மெல்லினம்
புனைக்கதைகள்
Backமெல்லினம்
நாவல்
பா. ராகவன்
நாயும் குரங்கும் நாலு வார்த்தைகளும்
ஆறு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகள், ஒரு கற்பழிப்புக்காட்சி, பெண்களைக் கதறியழ வைக்கக்கூடிய சில பிரத்தியேகக் காட்சிகள், ஒரு தனி நகைச்சுவை டிராக், உச்சபட்சமாக ஒரு நீதிமன்றக் காட்சி ஆகியவற்றுடன் ஒரு முழுநீளத் திரைப்படத்துக்கான திரைக்கதை தயாராகிக்கொண்டிருந்தது. திரைக்கதை அமைப்பில் பங்குபெற்றிருந்தவர்களுள் சிலர் என் நண்பர்கள் என்கிறபடியாலும் படத்தின் தயாரிப்பாளர் என் மிக நெருங்கிய நண்பர் என்பதாலும், மேற்சொன்ன default அம்சங்களுடன் மூலக்கதையாக என்னவாவது ஒன்றை எழுதித்தரும்படி என்னைக் கேட்டார்கள். அதற்கு முன் படத்துக்கு அழகாக ஒரு டைட்டில் சொல்லவும் கேட்டார்கள். கதைக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தம் இருந்தாகவேண்டிய அவசியமெல்லாம் இல்லை என்பதால் முதலில் 'மெல்லினம்' என்கிற தலைப்பைச் சொல்லிவிட்டுப் போய்விட்டேன். பிறகு ஏதோ ஒரு கதையும் சொன்ன ஞாபகம் இருக்கிறது. அந்தக் கதை நினைவில்லை.
ஆனால் அந்தத் தலைப்பு பிறகு தனக்கான சரியான கதையை எழுதச் சொல்லி என்னை நீண்டநாளாக வற்புறுத்திக்கொண்டிருந்தது. அந்தத் திரைப்படம் பல காரணங்களால் வெளிவராமல் போனதும் ஓரெல்லைவரை இதற்கான தூண்டுதலாக இருக்கலாம்.
மெல்லினம் நாவலின் சுருக்கத்தை நான்கு வரிகளில் கல்கி ஆசிரியர் திருமதி சீதாரவியிடம் சொல்லி, எழுதட்டுமா என்று சென்ற ஆண்டு மத்தியில் கேட்டேன். ஒரு சம்பிரதாயத் தமிழ்த் தொடர்கதைக்கான எவ்வித லட்சணமும் இல்லாமல் - குறைந்தபட்சம் ஒரு கதாநாயகன், நாயகி கூட இல்லாமல் - வெறும் நாய், குரங்கு, அணில், பட்டாம்பூச்சிகளையும் ரெண்டு பொடிசுகளையும் வைத்துக்கொண்டு, மிகவும் நுணுக்கமானதொரு பிரச்னையைக் கையாளக் கூடியதாக இருந்தது அக்கதை.
ஒரு பேச்சுக்குத்தான் கதை என்கிறோம். வாழ்வின் அனுபவச் சாறில்லாத எந்தப் படைப்புதான் காலத்தின்முன் நின்றிருக்கிறது? கதையில் இடம்பெறும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே என்கிற முன்னெச்சரிக்கை வரிகளைப்போலொரு முழுப்பொய் வேறெதுவும் இருந்துவிடமுடியாது என்று திடமாக நம்புகிறேன். நல்ல படைப்பொன்றின் ஆகச்சிறந்த அடையாளம், அது உண்மையை மட்டுமே பேசும்.
இந்த நாவலில் என் ஒரே சந்தோஷம், நான் முற்றிலும் உண்மைக்கு விசுவாசமாக இருந்திருக்கிறேன் என்பது. வார இதழ் தொடர்கதையிலும் இது சாத்தியம் என்பது மீண்டும் கல்கி மூலம் தான் நிரூபணமாகியிருக்கிறது. திருமதி சீதாரவிக்கு என் மனமார்ந்த நன்றி.
0
ஆனால் பத்திரிகைத் தொடர்கதைகள் அதன் வாசகர்களை துரதிருஷ்டவசமாக இழந்துவிட்டிருக்கும் காலம் இது. பொன்னியின் செல்வன் போன்றோ, மோகமுள் போன்றோ வருஷக்கணக்கில் நீளக்கூடிய படைப்புகளுக்கு இன்று இடமில்லாமல் போய்விட்டது. பின்னால் வந்தவர்கள் தம் படைப்பின்மீது காட்டத்தவறிய அக்கறையின்மையின் விளைவே இது. தொடராக வராதுபோயிருந்தாலும் மோகமுள்ளும் பொன்னியின் செல்வனும் காலம் கடந்து நிற்பதைத் தடுத்திருக்கமுடியாது என்பதை எனக்கு நானே நினைவூட்டிக்கொள்கிறேன். கையாளப்படும் விஷயத்திலும் உத்திகளிலும் எழுத்தின்பால் இருந்திருக்கக்கூடிய நோக்கத்திலும் வித்தியாசங்கள் இருந்தாலும் படைப்பு என்கிற செயல் சார்ந்த அக்கறை பற்றியே இங்கே சிந்திக்கிறேன்.
நல்ல நாவல்கள் நூலாக மட்டுமே வாசிக்கக் கிடைக்கும் என்கிற நிலைமை தமிழிலும் உருவாகியிருக்கிறது. இது நல்லதுதான் என்று பெரும்பாலானவர்கள் கருதலாம். எனக்கு அப்படித் தோன்றவில்லை. தமிழர்களின் வாங்கும் சக்தி புத்தக விஷயத்தில் அத்தனை சிலாகிக்கக்கூடியதாக இன்னும் வளரவில்லை என்றே நினைக்கிறேன். புத்தகக் கண்காட்சிக் கூட்டங்களையெல்லாம் தோற்ற மயக்கமாகத்தான் இந்தவிநாடிவரை நினைக்கிறேன்.
என்னளவில் தொடர்கதை வடிவம் எனக்குப் பெரும் சௌகரியமாக இருக்கிறது. எழுத்து உட்பட எல்லாவற்றையும் ஒரு கால அவகாசக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்போதுதான் என்னால் தடையின்றிப் பணியாற்ற முடிகிறது. இதில் வரக்கூடிய சமரசங்கள் பற்றிப் பெரிய விமரிசனங்கள் ஏதும் எனக்கில்லை. என் சுதந்தரத்தின் சுற்றுச்சுவரைப் பெயர்த்து எடுத்து, வேண்டியபோது, விரும்பிய இடத்தில் பொருத்திவைக்க நான் அறிவேன்.
0
நல்லதா, அல்லதா என்பதே பிரச்னையில்லை. எல்லா படைப்புகளும் எழுதியவனுக்கு அப்பால் பலபேருக்குக் கடமைப்பட்டிருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் படைப்புக்கு உதவியவர்கள் அவர்கள். அவர்கட்கு நன்றி சொல்லுவதற்காகவாவது முன்னுரைகள் அவசியமாகிவிடுகின்றன. தமிழ் எழுத்தாளன் அந்த ஒரு சொல்லைத் தவிர வேறெதைப் பெரிதாகச் சமர்ப்பித்துவிடமுடியும்?
கல்கி ஆசிரியர் சீதாரவி, கல்கியின் துணை ஆசிரியர்கள் ஏக்நாத், அனுராதா ஆகியோர் என்மீது செலுத்திய அன்பும் அளித்த உற்சாகமுமே இந்நாவலை நான் எழுத ஆதார சக்திகள். நாவலின் கருவை ஒருவரித் தத்துவமாக நான் பெற்றது ஃப்ராய்டிடம் இருந்து. எனக்கு ஃப்ராய்டுடன் நேரடிப் பரிச்சயமில்லை. நாகூர் ரூமியின் மொழிபெயர்ப்பு மூலம்தான் நான் ஃப்ராய்டை அறிந்தேன். அந்த வகையில் ஃப்ராய்டுக்கும் ரூமிக்கும் சம அளவு நன்றி உடையவனாகிறேன். கல்கியில் இது வெளியாகிக்கொண்டிருந்தபோது வாரம் தவறாமல் படித்து விமரிசித்து உதவிய என் நண்பன் என். சொக்கனுக்கும் நிறைவடைந்ததும் கடிதமெழுதி வாழ்த்திய வாசகர்களுக்கும் நன்றி. ஓய்வில்லாமல் தொடரும் எழுத்து ஊழியத்தின் இடையே குடும்பத்துக்கென நான் ஒதுக்கும் நேரம் மிகச் சொற்பம் கூட இல்லை. புரிந்துகொண்டு ஒத்துழைக்கும் பெற்றோருக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்களும் சகித்துக்கொண்டு அன்பு செலுத்தும் மனைவிக்குக் குறைவற்ற காதலும்.
இனி, இது உங்களுடையது.
அன்புடன்
பாரா.
சென்னை
பிப்ரவரி 2, 2004
00
1
ஜன்னல் ஓரம் தலை நீட்டிச் சிரித்த செம்பருத்திக் கிளையில் ரொம்ப நேரமாக ஒரு வண்ணத்துப் பூச்சி உட்கார்ந்திருந்தது. மலர்ந்திருந்த பூவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல். என்னையும் ஒரு பூவாக எண்ணிப்பார் என்று கேட்பது போல். செம்பருத்திப் பூவுக்குப் பக்கத்திலேயே அது அமர்ந்திருந்ததால் பூவின் செவ்வண்ணத்துக்குப் பூச்சியின் மஞ்சள் படர்ந்த மேனி அருமையான எதிரிடையாக அமைந்து, நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
குட்டி, பூவைப் பறிப்பதற்குத் தான் வந்தாள். ஆனால் பட்டாம்பூச்சியைப் பார்த்ததும் அவளுக்கு வேறு ஒரு திட்டம் உண்டானது.
என்ன அழகான பட்டாம்பூச்சி! பூவை விடவும். ஒருமுறை தொட்டுப் பார்க்க முடிந்தால் பிரமாதம். ஜக்கு எப்படியோ கண்ணில் படும் வண்ணத்துப் பூச்சிகளையெல்லாம் ஒருமுறையாவது பிடித்து அருகே பார்த்துவிட்டே பறக்கவிடுகிறான். அவன் விரல்களின் இடையே மாட்டிக்கொள்ளும் பூச்சிகள் என்ன பதற்றமடைகின்றன, அந்தச் சில விநாடிகளுக்குள்! எத்தனை வேகமாகச் சிறகுகளை உதறிக்கொள்கின்றன!
பயம்.
ஆனால் ஜக்கு ஒரு பூச்சியைக்கூடக் கொல்லமாட்டான். கடவுள் சத்தியம். அவற்றைத் தொட்டுப் பிடித்து அருகே பார்ப்பதில் ஏதோ இன்பம் இருக்கிறது அவனுக்கு. 'தப்பில்லையாடா இது?' என்று கேட்டால், 'என்னை எங்கப்பாவும் அம்மாவும் தாத்தா பாட்டியும் கிட்ட இழுத்து கொஞ்சலை? அந்தமாதிரி தான் இது' என்பான்.
ஐயோ, ஒரு பட்டாம்பூச்சியைக் கையில் எடுத்து ஒரு நிமிஷமாவது கொஞ்சமுடிந்தால் எத்தனை பரவசம்!
ஆனால் குட்டிக்கு ஒரு பூச்சி கூட, ஒரு முறை கூட அகப்பட்டதில்லை. அவளது கொலுசு தான் காரணமாக இருக்கவேண்டும். அவள் நெருங்கும்போதே பட்டுப்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிடுகின்றன. தலைக்குமேலே, எட்டாத இரண்டு ஆள் உசரத்தில் 'என்னைப் பிடிப்பியா? பிடி, பிடி!' என்று ஆட்டம் காட்டத் தொடங்கிவிடும்.
'ஒரு நேக் வேணும் குட்டி. நைஸா பின்னாடி போய் மெத்துனு பிடிக்கணும். பூச்சிக்கு வலிக்கக் கூடாது. பிடிச்சதுமே, நான் உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்; காட் ப்ராமிஸ். ஜஸ்ட் கொஞ்சிட்டு விட்டுடறேன்'னு அதுங்கிட்ட சொல்லிடணும்' என்பான் ஜக்கு.
ஜக்கு தான் எத்தனை விஷயம் தெரிந்தவனாக இருக்கிறான்! இத்தனைக்கும் தன்னைவிட இரண்டு வயசு தான் கூடுதல் . பட்டுப் பூச்சிகள் அவனுக்கு சிநேகமாகின்றன. பூனைகள் அவன் தொட்டுத் தூக்கிக் கொஞ்சுவதற்காகக் காத்திருக்கின்றன. எப்போதும், யாரைப்பார்த்தாலும் குரைக்கும் நாய்கள் கூட ஜக்குவைக் கண்டால் வால் ஆட்டுகின்றன. அவன் செடிகளுடன் பேசுகிறான். மணிக்கணக்கில். ஜக்குவின் அம்மா அவனைப் பைத்தியம் என்று திட்டக் கேட்டிருக்கிறாள் குட்டி.
ஆனால் அவன் பைத்தியமல்ல என்பதில் அவளுக்கு அசாத்திய நம்பிக்கை.
ஜக்கு சொல்வான்: 'பாரு, இந்த எலுமிச்சைச் செடி நட்டிருக்கேனா? ரெண்டு நாள்ள முளை விட்டாகணும்னு அதுக்கு ரூல் போட்டிருக்கேன். நிச்சயம் சாட்டர்டே ரெண்டு இலை வந்துடும் பார்'
என்ன ஆச்சர்யம்! சனிக்கிழமை காத்திருந்து குட்டி அவன் வீட்டுக்கு விடிந்ததுமே எழுந்து ஓடுவாள்.
சந்தேகமே இல்லை. ஜக்கு மந்திரசக்தி உள்ளவன் தான். சொன்னபடி செடி முளை விட்டிருக்கிறதே!
'யு ஆர் க்ரேட் ஜக்கு' என்பாள் குட்டி.
'தேங்ஸ். உன்னாலும் முடியும் குட்டி. ட்ரை பண்ணு' என்பான்.
எதாவது ஸ்லோகம் சொன்னால் இதெல்லாம் சாத்தியமாகுமா என்று குட்டிக்கு சந்தேகம். தன் அம்மாவிடம் கேட்டாள்.
'செடி முளைக்க ஸ்லோகமா?' அம்மா ஆச்சர்யப்பட்டாள்.
'இல்லம்மா. அதுக்கு மட்டுமில்லை. அவன் கூப்டா நாய், பூனையெல்லாம் கூட ஓடி வந்து விளையாடுது. பட்டாம்பூச்சியை அசால்டா பிடிக்கறான். பேப்பர்ல வீடு, பொம்மையெல்லாம் செய்யறான். சில் நம்பர்ஸை வெச்சிக்கிட்டு மேஜிக் கூட பண்றான்...'
அம்மா அவளை அணைத்துக்கொண்டாள்.
'நீயும் பண்ணலாம்டி செல்லம். நான் சொல்லித்தரேன்'
அன்று இரவு குட்டிக்கு அவள் அம்மா எதிராள் மனத்தில் நினைக்கும் எண்ணைக் கண்டுபிடிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தாள்.
'பத்துக்குள்ள ஒரு நம்பர் நினைச்சிக்க சொல்லு. அதை ரெண்டால பெருக்கி, ரெண்டு கூட்டணும். அப்புறம், அஞ்சால பெருக்கி, அஞ்சைக் கூட்டணும்...'
குட்டிக்கு அந்தக் கணக்கு ரசிக்கவில்லை. அம்மா, ஜக்குவின் மந்திரசக்தியை மிகவும் மலினப்படுத்துவதாகப் பட்டது. அவளுக்கு சந்தேகமே இல்லை. ஜக்கு ஒரு மேதை. தனக்குத் தெரியாத கோடி வித்தைகள் அவனுக்குத் தெரியும்.
தனக்கும் அவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளத் துடிப்பு இருப்பது உண்மை தான். ஆனால் தெரிந்துகொள்ளவேண்டாம் என்பதே அவளது அடிமனத்து விருப்பமாக இருந்தது.
ஒரு பாமர ரசிகையாக அவள் ஜக்குவை அணுகவே மிகவும் விரும்பினாள். வியப்பு தீராதவரை மட்டுமே ரசிக்கக் கூடிய அவனது மந்திர வித்தைகள். ஒரு வேளை அம்மா சொல்வதுபோல் அவனது வித்தைகளெல்லாம் எல்லாரும் செய்யக்கூடியவையாகவே இருந்துவிடும் பட்சத்தில் அதுநாள் வரை ஜக்கு என்னும் நண்பன் அவளுக்குள் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளுக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
அவளைப் பொறுத்த அளவில் மிகத் தெளிவாக இருந்தாள். ஜக்குவுக்குப் பூனைகளும் நாய்களும் பட்டாம்பூச்சிகளும் மேஜிக் கணக்குகளும். அவளுக்கு ஜக்கு.
இந்தமாதிரி விஷயங்களில் அதிக ஆர்வம் உள்ள பையன்கள் படிப்பில் படு மோசமாக இருப்பார்கள் என்று அவளது டீச்சர் டோரா மரகதம் சொல்லக்கேட்டிருக்கிறாள்.
'விளையாட்டு, சுத்தறது, கதை கேக்கறது, கதை புஸ்தகம் படிக்கறது, சினிமா போறது, டிவி பாக்கறது- இதெல்லாம் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கற பசங்களுக்குத் தெரியாத விஷயம். கேர்ல்ஸ்... உங்களுக்கு எதுல இஷ்டம்? ஃபர்ஸ்ட் ரேங்க்கா? மத்ததா?'
குட்டி முதலில் ரொம்பவே பயந்தாள். ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும்போது தன் சந்தேகத்தைத் தயக்கமுடன் ஜக்குவிடம் கேட்டாள்.
'ஜக்கு, நீ க்ளாஸ்ல எத்தனையாவது ரேங்க் வருவே?'
அவன் , அவளை உற்றுப் பார்த்து ஒரு புன்னகை செய்தான். "நாளைக்கு சொல்றேன்" என்றுவிட்டு ஓடிப்போனான்.
அடக்கடவுளே! இதைச் சொல்ல என்னத்துக்காக முழு இருபத்திநாலு மணி நேர அவகாசம் கேட்கிறான்? யோசித்துச் சொல்லவேண்டிய விஷயம் தானோ இது? ஒருவேளை டோரா டீச்சர் சொன்னது போல் ஜக்கு படிப்பில் மட்டு தானோ? எப்பப் பார்த்தாலும் நாய், பூனைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான். பார்த்தால் நல்ல பையனாகத் தான் இருக்கிறான். ஆனால் படிப்பில்?
அவளுக்கு ரொம்பக் குழப்பமாக இருந்தது. நிஜமாகவே ஜக்கு படிப்பில் செகண்ட், தேர்ட், ஃபோர்த் ரேங்க் என்றால் அதைத் தன்னால் தாங்கிக்கொள்ளமுடியுமா என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது. கேட்டிருக்கவே வேண்டாமோ என்றும் தோன்றியது.
சட்டென்று கண்கள் நிரம்பி, பாதை அலையடித்தது. பாவாடையால் துடைத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.
ஜக்கு அவளது பள்ளியில் படிப்பவன் அல்ல. அவன் விவேகானந்தா வித்யாலயாவில் ஆறாங்கிளாஸ். குட்டி, சர்வோதயாவில் நாலாவது. இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கிற பழக்கத்தில் உருவான சிநேகிதம். அவனது அறிமுகம் உண்டான தினம் தொட்டு ஒரு நாள் கூடப் பிசிறடிக்காத நட்பு அவர்களுடையது.
அவனுக்கு, அவளுடன் பேசிக்கொண்டிருப்பது பிடிக்கும். அவளுக்கு அவன் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பது பிடிக்கும். தீர்ந்தது விஷயம். அவரவர் செயல்களில் ஒருபோதும் மாறுதல் உண்டானதே கிடையாது. கண்ணுக்குத் தெரியாத நட்பின் வலிமை மிக்க இழையில் இருவரும் ஒருசேரப் பிணைக்கப்பட்டிருந்தார்கள்.
ஜக்கு அடிக்கடி சொல்வான்: "பாடம் படிக்கறது மட்டும் போதாது குட்டி. பலதும் கத்துக்கணும். அப்ப தான் சயிண்டிஸ்டா, பொயட்டா, இன்னும் என்னென்னவா ஆக நினைக்கறோமோ அதெல்லாம் முடியும்"
ஜக்கு என்னவாக நினைத்திருக்கிறான்?
அவன் தான் எத்தனையாவது ரேங்க் என்பதைச் சொல்லும்போது கேட்கவேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள்.
அன்றிரவு ஏழு மணிக்கு ஜக்கு அவள் வீட்டுக்கு வந்தான்.
அவளுக்கு ரொம்ப ஆச்சர்யமாகப் போய்விட்டது. ராத்திரி வேளையில் அவன் அவள் வீட்டுக்கு வருவது அது தான் முதல் முறை.
"என்னதுடா?" என்றாள் குட்டி.
"கேட்டியே? இந்தா, நீயே பார்த்துக்கோ"
ஜக்குவின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் அது. அவளுக்குப் பார்க்கவேண்டியதே இல்லை என்று உறுதிபடத் தோன்றியது. அவன் கண்களில் தான் எத்தனை தன்னம்பிக்கை! எத்தனை சிநேக பாவம்! தெளிவு! ரேங்க் குறைந்த பையன்கள் யாருக்கு இது சாத்தியம்? வாய்ப்பே இல்லை.
'பாரு' என்றான் ஜக்கு.
'வேணாம். எனக்கே தெரியும். நீ ஃபர்ஸ்ட் ரேங்க் தானே?'
'உம்' என்றான் ஜக்கு.
'அதான் நினைச்சேன். ஆனா எங்க டீச்சர் தான் வேற மாதிரி சொன்னா'
'என்னவாம்?'
'உன்னைமாதிரி எல்லாத்துலயும் கெட்டிக்காரனா இருந்தா படிப்பு வராதாம்'
ஜக்கு சிரித்தான்.
குட்டி அவனுக்கு ஒரு தேன்குழல் கொண்டுவந்து கொடுத்தாள்.
'யார்ராது? எம்பொண்ணோட ஃப்ரெண்டா?' என்று கேட்டுவிட்டு குட்டியின் அப்பா அன்றைய மாலை தினசரியுடன் உள்ளே போனார்.
'ஆமா சார். ஜகன்னாதன்' என்றான் ஜக்கு.
குட்டி கேட்டாள்: " ஒரு கேள்விக்கு பதில் சொல்லு. ஃப்யூச்சர்ல நீ என்னவா ஆக விரும்பறே?"
அவன் ஒரு கணம் யோசித்தான். பிறகு சொன்னான். "ஆசை இருக்கு. ஆனா முடியாது!"
"ஏன்?" அவளுக்கு ஒரே வருத்தமாகப் போய்விட்டது. அப்படியென்ன முடியாத ஆசை வைத்திருப்பான்?
"சொல்லட்டுமா? சிரிக்கக் கூடாது!"
"காட் ப்ராமிஸ். சிரிக்கமாட்டேன். சொல்லு."
அவன் சொன்னான்: " எனக்கு நான் ஒரு பட்டாம்பூச்சியா ஆகணும்."
அவளுக்கு நிஜமாகவே சிரிக்கத் தோன்றவில்லை. அது ஒரு முடியாத ஆசை என்பதாகவும் படவில்லை. ஜக்கு நினைத்து முடியாமல் போகக் கூடிய விஷயமும் இருக்க முடியுமா என்ன? நிச்சயம் முடியும். அவனால் முடியும். ஒரு பட்டாம்பூச்சியாக முடிந்தால், அந்த அனுபவம் தான் எத்தனை பரவசமாயிருக்கும்!
"எனக்கு நீ பட்டாம்பூச்சி பிடிக்கக் கத்துத் தரியா?'' அவள் தயங்கித் தயங்கிக் கேட்டாள்.
"அடக்கடவுளே! அது பிடிக்கறது இல்ல குட்டி! பிடிக்கறதுன்னா மத்த பசங்க மாதிரி வத்திப்பெட்டியோட அலையணும். கொலைகாரன் மாதிரி அப்ப நாம பூச்சிக்குத் தெரிவோம். நான் பண்றது, பட்டாம்பூச்சியைக் கூப்பிட்டுக் கொஞ்சறது. ஏய், ஏய், எங்கிட்ட வா, நான் உனக்கு விளையாட்டுக் காட்டறேன்னு கூப்பிடணும். அதுங்காதுல விழுந்து அது வரும்."
இத்தகவல் குட்டிக்கு உண்மையிலேயே பேராச்சர்யமாக இருந்தது.
"என்னது? பட்டாம்பூச்சிக்கு நீ பேசறது கேக்குமா?"
"ஆமா"
அதுக்கு தமிழ் புரியுமா?"
"நீ இங்கிலீஷ்ல கூப்ட்டா கூட புரியும்"
'மை காட்!' என்று கத்தினாள் குட்டி.
'நீ காட் ப்ராமிஸாவா சொல்றே?'
'மதர் ப்ராமிஸ்'
'ஐயோ' என்றாள் குட்டி.
அந்த வியப்பு அவளுக்குத் தீரவே இல்லை. ஒரு வாரம். பத்துநாள். ஒரு மாதம். ஆனால் அன்று தொடங்கி ஒரு நாள் கூட வண்ணத்துப்பூச்சி எதுவும் அவள் கண்ணில் தென்படாமலேயே இருந்தது.
அன்று தான் பட்டது. ஜன்னலோரம் எட்டிப்பார்த்த செம்பருத்திக் கிளையில். பூவோடு பூவாக.
ஜக்கு சொன்னதைப் பரீட்சித்துப் பார்த்துவிடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றிவிட்டது. பூவைப் பறிக்கும் தன் திட்டத்தைத் தாற்காலிகமாகக் கைவிட்டு ஓசைப்படாமல் ஜன்னலருகே போய் நின்றுகொண்டாள். மனத்துக்குள் ஒரு முறை கடவுள்களையெல்லாம் வேண்டிக்கொண்டு, "ப்ளீஸ்! நான் உன்னைக் கொஞ்சணும். ஜக்கு கூப்டா வரமாதிரி என்கிட்டயும் ஒரு வாட்டி வாயேன்? ஒரே ஒரு வாட்டி? தொட்டுப் பார்த்துட்டு விட்டுடறேன். நிச்சயம் உன்னைக் கொல்லமாட்டேன்" என்று மனத்துக்குள் உருகிக் கேட்டாள்.
மூடியிருந்த அவள் விழிகளிலிருந்து ஒரு துளி நீர் கசிந்தது.
ஜன்னலைப் பிடித்திருந்த வலது கையின் புறத்தில் மெத்தென்று ஓருணர்வு தோன்றியது. வலிக்காமல் இமை பிரித்துப் பார்த்தாள்.
"ஜக்கூ...!"
சந்தேகமே இல்லை. அவளது புறங்கையின் மேல் குட்டியுருவமாக அவன் தான் அமர்ந்திருந்தான். இரண்டு சிறகுகளுடன். மஞ்சள் வண்ணத்தில். பட்டுப்போல.
2
அற்புதங்கள் எப்போதாவது தான் நடக்கின்றன. மிக அழகாக. கவித்துவம் ததும்ப. உள்ளம் ஜில்லென்று சந்தோஷத்தை அப்பிக்கொண்டு நிற்கிற விதமாக.
குமார், அந்தப் பட்டைவீறும் வெயிலில், தி. நகர் நெரிசலில் மாலுவைக் கூட்டத்தில் ஒருத்தியாகச் சந்திக்க நேரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
சனிக்கிழமை என்பதால் அவனது பத்திரிகை அலுவலகத்துக்கு அரைநாள் தான் செயல்பாடு. மதியத்துக்கு மேல், தேவன் இறங்கி வந்துவிட்டாலும் செய்தியாளர்களுக்கு அவை செய்தியாகாது. மறுநாள் செய்தித்தாளில் நேற்று மாலை மூன்று மணியளவில் தேவன் இறங்கி வந்ததைச் சென்னை மக்கள் கண்டு களித்தார்கள் என்று எழுதிவிட்டால் போதும். யாராவது தன்னார்வப் புகைப்பட நிபுணர்கள் படம் எடுத்திருந்தால் நிச்சயம் கொண்டுவந்து கொடுப்பார்கள். முதல் பக்கத்தில் படமும் மூன்றாவது பக்கத்தில் செய்தியுமாக தேவனுக்கு ஒரு தினம் பொறுத்து செய்தி மோட்சம் கிடைக்கும்.
ஒரு தினசரிப் பத்திரிகையின் குணம் நிச்சயம் இதுவாக இருக்கமுடியாது; இருக்கக் கூடாது. ஆனால் அவனது பத்திரிகையின் முதலாளி மனத்தளவில் ஓர் அரசாங்கப் ஊழியராக இருந்தார். துடைக்கும் விதமாகவே தூசிகள் இருந்தாலும் அவையும் இருக்கப் பணிக்கப் பட்டவை . அற்ப நிர்ப்பந்தங்களுக்கு அவர் ஒரு போதும் செவி சாய்த்ததில்லை. அவரது பாட்டனார் காலத்து வழக்கம். சனிக்கிழமை அரைநாள். இருந்துவிட்டுப் போகட்டுமே? மேலும் நாம் பணியாற்றும்பொழுது உண்டாகாத செய்திகள் செய்திகளே அல்ல. நாம் அளிப்பது மட்டுமே செய்தி. யாரோடும் ஒப்பிடாதீர்கள். அவரவர் பாதைகளின் இலகுவும் சிரமங்களும் அவரவருக்கே உரியன. சனிக்கிழமை முற்பகல் வரை உங்கள் நேர்மையையும் கடும் உழைப்பையும் சிறந்த செய்திகளையும் முதலீடு செய்யுங்கள். பிறகு ஓய்வெடுக்கப் போய்விடலாம். பயிற்சி நிலைப் பத்திரிகையாளர்கள் ஞாயிற்றுக்கிழமையை கவனித்துக் கொள்வார்கள். நீங்கள் மறுபடியும் புத்துணர்ச்சியுடன் திங்கள் வந்தால் போதும்.
ஹிந்து அல்லது இந்தியன் எக்ஸ்பிரஸில் பணியாற்ற விரும்பி, வாய்ப்புக் கிடைக்காதவர்கள் தான் பெரும்பாலும் அந்த தினசரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். முதலாளிக்கும் ஆசிரியருக்கும் அது தெரியும். யாராவது ராஜிநாமா செய்தால் முதல் கேள்வியாக "ஹிந்துவா?" என்று கேட்பது தான் அங்கு வழக்கம்.
ரேஸ் டிப்ஸையும் ஷேர் உலகையும் வரி விளம்பரங்களையும் நம்பி இயங்கிக்கொண்டிருந்த மாலை தினசரி அது. எப்போதும் ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் இருக்கும் என்பதால் சில விளம்பர வருமானங்கள் பூமி உள்ள அளவும் அவர்களுக்குக் கிடைக்கும். மேலும் அவ்வப்போது சிறப்பு மலர்கள். சீரிய ஆட்சி குறித்த சிறப்பு அலசல்கள். சிறப்பு இணைப்புகள். செயல்பாடுகளில் சிறப்பு என்பதைக் காட்டிலும் செயல்பட்டுக்கொண்டிருப்பதே சிறப்பு என்னும் சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருந்த நாளிதழ் அது.
குமார் அங்கு குற்றச் செய்தியாளனாகச்சேர்ந்து ஆறு வருடங்கள் ஆகியிருந்தன. காவல் நிலையங்களில் அவனுக்கான செய்திகள் தயாராகும். இன்ஸ்பெக்டர்களும் கமிஷனர்களும் நட்புமுறையில் உடன் வந்து ஒரு காப்பி சாப்பிடக் கூடியவர்கள் என்பதால் பகுதியில் அவனுக்குக் குறைந்தபட்ச செல்வாக்கு என்பதாக ஒன்று உண்டாகியிருந்தது. வீட்டு டெலிபோன் அடிக்கடி இறக்காது. தினசரிகள் நேரத்துக்கு வந்து வாசலில் விழும். பேருந்தில் நடத்துநர் தாம் எழுந்து அவனுக்கு இருக்கை தருவார். கேபிள்காரர்கள் அவன் வீட்டு வாசலில் குழி தோண்டிவிட்டுப் போகமாட்டார்கள். மேலும் உரிய தினங்களில் அவன் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரத் தவறாது.
"சம்பளம் இன்னும் இருக்கலாம்" என்று எப்போதும் மாலு சொல்லுவாள்.
நிருபர்களின் சம்பளம் பொதுவாக மனைவிகள் சிலாகிக்கும்படி எப்போதும் இருந்ததில்லை. திறமை மிக்க குடும்பத் தலைவியாக இருந்துவிடும் பட்சத்தில் அது ஒரு பொருட்டில்லை தான். ஆயினும் இரண்டு சம்பளம் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
மாலு, தனியார் அழகு சாதன நிறுவனம் ஒன்றில் அக்கவுண்டண்டாகப் போய்க்கொண்டிருந்தாள். வருகிற சம்பளத்தில் தபால் மூல மேல் படிப்புக்குக் கொஞ்சம் நிறுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. சி.ஏ. கஷ்டம் என்றாலும் ஐ.சி.டபிள்யு.ஏவாவது முடித்துவிட வேண்டும்.
ஒளிமயமான எதிர்காலம் குறித்து அவ்வளவாக நம்பிக்கை இல்லாவிட்டாலும் கனவுகள் இன்னும் வெளிச்சத்துடன் தான் இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் நினைத்து மகிழும்படி வங்கிக்கணக்கில் ஒரு பெரும் தொகை சேராமல் போகாது. நீண்டநாள் கனவான தங்கத்தில் கொலுசு அப்போது சாத்தியமாகிவிடும்.
"ஜக்கு படிச்சி, சம்பாதிச்சாத்தான் உண்டு போல இருக்கு" என்று மாலு சொன்னாள்.
குமார் பதிலேதும் சொல்லாமல் தி. நகரின் கும்பலைத் துருவிக்கொண்டு முன்னேறும் முனைப்புடனும் அவளைத் தவறவிடக்கூடாத கவனத்துடனும் நடந்துகொண்டிருந்தான்.
"நீ எங்க திடீர்னு இந்தப்பக்கம் வந்தே?"
"அரை நாள் லீவ் போட்டேன். சரியான தலை வலி. அப்புறம், கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு. ஒரு வாரத்துக்கு காய்கறி வாங்கணும். மஸ்தான்ல ரெண்டு ப்ளவுஸ் தைக்கக் கொடுத்திருந்தேன். அதை வாங்கணும். ஜக்கு பார்க்கர் பேனா கேட்டான். அடுத்த வாரம் அவனுக்கு பிறந்த நாள் வருது...."
"ஆறாங்கிளாஸ் பையன் பார்க்கர் கேக்கறான்!"
குமாருக்கு ஆச்சர்யமாகவும் பெருமிதமாகவும் இருந்தது. தன் கவனம் தாண்டித் தன் மகன் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறான் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான். ஆயினும் பல சமயங்களில் ஜக்கு கேட்டதாக மாலு சொல்லும் சில கேள்விகள் அவனை அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே அடையச் செய்யக்கூடியவையாகவே இருந்தன.
"ஏம்மா, மாசம் மூணு நாள் நீ தூரம்னு சொல்றே. பாட்டி சமையல் பண்றா, சரி. குட்டி வீட்டுல அவம்மா தூரமானாலும் அவாளே தானே சமையலும் பண்றா? தூரம்னா என்ன? உன் தூரத்துக்கும் குட்டியோட அம்மா தூரத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"ஒரு வித்தியாசமும் இல்லை" என்று சொல்லிவிட்டுப் பேச்சை மாற்றிவிட்டதாக மாலு ஒரு நாள் சொன்னாள்.
தவறோ என்று குமார் கவலைப்பட்டான். குழந்தை தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு விஷயத்தை எப்படி தெரிந்துகொள்ளும்விதத்தில் தெரியப்படுத்துவது? அது தான் பெரும்பாலும் தெரியவில்லை. விளக்கிச் சொல்வதில் ஒரு தவறும் இருப்பதாக அவர்கள் இரண்டு பேருமே நினைக்கவில்லை. ஆனால் குமாரின் அப்பா அதைத் தடுத்துவிட்டார்.
"விடுடா. தானா தெரிஞ்சிட்டுப் போகும். இதையெல்லாம் சொல்லிண்டா இருப்பா? அந்த வயசு. அப்படித்தான் கேக்கத் தோணும். கேக்கற எல்லாத்துக்கும் பதில் சொல்லிண்டிருக்க முடியாது. அதுக்காக மூஞ்சில அடிக்கற மாதிரி சொல்லணுங்கறதில்லை. நைஸா பேச்சை மாத்தணும். அது ஒரு நேக். எங்கிட்ட விடு" என்று சொல்லிவிட்டார்.
ஓய்வு பெற்ற அவருக்கு ஜக்குவின் உலகத்தில் நுழைந்து விளையாடப் பெரிதும் ஆசை இருந்தது. அவரது மனைவியும் அதற்காகவே ஏங்கிக்கொண்டிருந்தாள்.
பேரனுக்கு வயதுக்கேற்பச் சொல்வதற்கென்று ஏராளமான கதைகளை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். மேலும் உட்கார்ந்த இடத்தில் விளையாடக்கூடிய சிலபல ஆட்டங்கள். கதைப் பாடல்கள். மிருதங்க க்ளாஸ். சுலோகங்கள். தன் காலத்தைய நிகழ்வுகள். கோவணத்திலிருந்து வேட்டிக்கும் வேட்டியிலிருந்து பேண்ட்டுக்குமாக மாறிய காலத்தின் பரிணாம வளர்ச்சி. மேலும் பாடங்கள். அதன் அடர்த்தியும் நீட்சியும். அந்தக்காலத்து பி.யு.சி கணக்கு இப்போதைய எட்டாங்கிளாஸ் கணக்கைவிடச் சுலபம் என்கிற வியப்பு கலந்த உண்மைகள். உலகமும் நாடுகளும். நதிகளும் நாகரிகங்களும்.
ஜக்குவுக்கு தாத்தா, பாட்டியுடன் நேரம் செலவிடுவதில் விருப்பம் தான். ஆனால் அவனது விருப்பங்கள் பெரும்பாலும் அவர்களுடன் ஒத்துப் போவதில்லை.
எல்லாவற்றிலும், எதைத் தொட்டாலும் அவனுக்குக் கேள்விகள் இருக்கின்றன. தேசங்கள் குறித்து ஒரு முறை தாத்தா சொல்லிக்கொண்டிருந்தார். அருமையான விஷயங்கள். ஆசியாவில் எத்தனை தேசங்கள்! ஆனால் ஆஸ்திரேலியா என்னுமொரு கண்டம் ஒரே தேசமாம். ஒரு சின்ன ஊரான ரோம் ஒரு தனி தேசம் என்கிறார் தாத்தா. மேப்பில் புள்ளியாக இருக்கிற சில இடமும் நாடு, பெரிய கோன் ஐஸ் மாதிரி இருக்கிற தென் அமெரிக்காவில் பதினாறு நாடுகள். அதே வட அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் ஒரே நாடு. எந்த ஊர் நியாயம் இது?
அது சரி, தேசத்தின் எல்லை என்பதை எப்படி வரையறுக்கிறார்கள்? கோடு போட்டா? கயிறு கட்டியா? காம்பவுண்ட் சுவர் எழுப்பியா? எனில் அவை ஏன் ஒரே சீராக, நேராக இல்லை. ஏன் வளைந்து வளைந்து இருக்கின்றன, மேப்பில்?
"தாத்தாக்கு முட்டி வலிக்கறது. போய் அந்த வாதவேங்கைத் தைலம் எடுத்துண்டு வா" என்று அனுப்பினார் குமாரின் அப்பா.
ஜக்குவுக்குத் தெரியும். பதில் சொல்லமுடியாத போதெல்லாம் தாத்தாவுக்கு முட்டிவலி வந்துவிடுகிறது. தைலம் கொண்டுவந்து தந்தவுடன், "போ, போய் விளையாடு" என்று சொல்லிவிடுவார்.
சின்ன வயதில் பள்ளியில் தாத்தா ஒழுங்காகப் படித்திருக்கமாட்டார் என்று ஜக்கு நினைத்துக்கொள்வான். ஆனால் எப்படியோ ஒரு அரசாங்க உத்தியோகமும் பார்த்து, ஓய்வும் பெற்றுவிட்டார். பென்ஷன் வருகிறது. அப்பாவும் அம்மாவும் போடுகிற பட்ஜெட்டில் குறைகிற தொகையை தாத்தாவின் பென்ஷன் தான் தீர்த்துவைக்கிறது. ஜக்குவின் அவ்வப்போதைய ஆராய்ச்சிகளுக்கு சாக் பீஸ், ரெட் இங்க், ட்வைன் நூல், ப்ளாஸ்டிக் பந்துகள், ப்ளாஸ்டிக் டப்பாக்கள் இவையும் தாத்தாவால் தான் கிடைக்கின்றன.
"நல்லா படிக்கணும்டா ஜக்கு. பெரிய கவர்மெண்டு ஆபீசரா வரணும். அது தான் காலத்துக்கும் உபயோகம். உங்கப்பனை இஞ்சினீரிங் படிக்க வெச்சேன். எங்க படிச்சான்? பத்திரிகை, பத்திரிகைன்னு அலைஞ்சான். இப்பபாரு, மாசம் ஏழாயிரம் கூட வரதில்லை."
"இஞ்சினீரிங் படிக்கற எல்லாருமே ஏழாயிரத்துக்கு மேல சம்பாதிப்பாளா தாத்தா?" என்று கேட்டான் ஜக்கு.
"ஆமா? பின்னே?"
"அப்ப மத்த எல்லா படிப்பையும் நிறுத்திட்டு அதை மட்டுமே ஏன் கவர்மெண்ட் வெச்சிக்கக் கூடாது? இப்ப நான் எதுக்கு கொன்றை வேந்தன், அவ்வையார்லேருந்து எல்லாம் படிக்கணும்?"
தாத்தாவுக்கு மீண்டும் முட்டி வலித்தது.
மாலு சிரித்தாள். "உங்கப்பா பாவம். அவன் கேக்கற பல கேள்விகளுக்கு அவரால பதில் சொல்ல முடியறதில்லை."
"நம்மாலயும் தான்" என்றான் குமார்.
மணி பிற்பகல் இரண்டரையாகியிருந்தது.
"சாப்டியா?" என்று குமார் கேட்டான்.
"ஆச்சு. நீங்க?"
"ம்.. ரெண்டு ரொட்டி சாப்டேன், ஆபீஸ் கேண்டீன்ல... வரியா, ஒரு சினிமாவுக்குப் போகலாம்?"
அவள் சட்டென்று அவனை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள். எத்தனை வருடங்கள்! ஜக்கு பிறப்பதற்கு முன் அவர்கள் வாரம் ஒரு படத்துக்குப் போவது வழக்கம்.
பிறகு அந்த வழக்கம் அனிச்சையாக நின்று போனது. வீட்டில் டிவி வந்ததும் திரைப்படங்களுக்காக வெளியே போவதென்னும் வழக்கமே விட்டொழிந்தது.
குழந்தையுடன் எப்போதாவது கடற்கரை, கபாலீசுவரர் கோயில், உயிரியல் பூங்கா என்று போவதுண்டு. அத்தருணங்களில் பெரும்பாலும் ஜக்குவின் குதூகலமே அனுபவிக்கவேண்டிய பொருளாக இருக்கும். சொந்த சந்தோஷம் என்பது நிச்சயம் குழந்தைக்கு அப்பாலும் இருக்கத் தான் வேண்டும் என்று மாலுவுக்குத் தோன்றியது. பரீட்சித்துப் பார்த்துவிடலாமே?
"ஜக்கு எப்படியும் நாலு மணிக்குத் தான் வருவான்."
"வந்தாலும் அம்மா இருக்கா. காப்பி குடுத்து விளையாட அனுப்பிச்சுடுவா"
"நாம சினிமா போய் எத்தனை வருஷம் ஆறது!"
"இன்னிக்குப் போவோம்"
அவன் தன் பர்ஸை எடுத்துப் பார்த்துக்கொண்டான். "சினிமா போறோங்கறது தான் முக்கியம். எந்தப் படம், எந்த தியேட்டர்ங்கறது முக்கியமில்லை. ரைட்?"
அவள் புன்னகை செய்தாள்.
கிருஷ்ணவேணியில் பழைய சிவாஜி படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இரண்டுபேரும் காற்றாடிய பால்கனியில் சந்தோஷமாகப் போய் உட்கார்ந்தார்கள். அரை மணி ஓடியதும் மாலு உறங்கிவிட்டாள். குமார், திங்கள் கிழமை பி த்ரீ ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டரிடம் பேசவேண்டிய விஷயங்கள் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னைப் பதிப்பு கொண்டுவருவதாக ஒரு வதந்தி வந்துகொண்டிருந்தது. அதில் தனக்கு வாய்ப்பு இருக்குமா, யாரைப் போய்ப் பார்க்கலாம் என்று யோசித்தான். தனக்குத் தெரிந்த பெரிய மனிதர்கள் அனைவரையும் ஒரு முறை மனத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி யார் உதவக்கூடும் என்று எண்ணிப்பார்த்தான்.
இடைவேளையில் இருவரும் வெளியே வந்து காப்பி சாப்பிட்டார்கள். ஒரு பாப்கார்ன் பாக்கெட் வாங்கிப் பகிர்ந்துகொண்டார்கள். படம் முடிய இன்னும் அரை மணி இருக்கும்போதே மாலு வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னாள்.
"பாவம் குழந்தை தனியா இருக்கும்."
"நானும் அதான் நினைச்சேன். சரி, வா" என்று எழுந்தார்கள்.
ரங்கநாதன் தெருவரை நடந்து ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்கிக்கொண்டார்கள். ரயிலில் நின்றபடி பயணம் செய்து வீட்டை அடைந்தபோது தான் ஜக்குவுக்கு ஏதாவது வாங்கிவந்திருக்கலாம் என்று தோன்றியது.
"அடடா, பார்க்கர் பேனாவை மறந்துட்டேனே?" என்று வருத்தப்பட்டாள் மாலு.
3
அதிக நேரம் தூங்கவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலையே விழிப்பு வந்துவிடுகிறது. ஏராளமான பணிகளைச் செய்து முடித்தாக வேண்டும் என்பதாக ஓர் உத்வேகமும் எதுவுமே செய்யக்கூடாதென்னும் செல்லப் பிடிவாதமுமாக மனம் இரண்டு பட்டு ஊசலாடத் தொடங்கிவிடுகிறது. ஞாயிறு, குடும்பத்துக்கான தினம். அலுவலகம் என்னும் கடமை அன்று இல்லை. வீடும் கடமை தான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நூலிழை வித்தியாசம் இருப்பதாகக் குமார் நினைத்தான். லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு செய்கிற வேலைகளின் நடுவே வழங்கப்படும் உறவின் பரிசுத்தமான புன்னகை, கடமைகளைக் கவிதையாக்கிவிடுகிறது.
"இன்னிக்கு என்ன ப்ளான்?'' என்று மாலு கேட்டாள். ஜக்கு இன்னும் விழிக்கவில்லை. இருள் பிரியத் தொடங்கியிருந்த புலர் காலையில் போர்வை சுகத்தில் இருவரும் கண் மூடியபடியே பேசிக்கொண்டிருந்தார்கள்.
உள்ளே சமையலறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வயதான குமாரின் பெற்றோருக்கு வாரம் முழுவதுமே ஞாயிறு தான் என்பதால் பிரத்தியேகத் திட்டங்கள் எதுவும் அவர்களுக்கு இல்லை. காலைக் காப்பி, குமாரின் அம்மா பொறுப்பு. சமையலுக்குள் மாலு தயாராகிவிடுவாள். மாமியாரும் மருமகளும் பேசிக்கொள்ள மேலதிக விஷயங்கள் இல்லாத தருணங்களில் ஸ்லோகங்கள் கைகொடுக்கும். இரட்டைக் குரலில் கடவுள்களுக்கான பக்தி கலந்த அழைப்புகள்.
தாத்தா வாசலில் இருப்பார். ஞாயிறுகளில் மட்டும் மனிதர்கள் ஏன் இப்படி சோம்பித் திரிகிறார்கள்? பொதுவில் சீரழியும் வீதி இளைஞர்கள் குறித்த அவரது கவலையைக் குமாருடன் பகிர்ந்துகொள்வார். குமார் அன்றைய செய்திகளைப் படித்துவிட்டுக் காய்கறி வாங்கக் கிளம்புவான்.
ஜக்குவின் ஞாயிறுகள் செடிகளுடன் கழியும். கீரைப் பாத்தி கட்டுவது. கத்திரிக்காய் பிஞ்சு விட்டிருக்கிறதா என்று பார்ப்பது. நட்டு வைத்த பாரிஜாதத்துக்கு பைப்பில் நீர் ஊற்றுவது. ஆ! இந்தத் தண்ணீர் ஊற்றும் காரியம் தான் எத்தனை இனிமையானது! வேக வேகமாக உறிஞ்சிக்குடிக்கும் மண்ணின் தாகத்தை அவன் ரசித்து அனுபவிப்பான். மேலும் நீரூற்றியபின் தோட்டத்துக்கு ஒரு பிரத்தியேக வாசனையும் நிறமும் வந்துவிடுகிறது. ஒரு சோலை போல. பிருந்தாவனம் போல. பிரதேசமே குளிர்ந்து விட்டது மாதிரி.
ஜக்கு ஒரு நாய்க்குட்டி வளர்த்துக்கொண்டிருந்தான். ஆசையாசையாய் அதற்கு வெங்கடாஜலபதி என்று பெயரிட்டு, வெங்கட் என்று அழைத்தான்.
"தப்புடா செல்லம், நாய்க்கெல்லாம் பெருமாள் பெயர் வைக்கலாமா?"
தாத்தா கேட்டபோது, " ஏன் பெருமாளுக்கு நாய்ன்னா பிடிக்காதா?" என்று பதிலுக்குக் கேட்டான்.
இல்லை. கடவுளுக்கு நாய் என்கிற பேதமில்லை. ஒரு நாய்க்குத் தன் பெயர் இடுவதில் அவருக்கு எவ்வித மனச்சிக்கலும் உண்டாகப் போவதுமில்லை. ஆனாலும் இந்தக் குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாமே வித்தியாசமாகவே தோன்றுகிறது? ஒரு சராசரியாக அவன் வரமாட்டான் என்று அவருக்குப் பட்டது.
சராசரிகளால் நிறைந்த உலகில் வித்தியாசமான ஜீவராசிகள் படும் அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. காலம் காலமாக. யுகம் யுகமாக. ஆனால் வித்தியாசமாக இருக்கப் பணிக்கப்பட்டவர்களால் ஒரு போதும் சராசரியாக சிந்திக்க முடிந்ததே இல்லை.
"சரி, உன்னிஷ்டம்" என்று தாத்தா சொன்னார். வெங்கட், ஜக்குவின் ஞாயிறுகளுக்கு ஒரு வண்ணம் சேர்க்கத் தொடங்கியது.
அதற்குக் காலை டிபனாக இரண்டு இட்லி வைப்பது, மத்தியானம் குழம்பு சாதமும் தயிர் சாதமும்; மூன்று மணியானால் குளிப்பாட்டுவது, நாலு மணிக்கு அதனுடன் வாக்கிங் என்று அவனும் ஒரு திட்டம் உருவாக்கி வைத்திருந்தான்.
இன்று ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமைக்கு வேறு வண்ணம் பூசிப்பார்க்கலாமா என்று குமார் நினைத்தான்.
"என்ன பண்ணப் போறீங்க?" என்றாள் மாலு.
"வீடு க்ளீன் பண்ணப்போறேன். "
"உருப்படியான காரியம். ஜக்குவும் ஹெல்ப் பண்ணும்"
உற்சாகமாகப் படுக்கையை விட்டு எழுந்தான் குமார். காப்பிக்குப் பிறகு ஜக்குவை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
"ஹை, பண்லாமே!" என்றான் அவன்.
"அப்ப ஒண்ணு பண்ணலாம். இன்னிக்கு கார்த்தால வீட்டுல சமையல் வேண்டாம். ஓட்டல்லேருந்து மசால் தோசை வாங்கிண்டு வந்துடறேன். வேலை முடிச்சிட்டு நிதானமா மத்தியானம் சமையல் வெச்சிக்கலாம்."
ஓஓ என்று குதித்தான் ஜக்கு. சின்னச் சின்ன திட்ட மாறுதல்கள் கூட அழகுதான். சந்தோஷம் தான். உள்ளம் எப்போதும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையுமே எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. மாற்றம் நிகழ்கிற ஒவ்வொரு கணமும் வாழ்வின் மறக்கமுடியாத கணங்களுக்குள் சேர்கின்றன. மிகப்பெரிய விஷயமாக இருக்கவேண்டுமென்பதே இல்லை.
அற்ப விஷயங்கள். ப்பூ என்று ஊதினால் உதிர்ந்துவிடுகிற விஷயங்கள் கூட.
குமார் ஓட்டலுக்குப் போய் டிபன் வாங்கிவந்து வீட்டுக் கூடத்தில் பொட்டலங்களைப் பிரித்ததும் குப்பென்று வீசிய மசாலா நெடிக்கு பாட்டி சற்று முகம் சுளித்தாள். பிறகு சமாளித்துக்கொண்டு, "வெங்காயம் இல்லாமெ உருளைக்கிழங்கா போடு" என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்.
ஒன்பது மணிக்கு குமார் லுங்கியை மடித்துக்கட்டி, தலைக்கு ஒரு முண்டாசும் அணிந்து "பாரதியார் மாதிரி இருகேனா?" என்று மாலுவைப் பார்த்துக் கண்ணடித்தான்.
"போருமே? எங்கேருந்து ஆரம்பிக்கப் போறீங்க?"
ஜக்கு புத்தக அலமாரியிடம் போய் நின்று கொண்டான். "இங்க தாம்பா ரொம்ப தூசி"
புத்தகங்கள் கீழே இறக்கப்பட்டன. செல்லரித்த புத்தகங்கள். அட்டை கிழிந்த புத்தகங்கள். புதிய புத்தகங்கள். அளவில் பெரிதும் சிறிதுமான ஆங்கிலப் புத்தகங்கள். குமாரின் அப்பா சேகரித்த பழைய நிகண்டுகள் மற்றும் சுதேசமித்திரன் மலர்கள். நாவல்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவது தொடர்பான ஆலோசனை நூல்கள், சுலோகப் புத்தகங்கள்.
குமாருக்கும் அவனது தந்தைக்கும் படிப்பில் ஆர்வம் இருந்தது. தேடிப்படிப்பதில்லை என்றாலும் கிடைப்பதை படிக்காமல் விடுவது கிடையாது. படிப்பதை விமர்சனம் செய்யாத குடும்பம் அமைவது ஒரு குடுப்பினை. பொருட்படுத்தாது போனால் கூடப் பொருட்டில்லை. அவமதிக்காதிருப்பதே நூல்களுக்கும் வாசிக்கிறவர்களுக்கும் செய்கிற மரியாதை என்பதை அந்தக் குடும்பம் அறிந்திருந்தது.
ஓ. இவற்றை எப்படி இன்னும் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கப் போகிறேன்?
அவன் அப்பாவுக்கு வந்த ரிடையர்மெண்ட் பணத்தில் கட்டிய சொந்தவீடுதான் அது. அரை கிரவுண்டு நிலத்தில் அமைந்த அந்தப்புரம். வத்திப்பெட்டி அளவிலொரு வசிப்பிடமும் தீக்குச்சி சொருகுகிற இடத்திலான சிறு தோட்டமும். விசாலம் என்பது பார்க்கிற கண்ணோட்டத்தில் இருக்கிறது.
"மெட்ராசுல இருக்க சொந்தமா ஒரு பொந்து. அதுவே பெரிய விஷயமில்லையா?" என்பார் குமாரின் தந்தை.
ரொம்ப சரி. ஒரு பத்திரிகையாளனாக வாழ்ந்து முடித்த பிறகும் தன்னால் ஒரு சொந்த வீடு கட்ட முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்ததேயில்லை. கைக்கும் வாய்க்குமான வருமானம். வலிந்து உற்பத்தி செய்துகொள்கிற திருப்தியில் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. புரிந்துகொள்ளும் மனைவியும் உணர்ந்து வாழும் பெற்றோரும். போதும். வாழ்க்கையின் இனிமை என்பது வசதிகளில் மட்டும் இல்லை.
"அது என்னப்பா, தனியா ஒரு பண்டில் வெச்சிருக்கே?" ஜக்கு கேட்டான்.
"எங்கடா?"
"அதோ மேல் ஷெல்ஃப்ல, ரைட் ஹாண்ட் சைட் எண்டுல?"
"எடு, பாக்கலாம்!"
குமார், ஜக்குவைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு எழுந்து நின்றான்.
"ஜாக்கிரதை! பிடிச்சிக்கோ. அம்மாவை வேணா கூப்டலாமா?"
" இரு, நானே எடுப்பேன்!"
குழந்தையின் ஆர்வம் அவனுக்கு சந்தோஷமளித்தது.
"தூசு மூக்குல போகாம பொத்திக்கோ ஜக்கு. இல்லாட்டி தும்முவே."
"மூச்சைப் பிடிச்சிண்டு தான் இருக்கேன்."
"பைத்தியம். அப்படியெல்லாம் பண்ணக்கூடாது. இரு, துண்டு சுத்தி விடறேன்."
அந்தச் சிறு அட்டைப்பெட்டியைக் கீழே இறக்கி, தூசைத் தட்டினார்கள்.
"இதுல என்ன வெச்சிருக்கே?"
"இருடா. எனக்கே மறந்து போச்சு. "
அவன் அதன் கயிற்றுச் சுற்றை அவிழ்த்து, பெட்டியைத் திறந்தான். நிறைய தூசியின் கீழே கத்தைக் கத்தையாகக் காகிதங்கள். எல்லாம் அவன் எழுதிய ரிப்போர்ட்டுகள்.
"எல்லாம் வேஸ்ட். தூக்கிப் போடணும். அந்த மொறத்தை எடு."
ஜக்கு நகர்ந்து போனான். குமார், தாள்களை எடுத்துத் தனியே வைக்கத் தொடங்கினான்.
"என்ன ஆயிண்டிருக்கு. கடை பரப்பியாச்சா?" இரண்டாம் டோஸ் காப்பியுடன் மாலு வந்தாள்.
"உம்பிள்ளை தான் முதல்ல இதை க்ளீன் பண்ணலாம்னான்."
"அப்பாவுக்கேத்த பிள்ளை."
அந்தப் பெட்டி அநேகமாக காலியாகிவிட்டிருந்தது. அடியில் ஓரிரு பழைய டைரிகள் மட்டுமே இருந்தன.
"இந்த பேப்பர் குப்பையையெல்லாம் பேப்பர்காரனுக்குப் போட்டுடலாம் மாலு. அநாவசியமா இடத்தை அடைச்சிண்டு இருக்கு"
"தனியா எடுத்து வைங்க." என்று மாலு சொன்னாள்.
அவன் அந்த டைரிகளை எடுத்து தூசு தட்டி விட்டு வருஷம் பார்த்தான்.
எல்லாம் ஜக்கு பிறப்பதற்கு முன் எழுதிய டைரிகள். குழந்தை பிறந்த பின் ஏனோ அந்தப் பழக்கம் விட்டுப் போயிற்று. எழுத விஷயமில்லாமல் இல்லை. சொல்லமுடியாத சோம்பேறித்தனம். அல்லது, இனி பிரத்தியேகம் என்று எதுவுமில்லை என்பதான மனத்தின் முடிச்சு.
"இப்பல்லாம் நீங்க டைரி எழுதறதே இல்லை" என்றாள் மாலு.
"ஆமா. தோணலை"
"திரும்பத் திரும்ப அந்த போலிஸ் ஸ்டேஷன் போனேன், இவன் கொலை பண்ணான்னு எழுதறது போரடிச்சிருக்கும். இல்லாட்டி, எடிட்டர் எரிஞ்சி விழுந்தார், எழுதின மேட்டர் சரியா வரலை, மத்தியானம் மோர் சாதம் புளிச்சிப் போச்சு, பூ வாங்கிண்டு வர மறந்துட்டேன்..."
அவன் சிரித்தான்.
சராசரிகளின் அந்தரங்கம் அநேகமாக ஒரே மாதிரி தான் இருக்கின்றன. இடங்களும் பெயர்களும் சம்பவங்களும் மாறினாலும் உணர்ச்சிகள் ஒரேதரம் தான்.
அவன் ஒரு பெருமூச்சுடன் அந்த டைரிகளை எடுத்து தூசு தட்டி, தனியே வைத்தான். ரொம்ப நாளாயிற்று. முடிந்தால் ஒரு தரம் முழுக்கப் படித்துப் பார்க்கலாம்.
தன்னைத் தனக்கு மறு அறிமுகம் செய்துகொள்வது மாதிரி.
மேலும் இரண்டு மணி நேரமாயிற்று. ஒரு வழியாக ஹால், படுக்கையறை, பூஜையறை, அப்பாவின் அறை எல்லாம் சுத்தமாகி வீடு பளிச்சென்றானது. ஜக்குவுக்குப் பசித்தது.
ஒன்றரைக்கு சாப்பிட்டார்கள். கண்ணைச் சுற்றிக்கொண்டு வந்தது.
"சாயங்காலம் பீச்சுக்குப் போலாமா?" என்று ஜக்கு கேட்டான்.
"போலாமே!" என்று மனைவியைப் பார்த்தான் குமார்.
"போலாம். ராத்திரிக்கு எதாவது பண்ணிவெச்சுட்டு வந்துடறேன்." என்று மாலு சொன்னாள்.
பிற்பகல் உறக்கத்தில் வீடு ஆழ்ந்தது.
ஜக்குதான் முதலில் எழுந்தான். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என அத்தனை பேரும் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சரி, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்று நினைத்தான்.
எழுந்து வெளியே வந்து வெங்கட்டுடன் சில நிமிடங்கள் கொஞ்சிவிட்டு செடிகளையும் ஒரு சுற்று பார்வையிட்டான். மீண்டும் உள்ளே வந்தவனுக்கு, அப்பா தனியே அலமாரியில் எடுத்து வைத்திருந்த அந்த டைரிகள் கண்ணில் பட்டன.
எழுதக் கொஞ்சம் தாள்கள் இருக்குமா என்று பார்க்க அவற்றை எடுத்தான். புரட்டத் தொடங்கினான்.
4
அபூர்வமாக நான்கு சொட்டுத் தூறல் விழுந்து மண் கிளர்ச்சியுற்றிருந்தது. நிகர் சொல்ல முடியாத அந்த வாசனையின் முழுமையைக் கைப்பற்ற வீதிக்கு வந்து நின்றான் ஜக்கு. ஆச்சர்யம் தான். எத்தனையோ அபூர்வமான வாசனைகள் இருக்கின்றன. கற்பூரவல்லியின் சுகந்தம். பழனி சித்தனாதன் விபூதியின் வாசனை. ஸ்கூட்டருக்கு அப்பா போடுகிற அன்லெடட் பெட்ரோலின் வாசனை. தாத்தா தூரப்போடுகிற பன்னீர்ப் புகையிலை பாக்கெட்டில் மிச்சமிருக்கிற வாசனை. வெள்ளிக்கிழமைக் காலை வேளைகளில் அம்மாவுக்கு வாய்க்கிற விவரிக்கமுடியாத அந்த வியர்வை கலந்த தெய்வீக வாசனை. இன்னும் இருக்கின்றன. பழைய புத்தகங்களின் வாசனை. பார்க்கர் பேனாவின் மூடிக்குள் அடிக்கிற வினோத வாசனை. மின்சாரம் நின்றுபோன இரவுகள் பூசிக்கொள்கிற பூச்சிகளின் சுவாசம் நிறைந்த கதம்ப வாசனை.
ஆனால் எதுவுமே இந்த மண்வாசனைக்கு நிகரில்லை. நிச்சயம் இல்லை என்று ஜக்கு நினைத்துக்கொண்டான். ஒரே நீண்ட மூச்சில் புவியின் முழு வாசனையையும் உள்ளே இழுத்துத் தேக்கிப் பாதுகாக்க முடிந்து, நினைத்தபோதெல்லாம் வெளியே விட்டு நுகரவும் முடிந்தால் எத்தனை அருமையாயிருக்கும்! ஆனால் மண் தன் மணத்தைச் சில வினாடிகள் தான் வெளிப்படுத்துகிறது. சட்டென்று மூடிக்கொண்டு ஆட்டம்காட்டுவதில் அதற்கு அப்படியென்ன சந்தோஷமோ. அப்படியும் சொல்வதற்கில்லை. மூடி மூடி வைத்துக்கொள்கிற வரைக்கும் தான் அபூர்வங்கள் அபூர்வமாகவே இருக்கும்போலிருக்கிறது. அப்பாவின் டைரி மாதிரி.
ஜக்குவுக்கு ஒரு டைரியில் என்னென்ன விஷயங்கள் எழுதப்படும் என்று அதற்கு முன்பு தெரிந்திருக்கவில்லை. அவனது வகுப்பு டீச்சர் அழகான, பெரியதொரு டைரியை தினமும் கொண்டு வருவாள். பல நாட்களில் அதை ஸ்டாஃப் ரூமில் வைத்துவிட்டு வகுப்புக்கு வந்து, மாணவர்களைப் போய் எடுத்துவரச் சொல்லுவாள். நிறைய பேப்பர்களும் மளிகைக்கடை, மருந்துக்கடை பில்களும் அடைக்கப்பட்டு புடைத்துக்கொண்டிருக்கும் டைரி. வெறும் கணக்குகளாலான அதன் பக்கங்கள்.
டீச்சரின் நேற்றைய செலவுகள் என்ன? ஆசிரியரில்லாத பொழுதுகளில் சகமாணவன் முத்துக்குமார் பட்டியல் வாசிப்பான். ஐலைனர் முப்பத்திமூணு ரூபாய். வெண்டைக்காய் அரைக்கிலோ எட்டு ரூபாய். ஹிண்டு பேப்பர் மூணுரூபா அம்பது காசு. ஜோதி டீச்சருடன் சர்பத் சாப்பிட்ட வகையில் ஆறரை ரூபாய்.
"அதையெல்லாம் ஏண்டா படிக்கறே? டீச்சருக்குத் தெரிஞ்சா பெஞ்சு மேல நிக்கசொல்லப்போறாங்க"
"தெரிஞ்சாத் தானே?" கண்ணடிக்கிற முத்துக்குமாருக்கு டைரியின் உபயோகங்கள் குறித்து ஏதோ கொஞ்சம் தெரிந்திருந்தது. அவனது அப்பாவும் டைரி எழுதுகிறவர் தான். அந்த வாரத்தில் அவனது அம்மாவுடன் எத்தனை சண்டைகள், என்னென்ன காரணத்துக்காகப் போட்டிருக்கிறார் என்பதை அவரது டைரியிலிருந்து தெரிந்துகொள்ளலாம் என்று அவன் சொன்னான். வீட்டில் நடக்கிற சண்டைகளைப் பதிவு செய்து வைப்பதற்காகவா அத்தனைக் கலையழகுடன் வழுவழுப்பான தாள்களைத் தொடுத்து வடிவமைத்து, கடையில் விற்பார்கள்?
ஒரு பள்ளிப்பாட நோட்டுகளோ புத்தகங்களோ டைரி அளவுக்கு ஏன் அழகாக இருப்பதில்லை? அவை அத்தனை முக்கியமில்லையா? அல்லது டைரியில் எழுதப்படவேண்டிய அத்தனை முக்கியமான விஷயங்கள் தான் என்ன?
ஜக்கு வெகு நாட்கள் இதை யோசித்து வந்திருக்கிறான். உதாரணம் காட்டக்கூடிய டைரிக்குறிப்புகள் என்று ஏதாவது உண்டா? கணக்கு வழக்குகள் எழுதவும் கோலம் போட்டுப் பார்க்கவும் கேட்டு ரசித்தப் பாடல்களை எழுதி வைக்கவுமா டைரிகள்? அதன் தோற்றத்துக்கும் வடிவத்துக்கும் வனப்புக்கும் வேறு ஏதாவது நோக்கம் இருக்கக் கூடும் என்று அவனுக்குப் படும். அந்த நோக்கம் தான் என்ன?
அவன் தெரிந்துகொள்ள மிகவும் விரும்பினான். அவனது அப்பா டைரி எழுதுபவராக இருந்திருக்கிறார் என்பதே அவனுக்கு அன்று தான் தெரியவந்தது. பரணை சுத்தம் செய்ய நேர்ந்து அகப்பட்ட அவரது மிகப்பழங்காலத்து டைரியைப் பார்த்தபோது. அடடே என்று மனத்துக்குள் வியந்தான். ஆனால் ஒரு வேளை அப்பாவும் பிளேடு நாலு, ரேசர் ஒண்ணு, ஹமாம் சோப்பு ஆறு என்று எழுதிவைத்திருக்கமாட்டார் என்று என்ன நிச்சயம்? கண்ணைப் பறிக்கிற டைரிகளின் பக்கங்களை கௌரவிக்கிற விதமாக உலகில் யாராவது ஒருத்தராவது அவசியம் ஏதாவது எழுதியிருக்கத் தான் வேண்டும். வீட்டுக் கணக்குகளோ, வெற்றுக் கவிதைகளோ, வீண் சண்டைகள் பற்றிய விவரமான குறிப்புகளோ அல்ல. வேறு ஏதாவது. ரொம்ப முக்கியமாக. டைரிகளில் பதிவதற்கென்றே உற்பத்தியான விதமாக.
அவன் புரட்டத்தொடங்கிய அப்பாவின் டைரியில் முதலில் மிகச் சாதாரணமான நிகழ்வுகள் தான் பதிவாகியிருந்தன. பஸ் பிரேக் டவுனாகி அலுவலகத்துக்கு அவர் தாமதமாகப் போக நேர்ந்திருக்கிறது. மதியத்துக்கென்று எடுத்துச்சென்ற தயிர் சாதம் புளித்துவிட்டது. பிறந்த நாள் சட்டையை அலுவலகத்தில் நியூஸ் எடிட்டர் மிகவும் பாராட்டியிருக்கிறார். கும்மிடிப்பூண்டி போக நேர்ந்த வகையில் ஆன பயணச்செலவு வவுச்சர் ஒரு வழியாகப் பதினைந்து தினங்கள் கழித்து பாஸ் ஆகிவிட்டது. புதிதாகச் சேர்ந்திருக்கும் ப்ரூஃப் ரீடருக்கு ரென் அண்ட் மார்ட்டின் வாங்கிக்கொடுக்கவேண்டும்.
டைரியைப் படிக்கலாமா கூடாதா என்கிற கேள்வி அவனுக்குள் இருந்தாலும் படிக்கத் தொடங்கியதும் அக்கேள்விக்கு அர்த்தமேதுமில்லை என்கிற தீர்மானம் வந்துவிட்டது. அடடே, அப்பாவும் டைரியின் அழகான பக்கங்களை கௌரவிக்கத் தெரியாதவராகத் தான் இருந்திருக்கிறார். ஒருவேளை அதை அவரே உணர்ந்து தான் பிறகு எழுதுவதை நிறுத்திவிட்டாரோ என்னவோ.
அவன் வருஷம் பார்த்தான். அவன் பிறப்பதற்கு இரண்டு வருடங்கள் முந்தைய டைரி அது. எழுதாமல் விடப்பட்ட தாள்கள் ஏதும் இருந்தால் கிழித்து எடுத்துப் படம் வரைந்துபார்க்கலாம் என்று புரட்டினான். இன்னுமொரு பக்கம் அவனை நிறுத்திப் படிக்கச் சொன்னது. படிக்கப்படிக்க, அவன் முகம் விரிந்தது. புன்னகையின் இயல்பான மொட்டவிழ்தல். உம். இது விஷயம். பரவாயில்லை. எழுதிவைக்கக் கொஞ்சம் தகுதி வாய்ந்தது தான். உபயோகம் ஏதுமில்லை என்றாலும் தற்செயலாகப் புரட்டும்போது ஒரு சிறிய சுவாரசியம் அவசியம் மிஞ்சும். அப்பா, தாத்தா மாதிரி தலையெல்லாம் நரைத்து மூட்டுகளில் வலி உண்டாகி, எப்போதும் பிரண்டைத்தைலம், வாதவேங்கைத் தைலம் என்று எதையாவது பூசிக்கொண்டு இருக்கிற நாட்களில் எடுத்துப் படித்துப் பார்த்தால் வரக்கூடிய சுவாரசியம்.
அன்று அப்பா வினோதமான கனவொன்றைக் கண்டிருக்கிறார். கனவில் அவரது கால்கள் நீண்டுகொண்டே போய் பதினொன்றரை அடி உயரத்துக்கு ஆகிவிட்டது. கால்கள் மட்டும் பதினொன்றரை அடி. அதற்குமேல் உடம்பு, தலை. மொத்தமாக அவர் பதினைந்தடி உயரத்தில் இருந்திருக்கிறார். உட்கார்ந்து அரிசி உப்புமா சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இப்படியாகிவிட்டது. சமையலறையிலிருந்து கையில் குழம்புப் பாத்திரத்துடன் வந்துகொண்டிருந்த பாட்டி இதை கவனித்துவிட்டு, "என்னடா குமார்? கூரையைத் தொட்டுண்டிருக்கே? இறங்கிவா. எப்படி சாப்டுவே?" என்று கேட்டாள்.
அப்போது தான் அப்பா அதை கவனித்தார். கால் பதினொன்றரை அடியும் உடம்பும் தலையும் சேர்ந்து மொத்தமாகப் பதினைந்தடியும் வளர்ந்திருந்தாலும் கைகள் மட்டும் பழையபடிதான் இருக்கின்றன.
அடக்கடவுளே! பதினாலடி உயரத்திலிருந்து இரண்டடி மட்டுமே தொங்கும் கையைக்கொண்டு, மொத்தம் பதினைந்தடி தொலைவில் தரையில் இருக்கும் தட்டிலிருந்து எப்படி நான் அரிசி உப்புமாவை எடுத்துச் சாப்பிடுவேன்?
"ஐயோ, அம்மா, எனக்குக் கை எட்டலையே!" அப்பாவுக்குக் கண்கள் நிறைந்துவிட்டன.
"என்ன பண்றது? இப்படி வளர்ந்துட்டியே. பேசாம படுத்துண்டு சாப்டு" என்று பாட்டி சொன்னாள்.
அப்பா படுக்க முனைந்தபோது அறையின் இரு எல்லைச் சுவரும் இடித்தது. சாப்பிடத் தோதுப்படவில்லை.
"என்னடா இது? உனக்குப் பிடிக்குமேன்னு மணல் மணலா அரிசி உப்புமா பண்ணிவெச்சிருக்கேன். இப்படி சாப்பிடமுடியாம ஆயிடுத்தே" துளி பதற்றமும் இல்லாமல் பாட்டி ஒரு டாகுமெண்டரி படத்தின் வருணனையாளர் தொனியில் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாள்.
"சரி, போ. நாங்க சாப்பிடறோம்" என்று பாட்டியும் தாத்தாவும் உட்கார்ந்து அரிசி உப்புமா சாப்பிடத்தொடங்கியதும் அப்பா அப்படியே தவழ்ந்து வீட்டை விட்டு வெளியேறி எழுந்து நின்றார். வாசலில் காம்பவுண்டு சுவரைக்காட்டிலும் அவர் அப்போது உயரமாயிருந்தார். கடவுளே, நான் எப்படி இன்று ஆபீஸ் போவேன்? மெரினா கடற்கரையில் மாலை பொதுக்கூட்டம் இருக்கிறது. பிரதமர் வருகிறார். மாநில முதல்வர் வருகிறார். மிக முக்கியமான கூட்டம். சட்டம் ஒழுங்குப் பிரச்னை தீவிரமாயிருக்கிற காலம். ஏதும் அசம்பாவிதம் நடக்கலாம் என்று உளவுத்துறை ரகசியத்தகவல் வேறு அளித்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்காதிருந்தால் நாட்டுக்கு நல்லது. நடந்தால் பத்திரிகைகளுக்கு முக்கியச் செய்தி. நிறைய பிரதிகள் விற்கும்.
ஆனால் பதினைந்தடி உயர நிருபரை எப்படி காவல்துறையினர் கூட்டத்துக்கு அனுமதிப்பார்கள்?
கவலையுடன் அவர் அலுவலகத்துக்கு நடக்க ஆரம்பித்தார்.
ஜக்குவுக்கு டைரியின் இந்தப் பக்கம் மிகுந்த மனக்கிளர்ச்சியை உண்டுபண்ணியது. ஒரு கனவு. எத்தனை வினோதமானது! சட்டென்று ஒரு மனிதன் அத்தனை உசரம் கொண்டவனாக ஆகிவிட முடிந்தால் உண்மையில் எப்படி இருக்கும்? மிகவும் குள்ளமான மனிதர்களைப் பற்றி அவன் படித்திருந்த கதைகள் ஞாபகத்துக்கு வந்தன.
தாத்தா கூட கட்டைவிரல் கலியபெருமாள் என்றொரு கதை சொல்லுவார். அவனுக்கு நாலைந்து வயது இருக்கும்போது. கட்டை விரல் அளவே உள்ள கலியபெருமாள், ஒரு வத்திப்பெட்டியில் வண்டிகட்டிக்கொண்டு பலகாத தூரத்தில் ஒரு இளவரசியைச் சந்தித்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா என்று கேட்கப் புறப்பட்டுப் போவான். நிறைய அவமானங்களுக்குப் பிறகு சட்டென்று கானகத்தில் அவன் சந்திக்க நேருகிற ஒரு தேவதை அவனுக்கு உதவி புரிந்து, இளவரசியை சுண்டுவிரல் அளவுக்கு மாற்றிவிடும்.
பிறகென்ன? கலியபெருமாளை மகாராஜாவே வேண்டி விரும்பிக்கேட்டுத் தன் மகளை மணம் செய்து கொடுப்பான். "அந்தக் கல்யாணத்துல மகாராஜா வாங்கிக்கொடுத்த வேஷ்டி தான் இது" என்று தான் கட்டியிருக்கும் மிகப் பழைய, பழுப்பேறிய வேட்டியைச் சுட்டிக்காட்டிச் சிரித்து, கதையை முடிப்பார் தாத்தா.
தாத்தா சொன்ன கதைகள் அனைத்துமே கனவுகளிலிருந்து எடுத்ததாகத்தான் இருக்கும் என்று நினைப்பான் ஜக்கு. அப்பா பதினைந்தடி உயரத்துக்கு வளர்ந்த கனவைக்கூட ஒரு கதையாக மாற்றிவிட முடியுமே.
அவனுக்கு அந்த டைரியைப் படிப்பதில் சுவாரசியம் உண்டாகிவிட்டது. முழுக்கப் படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வாசலில் நிழலாடியது. குட்டி தான்.
"வா" என்று முகம் மலர்ந்து கூப்பிட்டான் ஜக்கு. அவனது சிறிய தோட்டத்தின் நடுவே கூடை நாற்காலி போட்டு அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான்.
"நீ என்ன பண்ணிட்டிருக்கே? பாடமா படிக்கறே?'' என்று கேட்டாள் குட்டி.
"உஷ்!" என்றான் ஜக்கு. "பாடம் இல்லே. இது எங்கப்பாவோட டைரி."
"என்ன எழுதியிருக்கார்?"
"படிச்சிண்டிருக்கேன். வெரி இண்டிரஸ்டிங்"
"இப்படி உக்காந்து படிக்கறியே. பார்த்தா திட்டமாட்டார்?"
"ச்சூ. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியெல்லாம் தூங்கறா. சண்டே ஸ்பெஷல்!" அவன் புன்னகை செய்தான்.
"நீ தூங்கலையா?"
"ம்ஹும். தூக்கம் வரலை. குட்டி, உனக்கொரு கதை சொல்லட்டுமா? கதை இல்லை. நிஜமா நடந்த விஷயம்"
"சொல்லு, சொல்லு" ஆர்வமுடன் அவனருகே வந்து செம்மண்ணில் உட்கார்ந்துகொண்டாள் குட்டி. ஒரு தாமரை பூத்தது மாதிரி அவளது பாவாடை அவளைச் சுற்றி புஸ்ஸென்று பூத்து நின்றது.
"நேத்து ராத்திரி ஒரு அதிசயம் நடந்தது. நீ யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னா, சொல்றேன்."
"ப்ராமிஸா சொல்லமாட்டேண்டா. சொல்லு" என்றாள் குட்டி. அவளுக்கும் அந்தப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் இந்த அதிசயங்களில் எது ஒன்றும் ஏன் தனக்கு நடக்க மாட்டேனென்கிறது? எல்லாமே ஜக்குவுக்கு மட்டுமே நடக்கிறது. அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே தினசரி காட்சி அளிக்கிறான். அறிவின் பெரும் சுடர் அவன் முகத்தில் நிரந்தரமாகப் படர்ந்து இருக்கிறது. அவன் புன்னகையிலும் பேச்சிலும் செயலிலும் எப்போதும் ஒரு மேதையின் சாயல் தென்படுகிறது. சந்தேகமேயில்லை. மேதை தான். சிறு வயதிலேயே மேதை ஆகிவிட்டவன்.
"உம்! சொல்லுடா" அவசரமாகக் கேட்டாள் குட்டி.
"சொல்றேன். ஆனா யார்கிட்டயும் சொல்லிடாதே. அப்புறம் மேதமேடிக்ஸ்ல மார்க் குறைஞ்சுடும். ஓகே?"
"உம் சரி. சொல்லு."
நேத்து ராத்திரி தூங்கிண்டே இருந்தேனா? திடீர்னு ஒரு வெளிச்சம். கண் முழிச்சிப் பார்த்தா ஒரு ஏஞ்சல் என் எதிர்ல இருக்கா. மெதுவா என் காலைப் பிடிச்சி அமுக்கி விட்டுண்டிருக்கா. இதுல என்ன விஷயம்னா, அவ தொடும்போதெல்லாம் என் கால் நீண்டுண்டே போச்சு. அட்லீஸ்ட் ஒரு ஃபிஃப்டீன் ஃபீட்டாவது பெரிசாயிருக்கும்..."
"ஐயோ!"
"மிச்சத்தையும் கேளு! ரொம்ப பெரியவனாயிட்டேன். நின்ன இடத்துலேருந்தே எனக்கு பத்து கிலோமீட்டர் தூரம் வரைக்கும் தெரிய ஆரம்பிச்சுடுத்து. டென் மினிட்ஸ்ல இந்த ஊரையே ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்தேன்."
"ஆர் யு ஷ்யூர்?" என்று கத்தினாள் குட்டி.
"ஆமாடி. எனக்கே நம்ப முடியலை. ஜஸ்ட் ஒரு ஹாஃபனவர் இருக்கும். அப்புறம் பயமாயிடுத்து. அந்த தேவதையை மறுபடியும் கூப்பிட்டு பழையபடியே மாத்திடுன்னு கேட்டேன்.."
"நிஜமாவா?"
"ஆமா, ஆமா! அவளும் மறுபடி பழையபடியே மாத்திட்டா. ஆனா நான் எப்ப நினைச்சாலும் அவ்ளோ பெரியவனா ஆயிடமுடியும்னு ஒரு சக்தியைக் குடுத்துட்டுப் போயிட்டா."
குட்டிக்குப் பேச்சற்றுப் போனது. கண்கள் இமைக்காமல் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
"எப்போ நினைச்சாலும் உன்னால ஃபிஃப்டீன் ஃபீட்டுக்கு உயரமா ஆகமுடியுமா?"
"ஆமா. முடியும். இன்னிக்கு நைட் பன்னெண்டு மணிக்கு நீ முழிச்சிண்டிரு, உங்க வீட்டுல. நான் ஃபிஃப்டீன் ஃபீட் ஜக்குவா வரேன் பார்!"
"அம்மாடி!" என்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டாள் குட்டி. இரவுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
5
அலுவலகத்துக்குப் புறப்படுகிற அவசரக் கணங்களுக்குள் கொஞ்சம் கவிதை ஒளிந்திருக்கிறது. நிதானமாகச் செய்கிறபோது வேலைகளில் அத்தனை சுலபமாக அகப்படாத நேர்த்தி, எப்படியோ அவசரத்தில் வாய்த்துவிடுகிறது. கிறுக்கல் எழுத்துகள், எழுதியவன் மேதையோ என எண்ணச்செய்துவிடுவது போல.
மாலு சுலோகங்களை உச்சரித்துக்கொண்டிருந்த சூட்டிலேயே சாதம் ஆகிவிட்டது. ரசம் பொங்கிவிட்டது. குளியலறைத் துணிகள் பயந்து எழுந்து பக்கெட்டில் சங்கமமாயின. குழாய் தானே நீர் சுரந்தது. வாஷிங் மெஷின் சப்தமிடத் தொடங்கியது. ஜக்குவின் லஞ்ச் பாக்ஸில் தக்காளி சாதம் ஆவிபொங்க அடைக்கலமானது. தொட்டுக்கத் தனியா ப்ளாஸ்டிக் பையிலே சிப்ஸ் வெச்சிருக்கேன் ஜக்கூ... குரலுடன் அவளும் விரைந்து கடந்து வாசலை அடைந்தாள்.
ஈசிசேரும் மாமனாரும் வராண்டாவில் இருந்தார்கள். கையில் விரிந்த ஹிண்டுவில், லாரிகள் வேலை நிறுத்தம் செய்திருந்தன. "போறது போ. இன்னிக்கு டிராஃபிக்கில் மாட்டாம டயத்துக்கு ஆபீஸ் போவே"
உலகின் ஒவ்வொரு அசைவையும் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தன் வாழ்வின் அங்கமாக நோக்கும் பக்குவம் மிகப்பெரிது. கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் ஏதாவது கொஞ்சம் சூடாகப் பேசியதாக ஹிந்து நாளிதழ் சொல்லிவிட்டால், உடனே அவருக்குத் தன் உத்தியோக காலத்து சிநேகிதர் ஒருத்தரின் நினைவு வந்துவிடும். பெங்களூரில் மகள் வீட்டுக்குப் பத்து நாள் தங்கிவரப் போன சிநேகிதர். பிரச்னை ஏதுமங்கே வராது இருக்கவேண்டும். தமிழர் குடியிருப்புகள் தாக்கப்படாதிருக்கவேண்டும். தமது நண்பர் நல்லபடி திரும்பி வரவேண்டும். வரும்போது சந்தனத்தாலான சில பொருட்கள் வாங்கிவருவதாக அவர் சொல்லியிருக்கிறார். குளிரினால் போட்டுக்கொள்ள, வாகானதொரு ஸ்வெட்டரும்.
"மெட்ராஸ்ல ஏதுப்பா குளிர்?" என்று குமார் புன்னகையுடன் கேட்டால் பதில் வராது. ஆனால், நண்பரும் ஸ்வெட்டரும் பத்திரமாக வந்து சேர்ந்தபிறகு தினசரி மாலை வேளைகளில் ஏனோ அவருக்குக் குளிருவது போலிருக்கும்.
மாலுவுக்கு, குமாரின் அப்பா முதல் குழந்தை. அப்படி நினைக்க முடிவதால் தான் அவரது உலகத்துச் சாதாரணங்களைத் தனது வினோதங்களாக நினைக்கமுடியாமலிருக்கிறது.
"கதவை சாத்திக்கோங்கப்பா. நான் வரேன்"
காற்றோடு தகவல் சொல்லி, சாலையில் பாய்ந்தாகிவிட்டது. முக்கால் மணி நேர தூரத்தில் அலுவலகம் இருக்கிறது. அது ஒரு அழகுசாதனங்கள் விற்பனை செய்கிற நிறுவனம். பளபளப்பான கண்ணாடிக் கதவுகளின்பின்னே இயங்குகிற பெண்களின் பிரத்தியேக உலகம். வகைவகையான வண்ணக்குழம்புகள், நகப் பூச்சுகள். முகப்பொலிவுக்கு. முடிப் பொலிவுக்கு. கைக்கடக்கமான கைப்பைகள். கண்ணாடிகள். கைக்குட்டைகள். கலையின் அதிகபட்ச சாத்தியங்களை உள்ளடக்கிய காலணிகள். அ, பெண்களூக்கென்று தயாரிக்கும்போது அற்பப்பொருட்கள் கூட அமரத்துவமடைந்துவிடுகின்றன. வெறும் காசுக்கு நிகரானதா அவற்றின் மதிப்பு?
கணிப்பொறியின் முன் அமர்ந்து கணக்குகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் மாலுவுக்கு இந்தச் சிந்தனைதான் எப்போதுமிருக்கும். வியர்வையைத் துடைக்கக் கூட மனசு வராத நேர்த்தியிலா படுபாவிகள் கைக்குட்டையை வடிவமைப்பார்கள்! நாநூற்று நாற்பது ரூபாய்க்கு நேற்று ஒரு தினுசுக் குடை வந்திருக்கிறது. பிறந்த அணில் குஞ்சு மாதிரி உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிற மென்குடை. விரித்தால் சொர்க்கத்தின் கதவுகள் திறப்பது போல் என்னவொரு வர்ணஜாலம்! கோட் நம்பர்களின் வடிவில் அந்தக் கடை முழுவதும் அவளது கணிப்பொறிக்கும் விரல்களுக்குமிடையே அணிவகுத்துக்கொண்டிருந்தன.
"ஹலோ"
தலை உயர்த்திப் பார்த்தாள் மாலு. அட, காஞ்சனா.
"வா" என்றாள் புன்னகையுடன்.
"இங்கதான் இருக்கிங்களா?"
வேறெங்கே இருக்கமுடியும்? சி.ஏ. பாதியில் இருக்கிறது. முடித்தால் ஒரு புதிய எதிர்காலம் ஓரளவு ஒளிமயமாகத் தென்படக்கூடும். இங்கே விற்கிற பொருள்களில் சிலவற்றையாவது யோசிக்காமல் வாங்கவும் முடியும். ஜக்குவைத் தயங்காமல் சற்றே பெரிய பள்ளிக்கு அனுப்பமுடியும். மூன்று மாதங்களாக உபயோகிக்க முடியாமல் கிடக்கிற குமாரின் ஸ்கூட்டரைத் தூக்கிக் கடாசிவிட்டு ஒரு நல்ல வண்டி வாங்கமுடியும். வீட்டு டிவிக்கு எஸ்பேண்ட் போடமுடியும். ஒரு வெற்றி கண்டுவிட்டால் அதன் வாசனையில் இன்னும் சில வெற்றிகளும் வந்துவிடக்கூடும். குமாருக்கு ஹிண்டுவில் கூட வேலை கிடைத்துவிடலாம். அல்லது சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பதிப்பு என்கிற வதந்தி உண்மையாகி, அங்கே ஓரிடம் அமையக்கூடும். இரண்டு நல்ல சம்பளங்களில் ஜக்குவின் எதிர்காலத்தை இன்னும் வண்ணமயமாகக் கற்பனை செய்து வங்கியில் போட்டுவைக்கலாம். முதலீடு செய்யாத கனவுகளுக்கே வட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறது குழந்தை. வயதுக்கு மீறிய புத்திசாலித்தனத்தில் பலசமயம் பிரமிக்கச் செய்துவிடுகிறான்.
"நம்பவே முடியலே காஞ்சனா... நேத்து கேக்கறான், அம்மா நான் டைரி எழுதப்போறேன், ஒன்ணு வாங்கித்தரியான்னான் பாரு... தூக்கி வாரிப்போட்டுடுத்து எனக்கு..."
ஷாப்பிங் முடித்திருந்த காஞ்சனாவுக்கு உட்கார்ந்து பேச அவகாசம் இருந்தது. ஆனால் மாலு டியூட்டியில் அல்லவா இருக்கிறாள்?
அதனால் பரவாயில்லை. வா, ஒரு காப்பி சாப்பிடலாம் என்று எழுந்து, கிளம்பினாள் மாலு. இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கிறவள். ஒரு அவசர ஆத்திரத்துக்குக் கூடுதல் பால் பாக்கெட் வாங்கிச் சமாளிக்க எப்போதும் உதவுபவள். தீபாவளிக்கு இனிப்புகள், கிருஷ்ண ஜெயந்திக்குச் சீடை என்று தட்டுகள் மாற்றிக்கொள்கிற நெருக்கத்துக்கு ஒரு காப்பி அவசியமே.
"இவளே, கொஞ்சம் பாத்துக்கோ. வந்துடறேன்" என்று வெளியே வந்து சாலையைக்கடந்து எதிரே ஓட்டலுக்குள் நுழைந்து ஒரு ஓரத்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார்கள். கடவுளுக்கு நன்றி. வெளியே வந்தால் தான் சூழ்நிலையின் சூடு தெரிகிறது. பளபளப்பான அழகுசாதன நிறுவனத்தில் விற்கிற பொருட்களை வாங்கமுடியாவிட்டாலும் அந்தச் சூழ்நிலையின் குளுமையிலாவது வாழ அனுமதித்திருக்கிறது வாழ்க்கை.
ஆயினும் சொல்வதற்கில்லை. சி.ஏ. முடித்துவிட்டால் ஏஸி ஓட்டலுக்கே காஞ்சனாவை அழைத்துப் போகமுடியும்.
"சொல்லு" என்றாள் காஞ்சனா. "ஆனா ஒண்ணு மாலா. உங்க பையன் தான் என் பொண்ணுக்கு ரோல் மாடல். வீட்டுல எப்பப்பார் அவனைப் பத்தித்தான் பேசிக்கிட்டே இருக்கா. ஒரு நாளைக்கு நூறு ஜக்கு சொல்லாட்டி அவளுக்குத் தலை வெடிச்சிடும். உங்க வீட்டு நாய்...அதும்பேர் என்ன, ஆங்.. வெங்கடாஜலபதி! ஹும். என்ன ஒரு பேர் வெச்சிருக்கான் பாருங்க! அது கந்தசஷ்டி கவசம் கேசட் போட்டதும் கைகூப்புதாமே? எப்பிடி கத்துக்குடுத்தான்?"
மாலு சிரித்தாள். இன்னது தான் செய்திருப்பான் என்று யூகிக்கவே இடம் கொடுக்காத ஜக்கு. பத்து நாட்கள் முன்பு முளைவிட்டிருந்த வேம்புக்குத் தயிர்சாதத்தை அவன் வைக்கும்போது அவள் பார்த்துவிட்டாள்.
"என்னடா இது? வேப்பஞ்செடிக்குத் தயிர்சாதத்தை வெக்கறே?"
"எதுவுமே வெக்காம முளைக்கும்மா வேப்பமரம்...ஆனாலும் ஏதாவது நாம வெச்சாத்தானே அது நம்முது?" என்றான்.
"இவனைப் பார்த்துட்டு எங்க குட்டி ஒரு வேப்பங்கன்னை எடுத்துக்கிட்டு வந்து நட்டு, இந்தக்ஷணம் இதுக்கு ஒரு பாக்கெட் பால் ஊத்தினாத்தான் ஆச்சுன்னு அடம்பிடிக்கறா" சொல்லிவிட்டுத் தன்னைமறந்து சிரித்தாள் காஞ்சனா.
"குழந்தைங்க படிப்பு தவிரவும் மத்ததுல ஆர்வமா இருக்கறது சந்தோஷம் தான் காஞ்சனா. ஆனா உலகத்துக்குப் பொருந்தாம போயிடாம பாத்துக்கணும்." என்றாள் மாலு.
"எங்கியாவது ஊருக்குப் போகணும்னு தொணப்பிக்கிட்டே இருக்கா குட்டி"
"கூட்டிண்டு போகவேண்டியது தானே?"
"அதான், வர சண்டே மகாபலிபுரம் போகலாம்னு இருக்கோம்."
"நைஸ் ஐடியா" என்றாள் மாலு.
ஜக்குவைக்கூட எங்காவது அழைத்துப் போகவேண்டும். மெரினாவையும் உயிரியல் பூங்காவையும் தவிர வேறு எதையும் அவன் பார்த்ததில்லை. சொல்லிக்கொள்ளும்படியான உறவினர்கள் யாரும் கொஞ்ச நேரம் பயணம் செய்து போகக்கூடிய தூரங்களில் இல்லை. அவளது அப்பா, அம்மா இருக்கும் கேகே நகருக்கு அரை மணியில் போய்விடலாம். அத்தைகள், மாமாக்கள், பெரியம்மாக்கள், சித்திகள் என்று படையாகத் திரளக்கூடிய உறவுகள் இல்லாது போனது துரதிருஷ்டமே. கொஞ்சம் திறந்த மனத்துடன் யோசித்தால் உலகம் முழுவதையும் உறவாக்கிக்கொண்டுவிடமுடியும் தான். ஆனால் அவசரத்துக்கு பால் பாக்கெட் கொடுத்து உதவுகிறவளுக்கு ஒரு கப் காப்பி என்று எழுகிற சிந்தனையை ஏனோ தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறது.
மேலும் பொருளாதாரக் காரணங்கள். மூன்றுபேர் ஒரு பயணம் என்று கிளம்பினால் மாதாந்திர பட்ஜெட்டில் மிகப்பெரிய துண்டு விழுந்துவிடும். ஓவர்டைமில் சரிக்கட்டிவிடக்கூடிய துண்டுகள் தான் என்றாலும் வீட்டில் இருக்கக் கிடைக்கிற மிகக்கொஞ்சம் பொழுதுகளையும் அலுவலகத்தின் குளிர்க்கண்ணாடிகளுக்குப் பின்னால் கழிக்க நேருவது எந்தச் சமாதானத்துக்கும் உட்பட மறுக்கிறது. கடவுளுக்கு நன்றி சொல்ல முடியாத குளுமையின் நிழல் அது - அப்போது மட்டும்.
"நானும் யோசிச்சிக்கிட்டுத் தான் இருக்கேன் காஞ்சனா. எங்கியாவது ஒரு நாள் வெளில போகணும். குழந்தை பாவம் ஏங்கிப்போயிருக்கான். ரொம்பநாளாச்சு நாங்க வீட்டைவிட்டுக் கிளம்பியே"
"வாங்களேன், மகாபலிபுரத்துக்கு?" என்றாள் காஞ்சனா.
ஞாயிற்றுக்கிழமை மகாபலிபுரம் என்றால் ஜக்கு ஒரு பறவையாகிவிடுவான். அதுவும் குட்டி உடன் வருகிறாள், இரண்டு குடும்பங்களும் ஒன்றாகப் போகின்றன என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் அதிலும் சங்கடங்கள் இருக்கின்றன. பொருளாதாரச் சங்கடங்கள். டிக்கெட் வாங்குவதில் தொடங்குகிற இருப்பியல் சங்கடங்கள். வெளியே பேசிவிட முடியாத, மிகவும் அந்தரங்கமான நெருடல்களைத் தரக்கூடியவை அவை. ஆயினும் யோசிக்கவேண்டிய விஷயம் தான். குமாரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
இரவு ஜக்கு தூங்கியபிறகு அவள் குமாரிடம் விஷயத்தைத் தெரிவித்தபோது உண்மையிலேயே அது ஒரு நல்ல யோசனை என்று அவன் சொன்னான். "மகாபலிபுரம் பக்கத்துல தான் இருக்கு. சரித்திர பூமி. நீ சிவகாமியின் சபதம் படிச்சிருக்கியா?"
அவள் சிவகாமியின் சபதம் படித்திருக்கவில்லை. ஆனால் சில பழைய விஜயகுமார் படங்களில் மகாபலிபுரத்தைப் பார்த்திருக்கிறாள். கொளுத்துகிற வெயிலில் உச்சிப்பாறையில் நிகழும் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள். கடவுளே! மண்ணெங்கும் அழகு கொட்டிக்கிடக்கிற இடத்தில் எப்படி இவர்களால் அடிதடிக் காட்சிகளை அந்தரங்க சுத்தியுடன் படம்பிடிக்கமுடிகிறது? கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாலேயே கலையின் சான்னித்தியம் ஒரு பொருட்டில்லாமலாகிவிடுமா என்ன?
நகம் கடித்தபடி சண்டைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டே யோசிப்பாள். அது ஞாபகத்துக்கு வந்துவிட்டதில், மெல்லிய முறுவலொன்று அவளை மீறிப் பூத்து உதிர்ந்தது.
"அப்ப போலாமா?" நிச்சயப்படுத்திக்கொள்ளும்விதமாக மீண்டும் கேட்டாள்.
"போலாமே. என்ன பிரச்னை? வீட்டை அப்பா பார்த்துப்பார். நாம போயிட்டு வரலாம். என்ன ஒரு முன்னூறு ரூபா செலவு. பாதிக்கு மேலயே நாம செலவு பண்றதுன்னாலும் இருநூறு தாண்டாது. பரவாயில்லை. போகலாம்" என்று தீர்மானமாகச் சொன்னான் அவன். "எதுக்கும் கொஞ்சம் நிறையவே புளியோதரை கலந்து எடுத்துண்டுடு."
"அப்ப சரி" என்று உறங்கிப்போனாள் மாலு.
விடிந்ததும் ஜக்குவிடம் விஷயத்தைச் சொல்லி, அவனது குதூகலத்தை அள்ளி விழுங்கத் தயாராக இருந்தாள் அவள். ஆனால் குட்டி குடும்பத்துடன் ஒன்றாக மகாபலிபுரம் போகிறோம் என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னபோதும் அவனது முகத்தில் மகிழ்ச்சியின் முழுமை தென்படாதது அவளுக்கு ஆச்சர்யமாயிருந்தது.
"ஏண்டா என்னமோ மாதிரி இருக்கே காலங்கார்த்தால?"
"ஒண்ணுமில்லம்மா" என்றான் ஜக்கு.
"உனக்கு சந்தோஷம் தானே, மகாபலிபுரம் போறது?"
"ஆமாம்மா"
"என்ன நீ? ஆமான்னு சாதாரணமா சொல்றே? பயங்கர ஹேப்பி இல்லியா உனக்கு?" அவனது பாஷையிலேயே உற்சாகப்படுத்தும் விதமாகக் கேட்டாள்.
"ஹேப்பி தான்"
"ம்ஹும். சரியில்லை! என்ன ஆச்சு உனக்கு? குட்டியோட சண்டையா?"
"இல்லியே?" என்றான் அவன்.
"பின்ன? ஏன் சுரத்தே காணும்?"
"ஒண்ணும் இல்லே" என்று விறுவிறுவென வாசலுக்குப் போனான் ஜக்கு.
ஏதோ இருக்கிறது என்று மாலுவுக்கு உறுதியாகத் தோன்றியது.
6
குட்டிக்கு அந்தக் கனவு மிகவும் வினோதமாக இருந்தது. இதற்கு முன் இப்படி ஏதும் வந்ததில்லை. கனவில் அதிர்ச்சி அடையும் விதமாகவும் விழித்து எழுந்ததும் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரியும்.
பொதுவாக அவளூக்கு வருகிற கனவுகளில் பத்துகோடி குட் டே பிஸ்கெட்டுகள் மலைமலையாக அவள் முன் குவிந்திருக்கும். சாப்பிட முடியாமல் அவஸ்தைப்படுவாள். அல்லது கடற்கரையில் அலை வந்து தொடும் தூரத்தில் அவள் நின்றிருப்பாள். ஆக்ரோஷமாக உயர்ந்து எழுந்து தூரத்திலிருந்து ஓடிவரும் அலை, அவள் காலருகே வரும்போது மிகப்பெரியதொரு பட்டுப் பாவாடையாக மாறிவிடும். மடிக்க மடிக்கத் தீரவே தீராது. அவளது சின்னக் கரங்கள் சோர்ந்துபோய், சே, போ என்று தூக்கி எறிந்துவிடுவாள். வேறொரு கனவில் அவள் வீட்டுத் தோட்டத்தில் நட்டுவைத்திருக்கும் எலுமிச்சைக் கன்றில் அபூர்வமாகக் ஆகாய நீலத்தில் பழங்கள் பழுத்துக் குலுங்கும்.
எப்படி இது, நடக்கமுடியாதவை மட்டுமே கனவுகளாக வருகின்றன என்று சொற்களில்லாமல் நினைப்பாள். அதற்குமேல் அவள் தன் கனவுகளுக்குப் பெரிய முக்கியத்துவம் அளித்ததில்லை. ஒரே ஒரு முறை மட்டும் ஹோம் ஒர்க் சரியாகச் செய்யாததற்காக டீச்சர் பெஞ்சு மேல் நிற்கவைத்து முழங்காலுக்குக் கீழே அடிப்பது மாதிரி கனவு கண்டிருக்கிறாள். அன்று அடம் பிடித்துப் பள்ளிக்குப் போகாமல் இருந்துவிட்டாள்.
நீளமாக, மிகமிக நீளமாக, பயமுறுத்தாதபடி, ரசித்து அனுபவிக்கும்விதத்தில் ஓரிரவு முழுவதும் திரைப்படம் போலக் கனவொன்று வந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைப்பாள். விரும்பிப் பார்க்கிற கார்ட்டூன் பாத்திரங்களூடன் ஒரு முழு நீளக்கனவில் பஞ்சுப் பொதிகளூக்கு நடுவே விளையாட அவள் மிகவும் விரும்பியிருந்தாள். ஆனால் வருகிற கனவுகளெல்லாம் சின்னச்சின்ன புகைப்படங்கள் போலத்தான் இருக்கின்றன.
நேற்றுக்கூட புகைப்படக் கனவு தான். சில நிமிடங்கள். சில விநாடிகளாகக் கூட இருக்கும். ஏழெட்டுக் கதவுகளை எங்கோ, எதற்கோ அவள் திறந்துகொண்டு போய்க்கொண்டே இருந்தாள். கடைசிக் கதவைத் திறக்கும்போது டோரா மரகதம் டீச்சர் கையில் ஒரு உண்டியலுடன் நிற்கப் போகிறாள் என்று கனவுக்குள் நினைவு போலொரு பிம்பம் அவள் மனத்துக்குள் மிகத் தீவிரமாக எழுந்து நின்றது. டீச்சர் கையில் பிரம்பு அல்லது புத்தகம் இருப்பது நியாயம். தனக்கேன் அவர் கையில் இருக்கப்போவது ஒரு உண்டியலாகத் தோன்றுகிறது என்றும் யோசித்தாள். மேலும் இப்படி யோசிக்க முடிகிறதே, இது எப்படி ஒரு கனவாக இருக்கும்? ஒருவேளை வெறுமனே கற்பனை தான் செய்து கொண்டிருக்கிறோமோ?
ஆனால் என்ன ஆச்சர்யம்? அந்தக் கடைசிக் கதவு திறந்தபோது அவளால் நம்பவே முடியவில்லை.
வெட்டவெளியில் ஒரு மேசை மட்டும் போடப்பட்டிருக்கிறது. ஆளரவமற்ற தனியான வெட்டவெளி. பின்னணியில் எங்கோ மரங்கள் மிக வேகவேகமாக அசைந்துகொண்டிருக்கவேண்டும். வீசி அடிக்கும் காற்றுக்கு மண்ணும் தூசியும் மேலெழுந்து பறக்கிறது. அட, அந்த மேசையின் மேல் தனக்கு முதுகு காட்டியபடியும் தியானத்தில் அமர்ந்திருக்கிற ஒரு முனிவர் போலவும் இருப்பது யார்? ஜக்குவா? ஜக்குவா அது?
"ஜக்கூ..." கூப்பிட்டபடி அவள் வேகமாக அவனருகே போய், பிடித்து இழுத்துத் திருப்பினாள்.
சந்தேகமே இல்லை. ஜக்குதான். ஆனால் என்ன இது? சம்பந்தமேயில்லாமல் ஜக்குவுக்குப் போய் வெள்ளை வெளேரென்று நரைத்த மீசை முளைத்திருக்கிறது?
அதிர்ச்சியில் அவளுக்குப் பேச்சே வரவில்லை. டிராயர் தான் போட்டிருக்கிறான். சட்டையைக் காணோம். டிராயர் நழுவாமலிருக்கப் பிடிமானமாக மேலெழுந்து தோளில் படர்ந்திருக்கும் பட்டையில், ஜக்கு - சிக்ஸ்த் பி என்று பேட்ஜ் குத்தியிருக்கிறது. அதெல்லாம் கூடச் சரி. எப்படி இப்படியொரு நரைத்த மீசை இவனுக்கு வந்துசேர்ந்தது? தலைமுடி நரைக்கவில்லை. மீசை மட்டும்தான். அடர்த்தியாக. பள்ளிக்கூட வாட்ச்மேன் மீனாட்சிசுந்தரத்துக்கு இருக்கிறது மாதிரி.
இப்படி வெட்டவெளியில் மேசை போட்டு, மேலே ஏறி உட்கார்ந்து தனியாக அப்படி என்னதான் பண்ணிக்கொண்டிருக்கிறான்? நரைத்த மீசையுடன் நாளைக்கு எப்படி பள்ளிக்கூடத்துக்குப் போவான்? அவன் ஆசையுடன் வளர்க்கும் வெங்கடாஜலபதியே அவனைப் பார்த்துக் குரைக்காது என்பது என்ன நிச்சயம்?
ஆனால் அந்த திடீர் மீசை குறித்து அவள் ஏதும் வாய்திறந்து கேட்பதற்கு முன்னதாகவே கனவு கலைந்துவிட்டது. சட்டென்று சிரிப்பும் வந்துவிட்டது.
மீசை முளைத்த ஜக்கு. அதுவும் அடர்த்தியான வெள்ளை மீசை. என்னவோ சப்பாத்தி மாவை மூக்குக்குக் கீழே ஒட்டிவைத்தமாதிரி... சே, அப்படி இல்லை அது. பல் தேய்க்கிற ப்ரஷ்ஷின் நீளத்தை இழுத்து ஒட்டிவைத்தமாதிரி...ம்ஹும். ஷேவிங்குக்கு முன்னே அப்பா புசுபுசுவென்று க்ரீமை நுரைக்கவிடுவாரே, அந்தமாதிரி.
எந்தமாதிரி வெள்ளை என்று இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். அதற்குள் கலைந்துவிட்டது.
அன்று மாலை மறக்காமல் அவள் தான் கண்ட கனவு குறித்து ஜக்குவிடம் சொன்னாள். அவனும் விழுந்து விழுந்து சிரிப்பான் என்று தான் எதிர்பார்த்தாள். ஆனால், வழக்கத்துக்கு விரோதமான மௌனத்தில் அவன், அவளுக்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை அளித்தான்.
"உனக்கு வெள்ளை மீசை முளைச்சிருந்ததுடா!"
"உம்" என்றான் ஜக்கு.
"உனக்கு சிரிப்பு வரலே?"
"வருது" என்று சிரிக்காமல் சொன்னான் அவன்.
"எம்பேச்சு காவான்ன?" அவளுக்கு திடீரென்று அந்த சந்தேகம் வந்துவிட்டது. இந்த ஜக்குவிடம் இது ஒரு கெட்ட பழக்கம். திடீர் திடீரென்று கா விட்டுக் கொஞ்ச நேரம் அழவைத்து வேடிக்கை பார்ப்பான். இன்ன காரணம் தான் என்று சொல்லமுடியாது. ஒரு நாள் அவள் புளியங்கொட்டையைத் தின்றுகொண்டே வந்ததைக் கண்டதும் கூட அவன் கா விட்டிருக்கிறான்.
"பேட் ஹேபிட்" என்று ஜக்கு சொன்னான். உடனே அவள் துப்பிவிட்டதும் மீண்டும் பழமாகிவிட்டது நட்பு. "எங்கம்மா சொல்லியிருக்கா. கிடைக்கறதையெல்லாம் வாயில் போட்டு மென்னா, காதுலேருந்து ஈசல் பறக்கும்!"
என்ன ஆயிற்று இன்று இவனுக்கு? பேசக்கூட யோசிக்கிறான்? குட்டிக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. நிச்சயம் தான் ஏதோ தப்பு செய்திருக்கவேண்டும் என்று தோன்றியது. இல்லாதுபோனால் எப்போதும் வேடிக்கை வேடிக்கையாக எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும் ஜக்கு ஏன் இப்படி பேசாமல் இருக்கவேண்டும்?
"தோ பார். எனக்கு அழுகை அழுகையா வருது. நீ பேசலேன்னா, நான் காட் ப்ராமிஸா அழுதேவிடுவேன்!"
"பேசுவேன், பேசுவேன். நான் ஒண்ணும் கா இல்லே. போருமா?"
"அப்ப ஏன் சைலண்டா வரே?"
அவன் தன் கூடவே புத்தகமூட்டை சுமந்து நடந்துவரும் குட்டியைப் பக்கவாட்டில் திரும்பி ஒரு முறை பார்த்தான். லேசாகப் புன்னகை செய்தான். அவளுக்கு அது பெரிய நிம்மதியாக இருந்தது. அம்மாடி. இவன் காய் விடவில்லை.
"எனக்கு சண்டே எப்போ வரும்னு இருக்கு. நாளைக்கே வந்துவிடுமா? இன்னும் ஃபோர் டேஸ் இருக்கே!" என்றாள் குட்டி.
ஜக்குவுக்கு புரிந்தது. குட்டி மகாபலிபுரம் போகிற தினத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளூக்குத்தான் எத்தனை சந்தோஷம்! இப்படியொரு பயணம், இரு குடும்பத்தாரும் சேர்ந்து போகும்படி நேரும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. இரண்டு அம்மாக்களூம் சேர்ந்து பேசி ஐடியா பண்ணியிருக்கிறார்கள். எத்தனை ஒண்டர்புல் ஐடியா?
ஆனால் தனக்கு மட்டும் ஏன் இந்த விஷயம் உரிய குதூகலத்தைக் கொடுக்கத் தவறிவிட்டது என்று ஜக்கு யோசித்தான். உண்மையில் சில தினங்களாக அவனுக்கு எதுவுமே சுவாரசியமாகப் படுகிறதில்லை. வகுப்புகள் நரகமாக நீள்கின்றன. பாடங்களுக்குக் கை, கால் முளைத்து கூர்பற்களூடன் ஒரு பெரிய அரக்கன் மாதிரி ஆகிவிடுகின்றன, ஆசிரியரின் குரல் வடிவில். விளையாட்டில் விருப்பமில்லாமலிருக்கிறது. உற்சாகமுடன் ஓடக்கூட முடிகிறதில்லை. எப்போதும் படுத்துத் தூங்கலாம் போலவே இருக்கிறது. அதைவிட, யாராவது முகம் தெரியாத மனிதரின் மடியில் படுத்து அழவேண்டும் போலவும் இருந்தது. இதோ, இப்படி நினைக்கும்போதே கூட அழுகை வந்துவிடுகிறது. ஆனால் அழமுடியாது. பக்கத்தில் குட்டி இருக்கிறாள். தன்னைவிடச் சிறியவள்... இதை இன்னொரு விதமாகவும் நினைக்கலாம்....அவளை விடத் தான் பெரியவன். வயதிலும் வகுப்பிலும். அவள் எதிரே அழவாவது?
சொற்களூக்கு அகப்படாத ஒரு சுமைப்பந்து மனத்தில் உருளத்தொடங்கியிருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை தினம்,கேலண்டரிலிருந்தே தொலைந்து போயிருக்கலாம். ஏன் இருந்து தொலைத்தது?
அவனுக்கு முதலில் கேலண்டர் மீது தான் கோபம் வந்தது. பிறகு அந்த மசால் தோசையின் மணத்தின் மீது. தூசிகளின்மீது. நட்டநடுப்பகலில் தன் வீட்டாரின்மேல் உறக்கத்தின் வடிவில் வந்த குட்டிச்சாத்தானின் மீது.
எல்லாரும் ஏன் அன்று தூங்கியிருக்கவேண்டும்? ஏதோ ஒரு ராட்சஸ பூதம் தான் அந்த மந்திரப் பொடி தூவிய தூக்கத்தை அவர்கள் அனைவருக்கும் ரகசியமாக சுவாசிக்க வைத்திருக்கவேண்டும். அந்தத் தூக்கம் தனக்கு மட்டும் ஏன் வராமல் போயிருக்கவேண்டும்? தான் ஏன் அப்பாவின் அந்த டைரியை எடுத்துப் புரட்டியிருக்கவேண்டும்? யாரும் சொல்லியிருக்கவில்லை என்றாலும் டைரியை எடுத்துப் படிப்பது தவறு என்பதான எண்ணம் ஏன் தனக்கு உண்டானது? தவறு என்று தோன்றியதாலேயே திருட்டு ஆர்வத்துடன் மேலும் மேலும் ஏன் பக்கங்களைப் புரட்டியிருக்கவேண்டும்? விளையாட்டாக, ஒரு நோக்கமுமின்றிப் படித்துவிட்டுத் தூக்கிப் போட்டிருப்பேன். அப்படியொரு விஷயத்தை அப்பா ஏன் அதில் எழுதியிருக்கவேண்டும்? அதுவும் அத்தனை தெளிவாக? நான் ஏன் அதைப் படித்தேன்? எனக்கு ஏன் அது புரிந்தது?
அவனுக்குத் தலையே வெடித்துவிடும்போலிருந்தது. கூடியவரை கட்டுப்படுத்தியும் அழுகையை அடக்கமுடியாது போலிருந்தது. ஆனால் அழுதுவிடவும் கூடாது. குட்டி இருக்கிறாள். மிகவும் சின்னப்பெண். அவள் பயந்துவிடலாம். அல்லது ஓடிப்போய் தன் அம்மாவிடம் சொல்லிவிடவும் கூடும். ஆண்ட்டி, ஜக்கு இன்னிக்கு ஸ்கூல்லேருந்து வரும்போது ஓன்னு அழுதான்....
ஏண்டா கண்ணா? என்ன ஆச்சு? டீச்சர் திட்டினாளா? அடிச்சாளா? நீ என்ன பண்ணே? ஒண்ணும் பண்ணமாட்டியே... சமத்தாச்சே.... உடம்புக்கு ஏதும் பண்றதா? தலை வலிக்கிறதான்ன?
முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும் அம்மாவின் விசாரணைகள். எது ஒன்றுக்கும் பதிலே சொல்லமுடியாது. ஜில்லென்று அவள் கரங்கள் கன்னத்தைத் தடவி அணைக்கும்போது ஒருவேளை தான் உடைந்துபோய்விடலாம். ஒரு கோழிச்சிறகு போல் மென்மையாக இருக்கிற அம்மாவின் தொடுதல். உலகத்திலேயே வேறு யார் தொட்டாலும் அப்படி இருப்பதில்லை.
ம்ஹும். இந்தச் சந்தர்ப்பத்தில் அது தாங்காது. அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
"ஏண்டா ஜக்கு பேசாமலேயே வரே?"
இப்போது குட்டி அழுதுவிடுவாள் போலிருந்தது. அவன் ஒரு கணம் யோசித்தான். இவளிடம் சொல்லலாமா? வேண்டும் அல்லது கூடாது என்கிற முடிவு ஏதும் உடனடியாக உதிக்காது என்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால் ஏதாவது ஒரு வடிவில் தன்னை இறக்கிவைப்பது தான் உடனடியாக முடியக்கூடியது என்று உணர்ந்தான்.
"குட்டி, நான் ஒண்ணு கேக்கறேன். உனக்குத் தெரிஞ்சா பதில் சொல்லறியா?"
"உம்" என்றாள் அவள் சுவாரசியமாக.
"ஆனா ஒண்ணு. இதை நான் கேட்டேன்னு மதர் ப்ராமிஸா நீ உன் அம்மா கிட்ட சொல்லக்கூடாது."
"மாட்டேன்" என்று உடனே உத்தரவாதமளித்தாள் அவள்.
சில வினாடிகள் தாமதித்தான். பிறகு மெதுவாகக் கேட்டான்: "உங்கப்பா யாரையாச்சும் லவ் பண்ணியிருக்காரா? உனக்கு அது தெரியுமா?"
7
குட்டிக்கு முதலில் அவன் கேட்டது புரியவில்லை. சொற்கள், அதன் அர்த்தம் தவிர்த்த வெறும் ஒலிவடிவமாகவே அவள் செவிகளூக்குள் நுழைந்தது. அவள் சிந்திக்கவோ, பதில் சொல்லவோ தொடங்குமுன் ஜக்கு தன் உணர்ச்சியின் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதாரித்துக்கொண்டான்.
தன்னால் அதை அவளூக்குப் புரிகிற விதத்தில் விளக்க முடியுமா என்று அவனுக்குச் சந்தேகமாயிருந்தது. மேலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் தூரத்துக்குள் சொல்லிமுடிக்கக் கூடிய விஷயமும் இல்லை அது. அவள் மிரண்டுவிடக் கூடும். அல்லது தன் சொற்கள் தன்னைக் கைவிட்டு, விவரிக்கும்போதே உடைந்து போய் அழத்தொடங்கிவிடலாம். சொல்ல நினைத்த விஷயத்தைக் காட்டிலும் தன் அழுகை அவளைக் கலவரப்படுத்திவிடலாம்.
ஆனாலும் தன் மனத்தின் கனத்தை அரைவினாடி இறக்கிவைத்து, மீண்டும் எடுத்துச் சுமந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம். குட்டியைக் காட்டிலும் அலம்பித்துடைத்தாற்போன்ற பரிசுத்தமான இதயம் கொண்டவர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது. தன்னுடன் படிக்கிற பன்னீர் செல்வமோ, பாபுவோ, வினேஷோ மற்றவர்களோ இவ்விஷயத்தில் குட்டியின் கால் தூசு பெறமாட்டார்கள். கேள்விகளற்று, சொல்கிற விஷயங்களால் அந்தக் கணம் மனத்தை நிரப்பிக் கொள்கிறவள் அவள். உரிய உணர்சியை அதன் புனிதம் கெடாமல் வெளிப்படுத்தக் கூடியவள். அதிகாலைப் பூக்களின் மீதிருக்கும் கடைசிச் சொட்டுப் பனித்துளிபோன்ற மனசு அவளுக்கு.
"நீ என்ன சொல்றே ஜக்கு? எங்கப்பா யாரை லவ் பண்ணியிருக்கார்? எனக்குத் தெரியாதே! சினிமால தானே லவ் பண்ணுவாங்க?" என்றாள் குட்டி.
அது உண்மைதான். ஜக்குவும் கூட சினிமாக்களில் தான் லவ் பண்ணுகிறவர்களைப் பார்த்திருக்கிறான். அழகழகான உடைகளில் பனி மலைகளின்மீதும் பாலைவன மணற்படிவங்களின்மீதும் ஆடிப் பாடித் திரிகிறவர்கள். அவர்களைப் பற்றியிருக்கும் வெப்ப நோயின் கடுமையை மறக்கவே அவர்கள் ஆனந்தமாக ஆடித்திரிவதாக ஜக்கு நம்பினான். அவர்களின் ஆட்டத்துக்குத் தோதாக கண்ணுக்குப் புலப்படாத தேவதைகள் யாரோ இசையால் சூழலை முதலில் குளிர்பதனம் செய்து வைத்துவிடுகிறார்கள். கவலைகளற்றுக் காடுகளிலும் நீர்நிலைகளிலும் பாலைவனப் பகுதிகளிலும் சுற்றித்திரிகிற, லவ் பண்ணுபவர்கள். வெப்பம் ஒரு நோயாக மாறி அவர்களைத் தாக்கியிருப்பது முகத்தைப் பார்த்தாலே தெரியும்.
சினிமாக்களின் ஆதாரமாக இருக்கிற வெப்ப நோய். சரியான ஜுரம் அது. பலமணி நேரங்கள் அடித்துவிட்டுத் தான் ஓய்வது வழக்கம்.
சினிமாவுக்கு அப்பாலும் அந்த நோயால் தாக்குண்டவர்கள் உண்டு என்கிற விஷயம் அவனுக்கு ஓரிரு மாதங்கள் முன்பு தான் தெரியவந்தது. அவனது பள்ளியிலேயே பத்தாம் வகுப்பு படிக்கிற பையன் ஒருவன் யாரோ ஒரு பெண்ணுக்குக் கடிதம் கொடுத்திருக்கிறான். காதல் கடிதம்.
காதல் கடிதமா? ஆசிரியர்களுக்கு விஷயம் தெரியவந்தபோது பள்ளி வளாகத்தின் வெப்பநிலை திடீரென்று ஐம்பத்தேழு டிகிரி செண்டிகிரேடாக உயர்ந்துவிட்டது. ஜக்குவின் ஆறாம் வகுப்பு பி பிரிவுக்குள் தான் முதலில் அந்த வெப்பம் வந்து தாக்கியது.
இதென்ன, மார்கழி மாதத்தில் இப்படி தகிக்கிறதே என்று வகுப்பாசிரியரும் மாணவ, மாணவிகளும் உஸ் உஸ் என்று தமக்குள் ஊதிக்கொண்டார்கள்.
ஜக்குவின் வகுப்பாசிரியரான பழனி வாத்தியாரும் பத்தாம் வகுப்பு சி பிரிவின் ஆசிரியர் தண்டபாணியும் நெருங்கிய சிநேகிதர்கள். ஸ்டாஃப் ரூமில் இருவரும் பக்கத்துப் பக்கத்தில் தான் எப்போதும் உட்காருவார்கள். நாளிதழ் செய்திகளில் நாட்டு நடப்பு தொடங்கி வீட்டு விஷயங்கள் வரை எப்போதும் பேசவும் பகிரவும் அவர்களுக்குச் சங்கதி இருந்துகொண்டே இருக்கும்.
ஆகையால் தண்டபாணி மாஸ்டர் தாமறிந்த அதிமுக்கியமான அந்த விஷயத்தை முதலில் பழனி வாத்தியாருக்குச் சொல்ல முடிவெடுத்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
அவர் பாக்கெட்டில் தான் அந்தக் காகிதத்தை வைத்திருந்தார். அதற்குள்ளாகவே அவரது சட்டையிலிருந்து தீய்ந்த வாசனை வருவதை மாணவர்கள் மோப்பம் பிடித்துவிட்டார்கள். ஜக்குவின் வகுப்பறை வாசலுக்கு வந்து நின்று பழனி மாஸ்டரை அவர் அழைக்கும்போதே பாக்கெட்டிலிருந்து அதை எடுத்துவிட்டார். உடனே வகுப்பறையில் வெப்பம் பரவத் தொடங்கிவிட்டது. பையன்கள் அனைவருக்கும் நெற்றி, முகம், மூக்கு, முழங்கை, காலெல்லாம் வியர்க்கத் தொடங்கிவிட்டது. வெம்மை தாங்கமுடியாமல் உடனே சிலர் எழுந்து பக்கத்து வகுப்புகளுக்குப் போகத்தொடங்கிவிட்டார்கள்.
என்ன ஆச்சர்யம்? அவர்கள் போகிற வகுப்பறைகளிலெல்லாம் வெப்பநிலை ஏறத்தொடங்கியது. நிமிடங்களில் பள்ளியே ஒரு குமுட்டி அடுப்பு மாதிரி ஆகிவிட்டது. அணைக்க முடியாத வெப்பத்தைப் படரவிட்டுக்கொண்டே இருக்கிற ஆதிஅடுப்பு.
என்ன தைரியம் இந்தப் பையனுக்கு? எங்கிருந்தோ ஒரு வெப்பத்தின் பொறியைத் திருடிக்கொண்டு வந்து பேனாவுக்குள் மையோடு மையாகக் கரைத்துவைத்திருக்கிறான். வெறும் ப்ளாஸ்டிக் பேனா. எத்தனை நாள் சூட்டைத் தாங்கிக்கொண்டிருக்கும்? தன்னையறியாமல் அன்று தாளில் இறங்கிவிட்டது.
அடப்பாவி என்றார் பழனி மாஸ்டர். இனியதொரு வசந்தகாலத்தில் இப்படியான வெப்பம் படரவிட்டது மன்னிக்கக் கூடிய குற்றமல்ல என்று அவர் தீர்மானமாகச் சொன்னார்.
அன்றுமாலை ஜக்கு வீட்டுக்குக் கிளம்பியபோது அந்தப் பத்தாம்வகுப்பு மாணவன் பள்ளியின் மைதானத்தில் முட்டி போட்டபடியே வானம் பார்த்துக்கொண்டிருக்கக் கண்டான். ஐயோ பாவமே, எத்தனை மணி நேரமாக இவனை இப்படி நிற்கவைத்திருக்கிறார்கள்?
வெப்ப நோய்க்கிருமிகள் மிக்க அந்தக் காகிதத்தை அவன் எந்தப் பெண்ணின் கணக்குப் புத்தகத்துக்குள் ரகசியமாக ஒளித்துவைத்தானோ, அந்தப் பெண்ணின் தந்தை உடனடியாகப் பள்ளிக்கு வரவழைக்கப் பட்டார். பெண்ணுக்குத் தடுப்பூசி முதலியன உடனே போடப்பட்டு அவள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாள்.
மறுதினம் தொடங்கி அந்தப் பெண் வேறு செக்ஷனுக்கு மாற்றப்பட்டுவிட்டாள். அந்தப் பத்தாம் வகுப்புப் பையன் ஒருவாரம் பள்ளிக்கு வரவில்லை. திருட்டுத்தனமாக அவன் எந்தப் பெண்ணின் புத்தகத்துக்குள் அந்த நோய்க்கிருமிகள் நிறைந்த கடிதத்தாளை ஒளித்துவைத்தானோ, அதை எடுத்து அவனது புத்தகத்துக்குள்ளேயே வைத்து, இது தான் உனக்கு தண்டனை என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
கிருமிக்கு என்ன தெரியும்? அது அவனையே தாக்கிவிட்டதில் ஒரு வாரகாலம் அவனால் பள்ளிக்கு வரமுடியாமலேயே போய்விட்டது.
ஜக்குவுக்கு இந்தச் சம்பவம் இப்போது ஞாபகம் வந்தது. அதே கிருமி தன் தந்தையைக் கூடத் தாக்கியிருக்கமுடியும் என்று அவனால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை. இதைத் தான் அவன் குட்டியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினான்.
அதை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் தான் "உங்கப்பா யாரையாவது லவ் பண்னியிருக்காரா?" என்று கேட்டான்.
பாவம் குட்டி. அவளுக்கு எப்படி இது புரியும்? நல்லவேளை சுதாரித்துக்கொண்டோம் என்று தன்னைத் தானே பாராட்டிக்கொண்டான் ஜக்கு.
"சும்மா கேட்டேன். உனக்கு ஒரு குட்டிப் பூனை வேணுமா? ப்ரவுன் கண் உள்ள பூனை?" என்று சட்டென்று விஷயத்தை மாற்றி, சூழலில் மீண்டும் அந்த வெப்பம் நோயுருக்கொண்டு பரவாமல் தடுக்க முடிந்தது பற்றி தன்னைத் தானே வியந்தான்.
"பூனையா? அது ஏது?" என்று குட்டி கேட்டாள். "வாங்கியிருக்கீங்களான்ன உங்க வீட்டுலே?"
"சேச்சே. பூனையை யார் விப்பா? நாமாத்தான் எடுத்து வளக்கணும்" என்று ஜக்கு சொன்னான். "தெரியுமா உனக்கு? எலியைப் பிடிக்கறதுக்கு மட்டும் இல்லே பூனை! நீ பூனை வளர்த்தேன்னா, நிறைய கத்துக்கலாம். அமைதியா இருக்கறது, அதிராம நடக்கறது எல்லாம் பூனை ஜோரா கத்துக்குடுக்கும்."
"நான் சரி, நீ எப்படி வளர்ப்பே? உன் வெங்கடாஜலபதி பூனையைக் கடிச்சுடுமே?"
"யார் சொன்னா? கடிக்கக் கூடாதுன்னு நான் அதுக்கு ரூல் போட்டுட்டுத் தான் எங்க ஸ்கூல் பின்னாடி குட்டி போட்டிருந்த ரெண்டை எடுத்துண்டு வந்தேன்."
"அச்சச்சோ. அதோட அம்மா கத்துமே?"
"அதோட அம்மா இல்லை. எங்கியோ போயிடுத்து. அதனால தான் நான் எடுத்துண்டு வந்தேன்"
சட்டென்று விஷயத்தை நாலடி தூரத்துக்கு நகர்த்தி, மாற்ற முடிந்துவிட்டதில் அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அதே சமயம், தன் துக்கத்தைத் தொடர்ந்து ஒளித்தே வைக்கவேண்டியிருக்கிறதே என்றும் இருந்தது. பயம் தான். உயிருக்குச் சமமான ஃப்ரெண்டாக இருந்தாலும் குட்டியிடம் ஏன் சொல்லச்சொல்ல வாய்வந்து, உதட்டோடு நின்றுவிடுகிறது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.
தன்னையறியாமல் ஏதோ ஒன்று சொல்லவருவதைத் தடுக்கிறது என்று அவன் நினைத்தான். வெளியே சொல்லக்கூட முடியாத ஒரு விஷயத்தையல்லவா சுமந்துகொண்டு திரியவேண்டியிருக்கிறது?
அப்பா. தன் அப்பாவா? அவனால் நம்பவே முடியவில்லை. பயமும் அருவருப்புமாக வயிற்றைக்கலக்கும் உணர்ச்சியொன்று அவனைத் தாக்கியது. அந்தக் கொடிய, ஐம்பத்தேழு டிகிரி செண்டிகிரேடு வெப்ப நோயைவிடவும் இதன் கடுமை அதிகம் தான் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அத்தனைக் கடுமையான வெப்பம் இத்தனை வருடங்களாக அப்பாவின் டைரிக்குள் கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளைக் கொண்டு ஒளிந்து வசித்துவந்தும் தன் வீடு ஏன் பற்றி எரியவில்லை என்று அவனுக்குச் சற்று ஆச்சர்யமாகவும் இருந்தது. பரணில் அப்பாவின் டைரிக்கட்டு இருந்த பெட்டிக்கு அருகில் ஒரு பழைய பானையும் இருந்ததை அவன் கண்டான். எப்போதோ அதில் நிறைய நிறைய நீர் ஊற்றி வைத்திருக்கவேண்டும். பாட்டி உபயோகித்த பானையாக இருக்கலாம். ஆண்டாண்டுகாலமாக நீர் இருந்ததன் குளிர்ச்சி அந்தப் பானையின் பக்கச் சுவர்களில் ஊறியிருக்கவேண்டும். அது தான் டைரியின் வெப்பத்தைக் கரைத்திருக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
படிக்கத் தொடங்கியபோது அந்த வெப்பம் இன்னும் அதன் வீரியம் குறையாமல் படிக்கிறவனைத் தாக்குவதையும் அவன் கண்டான். முதல் நான்கைந்து வரிகளிலேயே அவனுக்குக் கண்கள் எரியத் தொடங்கியன. ஒரு தினத்தின் செய்தியைப் படித்து முடிக்கும்போது உடலெல்லாம் வியர்த்துவிட்டது. கரங்கள் நடுங்கத் தொடங்கின. தொண்டை வறண்டு, உடனே ஓடிப்போய் ஒரு சொம்பு நிறைய நீர் எடுத்துக் குடித்துத் தீர்த்தான்.
அப்போதும் அடங்கவில்லை சூடு. காது மடல்களெல்லாம் ஜிவுஜிவுவென்று ஆகிவிட்டன. தான் செத்துப் போய்விடப் போகிறோம் என்று அவனுக்குத் தோன்றிவிட்டது. வரிகளில் நிறைந்திருந்த எழுத்துகளிலிருந்து கிருமிகள் எழும்பிவந்து அவனது கண்கள் வழியே ஊடுருவி நேரே அவனது மூளையைத் தாக்கியது. ஓ, மூளைக் காய்ச்சல் வந்துவிட்டதா என்ன?
"இன்று நிர்மலாவைப் பார்க்க அவளது ஆபீசுக்குப் போயிருந்தேன். அழகிய வயலட் நிறப் புடைவையில் அவள் இருந்தாள். முந்தையதினம் அவளது அம்மாவுடன் ரங்கநாதன் தெருவுக்குப் போயிருந்தபோது வாங்கியதாகச் சொன்னாள். முன்னூற்று நாற்பது ரூபாய்ப் புடைவை. நிர்மலாவுக்கு விலையுயர்ந்த புடைவைகள் தான் வேண்டும் என்பதில்லை. அறுபது ரூபாய் ரேஷன் புடைவையில் கூட அவள் அழகாகத் தான் இருப்பாள்.... நான் எப்போது அவளுக்கு ஒரு புடைவை வாங்கித் தரப் போகிறேன் என்று கேட்டாள். வருகிற சம்பளம் வீட்டுக்கே காணுவதில்லை என்பதை எப்படி அவளுக்குத் தெரிவிப்பேன்? காதலிப்பதற்குக் குறைந்தபட்ச அந்தஸ்து வேண்டியிருக்கிறது. அந்தஸ்து இல்லாதவர்களுக்கு வருகிற காதல் அவஸ்தைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. எப்படியும் இரண்டொரு மாதங்களில் வேலைநிரந்தரமாகிவிடும். முதல் நிரந்தர சம்பளத்தில் அவளுக்கொரு பட்டுப் புடைவையே வாங்கித் தருவதாகச் சொன்னேன்...."
படிக்கப் படிக்க ஜக்குவின் கண்களில் இருந்து வெப்பம் ஒரு அலை போலப் பெருகிப் பரவத் தொடங்கியது. துக்கம் அவன் தொண்டையை நிரப்பியது. உட்கார்ந்து ஓவென்று அழலாம் போலிருந்தது.
அப்பாவா! அப்பாவா காதலித்திருக்கிறார்! அப்பாவா?
யார் நிர்மலா? அம்மாவின் பெயர் அது இல்லை. எனில் யார் அது? அம்மாவுக்குத் தெரியுமா? கடவுளே! தெரிந்துவிட்டால் அம்மா நிச்சயம் செத்துத் தான் போய்விடுவாள். அம்மா இல்லாமல் நான் எப்படி இருக்கமுடியும்?
அவன் அப்போது அழத்தொடங்கினான். அன்றிலிருந்து மனத்துக்குள் அழுதுகொண்டே தான் இருந்தான்.
8
அன்றிரவு ஜக்கு ஒரு கனவு கண்டான். கனவில், அவன் குட்டியுடன் ஒரு பேராசூட் ஏறி அண்டார்டிகாவுக்குப் போய்க்கொண்டிருந்தான். உற்சாகமான, வலிகளற்ற, மிகவும் சுகமான பயணமாக இருந்தது அது. காற்றின் திசையில் பேராசூட் தன்னிஷ்டத்துக்கு மிதந்துகொண்டிருந்தது. அவன் டிஸ்கவரி சேனலில் பார்த்திருந்த பேராசூட்களில் இல்லாதவாறு அந்த பேராசூட்டில் மட்டும் அழகாக, குட்டியாக இரண்டு நாற்காலிகள் இருந்தன. சௌகரியமாக உட்கார்ந்தபடி பேராசூட்டில் பறப்பது எத்தனை பரவசமானது! எப்படி இந்த பேராசூட் கிடைத்தது என்பது தான் அவனுக்குத் தெரியவில்லை. ஒரு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ போகாமல் தான் ஏன் அண்டார்டிகாவுக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம் என்றும் புரியவில்லை.
எப்படியும் இன்னும் ஒன்றேகால் மணி நேரத்தில் பேராசூட் அண்டார்டிகாவை அடைந்துவிடும் என்று எங்கிருந்தோ கன்ட்ரோல் ரூமிலிருந்து ஒரு பெண் குரல் அவனுக்கு மட்டும் கேட்டது. அவனுக்கு அந்தக் குரல் பிடிக்கவில்லை. ஏனோ அது அந்த நிர்மலாவின் குரல் என்று அவனுக்குத் தோன்றியது.
"இப்ப நாம எதுக்கு அண்டார்டிகா போறோம்?" பக்கத்தில் அமர்ந்திருந்த குட்டிக்கு திடீரென்று சந்தேகம் வந்துவிட்டது.
"சும்மாத்தான். அந்த இடம் ஒரே வெள்ளைவெளேர்னு இருக்கும். ஃபுல்லா ஸ்நோ தான். மெத்துமெத்துன்னு நடக்கவே சுகம்மா இருக்கும்! பெங்குயின்ஸ் நிறைய இருக்கும்....மனுஷங்களே இருக்கமாட்டாங்க. ரிசர்ச் பண்ண வந்த சயிண்டிஸ்ட்ஸ் மட்டும் ரெண்டு மூணுபேர் இருப்பாங்க. அநேகமா அவங்க நமக்கு மத்தியானம் லஞ்ச் குடுப்பாங்க" என்று ஜக்கு சொன்னான்.
"குளிருமே" என்றாள் குட்டி.
"ஒன் அவர் தான். சுத்திப் பார்த்துட்டுத் திரும்பிடலாம். எனக்கு நிறைய ஹோம் ஒர்க் இருக்கு"
அவன் கையிலேயே நோட்டுப் புத்தகமும் வைத்திருந்தான்.
"இதை எதுக்கு எடுத்துக்கிட்டு வந்திருக்கே ஜக்கு?"
"வழில போரடிச்சா நாலு சம் போட்டுப் பார்க்கலாம் இல்லியா? வி ஷுட் நாட் வேஸ்ட் அவர் டைம்."
"இந்த பேராசூட் கவிழ்ந்து விழாதே"
"பயப்படாதே" என்றான் ஜக்கு. பாதுகாப்பாக அவளது முதுகுப் பக்கம் தன் கையைக் கொடுத்து மறுபுறமிருந்த கயிறைப் பிடித்துக்கொண்டான்.
"கீழ குனிஞ்சு பார்த்தா பயமாத்தான் இருக்கு" என்றாள் குட்டி.
"குனியாதே. வேணா ஒண்ணு பண்ணறியா?" என்றவன் தன் நோட்டுப் புத்தகத்தை அவளிடம் கொடுத்து, "படிச்சிண்டே இரு. பயம் தெரியாது" என்று சொன்னான்.
"ஐயோ, மேத்ஸ் நோட். எனக்கு வேணாம். உவ்வே" என்றாள் குட்டி.
"கடைசிலேருந்து புரட்டிப் பாரு"
அவள் ஒருவினாடி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அந்த நோட்டுப் புத்தகத்தைப் பின்னட்டையிலிருந்து பிரித்துப் புரட்டத் தொடங்கினாள்.
ஜக்கு தன் கணக்கு நோட்டின் ஒரு பகுதியைத் தன் பிரத்தியேகமான டைரியாக மாற்றியிருந்தான். வான்வெளியின் தடையற்ற காற்று அதன் பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டித் தர, குட்டி ஒரு பேரதிசயம் கண்டாற்போல அந்தப் பக்கங்களைப் பார்க்கலானாள்.
"ஹை! என்னைப் பத்தி எழுதியிருக்கே!"
"அட, வெங்கடாஜலபதி நேத்து சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிச்சுதா? ஏன்? உங்கம்மாவுக்கும் பாட்டிக்கும் சண்டையா? அச்சச்சோ!"
புரட்டிக்கொண்டே வந்த குட்டி ஒரு பக்கத்தில் சட்டென்று தாமதித்தாள். அவனும் அந்தப் பக்கம் வருவதற்காகத் தான் காத்திருந்தான்.
"வாட் இஸ் திஸ்?" என்றாள் குட்டி.
அவன் சொல்ல நினைத்து, சொல்லமுடியாமல் உள்ளுக்குள் பூட்டிவைத்திருந்த விஷயம் அது. அப்பா. அவரது காதல். யார் அந்த நிர்மலா? முன்னூற்று நாற்பது ரூபாய்க்கு ரங்கநாதன் தெருவில் புடைவை வாங்கிய நிர்மலா. அப்பா தன் அடுத்தமாத சம்பளத்தில் அவளுக்குப் பட்டுப் புடைவை வாங்கித் தந்திருப்பாரா? அது அம்மாவுக்குத் தெரியுமா?
அந்த விவரங்கள் அப்பாவின் டைரியில் இல்லை. ஆனால் வேறு சில விவரங்கள் இருந்தன.
தான் படித்ததை, தன் மனத்தில் அது பதிந்தவிதத்தில் ஜக்கு தன் கணக்கு நோட்டில் எழுதி வைத்திருந்தான். ஒரு கோர்வையாகக் குட்டியிடம் தன்னால் அந்த விவரங்களைச் சொல்லமுடியாது என்று தோன்றியதுமே அவன் தன் கணக்கு நோட்டின் பின்பகுதியை தன் டைரியாக பாவித்து எழுதத் தொடங்கிவிட்டான்.
"குட்டி, நீ அதைப் படி. எங்கியாவது புரியலைன்னா கேளூ. ஆனா காட் ப்ராமிஸ், நீ இதுபத்தி யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சொல்லுவேன்னா, நான் இப்படியே கீழே குதிச்சி செத்துப் போயிடுவேன்!"
"ஐயோ! நான் ஏன் சொல்றேன்? நீ இப்படியெல்லாம் பேசாதே" என்று அவன் வாயைப் பொத்தினாள் குட்டி. "நீ செத்துப் போயிட்டா, நானும் செத்துப் போயிடுவேன். அப்புறம் எங்கம்மா அழுவா"
அவன் அவளைச் சில கணங்கள் சமாதானப்படுத்தவேண்டியதானது. நிலப்பரப்பு மறைந்து இப்போது கீழே நீலக்கடல் தன் தோகையை விரித்துவிட்டிருந்தது. அலையற்ற கடல். வெறும் நீலம். இள நீலம். கருநீலம். பச்சை கலந்த நீலம். வெறும் பச்சை. நீரின் விதவிதமான வர்ணஜாலங்கள். திடீர் திடீரென்று துள்ளிக்குதிக்கும் டால்பின்கள். பாய்விரித்து மிதக்கிற ஒற்றைப் படகில் ஒரு மீனவன் தலையில் உயர்ந்த குல்லாய் அணிந்திருக்கிறான். அவனுக்கருகில் ஒரு டிரான்ஸிஸ்டர் இருக்கிறது.
"கடல்லே ரேடியோ பாடுமா?" என்று குட்டி கேட்டாள்.
"தெரியலை. நீ படி"
அவனுக்கு அவள் மனத்துக்குள் அந்த விஷயத்தை ஏற்றிவிடவேண்டும் என்று மிகவும் ஆவலாயிருந்தது. அச்சச்சோ என்று வருத்தப்படுவாள். நீ கவலைப்படாதே ஜக்கு என்று ஆறுதல் சொல்லுவாள். கண்ணைத் துடைத்துவிடுவாள். அந்தச் சமயம் இரண்டு சொட்டு அழுகை வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்?
குட்டி படிக்கத் தொடங்கினாள். அவளூடனேயே அவனும் தான் எழுதிய வரிகளை மீண்டுமொருமுறை வாசிக்கத் தொடங்கினான்.
"...இன்று வீட்டை க்ளீன் பண்ண ஆரம்பித்தோம். அப்பாவின் புத்தக அலமாரியிலிருந்து புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே வைத்து தூசு தட்டினோம். பரணிலிருந்து அட்டைப் பெட்டியை நான் இறக்கினேன். அதில் அப்பாவின் பழைய டைரிகள் மூன்று கிடைத்தன.. விளையாட்டாகப் படிக்க ஆரம்பித்தேன். அப்பா யாரோ ஒரு பொம்பளையை லவ் பண்ணியிருக்கிறார் என்கிற விஷயம் அதில் இருந்தது.
எனக்கு மிகவும் அழுகை வந்தது. என் அப்பா ரொம்ப நல்லவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உலகத்திலேயே ரொம்ப ரொம்ப நல்லவர் என்று என் ஃப்ரெண்ஸிடம் சொல்லுவேன். என்னை அடிக்கவே மாட்டார் என் அப்பா. எப்போதாவது அம்மா நான் வெங்கட்டுடன் விளையாடும்போது திட்டினாலும் திட்டாதே என்று சொல்லுவார். ராத்திரி பத்துமணி குல்பியெல்லாம் வாங்கிக் கொடுப்பார். தாத்தாவுடன் நைட்ஷோ சினிமாவுக்குக் கூட போய்வர அனுமதி கொடுப்பார்.
அந்த அப்பா யாரோ ஒரு பொம்பளையை சினிமாவில் வருவது மாதிரி லவ் பண்ணியிருக்கிறார். அந்தப் பொம்பளையின் பெயர் நிர்மலா. சிகப்பாக, அழகாக இருப்பாளாம். ஒரு மேட்டர் விஷயமாக அப்பா அவளை முதல் முதலில் போய்ப் பார்த்திருக்கிறார். பிறகு அவளது அப்பாவுடன் ஃப்ரெண்டு ஆகிவிட்டார். வாரத்துக்கு ரெண்டுவாட்டி அவள் வீட்டுக்குப் போயிருக்கிறார். ஜர்னலிசம் படித்துக்கொண்டிருந்த அந்தப் பொம்பளைக்கு அப்பா நிறைய ஒத்தாசை பண்ணியிருக்கிறார்.
அதற்கப்புறம் ரெண்டுபேரும் லவ் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். உதயம் தியேட்டரில் புதுப்புது அர்த்தங்கள் என்ற சினிமா பார்த்திருக்கிறார்கள். ஒரு நாள் ராத்திரி சினிமா பார்த்துவிட்டு வரும்போது அப்பாவின் ஸ்கூட்டர் பஞ்சராகிவிட்டது. நடு ரோடில் அவர் வண்டியைத் தள்ளிக்கொண்டு அவளுடன் நடந்து போய் வீட்டில் விட்டுவிட்டு அப்புறம் குரோம்பேட்டை வந்திருக்கிறார். ஏன் லேட்டு என்று தாத்தா கேட்டார். ஆபீசில் வேலை ஜாஸ்தி என்று அப்பா பொய் சொன்னார்.
அப்பா லவ் பண்ணி ஒரு தப்பு பண்ணார். பொய் சொல்லி ஒரு தப்பு பண்ணார். இதனால் எனக்கு என் அப்பாவைப் பிடிக்கவில்லை. நிஜமாவே பிடிக்கவில்லை. எனக்கு அழுகை அழுகையாக வருகிறது. என் அம்மா ரொம்ப நல்லவள். அவளுக்கு இது இன்னும் தெரியாது. நான் அப்பாவின் டைரியை எடுத்து என் ஸ்கூல் பேகில் ஒளித்துவைத்திருக்கிறேன். அதை அம்மா பார்த்துவிடக்கூடாது. சில பேப்பர்களைக் கிழித்துப் போட்டுவிடலாமா என்று நினைக்கிறேன். ஆனால் வேற யாராவது எடுத்துப் படித்துவிட்டால் என்னைத் திட்டுவார்கள். அதுவும் சந்திரா டீச்சர் பார்த்துவிட்டால் என்னை பெஞ்சுமேல் நிற்கவைத்து அடிப்பாள். மேலும் என் எனிமியான பிரபுவுக்கு இது தெரிந்தால் என்னை கிண்டல் செய்வான். கடவுளே, என்னைக் காப்பாற்று..."
"அச்சச்சோ" என்றாள் குட்டி.
"என்னடா ஜக்கு இது? இப்படியெல்லாம் எழுதியிருக்கே?"
"எல்லாமே அப்படித்தான் இருக்கு. நான் என்ன பண்ணட்டும்?" என்றான் ஜக்கு.
"எனக்கு ஒரே பாவம், பாவமா இருக்கு"
"என் மேலயா?" என்று அவன் கேட்டான்.
"இல்லே... உங்கம்மா மேல"
சட்டென்று அவன் அவளை நிமிர்ந்து, உற்றுப் பார்த்தான். அவன் துளியும் எதிர்பாராத பதில் அது. தன்னால் மட்டுமே உணரமுடியும் என்று அவன் வெகு நிச்சயமாக நம்பியிருந்த விஷயம் அது. தன் மனத்தைப் பிரதியெடுப்பது போல் குட்டி சொன்னதும் அவன் உணர்ச்சிகள் உதடுகளைக் கிழித்துக்கொண்டு பீறிட்டது.
அம்மா! ஆம். அவள் தான் பாவம். இந்த விஷயம் அவளுக்குத் தெரியவே தெரியாது. தெரிந்தால் என்னாகும் என்று அவனால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. உட்கார்ந்து அழுவாளா? அப்பாவுடன் சண்டை போடுவாள். அது நிச்சயம். பாட்டி சமையலறையிலிருந்தபடி இரண்டுபேரில் யாராவது ஒருத்தருக்கு ஆதரவாகப் பேசக்கூடும். அப்பாவின் அம்மாவாக இருந்தாலும் பெரும்பாலும் பாட்டி அம்மாவைத்தான் சண்டைகளின் போது ஆதரிப்பது வழக்கம்.
ஒருவேளை இந்த விஷயம் பாட்டிக்குத் தெரிந்திருக்குமோ? தாத்தாவுக்கு? தெரிந்திருந்தால் அம்மாவிடம் சொல்லாமலா இருப்பார்கள்? மறைத்திருப்பார்களா? லவ் பண்ணுவது. எத்தனை கெட்டசெயல். அது ஏன் அப்பாவுக்குத் தெரியவில்லை? தண்டபாணி மாஸ்டர் அந்தப் பத்தாம் வகுப்புப் பையனை கிரவுண்டில் முட்டிபோடச் சொன்னதுபோல் அப்பாவை யார் போடச் சொல்லுவார்கள்?
அப்பா, முட்டிபோட்டபடி மொட்டைமாடியில் அழுதுகொண்டிருப்பது போன்றதொரு காட்சி அவன் மனத்துக்குள் உண்டானது. அதுவும் கஷ்டமாகத் தான் இருந்தது, பார்ப்பதற்கு. எத்தனை நல்ல அப்பாவாக இருந்தவர்! எதற்காக அந்த நிர்மலாவை லவ் பண்ணினார்?
அவனுக்குத் தாங்கவேமுடியவில்லை. ஏதாவது செய்து இந்த விஷயத்தை முற்றிலும் மறந்துவிட மிகவும் விரும்பினான். ஆனால் நினைவின் அத்தனை அடுக்குகளிலும் இது ஒன்றுமட்டுமே ராட்சஸன் மாதிரி வியாபித்திருந்தது.
கடவுளே!
நிச்சயம் அவன் ஓவென்று அலறியிருக்கவேண்டும். "என்னாச்சுடா கண்ணா?" என்று உடனே அம்மா அவனைப் பிடித்து உலுக்கி எழுப்பினாள்.
அண்டார்டிகாவுக்கு இனி தான் போகப்போவதில்லை என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது.
9
சுற்றுலாப் பயணிகளூம் சொந்த ஊர்க் குரங்குகளூம் நிறைந்த மகாபலிபுரத்துக்கு அவர்கள் வந்து இறங்கியபோது மணி எட்டரை ஆகியிருந்தது.
வெயிலுக்கு முன்னால் கிளம்பிவிடவேண்டும் என்று முன்னதாகக் குமாரும் குட்டியின் அப்பாவும் கூட்டாக முடிவெடுத்திருந்தார்கள். நாலரைக்கெல்லாம் எழுந்து, கண்ணெரியக் குளித்துவிட்டு, புளியோதரையும் தயிர்சாதமும் கலந்து எடுத்துக்கொண்டு, ஜக்குவை எழுப்பிக் கிளப்பிக்கொண்டு வெளியே வரும்போதே மாலுவுக்கு வியர்த்துவிட்டது. குழந்தைகள் இரண்டுபேருக்குமே அந்த அனுபவம் புதிதாகவும் நூதனமாகவும் இருந்தது. இப்படி ஒரு இன்பச் சுற்றுலாவை அவர்கள் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. ஃப்ரெண்ட்ஸ் குடும்பத்துடன் மகாபலிபுரம். அங்கே சிற்பங்கள் இருக்கின்றன. குகைக் கோயில்கள் இருக்கின்றன. சின்னதாக ஒரு மலையும் உண்டு என்று அப்பா சொல்லியிருக்கிறார். அதிக உயரம் எழும்பிவிழும் அலைகள் மிக்கக் கடலும் கடலோரத்தில் ஒரு கோயிலும் கூட.
"ஜக்கு, நீ வாக்மன் எடுத்துக்கலை?" என்று குட்டி கேட்டாள்.
"இல்லை" என்று ஜக்கு சொன்னான். அவனுக்கு எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியும் உற்சாகமும் நிரம்பிய தினமாக்கப் போகிற பயணம். பேருந்துப் பயணத்தின்போது, பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே போவது கூடுதல் மகிழ்ச்சி தரக்கூடும்தான். ஆனாலும் ஏனோ அவனுக்குத் தான் பஸ் ஏறியதும் தூங்கிவிடுவோம் என்று தோன்றியது. இந்தப் பயணம் குறித்த நினைவு தரவேண்டிய நியாயமான மகிழ்ச்சியை ஏதோ ஒரு சிறு மதகு தடுத்துத் தேக்கி, துளித்துளியாக வெளிப்படுத்துவது போல அவன் உணர்ந்தான்.
சந்தோஷமாகத் தான் இருந்தது. ஆனாலும் நிச்சயமாகச் சொல்லமுடியாத சந்தோஷம். ஒரு வாரமாக அவன் தன் அப்பாவிடம் அத்தனை சரியாகப் பேசவில்லை. அவரைப் பார்க்கிறபோதெல்லாம் முகமறியாத அந்த நிர்மலாவின் உருவம் முன்னூற்று நாற்பது ரூபாய் வயலட் நிறப்புடைவை ரூபத்தில் பக்கத்தில் வந்துகொண்டே இருந்தது. புடைவை தெரிகிறது. கைகள், பாதங்கள் தெரிகின்றன. கலவையாக ஒரு சிரிப்பொலி கேட்கிறது. அந்தச் சிரிப்பொலி கேட்கிறபோதெல்லாம் அவனால் அப்பாவை நேருக்குப் பார்த்துப் பேசமுடியாமலாகிவிடுகிறது.
ஒரு அப்பா எப்படி லவ் பண்ணமுடியும்? அதுவும் யாரையோ.
இந்தக் கேள்விதான். இது ஒன்றுதான். இதற்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் மிச்சமெல்லாம் பிரமாதமில்லை.
"குளிருதாடா செல்லம்?" பஸ் வேகமெடுத்தபோது அப்பாதான் கேட்டார். தன் பிரத்தியேக அன்பை மப்ளருக்குள் சுருட்டி ரகசியமாக அவர் தன் கைப்பையில் எடுத்துவந்திருக்கிறதை அப்போது தான் ஜக்கு கவனித்தான்.
"இல்லப்பா"
"காதை மட்டும் மூடிக்கோ." என்று அவன் தலையைச் சுற்றி மப்ளரைக் கட்டிவிட்டான் குமார்.
"ஹை, பாரதியார் மாதிரி இருக்கே" என்று உடனே எதிர்ப்புற இருக்கையிலிருந்து குட்டி சொன்னாள். ஜக்கு புன்னகை செய்தான்.
பேருந்து செங்கல்பட்டைத் தாண்டியதும் குட்டி எழுந்துவந்து ஜக்குவின் பக்கத்தில் உட்கார்ந்துகொள்வதற்குத் தோதாக குமார் எழுந்து அவளது அப்பாவின் அருகில் சென்று அமர்ந்தான்.
"பசங்க எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க பாருங்க சார். இதுக்காகவாவது மாசம் ஒரு தடவையாவது இப்படி எங்கியாவது போனா தேவலை" என்றார் குட்டியின் அப்பா.
உடனே அதை ஆமோதித்தான் குமார். உண்மையில் ஜக்குவைக் காட்டிலும் அவனுக்கு அந்தப் பயணத்தில் மேலதிகம் சந்தோஷம் இருந்தது. எத்தனை காலம் கழித்து இப்படியொரு பயணம்!
ஒரு புன்னகையுடன் அவன் மாலுவைத் திரும்பிப் பார்த்தான். குழந்தைகளின் பெயரில் பெரியவர்கள் அனுபவிக்கவும் சில சங்கதிகள் இருக்கின்றன. வீட்டை மறந்து, உத்தியோகத்தை மறந்து, நாளைய கவலை மறந்த சில நிமிடங்களாவது அவசியம் கிடைக்கும். நடந்தவாக்கில் மெல்லிய குரலில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளக் கொஞ்சம் காதல் கலந்த சொற்கள். சொற்கள் கூட வேண்டாம். கடந்த காலத்தின் வாசனைமிக்க கணங்களின் ஞாபகம் பூசிய மௌனம் கூடப் போதும்.
வாழ்க்கை விசித்திரம் நிரம்பியது. அளந்து அளந்து தான் அது மகிழ்ச்சியை வெளியே எடுத்துத் தருகிறது. அதுவும் எப்போதாவது. தின்பண்டத்தின் வாசனையே ருசியாகப் பரிமாணம் பெறுவது போல. இறைவனுக்கு நன்றி. இந்தத் தினத்தை நினைத்துக் கொண்டபடிக்கு இன்னும் சில மாதங்களாவது இயந்திரத்தை வலி தெரியாமல் ஓட்டிவிடமுடியும்.
எதிர் இருக்கையில் மாலுவும் காஞ்சனாவும் தமக்குள் மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தொலைக்காட்சித் தொடர்கள், குழந்தைகளின் ஆசிரியர்கள், வேலைக்காரிகள், அவரவர் பிரச்னைகள், மாமனார், மாமியார், கணவர் என்று பேசத் தீராமல் விஷயம் இருந்துகொண்டே இருந்தது. மறுபுறம் குமாரும் குட்டியின் அப்பாவும் பேசிமுடித்துவிட்டு, செய்தித்தாளின் பக்கங்களைப் பங்கிட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
குட்டி கேட்டாள்: "ஜக்கு, நீ மகாபலிபுரத்துல என்னென்ன திங்ஸ் வாங்கப்போறே?"
"தெரியலையே. அங்க என்னென்ன கிடைக்குமோ?" என்று ஜக்கு சொன்னான்.
"எங்கம்மா சொன்னா. சோழி, கூலிங் க்ளாஸ், சிற்பம் எல்லாம் இருக்குமாம். இளநீர் ரொம்ப ஜோரா இருக்குமாம் அந்த ஊர்ல. நான் ஒரு கூலிங் க்ளாஸ் வாங்கப்போறேன்."
"ஓ" என்றான் ஜக்கு. "நான் ஒரு குரங்கு பொம்மை வாங்கப்போறேன்"
"குரங்கு பொம்மையா? அது எதுக்கு?" ஆச்சர்யமுடன் கேட்டாள் குட்டி.
"சும்மாத்தான். அழகா இருக்குமே? உனக்கு காந்தி குரங்கு தெரியுமா?"
"தெரியாதே" என்றாள் குட்டி.
"இருக்கும். நான் காட்டறேன்" என்றவன், தனக்கேன் குரங்கு பொம்மை வாங்கவேண்டும் என்று தோன்றியது என்று யோசிக்கத் தொடங்கினான். ஐம்பது ரூபாய் அவனுக்கு உண்டு. என்ன வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று அப்பா சொல்லியிருந்தார். அம்மா ஒரு சிறிய சைஸ் சரஸ்வதி சிற்பம் கிடைத்தால் வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
மகாபலிபுரம். பல்லவர்களின் நகரம். குடைவரைக் கோயில்கள். சிற்பங்கள். ஓசைமிக்கப் பெருங்கடல். இந்தத் தினத்தில் ஏதோ விசேஷமாக நடக்கப்போகிறது என்பதாக அவனுக்குத் தோன்றியது. என்னவென்று புரியவில்லை. அது மகிழ்ச்சிகரமானதா, வேறுவிதமானதா என்றும் தெரியவில்லை. அப்பாவின் அந்த டைரியைப் படிக்காதிருந்திருந்தால் இந்தத் தினத்தின் வண்ணமே வேறுவிதமாகத் தான் இருந்திருக்கும். ஒரு நூறு புதிர்க் கணக்குகளாலும் விடுகதைகளாலும் சூழ்நிலையை அவன் மிகவுமே மாற்றியிருப்பான். குட்டி வியக்கும் விதத்தில் சிலபல மேஜிக் வித்தைகள், அவளது பெற்றோர் வியந்து பாராட்டக் கொஞ்சம் பாடல்கள், சுலோகங்கள், தன் பெற்றோர் பெரிதுவக்கக் கொஞ்சம் புதிய விஷயங்கள் என்று உண்மையிலேயே அவனது மூளை புதிய தகவல்கள் பலவற்றால் நிரம்பித்தான் இருந்தது. மகாபலிபுரத்தைப் பற்றியே அவனுக்குச் சில சங்கதிகள் தெரிந்திருந்தன. நரசிம்மவர்மப் பல்லவர் அவனுக்கு வகுப்பாசிரியர் மூலம் அறிமுகமாகியிருந்தார்.
ரசனை மிக்க ஆசிரியர்கள் அமைவது பெரிய வரம். அவனது ஆசிரியர் பாடத்திட்டத்தில் இல்லாத பல்லவர் காலத்தை ஒரு பிரசித்தி பெற்ற நாவலின் மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார். சிவகாமியின் சபதம். யார் அந்த சிவகாமி? சரித்திரத்தில் அவள் இல்லை. ஆனால் நரசிம்மவர்மப் பல்லவர் இருக்கிறார். அவர் தான் சிவகாமியைக் காதலித்தவர். கைகூடாத காதல்.
அப்பாவின் காதல் கூடக் கைகூடவில்லை. அந்த நிர்மலா கடைசியில் என்னதான் ஆனாள்? டைரியில் அதுகுறித்த விவரங்கள் போதிய அளவுக்கு இல்லாததில் அவன் கொஞ்சம் ஏமாந்திருந்தான். ஆனால் நரசிம்மவர்மப் பல்லவரின் காதல் குறித்துக் கேள்விப்பட்டபோது இப்படி மனசு பொங்கவில்லை. நரசிம்மவர்மர் தன் அப்பாவாக இல்லாதது தான் காரணமாயிருக்கமுடியும்.
நரசிம்மவர்மர் யாரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டிருப்பார்? அந்தப் பெண்ணுக்கு சிவகாமியைத் தெரிந்திருக்குமா? தன் சொந்தப் பிரச்னை தென்பட்டுவிடாதவகையில், உண்மையிலேயே தெரிந்துகொள்ளும் விருப்பமுடன் அவன் இதை ஆசிரியரிடம் கேட்டான்.
கனிவு மிக்க புன்னகையுடன் அவர் சொன்னார்: "கதையையும் சரித்திரத்தையும் போட்டுக் குழப்பிக்கக்கூடாது ஜகன். சரித்திரத்தைப் புரிஞ்சிக்க ஓரளவு கதை உதவும். ஆனா ரெண்டும் ஒண்ணு இல்லே. சரித்திரத்தில் சிவகாமி கிடையாது. ஓகே?"
சரியான விளக்கம்தான். சந்தேகமில்லை. ஆனால் அப்பாவின் சரித்திரத்திலேயே அந்த நிர்மலா இருந்துவிட்டுப் போய்விட்டது தான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. நல்லது. இது இப்போதே தீர்ந்துவிடக்கூடிய விஷயமாக இல்லை.
மகாபலிபுரம் வந்துவிட்டிருந்தது. அவர்கள் இறங்கி டிபன் சாப்பிட்டுவிட்டு சுற்றிப்பார்க்க ஆரம்பித்தார்கள். ஐந்துரதம். அர்ச்சுனன் தவம். ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட பிரும்மாண்டமான சிற்பசொரூபங்கள். வெண்ணெய்க் கல். ஆ, அது எப்படி உருளாமல், விழாமல் அப்படியொரு உயரத்தில் ஒட்டிக்கொண்டு நிற்கிறது? தொப்பி அணிந்த வெள்ளைக்காரர்கள். சுற்றிவரும் உள்ளூர்க் காரர்கள். சிற்பம் செதுக்கும் உளியோசை. தார்ச்சாலையில் கவிந்த மர நிழல். லைட் ஹவுஸ். கடல். மணல்.
ஒவ்வொரு இடத்திலும் நின்று நிதானமாக இரு அப்பாக்களும் விளக்கிக்கொண்டே வந்தார்கள். பிற்பகல் ஆனபோது சாப்பிடலாம் என்று ஒரு மர நிழலுக்குப் போனார்கள். மாலுவின் புளியோதரை மற்றும் தயிர்சாதப் பொட்டலங்களுக்கு காஞ்சனா கொண்டுவந்திருந்த சிப்ஸ் பாக்கெட் பக்கத்துணையாக இருந்தது. இந்த மாதிரி அடிக்கடி எங்காவது வெளியே போகவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
எல்லாரும் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே ஜக்கு எழுந்துவிட்டான். கை கழுவிக்கொண்டு, குரங்குகள் நிறைய அமர்ந்திருந்த ஒரு பாறையை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஏனென்று தெரியவில்லை. அன்று காலையிலிருந்தே அவனுக்கு அடிக்கடி குரங்குகளின் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது. குரங்கு பொம்மை வாங்கவேண்டும் என்று ஏன் தோன்றியது? அப்பா அனுமதித்தால் வீட்டில் ஒரு குரங்கும் கூட அவனால் வளர்க்கமுடியும். திராட்சைப் பழம் மாதிரி உருளும் அதன் கண்களில் தனக்கேதோ செய்தி இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வந்து இன்னொரு மரத்தடியில் அவன் அமர்ந்துகொண்டான். அங்கிருந்து அந்தப் பாறையும் அதன் மீது அமர்ந்திருந்த குரங்குகளும் சற்றே நெருக்கமாகத் தெரிந்தன. சில விநாடிகளில் அந்தக் குரங்குகளின் மாநாடு முடிவடைந்து ஆளுக்கொரு திசையில் தாவிப் போய்விட்டன. ஒரு குரங்குமட்டும் ஜக்குவை முறைத்துப் பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றது.
அவன் அதனைப் பார்த்து 'வா' என்று சைகை செய்தான். ரூர்ர்...ர்ர் என்றது அது. மீண்டும் வா என்றான். சட்டென்று அது தாவிக்குதித்து அவனிருந்த மரத்தடிக்கே வந்தது. அவன் கையில் பிரித்த பிஸ்கெட் பொட்டலம் ஒன்று இருந்தது. அதைச் சற்று தூரத்தில் போட்டு, அதனைக் காட்டித் தான் குரங்கை அழைத்துக்கொண்டிருந்தான்.
ஐந்தடி தூரத்தில் தன் எதிரே பிரத்தியட்சமாகி, சட்டமாக உட்கார்ந்துகொண்ட குரங்கை அவன் வியப்புடன் பார்த்தான். துளி பயமின்றி அது கூப்பிட்டதும் அருகே வந்தது எப்படி, அதே பயமின்றி தான் எப்படி அதன் எதிரே உட்கார்ந்திருக்கிறோம் என்று அவனுக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. இன்னது செய்கிறோம் என்கிற உணர்வில்லாமலேயே, "ஹாய், ஐயம் ஜகந்நாதன். வாட்ஸ் யுவர் நேம்?" என்று அந்தக் குரங்கைப் பார்த்துக்கேட்டான்.
"ரூர்ர்..ர்ர்ர்" என்று மீண்டும் உறுமியது அது.
"பிஸ்கட் உனக்குத் தான். எடுத்துக்கோ"
ஆனால் அது பிஸ்கட் பொட்டலம் இருந்த திசையில் பார்க்கவே இல்லை. அவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. சற்றும் எதிர்பாராத கணத்தில் அது வாய்திறந்து தமிழில் பேசப்போகிறதோ என்று அவனுக்குத் தோன்றியது. கடித்துவிடுமோ என்று ஓரத்தில் ஒரு பயமும் இருப்பதை உணர்ந்தான். எழுந்து ஓடிவிடலாமா, இருந்து பார்க்கலாமா என்று தீர்மானிக்கமுடியவில்லை. கடைசியில் ஒன்றும் பெரிதாக நடந்துவிடமுடியாது என்று தனக்குள் முடிவுசெய்துகொண்டு, " நீ அழகாத்தான் இருக்கே" என்று சொன்னான்.
அது மீண்டும் ரூர்ர்..ர்ர் என்றது.
"உனக்கு நரசிம்மவர்மரைத் தெரியுமா?"
"ஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்..."
"எங்கப்பாவை?"
"..............."
"சிவகாமிக்கு டான்ஸ் ஆடத்தெரியுமாம். நிர்மலாவுக்கு என்ன தெரியும்னு உனக்குத் தெரியுமா? யார் அவள்னாவது தெரியுமா?"
இப்போது குரங்கு நடப்பதற்குத் தயார் நிலையில் எழுந்துநின்றுகொண்டது.
"போகாதே. உக்கார். கொஞ்சம் பேசணும் உங்கிட்ட"
அவனைத் தேடிக்கொண்டு வந்த குட்டி மரத்தின் பின்னாலிருந்து இந்தப் பேச்சைக் கேட்டு வியப்பாகி அப்படியே நின்றுவிட்டிருந்தாள்.
10
அவள் கண்கள் இமைக்க மறந்திருந்தன. மூச்சும் பதுங்கிப்பதுங்கியே வந்தது. உடலை மரத்தின் பின்னே ஒடுக்கித் தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். இதென்ன அதிசயம்! இந்த ஜக்கு குரங்குடன் பேசுவதாவது! அதுவும் இத்தனை அன்னியோன்னியமாக. தன்னுடன் பேசுவது மாதிரி. உண்மையிலேயே குரங்குடன் தான் பேசுகிறானா? அல்லது தனக்குள் பேசிக்கொள்கிறானா? யாராவது இப்படி வெட்டவெளியில் வாய்விட்டு உரக்கத் தனக்குள் பேசுவார்களா? பைத்தியம் தான் பேசும்.
கடவுளே, ஜக்கு ஒரு பைத்தியமா?
சேச்சே என்று உடனே அவள் தலையைச் சிலுப்பிக்கொண்டாள். அவன் ஒரு லூசு என்று அவனது வகுப்புப்பையன்கள் சிலர் சொல்ல அவள் கேட்டிருக்கிறாள். அவர்கள் தான் லூசு என்று அவள் நினைத்துக்கொண்டு அவர்கள் பார்க்காதபோது பழிப்புக்காட்டுவாள். அவளுக்கு ஜக்கு ஒரு மேதை. இதில் சந்தேகமே இல்லை. வகுப்பில் ஃபர்ஸ்ட் ரேங்கிலிருந்து ஒருபோதும் கீழே இறங்காதவன். மேலும் பூமிக்கு மேலே இருக்கிற விஷயங்கள் அத்தனையையும் பற்றி அவனுக்கு என்னவாவது தெரிந்திருக்கிறது. பட்டாம்பூச்சிகளிலிருந்து நாய்கள், பூனைகள் வரை அவனுக்கு சிநேகமாகாத மிருகங்களே இல்லை. ஒரு குரங்கு சிநேகமாவதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?
அது இல்லை விஷயம். அவன் குரங்குடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தது தான் அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அன்போடு அழைத்தால் எந்த மிருகமும் அருகே வரும், உட்கார்ந்து பேசும் என்று எப்போதும் ஜக்கு சொல்லுவான். ஆனால் எல்லா மிருகத்துக்கும் எப்படி தமிழ் புரியும்?
இது தான் அவளுக்குக் குழப்பமாயிருந்தது. மிருகங்களுக்கு ஆங்கிலத்தில் பேசினாலும் புரியும் என்று ஜக்கு சொல்லியிருந்தாலும் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் குட்டிக்கு நம்பிக்கையே வரவில்லை. அல்லது அவன் சொல்வதில் ஒளிந்திருக்கக்கூடிய ஏதோ ஒரு சூக்ஷும இழை தனக்குப் புரியவில்லை என்று நினைத்தாள்.
எது எப்படியானாலும் ஜக்கு பேசுகிறான். அதுவும் குரங்குடன்! அதிசயமே தான் இது! சந்தேகமே இல்லை. ஆனால் என்ன பேசிக்கொண்டிருக்கிறான் இவன்? தனக்கு ஒன்றுமே புரியவில்லையே? சிவகாமி யார்? நிர்மலா யார்? கேள்விப்பட்ட பெயராகவே இல்லையே?
அவன் வகுப்பில் சிவகாமி என்றோ, நிர்மலா என்றோ யாரும் கிடையாது. அவனது டீச்சர்களில் யாரொருவருக்கும் கூட அந்தப் பெயர் கிடையாது. யார் அவர்கள்? ஜக்குவுக்கு அவர்களை எப்படித் தெரியும்? தன்னிடம் ஏன் இதுவரை அவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கவில்லை? இந்தக் குரங்குக்கு சிவகாமியையும் நிர்மலாவையும் எப்படித் தெரியும்? குரங்குக்கு அவர்களைத் தெரியும் என்பது ஜக்குவுக்கு எப்படித் தெரியும்?
அவளுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இப்போது தான் ஜக்குவின் எதிரே போய் நிற்கலாமா என்று நினைத்தாள். அதிர்ஷ்டம் இருந்தால் "வா, வந்து உக்காரு. இந்தக் குரங்கு இங்க எனக்கு ஃப்ரெண்ட் ஆச்சு" என்று தன்னையும் சம்பாஷணையில் சேர்த்துக்கொள்ளக்கூடும். அல்லது சட்டென்று பேச்சைக் கத்தரித்துவிட்டுத் தன்னுடன் எழுந்துவந்து விடவும் கூடும்.
எதற்கும் இன்னும் சற்றுநேரம் நின்று பேச்சைக் கேட்கலாம் என்று அவள் முடிவு செய்துகொண்டாள்.
"ஏன் பதிலே சொல்லமாட்டேங்கறே? கேக்கறேன் இல்லே? நிர்மலா யாரு? அவளுக்கு என்னென்ன தெரியும்? எங்கப்பாவை அவளுக்கு எவ்ளோ பிடிக்கும்? எங்கப்பாவுக்கு அவளை எவ்ளோ பிடிக்கும்? தெரியுமா உனக்கு? தெரிஞ்சா சொல்லு."
அந்தக் குரங்கு இப்போது மேலும் நெருங்கி வந்து அவனருகே அமர்ந்துகொண்டது. "ஹ்ர்ரும்...ர்ரூம்" என்று சிநேகமாகிவிட்டது.
"உன்னைப் போய்க் கேக்கறேன்பாரு. நானொரு மட்டி. சரி, இந்த ஊர்ல தானே நீ இருக்கே? சிவகாமி யாரு? அதுவாவது தெரியுமா?"
குரங்கு தலையாட்டியது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துவிட்டு, கீழே கிடந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பிய்த்துப் போட்டது.
"வேற என்னதெரியும் உனக்கு? எது கிடைச்சாலும் பிய்ச்சுப் போடு. சனியன். ஒருவாட்டியாவது பிய்ஞ்சி இருக்கறதை ஒட்டவெச்சுப் பார்த்திருக்கியா? அதுவும் சந்தோஷம்தான்." என்றான் ஜக்கு.
இதைக்கேட்டதும் குட்டிக்குப் புன்னகை உண்டானது. ஜக்கு, ஜக்குதான்! அவனா பைத்தியம்! சேச்சே. வாய்ப்பே இல்லை. எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே நினைக்கத் தெரிந்த ஒரு பிறவியாக இருக்கிறான். எப்படி இது சாத்தியம்? ஒட்டவைத்துப் பார்ப்பதில் சந்தோஷம் என்று எப்படி இவனுக்கு நினைக்கத் தோன்றுகிறது?
அவளது பள்ளிக்கூடப் புத்தகம், நோட்டுகள் எதாவது துளி கிழிந்திருப்பதை அவன் பார்த்துவிட்டால் போதும். உடனே எங்கிருந்தாவது ஒரு ஃபெவிகால் ட்யூப் எடுத்துவந்து அழகாகப் பசை தடவி ஒட்டி, காயவைத்து, இந்தா என்பான். சட்டை கிழிந்திருப்பது பிடிக்காது. மரத்தில் ஒரு கிளை உடைந்து தொங்கினால் பிடிக்காது. வாலறுந்து காற்றாடியொன்று தத்திப் பறந்தால் கூட இழுத்துவந்து வால் ஒட்டி ஓரமாக எடுத்துவைக்கிற ஜக்கு.
வினோதம் தான். இப்படியும் தன் வயதுகளில் யாரும் இருக்கமுடியுமா என்ன? ஜக்கு ஒரு விசித்திரம் தான் என்று அவள் நினைத்தாள்.
"நீயே சொல்லு. நான் ஏன் அதைப் படிக்கணும்? எனக்கு ஏன் அது புரியணும்?"
தொடர்ந்து குட்டிக்குப் புரியாத விஷயங்களாக ஜக்கு அந்தக் குரங்குடன் பேசிக்கொண்டிருந்தான். அவன் குரங்குடன் பேசுகிற ஆச்சர்யம் சற்று மறைந்து, இப்போது அவன் ஏதோ கவலையுடன் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரியத் தொடங்கியிருந்தது.
கடவுளே, ஜக்குவுக்கு என்ன அத்தனை பெரிய கவலை இருக்க முடியும்? டீச்சர் ஏதாவது திட்டியிருப்பாளோ? அல்லது வீட்டில்...? அதற்கு வாய்ப்பே இல்லை. யாரும் திட்டும்படியாகவோ, அடிக்கும்படியாகவோ நடந்துகொள்ளவே தெரியாதவனல்லவா அவன்! வேறென்ன கவலை இருக்கமுடியும்?
எதைப் படித்தான்? எதனால் இப்படிப் புலம்புகிறான்?
"என்னது? பேசாம மறந்துடணுமா? விளையாடறியா நீ? உங்கப்பா அப்படி பண்ணியிருந்தா தெரியும் உனக்கு! பெரிசா சொல்லவந்துட்டே?"
அவனது இந்த திடீர் கோபம் அவளுக்கு மேலும் வியப்பாக இருந்தது. அடடா, குரங்கு ஏதோ பேசியிருக்கிறது. அதற்கல்லவா அவன் பதிலுக்குக் கோபப்படுகிறான்! குரங்கு பேசியதைத் தவறவிட்டுவிட்டோமே?
அதுசரி, 'உங்கப்பா அப்படிப் பண்ணியிருந்தா தெரியும் உனக்கு' என்றானே? அப்படியென்றால் ஜக்குவின் அப்பா என்னவாவது பண்ணிவிட்டாரா? என்ன பண்ணியிருப்பார்? அதுவும் இப்படி உட்கார்ந்து வருந்தும்விதமாக?
ஒருவேலை யாரையாவது கொலை பண்ணியிருப்பாரோ?
ஐயோ என்று பயந்துவிட்டாள் குட்டி. கொலை! ஜக்குவின் அப்பாவா? நிஜமாக அப்படி இருக்கமுடியுமா? இல்லாவிட்டால் இவன் ஏன் இப்படி கிடந்து மறுகவேண்டும்? யாரைக் கொலை செய்திருப்பார்? அந்த நிர்மலாவையா? சிவகாமியையா? யார் அவர்கள்? ஜக்குவின் அப்பாவுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? அப்படி கொலை செய்துவிட்டு யாராவது போலிசுக்கு பயப்படாமல் இப்படி மகாபலிபுரம் வந்து சுற்றிப் பார்த்து, உட்கார்ந்து புளியோதரை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்களா?
அவளுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ஏதாவது செய்து ஜக்குவை சமாதானப்படுத்தி குரங்கை விடுத்துத் தன்னுடன் பேசிக்கொண்டிருக்கச் செய்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்தாள்!
ஆனால் அவனை மாதிரி ஒரு மேதைக்கே பிரச்னை என்றால் கேவலம் தான் என்ன ஆறுதல் தந்துவிடமுடியும்? மேலும் அடியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். ஏண்டா என்னவோ மாதிரி இருக்கே என்று தொடங்கி யார் அந்த சிவகாமி, யார் அந்த நிர்மலா, உங்கப்பா அவர்களை என்ன செய்தார், நீ ஏன் கவலைப்படுகிறாய் என்று வரிசையாக நூல்கோத்துக் கேட்கவேண்டும். ஜக்கு கோபமாகி காய் விட்டுவிடக்கூடும். அல்லது ஒண்ணுமில்லை என்று சொல்லிவிடுவான்.
சமாதானங்கள் இல்லை. தீர்வு வேண்டும் என்பதாக அவள் சொற்களில்லாமல் உணரத் தலைப்பட்டாள். ஜக்குவை அப்படியொரு கலக்கமான மனநிலையில் அவள் பார்த்ததே கிடையாது. அதுவும் ஜாலியாக மகாபலிபுரம் வந்திருக்கும்போதா இவன் இப்படி கவலைப்பட்டுக் குரங்குடன் பேசிக்கொண்டிருக்கவேண்டும். அடக்கடவுளே!
தூக்கிப் போட்ட பிஸ்கட் பொட்டலத்தைத் தானே எடுத்து ஒன்றை விண்டு வாயில் போட்டுக்கொண்டு மறுபகுதியை அந்தக் குரங்குக்கு நீட்டினான் ஜக்கு.
"சாப்டு. நீ பதில் சொல்லாட்டியும் எனக்கு ஃப்ரெண்டு தான். சாப்டு" என்றான்.
குரங்கும் மறுக்காமல் அவன் கையிலிருந்த பிஸ்கெட் துண்டை வாங்கி வாயில் போட்டுக்கொண்டது.
இப்போது தான் அவனருகே போகலாமா என்று குட்டி நினைத்தாள். அவன் கோபித்துக்கொண்டால் கூடச் சமாளித்துக்கொள்ளலாம். குரங்குக்குக் கோபம் வந்து மேலே பாய்ந்துவிட்டால்? ஐயோடா.
வேணவே வேணாம் என்று முடிவு செய்தாள். ஆனால் இந்த ஜக்கு இப்படித் தன்னை விட்டுவிட்டு இப்படித் தள்ளிவந்து ஒரு குரங்குடன் பேசிக்கொண்டிருப்பதில் அவளுக்கு உண்மையிலேயே வருத்தமாகத் தான் இருந்தது. கொஞ்சம் கோபமாகவும்.
"என்னை என்னதான் பண்ணணுங்கறே? மறந்துடுன்னு சொல்லாதே. அது முடியலை. தூக்கமே வரமாட்டேங்கறது தெரியுமா? ராத்திரி படுத்தா வயலட் கலர்ல நூறு புடைவை அலை அலையா வருது தெரியுமா? உனக்கென்ன தெரியும்? திடீர்னு நாளைக்கோ மத்தாநாளோ அவ எங்க வீட்டுக்கு வந்து வாசல்ல நின்னு அப்பாவை வான்னு கூப்டா எங்கம்மா என்ன பண்ணுவா? அப்பா என்னையும் அம்மாவையும் விட்டுட்டு அன்னிக்கு டிவில காட்டின சதிலீலாவதி படத்து ஹீரோ மாதிரி அவளோட போயிட்டா நாங்கதான் என்ன பண்றது? தாத்தாவுக்கு ஏற்கெனவே உடம்பு சரியில்லை. இப்படி எதாவது ஆகி அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தா என்ன ஆகும்? தாத்தாக்கு ஒண்ணுன்னா பாட்டி செத்தே போயிடுவாளே, உனக்குத் தெரியாதா? இவ்ளோ ப்ராப்ளம்ஸ் இருக்கும் மறந்துடுன்னு இனிமே சொல்லாதே நீ. நீ என் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னா முதல்ல என்னைப் புரிஞ்சுண்டு பேசு. ஓகே?"
அவன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தான். குரங்கு அவனருகே திட்டமாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. மரத்தின் பின்னாலிருந்து இதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த குட்டிக்கு வியப்பு முற்றிலும் மறைந்து கொஞ்சம் பயமும் கலவரமுமாக ஆகிப் போனது.
இல்லை. இவன் விளையாட்டாக ஏதும் பேசவில்லை. தீவிரமாக, ரொம்பத் தீவிரமாக அல்லவா என்னவோ பேசுகிறான்? தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்கிறானே? ஐயோ, அப்படி என்ன ஆகிவிட்டது? இத்தனை பெரிய பிரச்னையுடன் இவன் என்னத்துக்காக மகாபலிபுரம் வரவேண்டும்? அப்படியே தீவிரமான விஷயமென்றாலும் தன்னிடம் கூடவா சொல்லக்கூடாது? தான் அவனுக்கு பெஸ்ட் ஃப்ரெண்டு இல்லையா? தன்னைவிடவா அந்தக் குரங்கு முக்கியமாகிவிட்டது ஜக்குவுக்கு?
இதைச் சும்மா விட்டுவிடக்கூடாது! அதுவும் தன்னிடம் இதுவரை பேசாத என்னென்னவோ விஷயங்களையல்லவா அவன் அந்தக் குரங்கிடம் பேசிக்கொண்டிருக்கிறான்! சிவகாமியாம், நிர்மலாவாம், அப்பாவாம்! ஹும்.
இரு இரு, இதைப் பத்தி எங்கம்மாகிட்ட சொல்லி என்னன்னு கேக்கச் சொல்றேன் என்று நினைத்துக்கொண்டு மெல்ல நகர்ந்து, ஓடிப் போனாள்.
11
நாளெல்லாம் அலைந்து கால் வலி எடுத்திருந்தும் அன்று இரவு ஜக்குவுக்குத் தூக்கம் வரவில்லை. மகாபலிபுரத்தில் கண்ட அதிசயங்களெல்லாம், அது குறித்துக் கேட்டறிந்த கதைகளெல்லாம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. இந்தக் குட்டிக்கு என்ன ஆகிவிட்டது? திரும்பி வரும்போது என்னவோ கேட்டாளே? அது என்ன? எப்படி என் மனக்குழப்பத்தை அவள் கண்டுபிடித்தாள்?
இது தான், இந்தக் கேள்விதான் அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.
"ஜக்கு, நீ என் நிஜமான ஃப்ரெண்டுன்னா சொல்லிடு. என்னத்தை நினைச்சுண்டு கவலைப்பட்டுண்டிருக்கே? உன்னைப் பார்த்தாலே எனக்குப் பாவம் பாவமா இருக்கு"
அதோடு அவள் நிறுத்திக்கொண்டிருந்தால் கூடப் பரவாயில்லை. எதையாவது சொல்லி சமாளித்து இருக்கலாம். ஆனால் தான் குரங்குடன் பேசிக்கொண்டிருந்ததை வேறு கேட்டிருக்கிறாள். அவள் வந்ததைத் தாம் எப்படி கவனிக்கத் தவறினோம்? சுய நினைவே இல்லாமலா அந்தக் குரங்குடன் பேசிக்கொண்டிருந்தோம்? பைத்தியமாகிவிட்டேனா என்ன?
அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. "நீ சொல்லமாட்டேன்னா சரி. நீ இந்தமாதிரி நடந்துக்கறேன்னு நான் எங்கம்மாகிட்ட சொல்லி, உங்கம்மாவைக் கேக்க சொல்லுவேன்" என்றுவேறு பயமுறுத்தியிருந்தாள் குட்டி.
அவனுக்கு ஒரே சங்கடமாகப் போய்விட்டது. "நீ ட்ரூ ஃப்ரெண்டுன்னா இதை உங்கம்மாகிட்ட சொல்லமாட்டே. இது காட் ப்ராமிஸ்" என்று சொல்லி குட்டியின் வாயைக் கட்டமுடிந்துவிட்டாலும் அநாவசியமாக அவள் மனத்தில் சில சலனங்களை உண்டாக்கிவிட்டது குறித்து அவனுக்கு உண்மையிலேயே கவலையாகத் தான் இருந்தது.
ஒருவேளை குட்டியைப் பொருட்படுத்தி எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் தன் பளு குறைந்துவிடக்கூடும். அவளும் சந்தேகங்களின்றி தனக்கு ஆறுதலாக இருக்கத் தொடங்கிவிடுவாள். ஆனால் எதை, எங்கிருந்து தொடங்கிச் சொல்லுவது?
அதுதான் அவனுக்குப் புரியவில்லை. வாயைத் திறக்கவே செய்யாமல் தன் மனத்திலிருப்பதை ஒரு பொட்டலமாகக் கட்டி எடுத்து அவள் மனத்துக்குள் வைத்துவிடமுடியுமானால் மிகவும் நன்றாக இருக்கும். முடிந்த நேரத்தில் அவள் பிரித்து எடுத்துப் புரிந்துகொள்ளட்டும்.
அவன் மகாபலிபுரத்திலிருந்து புறப்படுகிறவரை அந்தக் குரங்கு அவன் கூடவே தான் வந்தது. போகும் வழியெல்லாம் அதுவும் ஒரு ஓரமாக. தான்பாட்டுக்குத் தன்பாதையில் போய்க்கொண்டிருப்பது போல. 'இது என் பேட்டை. நீங்கள் தான் விருந்தாளிகள்' என்பது மாதிரி. ஆனால் அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அது தான் போகுமிடமெல்லாம் தன்னுடன் தான் வந்துகொண்டிருக்கிறது என்பது.
அர்ச்சுனன் தவத்தைப் பார்க்க எல்லாரும் அந்த இருட்டுக் குகைக்குள் நுழைந்துகொண்டிருந்தபோது அவன் சற்றே பின் தங்கி அதனைப் பார்த்துக் கேட்டான்: "நான் கேக்கற எதுக்கும் பதில் சொல்லமாட்டேங்கறே? அப்புறம் எதுக்கு என் கூடவே வரே?"
அது சிரித்தது. "ஹ்ர்ர்ரும்..ருஹ்ம்ம்" என்று சொன்னது.
"என்னது? சமஸ்கிருதத்துல நீ சொல்ற பதில் எனக்குப் புரியலையா? இந்தக் கதையெல்லாம் வேணாம். தமிழ்ல சொல்லு. உனக்குத் தமிழ் தெரியும்னு எனக்குத் தெரியும். நீ இங்கிலீஷ்ல சொன்னாலும் எனக்குப் புரியும். உனக்கு இங்கிலீஷ் தெரியுமா?" என்று கேட்டான்.
அது மீண்டும் சிரித்தது. பிறகு பேச்சைக் கத்தரித்துவிட்டு, தானும் ஒரு சுற்றுலாப் பயணி மாதிரி சிற்பங்களைப் பார்க்கத் தொடங்கியது.
அவனுக்கு என்ன தோன்றியது என்றால், ஏதோ ஒரு காரணத்துக்காகக் கடவுளே அந்தக் குரங்கை அவனிடம் அனுப்பியிருக்கிறார். தெய்வீகக் குரங்குதான் அது; சந்தேகமில்லை. இல்லாவிட்டால் மகாபலிபுரத்தின் நூற்றுக்கணக்கான குரங்குகளில் எதுவொன்றுக்கும் இல்லாத அக்கறை இந்தக் குரங்குக்கு மட்டும் ஏன் உண்டானது? என்னத்துக்காக அது தன் கூட்டத்தை விட்டு விலகி வந்து தன்னருகே அமர்ந்து, தன்னைப் பேசத் தூண்டியிருக்க வேண்டும்?
அது வம்புக்கு அலையும் குரங்கு அல்ல என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது. தன்னைப் பேசவிட்டு, பேசவிட்டு, மனத்தைச் சுத்திகரிக்க அது திட்டமிட்டு செயல்படுவதாகவே நினைத்தான்.
ஒரு சாதாரண குரங்குக்கு இந்த புத்திசாலித்தனம் சாத்தியமில்லை. அது தெய்வீகக் குரங்காக இருப்பதனால்தான் முடிகிறது என்றும் தோன்றியது.
பஸ் ஏறும்போது ஜன்னலுக்கு வெளியே ஒரு டீக்கடைக் கூரையின்மீது உட்கார்ந்து இருந்த அந்தக் குரங்கைப் பார்த்து மானசீகமாகக் கேட்டான்: "பேசாம என்கூட மெட்ராஸ் வந்துடேன்?"
"ஹ்ர்ர்ரும்...பாக்கலாம்" என்றது அது.
"அட சனியனே? தமிழ்தான் தெரியறதே, இன்னிக்கெல்லாம் ஏன் பின்ன என் உயிரை வாங்கினே?"
இப்போதும் அது சிரித்தது. பஸ் புறப்பட்டு விட்டது. ஏனோ அது வராது என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு வகையில் அதுவும் நல்லதுதான். அது மட்டும் வந்துவிட்டால் பிறகு குட்டியுடனோ, வெங்கடாஜலபதியுடனோ, தாத்தா பாட்டியுடனோ தன்னால் நேரம் செலவழிக்கவே முடியாமல் போய்விடும் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. வெங்கடாஜலபதி முறைக்கும். மம்மு சாப்பிடப் படுத்தும். இந்தக் குட்டிக் கடங்காரி ஏன் கா விட்டுட்டே என்று கேட்டே கொல்லுவாள். தாத்தாவின் முட்டிவலி வாதவேங்கைத் தைலத்தை மீறிப் பெருகும்.
வேண்டாம். எல்லா உயிர்களையும், வலிக்கக் கிள்ளுவது தன் நோக்கமில்லை. ஆனால், தன் வலிக்குத்தான் ஒரு நிவாரணம் இல்லாமல் ஆகி விட்டது. வயலட் புடைவை அணிந்த நிர்மலா. அவள் ஏன் செத்துப் போயிருக்கக் கூடாது? ஒருவேளை செத்துப் போனவளின் உயிரைத்தான் அப்பா தன் டைரிக்குள் மயிலிறகு போல் எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாரோ?
தூங்கியது தெரியாமல் தூங்கி, விடிந்தது தெரியாமல் விழித்தபோது, ஹாலில் முற்றிலும் புதிதாகவும், அதே சமயம் நன்கு அறிமுகமானது போலவும் தோன்றிய ஒரு குரல் கேட்டது.
"ஜக்கு மாதிரி ஒரு ப்ரில்லியண்ட் பாய் திடீர்னு இப்படி சைலண்டா ஆயிடறதும் க்ளாஸ்ல எப்பப்பார் விட்டத்தைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்கறதும் சந்தேகத்துக்குரிய விஷயங்கள் மிஸ்டர் குமார். வீட்ல எதனா பிரச்னையா? திட்டினிங்களா? அடிச்சிங்களா? ஒண்ணுமில்லாம அவன் அப்படி ஆகமுடியாது. திங்க் பண்ணிப்பாருங்க. சம்திங் ஷுட் பி தேர். முதல்ல அவனை நார்மலா ஆக்கப் பாருங்க. தட்ஸ் வெரி இம்பார்ட்டண்ட் தேன் எனிதிங். மகாபலிபுரம் கூட்டிக்கிட்டு போனிங்களா? குட். வெரி குட். ஒரு சேஞ்ச் இருக்கறது நல்லது தான். இந்தப் பக்கம் எங்க அங்கிள் வீட்டுக்குப் போயிட்டிருந்தேன். சட்டுனு மாலா மேடத்தை வாசல்ல பார்த்ததும் வந்து சொல்லிட்டுப் போயிடணும்னு தோணிச்சி. அதான். தேங்ஸ் ஃபர் யுவர் நைஸ் காஃபி. நான் வரட்டுமா?"
கடவுளே, சந்திரா டீச்சர் குரல்! டீச்சரா? டீச்சரா வந்திருக்கிறார்கள்? ஐயோ! எதற்கு வந்தாள்?
குப்பென்று தூக்கம் ஒழிந்து, அடிவயிற்றில் பயம் பற்றிக்கொண்டது ஜக்குவுக்கு. டீச்சர் எதற்குத் தன் வீட்டுக்கு வரவேண்டும். தன்னைப் பற்றித்தான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். அம்மா காப்பி போட்டுக் கொடுத்திருக்கிறாள். டீச்சர் கிளம்பிக்கொண்டிருக்கிறாள்.
வந்தது தெரியாமல் இப்படித் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறோமே? க்ளாஸில் அடிப்பாளோ? ஐயோ. சட்டென்று எழுந்துபோய் குட் மார்னிங் டீச்சர் சொல்லவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. உடனே வேண்டாம் என்றும் நினைத்தான்.
தனக்கு என்னவோ ஆகிவிட்டதாக குட்டி நினைக்கிறாள். இப்போது டீச்சருக்கும் தெரிந்துவிட்டது. நாளை எல்லாருக்குமே தெரிந்துவிடப் போகிறது. எல்லாரும் கேட்கும்போது என்ன சொல்லுவது? எல்லாரிடமும் அப்பாவின் டைரியைப் பற்றியா சொல்லமுடியும்?
அன்று பார்த்த டைரி. படித்த டைரி. அதன்பிறகு வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தன்னையறியாமல் வேறு ஏதேனும் கிடைக்குமா என்று அவன் தேடிக்கொண்டே தான் இருக்கிறான். எதுவும் கிடைக்கக் கூடாது என்கிற பிரார்த்தனை உள்மனத்தில் இருந்தாலும் ஏதாவது அகப்படாதா என்கிற ஏக்கமும் இருந்தது. தனக்கு என்ன ஆகிவிட்டது என்று தன்னையே பலமுறை கேட்டுக்கொண்டான். எதுவுமே ஆகவில்லை என்று மேல் மனசு பதில் சொன்னாலும் உள்மனம் அதை ஆமோதிக்க மறுத்துக்கொண்டே இருந்தது.
ஒரே தீர்வுதான். அந்த டைரியை எடுத்துக்கொண்டுபோய் அப்பாவிடம் காட்டி, இதான் விஷயம், இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுவிடலாம் என்று தோன்றியது.
தள்ளிப்போடுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. டீச்சர் போகட்டும். இதோ , இப்போதே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தான். அந்தக் கணம் அம்மா, தாத்தா, பாட்டி, வீடு, அதன் அமைதி எல்லாம் மறந்து, உடனடியாகத் தீர்த்துவிடவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே அவன் மனமெங்கும் வியாபித்திருந்தது.
டீச்சர் வாசலுக்குப் போய்விட்டதைத் தெரிந்துகொண்டு துள்ளி எழுந்து பாத்ரூமுக்குப் போனான். அவசர அவசரமாகப் பல்தேய்த்துத் துப்பி, முகம் கழுவிக்கொண்டான்.
சப்தம் கேட்டு, "எழுந்தாச்சா?" என்றபடி அம்மா சமையலறைக்குள் நுழைந்தாள். 'உம்' என்றபடி முகம் துடைக்கத் துண்டை எடுக்க அவன் புறக்கடைக் கதவைத் திறந்து கொடியை நாடிப் போனபோது "ஹ்ர்ரும்" என்கிற குரல் கேட்டது.
"நீயா? வந்துட்டியா? எப்போ வந்தே?" அவனுக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது.
"நான் வந்து ஒன் அவர் ஆறது. கார்த்தால ஃபர்ஸ்ட் பஸ் ஏறி வரேன்" என்றது அது.
"நான் டிசைட் பண்னிட்டேன்!"
"தெரியும். அதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திடணும்னு தான் ஓடிவரேன்"
"என்னது?"
"இன்னிக்கு என்ன கிழமை?"
"இன்னிக்கு? மண்டே. ஏன் கேக்கறே?"
"சொல்லு. மண்டேவும் அதுவுமா உங்கம்மா இத்தனை சாவகாசமா வீட்டுல இருந்து என்னிக்கானா பார்த்திருக்கியா? புதுப்புடைவை கட்டிண்டிருக்காளே, அதையாவது கவனிச்சியா?"
அவன் குழம்பினான். "இல்லையே? ஏன்? இன்னிக்கு என்னது?"
"மக்கு" என்றது அது. "ஞாபகமில்லையா? உங்கப்பா, அம்மாவோட வெட்டிங் டே இன்னிக்கு. எங்கியாவது டைரி அது இதுன்னு உளறிவைக்காதே. இதைச் சொல்லணும்னு தான் ஃபர்ஸ்ட் பஸ் பிடிச்சி ஓடி வரேன். இன்னும் நான் ப்ரேக் ஃபாஸ்ட் கூட சாப்டலை. ஒரே பசி"
"ஓ" என்றான் ஜக்கு. தன்னையறியாமல் தன் வேகம் மட்டுப்படுவதையும் உணர்ந்தான். மனத்துக்குள் ஓய்ந்து போய் தளர்ந்து நடந்து உள்ளே போனான். அம்மா கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்துவிட்டு ஹோம் ஒர்க் நோட்டுப் புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு வாசலுக்குப் போய் உட்கார்ந்தான்.
"இங்கவாடா செல்லம்" என்று தாத்தா ஈசி சேரிலிருந்து கூப்பிட்டார். வெங்கடாஜலபதி அபூர்வமாக அப்போது தாத்தாவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தது.
12
குழந்தைக்கு ஏதோ உடம்புக்கு சரியில்லை என்றுதான் தாத்தா முதலில் நினைத்தார். பின்னே, ஒரு நாள் தவறாமல் ஹோம் ஒர்க் என்கிற பெயரில் இம்போசிஷன் மாதிரி அல்லவா நூறு நூறு பக்கங்கள் எழுதவேண்டியிருக்கிறது? அதான், அலுப்பாகியிருப்பான் என்பது அவரது அனுமானம். வீட்டுக்கு வந்திருந்த சந்திரா டீச்சரிடம் கூட இது குறித்த தமது விமர்சனங்களை எடுத்துச் சொல்லலாமா என்று யோசித்தார். குழந்தைகளின் அறிவு வளர்ச்சி என்பது எத்தனை பக்கங்கள் ஹோம் ஒர்க் செய்கிறார்கள் என்பதில் இல்லை. உலகெங்கும் கல்வித்திட்டங்களில் எத்தனையோ நவீனம் வந்துவிட்டபோதிலும் தெய்வத் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இன்னும் பள்ளிப் பிள்ளைகளைப் பொதி சுமக்கும் கழுதைகளாகவே ஆசிரியர்கள் கருதும் வழக்கம் இருக்கிறது? கையை ஒடிக்கும் கணக்குப் பாடங்கள் எது ஒன்றும் வாழ்க்கைக்கு உதவுகிற ரகம் இல்லை. தவிரவும் வாழ்க்கைக்கு உதவக்கூடியதெனப் பாடத்திட்டங்களில் மேலதிகம் ஏதுமிருப்பதில்லை.
ஒரு நாள் இரவு தொப்பையின் மேல் காலைப் போட்டுக்கொண்டு நிலா வெளிச்சத்தில் வாசலில் படுத்துக்கொண்டு ஜக்கு தன் பள்ளிக் கதையொன்றைத் தாத்தாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
அன்று அவன் வகுப்புக்கு அபூர்வமாகத் தலைமை ஆசிரியர் வந்திருந்தார். எப்போதும்போல் இனிய புன்னகையிலும் காட்டன் புடைவையிலும் சந்திரா டீச்சர் அவரை வரவேற்று, தன் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டுத் தான் எழுந்து நின்றுகொண்டார்.
பொதுவாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களூக்கும் தலைமை ஆசிரியர்களூக்கும் அப்படியொன்றும் நெருக்கமான உறவுமுறை இருக்காது. தலைமை ஆசிரியர்கள் பெரும்பாலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் மட்டுமே ஓரளவு நெருங்கக்கூடியவர்கள். அதுவும் பொதுத் தேர்வுக்குச் செல்பவர்கள் என்கிற காரணத்தினால் மட்டுமே. ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கிலீஷ் இரண்டாம் பேப்பருக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வைக்கிற தலைமை ஆசிரியர்களைப் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது.
ஜக்குவின் பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியர், ஒரு தமிழ் ஆசிரியர். தப்பு, தப்பு. தமிழாசான். தமிழிலக்கணத்துக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வைக்கிற அவருடன் பள்ளி மாணவர்கள் யாருக்குமே எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் குறுந்தொகை போன்ற நெட்டுரு பண்ணக் கஷ்டமான பாடல்களை அவர் குரலெழுப்பிப் பாடவும் செய்வதில் வல்லவராக இருந்ததால் சீனியர் மாணவர்கள் அவருக்கு பெங்களூர் ரமணியம்மாள் என்று பட்டப்பெயர் வைத்திருந்தார்கள்.
ஜக்கு பெங்களூர் ரமணியம்மாளின் பாடல்களைக் கேட்டதில்லை. தலைமை ஆசிரியரின் பாட்டையும் கேட்டதில்லை. ஆனால் இரண்டுமே தமாஷாகத் தான் இருக்கும் என்று நினைத்திருந்தான்.
திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றித் தன் வகுப்புக்கு வந்திருக்கும் தலைமை ஆசிரியர், பையன்களை மகிழ்விக்க பெங்களூர் ரமணியம்மாள் குரலில் ஒரு நற்றிணைப்பாடல் பாடப்போகிறாரா என்ன?
அவன் ஆர்வமுடன் காத்திருந்தபோது தலைமை ஆசிரியர், தன் போதனைகளைத் தொடங்கினார்.
மாணவர் சமுதாயம் இக்காலத்தில் தமிழ் படிப்பதை ஒரு கீழான விஷயமாக எண்ணத்தொடங்கியிருப்பதில் அவர் உண்மையிலேயே மிகவும் கலக்கமுற்றிருக்கிறார். இதற்குப் பல பள்ளிகளும் ஒரு காரணம். பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பாடங்களே இல்லை. இது நம் தாயைப் புறக்கணிப்பதற்கு ஒப்பாகும். என்னருமை மாணவச் செல்வங்களே, நீங்கள் தமிழ்ப் பாடங்களிலும் தீவிர ஆர்வமும் கவனமும் காட்டவேண்டும்.
இவ்வாறு சொல்லிவிட்டு, பிரசித்தி பெற்ற தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற பாடலை வசன நடையில் உச்சரிக்கத் தொடங்கினார்.
காலமில்லாத காலத்தில் திடீரென்று இவர் என்னத்துக்காக இன்று உள்ளே நுழைந்து தமிழின் அருமை பெருமைகளைக் குறித்துப் பேசவேண்டும்?
ஜக்குவுக்குப் புரியவில்லை.
தலைமை ஆசிரியர், சந்திரா டீச்சரிடம், பையன்களில் யார் யாருக்குத் தமிழில் ஆர்வம் அதிகமிருக்கிறது என்று அவர் கேட்டார். ஜக்கு உட்பட ஏழெட்டுபேரை டீச்சர் கையை உயர்த்தச் சொன்னதும் "அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. மத்த மாணவர்களும் அதே ஆர்வத்தைத் தமிழ்மீது செலுத்தணும். தமிழ் படிக்கறதைப் பெருமையா நினைக்கணும்" என்று சொன்னார்.
அடக்கடவுளே, பாடம் படிப்பதில் பெருமை என்ன இருக்கிறது? அது கடமை அல்லவா என்று ஜக்கு நினைத்தான். ஆனால் இன்னொரு ஆசிரியரான மாசிலாமணி வாத்தியார் - இவர் ஆறாம் வகுப்பிலிருந்து வரலாறும் புவியியலும் போதிக்கிறவர் - இந்தத் தமிழ்ப் பாடங்களும் வரலாறு புவியியலும் ஒருபோதும் வாழ்க்கைக்கு உதவாது என்று சொல்லிவிட்டுத் தான் அக்பரின் அரசவைக்குள்ளேயே நுழைவார்.
ஆறாம் வகுப்புக் குழந்தைகளின் மத்தியில் இப்போதே ஏன் வாழ்க்கை குறித்தெல்லாம் பேசவேண்டும் என்று சந்திரா டீச்சர் உட்படப் பல ஆசிரியர்கள் உரக்கக் கடிந்துகொள்வதை ஜக்கு பல சமயம் கேட்டிருக்கிறான். வாழ்க்கை குறித்த அலசல்களுக்கு வயதோ, வகுப்போ ஒரு வரம்பல்ல என்பார் அவர்.
தலைமை ஆசிரியர் ஓயாமல் தமிழ் படிக்கவேண்டியதன் அவசியம் குறித்துச் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தவர், சற்று இடைவெளி விட்டு, "ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்" என்று அறிவித்துவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டார்.
ஜக்கு எழுந்து நின்று பக்கத்து க்ளாஸில் மாசிலாமணி வாத்தியார் ஒவ்வொரு வகுப்பின் தொடக்கத்திலும் ஒலிபரப்புகிற அந்த விஷயத்தை எடுத்துக் கேட்டான். தமிழும் வரலாறும் புவியியலும் வாழ்க்கைக்கு உதவுமா?
தலைமை ஆசிரியர் ஒருகணம் திடுக்கிட்டார். கடிந்துகொள்ளலாமா, விளக்கலாமா என்று அவர் மனத்துக்கண் மாசில்லாமல் யோசித்திருக்கவேண்டும். சில விநாடிகள் மிகவும் இறுக்கமாகக் கரைந்து ஒழுகின.
இறுதியில் "உதவக்கூடியது தான் பாடங்களாக இருக்கும்" என்று சொன்னார். மேலும் சில விஷயங்களும் சொன்னார். இந்த வயதில் இத்தகைய கேள்விகளே பையன்களுக்குக் கூடாது. எல்லாவற்றையும் எடுத்து உள்ளே போட்டுக்கொள்ளுகிற ஆர்வம் மட்டுமே இருக்கவேண்டும். வயதும் அனுபவமும் பக்குவமாக விஷயங்களைப் பிரித்து எடுத்தாளக் கற்றுக்கொடுக்கும். ஜகந்நாதன் என்கிற ஜகன். ரொம்ப நல்லது. வகுப்பில் அவன் எத்தனையாவது ரேங்க் வருகிறான்?
சந்திரா டீச்சரிடம் போகும்போது மறக்காமல் கேட்டார்.
"ஃபர்ஸ்ட் ரேங்க் அவன் தான் சார்" என்று பெருமையுடன் சந்திரா டீச்சர் அறிவிப்பதை ஜக்கு கேட்டான். ஓ என்றார் தலைமை ஆசிரியர். தனியே அறைக்குக் கூப்பிட்டுப் பேசலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அந்த எண்ணத்தைத் தவிர்த்துவிட்டு அடுத்த வகுப்புக்குள் நுழைந்து தமிழுக்கு அமுதென்று பேர் என்று ஆரம்பித்ததை ஜக்கு கேட்டான்.
பிற்பகல் மாசிலாமணி வாத்தியார் வகுப்புக்கு வந்தபோது நடந்த விஷயத்தை மாணவர்கள் சொன்னார்கள்.
அவர் சிரித்துவிட்டு, "இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த ஸ்பெஷல் தமிழ் க்ளாஸ் இருக்கும் பிள்ளைகளா! நிர்வாகத்துல புதுசா ஒரு யோசனை பண்ணிக்கிட்டிருக்காங்க. நம்ம ஸ்கூலை ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூலா மாத்த யோசிச்சிக்கிட்டிருக்காங்க. அப்படி மாத்தினா உங்களூக்கு வேற ஹெட் மாஸ்டர் வந்துடுவார். நான் இருப்பேனாங்கறதும் சந்தேகம்" என்று சொன்னார்.
ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியின் பாடத்திட்டங்களால் மாணவர்களுக்கு என்னென்ன நன்மைகள் உண்டு என்றும் அவர் எடுத்துச் சொன்னார்.
யாருக்குமே அவர் சொன்னது புரியவில்லை. மெட்ரிகுலேஷன் என்றால் பாடங்கள் மாறுமா? வேறு புத்தகங்கள் வாங்கவேண்டுமா? இன்னும் கஷ்டமாக இருக்குமா?
ஜக்கு, தாத்தாவிடம் கேட்டான்.
"இப்போ தினசரி அரைக்கிலோ புஸ்தகம் எடுத்துக்கிட்டு போற இல்லே, பள்ளிக்கூடத்துக்கு? மெட்ரிகுலேஷன் ஆயிட்டா ஒண்ணரைக்கிலோ எடுத்துக்கிட்டுப் போகணும். அதான் வித்தியாசம் " என்றார் தாத்தா.
"மெட்ரிகுலேஷன் ஆயிட்டா தமிழ்ப் பாடம் இருக்காதா தாத்தா?"
"இருக்கும். ஆனா ஆப்ஷனல். உனக்குத் தமிழ் வேணும்னா தமிழ். ஹிந்தி வேணும்னா ஹிந்தி. ரெண்டு சாய்ஸ் இருக்கும்"
"அட! நான் ரெண்டும் எடுத்துப்பேன்" என்றான் ஜக்கு.
"எங்கண்ணு" என்று அவன் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார் அவர். அந்தத் தனியார் பள்ளி அடுத்த வருடமே மெட்ரிகுலேஷன் பாடத்திட்டங்களூக்கு மாறிவிட, கூடுதலான பாடங்கள், செலவு இரண்டையுமே சமாளிக்கவேண்டியதானது. செலவைச் சமாளிக்க குமார் தான் தடுமாறினானே தவிர, பாடங்களைச் சமாளிக்க ஜக்கு சிறிதும் சிரமப்படவில்லை. அதே முதல் ரேங்க். அதே புத்திசாலித்தனம். அதே கற்பூர புத்தி.
புத்திசாலிக் குழந்தைகளூக்குச் சுமை என்று ஏதுமிருப்பதில்லை. இயல்பான ஆர்வத்தின் தகிப்பில் அவர்கள் தம் சுமையை வெண்ணெய்போல் உருக்கி, சின்ன பாட்டிலுக்குள் அடைத்துவிடுகிறார்கள்.
பாடத்திட்ட மாறுதல்களினால் ஒட்டுமொத்தப் பள்ளிக்கூடமே கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருந்தபோதும் ஜக்கு தன் பிரத்தியேக முயற்சியாலும் கவனத்தாலும் சிரமமேதுமின்றிப் படிப்பைக் கையாண்டதை அவர் கூர்ந்து கவனித்தார். ட்யூஷன் வேண்டுமா என்று குமார் கேட்டபோது வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, சக மாணவர்களை வீட்டுக்கு அழைத்துவந்து தனக்குப் புரிந்ததைச் சொல்லிக்கொடுக்கிற மேதமை அவனுக்கு இருப்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த ஜக்குவா வகுப்பில் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்? ஆர்வமின்றி எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறான்? பிரமை கொண்டவன் போல் செயலற்றிருக்கிறான்? என்னவென்று கேட்பது? எப்படி இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது?
தாத்தாவுக்குக் கவலையாக இருந்தது. அவனைக் கூப்பிட்டுத் தன் பக்கத்தில் உட்காரவைத்துத் தலையை வருடினார். சில வினாடிகள் பொறுமையாக இருந்த ஜக்கு, அவர் ஆரம்பிப்பதற்கு முன்னமே முந்திக்கொண்டு, "எனக்கு ஒண்ணும் இல்லே தாத்தா. டீச்சர்தான் என்னமோ கம்ப்ளைண்ட் பண்ணியிருக்காங்க." என்று சொன்னான்.
தாத்தாவின் அருகிலிருந்த வெங்கடாஜலபதி, 'வவ்வூவ்வ்' என்றது.
"சீ வாயை மூடு" என்றான் ஜக்கு. அவன் சொல்வது பொய் என்று அது கண்டுபிடித்துவிட்டதில் அவனுக்குக் கோபம் உண்டானது. "இரு, இரு, உன்னைத் தனியா வெச்சுக்கறேன்" என்று தாத்தாவுக்குத் தெரியாமல் அதனைப் பார்த்து விரலாட்டி எச்சரித்தான். உடனே அது துக்கம் மிகுந்து படுத்துக்கொண்டது.
"டீச்சர் கெடக்கா ஜக்கு. நீ குட்பாய். அது எனக்குத் தெரியும். ஆனா சொல்லு, உடம்புக்கு என்னமாச்சும் பண்ணுதா? க்ளாஸ்லே தலை வலிக்கறதா? சில சமயம் அப்படிக்கூட ஆகும். அடிக்கடி தலை வலி வரும். கண் டெஸ்ட் பண்ணி கண்ணாடி போட்டா சரியாயிடும்..."
இந்தத் தாத்தாவால் எப்படி இத்தனை எளிமையாக மட்டுமே யோசிக்கமுடிகிறது? அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
"ஐயே, அதெல்லாம் இல்லை தாத்தா. நான் சரியாத்தான் இருக்கேன்" என்றான் ஜக்கு.
"அது எனக்குத் தெரியறது. உங்க டீச்சருக்குத் தெரியலையே? பாரு, எங்கியோ போயிட்டிருந்தவ, வீடு தேடி வந்து சொல்லிட்டுப் போறா என்னமோ. "
"குழந்தைகிட்ட என்ன வேண்டாத பேச்சு? பேப்பர் படிச்சு முடிஞ்சாச்சுன்னா எழுந்து குளிக்கப் போறது?" என்று உள்ளிருந்து குரல் வந்தது. பாட்டி தான். சமையலறையில் அவளது கைப்பக்குவத்தில் சேமியா பாயசம் மணக்கமணக்கத் தயாராகிக்கொண்டிருந்தது.
வெட்டிங் டே. புதிய புடைவையிலும் சேமியா பாயசத்திலும் ஒரு மணிநேர அலுவலக பர்மிஷனிலும் வருடம் தவறாமல் கொண்டாடப்படுகிற ஒரு சிறு பண்டிகை. நேரமிருந்தால் அம்மாவும் அப்பாவும் மாலை வரசித்தி விநாயகர் கோயிலுக்குப் போய்விட்டுப் பாதி தேங்காய் மூடியுடன் திரும்பி வருவார்கள். போன வருஷம் வெட்டிங் டே அன்று அப்பா ஆபீஸிலிருந்து வரும்போது ஆளூக்கொரு பெரிய சைஸ் கேட்பரிஸ் வாங்கிவந்தது ஜக்குவுக்கு நினைவுக்கு வந்தது. தாத்தா கூட ஆசையாகச் சாப்பிட்டார். "எனக்கெதுக்கு? உள்ள வை. நாளைக்கு ஜக்குவுக்குக் குடுக்கலாம்" என்று எடுத்து சமையலறையில் ஏதோ டப்பாவில் போட்டுவைத்த பாட்டி கூட மறுநாள் பாதியைத் தான் சாப்பிட்டுவிட்டுத் தான் மீதியை ஜக்குவுக்குக் கொடுத்தாள்.
வெட்டிங் டே என்பது சந்தோஷம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டுமில்லை. ஒட்டுமொத்த வீட்டுக்கே. ஒரு காட்பரிஸ் அளவு சந்தோஷம் தான் என்றாலும் அதுவும் ஒரு அவசியம். அந்த ஒரு தினத்தின் சந்தோஷம் வாரமெல்லாம் வீட்டில் பொலிந்து துலங்குவதை ஜக்கு கவனித்திருக்கிறான். அநாவசியமாக அந்த டைரி குறித்து இன்று பேசி எதற்கு அதைக் கெடுக்கவேண்டும்?
வேண்டாம் என்று குரங்கு எச்சரித்தது சரிதான் என்று அவனுக்குத் தோன்றியது. எத்தனை புத்திசாலிக் குரங்கு? தினசரி தயிர்சாதமும் குழம்பு சாதமும் வேளை தவறாமல் சாப்பிடும் இந்த வெங்கடாஜலபதி ஒரு நாளாவது இப்படி புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டிருக்கிறதா என்று அவன் எண்ணினான். இன்றைக்கு குரங்குக்குத் தயிர்சாதம் போடவேண்டும் என்று எண்ணியபடி அவன் எழுந்தபோது, வெங்கடாஜலபதி 'வ்வ்வூவூவூஉவ்...' என்று எச்சரித்தது.
"ஆமா, இவருக்குத் தான் பெரிசா தெரிஞ்சுடுத்து. அது கெட்டகுரங்குன்னு... பொறாமை. மூடு வாயை. உம்பேச்சு இன்னிக்கு நான் கா" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, குரங்கைத் தேடித் தோட்டத்துக்குள் போனான் ஜக்கு.
13
அன்று மாலை ஜக்கு பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அபூர்வமாக வானம் இருண்டு, சில துளிகள் மழை தூவியது. அவனுக்கு அந்த அனுபவம் மிகவும் பரவசம் தந்தது. ஆளற்ற சிஎல்சி மைதானத்தின் நடுவே நின்று வானம் பார்த்து ஆவென்று வாய் திறந்தான். மழையை நேரடியாகப் பருகமுடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! அதிகம் வேண்டாம். ஒரு வாய் நிரம்பினால் போதும். உலகில் யாராவது நேரடி மழை நீரின் ருசியை அனுபவித்திருப்பார்களா? கிணற்றுத் தண்ணீர். குழாய்த் தண்ணீர். லாரித் தண்ணீர். கேன் தண்ணீர். குடத்துத் தண்ணீர். பாக்கெட் தண்ணீர். ஒரு மழையை நேரடியாகப் பருகிப் பார்க்கும் ஆவல் யாருக்காவது வந்திருக்குமா? தனக்கு மட்டும் எப்படி இப்படியொரு ஆசை வந்தது?
ஆனால் அவனது சின்ன வாய்க்கு வெளியே மட்டும் தான் தூறல்கள் விழுந்தன. கன்னத்தில். உதட்டில். கண்ணில். நெற்றியில்.
உதட்டில் கூடப் படக்கூடாது. மிக நேரடியாகத் தொண்டையைத் தொடவேண்டும். முடியுமா?
"ம்ஹும். அது கஷ்டம்" என்றது பின்னால் இருந்து வந்த ஒரு குரல்.
சட்டென்று திரும்பிப் பார்த்தவன், அந்த மகாபலிபுரத்துக் குரங்கு தன் பின்னால் நின்றுகொண்டிருக்கக் கண்டு சற்றே வியப்புற்றான்.
"நீ இன்னும் ஊருக்குப் போகலையா? போயிருப்பேன்னு நினைச்சேன்." என்றான் ஜக்கு.
"போகலை. என்ன அவசரம்?" என்றது அது.
"குரோம்பேட்டையிலெல்லாம் உனக்கு மத்த குரங்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கறது கஷ்டம். பசங்க பார்த்தா கல்லடிப்பாங்க. கெட்ட பசங்க" என்று உண்மையான அக்கறையுடன் அவன் சொன்னான்.
"மத்தவங்களூக்காகவா நான் அவ்ளோதூரம் ஒன் நாட் எயிட் பஸ் கூரை மேல ஏறி உக்காந்து வந்தேன்? உனக்காகத் தான் வந்தேன். நீ கல்லடிக்கமாட்டியோல்லியோ? அதுபோதும்" என்றது அது.
"நானா? சேச்சே!"
"தெரியும் . நீ நல்ல ஆத்மா. அதனால தான் உம்பின்னாடி போகச்சொல்லி காட் என்னை அனுப்பினார்" என்றது அது.
அவன் ஒரு கணம் அதிர்ந்தான். "நீ என்ன சொல்றே? godஆ உன்னை அனுப்பினது?"
"பின்னே? லார்ட் ஆஞ்சநேயா. எங்க பாஸ்" என்று பெருமையுடன் சொன்னது அந்தக் குரங்கு.
"ஓ" என்றான் ஜக்கு.
"அப்படின்னா என் ப்ராப்ளம் தெரிஞ்சு தான் நீ வந்திருக்கே. நான் என்னதான் பண்ணட்டும் சொல்லு. யார்கிட்டயும் சொல்லவும் முடியலை. நானே ஒளிச்சு வெச்சுக்கவும் கஷ்டமா இருக்கு. அந்த நிர்மலா யாரு? எங்கப்பா அவளை கல்யாணம் பண்ணிண்டாரா? இல்லாட்டி ஏமாத்திட்டாரா? இது எனக்குத் தெரிஞ்சாகணும்"
"ஹும்" என்றது அது. "So sad. நீ ஏன் இவ்ளோ வருத்திக்கறே? இப்ப உனக்கு என்ன குறை? உங்கப்பா ஆசையாத் தானே இருக்கார்? வீட்டுல ஒரு ப்ராப்ளமும் இல்லை. உங்கம்மா உன்னைத் தாங்கு தாங்குன்னு தாங்கறா. தாத்தா, பாட்டியும் உம்மேல உசிரையே வெச்சிருக்காங்க. அந்த நிர்மலா போயே போயாச்சு. இனிமே அவ வரவே மாட்டா. விடு அதை" என்றது குரங்கு.
"எங்க போயிட்டா? செத்துப் போயிட்டாளான்ன?"
குரங்கு ஒரு கணம் யோசித்தது. "ம்ஹும். செத்துப் போகலை. ஆனா காணாமப் போயிட்டான்னு வெச்சுக்கோயேன். இத்தனை வருஷமா உனக்கு அவளைத் தெரியாது. அந்த டைரியிலேருந்து தானே முளைச்சா? டைரியைத் தூக்கிப் போடு. அத்தோட அவளூம் காணாம போயிடுவா."
"அதெப்படி?" என்றான் ஜக்கு. "நேத்து வரைக்கும் டைரில இருந்தா. இப்ப எழுந்துவந்து என் மூளைக்குள்ள உக்காந்துட்டா. இப்படியே எங்க வீடு ஃபுல்லா ஆக்குப்பை பண்ணிட்டான்னா என்ன அர்த்தம்? யார் கேக்கறது? அவளுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு, இதுக்கு? அதனால தான் கேக்கறேன். உனக்கு எங்கம்மாவைத் தெரியாது. எவ்ளோ நல்லவ தெரியுமா? சண்டை போடறவா கிட்டக்கூட அன்பாத்தான் பேசுவா. ஒருநாளூம் என்னைத் திட்டமாட்டா. என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லமாட்டா. அப்படி ஒரு அம்மா இருக்கும்போது எங்கப்பா எப்படி இவளைப் போய்...ச்சே!" தலையைச் சிலுப்பிக்கொண்டான் அவன்.
"ஐயோ, ஜக்கு! ஏன் குழப்பிக்கறே? இவ உங்கப்பாவுக்கு கல்யாணம் ஆறதுக்கு முன்னாடி இருந்தவ தான். கல்யாணத்துக்கு அப்புறம் இவ கிடையவே கிடையாது. உங்கம்மா மட்டும் தான். அப்புறம் உங்கம்மாவும் நீயும் மட்டும். போதுமா? இதை மறந்துடாதே."
"அதுவும் தானே எனக்குப் பிடிக்கலை? நிர்மலான்னு ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சுண்டு இருந்துட்டு அப்பா எப்படி எங்கம்மாவைக் கல்யாணம் பண்ணிண்டார்? அதுவே எனக்குப் பிடிக்கலையே. அவளை நேர்ல பார்த்துப் பேசாம என் மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு"
"ஐயோடா!" என்றது அது.
"அவளை எங்கபோயிப் பாப்பே? அவ அமெரிக்கா போயிட்டாளே?"
"வாட்? அமெரிக்காவா? உனக்கெப்படி அது தெரியும்?"
"நீ அந்த டைரியை முழுக்கப் படிக்கலையா?" என்று கேட்டது குரங்கு.
"ம்ம்ம்....படிச்சேன். சில பேஜஸ் புரியலை. இங்கிலீஷ்ல இருந்தது. அப்பா சேர்த்து சேர்த்து எழுதியிருக்கார்" என்றான் அவன்.
"அதான். முழுக்கப் படிக்காம இப்படிப் போட்டுக் குழப்பிண்டா என்ன அர்த்தம்? ம்? இப்ப அந்த டைரியை நீ எங்க வெச்சிருக்கே?"
"என் போன வருஷத்து பழைய புக்ஸெல்லாம் இருக்கே, அந்த கருப்பு தகரப் பொட்டி, அதுக்குள்ள, அடியில..." என்று சொல்லிக்கொண்டே வந்தவன், சட்டென்று நிறுத்தி, "ஏன், நீ லார்ட் ஆஞ்சநேயா அனுப்பின குரங்கு தானே? உனக்குத் தெரியாதா அது எங்க இருக்குன்னு? இவ்ளோ விஷயம் சொல்றே? அதுமட்டும் தெரியாதோ?" என்றான் மடக்கும் விதமாக.
அது சிரித்தது. பின்னங்காலைத் தூக்கி இடுப்பை ஒருதரம் சொறிந்துகொண்டது. சுற்று வட்டாரத்தில் வேறு எந்த மனிதத் தலையும் தென்படாததை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு, சட்டென்று எம்பி அவன் தோள்மீது அமர்ந்தது.
"ஜக்கு! நீ ரொம்ப நல்ல பையன். என்னத்துக்காக இவ்ளோ கஷ்டப்படறியோ? விடுன்னாலும் விடமுடியலைங்கற... ம்.. சரி நான் ஒண்ணு சொல்றேன். இன்னிக்கு ராத்திரி கரெக்டா பதினொண்ணேமுக்காலுக்கு முழிச்சிண்டிரு. உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிண்டு போறேன்"
"வாட்? பதினொண்ணேமுக்காலுக்கா? அதெல்லாம் கஷ்டம். அப்பா விடமாட்டா. கதவைத் திறந்தா சவுண்டு வரும். தாத்தா பொதுவா ராத்திரில தூங்கறதே கிடையாது. ரொம்பக் கஷ்டம். முடிஞ்சா இப்பவே அழைச்சுண்டு போ. எங்க போகப்போறே?" என்றான் அவன்.
"அந்த நிர்மலா வீட்டுக்குத் தான்" என்றது குரங்கு.
"நிர்மலா வீட்டுக்கா? அது எங்க இருக்கு?"
"இங்கதான். நாகப்பா நகர் தாண்டி லட்சுமிபுரம் போற வழில. மேத்யு டாக்டர் க்ளினிக்குக்குப் பின்னாடி."
"நிஜமாவா?" அவன் திடீரென்று பரபரப்படைந்திருந்தான். "ஆனா அவ அமெரிக்கா போயிட்டதா சொன்னியே?"
"அவ போனா என்ன? அவ வீடு இருக்கு. அவளோட தாத்தா, அங்கதான் இருக்கார். அப்பா இல்லை. செத்துப் போயிட்டார். அவம்மாவும் அங்கதான் இருக்கா"
"கரெக்ட். இந்த டீடெயில் கூட டைரில இருந்தமாதிரிதான் இருக்கு. இங்கிலீஷ்ல இருந்தது. பாதி புரிஞ்சது" என்றான் ஜக்கு.
"போவோமா?" என்றது அது. "உங்கம்மா தேடமாட்டாளே?"
"இல்லை. போகலாம். அரை மணி லேட்டானாவெல்லாம் அம்மா தேடமாட்டா. மழைக்கு எங்கியாவது நின்னிருப்பேன்னு நினைப்பா" என்றான். வருவதுமாதிரி இருந்து சட்டென்று வராமல் போய்விட்ட மழை இப்போது நிஜமாகவே வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!
அவன் தோளிலிருந்து முன்னால் குதித்து ஓடத்தொடங்கியது குரங்கு. அதனைப் பின் தொடர்ந்து அவனும் ஓடினான்.
மூச்சிறைக்க சந்துகளுள் நுழைந்து ஓடி, ரைஸ்மில் சரிவில் கார் ஓட்டும் பாவனையில் டுர்ர்ர் என்று இறங்கி சங்கத்து ஸ்கூல் தெருவில் நுழைந்து கிரவுண்டுக்குப் பின்னால் போய் நின்றான் ஜக்கு.
"அதோ அந்த வீடுதான்"
பச்சை சுண்ணாம்பு அடித்து, வாசலில் ஸ்வஸ்திக் கோலம் போட்டிருந்த வீட்டின் சுவரில் "பரசுராமன்" என்கிற பெயர்க் கல் இருந்தது.
ஜக்கு ஒரு கணம் தயங்கினான். பின்னால் திரும்பிப் பார்த்தான். பத்தடி தூரத்திலேயே குரங்கு நின்றுவிட்டிருந்தது. அங்கிருந்தே "உள்ள போயி விசாரி" என்று சைகை காட்டியது.
"என்னன்னு கேக்கறது?"
"மக்கு. டைரில படிச்சிருப்பியே? அவ தாத்தா ஜாதகப் பொருத்தம் எல்லாம் பாப்பார்னு? அதை வெச்சுண்டு பேசு. எங்கம்மா பாக்க வரணும்னு சொன்னா. எப்ப வரலாம்னு கேட்டுண்டுவரச் சொன்னான்னு எதாவது சொல்லு" அவசரப்படுத்தியது குரங்கு.
அடக்கடவுளே! ஜாதகப் பொருத்தமா! தன்வீட்டில் யாருக்கு ஜாதகம் பார்க்கவேண்டியிருக்கிறது? தாத்தாவுக்கா! குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு.
ஒரு முடிவுக்கு அவன் வரும்முன்னரே வீட்டு வாசலில் ஒரு முதியவர் உதித்து "யாருப்பா?" என்று கேட்டார்.
மனம் முடிவு செய்வதற்குள் உதடு திறந்துவிட்டது. "நிர்மலா ஆண்ட்டி இருக்காங்களா?"
"இல்லியே? நீ ஆரு?" என்றவர் உள்ளே திரும்பி, "இவளே, லெச்சுமீ...." என்று குரல் கொடுத்தார்.
"உள்ள வாப்பா" என்று அவனுக்கும் உத்தரவு கொடுத்துவிட்டு, கதவைத் திறந்தார்.
"என்ன வேணும்? நீ யாரு?" அதே கேள்வி மீண்டும் வந்தது.
எதற்கு வந்தோம், என்ன பேசுவது என்று முன் தீர்மானம் ஏதும் பண்ணிக்கொள்ளாததால் அவனுக்கு வியர்த்துவிட்டது. பாழாய்ப்போன குரங்கு இப்படியொரு இக்கட்டில் கொண்டுவந்து நிறுத்திவிட்டதே! ஆஞ்சநேயா, நீதான் காப்பாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டு, மனம் போன போக்கில் பேசத் தொடங்கினான்.
அவனது அம்மாவும் நிர்மலா ஆண்டியும் ரொம்ப வருஷத்து ஃப்ரெண்ட்ஸ். நிர்மலா ஆண்டியின் தாத்தா ஜாதகம் பார்ப்பாராமே? அவன் அம்மாவின் இன்னொரு ஃப்ரெண்டுக்கு அவரிடம் ஜாதகம் பார்க்கவேண்டும். எப்போது வரலாம் என்று கேட்டு அனுப்பியிருக்கிறாள்.
"அப்படியா? நீங்க எங்க இருக்கீங்க? உங்கம்மா பேர் என்ன?" என்றார் அந்த முதியவர்.
ஒருகணம் யோசித்தவன், எதற்கும் இருக்கட்டும் என்று "ராதாநகர்" என்று பொய் சொன்னான். கவனமாக அம்மா பேரைச் சொல்லாமல் தவிர்த்தான்.
"அட பகவானே! இதுக்காகவா குழந்தையை ரயில்வே லைன் க்ராஸ் பண்ணிப் போக அனுப்பியிருக்கா உங்கம்மா? ஈஸ்வரா, ஈஸ்வரா. எப்போ வேணா வரலாம்னு சொல்லு. போறச்சே ஜாக்கிரதையா போ. ரோடுலே இடதுபக்கம் தான் போகணும். ஓரமா போகணும். தெரியுமோல்லியோ?"
எத்தனை அக்கறை! ஜக்குவுக்குக் கொஞ்சம் அவமானமாக இருந்தது. ஒரு பெரியவரை இப்படிப் பொய் சொல்லி ஏமாற்றும் அளவுக்குத் தான் கெட்ட பையன் ஆகிவிட்டோம்! அப்படிப் பொய் சொல்லியாவது இந்த வீட்டுக்கு வந்து என்ன சாதிக்கப் போகிறோம்? எதற்காக இங்கே வந்தேன்?
"சரி சார். நான் வரேன்" என்று கிளம்பினான். எதற்கும் இருக்கட்டும் என்று "நிர்மலா ஆண்ட்டி இல்லியா?"
"அவ அமெரிக்கா போய் ஆச்சே பதினாலு வருஷம்? உங்கம்மா சொல்லலியா?"
அவன் பேசாதிருந்தான். ஆகவே அவரே, "என்னைத் தானே பாக்கணும்னு சொன்னா? அதனால இதைச் சொல்லாம விட்டிருப்பாளாயிருக்கும். நீ ஜாக்கிரதையா ரோடு க்ராஸ் பண்ணிப் போ. போகத் தெரியுமோல்லியோ?"
"தெரியும் சார்" என்று வாசலுக்கு வந்தவன், என்னவோ பார்க்கத் தவறியதுபோல் மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தான்.
ஒன்றும் ஆர்வத்துக்குத் தீனியாகத் தென்படவில்லை.
"கேட்டேனே? உங்கம்மா பேர் என்ன? முன்னாடி இங்க வந்திருக்காளாமா? உங்கப்பா யாரு?" பெரியவர் விடாமல் விசாரித்துக்கொண்டிருந்தார்.
சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை உண்டானது. அப்பா பெயரைச் சொல்லலாமா? சொன்னால் இந்தக் கிழவரின் முகபாவத்தில் ஏதாவது மாறுதல் தென்படுமா?
"வேண்டாம்" பின்னாலிருந்து உறுமலாக அடக்கிய குரல் கேட்டது. குரங்கு தான்.
"வரேன் சார்" பதில் எதிர்பார்க்காமல் திரும்பி ஓடியே போனான்.
14
அன்று மாலை பள்ளி விட்டதும் குட்டி நேராக வீட்டுக்குப் போகாமல், வழியிலேயே ஜக்குவுக்காகக் காத்திருந்தாள். அவளூக்கு, அவனுடன் பேசித் தீர்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, அவன் அவள் பேச்சு காய் விட்டுவிட்டு வெளியில் பழம் போல் நடிக்கிறானா என்று கேட்கவேண்டியது.
மகாபலிபுரம் போய்வந்ததிலிருந்தே அவன் சுத்தமாகச் சரியில்லை என்பது அவள் தீர்மானம். எப்போதும் போல உற்சாகமாக அவன் பேசுவதில்லை. புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் செய்ததாகவும் தெரியவில்லை. எங்கிருந்தோ வந்து அவனுடன் ஒட்டிக்கொண்ட அந்தக் குரங்கு எப்போது பார்த்தாலும் அவனுடன் கூடவே சுற்றிச் சுற்றி வருகிறது. அவன் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் அவன் கூடவே அதுவும் போகிறது, வருகிறது. பள்ளி வாசலிலேயே அவன் அதற்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டாலும் மறக்காமல் சாயங்காலம் சரியாகப் பள்ளி விடும் நேரத்தில் அது வந்து நின்று விடுகிறது.
ஜீவராசிகளிடம் அன்பாயிருப்பதில் பிழை இல்லை தான். அதே சமயம் ஒரு புதிய சிநேகிதத்துக்காகப் பழகிய அத்தனைபேரையும் உதாசீனம் செய்வதாவது?
ஜெய்ப்பூரிலிருந்து யாரோ ஒரு வியாபாரி போன ஞாயிற்றுக்கிழமை மூட்டையாகப் புடைவைகளை எடுத்துக்கொண்டு விற்க வந்திருந்தான். ஜக்குவின் அம்மா அவனை அழைத்து வாசலில் கடை பரப்பிவிட்டு, அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் தகவல் சொல்லியனுப்பியிருந்தாள்.
புதிய புடைவைகள் ஜெய்ப்பூரிலிருந்து வந்திருக்கின்றன. வாங்குவது அடுத்தக்கட்டம். ஆனால் விரித்துப் பார்த்து மகிழத் தடையேதும் இல்லையே? குட்டியின் அம்மா அவசரமாக முகத்தை முந்தானையில் துடைத்துக்கொண்டு, தோ வர்ரேன் என்று கிளம்பியபோது குட்டியும் கூட ஒட்டிக்கொண்டாள்.
ஜக்குவின் வீட்டு வாசலில் கொழுக்கட்டைகள் முன்பாகப் பிள்ளையார் மாதிரி அந்தப் புடைவை வியாபாரி அமர்ந்திருந்தான். சுற்றிலும் பக்தர்களாக ஜக்குவின் அம்மா, பக்கத்து வீட்டுக் கனகா அக்கா, மூன்றாவது வீடு ரஞ்சனாம்மா, கோட்டை வீட்டுப் பாட்டி, சுலோகம் சுந்தராம்பா, கிரைண்டர் கமலா என்று எல்லாரும் சூழ்ந்திருந்தார்கள். ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எப்படியும் நாலைந்து புடைவைகளூக்குக் குறையாமல் விற்கும் என்று வியாபாரி ஒரு நூறு புடைவைகளை விரித்துப் போட்டுக்கொண்டிருந்தான்.
"ஆண்ட்டி, ஜக்கு எங்கே?" குட்டி கேட்டாள்.
"கொல்லைல இருக்கானா பாரு" என்று அவன் அம்மா சொல்லும்போதும் அவள் பார்வை புடைவைகளின் மீதே இருந்தது.
ஜக்கு தோட்டத்தில் தான் இருந்தான். போன மாதம் அவன் நட்டிருந்த செம்பருத்திச் செடி அங்கே வாடிக்கொண்டிருந்ததை அப்போது தான் கவனித்தவன் மாதிரி அதற்கு நீரூற்றிக்கொண்டிருந்தான். தோளின்மேலே அந்தக் குரங்கு!
"திஸ் இஸ் டூ பேட் ஜக்கு" என்று குட்டி சொன்னாள்.
"பாரு. உன் வெங்கடாஜலபதி எப்படி ஏக்கமா பாக்கறது? ஒரு நாளாச்சும் அதை இப்படி உன் தோள்மேல தூக்கி வெச்சிட்டிருந்திருக்கியா? நீ கூப்பிடாமலேயே எவ்ளோ பட்டர்ஃப்ளைஸ் உன்கிட்ட வரும் முன்னெல்லாம்? இப்ப இந்தக் குரங்கைப் பார்த்து எல்லாம் பயந்து எங்கியோ போயிடுச்சே? எனக்கே பயமா இருக்கு. மூஞ்சியப் பாரு. உர்ர்ரூன்னு எப்பப்பாரு பிராண்ட வரமாதிரி! நீ எப்படி இதைக் கொஞ்சிண்டிருக்கே? பயமா இல்லே?"
"வா குட்டி" என்றான் ஜக்கு. "இதை வெறுக்காதே குட்டி. இது நல்ல குரங்கு. ஆஞ்சநேயர் அம்சம். காட் ஒன்லி செண்ட் இட்!" என்றான் ஜக்கு.
"பொய்...பொய்" என்று கத்தினாள் குட்டி.
"எங்கிட்ட பேசக்கூடாது, வெங்கடாஜலபதி பேச்சு கூட காய் விடுன்னு காட் சொல்லுவாரா? நான் நம்பமாட்டேன்"
அவன் தன் தோளின்மீது ஏறி உட்கார்ந்திருந்த அந்தக் குரங்கை இறக்கிவிட்டு, உள்ளே போ என்று சைகை காட்டினான். பிறகு துணிக்கல்லின் அடியில் அவனையே முறைத்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த வெங்கடாஜலபதியை நோக்கிப் போய், அருகே அமர்ந்து அதன் நெற்றியை நீவிக்கொடுத்தான்.
"நான் ஏன் இதும்பேச்சு காய் விடணும்? சமர்த்தா இருந்தா எப்பவும் பழம் தான்" என்று சொன்னான்.
"அப்போ நான் சமத்தா இல்லியா? என்கூட ஏன் இப்பல்லாம் பேசறதில்லே? பிராமிஸா பழம் தான்னு சொல்லு." குட்டிக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
"சீச்சீ" என்றான் ஜக்கு. "நான் ஏன் உன்பேச்சு காய் விடணும்? அதெல்லாம் இல்லே. நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்."
"அப்படின்னா சொல்லு, ஏன் ஒரு மாதிரி இருக்கே கொஞ்ச நாளா? உடம்புக்கு என்னமாச்சும் சரியில்லையா?"
"இல்லியே? சரியாத்தான் இருக்கேன். ஏன் எல்லாரும் இப்படியே கேக்கறிங்க?" அவனுக்கே அது கலவரமூட்டும்விதத்தில் தான் இருந்தது. ஒருத்தர் பாக்கியில்லை. என்ன ஆச்சு? என்ன ஆச்சு? கேட்காதவர்களே இல்லை. தன் முகத்தில் அப்படி என்னதான் எழுதி ஒட்டியிருக்கிறது? யாராவது ஒருத்தரிடம் கொஞ்சநேரம் மனம் விட்டுப் பேசினால் எல்லாமே சரியாகிவிடக்கூடும் என்று அவனுக்குப் பட்டது. ஆனால் யாரிடம் போய் என்ன பேசுவது? தாத்தா, அம்மா, பாட்டி, வகுப்புத் தோழர்கள், இந்தக் குட்டி எல்லாரிடமுமே ஓரெல்லைக்குமேல் எதையும் பேச வேண்டாம் என்று எப்போதும் உள் மனம் எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. குட்டியிடம் மட்டுமாவது கொஞ்சம் சொல்லட்டுமா என்று குரங்கிடம் கேட்டபோது, "எதையாவது சொல்லணும். அவ்ளோ தானே? கொஞ்சம் மாத்தி, வேற மாதிரி சொல்லு. கொஞ்சம் பாரம் குறையும்" என்று அது மாற்று உபாயம் சொன்னது. அதையே வெங்கடாஜலபதியிடமும் அவன் கேட்டான்.
"எதுக்கு சொல்லணும். நீ படற கஷ்டத்தை அவளும் படணுமான்ன? பேசாம இரு" என்று ஒரு வாத்தியார் தொனியில் அது கட்டளையிட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.
"ஹும். பார். நீ இப்படிப் பேசினா உங்கிட்ட எவன் வந்து அன்பா இருப்பான். எப்பப்பாரு ரங்கம்பாட்டி மாதிரியே வடுக்கு வடுக்குன்னு கடிப்பேச்சு பேசறே. எவ்ளோ கஷ்டம் படறேன்? ஆறுதலா பேசணும்னே தோணலையே உனக்கு?" என்று அதனிடம் சொன்னான் ஜக்கு.
"நீயா வரவழைச்சுக்கிட்ட கஷ்டத்துக்கு வேற யார் ஆறுதல் தரமுடியும் ஜக்கு? எப்படி வரவழைச்சிக்கிட்டியொ, அப்படியே தூக்கி வெளில போட்டுட்டு பழையபடி படிப்புல ஆர்வம் காட்டு. என்னோட விளையாடு. பாரு, என்னை நீ பத்து நாளா குளிப்பாட்டவே இல்ல. எனக்கே கப்படிக்குது" என்றது அது.
"ஹும். அப்படியே கிட" என்று அப்போது எழுந்து போனான். ஆனால் குட்டியை அப்படி முற்றிலும் புறக்கணித்துவிட்டுப் போய்விட முடியாதே. மேலும் கொஞ்சம் வேறுமாதிரி நடந்துகொண்டாலும் வெங்கடாஜலபதி சகித்துக்கொள்ளும். குட்டி அழ ஆரம்பித்துவிடுவாள். அதுவேறு பிரச்னை.
"ஒரு ப்ராப்ளம் குட்டி" என்றான் ஜக்கு.
"என்னது?"
"எனக்கில்லே. எங்கப்பாவுக்கு. அதான் நான் ஸேடா இருக்கேன். ஆனா இதை நீ என்மேல ப்ராமிஸா யார்கிட்டயும் சொல்லக்கூடாது"
"என்ன ப்ராப்ளம்? உடம்பு சரியில்லையா? கேன்சரா?" என்றாள் குட்டி.
"சீச்சீ! சினிமா பார்த்துட்டுப் பேசாதே. இது வேற. இந்த ஊர்ல முன்னாடி ஒரு காலத்துலே, நம்ம மேத்யு டாக்டர் க்ளினிக்குக்குப் பின்னாடி இருக்கற சந்துல ஒரு பொம்மனாட்டி இருந்திருக்கா. இப்ப அவ இல்லை. செத்துப் போயிட்டா. ஆனா ஆவியா வந்து பயமுறுத்திண்டிருக்கா"
"ஓ காட்!" என்றாள் குட்டி. "ஆவியாவா? நீ நிஜமாத்தான் சொல்றியா? ஆவி வருமா? ஐயோ!"
"உஷ்! கத்தாதே. யார் கிட்டயும் நீ கண்டிப்பா சொல்லக்கூடாது. சொன்னேன்னு தெரிஞ்சுது...? நான் அப்புறம் லைஃப்டைம் உன்னோட காய்தான்!"
"ஐயோ, ஏண்டா இதையே சொல்லிண்டிருக்கே நீ? நான் சொல்லமாட்டேன். நீ சொல்லு முதல்ல? ஆவியா? அப்படின்னா? நிஜமாவே சினிமால வரமாதிரி தான் வெள்ளையா மிதந்துவருமா? நீ பார்த்தியா?"
அவன் ஒரு கணம் யோசித்தான். "ஆமா, நான் பார்த்தேன்" என்று சொன்னான்.
"என்னால நம்பவே முடியலை. நீ பொய் சொல்லலியே?"
அவன் கொஞ்சம் முறைத்தான். "சரி, நீ நம்பலைன்னா போயிடு இங்கேருந்து. இதனால் தான் நான் உங்கிட்ட சொல்லவேணாம்னு நினைச்சேன்."
"சாரி...சாரி. சொல்லு; நான் நிச்சயமா நம்பிட்டேன். சொல்லு?"
"ஆவி தான். ரொம்பப் பொல்லாத ஆவி. பெரிய பல்லெல்லாம் இல்லை. மூஞ்சி அழகாத்தான் இருக்கு. ஆனா சிரிப்பு ரொம்ப கோரம். சகிக்கலே. டெய்லி ராத்திரி பன்னெண்டு மணிக்கு வயலட் புடைவை கட்டிண்டுவந்து எங்கப்பாவை பயமுறுத்தப் பாக்குது. நான் தான் கஷ்டப்பட்டு அதைத் தடுத்து, பிடிச்சி வெச்சுத் திருப்பி அனுப்பிண்டிருக்கேன். இல்லாட்டி எங்கப்பாவை அது சாப்டுடும்."
"வாட்? ஆவி, ஆளை சாப்டுமா?"
"ஆமா. எங்க பாட்டி எப்பவாச்சும் திட்டி நீ பார்த்திருக்கியா? நரமாமிசபட்சிணின்னு திட்டுவாளே?"
"ஆமா?"
"அதான் இது. நர மாமிசம்னா மனுஷங்களை சாப்டறதுன்னு அர்த்தம். "
"நான்வெஜிடேரியன் ஆவியா?"
"ஆமா. ஆனா ரொம்ப கோரம். அப்படியே உயிரோட சாப்டுடும். டெய்லி நடுராத்திரி எங்க வீட்டு வாசல்ல வந்து நின்னுடுது அது. நான் கரெக்டா முழிச்சிண்டிருந்து எழுந்துபோய் அதை மிரட்டித் திருப்பி அனுப்பிண்டிருக்கேன்."
"ஐயோ.... உன்னால எப்படி முடியும்? பயமா இல்லே?"
இப்போது அவன் கொஞ்சம் யோசித்தான். பிறகு, "ம்ம்..பயம் தான். ஆனா மனசுக்குள்ள மந்திரம் போட்டுண்டுடுவேன்."
"என்ன மந்திரம்?"
"எவ்ளவோ இருக்கு. எங்க பாட்டி சுதர்சன சுலோகம் சொல்லிக்குடுத்திருக்கா. அதை சொன்னா ஆவியால ஒண்ணும் பண்ணமுடியாது. அப்புறம் கருடதண்டகம் தெரியும்."
"க்ரேட்" என்றாள் குட்டி. "அப்புறம்?"
"உள்ள வந்தேன்னா, கையை காலை உடைச்சுடுவேன். போ வெளிலன்னு மிரட்டி அனுப்பிவெப்பேன். வேற என்ன முடியும் என்னால? தினம் இப்படியே ராத்திரில தூங்கறது இல்லை. அதனால டயர்டா இருக்கு. நீ என்னடான்னா, ஏன் பேசலை, ஏன் பேசலைன்னு பிராணனை வாங்கறே..."
"சாரிடா" என்றாள் குட்டி.
"ஐயோ, கதை விடறான் குட்டி, நீ நம்பாதே. இவன் கொஞ்சம் கொஞ்சமா கெட்டுப் போயிண்டே இருக்கான்" என்றது வெங்கடாஜலபதி.
குட்டிக்கு அதன் குரைப்பு புரியவில்லை. ஜக்கு அதன் பக்கம் திரும்பி முறைத்தான். "நீ இங்க இருக்கணுமா வேணாமா? அதைச் சொல்லு முதல்ல. உன்னை கார்ப்பரேஷன் காரன்கிட்ட பிடிச்சிக் குடுத்துடட்டுமா? ம்?"
அது சட்டென்று வாயை மூடிக்கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டது.
"அதை ஏண்டா திட்டறே? ஆவி வரும்போது அது தூங்கிப்போயிடறதா?"
"ஆமா" என்று சொல்லிவைத்தான் ஜக்கு.
அவள் சற்று நேரம் மிகவும் மௌனம் காத்தாள். ஆக, ஜக்குவின் பிரச்னை என்னவென்று ஒரு மாதிரி புரிந்துவிட்டது. ரொம்பப் பெரிய பிரச்னை தான். யாரால் இதையெல்லாம் சமாளிக்க முடியும்? எத்தனை பயங்கரமான பிரச்னை! நள்ளிரவில் வரும் ஆவி! அதுவும் மேட்டுத் தெருவில் வசித்து இறந்த ஒரு பெண்ணின் ஆவி. அது என்னத்துக்காக ஜக்குவின் அப்பாவைச் சாப்பிட வருகிறது? ஊரில் வேறு ஆளே கிடைக்கவில்லையா அதற்கு? ச்சே. ஒரு பெண்ணாக இருந்து ஆவியானவள் எப்படி இப்படியொரு நரமாமிச பட்சிணியாக மாறிவிடமுடியும்? கேட்பதற்கே நாராசமாக இருக்கிறது. பயங்கரமாக இருக்கிறது. ஜக்குமாதிரி மந்திரசக்தி படைத்த பையன்களால் வேண்டுமானால் வாசலிலேயே தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்ப முடியும். மற்றவர்கள் என்றால் என்ன செய்துவிடமுடியும்? தவிர, ஜக்குதான் எத்தனை நாளைக்கு தினசரி தூங்காமல் வாசலில் நின்று காவல் காக்கமுடியும்? என்றாவது ரொம்ப டயர்டாகி தூங்கித்தானே ஆகவேண்டும்? அப்போது அந்தப் பெண்ணின் ஆவி உள்ளே நுழைந்துவிட்டால்? ஐயோ.
"என்ன யோசிக்கறே?" என்றான் ஜக்கு.
"ஒண்ணுமில்லேடா. ஒரே ஒரு டவுட்."
"கேளு"
"நீ சொல்றதையெல்லாம் நான் நம்பறேன். கரெக்டாத்தான் நீ சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். ஆனா சொல்லு, அந்த ஆவி ஏன் ஊர்ல இருக்கற மத்தவங்களையெல்லாம் விட்டுட்டு உங்கப்பாவை சாப்ட வரணும்? உங்கப்பாவுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?"
தூக்கிவாரிப்போட்டது ஜக்குவுக்கு. குட்டி இப்படியொரு சரியான கேள்வியைக் கேட்டுவிடுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. கேள்விகளற்று இருக்கும்வரை மட்டுமே நண்பர்கள் கூட சௌகரியமாக இருக்கிறார்கள். குட்டி ஒரு கேள்வி கேட்டிருக்கிறாள். அவசியம் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்? ஆனால் ஓரிரு வினாடிகள் தாமதிப்பதில் பெரிய பிழை ஏதும் வந்துவிடப்போவதில்லை.
அவன் உள்ளே பார்த்து, "விக்கீ..." என்று குரல் கொடுத்தான்.
"அது யாரு?"
எங்கிருந்தோ அந்தக் குரங்கு பாய்ந்தோடி வந்து அவன் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டதும் குட்டி பயந்து இரண்டடி பின்னால் போனாள்.
"இது தான். இதுக்குத் தான் அந்தப் பேர் வெச்சிருக்கேன்" என்று ஜக்கு சொன்னான்.
"சரி. இப்ப சொல்லு. நீ என்ன கேட்டே?"
"அந்த ஆவி ஏன் உங்கப்பாவை மட்டும் தேடி வரணும்? ஊர்ல அதுக்கு வேற ஆளே கிடைக்கலியான்னு கேட்டேன்."
"காரணம் இருக்கு. கிட்டவா சொல்றேன்"
அவள் ஆர்வமுடன் அவனருகே நெருங்கி வந்து அமர்ந்துகொண்டாள்.
15
செடியாகவும் இல்லாமல், மரமாகவும் உயர்ந்து ஓங்காமல் தடைப்பட்ட உயரத்துடன் காம்பவுண்டு சுவரை ஒட்டி வளர்ந்திருந்த அந்தக் கொய்யா மரத்தின் தாழ்ந்த கிளையின் மீது ஏறி அமர்ந்திருந்தான் ஜக்கு. ஒரு மரத்தின் கிளை தரக்கூடிய பரவசம் சாதாரணமானதில்லை. ஏறி அமரலாம். பிடித்துக்கொண்டு ஆடலாம். ஃபுல் அப்ஸ் செய்து பார்க்கலாம். மேலும் கனமாக வளர்ந்து நீளும் கிளை அளிக்கும் மன எழுச்சியும் மிக முக்கியமானது. கைக்கெட்டும் தூரத்தில் அது இருக்கவேண்டும். சுள் சுள் என்று கடிக்கிற எறும்புகள் மட்டும் ஒரு பொருட்டில்லை என்றால் ஜக்குவுக்கு அந்த கொய்யா மரத்தின் கிளை ஒரு சிம்மாசனமே தான். தோட்டத்தில் கழிக்கும் பொழுதுகளில் மேலதிகம் அவன் அந்தக் கிளையில் கழிக்கவே விரும்புவான்.
இன்னும் காய்விடத் தொடங்காத கொய்யா மரம். விரைவில் அதில் பூக்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞைகள் அவனுக்குக் கிடைத்திருந்தன. அது பூத்து, காய்த்துக் கனியும் தினத்துக்காக அவன் காத்திருந்தான். எப்படியும் காய்விடுகிறபோது எங்கிருந்தாவது அணில்கள் வந்துவிடும். உள்ளங்கை அளவில் இருந்துகொண்டு அணில்கள் தான் என்ன வேகமாகப் பாய்ந்தோடும்! கிளையிலிருந்து கிளைக்குத் தாவும் லாகவம் ஒருபோதும் பிசகாத தொழில் நேர்த்தி படைத்த அணில்கள்.
ஒரு அணிலை சிநேகமாக்கிக்கொண்டுவிட முடியுமானால் உலகத்தில் வேறு எதுவுமே பிறகு வேண்டியிருக்காது. அணிலின் சிநேகிதம் வேகத்தைக் கற்றுக்கொடுக்கும். லாகவத்தைக் கற்றுக்கொடுக்கும். சுறுசுறுப்பைக் கற்றுக்கொடுக்கும். சுதந்தரத்தைக் கற்றுக்கொடுக்கும். வாழ்க்கையின் கனிந்த பகுதிகளை மட்டுமே தேடியெடுத்துச் சுவைக்கக் கற்றுக்கொடுக்கும்.
"தெரியுமா உனக்கு? எங்கப்பா ஜர்னலிஸ்டுங்கள்ளேயே ஒரு அணில் மாதிரி! ரொம்ப ஃபாஸ்டா மேட்டர் பண்ணுவார். எடிட்டருக்கு எங்கப்பானா ரொம்பப் பிடிக்கும். அவர் இண்டர்நேஷனல் அவார்டெல்லாம் வாங்குவார்னு சொல்லியிருக்கார்" என்று ஜக்கு சொன்னான்.
"ஓ" என்றாள் குட்டி.
பத்து நிமிடங்களூக்கு மேலாகிவிட்டது. அவள் ஜக்குவின் வாயையே பார்த்துக்கொண்டு, அந்தக் கிளையைப் பற்றியபடி மரத்தின் கீழே நின்றுகொண்டிருந்தாள். இது கூடப் பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஜக்கு ஒரு மேதை. பெரிய சயிண்டிஸ்ட். மேலும் மந்திர சக்தி படைத்தவன். அவன் மரத்தின் மேல் ஏறி அமர்ந்திருப்பது தான் சரி. அவன் அங்கிருந்தே பேசுவதும் தான் கீழே நின்று கேட்டுக்கொள்ளுவதும் மிகவும் பொருத்தமானது தான் என்று அவளூக்குத் தோன்றியது.
ஆனால்,அந்தத் தாழ்ந்த கிளையின் மீது ஏறி உட்காரவேண்டும் என்று அவளுக்கும் ஆசையில்லாமல் இல்லை. ஆனால் ஜக்கு ஒருபோதும் அதற்கு அனுமதித்தது கிடையாது. கீழ விழுந்துடுவே. கால் உடையும். பல் உடையும். காயம் படும். உங்கம்மா திட்டுவா. எங்கப்பா அடிப்பார். விதவிதமான காரணங்களில் எப்போதும் அவன் அதற்கு அனுமதித்ததே கிடையாது.
ஜாக்கிரதை உணர்ச்சி எப்போதும் உள்ள ஜக்கு. மரத்தின் மீது ஏறி உட்கார முடியாது. அதனால் என்ன? சுதந்தரமாகவும் துணிச்சலுடனும் ஏறி உட்காரத் தெரிந்தவனின் பெஸ்ட் ஃப்ரெண்டாக இருக்க முடிகிறதே! தன்னையும் மதித்து எத்தனை முக்கியமான விஷயங்களைப் பேசிவிடுவதென்று அவன் முடிவெடுத்திருக்கிறான்!
அந்த வயலட் புடைவை அணிந்த மேட்டுத்தெரு வெள்ளை ஆவி. நள்ளிரவில் ஜக்குவின் அப்பாவைச் சாப்பிடுவதற்காகக் காற்றில் மிதந்துவந்து ஜக்குவால் வாசலிலேயே தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கிற பெண் ஆவி. அது ஏன் ஜக்குவின் அப்பாவை மட்டும் சாப்பிட விரும்புகிறது? அதைத்தான் அவள் அவனிடம் கேட்டிருந்தாள். அவனும் தக்கதொரு பதிலைச் சொல்லும் முகமாகத்தான் கொய்யா மரத்தின் கிளையின் மீது ஏறி அமர்ந்திருந்தான். யார் கண்டது? ஆவிகள் குறித்த அதி முக்கியமான ரகசியங்களை மரத்தின் கிளை மீதிருந்து சொன்னால் தான் கேட்பவர்களுக்கும் அதன் வீரியம் குறையாமல் மனத்தில் ஏறுமோ என்னவோ? எனக்கென்ன தெரியும்? ஜக்குவின் தீர்மானங்களே தனி. அத்தனை காரியங்களுக்கும் ஒரு நியாயம் சொல்லிவிடக்கூடிய ஜக்கு. எல்லாம் சரி. கேள்விக்கு இன்னும் பதில் வந்தபாடில்லையே?
ஜக்கு தன் அப்பாவின் பெருமைகளைத்தான் அப்போதும் சொல்லிக்கொண்டிருந்தான். எடிட்டருக்கு மிகவும் பிடித்த ஜர்னலிஸ்ட் அவர். அணில்மாதிரி சுறுசுறுப்பாக மேட்டர் பண்ணுவார். பல கல்லூரி மாணவர்களுக்கு ஜர்னலிசம் க்ளாஸ் கூட எடுப்பார். எத்தனை பேருக்கு உத்தியோகம் வாங்கிக்கொடுத்திருக்கிறார் தெரியுமா? சென்னையில் இன்று பல பத்திரிகைகளில் இளம் நிருபர்களாக இருக்கிற நூற்றுக்கணக்கானபேரில் முக்கால்வாசி அவர்மூலம் வேலை கிடைக்கப்பெற்றவர்கள்தாம்.
"அப்படியா?" என்றாள் குட்டி.
"ஆமா. கேளு. அந்த மேட்டுத்தெரு பொண்ணு கூட ஜர்னலிஸ்டாகணும்னு தான் எங்கப்பா கிட்ட வந்திருக்கா. ஆனா பெரிய மக்கு அவ. ஒண்ணுமே தெரியாது. பேட்டி எடுக்கவே தெரியாது. எழுதறதுக்கு சுத்தமா தெரியாதுன்னு எங்கப்பாவே அவர் டைரில எழுதிவெச்சிருக்கார். அப்படிப்பட்டவளுக்கு எந்தப் பத்திரிகை ஆபீஸ்ல வேலை குடுப்பா?"
"அடக்கஷ்டமே!"
"அதனால எங்கப்பா கண்டிப்பா பேசி அவளைத் திருப்பி அனுப்பிட்டார். ரொம்ப கெஞ்சிப்பார்த்திருக்கா. அவளுக்கு என்னன்னா, எங்கப்பா உதவியால ஜர்னலிஸ்ட் ஆயிட்டா ஈசியா சீஃப் மினிஸ்டரையெல்லாம் பாக்கலாமே! பிரைம் மினிஸ்டர் மெட்ராஸ் வந்தா ஃபர்ஸ்ட் ரோல சீட் கிடைக்குமே! புது சினிமாங்களுக்கெல்லாம் பாஸ் கூட கிடைக்கும். ஏ.ஆர். ரகுமான் ம்யுசிக் ப்ரோக்ராமுக்கெல்லாம் கூப்டுவாங்க. பெரியபெரிய போலிஸ் ஆபீசர்ஸெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் ஆயிடுவாங்க."
"ஐயோடா!" என்றாள் குட்டி. "இவ்ளோ இருக்கா?"
"பின்னே? ஜர்னலிஸ்டுன்னா என்னன்னு நினைச்சே? ரொம்பப் பெரிய போஸ்ட் அது. பத்துக்கோடில ஒருத்தர் தான் ஜர்னலிஸ்டா ஆகமுடியும். எங்கப்பா அந்தமாதிரி!"
பெருமையுடன் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான் ஜக்கு.
"ம்? அப்புறம்?"
"எங்கப்பா அவளை ஜர்னலிஸ்டா ஆக்கவே முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டார் போல இருக்கு. ஒரு மக்கு எப்படி ஆகமுடியும்? அதனால தான்! அந்தக் கோவத்தோட அவ கிளம்பிப் போனபோது ரோடுல ஆக்ஸிடெண்ட் ஆயிடுத்து. லாரியோ பஸ்ஸோ இடிச்சிருக்கு. செத்துப் போயிட்டா. சாகும்போது 'என்னை ஜர்னலிஸ்டா ஆக்காத ஜக்குவோட அப்பாவை சும்மாவிட மாட்டேன்'னு சபதம் எடுத்துண்டு செத்துப் போயிருக்கா.."
"ஐயோ!" என்று கத்தினாள் குட்டி.
"உஷ்! சத்தம் போடாதே. இது ரகசியம். நீ யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு பிராமிஸ் பண்ணியிருக்கே"
"சொல்லமாட்டேண்டா. கண்டிப்பா சொல்லமாட்டேன். இவ்ளோபெரிய ப்ராப்ளத்துலேருந்து உங்கப்பாவை நீ எப்படிக் காப்பாத்தப்போறே?"
அவளூக்கு ரொம்பக் கவலையாகப் போய்விட்டது. உண்மையிலேயே ஜக்கு ரொம்பப்பெரிய பிரச்னையில் தான் இருக்கிறான். அவன் சொல்வதெல்லாம் வாஸ்தவம் தான். இந்த விஷயத்தை எப்படி மற்றவர்களிடம் போய்ச் சொல்லுவது. அந்த மக்குப் பெண்ணுக்கு என்னத்துக்காக ஒரு ஜர்னலிஸ்ட் ஆகும் ஆசை வந்திருக்கவேண்டும்? அவள் ஏன் உலகில் மற்ற எத்தனையோ பேரை விட்டுவிட்டு ஜக்குவின் அப்பாவிடம் அதற்கு உதவி கேட்கவேண்டும்? ஜக்குவே இத்தனை புத்திசாலிப்பையன் என்னும்போது அவனுடைய அப்பா நிச்சயம் ரொம்பப்பெரிய புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். அவர் எப்படி ஒரு மக்குக்கு ஒத்தாசை பண்ணமுடியும்? செத்துப்போனவள் அப்படியே போயிருக்கவேண்டியதுதானே? இப்படி ஆவியாக வந்து ஏன் கழுத்தறுக்கிறாள்? பாவம் ஜக்கு. ராத்திரிகளில் அவன் தூங்குவதே இல்லை. கடவுளே, என் ஜக்குவை நீ தான் காப்பாற்றவேண்டும்.
வாசலில் புடைவை வியாபாரி தன் வியாபாரங்களை முடித்துக்கொண்டு மூட்டை கட்டிவிட்டான். குட்டீ என்று அவளது அம்மா குரல் கொடுக்கிறாள்.
"நான் கிளம்பரேண்டா ஜக்கு. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதே. உனக்காக நான் பிள்ளையார் கிட்டே ப்ரே பண்ணிக்கறேன்" என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள். அழுகையே வந்துவிட்டது போலிருக்கிறது. திரும்பி ஓடும்போது பாவாடையால் அவள் கண்ணைத்துடைத்துக்கொள்வதை ஜக்கு பார்த்தான்.
"க்ரேட்" என்றது குரங்கு.
"என்னது?"
"கரெக்டா நான் சொல்லிக்குடுத்தமாதிரியே சொல்லி அவளை அனுப்பிட்டியே? யு ஆர் வெரி ப்ரில்லியண்ட். இந்த விஷயத்தையெல்லாம் அந்தச் சின்னப் பொண்ணுகிட்ட போயி சொல்லலாமா நீ? உங்கப்பாவை அவ லவ் பண்னினா. கல்யாணம் பண்ணிக்க இருந்தாங்க ரெண்டுபேரும். ஆனா அவளுக்கு ஃபாரின் போய் மேல் படிப்பு படிச்சி அமெரிக்கால வேலை பார்க்கணும்னு ஆசை. ரெண்டுபேருமா அமெரிக்கா போகலாம்னு சொன்னா; உங்கப்பா அதுக்கு சம்மதிக்கலை. இந்தியாலேயே தான் வேலை பார்க்கணும்னு பிடிவாதமா இருந்தார். இண்டியால நிறைய சம்பாதிக்கமுடியாதுன்னு அவ பிடிவாதம் பிடிச்சா. கடைசி வரைக்கும் உங்கப்பா ஃபாரின் போக ஒத்துக்காததால அவ லவ்வை டிஸ்கண்டின்யு பண்ணிட்டு, தான் மட்டும் ஃபாரின் போயிட்டா... இவ்ளோ பெரிய கதையை நீ அவளுக்கு சொன்னா புரியுமா? தவிர, ஒரு அப்பா லவ் பண்ணினார்ங்கறதை உன்னாலயே தாங்கமுடியலையே, அவ எப்படி தாங்குவா? நேரா போயி அவம்மா கிட்ட சொல்லுவா. எதுக்கு வம்பு உனக்கு?"
"நீ சொல்றது சரிதான்" என்றான் ஜக்கு.
"ஆனா நீ யோசிச்சிப் பார்த்தியா? உங்கப்பா ஏன் ஃபாரின் போகமாட்டேன்னு சொல்லியிருப்பார்?"
"டைரில கொஞ்சூண்டு இருந்தது. எங்கப்பாவுக்கு எங்க தாத்தா, பாட்டியைத் தனியா விட்டுட்டுப் போக இஷ்டமில்லை. அவர் தாத்தா பாட்டிக்கு ஒரே பையன் இல்லியா?"
"கரெக்ட். நீ இப்ப உங்கப்பா அம்மாவுக்கும் அப்படித்தானே? உன்னை யாராவது அப்படி அப்பா, அம்மாவை விட்டுட்டு ஃபாரின் போறியான்னு கேட்டா என்ன சொல்லுவே?"
"ம்ஹும். ஒத்துக்கமாட்டேன்!" உடனே உரக்க பதில் சொன்னான் ஜக்கு.
"அதான். அப்படித்தான். உங்கப்பாவோட டிசிஷன் கரெக்டுதானே அப்ப?"
"அதை யார் இல்லேன்னு சொன்னது? ஆனா எங்கப்பா எப்படி லவ் பண்ணலாம்? அவர் என்ன சினிமா ஹீரோவான்ன? எவ்ளோபெரிய ஜர்னலிஸ்ட் அவர்! அசிங்கமா லவ் பண்ணலாமா?"
"கரெக்ட்" என்றது அது.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த வெங்கடாஜலபதி, சட்டென்று குரங்கைப் பார்த்து "வவ்வ்ஹ்..." என்றது.
"என்னவாம் அதுக்கு?"
"கல்யாணத்துக்கு முன்னாடி தானே லவ் பண்ணியிருக்கார். அப்புறம் பண்ணாத்தானே தப்புங்கறான் அவன்."
"அதெப்படி? வேற ஒரு பொம்பளையை லவ் பண்ணிட்டு உங்கப்பா எப்படி உங்கம்மாவை கல்யாணம் பண்ணிக்கலாம்? உங்கம்மாவுக்குத் தெரிஞ்சா கதறிடுவாளே? மட நாய்க்கு இதை எடுத்துச் சொல்லு" என்றது விக்கி.
"யாரைப் பார்த்து மடநாய்ங்கறே? நீ தான் முட்டாள். என் ஜக்குவை கெடுத்துண்டிருக்கே. எவ்ளோ நல்லவனா, ஒரு கல்மிஷம் இல்லாம இருந்தான். ஒண்ணுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிசாக்கிண்டிருக்கே நீ. எங்கேருந்து வந்து முளைச்சே? இரு, உன்னை ஒரு நாள் கடிச்சிக் கடாசிடறேன்!" கறுவிக்கொண்டது வெங்கடாஜலபதி.
"வெங்கட்! நீ அப்படியெல்லாம் பேசக்கூடாது. விக்கியும் என் ஃப்ரெண்டு தான். உன்னைமாதிரியே! ஒத்துமையா இருக்கணும். இல்லாட்டி நான் பர்மனெண்டா உன்பேச்சு காய் விட்டுடுவேன்."
ஜக்குவின் எச்சரிக்கை வெங்கடாஜலபதியை அப்போதைக்குக் கட்டிப்போட்டது.
"சரிசரி, இப்ப என்ன வெட்டிப்பேச்சு? குட்டிக்கு இனிமே உன்மேல சந்தேகம் வராது. அழகா ஒரு பொய் சொல்லி சமாளிச்சுட்டே. போய் அடுத்தவேலையைப் பார்" என்றது விக்கி.
அவன் மரத்திலிருந்து இறங்கி, வீட்டுக்குள் போகவும் வெங்கடாஜலபதி மீண்டும் விக்கியைப் பார்த்து முறைக்கத் தொடங்கியது.
மறுநாள் பள்ளிக்கூடத்தில் குட்டிக்கு இருப்பே கொள்ளவில்லை. முந்தைய தினம் ஜக்கு சொன்ன விஷயங்களையே அவளது புத்தி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. பேய், பிசாசு, பூதம், கொள்ளிவாய்ப்பிசாசு, ராட்சஸன். இவற்றையெல்லாம் விட ஒரு ஆவி அத்தனை மோசமானதாக இருக்கமுடியாது என்று அவள் நினைத்தாள். சூலம் சீரியலில் வருகிற குட்டிச் சாத்தான்களும் மந்திரவாதிகளும்தான் எத்தனை கெட்டவர்களாக இருக்கிறார்கள்! பார்க்கவே என்ன கோரம்! வாயிலிருந்து நெருப்பெல்லாம் வருகிறதே! ஒரு ஆவிக்கு அந்தமாதிரியெல்லாம் வருமா? அதுவும் மேட்டுத்தெரு பெண் ஆவி! வயலட் புடைவை கட்டிய ஆவி. நடுராத்திரி அது எங்காவது ஜக்குவின் மீது அப்படி வாயிலிருந்து நெருப்பு மழை பொழிந்துவிட்டால்? ஜக்கு மந்திரசக்தி உள்ளவன் தான். ஆனால் அவனும் சின்னப்பையன் தானே. எத்தனைதான் சமாளிப்பான்? பாவம் ஜக்கு. ஒரு ஜர்னலிஸ்ட் ஆக முடியாவிட்டால்தான் என்ன அந்த மக்குப் பெண்ணுக்கு? வேறு ஏதாவது ஆகிவிட்டுப் போனால் போகிறது? இப்படியா ஜக்குவின் அப்பாமேல் பழிக்குப் பழி தீர்க்க வரவேண்டும். கடவுளே, ஜக்குவையும் அவன் அப்பாவையும் நீ தான் காப்பாற்றவேண்டும்!
"ஏண்டி ஒருமாதிரி இருக்கே? பேசவே மாட்டேங்கறே?" குட்டியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரஞ்சனா கேட்டாள். வகுப்பில் குட்டிக்கு இருந்த மிகச்சில தோழிகளுள் ஒருத்தி.
குட்டி யோசித்தாள். ரஞ்சனாவிடம் இதைச் சொல்லலாமா? உடனே ஜக்குவுக்கு செய்துகொடுத்த சத்தியம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. பயமாக இருந்தது. அதே சமயம் அது குறித்து, அல்லது எதுகுறித்தாவது பதைக்கப் பதைக்க ரஞ்சனாவிடம் சொன்னால் தனக்கே கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்போலிருந்தது.
"கேக்கறேனே? என்ன ஆச்சு உனக்கு?" விடாமல் கேட்டது ரஞ்சனா.
"ஒரு பயங்கரமான விஷயம் சொல்றேன். ரகசியமா வெச்சிருக்கியா?" என்றாள் குட்டி.
"பயங்கரமான விஷயமா? என்னது?" சட்டென்று அவள் குரலும் தாழ்ந்துவிட்டது. "சொல்லு. ரகசியமா வெச்சுப்பேன்"
"நீ என்னிக்காவது ஒரு ரத்தக்காட்டேரியைப் பார்த்திருக்கியா?"
"ஐயோ, இல்லியே?"
குட்டி சொன்னாள்: "என் ஃப்ரெண்ட் ஜக்கு தெரியுமில்லியா? அவன் பார்த்தான்."
"ஐயோ, நீ என்னடி சொல்றே?"
அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
16
ரத்தக்காட்டேரி. எங்கிருந்து தனக்கு அப்படியொரு பயங்கரமான யோசனை வந்தது என்று குட்டிக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கு ஜக்குவைப் பற்றி யாரிடமாவது பேசவேண்டும் போல இருந்தது. ஆனால் அவன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவும் அத்தனை சுலபத்தில் பேசக்கூடியதாக இருப்பதில்லை. நடுராத்திரி வருகிற வயலட் புடைவை ஆவி. மகாபலிபுரத்திலிருந்து அவனுக்காகவே குடித்தனம் மாற்றிக்கொண்டு வந்து அவன் வீட்டுத் தோட்டத்தில் குடியேறியிருக்கிற விக்கி என்கிற குரங்கு. பேசுவதையெல்லாம் புரிந்துகொள்கிற வெங்கடாஜலபதி என்கிற சமத்து நாய். மிருகங்களுடன் சகஜமாக மனித பாஷையிலேயே உரையாடும் ஜக்கு. மிருகங்கள், அவற்றின் சொந்த பாஷையில் பதில் சொன்னாலும் புரிந்துகொள்ளும் திறமை மிக்க ஜக்கு. தாவரங்களூடன் ரகசியம் பேசுகிறவன் அவன். அவன் கனவுகளில் தேவதைகள் வருகிறார்கள்.
கதை மாதிரி தான் இருக்கிறது. ஆனால் கதை இல்லை. நிச்சயம் இல்லை. பத்துக்கோடியே நாற்பத்தெட்டு லட்சத்து முப்பத்திமூவாயிரம் பேர்களுள் ஒருத்தருக்குத் தான் இந்த சக்திகளெல்லாம் கிடைக்கும். ஜக்கு அந்த சக்தியை எப்படியோ பெற்று இருக்கிறான். சந்தோஷம் தான். பெருமை தான். சக்திமானை விட சக்தி படைத்த ஜக்குவுக்கு ஃப்ரெண்டாக இருக்க முடிவதற்கு எத்தனையோ கொடுத்து வைத்திருக்கவேண்டும் தான்.
ஆனால் இந்தமாதிரி, இவன் ஒரு மந்திரசக்தி படைத்த பையன் என்று பெருமையாக யாரிடத்திலும் சொல்லிக்கொள்ளமுடியவில்லையே? என்னத்துக்காக எல்லா விஷயங்களுக்கும் ஒரு தடைக்கல் போல அவன் ப்ராமிஸ் வாங்கிக்கொண்டுவிடுகிறானோ? யார் கிட்டயாவது சொன்னேன்னா உனக்கு மேக்ஸ் வராது. யார்கிட்டயானும் சொன்னேன்னா எக்ஸாம்ல ஆன்ஸர் மறந்துபோயிடும். காட் ப்ராமிஸ். மதர் ப்ராமிஸ். அது கூடப் பரவாயில்லை. கொஞ்சநாளாக ஃப்ரெண்ட்ஷிப் ப்ராமிஸ் என்று வேறு சொல்ல ஆரம்பித்திருக்கிறான். அடக்கடவுளே! எதையாவது சொல்லித்தொலைத்து அவனுடன் ஃப்ரெண்ட்ஷிப்பே முடிந்துவிட்டால் என்னவாவது?
அவளுக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது அது. கண்ணுக்குப் புலப்படாத எஃகுத் தடைச்சீலையொன்றை அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் அவளது உதடுகளூக்கும் இடையே அவன் விரித்துப் படரவிட்டிருந்தான். அநியாயமல்லவா? அக்கிரமம் அல்லவா?
கெட்ட விஷயமென்றால் சரி. இத்தனை பெருமைகளைப் போய் யாரிடமும் சொல்லக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? குட்டிக்குத் தாங்கவே முடியவில்லை. நாளெல்லாம் அவள் ஜக்குவைக் குறித்தேதான் சிந்தித்துக்கொண்டிருந்தாள். எனில் சிந்திப்பதில் ஒரு துளியையேனும் அடுத்தவரிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்றால் என்ன நியாயம்?
"கேக்கறேனே? என்னமோ பயங்கரமான விஷயம் சொல்றேன்னியே, சொல்லு சீக்கிரம். டீச்சர் வந்துடப்போறாங்க" என்றாள் ரஞ்சனா.
ஜக்குவின் தீரபராக்கிரமங்கள். அதைக்குறித்துத் தான் அவள் பேச விரும்பினாள். தன் ஒருத்திக்கு மட்டுமே தெரிந்த அவனது மந்திர சக்தி மகிமைகள் குறித்தும். ஆனால் சத்தியத்தை மீறுவது சாத்தியமில்லை. அவன் புரிந்துவரும் சாகசங்களைத் தானே சொல்லமுடியாது? அவன் ஒரு சாகசக்காரன் என்று சொல்லுவதில் என்ன தப்பு இருக்கமுடியும்? ஆவியுடன் சண்டையிட்டுத் திருப்பி அனுப்பும் சக்தி மிக்கவனுக்கு ரத்தக்காட்டேரி எம்மாத்திரம்? மேலும் ஒரு ஆவியை ரத்தக்காட்டேரி என்று மாற்றிச் சொல்லுவது சத்தியத்தை மீறியதாகவும் ஆகமுடியாது. அடடா, என்ன ஒரு உபாயம்!
குட்டி சொல்ல ஆரம்பித்தாள்.
"தெரியுமா உனக்கு? என் ஃப்ரெண்டு ஜக்கு இருக்கானே, அவன் ஒரு ரத்தக்காட்டேரியைப் பார்த்தான்! பொம்பள ரத்தக்காட்டேரியாம். மிட்நைட் ட்வெல்வ் ஓ க்ளாக்குக்கு அவன் வீட்டு வாசலுக்கு வந்திருக்கு அது. என்னமோ ஏதோன்னு எல்லாரும் முழிச்சிக்கப் போறாங்களேன்னு இவன் நைசா எழுந்து வெளில வந்து மரியாதையா போயிடுன்னு அதை மிரட்டியிருக்கான்..."
"ஓ...நிஜமாவா சொல்றே நீ?" என்றாள் ரஞ்சனா.
"ஆமா, இன்னும் கேளு.... இவன் யாரு பொடியன் தன்னைப் போகச் சொல்லறதுன்னு அந்த ரத்தக்காட்டேரிக்குக் கோபம் வந்து வாய்லேருந்து நீள நீளமா நெருப்பைத் துப்பியிருக்கு. அதுங்கண்ணுலேருந்து கன்னங்கரேல்னு புகை புகையா வந்தது... கால் நகமெல்லாம் டூ ஃபீட் இருந்தது... உடம்பு முழுக்க ரத்தம் கொட்டிண்டே இருந்ததாம்... ஜக்கு பயப்படவே இல்லே தெரியுமா? அவனுக்கு நிறைய சுலோகம்ஸ் தெரியும். மனசுக்குள்ள சொல்லிண்டே அதைக் கல்லால அடிச்சு விரட்டியிருக்கான்...."
"ஐயோ..." என்றாள் ரஞ்சனா.
"என்ன சொல்றே நீ? நம்பவே முடியலையே!"
"சீ போ!" என்றாள் குட்டி.
"கோச்சுக்காதே குட்டி. சரி சொல்லு. நான் நம்பறேன். ஆனா ரத்தக்காட்டேரியெல்லாம் வீட்டுக்கு வருமா என்ன?"
"ஆமா! வரும். எங்கெல்லாம் குட் பாய்ஸ் இருக்காங்களோ அங்கெல்லாம் வருமாம். வந்து படிக்க விடாம பாடா படுத்துமாம்...."
"அடக்கடவுளே. உன் ஜக்கு எப்படி அவ்ளோ தைரியமா எழுந்து போய் அதை அடிச்சு விரட்டினானாம்? கேட்டியா நீ? அவப்பா அம்மாக்கு தெரியுமா இது?"
"அவன் யார் கிட்டயும் சொல்லலை இதை. எனக்கு மட்டும் தான் சொல்லியிருக்கான். நீயும் இப்போ யார்கிட்டேயும் சொல்லக்கூடாது. இது நம்ம மேத்ஸ் சப்ஜெக்ட் மேல ப்ராமிஸ்" என்றாள் குட்டி.
ரஞ்சனாவுக்குக் கொஞ்சம் பயமாகிவிட்டது. ரத்தக்காட்டேரி. ஐயோடா. இதென்ன விபரீதம்! படிக்கிற பசங்களைத் தேடித்தான் வருமாமே?
"உன் ஜக்குவை எனக்கு இண்ட்ரொட்யூஸ் பண்ணிவெக்கறியா?" என்று ரஞ்சனா கேட்டாள்.
"ஓ யெஸ்" என்றாள் குட்டி. அவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அப்பாடா! ஒருவழியாக ஜக்குவைப் பற்றிப் பேசுவதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தாகிவிட்டது. ரத்தக்காட்டேரிகள்..பேய்கள்...பூதங்கள்....பிசாசுகள். அனைத்தையும் அவன் இனி தயக்கமின்றி வென்றுவிட முடியும். ஆவியை வெற்றிகொண்டவனுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?
சற்று நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. குட்டி விவரித்த விஷயத்தின் உக்கிரத்தை ரஞ்சனா தன் மனத்துக்குள் படரவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். பேய்க்கதைகளில் ஆர்வம் மிக்க அவளுக்கு இந்த நிஜமான சம்பவம் ஏற்படுத்தியிருந்த பாதிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. ஒரு ரத்தக்காட்டேரியை அடித்துத் துரத்தும் அளவுக்கு ஒரு ஆறாம் க்ளாஸ் பையனுக்கு வல்லமை இருக்குமா என்ன?
"மக்கு ரஞ்சு! ஆறாங்கிளாஸ் படிக்கறதா முக்கியம்? அவனுக்கு god-ஓட அருள் இருக்கு. இயற்கையிலேயே நிறைய சக்தி கிடைச்சிருக்கு. இதெல்லாம் காமன் மேனுக்குப் புரியாது" என்றாள் குட்டி.
அட, இந்தக் குட்டி எப்போதிலிருந்து இத்தனை விஷயம் தெரிந்தவளானாள்? ரஞ்சனாவுக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது.
"நீ ஒருவாட்டி ஜக்குவோட பேசிப்பாரு, புரியும். ஆனா அவன் உன்னை ஃப்ரெண்டா ஏத்துப்பானோ என்னமோ? எல்லாத்தையும் தீவிரமா யோசிச்சித்தான் செய்வான். முடியாது, வேணாம்னு முடிவு பண்ணிட்டான்னா, செத்தே போனாலும் செய்யமாட்டான்..."
"ஓ...!க்ரேட்..." என்றாள் ரஞ்சனா. "எப்படியாவது என்னையும் ஃப்ரெண்டா சேர்த்துக்கச் சொல்லேன்! ப்ளீஸ்..."
"உம், சரி" என்றாள் குட்டி. அவளுக்குப் பெருமை பிடிபடவில்லை.
அன்றிரவு ரஞ்சனா வீட்டில் ஹோம் ஒர்க் முடித்துவிட்டு அவளது அம்மாவின் மடியில் படுத்தபடி பள்ளிக்கூடக் கதைகளைச் சொல்லத் தொடங்கியபோது எல்லாவற்றையும்விடப் பிரதானமாக குட்டி வருணித்த ஜக்குவின் பராக்கிரமங்கள் தான் அவள் மனத்தில் முன் நின்றன.
"நம்பவே முடியலேம்மா.. அவ்ளோ சக்தி உள்ளவனாம் அந்த ஜக்கு. கடவுளோட பேசுவானாம். படிக்காமலேயே எல்லாப்பாடமும் அவன் ப்ரெயினுக்குள்ள தானா போய் உக்காந்துடுமாம். செண்டம் தவிர வேற மார்க்கே இதுவரைக்கும் வாங்கினதில்லையாம். கம்ப்யூட்டரெல்லாம் ஆப்பரேட் பண்னுவானாம். நாய், பூனை, பாம்பு, கரடி எல்லாத்தோடவும் பேசத்தெரியுமாம். மொத்தம் ஹன்ட்ரட் லேங்குவேஜஸ் தெரியுமாம் அவனுக்கு...."
"அதென்னடி புதுக்கதை?" என்றாள் ரஞ்சனாவின் அம்மா.
"கதை இல்லேம்மா. ப்ராமிஸ். நீ யார்கிட்டேயும் இதையெல்லாம் சொல்லவேணாம். ஆனா இது ப்ராமிஸ். குட்டி தான் சொன்னா. அவ ஃப்ரெண்டு ஜக்கு ஒரு சூப்பர்மேன் மாதிரி. என்னென்னவோ சக்தியெல்லாம் இருக்கு அவனுக்கு. கேக்கவே பயம்மா இருக்குன்னா பார்த்துக்கோயேன்.... ஒரு நாள் நடு ராத்திரி அவன் வீட்டு வாசல்லே ஏழு ராட்சஸர்கள் வந்து இந்தக்ஷணம் உன்னை சாப்பிடப்போறேன். எழுந்து வா ஜக்குன்னு கூப்டாங்களாம்.... துளி பயமில்லாம எழுந்து போய் வாசல்ல அவங்க முன்னாடி நின்னிருக்கான். ஆனா ஒருத்தராலயும் அவனைப் பிடிக்கவே முடியலை... கிட்ட போனாலே அவனை சுத்தி ஒரு நெருப்பு வளையம் வந்துடுமாம்.. யாருமே நெருங்க முடியாது! "
"சீ போ. பேசாம படுத்துத் தூங்கு. கண்ட கதையெல்லாம் யார்கிட்டயோ கேட்டுட்டு ராத்திரி பெட்டுல முச்சா போற டெய்லி!" என்று அவளது அம்மா சொன்னாள்.
ரஞ்சனாவுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் படுக்கையில் முச்சா போவதை சுட்டிக்காட்டியதால் இல்லை. ஒரு உண்மை. அதுவும் பேருண்மை. தன்மீது எத்தனை நம்பிக்கை கொண்டு குட்டி அதைச் சொல்லியிருக்கிறாள்! மாமேதையான ஜக்குவுக்குத் தன்னை ஃப்ரெண்ட் ஆக்கிவிடுவதாகவும் சொல்லியிருக்கிறாள். ஆனால் இந்த அம்மாவுக்கு ஏன் இதன்மீது நம்பிக்கையே வரவில்லை? தான் பொய் சொல்வதாக் நினைக்கிறாளா என்ன?
ஆனால் அதுவும் தான் புரியவில்லை. ஜக்குவைக் குறித்துச் சொல்லும்போதே விஷயங்கள் இயல்பாகப் புதுப்பரிமாணம் பெற்றுவிடுகின்றன. விவரிக்கும் உண்மைகளுக்குத் திடீரென்று சிறகு முளைத்து விநாடிப் பொழுதுக்குள் கண்ணுக்கெட்டாத தூரங்கள் வரை பரவிவிடுகின்றன. குட்டி சொன்னதை அப்படியேசொல்லமுடியாது தான். அது மேக்ஸ் மீது ப்ராமிஸ் விஷயம். ஆனால் தான் சொல்லுவது ஒன்றும் முற்றிலும் வேறான விஷயம் அல்லவே? ஜக்கு ஒரு மந்திரசக்தி பொருந்திய பையன். அவன் ரத்தக்காட்டேரியை விரட்டினால் என்ன? ராட்சஸர்களை விரட்டினால் என்ன? ஒரு வேளை அவனது மந்திரசக்தியே தான் தன்னை ரத்தக்காட்டேரிக்கு பதில் ராட்சஸர்கள் என்று மாற்றிச் சொல்லவைத்துவிட்டதோ என்னமோ.
ஆனால் இந்த அம்மா ஏன் நம்பமாட்டேன் என்கிறாள்?
"நான் சொல்றது நிஜம்தாம்மா... அவன் உண்மையிலேயே மந்திரவாதி மாண்ட்ரேக் மாதிரி தான் போலிருக்கு..." ரஞ்சனாவுக்கு அழுகையே வந்துவிடும்போலிருந்தது.
"இந்தவாட்டி எக்ஸாம்ல எல்லா சப்ஜெட்லேயும் மார்க் குறைஞ்சிருக்கு ரஞ்சு. நீ ஒழுங்கா படிக்கணும். இந்தமாதிரி கண்ட கதையெல்லாம் யார்கிட்டேயும் கேட்டுண்டிருக்காதே... சமத்தோல்லியோ? ஹோம் ஒர்க் முடிச்சுட்டியா? போய்ப்படு?"
மறுநாள் ரஞ்சனாவை பள்ளியில் விடப்போகும்போது குட்டியின் அம்மாவைப் பார்த்துக் கொஞ்சம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் அவள்.
17
குழந்தைகளின் சரணாலயம் போலிருந்தது அந்தப் பெரிய மரத்தடி. வெள்ளைச் சட்டையிலும் நீலப்பாவாடையிலுமாக அவர்கள் உச்சிப்பொழுதில் அங்கே பூத்திருந்தார்கள். பிளாஸ்டிக் கூடைகளும் பகலுணவும். அவரவர் தாய்மார்களின் அண்மையில் மதிய உணவுடன் சேர்த்து அன்றைய முற்பகல் வகுப்பு நிகழ்வுகள் அசைபோடப்பட்டன. என்ன பாடம் இன்று நடந்தது? யாரையாவது கிள்ளினாயா? சட்டையில் ஏன் அழுக்கு? இன்னும் ஒரே ஒரு வாய்தான். சாப்பிட்டுவிடு.
பள்ளி வளாகத்தில் இப்படியொரு பெரிய மரம் இருப்பதும் உட்கார்ந்து இளைப்பாற வாகாக வட்டவடிவில் மேடைபோல் கட்டிக்கொடுத்திருப்பதும் பெரிய சௌகரியம். கூடிய சீக்கிரம் சாந்திநிகேதன் மாதிரி ஆக்கிவிடுவோம் என்று சொல்லி வாங்கிய கேபிடேஷன் ஃபீஸுக்கு இந்த மரத்தடி மேடை தான் அச்சாரம் போலும். மேல் வருமானத்துக்கென்று சினிமாக்களின் பஞ்சாயத்துக் காட்சிகளுக்கு அனுமதி தராமலிருக்கவேண்டும் பள்ளி நிர்வாகம்.
குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு, குழாயடியை நோக்கி ஓடிய விநாடி இடைவெளிகளில் நிர்மலாவைப் பார்த்து நட்புடன் சிரித்தாள் ரஞ்சனாவின் அம்மா. தினசரி பார்க்கிறது தான். தினசரி புன்சிரிப்பும் உண்டு. எப்போதாவது ஹோம் ஒர்க்குகளின் கனம் குறித்து ஓரிரு சொற்கள் பேசுவது தவிர முக்கியமாக ஏதும் பேசியதில்லை. நன்கு படிக்கிற குழந்தைகளின் பெற்றோருக்குக் கவலைகொண்டு விவாதிக்க விஷயங்கள் ஏதுமில்லை. விஷமக்காரக் குழந்தைகள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் தரும். கவலைப்படுவதுபோல சந்தோஷப்படவும், கடிந்துகொள்வதுபோல அனுபவிக்கவும்.
ஆனால் குட்டி அப்படி இல்லை. ரஞ்சனாவும் அப்படியில்லை. இரண்டுமே படிப்பில் கெட்டி. ஆசிரியர்களின் விருப்பத்துக்குரிய மாணவிகளாக முளையில் தெரிகிற முன்னணி நட்சத்திரங்கள். மதிய உணவு கொண்டுவரும் சராசரித் தாய்மார்களின் மத்தியில் பெருமையுடன் நடமாட ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிற குழந்தைகள். எந்தப் பாடத்திலும் தொண்ணூறுக்குக் குறையாத மதிப்பெண்களில் ஈன்றபொழுதில் பெரிதுவக்கச் செய்திருக்கிறவர்கள். மேலும் இப்போதெல்லாம் நான்காம் வகுப்பிலேயே கல்வித்திட்டம் தன் சிக்கல் மிகுந்த இருட்டு மூலைகளைத் திறந்துகாட்டத் தொடங்கிவிடுகிறது. அப்பப்பா. எத்தனை பெரிய பாடங்கள், கணக்குகள். குழந்தைகள் ரொம்பத்தான் பாடுபடுகின்றன என்று சாங்கோபாங்கமாக ஆரம்பித்தாள் ரஞ்சனாவின் அம்மா.
வாஸ்தவம் தான் என்று ஆமோதித்தாள் நிர்மலா.
"விளையாடறதுக்கே நேரமில்லாமப் போச்சு. பாவம் எங்க ரஞ்சனா. ஸ்கூல் விட்டா ஹிந்தி டியுஷன். அப்புறம் பாட்டு க்ளாஸ். ஸ்லோக க்ளாஸ். முடிச்சிட்டு வந்தா ஹோம் ஒர்க். ஒம்போதரைக்கு மெட்டி ஒலி போடறப்போதான் சாப்பிடவே முடியுது அவளால. பார்த்துண்டே சாப்பிட்டுட்டு அப்படியே தூங்கிடறா... பாக்கவே பாவமா இருக்கு"
"எதாவது ஒரு க்ளாஸை அவாய்ட் பண்ணிடலாமே?" என்றாள் நிர்மலா.
"எதைன்னு நிறுத்தறது? எல்லாமே வேண்டியிருக்கே.." என்று அலுத்துக்கொண்டாள். "அதெல்லாம் கூடப் பரவாயில்லை நிர்மலா. ராத்திரில ஒழுங்கா தூங்கவே மாட்டேங்கறா தெரியுமா? என்னத்தையானா நினைச்சுக்கிட்டு ஓன்னு அலறிடறா. என்னடின்னு விசாரிச்சா பேய், பூதம், பிசாசுன்னு என்னமோ உளர்றா. ஒழுங்கா படிக்கிற பொண்ணுக்கு எங்கேருந்து இதெல்லாம்னு என் ஹஸ்பெண்ட் என்னைக் கோச்சுக்கறார்."
"அச்சச்சோ?" என்றாள் நிர்மலா.
ரஞ்சனாவின் அம்மாவுக்கு முதலில் அந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்பது தான் குழப்பமாக இருந்தது. நேரடியாக ஒருபோதும் தொடங்கமுடியாது. அது நிச்சயம். சுற்றி வளைத்துத் தான் மூக்கைத்தொடவேண்டும். ஆனால் சுற்றி வளைப்பது தெரியாமல் சுற்ற வேண்டும். என்ன செய்யலாம் என்று உள்ளுக்குள் யோசித்தபடியே தான் பேச்சை ஆரம்பித்தாள். ஒரு தொடர்பு இல்லாவிட்டாலும் வந்து நிற்கவேண்டிய இடத்தில் தான் மிகச் சரியாக வந்துவிட்டதாக அவளுக்குத் தோன்றியது. தன்னைத்தானே பாராட்டிக்கொண்டாள்.
"...அதான் சொல்லவரேன். ஏண்டி, எங்கேருந்து இதெல்லாம் கத்துக்கறே? யார் சொன்னா உனக்கு பேய், பூதமெல்லாம் இருக்குன்னு கேட்டா மொழ நீளத்துக்குக் கதை கதையா சொல்றா!"
"சரியாப்போச்சு! என்னவாம்?" நிர்மலா ஆர்வமுடன் கதை கேட்கத் தொடங்கிவிட்டாள். பிற்பகல் வகுப்பு தொடங்குவதற்கான மணியடித்து, குழந்தைகள் வகுப்பறைகளுக்கு ஓடியதும் இருவரும் காலியான கேரியர்களைத் துடைத்து எடுத்துக் கூடையில் வைத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். இன்றைய பொழுதுக்குப் பேசிக்கொண்டே போக ஒரு துணை ஆச்சு என்று நிர்மலா நினைத்துக்கொண்டாள்.
ரஞ்சனாவின் அம்மா நிதானமாக, மிக கவனமாகத்தான் ஆரம்பித்தாள். எடுத்த எடுப்பில் உன் பெண்ணைக் கொஞ்சம் கவனித்து வை என்று சொன்னால் எந்த அம்மாவுக்குத்தான் பிடிக்கும்? போடி சர்தான் என்று சொல்லிவிடக்கூடும். ஒன்றுமில்லாத விஷயம் ஒரு பூகம்பத்தையே கூட உண்டாக்கிவிடலாம். எதற்கு வம்பு? ஆகவே அவள் மீண்டும் தலையைச் சுற்றி மூக்கைத்தொடலாம் என்று முடிவுசெய்தாள்.
"...இல்லே நிர்மலா, தப்பு இவபேர்ல தான். என்னிக்கோ க்ளாஸ்ல டீச்சர் வர லேட்டாயிருக்கு... டீச்சர் வராட்டா என்ன? படிச்சிட்டிருக்கலாமில்லே? உங்க குட்டியைத் தொணப்பு தொணப்புன்னு தொணப்பி, எதாவது பேய்க்கதை சொல்லுன்னு கேட்டிருக்கா போலிருக்கு. அது என்ன பண்ணும் பாவம்? தனக்குத் தெரிஞ்ச என்னத்தையோ சொல்லியிருக்கா. என்னமோ ரத்தக்காட்டேரியாம். ராத்திரி பன்னெண்டு மணிக்கு அவ ஃப்ரெண்டு யாரோ ஒரு பையனாமே? அவன் வீட்டுக்கு வருமாம். வழியெல்லாம் ரத்தம் கொட்டிண்டே, உன்னை சாப்டப்போறேன்னு பயமுறுத்துமாம்...உவ்வே. நீங்களே சொல்லுங்க. குழந்தைகள் மனசை எப்படியெல்லாம் கெடுத்து, பயமுறுத்தி வெச்சிருக்கு பாருங்க.."
கேட்டுக்கொண்டே வந்த நிர்மலாவுக்கு சட்டென்று பொறிதட்டினாற்போலிருந்தது. "என்னது!" என்று வியப்புடன் கேட்டாள்.
"குட்டிக்கும் சரி, எங்க ரஞ்சுவுக்கும் சரி. இந்த மாதிரி கதையெல்லாம் தெரியவே தெரியாது. எவனோ ஒரு தடியன் இப்படியெல்லாம் சொல்லி குழந்தைகளை பயமுறுத்தியிருக்கான்... யாருன்னு எனக்குத் தெரியலை. எங்க ரஞ்சு நைட்டெல்லாம் ஓன்னு அலர்றா. பயம்மா இருக்கும்மா, பயமா இருக்கும்மான்னு இழுத்து இழுத்துக் கட்டிக்கறா. என்னடின்னு கேட்டா ரத்தக்காட்டேரி வருதும்மாங்கறா..."
"ஐயோ..!" என்றாள் நிர்மலா. விஷயம் கொஞ்சம் பூடகமாகத் தான் அவளுக்குப் புரிந்திருந்தது. என்னவோ நடந்திருக்கிறது. ரஞ்சனாவுக்குக் குட்டி ஏதோ கதை சொல்லியிருக்கிறாள். நிஜமாக நடந்ததாக யாரோ கதை கட்டி விட்டிருக்கிறார்கள். அடக்கடவுளே. சின்னக் குழந்தையிடம் போய் ரத்தக்காட்டேரி அது இது என்று யார் சொல்லியிருப்பார்கள்?
"எனக்கு இந்த விஷயமே தெரியாதுங்க. நான் குட்டியை விசாரிக்கிறேன்" என்றாள் நிர்மலா.
"சேச்சே. நீங்க ஒண்ணும் அவளை மிரட்டவேண்டாம். எங்க ரஞ்சு பயந்திருக்கான்னா, அதே மாதிரி தானே குட்டியும்? குழந்தைகளை யார் இந்தமாதிரியெல்லாம் பயமுறுத்தறாங்கன்னு விசாரிக்கணும். அவங்க வீட்டுல சொல்லிவெக்கணும். சரி, நான் வரவா?" என்று வேலை முடிந்த சந்தோஷத்தில் விடைபெற்றாள் ரஞ்சனாவின் அம்மா.
நிர்மலாவுக்குக் குழப்பமாக இருந்தது. ரொம்ப சாமர்த்தியமாக ஒரு புகாரை, புகார் தொனியில் அல்லாமல் நட்புணர்வுடன் செய்தி அறிக்கை போல் வாசித்துவிட்டுப் போயிருக்கிறாள் ஒருத்தி. ஆனால், புகார் புகார் தான். எந்தத் தொனியில் சொல்லப்பட்டால் என்ன? விஷயத்தைத் தெரியப்படுத்தியாகிவிட்டது. இனி தாந்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'என்னமோ ரத்தக்காட்டேரியாம். ராத்திரி பன்னெண்டு மணிக்கு அவ ஃப்ரெண்டு யாரோ ஒரு பையனாமே? அவன் வீட்டுக்கு வருமாம். வழியெல்லாம் ரத்தம் கொட்டிண்டே, உன்னை சாப்டப்போறேன்னு பயமுறுத்துமாம்...' - அவள் சொன்ன சங்கதியை மனத்துக்குள் மீண்டுமொருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டாள்.
'அவ ஃப்ரெண்டு யாரோ ஒரு பையனாமே....'
யாராயிருக்கும்? குட்டியிடம் சொல்லி எச்சரிக்க வேண்டும். இந்தமாதிரி பேய்க்கதை சொல்கிற பையன்களுடன் பேசாதே. அவன் பேச்சு கா விட்டுவிடு. அதான் சமத்துப்பெண்ணுக்கு அழகு.
ஆனால் அன்றிரவு அவள் குட்டியிடம் இதுகுறித்துப் பேசத்தொடங்கியபோது எப்போதுமே இல்லாத வழக்கமாக அவள் மிகவும் கோபமுடன், ஆங்காரமுடன் முரண்டுபிடித்ததைக் கண்டு நிர்மலா சற்று வியப்படைந்தாள்.
"உதைபடுவே ராஸ்கல். யார் உனக்கு அந்தக் கதையெல்லாம் சொன்னது? மரியாதையா சொல்லிடு" என்று மிரட்டியபிறகு தான் அவள் ஜக்குவின் பெயரைச் சொன்னாள்.
"அந்தக் கிறுக்கனோட அதிகம் வெச்சுக்காதேன்னு சொல்லியிருக்கேனா இல்லியா?" கோபம் குறையாமல் கேட்டாள் நிர்மலா.
குட்டிக்கு அழுகை அழுகையாக வந்தது. இதென்ன அக்கிரமம்! உலகத்தில் ஜக்குவின் மேதைமையைப் புரிந்துகொள்ள தன்னைத்தவிர வேறு யாருக்குமேவா சக்தி இல்லை?
"அம்மா ப்ளீஸ். அவனை அப்படியெல்லாம் சொல்லாதே. அவன் நல்ல பையன். பைத்தியம் இல்லை. நீ இனிமே அதுமாதிரி சொல்லாதே!" என்று மிகவும் கெஞ்சுகிற தொனியில் கேட்டுக்கொண்டாள் குட்டி.
"நல்ல பையன்னா, ரத்தக்காட்டேரி கதையையெல்லாம் சொல்லமாட்டான். பாரு, அவன் உங்கிட்ட என்னென்னவோ அளந்திருக்கான். நீ ரஞ்சனா கிட்ட சொல்லி, அவ, அவம்மாகிட்ட சொல்லி, இன்னிக்கு அவ லஞ்ச் டயத்துல என்கிட்ட உன்னைப்பத்தி கம்ப்ளைண்ட் பண்றா. குட்டியைக் கொஞ்சம் அதட்டி வைங்க. இல்லாட்டி நான் ஹெட்மிஸ்ட்ரஸ் கிட்ட சொல்லிடுவேங்கறா. வேணுமா உனக்கு?"
ஹெட்மிஸ்ட்ரஸ்! ஐயோ. யார் அந்த பூதத்தின் முன்னால் போய் நிற்பது? இந்த ரஞ்சனாவிடம் எத்தனை ப்ராமிஸ் வாங்கிக்கொண்டு சொன்னோம்? இப்படி அவள் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி, காரியத்தைக் கெடுத்தாளே. இனி அவளுடன் பேசுவதில்லை. காய் தான். நிச்சயமாக, நிரந்தரமாக காய் தான். அவள் பக்கத்தில் கூட இனி உட்காரக்கூடாது என்று குட்டி தீர்மானம் பண்ணிக்கொண்டாள்.
இரவு விளக்கணைத்துப் படுத்ததும் குட்டியின் அம்மாவும் அப்பாவும் இந்த விஷயத்தைக் குறித்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். பேச்சுக்குரல் கேட்டதுமே குட்டி தூக்கத்தை வலுக்கட்டாயமாக விலக்கிவைத்துவிட்டு, அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்கத்தொடங்கினாள்.
"அந்தப் பையன் ஜக்குதாங்க நம்ம குட்டிகிட்ட இந்தமாதிரி கண்டகண்ட கதையெல்லாம் சொல்றான். குழந்தையை பயமுறுத்தி வெச்சிருக்கான். யார்டி சொன்னா உனக்கு இதையெல்லாம்னு கேட்டா, சொல்லமாட்டேங்கறா. சத்தியம் வாங்கியிருக்கானாம், யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு! இத்துனூண்டு வயசுல என்னென்ன திரிசமன் பாருங்க. அவம்மா கிட்ட அவசியம் சொல்லிடணும் இதை. என்ன குழந்தை வளர்க்கறாளோ, சே."
அதற்குமேல் குட்டிக்குத் தாங்கமுடியவில்லை. வெடித்துக்கொண்டு அழுகை பீறிட்டுவிட்டது.
"பார்த்தீங்களா? இப்படித்தான் . தூக்கத்துல என்னமோ நினைச்சு பயந்துண்டு அழறா பாருங்க. என் குலையே நடுங்குது. நாளைக்கு காலைல முதல் வேலை, போய் அவன் வீட்டுல நீங்க பேசிட்டு வாங்க."
தீர்மானமாகச் சொன்னாள் நிர்மலா.
18
சண்டை. கடும் சண்டை. உலக யுத்தம் கூட இப்படித்தான் நடந்திருக்கவேண்டும். டமால் டுமீல். டிஷ்யூம் டிஷ்யூம். ஆ...ஊ... ஐயோ, அம்மா. அடிக்காதேடி சனியனே. உன்னைக் கொல்லாம விடமாட்டேன் பார். சீபோ. இனி உன்கூடப் பேசக்கூட மாட்டேன். லைஃப் லாங் காய் தான். ஐயோ, நான் சொன்னால் நீ நம்ப மாட்டியா? காட் ப்ராமிஸா நான் அதைச் சொல்லல்லே...சொல்லல்லே... சொல்லல்லே...
குட்டிக்குக் கோபம் அடங்கவேயில்லை. எத்தனை நம்பிக்கையுடன் அவள் ரஞ்சனாவிடம் ஜக்குவின் வீரபராக்கிரமங்களைச் சொல்லியிருந்தாள். அதுவும் எத்தனை ஜாக்கிரதையாக! அந்த வயலட் புடைவை கட்டிய பெண்ணின் ஆவியை கன ஜாக்கிரதையாக ஒரு ரத்தக்காட்டேரியாக உருமாற்றி, புதிய கதைச் சட்டை போட்டு, புதுப்பொலிவுடன் ரகசியமாக அளித்திருந்தாள். அது ஒரு பெரிய பரிசு அல்லவா? பொக்கிஷமல்லவா? அதைப் போய் இந்த ரஞ்சனா சனியன் அவள் அம்மாவிடம் அப்படியே உளறிக்கொட்டியிருக்கிறாளே. இவளை எப்படி இனிமேல் நம்புவது? இவளை எப்படி ஃப்ரெண்டாக வைத்துக்கொள்வது? தனக்கு ஃப்ரெண்டாக இருப்பதோடல்லாமல் ஜக்குவுக்கும் ஃப்ரெண்டாகவேண்டும் என்று வேறு ஆசை மகாராணிக்கு! ஆசையைப்பார்! வெவ்வவ்வே.
ரஞ்சனாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாகத் தான் இருந்தது. குட்டி குறிப்பிட்ட ரத்தக்காட்டேரி குறித்து ஒரு சொல் கூட அவள் தன் அம்மாவிடம் சொல்லியிருக்கவில்லை. எப்படிச் சொல்லமுடியும்? படிப்பு மீதல்லவா ப்ராமிஸ் செய்திருக்கிறாள்? கவனமாக அதை மாற்றி, ஏழு ராட்சஸர்கள் அவன் வீட்டு வாசலில் வந்து நின்று மிரட்டியதாகத்தான் சொல்லியிருந்தாள். இந்த அம்மா எப்படி நூல் பிடித்தமாதிரி ராட்சஸர்களை விட்டுவிட்டு ரத்தக்காட்டேரிக் கதையைக் குட்டியின் அம்மாவிடம் சொன்னாள்? அம்மாவுக்கு மந்திரசக்தி இருக்குமோ? தான் மாற்றிச் சொன்னாலும் உண்மை என்ன என்று மனத்துக்குள்ளிருந்து எடுத்துப் பார்த்துவிடுவாளோ?
சேச்சே. இதென்ன குழப்பம்? ஒன்றுமே புரியவில்லை. குட்டியின் கோபம் நியாயமானது தான். அவள் அடித்ததையும் கடித்ததையும் கூட ரஞ்சனாவால் பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் ஏழு ராட்சஸர்கள் எப்படி ரத்தக்காட்டேரியாக அம்மா மூலம் உருமாறினார்கள் என்பது தான் அவளூக்குப் புரியாத புதிராக இருந்தது.
ஆனால் குட்டியின் கோபம், ராட்சஸர்கள் மீண்டும் ரத்தக்காட்டேரியாக உருமாறியது பற்றியல்ல. அவள் எப்படி அந்தக் கதையைப் போய் அம்மாவிடம் சொல்லலாம்?
"இப்போ என்ன ஆச்சு? உங்கம்மா எங்கம்மாகிட்டே சொன்னாங்களா? எங்கம்மா எங்க அப்பா கிட்டே சொல்லி, நேரா போய் ஜக்குவோட அப்பா கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணச் சொல்லியிருக்கா. இன்னிக்கு ஈவினிங் பயங்கர ப்ராப்ளம் ஆகப்போவுது. ஜக்குவோட அப்பா அவனைக் கூப்பிட்டு விசாரிச்ச நெக்ஸ்ட் செகண்டே அவன் என்கிட்ட வந்து கேப்பான். இல்லாட்டி, இருந்த இடத்துலேருந்தே என்பேச்சு கா விட்டுடுவான். உன்னால எங்க ஃப்ரெண்ட்ஷிப்பே போச்சு!"
கேவிக்கேவி அழத்தொடங்கியிருந்தாள் குட்டி.
ரஞ்சனாவுக்கும் அழுகை வந்தது. ஒரு மேதையைக் குட்டி மூலம் நட்பாக்கிக்கொள்ள அவள் மிகவும் ஆவலாயிருந்தாள். ஆனால் அவளுக்கே நட்பு போய்விடுமாறு அல்லவா செய்துவிட்டோம்? தன் வாய் ஏன் சும்மா இல்லை? அல்லது தன் அம்மாவின் வாய் ஏன் சும்மா இல்லை? அட, அது தான் போகட்டும். இந்தக் குட்டியின் அம்மாவுக்குக் கூடவா வாய் சும்மா இருக்காது?
எல்லாமே சிக்கல். பெரிய சிக்கல். ரத்தக்காட்டேரியை விரட்ட முடிந்த ஜக்குவால் அவன் அப்பாவைச் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. ரத்தக்காட்டேரிகள் மந்திரத்துக்கு பயப்படும். அப்பாக்கள் எப்படி பயப்படுவார்கள்? கடவுளே, நீ தான் ஜக்குவைக் காப்பாற்ற வேண்டும். குட்டியுடன் அவன் காய்விடாமல் இருக்கவேண்டும். குட்டி தன்மீது கொண்டிருக்கிற கோபமும் சீக்கிரம் அடங்கவேண்டும். எல்லாம் சரியானால் பிள்ளையாருக்கு மூன்று தோப்புக்கரணம்.
அவளுக்கு ஆறவேயில்லை. அன்று மாலை வீட்டுக்குப் போனதும் முதல் காரியமாக அம்மாவிடம் சண்டை பிடித்தாள். அவள் எப்படிக் கதையை மாற்றிச்சொல்லலாம்?
"நான் ஏழு ராட்சசர்கள்னு தானே சொன்னேன்? நீ எப்படி ரத்தக்காட்டேரின்னு சொல்லியிருப்பே குட்டியோட அம்மாகிட்டே?"
"என்ன எழவானா என்னடி? இனிமே பேய், பூதம், ராட்சஸன்னு எதையாவது கேட்டுக்கிட்டு வந்து அளந்தேன்னா நல்லா நாலு சாத்து சாத்தப்போறேன்" என்றாள் ரஞ்சனாவின் அம்மா.
சொல்லிவிட்டாளே தவிர அவளூக்கும் அது ஆச்சர்யமாகத் தான் இருந்தது. குட்டியின் அம்மாவிடம் புகார் சொல்லும்போது எதற்காக ரஞ்சனா சொன்ன ராட்சஸர்கள் கதையை ரத்தக்காட்டேரிக்கதையாகத் தான் மாற்றினோம்? சொல்கிற புகாரின் தீவிரத்தை ராட்சஸர்களைக் காட்டிலும் ரத்தக்காட்டேரிகள் அதிகரிக்கக்கூடும் என்று பட்டிருக்கலாம். ரத்தக்காட்டேரிகள். தனக்குக்கூட கற்பனை எத்தனை அழகாகப் படர்ந்து சிறகு விரிக்கிறது. எப்படியோ. குழந்தைகள் இனியாவது இந்த மாதிரி கதைகளில் வாழாமல் இருந்தால் சரி. வீட்டில் கேபிள் கனெக்ஷனைக்கூட ரத்து செய்யமுடியுமானால் நன்றாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பில்லி சூனிய சீரியல்கள். சனியன்.
இரவு ரஞ்சனா உறங்கிய பிறகு அவள் குட்டியின் அம்மாவுக்கு போன் செய்து தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள். "ரொம்ப கரெக்டா ஆக்ஷன் எடுத்திருக்கிங்க நிர்மலா. இனிமே குழந்தைகள் இந்தமாதிரி கதைகள் யார் சொன்னாலும் உக்கார்ந்து கேட்காது. படிக்கிற வயசுல என்னெல்லாம் டைவர்ஷன் பாருங்க"
நிர்மலாவுக்கும் அந்தத் தொலைபேசி அழைப்பின் சாரம் மிகவும் பிடித்திருந்தது. குழந்தைப் பராமரிப்பு. எத்தனை பெரிய விஷயம். இப்படியான சிக்கல்கள் வரும் என்று யாரும் நினைத்தும் பார்க்கமுடியாது. பேய்க்கதைகள் கேட்டு இரவுகளில் அலறுகிற குழந்தைகள். பிரச்னையின் வேரை வெட்டிவிடுவது தான் ஒரு நல்ல அம்மாவின் லட்சணம். தான் ஒரு நல்ல அம்மா என்று இன்னொரு நல்ல அம்மா சான்றிதழ் அளிக்கிறாள். அதுவும் ராத்திரி ஒன்பதரைக்கு மேல் நம்பர் தேடி போன் செய்து.
"நான் என் ஹஸ்பெண்ட் கிட்டயே சொல்லிட்டேன். அந்தப் பையன் ஜக்குவோட அப்பாவைப் பார்த்து பேசிட்டுத்தான் மறுகாரியம் பார்க்கணும்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டேன். அவன் நல்ல பையன் தான். நல்லா படிக்கவும் செய்வான். ஆனா ஏன் புத்தி இப்படியெல்லாமும் போறதோ தெரியலை" என்று சமூகக் கவலைப்பட்டாள் நிர்மலா.
"நல்ல காரியம் பண்ணிங்க நிர்மலா. முடிஞ்சா குட்டியை அந்தப் பையனோட சேராம பார்த்துக்கோங்க. அவ ப்ரில்லியண்ட் கேர்ள். கண்ட கதைகள் கேட்டு பயந்து அலறினா உடம்புக்கு என்ன ஆறது? ம்?"
ஆனால் குட்டியின் அப்பாவுக்கு இந்த அற்ப விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தோன்றியது.
"குழந்தைகள் தானே நிர்மலா? நாலுவிதமா பேசத்தான் செய்யும். விளையாடத்தான் செய்யும். உன்பையன் பேய்க்கதை சொல்லி என் பொண்ணை பயமுறுத்தறான்னு போய் கம்ப்ளைண்ட் பண்ணினா நல்லாவா இருக்கும்? மோர் ஓவர் ஜக்கு இஸ் எ குட் பாய். ரொம்ப சமத்து. யாரொ அவனுக்கு அந்தக்கதை சொல்லியிருக்கணும். அவன் இவ கிட்ட சொல்லியிருக்கான். இப்படி பெரிய ரவுண்ட் ஆயிடுச்சு. ஜஸ்ட் லீவ் இட்" என்றார் அவர்.
"ம்க்கும்" என்று இடித்துக்கொண்டாள் நிர்மலா.
குட்டிக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அம்மாவின் சொல்கேட்டு அப்பா, விஷயத்தைக் கொண்டுபோய் ஜக்குவின் வீட்டில் உடைத்திருக்கிறாரா? இல்லையா? காலையிலேயே அவர் சொல்லியிருந்தால் இந்நேரம் ஜக்கு நேரே வந்து காய்விட்டுவிட்டுப் போயிருப்பான். ஒருவேளை ஜக்குவின் அப்பா இன்னும் அவனைக்கூப்பிட்டு விசாரிக்கவில்லையோ? அல்லது தன் அப்பாவே விஷயத்தை இன்னும் சொல்லவில்லையா? சொல்லவேண்டாமே என்கிற அவர் முடிவு மட்டும் இறுதி முடிவாக இருந்துவிட்டால் எத்தனை உத்தமம்?
அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அம்மா அந்த இடத்தை விட்டு அகன்று ஹாலுக்குப் போகிறவரை பொறுமையாகக் காத்திருந்தாள். கதவுகளைச் சாத்திவிட்டு விளக்கணைக்க அவள் எழுந்துகொண்டதும் தொபுக்கட்டீர் என்று அப்பாவின் மடியில் குதித்து அமர்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள்.
"அப்பா, ப்ளீஸ்ப்பா. இனிமே நான் பேய்க்கதையெல்லாம் கேக்கமாட்டேன். சொல்லமாட்டேன். ப்ராமிஸ்ப்பா. இந்த ஒருவாட்டி விட்டுடுங்களேன். ஜக்குவீட்டுல போய் கம்ப்ளைண்ட் பண்ணாம இருங்களேன்? அப்புறம் அவன் என்பேச்சு கா விட்டுடுவான். என்கூட பேசவேமாட்டான். லைஃப் முழுக்க அப்புறம் காய்தான்னு சொல்லிடுவான்பா...ப்ளீஸ்பா...."
அவர் குழந்தையின் தலையைக் கோதிவிட்டார்.
"ம்ம்...ஜக்கு உனக்கு அவ்ளோ முக்கியமான ஃப்ரெண்டா?" என்று கேட்டார்.
"ஆமாப்பா. ரொம்ப முக்கியம். என் பெஸ்ட் ஃப்ரெண்ட். எவ்ளோ கெட்டிக்காரன் தெரியுமா அவன்? ஒருவாட்டி கூட எந்த சப்ஜெக்டுலேயும் அவன் செண்டமுக்குக் குறைஞ்சதே இல்லை...." படிப்பை முன்னிறுத்தினால் தான் அப்பாவுக்கு நம்பிக்கைவரும் என்று அவளுக்குத் தோன்றியது.
"அப்புறம்?"
"நிறைய விஷயம் தெரியும் அவனுக்கு. கார்டனிங்கெல்லாம் தெரியும். அனிமல்ஸோட லேங்குவேஜெல்லாம் தெரியும்...."
"அடடே!"
"ப்ராமிஸ்பா! அவனோட வெங்கடாஜலபதி என்ன பேசினாலும் அவனுக்குப் புரியும். அவன் பேசறதும் அதுக்குப் புரியும். உங்களுக்குத் தெரியுமா? ஒருநாள் அவன் ஸ்கூலுக்குப் போயிருக்கும்போது அந்த நாய் வீட்டைவிட்டு எங்கியோ வெளில போய் சுத்திட்டு வந்திருக்கு. இவன் வந்ததுமே அதைக் கண்டுபிடிச்சுட்டான். எப்படிடா தெரிஞ்சுதுன்னு கேட்டா, அது ஊர் சுத்தின ஸ்மெல்லை வெச்சே கண்டுபிடிப்பேன்னு சொன்னான். நாயோட ஸ்மெல்! எவ்ளோ க்ரேட் இல்லே? என் கண் எதிரேயே அதைக் கூப்பிட்டு இனிமே வெளில போனேன்னா, கார்ப்பரேஷன்காரன்கிட்டே பிடிச்சிக்குடுத்துடுவேன்னு மிரட்டினான். உடனே அது என்ன பண்ணித்து தெரியுமா? வவ்வ்வூவ்வ்வ்னு என்னமோ ஒரு சத்தம் குடுத்துது. அழவே அழுதுடுத்து. கண்ணுலேருந்து தண்ணி! நான் பார்த்தேன்ப்பா! நம்பவே முடியலை! என்னதுடான்னு கேட்டா, ரொம்ப சாரி, இனிமே வெளில போகவே மாட்டேன், காட் ப்ராமிஸ்னு சொல்லி அழறதாம்! அவன் காலடில படுத்துண்டு அது எழுந்திருக்கவே மாட்டேன்னுடுச்சு. தெரியுமா?"
குட்டியின் அப்பா, மிகுந்த அக்கறையும் ஆர்வமுமாக அவள் சொல்வதைக் கேட்டுவிட்டு, "சமத்து. நீ படுத்துக்கோ. மணியாயிடுச்சு பார்." என்று சொன்னார்.
"அப்ப நீங்க அவப்பா கிட்ட சொல்லமாட்டிங்க தானே?"
"சொல்லலை" என்றார் சிரித்துக்கொண்டே.
"சமத்து அப்பா" என்று அவரை இறுக்கிக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தாள். மிகுந்த மன நிம்மதியுடன் படுக்கைக்குப் போனாள். இந்த ராத்திரி எப்போது முடியும்? விடிந்ததும் முதல் காரியமாகப் போய் ஜக்குவைப் பார்க்கவேண்டும். என்னத்தையாவது கொஞ்ச நேரம் பேசவேண்டும். இன்று பொழுது விடிந்ததிலிருந்தே மனசு சரியில்லை. எத்தனை குழப்பம், கலக்கம்! ஐயோ, கோபம் வேறு. பாவம் ரஞ்சனா. அவளூம் தன்னை மாதிரி தானே? தனக்கு அவளிடம் சொல்லத்தோன்றியது போலத்தானே அவளூக்கும் யாரிடமாவது சொல்லவேண்டும் என்று பட்டிருக்கும்? அது ஒரு தப்பா? அதற்குப் போய் இத்தனை பெரிய கலாட்டாவைத் தான் செய்திருக்கவேண்டாம். எத்தனை அடிகள், கிள்ளுகள். ஐயோ பாவம். எவ்வளவு வலித்திருக்கும்! பதிலுக்கு அவள் ஒரு முறை கூடக் கிள்ளவில்லை. ஆனால் எப்படி அழுதாள்! தனக்கு ஏன் இத்தனை ஆங்காரமும் துவேஷமும் வந்துவிட்டது இன்று?
ஜக்கு. ஆம். அவனுக்கு ஒரு பிரச்னை. அதன் மூலம் தனக்கும் அவனுக்குமான நட்பு பாதிக்கப்படும் என்று தோன்றிவிட்டதனால் தான் எல்லாமும். நல்லவேளை. அம்மா மாதிரி, ரஞ்சனாவின் அம்மா மாதிரி தன் அப்பா இல்லை. அவர் சமத்து. தன்னை மாதிரி. ஜக்குவை மாதிரி. அதனால் தான் அம்மாவின் பேச்சைக்கேட்டு ஜக்குவின் வீட்டுக்குப் போய் புகார் செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார். எத்தனை நல்ல அப்பா!
ஆனால் அவள் ஒரு முடிவு செய்துகொண்டாள். ரஞ்சனா உட்பட இனி யாரிடமும் எப்போதும் ஜக்குவைக் குறித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. காட் ப்ராமிஸ்.
உறங்கியது தெரியாமல் உறங்கி, விடிந்தது தெரியாமல் விழித்தெழுந்தபோது அவளுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. ஜக்குவே அவள் வீடுதேடி வந்திருந்தான். ஐயோ இந்த அம்மா என்னத்தையாவது அவனிடம் உளறாமல் இருக்கவேண்டுமே என்று பதறி எழுந்து வாசலுக்கு ஓடினாள்.
நல்லவேளை. அம்மா குளித்துக்கொண்டு தான் இருந்தாள். அப்பா தான் அவனுடன் பேசிக்கொண்டிருந்தார். குட்டி வந்ததைப்பார்த்ததும் "ராத்திரி தான் சொல்லிண்டிருந்தே. இதோ, உன் ஃப்ரெண்டு வந்துட்டான் பாரு" என்று சொன்னார்.
"நான் மூணு நாள் ஊருக்குப் போறேன் குட்டி" என்றான் ஜக்கு.
"ஊருக்கா! எந்த ஊருக்கு? உங்கப்பா, அம்மாவெல்லாம் வராங்களா?"
"ம்ஹும். ஸ்கூல் எஸ்கர்ஷன்."
அவளுக்கு அந்தத் தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஜக்கு மூன்று நாட்கள் இருக்கமாட்டான்! போயும் போயும் இப்போதா அவன் பள்ளியில் எஸ்கர்ஷன் ஏற்பாடு செய்யவேண்டும்?
"எந்த ஊருக்குப் போரே?" ஏமாற்றம் தொனிக்கும் குரலில் அவள் கேட்டாள்.
"எங்கெங்கியோ. சீர்காழி, சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர்... இன்னும் நிறைய ப்ளேஸஸ்."
"நிஜமாவே முடிவு பண்ணிட்டியா?" அவளுக்கு அழுகையே வந்துவிடும்போலிருந்தது.
"என்ன கேக்கறே நீ? கண்டிப்பா எல்லாரும் வரணும்னு ஸ்கூல்ல சொல்லிட்டாங்க. போனவாரமே பணம் கட்டிட்டேனே?"
"என்கிட்டே சொல்லவேயில்லையே நீ?"
"மறந்துட்டேன்" என்றான் ஜக்கு.
"இன்னிக்கா கிளம்பறே?"
நாளைக்கு காலைல. ஏர்லி மார்னிங் பஸ் வந்துடும். மொத்தம் ரெண்டு பஸ். ஹன்ட்ரட் ஸ்டூடண்ட்ஸ்."
"அப்ப உன் வெங்கடாஜலபதி?" என்றாள் குட்டி.
"தாத்தா பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்கார்" என்றவன், சற்று நிறுத்திவிட்டு, மெதுவாக "விக்கியை மட்டும் கூட்டிண்டு போறேன் ரகசியமா" என்றான்.
அழுகையும் ஆத்திரமுமாகப் பீறிட்டுவந்தது குட்டிக்கு.
19
அதிகாலை மூன்று மணிக்கு அலாரம் வைத்து எழுப்பிவிட்டாள் அம்மா. கொதிக்கக் கொதிக்க வெந்நீர் போட்டுக் குளித்ததில் ஜக்குவுக்குக் கண்கள் எரிந்தன. தீபாவளி ஒரு நாளைத்தவிர வேறெப்போதும் இப்படி இருட்டோடு எழுந்து குளித்ததில்லை. கல்விச் சுற்றுலா. சீர்காழி, சிதம்பரம், கங்கை கொண்ட சோழபுரம். ஒரே நாளில் கூடப் போய்ச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் பயன் அதிகம் இருக்காது என்று தலைமைஆசிரியர் சொல்லியிருந்தார். ஒவ்வொரு இடத்திலும் பையன்கள் குறைந்தது மூன்று மணிநேரமாவது செலவழித்தால் தான் ஓரளவாவது விவரங்கள் அறிந்துகொள்ளமுடியும். தவிர இந்தச் சுற்றுலா என்பது மூன்று நாள் குதூகலத்துடன் முடிந்துவிடப்போவதில்லை. திரும்பி வந்ததும் எல்லாரும் கட்டுரை எழுதவேண்டும். சரித்திரம் தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடாகியிருக்கிறது. ஒரு மாறுதலுக்குப் பிரபல சரித்திரக் கதாசிரியர் ஒருவர் சிறப்பு விருந்தினராக வரும்வாரம் பள்ளிக்கு வருகைதரச் சம்மதித்திருக்கிறார்.
எல்லாமே சுவாரசியமான விஷயங்கள் தான். மெட்ரிகுலேஷன் பள்ளியில் இப்படியொரு சரித்திரச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வது கூட அநேகமாக இதுவே முதல்முறையாக இருக்கும் என்று நிறையப்பேர் பேசிக்கொண்டார்கள். சரித்திரமும் தமிழும் வாழ்க்கைக்கு உதவாது என்று தினசரி தியானமாக அறிவித்துக்கொண்டிருந்த பழைய ஆறாம் வகுப்பு ஆசிரியர் இப்போது பள்ளிக்கூடத்தில் இல்லை. வாழ்க்கைக்கு உதவும் பாடங்களை நடத்துவதற்காக அவர் வேறு பள்ளிக்குப் போய்விட்டிருந்தார்.
ஜாக்கிரதை ஜக்கு. ஜன்னலோரமே எப்பவும் உக்காராதே. பனிக்காத்து படாம பார்த்துக்கோ. சமத்தா வாத்தியாரோட கூடவே எப்பவும் இரு. ஆறு, குளம்னு போனா கரையில இருந்து பாரு. இறங்காதே. வேளைக்கு சமர்த்தா சாப்பிடு. பையிலே ஸ்நாக்ஸ் வெச்சிருக்கேன். கண்ட இடத்துலே எதுவும் வாங்கித்தின்னாதே. கோயில்களுக்குப் போகும்போது பிரதட்சிணம் பண்ண மறக்காதே.
அம்மாவும் அறிவுரைகளும். எதற்கும் இருக்கட்டும் என்று ஆசிரியரிடம் கொடுத்த பணத்தைத் தவிர அவனிடமும் ஐம்பது ரூபாய்களை அவள் கொடுத்திருந்தாள். காசைக் கரியாக்கத் தெரியாத குழந்தைகளிடம் எத்தனை கொடுத்துவைத்தாலும் தப்பில்லை.
இருளோடு கிளம்பி அப்பாவின் ஸ்கூட்டரில் மூன்றுபேருமாகப் பள்ளிக்குப் போனார்கள். அதே இருளில் அங்கே ஏராளமான குழந்தைகளும் பெற்றோரும் பளபளப்பான இரண்டு பஸ்களும் காத்திருக்க, டேவிட் மாஸ்டர் ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு தலை எண்ணிக்கொண்டிருந்ததைப் பார்த்தான் ஜக்கு.
உற்சாகமாகத்தான் இருந்தது. முதல் முதலாக அப்பாவும் அம்மாவும் உடன் வராமல் அவன் தனியாகக் கிளம்புகிற பயணம். எப்போதும் அதிகாரம் செய்ய ஆசிரியர்கள் உடன் வருவார்கள் என்றாலும் அந்தக் கூட்டத்தில் தன் சுதந்தரம் காப்பாற்றப்படும் என்பதாகத் தான் அவன் நம்பினான். தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமும் அழைத்துப்போய், கொஞ்சம் பார்த்துக்கோங்க சார் என்று சொன்னதை மட்டும் அப்பா தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் பாதகமில்லை. எல்லா அப்பாக்களுமே அப்படித்தான் இருக்கிறார்கள். எல்லாக்குழந்தைகளையும் ஒன்றேபோலத்தான் ஆசிரியர்களும் பார்த்துக்கொள்ளப்போகிறார்கள். அங்கே நிற்காதே. இங்கே நடக்காதே. எட்டிப்பார்க்காதே. வரிசையில் வா.
ஜக்கு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் மாலுவும் குமாரும் ஜன்னலுக்கு வெளியே வந்து நின்றுகொண்டார்கள். ஜாக்கிரதை, ஜாக்கிரதை என்று பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஜக்குவுக்கு அலுப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. எத்தனை அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கிறார் இந்த அப்பா! இவர் போய் எப்படி அந்த நிர்மலாவை லவ் பண்ணியிருக்கமுடியும்? ஒரு நிர்மலாவை லவ் பண்ணியவரால் எப்படித் தன்னிடமும் அம்மாவிடமும் கூட மாறாத அன்புடன் எப்போதும் நடந்துகொள்ளமுடிகிறது? ஒருவேளை அந்த டைரியில் இருந்த விஷயங்கள் எல்லாமே ஏதாவது கதையில் இடம்பெறுகிற சில பகுதிகளோ? அல்லது எங்கேயாவது மேட்டருக்குப் போன இடத்தில் கிடைத்த கதையைத்தான் அப்பா எழுதிவைத்திருக்கிறாரோ?
"போடா மக்கு" என்று மெல்லிய குரலில் சீறியது விக்கி.
"வந்துட்டியா நீ?"
ராத்திரியே வந்து இந்த சீட்டுக்கு அடியிலே உக்காந்துண்டுட்டேன். குளிருக்கு ஜோரா, இதமா இருக்கு. பின்பக்கத்து ஜன்னல் கொஞ்சம் ஓட்டை போல இருக்கு. காத்து சுரீர்னு வருது" என்றது அது.
டிரைவர் ஏறி உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ததும் ஜக்கு ஜன்னலுக்கு வெளியே அம்மாவைப் பார்த்துக் கையாட்டினான். மெதுவாக நகரத்தொடங்கிய வண்டியின் கூடவே பத்தடி ஓடிவந்து, அவன் கையை விடாமல் பற்றிக்கொண்டு 'ஜாக்கிரதைடா செல்லம்' என்ற அப்பாவை நினைத்தால் ஏனோ அவனுக்கு குப்பென்று அழுகை வந்தது. பேசாமல் வண்டியைவிட்டு இறங்கி வீட்டுக்கே போய்விடலாமா என்று கூடத் தோன்றியது. இப்படித் தனியாக இதுவரை அவன் எங்குமே போனதில்லை. அப்பாமேல் கோபம் கோபமாக வந்தாலும் அவர் பக்கத்தில் இருந்தபடிதான் தன்னால் கோபப்படக்கூட முடியும் என்று அவன் நினைத்தான்.
பேருந்தினுள் உற்சாகம் கரைபுரண்டுகொண்டிருந்தது. இரண்டு பேருந்துகள். ஒன்றை ஒன்று முந்துகிற போட்டி. ஓ ஓ என்று புறப்படுகிற குதூகலக் குரல்கள். ஒரு மாறுதலுக்குக் கையில் ஸ்கேல் வைத்திராத வாத்தியார்களும் டீச்சர்களும். சந்திரா டீச்சர் வயலட் புடைவை கட்டியிருந்ததை ஜக்கு பார்த்தான். ஏன் பெண்களுக்கு வயலட் என்றால் ரொம்பப் பிடிக்கிறது? தன் பார்வையில் படுகிற பெரும்பாலான பெண்கள் வயலட் புடைவை தான் அணிந்துகொண்டிருப்பதாக அப்போது அவனுக்குத் தோன்றியது. மேட்டுத்தெரு நிர்மலாவும் வயலட் புடைவை அணிகிறவள் தான். நல்லவேளை. அம்மாவிடம் தற்செயலாக வயலட் புடைவை ஏதுமில்லை. வீட்டில் அவளும் வயலட் புடைவை அணிந்து நடமாடினால் தன்னால் சுமுகமாகப் பேசக்கூட முடியுமா என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
"ஜகன், நீ ஒரு பாட்டுப்பாடறியா?" சந்திரா டீச்சர் அவனைப்பார்த்துக் கேட்டாள்.
ஜக்கு பாடுவான். மிக மெல்லிய குரலில் அழகாகவும் ரசிக்கும்விதத்திலும் சில பக்திப்பாடல்களை அவனால் பாடமுடியும் என்பது டீச்சருக்குத் தெரியும். அதனால் தான் பயணத்தின் குதூகலத்தை அதிகரிக்க அவனைப் பாடச்சொன்னாள்.
ஆனால் இந்தப் பயணத்தில் யாருடனும் பேசாமல், முற்றிலும் தனித்தே இருந்து நிறைய யோசித்துத் தீர்க்கவேண்டும் என்று அவன் முடிவு செய்திருந்தபடியால் டீச்சரின் கோரிக்கை அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. பாட்டு என்று ஆரம்பித்தால் ஒருபோதும் ஒன்றுடன் நின்றுவிடுவதில்லை.
"அப்புறம் பாடறேனே டீச்சர்?" என்றான் ஜக்கு.
"ஏன்?"
சட்டென்று தூக்கமா வருது டீச்சர் என்று தைரியமாக ஒரு பொய்யைச் சொன்னான்.
"காலங்கார்த்தால ஃப்ரெஷ்ஷா இருக்கவேண்டாமா?" என்றார் டேவிட் மாஸ்டர். கழுத்தில் சுற்றிய மஃப்ளருக்குள் வாக்மன் ஒயர்கள் தெரிய, மாஸ்டர் முற்றிலும் மாறுபட்ட ஜாலி மூடில் இருப்பதாகப் பையன்களுக்குத் தோன்றியது. சற்று வளர்ந்த, பெரிய க்ளாஸ் பையன்கள் அவரிடம் மிமிக்ரி செய்யும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள். வேதியல் வகுப்பில் எத்தனை காலமாக அவர் மிமிக்ரி செய்து காட்டிக்கொண்டிருக்கிறாரோ? பெரிய வகுப்புப் பையன்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகள்.
"செஞ்சுடுவோமா? முதல்ல யார் குரல் வேணும்?" கண்ணடித்துக் கேட்டார் டேவிட் மாஸ்டர்.
"ஹெட்மாஸ்டர் சார்..."
சடாரென்று சீறிவந்த வெடிச்சிரிப்புக் குரலுக்கு உடனே எதிர்வினையாக "உதைபடுவே படவா? உங்கப்பாவை வந்து என்னைப் பாக்கச்சொல்லு" என்று ஹெட்மாஸ்டர் குரலிலேயே பதில் சொன்ன டேவிட் மாஸ்டரின் சாமர்த்தியத்துக்கு டீச்சர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
]
"கொஞ்சம் மெதுவா சார். ஹெட்மாஸ்டர் பக்கத்து பஸ்லேதான் வரார்" என்றார் சந்திரா டீச்சர்.
"வரட்டு..வரட்டு..ம். எல்லாம் அப்பன் முருகப்பெருமான் சித்தம்..." பேருந்தில் சட்டென்று வாரியார் ஏறிக்கொண்டார்.
ஹோஹோவென்று பையன்கள் ஆரவாரம் செய்தார்கள். உற்சாகமாகப் பழகக்கூடிய ஆசிரியர்கள் கிடைப்பது ஒரு வரம். ஜக்குவுக்கு சந்திரா டீச்சரை எப்போதும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் அன்று அவள் வீட்டுக்கு வந்து புகார் செய்ததிலிருந்து மனத்துக்குள் அவள்பேச்சு காய் விட்டிருந்தான். படிக்கிற பையன் உம்மென்று இருப்பது தவறு. என்ன பிரச்னை என்று கவனியுங்கள்.
அன்று தொடங்கி வீட்டில் அப்பாவும், தாத்தாவும் அம்மாவும் மாற்றி மாற்றி அவனைக் குடைந்துகொண்டே தான் இருந்தார்கள். மிரட்டல் இல்லை. அன்பாக, அரவணைப்பாக, தலையைக் கோதிவிட்டபடிக்கு நடக்கிற மாறுபட்ட விசாரணை. என்னடா செல்லம்? ஏன் என்னவோ மாதிரி இருக்கே? உடம்புக்கு என்னமாச்சும் பண்றதா? டீச்சர் திட்டினாளா? பதிவு செய்யப்பட்ட கேள்விகள். ஒண்ணுமில்லேப்பா. ஒண்ணுமில்லேப்பா. ஒண்ணுமில்லேப்பா. ஒரே ஒரு பதில்.
அவன் தனக்குள் மிகவும் களைப்படைந்துவிட்டது போல உணர்ந்தான். வேண்டாத ஒரு பிரச்னையை மனத்துக்குள் ஏற்றிக்கொண்டு தன்னைத்தானே துளித்துளியாகத் தின்றுகொண்டிருப்பதுமாதிரி சொற்களற்று உணர்ந்தான். இந்த விஷயத்தை எப்படி மறப்பது அல்லது தீர்ப்பது? இரண்டில் ஏதாவது ஒன்று நடக்காவிட்டால் அடுத்து வரும் தேர்வுகளில் தன் மதிப்பெண்கள் அவசியம் குறைந்தே போகும் என்று அவனுக்குத் தோன்றியது.
கொஞ்ச நாளாகப் படிப்பு கொஞ்சம் கசக்கத் தொடங்கியிருந்தது. இயல்பான புத்திசாலித்தனத்தால் வகுப்பறையில் ஆசிரியர்களின் கேள்விகளைச் சமாளித்துவிட முடிகிறதே தவிர, முன்னளவு ஆர்வம் செலுத்தமுடியவில்லை என்பது அவனுக்கே தெரிந்திருந்தது. அடிக்கடி படுத்துத் தூங்கலாம் போல் இருக்கிறது. தோட்ட வேலைகளில் முற்றிலும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. வெங்கடாஜலபதியிடம் நெருங்க முடிவதில்லை. தாத்தாவின் அற்புதக்கதைகள் இப்போதெல்லாம் ரசிப்பதில்லை. டிவி பார்க்கப் பிடிக்கவில்லை. விளையாட்டு சுத்தமாக நின்றுவிட்டது. குட்டி கூட போரடிக்கிறாள். எப்போதும் ஒரே ஞாபகம் தான். அப்பா. அப்பா என்றால் டைரி. டைரி என்றால் வயலட் புடைவை. வயலட் புடைவை என்றால் நிர்மலா.
அதைப் படித்திருக்கவேண்டாம். அடுத்தவர் டைரியைப் படிப்பது தவறு என்று இதனால் தான் எல்லாருமே சொல்கிறார்களோ என்னவோ. அ, நல்ல கதை. ஒருத்தர் தப்பு செய்துவிட்டு டைரியில் எழுதிவைப்பாராம். அது தவறில்லையாம். ஆனால் எடுத்துப் படித்தால் அதுதவறு! என்ன நியாயம் இது?
இரண்டுமணிநேரம் பாட்டும் கூத்துமாக பஸ் நிற்காமல் ஓடி, விழுப்புரம் தாண்டியதும் ஓரிடத்தில் காலைச் சிற்றுண்டிக்காக நின்றது.
"பேகெல்லாம் பஸ்லேயே இருக்கட்டும். எல்லாரும் வரிசைல இறங்குங்க..." சந்திரா டீச்சர் பேருந்தின் கதவருகே நின்றுகொண்டு பையன்களை வரிசைப்படுத்த ஆரம்பித்தாள்.
அத்தியாயம் இருபது
ஓட்டல் தமிழ்நாடு. உயர்தர சைவ உணவகம் உங்களை வரவேற்கிறது. பொங்கலும் வடையும். இட்லியும் சட்னியும். முன்னதாகச் செய்துவைத்திருந்த ஏற்பாட்டில் உணவு மேசைகள் களைகட்டின.
ஜக்குவுக்கு மிகவும் பசித்தது. ஆனால் அந்தப் பொங்கலும் இட்லியும் அவன் அம்மா செய்வது போலில்லை. வேறு ருசி. வேறு மணம். பேருக்குச் சாப்பிட்டுவிட்டு காப்பியை வாங்கிக் குடித்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டான். எல்லாரும் வந்து சேருவதற்கு முன்னதாக பஸ்ஸில் ஏறி, தன்னிடத்தில் உட்கார்ந்துகொண்டான்.
வண்டி புறப்படும்போது சந்திரா டீச்சர் முன்னேறி வந்து அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அங்கே உட்காரவந்த ஜக்குவின் நண்பனைத் தன் இடத்துக்குப் போகச் சொல்லிவிட்டு, "உன்கிட்டே பேசணும்னு தான் இங்கே வந்து உட்கார்ந்தேன்." என்று சொன்னாள்.
அவனுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. குனிந்து சீட்டுக்குக் கீழே பார்த்தான். விக்கி மிகவும் ஜாக்கிரதையாகப் பதுங்கி ஒதுங்கி அமர்ந்துகொண்டிருந்தது. அது தூங்கிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
20
சந்திரா டீச்சரை சாதாரணமாக ஜக்குவுக்கு மிகவும் பிடிக்கும். வகுப்பில் ஒருபோதும் அவர் பிள்ளைகளை மிரட்டுவது கிடையாது. அதிகபட்ச தண்டனையாக கடைசி பெஞ்சில் போய் உட்காரச் சொல்லுவது தவிர வன்முறை விருப்பம் இல்லாதவர் அவர். தன்மீது எத்தனை அக்கறை இருந்தால் வீட்டுக்கு வந்து 'பையன் கொஞ்சநாளாக என்னவோ மாதிரி இருக்கிறான்' என்று கவனிக்கச் சொல்லுவார்? அது ஆபத்துதான். அநாவசியமான கேள்விகள் வீட்டில் வந்துவிட்டன. என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று எல்லாரும் பிச்சுப் பிராண்டிவிட்டார்கள்தான். அப்போது டீச்சர்மீது கோபம் வந்ததும் உண்மையே.
ஆனால் ஒரு புத்திசாலிப்பையனின் இயல்பான கோணத்தில் நினைத்துப் பார்த்தால் ஜக்குவுக்கு டீச்சர் கம்ப்ளைண்ட் பண்ணியதில் எந்தத் தவறும் இல்லையே என்றுதான் தோன்றியது. ஆமாம். நான் கொஞ்ச நாளாக சரியாகத்தான் இல்லை. எனக்கு என்னவோதான் ஆகிவிட்டது. அப்பா துளி அன்பு குறையாமல்தான் நினைவு தெரிந்தநாளாக நடந்து கொள்கிறார். ஆனாலும் ஏனோ அவரைப் பிடிக்காமல் போய்விட்டது. காரணமே புரியாமல் அடிக்கடி அம்மாவை நினைத்து பயமாக இருக்கிறது. என்றைக்காவது ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் அப்பா தன்னையும் அம்மாவையும் தாத்தா பாட்டியையும் விட்டுவிட்டு அந்த நிர்மலாவுடன் எங்கேயாவது ஓடிப்போய்விடுவார் என்று பல ராத்திரிகளில் கனவுச் சாயலுடன் சிந்தனையில் யாரோ வந்து ஒலிபரப்பிவிட்டுப் போகிறார்கள்.
அவள் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கிறாள் என்பது தனக்கே தெரியும்போது அப்பாவுக்குத் தெரியாமல் இருக்காது. அமெரிக்காவில் இருந்தால் என்ன? போன் பண்ணிப் பேசாமலா இருப்பார்கள்? அப்பா அடிக்கடி ப்ரவுசிங் செண்டருக்கு இப்போதெல்லாம் போய்விட்டு வருகிறார். கேட்டால் ஈமெயில் செக் பண்ணுவதாகச் சொல்கிறார். அப்படி யார் அப்பாவுக்குத் தொடர்ந்து ஈமெயில் அனுப்புவதற்கு இருக்கிறார்கள்? அது ஏன் அந்த அமெரிக்கா போன நிர்மலாவாக இருக்கக் கூடாது?
கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்.
இந்த அம்மாவுக்கு எப்படி இந்த விஷயம் இன்னும் தெரியாமலே இருக்கிறது? எத்தனை மக்காக இருக்கிறாள் அவள்? இத்தனை வருஷத்தில் அந்த டைரியை எடுத்துப் படிக்கவே தோன்றியிருக்காதா அவளூக்கு?
அவன் அந்த டைரியைக் கண்டெடுத்த தினத்துக்கு அப்புறம் பல சமயம் வேண்டுமென்றே அதை அம்மா கண்ணில் படும்படி சமையல் அறை அலமாரிகளில் கொண்டு வைத்துவிட்டுக் காத்திருந்திருக்கிறான்.
"இதை யார் இங்கே கொண்டுவந்து வெச்சது? ஜக்கூ... இதைக்கொண்டு அப்பா டேபிள்ள வை" என்று சொல்லிவிடுவாள். அவனும் சமர்த்தாக அதை எடுத்துக்கொண்டு போய் அப்பாவின் கண்ணில் படமுடியாத தனது பிரத்தியேக ரகசிய இடங்களில் சொருகிவிடுவான். மக்கு அம்மா. நாலைந்து முறை அவன் அதை அவள் கண்ணுக்குத் தென்படுகிற மாதிரி வைத்தும் ஒரு சூட்சுமம் வேண்டாமோ? என்னத்துக்கு இது அடிக்கடி இங்கே வருகிறது என்று தோன்றவேண்டாமோ? என்னைத்தவிர யார் கொண்டு வந்து வைப்பார்கள்? 'ஏண்டா ஜக்கு இதை இங்கே கொண்டு வரே?' என்று ஒரு வார்த்தை கேட்கலாம் என்று ஏன் அவளுக்குத் தோன்றவில்லை?
கேட்டுவிட்டால் அடுத்தக்கணம் பிரச்னை தீர்ந்துவிடும். நீயே படிச்சுப் பார் என்று சொல்லிவிடலாம். பிறகு புரட்சிக்குப் பின் எப்படியும் ஒரு தீர்வு கிடைக்கும். ஓயாமல் தன் மண்டையைக் குடைந்துகொண்டிருக்கும் ஒரு விஷ வண்டை எடுத்து அம்மாவின் மண்டைக்குள் நுழைத்துவிடுகிற தீர்வு.
இப்படித் தோன்றும்போதெல்லாம் அவனுக்கு இன்னொன்றும்கூடத் தோன்றும். எத்தனை குரூரமாகச் சிந்திக்கிறோம் தாம்? தனக்கே இத்தனை துயரம் தரும் விஷயம் அம்மாவை உயிருடன் விட்டுவைக்குமா? கொல்லையில் ஒரு பெரிய கிணறு இருக்கிறது. வெகு ஆழத்தில் எங்கோ நீர் தென்படும் பூதக்கிணறு. மோட்டார் போட்டு இறைத்து இறைத்து அடியாழத்துக்குப் போய்விட்டது நீர். ஐம்பதடியோ என்னவோ ஆழம். விழுந்தால் உயிர் போகிறதோ இல்லையோ, அத்தனை எலும்புகளும் நொறுங்கிவிடும்.
ஐயோ.
இந்தச் சிந்தனை வந்ததும் அவன் டைரியை எடுத்துத் தன் புத்தக அலமாரியின் பின்னால் போட்டு மேலே ஹிந்து பேப்பர் சிலவற்றைக் கசக்கி மூடிவிடுவான்.
எதையும் ஒளித்து ஒளித்தே வைக்கவிரும்புகிறது மனம். வெளிப்படுத்திவிடக்கூடிய விஷயம் இல்லை. அம்மா என்கிற மிகப்பெரிய தடுப்புச் சக்தி இதில் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் தான் இத்தனை தயங்குகிறோமோ என்று அவனுக்குத் தோன்றியது.
ஆனால் இந்தச் சந்திரா டீச்சருக்கு என்ன வந்தது? தன் மனத்தை ஒரு மந்திரச் சாவி கொண்டு திறந்துவிடும் உத்தேசத்துடந்தான் இப்படி பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்துவிட்டாளா? கல்விச் சுற்றுலா. இன்பச் சுற்றுலா. நிச்சயம் இன்பம் கூடிவரப்போவதில்லை. மாறாக டீச்சரிடம் என்னத்தையாவது உளறிக்கொட்டி பிரச்னையைச் சற்றும் விரும்பாத புதுப்பரிமாணத்துக்குக் கொண்டுபோகப்போகிறேனா?
அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது.
ஆனால் டீச்சர் எப்போதும் போலவே அன்புடன் இருந்தாள். எப்போதும் போலவே புன்னகையுடன் இருந்தாள். எப்போதும் காட்டும் அதே கனிவு. அக்கறை. அவள் ஒரு பிறவி நல்ல டீச்சர் என்று எப்போதும் ஜக்குவுக்குத் தோன்றும்.
"ஜக்கு, நீ ஏன் எப்பவும் இப்பல்லாம் என்னவோபோல இருக்கே? ஒரு மாசமாவே சரியில்லை நீ? என்ன ஆச்சு? அன்னிக்கு உங்க வீட்டுக்கே வந்து சொல்லிட்டுப் போனேனே. அப்புறமும் நீ மாறலை. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?"
பக்கத்தில் வேறு யாருக்கும் கேட்காத கீழ்க்குரலில், கனிவு தோய்த்துத்தான் கேட்டாள்.
"ஒண்ணும் இல்லே மிஸ்" என்றான் ஜக்கு.
"பார். நீ ப்ரில்லியண்ட் பாய். எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க் வரவன். நீ எப்பவும் எப்படி இருப்பேன்னு எனக்குத் தெரியாதா? சொல்லு? நான் உன்னை கோச்சுக்க மாட்டேன். திட்டமாட்டேன். உங்க வீட்டுல கூட இனிமே எதுவும் வந்து சொல்லமாட்டேன். என் கிட்டே மட்டும் சொல்லு. என்ன உன் ப்ராப்ளம்? உடம்புக்கு எதும் சரியில்லையா? வீட்டுல அப்பா, அம்மா சண்டை போடறாங்களா? உன்னை கவனிக்க மாட்டேங்கறாங்களா?"
"அதெல்லாம் இல்லை மிஸ்"
"பின்னே?"
அவனுக்கு அழுகை வந்துவிடும்போலிருந்தது. இதென்ன இப்படியொரு தர்மசங்கடம்? அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டீச்சரிடமிருந்து தன்னால் தப்பிக்க முடியாதோ என்றும் அச்சமாக இருந்தது. எதையாவது காரணம் என்று சொல்லாவிட்டால் அவள் விடமாட்டாள் போலிருந்தது. சில விநாடிகள் அவசர அவசரமாக மனத்துக்குள் யோசித்துப் பார்த்துக்கொண்டான். எதற்கும் இருக்கட்டும் என்று பிள்ளையாருக்கு மூன்று பிரதட்சிணம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டான். பிறகு, "நீங்க இதை எங்கப்பா கிட்டே கேக்கமாட்டீங்கன்னா சொல்றேன் டீச்சர்" என்று சொன்னான்.
"சேச்சே. நான் எதுக்கு கேக்கணும். எனக்கு நீ தான் முக்கியமே தவிர உங்கப்பா இல்லே. சொல்லு. தைரியமா சொல்லு. நான் அவர்கிட்டே பேசவே மாட்டேன். ஆனா எனக்கு உன் ப்ராப்ளம் தெரிஞ்சாகணும். நான் எதாவது ஹெல்ப் பண்ணமுடியுமான்னு பாக்கறேன்"
மீண்டுமொருமுறை கடவுளை வேண்டிக்கொண்டு, துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவன் சொன்னான்: "தெரியலே மிஸ். கொஞ்சநாளா என்னவோ பயம்மா இருக்கு. என்னவோ கெட்டது நடக்கும்னு அடிக்கடி தோணுது. எனக்கா, எங்கப்பாவுக்கா, அம்மாவுக்கான்னு தெரியலே. ரொம்ப பயமா இருக்கு. படிக்கவே முடியலே... ராத்திரி தூக்கமே வரமாட்டேங்கறது..."
"சீச்சீ! அப்படியெல்லாம் ஏன் நினைக்கறே? நீ எவ்ளோ ப்ரில்லியண்ட் பாய்! உனக்குப் போய் கெட்டது நடக்கறதாவது? நோ சான்ஸ்! என்னதிது? ம்? எதாவது கெட்ட கனவு கண்டியா எப்பவாவது? யாரானா உன்னை பயமுறுத்தினாங்களா?"
"அதெல்லாம் இல்லே மிஸ்"
"வீட்டுல உன்னை யாராவது திட்டினாங்களா எப்பவாவது?"
"அதெல்லாம் இல்லே மிஸ்'
"அப்பா அடிச்சாரா?"
"இல்லே மிஸ்"
"காரணமே இல்லாம ஏன் அப்படி உனக்குத் தோணணும்? எதாவது ரீசன் இருக்கும் இல்லே?"
சற்று நேரம் பேசாமல் யோசித்தபடி இருந்த சந்திரா டீச்சர் பிறகு மீண்டும் திடீரென்று "உங்க தாத்தாவுக்கு என்ன வயசு?" என்று கேட்டாள்.
"எழுபத்தஞ்சு ஆறது மிஸ்"
"அவர் அடிக்கடி நான் செத்துப்போயிடுவேன் அப்படி இப்படின்னு எதாவது சொல்லுவாரா வீட்டுல?
"சேச்சே. மாட்டார் மிஸ்"
"பாட்டி?"
"எங்க பாட்டி சுலோகம் சொல்ல மட்டும்தான் வாயே திறப்பா"
"அப்புறமென்ன? பார், உங்க பாட்டி எவ்ளோ சுலோகம்லாம் சொல்றாங்க? உங்கம்மாவும் சொல்லுவாங்கதானே? அப்புறம் எப்படி கெட்டதெல்லாம் நடக்கும்? தினசரி சுலோகம் சொல்லறவங்க வீட்டுல ஒரு கெடுதலும் வராது. தெரியுமா உனக்கு?"
"அப்படியா மிஸ்?"
"ஆமா. அதுவுமில்லாம உன்மேல உன் பேரண்ட்ஸ் எவ்ளோ அன்பா, அக்கறையா இருக்காங்க? இன்னிக்கு அத்தனை காலைல எவ்ளோ ஆசையா உன்னைக் கொண்டுவந்து பஸ் ஏத்தி விட்டாங்க? நீயே சொல்லு. கேட்டதெல்லாம் வாங்கித்தராங்க இல்லே? அடிக்கறதில்லே. திட்றதில்லே. அவங்களூம் சண்டை போட்டுக்கறதில்லைன்னு நீயே சொல்றே. அன்பான குடும்பம். பாதுகாப்பா வயசான தாத்தா, பாட்டியெல்லாம் இருக்காங்க. உனக்கு ஏன் இந்தத் தேவையில்லாத பயமெல்லாம்? அதுவும் படிக்கிற பையன் நீ! எதாவது கண்ட சினிமா, சீரியல் பார்த்தியா?"
அந்தப் பேச்சை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தே தீரவேண்டும் என்று நினைத்தவன் "சீரியல்ஸ் சிலது பார்ப்பேன் மிஸ். மந்திரவாதி சீரியல்ஸ்"
"அதான்!" என்று டீச்சருக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டதில் அவனுக்குத் தாற்காலிகமாக ஒரு நிம்மதி கிடைத்தாற்போலிருந்தது.
"அதையெல்லாம் பாக்காதே. படிக்கிற வயசுல எதுக்கு சீரியல்ஸ்? ம்? கார்ட்டூன் நெட்வொர்க் பார். அதுபோதும். ஜாலியா இருக்கும்."
"சரி மிஸ். இனிமே சீரியல்ஸ் பார்க்கமாட்டேன். ப்ராமிஸ்"
"தட்ஸ் தி ஸ்பிரிட்! உற்சாகமா இரு ஜக்கு. ஜாலியா இரு. எப்பவும் இப்படி நீ உம்முனு இருந்தா எனக்கே கஷ்டமா இருக்கே, உங்க பேரண்ட்ஸுக்கு எப்படி இருக்கும்? ம்?"
"சாரி மிஸ். இனிமே சரியா இருக்கேன்" என்று அவன் சொன்னான்.
தலையைக் கோதிக்கொடுத்துவிட்டு டீச்சர் எழுந்து தன் பழைய இருக்கைக்குப் போனதும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கூடவே மனத்துக்குள் "ஜக்கு நீ ஏன் இவ்ளோ கெட்டுப் போயிட்டே? மிஸ்கிட்டே போய் எவ்ளோ பொய் சொல்றே?" என்றும் ஒரு குரல் கேட்டது.
நான் ஒரு பொய்யும் சொல்லலை. ப்ராமிஸ்தானே எல்லாம்? வீட்டுல ஏதோ ஒரு கஷ்டம் வரப்போகுதுன்னு எனக்குத் தோணறது நிஜம் தானே என்றும் அவனே சொல்லிக்கொண்டான்.
ஒரு பத்து நிமிஷம் ஆகியிருக்கும். நாற்காலிக்கு அடியிலிருந்து விக்கி அவன் காலை நக்கிக் கூப்பிட்டது.
"என்னது?"
"கஷ்டம் வரப்போகுதா? யாராலே?"
"ஏன் கேக்கறே?"
"இல்லே. உனக்குத் தெரியுமோன்னு கேட்டேன்."
"யாராலே வரும்? வந்தா எங்கப்பாவாலேதான்"
"அதான் இல்லைங்கறேன்"
"பின்னே?"
"உன்னாலேதான்"
"என்னாலா?"
"ஆமா. பயந்துடாதே. உனக்கு எச்சரிக்கை குடுக்கறது என் கடமைன்னு லார்ட் ஆஞ்சநேயர் இப்பத்தான் எனக்கு சொன்னார். அதான் சொல்றேன்."
"என்னால என்ன கஷ்டம்?"
"ம்? பின்னே? இந்த டூர்ல நீ பாதிலேயே நைஸா நழுவி, காணாம போகப்போறியே. அது உங்க வீட்டுக்குக் கஷ்டமில்லியா?"
21
அந்தப் படிகள் ஓரடி அகலம் கூட இல்லை. இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில் ஒரே படியில் வைத்தால் இடித்துக்கொள்ளும் என்பது போலிருந்தது. ஆனால் எத்தனை நுணுக்கமாக, வளைத்து வளைத்து உயரே, உயரே கட்டிக்கொண்டே போயிருக்கிறார்கள்! பாதுகாப்புக்குப் பக்கவாட்டில் மரத்தாலான கைப்பிடி இருந்தாலும் அந்தக் குறுகலான பொந்தின் வழியே இரண்டாவது, மூன்றாவது, நாலாவது மாடிகளை ஏறிக்கடக்கும்போது ஜக்குவுக்கு பயமாகத்தான் இருந்தது.
படிகள் தான் குறுகலே தவிர ஒவ்வொரு தளமும் ஹாவென்று விசாலமாகவும் வெளிச்சம் கொட்டிக்கொண்டு போகிறபடியாகவும் இருந்தது. எத்தனை ஜன்னல்கள்! சிமெண்டுத் தரையே மொசைக் தரை மாதிரி வழுவழுவென்றிருந்தது. உத்தரங்களில் எழுதப்பட்டிருந்த ஓவியங்கள் பல சிதிலமடைந்திருந்தாலும் ஒரு பார்வையில் நர்த்தன மண்டபமும் ராஜசபையும் இன்ன பிறவும் தென்படாமல் போவதில்லை. இது ராஜா ஓய்வெடுக்கிற இடம், இங்கே மந்திராலோசனைகள் நடக்கும், இங்கே ராணிகள் கொலுவிருப்பார்கள், அங்கே ஒரு காலத்தில் நீச்சல் குளம் இருந்தது, அதோ, அந்த மண்டபம்தான் கைதிகளை விசாரிக்கிற இடம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வந்தார் வழிகாட்டி.
"ஒரு ஊரைத் தலைநகரமா ஆக்கறதுன்னு முடிவு செஞ்சதும் மன்னர்கள் முதல்ல கோயிலைத்தான் கட்டுவாங்க. கோயிலைவிட ஒருபோதும் தன் மாளிகை உசரமா அமைஞ்சுடக்கூடாதுங்கறதுல கவனமா இருப்பாங்க. ஆனா இந்த ஊர் கோயிலைக் கட்டின ராஜாவேற. இந்த அரண்மனையைக் கட்டின ராஜா வேற"
ஆனால் ஜக்குவுக்கு தஞ்சையின் அந்தக் கோயிலைக்காட்டிலும் மாளிகை பெரிதாகத்தான் இருக்கும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. எத்தனை உயரம்! எத்தனை தளங்கள்! ஒவ்வொரு தளத்தின் ஜன்னல் வழியாகவும் வெளியே பார்க்கும்போது பயமும் பரவசமும் கூடிக்கொண்டே போகிறது. உப்பரிகையில் நின்று ஊரைப்பார்க்கவேண்டும் என்கிற ஆவல் கட்டுக்கடங்காமலாகியிருந்தது.
"பாக்கலாமே. இங்கேருந்து திருச்சி டால்மியாபுரம் டவர் தெரியும்!" என்றார் வழிகாட்டி.
பெரும்பாலான பையன்கள் அந்த மாளிகையின் இரண்டாம் தளத்திலேயே நின்றுவிட்டிருந்தார்கள். தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் அங்கே ஒரு பெரிய திமிங்கலத்தின் எலும்புக்கூடு இருக்கிறது. அப்பா, எத்தனை பெரிசு! ஒரு கப்பல் மாதிரி! பிரமிப்பில் பலரால் அங்கிருந்து நகரவே முடியவில்லை. கம்பிச் சட்டத்துக்கு அந்தப் பக்கம் இருந்த திமிங்கலத்தைத் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஜக்குவுக்குத் திமிங்கலம் பிடிக்கவில்லை. திமிங்கலத்தின் எலும்புக்கூட்டில் என்ன இருக்கிறது? ரத்தமும் சதையுமான திமிங்கிலத்தைத் தண்ணீரின் நடுவே பார்க்க முடிந்தால் ஒரு வேளை பரவசம் வரலாம். ஆனால் பார்க்கவும் அறியவும் கிடைக்கிற எல்லாமே எலும்புக்கூடுகள் மாதிரிதான் இருக்கின்றன. டைரியில் உருப்பெற்ற நிர்மலா மாதிரி.
அப்பாவிடம் கேட்பதன் மூலம் அல்ல; என்றைக்காவது ஒரு நாள் அவளை நேரில் பார்த்தால்தான் தன் கொதிப்புகள் அடங்குவதற்கு ஒரு வழி பிறக்குமோ என்று அவனுக்குத் தோன்றியது. ஒருதரம் பார்த்துவிட்டால் போதும். முகத்திலேயே தெரிந்துவிடும். இவளை அப்பா காதலித்திருப்பாரா? ஆமாம் அல்லது இல்லை. இரண்டில் ஒருபதில் அப்போது தோன்றிவிடும். அப்புறம் விசாரணைகள் தேவையிருக்காது. ஒரு முகம் சொல்லாததையா சொற்கள் சொல்லிவிடும்?
அப்படிப் பார்க்க நேர்ந்துவிட்டால் இன்னொன்றும் தெரிந்துவிடும். ஒருவேளை அப்பா அவளைக் காதலித்திருந்தாலும் இத்தனை வருஷங்களுக்குப் பிறகு அந்தத் தொடர்புக்கு உயிர் உண்டா, இல்லையா என்பதே அது. அப்பா பார்க்கவேண்டியது கூட இல்லை. தான் பார்த்தாலே போதும். அவள் முகத்திலேயே தெரியும். அப்பாவுக்கும் அவளுக்கும் இத்தனை காலம் கழித்து ஏதாவது தகவல் தொடர்பாவது நேருமா, சாத்தியமில்லையா என்பது.
தனக்கு ஏன் இப்படியெல்லாமும் தோன்றுகிறது என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் இந்த ஒரு விஷயத்தைத் தவிர வேறெதுவுமே தன்னால் சிந்திக்க முடியாதபடி இருப்பது தான் பெருங்கவலையாக இருந்தது. இன்பச் சுற்றுலா தன்னளவில் இன்பம் தருமா என்பது அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது.
"என்ன ஜக்கு, எப்படி இருக்கு டூர்?"
சந்திரா டீச்சர் தான். சோழர் வம்சம், மராட்டி வம்சம் கதைகளெல்லாம் சொல்லிவிட்டுச் சோர்வாக ஏறிவந்திருந்தார். இன்னும் ஒரு மாடி ஏறிவிட்டால் போதும். உப்பரிகைதான். வானம் நிச்சயம் வெகுபக்கத்தில்தான் அங்கே இருக்கவேண்டும்.
"நல்லா இருக்கு மிஸ்" என்றான் ஜக்கு.
"நல்லா கவனிச்சு எல்லாத்தையும் மைண்டுல ஏத்திக்கோ. எப்படியெல்லாம் அந்தக் காலத்துல பில்டிங்ஸ் டிசைன் பண்ணியிருக்காங்க பார்த்தியா?"
"ஆமாம் மிஸ். பயங்கர பெரிசா இருக்கு. எவ்ளோ உயரம்!"
"குட். பில்டிங்ஸை அப்சர்ப் பண்ணும்போது கூடவே அந்த பீரியடையும் நினைச்சுப் பார்த்துக்கணும். அல்லது சொல்றதைக் கேட்டு ஞாபகத்துல வெச்சுண்டே வரணும். இந்த மாதிரி இடங்களுக்கு வரும்போது அது ரொம்ப முக்கியம். நான் சொன்ன சோழாஸ் ஹிஸ்டரில எதாவது சந்தேகம் உண்டா உனக்கு?"
அவன் யோசித்தான். ஒரே ஒரு சந்தேகம் இருந்தது அவனுக்கு. இத்தனை பிரும்மாண்டமான தலைநகரமும் மாடமாளிகைகளும் இங்கே ஏற்கெனவே இருக்க, எதற்காக கொஞ்சம் பக்கத்தில் தள்ளிப்போய் இன்னொரு தலைநகரை ராஜேந்திரசோழா உருவாக்கவேண்டும்?
சந்திரா டீச்சர் அவன் தலையைக் கலைத்துவிட்டுச் சிரித்தார். "நல்ல கேள்விதான் ஜக்கு. ஆனா கரெக்ட் ஆன்ஸர் இதுக்கு ஹிஸ்டரில கிடையாது. நிறைய கண்ட்ரீஸை ஜெயிச்சுட்டு வந்த சந்தோஷத்துல இன்னொரு ஊரை தலைநகரமா உருவாக்கணும்னு தோணியிருக்கலாம். இப்போ நாமல்லாம் ஒரு வீடு கட்டினா நம்ம பேரை வாசல்ல பதிச்சு வெச்சுக்கணும்னு நினைக்கறதில்லையா? அதுமாதிரி அவ்ளோ விக்டரிஸ் பார்த்த ராஜாவுக்குத் தன் பேர் சொல்ல ஒரு தனி நகரம் வேணும்னு தோணியிருக்கலாம்..."
"சரி மிஸ்" என்று சொல்லிவிட்டானே தவிர அவனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தை ஒரு தலைநகரமாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எத்தனை சின்ன ஊர்! மேலும் இந்தக் கோயில் மாதிரியேதான் அந்தக் கோயிலும் இருக்கிறது. எதற்காக ஒரே மாதிரி இன்னொரு அடையாளத்தை உருவாக்கும் ஆசை?
சம்பந்தமில்லை என்று அடிக்கடி தோன்றினாலும் தஞ்சையில் அவன் பார்த்த கோயிலையும் மாளிகை மேட்டு சோழன் கோயிலையும் தன் அம்மாவும் அந்த நிர்மலாவுமாக மாற்றி மாற்றி நினைத்துக்கொண்டே இருந்தான். இதென்ன சம்பந்தமில்லாத யோசனை என்று அவனுக்கே வெறுப்பாகவும் இருந்தது. அதே சமயம் தஞ்சைப் பெரிய கோயிலைத் தன் அம்மாவாகத் தன்னால் எப்படி உருவகப்படுத்திக்கொள்ளமுடிகிறது என்றும் ஆச்சர்யமாக இருந்தது. அந்த பிரும்மாண்டம். அகண்டு விரிந்து கரம் நீட்டி அணைக்கக் காத்திருப்பது போன்ற பெரிய கதவுகள். அடுக்கடுக்கான சுற்றுச் சுவரின் பின்னால் விரிகிற பரந்த தளம்... அம்மாவின் மனசு மாதிரி. அப்புறம் உயர்ந்த கோயில். மிக உயர்ந்த லிங்கம். குளிர்ச்சியும் மலர்ச்சியுமான சந்நிதி அம்மாவின் மடி மாதிரியேதான் இருக்கிறதாக அவன் உணர்ந்தான். சுற்றுலா புறப்பட்ட நிமிஷத்திலிருந்தே அம்மா ஞாபகமாகவே அவனுக்கு இருந்தது. விட்டுவரும்போதுதான் அருகாமை மிகவும் வேண்டியிருக்கிறது. என்ன செய்வது? இதுவும் ஒரு அனுபவம்.
உப்பரிகைக்கு வந்துவிட்டிருந்தான். எதிர்பார்ப்பு வீணாகவேயில்லை. எத்தனை பிரும்மாண்டம்! பரந்தவெளி! உலகம் சிறுசிறு நாய்க்குடைகளால் செய்யப்பட்டதுபோல் குட்டியாக, கொத்துக்கொத்தாகத் தென்பட்டது. கண்ணுக்கு எட்டும் தூரமெல்லாம் பச்சைப்பசேலென்று இருந்தது.
"தஞ்சாவூரே பசுமையான பூமிதான்" என்றார் தொல்பொருள் துறை வழிகாட்டி. "இப்ப மழை இல்லை. காவிரில தண்ணி இல்லை. அதனால பச்சை கொஞ்சம் கம்மி"
இன்பச் சுற்றுலாவின் இரண்டாம் நாள் அது. எத்தனை முயற்சி செய்தாலும் தன் மனம் வேறெதிலும் ஈடுபட மறுப்பதை ஜக்கு மிகவும் உணர்ந்திருந்தான். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் மாதிரி தான் ஆகிவிட்டோமோ என்று அவனுக்கே அச்சமாக இருந்தது. எதைப்பார்த்தாலும் அதே ஞாபகம். எதைக்கேட்டாலும் அதே நினைவு. எதிலும் அதே சிந்தனை. தன்னால் ஒரு போதும் யாரிடமும் வாய்விட்டுக் கேட்கவோ, சொல்லவோ முடியாது என்றும் அவனுக்கு உறுதியாகத் தோன்றியது. எனில் இதற்கு ஒரு முடிவுதான் என்ன?
நிறையக் குரங்குகள் இருந்தன அங்கே. மாடத்துக்கு ஒன்றாக. கூரைக்குச் சிலவாக. ஊரின் ஜனத்தொகைக்குச் சமமாகக் குரங்குகள் இருக்கும்போலிருந்தது. ஆகவே விக்கிக்கு அந்த இடத்தில் தயக்கமின்றி உலவவும் குதிக்கவும் ஆடவும் புழங்கவும் பிரச்னையே இல்லாமல் போய்விட்டது. "அப்பாடி. மகாபலிபுரம் மாதிரியே இருக்கு இந்த ஊரும். ரொம்ப தேங்ஸ் ஜக்கு. இப்போத்தான் எனக்கும் ஜாலியா இருக்கு" என்றது அது.
"நீ நாசமாப்போ. நான் எவ்ளோ குழப்பத்துல கஷ்டப்பட்டுண்டிருக்கேன். உனக்கு ஜாலி ஒரு கேடா?"
"என்ன குழப்பம். சிம்பிள் வழி. கூட்டத்துக்கு நடுல உன்னால உருப்படியா எதுவும் யோசிக்கமுடியாது. டீச்சர், பசங்க, வாத்தியார்கள், இந்த டூரிஸ்ட் கைடுத் தாத்தாவேற. கிட்ட எப்படி நிக்கற? பீடி நாத்தம் எனக்கே சகிக்கலை. விட்டுட்டுத் தனியா எங்கியாவது போய் உக்காந்து யோசி. ஒரு முடிவோடதான் நீ ஊர் திரும்பறே"
அவனுக்கும் அது சரியாகத்தான் பட்டது. ஆனால் எப்படி தனியாகப் போய் உட்கார்ந்து யோசிப்பது? சரஸ்வதி மகால் நூலகத்தில் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் நூலகத்துக்குள்ளே போக அனுமதியில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
சிவாஜி மன்னரின் வம்சத்தில் வந்த மராட்டி மகாராஜா. அவரது சயன அறைக்குள் அவன் நுழைந்து சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒரு சிறு சந்து மாதிரி ஒரு இடம் தென்பட்டது. நிம்மதியாக உட்கார்ந்து கொஞ்ச நேரம் யோசிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவன் அங்கே போனபோது டேவிட் மாஸ்டரும் வந்துவிட்டார். கையில் சிகரெட்!
"இங்கே என்னடா பண்றே? போ, போய் எல்லாரோடயும் சுத்திப்பார். தனியா போகக்கூடாது எங்கேயும்!"
வேறு வழியில்லாமல் மனசேயின்றித் திரும்பிவிட்டான்.
"ஒண்ணு பண்ணு. இவங்க இங்கேருந்து கிளம்ப எப்படியும் இன்னும் ரெண்டு மணிநேரமாவது ஆகும். நீ பார்த்ததுபோதும். அந்த இன்னொரு வழியா கீழ இறங்கிப்போயிடு. கோட்டைக்கு வெளிவாசல் பின்பக்கம் வரும்போது ஒரு தூங்குமூஞ்சி மரம் பார்த்தியே அங்க போய் உக்காந்து யோசி. எப்படியும் அந்த வழியாத்தான் எல்லாரும் பஸ் ஏற வருவாங்க. அப்ப சேர்ந்துக்கலாம்" என்றது விக்கி.
அவனுக்கு யோசிக்கக் கூடத் தோன்றவில்லை. சடசடவென்று படிகளின் இருபுறமும் பிடித்துக்கொண்டு இறங்க ஆரம்பித்துவிட்டான். எதிர்ப்புறப் படிகளில் சக மாணவர்கள் ஏறிவருவதைப் பார்த்தான். விக்கி சொன்னது சரிதான். இவர்கள் எல்லாரும் முழுக்கச் சுற்றிவிட்டு இறங்க எப்படியும் நேரம் பிடிக்கும். அதற்குள் தனக்குத் தேவையான தனிமையைத் தானே உண்டாக்கிக்கொள்வதுதான் சரி.
அஞ்சு நிமிஷத்தில் அவன் கீழ்த்தளத்தை அடைந்துவிட்டான். அவன் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் அங்கே இல்லை. எல்லாருமே மேலே தான் போயிருந்தார்கள்.
விறுவிறுவென்று வெளியேறி கோட்டைச் சுவரை நெருங்கினான். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. டீச்சருக்குத் தெரிந்தால் நிச்சயம் சத்தம் போடுவார்கள். ஆனால் இறங்கிவிட்ட பிறகு யோசிப்பதும் வீண்தானே?
அவன் கோட்டையைவிட்டு வெளியேறி அந்த மரத்தடிக்கு வந்தான். நிறைய கல் உடைத்துப் போட்டிருந்தது. அப்பாடா என்று ஒரு பெரிய கல்லின்மீது உட்கார்ந்தான். தள்ளூவண்டிகளில் குளிர்பானங்கள். புத்தகங்கள். கேமரா. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள். சிவந்த கட்டடத்தின் வாயிலில் பச்சைப் புல் அலங்கரிப்பு.
பார்வை சுற்றுப்புறங்களின்மீது தாவித்தாவிப் படிந்து நகர்ந்துகொண்டிருந்த வேகத்திலேயே அவன் மனமும் தாவிக்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும் என்கிற பதற்றம் மிகுந்தபோதுதான் அந்த எண்ணம் தோன்றியது.
கொஞ்ச நாள் யார் கண்ணிலும் படாமல் எங்காவது போய்விட்டால்தான் என்ன? எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள். ஓடிப்போனதன் காரணத்தை அப்போது கேட்பார்கள். தானே சொல்கிறோமோ, தானாகத் தெரியவருமோ? எப்படியோ விஷயம் வெளியே வரும். விளைவும் தெரியும். இத்தனை நாளாகப் பட்டுக்கொண்டிருக்கும் மண்டைக்குடைச்சலுக்கும் ஒரு விடிவு அகப்படாமலா போகும்?
விளைவே கூட வேண்டாம். இந்தக்ஷணம் உலகில் தான் தனி என்று ஆகிவிட்டாலே மனம் லேசாகிவிடும் போலிருந்தது. குறைந்தபட்சம் பிரச்னையையாவது புதிதாக, வேறொன்றாக எடுத்துப் போட்டுக்கொண்டமாதிரி.
ஒரு தீர்மானத்துடன் தான் அவன் எழுந்தான்.
22
பதற்றப்படவேண்டாம் என்று தான் சந்திரா டீச்சர் போனில் சொன்னார். இடையிடையே போனை மாற்றி, மாற்றி வாங்கிப் பேசிய மற்ற ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் கூட அதையேதான் சொன்னார்கள். ஒரு கூட்டமாகத்தான் எல்லா குழந்தைகளூம் தஞ்சை அரண்மனையைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். மாளிகையின் மேன்மாடத்தில் ஜக்கு சந்திரா டீச்சருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறான். அவன் கீழே இறங்குவதை டீச்சர் கவனித்திருக்கிறாள். அதன்பின் எல்லோரும் பஸ்ஸில் ஏறும்போதுதான் அவன் அங்கே இல்லை என்பது தெரியவந்தது. குழந்தை தவறுதலாக வேறு சுற்றுலாப்பேருந்து எதிலாவது ஏறியிருக்கலாம். அல்லது களைப்பில் அரண்மனையிலேயே எங்காவது உறங்கியிருக்கலாம். காணாமல் போய் இரண்டு மூன்றுமணி நேரங்கள்தான் ஆகின்றன. எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள். போலீஸிலும் தகவல் சொல்லியாகிவிட்டது. தஞ்சை முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கடைவீதி, கோயில், அரண்மனை, பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன். எப்படியும் குழந்தை கிடைத்துவிடுவான். கமிஷனரே முன்னின்று தேடிக்கொண்டிருப்பது கூடுதல் அனுகூலம். பதற்றப்படவேண்டாம்.
குமாருக்கு, எல்லா ஆசிரியர்களுமே பதற்றத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது. மெதுவாக விஷயத்தை மாலுவிடம் சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டான்.
ஐயோ என்று முதலில் அவளும் பதறினாலும் 'எங்க போயிடப்போறான்? வேற பஸ்ல தவறி ஏறியிருந்தாலும் யாராவது கண்டுபிடிச்சி கொண்டு சேர்த்துடுவா இல்லே?' என்று தனக்கும் அவனுக்குமாக ஒரு சமாதானத்தைப் பொதுவில் முன்வைத்தாள்.
குமாரின் அப்பாவுக்குத்தான் கோபம் பீறிட்டுவிட்டது. "இர்ரெஸ்பான்ஸிபிள் டீச்சர்ஸ். பசங்களை கவனிக்கறதைவிட வேறென்ன வேலை அவாளுக்கு? காணோம்னு சொல்றதுக்கா இங்கேருந்து கூட்டிண்டு போறா? சும்மா விடமாட்டேன் நான். கேஸ் போட்டு நாரடிச்சுடுவேன்"
"அப்பா கொஞ்சம் சும்மா இருக்கிங்களா?"
குமார் தன் அலுவலகத்துக்குப் போன் செய்து நியூஸ் எடிட்டரிடம் விஷயத்தைச் சொன்னான். தஞ்சாவூருக்கு சுற்றுலா போன பள்ளிக்குழந்தையைக் காணோம். போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அந்த ஏரியா ரிப்போர்ட்டரிடம் சொல்லி, தேடுதலைக் கொஞ்சம் தீவிரப்படுத்தச் சொல்லவேண்டும்.
தான் உடனே தஞ்சாவூர் கிளம்பினாலும் போய்ச்சேர மறுநாள் காலை மணி பத்தாகிவிடக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. அதற்குள் குழந்தை அவசியம் கிடைத்துவிடுவான். மேலும் குருட்டுத்தனமாகக் கிளம்பி ஏழெட்டு மணி நேரத்தைப் பேருந்தில் தண்டமாகச் செலவழிப்பதைவிட இங்கிருந்தே ஏதாவது செய்யமுடிகிறதா என்று பார்க்கலாம்.
அதுதான் சரி என்று மாலுவும் சொன்னாள். "பயமாத்தான் இருக்கு. ஆனா புத்தி கலங்கலே. எப்படியும் கிடைச்சுடுவான்னு தெரியும். நீங்க பதறாம இருங்கோ" என்று அவனுக்கு அவள் ஆறுதல் சொன்னாள். பூஜை அலமாரியில் விளக்கேற்றி வைத்துவிட்டுத் தெரிந்த சுலோகங்களை மனத்துக்குள் சொல்ல ஆரம்பித்தாள். குமாரின் அம்மா, ரகசியமாக ஒரு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து சுவாமி படத்துக்குக் கீழே வைத்துவிட்டு, குழந்தை கிடைத்ததும் நேரே திருப்பதிக்கு அழைத்துவந்து மொட்டை போடுகிறேன் என்று வேண்டிக்கொண்டாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக வீட்டில் யாருக்குமே என்ன செய்கிறோம் என்பதே புரியாதிருந்தது. தோன்றிய யோசனைகளையெல்லாம் தமக்கே சொல்லிக்கொண்டிருந்தார்கள். எந்த நிமிடமும் போன் வந்துவிடும், குழந்தை கிடைத்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் எல்லார் பார்வையும் தொலைபேசி மீதே இருந்தது. எப்போதும் ராங்காலாகவாவது ஒலித்துக்கொண்டே இருக்கிற அந்தச் சனியன் ஏனோ இன்று சும்மா இருக்கிறது. மேற்கொண்டு இன்னும் ஒரு மணி நேரம் கடந்த பிறகும் தகவல் ஏதும் வராததில் மாலுவுக்கு அழுகை வரத்தொடங்கியது.
"நீங்க சிடி கமிஷனருக்கு வேணும்னா பேசுங்களேன். அவர் போன் பண்ணீ அந்த ஊர் கமிஷனர்கிட்ட சொன்னா...."
"ஏற்கெனவே சொல்லிட்டேன்" என்றான் குமார். "ஒண்ணும் ஆயிருக்காது. பயப்படாதே"
பயப்படக்கூடாது என்றுதான் அவளும் நினைத்தாள். இந்த பிள்ளை பிடிக்கிறவர்களெல்லாம் இன்னும் இருக்கிறார்களா என்ன? அந்த ஒரு சந்தேகம் மட்டும்தான் அவளுக்கு மிச்சமிருந்தது. அது இல்லை என்று தெரிந்துவிட்டால் கூடப் போதும். கவலை ஒழிந்துவிடும்.
"சீச்சீ. அதெல்லாம் சான்ஸே இல்லை. யாரானா கூப்டா, சாக்லேட் குடுத்தாவெல்லாம் போற பையனா நம்ம ஜக்கு? இன்ஃபாக்ட் அவன் அந்தக் குட்டிகிட்டே எத்தனை தடவை இதுபத்தி சொல்லி நாமே கேட்டிருக்கோம்? தெரியாத ஆட்கள் என்ன குடுத்தாலும் வாங்கக்கூடாது, பேசக்கூடாதுன்னு...ஹி இஸ் வெரி ப்ரில்லியண்ட் பாய். அதுல எனக்கு சந்தேகமே இல்லை. தவறுதலா வேற பஸ்ல ஏறியிருக்கலாம். அந்த ஒரு சான்ஸ் இருக்கு. மத்தபடி தொலைஞ்சு போற அளவுக்கு அவன் ஒண்ணும் மக்கு இல்லே..."
மாலுவுக்கும் அது தெரிந்தே இருந்தது. ஆனாலும் எதைக் கட்டுப்படுத்த முடிகிறது?
கெட்டிக்காரக் குழந்தை. ஆசிரியர்களின் விருப்பத்துக்குரிய மாணவன். வயதுக்கு மீறிய புத்திசாலித்தனமும் அறிவும் உள்ளவன். வகுப்பில் எப்போதும் முதல் ரேங்க் வாங்குகிறவன். உடன் படிக்கிற பல மாணவர்களின் ஆதர்சமாக அந்தச் சிறு வயதிலேயே உருவாகியிருக்கிறவன். ஏகப்பட்ட திறமைகளின் சொந்தக்காரன். ஆனால் கொஞ்ச நாளாக ஏனோ மிகவும் சோர்வாகவே இருக்கிறான். எப்போதும் விட்டத்தைப் பார்த்துக்கொண்டும் நினைத்துக்கொண்டாற்போல திடீர் திடீரென்று படுத்துத் தூங்கிக்கொண்டும். தனக்குக்கூடத் தெரியாமல் ஏதாவது கவலையில் வாடுகிறானா என்ன?
மாலுவுக்கு ஜக்குவைக் குறித்து யோசிக்க யோசிக்க, கொஞ்ச நாளாக அவனைத் தான் சரியாக கவனிக்கவில்லையோ என்கிற சந்தேகம் வந்தது. அதை குமாரிடம் சொன்னாள்.
"நானும் கேட்டுப்பார்த்தேன். ஏன், அவனோட டீச்சரே அன்னிக்கு வந்து சொல்லலை? கொஞ்சம் டிஸ்டர்ப்டாத்தான் இருக்கான் கொஞ்ச நாளா. என்னன்னு தெரியலை. வந்ததும் மத்த வேலையையெல்லாம் ஒதுக்கிவெச்சுட்டு அவனைக் கொஞ்சம் சீரியஸா கவனிக்கணும் மாலு" என்று அவன் சொன்னான்.
"நான்கூட ஆபீஸுக்கு ஒரு மாசம் லீவு போட்டுடலாம்னு பாக்கறேன்"
"குட் ஐடியா. ஒருமாசம் உன் சம்பளம் இல்லாட்டி பரவாயில்லே. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். நான் வேணாலும் ரெண்டு ஷிப்ட் ஒர்க் பண்ணிக்கறேன். கேட்டா, ஜாம் ஜாம்னு ஒத்துண்டுடுவா ஆபீஸ்லே..."
"பாடங்கள் ரொம்ப ஜாஸ்தி. அந்த பளுதான் அவன் சோர்வுக்குக் காரணமோ என்னவோ."
"சான்ஸே இல்லே. அவன் படிக்கறதுக்கெல்லாம் சளைக்கறவனே இல்லை. இது வேற என்னவோ ரீஸன்."
"வேற என்ன இருக்க முடியும்?"
வேறு என்ன இருக்கமுடியும்? அவர்கள் அதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தார்கள். அவன் காணாமல் போனதைக்காட்டிலும் அதுதான் முக்கியமாகப் பட்டது அப்போது. குழந்தை தொலைந்துவிட்ட பதற்றத்தைத் தவிர்க்க, அவனைக்குறித்த வேறொரு சிந்தனையைத் தீவிரமாகப் படரவிட்டு அலசுவது உதவிகரமாக இருந்தது. நல்லபடியாக அவன் வீடு வந்து சேர்ந்ததும் தமது நடவடிக்கைகளில் கணிசமான மாறுதல்களைக் காட்டி, அவனை மீண்டும் சகஜ நிலைக்குத் திருப்பவேண்டியதன் அவசியம் குறித்தே ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
எல்லாம் கொஞ்ச நேரம் தான். குமாரின் அப்பாவுக்குச் சட்டென்று அந்த சந்தேகம் வந்ததும் அவனைத் தனியே கூப்பிட்டுத் தயக்கமுடன் வெளிப்படுத்திவிட்டார். கொஞ்ச நாளாக அவன் சரியாக இல்லாததும், இப்போது திடீரென்று சுற்றுலாவின் நடுவில் காணாமல் போனதும்.
"விபரீதமான யோசனைதான். ஆனாலும் தோணிடுத்து. உன்கிட்ட சொல்லாம இருக்க முடியலே. எதுக்கும் அந்த ஆங்கிள்ளேயும் யோசிச்சுப் பார். போலிஸ் கமிஷனர் கிட்டயும் கூடச் சொல்லலாம், தப்பில்லே..."
அவன் அதிர்ந்தே போனான்.
"சேச்சே. என்னப்பா சொல்ற நீ? ப்ளான் பண்ணி, காணாமப் போறதாவது? அப்படியென்ன அவனுக்குக் கஷ்டம்? அதுவும் நம்ம யாருக்கும் தெரியாம? ஆறாங்கிளாஸ் படிக்கிற பையன்! அந்த வயசுல அப்படியெல்லாமும் சிந்திக்கமுடியுமா என்ன? சேச்சே!"
அவனது பயமும் பதற்றமும் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் அப்படியொரு சாத்தியத்துக்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றிக்கொண்டே தான் இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று மீண்டும் கமிஷனருக்கு போன் செய்து அப்படியொரு கோணத்திலும் தேடுதலை தீவிரப்படுத்தச் சொல்லி தஞ்சை கமிஷனருக்குச் சொல்லச் சொன்னான். ஒரு க்ரைம் ரிப்போர்ட்டராக இத்தனை வருஷகாலம் இருந்ததன் பலன் இதுதான் போலிருக்கிறது. உயர் போலிஸ் அதிகாரிகள் அன்புடன் ஒத்துழைக்கிறார்கள். அவரிடமே நம்பர் வாங்கி தானே நேரடியாகவும் தஞ்சாவூர் போலிஸ் கமிஷனர் ஆபீஸில் தொடர்பு கொண்டு பேசினான். தன் பத்திரிகையின் பேரைச் சொன்னதும் மதிப்பும் அக்கறையும் அதிகப்படுவதாக உணர்ந்தான். எப்படியும் குழந்தை கிடைத்துவிடுவான். இனி இதுமாதிரி சுற்றுலாக்களுக்கெல்லாம் கொஞ்ச நாள் அனுப்பாதிருப்பதே நல்லது. எப்போதும் பார்வையிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். தவறியும் கடிந்துகொள்ளாமல், அன்பின் முழு அரவணைப்பில் பொத்திவைக்க வேண்டும். கேட்டதெல்லாம் வாங்கித்தரவேண்டும். ஓய்வு நேரங்களை அவனுடனேயே செலவிட வேண்டும்.
"ஒரு கஷ்டமும் இல்லாமத்தானே வளர்க்கறோம்? அக்கறைக்கு என்ன குறைச்சல்? அப்படியெல்லாமும் பிடிக்காம போவானான்ன?" மாலு அழுதுகொண்டே இருந்தாள்.
குமாரின் அம்மா, அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு, "குமாருக்கு இது ஏழரை சனி விடற காலம். இப்படி ஒரேயடியா பெரிய கஷ்டமா காட்டிட்டு, ஒண்ணுமில்லேன்னு குழந்தையைத் திருப்பிக் குடுத்துட்டு இன்னும் பல சௌக்கியங்களையும் குடுத்துட்டுப் போகப்போறது. நீ அழாதே. சுவாமி ஒரு கெடுதலும் பண்ணமாட்டார். கொஞ்சமாவா வேண்டிண்டிருக்கேன்?"
அன்றிரவு அவர்கள் யாரும் உறங்கவில்லை. காலைக்குள் செய்தி ஏதும் வராவிட்டால் குமார் கிளம்பி, தஞ்சாவூருக்குப் போவது என்று முடிவு செய்துகொண்டார்கள். இரவே தன் அலுவலக சகாக்கள் சிலருக்கு விஷயத்தைச் சொல்லி, இரண்டுபேரை உடன் வரச் சொல்லியிருந்தான்.
இரவு முழுவதும் விளக்கைக் கூட அணைக்காமல் கூடத்திலேயே அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மாலு சோபாவிலேயே சாய்ந்து அதிகாலை அப்படியே கண்ணயர்வதைக் குமார் பார்த்தான்.
காலை ஆறு மணிக்கு போன் அடித்தது. சந்திரா டீச்சர் தான். குழந்தை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் மிகத்தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.
சரி, நான் புறப்படுகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் அவசரமாகக் குளிக்கப் போனான்.
பல் தேய்ப்பதற்காக வாஷ்பேசினுக்குப் போன மாலுவுக்கு வயிற்றைப் பிசைந்தது. பெருத்த சத்தமுடன் வாந்தி வருவதற்கான அறிகுறியும் உண்டானது.
என்னாச்சு, என்னாச்சு என்று பதறி வந்த குமாரின் அம்மா அவள் தோளைப்பிடித்து மெல்ல அழைத்துவந்து ஹாலில் சாய்த்துப் படுக்கவைத்து தன் புடைவை முந்தானையால் நெற்றியைத் துடைத்துவிட்டாள்.
"என்ன பண்றதும்மா?"
"ஒண்ணுமில்லே" என்றவள், ஒரு சந்தேகத்துடன் மனத்துக்குள் கூட்டிப்பார்த்தாள். அப்படியும் இருக்குமோ?
அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. நாள் தள்ளிப்போயிருந்தது.
23
இன்னது செய்கிறோம் என்று உணராமலேயே தான் அவன் தன் கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். ஓரிரண்டு பஸ் ஸ்டாண்டுகள் தாண்டும்வரை மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றும் அவனுக்குத் தோன்றவில்லை. பயமாக இருந்தது. அழுகை வந்தது. ஆனால் திரும்பிப் போய்விடலாம் என்று மட்டும் தோன்றவில்லை. மீண்டும் ஆசிரியர்கள், சக மாணவர்கள், இன்பச் சுற்றுலா. முடிந்ததும் சென்னை. வீடு. அம்மா, அப்பா. அப்பா என்றால் நிர்மலாவின் ஞாபகம்.
ம்ஹும். இது சரிப்படவே படாது என்று அவனுக்குத் தோன்றியது. தன்னால் அந்த ஞாபகத்தை முற்றிலுமாக உதறவும் முடியாது; யாரிடமும் பேசவும் முடியாது. ஏதாவது பேசிவிட்டால் அம்மாவுக்கு விஷயம் தெரிந்து அவள் செத்துப் போய்விடுவாளென்கிற பயம் தீருவதாகவே இல்லை. இப்படி திடுதிப்பென்று கிளம்பி வந்துவிட்டது சரிதான். ஆனால் இன்னும் சில நாட்களில் பரீட்சை வருகிறது என்பது மட்டும்தான் உறுத்தலாக இருந்தது. ஆயிரம் கவலைகளூக்கு நடுவிலும் அவன் ஒழுங்காகப் படித்திருந்தான். தொடர்ந்து வகுப்பில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதென்பது விளையாட்டுப்போல ஆரம்பித்ததுதான். ஆனால் தன்னையறியாமல் அவனுக்கு அதிலொரு தீவிரம் ஏற்பட்டிருந்தது.
பாடங்கள் சுலபமாக இருக்கின்றன. பரீட்சைகளும் சுலபமாகவே இருக்கின்றன. வெற்றி, எல்லாவற்றைவிடச் சுலபம்தான். ஆனால் இந்த புத்தி ஏன் இப்படிக் கிடந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது? சிந்தனையின் காட்டுத்தனமான வெறிக்கூச்சல் அடங்கமாட்டேனென்கிறது. தனக்கென்ன தெரியும், சின்னப்பையன் தானே, எல்லாம், எல்லாமே சரியாகத்தான் இருக்கும்; தாந்தான் தப்பாக நினைத்துக்கொண்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோமோ என்று கூட அவன் தன் தகுதிக்கு மீறி சிந்தித்துப்பார்த்தான்.
சிந்திக்க முடிகிற எல்லாவற்றையும் ஏற்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? புத்திக்குள் ஒரு புத்தி, அதற்குள் இன்னொரு புத்தி என்று மனம் ஏன் இப்படி பரோட்டா மாதிரி லேயர் லேயராகப் பிரிக்கப் பிரிக்க நீண்டுகொண்டே போகிறது?
அழுகைதான் வருகிறது. எங்காவது யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுது தீர்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமோ என்னவோ? ஆனால் பார்க்குமிடமெல்லாம் ஏன் மனிதர்களாகவே இருக்கிறார்கள்?
கால் வலிக்கத்தொடங்கியபோது அவன் பெயர்ப்பலகையைப் பார்க்காமல் எதிரே வந்த பேருந்தில் ஏறி உட்கார்ந்துகொண்டான். கொண்டுவந்த டூர் பேக் பள்ளிப்பேருந்திலேயே இருக்கிறது. நல்லவேளையாக, புறப்படுகிற நேரத்தில் அம்மா கொடுத்த பணம் மட்டும் டிரவுசர் பாக்கெட்டில் பத்திரமாக இருக்கிறது. டிக்கெட்டுக்கு அது போதும்.
பக்கத்திலிருந்த முதியவர் கும்பகோணத்துக்கு டிக்கெட் வாங்கியதைப் பார்த்து அவனும் காசை எடுத்து நீட்டி, கும்பகோணம் என்று சொன்னான். சொல்லாமல் ஓடிப்போகிற பையனின் முகமில்லை அவனுடையது. ஆகவே கண்டெக்டருக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை.
டிக்கெட்டை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டு ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். மூடிய கண்ணுக்குள் அம்மாவின் முகம் தான் முதலில் வந்தது.
எத்தனை அன்பான அம்மா! தான் இப்படி எங்கோ போகிறோம் என்று தெரிந்தால் நிச்சயம் துடித்துப் போய்விடுவாள். ஒரு கஷ்டம் அவளுக்குத் தெரியாதிருக்கும்பொருட்டு இன்னொரு கஷ்டத்தையல்லவா கொண்டு தலையில் சுமத்துகிறோம்?
இப்படி நினைத்தவுடனேயே அவனுக்கு அழுகை கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு முகத்தை வெளியே நோக்கித் திருப்பிக்கொண்டான்.
"எங்கே போற தம்பி?"
பக்கத்திலிருந்த பெரியவர்தான் கேட்டார்.
"கும்பகோணம்...டிக்கெட் வாங்கியிருக்கேன்" என்று ஜாக்கிரதையாக அவன் சொன்னான்.
"அங்க யார் இருக்கா?"
ஒரு கணம் தயங்கியவன் "எங்க அத்தை வீடு இருக்கு" என்று தயங்காமல் பொய் சொன்னான்.
"தனியாவா போறே?"
"ஆமா. நெறையவாட்டி போயிருக்கேன்!"
"ஓ" என்றவர் சற்று நேரம் பேசாதிருந்துவிட்டு "பெத்தவங்களுக்குத் துணிச்சல் ஜாஸ்தியாயிடுச்சி. இப்படி பச்ச கொளந்தைய பஸ்ஸேத்தி அனுப்பிவிட்டுடறாங்க" என்று வருத்தப்பட்டார்.
அப்போதுதான் அவனுக்கு அந்த யோசனை சட்டென்று உதித்தது. பார்ப்பதற்கு நல்லவராகவும் வயதில் மிகவும் முதிர்ந்தவராகவும் தெரிகிற ஒரு அந்நியர். ஒருக்காலும் தன்னையோ தன் பெற்றோரையோ அறியமுடியாதவர். இப்படியொரு தெரியாத நபரிடம் பேசிப்பார்த்தால் என்ன? சம்பந்தப்பட்ட விஷயத்தில் தன்னால் விளங்கிக்கொள்ள முடியாத புதிர்கள் அவருக்குச் சுலபமாக விளங்குமல்லவா? கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் இன்னது செய்கிறோம் என்று உணர்ந்து செய்யக்கூடிய மனநிலையில் அவன் அப்போது இல்லை. ஆகவே மெல்ல அவருடன் தொடர்ந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
தன் அம்மா மிகவும் நல்லவள். அன்பானவள். தன்மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அப்பாவும் தன்னைப் பொறுத்த அளவில் அன்பாகத்தான் இருக்கிறார். அம்மாவிடமும் அவரது அன்புக்கு ஒரு குறைவும் இல்லை. தாத்தா, பாட்டி, குட்டி மற்றும் வெங்கடாஜலபதி. சிறியதொரு உறவும் நட்பும் கலந்த அழகிய வட்டத்தில் அவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். ஆனாலும் மனத்துக்கு என்னவோ கஷ்டமாக இருக்கிறது. அவனது அப்பாவின் அன்பு உண்மையானதாகத்தான் இருக்குமா என்கிற சந்தேகம்.
"அடடே, ஏம்ப்பா அப்படி நெனைக்கறே?"
சுற்றிச் சுற்றித் தடுமாறிவிட்டு ஒருவழியாக அவன் விஷயத்தை பதைக்கப் பதைக்க மெல்லிய குரலில் அவரிடம் சொல்லிமுடித்தான்.
"அடடே!" என்று கேட்டுக்கொண்டவர் ஆதரவாக அவன் தலையை வருடி, "நீ என்ன படிக்கறே?" என்று கேட்டார்.
"சிக்ஸ்த் ஸ்டேண்டர்ட் பி."
"அட்டேங்கப்பா. இங்கிலீஸ் மீடியமா?"
"ஆமா தாத்தா."
"நல்லது, நல்லது. நல்லா படிப்பியா?"
"ஓயெஸ். நான் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவேன் க்ளாஸ்ல."
"போடு சக்கை! அப்ப குட் பாய்தான்." என்றவர் சற்றுப் பொறுத்து, "சின்னக்கொழந்தே என்னவெல்லாம் கஷ்டப்படறே நீயி? ம்? அப்பாரு வயசுக்காலத்துலே ஒரு பொண்ணைக் காதலிச்சிருக்கறதைக் கண்டுபிடிச்சியா? பொல்லாதவன் நீயி!" என்று மனசுவிட்டுச் சிரித்தார்.
"அதுல ஒண்ணும் தப்பில்லையே தம்பி. எல்லா பயலுவளுக்கும் அந்த வயசுல அப்பிடி ஒரு இது வரத்தாஞ்செய்யும். நாங்கூட ஏளு குட்டிகளை 'லவ்வு' பண்ணீயிருக்கேன் பார்த்துக்க" என்றார் கண்ணடித்து.
அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவர் சொன்ன தகவல் தனக்குத் தேவையற்றது என்று தோன்றியது. கொஞ்சம் கோபமும் வந்தது. ஆகவே, "நான் அதெல்லாம் பண்ணமாட்டேன். ப்ராமிஸா பண்ணமாட்டேன்!" என்று கொஞ்சம் வேகமாகச் சொன்னான்.
"ஆரு இல்லேங்கறா? நீ பண்ணமாட்டே தான். ஏன்னா நீ குட்பாயி. ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கற புள்ள. உனக்குப் படிப்பு ஒண்ணுதான் குறி. கரெக்டா நாஞ்சொல்றது?"
ஆமாம் என்று அவன் தலையாட்டினான்.
"அப்பிடி காதல் கீதல்னு விளாம இருக்கறது ஒரு நேக்கு. விளுந்தாலும் தப்பில்லை. சரிப்பட்டா கல்யாணம் கட்டிக்கறது. இல்லாட்டி விட்டுட்டுப் போறது. அவ்ளதானே? நம்மால நாலு பேருக்குக் கஷ்டம் இல்லாம வாழணும். அவ்ளோதான் விஷயம். இப்ப உங்கப்பாரையே எடுத்துக்க. உங்களுக்கு அவரால எதும் கஷ்டம் உண்டா?"
"இல்லை"
"குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றாரா?"
"சேச்சே" என்றான் உடனே.
"அந்தப் பளைய பொண்ணு இப்ப இருக்குதா?"
"அது அமெரிக்கா போயிடுச்சு"
"அவ்ளோதான். அந்த வயசுல பார்த்திருக்காங்க. பேசியிருக்காங்க. பளகியிருக்காங்க. என்னமோ சரிப்படலை. விட்டுட்டாங்க. இப்ப உங்கப்பாவுக்கு அந்த ஞாபகமேகூட இருக்காது. அவருக்கு ஒரே புள்ளன்னு வேற சொல்ற! உன்னைப்பத்தின நெனப்புத்தான் எப்பமும் இருக்கும். அடடே நம்ம புள்ள ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கறானே, அவனை இன்னும் நல்லா படிக்க வெக்கணும், பெரியாளா ஆக்கணும், டாக்டராவணும்..."
"ம்ஹும். நான் பைலட் ஆகப்போறேன்"
"சரி, என்னமோ ஒண்ணு. அவர் நெனப்பெல்லாம் உன்னைப்பத்தித்தான் இருக்கும்னு சொல்லவரேன். நீ இப்ப அதைக் கேட்டினாகூட ஞாபகத்துல தேடிதான் எடுக்கணும் அவரு.வேணுமா இது?"
"அப்படியா?" என்றான் ஜக்கு.
"ஒரு மனுசன் நேத்திக்கு எப்பிடி இருந்தாங்கறது முக்கியமே இல்லே கண்ணு. அது செத்துப்போன காலம். நாளைக்கு எப்பிடி இருக்கப்போறோங்கறது நம்மாண்ட இல்ல. நல்லாவும் இருக்கலாம், நாசமாவும் போவலாம். அது ஆண்டவன் சித்தம். ஆனா இந்த இன்னிக்குன்னு ஒண்ணு இருக்குது பாரு. அதான் சொத்து. அதான் மேட்டர். நம்ம கையில இருக்கற விஷயம். அது ஒளுங்கா இருக்கா? நாம அதை ஒளுங்கா வெச்சிருக்கமா? அவ்ளோதான் விஷயம். நீயே சொல்லு. இன்னிக்கு உங்கப்பாரு எப்படி இருக்காரு?"
"ஏன், நல்லாத்தான் இருக்கார். அன்பா இருக்கார். he is a good father. no doubt." என்றான் ஜக்கு.
"அதான் சொல்லுறேன். உங்கம்மாவுக்கு அவர் நல்ல புருஷனா இருக்காரா? உங்க தாத்தா, பாட்டி இருக்காங்கன்ற. அவங்களுக்கு நல்ல புள்ளையா இருக்காரா இன்னிக்கு? அக்கறையா கவனிச்சுக்கறாரா? உனக்கு நல்ல அப்பனா இருக்காரா? அவ்ளோதான். இதுல குழப்பமே வேணாம். நாளைக்கு அவர் ஒரு தப்பு பண்ணினா கண்டிக்கலாம். திருத்தலாம். என்னவேணா சந்தர்ப்பத்துக்கு ஏற்ப செய்யவேண்டி வரலாம். ஆனா நேத்திக்கு செஞ்ச ஒரு லவ்வுக்காக அவரைப் பிடிக்கலேன்னு நீ சொல்லக்கூடாது கண்ணு..."
அவனுக்கு மீண்டும் அழுகை வந்தது. மீண்டும் கட்டுப்படுத்திக்கொண்டான்.
"அத்தை வீட்டுக்கு எதுக்குப் போற?" என்று கேட்டார் அவர்.
சற்று விழித்தவன், "சும்மாத்தான். வாரம் ஒருவாட்டி போவேன்" என்று சொல்லிவைத்தான்.
"நல்லா மவராசனா போ. ஆனா அவங்களாண்டல்லாம் இதையெல்லாம் பேசாத. ஒவ்வொரு மனுசனும் அப்பனா, புள்ளையா, ஆபீசரா, வேலைக்காரனா, அடிமையா, காதலனா இன்னும் என்னென்னவோவா ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு மாதிரி இருந்தாகணும். அதான் விதி. நம்மோட சம்மந்தப்பட்ட முறைல அவன் எப்படி நடந்துக்கறான்னு மட்டும்தான் நாம பாக்கணும். யார் யாருக்கு என்னென்ன கஷ்டமோ, மனசுக்குள்ள என்னென்ன வெச்சிருப்பாங்களோ யாருக்குத் தெரியும்? தோ, ஓமப்பொடி மாதிரி இருக்கே நீயி. உனக்குள்ள எவ்ளோ பெரிய விசயத்தை வெச்சிட்டிருக்கே நீயி? ஆனா பாரு, இதெல்லாம் வேண்டாத விசயம். உனக்கு இப்ப முக்கியம் உன் படிப்பு மட்டும்தான். அப்புறம் உங்கப்பா அம்மாவோட அரவணைப்பு. ரெண்டுலயுமே குறையில்லேங்கறே. அப்புறம் என்னத்துக்கு இந்தக் கண்றாவியெல்லாம்? ம்?"
அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். எத்தனை அழகாக இந்தப் பெரியவர் விளக்கிவிட்டார்! தன் புத்திக்கு இதுநாள் வரை எட்டவே எட்டாத எளிமையான விஷயம்! வேண்டாத சுமை என்று புத்தி அவ்வப்போது எச்சரித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனாலும் விலக்க முடியாமல் இருந்தது ஏன்?
"ஏன்னா நீ உங்கப்பாவை அவ்ளோ விரும்பறேன்னு அர்த்தம். ஒரு சின்ன தப்பான விஷயத்தைக் கூட அவர் சம்பந்தமா உன்னால ஏத்துக்க முடியலேன்னு அர்த்தம். அந்தளவுக்கு உங்கப்பாரு உன்னாண்ட அன்பா நடந்துக்கிட்டிருக்காருன்னு அர்த்தம். யோசிச்சிப்பாரு. உங்கப்பா யாரோ ஒருத்தியை லவ்வு பண்ணியிருக்காருன்னு சொல்றியே, அவளை உண்மையிலேயே அவர் விரும்பியிருந்தாருன்னா இப்பிடி உன்னாண்ட அன்பா இருந்திருக்க முடியுமா?"
அவனுக்குப் பளீரென்று எல்லாம் புரிவதுபோலிருந்தது.
"அதான். பின்னே? இன்னொண்ணு சொல்லுறேன், ரகசியமா வெச்சுக்க. ஐயமாரு வூட்டுப் புள்ளையா நீயி?" குரலைத் தாழ்த்திக்கொண்டு அவர் கேட்டார்.
சட்டென்று அவனுக்குப் புரியாவிட்டாலும் பாதி புரிந்ததுபோல் தலையாட்டினான்.
"அவுங்களுக்கெல்லாம் லவ்வு பண்ணவெல்லாம் வராது. அது ஒரு நேக்கு. உங்கப்பாருக்கு அதெல்லாம் சரியா வந்திருக்காது!" என்று அவர் கண்ணடித்தார்.
அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை என்றாலும் அப்பா தவறேதும் செய்யவில்லை என்பதை அவர் மேலும் வலியுறுத்துவதை மட்டும் உணரமுடிந்தது. அதுவே பெரிய ஆறுதலாக இருந்தது.
"சரி தாத்தா" என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பிக்கொண்டான். பெரிய பாரம் இறங்கியது போலிருந்தது. நிச்சயம் இந்தப் பெரியவர் தன் சம்பந்தப்பட்ட யாரிடமும் வந்து இந்த விஷயத்தை விவாதிக்கப்போவதில்லை என்பது மாபெரும் ஆறுதலாக இருந்தது. தவிரவும் இவர் சொல்வதில்தான் எத்தனை நியாயம் இருக்கிறது! இறந்துபோன ஒரு விஷயத்தைக் குறித்து எதற்கு இத்தனை கவலைப்படவேண்டும். அப்பா என்றால் அப்பாதான். நிர்மலாவைக் காதலித்தவர் என்று ஏன் நினைக்கவேண்டும்? அப்பாவாக இருக்கும்போது அவர் யாரையும் காதலிக்கவில்லையே? மேலும் அன்பான அப்பா.
ஓடிப்போய் அவரைக் கட்டிக்கொண்டு நேற்றுவரைக்கும் இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன், இப்போது இல்லை என்று சொல்லவேண்டும்போலிருந்தது. அப்படிச் சொல்வதாலும் பிரச்னையேதும் வராது என்று ஏனோ இப்போது தோன்றியது. ஏன், அம்மாவிடமே கூடப் பேசலாம் என்று தோன்றியது. தனக்குத் தெரிந்த இந்த விஷயம் எப்படி அம்மாவுக்கு முன்னதாகத் தெரியாமல் இருக்கும்? இந்தத் தாத்தாவுக்குப் புரிந்த விஷயம் நிச்சயம் அம்மாவுக்கும் புரிந்துதான் இருக்கவேண்டும். 'அட அசடே' என்று தன்னை இழுத்துக் கட்டிக்கொண்டுவிட்டால் எல்லாமே சரியாகப் போய்விடும். தான் செய்த தவறெல்லாம், உள்ளுக்குள் போட்டுக் குடைந்துகொண்டது தானோ?
கும்பகோணம் வந்துவிட்டது.
"தம்பி, இறங்கலியா? தூங்கிட்டியா?" என்று அவனைத் தட்டினார் அந்தப் பெரியவர். "எங்க இருக்கு உங்க அத்தை வீடு?"
சற்று விழித்தவன், சட்டென்று "கோயில் பக்கம்" என்று சொல்லிவிட்டு 'வரேன் தாத்தா' என்று அவசரமாக இறங்கினான்.
களேபரமாக இருந்த பேருந்து நிலையம் முதலில் அவனுக்குப் புரியவில்லை. முற்றிலும் புதிய இடம். எது வாசல் என்று விளங்கவில்லை. மேலும் அடுத்தபடியாகத் தான் எங்கே போவது என்றும் புரியவில்லை. இந்நேரம் டீச்சரும் மற்ற ஆசிரியர்களும் ஹெட் மாஸ்டரும் தேடிக்கொண்டிருப்பார்கள். ஐயோ, என்னைக் காணோம் என்று ஊருக்கு போன் செய்திருப்பார்களோ?
அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மீண்டும் பயமும் கலக்கமுமாக இருந்தது. தஞ்சாவூருக்கே திரும்பப் போய்விடலாம் என்று நினைத்தான். எல்லாரும் தஞ்சாவூரிலேயே தான் இன்னும் இருப்பார்களா? அடுத்த இடத்துக்குக் கிளம்பியிருக்கமாட்டார்களா என்றும் சந்தேகம் வந்தது. ஒருவேளை தான் தவறியதையே கவனிக்காதிருந்தால்? நேராக மெட்ராஸ் பஸ் பிடித்து ஊருக்கே போய்விடலாமென்றால் கையில் அத்தனை காசு இல்லை என்பது உறுத்தியது. அடுத்தடுத்துத் தவறுகளாகவே செய்துவருவதை நினைத்துப் பார்த்தான். ம்ஹும். இனி குட்பாயாக மட்டுமே இருக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். மேலும், செய்தவற்றை நினைத்துக் கலங்குவதிலும் ஒரு அர்த்தமும் இல்லை. அந்தத் தாத்தா அதைத்தானே சொன்னார்?
ஒரு ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கும் பையனின் சரியான நடவடிக்கை இதுதான் என்று முடிவு செய்துகொண்டு கண்ணில் பட்ட டிராஃபிக் போலீஸ் காரரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
24
ஜக்குவுக்குக் கொஞ்சம் ஜுரம் வந்திருந்தது. பயத்தால் விளைந்த ஜுரம். என்னத்துக்காகத் தான் இப்படித் தனியே புறப்பட்டு கும்பகோணம் போனோம், என்னத்துக்காக மீண்டும் தஞ்சாவூர் திரும்ப நினைத்து டிராபிக் போலீஸை அணுகினோம், ஆசிரியர்கள் கேட்கும்போது என்ன சொல்லப்போகிறோம் எதுவுமே புரியாததால் வந்த பயம். தன்னைக்காணாமல் எல்லாரும் என்ன செய்திருப்பார்கள், எங்கேயெல்லாம் தேடியிருப்பார்கள், வீட்டுக்குத் தகவல் போயிருக்குமா, போலீஸ் தேடுகிறதா, பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவார்களா என்று விதவிதமாக பயந்துகொண்டிருந்தான்.
மிகவும் ஜாக்கிரதை உணர்ச்சியுடன் தான் அவன் அந்த டிராபிக் போலீஸ்காரரிடம் பேசினான். சென்னையிலிருந்து சுற்றுலா வந்திருக்கும் பள்ளிமாணவன் அவன். தஞ்சாவூரில் ஏதோ புரியாமல் வேறு பஸ் ஏறிவிட்டான். ஆசிரியர்களும் சக மாணவர்களும் அங்கே அவனைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.
"அப்படியா? சரி, வா" என்று அவனை அழைத்துக்கொண்டு போனார் அந்த டிராபிக் போலீஸ்காரர். இரண்டு நிமிடங்கள். இரண்டு தொலைபேசி விசாரிப்புகள். அவ்வளவுதான். அடையாளம் தெரிந்துவிட்டது. பெயர் ஜகந்நாதன். ஆறாம் வகுப்பு படிக்கிற சென்னை மாணவன். ஆமாம். கும்பகோணத்தில் தான் இருக்கிறான். பத்திரமாக இருக்கிறான். அவனே வலிய வந்து போலீஸில் தகவல் சொல்லியிருக்கிறான். கெட்டிக்காரன் தான். கவலையே வேண்டாம். குழந்தை நலமாக இருக்கிறான். உடனே வருகிறீர்களா? ரொம்ப சரி.
வரப்போவது யார் என்பதுதான் அவனுக்குக் கவலையை அதிகரித்துக்கொண்டிருந்தது. சந்திரா டீச்சர் என்றால் பிரச்னையில்லை. சமாளித்துவிடமுடியும். டேவிட் மாஸ்டரோ, ஹெட்மாஸ்டரோ என்றால் கொஞ்சம் ஆபத்துதான். மிரட்டுவார்கள். அடிப்பார்கள். அதெப்படி வேறுபஸ் ஏறுவாய்? கேள்விகள் வரும். உன்னை யார் ஊருக்கு முன்னால் இறங்கித் தனியே போகச்சொன்னது? தொடர் விசாரணைகள் ஆரம்பமாகும்.
யாரோ ஒரு ஆள் தன்னை அழைத்துப்போய்விட்டான் என்று சொல்லலாமா என்று முதலில் யோசித்தான். சே, பொய். மேலும் பிரச்னையை அதிகரிக்கக்கூடிய பொய். அரண்மனை வாசலில் ஒரு பேருந்து காலியாக நின்றுகொண்டிருந்தது. கால் வலிக்கிறதே என்று ஏறி உட்கார்ந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். விழித்துப்பார்த்தால் கும்பகோணம்.
இப்படித்தான் சொல்லவேண்டும். கடவுளே, எத்தனை மோசமான பையனாகிக்கொண்டிருக்கிறேன் நான் என்று அவனுக்கே அருவருப்பாக இருந்தது. எல்லாம் அந்த நிர்மலாவால். பார்த்தே இராத நிர்மலா. மாதக்கணக்கில் மனத்தைப் பிய்த்து நார் நாராகக் கிழித்துக்கொண்டிருக்கிற பெண் பிசாசு. அந்த முகமறியாத பெரியவர்தான் எத்தனை ஆறுதலாகப் பேசித் தன் மனத்தை மாற்ற முயன்றார்? "உங்கப்பா யாரோ ஒருத்தியை லவ்வு பண்ணியிருக்காருன்னு சொல்றியே, அவளை உண்மையிலேயே அவர் விரும்பியிருந்தாருன்னா இப்பிடி உன்னாண்ட அன்பா இருந்திருக்க முடியுமா?" என்கிற அவரது கேள்விதான் எத்தனை நியாயமானது! தன் புத்தியில் ஏன் இது இத்தனை நாளாக உறைக்கவில்லை?
"முட்டாள்" என்றது விக்கி.
"என்னது?"
"உன்கிட்டே அன்பா இருக்கறதுக்கும் நீ பொறக்கறதுக்கு முன்னால, உங்கம்மாவை அவர் கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் முன்னால, அவர் நிர்மலாவை லவ் பண்ணினதுக்கும் என்ன சம்மந்தம்? உன் பிரச்னை என்ன? உங்கப்பா ஏன் நிர்மலாவை லவ் பண்ணினார்? அதானே? அதுக்கும் அவர் உன்கிட்டே அன்பா இருக்கறதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை." என்றது தீர்மானமாக.
அவனுக்கு மீண்டும் குழப்பம் உண்டாவது போல இருந்தது. தன்னால் இந்தப் பிரச்னையிலிருந்து மீளவே முடியாதோ என்று கலங்கிய சமயம் ஜுரம் அதிகமாகியிருந்தது.
போலீஸ் ஸ்டேஷனில் அவன் காத்திருந்தான். அன்பான காவலர் அவனுக்கு நான்கு இட்லியும் ஒரு காப்பியும் வாங்கிக்கொடுத்திருந்தார். சாப்பிட்டபின்பு தலை அதிகம் வலிப்பதுபோலிருந்தது. இப்போது வரப்போவது யார்? கடவுளே, அது சந்திரா டீச்சராகவே இருக்கட்டும்.
ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாக அவனது அப்பாவே வந்து இறங்கியதைக் கண்டு ஒருகணம் பயமும் பதற்றமும் அதிகரித்துவிட்டாற்போலிருந்தது அவனுக்கு.
குமார் ஓடிவந்து அவனைத் தூக்கி இறுக்கிக்கட்டிக்கொண்டான். "என்னடா ஆச்சு செல்லம்?"
அவன் அழத்தொடங்கினான்.
சுற்றி இருந்த போலீசாரும் குமாரும் சேர்ந்து அவனை சமாதானப்படுத்திவிட்டு ஒரு ஓரமாக உட்காரச் சொல்லிவிட்டுத் தனியே போய்ப் பேசினார்கள். தவறுதலாக பேருந்து மாறி ஏறிவிட்ட சிறுவன். புத்திசாலித்தனமாக போக்குவரத்துக் காவலரிடம் தகவல் சொல்லி தன்னைத்தானே மீட்டுக்கொண்டிருக்கிறான். நல்லது. அவர்கள் புறப்படுவதில் ஒரு பிரச்னையும் இல்லை.
"டீச்சரெல்லாம் தஞ்சாவூர்லே இருப்பாங்களே!" என்றான் ஜக்கு.
"நான் அங்கேருந்துதான் வரேன். பயப்படவே வேண்டாம் நீ. உங்க ஹெட்மாஸ்டரைப் பார்த்துப் பேசிட்டேன்." என்றவன் அங்கிருந்தே தஞ்சாவூருக்கு போன் செய்து காத்திருந்த ஆசிரியர்களிடமும் பேசி, தகவல் சொன்னான். இனி பிரச்னையில்லை. பையன் கிடைத்துவிட்டான். சுற்றுலாவின் மிச்சத்தை அவன் பின்னொரு சமயம் அனுபவித்துக்கொள்ளட்டும். இப்போது குமாரே அவனைத் தன்னுடன் ஊருக்கு அழைத்துப்போய்விட உத்தேசித்திருக்கிறான்.
ஏன், எதற்கு என்று தலைமை ஆசிரியர் ஏதோ கேட்டிருப்பார் போலிருக்கிறது. ஜக்கு மிகவும் பயந்திருக்கிறான். உடம்பு சுடுகிறது, ஊர் திரும்பிவிடுவதே நல்லது என்று எடுத்துச் சொல்லி, சம்மதம் பெற்றபின் அவனைப் பார்த்து 'வா' என்று அழைத்தான் குமார்.
"டீச்சர் திட்டுவாளே" என்றான் ஜக்கு.
"அதெல்லாம் திட்டமாட்டா. நான் பார்த்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு, காவலர்களுக்கும் நன்றி சொல்லி, புறப்பட்டான்.
ரயிலில் தான் அவர்கள் ஊர் திரும்பினார்கள். ஆகவே ஜக்குவுக்குப் படுத்துக்கொண்டு தூங்க சௌகரியமாக இருந்தது. ஒரு இரண்டு, மூன்று மணிநேரம் அவன் தூங்கட்டும் என்று குமார் ஏறியதுமே அவனைப் படுக்கச் சொல்லிவிட்டுத் தானும் படுத்துக்கொண்டான். வண்டி விழுப்புரம் தாண்டியபோதுதான் இருவருமே எழுந்துகொண்டார்கள்.
"ஜுரமெல்லாம் போச்சா?" என்று அவன் நெற்றியைத் தொட்டுப்பார்த்தான் குமார்.
"போயிடுச்சுப்பா" என்றான் ஜக்கு.
"ம்ம்...குட் பாய். சொல்லு என்ன ஆச்சு?"
ஜக்கு ஒருவிநாடி யோசித்தான். அந்த நிர்மலாவை மனத்துக்குள் ஏற்றிக்கொண்ட நாளாக எத்தனை பொய்கள் சொல்லவேண்டியதாகிவிட்டது? மேலும் நிம்மதி இல்லாத உளைச்சல்கள். பாடங்களில் கவனம் இல்லை. குட்டியிடம் கூடச் சரியாகப் பேசமுடியவில்லை. பாவம், வெங்கடாஜலபதி. அதை கவனித்து மாதக்கணக்காகிறது. புத்தி ஏன் இப்படித் தடுமாறி, அலைக்கழிக்கிறது? கடவுளே! ஓடிப்போகிற அளவுக்குக் குழப்பங்கள். ஒரு கெட்டிக்காரப்பையன், சமர்த்துப்பையன், நல்லபையன் இப்படியெல்லாமுமா நடந்துகொள்வான்? வேறு எதற்காக இல்லாவிட்டாலும் தான் ஒரு நல்லபையந்தான் என்று தனக்கே நிரூபித்துக்கொண்டாகவேண்டும் என்று அவனுக்குத் தோன்றிவிட்டது.
மனத்தை திடப்படுத்திக்கொண்டு உதடு துடிக்க அவன் கேட்டான்: "நீ என்னையும் அம்மாவையும் விட்டுட்டுப் போயிடுவியாப்பா?"
"என்னது?" என்றான் குமார். "அட அசடே! ஏன் இப்படியெல்லாம் கேக்கறே?"
"இல்லே. நான் வந்து...எனக்கு வந்து... சரி சொல்லிடறேன். நான் உன் டைரி ஒண்ணை எடுத்துப் படிச்சேன். அதுல நீ யாரையோ லவ் பண்றேன்னு எழுதியிருக்கே. அதனால என்னையும் அம்மாவையும் விட்டுட்டுப் போயிடுவியா நீ?"
"என்னது!" சில கணங்கள் குமாருக்குப் பேச்சடைத்துவிட்டது. சுதாரித்துக்கொண்டபோது அத்தனை விஷயங்களும் புரிந்துவிட்டது போலிருந்தது. சிலகாலமாக ஜக்குவின் நடவடிக்கைகளில் தென்படும் மாறுதல்கள். டீச்சர் வீடுதேடி வந்து எச்சரித்துவிட்டுப் போனது. அவன் விளையாடாமல், யாருடனும் அதிகம் பேசாமல் தனிமையில் தன்னைச் சுற்றி ஒரு கோட்டை கட்டிக்கொண்டது, எதிர்பாராத கல்விச்சுற்றுலாவின் சமயம் கிடைத்திருக்கக்கூடிய கூடுதல் தனிமை. அதைப் பயன்படுத்திக்கொண்டு அவன்........சரிதான். அப்பா சரியாகத்தான் யூகித்திருக்கிறார் என்று குமார் நினைத்தான்.
"அடக்கடவுளே!" என்றான் குமார்.
"அதானா விஷயம்! படிச்சதுமே எங்கிட்ட கேட்டிருக்கவேண்டியதுதானே நீ? ம்? அதை நினைச்சுண்டா இத்தனை நாள் கவலைப்பட்டிண்டிருக்கே?"
"நீ எப்படிப்பா ஒரு பொம்பளையை லவ் பண்ணே?அம்மாவுக்குத் தெரிஞ்சா செத்தே போயிடுவாளே!" அவன் அழத்தொடங்கியிருந்தான்.
குமார் அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு தலையைத் தடவினான். "அழாதே. தபாரு. அழாதேன்னு சொல்றேனில்லே? எல்லாரும் பாக்கறா பார்."
ஜக்கு அழுகையை நிறுத்த மிகவும் சிரமப்பட்டான். விடைகளே கூட வேண்டாம். விஷயத்தை உடைத்துவிட்டதே போதும் என்று தோன்றிவிட்டது அவனுக்கு.
ஐந்து நிமிடங்கள் அவனை சமாதானப்படுத்தி, சம நிலைக்குக் கொண்டுவந்தபின் "பதினாலு, பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால நடந்த சங்கதி. அது எப்படி உன்கிட்டே கிடைச்சது?" என்று சிரித்துக்கொண்டே கேட்டான் குமார்.
"அன்னிக்கு பரணை ஒழிச்சபோது கிடைச்சதே!"
"அ, ஆமாம்!" என்றவன், "தூக்கிப்போடணும்னு நினைச்சிருந்தேன். உங்கம்மாதான் வேண்டாம், இருக்கட்டும். டைரியெல்லாம் ஹிஸ்டரின்னு சொன்னா" என்று கண்ணடித்தான்.
"என்னது?"
"நிஜமாத்தான்" என்றவன், "அடி என் செல்லமே. அதை நினைச்சா கவலைப்பட்டுண்டிருந்தே? உங்களை விட்டுட்டு நான் எங்க போவேன்? என்னத்துக்குப் போகணும்? நீ இல்லாட்டி எனக்கு ஒரு நாள் கூடத் தூக்கம் வரதே இல்லை. உன்னை டூருக்கு அனுப்பிட்டு ராத்திரியெலாம் பேயா முழிச்சிண்டு உக்காந்திருக்கேன். என்னால எப்படி உன்னை விட்டுட்டு போகமுடியும்? மக்கு! மக்கு!" என்றான்.
"அப்ப நீ எப்படி யாரோ ஒரு பொம்பளையை..."
"ஐயோ! அதெல்லாம் இல்லடா. உனக்கு எப்படிப் புரியவெப்பேன்? ம்... இப்போ ஒருத்தருக்குக் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி நாலஞ்சு ஜாதகம் பார்த்து ரெண்டு மூணு இடத்துல பொண்ணு பார்க்கறதில்லையா? பார்க்கற பொண்ணையெல்லாமா கல்யாணம் பண்ணிண்டுடமுடியும்? அதுமாதிரிதான் இது. நான் ஒரு பொண்ணு பார்த்தேன். சரிப்படலே. விட்டாச்சு. கரெக்டா, பொருத்தமா உங்கம்மா அப்புறம் வந்தா. அவ்ளோதான். உங்கம்மாவே இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா அந்த இன்னொரு பொண்ணைப் பார்த்திருக்கவே அவசியம் இல்லாம போயிருக்கும்..."
"அ, கதை!" என்று ஜக்குவின் காலடியில் இருந்து ரகசியமாகக் குரல் கொடுத்தது விக்கி. "பொண்ணு பார்க்கப்போறதும் லவ் பண்றதும் ஒண்ணா?"
"அதானே!" என்று நினைத்தவன் "நீ லவ் பண்ணீனே தானே?" என்று விடாமல் மீண்டும் கேட்டான்.
"உன்னைக்கூடத்தான் லவ் பண்றேன். உங்கம்மாவை லவ் பண்றேன். எங்கப்பா, அம்மா, எங்க எடிட்டர், ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும்தான் லவ் பண்றேன்.." என்று அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் குமார்.
சற்று நேரம் பேசாதிருந்தவன், "ஜக்கு, நீ ரொம்ப குழம்பிப்போயிருக்கே. தப்பு என்னோடதுதான். அந்த டைரி...எஸ். தப்புன்னு கூட சொல்லமுடியாது. உன்னைப் போதுமான அளவு கவனிக்கலையோன்னு தோணுது. நீ சின்னக்குழந்தைன்னே நினைச்சுண்டிருந்துட்டோம் நானும் உங்கம்மாவும். நீ சுயமா திங்க் பண்ண ஆரம்பிச்சுட்டதை நோட் பண்ணியிருக்கணும். ஓகே! இப்ப சொல்லு. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?" குரல் மாறாமல் அதே அன்புடன், கனிவுடன் தான் கேட்டான்.
"நீ ஏன் யாரோ ஒரு பொம்பளைய லவ் பண்ணினே? அப்படி லவ் பண்ணிட்டு எப்படி எங்கம்மாவை கல்யாணம் பண்ணிண்டே?"
"ம்ம்...சொல்றேன். உன் பாஷைலேயே சொல்லட்டுமா? அந்த யாரோ ஒரு பொம்பளை சமத்தா ஒழுங்கா இருப்பான்னு நினைச்சேன். ஆனா அவ என்ன பண்ணா? கல்யாணம் பண்ணிண்டு அமெரிக்கா போயிடலாம்னு சொன்னா. அங்க போயி நிறைய சம்பாதிக்கணும், பணக்காரனா ஆகணும்னு சொன்னா. உன் தாத்தா, பாட்டியை விட்டுட்டு யாரோ ஒரு பொம்பளையோட அமெரிக்கா போக என்னால எப்படி முடியும்? அதான் சர்தான் போடின்னு சொல்லிட்டேன். நமக்கு யார் முக்கியம்? யாரோ ஒரு பொம்பளையா, நம்ம அப்பா, அம்மாவா?"
"நீ பண்ணது கரெக்ட்!" உற்சாகமாகச் சொன்னான் ஜக்கு.
"அதான். இதுலேருந்து உனக்கு என்ன புரியறது? நான் உண்மையா அப்ப லவ் பண்ணினது எங்க அப்பா, அம்மாவைத்தான். ரைட்டா?"
"ஆமாம்!"
"இன்னொண்ணு, அவளை அப்ப லவ் பண்ணலைங்கறதும் புரியறதா?"
"அப்ப டைரில எழுதிவெச்சிருக்கியே? வயலட் புடைவை கட்டிண்டிருந்தா. அழகா இருந்தா அது இதுன்னு..."
"ம்ம்..ஒண்ணுவிடாம படிச்சியா?" என்று அவன் மூக்கைப் பிடித்துக் கிள்ளியவன், "இப்போ ஒரு சினிமா பாக்கறோம். சிம்ரன் ஒரு டிரெஸ் போட்டுண்டு வந்தா பாரு, எவ்ளோ அழகா இருக்குன்னு உங்கம்மா எவ்ளோவாட்டி டிவில பார்த்து சொல்லுவா? அந்தமாதிரிதான் அது. உங்கம்மாவுக்கு டைரி எழுதற பழக்கம் இருந்தா அதை எழுதி வெச்சிருப்பா. எனக்கு அப்போ அந்தப் பழக்கம் இருந்தது. எழுதினேன். நீ மத்த டைரியெல்லாம் படிக்கலியே? வீட்டுக்கு வந்ததும் தரேன், முழுக்கப்படி. அந்த யாரோ ஒரு பொம்பளயோட டிரெஸ் மட்டுமில்லே. இந்திராகாந்தியோட ஹேர் ஸ்டைல், மார்கரெட் தாட்சர் போட்டிண்டிருந்த சேப்பு டாலர் வெச்ச நெக்லஸ், எங்க எடிட்டரோட ஒய்ஃப் போட்டுக்கற ஹை ஹீல்ஸ் ஷூ, உங்கம்மாவோட டிரெஸ்கள் பத்தியெல்லாமும் கூட எழுதியிருக்கேன். என்னத்துக்கு இதெல்லாம்னு ஒரு சமயம் தோணினபோதுதான் டைரி எழுதறதை நிறுத்திட்டேன்..."
"அப்ப நீ அவளை லவ் பண்ணலியா?"
குமாருக்கு ஜக்குவின் பிரச்னை முழுவதுமாகப் புரிந்திருந்தது. எந்தப் பொய்யும் தாற்காலிக சமாதானத்தை மட்டுமே தரும் என்று நினைத்தான். ஆகவே எதையும் மறைக்க வேண்டாம் என்று அவனுக்குத் தோன்றியது.
"இல்லடா செல்லம். லவ் பண்றதுன்னா நீ சினிமாக்கள்ள பாக்கற லவ் இல்ல அது. ஒரு பொண்ணு. அவளைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன். நல்லவளா, அன்பானவளா இருப்பான்னு நினைச்சேன். ஆனா சரிப்படாதுன்னு தெரிஞ்சதும் சமத்தா விலகி வந்துட்டேன். பதினஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்போ நான் சந்தோஷமா இருக்கேன். அப்பா, அம்மாவோட, அன்பான உங்கம்மாவோட, என் செல்லக்குட்டி ஜக்குவோட.. அவ்ளோதான். இதுதான் நிஜமான லவ். அது லவ் கிடையாது. வேணா, அந்த யாரோ ஒரு பொம்பள ஒரு காலத்துல எனக்குத் தெரிஞ்சவளா இருந்தான்னு சொல்லலாம். அவ்ளோதான். அதுக்கு மேல ஒண்ணுமே கிடையாது! இப்ப அவ அமெரிக்கால யாரையோ கல்யாணம் பண்ணிண்டு அவ இஷ்டத்துக்கு இருப்பா. அவ எப்படிப்போனா என்ன? எனக்கு நீதான் முக்கியம். உங்கம்மாதான் முக்கியம். எங்க அப்பா, அம்மாதான் முக்கியம். புரியறதா?"
"நிஜமாவாப்பா?"
"ப்ராமிஸ்!" என்றான் குமார். ஜக்குவுக்கு மனம் இளகிக் கனிந்துவிட்டாற்போலிருந்தது. எத்தனை நல்ல அப்பா! இப்போதல்ல. எப்போதுமே. நடுவில் ஏற்பட்ட மாற்றங்கள் கூட தன்னிடம் தானே தவிர அவரிடம் அல்ல. எத்தனை தெளிவாகச் சொல்கிறார்! 'இதுதான் நிஜமான லவ். அது லவ் கிடையாது'. ரொம்ப சரி. அது எப்படி லவ்வாக இருக்கமுடியும்? மேலும் அவள் அமெரிக்காவில் யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டதாகவும் சொல்கிறாரே. அதற்குமேல் என்னவேண்டும்? அந்த நிர்மலா எக்கேடு கெடட்டும். என்னவோ ஆகட்டும். இனி அவளைச் சிந்திக்கவே மாட்டேன். காட் ப்ராமிஸ்.
"ஓ. நான் தாம்ப்பா என்னென்னவோ நினைச்சுண்டுட்டேன். ரொம்ப தப்பாவெல்லாம் நினைச்சுட்டேம்ப்பா." அவன் மீண்டும் அழத்தொடங்கினான். குமார் அவனை சமாதானப்படுத்தி, தன் மடியில் சாய்த்துக்கொண்டான்.
துக்கம் சற்று மட்டுப்பட்டதும் கட்டக்கடைசியாக ஜக்கு மிச்சமிருந்த அந்த ஒரு கேள்வியைக் கேட்டான். "அம்மாவுக்கு இது தெரியுமாப்பா?"
25
அம்மாவுக்குத் தெரியுமா?
இந்த ஒரு கேள்வியில் ஜக்குவின் முழுப்பிரச்னையும் குமாருக்குப் புரிந்தது. ஒரு பன்னிரண்டு வயதுக் குழந்தையின் சிந்திக்கும் திறன் எம்மட்டில் இருக்கும் என்று சுலபத்தில் யூகித்துவிட முடியாது போலிருக்கிறது. பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். பழகிக்கொண்டே தான் இருக்கிறோம். நேரம் கிடைத்தால் கொஞ்சுவது, அன்பு மிகுந்தால் கேட்டதை வாங்கித்தருவது, சின்னதாகவேனும் ஏதாவது சாதித்தால் ஊரெல்லாம் பெருமை பொங்கப் பேசிமாய்வது என்பதுதவிர இதுநாள்வரை ஜக்குவின் மனவளர்ச்சி குறித்துத் தாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா என்று குமார் யோசித்தான்.
கெட்டிக்காரன். புத்திசாலி. கற்பூரபுத்தி. சாது. நல்லவன். அன்பானவன். சமத்து. சொற்களூக்குள் அடங்கிவிடக்கூடியதாகவா இருக்கிறது குழந்தைகளின் இயல்பு! ஆனால் வெறும் சொற்களிலல்லவா கணித்துக்கொண்டிருக்கிறோம்!
அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. பதிலேதும் சொல்லத்தான் வேண்டுமா என்றும் ஆயாசமாக இருந்தது. ஜக்கு விநாடிக்கு விநாடி அவனை பிரமிப்பூட்டிக்கொண்டே இருந்தான். முழங்கால் அளவு உயரமே இருக்கிற குழந்தை. ஆனால் நிமிர்ந்து பார்த்தால் கூட முழுக்கத் தென்படாது போலிருக்கிறதே அவன் புத்தியின் பாய்ச்சல் எல்லை? இவன் மட்டும்தானா? எல்லாக் குழந்தைகளூமே இப்படித்தானா?
அவன் சிந்தனையைக் கலைத்தது ஜக்குவின் ஸ்பரிசம்.
"அப்பா, நான் ஒண்ணு சொன்னா திட்டமாட்டியே?"
"சேச்சே. உன்னைப்போய் திட்டுவேனாடா செல்லம்? சொல்லு."
"நான் இப்பிடி காணாமப் போகணும்னு கிளம்பினது தப்புதான். ஏன் செஞ்சேன்னு தெரியலே. ஆனா சமத்தா வந்துட்டேன் இல்லே? இதுலேருந்து என்ன தெரியறது? நான் குட்பாய். கரெக்ட் தானே?"
"சந்தேகம் என்ன? நீ எப்பவுமே குட்பாய்தான்"
"இல்லே. எப்பவும் இல்லே. அந்த டைரி படிச்சதுலேருந்து பேட்பாயா மாறிட்டேன். எனக்கே தெரியும். ஆனா இப்போ இல்லே. இனிமே இந்தமாதிரியெல்லாம் செய்யமாட்டேன். அது காட் ப்ராமிஸ்தான். ஆனா நீ ஒரு ப்ராமிஸ் பண்ணணும்"
"என்னது?"
"இந்த விஷயத்தை அம்மாகிட்டே சொல்லக்கூடாது."
"எந்த விஷயம்?"
"டைரில இருக்கற பொம்பள பத்தின விஷயம். அதனாலதான் நான் இப்படிப் பண்ணேங்கற விஷயம். அம்மா பாவம். செத்தே போயிடுவா...."
அவன் அப்படியே குழந்தையை இழுத்து இறுக்கிக்கொண்டான்.
"சேச்சே. என்ன பேசறே நீ?"
"இல்லேப்பா. நிஜமாவே. எனக்கே இவ்ளோ கஷ்டமா இருந்ததுன்னா அம்மாவுக்கு எவ்ளோ இருக்கும்? நான் பாய் தானே? அதனால நீ விளக்கி சொன்னதும் புரிஞ்சுடுத்து. அம்மா கேர்ல் இல்லியா? கண்டிப்பா அழுவா...அந்த டைரியை நீயே எங்கியாவது தொலைச்சுடு."
குமார் அவனை மிகவும் ரசித்தான். சோப்புக்குமிழின் இடையில் கண்ணுக்குத்தெரியாமல் சொருகப்பட்ட ஊசியொன்று அவன் மானசீகத்துக்குத் தென்பட்டது. சத்தமில்லாமல் உடைந்து சிதறுகிற நீத்துளிகள். அடடே, ஜக்கு பெரியவனாகிவிட்டானா என்ன?
"கவலைப்படாதடா செல்லம். அம்மாவுக்கு இது முன்னாடியே தெரியும். எப்படி உனக்குப் புரிஞ்சதோ, அதேமாதிரி அம்மாவுக்கும் அப்பவே புரிஞ்சதுதான். நிஜமாவே நீ கவலைப்படவேண்டாம்" என்றான் குமார்.
சற்றும் ஆச்சர்யம் காட்டாத முகத்துடன், "அப்படின்னாலும் சரி. ஆனா இந்த விஷயத்தை இனிமே வீட்டுல பேசவேண்டாமே ப்ளீஸ். நான் தெரியாம பஸ் மாறி ஏறிட்டேன்னே அம்மாகிட்டே சொல்லிடுப்பா. "
"ஏண்டா?"
"தெரியலேப்பா. அம்மா பாவம். ரொம்பப் பாவம். நீயும் ரொம்ப ரொம்பப் பாவம். ரெண்டுபேரையும் நாந்தான் படுத்திட்டேன்..."
"சே, என்ன பேசறே நீ? ம்? ஏன் குழப்பிக்கறே?"
"அதெல்லாம் இல்லப்பா. நீ எப்படி என்னை, அம்மாவை, தாத்தா, பாட்டியையெல்லாம் ரொம்ப ரொம்ப லவ் பண்றியோ, அதேமாதிரிதான் நானும். நிஜமா லவ் பண்றவாளை என்னவாச்சும் சொல்லி கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு தோணறதுப்பா. இப்படி எங்கியோ பஸ் ஏறிப்போய் உன்னை, எங்க டீச்சர்களையெல்லாம் எவ்ளோ கஷ்டப்படுத்திட்டேன்? அம்மாவுக்கும் விஷயம் தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படுவா? நீ நல்ல அப்பா. அதனால என்னைத் திட்டலே. அடிக்கலே. அடிச்சாலும் பரவாயில்லை. நான் தப்புதானே பண்ணேன்? ஆனா அம்மாக்குத் தெரிஞ்சி அவ அழுதா அது எவ்ளோ கஷ்டம்? வேணாம்பா. அந்த டைரில இருந்த பொம்பளயாலதான் நான் போனேன்னு தெரிஞ்சா நிச்சயம் அம்மா தாங்கவேமாட்டா... என்னைப்பத்தியும் பயப்படுவா. உன்னைப்பத்தியும் கவலைப்படுவாளே."
பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தான் குமார்.
வீட்டுக்கு வந்ததும் அம்மா பாய்ந்துவந்து அவனை அள்ளிக்கொண்டுவிட்டாள். என் செல்லமே, செல்லமே என்று இறுக்கிய அணைப்பில் அவன் தோள்கள் வலித்தன. தாத்தா ஈசிசேரை விட்டு எழுந்திருக்காமலேயே வானம் பார்த்துக் கைகூப்புவதை ஜக்கு பார்த்தான். 'நாளைக்குக் கார்த்தால திருப்பதி கிளம்பணும். எல்லாரும் ரெடியாக வேண்டியது' என்று குரல் உயர்த்தி அறிவித்துவிட்டுப் போனாள் பாட்டி.
"என்னடா ஆச்சு உனக்கு? எங்க போயிட்டே? பதறிட்டோம் தெரியுமா?"
"ஒண்ணும் ஆகலேம்மா:" என்றவன் ரகசியமாக அப்பாவை ஒருமுறை பார்த்துக்கொண்டான்.
"கேள்வியெல்லாம் வேண்டாம் மாலு. குழந்தை தவறிப்போய் வேற எதோ ஒரு பஸ்ல ஏறியிருக்கான். சுத்தின களைப்பு அப்படியே தூங்கியிருக்கான். வண்டி கிளம்பிடுத்து. அவ்ளோதான்." என்றான் குமார்.
"அவ்ளோதானா?" என்றார் தாத்தா.
"ஆமாப்பா. அவ்ளோதான்" என்று அவன் சொன்னதில் ஜக்குவுக்கு மிகவும் நிம்மதியாகிப் போய்விட்டது. ஒரு நல்ல அப்பாவால் வேறெப்படியும் நடந்துகொள்ளமுடியாது என்று உறுதியாகத் தோன்றியது. இவரா நிர்மலாவைக் காதலித்திருப்பார்? சேச்சே.
குளித்து, சாப்பிட்டு ஆனதும் ஜக்குவை அம்மா தன் மடியில் படுத்துக்கொள்ள அழைத்தாள்.
"வேண்டாம்மா. நான் கட்டில்லேயே படுத்துக்கறேன்" என்று மறுத்தவனை விநோதமாகப் பார்த்தாள் மாலு. "சரி, தூங்கு. எழுந்ததும் உனக்கொரு குட்நியூஸ் சொல்றேன்" என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்.
விட்ட இடத்திலிருந்து மீண்டும் எல்லாவற்றையும் பழைய ஒழுங்கில் தொடங்கவேண்டும் என்று அவன் நினைத்துக்கொண்டான். படிப்பு, தோட்டம், பூக்கள், பட்டாம்பூச்சி, வெங்கடாஜலபதி, குட்டி.
அடடே. அவளை மறந்தேபோனோமே என்று நாக்கைக் கடித்துக்கொண்டான். நல்லவேளை. விளையாட்டாகக் கூட அவளிடம் ஏதும் உளறிவைக்கவில்லை என்று நிம்மதியாக இருந்தது. எத்தனை சிறுகுழந்தை அவள்! பைத்தியக்காரத்தனம் முற்றி இந்த விஷயத்தைப் போய் அவளிடம் சொல்லியிருந்தால் எப்படியெல்லாம் விபரீதக் கற்பனைகள் வளர்த்துக்கொண்டிருப்பாள்! எதைச்சொன்னாலும் நம்புகிற குட்டி. எப்படிக் கோபித்தாலும் அன்பு செலுத்தினாலும் பழகுவதில் ஒரு மாறுதலும் காட்டாத குட்டி. பட்டாம்பூச்சிகளுடனும் செடி, கொடிகளூடனும் பேசுவதில்தான் எத்தனை ஆர்வம் கொண்டிருக்கிறாள். அவளிடம்போய் இப்படியொரு கதையைச் சொல்ல இருந்தோமே என்று அவனுக்குக் குற்ற உணர்ச்சியாக இருந்தது.
மாலை அவள் பள்ளிவிட்டு வரும் நேரம் பார்த்து சரியாகக் கிளம்பி அவள் பள்ளி வாசலுக்கே போய் நின்றுகொண்டான். குட்டியிடம் சொல்லுவதற்கு அவனிடம் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருந்தது. அவனுக்கொரு தம்பி அல்லது தங்கைப்பாப்பா பிறக்கப்போகிறது என்பதே அது. அம்மா அத்தகவலைச் சொன்னபோது எத்தனை சந்தோஷம் கொப்பளித்தது மனத்துக்குள்! குட்டி, குட்டிபாப்பா மற்றும் வெங்கட். அடடே, எத்தனை சின்ன, நிறைவான உலகம்! இனி தன்னை வேறெதுவுமே பாதிக்காது என்று அவனுக்கு வெகு நிச்சயமாகத் தோன்றியது.
நடையும் ஓட்டமுமாக அவன் குட்டியின் பள்ளிவாசலுக்குப் போய் மூச்சுவாங்க நின்றான்.
அவனை அங்கே பார்த்தபோது குட்டி அழுதே விட்டாள்.
"என்னடா ஆச்சு உனக்கு? காணாமபோயிட்டேன்னு சொன்னாளே எல்லாரும்?"
"சேச்சே. தோ வந்துட்டேனே" என்றான் ஜக்கு.
"எங்க போனே? எனக்குக் கூட சொல்லாம எஸ்கர்ஷன் கிளம்பினே இல்லே? உம்பேச்சு கா"
அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதல்முறையாக குட்டி காய் விடுகிறாள்!
"எங்கியும் போகலே குட்டி. பஸ் மாறி ஏறி உக்காந்துட்டேன். பத்திரமா திரும்பிவந்துட்டேனே? அப்புறம் என்ன?"
"பயந்தே போயிட்டேன் தெரியுமா?" அவள் கண்கள் நனைந்திருந்தன.
"சீ. எதுக்கு பயம்? நான் என்ன சின்னக் குழந்தையா?"
கேட்டுவிட்டானே தவிர அவன் தனக்குள் அதைத்தான் யோசித்துக்கொண்டும் இருந்தான். தான் சின்னக் குழந்தையா? இல்லையா? ஒரு சின்னக் குழந்தைக்கு இத்தனை தெரியுமா? யோசிக்கவும், குழம்பவும் தெளியவும்... ஆனால் குட்டி சின்னக் குழந்தை தான். சந்தேகமே இல்லை. சிறு குழப்பங்களுக்குக் கூட பக்குவப்படாத மனம் அவளுடையது என்று அவனுக்குத் தோன்றியது. பிறக்கப்போகிற குழந்தையும் பெண் குழந்தையாகவே இருந்து அதுவும் குட்டியைப்போலவே சமத்துக்குட்டியாக இருக்குமானால் எத்தனை நன்றாக இருக்கும்!
"என்னென்னவோ ஆயிடுத்துடா ஜக்கு. எங்கம்மா உன்னைப்பத்தி என்னென்னவோ சொல்லிட்டா. நீ லூஸாம். உன்கூட பேசக்கூடாதாம். இன்னும் என்னென்னவோ. நான் மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டேன். உன்கூட பேசாம என்னால எப்படி முடியும்?"
"ஐயோ. ஏனாம்?" என்றான் ஜக்கு.
"நான் ஏன்னு சொன்னா நீ எம்பேச்சு கா விடமாட்டியே?"
"மாட்டேன். சொல்லு"
"நீ ஒரு ஆவி பத்தி சொன்னியே. வயலட் புடைவை கட்டிண்டு உங்கப்பாவை தினம் ராத்திரி பன்னெண்டு மணிக்கு பயமுறுத்த வர ஆவி..."
"ஆமா?"
"நான் தெரியாத்தனமா அதை ரஞ்சனாகிட்டே சொல்லிட்டேன்."
"ஐயய்யோ!" கத்தியேவிட்டான் ஜக்கு.
"இல்லேடா. ப்ளீஸ். கா விட்டுடாதேயேன். முழுக்க சொல்லிடறேனே? நான் ஆவி பத்தி சொல்லவேயில்லை, ப்ராமிஸா சொல்லலை. ஒரு ரத்தக்காட்டேரிகிட்ட நீ தினம் சண்டை போட்டு ஜெயிச்சிண்டிருக்கேன்னுதான் சொன்னேன். அந்த லூஸு போய் அதை அவம்மாகிட்டே மாத்தி சொல்லிட்டா. அவம்மா எங்கம்மாகிட்டே வந்து சொல்லிட்டா.. என்னமோ எனக்கு ஒண்ணுமே பிடிக்கலே. நீ நிச்சயமா என்பேச்சு காய் விடக்கூடாதுடா, ப்ளீஸ்..." அவள் அழத்தொடங்கினாள்.
ஜக்குவுக்கு உண்மையில் சிரிப்புத்தான் வந்தது. தனியே எங்காவது போய் யார் கண்ணிலும் படாமல் விழுந்து விழுந்து சிரிக்கவேண்டும்போலிருந்தது. அடக்கிக்கொண்டு, "உம்.. சொல்லு. அப்புறம்?" என்றான்.
"நீ கெட்ட கெட்ட விஷயமெல்லாம் சொல்றியாம். அதனால உன்கூட பேசக்கூடாதாம். ரத்தக்காட்டேரி, பூதம்னு எல்லாம் பேசினா கனவுல மிரண்டு நான் அழறேனாம்...எங்கம்மா பொய் சொல்றா ஜக்கு. நான் அதெல்லாம் அழவேயில்லை. ஆனா ஏன் அப்படி சொல்றான்னுதான் தெரியலை"
அவன் சற்றுநேரம் பரிதாபமாக அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். பிறகு, "சரி, பரவாயில்லை. நான் உன்பேச்சு காய் இல்லை. பழம்தான். நான் பழம்தான்னு உங்கம்மாவுக்குத் தெரியவேண்டாம். சரியா? இதேமாதிரி நாம ஸ்கூல்லேருந்து வரும்போது வழக்கம்போல பேசிண்டே வருவோம்!"
அவளுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. சட்டென்று பேச்சை மாற்றி, " டூர் எப்படி இருந்தது? என்னெல்லாம் பார்த்தே?" என்று கேட்டாள்.
"நிறைய. தஞ்சாவூர் பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் கோயில்...மெனி ப்ளேஸஸ். அப்புறம் எல்லாம் சொல்றேன்" என்றான். "குட்டி, நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?"
"என்னது?"
"அந்த ஆவியை நீ மறந்துடு. அதெல்லாம் இப்போ இல்லை. எல்லாம் செத்துப்போச்சு."
"நிஜமாவா? எப்படி?" அவளுக்கு வாயடைத்துவிட்டது.
"ஆமா. தஞ்சாவூர்லே அது என்னை ஃபாலோ பண்ணிண்டு வந்தது. ரொம்ப யோசிச்சேன். டெய்லி இதோட சண்டைபோட்டுண்டே இருக்கவேண்டியிருக்கேன்னு ஒரே கோபம் வந்துடுத்து... நைஸா அங்க பேலஸ் மேலேருந்து பிடிச்சித் தள்ளி கொன்னுட்டேன்..."
"ஓ காட்! நீ நிஜமாவா சொல்றே?"
"ப்ராமிஸ். இனிமே அது வராது. நான் அதை மறந்தேவிட்டேன். நீயும் மறந்துடு. நாம வேற எதனா பேசலாம், விளையாடலாம். இன்னிக்கு நான் உனக்கு அணிலோட பேச கத்துத்தரேன். ரெடியா இரு. அஞ்சு மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துடு" என்று சொன்னான்.
"ஐயோ! என்னால நம்பவே முடியலேடா ஜக்கு. அணிலொட பேசமுடியுமா?"
"ஷ்யூர். நான் சொல்லித்தரேன். நீ வா. இப்போ நான் கிளம்பரேன். சரியா?"
"ம்...." என்று இழுத்தவள், "உன்கிட்டே சண்டை போடணும்னு நினைச்சுண்டிருந்தேன். என்னையும் வெங்கடாஜலபதியையும் விட்டுட்டு ஊருக்குப் போனியே, அந்த விக்கியை மட்டும் எதுக்கு கூட்டிக்கிட்டுப் போனே? அது அவ்ளோ ஒஸ்தியா?"
ஜக்கு சிரித்தான். "நிச்சயமா இல்லே. நீதான் ஒஸ்தி. வெங்கட் தான் ஒஸ்தி. போதுமா?"
"அப்ப எதுக்கு அதை மட்டும் கூட்டிண்டு போனேன்னு கேக்கறேன்?" அவள் மூக்கு சிவந்துவிட்டது கோபத்தில்.
ஜக்கு ஒரு கணம் யோசித்தான். ஒரு தீர்மானத்துடன் பிறகு சொன்னான்: "கூட்டிண்டு போனது தப்புதான். ஆனா விட்டுட்டு வந்துட்டேன்!"
***
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக