காதலிசை!
காதல் கதைகள்
Backகாதலிசை!
அன்னைத் தமிழே அழகுபெறும் நிலவே ! உன்னை வணங்குகிறேன். உயர் தமிழே என் உயிர்த் தமிழே நீ வாழி !
காதலிசை !
ராகவேந்திரன் பாலகிருஷ்ணன்
பொருளடக்கம்
என்னைப் பற்றி : 7
இன்னும் கொஞ்சம்... 57
முதல் நட்பு... 65
நாடகமாடும் நண்பன்... 66
யாசகன்... 68
முகநூல் நட்பு... 69
காதலால் தவிக்கிறேன்... 70
காதல் வியாதி... 72
யார் அந்த தேவதை ?... 75
பயணம்.... 78
என் காதலி... 79
யார் நாங்கள் ? ... 82
மரங்களை வெட்டாதீர் ! 84
கணினியும் என் காதலியும் !... 86
மழையும் என் காதலும்... 87
என்னைக் காதலிப்பாயா ? 89
ஏழையின் குடிசை... 90
ஹைக்கூக்கள் சில : 91
நான் அவனில்லை... 97
FreeTamilEbooks.com எங்களைப் பற்றி: 100
நான் சோர்வடையும் போதெல்லாம் என்னைத் தூக்கி நிறுத்தியவன் மகாகவி சுப்ரமண்ய பாரதி. அவனின்றித் தமிழில்லை, பாரதியின் மீது அளவுகடந்த காதலால் தமிழில் மற்றுமொரு ஆர்வம் ஏற்பட்டது. பாரதியின் கவிதைகளுக்கு அடிமையானேன். நான் எழுதிய இந்தப் புத்தகத்திற்கு காரணமாய் பாரதியையும் துணைக்குச் சேர்த்துக்கொள்கிறேன் !
“தேடிச் சோறுநிதந் தின்று- பல
சின்னஞ் சிறுகதைகள் –பேசி
மனம்வாடித்துன்பமிக உழன்று –பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி- கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே- நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ? ”
-சுப்ரமண்ய பாரதி
*சமர்ப்பணம்*
எழுத்தறிவித்த இறைவனுக்கும், ஈன்றெடுத்த அன்னைத் தந்தையருக்கும், தோள்சாயத் தோள் கொடுத்த தோழர், தோழிகளுக்கும் முதல் சமர்ப்பணம்.
சிந்தையில் தகிக்கின்ற அனலாய் எரிந்துத் கொண்டிருக்கும் என்னவளுக்கும் இதில் பெரியப் பங்குண்டு. அவள் தான் என்னுள் இருக்கும் ஒரு மிருகத்தை அன்பெனும் வித்தைக் கொண்டு அடக்கி ஆண்டவள் ! என்னவளுக்கு இரண்டாம் சமர்ப்பணம்!
என்னுள் தமிழ் தாகத்தைத் தவிக்கவிட்டுத் தவிக்கவிட்டு, புத்தகத்தின் வாயிலாக தாகம் தனித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் மூன்றாம் சமர்ப்பணம்.!
பள்ளியில் படித்தத் தமிழை மறக்காமல் செய்த ஆறாம் வகுப்புத் தமிழாசிரியர் இப்போது இப்பூவுலகில் இல்லை. அவரின் ஆன்மாவிற்கு நான்காம் சமர்ப்பணம்.
விளையாட்டாய் நான் கிறுக்கியச் சில கவிதைகளைப் பாராட்டி, புகழ்ந்து, ஏசிய சில நல்ல முகநூல் நண்பர்களுக்கு ஐந்தாம் சமர்ப்பணம்.
அவ்வப்பொழுது தடுக்கி விழும்போது தூக்கி நிறுத்திய சொந்தங்களுக்கு ஆறாம் சமர்ப்பணம்.
நான் தட்டச்சு செய்த மடிக்கணினிக்கு ஏழாம் சமர்ப்பணம்.
கூகுல் இன்புட் டூல்ஸ் எனப்படும் செயலிக்கு எட்டாம் சமர்ப்பணம்.
அவ்வப்போது கிறுக்கி கிறுக்கித் தூக்கிப் போட்ட காகிதங்களுக்கு ஒன்பதாம் சமர்ப்பணம்.
எத்தனை பேனா இருந்தாலும் “ஹீரோ பேனாவுக்கு” மட்டும் என் பத்தாவது சமர்ப்பணம்.
என்னைப் பற்றி :
கணினி பழுதுநீக்கும் துறையைச் சார்ந்தவன். பால்ய பருவமுதல் தமிழின் மேல் கொண்ட அதீத காதல் தான் எனக்குக் கவிதைகளாகவும், கடிதங்களாகவும் கொட்டியது.
நான் என் வருங்கால காதலியுடன் எப்படி எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று நினைத்தேனோ அவையெல்லாம் இன்று கவிதைகளாய் புதைந்து கிடக்கிறது.
டீக்கடையில் பஜ்ஜியை சுவைத்து விட்டு, எண்ணெய் கசிந்தக் காகிதத்தை கூடப் படித்து விட்டு தூக்கி எரியும் அளவிற்கு படிப்பதில் ஆர்வம் கொண்டவன். முகநூலில் அவ்வப்போது கிறுக்கியது அனைத்தையும் இந்நூலில் சில இடங்களில் சேர்த்துள்ளேன். என்னை எழுத்தாளனாய் மாற்றியது என் முகநூல் பக்கமே.
மது, மாது போதையாம். யார் சொன்னார் ? ஒரு நல்லப் புத்தகத்தில் கவனத்தைச் செலுத்திப் பாருங்கள் எவ்வளவு போதை என்று நீங்களே வியப்பீர்கள். கவிஞர் கண்ணதாசன் எழுத்துக்களைப் பார்த்து பார்த்துப் திகைத்தவன். சுஜாதாவை என் மானசீக குருவாகக் கொண்டவன்.
ஒருவனுக்கு மனதில் வெளியில் சொல்லமுடியாத சில விஷயங்கள் இருக்கின்றன. இவரிடம் சொன்னால் அதுத் தப்பாகி விடுமோ? அவரிடம் இதைச் சொல்லலாமா? என்று பல விஷயங்களை நாம் நமது மனதில் பூட்டுப் போட்டு பூட்டிக் கொண்டிருக்கிறோம்.
அதனால் நமக்கு என்னப் பயன் ? ரத்தக்கொதிப்பு வந்தது தான் மிச்சம். சொல்ல முடியாத சந்தோஷங்களையும், வெளியில் சொல்ல முடியாத துக்கங்களையும் ஒரு காகிதத்தில் எழுதிப் பாருங்கள். அதுத் துண்டுக் காகிதமானாலும் சரி. கவிதை வடிவிலோ அல்லது உரைநடை வடிவிலோ எழுதுங்கள். உங்கள் சந்தோஷங்கள் இரட்டிப்பாகும்.துக்கங்கள் பாதியாய் குறையும். அந்த மாதிரி என் சந்தோஷங்களும், என் துக்கங்களுமே இந்த படைப்பிற்கு அச்சாரம்.
நன்றி !
மன்னித்துவிடுங்கள் மறந்து விடுங்கள் !
நடக்க பழகிக் கொண்டிருக்கும் குழந்தை நான். அவ்வப்போது கவிதைகளின் தன்மைக்காக ஆங்காங்கே சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். அதற்காக இப்போதே மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்.
மன்னிக்கவும் !
என் முகம் பாராமல் என்னை சுமந்தவள்,
என் முகம் காண ஏங்கித் தவித்தவள்,
என் கன்னத்தில் முத்தமிட காத்துக் கொண்டிருந்தவள்,
இளையராஜாவின் துணையோடு தாலாட்டிசைக்க பழகிக் கொண்டவள்,
விரல் விட்டு நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தவள்,
அறுசுவை அமுது படைக்க காத்துக் கொண்டிருந்தவள்,
ஆணா பெண்ணா என்றறியாமல் ஆடை வாங்கிச் சேமித்தவள்,
பூவுலகுக்கு வரும் முன் காத்தவள், வந்தபின் தேற்றியவள்,
எனக்கு உயிர்கொடுத்த மூன்றெழுத்து “அம்மா”.
# என்னத் தான் நம்மைப் பற்றி அக்கம் பக்கத்தோர் தவறாய் கூறினாலும். “ என் மகன் அப்படியில்லை” என்ற வார்த்தையை உதிர்த்துவிட்டுச் சலனமில்லாமல் நகர்ந்து விடுவாள் அம்மா !
மேகக் கூட்டங்கள் பூதூவ, மின்னல் கூட்டங்கள் நாதஸ்வரமாசிக்க, இடிகள் கெட்டிமேளம் கொட்ட, என்னவளின் பாதக் கொலுசுகளின் சப்தங்களோடு இனிதே நிறைவுற்றது என் நடைப்பயணம்.
#எதிர்பாரா நேரத்தில் நானும் அவளும் பயணிக்கும் போது, எங்களை பார்த்து மேகங்கள் பொறாமை கொண்டன. அந்தப் பொறாமையின் கண்ணீர்த் துளிகளே, அம்மழைக்குக் காரணம்.
அன்பெனும் சர்க்கரை கலந்து, வெட்கமெனும் நீர் ஊற்றி, காதலெனும் தேயிலையை சரியான விகிதத்திலிட்டு, பரிவெனும் கைகளிலேந்தி ,பால் போன்ற வெள்ளை மனதுடன் அவளெனக்கு ஈந்தமையால் அதெனக்கு தேநீர் ஆயிற்று “தேன் நீர்” ஆயிற்று.
# என் மீதுள்ள கோபத்தை என் மீது காட்டுவாளே தவிர, எனக்களிக்கும் உணவதனில் காட்டமாட்டாள். நான் பசிக்கிறது என்று ஒற்றை வார்த்தை சொன்னால் போதும். என் மீதுள்ள கோபத்தையெல்லாம் தூக்கி எறிந்து விடுவாள். நான் பசி தாங்க மாட்டேன் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
பெண்ணே ! தயவு செய்து கண்மை வைக்காதே. உன் வேர்வைத் துளிகள் கூட நீ வைக்கும் கண்மையிடம் காதல் கொண்டு உருகி வழிகிறது உன் கண்ணோரம் கவிதைகளாய்.
# கண்மையில் ரசாயனமிருக்கின்றதாம். இப்படி நானேதும் சொன்னால் தான் அவள் அதை அடுத்த முறை தொடமாட்டாள். மான் விழியால் உனக்கு எதுக்கு அஞ்சனம் ?
அவள் பற்களால் கடிப்பட்டு தன்னுயிர் துறக்க வேண்டும் என்பதற்காகவே அவள் விரல்களில் உள்ள நகங்கள் நித்தம் வளருகின்றன. எத்தனை முறை அவள் கடித்து துப்பினாலும், திரும்பி வளர்ந்து வந்து மீண்டும் அவளிடத்திலேயே மறுபடியும் செத்து மடிகின்றன.
# ஏதாவது யோசித்துக் கொண்டிருக்கையில் இப்படி நகம் கடிப்பாள். சந்தோஷமாய் இருந்தாலும் நகம் கடிப்பாள். ஒரு வேளை அவளிடத்தில் வளரும் நகத்திற்கும் அவள் மேல் காதல் இருக்குமோ ? எத்தனை முறை அவள் கடித்தாலும் அவளிடமே வந்து வந்து சாகிறதே ?
அதிகாலை வெயிலுக்கும் உன் மேல் தீராக் காதல் போலும்! நீ கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் ஜன்னல் கம்பிகளின் வழியே ஊடுருவி, கள்ளத்தனமாய் உன் கன்னக் குழியில் முத்தமிடுகிறது !
# அவளிடம் ஒரு கெட்டப் பழக்கமுண்டு. அதிகாலை வெயில் மேனியில் பட்டால் நோய்கள் அண்டாதாம். அதானால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அவள், ஜன்னலை திறந்து விடுகிறாள். இவள் தனக்கு ஆதவனால் நோய் அண்டாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஆதவனுக்கு மட்டும் தானே தெரியும் இவள் மீது பட்டால் அவனுக்கு நோய் அண்டாது என்று.
இருபுருவமுயர்த்தி அவள் பேசுகையில் அவள் நெற்றிப் பொட்டில் உள்ள ஸ்டிக்கர் பொட்டு கீழே விழுந்து சாகத் துடிக்கிறது. !
#என்னுடன் அவள் விளையாட்டை அவ்வப்போது சண்டையிடுவாள். எல்லோரும் தலைக்கு மேல் கோபம் வருமென்பார்கள். என்னவளுக்கு மட்டும் அவள் நெற்றியின் மேல் கோபம். ஸ்டிக்கர் போட்டு கிழே விழும் வரை தான் அவளுக்கு கோபம் நீடிக்கும். அது மண்ணில் விழுந்து தற்கொலை செய்த அடுத்த கணம் சமாதானம்.
வானவில்லுக்கும் சவால் விடுவாள், விரல் நகத்தில் பூசிய நெயில் பாலிஷ் வண்ணங்களால்.
# வானவில்லுக்காவது வெறும் ஏழு வண்ணங்கள் தான். என்னவளிடம் பல வண்ணங்கள் இருக்கின்றன. நான் இன்னைக்கு பிங்க் கலர் நெயில் பாலிஷ் போட்டு இருக்கன். நல்லா இருக்காடா ? நெயில் பாலிஷை விட உன் நகம் அழகாய் இருக்கிறதென்றால் வெட்கப் படுகிறாள்.
ஓராயிரம் அழகிகள் என்னைச் சூழ்ந்திருந்தாலும் அரைநொடிப்பொழுதில் கண்டுபிடுத்துவிடுவேன் என் அழகியை. !
# அதென்னவோ தெரியவில்லை. எத்தனைப் பெரிய கூட்டத்தில் அவள் இருந்தாலும். என் கண்கள் அவளைத் தான் தேடுகின்றன. இதற்கு பெயர் தான் காதலா ?
உன் காதோரமுள்ள ஜிமிக்கிக் கூட உன் காதுகளை பற்றிக் கொண்ட மகிழ்ச்சியில் அழகாய் நடமாடிக் கொண்டிருக்கிறது. !
# உண்மையில் அந்த ஜிமிக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறதோ இல்லையோ. நான் வாங்கியதால் தந்ததால் அவளுக்கு மகிழ்ச்சி. அவளுக்கு நானே அதை அணிவித்தைமையால் எனக்கு மகிழ்ச்சி.
மறுபிறப்பு என்றொன்று இருந்தால் உன் இடக் கன்னத்தில் உள்ள முகப்பருவாய் பிறக்கவே விழைகிறேன். நீ என்னைக் கிள்ளிக் கொண்டே இருப்பாய் என்ற நம்பிக்கையில்.!
# அவள் என்னைக் கிள்ளியதை விட அவளின் முகப்பருக்களை கிள்ளியது தானதிகம். அதனால் தான் எனக்கிந்த சிறு நப்பாசை.
அவள் பாதக் கொலுசுகளின் சுப்ரபாதம் கேளாமல் என் பொழுது விடிந்தென்ன பயன்?
# என்னை தினமும் கொஞ்சி எழுப்புவது, புல்லாங்குழல் இசையோ, அல்லது இளையராஜாவின் மெல்லிசையோ இல்லை. அவள் பாத கொலுசின் இசை தான். அடடா ! அந்த இசைக்கேட்டு எழுந்து பழக்கப் பட்டுவிட்டேன். எத்தனை கொலுசுகள் இந்த பூமியில் கொல்லன் செய்தாலும, அவள் கொலுசு ஓசையை கண்டுபிடிக்கும் திறன் எனக்கும் அவளுக்கும் மனதால் நடந்த திருமணத்தின் போதே ஒட்டிக் கொண்டுவிட்டது.
வண்டியில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிறு சிறு மழைத் துளிகளுக்கு அவளின் கைக்குட்டை கொண்டு சாபவிமோசனம் தருகிறாள். !
# அன்றொருநாள் நாங்கள் இருவரும் ஒரே வண்டியில் பயணித்தோம். ஒரு உணவகத்தில் எங்களது இரவு உணவை முடித்து விட்டு, வெளியில் வந்தப் பிறகு தான் தெரிந்தது மழை பெய்தது என்று. அன்று அவளின் கைக்குட்டையைக் கொண்டு சீட்டில் இருக்கும் மழைத்துளிகளை துடைத்தாள். அப்போது அந்த மழைத்துளிகள் அனைத்தும் கிழே விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டு சாபவிமோசனம் அடைந்தது. மழைத்துளிகளின் முன் ஜென்மத்தில் தேவதை கை தீண்டிய பிறகு தான் உனக்கு விமோசனம் என்று சொன்ன முனிவன் யார் ?
OK, Fine, Like, No Problem, But, Then, Da, Yes, Best, Listen.
அவள் அதிகமாய் பிரயோகிக்கும் வார்த்தைகள் இவை.
மழைக்காலத்து தொற்றுநோய் போல தொற்றிக்கொண்டது அவள் உச்சரிக்கும் வார்த்தைகள்.
"நீ பேசும் போது அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தைகளெல்லாம் நான் நித்திரை கொள்கையில் என் கண்முன்னே வந்து சித்திரவதை செய்கிறதடி "
# ஒரு முறை நீ என்னுடன் பேசினால் போதும். அன்றிரவு உன் குரல் தான் என்னைத் தூங்க விடாமல் செய்கிறது. ஏன் இந்த மாதிரி என்னை சித்திரவதை செய்கிறாய். ?
ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆசையில்லை அவள் என்னருகில் அமராத போது.
# நான் பேருந்தில் அதிகம் பயணம் செய்பவன். நானும் நீயும் ஒரே பேருந்தில் பயணித்தால் எனக்கு ஜன்னல் ஓர இருக்கையை விட்டுக் கொடுத்து விடுவாள். அவளுக்கு குளிர் ஆகாது. எனக்கோ வெயில் ஆகாது. நீ இல்லாத பொழுது ஜன்னல் ஓர இருக்கை எனக்கெதற்கு?
அன்பாய் பார்க்கும் ஒற்றைப் பார்வையில் என்னையும் அநாதையாக்கி விடுகிறாள்.
#அன்பிற்காக ஏங்குமென்னை அநாதையாக மாற்றுவதில் அவளுக்கு நிகர் அவளே. பார்த்து பத்திரமாய் போ! வண்டியை வேகமாக ஓட்டாதே என்பது முதல், எனக்கு உடம்பு சரியில்லை என்றால் “ரொம்ப முடியலையா டா ? “ என்பது வரை. ஒருநாளைக்கு இருமுறையாவது பாசமழை பொழிந்து விடுகிறாள்.
பேசிக்கொண்டிருக்கையில் கேட்டாள்,
வைரத்திற்கு மதிப்பு அதிகமா? இல்லை பிளாட்டினத்திற்கு மதிப்பு அதிகமா டா? ?
# நீ சாதாரண கல் வைத்த மூக்குத்தி அணிந்தாலும் அது விலை மதிப்பில்லாதது என்னைப் பொறுத்தவரை. உன்னிடம் சேர்ந்தவுடனே அம்மூக்குத்தி அழகாகி விடுகிறது. உன்னால் தான் மூக்குத்திக்கு அழகே ஒழிய, அந்த மூக்குத்தியால் உனக்கு அழகு ஒன்றும் சேர்ந்துவிடப் போவதில்லை.
மழையில் நானும் அவளும் சந்தித்தோம்,
ஒரே ஒரு மழைக்கவிதை சொல்லடா என்றாள்.
# கனமழை, ஒரே ஒரு குடை, நீயும் நானும். இது தான் எனக்கு தெரிந்த மழைக்கவிதை.இதை விட வேறு மழைக் கவிதை இருக்கிறதா என்ன ?
மற்றுமொரு கனமழைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
# சிறப்பு காரணமொன்றும் இல்லை. நான் மழையில் நனைந்து வீடு திரும்பினால் தானே அவள் துப்பட்டாவால் என் தலைத் துடைப்பாள் ?
ஒவ்வொரு முறை ” I LOVE YOU ” சொல்லும்போதும் அலுக்காமல் முதல் முறை சொன்னதுப் போலவே திரும்பத் திரும்ப கேட்கிறாள்,அந்த மூன்று வார்த்தைக்கு இவ்வளவு சக்தியா?
#கிட்ட திட்ட இதுவரை பல லட்சம் தடவைக்கு மேல் “ I LOVE YOU ” என்று அவளிடம் கூறிவிட்டேன். அவள் கேட்டுக்குக் கொண்டே இருக்கிறாள். நான் கூறிக் கொண்டே இருக்கிறேன். நானும் அவளும் ஒருவொருக்கொருவர் இவ்விஷயத்தில் சலித்தவர்கள் இல்லை.
உன் கன்னக்குழியில் ஒவ்வொரு நாளும் தடுக்கி விழுகிறேன். வி(வீ)ழ்ந்த என்னை எக்கணம் தூக்கி விடப் போகிறாய் ?
.
# புதைக் குழியில் விழுந்துவிட்டேன் என்றால் கூட மீண்டும் என்னால் எழுந்து வந்து விட முடியும். அவளின் கன்னக்குழியில் விழுந்து விட்டேன். மீண்டு(ம்) வரமுடியவில்லை.
வாசலில் கோலமிட்டாள்,
வெட்கத்தில் நெளிந்தன,
கோடுகள்.
# அதிகாலை அவள் எழுந்து கோலம் போடுவது, நான் இப்படி எதாவது கிறுக்குவது.இது தான் எனக்கு வேலை. வேளைத் தவறாமல் இவ்வேலையை பல வருடங்களாய் செய்கிறேன். என்னை மட்டும் தான் அவள் சிறையில் தள்ளினால் என்று நினைத்தேன். அவள் வாசலில் இட்ட கோலத்தினை பார்க்கும் போது தான் தெரிகிறது. கோலத்தையும் ஒரு புள்ளி வைத்து சிறைச் சேதம் செய்துவிடுகிறாள் என் கள்ளி !
ஒரே பெண்ணைக் காதலித்து ஒரே பெண்ணை மணமுடிக்க முடியுமா ? எந்தப் பெண் இக்காலத்தில் அப்படி இருக்கிறாள் என்றான் என் ஆருயிர் நண்பன். என்னவளை வந்துப் பார் என்றேன் நான்.
# பின் என்னால் ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி கதையை அவனிடம் உதாரணம் காட்ட முடியுமா? அவர்கள் எங்கோ பிறந்து எப்போதே இறந்தவர்கள். இது வரை காதலுக்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கலாம். இனி காதல் என்றால் அவளும் நானும் என்று கூறட்டும் இவ்வுலகம்.
ஆயிரமாயிரமாய் செல்ஃபி எடுத்துக் கொண்டாலும், உன்னோடு எடுத்துக் கொண்ட அந்த நம் முதல் சந்திப்பு செல்ஃபி என் மெமரிகார்டிலும், என் மெமரியிலும் நீங்காயிடம் பெற்றுவிட்டது.
# நாம் இருவரும் ஒரே மாடல் செல்போன் வாங்கி இருவரும் ஒரே நேரத்தில் எடுத்த செல்ஃபி ஆயிற்றே ? அதை எவ்வாறு என்னால் அழிக்க முடியும் ?
எனக்கும் ஆசைகள் உண்டு!
விழித்தவுடன் உன் முகம் பார்க்க ஆசை!
விழித்த பின் நீ கொடுக்கும் காஃபிக்காக தவம் கிடக்க ஆசை.
தேடித் தேடி நீ சமைத்த உணவதனை திகட்டாமல் தின்று திக்கு முக்காடா ஆசை!
அவசரமாய் ஆஃபீஸ் போகும் போது கண் சிமிட்டி உன் கன்னக் குழியில் முத்தமிட ஆசை !
ஆஃபீஸ் போனவுடன் முதல் வேலையாய் உனக்கு போன் செய்து போனில் முத்தமிட ஆசை!
எத்தனை வேலைகள் வந்தாலும் ஒரு நொடிக் கூட உன்னை மறக்காமல் இருக்க ஆசை !
மதிய வேலை தன்னில், நீ கொடுத்த அனுப்பிய உணவதனை, வீணாக்காமல் உன்ன ஆசை !
சாயங்கால வேலைதன்னில், சாதுர்யமாய் வீடு திரும்பி, உன்னைக் கட்டி அணைக்க ஆசை !
இப்படி என் ஆசையை உன்னிடம் கூறிக்கொண்டு இருக்கையில் சட்டென்று கனவில் இருந்து விழித்து விடவும் ஆசை !
எனக்கு இருக்கும் ஆசைகளும் ஏராளம் ! கனவுகளும் ஏராளம் !
# இதற்கு பரிசுகிடைக்குமா என்று தெரியவில்லை. அவளிடம் காண்பித்தால் முத்தம் மட்டும் கிடைக்கும்.
அவள் இடப்புறம் திரும்பினாள் , அவன் வலப்புறம் திரும்பினான்
காதல் அவர்கள் வருகைக்காக அங்கேயே காத்திருந்தது..
#எந்த சந்தேகம் காதலர்களுக்குள் வந்தாலும் காதல் தோற்பதில்லை. காதலர்கள் தான் தோற்கிறார்கள். காதல் விட்ட இடத்திலேயே காத்துக் கொண்டு தானிருக்கிறது..
புசிக்கும் தருணமதில் விக்கினால் யாரோ நினைக்கிறார்கள் என்று அர்த்தாமாம்.
# அப்படியானல் நீயும் நானும் ஒவ்வொரு நொடியும் விக்கிக் கொண்டே தான் இருக்க வேண்டும். நீ என்னை எங்கே மறக்கிறாய்? இல்லை நான் தான் உன்னை மறக்கிறேனா ?
முக்கியமாக நான் சாப்பிடும்போது நீ சாப்பிட்டாயா என்று நினைக்கிறேன். நீ சாப்பிடும் போது நான் சாப்பிட்டேனா என்று நினைக்கிறாய். நமக்கு வருகிற விக்கலுக்கு கூட தெரியும் நம்மிருவரின் காதல் கதை.
எனக்கு பிடித்ததை சமைப்பதற்காக, காய்கறி நறுக்குகையில் கையில் சீவிக் கொண்டாள் என்னவள்.
#காய்கறி நறுக்கும் கத்தியை தடை செய்ய எதேனும் வாய்ப்பு உள்ளதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் . சட்டத்தில் இடமிருந்தால் சட்ட ஆலோசனை தேவை.
ஒரே புத்தகம்,
என் மடியில் நீ,
உன் மடியில் நான்,
வாசிக்க நாம்.
இதை விட வேறு கவிதை உண்டோ ?
# புத்தகங்களின் பக்கங்களும் நீண்டுக்கொண்டே போகட்டும். கண் இமைக்காமல் நீயும் நானும் புத்தகப் புழுவாகி புது சரித்திரம் படைப்போம் வா !
யானை முடியில் மோதிரம் செய்து அணிந்துக் கொள்ள ஆசையில்லை எனக்கு.
# நீ சிக்கெடுத்து வாரிய சீப்பில் மிச்சமிருக்கும் ஓரிரு முடிகளில் மோதிரம் செய்துக் கொள்ளத் தான் கொள்ளை ஆசை. அதன் ரகசியம் எனக்கு மட்டும் தானே தெரியும்.
என் முகத்தில் திடீர் முகப்பரு !
ஹார்மோன்கள் செய்யும் லீலைகள் என்றார் டாக்டர்.
#அவர் மருத்துவம் படித்தென்னப் பயன் ? அவருக்கு நீ செய்த லீலைகள் தான் என்று தெரியவில்லை. மருத்துவ துறையில் கொஞ்சம் காதல் பாடங்களும் எடுக்க பரிந்துரை செய்யலாமா ?
ஆயிரம் பேர் நடந்து வந்தாலும் உன் பாதக் கொலுசின் ஓசையை வைத்தேன் உன்னை சட்டென்று கண்டுபிடித்து விடுவேன்.
# நானே முதன் முதலில் உனக்காகவே பிரத்தேயகமாய் நகைக் கடைக்குச் சென்று தேடித் தேடிப் பார்த்து தேர்வு செய்தது. அந்த முதல் கொலுசின் ஓசையை நான் எப்படி மறக்க முடியும்.
கடற்கரை மணலில் செருப்பில்லாமல் நடக்காதே ! அந்த பாழாய்ப் போன கடலலைக்கு உன் பாதச் சுவடுகளை பாதுகாக்க தெரியவில்லை. !
# அலைக்கு எப்படி உன் பாதச் சுவடின் மகிமை தெரியும் ?
அவளின் கைவிரல்களை பிடித்துக் கொண்டு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருக்கும் போது மட்டும் கடவுளைச் சபிக்கிறேன் ஏன் மனிதனை வெறும் பத்து விரல்களோடு படைத்தானென்று !
# உன் வாழைப்பூ விரல்களை பிடித்துக் கொண்டே ஒரு யுகம் கடக்க சொன்னாலும் கடந்து விடுவேன்.
மஹாலட்சுமி எப்படி இருப்பாள் என்று நெடுநாட்களாய் எனக்கு சந்தேகமிருந்தது.
# என் நெடுநாள் சந்தேகத்தை சிவப்பு நிற பட்டுபுடவையை நீயுடுத்தி நிவர்த்தி செய்துவிட்டாய்.
இயற்கையாகவே உன் இரு புருவங்களும் அழகு தான். பின் "ஐப்ரோ" பென்சில் உனக்கெதற்கு ?
#வில் போன்ற புருவமென்று கூறுவார்களே, அவ்வில்லை விட உன் புருவம் இயற்கையாய் அழகு தான். பின் எதற்கு இந்த கண்ட சமாச்சாரங்கள்?
நான் உன் நெற்றியில் இட்ட செந்தூரத்திற்கும் உன் மேல் தீராக் காதல் போதும்,
என்னைப் போலவே அதுவும் உன்னிடம் இருந்து "அழிய" மறுக்கிறது !
# உனக்கு ஒரு ஆசை நாம் எப்போது எல்லாம் இருவரும் கை கோர்த்து கோவிலுக்கு செல்கிறோமோ, அப்போதெல்லாம் என் கையால் உனக்கு குங்குமம் வைக்க வேண்டுமென்று. கல்யாணத்திற்கு முன் இதெல்லாம் சரியா என்று கேட்டேன். கனவில் நமக்கு எப்போதோ திருமணம் முடிந்து விட்டது. நான் உன் மனைவியாகிவிட்டேன். செந்தூரத்தை என் நெற்றியில் இடு. என் கணவன் நீ தான் என்றாய். இதற்கு மேல் நான் என்ன மறுப்புத் தெரிவிக்க முடியும் ?
வண்ணத்துப் பூச்சியின் இறக்கையின் வண்ணங்கள் பிடிக்கும் போது கைகளில் ஒட்டிக் கொள்வது போல்,
நான் இன்று உன் நெற்றியின் நடுவே இட்ட செந்தூரமும் என் விரல்களில் ஒட்டிக் கொண்டுவிட்டது !
#உண்மையில் செந்தூரம் கூட அழகு தான் என் விரல் பட்டு அவள் நெற்றியில் ஒட்டிக்கொண்ட பின் .
அவள் வீட்டு வாசலில் இருக்கும் புல்வெளிகளில் செருப்பின்றி நடக்கிறாள்.
அவள் மிதித்த ஒவ்வொரு புல்லும் சாபவிமோசனம் அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் கண்ணீர் வடிக்கின்றன பனித்துளிகளாய்.
# குழந்தை பிறந்தவுடன் அந்த பிஞ்சுப் பாதங்கள் எவ்வளவு மென்மையாக இருக்குமோ அவ்வாறு இருக்கிறதவள் பாதங்கள். இந்த ஜென்மத்தில் இந்த ரதியால் தான் அந்த புல்களுக்கு சாபவிமோசனம் என்று எழுதப்பட்டது போலும், அந்த மகிழ்ச்சியில் தான் ஆனந்தக் கண்ணீர்.
மடிக்கணினியை மடியில் தவழவிட்டுக் கொண்டே ஒரு கவிதை, என் கவிதைகளை படித்துக் கொண்டிருக்கிறது !
#முகநூலில் நான் இட்ட பதிவுகளை படித்துவிட்டு அழகாய் சிரித்துவிட்டு லைக் இடுகிறாள். அந்த மவுசும், கீபோர்ட்டும் எனக்கு அவள் இட்ட லைக்கினை கண்டு பொறாமைப் படுகின்றன.
நானே என் கையால பன்னினது. டேஸ்ட் நல்லா இருக்கா டா ?
என்று ஊட்டிவிட்டுக் கொண்டே கேட்கிறாள்.
இன்னொரு வாய் கொடுத்தா தான் கரெக்டா சொல்ல முடியும், என்று கூறி சாப்பிட்டு முடிக்கையில்.
அடப்பாவி தீர்ந்து போச்சுடா என்று முகம் சுளிக்கிறாள்.
# ஒவ்வொரு முறை நீ ஊட்டிவிடும் போதும் சுவை ஒவ்வொரு மடங்கு கூடுகிறது என்று அவளிடம் கூறவா முடியும் ?
மழையில் நனைந்து வீடு திரும்புகையில் , ஏன் மழை நின்றவுடன் வரலாமே என்று செல்லமாய் கடிந்துக் கொண்டே, அவள் துப்பட்டாவால் தலைத்துவட்டுகிறாள்.
#அவள் துப்பட்டாவுக்கு மட்டும் தான் தெரியும். நான் ஏன் வேண்டுமென்றே மழையில் நனைகிறேன் என்று !
வேண்டுமென்றே நனைகிறேன் மழையில். காய்ச்சல் வந்தால் என் கூடவே காதலியும் வருவாள் என்ற நம்பிக்கையில் !
#மழையில் நனையாதே நனையாதே என்று பல முறை எனக்கு சொல்லி இருக்கிறாள். மழையில் நனைந்து எனக்கு ஜுரம் வந்தால் தானே அவள் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வருவாள். என் காதலுக்கு மழையும் தோழனே.
ஒவ்வொரு முறை அவளைச் சந்திக்கும் போதும் வேண்டுமென்றே கால் கொலுசுகளின் திருகாணிகளை லூசாக்கி விடுகிறாள் !
# அத்திருகாணியை பல்லால் கடித்து சரி செய்வதற்குள் நான் "லூசாகி" விடுகிறேன்.
அவளுக்கு மூக்குத்தி செய்த கொல்லனுக்கு கூட தெரிந்திருக்கிறது. இதை தேவதை ஒருத்தி அணியவிருக்கிறாள் என்று.
#அவன் யாரிந்த தேவதை என்றே தெரியாமல், அவள் மீது கொண்டுள்ள காதல், அவன் செய்த அழகிய இந்தச் சிறுகல் மூக்குத்தியில் தெரிகிறது !
உன் நெற்றிமீதாடும் ஒற்றை முடி முன் ஜென்மத்தில் எதோ புண்ணியம் செய்து வரம் பெற்றன போலும்.
# பின்னே ? உன்னை கன்னத்தை முத்தமிடும் பாக்கியம் அவ்வளவு எளிதில் கிட்டிடுமா ?
உன் காதோரம் தவழும் ஒரிரு முடிகளின் மீதெனக்கு சற்று பொறாமைதான்.
# முப்பொழிதிலும் உன்னை முத்தமிட்டுக் கொண்டே அல்லவா இருக்கின்றன
உன் கன்னத்தில் கவிதைகள் கிறுக்கும் உன் ஓரிரு முடிகள் மீதெனக்கு கோபம் தான்.
அழகுக்கு அழகுச் சேர்க்கும் அழகுசாதனப் பொருட்கள் உனக்கெதற்கு ?
# ரம்பை, ஊர்வசி, என்று பல அழகிகள் இருக்கின்றார்களாம். அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள எனக்கு என்ன அவசியம் இருக்கிறது? என் அழகி என் அருகில் இருக்கையில், அவர்களை பற்றி பேசி எனக்கென்ன பயன்?
இன்னும் கொஞ்சம்...
அவளை சிந்தையில் திணித்து தான் முகநூலில் பதிவிடுகிறேன் கவிதைகளை ! யாருக்கோ எழுதுகிறேன் என்று நினைக்கிறாள் என் மனதை திருடியவள் ! காதலிக்கு தெரியாமல் காதலிப்பதிலும் அதிக சுகமுண்டு என்பதை ஒவ்வொரு பதிவிலும் உணர்த்தி விடுகிறாள் என்னவள் !
நீ சிக்கெடுத்து வாரிய சீப்பிலிருந்து பிரிய மறுத்த உன் ஓரிரு முடிக் கூட எனக்கு பயன்படுகிறது கவிதையாய் !
என்னையும் கவிஞனாக்கியது அவள் குளிக்கும் முன் கண்ணாடியில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் போட்டு.
சாலையை நீ கடக்கும் தருணமதில் என் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறாய், என் ஆசையெல்லாம் சீக்கிரம் கடந்து விடக்கூடாது என்பது தான்.
இருநொடியில் ஒருக் கவிதை சொல் என்றாள், அவளுடைய பெயரை மட்டும் உச்சரித்து விட்டு, எனக்கு தெரிந்த இருநொடிக் கவிதை நீதான் என்றேன்.!
நீ சுவைத்து மிச்சம் கொடுத்த தேன் நீர் போதும் அறுசுவை உணவு எனக்கெதற்கு? உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதுப் போல் உன் எச்சில்லா பண்டம் குப்பையிலே
எத்தனை எழுதினாலும் அலுக்கவில்லை. வெளியில் தான் தமிழின் மீதென் காதல் என்கிறேன்!
# உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும் எனக்கு யார் மேல் காதலென்று ?
நீ வெட்கப் பட்டுக்கொண்டே என் வீட்டுக் கதவோரம் சாய்ந்து நின்று என்னை ஓரக்கண்ணால் பார்க்க,
என் ஆவி தவிப்பதை பார்த்து அதை தணிக்க நீ ஆவி பறக்க தேநீர் தந்தாய்,
திடுக்கிட்டு எழுந்தேன் கனவின் விழிப்பில் நீ ,
கனாக் காணும் சிறுவனாய் நான்.
கனவு மெய்ப்பட வேண்டும்..
சிவப்புநிற பட்டுப்புடவையதை அவளுடுத்தி,
நெற்றியதில் அரக்கு நிற குங்குமமிட்டு,
அன்று மலர்ந்த முல்லை பூவதனை பாவையவள் சூடி,
மங்களமாய் மங்கையவள் ஆலயத்தினுள் நடந்து வர,
அம்மனுக்கு காட்டப்பட்ட ஆரத்தியில் மின்னியதவள் முகம்.
அன்னமவள் காலனியின்றி அன்னநடை பயிலவோ ஆங்காங்கே நிழல் படைத்தான் இறைவன் ?
இதோடு நானும் உன்னிடம் நூறு தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்.
நீ காதில் வாங்கிக்கொண்டதாய் தெரியவில்லை.
ஒரே ஒரு தடவை தானே கேட்கிறேன்.
செவி சாய்தாலென்ன?
என் மீது உனக்கு இரக்கமில்லையா?
என் மீது காதல் இல்லையா?
எங்கே பனிரெண்டு வருடங்களுக்கு முன் கூறியது போல் " I LOVE YOU " என்று கூறு.
காதல் !
எவ்வளவு அழகான வார்த்தை?
இதை காமம் கொண்டு கொச்சை படுத்த எப்படி இந்த வேடிக்கை மாந்தர்களால் முடிகிறது ?
காமம் வேறு, காதல் வேறு என்று எப்போது இவர்கள் புரிந்து கொள்ளவார்கள்,
கனவில் கூட காதலியை கண்ட கோலத்தில் பார்பவனல்ல நான் என்பதை நீ புரிந்து கொண்டமையால் தானோ என்னிடம் அன்யோன்யமாய் பழகுகிறாய் ?
காதல் வேறு காமம் வேறு என்பதை இந்த வேடிக்கை மாந்தரிடையே புரிய வைக்கவோ என்னையும் உன்னையும் ஒரு சேர படைத்தான் இறைவன் ?
உன் கண்களில் வெட்கம், இதழில் புன்னகை, கால் விரல்களால் நீயிட்ட கோலம், அழகான உன் கண் சிமிட்டல், மூன்று மணி நேரம் நீடித்த நம் உரையாடல்கள். இதை எல்லாம் விடவா பெரியது நீ எனக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு ?
இரு நாட்களாய், ஓய்வின்றி வேலையும், தொலைதூரப் பயணமும். தனியே மகிழுந்தில் பயணம் என்றாலும் நீ இல்லாத் தனிமையை போக்கியது, நீ தேர்ந்தெடுத்துக் கொடுத்த இளையாராஜாவின் மெல்லிசைகள்.
வேம்பின் வாசம் கலந்து வீசும் தென்றல், இதமான குளிர்காற்று. காற்றில் அசைந்தாடிக்கொண்டே என் முகத்தில் முத்தமிடும் உன் ஒரிரு முடி,
அங்காங்கே சில மழைத்தூறல்கள்,
என் தோள் சாய நீ !
உன் கைகோர்த்து நடக்க நான் !
இனிதே ஆரம்பமாகியிருக்கிறது நடைப்பயணம்.
விடிந்த பின் குளித்து முடித்து கருங்கூந்தல் உலர்த்துகையில்,
தெரிக்கும் சில துளிகள் என் தூக்கம் கலைக்கையில்,
என் தலைக்கோதி கடிகாரத்தை பாராடா ! என்றவள் கூற,
கொஞ்சம் கொஞ்சலாய் இன்னும் சிறிது நேரம் துயில்கொள்கிறேனடி என்று நான் குழைய,
அவள் பஞ்சுத்தலையனையை என் மீது வீசி எறிய,
அத்தருணத்திலிருந்தே தொடங்கி விட்டன அதிகாலை உடற்பயிற்சிகள் !
உயிரை மட்டும் விட்டு விட்டு, உணர்வுகள் அனைத்தயும் உன்னோடு எடுத்து செல்லும் வித்தையை எங்கு சகி கற்றுக்கொண்டாய் ?
எப்படி சகி உன்னால் மட்டும் இது சாத்தியமாயிற்று ?
நித்தம் ஆயிரம் தமிழ் வார்த்தைகள் கற்றுக்கொண்டாலும்,
உன்னை பற்றி எழுதுகையில் அவ்வனைத்தும் மறந்து விடுகிறேன் !
உன்னைப்பற்றி எழுதுகையில் மட்டும் தமிழிற்கு கூட பஞ்சம் ஏற்ப்பட்டு விடுகிறது.
அது எப்படி சகி நான் கேட்கும் அனைத்து பாடல்களும் அச்சு பிசறாமல், உன்னிடமும் இருக்கிறது என்று கேட்டேன்.
அவள் நகைத்து கொண்டே நகர்ந்து விட்டாள்.
இது தான் நாணம் போலும் என்று விட்டு விட்டேன் !!
அழகழகாய் ஆயிரம் செல்ஃபிகள் நீயெடுத்தாலும், அஷ்டகோணலாய் நீ எடுத்த அந்த ஓர் செல்ஃபிக்கு ஈடினையுண்டோ ?
உன் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே விடிகிறது.
உன் புகைப்படத்தை பார்த்துகொண்டே முடிகிறது.
#நாட்கள்
#வாழ்க்கை.
எப்படியடா இப்படி எழுதுகிறாய் என்று கேட்டாள்.
நீ தான் காரணம் என்று கூறினேன்.
எதைப்பற்றி எல்லாம் எழுதுவாய் என்றும் கேட்டாள்.
நான் கூறினேன்.
நீ சாப்பிட்டு கீழே போட்ட சாகோபாரின் குச்சி போதும் நான் கவி இயற்ற என்றேன். என் கைகளை பற்றி கொண்டாள் .
கல் வைத்த மூக்குத்தி போடாதே என் செல்லம்மா !
கல்லின்கணம் தாங்காமல் உனக்கும் வலிக்கும்,
கல்லை பார்த்து எனக்கும் வலிக்கும்.
என்னோடு பழகும் எல்லா பெண்களுடன் எவ்வித ஐயமுமின்றி பேசுகிறேன்.
ஆனால் உன்னைப்பற்றி பேசும் போதும் சரி, உன்னைப்பற்றி கவி அரங்கேற்றும் போதும் சரி.
எந்தன் விரல் கூட தட்டச்சு செய்யும் போது பயம் கலந்த காதாலால் நடுங்குகின்றன
சில தருணங்களில் மிகுந்த மரியாதையுடன் வாங்க போங்க என்று அழைக்கிறாள்.
ஏனடி இப்படி ? என்றால்.
சுற்றத்தார்கள் சூழுகையில் மட்டுமே உனக்கு இம்மரியாதை என்றாள் ஏளனமாய் சிரித்துக்கொண்டே !!
இதயமெனும் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் ஒரு பகுதியில் அவள் பேசிய வார்தைகள் கல்வெட்டு கொண்டு செதுக்கபட்டுள்ளன.
என்னவென்று சொல்வேன் என் சகியை பற்றி,
அவளை பற்றி நினைக்கும் போதெல்லாம் மடிக்கணினி கூட அவளின் மடியில் இருப்பதாய் நினைத்து கவிதைகளை கொட்டிவிடுகிறது.
உன் 'முகப்பரு'கன்னத்தில் முத்தமிடவே துடிக்கிறான் ஆதவன்.
நீயோ தவிக்கும் சூரியனைக் கண்டு கொள்ளாமல் , முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டிருக்கிறாய்.
உன் முகமதை அழகாக்குமுன் சிறுகல் மூக்குத்தி, என் மூச்சுக்காற்றை விட முக்கியமானதென்றால் எனக்கு முத்தங்கள் தருவாயா ?
நெற்றியில் தீயெரியும் தியானத்தால் கூட கட்டுப்படுத்த முடியாத கோபத்தை அவளின் சுண்டுவிரல் கட்டுப்படுத்தி விடுகிறது.
விரலுக்கிடையில் உள்ள வேர்வைத் துளிகளுக்கு மட்டும் தான் தெரியும்
நடந்து முடிந்த எங்கள் காதல் கதை.
ரோஜாவின் மீதுள்ள ஒரிரு பனித்துளிகள் ரோஜாவினை அழகூட்டுவது போல்,
உன்னையும் அழகூட்டுகின்றன உன் ஒரிரு
முகப்பருக்கள்
எப்போதும் மெளனமாய் இருக்கிறேனாம். ஏன் என்று வினவுகிறார்கள் சுற்றத்தார்.
எப்படி புரிய வைப்பேன் என் காதலின் மௌனத்தை ?
சில நாட்களில் தான் மெளன விரதமிருப்பார்கள். நீ மட்டும் ஏன்
என்னை பார்த்த உடனே மெளன விரதம் எடுக்கிறாய் !
தயவு செய்து உன் மெளனத்தை கிழித்தெறி !
உன் தெருவெல்லாம் தீபங்களால் ஜொலிக்கிறது,
நீ மட்டும் தனியாகவே ஜொலிக்கிறாய் பாவாடை தாவணியுடன்.
# கார்த்திகை தீபம்
உன் நெற்றி மீதாடும் ஒற்றை முடி என்ன பாவம் செய்ததோ?
என்னைப் போலவே ஒதுக்கி விடுகிறாய் ?
எத்தனை பெரிய இன்னல்கள் வந்தாலும், எவ்வளவு முறை நானுன் மீது கோபம் கொண்டாலும், ஒரே ஒரு முறை உன் புன்சிரிப்பும், கள்ளத்தனமாய் உன் கண்சிமிட்டலும் போதும் அத்துனையும் நான் ம(றை)றக்க.
இருநொடியில் ஒரு கவிதைச் சொல் என்றாள்.
அவளுடைய பெயரை மட்டும் உச்சரித்து விட்டு,
எனக்கு தெரிந்த இருநொடிக் கவிதை நீதானென்றேன்.
சாலையை கடக்கும் தருணமதில் என் கைகளைக் இறுகப் பற்றிக் கொள்கிறாள். என் ஆசையெல்லாம் சீக்கிரம் கடந்துவிடக் கூடாதென்பது தான்.
வெட்கத்தில் சினுங்கியது துளசிச் செடி
அவள் சுப்ரபாதம் பாடிக்கொண்டே
சுற்றியபோது.
முதல் நட்பு...
புறமுதுகில் புத்தகச் சுமையேற்றி,
கனா காணத் தெரியாமல் கனாக்கண்டு,
பற்பல எதிர்பார்ப்புகளுடன்
மருத்துவனாகவோ, பொறியாளனாகவோ,
முதலடி எடுத்து வைத்து,
முகம் தெரியா காளகளுடனும்,
முன்பின் அறியா பாவைகளுடனும் பகிர்ந்துண்டு பழகி,
என் முதல் தோழியவள் ஆசையாய் கொடுத்த மயிலிறகு குட்டிப் போடும் என்று அவாக் கொண்டு,
நற்தமிழ் புத்தகத்தின் 23ம் பக்கத்திலிட்டு,
ஒரு நிமிடத்திற்கு இருமுறை பிரித்து பிரித்து பார்த்து,
வளராத மயிலிறகை வளர்ந்துவிட்டதாக நண்பனிடம் பறைசாற்றி,
அவனை வெறுப்பேற்றி,
அவன் வைத்திருந்த அதே புத்தகத்தில் நான் வைத்திருந்த அதே பக்கத்திலிட்டு,
நன்றாக பாரடா நண்பா !
உன்னுடையதைக் காட்டிலும் என்னுடையது சற்று நீளமாய் வளர்ந்துவிட்டாய் கூறி குக்குரலிட்டு பூரிக்க,
நான் நீலிக்கண்ணீர் வடிக்க,
நான் கண்ணீர் வடிப்பதை கண்டவன் சிரிக்க , அப்போதே தொடங்கிவிட்டது எங்கள்,
#இயல் #இசை #நாடகம் #அது ஒரு காலம்.
நாடகமாடும் நண்பன்...
சித்தனின் வழியில் சென்றேன். மெளனம் பூண்டேன். பேசாமல் இருக்கிறான். எதோ சதி செய்கிறான் என்றான் நண்பன்.
நண்பனை அண்ணனாய் நினைத்தேன், தம்பியாய் நினைத்தேன், தங்கையாய் நினைத்தேன். எல்லாம் பொய்யென்று உணர்ந்தேன்.
ஆருயிர் காதலி, என் எதிர்கால இல்லாள் கூறும் போது தெரியவில்லை.
அடிக்கடி கூறுவாள் என் மனதை திருடியவள்.
“ பார்த்துப் பழகு ! பார்த்துப் பழகு ! யாரிடமும் அதீத அன்போ, அல்லது அக்கறை யோ வைக்காதே. புரிந்தும் அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தப் படுவாய். உன்னைப் பற்றி எனக்கு மிகையாய் தெரியும் ”
எங்கள் நட்புக்குள் தலையிட உனக்கென்ன தகுதி இருக்கிறது ? நீ உன் வேலையை பார் என்றேன். என் தோழர்களை பற்றி உனக்கென்ன தெரியும் என்று கடிந்து கொண்டேன்.
இன்று தெரிந்தது. யார் எப்படி என்று இப்போது புரிந்தது. இவர்களை பற்றி புரிந்துக் கொள்ளவோ நீ என்னை அவர்களிடம் பழக வேண்டாம் என்றாய்? நண்பர்கள் தோண்டிய படுகுழியில் விழுந்து விட்டேன்.
காதலால் விழித்தெழுந்தேன்.
நான் கூறும் அறிவுரையை கேளாடா ! குறித்துக் கொள் உனக்கும் பின்னாளில் பயன் படும் பாரடா .
அளவோடு பழகு நண்பனிடம்,
உண்மையை பேசாதே நண்பனிடம்,
பொய் பேசாதே நண்பனிடம்,
பேசாமல் மெளனமாகவும் இருக்காதே,
உன் சுக, துக்கங்களை பகிராதே !
அவன் சுக, துக்கங்களை உன்னுடன் பகிர வேண்டும் என்று ஆசைப்படாதே!
உன்னைப் பற்றிய எல்லா ரகசியங்களையும் சொல்லாதே !
அதிகமாய் பேசாதே ! அளவோடு நிறுத்தாதே !
ஒன்றாக குடிக்காதே !
நீண்ட நேரம் அலைபேசியில் உரையாடாதே !
உரையாடாமலும் இருக்காதே !
அவன் என் உயிர்த்தோழன் என்று வீர வசனம் பேசாதே !
என்னிடம் எதையும் அவன் மறைக்க மாட்டான் என்று நினைக்காதே ! கண்டிப்பாக மறைப்பான். !
உன் காதலைப் பற்றி நீ கூறியது போல் அவனுனக்கு கூறவேண்டும் என்று நினைக்காதே !
அவனுக்கு உனது காதல் ஒரு கதை !
அவனுக்கு அவன் காதல் பெர்சனல் !
அவனுக்கு வேண்டாதவனிடம் நீ பழகாதே !
பழகினால் இருவரையும் நீ இழப்பாய் என்பதை மறக்காதே !
அனுபவத்தில் சொல்கிறேன் கேளடா !
கேட்காமல் போனால் வருத்தம் உனக்கடா !
இது சாத்தியமா ?
சாத்தியம் இல்லை என்று எனக்கு இப்போது புரிந்தது. உனக்கு புரியும் போது ஆறுதல் கூறுகிறேன்.
நண்பனாய் அல்ல !
ஏனெனில் எனக்கு நட்பின் மீது நம்பிக்கை போய் விட்டது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
ஒரு ஆலோசகரயாய் !
எப்படியும் வருவாய் ! எப்போது என்பதை விதியும் இறைவனும் முடிவு செய்யட்டும் !
நான் சந்தித்த “சில” நட்பூக்களுக்கு சமர்ப்பணம்.
பி.கு. - யார் மனதையும் புன்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப் படவில்லை. அதையும் மீறி உங்கள் மனது புன்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல !
யாசகன்...
பல மாதங்கள் மழிக்கப்படாத தலைமயிர்,
எனக்கென்னயென்று காடு போல் மண்டி கிடக்கும் தாடி மீசை,
ஊரிலுள்ள அழுக்குகளால் நெய்யப்பட்ட வெள்ளை சட்டை,
முழங்கால் வரையுடுத்தி உள்ள ஒர் கைலி,
தோளில் ஒரு சிவப்பு துண்டு,
கையேந்தி தட்டுடன் வாசலில் நின்று அம்மா தாயே என்று தன் கரகரக்கும் குரலில் யாசகம் கேட்கிறான்,
பள பளக்கும் அடுக்கு மாடி வீடு,
உயர் ரக மார்பிள்கள்,
உள்ளே இருந்து ஒரு ஆசாமி வருகிறார்,
அவர் கழுத்திலும் , இரு கைகளிலும் தங்க ஆபரணங்கள்,
பளிச் என்று பட்டு வேட்டி,
வெளியே வந்து யாசகம் கேட்டவனிடம் ஒன்றுமில்லை போ என்று கூறுகிறான்.
இந்த இருவரில் யார் பிச்சைக் காரனென்று தெரியவில்லை
முகநூல் நட்பு...
ஒட்டி உறவாடி,
தன் கதை பேசி,
உன்கதை சொல்லி,
ஆறுதல் கூறி ஆங்கங்கே விழும்போது தூக்கி நிறுத்தி,
வசனங்கள் பல பேசி, சிரித்து சிலாகித்து கேலியுடன் வசைபாடி,
உன்னை புரிந்து கொண்டு,
பின் உன்னை பற்றி யாதும் அறியாமல் பிதற்றுகிறான் பித்தன் என்று எள்ளி நகையாடி,
தனக்கொன்று வந்தால் தான் தெரியும் என்று கூறி விடைபெற்ற அவனை எண்ணியோ மனம் பதை பதைக்கிறது ? பாசம் வைத்தவன் பாசாங்கு செய்வான் என்று தெரிந்திருந்தால் தூர விலகி நின்று இருப்பேன்.
பெத்த ,மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது தாய்மைக்கு உரிய வசனமாயிற்றே !நண்பனுக்கு அமைந்து இருந்தால் நானும் என்னை தேத்தி கொண்டு தேறியிருப்பேன்.
முகத்திற்கு நேரே நம்முடன் வளர்ந்த பனை போல் அல்லவா இருந்தான் அன்று! இன்று என் முகம் பனை இருந்த பாதை நோக்கியே இருக்கிறது,
அதிலிருந்து உதித்த மட்டைகளும் சற்று விலகி தென்படுகிறது.கண்ணருகே இருந்த இருந்த பனை பட்டு விட்டு அதற்கே உரித்தான அதன் வடுவை மட்டும் விட்டு சென்றது.
முகத்திற்கு நேரே பழகிய நண்பர்களே பிரிந்து செல்லும் இக்காலத்தில்
முகநூல் நட்பு மட்டும் எம்மாத்திரம் !!
காதலால் தவிக்கிறேன்...
நித்தம் ஒரு முறை மரணத்தின் வாசல் சென்று எட்டடி பாய்ந்து எட்டி பார்த்து வருகிறேன்,
ஒவ்வொரு முறை அலைபேசி சப்தமிடும் நேரத்தில் ஆவலுடன் சென்று அணைக்கிறேன் உன் குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று,
உன்னை காணாத வரை வரை நான் கண்ணாடியை பார்த்தது இல்லை,
உன்னை கண்ட பின்பு கண்ணாடி முன் நின்றுகொண்டு உனக்கு பிடித்த மாதிரி என்னை மாற்றிகொள்கிறேன்.
உன்னால் தான் நான் உண்ணவில்லை,
உன்னால் தான் நான் உறங்க வில்லை,
உன்னால் தான் வேலைகளில் நாட்டம் செல்லவில்லை,
உன் குறுஞ்செய்தி கண்டு துள்ளி குதித்த நாட்களை விட,
குறுஞ்செய்தி வராமல் கண்ணீர் சிந்திய நாட்கள் ஏராளம்.
இது போதும் எனக்கு நீ அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி,
அந்த குறுஞ்செய்தியை பார்த்துக்கொண்டே பல நாட்களை ஓட்டிவிடுவேன்,
எத்தனை முறை கண்மூடினாலும் கண்மூடித்தனமாக நீ தான் வந்து என் தூக்கத்தை தொலைத்து துக்கத்தை தருகிறாய்,
இன்னும் எத்தனை நாள் என்னை இன்னும் நரக வேதனையில் தள்ள போகிறாய்?,
என்னை சோதனை செய்யவோ ?
இல்லை என்ன அழ வைக்கவோ ?
குறிப்பொன்று தருகிறேன் குறித்துக்கொள் ,
நீ என்னை ஏற்றுகொண்டாலும் சரி இல்லாவிடிலும் சரி,
காதலின் ஆழத்தில் விழுந்தாலும் மீண்டு எழுந்து வருவேன் !
உன்னை என் இதயத்தில் சிறை வைத்து அடைத்து விட்டேன்.
நீ எப்போது என்னை உன் இதயமெனும் சிறையில் தள்ளி யாரும் அண்டாதவாறு பூட்டு போட்டு சாவியை தொலைக்க போகிறாய்?
உன் மனம் என்னை மறுக்கவில்லை மாறாக மறைக்கிறது,
ஏன் என்று காரணம் கூறாயோ ?
விடிந்ததும் உன் முகக்தில் விழிக்கும் தருணம் எப்போது வரும்?
என்ன கைகளை பற்றி கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம் ?
ஏன் இப்படி என்னை வாழும் போதே நரகத்தில் தள்ளுகிறாய்?
எவ்வளவு தரம் மறைமுகமாக கூறினேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று,
உனக்கு புரியவில்லையா?
இல்லை புரிந்தும் புரியாததுபோல் நடிக்கிறாயா?
நீ நல்ல நடிகை என்று எனக்கு தெரியும்,
அந்த நடிப்பை என்னிடமா அரங்கேற்றுவது ?
நான் உள்ளுக்குள்ளேயே வெம்பி வெம்பி அழுதுகொண்டு இருக்கிறேன் !
அதன் ஓசை செவிகளுக்கு எட்டவில்லையா ?
என் தலையணையிடம் கேட்டு பாரும் அதுகூறும் என் அழுகாச்சி காவியத்தை,
இனியும் என்னை ஒரு கணம் கூட காக்கவைக்கதே !
நீ கூறும் வார்த்தையை கேட்கவே காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன்!
நீ கூறுவதை கேட்கவே விழைகிறேன் !
இனியும் காக்க வைக்காதே !
இன்றே சொல்லிவிடு, இப்பொழுதே சொல்லிவிடு, இக்கணமே என்னை கைது செய் !
நான் உன்னிடம் இருந்து எதிர்பார்ப்பது காரணம்மில்லை ! உன்னிடமும் காதல் உண்டு என்பதை அறிவேன்.
உன்னை பற்றி உன் பெற்றோருக்கு தெரிந்ததை விட எனக்கு தானே மிகையாய் தெரியும் !
எதுவாக இருந்தாலும் வெளிபடையாக கூறு,
இதுவும் கடந்து செல்வோம்,
என்னுடன் வா ! என் கையை பிடித்துகொள் ! என்னை இறுக்கி அணைத்து நான்
இருக்கிறேன் என்று கூறு !
எத்துனை இன்னல்கள் வந்தாலும் இருவரும் சேர்ந்து சமாளிப்போம்.
என் சுவாசம் என்னிடம் இருக்கும் வரை, உன் சுவாசம் உன்னிடம் இருக்கும் வரை,
அச்சம் கலந்த ஆவலுடன் உனக்காக உன் காதல் வாசலில் வெகு நாட்களாக காத்துகொண்டிருக்கும் ஓர் இதயம்.
இருக்கிறேன் என்று கூறு !
காதல் வியாதி...
கண்டதும் காதலாம், பாவையை பார்த்ததும் பாடலாம்.
கேளி பேசினேன். உன் கண்சிமிட்டலை என் மீதெறிந்து என் கேளிக்கை பேச்சுகளை அரை விநாடியில் உடைத்தெறிந்தாய்.
காதலி விழியோரமிட்ட மையைக் கொண்டு கவிதை வடித்தானென் நண்பன். பைத்தியம் பிடித்துவிட்டது இவனுக்கென்று பைய நகர்ந்தேன்.
பின்னொரு நாளில் உன் கன்னக்குழியை முத்தமிடும் மயிராக நான் ஏன் மாறக்கூடாது என ஏங்கினேன் !
அன்னைக் கையால் அமிர்தமுண்டாலும், ஆசைக் காதலி கொடுக்கும் தண்ணீருக்கு ருசி அதிகமாம்.
என்னடா இது இவனை மருத்துமனையில் சேர்த்துவிடலாமா ? என யோசித்தேன்!
பின்னொரு நாளில் நீ மழையில் நனைந்து வந்துக் கொண்டிருக்கும் போது, உன் ஈரக்கூந்தலில் இருந்து தவறிய அந்த ஒரு சொட்டு துளி என் உதட்டு மேல் பட அமிர்தமுண்ட பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்.
காதலிப்பவன் நிலாவை கூர்ந்து கவனித்தால் நிலாவில் காதலியின் முகம் தெரியுமென்றான் அவன்.
என்னடா இது மடத்தனம் ? என்றேன்.
பின்னொரு நாளில் நிலாவில் மட்டுமல்ல. இறைவன் தூணிலும் இருப்பான். சிறு துரும்பிலும் இருப்பான் என்ற கூற்றுக் கினங்க, காதலியும் அப்படியே என்று ஆராய்ச்சியின் முடிவில் கண்டறிந்தேன் !
காதலியிடம் பேசும் போது நேரம் போவது தெரியாது என்றானவன்.
இன்னும் சில மாதங்கள் கழித்து இதையே கூறினால் ஒத்துக் கொள்கிறேன் என்றேன் நான்.
பின்னொரு நாளில், காதலியிடம் பேசும் போது மட்டும் அல்ல. அவளைப் பற்றி நினைக்கும் போது கூட திகட்டாத சுவைமிகு இனிப்புப் பண்டங்களைச் சுவைத்ததுப் போல் இருக்குமென்று புரிந்துக் கொண்டேன்.
நானும் கவிதை வடித்தேன்.
அவனும் கவிதை வடித்தான்.
பேனாவால் புள்ளியிட்டான் அவன்.
நட்சத்திரங்களை களவாடி புள்ளி வைத்தேன் நான்.
காகிதத்தில் எழுதினான் அவன்.
பரந்து விரிந்த மேகத்தை என் கைக்குள் அடக்கி எழுதினேன் நான்.
மையினால் பல வண்ண ஜாலங்கள் காமித்தான் அவன்.
வானவில்லை துணைக்கழைத்துக் கொண்டேன் நான்.
நானும் எழுதினேன் !
அவனும் எழுதினான் !
அவனது கடிதம் பத்திரமாய் சேர்க்கப் பட்டது அவளிடம்.
என் கடிதம் பாதுகாப்பாய் பழைய பெட்டியில் வைக்கப் பட்டது !
எனக்கும் என் "ஆருயிர் தோழனுக்கும் " ஒரே அளவு காதல் இல்லை.
விளையாட்டாய் காதலித்தான் அவன்.
விசித்திரமாய் காதலித்தேன் நான் !
விளையாட்டாய் உள்ளவனை காதல், கைது செய்து காதல் சிறையில் தள்ளியது !
விசித்திரமாய் காதல் செய்தவனை
ஆயுள் தண்டனை கைதியாக்கியது. !
என்னை வேண்டாமென்றால் என் காதலி !
அவனை காதலித்தால் அவன் காதலி !
ஆண்டுகள் உருண்டோடிய பிறகு தான் தெரிந்தது.
எங்களிருவருக்கும் இருந்த காதல் மட்டும் ஒன்றல்ல.
காதலியும் ஒன்று தான் என்று !
இன்று பொக்கிஷமாய் என் முன்னால் காதலியின் நினைவுகளும். அவளுக்கெழுதிய கடிதங்களும்.
பத்திரமாய் இருக்கிறது,
என் மனம் என்னும் "பாதுகாப்பு பெட்டகத்துள்"
யார் அந்த தேவதை ?...
எங்குப் பார்த்தேன் அவளை ?
ஏன் பார்த்தேன் அவளை ?
எதற்காக இறைவன் என்னிடம் அனுப்பினான் அவளை ?
பால்ய வயதுக் காதல் !
விசித்திரமாகவும், வினோதமாகவும் காதல் வருமென்பர் சிலர்!
விழியை கலங்க வைக்கும் மாசுக் கூட காதலின் வெளிப்பாடா ?
அன்றொரு நாள் !
என் பால்ய பருவமதனில், முப்போகம் விளையும் பூமியில் நானும் அவளும்.
அவள் எனக்கு நேர் வருகிறாள். நான் அவளுக்கு நேர் செல்கின்றேன்.
நானவளை கண்டுக் கொள்ளவில்லை.
அவளும் என்னை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை.
வயல் வரப்பின் நடுவே அடி மேல் அடி வைத்து நடந்தேன்.
நெல்மணிகளை புடைத்துக் கொண்டிருந்தார்கள் கிராமத்தார்கள் !
காற்று தூக்கி எறிந்த தூசி என் கண்ணுக்குள் குடியேறியது !
அவளுக்கும் இதே கதிதான். கண்களை கசக்கினேன்.
மங்கலாய் தெரிந்த கண்களின் ஊடே அவளின் தரிசனம்.
சட்டென்று மழை !
அவள் மழையில் நனைந்து, ரசித்துக் கொண்டே ஓடுகிறாள் எங்கோ !
நான் காதல் பித்தனாக்கி மழையின் ஒவ்வொரு சொட்டையும் நின்று நிதானமாய் ரசிக்கிறேன்.
வேகமாய் கீழே விழும் மழைத்துளிகளை கூர்ந்து கவனிக்கிறேன்.
அந்த மழைத்துளிகளில் அவள் முகம் !
எப்படி வந்தது இந்தப் பொறுமை எனக்கு ?
இதற்காகவோ அவளை அனுப்பினான் இறைவன் ?
மிச்சம் வைக்காமல் மழையின் ஒவ்வொரு துளிகளையும் தலையின் வழியே குடித்தேன் !
அவள் முகம் என்னை ஏதோ செய்தது !
புது அனுபவம். இரவின் நிசப்தங்களில் என் மூச்சுக் காற்று மட்டும் சத்தம் போட்டது.
இரண்டொரு நிமிடங்கள் தானவளை பார்த்திருப்பேன் இருபது வருடங்களுக்குப் பின்னும் அவளை, அப்போது எப்படி பார்த்தேனோ அதே பாவாடை சட்டையில் இன்றும் என் மனதிலும் கனவிலும் வந்து மறைகிறாள்.
யார் அவள் ?
மழைக்கு முன் வந்தாள், மழைக்குப் பின் சென்றாள். எங்கே போய் தேடுவது அவளை ?
தொலைத்த இடத்தில் தேடு என்றான் என் ஆருயிர் நண்பன்.
இருபது ஆண்டுகளுக்கு பிறகு அதே இடம். அதே ஊர். அதே மண். அவள் முகம் மட்டும் தான் எனக்கு நினைவிருந்தது. எந்த இடம் அது என்று நினைவில்லை.
ஒரே ஒரு ஆலமரம் மட்டும் அங்கே பார்த்ததாய் ஞாபகம் !
ஆலமரத்தினை அடையாளம் கூறி, சுற்றியிருப்பவர்களை விசாரித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தேன்.
சுற்றிலும் எட்டடுக்கு மாளிகைகள். மிகப் பெரிய கல்லூரி. சிறியதாய் ஒரு பேரூந்து நிலையம். பெரியதாய் ஒரு உணவு விடுதி !
சின்னதாய் ஒரு சிறுவர்கள் பூங்கா. அங்கே ஊஞ்சல். பூங்காவின் நடுவில் ஆலமரம். ஆம் நான் பார்த்த அதே ஆலமரம் தான் !
அந்த இடமா இப்படி !
இனி அவளை எங்கே போய் தேடுவேன்! கண்கள் குளமாயின.
மறுபடியும் மழை!
வெள்ளை நிற ஆடையில் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே யாரோ ஒருத்தி விண்ணுலகில் பறக்கிறாள்.
ஆஹா ! அவளே தான் ! அதே சிரிப்பு ! அதே சினுங்கல், அதே காண்போரை கவரும் கண்கள் !
எங்கு செல்கிறாள் அவள் ?
மீண்டும் கண்கள் குளமாயின !
என்னையும் அறியாமல் கதறி அழுது கொண்டிருக்கிறேன் !
பட்டுத்துனியில் ஒரு கடிதம் கீழே தூக்கி எறிந்தாள் என் காதலி!
என்னை எல்லோரும் ஏமாற்றி விட்டார்கள்.
எல்லோரும் சேர்ந்து என்னைக் கொன்று விட்டார்கள். எனக்கு இந்த ஊர் வேண்டாம். நான் வாழ வேறொரு ஊரை தேர்வு செய்துவிட்டேன் ! அங்கே செல்கிறேன். முடிந்தால் என்னை அங்கே வந்து காதல் செய்யுங்கள். நானும் உங்கள் நினைவாகவே இருக்கிறேன்.
உங்கள் முகமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
கொட்டும் மழையிலும் எனக்கு அக்கடிதத்தை படிக்கையில் வேர்க்கிறது.
வேர்வையை துடைத்துக் கொண்டு மீண்டும் கடிதத்தில் மூழ்கினேன்.
நீங்களும் இங்கு இருக்காதீர்கள். உங்களையும் கொன்று விடப்போகிறார்கள்.
அதோ அங்கிருக்கிறானே பனைமர அளவில் ஒருவன். அவன் காற்றில் நஞ்சு கலந்து உங்களை கொல்லும் ஆற்றலைப் பெற்ற அரக்கன்.
ஓடி விடுங்கள் !
இங்கிருந்து சரியாக பத்து மைல் கல் தொலைவில் அழகிய மாஞ்சோலை ஒன்று உள்ளது. அங்கு வாருங்கள் சீக்கிரம். என் கரம் பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
உங்கள் ஆருயிர் காதலி,
"கிராம தேவதை"
வயல் வயல்களாய் இருக்கட்டும். சோலைகள் சோலைகளாய் இருக்கட்டும்
பயணம்....
மிதமான குளிரில் மகிழ்ச்சியானதொரு பயணம்.
இயற்கை கொஞ்சி விளையாடும் அப்படி ஓர் அழகு.
பச்சை பசேலென்று இயற்கை அன்னை என்னை மயக்கமுற செய்து விட்டாள்.
கிழக்கிலிருந்து ஆதவன் ஆரவாரமாய் தன் தூக்கம் கலைத்தான் !
வழிநெடுக உறக்கம் கலையாமல் மெய்மறந்து உறங்கும் மனிதர்கள்.
பசுஞ்சானி கரைத்து கோலமிடும் இளம் பெண்கள் !
மூச்சை இழுத்துப் பிடித்து காற்றை தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு மாசில்லா காற்று !
ஆங்காங்கே சில நீர்நிலைகள்!
அழகியதொரு மாஞ்சோலை!
பாரதிக்கு இங்கு தான் குயில் பாட்டு பிறந்ததோ என்று நினைக்குமளவில் குயில்களின் காணம் !
நுனிப்புல் மேயும் ஆடுமாடுகள் !
தோகைவிரித்தாடும் மயில்கள் !
உற்சாகமாய் விளையாடும் மழலைகள் !
மல்லிகையின் மனம் அவ்வனம் முழுவதும் சூழ்ந்துக் கொண்டு தானிருந்தது !
ஆஹா ! நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ரம்மியமான சூழல் !
தட்டி எழுப்பினாள். உறக்கம் கலைத்தேன்.
ஆஃபீஸ் க்கு டைம் ஆச்சுடா ! டிராஃபிக் ல மாட்டிக்க போற பாரு. சீக்கிரம் ரெடி ஆகு !
அதே வேலை ! அதே ஆஃபீஸ்! அதே மனிதர்கள் !
# நகர வாழ்க்கை சில சமயங்களில் நரக வாழ்க்கை தான் !
என் காதலி...
நாங்கள் இருவரும் சுற்றாதயிடமில்லை. எந்த பார்க் பெஞ்சையும் நாங்கள் தேய்க்காமல் விட்டதில்லை. தினமும் ஒரு ஐந்தாறு முறையாவது அவளிடம் "I LOVE YOU " என்று சொல்வேன்.
நான் கிட்டத்தட்ட அவளை ஒரு 10 வருடத்திற்கு முன்பு பார்த்தேன். எங்கு பார்த்தேன் ? எனக்கு நினைவிருக்கிறதா ? என்று கேட்கிறீர்களா ?
நினைவிருக்கிறது ஆனால் வேண்டாம்.
நான் எந்த தப்பு செய்தாலும் என்னைத் திருத்துவாள். மது, புகை என்று பல முறை தவறான பாதை நோக்கி சென்றிருக்கிறேன். என்னைத் திருத்தி மனிதனாய் ஆக்கியவள் அவள்.
மதியை செயலிழக்க செய்யுமாம் மது. அதை எனக்கு கூறியவள் அவளே ! மதுவை அவள் நிறுத்த சொல்லவில்லை. கல்யாணத்திற்கு பிறகு மதுவருந்தலாம் என்றாள்.
என்ன இவள் உளறுகிறாள் என்று நான் யோசித்தேன். அவளே அதற்கு விளக்கமளித்தாள். சில்லுனு ஒரு காதல் படத்தை பார் என்றாள். எனக்கு விளங்கவில்லை. நாளைந்து தடவைக்கு மேல் பார்த்தபின் தான் எனக்கே விளங்கிற்று !
புரியவில்லையா உங்களுக்கும்? இன்னொரு முறை எனக்காக பாருங்களேன் !.
முதல் முத்தம் ?
நான் காதலைச் சொல்லிய எட்டு ஆண்டுகளுக்கு பிறகு. தந்தாள்.
என்ன படம் பார்த்தோம் ?
தாம் தூம் ஜெயம் ரவியின் படம். அன்பே அன்பே பாட்டிற்காக பார்த்தோம் ! எனக்கு அந்த பாடல் மிகவும் பிடித்தது. என்னால் அவளுக்கும் பிடித்தது.
இரண்டாவதாய் பார்த்தபடம் யாரடி நீ மோகினி. என் ஆசை மோகினியுடன் சென்றேன்.
அவள் அப்பா எப்படி ? அந்தஸ்து பார்ப்பாரா ?
ஆம் சில சமயங்களில். இருந்தாலும் நான் அவர் தகுதிக்கு குறைந்தவன் இல்லை.
அவளுக்கு சொந்த வீடு உண்டா ?
ஆம் விசாலமான வீடு ! அந்த மொட்டை மாடியில் எவ்வளவு முறை நான் அவளெதிரே புகைப்
பிடித்திருக்கிறேன் ! நான் சிகரெட்டை உதட்டில் வைத்தால் அந்த கள்ளி கசக்கி தூக்கி எறிந்து விட்டு அவள் கைகளை மோர்ந்து பார்த்து
ச்சீய் இந்த கருமத்தை எப்படித்தான் குடிக்கிறியோ என்பாள்,
நான் இப்படித்தான் என்று அடுத்த சிகரெட்டை எடுப்பேன்.
பொய்யாய் என் மேல் கோபம் கொல்வாள் !
அவள் வீட்டுக்குச் சென்றால் என்ன தருவாள்?
முதலில் புன்னகையை தருவாள். பின் காஃபியும்.
இரண்டு பிஸ்கட்டும். காஃபியை குடித்து முடித்தவுடன் தண்ணீர் தருவாள் .
ஏன் உடனே தண்ணீர் ?
காஃபி குடித்தால் உடனே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை உடையவன் நான் ! அது என் அம்மாவிற்கும், அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் !
அம்மா என்றவுடன் தான் ஞாபகம் வருகிறது ! உங்கள் காதல், உங்க அம்மாவுக்கு தெரியுமா ?
ஓ நன்றாக தெரியுமே !
உங்கள் அப்பாவுக்கு ?
அவருக்குத் தான் முதலில் தெரியும்.
உங்கள் வீட்டிற்கு அவள் வந்திருக்கிறாளா ?
நிறைய தடவை !
உங்கள் வீட்டில் உங்க அம்மா ஏதும் சொல்ல மாட்டார்களா ?
ச்சீய் அதெல்லாம் சொல்லமாட்டார்கள். நாங்கள் இருவரும் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறோம் என்று தெரியுமே பிறகு என்ன சொல்லப் போகிறார்கள் ?
உங்கள் சுற்றத்தார்களுக்கு தெரியுமா உங்கள் காதல் விஷயம் ?
எல்லோருக்கும் தெரியும்.
உங்கள் வீட்டில் இருந்து அவளை உங்கள் வண்டியில் அழைத்துச் செல்கையில் உங்க பக்கத்து வீட்டுக் காரர்கள் என்ன சொல்வார்கள்?
பாத்துப் போங்க ரெண்டு பேரும் என்பார்கள் !
அவள் இப்போது எங்கிருக்கிறாள் ?
என் மனதில் வசிக்கிறாள். .
எப்படி பேசுகிறீர்கள் ?
அதான் நீயும் நானும் ரேட் கட்டர் இருக்கிறதே ! அதிலும் வாட்ஸ் அப்பிலும்.
எதாவது தப்பு பன்னி இருக்கிறீர்களா ?
ஒரே ஒரு தப்பு மட்டும் தான் பன்னி இருக்கிறேன். உங்களை இவ்வளவு நேரம் பேசவிட்டது மிகப் பெரிய தப்பு என்று என்னுகிறேன்.
காதல் வேறு, காமம் வேறு என்று புரிந்து கொள்ளுங்கள். காதலை கொச்சைப் படுத்தாதீர்கள்.
உங்கள் நண்பருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியுமா ? என்னோடு நெருங்கி பழகும், நான் நம்பிக்கை வைத்துள்ள நல் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
எல்லாருக்கும் தெரியுமா ?
என் ஆருயிர் நண்பர்களுக்கு மட்டும் தெரியும்.
எப்போது திருமணம் ?
கூடிய சீக்கிரமே அடுத்த வருடம் ! உங்களுக்கு பத்திரிக்கை அனுப்புகிறேன் .
நன்றி !
உங்கள் காதலியின் பெயர்?
இப்போது வேண்டாம்.கல்யாணப் பத்திரிக்கை பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன் !
சரி ! மறக்காமல் சொல்லுங்கள் !
நிச்சயமாய் !
“ கரண்ட் போய் விட்டது ! ஃபேன் நின்று விட்டது ! வேர்த்துக் கொட்டி கனவிலிருந்து விழித்து விட்டேன் ”
யார் அந்தக் காதலி என்று நான் தெரிந்துக் கொள்ளும் முன், இந்த மின்சாரம் சதிச்செய்து விட்டது. மறுபடியும் உருண்டு பிரண்டு தூங்கிப் பார்த்தேன். யார் அவள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. விதி விளையாட்டு.
யார் நாங்கள் ? ...
அடி தடி எல்லாம் எதற்கு அஹிம்சை வழியில் செல் என்போம். தனக்கொரு பிரச்சனை என்றால் முதலில் நாங்கள் தான் அடிப்போம்.
ஏ.டி.எம் மெஷுனிலும், பேங்க் கவுண்டர்களிலும் , நின்று கொண்டு மேனேஜரை திட்டுவோம். சினிமா டிக்கட் வாங்க மூன்று மணி நேரக் கியூவில் நிற்போம்.
இவன் ஊழல் செய்துவிட்டான் அது எங்கள் பணம், என்று முகநூலில் பொங்குவோம். டிவியோ அல்லது ஏ.சியோ வாங்கும் போது "வித்தவுட் பில்" கேட்டு தலையை சொறியுவோம்.
அன்னையர் தினமன்று அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று ஃபேஸ்புக்கில் கூவுவோம். அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவோம்.
என் ஓட்டு என் உரிமை என்று அரைகூவலிடுவோம். தேர்தல் தினமன்று உல்லாசச் சுற்றுலா சென்று செல்ஃபி பதிவேற்றுவோம்.
எனக்கு டமில் தெரியாது. இட்ஸ் ஃபன்னி லாங்குவேஜ். இங்கிலீஷ் தான் எல்லாம் என்று வெள்ளைப் பரங்கியர் போல் நுனிநாக்கில் ஆங்கிலத்தை தவழவிடுவோம். தடுக்கி விழுந்தால் மட்டும் "ஆ" வென்று கத்துவோம்.
தமிழில் பத்தி பத்தியாய் எழுதியிருக்கும் நல்ல படைப்புக்களைக் எல்லாம் கேலி செய்வோம். குட் மார்னிங் என்று தங்கிலீஷில் போட்ட பதிவிற்கு லைக்கிடுவோம்.
ஆங்கில புத்தகங்களின் மீதும், ஆங்கிலேயே எழுத்தாளர்களின் மீதும் காதல் கொள்வோம். திருவள்ளுவர் குறளையும், கண்ணாதாசனின் கவிதைகளையும் தமிழ் என்ற ஒரே காரணத்திற்காக ஓரம் கட்டுவோம்.
சுபாஷ் சந்திரப் போஸ், பகத்திங், விவேகானந்தர், காமராஜர் பற்றி தெரிந்துக் கொள்ளமாட்டோம். சேகுவேரா, ஹிட்லர் புகைப் படங்கள் பொறித்த டி- ஷர்ட்டை போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்து லைக் வாங்குவோம்.
அருகில் இருக்கும் கோவிலுக்கு நடந்து செல்ல மாட்டோம். காதலியோடு கால்கடுக்க நடப்போம்.
பதப்படுத்தப்பட்டு, பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களை வாவ் வாட் எ டேஸ்ட் என்று சுவைப்போம். மோரையும், கூழையும் அன் ஹெல்தி என்று ஓரம் கட்டுவோம்.
செர்ரி பழங்களின் புளிப்பு எங்களுக்கு யம்மியாய் பிடிக்கும். நுங்கின் இனிப்பு கலந்த உவர்ப்பு பிடிக்காது.
ஹோட்டலில் "அஜினமோட்டோ", நேற்று மிச்சம் வைத்த ஆயிலில் பொறித்த சில்லி பரோட்டவை ஆஹா ஓகோ என்போம். ஆரோய்க்கியமாய் அன்னை சமைக்கும் உணவை கேலி செய்வோம்.
ஐடியில் கண்விழித்து வேலை பார்க்கும் அவனை வயதில் சிறியவனானவனை சார் என்போம். தள்ளாத வயதில் மூட்டை தூக்கி உழைக்கும் வயோதிகரை " யோவ் பெருசு ஓரமா போமாட்டியா? என்போம்.
ஆங்கிலத்தில் சாரி என்று ஸ்டைலாய் கேப்போம், தமிழில் மன்னித்து விடுங்கள் என்று சொல்ல கூச்சப் படுவோம். எனென்றால் எங்கள் தமிழ் அவமானம் !
கையில் காசில்லை என்று கடன் வாங்கியவனை கடன்காரன் என்போம். நாங்கள் ஈ.எம்.ஐ யில் வாங்கிய காரை கவலையில்லாமல் ஓட்டுவோம்.
வேட்டிக் கட்டியவனை வேடிக்கையாய் பார்ப்போம். டக்கின் பன்னி வருபவனை டாக்டராய் பார்ப்போம்.
நகரங்களில் வாழ்ந்தால் பணக்காரன், கிராமத்தில் வாழ்ந்தால் கிராமத்தான்.
#சிட்டி #டெக்னாலஜி #வேடிக்கை.
மரங்களை வெட்டாதீர் !
நாங்களிருவரும் ஒன்றாய் பால்ய வயதில், மண்ணைத் தோண்டி, அவள் பொன்னிற கைகளால் நீரூற்றி,வளர்ந்தவுடன் எங்கள் பெயர் கிறுக்கி, அம்மரத்தை சாட்சியாய் வைத்து, கையெழுத்திட்ட பதிவுத் திருமண சான்றை பக்குவமாய் பத்திரப் படுத்தி வைத்துள்ள ஆலமரத்தை அழித்துவிடாதீர்கள் !
குழந்தைகள் தாலாட்டு கேட்டு வளர்வது போல், அது எங்கள் காதல் உரையாடல்களை கேட்டு வளர்ந்தடா பாவிகளே ! அதன் கிளைகளை வெட்டாதீர்கள் !
அதன் கிளைகள் ஒவ்வொன்றிலும் நான் அவளிடம் கேட்ட மன்னிப்புகள் இருக்கின்றன.
இலைகளை கழிக்காதீர்கள், அந்த இலைகள் எல்லாம் நாங்கள் இருவரும் பேசும் போது மலர்களாய் எங்களுக்கு அர்ச்சனை செய்யும் !
கட்டளையிடுகிறேன் நானுனக்கு கோடாரியால் வெட்டுவதை நிறுத்து. அங்கிருக்கும் பொந்தில் எங்களைப் போலவே மற்றுமொரு காதல் கிளிகள் இருக்கின்றன.
இரண்டாக பிளக்காதே கல் மனம் கொண்டவனே ! அதில் ஒன்று என்னுடல் மற்றொன்று அவளுடல். சொல்கிறேன் செவி சாய்த்துக் கேள். நாங்கள் அர்த்தநாரீசுவரர் அவதாரமடா !
அந்தப் பிஞ்சிப் பூக்களை பூட்சுகாலால் நசுக்காதேயடா அவையெல்லாம் எங்கள் பிள்ளைகள் போன்றதடா !
அயோக்கியனே ! அங்குள்ள பறவைகளை விரட்டியடிக்காதே ! அவையெல்லாம் எங்கள் நண்பர்களடா !
கண் தெரியா குருடனே ! வெட்டிய மரத்தில் இருந்து ரத்தப் பால் வடிகிறது பார் இரக்கமில்லையா உனக்கு ?
அடிமுட்டாளே அடிவேரை வெட்டாதே ! நானும் என்னவளும், மறுபடியும் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோம் !
என்ன வேணும் சொல் ஏளனமாய் சிரிப்பவனே ! கட்டில் வேண்டுமோ உனக்கு ? இல்லை தொட்டில் வேண்டுமா உனக்கு ? சன்னல் வேண்டுமா ? கதவு வேண்டுமா ? ஊஞ்சல் வேண்டுமா ? மரப்பலகை வேண்டுமா ? நடைப் பழக நடைவண்டி வேண்டுமா ? நாலுத்தெரு தள்ளிப் போக வண்டி வேண்டுமா ? சவப்பெட்டி வேண்டுமா ?
காது கொடுத்து கேள் அதோ அங்கே ஆந்தை அழுகிறது ! கிளி தற்கொலை செய்யத் துடிக்கிறது !
உனக்கு எனக்கு வீடிருக்கு. இந்த ஐந்தறிவு ஜீவனுக்கு யார் இருக்கா ?
மது மயக்கத்தில் உள்ளவனே குடித்ததை குமட்டி விட்டு குருதியில் நான் சொல்வதை ஏற்றிக் கொள்.
மரத்தை வெட்டி, வீடு கட்டி, ஜன்னல் செய்து, கதவருகே ஊஞ்சலை தொங்க விட்டு, சுவை மிகு உணவை சமைத்து, ஆடம்பரமாய் கட்டில் செய்து, காதலால் கலவி செய்து, குழைந்தைப் பெற்று, அக்குழந்தைக்கு நடைபழக நடைவண்டி செய்து, சக்கரம் செய்து வண்டி ஓட்டி, இருதியில் உனக்கு சவப்பெட்டி செய்வது வரை அந்த மரத்தின் பயனை நினைத்துப் பார்
இரக்கமில்லையேல் இப்போதே வெட்டிக்கொள். நான் என் காதலியை அழைத்துக் கொண்டு, இந்த கிளிகளைக் கூட்டிக் கொண்டு செல்கிறேன். நாங்கள் இருவரும் வளர்த்த இன்னொரு மரமிருக்கிறது.
அங்கே வந்து விடாதே ! அது என் இடம். என்னவள் பெயரில் உள்ளது. வந்து விடாதே வசைப்பாடி வாசலோடு திருப்பி விடுவேன்.
கணினியும் என் காதலியும் !...
கணினி இயக்குகையில் நானென் கையில் நகம் கடிக்கையில் என் வலக்காதை திருகி கன்னி நீ நகம் கடிக்காதே என்பாயா ?
விசைப்பலகையை விருப்பமில்லாமல் விடு விடென்று நான் தட்ட, விசைப்பலகைக்கு வாயிருந்தால் வஞ்சகமில்லாமல் அழுமென்று அடுக்கடுக்காய் அடுக்கலையிலிருந்து பொய்களை சொல்வாயா ?
மேசைக் கணினியை மேம்போக்காய் நான் நோக்குகையில், என்னருகிலிருக்கும், தேநீர் கோப்பையை ஈ , எறும்பு மொய்ப்பதுப் போல் எனை நீயும் மொய்ப்பாயா ?
கணினியில் நான் தோற்று தோற்று விளையாடுகையில் என்னுடன் சேர்ந்து அவ்விளையாட்டினை நீ விளையாடி வெற்றிக் கண்டு பூரிப்பாயா ?
கேட்பொறியில் கேட்ட பாடலை நான் கேட்கையில், என் கேட்பொறியின் மறுமுனையை உன் காதில் காதலோடு மாட்டிக் கொண்டு அப்பாடலை நீ என்னுடன் சேர்ந்தே முனு முனுப்பாயா ?
மின்னல் வேகத்தில் வருமென் மின்னஞ்சலை, கண் இமைக்காமல், குயிலிடமிருந்து கடன் வாங்கிய உன் கொஞ்சும் குரலால் படித்து கூறுவாயா ?
கணினி திரையகத்தினை கண்சிமிட்டாமல் நான் நோக்குகையில் வருமென் கண்ணீரை, நங்கையே உன் நவீன கைக்குட்டை கொண்டு நீ துடைப்பாயா ?
முகநூலில் முத்துக்களாய் ஆங்காங்கே சிதறியிருக்கும் முத்துகளை நான் பொறுக்கி, முக்கியமானதை மட்டும் நானுன்னிடம் கூறுகையில் எனை முத்தமிடுவாயா ?
இல்லை தேவையில்லாமல் சுற்றித் திரியும் பழைய பதிவுகளை, பாவை நீ பார்க்காமல் பத்திரமாய் பாதம் பதித்து செல்வது போல் பாவி எனக்கு பாடம் புகட்டி செல்வாயா ?
மழையும் என் காதலும்...
லேசாய் மழைத்தூறும் தருணமதில் நான் எதேதோ உன்னிடம் பிதற்றுகையில், சட்டென்று என் கைகளை பிடித்து, போதும் உன் புலம்பல்கள் என்று சொல்வாயா ?
ஆரவாரமாய் அவ்வப்போது பட் பட் என்று, பூமித்தாயை முத்தமிடும் மழைத்துளிகளை நானுற்று நோக்குகையில் உன் முகம் தெரிகிறதென்றால் மகிழ்ச்சியடைவாயா ?
மண்வாசனையை விட நீ சூடிய மல்லிகை வாசனை மனமதை மயக்குகிறதென்றால் மங்கையே நீ மதில் மேல் பூனைப் போல் நடந்து வருவாயா ?
பூச்சிகளின் சத்தங்களை விட உன் சலங்கைகளின் சத்தங்கள் என் காதில் தெவிட்டாத தேவகானமிசைக்கிறது என்றால் தேவைதையே என் மீது நீ மையல் கொள்வாயா ?
மிச்சமிருந்த மின்னல்கள் மின்னியே என் இரு கண்களை பறிப்பதைவிட, மின்னல் வெட்டு ம் உன் பார்வை வீதியெங்கும் விசிறியடிக்குமென்றால் ஒரு மின்னல் பார்வை பார்ப்பாயா ?
இடியிடிக்கும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று சொல்வதற்க்கு பதில் என் பெயர் சொல்வாயா ?
இடிகள் இசைக்கும் போதெல்லாம், கெட்டிமேள ஞாபகமெனக்கு வருகிறதென்றால் இச்சென்று இடைவிடாது கண்ணத்தில் முத்தமழைப் பொழிவாயா ?
தவளைகள் தாவி தாவிக் குதிப்பது போல், நீயென் மீது தாவிக் குதிப்பாயா ?
தூரத்திலிருக்கும் கடலலை தன் அலையோசையை ஒண்டியாய் என் காதோரத்தில் காதலிசைப்பதுப் போல் நீ என் காதோரத்தில் கலகலப்பாய் உன் காதலோசை இசைப்பாயா ?
மதியை மயக்கும் மதிப் போலுன்னை மாயமாய் தொடர்வேனென்றால் மதியிழந்தவன் நானென்று நாசுக்காய் நகர்வாயா ?
மரத்தினிலிருந்து மாசில்லாமால் மழைத்துளிகள் சொட்டுவதுப் போல், உன் காதல் துளிகளை என் மீது சொட்டுவாயா ?
இல்லை சட்டென்று மின்சாரம் துண்டிக்கப் படுவதுப் போல் என் காதலை துண்டிப்பாயா ?
பாவையே பைய பதில் கூறு. பயமில்லை. பாவலன் நானிருக்கிறேன்.
என்னைக் காதலிப்பாயா ?
உன் அழகு முகத்தை சற்று அழுகாச்சியாக்கி, கண்களை நீ கசக்குகையில், உன் விழியோரமிட்ட அஞ்சனம் தானாய் கரைந்து உன் கன்னக் குழியில் , நீ வைக்க மறந்த திருஷ்டிப் பொட்டை வைக்கிறது என்று சொன்னால் உன் அழுகாச்சி "காவியத்தினை" சிறிது மூடி வைப்பாயா ?
வலைப்பூக்களில் நீ விளையாடும் போது, உன் வளையல்களும் உன்னுடன் சேர்ந்து விளையாடுகின்றன என்று நான் மிகைப்படுத்திச் சொன்னால் என்னை முத்தமிடுவாயா ?
அடிமேல் அடிவைத்து அன்னநடை நீ நடக்கையில், உன் வெள்ளிக் கொலுசுகள் சங்கீத ஒலிகளை எழுப்புகின்றன என நான் வெள்ளந்தியாய் சொன்னால் நீ வெட்கப் படுவாயா ?
ஒற்றை ரோஜாவதனை ஒருத்தியாய் நீ சூடுகையில், சூட்சுமமாய் சுற்றிவந்த வண்டொன்று நீ சூடிய ரோஜாவினை மட்டுந்தானிது நுகருமென்றால் என் உச்சிதனை நீ நுகர்வாயா ?
அன்றரைத்த சந்தனமதை, உன் நடுநெற்றியில் சிறு குச்சியால் மெலிதாய் கீறி, அதை நீ தூக்கி எறிந்துவிட்டதால் தான் தன்னுயர் துறந்து தற்கொலைச் செய்து கொண்டதென்று கூறினால் என்னை குறும்புகாரனென்பாயா ?
நாடெல்லாம் நடந்த நகைப்புக்குரிய செய்திகளை, நாடகமாய் நான் சொல்ல நங்கையே நீ நகைப்பாயா ?
உன் காதோர மடலிடம் என்னைப் பற்றிய ரகசியங்களை, ரகசியமாய் நான் சொல்ல செவி சாய்ப்பாயா ?
உன் ஈரைந்து விரல்களும், என் ஈரைந்து விரல்களும் கோர்த்தால் நாமிருவரும் நாட்டைக் கூட சுற்றலாமென்றால் என்னுடன் கை கோர்ப்பாயா ?
கவிதைகளை நானெழுதி, நாசுக்காய் கண்ணடித்தால் , உன் இமைகள் தொடுக்கும் அம்புகளை என் மீது வரிசையாக ஏவி என் மீதுப் போர்த் தொடுப்பாயா ?
நிதமும் நித்திரையில்லாமல், நிதானமில்லாமல், நிகழ்சிகளையெல்லாம் மறந்து உனை நினைத்து, நினைத்து காதலிக்கிறேன் நானென்றால்,
எனை நீ காதலிப்பாயா ?
ஏழையின் குடிசை...
மழைநீர் சேகரிப்பு அங்கு செவ்வனே செழித்தது. குளிமையான காற்றும் தகிக்கும் வெப்பமும் நண்பர்களாய் சுற்றித் திரிந்தது.
மின்சாரத்திற்கோ அங்கு பஞ்சமேயில்லை. நண்பகலில் சூரியனும், நடுநிசியில் திங்களும் தன் பணியினை சிறப்பாக செய்துக்கொண்டிருந்தன.
மாதத்தில் ஒருமுறை மட்டும் மின்வெட்டு அதுவும் அமாவாசையன்று. அப்பொழுது மட்டும் மெழுகுவர்த்தியின் உறவு தேவைப்பட்டது.
அவ்வப்போது கார்மேகம் வடிக்கும் கண்ணீரை சில எவர் சில்வர் பாத்திரங்கள் உள்வாங்கிக் கொண்டன.
இடியுடன் கூடிய கனமழையால் சில இசைக் சப்தங்கள் கேட்கும்.
பாம்புக்கும் கீரிக்கும் பகையாம். ஆனால் அங்கு இரண்டும் ஒருசேர விளையாடும்.
அங்கே களவாடிச் செல்ல ஒன்றுமில்லை. ஆகையால் கள்வர்கள் ஊர்த் திருவிழாவிற்கு மட்டுமே முரசுக் கொட்டினர்.
குளிர்சாதனப் பெட்டி அங்கில்லை. மாறாக சிவப்புச் சாயம் பூசப்பட்ட மண்பானையே இருந்தது.
அங்கே பணத்திற்கோ பஞ்சம். கனவுகள் மட்டுமே மிஞ்சும்.
அங்கு ஒரே ஒரு குறை மட்டுமே,
படுத்தவுடன் தூக்கம் வந்தது.
ஹைக்கூக்கள் சில :
ஆயிரம் வீடு கட்டிய மேஸ்திரி
படுத்துறங்கினான்,
சத்திரத்தில்.
ஓடிவிளையாடு பாப்பா பாடலை
பாடிக்கொண்டிருந்தாள் சிறுமி
தாழிடப்பட்ட அறையில்.
ஒட்டடை அடிக்கும் போது
தற்கொலை செய்து கொண்டது,
சிலந்தி.
கடன் அன்பை முறிக்கும்.
எழுதியிருந்தது,
வட்டிக்கடை வாசலில்.
சிறையில் அடைக்கப்பட்டது
நிலா !
ஜன்னல் வழியாக பார்த்த போது!
ரோடு முழுவதும்
வேகத்தடை
#டிராபிஃக்
வெள்ளைச் சீருடையில்
பிரபல டாக்டர்
நம்பர் 306
என் கோபத்தை அடக்கும்
ஒரே ஆயுதம்
அவளின்
முத்தம்.
பள்ளியில் மணியடித்தவுடன்
பறக்கின்றன
புறாக்கள்.
உன் இருவிழியோரம்
என் பேனாவின்
'மை'
சரஸ்வதி தேவி
தூங்கிக் கொண்டிருந்தாள்
பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில்.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
எழுதியிருந்தது
செருப்புக்கடையில்.
கிருமிகள் அண்டாமல் இருக்க
மினரல் வாட்டரை உபயோகித்தார்
பால்காரர்.
ஓட்டுக்கு பணம் வாங்காதீர் என்றார்
அரசியல்வாதி
பணம் கொடுக்க வந்தபோது.
மஹாலட்சுமி
சிறையில் அடைக்கப்பட்டாள்,
இரும்பு பீரோவினுள்.
கேள்வி கேட்க ஆளில்லை என்று
ஊதாரித்தனமாய் சுற்றுகிறது
ஃபேன்
பத்தாயிரம் லஞ்சம் கொடுத்து
வேலை வாங்கியவனுக்கு
லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலை.
சுத்திகரிக்கப்பட்ட
குடிநீரில் கலப்படம்
#சாக்கடை நீர்
கோவிலுக்கு செல்லமாட்டேன்.
அங்கே கடவுள் இருக்கிறார்.
இப்படிக்கு,
நாத்திகன்.
என் ஃபேஸ்புக்"டைம் லைன்" முழுவதும்
பரவிக்கிடக்கும் அவளின்
#நினைவுகள்
என் கன்னத்தின் முகப்பரு
ஒவ்வொன்றும் ஞாபகப் படுத்தும்
உன் நினைவுகளை.
உன் கோபம்
முடிவடைகிறது
பசிக்கிறது என்ற ஒற்றை வார்த்தையில்
சுதந்திரதினத்துக்கு துவைக்கப்பட்ட ,
தேசியக் கோடியில்,
காக்கை எச்சம்
உன் அழகிற்கு
இறைவன் இயற்கையாய் வைத்த திருஷ்டிப் பொட்டு
#முகப்பருக்கள்
அறுசுவை உணவிருந்தும் பசிக்கவில்லை.
காரணம் ?
#பரிமாற நீயில்லை.
குடையிருந்தும் , மழையிருந்தும்
அருகினில் நீயில்லை.
#வென்நீராகிறது மழை
எதிர்பாரா அழுகை
கண்ணுக்குள்
தூசி !
நேரம் சரியில்லை எனக்கு
இப்படிக்கு
கடிகாரக் கடையின் முதலாளி !
சுத்தம் சோறு போடும்
எழுதியிருந்தது
குப்பைத்தொட்டியில்.
வளைவுகளில் முந்தாதீர் என்று எழுதியிருந்தது
டயர் தேய முந்திய வாகனத்தின்
பின்புறம்.
பாடலுக்கு தகுந்தாற்போல்
நடனமாடுகிறது
பேருந்து.
என்னை நானே அறைந்துக் கொண்டேன்
கன்னத்தில்
கொசுக்கடி.
கத்தியுமில்லை, ரத்தமுமில்லை
பெரிய காயம்
மனதில்.
சத்தம் போடாதீர் என்று பலகை
இருந்தது குழைந்தைகள்
விளையாடுமிடத்தில்.
ஆற்றுமணலோடு
கடத்திவரப்பட்டது
லாரி !
உயிர் ஊசலாடுகையில்
ஓவென்று கதறிஅழுகிறது
#ஆம்புலன்ஸ்
நான் அவனில்லை...
சுற்றிலும் கயவர்களும், முன்னொன்று சொல்லி புறமொன்று பேசும் நடிகர்களிடத்துமிருந்து சாதுர்யமாய் விடைப்பெற்றான்.
கத்தரி வெயிலில் குழாயைதிறந்தால் வரும் வெந்நீர் போலொரு தண்ணீரை பருகி வந்த அவன், இன்று இமயமலையிலிருந்து நேராய் சீறி வருமூற்று நீரதனை சுவைக்கிறான்.
இம்முடிவு சரியாய் இருக்குமோ? அம்முடிவு தவறாயிருக்குமோ யென்று பயந்து பயந்தெடுத்த முடிவுகளை, இத்தருணமுதல் அச்சமில்லாமல் செயல்படுத்துகிறான்.
எப்போதும் வேண்டாததை பற்றியும், தேவையில்லாததைப் பற்றியும் மட்டுமே யோசிக்கின்ற அவன் . இன்றிலிருந்து நடப்பவைகளெல்லாம் நல்லவையாகவே இருக்கும் என்ற மனோ பக்குவத்திற்கு வந்துள்ளான்.
தகிக்கும் பாலைவனத்தில் பட்டா போட்டிருந்த அவன். இன்று பாலவனத்தில் உள்ள சோலையில் இடம் வாங்கி குடியேறியிருக்கிறான்.
இருட்டைக் கண்டால் பதைபதைக்கும் அவன் கண்களும், வெயிலைக் கண்டால் வேர்வை வடியும் அவன் தேகமும் இன்று அவன் பேச்சைத் தான் கேட்கின்றன.
துரோகம், வஞ்சகம், பொறாமை, அவமானம் இவற்றை மட்டுமே பார்த்துப் பார்த்துப் பழகிய அவன், இன்று குழந்தையின் எச்சில் வடியும் சிரிப்பினைக் கண்டு மகிழ்கிறான்.
பணம் பத்தும் செய்யும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழிகளை பொய்யென்றுரைக்கிறான். பணமும் ஒரு சாதாக் காகிதம் தான். அதுவும் காற்றில் பறக்குமென்று புரிந்துக் கொண்டு பூரிப்படைகிறான்.
மெத்தைவீட்டில், பஞ்சுத் தலையணையை கட்டிப் பிடித்து தூங்குமவன், இனி கீற்று வீடு போதுமெனக் கென்கிறான்.
நடந்துபோகா சோம்பேறியான அவன். இன்று நானூறு மைல்கள் நடக்கிறான்.
ஆள்பாதி ஆடைப் பாதி பழமொழியை கிண்டல் செய்கிறான். முகச்சவரம் செய்த மினுமினுப்போடு மிடுக்காய் வீரநடை போடுபவன், இன்று தன் தாடியை தடவுகிறான்.
எப்போதும் ஜவ்வாது வாசத்தில் "நாற்றமடிக்கும்" அவன் தேகம் இன்று வேர்வையில் மணக்கிறது !
செருப்புடனே நடந்து பழகிய அவன் கால்கள், இன்று செருப்பில்லாமல் நடக்க பழகுகின்றன.
இன்னார் இப்படித்தான் என்றறியாமல் இன்பமாய் பழகுபவன், இன்று இன்னார் இப்படித்தான் என்றறிந்துக் கொள்கிறான்.
அறுசுவை உணவை மட்டுமே பசிக்கு புசித்தவன், இன்று ஊற்று நீரை பருகியதிலும் , காற்றை காசில்லாமல் சுவாசித்ததிலும் புளகாங்கிதமடைகிறான்.
அம்மையப்பனை, உற்றார் உறவினர்களை, அலட்சியமாய் பார்த்தவன், இன்று அவர்களிடத்தில் ஆசி பெறுகிறான்.
கனவில் மட்டுமே காதலியை கரம் பிடித்தவன் இன்று, தன்னைக் கிள்ளிப் பார்த்து விட்டு நிஜத்தில் கரம்பிடிக்க இருக்கிறான்.
எப்போதுமிராத சந்தோஷத்தில் திகைக்கிறான். !
நடக்காதென்று சத்தியமாய் நினைத்த கனவுகளுக்கு எல்லாம் பந்தக் கால் முகூர்த்தம் பண்ணப் போவதை எண்ணி எண்ணி ஆனந்த கூத்தாடுகிறான்.!
இதோ முகநூலைத் தாண்டிய ஒரு உலகம் ! அது எப்படி இருக்கும் ? இல்வாழ்க்கை எப்படி இருக்கும் ? என்று யோசித்துக் கொண்டே முகநூலில் இருந்து வெளியேறுகிறான்.
பொறுமையோடு இந்த காதலிசை நூலை, கண்ணால் கேட்டதுக்கு நன்றி. இந்த நூலினை படிக்கும்போது தங்களுக்கும் யார் இவனுடைய காதலி என்று சற்று யோசித்தால் போதும். அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
படிப்பவர்கள் எதாவது குறையிருந்தாலும் பிழையிருந்தாலும் தயவுசெய்து பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். ஓரிரு நிமிடங்களை ஒதுக்கி தங்களின் கருத்துக்களை WRITER.RAGA@GMAIL.COM எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக