மத்தியப் பிரதேசம் அழைக்கிறது
யாத்திரை
Backமத்தியப் பிரதேசம் அழைக்கிறது
வெங்கட் நாகராஜ்
Contents
மத்தியப் பிரதேசம் அழைக்கிறது
என்னுரை
கருத்துரை
பொருளடக்கம்
1. மத்தியப்பிரதேசம் அழைக்கிறது….
2. வெளிச்சம் பிறக்கட்டும்…
3. தான்சேன் மாதிரி நீங்க நல்லா பாடணுமா?
4. பிரம்மாண்டத்தின் மறுபெயர்
5. வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்
6. இதுவல்லவோ விளக்கு!
7. வண்ணமயமான கோட்டை
8. மாமியார் – மருமகள் கோவில்
9. தேலி கா மந்திர்
10. கோட்டையில் ஒலியும் ஒளியும்
11. கண் கவர் காதலி
12. சூரியனார் கோவில்
13. டிக்ரா அணை
14. பூங்கொத்துடன் வரவேற்பு
15. ஓ மானே மானே… உன்னைத்தானே...
16. கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று
17. ராஜா-ராணி குடைகள்
18. பளிங்கினால் ஒரு மாளிகை…
19. என்ன விலை அழகே…
20. ஓர்ச்சா என்றொரு நகரம்…
21. ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்
22. ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்
23. ராம் ராஜா மந்திர்
24. ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்
25. எங்கெங்கு காணினும் பூச்சியடா!
26. எங்கோ மணம் வீசுதே…
27. ஜான்சியில் ரயில் இஞ்சின்
FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்
1
மத்தியப் பிரதேசம் அழைக்கிறது
வெங்கட் நாகராஜ்….. என் பெயரில் பாதியும் அப்பா பெயரில் முக்காலும் சேர்த்து வலைப்பூவுக்காக வைத்துக் கொண்ட பெயர். அதுவே இப்போது பழகி விட்டது! நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன்! கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தில்லி வாசி. பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம். கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து www.venkatnagaraj.blogspot.com எனும் வலைப்பூவில் எழுதி வருகிறேன். சென்று வந்த பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்களை வலைப்பூவில் எழுதி வருகிறேன்.
ஆசிரியர் – வெங்கட் நாகராஜ் – venkatnagaraj@gmail.com
மின்னூலாக்கம் –வெங்கட் நாகராஜ்
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
creative commons attribution Non Commercial 4.0 international license
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
2
பயணங்கள் நமக்கு பலப் பல அனுபவங்களைப் பெற்றுத் தருகிறது. ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாகத் தான் அமைகிறது. பயணங்களின் போது பார்க்கும் விதம் விதமான மனிதர்கள், சந்திக்கும் சவால்கள், தெரிந்து கொள்ளும் புதிய விஷயங்கள் என ஒவ்வொன்றும் நமக்கு ஒரு பாடம் தான். தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பது எனக்கு பிடித்தமான ஒரு விஷயம். அப்படி மத்திய பிரதேச மாநிலத்தின் சில இடங்களுக்கு நான்கு நாட்கள் செய்த பயணத்தில் நான் பார்த்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், கிடைத்த அனுபவங்கள் ஏராளம்.
பயணத்தின் ஒரு பகுதியாக மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palcy போன்ற குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் ROSHNI என்கிற மையத்திற்குச் சென்றிருந்தோம். வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு அங்கே இருந்தவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது. வித்தியாசமான ஒரு அனுபவம் அது.
ஓர்ச்சா எனும் நகரம் ஒன்றில் தங்கியிருந்தபோது மாலை வேளைகளில் விளக்குகள் இருந்தாலும் அணைத்து விடுகிறார்கள். எங்கும் இருட்டு. எதற்கு என்று புரியாது நாங்கள் ஒரு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிப் பார்த்துக் கொண்டிருக்க, வெளியே வந்தபோது எங்கள் மீது ஒரு படையெடுப்பு நடந்தது – ஊரே இருளில் மூழ்கி இருக்கக் காரணம் அந்த படையெடுப்பு தான். அதுவும் தினம் தினம் நடக்கும் படையெடுப்பு! என்னவொரு அனுபவம்….
பழமை, புதுமை, அரண்மனைகள், வழிபாட்டுத் தலங்கள், இயற்கை எழில், வனங்கள் என இங்கே பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஏராளம். “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்பது போல, எனக்குக் கிடைத்த அனுபவங்களை எனது வலைப்பூவில் [சந்தித்ததும் சிந்தித்ததும்] எழுதினேன். இப்போது அவற்றைத் தொகுத்து மின்புத்தகமாகவும் வெளியிடுவதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
மத்தியப் பிரதேசம் அழைக்கிறது….. வாருங்கள் பயணிப்போம்!
என்றென்றும் அன்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
3
இலக்கியங்கள் இனிதாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, கவிதை, கதை, கட்டுரை போன்ற இலக்கியப் படைப்புகளிலுள்ள, அதைப் படைத்தவரின் முத்தான வார்த்தைகளைத் தாங்கிய வரிகள், அதை வாசிப்பவரைத் தம் சிறகிலேற்றி, அப்படைப்பாளி கண்ட காட்சிகளைக் காண்பித்து, கொண்ட மகிழ்வினைக் கொள்ளச் செய்து, அவர் மூழ்கிய இன்ப வெள்ளத்தில் வாசிப்பவரையும் மூழ்க வைக்கும் என்பதுதான் உண்மை. அப்படியிருக்கையில், இலக்கியப்படைப்பே ஒரு பயணக் கட்டுரையானால் எப்படி இருக்கும்?!
கண்ணுக்கு விருந்தாகும் காட்சிகள் ஒவ்வொன்றையும் கண்ணால் காணாமலேயே மனக்கண்ணில் காணக்கூடிய வாய்ப்பை அல்லவா நாம் கிடைக்கப் பெறுவோம்! அத்தகைய பயணங்களை மேற்கொள்பவரும், அதை எழுதுபவரும் நம் வெங்கட்ஜியானால், வாசிப்பவர்கள் எல்லாவிதத்திலும் கொடுத்து வைத்தவர்கள் என்றுதானே சொல்லவேண்டும்! எனவே, இதை வாசிக்கத் தீர்மானித்த நீங்கள் கொடுத்து வைத்தவரே.
தான் கண்ட காட்சிகளைக் கச்சிதமாக விவரிக்கும் திறனும், காதில் கேட்பவைகளில் எல்லோரும் அறிய வேண்டியதை மட்டும் அளவாக, அழகாகச் சொல்லும் திறனும், இடையிடையே தேவையான இடத்தில், தேவையான அளவில் தன் கருத்துகளையும், எண்ணங்களையும், தன்னகத்தே மலரும் நினைவுகளையும் சேர்த்துத் தன் படைப்புகளை அழகுபடுத்தும் திறனும் வாய்ந்தவர் நம் வெங்கட்ஜி. இயற்கையைப் பூசிக்கும் பூசாரி ஆகிய ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. “The spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion Recollected in Tranquility”. “Nature teaches everything to us. Nature watches us every time”. இயற்கை நமக்கு எல்லாமே கற்றுத் தருகிறது”.
வெங்கட்ஜி அவர்களின் எழுத்துகள் வசீகரமானவை. மிக எளிதான நடையில் சொல்லிச் செல்வது மிக மிகச் சிறப்பான ஒன்று. பயணக் கட்டுரைகளின் இடையே சிறிது நகைச்சுவையும் விரவி வருவது மேலும் சுவையூட்டுவதாகவே இருக்கின்றது. “ஜன்னல் வழியே கிருஷ்ணர் தெரிகிறாரா என்று பார்த்தேன். அவரைக் காணவில்லை. கோபியர்களுடன் “மார்னிங் வாக்” சென்று விட்டார் போல.” “ஆக்ரா என்றால் கொஞ்சம் உதறல். பல முறை தாஜ்மஹால் சென்றதுண்டு. ஷாஜஹான் கூட இத்தனை முறை பார்க்க வந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு மும்தாஜ் கூடவே வந்து விட்டால்?!!” என்பன சில உதாரணங்களே.
அவர் சில வருடங்களுக்கு முன், அலுவலகத்தில் இரண்டு மாத பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, பயிற்சியின் ஒரு பகுதியாகத் தன் அலுவலக நண்பர்களுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட 4 நாள் பயணத்தில் கண்ட காட்சிகளைத் தன் வலைத்தளத்தில் 27 இடுகைகளாக வெளியிட்டிருந்தார். இதோ இப்போது அவற்றைத் தொகுத்து ஒரு மின் புத்தகமாக வெளியிட்டும்விட்டார். நேரத்தை வீணாக்காமல், பயணத்தின் அடுத்த பகுதியை வாசிக்க, அடுத்த இடுகை வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே ஒரே மூச்சாக அவரது நான்கு நாள் பயணத்தை நாமும் பயணித்து முடித்து, நம் மனதில் சேமித்து வைக்கக் கிடைத்த அரிய வாய்ப்பிது.
இப்பயணக் கட்டுரை வாசிக்கையில், “சில சமயங்களில் பயணம் ஆழமான அன்பையும், நேசத்தையும் கூட புரிய வைக்கிறது. பல புதிய நட்புகளை உருவாக்குகிறது. புதிய மனிதர்களை நேசிக்க வைக்கிறது. இந்த உலகம் மிகவும் பரந்தது, அதில் எண்ணற்ற ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன” என்பதை உணர வைக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணமாக, “ரோஷ்ணி”யில் -“REHABILITATION OPPORTUNITIES SERVICE & HEALTH FOR THE NEUROLOGICAL IMPAIRED”- நாமும் வெங்கட்ஜி சந்தித்த அதுலையும், சேதனையும் காண்கிறோம்.
இந்தக் கட்டுரையில் பல இடங்களைப் பற்றிய குறிப்புகளை மிக அருமையாகச் சொல்லிச் செல்கின்றார். இடங்களின் வரலாறுகளைக் கூட நினைவில் வைத்துக் கொண்டு அவர் அனாயாசமாகச் சொல்லுவது மிக மிக வியப்பாக இருக்கின்றது. நுணுக்கமான தகவல்களைத் தருவதில் வல்லவராகவும் இருக்கின்றார்.
தான்சேனின் சமாதிக்கருகே பூத்துக் குலுங்கும் ரோஜாக்களையும் காண்கிறோம். இலைகள் தினம் தினம் பறி போய்கொண்டிருக்கும் புளியஞ்செடியைக் கண்டு வருந்துகிறோம். ஜெயவிலாஸ் அரண்மனை சாப்பாட்டு மேசையில் இயங்கும் வெள்ளி ரயிலைக் கண்டு நாமும் வியக்கிறோம். 7 டன் எடையுள்ள 248 மெழுகுவர்த்திகளை ஏற்ற முடிகின்ற அலங்கார விளக்கைக் கண்டு அதிசயிக்கிறோம்.
அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும், வேட்டையாடப்பட்டுப் பதப்படுத்திய புலிகளைக் கண்டவர், “புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனப் புலம்பி என்ன பயன்? அந்தக் காலத்திலேயே இது போன்ற ராஜாக்களும், வெள்ளைக் காரர்களும் நமது நாட்டின் சொத்தை மட்டும் அடித்துக் கொள்ளவில்லை. நமது வனங்களின் செல்வத்தினையும் அல்லவா அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.” என்று பதிந்த அவரது ஆதங்கம் நம்மையும் தொற்றிக் கொள்கின்றது.
குவாலியர் சிறைக் கைதிகள் நெய்த, தர்பார் ஹாலில் விரிக்கப்பட்டிருக்கும், ஆசியக்கண்டத்திலேயே மிகப் பெரிய கம்பளத்தைக் கண்டு வியக்கிறோம். குவாலியர் கோட்டையில் காணும் கல்லாலான திரைச் சீலையைக் கண்டு அதிசயக்கிறோம். குவாலியர் கோட்டையில் காண்பிக்கப்படும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியைக் கேட்பதோடு மட்டுமல்ல, குவாலியரின் பெயருக்குக் காரணமான குவாலிபா முனிவரின் குரலையும் கேட்கிறோம். மாமியார் மருமகள் கோயில் என்பதை வாசித்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதை நீங்களும் வாசித்து வியப்பீர்கள்.
தாஜ்மகால் போல் அங்குள்ள குஜ்ரி மகால் எழுப்பப்படக் காரணமான அந்த மான்விழியாளை நாமும் நம் மனக்கண்ணில் காண்கிறோம். “டிக்ரா” அணையில் படகு சவாரி செய்கிறோம். மாதவ் தேசிய பூங்காவில் திறந்த ஜீப்பில் பயணித்து மான் கூட்டங்களையும், மயில்களையும் காண்கிறோம். “பதையா குண்ட்” சிவலிங்க தரிசனம் செய்கிறோம்.
இந்திய அரசாங்கத்தால் மஹாவிருக்ஷ் புரஸ்கார் பெற்ற, “கதம்” மரத்தைப் பார்க்கிறோம். மூலிகைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் குவித்து இடப்பட்டிருக்கும் அஸ்வகந்தா, இஞ்சி, சீயக்காய், மேத்தி போன்றவற்றைக் கண்டு வியக்கிறோம். ஓர்ச்சாவிலுள்ள ராமராஜா மந்திரைத் தரிசிக்கிறோம். ஜான்சியில் பெல் யூனிட்டில் தயாரிக்கப்படும் ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்களையும் கண்டபின் வெங்கட்ஜியுடன் ரயிலேறி அவர் புதுதில்லிக்கும், நாம் நம் வீட்டிற்கும் பயணிக்கிறோம்.
வெங்கட்ஜியின் செலவில் நான்கு நாள் இலவசமாக மத்தியப்பிரதேசத்தில் பயணித்ததற்குக் கண்டிப்பாக திருமிகு வெங்கட்நாகராஜ் (வெங்கட்ஜி) அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை, இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நினைப்பார்கள் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
மற்றவர்கள் பார்க்காத பார்வையில் பார்த்து எழுதுவது இவரது தனிச் சிறப்பு. ஒருவேளை அவருக்குப் புகைப்படக் கலையில் ஆர்வம் இருப்பதால் காமெரா கண்கள் வழி பார்ப்பது போல் பார்ப்பதாலும் இருக்கலாம். அதனால்தானோ என்னவோ இவர் தரும் குறிப்புகள் மட்டுமின்றி, பயணம் செய்யும் போது எடுக்கும் புகைப்படங்களும் பல வித்தியாசமாக, மிக மிக அருமையாகக் கண்ணிற்கு விருந்தளிப்பவையாக இருக்கின்றன. இவரது பயணக்குறிப்புகள் நாம் பயணம் மேற்கொள்ள உதவியாகவும் இருக்கின்றன என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு நல்ல யாத்ரீகன் தனது பயணத்தைக் குறித்துப் பல அனுபவப் பாடங்களையும், தனது பார்வையையும், கருத்துக்களையும் பயணக் கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் தவறுவதில்லை என்பதை திருமிகு வெங்கட் நாகராஜ் நிரூபித்துள்ளார். நிரூபித்தும் வருகின்றார் தனது வலைத்தளத்தில் www.venkatnagaraj.blogspot.com. வாசித்துப் பாருங்கள். நீங்களும் எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள்! வெங்கட்ஜியுடன் அவரது கட்டுரை வழி பயணம் செய்யப்போகும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.
துளசிதரன்/கீதா
http://thillaiakathuchronicles.blogspot.in/
4
பொருளடக்கம்
பகுதி-1: மத்தியப்பிரதேசம் அழைக்கிறது….
பகுதி-2: வெளிச்சம் பிறக்கட்டும்…
பகுதி-3: தான்சேன் மாதிரி நீங்க நல்லா பாடணுமா?
பகுதி-4: பிரம்மாண்டத்தின் மறுபெயர்
பகுதி-5: வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்
பகுதி-6: இதுவல்லவோ விளக்கு!
பகுதி-7: வண்ணமயமான கோட்டை
பகுதி-8: மாமியார் – மருமகள் கோவில்
பகுதி-9: தேலி கா மந்திர்
பகுதி-10: கோட்டையில் ஒலியும் ஒளியும்
பகுதி-11: கண் கவர் காதலி
பகுதி-12: சூரியனார் கோவில்
பகுதி-13: டிக்ரா அணை
பகுதி-14: பூங்கொத்துடன் வரவேற்பு
பகுதி-15: ஓ மானே மானே… உன்னைத்தானே…
பகுதி-16: கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று
பகுதி-17: ராஜா-ராணி குடைகள்
பகுதி-18: பளிங்கினால் ஒரு மாளிகை…
பகுதி-19: என்ன விலை அழகே…
பகுதி-20: ஓர்ச்சா என்றொரு நகரம்…
பகுதி-21: ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்
பகுதி-22: ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்
பகுதி-23: ராம் ராஜா மந்திர்
பகுதி-24: ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்
பகுதி-25: எங்கெங்கு காணினும் பூச்சியடா!
பகுதி-26: எங்கோ மணம் வீசுதே…
பகுதி-27: ஜான்சியில் ரயில் இஞ்சின்
1
மத்தியப் பிரதேசம்…. இம்மாநிலத்தினை இந்தியாவின் இதயம் என்று இதைச் சொல்கிறார்கள். இம்மாநிலத்தில் பல அருமையான சுற்றுலாத் தலங்கள் உண்டு. பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வடக்கே சுற்றுலாவாக வருபவர்கள் ஆக்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத், சிம்லா, மணாலி போன்ற இடங்களுக்கே செல்வார்கள். வழியில் இருக்கும் மத்தியப் பிரதேசத்திற்கு அவ்வளவாகச் செல்வதில்லை. அங்கேயும் வனங்கள், அரண்மனைகள், கோவில்கள் எனப் பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் உண்டு.
அலுவலகத்தில் இரண்டு மாத பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, பயிற்சியின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேசத்திற்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டோம். அப்பயணத்தில், குவாலியர், ஷிவ்புரி, ஓர்ச்சா, ஜான்சி ஆகிய நான்கு இடங்களுக்கு நாங்கள் செல்வதாகத் திட்டம். அந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற இடங்கள், அங்குள்ள சுற்றுலாத் தலங்கள், அலுவலகங்கள் பற்றிய சில குறிப்புகள் ஆகியவற்றை இப்பகுதியிலும் வரப்போகும் பகுதிகளிலும் பார்க்கலாம்!
காலை 06.15 மணிக்கு புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து போபால் செல்லும் ஷதாப்தி விரைவு வண்டியில் எங்களுக்கான பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. வீட்டிலிருந்து 05.30 மணிக்குக் கிளம்பி ரயில் நிலையம் சென்றடைந்தேன். பயிற்சியில் பயிலும் மாணவர்கள் தவிர [அட மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் என்னவொரு ஆனந்தம்….], பயிற்சியாளர், அவருடைய மனைவி மற்றும் மத்தியப்பிரதேச சுற்றுலாத் துறையில் பணிபுரியும் திரு ரோஹித் பட்நாகர் என மொத்தம் 14 பேர்கள் கொண்ட குழுவாய் பயணத்தினை இனிதே தொடங்கினோம்.
ஷதாப்தி கிளம்பியவுடன் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்துக் கொண்டு வந்தார் ஒரு ஐ.ஆர்.சி.டி.சி. சிப்பந்தி. பின்னாலேயே இன்னுமொரு சிப்பந்தி செய்தித்தாள்கள் கொடுத்துக் கொண்டு வந்தார். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வகைக்கு இரண்டு, மூன்று என ஐந்தாறு பேப்பர்கள் கேட்க, சிப்பந்தி ஒரு பேப்பர்தான் தருவேன் எனச் சொல்ல, அவர் அடம் பிடிக்க, கடைசியில் ஜெயித்தது பெரியவர் தான்.
நான் இருந்த பெட்டியில் நான்கு நண்பர்கள். அதில் இருவருக்கு பக்கத்துப் பக்கத்து இருக்கைகள். மற்ற இருவருக்கு தனித் தனி இடத்தில் இருந்தது. சிறு வயது ராகேஷ் ரோஷன் போன்ற ஒருவரிடம் இடம் மாறி உட்காரச் சொல்ல, எங்களைப் பார்த்து முறைத்தார். எங்கே அவர் ஹிரித்திக் ரோஷனை வைத்து எடுத்தப் படத்தினைப் பார்க்க வைத்து விடுவாரோ என்று மனதில் பயம் தோன்ற விட்டு விட்டோம்.
நடுநடுவே காபி, தேனீர், பிஸ்கெட், பிறகு, உப்புமா, உப்பில்லாத சட்னி, சாம்பார், பிரவுன் பிரெட் என்றெல்லாம் சாப்பிடக் கொடுத்தார்கள். ”பச்சை நிறமே பச்சை நிறமே” என்று மனதினுள் பாடியபடி வெளியே வேடிக்கை பார்த்தபடியே 08.00 மணிக்கு மதுரா வந்தோம். ஜன்னல் வழியே கிருஷ்ணர் தெரிகிறாரா என்று பார்த்தேன். அவரைக் காணவில்லை. கோபியர்களுடன் “மார்னிங் வாக்” சென்று விட்டார் போல.
சிறிது நேர பயணத்திற்குப் பின்னரே ”ராஜா கி மண்டி” ரயில் நிலையத்தினைக் கடந்தது எங்கள் ரயில். அடுத்தது ஆக்ரா தான். ஏற்கனவே நமக்கு ஆக்ரா என்றால் கொஞ்சம் உதறல். பல முறை தாஜ்மஹால் சென்றதுண்டு – தில்லி வரும் நண்பர்களை அழைத்துச் செல்வது எனக்குப் பழக்கமாக இருந்தது. ஷாஜஹான் கூட இத்தனை முறை பார்க்க வந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு மும்தாஜ் கூடவே வந்து விட்டால் என்ற சிந்தனையை ”மும்தாஜ் வந்துவிட்டால்” எனும் பதிவாக சொல்லியிருக்கிறேன். நல்ல வேளை… இப்போது ஆக்ராவில் இறங்கப் போவதில்லை.
எல்லா வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சிமெண்ட் பூசப்படாத வெளிச்சுவர்களை கொண்ட வீடுகள். அவ்வீடுகளைப் பார்த்தபடி கிடக்கும் நீண்ட தண்டவாளங்கள். நேற்று பெய்த மழையோ? ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அது சரி…. கொசுக்களும் பிறக்க வேண்டுமே…
ஆக்ராவிற்குப் பிறகு 09.15 மணி அளவில் முரேனா நகரைச் சென்றடைந்தோம். ஆங்கிலத்தில் ஏனோ இதை Morena என எழுதி இருக்கிறார்கள். அன்று அவர்கள் எப்படி எழுதினார்களோ அதையே இன்னமும் தொடர்கிறோம்.
எங்களுக்கு உணவு வழங்கிய சிப்பந்தி ஒரு தட்டில் சோம்பு, கல்கண்டு போன்றவை வைத்து “டிப்ஸ்” வாங்கிக்கொள்ள ஒவ்வொரு இருக்கையாக வந்து கொண்டு இருந்தார். பேப்பர் அங்கிள் முகத்தினைத் திருப்பிக்கொண்டு பேப்பர் படிக்க ஆரம்பித்து விட்டார்.
ரயில் வழக்கம்போலவே தாமதமாகச் சென்று கொண்டு இருக்கிறது. 09.30க்கு சேர வேண்டிய வண்டி 09.50க்கு சென்றடைந்தது. எங்களது மொத்த பயணமும் மத்தியபிரதேச சுற்றுலா நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் பிரச்சனை இல்லை. குவாலியர் ரயில் நிலையத்தின் வெளியே மூன்று இனோவா கார்கள் எங்களுக்காகக் காத்திருந்தது.
இரயில் நிலையத்தில் இருந்து நாங்கள் சென்ற இடத்தினைப் பற்றி அடுத்த பகுதியில் தொடர்கிறேன். பயண அலுப்பினைப் போக்கக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த பகுதியில் சந்திப்போம்…..
2
வெளிச்சம் பிறக்கட்டும்…
“மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…..” எனும் முதல் பகுதியில் ஓய்வு எடுத்துக்கொண்டு வருகிறேன் என எழுதி இருந்தேன். நீங்களும் ஓய்வு எடுத்துக்கிட்டீங்களா?
குவாலியர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இன்னோவா கார்கள், நேராக ”தான்சேன் ரெசிடென்சி” சென்று தான் நின்றது. மத்தியப் பிரதேச சுற்றுலா நிறுவனம் நடத்தும் ஒரு தங்கும் விடுதி அது. நகரின் மத்தியில் நல்ல வசதிகளுடன் நன்றாக இருக்கிறது இந்த விடுதி.
எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் சென்று கொஞ்சம் ஓய்வு எடுத்து, எல்லோரும் கிளம்பினோம். நாங்கள் சென்ற இடம் ராமகிருஷ்ணா ஆஷ்ரமத்தின் ஒரு பகுதியில் நடக்கும் ”ரோஷ்ணி” என்கிற ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு. ஆங்கிலத்தில் “REHABILITATION OPPORTUNITIES SERVICE & HEALTH FOR THE NEUROLOGICAL IMPAIRED” என்பதைச் சுருக்கி ROSHNI என்று அழைக்கிறார்கள். ஹிந்தியில் ரோஷ்ணி என்றால் வெளிச்சம் என்று அர்த்தம்.
இவர்கள் மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palsy ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயிற்சி அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நடைமுறையில் அவர்களுக்கு உதவும் பயிற்சிகள் தவிர இக் குழந்தைகளுக்கு பேப்பர் பைகள் செய்யவும், துணிகளில் எம்பிராய்டரி செய்வது, அழகிய கலர் டிசைன்கள் செய்வது, ராக்கி செய்வது, சிறிய மணி மாலைகள் செய்வது என்று நிறைய கைவேலைகள் செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள்.
அந்த நிறுவனத்தின் இயக்குனர் திருமதி மஞ்சுளா பட்டன்கர் எங்களை ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் காண்பித்து அவர்கள் செய்து வரும் பயிற்சிகளைப் பற்றிய விளக்கங்களை அளித்தார். ஒவ்வொரு வகுப்பறையாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தோம். அப்படிப் பார்த்த ஒரு அறையில் அதுல் என்ற சிறுவன் பேப்பர் கவர்கள் செய்து கொண்டு இருந்தான். அவனுடனும், மற்ற சிறுவர்களுடனும் பேசிவிட்டு வெளியே வந்தவுடன், சேதன் என்கிற சிறுவன் “நீங்க எல்லாம் அதுல் வகுப்புக்கு மட்டும் போயிட்டு வந்தீங்க, என்னோட வகுப்புக்கும் வாங்க என்று பாசமாக அவன் மொழியில் அழைக்க, அவனை வருத்தப்பட வைக்க வேண்டாமென அச்சிறுவனுடன் நாங்கள் செல்ல, அவனது கூட பயிலும் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான்.
ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும்தான் எத்தனைத் எத்தனை திறமைகள்? சில குழந்தைகள் தையல் கற்றுக் கொள்கிறார்கள், சிலர் பேப்பர் கவர்கள் செய்கிறார்கள். வேறு சிலர் ஒரு பெரிய புடவையில் கைவேலைகள் செய்து வருகிறார்கள். இவர்கள் செய்யும் எல்லாப் பொருட்களும் அரசின் அங்காடியான “Mrignaini” யில் விற்கப்படுகின்றன.
இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மனதிலே ஒரு அழுத்தம். வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது.
மேலும் பொறுமை இல்லாத என்னைப் போன்ற சிலருக்கு இந்த இடத்தில் பணிபுரியும் நண்பர்களைப் பார்த்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும். ஏற்பட்டது.
அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து விட்டு மனதில் திருப்தியுடன் வெளியே வந்தோம். அவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் அவர்களது இணையதளத்தினைச் சென்று பார்க்கலாம்.
அடுத்த பகுதியில் ஒரு நவரத்தினம் பார்க்கப் போகிறோம்!
3
தான்சேன் மாதிரி நீங்க நல்லா பாடணுமா?
ராம்தனு பாண்டே என்ற இயற்பெயரைக் கொண்ட தான்சேன் சிறு வயதிலேயே இசையில் வல்லமை பெற்றவராக இருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் தமது இசையினை மதுராவின் அருகே இருக்கும் பிருந்தாவனத்தில் இருந்த ஸ்வாமி ஹரிதாஸ் என்பவரிடம் கற்றதாகவும், அவரது இசையில் மயங்கிய அப்போதைய குவாலியர் மஹாராஜா மான்சிங் தோமர் அவருக்கு தான்சேன் என்ற பட்டத்தை வழங்கியதாகவும் சொன்னார் எங்களுடன் வந்த கைடு.
தான்சேன் தனது பாடலினாலேயே விளக்குகளை எரிய வைக்கும் திறமைப் பெற்றவராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அவரது மகள் தன்னுடைய இசையின் மூலம் மழையை வரவைத்ததாகவும் சொல்கிறார்கள்.
பின்னாளில் இவரது இசையைப் பற்றிக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர் தான்சேன் அவர்களைத் தனது அரசவையிலேயே இருக்கச் சொல்லி அவரது இசையிலே மயங்கியதாகவும் தான்சேன் அக்பரது மகள் மெஹருன்னிசாவை மணந்ததாகவும் சொல்லிக் கொண்டு வந்தார் எங்களது கைடு.
சூஃபி பாடல்களை மற்றுமொரு குருவிடம் கற்றுக் கொண்டு இருக்கிறார். அந்த குருவின் பெயர் முகம்மது கவுஸ். தற்போது தான்சேன் சமாதி கூட முகம்மது கவுஸ் அவர்களுடைய சமாதி இருக்கும் இடத்தின் பின் பக்கமே இருக்கிறது.
முகம்மது கவுஸின் சமாதி இருக்கும் கட்டிடம் மிகச் சிறப்பாக, சதுர வடிவத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் பக்கங்களில் அறுகோண வடிவில் ஒரு மூன்றடுக்கு கட்டிடமும் பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறது.
பின் புறத்தில் இருக்கும் தான்சேன் சமாதி கவுஸ் சமாதி அளவுக்குப் பெரியதாக இல்லாமல் சற்றே சிறிய சதுரமாக, தூண்கள் அமைக்கப்பட்டு அழகாய் இருக்கும் ஒரு கட்டிடத்தின் நடுவே அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இடம் முழுவதும் நிறைய பூச்செடிகள் இருக்கின்றன. ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகிறது. மல்லிகைச் செடிகளில் இப்போது தான் மொட்டுகள் வந்திருக்கின்றன. இன்னும் பெயர் தெரியாத பூக்களும் நிறைய இருந்தன.
இப்போதும் ஒவ்வொரு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒரு சங்கீத சம்மேளனம் நடத்தப்படுகிறது. அதில் உலகிலிருந்து பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் எனச் சொன்னார் கூட வந்த ஒருவர்.
அவரது சமாதி தற்போது இருக்கும் இடத்திலேயே ஒரு பெரிய புளிய மரம் இருந்ததாகவும் அதன் இலையை அவ்வப்போது சாப்பிட்டதால் தான் அவருக்கு இனிய குரல் வந்ததாகவும் சொல்கிறார்கள். இப்போது அந்த மரம் பட்டுப்போய் விழுந்து விட்டதால், மத்தியப் பிரதேச அரசாங்கம் அங்கே ஒரு புளியஞ்செடியை நட்டு வளர்த்து வருகிறார்கள். ஆனால் அது பெரிய மரமாக வளர்வது சந்தேகமே. காரணம் …
வருவோர் போவோரெல்லாம் தானும் தான்சேனாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் செடியைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கம்பி வலையினுள் கையை விட்டு இலைகளைப் பறித்துச் சாப்பிடுகின்றனர். தடுப்பதற்கோ, பாதுகாப்பதற்கோ யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கட்டிடத்தின் நிழலில் சிலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஒருவேளை அவர்கள்தான் பாதுகாவலர்களோ?
இதில் இன்னுமொரு கொடுமை என்னவெனில், கையை விட்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்றபடியே பாடி வேறு பார்க்கிறார்கள். தான்சேன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பாவம் அந்த இடத்தினை விட்டு ஓடியே போயிருப்பார். ”’நீங்க நல்லா பாடணுமா?’ன்னு கேட்டுட்டு இப்படி சொன்னா எப்படி?” என்று கேட்பவர்களுக்கு, நல்ல குருவாகப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்களேன்.
அடுத்த பகுதியில் உங்களை ஒரு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அரண்மனையில் இருக்கும் உணர்வு உங்களுக்கு வர ராஜா – ராணி உடையெல்லாம் போட்டுக்கிட்டு தயாரா இருங்க. சரியா!
4
பிரம்மாண்டத்தின் மறுபெயர்
தான்சேனின் சமாதியிலிருந்து திரும்பி நாங்கள் தங்கியிருந்த ”தான்சேன் ரெசிடென்சி”யில் மதிய உணவு உட்கொண்டோம்.
14 பேர்களுக்கும் ஒரு நீண்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்டது. வட இந்திய உணவு வகைகளே பிரதான உணவாக இருந்தது. மிசோ மாநிலத்தவர்கள் அசைவ உணவும் மற்றவர்கள் சைவ உணவும் உட்கொண்டோம். சிறிது ஓய்வுக்குப் பின் எங்களது அடுத்த இலக்கான ஜெய்விலாஸ் அரண்மனை மற்றும் அருங்காட்சியகம் சென்றோம்.
இந்த அரண்மனைக்குள் செல்லக் கட்டணம் இந்தியர்களுக்கு ரூ.40-ம் வெளிநாட்டவர்களுக்கு ரூ.300-ம். புகைப்படக் கருவி எடுத்துச் செல்ல இந்தியர்களிடம் தனியாக 60 ரூபாய் வாங்குகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கு அதிகமாம். வாரத்தின் எல்லா நாட்களும் [புதன் கிழமை தவிர] காலை 10.00 மணி முதல் மாலை 05.30 வரை திறந்திருக்கும்.
என்ன ஒரு பிரம்மாண்டம்…
சிந்தியா ராஜாக்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்க உபயோகப்படுத்தும் அரண்மனை ஜெய்விலாஸ் பேலஸ். அதில் இருக்கும் முன்னூற்றுக்கும் அதிகமான மொத்த அறைகளில் 35 அறைகளை அருகாட்சியகமாக உருவாக்கி அதில் பல்வேறு கலைப்பொருட்களை வைத்திருக்கிறார்கள்.
இந்த அறைகளைப் பார்க்கும்போது அந்த அரண்மனையின் பிரம்மாண்டம் விளங்குகிறது. ஜயாஜிராவ் சிந்தியா அவர்களால் 1874 ஆம் வருடம் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனை வேல்ஸ் நாட்டு இளவரசரை வரவேற்கவென மூன்று வருடங்களில் [1872-74] கட்டி முடிக்கப்பட்டதாம்.
ஜயாஜிராவ் சிந்தியாவிற்கு மொத்தம் நான்கு மனைவிகள். [அட பலருக்கு ஒரு மனைவி கிடைக்கிறதே கஷ்டமாக இருக்கும் இக்காலத்தில் இதை நினைத்தால் பொறாமையாகத் தான் இருக்கும்…]. நான்காவது மனைவியான சாக்யாபாய் மூலம் அவருக்கு நான்காவது மகன் பிறந்தார். அவர்தான் மாதோராவ் சிந்தியா. ஜயாஜிராவ் சிந்தியாவிற்குப் பிறகு குவாலியர் மஹாராஜா ஆனவர்.
மாதோராவ் சிந்தியாவிற்கும் இரண்டு மனைவிகள்! முதலாவது மனைவி குள்ளமானவர். இரண்டாவது மனைவி உயரம். முதலாவது மனைவிக்குக் குழந்தைகள் இல்லாததால் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
இந்த அரண்மனையை ஜிவாஜிராவ் காலத்தில் கட்டியிருந்தாலும், மாதோராவ் காலத்தில் உப்யோகப்படுத்திய பல பொருட்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. நாலு அடி ராணிக்குத் தகுந்த அளவு கட்டில், மேஜை-நாற்காலிகள், சாப்பாட்டு மேஜைகள் என எல்லாம். உடனே அப்ப ஆறு அடி ராணி என்ன பாவம் செய்தாள் என்று கேட்கக் கூடாது. அவருக்குத் தகுந்த மாதிரியும் எல்லாவிதமான பொருட்களும் இங்கே இருக்கின்றன.
ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற பலவித நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அறைகலன்களை [Furniture-க்கு தமிழாம்!] இங்கே வைத்திருக்கிறார்கள்.
பல்வேறு ராஜாக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள், அவர்கள் அணிந்து கொண்ட கவசங்கள் என்று எல்லாவற்றையும் வரிசையாக வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஜன்மாஷ்டமியிலும் குட்டி கிருஷ்ணரை வைத்துத் தாலாட்ட, இத்தாலி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கண்ணாடியாலான ஒரு தொட்டில் ஒரு அறையில் நடுநாயகமாய் வீற்றிருக்கிறது.
பெர்சியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு பெரிய கார்பெட்டில் சுமார் 180 உருவங்கள் வரையப்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய பிளாஸ்டிக் பேப்பரில் இதைப் பொதிந்து ஒரு அறையில் மாட்டி வைத்திருக்கிறார்கள். வருவோர் போவோர் எல்லோரும் அதைத் தொட்டு அசுத்தப் படுத்துவதால் இப்படி ஒரு ஏற்பாடாம்.
இன்னும் பலப்பல அருமையான பொருட்கள் இந்த அரண்மனையில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.
5
வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்
இந்தப் பகுதியிலும் நாம் ஜெய்விலாஸ் அரண்மனையின் உள்ளேதான் பயணிக்கப் போகிறோம். அட ஆமா, எம்மாம் பெரிய அரண்மனை, 300க்கும் மேற்பட்ட அறைகள். நல்ல வேளை முழுவதும் நாம் சுற்றிப் பார்க்கப் போவதில்லை. வெறும் 35 அறைகள் தான். அதற்கே நிறைய நேரம் வேண்டும்.
சென்ற பகுதியில் பார்த்தது போல பிரம்மாண்டத்தின் மறுபெயர் தான் இந்த அரண்மனை. அரண்மனை என்று இருக்கும்போது சாப்பாட்டு அறை என்று ஒன்று இல்லாமலா இருக்கும். [அட எங்க ஏரியாவுக்கு இப்பதான் வந்தீங்க என்று சொல்லும் என்னைப் போன்ற சாப்பாட்டு ராமன்களுக்கு, உணவு வகைகள் பற்றி இங்கே ஒன்றும் எழுதப் போவதில்லை. இங்கே வரப்போவது வெறும் இங்கே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே!]
ராஜா, மகாராஜாக்கள் எல்லோரும் கீழே வரிசையாகப் போடப்பட்டுள்ள மெத்தைகளில் அமர்ந்து இருக்க, எதிரே முழுவதும் வெள்ளியால் ஆன தட்டுகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. பார்க்கும்போதே ஆசையாகத் தான் இருந்தது அவற்றில் சாப்பிட.
இவர்களைத் தவிர வேறு நபர்கள் வந்தால் மேஜையிலும் பரிமாறுவார்களாம். அதற்கும் தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இதையெல்லாம் விட முக்கியமான ஒரு விஷயம் இந்த அறைகளில் இருக்கிறது. ஒரு நீண்ட மேஜையில் அழகாய் மேஜை விரிப்புகள் போடப்பட்டு மேஜையின் இருபக்கங்களிலும் நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன.
மேஜையின் நடுவே அதன் முழு நீளத்திற்கும் ஒரு தண்டவாளம் இருபக்கத்திலும் செல்கிறது. இந்த முனையில் ஆரம்பித்து, பயணித்து அடுத்த முனை சென்று திரும்ப இதே முனைக்கு வரும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயணிக்கப்போவது வெள்ளியால் ஆன ஒரு சிறிய ரயில்.
வெள்ளியால் ஆன இந்த ரயிலில் மொத்தம் 7 பெட்டிகள். அதன் முன்னே ரயில் எஞ்சின் மற்றும் இன்னுமொரு உபரிப் பெட்டி எஞ்சின் எரிபொருட்களைப் போட்டு வைக்க. இருக்கும் 7 பெட்டிகளிலும் பெட்டிக்கு ஒன்றாய் S C I N D I A என்று எழுதப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் இப்போதும் வேலை செய்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்.
விருந்து நடக்கும்போது இந்த ரயில் மேஜையில் சுற்றிச் சுற்றி வரும். நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் அந்த ரயிலில் இருக்கும் பானங்களையோ, ஐஸ்கட்டிகளையோ, வறுத்த டிரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றை எடுக்க விரும்பினால் அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு குப்பியை எடுக்க வேண்டியதுதான். எடுத்தால் வண்டி நின்று விடும். பிறகு அந்தக் குப்பியை வண்டியில் திரும்ப வைத்தால் தான் அது மீண்டும் ஓட ஆரம்பிக்கும். என்ன ஒரு வசதி! இப்போதும் விருந்து நடைபெற்றால் இந்த இடத்தில் நடத்துகிறார்கள்.
அதில் இன்னும் விசேஷம் அந்த ரயில் பெட்டி முழுவதும் வெள்ளியாம். இன்னிக்கு விற்கிற விலையில் வாங்கணும்னா எவ்வளவு ஆகும்னு யாராவது கணக்குப் புலிங்க கணக்குப் போட்டுச் சொன்னால் நல்லா இருக்கும். பயத்துல மொத்தம் எவ்வளவு கிலோ வெள்ளி இந்த ரயில் செய்யப் பயன்படுத்துனாங்கன்னு கேட்க மறந்துட்டேன். இருந்தாலும் இவ்வளவு பெரிய ரயில் செய்யணும்னா நிறைய வெள்ளி ஆகியிருக்கும்.
இந்தக் கணக்கப் போட்டுக்கிட்டு இருங்க. பிரம்மாண்டத்தின் உண்மை அடுத்த பகுதியில் காத்திருக்கு உங்களுக்காக.
6
இதுவல்லவோ விளக்கு!
சிந்தியா மஹாராஜாக்கள் அரசாங்கம் நடத்திய தர்பாரை இரண்டு பெரிய, பிரம்மாண்டமான அலங்கார விளக்குகள் [CHANDELIERS] அலங்கரிக்கின்றன.
ஒவ்வொரு CHANDELIERS-ம் சுமார் 3.5 டன் எடையுள்ளதெனவும் அதில் 248 மெழுகுவர்த்திகளை ஏற்றலாம் என எங்களுடன் வந்த கைடு சொல்லிக்கொண்டு வந்தார். ஒன்றே இவ்வளவு எடை என்றால், இரண்டையும் சேர்த்தால் அப்பா எவ்வளவு எடை? அதாவது 7 டன்கள்.
இந்த தர்பார் நடக்கும் பெரிய அறையின் மேல்பாகம் முழுவதும் தங்கத்தினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர CHANDELIERS – லும் மொத்தம் 56 கிலோ தங்கம் பயன்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றும் இடங்கள் முலாம் பூசப்பட்டு உள்ளன. ”56 கிலோ தங்கமா!” என்று அங்கே பிளந்த வாய் பல நிமிடங்கள் வரை மூடவேயில்லை நிறைய பேருக்கு. இன்றைய தேதிக்கு, இந்த தங்கத்திற்கு மட்டுமே 15 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பாகும்.
சரி 7 டன் எடையுள்ள இவற்றை உத்திரத்தில் மாட்டினால் அது தாங்குமா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது. இப்ப கட்டற கட்டிடமெல்லாம் சும்மா இரண்டு ஃபேன் மாட்டினாலே தாங்குமா என்று கேட்கணும். இதுல இவ்வளவு எடையிருந்தா என்ன ஆகிறது?
இவற்றை மாட்டுவதற்கு முன்னரே இந்த அரண்மணையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை சாய்வான ஒரு பாதை அமைத்து அதன் வழியே 10 யானைகளை அழைத்து வந்து அந்த அறை தாங்குகிறதா என்று பார்த்தார்களாம்.
இப்போது மாதிரி எந்த விதமான வசதிகளும் இல்லாமல் இப்படி ஒரு வழியை வைத்து அதன் தாங்கும் திறனைக் கண்டுபிடித்து இருக்கிறார்களே. என்னே அவர்களின் திறமை!
இந்த தர்பார் அறையில் விரிக்கப்பட்டு இருக்கும் கம்பளம் [Carpet] ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய கம்பளம் ஆகும். இந்தக் கம்பளம் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களால் நெய்யப்பட்டதாம்.
இந்த அறையின் வெளியே சிவப்பு வண்ணத்திலும் CHANDELIERS மாட்டி வைத்திருக்கிறார்கள். இந்த தர்பாரின் மேல்பக்கத்தில் நின்றபடி அந்த 7 டன் விளக்குத் தொகுப்புகளைப் பார்க்க மாடிப்படிகள் இருக்கின்றன. இத்தனை பிரம்மாண்டத்தில் மாடிப்படிகள் மட்டும் சாதாரணமாக இருந்தால் நன்றாகவா இருக்கும். இந்த மாடிப்படிகள் முழுவதும் பளிங்கினால் செய்யப்பட்டு இருக்கிறது.
வெளியே சிந்தியா பரம்பரை ராஜாக்கள் வேட்டையாடிய புலிகள் பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மேலே ஒரு காட்டு எருமையின் தலைப்பகுதி வேறு மாட்டி வைத்திருக்கிறார்கள். இப்ப புலிகளின் எண்ணிக்கைக் குறைந்து விட்டது என புலம்பி என்ன பயன்? அந்த காலத்திலேயே இது போன்ற ராஜாக்களும், வெள்ளைக் காரர்களும் நமது நாட்டின் சொத்தை மட்டும் அடித்துக் கொள்ளவில்லை. நமது வனங்களின் செல்வத்தினையும் அல்லவா அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இங்கிருந்து வெளியே வந்தால் ராஜாக்கள் பயன்படுத்திய அலங்கார வண்டிகள் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு B.M.W. கூட இருந்தது. கண்ணாடியாலான ஒரு செயற்கை நீறுற்று கூட இருக்கிறது. நட்ட நடுவே ஒரு பெரிய குப்பி இருக்கிறது. எப்படி அது புவியீர்ப்பு சக்தியை மீறி சாய்ந்து நிற்கிறது என்பது ஆச்சரியம். அந்தக் குப்பியில் தான் உற்சாக பானங்கள் வைத்திருப்பார்களாம். ஒரு வேளை அதைக் குடிப்பவர்களுக்குத்தான் பிரச்சனை போல. அது என்றுமே நிலையாகத்தான் இருக்கும்.
இன்னும் பல பிரம்மாண்டமான விஷயங்கள் இந்த அரண்மணையில் இருக்கிறது. எல்லாவற்றையும் இங்கே சொல்லி விட்டால், நீங்கள் நேரில் சென்று பார்க்கும் போது நான் சொல்லாததையும் பார்த்த திருப்தி உங்களுக்கும் கிடைக்க வேண்டுமே! முடிந்தால் நேரில் சென்று பாருங்கள்.
இந்த பகுதிகளில் இது வரை சொன்ன விஷயங்களை மனதிலே நினைத்தபடி காத்திருங்கள். அடுத்ததாய் உங்களை குவாலியரின் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்போகிறேன்.
7
வண்ணமயமான கோட்டை
ஜெய்விலாஸ் அரண்மணையில் இருந்த பல்வேறு பொருட்கள், அதன் பிரம்மாண்டம் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து வெளி வராமலேயே அடுத்து நாங்கள் சென்ற இடம் குவாலியர் கோட்டை.
சுமார் 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இக்கோட்டை அமைந்துள்ளது. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னரே கட்டப்பட்டு ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சியிலும் பல மாற்றங்களைக் கண்ட இது பல வரலாற்று நிகழ்வுகளின் சின்னமாய் இன்றும் நின்று கொண்டிருக்கிறது. மன் மந்திர், கரன் பேலஸ், ஜஹாங்கீர் மஹால், ஷாஜஹான் மஹால், குஜ்ரி மஹால் என்ற பெயர்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்ட மாளிகைகள் இக்கோட்டையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இருக்கிறது.
வட இந்தியாவில் இருக்கும் பல கோட்டைகளில் முக்கியமான ஒரு கோட்டையாக குவாலியர் கோட்டை இருந்திருக்கிறது. கடந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பல ஏற்ற இறக்கங்களை கண்ட இந்த கோட்டையில் இருந்து தோமர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், சிந்தியா மன்னர்கள் என்று பலர் ஆட்சி புரிந்து இருக்கிறார்கள். ராணிகளில் ஒருவரான ஜான்சி ராணி கூட இந்த குவாலியர் கோட்டையினைக் கைப்பற்றியிருக்கிறார்.
கோட்டையின் வெளிப்புற சுவர்களில் நீல நிற வண்ணத்தில் இருக்கும் யானை, கிளி, மற்றும் பல விலங்குகளின் சிற்பங்களை இன்றைக்கும் காண முடிகிறது. பல்வேறு படையெடுப்புகளில் அழிந்து விட்ட சிற்பக்கலையின் சிறப்பு பற்றி இங்கே மீதியிருக்கும் சில சிற்பங்கள் பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றன எனச் சொன்னால் மிகையாகாது.
பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கோட்டையினைச் சுற்றி பல மாளிகைகள் கட்டப்பட்டு இருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்றான ”மன் மந்திர்” 1486 முதல் 1517 வரை உள்ள வருடங்களில் ராஜா மான்சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கே வெளிச்சுவற்றில் பதிக்கப்பட்ட ஓடுகள் காலத்தின் பலதரப்பட்ட தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எஞ்சியிருக்கும் சில, இவற்றின் அழகை வெளிப்படுத்தி, முழுவதும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த மாளிகைக்குள்ளே இருக்கும் பெரிய அறைகளில் பெரிய பெரிய இசை மேதைகளிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்வார்களாம் பெண்கள். அப்படிக் கற்றுக்கொள்ளும்போது ஆசிரியர் ஒரு புறம் இருக்க, மறைவிற்குப் பின்புறம் இருப்பார்களாம் பெண்கள். அவர்களுக்கு திரைச்சீலைகளாக அமைக்கப்பட்டது எதனால் என்று தெரிந்ததும் அவ்வளவு ஆச்சரியம் எங்களுக்கு. அத்திரைச் சீலைகள் எல்லாமுமே கற்களால் ஆனவை. அவ்வளவு மெலிதாகச் செதுக்கப்பட்டு ஆங்காங்கே சிறிய துளைகள் இடப்பட்டு இருந்தன.
முகலாயர்கள் காலத்தில் இக் கோட்டை கடுமையான சிறைத் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்ட ஒரு சிறைச்சாலையாக இருந்திருக்கிறது. முகலாய மன்னர் ஔரங்கசீப் தனது தம்பி முரத் என்பவரை இங்கே தான் சிறை வைத்திருக்கிறார். கடைசியில் அவரது தம்பி கொல்லப்பட்டதும் இங்கேதான்.
இன்னும் பலப் பல வரலாற்று நிகழ்வுகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் இக் கோட்டையின் முழு வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு நேரமும் பிடிப்பும் இருக்க வேண்டும்.
இங்கே தினமும் மாலை வேளைகளில் “Light and Sound Show” நடக்கிறது. இரவு 07.30 மணி முதல் 08.15 வரை ஹிந்தி மொழியிலும் 08.30 மணி முதல் 09.15 வரை ஆங்கில மொழியிலும் இக்கோட்டையின் வரலாற்றினை நம் கண் முன்னே ஒலி, ஒளி கொண்டு நமக்குக் காண்பிக்கிறார்கள்.
அட இருங்க மணி இன்னும் 07.30 ஆகலையே அதுக்குள்ளே என்ன அவசரம்?. அதற்குள் நாம் இன்னும் சில இடங்களைப் பார்த்துட்டு வந்துடலாம்,சரியா. எங்கேன்னு கேட்கறீங்களா? மாமியார்-மருமகள் கோவிலுக்குத் தான்.
8
மாமியார் – மருமகள் கோவில்
அது என்னங்க Saas-Bahu Mandir? அதாங்க மாமியார் [Saas] – மருமகள் [Bahu] கோவில்? அட கேட்க புதுசா இருக்கேன்னுதான் நாங்களும் ஆர்வத்துடன் அங்கு சென்றோம்.
சற்றேறக்குறைய 10-11-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் இது. அப்போதைய குவாலியர் மாகாணத்தினை ஆண்ட ”கச்சபகாடாஸ்” அரசர்கள் காலத்தில் நிறைய கோவில்கள் கட்டியிருக்கின்றனர். அவற்றில் இரண்டு தான் குவாலியர் கோட்டையின் அருகே கட்டப்பட்டு இருக்கும் இந்த Saas-Bahu Mandir.
இக்கோவிலைப் பார்க்கும் மாமியார்கள் சற்றே பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஏனெனில் மருமகள் கோவிலை விட மாமியார் கோவில் தான் அளவில் பெரியது. அப்ப நாங்க என்ன சும்மாவா, என என்னை சண்டைக்கு இழுக்கும் மருமகள் சங்க உறுப்பினர்களே நீங்களும் பெருமைப்பட விஷயம் இருக்கிறது.
இரு கோவில்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் மருமகள் கோவில் தான் இன்றும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாமியார் கோவில் பாவம் சற்றே இடிபாடுகளுடன் காணப்படுகின்றது.
சரி இந்த கோவில்களில் என்ன மூர்த்தி வைத்து பூஜித்தார்கள்? மாமியார்-மருமகள்களையா என்று கேட்டால் அதுதான் இல்லை. இங்கே பூஜிக்கப்பட்டது பகவான் ஸ்ரீ விஷ்ணுவை. விஷ்ணு பகவான் கோவிலை எதற்கு மாமியார்-மருமகள் கோவில்என்று சொல்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏற்பட்டது.
பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கு பல பெயர்கள் இருக்கிறதல்லவா. அதில் ஒரு பெயர் ”ஷாஸ்த்ர பகு” என்பதாம். இந்த பெயரில் முதலில் அழைக்கப்பட்ட இந்த கோவில்கள், நாளடைவில் மருவி “சாஸ்-பகு” அதாவது மாமியார்-மருமகள் கோவில் ஆகிவிட்டதாம்.
மிகச் சிறப்பான கட்டமைப்பு கொண்டவை இந்த இரு கோவில்களும். பிரமீட் வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இவைகள் நிறைய தூண்களின் பலத்தில் நிற்கின்றன.
இரண்டு கோவில்களிலுமே சிற்பங்கள் மிக அழகாய் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சிற்பங்களின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றியது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பழங்கால கோட்டைகளையும் கோவில்களையும் பார்க்க வந்து கொண்டு இருக்கும் வெளி நாட்டவர்கள் இக்கோவில்களையும் பார்க்கத் தவறுவதில்லை. நாங்கள் அங்கு இருந்தபோது ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மூன்று பேருக்கு ஒரு பனிரெண்டு வயது சிறுவன் இக்கோவிலின் சிறப்பு பற்றி ஸ்பேனிஷ் மொழியில் விளக்கிக் கொண்டிருந்தான்.
அந்த மூன்று பேருக்கு மட்டுமல்ல பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம். பள்ளிப் படிக்கட்டைக் கூட மிதிக்காத அச்சிறுவன் பழக்கத்திலேயே ஸ்பேனிஷ், ஃப்ரென்ச், ஆங்கிலம் என நிறைய பாஷைகளை நன்கு பேசுகிறான் என அந்த வெளிநாட்டவர்களே சொல்லி ஆச்சரியப்பட்டுப் போனார்கள். நம் குழந்தைகளுக்கு திறமை நிறைய கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை வழிப்படுத்தத்தான் ஆள் இல்லை.
என்ன மாமியார்-மருமகள் கோவில் பார்த்துட்டீங்களா? அடுத்ததாய் நாம் செல்லப்போவது ”தேலி கா மந்திர்”. காத்திருங்கள்.
9
தேலி கா மந்திர்
மாமியார் மருமகள் கோவிலிலிருந்து நாங்கள் அடுத்ததாய் சென்றது “தேலி கா மந்திர்”. ஹிந்தியில் “தேல்” என்றால் எண்ணெய். ”தேலி” என்றால் எண்ணெய் மொத்த வியாபாரி. ஒரு எண்ணெய் மொத்த வியாபாரியின் பணத்தினை வைத்துக் கொண்டு கட்டப்பட்டதால் இந்த கோவிலுக்கு “தேலி கா மந்திர்” என்ற பெயர் ஏற்பட்டது என்று சொல்கிறது இங்கே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு.
பிரதிஹாரா வம்சத்தினைச் சேர்ந்த ராஜா மிஹிர போஜா அவர்களின் காலத்தில் கட்டப்பட்ட இக் கோவிலின் உயரம் 30 மீட்டர். குவாலியர் கோட்டையில் இருக்கும் கட்டிடங்களிலேயே மிக உயரமான கோவில் இது தான்.
கிழக்குப் பக்கத்தில் இருக்கும் படிக்கட்டுகள் வழியே உள்ளே சென்றால் உள்ளே கர்ப்பக்கிரகம், சுற்றுப்பிரகாரம் என இருக்கிறது. இக்கோவிலின் சிறப்பு, இதன் கட்டமைப்பில் தென் இந்திய மற்றும் வட இந்திய பாணிகள் இரண்டுமே உபயோகப்பட்டு இருக்கிறது என்பது. அத்தனை வருடங்களுக்கு முன்னரே இது சாத்தியமாகி இருக்கிறது என்று நினைக்கும் போது ஆச்சரியம்தான்.
கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் நிறைய சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. கட்டி பல நூற்றாண்டுகள் ஆனதாலும், ஒழுங்கான பராமரிப்பு இல்லாததாலும், பல சிற்பங்கள் சிதிலப்பட்டு கிடக்கிறது.
முதலில் விஷ்ணு பகவான் இருந்த கோவிலாகவும் பின்னாட்களில் சிவனுக்கெனவும் இருந்ததாக இங்கே குறிப்புகள் காணப்படுகின்றன.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோவிலின் வெளியே ஒரு நுழைவாயிலும், இரு சிறிய மண்டபங்களும் கட்டப்பட்டதாம். கோவில் மட்டுமல்லாது இங்கே இருக்கும் பூங்காவும் பராமரிக்கப்படாமல் இருக்கிறது. நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இவ்விடத்தினை மேலும் கவனம் செலுத்தி பராமரித்தால் நல்லது.
இக் கோவிலின் அருகில் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந் சிங் அவர்களின் நினைவாய் கட்டப்பட்ட ஒரு குருத்வாராவும் இருக்கிறது. நேரமின்மை காரணமாக அங்கே செல்ல இயலவில்லை. இப்போது புதியதாய் கட்டப்பட்டாலும், இந்த குருத்வாரா இருக்கும் இடத்தின் வாசலிலேயே முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய குருத்வாரா மேடை இப்போதும் இருக்கிறதாம்.
குவாலியர் கோட்டை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்ட ஔரங்கசீப் காலத்தில் இங்கே சிறை பிடிக்கப்பட்ட குரு கோவிந்த் சிங் சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பலரது முயற்சியின் காரணமாய் அவருக்கு விடுதலை வழங்கினாராம் ஔரங்கசீப். ஆனால் தன்னுடன் சிறையில் இருந்த சுமார் 52 ராஜாக்களையும் விடுதலை செய்தால்தான் தானும் வெளியேறுவேன் எனச் சொல்லி அவர்களையும் விடுவித்ததாய் சிலர் சொல்கிறார்கள். நடந்தது குரு கோவிந்த் சிங்கிற்கும், ஔரங்கசீப்பிற்குமே வெளிச்சம்.
அட மணி ஆகிவிட்டதே. ஒலி-ஒளி காட்சி ஆரம்பித்து விடுமே. வாருங்கள் அங்கு செல்வோம். நாங்கள் நேரம் அதிகமாகிவிடும் என்பதால் ஹிந்தி பாஷையிலே தான் பார்த்தோம். அதில் இருந்து சில விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். காத்திருங்கள்.
10
கோட்டையில் ஒலியும் ஒளியும்
மாலை 07.30 மணி. கோட்டையை சுற்றி இருக்கும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டன. எங்கள் குழுவில் உள்ள பதினான்கு பேர் தவிர இன்னுமொரு இருபது பேர் கூட்டத்தில் இருந்தார்கள். படிக்கட்டுகளில் எங்களுக்கென விரிக்கப்பட்டிருந்த நீளமான பாய்களில் அமர்ந்திருந்தோம்.
நிசப்தமான அந்த வெளியில், ஒலியும் ஒளியும் ஆரம்பிக்கப்பட்டு கோபாச[cha]ல் என்கிற சூத்ரதாரி மூலம் கதை சொல்லப்படுகிறது. அந்த சூத்திரதாரியின் குரலாய் ஒலிப்பது அமிதாப் பச்சன் அவர்களின் கம்பீரமான குரல்.
அவரது குரலில், ஆங்காங்கே எரியும் விளக்குகளில் இக்கோட்டையில் நடந்த நிகழ்வுகள் பலவும் உயிரூட்டம் பெற்று, நம் கண்முன்னே நடந்தேறுவது போல விரிகிறது. பார்க்கும் எல்லோரையும் குவாலியர் நகரம் தோன்றிய காலத்திற்கு அழைத்துச் செல்கிறது இக்காட்சி.
ராஜ்புத் அரசர் சூரஜ் சென் வேட்டைக்குப் புறப்பட்டு வழி தவறி தனியாய் மலைகள் சூழ்ந்த காட்டுக்குள் வருகிறார். அவருக்கு தொண்டை வறண்டு, ஒரு துளி தண்ணீர் கிடைத்தால் கூட தனது ராஜ்ஜியத்தையே எழுதி வைக்கும் அளவுக்கு தண்ணீர் தாகம்! அப்படி தாகத்துடன் வந்து கொண்டு இருக்கும்போது, யாருமே இல்லாத அக்காட்டில் அவர் சந்திப்பது ”குவாலிபா” என்கிற முனி ஸ்ரேஷ்டரை.
தன்னுடைய தண்ணீர் தாகத்தினைச் சொல்லி தண்ணீர் கிடைக்குமா எனக்கேட்ட மன்னர் சூரஜ் சென் அவர்களுக்கு முனிவர் வழி நடத்திச் சென்று காண்பித்தது ஒரு குளம். குளத்தில் இறங்கி தாகம் தீர அவர் குடித்தது குளிர்ந்த, சுவை மிகுந்த, மருத்துவ குணம் நிறைந்த நீர். என்ன ஆச்சரியம்… அவருக்கு நீண்ட நாட்களாய் இருந்த தொழுநோய் நீங்கியதாம் அந்தத் தண்ணீரை அருந்தியவுடன்.
நன்றிக்கடன் செலுத்த விரும்பிய மஹாராஜா, முனிவரின் விருப்பத்திற்கிணங்க, அங்கேயே ஒரு பெரிய குளம் கட்டி, பக்கத்திலேயே கோட்டையையும் கட்டி, அந்த நகரத்தின் பெயரையும் முனிவரின் பெயரை மூலமாகக் கொண்டு குவாலியர் என்று வைத்தாராம். இக் கோட்டையைச் சுற்றி நிறைய மாளிகைகளும், கோவில்களும் கட்டி இருக்கின்றனர் ராஜ்புத் அரசர்கள்.
இப்படி இருந்த சந்தோஷமான வாழ்க்கையில் தீங்கு வந்தது துருக்கிய படையெடுப்பின் மூலம். அதன் பிறகு முகம்மது கஜினி மற்றும் மற்ற முகலாய ராஜாக்களின் படையெடுப்புகள் பற்றி அவ்வளவு அழகாய் இந்த ஒலி-ஒளிக்காட்சியில் காண்பித்தார்கள். அதிலும் முக்கியமாய் ஒரு காட்சி.
“முகலாய மன்னர்கள் ராஜ்புத் மன்னர் மீது படையெடுக்க, அவர்கள் தோற்கும் நிலையில் மன்னரின் மனைவிகள், அரண்மணையில் இருந்த பெண்கள் அனைவரும் “ஜௌஹர்” என்ற அரண்மணையின் பகுதியில் ஒரு பெரிய நெருப்பு வளர்த்து அதனுள் பாய்ந்து தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்ட” நிகழ்ச்சி பற்றிய காட்சிகளை ஒலியும், ஒளியும் கொண்டு நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள். மாண்ட பெண்களின் அழுகுரல்கள், கேட்கும் எல்லோரையும் வருத்தியது உண்மை.
தோல்வி ஏற்பட்டாலும் சில காலத்திற்குப் பின் தோமர்கள் இக்கோட்டையில் கோலோச்சுகிறார்கள். தோமர்கள் காலத்தில் தான் குவாலியர் சிறந்து எல்லா இடங்களிலும் தன்னுடைய புகழைப் பரப்பிக் கொண்டு இருந்ததாம். தோமர்களில் மிகவும் புகழ் பெற்ற ராஜா மான்சிங் காலத்தில் நடந்த சில இனிமையான நிகழ்வுகளுக்கு மட்டுமே இந்த ஒலி-ஒளி காட்சியில் 10 நிமிடத்திற்கு மேல் ஒதுக்கி இருக்கிறார்கள்.
அக் கதையில் ராஜா மான்சிங் காதல் கதையும் வருகிறது. காதல் நம் எல்லோருக்குமே பிடித்தது தானே. அக்காதலும் மற்ற சுவையான விஷயங்களும் அடுத்த பகுதியில்… அதுவரை நீங்கள் காதலித்துக் கொண்டு இருங்கள், கல்யாணம் ஆனவர்கள் எனில் தத்தமது கணவன்/மனைவியை. ”கல்யாணம் ஆகாதவர்கள்?” எனக் கேட்பவர்களுக்கு, வரப் போகும் வாழ்க்கைத் துணை பற்றிய கனவில் இருங்கள்.
11
கண் கவர் காதலி
ராஜா மான்சிங் தனது காலத்தில் தான் ”மன் மந்திர்” கட்டினார் என்பதை முன்பே எழுதியிருந்தேன். இவர் பெரிய ஆளாக இருப்பார் போல. எல்லா ராஜாக்களையும் போல இவருக்கும் ஒரு மனைவி மட்டுமே இல்லை.
ஒரு முறை வேட்டையாடச் செல்லும் போது வழியில் கிராமத்தில் பார்த்த ஒரு பெண் அவ்வளவு அழகு. பார்த்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு இருந்ததாம் அவளது அழகு. ராஜா அந்தப் பெண்ணிடம் ”உன் பெயர் என்ன?” என்று கேட்க, மிகவும் தைரியமாய் ”நன்னி [Nanhi]” என்று தனது பெயரைச் சொன்னாளாம்.
அழகில் மயங்கிய ராஜா அந்தப் பெண்ணிடம் தன்னைக் ”கல்யாணம் செய்து கொள்கிறாயா?” எனக் கேட்கிறார். இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ராஜா மான்சிங் அவர்களுக்கு ஏற்கனவே எட்டு மனைவிகள். பின்னே ராஜாவாச்சே, சும்மாவா?
அந்தப் கிராமத்துப் பெண் அதற்கு போட்ட கட்டளைகள் என்ன தெரியுமா? குவாலியர் கோட்டையின் அருகே தனக்கென தனியாக ஒரு மாளிகை கட்ட வேண்டும். அப்படி கட்டப்படும் மாளிகைக்கு தன்னுடைய ஊரில் ஓடும் ராய் நதியிலிருந்து தனியாக ஒரு கால்வாய் வெட்டப்பட்டு அதிலிருந்து எப்போதும் தண்ணீர் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற இரண்டு கட்டளைகள் போட, ராஜாவாச்சே, இது கூடவா அவருக்கு முடியாது. உடனே “யாரங்கே!” தான்.
உடனே அந்த பெண்ணிற்கு பெயர் மாற்றமும் செய்தார் ராஜா. ஏனோ நன்னி பிடிக்கவில்லை அவருக்கு. “மிருக்நயினி” என்ற பெயர் வைத்து தன்னுடைய ஒன்பதாவது ராணியாக்கிக் கொண்டார். மிருக்நயனி என்றால் மான் போன்ற கண்களை உடையவள் என்று அர்த்தம். கலாரசிகனாய் இருந்திருப்பார் போல ராஜா மான்சிங்.
இந்த ராணிக்கு வாக்குக் கொடுத்தபடி அவருக்காக கட்டிய மாளிகை தான் குஜரி மஹால். இப்போது அங்கே ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. பல நூற்றாண்டுகள் பழமையான பொருட்கள் இங்கே காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறதாம். காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தான் திறந்திருக்கும். நாங்கள் சென்றது அதன் பிறகு என்பதால் பார்க்க முடியவில்லை.
மீண்டும் கோட்டைக்கே வருவோம். இந்தக் கோட்டை ஔரங்கசீப் காலத்தில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. இங்கே சிறைபட்ட எவரும் உயிருடன் வெளியே போனதில்லையாம். அதற்கு விதிவிலக்காய் வெளியே வந்தவர் சீக்கிய குருவில் ஒருவரான குரு ஹர்கோவிந் சிங். இந்தக் காட்சிகளும் ஒலி-ஒளி காட்சியின் போது சொல்லிக் கொண்டு வந்தார் கோபாசல்.
பல நூற்றாண்டு கால கதையை 45 நிமிடங்களில் அடக்கிச் சொல்வது என்பது கடினம்தான். இருப்பினும் அவ்வளவு அழகாய் அதைச் சொல்லிக் கொண்டு அந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவற்றை நம் முன் ஒரு காட்சியாகக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
குவாலிபா முனிவரில் ஆரம்பித்த கதை, அதன் போக்கில் பயணித்து சிந்தியா ராஜாக்கள் வரை வந்து முடிகிறது. நடுநடுவே தான்சேன் பாடிய பாடல்களாய் சில பாடல்கள் பண்டிட் ஜஸ்ராஜ், பீம்சென் ஜோஷி, குமார் கந்தர்வா போன்றோர் குரல்களில் செவிக்கினிமையாய் கேட்டோம். குதிரைகள் ஓடும் சத்தம், போர் நடக்கும் போது கேட்கும் வீரர்களின் வீர முழக்கம், வாள்களால் தாக்கிக் கொண்டு போடும் சத்தம் எல்லாம் நமக்கு தெளிவாய் கேட்கிறது.
விளக்குகள் மீண்டும் எரிய, நல்ல கதை கேட்ட திருப்தியோடு வெளியே வந்து அன்றைய இரவினை நல்ல நினைவுகளோடு கழிக்க ”தான்சேன் ரெசிடென்சி” வந்து சேர்ந்தோம். மனசு அதிலே மூழ்கிக் கிடக்க, கடமைக்கென சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்து சூரியனார் கோவில் செல்ல வேண்டும் என்ற நினைவுடன் பஞ்சணையில் சாய்ந்தோம்.
மீண்டும் சந்திப்போம் சூரியனார் கோவில் அருகே.
12
சூரியனார் கோவில்
சூரியனார் கோவில் என்றதும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது நம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சூரியனார் கோவில் தான். அடுத்ததாய் ஒடிசா மாநிலத்தில் பூரி அருகே இருக்கும் கோனார்க்.
இது போன்று இந்தியாவில் பல இடங்களில் இருக்கலாம். மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அழகிய பூங்காவின் நடுவே கோனார்க் சூரியனார் கோவில் அமைப்பிலேயே அமைந்துள்ளது தான் விவஸ்வான் மந்திர் என்று அழைக்கப்படும் சூரிய பகவானுக்கான கோவில்.
முற்றிலும் கோனார்க் சூரியனார் கோவில் போலவே இது அமைக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில், அதாவது 1986-ஆம் வருடம் தான் [G]கன்ஷ்யாம் தாஸ் [B]பிர்லா அவர்களால் ஆதித்ய பிர்லா ட்ரஸ்ட் மூலம் கட்டப்பட்டது இந்த கோவில். அழகாய் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவிலில் நிறைய சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பார்க்க முடிகிறது.
சுற்றிலும் பல சிற்பங்களைக் காண முடிந்தது. ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அச் சிற்பம் யாருடையது என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. ஆதி சங்கரர், கபீர் தாஸ், சந்த் ஞானேஷ்வர், துளசி தாஸ், வால்மீகி, சூர்தாஸ் போன்ற மகான்கள், வாயுதேவன், குபேரன், ஈஷானதேவன், சூர்ய தேவன், மித்ரா, வருணதேவன் போன்ற பலரது முழு உருவச் சிலைகளை கோவில் கோபுரத்தில் செதுக்கி வைத்துள்ளார்கள்.
சிற்பங்கள் அனைத்துமே மிகவும் நுணுக்கமாகவும், நேர்த்தியுடனும் செதுக்கப்பட்டு இருக்கிறது. Sandstone என்றழைக்கப்படும் மணற்கற்களால் வெளிப்புறமும் கோவில் உள்ளே வெள்ளை சலவைக் கற்களாலும் கட்டப்பட்ட இக்கோவில் உள்ளே சூரிய பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார்.
உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் வெளியே விற்றுக் கொண்டு இருந்த அவரது புகைப்படத்தினை படம் பிடித்து கீழே போட்டு இருக்கிறேன்.
10-15 படிகள் மீதேறி மேலே சென்றால் கோவிலுக்குள் செல்லலாம். படிகளுக்கு மேலே ஏறி கோவிலைச் சுற்றி வந்தால் மேலே சொல்லியுள்ள அனைத்து சிற்பங்களையும் நீங்கள் பொறுமையாய் ரசித்துப் பார்க்கலாம். ஒரு தேரின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது இது. தேரை இழுத்துச் செல்ல ஒரு பக்கத்தில் நான்கு குதிரைகளும், மற்ற பக்கத்தில் மூன்று குதிரைகளும் இருக்கின்றன. சூரிய பகவான் தேரில் 7 குதிரைகள் என்பதை இது குறிக்கிறது. பெரிய பெரிய தேர் சக்கரங்கள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது நன்றாக இருந்தது.
கோவில் இருக்கும் பூங்கா பலவித பூச்செடிகள், மரங்கள் என அழகாக காட்சியளிக்கிறது. மயில்களின் அகவல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. நாங்கள் சென்ற போது இரு மயில்கள் அழகாய் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. படம் எடுக்க எல்லோரும் செய்த அமளி துமளியில் விரைவாக ஓட்டம் எடுத்து, பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டது. அப்படி ஓடிக் கொண்டு இருந்த ஒரு மயிலின் படம் கீழே. நாங்கள் அங்கிருந்து திரும்பும் வரை அதன் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தது. மனிதர்களைக் கண்டு தான் எவ்வளவு பயம் இந்த மயிலுக்கு.
காலையிலேயே சூரிய பகவானின் தரிசனம் பெற்று மீண்டும் தான்சேன் ரெசிடென்சி வந்து அறையைக் காலி செய்து மூன்று இன்னோவா கார்களில் தொடர்ந்தது எங்கள் பயணம், அடுத்த இலக்கான டிக்ரா அணைக்கட்டை நோக்கி.
அடுத்ததாய் உங்களை டிக்ரா அணைக்கட்டின் படகுத் துறையில் சந்திக்கிறேன். ஒரு உல்லாசப் படகுச் சவாரி செல்லக் காத்திருங்கள்.
13
டிக்ரா அணை
சென்ற பகுதியில் உங்களை அணைக்கட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா, வாருங்கள் நண்பர்களே… ஒரு படகு சவாரி செய்யலாம்.
படகு சவாரி செய்வதற்கு முதலில் டிக்ரா அணை இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் அல்லவா? குவாலியரிலிருந்து கிளம்பிய நாங்கள் நகர எல்லை தாண்டி வெளியே வரவே 30 நிமிடத்திற்கு மேல் ஆனது. தேசிய நெடுஞ்சாலை செல்லும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. நடுநடுவே பலகைகளில் ”டிக்ரா” எத்தனை தூரம் என்கிற விவரங்கள் இருந்தன. ஒரு கிளை சாலையில் திரும்பிய பிறகு தான் ஆரம்பித்தது தொல்லை.
நெடுந் தொலைவு வரை ஒரு அறிவிப்புப் பலகை கூட இல்லை. ஆங்காங்கே சாலைகள் பிரிந்து செல்கிறது ஒரு வித அறிவிப்பும் இல்லாமல். ஒரு வழியாய் பதினைந்து இருபது நபர்களிடமாவது வழி கேட்டு, சில சமயங்களில் தவறான வழி சொன்னாலும், தட்டுத் தடுமாறி குவாலியர்-டிக்ரா இடையிலான 23 கிலோ மீட்டர் தொலைவினை ஒன்றரை மணி நேரத்தில் கடந்தோம்.
பயணக் களைப்பினைப் போக்கிக்கொள்ள, மத்திய பிரதேச சுற்றுலாத் துறையின் “Wind and Waves Restaurant”-இல் குளிர்பானங்கள் அருந்திய பிறகு படகுத்துறை நோக்கி சென்றோம்.
டிக்ரா அணைக்கட்டு [Cha]சம்பல் ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. மலைகளுக்கு நடுவில் இருக்கும் அழகிய ஆற்றில் இதைப் பார்க்கும்போது நன்றாக இருந்தது. ஆற்றங்கரையில் ஒரு பெரிய படகினையே அலுவலகமாக செய்து வைத்திருந்தனர்.
நான்கு பேர் அமர்ந்து கொள்ளக் கூடிய படகுகளும், 20 பேர் அமர்ந்து கொள்ளக் கூடிய படகுகளும் இருந்தன. எல்லோரும் சேர்ந்து பயணம் செய்யவே விரும்பியதால், ஒரு பெரிய படகில் பயணம் செய்ய முடிவு செய்து, அதற்கான நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டோம். பயணம் செய்யும் எல்லோருக்கும் பாதுகாப்பு உடைகள் போட்டுக் கொள்ளக் கட்டாயப் படுத்தியது நல்லது எனத் தோன்றியது. பல இடங்களில் இது இல்லாமல் பலியான உயிர்களின் நினைவு வந்து போனது.
விசைப்படகில் எல்லோரும் அமர்ந்து கொண்டபின் படகின் ஓட்டுனர்கள் [இரண்டு பேர்கள்] படகினை செலுத்தினர். அவர்கள் இருவருமே பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ளவில்லை. ஒரு வேளை பெரிய நீச்சல்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு அவசியம் ஏற்படாது என்று நினைத்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ?
10 நிமிடங்கள் விசைப்படகில் பயணம். அணைக்கட்டின் அருகே சென்று பிறகு ஆற்றின் மறு கரை அருகே சென்று ஒரு வட்டம் அடித்து சுற்றிலும் இருக்கும் மலைகளை தரிசித்துத் திரும்பி வந்தோம். ஆற்றில் படகுகள் நிற்கும் இடத்திற்குச் செல்ல ஒரு சிறிய பாலம் இருக்கிறது. பாலத்தின் இரு புறங்களிலும் ஆற்றுக்கு சென்று வந்ததன் அடையாளமாக பல பிளாஸ்டிக் குப்பிகள், வறுவல் பாக்கெட் கவர்கள் என்று சகல குப்பைகளையும் விட்டுச் சென்றிருக்கின்றனர் வந்து சென்றவர்கள்.
படகு சவாரியை நன்கு ரசித்து, முன் சொன்ன “Wind and Waves Restaurant”-இல் மதிய உணவு முடித்து எங்களது அடுத்த இலக்கான ஷிவ்புரி செல்ல தயாரானோம். குவாலியர் நகரத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஷிவ்புரி. சிந்தியா ராஜாக்களின் கோடைக்கால வாசம் இந்த ஷிவ்புரியில் தானாம்.
ஷிவ்புரியில் மாதவ் தேசிய பூங்கா [வனவிலங்கு சரணாலயம்], சத்ரி என்று பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் இருக்கின்றன. அடுத்தடுத்த பகுதிகளில் அவை பற்றி எழுதுகிறேன்.
14
பூங்கொத்துடன் வரவேற்பு
டிக்ரா அணைக்கட்டின் அருகில் நாங்கள் மதிய உணவை முடித்ததும் எங்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய வண்டிகள் இரண்டு மணி நேர பயணம் கழித்து ஷிவ்புரியில் சேர்த்தது. அன்று இரவு நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த Madhya Pradesh Tourist Village, Shivpuri தான் நாங்கள் சேர்ந்த இடம்.
இறங்கி அறை சாவிகள் வாங்குவதற்கு முன்னர் லாபியில் எல்லோரும் அமர்ந்திருந்தோம். வந்திருந்த அனைவருக்கும் ராஜ வரவேற்பு தான். ஒவ்வொருவருக்கும் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றார் அந்த தங்குமிடத்தின் நிர்வாகி. பரவாயில்லையே இப்படி கூட வரவேற்கிறார்களே என்று எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.
வரவேற்பு, அறிமுகங்கள் எல்லாம் முடிந்தபிறகு சிப்பந்திகள் அவரவர் அறைகளில் எங்கள் பைகள் மற்றும் பெட்டிகளைக் கொண்டு சேர்க்க, அரை மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு தேநீர் அருந்தி விட்டு ஷிவ்புரியில் இருக்கும் ”சத்ரி” பார்க்கத் தயாரானோம்.
ஆனால் வருணபகவானின் நோக்கம் வேறாக இருந்தது. மழை பொழிய ஆரம்பிக்கவே லாபியில் காத்திருந்தோம். 10-15 நிமிடங்களுக்குள் மழை நின்றுவிட்டது போல தோன்றவே விரைவில் வண்டிகளில் சென்று அமர்ந்து கிளம்பினோம் வருணபகவானின் விளையாட்டை புரிந்து கொள்ளாமல்.
நாங்கள் தங்கிய இடத்தில் இருந்து 15 நிமிட தூரத்தில் இருக்கிறது சத்ரி. வண்டிகளில் எல்லோரும் அமர்ந்து கிளம்பிய ஐந்தாவது நிமிடத்திலேயே பெருமழை தொடங்கிவிட்டது. “விடாது கருப்பு” என்பது மாதிரி நாங்களும் விடாது பயணித்து ”சத்ரி” சென்றடைந்தோம். வண்டிகளை விட்டு எவரும் இறங்க முடியாத அளவு மழை. அதனால் 15-20 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு தங்குமிடம் திரும்ப முடிவு செய்தோம்.
மாலை முழுவதும் எங்களுக்காய் காத்திருந்தது. என்ன செய்ய என்று குழம்பியபோது, தங்குமிடத்தில் பொழுதுபோக்கிற்காக, டேபிள் டென்னிஸ், கேரம், மற்றும் செஸ் விளையாட ஒரு அறை இருக்கிறது என சொல்லவே, நாங்கள் அங்கு சென்று டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தோம்.
நன்கு விளையாடி வேர்க்க விறுக்க அறையின் சாவி வாங்க வந்தபோது, “நீச்சல் குளம்” பற்றி சொல்லி, ”நீங்கள் அதை உபயோகிக்கலாமே” எனச் சொல்ல, நான் மற்றும் சில நண்பர்கள் அங்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் நீச்சல் குளத்தில் கும்மாளம் தான்…. எனக்கு பிரச்சனையில்லை. குளத்தின் அதிகமான ஆழமே ஐந்து அடிதான். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீச்சல் குளத்தில் குளியலை ரசித்து அறைக்குச் சென்றோம்.
அறைக்குச் சென்று மீண்டும் குளித்து அறையின் வழியே வெளியே பார்த்தால் பின்புறம் ”சாக்யா சாகர்” [Sakhya Sagar] ஆற்றின் அழகிய தோற்றம். அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு. ஆற்றின் அந்தப் பக்கத்தில் அமைந்திருப்பது தான் ”மாதவ் தேசிய பூங்கா” என்ற பெயர் கொண்ட வனவிலங்குகள் சரணாலயம்.
இரவு உணவு முடித்து, ஆற்றினை நோக்கி இருக்கும் கண்ணாடிச் சுவற்றினை மறைத்திருக்கும் திரைச்சீலைகளை விலக்கி ஆறு மற்றும் அடர்ந்த காடுகளைப் பார்த்தபடியே இரவினைக் கழித்தோம். மறு நாள் காலை சீக்கிரமாகவே கிளம்பி நம் விலங்கு நண்பர்களைப் பார்க்கப் போக வேண்டும். ஒரு புலிகூட இருக்கிறதாம் அங்கே. நம் கண்ணுக்குத் தென்படுகிறதா இல்லை நாம் வருவோம் என பயந்து ஒளிந்து கொண்டு விடுகிறதான்னு பார்க்கணும்.
நிஜ மான்களை பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தோடு படுத்ததாலோ என்னவோ தெரியவில்லை, கனவில் “ஓ மானே மானே, உன்னைத்தானே!” பாட்டு.
வனவியல் பூங்காவில் சந்திப்போம்…
15
ஓ மானே மானே… உன்னைத்தானே...
இரவு முழுவதும் கனவில் “ஓ மானே மானே…” என்று ஒரே மான்கள் கூட்டம் தான். அதனால் ஆர்வமுடன் மாதவ் தேசிய பூங்கா செல்ல அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து தயாரானோம். ஆக்ரா-மும்பை மற்றும் ஜான்சி-ஷிவ்புரி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த பூங்காவின் மொத்த பரப்பளவு 156 சதுர கிலோமீட்டர். எங்களது வண்டிகளில் இரண்டும், மத்தியப்பிரதேச சுற்றுலா துறையின் ஒரு திறந்த ஜீப்பிலுமாக பயணத்தைத் தொடங்கினோம்.
வருடத்தின் எல்லா நாட்களும் திறந்திருக்கும் இப்பூங்காவில் நிறைய விலங்குகள் இருக்கின்றனவாம். பூங்காவின் நுழைவாயிலில் இருக்கும் தகவல் மையத்தில் செல்லும் நபர்கள் எண்ணிக்கை, வண்டி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதனுள் செல்வதற்கான நுழைவுச்சீட்டு வாங்கிய பிறகு வன இலாகா ஊழியர் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.
உள்ளே நுழைந்து மெதுவாக பயணத்தினைத் தொடங்கினோம். வேகமாகவோ, ஒலி எழுப்பியபடியோ சென்றால் விலங்குகள், பறவைகளைப் பார்க்க முடியாது என்பதால் மெதுவாகவே வண்டிகள் நகர்ந்தன. வன இலாகா ஊழியர் மூவாயிரத்திற்கும் அதிகமான மான்கள், எண்ணிலடங்கா மயில்கள், காட்டுப் பன்றிகள், பறவைகள், ஒரு புலி, நீல்காய் என்று அழைக்கபடும் மானினம் என பல விலங்குகள் இருப்பதாய் சொன்னார்.
சுத்தமான காற்று, பாழ்படுத்தப்படாத இயற்கைச் சூழல் என்று அதிகாலையில் நன்கு அனுபவிக்க முடிந்தது எங்களால். தில்லியின் மாசுபட்ட காற்றினை சுவாசித்த எனக்கு இது மிகவும் புத்துணர்வு ஊட்டுவதாய் அமைந்தது. பூங்காவில் நுழைந்து பயணித்த சில நிமிடங்களிலேயே நாங்கள் பார்த்தது 1919-ஆம் வருடம் கட்டப்பட்ட Sakhya Sagar Sailing Club.
இந்த கட்டிடம் குவாலியர் மஹாராஜா அவர்களால் முக்கிய புள்ளிகள் தங்குவதற்காக கட்டியது. கட்டிடத்தின் பாதி சாக்யா ஆற்றினுள் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் இருந்து ஆற்றின் முழு அழகையும், பல்வேறு பறவைகள், ஆற்றில் இருக்கும் முதலைகள் போன்றவற்றையும் காண முடிகிறது.
அங்கிருந்து கிளம்பி வனத்தினுள் செல்லும் போது வழியில் பார்த்தது “ஷூட்டிங் பாக்ஸ்”. 1936-ஆம் வருடம் சாக்யா சாகர் ஆற்றில் கட்டியிருக்கும் அணையின் மீது கட்டப்பட்டது இந்த அறை. இங்கிருந்தபடியே வனத்தில் இருக்கும் புலிகளைக் கொல்வார்களாம்… என்னே அவர்களது வீரம்! புலிகளைக் கொல்வது தவிர இங்கிருந்தபடியே பறவைகள், அணைக்கட்டின் கற்களில் வந்து படுத்திருக்கும் முதலைகள் ஆகியவற்றைக் கண்டு களிப்பார்களாம் அரசர் மற்றும் அவரது பரிவாரங்கள்.
வனத்தினுள் அடுத்து வருவது George Castle. இதன் பின்னும் ஒரு கதை இருக்கிறது. ஜிவாஜி ராவ் சிந்தியா அவர்களால் 1911 –ஆம் வருடம் கட்டப்பட்டது இக்கட்டிடம். ஆங்கிலேய அரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்த வழியே புலி வேட்டைக்காக வரும்போது ஒரு இரவு தங்குவதற்காகக் கட்டப்பட்டதாம் இந்த இடம். இதில் வேதனை என்னவென்றால் அரசர் வரும் வழியிலியே புலியைக் கொன்று விட்டதால் இங்கு வரக்கூட இல்லை. இந்தக் கட்டிடத்தில் தரையில் இத்தாலியிலிருந்து தருவிக்கப்பட்ட சிறிய கற்கள் [tiles] பதிக்கப்பட்டுள்ளன. பல லட்சங்கள் செலவு செய்து கட்டப்பட்ட இக் கட்டிடத்தில் இப்போது யாரும் வசிப்பதில்லை என்று சொல்வதற்கில்லை. நிறைய வௌவால்களும், அவ்வப்போது விலங்குகளும் வந்து தங்குகிறதாம்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் சுத்தமான காற்றையும் இயற்கைச் சூழலையும் பார்த்து ரசித்தோம். எங்களது மொத்த பயணத்தின் போது நாங்கள் நிறைய மான்களையும், மயில்களையும் பார்க்க முடிந்தது. ஒரு சில பறவைகள், ஒரு காட்டுப் பன்றி, சில லங்கூர் வகை குரங்குகள் ஆகியவையும் கண்ணுக்கு புலப்பட்டன.
மொத்தத்தில் ஒரு சுகானுபவம் அது. இருக்கும் ஒரு புலியையும் காண முடியவில்லை என சிலருக்கு வருத்தம். இந்தப் புலி வருகிறது என்று தெரிந்ததும் அந்தப் புலி ஓடி ஒளிந்து விட்டது என்று சொல்ல முடியாமல் என் தன்னடக்கம் தடுத்து விட்டது!
அடுத்ததாய் நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே இருக்கும் “பதையா குண்ட்” என்ற இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்…
16
கனிமம் நிறைந்த இயற்கை ஊற்று
ஷிவ்புரிக்கு வந்ததிலிருந்தே நாங்கள் தங்கியிருந்த சுற்றுலா கிராமத்தின் [டூரிஸ்ட் வில்லேஜ்] நிர்வாகி எங்களை ஒரு இடத்திற்குக் கண்டிப்பாக செல்லும்படி சொன்னார். அந்த இடத்தின் பெயர் ”பதையா குண்ட்” [Bhadaiya Kund].
தங்குமிடத்தில் இருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் ஒரு சந்தில் 20 மீட்டர் உள்ளே சென்றால் பதையா குண்ட் செல்வதற்கான படிக்கட்டுகள் தென்படுகின்றன. பாறைகளில் அமைந்துள்ள 50 படிக்கட்டுகள் மூலமாக இறங்கி உள்ளே சென்றால் கீழே ஒரு குகை போன்ற அமைப்பு தெரிகிறது.
அழகிய தூண்கள் கட்டப்பட்டு அதன் கீழே ஒரு சிறிய கோவில் இருக்கிறது. கோவிலில் சிவன் லிங்க ரூபமாக காட்சி தருகிறார். கோவிலின் மேலே இருந்து தண்ணீர் அருவிபோல பொழிந்து கொண்டிருக்கிறது. சிவலிங்கம் இருக்கும் இடத்திலும் தண்ணீர் ஊற்று எடுத்து வருகிறது. இந்த தண்ணீர் நிறைய மருத்துவ குணம் உடையது என்றும், நிறைய கனிமங்கள் நிறைந்தது என்றும் கூறுகின்றனர்.
நாங்கள் சென்றிருந்தபோது நிறைய சுற்றுலா பயணிகள் அங்கே குளித்து விட்டு சிவபிரானை தங்கள் கைகளாலேயே பூஜித்து விட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டிருந்தனர்.
எல்லாம் துறந்த முனிவர் போல கொட்டும் தண்ணீருக்குக் கீழே அமர்ந்து இருந்த ஒரு இளைஞர் சிறிது நேரத்திற்குப் பின் தண்ணீருக்குள் ஒரு பாய்ச்சல். பிறகு ஒரு துண்டினை அணிந்து நேராக சிவனை தரிசிக்கச் சென்று விட்டார்.
கனி… அட கனிமம் என்று சொல்ல வந்தேன். கனிமம் நிறைந்த அந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு அங்கே சில புகைப்படங்களையும் கிளிக்கிவிட்டு அறைக்குத் திரும்பினோம். காலை உணவு முடித்து ஒரு முக்கியமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
அந்த இடம் என்ன எனக் கேட்பவர்களுக்கு, அடுத்த பகுதி வரை காத்திருங்கள்….
17
ராஜா-ராணி குடைகள்
பகுதி-14-ல் ”பூங்கொத்துடன் வரவேற்பு” எனும் தலைப்பில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாநிலத்தில் இருக்கும் சத்ரி பற்றி சொல்லியிருந்தேன். முதல் நாள் மாலை பெய்த மழையின் காரணமாய் அங்கு செல்ல இயலவில்லை. எப்படியும் சென்று விடுவது என முடிவு செய்து, “மாதவ் தேசிய பூங்கா” மற்றும் ”பதையா குண்ட்” [Bhadaiya Kund] ஆகியவைகளை பார்த்த பிறகு காலை உணவை முடித்துக்கொண்டு 10 மணிக்கு அங்கு செல்ல கிளம்பினோம்.
மஹாராஜா மாதோ ராவ் சிந்தியா மற்றும் மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்கள் இருவருக்குமான குடைகள் இவை. ”சத்ரி” என்பது இவ்வுலகில் நல்ல விஷயங்களைச் செய்தவர்களுக்கான சமாதி். இந்த குடைகள் பொதுவாக போரில் வீர மரணம் எய்திய மராட்டிய மஹாராஜாக்களுக்காக கட்டப்பட்டு வந்தன. சிந்தியா ராஜா-ராணிக்காகக் கட்டப்பட்டவையே இந்த மிக அழகிய குடைகள்.
இந்த இடத்தினை நிர்வாகம் செய்துவரும் அறக்கட்டளையின் திரு மோஹிதே அவர்கள் இந்த இடம் முழுதும் எங்களுடன் வந்து அதன் சிறப்பினை விளக்கிச் சொன்னார். அவர் சொன்ன நிறைய விஷயங்கள் அந்த இடத்தின் பெருமையை உணர்த்தியது.
மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்களின் அமர்ந்த நிலையில் உள்ள முழு உருவச் சிலை இருக்கிறது. அந்த இடத்தின் எதிரே ஒரு பெரிய மண்டபம். அதில் தினமும் காலை நேரத்தில் பிரசங்கங்கள் நடைபெறுகின்றன. மாலையில் வாத்திய இசையுடன் கூடிய பாடல்களை இசைக்கிறார்கள்.
மஹாராணி மற்றும் மஹாராஜா அவர்களின் குடைகளின் உள்ளே இருக்கும் அரங்குகளில் நிறைய மின்விசிறிகள் இருக்கின்றன. அவற்றின் இறக்கைகள் மரத்தினால் ஆனவை என்பது ஒரு சிறப்பு. இன்னுமொரு சிறப்பு இந்த மின்விசிறிகள் ஏ.சி. டி.சி என்ற இரண்டிலும் இயங்கும் விதமாய் அமைந்துள்ளது. இப்போதும் இயங்குகிறது என்று திரு மோஹிதே அவர்கள் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
இந்தக் குடைகளுக்கு நடுவே அழகாய் வடிவமைக்கப்பட்ட குளம் இருக்கிறது. குளத்திற்கு நீர் பக்கத்தில் இருக்கும் ஆற்றிலிருந்து வருகிறது. இந்தக் குடைகளைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் குளத்தில் நிறைய குப்பைகளைப் போட்டுச் சென்றிருக்கிறார்கள். திரு மோஹிதே அவர்கள் இதைப் பற்றி சொல்லும்போது தினமும் குளத்தினை சுத்தம் செய்தாலும், அடுத்து வருபவர்கள் போட்டு விடுகிறார்கள் என்று எங்களிடம் குறைபட்டார்.
இங்கே ”கதம்” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மரம் இருக்கிறது. 125 வயதான இந்த மரம், 1996 வருடம் இந்திய அரசாங்கத்தினால் ”மஹாவ்ருக்ஷ் புரஸ்கார்” வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருக்கிறது. இந்த மரத்தின் உயரம் 20.7 மீட்டர்.
குளத்தின் இரண்டு பக்கங்களிலும் இரு கோவில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. ஒரு கோவிலில் கருப்பு நிற இராமரும், பக்கத்தில் சீதாதேவி மற்றும் இலக்குவனும் இருக்க, வெளியே கைகளை கூப்பியபடி ஹனுமனும் நின்று கொண்டு இருக்கிறார். மற்ற பக்கத்தில் இருக்கும் கோவிலில் புல்லாங்குழல் ஊதியபடி கருமை நிற கண்ணனும், ராதையும் இருக்கிறார்கள்.
குளத்தின் நடுவே இருக்கும் ஒரு மேடையில் சிவலிங்கமும் அதன் எதிரே ஸ்படிகத்தினால் ஆன ஒரு நந்தியும் இருக்கிறது. சிவலிங்கத்தின் மேலே இயற்கையிலேயே பல விஷயங்கள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் ஒரு பகுதியில் நந்தியின் உருவம் தெரிகிறது. இன்னொரு பக்கத்தில் சிவனின் உடுக்கையும் தெரிகிறது. எங்களுக்கு திரு மோஹிதே அவர்கள் சமய சார்பான பல விஷயங்களை விளக்கினார்.
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவற்றினை அடுத்த பகுதியில் பார்ப்போம்…
18
பளிங்கினால் ஒரு மாளிகை…
சென்ற பகுதியில் குடைகள் பற்றி சொல்லும் போது, மஹாராணியின் குடை, 125 வயதான ”கதம்” மரம், சிவலிங்கத்தின் சிறப்புகள் பற்றி பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கப் போவது பளிங்கினால் ஒரு மாளிகை… கொஞ்சம் பொறுங்க நான் சொல்லப்போவது ”வல்லவன் ஒருவன்” படத்தில் வரும் பாடலைப் பற்றியது அல்ல.
மஹாராஜா மாதோ ராவ் சிந்தியா அவர்களுக்கான குடை தான் இந்த ”பளிங்கினால் ஒரு மாளிகை….” அப்பப்பா.. எத்தனை கலை நுணுக்கத்தோடு கூடிய வேலைப்பாடுகள். பளிங்குக் கற்களில் கட்டப்பட்ட தூண்கள், அத்தூண்களின் நடுநடுவே வேறு கற்களைக் கொண்டு செய்யப்பட்ட பறவை, வண்ணத்துப்பூச்சி, பூக்கள் என எல்லாமே அருமை.
பூக்களின் வடிவங்கள், வேலைப்பாடுகள் எல்லாமே விலை மதிப்புள்ள கற்கள், படிமங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன. கைவிளக்கு கொண்டு அக்கற்கள் மேல் ஒளிபாய்ச்ச, ஒளி கற்களை ஊடுருவி செல்லும் விதமாய் இருக்கிறது. எத்தனை விதமான வேலைப்பாடுகள்… ஆச்சரியமளிக்கும் விதமாகக் கட்டப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து வெளியே வரவே மனமில்லை.
இந்த மாளிகைக்குள் செல்ல நிறைய பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளிக் கதவுகள் இருக்கின்றன. மேலும் பளிங்குக் கற்களால் ஆன கதவுகளும், ஜன்னல்களும் இருக்கின்றன. பளிங்கு கதவுகள் எனும் போது நிச்சயம் அதன் எடை அதிகமாகத்தான் இருக்கும். “எப்படி திறந்து மூடுவது?” என்ற கேள்வி எங்கள் அனைவரின் மனதிலும். அதற்கும் பதில் இருந்தது திரு மோஹிதே அவர்களிடம்.
இந்த கதவுகள் பிணைக்கப்பட்டிருப்பது வெள்ளியால் ஆன பிணைப்புகளால் [HINGES]. இரண்டு வயதே ஆன சிறுவனால் கூட இதனை சுலபமாகத் திறந்து விட முடியும் என்று கூறிய அவர் அதை இரண்டு விரல்களாலேயே திறந்தும் காட்டினார்.
குடைக்குள்ளே திரு மாதோ ராவ் சிந்தியா அவர்களின் முழு உருவச் சிலை இருக்கிறது. அவரின் சிலைக்கு முன்னே ஒரு சிவலிங்கமும், அதற்கு முன் ஒரு கரு வண்ண நந்தியின் சிலையும் இருக்கிறது. எதிரே இருக்கும் அரங்கத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த பளிங்குக் கல் தூண்கள் தவிர, இரண்டு அலங்கார விளக்குகளும், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட கூரைகளும் இருக்கின்றன. இங்கும் மரத்தினால் ஆன இறக்கைகள் கொண்ட மின்விசிறிகள் இருக்கின்றன.
மஹாராணி குடைக்குள் இருந்த மின்விசிறிகளுக்கும் மஹாராஜா குடைக்குள் இருந்த மின்விசிறிகளுக்கும் இருந்த வித்தியாசம் – மஹாராஜாவின் குடையில் இருந்த மின்விசிறிகளில் தங்கத்தினால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் ஆண்களுக்கும் தங்கத்தின் மேல் மோகம் இருந்திருக்கிறது போல! உடனே இப்போதிருக்கும் ஆண்களுக்கு தங்கத்தின் மீது மோகம் இல்லையா என்று கேட்கும் சக பதிவர்களுக்கு, ”இது என்னுடைய கருத்து அல்ல, என்னுடன் வந்த மிசோ மாநில பெண்மணியின் கருத்து” என்பதை சொல்லிக் கொள்ள விழைகிறேன்… [அப்பாடா நான் தப்பித்தேன்….]
சுற்றிச் சுற்றி இருக்கும் பலவித அதிசயங்களையும் பார்த்து ”நமக்கும் யாராவது இப்படி குடை கட்டுவார்களா?” என்று யோசித்தபடிதான் நாங்கள் எல்லோரும் இருந்தோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த இரண்டு குடைகளும் அமைந்திருக்கும் இடத்தில் நிறைய மரங்களும், பூச்செடிகளும் அமைத்திருக்கிறார்கள். வெளியே வர மனமில்லையெனிலும் வெளியே வந்துதானே ஆகவேண்டும் என்பதால் வெளியே வந்தோம்.
வரும்போது கிருஷ்ணர் கோவிலுக்கு எதிரே ஒரு நீண்ட நான்கு பேர் அமரக்கூடிய கல்லால் ஆன இருக்கை ஒன்று இருந்தது. நீண்ட நேரம் கால்கடுக்க சுற்றியதற்கு இதமாய் இருந்தது. ஒரே பளிங்குக் கல்லினால் ஆன இந்த இருக்கையில் நிறைய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிவிட்டு, நாங்கள் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தோம்.
மதிய உணவு எடுத்துக் கொண்டபின் நாங்கள் சென்ற இடம் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன். நம் வனங்களில், நாட்டில் இருக்கும் பல விதமான மரங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் சில பொருட்கள் எப்படி பயன்படுகின்றன என்பது பற்றி பார்க்கலாம் அடுத்த பகிர்வில்.
19
என்ன விலை அழகே…
இப்போதெல்லாம் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்களும், மருந்துகளும் நமக்கு கடைகளில் கிடைக்கின்றன. இவையெல்லாம் எப்படி தயாரிக்கப்படுகின்றன, இவற்றுக்கு என்ன மூலப் பொருள் என்று என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா நாம்? இதற்கான உங்களின் பதில்”நிச்சயமாக இல்லை” என்பதாகத்தான் இருக்கும்.
இந்தியாவில் நிறைய Herbal Products வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுகிறது. இப்படி வெளிநாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் Herbal Products வாங்குபவர்கள் நம்மில் எத்தனை எத்தனை பேர்! இவற்றுக்கெல்லாம் மூலப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?
நம் நாட்டில் நிறைய மூலப் பொருட்களை தயார் செய்து அவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த மூலப் பொருட்களைக் கொண்டு பொருட்கள் தயாரித்து அவற்றினை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்கிறார்கள். அதை நாமும் வாங்கி “என்ன இருந்தாலும் வெளி நாட்டுக் காரன் வெளிநாட்டுக்காரன் தான்! அவன் திறமையே திறமை” என்று மெச்சிக் கொள்கிறோம்.
ஷிவ்புரி மாநிலத்தில் இப்படி மூலிகைகளிலிருந்து, மரங்களின் பட்டைகளிலிருந்து, பூக்களில் இருந்து என்று இயற்கையாக நம் வனங்களில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்களை எடுத்து சுத்தப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிற்சாலையினை நாங்கள் பார்வையிட்டோம்.
இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பொருட்களை எடுத்து அவற்றினை எப்படி பதப்படுத்துகின்றனர், அதில் என்னென்ன விஞ்ஞான முறையில் கலந்து பொடிகள் செய்கிறார்கள் என்பதையெல்லாம் எங்களால் பார்க்க முடிந்தது. நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் நிறைய மூலிகைப் பொருட்கள் தயார் செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இவர்களின் தயாரிப்பு பல மருந்துகளின், அழகுப் பொருட்களின் மூலப் பொருள். அஷ்வகந்தா, இஞ்சி, சீயக்காய், மேத்தி இன்னும் பலப்பல மூலிகை மரங்கள்/செடிகளின் வேர்கள், பழங்கள், மரப்பட்டைகள், இலைகள் என்று எல்லாவற்றிலிருந்தும் மருந்து செய்வதற்கான பொருட்களை பிரித்தெடுத்து, அவற்றை பொடியாக்குகிறார்கள்.
அவற்றையெல்லாம் பார்த்த போது “இந்தியாவில் இத்தனை வளங்கள் இருக்கும் போது அவற்றை வைத்து மருந்துகளை நாமே தயாரிக்கலாமே, ஏன் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களிடமிருந்து வாங்கவேண்டும்” என்று எனக்கு மனதில் தோன்றியது. அதற்கு பதிலும் உடனே தோன்றியது.
நமக்கு என்றுமே வெளிநாட்டுப் பொருட்கள் மீது மோகம் அதிகம். ஒரு பொருள் நம் நாட்டிலேயே தயாரித்து கிடைத்தாலும் அது வெளிநாட்டில் தயாரித்தது என்றாலோ, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றாலோ தான் அதற்கு என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்குகிறோம்.
தொழிற்சாலையின் உள்ளே ஆங்காங்கே உள்ள பூச்செடிகளிலிருந்தும், இயற்கையான மூலிகைகளின் ஒருசேரக் கலந்திருக்கும் வாசமும் அங்கிருந்த மரங்களின் தயவால் காற்றின் மூலம் நாசியை வந்தடைகிறது.
இந்த எண்ணங்களுடனே அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்து எங்களுடைய அடுத்த இலக்கான ”ஓர்ச்சா” எனும் இடத்திற்கு வந்தோம். ஓர்ச்சா எனும் மிகவும் பழமையான நகரம், அங்கிருக்கும் கோட்டைகள், ராம்ராஜா கோவில், வித்தியாசமான ஒரு படையெடுப்பு போன்ற விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் நாம் காண இருக்கிறோம். காத்திருங்கள்….
20
ஓர்ச்சா என்றொரு நகரம்…
மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் [Tikamgarh] மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. ஹிந்தியில் ஓர்ச்சா என்றால் ”மறைந்துள்ள” என்று அர்த்தம். இந்த ஊர் “பேத்வா” [Betwa] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
புந்தேலா [Bundela] ராஜாக்களின் தலைநகராகத் திகழ்ந்த ஒரு இடம் தான் இது. Bundelkhand என்று மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளைச் சேர்த்து தனி மாநிலம் கேட்கிறார்களே அதற்கெல்லாம் முன்னோடி நகரம் தான் இது. 1501-ஆம் வருடம் புந்தேலா ராஜாவான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் இது.
இந்த நகரத்தில் பலப்பல பழமையான கட்டிடங்கள் இருக்கின்றன. அரண்மனைகள், கோவில்கள், சத்ரி [இறந்த ராஜா-ராணிகளுக்கென கட்டப்பட்ட சமாதிகள்], மற்றும் நாட்டியமாடும் ஒரு கவிதாயினிக்கு என கட்டப்பட்ட ”ராய் ப்ரவீன் மஹால்” என ஊர் முழுவதும் புராதனமான கட்டிடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டிடத்திலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன.
நாங்கள் சென்ற அன்று முதலில் பார்த்த இடம் ”ஷீஷ் மஹால்”. இந்த இடம் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ராஜா ”உதைத் சிங்” அவர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட எழில் மிகு கட்டிடம். ஆனால் இப்போது அந்த கட்டிடத்தின் பல புராதனச் சின்னங்கள் அழிந்து போய் விட்டது. மிச்சம் இருக்கும் இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடம்/உணவகம் இருக்கிறது. நாங்கள் அனைவரும் அங்கு சென்று அறைகளையும், மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்தோம்.
இந்த மஹால், ராஜ் மஹால் மற்றும் ஜெஹாங்கீர் மஹால் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கிறது. இந்த இடங்களுக்கெல்லாம் செல்லலாம் என்று நினைத்தால் அது முழுவதற்கும் இன்று நேரம் இருக்காது, நாளை செல்லலாம் என்று எங்களுடன் வந்த ரோஹித் பட்நாகர் அவர்கள் சொல்லவே இன்றைய பொழுதின் அடுத்த நிகழ்ச்சி என்ன என்று கேட்டோம்.
மாலை 07.00 மணிக்கு ஒலி-ஒளி மூலம் இந்த ஓர்ச்சா நகரத்தின் பழமையை விளக்கிச் சொல்லும் காட்சி இருக்கிறது என்று சொல்லி, அது வரை பக்கத்தில் இருக்கும் ராம் ராஜா மந்திர் சென்று பார்த்து விட்டு, அப்படியே அந்த ஊரின் முக்கிய கடை வீதியைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னார்.
கடை வீதி என்று சொன்னவுடன் ஏதோ பெரிய கடை வீதி, நிறைய கடைகள் இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம். இப்போது இந்த புந்தேலா தலைநகரத்தில் இருப்பது இந்த கட்டிடங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. சில கடைகள் இருக்கின்றன. ஜான்சியிலிருந்து கஜுராஹோ செல்லும் வழியில் இந்த இடம் இருப்பதால் நிறைய வெளிநாட்டவர்களைப் பார்க்க முடிகிறது. அதனால் இங்கு விற்கும் பொருட்களின் விலையும் டாலரின் அளவிற்குத் தான் இருக்கிறது.
அப்படியே நடந்து சென்ற போது இந்த இடத்தின் பின்னடைவு கண் கூடாகத் தெரிந்தது. மொத்த ஊரின் மக்கள் தொகையே இருபதாயிரத்திற்கு மேல் இருக்காது. இருக்கும் எல்லா மக்களும் சுற்றுலா வரும் பயணிகளை நம்பியே இருக்கிறார்கள். எங்களுடன் வந்த வண்டி ஓட்டுனர் திரு ராஜு அவர்களின் ஊராம் இது.
ஊர் பற்றிய நிறைய விஷயங்களை வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார். இருக்கும் சிலரும் ஜான்சி, குவாலியர் போன்ற அடுத்த நகரங்களை நோக்கிச் சென்று விட்டதாகவும் சொன்னார். ராம் ராஜா மந்திர் சிறப்பு பற்றியும் சொன்னார். சரி கோவிலையும் பார்த்து விடலாம் என்று சென்றபோது கோவில் மூடியிருந்தது. இரவு 08.30 மணிக்கு தான் திறப்பார்கள் என்று சொல்லவே அப்படியே நடந்து விட்டு திரும்பினோம்.
07.00 மணிக்கு நாங்கள் கண்ட ஒலியும்-ஒளியும் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகிர்வில் சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள்.
21
ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்
ஓர்ச்சா நகரம் முழுவதுமே பழமை குடிகொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், அரண்மணைகள், மஹால்கள், சத்ரி என்றழைக்கப்படும் குடைகள். அவற்றின் பின்னே பெரும் கதைகள் இருக்க வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ள ஏதுவாய் அங்கே மாலையில் மத்தியப்பிரதேச சுற்றுலாத்துறை ஒலி-ஒளி மூலம் தினமும் இந்த ஊரின் பின்னே இருக்கும் கதைகளை நமக்குத் தருகிறார்கள்.
ஓர்ச்சா என்றால் ”மறைந்திருக்கும் இடம்” என்ற பொருள். ராஜா ருத்ர பிரதாப் ஒரு முறை வனத்தில் வேட்டையாட வந்திருக்கும்போது வழி தவறி, தட்டுத் தடுமாறி வருகிறார். தண்ணீர் வேட்கையுடனும் சோர்வுடனும் வந்த போது அவருக்கு வழியிலே ஒரு முனிவரின் இருப்பிடம் தெரிய, அங்கே வந்து அடைக்கலம் ஆகிறார். அந்த இடத்தினைப் பார்த்ததில் அத்தனை ஆனந்தம் அவருக்கு.
பக்கத்தில் கரை புரண்டு ஓடும் ”பேத்வா” [BETWA] நதி. சுற்றிலும் நல்ல மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் இடம். இந்த இடத்திலேயே ஒரு நகரத்தினை நிர்மாணிக்க வேண்டும் என நினைத்து, அந்த நகரத்திற்கு ஒரு பெயரைச் சூட்டும்படி முனிவரிடம் வேண்ட, “நாளை பார்த்துக் கொள்ளலாம், இன்று படுத்து உறங்குங்கள்” எனச் சொல்லி விட்டாராம்.
அடுத்த நாள் காலையில், திரும்பவும் பெயர் சூட்டல் பற்றி நினைவு படுத்த, ” நான் பெயர் வைக்க மாட்டேன், ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன், இன்று நீங்கள் வேட்டைக்குச் செல்லுங்கள், செல்லும் வழியில் உங்கள் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தையை மூலமாக வைத்து நீங்கள் நிர்மாணிக்கும் நகரத்தின் பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ” என்றாராம்.
அப்படிச் செல்லும் போது வழியில் ஒரு மான் தென்பட, அதைப் பிடிக்க தன்னுடைய வேட்டை நாயை “ஊர்ச்” என்று ஏவினார். அதுவே அவர் சொன்ன முதல் வார்த்தை. அந்த வார்த்தையைக் கொண்டு உருவானது தான் ஊர்ச்சா… அது மருவி இப்போது “ஓர்ச்சா” என்றாகிவிட்டது.
ராஜா ருத்ர பிரதாப் சிங் காலத்தில் உருவாக ஆரம்பித்த நகரம், அது முடியும் முன்னரே அவரின் எதிர்பாராத இறப்பினால் சற்று தடைப்பட்டாலும் தொடர்ந்தது. ஒரு பசுவினை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ராஜா ருத்ர பிரதாப் தனது உயிரை இழக்க அடுத்தடுத்த ராஜாக்கள் காலத்தில் நகரம் உருவானது. பல ராஜாக்கள் நிறைய கட்டிடங்களை நிர்மாணித்தனர்.
ராஜா பீர் சிங் தியோ காலத்தில் நிறைய மாளிகைகள் உருவாக்கப்பட்டன. ஷீஷ் மஹால் [முந்தைய பகுதியில் பார்த்தது], ஜான்சி கோட்டை என பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஜஹாங்கீர் மஹால் என்பது முகலாய மன்னர் ஜஹாங்கீர் இந்த இடத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்று தங்க வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒன்று. இரண்டு வாயில்கள். ஒரு வாயிலில் பிரம்மாண்டமான மரக் கதவுகளின் மேல் இருக்கும் இடத்தில் இரண்டு யானைகளின் சிலைகள் அழகாய் இருக்கின்றன.
புந்தேல்கண்ட் ராஜா-ராணிகளின் சத்ரிகள் [குடைகள்] என சொல்லப்படும் சமாதிகள் நகரம் முழுவதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. எல்லாவற்றின் பின்னாலும் இருக்கும் கதைகள் நிறைய. அவற்றை எல்லாம் சொல்ல இன்னும் பல பதிவுகள் தேவை என்பதால் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன்.
சொல்லிக் கொண்டு வந்த கதைகளில் ஒரு முக்கிய விஷயமாக ராய் ப்ரவீன் மஹால் உருவான கதையை எல்லோரும் ரசித்தார்கள். இந்த மஹால் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் “எப்படி இருந்த நீ் இப்படி ஆயிட்டேயே” என்று தோன்றியது உண்மை. அப்படி என்ன அதற்குப் பெருமை என்று கேட்பவர்களுக்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள். நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும்.
ராம் மந்திர் உருவான கதை, புந்தேலா மன்னர்களின் ராஜாங்கம் எப்படி இருந்தது என்று எல்லா விஷயங்களையும் ஒலி-ஒளி மூலம் நம் கண் முன்னே கொண்டு நிறுத்துவது ஆச்சரியம்.
நன்றாக இருந்த அந்த காட்சிகளை ரசித்து முடித்து அங்கிருந்து கிளம்பினோம். ஒலி-ஒளி மூலம் சொல்லப்பட்ட கதையில், ராய் ப்ரவீன் மஹால் உருவான கதை, ராம் ராஜா மந்திர் உருவான கதை ஆகியவற்றை மட்டும் அடுத்த இரு பகுதிகளில் பார்க்கலாம்.
22
ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்
புந்தேலா ராஜாக்களில் ஒருவரான ராஜா இந்திரமணி அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் பாதிகளில் ஓர்ச்சா நகரத்தினை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். அவர் இயல் இசை நடனத்தில் மிகுந்த நாட்டம் உடையவராக இருந்தாராம். எப்போதும் நிறைய இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி, நடனம் ஆடும் ஒரு அழகிய பெண்மணி தான் ராய் ப்ரவீன். அந்த ராஜாங்கத்திலேயே பாட்டு மட்டுமல்லாது நடனத்திலும் தலை சிறந்தவள். பாட்டு பாடி நடனம் ஆடும் ராய் ப்ரவீன் அழகிலும் குறைந்தவளல்ல. அவள் மீது ராஜா இந்திரமணிக்கு ஆசை. ராய் ப்ரவீனுக்கும் ராஜா மீது தீராத காதல்.
என்ன தான் காதலும் ஆசையும் இருந்தாலும் எல்லா ராஜாக்களைப் போல இவரும் தனது காதலியும் நடனம் ஆடுபவருமான ராய் ப்ரவீனை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஆசை நாயகியாகத்தான் வைத்திருந்தார். நடனம், பாடல், காதல் என்று சென்று கொண்டிருந்த அந்த வாழ்வில் ஒரு திருப்பம்.
ராய் ப்ரவீன் அவர்களின் பாடல்-நடனம் ஆகியவற்றின் சிறப்பினால் வந்த புகழ் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாது தில்லியை ஆண்ட முகலாய மன்னரின் காதுகளையும் எட்டியது. ராய் ப்ரவீனின் அழகு, அவளது குரலின் மேன்மை, நாட்டியமாடும் அழகு ஆகியவற்றைக் கேள்விப்பட்ட முகலாய் மன்னர் உடனே அவளை தில்லிக்கு அனுப்பி வைக்குமாறு ஓலை அனுப்பி விட்டார்.
முகலாய மன்னர்களின் ஆதரவு பெற்று ஆட்சி செய்த ராஜா இந்திரமணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. முகலாய மன்னர் ஒரு பக்கம், ஆசை நாயகி மறுபக்கம் என இரண்டு பக்கங்களிலும் இழுக்கப்பட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியிருந்தபோது, ராய் ப்ரவீன் ராஜாவிற்கு தைரியம் சொல்லி, ”என்னை அனுப்பி வையுங்கள், நான் சீக்கிரமே திரும்பி வருவேன்” என்று சொல்லி தில்லி கிளம்பி சென்றாள்.
முகலாய மன்னர் அரண்மணையில் ராய் ப்ரவீன் பாடல்-நடனத்திற்கு ஏற்பாடு செய்தார். முதல் பாடலிலேயே மன்னரை மறைமுகமாக ”நாய்” என்று திட்டியபடி அவள் தைரியமாக பாடி நடனம் ஆட, மன்னரைச் சுற்றி இருக்கும் எல்லோருக்கும் அதிர்ச்சி. மன்னர் நிச்சயம் மரண தண்டனை வழங்குவார் என அவர்கள் எதிர்பார்க்க, ஆனால் அவரோ எதற்காக இப்படி சொல்கிறாள் இந்தப் பெண் என்பதை விசாரித்து, ராஜா இந்திரமணியின் மேல் கொண்ட காதலைத் தெரிந்து அவளை திரும்பவும் ஓர்ச்சா நகரத்திற்கே மரியாதை செய்து அனுப்பி வைக்கிறார்.
திரும்பவும் ராஜா இந்திரமணியின் சபையில் ராய் ப்ரவீனின் பாடலும் நடனமும் தொடர்கிறது. கூடவே அவர்களின் காதலும். தனது காதல் தலைவிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் “ஆனந்த் மஹால்” இருக்கும் பெரிய புல்வெளியில் ஒரு இரண்டு அடுக்கு மாளிகையைக் கட்டி அதில் அவரை தங்க வைத்திருக்கிறார். அப்படிக் கட்டப்பட்ட மாளிகை தான் ராய் ப்ரவீன் மஹால்.
கீழே நாட்டியம் – பாடல் ஆகியவை நடத்த ஒரு பெரிய கூடமும், மேலே அழகிய கூடங்களும், பூமிக்குக் கீழே குளிர்ந்த தங்குமிடமும் அமைந்த கட்டிடமாகக் கட்டி தனது காதல் நாயகிக்காக கொடுத்து விட்டார் ராஜா இந்திரமணி.
ஆனால் தற்போது இந்த மஹால் இருக்கும் நிலை பார்த்தால் மனதுக்குக் கஷ்டம் தான் மிச்சம். மாடுகள் அங்கே வளர்ந்திருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறது. எங்கும் வௌவால் எச்சங்களின் நாற்றம். படிக்கட்டுகள் மூலம் தட்டுத் தடுமாறி ஏறி மேலே சென்று பார்த்தால் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கிறது கட்டிடம்.
இந்த இடமா நடனமும் பாடலுமாக சந்தோஷமாக இருந்தது என்று எண்ணும்படி இருக்கிறது. ஓர்ச்சா நகரம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டிடங்களின் நிலையும் இதுதான். ஒரு சில கட்டிடங்களை பராமரித்து வருகிறார்கள்.
எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இப்படி அழிவினை நோக்கிச் செல்ல விட்டுவிட்டார்களே! நாங்கள் சென்றபோது இந்த இடத்திலும் சில விளம்பரப் படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்படத்தில் நடிக்க வந்தவர்களின் பின்னே தான் பெரும் கும்பல் ஓடியது – வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்க அல்ல என்பதை நினைக்கும் போது வருத்தம்தான் மேலோங்கியது.
அடுத்ததாக உங்களுக்குச் சொல்லப் போவது ராம் ராஜா மந்திர் பற்றி. ஆனால் இந்தப் பகுதியில் அல்ல – அடுத்த பகுதியில். அதுவரை காத்திருங்கள்.
23
ராம் ராஜா மந்திர்
சாதாரணமான கணவன் – மனைவிக்குள் மட்டும்தான் கருத்து வேறுபாடு இருக்குமா? சிவபெருமானுக்கும் பார்வதிக்குமே கருத்து வேறுபாடுகள் இருந்தது பற்றி நாமெல்லாம் திருவிளையாடல் படத்தில் பார்த்திருக்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது ராஜா – ராணி மட்டும் விதிவிலக்கா என்ன? அப்படி ஒரு ராஜா-ராணிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாய் தோன்றியது தான் இந்த ராம் ராஜா மந்திர்.
சென்ற பகுதியில் புந்தேலா ராஜாங்கம் பற்றி சொல்லியிருந்தேன். அந்த ராஜாங்கத்தில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்த ஒரு ராஜா மதுகர் ஷா. தீவிரமான கிருஷ்ண பக்தர். வருடா வருடம் மதுரா சென்று கிருஷ்ணபகவானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தவர். எது தவறினாலும் தவறும் ராஜா மதுகர் ஷா மதுரா செல்வது மட்டும் தவறாது. ராணி கணேஷ் குவா[ன்]ரி ராம பக்தை. வருடம் ஒருமுறையாவது அயோத்யா செல்ல வேண்டும் என நினைத்து அதைக் கடைப்பிடித்தும் வருபவர். மதுரா செல்வதை விட அயோத்யா செல்வதையே விரும்புபவரும் கூட.
இப்படி ராஜா-ராணி இருவரும் இரு துருவங்களாக இருக்க, ஒரு முறை ராஜா மதுரா கிளம்ப யத்தனிக்கும்போது ராணியையும் தன்னுடன் வரும்படி அழைக்கிறார். எப்போதும் போலவே ராணி மறுத்து தான் ராஜாவுடன் மதுரா வர விரும்பவில்லையென்றும் அயோத்யா செல்ல விரும்புவதாகவும் சொல்கிறார்.
ராஜாவுக்கு பயங்கர கோபம். அவருடைய வார்த்தையை வேறு யாராவது கேட்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சிரச்சேதம் செய்யச் சொல்லியிருப்பார். ஆனால் சொன்னது பட்டத்து ராணியாயிற்றே. இருந்தாலும் எதாவது தண்டனை தரவேண்டும் என்று நினைத்தவர் ”நான் மதுரா செல்கிறேன். நீ அயோத்யா செல்! திரும்ப வரவேண்டும் என நினைத்தால் உன்னுடைய ஆத்ம தெய்வம் ராமனுடன் திரும்பி வா!” என்று கோபமாக சொல்லிவிட்டு மதுரா சென்று விட்டார்.
ராணிக்கு தனது ராமனின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை. நிச்சயம் தன்னுடன் அவர் ஓர்ச்சா வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தோழிகள் புடை சூழ தன்னுடைய மாளிகையிலிருந்து ரதத்தில் கிளம்பி அயோத்யா வந்து சேருகிறார். அங்கே ராமனை தரிசித்து தன்னுடன் ஓர்ச்சா வந்துவிடும்படி சொல்ல, அதற்கு பதிலேதுமில்லை. ஆனாலும் துவண்டு போய்விடாமல் அயோத்யா நகரின் சரயு நதிக்கரையில் ராமனை நோக்கி தவம் இருக்க ஆரம்பித்து விட்டார்.
நாட்கள் ஓடின . ராமனின் தரிசனம் கிடைத்தபாடில்லை. நீண்ட காலம் தவமிருந்தும் ராமன் பிரத்யட்சமாய் தரிசனம் தராததால் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார் ராணி கணேஷ் குவா[ன்]ரி. ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் சரயு நதியில் பாய்ந்து விட எத்தனிக்கும்போது ராமன் ஒரு சிறுவன் வேடம்பூண்டு ராணியின் முன் தரிசனம் தருகிறார்.
தரிசனம் தந்ததுடன் நில்லாமல் சிறுவன் உருவத்திலேயே ஓர்ச்சாவில் கோவில் கொள்ளவும் சம்மதிக்கிறார் – ஒரு சிறிய நிபந்தனையோடு. அது – ‘ஓர்ச்சா சென்றபின் எங்கு முதலில் அமர்கிறேனோ அங்கேயே கோவில் கொள்வேன்’ என்பது தான். ராமன் தன்னுடன் வரச் சம்மதம் சொன்னவுடன் ராஜா மதுகர் ஷாவிற்கு முன்தகவல் அனுப்பி ராம்ராஜாவிற்கான கோவிலை தயார் செய்யச் சொல்கிறார். ராஜாவும் “சதுர்புஜ் மந்திர்” என்ற கோவிலை நிர்மாணிக்கிறார்.
ராணி கணேஷ் குவா[ன்]ரி ஓர்ச்சா நகரத்தினை வந்தடையும் போது சதுர்புஜ் மந்திரில் இன்னும் ஒரு நாள் வேலை பாக்கி இருந்திருக்கிறது. ஆகவே ராணி தன்னுடைய அரண்மனையிலேயே சிறுவன் ராமனை உட்கார வைக்கிறார் – அவரின் நிபந்தனையை மறந்து. அடுத்த நாள் சதுர்புஜ் மந்திர் தயாராகிவிடவே அவரை அங்கே பிரதிஷ்டை செய்ய நினைக்க, சிறுவன் ராமனை அசைக்கவே முடியவில்லை.
அதனால் தன்னுடைய அரண்மனையையே ராமனுக்கு ”ராம்ராஜா மந்திர்” என்ற கோவிலாக்கி விட்டு வேறு மாளிகைக்குக் குடியேறுகிறார் ராணி. இன்றைக்கு இந்த ராம் ராஜா மந்திர் மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் மாநிலத்தில் உள்ள முக்கியமான கோவில். சுற்றுப்புறத்தில் இருக்கும் அத்தனை கிராமங்களிலும் இருந்து சாரிசாரியாக வண்டி கட்டிக்கொண்டு வருகிறார்கள். ஓர்ச்சாவின் பேத்வா நதியில் நீராடி ராம்ராஜாவினை தரிசித்து அவன் அருள் பெற்றுச் செல்கிறார்கள். நீங்களும் இந்தப் பதிவின் மூலம் ராம்ராஜா அருள் பெறுவீர்களாக!
மீண்டும் ஒரு ஓவியப் பகிர்வில் சந்திப்போம்.
24
ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்
சென்ற பதிவான ராம் ராஜா மந்திர்-ல் பார்த்த கிருஷ்ண பக்தர் ராஜா மதுகர் ஷா அவர்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகை தான் ராஜ்மஹால். இந்த மாளிகையில் ”சுவர் சார்ந்த சித்திரங்கள்” எனப்படும் mural சித்திரங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பல இப்போதும் பொலிவுடன் காணப்படுகின்றன.
இந்த மஹாலில் நான் பார்த்து அதிசயித்த இன்னும் ஒரு விஷயம் அங்கே இருந்த குளிர்சாதன வசதி. ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் மேலிருந்து வரும் ஒரு பெரிய இடைவெளி வழியாக அப்படி ஒரு குளிர்ந்த காற்று வருகிறது. ஒன்றரை டன் ஏ.சி. கூட அந்த அளவுக்குக் குளிர்ந்த காற்று தருமா என்பது சந்தேகம். அந்த காலத்திலேயே நிறைய முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனதில் மகிழ்ச்சி.
ராஜ்மஹால் முழுவதையும் தரிசித்த பிறகு ஓர்ச்சா நதியில் ராஃப்டிங் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் எங்களது துரதிர்ஷடம் பேத்வா நதியின் நடுவே இருக்கும் ஒரு நான்கு அடி அகலப் பாதை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதனால் இப்படி இருக்கும் போது ராஃப்டிங் செய்வது அவ்வளவு உகந்ததல்ல, ஆபத்து அதிகம் என்று சொல்லி விட்டார்கள்.
இந்த பகுதியில் இருந்த ஓவியமான மாளிகை பற்றிய செய்திகள் படித்து மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த பகுதியில் ஒரு படையெடுப்பு பற்றி எழுத இருக்கிறேன். காத்திருங்கள்.
25
எங்கெங்கு காணினும் பூச்சியடா!
ஒலி-ஒளிக் காட்சி நடந்து கொண்டு இருக்கும்போதே கால்களில் ஏதோ ஊறுவது போன்ற ஒரு உணர்வு. கொசுவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கால்களை ஆட்டியபடியே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினோம். ஊர் முழுவதும் ஓரிரு விளக்குகள் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டு இருக்கின்றது.
உத்தேசமாய் இதுதான் பாதையென்று கருதி நடந்து வந்தோம். கோட்டையின் வாயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதைத் தாண்டும்போது எங்கள் அனைவரின் மேல் திடீரென ஒரு பயங்கரத் தாக்குதல். அந்த விளக்கை நோக்கி ஆயிரக்கணக்கில் பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன. அதன் வழியில் செல்லும் எங்கள் மேலெல்லாம் விமானத் தாக்குதல் தான். தட்டுத் தடுமாறியபடி வந்து எங்கள் வாகனங்களை அடைந்தோம்.
ஊர் முழுக்க ஒரே இருட்டடிப்பு. நாங்கள் தங்கியிருந்த பேத்வா ரிட்ரீட் [Betwa Retreat] கூட இருட்டில் மூழ்கியிருக்கிறது. ஆங்காங்கே மின்மினி பூச்சிகள் போல் சில வெளிச்சம் குறைவாய்த் தரும் விளக்குகள். இந்த ஊரில் இருக்கும் பழைய கட்டிடங்கள் போலவே இங்கே இருக்கும் இந்த பூச்சிகள் பிரச்சனையும் மிகவும் புராதானமான ஒன்றாம்.
அதனால் அங்கே மாலை ஆனாலே இப்படி விளக்குகளை அணைத்து விட்டு இரவு 09.00 மணி ஆகக் காத்திருக்கிறார்கள். அரசும் இந்த பூச்சித் தொல்லையைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை போல. நாங்கள் தங்குமிடம் வந்து சேரும்போது 08.00 மணி தான் ஆகியிருந்தது. அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு குழல் விளக்குகளைப் போட்டால் கூட கதவு இடுக்குகள் வழியே பூச்சிகள் வந்து விடும் என தங்குமிடத்தின் நிர்வாகி எச்சரிக்கவே ஒரு மணி நேரம் நிலவொளி இருந்த ஒரு பலகணியில் இருந்து பேத்வா நதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.
அப்போது எங்களுக்கென ஒரு கிராமிய நடன நிகழ்ச்சி இப்போது நடைபெறும் என்று அந்த நிர்வாகி சொன்னார். இரண்டு வயதான ஆண்கள் பாட, 10-12 வயதுடைய இளம்பெண் பாடலுக்கேற்ப புந்தேலா நகரத்தில் ஆடப்படும் கிராமிய நடனமாடினார். நிலவொளியில் பாடலும் பாடலுக்கேற்ற நடனமும் மனதை மயக்கியது. நடனமாடிய பெண் எங்களில் சிலரையும் கூட நடனமாட அழைத்தார். அரை மணி நேரம் பாடலையும், நடனத்தையும் பார்த்து ரசித்த பிறகு அந்த கிராமிய கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற பண உதவி செய்தபின் இரவு உணவு தயாராகிவிடவே உள்ளே சென்றோம்.
நிறைய மின்விளக்குகள் இருந்தாலும், மெழுகுவர்த்தி ஒளியில் சில பெரிய உணவகங்களில் உணவு பரிமாறுவார்கள். அதுபோல் இங்கேயும் மின்விளக்குகள் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை. மங்கிய ஒளியில், அதுவும் வாயின் உள்ளே செல்வது உணவா, பூச்சியா என்று தெரியாத நிலையில் இரண்டொரு சப்பாத்தியை விடுவிடுவென உள்ளே தள்ளிவிட்டு எழுந்தோம்.
ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டபடியால் இனி பூச்சிகள் தொல்லையிராது, நீங்கள் சென்று உங்கள் அறைகளில் ஓய்வெடுங்கள் நாளை காலை சீக்கிரம் கிளம்பலாம் என்று பயணம் ஏற்பாடு செய்த பட்நாகர் சொன்னார். நானும் என்னுடன் இந்த முழு பயணத்திலும் என்னறையில் தங்கிய கேரள நண்பர் பிரமோதும் அறைக்குச் சென்றோம். நாங்கள் அறையை விட்டு அகலும்போது எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுச் சென்றதால் ஓரிரு பூச்சிகள் தான் குளியலறையில் இருந்தது. அவற்றை தண்ணீர் விட்டு ஜலசமாதி செய்தோம்.
மறுநாள் காலை எழுந்தபோது தான் தெரிந்தது மற்ற அறைகளில் நடந்த கூத்துகள். அவர்கள் அறைகளில் விளக்குகளை அணைக்காமல் விட்டுவிட்டதால் அறை முழுக்க ஆயிரக்கணக்கில் பூச்சிகள்… தரை, படுக்கை, நாற்காலிகள், குளியலறை என்று எங்கெங்கு காணினும் பூச்சியடா! இரவு முழுவதும் எல்லாவற்றையும் பெருக்கி, ஒரு மூலையில் குவித்து மொத்தமாய் ஹிட் அடித்து மயக்கமடையச் செய்து வாரி வெளியில் கொட்டியிருக்கிறார்கள். மொத்த அறையையும் De-bug செய்து முடிக்கவே இரவு இரண்டு மணி ஆகிவிட்டதாம்.
வெளியே ஒவ்வொரு விளக்குக் கம்பத்தின் கீழும் ஆயிரக்கணக்கில் செத்துக் கிடந்த பூச்சிகள். மேலும் பூமியில் ஆங்காங்கே இருக்கும் சிறு துவாரங்களில் நிறைய பூச்சிகள் உயிருடன்…
நாங்களும், இன்னும் இரு நண்பர்களும் சீக்கிரமாகவே எழுந்து விட்டபடியால் தயாராகி வெளியே நகர்வலம் செய்து அப்படியே இங்கிருக்கும் சத்ரிகளைப் பார்க்கச் சென்றோம். அவை பற்றி அடுத்த பகுதியில்…..
26
எங்கோ மணம் வீசுதே…
காலையிலேயே எழுந்து விட்டதால் எங்கள் தங்குமிடத்தின் மிக அருகிலேயே பேத்வா நதிக்கரையில் அமைந்திருக்கும் புந்தேலா ராஜ குடும்பத்தினருக்கான சத்ரிகளைப் பார்க்க நானும், இன்னும் மூன்று நண்பர்களும் சேர்ந்து கிளம்பினோம்.
வெளியே வந்தால் யார் மேல் என்ன கோபமோ தெரியவில்லை பேத்வா நேற்றை விட இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறாள். அன்றைய தினம் ராம்ராஜா மந்திரில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் இருக்கிறதாம். அதனால் சுற்றுப்புறக் கிராமத்தில் இருந்தெல்லாம் நிறைய மக்கள் தத்தமது குடும்பத்தினருடன் வந்து ஆங்காங்கே தங்கியிருக்கிறார்கள்.
சரி நதிக்கரைக்குச் செல்லலாம் என மக்கள் கூட்டத்தில் நாங்களும் முட்டி மோதிச் சென்றால், செல்லும் போதே ஒரு வித நாற்றம் நாசியை எட்டியது. முந்தைய நாள் இரவில் நடனம் பார்த்தபோது தூரத்தே வீசிய நாற்றம் இப்போது அருகினில். பூச்சி தான் நாற்றம் பரப்பும் எனச் சொன்ன தங்குமிட நிர்வாகி சொன்னது பொய் என சிறிது நேரத்தில் புரிந்து கொண்டோம்.
பேத்வா நதிக்கரை ஓரம் முழுவதும் மனித எச்சங்கள்…. பூச்சித் தொல்லைக்கு எதுவுமே செய்யாத நிர்வாகம் இந்த மனிதர்களுக்கும் எந்தவித ஏற்பாடுகளும் செய்யவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாயிற்று. நதிவரை சென்று கை-கால்களையாவது நனைக்க வேண்டும் என்ற எண்ணமே அகன்றது. எனவே அங்கிருந்து விரைந்து வெளியே வந்து விட்டோம்.
வெளியே வரவும் கூட மக்கள் வெள்ள அலையைக் கடந்துதான் வர வேண்டியிருந்தது. தெருவெங்கும் ஆங்காங்கே மக்கள் கிடைத்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். காலைக் கடன்கள் முடித்து பேத்வா நதியில் குளித்து, உடை மாற்றி, அலங்காரங்கள் செய்து கொண்டு இருந்தனர்.
நாங்கள் நால்வரும் ஒரு வழியாக சத்ரிகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். பெரிய பெரிய கட்டிடங்களாக இருந்தன இந்த சத்ரிகள். மொத்தம் 14 கட்டிடங்கள் இருக்கின்றன இங்கே. அவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நிலையில் சேதங்களுடன் கண்டது மனதிற்கு வருத்தமாய் இருந்தது. ஷிவ்புரியில் நாங்கள் கண்ட ராஜா-ராணி குடைகள் பகுதியில் சொல்லி இருந்த சத்ரிகள் போலில்லாது இங்கே சுத்தமாய் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.
இந்தியாவிற்கு அதுவும் குறிப்பாய் மத்தியப்பிரதேசத்திற்கு வரும் வெளி நாட்டு பிரயாணிகள் ஏராளம். காரணம் அங்கிருக்கும் கஜுராஹோ. இந்த கஜுராஹோ செல்லும் வழியில் ஓர்ச்சா இருப்பதால் அந்த வெளிநாட்டு பிரயாணிகளில் பெரும்பாலானவர்களும் இந்திய பிரயாணிகளில் சிலரும் அங்கு வருகிறார்கள். அவர்களின் வருகை மூலம் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டோ அல்லது வேறு வகையிலோ இந்த கட்டிடங்களை பராமரித்தால் இன்னமும் நிறைய பிரயாணிகளை ஈர்க்க முடியும்.
அதுவும் வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் இருந்து இவர்கள் டாலர்களில் வசூலிக்கும் தொகைக்கு நிச்சயமாய் ஏதாவது நல்லது செய்ய முடியும். சாதாரணமாய் இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் 10-20ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர்கள் வெளிநாட்டவர்களிடம் 300 ரூபாய் வாங்கும்போது நிச்சயம் இந்த இடங்களை நல்லவிதமாய் பராமரிப்பது சாத்தியம் என நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க!
இந்த நினைவுகளோடு தங்குமிடம் திரும்பினோம். மற்றவர்களும் எழுந்து தயாராகி வரவே காலை உணவு முடித்து ஓர்ச்சாவிலிருந்து எங்களின் கடைசி இலக்கான ஜான்சி நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தோம். ஜான்சி நகரத்தில் நாங்கள் பார்த்த இடம் பற்றிய பகிர்வு அடுத்த பகுதியில்.
27
ஜான்சியில் ரயில் இஞ்சின்
பத்து மணி அளவில் ஓர்ச்சாவிலிருந்து கிளம்பிய நாங்கள் 12 மணிக்கு ஜான்சி வந்தடைந்தோம். எங்களுடைய இந்த கல்விச் சுற்றுலாவில் முக்கியமான பகுதியாக ஒரு பெரிய தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒன்று. முன்பே இரு பகுதிகளில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் தொழிற்சாலை சென்றது பற்றியும் எழுதியிருக்கிறேன்.
இப்போது நாங்கள் சென்றது ஜான்சி நகரத்தில் இருக்கும் அரசு தொழிற்சாலையான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-இன் ஒரு யூனிட்டிற்கு. இந்த யூனிட்-இல் அவர்கள் தயாரிப்பது ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள்.
இஞ்சின்களின் சக்கரங்கள் செய்வது முதல் ஒவ்வொரு பகுதியும் எப்படிச் செய்கிறார்கள், எப்படி இணைக்கிறார்கள், தரத்தினை எப்படிச் சோதிக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுடன் ஒவ்வொரு பகுதியாய் வந்து எங்களுக்குப் புரியும் பாஷையில் சொல்லிக் கொண்டு வந்தார் ஒரு பொறியியலாளர்.
இந்திய ரயில்வே தனக்குத் தேவையான ரயில் இஞ்சின்களை அவர்களது சொந்த தொழிற்சாலைகளிலேயே தயாரித்துக் கொள்கிறது. இருந்தாலும் சில சமயங்களில் இவர்களுக்கும் இஞ்சின்கள் தயாரிக்க ஆர்டர்கள் தருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. ஒவ்வொரு இடமும் நிறைய விஷயங்களை எங்களுக்குச் சொல்லித் தந்தது.
அங்கிருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினோம். நாங்கள் அடுத்ததாய் சென்றது ஜான்சி நகரத்தில் இருந்த ஒரு பழமை வாய்ந்த கிறிஸ்துவ தேவாலயத்திற்கு. 1956-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த தேவலாயத்திற்கு எல்லோரும் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினோம்.
ஜான்சி ரயில் நிலையத்திற்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தோம். நாங்கள் தில்லி செல்ல போபால்-தில்லி ஷதாப்தியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அருமையான பயணச் சுற்றுலாவினை முடித்த திருப்தியில் அவரவர் இருக்கையில் அமர்ந்தோம்.
என் பக்கத்தில் வந்து அமர்ந்தது ஒரு வட கொரியா நாட்டினைச் சேர்ந்த ஒரு ஆசிரியர். ஜான்சியிலிருந்து அவர் செல்லும் ஆக்ரா வரை என்னுடன் பேசியபடி வந்தார். இந்திய உணவு வகைகள், படிப்பதில் இந்தியர்கள் காட்டும் ஆர்வம், இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்ட தளங்களில் பயணித்தது எங்கள் பேச்சு.
தன்னுடைய தாய்க்கு இந்தியாவைச் சுற்றிக் காட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறாராம். கொரிய பாஷையில் சில வார்த்தைகளை எழுதிக் காட்டினார். ஒன்றுமே புரியவில்லை. சீன பாஷை போன்றே இவர்களும் எழுதுகிறேன் என்று படம் வரைகிறார்கள்…. இரண்டு-மூன்று மணி நேர பயணத்திற்குள் இப்படி வரையக் கற்றுக்கொள்வது கடினம் என்பதால் மேலே செல்லவில்லை…. J
இரவு பத்தரை மணிக்கு புது தில்லி ரயில் நிலையம் வந்தடைந்தோம். எல்லோரும் அவரவர் இலக்கினை நோக்கி பயணம் செய்யும் முன் பரஸ்பர இரவு வணக்கங்களும் சொல்லிக்கொண்டோம். அடுத்த நாள் மீண்டும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, “நாளை வருவதை நாளை பார்த்துக்கொள்வோம், இப்போதைக்கு நான்கு நாள் பயணம் பற்றிய இனிய நினைவுகளை சுமப்போம்” என வீடு திரும்பினேன்.
இப்படியாக இந்த நான்கு நாள் பயணத்தில் நான் சந்தித்த, சிந்தித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். உங்கள் அனைவருக்கும் இந்தப் பயணக் குறிப்புகள் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.
நான்கு நாட்கள் சென்றதை இருபத்தி ஏழு பகுதிகளாய் பிரித்து எழுதி இருக்கிறேன். பார்த்த அனைத்தையும் எழுத முயன்றாலும், நினைவில் இல்லாத சிலவற்றை விட்டுவிட்டேன்.
என்னுடன் இந்தப் பயணத் தொடரில் கூடவே பயணம் செய்த அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக