மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை II


சுய சரிதை

Back

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை II
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)


இரண்டாம் பாகம்

 


 

  • 1. ராய்ச்சந்திர பாய்

பம்பாய் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது என்று முந்திய அத்தியாயத்தில் கூறினேன். ஜூன், ஜூலை மாதங்களில் அரபுக் கடலில் இவ்விதம் இருப்பது சகஜம். ஏடனிலிருந்து நெடுகவுமே அலை அதிகமாகவே இருந்தது. அநேகமாக எல்லாப் பிரயாணிகளுக்கும் மயக்கமும் வாந்தியுந்தான். நான் ஒருவனே எதுவும் இல்லாமல் சுகமாக இருந்தேன். கப்பலின் மேல் தளத்தில் இருந்து கொண்டு, காற்றின் ஆவேசத்தையும் அலைகள் வேகமாகக் கப்பலில் வந்து மோதுவதையும் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர இரண்டொருவரே காலை ஆகாரம் சாப்பிட வருவார்கள். ஓட்ஸ் கஞ்சித் தட்டை மிக எச்சரிக்கையுடன் மடியில் வைத்துக்கொண்டு சாப்பிடுவேன். கொஞ்சம் உஷாராக இல்லாது போனால் மடியிலெல்லாம் கஞ்சி கொட்டிவிடும்.

 

     வெளிப்புயல், என் அகப்புயலுக்குப் ஒரு சின்னமாகவே இருந்தது. வெளிப்புயல் எவ்விதம் என்னைக் கலங்கச் செய்யவில்லையோ அதைப்போலவே அகப்புயலைக் குறித்தும் நான் கலங்கவில்லை என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன். சாதிக்கட்டுப்பாட்டுத் தொல்லை வேறு, என்னை எதிர்நோக்கி நின்றது. பாரிஸ்டர் தொழிலைத் தொடங்குவது சம்பந்தமாக எனக்கு இருந்து வந்த அதைரியங்களை முன்பே சொல்லியிருக்கிறேன். மேலும், நான் சீர்திருத்தக்காரன். எனவே சில சீர்திருத்தங்களை எவ்விதம் ஆரம்பிக்கலாம் என்பதைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததையெல்லாம் விட இன்னும் அதிகக் கஷ்டங்கள் எனக்குக் காத்துக் கொண்டிருந்தன.

 

     என் மூத்த சகோதரர் என்னைச் சந்திப்பதற்காகத் துறைமுகத்திற்கு வந்திருந்தார். அவர், இதற்கு முன்பே டாக்டர் மேத்தாவுடனும் அவருடைய மூத்த சகோதரருடனும் பழக்கமாகிவிட்டார். தமது வீட்டிலேயே நான் தங்க வேண்டும் என்று டாக்டர் மேத்தா வற்புறத்தியதன் பேரில் நாங்கள் அங்கே சென்றோம். இவ்விதம் இங்கிலாந்தில் ஏற்பட்ட பழக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து இரு குடும்பங்களுக்கும் இடையே நிரந்தரமான நட்பாக வளர்ந்து விட்டது.

 

     என் தாயரைப் பார்க்கவேண்டும் என்று என் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. என்னைத் திரும்ப வரவேற்று, மார்புடன் தழுவி மகிழ, அவர் தமது பூதவுடலுடன் அப்பொழுது இல்லை என்பது எனக்குத் தெரியாது. அவர் காலமாகிவிட்டார் என்ற துக்கச் செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தேன். நான் இங்கிலாந்தில் இருந்தபோதே, என் அன்னை இறந்துவிட்டார். இதை என் சகோதரர் எனக்கு தெரிவிக்கவில்லை. வெளிநாட்டில் இப்பெரும் துக்கத்தின் வேதனை எனக்கு ஏற்பட வேண்டாம் என்று அவர் நினைத்திருக்கிறார். என்றாலும் இப்பொழுது அச்செய்தி எனக்குக் கடுமையான அதிர்ச்சியையே உண்டாக்கியது. ஆனால், அதைக் குறித்து நான் அதிகமாக விவரித்துக் கொண்டு போகக் கூடாது. என் தந்தையார் இறந்தபோது எனக்கு இருந்த துக்கத்தைவிட இது இன்னும் அதிகத் துக்கம் என் உள்ளத்தில் ஆசையோடு வைத்திருந்த நம்பிக்கையெல்லாம் சிதறுண்டு போயின. ஆனால், அழுது புலம்பி என் துக்கத்தை நான் வெளிக்காட்டவில்லை என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கண்ணீர் பெருகுவதையும் என்னால் தடுத்துவிட முடிந்தது. எதுவுமே நிகழாதது போலவே என் காரியங்களைக் கவனித்து வந்தேன்.

 

     டாக்டர் மேத்தா, பல நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் அவருடைய சகோதரரான ஸ்ரீ ரேவா சங்கர் ஜகஜீவனும் ஒருவர். அவருக்கும் எனக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் நீடித்த நட்பு வளர்ந்தது. ஆனால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் ராய்ச்சந்திரர் - ராஜ்சந்திரர் என்ற கவி முக்கியமானவர் என்பதை நான் குறிப்பிட வேண்டும். அவர் டாக்டர் மேத்தாவின் ஒரு மூத்த சகோதரரின் மாப்பிள்ளை ரேவாசங்கர் ஜகஜீவனி என்ற பெயரில் நடந்து வந்த நகை வியாபாரத்தில் அவர் ஒரு பங்குதாரர். அவருக்கு அப்பொழுது வயது இருப்பத்தைந்துக்கு மேல் இராது. ஆனால் அவரை முதன் முதல் பார்த்ததுமே அவர் சிறந்த ஒழுக்கமும் புலமையும் உள்ளவர் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் சதாவதானி என்றும் பெயர் பெற்றிருந்தார். (ஏககாலத்தில் நூறு விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் அல்லது கவனிக்கும் பேராற்றல் படைத்தவர்). அவர் தமது அபாரமான ஞாபக சக்தியால் செய்யும் சில அருஞ்செயல்களைப் பார்க்கும்படியும் டாக்டர் மேத்தா என்னிடம் கூறினார். ஐரோப்பிய மொழிகளில் எனக்கு எத்தனை சொற்கள் தெரியுமோ அவ்வளவையும் சொல்லி அவற்றைத் திரும்ப ஒப்பிக்கும்படி அவரிடம் கேட்டேன். நான் அந்தச் சொற்களை எந்த வரிசைக் கிரமத்தில் சொன்னேனோ அந்த வரிசைக் கிரமம் ஒரு சிறிதும் தவறாமல் அவர் ஒப்பித்துவிட்டார். அவருடைய அபார சக்தியில் நான் மயங்கிப் போய்விடவில்லையாயினும். அந்த ஆற்றல் எனக்கு இல்லையே என்று பொறாமைப்பட்டேன். ஆனால் அவரைக் குறித்து எனக்குப் பின்னால் தெரியவந்த சில விஷயங்கள் என்னை மயக்கியே விட்டன. சமய நூல்களில் அவருக்கு இருந்த அபார ஞானமும் அப்பழுக்கற்ற அவரது ஒழுக்கமும் ஆத்மானுபூதியை அடைய வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வமுமே என்னை மயக்கியவை. ஆத்மானுபூதியை அடையவேண்டும் என்ற ஒன்றிற்காகவே அவர் வாழ்ந்து வந்தார் என்பதையும் பிறகு கண்டேன். முக்கானந்தரின் பாடல் ஒன்றை அவர் சதா உச்சரித்துக் கொண்டே இருப்பார். அது அவர் உள்ளத்தில் பதிக்கப்பட்டிருந்தது என்றே சொல்ல வேண்டும். அப்பாடலாவது:

 

 

நித்தம் யான்செய் வினையதனில்

     நிமலன் தோற்றம் காண்பேனேல்,

அத்தன் அருளுக் குரியோனாய்

     ஆனேன் என்று அகமகிழ்வேன்;

வித்தும் முதலும் ஆதியுமாய்

     விளங்கும் நாதன் என் கடவுள்;

முக்தா னந்தன் வாழ்விற்கு

     மூலா தாரம் அவனேகாண்.

 

     ராய்ச்சந்திர பாயின் வியாபாரம் பல லட்சக்கணக்கில் மூலதனம் கொண்டது. முத்து, வைரங்களைச் சோதித்துப் பார்ப்பதில் அவர் கைதேர்ந்தவர். எவ்வளவுதான் சிக்கலான பிரச்னையாக இருந்தாலும், அது அவருக்குக் கஷ்டமானதே அல்ல. ஆனால், அவருடைய வாழ்க்கையில் இவைகளெல்லாம் முக்கியமானவை அன்று. அவரது வாழ்க்கையில் மிகக் கேந்திரமாக இருந்தது கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்ற ஆர்வம் தான். அவருடைய வியாபார மேiஜ மீதிருக்கும் பல நூல்களுள், சில மத நூல்களும், அவருடைய தினக்குறிப்பும் இருக்கும். வர்த்தக வேலை முடிந்ததுமே மத நூல்களையோ தினக்குறிப்பையோ பிரித்து விடுவார். அவர் எழுதிப் பிரசுரமாகியிருக்கும் பல நூல்கள் இந்தத் தினக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டவையே. பலமான வர்த்தக பேரங்களையெல்லாம் பேசி முடித்தவுடனேயே, ஆன்மாவில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை எழுத ஆரம்பித்துவிடுகிறார் என்றால், அவர் உண்மையில் சத்தியத்தை நாடுபவராக இருக்க வேண்டுமே அல்லாமல் வியாபாரியாக இருக்க முடியாது என்பது தெளிவானது. ஒரு தடவை இரண்டு தடவையன்று, அநேகமாக எப்பொழுதுமே தேடும் முயற்சியில் இவ்விதம் ஆழ்ந்திருந்ததைக் கண்டேன். சாந்தி நிலையிலிருந்து அவர் மனம் மாறுப்பட்டதாகவே நான் கண்டதில்லை.

 

     எந்த ஒரு வியாபாரமும், சுயநலமும் என்னை அவருடன் பிணைக்கவில்லை என்றாலும், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இன்புற்றேன். அப்பொழுது நான் வழக்கே இல்லாத வெறும் பாரிஸ்டர் என்றாலும் என்னைப் பார்க்கும் போதெல்லாம், சமய சம்பந்தமான முக்கியமான விஷயங்களைக் குறித்து என்னிடம் அவர் பேசுவார். அச்சமயம் நான் எதிலும் தெளிவில்லாது, இருளில் வழி தெரியாமல் தடவிக் கொண்டிருப்பவனாகவே இருந்தேன். சமய சம்பந்தமான விவாதங்களில் எனக்கு அதிகச் சிரத்தை இருந்ததாகச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் பேச்சு எனக்குக் கவர்ச்சி அளிப்பதாக இருந்ததைக் கண்டேன். அதற்குப் பிறகு மதத் தலைவர்கள் பலரையும் மத குருக்களையும் நான் சந்தித்திருக்கிறேன். பல மதங்களின் தலைவர்களைச் சந்திக்க முயன்றும் இருக்கிறேன். ராய்ச்சந்திரரைப் போல அவர்களில் யாருமே என் மனத்தைக் கவர்ந்ததில்லை என்பதை நான் சொல்ல வேண்டும். அவருடைய சொற்கள், என் உள்ளத்தில் நேரே சென்று பதிந்தன. ஒழுக்க சீலத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தைப் போலவே அவருடைய அறிவாற்றலும் அவரிடம் நான் பெருமதிப்பு வைக்கும்படி செய்தது. அவர் விரும்பி என்னைத் தவறான வழியில் செலுத்திவிட மாட்டார். தமது அகநோக்கு எண்ணங்களை எல்லாம் என்னிடம் எப்பொழுதும் அவர் கூறுவார் என்ற உறுதியும் எனக்குப் புலப்பட்டது. ஆகையால், ஆன்மீகத் துறையில் எனக்கு சிக்கல் ஏற்பட்ட சமயங்களிலெல்லாம் அவரே எனக்குப் புகலிடமாக விளங்கினார்.

 

     எனக்கு அவரிடம் எவ்வளவோ மதிப்பு இருந்தும், என் குருநாதராக எனது இதயபீடத்தில் அவரை நான் அமர்த்திக் கொள்ளவில்லை. அந்தச் சிம்மாசனம் இன்னும் காலியாகவே இருக்கிறது. அதில் அமர்வதற்கு ஏற்றவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 

     குருவைக் குறித்தும், ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக் கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபடவேண்டும். ஏனெனில் அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை.

 

 

     இவ்விதம் ராய்ச்சந்திர பாயை என் உள்ளத்தின் சிங்காதனத்தில் குருவாக அமர்த்திக் கொள்ள என்னால் இயலாவிட்டாலும் அவர் அநேக சந்தர்ப்பங்களில் எவ்விதம் எனக்கு வழிகாட்டியாகவும் உதவி செய்பவராகவும் இருந்திருக்கிறார் என்பதை போகப் போகப் பார்ப்போம். இக்காலத்தவர்களில் என் உள்ளத்தைக் கவர்ந்து என் வாழ்க்கையில் ஆழ்ந்த சுவட்டை விட்டுச் சென்றோர் மூவர் ஆவர். ராய்ச்சந்திரர் தமது ஜீவியத் தொடர்பினாலும், டால்ஸ்டாய், ‘ஆண்டவன் ராஜ்யம் உன்னுள்ளேயே’ என்ற தமது நூலினாலும் ரஸ்கின், ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ என்ற நூலினாலும் அவ்வாறு செய்தனர். இவர்களைப் பற்றி உரிய இடங்களில் விரிவாகக் கூறுகிறேன்.

 

  • 2. வாழ்க்கையைத் தொடங்கிய விதம்

 

என் மூத்த சகோதரர் என்னைப் பற்றி எவ்வளவோ அதிக நம்பிக்கைகளையெல்லாம் வைத்திருந்தார். பணம், பெயர், புகழ் ஆகியவைகளில் அவருக்கு ஆசை அதிகம். அவர் விசாலமான உள்ளம் படைத்தவர். அளவுக்கு மிஞ்சிய தாராள குணமும் உள்ளவர். அதோடு, அவர் கபடமற்ற சுபாவமும் உடையவர் ஆதலின் அவருக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் என்னிடம் அதிக கட்சிக்காரர்கள் வரும்படி செய்யலாம் என்று அவர் நம்பினார். அத்துடன் என் வக்கீல் தொழில் பிரமாதமான வருவாய் உள்ளதாக இருக்கப் போகிறது என்றும் எண்ணிக் கொண்டார். அந்த எண்ணத்தில் வீட்டுச் செலவு மிதமிஞ்சிப் போகவும் அனுமதித்து விட்டார். நான் தொழில் நடத்தவதற்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளில் எதையும் அவர் பாக்கி வைக்கவில்லை.

 

     நான் வெளிநாட்டுப் பிரயாணம் செய்ததைக் குறித்து, என் சாதியாரிடையே எழுந்த புயல், இன்னும் இருந்து கொண்டே இருந்தது. அது, சாதியை இரண்டு கட்சிகள் ஆக்கிவிட்டது. இதில் ஒரு கட்சியினர் என்னை உடனேயே சாதியில் சேர்த்துக் கொண்டு விட்டனர். மற்றக் கட்சியாரோ, எனக்கு விதித்திருந்த சாதிக் கட்டுப்பாட்டை நீக்குவதில்லை என்று உறுதி கொண்டிருந்தனர். முதல் கட்சியாருக்குத் திருப்தி அளிக்க வேண்டும் என்பதற்காக என் சகோதரர் ராஜ்கோட்டுக்குப் போகும் முன்பு என்னை நாசிக் அழைத்துச் சென்றார். அங்கே புண்ணிய நதியில் என்னை நீராடச் செய்தார். பிறகு ராஜ்கோட்டிற்குப் போனதும், சாதியாருக்கு ஒரு விருந்தும் வைத்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால், என்னிடம் என் சகோதரருக்கு இருந்த அன்போ எல்லையற்றது. அதே போல் அவரிடமும் எனக்குப் பக்தி உண்டு. ஆகையால், அவர் சொன்னதே சட்டம் என்று மதித்து, அவர் விரும்பியபடியெல்லாம் யந்திரம் போலச் செய்து வந்தேன். இவ்விதம் திரும்பவும் சாதியில் சேர்த்துக் கொள்ளுவதைப் பற்றிய தொல்லை ஒருவாறு தீர்ந்தது.

 

     என்னைச் சாதியில் சேர்த்துக் கொள்ள மறுத்த கட்சியினரிடம் என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் முயலவே இல்லை. அக்கட்சியின் தலைவர்களிடம் எனக்கு வெறுப்புத் தோன்றவும் இல்லை. அவர்களில் சிலர் என்னை வெறுத்தனர். ஆனாலும் அவர்கள் மனம் புண்படும் காரியம் எதையும் செய்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டேன். சாதிக்கட்டுப்பாடு சம்பந்தமான விதி முறைகளையெல்லாம் மதித்து நடந்துகொண்டேன். அந்தக் கட்டுப்பாடுகளின் படி என் மாமனார், மாமியார், தமக்கை, மைத்துனர் உட்பட என் உறவினர் யாருமே எனக்குச் சாப்பாடு போடக்கூடாது. ஆகையால், அவர்களில் யார் வீட்டிலும் நான் தண்ணீர் குடிப்பதுகூட இல்லை. இந்தக் கட்டுப்பாட்டை ரகசியமாக மீறிவிட அவர்கள் தயாராக இருந்தனர். பகிரங்கமாகச் செய்யாததை ரகசியமாகச் செய்வது என்பது என் இயல்புக்கே நேர் விரோதமானது.

 

     இவ்விதம் என்மீது குறை கூறுவதற்கே கொஞ்சமும் இடம் வைக்காமல் நான் நடந்து கொண்டதன் பலனாக, எனக்குச் சாதித் தொல்லை ஏற்படுவதற்கே சந்தர்ப்பம் இல்லாது போயிற்று. அது மாத்திரம் அல்ல. என்னைச் சாதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவனாக இன்னும் கருதிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என்னிடம் அன்போடும் தாராளமாகவும் நடந்து கொண்டார்கள். சாதிக்காக நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று எதிர்பாராமலேயே என் தொழிலிலும் அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். இந்த நல்ல காரியங்களெல்லாம் என்னுடைய எதிர்ப்பின்மையின் பலனே என்பது எனது திடநம்பிக்கை. சாதியில் என்னைச் சேர்த்துக் கொண்டாக வேண்டும் என்று நான் கிளர்ச்சி செய்திருந்தால், சாதியை இன்னும் பல கட்சிகளாகப் பிரித்துவிட நான் முயன்றிருந்தால், சாதியாருக்கு நான் ஆத்திரத்தை மூட்டியிருப்பின் அவர்களும் நிச்சயம் எதிர்த்துப் பதிலுக்குப் பதில் செய்திருப்பார்கள். இங்கிலாந்திலிருந்த நான் திரும்பயதும் புயலிலிருந்து ஒதுங்கிவிடுவதற்குப் பதிலாக, நான் கிளர்ச்சிச் சுழலில் சிக்குண்டு, பொய் நடிப்பை மேற்கொள்ளுவதற்கு உடந்தையாகவும் இருந்திருப்பேன்.

 

     என் மனைவியுடன் எனக்கு இருந்த உறவு, இன்னும் நான் விரும்பிய வகையில் அமையவில்லை. எனக்கு இருந்த சந்தேகக் குணத்தை என் இங்கிலாந்து வாசமும் போக்கக் காணோம். சின்ன விஷயத்திற்கெல்லாம் கூட, என் மனைவி மீது முன்போல் சந்தேகப்பட்டு எரிந்து விழுந்து கொண்டிருந்தேன். ஆகையால் நான் கொண்டிருந்த ஆசைகளெல்லாம் நிறைவேறாமலே இருந்தன. என் மனைவி எழுதப் படிக்கத் கற்றுக்கொண்டாக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அவளுடைய படிப்புக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தேன். ஆனால், இதில் என் காமம் வந்து குறுக்கிட்டது. என்னுடைய குறைபாடுகளுக்காக அவள் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. ஒரு சமயம் அவளை அவளுடைய தந்தையார் வீட்டிற்கு அனுப்பிவிடும் அளவுக்குக்கூட போய்விட்டேன். அவளைக் கொடிய மனத் துயரத்திற்கு ஆளாக்கிய பிறகே, திரும்ப அழைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். இவையெல்லாம் என்னுடைய பெருந்தவறுகள் என்பதை பின்னால் உணர்ந்தேன்.

 

     குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் விஷயத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன். என் அண்ணனுக்குக் குழந்தைகள் உண்டு. நான் இங்கிலாந்து சென்ற போது, வீட்டில் விட்டுச் சென்ற என் பையனுக்கும் இப்போது நான்கு வயது. அச்சிறு குழந்தைகளுக்குத் தேகாப்பியாசம் சொல்லிக் கொடுத்து, அவர்கள் உடல் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பது என் ஆவல். என்னுடைய நேரான மேற்பார்வையில் அக்குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்றும் நினைத்தேன். இதில் என் சகோதரரின் ஆதரவும் எனக்கு இருந்ததால் என் முயற்சியில் அநேகமாக வெற்றியும் பெற்றேன். குழந்தைகளுடன் கூடியிருப்பதில் எனக்கு அதிகப் பிரியம். அவர்களுடன் விளையாடி, வேடிக்கை செய்து கொண்டிருக்கும் வழக்கம், இன்றைக்கும் என்னிடம் அப்படியே இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு நான் நல்ல உபாத்தியாயராக இருப்பேன் என்ற எண்ணம் அப்பொழுது முதல் எனக்கு இருந்து வருகிறது.

 

     உணவுச் சீர்திருத்தம் அவசியமானது என்பது தெளிவு. ஏற்கனவே வீட்டில் தேநீரும் காப்பியும் புகுந்துவிட்டன. நான் இங்கிலாந்து திரும்பியதும், ஒருவிதமான ஆங்கிலச் சூழ்நிலை வீட்டில் இருக்கும்படி செய்வதே சரி என்று என் சகோதரர் நினைத்துவிட்டார். அதனால், எப்பொழுதோ விஷேட சமயங்களில் மட்டும் உபயோகிப்பதற்கென்று வைத்திருந்த பீங்கான் சாமான்கள் முதலியன தினசரி உபயோகத்திற்கே வந்துவிட்டன. என்னுடைய சீர்திருத்தங்கள் அதை பூர்த்தி செய்தன. தேநீருக்கும் காப்பிக்கும் பதிலாக, ஓட்ஸ் கஞ்சியையும் கோக்கோவையும் புகுத்தினேன். உண்மையில் தேநீருடனும் காப்பியுடனும் இவை அதிகப்படியாகவே சேர்ந்துவிட்டன. ஐரோப்பிய உடையையும் புகுத்தி, ஐரோப்பிய மயமாக்குவதைப் பூர்த்தி செய்தேன்.

 

     இவ்வாறு செலவுகள் அதிகமாகிக்கொண்டே போயின ஒவ்வொரு நாளும் புதிய சமான்கள் சேர்க்கப்பட்டு வந்தன யானையைக் கட்டித் தீனிபோடும் கதை ஆகிவிட்டது. இந்தச் செலவுகளுக்கெல்லாம் வேண்டிய பணத்திற்கு எங்கே போவது ? ராஜ்கோட்டில் நான் பாரிஸ்டர் தொழிலை ஆரம்பிப்பதென்றால் அது கேலிக்கு இடமானதாகும். தகுதி பெற்ற ஒரு வக்கீலுக்குத் தெரிந்தது கூட எனக்குத் தெரியாது. என்றாலும், அவருக்குக் கொடுப்பதை விட எனக்குப் பத்துமடங்கு அதிகக் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்! அப்படி என்னை வக்கீலாக வைத்துக் கொள்ள, எந்தக் கட்சிகாரரும் முட்டாள் அல்ல. அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்துவிடுகிறார் என்றே வைத்துக் கொண்டாலும் என்னுடைய அறியாமையுடன் அகம்பாவத்தையும் மோசடியையும் புதிதாகச் சேர்த்து உலகிற்கு நான் பட்டிருக்கும் கடனை இன்னும் அதிகமாக்கிக் கொள்ளுவதா?

 

     ஹைகோர்ட்டு அனுபவத்தைப் பெறுவதற்கும், இந்திய சட்டத்தைப் படித்துக் கொள்ளுவதற்கும், முடிந்தவரையில் வழக்குகள் கிடைக்கும் படி செய்து கொள்ளுவதற்கும் நான் பம்பாய் போவது நல்லது என்று நண்பர்கள் யோசனை கூறினர். இந்த யோசனையை ஏற்றுக் கொண்டு, அப்படியே பம்பாய்க்குப் போனேன்.

 

     பம்பாயில் என்னைப் போன்றே தகுதியற்றவரான ஒரு சமையற்காரரை வைத்துக் கொண்டு, குடித்தனத்தை ஆரம்பித்தேன் அவர் ஒரு பிராமணர். அவரை வேலைக்காரராகப் பாவித்து நடத்தாமல், குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராகவே நடத்தினேன். அவர், மேலே தண்ணீரை ஊற்றிக்கொள்ளுவாரேயன்றித் தேய்த்துச் குளிக்கமாட்டார். அவருடைய வேட்டி ஒரே அழுக்காயிருக்கும், பூணூலும் அப்படித்தான். சாத்திரங்களைப் பற்றியே அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவரை விட நல்ல சமையற்காரர் எனக்குக் கிடைப்பது எப்படி?

 

     ரவிசங்கர் என்பது அவர் பெயர். “ரவிசங்கர், உமக்குச் சமையல் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உமக்குச் சந்தியா வந்தன மந்திரம் முதலியன தெரிந்தே இருக்கவேண்டுமே?” என்று கேட்டேன்.

 

     அதற்கு அவர், “சத்தியாவந்தன மந்திரமா, ஐயா கலப்பையே எங்கள் சந்தியாவந்தனம், மண்வெட்டியே எங்கள் அன்றாட அனுஷ்டானம். அந்த வகையைச் சேர்ந்த பிராமணன் நான். உங்கள் கிருபையைக் கொண்டு நான் வாழவேண்டியவன். இல்லாவிட்டால் எனக்கு விவசாயம் இருக்கவே இருக்கிறது” என்றார்.

 

 

     ஆகவே, ரவிசங்கருக்கும் நான் ஆசானாக இருக்க வேண்டியதாயிற்று. எனக்கோ வேண்டிய அவகாசம் இருந்தது. சமையல் வேலையில் பாதியை நானே செய்ய ஆரம்பித்தேன். கறிகாய்ச் சமையலில் ஆங்கிலப் பரிசோதனையெல்லாம் புகுத்தினேன். ஓர் எண்ணெய் அடுப்பு வாங்கினேன். ரவிசங்கருடன் அடுப்பாங்கரை வேலைகளைக் கவனிக்கத் தலைப்பட்டேன். பிறருடன் ஒரே பந்தியில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ரவிசங்கருக்கும் அது கிடையாது. ஆகவே, இருவரும் சேர்ந்து சுகமாகவே வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் ஒன்றே ஒன்றுதான் குறுக்கே நின்றது. அதாவது அழுக்காகவே இருப்பது, உணவையும் சுத்தமில்லாமல் வைப்பது என்று ரவிசங்கர் விரதம் கொண்டிருந்தார்.

 

     செலவு அதிகரித்துக் கொண்டே போயிற்று. அதைச் சரிக்கட்டிக் கொள்ளுவதற்கு வருமானமே இல்லை. ஆகையால், பம்பாயில் நான்கு, ஐந்து மாதங்களுக்குமேல் காலம் தள்ள என்னால் முடியவில்லை.

 

     இப்படித்தான் நான் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். பாரிஸ்டர் தொழில், கொஞ்ச அறிவும் அதிக ஆடம்பரமும் உடைய மோசமான தொழில் என்று எனக்குத் தோன்றியது. எனக்கு இருந்த பொறுப்பை எண்ணி, பெரிதும் கவலைக்கு உள்ளானேன்.

 

  • 3. முதல் வழக்கு

பம்பாயில் இருந்தபோது, ஒரு புறம் இந்தியச் சட்டத்தைப் படிக்கலானேன், மற்றொரு புறமோ, உணவைப் பற்றிய என் ஆராய்ச்சிகள். இதில் வீரசந்திர காந்தி என்ற ஒரு நண்பரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். என் சகோதரரோ, எனக்குக் கட்சிக்காரர்களைப் பிடிப்பதற்காக அவரளவில் தம்மால் ஆனதையெல்லாம் செய்து கொண்டிருந்தார்.

 

     இந்தியச் சட்டங்களைப் படிப்பது சங்கடமான வேலையாக இருந்தது. சிவில் நடைமுறைச் சட்டத்தைப் படிக்க என்னால் முடியவே இல்லை. ஆனாலும் ‘சாட்சிகள் சட்ட’ விஷயம் அப்படி இல்லை. வீரசந்திர காந்தி சொலிஸிட்டர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். பாரிஸ்டர்களையும் வக்கீல்களையும் குறித்து எல்லாவிதமான கதைகளையும் அவர் எனக்குச் சொல்வார். “ஸர் பிரோஸ்ஷாவின் ஆற்றலுக்குக் காரணமே, சட்டத்தில் அவருக்கு இருக்கும் அபாரமான ஞானம்தான். ‘சாட்சிகள் சட்டம்’ அவருக்கு மனப்பாடமாகத் தெரியும். அதன் முப்பத்தி ரெண்டாவது பிரிவு சம்பந்தப்பட்ட வழக்குகள் எல்லாவற்றையும் அவர் அறிவார். பத்ருதீன் தயாப்ஜீயின் அற்புதமான விவாத சக்தி, நீதிபதிகளை ஆச்சரியத்தில் மூழ்கும்படி செய்துவிடுகிறது” என்பார். பெரிய வக்கீல்களைப் பற்றிய இத்தகைய கதைகளெல்லாம் என்னுடைய மனச்சோர்வை அதிகமாக்கிவிட்டன.

 

     அவர் மேலும் கூறுவார்: “ஒரு பாரிஸ்டர் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு வருவாய் இல்லாமல் காத்திருக்க நேருவது அசாதாரணம் அன்று. அதனால்தான் நான் சொலிஸிட்டர் பரீட்சைக்குப் போகிறேன். மூன்று ஆண்டுகளில் உம் வாழ்க்கைப் படகை நீரே செலுத்திக்கொள்ள உம்மால் முடிந்து விட்டால், உம்மை நீர் அதிர்ஷ்டசாலி என்று கருதிக் கொள்ள வேண்டும்.”

 

     மாதத்திற்கு மாதம் செலவு அதிகரித்துக் கொண்டே போயிற்று. உள்ளுக்குள் பாரிஸ்டர் தொழிலுக்குத் தயாராகிக் கொண்டுவரும் போதே, பாரிஸ்டர் என்ற விளம்பரப் பலகையை வெளியில் தொங்கவிடுவது என் மனதுக்குச் சமாதானம் தராத ஒரு விஷயம். இதனால் என் படிப்பில் நான் முழுக் கவனத்தையும் செலுத்த இயலவில்லை. சாட்சியத்தைப் பற்றிய சட்டத்தைப் படிப்பதில் ஓரளவுக்கு எனக்கு விருப்பம் பிறந்தது. மேய்னே என்பவர் எழுதிய ஹிந்து சட்ட புத்தகத்தை ஆழ்ந்த சிரத்தையுடன் படித்தேன். ஆனாலும், ஒரு வழக்கை நடத்துவதற்கான துணிவு எனக்கு இல்லை. சொல்லால் கூறமுடியாத அளவுக்கு நான் அதைரியம் கொண்டிருந்தேன். மாமனார் வீட்டுக்குப் புதிதாக வந்த மருமகளைப் போலத் தவித்தேன்.

 

     அந்தச் சமயத்தில், மமிபாய் என்ற ஒருவரின் வழக்கை நடத்துவதற்கு எடுத்துக் கொண்டேன். அது, ஸ்மால்காஸ் வழக்கு. அந்த வழக்கைக் கொண்டுவந்து கொடுத்த தரகருக்கு ஏதாவது கொஞ்சம் தரகுப் பணம் தர வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிக் கொடுப்பதற்கு நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன்.

 

     “மாதம் மூவாயிரம், நாலாயிரம் சம்பாதிக்கும் பெரிய கிரிமினல் வக்கீலான இன்னார் கூடத் தரகு கொடுக்கிறாரே!” என்றார்கள்.

 

     “அவரை நான் பின்பற்ற வேண்டியதில்லை” என்றேன். “எனக்கு மாதம் ரூ. 300 கிடைத்தாலே போதும். என் தந்தை அதற்கு மேல் சம்பாதிக்கவில்லை” என்றும் கூறினேன்.

 

     “அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது பம்பாயில், பயப்பட வேண்டிய அளவுக்குச் செலவுகள் கூடி விட்டன. ஆகையால், நீர் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும்” என்றார்கள்.

 

     நான் பிடிவாதமாக இருந்து விட்டேன். தரகுப் பணம் கொடுக்கவில்லை என்றாலும் மமிபாயின் வழக்கு என்னிடம் வந்தது. அது மிகவும் சுலபமான வழக்கு, எனக்கு ரூபாய் 30 கட்டணம் கொடுக்க வேண்டும் என்றேன். கோர்ட்டில் அந்த வழக்கு ஒரு நாளுக்கு மேல் நடக்கும் என்று தோன்றவில்லை.

 

     ஸ்மால்காஸ் கோர்ட்டில் நான் ஆஜராவது அதுவே முதல் தடவை. நான் பிரதிவாதிக்காக ஆஜரானதால் வாதியின் சாட்சிகளை நான் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அதற்காக எழுந்தேன் ஆனால் என் தைரியமெல்லாம் போய், தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. கோர்ட்டு முழுவதுமே சுழலுவதாக எனக்குத் தோன்றிற்று குறுக்கு விசாரணை செய்ய ஒரு கேள்விகூட என் சிந்தனையில் எழவில்லை. நீதிபதி சிரித்திருப்பார், வக்கீல்களும் அக்காட்சியை ரசித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நானோ இதில் எதையும காணும் நிலையில் இல்லை. பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். “இந்த வழக்கை நடத்த என்னால் முடியாது. பட்டேலை அமர்த்திக்கொள்ளலாம். எனக்குக் கொடுத்த கட்டணத்தையும் திருப்பித் தந்து விடுகிறேன்” என்று ஏஜெண்டிடம் சொன்னேன். ரூ. 51 கட்டணம் கொடுப்பதெனப் பேசி, ஸ்ரீ பட்டேல் வக்கீலாக அமர்த்தப்பட்டார் அவருக்கோ இந்த வழக்கு குழந்தை விளையாட்டுப் போன்றதாகும்.

 

     என் கட்சிக்காரர் வெற்றி பெற்றாரா, தோற்றாரா என்பது கூட எனக்குத் தெரியாது. கோர்ட்டை விட்டு அவசரமாகக் கிளம்பினேன். ஆனால் என்னைக் குறித்து எனக்கே வெட்கமாக இருந்தது. வழக்கை நடத்தும் தைரியம் எனக்கு ஏற்படும்வரையில், திரும்பவும் கோர்ட்டுக்குப் போகவே இல்லை. நான் செய்து கொண்ட தீர்மானத்தில் பாராட்டக் கூடியது எதுவும் இல்லை. அவசியத்தை முன்னிட்டு, வேறு வழி இல்லாமலேயே நான் அந்த முடிவுக்கு வந்தேன். தோற்றுப் போவதற்கு என்று வழக்கை என்னிடம் கொண்டு வந்து ஒப்படைக்க யாரும் அவ்வளவு முட்டாளாக இருக்க மாட்டார்கள்.

 

     ஆயினும் பம்பாயில் இன்னும் ஒரு வழக்கு என்னிடம் வரக்காத்திருந்தது. ஒரு விண்ணப்பத்தைத் தயாரிக்க வேண்டி இருந்ததே அது. ஓர் ஏழை முஸ்லீமின் நிலத்தைப் போர்பந்தரில் பறிமுதல் செய்து விட்டார்கள். பெரிய மனிதரான என் தந்தைக்கு ஏற்ற மகனாக நான் இருப்பேன் என்று எண்ணி, அவர் என்னிடம் வந்தார். அவருடைய கட்சியில் பலம் இல்லை என்றே தோன்றிற்று. என்றாலும், விண்ணப்பத்தை அச்சிடும் செலவை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி, விண்ணப்பம் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். அதைத் தயாரித்து, நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன். அவர்களும் அதை அங்கீகரித்தார்கள். விண்ணப்பம் தயாரிப்பதிலாவது எனக்குத் தகுதியிருக்கிறது என்ற அளவுக்கு அது எனக்கு நம்பிக்கை ஏற்படும்படி செய்தது. உண்மையிலேயே அந்த ஆற்றல் எனக்கு இருந்தது.

 

     கட்டணம் எதுவுமே வாங்கிக் கொள்ளாமல் நான் விண்ணப்பங்கள் தயாரித்துக் கொடுப்பதாக இருந்தால் என் தொழில் நன்றாக நடக்கும். ஆனால், சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே? உபாத்தியாயர் தொழிலுக்குப் போய்விடலாமா என்று எண்ணினேன். எனக்கு ஆங்கில ஞானமும் நன்றாக இருந்தது. ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் மெட்ரிகுலேஷன் மாணவருக்கு ஆங்கிலம் போதிக்கும் வேலை, எனக்குப் பிரியமாக இருந்திருக்கும். இந்த வகையில் என் செலவில் ஒரு பகுதியையாவது சமாளித்தவனாவேன். பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன், ‘தினம் ஒரு மணி நேரம் போதிப்பதற்கு ஓர் ஆங்கில ஆசிரியர் தேவை. சம்பளம் ரூ. 75’ என்று அந்த விளம்பரத்தில் இருந்தது. ஒரு பிரபலமான உயர்நிலைப் பள்ளியின் விளம்பரமே அது. அந்த உத்தியோகத்திற்கு மனுப் போட்டேன். நேரில் சந்தித்துப் பேச அழைப்பும் வந்தது. அதிக உற்சாகத்தோடு அங்கே போனேன். நான் பி.ஏ. பட்டதாரி அல்ல என்பதை அப் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் கண்டுகொண்டதும், என்னை நியமிக்க வருத்தத்துடன் மறுத்துவிட்டார்.

 

     “ஆனால், லத்தீனை இரண்டாவது மொழியாகக் கொண்டு நான் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறியிருக்கிறேனே” என்றேன்.

 

     “உண்மை! ஆனால் எங்களுக்கு பி.ஏ. பட்டதாரியே வேண்டும்” என்று அவர் சொல்லிவிட்டார்.

 

     ஆகவே, வேறு வழியில்லை. மனம் சோர்ந்து போய்க் கைகளைப் பிசைந்து கொண்டேன். என் சகோதரரும் அதிகக் கவலைப்பட்டார். பம்பாயில் மேற்கொண்டும் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு இருவரும் வந்துவிட்டோம். எனது சகோதரர், ராஜ்கோட்டில் ஒரு சின்ன வக்கீல். நானும் அங்கே போய்விடுவது என்று முடிவாயிற்று. மனுக்கள், விண்ணப்பங்கள் தயாரிப்பதில் கொஞ்சம் வேலையை அவர் எனக்குக் கொடுக்கலாம். மேலும் இப்பொழுதே ராஜ்கோட்டில் ஒரு குடித்தனம் இருப்பதால் பம்பாயில் இருக்கும் குடித்தனத்தை எடுத்துவிடுவதால் பணமும் நிரம்ப மிச்சமாகும். இந்த யோசனை எனக்குப் பிடித்தது. இவ்விதம் பம்பாயில் ஆறு மாதங்கள் தங்கி இருந்த பிறகு அங்கே இருந்த என் சிறு குடித்தனத்தை கலைத்து விட்டோம்.

 

 

     நான் பம்பாயில் இருந்தபோது, தினமும் ஹைகோர்ட்டுக்குப் போவேன். ஆனால் அங்கே ஏதாவது கற்றுக் கொண்டதாக நான் கூறுவதற்கில்லை. அதிகமாகக் கற்றுக் கொள்ளுவதற்கு வேண்டிய சட்ட ஞானம் எனக்கு இல்லை. வழக்குகளின் நடைமுறை எனக்குப் பிடிபடுவதில்லை. ஆகையால், அங்கே தூங்கிவிட்டுத் திரும்புவேன். இதில் எனக்கு கூட்டாளிகள் பலர் இருந்தனர். ஆகவே நான் அவ்வளவாக வெட்கப்படுவதில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஹைகோர்ட்டில் தூங்குவதே ஒரு நாகரிகம் என்று எண்ணக் கற்றுக்கொண்டுவிட்டதும், இருந்த வெட்க உணர்ச்சியும் கூட என்னை விட்டுப் போய்விட்டது.

 

     பம்பாயில் நான் இருந்ததைப் போல் இந்தத் தலைமுறையிலும் கட்சிக்காரரே இல்லாத பாரிஸ்டர்கள் யாராவது இருப்பார்களானால் வாழ்க்கை நடத்துவதைப் பற்றிச் சில அனுபவ யோசனைகளை அவர்களுக்குக் கூற விரும்புகிறேன். கீர்காமில் நான் குடியிருந்த போதிலும் வண்டியிலோ, டிராம் வண்டியிலோ போவதே இல்லை. தினமும் ஹைகோர்ட்டுக்கு நடந்தே போவது என்பதை ஒரு விதியாக வைத்துக் கொண்டேன். அங்கே போய்ச் சேர எனக்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். வீட்டுக்குத் திரும்பும் போதும் அநேகமாக நடந்தே வருவேன். வெயிலில் நடந்து நடந்து அந்தச் சூடும் என்னை எதுவும் செய்வதில்லை. கோர்ட்டுக்கு நடந்து போய் வந்து கொண்டிருந்ததால் அதிகப் பணம் மிச்சமாயிற்று. மேலும் பம்பாயில் என் நண்பர்களில் பலர், வழக்கமாக நோயுற்று வந்தபோது, நான் ஒரு தடவையேனும் நோய்வாய்ப்பட்டதில்லை. நான் பணம் சம்பாதிக்க ஆரமபித்துவிட்ட பிறகும் கூட, காரியாலயத்திற்கு நடந்தே போய்த் திரும்பும் வழக்கத்தை மாத்திரம் விடவே இல்லை. அப்பழக்கத்தின் நன்மைகளை நான் இன்னும் அனுபவித்து வருகிறேன்.

 

  • 4. முதல் அதிர்ச்சி

 

ஏமாற்றத்துடன் பம்பாயிலிருந்து புறப்பட்டேன். ராஜ்கோட்டிற்குப் போய் அங்கே என் அலுவலகத்தை அமைத்துக் கொண்டேன். அங்கே என் தொழில் கொஞ்சம் நன்றாகவே நடந்து வந்தது. மனுக்களும், விண்ணப்பங்களும் தயாரித்துக் கொடுப்பதில் சராசரி மாதத்திற்கு ரூ. 300 எனக்குக் கிடைத்து வந்தது. இதற்கு என் சொந்தத் திறமையை விட என் சகோதரரின் செல்வாக்குத்தான் முக்கியமான காரணம். அவருடைய கூட்டாளியான வக்கீலுக்குத் தொழில் நன்றாக நடந்து வந்தது. உண்மையில் முக்கியமானவையாக இருக்கும், அல்லது முக்கியமானவை என்று அவருக்குத் தோன்றும் மனுக்களைத் தயாரிக்கும் வேலையை, அவர், பெரிய பாரிஸ்டர்களிடம் கொடுத்துவிடுவார். அவரிடம் வரும் ஏழைக் கட்சிக்காரர்களுக்காகத் தயாரிக்க வேண்டிய விண்ணப்பங்களே என் பங்கில் விழுந்தன.

 

     வழக்குப் பிடித்துத் தருகிறவர்களுக்குத் தரகுப் பணம் கொடுப்பதில்லை என்ற கொள்கையைப் பம்பாயில் நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வந்தேன். ஆனால், அந்தக் கொள்கையை இப்போது நான் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நிலைமைகளுக்கும் வித்தியாசம் உண்டு என்றார்கள். பம்பாயில் தரகுப் பணம், வழக்குத் தரகர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்கோ, நம்மை அமர்த்தும் வக்கீலுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு பம்பாயைப் போன்றே, இங்கும் ஒருவர் கூடப் பாக்கியில்லாமல் எல்லாப் பாரிஸ்டர்களும் தரகு கொடுக்கிறார்கள் என்றும் எனக்குச் சொன்னார்கள். என் சகோதரர் கூறிய வாதத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் சொன்னார்: “நான் மற்றொரு வக்கீலுடன் கூட்டாளியாக இருக்கிறேன். உன்னால் செய்ய முடியும் வேலைகள் எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிட வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். அப்படியிருக்க, என் கூட்டாளிக்குத் தரகுத் தொகை கொடுக்க நீ மறுத்துவிட்டால், நிச்சயமாக என் நிலைமை சங்கடமானதாகிவிடும். நீயும் நானும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஆகையால், உனக்குக் கிடைக்கும் ஊதியம் நம் பொது வருமானத்தில் சேர்ந்துவிடுகிறது. எனவே, அதில் எனக்கு ஒரு பங்கு, தானே கிடைத்து விடுகிறது. ஆனால், என் கூட்டாளியின் நிலைமை என்ன? உனக்குக் கொடுக்கும் அதே வேலையை, அவர் வேறொரு பாரிஸ்டரிடம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது இவருக்கு அவரிடமிருந்து நிச்சயமாகத் தரகுப் பணம் கிடைத்துவிடும்!” இந்த வாதம் என்னை மாற்றிவிட்டது. நான் பாரிஸ்டர் தொழிலை நடத்த வேண்டுமானால் இத்தகைய வேலைகளுக்குத் தரகு கொடுப்பதில் என் கொள்கையை வற்புறுத்தமுடியாது என்பதை உணர்ந்தேன். இப்படித் தான் எனக்குள்ளேயே நான் விவாதித்துக் கொண்டேன். உண்மையைச் சொன்னால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன். என்றாலும் இன்னும் ஒன்றும் கூறுவேன். இங்கே கொடுத்ததைத் தவிர வேறு எந்த வழக்குச் சம்பந்தமாகவும் நான் தரகு கொடுத்ததாக நினைவு இல்லை.

 

     இவ்விதம் என் வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதை நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். என்றாலும் இச்சமயத்தில்தான், என் வாழ்க்கையிலே முதல் அதிர்ச்சியும் எனக்கு உண்டாயிற்று. ஒரு பிரிட்டிஷ் அதிகாரி என்றால் அவர் எப்படியெல்லாம் இருப்பார் என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அச் சமயம் வரையில் அப்படிப்பட்ட ஒருவரை நான் நேருக்கு நேராகப் பார்த்ததில்லை.

 

     போர்பந்தரின் காலஞ்சென்ற ராணா சாகிப் பட்டத்திற்கு வருவதற்கு முன்னால், என் சகோதரர் அவருக்கு காரியதரிசியாகவும் ஆலோசகராகவும் இருந்தார். என் சகோதரர் அந்த உத்தியோகத்தில் இருந்தபோது ராணாவுக்குத் தவறான ஆலோசனைகளைக் கூறிவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டை என் சகோதரரின் தலை மீது இப்பொழுது சுமத்தியிருந்தார்கள். விஷயம் ராஜீய ஏஜெண்டிடம் போய்விட்டது. அவரோ, என் சகோதரர் மீது கெட்ட அபிப்ராயம் கொண்டிருந்தார். நான் இங்கிலாந்தில் இருந்தபோது, இந்த அதிகாரியை அறிவேன். ஓர் அளவுக்கு அவர் எனக்கு நண்பராகவும் இருந்தார் என்று சொல்லலாம். அந்தச் சிநேகிதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ராஜீய ஏஜெண்டிடம் தம்மைப் பற்றி நான் பேசி, அவருக்கு இருந்த தவறான அபிப்ராயத்தை நான் போக்க வேண்டும் என்று என் சகோதரர் விரும்பினார். இந்த யோசனை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை. இங்கிலாந்தில் ஏற்பட்ட சொற்ப நட்பை நான் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கக்கூடாது என்று எண்ணினேன். என் சகோதரர் செய்தது தவறாகவே இருக்கு மாயின், என் சிபாரிசினால் என்ன பயன்? அவர் குற்றமற்றவர் என்றால் முறைப்படி விண்ணப்பத்தை அனுப்பிவிட்டுத் தாம் நிரபராதி என்ற தைரியத்துடன் முடிவை எதிர் நோக்குவதே சரியானது. ஆனால் நான் கூறிய இந்த யோசனை என் சகோதரருக்குப் பிடிக்கவில்லை. அவர் சொன்னதாவது: “உனக்குக் கத்தியவாரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. உலக அனுபவமும் உனக்கு போதவில்லை. செல்வாக்கு ஒன்றுதான் இங்கே முக்கியம். உனக்குத் தெரிந்தவரான ஓர் அதிகாரியிடம் என்னைக் குறித்து நீ ஒரு நல்ல வார்த்தை சொல்ல நிச்சயம் முடியும் என்று இருக்கும்போது சகோதரனாகிய நீ, உன் கடமையைத் தட்டிக் கழிப்பது சரியல்ல.”

 

     அவருக்கு நான் மறுத்துக் கூற முடியாது. அதனால், என் விருப்பத்திற்கு மாறாகவே அந்த அதிகாரியிடம் போனேன். அவரிடம் போவதற்கு எனக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்பதை அறிவேன். என்னுடைய சுயமதிப்பையும் விட்டுத்தான் நான் அவரிடம் போகிறேன் என்பதையும் நான் நன்றாக அறிந்தே இருந்தேன். ஆயினும் பார்க்கவேண்டும் என்று கோரி, அனுமதியும் பெற்றேன். எங்களுக்குள் இருந்த பழைய பழக்கத்தையும் அவருக்கு நினைவூட்டினேன். ஆனால், இங்கிலாந்திற்கும் கத்தியவாருக்கும் வித்தியாசம் அதிகம் என்பதை உடனே கண்டேன். ஓர் அதிகாரி ஓய்வு பெற்றிருக்கும்போது ஒரு மனிதராகவும் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கும்போது வேறு மனிதராகவும் ஆகிவிடுகிறார் என்பதையும் அறிந்தேன். என்னைத் தமக்குத் தெரியும் என்பதை நினைவூட்டியதால் அவருடைய கடுகடுப்பு அதிகமானதாகவே தெரிந்தது. “அந்த பழக்கத்தை தவறான வழியில் உபயோகித்துக் கொள்வதற்காக நீர் இங்கே வரவில்லையல்லவா?” என்பதே அவருடைய கடுகடுப்புக்குப் பொருள்போல் தோன்றியது. அது அவர் முகத்திலும் பிரதிபலித்தது. என்றாலும், நான் வந்த காரியத்தை அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் துரை பொறுமையை இழந்துவிட்டார். “உமது சகோதரர் சூழ்ச்சிக்காரர். அவரைப் பற்றி உம்மிடமிருந்து எதையும் கேட்க நான் விரும்பவில்லை. எனக்கு நேரமும் கிடையாது. ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டும் என்று உம் சகோதரர் விரும்பினால் முறைப்படி அதை மனுச் செய்து கொள்ளட்டும்” என்றார். இந்தப் பதில் போதுமானது. இப்படிப்பட்ட பதிலே எனக்குச் சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், சுயநலம் ஒருவனைக் குருடாக்கி விடுகிறது. நான், என் கதையை சொல்லிக்கொண்டே போனேன். துரை எழுந்து “இப்பொழுது நீர் போய்விட வேண்டும்” என்றார்.

 

     “தயவு செய்து நான் சொல்லுவதை முழுவதும் கேளுங்கள்” என்றேன். இப்படிச் சொன்னதும் அவருக்குக் கோபம் அதிகமாகி விட்டது. அவர் தமது சேவகனைக் கூப்பிட்டு என்னை வெளியே அனுப்பும்படி சொன்னார். அப்பொழுதும் நான் தயங்கிக் கொண்டே நின்றேன். சேவகன் உள்ளே வந்து, என் தோளில் கைபோட்டு என்னை வெளியே தள்ளிவிட்டான்.

 

     துரையும் சேவகனும் போய்விட்டனர். நானும் புறப்பட்டேன். கோபமும் ஆத்திரமும் என் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தன. உடனே ஒரு குறிப்பு எழுதி, அதை அவருக்கு அனுப்பினேன். அக்குறிப்பில், “நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். உங்கள் சேவகனைக் கொண்டு என்னைத் தாக்கிவிட்டீர்கள். இதற்குத் தக்க பரிகாரம் செய்யாவிட்டால், நான் உங்கள் மீது வழக்குத் தொடர நேரும்” என்று எழுதியிருந்தேன்.

 

     உடனே அவருடைய சிப்பாயின் மூலம் எனக்கு பின் கண்ட பதிலும் கிடைத்தது: “நீர் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டீர். போய்விடுமாறு நான் உம்மிடம் கூறியும், நீர் போகவில்லை. உம்மை வெளியே அனுப்புமாறு என் சேவகனுக்கு உத்தரவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. வெளியே போகுமாறு அவன் சொன்னதற்கும் நீர் போக மறுத்தீர். ஆகவே, உம்மை வெளியே அனுப்புவதற்குப் போதுமான பலாத்காரத்தை அவன் உபயோகிக்க வேண்டியதாயிற்று. உமது விருப்பம் போல் எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் நீர் எடுத்துக் கொள்ளலாம்.”

 

 

     இந்தப் பதிலை என் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு இடிந்து போய் வீடு திரும்பினேன். நடந்ததையெல்லாம் என் அண்ணனிடம் சொன்னேன், அவரும் வருத்தப்பட்டார். ஆனால் என்னைத் தேற்றுவது எப்படி என்பது அவருக்குத் தெரியவில்லை. துரைமீது எப்படி வழக்குத் தொடருவது என்பது எனக்குத் தெரியாது போகவே, அவர் தமது வக்கீல் நண்பர்களிடம் இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்தார். அச் சமயத்தில் ஸர் பிரோஸ்ஷா மேத்தா ராஜ்கோட்டில் இருந்தார். ஏதோ ஒரு வழக்குக்காக அவர்அங்கே வந்திருந்தார். ஆனால், என்னைப் போன்ற ஒரு சின்ன பாரிஸ்டர் அவரைப் போய்ப் பார்க்க எவ்வாறு துணிய முடியும்? அவரை அங்கே ஒரு வழக்கிற்கு அமர்த்தியிருந்த ஒரு வக்கீலின் மூலம் என் வழக்குச் சம்பந்தமான தஸ்தாவேஜூக்களை அனுப்பி, அவருடைய ஆலோசனையைக் கோரினேன். அவற்றைப் பார்த்துவிட்டு, அவர் பின்வருமாறு கூறினாராம்: “அநேக வக்கீல்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் இது சாதாரணமான அனுபவம் என்று காந்தியிடம் கூறுங்கள். அவர் இங்கே ஏதோ கொஞ்சம் சம்பாதித்துச் சௌக்கியமாக வாழ விரும்பினால், அக் குறிப்பைக் கிழித்தெறித்து விட்டு, அவமானத்தையும் சகித்துக் கொள்ளட்டும். துரை மீது வழக்குத் தொடுத்து அவர் அடையப் போவது எதுவும் இல்லை. அதற்கு மாறாக, தம்மையே நாசப்படுத்திக் கொண்டதாகவும் அது ஆகலாம். வாழ்க்கையைப்பற்றி அவர் இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் அவருக்கு சொல்லுங்கள்.”

 

     இந்தப் புத்திமதி, விஷம்போல எனக்குக் கசப்பாகவே இருந்தது என்றாலும் இதை நான் விழுங்கியே ஆக வேண்டியதாயிற்று. அவமானத்தைச் சகித்துக் கொண்டேன். அதனால் பலனையும் அடைந்தேன். இனி ஒருக்காலும் இத்தகைய சங்கடமான நிலைக்கு என்னை உட்படுத்திக் கொள்ள முயலமாட்டேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன்பின் இந்த உறுதியிலிருந்து மாறும் குற்றத்தை நான் செய்ததே இல்லை. இந்த அதிர்ச்சி என் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்டது.

 

  • 5. ஆப்பிரிக்கா செல்ல ஏற்பாடு

 

அந்த அதிகாரியிடம் நான் போனதே தவறு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் காட்டிய பொறுமையின்மையும் அளவு கடந்த கோபமும், என் தப்புக்கு மிகவும் அதிகப் படியானவையே. வெளியில் பிடித்துத் தள்ள வேண்டியதற்கான தப்பை நான் செய்துவிடவில்லை. அவருடைய நேரத்தில், நான் சொன்னதைக் கேட்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிராது. ஆனால், நான் பேசியதே அவருக்குப் பொறுக்கவில்லை. போய்விடும்படி அவர் மரியாதையாக எனக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவருக்கு அளவுக்கு மீறி அதிகார போதை இருந்தது. பொறுமை என்ற குணத்திற்கும் இந்த அதிகாரிக்கும் வெகு தூரம் என்பது எனக்குப் பின்னால் தெரிந்தது. தம்மைப் பார்க்க வருகிறவர்களை அவமதிப்பதே அவருக்குப் பழக்கமாம். அவருடைய விருப்பத்திற்கு மாறாக ஏதேனும் அற்பக் காரியம் நடந்துவிட்டாலும் அவருக்குக் கோபாவேசம் வந்துவிடுமாம்.

 

     இப்பொழுதே என் வேலைகளில் பெரும்பாலும் அவருடைய நீதிமன்றத்தில் நடந்தாக வேண்டியவை. அவரைச் சமாதானப் படுத்துவது என்பதும் என்னால் ஆகாதது. எப்படியாவது அவருடைய தயவைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இல்லை. உண்மையில் அவர் மீது வழக்குத் தொடருவதாக நான் ஒரு முறை அவரைப் பயமுறுத்திவிட்ட பிறகு சும்மா இருந்துவிட நான் விரும்பவில்லை.

 

     இதற்கு மத்தியில் நாட்டின் சில்லரை ராஜிய விஷயங்களைக் குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். கத்தியவார் அநேக சிறு சிறு சமஸ்தானங்களைக் கொண்ட பகுதியாகையால், ராஜியவாதிகள் ஏராளமாக முளைத்துக் கொண்டிருந்தனர். சமஸ்தானங்கள் ஒன்றுக்கொன்று சூழ்ச்சிகளில் ஈடுபடுவதும் அதிகாரத்திற்கு அதிகாரிகள் சூழ்ச்சிகளில் இறங்குவதும் அங்கே சர்வ சாதாரணம். சமஸ்தானாதிபதிகளோ, எப்பொழுதுமே பிறரை நம்பியிருக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே, இச்சகம் பேசுகிறவர்கள் சொல்லுவனவற்றிற்கெல்லாம் சமஸ்தானாதிபதிகள் செவி சாய்த்து வந்தனர். துரையின் சேவகனைக் கூடச் சரிகட்டி வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. துரையின் சிரஸ்தாரே துரைக்குக் கண்களாகவும், காதுகளாகவும், மொழிபெயர்த்துச் சொல்லுபவராகவும் இருந்ததால், அவர், தம் எஜமானனைவிட ஒருபடி மேலானவராகவே இருந்தார். சிரஸ்தார் வைத்தது தான் சட்டம். அவருடைய வருமானம் துரையின் வருமானத்திற்கும் அதிகம் என்பது பிரபலமான விஷயம். இது ஒரு வேளை மிகைப்படுத்திக் கூறப்பட்டதாகவும் இருக்கலாம். என்றாலும் அவர், தமது சம்பளத்திற்கு மிஞ்சிய ஆடம்பர வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

 

     இந்தச் சூழ்நிலை, விஷமமானது என்று எனக்குத் தோன்றிற்று. இதனால் பாதிக்கப்படாமல் அங்கே எப்படி இருப்பது என்பதே எனக்குத் தீராப் பிரச்சினையாயிற்று.

 

     நான் முற்றும் மனச் சோர்வை அடைந்துவிட்டேன். இதை என் சகோதரர் தெளிவாக அறிந்து கொண்டார். எனக்கு ஏதாவது ஓர் உத்தியோகம் கிடைத்துவிட்டால், இந்தச் சூழ்ச்சிச் சூழ்நிலையிலிருந்து நான் விடுதலை பெற்றுவிடுவேன் என்பதை நாங்கள் இருவருமே உணர்ந்தோம். ஆனால், சூழ்ச்சியையும் தந்திரத்தையும் கையாளாமல் ஒரு மந்திரி வேலையோ, நீதிபதி உத்தியோகமோ கிடைப்பது முடியாத காரியம். துரையுடன் ஏற்பட்ட சச்சரவு, எனது தொழிலை நடத்திக் கொண்டு போவதற்கே இடையூறாக நின்றது.

 

     அச்சமயம் போர்பந்தர், பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த அதிகாரி ஒருவரின் நிர்வாகத்தில் இருந்தது. மன்னருக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும்படி செய்வது சம்பந்தமாக அங்கே எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது. விவசாயிகளிடமிருந்து நிலத் தீர்வை அதிகப்படியாக வசூலிக்கப்பட்டு வந்தது சம்பந்தமாகவும் நான் அந்த நிர்வாக அதிகாரியைப் பார்க்க வேண்டியிருந்தது. அந்த அதிகாரி ஓர் இந்தியராக இருந்த போதிலும் அகம்பாவத்தில் துரையையும் மிஞ்சியவராக இருக்கக் கண்டேன். அவர் திறமைசாலியே. ஆனால் அவருடைய திறமையினால் விவசாயிகள் எந்த நன்மையையும் அடைந்து விட்டதாகத் தெரியவில்லை. ராணா மேற்கொண்டு சில அதிகாரங்களைப் பெறும்படி செய்வதில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் விவசாயிகளுக்கோ எவ்விதமான கஷ்ட நிவாரணமும் ஏற்படவில்லை. அவர்கள் விஷயம் இன்னது என்பதைக்கூட அந்த அதிகாரி சரிவரக் கவனிக்கவில்லை என்றே எனக்குத் தோன்றியது.

 

     எனவே, இந்த வேலையிலும் நான் ஏமாற்றத்தையே அடைந்தேன் என்று சொல்ல வேண்டும். என் கட்சிக்காரர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று எண்ணினேன். ஆனால் அவர்கள் நியாயத்தை அடையும்படி செய்வதற்கான சக்தி என்னிடம் இல்லை. நான் மேற்கொண்டு ஏதாவது செய்வதென்றால் ராஜிய ஏஜெண்டிடமோ, கவர்னரிடமோ முறையிட்டுக் கொள்ளலாம். ஆனால், அவர்களோ, ‘இதில் நாங்கள் தலையிடுவதற்கில்லை’ என்று என் அப்பீலை நிராகரித்து விடுவார்கள். இத்தகைய முடிவுகள் சம்பந்தமாக அனுசரிக்க விதிமுறை ஏதாவது இருந்தால், அதைக் கொண்டாவது ஏதாவது செய்ய பார்க்கலாம். ஆனால், இங்கோ, துரையின் இஷ்டமே சட்டம் என்று இருக்கிறது. இதனால் எனக்கு உண்டான ஆத்திரத்தைச் சொல்லி முடியாது.

 

     இதற்கு மத்தியில் போர்பந்தரைச் சேர்ந்த ஒரு மேமன் வியாபாரக் கம்பெனியார், என் சகோதரருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள் அதில் அவர்கள் அறிவித்திருந்ததாவது: “தென்னாப்பிரிக்காவில் எங்களுக்கு வியாபாரம் இருக்கிறது. எங்களுடையது பெரிய வியாபாரக் கம்பெனி. எங்களுடைய பெரிய வழக்கு ஒன்று, அங்கே கோர்ட்டில் நடக்கிறது. 40,000 பவுன் வர வேண்டும் என்பது எங்கள் தாவா. இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து கொண்டு வருகிறது. பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தியிருக்கிறோம். உங்கள் சகோதரரை அங்கே அனுப்புவீர்களானால் எங்களுக்கும் உதவியாக இருக்கும், அவருக்கும் உதவியாக இருக்கும். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக்கூற, எங்களை விட அவரால் நன்கு முடியும். அதோடு, உலகத்தில் புதியதொரு பகுதியைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுவதோடு புதிதாக பலருடன் பழகும் சந்தர்ப்பமும் அவருக்கு கிடைக்கும்.”

 

     இந்த யோசனையைக் குறித்து, என் சகோதரர் என்னுடன் விவாதித்தார். வக்கீல்களுக்கு நான் விஷயங்களை எடுத்துச் சொல்ல மாத்திரம் வேண்டியிருக்குமா, கோர்ட்டிலும் ஆஜராக வேண்டியிருக்குமா என்பது எனக்குத் தெளிவாகவில்லை.

 

     மேலே சொன்ன தாதா அப்துல்லா கம்பெனியின் ஒரு கூட்டாளியான காலஞ்சென்ற சேத் அப்துல் கரீம் ஜவேரியை, என் சகோதரர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். “இந்த வேலை கஷ்டமானதாக இராது என்று சேத் எனக்கு உறுதி கூறினார். பெரிய வெள்ளைக்காரர்களெல்லாம் எங்கள் நண்பர்கள். அவர்களுடன் நீங்கள் பழக்கம் செய்து கொள்ளலாம். எங்கள் கடைக்கும் நீங்கள் பயன்படுவீர்கள். எங்கள் கடிதப் போக்குவரத்தெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான். அதிலும் நீங்கள் எங்களுக்கு உதவி செய்யலாம். நீங்கள் எங்கள் விருந்தினரே. ஆகையால், உங்களுக்கு எந்தவிதமான செலவும் இராது” என்றார்.

 

 

     “என் சேவை உங்களுக்கு எவ்வளவு காலத்திற்குத் தேவை? நீங்கள் அதற்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டேன்.

 

     “ஓர் ஆண்டுக்கு மேல் தேவைப்படாது. உங்களுக்குப் போகவர முதல் வகுப்புக் கப்பல் கட்டணமும், மற்ற எல்லாச் செலவும் போக 105 பவுனும் தருகிறோம்” என்றார்.

 

     நான் அங்கே போவது, பாரிஸ்டர் என்ற முறையிலேயே அன்று அந்தக் கம்பெனியின் ஊழியன் என்ற வகையிலேயே போகிறேன். ஆனால், எப்படியாவது இந்தியாவிலிருந்து போய் விட வேண்டும் என்று விரும்பினேன். அதோடு புதிய நாட்டைப் பார்க்கலாம். புதிய அனுபவங்களைப் பெறலாம் என்ற ஆசையும் இருந்தது. மேலும் 105 பவுனையும் என் சகோதரருக்கு அனுப்பி, குடும்பச் செலவுக்கு உதவி செய்யலாம். எந்தவிதமான பேரமும் பேசாமல் ஒப்புக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்குத் தயாரானேன்.

 

  • 6. நேட்டால் சேர்ந்தேன்

இங்கிலாந்திற்குப் புறப்பட்டபோது பிரிவாற்றாமையால் என்ன மனக்கஷ்டம் இருந்ததோ, அத்தகைய உணர்ச்சியெல்லாம் இப்பொழுது தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்ட போது இல்லை. என் தாயாரோ காலமாகிவிட்டார். எனக்குக் கொஞ்சம் உலக அனுபவமும் ஏற்பட்டுவிட்டது. ராஜ் கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போவதும் இப்பொழுது மிகச் சாதாரணமாகவே இருந்தது.

 

     இத்தடவை, மனைவியை விட்டுப் பிரிந்து போகிறோமே என்பதைப் பற்றி மாத்திரமே எனக்கு மனக்கஷ்டம் இருந்தது. நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர். எங்களுக்கு மற்றும் ஒரு குழந்தை பிறந்தது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த அன்பு காமக் கலப்பு இல்லாதது என்று இன்னும் சொல்லிவிடுவதற்கு இல்லை. என்றாலும், அது நாளுக்கு நாள் தூய்மையாகி வந்தது. ஐரோப்பாவிலிருந்து நான் திரும்பி வந்த பிறகு, நாங்கள் இருவரும் சொற்பகாலமே சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். அவ்வளவு அதிக சிரத்தையுடன் இல்லை என்றாலும் நான் அப்பொழுது அவளுக்கு ஆசிரியன் ஆகியிருந்தேன். சில சீர்திருத்தங்களை அடைவதற்கும் அவளுக்கு உதவி செய்து வந்தேன். அந்த சீர்திருத்தங்களைத் தொடர்ந்து அடைவதென்றால், நாங்கள் இருவரும் அதிகமாகக் சேர்ந்து வாழ்ந்து வரவேண்டியது அவசியம் என்பதை இருவருமே உணர்ந்தோம். ஆனால், தென்னாப்பிரிக்கா செல்வதில் ஏற்பட்ட கவர்ச்சி, பிரிந்து வாழ்வதையும் சகிக்கக் கூடியதாக்கியது. அவளுக்கு ஆறுதலாக இருப்பதற்காக நாம் எப்படியும் ஓர் ஆண்டில் மீண்டும் சந்திப்போம் என்று கூறிவிட்டுப் பம்பாய் செல்ல ராஜ்கோட்டிலிருந்து புறப்பட்டேன்.

 

     தாதா அப்துல்லா கம்பெனியின் காரியஸ்தர் மூலமாகவே கப்பல் டிக்கெட் கிடைக்க வேண்டியிருந்தது. ஆனால், கப்பலிலோ இடமில்லை. அப்பொழுது நான் கப்பல் ஏறவில்லையென்றால் பம்பாயிலேயே தங்கிவிட வேண்டிவரும். “கப்பலில் முதல் வகுப்பில் இடம் பெறுவதற்காக எங்களால் ஆன முயற்சிகளையெல்லாம் செய்து பார்த்துவிட்டோம். பயனில்லை. மூன்றாம் வகுப்பில் போக நீங்கள் தயாராக இருந்தாலன்றி வேறு வழியில்லை. உங்கள் சாப்பாட்டுக்கு வேண்டுமானால் முதல் வகுப்பில் ஏற்பாடு செய்து விடலாம்” என்றார், அக்காரியஸ்தர். நான் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்துவந்த காலம் அது. ஒரு பாரிஸ்டர் , மூன்றாம் வகுப்பில் எவ்விதம் பிரயாணம் செய்ய முடியும்? ஆகவே, அவர் கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். முதல் வகுப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதை நான் நம்பவில்லை. காரியஸ்தரின் நேர்மையில் சந்தேகம் கொண்டேன். அவருடைய சம்மதத்தின் பேரில் கப்பலுக்கே போனேன். அதன் பிரதம அதிகாரியையும் கண்டு பேசினேன். அவர் உள்ளதைச் சொல்லிவிட்டார். “வழக்கமாக எங்கள் கப்பலில் இப்படி இட நெருக்கடி ஏற்படுவதில்லை. ஆனால், மொஸாம்பிக் கவர்னர் ஜெனரல் அக்கப்பலில் வருகிறார். ஆகையால், இடத்தையெல்லாம் அமர்த்திக் கொண்டு விட்டனர்” என்றார்.

 

     “என்னையும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட உங்களால் முடியாதா?” என்று கேட்டேன். அவர் உச்சியிலிருந்து உள்ளங்கால்கரை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு புன்னகை புரிந்தார். “பிறகு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. என் அறையில் அதிகப்படியாக ஓர் இடம் இருக்கிறது. சாதாரணமாக அதைப் பிரயாணிகளுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், அதை உங்களுக்கு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்றார், கப்பலின் பிரதம அதிகாரி. அவருக்கு நன்றி கூறிவிட்டு, அதற்கு வேண்டிய டிக்கெட்டைக் காரியஸ்தரைக் கொண்டு வாங்கச் செய்தேன். ஆகவே, தென்னாப்ரிக்காவில் என்னுடைய அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதென்ற முழு உற்சாகத்துடன் 1893, ஏப்ரலில் புறப்பட்டேன்.

 

     எங்கள் கப்பல் அடைந்த முதல் துறைமுகம் லாமு என்பது. சுமார் பதின்மூன்று நாட்களில் அங்கே போய்ச் சேர்ந்தோம். இதற்குள் கப்பல் காப்டனும் நானும் சிறந்த நண்பர்கள் ஆகிவிட்டோம். சதுரங்கம் ஆடுவதில் அவருக்கு அதிகப் பிரியம். ஆனால், அந்த ஆட்டம் அவருக்கு புதியது. ஆகையால், தம்மிலும் அதிகக் கற்றுக் குட்டியாக இருப்பவரையே தம்முடன் விளையாடுவதற்குச் சகாவாக அவர் விரும்பினார். எனவே சதுரங்கம் ஆட என்னை அழைத்தார். அவ்விளையாட்டைக் குறித்து எவ்வளவோ கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், நான் விளையாடியது மாத்திரம் இல்லை. அதை விளையாடினால் அறிவுக்கு அதிகப் பயிற்சி உண்டு என்று விளையாடத் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். அதில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க காப்டன் முன் வந்தார். அவருக்கு எல்லையற்ற பொறுமை உண்டு. ஆகையால், நான் நல்ல மாணவன் எனக்கண்டார். ஒவ்வொரு சமயமும் தோற்பவன் நானே. இது எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் அவருக்கு இன்னும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியது. சதுரங்கம் விளையாடுவது, எனக்கும் பிடித்திருந்தது. ஆனால், அவ்விருப்பத்தை அக்கப்பலோடு விட்டுவிட்டேன். அந்த ஆட்டத்தைப்பற்றி எனக்கு இருந்த ஞானம், காய்களை நகர்த்தி வைப்பதற்கு மேலே போனதே இல்லை.

 

     லாமுவில் கப்பல் மூன்று, நான்கு மணிநேரம் நின்றது. துறைமுகத்தைப் பார்ப்பதற்காக இறங்கினேன். காப்டனும் இறங்கிப் போனார். ஆனால், அத்துறைமுகம் அபாயகரமானது என்றும், முன்னாலேயே திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அவர் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.

 

     லாமு மிகச் சிறிய ஊர். துறைமுகக் காரியாலயததிற்குச் சென்றேன். அங்கே இந்திய குமாஸ்தர்கள் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவர்களுடன் பேசினேன். ஆப்பிரிக்காக்காரர்களையும் அங்கே பார்த்தேன். அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுவதில் எனக்கு அதிகச் சிரத்தை உண்டாயிற்று. அதை அறிந்து கொள்ளவும் முயன்றேன். இதில் கொஞ்சம் நேரமாயிற்று.

 

     அக்கப்பலின் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளில் சிலருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. தரைக்குப் போய்ச் சமைத்து அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டும் என்பதற்காக அவர்களும் இறங்கியிருந்தனர். அவர்கள் கப்பலுக்குத் திரும்பிவிடத் தயாராக இருந்ததைக் கண்டதும் எல்லோரும் ஒரே படகில் ஏறிப் புறப்பட்டோம். துறைமுகத்தில் அலை பலமாக இருந்தது. படகிலோ இருக்க வேண்டியதற்கு அதிகமான பளு இருந்தது. அலைகள் வேகமாக அடித்துக் கொண்டிருந்ததால், கப்பலின் ஏணிக்கு அருகில் படகை நிறுத்துவது என்பது முடியாததாகிவிட்டது. படகு ஏணியைத் தொடும், உடனே ஒரு பலமான அலை வந்து, படகை தூரத்திற்குக் கொண்டு போய்விடும். கப்பல் புறப்படுவதற்கு, முதல் சங்கும் ஊதியாயிற்று. நான் அதிகச் சஞ்சலம் அடைந்து விட்டேன் காப்டன் எங்களுடைய தவிப்பையெல்லாம், மேல்தளத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். கப்பல், மேற்கொண்டும், ஐந்து நிமிட நேரம் காத்திருக்க உத்தரவிட்டார். கப்பலுக்கு அருகே மற்றொரு படகு இருந்தது. அதை எனக்காக ஒரு நண்பர், பத்து ரூபாய்க்கு அமர்த்தினார். அதிகப் பளு ஏற்றப்பட்டிருந்த படகிலிருந்து என்னை இப்படகு ஏற்றிக்கொண்டது. ஏணியையோ இதற்குள் உயர்த்தி விட்டார்கள். ஆகையால் என்னைக் கயிறு கொண்டு மேலே தூக்கினார்கள். உடனே கப்பலும் கிளம்பிவிட்டது. மற்ற பிரயாணிகள் ஏற முடியவில்லை. காப்டன் செய்த எச்சரிக்கை, அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது.

 

     லாமுக்கு அடுத்த துறைமுகம், மொம்பாஸா. அதன் பிறகு ஜான்ஸிபார் போய்ச் சேர்ந்தோம். அங்கே அதிக காலம் - எட்டு அல்லது பத்து நாள் வரை - தங்கினோம். பிறகு மற்றொரு கப்பலில் ஏறினோம்.

 

     கப்பல் காப்டன் என்னிடம் அதிகப்பிரியம் கொண்டு விட்டார், ஆனால், அந்தப் பிரியம் விபரீதமான முடிவில் கொண்டு போய்விட்டது. உல்லாசமாகப் போய் வரலாம் என்று என்னையும் ஓர் ஆங்கில நண்பரையும் அவர் அழைத்தார். அவருடைய படகிலேயே நாங்கள் கரைக்குப் போனோம். உல்லாசமாகப் போய் வரலாம் என்றால் இன்னது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இத்தகைய விஷயங்களில் நான் எவ்வளவு அனுபவம் இல்லாதவன் என்பதும் காப்டனுக்குத் தெரியாது. ஒரு தரகன் எங்களை நீக்கிரோப் பெண்களின் வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கே எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒர் அறையைக் காட்டி, உள்ளே போகச் சொன்னான். நான் உள்ளே போனதும் வெட்கத்தால் வாய் பேசாமல் அப்படியே நின்றேன். என்னைப் பற்றி அப்பெண் என்ன நினைத்திருப்பாள் என்பது ஆண்டவனுக்கே தெரியும். காப்டன் அழைத்ததும் நான் போனபடியே வெளியே வந்துவிட்டேன். ஒரு பாவமும் செய்யாத என் நிலையை அவர் தெரிந்து கொண்டார். எனக்கு முதலில் அவமானமாக இருந்தது. ஆனால் அக்காரியத்தை நினைப்பதும் எனக்குப் பயமாக இருந்ததால் அவமான உணர்ச்சி மறைந்தது. அப்பெண்ணைப் பார்த்ததும் என் புத்தி தடுமாறிவிடாமல் இருந்ததைக் குறித்து கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். எனக்கு இருந்த பலவீனத்திற்காக என்னை நானே வெறுத்தேன். அறைக்குள் போக மறுத்துவிடும் துணிச்சல் எனக்கு இல்லாது போனதைக் குறித்து எனக்கு நானே பரிதாப்பட்டுக் கொண்டேன்.

 

 

     என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இது போன்ற சோதனைகளில் இது மூன்றாவதாகும். இளைஞர்களில் பலர் ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம் என்று தவறாக ஏற்பட்டுவிடும் உணர்ச்சியின் காரணமாகப் பாவத்திற்கு இழுக்கப்பட்டு விடுகின்றனர். இதில் தவறிவிடாமல் வெளிவந்து விட்டதற்கு நான் பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணம் எதுவுமே இல்லை. அறைக்குள் போக நான் மறுத்திருந்தால் அது எனக்குப் பெருமையாக இருந்திருக்கும். என்னைக் காத்தருளியதற்கு கருணைக் கடலான ஆண்டவனுக்கே நான் நன்றி செலுத்த வேண்டும். இச்சம்பவம் கடவுள் மீதுள்ள என் நம்பிக்கையை அதிகமாக்கியது. அவமானம் என்ற தவறான உணர்ச்சியை ஓரளவுக்கு விட்டொழிக்கவும் இச் சம்பவம் எனக்குப் போதித்தது.

 

     இத்துறைமுகத்தில் நாங்கள் ஒரு வாரம் தங்க வேண்டியிருந்ததால் பட்டணத்தில் வசிக்க ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். சுற்றுப்புறங்களையெல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்தேன். ஜான்ஸி பார் செடி கொடிகள் நிறைந்து, இயற்கை வளத்தில், மலையாளத்தைப் போல் இருந்தது எனலாம். பிரமாண்டமான மரங்களையும், மிகப் பெரிய பழங்களையும் பார்த்துப் பிரமித்துப் போனேன்.

 

     எங்கள் கப்பல் நின்ற அடுத்த துறைமுகம் மொஸாம்பிக். பிறகு மே மாதக் கடைசியில் நேட்டால் போய்ச் சேர்ந்தோம்.

 

  • 7. சில அனுபவங்கள்

 

  நேட்டாலின் துறைமுகம், டர்பன். அதை நேட்டால் துறைமுகம் என்பதும் உண்டு. என்னை வரவேற்க அப்துல்லா சேத் துறைமுகத்திற்கு வந்திருந்தார். கப்பல் கரையைத் தொட்டதும், நண்பர்களை வரவேற்கப் பலர் கப்பலுக்கு வருவதைப் பார்த்தேன். அப்படி வருகிறவர்களில் இந்தியர்களுக்கு மரியாதை காட்டப்படுவதில்லை என்பதையும் கவனித்தேன். அப்துல்லா சேத்தை அறிந்தவர்கள் அவரிடம் ஒரு வகையான அகம்பாவத்துடன் நடந்து கொள்ளுவதையும் நான் கவனிக்காது போகவில்லை. அது என் மனத்தை வருத்தியது. ஆனால், அப்துல்லா சேத்துக்கு இதெல்லாம் பழக்கமாகி விட்டது. என்னைப் பார்த்தவர்களும் அது போலவே ஏதோ விசித்திரப் பொருளைப் பார்ப்பது போலப் பார்த்தனர். நான் அணிந்திருந்த உடை, மற்ற இந்தியரிலிருந்து என்னை வேறுபடுத்திக் காட்டியது நான் வங்காளிகள் வைத்துக் கொள்வதைப் போன்ற ஒரு தலைப்பாகையை வைத்துக்கொண்டு, மேலங்கியும் அணிந்திருந்தேன்.

 

     என்னைக் கம்பெனியின் கட்டடத்திற்கு அப்துல்லா சேத் அழைத்துச் சென்றார். அவருடைய அறைக்குப் பக்கத்து அறையில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர் என்னை அறிந்து கொள்ளவில்லை. என்னாலும் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை. என் வசம் அவருடைய சகோதரர் அனுப்பியிருந்த காகிதங்களைப் படித்துவிட்டு, அவர் இன்னும் அதிகக் குழப்பமடைந்தார். யானையைக் கட்டித் தீனி போடச் சொல்லுவது போல என்னைத் தம்முடைய சகோதரர் அனுப்பியிருக்கிறார் என்றே எண்ணினார். என்னுடைய உடையின் கோலத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்துவிட்டு, ஐரோப்பியர்களைப் போல் எனக்கும் அதிகச் செலவாகும் என்று நினைத்தவிட்டார். குறிப்பாக எனக்குக் கொடுக்கக்கூடிய வேலையும் அப்பொழுது எதுவும் இல்லை. அவர்கள் வழக்கோ டிரான்ஸ்வாலில் நடந்து கொண்டிருந்தது. என்னை உடனே அங்கே அனுப்புவது என்பதிலும் அர்த்தமில்லை. என்னுடைய திறமையும் யோக்கியப் பொறுப்பையும் அவர் எந்த அளவுக்கு நம்ப முடியும்? என்னைக் கண்காணிப்பதற்கு அவர் பிரிட்டோரியாவில் இருந்து வர இயலாது. பிரதிவாதிகள் பிரிட்டோரியாவில் இருக்கின்றனர். அவர்கள் என்னை எந்த வழியிலாவது வசப்படுத்திக் கொள்ளக்கூடும் என்று அவர் கருதினார். சம்பந்தப்பட்ட வழக்கைப் பற்றி வேலையை ஒப்படைப்பதற்கில்லை என்றால், வேறு எந்த வேலையை ஒப்படைப்பது? வேறு வேலைகளெல்லாம், அவருடைய குமாஸ்தாக்களே என்னைவிட நன்றாகச் செய்துவிட முடியும். மேலும் தவறு செய்யும் குமாஸ்தாக்களைக் கண்டிக்க முடியுமா? ஆகையால் வழக்குச் சம்பந்தமான வேலை எதையும் என்னிடம் கொடுக்க முடியவில்லையென்றால், ஒரு பயனும் இல்லாமல் என்னை வைத்துக் கொண்டிருக்க நேரும்.

 

     அப்துல்லா சேத், எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றே சொல்லலாம். ஆனால் மிகுந்த அனுபவ ஞானம் உள்ளவர். அதிக கூர்மையான அறிவு படைத்தவர். தமக்கு புத்திசாலித்தனம் அதிகம் உண்டு என்பதை அவரும் உணர்ந்திருந்தார். பழக்கத்தினால் அதைக் கொண்டு அவர், பாங்க் மானேஜர்களிடமோ, ஐரோப்பிய வர்த்தகர்களிடமோ பேசியும், தமது வழக்குச் சம்பந்தமாக வக்கீல்களிடம் தமது கட்சியை விளக்கியும் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார். இந்தியர்களுக்கு அவரிடம் உயர்ந்த மதிப்பு உண்டு. அச்சமயம் இந்தியரின் வியாபார ஸ்தலங்களில் அவருடைய கம்பெனியே மிகப் பெரியது, அல்லது பெரியவைகளில் ஒன்று என்றாவது சொல்ல வேண்டும். இவ்வளவு சாதகமான வசதிகளெல்லாம் இருந்தும், அவருக்குப் பிரதிகூலமானதும் ஒன்று உண்டு. அது, அவர் சுபாவத்திலேயே சந்தேகப் பிராணியாக இருந்ததுதான்.

 

     இஸ்லாம் மதத்தின் சிறப்பில் அவர் பெருமைகொள்ளுபவர். அம்மதத்தின் தத்துவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதிலும் அவருக்குப் பிரியம் அதிகம். அவருக்கு அரபு மொழி தெரியாது, என்றாலும் பொதுவாகத் திருக் குர் ஆனிலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் அவருக்கு ஓரளவு நல்ல ஞானம் உண்டு. அவைகளிலிருந்து ஏராளமான உதாரணங்களை உடனுக்கு உடன் கூறுவார். அவருடன் பழகியதால் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, சமய விஷயங்களைக் குறித்து நீண்ட நேரம் விவாதித்தும் வந்தோம்.

 

     நான் நேட்டாலுக்கு வந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ, என்னை டர்பன் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே என்னைப் பலருக்கு அறிமுகம் செய்து வைத்துத் தம் வக்கீலுக்குப் பக்கத்தில் என்னை உட்கார வைத்தார். மாஜிஸ்டிரேட்டோ, என்னை வெறிக்கப் பார்த்துக் கொண்டே இருந்தார். கடைசியாக, என் தலைப்பாகையை எடுக்கும்படி கூறினார். நான் எடுக்க மறுத்து, கோர்ட்டிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ஆகவே, இங்கும் எனக்கு போராட்டம் காத்துக் கொண்டிருந்தது.

 

     இந்தியர்களில் சிலர் மட்டும் தங்கள் தலைப்பாகையை எடுத்துவிட வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகின்றனர் என்பதை அப்துல்லா சேத் எனக்கு விளக்கிச் சொன்னார். முஸ்லிம் உடை தரிப்பவர்கள் மாத்திரம் தலைப்பாகைகளை வைத்துக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் தலைப்பாகையை எடுத்துவிடுவது வழக்கமாக நடந்து வருகிறது என்றும் சொன்னார்.

 

     இந்த நுட்பமான பாகுபாடு புரியும்படி செய்வதற்குச் சில விவரங்களை நான் கூற வேண்டிருக்கிறது. அங்கிருந்த இந்தியர் பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இரண்டு மூன்று நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒரு பிரிவு முஸ்லிம் வர்த்தகர்களை கொண்டது. அவர்கள் தங்களை அராபியர் என்று சொல்லிக் கொண்டனர். மற்றொரு பிரிவினர், ஹிந்து குமாஸ்தாக்கள். பார்ஸி குமாஸ்தாக்களின் பிரிவும் இருந்தது. ஹிந்து குமாஸ்தாக்கள் அராபியருடன் சேர்ந்து கொண்டாலன்றி, இங்குமில்லை, அங்குமில்லை என்பதே அவர்கள் கதியாக இருந்தது. பார்ஸி குமாஸ்தாக்களோ, தங்களைப் பாரஸீகர்கள் என்று சொல்லிக் கெண்டனர். இந்த மூன்று பிரிவினருக்குள்ளும் சில சமூக உறவுகள் இருந்தன. இவர்களைத் தவிர பெரிய பிரிவினராக இருந்தவர்கள் ஒப்பந்த தொழிலாளலர்களாகவும், சுயேச்சையான தொழிலாளராகவும் இருந்த தமிழரும், தெலுங்கரும், வட இந்தியரும் ஆவர். ஐந்து ஆண்டுகள் வேலை செய்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் நேட்டாலுக்குச் சென்றவர்களே ஒப்பந்தத் தொழலாளிகள். ‘கிரிமிதியர்’ என்று இவர்கள் சொல்லப்படுகின்றனர். ‘எக்ரிமென்ட்’ என்ற ஆங்கிலச் சொல் ‘கிரிமித்’ என்று திரிந்து, அதிலிருந்து ‘கிரிமிதியர்’ என்று ஆகியிருக்கிறது. இந்தியர்களுக்குள் இருக்கும் மற்ற மூன்று பிரிவினருக்கும், இவர்களிடம் வர்த்தகத் தொடர்பைத் தவிர வேறு எந்தவிதமான தொடர்பும் இல்லை. பெரும்பான்மையான இந்தியர்கள், தொழிலாளர்கள் வகுப்பையே சேர்ந்தவர்கள். ஆகையால், ஆங்கிலேயர்கள் அவர்களைக் ‘கூலிகள்’ என்றே அழைத்து வந்தனர். எல்லா இந்தியர்களுமே ‘கூலிகள்’ அல்லது ‘சாமிகள்’ என்று அழைக்கப்பட்டனர். ‘சாமி’ என்பது தமிழர்களின் பெயர்கள் பலவற்றிற்கு விகுதியாக இருப்பது. ‘ஸ்வாமி’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபே ‘சாமி’. அச்சொல்லின் பொருள் ‘எஜமான்’ என்பதே. ஆகையால், தம்மை ஓர் ஆங்கிலேயர் ‘சாமி’ என்று கூப்பிடும் போது இந்தியர் யாருக்காவது ஆத்திரம் உண்டானால் அவருக்குப் புத்திசாலித்தனமும் இருந்தால், இவ்வாறு ஒரு பதிலைச் சொல்லி வாயடைத்து விடுவார். “என்னை ‘சாமி’ என்று நீர் கூப்பிடலாம். ஆனால் ‘சாமி’ என்பதற்கு ‘எஜமான்’ என்பது பொருள். நான் உம் எஜமான் அல்லவே!” என்பார். இதைக் கேட்டுச் சில ஆங்கிலேயர்கள் வெட்கிப் போவார்கள். மற்றும் சிலரோ, கோபமடைந்து திட்டுவார்கள். சமயம் நேர்ந்தால் அடித்தும் விடுவர். ஏனெனில் ‘சாமி’ என்ற சொல், இழிவுபடுத்தும் சொல்லைத் தவிர அவர்களைப் பொறுத்தவரை வேறு எதுவும் இல்லை. அச்சொல்லுக்கு ‘எஜமான்’ என்ற பொருளைக் கூறுவது, அவர்களைப் அவமதிப்பதற்குச் சமம்.

 

     ஆகவே, என்னைக் ‘கூலி பாரிஸ்டர்’ என்றே அழைத்தார்கள். வர்த்தகர்களும், ‘கூலி வர்த்தகர்கள்’ என்றே அழைக்கப்பட்டனர். இவ்விதம், கூலி என்ற சொல்லுக்கு உரிய உண்மைப் பொருள் மறைந்து போய் அது எல்லா இந்தியருக்கும் ஓர் அடைமொழி ஆகிவிட்டது. இவ்விதம் அழைக்கப்படுவதைக் கேட்டு, முஸ்லிம் வர்த்தகர் ஆத்திரம் அடைவார். ‘நான் கூலியல்ல, அராபியன்’ என்பார். அல்லது ‘நான் ஒரு வியாபாரி’ என்பார். ஆங்கிலேயர் மரியாதை தெரிந்தவராக இருந்தால், தாம் தவறாக அழைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவார்.

 

     தலைப்பாகை வைத்துக் கொள்ளும் விஷயம் இந்த நிலைமையில் மிக முக்கியமான ஒன்றாக ஆயிற்று. பிறர் உத்தரவிடுகிறார்கள் என்பதற்காக ஒருவர், தமது இந்தியத் தலைப்பாகையைக் கழற்றிவிடுவது என்பது அவமதிப்புக்கு உடன் படுவதாக ஆகும். ஆகவே, இந்தியத் தலைப்பாகையை அணிவதை அடியோடு விட்டுவிட்டு, ஆங்கிலத் தொப்பி போட்டுக் கொள்ளுவதே மேல் என்று நினைத்தேன். அப்படிச் செய்து விட்டால் அவமதிப்பிலிருந்தும், விரும்பத்தகாத விவாதங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்றும் கருதினேன்.

 

     ஆனால், இக்கருத்தை அப்துல்லா சேத் ஒப்புக் கொள்ளவில்லை. “நீங்கள் அவ்விதம் ஏதாவது செய்வீர்களானால் அதனால் பெருந்தீங்கே விளையும். இந்தியத் தலைப்பாகையை அணிந்தே தீருவோம் என்று வற்புறுத்தி வருபவர்களை நீங்கள் கைவிட்டவர்களும் ஆவீர்கள். மேலும், இந்தியத் தலைப்பாகையே உங்கள் தலைக்கு அழகாகவும் இருக்கிறது. நீங்கள் ஆங்கிலத் தொப்பி அணிந்து கொண்டால், உங்களை ஒரு ஹோட்டல் வேலைக்காரன் என்றே நினைத்து விடுவார்கள்” என்று அவர் சொன்னார்.

 

     அவர் கூறிய இப்புத்திமதியில் அனுபவ ஞானமும், தேசாபி மானமும் அடங்கியிருந்ததோடு, ஒரு சிறிய குறுகிய புத்திப் போக்கும் கலந்திருந்தது. அனுபவ ஞானம் இருந்தது தெளிவாகத் தெரிந்த விசயம். தேசாபிமானம் இல்லாதிருந்தால், அவர் இந்தியத் தலைப்பாகை அணிவதை வற்புறுத்தியிருக்க மாட்டார். ஹோட்டல் வேலைக்காரனைக் கேவலப்படுத்தி அவர் கூறியது. ஒரு வகையான குறுகிய புத்திப் போக்கையே வெளிப்படுத்தியது. ஒப்பந்த வேலையாட்களாக வந்த இந்தியரில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று வகுப்பார் இருக்கின்றனர். இதில் கிறிஸ்தவர்கள் என்போர், கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்ட ஒப்பந்தத் தொழிலாளரின் சந்தததியினர். 1893-இல் கூட இவர்கள் தொகை அதிகமாகவே இருந்தது. இவர்கள், ஆங்கில உடைகளையே அணிந்து வந்தனர். பெரும்பாலானவர்கள் ஹோட்டல் ஊழியர்களாக வேலை செய்து பிழைத்து வந்தனர். ஆங்கிலத் தொப்பியைக் குறித்து அப்துல்லா சேத் குறை கூறியது, இந்த வகுப்பினரை மனத்திற் கொண்டேயாகும். ஹோட்டலில் பணியாளராக இருப்பது, இழிவான தொழில் என்று கருதப்பட்டது. இன்றும்கூட அநேகரிடம் இந்த எண்ணம் இருந்து வருகிறது.

 

 

     மொத்தத்தில் அப்துல்லா சேத்தின் புத்திமதி எனக்குப் பிடித்திருந்தது. தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து பத்திரிகைகளுக்கு எழுதினேன். கோர்ட்டில் நான் தலைப்பாகை அணிந்திருந்தது நியாயமே என்று வாதாடினேன். இவ்விஷயத்தைக் குறித்து பத்திரிகைகளில் பலத்த விவாதம் நடைபெற்றது. பத்திரிகைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன. இவ்விதம் நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சில தினங்களுக்குள்ளேயே இச்சம்பவம் எனக்கு எதிர்பாராத விளம்பரத்தை அளித்தது. சிலர் என்னை ஆதரித்தனர், மற்றும் சிலரோ, இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல் என்று கூறிப் பலமாகக் கண்டித்தனர்.

 

     நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசி வரையில், என் தலைப்பாகை என்னிடம் இருந்தது. தென்னாப்பிரிக்காவில் நான் எப்பொழுது, ஏன், தலையில் எதையுமே அணிவதை விட்டேன் என்பதைக் குறித்துப் பிறகு கவனிப்போம்.

 

  • 8. பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில்

 

டர்பனில் இருக்கும் இந்தியக் கிறிஸ்தவர்களுடன் எனக்குச் சீக்கிரத்திலேயே தொடர்பு ஏற்பட்டது. கோர்ட்டில் மொழி பெயர்ப்பாளராக இருந்த ஸ்ரீபால், ஒரு ரோமன் கத்தோலிக்கர். அவருடன் பழக்கம் வைத்துக் கொண்டேன். பிராட்டஸ்டன்டு மிஷனின் கீழ், அப்பொழுது உபாத்தியாராக இருந்த ஸ்ரீசுபான் காட்பிரேயும் எனக்குப் பழக்கமானார். 1924-ல் இந்தியாவுக்கு வந்த தென்னாப்பிரிக்கத் தூது கோஷ்டியினரில் ஒருவராக இருந்த ஸ்ரீ ஜேம்ஸ் காட்பிரேயின் தந்தையே அவர். அதை போல், காலஞ்சென்ற பார்ஸி ருஸ்தம்ஜி, காலஞ்சென்ற ஆதம்ஜி மியாகான் ஆகியவர்களையும் அச் சமயத்தில் சந்தித்தேன். வியாபார சம்பந்தமாக அல்லாமல் இதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் இவர்கள் சந்தித்ததே இல்லை. ஆனால், பின்னால் இந்த நண்பர்கள் எல்லோரும் நெருங்கிப் பழக நேர்ந்த விவரத்தைப் போகப் போகப் பார்ப்போம்.

 

     இவ்வாறு நான் புதிது புதிதாக பலருடன் பழக்கம் செய்து கொண்டு வந்த சமயத்தில், கம்பெனிக்கு அவர்களுடைய பிரிட்டோரியா வக்கீலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வழக்கை நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்றும், அப்துல்லா சேத் பிரிட்டோரியாவுக்கு வர வேண்டும் என்றும், இல்லாவிடில் ஒரு பிரதிநிதியையாவது அனுப்ப வேண்டும் என்றும் வக்கீல் எழுதியிருந்தார்.

 

     அக் கடிதத்தை அப்துல்லா சேத் என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். “பிரிட்டோரியாவுக்குப் போகிறீர்களா?” என்று என்னைக் கேட்டார். “உங்களிடமிருந்து வழக்குச் சம்பந்தமான விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே அதைப்பற்றி நான் சொல்ல முடியும்” என்றேன். “இப்பொழுது அங்கே நான் செய்ய வேண்டியது இன்னது என்பது தெரியவில்லை” என்றேன். அதன் பேரில் வழக்குச் சம்பந்தமான விவரங்களை எனக்கு விளக்கிக் கூறுமாறு அவர் தமது குமாஸ்தாக்களிடம் கூறினார்.

 

     இவ்வழக்குச் சம்பந்தமாக நான் அரிச்சுவடியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது என்பதை வழக்குப்பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பித்ததுமே கண்டு கொண்டேன். கப்பலில் வரும்போது ஜான்ஸிபாரில் சில தினங்கள் தங்கிய சமயத்தில் அங்கே கோர்ட்டு வேலைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் பார்க்கக் கோர்ட்டுக்குச் சென்றேன். அப்பொழுது ஒரு பார்ஸி வக்கீல், ஒரு சாட்சியை விசாரித்துக் கொண்டிருந்தார். கணக்குப் புத்தகங்களில் கண்ட பற்று, வரவு இனங்களைக் குறித்து அவர் கேள்விகள் கேட்டு வந்தார். அவையெல்லாம் எனக்குக் கொஞ்சங்கூடப் புரியவில்லை. கணக்குவைக்கும் முறையைக் குறித்துப் பள்ளிக்கூடத்திலோ, பிறகு இங்கிலாந்தில் இருந்தபோதோ நான் கற்றுக் கொண்டதில்லை. நான் எந்த வழக்குக்காகத் தென்னாப்பிரிக்காவுக்குப் போயிருந்தேனோ அந்த வழக்கு, கணக்கு சம்பந்தமானது. கணக்கு வைக்கும் முறையைத் தெரிந்தவர்கள் மாத்திரமே அதைப் புரிந்து கொள்ளவும், விளக்கவும் முடியும். இது பற்று எழுதப்பட்டது, இது வரவு வைக்கப்பட்டது என்றெல்லாம் குமாஸ்தா சொல்லிக் கொண்டே போனார். எனக்கோ மேலும் மேலும் அதிகக் குழப்பமாகிக் கொண்டிருந்தது. பி. நோட்டு ( பிராமிசரி நோட்டு ) என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. அகராதியிலும் இந்த வார்த்தையைக் காணவில்லை. என்னுடைய அறியாமையைக் குமாஸ்தாவுக்கு வெளிப்படுத்தினேன். பி. நோட்டு என்றால் பிராமிசரி நோட்டு என்று அவர் சொல்ல, நான் தெரிந்து கொண்டேன். கணக்கு வைக்கும் முறையைப் பற்றிய புத்தகம் ஒன்றை வாங்கி அதைப்படித்தேன். அதன் பிறகு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. வழக்கையும் புரிந்து கொண்டேன். கணக்கு எழுதுவது எப்படி என்பது, அப்துல்லா சேத்துக்கும் தெரியாது, என்றாலும் அவருக்கு இருந்த நல்ல அனுபவ ஞானத்தினால் கணக்கு முறையில் ஏற்படும் எந்தச் சிக்கலையும் உடனே தீர்த்துவிடும் திறமை அவருக்கு இருந்ததைக் கண்டேன்.

 

     “பிரிட்டோரியாவுக்குப் போக நான் தயாராக இருக்கிறேன்” என்று அவரிடம் சொன்னேன்.

 

     “நீங்கள் அங்கு எங்கே தங்குவீர்கள்?” என்று சேத் கேட்டார்.

 

     “நான் எங்கே தங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அங்கே தங்குகிறேன்” என்றேன்.

 

     “அப்படியானால் நம் வக்கீலுக்கு எழுதுகிறேன். நீங்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்வார். அதோடு அங்கே இருக்கும் என் மேமன் நண்பர்களுக்கும் எழுதுகிறேன். ஆனால், அவர்களுடன் தங்குங்கள் என்று உங்களுக்குச் சொல்ல மாட்டேன். எதிர்க் கட்சியினருக்குப் பிரிட்டோரியாவில் அதிகச் செல்வாக்கு உண்டு. நமது அந்தரங்கக் கடிதங்களை அவர்களில் எவராவது படித்து விட்டால் அதனால் நமக்கு அதிகத் தீமைகள் ஏற்படும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அவர்களுடன் நெருங்கிப் பழகாமல் இருக்கிறீர்களோ அவ்வளவும் நமக்கு நல்லது” என்றார்.

 

     “உங்கள் வக்கீல் என்னை எங்கே இருக்கச் சொல்கிறாரோ அங்கே தங்குகிறேன். இல்லாவிட்டால் நானே என் இருப்பிடத்திற்கு ஏற்பாடு செய்துகொள்ளுகிறேன். நமக்குள் ரகசியமாக இருக்கும் எதையும் மற்றொரு ஆத்மா அறிந்து கொண்டு விடமுடியாது. பிரதிவாதிகளை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்றே எண்ணியிருக்கிறேன். சாத்தியமானால், இவ் வழக்கைக் கோர்ட்டுக்கு வெளியிலேயே சமரசம் செய்து விட விரும்புகிறேன். எப்படியும் தயாப் சேத் உங்கள் உறவினர்தானே” என்றேன். பிரதிவாதியான சேத் தயாப் ஹாஜி கான் முகம்மது, அப்துல்லா சேத்திற்கு நெருங்கிய உறவினர்.

 

     சமரசம் ஏற்படக்கூடும் என்ற சொல்லைக் கேட்டதுமே சேத் திடுக்கிட்டுவிட்டார் என்பதை நான் காண முடிந்தது. நான் டர்பனில் ஆறு, ஏழு நாட்களாக இருந்திருக்கிறேன். நாங்கள் ஒருவரையொருவர் அறிந்து, புரிந்து கொண்டும் இருக்கிறோம். என்னை வைத்திருப்பது இப்போது யானையைக் கட்டித்தீனி போடுவது போல் இல்லை. ஆகையால் அவர் சொன்னார்: “ஆம்... ம் கோர்ட்டுக்கு வெளியிலேயே சமரசமாகப் போய்விடுவதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை தான். ஆனால் நாங்கள் எல்லோரும் உறவினர்கள். ஆகையால் ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறோம். தயாப் சேத் அவ்வளவு எளிதில் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு விடக் கூடியவரல்ல. நம்மளவில் நாம் கொஞ்சம் அஜாக்கிதையாக இருந்தாலும், நம்மிடம் இருக்கும் ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொண்டு, முடிவில் நம்மையே கவிழ்த்திவிடப் பார்ப்பார். ஆகையால் எதையும் தீர யோசித்துச் செய்யுங்கள்.”

 

     “அதைப்பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். வழக்கை குறித்துத் தயாப் சேத்திடமோ, மற்றவர்களிடமோ, நான் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சமரசத்திற்கு வந்து, அனாவசியமான கோர்ட்டு விவகாரக் கஷ்டத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளும்படி மாத்திரமே அவருக்குச் சொல்லுவேன்” என்றேன்.

 

     நான் டர்பன் சேர்ந்த ஏழாவது அல்லது எட்டாவது நாள் அங்கிருந்து புறப்பட்டேன். எனக்கு ரெயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கப்பட்டிருந்தது. இரவில் படுக்கையும் வேண்டும் என்றால் அதற்காகத் தனியாக ஐந்து ஷில்லிங் கொடுத்துச் சீட்டுப் பெறுவது அங்கிருந்த வழக்கம். எனக்கு படுக்கை சீட்டும் வாங்கி விட வேண்டும் என்று அப்துல்லா சேத் வற்புறுத்தினார். ஆனால் பிடிவாதத்தினாலும், கர்வத்தினாலும் ஐந்து ஷில்லிங் மிச்சப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தினாலும், அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

 

     “இந்நாடு இந்தியா அல்ல என்பதைக் கவனத்தில் வையுங்கள். எங்களுக்கு போதிய செல்வத்தை ஆண்டவன் அளித்திருக்கிறார். செலவு செய்யவும் முடியும். உங்களுடைய தேவைக்குச் செலவு செய்து கொள்ளுவதில் தயவு செய்து வீண் சிக்கனம் பிடிக்க வேண்டாம்” என்று சேத் எச்சரிக்கை செய்தார்.

 

     அவருக்கு நன்றி தெரிவித்தேன். “என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்றேன்.

 

     நான் சென்ற ரெயில், இரவு 9 மணிக்கு நேட்டாலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க் போய்ச் சேர்ந்தது. அந்த ஸ்டேசனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம் ஒரு ரெயில்வே சிப்பந்தி வந்து எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார். “வேண்டாம் , என் படுக்கை இருக்கிறது” என்றேன். அவர் போய்விட்டார். ஆனால் ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். நான் கறுப்பு மனிதன் என்பதை அறிந்ததும் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது வேறு ஒரு அதிகாரி என்னிடம் வந்து, “இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும்” என்றார்.

 

     “என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே” என்றேன்.

 

     “அதைப்பற்றி அக்கறையில்லை, நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்றார்.

 

 

     “நான் உமக்குச் சொல்லுகிறேன். இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, இதில் தான் நான் பிரயாணம் செய்வேன்” என்றேன்.

 

     “இல்லை. நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர் இறங்கிவிட வேண்டும். இல்லையானால் உம்மைக் கீழே தள்ளப் போலீஸ்காரனை அழைக்க வேண்டி வரும்” என்றார்.

 

     “அழைத்துக் கொள்ளும் நானாக இவ் வண்டியிலிருந்து இறங்க மறுக்கிறேன்” என்று சொன்னேன்.

 

     போலீஸ்காரர் வந்தார். கையைப் பிடித்து இழுத்து என்னை வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்கிப் போட்டு விட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது. போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு, கைப் பையை மாத்திரம் என்னுடன் வைத்துக் கொண்டு, பிரயாணிகள் தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன். சாமான்கள் ரெயில்வே அதிகாரியின் வசம் இருந்தன.

 

     அப்பொழுது குளிர்காலம். தென்னாப்பிரிக்காவில் உயரமான பகுதியில் குளிர்காலத்தில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க் உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக் கடுமையாக இருந்தது. என் மேல் அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது. அதை ரெயில்வே அதிகாரிகளிடம் போய் கேட்க நான் துணியவில்லை. கேட்டால், திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வறையில் விளக்கும் இல்லை நடுநிசியில் ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச விரும்புவது போல் இருந்தது. ஆனால் பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.

 

     என் கடமை என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்கலானேன். என்னுடைய உரிமைகளுக்காக போராடுவதா, இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா? இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய் வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா? என் கடமையை நிறைவேற்றாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுவது என்பது கோழைத்தனமாகும். எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது, நிறத்துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி மாத்திரமே அது. சாத்தியமானால், இந்த நோயை அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும். அதைச் செய்வதில் துன்பங்களை அனுபவிக்க வேண்டும். நிறத்துவேஷத்தைப் போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே, நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.

 

     எனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன்.

 

 

     மறுநாள் காலையில் ரெயில்வே ஜெனரல் மானேஜருக்கு நீண்ட தந்தி ஒன்று கொடுத்தேன், அப்துல்லா சேத்துக்கும் அறிவித்தேன். அவர் உடனே ஜெனரல் மானேஜரைப் போய்ப் பார்த்தார். மானேஜரோ, ரெயில்வே அதிகாரிகள் செய்தது சரியே என்றார். ஆனால் நான் சேர வேண்டிய இடத்திற்குப் பத்திரமாகப் போய்ச் சேரப் பார்க்குமாறு தாம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு அறிவித்து விட்டதாக அப்துல்லா சேத்திடம் கூறினார். என்னைச் சந்தித்து, எனக்கு வேண்டியதைச் செய்யுமாறு மாரிட்ஸ்பர்க்கிலும் மற்ற இடங்களிலும் இருந்த இந்திய வர்த்தகர்களுக்கு அப்துல்லா சேத் தந்திகள் கொடுத்தார். வர்த்தகர்கள் என்னைப் பார்க்க ஸ்டேஷனுக்குப் வந்தார்கள். தாங்கள் அனுபவித்திருக்கும் கஷ்டங்களை யெல்லாம் சொன்னார்கள். எனக்கு நேர்ந்தது சர்வ சாதாரணமான அனுபவம் தான் என்று கூறி, எனக்கு ஆறுதல் அளிக்க முயன்றார்கள். முதல் வகுப்பிலும், இரண்டாம் வகுப்பிலும் பிரயாணம் செய்யும் இந்தியர்கள், ரெயில்வே அதிகாரிகளிடமிருந்தும் வெள்ளையரிடமிருந்தும் தொல்லையை எதிர்ப்பார்க்கவே நேரும் என்றார்கள். இவ்விதம் துன்பக் கதைகளைக் கேட்பதிலேயே அன்று பொழுது போயிற்று. மாலை வண்டியும் வந்தது. எனக்காக ஏற்பாடு செய்திருந்த இடம் அதில் இருந்தது. டர்பனில் நான் வாங்க மறுத்த படுக்கைச் சீட்டை மாரிட்ஸ்பர்க்கில் வாங்கிக் கொண்டேன். ரெயிலும் என்னைச் சார்லஸ் டவுனுக்கு கொண்டு போய்ச் சேர்த்தது.

 


9. 9. மேலும் துன்பங்கள்

 

ரெயில் காலையில் சார்லஸ் டவுன் சேர்ந்தது. சார்லஸ் டவுனுக்கும் ஜோகன்னஸ்பர்க்குக்கும் இடையே அந்த நாளில் ரெயில் பாதை இல்லை. நான்கு சக்கரக் குதிரைக் கோச் வண்டிகளில்தான் போக வேண்டும். அவ்வண்டி, வழியில் உள்ள ஸ்டாண்டர்ட்டனில் விடியும் வரையில் தங்கும். அவ்வண்டியில் போக என்னிடம் சீட்டு இருந்தது. வழியில் மாரிட்ஸ்பர்க்கில் ஒரு நாள் தங்கிவிட்டதால் அது ரத்துச் செய்யப்படவில்லை. அதுவல்லாமல் சார்லஸ் டவுனிலிருந்த கோச் வண்டி ஏஜெண்டுக்கும் அப்துல்லா சேத் தந்தி கொடுத்திருந்தார்.

 

     ஆனால் அந்த ஏஜெண்டுக்கு, என்னை வண்டியில் ஏற்ற மறுத்துவிடுவதற்கு ஏதாவது ஒரு சாக்குப் போக்குத்தான் தேவையாக இருந்தது. ஆகவே நான் அவ்விடத்திற்குப் புதியவன் என்று கண்டு கொண்டதும், உம் டிக்கெட் ரத்தாகி விட்டது என்றார். நான் அவருக்குத் தக்க பதில் அளித்தேன். எனக்கு இடமில்லை என்று அவர் மறுத்ததற்குக் காரணம் வேறு. வண்டியில் இடமில்லை என்பதல்ல. பிரயாணிகளை வண்டிக்குள்ளேயே உட்கார வைக்க வேண்டும். ஆனால், நானோ கூலியாகக் கருதப்பட்டேன். அதோடு புதியவனாகவும் தென்பட்டேன். எனவே, என்னை வெள்ளகாரப் பிரயாணிகளுடன் உட்கார வைக்காமல் இருப்பதுதான் சரி என்று வண்டித் தலைவர் கருதினார். கோச் வண்டியின் காரியங்களைக் கவனித்து வரும் வெள்ளைக்காரருக்குத் தலைவர் என்பது பட்டம். வண்டியில் பெட்டிமீது வண்டியோட்டிக்கு இரு பக்கங்களிலும் இரு ஆசனங்கள் இருந்தன. அவைகளில் ஒன்றில் தலைவர் உட்கார்ந்து கொள்ளுவது வழக்கம். ஆனால் இன்றோ அவர் உள்ளே உட்கார்ந்து கொண்டு, அவருடைய இடத்தை எனக்குக் கொடுத்தார். அது பெரிய அநியாயமும் அவமதிப்பும் ஆகும் என்பதை அறிவேன் என்றாலும், அதையும் சகித்துக் கொள்ளுவது நல்லது என்று நினைத்தேன். கட்டாயப்படுத்தி நான் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ள முடியாது. வெளியில் உட்கார ஆட்சேபித்திருந்தால் என்னை ஏற்றிக் கொள்ளாமலேயே வண்டி போயிருக்கும். அதனால் இன்னும் ஒரு நாள் வீணாகியிருக்கும். அதற்கு மறுநாள் என்ன நேரும் என்பதையும் கடவுளே அறிவார். ஆகவே, எனக்குள்ளேயே ஆத்திரப்பட்டுக் கொண்டாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் வண்டியோட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

 

     சுமார் மூன்று மணிக்கு வண்டி, பார்டேகோப் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இப்பொழுது, தலைவர் நான் உட்கார்ந்திருந்த இடத்தில், தாம் உட்கார்ந்து கொள்ள விரும்பினார். சுருட்டுப் பிடிக்க விரும்பியதோடு, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர் அழுக்குக் கோணித் துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படி மீது அதை விரித்தார். பிறகு என்னைப் பார்த்து “சாமி இதன் மீது நீர் உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்” என்றார். இந்த அவமதிப்பை என்னால் சகிக்க முடியவில்லை. “என்னை உள்ளே உட்கார வைக்கவேண்டியிருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்காரவைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்காரமாட்டேன். ஆனால், உள்ளே வேண்டுமானால் உட்காரத் தயார்” என்று பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் கூறினேன்.

 

     இவ்விதம் நான் தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும் நான் சும்மா இருப்பதுமாகிய அக் காட்சியைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமாவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று. “அவரை விட்டுவிடும். அடிக்காதேயும். அவர் மீது குற்றம் இல்லை. அவர் செய்தது சரியே. அவர் அங்கே இருக்க முடியாதென்றால் இங்கே வந்து எங்களுடன் உட்கார்ந்த கொள்ளட்டும்” என்றனர். “அது முடியாது” என்று தலைவர் கத்தினார். ஆனாலும், கொஞ்சம் அவமானம் அடைந்துவிட்டவர் போலவே காணப்பட்டார். என்னை அடிப்பதை நிறுத்திவிட்டார். என் கையை விட்டுவிட்டு, கொஞ்ச நேரம் திட்டிக் கொண்டிருந்தார். வண்டிப் பெட்டியின் மற்றொரு பக்கத்தில் ஹாட்டன்டாட் வேலைக்காரர் உட்கார்ந்திருந்தார். எழுந்து படிக்கட்டில் உட்காரும்படி அவருக்குச் சொல்லி, அவர் காலி செய்த இடத்தில் 'தலைவர்' உட்கார்ந்து கொண்டார்.

 

     பிரயாணிகள் ஏறி அவரவர்களிடத்தில் உட்கார்ந்தனர். ஊதியதும், வண்டியும் வேகமாகப் புறப்பட்டுப் போயிற்று. என் இருதயமோ அதி வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. சேர வேண்டிய இடத்திற்கு உயிருடன் போய்ச் சேர முடியுமோ என்று எண்ணித் திகைத்தேன். தலைவரோ அடிக்கடி கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். “இரு ஸ்டாண்டர்ட்டன் போய்ச் சேர்ந்ததும் என்ன செய்கிறேன் என்பதை காட்டுகிறேன்” என்று விரலை ஆட்டி, உறுமிக் கொண்டே இருந்தார். நான் வாய் திறவாது உட்கார்ந்திருந்தேன், எனக்கு உதவுமாறு கடவுளைப் பிரார்த்தித்தேன்.

 

     இருட்டியதும் ஸ்டாண்டர்ட்டன் போய்ச் சேர்ந்தோம். அங்கே சில இந்திய முகங்களைக் கண்டதும் ஒரு சிறிது ஆறுதல் அடைந்து பெரு மூச்சு விட்டேன். நான் வண்டியிலிருந்து இறங்கியதும் அந்த நண்பர்கள், “உங்களை வரவேற்று, ஈஸா சேத்தின் கடைக்கு அழைத்துச் செல்ல இங்கே வந்திருக்கிறோம். தாதா அப்துல்லாவிடமிருந்து எங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது” என்றார்கள். நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். சேத் ஈஸா ஹாஜி ஸூமாரின் கடைக்குச் சென்றோம். சேத்தும் அவருடைய குமாஸ்தாக்களும் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் சொன்னேன். கேட்டு அதிக வருத்தப்பட்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களையெல்லாம் கூறி என்னைத் தேற்றினார்கள்.

 

     நடந்ததையெல்லாம் கோச் வண்டிக் கம்பெனியின் ஏஜெண்டுக்கு அறிவிக்க விரும்பினேன். எனக்கு நேர்ந்ததையெல்லாம் எடுத்துக்கூறி அவருடைய ஆள் என்னை மிரட்டியதையும் அவர் கவனத்திற்கு கொண்டு வந்து ஒரு கடிதம் எழுதினேன். மறுநாள் காலை நாங்கள் புறப்படும்போது மற்ற பிரயாணிகளுடன் என்னை உள்ளே உட்கார வைப்பதாக வாக்குறுதி தரவேண்டும் என்றும் அவரிடம் கேட்டேன். இக்கடிதத்திற்கு ஏஜெண்டு பின் வருமாறு பதிலளித்தார்.

 

     “ஸ்டாண்டர்ட்டனிலிருந்து வேறு ஆட்களைக் கொண்ட பெரிய வண்டி போகிறது. நீங்கள் புகார் செய்யும் அந்த ஆசாமி நாளைக்கு அங்கே இருக்க மாட்டார். மற்ற பிரயாணிகளுடன் உங்களுக்கும் இடம் இருக்கும்.” இது ஒருவாறு எனக்கு ஆறுதலை அளித்தது. என்னை அடித்த ஆசாமி மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற நோக்கமே எனக்கு இல்லை. ஆகவே, அடிப்பட்ட அத்தியாயம் அத்தோடு முடிந்தது.

 

     மறுநாள் காலையில் ஈஸா சேத்தின் ஆள் என்னைக் கோச் வண்டிக்கு அழைத்துச் சென்றார். எனக்கு நல்ல ஆசனம் கிடைத்தது. அன்றிரவு பத்திரமாக ஜோகன்னஸ்பர்க்கை அடைந்தேன்.

 

     ஸ்டாண்டர்டன் சிறு கிராமம், ஜோக்கன்னஸ்பர்க்கோ பெரிய நகரம். அப்துல்லா சேத் ஜோகன்னஸ்பர்க்கிற்கும் தந்தி கொடுத்தார். அங்குள்ள மகமது காஸீம் கம்ருதீன் கம்பெனியின் விலாசத்தையும் என்னிடம் கொடுத்திருந்தார். என்னைச் சந்தித்து அழைத்துப் போவதற்கு கம்பெனியின் ஆள் ஒருவரும் வண்டி நிற்கும் இடத்திற்கு வந்திருந்தாராம். ஆனால், நான் அவரைப் பார்க்கவும் இல்லை. அவர் என்னைத் தெரிந்து கொள்ளவும் இல்லை. ஆகவே, ஒரு ஹோட்டலுக்குப் போவது என்று முடிவு செய்தேன். பல ஹோட்டல்களின் பெயர்கள் எனக்குத் தெரியும். வண்டியை அமர்த்திக் கொண்டு நேரே கிராண்டு நாஷனல் ஹோட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். மானேஜரைப் பார்த்து, தங்குவதற்கு ஓர் அறை வேண்டும் என்று கேட்டேன். அவர் என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். “இடம் நிரம்பி விட்டது! வருத்தப் படுகிறேன்” என்று மரியாதையாகக் கூறி, என்னை வழியனுப்பி விட்டார். ஆகவே, முகமது காஸீம் கம்ருதீன் கடைக்கு ஓட்டுமாறு வண்டிக்காரனிடம் கூறினேன். அங்கே அப்துல்கனி சேத், என்னை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அன்போடு வரவேற்றார். ஹோட்டலில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கேட்டு விட்டு, விழுந்து விழுந்து சிரித்தார். “ஹோட்டலில் இருக்க உங்களை அனுமதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்?” என்றார்.

 

     “ஏன் அனுமதிக்கமாட்டார்கள்?” என்று நான் கேட்டேன்.

 

     “நீங்கள் இங்கே சில தினங்கள் தங்கியதும் அதைத் தெரிந்து கொள்ளுவீர்கள்” என்றார். “இது போன்றோர் நாட்டில் நாங்கள்தான் வசிக்க முடியும். ஏனெனில், பணம் சம்பாதிப்பதற்காக அவமானங்களைச் சகித்துக் கொள்ளுவதைக் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை. ஆகையால், நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்றார். அதோடு தென்னாப்பரிக்காவில் இந்தியர் அனுபவித்துவரும் துன்பங்களைப் பற்றிய கதையையும் விரிவாகக் கூறினார். மேலே போகப் போகச் சேத் அப்துல்கனியைக் குறித்து நாம் அதிகமாகத் தெரிந்து கொள்ளுவோம்.

 

     அவர் மேலும் சொன்னதாவது: “உங்களைப் போன்றவர்களுக்கு ஏற்ற நாடல்ல இது. நீங்களோ, நாளை பிரிட்டோரியாவுக்குப் போக வேண்டியிருக்கிறது. மூன்றாம் வகுப்பு வண்டியில்தான் நீங்கள் பிரயாணம் செய்தாக வேண்டும். டிரான்ஸ்வாலில் இருக்கும் நிலைமை, நேட்டாலில் இருக்கும் நிலைமையைவிட மகா மோசமானது. இந்தியருக்கு முதல் இரண்டாவது வகுப்பு டிக்கெட்டுகளைக் கொடுப்பதே இல்லை. ”

 

     “இது சம்பந்தமாக நீங்கள் விடாமல் முயன்றிருக்க மாட்டீர்கள்” என்றேன்.

 

     “விண்ணப்பங்கள் அனுப்பியிருக்கிறோம். வழக்கமாக நம்மவர்கள் முதல், இரண்டாம் வகுப்புகளில் பிரயாணம் செய்ய விரும்புவதில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன்” என்றார் சேத் கனி.

 

     ரெயில்வே விதிகளைத் தருவித்து, அவற்றைப் படித்துப் படித்துப் பார்த்தேன். விதிகளில் ஓரளவு இடம் இருந்ததைக் கண்டேன். டிரான்ஸ்வாலின் பழைய சட்டங்களின் வாசகங்கள் அவ்வளவு திட்டவட்டமாக இல்லை. ரெயில்வே விதிகளோ, அதையும் விடத் திட்டவட்டமில்லாமல் இருந்தன.

 

     “நான் முதல் வகுப்பிலேயே போக விரும்புகிறேன். அப்படிப் போக முடியவில்லையென்றால், பிரிட்டோரியாவுக்கு முப்பத்து ஏழு மைல் தூரமேயாகையால் கோச் வண்டியில் போகிறேன்” என்று சேத்திடம் சொன்னேன்.

 

     இதனால் ஏற்படக் கூடிய காலதாமதத்தையும் பணச் செலவையும் சேத் அப்துல் கனி, எனக்கு எடுத்துக்கூறினார். ஆனால், முதல் வகுப்பில் பிரயாணம் செய்வதென்ற என் யோசனையை ஒப்புக் கொண்டார். அதன் பேரில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். நான் பாரிஸ்டர் என்றும், நான் முதல் வகுப்பிலேயே எப்பொழுதும் பிரயாணம் செய்வது வழக்கம் என்றும் அதில் குறிப்பிட்டேன். பிரிட்டோரியாவுக்குச் சீக்கிரத்தில் நான் போக வேண்டியிருக்கிறது என்றும், அவருடைய பதிலுக்காகக் காத்திருக்க நேரமில்லையாகையால் பதிலை ஸ்டேஷனிலேயே நான் வாங்கிக் கொள்ளுவதாகவும், முதல் வகுப்பு டிக்கெட்டை எதிர்பார்க்கிறேன் என்றும் அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். பதிலை நேரில் வாங்கிக் கொள்ளுவதாக நான் கூறியிருந்ததற்கும் ஒரு காரணம் உண்டு கூலி பாரிஸ்டர் என்றால் எப்படி இருப்பார் என்பதைக் குறித்து ஸ்டேஷன் மாஸ்டருக்கும் ஒரு வகையான எண்ணம் இருக்கக்கூடும். ஆகையால், எழுத்து மூலம் ஸ்டேசன் மாஸ்டர் எனக்குப் பதில் அனுப்புவதாக இருந்தால். இல்லை என்றுதான் எனக்கு நிச்சயமாகச் சொல்லிவிடுவார். எனவே, சரியான ஆங்கில உடையில் அவரிடம் போய், நேரில் பேசினால் முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்துவிடும்படி செய்து விடக்கூடும் என்று எண்ணினேன். மறுநாள் காலை நாகரிகமான சட்டை, டை முதலியவைகளை அணிந்து கொண்டு, ஸ்டேஷனுக்குப் போய், என் கட்டணத்திற்காக சவரனை டிக்கெட் கொடுக்கும் இடத்தில வைத்து முதல் வகுப்பு ஒரு டிக்கெட் வேண்டும் என்று கேட்டேன்.

 

     “இக் கடிதத்தை நீங்கள்தானே அனுப்பினீர்கள்?” என்று ஸ்டேஷன் மாஸ்டர் என்னைக் கேட்டார்.

 

     “நான் தான் அனுப்பினேன். எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தால் அதிக உபகாரமாக இருக்கும். நான் இன்றே பிரிட்டோரியாவுக்குப் போயாக வேண்டும்” என்றேன்.

 

     அவர் சிரித்தார். பச்சாதாபப்பட்டார். பின்வருமாறு சொன்னார்: “நான் டிரான்ஸ்வால்காரன் அல்ல, ஹாலந்துக்காரன். உங்கள் உணர்ச்சியை நான் மதிக்கிறேன். உங்களிடம் எனக்கு அனுதாபமும் உண்டு. உங்களுக்கு டிக்கெட் கொடுக்கவே விரும்புகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, உங்களை மூன்றாம் வகுப்பு வண்டிக்குப் போய்விடுமாறு கார்டு கூறினால், என்னை இவ்விஷயத்தில் சிக்க வைத்துவிடக் கூடாது. ரெயில்வே கம்பெனிமீது நீங்கள் வழக்குத் தொடுத்து விடக்கூடாது என்றே கூறுகிறேன். சுகமாகப் போய் சேருங்கள். பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் ஒரு கனவான் என்பதைக் காண்கிறேன்.”

 

     இவ்விதம் கூறி அவர் எனக்கு டிக்கெட் கொடுத்தார். அவருக்கு நன்றி செலுத்தினேன். தேவையான உறுதி மொழிகளையும் அவருக்கு கொடுத்தேன்.

 

     என்னை வழியனுப்புவதற்காக சேத் அப்துல் கனி, ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். இச் சம்பவம் அவருக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது. ஆனால் அவர் ஓர் எச்சரிக்கையையும் செய்தார். நீங்கள் தொந்தரவில்லாமல் பிரிட்டோரியா போய்ச் சேர்ந்தால், அது கடவுள் கிருபைதான். முதல் வகுப்பு வண்டியில் உங்களைக் கார்டு விட்டுவைக்க மாட்டார் என்றே அஞ்சுகிறேன். அவர் விட்டு வைத்தாலும் பிரயாணிகள் விட்டுவைக்க மாட்டார்கள் என்றார்.

 

 

     முதல் வகுப்பு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். வண்டியும் புறப்பட்டு விட்டது. ஜெர்மிஸ்டன் என்ற இடத்தில் டிக்கெட்டுகளைப் பரிசோதிப்பதற்காகக் கார்டு வந்தார். நான் அங்கே இருப்பதைக் கண்டதும் கோபம் அடைந்தார். மூன்றாம் வகுப்பு வண்டிக்குப் போய்விடுமாறு விரலாலேயே சமிக்ஞை செய்தார். என்னிடம் இருந்த முதல் வகுப்பு டிக்கெட்டை அவரிடம் காட்டினேன். “அதைப்பற்றி அக்கறையில்லை. மூன்றாம் வகுப்பு வண்டிக்குப் போய்விடு” என்றார்.

 

     அந்த வண்டியில் என்னைத்தவிர ஆங்கிலப் பிரயாணி ஒருவரும் இருந்தார். அவர் கார்டைக் கண்டித்தார். “அந்தக் கனவானை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? அவரிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருப்பதை நீர் பார்க்கவில்லையா? அவர் என்னோடு பிரயாணம் செய்வதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் ஆட்சேபம் இல்லை” என்றார். பிறகு அவர் என்னைப் பார்த்து, “நீங்கள் இருக்கும் இடத்திலேயே சௌகரியமாக இருங்கள்” என்றார்.

 

     “ஒரு கூலியுடன் பிரயாணம் செய்ய நீங்கள் விரும்பினால் எனக்கு என்ன கவலை?” என்று கார்டு முணுமுணுத்தார்.

 

     இரவு எட்டு மணிக்கு ரெயில் பிரிட்டோரியாவைச் சேர்ந்தது.

 

  • 10. பிரிட்டோரியாவில் முதல் நாள்

 

தாதா அப்துல்லாவின் அட்டர்னியிடமிருந்து யாராவது என்னைச் சந்திக்கப் பிரிட்டோரியா ஸ்டேஷனுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். குறிப்பாக இந்தியர் எவருடைய வீட்டிலும் தங்கப் போவதில்லை என்று நான் வாக்குறுதி அளித்திருந்தேன். ஆகையால், என்னைச் சந்திக்க இந்தியர் எவருமே ஸ்டேஷனுக்கு வரமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அட்டர்னியும் யாரையும் அனுப்பவில்லை. நான் அங்கே போய்ச் சேர்ந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், அன்று யாரையும் அனுப்ப அவருக்கு சௌகரியப்படவில்லை என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனேன். எந்த ஹோட்டலிலும் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று நான் பயந்ததால் எங்கே போவது என்று புரியாமல் விழித்தேன்.

 

     பிரிட்டோரியா ஸ்டேஷன் 1914-ல் இருந்ததற்கும் 1893 இல் இருந்ததற்கும் அதிக வித்தியாசம் உண்டு. அப்பொழுது விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. பிரயாணிகளும் மிகச் சிலரே மற்றப் பிரயாணிகளெல்லாம் போகட்டும் என்று காத்திருந்தேன். டிக்கெட் வசூலிப்பவர் (டிக்கெட் கலெக்டர்) ஓய்வாக இருக்கும் போது அவரிடம் என் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, ஏதாவது ஒரு சிறு ஹோட்டலுக்காவது, நான் தங்கக்கூடிய வேறு இடத்திற்காவது வழி சொல்லும்படி கேட்கலாம் என்று இருந்தேன். அப்படி இல்லையென்றால், இரவு ஸ்டேஷனிலேயே இருந்து விடுவது என்றும் நினைத்தேன். ஆனால், உண்மையில் இதைக் கேட்பதற்குக்கூட எனக்குப் பயமாக இருந்தது. அவர் எங்கே என்னை அவமதித்து, விடுவாரோ? என்று அஞ்சினேன்.

 

     ஸ்டேஷனிலிருந்து எல்லாப் பிரயாணிகளும் போய்விட்டார்கள். நான் டிக்கெட் கலெக்டரிடம் என் டிக்கெட்டைக் கொடுத்து விட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் மரியாதையாகவே பதில் சொன்னார் என்றாலும் அவரால் எனக்கு அதிகமாக எந்த உதவியும் ஏற்படாது என்று கண்டேன். ஆனால் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஓர் அமெரிக்க நீக்கிரோவரும் பேச்சில் எங்களுடன் கலந்த கொண்டார்.

 

     “நீங்கள் இந்த இடத்திற்கு முற்றும் புதியவர் என்றும், உங்களுக்கு நண்பர்கள் இங்கே யாரும் இல்லை என்றும் தெரிகிறது. நீங்கள் என்னுடன் வந்தால் உங்களை ஒரு சிறு ஹோட்டலுக்கு இட்டுச் செல்கிறேன். அந்த ஹோட்டலின் சொந்தக்காரர் ஓர் அமெரிக்கர், எனக்கு நன்றாக தெரிந்தவர். அவர் உங்களை ஏற்றுக் கொள்வார் என்றே நினைக்கிறேன்” என்றார் அவர்.

 

     எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் அவருக்கு நன்றி கூறிவிட்டு, அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டேன். என்னை அவர் ஜான்ஸ்டனின் குடும்ப ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். ஸ்ரீ ஜான்ஸ்டனைத் தனியாக அழைத்துப் பேசினார். அவரும் அன்றிரவு தங்குவதற்கு இடம் தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அன்றிரவுச் சாப்பாட்டைத் தனியாக என் அறையிலேயே சாப்பிட வேண்டும் என்பது நிபந்தனை.

 

     “எனக்கு நிறத் துவேஷம் எதுவுமே கிடையாது என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன். ஆனால், என் ஹோட்டலுக்கு வருபவர்களெல்லோரும் ஐரோப்பியர். போஜன அறையில் சாப்பிட உங்களை நான் அனுமதித்தால் அவர்கள் கோபமடைவார்கள். அவர்கள் இங்கிருந்த போய்விட்டாலும் போய்விடக்கூடும்” என்றார் ஸ்ரீ ஜான்ஸ்டன்.

 

     அதற்கு நான், “இன்றிரவுக்கு மாத்திரம் எனக்கு இடம் அளிப்பதாக இருந்தாலும் அதற்காக என் நன்றி. இங்குள்ள நிலைமையை நான் இப்பொழுது அநேகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆகையால், உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் அறிகிறேன். என் அறையிலேயே எனக்கு நீங்கள் இரவுச் சாப்பாடு கொடுப்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நாளைக்கு வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினேன்.

 

     பிறகு அவர் என்னை ஓர் அறைக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார். சாப்பாடு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தனியாக இருந்ததால் சிந்தனையில் ஆழ்ந்தேன். அந்த ஹோட்டலில் தங்கியவர்கள் அப்பொழுது அதிகம் பேர் இல்லை. ஆகவே, வேலைக்காரன் சீக்கிரமாகவே சாப்பாடு கொண்டு வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஸ்ரீ ஜான்ஸ்டனே அங்கே வந்தார். “உங்கள் அறையிலேயே நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்று உங்களிடம் சொன்னது எனக்கே வெட்கமாக இருந்தது. ஆகவே, உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொன்னேன். சாப்பாட்டு அறைக்கே நீங்களும் வந்து சாப்பிடுவதில் அவர்களுக்கு ஏதாவது ஆட்சேபம் உண்டா? என்று அவர்களைக் கேட்டேன். தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை என்றும் நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்குவதைக் குறித்தும் தங்களுக்குக் கவலையில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆகையால், தயவு செய்து சாப்பாட்டு அறைக்கே வாருங்கள். உங்களுக்கு இஷ்டம் இருக்கும் வரை நீங்கள் இங்கேயே தங்கலாம்” என்றும் அவர் கூறினார்.

 

     அவருக்கு மீண்டும் நன்றி கூறினேன். சாப்பாட்டு அறைக்குப் போய்த் திருப்தியாகச் சாப்பிட்டேன்.

 

     மறுநாள் காலை அட்டர்னி ஸ்ரீ ஏ. டபிள்யு. பேக்கரைப் போய்ப் பார்த்தேன். அவரைப்பற்றிய சில விவரங்களை அப்துல்லா சேத் என்னிடம் சொல்லியிருந்தார். ஆகையால் அவர் என்னை அன்போடு வரவேற்றதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. என் சுகத்தைக் குறித்தும் பிரியமாக விசாரித்தார். என்னைப் பற்றி எல்லா விவரங்களையும் சொன்னேன். அதன் பேரில் அவர் கூறியதாவது: “இந்த வழக்குக்குச் சிறந்த வக்கீலை அமர்த்தியிருக்கிறோம். ஆகையால், பாரிஸ்டர் என்ற வகையில் உங்களுக்கு எங்களிடம் வேலையில்லை. இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வருவதோடு மிகவும் சிக்கலானதும் கூட. அவசியமான தகவல்களைப் பெறும் அளவுக்கு மாத்திரம் உங்கள் உதவியை ஏற்றுக்கொள்ளுகிறேன். என்னுடைய கட்சிக்காரரிடமிருந்து வேண்டிய விவரங்களையெல்லாம் உங்கள் மூலமே கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமாகையால் அவருடன் நான் வைத்துக் கொள்ள வேண்டிய தொடர்பை நீங்கள் எளிதாக்கிவிட்டீர்கள். இது நிச்சயமாக வசதியானதே. நீங்கள் தங்குவதற்கு நான் இன்னும் இடம் பார்க்கவில்லை. உங்களைப் பார்த்த பிறகு ஏற்பாடு செய்வது நல்லது என்ற இருந்துவிட்டேன். இங்கே பயப்படக்கூடிய வகையில் நிறத்துவேஷம் இருந்து வருகிறது. ஆகையால், உங்களைப் போன்றவர்கள் தங்குவதற்கு இடம் பார்ப்பதென்பது சுலபமல்ல. ஆனால், எனக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் தெரியும். அவள் ஒரு ரொட்டிக்கடைக்காரரின் மனைவி. அம்மாது உங்களுக்கு இடம் கொடுப்பாள் என்று நினைக்கிறேன். அதனால் அவளுக்கும் வருவாய் இருக்கும். வாருங்கள், அவள் இருக்கும் இடத்திற்குப் போவோம்.”

 

     அப் பெண்மணியின் வீட்டிற்கு என்னை அவர் அழைத்துச் சென்றார். என்னைக் குறித்து தனியாக அவரிடம் பேசினார். வாரத்திற்கு 35 ஷில்லிங் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு, நான் அங்கே தங்குவதற்கு அப்பெண் சம்மதித்தார்.

 

     ஸ்ரீ பேக்கர், அட்டர்னித் தொழில் செய்து வந்ததோடு மத சம்பந்தமான பிரசங்கங்களும் செய்து வந்தார். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். இப்போது சட்டத் தொழிலை விட்டு விட்டு மதப்பிரசாரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நல்ல சொத்து உண்டு. இப்பொழுதும் எனக்குக் கடிதங்கள் எழுதுகிறார். எழுதும் கடிதங்களிலெல்லாம் ஒரே விஷயத்தையே எழுதிக்கொண்டு வருகிறார். எந்த வகையில் கவனித்தாலும் கிறிஸ்தவ சமயம் ஒன்றே எல்லாவற்றிலும் சிறந்தது என்கிறார். ஏசுநாதர் ஒருவரையே கடவுளின் திருக்குமாரர், அவரே மனித வர்க்கத்தின் ரட்ஷகர் என்பதை ஒப்புக்கொள்ளா வரையில் நிரந்தரமான சாந்தியை அடையவே முடியாது என்று வாதிக்கிறார்.

 

     ஸ்ரீ பேக்கரை நான் முதல் முறை சந்தித்துப் பேசியபோதே மத சம்பந்தமான என்னுடைய கருத்துக்களைப்பற்றி அவர் விசாரித்தார். நான் அவருக்கு பின்வருமாறு சொன்னேன்: “பிறவியினால் நான் ஹிந்து என்றாலும் ஹிந்து தருமத்தைப் பற்றி எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியாது. மற்ற மதங்களைக் குறித்துத் தெரிந்திருப்பதோ அதைவிடவும் குறைவு. உண்மையில் மத சம்பந்தமாக என் நிலை என்ன? என் நம்பிக்கை எதுவாக இருக்க வேண்டும்? என்பதையே நான் அறிவேன். என் சொந்த மதத்தைக் குறித்துக் கவனமாகப் படிக்க விரும்புகிறேன். முடிந்த வரையில் பிற சமயங்களைக் குறித்தும் படிக்க எண்ணுகிறேன்.”

 

     இதையெல்லாம் நான் சொல்லக் கேட்டு ஸ்ரீ பேக்கர் சந்தோஷமடைந்தார். அவர் கூறியதாவது: “தென்னாப்பிரிக்கப் பொதுக் கிறிஸ்தவ பிரசார சபையில் நானும் ஒரு டைரக்டர். என் சொந்த செலவில் ஒரு கிறிஸ்தவாலயம் கட்டியிருக்கிறேன். தவறாமல் அதில் சமயப் பிரசங்கங்கள் செய்து வருகிறேன். நிறத்துவேஷம் என்பதே என்னிடம் இல்லை. எனக்குச் சக ஊழியர் சிலர் இருக்கின்றனர். தினம் பகல் ஒரு மணிக்கு நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம். அதில் நீங்களும் கலந்து கொள்வீர்களாயின் மகிழ்ச்சியடைவேன். என் சக ஊழியர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். உங்களைச் சந்திப்பதில் அவர்கள் ஆனந்தமடைவார்கள். அவர்களுடன் பழகுவதை நீங்களும் விரும்புவீர்கள் என்று தைரியமாகக் கூறுவேன். அதோடு நீங்கள் படிப்பதற்குச் சமய நூல்களிலெல்லாம் தலையாய நூல் பைபிளேயாகையால் முக்கியமாக நீங்கள் அதைப் படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.”

 

     ஸ்ரீ பேக்கருக்கு நன்றி கூறினேன். ஒரு மணிக்கு நடக்கும் பிரார்த்தனைக்குச் சாத்தியமானவரை ஒழுங்காக வருவதாகவும் ஒப்புக்கொண்டேன்.

 

     “அப்படியானால், நாளை, பகல் ஒரு மணிக்கு உங்களை இங்கே எதிர்ப்பார்க்கிறேன். பிராரத்தனைக்கு நாம் இருவருமே சேர்ந்து போவோம்” என்றார். பிறகு விடை பெற்றுக் கொண்டு பிரிந்தோம்.

 

     இந்தப் பேச்சைப்பற்றித் திரும்பச் சிந்தித்துப் பார்க்க எனக்கு அப்பொழுது அவகாசம் இல்லை. ஸ்ரீ ஜான்ஸ்டனின் ஹோட்டலுக்குச் சென்றேன். அவருக்குக் கொடுக்க வேண்டியிருந்ததைக் கொடுத்துவிட்டு, வசிப்பதற்குப் புதிதாக அமர்த்தியிருந்த இடத்திற்குச் சென்று, அங்கேயே என் மத்தியான ஆகாரத்தையும் சாப்பிட்டேன். அவ் வீட்டு அம்மாள் நல்ல பெண்மணி. எனக்காக அவர் சைவ உணவு சமைத்திருந்தார். வெகு சீக்கிரத்திலேயே அக் குடும்பத்தில் நானும் ஒருவன் ஆகிவிட்டேன்.

 

     தாதா அப்துல்லா ஒரு நண்பருக்குக் கடிதம் கொடுத்திருந்தார். அடுத்தபடியாக அவரைப் பார்க்கச் சென்றேன். தென் ஆப்ரிக்காவில் இந்தியருக்கு இருந்த கஷ்டங்களைக் குறித்து, இன்னும் அதிகமான விவரங்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். தம்முடனேயே தங்கும்படி அவர் என்னை வற்புறுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி கூறிவிட்டுத் தங்குவதற்கு வேறு ஏற்பாடுகளைச் செய்து விட்டதாகச் சொன்னேன். எனக்கு ஏதாவது தேவை இருந்தால் அதைக் கேட்கத் தயங்க வேண்டாம் என்றும் அவர் வற்புறுத்திச் சொன்னார்.

 

 

     இதற்குள் இருட்டிவிட்டது. வீட்டுக்குச் சென்று சாப்பிட்டேன். என் அறைக்குப் போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து சிந்திக்கலானேன். உடனே செய்தாக வேண்டிய வேலை எதுவும் எனக்கு இல்லை. அதைப்பற்றி அப்துல்லா சேத்துக்கு அறிவித்தேன். என்னிடம் ஸ்ரீ பேக்கர் கொண்டிருக்கும் சிரத்தையின் பொருள் என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்தேன். அவருடைய சகாக்களினால் நான் அடையப்போகும் லாபம் என்ன? கிறிஸ்தவ சமய ஆராய்ச்சியை நான் எந்த அளவுக்கு மேற்கொள்ளுவது? ஹிந்து சமயத்தைப் பற்றிய நூல்களைப் பெறுவது எப்படி? என்னுடைய மதத்தைப் பற்றி முற்றும் தெரிந்து கொள்ளாமல் கிறிஸ்தவத்தைச் சரியான வகையில் நாள் எவ்விதம் புரிந்துகொள்ள முடியும்? ஒரே ஒரு முடிவுக்கே நான் வர முடிந்தது, எனக்குக் கிடைப்பதை எல்லாம் விருப்பு வெறுப்பின்றி நான் படிக்க வேண்டும். கடவுள் காட்டும் வழியை அனுசரித்து, ஸ்ரீ பேக்கரின் கோஷ்டியினருடன் பழக வேண்டும். என் மதத்தைப்பற்றி முற்றும் தெரிந்து கொள்ளுவதற்கு முன்னால், மற்றொரு மதத்தில் சேருவதைப்பற்றி நான் எண்ணவும் கூடாது.

 

     இவ்விதம் சிந்தித்தவாறே தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

 

  • 11. கிறிஸ்தவர்களுடன் தொடர்பு

 

 மறுநாள் ஒரு மணிக்கு ஸ்ரீ பேக்கரின் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே கன்னி ஹாரிஸ், கன்னி காப், ஸ்ரீ கோட்ஸ் முதலானவர்களுக்கு அவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். பிரார்த்தனை செய்வதற்காக எல்லோரும் முழந்தாள் இட்டனர். நானும் அவ்வாறே செய்தேன். ஒவ்வொருவரின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு, பல காரியங்களை முடித்தருள வேண்டுமென்று கடவுளைத் துதிப்பதே பிரார்த்தனை. அன்றை தினம் அமைதியாகக் கழிய வேண்டும் என்பதும் உள்ளத்தின் கதவுகளை ஆண்டவன் திறக்க வேண்டும் என்பதும் சாதாரணமான பிரார்த்தனைகள். என்னுடைய க்ஷேமத்திற்கென்று பின்வருமாறு ஒரு பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது: “ஆண்டவனே எங்கள் மத்தியில் வந்திருக்கும் புதிய சகோதரருக்கு வழிகாட்டி அருளும். ஆண்டவனே! எங்களுக்கு நீர் அளித்திருக்கும் சாந்தியை அவருக்கும் அளியும். எங்களைக் காப்பாற்றியிருக்கும் ஏசுநாதர் அவரையும் காப்பாராக. ஏசுவின் பெயராலேயே இவ்வளவும் வேண்டுகிறோம்.” இந்தக் கூட்டங்களில் பிரார்த்தனைக் கீதங்கள் பாடுவதோ, வேறுவிதச் சங்கீதமோ இல்லை. ஒவ்வொரு நாளும் விசேஷமாக ஏதாவது ஒன்றைக் கோரிப் பிரார்த்திப்போம். பிறகு கலைந்துவிடுவோம். அது மத்தியானச் சாப்பாட்டு வேளையாகையால் அவரவர்கள் சாப்பிடப் போய்விடுவார்கள். பிரார்த்தனை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.

