மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும்
கவிதைகள்
Backமாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும்
கவிதைகள்
பேயோன்
முன்னுரை
இருபத்தைந்து ஆண்டுகளாகவே நான் கவிதைகள் எழுதிவருகிறேன். கவிதைகளைவிட உரைநடைகளைத்தான் அதிகம் எழுதியிருக்கிறேன் என்றாலும் கவிதைதான் என் முதல் மனைவி. உரைநடை இரண்டாம் மனைவி. கவிதையை எடுத்துக்கொள்வோம் - ஒரு மனிதனால் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரே மனைவியுடன் வாழ முடியுமா? முடியும். கவிஞனால் முடியும். கவிதைகளோடு முடியும்.
கால் நூற்றாண்டு காலமாகக் கவிதை எழுதுகிறேனே தவிர இப்போதும் கவிதையின் மாணவனாகவே என்னைக் கருதிக்கொள்கிறேன். என் குருநாதரே எனக்கு முதல் மனைவியாக அமைந்தது என்னுடைய பெரும்பேறு என்று சொல்ல வேண்டும். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். எந்தச் சொற்களைப் பயன்படுத்தினால் கவிதையின் சாயல் வரும், எப்படி எழுதினால் புரியாமல்போய் அதே சமயத்தில் ஏதோ இருப்பது போல் காட்டும், ஞாபகமில்லாமல் சும்மா உரைநடையாக எழுதித் தொலைத்துவிட்ட குறிப்பைக் கவிதையாக்குவது எப்படி, எங்கே கமா போட்டால் எடுப்பாக இருக்கும், உணர்வெழுச்சிக்கான ஃபார்முலாக்கள், இப்படிப் பல விஷயங்களைக் கற்கிறேன்.
என் பெயரின் கீழ் இது வரை இருநூறுக்கு மேற்பட்ட தொகுப்புகள் வந்துவிட்டன. இருந்தாலும் கவிதை எழுதுவதில் உள்ள ஆர்வம் அதிகரிக்கிறதே தவிரக் குறையவில்லை. மாத்திரை சாப்பிடுகிறேன். அன்றாட வாழ்வியலின் காலாதீத இண்டு இடுக்குகளில் - உதாரணமாக, மருத்துவரைப் பார்க்க அசௌகரியமானதொரு நாற்காலியில் அமர்ந்து காத்திருக்கும்போது - உரைநடை எழுத நேரமற்ற தருணங்களில், கவிதைதான் இந்த இடைவேளைகளை இட்டு நிரப்புகிறது.
கவிதை எழுதுவது அவ்வளவு எளிதாக இருக்கிறது. பேருந்து நிலையத்தில் ஒரு பெஞ்சியில் அமர்ந்திருக்கிறேன். எதிரே விசாரிப்பு நிலையத்திற்கு அருகில் ஒரு கோணி மூட்டை இருக்கிறது. அந்த மூட்டை மேல் ஒரு குருவி வந்து உட்கார்கிறது. குருவிகள் மிக அபூர்வமானவை. அவை காணுயிர்கள் அல்ல. அவற்றைப் பார்ப்பதரிது. அருகிவரும் குருவிப் பறவை மிகச் சாதாரணமான, சிறிதும் விசேடமில்லாத, வெறுப்பைக்கூடத் தரக்கூடிய ஒரு சூழலில் திடீரெனத் தோன்றுவது ஒரு தரிசனம் போலத்தானே? இதை வைத்துப் பத்து வரி தேற்றலாம். இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் இருக்கும் கவிதையை உலகுக்குத் தருவது என் பணி.
வலப்பக்கம் ஒரு நோட்டுப் புத்தகம், இடப்பக்கம் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்து இரு கைகளால் கவிதையும் உரைநடையும் என வெவ்வேறாக எழுதும்போது வலதுகையால் எழுதுவது கவிதையைத்தான் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு முந்தைய தொகுப்புகளைவிட இத்தொகுப்பில் கவிதைகள் அதிகம். கையோடு அவற்றின் நீளமும். ஒரு குழந்தையாய்க் கவிதை என்னுள் வளர்ந்துகொண்டிருக்கிறது. என் கவிதை, நீங்கள் பார்த்து வளரும் கவிதை.
பேயோன்
ஆகஸ்ட் 27, 2016
சிக்குதல்
ஓடும் பேருந்தின் ஃபுட்போர்டில் ஏறுவது போல்
வலதுகால் செருப்புக்குள் கல் ஒன்று புகுந்தது
எல்லாப் பக்கமும் வார் போட்ட செருப்பிலிருந்து
கல்லுக்குத் தப்பிக்க வழி இல்லை
கோட்டை போன்ற என் செருப்பு
அனுமதித்த வரையிலும்
உள்ளங்காலை உயர்த்தித் திருப்பி
இடைவெளிப் பாதை வகுத்து
கல்லைத் தெருவுக்குள் வீசினேன்
வலையிலே விழுந்த மீனைக் கடலிலே விடுவது போல்.
தாவர அன்பு
மதுரைக்குப் போவதாகச் சொல்கிறேன்
மதுரையிலென் மாமா வீட்டில் தங்கு என்கிறாய்
திருச்சிக்குப் போவதாகச் சொல்கிறேன்
திருச்சியில் பெரியப்பா வீட்டில் தங்கு என்கிறாய்
கோவைக்குப் போவதாகச் சொல்கிறேன்
கோவையில் கசின் வீட்டில் தங்கு என்கிறாய்
திருநெல்வேலி போவதாகச் சொன்னால்
சாந்தியக்கா புருஷன் உதவுவார் என்கிறாய்
அசௌகரியத்தின் நகத் துண்டால் நெருடுகிறாய்
யாரும் உதவாமல் நான் போக வழியுண்டா?
மாமாக்களே, பெரியப்பாக்களே
கசின்களே, சாந்தியக்கா புருஷன்களே
உங்கள் தூய்மையான தாவர அன்பிலிருந்து
தப்பிக்க வழி இல்லையா?
உண்டு
காணச் சகியாத குழந்தைகள் உண்டு
அருவருப்பூட்டும் பூக்கள் உண்டு
ஆட்கொல்லி மழைகள் உண்டு
இளமையை மதியா விகாரம் உண்டு
வரிகளால் இனிமை கெட்ட இசை உண்டு
சார் சொல்வது மாதிரியும் உண்டு.
பார்க்கும் புத்தர்
நேற்று புத்தர் வீட்டுக்கு வந்திருந்தார்
தள்ளுவண்டிக் கடையில் வாங்கியவர்
பீங்கானில் செய்த முனிபுங்கவர்
தாடி வைத்தால் திருவள்ளுவர்
போட்டிசெல்லி முகபாவி
சுருட்டைமுடிக் காந்தார உருவி
தொங்கட்டானை இழந்த காது
மூக்கென்னவோ கிழக்காசியம்
நகைச்சுவைத் துணுக்கொன்று
சொல்லி முடித்த புன்னகை
மனக்கண்ணில் எதையோ பார்க்க
விரும்பி மூடிய கண்கள்
கண் திறந்தால் தெரிந்துவிடுமா
என்று மூடிய கண்கள்
எனக்கு புத்தரைப் பிடிக்கும்
பார்த்தால் அமைதி தருகிறார்
என்றெண்ணவைக்கும் ஆளுமை
கிளர்ந்தெழும் அன்போடு
கண்வாங்காமல் பார்க்கிறேன் அவரை
பிறவியிலேயே மூடிய கண்களால்
அவரும் என்னைப் பார்க்கிறார்
ஆனால் பீங்கானுக்குள்ளிருந்தல்ல
எங்குமில்லா ஓர் இடத்திலிருந்து
அவர் பார்ப்பது எனக்குத் தெரியும்
நான் பார்ப்பது அவருக்குத் தெரியாது.
சம்சார சாகரம்
கரையிலிட்ட மீன்களாய்
சம்சார சாகரத்தில் எத்தனைப் பேர்
தத்தளிக்கிறார்கள் பாருங்கள்
நிஜ மீன்கள் உருவகத்திற்கு வெளியே
அநேகமாய்ச் சொகுசாக இருக்க
எத்தனைப் பேர் தத்தளிக்கிறோம் பாருங்கள்
விதிமீனவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
பெரிய கடல், வற்றாத உப்புநீர், எனினும்
இவன்/இவள் குடித்தது போதும் எனக்
காலித் தூண்டிலைப் போட்டு
ஒவ்வொருவராய் வெளியே எடுக்கிறான்
தமதல்லாத் தூண்டிலைப் பிடிக்க
நடுக்கடலில் என்னவொரு முண்டியடிப்பு
மண்டைகள், மண்டைகள், எங்கும் மண்டைகள்
பெரிதும் சிறிதும் நல்லதும் கெட்டதுமாய்
உருப்படாத ஆற்றில் மிதக்கும்
அணைந்த அகல்களைப் போல்
மண்டைகள், மண்டைகள், மண்டைக் கடலில்
வெயிலைக் கொட்டும் வானத்திற்கடியிலே
ஒழுங்கற்ற வரிசையில் திணறத் திணறக்
காத்திருந்தது போதும் ஐயா
நுரையீரலுக்குள் தண்ணீர் போய்விட்டது
சட்டைப்பை ரூபாய் நோட்டு நனைந்துவிட்டது
தத்தளிப்பாளர்களின் உப்புநீர் வாந்தி
கடலை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது
உருவகத்திற்கு வெளியே என்னைக்
கொண்டு விடு மீனவா
உனக்குப் புண்ணியமாய்ப் போகும்(?).
ஆவன செய்ய ஆளில்லை
விழித்துக்கொள்ளுங்கள் மந்தையரே
ஆவன செய்ய ஆளில்லை
பொங்குங்கள், பொருமுங்கள்
இரவுத்திரம் கொள்ளுங்கள்
ஏதுமியலாத்தனத்துப் பளிங்குப் பரப்பின்
சுயபிரதிபலிப்பில் மூழ்கித் திளையுங்கள்
ஆனால்
விழிப்புக் கொள்ளுங்கள் மண்டையரே
ஆவன செய்ய ஆளில்லை
செய்தித்தாளை வாசிக்காதீர்
பஞ்சாங்கம் பாருங்கள்
ஐயங்களுக்கு இடங்கொடுக்காதீர்
தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்
புது வீடு கட்டுங்கள்
காணி நிலம் வாங்குங்கள்
நம்மையும் சேர்த்து
ஐந்து பேராய் மதிக்கட்டும்
குழந்தைகள் கைகளைக் கட்டிக்
கொல்லப்படும் கருணைக் கடலில்
நாம் ஜீவிக்கிறோம்
மருத்துவர்கள் கைவிட்ட பின்பு
புற்றுநோயிலிருந்து காப்பாற்றிய
கோரப் புதுவை மதர் புகைப்படம்
எல்லோரையும் காப்பாற்றாது
எல்லோரிடமும் இல்லை மதர்ப் படம்
கண் திறவீர் வியர்த்தர்களே
நெற்றிக்கண் திறந்தாலும்
குற்றம் குற்றமே என்றாலும்.
நன்மையும் தீமையும்
கெட்ட விசயங்கள் நடக்கும்போது
அவை பெரும் அளவில் நிகழ்கின்றன:
யுத்தங்கள், பஞ்சங்கள், படுகொலைகள்,
பெரும் நோய்கள், ஒடுக்குமுறைகள், பேரழிவுகள்…
(தனிமனிதன் அனுபவிக்கும் பிரச்சினைகளையும்
இதில் கொஞ்சம் சேர்த்துக்கொள்கிறேனே)
நல்ல விசயங்கள் நடக்கும்போது
அவை மிகச் சிறிய அளவில் நிகழ்கின்றன:
சாகக் கிடந்தவர் குணமாகிறார்
தொலைந்த குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள்
பேருந்து ஓட்டுநர் மாரடைப்புக்கிடையில்
ஐம்பது பேரைக் காப்பாற்றிவிட்டுச் சாகிறார்
(1-ஐவிட 50 பெரிதல்லவா)
ஆட்டோவில் விட்ட லட்ச ரூபாயை
நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்
திரும்பக் கொண்டுவந்து தருகிறார், இத்யாதி.
கெட்ட விசயங்கள் நடக்கும்போது
முக்கியமான கேள்விகள் எழுவதில்லை
நல்லது நடக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது
உலகில் நல்லதும் நடக்கிறது
என்று மனங்கள் சமாதானம் அடைகின்றன.
உலகில் நல்லதும் நடப்பதுதானே பிரச்சினை?
எழுதலாம்
எதை வேண்டுமானாலும் எழுதலாம்
எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்
எதற்காக வேண்டுமானாலும் எழுதலாம்
எதைக் கொண்டும் எழுதலாம்
எதன் மீதும் எழுதலாம்
எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்
நான் படிக்க மாட்டேன்
இருத்தலியன்
குறுகிய தெருவில் அகன்ற மனிதன்
மெல்ல வழிமறித்துச் செல்கிறான்
'ஹலோ!' எனக் கோபித்து உசுப்பத்
தடுக்கிறதென் உள்ளார்ந்த நாகரிகம்
'கொஞ்சம் வழி விடு' எனச் சொல்ல
விடுவதில்லை அறிவுஜீவிக் கையாலாகாத்தனம்
'அப்படி என்ன அவசரம்?'
என்று அவன் கேட்டுவிட்டால்
என்ன பதில் சொல்லப்போகிறேன்?
யாருடைய அனர்த்தம் பெரிது?
(என எப்படி நிரூபிப்பானேன்?)
பிறகு நான் உணர்கிறேன்:
எது நடக்க வேண்டுமோ
அதுதான் நடந்துகொண்டிருக்கிறது
அவன் உருட்டும் பாறையைவிட
முக்கியமல்ல நானுருட்டுவது.
குறுகிய தெருவின் அகன்ற மனிதனிடம்
மனதிற்குள் சொல்கிறேன்:
நண்பா, நம் பாறைகளின் அளவு
ஒன்றே எனினும் உன்
முக்கியத்துவங்களுக்கு முன்
நான் சுருங்கிப்போகிறேன், வாழ்த்துகள்.
உன் வார்த்தைகளால் வேண்டாம்
எனக்குத் தெரியும்
எப்படி எண்ணெய்க் கிணற்றில் மீன்கள் போல்
மக்கள் சாகிறார்கள் என்று
எப்படிக் கூடாத வகையிலெல்லாம்
இழிவுக்குள்ளாகிறார்கள் என்று
எப்படி ரத்தக்கறை தரையில் படியக்
குழந்தைகள் மடிகிறார்கள் என்று
அதனால்தான் சொல்கிறேன்
இனிமேல் அது பற்றி எழுதாதே
உன் வேதனை எனக்குப் புரிகிறது
என் வேதனையும்தான் அது
உன் கண்களில் துளிர்க்கும் கண்ணீரை
என் கண்களில் நான் கட்டுப்படுத்துகிறேன்
(நான் உறுதியான ஆள் என்றில்லை.
என்னைப் பற்றிய சிந்தனையில்
கொஞ்சம் தொலைந்துபோவேன்,
அவ்வளவுதான்)
உன் இதயத்தைப் பொசுக்கும் கோபம்
என் இதயத்தையும் பொசுக்காமல் இல்லை
இதில் நீயும் நானும் வேறில்லை
அதனால்தான் சொல்கிறேன்
இனிமேல் அது பற்றி எழுதாதே
உன் வார்த்தைகளால் வேண்டாம்
அது ரொம்ப அதிகம்
நிறைய நடந்துவிட்டது
இனியும் நடக்கும்
உலகம் எப்போதும் இப்படித்தான்
இயங்கிவந்திருக்கிறது
பூமி சுற்றுவதே அதற்கு அத்தாட்சி
நீ இப்போது மேலும் அதிகமாக,
விரிவாகத் தெரிந்துகொள்கிறாய்
எதுவும் மாறவில்லை
அதனால்தான் சொல்கிறேன்
இனிமேல் அது பற்றி எழுதாதே
உன் வார்த்தைகளால் வேண்டாம்
அது ரொம்ப அதிகம்
ஏனென்றால் உன்னைப் போல்
களங்கமற்றவை அல்ல
உன் வார்த்தைகள்
உன் துயரத்தை உரக்கச் சொல்ல
உன் துரோகிகளைத் தேடாதே
கண்கள் கலங்கும்போது
மனம் குமுறும்போது
உன்னால் எதுவும்
செய்ய இயலாதென
உணர்ந்து நோகும்போது
அது பற்றி எழுதாதே
வேறு ஏதாவது செய்
அதில் தவறே இல்லை
அது உலகின் துன்பத்திற்கு
நீ செலுத்தும் மரியாதை
அது உன் பங்களிப்பு.
நம்பிக்கை மீட்பு
லட்சம் பேர் சாகும்போது
அதில் நூறை ஒருவன் காக்கிறான்
நூறு பேரைக் காத்தவன்
நம்பிக்கையை மீட்கிறான்
லட்சம் பேரைக் கொன்றவன்
வேலை பார்த்துப் போகிறான் .
நேற்றுப் பெய்த கனமழை
நேற்றுப் பெய்த கனமழை
பிரசவித்த அழுக்குக் குளத்தில்
ஒரு ஆட்டோ புகுந்து எழுப்பிய
அலையில் நனைகின்றன என் கால்கள்
நடுத்தெருவில் பாக்கெட் கடல்.
ஒரு ஞாயிறு
நண்பர்கள் போலத் தெரிந்த
மூன்று இளைஞர்களில்
ஒருவன் இன்னொருவனை
அடித்துக்கொண்டிருந்தான்
நான் இருந்த தேநீர்க் கடை வாசலில்
வாடிக்கையாளர்கள் வெளியே வந்து
வேடிக்கை பார்த்தனர்
ஞாயிறு என்பதால் தெருவில்
நடமாட்டம் அதிகம் இல்லை
அடித்தவன் குத்து மழை
பொழிந்துகொண்டிருந்தான்
அடி வாங்கியவன் செய்த துரோகம் பற்றி
சும்மா இருந்த நண்பனிடம்
சில வார்த்தைகள் பேசினான்
அடித்தவனின் குத்துகள் ஒவ்வொன்றும்
அடி வாங்கியவனை நிலைகுலையச் செய்தது
அவன் விட்டுவிடும்படி கைகூப்பிக்
கெஞ்சினான், மன்னிப்புக் கேட்டான்
அடித்தவன் இன்னும் கொஞ்சம் கொடுத்த பின்
நிறுத்திவிட்டு அவன் மேல் துப்பினான்
இனி அவளுக்கு ஃபோன் செய்தால்
மவனே நீ செத்தாய் என எச்சரித்து நகர்ந்தான்
அடி வாங்கியவன் வீங்கிய முகத்தில்
ரத்தக் காயத்துடன் தள்ளாடி நடந்தான்
எங்களைக் கவனிக்கவில்லை
சற்றுத் தூரத்தில் ஒரு மாடு
சுவரை நோக்கி நின்றிருந்தது
அழுக்குப் புட்டத்தைக் காட்டியபடி
அதன் உலகத்தில் இருந்து
அசை போட்டுக்கொண்டிருந்தது
இவன் அந்தப் பக்கம் வந்தபோது
திரும்பிப் பார்க்காமல்
மென்மையாக வாலைச் சுழற்றியது
வால் முனையின் உரசலுக்குத்
திடுக்கிட்டுத் திரும்பிய இளைஞன்
தன் ஓய்ந்த நடையைத் தொடர்ந்தான்.
