கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
காதல் கதைகள்
Backகால் கிலோ காதல் அரை கிலோ கனவு
பா. ராகவன்
உள்ளடக்கம்
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
ஒரு சொல்
1. அத்தியாயம் 1
2. அத்தியாயம் 2
3. அத்தியாயம் 3
4. அத்தியாயம் 4
5. அத்தியாயம் 5
6. அத்தியாயம் 6
7. அத்தியாயம் 7
8. அத்தியாயம் 8
9. அத்தியாயம் 9
10. அத்தியாயம் 10
11. அத்தியாயம் 11
12. அத்தியாயம் 12
13. அத்தியாயம் 13
14. அத்தியாயம் 14
15. அத்தியாயம் 15
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
கால் கிலோ காதல்
அரை கிலோ கனவு
பா. ராகவன்
மூலங்கள் பெற்றது – அன்வர் – gnukick@gmail.com
மின்னூலாக்கம் – த.சீனீவாசன் – tshrinivasan@gmail.com
உரிமை -Creative Commons Attribution-Noncommercial-No Derivative License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்
ஒரு சொல்
திருட்டு பிடிஎஃப் என்பது தேசிய குணமாகிவிட்ட காலகட்டத்தில் முறைப்படி அனுமதி பெற்று புத்தகங்களை விலையற்ற மின்னூல்களாக வழங்கும் FreeTamilEbooks.com-இன் தன்னலமற்ற சேவையை விவரிக்கச் சொற்களில்லை. பெயர், புகழ், பணம், செருப்படி என்று நான் எழுத்தில் நிறைய சம்பாதித்தவன். இழந்தவனும் கூட. அச்சுப்புத்தகங்கள் சந்தையில் உள்ளபோதே திருட்டு பிடிஎஃப் வினியோக உற்சவங்களைக் கண்டுகளித்தவன். அச்சு நூல்களின் ராயல்டியையே பிச்சுப் பிறாண்டி வாங்கும் சூழல்தான் தமிழ் எழுத்தாளர்களுக்கு. அனைத்தும் பழகிவிட்டது. எல்லாவற்றின் உளவியலையும் அறிந்து தெளிய முடிந்ததுதான் இதில் என் லாபம்.
இன்றுவரை எழுத்தால் மட்டுமேதான் வாழ்கிறேன். இருப்பினும் இந்த இலவச மின்னூல் திருப்பணியில் அணிற்பங்களிப்பதில் மகிழ்ச்சியே.
இந்நாவல் அச்சுப் பிரதியாகவும் உள்ளது. அதை வாங்கிப் படித்தாலும் சரி, அல்லது இலவசமாக இதைத் தரவிறக்கிப் படித்தாலும் சரி. எனக்குப் பிரச்னையில்லை. ஓசிப் புத்தகம்தானே என்று நீங்கள் ஒரு எடிஷன் ப்ரிண்ட் போட்டு கடைக்கு அனுப்பாதவரைக்கும் யாருக்கும் எந்தப் பிரச்னையுமில்லை.
ததாஸ்து.
பா. ராகவன்
writerpara@gmail.com
1
அத்தியாயம் 1
வீதியை அடைத்துக்கொண்டு மயில் நின்றுகொண்டிருந்தது. மேலுக்கு ஜிகினா ஒட்டி, சுற்றிலும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்ட அட்டை மயில். அதன் முதுகில் அம்பாரி மாதிரி பீடம் கட்டி, ஒரு சிம்மாசனத்தை ஏற்றியிருந்தார்கள். நாலாம் நாள், பாலவாக்கம் செல்லக்கிளி ஆச்சாரியின் கொட்டகையில் நடந்த வள்ளி திருமணம் நாடக க்ளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே சிம்மாசனம். ஸ்தாபிதம் 1929 என்று ஸ்கிரீன் முதல் செருப்பு வரை எழுதிவைத்துவிடுவது ஆச்சாரியின் வழக்கம். அதெல்லாம் கிடையாது, 1930தான் என்று யாராவது சண்டைக்கு வந்துவிடுவார்களோ என்கிற பயம் காரணமாயிருக்கலாம். சிம்மாசனத்தை விட்டுவிடுவாரா?
‘லேய், அந்த சேர் கழுத்துல ரெண்டு பூவ சுத்தி வைங்கடா. எம்பேத்தி பொறந்தது 1971தான்.’ சுந்தரமூர்த்தி முதலியாரின் குரல் வீதிக்கு வந்தபோது பத்மநாபன் அவசர அவசரமாகத் தன் காதல் கடிதத்தின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருந்தான்.
முதலியார் வீட்டு வாசலில்தான் மயில் நின்றுகொண்டிருந்தது. ஆனால் வீதி முழுவதற்குமாகப் பந்தல் போட்டிருந்தார்கள். வாடகைக்குக் கொண்டு இறக்கிய பிளாஸ்டிக் நாற்காலிகளில் பெரியவர்கள் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். சின்னாளம்பட்டுப் புடைவையும் கொண்டையைச் சுற்றிய கனகாம்பரப் பந்துமாக அவர்தம் சம்சாரங்கள் [அவரவர் சம்சாரம் என்று பாடம்.] பிரிஞ்சிக்குப் பிறகு கிடைத்த கோலி சோடாவை வீணாக்க விரும்பாமல் பாதி சாப்பிட்டுவிட்டு, யாரும் பார்க்கிறார்களா என்று கவனித்தவண்ணம் மீதியில் கைகழுவினார்கள்.
‘தம்பி, சோடா குடிக்கிறியா? கலரு சோடா.’
எழுதிக்கொண்டிருந்த காகிதத்தை சரேலென்று பாக்கெட்டில் திணித்து மறைத்தபடி பத்மநாபன் தலை நிமிர்ந்தபோது வீரபத்திரன் கையில் நாலு சோடா பாட்டில்களுடன் எதிரே இந்திரஜித் போல நின்றுகொண்டிருந்தான்.
‘வேணாம்.’ அவன் உடனே நகர்ந்துவிட்டால் நல்லது என்று தோன்றியது. ஆனால் முறைத்தான்.
‘என்னாத்த மறைச்சே? என்னா எளுதுற? நாம்பாக்கலேன்னு நெனச்சியா? அதெல்லாம் கரீட்டா நோட் பண்ணிருவேன்.’
‘அ.. ஆமா. இல்லியே?’ சே. சொதப்பிவிட்டேன். இவனுக்கு எதற்கு நான் பயப்படுகிறேன்? பத்து பைசா பிரயோஜனமில்லாத வெறும்பயல். எழுதிய தாளைப் பிடுங்கிக்கொண்டால்கூட எழுத்துக்கூட்டிப் படிக்கத் துப்பில்லாதவன். வளர்மதி வீட்டில் எடுபிடி வேலை செய்துகொண்டிருக்கிறவன். பரட்டைத் தலையும் முரட்டுப் பார்வையும் அண்டர்வேர் தெரிய மடித்துக் கட்டிய லுங்கியும் இரட்டை இலையைப் பச்சை குத்திய புஜம் தெரிய மடித்துவிடப்பட்ட சட்டையுமாக எப்போது பார்த்தாலும் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பவன். அதுவும் ஊ.. ஆ.. என்கிற சுருதியோடு வெளிப்படுகிற கொட்டாவி.
முதலியார் பொதுவில் அவனை மூதேவி என்று அழைப்பது வழக்கம். ஆரம்பத்தில் அது குறித்து வருத்தப்பட்டிருப்பானோ என்னவோ. காலப்போக்கில் அவனது பெயர் வீரபத்திரன் என்பது அவனுக்கே மறந்து, ‘லேய் மூதேவி’ என்றால் மட்டுமே திரும்பிப் பார்க்கக்கூடிய விதத்தில் முதலியார் வீட்டு வாழ்க்கைக்குப் பழகிப்போனான்.
‘பாவம்டா. அவன் ஒரு ஸ்லேவ். ஆனா அந்த வாழ்க்கையை ரொம்ப விரும்ப ஆரம்பிச்சிட்டான்’ என்று ஒரு சமயம் கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியிலேயே மிகவும் புத்திசாலி என்று புகழப்படும் பன்னீர் செல்வம் சொன்னான். அவன் சொன்னபிறகு மூன்று நாள்கள் ‘ஸ்லேவ்’ என்றால் என்னவென்று கண்டுபிடிக்க பத்மநாபனும் பாபுவும் கலியமூர்த்தியும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்கள். இறுதியில் எந்த முயற்சியும் பலனளிக்காமல் அவனிடமே விசாரித்தபோது, ‘ரெ·பர் டு தி டிக்ஷனரி’ என்று சொன்னான்.
‘விடுடா. அவனுக்கு ரொம்ப ஹெட் வெயிட். தனக்குத்தான் இங்கிலீஷ் தெரியும்னு ஒரு இது. எதுக்கானா நம்மாண்ட வராமலா போயிடுவான்? அப்ப பாத்துப்போம்’ என்று கலியமூர்த்தி வெஞ்சினம் கொண்டான்.
பத்மநாபன் அன்றைக்கு ஒரு முடிவுடன் வந்திருந்தான். என்ன ஆனாலும் சரி. இன்றைக்கு வளர்மதியிடம் தன் உள்ளக்கிடக்கையைச் சொல்லிவிடுவது. ஆங்கில அறிவிலும் இன்னபிறவற்றிலும் தன்னிகரற்ற உயரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் பன்னீரை வெற்றிகொள்ளத் தனக்கிருக்கும் ஒரே வழி அதுதான். ஒருவகையில் அது இப்போது அவசரமான விஷயமும் கூட.
அவனுக்குத் தெரிந்து, அவன் வகுப்பில் மொத்தம் ஐந்துபேர் வளர்மதியைக் காதலித்துக்கொண்டிருந்தார்கள். சீட்டிப் பாவாடையும் ரெட்டைப் பின்னலும் முதுகில் தொங்கும் புத்தக மூட்டையுமாகப் பள்ளிக்கு வருகிற வளர்மதி. அடேயப்பா. எத்தனை பெரிய கண்கள் அவளுக்கு. விரித்து வைத்து ஒரு படமே வரைந்துவிடலாம் போல. பாய்ஸ¤டன் பேசுவது கெட்ட காரியம் என்று இருந்த நூற்றாண்டு கால வழக்கத்தை முதல் முதலில் ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் மாற்றி எழுதியவள் அவள்தான்.
‘பத்து, உன்னை ஏண்டா எல்லா பசங்களும் குடுமிநாதன்னு கூப்பிடறாங்க? நான் பாத்து நீ குடுமியோட இருந்ததில்லையே?’ என்று திடீரென்று ஒருநாள் அவனிடம் கேட்டாள் வளர்மதி.
வளர்மதி தன்னிச்சையாகத் தன்னிடம் பேச வந்ததில் திக்கிமுக்காடிப்போன பத்மநாபன், அவள் பேச எடுத்துக்கொண்ட கருப்பொருள் பற்றி லேசாக அதிருப்தி கொண்டான். ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘ப்ச்.. புவர் ·பெல்லோஸ்’ என்று பன்னீர் எப்போதோ உபயோகித்த ஒரு சொல்லை கவனமாக நினைவின் அடுக்குகளில் தேடி எடுத்து ஒலிபரப்பினான்.
‘இல்ல.. சும்மா தெரிஞ்சிக்கணும்னுதான் கேட்டேன். சின்ன வயசுல நீ குடுமி வெச்சிருப்பியா?’
‘இல்ல வளரு. ஆறாவது படிக்கசொல்ல ஒருவாட்டி பழனிக்கு நேர்ந்துக்கிட்டு முடி வளர்த்துக்கிட்டிருந்தேன். அப்ப நம்ம பாண்டுரங்கன் சார் அப்பிடி கூப்புடுவாரு. அதையே புடிச்சிக்கிட்டு.. சே.’
‘வருத்தப்படாதடா. அப்படி கூப்பிட்டாக்கூட நல்லாத்தான் இருக்கு. நானும் கூப்பிடவா?’
‘அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேண்டாம் என்று அவசரமாக மறுக்கப் பார்த்தான். ஆனால் கோபித்துக்கொண்டு ஒருவேளை அவள் பேசாதிருந்துவிட்டால்?
அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம். ஏனைய பையன்கள் அத்தனைபேரும் அவளுடன் ஒருவார்த்தை பேசிவிடமாட்டோமா என்று தவம் இருக்கும்போது அவளாக வலிய வந்து பேசியிருக்கிறாள். இது மட்டும் பன்னீருக்குத் தெரிந்தால் பொறாமைச் சூட்டில் வெந்தே செத்துப் போய்விடுவான். ஒவ்வொரு பரீட்சையிலும் முதல் ரேங்க் எடுத்து என்ன புண்ணியம்? அவன் வாழ்நாளெல்லாம் வளர்மதியை நினைத்து மனத்துக்குள்ளேயே மறுகிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.
நான் அதிர்ஷ்டசாலி. சந்தேகமில்லாமல் அதிர்ஷ்டசாலி. வேறு யாரிடமும் காணமுடியாத ஏதோ ஒரு சிறப்பம்சம் என்னிடத்தில் இருக்கிறது. மடையன், எனக்குத் தெரியாது போனாலும் வளர்மதிக்கு அது தெரிந்திருக்கிறது.
அதன்பிறகு ஒருசமயம் வீட்டுப்பாடத்தில் அவன் செய்திருந்த குளறுபடியை அவள் எடுத்து சரி செய்து கொடுத்தாள். பிறிதொரு சமயம் பள்ளி மைதானத்தில் அவன் சா·ப்ட் பால் ஆடிக்கொண்டிருந்தபோது அடித்த ஒரு ஷாட்டுக்குக் கைதட்டினாள். பாரதிவிழா பேச்சுப்போட்டியில், பெருமாள் வாத்தியார் எழுதிக்கொடுத்த அசகாயப் பேச்சை உருப்போட்டு அவன் ஒப்பித்தபோது பாராட்டினாள். பரிசு கிடைத்தபோது இன்னொருமுறை பாராட்டினாள்.
அவனது காதல் வேகம் பிடிக்கத் தொடங்கி இரவும் பகலும் வளர்மதி, வளர்மதி என்று உள்ளுக்குள் உருகத் தொடங்கியபோதுதான் திடீரென்று ஒருநாள் அவள் பள்ளிக்கு வரவில்லை. எதனால் என்று புரியாமலேயே அவனுக்கு அழுகை வந்தது.
இதென்னடா விபரீதமாய்ப் போச்சே என்று மறுநாள் அடித்துப் பிடித்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றபோது, அன்றைக்கும் அவள் வரவில்லை. தற்கொலை பண்ணிக்கொண்டுவிடலாம் என்று முதலில் தோன்ற, சில நிமிடங்கள் யோசனையை ஒத்திப்போட்டுவிட்டு அவள் வீட்டுக்கே சென்று பார்த்துவிடலாம் என்று நினைத்தான். அதிலும் பிரச்னை. பையன்கள் யாருக்காவது தெரிந்துவிட்டால் சத்துணவுக்கூட சுவரில் கரியால் எழுதிவிடுவார்கள். குடுமிநாதன் – வளர்மதி காதல். வீட்டுக்குப் போய் விசாரித்துவிட்டு வந்த வீரன் கதை கேளீர்.
சத்துணவுக்கூட சுவர் செய்திகளால் சித்தியடைந்தது. ஏற்கெனவே ஏழெட்டுக் காதல் கதைகளை அரங்கேற்றிய சங்கப்பலகை அது. அதில் இடம்பெறும் பேறு பெற்ற யாரும் ஹெட் மாஸ்டரின் பிரம்படிக்குத் தப்பித்ததில்லை. பயமாகத்தான் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே விஷயம் வகுப்பறைக்கு வந்துவிட்டது. வளர்மதியின் தோழி ராஜாத்திதான் தகவல் ஒலிபரப்பினாள். வளர்மதி வயசுக்கு வந்துவிட்டாள்.
ஏற்கெனவே அவளைக் காதலித்துக்கொண்டிருந்த ஐந்து பேருடன், அந்தக் கணம் புதிதாக மூன்று காதலர்கள் அவளுக்காக அவதரித்தார்கள். வயதுக்கு வந்துவிட்ட வளர்மதி. இனி தாவணி அணிந்து பள்ளிக்கு வரப்போகிற வளர்மதி. தாவணியில் அவள் எப்படி இருப்பாள்? ஐயோ, கடவுளே, எனக்கு மட்டும் கவிதை எழுதத் தெரிந்தால் இன்னேரம் இரண்டு குயருக்கு எழுதித் தள்ளியிருப்பேனே.
எத்தனையோ தருணங்களில் தனக்கு வாழ்த்துச் சொன்ன வளர்மதிக்குத் தான் இப்போது ஏதாவது சொல்லி அல்லது செய்தாகவேண்டும். கண்டிப்பாக, பன்னீருக்கு முன்னதாக. அவனுக்குக் கிடைத்திருந்த தகவலின்படி, வளர்மதி மீண்டும் பள்ளிக்கு வந்ததும் உடனடியாகப் பன்னீர் செல்வம் அவளிடம் தன் காதலை ‘ஓப்பன்’ பண்ணப்போகிறான். வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் பெறும் மாணவனின் காதலை அவள் ஒருக்காலும் மறுக்கமாட்டாள்.
எனவே முந்திக்கொண்டுவிடுவது என்று முடிவு செய்துதான் மயில் ஜோடித்திருந்த அவள் வீட்டு வாசலுக்குச் சென்று உட்கார்ந்து, கடிதம் எழுதிக்கொண்டிருந்தான். பாக்கெட்டில் ஒரு ரோஜாப்பூ வைத்திருந்தான். யார் கண்ணிலும் படாமல் கொடுத்துவிட முடிந்தால் அதி உன்னதம்.
அன்புமிக்க வளர்மதி, உன் பிரியத்துக்குரிய பத்மநாபன் என்கிற குடுமிநாதன் எழுதிக்கொள்வது. இப்பவும் நீ பெரியவளாகிவிட்ட விஷயம் கேள்விப்பட்டு உளமார மகிழ்ந்தேன். நான் படித்து முடித்துப் பெரியவனாகி, ஓர் உத்தியோகத்தைத் தேடிக்கொண்டு, உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுதும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்று எங்கள் குலதெய்வம் திருப்போரூர் முருகப்பெருமான் மீது ஆணையாக உறுதி கூறுகிறேன். என் காதலை ஏற்றுக்கொண்டு என்னை அங்கீகரிப்பாய் என்று திடமாக நம்புகின்றேன். படித்ததும் இக்கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிடவும். யாருக்கும் தெரியாமல் படிக்கவும். இவண், கு.வெ. பத்மநாபன்.
எழுதியதைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தான். ஒரு சமயம் சரியாக இருப்பது போலவும், இன்னொரு சமயம் சுத்த அபத்தம் என்றும் மாற்றி மாற்றித் தோன்றியது. முதலில் ஆங்கிலத்தில் எழுதலாம் என்றுதான் நினைத்தான். My dear uncle, Iam fine. How are you? It is very kind of you to have sent me such a nice fountain pen. I shall make the best use of it. I like it very much என்று தொடங்கி ஏழெட்டு வரிகளுக்கு நீளும் செகண்ட் பேப்பர் மாதிரிக் கடிதம் ஒன்றை எடிட் செய்து தக்க மாறுதல்களுடன் காதல் கடிதமாக உருமாற்றியும் வைத்திருந்தான். [My dear Valarmathi, Iam fine. How are you…] ஆனால் இறுதிக் கணத்தில் முடிவை மாற்றிக்கொண்டான். அந்நிய மொழியை அதிகம் நம்புவதற்கில்லை.
பயமும் படபடப்பும் ஆர்வமும் மேலோங்க, வியர்வையைத் துடைத்தபடி எழுந்தான். வளர்மதி மயிலுக்கு வந்திருந்தாள். சரிகை பார்டர் வைத்த பச்சை கலர் பட்டுத் தாவணியில் அம்மன் போலல்லவா இருக்கிறாள்! உறவினர்களும் மற்றவர்களும் கன்னத்தில் தடவிய சந்தனம் காய்ந்து தனியொரு எழிலை அவளுக்குத் தந்திருந்தது.
மாமன்கள் சீர் செய்துகொண்டிருந்தார்கள். தயங்கி நின்றது போதும் என்று முடிவு செய்து, மனத்துக்குள் முருகா, முருகா, முருகா, முருகா என்று சொல்லியபடியே மெல்ல முன்னேறி மயிலுக்கு அருகே சென்றான்.
சட்டென்று தோளில் ஒரு கைவிழுந்தது. வீரபத்திரன்.
‘என்னா? கி·ப்டு கொண்டாந்துக்கிறியா? என்னாண்ட குடுத்துட்டுப் போ. நீயெல்லாம் மேல போவக்கூடாது பத்து. இது பொம்பளைங்க மேட்டரு. பெரியவங்க மேட்டரு’
‘ஒரே நிமிசம் வீரபத்திரா. வாழ்த்து சொல்லிட்டுப் போயிடறேன்.’
‘அடச்சே கசுமாலம். வாள்த்தறானாம் வாள்த்து. உங்கப்பாருக்கு நீ இங்க வந்திருக்கறது தெரியுமா?’
சே. இழவெடுத்தவன். எந்த நேரத்தில் யாரை நினைவுபடுத்துகிறான்? எல்லாம் தெரியும் போ என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று அருகே போனான்.
வளர்மதி சிரித்தாள். ‘என்னடா? இங்க எப்ப வந்த?’
‘இப்பதான் வளரு.. வந்து..’
பேசத் தொடங்கியவன், இயற்கையான உந்துதலால் மெல்லத் திரும்பிப் பார்த்தான். அதிர்ச்சியாக இருந்தது. அழுகை வந்தது.
2
அத்தியாயம் 2
இது ஒரு சதி. கடவுள் அல்லது சாத்தானின் அதிபயங்கரக் கெட்ட புத்தியின் கோரமான வெளிப்பாடு. இல்லாவிட்டால் ·பர்ஸ்ட் ரேங்க் பன்னீர் செல்வம் ஏன் வளர்மதியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரவேண்டும்?
பத்மநாபனுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. பீமபுஷ்டி லேகிய விளம்பரத்தில் தோன்றும் புஜபலபராக்கிரமசாலி சர்தார் தாராசிங்கைப் போல் தன் சக்தி மிகுந்து பன்னீரைத் தூக்கிப்போட்டு துவம்சம் செய்ய முடிந்தால் தேவலை. ஆனால் கடவுளே, என்னை ஏன் அரைநிஜார் அணிந்த பல்லிபோல் படைத்தீர்?
அது பிரிதொரு அவலம். பூவுலகில் அப்பாக்களாக அவதரித்த யாருமே பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பதில்லை. கேவலம் ஒரு பேன்ட் வாங்கித்தர யோசிக்கும் அப்பா. பத்மநாபன், இதன் பொருட்டும் பலதடவை வீட்டில் சத்தியாகிரகங்கள், தர்ணாக்கள், கண்ணீர்ப் பெருக்குத் திருவிழாக்கள் நடத்திப் பார்த்திருக்கிறான். வாய்ப்பே இல்லை. இரண்டு எல்.ஜி. கூட்டுப் பெருங்காயப் பைகளை இணைத்துத் தைத்த மாதிரி அரை நிஜார்கள் வீடெங்கும் விரவிக் கிடக்கின்றன. வருடத்துக்கு ஒருமுறை புடைவை நீளத்துக்கு காக்கி நிறத்தில் துணி வாங்கி வந்துவிடுகிற அப்பா. (கோஆப்டெக்ஸின் பொங்கல் சிறப்புத் தள்ளுபடி 35%) ‘வளர்ற பையன்’ என்று சொல்லிச் சொல்லியே எப்போதும் தொளதொளவென்று தைத்துத் தள்ளிவிடுகிற புளியமரத்தடி டெய்லர் தாமோதரன். பத்மநாபனுக்கு, டிராயர் அணியும் போதெல்லாம் தானொரு கார்ட்டூன் ஆகிவிடுவது போலத் தோன்றும்.
ஆனால் பாழாய்போன பன்னீர்செல்வம் இன்றைக்கு பேன்ட் அணிந்து வந்திருக்கிறான். முதல் ரேங்க் வாங்குபவர்களின் அப்பாக்கள் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் புளியமரத்தடி தாமோதரனை ஒரு டெய்லராகக் கருதுவதே இல்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் பன்னீர்செல்வம் பலப்பல வண்ணங்களில் பேன்ட் அணிகிறான். பள்ளிக்குக்கூட டெரி காட்டன் காக்கி பேன்ட். அவனுடைய கால் சட்டைகளும், மேல் சட்டைகளும் அடையாறில் ஏசி போட்ட கடையொன்றில் நவீனமாகத் தைக்கப்படுகின்றன. குழலூதும் கண்ணனைப் போலவும் சுனில் மனோகர் கவாஸ்கரைப் போலவும் அவன் ஒரு காலுக்கு இன்னொன்றை ஒட்டுக் கொடுத்து நிற்கிற ஸ்டைலுக்கே பள்ளியில் ராஜாத்தியும் பேபியும் வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள்.
அயோக்கிய ராஸ்கோல், அவர்களில் ஒருவரைக் காதலிக்காமல் ஏன் என் உயிரினும் மேலான வளர்மதியையே குறிவைத்துக் காய் நகர்த்த வேண்டும்?
பத்மநாபனுக்கு வயிறு எரிந்தது. கோபம் கோபமாக வந்தது.
‘ஹாய் குடுமி! வளர் ஒன்லி ஆஸ்க்டு மி டு கம் டுடே. ஐயம் சர்ப்ரைஸ்ட் டு ஸீ யூ ஹியர்’ என்று பன்னீர் சொன்னான்.
கோபத்தைக் கிளறிவிட ஒரு வரியில் மூன்று விஷயங்கள். தன்னைப் பொதுவில் குடுமி என்று அழைத்தது முதலாவது. ஆங்கிலத்தில் பேசியது அடுத்தது. மூன்றாவதும் முக்கியமானதுமான விஷயம், வளர்மதியே இவனை வரச் சொல்லியிருக்கிறாள் என்பதாகும்.
பத்மநாபனுக்குக் கண்ணில் நீர் திரண்டு விட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். அவனுடன் ஏதும் பேச வேண்டாம் என்று நினைத்தான். ஆனால் வளர்மதியிடம் பேசியாக வேண்டும். இரண்டில் ஒன்று இன்றைக்குத் தெரிந்தாக வேண்டும்.
‘வளரு! நீயா இவனை வரச் சொன்ன?’ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவன் கேட்டது, மயில் மீதிருந்த வளர்மதிக்குக் கேட்கவில்லை. அவள் பார்வையெல்லாம் வந்து சேர்ந்து கொண்டிருந்த பரிசுப் பொருள்களின் மீதே இருந்தது.
‘ஏ, யாரப்பா இங்க ஒரே ஆம்பள பசங்க கூட்டமா இருக்கு? நகர சொல்லு அவங்கள!’
எங்கிருந்தோ ஒலித்த சுந்தரமூர்த்தி முதலியாரின் குரலுக்கு ஸ்லேவ் ஓடி வந்தான்.
‘ஏன்டா, இங்க நிக்காதீங்கன்னு எத்தினிவாட்டி சொன்னேன்? மொதலியார் கூவுறாரு பாரு. உங்கப்பாவாண்ட விசயம் போவுறதுக்குள்ள இடத்த காலி பண்ணு, நவுரு, நவுரு…’
‘நத்திங்பா! ஐ ஜஸ்ட் வான்டட் டு கன்வே மை க்ரீட்டிங்ஸ்!’ என்று அவன் தோளில் தட்டி, பன்னீர் நகர முற்படுகையில் ஸ்லேவ், அவன் கையில் ஒரு கலர் சோடவைத் திணித்தபடி ‘நான் உன்ன சொல்லல தொர’ என்றது மேலும் எரிச்சலாக இருந்தது.
நல்லது. உலகம் பழிவாங்குகிறது. ஒரு காதல் கடிதம் கொடுக்கப்படாமலேயே கிடக்கிறது. கடங்காரன் பன்னீர் வந்து கெடுத்து விட்டான். வளர்மதி சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது கொடுத்தால், விளைவு வேறுவிதமாக இருப்பினும் விபரீதமாகாது என்றூ எண்ணியே பத்மநாபன் அந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான். தவிரவும் தன் உள்ளக் கிடக்கை அவளுக்கு முன்கூட்டியே ஒருவாறு தெரிந்திருக்கும் என்றும் நம்பியிருந்தான்.
அப்படியிருக்கையில் ஏன் தன்னை அழைக்காமல் பன்னீரை அவள் அழைத்தாள்?
புரியவில்லை.
மிகவும் குழப்பமாகவும் துக்கமாகவும் இருந்தது. ஒருவேளை வளர்மதி பன்னீரை லவ் பண்ணுகிறவளாக மட்டும் இருந்து விட்டால் இந்த உலகில் தான் இனியும் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று அவனுக்குத் தீர்மானமாகத் தோன்றியது.
பத்மநாபன் அதுகாறும் ஆறு பேரைக் காதலித்திருக்கிறான். ஏழாம் வகுப்பில் இருந்தபோது பொற்கொடி. எட்டாவதில் ஜெயலலிதா, தனலட்சுமி, ராதிகா. எட்டாம் வகுப்பு விடுமுறையில் விக்டோரியா. ஒன்பதாம் வகுப்புக்கு வந்த புதிதில் பிரேமகுமாரி.
அவற்றையெல்லாம் எப்படிக் காதல் என்பது? எதுவும் ஒரு சில மாதங்களுக்குமேல் நீடித்ததில்லை. நண்பர்கள் அனைவரிடமும் தனது காதலை ஒரு சுற்று சொல்லி முடிப்பதற்கு முன்னால் அது காணாமல் போயிருக்கும்.
அவனுக்கு ·ப்ளாஸ்கில் வைத்த காப்பிதான் எப்போதும் நினைவுக்கு வரும். ஊற்றி வைத்த சில மணி நேரங்களுக்குப் பொறுக்க முடியாத சூடு. எப்போது குளிர்ந்து போகத் தொடங்கும் என்றே தெரியாது. ஆறிய பிறகு வாயில் வைக்கச் சகியாது காப்பி என்னும் கசப்பு பானம்.
‘ஆனா வளர்மதி விசயம் அப்படி இல்லடா. என்னிக்கு அவளைக் காதலிக்கத் தொடங்கினேனோ, அன்னியலேருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அவளை நினைச்சாலே மனசுக்குள்ள ஜல்னு ஒரு சலங்கை சத்தம் கேக்குதுடா. காதெல்லாம் சூடாயிடுது. தரைல கால் வெச்சா, பஞ்சுமூட்டைமேல வெக்கிற மாதிரி இருக்கு. விக்டோரியா, தனம், ராதிகாவைக் காதலிக்கும்போதெல்லாம் இப்படி இருந்ததில்லைடா’ என்று பலசமயம் தன் உயிர் நண்பன் தண்டபாணியிடம் அவன் சொல்லியிருக்கிறான்.
நான்கு வருடங்களில் 17 பேரைக் காதலித்துவிட்டு பதிலுக்கு யாராலும் காதலிக்கப்படாமல் கைவிடப்பட்டவனான தண்டபாணி, இதுவிஷயத்தில் பொதுவாக கருத்து சொல்வதில்லை. வகுப்பில் ஒவ்வொரு பையனும் யாரேனும் ஒருத்தியைக் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் யாரேனும் ஒரு பையன் மீது விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் யாரும் வெளிப்படுத்துவதில்லை. இது நடைமுறையில் இல்லாத இல்லாத விஷயமாகக் கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அறியப்பட்டிருக்கிறது. மரபு மீறுவது நல்லதல்ல. காலக்ரமத்தில் ஹெட்மாஸ்டருக்குச் சேதி போய்ச் சேர்ந்தால், விபரீதங்கள் விளையத் தொடங்கும். ப்ரேயரில் முட்டி போடு. கிரவுண்டை நாலுமுறை சுற்றி ஓடிவா. வகுப்புக்கு வெளியே நில். அப்பாவை அழைத்து வா.
பொதுவாக உத்தமர்களான அப்பாக்கள் இம்மாதிரியான புகார்களை விரும்புவதில்லை. அடி பின்னியெடுத்துவிட்டு அம்மாமார்களை அழைத்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்கச் சொல்லுவார்கள். அந்தக் காதல் அந்தக் கணமே அடக்கம் செய்யப்பட்டுவிடும். ஏனோ சம்பந்தப்பட்ட பெண்ணை மறுநாள் பார்க்கும்போது அந்த ‘ஜல்’ இருக்காது. ஆன்மாவுக்குள் விஷக்கிருமிகளை ரகசியமாகப் புகுத்திவிடும் அப்பாக்கள்.
பத்மநாபன் இந்தமுறை வளர்மதியைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து, தண்டபாணி ஒருவன்தவிர வேறு யாரிடமும் வாய் திறக்கவில்லை. ரகசியம் காக்கப்படும்போது காதலின் வாசனை அதிகரிக்கிறது. அதன் மென் அழுத்தம் மேலும் சுகமூட்டுகிறது. தவிரவும் சொல்லாத காதல் சுகமான அவஸ்தை.
காதலிக்கிறவளிடமுமா?
அதனால்தான் சொல்லிவிடலாம் என்று கிளம்பிவந்தான். கேடுகெட்ட ·பர்ஸ்ட் ரேங்க் பன்னீர் சொதப்பிவிட்டான்.
ஏழு நாள் கழித்து வளர்மதி பள்ளிக்கு வரத் தொடங்கினாள். நீலத் தாவணியும் வெள்ளைச் சோளியும். இரட்டைப் பின்னலும் பட்டாம்பூச்சிபோல் சிறகு விரித்த ரிப்பனும். மேலான வெட்கமும் மெலிதான புன்னகையும்.
பார்த்த கணமே பத்மநாபனுக்குக் கிறுகிறுவென்று ஆகிப்போனது. வளர்மதி ஐ லவ் யூ, வளர்மதி ஐ லவ் யூ என்றூ கணக்கு நோட்டுப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் இருபது முறை எழுதி, தண்டபாணியின் பக்கம் நகர்த்தினான்.
அவன், ‘அவகிட்ட காட்டுடா’ என்று எழுதி மீண்டும் இவன் பக்கம் நகர்த்த, இந்த சந்தோஷ விளையாட்டு என்னவென்று புரியாமல் மூன்றாம் பெஞ்சு முழுதும் குழப்பமடைந்தது. சலசலப்பு எழுந்தது.
‘உஷ்’ என்றார் கணக்கு வாத்தியார் மகாலிங்கம். பொதுவாக மாணவர்களுக்கு அவரைப் பிடிக்காது. கணக்குப் பாடம் எடுப்பதனால் மட்டுமல்ல. பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகவும் ஸ்கவுட்ஸ் மாஸ்டராகவும் விசாரணை அதிகாரியாகவும் அவரே இருப்பதுதான் காரணம். தவிரவும், பிறந்ததிலிருந்து சிரித்திராதவர். மாணவர்களின் அதிகபட்சப் பொழுதுபோக்காக ‘வருவான் வடிவேலன்’ படத்தை ராஜலட்சுமி திரையரங்கம் திரையிட்டால் மட்டும் பார்க்கலாம் என்கிற கொள்கையில் அழுத்தமான பிடிப்பு கொண்டவர்.
‘என்னடே?’ என்றார் மகாலிங்க வாத்தியார்.
‘தெர்ல சார். குடுமிதான் சிரிக்கிறான் சார்.’
‘எதுக்குடா சிரிக்கிற?’
‘ஒண்ணும் இல்ல சார். இவன் சும்மா போட்டுக் குடுக்கறான் சார்.’
‘இரண்டு பேரும் உதைபடப் போறீங்க. ஜாக்கிரதை. என்ன பார்த்துக்கிட்டிருந்தோம்? பகா எண்கள். ஆங்… பகா எண் அப்படின்னா…’
பத்மநாபனுக்கு வகுப்பு பிடிக்கவில்லை. தான் அநாவசியமாக நாளையும் பொழுதையும் கடத்துகிறோம் என்று தோன்றியது. இதற்கு மேலும் கடத்தினால் கண்டிப்பாகப் பன்னீர் முந்திக் கொண்டு விடக்கூடும்.
ஒரு முடிவுக்கு வந்தவனாக, அந்த வகுப்பு முடிந்து அடுத்த ஆசிரியர் வருகிற இடைவெளியில் சட்டென்று எழுந்து வளர்மதியிடம் சென்றான்.
‘என்னடா?’
‘வந்து… நீ ஏன் அன்னிக்கு ·பங்ஷனுக்கு என்னைக் கூப்புடல? நானே தான் வந்தேன்.’
‘சீ போடா லூசு. இதுக்கெல்லாம் உன்னிய மாதிரி பசங்கள கூப்புட மாட்டாங்க.’
‘பன்னீரை மட்டும் ஏன் கூப்ட்ட?’
அவள் ஒரு கணம் பன்னீரைப் பார்த்தாள்.
‘அப்படின்னு அவன் சொன்னானா?’
‘ஆமா.’
‘பொய் சொல்லியிருக்கான்.’
பத்மநாபனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. மனமும் ஆன்மாவும் கொதிப்பு அடங்கியது போல் லேசாகிவிட்டது.
‘டேய்! இந்தப்பக்கம் வாடா. எப்பப்பார் கேர்ள்ஸ் பக்கம் என்ன பேச்சு?’
சட்டென்று பின்புறம் தோளில் கைவைத்து இழுத்தது பழனி வாத்தியார் என்று அடித்த வாடையிலேயே தெரிந்தது.
‘இருங்க சார், கணக்குல ஒரு சந்தேகம் கேட்டுக்கிட்டிருக்கேன்.’
‘பிச்சுப்புடுவேன் படுவா, கணக்கு சந்தேகம் கேக்கற மூஞ்சிய பாரு.’
‘இந்த மூஞ்சி கணக்கு சந்தேகம் கேக்கலைன்னா வேற என்ன சார் கேக்குது?’ என்றான் கடைசி பெஞ்ச் கலியமூர்த்தி. அவனுக்கு வெகுநாட்களாகவே பத்மநாபன் மீது ஒரு கண்.
‘பசங்களா! ஒழுங்கா படிச்சி பாஸ் பண்ற வழியப் பாருங்க. இந்த ஸ்கூல்ல நைன்த் பி மட்டும் ரொம்ப கெட்ட கிளாஸா இருக்குன்னு ஸ்டா·ப் ரூம்ல அடிக்கடி புகார் வருது. எச்.எம். ரொம்ப கோவத்துல இருக்கார், சொல்லிட்டேன். என்ன வேணா பண்ணுங்க. பொண்ணுங்களோட பேசற வேலை மட்டும் வெச்சிக்காதீங்க.’
பத்மநாபன் அந்தக் கணம் முடிவெடுத்தான். இம்முறை அதிக அலங்காரங்கள் இல்லாமல், மிக மென்மையாக உள்ளத்தைத் தொடும் விதத்தில் ஒரு கடிதம் எழுதினான். மறக்காமல் செய்திச் சுருக்கத்தை ‘ஐ லவ் யூ’ என்று தலைப்பில் வைத்தான்.
வகுப்புகள் முடிந்து வளர்மதி வீட்டுக்குக் கிளம்பும்போது ‘ஒரு நிமிஷம்’ என்று கூப்பிட்டு அவள் கையில் நேரில் அளித்தான்.
‘என்னது?’
‘பொண்ணுங்களோட பேசக்கூடாதுன்னு பழனி சார் சொன்னாரில்ல? அதான் எழுதி இருக்கேன். லவ் லெட்டர். வீட்டுக்குப் போயி படிச்சுப்பாரு’ என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே ஓடினான்.
‘என்னதுடி?’ என்று கேட்டபடி அவளது தோழி ஜெயலட்சுமி அருகேவர, ‘இவனும் லவ் லெட்டர் குடுத்திருக்கான்டி. இதோட சேர்த்து மொத்தம் பதினொண்ணு!’ என்று சிரித்தாள்.
3
அத்தியாயம் 3
தையூர் பண்ணையாரின் தோப்புக்குள் சுவரேறிக் குதித்து பத்மநாபன் பம்ப் செட் கிணற்றை அடைந்தபோது அவனது நண்பர்கள் ஏற்கெனவே கிணற்றுக்குள் குதித்திருந்தார்கள்.
‘ஏண்டா லேட்டு?’ என்றான் பனங்கொட்டை என்கிற ரவிக்குமார். பண்ணையார் கிணற்றை நாரடிப்பதற்காகவே திருவிடந்தையிலிருந்து சைக்கிள் மிதித்து வருகிறவன்.
‘ட்ரீம்ஸ்ல இருந்திருப்பாண்டா. டேய் குடுமி, லவ் மேட்டரெல்லாம் நமக்குள்ள மட்டும்தாண்டா பேசிக்கணும். பொண்ணுங்க கிட்டபோய் சொல்லி அது பிரச்னையாகி பெரிசாச்சுன்னா உஸ்கோல்ல டிசி குடுத்துருவாங்கடா’ என்றான் மோகனசுந்தரம்.
எந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று பத்மநாபன் தனக்குள்ளே மட்டும் பொத்தி வைத்துப் பாதுகாத்துவந்தானோ அந்த விஷயத்தை முன் தினம் போட்டு உடைக்கவேண்டியதாகிவிட்டது. வகுப்பில் அவன் வளர்மதியிடம் நீட்டிய தாள் என்ன?
முதல் வினா, கலியமூர்த்தியிடமிருந்து வந்தது. அப்படியா? லெட்டரா குடுத்தான் என்று முதல் பெஞ்ச் பன்னீர் செல்வம் ஆர்வத்துடன் நாக்கைத் துருத்திக்கொண்டு முன்னால் வந்தான்.
இது விபரீதம் என்று பத்மநாபனுக்குத் தோன்றிவிட்டது. அதிர்ஷ்டம் ஓரளவு அவன்பக்கம் இருந்தபடியால் வளர்மதி அழுது ஆகாத்தியமெல்லாம் பண்ணாமல் வாங்கிய கடிதத்தைப் பையில் வைத்துக்கொண்டு வெளியே போய்விட்டாள். ஒருவேளை அது காதல் கடிதம் என்று அவளுக்குத் தோன்றாதிருந்திருக்கலாம். பத்மநாபன் சொல்லித்தான் கொடுத்தான். ஆனாலும் காதில் விழாமல் போயிருக்கக்கூடும்.
புத்திக்குத் தெரிந்திருக்காதா என்ன? பகா எண்கள் பற்றியா எழுதிக் கொடுத்திருப்பான்?
அது தனக்கும் அவளுக்குமான ஒரு மௌனப்போராட்டம் என்பதாக அவன் தன் மனத்துக்குள் கருதியிருந்தான். தன் காதலை அவள் ஏற்றுக்கொண்டுவிடுகிற பட்சத்தில் தனது நட்பு வட்டத்தையே மாற்றி அமைத்து முதல் பெஞ்ச் பன்னீருடன் கூட நட்பு பேணத் தயாராக இருந்தான். பெண்களுக்கு முதல் பெஞ்ச் பசங்களை ஏனோ மிகவும் பிடித்திருக்கிறது. நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு, நோட்டைத் திறந்ததும் ‘உ’ போடுகிறவர்கள் அவர்களைப் பொருத்தவரை உலக உத்தமர் காந்தியடிகளுக்கு அடுத்தப் படியில் இருப்பவர்கள்.
பிரச்னையில்லை. தன்னாலும் இயலும். திருநீறு வைக்கவும் திருவாசகம் படிக்கவும். கொஞ்சம் மெனக்கெட்டால் ஒன்றிரண்டு பாடங்களிலாவது முதலிடத்தைப் பெற்றுவிடவும் முடியும். சனியன் பிடித்த ஆங்கிலத்தை மட்டும் பன்னீருக்கு நேர்ந்துவிடத்தான் வேண்டும். ஏதாவது சாலாக்கு செய்து அப்பாவைப் பேசிச்சரிக்கட்டி, பேண்ட் கூட வாங்கிவிடலாம். எல்லாமே சாத்தியம்தான். அவள் அங்கீகரிக்கவேண்டும். அது முக்கியம். அது மட்டும்தான்.
‘டேய், அவகிட்ட என்ன குடுத்தே?’
கலியமூர்த்திதான் கேட்டான்.
‘என்னது? என்னது?’ என்றான் பத்மநாபன். உள்ளுக்குள் உஷாராகிக்கொண்டிருந்தான்.
‘எல்லாம் பாத்துட்டோம். மரியாதையா நீயே சொல்லிடு. லவ் லெட்டரா?’
‘இல்லியே?’ என்றான் வருவான் வடிவேலன் படத்து ஸ்ரீதேவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு.
‘சும்மா கதவிடாத. அவ நேரா அவங்க தாத்தாகிட்ட போயி குடுக்கப்போறா. மொதலியாரு வெளக்குமாற தூக்கிக்கிட்டு உங்க வீட்டாண்ட வந்து நிப்பாரு. ஏண்டா இப்படியெல்லாம் பண்ற?’
பத்மநாபனுக்கு லேசாக பயம் வந்தது. ஆத்திரம் மிகுந்த ஒரு கணத்தில் கடிதத்தைக் கொடுத்துவிட்டான். முன்னப்பின்ன வேறு யாருக்கும் இவ்வாறெல்லாம் கொடுத்ததில்லை. எல்லா காதலும் மனத்தில் பிறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாகத்தான் இதுவரை இருந்துவந்திருக்கிறது. இதுதான் சற்று விபரீதக் காதலாக இருக்கிறது. பத்தாம் வகுப்புக்குப் போகவிருக்கிற வேளையில் இந்த அவஸ்தை மிகப்பெரிதாக உள்ளது. என்ன செய்தால் தணியும் என்று தெரியாமல் கடிதம் கொடுத்துப் பார்த்தது, இப்போது நண்பர்களின் விசாரணைக்கு உட்பட்டிருக்கிறது. பிரச்னை என்று ஏதும் வந்தால் உண்மையிலேயே எப்படிச் சமாளிப்பது?
அது குறித்து அவன் யோசித்திருக்கவில்லை. எனவே கவலை கொண்டான்.
‘டேய் மூர்த்தி, உன்னை என் பெஸ்ட் ·ப்ரெண்டா நினைச்சி சொல்லுறேன். ஆமா. லவ் லெட்டர்தான் குடுத்தேன். அவ ஏத்துப்பான்னு நம்பிக்கை இருக்கு. ஆனா ஒருவேளை நீ சொன்னமாதிரி அவங்க தாத்தாவாண்ட காட்டிட்டா?’
கலியமூர்த்தி கங்கைகொண்ட சோழன் போல் பெருமிதப் புன்னகை புரிந்தான். ‘நெனச்சேன். சரி, கவலைப்படாத. நான் திங்க் பண்றேன். கண்டிப்பா ஒரு ஐடியா சிக்கும்.’ என்றவன், ஒருகணம் இடைவெளிவிட்டு ‘கீழ கையெழுத்து போட்டிருக்கியா?’
பத்மநாபன் யோசித்தான். சரியாக நினைவில்லை. யுவர்ஸ் ஒபீடியண்ட்லி என்று போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடலாமா என்று யோசித்தது நினைவிருந்தது. ஆனால் கையெழுத்துப் போட்டோமா இல்லையா?
‘சரியா ஞாபகம் இல்லடா’
‘போடாம இருந்தேன்னா நாளைக்கு ஒரு ப்ராப்ளம்னு வந்தா அது நான் குடுக்கலன்னு சொல்லிடலாம்’
அடடே, எத்தனை சிறந்த யோசனை! உண்மைத் தோழன் மட்டும்தான் இப்படியெல்லாம் உதவுவான். கடவுளே, நான் கையெழுத்துப் போடாமல் இருக்கவேண்டும்.
‘மூர்த்தி, ரொம்ப தேங்ஸ்டா. கையெழுத்துப் போடலனுதான் நினைக்கறேன். ஆனா இந்த விஷயத்த நீ யாராண்டயும் சொல்லாதடா. அவ அக்செப்ட் பண்ணிட்டான்னா அப்பறம் சொல்லிக்கலாம்’ என்று சொன்னான்.
‘சேச்சே. இதெல்லாம் உன் பர்சனல். நான் யாராண்டயும் சொல்லமாட்டேன்’ என்று நம்பிக்கை சொல்லிவிட்டு, சத்துணவுக்கூடத்துக்குப் பின்புறமிருக்கும் வேலிக்காத்தான் புதர் அருகே போய் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொருவரையாகக் கூப்பிட்டு அனுப்பியிருக்கிறான்.
‘மேட்டர் தெரியுமா? குடுமி, வளருக்கு லவ் லெட்டர் குடுத்துட்டான். அது அளுதுக்கிட்டே வீட்டுக்கு ஓடுது. நான் பாத்தேன்.’
‘சேச்சே. அவ ஒண்ணும் அழுதுக்கிட்டு போகல. சாதாரணமாத்தான் போனா’ என்று பத்மநாபனே பிறகு அனைவரிடமும் விளக்கம் தரவேண்டியிருந்தது.
‘நீ ஒரு கூமுட்டடா. கலியமூர்த்தியாண்ட ஏன் மேட்டர சொன்ன? என்னாண்ட சொல்லியிருக்கலாம்ல?’ என்று பனங்கொட்டை கேட்டான்.
‘இவுரு ரொம்ப ஓக்யம். பாபு ஜெயலலிதாவ லவ் பண்றேன்னு உன்னாண்ட தானே சொன்னான். நீ என்னா செஞ்ச? நேருக்கா போயி அவங்கம்மாவாண்ட சொல்லி மாட்டிவுட்ட இல்ல?’
‘அது வேற இதுவேற. அப்ப அவன் என்னிய சா·ப்ட் பால் டீம்ல சேத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டான்.’
‘க்ளாரா, சரவணன் லவ்வு கெட்டதும் உன்னாலதான். மறந்துடுச்சா?’
‘போடாங். என்னிய ஒளுங்கா நம்பினா கண்டிசனா லவ்வுக்கு ஹெல்ப் பண்றவன் நான். பாஸ்கருக்கு எத்தன வாட்டி நான் லெட்டரு கொண்ட்டுபோயி குடுத்திருக்கேன் தெரியுமா? வந்தான்னா கேட்டுப்பாரு.’
தையூர் பண்ணையின் கிணற்றை அதகளப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நூறடி ஆழக் கிணறு அது. அகல வாய் திறந்த பூதம் மாதிரி தரையோடு கிடக்கிற கிணறு. பதினொரு மணிக்கு மோட்டார் போட மருதய்யன் வருவான். அதுவரை கேட்க நாதி கிடையாது. ஞாயிறு ஆனால் பத்மநாபனும் நண்பர்களும் தூங்கி எழுந்ததும் கிணற்றுக்கு வந்துவிடுவார்கள்.
கண் சிவக்கும் வரை குதித்துக் குளித்துவிட்டு கையோடு இரண்டொரு மாங்காய் அடித்துச் சாப்பிட்டுவிட்டுப் பொடிநடையாக வீடு போய்ச் சேர்ந்தால் மதியச் சாப்பாட்டுக்குச் சரியாக இருக்கும்.
அந்தக் குளியலுக்கும் ஞாயிற்றுக்கிழமைப் பகலுணவுக்கும் வருகிற தூக்கம் அபாரமாக இருக்கும்.
பத்மநாபனுக்கு எப்போதும் அந்தத்தூக்கம் பிடிக்கும். இப்போது மிகவுமே பிடித்திருந்தது. பகலில் படுத்து வளர்மதியை நினைத்துக்கொண்டிருக்கலாம். நினைவிலிருந்து உறக்கத்துக்கு நழுவும்போது அவளும் உடன் வந்து கனவில் கதவு திறப்பாள். பாட்டுப் பாடலாம். கையைப் பிடித்துக்கொண்டு கோவளம் கடற்கரையில் அலைந்து திரியலாம். புதிதாக அங்கே திறந்திருக்கும் தாஜ் கொரமாண்டல் ஓட்டலில் அவளோடு உட்கார்ந்து காப்பி சாப்பிடலாம். சாப்பிட்டுவிட்டு பில்லுக்கு அவள் பணம் கொடுக்க முனையும்போது கையைப் பிடித்துத் தடுத்துவிட்டு தானே கொடுக்கலாம். அவள் புன்னகை செய்வாள். எடுத்து சட்டைப்பையில் பத்திரப் படுத்திக்கொள்ளலாம்.
‘தபார் குடுமி, நீ லெட்டர் குடுத்தது தப்புன்னு சொல்லல. ஆனா எங்களாண்ட ஒருவார்த்த கேட்டுட்டுக் குடுத்திருக்கலாம். எதனா ப்ராப்ளம் வருமான்னு நாங்க திங்க் பண்ணியிருப்பம்ல?’
‘ஒண்ணும் வராதுடா. இன்னிக்கி சண்டே. ஒருநாள் எப்படியாச்சும் போயிருச்சின்னா நாளைக்கு அவ ஸ்கூலுக்கு வந்துடுவா. அப்ப தெரிஞ்சிட்டுப்போவுது!’
‘அவ ஒண்ணும் சொல்லலன்னா?’
‘அதெப்பிடிடா சொல்லாம இருப்பா? ஒண்ணு, சரின்னு சொல்லணும். இல்லனா அவங்க தாத்தாவையாவது இட்டுக்கினு வரணும்’ என்றான் பனங்கொட்டை.
பத்மநாபனுக்கு அவன்மீது மிகவும் சந்தேகமாகவே இருந்தது. தன்னை முன்வைத்து ஒரு முழுநீளப் பொழுதுபோக்குச் சித்திரத்தை அவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறானோ என்று தோன்றியது. கோபம் வந்தது. அப்படியே கிணற்றடிக்குத் தள்ளிக்கொண்டுபோய் அழுத்திவிட்டால் என்ன?
அடக்கிக்கொண்டான். யார் என்ன சொன்னாலும் தன் காதல் அப்பழுக்கில்லாதது. உள்நோக்கம் அதில் கிடையாது. நான் அவளைக் காதலிக்கிறேன். அவ்வளவுதான். அவள் ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.
ஒரு சௌகரியம். அது ஒரு சந்தோஷமும் கூட. இனிமேல் வெளிப்படையாகப் பள்ளி வளாகத்தில் யாரும் வளர்மதியைக் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கமாட்டார்கள். வளர்மதி குறித்துப் பேச்சுவந்தால், ‘அவ குடுமியோட ஆளுடா’ என்பார்கள்.
சமூக அங்கீகாரம் என்பது இவ்வாறாகத்தான் வெளிப்படும். காலப்போக்கில் அதுவே நிலைக்கும். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியாதவரைக்கும் இம்மாதிரியான அங்கீகாரங்கள் அற்புத சுகமளிக்கும். பத்மநாபனுக்கு அது உவகை தரக்கூடிய சிந்தனையாக இருந்தது.
அன்றைக்குப் பத்தரைக்கெல்லாம் குளியல் ஆட்டம் முடிவடைந்துவிட்டது. நண்பர்கள் அனைவரும் துடைத்துக்கொண்டு துணிகளைப் பிழிந்து தோளில் போட்டுக்கொண்டு வழியில் தென்படும் கொய்யா, மாங்காய் வகையறாக்களை டிராயர் பைகளில் திணித்தபடி பேசிக்கொண்டே தோப்பைவிட்டு வெளியேறினார்கள்.
‘ரைட்ரா குடுமி, நாளைக்குப் பாப்போம்’ என்றான் பனங்கொட்டை. பத்மநாபன் அவனுக்கு ‘ஓகேடா’ சொல்லவில்லை. மற்ற அனைவரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றான்.
வீட்டுக்குப் போகிறவரை திரும்பத் திரும்ப பனங்கொட்டையைப் பற்றியே நினைத்துக்கொண்டான். தன் காதலுக்கு அவன் ஒரு வில்லனாவானோ என்கிற சந்தேகம் எழுந்தது. அப்படியாகிற பட்சத்தில் தன்னுடைய நண்பர்களில் யார் யார் எல்லாம் தன் பக்கமிருந்து தனக்காக வாதிடுவார்கள் என்று யோசித்துப் பார்த்தான்.
வளர்மதி தன் காதலை ஏற்றுக்கொண்டுவிடுகிற பட்சத்தில் இவர்கள் யாருமே ஒரு பொருட்டில்லை. ஞாயிற்றுக்கிழமை காலைகளை கிணற்றுக்குப் போய் குதித்து வீணாக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமுமில்லை. அடித்த பாவத்துக்குப் புளித்த மாங்காய்களைத் தின்று தீர்க்கவேண்டியதில்லை. மாறாக வளர்மதியை அழைத்துக்கொண்டு திருவான்மியூர் ஜெயந்திக்கு பாயும் புலி பார்க்கப் போய்விடலாம். அடடே, பணத்துக்கு என்ன செய்வது?
இவ்வாறெல்லாம் நடக்க வாய்ப்பில்லாதவற்றை யோசிக்கிறோம் என்பதை அறிந்தே அவன் அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தான். அதுவும் சந்தோஷம் தரக்கூடியதாகவே இருந்தது. காதல்தான் எத்தனை அழகான பைத்தியக்காரத்தனம்! அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். வெட்கப்பட்டான். வேகமாக வீட்டுக்குப் போனான்.
காம்பவுண்டு கதவைத் திறக்கும்போது பிடறியில் பேயடித்தமாதிரி இருந்தது. கடவுளே! இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது?
அவனது வீட்டு காம்பவுண்டு வாசலில் வளர்மதி நின்றுகொண்டிருந்தாள். அம்மாவுடன்தான் பேசிக்கொண்டிருந்தாள்.
4
அத்தியாயம் 4
திடீரென்று உலகம் அழகடைந்துவிட்டது. வீசும் காற்றில் விவரிக்க இயலாத வாசனையொன்று சேர்ந்துவிட்டது. சுவாசிக்கும் கணங்களிலெல்லாம் அது நாசியின் வழியே நுரையீரல் வரை சென்று மோதி, அங்கிருந்து புத்திக்குத் தன் நறுமணத்தைப் பரப்பத் தொடங்கிவிட்டது. கால்கள் தரையில்தான் நிற்கின்றன. ஆனால் உணரமுடியவில்லை. பஞ்சுப் பொதி வாகனத்தில் மிதப்பதுபோலிருக்கிறது. காதுகளுக்குள் கொய்ய்ய்ங் என்று ஒலிக்கும் சத்தத்தை உற்றுக்கேட்டால் சங்கீதமாக இருக்கிறது. இன்றைய தினம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.
பத்மநாபன் தன் ஆகச்சிறந்த ஸ்டைல் நடை போட்டு வேகவேகமாக வீட்டை நெருங்க, வளர்மதி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
‘ஐயே, என்னடா இது உரிச்ச கோழியாட்டம் வரே?’ என்று கேட்டாள்.
அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. சே. இனிமேல் குளிக்கப்போகும்போதும் சட்டையுடன் செல்லவேண்டும். ஒரு கணம்தான். வெட்கம் வந்துவிட, அரசியல்வாதிபோல் ஒரு பக்கத் தோளில் தொங்கிய ஈரத் துண்டை எடுத்து உதறி விரித்து சால்வை போல் போர்த்திக்கொண்டு சிரித்தான்.
‘என்ன வளரு? லெட்டர் படிச்சியா?’
‘அடச்சே ஒனக்கு வேற வேலையே இல்ல. என் சயின்சு புக்க பொற்கொடி எடுத்துட்டுப் போயிட்டா. வீட்டாண்ட போயி கேட்டா அவங்க மாமா வீட்டுக்குப் போயிருக்கான்றாங்க. உன் புக்க குடேன். நாளைக்கு க்ளாஸ்ல குடுத்துடறேன்.’
அவனுக்கு அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகளில் காதுகளில் கேட்ட சத்தத்தின் கனபரிமாணம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நாற்பத்தியெட்டு பேர் படிக்கும் வகுப்பு. அதில் ‘படிக்கிற பசங்க’ளின் எண்ணிக்கை பத்து. அதில் நான்குபேர் பெண்கள். வளர்மதியின் தோழிகள். அவர்களில் யாராவது ஒருவரிடம் அவள் அறிவியல் புத்தகத்தைக் கேட்கலாம். அல்லது அவள் வீட்டுக்கு வெகு அருகில் இருக்கும் கலியமூர்த்தியிடம் கேட்கலாம். வாங்கி அட்டை போட்டு லேபிள் ஒட்டி ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பெயரெழுதி வைத்த நாளாக அவன் திறந்து பார்த்ததே இல்லை. ஆத்தா, மாரியாத்தா என்று காலில் விழுந்து வணங்கி சமர்ப்பித்துவிடுவான். அவளையே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டாலும் வியப்பதற்கில்லை.
சாத்தியங்கள் அநேகம். சந்தர்ப்பங்கள் அநேகம். ஆயினும் நாநூறடி நடந்து தன் வீடு தேடி வந்து புத்தகம் கேட்க வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?
‘வளர்மதி, சீக்கிரம் சொல்லிடேன். நீயும் என்ன லவ் பண்றதானே?’
அவள் முறைத்தாள். ‘எப்பப்பாரு கெட்டபேச்சு பேசதடா குடுமி. எங்க தாத்தாவாண்ட சொல்லியிருந்தேன்னா என்னாயிருக்கும் தெரியுமில்ல?’
தெரியும். தோலை உரித்திருப்பார் அப்பா. விஷயம் வீடு வந்து சேருவதற்குள் பிரம்பு அவன் முதுகு வந்து சேர்ந்திருக்கும். வளர்மதியைப் போன்ற ஓர் உத்தமி அம்மாதிரியான நெருக்கடிகளுக்குத் தன் தோழர்களை உள்ளாக்குவதில்லை.
‘ரொம்ப தேங்ஸ் வளர்மதி. ஆனா என்னோட லவ் எவ்ளோ புனிதமானதுன்னு ஒனக்கு மொதல்ல நான் விளக்கி சொல்லணும். அப்பத்தான் புரியும்.’
‘திரும்பத் திரும்ப அதையே பேசினா இப்பவே உங்கப்பாவாண்ட சொல்லிடுவேன்.’
‘ஐயோ.. வேண்டாம் இரு ஒரு நிமிசம்’ என்று வேகமாக உள்ளே ஓடினான். கிடைத்த சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு அறிவியல் புத்தகத்தைத் தன் பள்ளிப்பையில் தேடினான்.
‘யார்றா அது குள்ளச்சி ஒருத்தி வாசல்ல நின்னுக்கிட்டிருக்கா? ஒன்னோட படிக்கறவளா?’
அப்பா. கவனித்திருக்கிறார்.
‘அ.. ஆமாப்பா. என் க்ளாஸ்ல செகண்ட் ரேங்க் வாங்கற பொண்ணு.’
ஒரு குள்ளச்சியின் இமேஜை இவ்வாறாகத்தான் உயர்த்திக்காட்ட இயலும். அப்பாக்களின் அட்ஜெக்டிவ்கள் பிள்ளைகள் ரசிக்கக்கூடியதாக எப்போதும் இருப்பதில்லை.
‘நீ எங்க போயி மேஞ்சிட்டு வர?’
‘பண்ண தோப்புல குளிக்கப் போயிருந்தேம்பா.’
‘வந்து உக்காந்து படிக்கணும். புரியுதா?’
‘சரிப்பா.’
அறிவியல் புத்தகத்தை அள்ளிக்கொண்டு வேகமாக வாசலுக்கு விரைந்தான். வீட்டில் அப்பா இல்லாதிருந்தால் அம்மாவிடம் சில சலுகைகள் எடுத்துக்கொள்ள இயலும். வா வளரு. உள்ள வா. இங்க உக்காரு. அம்மா, என் ·ப்ரெண்டும்மா. காப்பி குடுக்கிறியா?
கேட்கலாம். கிடைக்கும். தன் விருப்பம் அல்லது விருப்பமின்மையை அம்மா வெளிக்காட்டமாட்டாள். அந்தத் தருணத்துக்கு ஆபத்தில்லாமல் வந்தவளை உபசரித்து அனுப்ப இயலும். அப்பா இருக்கும்போது அது சாத்தியமில்லை. களுத ஒனக்குப் போடறதே தண்ட சோறு என்று அவள் எதிரிலேயே மானத்தை வாங்கிவிடுவார்.
புத்தகத்துடன் அவன் மீண்டும் வெளியே வந்தபோது வளர்மதி செம்பருத்திச் செடி அருகே நின்றுகொண்டிருந்தாள்.
‘அழகா இருக்கு’ என்றாள்.
‘எங்கம்மாதான் வெச்சாங்க. டெய்லி ரெண்டு மூணு பூக்கும்! ஒனக்கு வேணுமா?’
அவள் முகத்தில் இருந்த பரவசம் அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. அவள் கேட்பதற்கு முன்பே ஓடிச்சென்று இரண்டு பூக்களைப் பறித்து அவளிடம் நீட்டினான்.
‘இத ரோஜாவா நெனச்சிக்க வளரு.’
முறைத்தாள். ‘நீ இப்பிடியே பேசினன்னா நான் உன்னோட பேசவே மாட்டேண்டா குடுமி’ என்று சொன்னாள்.
‘அப்படி சொல்லாத வளரு. நான் பொய் சொல்லல. எதையும் மறைக்கல. நீ என்னா செஞ்சாலும் பரவால்லன்னுதானே நேர்ல சொல்லுறேன்?’
‘எனக்கு புடிக்கல. நான் நல்லா படிக்கணும். டாக்டரா ஆவணும்னு எங்க தாத்தா சொல்லியிருக்காரு. லவ்வு கிவ்வுன்னு பேசினன்னா உன்னோட பளகவே மாட்டேன்.’
அவன் அதிர்ச்சியடைந்தான். ‘ஐயோ அப்பிடியெல்லாம் சொல்லிடாத வளரு. நீ பேசலன்னா நா செத்தே போயிருவேன்!’
கண்கள் ததும்பிவிட்டிருந்தன.
‘சே, என்னாடா அசிங்கமா அளுதுக்கிட்டு. கண்ணத் தொட’ என்றாள். அவன் கையிலிருந்து புத்தகத்தை வெடுக்கென்று அவளே பிடுங்கிக்கொண்டாள்.
‘புக்க குடுக்க எவ்ளோ நேரம். வந்து படிக்க உக்காருன்னு சொன்னேன்ல?’
அப்பாதான். வாசலுக்கே வந்துவிட்ட வில்லன் வில்லாளன்.
வளர்மதி அவரை நிமிர்ந்து பார்த்தாள். வணக்கம் சார் என்று சொன்னாள்.
‘ஆங், ஆங். என்ன படிக்கற?’
‘பத்மநாபன் க்ளாஸ்தான் சார்.’
‘எத்தினியாவது ரேங்க் வாங்குற?’
‘செகண்ட் ரேங்க் வரும் சார்.’
‘யாரு ·பர்ஸ்ட் ரேங்க்கு வாங்குவாங்க?’
‘பன்னீரு சார்.’
‘உம்ம்’ என்றார். சட்டென்று ‘இவன் எத்தன வாங்குவான்?’
வளர்மதிக்கு ஒருகணம் பேச்சு வரவில்லை. பத்மநாபனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் தீயில் நிற்பது போல் உணர்ந்தான். இப்படியெல்லாம் துர்த்தருணங்கள் எதிரிக்குக்கூட வரக்கூடாது என்று மனத்தில் தோன்றியது. ஒரு பெண்ணின் எதிரே, அதுவும் மனத்துக்குள் எப்போதும் நினைத்தபடியிருக்கும் பெண்ணின் எதிரே பேச வேறு விஷயமா இல்லை? பார்த்த படங்கள், செய்த சாகசங்கள், அடித்த கொட்டங்கள், கனவு, காதல், கடிதம்…
அப்பாக்களைத் திருத்தமுடியாது. ஆயிரம் யுகம் கடந்தாலும் அது சாத்தியமில்லை. ஒரு சொல் போதும். ஒரு பார்வையேகூடப் போதும். துரும்பாகக் கிள்ளிக் கீழே வீசி, கட்டை விரல் முனையில் நசுக்கி எறிந்துவிடும் வல்லமை கொண்ட வில்லன் வேறு யார் இருக்கமுடியும்?
அவனுக்கு அப்பாவை சுத்தமாகப் பிடிக்கவில்லை. சே. எத்தனை கெட்டவார்த்தை பேசிவிட்டார். இதைவிடப் பெரிய அவமானம் வேறு இருந்துவிட முடியாது.
‘கேட்டனே, காது கேக்கல? நீ செகண்ட் ரேங்கு. இவன் எத்தினியாவது ரேங்கு?’
‘ஒ.. ஒம்போது.. பத்து வருவான் சார்.’
‘ம்ம்.. கேட்டுக்கடா. பொட்டச்சி செகண்ட் ரேங்க். வெக்கமா இல்ல?’
அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இதென்ன ஒப்பீடு? அருவருப்பாகத் தெரியவில்லை? அபத்தமாகப் படவில்லை? கேவலமாகத் தோன்றவில்லை? என்னைவிட அவள் நன்றாகப் படிக்கிறாள். நானும் முயற்சி செய்தால் செகண்ட், ·பர்ஸ்ட் ரேங்க் வாங்கிவிட்டுப் போகிறேன். முடியாதா என்ன? அவசியம் முடியும். வளர்மதி தன் காதலை ஏற்றுக்கொண்டுவிடுகிற பட்சத்தில் இன்னுமேகூட சீக்கிரமாக முடியலாம்.
‘எப்பப்பாரு பசங்களோட சேர்ந்துக்கிட்டு மாங்கா அடிக்கப் போவுறது, கெணத்துல குதிச்சி கும்மாளமடிக்கப் போவுறது, தியேட்டருக்குப் போவுறதுன்னு அதுலயே இரு. உக்காந்து எப்ப படிக்கற நீயி?’
‘எல்லாம் படிக்கறேன். ஆங்..’ என்றான் மெல்லிய முறைப்புடன்.
‘கிழிச்ச’ என்று சொன்னார்.
வளர்மதி சிரித்தாள். அதுவும் எரிச்சல் தந்தது.
‘சரி சொல்லு. பலபடிச் சமன்பாடுகளின் மூலம் எது? விகிதமுறு எண்களா? விகிதமுறா எண்களா?’
பத்மநாபன் விழித்தான். படித்த மாதிரிதான் இருக்கிறது. மதியச் சாப்பாட்டுக்குப் பிறகான உடனடி மகாலிங்க வாத்தியார் வகுப்புகள் பொதுவில் அரைகுறையாகத்தான் மனத்தில் விழும். கண்கள் சொருகும் நேரத்தில் இம்மாதிரியான இசகுபிசகுகள் நேர்ந்துவிடுகின்றன. விகிதமுறு எண்கள். விகிதமுறா எண்கள். பகு எண்கள். பகா எண்கள். படுத்தும் எண்கள். பாவி எண்கள்.
‘நீ சொல்லும்மா. ஒனக்குத் தெரியுமா?’ வளர்மதியைப் பார்த்துக் கேட்டார் அப்பா. வளர்மதி அவனை ஒருகணம் பார்த்தாள். தருணம் தர்மசங்கடமாகிக்கொண்டிருக்கிறது. தப்பித்து வீடு போய்ச் சேர்ந்தாலே போதுமானது.
‘எல்லா விகிதமுறா எண்களையும் பலபடிச் சமன்பாட்டோட மூலமா பாக்கமுடியும் சார்’ என்று சொன்னாள். ‘சமன்பாட்டோட கெழு விகிதமுறு எண்ணா இருந்தாலும் மூலங்கள் விகிதமுறா எண்ணாத்தான் சார் வரும்’.
‘போடு. நீ படிக்கற புள்ள. இவனப்பாரு. திருவிழால திருடவந்தவன தேள் கொட்னாப்புல முழிக்கறத பாரு. என்னாடா படிக்கற நீயி? பன்னி மேய்க்கப்போற பாரு. உன்னையெல்லாம் பள்ளியோடத்துல சேர்த்து படிக்கவெச்சி..’
பல்லைக் கடித்தபடி அவன் காதைப் பிடித்து திருகியபடியே கையை உயர்த்தினார்.
வலித்தது. வளர்மதி பார்த்துக்கொண்டிருந்தபடியால் வந்த வலி. கண்ணில் நீர் நிறைந்துவிட்டது. இதற்குமேல் பெரிய அவமானம் என்று ஏதும் இருந்துவிட முடியாது.
‘நான் போயிட்டு வரேன் சார்’ என்று வளர்மதி சொன்னாள். பார்வை அவன்மீதே இருந்தது. அதில் பரிதாபம் தெரிந்தது.
‘டயம் கிடைச்சா இவனுக்கு கொஞ்சம் சொல்லிக்குடும்மா. பொட்டச்சி ஒனக்குத் தெரிஞ்ச துல கால்வாசி கத்துக்கறானா பாப்பம்.’
வளர்மதி இரண்டடி நடந்தாள். என்ன தோன்றியதோ சட்டென்று நின்றவள், திரும்பி, ‘பொட்டச்சின்னு சொல்லாதிங்க சார். பொண்ணுன்னு சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள்.
பத்மநாபனின் அப்பா அதிர்ச்சியடைந்துவிட்டார். சட்டென்று அவன் காதிலிருந்து அவரது அழுத்தம் விலகி நழுவியது. அவளை வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.
பத்மநாபனுக்கு சிறு சந்தோஷம் ஏற்பட்டாற்போலிருந்தது.
5
அத்தியாயம் 5
தமிழ் ஐயா திரு.வி.கவை வாணலியில் போட்டு வறுத்துக்கொண்டிருந்தார். பத்மநாபனுக்கு போரடித்தது. அவன் ஒரு யோசனையுடன் வந்திருந்தான். பள்ளிக்கூடம் முடிந்ததும் ஒரு பத்து நிமிடம் வளர்மதி தன்னுடன், தான் கூப்பிடும் இடத்துக்கு வருவாளா? கொட்டகை இல்லை. கடற்கரை இல்லை. தோப்பில்லை. ஹோட்டல் இல்லை. கோயில். பூசாரி உள்பட யாரும் எப்போதும் போகிற வழக்கமில்லாத முத்துமாரி அம்மன் கோயில். தையூர் பண்ணையின் தோப்பை ஒட்டிய வாய்க்கால் வழியில் இருபதடி நடந்தால் அரசமரப் பிள்ளையார் ஒருத்தர் எதிர்ப்படுவார். ஒரு கும்பிடு போட்டுவிட்டு அப்படியே மேலும் முப்பதடி போனால் கீரைத் தோட்டங்கள் ஆரம்பிக்கும் வரிசையில் திருப்போரூர் பைபாஸ் சாலையில் செம்மண் புழுதி பூசிய சிறிய கோயில்.
ஏதோ ஒரு காலத்தில் பூஜைகள் நடந்திருக்கவேண்டும். விளக்குகளும் எரிந்திருக்கலாம். வீதியோரச் சிறு ஆலயங்களுக்குப் பொதுவில் யாரும் மானியங்கள் தருவதில்லை. ஆயினும் தையூர் பண்ணையார் நெல்லுக்கு இறைத்தபொழுதுகளில் வாய்க்கால் வழியே இந்தப் பக்கமும் கொஞ்சம் வந்து சேரத்தான் செய்தது.
காலப்போக்கில் பைபாஸ் முத்துமாரியம்மன் கோயில், மக்களுக்கு மெல்ல மறக்கத் தொடங்கிவிட்டது. ஊரில் வேறு பெரிய சைஸ் கோயில்கள் முளைக்க ஆரம்பித்தன. புதிய புதிய வழிபாட்டு முறைகள் தோற்றுவிக்கப்பட்டன. மட்டைத் தேங்காயைப் பாதி உரித்துக் கட்டு. நாற்பத்தியெட்டு நாளில் திருமணம் ஆகிவிடும். மஞ்சள் துணியில் பத்து ரூபாய் முடிந்து குளத்தில் வீசிவிட்டுத் திரும்பிப் பாராமல் போய்ச் சேர். மஞ்சள் காமாலை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
ஹோட்டல் பைரவர் கோயிலில் இன்னும் விசேஷம். கோயில் வாசலில் கோழி பலியிட்டு, பக்கத்திலிருக்கும் ஓலைக்குடிசை ஹோட்டலில் கொண்டு கொடுத்துவிட வேண்டும். ஒரு மணிநேரம் காத்திருந்தால் பிரசாதம் அங்கிருந்து கிடைக்கும். பிரியாணிப் பிரசாதம். தொன்னையில் வைத்த பிரசாதம். பிரசாதத்தில் லெக் பீஸ் அகப்பட்டால், முட்டிவலி தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையை கி.பி. 1979ம் ஆண்டில் உள்ளூர் மகான் பக்கிரிசாமிப் பண்டாரம் [முன்னாள் உப்புமண்டி கமிஷன் ஏஜண்ட்] உருவாக்கிவைத்துவிட்டு, ஆஸ்துமா தொல்லையில் செத்துப்போனார்.
தொடரத்தான் செய்கிறது நம்பிக்கைகள். பிரியாணி, மட்டைத் தேங்காய், மஞ்சள் துணியில் முடிந்த பத்து ரூபாய் உள்ளிட்ட எந்த டிக்கெட் செலவும் இல்லாமல் பைபாஸ் முத்துமாரியம்மனின் அருள் இலவசமாகச் சுரந்துகொண்டிருப்பதைப் போலவே.
பத்மநாபனுக்கு முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிடிக்கும். அங்கு கிடைக்கும் தனிமை மட்டுமல்ல காரணம். ஜிலுஜிலுஜிலுவென்று எப்போதும் வீசும் அரசமரக் காற்று. என்ன தப்பு காரியம் செய்தாலும் யார் கண்ணிலும் படவாய்ப்பில்லை. முத்துமாரியம்மன் பொதுவில் பிள்ளைகளின் சில்லுண்டி விளையாட்டுகளைக் கண்டுகொள்வதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. பத்மநாபன் தனது முதல் திருட்டு பீடியை அங்கே வைத்துத்தான் இழுத்துப் பார்த்தான். தேர்வுகளுக்கான பிட்டுகளை அங்கு வைத்துத்தான் தயாரிப்பது வழக்கம். அம்மனின் அருள் தேர்வுக்கு மட்டுமல்லாமல் பிட்டுக்கும் அவசியமுண்டு.
எனவே வளர்மதியிடம் தான் பேச விரும்பிய விஷயத்தை அங்கு வைத்து தெய்வசாட்சியாகச் சொல்வதே சாலச் சிறந்தது என்று அவன் முடிவு செய்தான்.
விஷயம் சற்றுத் தீவிரமானதும் கூட. இந்த வயதில் அவனைத் தவிர வேறு யாராலும் அப்படிப்பட்ட தொலைநோக்கு மனப்பான்மையுடன் சிந்திக்கவும் இயலாது. செகண்ட் ரேங்க் வாங்கும் வளர்மதிக்கு அந்தத் தொலைநோக்கு அவசியம் பிடிக்கும். அவனை அவள் விரும்ப அதுவே ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும். பைபாஸ் அம்மனே, இதற்கு ஏற்பாடு செய்து கொடு. உனக்கு ஐம்பது பைசா காணிக்கை இடுகிறேன்.
இப்படி யோசித்த உடனே அவனுக்கு வேறொரு கவலையும் வந்துவிட்டது. ஐம்பது பைசாவைக் கண்டிப்பாக அம்மன் எடுத்துச் சென்று அரைமுழம் பூ வாங்கி வைத்துக்கொள்ளப் போவதில்லை. பூசாரி யாரும் வராத நான்கடி உயரமும் மூன்றடி நீளமும் கொண்ட சிறு கோயில். எப்போதும் பூட்டியே இருக்கும் கதவு. கம்பிக்குப் பின்னால் கால் கடுக்க நிற்கும் அம்மன் அந்த ஐம்பது பைசாவை என்ன செய்வாள்?
வீணாகக் கீழே அல்லவா கிடக்கப்போகிறது? வேண்டாம். வீணாக்குவது தவறு. ஆனால் கடவுளே, போடுவதாக வேண்டிக்கொண்டுவிட்டு இப்படிப் பால் மாறினால் பிரச்னை வந்துவிடுமோ?
ஐம்பது பைசாவில் சாதிக்கக்கூடிய விஷயங்கள் அநேகம். மேற்கொண்டு நாற்பது பைசா போட்டால் ராஜலட்சுமி திரையரங்கில் பெஞ்ச் டிக்கெட்டில் படம் பார்க்கலாம். நாற்பது முடியாது என்றால் பத்து பைசா கூடுதலாகப் போதும். தரை டிக்கெட் கிடைத்துவிடும். வெறும் ஐம்பது பைசாவுக்கே முடியக்கூடியவை உண்டு. மன்னார் கடையில் இரண்டு இடியாப்பங்கள். தொட்டுக்கொள்ள தேங்காய்ப் பால். அல்லது ஒரு காற்றாடியுடன் கூடிய ஒரு கட்டு மாஞ்சா நூல். ஞாயிறு காலை அவர் சைக்கிள். அடக்கடவுளே, அம்மன் கைவிட்டுவிடுவாளா?
இவ்வாறு அவன் கோர்வையற்று யோசித்துக்கொண்டிருந்தபோது தமிழ் ஐயா, அழகு என்பது யாது? என்று பெருமாள் சாமியைப் பார்த்துக் கேட்டார்.
அழகு என்பது வளர்மதி என்று பத்மநாபன் தனக்குள் சொல்லிக்கொண்டான். ஒருகணம் அவளைத் திரும்பிப் பார்க்கவும் செய்தான். படிக்கிற பெண்ணான வளர்மதி தமிழ் ஐயாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘என்னடே, கேக்கறேன்ல? சொல்லு. அழகு என்பது யாது?’
பெருமாள் சாமி திருட்டு விழி விழித்தபோது தமிழ் ஐயாவின் பார்வை பெண்கள் வரிசைக்குத் தாவியது.
‘நீ சொல்லு வளரு. இப்பத்தானே சொன்னேன்?’
வளர்மதி எழுந்து நின்று திறந்துவிட்ட பம்ப் செட் போல் பொழிய ஆரம்பித்தாள். அழகு என்பது நிறத்திலோ மூக்குக் கண்ணாடியிலோ கழுத்துச் சுருக்கிலோ பட்டுடையிலோ பிற அணிகலன்களிலோ அமைவது அன்று. மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற பேருறுப்புகள் செழிய நிலையில் நின்று ஒழுங்கு பெறக் கடனாற்றலால், நரம்புக் கட்டினின்றும் தடைபடாக் குறுதியோட்டத்தினின்றும் முகிழ்க்கும் தசையிடை அரும்புவதே அழகாம்…
‘போடு, போடு. என்னாம்மா படிச்சிருக்கா பாரு. எதுக்குடே நீயெல்லாம் பள்ளியோடத்துக்கு வர? பன்னி மேய்க்கப் போவுறதுதான?’
தமிழ் ஐயா கையிலிருந்த சாக் பீஸைப் பாதி உடைத்து, பெருமாள் சாமியின் மீது வீசியெறிந்தார்.
வகுப்பறை சிரித்தது.
மணி என்ன இருக்கும் என்று பத்மநாபன் யோசித்தார். வகுப்பு இப்போதுதான் ஆரம்பித்தது போலவும், தொடங்கி இரண்டு நாள் ஆகிவிட்டது போலவும் இருவிதமான உணர்வுகள் ஒரே சமயத்தில் தோன்றின. தினத்தின் கடைசி வகுப்பு. சீக்கிரம் முடிந்துவிட்டால் சால நன்று. வளர்மதியிடம் ஒருவார்த்தை சொல்லவேண்டும். ஒரே வார்த்தைதான். அதனைப் பின்பற்றி அவள் தன்னுடன் பைபாஸ் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வந்துவிட வேண்டும். நீளக் கதைகள், விளக்கங்கள் உதவாது. என்ன சொல்லலாம்?
அவன் தீவிரமாக சொற்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் ‘உய்ய்ய்ய்’ என்றொரு சத்தம் கேட்டது.
பெருமாள் சாமிதான் அப்படி உதட்டைக் குவித்துக் கத்துவான். அது ஒரு சமிக்ஞை. ஒரு குறும்புக்கான முன்னெச்சரிக்கை. அனைவருக்கும் தெரியும்.
பத்மநாபன் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்க்க, பெருமாள் சாமி தன்னிரு கைகளையும் குவித்து ஒரு பேப்பர் ராக்கெட்டை இடையில் வைத்துக் குறிபார்த்துக்கொண்டிருந்தான்.
தமிழ் ஐயாவுக்கா?
ஒரு கணம் அவன் கண்ணிமைத்துத் திறந்தபோது பெருமாள் சாமியின் ராக்கெட் ஜிவ்வோவென்று பறந்து சென்று வளர்மதியின் காதோரம் சொருகி நின்றது.
வளர்மதி திடுக்கிட்டுத் திரும்பினாள். முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
‘டேய், லூசு..’ என்றாள் பெருமாளைப் பார்த்து.
‘என்னது? என்னது?’ என்றார் தமிழ் ஐயா.
‘ஒண்ணுமில்ல சார்’ என்று ராக்கெட்டை எடுத்து பெஞ்சுக்குக் கீழே போட்டாள். மீண்டும் பாடத்தில் ஆழ்ந்தாள்.
பத்மநாபனுக்கு ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. இது அத்துமீறல். சந்தேகமில்லாமல் அத்துமீறல். வகுப்பில் ராக்கெட் விடுவது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருப்பதுதான் எனினும் வளர்மதியின் மீது அவன் அதனை ஏவியது கண்டிக்கப்படவேண்டிய செயல். அரசல்புரசலாக முழு வகுப்புக்கும் வளர்மீது அவனுக்குள்ள காதல் தெரியும். இனி அவள் குடுமியின் ஆள். குறைந்தபட்சம் அவனது காதல் இன்னொருத்தியின்மீது திரும்பும் வரை. அந்தக் காலங்களில் ராக்கெட் விடுவது, கேலி செய்வது, சீண்டுவது போன்றவை அவசியம் தவிர்க்கப்பட்டாக வேண்டும். இது பொதுவிதி.
பெருமாள் சாமி எப்படி இதனை மீறுவான்? அவனது ஆளான நைன்த் சி மணிமேகலையின்மீது பத்மநாபன் ராக்கெட் விட்டால் சும்மா இருப்பானா?
உக்கிரமாக அவன் எழுந்து நின்றான். பெருமாள் சாமியை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
முதல் பெஞ்ச் தவிர அனைவரும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தமிழ் ஐயா, போர்டில் திரு.வி.க.வின் தமிழுக்குப் பதம் பிரித்துப் பொருள் விளக்கம் எழுதிக்கொண்டிருந்தபடியால் அவர் கவனிக்கவில்லை.
பத்மநாபன் மெல்ல நடந்து பெருமாள் சாமியின் அருகே போய் நின்றான்.
பெருமாள் முறைத்தான். ‘என்னா?’
‘ஏன் அவமேல ராக்கெட் விட்ட?’
‘என் இஷ்டம்’
‘தபார்! அவ என் ஆளு.’
‘தூத்தேரி’ என்றான். பத்மநாபனுக்கு அது ஒரு கெட்டவார்த்தை என்று தோன்றியது. ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் பெருமாள் சாமியின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விட்டான்.
பற்றிக்கொண்டுவிட்டது.
முழு வகுப்பும் திரும்பிப் பார்க்க இருவரும் கட்டிப்புரண்டு அடித்துக்கொண்டதன் காரணம் புரியாமல் தமிழ் ஐயா பிரமித்து நின்றிருந்தார். தன் நிலை உணர்ந்த சமயம், ‘டேய், டேய், எந்திரிங்கடா டேய்.. என்னடா ஆச்சு?’ என்று அருகே ஓடி வந்து இருவர் மீதும் தலா இரண்டு பிரம்படிகளை வைக்க, அந்தச் சண்டை அவ்வாறாக நிறுத்தப்பட்டது.
பள்ளி முடிந்துவிட்டதற்கான மணி அடித்தது. பத்மநாபன் தன் முறைப்பு குறையாமல் தனது பையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.
வளர்மதி தன்னை கவனிக்கிறாளா என்று பார்த்தான். இல்லை. அவள் கிளம்பும் மும்முரத்தில் இருக்க, வேகமாக அவளருகே சென்றான்.
வகுப்பை விட்டு வெளியே சென்ற தமிழ் ஐயா, என்ன நினைத்தாரோ திடுமென்று உள்ளே திரும்பி வந்து, ‘டேய், குடுமி, நீயும் அவனும் ஸ்டா·ப் ரூமுக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டு மீண்டும் வெளியேறினார்.
பத்மநாபன் அதிர்ச்சியடைந்தான். பைபாஸ் முத்துமாரியம்மன் இப்படிக் கடைசி வினாடியில் கைவிடுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
6
அத்தியாயம் 6
பெருமாள்சாமி ஓர் அயோக்கியன். பெருமாள் சாமி ஒரு பித்தலாட்டக்காரன். பெருமாள் சாமி ஒரு கெட்ட பையன். இது வகுப்புக்கே தெரியும், பள்ளிக்கே தெரியும். ஆனாலும் தமிழ் ஐயா எப்படி அவன் சொன்னதை அப்படியே நம்பினார்?
மறுநாள் தமிழ் வகுப்பு ஆரம்பித்ததும், வகுப்பறைக்கு வெளியே தன்னை அவர் முட்டி போட்டு நிற்கச் சொன்னபோது பத்மநாபன் தீவிரமாக யோசித்தான். முட்டி எரிந்தது. புத்தியில் வன்மம் மட்டுமே மேலோங்கி இருந்தது. என்னவாவது செய்து பழிவாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஆன்மா அமைதியுறாது.
ஆனால் வேறு விதமாக யோசித்துப் பார்த்தால் பெருமாள் சாமி தன்னைப் பற்றிச் சொன்ன புகார்களில் பாதிக்குமேல் உண்மையாகவும் இருக்கிறது. சார், பத்மநாபன் வளர்மதிய லவ் பண்றான் சார். உண்மை. அவளுக்கு லெட்டர் குடுத்தான் சார். உண்மை. அவ வயசுக்கு வந்தப்ப மயில் ஜோடிச்சாங்கல்ல? அந்த விசேசத்துக்கு இவன் போனான் சார். சந்தேகமில்லை.
ஆனால் இதற்குமேல் அவன் கூறியவைதான் தவறான தகவல்கள். வகுப்பறையில் எப்போதும் வளர்மதியையே பார்த்துக்கொண்டிருக்கிறான். காதல் கவிதைகளாக எழுதிக் குவிக்கிறான். தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என்று பள்ளி முழுதும் செய்தி பரப்பி வருகிறான். வீட்டில் பைசா திருடி வளர்மதிக்கு ஆல்வள்ளிக் கிழங்கு வாங்கிக் கொடுக்கிறான். அவளுடன் ராஜலட்சுமி திரையரங்குக்குப் போகிறான். அவள் தனக்கு முத்தம் கொடுத்ததாக நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான்.
‘முளைச்சி மூணு இலை விடலை’ என்று தமிழ் ஐயா சொன்னார்.
‘பிச்சுப்புடுவேன் படுவா. நாளைக்கு வரப்ப உங்கப்பாவ கூட்டிக்கிட்டு வரணும். தெரிஞ்சிதா?’
‘சார், இவன் பொய் சொல்றான் சார். அப்படியெல்லாம் நான் சொல்லவும் இல்ல, செய்யவும் இல்ல சார். நீங்கவேணா வளர்மதியையே கேட்டுப்பாருங்க சார்.’
தமிழ் ஐயா முறைத்தார். ஸ்டா·ப் ரூமுக்குள் நுழைந்த வேறு சில ஆசிரியர்கள் விஷயத்தின் சுவாரசியத்தால் கவரப்பட்டு, ‘என்ன பழனி?’ என்று அவரைக் கேட்டார்கள்.
‘பசங்க ஜோடி தேடுறானுக’
‘நைன்த் பி தான? அட்டண்டன்ஸ் ரிஜிஸ்தர்ல இருக்கற அத்தன பேருக்கும் ஆளுக்கொரு டாவு வெச்சிருக்கானுக. வந்து சேந்தானுக பாருங்க.’ என்று தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார் பாண்டுரங்கன் சார்.
பத்மநாபனுக்கு அவமானமாக இருந்தது. காதல் எத்தனைக்கு எத்தனை சுகமானதோ, அதே அளவு வலி தரக்கூடியதும். தமிழ் ஐயா உள்ளங்கைகளை நீட்டச் சொல்லி தலா மூன்று அடிகள் கொடுத்தார். ஒரு அடி ஸ்கேலில் ஒழுங்காக அடித்து வலி ஏற்படுத்தத் தெரிந்த ஆசிரியர்கள் குறைவு. தமிழ் ஐயாவுக்கு அந்தக் கலை அத்தனை பரிச்சயமில்லை. அடி விழும்போது லேசாகக் குவித்துக்கொண்டுவிட்டால் போதும். வலிக்காது. மகாலிங்க வாத்தியார் போன்ற வில்லன்கள், பையன்களின் இந்த உத்தியை நன்கறிந்தவர்கள். அவர்கள் புறங்கையைத் திருப்பச் சொல்லித்தான் அடிப்பார்கள்.
‘அசிங்கமா இருக்கு. க்ளாசுல கட்டிப் பொறண்டு அடிச்சிக்கறது; கேட்டா காதல் கத்திரிக்கான்றது. படிக்கிற வயசுல இப்பிடி அலைபாயவிட்டிங்கன்னா பின்னால மூட்ட தூக்கணும் தெரிஞ்சுதா? உப்பு மண்டி தவிர வேற எதுலயும் வேலதரமாட்டான் பாத்துக்கோ’ என்று சொன்னார்.
ஐயா சொல்வதில் தவறேதுமில்லை. பத்மநாபனுக்கு லேசாக அழுகை வந்தது. அவனது அப்பாவும் இதையேதான் அடிக்கடி சொல்லுவார். உப்புமண்டியில் மூட்டை தூக்குதல் பற்றி. அவர் தன் வயசுக் காலத்தில் ஒழுங்காகப் படித்தவர். திரு.வி.க.வின் அழகு என்பது யாதுவையெல்லாம் உருப்போட்டுப் பரீட்சை எழுதி, முதல் வகுப்பில் தேர்வானதன் விளைவுதான் சோழிங்கநல்லூர் மோட்டார் சைக்கிள் கம்பெனியில் அவரால் செக்யூரிடி உத்தியோகம் பார்க்க முடிகிறது. உப்பு மண்டியில் மூட்டை தூக்கினால் மாதம் ரூ. இரண்டாயிரம் கிடைக்காது. தீபாவளிக்கு போனஸ் தரமாட்டார்கள். பொங்கலுக்கு வேட்டி, சட்டையுடன் கரும்பு வைத்துத் தரமாட்டார்கள்.
ஆனால் அப்பா காதலித்ததில்லை. அபூர்வமாக ஒருநாள் கிளம்பி, குடும்பத்துடன் ராஜலட்சுமி திரையரங்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்துக்குப் போனபோது, சற்றும் ரசனையில்லாமல் பாடல் காட்சிகளில் வெளியே போய்விட்டவர். ‘என்னடா எளவு எப்பப்பாரு அந்தக் கறுப்பிய பாத்து நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு அலையுறான்’ என்று சொன்னார். கடவுள் ஏன் அப்பாக்களுக்குக் காதலைப் புரியவைப்பதேயில்லை?
‘அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சிடா. அதான் தப்பு’ என்று கலியமூர்த்தி ஒருநாள் சொன்னான். உண்மையாகவும் இருக்கலாம். கல்யாணம் செய்துகொள்வதற்குமுன்னால் கண்டிப்பாகக் காதலித்துவிட வேண்டும். வளர்மதி தன் காதலை ஏற்றுக்கொண்டுவிட வேண்டும். வேறெதுவும் வேண்டாம். புளுகன் பெருமாள் சாமி சொன்னதுபோல் முத்தமெல்லாம் கூட அவசியமில்லை. ஒரு உணர்வு. அது போதும். அவள் என்னை அங்கீகரிக்கிற பெருமிதம் ஒன்றுபோதும். மற்றதெல்லாம் அனாவசியம். மோட்டார் சைக்கிள் கம்பெனியில் மேனேஜராகவே ஆகிவிட முடியும். தமிழ் ஐயாவும் திரு.வி.கவும் பார்த்துப் பொறாமை கொள்ளத்தக்க வகையில் பிறகு வாழ்வில் முன்னுக்கு வந்து காட்டிவிடலாம்.
ஆனால் அதெல்லாம் அப்புறம். நாளைக்கு அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருக்கிறாரே. அதற்கு என்ன செய்வது? தமிழ் ஐயாவும் ஓர் அப்பாதான். முத்துக்குமாரசாமி என்கிற அவரது தவப்புதல்வனும் இதே பள்ளிக்கூடத்தில்தான் பத்தாம் வகுப்பில் படிக்கிறான். அவன் மீது இப்படியொரு பிராது வந்து, அழைத்து வா உன் அப்பாவை என்று சொன்னால் வந்து நின்று என்ன செய்வார்? யோசிக்க வேண்டாமா? பிள்ளைகளின் தர்மசங்கடங்கள் ஏனோ பெரியவர்களுக்குப் புரிவதே இல்லை. ஆசிரியர்களானாலும் அப்பாக்களானாலும் பெரியவர்களுக்குப் பெரும்பாலும் அறிவே இருப்பதில்லை.
முட்டி போட்டு நின்றவண்ணம் யோசித்துக்கொண்டிருந்தவனுக்குச் சட்டென்று ஓரெண்ணம் தோன்றியது. வகுப்பு முடியும்வரை காத்திருந்தான். மணியடித்து தமிழ் ஐயா வெளியே வந்தபோது ஒரு கணம் நின்று அவனைப் பார்த்தார். தருணம்.
பத்மநாபன் சட்டென்று எழுந்து ஓடி அவர் காலில் விழுந்தான்.
‘மன்னிச்சிருங்க சார். இன்னமே என்னப்பத்தி யாரும் உங்களாண்ட கம்ப்ளைண்டு குடுக்கமாட்டாங்க. முழுப்பரீட்சைல நான் க்ளாஸ் ·பர்ஸ்டு வந்து காட்டுறேன். என் கண்ண தொறந்துட்டிங்க சார்!’
பரவாயில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்பக் கண்ணில் கொஞ்சம் நீரும் வந்து உதவுகிறது.
தமிழ் ஐயா பரவசமானார். சட்டென்று குனிந்து அவனைத் தூக்கினார். ‘குடுமி? நீயா பேசுறே?’
‘ஆமா சார். என் கண்ண தொறந்துட்டிங்க சார்.’
‘சிங்கம்டா நீயி. எந்திரிச்சி கண்ண தொடச்சிக்க. இந்த மனமாற்றம்தாண்டா வாழ்க்கைல முன்னுக்கு வர உதவும். டேய், பாத்துக்கங்கடா. எல்லாப் பசங்களும் இவனமாதிரி இருக்கோணும். காந்தி கூட இப்பிடித்தான். தப்பு செய்யத் தயங்காமத்தான் இருந்திருக்காரு. அப்பால அரிச்சந்திரன் டிராமா பாத்து திருந்தினாரு. தெரியும்ல?’
பத்மநாபனுக்கு நாக்கு துறுதுறுத்தது. காந்தி தன் பள்ளி நாள்களில் யாரையேனும் காதலித்திருக்கிறாரா? கடிதம் கொடுத்திருக்கிறாரா? அடிக்கடி ஐயா காந்தியை உதாரணம் காட்டுகிறார். என்றைக்காவது கேட்டுவிட வேண்டும். அடிக்கடி அவர் தவறு செய்தார் என்றும் சொல்கிறார். ஆனால் என்ன தவறு என்று சொன்னதில்லை. சிக்கனும் மட்டனும் சாப்பிட்டது ஒரு தவறாக முடியாது. வேறேதாவது பெரிதாகச் செய்திருக்கத்தான் வேண்டும். நூலகத்தில் சத்திய சோதனையைத் தேடிப் பார்த்தாகிவிட்டது. அகப்படவில்லை. சின்ன வயதிலேயே அவருக்குத் திருமணமாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை திருமணத்துக்குப் பிறகு யாரையாவது டாவடித்திருப்பாரோ? அப்படியே இருந்தாலும் அதையெல்லாம் சத்திய சோதனையில் எழுதியிருப்பாரா?
இவ்வாறு யோசிக்கும்போதே, காதலிப்பது தவறா என்றும் ஒரு கேள்வி வந்தது. வாய்ப்பே இல்லை. பெரியவர்களுக்கு மட்டும்தான் அது தவறு. தாத்தாவானபிறகு எடுத்த புகைப்படங்களே உலகின் பார்வைக்குப் பெரும்பாலும் கிடைத்தாலும் காந்தி, தன் சின்ன வயதுகளில்தான் அதனைச் செய்திருக்கவேண்டும். என்றைக்காவது அந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டுவிடவேண்டும்.
ஒருவழியாக அப்பாவை அழைத்து வருவது என்னும் பெருந்தொல்லையிலிருந்து தாற்காலிகமாகத் தப்பித்தது பற்றி பத்மநாபன் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தான். அடுத்த வகுப்பில் அடிக்கடி திரும்பித் திரும்பி பெருமாள் சாமியைப் பார்த்துக்கொண்டான். எப்போதும்போல் அவன் முறைத்துக்கொண்டே இருப்பதைக் கண்டவன், ‘மவனே இன்னிக்கி ஒனக்கு இருக்குது பாரு’ என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டான்.
உணவு இடைவேளையில் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு நேரே மைதானத்துக்கு ஓடினான். பெருமாள் சாமியும் அவனது நண்பர்களான பிற படிக்காத பசங்களும் அங்கே மாமரத்து நிழலில்தான் உட்கார்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பது வழக்கம். என்னவாவது செய்து அவனைக் கதறவிட்டுவிடவேண்டும் என்று பத்மநாபன் முடிவு செய்துகொண்டான்.
அவன் மைதானத்தை ஒட்டிய மாமரத்தருகே சென்றபோது பெருமாள், மரத்தின் மேலே இருப்பது தெரிந்தது. பெரிய மரம். நிறைய கிளைகள். சீசனுக்கு ஆயிரம் காய்கள் கொடுக்கிற மரம். அனைத்தையும் பங்கு போட்டு ஆசிரியர்கள் அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள். ஹெட் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பங்கு. பிரம்புக் கூடையில் குவித்து அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வைக்கும் வாட்ச்மேன் எட்டியப்பன் அதில் இரண்டு எடுத்து வழியில் கடித்துக்கொண்டே போவான்.
பத்மநாபன் மரத்தடியில் போய் நின்றபோது பெருமாள் சாமியின் நண்பர்கள் அவனை முறைத்தார்கள்.
‘ஏய், என்னா?’
பத்மநாபன் பதில் சொல்லவில்லை. ஒரு கணம் யோசித்தான். விறுவிறுவென்று மரத்தில் ஏறினான்.
‘டேய், அவன் வராண்டா’ என்று கீழிருந்து குரல் கேட்டது. பெருமாள் திரும்பிப் பார்க்கக்கூட பத்மநாபன் அவகாசம் தரவில்லை. அவன் நின்று, பறித்துக்கொண்டிருந்த கிளைக்குத் தாவியேறி பொளேரென்று அவன் கழுத்தில் ஒரு குத்து விட்டான்.
அதிர்ச்சியடைந்த பெருமாள், மாங்காய் பறிப்பதை நிறுத்திவிட்டு பத்மநாபனின் கழுத்தைப் பிடித்தான். இரண்டு பையன்களின் கனம் தாங்கக்கூடிய கிளைதான். ஆனாலும் ஆடியது. இருவரும் விளைவு குறித்துச் சற்றும் சிந்திக்காமல் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளத் தொடங்க, செய்தி பரவி, பையன்களும் பெண்களும் மரத்தடியில் கூடிவிட்டார்கள்.
‘டேய், டேய், கீழ இறங்குங்கடா. இங்க வந்து அடிச்சிக்கங்கடா’ என்று ஜெயலலிதா சத்தம் போட்டாள்.
‘விழுந்தா எலும்பு தேறாதுடா’ என்று வளர்மதி சொன்னாள். பத்மநாபன் அவளைப் பார்த்தான். கோபம் மேலும் பீறிட்டது. தன் முழு பலத்தையும் பிரயோகித்து பெருமாள் சாமியைப் பிடித்துத் தள்ளினான். நியூட்டனின் மூன்றாவது விதிப் பிரகாரம், அவனும் பின்புறமாகக் கீழே விழுந்தான்.
நல்ல அடி.
7
அத்தியாயம் 7
உலகம் இருட்டாக இருக்கிறது. எதிர்காலம் என்னவாகும் என்று யூகிப்பதற்கில்லை. நிகழ்காலத்தில் அப்பாவை அழைத்துவரச் சொல்லி இம்முறை ஓலை கொடுத்தாகிவிட்டது.
பொதுவாக பள்ளிக்கூடத்துக்கு அப்பாக்களை அழைத்துச் செல்வது அத்தனை கௌரவமான செயல் அல்ல. குற்றச்சாட்டுகளைப் படிக்கிற திருவிழா அது. ஆசிரியர் முன்னால் அப்பாக்கள் நிகழ்த்தும் வன்கொடுமைகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. அங்கேயே அடித்து, அங்கேயே திட்டி, தன் மானத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்குவதற்காகவே பிறந்தவன் என்று பட்டம் சூட்டி, தன் தலையில் அடித்துக்கொண்டு, அழுது நாடகம் அரங்கேற்றி ஒரு வழி பண்ணிவிடும் அப்பாக்கள்.
பத்மநாபனுக்கு விழப்போகிற அடிகள் பற்றியோ, கேட்கப்போகிற வசவுகள் பற்றியோ பெரிய வருத்தமில்லை. விஷயம் தன் காதல் சம்பந்தப்பட்டது. அப்பாக்களுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியாது அல்லது புரியாது. புரியவைப்பது பெரும் கஷ்டம். முளைத்து மூணு இலை என்று ஆரம்பித்துவிட்டால் தையூர் பண்ணையின் பம்ப் செட் மாதிரி பொழிந்துகொண்டே இருப்பார்கள்.
பத்மநாபன் நிறைய பார்த்திருக்கிறான். வெங்கட்ராமன் காதலில் விழுந்தபோது அவனது அப்பா வந்து அரங்கேற்றிய ஆக்ஷன் காட்சிகள். துரைராஜின் அப்பா மரத்தில் கட்டிப்போட்டு அடித்த அடிகள். பாபுவின் அப்பா ஒரு மாறுதலுக்குத் தன் தலையில் தானே அடித்துக்கொண்டு அழுத காட்சி இன்னமும் அவன் மனக்கண்ணில் நிற்கிறது.
இத்தனை பாடுகள் படுவதற்காகவாவது எந்தப் பெண்ணாவது காதலை ஏற்றுக்கொள்ளலாம். கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் காதலர்களின் எண்ணிக்கைதான் உயர்ந்துகொண்டே போகிறதே தவிர ஒரு காதலியும் அவதரித்தபாடில்லை. பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? காதலித்துத் தொலைத்தால் தான் என்ன?
ராஜலட்சுமி திரையரங்கத்தில் அலைகள் ஓய்வதில்லை ரிலீஸ் ஆனபோது வளர்மதி உள்பட பல பெண்களின் புத்தகப் பையில் கார்த்திக்கின் புகைப்படம் இருந்தது பத்மநாபனுக்குத் தெரியும். சற்றே கோபமாகவும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது அது. கோபம், கார்த்திக்கின் புகைப்படத்துக்காக. ஆறுதல், அந்தக் கதாநாயகனின் இடத்தில் என்றேனும் ஒருநாள் தன் படத்தை அவள் வைப்பாள் என்னும் நம்பிக்கையின் விளைவு.
ஆனால் கார்த்திக்கின் இடத்தை அடுத்தடுத்து வந்த வேறு பல கதாநாயகர்கள் பிடித்தார்களே தவிர பத்மநாபனுக்கும் பன்னீருக்கும் பிறருக்கும் இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எடுத்து வைத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுக்கு வேலையில்லாமல் போனது.
பத்மநாபனுக்கு அதெல்லாம் கூட வருத்தமில்லை. தாம் காதலிக்கிறோம் என்று அவளுக்குத் தெரியும். பள்ளிக்கே தெரியும். இதோ இப்போது ஆசிரியர்களுக்கும் தெரிந்து, அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்கள். மாமரத்துச் சண்டையின் விளைவாக அவனுக்கும் பெருமாள் சாமிக்கும் இடையே உண்டாகியிருந்த நிரந்தரப் பகை பள்ளி முழுதும் பிரசித்தமாகியிருந்தது.
‘ஒன்ன சும்மா விடமாட்டேண்டா. நீ எப்படி வளர்மதிய லவ் பண்ணிடரேன்னு பாத்துடறேன்’ என்று வெஞ்சினத்துடன் வீரசபதம் செய்துவிட்டுப் போனவன் நேரே தலைமையாசிரியரின் அறைக்குத்தான் சென்றிருக்கிறான்.
உண்மை விளம்பி. ஆனால் பெயருடன். ஆதாரத்துடன்.
‘நீங்களே கூப்ட்டு அந்தப் பொண்ண விசாரிச்சிப் பாருங்க சார். வெளிய சொல்ல பயந்துக்கிட்டு உள்ளுக்குள்ளாற அழுதுக்கிட்டிருக்குது சார். என் தங்கச்சி மாதிரிசார் அது. என்னால தாங்கமுடியல சார்’ என்று அவன் நிகழ்த்திய ஓரங்க நாடகத்தின் விளைவு, அப்பாவை அழைத்துவரவேண்டும்.
ப்ரேயர் முடிந்தவுடன் தன்னை அறைக்கு வந்து பார்க்கச் சொன்ன தலைமையாசிரியர், ‘ஒழுங்கா படிக்கப்போறியா? டிசி வேணுமா?’ என்று கேட்டார்.
கண்டிப்பாக டிசி வேண்டாம். ஆனால் ஒழுங்காகப் படிக்கவும் முடியவில்லை. புத்தகத்தைத் திறந்தாலே வளர்மதியின் முகம்தான் தெரிகிறது. விளையாட்டு பீரியட்களில்கூட மனம் தோயமறுக்கிறது. நண்பர்கள் வீசும் சா·ப்ட் பாலை விசிறி அடித்துவிட்டு மூச்சிறைக்க ஓடும்போதெல்லாம் எங்கேனும் கண்ணில் அவன் தென்படுகிறாளா என்று அலைபாய்கிறது. எப்போதும் வகுப்பறையில் பார்வை தன்னிச்சையாக அவள் அமர்ந்திருக்கும் இடத்தில்தான் போய் நிற்கிறது. வளர்மதி. வளர்மதி. வளர்மதி.
வழியே இல்லை. ரத்தத்தில் கலந்துவிட்ட ஒரு நல்ல கிருமி. யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
இரவு அப்பா வாசலில் உட்கார்ந்து காலை தினத்தந்தியைக் கடன் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தபோது அருகே சென்று அமர்ந்தான்.
‘என்னடா?’
‘ஒரு விஷயம் சொல்லணும்’
‘சொல்லு’
‘ஒரு சின்ன பிரச்னை.’
திரும்பிப் பார்த்தார். ‘சொல்லு.’
‘கோச்சிக்கக்கூடாது. திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.’
அவன் எதிர்பார்த்தது ஒன்றுதான். இப்படிச் சொல்வதன்மூலம் அவர் முகத்தில் சிறு புன்னகை ஒன்று வந்துவிடுமானால் விபரீதத்தின் சதவீதம் சற்றுக் குறையக்கூடும். ஆனால் அப்பாவிடம் காதலைப் பற்றி எப்படிப் பேசுவது. அதுவும் முளைச்சி மூணு இலை விடாதவன். இந்த மூன்று இலைகள் என்னென்ன என்று யாரிடமாவது கேட்கவேண்டும். ஏன் நான்காகவோ இரண்டாகவோ அது இல்லை?
‘பீடிகையெல்லாம் பலமா இருக்குது? என்னா விசயம் சொல்லு’ என்றார் அப்பா.
பத்மநாபன் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்க்க, அம்மா அங்கே வந்து நின்றிருந்தாள். ‘என்னம்மா?’ என்று கேட்டான்.
‘எனக்கு ஒண்ணுமில்ல. என்னிக்குமில்லாத திருநாளா அப்பாவாண்ட உக்காந்து பேசுறியே, என்னான்னு பாக்க வந்தேன்.’
அவன் அப்பாவைப் பார்த்தான். இதுவும் சந்தர்ப்பம். தவறவிடக்கூடாது. ‘அதெல்லாம் பர்சனல். நான் அப்பாவாண்டதான் பேசுவேன். நீ உள்ள போ’ என்று சொன்னான்.
அம்மா அதிர்ச்சியடைந்துவிட்டாள். ‘என்னங்க இது! இவனுக்கு என்ன ஆச்சு இன்னிக்கி?’
‘டேய், நீ வாடா’ என்று அழைத்துக்கொண்டு வீட்டு வாசலுக்குச் சென்றார். ‘இப்ப சொல்லு.’
அவன் அதற்குமேல் தயங்கவில்லை. ‘தெரியாத்தனமா நா ஒரு பொண்ண லவ் பண்ணிட்டேம்பா’ என்று முதல் வரியில் விஷயத்தை உடைத்தான்.
அப்பா அதிர்ச்சியடைந்தார். ‘என்னடா சொல்லுறே?’
‘மன்னிச்சிருங்கப்பா. இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரியும். ஆனாலும் தப்பு செஞ்சிட்டேன். உங்களாண்ட சொல்லாம இருக்க வேணாம்னு தோணிச்சி. யாராண்டவேணா எதவேணா மறைப்பேம்பா. உங்களாண்ட என்னால முடியாது!’
கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கோத்த வார்த்தைகள். கண்டிப்பாக அப்பா நிலைகுலைந்துதான் போவார். சந்தேகமில்லை.
அவர் பேசவில்லை. நெடுநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு சட்டென்று இறங்கிவந்து, ‘சரி, என்னா இப்ப?’ என்றார்.
‘ஒண்ணுமில்ல. நா லவ் பண்ணது உண்மை. ஆனா அந்தப் பொண்ணுக்கு அதெல்லாம் தெரியாது. நான் சொல்லல. இந்த வயசுல இதெல்லாம் கூடாதுன்னு எனக்கும் தெரியும்.’
அவர் பேச்சற்றுக் கேட்டுக்கொண்டிருந்தார்.
‘நல்லா படிச்சி முடிச்சி பெரியாளா ஆனப்பறம் பாத்துக்கலாம்னுதான் இருந்தேன். ஆனா ஒருத்தன் ஹெட் மாஸ்டராண்ட என்னப்பத்தி போட்டுக்குடுத்துட்டான்.’
‘என்னன்னு?’
‘நான் வளர்மதிய லவ் பண்றேன்னு.’
‘கர்மம். உங்களுக்கெல்லாம் பள்ளியோடத்துல வேற வேலையே இல்லியாடா?’
‘தப்புதாம்பா. மன்னிச்சிருங்க. நான் யாருக்கும் தெரியாமத்தான் வெச்சிருந்தேன். அவன் குண்ஸா கண்டுபிடிச்சி போட்டுக்குடுத்துட்டான். இப்ப ஹெட் மாஸ்டர் உங்கள இட்டார சொல்றாரு. மெய்யாவே அந்தப் பொண்ணுக்கு இந்த விசயம் தெரியாதுப்பா. இதுமூலமா தெரிஞ்சி அதுக்கு எதாச்சும் கஷ்டம் வந்துடப்போவுதேன்னுதான் சொல்றேன்.’
‘அடி செருப்பால’ என்றார். ஆனால் அந்த சொல்லில் எப்போதுமுள்ள தீவிரம் இல்லை என்பதை அவன் விழிப்புணர்வுடன் கவனித்தான்.
‘நீங்க என்னிய எவ்ளோவேணா திட்லாம், அடிக்கலாம்பா. செஞ்சது தப்புதான். அது புரிஞ்சிடுச்சி. இன்னமே செய்யமாட்டேன். இது சத்தியம். ஆனா நாளைக்கு ஹெட் மாஸ்டராண்ட பேசறப்ப, அந்தப் பொண்ண கூப்ட்டு பேசவேணாம், அதுக்கு ஒண்ணும் தெரியாதுன்றத நீங்கதாம்பா சொல்லணும்.’
கடவுளுக்கு நன்றி. தக்க சமயத்தில் கண்ணில் ஒரு சொட்டு நீரும் வருகிறது. வாழ்க.
ஒரு கல்லில் சில மாங்காய்கள் இன்று சாத்தியமாகியிருக்கின்றன. ஆனாலும் அப்பாவுக்கு இது அதிர்ச்சிதான். பேரதிர்ச்சி என்றும் சொல்லலாம். வேறு வழியில்லை. தன் மகனைச் சான்றோன் என்று கேட்கும் நாள் வரை இம்மாதிரியான சங்கடங்களை அவர்கள் எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.
பத்மநாபன், அவர் கண்ணில் படும்படி தன் கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டான். தாங்கமுடியாத மகிழ்ச்சியில் லேசான சிரிப்புக் கூட வந்தது. அடக்கிக்கொண்டான். இரவு சீக்கிரமே படுத்துத் தூங்கிவிட்டான்.
மறுநாள் காலை அவன் பள்ளிக்குச் செல்லும்போது அப்பாவை நிமிர்ந்து பார்த்தான். ‘பதினொரு மணிக்கா வரேன்னு சொல்லு’ என்றார்.
‘சரிப்பா’ என்று மட்டும் சொல்லிவிட்டு ஓடியே விட்டான். கவனமாக அம்மாவைத் தவிர்த்தான். அது பற்றிய குறுகுறுப்பு இருந்தது. பிரச்னையில்லை. வந்து பார்த்துக்கொள்ளலாம். ஆனானப்பட்ட அப்பாவையே ஒரு சிறு நாடகத்தில் கட்டிப்போட்டுவிட முடிந்தபிறகு அம்மாக்கள் எம்மாத்திரம்? சொல்லப்போனால் அப்பாவோ அம்மாவோ இப்போது ஒரு பிரச்னையே இல்லை. ஹெட்மாஸ்டரைச் சமாளித்துவிட்டால் போதுமானது. வீட்டுக்கு விஷயம் தெரியும், மேற்கொண்டு சிக்கல் ஏதுமில்லை என்பதை வகுப்பில் பிரகடனப்படுத்திவிட்டால் பெருமாள் சாமி தன் முகத்தை எங்குகொண்டு வைத்துக்கொள்வான்?
பள்ளி மணி அடிக்க இருபது நிமிடங்களுக்கு முன்னதாகவே அவன் வகுப்புக்குச் சென்று பையை வைத்துவிட்டு வேகமாக கிரவுண்டுக்குப் போனான். வளர்மதியும் வேறு சில பெண்களும் அங்கே ரைட்டா, ரைட்டு, ரைட்டா, ரைட்டு என்று கட்டம் போட்டு பாண்டியாடிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு கணம் யோசித்தான். சட்டென்று அருகே சென்று, ‘வளரு உன்னாண்ட ஒரு நிமிசம் பேசணும்.’ என்று சொன்னான்.
அவள் திரும்பிப் பார்த்த அதே சமயம் ஹெட் மாஸ்டரும் பின்னாலிருந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
8
அத்தியாயம் 8
பாண்டியாடிக்கொண்டிருந்த வளர்மதி திரும்பிப் பார்த்தபோது அவள் கண்ணில் முதலில் பட்டது பத்மநாபன் இல்லை. ஹெட்மாஸ்டர்தான். எனவே அவள் ஜாக்கிரதை உணர்வு கொண்டாள். ஆட்டத்தை நிறுத்தாமலேயே, ‘என்னடா?’ என்று அலட்சியமாகக் கேட்டாள்.
‘உன்னாண்ட கொஞ்சம் பேசணும்’ என்று பத்மநாபன் சொன்னான்.
‘இப்ப முடியாது. அஞ்சு நிமிஷத்துல கிளாசுக்கு வந்துடுவேன். இங்கிலீஷ் சார் ‘மிஸிண்ட்ரப்ரடேஷன் லீட்ஸ் டு மிஸரி’ல இன்னிக்கி டெஸ்ட்னு சொன்னாரே, படிச்சிட்டியா?’
பத்மநாபனுக்கு அவளுடைய பேச்சும் கவனிக்காத பாங்கும் குழப்பம் தந்தன. அதைவிடக் குழப்பம், சம்பந்தமில்லாமல் பாடம் குறித்து அவள் நினைவூட்டியது. எரிச்சலாக இருந்தது. அடக்கிக்கொண்டு திரும்பவும் அழைத்தான். உன்னாண்ட கொஞ்சம் பேசணும்.
வளர்மதியும் தோழிகளும் ஆட்டத்தை முடித்துக்கொண்டு முகம் துடைத்தபடி வகுப்புக்குப் புறப்பட்டார்கள்.
‘அப்ப நீ வரமாட்ட?’
‘எங்கடா?’
‘பேசணும்னு சொன்னனே?’
வளர்மதி அவனை உற்றுப்பார்த்தாள். வெறும் பத்தடி தொலைவிலேயே கையில் பிரம்புடன் காவல் காக்கும் ஐயனார் போல் மைதானம் முழுவதையும் தன் பார்வையால் அளவெடுத்துக்கொண்டிருக்கிறார் ஹெட் மாஸ்டர். இந்தக் குடுமிக்கு ஒரு சின்ன உள்ளுணர்வு கூடவா இருக்காது? மடையன், மடையன். திரும்பிப் பாருடா தடியா.
ஆனால் பத்மநாபன் கொக்குக்கு மதி எப்போதும் ஒன்று. வளர்மதி. அவள்மீது வளர்த்துக்கொண்ட காதல். அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருக்கும் ஹெட் மாஸ்டர். விஷயம் என்னவாகப்போகிறது? இன்று விடை தெரியும். இது குறித்து அல்லது வேறு எது குறித்தாவது அவன் வளர்மதியுடன் பேசியாகவேண்டும். அதைவிட என்ன பெரிய விஷயம்? மிஸிண்ட்ரப்ரடேஷன் லீட்ஸ் டு மிஸரி நாசமாய்ப் போகட்டும்.
‘உஸ்கூல் விட்டதும் கண்டிப்பா உன்னாண்ட பேசணும். ராஜமாணிக்க மொதலியார் கொடோனாண்ட வாய்க்கால் கரையோரம் வெயிட் பண்ணிட்டிருப்பேன். நீ வரலன்னா செத்துருவேன் வளரு’ என்று கண்ணைத் துடைத்தபடி சொல்லிவிட்டு ஓடிப்போனான். வளர்மதி தலையில் அடித்துக்கொண்டு வகுப்புக்குச் சென்றாள்.
பதினொரு மணிக்கு பத்மநாபனின் அப்பா பள்ளிக்கு வந்தார். உடனே ப்யூன் எட்டியப்பன் வகுப்புக்கு வந்து ஹெட் மாஸ்டர் அவனை அழைப்பதாகச் சொன்னான். டிசி அல்லது திருந்திய மாணவன். புத்தம்புதிய காதல் காவியம். உங்கள் கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் காணத்தவறாதீர்.
விபரீத எண்ணங்களும் கலவையான திட்டங்களும் புத்தியில் முட்டி மோத, அவன் தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றார்.
அப்பா நின்றுகொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் பல்லைக் கடித்தார்.
‘பத்மநாபனா ஒம்பேரு? காலைல கிரவுண்ட்ல பாத்தனே? பொண்ணுங்களோட ஒனக்கு என்னடா பேச்சு?’ என்று எடுத்த எடுப்பில் ஹெட்மாஸ்டர் சட்டையைப் பிடித்தார்.
‘இங்கிலிஷ் க்ளாஸ்ல இன்னிக்கி டெஸ்டு சார். ஒருவாட்டி ஒப்பிச்சிப் பாக்கலாம்னு போனேன்.’
‘ஓஹோ. பாடம் ஒப்பிச்சிப் பாக்க ஒனக்கு க்ளாஸ்ல வேற பசங்களே கிடையாதா?’
‘வளர்மதி இங்கிலீஷ்ல ·பர்ஸ்ட் சார்.’
ஹெட் மாஸ்டர் முறைத்தார்.
‘இந்தா பாருங்க சார், உங்க பையன பத்தி விசாரிச்சேன். சுமாராத்தான் படிக்குறான். நிறைய டைவர்ஷன்ஸ் இருக்குது. எனக்கு இந்த லவ்வு கிவ்வுன்னா சுத்தமா புடிக்காது. படிக்கற பசங்க ஒழுங்கா இல்லன்னா நாளைக்கு எனக்குத்தான் கெட்ட பேரு. என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க’
அப்பா, பத்மநாபனைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். ‘ஹெட் மாஸ்டர் கால்ல வுழுடா. இன்னோர்வாட்டி இந்தமாதிரி விசயம் வந்திச்சின்னா வீட்ல சேக்கமாட்டேன் உன்னிய’ என்று சொன்னார்.
அடடே விஷயம் இத்தனை எளிமையானதா? பத்மநாபன் சந்தோஷமாக ஹெட் மாஸ்டர் காலில் விழுந்தான். மன்னிச்சிருங்க சார். தெரியாம தப்பு பண்ணிட்டேன். இன்னமே என்னப்பத்தி நல்ல விஷயம் மட்டும்தான் உங்க காதுல விழும். இந்த பத்மநாபன் திருந்திட்டான் சார். நேத்தே எங்கப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன் சார்.
‘நிஜமாவா?’ என்றார் ஹெட் மாஸ்டர்.
‘ஆமா சார். நைட்டு வீட்ல சொன்னான். இந்தமாதிரி ஒரு பொண்ணு.. அப்படின்னு. இந்தக் காலத்துப் பசங்க புத்தி ஏன் இப்பிடிப் போவுதுன்னு தெரியல..’ என்று அப்பா பொதுவில் சில வரிகள் கவலைப்பட்டார்.
‘மொதல்ல சினிமா பாக்குறத நிறுத்தணும்.’
‘இன்னமே தியேட்டர் பக்கமே போகமாட்டேன் சார்’ என்றான் பத்மநாபன்.
‘லாஸ்டா என்னா படம் பாத்த?’
‘அலைகள் ஓய்வதில்லைக்கு அப்பறம் எதும் பாக்கல சார். அதுகூட அப்பாதான் இட்டுக்கினு போனாரு.’
ஹெட்மாஸ்டர் அவனது அப்பாவைத் திரும்பிப் பார்த்தார்.
‘ஹிஹி. நல்லபடம்னு யாரோ சொன்னாங்க சார். போய்ப் பாத்தாத்தான் தெரியுது, ஒரே லவ்வு.’ என்றார். இப்போது அப்பா காலில் விழும் சம்பவம் அரங்கேறினால் பார்க்க நன்றாக இருக்கும். பத்மநாபன் சிரித்துக்கொண்டான்.
‘தபார் பத்மநாபன், இதெல்லாம் நல்லது இல்லே. அந்தப் பொண்ணோட அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சா உன் தோலை உரிச்சிடுவாரு. ஊர்ல அவங்களுக்கு இருவது ஏக்கர் உப்பு ஏரி கெடக்குது. ரெண்டு மண்டி போட்டிருக்காங்க. ஆள்பலம், அடியாள் பலம்னு ஒருமாதிரியானவங்க. படிக்கற வயசுல ஒனக்கு ஏண்டா இதெல்லாம்?’
‘தப்புதான் சார். தெரியாம செஞ்சிட்டேன். இப்பலேருந்து அந்தப் பொண்ணு என் தங்கச்சி சார். நேத்து எங்கப்பாவாண்டகூட இதான்சார் சொன்னேன்.’
தயங்காமல் கண்ணைத் துடைக்கும் அளவுக்கு நினைத்த சமயம் அழுகை வருகிறது. பெரிய விஷயம்.
ஹெட் மாஸ்டர் அவனை உற்றுப்பார்த்தார். ‘நம்பலாமா?’
‘எங்கப்பான்னா எனக்கு உசிரு சார். அவர் மேல சத்தியமா சொல்றேன். என்னிய நம்புங்க சார்..’
இப்போது பத்மநாபனின் அப்பாவுக்குக் கண்ணில் நீர் கோத்துக்கொண்டது. அடடே, இத்தனை நல்லவனா? தெரியாமல் போய்விட்டது. பாதகமில்லை. இனி தெரிந்துகொள்ளலாம்.
‘எனக்கு ஏன் அப்பிடி தோணிச்சி, ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு இப்பவும் தெரியல சார். ஆனா தப்புனு புரியுது. அந்தப் பொண்ணு கிளாஸ்ல செகண்ட் ரேங்க் வாங்கும் சார். ஒருவேள அதனால லவ்வு வந்திச்சோ என்னாமோ. ஆனா இப்ப தெளிஞ்சிட்டேன் சார். அடுத்த எக்சாம்ல இந்த பத்மநாபன் தான்சார் க்ளாஸ்ல ·பர்ஸ்ட் ரேங்க் வாங்குவான். எளுதி வெச்சிக்கங்க. எங்கப்பாவுக்கு நான் செலுத்தற மரியாதசார் இது!’
ஹெட் மாஸ்டரும் அப்பாவும் ஒருசேர உணர்ச்சிவசப்பட, பத்மநாபனுக்கு மிகவும் குஷியாகிவிட்டது. ராஜலட்சுமி திரையரங்கில் அவன் காண நேர்ந்த எந்தத் திரைப்படத்திலும் இத்தனை நேர்த்தியான வசனங்கள் வந்ததில்லை. தன் நாவில் சரஸ்வதி நர்த்தனமாடுகிறாள். சந்தேகமில்லை. இனி கையும் களவுமாகப் பிடிபட்டால்கூட ஹெட் மாஸ்டர் அத்தனை சுலபத்தில் தன் விஷயத்தில் நடவடிக்கை ஏதும் எடுத்துவிடமாட்டார்.
‘சரி ஒழுங்கா கிளாசுக்குப் போ. ஒன்ன வேணா செக்ஷன் மாத்தட்டுமா?’
‘ஐயோ வேணாம் சார். நைன்த் பிக்குதான் சார் மகாலிங்க வாத்தியார் கணக்கு எடுக்குறாரு. அவரு க்ளாஸ்னா எனக்கு உசிரு சார்.’
அவனை ஏற இறங்கப் பார்த்தவர், ‘கணக்குல நீ எவ்ளோ?’ என்று கேட்டார்.
பத்மநாபன் யோசித்தான். ஆபத்துக்குப் பாவமில்லை. ஒரு சிபிஐ ஆபீசர் மாதிரி ஹெட்மாஸ்டர் தன் பிராக்ரஸ் கார்டுகளைத் தேடி எடுத்துப் பார்ப்பார் என்று தோன்றவில்லை. எனவே எண்பத்தி ஆறு சார் என்று சொன்னான்.
‘ஓகே. அடுத்ததுல நூறு வாங்கணும். புரிஞ்சிதா?’
‘எஸ் சார்’ என்று விட்டான் சவாரி. சந்தோஷமாக இருந்தது. இரண்டு தலைகள் வசமாக அகப்பட்டன, மிளகாய்ப்பழம் அறைப்பதற்கு. பெரியவர்களை ஏமாற்றுவதில் ஒரு லயம் கலந்த சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. சந்தர்ப்பங்கள் தொடர்ந்து இப்படிக் கைகொடுத்தால் நல்லது.
மாலை வகுப்புகள் முடிந்ததும் கலியமூர்த்தியின் சைக்கிளை வாங்கிக்கொண்டு நேரே ராஜமாணிக்க முதலியார் உப்பு கொடோனுக்கு எதிரே உள்ள ஏரிக்கரைக்குச் சென்றான். கரையோரம் நிறைய கட்டுமரங்கள் இருந்தன. காத்திருந்தான். வளர்மதி வரவேண்டும். வந்ததும் என்னடா விஷயம்? சீக்கிரம் சொல்லு. நான் அவசரமா போகணும் என்பாள். சந்தேகமில்லை. அவசரமாகக் கிளம்பிச் சென்று அவள் ராக்கெட் விட்டாக வேண்டும். விடுகிற ராக்கெட் ‘ஸ்கைலாபா’க இல்லாமல் இருக்கவேண்டும். அவளை ஏற்றிக்கொண்டு கட்டுமரத்தில் புறப்படவேண்டும். கிழக்கே கடல் கண்ணுக்கெட்டும் தொலைவில் இருக்கிறது. ஏரித் தண்ணீர் அங்கு சென்று சேர்கிறது. வழியெங்கும் ஏரியில் பாத்தி கட்டி ஆங்காங்கே உப்புப்பூ பூத்திருக்கிறது. இம்மாதிரி ஒரு லொக்கேஷன் அமைவது கஷ்டம். காதலை வெளிப்படுத்த உப்பளங்களைக் காட்டிலும் உன்னதமான இடம் வாய்ப்பதற்கில்லை.
காத்திருந்தான். கண்ணை மூடிக் கனவு கண்டான். கட்டுமரம் மிதக்கிறது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அவனைத் தெரிந்த யாருமில்லை. அவனும் வளர்மதியும் மட்டும்.
‘சொல்லு. என்ன விஷயம்’
‘ஐ லவ் யூ வளர்மதி.’
வளர்மதி புன்னகை செய்தாள். ‘நானும்தாண்டா குடுமி’ என்று சொன்னாள்.
நினைவு மிகவும் இதமாக இருந்தது. கண்ணைத் திறந்தபோது வளர்மதியுடன் அவள் வீட்டு ஸ்லேவ் வீரபத்திரனும் நின்றிருந்தான்.
9
அத்தியாயம் 9
இது ஒரு தருணம். சற்றே மாறுபட்ட, எதிர்பாராத, மகிழ்ச்சியும் கலவரமும் ஒருங்கே உருவாகும் தருணம். இதையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். பைபாஸ் முத்துமாரியம்மனோ குருட்டு அதிர்ஷ்டமோ அவசியம் கைகொடுக்கும். பத்மநாபன் திடசித்தம் கொண்டான். ஸ்லேவ் வீரபத்திரன் அச்சமூட்டக்கூடிய ஆகிருதியில் இருந்தால்தான் என்ன? அவன் ஒரு ஸ்லேவ்தான். கண்டிப்பாக அவனால் வளர்மதியைக் காதலிக்க முடியாது. வத்தக்காச்சி போலிருக்கும் பத்மநாபனால் முடியும். அப்பாவுக்கும் ஹெட் மாஸ்டருக்கும் அகில உலகுக்குமே விஷயம் தெரிந்தாலும் ஆமாம், காதலிக்கிறேன் என்று அடித்துச் சொல்ல அவனால் முடியும். சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் அவர் மகன் அருணாசல முதலியாருக்கும் பேத்தி வளர்மதிக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் இன்னபிற அத்தனை உருப்படிகளுக்கும் கைகட்டிச் சேவகம் செய்யும் வீரபத்திரனால் சாத்தியமில்லை.
இந்தத் துணிச்சல் மிகுந்த எண்ணத்துக்கு வலு சேர்ப்பதுபோல், உப்புகொடோனுக்கு அருகே தான் வரச்சொன்ன இடத்துக்கு வீரபத்திரனுடன் வந்து சேர்ந்ததுமே மன்னிப்புக் கேட்கும் குரலில் வளர்மதியும் ஒரு விஷயத்தைச் சொன்னாள்.
‘தனியாத்தான் கெளம்பினேன். பாப்பா தனியா போவுதேன்னு தாத்தாதான் இவன அனுப்பிவெச்சாரு. வீரபத்திரா, நீ போய் நாலு புளியாங்கா எடுத்தாயேன். சாப்ட்டுக்கினே பேசலாம்’ என்று சொன்னாள்.
வீரபத்திரன் பத்மநாபனை முறைத்தான். அல்லது வெறுமனே அவன் பார்ப்பதே தனக்கு முறைப்பதுபோல் தெரிகிறதா?
பத்மநாபனுக்குக் குழப்பமாக இருந்தது. இருப்பினும் அவனை வெறுப்பேற்றுவது என்று முடிவு செய்து, ‘புளியாங்காயெல்லாம் வேணாம் வளரு. எனக்கு ஒரு பெரிய டவுட்டு. அத்த மொதல்ல க்ளியர் பண்ணு. பின்னத்தின் சுருங்கிய வடிவம்னா என்னா? மகாலிங்க வாத்தியாரு சொன்னப்ப சரியாவே விளங்கல. பன்னீராண்ட கேட்டேன். போடான்னுட்டான். ·பர்ஸ்ட் ரேங்க் வாங்குற திமிரு… இத்த புரிஞ்சிக்காம இன்னிக்கி எப்பிடி ஓம்மொர்க்கு பண்றதுன்னே தெரியல.’
வளர்மதிக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள். அழகான சந்தர்ப்பங்களை இன்னும் அழகாக்கலாமே? எனவே ஆரம்பித்தாள். ஓட்டைப் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் தக்கென்று ஏறி அமர்ந்து பத்மநாபன் கையிலிருந்த நோட்புக்கை வாங்கிப் பிரித்தாள். அவன் பாக்கெட்டிலிருந்து அவளே பேனாவை எடுத்து, ‘இங்க பாரு..’ என்று ஆரம்பித்தாள்.
‘சிநேகிதக்காரப் பொண்ணுங்கல்லாம் வராங்கன்ன? இங்க இவன் மட்டும்தான் இருக்கான்?’ என்று முதல் சந்தேகத்தை வீரபத்திரன் கேட்டான்.
பத்மநாபனுக்கு அதுவும் மகிழ்ச்சிக்குரிய தகவலாகவே இருந்தது. தன் பொருட்டு வீட்டில் ஒரு பொய் சொல்லியிருக்கிறாள். சந்தேகமே இல்லை. காதல்தான். ஆண்டவா, இந்தக் கடங்காரனை ஒழித்துக்கட்டேன்? ஒரே ஒரு நிமிஷம் நான் வளர்மதியிடம் தனியே பேசிவிட ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடேன். பெரியவனாகி, சம்பாதித்து ஒரு கோயிலே கட்டிவிடுகிறேனே.
வளர்மதி அவன் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. மிகத் தீவிரமாக நோட்புக்கில் எதையோ எழுதி, ‘இங்க பாரு. எந்த பின்னத்தையும் அதோட சுருங்கின வடிவத்தால பாக்கமுடியும். இப்ப, p, qன்னு ரெண்டு நம்பர் இருக்குன்னு வெச்சிக்கோ. இந்த ரெண்டையும் rனு ஒரு நம்பரால வகுக்க முடியும்னா, வகுத்து வர்ற நம்பர்ஸ்தான் அதோட சுருங்கின வடிவம்.’
‘ஓஹோ’ என்றான் பத்மநாபன்.
‘நாலு பை ஆறுன்னு ஒரு பின்னம் இருக்குன்னா அதோட சுருங்கின வடிவம் எது?’
பத்மநாபன் யோசித்தான். காதலின் சுருங்கின வடிவம் கனவு காண்பது. கனவின் சுருங்கின வடிவம் கவிதை எழுதுவது. கவிதையின் சுருங்கின வடிவம் அதை நினைத்துப் பார்ப்பது. நினைவின் சுருங்கின வடிவம் வளர்மதி. வளர்மதியின் சுருங்கின வடிவம் அவளது புன்னகை. புன்னகையின் சுருங்கின வடிவம்…
பத்மநாபன் ரகசியமாக வீரபத்திரனைப் பார்த்தான். கைப்பிடிச் சுவரில் அவனுக்கு உட்கார இடமுமில்லை, அனுமதியும் இல்லை. பொதுவாக ஸ்லேவ்கள் எஜமானியம்மாக்களுக்கு சமமாக உட்காரமாட்டார்கள். மவனே இரு. எனக்கும் வளருக்கும் திருமணம் ஆகட்டும். உன்னைத் திருமணச் சீராகக் கேட்டு வாங்கி வந்து தினசரி ஆறு கேன் தண்ணீர் இழுக்கவைக்கிறேன்.
‘என்னடா யோசிக்கற? நாலு, ஆறு ரெண்டையும் ரெண்டால வகுக்க முடியும் இல்ல?’
‘ஆமா?’
‘அப்ப சொல்லு.’
‘ரெண்டு பை மூணு.’
‘கரெக்ட். அதான் நாலு பை ஆறோட சுருங்கின வடிவம்.’
வீரபத்திரன் கொட்டாவி விட்டான். ‘இந்தா வரேன்..’ என்று இரண்டடி நகர, ‘தம்மடிக்க போறியா வீரபத்திரா?’ என்று பத்மநாபன் கேட்டான்.
துடித்துப் போய் திரும்பிய வீரபத்திரன், ‘டேய், கொன்னுடுவேன் உன்னிய. அதெல்லாம் இல்ல வளரு. நீ தாத்தாவாண்ட ஒண்ணூம் சொல்லாத. நான் சொம்மா இப்பிடி..’ என்று கொடோன் சந்தைக் காட்டினான். வளர்மதி சிரித்தாள்.
முறைத்தபடி வீரபத்திரன் நகர்ந்ததும் பத்மநாபன், ‘ஐ லவ் யூ வளரு. என்னால இத சொல்லாம இருக்கமுடியல. செத்துருவேன் வளரு’ என்றான்.
அவள் ஒன்றும் பேசவில்லை. அதிர்ச்சியடைந்த மாதிரியும் தெரியவில்லை. இது பத்மநாபனுக்கு வியப்பாக இருந்தது. இப்படியுமா ஒரு பெண் இருப்பாள்?
‘தபாருடா. நீ லவ் பண்றேன்னு எனக்குத் தெரியும். ஆனா நான் இப்ப சொல்லமுடியாது. என்னால முடிஞ்சது உன்ன மாட்டிவிடாம இருக்கேன். உன்னமாதிரியே இன்னும் ரெண்டு பேரு லவ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க. எனக்கு எவன் மேலயும் இஷ்டம் இல்ல. நான் மொதல்ல நல்லா படிக்கணும்’ என்றாள்.
பத்மநாபனுக்கு சுறுசுறுவென்று ஆகிவிட்டது. இன்னும் இரண்டு பேர்! கடவுளே. யார் அந்தக் களவாணிப் பயல்கள்?
‘அதெல்லாம் ஒனக்கு வேணாம். இப்ப நமக்கு வேல படிக்கறது. அத ஒழுங்கா செய்யி. லவ்வெல்லாம் சரிப்படாது குடுமி’
அவனுக்கு அழுகை வந்தது. ‘என்னால முடியல வளரு. எங்கப்பா எப்பிடி அடிச்சாரு தெரியுமா? இன்னிக்கி ஹெட்மாஸ்டர் கூப்ட்டு அப்பா எதிர்ல அசிங்கம்மா போயிடுச்சி.’
‘ஐயோ எப்படா?’
‘காலைல. உன்னாண்ட சொல்லவேணாம்னுதான் நெனச்சேன். உஸ்கோலுக்கே தெரியும். என்னால மறைச்சிவெக்கமுடியல வளரு. நீ இல்லாம என்னால வாழக்கூட முடியாது. நீ மட்டும் சரின்னு சொல்லிட்டன்னா, அப்பறம் நீ பேசக்கூட வேணாம். சரின்னு சொல்லிட்ட ஒரு வார்த்த போதும். அத்தவெச்சிக்கிட்டே நான் டிகிரி வரைக்கும் ஒழுங்கா முடிச்சிருவேன். வேல தேடிக்கிட்டு நேரா உன் வீட்டாண்ட வந்து நிப்பேன். அதுவரைக்கும் உம்மூஞ்சியக்கூட ஏறெடுத்துப் பாக்கமாட்டேன்.’
அவள் அவனை உற்றுப்பார்த்தாள்.
‘நாளைக்கு ஒனக்கே இதெல்லாம் சில்றத்தனமா தெரியும் குடுமி. வேணாம், சொன்னாக்கேளு’ என்றாள்.
‘முடியல வளரு.’
‘தபாரு நான் நல்லவிதமா சொல்றேன். எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா ப்ராப்ளமாயிரும். எங்க தாத்தா ஒன்ன சும்மாவே விடமாட்டாரு. ஸ்கூல்லேருந்து தூக்கிருவாங்க அப்பறம்? தேவையா இதெல்லாம்?’
‘நான் என்ன உன் தாத்தாவையா லவ் பண்றேன். ஒன்னத்தான? நீ சொல்லு வளரு. என்னிய புடிக்கலியா?’
ஒரு கணம் யோசித்தாள். பிறகு, ‘அப்பிடி சொல்லமுடியாது. ஆனா லவ் இல்ல.’
அவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. லவ் பண்ணவைத்துவிடலாம் என்று நினைத்தான். ‘ரொம்ப தேங்ஸ் வளரு’ என்று பொத்தென்று குதித்தான்.
‘டேய், எங்கடா போற?’
‘வீட்டுக்குத்தான். இன்னிக்கி பட்ட அவமானத்துக்கு ஒரு மருந்து வோணுமுன்னுதான் உன்னிய வரசொன்னேன். நீ சொன்ன ஒருவார்த்த போதும் வளரு. என்னிய புடிக்காம இல்லன்னு நீ சொன்னத புடிச்சிருக்குன்னு சொன்னதாவே எடுத்துக்கறேன். நான் போறேன்..’
‘டேய், டேய்..’ அவள் அழைக்க அழைக்க நில்லாமல் விறுவிறுவென்று போனான்.
பள்ளி மைதானத்தைக் கடக்கும்போது நண்பர்கள் சிலர் ஒரு பெரிய பாறையைத் தூக்க முயற்சி செய்துகொண்டிருப்பதைக் கண்டான். காலம் காலமாக மாணவர்கள் முயற்சி செய்யும் விஷயம் அது. மைதானத்தில் அந்தப் பாறையை யார் கொண்டுவந்து போட்டது என்று தெரியவில்லை. தூக்கமுடியாத பாறை. கனமான, பெரிய ஆகிருதி கொண்ட, வீரபத்திரனைப் போன்ற பாறை.
‘நகருங்கடா’ என்று பத்மநாபன் சொன்னான்.
‘இவுரு தூக்கப்போறாராம்டா.’
பத்மநாபன் நிமிர்ந்து பார்த்தான். ‘ஆமா. தூக்கட்டா? என்ன பெட்டு?’
‘தூக்கு பாப்பம்?’
முடியும் என்று உறுதியாகத் தோன்றியது. இன்று தொடங்கி முழுப்பரீட்சை வரை சிந்தனையைச் சிதறவிடாமல் ஒழுங்காகப் படித்து க்ளாஸ் ·பர்ஸ்ட் வாங்கிவிடுவது என்று உறுதி கொண்டான். வளர்மதி பிரமித்து நின்று, தன் காதலை அங்கீகரிக்க இனி அதுவே தலைசிறந்த வழி. என்ன புடிக்கலியா? அப்பிடி சொல்ல முடியாது. போதும். இது பெரிய விஷயம். பிடிச்சிருக்குடா என்று வந்து சொல்லவைக்க ·பர்ஸ்ட் ரேங்க்தான் ஒரே பாதை. தன்னால் முடியுமா? கண்டிப்பாக முடியும். தன்னால் மட்டுமே முடியும்.
ஹ¤ப் என்று பாறையைப் பிடித்தான். தன் முழு பலத்தையும் பிரயோகித்துத் தூக்கினான்.
‘டேஏஏஏஏய்!!’ நண்பர்கள் வியப்பில் வாய் பிளக்க, இதைப் பார்க்க வளர்மதி அருகே இல்லையே என்று ஏங்கினான்.
அது பிரச்னையில்லை. சில தொண்டர்கள் எப்போதும் இருக்கிறார்கள். தகவல் ஒலிபரப்புத் தொண்டர்கள்.
‘வளரு, தெரியுமா? பத்மநாபன் மாப்ளகல்ல தூக்கிட்டான்!’
மணப்பெண் வெட்கப்படுவாள். புன்னகை செய்வாள். குடுமி, ஐ லவ் யூடா என்பாள். போதும். நினைத்தால் இனிக்கிறது. மிகவும் இனிக்கிறது. பின்னத்தின் சுருங்கின வடிவம்கூட எளிமையானதாகவே இப்போது தெரிகிறது.
10
அத்தியாயம் 10
ஷெல்டர் என்று பொதுவில் அறியப்பட்ட, காப்பி ·பில்டர் மாதிரி இருந்த உயரமான கட்டடத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகளாக மக்கள் வந்து சேர்ந்த தினத்தில் ஆண்டிறுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வந்தது. பள்ளியில் சத்துணவுத்திட்டத்தைத் பார்வையிட எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை அனுப்பிவைத்தார். ஆரஞ்சு நிற புடைவையில் அன்றைக்கு அவர் பள்ளி வளாகத்தில் இறங்கியபோது பாண்டுரங்கன் சார் ‘நானும் இன்னிக்கி ஆரஞ்ச் கலர்’ என்று பழனி வாத்தியாரிடம் தன் சட்டையைக் காட்டிச் சொன்னதை ஒட்டுக்கேட்டு கலியமூர்த்தி வகுப்பில் ஒலிபரப்பினான். கவிதை எழுதும் ஆற்றல் படைத்த மோகன சுந்தரம் இது பற்றி எட்டு வரிகள் எழுதி எல்லோருக்கும் காட்டினான். கலர் கொடிகள் கட்டி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தார்கள். பத்மநாபன் தனக்குக் கிடைத்த சாக்லேட்டை வளர்மதியிடம் நீட்ட, அவள் ‘தேங்ஸ் குடுமி, நீ சின்சியரா படிக்க ஆரம்பிச்சிட்டேன்னு கேள்விப்பட்டனே?’ என்று கேட்டாள்.
அவன் பதில் சொல்லவில்லை. தீர்மானம் செய்திருந்தான். வளர்மதியைக் கவர அது ஒன்றைத்தவிர வேறு வழியில்லை. நன்றாகப் படிப்பது. எப்படியாவது ·பர்ஸ்ட் ரேங்க் வாங்குவது. இடைப்பட்ட காலங்களில் பன்னீர் செல்வத்தைப் பற்றி அவ்வப்போது வளர்மதி தன் தோழிகளிடம் குறிப்பிட்ட சில கருத்துகள் அவன் காதில் விழுந்திருந்தது. பன்னீர் நல்லவன். பன்னீர் கெட்டிக்காரன். பன்னீர் பெரியாள். என்னிக்கானா அவன நான் பீட் பண்ணிக் காட்டுறேன் பாரு. செகண்ட் ரேங்க் வாங்கும் வளர்மதிக்கு அது ஒருவேளை நெருங்கக்கூடிய தொலைவாகவே இருக்கலாம். பத்மநாபனுக்கு ஒரு விருப்பமாக அல்லாமல் வெறியாக அந்த எண்ணம் உருக்கொண்டது. கடைசியில் ஓடும் குதிரை முதலாவதாக வருவது. முடியாதா என்ன?
பன்னீர் வயிறெரிவான் என்கிற மகிழ்ச்சிக்குரிய தகவல் தவிர, வளர்மதி அப்போது தன் காதலை மறுக்கமுடியாமல் போகும். சின்சியரான காதலன் ·பர்ஸ்ட் ரேங்க் வாங்குபவனாகவும் இருப்பது அரிது. மாற்றியும் சொல்லலாம். ·பர்ஸ்ட் ரேங்க் வாங்குகிறவர்களைப் பொதுவில் யாரும் காதலிப்பதில்லை. குறிப்பாகப் பன்னீருக்கு அந்த பாக்கியம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்களால் அதிகம் விரும்பப்படும் பையன்களைப் பெண்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.
விதிகளை மாற்றுவதென்பது தன்னால் மட்டுமே முடியும். வளர்மதி, காத்திரு. இன்னும் ஒரே மாதம். இறுதித் தேர்வு நெருங்கிவிட்டது. பாடங்களிலும் காதலிலும். பத்தாம் வகுப்பு பி செக்ஷனுக்கு நீயும் நானும் காதலர்களாக உள்ளே நுழைவோம்.
அவன் பேய்போல் உழைக்கத் தொடங்கினான். இங்கிலீஷ் க்ளாஸில் சொல்லிக்கொடுக்கிற அனைத்தையும் வீட்டுக்குப் போய் உடனுக்குடன் எழுதிப்பார்த்தான். அதிகாலை வேளையில் ரெட்டைக்குளத்து புதரோரம் ஒதுங்கி அமரும்போது கையில் ஒரு துண்டுத்தாள் வைத்து கணக்குகளைப் போட்டுப்பார்த்தான். பள்ளிக்குப் போகிற, வருகிற வழியிலெல்லாம் வரலாற்றுப் புத்தக வருஷங்களை உருப்போட்டான். ஞாயிற்றுக்கிழமை பம்ப்செட் திருவிழாவைத் தவிர்த்துவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்று உலவியபடி படிக்கத் தொடங்கினான்.
இதனாலெல்லாம் அவனது அம்மா மிகுந்த கவலைக்கு உள்ளாகி, ‘உடம்புக்கு எதாச்சும் சரியில்லையா பத்து?’ என்று கேட்டாள்.
‘த..சே. அவன சொம்மாவுடு. புள்ள படிக்கறான்ல?’ என்று அப்பா அதற்கு பதில் சொன்னது பெருமிதமாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை அவனொரு திருந்திய மாணவன். ஹெட் மாஸ்டர் அறையில் ஞானம் பெற்றவன். இனி ஒருக்காலும் காதல், கொத்தவரங்காய் என்று போகமாட்டான்.
‘டேய், அழியாத கோலம்னு ஒரு படம் வந்திருக்காம். போவலாமா?’ என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அபூர்வமாக அப்பாவே கேட்க, ‘நீங்க போயிட்டுவாங்கப்பா. நான் படிக்கணும்’ என்று சொன்னான். ராஜலட்சுமி திரையரங்க மண்ணை மிதித்துச் சில வாரங்கள் ஆகியிருந்தன. இடையில் பன்னிரண்டு படங்கள் அங்கு வந்து போய்விட்டன. எந்தப் படமும் மூன்று நாளுக்கு மேல் கிடையாது. தூக்கிவிடுவார்கள். ஒன்றுவிட்டு ஒன்றாவது பார்த்துவிடுவது வழக்கம். இப்படித் தொடர்ந்து புறக்கணித்து சரித்திரமில்லை. சாதித்தாகவேண்டியிருக்கிறது. தியாகங்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை.
அவனது தோழர்களுக்கு இந்த மாற்றங்கள் முதலில் புலப்படவில்லை. அதே ஆறாவது பெஞ்சில் அமர்ந்திருக்கிற பத்மநாபன். சகஜமாகத்தான் பேசுகிறான். பழகுகிறான். வழக்கம்போலவே அவனது பார்வை எப்போதும் வளர்மதியின்மீது இருக்கிறது. அவ்வப்போது போரடித்தால் பெருமாள் சாமியைத் திரும்பிப் பார்த்து முறைத்துக்கொள்கிறான். ஆனால் அவன் வளர்மதியை அணுகி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது மற்றவர்களின் கவனத்துக்கு வரவில்லை.
நைன்த் பியில் மேலும் சில காதலர்கள் பிறந்தார்கள். கலியமூர்த்தி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் நான்காவது பெண்ணாக காஞ்சனாவைக் காதலிக்கத் தொடங்கி மோகனசுந்தரத்திடம் கவிதை எழுதப் பயிற்சி எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான். பன்னீரும் அவனது குழுவில் இருக்கும் (தேர்ட் ரேங்க்) முத்துக்குமாரும் ராஜாத்தியைக் காதலிக்கலாம் என்று ஒரே சமயத்தில் முடிவு செய்ய, இருவருக்குமான நட்பில் விரிசல் ஏற்பட்டது. ராஜாத்தி முத்துக்குமாரை ‘போடா பன்னாட’ என்று சொல்லிவிட்டதாக ஒரு புரளியை குண்டு கோவிந்தன் கிளப்பிவிட, இருவரும் சத்துணவுக்கூடத்துக்குப் பின்புறம் இருக்கும் திறந்தவெளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டார்கள். ராஜாத்தி இதனைப் பார்த்து ரசித்துப் பாராட்டினாள். அதுநாள் வரை யாரையுமே காதலித்திராத அஞ்சாவது ரேங்க் சிவசுப்பிரமணியன்கூட ஒன்பதாம் வகுப்பு சி செக்ஷனில் இருக்கும் ரேவதியைக் காதலிக்கத் தொடங்கினான்.
இறுதித் தேர்வு நெருங்கிய நேரத்தில் இவ்வாறாக உலகம் இயங்கிக்கொண்டிருக்க, தான் மட்டும் ரகசியமாக ஒரு பெரும் யுத்தத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வது பற்றிய நியாயமான பெருமிதம் பத்மநாபனுக்கு இருந்தது. தொடக்கத்தில் சிரமப்பட்டான் என்றாலும், விடாமல் படிக்கப் படிக்க, புரியாத பாடங்களெல்லாம் புரிய ஆரம்பித்தன. தப்பித்தவறி ஒருவேளை ·பர்ஸ்ட் ரேங்க் வாங்கிவிடுவோமோ என்று அவனுக்கே அவ்வப்போது சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.
இனிப்பாக, சுவையாக இருந்தது அந்த நினைவு. அது மட்டும் சாத்தியமாகிவிட்டால் உலகில் வேறு எதுவுமே சிரமமில்லை. முதல் ரேங்க் மாணவனின் காதலும்கூட முதல்தரமானதாகவே கருதப்படும். அப்பாவைப் பற்றி இனி பிரச்னையில்லை. கௌதம புத்தருக்கு அடுத்தபடியாக பத்மநாபன் தான் என்கிற கருத்தில் மாற்றமே வராது அவருக்கு. வகுப்பிலும் விசேஷ கவனம் உண்டாகும். பன்னீர் பயப்படுவான். மகாலிங்க வாத்தியார் வியப்பில் வாய் பிளப்பார். நீயாடா குடுமி? நீயாடா குடுமி? நீயாடா குடுமி? என்று பார்க்கிற முகங்களெல்லாம் பரவசப்படும்.
அது முக்கியமில்லை. ஐ லவ்யூ குடுமி. வளர்மதி சொல்லவேண்டும். சொல்வாள். கண்டிப்பாகச் சொல்வாள். சொல்லாமல் எங்கே போய்விடுவாள்? அவள் தன்னை வெறுக்கவில்லை என்பதே அவள் விரும்புவதற்கு நிகரானதல்லவா?
இறுதித் தேர்வு தினத்துக்கு ஒருவாரம் முன்னதாக பத்மநாபனுக்கு ஓர் எண்ணம் எழுந்தது. ஒரு தாளை எடுத்து இரண்டு வரி எழுதினான். முழுப்பரீட்சையில் போட்டி உனக்கும் பன்னீருக்கும் அல்ல. எனக்கும் உனக்கும்தான். இப்படிக்கு உன் குடுமிநாதன்.
எழுதிவிட்டு ஒருமுறை சரிபார்த்தான். குடுமிநாதன் என்பதை ஸ்டிராங்காக இரட்டை அடைப்புக்குறிகளுக்குள் திணித்தான். மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். வெகுநேரம் யோசித்து, வளர்மதி வீட்டுக்குப் போய் அதை டோர் டெலிவரி செய்துவிட்டு வரலாம் என்று அவன் முடிவு செய்து கிளம்பியபோது மணி இரவு பத்தாகியிருந்தது.
அவன் இப்போது படிக்கிற பையன் என்பதால் மொட்டைமாடியில் அவனுக்காக அப்பா ஒரு மின்விளக்கு ஏற்பாடு செய்து தந்திருந்தார். குட்டியாக ஒரு மேசை நாற்காலியும் கூட. ஒரு அரைமணிநேரம் அவன் வெளியே போய்விட்டு வருவது இப்போது பெரிய பிரச்னையாகாது. படிக்கிற பையன். ஏதாவது யோசித்தபடி உலவப் போயிருப்பான்.
புறப்பட்டான். சர்ர்ர்ர்ர் என்று நூல் பிடித்தமாதிரி ஓடி, வளர்மதி வீட்டு வாசலில் சென்று நின்றான். மூச்சு விட்டுக்கொண்டான். கதவு மூடியிருந்தது. உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. பொதுவாக உப்பள முதலாளிகள் ஒன்பது மணிக்குமேல் விழித்திருப்பதில்லை. இதனாலேயே ராஜலட்சுமி திரையரங்கில் கூட மாலைக்காட்சியை ஐந்தே முக்காலுக்கு ஆரம்பித்து எட்டே காலுக்கெல்லாம் முடித்துவிடுவார்கள். அதன்பிறகு ஒருமணிநேரம் இடைவெளி விட்டு, விடலைகளுக்கான இரவுக் காட்சியை ஒன்பதரைக்கு சாவகாசமாகத் தொடங்குவார்கள்.
உணர்ச்சி வேகத்தில் புறப்பட்டு வந்தானே தவிர, என்ன செய்வது, எப்படி அவளைப் பார்ப்பது என்றெல்லாம் யோசித்திருக்கவில்லை. எனவே இப்போது யோசித்தான். வீட்டை ஒருமுறை சுற்றி வந்தான். திருடன் என்று யாராவது தன்னைப் பிடித்துவிடுவார்களோ என்றும் பயமாக இருந்தது. கட்டைல போற வீரபத்திரன் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டாம்.
என்ன செய்யலாம்?
வீட்டின் வலப்புறம் இரண்டாவதாக இருந்த ஒரு சன்னல் மட்டும் லேசாகத் திறந்திருப்பதுபோல் தெரிய, அருகே சென்று மெல்லத் தொட்டு இழுத்துப் பார்த்தான். திறந்துதான் இருந்தது. பயமாக இருந்தது. இருட்டில் உள்ளே இருப்பது தெரியக் கொஞ்சம் நேரம் பிடித்தது. பதைப்புடன் கண்ணை பழக்கிக்கொண்டு உள்ளே பார்க்க, சன்னலோரக் கட்டிலில் ஒரு நாய்க்குட்டி பொம்மை மட்டும் இருக்கக்கண்டான்.
சந்தேகமில்லை. இது வளர்மதியின் அறைதான். வகுப்பில் அவள் தன் நாய் பொம்மை குறித்துப் பல சமயம் சொல்லியிருக்கிறாள். அமெரிக்காவிலிருந்து அவளது மாமா வாங்கி வந்து கொடுத்த புசுபுசு நாய் பொம்மை. அதைக் கட்டிக்கொண்டுதான் வளர்மதி தூங்குவாள்.
ஆனால் கட்டிலில் பொம்மை மட்டுமல்லவா இருக்கிறது? வளர்மதி எங்கே?
துடித்துப் போய்விட்டான். ஒரு முயற்சி வீணானது கூடப் பெரிதில்லை. வளர்மதி இந்த நேரத்தில் எங்கு போயிருப்பாள்? வேறு அறையில் தூங்கியிருப்பாளா? அமெரிக்க நாய்க்குட்டி பொம்மை இல்லாமல் அவளுக்குத் தூக்கம் வராதே?
மறுநாள் அவள் பள்ளிக்கு வராதது மேலும் குழப்பமளித்தது. அடுத்தநாளும். அடுத்த நாளும்.
வளர்மதிக்கு என்னவோ ஆகிவிட்டது. கடவுளே, என்ன அது?
அவ்வளவுதான். படிப்பைப் பையில்போட்டு எடுத்து வைத்தான். தன் மானசீகத்தில் அழ ஆரம்பித்தான்.
11
அத்தியாயம் 11
இன்றோடு வகுப்புகள் முடிகின்றன. சரியாக ஏழாவது நாள் தேர்வுகள் தொடங்கும் என்று நோட்டீஸ் போர்டில் ஹெட் மாஸ்டர் கையெழுத்துப் போட்ட அறிவிப்பை ப்யூன் எட்டியப்பன் வந்து ஒட்டிவிட்டுச் சென்றான்.
‘வளர்மதி ஏன் இந்த ஒருவாரம் இஸ்கூலுக்கு வரல?’ என்று பத்மநாபன் ராஜாத்தியிடம் கேட்டான்.
அவனை ஒருமாதிரி முறைத்துப் பார்த்தவள், ‘தெரியல. தெரிஞ்சிக்கவேண்டிய அவசியமும் இல்ல’ என்று சொல்லிவிட்டுப் போனாள். உட்கட்சிப் பூசல் என்னவென்று பத்மநாபனுக்குத் தெரியவில்லை. வேறு யாரிடம் விசாரித்தால் விவரம் தெரியும் என்றும் புரியவில்லை. பையன்கள் யாருக்கும் தன் தவிப்பு தெரியாமல் பெரும்பாலும் புத்தகங்களால் தன் முகத்தை மறைத்துக்கொண்டான். பெண்கள் பிரிவில் வளர்மதிக்கு நெருக்கமான ஒன்றிரண்டு பேரிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தபோது சரியான பதில் கிடைக்கவில்லை.
எதனா உடம்புக்கு சரியில்லாம இருக்கும்டா குடுமி என்று க்ளாரா சொன்னாள். திக்கென்றது. எப்படி இதனைப் போய் செய்தி வாசிக்கும் தொனியில் சொல்கிறாள்? சந்தேகமாகத்தான் சொல்கிறாள் என்றாலும் தனக்கு ஏன் அது குடலைப் புரட்டி, தொண்டைக்குத் தள்ளுகிறது?
ஜெயலலிதாவிடம் கேட்டபோது, ‘அவங்கப்பா அவள அடையாறுல சேக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. ஒருவேள எக்சாம அடையார் ஸ்கூல்ல எளுதறாளோ என்னமோ’ என்றாள் சர்வ அலட்சியமாக.
குப்பென்று அழுகை முட்டிவிட்டதைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு வேறு புறம் திரும்பிக்கொண்டான்.
வேறு சிலரும் அவன் விரும்ப இயலாத பதில்களையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். வெறுப்பாக இருந்தது. எப்போதும் அழுகை வந்தது. படிக்கத் தோன்றவில்லை. இதுதானா? இவ்வளவுதானா? ஒரு மாதக் கடும் முயற்சி. இறுதித் தேர்வில் நிச்சயமாக முதல் மார்க் வாங்கக்கூடிய தரத்தைத் தொட்டுவிடுவோம் என்று அவன் தீர்மானமாக நம்பத்தொடங்கியிருந்த வேளையில் இப்படியொரு பூதம் புறப்பட்டிருக்கிறது. நான் என்ன ஆகப்போகிறேன்?
மொட்டை மாடி விளக்கின் அடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு பத்மநாபன் யோசித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வியப்பாக இருந்தது. வளர்மதி பள்ளிக்கு வராதது பற்றி ஆசிரியர்கள் யாரும் ஒருவார்த்தை கூட கேட்கவில்லை. அட்டண்டன்ஸ் எடுக்கும் முதல் பீரியட் தமிழய்யா கூட வாய் திறக்கவில்லை. கவனமாக அவள் பெயரே பதிவில் இல்லாதது போல நகர்ந்து சென்று அடுத்த பெயரை உச்சரித்து உள்ளேன் ஐயாவைப் பெற்றுக்கொண்டு மேலே சென்றார். வகுப்பின் பிற மாணவர்கள் யாரும் ஒரு தகவலுக்காகக் கூட அவளைப் பற்றி விசாரிக்காதது மேலும் வியப்பாக இருந்தது. யாருக்கும் அவள் பொருட்படுத்தத்தக்க நபர் இல்லையா? புரியவில்லை.
‘படிக்குறியா? படிபடி’ என்று மேலே வந்து எட்டிப்பார்த்த அப்பா அன்பாகத் தலையை வருடினார். அழுகை வந்தது.
படிக்கவில்லை. படிக்க முடியவில்லை. அதுகூடப் பரவாயில்லை. படித்ததெல்லாம் மறந்துவிடும்போல் இருக்கிறது. இந்தக் கடன்காரி அப்படி எங்கேதான் போயிருப்பாள்?
‘அப்பா..’ என்றான் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு.
‘சொல்லுடா?’
யோசித்தான். எதுவும் பேசமுடியாது. படிக்கமுடியாத விஷயத்தைச் சொல்வதன்மூலம் சாதிக்கக்கூடியது எதுவுமில்லை. மொட்டைமாடித் தனிமைகூட இல்லாமலாகிவிடக்கூடும். எனவே, ‘ஒண்ணுமில்ல..சும்மாதான் கூப்ட்டேன்’ என்றான். சிரித்தார். போய்விட்டார்.
ஃபார்முலாக்கள் மறக்கத் தொடங்கின. உருப்போட்ட செய்யுள்கள் உதைத்தன. பாஸ்ட்டு பர்ஃபெக்டென்ஸும் ப்ரசண்ட் கண்டின்யுவஸ்டன்ஸும் தண்ணி காட்ட ஆரம்பித்தன. அக்பரும் பாபரும் பானிப்பட்டில் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டார்கள். உலகம் வலப்புறமாகச் சுழல ஆரம்பித்தது. புத்தகம் சரிய, அவன் அப்படியே தூங்கிப் போனான்.
‘நிஜமாவாடி?’ என்றாள் வளர்மதி.
‘சொன்னா நம்பமாட்ட. உம்மேல பைத்தியமா இருக்காண்டி’ என்று ராஜாத்தி சொன்னாள்.
அவள் சிரித்தாள். ‘தெரியும். ஆனா இதெல்லாம் தப்புதானே?’
‘நம்ம க்ளாஸ் பசங்களுக்கு லவ் பண்றது ஒரு ஹாபிடி. இவ என் ஆளு, அவ உன் ஆளுன்னு சொல்லிக்கிட்டு திரியணும். அதுல ஒரு கெத்து. ஆனா குடுமி டோட்டலா வேற மாதிரி இருக்கான் வளரு. போன வாரம் முழுக்க க்ளாஸ்ல அவன் பட்ட பாட்ட பாக்கணுமே நீ? மூஞ்சி பேயறைஞ்சமாதிரி இருந்திச்சி. யார்கிட்டயும் ஒருவார்த்த பேசல. நீ உக்கார்ற இடத்தையே பாத்துக்கிட்டிருந்தான்.’
வளர்மதி திரும்பவும் புன்னகை செய்தாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த குச்சி ஐஸ் உதட்டோரம் சற்றே ஒழுகி உதிர்ந்தது. அழகாக இருந்தது.
‘சொல்லிவெச்ச மாதிரி வாத்யார்கூட நீ எங்கன்னு கேக்கல தெரியுமா?’
‘நான் தான் அப்பாகிட்டேருந்து லெட்டர் வாங்கிட்டு வந்து குடுத்து முன்னாடியே அட்டண்டன்ஸ்ல லீவ் மார்க் பண்ணிட்டேனே? போறச்சே எல்லா சார்கிட்டயும் சொல்லிட்டுத்தான் போனேன்.’
‘அத்த வீட்ல படிக்க முடிஞ்சிதாடி?’
‘சுமாரா படிச்சேன். கல்யாணத்துக்குப் போயிட்டு படிக்க எங்க முடியுது? ஆனா ஜாலியா இருந்திச்சிப்பா. மெட்ராஸ்னா மெட்ராஸ்தான்! தேவின்னு ஒரு தியேட்டர் இருக்கு அங்க. செம பெரிசு. ஜில்லுனு ஏசியெல்லாம் போடறாங்கடி.’
‘என்ன படம் பாத்த?’
‘காந்தி படம். மாமா கூட்டிக்கிட்டுப் போனாரு. இங்கிலீஷ் படம்.’
‘ஓ…’ என்றாள் ராஜாத்தி. செகண்ட் ரேங்க் வாங்குகிறவள் இங்கிலீஷ் படம் பார்ப்பதில் தவறில்லை. தவிரவும் ராஜலட்சுமி திரையரங்கில் காந்தி போன்ற படங்களைப் பொதுவாகத் திரையிடுவதில்லை.
‘அவன் என்ன லவ் பண்றான்னு எனக்குத் தெரியும்டி. சின்சியராத்தான் பண்றான். ஆனா எனக்கு இதெல்லாம் புடிக்கல தெரியுமா?’
‘அடச்சீ அவன விடுடி. மெட்ராஸ்ல வேற எங்கெல்லாம் போன?’
‘பீச்சுக்குத்தான் போனேன்.’
‘இங்க பாக்காத பீச்சா?’
‘அங்க பீச்ல கடலையெல்லாம் விக்கறாங்கடி. குதிரை ஓட்றாங்க. நிறையப்பேர் ஜோடி ஜோடியா மண்ணுல உக்காந்துக்கிட்டு லவ் பண்றாங்க. யாரும் கண்டுக்கறதே இல்ல’
இதைச் சொல்லும்போது வளர்மதி வெட்கப்பட்டதுபோல் ராஜாத்திக்குத் தெரிந்தது. உற்றுப்பார்த்தாள். சில வினாடிகள் கழித்துக் கேட்டாள். ‘உண்மைய சொல்லு. நீ குடுமிய லவ் பண்றியா?’
வளர்மதி திடுக்கிட்டாள். சற்றுநேரம் யோசித்தாள். பிறகு, ‘அவன எனக்குப் பிடிக்கும்டி. ஆனா லவ்வு இல்ல.’
‘பின்ன? பிரதரா?’
‘சேச்சே.’
‘பிரதர் இல்லன்னா லவ்வுதான். வேறென்ன இருக்கு?’
‘நல்ல ஃப்ரெண்டுடி அவன்.’
‘அவன் அப்படி நினைக்கலியே?’
‘தெரியல. பாப்போம். மொதல்ல முழுப்பரீட்சை முடியட்டும். அடுத்த வருஷம் செக்ஷன் மாத்திட்டாங்கன்னா டோட்டலா எல்லாம் மாறிடும்.’
பள்ளியில் அந்த ஒரு பிரச்னை இருந்தது. இன்ன காரணம் என்று யாரும் சொல்வதில்லை. சம்பந்தமில்லாமல் பிள்ளைகளை அடுத்த வகுப்பில் வேறு வேறு பிரிவுகளுக்குப் பிரித்துப் போடுவார்கள். நைன்த் பியில் இருப்பவர்கள் டெந்த் பிக்குத்தான் போவார்கள் என்றுசொல்லமுடியாது. டெந்த் சியில் சிலர் போடப்படுவார்கள். ஏ செக்ஷனில் பத்து பேர் மாறுவார்கள். டியில் நாலு பேர். ஈயில் ஆறு பேர். ஹெட் மாஸ்டர் அலகிலா விளையாட்டுடையார். அவர் தலைவரும் கூட. யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிட முடியாது.
ஒருவார ஸ்டடி ஹாலிடேஸ் முழுவதும் வளர்மதியும் ராஜாத்தியும் வளர்மதியின் வீட்டு மொட்டைமாடி கூரைச் சரிவினடியில்தான் படித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது சுமதி வந்தாள். பொற்கொடி வந்தாள். க்ளாரா வந்தாள். இரவு பகலாகப் புத்தகங்களை மேய்ந்து தின்றுகொண்டிருந்தார்கள். நடுவில் பள்ளி குறித்தும் பையன்கள் குறித்தும் பேச்சு வரும்போதெல்லாம் வளர்மதி தவறாமல் குடுமியைப் பற்றிப் பேசியதை ராஜாத்தி கவனித்தாள்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வாரத்தின் கடைசி தினம். மறுநாள் முழுப்பரீட்சை. பதற்றமும் கவலையும் மேலோங்கி, விடைபெற்ற கணத்தில் அவள் மீண்டும் கேட்டாள். ‘இப்பவாச்சும் சொல்லிடுடி. குடுமிய நீ லவ் பண்ரியா?’
யோசித்தாள். ‘இல்லன்னுதான் நினைக்கறேன்’ என்று சொன்னாள்.
அதே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி முப்பது நிமிடங்களுக்கு பத்மநாபன் முகம் கழுவி, சட்டை மாற்றி நெற்றி நிறைய விபூதி வைத்துக்கொண்டு அப்பாவிடம் வந்து, ‘நான் பைபாஸ் முத்துமாரியம்மன் கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேம்பா’ என்று சொன்னான்.
நிமிர்ந்து பார்த்தவர், ‘இந்தா..’ என்று கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து, ‘போறச்சே கற்பூரம் ஒரு கட்டி வாங்கிட்டுப் போ’ என்று சொன்னார்.
பத்மநாபன் வாசலுக்குச் சென்றதும் தன் மனைவியிடம், ‘பாத்தியா எம்புள்ளைய?’ என்றார்.
‘என்னாமோ.. பாஸ் பண்ணான்னா சரி.’
‘பைத்தியக்காரி, அவன் ·பர்ஸ்ட் ரேங்க் வாங்கப்போறாண்டி!’
‘நெசமாவாங்க?’
‘வெயிட் பண்ணிப் பாரு. எம்புள்ள படிப்புல எறங்கிட்டான். இன்னமே அவன யாரும் எதும் செஞ்சிக்க முடியாது.’
பத்மநாபன் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். அழுகை வந்தது. அடக்கிக்கொண்டு முத்துமாரியம்மனிடம் ஓடினான். ஒரு கற்பூரத்தைக் கொளுத்திக் கும்பிட்டுவிட்டு மூன்றுமுறை சுற்றிவந்தான்.
நாளை தேர்வு தொடங்குகிறது. முத்துமாரியம்மா! பாடங்கள் மறந்தால்கூடப் பிரச்னையில்லை. சமாளித்துவிடுவேன். வளர்மதி நினைவில் வராதிருக்க நீதான் அருள் புரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வந்தான்.
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு உட்கார்ந்து புத்தகத்தைத் திறந்தான். வளர்மதிக்கு எழுதிய கடிதம்தான் முதலில் கண்ணில் பட்டது.
12
அத்தியாயம் 12
வளர்மதியைக் காதலிக்கத் தொடங்கிய நாளாக, பிரதிதினம் இரண்டு கடிதங்கள் வீதம் அவளுக்கு எழுதி ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் அட்டைக்குள்ளும் சொருகி வைப்பதை பத்மநாபன் வழக்கமாகக் கொண்டிருந்தான். புத்தகத்துக்கு மேலே போடப்படும் பிரவுன் அட்டைகள் எப்போதும் ரகசியச் சுரங்கங்களாகவே இருக்கின்றன. காதல் கடிதங்கள். தேர்வு பிட்டுகள். கெட்டவார்த்தைப் படங்கள். பிளாட்பாரத்தில் ஐந்து காசுக்கு இரண்டு வீதம் பொறுக்கியெடுத்து வாங்கிவந்து பாத்ரூமில் மட்டும் பார்த்து ரசிக்கிற துண்டு பிலிம்கள்.
அவன் டாய்லெட்டுக்குப் புத்தகம் எடுத்துச் செல்வது குறித்து அவனது அம்மா எப்போதும் பெருமிதம் அடைவது வழக்கம். விழுந்து விழுந்து படிக்கிறான், மார்க்குதான் வரமாட்டேங்குது என்று அண்டை வீட்டு ஈ.பி. சம்சாரத்திடம் அவள் சொல்லி வருத்தப்படுவதை அவ்வப்போது கேட்டிருக்கிறான். அம்மாக்களை ஏமாற்றுவதில் ஏதோ ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது அது நினைவுக்கு வர, குப்பென்று கண்ணை நீர் மறைத்தது. இது மொட்டை மாடி. யாருமற்ற தனிமை. மேலும் இரவும் அவனுக்கான பிரத்தியேக அறுபது வாட்ஸ் விளக்கும். இப்போது அட்டையைக் கழற்றிவைத்துவிட்டு ஒவ்வொரு பிலிமாக எடுத்துப் பார்த்தாலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் மனம் வரமாட்டேனென்கிறது. அனைத்தையும் எரித்துவிடலாம்போல் அப்படியொரு ஆத்திரம் பிதுக்கிக்கொண்டு பொங்குகிறது.
வளர்மதி. ஏன் இப்படி இம்சிக்கிறாள்? நினைக்காமலும் இருக்கமுடியவில்லை. நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது. துக்கத்தின் சாயல் பூசிய மகிழ்ச்சிப் பந்தொன்று உள்ளுக்குள் உருண்டபடி கிடக்கிறது. அவள் மட்டும் தன் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டால் உலகத்தையே ஒரு கைப்பிடிக்குள் மூடிவிட முடியும் என்று உறுதியாகத் தோன்றுகிறது. பாழாய்ப்போன முழுப்பரிட்சை குறுக்கே வராதிருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நினைத்து அனுபவித்திருக்கலாம். இப்போது படித்தாகவேண்டும்.
தவிரவும் லட்சியம் என்று ஒன்று வந்திருக்கிறது. வகுப்பில் முதல். தேர்வில் முதல். வாழ்வில் முதல். பிறகு வளர்மதிக்காக இத்தனை உருகவேண்டிய அவசியமிருக்காது. கண்டிப்பாகக் கிடைப்பாள். குடுமி ஐ லவ் யூ. நிச்சயம் சொல்வாள். சந்தேகமில்லை.
எனவே அவன் கடிதத்தையும் பிறவற்றையும் மடித்துச் சொருகிவிட்டு உக்கிரமாகப் படிக்க ஆரம்பித்தான்.
கூட்டுச் சராசரி என்பது எப்போதும் பெருக்குச் சராசரியைவிட அதிகமாகவே இருக்கும். இரு எண்களின் கூட்டுச் சராசரி என்பது இரண்டையும் கூட்டி இரண்டால் வகுத்தால் வருவது. பெருக்குச் சராசரியாகப்பட்டது இரு எண்களின் பெருக்கல் தொகையின் வர்க்கமூலம்.
என்ன ஒரு கண்டுபிடிப்பு! உட்கார்ந்து யோசித்த கணித மேதைகள் நீடூழி வாழட்டும். அவன் படித்தபடியே தூங்க ஆரம்பித்தான்.
மறுநாள் தேர்வுகள் ஆரம்பமாயின. தாற்காலிகமாக பத்மநாபன் வளர்மதியை மறந்தான். ஆசிரியர்களை, அப்பா அம்மாவை, ஹெட்மாஸ்டரை, நண்பர்களை, எதிரிகளை எல்லோரையும் மறந்தான். வினாத்தாள். விடைத்தாள். என்ன எழுதுகிறோம், எழுதுவது சரியா என்று திருப்பிப் படித்துப்பார்க்கக்கூட இல்லை. எழுதி நீட்டிவிட்டு வந்துகொண்டே இருந்தான். வீடு திரும்பியதும் மறுநாள் தேர்வுக்கான படிப்பு.
தான் படித்துக்கொண்டிருக்கிறோம், தேர்வு நடந்துகொண்டிருக்கிறது என்பதுகூட அவனுக்கு நினைவில் இல்லை. செலுத்தப்பட்ட ஓர் இயந்திரம் போல் இயங்கிக்கொண்டிருந்தான். மனத்தில் முன்பிருந்ததைப் போல பயமோ, பதற்றமோ, எதிர்பார்ப்போ, மகிழ்ச்சியோ, துக்கமோ ஏதுமில்லை. வெறுமையும்கூட அழகாகத்தான் இருக்கிறது. வெட்டவெளிப் பாலைவனத்தில் எங்கோ ஓரிடத்தில் வளர்மதி என்னும் சிறு சோலை இருக்கிறது. அடையும்வரை இழுத்துப் பிடிக்க முடியுமானால் சரி. இல்லாதுபோனால் பெரிய பிரச்னை ஏதுமில்லை. பத்தாம் வகுப்பு பி செக்ஷனுக்கு அவன் போகும்போது வேறு வகுப்புகளிலிருந்தும் யாராவது பெண்கள் வருவார்கள். அவர்களில் சிலர் அவன் கண்ணுக்கு அழகாகத் தென்படக்கூடும். இதற்குமுன்பும் சில முறை இவ்வாறு நேர்ந்திருக்கிறது.
ஆறு தினங்கள். அவன், அவனாக இல்லை. அதுவாக இருந்தான். இறுதித் தேர்வு தினத்தன்று மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ரிசல்ட் தினத்தன்று சந்திக்கலாம் என்று சொல்லிக்கொண்டு பிரிந்தார்கள்.
பன்னீர் செல்வம் செங்கல்பட்டில் உள்ள தன் அத்தை வீட்டுக்கு ஒரு மாதம் செல்லவிருப்பதாகச் சொன்னான். கலியமூர்த்தி, கள்ளக்குறிச்சிக்குப் போகிறானாம். பெருமாள் சாமிகூட திருவான்மியூரில் யாரோ உறவினர் இருப்பதாகவும் அவர்கள் வீட்டுக்குப் போவதாகவும் சொல்லிக்கொண்டிருந்ததை பத்மநாபன் கேட்டான்.
பொதுவாக விடுமுறைகளில் அவன் எந்த உறவினர் வீட்டுக்கும் செல்வது கிடையாது. ஒருமாதம் தங்கி உறவு வளர்க்கத் தக்க உறவினர்கள் யாரும் இல்லையோ என்னவோ. அவனது அப்பா, ஒவ்வொரு ஆண்டிறுதி விடுமுறையிலும் அவனுக்கு நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பது வழக்கம்.
இந்த வருடம் அதையும் எதிர்பார்க்க முடியாது. எதிரே வருவது பத்தாம் கிளாஸ். பள்ளியிறுதி. அரசுத் தேர்வு. எங்காவது பழைய புத்தகத்துக்கு ஏற்பாடு செய்துவைத்திருப்பார். படிக்கவேண்டும். அல்லது படிப்பதுபோல பாவனை செய்யவேண்டும்.
‘பாஸ் பண்ணிருவ இல்ல?’ என்று அம்மா கேட்டாள்.
அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனாலும் ஏன் அம்மாவுக்குச் சந்தேகமாக இருக்கிறது? தெரியவில்லை.
‘சீச்சீ. மார்க்கு எத்தினின்றதுதான் விசயம். ஏண்டா நாநூற தாண்டிருவ இல்ல?’ என்றார் அப்பா. அவரது அபார நம்பிக்கை அவனுக்கு அச்சமளித்தது. திடீரென்று தானொரு படிக்கிற பையனாக அடையாளம் காட்டிக்கொண்டது தவறோ என்று தோன்றியது. படித்தது தப்பில்லை. ஆனால் வெளியே தெரியும்படி நடந்துகொண்டிருக்கவேண்டாம் என்று நினைத்தான்.
அந்த ஆண்டின் இறுதி நாளில் தேர்வு முடிந்து வெளியே வந்து அவன் வெகுநேரம் காத்திருந்தான். வளர்மதி இன்னும் வெளியே வரவில்லை.
வருவாள். ராஜாத்தி, க்ளாரா, பொற்கொடி இன்னபிற தோழிகள் புடைசூழ நடுவே வருவாள்.
வளர்மதி விடுமுறைக்கு எங்கே போகப்போகிறாள்? அவனுக்குத் தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. கேட்கலாம். பதில் சொல்லுவாள். அவசியம் சொல்வாள். ஆனால் கேட்டுத் தெரிந்துகொண்டபிறகு சோகம் வந்துவிடும். ஒரு மாதகாலம். ஊருக்குப் போறேன் குடுமி. எங்க மாமா வீட்டுக்கு. அத்த வீட்டுக்கு. பெரியம்மா வீட்டுக்கு.
என்னத்தையாவது சொல்லிவிட்டால் மிச்ச நாளைக் கடத்துவது சிரமம். ஒன்றும் தெரியாதிருந்தாலே தேவலை. ஆறு தெரு தாண்டினால் வளர்மதி வீடு வரும். வீட்டுக்குள் அவள் இருப்பாள். தனது செல்ல நாய்க்குட்டி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருப்பாள். போய்ப் பார்க்கலாமா? திடீரென்று எதிரே போய் நின்றால் அவளது முகபாவம் எப்படி மாறும்? என்ன சொல்வாள்? டேய், போயிடுடா. எங்க தாத்தா வந்துடுவாரு. பதறலாம். பயப்படலாம். கலவரமடையலாம்.
இப்படி நினைத்துக்கொண்டிருப்பதே சுகமாக இருக்கும். எதற்குக் கேட்டுவைத்து ஏதாவது விடை பெற்று வருத்தத்தைச் சுமந்துகொண்டு வீட்டுக்குப் போகவேண்டும்?
எனவே அவன் வெறுமனே காத்திருந்தான். வருவாள். பார்க்கலாம். சிரிக்கலாம். போய்விடலாம்.
ஒருவேளை தேர்வு முடிந்த சந்தோஷத்தில் இன்றைக்கே ‘குடுமி ஐ லவ்யூடா’ என்று சொல்லிவிட்டால்?
கிளுகிளுவென்றிருந்தது. அடக்கிக்கொண்டான். தன்னிடம் கூட சொல்லவேண்டாம். சாகிற வரை சொல்லவே வேண்டாம். அவளது பெஸ்ட் ·ப்ரெண்ட் யாரிடமாவது சொன்னால்கூடப் பரவாயில்லை. போதும். இவளே, ராஜாத்தி, நான் நிஜமாவே குடுமிய லவ் பண்றேண்டி. ஆனா அவன்கிட்ட சொல்லிடாத.
சொல்லுவாளா? ஒருவேளை அவளுக்கும் இருக்குமா? தன் வயதுதானே? தன் மனம் தெரியும்தானே? ஏன் அவளுக்கும் இருக்கக்கூடாது?
ஒருமாத விடுமுறை. கடவுளே, எப்படிக் கழிக்கப்போகிறேன்? நண்பர்கள் இல்லாத தினங்கள். பள்ளி இல்லாத தினங்கள். வளர்மதி இல்லாத தினங்கள். கொடுமை அல்லவா? குரூரம் அல்லவா?
அவனுக்கு அழுகை வந்தது. அதே சமயம் வளர்மதியும் வந்தாள்.
‘டேய் குடுமி, நீ வீட்டுக்குப் போகல?’
‘இல்ல வளரு.’
‘ஏண்டா?’
‘ஒனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.’
அவள் சிரித்தாள். உலகமே சிரிப்பது போலிருந்தது அவனுக்கு.
‘என்ன விஷயம்டா?’
‘நான் சொன்னத யோசிச்சியா?’
‘என்ன சொன்ன?’
‘ஐ லவ் யூ வளரு.’
‘சீ போடா. ஒனக்கு வேற வேலையே இல்ல.’
‘இல்ல வளரு. நான் நெசமாத்தான் சொல்லுறேன். என்னால.. என்னால..’
அவனால் பேசமுடியவில்லை. அழுகை வந்தது. அழுதுவிடுவோமோ என்று அச்சமாக இருந்தது. வளர்மதி எதிரே அழுவது அவமானம். அவளுக்கு ஒருவேளை காதல் இருந்தால், ஓடியே போய்விடக்கூடும். ம்ஹ¤ம். அழக்கூடாது. கண்டிப்பாகக் கூடாது.
‘ஒழுங்கா எக்ஸாம் எழுதினியா?’
‘உம்’ என்றான் சுரத்தே இல்லாமல்.
‘கணக்கு பேப்பர் கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சி இல்ல?’
‘தெரியல வளரு.’
அவள் உற்றுப்பார்த்தாள். சில வினாடிகள் பேசாதிருந்தாள். பிறகு சட்டென்று, ‘ரிசல்ட் வரட்டும். பாக்கலாம்’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
அவன் நெடுநேரம் அங்கேயே நின்றிருந்தான். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. ஒரு மாத விடுமுறை. சரியாக முப்பது நாள்கள். ஒரு நாளைக்கு மூன்று வீதம் தொண்ணூறு கவிதைகள் எழுதி பள்ளி திறக்கும் தினத்தன்று வளர்மதியிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்துகொண்டான்.
‘அதென்னடா தொண்ணூறு? இன்னும் பத்து எழுதவேண்டியதுதானே?’ சிரித்துக்கொண்டே கேட்பாள்.
‘அத்த நீ எளுதி பூர்த்தி பண்ணு வளரு’ என்று சொல்லவேண்டுமென எண்ணிக்கொண்டான்.
13
அத்தியாயம் 13
விடுமுறை அறிவித்துவிட்டார்கள். சரியாக ஒரு மாதம். பத்தாம் வகுப்புக்குப் போகவிருக்கிற மாணவ மாணவிகளுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு, அக்கறை குறித்தெல்லாம் ஹெட் மாஸ்டர் சாங்கோபாங்கமாக விவரித்துவிட்டு, லீவு நாள்களை வீணாக்காமல் படிக்கும்படி கெட்ட அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தார்.
பத்மநாபனுக்குக் கடந்த ஒருமாத கால படிப்பு அனுபவமே அறுபது வயது வரை தாங்கும்போலிருந்தது. என்ன ஆகிவிட்டது தனக்கு? பைத்தியம் பிடித்த மாதிரி பாடப் புத்தகங்களில் மூழ்கி முத்தெடுத்து, தேர்வெழுதித் தீர்த்ததற்கு என்னவாவது பிரயோஜனம் இருக்குமா என்று இப்போது சந்தேகமாக இருந்தது. ஆகப்பெரிய பயன் என்றால் அது நல்ல மார்க். ஆனால் அதில் பெரிய விருப்பம் இல்லை. நல்ல மார்க் என்பது வளர்மதியின் மனத்தில் காதலை உருவாக்குமானால் சரி. வெறுமனே படிக்கிற பையனாக அடையாளம் காணப்படுவதில் பெரிய லாபங்கள் ஏதுமில்லை. தவிரவும் ஒரு மாறுவேடப்போட்டியில் மகாத்மா காந்தி வேஷம் போடுவது போலத்தான் அவன் தேர்வுக்குப் படித்திருந்தான். நிரந்தரமாக மகாத்மா காந்தியாகும் உத்தேசம் ஏதுமில்லை.
யோசித்துப் பார்த்தால் படிக்கிறேன் பேர்வழி என்று ஒருமாத காலத்தைத் தான் மிகவும் வீணாக்கி விட்டது போலத்தான் இப்போது தோன்றியது. வளர்மதியிடம் மேலும் முயற்சி செய்திருக்கலாம். அன்பே உன்னைக் காதலிக்கிறேன். நீயில்லாமல் வாழ்வது கஷ்டம். என் காதலை ஏற்றுக்கொள்வதற்கு ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறாய்? என்னைப் பிடிக்கவில்லையா? அப்படியாவது சொல்லிவிடு. நான் ஆறுமுக தேவிக்கு பிராக்கெட் போடப் போகிறேன். ஒன்பதாம் வகுப்பு டி பிரிவில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறாள். பார்க்க லட்சணமாக, கல்லுக்குள் ஈரம் அருணா போல இருக்கிறாள். அவள் கண்ணுக்குள் நெட் கட்டி ஷட்டில் காக் விளையாடலாம்போல் அத்தனை பெரிதாக உள்ளது.
இவ்வாறு புத்தி குதிரை வேகம் எடுத்து யோசிக்கத் தொடங்கியபோது படாரென்று பின்னந்தலையில் அடித்துக்கொண்டான்.
சே. எத்தனை கெட்டவன் நான். புனிதமான என் காதலின்மீது நானே சாணி பூசுகிறேன்! வெளியே தெரிந்தால் எத்தனை அசிங்கம். குறிப்பாக வளர்மதிக்குத் தெரிந்தால் என்ன நினைப்பாள்!
அதே சமயம் ஆறுமுக தேவியின்மீது எப்போது தன் பார்வையும் புத்தியும் குவிந்தது என்றும் அவன் யோசிக்கத் தவறவில்லை. சென்ற வருடம்தான் பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்திருந்தாள். அவளது அப்பா காண்டீபன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக உத்தியோகம் பார்க்கிறவர். செங்கல்பட்டு – உத்திரமேரூர் ரூட்டில் ஓட்டிக்கொண்டிருந்தவருக்கு திருப்போரூர் – சோழிங்கநல்லூர் ரூட்டுக்கு மாறுதல் வந்தபடியால் கேளம்பாக்கத்தில் குடும்பத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, போலாம் ரைட் என்று புறப்பட்டுப் போனவர்.
வகுப்பில் ஒரு சில பையன்கள் ஆறுமுக தேவியின் அழகு குறித்து அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறார்கள். பத்மநாபனும் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் அவளைப் பார்த்தான். நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் வளர்மதியைவிடவுமா என்று சொல்லத் தெரியவில்லை. எப்படி இருந்தாலுமே தன் நினைப்பு அயோக்கியத்தனமானது என்று அவனுக்குத் தோன்றியது. மானசீகமாக வளர்மதியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, வேகமாக தோட்டத்துப் பக்கம் போனான்.
ஒரு கோவைக்காயைக் கிள்ளி எடுத்துக்கொண்டு சுவரருகே சென்றான். மனத்துக்குள் இருக்கும் வளர்மதி. பிரம்மாண்டமான அளவில் எப்போதும் விழிகளையும் உள் விழிகளையும் நிறைக்கும் அவளது புன்னகை தோய்ந்த முகம். சீ போடா, சீ போடா என்று எத்தனை முறை செல்லமாகத் திட்டியிருக்கிறாள்! ஒரு முறைகூட கோபித்துக்கொண்டதில்லை. வாத்தியார்களிடமோ ஹெட் மாஸ்டரிடமோ போட்டுக்கொடுத்ததில்லை.
காதல் இல்லாமல் இது சாத்தியமா? நிச்சயம் இல்லை. ஆனால் சொல்வதற்குத் தயங்குகிறாள். யாருக்கோ பயப்படுகிறாள். உப்பள முதலாளியான தாத்தா முதலியாருக்கா? உக்கிரமூர்த்தியான அப்பாவுக்கா? வாத்தியார்களுக்கா? ஹெட் மாஸ்டருக்கா? தோழிகளுக்கா?
அன்பே, யாருக்கும் பயப்படாதே. என்னை நம்பு. நான் உன்னுடைய குடுமிநாதன். உனக்காகவே வாழ்கிறவன். எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பவன். வேண்டாத விடுமுறை மாதத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பின்புறச் சுவரில் உன் திருமுகத்தை வரைந்து பார்க்கிற காதல் பைத்தியம். ஒருவேளை நான் வரையும் உன் படம் ஒழுங்காக வந்துவிட்டால் கீழே ஆர்ட் பை என்று என் பெயரை எழுதிவைப்பேன். சொதப்பிவிட்டால் என் அப்பா பெயரை எழுதிவிடுகிறேன். இதோ கண்ணை வரைந்துவிட்டேன். இதோ மூக்கு. இதோ தலைமுடி.
கடவுளே ஒழுங்காக வந்துவிடும் போல் உள்ளதே. எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் கலைஞனை நான் இந்த விடுமுறையில் அடையாளம் கண்டுகொண்டுவிட்டேனா? நான் ஒரு ஓவியனா! மாருதி போல், ஜெயராஜ் போல், லதா போல் வந்துவிடுவேனா?
பத்மநாபனுக்கு அந்த விடுமுறையில்தான் முதல் முதலில் குமுதம் வாசிக்கக் கிடைத்தது. சாண்டில்யன் என்பவர் எழுதும் விஜய மகாதேவி. படித்தால் முழுக்கப் புரிகிறது என்று சொல்லமுடியவில்லை. ஆனாலும் படிக்கவேண்டும், படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எப்போதும் தோன்றியது. ஒரு மாதிரி குறுகுறுப்புடனேயே வாசிக்கும் அனுபவம் அவனுக்கு மிகவும் புதிதாக இருந்தது. என்னமாய் வருணிக்கிறார்! குறிப்பாக அந்த இளவரசியை.
பாழாய்ப்போன லதாதான் என்னமாய்ப் படம் போடுகிறார்!
அவன் திரும்பத் திரும்ப விஜய மகாதேவியைப் பார்த்துக்கொண்டே இருந்தான். இரண்டு பக்கங்களை அடைத்துக்கொண்டு சப்ரமஞ்சத்தில் சயனிக்கும் தேவி. மேலாடை மிக இயல்பாக நழுவிச் சரிந்தாலும் அவள் தனக்காகவே அதனைக் கண்டுகொள்வதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. உள்ளுக்குள் உருவாகி ஓர் உருண்டைபோல் இங்குமங்கும் உருண்ட திருட்டுத் தனத்தை ரகசியமாக பத்திரப்படுத்தினான்.
லதாவைப் போல் ஒரு மாபெரும் ஓவியனாகிவிடவேண்டும் என்று வெஞ்சினம் கொண்டு கையில் கிடைத்த தாளில் எல்லாம் வரைந்து பார்க்கத் தொடங்கினான். கண், மூக்கு, தலையெல்லாம் கூடப் பிரச்னையில்லை. முக்கியமான சில விஷயங்கள் சரியாக வரமாட்டேனென்கிறது. சரியாக வராது போனால்கூடப் பிரச்னையில்லை. சமயத்தில் தனக்கே கொலை வெறி வருமளவுக்கு அரூபமாகிவிடுகிறது. சோகம் உடனே நெஞ்சைக் கவ்விவிடுகிறது.
படம் போடுவது கஷ்டம். கழுத்துக்குக் கீழெ மிகவும் கஷ்டம். எனவே அவன் சுவரில் வரைய ஆரம்பித்த வளர்மதியின் படத்தை கவனமாக முகம் மட்டும் என்று தீர்மானித்துக்கொண்டுதான் ஆரம்பித்தான். தவிரவும் வளர்மதியை வரைய நினைத்துவிட்ட பிற்பாடு முகத்தைத் தவிர வேறெதையும் நினைக்கப் பிடிப்பதில்லை. லதாவின் படங்களில் கவர்கிற அம்சங்களெல்லாம் காதலுக்கு எதிரானவை போலிருக்கிறது. யாருக்குத் தெரியும்? உள்ளுக்குள் என்னென்னவோ நடக்கிறது.
பலவிதமான யோசனைகளுடன் அவன் சுவர்ப் படத்தில் மூழ்கியிருந்தபோது சட்டென்று அம்மாவின் குரல் கேட்டது.
‘சீ கழிசடை. புத்தி போவுது பாரு. நவுருடா. நவுந்து போ மொதல்ல.’
அந்தக் கணம் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அம்மா பார்த்துவிட்டாள். ஒரு பெண்ணின் முகத்தை வரைந்துகொண்டிருக்கும் பிள்ளைகளைப் பொதுவாக அம்மாக்கள் விரும்பமாட்டார்கள். அவன் யோசிக்கிற வேகத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக அம்மா யோசிப்பாள். கெட்டுப்போய்விட்டான் என்று மனத்துக்குள் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்.
என்ன செய்யலாம் என்று அவன் வேகவேகமாக யோசித்தான். இந்தக் கணம் அம்மா திட்டத் தொடங்கிவிட்டால் வேறு வினையே இல்லை. ஒருமாத விடுமுறையையும் நரகமாகக் கழிக்கவேண்டி வந்துவிடும். எப்பப்பார் போலீஸ் மாதிரி வேவு பார்த்துக்கொண்டே இருப்பாள். சினிமாவுக்குக் கூடப் போகவிடமாட்டாள். கடவுளே, காப்பாற்று.
‘என்னடா வேல இது?’
‘சும்மாம்மா. பொழுது போவல. அதான்…’
‘பொழுதுபோவலன்னா படிக்கவேண்டியதுதான?’
‘எல்லாம் படிச்சாச்சு. பரீட்சை எழுதியாச்சு. இப்ப லீவு’
‘அடுத்த வருச பாடத்த படிக்கவேண்டியதுதான?’
அம்மாக்கள் ஹெட்மாஸ்டர் போல. திருத்தவே முடியாது. சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது. அடடே, சூப்பர்.
‘எல்லாம் அப்பறம் படிச்சிக்கலாம். மொதல்ல இந்த படத்த பாரு. உன்ன மாதிரியே இல்ல?’
இது தூண்டில். சரியான தூண்டில். அம்மா அவனைத் திட்டுவதை நிறுத்திவிட்டுப் படத்தைப் பார்த்தாள்.
‘நானா?’
‘பின்ன? எனக்கு வேற யார தெரியும்? நீதான். கொஞ்சம் சின்னவயசுல எப்படி இருந்திருப்பேன்னு யோசிச்சி போட்டேன்.’
அம்மாவுக்குப் பூரித்துப் போய்விட்டது. ‘எங்கண்ணு’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
கடவுளுக்கு நன்றி. சுடர்மிகும் அறிவுடன் படைத்த கடவுள். தைரியமாகப் படத்தை வரைந்துமுடித்து ஆர்ட் பை பத்மநாபன் என்று கையெழுத்தும் போட்டான். மாலை அப்பா வேலைவிட்டு வந்ததும் அவனே அழைத்து வந்து காட்டினான்.
‘எப்படி இருக்கு?’
‘நீயா வரைஞ்ச?’
‘ஆமா. நல்லாருக்கா?’
‘பரவால்ல.’
‘என்ன பரவால்ல? நல்லாத்தான் வரைஞ்சிருக்கான்’ என்று பின்னால் இருந்து அம்மாவின் குரல் கேட்டது. ஏமாற்றி விட்டது பற்றிய மெல்லிய குற்ற உணர்வு இருந்தாலும் அதுவும் சந்தோஷம் தரக்கூடியதாகவே இருந்தது. பத்தாம் வகுப்புக்குப் போய்விட்ட பிறகு இன்னுமேகூட நிறைய யோசனைகள் உதிக்கும்.
அன்று மாலை என்னவோ தோன்றி, சட்டென்று வளர்மதியின் வீட்டுக்குப் புறப்பட்டான்.
‘எங்கடா கிளம்பிட்ட?’ என்று அப்பா கேட்டார்.
ஒரு கணம் யோசித்தான். ‘வளர்மதி வீட்டுக்குப்பா’ என்றே சொன்னான்.
‘எதுக்கு?’
‘டென்த் புக்ஸ் அவ வாங்கிட்டாளாம். எங்க கிடைக்குதுன்னு கேட்டுக்கிட்டு வரதுக்குத்தான்.’
‘ஓ’ என்றார். அவருக்கு முன்னால் அடுத்த ஆண்டுப் படிப்பு குறித்து அவனே ஆரம்பித்துவிட்டதில் அவரது ஆன்மா நிச்சயம் அமைதியுற்றிருக்கும்.
பதிலுக்குக் காத்திருக்காமல் வேகமாக நடந்தான். வளர்மதி இருப்பாளா? எங்காவது சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போயிருப்பாளா?
யோசித்தபடி சென்றவனுக்கு வழியிலேயே அதிர்ஷ்டம் அடித்தது. எதிர்பாராத அதிர்ஷ்டம்.
14
அத்தியாயம் 14
நாளையோடு விடுமுறை முடிகிறது. ஓடியது தெரியாமல் ஓடி முடிந்துவிட்ட ஒரு மாதம். முப்பது நாள்களில் தூங்கிய நேரம் போக மிச்ச நேரமெல்லாம் மனத்துக்குள் வளர்மதியை நினைத்துக்கொண்டிருந்தது தவிர வேறென்ன செய்தோம் என்று பத்மநாபன் யோசித்துப் பார்த்தான். குறிப்பாக ஏதும் நினைவுக்கு வரவில்லை. இடையில் ராஜலட்சுமி திரையரங்கில் ஒன்றிரண்டு படங்கள் பார்த்தது ஒரு முக்கிய சம்பவமாக அவனுக்கே தோன்றவில்லை.
நண்பர்கள் யாருமில்லை. எல்லோருக்கும் விடுமுறையைக் கழிக்க யாராவது ஒரு அத்தை வீடு, மாமா வீடு, தாத்தா வீடு என்று ஏதேனும் இருக்கிறது. தனக்கு மட்டும் பைபாஸ் முத்துமாரியம்மன் அம்மாதிரியான உறவுக்காரர்கள் வீடுகளைப் படைக்கத் தவறிவிட்டாள்.
‘ஏன், ஒனக்கென்னாடா கொறைச்சல்? போனன்னா அத்தைக்காரி ஆசையாத்தான் இருப்பா. உங்கம்மா உடுவாளா கேளு. பஸ் ஏத்தி வுட்டன்னா கருங்குழில அவ வந்து கூட்டிக்கினு போயிடுவா’ என்று அப்பா ஒரு நாள் சொன்னார்.
குடும்ப அரசியலின் ஏதோ ஒரு கண்ணியில் அத்தை உறவு விடுபட்டிருக்கிறது என்பதை பத்மநாபன் புரிந்துகொண்டான். எதற்கு அம்மாவிடம் இது குறித்துப் பேசி எதையேனும் வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டும்?
அவன் பேசாதிருந்துவிட்டான். எங்கும் போகவேண்டாம். யாரையும் பார்க்க வேண்டாம். யாருமற்ற தனிமையில் வளர்மதியை நினைத்துக்கொண்டிருந்தால் போதும். அதுவும் அன்றைக்கு திடீரென்று நினைத்துக்கொண்டு அவள் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனபோது வழியிலேயே கண்ணாடிக்காரர் கடை வாசலில் அவளைச் சந்திக்க நேர்ந்தது ஆயுசுக்கும் மறக்காது.
முற்றிலும் மாறுபட்ட வளர்மதியை அன்றைக்கு அவன் கண்டான். யூனிஃபார்ம் இல்லை. நீல வண்ணத்தில், கவிழ்த்த V ஷேப்பில் நெஞ்சையள்ளும் தாவணி. அப்போதுதான் குளித்திருந்தாள் போலிருக்கிறது. முகத்தில் எப்போதுமுள்ள மலர்ச்சிக்கு மேலும் சற்று நீரூற்றியது போலிருந்தது. மடித்துக்கட்டிய பின்னலும் அங்கே சிறகடிக்கும் பட்டாம்பூச்சி ரிப்பனும்.
‘டேய் குடுமி! நீயா?’ என்றாள் வியப்புடன்.
அவன் பார்த்தபோது அவள்தன் பத்து விரல்களிலும் மோதிர வத்தல் அணிந்திருந்தாள். ஐந்து பைசாவுக்கு இரண்டு என்று கிடைக்கும் மஞ்சள் நிற மோதிரம். அப்படியே கடித்துச் சாப்பிட்டுக்கொண்டே போனால் இறுதியில் பத்து விரல்களும் எண்ணெய்ப் பிசுபிசுப்புடன் பளபளக்கும்.
பத்மநாபனுக்கு அதைப் பார்த்ததுமே வெடுக்கென்று தானொரு மோதிரத்தைக் கடிக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் வளர்மதியின் விரல். தப்பு. அவளே நீட்டி எடுத்துக்கோ என்றால் நன்றாக இருக்கும். அப்போதுகூட மரியாதையாக விரலிலிருந்து உருவினால்தான் அழகே தவிர கடிப்பதல்ல.
‘ஊருக்கு எங்கியும் போகலியாடா?’ என்று வளர்மதி கேட்டாள்.
‘நீ போகலியா?’
‘மெட்ராஸ்தான் போனேன். எங்க பெரியம்ம வீட்டுக்கு நாலு நாள். போரடிச்சிது. வந்துட்டேன்.’ என்றாள்.
வேறென்ன பேசலாம்? பத்மநாபன் யோசித்தான். பத்தாம் வகுப்புக்கான புத்தகங்கள் வாங்கிவிட்டாளா? படிக்கத் தொடங்கிவிட்டாளா? யாரிடமாவது ட்யூஷன் போகப்போகிறாளா? லீவில் என்ன படம் பார்த்தாள் அல்லது பார்க்க திட்டமிட்டிருக்கிறாள்? ராஜாத்தி எங்கே போயிருக்கிறாள்? க்ளாரா பர்த்டே இந்த மாதம்தானே வருகிறது?
ஆயிரம் விஷயங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அன்பே, நீ என்னை எப்போது காதலிக்கப்போகிறாய்? அதைச் சொல் முதலில். அல்லது காதலிப்பதைத் தெரியப்படுத்தப் போகிறாய்?
கேட்கலாமா என்று நினைத்தான். திரும்பத் திரும்ப அதையே கேட்பது அவனுக்கே அலுப்பாக இருந்தது. பார்த்துக்கொண்டிருப்பதே காதலல்லவா? நினைத்துக்கொண்டிருப்பது அதனைக்காட்டிலும் மேன்மை பொருந்தியது.
மனத்துக்குள் என்னென்னவோ தோன்றுகிறது. சொற்களில்லாமல் உணர்ச்சி ஒரு வடிவமற்ற வர்ணஜாலக் குழம்பாகப் பொங்கிப் பொங்கித் தணிகிறது. அடிப்படை ஒன்றுதான். நோக்கம் ஒன்றுதான். வேட்கையும் அதுவேதான். ஆனால் எப்போது வடிவம் பெறும்?
‘பத்தாங்கிளாசுக்குப் படிக்கிறியாடா?’ வளர்மதிதான் கேட்டாள்.
சுதாரித்து, ‘இன்னும் இல்லை’ என்று பதில் சொன்னான். என்ன ஆனாலும் இந்தச் சந்திப்பில் காதல் குறித்து மட்டும் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டான். அவள் எதிர்பார்க்கட்டுமே? ஏண்டா குடுமி, என்ன லவ் பண்றேன்னு நீ சொல்லவேயில்ல? கேட்கட்டும். கேட்கத் தோன்றுமல்லவா. கடந்த ஆண்டு முழுதும் ஒவ்வொரு முறை பேசும்போதும் சொல்லியிருக்கிறான்.
சீ போடா. லூசு. பைத்தியம் மாதிரி பேசாத. பேக்கு. எங்க தாத்தாக்கு தெரிஞ்சா.. ஹெட் மாஸ்டர் என்ன பண்ணுவாரு தெரியுமா? நீ உதைபடப்போற. உங்கப்பாட்ட வந்து சொல்லட்டுமா? வேணாண்டா குடுமி. இதெல்லாம் தப்பு. வேற எதுமே பேசமாட்டியா?
சந்தர்ப்பங்களுக்கேற்ப பதில்கள் வெவ்வேறு விதங்களில் வந்திருக்கின்றன. மிகக் கவனமாக ஒரு முறை கூட அவள் கோபத்தை வெளிக்காட்டியதில்லை. அல்லது வெறுப்பை. தவிர்ப்பது கூட ஒரு விளையாட்டே என்பது போல. காதல் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதாக.
உண்மையிலேயே அப்படித்தான் நினைக்கிறாளா?
என்றால் எப்பேர்ப்பட்ட மடத்தனம்! காதல் எத்தனை பெரிய, உன்னதமான, தெய்வீகமான விஷயம்! அது மனத்துக்குள் வந்ததிலிருந்து கெட்ட சிந்தனைகள் அறவே இல்லாது போய்விட்டன. முன்பெல்லாம் ராஜலட்சுமி திரையரங்கில் ஞாயிறு காலை வேளைகளில் சிவப்பு பல்பு போட்டு திரையிடப்படும் படங்களையும் அவற்றின் போஸ்டர்களையும் பார்க்க மனம் எப்படி அலையும்! இப்போது அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கத் தோன்றுவதில்லை.
வளர்மதி. அவளைப் பற்றிய ஞாபகம் என்றால் முதலில் வருவது அவளது முகம். அப்புறம் குரல். சீ போடா என்கிற செல்லக் கோபம். அப்புறம் அந்த வி ஷேப் தாவணி. பட்டாம்பூச்சி பறக்கிற ரிப்பன். ஆ, அந்தப் பாதங்கள்!
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் எத்தனை மிருது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவன் ரசிப்பான். அவளுக்கென்றே எங்கிருந்தோ பூப்போட்ட செருப்பு கிடைத்துவிடுகிறது. ஒரு பூவின்மீது பயணம் செய்யும் இன்னொரு பூ.
‘ஊருக்கு எங்கயும் போகலியாடா?’ என்று வளர்மதி கேட்டாள்.
‘இல்ல வளரு. சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம்போறதில்ல.’
‘படம் போனியா?’
‘இல்ல.’
‘படிக்கிறியான்ன?’
யோசித்தான். ஆம் என்று சொல்லலாம். ஆனால் பொய். எனவே இல்லை என்று சொன்னான்.
‘வேற என்னதான் பண்ற?’
‘சும்மாதான் வளரு இருக்கேன்’
‘ஐயே, சும்மாருக்கற மூஞ்சியப்பாரு’ என்று சொல்லிவிட்டு ஒரு மோதிரத்தைக் கடித்தபடி நடக்கத் தொடங்கிவிட்டாள்.
பத்மநாபனுக்கு அந்தச் சந்திப்பே ஒரு மாதத்தைக் கடத்தப் போதுமானதாக இருந்தது. ரகசியமாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் நிறைய கவிதைகள் எழுதினான்.
அன்பே வளர்மதி!
உன்னை நினைத்து
ராத்திரியெல்லாம் நான்
தூங்குவதே இல்லை
நீ கண்ணைவிட்டு இறங்கினால்தானே
நான்
கண்மூட முடியும்
என்று எழுதி ஒரு கேள்விக்குறியும் இரண்டு ஆச்சர்யக்குறிகளும் போட்டுவிட்டுப் பார்த்தால் கவிதை பிரமாதமாக வந்துவிட்டதுபோலத் தோன்றியது. ஒரே பரவசமாகிவிட்டது.
யாரிடமாவது காட்டவேண்டுமென்று மிகவும் விரும்பினான். ஆனால் நண்பர்கள் இல்லாத மாதம். தானே திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து மேலும் மேலும் நிறைய கவிதைகள் எழுதினான். ஒரு பக்கம் ஓவியனாகும் எண்ணம் வேறு உயிரை வாங்கிக்கொண்டிருந்தது. அப்பா எங்கேயோ புக் பேங்கில் சொல்லி வைத்து பத்தாம் வகுப்புப் புத்தகங்களில் இரண்டு மூன்றை வாங்கிவந்திருந்தார். அட்டை கிழிந்திருந்த புத்தகம்.
‘மெதுவா படி. ஒண்ணும் அவசரமில்ல’ என்று எதற்கும் சொல்லிவைத்தார். அவரையாவது சந்தோஷப்படுத்தலாம் என்று அடுத்த இரண்டு தினங்கள் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு, உள்ளுக்குள் நோட்டுப்புத்தகத்தில் வளர்மதி கவிதைகள் எழுதினான்.
ஒரு விஷயம் அவனுக்குத் தெளிவாகிவிட்டது. அப்பா இனி தன்னை இம்சிக்கப் போவதில்லை. வளர்மதி தன் காதலை ஏற்கும்வரை தனது இம்சைகள் ஓயப்போவதுமில்லை. பைபாஸ் முத்துமாரியம்மா! இன்னும் எத்தனை நாளைக்கு என்னைப் படுத்தப்போகிறாய்?
மறுநாள் ரிசல்ட் என்றதும் அம்மா யூனி·பார்ம்களைத் தோய்த்து அயர்ன் செய்து வைத்தாள். அவனது அழுக்கு சுமந்த புத்தகப் பைக்கும் ஒரு விடிவு வந்தது. தோய்த்துக் காயப்போட்டதில் நல்ல மொடமொடப்பாக விரைத்துக்கொண்டு நின்றது. அப்பா புதிய பேனா ஒன்று வாங்கித் தந்திருந்தார். இந்த முறை பாஸ் பண்ணுவானா என்கிற கவலை இல்லை. ரேங்க் எத்தனை என்பதுதான்.
‘ஏண்டா எப்படியும் அஞ்சு ரேங்குக்குள்ள வருவ இல்ல?’ என்று அன்று இரவு அப்பா கேட்டார்.
பத்மநாபனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. தேர்வு எப்படி எழுதினோம் என்பதே நினைவில் இல்லை. எல்லாமே சரியாக எழுதியது போலவும், அனைத்துமே தவறு என்பது போலவும் இருவிதமாகத் தோன்றியது.
கடவுள் விட்ட வழி என்று நினைத்துக்கொண்டுதான் ரிசல்ட் பார்க்கப் போனான். கும்பலில் நோட்டீஸ் போர்டை நெருங்கி, நம்பர் தேடி, இருப்பதைக் கண்டு அரை வினாடி திருப்தியடைந்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியே வந்ததுமே மகிழ்ச்சி என்ற ஒன்று தன்னிடம் இல்லை என்பதை அவன் கண்டுகொண்டான்.
ரிசல்ட் பார்க்க வளர்மதி வரவில்லை. அழுகை வந்தது. யாருடனும் பேசப்பிடிக்காமல் அவன் விறுவிறுவென்று வீட்டுக்கு நடக்கத் தொடங்கியபோது தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஹெட்மாஸ்டர் அவனைப் பார்த்து, கையசைத்தார். அருகே வரும்படி கூப்பிட்டார்.
15
அத்தியாயம் 15
‘என் ரூமுக்குப் போயி வெயிட் பண்ணு. அஞ்சு நிமிஷத்துல வரேன்’ என்று ஹெட் மாஸ்டர் சொன்னார்.
இதென்னடா ரோதனை என்று பத்மநாபனுக்கு அடிவயிற்றில் ஒரு பூச்சி பறந்தது. இன்றைக்கு ரிசல்ட். நாளைக்குப் பள்ளி திறக்கிறது. ரிசல்ட் பார்த்தாகிவிட்டது. அது ஒரு சம்பிரதாயம். கும்பலில் முட்டிமோதி போர்டில் ஒட்டியிருக்கும் பேப்பரில் தன் நம்பரைத் தேடிப் பிடிக்கிற சடங்கு. பிரச்னை ஒன்றுமில்லை. பாஸாகிவிட்டிருந்தான். ஒரு முழு நாளை நிம்மதியாகக் கழித்துவிட்டு நாளை முதல் தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிடலாம் என்று இருந்தவனுக்கு இப்படி திடீரென்று ஹெட் மாஸ்டர் கூப்பிட்டு ரூமுக்கு வரச் சொன்னது மிகுந்த அச்சத்தை விளைவித்தது.
என்ன தப்பு செய்திருப்போம்? யோசித்தபடி அவரது அறையில் காத்திருந்தான். நாற்காலி இருக்கிறது. ஆனாலும் உட்காருவதற்கில்லை. ஹெட் மாஸ்டர் அறையில் மாணவனாகப்பட்டவன் எப்போதும் நின்றபடி தான் இருக்கவேண்டும். பன்னிரண்டாம் நூற்றாண்டு செப்பேடு ஒன்றில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நீண்ட மேசையில் நிறைய குப்பைகள். எப்போதோ பள்ளிக்கூடம் பெற்ற பித்தளை, வெண்கலக் கோப்பைகள் அடைத்துவைத்த ஷோ கேஸ். எதிர்ப்புற மர பீரோவில் பிதுங்கும் பழைய ஃபைல்கள். தூசு. மேலே சத்தமுடன் சுழலும் மின்விசிறியின் அடியில் பின்புறம் டர்க்கி டவல் போட்ட மர நாற்காலி ஹெட் மாஸ்டருக்காகக் காத்திருக்கிறது.
எதற்கு வரச் சொன்னார்? பத்மநாபனுக்குக் குழப்பமாக இருந்தது. வளர்மதி ஏதாவது சொல்லியிருப்பாளா? வாய்ப்பில்லை. அவள் சமத்து. கடங்காரன் கலியமூர்த்தி ஏதாவது டபுள் கேம் ஆடியிருப்பானோ? விடுமுறைக் காலத்தில் அவனைப் பார்க்கவேயில்லை. பள்ளி தொடங்கும்போது திருப்பணியைத் தொடங்கும் அளவுக்கு முன்விரோதம் ஏதுமில்லை. ஒருவேளை நிரந்தர வில்லன் பெருமாள் சாமி என்னவாவது வத்திவைத்திருப்பானோ?
எப்படியும் அவன் பாஸாகியிருக்கமாட்டான் என்று பத்மநாபனுக்கு உறுதியாகத் தோன்றியது. நம்பர் தெரியாது. தெரிந்திருந்தால் பார்த்திருக்கலாம். ஆனால் ரிசல்ட் பார்த்த கூட்டத்தில் அவன் கண்ணில் படவில்லை. பெரும்பாலானவர்கள் பாஸாகி, ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டிருந்தார்கள். ·பெயில் ஆன முகம் எதுவும் தென்படவில்லை. ஃபெயில் ஆனவர்களுக்கு ரிசல்ட் பேப்பர் அத்தனை முக்கியமில்லை. அந்தராத்மா முன்னறிவிப்பு செய்துவிடும். அன்றைய தினம் அவர்கள் பள்ளிக்கு வருவதை அநேகமாகத் தவிர்த்துவிடுவார்கள். அல்லது இருட்டியபிறகு கதவேறி குதித்து உள்ளே வந்து வத்திக் குச்சி கிழித்து ரிசல்ட் பேப்பரைப் பார்த்து, தாங்கள் ·பெயில் என்பதை உறுதி செய்துகொள்வது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம்.
எதற்கு வரச் சொல்லியிருப்பார் ஹெட்மாஸ்டர்?
நின்றபடி யோசித்துக்கொண்டிருந்தான். கால் வலித்தது. ஐந்து நிமிடத்தில் வருவதாகச் சொன்னவர் இருபது நிமிடங்கள் கழித்து வந்தார். கூடவே மகாலிங்க வாத்தியார்! கடவுளே, இன்றைய ராசிபலன் ஏன் இத்தனை மோசமாக அமைந்திருக்கிறது? எதிரிகளின் கிரக சஞ்சாரம் உச்சத்திலும் என்னுடைய கிரகங்கள் பாம்பின்மீதும் ஏன் பயணம் செய்கின்றன?
‘என்னடா, பாஸ் பண்ணிட்டியா?’ என்று கேட்டபடி மகாலிங்க வாத்தியார் ஹெட் மாஸ்டருக்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்தார். ஹெட்மாஸ்டரும் உட்கார்ந்து ஒரு வாய் மோர் எடுத்துக் குடித்தார். வீட்டிலிருந்து அவர் சாப்பிடுவதற்கென்று எடுத்துவரும் பொருள்களின் பட்டியல் மிகப்பெரிது. மோர், மிளகாய் வற்றல், வெங்காய வற்றல், வறுத்த வேர்க்கடலை, அரிசிப் பொறி, மிளகாய்ப்பொடியில் பிரட்டிய இட்லி, சாத்துக்குடி பழம் என்று மணிக்கொன்றாக உள்ளே போய்க்கொண்டே இருக்கும். கேட்டால் அல்சர் என்பார். அல்சருக்கு மிளகாய்ப் பொடியும் வறுத்த வேர்க்கடலையும் வெங்காய வற்றலும் அதி உன்னத மருந்துகள் போலிருக்கிறது.
‘அப்பறம்? நீதான் பத்மநாபனா?’ என்றார் ஹெட்மாஸ்டர்.
இதென்ன அபத்தம்! ஹெட் மாஸ்டர்கள் இப்படித்தான் சொற்பொழிவுகளைத் தொடங்கவேண்டுமென்று டி.ஓக்களும் சி.ஓக்களும் சொல்லியிருக்கக்கூடும். நல்லது கனவான்களே, எனக்கான கழு எங்கே இருக்கிறது?
‘உக்காருடா’ என்றார் மகாலிங்க வாத்தியார்.
பத்மநாபனுக்கு சகலமும் சுழல்வது போலிருந்தது. இது ஆகாதகாரியமல்லவா.
‘அட உக்காருடா பரவால்ல’ என்று திரும்பவும் சொன்னார். அவன் தோளைப் பிடித்து அருகிலிருந்த நாற்காலியில் அழுத்தினார். பத்மநாபன் அடித்துப் போட்ட கரப்பான்பூச்சி போல் நாற்காலியின் ஓரத்தில் தொங்கியபடி அமர, ‘அன்னிக்கி நீ சொன்னப்ப நான் நம்பலை. ஆனா இப்ப நம்பறேன்’ என்று அந்தரத்தில் ஆரம்பித்தார் ஹெட் மாஸ்டர்.
அவனுக்கு உண்மையில் ஒன்றும் புரியவில்லை.
‘ஐயம் வெரி ப்ரவுட் ஆஃப் யூ மை பாய்! அல்மோஸ்ட் எல்லா பாடத்துலயும் நைண்ட்டி ஃபைவ் பர்சண்ட்டுக்கு மேல வாங்கியிருக்க. கொஞ்சம் கஷ்டப்பட்டேன்னா அடுத்த வருஷ பப்ளிக் எக்ஸாம்ல ஸ்டேட் லெவல் மார்க்குக்கு கிட்ட வந்துடுவ’
பேசுவது யார்? ஹெட் மாஸ்டரா? பக்கத்தில் உட்கார்ந்து கையை அழுத்திப் பிடித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டிருப்பது மகாலிங்க வாத்தியாரா? கடவுளே, இங்கு என்னதான் நடக்கிறது? இதெல்லாம் நிஜம்தானா.
‘முழிச்சிக்கடா! நிசந்தான். என்னாலயே நம்பமுடியல. நீ எப்படி நம்புவ?’ என்று வாத்தியார் சிரித்தார்.
‘சார்… யார் சார் ஃபர்ஸ்ட் ரேங்க் என் கிளாஸ்ல?’ என்று குழறியபடி கேட்டான்.
‘போடா லூசு! ஆறு செக்ஷன்லயும் சேத்து நீதாண்டா ஃபர்ஸ்டு! என்ன ஃப்ராடு பண்ணியோ, என்னமோ. ஐநூறுக்கு நாநூத்தி எண்பத்தொம்பது மார்க் எடுத்திருக்க! மேத்ஸ்ல செண்டம். சயின்ஸுல செண்டம், இங்கிலீஷ் செகண்ட் பேப்பர்ல செண்டம்! உங்கப்பாட்ட சொல்லு. சந்தோஷப்படுவாரு.’
பத்மநாபனுக்குக் கரகரவென்று கண்ணிலிருந்து நீர் பொங்கி வழிந்தது.
‘சேச்சே. இல்ல மகாலிங்கம். அன்னிக்கி எதுக்கோ இவன கூப்பிட்டு வார்ன் பண்ணேன். அப்பவே சொன்னான், இனிமே ஒழுங்கா படிக்கறேன், க்ளாஸ்ல ·பர்ஸ்ட் வந்து காட்டறேன்னு… டேலண்ட் உள்ள பையன் தான். வயசு பாருங்க! நடுவுல கொஞ்சம் தடுமாறிட்டான் போல. என்னடா?’ என்றார் ஹெட் மாஸ்டர்.
‘எப்பவும் ஒம்பது, பத்தாவது ரேங்க் வருவான் சார். திடீர்னு புத்தி வந்திருக்கு போலருக்கு’ என்று மகாலிங்க வாத்தியார் விடாமல் சிவப்புத் தொப்பி அணியப் பார்த்தார்.
‘எப்படியோ. தபாரு பத்மநாபா! கவர்மெண்டு ஸ்கூல்ஸ்ல பெரிய ரேங்க் வாங்கறவங்க யாரும் வர்றது கிடையாதுன்னு ஒரே குற்றச்சாட்டு. போன டி.ஓ. மீட்டிங்லகூட இதப்பத்தித்தான் பேசினாங்க. கல்வித்தரம் வளரல, டீச்சர்ஸ் இங்க சரியா சொல்லிக்குடுக்கறதில்லன்னு வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. இப்ப நீ மொததடவையா ஸ்கூல்லயே அதிக மார்க் எடுத்திருக்க. இதே மார்க்க நீ பப்ளிக் எக்ஸாம்ல காட்டிட்டன்னா, பேசறவங்க வாய அடைச்சிரலாம்! என்ன சொல்ற?’
‘நிச்சயமா சார்… இங்க சொல்லிக்குடுக்கறமாதிரி வேற எங்கயுமே முடியாதுசார்’ என்று மகாலிங்க வாத்தியார் தலையில் ஒரு கட்டி பனியை வைக்கும் விதமாக அவரைப் பார்த்தபடியே சொன்னான். ‘ஒலகத்துலயே இவர்தான் சார் பெரிய மேக்ஸ் வாத்தியாரு!’
‘சேச்சே.. நீ நல்லா படிச்சேடா.. அதான் காரணம்!’ என்றார் தியாகியாகும் உத்தேசத்துடன்.
‘நாளைக்கு ப்ரேயர்ல அனோன்ஸ் பண்றேன் பத்மநாபன். அடுத்த வருஷம் நீ பிச்சி ஒதரணும். எப்படியாவது நைண்ட்டி ஃபைவ் பர்செண்ட் காட்டிடு. ஒனக்கு ஸ்பெஷல் கோச்சிங் தர சொல்றேன். வேற என்ன வேணும்னாலும் கேளு. கண்டிப்பா கிடைக்கும். என்ன சொல்றிங்க சார்?’ என்று ஹெட்மாஸ்டர் மகாலிங்க வாத்தியாரைப் பார்க்க, ‘ஷ்யூர், ஷ்யூர்’ என்றார் தலையாட்டியபடி.
பத்மநாபனுக்குக் கிறுகிறுவென்றிருந்தது. இன்னும் நம்பமுடியாமல்தான் இருந்தது. படித்திருந்தான். தேர்வு எழுதியதும் திருப்திகரமாகவே இருந்தது. ஆனாலும் இத்தனை மார்க் எதிர்பார்க்கவில்லை. ஒரு வகையில் ஹெட் மாஸ்டர் சொல்வது சரிதான். பள்ளியில் முதல் மார்க் என்று வருவதெல்லாம் நாநூற்றுப் பத்து, நாநூற்றுப் பதினைந்து என்கிற அளவில்தான். அதற்குமேல் முடியாது. குட்டிக்கரணம் அடித்தாலும் ஆங்கிலத்தில் யாரும் எண்பதைத் தாண்டியதில்லை. ஆனால் இதென்ன, செகண்ட் பேப்பரில் செண்டம் என்கிறாரே! உலகம் வலப்பக்கமாகச் சுழலத் தொடங்கிவிட்டது போலிருக்கிறது. இனி தயங்காமல் இங்கிலீஷ் பேசலாம். ப்ரசண்ட் பர்·பெக்டன்ஸ், பாஸ்ட் கண்டின்யுவஸ்டென்ஸ் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடலாம். பழிகாரப் பன்னீர் செல்வம் முகத்தில் கரி பூசலாம்.
ஹெட் மாஸ்டர் அறையை விட்டு அவன் வெளியே வந்தபோது விஷயம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்துவிட்டிருந்தது. அவனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் ‘ஹுர்ரேஏஏஎ’ என்று தூக்கிச் சுற்றி வீசினார்கள்.
‘க்ரேட்ரா டேய், சைலண்டா சாதிச்சிட்ட!’ என்று பன்னீர் கூட வந்து கைகொடுத்தான். கலியமூர்த்தி உடனடியாக ஒரு பாக்கெட் கமர்கட் வாங்கி அனைவருக்கும் வினியோகித்தான். ‘பின்னிட்டடா மாப்ள. இன்னமே இஸ்கோல்ல இருக்கற எல்லா பொண்ணுங்களும் உன்னியத்தான் லவ் பண்ணும்’ என்றான் பாபு.
வளர்மதி!
ரிசல்ட் போர்டுக்குக் கீழே பெண்கள் அணி வட்டமிட்டு அமர்ந்திருந்தது. வளர்மதி இருந்தாள். பொற்கொடி, ராஜாத்தி, சுமதி, க்ளாரா எல்லோரும் இருந்தார்கள். பத்மநாபன் ஓடி வந்தபோது வளர்மதி புன்னகையுடன் எழுந்து நின்றாள்.
‘இங்க வாடா’ என்று அழைத்தாள். அருகே சென்றதும் நம்பமுடியாமல் ஒரு காரியம் செய்தாள்.
‘கங்கிராட்ஸ்!’ என்று கைகுலுக்க, நீட்டினாள். நம்பமுடியாமல் மெல்லக் கை உயர்த்தி அவள் கையைப் பிடித்துக் குலுக்கும்போது காதுக்குள் சூடாக உணர்ந்தான்.
‘எனக்குத் தெரியும்டா குடுமி. நீ இந்தவாட்டி சாதிச்சிருவேன்னு எதிர்பாத்தேன். எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? உங்கப்பா, அம்மா எவ்ளோ சந்தோஷப்படுவாங்க?!’
‘ஆமா வளரு. என்னால நம்பவே முடியல. நாநூத்தி எண்பத்தொம்போதாம்!’
‘பழனி வாத்தியார் இப்பத்தான் சொல்லிட்டுப் போனாரு. தமிழ்லகூட தொண்ணூத்தி ஆறாம்டா! என்னடா செஞ்ச?’
‘தெரியல வளரு’ என்று சொன்னான். தலை சுற்றுவது போலிருந்தது. பசிப்பது போலவும் வயிறு நிரம்பியது போலவும் உணர்ந்தான். கண்ணுக்குள் யாரோ இரண்டு கை பஞ்சை அள்ளித் திணித்தது போல் இருந்தது. எல்லாமே தித்திப்பாக, எல்லாமே வண்ணமயமாகத் தெரிந்தன.
இனி ஒன்றுமில்லை. தன்னால் முடியும். நிச்சயம் முடியும். என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். ஃபர்ஸ்ட் ரேங்க் என்பது ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் சொத்து அல்ல. உழைக்க முடிந்த யாருக்கு வேண்டுமானலும் கிடைக்கக்கூடிய ம்யூசிக்கல் சேர். அடுத்த வருடம் நிச்சயம் இதற்குமேலே மார்க் வாங்கிவிட முடியும். போகிற போக்கில் ஹெட் மாஸ்டர் சொல்லிவிட்டார். ஸ்டேட் ரேங்க். முடியாதா என்ன? ஒரு முயற்சி தானே? செய்து பார்த்தால்தான் என்ன?
உற்சாக வாழ்த்துகள் ஓய்ந்து எல்லோரும் வீட்டுக்குப் புறப்பட்ட வேளையில் வளர்மதி மீண்டும் அவனிடம் வந்தாள். புன்னகை செய்தாள்.
‘குடுமி, என்னை மன்னிச்சிருடா.’
‘ஐயோ என்னாச்சு வளரு?’
‘ஒன்ன ரொம்ப அலைய விட்டுட்டேன் இல்ல? பாவம் நீ. திரும்பத் திரும்ப என்னாண்ட வந்து நின்னுக்கிட்டே இருந்த. பெரிய இவ மாதிரி நான் கண்டுக்கவே இல்ல ஒன்ன.’
‘சேச்சே. அப்படியெல்லாம் இல்ல வளரு. நான்..’
‘நீ நெசமாவே பெரியாளுடா. உன் அருமை தெரியாம இருந்துட்டோம் இத்தன நாளா.’
அவன் அமைதியாக இருந்தாள். எல்லாம் கூடி வருகிற நேரம். பைபாஸ் முத்துமாரி அம்மா! உன் கருணைக்கு ஓர் அளவே கிடையாதா! மனம் சிறகடிக்க அவன் காத்திருந்தான். சொல், சொல், சொல் வளர்மதி. இதற்காகத்தான் இத்தனை நாளாகத் தவமிருக்கிறேன்.
‘நீ தப்பா நினைச்சிக்கலன்னா ஒண்ணு சொல்லுவேன்..’
‘சொல்லு வளரு.’
ஒரு கணம் தாமதித்தாள். பிறகு சிறிது வெட்கப்பட்டாள். ‘வந்து.. நானும் உன்னிய.. லவ் பண்றேண்டா’ என்று சொன்னாள்.
பத்மநாபனுக்கு சகலமும் அமிழ்ந்து அடங்கியது போல் இருந்தது. இதுதான். இவ்வளவுதான். இதற்குமேல் ஒன்றுமில்லை. ஒரு கணம் கண்ணை இறுக்கி மூடி பெருமூச்சு விட்டான். சட்டென்று அவளைப் பார்த்து உறுதியாகச் சொன்னான்:
‘தெரியும் வளரு. ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணு. அடுத்த வருசம் பப்ளிக் எக்ஸாம் எளுதிட்டு பதில் சொல்லுறேன்.’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று திரும்பிப் பாராமல் வீட்டுக்கு ஓடினான்.
(முற்றும்)
கருத்துகள்
கருத்துரையிடுக