     ஹாரிஸ், காப் ஆகிய இருவரும் வயது முதிர்ந்த கன்னிப் பெண்கள். ஸ்ரீ கோட்ஸ், குவேக்கர் என்னும் கிறிஸ்தவ கோஷ்டியைச் சேர்ந்தவர். முதற்கூறிய இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் வசித்து வந்தனர். இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4 மணிக்குத் தங்கள் வீட்டுக்குத் தேநீர் சாப்பிட வந்துவிடுவிமாறு எனக்கு நிரந்தர அழைப்பு விடுத்தனர்.

     ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் சந்திக்கும் போது, அந்த வாரத்தில், சமய ஆராய்ச்சி சம்பந்தமாக நான் தெரிந்து கொண்டவைகளை ஸ்ரீ கோட்ஸிடம் கூறுவேன். நான் படித்த புத்தகங்களையும், அதனால் எனக்கு ஏற்பட்ட கருத்துக்களையும் பற்றி அவருடன் விவாதிப்பேன். அந்தப் பெண்களோ, தங்களுக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவங்களைப் பற்றிக் கூறுவார்கள். தாங்கள் கண்ட சாந்தியைக் குறித்தும் பேசுவார்கள்.

     ஸ்ரீ கோட்ஸ் கபடமற்ற, உறுதியுள்ள இளைஞர். நாங்கள் இருவரும் சேர்ந்து உலாவப் போவது உண்டு. மற்றக் கிறிஸ்தவ நண்பர்களிடம் அவர் என்னை அழைத்துச் சென்றார்.

     நாங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழக ஆரம்பித்து விடவே, தமக்குப் பிடித்தமான புத்தகங்கள் எனக்குக் கிடைக்கும்படி அவர் செய்தார். இவ்விதம் என்னிடம் நிறையப் புத்தகங்கள் சேர்ந்து விட்டன. என் மீது புத்தகச் சுமையை ஏற்றினார் என்றே கூறவேண்டும். உண்மையாகவே அவற்றைப் படிப்பதாக நான் ஒப்புக் கொண்டேன். நான் படிக்கப் படிக்கப் படித்தவைகளைக் குறித்து விவாதித்தும் வந்தோம்.

     அத்தகைய புத்தகங்கள் பலவற்றை நான் 1893 இல் படித்தேன். அவை எல்லாவற்றின் பெயர்களும் எனக்கு நினைவில்லை. நான் படித்தவைகளில் சில, ஸிட்டி டெம்பிளைச் சேர்ந்த டாக்டர் பார்க்கர் எழுதிய வியாக்கியானம், ஸ்ரீபியர்ஸன் எழுதிய நிச்சயமான பல ருசுக்கள், ஸ்ரீ பட்லர் எழுதிய உபமானங்கள் முதலியன, இவற்றில் சில பகுதிகள் எனக்கு விளங்கவே இல்லை, சில விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன, மற்றவை எனக்குப் பிடிக்கவில்லை. நிச்சயமான பல ருசுக்கள் என்ற புத்தகம், பைபிளின் மதத்திற்கு ஆதரவாக, அதன் ஆசிரியர் அறிந்து கொண்ட பலவகை ருசுக்களைக் கொண்டது. இப்புத்தகம் என் மனதைக் கவரவில்லை. பார்க்கரின் வியாக்கியானம், ஒழுக்கத்தைத் தூண்டுவதாக இருந்தது. ஆனால் நடைமுறையில் இருக்கும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந் நூல் எவ்வகையிலும் பயன்படாது. பட்லரின் உபமானங்கள் ஆழ்ந்த கருத்துக்கள நிறைந்த கஷ்டமான நூலாக எனக்குத் தோன்றிற்று. அதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நான்கு ஐந்து முறை படிக்க வேண்டும். நாஸ்திகர்களை ஆஸ்திகர்களாகத் திருப்பிவிடும் நோக்கத்துடன் அந்நூல் எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதற்காக இப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வாதங்கள் எனக்கு அவசியம் இல்லாதவை. ஏனெனில் சந்தேகிக்கும் அந்தக் கட்டத்தை நான் முன்பே கடந்து விட்டேன். ஆனால், கடவுளின் ஒரே அவதாரம் ஏசுவே, கடவுளிடம் மனிதரைச் சேர்ப்பிக்க வல்லவரும் அவர் ஒருவரே என்பதை நிரூபிப்பதற்காகக் கூறப்பட்டிருந்த வாதங்கள் என் மனத்தைக் கவர்ந்து விடவில்லை.

     எனினும் ஸ்ரீ கோட்ஸ் அவ்வளவு சுலபத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடக் கூடியவர் அன்று. என் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. வைஷ்ணவத்திற்கு அடையாளமான துளசி மணி மாலை, என் கழுத்தில் இருப்பதை அவர் பார்த்தார். அது மூட நம்பிக்கை என்று எண்ணி, அதற்காக மனம் வருந்தினார். “இந்த மூடநம்பிக்கை உங்களுக்கு ஆகாது, வாருங்கள் அந்த மாலையை நான் அறுத்து எறிந்து விடுகிறேன்” என்றார்.

     “இல்லை. நீங்கள் அப்படிச் செய்துவிடக் கூடாது. இம் மாலை, என் அன்னை எனக்கு அளித்த தெய்வீக வெகுமதி” என்றேன்.

     “ஆனால், இதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டார்.

     “இம்மாலையிலிருக்கும் தெய்வீக ரகசியம் இன்னது என்பது எனக்குத் தெரியாது. இதை நான் அணியாவிட்டால் எனக்குத் தீமை உண்டாகிவிடும் என்று நான் நினைக்கவும் இல்லை. அன்பினாலும் இது என்னுடைய சுகத்திற்கு உதவியாக இருக்கும் என்ற திட நம்பிக்கையுடனும் என் தாயார் இதை என் கழுத்தில் அணிவித்தார். ஆகையால் தக்க காரணமின்றி இதை நான் எறிந்துவிட முடியாது. அறுந்துவிடுமானால் புதிதாக ஒன்றைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்காது. ஆனால், இந்த மாலையை அறுத்துவிட முடியாது” என்றேன்.

     என் மத விஷயத்தில் ஸ்ரீ கோட்ஸூக்கு மதிப்பு இல்லாதால் என் வாதத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அஞ்ஞானப் படுகுழியிலிருந்து என்னைக் கரையேற்றிவிட வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். மற்ற மதங்களில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. கிறிஸ்தவத்தை நான் ஒப்புக் கொண்டாலன்றி எனக்கு விமோசனமே இல்லை என்பதை நான் உணர்ந்துவிடச் செய்ய அவர் விரும்பினார். எனக்காக ஏசுநாதர் ஆண்டவனிடம் பரிந்து பேசினாலன்றிப் பாவங்களிலிருந்து நான் மன்னிப்புப் பெற இயலாது என்றும், செய்யும் நற்காரியங்களெல்லாம் பயனற்றுப் போய்விடும் என்றும் நான் உணரச் செய்ய அவர் முயன்றார்.

     பல புத்தகங்களை அவர் அறிமுகம் செய்து வைத்ததைப் போலவே, தீவிர மதப்பற்றுள்ள கிறிஸ்தவர்கள் என்று அவர் கருதிய நண்பர்கள் பலரையும் அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்விதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் பிளிமத் சகோதரர்களில் ஒருவர், என்னிடம் ஒரு வாதத்தை எடுத்துக் கூறத் தொடங்கினார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் கூறியதாவது:

     “எங்கள் மதத்தின் மேன்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் செய்துவிட்ட தவறுகளைக் குறித்தே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நினைத்து வருந்திக் கொண்டும், எப்பொழுதும் அவைகளைத் திருத்திக் கொண்டு அவற்றிற்காகப் பிராயச்சித்தம் செய்து கொண்டும் நீங்கள் இருப்பதாகச் சொல்வதில் இருந்தே அது தெரிகிறது. இந்த இடையறாத வினைச் சுழல் உங்களுக்கு எவ்விதம் விமோசனம் அளிக்க முடியும்? உங்களுக்கு மனச்சாந்தியே இராது. நாம் எல்லோரும் பாவிகளே என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள். எங்கள் நம்பிக்கை எவ்வளவு பரிபூரணமானது என்பதை இப்பொழுது பாருங்கள். சீர்திருந்துவதற்கும், பிராயச்சித்தம் பெறுவதற்கும் நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் வீணானவை என்றாலும் நமக்கு கதி மோட்சம் ஏற்பட வேண்டும். பாவத்தின் சுமையை நாம் எவ்விதம் தாங்க முடியும்? அப் பளுவை நாம் ஏசுநாதர் மீது போட்டு விடத்தான் முடியும். அவர் ஒருவரே பாவமற்ற திருக்குமாரர். ‘என்னை நம்புகிறவர் யாரோ அவரே நித்தியமான வாழ்வை அடைவார்’ என்பது அவருடைய திருவாக்கு. கடவுளின் எல்லையற்ற கருணை இதில்தான் இருக்கிறது. நமது பாவங்களுக்கு ஏசுநாதர் பிராயச்சித்தத்தைத் தேடுகிறார் என்பதை நாம் நம்புவதால், நமது பாவங்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை நாம் பாவஞ் செய்யாதிருக்க முடியாது. பாவமே செய்யாமல் இவ்வுலகில் உயிர் வாழ்வது இயலாது. ஆகையால் நமது பாவங்களுக்காக ஏசுநாதர் துன்பங்களை அனுபவித்தார், மனித வர்க்கத்தின் எல்லாப் பாவங்களுக்கும் அவரே பிராயச்சித்தம் தேடினார். அவர் வழங்கும் இந்த மகத்தான விமோசனத்தை ஒப்புக் கொள்கிறவர்கள் மாத்திரமே நிரந்தரமான மனச் சாந்தியைப் பெறமுடியும். உங்களுடைய வாழ்வு எவ்வளவு அமைதியற்றதாக இருக்கிறது என்பதையும் எங்களுக்கு அமைதி எவ்வளவு நிச்சயமாக இருக்கிறது என்பதையும் சிந்த்தித்துப் பாருங்கள்.”

     இந்த வாதம் எனக்குக் கொஞ்சமும் திருப்தியளிப்பதாக இல்லை. எனவே பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்: “எல்லாக் கிறிஸ்தவர்களும் அங்கீகரிக்கும் கிறிஸ்தவம் இதுவேயாயின், இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன். அந்த லட்சியத்தை நான் அடையப்பெறும் வரையில் அமைதியின்றி இருப்பதில் திருப்தியடைவேன்.”

     நான் இவ்வாறு கூறியதற்குப் பிளிமத் சகோதரர், “உங்கள் முயற்சி பயனற்றது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நான் கூறியதைக் குறித்து, நீங்கள் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்” என்றார்.

     அந்தச் சகோதரர் சொன்னதற்கு ஏற்பவே அவருடைய செயலும் இருந்தது. அறிந்தே அவர் தவறுகளைச் செய்தார். அத்தவறுகளைப் பற்றி எண்ணம் தம்மைக் கவலைக்கு உள்ளாக்கி விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டி விட்டார்.

     ஆனால், தவறுகளைப்பற்றிய இத்தகைய சித்தாந்தத்தை எல்லாக் கிறிஸ்தவர்களுமே நம்பிவிடவில்லை என்பதை இந்த நண்பர்களைச் சந்திப்பதற்கு முன்பே நான் அறிவேன். ஸ்ரீ கோட்ஸ், தம்மைப் பொறுத்தவரையில் கடவுளுக்குப் பயந்தே நடந்து வந்தார். அவருடைய உள்ளம் தூய்மையானது. நமக்கு நாமே தூய்மை அடைவது சாத்தியம் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு. ஹாரிஸ், காப் என்ற அவ்விரு பெண்களுக்கும் இதே நம்பிக்கை இருந்தது. நான் படித்த புத்தகங்களில் சில பக்தி ரசம் மிகுந்தவை. ஆகவே எனக்கு ஏற்பட்ட கடைசி அனுபவத்தைக் கொண்டு ஸ்ரீ கோட்ஸ் அதிகக் கவலை அடைந்து விட்டார். என்றாலும், பிளிமத் சகோதரர் கொண்ட தவறான நம்பிக்கையினால் கிறிஸ்தவத்தைக் குறித்து எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாது என்று நான் ஸ்ரீ கோட்ஸூக்கு கூறியதோடு அவருக்கு உறுதியளிக்கவும் என்னால் முடிந்தது.

     எனக்குக் கஷ்டங்களெல்லாம் வேறு இடத்திலேயே ஏற்பட்டன. பைபிளையும், பொதுவாக அதற்கு, ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வியாக்கியானத்தையும் பற்றியவையே அவை.

 

  • 12. இந்தியருடன் தொடர்பை நாடினேன்
  • கிறிஸ்தவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தைக் குறித்து மேற்கொண்டும் எழுதுவதற்கு முன்னால், அதே சமயத்தில் எனக்கு உண்டான மற்ற அனுபவங்களையும் நான் குறிப்பிட வேண்டும்.     நேட்டாலில் தாதா அப்துல்லாவுக்கு என்ன அந்தஸ்து இருந்ததோ அதே அந்தஸ்து, சேத் தயாப் ஹாஜி முகமதுக்கும் பிரிட்டோரியாவில் இருந்தது. அவர் இல்லாமல் பொதுஜன காரியம் எதுவும் அங்கே நடவாது. முதல் வாரத்திலேயே நான் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். பிரிட்டோரியாவில் இருக்கும் ஒவ்வோர் இந்தியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள நான் விரும்பியதைக் குறித்து அவரிடம் கூறினேன். அங்கே இந்தியரின் நிலைமையைத் தெரிந்துகொள்ள நான் ஆசைப்படுவதாகவும் அவருக்குத் தெரிவித்தேன். இந்த முயற்சியில் எனக்கு அவருடைய உதவி வேண்டும் என்றும் கோரினேன். உதவியளிக்க அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்.

         பிரிட்டோரியாவில் இருக்கும் எல்லா இந்தியரையும் கூட்டி வைத்து, டிரான்ஸ்வாலில் அவர்களுக்கு இருந்த நிலையை எடுத்து கூறுவது என்பது எனது முதல் வேலை. இக்கூட்டம், சேத் ஹாஜி முகமது ஜூஸப் வீட்டில் நடந்தது. அவருக்கு என்னை அறிமுகப்படுத்தும் கடிதம் ஒன்றும் என்னிடம் இருந்தது. இக்கூட்டத்திற்கு மிகச் சில ஹிந்துக்களும் வந்திருந்தனரெனினும் பிரதானமாக மேமன் வர்த்தகர்களே வந்திருந்தார்கள். உண்மையில் பிரிட்டோரியாவில் இந்துக்கள் மிகச் சிலரே இருந்தனர்.

         இக்கூட்டத்தில் நான் ஆற்றிய சொற்பெருக்கே என் வாழ்க்கையில் நான் செய்த முதல் பிரசங்கம் எனலாம். அங்கே பேசுவதற்குச் சுமாராக விஷயத்தைத் தயார் செய்து கொண்டே போனேன். நான் பேசிய விஷயம் வியாபாரத்தில் உண்மையைக் கடைப்பிடித்தலைப் பற்றியது. வியாபாரத்தில் உண்மையாக நடந்து கொள்ளுவதென்பது சாத்தியமானதே அல்ல என்று வர்த்தகர்கள் கூறிவருவதை நான் எப்பொழுதும் கேட்டு வந்திருக்கிறேன். அப்படிச் சாத்தியமில்லை என்று நான் அப்பொழுது நினைத்ததில்லை, இப்பொழுதும் நினைக்க வில்லை. வியாபாரமும் உண்மையும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை என்று சொல்லும் வர்த்தக நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள். வியாபாரம், முற்றும் உலக விவகாரம் என்றும், சத்தியமோ மதத்தைப் பற்றியது என்றும் சொல்லுகிறார்கள். உலக விவகாரத்திற்கு மத விஷயம் முற்றும் வேறானது என்றும் வாதிக்கின்றனர். வியாபாரத்தில் சுத்தமான உண்மைக்கே இடமில்லை. உசிதமான அளவுக்குத்தான் அதில் உண்மை பேச முடியும் என்கின்றனர். அவர்களுடைய அந்தக் கொள்கையை நான் என்னுடைய சொற்பொழிவில் பலமாக எதிர்த்தேன். வர்த்தகர்களுக்கு அவர்களுடைய கடமை உணர்ச்சியை எழுப்பினேன். அக்கடமை இரு வகையானது. அங்குள்ள சில இந்தியரின் நடத்தையே அவர்களுடைய தாய் நாட்டின் கோடிக்கணக்கான சகோதர மக்களின் தன்மையை இந்நாட்டார் அறிவதற்கு அளவு கோல் ஆகிறது. ஆகையால், ஓர் அந்நிய நாட்டில் உண்மையுள்ளவர்களாக, இருக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கு மேலும் அதிகமாகிறது.
  •      சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் மக்களின் பழக்கங்கள், சுகாதாரக் குறைவாக இருந்ததைக் கவனித்திருந்தேன். ஆகையால் அதை அங்கே கூடியிருந்தவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், குஜராத்திகள், மதராஸிகள், பஞ்சாபிகள், சிந்திகள், கச்சிக்காரர்கள், சூரத்காரர்கள் என்றெல்லாம் இருக்கும். பாகுபாடுகளையெல்லாம் மறந்துவிட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தினேன். முடிவாக, மற்றொரு யோசனையும் கூறினேன். குடியேறியிருக்கும் இந்தியரின் கஷ்டங்களைக் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டுக் கொள்ளுவதற்கு ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளவேண்டும் என்றேன். அச்சங்கத்திற்குச் சாத்தியமான அளவுக்கு என் நேரத்தையும் சேவையையும் அளிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் அறிவித்தேன்.

         என்னுடைய சொற்பொழிவு அங்கே கூடியிருந்தவர்களின் மனத்தை நன்கு கவர்ந்தது என்பதைக் கண்டேன்.

         என் பேச்சைத் தொடர்ந்து விவாதம் நடந்தது. எனக்கு வேண்டிய விவரங்களையும் சேகரித்துக் கொடுப்பதாகச் சிலர் முன்வந்தனர். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. என் சொற்பொழிவைக் கேட்டவர்களில் மிகச் சிலருக்கே ஆங்கிலம் தெரியும் என்பதையும் அறிந்தேன். அந்நாட்டில் ஆங்கிலம் தெரிந்திருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதியதால் அவகாசம் இருப்பவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுமாறு யோசனை கூறினேன். அதிக வயதாகிவிட்ட பிறகும்கூட ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு விடுவது சாத்தியமே என்று நான் அவர்களுக்குச் சொன்னதோடு, அப்படிக் கற்றுக்கொண்ட சிலரைப் பற்றியும் உதாரணமாக எடுத்துக் கூறினேன். அதைச் சொல்லிக் கொடுப்பதற்கென்று ஒரு வகுப்பை ஆரம்பித்தால் அதில் வந்து போதிக்கிறேன் என்றேன். விரும்பினால் நானே அவர்கள் வீட்டுக்குப் போய்ச் சொல்லிக் கொடுக்க தயார் என்றும் கூறினேன்.

         இம்மொழியைப் போதிக்க வகுப்பு எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், தங்களுக்கு இருக்கும் வசதியைப் பொறுத்துக் கற்றுக்கொள்ளத் தாங்கள் தயாராய் இருப்பதாக மூன்று இளைஞர்கள் அறிவித்தனர். இதற்கு அவர்கள் விதித்த நிபந்தனை, அவர்களுடைய இடத்திற்கு நான் போய்ச் போதிக்க வேண்டும் என்பது. அவர்களில் இருவர் முஸ்லிம்கள் - ஒருவர் நாவிதர் மற்றொருவர் குமாஸ்தா, - மூன்றாமவர் ஹிந்து. இவர் ஒரு சில்லைரைக் கடைக்காரர். அவர்களுடைய சௌகரியப்படி போய்ச் சொல்லிக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். சொல்லிக் கொடுப்பதில் எனக்குள்ள தகுதியைப்பற்றி எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. என் மாணவர்கள் சளைத்துப் போனாலும் போகலாமே ஒழிய, நான் சளைக்கமாட்டேன். சில சமயங்களில் நான் அவர்கள் இருக்கும் இடத்திற்குப் போகும்போது அவர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். என்றாலும் பொறுமையை இழந்து விடுவதில்லை. ஆங்கிலத்தில் புலமை பெறும் வகையில் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இம்மூவரில் எவருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், இவர்களில் இருவர் சுமார் எட்டு மாத காலத்தில் நல்ல அபிவிருத்தியை அடைந்தனர் என்று சொல்லலாம். இருவர், கணக்கு எழுதவும், வியாபார சம்பந்தமான சாதாரணக் கடிதங்களை எழுதவும் போதுமான அளவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டார்கள். ஆனால் , நாவிதருக்கோ இம்மொழியைக் கற்பதிலிருந்த ஆசை, தமது வாடிக்கைகாரர்களிடம் பேசக்கூடிய அளவிற்குத் தெரிந்தால் போதும் என்பதோடு நின்றது. இவ்விதம் படித்ததனால், இம்மாணவர்களில் இருவர், நல்ல வருமானம் பெறுவதற்கான தகுதியை அடைந்தனர்.

         முன்னால் கூறிய பொதுகூட்டத்தின் பலன் எனக்குத் திருப்தி அளித்தது. இத்தகைய பொதுக்கூட்டங்களை வாரத்திற்கு ஒரு முறை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது என்றே எனக்கு ஞாபகம். மாதம் ஒருமுறை கூட்டுவது என்றும் முடிவு செய்திருக்கக்கூடும். அநேகமாகத் தவறாமல் கூட்டங்கள் நடந்து வந்தன. அச்சமயங்களில் அவரவர்களின் அபிப்பிராயங்களைத் தாராளமாக எடுத்துக் கூறி வந்தனர். இதன் பலன் என்னவென்றால், பிரிட்டோரியாவில் எனக்குத் தெரியாத இந்தியர் எவருமே இல்லை என்று ஆகிவிட்டதுதான். அவர்களின் ஒவ்வொருவரின் நிலைமையையுங்கூட நான் அறிந்திருந்தேன். பிரிட்டோரியாவில் இருக்கும் பிரிட்டிஷ் ஏஜண்டு ஜேகோபஸ் டி வெட்டுடனும் பழக்கம் வைக்துக் கொள்ள வேண்டும் என்று இது என்னை ஊக்குவித்தது. இந்தியரிடம் அவருக்கு அனுதாபம் உண்டு. ஆனால் அவருக்கு இருந்த செல்வாக்கோ மிகச் சொற்பம். என்றாலும் தம்மால் இயன்றவரை உதவி செய்வதாக அவர் ஒப்புக் கொண்டார். நான் விரும்பும் போது தம்மை வந்த பார்க்கும்படியும் என்னை அழைத்தார்.

         பிறகு ரெயில்வே அதிகாரிகளுக்கு எழுதினேன். ரெயில்வே பிரயாணம் செய்வது சம்பந்தமாக இந்தியருக்கு இருந்து வரும் கஷ்டங்கள், ரெயில்வேக்களின் விதிகளின் படியும் நியாயமற்றவை என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். ரெயில்வே அதிகாரிகளிடமிருந்து எனக்குப் பதில் வந்தது. தக்க உடையுடன் இருக்கும் இந்தியருக்கு, முதல் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அந்தப் பதிலில் கூறியிருந்தார்கள். சரியானபடி ஒருவர் உடையணிந்திருக்கிறார் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் ஸ்டேஷன் மாஸ்டரிடமே இருப்பதால் அந்தப் பதில் இந்தியருக்குப் போதுமான கஷ்ட நிவாரணம் அளிப்பதாக இல்லை.
  •      இந்தியர் சம்பந்தமான சில தஸ்தாவேஜுகளைப் பிரிட்டிஷ் ஏஜண்டு எனக்குக் காட்டினார். இதே போன்ற தஸ்தாவேஜுகளைத் தயாப் சேத்தும் எனக்குக் கொடுத்தார். ஆரஞ்ச் பிரீ ஸ்டேட்டிலிருந்து இந்தியர் எவ்வளவு கொடூரமாக விரட்டியடிக்கப் படுகிறார்கள் என்பதை அவைகளைக் கொண்டு அறிந்துகொண்டேன்.

         சுருங்கச் சொன்னால், டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டிலும் இருக்கும் இந்தியரின் சமூக, பொருளாதார, ராஜீய நிலையைக் குறித்து நன்றாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுவதற்கு நான் பிரிட்டோரியாவில் இருந்தது வசதியளித்தது எனலாம். இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் எனக்கு மதிப்பதற்கரிய உதவியாக இருக்கப் போகிறது என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. ஆண்டு முடிவிலோ, ஆண்டு முடிவதற்கு முன்னாலேயோ, வழக்கு முடிந்துவிட்டால் அதற்கும் முன்பே, நான் இந்தியாவுக்குத் திரும்பி விடலாம் என்றே நினைத்து வந்தேன். ஆனால், கடவுளின் சித்தமோ வேறுவிதமாக இருந்துவிட்டது.

 

13. கூலியாக இருப்பதன் துன்பம்

 

டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டிலும் இருந்த இந்தியரின் நிலைமையைக் குறித்து விபரமாகக் கூறுவதற்கு இது இடமன்று. அதைக் குறித்து விபரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நான் எழுதியிருக்கும் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின் சரித்திரம் என்ற நூலில் பார்க்குமாற யோசனை கூறுகின்றேன். என்றாலும் அதைக் குறித்து இங்கே சுருக்கமாகக் கூற வேண்டியது அவசியம்.

 

     ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டில், 1858-ல் செய்யப்பட்ட விசேஷ சட்டத்தின் படி, இந்தியருக்கு முன்னால் இருந்த உரிமைகள் எல்லாமே பறிக்கப்பட்டு விட்டன. அங்கே இந்தியர் இருக்க விரும்பினால் ஹோட்டல்களில் வேலைக்காரர்களாக மாத்திரமே இருந்து வர முடியும். இல்லாவிடில் இதுபோன்ற கீழத்தரமான ஊழியம் செய்துகொண்டிருக்க வேண்டும். சொற்ப நஷ்ட ஈடு கொடுத்து, வியாபாரிகள் விரட்டப்பட்டு விட்டனர். விண்ணப்பங்களும் மகஜர்களும் அனுப்பினார்கள், ஒன்றும் பயனில்லை.

 

     டிரான்ஸ்வாலில் 1885-ல் கடுமையான சட்டம் ஒன்றை இயற்றினர். 1886-ல் இச்சட்டத்தில் சிறுமாறுதல்களைச் செய்தார்கள். திருத்தப்பட்ட அச்சட்டத்தின்படி இந்தியர் எல்லோரும் டிரான்ஸ்வாலுக்குள் போவதற்குக் கட்டணமாக ஆளுக்கு 3 பவுன் தலைவரி செலுத்த வேண்டும். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் பகுதிகளில் அல்லாமல் அவர்கள் வேறு எங்குமே சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், அனுபவத்தில் அந்த ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் நிலம் அவர்களுக்குச் சொந்தமாவதில்லை. இந்தியருக்கு வாக்குரிமை இல்லை. இவை யாவும் ஆசியாக்காரர்களுக்கு என்று செய்யப்பட்ட விசேஷச் சட்டத்தினால் நடந்தன. கறுப்பர்களுக்கு என்று இயற்றப்பட்ட சட்டங்களும் அவர்கள் விஷயத்தில் அமுல் செய்யப்பட்டன. பின்னால் கூறிய இச்சட்டங்களின் படி, இந்தியர் பொது நடைபாதைகளில் நடக்கக் கூடாது அனுமதிச்சீட்டு இல்லாமல் இரவு 9 மணிக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவும் கூடாது. இந்தக் கடைசி விதி, இந்தியரைப் பொறுத்தவரையில், சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் உபயோகிக்கப்பட்டு வந்தது. தங்களை, அரபுக்கள் என்று சொல்லிக் கொண்டவர்களுக்குச் சலுகை காட்டுவதற்காக இந்த விதியிலிருந்து அவர்களுக்கு விலக்களித்தார்கள். இவ்விதம் அளிக்கப்பட்ட விதி விலக்கும் இயற்கையாகவே போலீஸாரின் இஷ்டத்தைப் பொறுத்ததாகத்தான் இருந்து வந்தது.

 

     அவ்விரு சட்டங்களினாலும் ஏற்பட்ட கஷ்டங்களை நான் அனுபவிக்க நேர்ந்தது. நான் அடிக்கடி இரவில் ஸ்ரீ கோட்ஸூடன் உலாவ வெளியே போவேன். இரவு 10 மணிக்கு முன்னால் வீடு திரும்புவதில்லை. போலீஸார் என்னைக் கைது செய்துவிட்டால் என்ன செய்வது? இவ்விஷயத்தில் என்னை விட ஸ்ரீ கோட்ஸூக்குத் தான் அதிகக் கவலை. தம்முடைய நீக்ரோ வேலைக்காரர்களுக்கு அவர் அனுமதிச்சீட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்கும் அவர் எப்படிச் சீட்டுக் கொடுப்பது? வேலைக்காரனுக்குத் தான் எஜமான் இத்தகையச் சீட்டுக் கொடுக்கலாம். எனக்கும் ஒரு சீட்டு வேண்டும் என்று கேட்டிருந்தால், அப்படிச் சீட்டுக் கொடுக்க ஸ்ரீ கோட்ஸ் தயாராக இருந்தாலும், அவரால் கொடுக்க முடியாது. ஏனெனில் அவ்விதம் கொடுப்பது மோசடியாகக் கருதப்பட்டிருக்கும்.

 

     ஆகவே, ஸ்ரீ கோட்ஸோ, அவருடைய நண்பர் ஒருவரோ, என்னை அரசாங்க அட்டர்னியான டாக்டர் கிராஸே என்பவரிடம் அழைத்துச் சென்றனர். நாங்கள் இருவருமே ஒரே இடத்தில் பாரிஸ்டரானவர்கள் என்பது தெரியவந்தது. இரவு 9 மணிக்குப் பிறகு வீட்டிற்கு வெளியே இருப்பதற்கு எனக்கு அனுமதிச்சீட்டு வேண்டியிருக்கிறது என்ற விஷயம் அவருக்கு அதிக வருத்தத்தை அளித்தது. எனக்கு அவர் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார். எனக்கு அனுமதிச் சீட்டுக் கொடுப்பதற்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக, எந்த நேரத்திலும் போஸீஸாரின் குறுக்கீடு இல்லாமல் நான் வெளியில் நடமாடுவதற்கு எனக்கு உரிமை அளித்து, ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்தார். நான் வெளியில் செல்லும் போதெல்லாம் அக்கடிதத்தை எப்பொழுதும் என்னிடம் வைத்திருந்தேன். உண்மையில் அக்கடிதத்தை உபயோகித்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பமே எனக்கு ஏற்பட வில்லையென்றால் அது தற்செயலேயன்றி வேறில்லை.

 

     டாக்டர் கிராஸே என்னைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நாங்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று சொல்லலாம். நான் எப்பொழுதாவது அவர் வீட்டிற்குப் போவேன். ஜோகன்னஸ்பர்க்கில் பப்ளிக் பிராசிக்யூடராக இருந்த அவருடைய பிரபலமான சகோதரர், அவர் மூலம் எனக்கு அறிமுகமானார். போயர் யுத்தத்தின் போது, ஓர் ஆங்கில அதிகாரியைக் கொல்ல அவர் சதி செய்தார் என்று ராணுவக் கோர்ட்டில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் ஏழு வருடச் சிறைத் தண்டனையை அடைந்தார். அவர் வக்கீல் தொழில் செய்யக்கூடாது என்று நீதிபதிகளும் அவரைத் தடுத்து விட்டனர். ஆனால் யுத்தம் முடிந்ததும் அவரை விடுதலை செய்து விட்டனர். டிரான்ஸ்வாலில் வக்கீலாக இருக்க அவரை கௌரவமாக அனுமதித்து விடவே, வக்கீல் தொழிலை நடத்தி வரலானார்.

 

     இந்தத் தொடர்புகள் பின்னால் என்னுடைய ராஜீய வாழ்க்கைக்கு உதவியாக இருந்ததோடு, என் பெரும் பகுதி வேலைகளையும் சுலபமாக்கி விட்டன.

 

     நடைபாதையில் நடப்பது சம்பந்தமாக இருந்த சட்ட விதிகள் எனக்கு இன்னும் அதிகக் கஷ்டத்தைக் கொடுத்தன. நான் எப்பொழுதுமே உலாவுவதற்குப் பிரஸிடெண்டு தெரு வழியாக ஒரு மைதானத்திற்குப் போவேன். பிரஸிடெண்டு (ஜனாதிபதி ) குரூகரின் வீடு அந்தத் தெருவில்தான் இருந்தது. அது மிகவும் அடக்கமான ஆடம்பரமில்லாத கட்டிடம். அதன் முன்னால் தோட்டமும் இல்லை. பக்கத்தில் இருந்த மற்ற வீடுகளுக்கும் அதற்கும் வித்தியாசமே இல்லை. பிரிட்டோரியாவின் லட்சாதிபதிகள் பலருடைய வீடுகள் அவர் வீட்டைப் போல் அல்லாமல் அதிக ஆடம்பரமாக இருந்தன. அவற்றைச் சுற்றித் தோட்டங்களும் இருந்தன. ஜனாதிபதி குரூகரின் எளிய வாழ்வு, மிகப் பிரசித்தமானதாகும். அவர் வீட்டுக்கு முன்னாலிருந்த போலீஸ் காவலைக் கொண்டே அது ஒரு முக்கியமான அதிகாரியின் வீடு என்பது தெரியும். நான் எப்பொழுதும் அவ்வீட்டிற்கு எதிரிலுள்ள நடைபாதை வழியாக அங்கிருந்த போலீஸ் பாராக்காரனைக் கடந்து செல்வது வழக்கம் எந்த விதமான தடையோ, தகராறோ ஏற்பட்டதே இல்லை.

 

     அங்கே காவலுக்கு இருந்த போலீஸ்காரனை அடிக்கடி மாற்றி வந்தார்கள். ஒரு நாள் அவ்விதம் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் எனக்குக் கொஞ்சமேனும் எச்சரிக்கை செய்யாமலும், நடைபாதையை விட்டுப் போய்விடும்படி சொல்லாமலும் என்னை உதைத்துத் தெருவில் தள்ளிவிட்டார். நான் திகைத்துப் போனேன். அவர் இவ்விதம் நடந்து கொண்டதைக் குறித்து அவரிடம் நான் கேட்க முற்படுவதற்கு முன்னால் ஸ்ரீ கோட்ஸ் சப்தம் போட்டு என்னைக் கூப்பிட்டார். அவர் அச்சமயம் அந்த வழியாகக் குதிரைமீது வந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்து “ஸ்ரீ காந்தி நடந்ததையெல்லாம் நான் பார்த்தேன். அந்த ஆள்மீது நீங்கள் வழக்குத் தொடருவீர்களானால், கோர்ட்டில் உங்களுக்காக நான் மகிழ்ச்சியுடன் சாட்சி சொல்வேன். இவ்வளவு முரட்டுத்தனமாக நீங்கள் தாக்கப்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்றார்.

 

     அதற்கு நான், “நீங்கள் வருந்த வேண்டாம். பாவம், அவருக்கு என்ன தெரியும்? கறுப்பு மனிதர்கள் எல்லோரும் அவருக்கு ஒரே மாதிரிதான். என்னை இப்பொழுது நடத்தியதைப் போல அவர் நீக்கிரோக்களையும் நடத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய சொந்தக் குறை எதற்காகவும் கோர்ட்டுக்குப் போவதில்லை என்பதை நான் ஒரு விதியாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், அவர் மீது வழக்குத்தொடரும் உத்தேசமில்லை” என்றேன்.

 

     உடனே, ஸ்ரீ கோட்ஸ், “உங்கள் உயரிய குணத்திற்கு அது சரி. ஆனால், அதைக் குறித்து மறுபடியும் சிந்தியுங்கள். இப்படிப்பட்டவனுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்” என்றார். பின்னர் அந்தப் போலீஸ்காரரிடம் பேசினார். அவரைக் கண்டித்தார். போலீஸ்காரர் போயர் ஆனபடியால் இருவரும் டச்சு மொழியில் பேசினர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால், அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அப்படிக் கேட்பதற்கு அவசியமே இல்லை. ஏனெனில், அவரை முன்பே நான் மன்னித்து விட்டேன்.

 

     ஆனால் திரும்பவும் அத்தெரு வழியாக நான் போகவே இல்லை. அந்த ஆள் இருந்த இடத்தில் வேறு ஆள் வந்திருக்கக் கூடும். இந்தச் சம்பவத்தை அறியாமல் புதிதாக இருக்கும் ஆளும் இதே போல நடந்து கொண்டுவிடக் கூடும். அனாவசியமாக நான் ஏன் இன்னும் ஓர் உதையை வலிய வாங்க வேண்டும்? எனவே நான் வேறு வழியில் போகத் தொடங்கினேன்.

 

 

     குடியேறியிருக்கும் இந்தியரிடம் எனக்குள்ள அனுதாபத்தை இச்சம்பவம் அதிகமாக்கி விட்டது. இத்தகைய சட்ட விதிகள் சம்பந்தமாக முதலில் பிரிட்டிஷ் ஏஜண்டைப் பார்ப்பது, பிறகு அவசியம் என்று தெரிந்தால் பரீட்சார்த்தமாக ஒரு வழக்கைப் போட்டுப் பார்ப்பது என்பதைக் குறித்து இந்தியர்களுடன் விவாதித்தேன்.

 

     இவ்விதம் அங்கே இந்தியருக்கு இருந்து வந்த மிகக் கஷ்டமான நிலையை, அதைப்பற்றிப் படிப்பதனாலும் கேள்விப்படுவதனாலும் மாத்திரம் அன்றி, என் சொந்த அனுபவங்களினாலும் மிக நன்றாக அறிந்துக்கொண்டேன். தென்னாப்பிரிக்கா, சுயமரியாதையுள்ள இந்தியனுக்கு உகந்த நாடன்று என்பதைக் கண்டேன். இத்தகைய நிலைமையில் மாறுதல் ஏற்படும்படி செய்வது எப்படி என்ற கேள்வியே என் மனத்தில் மேலும் மேலும் எழுந்தவண்ணம் இருந்தது. ஆனால், அப்பொழுது என்னுடைய முதன்மையான கடமை தாதா அப்துல்லாவின் வழக்கைக் கவனிப்பதே.

 

14. வழக்குக்கான தயாரிப்பு

 

பிரிட்டோரியாவில் நான் இருந்த அந்த ஓராண்டு, என் வாழ்க்கையிலேயே மிக மதிப்பு வாய்ந்த அனுபவத்தை எனக்கு அளித்தது. பொதுஜனப் பணியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு இங்கேதான் கிடைத்தது. இங்கே அச்சேவைக்கான ஓரளவு ஆற்றலையும் பெற்றேன். என்னுள் சமய உணர்ச்சி ஜீவ சக்தியுள்ளதாக ஆனதும் இங்கேதான். மேலும், வக்கீல் தொழில் சம்பந்தமான உண்மையான ஞானத்தையும் இங்கேதான் அடைந்தேன். தொழிலுக்குப் புதிதாக வரும் பாரிஸ்டர், அனுபவமுள்ள ஒரு பாரிஸ்டரிடம் அறிந்து கொள்ளும் விஷயங்களை இங்கே அறிந்து கொண்டேன். வக்கீல் தொழிலை என்னால் நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இங்கேதான் ஏற்பட்டது. அதே போல ஒரு வக்கீலின் வெற்றிக்கான ரகசியங்களையும் இங்கேதான் அறிந்தேன்.

 

     தாதா அப்துல்லாவின் வழக்கு, சிறிய வழக்கே அல்ல. 40,000 பவுன் கிடைக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. வியாபாரத்தின் கொடுக்கல் வாங்கலில் இவ்வழக்கு ஏற்பட்டதால் கணக்குச் சம்பந்தமான நுணுக்கங்கள் இதில் அதிகம் இருந்தன. வழக்கிடப்பட்ட தொகையில் ஒரு பகுதி பிராமிசரி நோட்டுக்காகவும் பிராமிசரி நோட்டுகள் தருவதாகக் கூறியதற்கும் வரவேண்டிய தொகை. பிராமிசரி நோட்டுகள் மோசடியாக வாங்கப்பட்டவை. அவற்றிற்குப் போதுமான நியாயம் இல்லை என்பது பிரதிவாதி தரப்பு வாதம். இந்தச் சிக்கலான வழக்கில் உண்மையையும் சட்டத்தையும் பற்றிய விஷயங்கள் ஏராளமாக அடங்கியிருந்தன.

 

     இரு தரப்பாரும் பெரிய அட்டர்னிகளையும் வக்கீல்களையும் அமர்த்தியிருந்தனர். ஆகவே, அவர்கள் வேலை செய்யும் விதத்தைத் தெரிந்து கொள்ளுவதற்கு எனக்குச் சிறந்த வாய்ப்புக் கிடைத்தது. வாதியின் கட்சியை அட்டர்னிக்கு எடுத்துக் கூறுவதும், வழக்குச் சம்பந்தமான ஆதாரங்களைச் சேகரிப்பதுமான வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றில் அட்டர்னி எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுகிறார், நான் தயாரித்துக் கொடுப்பதில் எதை அவர் நிராகரித்து விடுகிறார் என்பதைக் கவனித்து வருவதே ஒரு போதனையாயிற்று. அதோடு அட்டர்னி தயாரித்துக் கொடுக்கும் விவரங்களில் எவ்வளவை வக்கீல் உபயோகித்துக் கொள்ளுகிறார் என்பதையும் நான் அறிய முடிந்தது. சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்ளுவதற்கும், சாட்சியங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் எனக்குள்ள திறமையை அளந்து அறிவதற்குச் சாத்தியமானதாக இந்த வழக்குத் தயாரிப்பு வேலை உதவுவதையும் கண்டேன்.

 

     இந்த வழக்கில் மிக அதிகமான சிரத்தை எடுத்துக் கொண்டேன். அதில் நான் முற்றும் மூழ்கியிருந்தேன் என்றே சொல்ல வேண்டும். பற்று வரவு சம்பந்தமான எல்லாத் தஸ்தாவேஜுகளையும் படித்தேன். என் கட்சிக்கார் அதிகத் திறமைசாலி. என்னிடம் முழு நம்பிக்கையும் கொண்டிருந்தார். இதனால் என் வேலை எளிதாயிற்று. கணக்கு வைக்கும் முறையைக் குறித்தும் ஓரளவுக்குப் படித்துத் தெரிந்து கொண்டிருந்தேன். கடிதப் போக்குவரத்துக்களெல்லாம் பெரும்பாலும் குஜராத்தியிலேயே இருந்ததால் அவற்றை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியதாயிற்று. இதனால் மொழிபெயர்க்கும் ஆற்றலும் எனக்கு அதிகமாயிற்று.

 

     நான் முன்னால் கூறியிருப்பதைப்போல், சமய சம்பந்தமான விஷயங்களிலும், பொது வேலைகளிலும் நான் அதிக சிரத்தை கொண்டிருந்தபோதிலும் என் நேரத்தில் கொஞ்சத்தை அவற்றிற்குச் செலவிட்டு வந்தாலும், அப்பொழுது எனக்கு அதிக முக்கியமானவையாக இருந்தவை அவை அல்ல. எனக்கு இருந்த முக்கியமான சிரத்தையெல்லாம் வழக்குச் சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பதே. சட்டத்தைப் படிப்பது, அவசியமாகும் போது அச்சட்ட சம்பந்தமான வழக்குகளைத் தேடியெடுப்பது ஆகியவைகளில் ஈடுபட்டு, மிஞ்சிய நேரங்களில்தான் மற்ற வேலைகளைக் கவனிப்பேன். இதன் பலனாக, வழக்கின் இரு தரப்பினரின் தஸ்தாவேஜுகளெல்லாம் என்னிடம் இருந்ததால் கட்சிக்காரர்களையும்விட நன்றாக வழக்கைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தன.

 

     காலஞ்சென்ற ஸ்ரீபின்கட், ‘விவரங்களே சட்டத்தில் முக்கால் பாகம்’ என்று புத்திமதி கூறியிருந்தார். அதை நான் நினைவு படுத்திக் கொண்டேன். தென்னாப்பிரிக்காவின் பிரபல பாரிஸ்டரான காலஞ்சென்ற ஸ்ரீ லியோனார்டும் இந்த உண்மையைப் பின்னால் உறுதிப்படுத்தினார். என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் என் கட்சிக்காரர் பக்கம் நியாயம் இருந்தாலும், சட்டம் அவருக்கு விரோதமாக இருப்பதாகத் தோன்றியதைக் கண்டேன். என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்ரீ லியோனார்டின் உதவியை நாடினேன். அவ்வழக்கின் விவரங்கள் அதிக அனுகூலமாக இருக்கின்றன என்று அவர் கருதினார். அவர் பின்வருமாறு கூறினார். ‘ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டிருக்கிறேன். வழக்கைப் பற்றிய விவரங்களில் மாத்திரம் நாம் ஜாக்கிரதையாக இருந்தால், சட்டம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும். ஆகையால் இந்த வழக்கின் விவரங்களை நாம் இன்னும் ஆழ்ந்து கவனிப்போம்.’ அவர் என்னிடம் இவ்விதம் கூறி, வழக்கைப்பற்றி மேலும் ஆராய்ந்து கொண்டு, மீண்டும் தம்மை வந்து பார்க்கும் படி கூறினார். விவரங்களை நான் திரும்ப ஆராய்ந்தபோது அதே விவரங்கள் எனக்குப் புதியவிதமாகத் தென்பட்டன. இதற்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஒரு பழைய தென்னாப்பிரிக்க வழக்கும் எனக்கு அகப்பட்டது. அதிக ஆனந்தம் அடைந்தேன். ஸ்ரீ லியோனார்டிடம் சென்று எல்லாவற்றையும் சொன்னேன். “சரி, வழக்கில் வெற்றி பெற்றுவிடுவோம். ஆனால், எந்த நீதிபதி இதை விசாரிக்கப் போகிறார் என்பதை மாத்திரம் நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்” என்றார்.

 

     தாதா அப்துல்லாவின் வழக்குக்கு வேண்டிய காரியங்களை நான் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, ஒரு வழக்கில் விவரங்களே அதிக முக்கியமானவை என்பதை நான் முற்றும் உணர்ந்து கொள்ளவில்லை. விவரங்கள் என்பவை, உண்மையாக நடந்த செயல்களாகும். நாம் உண்மையை அனுசரித்துப் போனால் இயற்கையாகவே சட்டம் நம் உதவிக்கு வருகிறது. தாதா அப்துல்லாவின் வழக்கில், விவரங்கள் மிகவும் அனுகூலமானவைகளாக இருந்ததால் சட்டமும் நிச்சயமாக அவருக்கு அனுகூலமாகவே இருக்கும் என்பதைக் கண்டேன். வாதியும் பிரதிவாதியும் உறவினர்கள். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் ஆனால், விவகாரம் தொடர்ந்து நடத்தப்படுமானால் இரு தரப்பினருமே அழிந்து விடுவார்கள் என்பதையும் கண்டு கொண்டேன். வழக்கு எவ்வளவு காலத்திற்கு நடந்த கொண்டு போகும் என்பது யாருக்கும் தெரியாது. கோர்ட்டில் வழக்காடி ஒரு முடிவுக்கு வந்தே தீருவது என்று, வழக்கைத் தொடர்ந்து நடக்க விட்டுவிட்டால் காலவரையறையின்றி அது நடந்து கொண்டே போகும். இதனால் இரு தரப்பாருக்கம் நன்மை இல்லை. ஆகையால், வழக்கு உடனேயே தீர்ந்துவிடுவது நல்லது என்று இரு தரப்பாரும் விரும்பினார்கள்.

 

     தயாப் சேத்திடம் போய், வழக்கை மத்தியஸ்தத்திற்கு விட்டுத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு யோசனையும் கூறினேன். அவர் வக்கீலிடமும் அதைக் குறித்து யோசிக்கும்படியும் கூறினேன். இரு தரப்பினருக்கும் நம்பிக்கை வாய்ந்த ஒருவரை மத்தியஸ்தராக நியமித்து விட்டால் வழக்கு சீக்கிரத்தில் தீர்ந்துவிடும் என்றும் யோசனை கூறினேன். கட்சிக்காரர்கள் இருவரும் பெரிய வியாபாரிகள். என்றாலும், அவர்களுடைய வசதிகள் எல்லாவற்றையுமே விழுங்கிவிடும் அளவுக்கு, வக்கீல் கட்டணங்கள் பெருகிக்கொண்டே போயின. அவர்கள் இருவரின் கவனம் முழுவதும் இந்த வழக்கிலேயே ஈடுபட்டிருந்ததால் மற்ற வேலைகளைக் கவனிப்பதற்கு அவர்களுக்கு நேரமே இல்லை. இதற்கிடையே ஒருவருக்கொருவர் விரோதமும் வளர்ந்து கொண்டு போயிற்று. இத் தொழிலில் எனக்கு வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. இரு தரப்பு வக்கீல்களும் அவர்கள் வக்கீல்கள் என்ற முறையில் அவரவர்கள் தரப்புக்குச் சாதகமான சட்ட நுட்பங்களைக் கிளப்பிக்கொண்டே இருக்க வேண்டியது அவர்களுடைய கடமையாயிற்று. வெற்றி பெறும் கட்சிக்காரர், தாம் செலவழித்த தொகை முழுவதையும் செலவுத் தொகையாக எதிர்த் தரப்பிலிருந்து பெற்று விடுவதில்லை என்பதையும் முதன் முதலாக அப்பொழுது தான் நான் கண்டேன். கோர்ட்டுக் கட்டணச் சட்டத்தின் படி வாதி, பிரதிவாதிகளுக்கு இவ்வளவுதான் செலவுத் தொகையாக அனுமதிக்கலாம் என்று விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அட்டர்னிக்குக் கட்சிக்காரர் உண்மையில் கொடுக்கும் தொகையோ, அந்த விதிகளில் கண்டதற்கு மிக அதிகமாக இருந்தது. இதையெல்லாம் என்னால் சகிக்க முடியவில்லை. இரு தரப்பினரிடமும் நட்புக் கொண்டு, இருவரையும் சமரசம் செய்து வைத்துவிடுவதுதான் எனது கடமை என்பதை உணர்ந்தேன். சமரசம் செய்து வைத்துவிட என்னாலான முயற்சிகளையெல்லாம் செய்தேன். கடைசியாக தயாப் சேத் சம்மதித்தார். ஒரு மத்தியஸ்தரும் நியமிக்கப்பட்டார். அவர் முன்னிலையில் வழக்கு விவாதிக்கப்பட்டு, தாதா அப்துல்லா வெற்றி பெற்றார்.

 

 

     ஆனால் அதோடு நான் திருப்தி அடைந்து விடவில்லை. தீர்ப்பான தொகையை. என் கட்சிக்காரர் உடனே வசூலிக்க நடவடிக்கை எடுப்பதென்றால், தீர்ப்புத் தொகை முழுவதையும் உடனே கட்டி விடுவதென்பது தயாப் சேத்தினால் முடியாத காரியம். மேலும், தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த போர்பந்தர் மேமன்களிடம் உறுதியான கொள்கை ஒன்று இருந்தது. பட்ட கடனைச் செலுத்த முடியாமல், இன்ஸால்வென்ட்டாகி விடுவதை விடச் செத்துவிடுவது மேல் என்பது அவர்கள் கொள்கை. மொத்தத் தொகையான 37,000 பவுனையும், செலவுத் தொகையும் உடனே செலுத்திவிடுவது என்பது தயாப் சேத்தினால் முடியாது. ஒரு தம்படியும் குறையாமல் முழுத் தொகையையும் செலுத்திவிடவே அவர் விரும்பினார்.

 

     இன்ஸால்வென்ட்டாகி விடவும் அவர் விரும்பவில்லை. இதற்கு ஒரே வழிதான் உண்டு. நியாயமான தவணைகளில் அத்தொகையைப் பெறத் தாதா அப்துல்லா ஒப்புக்கொள்ள வேண்டும். அவரும் இணங்கினார். நீண்டகாலத் தவணையில் தயாப் சேத் பணம் கட்டுவதை அனுமதிக்க ஒப்புக்கொண்டார். வழக்கை, மத்தியஸ்தத்திற்கு விடுவதற்கு இரு தரப்பினரும் சம்மதிக்கும்படி செய்வதைவிடத் தொகையைத் தவணையில் செலுத்துவது என்ற சலுகையைப் பெறுவதில்தான் எனக்கு அதிகச் சிரமம் இருந்தது. ஆனால் ஏற்பட்ட முடிவைக் குறித்து, இரு தரப்பாரும் மகிழ்ச்சி அடைந்தனர். பொது ஜனங்களிடையே அவர்களுடைய மதிப்பும் உயர்ந்தது. எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. உண்மையான வக்கீல் தொழிலை நான் கற்றுக் கொண்டேன். பிளவுப்பட்டிருக்கும் கட்சிக்காரர்களை ஒன்றாக்குவதே வக்கீலின் உண்மையான வேலை என்பதை உணர்ந்து கொண்டேன். இந்தப் பாடம் என்னுள் அழிக்க முடியாதபடி நன்றாகப் பதிந்துவிட்டது. ஆகையால் நான் வக்கீலாகத் தொழில் நடத்திய இருபது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வழக்குகளில், தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்துவிடுவதிலேயே என் காலத்தின் பெரும் பகுதி கழிந்தது. இதனால் எனக்கு நஷ்டம் எதுவுமே இல்லை. பண நஷ்டமும் இல்லை; நிச்சயமாக ஆன்ம நஷ்டம் இல்லவே இல்லை.

 

  • 15. சமய எண்ணத்தின் எழுச்சி

 

கிறிஸ்தவ நண்பர்களிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் குறித்துத் திரும்பவும் சொல்ல வேண்டிய சமயம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

 

     எனது வருங்காலத்தைப் பற்றிய கவலை ஸ்ரீ பேக்கருக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. வெல்லிங்டனில் நடந்த மகாசபைக்கு அவர் என்னைப் அழைத்துச் சென்றார். சமயத் தெளிவைப் பெறுவதற்கு அதாவது வேறுவிதமாகச் சொன்னால் சுயத் தூய்மையைப் பெறும் பொருட்டு என்று புராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள், இத்தகைய மகாசபைகளைச் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டுவது வழக்கம். சமயத்தைச் சீராக்குவது அல்லது சமய புனருத்தாரணம் என்ற இதைச் சொல்லலாம். வெல்லிங்டன் மகாசபையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். அந்த மகாசபைக்குத் தலைமை தாங்கியவர் அப் பகுதியில் பிரசித்தமாயிருந்த பாதிரியாரான பூஜ்ய ஆண்ட்ரு மர்ரே என்பவர். அந்த மகா சபையில் இருக்கும் பக்திப் பரவசச் சூழ்நிலையும், அதற்கு வந்திருப்பவர்களின் உற்சாகமும் சிரத்தையும் என்னைக் கட்டாயம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவும்படி செய்தே தீரும் என்று ஸ்ரீ பேக்கர் நம்பியிருந்தார்.

 

     அவருடைய முடிவான நம்பிக்கையெல்லாம் பிரார்த்தனையின் சக்தியிலேயே இருந்தது. பிரார்த்தனையில் அவர் திடமான நம்பிக்கை வைத்திருந்தார். மனப்பூர்வமான பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்க்காமல் இருந்து விடமாட்டார் என்றும் அவர் திடமாக நம்பினார். இதற்குப் பிரிஸ்டலின் ஜார்ஜ் முல்லர் போன்றவர்களின் உதாரணத்தையும் அவர் எடுத்துக் கூறுவார். அவர், தமது அன்றாடத் தேவைகளுக்குக் கூடக் கடவுளைப் பிரார்த்தித்துவிட்டு, அவரையே நம்பி இருந்துவிடுவாராம். பிரார்த்தனையின் சக்தியைக் குறித்து அவர் கூறுவதை யெல்லாம் எவ்விதத் துவேசமும் இல்லாத கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘என் மனச் சாட்சி மாத்திரம் ஆக்ஞாபித்து விடுமாயின் நான் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி விடுவேன். இவ்விதம் நான் செய்வதை எதுவும் தடுத்து விட முடியாது’ என்று அவரிடம் உறுதி கூறினேன். அந்தராத்மா காட்டும் வழயில் நடக்க நான் நீண்ட காலமாகவே கற்றுக் கொண்டிருந்ததால், எந்தவிதத் தயக்கமும் இன்றி அவருக்கு இந்த வாக்குறதியை நான் அளித்தேன். அதற்கு விரோதமாக நடப்பதென்றால், முடியாது என்பதோடு, அது எனக்கு வேதனையாகவும் இருக்கும்.

 

     எனவே, நாங்கள் வெல்லிங்டனுக்குச் சென்றோம். என்னைப் போன்ற, ‘கறுப்பு மனிதனை’ அழைத்துப் போய் அங்கே சமாளிப்பது ஸ்ரீ பேக்கருக்குக் கஷ்டமாகிவிட்டது. முற்றும் என்னாலேயே பல சமயங்களிலும் அசௌகரியங்களை அவர் அனுபவிக்க வேண்டியதாயிற்று. பிரயாணத்தின் நடுவில் ஞாயிற்றுக்கிழமை குறுக்கிட்டது. ஸ்ரீ பேக்கரும் அவருடைய சகாக்களும் புண்ணிய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பிரயாணம் செய்யமாட்டார்கள். ஆகவே இடையில் ஒரு நாள் பிரயாணத்தை நிறுத்த வேண்டி வந்தது. ஸ்டேஷன் ஹோட்டல் மானேஜர் எவ்வளவோ விவாதத்திற்குப் பிறகு என்னை ஹோட்டலில் வைத்துக் கொள்ளச் சம்மதித்த போதிலும் சாப்பாட்டு அறையில் என்னை அனுமதிக்க மாத்திரம் மறுத்துவிட்டார். எளிதில் விட்டுக் கொடுக்கிறவர் அல்ல, ஸ்ரீ பேக்கர். ஹோட்டலில் வந்து தங்குகிறவர்களின் உரிமையைக் குறித்து அவர் எவ்வளவோ வாதாடினார். என்றாலும், அவருக்கு இருந்த கஷ்டத்தை நான் அறிய முடிந்தது. வெல்லிங்டனிலும் நான் ஸ்ரீ பேக்கருடனேயே தங்கினேன். என்னால் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை மறைக்க அவர் என்னதான் முயன்ற போதிலும் அவற்றை நான் அறியாமல் இல்லை.

 

     இந்த மகாசபை, பக்தியுள்ள கிறிஸ்தவர்களைக் கொண்டது. அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். பூஜ்யர் மர்ரேயையும் சந்தித்தேன். பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்ததையும் கண்டேன். அவர்களுடைய சில தோத்திர கீதங்கள் எனக்குப் பிடித்திருந்தன. அவை இனிமையாகவும் இருந்தன.

 

     மகாசபை மூன்று நாட்கள் நடந்தது. அதற்கு வந்திருந்தவர்களின் பக்தியை நான் அறியவும் பாராட்டவும் முடிந்தது. ஆனால் என் நம்பிக்கையை - என் மதத்தை - மாற்றிக் கொள்ளுவதற்கு எந்தவிதமான காரணத்தையும் நான் அங்கே காணவில்லை. கிறிஸ்தவனாக ஆகிவிடுவதனால் மாத்திரமே நான் சுவர்க்கத்திற்குப் போகமுடியும், முக்தியை அடைய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நல்லவர்களான கிறிஸ்தவ நண்பர்கள் சிலரிடம் இவ்விதம் நான் மனம் விட்டுச் சொன்னபோது அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். ஆனால், நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை.

 

     எனக்கு இருந்த கஷ்டங்கள் மேலும் ஆழமானவை. ‘ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரமான திருக்குமாரர். அவரிடம் நம்பிக்கை வைப்பவர்கள் மாத்திரமே நித்தியமான வாழ்வை அடைய முடியும்’ என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு குமாரர்கள் இருக்க முடியும் என்றால், நாம் எல்லோரும் அவருடைய குமாரர்களே. ஏசுநாதர் கடவுளைப் போன்றவர் அல்லது அவரே கடவுள் என்றால், எல்லா மனிதரும் கடவுளைப் போன்றவர்களே என்பதுடன் ஒவ்வொருவருமே கடவுளாகவும் முடியும். ஏசுநாதர் தமது மரணத்தினாலும், தாம் சிந்திய ரத்தத்தினாலும் உலகத்தைப் பாவங்களிலிருந்து ரட்சித்தார் என்பதை அப்படியே ஒப்புக் கொண்டுவிட என் பகுத்தறிவு தயாராக இல்லை. இதை உருவகமான கூற்றாகக் கொண்டால் இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதோடு, கிறிஸ்தவ தருமத்தின்படி மனிதருக்கு மாத்திரமே ஆன்மா உண்டேயன்றி மற்ற ஜீவன்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்குச் சாவு என்பது அடியோடு மறைந்துவிடுவது தான். நானோ, இதற்கு மாறுபட்ட நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏசுநாதர் லட்சியத்துக்காக உயிரைக் கொடுத்தவர், தியாகமூர்த்தி, தெய்வீகமான போதகர் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதுவரையில் தோன்றியவர்களிலெல்லாம் அவரே பரிபூரணர் என்பதையும் நான் ஒப்புக்கொள்வதற்கில்லை. சிலுவையில் அவர் மாண்டது, உலகிற்குப் பெரியதோர் உதாரணம். ஆனால், ‘அதில் பெரிய ரகசியம் அல்லது அற்புதத் தன்மை இருக்கிறது’ என்பதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றச் சமயங்களை பக்தியுடன் பின்பற்றுகிறவர்கள் எனக்கு அளிக்கத் தவறியது எதையும் கிறிஸ்தவர்களின் பக்தி வாழ்க்கை எனக்கு அளித்து விடவில்லை. கிறிஸ்தவர்களிடையே பலர் புண்ணிய சீலர்களாகத் திருந்தி இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையிலும் அதே மாறுதலை நான் கண்டிருக்கிறேன். தத்துவ ரீதியில் கிறிஸ்தவக் கொள்கையில் அசாதாரணமானது எதுவும் இல்லை. தியாகத்தைப் பொறுத்த வரையில் பார்த்தால், ஹிந்துக்கள் இதில் கிறிஸ்தவர்களையும் மிஞ்சியிருக்கின்றனர். கிறிஸ்தவமே பரிபூரணமான மதம் என்றோ, எல்லா மதங்களிலும் அதுவே தலை சிறந்தது என்றோ நம்ப என்னால் முடியவில்லை. என் மனத்தில் தோன்றிய இந்த எண்ணங்களையெல்லாம் சமயம் நேர்ந்தபோதெல்லாம் எனது கிறிஸ்தவ நண்பர்களிடம் கூறுவேன். ஆனால் இவற்றிற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. கிறிஸ்தவ மதமே பரிபூரணமான மதம் என்றோ, தலைசிறந்த மதம் என்றோ என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லையென்றால், ஹிந்து சமயம் பரிபூரணமானது, தலைசிறந்தது என்றும் அப்பொழுது எனக்கு நிச்சயமாகத் தோன்றிவிடவில்லை. தீண்டாமை, ஹிந்து சமயத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியுமாயின், அது அதன் அழுகிப் போன பகுதியாகவோ அல்லது சதைச் சுரப்பாகவோதான் இருக்க வேண்டும். ஏராளமான பிரிவுகளும் சாதிகளும் இருப்பதற்கான நியாயமும் எனக்கு விளங்கவில்லை. கடவுள் வாக்கே வேதங்கள் என்று சொல்லுவதன் பொருள் என்ன? அவை கடவுளால் கூறப்பட்டவையாக ஏன் இருக்கலாகாது? என்னை மதம் மாற்றுவதற்குக் கிறிஸ்தவ நண்பர்கள் எவ்விதம் முயன்று வந்தனரோ அது போலவே முஸ்லிம் நண்பர்களும் முயன்றனர். இஸ்லாமிய நூல்களைப் படிக்குமாறு அப்துல்லா சேத், விடாமல் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார். எப்பொழுதும் அவர் இஸ்லாமின் சிறப்பைக் குறித்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு இருந்த கஷ்டங்களைக் குறித்து ராய்ச்சந்திர பாய்க்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தேன். சமயத் துறையில் வல்லுநராக இந்தியாவில் இருந்தவர்களுக்கும் எழுதினேன். அவர்களிடமிருந்தும் எனக்குப் பதில்கள் கிடைத்தன. ராய்ச்சந்திரரின் கடிதம் ஓரளவுக்கு எனக்கு மன நிம்மதியை அளித்தது. பொறுமையுடன் இருக்குமாறும், ஹிந்து தருமத்தைக் குறித்து இன்னும் ஆழ்ந்து படிக்குமாறும், அவர் எழுதியதில், ஒரு வாக்கியம் பின்வருமாறு: ‘இவ்விஷயத்தை விருப்பு வெறுப்பின்றிக் கவனித்ததில் ஒன்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. ஹிந்து மதத்தின ஆழ்ந்த, அற்புதமான கருத்துக்களும், ஆன்ம ஞானமும், தயையும் வேறு எந்த மதத்திலும் இல்லை’ என்பதே அது.

 

     ஸேல்ஸ் என்பவரின் குரான் மொழிபெயர்ப்பு நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இஸ்லாமைப் பற்றிய வேறு சில நூல்களையும் வாங்கினேன். இங்கிலாந்திலிருந்த கிறிஸ்தவ நண்பர்களுக்கும் எழுதினேன். அவர்களில் ஒருவர், எட்வர்டு மெய்ட்லண்டுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவருடனும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டேன் பரிபூரணமான வழி என்ற நூலை அவர் எனக்கு அனுப்பினார். அன்னா கிங்ஸ்போர்டுடன் சேர்ந்து அவர் இந்நூலை எழுதியிருந்தார். இப்பொழுது இருந்து வரும் கிறிஸ்தவ நம்பிக்கைகளை இந்நூல் மறுக்கிறது. ‘பைபிளுக்குப் புதிய வியாக்கியானம்’ என்ற மற்றொரு புத்தகத்தையும் அவர் எனக்கு அனுப்பினார். அவ்விரு புத்தகங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. அவை, ஹிந்து தருமத்தை ஆதரிப்பனவாகத் தோன்றின. ‘உன்னுள்ளேயே ஆண்டவன் ராஜ்யம்’ என்ற டால்ஸ்டாயின் நூல், என்னைப் பரவசப்படுத்தி விட்டது. அதில் கண்ட கருத்துக்கள் என் உள்ளத்தில் பலமாகப் பதிந்துவிட்டன. அந்நூல் கண்ட சுயேச்சையான சிந்தனை, மிகச் சிறந்த ஒழுக்கம், உண்மை ஆகியவற்றின் முன்பு ஸ்ரீ கோட்ஸ் எனக்குக் கொடுத்திருந்த புத்தகங்கள் எல்லாமே ஒளி இழந்து, அற்பமானவைகளாகத் தோன்றின. இவ்விதம் என்னுடைய ஆராய்ச்சி, கிறிஸ்தவ நண்பர்கள் எதிர் பாராத திக்குக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது. எட்வர்டு மெயிட்லண்டுடன் நீண்ட காலம் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தேன். ராய்ச்சந்திர பாய் இறக்கும் வரையில் அவருடனும் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தேன். அவர் அனுப்பிய சில புத்தகங்களையும் படித்தேன். பஞ்சீகரணம், மணிரத்தினமாலை, யோகவாசிஷ்டத்தின் முமுட்சுப்பிரகணம், ஹரிபத்ர சூரியின் சத் தரிசன சமுச்சயம் முதலியவைகளும் அவைகளில் சேர்ந்தவை.

 

 

     என் கிறிஸ்தவ நண்பர்கள் எதிர்பாராத ஒரு வழியை நான் மேற்கொண்டேனாயினும், என்னுள் அவர்கள் எழுப்பிய சமய வேட்கைக்காக நான் அவர்களுக்கு என்றும் கட்டுப்பாடு உடையவனாக இருக்கிறேன். அவர்களுடன் பழகியதைப் பற்றிய நினைவை நான் என்றும் போற்றி வருவேன். இத்தகைய இனிமையான, புனிதமான தொடர்புகள், அதற்குப் பின்னாலும் எனக்கு திடமாக இருந்தனவே அன்றிக் குறையவில்லை.

 

  • 16. நானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது

 

வழக்கு முடிவடைந்துவிட்டதால் நான் பிரிட்டோரியாவில் இருப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. ஆகவே, நான் டர்பனுக்குத் திரும்பினேன். தாய்நாட்டுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானேன். ஆனால், அப்துல்லா சேத் பிரிவுபசாரம் எதுவும் இல்லாமல் என்னை அனுப்பிவிட இசைபவர் அல்ல. சைடன்ஹாமில் அவர் எனக்கு ஒரு பிரிவுபசார விருந்து நடத்தினார்.

 

     அன்று நாள் முழுவதையும் அங்கேயே கழிப்பது என்பது ஏற்பாடு. அங்கே கிடந்த பத்திரிகைகளை நான் புரட்டிக் கொண்டிருக்கையில், அதில் ஒன்றின் ஒரு மூலையில், இந்தியரின் வாக்குரிமை என்ற தலைப்பில் ஒரு சிறு செய்தி என் கண்ணில் பட்டது. அப்பொழுது சட்டசபை முன்பிருந்த ஒரு மசோதாவைப் பற்றியது, அச்செய்தி. நேட்டால் சட்டசபைக்கு மெம்பர்களைத் தேர்ந்தெடுக்க இந்தியருக்கு இருந்த உரிமையைப் பறிப்பதற்கென்று கொண்டு வரப்பட்டது, அந்த மசோதா. அம்மசோதாவைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. விருந்துக்கு வந்திருந்தவர்களுக்கும் தெரியாது.

 

     அதைக் குறித்து அப்துல்லா சேத்தை விசாரித்தேன். அவர் கூறியதாவது: “இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன தெரிகிறது? எங்கள் வியாபாரத்தைப் பாதிக்கும் விஷயம் மாத்திரமே எங்களுக்குப் புரிகிறது. ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டில் எங்கள் வியாபாரம் எல்லாம் அடியோடு போய்விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள், அதைக் குறித்துக் கிளர்ச்சி செய்தோம், ஒன்றும் பயனில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருப்பதால் நாங்கள் முடவர்களாகத்தான் இருக்கிறோம். அன்றாட மார்க்கெட் நிலவரம் போன்றவைகளைத் தெரிந்து கொள்ளுவதற்கு மாத்திரமே பொதுவாக நாங்கள் பத்திரிகைகளைப் பார்க்கிறோம். சட்டங்கள் செய்யப்படுவதைக் குறித்து எங்களுக்கு என்ன தெரியும். எங்களுக்கு கண்களாகவும் காதுகளாகவும் இருப்பவர்கள் இங்கிருக்கும் ஐரோப்பிய அட்டர்னிகளே.”

 

     “இங்கே பிறந்து, படித்தும் இருக்கும் வாலிப இந்தியர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வதில்லையா?” என்று கேட்டேன். “அவர்களா?” என்று மனம் சோர்ந்து அப்துல்லா சேத் கேட்டார். “அவர்கள் எங்களைப் பொருட்டாக நினைத்து எங்களிடம் வருவதே இல்லை. உங்களிடம் உண்மையைச் சொல்லுகிறேன். அவர்களை நாங்களும் சட்டை செய்வதில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாதலால் வெள்ளைக்காரப் பாதிரிகளின் கைக்குள் இருக்கின்றனர். அப்பாதிரிகளோ, அரசாங்கத்திற்கு உட்பட்டவர்கள்” என்றார்.

 

     அவர் இவ்விதம் கூறியது என் கண்களைத் திறந்தது. இந்த வகுப்பினரை நம்மவர்கள் என்று நாம் உரிமை கொண்டாட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கிறிஸ்தவம் என்பதற்குப் பொருள் இதுதானா? அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டதனால் இந்தியர்களாக இல்லாது போய்விட்டனரா?

 

     ஆனால், நானோ தாய்நாட்டுக்குத் திரும்பும் நிலையில் இருந்தேன். அகவே, இவ் விஷயத்தில் என் மனத்தில் தோன்றிய எண்ணங்களை வெளியில் கூறத் தயங்கினேன். “இந்த மசோதா சட்டமாகிவிட்டால், நமது கதியை அது இன்னும் அதிகக் கஷ்டமானதாக்கி விடும். நமது சவப்பெட்டியில் அடிக்கப்படும் முதல் ஆணி இது. நமது சுயமதிப்பின் வேரையே இது தாக்குகிறது” என்று மாத்திரம் அப்துல்லா சேத்திடம் கூறினேன்.

 

     உடனே அவர் கூறியதாவது: “நீங்கள் சொன்ன நிலைமை ஏற்படலாம். வாக்குரிமை வரலாற்றை உங்களுக்குக் கூறுகிறேன். அதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. எங்களுடைய சிறந்த அட்டர்னிகளில் ஒருவரான ஸ்ரீ எஸ்கோம்புதான் இதைப்பற்றி எங்களிடம் சொன்னார். அது நடந்த விதம் இதுதான். அவர் தீவிரமாகப் போராடுகிறவர். அவருக்கும் கப்பல் துறை இன்ஜீனீயருக்கும் பரஸ்பரம் பிடிக்காது. இன்ஜீனீயர், தமக்கு வோட்டுகள் இல்லாதபடி செய்து, தம்மைத் தேர்தலில் தோற்கடித்துவிடுவார் என்று ஸ்ரீ எஸ்கோம்பு நினைத்தார். ஆகையால், எங்களுடைய நிலைமையை எங்களுக்கு அவர் எடுத்துச் சொன்னார். அவர் கூறிய யோசனையின் பேரில் நாங்களெல்லோரும் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டு. அவருக்கு வோட்டுப் போட்டோம். நீங்கள் அந்த வாக்குரிமை முக்கியமானது என்கிறீர்கள். ஆனால், அது எங்களுக்கு எவ்விதம் முக்கியமல்ல என்பதை நீங்கள் இப்பொழுது அறியலாம். என்றாலும், நீங்கள் கூறுவது. எங்களுக்குப் புரிகிறது சரி, அப்படியானால் நீங்கள் கூறும் யோசனை தான் என்ன?”

 

     விருந்துக்கு வந்திருந்த மற்றவர்களும் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், “செய்யவேண்டியது என்ன என்பதை நான் சொல்லட்டுமா? இந்தக் கப்பலில் நீங்கள் புறப்படுவது என்பதை ரத்துச் செய்துவிடுங்கள். இன்னும் ஒரு மாதம் இங்கே இருங்கள். நீங்கள் கூறுகிறபடி நாங்கள் போராடுகிறோம்” என்றார்.

 

     மற்றவர்கள் எல்லோரும் “அதுதான் சரி, அதுதான் சரி அப்துல்லா சேத் காந்தியை நிறுத்திவையுங்கள்” என்றனர்.

 

     சேத் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர். அவர் கூறியதாவது: “இப்பொழுது நான் அவரை நிறுத்தி வைப்பதிற்கில்லை. அவரை நிறுத்திவைப்பதற்கு எனக்கு இருக்கும் உரிமை இப்பொழுது உங்களுக்குத்தான் இருக்கிறது. ஆனால், நீங்கள் சொல்லுவது என்னவோ முற்றும் சரியானதே. இங்கே இருக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் அவரைக் கேட்டுக் கொள்ளுவோம். அவர் ஒரு பாரிஸ்டர் என்பது உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்திற்கு என்ன ஏற்பாடு?”

 

     கட்டணம் என்று சொல்லப்பட்டது எனக்கு வேதனை அளித்தது. எனவே, நான் குறுக்கிட்டுச் சொன்னதாவது: “அப்துல்லா சேத், என் கட்டணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பொது ஜன ஊழியத்திற்கு கட்டணம் இருக்க முடியாது. நான் தங்குவதாயின் உங்கள் சேவகன் என்ற முறையில் தங்க முடியும். இந்த நண்பர்கள் எல்லோருடனும் எனக்குப் பழக்கம் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நீங்கள் நம்பினால் மேற்கொண்டு ஒரு மாதம் தங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் ஒரு விஷயம் இருக்கிறது. எனக்கு நீங்கள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லையென்றாலும், நாம் எண்ணுவதைப் போன்ற வேலையை, ஆரம்பத்திலேயே ஏதாவது ஒரு நிதி இல்லாமல் செய்ய முடியாது. நாம் தந்திகள் அனுப்ப வேண்டி வரலாம், சில பிரசுரங்களைம் அச்சிடவேண்டி வரும். கொஞ்சம் சுற்றுப் பிரயாணமும் அவசியமாவதோடு உள்ளூர் அட்டர்னிகளையும் கலந்து ஆலோசிக்க நேரலாம். இங்குள்ள சட்டங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாதாகையால் அவைகளைப் பார்க்கச் சில சட்டப் புத்தகங்களையும் வாங்க வேண்டியிருக்கும். இவற்றை எல்லாம் பணம் இல்லாமல் செய்ய முடியாது. மேலும் இந்த வேலைக்கு ஒருவர் மாத்திரம் போதாது என்பதும் தெளிவானது. எனக்கு உதவி செய்யப் பலர் முன்வர வேண்டும்.”

 

     உடனே ஏககாலத்தில பல குரல்கள் எழுந்தன. “அல்லாவின் மகிமையே மகிமை! அவன் அருளே அருள்! பணம் வந்துவிடும் உங்களுக்கு. எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு ஆட்களும் இருக்கிறார்கள். தயவு செய்து நீங்கள் தங்குவதற்கு ஒப்புக் கொள்ளுங்கள். எல்லாம் நன்றாகிவிடும்.”

 

 

     இவ்விதம் பிரிவுபசார கோஷ்டி, காரியக் குழுவாக மாறியது. விருந்து முதலியவைகளைச் சீக்கரமாக முடித்துக் கொண்டு வீடு திரும்பிவிடுவோம் என்று யோசனை கூறினேன். இந்தப் போராட்டத்திற்கு என் மனத்திற்குள்ளேயே ஒரு திட்டம் போட்டுக் கொண்டேன். வாக்காளர் ஜாபிதாவில் யார் யாருடைய பெயர்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டேன். மேற்கொண்டும் ஒரு மாத காலம் தங்குவதென்றும் தீர்மானித்தேன்.

 

     இவ்விதம் தென்னாப்பிரிக்காவில் என் வாழ்க்கைக்குக் கடவுள் அடிகோலியதோடு தேசிய சுயமரியாதைக்காக நடத்திய போராட்டத்திற்கு விதையையும் ஊன்றினார்.

 

  • 17. நேட்டாலில் குடியேறினேன்

 

  1893-இல் சேத் ஹாஜி முகமது ஹாஜி தாதா, நேட்டால் இந்தியரிடையே தலைசிறந்த தலைவராகக் கருதப்பட்டார். செல்வ விஷயத்தில் பார்த்தால் இந்தியரில் முதன்மையானவர் சேத் அப்துல்லா ஹாஜி ஆகும். ஆனால், இருவரும் மற்றவர்களும் பொதுக் காரியங்களில் சேத் ஹாஜி முகமதுவுக்கே முதலிடம் அளித்து வந்தனர். ஆகவே, அவருடைய தலைமையில் அப்துல்லா சேத்தின் வீட்டில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. வாக்காளர் மசோதாவை எதிர்ப்பது என்று அதில் தீர்மானமாயிற்று.

 

     தொண்டர்கள் சேர்க்கப்பட்டனர். நேட்டாலில் பிறந்தவர்களான இந்தியர் அதாவது பெரும்பாலும் இந்தியக் கிறிஸ்தவ இளைஞர்கள் அக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். டர்பன் நீதிமன்ற மொழி பெயர்ப்பாளரான ஸ்ரீ பாலும், ஒரு மிஷன் பாடசாலை ஆசிரியரான ஸ்ரீ சுபான் காட்பிரேயும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஏராளமான கிறிஸ்தவ இளைஞர்கள் அக்கூட்டத்திற்கு வருவதற்குப் பொறுப்பாளிகளாக இருந்தவர்கள் இவர்கள் இருவருமே. இவர்கள் எல்லோரும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். உள்ளூர் வர்த்தகர்கள் பலரும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள்.

 

     சேத்துக்கள் தாவூது முகமது, முகமது காசிம் கம்ருதீன் ஆதம்ஜி மியாகான், ஏ. குழந்தை வேலுப் பிள்ளை, ஸி.லச்சிராம், ரங்கசாமிப் படையாச்சி, ஆமத் ஜீவா ஆகியவர்கள் பதிவு செய்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பார்ஸி ருஸ்தம்ஜியும் அவர்களுள் ஒருவராக இருந்தார். சேர்ந்து கொண்ட குமாஸ்தாக்களில் ஸ்ரீமான்கள் மாணேக்ஜி, ஜோஷி. நரசிங்கராம் முதலியவர்களும், தாதா அப்துல்லா கம்பெனி முதலிய பெரிய கம்பெனிகளில் வேலை பார்த்தவர்களும் இருந்தனர். பொது வேலையில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ளுவதைக் குறித்து இவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்ததோடு, ஆச்சரியமும் அடைந்தார்கள். இவ்விதம் பங்கு கொள்ள அழைக்கப்படுவது, அவர்களுடைய வாழ்க்கையிலேயே ஒரு புது அனுபவம். சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தானதோர் வேளையில் உயர்வு, தாழ்வு; சிறியவர்கள், பெரியவர்கள்; எஜமான், வேலைக்காரன்; ஹிந்து, முஸ்ஸிம்; பாரஸி, கிறிஸ்தவர்; குஜராத்திகள், மதராஸிகள், சிந்துக்காரர்கள் என்ற பாகுபாடுகளையெல்லாம் மறந்து விட்டனர். எல்லோரும் ஒரே மாதிரியாக தாய்நாட்டின் குழந்தைகள்; சேவகர்கள்.

 

     மசோதா இரண்டாம் முறையாகச் சட்டசபையில் நிறைவேறி விட்டது. அல்லது நிறைவேற இருக்கும் தருணத்தில் இருந்தது எனலாம். இத்தகைய கடுமையான மசோதாவுக்கு இந்தியர், தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்காததிலிருந்தே, வாக்குரிமைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்பது ருசுவாகிறது என்று சட்ட சபையில் மசோதாவின் மீது பேசியவர்கள் கூறினர்.

 

     நிலைமையைப் பொதுக் கூட்டத்திற்கு விளக்கிக் கூறினேன். நாங்கள் செய்த முதல் காரியம், சட்டசபையின் சபாநாயகருக்குத் தந்தி கொடுத்ததாகும். மசோதா மீது மேற்கொண்டும் விவாதிப்பதை ஒத்தி வைக்குமாறு அவரைக் கோரினோம். அதே போன்ற தந்திகளைப் பிரதமர் ஸர் ஜான் ராபின்ஸனுக்கும், தாதா அப்துல்லாவின் நண்பர் என்ற முறையில் ஸ்ரீ எஸ்கோம்புக்கும் அனுப்பினோம். மசோதாவின் விவாதம் இரண்டும் தினங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் என்று சபாநாயகர் உடனே பதில் அனுப்பினார். இதனால் மகிழ்ச்சியடைந்தோம்.

 

     சட்டசபை முன்பு சமர்ப்பிப்பதற்கு மகஜரைத் தயாரித்தோம். அதற்கு மூன்று பிரதிகள் தயாரிக்க வேண்டி இருந்ததோடு பத்திரிகைகளுக்கும் தனியாக ஒரு பிரதி வேண்டியிருந்தது. மகஜரில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கையெழுத்துக்களையும் வாங்கிவிடுவதென்றும் உத்தேசிக்கப்பட்டது. இந்த வேலைகளை எல்லாம் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் தெரிந்த தொண்டர்களும் மற்றும் பலரும் இரவெல்லாம் வேலை செய்தனர். ஸ்ரீ ஆர்தர் வயதானவர், அழகாக எழுதுவதில் பெயர் பெற்றவர். முக்கியப் பிரதியை அவரே எழுதினார். மற்றவைகளை ஒருவர் படித்துச் செல்ல, மற்றவர்கள் எழுதினர். இவ்விதம் ஒரே சமயத்தில் ஐந்து பிரதிகள் தயாராகிவிட்டன. தொண்டர்களான வர்த்தகர்கள் மகஜரில் கையெழுத்து வாங்கத் தங்கள் சொந்த வண்டிகளில் சென்றனர், வாடகை வண்டிகளில் போனவர்கள் தாங்களே வாடகையைக் கொடுத்து விட்டார்கள். இவைகளெல்லாம் வெகுசீக்கிரத்தில் செய்து முடிக்கப் பெற்றன. மகஜரையும் அனுப்பிவிட்டோம். பத்திரிகைகளும் அதைப் பிரசுரித்து ஆதரவான அபிப்ராயங்களை எழுதின. இவ்விதம் அது சட்டசபையிலும் சிறிது ஆதரவான அபிப்பிராயத்தை உண்டாக்கியது. மகஜரைக் குறித்துச் சட்டசபையில் விவாதித்தனர். மசோதாவைக் கொண்டு வந்திருந்தவர்கள், மகஜரில் கூறப்பட்டிருந்த வாதங்களுக்குப் பதிலாக நிச்சயமாக நொண்டிச் சமாதானங்களையே கூறினர் என்றாலும் மசோதா நிறைவேறிவிட்டது.

 

     இப்படித்தான் நடக்கப்போகிறது என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். ஆனால், அக்கிளர்ச்சி சமூகத்தினர் இடையே ஒரு புத்துயிரை அளித்தது. இந்தியர் யாவரும் பிரிக்க முடியாத ஒரே சமூகத்தினர். வர்த்தக உரிமைக்காகப் பேராடுவதைப் போலவே தங்கள் ராஜிய உரிமைக்காகவும் போராடியே தீருவர் என்பதை எல்லோரும் உணரும்படியும் இக்கிளர்ச்சி செய்தது.

 

     அச் சமயம் லார்டு ரிப்பன் குடியேற்ற நாட்டு மந்திரியாக இருந்தார். அவருக்குப் பிரம்மாண்டமான மகஜர் ஒன்றை அனுப்புவது என்று முடிவு செய்தோம். இது சின்ன விஷயமன்று; ஒரே நாளில் செய்துவிடக் கூடியதும் அல்ல. தொண்டர்களைத் திரட்டினோம். இவ் வேலையில் எல்லோரும் அவரவர்கள் பங்கைச் செய்தனர்.

 

     இந்த மகஜரைத் தயாரிப்பதில் நான் அதிகச் சிரமம் எடுத்துக் கொண்டேன். இவ் விஷயத்தைக் குறித்துக் கிடைக்காத புத்தகங்களையெல்லாம் படித்தேன். ஒரு கொள்கையையும் உசிதத்தையுமே முக்கியமாகக் கொண்டவை மகஜரில் நான் கூறியிருந்த வாதங்கள். இந்தியாவில் ஒரு வகையான வாக்குரிமை இருந்து வருவதால் நேட்டாலிலும் வாக்குரிமை பெற எங்களுக்கு உரிமை உண்டு என்று வாதித்தேன். வாக்குரிமை உபயோகித்துக் கொள்ளக் கூடிய இந்தியரின் தொகை மிகக் குறைவேயாகையால், அந்த உரிமை தொடர்ந்து இருந்து வரும்படியாகப் பார்த்துக் கொள்வதே உசிதமானது என்றும் வற்புறுத்தினேன்.

 

     இரண்டு வாரங்களுக்குள் பத்தாயிரம் கையெழுத்துக்களை வாங்கினோம். இந்த வேலையில் ஈடுபட்டவர்கள், இத்தகைய வேலைக்கே முற்றும் புதிதானவர்கள். இதைக்கொண்டு கவனித்தால், மாகாணம் முழுவதும் போய், அவ்வளவு ஏராளமான கையெழுத்துக்களை வாங்கியதும் அற்ப சொற்பமான வேலையல்ல என்பது விளங்கும் விண்ணப்பத்தின் கருத்தை முற்றும் புரிந்து கொள்ளாதவர்கள் யாரிடமும் கையெழுத்து வாங்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தோம். ஆகையால், விசேஷத் தகுதி பெற்றிருந்த தொண்டர்களையே இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத்தோம். கிராமங்களோ, ஒன்றுக்கொன்று தொலைதூரத்தில் இருந்தன. அநேக ஊழியர்கள், தங்கள் முழு மனத்தையும் இவ் வேலையில் செலுத்தினால்தான் இவ் வேலை சீக்கிரத்தில் முடியும். அவ்வாறே பலர், முழுமனத்துடன் வேலை செய்தனர். இவ் வரிகளை நான் எழுதும் போது சேத் தாவூது முகமது, ருஸ்தம்ஜி, மியாகான், ஆமத் ஜீவா ஆகியவர்கள் தெளிவாக என் கண் முன்பு தோன்றுகின்றனர். அதிகப்படியான கையொப்பங்களை வாங்கி வந்தவர் இவர்களே. தாவூது சேத் நாளெல்லாம் வண்டியில் சென்றவண்ணம் இருந்தார். அவ்வேலையில் இவர்களுக்கு இருந்த அன்பினாலேயே இதையெல்லாம் செய்தனர். இவர்களில் ஒருவர் கூடத் தங்கள் செலவுக்குப் பணம் வேண்டும் என்று கேட்டதில்லை. தாதா அப்துல்லாவின் வீடு, உடனே ஒரு சத்திரமாகவும் பொதுக் காரியாலயமாகவும் மாறிவிட்டது. எனக்கு உதவி செய்த படித்த நண்பர்கள் பலரும், மற்றும் பலரும், அங்கேதான் சாப்பிட்டார்கள். இவ்விதம் உதவி செய்த ஒவ்வொருவருக்கும் பணச் செலவு அதிகமாயிற்று.

 

     முடிவாக, மகஜரைச் சமர்ப்பித்துவிட்டோம். எல்லோருக்கும் அனுப்புவதற்கும் வினியோகிப்பதற்குமாக அம்மகஜரின் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டோம். நேட்டாலில் இருந்த தங்கள் நிலைமையைப் பற்றி இந்திய மக்கள் முதன் முதலாக அறியும்படி இது செய்தது. எனக்குத் தெரிந்த எல்லா பத்திரிகைகளுக்கும் பிரமுகர்களுக்கும் மகஜரின் பிரதிகளை அனுப்பினேன்.

 

     டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, இம்மகஜரைக் குறித்து எழுதிய ஒரு தலையங்கத்தில் இந்தியரின் கோரிக்கையைப் பலமாக ஆதரித்தது. இங்கிலாந்தில் பல கட்சிகளைச் சேர்ந்த பத்திரிகைகளுக்கும் பிரமுகர்களுக்கும் மகஜரின் நகலை அனுப்பினேன். லண்டன் டைம்ஸ் பத்திரிகை எங்கள் கட்சியை ஆதரித்தது. மசோதா நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையைக் கொள்ள லானோம்.

 

     இச் சமயத்தில் நான் நேட்டாலை விட்டுப் போய்விடுவது என்பது முடியாத காரியம் ஆகிவிட்டது. இந்தய நண்பர்கள் நாலா பக்கங்களிலும் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். நிரந்தரமாக அங்கே தங்கிவிடுமாறும் மன்றாடினர். எனக்கு இருந்த கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். பொதுஜனத் செலவில் அங்கே தங்குவதில்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். தனியாக ஒரு ஜாகையை அமர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் எண்ணினேன். வீடு நல்லதாக இருக்க வேண்டும், அதோடு நல்ல இடத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சாதாரணமாக பாரிஸ்டர்களுக்கு உரிய அந்தஸ்தில் நான் வாழ்ந்தாலன்றி இந்திய சமூகத்திற்கு நான் மதிப்பைத் தேடிக் கொடுத்தவன் ஆக முடியாது என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. வருடத்திறகு 300 பவுனுக்குக் குறைத்து அத்தகைய குடித்தனத்தை நடத்துவது இயலாது என்றும் எனக்குத் தோன்றியது. ஆகவே, குறைந்தபட்சம் அந்த அளவுக்குச் சட்ட சம்பந்தமான வேலையை எனக்குத் தருவதாக இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே நான் அங்கே தங்க முடியும் என்று முடிவு செய்தேன். இந்த முடிவை அவர்களுக்கு அறிவித்தேன். “நீங்கள் செய்யும் பொது வேலைக்காக அத்தொகையை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புவோம். இதை நாங்கள் எளிதாக வசூலித்துவிட முடியும். இதுவல்லாமல் தனிப்பட்டவர்களுக்காக நீங்கள் செய்யும் வக்கீல் வேலைக்கு, நீங்கள் தனியாகக் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம்” என்று அவர்கள் கூறினர்.

 

     “அது முடியாது பொதுஜன ஊழியத்திற்கு உங்களிடம் பணம் வாங்க முடியாது. இந்த வேலைக்குப் பாரிஸ்டர் என்ற வகையில் என் திறமை. அதிகமாகத் தேவையில்லை. உங்களையெல்லாம் வேலை செய்யும்படி செய்வதே முக்கியமாக என் வேலையாக இருக்கும். அப்படியிருக்க, இந்த வேலைக்குப் பண உதவி செய்யுமாறு உங்களிடம் நான் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டிவரும். என் சொந்தச் செலவுக்கும் உங்களிடமிருந்து நான் பணம் வாங்குவதாக இருந்தால் பெருந்தொகை கொடுக்கும்படி உங்களைக் கேட்பது எனக்குச் சங்கடமாக இருக்கும். முடிவாக அதனால் நம் வேலை நின்றுவிடும் நிலைக்கு வந்துவிடுவோம். இத்துடன் பொது வேலைக்கு ஆண்டுக்கு 300 பவுனுக்கு மேல் நம் சமூகம் பணம் திரட்ட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்” என்று கூறினேன்.

 

     “கொஞ்ச காலமாக உங்களுடன் பழகி உங்களை நன்றாக நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்குத் தேவை இல்லாதது எதையும் நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் இங்கே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பும்போது உங்கள் செலவுக்கு நாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டாமா?” என்றும் கேட்டார்கள்.

 

     அதற்கு நான் கூறியதாவது, “நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும் அன்பும், இப்பொழுது உங்களுக்கு இருக்கும் உற்சாகமுமே நீங்கள் இவ்விதம் பேசும்படி செய்கின்றன. இந்த அன்பும் உற்சாகமும் எப்பொழுதும் இப்படியே இருந்து வரும் என்று நாம் எவ்விதம் நிச்சயமாக நம்ப முடியும்? உங்கள் நண்பன், ஊழியன் என்ற வகையில், சில சமயங்களில் உங்களை நான் கடிந்து பேசவும் நேரலாம். அப்பொழுதும் என்னிடம் நீங்கள் அன்புடையவர்களாகவே இருப்பீர்களா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் உண்மை என்னவெனில், பொது வேலைக்காக நான் சம்பளமாக எதுவும் வாங்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான். நீங்கள் எல்லோரும் உங்களுக்கு இருக்கும் சட்ட வேலையை என்னிடம் ஒப்படைத்தால் இதுவே எனக்குப் போதுமானது. அதுவும்கூட உங்களுக்குக் கஷ்டமானதாக இருக்கலாம். நான் வெள்ளைக்காரப் பாரிஸ்டர் அல்ல. கோர்ட்டு என்னை மதிக்கும் என்று நான் எப்படி நிச்சயமாகக் கூற முடியும்? வக்கீல் தொழிலில் நான் எவ்வளவு தூரம் திறமையாக நடந்து கொள்ளுவேன் என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆகையால், என்னை உங்களுடைய வக்கீலாக அமர்த்திக் கொளவதிலும் உங்களுக்குச் சில ஆபத்துக்கள உண்டு. அந்த வேலையை எனக்குக் கொடுப்பதைக் கூட உண்மையில் என்னுடைய பொது வேலைக்குச் சன்மானம் என்றே நான் கருத வேண்டும்.”

 

 

     இந்த விவாதத்தின் பலனாகச் சுமார் இருபது வர்த்தகர்கள் ஓர் ஆண்டிற்கு என்னைத் தங்கள் வக்கீலாக அமர்த்திக்கொண்டு, அதற்காக எனக்குப் பணம் கொடுத்தார்கள். நான் தாய்நாடு திரும்பும்போது எனக்கு ஒரு பண முடிப்பு அளிப்பதென்று, தாதா அப்துல்லா தீர்மானித்திருந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர், எனக்குத் தேவையாயிருந்த மேஜை, நாற்காலி முதலியவைகளை வாங்கிக் கொடுத்தார்.

     இவ்வாறு நான் நேட்டாலில் குடியேறினேன்.

 

  • 18. நிறத் தடை

 

புத்தி கூர்மையுள்ள ஒரு பெண். அவளுக்குக் கண் பார்வை இல்லை. பாரபட்சமற்றவள். ஒரு தட்டுக்கு மற்றொரு தட்டு ஏற்றத்தாழ்வின்றி நடுநிலையாக வைத்து, ஒரு தராசைக் கையில் ஏந்தியிருப்பாள். இதுவே ஒரு நீதிமன்றத்திற்குச் சின்னம். ஒருவேளை அவனுடைய வெளித் தோற்றத்தைக் கொண்டு அவள் மதித்துவிடக் கூடாது, அவனுடைய உண்மையான உள் யோக்கியதையைக் கவனித்தே முடிவு கூற வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே விதி அவளைக் குருடாக்கியிருக்கிறது. ஆனால், நேட்டால் வக்கீல்களின் சங்கமோ, இந்தக் கொள்கைக்கு முற்றும் மாறாக அந்தச் சின்னத்தைப் பொய்யாக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு நடக்கும்படி செய்ய முனைந்தது.

 

     சுப்ரீம் கோர்ட்டில் அட்வகேட்டாகத் தொழில் நடத்த என்னை அனுமதிக்க வேண்டும் என்று மனுச் செய்தேன். பம்பாய் ஹைகோர்ட்டில் நான் வக்கீலாக இருந்ததற்குரிய அத்தாட்சி என்னிடம் இருந்தது. இங்கிலாந்தில், பாரிஸ்டரானதற்கு எனக்குக் கொடுத்த அத்தாட்சிப் பத்திரத்தைப் பம்பாய் ஹைகோர்ட்டில் நான் வக்கீலாகப் பதிவு செய்து கொண்டபோது அங்கே தாக்கல் செய்து விட்டேன். சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுப் போடும்போது, அத்துடன் நன்னடத்தை அத்தாட்சிப் பத்திரங்கள் இரண்டும் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இந்த அத்தாட்சிப் பத்திரங்களை ஐரோப்பியர்கள் கொடுத்ததாக இருந்தால் அவற்றிற்கு அதிக மதிப்பிருக்கும் என்று எண்ணி, சேத் அப்துல்லாவின் மூலம் எனக்குத் தெரிந்தவர்களான இரு பிரபல ஐரோப்பிய வர்த்தகர்களிடம் அந்த அத்தாட்சிப் பத்திரங்களை வாங்கினேன். வக்கீலாக இருப்பவர் ஒருவர் மூலமாக இம்மனுவைக் கொடுக்க வேண்டும். எத்தகைய கட்டணமும் வாங்கிக் கொள்ளாமல் அட்டர்னி ஜெனரல் இத்தகைய மனுக்களைச் சமர்பிப்பதுதான் வழக்கம். ஸ்ரீ எஸ்கோம்பு, தாதா அப்துல்லா கம்பெனிக்குச் சட்ட ஆலோசகராக இருந்தார் என்பதை முன்பே படித்தோம். அவரே இப்பொழுது அட்டர்னி ஜெனரல். அவரிடம் சென்றேன். அவரும் என் மனுவைக் கோர்ட்டில் சமர்ப்பிக்க மனம் உவந்து ஒப்புக்கொண்டார்.

 

     நான் எதிர்பாராத விதமாக வக்கீல்கள் சங்கத்தினர் எதிர்க்கக் கிளம்பினர். என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கொடுத்திருந்த மனுவை எதிர்த்து, எனக்கு ஒரு தாக்கீது அனுப்பினார்கள். நேட்டாலில் வக்கீல் சங்கத்தினர் வெளிப்படையாகக் கூறிய ஓர் ஆட்சேபம், இங்கிலாந்தில் பெற்ற அசல் அத்தாட்சிப் பத்திரத்தை மனுவுடன் நான் தாக்கல் செய்யவில்லை என்பது. ஆனால் அவர்களுக்கு இருந்த முக்கியமான ஆட்சேபம், ஒரு கருப்பு மனிதனும் அட்வகேட்டாகப் பதிவு செய்துகொள்ள மனுப்போடக்கூடும் என்பதை அட்வகேட்டுகளை அனுமதிப்பது சம்பந்தமான விதிகளைச் செய்தபோது சிந்தித்திருக்க முடியாது என்பதுதான். ஐரோப்பியரின் முயற்சியால்தான் நேட்டால் இன்று வளம் பெற்று வளர்ந்திருக்கிறதாகையால், வக்கீல் தொழிலிலும் ஐரோப்பியர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும். வெள்ளையர் அல்லாதவரையும் இத்தொழிலுக்குள் வர விட்டுவிட்டால், நாளாவட்டத்தில் அவர்கள் தொகை ஐரோப்பிய வக்கீல்களின் தொகையைவிட அதிகமாகிவிடும். அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரண் தகர்ந்துவிடும். இதுவே அவர்களுடைய முக்கியமான ஆட்சேபம்.

 

     தங்களுடைய எதிர்பை ஆதரித்து, வாதாட ஒரு பிரபலமான வக்கீலை, வக்கீல்கள் சங்கத்தினர் அமர்த்தியிருந்தார்கள். அந்த வக்கீலும் தாதா அப்துல்லா கம்பெனியுடன் தொடர்புள்ளவர். ஆகவே, தம்மை வந்து பார்க்குமாறு சேத் அப்துல்லா மூலம் அவர் எனக்குச் சொல்லியனுப்பினார். நான் போனேன். அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். என்னுடைய பூர்வோத்தரங்களை விசாரித்தார். சொன்னேன். பிறகு அவர் கூறியதாவது:

 

     “உமக்கு விரோதமாக நான் சொல்லக் கூடியது எதுவும் இல்லை. குடியேற்ற நாட்டில் பிறந்த, எதற்கும் துணிந்துவிடும் ஓர் ஆசாமியாக நீர் இருப்பீரோ என்றுதான் நான் பயந்தேன். அசல் அத்தாட்சியை உம்முடைய மனுவுடன் நீர் அனுப்பாதது என் சந்தேகத்தை அதிகமாக்கியது. மற்றவர்களுடைய அத்தாட்சிப் பத்திரங்களைத் தங்களுடையவை எனக்காட்டி ஏமாற்றுபவர்களும் உண்டு. ஐரோப்பிய வியாபாரிகளிடம் வாங்கி, நீங்கள் அனுப்பிருக்கும் நன்னடத்தை அத்தாட்சிகள் என்னைப் பொறுத்தவரை பயனற்றவை. உங்களைக் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு உங்களிடம் எவ்வளவு பழக்கம் இருக்க முடியும்?”

 

     “இங்கே எனக்கு எல்லோருமே புதியவர்கள்தான். சேத் அப்துல்லாவும் இங்கேதான் முதன் முதலாக என்னை அறிவார்?” என்றேன்.

 

     “ஆனால், அவர் உங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்கிறீர்களே? உங்கள் தகப்பனார் அங்கே முதல் மந்திரியாக இருந்தார் என்றால், சேத் அப்துல்லாவுக்கு உங்கள் குடும்பம் தெரிந்தே இருக்கவேண்டும். அவரிடமிருந்து உறுதிமொழிப் பத்திரத்தை நீங்கள் தாக்கல் செய்வதாக இருந்தால், எனக்குக் கொஞ்சமும் ஆட்சேபமே இல்லை. அப்பொழுது உங்கள் மனுவை நான் எதிர்த்துப் பேசுவதற்கில்லை என்று வக்கீல்கள் சங்கத்திற்குச் சந்தோஷமாகவே அறிவித்து விடுவேன்” என்றார்.

 

     அவருடைய இந்த பேச்சு எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஆனால் என் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன். என்னுள்ளேயே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: ‘தாதா அப்துல்லாவின் அத்தாட்சியை நான் தாக்கல் செய்திருந்தால் அதை நிராகரித்திருப்பார்கள்;, ஐரோப்பியரிடமிருந்து அத்தாட்சி வேண்டும் என்றும் கேட்டிருப்பார்கள். நான் அட்வகேட்டாகப் பதிவு செய்து கொள்ளுவதற்கும் என் பிறப்புக்கும் பூர்வோத்தரங்களுக்கும் என்ன சம்பந்தம்? என் பிறப்பு எளிமையானதாகவோ, ஆட்சேபகரமானதாகவோ இருக்குமாயின், அதை எப்படி எனக்கு எதிராக உபயோகிக்க முடியும்?’ ஆனால் என் கோபத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு அமைதியாக அவருக்குப் பின்வருமாறு பதில் சொன்னேன்:

 

     “அந்த விவரங்களையெல்லாம் கேட்பதற்கு வக்கீல்கள் சங்கத்திற்கு எந்தவிதமான அதிகாரமும் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நீங்கள் விரும்பும் அத்தாட்சிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.”

 

     சேத் அப்துல்லாவின் அத்தாட்சியைத் தயாரித்து வக்கீல்கள் சங்கத்தின் ஆலோசகரிடம் சமர்ப்பித்தேன். தாம் திருப்தியடைந்து விட்டதாக அவர் சொன்னார். ஆனால் வக்கீல்கள் சங்கத்தினர் திருப்தியடையவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் என் மனுவை எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்புக்குப் பதில் சொல்லுமாறு என் மனுவைத் தாக்கல் செய்த ஸ்ரீ எஸ்கோம்பைக்கூட அழைக்காமலே, கோர்ட்டு, அச்சங்க எதிர்ப்பை நிராகரித்து விட்டது. பிரதம நீதிபதி கூறியதாவது: “மனுதாரர், தம்முடைய மனுவுடன் அசல் அத்தாட்சிப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்ற ஆட்சேபம் அர்த்தம் இல்லாதது. அவர் பொய்ப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தால், அவர் மீது வழக்கத் தொடுத்து, அவர் குற்றம் செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் வக்கீல் பட்டியலிலிருந்து இவர் பெயரை நீக்கிவிடலாம். வெள்ளையருக்கும் வெள்ளையர் அல்லாதவர்களுக்கும் இடையே எந்தவிதமான பாகுபாட்டையும் சட்டம் கற்பிக்கவில்லை. ஆகவே ஸ்ரீ காந்தி அட்வகேட்டாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளுவதைத் தடுக்கக் கோர்ட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவருடைய மனுவை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஸ்ரீ காந்தி, இப்பொழுது நீர் பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம்.”

 

     நான் எழுந்துபோய் ரெஜிஸ்டிரார் முன்பு பிரமாணம் எடுத்துக்கொண்டேன். நான் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பிரதம நீதிபதி என்னைப் பார்த்துக் கூறியதாவது:

 

     “ஸ்ரீ காந்தி, நீர் உம்முடைய தலைப்பாகையை இப்பொழுது எடுத்துவிட வேண்டும். தொழில் நடத்தும் பாரிஸ்டர்கள் சம்பந்தமாக உள்ள கோர்ட்டின் விதிகளை அனுசரித்து நீங்கள் நடக்க வேண்டும்.”

 

     எனக்குரிய வரம்புகளை நான் உணரலானேன். ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நான் எடுக்க மறுத்த தலைப்பாகையைச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப் பணிந்து எடுத்து விட்டேன். இந்த உத்தரவை நான் எதிர்த்திருந்தால். அந்த எதிர்ப்பு நியாயமானதாக இருந்திருக்காது என்பதல்ல. ஆனால் என் பலத்தைப் பெரிய விஷயங்களில் போராடுவதற்காகச் சேமித்து வைக்க நான் விரும்பினேன். தலைப்பாகையை வைத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை வற்புறுத்துவதில் என்னுடைய ஆற்றலையெல்லாம் நான் செலவிட்டுவிடக்கூடாது. அது, சிறந்த லட்சியத்திற்காகப் பாடுபடுவதற்கு உரியதாகும்.

 

     நான் பணிந்துவிட்டது (அல்லது என் பலவீனமோ என்னவோ?) சேத் அப்துல்லாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை. கோர்ட்டில், வக்கீல் தொழிலை நடத்தி வரும்போது என் தலைப்பாகையை வைத்துக்கொள்ள எனக்குள்ள உரிமையை விடாமல் வற்புறுத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர். என் நியாயத்தை எடுத்துக் கூறி அவர்களுக்குத் திருப்தியளிக்க முயன்றேன். ரோமில் இருக்கும்போது ரோமர்கள் செய்வதைப் போலவே நீயும் செய் என்ற பழமொழியினை அவர்கள் உணரும்படி செய்ய முயன்றேன். “இந்தியாவில் ஓர் ஆங்கில அதிகாரியோ, நீதிபதியோ உங்கள் தலைப்பாகையை எடுத்து விடுமாறு சொன்னால் அதற்கு உடன்பட மறுத்துவிடுவது சரியானதாக இருக்கும். ஆனால், நேட்டால் மாகாணத்தில் கோர்ட்டில் இருக்கும் ஒரு வழக்கத்தை அந்தக் கோர்ட்டில் தொழில் செய்யும் நான் மதிக்க மறுப்பது நேர்மையானதல்ல” என்று சொன்னேன்.

 

 

     இவ்வாறும், இது போன்ற வாதங்களினாலும் நண்பர்களை ஒருவாறு சமாதானப்படுத்தினேன். ஆனால், வெவ்வேறான விஷயங்களை வெவ்வேறான நோக்குடன் கவனித்து முடிவுசெய்ய வேண்டும் என்ற கொள்கைகளை இக்காரியத்திலும் அனுசரிப்பது என்பதில், அவர்களுக்கு நான் திருப்தி உண்டாக்கிவிட்டதாக கருதவில்லை. எனினும், சத்தியத்தை நான் விடாப்பிடியாகப் பின்பற்றியதால், சமரசத்திலுள்ள அழகை என் வாழ்நாள் முழுவதிலுமே உணரும் சக்தியை அது எனக்கு அளித்துவிட்டது. இந்தச் சமரச உணர்ச்சி, சத்தியாக்கிரகத்தில் ஓர் அத்தியாவசியமான பகுதி என்பதை என் வாழ்க்கையில் நான் பின்னால் கண்டேன். இதனால் அடிக்கடி என் உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொள்ளவும், நண்பர்களின் வருத்தத்திற்கு ஆளாகவும் நேர்ந்திருக்கிறது. ஆனால், சத்தியமானது பூத்த மலர்போல் மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானதும் ஆகும்.

 

  • 19. நேட்டால் இந்தியர் காங்கிரஸ்

 

வக்கீல் தொழில் எனக்கு இரண்டாம் பட்சமான வேலையாக இருந்து வந்தது. நேட்டாலில் நான் தங்கியது நியாயம் என்றால் பொதுஜன வேலையில் நான் அதிகக் கவனம் செலுத்துவது அவசியம். வாக்குரிமையைப் பறிக்கும் மசோதா சம்பந்தமாக மகஜரை அனுப்பியது மாத்திரம் போதாது. குடியேற்ற நாட்டு மந்திரி, இதில் கவனம் செலுத்தும்படி செய்வதற்கு இடைவிடாது கிளர்ச்சி செய்து கொண்டிருப்பது அத்தியாவசியம் ஆகும். இக்காரியத்திற்காக ஒரு நிரந்தரமான ஒரு பொது ஸ்தாபனத்தை ஆரம்பிப்பது என்று நாங்கள் எல்லோரும் முடிவுக்கு வந்தோம்.

 

     இந்தப் புதிய ஸ்தாபனத்திற்கு என்ன பெயர் கொடுப்பது என்பது சதா என் மனத்தை அலட்டி வந்தது. எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிச் சார்பும் உள்ளதாக இது இருக்கக்கூடாது. காங்கிரஸ் என்ற பெயர், இங்கிலாந்தில் இருக்கும் கன்ஸர்வேடிவ்களுக்கு வெறுப்பானதாக இருந்தது என்பதை அறிவேன். என்றாலும் இந்தியாவுக்கு ஜிவனாக இருப்பதே காங்கிரஸ்தான். நேட்டாலில் அப்பெயரைப் பிரபலபடுத்த விரும்பினேன். அப்பெயரை வைக்க தயங்குவது கோழைத்தனம் என்று எனக்குத் தோன்றிற்று. ஆகையால், அந்த ஸ்தாபனத்திற்கு நேட்டால் இந்தியர் காங்கிரஸ் எனப் பெயரிட வேண்டும் என்று விரிவான விளக்கத்துடன் நான் சிபாரிசு செய்தேன். மே மாதம் 22-ஆம் தேதி நேட்டால் இந்தியர் காங்கிரஸ் பிறந்தது.

 

     சேத் அப்துல்லாவின் விசாலமான அறை முழுவதிலும் அன்று ஒரே கூட்டம் நிறைந்துவிட்டது. வந்திருந்தவர்கள் எல்லோரும் காங்கிரஸைக் குதூகலமாக வரவேற்றனர். அதன் அமைப்பு விதி எளிதானது. சந்தா மாத்திரம் அதிகம். மாதம் ஐந்து ஷில்லிங் கொடுப்பவர் மாத்திரமே அங்கத்தினராகலாம். பண வசதி உள்ளவர்கள், தங்களால் இயன்ற வரையில் தாராளமாகக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாதம் இரண்டு பவுன் தருவதாக அப்துல்லா சேத் முதலில் கையெழுத்திட்டார். நானும் என் சந்தா விஷயத்தில் தாராளமாக கொடுக்க நினைத்து மாதத்திற்கு ஒரு பவுன் என்று எழுதினேன். என்னைப் பொறுத்தவரை இது சின்னத்தொகை அல்ல. நான் சம்பாதித்து, என் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போவதெனில், இத் தொகை என் சக்திக்கு மிஞ்சியதென்று எண்ணினேன். கடவுளும் எனக்கு உதவி செய்தார். மாதம் ஒரு பவுன் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் பலர் சேர்ந்தனர். மாதம் 10 ஷில்லிங் தருவதாக முன் வந்தவர்களின் தொகையோ இன்னும் அதிகம். இவையெல்லாம் போக நன்கொடையாகக் கொடுக்கப்பட்டதையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டோம்.

 

     கேட்ட மாத்திரத்திலேயே யாரும் சந்தாவைச் செலுத்தி விடுவதில்லை என்பது அனுபவத்தில் தெரியலாயிற்று. டர்பனுக்கு வெளியிலிருந்த உறுப்பினர்களிடம் அடிக்கடி போய்க் கேட்பது என்பது முடியாதது. ஒரு சமயம் இருக்கும் உற்சாகம் இன்னுமொரு சமயம் இருப்பதில்லை. டர்பனில் இருந்த உறுப்பினர்களிடம் கூடப் பன்முறை விடாமல் கேட்டுத் தொந்தரவு செய்துதான் சந்தா வசூலிக்கக வேண்டியதிருந்தது.

 

     நானே காரியதரிசியாகையால், சந்தா வசூலிக்கும் வேலை என்னுடையதாயிற்று. என் குமாஸ்தா, நாளெல்லாம் சந்தா வசூலிக்கும் வேலையிலேயே ஈடுபட்டிருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது. அவரும் அலுத்துப் போனார். இந்த நிலைமை மாறவேண்டுமானால், மாதச் சந்தா என்பதற்குப் பதிலாக அதை வருடச் சந்தாவாக்கி, அந்தச் சந்தாவைக் கண்டிப்பாக முன் பணமாகச் செலுத்திவிடச் செய்துவிட வேண்டும் என்று கருதினேன். ஆகவே காங்கிரஸின் கூட்டத்தைக் கூட்டினேன். மாதச் சந்தா என்பதற்குப் பதிலாக, அதை வருடச் சந்தாவாகச் செய்துவிடுவது என்பதையும், குறைந்த பட்ச சந்தா 3 பவுன் என்று நிர்ணயிப்பதையும் எல்லோரும் வரவேற்றனர். இவ்விதம் வசூல் வேலை அதிக எளிதாயிற்று.

 

     கடன் வாங்கி, அந்தப் பணத்தைக் கொண்டு பொது வேலையைச் செய்யக்கூடாது என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டிருந்தேன். மக்களின் வாக்குறுதியை எல்லாவற்றிலும் நம்பலாம், ஆனால் பண விஷயத்தில் மாத்திரம் நம்பக்கூடாது. கொடுப்பதாகத் தாங்கள் ஒப்புக்கொண்ட பணத்தைச் சீக்கிரத்தில் கொடுக்கக் கூடியவர்களை நான் பார்த்ததே இல்லை. நேட்டால் இந்தியர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல. எனவே, பணம் இருந்தால் ஒழிய எந்த வேலையையும் செய்வதில்லையாகையால், நேட்டால் இந்தியர் காங்கிரஸ் கடன் பட்டதே இல்லை.

 

     அங்கத்தினர்களைச் சேர்ப்பதில் என் சக ஊழியர்கள் அதிக உற்சாகத்துடன் வேலை செய்தார்கள். அந்த வேலை அவர்களுடைய மனத்திற்குப் பிடித்ததாக இருந்ததோடு, அது அதிகப் பயனுள்ள அனுபவமாகவும் இருந்தது. ஏராளமானவர்கள் ரொக்கமாகச் சந்தா கொடுத்துச் சேர முன்வந்தனர். தொலைவாக, உள் நாட்டில் இருந்த கிராமங்களின் விஷயத்தில்தான் வேலை கஷ்டமானதாக இருந்தது. பொது வேலையின் தன்மையை மக்கள் அறியவில்லை என்றாலும் தொலை தூரங்களில் இருந்த இடங்களிலிருந்தும் எங்களுக்கு அழைப்புக்கள் வந்தன. ஒவ்வோர் இடத்திலும் முக்கியமான வியாபாரிகள் எங்களை வரவேற்று, வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வந்தார்கள்.

 

     இந்த சுற்றுப் பிரயாணத்தின் போது ஒரு சமயம் நிலைமை சங்கடமானதாகிவிட்டது. நாங்கள் யாருடைய விருந்தினராகச் சென்றிருந்தோமோ, அவர் ஆறு பவுன் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ மூன்று பவுனுக்கு மேல் எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார். அவரிடமிருந்து அத்தொகையை வாங்கிக் கொண்டோமாயின் மற்றவர்களும் அது மாதிரியே கொடுப்பார்கள். எங்கள் வசூல் கெட்டுவிடும். அன்று இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கோ பசி. ஆனால், அவரிடம் வாங்கியே தீருவது என்று நாங்கள் முடிவு கட்டிக்கொண்ட தொகையை அவரிடம் வாங்காமல் அவர் வீட்டில் நாங்கள் எப்படிச் சாப்பிடுவது? என்ன சொல்லிப் பார்த்தும் பயனில்லை. அவரோ பிடிவாதமாக இருந்தார். அவ்வூரின் மற்ற வர்த்தகர்களும் அவருக்குச் சொல்லிப் பார்த்தார்கள். இரவெல்லாம் அப்படியே எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். அவரும் பிடிவாதமாக இருந்தார். நாங்களும் பிடிவாதமாக இருந்தோம். என் சக ஊழியர்களில் பலருக்குக் கோபம் பொங்கிற்று. ஆனால், அடக்கிக்கொண்டார்கள். கடைசியாகப் பொழுதும் விடிந்து விட்ட பிறகு அவர் இணங்கி வந்தார். ஆறு பவுன் கொடுத்து, எங்களுக்கு விருந்துச் சாப்பாடும் போட்டார். இது தோங்காத் என்ற ஊரில் நடந்தது. ஆனால் இச் சம்பவத்தின் அதிர்ச்சி, வடக்கில் கடலோரம் இருக்கும் ஸ்டான்கர் வரையிலும் மத்தியப் பகுதியில் இருக்கும் சார்லஸ் டவுன் வரையிலும் பரவி விட்டது. அது எங்கள் வசூல் வேலை துரிதமாக முடியும்படியும் செய்தது.

 

     ஆனால் செய்ய வேண்டிய வேலை, நிதி வசூல் செய்வது மாத்திரம் அன்று. உண்மையில், அவசியமானதற்கு மேல் பணம் இருக்கக்கூடாது என்ற கொள்கையை வெகு காலத்திற்கு முன்னாலிருந்தே நான் கற்றுக்கொண்டிருந்தேன்.

 

     கூட்டங்கள் மாதம் ஒரு முறை நடக்கும். அவசியமானால், வாரத்திற்கு ஒரு முறையும் நடப்பது உண்டு. முந்திய கூட்டத்தின் நிகழ்ச்சிகள் அடுத்த கூட்டத்தில் படிக்கப்படும். பல விஷயங்களும் விவாதிக்கப்படும். பொது விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளுவதிலும், விஷயத்தை ஒட்டிச் சுருக்கமாகப் பேசுவதிலும் மக்களுக்கு அனுபவமே இல்லை. எழுந்து பேச ஒவ்வொருவரும் தயங்கினர். கூட்டங்களின் நடைமுறை விதிகளை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். அவற்றை மதித்து, அவர்களும் நடந்து கொண்டார்கள். அது தங்களுக்கு ஒரு படிப்பு என்பதை உணர்ந்தார்கள். ஒரு கூட்டத்திலும் இதற்கு முன்னால் பேசியே பழக்கம் இல்லாதவர்கள். சந்தித்துப் பொது விஷயங்களைச் குறித்துப் பகிரங்கமாகப் பேசவும் பழகிக் கொண்டனர்.

 

     பொதுவேலைகளில், சில்லரைச் செலவே சமயத்தில் பெருஞ் செலவாகிவிடும் என்பதை அறிவேன். ஆகையால், ஆரம்பத்தில் ரசீதுப் புத்தகங்களைக்கூட அச்சிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். என் காரியாலயத்தில் பிரதிகள் எடுக்கும் சைக்ளோஸ்டைல் யந்திரம் ஒன்று இருந்தது. அதிலேயே ரசீதுகளுக்கும் அறிக்கைகளுக்கும் பிரதிகளைத் தயாரித்துக் கொண்டேன். காங்கிரஸினிடம் நிதி அதிகம் சேர்ந்து அங்கத்தினர்களும் அதிகமாகி, வேலையும் பெருகிய பிறகே அவைகளையெல்லாம் அச்சிட ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் இத்தகைய சிக்கனம் அவசியம், என்றாலும் அதுதான் அனுசரிக்கப்படுவதில்லை என்பதையும் அறிவேன். இதனாலேயே, சிறிய ஆனால் வளர்ந்து வருகிற ஒரு ஸ்தாபனத்தின் விஷயத்தில் ஆரம்பத்தில் இந்தச் சிறு விவரங்களையெல்லாம் கவனிப்பதே சரி என்று எண்ணினேன்.

 

     தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு ரசீது பெற வேண்டும் என்பதைக் குறித்து மக்கள் கவலைப்படுவதே இல்லை. ஆனால் நாங்கள் வற்புறுத்தி ரசீதுகளைக் கொடுத்து வந்தோம். இவ்விதம் ஒவ்வொரு தம்படிக்கும் சரியாகக் கணக்கு வைக்கப்பட்டது. 1894-ஆம் ஆண்டின் கணக்குப் புத்தகங்களை இன்று கூட நேட்டால் இந்தியர் காங்கிரஸ் தஸ்தாவேஜூக்களில் காணலாம் என்று நான் தைரியமாகக் கூற முடியும். கணக்குகளைச் சரியாக வைத்திருக்க இல்லையானால் அந்த ஸ்தாபனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். சரியானபடி கணக்கு வைத்திருக்காவிட்டால், உண்மையை அதனுடைய அசல்தூய்மையுடன் வைத்து இருப்பதென்பது இயலாத காரியம்.

 

 

     காங்கிரஸின் மற்றோர் அம்சம், தென்னாப்பிரிக்கா விலேயே பிறந்தவர்களான, படித்த இந்திய இளைஞர்களின் சேவையாகும். அங்கே பிறந்த இந்தியரின் கல்வி சங்கம் ஒன்று காங்கிரஸின் ஆதரவில் அமைக்கப் பெற்றது. இந்தப் படித்த இளைஞர்களே பெரும்பாலும் அச் சங்கத்தின் அங்கத்தினர்கள். பெயருக்கு அவர்கள் ஒரு தொகையைச் சந்தாவாகச் செலுத்தவேண்டும் அவர்களுடைய தேவைகளையும் குறைகளையும் எடுத்துக் கூறுவதற்கும், அவர்களிடையே புதிய எண்ணங்களை எழுப்புவதற்கும், இந்திய வர்த்தகர்களுடன் அவர்களுக்குத் தொடர்பை உண்டாக்கிக் சமூகத்திற்குச் சேவை செய்யும் வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பதற்கும் இச்சங்கம் பயன்பட்டது. அது ஒரு வகையான விவாதசபை போன்றது. அங்கத்தினர்கள் அடிக்கடி கூடுவார்கள். பல விஷயங்களைக் குறித்துப் பேசுவார்கள்; எழுதியும் படிப்பார்கள். இச்சங்க சம்பந்தமாக ஒரு சிறு புத்தகசாலையும் ஆரம்பமாயிற்று. காங்கிரஸின் மூன்றாவது அம்சம், பிரசாரம். நேட்டாலில் இருந்துவரும் இந்தியர் சம்பந்தமான உண்மையான நிலையை தென்னாப்பிரிக்காவில் மக்களும் அறியும்படி செய்வதே இக்காரியம். அந்த நோக்கத்தின் பேரில் நான் இரு துண்டுப் பிரசுரங்களை எழுதினேன். அவற்றுள் ஒன்று, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பிரிட்டானியருக்கும் வேண்டுகோள் என்பது. அது, நேட்டால் இந்தியரின் பொதுவான நிலைமையை ஆதாரங்களுடன் கூறுவதாகும். மற்றொரு பிரசுரம், இந்தியரின் வாக்குரிமை - ஒரு கோரிக்கை என்ற தலைப்புடையது. நேட்டால் இந்தியரின் வாக்குரிமையைப்பற்றிய சரித்திரம், உண்மை விவரங்களுடனும், புள்ளி விவரங்களுடனும் அதில் சுருக்கமாகக் கூறப்பட்டது, இந்த துண்டுப் பிரசுரங்களைத் தயாரிப்பதற்கு நான் அதிகம் படிக்க வேண்டியிருந்ததோடு அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், இதில் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்தது. அவைகளை எல்லா இடங்களுக்கும் அனுப்பினோம்.

 

     இத்தகைய நடவடிக்கைகளின் பயனாகத் தென்னாப்பிரிக்காவில் இந்தியருக்கு ஏராளமானவர்கள் நண்பர்கள் ஆயினர். இந்தியாவில் இருந்த எல்லாக் கட்சியினரின் தீவிரமான அனுதாபமும் கிடைத்தது. அத்துடன் தென்னாப்பிரிக்க இந்தியர், திட்டமான நடவடிக்கையில் இறங்குவதற்கு ஒரு வழியும் ஏற்பட்டு, வேலைத் திட்டமும் உருவாயிற்று.

 

  • 20. பாலசுந்தரம்

 


     மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்பதே என் உள்ளத்தின் ஆசை. அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது.

     தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த இந்தியரும், குமாஸ்தாக்கள் வகுப்பினரும், நேட்டால் இந்தியர் காங்கிரஸில் அங்கத்தினர்களாக இருந்த போதிலும், நுட்பப் பயிற்சி பெறாதவர்களான சாதாரணத் தொழிலாளரும், ஒப்பந்தத் தொழிலாளரும் அதில் இன்னும் இடம் பெறாமலேயே இருந்து வந்தனர். சந்தா கொடுத்துச் சேர்ந்து அதன் அங்கத்தினர்கள் ஆகிவிட அவர்களால் இயலாது. அவர்களுக்குச் சேவை செய்வதன் மூலமே, காங்கிரஸ் அவர்களுடைய அன்பைப் பெற முடியும். அதற்கு நானோ காங்கிரஸோ தயாராக இல்லாத தருணத்தில் அதற்கான வாய்ப்பு, தானே வந்து சேர்ந்தது. நான் வக்கீல் தொழிலை நடத்த ஆரம்பித்து மூன்று, நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. காங்கிரஸும் இன்னும் அதன் குழந்தைப் பருவத்தில் தான் இருந்தது. அப்பொழுது ஒரு தமிழர், கந்தை அணிந்து, முண்டாசுத் துணியைக் கையில் வைத்துக்கொண்டு, முன்னம் பற்கள் இரண்டும் உடைந்துபோய், ரத்தம் வழியும் கோலத்தில் நடுங்கிக்கொண்டும், அழுது கொண்டும் என் முன்னே வந்து நின்றார். அவர் தம்முடைய எஜமானால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார். என் குமாஸ்தா ஒரு தமிழர். அவர் மூலம் எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். வந்தவரின் பெயர் பாலசுந்தரம் டர்பனில் குடியிருப்பவரான ஒரு பிரபலமான ஐரோப்பியரின் கீழ் அவர் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய எஜமான் அவர் மீது கோபம் கொண்டார். அத்து மீறிப்போய், பாலசுந்தரத்தைப் பலமாக அடித்து, அவருடைய முன்னம் பற்கள் இரண்டை உடைத்துவிட்டார்.

     அவரை ஒரு டாக்டரிடம் அனுப்பினேன். அந்த நாளில் வெள்ளைக்கார டாக்டர்களே உண்டு. பாலசுந்தரத்திற்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மையைக் குறித்து, டாக்டரிடமிருந்து ஓர் அத்தாட்சி வேண்டுமென்று கேட்டேன். அத்தாட்சியைப் பெற்றேன். காயமடைந்தவரை நேரே மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் சென்றேன். அவரிடம் பால சுந்தரத்தின் பிரமான வாக்கு மூலத்தைச் சமர்ப்பித்தேன். அதை படித்ததும் மாஜிஸ்டிரேட் எரிச்சலுற்றார். எஜமானுக்கு சம்மன் அனுப்பினார்.

     அந்த எஜமான் தண்டிக்கப்பட வேண்டும் என்பதன்று என் விருப்பம். அவரிடமிருந்து பாலசுந்தரம் விடுதலை பெற வேண்டும் என்றே நான் விருமபினேன். ஒப்பந்தத் தொழிலாளரைப்பற்றிய சட்டங்களைப் படித்தேன். சாதாரண வேலைக்காரன் ஒருவன் முன் கூட்டி அறிவிக்காமல் வேலையை விட்டுப் போய் விடுவானாயின், எஜமான் அவன் மீது சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடரலாம். ஆனால் ஒப்பந்தத் தொழிலாளியின் விஷயத்திலோ இம் முறை முற்றும் மாறானது. அதே போன்ற நிலையில் முன் கூட்டி அறிவிக்காமல் ஓர் ஒப்பந்தத் தொழிலாளி போய்விட்டால், எஜமான் அத்தொழிலாளி மீது கிரிமினல் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துத் தண்டித்துச் சிறையில் இடலாம். இதனாலேயே இந்த ஒப்பந்த முறை, அடிமைத் தனத்தைப் போல் மிக மோசமானது என்று, ஸர் வில்லியம் ஹண்டர் கூறினார். ஓர் அடிமையைப் போன்றே ஒப்பந்தக் கூலியும் எஜமானனின் சொத்து.

     பாலசுந்தரத்தை விடுவிப்பதற்கு, இருந்த வழிகள் இரண்டுதான். ஒப்பந்தத் தொழிலாளரின் பாதுகாப்பாளரைக் கொண்டு, பாலசுந்தரத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி செய்யலாம். அல்லது வேறு ஓர் எஜமானிடம் அவரை மாற்றிவிடச் செய்யலாம். இல்லையாயின் பாலசுந்தரத்தின் எஜமான் அவரை விடுவித்து விடுமாறு செய்யலாம். அந்த எஜமானிடம் சென்று பின்வருமாறு கூறினேன்: “உங்கள் மீது வழக்குத் தொடுத்து, நீங்கள் தண்டனை அடைய வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவரைப் பலமாக அடித்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள் என்றே நம்புகிறேன். அவருடைய ஒப்பந்தத்தை மற்றொருவருக்கு நீங்கள் மாற்றி விடுவீர்களாயின் நான் திருப்தியடைவேன்.” இதற்கு அவர் உடனே சம்மதித்து விட்டார். பிறகு ஒப்பந்தத் தொழிலாளரின் பாதுகாப்பாளரைப் போய் பார்த்தேன். புதிய எஜமான் ஒருவரை நான் கண்டுபிடிப்பதாக இருந்தால் அதற்குத் தாமும் சம்மதிப்பதாக அவர் கூறினார்.

     எனவே, ஓர் எஜமானைத் தேடிப் புறப்பட்டேன். ஒப்பந்தத் தொழிலாளியை இந்தியர் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாதாகையால், நான் தேடும் எஜமான் வெள்ளைக்காரராகவே இருக்க வேண்டும். அப்பொழுது எனக்கு மிகச் சில ஐரோப்பியர்களையே தெரியும். அவர்களில் ஒருவரைச் சந்தித்தேன். பால சுந்தரத்தை வைத்துக் கொள்ள அவர் மிக அன்புடன் ஒப்புக் கொண்டார். அவருடைய அன்பை நன்றியறிதலோடு ஏற்றுக் கொண்டேன். பால சுந்தரத்தின் எஜமான் குற்றஞ்செய்திருப்பதாக மாஜிஸ்டிரேட் முடிவு கூறினார். ஒப்பந்தத்தை வேறு ஒருவருக்கு மாற்றிவிட அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் பதிவு செய்தார்.

     பாலசுந்தரத்தின் வழக்கு, ஒப்பந்தத் தொழிலாளர் ஒவ்வொருவருடைய காதுக்கும் எட்டிவிட்டது. அவர்கள் என்னைத் தங்களுடைய நண்பனாகக் கருதினார்கள். இந்தத் தொடர்பைக் குறித்து, நான் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓயாமல் என் காரியலயத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுடைய இன்ப துன்பங்களை அறிந்து கொள்ளுவதற்கு எனக்குச் சிறந்த வாய்ப்பு அதனால் ஏற்பட்டது.

     பாலசுந்தரம் வழக்கின் எதிரொலி, தொலை தூரத்தில் இருக்கும் சென்னையிலும் கேட்டது. அம்மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஒப்பந்தத் தொழிலாளராக நேட்டாலுக்கு வந்திருந்தவர்கள் தஙகள் சகோதரத் தொழிலாளர்களின் மூலம் இவ்வழக்கைக் குறித்து அறியலாயினர்.

     அவ் வழக்கைப் பொறுத்தவரையில் அதில் விசேஷமானது எதுவும் இல்லை. ஆனால், தங்கள் கட்சியை எடுத்து பேசுவதற்கும், நேட்டாலில் ஒருவர் இருக்கிறார் என்பது ஒப்பந்தத் தொழிலாளருக்கு ஆனந்தத்தோடு கூடிய அதிசயமாக இருந்ததோடு அதனால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் உண்டாயிற்று.

     முண்டாசுத் துணியைக் கையில் வைத்துக்கொண்டு, பாலசுந்தரம் என் காரியாலயத்திற்குள் வந்தார் என்று ஆரம்பத்தில் கூறினேன். இதில் நமது மானக்கேட்டைக் காட்டும் துக்ககரமான அம்சம் ஒன்று இருக்கிறது. என் தலைப்பாகையை எடுத்துவிடும்படி தலையில் வைத்திருப்பது குல்லாயாக இருந்தாலும் தலைப்பாகையாக இருந்தாலும், தலையில் சுற்றிய ஒரு துண்டாக இருந்தாலும் ஓர் ஐரோப்பியரைப் பார்க்கப் போகும்போது ஒவ்வோர் ஒப்பந்தத் தொழிலாளியும், புதிதாக வந்த ஒவ்வோர் இந்தியரும், அதைத் தலையிலிருந்து எடுத்தாக வேண்டும். இரண்டு கைகளால் சலாம் போட்டாலும் போதாது. இந்தப் பழக்கம் நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டு வந்திருக்கிறது. என் விஷயத்திலும் அதே பழக்கத்தை அனுசரிக்க வேண்டும் என்று பாலசுந்தரம் கருதியிருக்கிறார். அதனாலேயே முண்டாசுத் துணியைக் கையில் எடுத்துக் வைத்துக்கொண்டு என்னிடம் வந்தார். என் அனுபவத்தில் இவ்விதம் நிகழ்ந்தது இதுவே முதல் தடவை. அவமானத்தினால் என் மனம் குன்றியது. தலையில் முண்டாசைக் கட்டும்படி அவரிடம் கூறினேன். கொஞ்சம் தயங்கிக்கொண்டே அவர் கட்டினார். என்றாலும், அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர் முகத்தில் நான் காணமுடிந்தது.

     மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது, எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.

 

 

  • 21. மூன்று பவுன் வரி

 

பாலசுந்தரத்தின் வழக்கினால் ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டதானாலும், அவர்களுடைய நிலைமையைக் குறித்து ஆழ்ந்து ஆராயும்படி என்னைத் தூண்டியது, கடுமையான விசேஷ வரியை அவர்கள் மீது சுமத்துவதற்குச் செய்யப்பட்ட முயற்சியே ஆகும்.

     அதே 1894 ஆம் ஆண்டில் நேட்டால் அரசாங்கம் இந்திய ஒப்பந்தத் தொழிலாளருக்கு ஆண்டுக்கு 25 பவுன் வரி விதிக்க முற்பட்டது. இந்த யோசனையைக் கேட்டுத் திகைப்புற்றேன். இவ்விஷயத்தைக் குறித்து விவாதிக்க, இதைக் காங்கிரஸின் முன் கொண்டு வந்தேன். அவசியமான எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்வதென்று உடனே காங்கிரஸ் தீர்மானித்தது.

     இந்த வரியின் பூர்வோத்தரத்தைக் குறித்தும் சுருக்கமாக முதலில் நான் விளக்க வேண்டும். 1860-ம் ஆண்டு வாக்கில் நேட்டாலில் இருந்த ஐரோப்பியர்கள், அங்கே கரும்பு சாகுபடிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கண்டனர். இதற்கு தொழிலாளர் தேவை என்றும் உணர்ந்தார்கள். இத்தகைய வேலைக்கு நேட்டால் ஜூலுக்கள் பயன்படமாட்டார்கள். கரும்புச் சாகுபடிக்கும், சர்க்கரை தயாரிப்பதற்கும் வெளியில் இருந்து தொழிலாளரைக் கொண்டு வந்தாலன்றிச் சாத்தியமில்லை. அதன் பேரில் நேட்டால் அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் கடிதப் போக்குவரத்து நடந்தது. இந்தியத் தொழிலாளரைத் திரட்டிக் கொண்டுவர, நேட்டால் அரசாங்கம் அனுமதி பெற்றது. இவ்விதம் திரட்டப்படும் தொழிலாளர்கள், நேட்டாலில் ஐந்தாண்டுகள் வேலை செய்வதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த ஐந்து வருட காலம் முடிந்ததும் அங்கேயே குடியேறி விடலாம். முழு உரிமையுடன் அவர்கள் நிலத்தையும் வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு இவ்விதமெல்லாம் ஆசை காட்டப்பட்டது. ஏனெனில் இத்தொழிலாளரின் ஒப்பந்தம் தீர்ந்த பிறகும் இவர்களின் உழைப்பைக் கொண்டே தங்களுடைய விவசாயத் தொழிலை விருத்தி செய்து கொண்டு விடலாம் என்று அப்பொழுது வெள்ளைக்காரர்கள் எண்ணினார்கள்.

     இந்தியரோ, அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகவே தென்னாப்பிரிக்காவுக்கு பயன்பட்டனர். ஏராளமாகக் காய்கறிகளைப் பயிரிட்டார்கள். இந்தியாவிலிருந்து பல ரகக் கறிகாய்களையும் கொண்டு வந்து அங்கே பயிரிட்டனர். அந்நாட்டுக் காய்கறித் தினுசுகளைக் குறைந்த செலவில் பயிரிடுவதையும் சாத்தியமாக்கினர். மாமரத்தையும் அங்கே முதன் முதலில் பயிரிட்டனர். அவர்களுடைய உழைப்பும் முயற்சியும் விவசாயத்தோடு நின்று விடவில்லை. வர்த்தகத்திலும் புகுந்தது நிலம் வாங்கி, வீடுகள் கட்டினர். பலர் தொழிலாளர் அந்தஸ்திலிருந்து நிலத்திற்கும் வீடுகளுக்கும் தாங்கள் சொந்தக்காரர் என்ற நிலைக்கும் உயர்ந்தனர். இவர்களைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வர்த்தகர்களும் அங்கேபோய் வியாபாரம் செய்யக் குடியேறினர். இப்படி வந்தவர்களில் முதன் முதலாக வந்தவர் காலஞ்சென்ற சேத் அபூபக்கர் ஆமத். வெகு சீக்கிரத்திலேயே அவர் தமது வர்த்தகத்தைப் பெருக்கி விட்டார்.

     வெள்ளை வர்த்தகர்கள் திகிலடைந்து விட்டனர். ஆரம்பத்தில் இந்தியத் தொழிலாளர் வேண்டுமென்று விரும்பியபோது அவர்களுக்கு வர்த்தகத் திறமையும் இருக்கும் என்று அவர்கள் எண்ணவில்லை. சுயேச்சையான விவசாயிகள் என்ற அளவோடு மாத்திரம் இந்தியர்கள் இருந்திருந்தாலும் சகித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், வர்த்தகத்திலும் அவர்கள் தங்களுக்குப் போட்டியாக இருப்பதை நினைத்துப் பார்க்கவும் வெள்ளை வர்த்தகருக்குச் சகிக்கவில்லை.

     இந்தியர் மீது விரோதத்திற்கு விதை விதைத்தது இதுதான். இது வளர்வதற்கு மற்றும் பல விஷயங்களும் உதவியாக இருந்து விட்டன. நமது மாறுபட்ட வாழ்க்கை, கொஞ்ச லாபத்தைக் கொண்டு திருப்தியடைந்து விடும் நம் மனப்பான்மை, சுத்தம், சுகாதாரம் ஆகியவை சம்பந்தமாக நம்மிடம் இருக்கும் அசிரத்தை, நம்மைச் சுற்றி இருப்பவைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் நமக்குச் சுறுசுறுப்பு இல்லாமை, வீடுகளைப் பழுதில்லாமல் வைத்திருப்பதில் நமக்கிருக்கும் கஞ்சத்தனம், இவைகள் எல்லாவற்றுடன் மத வித்தியாசமும் சேர்ந்து விரோதத் தீயை ஊதி வளர்த்தன. இந்த விரோதம், இந்தியரின் வாக்குரிமையை ரத்து செய்யும் மசோதாவின் மூலமும், ஒப்பந்த இந்தியருக்கு வரி விதிக்கும் மசோதாவின் மூலமும் சட்ட ரீதியில் வெளிப்பட்டது. சட்டம் இல்லாமலேயே அதே தொந்தரவுகள் ஏற்கனவே ஆரம்பம் ஆகிவிட்டன. அத்தொழிலாளரின் ஒப்பந்த காலம், இந்தியாவுக்கு போன பிறகு முடியக் கூடியவாறு அவர்களைக் கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி விடுவது என்பது முதல் யோசனை. ஆனால் அந்த யோசனையை இந்திய சர்க்கார் ஒப்புக்கொள்ளுவதாக இல்லை. ஆகையால், கீழ்வரும் வகையில் மற்றோர் யோசனை செய்யப்பட்டது.

1. இந்திய ஒப்பந்தத் தொழிலாளி, ஒப்பந்த காலம் தீர்ந்ததுமே இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும்.

2. அப்படித் திரும்பவில்லையென்றால், ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கும் புதிதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்விதம் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு தடவையிலும் கூலி உயர்வு கொடுக்கப்படும்.

3. அப்படியின்றி, இந்தியாவுக்குத் திரும்பிவிடவோ, ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவோ மறுத்தால், அத் தொழிலாளி ஆண்டுக்கு 25 பவுன் வரி செலுத்த வேண்டும்.

     இந்த யோசனைக்கு இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஸர் ஹென்றிபின்ஸ், ஸ்ரீ மேஸன் ஆகியோர் ஆகியோர் அடங்கிய ஒரு தூது கோஷ்டியை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். இந்தியாவில் அப்பொழுது லார்டு எல்ஜீன் வைசிராயாக இருந்தார். 25 பவுன் வரி விதிப்பது என்பதை அவர் அங்கீகரிக்க வில்லை. ஆனால், மூன்று பவுன் தலைவரி விதிப்பது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இது வைசிராய் செய்த மோசமான தவறு என்று அப்பொழுது நான் எண்ணினேன், இன்றும் அப்படியே கருதுகிறேன். தமது அங்கீகாரத்தைக் கொடுத்ததில் அவர் இந்தியாவின் நலன்களைக் குறித்துக் கொஞ்சமும் எண்ணவே இல்லை. நேட்டால் வெள்ளையருக்கு இவ்விதம் சகாயம் செய்து கொடுக்க வேண்டியது அவருடைய கடமையும் அன்று. மூன்று நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஒப்பந்தத் தொழிலாளியும், அவர் மனைவியும் 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வோர் ஆண் மகனும் 13 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் இந்த வரியைச் செலுத்த வேண்டியவர்களாயினர். ஓரு தொழிலாளியின் சராசரி வருமானம் மாதத்திற்கு 14 ஷில்லிங்குக்கு மேல் இல்லை. அப்படியிருக்க கணவன், மனைவி, இரு குழந்தைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 12 பவுன் வரி விதிப்பது என்பது அட்டூழியம். இந்த அநியாயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.

     இவ் வரியை எதிர்த்துத் தீவிரமாகக் கிளர்ச்சி செய்தோம். இவ்விஷயத்தில் நேட்டால் இந்தியர் காங்கிரஸ் சும்மா இருந்திருக்குமானால், 25 பவுன் வரியையும் வைசிராய் அங்கீகரித்திருப்பார். இவ்வரி 25 பவுனிலிருந்து 3 பவுனுக்குக் குறைக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் செய்த கிளர்ச்சி ஒன்றே காரணமாக இருந்திருக்கக் கூடும். ஆனால், நான் அவ்வாறு எண்ணுவது தவறாகவும் இருக்கலாம். காங்கிரஸின் எதிர்ப்பைக் கவனிக்காமலேயே இந்திய அரசாங்கம் ஆரம்பம் முதற்கொண்டே 25 பவுன் வரியை ஏற்க மறுத்து, அதை 3 பவுனுக்குக் குறைத்திருக்கவும் கூடும். அது எப்படி இருந்தாலும், இந்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், இது நம்பிக்கைக் துரோகமாகும். இந்தியாவின் நலனைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பாளியான வைசிராய், மனிதத் தன்மையே இல்லாததான இந்த வரியை அங்கீகரித்திருக்கவே கூடாது.

     அவ்வரி 25 பவுனிலிருந்து 3 பவுனாகக் குறைந்ததை, நான் அடைந்த பெரிய வெற்றி என்று காங்கிரஸ் கருதிக் கொள்ளுவதற்கில்லை. இந்திய ஒப்பந்தத் தொழிலாளியின் நலன்களை முற்றும் பாதுகாவாது போனதைக் குறித்து காங்கிரஸுக்கு வருத்தமே இருந்தது. அந்த வரி ரத்து செய்யப்பட்டுவிட வேண்டும் என்பதே எப்பொழுதும் காங்கிரஸின் உறுதியான கொள்கையாக இருந்து வந்தது. ஆனால், அந்தக் கொள்கை நிறைவேறுவதற்கு இருபது ஆண்டுகள் ஆயின. அப்படி அவ்வரி ரத்தானதற்கு, நேட்டால் இந்தியர் மாத்திரம் அல்லாமல், தென்னாப்பிரிக்க இந்தியர் எல்லாருமே சேர்ந்த பாடுபட்டதே காரணம். காலஞ் சென்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ணன கோகலேயிடம் கொடுத்திருந்த வாக்குறுதி மீறப்பட்டதன் காரணமாக, முடிவான ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டியதாயிற்று. அப்போராட்டத்தில் இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் முழுப் பங்கும் எடுத்துக் கொண்டனர். அதிகாரிகள் சுட்டதனால், அவர்களில் சிலர் உயிரையும் இழந்தனர். பத்தாயிரத்திற்கு அதிகமானவர்கள் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்கள்.

     ஆனால், முடிவில் சத்தியம் வெற்றி பெற்றது. இந்தியர் அனுபவித்த துன்பங்களில் அந்தச் சத்தியம் பிரதிபலித்தது என்றாலும், தளராத நம்பிக்கையும் மிகுந்த பொறுமையும், இடைவிடாத முயற்சியும் இல்லாதிருக்குமாயின் அது வெற்றி பெற்றிருக்க முடியாது. சமூகம், போராட்டத்தை நடத்தாமல் விட்டிருந்தால், காங்கிரஸ் கிளர்ச்சியைக் கை விட்டு, வரி தவிர்க்க முடியாத ஒன்று எனப் பணிந்து போயிருக்குமாயின், வெறுக்கப்பட்ட அந்த வரி இன்றளவும் வசூலிக்கப்பட்டு வந்திருக்கும். தென்னாப்பிரிக்க இந்தியருக்கும், இந்தியா முழுமைக்குமே அது நிரந்தரமான அவமானமாகவும் இருந்திருக்கும்.

 

  • 22. பல மதங்களைக் குறித்து ஆராய்ச்சி

 

இந்திய சமூகத்தின் சேவையிலேயே நான் முற்றும் மூழ்கி இருந்தேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம், ஆத்மானு பூதியைப் பெற வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த ஆர்வம் தான். சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பதை அறிந்தேன். ஆகையால், சேவையையே என்னுடைய மதம் ஆக்கிக் கொண்டேன். என் அளவில் சேவையென்றால் அது இந்தியாவுக்குச் செய்யும் சேவையே. ஏனெனில் அது தேடாமலேயே எனக்குக் கிட்டியதோடு, அதற்கான மன இசைவும் என்னிடம் இருந்தது. பிரயாணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், கத்தியவாரின் சூழ்ச்சிகளிலிருந்து தப்புவதற்காகவும், எனக்குப் பிழைப்பைத் தேடிக் கொள்ளுவதற்காகவுமே நான் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றேன். ஆனால் நான் முன்னால் கூறியதைப் போல், கடவுளைத் தேடுவதில் நான் ஈடுபட்டிருப்பதையும் ஆத்ம ஞானமடையும் முயற்சியில் முனைந்திருப்பதையும் கண்டேன்.

     எனக்கு இருந்த அறிவுப் பசியைக் கிறிஸ்தவ நண்பர்கள் இன்னும் அதிகக் கடுமையானதாக்கி விட்டார்கள். அப் பசியோ தணியாப் பசியாகி விட்டது. நான் அசிரத்தையாக இருந்து விட விரும்பினாலும் அவர்கள் என்னைச் சும்மா விடவில்லை. டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்கப் பொது மிஷின் தலைவரான ஸ்ரீ ஸ்பென்ஸர் வால்டன் என்னைக் கண்டு கொண்டார். நான் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாகவே ஆகிவிட்டேன். பிரிட்டோரியாவில் கிறிஸ்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பே, இப்பழக்கத்திற்குக் காரணமாக இருந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஸ்ரீ வால்டனின் போக்கே அலாதியானது. கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந்து விடுமாறு எப்பொழுதாவது அவர் என்னை அழைத்ததாக எனக்கு நினைவேயில்லை. ஆனால், அவர் தமது வாழ்க்கையைத் திறந்த புத்தகம் போல் என் முன்பு வைத்து விட்டார். அவருடைய செயல்கள் யாவற்றையும் நான் காணும்படி செய்தார். ஸ்ரீமதி வால்டன், கண்ணியமுள்ள, திறமைசாலியான பெண்மணி. இத்தம்பதிகளின் போக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்களுக்குள் இருந்த அடிப்படையான பேதங்களை நாங்கள் அறிவோம். எவ்வளவுதான் விவாதித்தாலும் அந்தப் பேதங்கள் மறையமாட்டா. என்றாலும், சகிப்புத் தன்மை, தாராளம், உண்மை ஆகியவை இருக்குமிடத்தில் பேதங்களும் பயன் அளிப்பவையாகவே உள்ளன. வால்டன் தம்பதிகளின் அடக்கம், விடாமுயற்சி, உழைப்பில் ஈடுபாடு ஆகியவை எனக்குப் பிடித்திருந்தன. நாங்கள் அடிக்கடி சந்தித்து வந்தோம்.

     இந்த நட்பு எனக்குச் சமய விஷயங்களில் தொடர்ந்து சிரத்தை இருந்து வரும்படி செய்தது. சமய சம்பந்தமான நூல்களைப் படிப்பதற்குப் பிரிட்டோரியாவில் எனக்கு இருந்த ஓய்வு இங்கே கிடைப்பதற்குச் சாத்தியமில்லை. என்றாலும் எனக்குக் கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தையும் நல்வழியில் பயன்படுத்தி வந்தேன். சமய சம்பந்தமாக நான் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடத்தி வந்தேன். ராய்ச்சந்திரபாய் எனக்கு வழிகாட்டி வந்தார். நர்மதா சங்கர் எழுதிய, ‘தரும விசாரணை’ என்ற நூலை ஒரு நண்பர் எனக்கு அனுப்பினார். அதன் முன்னுரை அதிக உதவியாக இருந்தது. இக்கவி, ஆரம்பத்தில் நடத்தி வந்த துன்மார்க்க வாழ்க்கையைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சமய நூல்களின் ஆராய்ச்சியினால், தமது வாழ்க்கையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களைக் குறித்து, அவர் முன்னுரையில் விவாதித்திருந்தது என் மனத்தைக் கவர்ந்தது. அந்நூல் எனக்குப் பிரியமானதாக இருந்ததால் ஓர் எழுத்து விடாமல் அதைக் கவனமாகப் படித்தேன். மாக்ஸ் முல்லர் எழுதிய, ‘இந்தியா அது நமக்கு என்ன போதிக்க முடியும்?’ என்ற நூலையும் சிரத்தையுடன் படித்தேன். பிரம்மஞான சங்கத்தினர் வெளியிட்டிருந்த உபநிடதங்களின் மொழிப்பெயர்ப்பையும் படித்தேன். இவைகளினால் எல்லாம் ஹிந்து மதத்தினிடம் எனக்கு இருந்த மதிப்பு அதிகரித்தது. அதிலிருந்த அழகுகளையும் அதிகமாக உணரலானேன். என்றாலும், இதனால் மற்ற மதங்களின் மீது நான் துவேஷம் கொள்ளவில்லை. வாஷிங்டன் இர்விங் எழுதிய ‘முகமதுவும் அவருடைய சீடர்களும்’ என்ற புத்தகத்தையும் படித்தேன். முகம்மது நபியைக் குறித்துக் கார்லைல் எழுதிய புகழுரைகளையும் படித்தேன். இந் நூல்களெல்லாம் முகம்மதுவிடம் நான் கொண்டிருந்த மதிப்பை மேலும் அதிகப் படுத்தின. ‘ஜாரதூஷ்டிரரின் திருவாக்குகள்’ என்ற நூலையும் படித்தேன்.

     இவ்விதம் பல சமயங்களையும் பற்றிய அறிவு எனக்கு அதிகமாயிற்று. இந்த ஆராய்ச்சி, என் ஆன்ம பரிசோதனையை ஊக்குவித்தது. நான் படிப்பவைகளில் எவையெவை சிறந்தவைகள் என எனக்குத் தோன்றுகின்றனவோ, அவற்றை அனுஷ்டானத்தில் கொண்டு வரும் பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. இவ்விதம் ஹிந்து நூல்களில் யோகாப்பியாசத்தைக் குறித்து நான் படித்து புரிந்து கொண்ட மட்டில் யோக சாதன முறைகள் சிலவற்றைச் சாதகம் செய்யவும் முயன்றேன். ஆனால், இதில் நான் வெகுதூரம் முன்னேற முடியவில்லை. நான் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு ஒரு நிபுணரின் உதவியைக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்று தீர்மானித்தேன். அந்த ஆசை நிறைவேறவே இல்லை.

     டால்ஸ்டாயின் நூல்களையும் அதிக் கவனத்துடன் படித்து வந்தேன். ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’, ‘செய்ய வேண்டியது யாது?’ என்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்.

     அந்த சமயத்தில் மற்றொரு கிறிஸ்துவக் குடும்பத்துடனும் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கூறிய யோசனையின் பேரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெஸ்லியின் கிறிஸ்தவாலயத்திற்குச் சென்று வந்தேன். இத் தினங்களில் தங்கள் வீட்டுக்கு இரவுச் சாப்பாட்டுக்கு வரும்படியும் என்னை அவர்கள் அழைத்திருந்தார்கள். அக்கோயிலுக்குப் போய் வந்ததில் என் மனத்தில் திருப்தி உண்டாகவில்லை. அங்கே செய்யப்பட்ட உபதேசங்கள் பக்தி சிரத்தையை உண்டாக்குபவையாகத் தோன்றவில்லை. அங்கே வந்து கூடியிருந்தவர்களும் முக்கியமாகக் சமய சிரத்தையுடன் வந்திருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அக்கூட்டம் பக்திமான்களின் கூட்டம் அன்று. உலகப் பற்றே அதிகமாக உள்ளவர்கள், பொழுது போக்குக்காகவும், பழக்கத்தை யொட்டியும் கோயிலுக்கு வந்திருப்பதாகவே தோன்றியது. அங்கே, சில சமயங்களில் என்னையும் அறியாமலேயே எனக்கு தூக்கம் வந்து விடுவது உண்டு. இது எனக்கு வெட்கமாக இருக்கும். ஆனால், என் பக்கத்தில் இருப்பவர்களில் சிலரும் அப்படித்தான் தூங்குகிறார்கள் என்பதைப் பார்த்ததும் என் வெட்கம் குறைந்து விடும். இப்படியே நான் நீண்டகாலம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்க முடியாது. ஆகவே கோயிலுக்குப் போவதைச் சீக்கிரத்தில் நிறுத்தி விட்டேன்.

     ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் போய்க் கொண்டிருந்த குடும்பத்துடன் தொடர்பு திடீரென்று முறிந்தது. உண்மையில் ‘இனி வர வேண்டாம்’ என்று நான் எச்சரிக்கை செய்யப்பட்டேன் என்று சொல்லலாம். இது நிகழ்ந்த விதம் இதுதான். அந்த வீட்டு அம்மாள் நல்லவர், சூதுவாது இல்லாதவர். ஆனால், அவருக்குக் கொஞ்சம் குறுகிய புத்தியும் உண்டு. எப்பொழுதும் நாங்கள் சமய சம்பந்தமான விஷயங்களைக் குறித்து விவாதிப்போம். அச்சமயம் நான் அர்னால்டு எழுதிய ‘ஆசிய ஜோதி’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் ஏசுநாதரின் வாழ்க்கையோடு புத்த பகவானின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசலானோம். நான் சொன்னேன்: “புத்தரின் அபாரமான கருணையைப் பாருங்கள்! அக் கருணை, மனிதவர்க்கத்தோடு நின்றுவிடவில்லை; எல்லா ஜீவராசிகளிடத்திலும் அக் கருணை பரவியது. அவருடைய தோள்களில் ஆட்டுக்குட்டி ஆனந்தமாகப் படுத்துக் கொண்டிருந்ததை எண்ணும்போது நம் உள்ளத்தில் அன்பு வெள்ளம் பொங்குகிறதல்லவா? இவ்விதம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு கொள்ளுவது என்பது ஏசுநாதரின் வாழ்க்கையில் காணப்படவில்லை.” இவ்விதம் நான் ஒப்பிட்டுக் கூறியது அந்த நல்ல பெண்மணிக்கு மனவருத்தத்தை உண்டாக்கி விட்டது. அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சியை நான் அறிந்தேன். அப் பேச்சை நிறுத்தி விட்டேன். பிறகு சாப்பிடப் போனோம். ஐந்து வயது கூட ஆகாத அவருடைய ஆண் குழந்தையும் எங்களுடன் இருந்தான், குழந்தைகளின் நடுவில் இருக்கும்போது நான் அதிக ஆனந்தத்துடன் இருப்பேன், நீண்ட நாட்களாகவே அச்சிறுவனும் நானும் நண்பர்கள். சாப்பிடும் போது, அவன் தட்டில் இருந்த மாமிசத்தை இகழ்ச்சியாகவும், என் தட்டில் இருந்த ஆப்பிள் பழத்தைப் பெருமைப்படுத்தியும் பேசினேன். கள்ளங் கபடம் அற்ற அச்சிறுவன் என் பேச்சில் மயங்கி விட்டான். அவனும் ஆப்பிள் பழத்தின் பெருமையைப் பேச ஆரம்பித்து விட்டான்.

     ஆனால், அவன் தாயாரோ அப்படியே திகைத்துப் போய்விட்டார். அது எனக்கு எச்சரிக்கையாக இருந்தது. என் பேச்சை நிறுத்தி, வேறு விஷயத்தைக் குறித்து பேச ஆரம்பித்தேன். வழக்கம்போல் அடுத்த வாரம் அவ்வீட்டுக்குப் போனேன். நடுக்கத்தோடுதான் போனேன். அங்கே போகாமல் இருந்து விட வேண்டும் என்றும் எனக்குத் தோன்றவில்லை, அப்படியே போகாது நின்றுவிடுவது சரி என்றும் எனக்குப் படவில்லை. ஆனால் அந்த நல்ல பெண்மணி எனக்கு வழியை எளிதாக்கி விட்டார்.

     அவர் கூறியதாவது, “ஸ்ரீ காந்தி ! உம்முடைய சகவாசம் என் பையனுக்கு நன்மையானதாகாது என்று நான் உங்களுக்குச் சொல்லிவிட வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்ல நேர்ந்ததற்காகத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் அவன் மாமிசம் சாப்பிடத் தயங்குகிறான். உங்கள் வாதத்தை நினைவு படுத்தி பழமே வேண்டும் என்கிறான். காரியம் மிஞ்சி விட்டது. அவன் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டால் அவன் நோயுறாவிட்டாலும் அவன் இளைத்தாவது போவான். இதை நான் எப்படி சகிப்பது? இனிமேல் உங்களுடைய வாதங்கள் எல்லாம் பெரியவர்களாகிய எங்களிடம் மட்டும் இருக்கட்டும். அந்த வாதங்களினால் குழந்தைகள் கெட்டுப் போவது நிச்சயம்.”

     நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “அம்மா ! நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. ஆகையால் தாய் என்ற வகையில் உங்களுடைய உணர்ச்சிகளை நான் அறிகிறேன். இத்தகைய வருந்தத்தக்க நிலைமையை நாம் எளிதில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியும். நான் வாயால் சொல்வதை விட நான் எதைச் சாப்பிடுகிறேன். எதைச் சாப்பிடாமல் ஒதுக்குகிறேன் என்பதைப் பார்ப்பது, குழந்தையின் மனத்தில் இன்னும் அதிக மாறுதல் உண்டாக்கிவிடக் கூடும். ஆகையால் சிறந்த வழி, நான் இங்கே வருவதை நிறுத்திக் கொள்ளுவதே. இது நிச்சயமாக நம் நட்பைப் பாதிக்க வேண்டியதே இல்லை.”

     அந்தப் பெண்மணி உடனே பெரிய பாரம் நீங்கியதைப் போல், “உங்களுக்கு நன்றி” என்றார்.

 

  • 23. குடித்தனக்காரனாக

 

 ஒரு குடித்தனம் வைப்பதென்பது எனக்குப் புதிய அனுபவம் அன்று. ஆனால், பம்பாயிலும் லண்டனிலும் நான் நடத்திய குடித்தனத்திற்கும் நேட்டாலில் வைத்த குடித்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு. இத்தடவை செலவில் ஒரு பகுதி, முற்றும் கௌரவத்திற்காக மட்டுமே ஆயிற்று. நேட்டாலில் இருக்கும் இந்தியப் பாரிஸ்டர் என்ற வகையிலும், ஒரு பிரதிநிதி என்ற வகையிலும், என் அந்தஸ்திற்கு ஏற்றதான ஒரு குடித்தனத்தை அமைக்க வேண்டியது அவசியம் என்று எண்ணினேன். பிரபலமான பகுதியில் அழகான ஒரு சிறு வீட்டை அமர்த்தினேன். தக்க வகையில் அதில் மேசை, நாற்காலி முதலிய சாமான்களெல்லாம் போடப்பட்டன. சாப்பாடு எளிமையானது. ஆனால் ஆங்கில நண்பர்களையும் இந்தியச் சக ஊழியர்களையும் நான் சாப்பிடக் கூப்பிடுவதால் குடித்தனச் செலவு எப்பொழுதும் அதிகமாகவே இருந்தது.

     ஒவ்வொரு குடித்தனத்திற்கும் ஒரு நல்ல வேலைக்காரன் அத்தியாவசியம். ஆனால், ஒருவரை வேலைக்காரனாக வைத்து நடத்துவது எப்படி என்பதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்குச் சகாவாகவும் உதவி செய்பவராகவும் ஒரு நண்பர் இருந்தார். சமையற்காரர் ஒருவர் உண்டு. அவர் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே ஆகிவிட்டார். என் காரியாலய குமாஸ்தாக்களும் என்னோடு தங்கி, அங்கேயே சாப்பிட்டும் வந்தனர்.

     இந்தப் பரிசோதனையில் ஓரளவுக்கு நான் வெற்றி பெற்றேன் என்றே நினைக்கிறேன். ஆனால், வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களில் ஒரு சிறிது இதில் இல்லாமல் போகவில்லை.

     என்னுடைய சகா அதிக சாமர்த்தியசாலி. அவர் என்னிடம் உண்மையாக நடந்து கொண்டு வருகிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால், இதில் தான் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். என்னுடன் தங்கியிருந்த ஆபீஸ் குமாஸ்தா ஒருவர்மீது, என்னுடைய அந்தச் சகாவுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டது. குமாஸ்தா மீது நான் சந்தேகம் கொள்ளும் வகையில் அவர் ஒரு வலையை விரித்து விட்டார். அந்தக் குமாஸ்தா நண்பரோ, அதிக ரோஷக்காரர். தம்மீது எனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என்பதைக் கண்டதுமே அவர் வீட்டை மாத்திரமே அன்றிக் காரியாலயத்தையும் விட்டுப் போய்விட்டார். இது எனக்கு வருத்தமாக இருந்தது. ஒரு வேளை அவருக்கு நான் அநீதி செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்தேன். என் மனச்சாட்சியும் சதா உறுத்திக் கொண்டே இருந்தது.

     இதற்கு மத்தியில் சமையற்காரர், சில தினங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டதாலோ, வேறு காரணத்திற்காகவோ வீட்டில் இல்லை. அவர் இல்லாதபோது வேறு ஒரு சமையற்காரரை வைக்க வேண்டியது அவசியமாயிற்று. புதிதாக வந்தவர், அசல் போக்கிரி என்பது பின்னால் தெரிய வந்தது. ஆனால் எனக்கோ, அவர் கடவுள் அனுப்பிய தூதர் போன்றே ஆனார். என் வீட்டில் எனக்குத் தெரியாமலேயே சில ஒழுங்கீனங்கள் நடந்து வருகின்றன என்பதை அவர், தாம் வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே கண்டுபிடித்தார். என்னை எச்சரிக்கை செய்வதென்றும் தீர்மானித்தார். யாரையும் நான் எளிதில் நம்பிவிடக் கூடியவன். ஆனால் நேர்மையானவன் என்ற பெயர் அப்பொழுதே எனக்கு உண்டு. இதனால் அந்தப் புதுச் சமையற்காரர் கண்டு பிடித்த விஷயம், அவருக்கு இன்னும் அதிக அதிர்ச்சியை அளித்தது. தினமும் மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு மணிக்குக் காரியாலயத்திலிருந்து நான் வீடு திரும்புவேன். ஒரு நாள் 12 மணிக்குச் சமையற்காரர் தலைதெறிக்க காரியாலயத்திற்கு ஓடி வந்தார். “தயவு செய்து உடனே வீட்டுக்கு வாருங்கள். நீங்கள் பார்க்க வேண்டிய அதிசயம் ஒன்று இருக்கிறது” என்றார்.

     “அது என்ன? சங்கதி இன்னது என்பதை நீ இப்பொழுது சொல்லியாக வேண்டும். அதைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த நேரத்தில் நான் காரியாலயத்தை விட்டு எப்படி வரமுடியும்?” என்றேன்.

     “நீங்கள் இப்பொழுது வராவிடில் அதற்காகப் பிறகு வருத்தப் படுவீர்கள். அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்” என்றார் சமையற்காரர்.

     அவர் பிடிவாதத்தில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஒரு குமாஸ்தா உடன் வர வீட்டுக்குப் போனேன். சமையற்காரர் எங்களுக்கு முன்னால் வேகமாகப் போனார். என்னை நேரே மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார் என் சகாவின் அறையைச் சுட்டிக் காட்டினார். “அந்தக் கதவைத் திறந்து நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

     எனக்கு அப்பொழுது எல்லாம் விளங்கிவிட்டன. கதவைத் தட்டினேன். பதில் இல்லை! சுவர்களெல்லாம் கூட அதிரும்படியாகக் கதவைப் பலமாக இடித்தேன். கதவு திறந்தது. உள்ளே ஒரு விபசாரியைக் கண்டேன். திரும்ப அங்கே அடியெடுத்து வைக்கச் கூடாது என்று கூறி, அவளை வெளியே போகச் சொன்னேன்.

     என் சகாவிடம், “இந்தக் கணத்திலிருந்து உமக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. நெடுக, நான் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறேன். எனக்கு நானே பைத்தியக்காரப் பட்டம் கட்டிக் கொண்டேன். உம்மிடம் நான் வைத்த நம்பிக்கைக்கு நீர் செய்யும் பிரதியுபகாரம் இதுதானா?” என்றேன்.

     அப்பொழுதும் நல்லறிவு பெறாத அவர், என் சங்கதிகளை அம்பலப்படுத்தி விடுவதாக என்னை மிரட்டினார்: “மறைத்து வைக்க என்னிடம் எதுவுமே இல்லை. நான் செய்தது ஏதாவது இருந்தால் அம்பலப்படுத்தும். ஆனால், இந்தக் கணமே நீர் இந்த இடத்தை விட்டுப் போயாக வேண்டும்” என்றேன். இதைக் கேட்டதும் அவர் இன்னும் அதிகமாகக் கோபாவேசம் கொண்டார். வேறு வழி இல்லாது போகவே, கீழே இருந்த குமாஸ்தாவைக் கூப்பிட்டேன். “உடனே, போலீஸ் சூப்பரின்டென்டிடம் போய், என் வந்தனங்களை அவருக்குத் தெரிவித்து விட்டு, என்னிடம் வசித்து வந்த ஒருவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்றும், என் வீட்டில் அவரை வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்றும், அவர் வெளியே போக மறுக்கிறார் என்றும், போலீஸ் உதவியை அனுப்பினால் மிக்க நன்றியறிதல் உள்ளவனாவேன் என்றும் அவரிடம் சொல்லும்” என்றேன்.

     நான் கண்டிப்பாகத்தான் இருக்கிறேன் என்பதை இது அவருக்குக் காட்டியது. அவர் குற்றமே அவரைப் பலவீனப் படுத்தியும் விட்டது, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். போலீஸுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். வீட்டை விட்டு உடனே போய் விடவும் ஒப்புக் கொண்டார். போயும் விட்டார்.

     இச் சம்பவம் என் வாழ்க்கையில் தக்க சமயத்தில் செய்ததோர் எச்சரிக்கையாக அமைந்தது. கெட்டிக்காரத்தனமுள்ள இந்தத் தீய ஆசாமி, நெடுக, என்னை எவ்வளவு தூரம் ஏமாற்றி வந்திருக்கிறார் என்பதே இப்பொழுதுதான் என்னால் தெளிவாகக் காண முடிந்தது. அவர் என்னிடம் இருக்க இடம் கொடுத்தது, நான் ஒரு நல்ல காரியத்திற்குக் கெட்ட முறையை அனுசரித்தாதாயிற்று. நெருஞ்சிச் செடியிலிருந்து அத்திப் பழம் எடுக்கலாம் என்று நான் எதிர் பார்த்து விட்டேன். அந்தத் தோழர் கெட்ட நடத்தை உள்ளவர் என்பதை நான் அறிந்தே இருந்தேன். என்றாலும், என்னிடம் உண்மையாக நடந்து கொள்ளுவாரென்று நம்பிவிட்டேன். அவரைச் சீர்திருத்துவதற்கு நான் செய்த முயற்சியில் என்னையே நாசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நெருங்கி வந்து விட்டேன். அன்புள்ள நண்பர்களின் எச்சரிக்கைகளை யெல்லாம் உதாசீனம் செய்து விட்டேன். அவரிடம் நான் கொண்டிருந்த பிரியம் என்னை முற்றும் குருடனாக்கி விட்டது.

     புதிய சமையற்காரர் காட்டாதிருந்தால், உண்மையை நான் கண்டுகொண்டிருக்கவே மாட்டேன். இச்சம்பவத்திற்குப் பிறகு நான் பற்றாற வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டேன். இச்சம்பவத்தை நான் அறியாமல் இருந்திருந்தால், அந்தச் சகாவின் தொடர்பினால் இந்த பற்றற்ற வாழ்க்கையை நான் நடத்த முடியாமலும் போயிருக்கக் கூடும். என்னை இருட்டிலேயே வைத்திருந்து, நான் தவறான வழியில் சென்றுவிடும்படி செய்துவிடும் சக்தி, அவருக்கு உண்டு.

     ஆனால், முன்பு போலவே கடவுள் என்னைக் காத்தருள வந்தார். என் நோக்கங்கள் தூய்மையானவை. ஆகையால், நான் தவறுகள் செய்திருந்தும், காப்பாற்றப்பட்டேன். ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்த அனுபவம், வருங்காலத்திற்கான ஒரு நல்ல முன்னெச்சரிக்கையாயிற்று.

     அந்தச் சமையற்காரர், கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர் போன்றே ஆனார். அவருக்குச் சமையல் வேலை தெரியாது. ஆகையால், சமையற்காரராக அவர் என்னிடத்தில் இருந்திருக்க முடியாது. ஆனால், வேறு யாரும் என் கண்களைத் திறந்திருக்க முடியாது. என் வீட்டிற்குள் அந்த விபசாரி அழைத்துக் கொண்டு வரப்பட்டது. அது முதல் தடவை அன்று என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். அவள், முன்னால் அடிக்கடி வந்திருக்கிறாள். ஆனால், இந்தச் சமையற்காரருக்கு இருந்த தைரியம் வேறு யாருக்கும் இல்லை. ஏனெனில், கண்ணை மூடிக்கொண்டு அந்தச் சகாவை நான் எவ்வாறு நம்பி வருகிறேன் என்பதை எல்லோரும் அறிவார்கள். இந்தச் சேவையைச் செய்வதற்கென்றே அச்சமையற்காரர் அனுப்பப்பட்டது போல் இருந்தது. ஏனெனில் அக்கணத்திலேயே தாம் போய்விடப் போவதாக என்னிடம் அவர் அனுமதி கேட்டார்.

     “நான் உங்கள் வீட்டில் இருக்க முடியாது. உங்களைச் சுலபமாகப் பிறர் ஏமாற்றி விடுகிறார்கள். இது எனக்கு ஏற்ற இடம் அல்ல” என்று சமையற்காரர் கூறினார். அவர் போக அனுமதியும் கொடுத்துவிட்டேன்.

     குமாஸ்தாவைக் குறித்து சந்தேகம் ஏற்படும்படி செய்ததும் இந்த என் சகாவைத் தவிர வேறு யாரும் அல்ல என்பதையும் இப்பொழுது கண்டு கொண்டேன். குமாஸ்தாவுக்கு நான் செய்துவிட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட எவ்வளவோ கஷ்டப்பட்டு முயன்றேன். அவருக்கு முற்றும் திருப்தி ஏற்படும்படி செய்ய முடியாது போனது எனக்கு நிரந்தரமான துக்கமாக இருந்து வருகிறது. ஒருமுறை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு என்னதான் ஒட்டுப்போட்டாலும், பிளவு பிளவுதான்.

 

  • 24. தாய் நாடு நோக்கி

 

நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, இப்பொழுது மூன்று ஆண்டுகள் ஆயின. அங்கிருந்த மக்களை நான் தெரிந்து கொண்டேன். அவர்களும் என்னை அறிந்து கொண்டார்கள். அங்கே நான் நீண்டகாலம் தங்க வேண்டியிருக்குமென்று கண்டதால் ஆறு மாதங்களுக்கு தாய்நாடு போய்வர 1896-ல் நான் அனுமதி கேட்டேன். வக்கீல் தொழிலும் நன்றாகவே நடந்து வந்தது. நான் இருக்க வேண்டியது அவசியம் என்று மக்கள் உணர்ந்தனர் என்பதையையும் கண்டேன். ஆகவே, தாய் நாட்டிற்குச் சென்று, மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து, அங்கேயே தங்குவது என்று தீர்மானித்துக் கொண்டேன். மேலும், தாய் நாட்டிற்குச் சென்றால், விஷயங்களைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூறித் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இந்தியர் சம்பந்தமாக அவர்களுக்கு அதிகச் சிரத்தை உண்டாகும்படி செய்து, ஏதாவது பொதுவேலை செய்யலாம் என்றும் நினைத்தேன். மூன்று பவுன் வரி, ஆறாப் புண்ணாக இருந்து வந்தது. அது ரத்துச் செய்யப்படும் வரையில் அமைதி கிட்டுவதற்கில்லை.

 

     ஆனால், நான் இல்லாதபோது காங்கிரஸின் வேலைகளையும், கல்விச் சங்கத்தையும் ஏற்று நடத்துவது யார்? இதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக ஆதம்ஜி மியாகான், பார்ஸி ருஸ்தம்ஜி ஆகிய இருவரையே நான் நினைக்க முடியும். வர்த்தகர்கள் வகுப்பில் பொது வேலையில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் அப்போது பலர் இருந்தனர். ஆனால் அவர்களில் ஓழுங்காக வேலை செய்து காரியதரிசியின் கடமையை நிறைவேற்றக் கூடியவர்களும், இந்தியர் சமூகத்தின் மதிப்பைப் பெற்றிருந்தவர்களும் அந்த இருவருமே. காரியதரிசியாக இருப்பவருக்கு ஓரளவு ஆங்கிலம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். காங்கிரஸுக்குக் காலஞ் சென்ற ஆதம்ஜி மியாகானின் பெயரைச் சிபாரிசு செய்தேன். அவரைக் காரியதரிசியாக நியமிப்பதைக் காங்கிரஸும் அங்கீகரித்தது. அவரைத் தேர்ந்தெடுத்தது மிகவும் சரியானது என்பது பிறகு அனுபவத்தினால் தெரிந்தது. ஆதம்ஜி மியாகான், விடாமுயற்சி உள்ளவர் தாராளமானவர், இனிய தன்மையுள்ளவர், மரியாதையுள்ளவர். அந்த நற்குணங்களால் அவர் எல்லோருக்கும் திருப்தியளித்தார். அதோடு காரியதரிசி வேலைக்குப் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரோ, அதிகமாக ஆங்கிலம் படித்தவரோ தேவையில்லை என்பதையும் அவர் எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டி விட்டார்.

 

     1896-ஆம் ஆண்டு மத்தியில் கல்கத்தாவுக்குச் சென்ற, பொங்கோலோ என்ற கப்பலில் நான் தாய் நாட்டிற்குப் புறப்பட்டேன்.

 

     கப்பலில் பிரயாணிகள் குறைவாகவே இருந்தனர். அவர்களில் இருவர் ஆங்கில அதிகாரிகள். அவர்களுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டாயிற்று. அவர்களில் ஒருவருடன் தினம் ஒரு மணி நேரம் சதுரங்கம் விளையாடுவேன். கப்பல் டாக்டர் எனக்கு, ‘தமிழ்ச் சுயபோதினி’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் படிக்க ஆரம்பித்தேன். முஸ்லீம்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமாயின், உருது மொழி தெரிந்திருப்பதும், சென்னை இந்தியருடன் நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம் என்பதை நேட்டால் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

 

     அந்த ஆங்கில நண்பரும் என்னுடன் உருது படித்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில், மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளிடையே ஒரு நல்ல உருது முன்ஷியைக் கண்டு பிடித்தேன். எங்களுடைய இப்படிப்பில் நல்ல முன்னேற்றமும் கண்டோம். அந்த அதிகாரிக்கு என்னை விட ஞாபக சக்தி அதிகம். ஒரு சொல்லைப் பார்த்து விட்டால் பிறகு அதை அவர் மறக்கவே மாட்டார். உருது எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. அதிக விடா முயற்சியுடனேயே நான் படித்தேன். ஆனால், அந்த அதிகாரியை மிஞ்சிவிட முடியவே இல்லை.

 

     தமிழிலோ, நல்ல அபிவிருத்தி அடைந்து வந்தேன். இதைச் சொல்லிக் கொடுக்க யார் உதவியும் கிடைக்கவில்லை. ஆனால் ‘தமிழ்ச் சுயபோதினி’ நன்றாக எழுதப்பட்ட புத்தகம் இன்னொருவர் உதவி அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

 

     இந்தியாவுக்குப் போய் சேர்ந்த பிறகும், இம் மொழிகளைத் தொடர்ந்து படிக்கலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால், அது சாத்தியமில்லாது போயிற்று. 1893-க்குப் பிறகு நான் அதிகமாகப் படித்ததெல்லாம் சிறையிலேதான். சிறைகளில், தமிழிலும் உருதுவிலும் எனக்குக் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கச் சிறைகளில் தமிழ் படித்தேன். உருது படித்தது ஏராவ்டா சிறையில். ஆனால் தமிழ் பேசக் கற்றுக்கொள்ளவே இல்லை. நான் படித்த கொஞ்சம் தமிழும், பயிற்சி இன்மையால் துருப் பிடித்துக் கொண்டிருந்தது.

 

     தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை இன்னமும் நான் உணர்ந்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருந்த திராவிடர்கள் என் மீது பொழிந்த அன்பு இன்றும் எண்ணிப் போற்றுவதற்கு உரிய நினைவாக இருந்து வருகிறது. தமிழ் அல்லது தெலுங்கு நண்பர் ஒருவரை நான் காணும்போது, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அவர்களுடைய இனத்தினரான தமிழரும் தெலுங்கரும் காட்டிய விடா முயற்சியையும் தன்னலமற்ற தியாகத்தையும் நினைக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை. அவர்களில் பெரும் பாலானவர்கள் எழுத்து வாசனையே இல்லாதவர்கள். அவர்கள் பெண்களும் அப்படியே. இப்படிப்பட்டவர்களுக்காக நடந்ததே தென்னாப்பிரிக்கப் போராட்டம். எழுதப் படிக்கத் தெரியாத சிப்பாய்களே அப்போரில் ஈடுபட்டனர்; ஏழைகளுக்காக நடந்த போர் அது. அதில் அந்த ஏழைகள் முழுப் பங்கும் வகித்தனர். என் நாட்டினரான கள்ளங் கபடமற்ற அந்த நல்ல மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுவதற்கு, அவர்களுடைய மொழி எனக்குத் தெரியாதது ஓர் இடையூறாக இருந்ததே இல்லை. அரைகுறை ஹிந்துஸ்தானியோ, அரைகுறை ஆங்கிலமோ அவர்கள் பேசுவார்கள். அதைக் கொண்டு எங்கள் வேலைகளைச் செய்து கொண்டு போவதில் எங்களுக்குக் கஷ்டமே தோன்றியதில்லை. ஆனால், அவர்கள் என்னிடம் காட்டிய அன்புக்கு நன்றியறிதலாகத் தமிழும் தெலுங்கும் கற்றுக்கொண்டு விட வேண்டும் என்று விரும்பினேன். முன்பே நான் கூறியது போல், தமிழ்க் கல்வியில் கொஞ்சம் அபிவிருத்தியடைந்தேன். ஆனால், இந்தியாவில் தெலுங்கு கற்றுக் கொள்ள முயன்றும் நான் நெடுங்கணக்கை தாண்டி அப்பால் போகவில்லை. இம்மொழிகளை நான் இனி கற்றுக் கொள்ளவே முடியாது என்று இப்பொழுது அஞ்சுகிறேன். ஆகையால், திராவிடர்கள் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இவர்களில் ஆங்கிலம் தெரியாதவர்கள் தட்டுத்தடுமாறியேனும் ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி பேசுகிறார்கள். ஆங்கிலம் பேசுகிறவர்கள் மாத்திரமே, ஆங்கிலம் தெரிந்திருப்பது நமது சொந்த மொழிகளை அறிந்து கொள்ளுவதற்குத் தடையாக இருப்பது போல ஹிந்தி கற்றுக் கொள்ளுவதில்லை.

 

 

     நான் விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டேன். என் பிரயாண விவரத்தை கூறி முடித்து விடுகிறேன். ‘பொங்கோலா’க் கப்பலின் காப்டனை நான் உங்களுக்கு அறிமுகம் செய்த வைக்க வேண்டும். நாங்கள் நண்பர்கள் ஆனோம். அந்த நல்ல காப்டன், பிளிமத் சகோதரர்கள் என்ற கிறிஸ்தவ கோஷ்டியைச் சேர்ந்தவர். கப்பல் ஓட்டும் விஷயத்தைக் காட்டிலும், எங்கள் பேச்சு, அதிகமாக ஆன்மிக விஷயங்களைப் பற்றியதாகவே இருந்தது. ஒழுக்கத்திற்கும் சமயத்திற்கும் நடுவே அவர் ஒரு வரம்பை இட்டுவிட்டார். பைபிளில் கண்ட உபதேசங்கள் அவருக்குக் குழந்தை விளையாட்டாகத் தோன்றின. ‘அதன் அழகு அவற்றின் எளிமையிலேயே இருக்கிறது’ என்றார். ‘ஆண், பெண், குழந்தைகள் ஆகிய எல்லோரும் ஏசுநாதரிடமும் அவர் தியாகத்திலும் நம்பிக்கை வைக்கட்டும். அவர்கள் பாவங்களிலிருந்து நிச்சயம் விமோசனம் அடைவார்கள்’ என்றும் அவர் கூறுவார். பிரிட்டோரியாவில் இருந்த பிளிமத் சகோதரர்களின் நினைவு எனக்குத் திரும்ப வரும்படி இந்த நண்பர் செய்தார். ஒழுக்கச் கட்டுத் திட்டங்களை விதிக்கும் எந்த மதமும் பயனற்றது என்பது இவர் கருத்து. இந்த விவாதமெல்லாம் என்னுடைய சைவ உணவின் பேரில் எழுந்தவையே. மாமிசம் ஏன் திண்ணக் கூடாது மாட்டிறைச்சி தின்றால்தான் என்ன மோசம்? தாவர வர்க்கத்தை மனிதன் அனுபவிப்பதற்கென்றே கடவுள் படைத்திருக்கிறார். மிருகங்கள் போன்ற கீழ் உயிர் இனங்களையும் அதற்காகவே கடவுள் படைத்திருக்க வில்லையா? இந்தக் கேள்விகளெல்லாம் அநேகமாகச் சமய சம்பந்தமான விவாதத்தில் கொண்டு போய் விட்டன. எங்களில், ஒருவர் கருத்தை மற்றவரால் மாற்றிவிட முடியவில்லை. மதமும் ஒழுக்கமும் ஒன்றே என்ற கருத்தில் நான் உறுதியுடன் இருந்தேன். இதற்கு மாறுபட்டு, தாம் கொண்ட கருத்தே சரியானது என்பதில் காப்டனுக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

 

     இருபத்து நான்காம் நாள் முடிவில் இன்பகரமான அக்கப்பல் பிரயாணம் ஒரு முடிவுக்கு வந்தது. ஹூக்ளி நதியின் அழகைக் கண்டு வியந்தவண்ணம் நான் கல்கத்தாவில் இறங்கினேன். அன்றே பம்பாய் செல்ல ரெயில் ஏறினேன்.

 

  • 25. இந்தியாவில்

 

பம்பாய்க்குப் போகும் வழியில் ரெயில் அலகாபாத்தில் நாற்பத்தைந்து நிமிடங்கள் நின்றது. அந்த நேரத்தில் அந் நகரைச் சுற்றிப் பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். மருந்துக் கடையில் சில மருந்துகள் வாங்க வேண்டியிருந்தது. மருந்துக் கடைக்காரரோ தூங்கி விழுந்து கொண்டிருந்தார். நான் கேட்ட மருந்தை எடுத்துக் கொடுப்பதில் அநியாயமாக நேரம் கடத்தி விட்டார். இதன் பலன் என்னவென்றால், நான் ஸ்டேஷன் வந்து சேர்ந்த போது, அப்பொழுதுதான் ரயில் புறப்பட்டு போய் விட்டது. எனக்காக ஸ்டேஷன் மாஸ்டர் அன்போடு ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார். நான் வரவில்லை என்று தெரிந்ததும், உஷாராக என்னுடைய சாமான்களை ரெயிலிலிருந்து இறக்கி வைத்து விடும்படியும் செய்திருக்கிறார்.

 

     கெல்னர் கட்டிடத்தில் ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். என் வேலையை அப்பொழுதே ஆரம்பித்து விடுவது என்று தீர்மானித்தேன். அலகாபாத்திலிருந்து பிரசுரமாகும் ‘பயோனீர்’ பத்திரிகையைக் குறித்து நான் அதிகமாகக் கேள்விப்பட்டிருந்தேன். இந்தியரின் தேசியக் கோரிக்கைகளை எதிர்க்கும் பத்திரிகை அது என்றும் அறிந்து கொண்டிருந்தேன். அச்சமயம் ஸ்ரீ செஸ்னே (இளையவர்) அதன் ஆசிரியராக இருந்தார் என்று எனக்கு ஞாபகம். எல்லாக் கட்சியினரின் ஆதரவையும் பெற நான் விரும்பினேன். ஆகவே, ஸ்ரீ செஸ்னேக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். அதில், எனக்கு ரெயில் தவறிவிட்ட விவரத்தைக் கூறினேன். மறுநாள் வண்டிக்கு நான் புறப்படுவதற்கு முடியும் வகையில் சந்தித்து பேச என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் கோரினேன். சந்தித்துப் பேச உடனே அனுமதித்தார். மகிழ்ந்தேன். முக்கியமாக நான் கூறியதையெல்லாம் அவர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டதைக் குறித்து, நான் அதிக சந்தோஷம் அடைந்தேன். நான் என்ன எழுதினாலும் அதைக் குறித்துத் தம் பத்திரிகையில் அபிப்பிராயம் எழுதுவதாகவும் கூறினார். அதோடு இன்னும் ஒன்றும் கூறினார். ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கும் வெள்ளைக்காரர்களின் கருத்தையும் அறிந்து, அதற்குரிய மதிப்பையும் கொடுக்கத் தாம் கடமைப்பட்டிருப்பதால் இந்தியரின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஆதரிப்பதாகத் தாம் வாக்களிக்க முடியாது என்றார்.

 

     “இப் பிரச்னையை நீங்கள் கவனித்து, அதைக் குறித்துப் பத்திரிகையில் விவாதிப்பதே போதும். நான் கேட்பதும், அடைய விரும்புவதும் எங்களுக்கு உரிய நியாயமான உரிமைகளை மாத்திரமே அன்றி வேறு எதையும் அல்ல” என்றேன்.

 

     அன்றைய மீதிப் பொழுதை, ஊரைச் சுற்றிப் பார்ப்பதிலும், திரிவேணி சங்கமத்தின் அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்திப்பதிலும் கழித்தேன். என்னுடைய வேலைத் திட்டத்தைக் குறித்தும் சிந்தித்தேன்.

 

     எதிர்பாராத விதமாக நான் ‘பயோனீர்’ ஆசிரியரைச் சந்தித்துப் பேசியது, தொடர்ந்து நடந்த பல சம்பவங்களுக்கு அடிப்படை ஆயிற்று. இறுதியில் என்னை நேட்டாலில் அடித்துக் கொல்ல முயன்றதில் போய் இது முடிந்தது.

 

     பம்பாயில் தங்காமல் நேரே ராஜ்கோட்டிற்குச் சென்றேன். அங்கே தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து, ஒரு துண்டுப் பிரசுரத்தை எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன். அதை எழுதவும் அச்சிடவும் ஒரு மாதம் ஆயிற்று. அதற்குப் பச்சை நிற மேல் அட்டை போடப்பட்டது. ஆகவே அது ‘பச்சைத் துண்டுப் பிரசுரம்’ என்று வழங்கலாயிற்று. அதில், தென்னாப்பிரிக்க இந்தியரின் நிலையைக் குறித்து, வேண்டுமென்றே, அடக்கமாக, குறைத்தே கூறியிருந்தேன். முன்னால் நான் இரு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதாகக் கூறியிருக்கிறேன். அவற்றில் இருந்ததை விட இதில் நிதானமான பாஷையையே உபயோகித்திருந்தேன். ஏனெனில், ஒரு விஷயத்தைத் தூரத்திலிருந்து கேள்விப்படும் போது உள்ளதையும் விடப் பெரியதாகவே அது தோன்றி விடுகிறது என்பதை நான் அறிவேன்.

 

     பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டேன். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் பத்திரிகைகளுக்கும் தலைவர்களுக்கும் அதை அனுப்பினேன். அதைக் குறித்து முதலில் தலையங்கம் எழுதிய பத்திரிகை, ‘பயோனீர்’. அத் தலையங்கத்தின் சுருக்கத்தை ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் இங்கிலாந்துக்குத் தந்தி மூலம் அனுப்பியது. அந்தச் சுருக்கத்திற்கு ஒரு சுருக்கத்தை ராய்ட்டரின் லண்டன் காரியாலயம் நேட்டாலுக்கு அனுப்பிற்று. அந்தத் தந்தி, அச்சில், மூன்று வரிக்கு மேல் இல்லை. செய்தி, அவ்வளவு சிறியதாக இருந்தாலும், நேட்டாலில் இந்தியர்கள் நடத்தப்படும் விதத்தைக் குறித்து, நான் கூறியதை அச் செய்தி மிகைப்படுத்திக் கூறுவதாக இருந்தது. மேலும், அச் செய்தி என் வார்த்தைகளைக் கொண்டு வரையப்பட்டதாகவும் இல்லை. நேட்டாலில் இதன் விளைவு என்னவாயிற்று என்பதைப் பிறகு கவனிப்போம். இதற்கு மத்தியில், முக்கியமான பத்திரிகைகள் எல்லாமே இப் பிரச்னையைக் குறித்து, விரிவாக அபிப்பிராயங்கள் கூறின.

 

     இத் துண்டுப் பிரசுரங்களைத் தபாலில் அனுப்புவதற்குத் தயார் செய்வது சுலபமான வேலையே அல்ல. இவற்றைக் காகிதம் போட்டுச் சுற்றி அனுப்புவது போன்ற வேலைகளுக்குக் கூலி கொடுத்து ஆள் அமர்த்தினால் அதிகச் செலவு ஆகியிருக்கும். ஆகவே, மிக எளிதான உபாயம் ஒன்றைக் கண்டுபிடித்தேன். பக்கத்தில் இருந்த குழந்தைகளையெல்லாம் திரட்டினேன். பள்ளிக்கூடம் இல்லாதபோது காலையில் இரண்டு, மூன்று மணி நேர உழைப்பை வலிய அளிக்க முன்வருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அப்படியே செய்ய அவர்கள் மனம் உவந்து ஒப்புக் கொண்டார்கள். அவர்களை வாழ்த்தி, நான் சேர்த்து வைத்திருந்த பழைய தபால் ஸ்டாம்புகளை அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதாகவும் கூறினேன். குழந்தைகள் கொஞ்ச நேரத்தில் வேலையை முடித்து விட்டார்கள். சிறு குழந்தைகளைத் தொண்டர்களாக உபயோகிப்பதில் இதுவே என் முதல் பரீட்சை. அக் குழந்தைகளில் இருவர் இன்று என் சக ஊழியர்களாக இருக்கின்றனர்.

 

     அச் சமயம் பம்பாயில் பிளேக் நோய் பரவியது. இதனால், சுற்றுப்புறங்களில் எல்லாம் ஒரே பீதி ஏற்பட்டது. ராஜ்கோட்டிலும் அந்த நோய் பரவிவிடும் என்ற பயம் இருந்தது. சுகாதார இலாகாவுக்கு நானும் கொஞ்சம் உதவியாக இருக்கலாம் என்று எண்ணினேன். சேவை செய்யத் தயார் என்று அரசாங்கத்திற்கு அறிவித்தேன். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். அதன் பேரில் இது சம்பந்தமாகக் கவனிக்க நியமித்த ஒரு கமிட்டியில் என்னையும் சேர்த்தனர். கக்கூசுகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நான் முக்கியமாக வற்புறுத்தினேன். ஒவ்வொரு தெருவிலும் கக்கூசுகள் இருக்கும் நிலையைப் போய்ப் பார்வையிடுவது என்று கமிட்டி முடிவு செய்தது. தங்கள் கக்கூசுகளைப் போய்ப் பார்ப்பதை, ஏழைகள் ஆட்சேபிக்கவில்லை. நாங்கள் கூறிய யோசனைகளையும் அவர்கள் நிறைவேற்றிக் கக்கூசுகளைச் சுத்தமாக வைத்தனர். ஆனால், பணக்காரர்கள் வீட்டுக் கக்கூசுகளைப் பார்க்க நாங்கள் சென்றபோது, அவர்களில் சிலர், நாங்கள் அவற்றைப் பார்க்க அனுமதிக்கக்கூட மறுத்து விட்டனர். அப்படியிருக்க, நாங்கள் கூறிய யோசனையை அவர்கள் காது கொடுத்துக் கேட்டார்களா என்பதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பணக்காரர்கள் வீட்டுக் கக்கூசுகளே அதிக ஆபாசமாக இருந்தன என்பது எங்கள் பொதுவான அனுபவம். அவை இருண்டிருந்தன; ஒரே துர் நாற்றம்; ஒரே ஆபாசம், புழுக்களும் நெளிந்து கொண்டிருந்தன. செய்யுமாறு நாங்கள் கூறிய அபிவிருத்திகள் மிகச் சுலபமானவை. அதாவது, கழிக்கும் மலம் தரையில் விழாதவாறு அதற்குத் தொட்டி வைக்குமாறு கூறினோம். மூத்திரமும் தரையில் விழுந்து, அந்த இடம் ஒரே ஈரம் ஆகிவிடாமல் அதையும் தொட்டியில் பிடிக்கும்படி சொன்னோம். கக்கூசுகளில் வெளிச்சமும் காற்றோட்டமும் இருப்பதற்காகவும், அவற்றைத் தோட்டி நன்றாகச் சுத்தம் செய்வதற்கு வசதியாக இருப்பதற்காகவும் வெளிச் சுவருக்கும் கக்கூசுக்கும் மத்தியில் இருக்கும் சிறு சிறு தடுப்புக்களையெல்லாம் இடித்து விடுமாறும் கேட்டுக் கொண்டோம். இந்தக் கடைசிச் சீர்திருத்தத்திற்குப் பணக்காரர்கள் ஏராளமான ஆட்சேபங்களைக் கூறினார்கள். அநேகர் நாங்கள் கூறியதைப் பின் பற்றி எதுவுமே செய்யவில்லை.

 

     தீண்டாதார் குடியிருந்த வீடுகளையும் கமிட்டி போய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அங்கே என்னுடன் வருவதற்குக் கமிட்டி அங்கத்தினர்களில் ஒருவர் மாத்திரமே தயாராக இருந்தார். மற்றவர்களோ, அவ்வீடுகளுக்குப் போவது என்பதே மகா பாதகமான காரியம் என்று நினைத்தனர். அதிலும், அவர்களுடைய கக்கூசைப் போய்ப் பார்ப்பது, இன்னும் அதிக மோசமானது என்று எண்ணினர். ஆனால், அவ்வகுப்பினரின் இருப்பிடங்களைப் பார்த்ததும் நான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அத்தகைய பகுதிகளுக்கு நான் சென்றது அதுதான் முதல் தடவை. அங்கிருந்த ஆண்களும் பெண்களும் நாங்கள்வந்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அவர்களுடைய கக்கூசுகளைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டேன். “எங்களுக்கும் கக்கூசுகளா!” என்று அவர்கள் வியந்தார்கள். பிறகு, வெளியே திறப்பான இடங்களில் நாங்கள் போய் மலஜலம் கழித்து விடுவோம். உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்கல்லவா கக்கூசு!” என்றனர்.

 

     “சரி, அப்படியானால் உங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் பார்ப்பதைப்பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இல்லை அல்லவா?” என்று கேட்டேன்.

 

     “நன்றாக வாருங்கள்; வந்து பாருங்கள், ஐயா. எங்கள் வீடுகளின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் நீங்கள் பார்க்கலாம். எங்கள் வீடுகள், வீடுகளா? அவை வளைகள்!” என்றனர்.

 

     உள்ளே போனேன். வெளிப்புறத்தில் இருப்பதைப் போலவே உள்ளேயும் சுத்தமாக இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன். வாசல்களையும் நன்றாக வைத்து இருந்தனர். தரையைச் சாணம் கொண்டு அழகாக மெழுகி இருந்தனர். அங்கே இருந்த பானைகளும் தட்டுகளும் கொஞ்சம்தான். என்றாலும் அவை சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தன. அப்பகுதியில் பிளேக் நோய் பரவிவிடும் என்ற பயமே இல்லை.

 

     மேல் சாதியினர் வசிக்கும் பகுதியில் நாங்கள் ஒரு கக்கூசைப் பார்த்தோம். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லாமல் இருப்பதற்கு இல்லை. வீட்டின் ஒவ்வோர் அறைக்கும் ஒரு ஜலதாரை இருந்தது. தண்ணீர் விடவும் மூத்திரம் கழிக்கவும் அந்த ஜலதாரை உபயோகிக்கப்பட்டது. அதனால் வீடு முழுவதுமே துர்நாற்றம் இருக்கும். நாங்கள் பார்த்த வீடுகள் ஒன்றில், மாடியிலிருந்த ஒரு படுக்கை அறையையும் பார்த்தோம். அதிலிருந்த ஜலதாரை, மலஜலம் இரண்டும் கழிக்கக் கக்கூசாக உபயோகிக்கப்பட்டு வந்தது. அந்த ஜலதாரை கீழே போக ஒரு குழாயும் இருந்தது. அந்த அறையிலிருந்த துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு அங்கே நிற்கவே முடியவில்லை. அங்கே எப்படித்தான் படுத்துத் தூங்குகிறார்கள் என்பதை வாசகர்களே சிந்தித்துப் பார்த்துக்கொள்ள விட்டுவிடுகிறேன்.

 

 

     வைஷ்ணவக் கோயிலுக்கும் கமிட்டி போய்ப் பார்த்தது. அந்தக் கோயிலின் அர்ச்சகர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர். ஆகவே, எல்லாவற்றையும் பார்த்து, நாங்கள் செய்ய விரும்பும் சீர்திருத்தங்களைக் கூறலாம் என்று அவர் ஒப்புக்கொண்டார். அக்கோயிலின் ஒரு பகுதியை அவர் கூடப் பார்த்ததே இல்லை. அந்த இடத்தில் தான் குப்பை கூளங்களையும் எச்சில் இலைகளையும் சுவரைத் தாண்டி வீசிப்போட்டு விடுவது வழக்கம். காக்கைகளும் பருந்துகளும் அங்கே எப்பொழுதும் இருந்து வந்தன. கக்கூசுகளும் மிக ஆபாசமாக இருந்தன. நாங்கள் கூறிய யோசனைகளை எவ்வளவு தூரம் அந்த அர்ச்சகர் நிறைவேற்றிவைத்தார் என்பதைப் பார்க்க நான் அதிக நாட்கள் ராஜ்கோட்டில் இல்லை.

 

     கடவுளை வழிபடும் இடங்களில் கூட அவ்வளவு அசுத்தங்கள் இருப்பதைக் கண்டு மனவேதனைப்பட்டேன். தெய்வீகமானது என்று கருதப்படும் ஓர் இடத்தில் சுகாதார விதிகள் கவனமாக நிறைவேற்றப் பட்டிருக்கும் என்றே யாரும் எதிர்பார்ப்பார்கள். அகம், புறம் ஆகிய இரு தூய்மைகளும் இருக்க வேண்டியது முக்கியம் என்று ஸ்மிருதி கர்த்தாக்கள் மிகவும் வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள் என்பதை அப்பொழுதே நான் அறிந்திருந்தேன்.

 

  • 26. இரு ஆர்வங்கள்

 

  பிரிட்டிஷ் அரசியல் முறைகளிடம் எனக்கு இருந்த அவ்வளவு விசுவாசத்தைப்போல் வேறு யாருக்கும் இருந்ததாக நான் அறிந்ததில்லை. சத்தியத்தினிடம் எனக்கு இருந்த பற்றே இத்தகைய விசுவாசத்திற்கு அடிப்படையாக இருந்தது என்பதை நான் அப்பொழுது காண முடிந்தது. விசுவாசமோ, வேறு ஒரு நற்குணமோ என்னிடம் இருப்பதாக நடிப்பது என்பது மாத்திரம் என்னால் என்றுமே ஆகாது. நேட்டாலில் நான் போகும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ராஜ வாழ்த்துக் கீதம் பாடப்படும். அதைப் பாடுவதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று அப்பொழுது நான் எண்ணினேன். பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் குறைகளை நான் அறியவில்லை என்பதல்ல. ஆனால், மொத்தத்தில் பார்த்தால் அந்த ஆட்சி, ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்று நினைத்தேன். பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சி, ஆளப்படுவோருக்கு நன்மையானது என்றும் அந்த நாட்களில் நம்பினேன்.

 

     தென்னாப்பிரிக்காவில் நிற வெறியைக் கண்டேன். ஆனால் அது பிரிட்டிஷ் பாரம்பரிய குணத்திற்கு மாறுபட்டது என்று கருதினேன். அது தற்காலிகமானது, தென்னாப்பிரிக்காவில் மாத்திரம் இருப்பது என்று நம்பினேன். ஆகையால், ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக்கொண்டு, மன்னரிடம் விசுவாசம் காட்டினேன். ராஜவாழ்த்துக் கீதத்தின் மெட்டைக் கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் கற்றுக்கொண்டேன். அக்கீதம் பாடப்படும் போதெல்லாம் நானும் சேர்ந்து பாடி வந்தேன். ஆர்பாட்டமும் வெளிப்பகட்டும் இல்லாமல் ராஜவிசுவாசத்தைத் தெரிவிக்கும் சமயம் வந்த போதெல்லாம் அதில் நானும் தயங்காது பங்குகொண்டேன்.

 

     இந்த விசுவாசத்தை என் வாழ்க்கையில் என்றுமே நான் பயன்படுத்திக் கொண்டதில்லை. அதைக் கொண்டு சுய லாபத்தை அடைவதற்கு நான் என்றும் நாடியதும் இல்லை. விசுவாசம் காட்ட வேண்டியது என் அளவில் ஒரு கடமையாகவே இருந்தது. வெகுமதி எதையும் எதிர்பாராமல் அதை நான் காட்டி வந்தேன்.

 

     நான் இந்தியாவுக்கு வந்தபோது, விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராஜ்கோட்டில் இதற்காக அமைக்கப்பட்டிருந்த கமிட்டியில் சேருமாறு என்னை அழைத்தார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால், கொண்டாட்டம் பெரும்பாலும் பகட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வெளி வேஷமாகவே காரியங்கள் நடந்ததைக் கண்டு, மனவருத்தம் அடைந்தேன். ‘கமிட்டியில் நான் இருக்க வேண்டுமா?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், முடிவாக, நான் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டுபோவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

 

     விழாவை ஒட்டிச் செய்யப்பட்ட யோசனைகளில் ஒன்று, மரம் நடுவது என்பது. அநேகர் இதைப் பகட்டுக்காகவும் அதிகாரிகளைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற்காகவும் செய்ததைக் கண்டேன். மரம் நடுவது, கட்டாயமானது அல்ல என்றும், அது ஒரு யோசனையே என்றும் அவர்களிடம் நான் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். செய்வதானால் சரியாகச் செய்யவேண்டும்; இல்லா விட்டால் சும்மா இருந்துவிட வேண்டும். என் கருத்தைக் கேட்டு அவர்கள் நகைத்தார்கள் என்றே எனக்கு ஞாபகம். என் பங்குக்கு ஏற்பட்ட மரத்தை நான் உண்மையான சிரத்தையுடனேயே நட்டு, ஜாக்கிரதையாகத் தண்ணீர் ஊற்றியும் வளர்த்தேன் என்பது எனக்கு நினைவு இருக்கிறது.

 

     அதேபோல என் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜவாழ்த்துக் கீதம் பாடக்கற்றுக் கொடுத்தேன். உள்ளூர்ப் போதனாமுறைக் கல்லூரி மாணவர்களுக்கும் அதை நான் சொல்லிக் கொடுத்தது நினைவிருக்கிறது. ஆனால் அப்படி நான் சொல்லிக் கொடுத்தது ஜுபிளி சமயத்திலா அல்லது இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஏழாம் எட்வர்டுக்கு முடி சூட்டு விழா நடந்தபோதா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. பிற்காலத்தில் அப் பாடலின் அடிகள் எனக்கு அருவருப்பை உண்டாக்கின. அகிம்சையைப் பற்றிய என் எண்ணங்கள் வளர்ச்சியடையவே, நான் எண்ணுவதிலும் பேசுவதிலும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தேன்.

 

 

     ‘அவள் விரோதிகளைச் சிதறடித்து

     அவர்கள் வீழ்ச்சியடையச் செய்யும்;

     அவர்களது ராஜ்யம் குழப்பமடைந்து

     வஞ்சகமான அவர்கள் தந்திரங்கள் நிறைவேறாது செய்யும்’

 

     முக்கியமாக அந்தக் கீதத்தின் மேற்கண்ட வரிகளே அகிம்சையைப் பற்றிய என் உணர்ச்சிக்கு முரணாக இருந்தன. என் அபிப்பிராயத்தை டாக்டர் பூத்திடம் தெரிவித்தேன். அகிம்சையில் நம்பிக்கையுள்ள ஒருவர், அந்த வரிகளைப்பாடுவது சரியல்ல என்பதை அவரும் ஒப்புக்கொண்டார். ‘விரோதிகள்’ என்று சொல்லப்படுகிறவர்கள், ‘வஞ்சகர்’களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக்கொள்ளுவது? விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா? ஆண்டவனிடமிருந்து நாம் நீதியையே கேட்கலாம். டாக்டர் பூத் என் உணர்ச்சிகளைப் பூரணமாக அங்கீகரித்தார். தமது பிரார்த்தனைக் கூட்டத்திற்கு என்று புதியதொரு ராஜ வாழ்த்துக்கீதத்தையும் இயற்றினார். டாக்டர் பூத்தைக் குறித்து மேற்கொண்டும் பிறகு கவனிப்போம்.

 

     ராஜவிசுவாசத்தைப் போலவே, நோயுற்றிருப்போருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்ற ஆர்வமும் என் சுபாவத்திலேயே ஆழ வேர்விட்டிருந்தது. நண்பர்களாக இருக்கட்டும், முன் பின் தெரியாதவர்களாக இருக்கட்டும்; பிறருக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு ஆசை அதிகம்.

 

     தென்னாப்பிரிக்க இந்தியர் சம்பந்தமான துண்டுப் பிரசுர வேலையில் நான் ராஜ்கோட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம், பம்பாய்க்கு உடனே போய்த் திரும்ப வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டது. தென்னாப்பிரிக்க இந்தியர் விஷயமாக நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்திப் பொதுமக்கள் அந்த நிலைமையை அறியும்படி செய்யவேண்டும் என்பது என் நோக்கம். இதற்கு முதல் நகரமாகப் பம்பாயைத் தேர்ந்தெடுத்தேன். முதலில், நீதிபதி ரானடேயைச் சந்தித்தேன். நான் சொன்னதை அவர் கவனமாகக் கேட்டுக்கொண்டார். ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைச் சந்திக்குமாறு கூறினார். அடுத்தபடியாக நான் சந்தித்த நீதிபதியான பத்ருதீன் தயாப்ஜியும் அதே யோசனைதான் கூறினார். “நீதிபதி ரானடேயும் நானும் உங்களுக்கு, அதிகமாக எந்த உதவியும் செய்வதற்கு இல்லை. எங்கள் நிலைமையை நீங்கள் அறிவீர்கள். பொது விஷயங்களில் நாங்கள் தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளுவதற்கில்லை. ஆனால், எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்களுக்குச் சரியானபடி வழிகாட்டக் கூடியவர், ஸர் பிரோஸ்ஷா மேத்தாவே” என்றார்.

 

     நிச்சயமாக நானும் ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைப் பார்க்க வேண்டும் என்றுதான் இருந்தேன். அவர் யோசனைப்படி நடந்து கொள்ளுமாறு இப் பெரியவர்கள் எனக்குப் புத்திமதி கூறியது, பொதுமக்களிடையே ஸர் பிரோஸ்ஷாவுக்கு இருந்த மகத்தான செல்வாக்கை நான் நன்றாக அறிந்துகொள்ளும்படி செய்தது. பிறகு அவரிடம் சென்றேன். அவர் முன்னிலையில் பயத்தால் திகைத்து நின்றுவிட நான் தயாராக இருந்தேன். பொதுமக்கள் அவருக்குக் கொடுத்திருந்த பட்டங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ‘பம்பாயின் சிங்கத்தை’, ‘மாகாணத்தின் முடி சூடா மன்னரை’ நான் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதையும் அறிவேன். ஆனால், ‘மன்னர்’ முன்னெச்சரிக்கையுடன் என்னை அடக்கி விடவில்லை. அன்புமிக்க ஒரு தந்தை, தம்முடைய வயது வந்த மகனை எவ்விதம் சந்திப்பாரோ அவ்வாறே என்னை அவர் சந்தித்தார். நான் அவரைச் சந்தித்தது, ஹைகோர்ட்டில். அவர் காரியாலயத்தில் பல நண்பர்களும் சீடர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஸ்ரீ டி.ஈ. வாச்சாவும் ஸ்ரீ காமாவும் அங்கே இருந்தனர். ஸர் பிரோஸ்ஷா மேத்தா, அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ரீ வாச்சாவைக் குறித்து முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஸர் பிரஸ்ஷாவுக்கு அவர் வலக்கரம் போன்றவர் என்று கருதப்பட்டு வந்தார். புள்ளி விவரங்களில் அவர் பெரிய நிபுணர் என்று ஸ்ரீ வீரசந்திர காந்தி எனக்குச் சொல்லியிருக்கிறார். “காந்தி, நாம் திரும்பவும் சந்திக்க வேண்டும்” என்றார் ஸ்ரீ வாச்சா.

 

     இவ்விதம் அறிமுகம் செய்து வைத்ததெல்லாம் இரண்டே நிமிஷங்களில் முடிந்து விட்டது. நான் கூறியதையெல்லாம் ஸர் பிரோஸ்ஷா கவனமாகக் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் ரானடேயையும் தயாப்ஜியையும் நான் பார்த்தேன் என்றும் சொன்னேன். “காந்தி, உமக்கு நான் உதவி செய்தாக வேண்டும் என்பதைக் காண்கிறேன். இங்கே நான் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்” என்று சொல்லி விட்டுத் தம் காரியதரிசி ஸ்ரீமுன்ஷியைப் பார்த்து, கூட்டத்திற்குத் தேதியை நிச்சயிக்கும்படி கூறினார். தேதியும் முடிவாயிற்று. பொதுக்கூட்டத்திற்கு முதல் நாள், தம்மை வந்து பார்க்கும்படி கூறி, எனக்கு அவர் விடை கொடுத்து அனுப்பினார். இந்தச் சந்திப்பு அவரிடம் எனக்கிருந்த பயத்தைப் போக்கிவிட்டது. குதூகலத்துடன் வீடு திரும்பினேன்.

 

     இச்சமயம் பம்பாயில் இருந்தபோது அங்கே நோயுற்றிருந்த என் மைத்துனரைப் பார்க்கப் போனேன். அவர் வசதியுடையவர் அல்ல. என் சகோதரி (அவர் மனைவி) யாலும் அவருக்குப் பணிவிடை செய்யமுடியவில்லை. நோயோ கடுமையானது. அவரை ராஜ்கோட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவதாகக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். எனவே என் சகோதரியுடனும் அவர் கணவரோடும் நான் வீடு திரும்பினேன். நான் எதிர்பார்த்ததை விட அவருடைய நோய் அதிக நாள் நீடித்திருந்தது. என் மைத்துனரை என் அறையில் தங்கச் செய்து, இரவும் பகலும் அவருடனேயே இருந்தேன். இரவில் பாதி நேரம் நான் விழித்திருக்க வேண்டியிருந்தது. அவருக்குப் பணிவிடை செய்து கொண்டே என் தென்னாப்பிரிக்க வேலைகள் சிலவற்றையும் நான் செய்ய வேண்டியிருந்தது. முடிவாக நோயாளி இறந்து விட்டார். ஆனால், அவருடைய கடைசி நாட்களில் அவருக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது, எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

 

 

     நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு இருந்த விருப்பு, நாளாவட்டத்தில் அடங்காத அவாவாக வளர்ந்து விட்டது. இதன் பலனாக நான் என்னுடைய மற்ற வேலைகளைப் பல சமயங்களில் சரிவரக் கவனிப்பதில்லை. சில சமயம் இவ்விதப் பணிவிடை செய்வதில் என் மனைவிக்கும் வேலை கொடுத்து, வீட்டிலிருந்த எல்லோரையும் அவ் வேலையில் ஈடுபடுத்திவிடுவேன்.

 

     ஒருவர் இத்தகைய சேவையைச் செய்வதில் இன்பம் கொண்டாலன்றி இதைச் செய்வதில் அர்த்தமே இல்லை. வெளிப்பகட்டுக்காகவோ, பொதுஜன அபிப்பிராயத்திற்குப் பயந்தோ இதைச் செய்வதாயின், அப்படிச் செய்பவரின் ஆன்ம வளர்ச்சியை அது குன்றச் செய்து, உணர்ச்சியையும் நசுக்கி விடுகிறது. சந்தோஷம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை; சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடைமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப்போகின்றன.

 


27. பம்பாய்க் கூட்டம்

 

 என் மைத்துனர் இறந்த அன்றே பொதுக் கூட்டத்திற்காக நான் பம்பாய் போக வேண்டியிருந்தது. நான் அங்கே செய்ய வேண்டிய பிரசங்கத்தைக் குறித்துச் சிந்திக்கக்கூட எனக்கு அவகாசம் இல்லை. இரவும் பகலும் கவலையுடன் விழித்திருக்க நேர்ந்ததால், நான் களைத்துப் போனேன். தொண்டையும் கம்மிப் போயிருந்தது. என்றாலும், கடவுளிடமே முழு நம்பிக்கையையும் வைத்து, நான் பம்பாய்க்குப் போனேன். என் பிரசங்கத்தை முன்னாலேயே எழுத வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் எண்ணவில்லை.

     ஸர் பிரோஸ்ஷா கூறியிருந்தபடி, பொதுக் கூட்டம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு, அவர் காரியாலயத்திற்குப் போனேன்.

     “காந்தி, உமது பிரசங்கம் தயாராக இருக்கிறதா?” என்று அவர் என்னைக் கேட்டார்.

     “இல்லை, ஐயா. ஞாபகத்தில் இருந்தே கூட்டத்தில் பேசி விடலாம் என்று இருக்கிறேன்” என்று நான் நடுங்கிக் கொண்டே சொன்னேன்.

     “பம்பாயில் அது சரிப்படாது” இங்கே நிருபர்கள் பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்புவது மோசமாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தினால் நாம் பயனடைய வேண்டுமாயின், உமது பிரசங்கத்தை நீர் எழுதி விட வேண்டும். அதோடு நாளை விடிவதற்குள் அதை அச்சிட்டும் விட வேண்டும். இதைச் செய்துவிட உம்மால் முடியும் என்றே நம்புகிறேன்” என்றார்.

     எனக்கு ஒரே நடுக்கம் எடுத்துவிட்டது. என்றாலும் முயல்வதாகச் சொன்னேன்.

     “அப்படியானால், கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொள்ள ஸ்ரீ முன்ஷி உம்மிடம் எந்த நேரத்திற்கு வரவேண்டும் என்பதைச் சொல்லும்” என்றார்.

     “இரவு பதினொரு மணிக்கு” என்றேன்.

     அடுத்த நாள் கூட்டத்திற்குப் போனதும், ஸர் பிரோஸ்ஷா கூறிய யோசனை, எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதைக் கண்டு கொண்டேன். ஸர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் இன்ஸ்டிடியூட் மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒரு கூட்டத்தில் ஸர் பிரோஸ்ஷா மேத்தா பேசுகிறார் என்றால் எப்பொழுதுமே மண்டபம் நிறைந்துவிடும். அவர் பிரசங்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முக்கியமாக மாணவர்கள், எள் விழவும் இடமின்றி வந்து கூடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் அனுபவத்தில் அப்படிப்பட்ட முதல் கூட்டம் இதுதான். நான் பேசுவது, சிலருக்கு மாத்திரமே கேட்கும் என்பதைக் கண்டேன். என் பிரசங்கத்தைப் படிக்க ஆரம்பித்ததுமே என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. உரக்க, இன்னும் கொஞ்சம் உரக்கப் பேசும்படி கூறி ஸர் பிரோஸ்ஷா தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது என்னை உற்சாகப் படுத்துவதற்குப் பதிலாக, என் தொனி மேலும் மேலும் குறைந்து கொண்டு போகும்படியே செய்தது என்பது என் ஞாபகம்.

     எனது பழைய நண்பர் ஸ்ரீ கேசவராவ் தேஷ்பாண்டே என்னைக் காப்பாற்ற வந்தார். என் பிரசங்கத்தை அவர் கையில் கொடுத்து விட்டேன். அவர் பேச்சுத் தொனிதான் ஏற்ற தொனி. ஆனால், கூடியிருந்தவர்களோ, அவர் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டனர். ‘வாச்சா!’ ‘வாச்சா!’ என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. ஆகவே, ஸ்ரீ வாச்சா எழுந்து என் பிரசங்கத்தைப் படித்தார். அற்புதமான பலனும் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் முற்றும் அமைதியோடு இருந்து, பிரசங்கத்தைக் கேட்டார்கள். அவசியமான இடங்களில் கரகோஷமும், ‘வெட்கம்!’ என்ற முழக்கமும் செய்தார்கள். இது என் உள்ளத்துக்குக் குதூகலம் அளித்தது.

     பிரசங்கம் ஸர் பிரோஸ்ஷாவுக்குப் பிடித்திருந்தது. நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.

     ஸ்ரீ தேஷ்பாண்டே, ஒரு பார்ஸி நண்பர் ஆகியவர்களின் ஆதரவை இக்கூட்டம் எனக்குத் தேடித் தந்தது. அந்தப் பார்ஸி நண்பர் இன்று உயர்தர அரசாங்க அதிகாரியாக இருப்பதால் அவர் பெயரைக் கூற நான் தயங்குகிறேன். இருவரும் என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வர முடிவு செய்து இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். அப்பொழுது ஸ்மால் காஸ் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஸ்ரீ சி. எம். குர்ஸேத்ஜி, அந்தப் பார்ஸி நண்பர்க்குக் கல்யாணம் செய்துவிடத் திட்டம் போட்டிருந்தார். ஆகவே, அவர் பார்ஸி நண்பரைத் தமது தீர்மானத்தை மாற்றிக் கொள்ளும்படி செய்துவிட்டார். ‘கல்யாணமா, தென் ஆப்பிரிக்காவுக்குப் போவதா?’ -இந்த இரண்டில் ஒன்றை அவர் தீர்மானிக்க வேண்டியதாயிற்று. அவர் கல்யாணத்தையே ஏற்றுக் கொண்டார். ஆனால், இவ்விதம் அவர் தீர்மானத்தைக் கைவிட்டதற்காக, பிற்காலத்தில் அச்சமூகத்தைச் சேர்ந்த பார்ஸி ருஸ்தம்ஜி பரிகாரம் செய்துவிட்டார். அநேகப் பார்ஸிப் பெண்கள், கதர் வேலைக்குத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டதன் மூலம், அந்தப் பார்ஸி நண்பர் உறுதியை மீறுவதற்குக் காரணமாக இருந்த அவர் மனைவிக்காகப் பரிகாரம் செய்து விட்டனர். ஆகையால், அத் தம்பதிகளுக்குச் சந்தோஷமாக நான் மன்னிப்பு அளித்துவிட்டேன். ஸ்ரீ தேஷ்பாண்டேக்குக் கல்யாண ஆசை எதுவும் இல்லை. என்றாலும், அவராலும் வர முடியவில்லை. அவர் அப்பொழுது, தம் வாக்குறுதியை மீறியதற்கு, இப்பொழுது தக்க பிராயச்சித்தங்களைச் செய்துகொண்டு வருகிறார். நான் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிப்போன போது ஜான்ஸிபாரில் தயாப்ஜி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தேன். என்னுடன் வந்து, எனக்கு உதவி செய்வதாக அவரும் வாக்களித்தார். ஆனால், அவர் வரவே இல்லை. அந்தக் குற்றத்திற்கு ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி, இப்பொழுது பரிகாரம் தேடி வருகிறார். இவ்விதம் சில பாரிஸ்டர்கள் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும்படி செய்ய நான் செய்த மூன்று முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

     இது சம்பந்தமாக ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் நினைவு எனக்கு இருக்கிறது. நான் இங்கிலாந்தில் இருந்த காலம் முதற்கொண்டு அவரிடம் நட்புடன் இருந்தேன். லண்டனில் ஒரு சைவ உணவு விடுதியில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அவருடைய சகோதரர் ஸ்ரீ பர்ஜோர்ஜி பாத்ஷா ஒரு ‘கிறுக்கர்’ என்று பெயர் பெற்றிருந்ததைக் கொண்டு, அவரைக் குறித்தும் எனக்குத் தெரியும். நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் விசித்திரப் போக்குடையவர் என்று நண்பர்கள் சொன்னார்கள். குதிரைகளிடம் இரக்கப்பட்டு அவர் (குதிரை பூட்டிய) டிராம் வண்டிகளில் ஏறுவதில்லை. அவருக்கு ஞாபக சக்தி அபாரமாக இருந்தும், பரீட்சை எழுதிப் பட்டங்களைப் பெற மறுத்து விட்டார். சுயேச்சையான மனப்போக்கை வளர்த்துக் கொண்டிருந்தார். பார்ஸி வகுப்பினராக இருந்தும் அவர் சைவ உணவே சாப்பிடுவார். பேஸ்தன்ஜிக்கு இத்தகைய கியாதி இல்லை. ஆனால், அவரது புலமைக்கு லண்டனிலும் பிரபல்யம் இருந்தது. எங்கள் இருவருக்கும் இருந்த ஒற்றுமை சைவ உணவில்தான். புலமையில் அவரை நெருங்குவதென்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.

     அவரை நான் பம்பாயில் மீண்டும் சந்தித்தேன். அவர் ஹைகோர்ட்டின் பிரதம குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். நான் அவரைச் சந்தித்தபோது, அவர் உயர்தரக் குஜராத்தி அகராதி ஒன்று தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். என் தென்னாப்பிரிக்க வேலையில் எனக்கு உதவி செய்யுமாறு நான் கேட்காத நண்பர் இல்லை. பேஸ்தன்ஜி பாத்ஷா எனக்கு உதவி செய்ய மறுத்த தோடல்லாமல், இனி தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டாம் என்று எனக்குப் புத்திமதியும் சொன்னார்.

     அவர் கூறியதாவது “உமக்கு உதவி செய்வது சாத்தியமில்லை. நீர் தென்னாப்பிரிக்காவுக்குப் போவது என்பது கூட எனக்குப் பிடிக்கவில்லை. செய்வதற்கு நம் நாட்டில் வேலையே இல்லையா? இப்பொழுது பாரும், நம் மொழிக்குச் செய்ய வேண்டியதே எவ்வளவோ இருக்கிறது. விஞ்ஞானச் சொற்களை நம்மொழியில் நான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், செய்ய வேண்டியிருக்கும் வேலையில் இது ஒரு சிறு பகுதியே. நாட்டில் இருக்கும் வறுமையை எண்ணிப்பாரும். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் நம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உம்மைப்போன்ற ஒருவர் அந்த வேலைக்காகப் பலியிடப்படுவதை நான் விரும்பவில்லை. முதலில் இங்கே சுயாட்சியைப் பெறுவோம். அதனால் அங்கிருக்கும் நம்மவர்களுக்குத் தானே உதவி செய்தவர்கள் ஆவோம். உம் மனத்தை மாற்ற என்னால் ஆகாது என்பதை அறிவேன். என்றாலும், உம்மைப் போன்றவர்கள் யாரும் உம்முடன் சேர்ந்து உம்மைப் போல் ஆகிவிடுவதற்கு உற்சாகம் ஊட்டமாட்டேன்.”

     இந்தப் புத்திமதி எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும், ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷா மீது நான் கொண்டிருந்த மதிப்பை இது அதிகமாக்கியது. நாட்டினிடமும் தாய் மொழியினிடமும் அவர் கொண்டிருந்த பக்தி என் மனத்தைக் கவர்ந்தது. இச் சம்பவம் எங்களை இன்னும் அதிகமாக நெருங்கிப் பழகும்படி செய்தது. என்றாலும் தென்னாப்பிரிக்காவில் எனக்கு இருந்த பணியை நான் விடுவதற்குப் பதிலாக என்னுடைய தீர்மானத்தில் நான் அதிக உறுதி கொள்ளலானேன். தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய வேலையின் எப்பகுதியையும் தேசபக்தி உள்ள ஒருவர் அலட்சியம் செய்துவிட முடியாது. எனக்கோ கீதையின் வாசகம் மிகத் தெளிவாகவும் கண்டிப்பாகவும் இருந்தது: “நன்றாக அனுஷ்டிக்கப்பட்ட பிறருடைய தருமத்தைவிட, குணமற்ற தனது தருமமே சிறந்ததாகும். தனது தருமத்தை நிறைவேற்றும் போது இறப்பது சிறந்தது. பிறர் தருமம் பயத்தைக் கொடுப்பதாகும்”.

 

  • 28. புனாவும் சென்னையும்

 

என் வேலையை ஸர் பிரோஸ்ஷா எளிதாக்கிவிட்டார். ஆகவே, பம்பாயிலிருந்து புனாவுக்குப் போனேன். அங்கே இரு கட்சியினர் இருந்தார்கள். எல்லாவிதக் கருத்துக்களும் கொண்ட எல்லோருடையஉதவியும் எனக்குத் தேவை. முதலில் லோகமான்யத் திலகரைப் பார்த்தேன். அவர் கூறியதாவது:

 

 

     “எல்லாக் கட்சியினரின் உதவியையும் நீங்கள் நாடுவது மிகவும் சரி. தென்னாப்பிரிக்கப் பிரச்னை சம்பந்தமாக அபிப்பிராய பேதமே இருப்பதற்கில்லை. ஆனால், எக் கட்சியையும் சேராதவரான ஒருவர், உங்கள் பொதுக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும். பேராசிரியர் பந்தர்காரைச் சந்தியுங்கள். கொஞ்ச காலமாக அவர் பொதுஜன இயக்கம் எதிலும் ஈடுபடுவதில்லை. அவரைப் பார்த்துவிட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னிடம் கூறுங்கள். என்னால் ஆன எல்லா உதவியையும் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் போதெல்லாம் வந்து என்னைத் தாராளமாகப் பார்க்கலாம். வேண்டியதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்.”

 

     லோகமான்யரை நான் சந்தித்தது இதுவே முதல் தடவை. பொதுமக்களிடையே அவருக்கு இருந்த இணையில்லாத செல்வாக்கின் ரகசியத்தை இச் சந்திப்பு எனக்கு வெளிப்படுத்தியது.

 

     பின்பு கோகலேயைப் போய்ப் பார்த்தேன். பெர்குஸன் கல்லூரி மைதானத்திலேயே அவரைக் கண்டேன். அன்போடு அவர் என்னை வரவேற்றார். அவருடைய இனிய சுபாவம் அப்பொழுதே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவரைச் சந்திப்பதும் இதுதான் முதல் தடவை. என்றாலும், ஏதோ பழைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போலவே தோன்றியது. ஸர் பிரோஸ்ஷா எனக்கு இமயமலைபோல் தோன்றினார். லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் காணப்பட்டார். ஆனால், கோகலேயோ கங்கையைப் போல இருந்தார். அந்த புண்ணிய நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு அரியது. கடலில், யாரும் துணிந்து எளிதில் இறங்கிவிட முடியாது; ஆனால், கங்கையோ அரவணைத்துக் கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது. கையில் துடுப்புடன் படகில் ஏரி, அதில் மிதப்பதே இன்பம். பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை ஓர் உபாத்தியாயர் எவ்விதம் பரீட்சிப்பாரோ அதே போலக் கோகலே என்னை நுட்பமாகப் பரீட்சை செய்தார். யாரிடம் போகவேண்டும் என்பதை அவர் எனக்குச் சொன்னார். நான் செய்ய இருக்கும் பிரசங்கத்தை முன்னால் தாம் பார்க்க விரும்புவதாகக் கூறினார். கல்லூரி முழுவதையும் சுற்றிக் காட்டினார். தம்மால் ஆனதைச் செய்யத் தாம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் எனக்கு உறுதியளித்தார். டாக்டர் பந்தர்காரைச் சந்தித்ததன் முடிவைத் தமக்கு அறிவிக்கச் சொன்னார். மிக்க மகிழ்ச்சியுடன் என்னை அனுப்பினார். அன்று முதல் - ராஜீயத் துறையில் - அவர் ஜீவித்திருந்த காலத்திலும் அதற்குப் பின்னர் இன்றளவும், முற்றும் என் உள்ளத்தில் இணையற்றதான பீடத்தில் கோகலே அமர்ந்து விட்டார்.

 

     டாக்டர் பந்தர்கார், தந்தைக்கு மகனிடம் இருக்கும் அன்புடன் என்னை வரவேற்றார். நான் அவரைப் பார்க்கப் போனது மத்தியான வேளை. அந்த நேரத்தில்கூட ஓய்வின்றி நான் எல்லோரையும் சந்தித்து வந்தது, சோர்வு என்பதையே அறியாத அப் பண்டிதமணிக்கு என் மீது அதிகப் பரிவை உண்டாக்கியது. பொதுக்கூட்டத்திற்கு எக் கட்சியையும் சேராதவரே தலைவராக இருக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியதை உடனே அவர் ஏற்றுக்கொண்டார். “அதுதான் சரி”, “அதுதான் சரி” என்றும் அவராகவே ஆனந்தத்துடன் கூறினார்.

 

     நான் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகு அவர் கூறியதாவது “ராஜீய விஷயங்களில் நான் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதில்லை என்பதை எல்லோரும் உங்களுக்குச் சொல்வார்கள். ஆனாலும், உங்கள் கோரிக்கையை மறுக்க என்னால் முடியாது. உங்கள் கட்சி மிகவும் நியாயமானது. உங்கள் முயற்சியோ அற்புதமானது. ஆகவே, உங்கள் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள நான் மறுத்து விடுவதற்கில்லை. திலகரையும் கோகலேயையும் நீங்கள் கலந்து ஆலோசித்தது மிகவும் சரியானதே. அவர்களுடைய இரு சபைகளின் கூட்டு ஆதரவில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள். கூட்டத்தின் நேரத்தைக் குறித்து, நீங்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. அவர்களுக்குச் சௌகரியப்படும் நேரம், எனக்கும் சௌகரியமானதே”. இவ்விதம் கூறி எனக்கு வாழ்த்தும் ஆசீர்வாதமும் தந்து, அவர் விடை கொடுத்து அனுப்பினார்.

 

     புலமை மிக்கவர்களும், தன்னலமே இல்லாதவர்களுமான புனாத் தலைவர்கள் குழாத்தினர், எந்தவிதப் படாடோபமும் இன்றி, ஆடம்பரம் இல்லாத ஒரு சிறு இடத்தில் கூட்டத்தை நடத்தினார்கள். நான் பெரும் மகிழ்ச்சியும், என் வேலையில் மேலும் அதிக நம்பிக்கையும் கொண்டவனாகத் திரும்பும்படி என்னை அனுப்பியும் வைத்தார்கள்.

 

     அடுத்தபடியாக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே மக்கள் மட்டற்ற உற்சாகம் கொண்டிருந்தனர். பாலசுந்தரம் பற்றிய சம்பவம், பொதுக்கூட்டத்தில் எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கிவிட்டது. என் பிரசங்கம் அச்சிடப்பட்டிருந்தது. எனக்கு அது ஒரு நீண்டதொரு பிரசங்கமே. ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டனர். கூட்டத்தின் முடிவில், பச்சைத் துண்டுப் பிரசுரத்திற்கு ஒரே கிராக்கி. சில மாற்றங்களுடன் இரண்டாம் பதிப்பில் 10,000 பிரதிகள் அச்சிட்டேன். அவை ஏராளமாக விற்பனையாயின. என்றாலும், அவ்வளவு அதிகமான பிரதிகளை அச்சிட்டிருக்க வேண்டியதில்லை என்று எண்ணினேன். என் உற்சாகத்தில், இருக்கக்கூடிய தேவையை அதிகப்படியாக மதிப்பிட்டு விட்டேன். நான் பிரசங்கம் செய்தது, பொது ஜனங்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே. சென்னையில் அந்த வகுப்பினர் இவ்வளவு பிரதிகளையும் வாங்கிவிட முடியாது.

 

 

     சென்னையில் எல்லோரையும்விட அதிகமாக உதவி செய்தவர், ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிக்கையின் ஆசிரியரான காலஞ் சென்ற ஸ்ரீ. ஜி. பரமேஸ்வரன் பிள்ளையாவார். இப்பிரச்னையை அவர் கவனமாக ஆராய்ந்தார். அடிக்கடி தமது காரியாலயத்திற்கு என்னை அழைத்து, வேண்டிய யோசனைகளைக் கூறினார். ‘ஹிந்து’ பத்திரிகையின் ஸ்ரீ. ஜி. சுப்பிரமணியமும், டாக்டர் சுப்பிரமணியமும் அதிக அனுதாபம் காட்டினார்கள். ஸ்ரீ. ஜி. பரமேசுவரன் பிள்ளை தமது ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் நான் எழுதுவதையெல்லாம் தாராளமாகப் பிரசுரிக்க முன் வந்தார். அந்த வாய்ப்பை நானும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுக்கூட்டம், பச்சையப்பன் மண்டபத்தில் டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது என்றே எனக்கு ஞாபகம்.

 

     நான் சந்தித்தவர்களிடமெல்லாம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டி இருந்தபோதிலும் அந்நியர் நடுவில் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் சந்தித்த நண்பர்கள் எல்லோருமே என்மீது அன்பைப் பொழிந்தார்கள். நான் கொண்டிருந்த லட்சியத்திலும் அவர்கள் அதிக உற்சாகம் காட்டினர். அன்பினால் தகர்த்துவிட முடியாத தடையும் உண்டா?

 

  • 29. விரைவில் திரும்புங்கள்

 

சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குப் போனேன். அங்கே சங்கடங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன. யாரையுமே அங்கே எனக்குத் தெரியாது. ஆகவே, கிரேட் ஈஸ்டர்ன் ஹோட்டலில் ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். ‘டெயிலி டெலிகிராப்’ பத்திரிகையின் பிரதிநிதியுடன் அங்கே எனக்குப் பழக்கம் உண்டாயிற்று. தாம் தங்கியிருந்த ஐரோப்பியரின் ‘பெங்கால் கிளப்’புக்கு என்னை அழைத்தார். அந்தக் கிளப்பின் பிரதான அறைக்கு இந்தியர் எவரையும் அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்பது அவருக்குத் தெரியாது. இவ்விதத் தடை இருப்பதை அவர் கண்டு கொண்டதும், தம் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கல்கத்தாவில் இருக்கும் ஆங்கிலேயர், இத்தகைய துவேஷம் காட்டி வருவதைக் குறித்துத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். பிரதான அறைக்கு என்னை அழைத்துக் கொண்டு போக முடியாது போய் விட்டதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

 

     வங்காளத்தின் தெய்வம் என்று வழங்கப்பட்டு வந்த சுரேந்திரநாத் பானர்ஜியை நான் பார்க்க விரும்பினேன். அவரைச் சந்தித்தேன். பல நண்பர்கள் அவரைச் சூழ்ந்துக் கொண்டிருந்தனர். அவர் கூறியதாவது:

 

     “உங்கள் வேலையில் மக்கள் சிரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றே அஞ்சுகிறேன். இங்கே எங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள். என்றாலும், உங்களால் முடிந்த வரையில் நீங்கள் முயலவே வேண்டும். மகாராஜாக்களின் ஆதரவை நீங்கள் தேடிக் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் இந்தியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தவறிவிடாதீர்கள். ராசா ஸ்ர் பியாரி மோகன் முகர்ஜியையும், மகாராஜா டாகுரையும் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். அவர்கள் இருவரும் தாராள மனம் படைத்தவர்கள்; பொது வேலையில் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.”

 

     அந்தக் கனவான்களையும் பார்த்தேன். ஆனால், ஒன்றும் பயன் இல்லை. அவர்கள் என்னைச் சரியாக ஏற்றுப் பேசக்கூட இல்லை. கல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடத்துவது என்பது எளிதான காரியமே அல்ல என்றார்கள். ஏதாவது செய்ய முடியும் என்றால் அது நடப்பது முக்கியமாகச் சுரேந்திரநாத் பானர்ஜியையே பொறுத்தது என்றும் கூறினர்.

 

     என் வேலை வர வர அதிகக் கஷ்டமாகிக்கொண்டு வருவதைக் கண்டேன். ‘அமிர்த பஜார்’ பத்திரிகையின் காரியாலயத்திற்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ஆசிரியக் கனவான், நான் ஊர் சுற்றித் திரியும் பேர்வழி என்று எண்ணிக்கொண்டு என்னிடம் ஒன்றும் பேசாமலே என்னைப் போகச் சொல்லிவிட்டார். வங்கவாசி பத்திரிகையோ இன்னும் கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டது. அதன் ஆசிரியர் என்னை ஒரு மணி நேரம் காக்க வைத்தார். அவரைக் கண்டு பேசப் பலர் வந்திருந்தார்கள். ஆனால், மற்றவர்களெல்லாம் பேசிவிட்டுப்போன பின்புகூட, என்னைக் கண்ணெடுத்துப் பார்க்க அவருக்குத் தயவு பிறக்கவில்லை. நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்த பிறகு அவரைப் பார்த்து, என் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். உடனே அவர், “எங்களுக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? உம்மைப்போல் கண்டு பேச வருகிறவர்களின் தொகைக்கு முடிவே இல்லை. நீர் போய்விடுவதே மேல். நீர் சொல்வதைக் கேட்க எனக்கு இப்பொழுது சௌகரியப்படாது” என்றார். நான் அவமதிக்கப்படுவதாக ஒரு கணம் எண்ணினேன். ஆனால் உடனே ஆசிரியரின் நிலைமையையும் புரிந்துகொண்டேன். ‘வங்கவாசி’யின் புகழைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆசிரியரைப் பார்க்க ஓயாமல் பலர் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதையும் இப்போது பார்த்தேன். அவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமானவர்கள். அவருக்கு தம் பத்திரிகையில் எழுதுவதற்கு விஷயங்களுக்கும் பஞ்சம் இல்லை. தென்னாப்பிரிக்கா விஷயமோ அச்சமயம் இங்கே அவ்வளவு நன்றாகத் தெரியாத சங்கதி.

 

     எந்தக் குறையினால் ஒருவன் கஷ்டப்படுகிறானோ அவனுக்கு அக் குறையே பெரிது என்று தோன்றும். ஆசிரியரின் காரியாலயத்திற்குப் படையெடுத்து வரும் அநேகரில் நானும் ஒருவன். அப்படி வரும் மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் குறை இருக்கத்தான் இருக்கிறது. எல்லோருக்குமே ஆசிரியர் என்ன செய்ய முடியும்? மேலும், ஆசிரியர், நாட்டில் பெரிய சக்தி வாய்ந்தவர் என்று கஷ்டப்படுகிறவன் நினைக்கிறான். ஆனால், தமது சக்தி, தம் காரியாலயத்தின் வாசலுக்கு அப்பால் செல்லாது என்பது ஆசிரியருக்கு மாத்திரமே தெரியும். நான் சோர்வடைந்துவிடவில்லை. மற்றப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை விடாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். வழக்கம்போல், இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் சந்தித்தேன். ‘ஸ்டேட்ஸ்மனும்’ ‘இங்கிலீஷ்மனும்’ அப்பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்தன. அப்பத்திரிகை நிருபர்களுக்கு நான் நீண்ட பேட்டிகள் அளித்தேன். அவை முழுவதையும் அப் பத்திரிகைகள் பிரசுரித்தன.

 

     ‘இங்கிலீஷ்மன்’ பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ சாண்டர்ஸ், என்னைத் தமது சொந்த மனிதனாகவே கொண்டார். தமது பத்திரிகையையும் என் இஷ்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து, அவர் எழுதிய தலையங்கங்களின் அச்சு நகல்களை முன் கூட்டியே அவர் எனக்கு அனுப்புவார். அத் தலையங்கங்களில் நான் விரும்பும் திருத்தங்களைச் செய்து கொள்ளவும் அவர் என்னை அனுமதித்தார். எங்களுக்கிடையே நட்பு வளர்ந்துவிட்டது என்று சொல்லுவதும் மிகையாகாது. தம்மால் இயன்ற உதவிகளை எல்லாம் செய்வதாக அவர் எனக்கு வாக்களித்தார். வாக்களித்தபடியே நிறைவேற்றியும் வந்தார். அவர் கடுமையான நோய்வாய்ப்படும் வரையில் என்னுடன் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொண்டிருந்தார்.

 

     என் வாழ்க்கை முழுவதுமே இவ்விதமான பல நண்பர்களைப் பெறும் பாக்கியம் எனக்கு இருந்திருக்கிறது. இந்தச் சிநேகங்கள் எதிர்பாராத விதமாகத் திடீரென்று ஏற்பட்டவை. மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடியே கூறும் என் குணமும், உண்மையினிடம் எனக்கு இருந்த பற்றும், ஸ்ரீ சாண்டர்ஸூக்கு என்னிடம் பிரியத்தை உண்டாக்கின. நான் மேற்கொண்ட வேலையைக் குறித்து, வெகு நுட்பமாகக் குறுக்குக் கேள்விகள் எல்லாம் போட்டுத் தெரிந்து கொண்ட பிறகே என் முயற்சிக்கு அனுதாபம் காட்ட அவர் முற்பட்டார். தென்னாப்பிரிக்க வெள்ளையரின் கட்சியையும் பாரபட்சமின்றி அவருக்கு எடுத்துக் காட்டுவதற்குச் சிரமத்தைப் பாராமல் நான் செய்த முயற்சியையும் கண்டார். இதற்காக என்னை அவர் பாராட்டினார்.

 

     எதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம் தன் கட்சிக்கு நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது.

 

     எதிர்பாராத வகையில் ஸ்ரீ சாண்டர்ஸின் உதவி கிடைத்ததால், முடிவில், ‘கல்கத்தாவிலும் பொதுக் கூட்டத்தை நடத்துவதில் வெற்றிபெற முடியும்’ என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது டர்பனிலிருந்து ‘பார்லிமெண்டு ஜனவரியில் ஆரம்பமாகிறது. விரைவில் திரும்புக’ என்ற தந்தி வந்தது.

 

 

     ஆகவே, பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு ஒரு கடிதம் அனுப்பினேன். திடீரென்று கல்கத்தாவைவிட்டு நான் ஏன் புறப்பட வேண்டியிருக்கிறது என்று அதில் விளக்கிக் கூறி விட்டுப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். புறப்படும் முன்பு தாதா அப்துல்லா கம்பெனியின் பம்பாய் ஏஜெண்டுக்கு ஒரு தந்தி கொடுத்து, தென்னாப்பிரிக்காவிற்கு முதலில் புறப்படும் கப்பலில் எனக்கு இடத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு அறிவித்தேன். தாதா அப்துல்லா அப்பொழுதுதான், ‘கோர்லாண்டு’ என்ற கப்பலை வாங்கியிருந்தார். அக் கப்பலிலேயே நான் போக வேண்டும் என்று வற்புறுத்தியதோடு என்னையும் என் குடும்பத்தையும் கட்டணம் வாங்காமல் ஏற்றிச் செல்வதாகவும் அறிவித்தார். இதை நன்றியுடன் ஏற்றுக் கொண்டேன். டிசம்பர் ஆரம்பத்தில் இரண்டாம் முறையாக நான் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். இப்பொழுது என் மனைவி, இரு குமாரர்கள், விதந்துவாகிவிட்ட என் சகோதரியின் ஒரே குமாரன் ஆகியவர்களுடன் பயணமானேன். அதே சமயத்தில் ‘நாதேரி’ என்ற மற்றொரு கப்பலும் டர்பனுக்குப் புறப்பட்டது. அக் கப்பல் கம்பெனிக்கு தாதா அப்துல்லா கம்பெனியே ஏஜெண்டுகள். இந்த இரு கப்பல்களிலும் சுமார் எண்ணூறு பிரயாணிகள் இருந்திருப்பார்கள். அவர்களில் பாதிப்பேர் டிரான்ஸ்வாலுக்குப் போக வேண்டியவர்கள்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III