எல்லாப் பெண்களையும்போல் தான் எந்த ஆடவனையும் சார்ந்து வாழ முடியாது என்றுதான் ரேணு நினைத்திருந்தாள், கிரியைச் சந்திக்கும்வரை. அந்த நினைப்பின் வித்து பக்கத்து வீட்டுக் கிழவர் அவளது ஆடைகளைக் களைந்து, ஏதேதோ செய்தபோது அவளது உள்மனத்தில் ஆழமாக விழுந்திருந்தது.

தான் ஏதோ தப்பு செய்கிறோம் என்றவரை அந்தக் குழந்தைமனதுக்குப் புரிந்தது. ஆனால், பாவாடை அழுக்கானால்கூட திட்டும் தாயிடம் தாழிட்ட அறைக்குள் அடிக்கடி நடந்ததை எப்படிப் பகிர்ந்துகொள்வது?

அவளால் முடிந்ததெல்லாம் தன் உடலை ஆக்கிரமிக்கும் தாத்தாவைக் கண்டு பயப்படுவது ஒன்றுதான். அந்த பயமே அவருக்குச் சாதகமானது புரியும் வயதாகவில்லை அப்போது.

அடுத்த வருடமே ரேணுவின் பெற்றோர் வேறு வீட்டிற்கு மாறிப் போய்விட்டாலும், அந்த நாட்களின் பாதிப்பு வாழ்நாட்கள் பூராவும் தன்னை உறுத்தும் என்று அப்போது ரேணு எதிர்பார்த்திருக்கவில்லையே!

தான் மிகவும் கேவலமானவள், இல்லாவிட்டால் தன்னை ஒருவர் இப்படியெல்லாம் நடத்தி இருக்கமாட்டார் என்ற குற்ற உணர்ச்சி அவளோடு தானும் வளர்ந்தது. மற்ற பெண்களைவிட எப்போதும், எல்லாவற்றிலும் தான் ஒரு படி மேலே நிற்க வேண்டும் என்ற வீம்பு உண்டாயிற்று.

பதினாறு வயதில் சக மாணவிகள் ஆண்களைப்பற்றி கூடிக் கூடிப் பேசி, காரணமில்லாமல் சிரித்தபோது, அந்த மாதிரி பேச்சுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டாள்.

“இப்படி இந்த வயசிலேயே சாமியாரா இருந்தா, யாராலதான் கிளாசில எப்பவும் முதலாக வரமுடியாது?” என்றெல்லாம் வயிற்றெரிச்சலுடன் அவர்கள் பேசியது அவள் காதிலும் விழாமல் இல்லை. தன்னைப் பார்த்துப் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைப்பட முடியவில்லை. இப்படி எல்லாரிடமிருந்தும் மாறுபட்டுப் போனோமே என்ற வருத்தம்தான் எழுந்தது அவளுக்கு.

அப்போதெல்லாம், தன்னை இப்படி ஒரு கேலிப்பொருளாக, அரைப் பைத்தியமாக ஆக்கி விட்டிருந்த அந்தக் கிழவரின்மேல் ஆத்திரம் மூளும். அவர் என்றோ இறந்து போயிருக்கக்கூடும். ஆனால் அவர் செயலின் பாதிப்பு நிரந்தரமாகத் தங்கிவிட்டது அவளிடம்.

இனி என்னதான் யோசித்தாலும், நடந்ததை மாற்றவா முடியும் என்ற உண்மை உறைக்கையில், இரண்டு மூன்று நாட்கள் ஏதோ அடியற்ற பாதாளத்தில் விழுநதுவிட்டதைப்போல் இருக்கும். மிகுந்த பிரயாசை செய்து, மேல் எழுவாள். அத்தகைய சமயங்களில் கொழுகொம்பாக அமைந்தது படிப்பு. மேலும் மேலும் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கி, தனித்துப் போனாள்.

`இப்படியே இருந்துவிட்டால் போதும்,` என்று சிறிது நிம்மதி எழுந்தபோதுதான் கிரி அவள் வாழ்க்கையில் புகுந்தான்.

ரேணுவின் போக்கே புதுமையாக, ஒரு சுவாரசியத்தை உண்டுபண்ணுவதாக இருந்தது அவனுக்கு. அவன் நெருங்க நெருங்க, அவள் ஒதுங்கிப் போனது சவாலாக இருந்தது.

`மற்ற பெண்களைவிட நீங்கள்தான் எத்தனை வித்தியாசமாக இருக்கிறீர்கள்!`

`எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! பூர்வ ஜன்ம வாசனையாகத்தான் இருக்க முடியும்`.

கடல் அலையால் ஓயாது அலைக்கழைக்கப்படும் பாறாங்கல்லே நாளடைவில் தன் கூர்மையை இழந்து, உருண்டையாக ஆகிவிடுகிறது. இவள் கேவலம், உயரமும், ஒல்லியுமான பெண். சற்றுக் கூனல் வேறு என்று கணக்குப் போட்டான். மாற்ற முடியாதா, என்ன!

`இன்னும் என்னென்ன செய்தால் இவளை வழிக்குக் கொண்டு வரலாம்?` என்று யோசித்து யோசித்து திட்டம் போடுவதே பேரின்பமாக இருந்தது. ஓடும் விலங்கை துரத்தித் துரத்திப் பிடிப்பதில்தானே வேடுவனுக்கு உற்சாகம்!

நாலடி தள்ளியே நின்று, அறிவுபூர்வமாக எதையாவது விவாதிக்கும்போது அவள் முகத்தின் இறுக்கம் குறைகிறது என்று புரிந்துகொண்டான். வழக்கமான தனது மன்மத ஆட்டங்களைக் குறைத்துக்கொண்டு, பல்வேறு பொருட்களில் அமைந்த புத்தகங்களைத் தேடிப் படித்தான். மறுநாள் வாசகசாலையிலோ, உணவு விடுதியிலோ ரேணுவைத் `தற்செயலாகச்` சந்தித்து, தன் அறிவுத்திறமையை வெளிப்படுத்திக் கொண்டான்.

`என்னை மாதிரியே இவரும் ஒரு தனிமை விரும்பி. ஓயாது படிக்கிறாரே! என்ன துயரமோ, பாவம்!` என்று ஆரம்பத்தில் பரிவு காட்டியவள், தனிமையிலேயே வாடும் இருவர் ஒருவரை ஒருவர் சார்ந்தால், வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று எண்ண ஆரம்பித்தாள்.

பழம் கனிந்துவிட்டதை உணர்ந்தான் கிரி. இவளை அனுபவித்துவிட்டு ஓடிவிட ஒத்துக்கொள்ளமாட்டாள், கல்யாணம் ஒன்றுதான் வழி என்பதைப் புரிந்துகொண்டிருந்ததால், தன் கேரரிக்கையை மெள்ள வெளியிட்டான்.

உடனே அவள் சம்மதித்தபோது, தன் ஆற்றலில் மிகுந்த கர்வம் உண்டாயிற்று கிரிக்கு.

முதல் வருடம், அவன் என்ன பேசினாலும் மெய்மறந்து, அவனுடைய முகத்தையே பார்த்த மனைவியால் கிரியின் ஆண்மை பெருமிதம் கொண்டது.

போகப் போக, ஒரு இளம்பெண்ணுக்குரிய துடிப்பு சற்றுமின்றி, கண்ணிலும் ஒளியின்றி அவள் மந்தமாக இருந்தது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அவனுடைய உடலின் நெருக்கத்தை அவள் வேண்டாவெறுப்பாகப் பொறுத்துப் போவதுபோல்தான் பட்டது. `இவளுக்கு மரத்தால் செய்த உடம்பா என்ன,` என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு.

அவனுக்குப் புரியவில்லை, என்றோ மனதில் படிந்த பயம், அத்தருணங்களில் தன் உடலின்மேலேயே அவளுக்கு உண்டான அருவருப்பு, `இதெல்லாம் தவறு` என்ற உறுதியான எண்ணம் முதலியவைதான் அவள் போக்கிற்குக் காரணமென்று.

புதுமோகம் எழுந்த வேகத்திலேயே மறைய, பிற பெண்களை நாடினான். மனைவியிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தவனுடைய போக்கை எந்தவித எதிர்ப்பும் காட்டாது அவள் ஏற்றது அவனுடைய ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

`போயும் போயும் இப்படி ஒரு உம்மணாமூஞ்சியை மயக்கவா அவ்வளவு பாடுபட்டேன்!` நனவுலகத்தின் கசப்பை மாற்ற குடித்தான். குடித்ததால், இன்னும் கேவலமாக ஆனான்.

ஒரு நாள் ரேணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கிரி — ரசத்தில் உப்பு போட மறந்துவிட்ட குற்றத்துக்காக. உடனே, சம்பளத்தை அப்படியே தன் கையில் கொடுத்துவிடும் சாதுவான மனைவியைப் பகைத்துக் கொள்வதா சரிதானா என்ற நினைப்பு எழுந்தது. ஆனால், ரேணுவின் கண்களில் அவனைவிட அதிக பயம் தென்பட்டபோது, அவனுக்குள் ஒரு பூரிப்பு. ஒரு போதை. தான் எப்படி வதைத்தாலும் இவள் எதிர்ப்பு காட்டமாட்டாள் என்று சந்தேகமற புரிந்தபோது, அவனுடைய கொடுமையும் அதிகரித்தது.

`நான் ஒரு ஈனமான பிறவி. ஆண்கள் ஏதோ விதத்தில் என்னைப் பந்தாடுவதற்காகவே பிறந்து தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது!` என்று, எது நடந்தாலும் அதைத் தன் குற்றமாக ரேணு ஏற்றது அவனுடைய போதையை அதிகரிக்கச் செய்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், தேத்தண்ணீரில் சீனி குறைவாக இருந்ததென்று, எண்ணை போத்தலால் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு, ரத்தம் பீறிட மயங்கிக் கிடந்தவளை பக்கத்து வீட்டினர் மருத்துவமனையில் சேர்த்திராவிட்டால், அந்தச் சமூக சேவகி சொல்லியதுபோல், இந்நேரம் அவள் கதை முடிந்திருக்கும்.

ரேணுவின் நினைவோட்டம் நிகழ் காலத்தை வந்தடைந்துவிட்டதை முகத்தின்வழி உணர்ந்துகொண்ட லீலா தொடர்ந்து பேசினாள்: “மாஸ்டர்ஸ் பட்டமில்ல வாங்கி இருக்கீங்க! எவ்வளவு அறிவு! எவ்வளவு உழைப்பு! தனியார் பள்ளியில தலைமை அதிகாரியா இருக்கீங்க!”

“உதவி தலைமை அதிகாரிதான்!” ரேணு முணுமுணுத்தாள்.

“சரி. மத்தவங்க ஒங்களை இந்த அளவுக்கு தாழ்த்த எப்படி விட்டீங்க, ரேணு?”

ரேணுவின் ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக வாய்க்குள் போய், மேல்பற்களுக்கும் கீழ்பற்களுக்குமிடையே மாட்டிக்கொண்டது.

“அட, படிப்பை விடுங்க. படிச்சிருக்கீங்களோ இல்லியோ, நீங்களும் ஓர் ஆத்மா. ஓர் உயிர். நம்ப எல்லாருக்கும் சுதந்திரமா, பயமில்லாம வாழற உரிமை இருக்கு”. அழுத்தந்திருந்தமாக லீலா கூறியது மனதைத் தைத்தது.

`இனியும் என்மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி, கண்டபடி ஆட்டிவைக்க விடக் கூடாது`. உறுதி செய்துகொள்ள முயலும்போதே அது அவ்வளவு எளிதல்ல என்பதும் புரிந்தது.

பிறருக்கு அடங்கியே பழகிவிட்ட நான் மாற முடியுமா?

ஆனால், தான் இப்படியே இருந்தால், தன்மீது இன்னும் இன்னும் மதிப்பு குன்றி, வெறுப்பே தோன்றிவிடும் என்ற பயம் எழுந்தது.

பயம்.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உணர்வுகள் முழுமையாக வளராத குழந்தையாக, எல்லா சந்தர்ப்பங்களிலும் பயந்து நடுங்கியே காலத்தைக் கழிப்பது!

எந்த மனிதப் பிறவியும் தனிமரமில்லை. `பிறருக்கு நன்மை செய்வதே வாழ்வெடுத்ததன் பயன்` என்று நினைக்கும் லீலா போன்ற நல்லவர்களும் இந்த உலகில் இல்லாமல் போகவில்லை.

அந்த நிதரிசனமே துணிச்சலைத் தர, ரேணுவின் முகத்தில் சிறு நகை பூத்தது.

லீலாவும் அதில் பங்கு கொண்டாள். “என்ன முடிவு எடுத்திருக்கீங்க? ரொம்ப அவசரப்படுத்தறேனோ?”

“இல்ல.. மொதல்ல, ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்,” ரேணு ஆரம்பித்தாள். “அப்போ எனக்கு ஏழு, இல்ல எட்டு வயசு இருக்கும்”. விம்மல் எழுந்தது, காலதாமதமாக.

“எங்கம்மா என்னை பக்கத்து வீட்டில விட்டுட்டு, வேலைக்குப் போவாங்க..” பாம்புச் சுருளாய் இறுகிப் போயிருந்த நினைவு சிறிது சிறிதாக நீள, குறுகியிருந்த ரேணுவின் நெடிய உருவமும் நிமிர ஆரம்பித்ததது.

(இக்கதை எனக்கு வல்லமையாளர் விருதைப் பெற்றுத் தந்தது).

8


சுதந்திரம்


“மாதவனுக்காக நீச்சல் கத்துக்கிட்டே! இப்போ ஒனக்கே பிடிச்சுப்போச்சு போலிருக்கே!”

கணவரின் கேலியை ரசிக்க முடியவில்லை சாவித்திரியால். `ஏதோ, நாலு பேரைப் பாத்தாலாவது அவன் கொஞ்சம் தேறமாட்டானா என்கிற ஆசைதான்!” என்றாள், தழுதழுத்த குரலில்.

பூமியின்மேல் இரு பாதங்களையும் பதித்து நடக்க முடியாது, தன் தோளைப்பற்றி, உடன் நடக்கும் பிள்ளையை நினைக்கும்போதே சொல்லவொணா வருத்தம் எழுந்தது அத்தாய்க்குள். அவள் அருகில் இல்லாவிட்டால், எட்டு மாதக் குழந்தைபோல் தவழுவான்.

ஏதோ நினைப்பில் அவள் முகம் மலர்ந்தது. “அவன் நீஞ்சறப்போ நீங்க பாக்கணுமே! தண்ணிக்குள்ளே போய் குட்டிக்கரணம் போட்டு..! என்று ஆரம்பித்தவள், கொஞ்ச நேரம் அந்த இன்ப நினைவில் ஒன்றிப்போனாள். “அவன் தலையை மறுபடியும் மேலே பாக்கறபோதுதான் எனக்கு மூச்சு வரும்!”

“அதான் டாக்டர் சொல்லியிருக்காரில்ல? உயிருக்கு ஆபத்து வர்றமாதிரி எதுவும் செய்திட மாட்டான்னு!”

“இருந்தாலும், எனக்குப் பயம்தான்! ” என்று ஒப்புக்கொண்டாள் அந்த பேதைத்தாய். “நீங்கதான் எங்ககூட வரவே மாட்டேங்கிறீங்களே!”

“எனக்கு இந்த `தண்ணி` எல்லாம் பிடிக்காது!” சிரித்தார். “அதோட, அளவுக்கு அதிகமா க்ளேரரின் போட்டிருப்பாங்க. கிருமிங்க சாகுதோ, என்னவோ, எனக்கு முடி கொட்டிடும்”.

சாவித்திரிக்குத் தெரியும் அவர் மறுப்பின் காரணம்.

தண்ணீரில் அமிழ்ந்திருக்கும்போது தான் அனுபவிக்கும் சுகத்தை வெளிக்காட்ட வேறு வழி தெரியாது, மாதவன் அர்த்தமற்ற பிதற்றல்களை இரைந்து கத்தும்போது, அங்கிருக்கும் அனைவரும் வேடிக்கை பார்ப்பதும், அருவருப்புடன் ஒதுங்குவதும் அந்தப் பெரிய மனிதருக்கு தலைகுனிவு.

எவ்வளவோ ஆசையாகப் பெற்ற மகன்!

மூன்று மாதத்தில் தன் முகம் பார்த்து இவன் சிரிக்கவில்லை, எட்டு மாதத்தில் உட்காரவில்லையே என்றெல்லாம் சாவித்திரிக்கு சந்தேகம் எழ, `எல்லாக் குழந்தையின் சுபாவமும் ஒரே மாதிரி இருக்குமா?` என்று சமாதானம் செய்தார் கணவர்.

மூன்று வயதானபின், `பசித்தாலும் சொல்லத் தெரியவில்லை, நெருப்பு சுடும் என்றாலும் புரியவில்லை,` என்ற நிலை வர, அதற்கு மேலும் தவிர்க்க முடியாது, மருத்துவர்களை நாடிப் போனார்கள்.

மாதவனுக்கு எட்டு வயதானபோது, `இவன் என்றுமே சிறு பிள்ளையாகத்தான் இருப்பான்!` என்று திட்டவட்டமாகப் புரிந்து போனது சாவித்திரிக்கு. நீரில் அமிழ்பவன், தத்தளிப்பை விடுத்து, தன் முடிவை ஏற்கச் சித்தமாவதுபோல் அமைதியானாள். எந்த தேவைக்கும் தன்னை எதிர்பார்க்கும் இந்த மகன் என்றுமே தனக்கு கைப்பிள்ளைதான் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.

`ஆடிசம் குணமாக இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கல. அவனால் இயன்றவரை, எல்லாவற்றையும் கற்க ஏற்பாடு செய்யுங்கள்!` என்று டாக்டர்கள் தெரிவித்தபோது, மாதவன் பியானோ கற்க ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டாள்.

`விரல்களில் வலுவே இல்லையே!` என்று அவள் உதட்டைப் பிதுக்க, பரிதவிப்புடன், டாக்டரிடம் ஆலோசனை கேட்டாள் சாவித்திரி.

`உங்கள் மகனுடைய நல்ல காலம்தான் இப்படி பணத்தட்டுப்பாடு இல்லாத குடும்பத்தில் பிறந்திருக்கிறான். நீந்தவும் கற்றுக் கொடுக்கலாமே!`

`எப்படி டாக்டர்? இவனுக்கோ பிடித்துக்கொள்ளாமல் நிற்கவே முடியவில்லை..,` தாய் பயந்தாள்.

`தண்ணியில எடை குறைஞ்சமாதிரி இருக்குமில்லியா? அதனால, கால், கையெல்லாம் சீரா இணைஞ்சு, ஒடம்பும் சமநிலைக்கு வரும். நாளடைவிலே இருதயமும் பலமாகிடும்`.

நீச்சல் குளம் காலியாக இருந்தது. அனேகமாக, காலை எட்டு மணிக்குமேல் யாரும் வரமாட்டார்கள். பூமத்திய ரேகைக்கு ஏழு டிகிரி வடக்கிலிருந்த மலேசிய நாட்டில், நாள் முழுவதும் வெயில் கடுமையாகத் தாக்கும். எப்போது மழை பொழியும் என்றும் சொல்ல இயலாது.

வெளிர்நிற சருமம் கொண்டவர்கள் பகல் பன்னிரண்டு மணி வெயிலில் — ஒரே மணி நேரம் — காய்ந்தால்கூட, சருமப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்று ஆங்கில தினசரிகளில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

மேல்நாடுகளில் வசித்தவர்கள் டிசம்பர் மாதத்து குளிரைத் தாங்கமுடியாது, இங்கு வந்து, கடற்கரைப் பகுதிகளில், அல்லது நீச்சல் குளங்களுக்கருகே நாற்காலிகளில் அமர்ந்திருப்பது சாதாரணமாகக் காணக்கூடிய காட்சி. கூடியவரை ஆடைகள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு, காலையும் தலைக்குமேல் தூக்கி, இண்டு, இடுக்கு எல்லாம் ஒரே சீராக பழுப்பு நிறமாக வேண்டும் என்ற அவாவுடன் அவர்கள் இருந்தார்கள், `கான்சர் போன்ற வியாதி எல்லாம் பிறருக்குத்தான் வரும்,` என்ற மெத்தனத்துடன். மாதவனுக்கோ சூரியன் அளிக்கும் அந்த விட்டமின் D வேண்டியிருந்தது.

வழக்கம்போல், “ஒழுங்கா அந்தப் பக்கம் போயிட்டு வரணும், என்ன?” என்று உபதேசித்தாள் சாவித்திரி, மகனுக்கு அந்த அறிவுரை விளங்காது என்று தெரிந்திருந்தும்.

அவனோ, இரு மீட்டருக்குமேல் இருந்த குளத்தின் அடிப்பாகத்திற்கே சென்றான். மேலெழுகையில், அனுமார்போல் கன்னம் உப்பியிருந்தது.

“மாதவன்!” சாவித்திரியின் கண்டனக்குரல் தாமதமாகத்தான் வந்தது.

தலையை மேலே சாய்த்து, வாய் நிறைய இருந்த நீரை உமிழ்ந்தான். அந்த எச்சில் நீர் அருகே நின்றிருந்த ஒருவரின்மேல் அருவியாக ஊற்றியது.

பதைப்புடன் அவரை நோக்கியவள், “என் மகன்.. அவனுக்கு மூளை சரியில்லை! மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று அவமானத்தில் இறுகிய முகத்துடன் வேண்டினாள்.

“இதற்கு மன்னிப்பு எதற்கு? இன்னொரு முழுக்கு போட்டால் போகிறது!” என்று பெருந்தன்மையுடன் கூறியவரை நன்றியுடன் நோக்கினாள்.

அவருக்கும் கிட்டத்தட்ட அவள் வயதுதான் இருக்கும். சற்றே நரைத்திருந்தாலும், அடர்ந்த முடி நெற்றியெல்லாம் படர்ந்திருந்தது.

“உன் பேரு என்னப்பா?”

தலையும், பார்வையும் இலக்கில்லாது, எங்கோ பதிந்திருக்க, இயந்திர கதியில் பதிலளித்தான் மாதவன்.

“அங்கிள் முகத்தைப் பார்த்துச் சொல்லு, மாதவன்!” என்று திருத்தினாள் தாய்.

அவன் அவர்புறம் திரும்பியபோது, மரியாதையாக, “என் பெயர் சேது!” என்று தெரிவித்தார், முறுவலுடன்.

“சேது!” என்று திரும்பச் சொன்ன மகனை மீண்டும் கண்டித்தாள் தாய்: “அங்கிள் சேது!”

“மீன் குட்டி மாதிரி தண்ணிக்குள்ளே என்னென்னமோ வித்தைகள் செய்யறானே!” சேதுவின் வியப்பு உண்மையாக இருந்தது.

பெருமையுடன் புன்னகைத்தாள் சாவித்திரி. மாதவனைப் பாராட்டி, இதுவரை எவரும், எதுவும் சொன்னதாக நினைவில்லை அவளுக்கு.

“ஒவ்வொரு நாளும் இங்க கூட்டிட்டு வர்றப்போ, பயமா இருக்கு எனக்கு. அவனோ, எப்பப் பார்த்தாலும், `ஸ்விம்மிங் போகலாம்மா, ப்ளீஸ்!` என்கிறான்!”

“எதுக்குப் பயப்படறீங்க? சொல்லப்போனா, மாதவனைப் பாத்தா பொறாமையா இருக்கு எனக்கு”.

சாவித்திரி வியப்புடன் அவரை நோக்கினாள்.

“நாப்பது வயசுக்குமேலதான் நீச்சல் பழகினேனா! இப்போ.. ஒழுங்கா.. இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கம்தான் போகத் தெரியும். மீதி எல்லாம் பயம்!”

அவர்கள் இருவரும் மனம் விட்டுச் சிரிக்கையில், காரணம் புரியாமலேயே தானும் சேர்ந்து சிரித்தான் மாதவன்.

பூரிப்புடன் அவனது கன்னத்தைத் தடவினாள் தாய். இப்போது அக்கன்னம் முன்போல வழவழப்பாக இல்லை என்பதை உணரும்போதே, ஒரே சமயத்தில் பெருமிதமும், கவலையும் முளைத்தன.

ஒளிவுமறைவில்லாது பேசும் இவரிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கையுடன், “ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?” என்றாள், கெஞ்சலாக.

பதிலாக, அவர் மிக லேசாக தலையை ஒருமுறை மேலும், கீழும் ஆட்டி, அவளுடைய கண்களையே உற்றுப் பார்க்க, சாவித்திரி தன் மனதைத் திறந்து கொட்டினாள் — தன்னைவிட உயரமாக வளர்ந்துவிட்ட மகனுக்குப் பல் விளக்க ஒவ்வொரு நாளும் தான் படும் பாடு (`அவனை நாற்காலியில உட்கார வைங்களேன்!`), யாராவது பேசும்போது அதை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, தவறாக அதை வெளியிட்டு மகன் தலைகுனிவை ஏற்படுத்துவது; அப்படித்தான் ஒருநாள், ஒரு பெண்மணி அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவளுடைய மார்பகத்தைச் சுட்டி, `குண்டு!` என்று அறிவித்தது, அப்போது வந்தவள் அடைந்த அதிர்ச்சி, கோபம் — இப்படியாக, தன்னை எப்போதோ பாதித்து இருந்த அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள். ஒருவரிடம் மனந்திறந்து பேசுவதே இனிய அனுபவமாக இருந்தது.

உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த சேது, “தான் ஆண் என்பது மாதவனுக்குத் தெரியுமா?” என்று வினவினார்.

சாவித்திரி தலையசைத்தாள்.

“பொதுவா, ஒரு பையனுக்கு நாலு வயசாறப்போ, `அம்மாவோட ஒடம்பு என்னோடதுமாதிரி இல்லையே!` அப்படின்னு வியப்பா இருக்கும். `அம்மா என்கூடவே இருக்கணும்` என்கிறமாதிரி ஒரு கவர்ச்சி ஏற்படும்”.

பிறகு, தான் படித்திருக்கும் பெருமையை இவளிடம் காட்டிக் கொள்கிறோமே என்று வெட்கியவராக, “ஆசிரியப் பயிற்சி எடுக்கும்போது, மனோதத்துவத்தில படிச்சது,” என்று சமாளித்தார். “மாதவனுக்கு ஒடம்புதான் வளர்ந்திருக்கு. ஆனா, மனசு இன்னும் சின்னப் பிள்ளையாத்தானே இருக்கு?” என்று நியாயம் கற்பித்தார்.

“மத்தவங்களுக்கு இது புரியுதா? எங்களைத் தப்பா நினைக்கிறாங்க!” சாவித்திரியின் முகத்தில் ஆழ்ந்த வருத்தம்.

“கெடக்கிறாங்க. நாம்ப எல்லாரையும், எப்பவும் திருப்திப்படுத்திக்கிட்டு இருக்க முடியாது!” கையை ஒருமுறை அலட்சியமாக வீசினார் சேது.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, ” நீங்க அவன்கிட்ட, `நீ அப்பா மாதிரி. அப்பாவும் ஒன்னைமாதிரி பையனாக இருந்தவர்தான். ஆனா, அம்மா ஒரு பெண்` — இப்படிச் சொல்லிப் பாருங்களேன்!”

“அவனுக்குப் புரியுமா?” சாவித்திரியின் நியாயமான சந்தேகம்.

“எந்த ஒண்ணையும் செய்கையால புரிய வைக்க முடியாதா, என்ன! அவசியமானா, ஒங்க ஜாக்கெட்டுமேல அவன் கையை வைங்க!” கூறப்பட்டது நுண்ணியமானதாக இருந்தாலும், கூறிய விதத்தால் ஆபாசமாக ஒலிக்கவில்லை.

“எந்த ஒண்ணும் நமக்குப் புரிஞ்சு போயிடறப்போ, அதில வேண்டாத ஆர்வம் இருக்கிறதில்ல,” என்று அழுத்தமாக மேலும் சொன்னார்.

சாவித்திரியின் நன்றி உணர்வையும் மீறி, பெருமூச்சு வந்தது. “நான் தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!” சொல்லும்போதே சுயபச்சாதாபம் கிளர்ந்தது.

சேது மென்மையாகப் புன்னகைத்தார். “எல்லாமே தெரிஞ்சவங்களா இருந்தா, நாம்ப ஏம்மா இன்னும் இந்த ஒலகத்தில இருக்கோம்? சாமியா இல்ல ஆகியிருக்கணும்?”

கருணையும், அமைதியும் ததும்பும் அவரது கண்களைச் சந்தித்தபோது குழப்பமோ, குற்ற உணர்வோ இல்லை அவளிடம்.

நாளடைவில், சேது நீச்சல் குளத்தில் இருந்தால், தொலை தூரத்திலிருந்தே அவரைக் கண்டுவிட்டு, “அங்கிள் சேது!” என்று ஆனந்தப்படும் மாதவனுக்காக, அவன் கேட்பதற்கு முன்னாலேயே சாவித்திரி தயாராவது பழக்கமாயிற்று. அவளுடைய புதிய ஆர்வம் கணவருடைய கண்களுக்குத் தப்பவில்லை. “எப்படா நீச்சல் குளத்துக்குப் போகலாம்னு, இவனைவிட நீதான் அதிகம் துடிக்கிறமாதிரி இல்ல இருக்கு!” என்று கேலி செய்தார்.

அவள் எதுவும் சொல்லுமுன், “அங்கிள் சேது!” என்றான் மாதவன், அசந்தர்ப்பமாக.

தம்புராவின் தந்தி அறுந்ததுபோல, இசைவு மறைந்த சூழ்நிலை எழுந்தது அங்கு.

சட்டென முகத்தில் மாறுதல் தெரிய, “யாரது?” என்ற கேள்வி பிறந்தது.

கூடியவரை இயல்பாக இருக்க முயன்று, “எப்பவாவது அங்கே பார்ப்போம். மாதவன்கிட்டே அன்பாப் பேசுவார்,” என்றாள்.

“என்ன உத்தியோகம்?” மிரட்டலாக வந்தது அடுத்த கேள்வி.

சாவித்திரியின் ஸ்ருதி இறங்கியது. “ஸ்கூல் டீச்சர்னு சொன்ன ஞாபகம்!”

கை, கால், முதுகு எல்லாம் தெரிய, மானம் காக்கும் அத்தியாவசியமான உறுப்புகள் மட்டும் மறைக்கப்பட்டால் போதும் என்னும் நோக்கத்துடன் தைக்கப்பட்டிருந்த உடையில் மனைவி நீச்சல் குளத்தில் இருக்க, அவளருகே ஓரிரு சாண் அகல உள்ளாடை மட்டுமே அணிந்த ஒரு ஆண்மகன்!

எப்படிப் பேசினால் பெண்களைக் கவரலாம் என்பதைக் கலையாகக் கற்றிருப்பவன் அவன் என்பதில் அவருக்குக் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.

பெற்ற குழந்தையைப் புகழ்ந்து பேசினால், அவள் எவ்வளவு கடின நெஞ்சுடையவளாக இருந்தாலும் இளகிவிடுவாளே! அப்படி இருக்கையில், மகனை நினைக்கையில், வேதனை மட்டுமே அனுபவித்திருக்கும் சாவித்திரி எம்மாத்திரம்!

மாதவனிடம் அன்பாகப் பேசுவானாமே!

தான் பெற்ற மகனுடன் கழிக்க சிறிது அவகாசத்தை ஒதுக்கவில்லை என்பதைக் குத்திக்காட்டுகிறாளோ!

இப்போது தாய், தந்தை இருவருமே தொடர, நீச்சலுக்குப் போனான் மாதவன். அவனுடைய கபடில்லா மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்தப்பட முடியவில்லை சாவித்திரியால்.

கணவருக்கு அப்படியொன்றும் மகன்மீது புதிதாகக் கரிசனம் பிறந்துவிடவில்லை, தன்னைக் கண்காணிக்கவே உடன் வருகிறார் என்று புரிய, வேதனையாக இருந்தது. மரியாதை கருதி, சேதுவை கணவருக்கு அறிமுகப்படுத்தினாள், வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன்.

தனது சொந்த கம்பெனியில் வந்து குவியும் பணத்தை கணவர் பிரகடனப்படுத்திக்கொண்டபோது, சேதுவுடன் அவளும் கூசிப்போனாள்.

`நான் யார் தெரியுமா? நீ மாதமெல்லாம் உழைத்துச் சம்பாதிப்பதை நான் ஒரே நாளில் ஈட்டிவிடுகிறேன்! என்னிடமா மோதுகிறாய்?` என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது தெளிவாகத் தெரிந்தது.

சில வாரங்கள் கழிந்தன.

இனிமேலும் தான் மனைவிகூட வருவது அனாவசியம் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.

கணவர் தன் முழு கவனத்தையும் பழையபடி வேலை மற்றும் `பார்` நண்பர்களிடம் திருப்ப, சாவித்திரியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இப்போது மட்டும் என்ன, அவளிடம் புது நம்பிக்கையா?

மகனுடைய வளர்ச்சியில், மகிழ்வில் அக்கறையைவிட மனைவியைக் கண்காணிக்க வேண்டியதுதானே அவசியமாகப் போய்விட்டது அவருக்கு!

“அங்கிள் சேது!” என்று மாதவன் ஆர்ப்பரித்தபோது, தலைநிமிர்ந்த சாவித்திரியின் கண்கள் சேதுவின் தீர்க்கமான நயனங்களில் பதிந்தன.

அதில் அவள் கண்டது இரக்கமா, வேதனையா? அதை அலசும் மனநிலையில் இருக்கவில்லை அவள்.

வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டபோது, ஆத்திரம் பொங்கியது, இலக்கில்லாமல்.

ஆண்-பெண் நட்பு எவ்வளவுதான் மதிப்புக்குட்பட்டதாக இருந்தாலும், அதைக் கேவலமானதாகக் கருதுபவர்கள் இருக்கும்வரையில், எவருக்குமே பூரண சுதந்திரம் இல்லை.

நம் சமூகம் ஏன் இப்படி தனக்குத்தானே விலங்கிட்டுக்கொள்கிறது?

குளத்தின் அடியில் போய், வாய் நிறையத் தண்ணீருடன் மூச்சுத் திணற, தலையை வெளியே நீட்டிய மகனுடைய முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டாள் சாவித்திரி.

அதைக் காணாதமாதிரி, வேறு பக்கம் போனார் சேது.

9


நேற்றைய நிழல்


“ஏதாவது கடுதாசி வந்திருக்கா?”

சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தெரிவிப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார்.

“ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!” என்றபடி, கோப்பையில் தேத்தண்ணீரை எடுத்து வருவாள் திலகம்.

அன்று அவளுடைய பதிலில் சிறிது மாற்றம். “இந்தாங்க. ஒங்க மகன் பள்ளிக்கூடத்திலிருந்து!”

“என்னாவாம்?”

“யாருக்குப் புரியுது மலாயில எழுதினா!”

அசுவாரசியமாக நோட்டம் விட்டவருக்கு கோபம் வந்தது. அதற்குப் பதில் எழுதித் தொலைக்கவேண்டுமே என்ற கவலை எழ, மனைவிமேல் பாய்ந்தார். “விநாயகம் ஒழுங்கா பள்ளிக்கூடம் போறதில்ல? மூணு நாளா வரல்லேன்னு எழுதியிருக்காங்களே!”

அவளுக்கும் கோபம் எழுந்தது. தான் என்ன மற்ற மாற்றாந்தாய்கள் மாதிரியா!

“தினமும் காலையில அஞ்சு மணிக்கே எழுந்து, கஷ்டப்பட்டு பலகாரம் பண்ணி அவன் கையில குடுத்து அனுப்பறேன் நான்! புத்தகப்பையை எடுத்துக்கிட்டு, ஆறரை மணி பஸ்சுக்குப் போயிடுவான். நீங்க வேணுமானா, அவனையே கேட்டுப் பாருங்க!” வீராவேசமாக ஆரம்பித்தவளின் குரல் அடைத்தது. அழுதுவிடுவாளோ என்று பயந்தார் குஞ்சிதபாதம்.

ஆறு வயது மகனான விநாயகத்துடன் அவர் திகைத்துப்போய் நின்றிருந்தபோது, அவருடைய வாழ்வைப் பங்கு போட்டுக்கொள்ள துணிந்து வந்தவள் திலகம். அவளுடைய ஏழ்மையும், குள்ளமும், குண்டுமான உருவமும் அவரைப் பாதிக்கவில்லை. மாறாக, குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவள் கையில் விட்டுவிட்டு, தன் உத்தியோகம் உண்டு, வீட்டில் தொலைகாட்சி உண்டு என்று நிம்மதியாகக் காலத்தைக் கழித்தார்.

அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தான் விநாயகம், தன்னைப்பற்றி ஒரு பூகம்பமே உருவாகிக் கொண்டிருப்பதை உணராது.

பதினாறு வயதாகியும், பன்னிரண்டு வயதே மதிக்கத்தக்க தோற்றம். ஏனோ தானோ என்றிருக்கும் தந்தை, `கண்டிப்பு` என்ற பெயரில் சதா சுடுசொற்களை வீசும் சின்னம்மா, தன் நினைவில் இல்லாத, ஆனால் பிறர் நினைவுபடுத்துக்கொண்டே இருக்கும், தாய் — இவர்களில் யாரால் அவனுடைய வளர்ச்சி பாதிக்கப் பட்டதோ!

வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி அடையவில்லையே என்ற தாபம் ஒரு புறம்; உடல் வளராமலேயே நின்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மற்றொரு புறம். அதோடு, தான் யாருக்கும் வேண்டாதவனாக குறித்தும் அவனுக்கு கலக்கம் உண்டாயிற்று.

பள்ளிக்கூடத்துக் கட்டுப்பாடுகள், கொள்கைகள் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை முளைக்க ஆரம்பித்தது.

தான் ஒழுங்காக இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே என்ற ஏக்கமானது கெட்டலையும்போது பக்கபலமாக நண்பர்கள் இருக்கிறார்களே என்ற திருப்தியில் மறைந்தது.

எப்படியோ இவ்வளவு நாட்களும் யார் கண்ணிலும் படாமல் தப்பியாயிற்று என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தவன், தந்தை கையிலிருந்த கடிதத்தை அவன்மீது வீசி எறிந்து, கூடவே, “ஏண்டா? இதுக்கு என்னா அர்த்தம்னு கேக்கறேன்!” என்று ஒரு அதட்டலும் போட்டதும், திகைத்துப் போனான்.

ஒரு கணம்தான். குறுக்கு வழியிலேயே போய் பழகிய மூளை அப்போது அவனைக் கைவிடவில்லை. “சின்னம்மாவையே கேட்டுக்குங்கப்பா, நான் பள்ளிக்கூடம் போகாம வீட்டிலேயே இருந்திருக்கேனா அப்படின்னு!” திமிராகப் பேசினான்.

“ஒழுங்காப் போயிருந்தா, இந்த கடுதாசி எப்படி வந்திச்சு?” மலேசிய அரசாங்கப் பள்ளிகளின் விதிமுறைப்படி, தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பள்ளிக்குச் செல்லாவிட்டால், வீட்டுக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள்.

அயரவில்லை விநாயகம். “டீச்சர் என் பேரைக் கூப்பிடறப்போ, நான் பதில் சொன்னது கேக்காட்டி, `ஆப்செண்ட்` போட்டிருப்பாங்க!” என்று ஒரேயடியாக அளந்தான்.

“எதுக்கு மனசுக்குள்ளே முனகிக்கிறியாம்? உரக்க பதில் சொல்றது!”

“மத்தவங்க பேசறதால, என் குரல் அவங்களுக்குக் கேக்கல போலயிருக்கு! இனிமே ஜாக்கிரதையா இருக்கேம்பா!” என்று இரு பொருள்பட பேசினான் விநாயகம். இனிமேல் மாட்டிக்கொள்ளக்கூடாது. அதிகப்படி இரண்டு நாட்கள்தாம் மட்டம் போடலாம்.

குஞ்சிதபாதத்திற்கு அலுப்பு தட்டியது. மகன் சொல்வது உண்மையோ, பொய்யோ, அதை நம்பினால் நிம்மதி என்று தோன்ற, “சரி போ. இன்னொரு தடவை இந்தமாதிரி ஏதாவது வந்திச்சோ, முதுகுத்தோலை உரிச்சுடுவேன்!” என்று எச்சரித்துவிட்டு, அந்த சமாசாரத்தை அப்போதே மறந்துவிட்டவராக, தொலைகாட்சியை முடுக்கினார்.

ஏதோ ஆங்கிலப்படம். கதாநாயகனுக்கு ஆறு பிள்ளைகள். அவளுக்கு நான்கு. இருவரும் விவாகரத்து ஆனவர்கள். காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். மொத்தம் பத்து குழந்தைகள்!

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு மகனை வைத்தே தன்னால் சமாளிக்க முடியவில்லையே, அது எப்படி இந்தக் குடும்பத்தில் எல்லாரும் சிரிப்பும், கேலியுமாக வளைய வருகிறார்கள்?

நடப்பதையே காட்டினால், எவன் படம் பார்ப்பான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது.

சில மாதங்கள் கழிந்தன.

குஞ்சிதபாதத்திடம் ஒரு கடிதத்தை நீட்டிய விநாயகம், “அப்பா! வர்ற ஞாயித்துக்கிழமை எங்க பள்ளிக்கூடத்தில பி டி ஏ (PTA) மீட்டிங்காம். நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்லச் சொன்னாங்க டீச்சர். என்னையும் கூட வரச்சொன்னாங்க” என்றான், சற்றே பயந்தபடி.

“அது என்னடா கஷ்டகாலம்?” டீச்சர் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற கவலையில் கேள்வி தானாக வந்தது.

“பெற்றோர் ஆசிரியர் சங்கம். அதாவது, மாணவர்களோட அப்பாவோ, அம்மாவோ டீச்சர்சை பாத்துப் பேசறது”.

“ஓ! அப்போ, மத்த அப்பாவும் வருவாங்க, இல்லே?” தான் மட்டும் தனியாகப் போய் நின்று, உதவாக்கரையான மகனைப் பெற்றதற்கு பேச்சு வாங்கிக்கொண்டு வரவேண்டாம் என்ற நினைப்பில் சற்று நிம்மதி பிறந்தது.

பள்ளி வளாகத்துள் நுழையும்போது, குஞ்சிதபாதத்திற்குத் தயக்கம் ஏற்பட்டது. அவருக்குப் பின்னால் தன் சிறிய உருவத்தை மறைத்துக்கொள்ள முயன்றபடி, “அதோ வர்றாங்களே, அவங்கதான் எங்க டீச்சர்,” என்று கிசுகிசுத்தான் விநாயகம்.

குதிகாலில் சுமார் நான்கு அங்குலம் நீண்ட காலணிகளும், உச்சந்தலையில் போடப்பட்டிருந்த கொண்டையும் அவளை அசாதாரணமான உயரமாகக் காட்டின. உடலைத் தழுவிய மெல்லிய , ஜப்பான் நாட்டு நைலக்ஸ் புடவை, நீல வண்ணத்தில். அதே நிறத்தில் நீண்டு தொங்கிய காதணிகள், கண்ணாடி வளையல்கள். கைக்கடிகாரத்தின் பிளாஸ்டிக் பட்டை மற்றும் நகப்பூச்சும்கூட நீலம்!

`அலங்காரத்தில செலுத்தற கவனத்தை பிள்ளைங்க முன்னேற்றத்திலேயும் காட்டினா தேவலே!` என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் குஞ்சிதபாதம். `இவ்வளவு அழகா டிரெஸ் பண்ணிக்கிட்டா, வயசுப் பசங்க டீச்சரைத்தானே கவனிப்பாங்க! அவங்க படிச்சுக் குடுக்கறதிலே கவனம் போகுமா?` என்ற கவலையும் பிறந்தது.

ஆசிரியர்களின் நடையுடை பாவனை அவர்கள் போதிக்கும் பாடங்களில் மாணவர்களுக்குத் தனி ஆர்வத்தை உண்டாக்கும் என்பதெல்லாம் குஞ்சிதபாதத்தின் அறிவுக்கு அப்பாற்பட்டது. அவர் என்ன, கல்லூரியிலா படித்திருந்தார் சமூக இயல் தெரிய!

“அப்பா! இவங்கதான் எங்க டீச்சர், மிசஸ் பாணி,” என்ற மகனின் குரல் கேட்டு, தம் எண்ணங்களிலிருந்து விடுபட்டார் குஞ்சிதபாதம். “எங்கப்பா, டீச்சர்!”

மிசஸ் பாணி புன்னகையுடன் தலையைத் தாழ்த்தினாள், அந்த அறிமுகத்தை ஏற்கும் விதத்தில்.

“ஒங்களை இதுக்கு முன்னே பாத்ததில்லேன்னு நினைக்கிறேன்!” உருவத்திலிருந்த அழகு குரலில் இல்லை.

`பாவம்! பிள்ளைங்களோட கத்திக் கத்தி, தொண்டை வரண்டுபோச்சு டீச்சரம்மாவுக்கு!` என்று பரிதாபப் பட்டுக்கொண்டார் குஞ்சிதபாதம்.

“ரெண்டு நாள் முந்திதான் இவன் வந்து சொன்னான்..,” என்று மென்று விழுங்கினார்.

“இந்தத் தடவை சொல்லாட்டி, நானே நேரிலே ஒங்க வீட்டுக்கு வந்துடுவேன்னு மிரட்டி அனுப்பினேன். ஒரு தடவைகூட விநாயகம் ஒங்ககிட்டே லெட்டரை ஒங்ககிட்டே குடுக்கலியா?”

“ஏண்டா டேய்!” மகன்மேல் பாய்ந்தார் தந்தை.

இப்படி ஒரு நேரிடைத் தாக்குதலை எதிர்பார்த்திராத பையன் மிரண்டே போனான்.

அவனைப் பார்த்து முறுவலித்தாள் ஆசிரியை. அவளுடைய உத்தியோகத்தில் இந்தமாதிரி எத்தனை அப்பாக்களைச் சந்தித்திருக்கிறாள்!

“வாங்க. அப்படிப்போய் ஒக்காந்துக்கிட்டு பேசலாம்,” என்று நடந்தவள் பின்னால் பலியாடுகள்போல் இரு ஆண்களும் நடந்தனர்.

“விநாயகம் ஒரு மாசத்தில ரெண்டு, மூணு நாள் கூட ஸ்கூலுக்கு வரதில்லே. அதுக்காக ஒங்களுக்கு எத்தனை லெட்டர் போட்டேன்! நீங்க ஏன் சார் எந்த ஆக்ஷனும் எடுக்கலே?”

டீச்சரின் குற்றச்சாட்டைச் செவிமடுத்த குஞ்சிதபாதம் திகைத்துப் போனார். அவருக்கு ஒரே ஒரு கடிதம்தானே வந்தது? தன் உடலைக் குறுக்கியபடி பக்கத்தில் நின்றிருந்த மகனை நோக்கித் திரும்பினார். கையும் களவுமாகப் பிடிபட்டு, திருடனைப்போல் அவன் விழித்ததைப் பார்த்து அவருக்கு உண்மை புலனாகியது. தபால்காரரை மடக்கி, தனக்கு வரும் கடிதங்களை பாதி வழியிலேயே பெற்றுக் கொண்டிருக்கிறான்!

டீச்சர் தன்பாட்டில் தொடர்ந்தாள்: “விநாயகத்தோட படிப்பு மட்டுமில்ல, உடம்பும் ரொம்ப இளைச்சிருக்கு, பாத்தீங்க இல்ல?”

“அதுக்கு என்னங்க டீச்சர் பண்றது? காலையில போனா, ராத்திரி ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வரான். இங்க தினமும் ஹாக்கி, ஃபுட்பால் எல்லாம் விளையாடறானாமில்ல!” என்றார் அப்பாவியாக.

ஆசிரியை பெரிதாக நகைத்தாள். “விளையாடறானா? பாடம் படிக்கவே கிளாசுக்கு வராதவன் விளையாட மட்டும் ஸ்கூலுக்கு வர்றானா? அவன் சொன்னா, நீங்களும் நம்பிடறதா?”

குஞ்சிதபாதத்துக்கு அவமானம் தாங்கவில்லை.

அடுத்த கேள்வி பிறந்தது.”ஒங்க மனைவிக்கும், ஒங்களுக்கும் இடையே எந்த மாதிரி உறவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

என்னென்னவோ கேட்கிறாளே என்று அருவருப்படைந்தார் குஞ்சிதபாதம்.

அவருடைய எண்ணப்போக்கு முகத்திலும் பிரதிபலிக்க, புன்னகையுடன் விளக்கினாள் மிசஸ் பாணி. “அதாவது, நீங்க ரெண்டுபேரும் குழந்தைகளோட நலனைப்பத்தி அக்கறையோட சேர்ந்து விவாதிப்பீங்களா? பெத்த பிள்ளைகளோட சேர்ந்து பொழுதைக் கழிக்க விரும்பறீங்களா? இதைத்தான் கேக்கறேன்”.

எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறாள் என்பது விளங்காது, பதில்சொல்லத் தெரியாது விழித்தார் குஞ்சிதபாதம்.

அவருடைய மௌனத்தை விநாயகம்தான் கலைத்தான், கணீரென்ற குரலில். “எனக்கு அம்மா கிடையாது, டீச்சர். சின்னம்மாதான் இருக்காங்க”.

மென்று விழுங்கியபடி, ” ஆமாம். என் ரெண்டாந்தாரம்,” என்று சேர்ந்துகொண்டார் குஞ்சிதபாதம்.

ஏதோ புரிந்தவள்போல் தலையை ஆட்டினாள் மிசஸ் பாணி. “ஓ! முதல் மனைவி இறந்தபிறகு, விநாயகத்தை வளர்க்க இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டீங்கன்னு சொல்லுங்க!”

விநாயகத்திற்கு திடீரென்று ஆவேசம் பிறந்தது. “எங்கம்மா செத்துப் போகலே, டீச்சர். யாரோடேயோ ஓடிப் போயிட்டாங்க. அவங்க எங்க குடும்பத்துக்கு உண்டாக்கிட்டுப் போயிருக்கிற களங்கத்தைத் துடைக்க முடியலியே என்கிற ஆத்திரத்திலே என்மேலே வஞ்சம் தீர்த்துக்கிறாங்க இவங்க எல்லாரும்!” பெரிய குரலில் அலறிவிட்டு, சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். ஆண்டாண்டு காலமாகத் தன்னையுமறியாமல் தேக்கி வைத்திருந்த துயரம் எல்லாம் வெளிக் கிளம்பியது.

என்றோ சிறுவனாக இருந்தபோது நடந்ததை அப்படியே விட்டிருந்தால், அவனுக்கு மறந்து போயிருக்கக்கூடும்.

ஆனால், அது மனதில் என்றும் நிலைத்திருப்பது அவனுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று எண்ணியவள்போல, திலகம் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாரிடமும் தம்பட்டம் அடிப்பாள்: `விநாயகம் என் சொந்தப் பிள்ளைன்னுதான் எல்லாருமே நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அவன் எங்க வீட்டுக்காரரோட மூத்த சம்சாரத்துக்குப் பிறந்தவன்`. இந்த இடத்தில் சற்று நிதானித்து, கேட்பவர்களை யோசிக்கவைப்பாள். `அந்தச் சிறுக்கி எவனோடேயோ ஓடிப் போயிட்டா. இவரு, பாவம், மானி. சாது. மகனை வளர்க்க என்னைக் கட்டிக்கிட்டார்!` என்று நீட்டி முழக்கி, இன்னொருத்தியின் மகனைப் பேணும் தன் நல்ல குணத்தையும், மூத்தவளுடைய தரக்குறைவான நடத்தையையும் ஒப்பிட்டுக் காட்டுவாள்.

அதையே திரும்பத் திரும்பக் கேட்கும்போதெல்லாம் விநாயகத்தின் மனம் கொந்தளிக்கும். அப்படிப்பட்ட ஒரு தாய்க்குப் பிறந்த தான் மட்டும் ஒழுக்கமானவனாக இருக்க முடியுமா என்ற சந்தேகம்தான் அவனிடம் தலைதூக்கியது.

தன் இருப்பிடத்திலிருந்து எழுந்த ஆசிரியை, மாணவனின் மனக்குமுறலைப் புரிந்துகொண்டவளாய், ஆறுதல் அளிக்கும் வகையில் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

விம்மலுக்கிடையே தொடர்ந்தான்: “எங்கம்மா செய்த காரியத்துக்கு நானா டீச்சர் பிணை? நீங்கதான் பாக்கறீங்களே எங்கப்பாவை! இந்தமாதிரி பாசமே இல்லாத, அக்கறை காட்டாத ஒருத்தரோட வாழ முடியாம அவங்க போனதில என்ன தப்பு? அவங்க நல்ல காலம் போயிட்டாங்க. என்னால முடியலியே! அதான் கண்ட வழியில போறேன்”.

குஞ்சிதபாதம் விக்கித்துப் போனார். மகன் ஒரு முட்டாள், கீழ்ப்படியாதவன் என்றுதான் அதுவரை நினைத்திருந்தார். ஆனால், அவனுடைய குற்றச்சாட்டுகளைக் கேட்டபின், தன்மீதே அவருக்குச் சந்தேகம் பிறந்தது.

எப்போது மாறினான் இப்படி ஒரு உணர்ச்சிக் குவியலாக?

எவ்வளவு காலமாக இத்துணை ஏக்கத்தையும் சுமந்து வந்திருக்கிறானோ என்ற எண்ணம் உரைக்க, தன்னையுமறியாமல் மகன்மேல் பாசம் சுரந்தது.

“கண்ட வழியிலே போறதாச் சொன்னியே, விநாயகம்! சிகரெட்டா?”

கொஞ்சம் தயங்கிவிட்டு, கண்ணைத் துடைத்தபடி, `ஆமாம்` என்பதுபோல் தலையாட்டினான்.

“டாடா? (DADAH?)

போதைப் பழக்கம் கிடையாது என்று தலையசைப்பிலேயே மறுத்தான்.

சற்றுமுன் நெகிழ்ந்திருந்த குஞ்சிதபாதத்தின் மனம் மீண்டும் கல்லாகியது. சின்னப் பையன், பிறர் எதிரில் தன்னை என்ன பேச்சு பேசிவிட்டான், என்னவோ, எல்லாமே தன் குற்றம் என்பதுபோல்!

ஆத்திரத்தில் அறிவிழந்தார். மகனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

“என்னடா சொல்றே? இந்த வயசிலே சிகரெட் பிடிக்கிறியா, காலிப் பயலே! வெக்கமா இல்லே, டீச்சர் எதிரிலேயே ஒத்துக்கிட?”

துடிக்கும் உதடுகளுடன், தலையைச் சற்றே சாய்த்தபடி ஆங்காரத்துடன் அவரை முறைத்துப் பார்த்தான் மகன்.

நிலைமையை மிசஸ் பாணி தன் வழியில் சமாளிக்கப் பார்த்தாள். “நீ கொஞ்சம் வெளியே இரு, விநாயகம். நான் அப்பாவோட தனியா பேசணும்”.

உதடுகளைப் பிதுக்கியபடி அவன் அசையாது நின்றிருந்தான். வேறு வழியின்றி, அவன் எதிரிலேயே அவன் மனநிலைமையை அலசினாள். “புகை பிடிக்கிறதில்லேன்னு இவன் பொய் சொல்லி இருக்கலாம். ஆனா, இவன் அப்படிச் செய்யல. ஏன் தெரியுமா?”

தந்தை, மகன் இருவருமே உன்னிப்பாகக் கவனித்தனர், தலையைச் சாய்த்தபடி.

“தான் கெட்டுப் போறதை தன்னாலதான் தவிர்க்க முடியலே. மத்தவங்களாவது தன்னை நல்வழிப்படுத்த மாட்டாங்களான்னு ஏங்கிப் போயிட்டான்”.

விநாயகத்திடமிருந்து ஒரு பெரிய விம்மல் வெளிப்பட்டது.

“அதனாலதான் உண்மையை ஒத்துக்கிட்டான். அதுவே நல்ல ஆரம்பம்தான். என்ன சொல்றீங்க?”

அந்த அழகிய உடலுக்குள் அறிவு மட்டுமின்றி, அளவற்ற அன்பும் இருப்பது புலன்பட, குஞ்சிதபாதம் மனம் நெகிழ்ந்து கையைக் கூப்பினார்.

“நம்ப மலேசிய நாட்டு மக்கள் தொகையிலே, பெரும்பான்மையானவங்க பள்ளிக்கூடத்துக்குப் போற வயசுப் பிள்ளைங்கதான். இவங்களை முன்னுக்குக் கொண்டு வந்தாத்தானே நாளைக்கு நாடு உருப்படும்?” அரசியல்வாதிபோல் ஏதேதோ சொல்கிறாளே என்ற அலுப்பு ஏற்பட்டது எதிரிலிருந்தவருக்கு.

“பிள்ளைங்களை ஒழுங்கு படுத்தறது ஆசிரியர்கள் பொறுப்பு மட்டும்தான் என்கிறமாதிரி நடந்துக்கிறவங்கதான் இங்க அதிகம்,” மேலும் சொன்னாள்.

குஞ்சிதபாதம் நெளிந்தார்.

“அடடே! நீங்க வித்தியாசமா எடுத்துக்கிட்டீங்களா? பொதுவாச் சொன்னேன். தனித்தனியா நாம்ப எதுவும் செய்ய முடியாது. ஆனா, பெத்தவங்களும், ஆசிரியர்களும் ஒண்ணு சேர்ந்தா, கண்டிப்பா ஒரு நல்ல குடிமகனை உருவாக்க முடியும். என்ன சொல்றீங்க?”

தான் செய்யும் தொழிலில் கிடைக்கும் சம்பளத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்கேற்ப வேலை செய்யாது, அதன் மூலகாரணத்தையும், சிறப்பையும் அறிந்து நடக்கும் இவளைச் சந்தித்தது தன் பாக்கியம் என்று குஞ்சிதபாதம் பெருமிதம் கொண்டார்.

“ஒரு பையனுக்கு அப்பாதான் வழிகாட்டி. அவனோட சின்னம்மா நல்ல எண்ணத்தோட கண்டிச்சாலும், `பெத்த தாயா இருந்தா இப்படி தன் மனம் நோக ஏசுவாளா?`ன்னு நினைச்சு வருந்தலாம். அதுவே நீங்க உரிமையோட கண்டிச்சா, அப்பாவுக்குத்தான் நம்பமேல எவ்வளவு அக்கறைன்னு புரிஞ்சு ஆனந்தப்படுவான். ஒங்க அன்பையும், ஆதரவையும் எப்படியாவது அடையணும்னுதான் அவன் எதை எதையோ தேடிப் போயிருக்கான். நல்ல வேளை, சிகரெட்டோட போச்சு”.

பள்ளிக்கூட வளாகத்திலிருந்து வெளியே நடக்கும்போது, கோயிலுக்குப் போய்விட்டு வந்த நிறைவு இருவரிடமும்.

“என்னங்க, ஒன்பது மணிக்கே படுத்துட்டீங்க? சீரியல் பாக்கலே?”

“அது கிடக்கு! நம்ப மகன் அடுத்த வருஷம் சீனியர் (பள்ளி இறுதியாண்டு) எடுக்கிறானே! இப்பவே பிடிச்சு படிக்கவேணாம்? சும்மா டிவி போட்டா, அதிலதான் அவன் மனசு போகும்!”

மகன்மேல் அவருக்குப் புதிதாகத் தோன்றியிருந்த கரிசனம் திலகத்திற்குப் புதிராக இருந்தாலும், அவளுக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

(‘ஓடிப் போனவளின் மகன்’என்ற தலைப்பில், ஏப்ரல் 1974-ல் வெளிவந்தது. தமிழ்நேசன் பவுன் பரிசும், மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரப் பரிசும் பெற்றது)

10


தி.தி


புதிதாக வாங்கியிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான் விசு.

பக்க ஆரம்பத்தில், சிலர் `‚ராமஜெயம்` என்று எழுதுவார்கள். வேறு சிலர், விநாயகரைத் துணை அழைப்பார்கள்.

விசுவோ, தி.தி என்று எழுதினான். எல்லாம், `திருமணத் திட்டங்கள்` என்பதன் சுருக்கம்தான்.

“படிச்சு முடிச்சு, வேலையும் கிடைச்சுடுச்சு. இப்பவே முன் நெத்தியில வழுக்கை விழுந்திடுச்சுடா! சீக்கிரமா ஒனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சுட்டா, நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்!” டிவியைத் தவிர வேறு பொழுதுபோக்கே இல்லாத அம்மா, சினிமா அம்மாவைப்போல்தான் பேசுவாள்.

உடனே ஒத்துக்கொண்டுவிட்டால், அவன் கௌரவம் என்ன ஆகிறது!

“இப்ப முடியாதும்மா. மொதல்ல நான் ஒரு ஆராய்ச்சி பண்ணப்போறேன்,” என்று புதிர் போட்டான்.

“மேலே படிக்கப்போறியா!” தனலட்சுமி ஆச்சரியப்பட்டாள். பள்ளி நாட்களிலேயே தலைவலி, வயிற்றுவலி என்று ஏதாவது சாக்கு சொல்லி, அடிக்கடி மட்டம் போட்ட மகன்!

“கல்லூரியில படிச்சாத்தானா? நான் வாழ்க்கையைப் படிக்கப் போறேன்!” பெருமையாக, தலையை நிமிர்த்தினான். “அம்மா! எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க. ஆனா, அதில எத்தனைபேர் சந்தோஷமா இருக்காங்க?”

“இதையா கணக்கு எடுக்கப்போறே? வேண்டாத வேலை!”

“இப்போ அப்படித்தான் சொல்வீங்க! நான் கட்டிக்கப்போற பொண்ணை, அதான் ஒங்க மருமகளை எப்படி நடத்தினா, அவ மனசு நோகாம, எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பா — இந்த மாதிரி ஒரு பட்டியல் தயார் செய்யப்போறேன். என்னோட திருமண வாழ்க்கை ரொம்ப ஜாலியா இருக்கப்போகுது, பாருங்களேன்!”

“அதை அப்போ பாத்துக்கலாம். சாப்பிட வா!”

பாராட்டாவிட்டாலும் போகிறது, இப்படி இளக்காரமாகப் பேசுகிறாளே!

விறைப்பாக வெளியே போய், நோட்டுப் புத்தகத்தை வாங்கிவந்தான். பக்கத்தின் நடுவில் ஒரு நீண்ட கோடு, மேலிருந்து கீழே. ஒரு புறத்தில் `நான் செய்ய வேண்டுபவை,` மறு புறத்தில், `நான் செய்யக் கூடாதவை` என்ற உபதலைப்புகள்.

எங்கே ஆரம்பிப்பது என்று விசு அதிகம் குழம்ப வேண்டியிருக்கவில்லை.

முந்தைய வருடம் மணப்பந்தலில் அமர்ந்தவன் செல்வம். தன்னைவிட அதிகம் படித்தவளை, ஒரு பணக்காரியைக் கைப்பிடித்தால், வாழ்க்கையின் உயர்மட்டத்தை சுலபமாக எட்டிவிடலாம் என்று எப்போதும் நண்பர்களிடம் விவாதிப்பான்.

மலாயா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தபோது, அவனுடைய தாத்தா ரப்பர் எஸ்டேட்டில் கங்காணியாக இருந்தாராம். ஒரு பவுன் பத்து வெள்ளி விற்ற அந்தக் காலத்தில், பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி என்று அலங்காரபூஷணனாக, கப்பலேறி அயல்நாடு சென்றவர், ஒரு செல்வந்தரின் ஒரே மகளை, அதுவும் இவரது இரண்டாம் வகுப்பைவிட அதிகம் படித்தவளை மணந்துகொண்டு, வெற்றிகரமாகத் திரும்பி வந்தாராம்.

செல்வமும் தாத்தா காட்டிய வழியில் நடந்து, நாகரிகத்தில் ஊறிய ஒரு பணக்காரப் பெண்ணை எப்படியோ வளைத்துப் பிடித்திருந்தான்.

அவன் பாட்டி எப்படியோ, ஆனால் அவனுக்கு வாய்த்தவள், `கல்லானாலும் கணவன்` என்று பொறுத்துப்போக மறுத்ததால், விவாகரத்து வழக்கிற்காக செல்வம் வீட்டுக்கும், கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருப்பதாகக் கேள்வி.

விசு எழுத ஆரம்பித்தான்.

தி.தி1: என்னைவிட அதிகம் படித்த, அல்லது பணக்காரியான பெண் வேண்டாம்.

அடுத்து ஒருசந்தேகம் எழுந்தது.

மனைவியாகப் போகிறவள் அழகாக இருக்கலாமோ?

பிறர் பார்த்து ரசிக்கிறார்களே என்ற பொறாமை வருமா?

வரும்.

கண்டிப்பாக வரும்.

அது மட்டுமல்லாது, அந்த அழகி தனக்கு உண்மையாக நடந்து கொள்கிறாளோ என்று யோசித்து யோசித்தே இருக்கிற நான்கு முடியையும் இழக்கவேண்டி வரலாம்.

தி.தி 2: அழகி வேண்டாம். கண், காது போன்றவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் போதும்.

அதிகம் யோசித்ததில் தலை வலித்தது. `பசி,` என்று நினைத்துக்கோண்டான்.

பிறகு, முதல் நாளைக்கு இவ்வளவு போதும் என்று எழுந்தான்.

“கை, காலைக் கழுவிட்டு வாடா,” என்றாள் அம்மா.

சாப்பாட்டு மேசைமுன் நாற்காலியில் அமர்ந்து, காலால் அல்ல, கையால் சாப்பிடுவதற்கு எதற்காக காலைக் கழுவ வேண்டும்?

அம்மாவைக் கேட்டால், `குதர்க்கம்,` என்று பழிப்பாள். அப்பாவைக் கேட்கலாம் என்றாலோ, `அம்மாவைக் கேளு,` என்று நழுவி விடுவார்.

அப்படித்தான் அடுத்த தி.தி பிறந்தது.

அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு ஓடியவனை அப்பா எதுவும் புரியாமல் பார்த்தார். அவனுக்கு படிப்பு வேப்பங்காய் என்றால், சாப்பாடு தேன்.

அவர் கேளாத கேள்விக்கு புன்சிரிப்புடன் பதிலளித்தாள் அம்மா: “ஒங்க மகனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு. அப்ப எப்படி நடந்துக்கணும்னு இப்பவே திட்டம் போடறான்!”

“வேண்டாத வேலை!” என்றார் அப்பா.

விசு அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, வேகமாக எழுதினான்.

தி.தி 3: பெண்டாட்டி தாசனாக இருக்காதே. வரியின் ஆரம்பத்தில், `அப்பாமாதிரி` என்று எழுதிவிட்டு, அதை நன்றாக அடித்தான். `ஏனெனில், ஒரு ஆணின் சுதந்திரம் எந்த விதத்திலும் தடைப்பட்டுவிடக் கூடாது` என்று விரிவாக்கினான். இப்போது அப்பாவைப் பழித்ததால் உண்டான குற்ற உணர்வு மறைந்தது.

அடுத்து, இலக்கணத்தில் சந்தேகம் வந்தது. `ஒரு ஆணா,` இல்லை, `ஓர் ஆணா?`

எதாக இருந்தால் என்ன! இப்போது அதுவா முக்கியம் என்று, `ஒரு` என்ற வார்த்தையை அடித்துவிட்டு, `ஆணின்` என்று போட்டுக்கொண்டான்.

எழுதும்போதே மாற்று யோசனை எழுந்தது. கல்யாணம் என்றால் தனக்கு மட்டும்தானா? அதன்வழி தன்னுடன் இணையப்போகும் பெண்ணுக்கு மட்டும் உணர்ச்சிகள் இருக்காதா, என்ன!

அடுத்த பக்கத்தில், `ஒரு பெண் எதிர்பார்ப்பவை` என்ற தலைப்பின்கீழ், `பெண் சுதந்திரமும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது` என்று எழுதும்போதே அளப்பரிய பெருமை உண்டாயிற்று.

வரப்போகிறவளின் நல்வாழ்க்கையில்தான் தனக்கு எவ்வளவு அக்கறை!

தன்னை மணப்பவள் கொடுத்து வைத்தவள்! அவளுக்குத் தினமுமே கொண்டாட்டம்தான்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, நாடெங்கும் கொண்டாட்டமாக இருந்தது. நீண்ட விடுமுறைக் காலம் வேறு.

கிட்டத்தட்ட மறந்திருந்த பழைய நண்பர்களைப் பார்ப்பது என்று முடிவெடுத்தான் விசு. அவர்களுக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்டதா என்று முதலிலேயே விசாரித்து வைத்துக்கொண்டான். எல்லாம் ஆராய்ச்சியின் பொருட்டுதான்.

தேவா என்கிற நண்பனின் அக்கா, குடிப் பழக்கம் இருந்த கணவர் குடும்பச் செலவுக்குப் பணமே கொடுக்காது, அடித்து வேறு கொடுமைப் படுத்தியதில் மனம் வெறுத்து, பிறந்தகத்துக்கே நிரந்தரமாக வந்திருந்தாள்.

அவர்கள் வீட்டுக்குப் போய் விவரம் சேகரித்த விசு, யாரும் பார்க்காத சமயத்தில், `குடிக்காதே! மனைவியை அடிக்காதே!` என்று, சட்டைப்பையில் தயாராக வைத்திருந்த நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொண்டான் விசு.

அபூர்வமாகத் தனது வீடு தேடி வந்திருந்த விசுவின் எதிரே, தேவா தன் அதிகாரத்தைப் பறைசாற்றிக்கொள்ள எண்ணினான் போலும்! சமையலறைக்குள் அவ்வப்போது எட்டிப் பார்த்து, “டிகாக்ஷன் காபி கலக்கிட்டு வாடி. தோசைக்கு வெறும் சாம்பார்தானா! தக்காளி சட்டினி, வெங்காய சட்டினி இரண்டும் அரைச்சுடு. அதான் மிக்சி இருக்கில்ல! அப்படியே கொஞ்சம் கேசரி,” என்று மனைவியை வாய் ஓயாமல் விரட்டினான்.

அப்பெண்மணியின் முகம் எவ்வளவு வாடிப் போயிருக்கும் என்று கற்பனையில் பார்த்தே பரிதாபப்பட்டான் விசு. தி.தி எழுத நேரமில்லை.

ஆரம்பப் பள்ளியில் கணக்கு வாய்ப்பாடுகளை மனனம் செய்த பழக்கம் இப்போது கைகொடுத்தது.

`மற்றவர்கள் எதிரில் பெண்டாட்டியை விரட்டாதே!` என்ற பொன்மொழியை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டான்.

இப்போது நோட்டுப் புத்தகத்தில் சில பக்கங்களே எஞ்சியிருந்தன.

சாவதானமாக, எழுதிய அறிவுரைகளை ஒன்றுவிடாமல் படித்துப் பார்த்தபோது, அயர்ச்சிதான் மிஞ்சியது.

மனைவிக்கும் சுதந்திரம் கொடுக்க வேண்டும், ஆனால் தன் தனிப்போக்கிற்கும் குந்தகம் விளையக் கூடாது. நடக்கிற காரியமா?

இருவரும் அவரவர் வழியில் போவதற்கு இணைவானேன்? புரியவில்லை.

ஒரு தி.தியின்படி, பிறர் எதிரில் கணவன் மனைவியையோ, அல்லது ஒரு பெண் கொண்டவனையோ தலைகுனிவாகப் பேசக்கூடாது.

தலைகுனிவுக்கு எதிர்ப்பதம் என்னவென்று சற்று யோசித்து, மனைவியை அதிகம் புகழவும் கூடாது. புகழப்பட்டவருக்குத் தலைக்கனம் வந்துவிடும். புகழ்வரை மதிக்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்தான் விசு.

புகழாவிட்டாலோ, குடும்பத்தில் சுமுகமான நிலைமை இருக்காது. அது அப்பா தன் நடத்தையால் காட்டிய பாடம்.

“இன்னிக்கு ரசம் ஏ ஒன். ஒரு தம்ளரில் விட்டுக் குடு, தனம்!” என்று பாராட்டிய அப்பாவை நம்ப முடியாது பார்த்தான்.

“இன்னிக்கு ரசத்திலே உப்பு போட மறந்துட்டாங்க அம்மா. அதை எப்படிப்பா இவ்வளவு ரசிச்சு, கேட்டு வேற வாங்கிக் குடிக்கிறீங்க?”

அப்பா சிரித்தார். “உண்மையைச் சொல்லிட்டு, யாரு ஒங்கம்மாகிட்ட மாட்டிக்கிறது! நாளையிலேருந்து நீங்களே ஒங்களுக்குப் பிடிச்சமாதிரி சமைச்சுக்குங்கன்னு முரண்டு பண்ணுவா. இல்லே, எப்பவோ செத்துப்போன எங்கம்மாவை வம்புக்கு இழுப்பா — என்னை இப்படி நாக்கு நீளமா வளர்த்ததுக்கு. எதுக்குடா பொல்லாப்பு!” என்று அப்பா விளக்கியது மறக்கக்கூடியதா!

எதிர் வீட்டு மருமகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மூன்று பிள்ளைகளைப் பெற்றுவிட்டு, நான்காவது பிரசவத்தில் இறந்துபோனபோது, இடுப்பின் அகலத்துக்கும், பிள்ளைப்பேறு சுலபமாக இருப்பதற்கும் இடையே உள்ள தொடர்பைத் தற்செயலாக அறிந்துகொண்டான் விசு.

“அப்பாவுக்குப் பெண்பார்க்க, மொதல்ல அவங்கம்மாவும், அத்தையும்தான் என்னைப் பாக்க வந்தாங்க. என்னோட இடுப்பு அப்பவே அகலம்தான். இவதான் நம்ப வம்ச விருத்திக்கு ஏத்தவள்னு முடிவு செஞ்சுட்டாங்க!”

நண்டும் சிண்டுமாக குழந்தைகளை மேய்த்துக்கொண்டு திண்டாடும் விதுரனைப் பார்த்தபோதெல்லாம் தானும் அவன் நிலைமைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம் பிறந்தது.

கட்டியவள் அல்பாயுசில் போய்விட்டால், அவள் பெற்றுப்போட்டதை யார் பார்த்துக்கொள்வது?

அதுவரை அவன் அறைச் சுவர்களை அலங்கரித்த த்ரிஷா, தமன்னா போன்றவர்களின் படங்களைக் கிழித்தான். சரிதாவை அந்த இடத்தில் வைத்துப் பார்த்தபோதுதான் அவனுக்கு மூச்சு வந்தது.

அடுத்த தி.தி, `நாமிருவர், நமக்கிருவர்` என்று, ஏதோ பலான சமாசாரத்தின் விளம்பர வாசகம்போல் இருந்தது.

ஓராண்டுகால ஆராய்ச்சியின் பலனாக, எல்லா சூழ்நிலையிலும் எதையோ கவனமாகத் தேடும் பாவனை வந்தது விசுவுக்கு.

தூக்கம் போயிற்று. ராத்திரியெல்லாம் கண்விழித்துப் படிக்கும் மாணவியுடையதைப் போன்று, முடி உதிர்ந்தது. வயிறு காலியாக இருப்பதால்தான் தூக்கம் வரவில்லையோ என்றெண்ணி, அர்த்த ராத்திரியில் ஐஸ்பெட்டியை முற்றுகையிட்டான்.

அம்மாவுக்குக் கவலை பிறந்தது.

மீண்டும் அந்தப் பேச்சை எடுத்தாள்.

காலமெல்லாம் துப்பு துலக்கினாலும், இந்த புதிருக்கு விடையே கிடையாது என்ற ஞானம் பிறந்திருந்தது விசுவுக்கு.

“சரிம்மா. ஒங்க ஆசையைக் கெடுப்பானேன்!” என்று பெரியமனது பண்ணினான்.

முதன்முதலாகப் பார்த்த பெண்ணே தனது தி.திக்கு உட்பட்டிருந்ததுபற்றி விசுவிற்கு கொள்ளை மகிழ்ச்சி.

அம்மாதான், “பொண்ணு பாக்க சுமாராத்தான் இருக்கு. இடுப்புக்குக் கீழே விகாரமான அகலம் — மார்க்கெட்போன நடிகைமாதிரி. படிப்பும் பெருமையாச் சொல்லிக்கிறமாதிரி இல்ல. இவனுக்கு என்ன குறைச்சல்! அவசரப்பட்டு, போன இடத்திலேயே சரின்னு தலையாட்டிட்டான்!” என்று பார்ப்பவர்களிடமெல்லாம் அங்கலாய்த்துக்கொண்டாள். “நான் ரொம்ப அவசரப்படுத்தி இருக்கக்கூடாது,” என்று பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டாள்.

அறையை அலங்கரித்த மலர்களின் மணம் சிற்றின்ப உணர்வுகளைக் கிளறிவிட, முன்பின் பழக்கமில்லாத அப்புதுமணத் தம்பதிகள் மௌனமாக இருந்தார்கள்.

ஏதாவது பேசினால் இறுக்கம் குறையும் என்று நினைத்தவனாக, ” ஒனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” அசட்டுத்தனமாகக் கேட்டுவைத்தான் மணமகன்.

மனைவி அளித்த பதில்: “எனக்கு வரப்போறவரு எப்படியெல்லாம் இருக்கணும்னு கனவு கண்டேன், தெரியுமா? கடைசியில, கட்டை குட்டையா, வழுக்கையா நீங்க! ஹூம்! ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுடுதா?”

விசுவிற்குள் கிளர்ந்த அவமானம் ஆத்திரமாக மருவியது. ஆரம்பத்திலேயே கோணல் வேண்டாம் என்று அடக்கிக்கொண்டான்.

மேற்கொண்டு அவள் எதுவும் பேசித் தொலைப்பதற்குள், அவள் வாயை இறுக மூடினான் — கையால் அல்ல.

விநாடிகள் நிமிடங்களாயின. நிமிடங்கள் மணிகளாக மாறி.. கணக்கு வைத்திருக்க வேண்டிய காலமா அது!

கணவனை வசப்படுத்திவிட்டோம், இப்போது எது கேட்டாலும் தட்ட மாட்டார் என்ற நம்பிக்கையுடன், “ஏங்க? நானும் ஒத்தைப்பிள்ளை. நீங்களும்தான். ஏதாவது பிரச்னை வந்தா, சொல்லி அழ அக்கா, தங்கச்சி, அண்ணன்னு நமக்கு யாரும் இல்லியேன்னு எத்தனை தடவை வருத்தப்பட்டிருப்பேன் தெரியுமா? அதனால, நமக்கு நாலு பிள்ளைங்களாவது வேணும். என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள் தர்மபத்தினி.

குறட்டை பதிலாக வந்தது.

மறுநாள் காலை, பல் விளக்குகையில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான் விசு.

அப்பா தெரிந்தார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III