திடீரெனத் தெளித்த நீர்
இவ்வளவு நேரம்
சும்மா இருந்த ஆட்டோக்காரன்
நான் வரும்போது
வண்டியெடுத்து வழிமறிக்கிறான்
இவ்வளவு நேரம்
வாளாவிருந்த தொப்பைக் கிழவன்
நான் வரும்போது
ஆள் வருவதைப் பார்க்காமல்
மேலே தும்முகிறான்
இவ்வளவு நேரம்
பெருக்கிக்கொண்டிருந்த பெண்மணி
நான் வரும்போது
பக்கெட் நீரை என் மேல் இறைக்கிறாள்
ஒருநாளும் இவர்கள் எனக்குப் பிடிபட்டதில்லை
பெரும்புதிர் இவர்களின் இருப்பெனக்கு
ஒருபோதும் இவர்களெனக்குத் தனித்ததில்லை
ஆனாலும் திடீரெனத் தெளித்த நீர்
என் துயிலைக் கலைக்கிறது
இந்த வண்டியெடுத்து வழிமறிக்கும் கணத்திற்காகவே
இந்த ஆள் பார்க்காமல் மேலே தும்மும் கணத்திற்காகவே
இந்த பக்கெட் நீரை இறைக்கும் கணத்திற்காகவே
இவர்கள் மும்முறையே படைக்கப்பட்டிருக்கிறார்கள்
இக்கணத்திற்கு முன்பு இவர்கள் இல்லை
இக்கணத்திற்குப் பின்பும் இவர்கள் இல்லை
இவர்கள் இக்கணத்தில் வாழ்பவர்கள்
இவர்கள் எனக்காகத் தோன்றியவர்கள்
என் பிராணனோடு அழிவார்கள் இவர்கள்
என் ஸ்தூலத்தோடு மடிவார்கள் இவர்கள்
சர்வம் சுயமையம் ஜகத் அந்தர்யாமி யுஹே யுஹே.
மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும்
மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும்
அதனால் அவர் வரும்போதெல்லாம்
அவருக்காக அரைக் கிலோ
வாங்கிவைத்துவிடுவது.
அதிலே அப்படி என்ன ருசி இருக்கிறதோ
தெரியவில்லை. பர்சனலாக
எனக்கு மிக்சர்தான் பிடிக்கும்
அதுவும் இப்போது முந்திரி
எல்லாம் போடுகிறான்.
முன்னாலெல்லாம் பொட்டுக்கடலை,
வேர்க்கடலை, கொஞ்சம்
பெரிய கடையாக இருந்தால் பூசணி விதை
எல்லாம் போட்டிருப்பான்.
அந்தப் பழைய டேஸ்ட்
இப்போது வருவதில்லை.
அதிலேயே கார்ன் மிக்சர் என்று ஒன்று
வருகிறது; சூப்பராக இருக்கும்
உடம்புக்கும் நல்லது. புரோட்டீன்…
மாப்பிள்ளையும் சாப்பிடுவார்
ஆனால் காராபூந்திதான் அவருடைய
ஆஸ்தான தின்கிற ஐட்டம்
காராபூந்தி எதில் செய்கிறான்?
கடலை மாவா?
அதுவும் அவ்வளவு எண்ணெய்!
மாசக் கடைசி என்றால்
கொஞ்சம் சீப்பாக வாங்குவேன்
(ஆனால் அதுவும் குவாலிட்டிதான்)
தணிகாசலத்தில் நியூஸ்பேப்பரில்
கட்டிக்கொடுப்பான்
அந்தப் பேப்பரில் பார்க்க வேண்டுமே
எண்ணெயை!
பிழிந்தால் ஐம்பது கிராம் வரும்.
மழைக்காலத்தில் டியூப்லைட்டில்
கட்டித் தொங்க விடலாம்
அந்தப் பேப்பரை.
கொலஸ்ட்ரால், பீப்பீ எல்லாம்
வைத்துக்கொண்டு…
கார்ன் மிக்சர் டிரையாக இருக்கும்.
ஆனால் நாம் அதெல்லாம் ரொம்பப்
பார்க்கக் கூடாது.
மாப்பிள்ளை வருவதே அபூர்வம்
அவர் வரும்போது
அவருக்குப் பிடித்ததைக் கொடுப்போம்
நமக்கென்ன குறைந்துவிடப்போகிறது,
இல்லையா?
இங்கே கிரி பவனில் நல்ல
குவாலிட்டியாகக் கிடைக்கும்
இடத்தையும்
நீட்டாக வைத்திருப்பான்
விலை கொஞ்சம் ஜாஸ்தி
நான் அடிக்கடி போவதால்
ரவுண்டாகக் குறைத்துத் தருவான்
மாப்பிள்ளைக்குப் பிடித்தால்
நமக்கு சந்தோஷம்
ஒரு திருப்தி – என்ன?
நமக்குத் தேவை அதுதானே?
அவரும் இதைக் கொடு
அதைக் கொடு என்று
கேட்கிற ஆள் இல்லை
தங்கமானவர்
ரொம்பப் பேச மாட்டார்
ஆனால் நமக்குத் தெரிய வேண்டும்,
இல்லையா?
எங்கள் வீட்டில் நாங்கள்
எண்ணெயே சேர்த்துக்கொள்வதில்லை...
பொம்மையன்
பொய் சொல்லக் கற்றுவிட்டான்
சூதுவாது இப்போது தெரிகிறது
ஸ்பைடர்மேன் வந்த கனவைச்
சொல்லும்போது
என் பெற்ற ஆர்வத்தைக் கவனித்துக்
கனவில் வந்திருக்க முடியாத
உபகதைகள், கதாபாத்திரங்கள்
சேர்த்துக் கதையை வளர்ப்பான்
என் நெஞ்சுயரம் வளர்ந்த பிறகும்
ஊட்டிவிடச் சொல்லி அடம்பிடிப்பான்
எண்ணற்ற புதிய சொற்களைப்
பொருளறிந்து பயன்படுத்துவான்
ஆனால் மழலை முழுமையாக விடவில்லை
தலைகீழ் இந்திக்காரன் போல்
'ட'வை 'ர' என உச்சரிப்பான்
சிறுவர்களுக்கான அம்பேத்கர் புத்தகம்
படிக்கையில் கேள்விகள் கேட்பான்
(விக்கிபீடியாவில் பார் என்பேன்)
பொம்மைகளுடன் பேசி விளையாடுவான்
அவனே பொம்மை போல் இருக்கிறான்
அவனுடைய அளவிலாத
சூட்டிகையைப் பார்க்கும்போது
இதயம் வெடித்துவிடும் போல் இருக்கிறது
கண்கள்கூடக் கொஞ்சம் ஈரமாகின்றன
ரொம்பக் கொஞ்சினால் செலவு வைப்பான்
என் வயதில் இவன்
தன் குழந்தைக்கு அம்பேத்கர் புத்தகம்
வாங்கித் தர மாட்டான்
யானை விலைக்கு லெகோ பிளாக்ஸ்
வாங்கிக் கொடுப்பான்
வேறொரு வர்க்கத்தில் ஒருவனாகிவிடுவான்
அப்பாவும் அம்பேத்கரும்
எச்சரிக்கைகளும் அறிவுரைகளும்
மறந்துவிடும்
இந்த அபூர்வக் குழந்தையை
இழக்க நான் தயாரில்லை
கரும்பு பிழியும் எந்திரத்தில் போல்
அவன் கடைவாய்ப் பற்களிடையே
குச்சி சிப்ஸைக் கொஞ்சம் கொஞ்சமாக
நுழைத்துத் தன்னை மறந்து தின்பதை
வேடிக்கை பார்க்கும்போதே
உயிர் பிரிந்துவிட வேண்டும்
(இன்சூரன்ஸ் இருக்கிறது).
எலி
நடுத் தெருவில் ஒருக்களித்துக் கிடக்கும்
எலியைக் காக்கைகள் கொத்துகின்றன
விரும்பிய நேரத்தில், பசிக்கிற சமயத்தில்
கூட்டமாய் வந்து கொத்துகின்றன
காக்கை அலகுகள் கூரியவை
ஒரு கும்பல் சேர்ந்து இன்னொரு ஆளை
ஈட்டியால் குத்திச் சிதைப்பது போல்
கொடூரமான காட்சி அது
(புரியும்படி சொல்லவா?
கௌரவர்கள் அபிமன்யுவைச்
சூழ்ந்து தாக்கிக் கொல்வது போல)
தினமும் பார்ப்பதுதான் என்றாலும்
நமக்குப் பழகிவிடும் விஷயம் அல்ல அது
இந்தத் தெருவில் இந்த வேகத்தில் வரும்
ஒரு காட்டானின் பைக்கிற்கு
ஒதுங்கிக் கடந்து செல்கிறேன்.
பெரிய மூக்குள்ள நண்பருக்கு
மூக்கு இவ்வளவு பெரிதாக இருந்தால் வலிக்காதா?
உங்கள் மூக்கினுடைய பின்னணியாக மட்டுமே
நீங்கள் இருப்பது பரவாயில்லையா?
உங்கள் மூக்கிற்குத் தனி உடல் எதற்கு?
உங்கள் தலையில் திரியைப் பொருத்திக் கொளுத்தினால்
நாசித் துவாரங்கள் நெருப்பையும் புகையையும் கக்க
ராக்கெட்டாகப் பறப்பீர்களா?
உங்கள் ஆளுமை முழுவதையும்
உங்கள் மூக்கே விழுங்கிவிடுகிறதே?
தங்கள் உடலெடையில்
மூக்கெடையின் சதவீதம் என்னவோ?
திரைப்பட காமிரா பார்வையில்
படகின் ஒரு முனை நீரில் முன்னேறிச் செல்வது போல
நீங்கள் நடக்கும்போது மூக்கு முன்னே தெரியுமா?
அதைத்தான் நீங்கள் பின்தொடர்ந்து செல்வீர்களா?
உங்களால் அவசரத்திற்கு
எங்காவது ஒளிந்துகொள்ள முடியுமா?
உங்கள் குழந்தைகள்/மனைவி உங்கள் மூக்கில்
சறுக்குமரம் விளையாடுவதுண்டா?
மூக்கின் எடையைச் சுமந்துச் சுமந்து
உங்கள் முகத் தசைகள் இறுகிவிட்டனவா?
சாதாரணமாக மூக்கை நீவிக்கொள்ள
உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?
ஜலதோஷம் ஏற்பட்டால் என்ன ஆகும்?
தும்மினால் கீழே விழுந்துவிடுவீர்களா?
அப்புறம்?
காற்றலை
குளிப்பாட்டும் குளிர்க் காற்று
சிகரெட்டை சீக்கிரம் தீர்த்துவிடுகிறது.
புயல்
பெருங்காற்று கதவை மூட விடவில்லை
திறந்துவைத்துப் போனால் அறைந்து சாத்துகிறது.
சொர்க்கத்திலும்
சொர்க்கத்திலும்
சமரசங்கள் உண்டு
எல்லோரும்
ஒரே மாதிரி இல்லை.
பயிற்சி
ஒரு
கல்லில் தினமும்
தடுக்கிக்கொள்வேன்
வேறு யாரும் அதில்
தடுக்கிப் பார்த்ததில்லை
உஷாரான ஆட்கள்
இப்போது பார்க்கிறேன்
சாரிசாரியாக வந்து
தடுக்கிக்கொள்கிறார்கள்
பெருமிதமாக இருக்கிறது
ஒரு சிறிய மலை மீதிருந்து
கூவ விரும்புகிறேன்,
"நான்தான் பயிற்சி கொடுத்தேன்!"
தெருநாய்
தெருநாய்கள் எங்கும் செல்கின்றன
செலவின்றி இரை தேடித் தின்கின்றன
காணாதது போல் செல்பவனிடம்
வாலாட்டி உணவைப் பின்தொடர்கின்றன
கல்லடி படுகின்றன
அசுத்தம் என விரட்டுகிறார்கள்
வெந்நீரைக் கொட்டித்
துரத்துகிறான் டீ மாஸ்டர்
வலியில் துடித்தாலும்
அவமானத்தை அவை உணர்வதில்லை
கும்பல் நடவடிக்கைகளுக்கு
நெருக்கமில்லாத நண்பர்கள்
அவற்றுக்கும் உண்டு
கலவித் துணையுடன் அவை விளையாடுகின்றன
புகைக்கும் தேநீர் அருந்தும் சும்மா நிற்கும்
முட்டாள்கள் வேடிக்கை பார்த்துச் சிரிக்க
நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில்
புணர்ந்து இனப்பெருக்கம் செய்து
ஊர் மேயப் போகின்றன
இரவானால் தூங்க இடம் எங்காவது இருக்கும்
வெயில் மழை வெப்பம் குளிருக்கும் நிச்சயம்
தெருநாய்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது
ஒழுங்கற்ற ஒரு வாடிக்கையைப்
பின்பற்றுகின்றன அவை.
எனதன்புத் தோழா,
காரியமாய் ஓடுவதைக் கொஞ்சம் நிறுத்தி
என் கேள்விக்கு பதில் சொல்லு
எந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் நீ
தெருநாய் ஆனாய்?
என் ஆயுளை உனக்குத் தருகிறேன்
உன் ஆயுளை எனக்குத் தா
நாம் உடல் மாறாட்டம் செய்துகொள்வோம்
மனித வாழ்க்கையின் சகல மரியாதைகளும்
கிடைக்கட்டும் உனக்கு
அள்ளிக்கொள், வாரிக்கொள்!
உனக்கு மட்டுமே இச்சிலுவை!
நான் மனம் மாறுவதற்குள்
இன்றே முந்திக்கொள்!
நானும் சாத்தானும்
சாத்தான் எதிரில் அமர்ந்திருக்கிறான்
எங்களிடையே ஒரு சதுரங்கப் பலகை
எனக்குச் சதுரங்கம் தெரியாது
அதுவும் 1008×1008 பலகையில்
பொருள் பொதியப் புன்னகைத்து
ஒரு பகடையால்
என் யானையொன்றைத்
தட்டி விடுகிறான் சாத்தான்
மாஜி தேவதைகளுக்கும்
தாடி-மீசை முளைக்காது போலும்
வழுவழு கொம்புகளை
இரு கைகளால் நீவிக்கொள்கிறான்
பார்க்க விநோதமாக இருக்கிறது
அவனுக்கே உறைக்காதா?
'உன் முறை' என்கிறான் சாத்தான்
ஆயிரத்தெட்டு சதுரங்களில்
பத்தைக்கூட நான் தாண்டவில்லை
ஆனால் இந்த ஆட்டத்திலிருந்து
விலக முடியாது
கான்கிரீட் தரையோடு
இடுப்பு வரை இறுகியிருக்கிறேன்
ஆட்டம் முடிந்த பின்பே
எழுச்சி கொள்ள முடியும்
மறுகோடியில் இப்போது
அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் கோலத்தில்
ஒய்யாரமாய்ப் படுத்திருக்கும்
சாத்தானிடம் சொல்கிறேன்,
'இது ஆகாத வேலை
என் ஆட்டம் இல்லை இது
வா, பந்து விளையாடுவோம்.'
கிக்கிக்கி என்று சிரிக்கிறான் சாத்தான்
'இடுக்கண் வருங்கால் நகுதல்
ஐ லைக் தட்!' என்கிறான்
இவன் காஃப்காவின் வாயிற்காவலன்
கொஞ்சம் உதவேன் என்றால்
அசைந்துகொடுக்க மாட்டான்
'சொல்லித் தெரிவதில்லை
சதுரங்கக் கலை' என்பான்
நான் மீண்டும் வாயைத் திறக்கிறேன்
பேசுவது அவன்
'இத்தனை வருடங்களாக ஆடுகிறோம்
என்ன கற்றுக்கொண்டாய்?
உன் குதிரைகளைக் கொன்றுவிட்டாய்
உன் யானைகளைத் தின்றுவிட்டாய்
பகடைகளில் பலது அம்பேல்
கெட்ட கேட்டுக்குக்
கான்கிரீட் கமிட்மென்ட் வேறு.'
சிரித்துக்கொண்டே இவ்வளவும் சொல்கிறான்
சொன்ன பின்பு தனியாக வேறு
கொஞ்சம் சிரிக்கிறான் என்னை வெறுப்பேற்ற
சிரிப்பு அவன் முகம் விட்டு அகல்வதேயில்லை
அவன் பணியின் சாபம் போல
ஆனால் என்னிடம் ஒரு திட்டம் உண்டு
இம்முறை நான் சொல்கிறேன்,
'பார், இந்த ஆட்டத்தை விடுவோம்
யுகயுகமாய் நீயும்தான் இதில்
சிக்கியிருக்கிறாய் – '
'பட் ஐ என்ஜாய் இட்!'
'நல்ல இடமாய் எங்காவது போவோம்
நீ மட்டும் பேசு, நான் கேட்கிறேன்
நீ பேசி முடிக்கும் வரை கேட்கிறேன்
ஏன், நீ முடிக்கவே வேண்டாம்
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
உனக்கும் சொல்ல விஷயம்
நிறைய இருக்கும், இல்லையா?'
கழுத்தின் மேல் மாலையாகப்
போட்டுக்கொண்ட வாலை
மேல்துண்டு போல் இருபக்கமும்
மாற்றி மாற்றி இழுத்து விளையாடுகிறான்
என்னை வேடிக்கை பார்க்கிறான்
'அப்போது சதுரங்கம் வேண்டாம் என்கிறாய்.'
'வேண்டாம்
நீ ரொம்ப அழகான இடம் என்று
நினைக்கும் இடத்திற்குப் போவோம்
அங்கே உட்கார்ந்து ஆற அமரப் பேசுவோம்
இல்லை, நீ பேசு, நான் கேட்கிறேன்.'
'தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று
கைகூப்பித் தலைவணங்குகிறான்
ஜன்னல் இல்லாத 4×4 அறையொன்றில்
நாங்கள் இருந்தோம்
நாற்காலிகள் இல்லை
மேலே ஒரு பழைய மஞ்சள் ஒளி பல்பு
அடுத்த ஆட்டத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தேன்
'ஐம் வார்ணிங் யூ
நான் நிறுத்த மாட்டேன்' என்கிறான்
என் தலையசைப்புக்குப் பின்பு
பேச ஆரம்பிக்கிறான்
'உனக்கு நினைவிருக்கும்,
உன் பதினாலாவது வயதில் – '
'இங்கே பக்கத்தில் ஏதாவது
கடை இருக்குமா?' என்கிறேன் குறுக்கிட்டு
வாய் தைத்துக்கொள்கிறது மாயாஜாலமாய்.
இன்றைக்காக
இன்றைக்காக வாழ்வேன்
நாளையும்
இதே கதைதான்.
ஹாக்கி
என் மனதில் ஒரு ஹாக்கி மட்டை இருந்தது
உறுதியான, தரமான ஹாக்கி மட்டை
அது வெளியே வரத் துடித்தது
எல்லாவற்றையும் அடித்து நொறுக்க வேண்டும்
கண்மண் தெரியாமல்
தூசு, புழுதி, கான்க்ரீட், ரத்தம் தெறிக்க
அவ்வளவையும் தரைமட்டமாக்க வேண்டும்
பின்பு அந்த ம்யோல்னிர் மட்டையையும்
தரையில் அடித்துச் சிலாம்புகளாக்க வேண்டும்
இப்போதும் இருக்கிறது அந்த மட்டை
ஆனால் விளையாட்டுக் களிமண்ணில் செய்த
வாக்கிங் ஸ்டிக் மாதிரி.
நாறாதே
நாறாதே
ஓ நிரம்பிவழியும் ஆஷ்ட்ரே!
முடிந்த கதைகளின்
இடுகாடு மட்டுமே நீ.
இரும்புக் குண்டு
எங்கும் போக விடாமல்
காலைக் கட்டிப்போடும்
இரும்புக் குண்டுக்கு
இந்தா, அடியில் ஒரு சக்கரம்
மூடிக்கொண்டு கூட வா.
பெருமை
நீங்கள் விழலுக்கு இறைத்த நீரில்
ஒரு துளி என்னுடையது.
குடும்ப மகிழ்ச்சி
காலையின் இருட்டு முழுதாய்க் கலையுமுன்
கல்யாண வீடு போல் ஆகிவிட்டதென் அறை
நகைகள் பட்டுப்புடவைகள்
சபாரி சூட் குர்த்தா பைஜாமா
ஆப்பிள் ஆரஞ்சு பிளாஸ்டிக் பைகள்
பெரியப்பா சித்தப்பா அத்தை மாமா
தூரத்து உறவுகள் அறியாத முகங்கள்
அவர்களுடைய வளர்ந்த, வளராத வாரிசுகள்
எல்லோரும் கம்பளம் விரித்தமர்ந்து
ஒரே குதூகலம் கெக்கலிப்பு
சிரிப்புப் பிளிறல்கள் பொய்க் கோபங்கள்
சமாளிப்புகள் பெருமிதங்கள்
திடீர் உரிமை முதுகுத் தட்டல்
இப்ப அவன் யூஎஸ்-ல இருக்கான்கள்
காபி தட்டை முறுக்கு குட் டே பிஸ்கட்
ஐயையோ, எனக்கு வேணாம்
இப்பதான் டிபன் சாப்ட்டேன்
அட ஒண்ணே ஒண்ணு எடுத்துக்குங்க
இல்ல சார் வேணாம் எடமில்ல வயித்துல
ஷர்ட் நல்லாருக்கு எங்க வாங்குனீங்க
நான்கு தெரு தள்ளி ஏதோ விசேஷம்
அரிய உள்ளங்கள் கூடி இன்புற்றிருக்க
மலர்ப்பாதை வகுத்துத் தந்திருக்கிறது
நூற்றுக்கணக்கில் தெரிகின்றன பற்கள்
என் கதவுச் சட்டத்தில் சாய்ந்து நின்று
அதைப் பார்க்கக் கேட்க மனம் மகிழ்கிறது
நமக்கென்று 4 பேர் இருக்கிறார்கள் என்கிறது
உள்ளே வா, இடமுள்ளது என்கிறார்கள்
பரவாயில்லை, இங்கேயே நிற்கிறேன்
நடுவே கால் வைக்கக்கூட இடம் இல்லை
இப்போது நான் குளிக்கப் போக வேண்டும்
ஜட்டி உள்ளே கொடியில் இருக்கிறது.
சித்தி
சில நாட்களாக இந்தப் பெண்களைப் பார்க்கிறேன்
நடுத்தர வயது, நெட்டை, மாநிறம், ஒல்லி உடல்
எல்லோரும் என் சித்தியின் சாயலில்
அவர்தான் எனத் தயங்கி நலம் விசாரிக்கத் தயாராகையில்
அவர் இறந்து ஓர் ஆண்டானது நினைவுக்கு வருகிறது
என் குடும்பமும் அவர் குடும்பமும் நெருக்கமல்ல
எங்களுக்குள் வாழ்க்கைமுறை, கண்ணோட்ட பேதங்கள் உண்டு
அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை
கசப்புணர்வுக்கும் வயிற்றெரிச்சலுக்கும் பஞ்சமில்லை
குற்றப்பட்டியல் வாசிக்க எப்போதும் தயாராக இருப்பார்
எங்களுக்கோ வயிற்றெரிச்சல் தண்டனைக்குரிய குற்றம்
அவரை நான் நினைவுகூரக் காரணம் ஏதும் இல்லை
பின்பு ஏன் இந்தப் பெண்களைப் பார்க்கும்போது
திடீரென எங்கிருந்தோ உருப்பெறுகிறார்?
லேடீஸ், உங்கள் ஆள் போய் ஒரு யுகம் ஆயிற்று
இன்னும் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
கனவு
நானும் ஓர் கனவோ?
கலைவது எப்பொழுதோ?
ஏதோ ஒன்று
எல்லாவற்றிலும் ஏதோ ஒன்று இருக்கிறது
நகரும் மரவட்டையைக் கேள்
அது நேற்றிரவு எங்கே இருந்ததென்று
யாரோ ஒரு சண்முகத்திடம்
உன் சம்போகத்தைச் சொல்லு
பெருநிறுவனங்களில் முதலீடு செய்
புறநகரில் வீடு வாங்கு
சிற்பத்தைத் தலைகீழாகச் செதுக்கு
30 வார்த்தைகளுக்கு மிகாமல்
எண்ணவோட்டத்தை வர்ணி
சவரம் தேவையா என
முகவாயைத் தடவிக்கொள்
அரிசியில் படம் வரை
மனைவிக்குக் கைப்பை வாங்கு
கணவனுக்கு டி-ஷர்ட் வாங்கு
(உனக்கு அளவு தெரியும்)
சாலையைப் பார்த்துக் கட
பிச்சைக்காரனுக்குக் கைவிரி
பற்பசை தீருமுன் புதியதை வாங்கு
கடந்து சென்ற ஸ்கூட்டர்காரன்
சாலையைக் கடக்க உதவு
சரியான சில்லறை கொடு
நாளுக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடி
கூட்டங்களிடையே புழங்கு
ஒவ்வொன்றிலும் நீ இருக்கிறாய்
எல்லாவற்றிலும் ஏதோ ஒன்று இருக்கிறது
காபிக் கோப்பையுடன் 12ஆவது மாடியில்
ஏழு மணி இருளில் விளக்குமாலை அணிந்து
அசையாமல் விறைத்து நிற்கும்
பத்து ராட்சதர்களுக்குப் பின்னால்
ஒற்றைக் கண்ணன் குந்தியிருக்கிறான்
சிறிது நேரத்தில் அவனைப் பார்ப்பேன்
தினமும் இரவெல்லாம் எத்தனை பீடிகளைப்
புகைத்துக்கொண்டு அங்கேயே குந்தியிருப்பான்
ஒற்றைக் கண்ணன்?
நான் காபிக் கோப்பையுடன்
பால்கனியில் வந்து நிற்க
முழங்கால்களில் கையூன்றி மெல்ல
எழுந்து நிற்கத் தொடங்குவான்
ராட்சதர்களின் செவ்வகத் தலைக்கு மேல்
முகத்தை முழுசாய்க் காட்டுவதற்குள்
மேகம் வந்து அவன் கண்ணை மறிக்கும்
அந்த ஒற்றைக் கண்தான் அவன் முகமே
இனி வர மாட்டான் என நினைக்கையில்
மேகப் பொதி தன் வழி போக
மீண்டும் தரிசனம் அளிப்பான் ஒற்றைக் கண்ணன்
பதினோராம் ராட்சதன் போல்.
செவன் லெவன்
சொகுசான தூக்கத்தைக்
காலை மூன்றரைக்குக் கலைக்கிறது
கொலைப்பசி
முகம் துடைத்துத் தலை வாரி
பர்ஸ், லைட்டர், செல்பேசி எடுத்துக்கொண்டு
செவன் லெவனை நோக்கிப் பறக்கிறேன்
நெருக்கமான இருள், கொஞ்சும் காற்று
அநாதைத் தெருக்கள், எலக்ட்ரானிக் தட்டிகள்
பேருந்து நிறுத்தங்கள், பிக்கப் லாரிகள்
டுகாட்டிகள், ஜாகுவார்களைக் கடக்கிறேன்
சருருகள், பூக்கள் உதிர்ந்த
நெளியும் காலி சிமென்ட் பாதையிலும்
சைக்கிள்காரனுக்கு இடம் விட்டு
வலப்பக்க ஓரத்தில் நடக்கிறேன்
பகலிலேயே அதிக பரபரப்பற்ற
அகன்ற சாலைகள் நான்கு
சேரும் சிக்னலைத் தாண்டி
நேராகப் போனால் இடது
மூலையில் செவன் லெவன்
வெறிச்சோடிய நாற்சந்தியில்
ஆரஞ்சு விளக்கைக் காட்டுகிறது சிக்னல்
பசியின் பற்கள் வயிற்றுக்குள் குதறப்
பச்சை மனிதனுக்காகக் கால் கடுக்கவைத்து
எந்த மந்திரி செல்லக் காத்திருக்கிறது இந்த சிக்னல்?
காமிரா செல்பேசியை எடுப்பதற்குள்
முதுகைக் காட்டிவிடும்
ஆகாய ரயிலின் இருப்புப் பாதை
குட்டிப் பூங்கா, சிமென்ட் பெஞ்சுகள்
ஆளற்ற சாலையின் கண்மூடி சிக்னல் பற்றி
நகைச்சுவை செய்யக் கூட யாரும் இல்லை
பச்சை மனிதன் பளிச்சென வருகிறான்
இருபக்கமும் பார்த்து மறுமுனைக்கு விரைகிறேன்
சாண்ட்விச், மார்ல்பரோ கோல்டு, ரொட்டி
சாண்ட்விச், மார்ல்பரோ கோல்டு, ரொட்டி
வியர்வை
அவரவர் கை வியர்வையை
ஆடையில் துடைத்துக்கொண்டு
மீண்டும் கைகோர்த்து நடந்தோம்.
பேசிப் பேசி
பேசிப் பேசி
ஒரு முட்டுச்சந்துக்கு வந்திருந்தோம்
அலைகளின் சத்தம்
வசவு போல் ஒலித்தது
ஆனால் நமக்கு நம் மௌனம் இருந்தது.
படுமரம்
இலைகள் உதிர்ந்துவிட்டன
வேருக்கு மேல் ஒரே ஒரு துளிர்
திருஷ்டி.
வட்டச் செயலாளன்
விடிதற்காலையில் உன் மஞ்சள் வழுக்கை
மெல்ல உயர்வது காண ஓடோடி வருவேன்
உன் பட்டைக் கிரணங்களைக்
கண்ணன் கைத் திரவுபதிப் புடவையாய்
என் மீது பாய்ச்சுவாய்
வைட்டமின் டி ஏந்தி மலர்களோடு மலர்வேன் நானும்
காணாமை என்னும் அவலச் சுமையிலிருந்தென்னை
அன்றாடம் விடுவிக்கும் வட்டச் செயலாளனே!
உன் பேரொளிக்குப் பெரும்பிரதியாய் என் தருவேன் நானுனக்கு?
மேலிடக் கருவெளியின் ஒரு நீலப் புள்ளிக்குள்
மீச்சிறு புள்ளியாய்க் கிடக்கும் எனக்கும்
அஃதேக் கருவெளியில் சொலிக்கின்ற
சுடுமின்மினி உனக்கும் உள்ள
ஆறாத பந்தத்தை இவ்வுலகு உணராதது
இட்டிசபிட்டியல்லவோ?
எனது அகத் தீ உன்னுடையவோர்த் துளியே
என்று நினைத்திடத் துணிந்திடுவேன்.
நிரந்தரனே, அருஞ்சாவு என்னை அணைத்த பின்பு
என் சிதைக்கு உன் நெருப்பைத் தருவாயா?
பெரிய சித்திரம்
நான் செய்தித்தாள் படிப்பதில்லை
அதில் புதிதாக எதுவும் இருப்பதில்லை
எனக்கு big picture தெரியும்
அதன் ஒவ்வொரு பிக்சலும்
தெரியத் தேவையில்லை
எனக்கு நலம் விசாரிக்க வராது
'நன்றாக இருக்கிறீர்களா?' எனக் கேட்டு
நழுவுவதோடு சரி
'வீட்டில் எல்லோரும் நலமா?'
என்று நீட்டிக்கும் இங்கிதம் தெரியாது
அவசியமும் இல்லைதானே?
நலமாகத்தான் இருக்கப்போகிறார்கள்
வேறென்ன தெரியும் இவர்களுக்கு?
அழியாச் சுடர்கள்
எனக்கு நம்பிக்கை இருக்கிறது –
உலகம் அழிந்து தரைமட்டமான பின்பும்
நம் கடமைகள் ஆவியாய் அலைந்துகொண்டிருக்கும்
இடிபாடுகளுக்குள் புகுந்து
மனிதர்களை, விலங்குகளை, பறவைகளை
பூச்சிகளை, புழுக்களைத் தேடிப் பின்னர்
கடல்களில், நதிகளில், ஏரிகளில், குளங்களில் மூழ்கி
மீன்களை, தவளைகளை, முழுமையாய் அழுகாத
இன்ன பிற சடலங்களை ஆராய்ந்து
சிபிஆர் கொடுத்துப் பிழைப்பிக்க முயலும்
எதைப் பிடுங்க இந்தப் பிணப் புரட்டல் என்று
கடைநிலைக் கடமைகள் சலிப்பாகிக் கேட்கையில்
தலையாய கடமைகள் கடுப்புற்றுச் சொல்லும்:
கடமைகளுக்கும் உண்டு கடமைகள், மூடு.
சிரிக்கும் பல்லி
சூனியக்காரியின் கொக்கரிப்பு போல்
குளியலறையிலிருந்து பல்லியின் சத்தம்
எதை நினைத்துச் சிரிக்கிறாள் பல்லி?
(இதே போன்ற ஒரு சிரிப்பில்
நான் சோரம்போன சோகம் உண்டு)
குறும்புக்கார வேதாளம் ஒன்று
எம்.என். ராஜத்துக்குக் கிச்சுக்கிச்சு மூட்டினாற்போல்
ஒலிக்கும் பல்லியின் சிரிப்பு
சொல்லுவதென்ன?
மாடிவீட்டு அழைப்பு மணி
இதே மாதிரிதான் இருக்கும்
லேசாக ஒரு அழுத்து – அதற்கே
கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கீ எனக் குய்யோமுறையிடும்
அந்த வீட்டில் ஒரு முசுட்டுக் கிழவி வசிக்கிறாள்
கிழவிக்கு யாரும் இல்லை கூட
பாதி நேரம் செல்பேசியில் யாருடனோ
பேசிச் சிரித்துக்கொண்டிருப்பாள்
இவளுக்கு ஆகாத யாருக்கோ
கெடுதி வந்துவிட்டது போல்
சர்வநேரமும் சிரித்தாடுவாள் பொல்லாக் கிழவி
விவரங்கெட்ட எங்கள் வீட்டுப் பல்லியும்
சேர்ந்து சிரிக்கும் சூனியக்கிழவியின்
பிடிபடாத உளவாளி போல்.
எங்கு போனாலும்
எங்கு போனாலும்
எனக்கு ஓர் இடம் கிடைக்கிறது
எங்கு போனாலும்
என் இடம் பறிபோகிறது.
கலைஞர்கள் மனிதர்களா?
கலைஞர்கள் மனிதர்களா?
எப்படி மாறுபடுகிறார்கள்
நம்மிடமிருந்து அவர்கள்?
எங்கிருந்து வருகிறது இந்த ஆற்றல்?
ஒரு வண்ணத் தேன் குளத்தில்
நம் தலையைத் திரும்பத் திரும்ப
முக்கியெடுத்து மூச்சுத் திணறவைத்துக்
குறுக்கும் நெடுக்குமான மாஞ்சாக் கோடுகளில்
சிக்கிக் கூறுபட்டு ரத்தம் சிந்தவைக்கும்
மூர்க்கம் எங்கிருந்து வருகிறது?
நம்மைப் பரவசத்தின் வலியில்
திளைக்கச் செய்து பந்தாடும் உரிமையை
இவர்களுக்கு யார் கொடுத்தது?
எதிரிகளைப் போல் அல்லவா
நடந்துகொள்கிறார்கள்!
குளத்தோரம்
மீன்களுக்குப் பொரி தூவிவிட்டுக்
குளத்துப் படிக்கட்டில் அமர்ந்து
மண்டபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்
அசையாத நீரில் விழுந்த
ஒரு விந்துத் துளி போல்
படர்ந்த மலரைக் காட்டினேன்.
இந்தப் படுகுழி சூப்பராக உள்ளது
இந்தப் படுகுழி சூப்பராக உள்ளது
போன முறை விழுந்த குழி
ஒப்பீட்டளவில் கேவலமாக இருந்தது
இந்தக் குழியில் வசதிகள் உண்டு
முந்தைய குழியில் விழும்போது
சுற்றுச்சுவர்கள் – சுவர்கள் அல்ல,
இயற்கையாக உருவான மண் தடுப்புகள் –
காய்ந்து கரடுமுரடாய்க்
கூரிய கற்களும் உடைந்த கிளைகளும் துருத்திப்
போகும் வழியெல்லாம் உடலைக் கீறும்,
குத்தும், சிராய்க்கும், கிழிக்கும், மோதும்,
படாத இடத்தில் பதம் பார்க்கும்
ஒரு முவ்வயதுக் குழந்தை செய்வதை
யெல்லாம் செய்யும், கொசுறும் கொடுக்கும்
ஆனால் இந்தப் படுகுழி இருக்கிறதே,
அது கருணையின் குழாய் வடிவம்
நீர்ச் சறுக்குமரத்தில்
வழுக்கிச் செல்வது போல் லாவகம்
பாசியோ, சேறோ, அழுகிய காய்கறிக்
குப்பையோ, மனித மலமேதானோ,
சுற்றுச்சுவர்கள் எல்லாம் சிநேகக் கொழகொழப்பு
இந்தக் குழி ஆழம்தான், ஆனால்
எல்லாக் குழியும் ஆழம்தான்
இருந்தாலும் தரம் இருக்கிறது பாருங்கள்,
அதுதான் இங்கே வித்தியாசம்
கடந்த குழியில் விழுந்தபோது
வழியெல்லாம் அவஸ்தைப்பட்டேன்
இந்தக் குழியில் பிடிமானம் இன்றிக்
கீழே போய்க்கொண்டே இருந்தபோது
எங்கே இடித்தாலும் எதில் மோதினாலும்
தாயின் மடி போல் கவனிப்பு
அதிர்ஷ்டத்தில்கூட வாய்க்காது
இப்படியொரு மகாகுழி
சுற்றுச்சுவர்களின் சகதியில் தோய்ந்தேன்
கண், காது, மூக்கு, வாய் உள்படக்
கோவில் தூண் போல் பிசுபிசுத்துவிட்டேன்
அடியைத் தொடும்போது காய்ந்திருக்கும்
என்றே நினைக்கிறேன்
அடி நிச்சயம் உண்டு
இல்லாவிட்டால் இது குழியாகுமா?
அனுபவ ரீதியாக,
'லேண்ட்' ஆகையில் அடி பலமாக இருக்கும்
ஆனால் எல்லாக் குழியும் அப்படித்தான்
அடிவாரத்தில் நமக்கு ஆட்கள் வெயிட்டிங்
என்றாலும் மெத்தை போட்டு வைக்க மாட்டார்கள்
(என்ன, உயிரா போய்விடப்போகிறது?)
இதுவும் ஒரு பயணந்தான் பார்த்துக்கொள்ளுங்கள்
என்ன, முன்பே தெரிந்திருந்தால்
கழுத்தோடு ஒரு எமர்ஜென்சி லைட்டும்
கையோடு ஒரு கதை புக்கும்
எடுத்துவந்திருப்பேன்.
கூப்பிடுதல்
என்ன என்கிறாள் மனைவி
என்ன 'என்ன?' என்கிறேன் நான்
நீங்கள்தானே கூப்பிட்டீர்கள் என்கிறாள்
நான் எங்கே கூப்பிட்டேன்,
அவன்தான் உன்னைக் கூப்பிட்டான் என்கிறேன்
எதற்கடா கூப்பிட்டாய் என்கிறாள் மனைவி
நான் கூப்பிடவில்லையே என்கிறான் மகன்
அதெப்படி யாரும் யாரையும்
கூப்பிடாமல் இருக்க முடிகிறது?
கரித்துண்டு
நிரந்தர சிகரெட் நெடிக்காக
எட்ட நின்று சுருங்கப் பேசுவேன்
தீச்சட்டியில் போடச் சொன்ன கரித்துண்டு
கையில் வெதுவெதுப்பாக இருக்கிறது
சட்டியில் போட்டுவிட்டுத் தட்டில்
இன்னொரு துண்டைத் தேடுகையில்
அது எலும்புத் துண்டென உறைக்கிறது
ஆமாம்,
கரித்துண்டு போய் இரும்பாய்க் கனக்குமா?
மார்பின் மேல்
ஹாண்டில்பார் போல் பிடித்துக்கொண்டு
மார்பின் மேல் கவிழ் என்றார்கள்
சொன்னபடி செய்து மார்பின் மேல்
சட்டியைக் கவிழ்க்கிறேன்
கொட்டும் எலும்புக் கெண்டைகளின்
அனல்புகை என் கையைச் சுடக் கத்துகிறேன்
இப்படித்தானே பிடிக்கச் சொன்னேன்
உன்னை என்று திட்டுகிறார்கள்
எரியும் இடதுகைச் சுண்டுவிரலைத்
தடவிப் பார்க்கிறேன்
கொப்புளமாகிவிட்டதா என்று
"வரட்டுமா?" எனச் சிரிப்புடன் கேட்டு
மறைகிறார் அப்பா.
குஸ்மா இயோனிட்ச் மறைவு
சொல்ல விஷயம் இருக்கிறது
எப்படி, யாரிடம் சொல்வது?
கோர்வையாக வேறு சொல்ல வேண்டும்
ஒப்பாரியைக் குறைத்துச் சொல்லவில்லை
ஆனால் நான் ஒப்பாரி வைக்கும் ரகமல்ல
இயோனா போட்டபோவிடம்
ஒரு குதிரையாவது இருந்தது
எனக்கு இப்போது அந்தக் குதிரை வேண்டும்.
கண்ணாடியும் வாட்ச்சும்
நோயாளி இறந்தால்
உடனே பில்லைக் கட்ட வேண்டும்
இரு மணிநேரத்திற்குள்
பிணத்தை அப்புறப்படுத்த வேண்டும்
ஆம்புலன்ஸுக்கு உடனே முன்பதிவுசெய்து
வார்டைக் காலிசெய்ய வேண்டும்
அம்மாவின் டெபிட் கார்டுடன்
பில்லிங் பிரிவுக்குப் போனேன்
வார்டுக்குப் போன தம்பியிடம் சொன்னேன்
"அப்பா கண்ணாடியை மறந்துவிடாதே!"
இரு பைகளோடு வந்தவனிடம் கேட்டேன்
"கண்ணாடி கிடைத்ததாடா?"
"ஆம், எடுத்துக்கொண்டேன்"
இரண்டு நாட்கள் அடங்கிய பின்பு
கண்ணாடியை எடுத்துத் தந்தான்
அழகான ஒரு வாட்ச்சையும்
என் மேஜை மேல் வைத்தான்
"இது அப்பா வாட்ச். இதையும் வைத்துக்கொள்"
அவர் முன்பே ஒரு வாட்ச் தந்திருக்கிறார்
அதைக் கட்டிக்கொண்டுதான் சிங்கப்பூர் போனேன்
அவர் கண்ணாடியை நான் அணிய முடியாது
அவரது பார்வை அவ்வளவு மோசமில்லை
நானோ கிட்டத்தட்டக் குருடு
வருபவர்கள் யாரும் அதை
உடைத்துவிடக் கூடாதென்று
கண்ணாடியை பீரோவில் வைத்தேன்
வாட்ச்சைத்தான் கட்டுவதா பூட்டிவைப்பதா?
எங்காவது, யாராவது
துர்க்மெனிஸ்தானில் ஒரு பணக்காரர்
தம் சொத்துகள் அனைத்தையும்
தமது ஏழைக் கிராமத்தினருக்குக்
கொடுத்துவிட்டுக் குடிசை பெயர்ந்தார்
சென்னையில் ஓர் ஆட்டோக்காரர்
பயணி மறந்து சென்ற ரூ. 5 லட்சத்தைப்
போலீசில் ஒப்படைத்துப் பயணிமகள்
திருமணம் புரிய ஏது செய்துள்ளார்
விபத்தில் ஒருவன் செத்துத் தெறித்தான்
செத்தவனின் குடும்பம்
அவன் உறுப்புகளைத் தானமளித்துப்
பத்து பேரைக் காப்பாற்றியது
துருக்கியில் சிறுவர் குழு ஒன்று
ஏதோ சுவரை இடித்து ஊரார் 150 பேருக்குள்
வெள்ளம் புகாமல் தடுத்திருக்கிறது
150 பெரிய எண்ணிக்கைதான்
ஜெர்மனியில் ஒரு பழைய கட்டிடம்
ஜப்பானில் ஓர் ஆறு
மெக்சிகோவில் ஒரு பழங்குடி
எல்லோருக்கும் சாக்லேட்
உலகெலாம் எங்காவது யாராவது
தங்களாலான அற்புதங்களை நிகழ்த்திப்
பருக்களை நீக்கியபடி இருக்கிறார்கள்
புற்றுநோய்கள் எந்தத் தொந்தரவும் இன்றி
ஜாலியாக வளர்ந்து பரவுகின்றன
எல்லாவற்றையும் ஒருவன்
பார்த்துக்கொண்டிருக்கிறான்
நான்தான் அது
ஆனால் மன்னிக்கவும்,
ஒன்றும் செய்வதற்கில்லை.
ஓய்!
அயிறே,
மனப்பாடம் செய்த மந்திரத்தை சீக்கிரம் கக்கு
அட்சரம் பிசகத் திருப்பிச் சொல்கிறேன்
உன் கூட்டத்தின் ஓலம் தவிர்க்க
நேற்று மாட்டிய வெண்பாம்பைப் பார்த்து
நானும் உன் மந்தை என ஏமாறாதே
நீ மூக்கை நோண்டிவிட்டு
வேட்டியில் துடைக்கும் கையால்
பிடித்துவைத்த சோற்றுருண்டையில்
என் அப்பா குந்தியிருக்கிறார்
எனப் பிதற்றாதே
நாலு பருக்கை போடும் வரை
பசியில் அலைவார் என மிரட்டாதே
ஆளை நெருப்புக்குள் தள்ளி விட்டுக்
காலையிலிருந்து என்னை
ஈரத்துணியில் உட்காரவைத்திருக்கிறாய்.
ஓஹோ!
பாட்டன், முப்பாட்டன் எல்லாம்
காக்கை உருவத்தில் வருவார்களாமா?
"கா கா" என்று நாம் கத்தினால்
அன்பாக ஓடி வந்து
ஒயிட் ரைஸைத் தின்பார்களாமா?
சாலைப் பெருச்சாளிகளை
அக்கு அக்காகக் கொத்தித் தின்ற பின்
அத்தனூண்டு வயிற்றில் இடம் இருக்குமாமா?
பித்து உருக்கள்
இங்கே தெருவில் ஓர் எலியைக்
கூட்டு வன்கலவி போல்
கொந்தித் தின்னும் காக்கைகள்
என் மூதாதையர்களாக இருக்க முடியாது
என் பித்ருக்கள் வெஜிட்ஆரியர்கள்.
சோனி வாக்மேன்
இன்றைக்கு ஒரு சோனி வாக்மேன் வந்தது
பழைய மாடல்
பார்க்க நல்ல கண்டிஷனில் இருந்தது
ஆனால் வேலை செய்யவில்லை
கஸ்டமருக்கு அன்பளிப்பாகக் கிடைத்ததாம்
கொடுத்தவர் இப்போது இல்லையாம்
அவர் நினைவாகப் பயன்படுத்த விரும்புகிறாராம்
நிறைய கேசட்ஸ் வைத்திருக்கிறாராம்
அதற்கு உயிர் கொடுக்க முடியுமா என்றார்
நான் சொன்னேன்
சார், இதன் ஐ.சி.யே இப்போது கிடையாது சார்
பார்ட்ஸ் எதுவும் கிடைக்காது
ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்குமா என்றார்
கிடைத்தால் எங்களுக்குத் தெரியாதா சார்?
ஐபாட் மாதிரி வாங்கிக்கொள்ளுங்கள்
தெரிந்த கடை இருக்கிறது
நான் சொன்னால் டிஸ்கவுன்ட்டில் தருவான்
இப்போதெல்லாம் மொபைலில்தான் பாட்டு கேட்கிறார்கள்
குவாலிட்டி சூப்பராக இருக்கும்
இந்த பீஸை அவர் ஞாபகமாக வைத்துக்கொள்ளுங்கள்
பாட்டு கேட்க ஃபோனை யூஸ் பண்ணுங்கள் என்றேன்
கஸ்டமர் காதிலேயே வாங்கவில்லை
அப்போது இதை ஒன்றும் செய்ய முடியாதா என்றார்
முடியாது சார், உங்களுக்காக வேண்டுமானால்
கொஞ்சம் நோண்டிப் பார்க்கிறேன்
கியாரண்டியாக சொல்ல முடியாது என்றேன்
பரவாயில்லை, தேங்க்ஸ் என்று
பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போய்விட்டார்
முதலில் சோனி ப்ளேயரையே எவனும் வாங்குவதில்லை!
கடைசி வார்த்தைகள்
கடைசியாக நீங்கள் என்னிடம்
பேசிய வார்த்தைகள் என்ன?
சுத்தமாக நினைவில்லை.
அவை நினைவிருப்பது
முக்கியம் என்று நினைத்தேன்
கண் அசைவு நிற்பதற்கு
நான்கு நாட்கள் முன்பு
ஆக்சிஜன் முகமூடி அணிந்து
நீங்கள் செய்த சைகைகள்
கணக்கில் வருமா?
இதில் நான் எங்கே வருகிறேன்?
கம்மிய குரலில் முகமூடிவழி
பேசியது புரியாமல்
தலையாட்டினேன்
வீங்கிய கையை அழுத்தினேன்
காலையில் இருந்ததைவிட
இப்போது மிகவும் தேறிவிட்டீர்களாம்
என்று மருத்துவர்களின் புளுகுகளைப்
பல்லிளித்து நானும் நம்பி
உங்களுக்குச் சொன்னேன்
கடைசி வரை நானேதான்
பேசிக்கொண்டிருந்தேன்.
விடாதீர்கள்
இப்போதே
வீடியோ எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்
நிறைய புகைப்படம் எடுங்கள்
பேசவைத்து, பாடவைத்து, சிரிக்கவைத்து
ஒலிப்பதிவு செய்துவைத்துக்கொள்ளுங்கள்
இப்போதே கூட உட்கார்ந்து பேசுங்கள்
குழந்தை போல் துருவித் துருவிக் கேட்டு
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்
பிறந்தநாளை மறந்துவிடாதீர்கள்
நினைவில் இருப்பதைத் தட்டச்சும்
செய்து வைத்துக்கொள்ளுங்கள்
அவர் மீதிருந்து பார்வையை எடுக்காதீர்கள்
ஒவ்வொரு முகபாவத்தையும் பார்த்து
ஒவ்வோர் உடலசைவையும் பார்த்து
மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்
உங்கள் பெயரைச் சொல்ல நேர்ப்பித்து
ஒலியை மனதில் பதித்துக்கொள்ளுங்கள்
ஏதேனும் காரணம் சொல்லி
வாழ்த்திக் கைகுலுக்குங்கள்
சாலையைக் கடக்கும்போது
கைகோர்த்துக்கொள்ளுங்கள்
சும்மா ரேகை பாருங்கள்
பார்த்தவைக்கு, கேட்டவைக்கு, தொட்டதற்கு
தொட்டபோது உணர்ந்த வெப்பத்திற்கு
மனத்திற்குள் நினைவுத் தேர்வுகளை
அடிக்கடி நடத்திக்கொண்டிருங்கள்
மதிப்பெண் விஷயத்தில் கறாராக இருங்கள்
ரத்த மாதிரி, கூந்தல் மாதிரி
சேகரித்துக்கொள்ளுங்கள்
வேண்டாத பொருட்களை, குப்பைத் துண்டுகளை
இப்போதே கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்
ஆள் உங்களை விட்டுப் போவதற்குள்
அவரை உறிஞ்சியெடுத்துவிடுங்கள்
இங்கேதானே கிடக்கிறார்
எங்கே போய்விடப்போகிறார்
என்று நினைக்காதீர்கள்
நாளைக்கு நீங்கள் இருப்பீர்கள்
அவர் இருக்க மாட்டார்.
மறத்தல்
மறக்க வேண்டியதை
மறந்துவிடுவது போல் ஒரு
கொடுமை உண்டோ?
இப்படித்தானா?
சாகக்கூடாது என்று சொல்லவில்லை
அதைவிட அபத்தம் இல்லை
இத்தனைக்கும் பிறகு
இப்படித்தான் சாக வேண்டுமா என்கிறேன்
வலியில்லா வழிகள் ஆயிரம் இருக்க
அதில் ஒன்றில் இறந்திருக்கலாம்
காணாமல்போவதில் என்ன குறை கண்டீர்கள்?
மரணத்தின் அறிகுறிகள், சௌகரியங்கள் பலவும்
தொலைந்துபோவதிலும் உண்டே
மறைந்தார் என்று சொல்வதில்லையா?
தேடாதீர்கள் எனக் கிறுக்கிவைத்துவிட்டு
ஒருநாள் இடத்தைக் காலிசெய்தால்
தேடவா போகிறோம்.
சீட்டு
ஒரு சீட்டை வைத்து
இன்னொரு சீட்டை மறைக்கலாம்
அந்தச் சீட்டை
இன்னொரு சீட்டால் மறைக்கலாம்
எதனை எதனால் மறைக்கிறோம் என
வேறு யாருக்கும் தெரியாது
சீட்டுக்கட்டில் ஒரு பகுதி
நம் கையில் இருக்கிறது
நம் கையில் இருப்பதைக் கொண்டு
நமக்குத் தெரிந்த
ஆட்டத்தை ஆடுவோம்.
டிஸ்ப்னிக், டாக்கிப்னிக்
டிஸ்ப்னிக், டாக்கிப்னிக், டயூரெட்டிக்ஸ்
டைல்ஸ் பதித்த சுவரைப் பார்த்து
மருத்துவர் படபடக்கிறார்
ஆவாகனம், உபதிஷ்டது, ஸ்வாகா
நெருப்பு டப்பாவைப் பார்த்துப்
புரோகிதர் ஒப்பிக்கிறார்
எனக்கோ மொத்த விவகாரமும்
இன்னும் புரியவில்லை.
கடைசி இரவு
பேரக் குழந்தைகள், பிற குழந்தைகள்
வயசாளிகள், இதய பலகீனர்கள்
எல்லோரும் அன்றிரவு வந்திருந்தார்கள்
உறவினர்களை அருகில் அமர்ந்து தேற்றலாம்
குழந்தைகளை அறையில் வைத்துப் பூட்டிப்
பெரிய குழந்தைகள் காவல் காக்கலாம்
அம்மாவை எங்கே வைத்துப் பூட்டுவது?
இரவே உங்களை வீட்டுக்குக் கொண்டுவந்தால்
அம்மாவுக்குத் தூக்கம் கெடும்
வேறு யாரும்கூடத் தூங்க முடியாது
அடுத்த நாள் வேலை இருந்தது
தகனத்திற்குத் திட்டமிட வேண்டும்
நீங்கள் எங்கோ ஓர் இடத்தில்
ஏதோ ஒரு கட்டிடத்தில்
உபகரணங்களின் மென்ஒலிகள்கூட இன்றிக்
காலிப் பெட்டிகளிடையே ஒன்றினுள்
தன்னந்தனியே இருளில் உறைந்து
உங்கள் கடைசி இரவைக் கழித்தீர்கள்
எப்போதும் உங்களோடுதான் இருந்தோம்
அந்த இரவு பார்த்து உங்களைத்
தனியாக விட்டிருக்கக் கூடாது
ஆனால் நீங்கள் இருந்திருந்தால்
என்ன செய்திருப்பீர்கள்?
மருந்துக்கும்
என்ன வெயில்!
நிற்குமிடத்தில் மருந்துக்கும் நிழல் இல்லை
மருந்துகளை வெயில் படாமல்
வைத்திருக்கச் சொல்கிறார் மருத்துவர்
அவற்றைக் குழந்தைகளின் கைக்கு
எட்டும் இடத்திலும் வைப்பாயோ
வெயிலே?
புன்னகை
சில்லறை இல்ல சார்
உங்களுக்குப் பத்து ருவா நான் தரணும்
என்றார் மாஸ்டர். இருக்கட்டும்
அப்புறம் வாங்கிக்கிறேன் என்றேன்
மாஸ்டர் பிறகு வரவில்லை
நாட்டுக்குப் போயிருப்பதாய்ச் சொன்னார்கள்
அவர் தர வேண்டியது பிறருக்குத் தெரியாது
அவரிடமே வாங்கிக்கொள்வோம் என விட்டுவிட்டேன்
மூன்று மாதங்கள் மெதுவாய் ஓடின
எதிர்வீட்டுப் புனரமைப்பு முடிந்தது
ஒரு பண்டிகை வந்து போனது
மாநில அமைச்சர்கள் மாறினார்கள்
பிறகு வந்தார் மாஸ்டர்
சவரம் செய்யாத பழைய முகத்துடன்
மீதிச் சில்லறையில் பத்து ரூபாய் அதிகம் தந்தார்
அவர் நினைவுத் திறனின் நேர்மையை மெச்சி
பத்து ருவா கூட இருக்கு என்றேன் புன்னகைத்து
சாரி சார் என்று கைநீட்டி வாங்கிக்கொண்டார்
பரிச்சயத்தின் புன்னகைகூட இல்லாமல்.
ஓர் உலகம்
பாலிஷ் மங்கிய நகம் ஒன்று
தெரு வழியே நிதானமாய்ப் பறந்து
சுவரோரச் செடி மேல் அமர்கிறது
நான் மட்டும்தான் அதை கவனிக்கிறேன்
அதுவும் என்னை கவனிக்கவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக