குமார் துப்பறிகிறார்
சிறுகதைகள்
Backகுமார் துப்பறிகிறார்
சிறுகதைகள்
பேயோன்
குமார் துப்பறிகிறார்
பெனாயில் மணக்கும் சம்பவ வீட்டிற்குள் கான்ஸ்டபிள் 114உடன் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் குமார். கூடத்தில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. வீடு கழுவப்பட்டிருந்தது. பதற்றமான நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் இன்ஸ்பெக்டரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றார். 4க்கு 4 பாத்ரூமில் அந்தப் பெரியவர் சடலமாகக் கிடந்தார். காலடியில் ஒரு குளியல் சோப்.
"காலைலேந்து இப்பிடித்தாங்க கெடக்கறாரு. கூப்டா பதிலே இல்ல," பெரியவரின் மனைவி விம்மினார்.
"மிஸஸ் மேடம், உங்க கணவர் கொல்லப்பட்டிருக்காரு" என்றார் குமார்.
மனைவி ஒரு கணம் அதிர்ந்து பின் கதறி அழுதார். "அவரை யாருங்க கொல்லப்போறாங்க?"
"இவருக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?" என்றார் குமார், கீழே கிடந்தவரை லத்தியால் சுட்டிக்காட்டி.
"இல்லீங்க, இவர் யார் வம்புக்கும் போக மாட்டாரு" என்றார் மனைவி அழுதபடி.
குமார் குனிந்து பிணத்தின் பாதங்களைப் பார்த்தார். பிறகு முகத்தை நெருங்கிப் பார்த்தார்.
"பேச்சு மூச்சில்லாம கெடக்கறப்ப ஏன் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ல?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"அவர் கோவிச்சிக்கிட்டு பேசாம இருக்கார்னு நினைச்சேன்..."
"கோவிச்சுக்கிட்டுன்னா அவரோட எதுக்காவது சண்டை போட்டீங்களா?"
"சண்டை இல்லைங்க. ரசத்தை வாயில வெக்க முடியலன்னாரு. அதுக்காகத் திட்டுனேன்."
"மிச்சத்தை நான் சொல்றேன். அவர் மேல இருக்குற கோவத்துல அந்த ரசத்தைக் குடுத்தே அவரைக் கொன்னுட்டீங்க. அப்புறம் அவரை பாத்ரூமுக்கு இழுத்துட்டு வந்து காலடில சோப்பை வச்சீங்க. கைலேந்து சோப்பு வாசனை போக வீட்டைக் கழுவுற சாக்குல பெனாயிலைப் போட்டு கையைக் கழுவிருக்கீங்க. ஆம் ஐ ரைட்?"
அந்த பெண்மணி ஓடப் பார்த்தார். இன்ஸ்பெக்டர் அவரைத் தடுத்து நிறுத்தித் தொடர்ந்தார்.
"ஆனா பேஷன்ட்டோட ரெண்டு கால்லயும் சோப்பு வாசனை வர்ல, பிசுபிசுப்பு இல்ல. வாயை நல்லா துடைச்சு விட்டிருக்கீங்க. பட், ரசத்தோட வாசனை உங்களை காட்டிக் குடுத்திருச்சு. அரஸ்ட் ஹெர்!"
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
கடுப்பாக ஒரு கொலை
அந்த வசதியான குஷன் சோபாவைப் பார்த்தால் யாருக்கும் பாய்ந்து உட்காரத் தோன்றும். இன்ஸ்பெக்டர் குமார் அதைத்தான் செய்தார். சிறிது நேரம் மரியாதைக்காக நின்று பார்த்த கான்ஸ்டபிள் 114, அதற்கு மேல் ஆசைக்கு அணை போட முடியாமல் தானும் சோபாவில் மூழ்கினார்.
வசதியான பழைய பங்களா. எல்லாம் தேக்கு. பங்களாவுக்குப் பின்னால் இருந்த திருமண மண்டபத்திலிருந்து ஈமக்கிரியை சத்தங்கள் கேட்டன. அறையில் இருந்த சகலத்தையும், காத்திருக்கச் சொல்லிவிட்டுப் போன வேலைக்காரரின் முதுகையும் இன்ஸ்பெக்டரின் கூர்மையான பார்வை ஸ்கேன் செய்தது. அவரது வாயோ, சமையல்காரரின் கை கால்கள் நடுங்குவதைப் பார்த்துப் புன்னகைத்தது.
பண்டைய மின்விசிறியின் சத்தத்தை குமார் சில நொடிகள் கேட்டுக்கொண்டிருந்த பின் பருமனாக ஒருவர் வந்தார். வெங்கடேஸ்வரா ஹெவி இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர். பளிச்சிடும் வெண்மைச் சட்டை, வேட்டி. நெற்றியில் பக்தி. கோடீஸ்வரருக்கே உரிய எளிமை. மூன்று நாட்களுக்கு முன்பு மனைவியை இழந்த வேதனை முகத்தில் நடமாடிக்கொண்டிருந்தது.
இன்ஸ்பெக்டர் குமார் லத்தியின் காலி முனையை இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மிடுக்காகத் தொடங்கினார்.
"முதல்ல உங்க வருத்தங்களுக்கு என்னோட அனுதாபங்கள் மிஸ்டர் வெங்கடேஸ்வரன். இந்த சமயத்துல உங்களை டிஸ்டப் பண்ண வேண்டியிருக்கு."
"செத்தவங்க எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க சார். அதான் தாங்க முடியல" என விம்மினார் அம்மனிதர்.
"ரைட்டோ. குற்றவாளிய கண்டுபிடிக்கிறது உங்க சோகத்தைவிட முக்கியமானது. உங்க மனைவி கொலைல யாரை சந்தேகப்படுறீங்க?"
"எனக்கு சமையல்காரர் முருகன் மேலதான் சார் சந்தேகம். ஆனா நான் சொன்னதா அவர்கிட்ட சொல்ல வேணாம். ரொம்ப வருத்தப்படுவாரு. நல்ல மனுஷன்."
"அவரை ஏன் சந்தேகப்படுறீங்க?"
"என் மிஸஸ் எப்பவும் அவரைத் திட்டிக்கிட்டே இருப்பாங்க. ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க. எனக்கு மத்தியஸ்தம் பண்ணவே நேரம் சரியா இருக்கும்."
"வெரிகுட். முதல் சஸ்பெக்ட் கிடைச்சாச்சு. அவரைக் கூப்பிடுங்க."
வெங்கடேஸ்வரன் சமையல்காரரை அழைத்தார். அவரை இப்போது வர்ணிக்கலாம். ஒடுங்கிய தேகம். பிளாஸ்டிக் பைகளுக்கு சவால் விடும் விதமாய் கண்ணுக்குக் கீழே மடிப்புகள். இயந்திர வாழ்க்கைக்கு வாழ்க்கைப்பட்டவரின் உயிரற்ற கண்கள். நெற்றியைக் காலம் நன்றாகவே உழுதிருந்தது. அதே நடுங்கும் கைகளில் ஒன்றில் வண்ண ஈரம் சொட்டும் பித்தளைக் கரண்டி. சாம்பாரா, ரசமா? ஏன் பொரித்த கூட்டாக இருக்கக் கூடாது? இன்ஸ்பெக்டரின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கின.
"இவங்க சம்சாரத்தோட கடைசியா நீங்க எப்ப சண்டை போட்டீங்க?" சமையல்காரரைக் கேட்டார் குமார்.
சமையல்காரர் விழித்தார். கைகள் இன்னும் தீவிரமாக உதறின. உதடுகள் துடித்தன.
"அவங்க செத்த அன்னிக்கு காலைல" என்றார் சமையல்காரர்.
"வெரிகுட். உங்க கை ஏன் நடுங்குது? கழுத்தை நெரிச்ச வலி இன்னும் சரியாகலியா?" என்று கேட்ட குமார், வெங்கடேஸ்வரனைப் பார்த்தபடி "ஒன் ஃபோர்ட்டீன், அரெஸ்ட் தி முருகன்" என்றார்.
"ஐயா, நான் எப்படி?" என்றார் முருகன் பதறி.
"ஷட்டப். உங்க கை நடுக்கமே உங்களைக் காட்டிக் குடுத்திருச்சு. கழுத்துல பதிஞ்ச மெல்லிய விரல் அடையாளம் உங்களுதுதான். மத்ததை ஸ்டேஷன்ல பேசிக்குவோம்" என்றார் குமார்.
114 ஓர் உரத்த பெருமூச்சுடன் சோபாவை விட்டு எழுந்தார். சமையல்காரரை எரிச்சலோடு பார்த்தார், 'அடங்க மாட்டியா?' என்பது போல. வெங்கடேஸ்வரன் கைதுக்கு இடம் விட்டு பின்னே நகர்ந்து நின்றார்.
"நோ, வெயிட். இவரை அரெஸ்ட் பண்ணுங்க" என்ற குமாரின் லத்தி வெங்கடேஸ்வரனைக் காட்டியது.
"யாரு, நானா? என்ன இன்ஸ்பெக்டர், விளையாடுறீங்களா?"
குமார் கடைசிப் பகுதி விளக்கத்தைத் தொடங்க செருமிக்கொண்டார்.
"எனக்கு விளையாடுற வயசில்ல வெங்கடேஸ்வரா. முருகனை அரஸ்ட் பண்ணச் சொன்னதும் நான் எதிர்பாத்த மாதிரியே உன் முகத்துல சடனா வந்த நிம்மதி உன் குற்றத்த புரூவ் பண்ணிருச்சு. உன் பொண்டாட்டியோட கருமாதி உனக்கு சொந்தமான கல்யாண மண்டபத்துல நடக்கறப்பவே சந்தேகப்பட்டேன். இந்தக் கொலைய முருகன் பண்ணிருக்க முடியாது. விரலுக்கு விரல் முளைச்ச மாதிரி இருக்குற அவர் கையால உன் பொண்டாட்டி கழுத்தை நெரிக்க முடியாது, அமுக்கி விடத்தான் முடியும். அது மட்டுமில்ல, எப்பவுமே சொந்தக்காரங்கதான் இவ்வளவு குரூரமா கொல்லுவாங்க. உனக்கு பிசினஸ் சரிஞ்சு போச்சு. புதுசா பிசினஸ் தொடங்க கடன் கிடைக்கல. பொண்டாட்டியக் கொன்னு அவ இன்சுரன்ஸ் பணத்துல புது பிசினஸ் ஆரம்பிக்க பிளான் போடுற. முருகன் உனக்கு பலியாடு. கரெக்டா? ஒன் ஃபோர்ட்டீன், இப்ப அரஸ்ட் பண்லாம்.”
கோடீஸ்வரர் கு(ண்)டுகு(ண்)டு என ஓடப்பார்த்தார். இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலைக் குறுக்கே நீட்ட சுமோ வீரர் போல் குப்புற விழுந்தார் வெங்கி.
“பிளடி அமெச்சூர்ஸ்!" என்றார் குமார்.
தானாக ஒரு திருட்டு
இன்ஸ்பெக்டர் குமாரின் போலீஸ் கார் சைரன் அலற அந்த இரண்டு மாடி நகைக் கடை முன்பு கிறீச்சிட்டு நின்றது. கதவைத் திறந்து வேகமாக இறங்கிய குமார், அதே வேகத்தில் தடதடவவெனப் பத்து படிகள் ஏறிப் பரபரப்பை ஏற்படுத்த முனைந்தார். ஆனால் மூன்று படிகள்தான் இருந்தன. பிறகு சமாளித்து ஒரே தாண்டில் மூன்று படிகளையும் ஏறி கடைக்குச் சென்றார்.
"முன்னாலால் சேட் ஜுவல்லர்ஸ்" என்று சொன்னது பெயர்ப் பலகை. குமார் அதை ஏறிட்டுப் பார்த்து ஆமோதித்துவிட்டு கடைக்குள் நுழைய, கான்ஸ்டபிள் 114 அவரைப் பின்தொடர்ந்தார். நடுத்தர வயதுக் கடைக்காரர் அவர்களைக் கைகூப்பி வரவேற்றார்.
"முதல்லேந்து சொல்லுங்க சேட்ஜி சார்" என்றார் குமார்.
"காலைல கடையத் தொறந்து பாத்தா இந்தக் கண்ணாடிய ஒடச்சிருக்காங்க சார். ரெண்டு லட்ச ருவா மதிப்புள்ள வைரம் காணாம போயிடுச்சு. இந்த ஆல்பத்துல பாருங்க..."
வைரத்தை எல்லா கோணங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்பெக்டர் அசுவாரஸ்யமாக மேய்ந்தார்.
"உங்க வைரத்துக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா?"
"வைரத்துக்கா?"
"ஐ மீன், உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"
"இல்ல சார். சி.சி. காமிரா ரெக்கார்டிங்லகூட எதுவும் பதிவாகல."
"நான் ஒரு வாட்டி பாக்கறேனே."
இன்ஸ்பெக்டர் குமாரும் குழாமும் சி.சி.டி.வி. டி.வி.டி.யைப் பார்த்தனர். அந்தச் சிறிய தொலைக்காட்சித் திரையில் தெரிந்ததோ ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பற்றிய முழு ஆவணப்படம். டி.வி.டி.யை மாற்றியிருந்தார்கள். எங்குமே கைரேகைகள் இல்லை. டி.வி.டி.யின் முகத்தை விரலால் ஆங்காங்கே லேசாகத் தொட்டுப் பார்த்தார் குமார். ஒரு இடத்தில் லேசாக ஒட்டியது. திருப்பிப் பார்த்தார். பின்பக்கம் பிரதிபலித்த அவர் முகத்தில் குறுக்கும் நெடுக்குமாக நிறைய கீறல்கள். குமார் புன்னகை அரும்பினார்.
"வைரத்தைத் திருடுனவன் யாருன்னு இப்ப தெரிஞ்சிரும். நீங்க ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க."
இன்ஸ்பெக்டரின் கார் மிடுக்காய்க் கிளம்பி அந்தப் பகுதியில் ஒவ்வொரு தெருவாக வட்டமிட்டது. பிறகு அது மெல்ல நின்ற இடம், 'கணேஷ் வீடியோ ரென்டல்ஸ்' என்ற டி.வி.டி. வாடகைக் கடை. அடுத்த சில நொடிகளில் குமார் கடைக்குள் இருந்தார். சின்ன கடையாக இருந்தாலும் சி.சி.டி.வி. வைத்திருந்தார்கள்.
"ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பத்தின டி.வி.டி.யப் பாக்கணும்" என்றார் குமார் டி.வி.டி. நூலகரிடம்.
"எடுத்துத் தரேன் சார்" என்று ஓட்டமாக ஓடிய நூலகர், ஐந்து நிமிடங்களில் வெறுங்கையோடு திரும்பி வந்தார். "சாரி சார், அதை மட்டும் காணோம். மேரி க்யூரி பாக்குறீங்களா?"
"வேணாம். அந்த டி.வி.டி.ய யாரு இரவல் வாங்குனாங்க?”
“எங்க ரெக்கார்ட்ஸ்படி அதை யாரும் எடுக்கல சார்.”
“சரி, உங்க கடையோட சி.சி.டி.வி. ரெக்கார்டிங்கைப் போட்டுக் காமிங்க."
"இதோ சார். எதுனா பிராப்ளமா சார்?" என்று நூலகர் டி.வி.டி.யை எடுத்து வந்தார். அது வழக்கமான இருபது ரூபாய் டி.வி.டி.
32 அங்குலத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒடியது ஒரு திருடல் படலம்தான் — நகைக் கடைத் திருட்டு. குமார் அரும்பிய புன்னகையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
“உங்க கடை ஓனர் யாரு?”
“முன்னாலால் சேட் சார். பக்கத்துல நகைக் கடை...”
"ஐ நோ. உங்க நைட்டிங்கேல் டி.வி.டி. திருடு போயிருக்கு. கம்ப்ளெயின்ட் குடுத்து ஸ்டேஷன்ல வாங்கிக்குங்க" என்று சொல்லிவிட்டு நகைக் கடைக்கு விரைந்தார் இன்ஸ்பெக்டர்.
கடையில் இருந்தவர்கள் எல்லோரும் பதற்றமாகப் பார்க்க இன்ஸ்பெக்டர் அமர்த்தலாக ஒரு நாற்காலியில் அமர்ந்து சரேலெனச் சுழல யத்தனித்தார். ஆனால் அது பிளாஸ்டிக் நாற்காலி.
“சேட்டு, நீ சமீபத்துல ரெண்டு லட்ச ருவாய்க்கு இன்ஷ்யூர் பண்ணி காணாம போன உன் வைரம் கிடைச்சிருச்சு. ஆனா ஒரு பிராப்ளம்...” என்றார் குமார். கடைக்காரர் நெற்றியில் வியர்வை கிளம்பி வர எச்சில் விழுங்கி எழுந்து நின்றார்.
“நீ திருடுன நைட்டிங்கேல் டி.வி.டி.ல இருந்த கடை ஸ்டிக்கரைக் காணோம். அதை ஸ்டிக்கர் இல்லாம ரிட்டன் பண்ணா உனக்கு அஞ்சு ருவா ஃபைன்.”
பேயறைந்தாற்போல் தெரிந்த சேட்ஜி “அதுவும் என் கடைதான்” என்றார்.
“நாட் எனி மோர்” என்றார் குமார் அவர் கையில் விலங்கை மாட்டி.
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
பாடிஸ்ப்ரே
"பட்டப்பகலில் வங்கியில் புகுந்து முகமூடித் திருடர்கள் துணிகர கொள்ளை!" என்று மறுநாள் தலைப்புச் செய்திகள் வருவதற்கு முந்தைய நாள் திருட்டு நடந்த பேங்க் ஆஃப் ஜார்க்கண்ட் தலைமைக் கிளையில் போலீஸ் டீம் ஆஜராகியிருந்தது. இன்ஸ்பெக்டர் குமார் வந்தபோது 'கிரைம் சீனை'த் தொந்தரவு செய்யக் கூடாது என்று காவல் குழுவினர் ஒதுங்கி நின்றார்கள்.
"என்னய்யா ஒரே பாடிஸ்ப்ரேயா இருக்கு?" என்றார் குமார். உண்மையில் அந்த இடம் அப்படித்தான் இருந்தது. தரையில் சுமார் 15 பேர் விபத்துக் கோலத்தில் சிதறிக் கிடந்தார்கள். ஆறு ஊழியர்கள் தத்தம் இருக்கைகளில் விசைப்பலகைகளின் மேல் எச்சில் ஒழுகக் கவிழ்ந்திருந்தார்கள். "சார், இவுங்க தூங்கிட்டிருக்காங்க சார்" என்றார் கான்ஸ்டபிள் 114 பதறி.
"தூங்கிக்கிட்டா? சார், எந்திரிங்க" என்று மேனேஜர் போல் தெரிந்த ஒருவரை குமார் பூட்ஸ் காலால் எத்தினார். மேனேஜர் சாயலாளி புரண்டு படுத்தார். "அட ஆமா, தூங்குறான்" என்றார் குமார்.
ஸ்தலத்தைப் பார்வையிட்ட குமாருக்கு ஸ்தலபுராணத்தைச் சொன்னார் கான்ஸ்டபிள். 12 மணிக்குக் கொள்ளை. முகமூடி அணிந்த நான்கைந்து பேர் வங்கிக்குள் நுழைந்து எல்லோர் மீதும் குளோரோஃபார்ம் அடித்து மயங்கி விழவைத்திருக்கிறார்கள். ரூ. 40 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார்கள். வெளியே போய்விட்டுத் திரும்பி வந்த இரு வங்கி ஊழியர்கள் களேபரத்தைப் பார்த்துக் காவல் துறைக்கு ஃபோன் போட்டிருக்கிறார்கள். வாட்ச்மேன் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.
சம்பவ நேரத்தில் வங்கியில் இருந்தவர்கள் யாரும் இன்னும் விழித்தெழவில்லை. சோபா மெத்தை ஒன்றை மேனேஜருக்குத் தலையணையாக வைத்திருந்தார்கள். ஆனால் போர்வை கிடைக்கவில்லை. எங்கேயும் கைரேகைகள் இல்லை. அலாரம், சி.சி. காமிராக்கள் உடைந்திருந்தன. சுருக்கமாகச் சொன்னால் எந்தத் தடயமும் இல்லை. இந்தக் குழப்பம் போதாதென்று வங்கியிலிருந்து முகமூடி ஆட்கள் வெளியேறியதை யாரும் பார்க்கவில்லை.
கடைசி விவரத்தைக் கேட்டு இன்ஸ்பெக்டர் சுறுசுறுப்பானார். "ஒன் ஃபோர்ட்டீன், எல்லாரையும் எழுப்பு" என்றார். கான்ஸ்டபிள் குழு படுத்திருந்தவர்களை உலுக்கியும் உருட்டியும் எழுப்ப முயன்றது. முறைவாசல் பெண்மணியை அழைத்து சிலர் மேல் தண்ணீர் தெளிக்கச் சொல்லப்பட்டது. மெதுவாக ஒவ்வொருவராக எழுந்துகொள்ள, அவர்கள் அப்படியே தரையில் அமரவைக்கப்பட்டார்கள்.
இதற்கிடையில் குமார் தனியாக ஒரு ரெய்டு நடத்தத் தொடங்கினார். மூலையில் இருந்த ஒரு பூத்தொட்டியிலிருந்து பிளாஸ்டிக் பூங்கொத்தை எடுத்து வெளியே வைத்துத் தொட்டிக்குள் கை விட்டுப் பார்த்தார். ஒரு தீப்பெட்டியும் தண்ணீர் பாக்கெட்டும் கையோடு வந்தன. மற்ற மூலைகளிலிருந்து இன்னும் மூன்று தொட்டிகளைக் கவிழ்த்தார். சில ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் விழுந்தன. குப்பைத் தொட்டிகள் எல்லாவற்றையும் கவிழ்த்தார். அவற்றிலும் நோட்டுக் கட்டுகள். மொத்தம் ரூ. 40 லட்சம் இருந்தது போல் தெரிந்தது. அதோடு இரண்டு பாடிஸ்ப்ரே புட்டிகள், நான்கு ஜோடிக் கையுறைகள். குமார் புன்னகைத்தார். "இந்தாய்யா ஃபாரன்சிக்கு, இதெல்லாத்தையும் எடுத்துக்க. பணத்தைத் தனியா வை. பசங்க உள்ளதான் இருக்காங்க."
அடுத்து, மலங்க மலங்க உட்கார்ந்திருந்தவர்களை குமார் பல விதமாகத் திருப்பியும் புரட்டியும் பார்த்தார். கீழே விழுந்ததில் சிராய்ப்புகள், பல் இழப்புகள், ரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஒருவருக்குத் தலை உப்பியிருந்தது.
கட்டை குட்டையாக இருந்த ஒரு இளைஞனைப் பார்த்துக் குமார் கேட்டார்: "நீங்க எங்கேந்து சார் வரீங்க? டெபாசிட் பண்ண வந்தீங்களா?"
"ஆவடிலேந்து வரேன் சார். டெபாசிட் பண்ணத்தான் வந்தேன்" என்றான் அவன்.
"உங்க கூட எத்தன பேர் வந்தாங்க?"
"நான் ஒருத்தன்தான் சார்."
"எப்படி வந்தீங்க?"
"ஆட்டோல சார்."
"எவ்ளோ ஆச்சு?"
"நூத்தம்பது ரூபா சார்."
"தூங்கி எழுந்து ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க. அதெப்படி சார் உங்களுக்கும் உங்க ஃப்ரெண்ட்ஸ் மூணு பேருக்கும் விழுந்த காயமே இல்ல? நாங்க வர்றோம்னு தெரிஞ்சதும் சட்டுன்னு படுத்துக்கிட்டீங்களா?" என்றார் குமார். பேயறைந்தது போல் தெரிந்த இளைஞன் பதற்றமாகத் தனது நண்பர்களைப் பார்த்தான். அதற்காகவே காத்திருந்த 114ம் மற்ற கான்ஸ்டபிள்களும் அவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள்.
"ஆவடிலேந்து மவுன்ட்ரோடுக்கு 300 ரூபா* ஆகும்டா புண்ணாக்கு! அங்கதான் தப்பு பண்ணிட்டே" என்றார் இன்ஸ்பெக்டர்.
* 2013ஆம் ஆண்டின் ஆட்டோ கட்டண சீர்திருத்தத்திற்கு முன்பு எழுதப்பட்டது
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
மரணக் கிணறு
“வெல், வெல், வெல்!” என்றார் இன்ஸ்பெக்டர் குமார் கிணறுகளை எண்ணியபடி. மூன்று வீடுகளுக்குப் பின்னே மூன்று கிணறுகள். ஈரம் சொட்ட இரண்டு பிணங்கள். மூன்றாவது ஆள் மட்டும் பிழைத்துவிட்டான். ஒரு பிணத்தின் திறந்த வாயில் இன்னும் இருந்த கிணற்று நீரில் இரண்டு தலைப்பிரட்டைகள் விளையாடிக்கொண்டிருந்தன. இரு பிணங்களும் மிகையான அட்டென்ஷனில் படுத்திருப்பது போலிருந்தது. ஏனென்றால் விண்வெளி வீரர்களின் பிராணவாயு போல் முதுகில் கனமான செவ்வகப் பாறை கட்டப்பட்டிருந்தது. இருவருக்கும் 30 வயதுக்கு மேல் இருக்காது. பிழைத்தவனை உடை மாற்றி உட்கார வைத்திருந்தார்கள்.
சம்பவக் கிணறுகளைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் திரண்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிப்பதிவில் விழ எட்டிப் பார்ப்பது போல் பல தலைகள் பிணங்களைப் பார்க்க எம்பின.
குமார் எரிச்சலடைந்தார். “ஃபர்ஸ்ட் ரோ - பாத்துட்டீங்கன்னா நகருங்க, மத்தவங்களுக்கு வழி விடுங்க” என்று அதட்டினார். முதல் வரிசைக்காரர்கள் முணுமுணுத்தபடி விலகிச் செல்ல பின்னாலிருந்தவர்கள் முன்னே வந்தனர். மூன்று கிணறுகளையும் எட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
“யாரு முதல்ல பாத்தது?” என்று குமார் கேட்டதும் எங்கோ மூலையிலிருந்து ஒரு இளைஞன், “நான்தான் சார்!” என்று கைதூக்கிக் கத்தினான். எல்லோரும் அவனுக்கு வழி விட்டார்கள்.
“என்ன நடந்துது சொல்லு.”
“என் பேரு கணேஷ் சார். அங்க படுத்திருக்காருல்ல சார் மாணிக்கம் (முதல் பிணம்), அவரப் பாக்க வந்தேன் சார். தொப்புனு சத்தம் கேட்டுச்சு. இவரு (பிழைத்தவன்) கெணத்துலருந்து ஏற ட்ரை பண்ணிட்டிருந்தாரு. நான் ஒரு கயிறப் போட்டு மேல ஏத்துனேன். பக்கத்துக் கிணத்துலயும் ஆள் விழுந்திருக்குன்னு இவர் சொன்னாருன்னு உள்ள பாத்தா ஒரு ஆள் கெடந்தாரு. பாடிய வெளிய எடுத்தோம். அதுக்கப்புறம் என் ஃப்ரெண்டப் பாக்கப்போனா அவர் வீட்ல இல்ல. சரி, கெணத்துல இருப்பாரான்னு பாத்தேன். அங்கதான் சார் பொணமாக் கெடக்குறாரு!” என்று முடிக்கும்போது குரல் கம்மியது அந்த இளைஞனுக்கு.
இன்ஸ்பெக்டர் மாற்று ஆடை அணிந்த மூன்றாமவனை ஏற இறங்கப் பார்த்தார்.
“என்னய்யா, கல்லு சரியா கட்டலியா?” என்றார்.
“ஆமா சார், பொழச்சிட்டன் சார்” என்று குழைந்தான் அந்த வாலிபன்.
“உம் பேரு என்ன? உம் பேருக்கு அப்புறம் என்ன நடந்துச்சு?”
“எம் பேரு சீனிவாசன்ங்க சார். இந்தப் பக்கமா போயிட்டிருந்தப்ப பெருசா ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு வந்து பாத்தேங்க. ஒருத்தர் கெணத்துல மூழ்கிட்டிருந்தாரு. யாருன்னு பாக்க சொல்லோ பின்னாலேந்து மண்டைல யாரோ ஓங்கி அடிச்சாங்க சார். நெக்ஸ்டு முளிச்சுப் பாத்தா கெணத்துல கெடக்குறேன். எனக்கு நீச்சல்கூடத் தெரியாதுங் சார். இவர்தான் காப்பாத்துனாரு. அப்புறம் இவரு சொன்ன மாதிரி ரெண்டு பாடிய வெளிய எடுத்தோம்” என்று சொன்னவனின் பின்மண்டையை குமார் தடவிப் பார்த்தார். வீங்கித்தான் இருந்தது.
“எங்க, சட்டையக் கழட்டு பாப்போம்” என்றார் இன்ஸ்பெக்டர்.
சீனிவாசன் உடலுறவு அவசரத்தில் கழற்றுவது போல் பரபரவென்று சட்டையைக் கழற்றினான். உடலின் முன்பகுதியில் சில இடங்களில் நேர்த்தியான கீறல்கள். தடயவியல் நிபுணர் அவன் கிணற்றில் விழுந்தபோது அணிந்திருந்த ஈர ஆடைகளையும் அவற்றில் இருந்த பொருட்களையும் குமாரிடம் காட்டினார். அதில் குமாரைக் கவர்ந்தது ஒரு பேனாக் கத்தி. அவர் அதை எடுத்துக் கூர்மையைச் சோதித்தார், பிறகு முகர்ந்து பார்த்தார்.
“இப்ப நான் ஒரு கதை சொல்லட்டுமா? நீயும் கணேஷும் மாணிக்கத்த பிளான் போட்டுக் கொலை பண்றீங்க. அத நடுவீட்டுக்கார்ரு பாத்துடுறாரு. அவரையும் அதே மாதிரி கல்லக் கட்டி கெணத்துல போட்டுத் தள்றீங்க. உங்க ரெண்டு பேர் மேலயும் பழி விழக் கூடாதுன்றதுக்காக நீயும் விழுந்த மாதிரி காட்டிக்க ஒரு கல்லக் கெணத்துல போடுறதா பிளான் பண்றீங்க. ஆனா கணேஷு உன்னை தீத்துக்கட்ட பிளான் போட்ருக்கான். உன்னை அடிச்சுப் போட்டு கல்லக் கட்டி கெணத்துல தள்றான். உனக்கு கணேஷு மேல முன்னாடியே நம்பிக்கை இல்ல. தற்காப்புக்காக பாக்கெட்ல பேனா கத்தி வச்சிருக்க. கணேஷு பய டென்சன்ல கல்ல கொஞ்சம் லூசா கட்டிட்டான். நீ கத்தியால கயித்தை அறுக்குறப்ப உடம்புல காயம் பட்டிருக்கு. நீ வெளிய வர்றதுக்குள்ளாற ஜனம் சேந்துருச்சு. மாட்டிக்காம இருக்க நீங்க திருப்பியும் தோஸ்தாயிட்டீங்க. ரைட்டா?”
கணேஷும் சீனிவாசனும் இன்ஸ்பெக்டரின் கதை சொல்லலில் வெகுநேரமாய் கட்டுண்டிருந்தார்கள். தப்பிக்க வழி தேடி இருவரின் கண்களும் அலைபாய்ந்தன. ஆனால் 114 லத்தியை உயர்த்தித் தயாராக இருந்தார். தடயவியல் நிபுணரும் பேனா கத்தியை அது இருந்த பாலிதீன் பையுடன் சேர்த்துக் காட்டி மிரட்டினார்.
இன்ஸ்பெக்டர் சூழலை ரசித்துப் புன்னகைத்தபடி இருவரையும் கேட்டார், “எதுக்குடா கொன்னீங்க?”
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
மீண்டும் குமார்
"வாங்கோ!" என்று மேல் துண்டின் நுனியால் அழுகையைப் பொத்திக்கொண்டு வரவேற்றவரை (48) கண்டுகொள்ளாமல் அந்த இரண்டு படுக்கையறை வீட்டிற்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் குமார். அவர் நேராகச் சென்ற சமையலறையின் நடுவில் ஓர் எரிந்த பெண்மணி (44) படுத்த நிலையிலேயே ஓட முயல்வது போல் கிடந்தார். ஆள் போய் மூன்று-நான்கு மணிநேரம் ஆகியிருக்கலாம். எரிந்து முடிகையில் நீரூற்றி அணைக்கப்பட்ட தடயம் இருந்தது. அவரைச் சுற்றி சாக்பீஸால் கோட்டோவிய அவுட்லைன் வரைந்திருந்தார்கள். கலரிங் கொடுப்பதற்குள் போலீஸ் ஓவியர் தீயணைப்புப் படையினருடன் தேநீர் குடிக்கப் போய்விட்டதால் சம்பவ நபர் இன்னும் கோட்டோவியத்திற்குள்ளேயே சிறைபட்டிருந்தார்.
சமையல் மேடை மற்றும் அதன் பின்னணி, தாமும் அவிந்த அடையாளங்களைக் கன்னங்கரேலெனப் பறைசாற்றின. சுவரில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய ஓட்டை வழியே எதிர்வீட்டுப் பார்வையாளர்கள் தெரிந்தார்கள். குமாருக்குக் கண்கள் பனித்தன – அந்த இடத்தில் அபரிமித வெங்காய வீச்சம். தரையில் எங்கேயும் வெங்காயத்தின் அடையாளங்கள் காணப்படவில்லை. இன்ஸ்பெக்டர் அதை மனத்தில் குறித்துக்கொண்டார்.
இறந்தவர் முகம் சிறிது சிதைந்திருந்தது. மேற்சருமம் முழுமையாகப் பொசுங்கி அடியில் இருந்த சருமத்தைத் தன்னையறியாமல் காட்டியது. வெளிறிப்போய், புருவங்கள் இன்றி, மிகையான கெய்ஷா ஒப்பனையில் இருந்த ஜப்பானியப் பெண் போல் தெரிந்தார் அந்தப் பெண்மணி. குமாரைப் புதிராக்கியது என்னவென்றால் பிணத்தின் முகத்தையும் வயிற்றில் கொஞ்சத்தையும் தவிர உடலில் சுமார் 40% தீக்காயங்களே இருந்தன. சிலிண்டர் வெடித்துவிட்டது என்றார்கள். சிலிண்டர் உருப்பிளந்து கிடந்தது உண்மை. ஆனால் முகம் மட்டும் அதிகமாகச் சேதமடைந்தது எப்படி? விபத்து அந்தப் பெண்மணியின் முகத்தில் தொடங்கியிருக்க வேண்டும் என்று ஊகித்தார் குமார்.
"இன்னிக்குக் காலைலகூட நல்லா இருந்தா. மதியத்துக்குள்ள சிலிண்டர் இப்படி ஆயிடுத்து. புதூ சிலிண்டர். பக்கத்துத் தெரு வரைக்கும் போயிருந்தேன். வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு" என்றார் கணவர் கேவி.
குமார் பதிலளிக்காமல் கூடத்திற்குச் சென்று போலீஸ் முறைப்படி நோட்டம் விட்டார். சுவர்களில் இலைப் பிள்ளையார் படம், பத்து நிமிடம் தாமதமான சுவர்க் கடிகாரம், கணவன்-மனைவி-இரு குழந்தைகள் அடங்கிய குழுப் புகைப்படம், மாத நாள்காட்டி என ஒரு சாதாரணக் குடும்பச் சித்திரம் விரிந்தது. பொருட்கள் அடைத்திருந்த ஓர் அலமாரியில் எண்ணெய்ப் புட்டி, பல வகை மருந்துகள், பழைய மருந்துச் சீட்டுகள், ஒப்பனைப் பொருட்கள் நிரம்பியிருந்தன. குமார் ஒவ்வொரு மருந்தையும் மருந்துச் சீட்டையும் எடுத்துப் பார்த்தார். அருகே தொலைக்காட்சிப் பெட்டி. அதன் மேல் மீண்டும் ஒரு பிள்ளையார் பொம்மை, ஒரு விக்ஸ் டப்பா. குமார் கையுறைக் கையால் விக்ஸ் டப்பாவை அடிப்பகுதியில் பிடித்து எடுத்து எல்லா பக்கமும் திருப்பியும் முகர்ந்தும் பார்த்துவிட்டுத் தடயவியல் நிபுணரிடம் கொடுத்தார். நாள்காட்டியில் ஒரு தேதி பால்பாயின்ட் பேனாவால் இருமுறை வட்டமிடப்பட்டிருந்தது. குமார் அருகில் சென்று பார்த்தார். அது முந்தைய நாளின் தேதி. "நேத்துத் தேதிய எதுக்கு மார்க் பண்ணிருக்கீங்க?" என்றார் குமார். "நேத்து ஏகாதசி, அதான்" என்றார் கணவர்.
அடுத்து பாத்ரூமைக் கண்டுபிடித்தார் குமார். சமீபத்தில் சுத்தப்படுத்தப்பட்ட இடம். ஒரு மூலையில் அமிலம், கழுவும் ஹாக்கி பிரஷ், முழுவதும் காலியான ஒரு ஃபெனாயில் புட்டி ஆகியவை இருந்தன. குமார் அந்தப் புட்டியை எடுத்து மூடி அருகே முகர்ந்து பார்த்தார். புட்டியின் உடல் துடைத்தது போல் உலர்ந்து இருந்தது. அதையும் எடுத்துத் தடயவியல் ஆளிடம் கொடுத்தார். குமாரின் தேடல் முடிந்தது போல் தெரிந்தது. கூடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
"இன்னிக்கு என்ன சமையல்?" என்றார் குமார் அந்தக் கணவரிடம்.
கணவர் இதை எதிர்பார்க்கவில்லை. "சமையலா?" என்றார் விழித்து.
"ஆமா. குக்கிங்" என்றார் குமார்.
"வெண்டைக்காய் குழம்பு, தக்காளி ரசம் அவரைக்காய் பொரியல், வெள்ளரிக்காய் பச்சடி…"
"வெங்காய பூரணம் மாதிரி எதுவும் பண்லியா?"
"இன்னிக்கு துவாதசி சார். வெங்காயம் பண்ண மாட்டோம்" என்றவரின் முகம் உடனே வெளிறியது. குமார் எதிர்பார்த்தது அதைத்தான்.
"தெரியும்" என்றார் குமார். "குழந்தைங்க எங்க?" என்றார்.
"பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க."
"குழந்தைங்களுக்கு சொல்லியாச்சா?"
"சொல்லியாச்சு சார். ஃப்ளைட்ல வந்துக்கிட்டிருக்காங்க டெல்லிலேந்து."
"நீங்கதான் கொன்னீங்கன்னு சொல்லிட்டீங்களா?"
"சார்! என்ன பேசறீங்க?"
"உன் மனைவிக்கு ஜலதோஷம். அதனால அவங்களுக்கு வாசனை தெரியாதுன்றத யூஸ் பண்ணிக்கிட்டு பால் பாத்திரத்துல இருந்த பாலைக் கொட்டிட்டு பெனாயில ஊத்தியிருக்கே. அவங்களுக்கு இருந்த சளில வெளுத்ததெல்லாம் பால்னு நம்பி பெனாயில அடுப்புல வெச்சிருக்காங்க. பெனாயில் பொங்குறப்ப வெடிச்சு அந்த அதிர்ச்சில ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட்டா இருக்குற உன் சம்சாரம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. சிலிண்டரும் வெடிச்சிருச்சு. பெனாயில் வாசனை தெரியாம இருக்குறதுக்கு பொண்டாட்டி எரியிற நெருப்புல நிறைய வெங்காயத்த அள்ளிப் போட்டிருக்க. ஆனா நிறைய தடயங்கள எங்களுக்கு விட்டு வெச்சிருக்க" என்றார் குமார்.
"என்ன சார் அநியாயமா கதை சொல்றீங்க! என் பொண்டாட்டிய நான் எதுக்கு சார் கொல்லணும்?"
"அத ஸ்டேஷன்ல வந்து டீட்டெய்லா எஸ்பிளைன் பண்ணுவியாம்."
(ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
ஃபவுல் பிளே
ஒரு வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அந்த அழுது வடிந்துகொண்டிருந்த வசதியான சாவு வீட்டுக்குள் வலது காலை எடுத்துவைத்தார் இன்ஸ்பெக்டர் குமார். கான்ஸ்டபிள் 114 பின்தொடர்ந்தார். வீட்டினுள் நுழைந்ததும் ஸ்பிளிட் ஏ.சி. குளிர் அவர்களை அணைத்துக்கொண்டது.
அந்தப் பெரிய கூடத்தில் தோராயமாக எழுபது பேருக்கு அப்பால் சுமார் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவரை சுவரோரத்தில் ஐஸ் பாளங்களின் மேல் கிடத்தியிருந்தார்கள். மெல்லிய விசும்பல்கள், கிசுகிசுப்புகள் தவிர அந்த இடம் அமைதியாக இருந்தது. குமார் நுழைந்த மறுகணம் எல்லோர் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது, புருவங்கள் மொத்தமாக உயர்ந்தன. குமார் நெருங்கிச் சென்று பார்வையால் சடலத்தை மேய்ந்தார். அவர் பார்வைக்கு உள்காயமோ வெளிக் காயமோ எதுவும் தென்படவில்லை. க்ஷீணக் கிழம். காதில் சத்தமாகக் கத்தினாலே மாரடைப்பை ஏற்படுத்திவிடலாம். கைரேகை, விஷம் என்று ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை.
மூதாட்டியின் ஐம்பது வயது மகன் போல் தெரிந்த ஒருவர் எழுந்து குமாரிடம் கேட்டார்: "என்ன சார் வேணும்?"
"இங்க தனசிங்கம் யாரு?"
"நான்தான். என்ன வேணும்?"
"இறந்துபோன லேடி பத்தி கொஞ்சம் கொஸ்டின்ஸ் கேக்கணும்" என்றார் குமார்.
"அவங்க எங்கம்மா சார். காலைல ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. அது பத்தி என்ன கேக்கப்போறீங்க?"
"இந்த சந்தர்ப்பத்துல உங்களத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும். ஆனா இது அர்ஜன்ட் போலீஸ் மேட்டர்…"
"சாரி சார், ரெண்டு நாள் கழிச்சு வாங்க. ரெண்டு மணிக்கு எடுக்குறோம். வேலை நிறைய இருக்கு," தனசிங்கம் எரிச்சலாகச் சொன்னார்.
"பக்கத்துல ஏதாவது ரூம்ல வெச்சிப் பேசலாமா, ஸ்டேஷனுக்கு வரீங்களா?" என்றார் குமார் அழுத்தமாக.
திடுக்கிட்ட தனசிங்கம், வலதுகையால் ஒரு திசையைக் காட்டினார். பெரும்பாலானவர்களைப் போல் இவருக்கும் வலதுகைப் பழக்கம்தான் என்று மனதில் குறித்துக்கொண்டார் குமார். இருவரும் தனியாக ஓர் ஆளில்லாத அறைக்குச் சென்றார்கள்.
குமாரும் தனசிங்கமும் அங்கிருந்த 90களின் பாணியிலான குஷன் நாற்காலிகளில் அமர்ந்ததும் தனசிங்கத்தைக் குமார் உள்வாங்கினார். ஐம்பது வயதுக்கு மீறிய நரை. ஆனால் முதுமை நெருங்கினாலும் வழுக்கை விழ அனுமதிக்காத மரபணு. இழப்பின் அழுகை அவரது கண்களைச் சிவப்பாக்கியிருந்தது. சமீபத்தில் முடிதிருத்தம் செய்துகொண்டதன் அடையாளமாக கழுத்திலும் போலோ டி-ஷர்ட் காலரிலும் மில்லிமீட்டர் நீள முடித் துண்டுகள் விடாப்பிடி விசுவாசம் காட்டிக்கொண்டிருந்தன.
"ஓ.கே. மிஸ்டர் தனசிங்கம்," என்றார் குமார். "உங்கம்மா எத்தனை மணிக்கு இறந்தாங்க?"
"காலைல எட்டு மணி இருக்கும். அவங்களுக்குத் தொண்ணூறு வயசு சார். ஹார்ட் பேஷண்ட். அப்படித்தான் சாவாங்க. இதுல கேள்வி கேக்க என்ன இருக்கு?" என்றார் தனசிங்கம் வேதனையுடன்.
"உங்கம்மா சாவுல ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்குறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. அது சம்மந்தமா கேள்வி கேக்கணும்."
"என்ன டீடெய்ல்ஸ் வேணுமோ கேளுங்க, சொல்றேன்" என்றார் அமைதியாக தனசிங்கம்.
"அவங்க சாகுறப்ப என்ன பண்ணிக்கிட்டிருந்தாங்க?"
"பேப்பர் படிச்சிட்டிருந்தாங்க."
"அந்த டைம்ல நீங்க எங்க இருந்தீங்க?"
"முடி வெட்டிக்கப் போயிருந்தேன்."
"உங்கம்மாவுக்கு சொத்து எதுனா இருக்கா?"
"நாங்கல்லாம்தான் அவங்களோட சொத்து" தனசிங்கம் உருக்கமாகச் சொன்னார்.
குமார் எரிச்சலடைந்தார். "உங்கம்மா பேர்ல என்னென்ன சொத்து இருக்கு? டீடெய்லா சொல்லுங்க."
"இந்த வீடு, ராயபுரத்துல ரெண்டு வீடு, ஊர்ல அறுவது ஏக்கர் நிலம், பேங்க்ல ஒரு பதினஞ்சு கோடி பணம், அப்புறம் நாங்க, அவ்வளவுதான்."
"உயில் ஏதாவது இருக்கா?"
"இருக்கு, ஆனா வக்கீல்ட்ட இருக்கு."
"சொத்தெல்லாம் யார் பேருக்கு எழுதி வெச்சிருக்காங்க?"
"என் பேர்லயும் என் பொண்ணு பேர்லயும்."
"பியூட்டிஃபுல். கடைசியா எப்ப முடி வெட்டிக்கிட்டீங்க?"
"சார்?"
குமார் கேள்வியை மீண்டும் கேட்டார்.
"ரெண்டு மாசம் இருக்கும்."
"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீங்க முடி வெட்டிக்கிட்ட அன்னிக்கு என்ன கிழமை?"
தனசிங்கம் விழித்தார். "அதெல்லாம் எப்படி சார் ஞாபகம் இருக்கும்? சண்டேன்னு நினைக்கிறேன்."
"ரைட். நீங்க போய் உங்க மிசஸை அனுப்புங்க."
"உங்களுக்கு யாரோ எங்களப் பத்தி தப்பா தகவல் குடுத்திருக்காங்க சார்."
"அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீங்க போய் உங்க மிசஸை அனுப்புங்க."
தனசிங்கம் குழப்பம் குறையாமல் எழுந்து போனார். சில நொடிகளில் புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு ஒரு பெண்மணி வந்தார்.
"உங்க ஹஸ்பண்ட் கடைசியா எப்ப முடி வெட்டிக்கிட்டாருன்னு நியாபகம் இருக்கா மேடம்?" என்றார் குமார்.
"எதுக்குக் கேக்குறீங்க சார்?"
"அது எங்க பிரச்சனை. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க."
"ரெண்டு மாசம் இருக்கும் சார்."
"அன்னிக்கு என்ன கிழமை?"
"ஞாயித்துக்கிழமை சார்."
"நல்லா தெரியுமா?"
"தெரியும் சார். காலண்டர்ல குறிச்சி வெச்சிருக்காரு."
"உங்க ஹஸ்பண்ட் என்னிக்காவது வெள்ளிக்கிழமை முடி வெட்டிருக்காரா?"
"இல்ல சார். எனக்குத் தெரிஞ்சு இதுதான் முதல் தடவை."
"நீங்கதான் காலைல கன்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் பண்ணீங்களா?"
"இல்லியே சார்" என்றார் அந்தப் பெண் பதற்றமாக.
குமார் புன்னகைத்தார். "பயப்படாதீங்க. உங்க பேர் வெளிய வராது."
"நான் இல்ல சார்!"
"உங்களுக்கும் உங்க புருஷனுக்கும் ஏதாவது பிராப்ளம்?"
"ஒரு பிராப்ளமும் இல்ல. நாங்க சந்தோஷமாத்தான் இருக்கோம்" என்றார் அந்தப் பெண்மணி பட்டென்று.
குமார் மீண்டும் புன்னகைத்து, "நீங்க போய் உங்க புருஷனை அனுப்புங்க" என்றார்.
சிறிது நேரத்தில் தனசிங்கம் பொறுமையெல்லாம் இழந்து புயலாக அறைக்குள் வந்தார்.
"என்ன சார் வேணும் உங்களுக்கு?" என்றார் புலம்பலாக.
"உங்க அம்மாவைத் திட்டம் போட்டுக் கொலை பண்ணதுக்காக உங்களைக் கைது செய்றேன்" என்ற குமார், இடுப்பில் மாட்டியிருந்த விலங்கை எடுத்தார்.
"வாட் நான்சென்ஸ்! முதல்ல வெளிய போங்க!" என்று எழுந்து நின்று கத்தினார் தனசிங்கம்.
"வெள்ளிக்கிழமை முடி வெட்டிக்கிட்டா அம்மாவுக்கு ஆகாதுன்றது போலீஸ் டிபார்ட்மென்ட்டுக்கும் தெரியும் தனசிங்கம்" என்றார் குமார் சிரித்துக்கொண்டே.
தனசிங்கம் விருட்டென எழுந்து எல்லோரும் பார்க்க வீட்டுக்கு வெளியே ஓடினார். துக்க விசாரிப்புக் கும்பல் வேடிக்கை பார்க்கப் பரபரவென்று வெளியே வந்தது. சட்டைப் பையிலிருந்து கார் சாவியைக் கையில் வைத்துக்கொண்டார் தனசிங்கம். அதற்காகவே காத்திருந்த 114, தயாராகப் பிடித்துவைத்திருந்த ஒரு பூனையைக் குறுக்கே ஓட விட்டார். தனசிங்கம் விதிர்விதிர்த்து சிலையாக நின்றார். குமார் சாவகாசமாக வெளியே வந்து அவருக்கு விலங்கு மாட்டினார். "உன்னையெல்லாம் நூத்தியெட்டு வருஷம் உள்ள வெக்கணும்" என்றார்.
கத்தியின்றி ரத்தமின்றி
புறநகரில் இருந்த அந்தத் தனி வீட்டை இன்ஸ்பெக்டர் குமார் அடைந்தபோது வாசலில் சிறு கூட்டம் கூடியிருந்தது. கான்ஸ்டபிள் 114 அவருக்காக வெளியில் காத்திருந்தார்.
"என்ன விசேஷம்?" என்று கான்ஸ்டபிளிடம் கேட்டுக்கொண்டே படியேறினார் குமார். "மர்டர் கேஸ் சார்" என அவரைப் பின்தொடர்ந்தார் 114.
போலீஸ் புகைப்படக்காரர் பெரிய கூடத்தின் சோபாவில் கிடந்த கொலைப் பிணத்திடமிருந்து தூர விலகி நின்று படமெடுத்துக்கொண்டிருந்தார். குமாரைப் பார்த்ததும் சல்யூட் வைத்தார்.
இடதுகால் லுங்கியிலிருந்து வெளிப்பட்டுச் சரிந்து தரையில் புரள, கைதாங்கும் கட்டை மீது வலதுகால் கிடக்க, தலைக்கு அடியில் தலையணையுடன் சோபாவில் கிடந்தது ஆண் பிணம். இன்ஸ்பெக்டர் அருகில் சென்று பார்த்தார். வயது முப்பத்தைந்திலிருந்து நாற்பது இருக்கும். திருமணமானதற்கு அடையாளமாகக் கழுத்தில் தாலி. நெற்றியில் சன்னஞ்சரியாகப் பொட்டு வைக்கும் இடத்தில் ஆணி அடித்திருந்தது. அந்த இடத்தைச் சுற்றி வேறு கீறல்கள், காயங்கள் இல்லை. எனவே ஓங்கி அடித்த ஒரே அடியில் ஆணியைப் புகுத்தியிருப்பார்கள் போல. குறுக்கும் நெடுக்கும் சிறு கோடுகள் பாய்ந்த வட்ட முனை மட்டுமே தெரியும்படி ஆழமாக இறங்கியிருந்தது ஆணி. அதைச் சுற்றி மண்டையோட்டில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மண்டைக்கு வெளியிலிருந்து பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான கச்சிதம். குமார் தம் சட்டைப்பையிலிருந்து ஒரு குச்சியை எடுத்துப் பிணத்தின் தலையை இருபக்கமும் திருப்பிப் பார்த்தார். பின்னந்தலை வீக்கத்தை கான்ஸ்டபிளிடம் காட்டினார்.
"விஸ்வநாதன நெத்தீல ஆணியடிச்சிக் கொன்னுருக்காங்க சார்" என்றார் 114.
"யாரு விஸ்வநாதன்?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"இவுருதான் சார்" என்று பிணத்தைக் காட்டிச் சொன்னார் கான்ஸ்டபிள். குமார் யோசனையாகத் தலையாட்டி ஆமோதித்துவிட்டு விஸ்வநாதனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்.
பக்கத்து அறையில் அழுது அடங்கி அடுத்த பாட்டத்தைத் தொடங்கும் பெண் கேவல் கேட்டது. ஒரு பெண், சந்தேகத்திற்கிடமின்றி விஸ்வநாதனின் மனைவி ரேணுகா (சுமார் 30 வயது), இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு சுவரோரத்தில் உட்கார்ந்திருந்தார். அருகே அவரை சமாதானப்படுத்திக்கொண்டு சற்று மூத்த இன்னொரு பெண்மணி.
"என்னம்மா ஆச்சு?" என்றார் குமார் குரலை இளக்கிக்கொண்டு.
"காலைல எழுந்து பாத்தா என் புருஷன் பொணமா கெடக்குறாரு சார். மண்டைல ஆணி அடிச்சிருக்கு. அவருக்கு இதெல்லாம் புடிக்கவே புடிக்காது!" கேவல் தொடர்ந்தது.
"காலைல எப்ப எழுந்தீங்க?"
"அஞ்சரை மணி இருக்கும் சார்."
"ராத்திரி ஏதாச்சும் சத்தம் கேட்டுச்சா?"
"இல்ல சார்."
"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? அவருக்கு எதிரிங்க யாராவது…"
"அதெல்லாம் இல்லைங்க சார். அவரு யார் வம்புக்கும் போக மாட்டாரு."
"நல்லா யோசிச்சு சொல்லுங்கம்மா. கதவைத் தொறந்துக்கிட்டு உள்ள வந்திருக்காங்க. அவருக்குத் தெரிஞ்ச யாரோ ஒரு ஆள்தான் இப்படி பிஹேவ் பண்ணிருக்கான். அநேகமா அவர்தான் கதவைத் தொறந்து விட்டுருப்பாரு…"
"அப்படி நடந்திருந்தா சத்தம் கேட்டு நான் எழுந்திருப்பேனே சார்! சத்தமில்லாம முடிஞ்சுபோச்சே!" மனைவி மீண்டும் அழத் தொடங்கினார்.
வீட்டிலிருந்து சல்லிக் காசுகூடத் திருடு போகவில்லை. நகைகளும் ஒரு திருகாணி விடாமல் பத்திரமாக இருந்தன. பீரோ பூட்டிய கோலத்தில் கிடந்தது. புருவம் சுருங்கிய குமார், பிள்ளையார் பொம்மை பதித்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். தலத்திற்கு வந்து பதினைந்து நிமிடங்கள் ஆகியும் குற்றவாளி யார் என்று ஊகிக்க முடியாததில் குமாருக்கு எரிச்சலாக இருந்தது. 'அவ்வளவு பெரிய ஆளா நீ?' என்று நினைத்துக்கொண்டார்.
க்ரைம் சீனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டார் இன்ஸ்பெக்டர். விஸ்வநாதன் பிரேதப் பரிசோதனைக்கு மூட்டை கட்டப்பட்டார். அவரது மனைவி, அருகில் அமர்ந்து தேற்றிக்கொண்டிருந்த பக்கத்துவீட்டுப் பெண்மணியின் வீட்டில் தங்க ஏற்பாடானது. வீட்டிற்குள் ஆயுதபூஜைத் தோரணங்கள் போல் மஞ்சள் ரிப்பன்களைக் கட்டிப் பூட்டுப் போட்டார்கள். குமார் ஸ்டேஷனுக்கு புல்லட்டைச் செலுத்தினார்.
இன்ஸ்பெக்டர் அவசரப்படுத்தியும் போஸ்ட்மார்ட்ட அறிக்கை கைக்கு வர இரண்டு நாள் ஆனது. குமாருக்கு முன்பே தெரிந்த இரு விஷயங்களை அறிக்கை உறுதிப்படுத்தியது. மொண்ணை ஆயுதத்தால் – அநேகமாகக் கட்டையால் – பின்மண்டையில் அடித்து நெற்றிப்பொட்டில் ஆணி அடித்திருக்கிறார்கள். ஆணி அடித்ததால்தான் ஆசாமிக்கு இதயம் நின்றுவிட்டிருக்கிறது. முதலில் பின்மண்டையில் அடித்து மயக்கமூட்டி சோபாவில் கிடத்திய பின்பு ஆணியை இறக்கியிருப்பார்கள் என்று ஊகித்தார் குமார். எவ்வளவு தெரிந்த ஆளாக இருந்தாலும் மண்டையில் ஆணி அடிக்க ஒப்புக்கொண்டிருக்க முடியாது. அந்த மாதிரி ஓர் உறவை குமார் இன்னும் பார்க்கவில்லை. இது ஏதோ ஒருவித அனஸ்தீஷியாவைக் கொடுத்த பின்பு செய்ய வேண்டிய காரியம். கொலை நடந்த நேரம், நள்ளிரவைத் தாண்டி 1.00-2.00 மணி என்றது ரிப்போர்ட்.
ஆணி, சோபா, கதவு எதிலும் கைரேகை இல்லை. அவை சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தன. மேஜை, நாற்காலி தவிர கனமான மரச் சாமான்கள் எவையும் இல்லை. வேலைக்கு ஆகாத வகையில் வீட்டைச் சுற்றி ஏராளமான கால் தடங்கள் இருந்தன. வங்கி அதிகாரி விஸ்வநாதனும் இல்லத்தரசி ரேணுகாவும் அதிக சண்டை சச்சரவில்லாமல் வாழ்ந்ததாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். சலிப்பூட்டும் வாழ்க்கை போல் தெரிந்தது. மனைவி குற்றவாளியாக இருக்க முடியாது என்று குமார் அப்போதைக்கு முடிவு செய்தார். ஆனால் நெற்றிப்பொட்டில் கச்சிதமாக ஆணி அடிக்கப்பட்டதில் ஏதோ துப்பு இருப்பதாக அவருக்குத் தோன்றியது. ஆனால் அது என்ன? சுத்தமாகத் தெரியவில்லை.
மூன்றாம் நாள் கொலை வீட்டிற்கு இன்னொரு வருகையடித்தார் குமார். தமிழில் அவருக்குப் பிடிக்காத வார்த்தை பூதக்கண்ணாடி. ஆனால் இப்போது வேறு வழியின்றி அதைத்தான் கையில் வைத்துக்கொண்டு சோபாவுக்கு அருகே தரையை ஆராய்ந்துகொண்டிருந்தார். வாசலிலிருந்து சோபா வரை ஆங்காங்கே இறைந்து கிடந்த நூலிழைகள் போன்ற சில பொருட்கள் குமாரின் காவல் துறைக் கண்களில் பட்டன. அவற்றைத் தமது ஆஸ்தான குச்சியால் மெல்ல எடுத்து ஒரு பாலிதீன் பைக்குள் போட்டுக்கொண்டார்.
ரேணுகா விஸ்வநாதன் இப்போது நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்த தமது தூரத்து உறவினர் வீட்டிற்கு இடமாற்றல் ஆகியிருந்தார். குமார் அங்கே போய் இன்னும் சில கேள்விகள் கேட்டதில் சில தகவல்கள் கிடைத்தன. வீட்டில் இரண்டு பேர் இருந்தும் டூப்ளிகேட் சாவி வைத்துக்கொள்ளவில்லை. முன்பெல்லாம் இருவரில் ஒருவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே போனால் சாவியைப் பக்கத்துவீட்டில் கொடுத்தார்கள். இப்போது ஜன்னலுக்கு உள்பக்கம் ஒளித்துவைத்து ஜன்னல் கதவை மூடும் பழக்கம் வந்திருந்தது. அதைத்தான் யாரோ பார்த்து எடுத்து நகல் எடுத்திருக்க வேண்டும். அந்த இடத்தில் புழங்குபவர்களில் ஒருவரின் கைவேலையாக இருக்கலாமோ என்று நினைக்கலாம் என்றால் உருப்படியான உள்நோக்கம் எதுவும் அகப்படவில்லை.
கொலை நடந்த நான்காம் நாள் தடயவியல் ஆய்வகத்திலிருந்து ஓர் அறிக்கை வந்தது. இன்ஸ்பெக்டர் அள்ளி வந்த நூலிழைகள் அவர் முன்பே எதிர்பார்த்தது போல் அடிப்படையில் சணல் இழைகள். சணல் என்றால் கோணிப்பை செய்யப் பயன்படும் ரகம். குமாரின் அனுபவமிக்க புருவங்கள் இம்முறை தீர்க்கமாகச் சுருங்கின.
அடுத்த நான்கு மணிநேரத்தில் (போக்குவரத்து நெரிசல்) குமாரின் கார் ரேணுகாவின் உறவினர் வீட்டுப் பார்க்கிங்கில் நின்றது.
ரேணுகா இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தார். குமாரை மௌனமாக வரவேற்றார். குமார் எந்த சம்பிரதாயமும் இல்லாமல் நேரடியாகக் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார்.
"உங்க வீட்ல கோணிப்பை இருக்கா?"
"இருக்குமே. எடுத்துத் தரவா?" என்று குழப்பம் காட்டி எழுந்தார் ரேணுகா.
"இந்த வீட்ல இல்ல. உங்க வீட்ல."
"நாங்க கோணிப்பை எல்லாம் யூஸ் பண்றதில்ல சார்."
"ஓ.கே. சாவிய முதல்ல பக்கத்துவீட்டுல குடுத்துக்கிட்டிருந்த நீங்க, அப்புறம் ஏன் அதை உங்க வீட்டு ஜன்னல்ல ஒளிச்சு வெச்சீங்க?"
"அவர்தான் அவங்க வீட்ல குடுக்க வேணாம்னாரு."
"அப்படியா? ஏன்?"
"பக்கத்துவீட்டு ஆன்ட்டி எங்க வீட்டுக்கு சீரியல் பாக்க வருவாங்க. அது என் ஹஸ்பெண்டுக்குப் புடிக்கல. எங்களுக்குள்ள சண்டை ஆயிடுச்சு. அவங்க வர்றத நிறுத்திட்டாங்க. என்னோட பேசறதையும் நிப்பாட்டிட்டாங்க. அப்பதான் சாவி குடுக்குறத நிறுத்துனேன்."
"அவங்க ஏன் உங்க வீட்ல டி.வி. பாக்கணும்? அவங்க வீட்ல இல்லியா?"
"இருக்கு. ஆனா அவங்க புருஷன் வீட்ல சீரியல் பாக்க விடமாட்டாரு. பசங்க ரொம்ப கார்ட்டூன் பாப்பாங்க."
"ஐ ஸீ" என்ற குமார், "தேங்க் யூ ஃபார் த இன்ஃபர்மேஷன்" என்றார்.
இதைக் கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்று மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர், "இந்த சாவியக் காட்டி ஏரியால இருக்குற டூப்ளிகேட் சாவிக் கடை எல்லாத்தையும் விசாரி" என்றார், "ஓகே சார்" என்று பதிலளித்த கான்ஸ்டபிளிடம்.
குமார் 114ஐ அனுப்பிவிட்டு விஸ்வநாதனின் பக்கத்துவீட்டிற்குப் பறந்துகொண்டிருந்தபோது கான்ஸ்டபிளிடமிருந்து தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தந்த சாவியை இரு வாரங்களுக்கு முன்பு ஒரு சிறுவன் டூப்ளிகேட் செய்திருக்கிறான். மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற எவ்வளவு வலுவான நம்பிக்கை இருந்திருந்தால் கொலையாளி தன் மகனையே பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ஆச்சரியப்பட்டார் குமார்.
விஸ்வநாதனின் பக்கத்து வீட்டை வி.ஆர்.எஸ். கொடுத்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். அவர் பெயர் சுப்பிரமணி. குமார் வீட்டுக்குள் நுழைந்ததும் சுப்பிரமணி தொலைக்காட்சி எதிரிலான குஷன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தார். குமாருக்குப் புன்னகைத்து இன்னொரு இருக்கையைக் காட்டினார். அவர் வலதுகை இதிலெல்லாம் கலந்துகொள்ளாமல் ரிமோட்டின் சானல் பொத்தானைப் பரபரவென்று அழுத்திக்கொண்டே இருந்தது.
"விஸ்வநாதன் கொலை சம்மந்தமா உங்ககிட்ட சில கேள்விகள் கேக்கணும்."
சுப்பிரமணியின் மனைவி மகாலட்சுமி, குமாரைப் பார்க்கக் கூடத்திற்கு வந்தார். விஸ்வநாதன் கொலையுண்ட பிறகு ரேணுகாவுக்குப் பக்கத் துணையாக இருந்த 'சற்று மூத்த பெண்மணி' இவர்தான்.
"நீங்க என்ன பண்றீங்க மேடம்?" என்றார் குமார்.
"நான் இங்க பக்கத்துல சாய் மெட்ரிகுலேஷன்ல டீச்சரா இருக்கேன்."
"எந்த க்ளாஸுக்கு எடுக்குறீங்க?"
"நர்சரிதான் சார்" என்றார் அடக்கமாக.
கான்ஸ்டபிள் 114 உள்ளே நுழைந்தார்.
"கண்டுபுடிச்சிட்டீங்களா சார் யார் பண்ணாங்கன்னு?" என்றார் மகாலட்சுமி.
"கண்டுபுடிச்ச மாதிரிதான்" என்றார் குமார் புன்னகைத்து.
மகாலட்சுமி திகைத்து நின்றார்.
"எப்படி சார் கண்டுபுடிச்சீங்க? ஹூ இஸ் த கல்ப்ரிட்?" என்று கேட்டார் சுப்பிரமணி. எங்கே அதைக் கேட்காமல் போய்விடுவார்களோ என்ற மெல்லிய கவலையில் இருந்த குமார், விளக்கத்திற்கான தயார்ப்படுத்திக்கொள்ளுதலாகக் கனைத்தார்.
"ரொம்ப ஈஸி. கொலை பண்ணவங்களுக்கு விஸ்வநாதன் வீட்டு சாவி கிடைச்சிருக்கு. அத டூப்ளிகேட் எடுத்திருக்காங்க. நைட்டு ஒரு மணி இருக்குறப்ப சுலபமா கதவத் தொறந்து உள்ள போயிருக்காங்க. நடக்கற சத்தம் கேக்காம இருக்க கோணிப்பைக்குள்ள நின்னுக்கிட்டு குதிச்சு குதிச்சுப் போயிருக்காங்க. அன்னிக்குன்னு பாத்து விஸ்வநாதன் வாசலுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு சோபால தூங்கிட்டிருந்திருக்காரு. இவங்க முன்னெச்சரிக்கையா ஒரு கட்டையால விஸ்வநாதன் மண்டைல ஒங்கி ஒரு போடு போட்டு அவரை மயக்கிட்டாங்க. அப்புறம் உடம்பைத் திருப்பி வெச்சு அதே கட்டையால கரெக்டா நெத்திப் பொட்டுல ஆணி அடிச்சுக் குரூரமா கொன்னுருக்காங்க. கொன்னப்புறம் சைலண்டா வந்த வழில திரும்பிப் போயிட்டாங்க."
"அதெப்படி அவ்ளோ துல்லியமா சொல்ல முடியும்?" என்றார் மகாலட்சுமி மூச்சிரைக்க.
"நெத்தில இம்மி பிசகாம கரெக்டா பொட்டு வெக்கிற இடத்துல ஆணியப் பாத்தப்பவே இது லேடீஸ் வேலையாத்தான் இருக்கும்னு தோணிச்சு. அதுவும் அந்த பெர்ஃபெக்ஷன் – அதுக்குப் பின்னால இருக்குற மன உறுதி, அனுபவம், கண்டிப்பா மிடில் ஏஜ்னு சொல்லுது. சாக்குப்பைய கால்ல மாட்டிக்கிட்டு தவ்வித் தவ்விப் போற ஐடியா ஒரு நர்சரி ஸ்கூல் டீச்சருக்குத்தான் தோணும். நீங்க வீட்லேர்ந்தே பூரிக்கட்டையோ சம்திங் லைக் தட் எடுத்துட்டுப் போயிருக்கீங்க. வெப்பன்ஸை உங்க வீட்ல சீக்கிரமா தேடிக் கண்டுபுடிச்சிடுவோம். ஸர்ச் வாரன்ட்டும் அரஸ்ட் வாரன்ட்டும் வந்துட்டிருக்கு. பாவம், உங்க பையன வேற இன்வால்வ் பண்ணிருக்கீங்க. நல்லா கொன்னீங்க போங்க!"
"நானா?" மகாலட்சுமி வீறிட்டார்.
"பின்ன நானா?" என்றார் குமார். "சீரியல் பாக்க விடாத ஆத்திரத்துல விஸ்வநாதனை திட்டமிட்டுக் கொன்னதுக்காக உன்னைக் கைது பண்றேன்!"
"ஹலோ!" என்று மகாலட்சுமி அலறினார் கணவனைப் பார்த்து. "இவங்க என்னை இழுத்துட்டுப் போறாங்க, நீங்க பாட்டுக்கு சானல் மாத்திட்டு இருக்கீங்களே!"
"மகா, இன்ஸ்பெக்டர் பக்கமும் நியாயம் இருக்கு. எப்பவுமே சட்டத்தை நம்ம கைல எடுத்துக்கிட்டா பிரச்சனைதான். பசங்க விளையாடிட்டு வர்றதுக்குள்ள கெளம்பிடு. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்றார் சுப்பிரமணி.
குமார் விலங்கு மாட்டி மகாலட்சுமியைக் கட்டிய புடவையுடன் ஜீப்பிற்கு அழைத்துச் செல்லும்போது கேட்டார், "ஏம்மா, நீயுந்தானே சம்பாதிக்கிறே? உன் காசுல ஒரு டி.வி. வாங்கி சீரியல் பாத்திருக்கலாம்ல?"
"என்னவோ தோணவேயில்ல சார்!"
அப்பளம் நொறுங்கியது எப்படி?
இன்ஸ்பெக்டர் குமாரின் ரோந்து கார் அவரது காவல் நிலையத்தை நெருங்கும்போதே ஏதோ சரியில்லை என்று புரிந்துகொண்டார். வெளியே காக்கிகளின் இலக்கிலா மாநாடு. அவர் அந்தக் கட்டிடத்தில் நுழைந்ததும் எல்லோரும் அவருக்காகக் காத்திருந்த பாவனையில் தயாராக விலகி வழி விட, சல்யூட் வைத்த நிலையில் நின்றிருந்த எஸ்.ஐ. ராஜஇராஜன் கண்ணில் பட்டார். "வாங்க சார்" என்றார் அடுத்து.
"என்ன ஆச்சு?" என்றார் குமார், பதிலை எதிர்பார்த்து.
"ஒருத்தன் கஸ்டடில போயிட்டான் சார்."
"எங்க, காமிங்க?"
சடலத்தைக் காலியாக இருந்த செல்லில் கிடத்தியிருந்தார்கள். சுமார் 30க்கு வயதும் ஐந்தடிக்கு உயரமும் கொண்ட இளைஞன். அருகிலேயே அவன் தூக்குப் போடப் பயன்படுத்திய லுங்கி சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
"நம்ம அருணா ஓட்டல் இல்ல? கல்லால ஆள் இல்லாதப்ப கை விட்டு காசு எடுத்து மாட்டிக்கினாப்ல. ஓட்டல்ல கம்ப்ளைன் பண்ணாப்ல. நம்ம 200 இட்னு வந்து லாக்கப்ல போட்டாப்ல. பாத்ரூம் போணும்ட்டு சொல்ல சொல்லோ 210 கொண்டுபோய் விட்டாப்ல. திடீர்னு பாத்தா பையன் பாத்ரூம்லயே லுங்கில தூக்குப் போட்டாப்ல," ராஜஇராஜன் விளக்கினார்.
"ஃபேமிலிக்கு சொல்லியாச்சா?"
"இல்ல சார், நீங்க வந்தப்புறம் சொல்லலாம்ட்டுதான் வெயிட்டிங்."
குமார் பிணத்தை நெருங்கினார். கழுத்தில் லுங்கியின் இறுக்கலால் சில சுருக்கங்கள் காணப்பட்டன. அதன் சட்டைப்பையில் கை விட்டார். நொறுங்கிய அப்பளத் துண்டுகள் அவர் கையை எண்ணெயாக்கின.
"நமக்குன்னே வர்றாங்க பாருங்க சார்!" ராஜஇராஜன் அலுத்துக்கொண்டார்.
குமார் மறுத்துத் தலையசைத்தார். பிணத்தின் கழுத்தைச் சுட்டிக்காட்டினார்.
"லுங்கில தூக்குப் போட்டான்னு சொல்றீங்க, ஆனா கழுத்துல லுங்கி இறுக்குன அடையாளத்தக் காணமே?"
"210 ஒடனே பாத்து எடுத்துட்டாப்ல. அதுனால இம்ப்ரஷன் உளுந்திருக்காது," சமாளித்தார் எஸ்.ஐ.
சுற்றத்தாரிடையே மௌனமாக நின்றிருந்த 210இடம் கேட்டார் குமார்: "இவனை உனக்கு எத்தனை வருஷமா தெரியும்?"
210 திடுக்கிட்டார், திணறினார், பிறகு சொன்னார் -
"சும்மா ஒரு பத்து வருஷம்!"
ராஜஇராஜன் திகைத்தார். "ஏன்யா, இவனைத் தெரியும்னு சொல்லவேல்ல?"
"உங்கிட்ட இவன் என்ன சொன்னான்?" என்றார் குமார் 210இடம்.
"எங்கிட்ட இவன் ஒண்ணும் சொல்லலியே சார்!" என்றார் குழம்பிய 210.
"பின்ன இவன் சட்டையில இருந்த அப்பளம் எப்படி நொறுங்கிச்சு?"
கலவரமடைந்த 210ஐ அணுகிய குமார், அவரது வலதுகையைச் சடக்கென இழுத்தார். துண்டாகத் தனியே கிடந்த ஒரு கையைப் பார்ப்பது போல் புரட்டிப் பார்த்தார். தம் மூக்கருகே வைத்து ஆழமாக மூச்சை இழுத்தார்.
பிறகு அந்தக் கையை விட்டுவிட்டு ராஜஇராஜனிடம் சொன்னார்: "210 இந்தப் பையனை லாக்கப்ல முட்டிக்கு முட்டி தட்டப் போனப்ப பையன் ரொம்ப பர்சனலா ஏதோ லந்து பண்ணிப் பேசிருக்கான். அதனால அவனுக்கு 210ஐ முன்னாடியே தெரியும்னு ப்ரூவ் ஆகுது. பர்சனலா கிண்டல் பண்லன்னா 210 ப்ரவோக் ஆக மாட்டான். 210க்கு இருந்த ஆத்திரத்துல நெஞ்சுல குத்திருக்கான். அந்தக் குத்துல பையன் ஸ்பாட்லயே செத்துட்டான். சட்டை பாக்கெட்ல இருந்த அப்பளம் அவனைக் காப்பாத்தல. நொறுங்கிருச்சு. அப்புறம் இவனே அந்தப் பையனை பாத்ரூம்ல கொண்டுபோய் அவன் லுங்கிலயே தூக்கு மாட்டியிருக்கான். ஆனா சீக்கிரமா எறக்கிட்டான். அதான் கழுத்து நெரிச்ச தடயத்தைக்கூடக் காணோம். 210 கைல எண்ணக் கறையும் அப்பள வாசனையும் அப்படியே இருக்கு பாரு. என்னப்பா 210, ஊருக்கு ஒரு நியாயம், உனக்கொரு நியாயமா?"
ராஜஇராஜன் வாய் பிளந்து கேட்க, 210 தலைகுனிந்தார்.
பல முறை கேட்டும் சலிக்காத கேள்வியை ராஜஇராஜன் கேட்டார்: "எப்படி சார் கண்டுபுடிச்சீங்க? சூசைட் மாதிரியே இருந்துதே சார்?"
குமார் புன்னகைத்தார். "நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா அப்புறம்தான் தோணிச்சு. நான் இஸ்வெஸ்டிகேட் பண்ற மேட்டர் எப்படி வெறும் சூசைடா இருக்க முடியும்? அதுலதான் எனக்கு சந்தேகமே வந்துது..."
கருத்துகள்
கருத்துரையிடுக