மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III


சுய சரிதை

Back

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)


மூன்றாம் பாகம்


 

  • 1. புயலின் குமுறல்கள்

 

நான் மனைவியுடனும் குழந்தைகளோடும் கப்பல் பிரயாணம் செய்வது இதுதான் முதல் தடவை. ஹிந்துக்களில் மத்திய தரவகுப்பினரிடையே பால்ய விவாகம் செய்து விடும் வழக்கம் இருப்பதால், கணவன் படித்திருப்பான், மனைவி கொஞ்சம் கூட எழுத்து வாசனையே இல்லாதிருப்பாள் என்பதை இச் சரித்திரத்தில் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். இவ்விதம் அவர்கள் இருவர் வாழ்க்கைக்கும் இடையே பெரும் அகழ் ஏற்பட்டு, அவர்கள் வாழ்வைப் பிரித்து நின்றது. கணவன், மனைவிக்கு ஆசானாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஆகையால், என் மனைவியும் குழந்தைகளும் அணிய வேண்டிய உடைகள் யாவை, அவர்கள் சாப்பிட வேண்டியது என்ன, புதிய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் எந்தவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பனவற்றையெல்லாம் நானே சிந்தித்து முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த நாட்களைப் பற்றிய சில நினைவுகள் இப்பொழுது நகைப்பை ஊட்டுபவைகளாக இருக்கின்றன.

 

     ‘கணவன் சொல் தவறாமல் பணிந்து நடந்து வருவதே தனக்கு உயர்ந்த தருமம்’ என்று ஒரு ஹிந்து மனைவி கருதுகிறாள். ஒரு ஹிந்துக் கணவனோ, மனைவிக்கு எஜமானனும் எல்லாமும் தானே என்று எண்ணுகிறான்; தன் மனைவி, தான் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்ய வேண்டியது கடமை என்றும் கருதுகிறான்.

 

     நாம் நாகரிகம் உள்ளவர்களாகத் தோன்ற வேண்டுமாயின் நடை உடை பாவனைகளெல்லாம் சாத்தியமானவரை ஐரோப்பியத் தரத்திற்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்று எந்தச் சமயத்தைப் பற்றி எழுதுகிறேனோ அந்தச் சமயத்தில், நான் நம்பி வந்தேன். ஏனெனில், அப்படிச் செய்தால் தான் நமக்குக் கொஞ்சம் செல்வாக்காவது இருக்கும். அந்தச் செல்வாக்கு இல்லாது போனால், சமூகத்திற்குச் சேவை செய்வது சாத்தியமாகாது என்றும் நான் அப்போது எண்ணினேன்.

 

     ஆகையால், என் மனைவியும் குழந்தைகளும் எந்தவிதமான ஆடைகள் அணிவது என்பதில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். அவர்கள் கத்தியவார்ப் பனியாக்கள் என்று கண்டுகொள்ளக் கூடியவாறு அவர்கள் உடை இருப்பதை நான் எப்படி விரும்ப முடியும்? இந்தியர்களில் பார்ஸிகளே, அதிக நாகரிகம் உள்ளவர்களாக அப்பொழுது கருதப்பட்டு வந்தார்கள். ஆனாலும், ‘முழு ஐரோப்பிய உடை சரிப்படாது’ என்று தோன்றவே, பார்ஸி உடையை அவர்கள் அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அதன்படி என் மனைவி பார்ஸிப் புடவை உடுத்திக்கொண்டாள். சிறுவர்கள், பார்ஸிக் கோட்டும் கால்சட்டைகளும் போட்டுக் கொண்டனர். பூட்ஸு ம் ஸ்டாக்கிங்கும் இல்லாமல் யாரும் இருப்பதற்கில்லை. அவற்றைப் போட்டுப் பழக்கப்படுவதற்கு என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட காலம் பிடித்தது. பூட்ஸ்கள் அவர்கள் காலை நசுக்கின. ஸ்டாக்கிங்குகளோ, வியர்வையால் நாற்றம் எடுத்துவிட்டன. கால்விரல்கள் அடிக்கடி புண்ணாயின. இவைகளையெல்லாம் சொல்லி அவற்றைப் போட்டுக் கொள்ள அவர்கள் ஆட்சேபிக்கும் போதெல்லாம் அதற்குச் சமாதானம் கூற நான் பதில்களைத் தயாராக வைத்திருப்பேன். ஆனால், என் பதில்களால் திருப்தியடைந்து விடாமல், என் அதிகாரத்திற்குப் பயந்தே, அவர்கள் விடாமல், அவற்றை அணிந்து வந்தார்கள் என்று நினைக்கிறேன்.‘வேறு வழி இல்லை’ என்பதனாலேயே அவர்கள் உடை மாற்றத்திற்கும் சம்மதித்தார்கள். அந்த உணர்ச்சி காரணமாகவே, ஆனால் இன்னும் அதிகத் தயக்கத்துடனேயே, கத்தியையும் முள்ளையும் கொண்டு சாப்பிடவும் சம்மதித்தார்கள். இந்தவிதமான நாகரிகச் சின்னங்களின் மீது எனக்கு இருந்த மோகம் குறைந்த பிறகு, அவர்கள் கத்தியையும் முள்ளையும் உபயோகித்துச் சாப்பிடும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். புதிய முறைகளில் நீண்ட காலம் பழகிவிட்டதால், பழைய வழக்கத்திற்குத் திரும்புவதும் அவர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது. ஆனால் நாகரிகத்தின் இந்தப் பகட்டுகளையெல்லாம் உதறி எறிந்து விட்ட பிறகு, நாங்கள் சுமையெல்லாம் நீங்கி விடுதலை பெற்ற உணர்ச்சியோடு இருந்ததை நான் இன்று காண முடிகிறது.

 

     அதே கப்பலில் என் உறவினர்கள் சிலரும், எனக்குப் பழக்கமானவர்களும் இருந்தனர். எனது கட்சிக்காரரின் நண்பருக்கு அக் கப்பல் சொந்தமானதாகையால், அதில் நான் விரும்புகிற இடத்திற்கெல்லாம் தாராளமாகப் போக முடிந்தது. அதனால் இந்த உறவினர் முதலியவர்களையும் மூன்றாம் வகுப்பில் வந்த மற்றப் பிரயாணிகளையும் நான் அடிக்கடி சந்தித்து வந்தேன்.

 

     மத்தியில் எந்தத் துறைமுகத்திலும் நிற்காமல், கப்பல், நேரே நேட்டாலுக்குப் போய்க்கொண்டிருந்தது. ஆகையால், எங்கள் பிரயாணம் பதினெட்டு நாட்களில் முடிந்துவிடும். ஆனால், ஆப்பிரிக்காவில் அடிக்கவிருந்த தீவிரமான போராட்டப் புயலைக் குறித்து எங்களுக்கு எச்சரிக்கை செய்வதைப் போல், நேட்டாலுக்கு இன்னும் நான்கு நாள் பிரயாணமே பாக்கி இருந்த சமயத்தில், கடலில் கடுமையான புயல் காற்று வீசியது. அது டிசம்பர் மாதம். பூமத்திய ரேகைக்குத் தெற்கிலுள்ள பகுதிக்கு அதுவே கோடைக் காலம். ஆகையால், அப் பருவத்தில் தென் சமுத்திரத்தில், பெரியதும் சிறியதுமாகப் புயல்காற்றுகள் அடிப்பது சகஜம். ஆனால் எங்களைத் தாக்கிய புயலோ மிகக் கடுமையானது. நீண்ட நேரம் அடித்தது. எனவே, பிரயாணிகள் திகில் அடைந்து விட்டனர். அது பயபக்தி நிறைந்த காட்சியாக இருந்தது. எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்ட அபாயத்தில், சகலரும் ஒன்றாகிவிட்டனர். முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் முதலிய எல்லோரும், தங்களுடைய வேற்றுமைகளையெல்லாம் மறந்து விட்டு ஒன்றை ஒரே கடவுளை நினைத்தார்கள். சிலர் அநேக வேண்டுதல்களைச் செய்துகொண்டனர். பிரயாணிகளின் பிரார்த்தனைகளில், கப்பல் காப்டனும் கலந்து கொண்டார். புயல் ஆபத்துக்கு இடமானதுதான் என்றாலும், அதையும்விட மோசமான புயல்களைத் தாம் அனுபவித்திருப்பதாகக் காப்டன் பிரயாணிகளுக்கு உறுதி கூறினார். சரியான வகையில் கட்டப்பட்ட கப்பல், எந்தப் புயலையும் சமாளித்துத் தாங்கிவிடும் என்றும் விளக்கினார். ஆனால், பிரயாணிகளைத் தேற்ற முடியவில்லை. ‘கிரீச்’ என்ற சப்தமும், முறியும் சப்தமும் கப்பலின் பல பாகங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக் கொண்டே இருந்தன. கப்பலில் பிளவு கண்டு, எந்த நேரத்திலும் தண்ணீர் உள்ளே புகுந்துவிடக் கூடும் என்பதை அந்தச் சப்தங்கள் நினைவுபடுத்தி வந்தன. கப்பல் அதிகமாக ஆடியது; உருண்டது; எந்தக் கணத்திலும் கவிழ்ந்துவிடக் கூடும் என்று தோன்றியது. மேல் தளத்தில் இருக்கமுடியும் என்ற பேச்சிற்கே இடமில்லை. ‘எல்லாம் அவன் சித்தம்போல் நடக்கும்’ என்று சொல்லாதவர் இல்லை. இருபத்து நான்கு மணி நேரம் இவ்விதம் அல்லல்பட்டிருப்போம் என்பது என் ஞாபகம். கடைசியாக வானம் நிர்மலமாயிற்று; சூரியனும் காட்சியளித்தான். ‘புயல் போய் விட்டது’ என்று காப்டன் அறிவித்தார். கப்பலில் இருந்தவர்களின் முகங்களில் ஆனந்தம் பொங்கியது. ஆபத்து மறைந்ததோடு அவர்களின் நாவிலிருந்து கடவுள் நாமமும் மறைந்தது. திரும்பவும் தின்பது, குடிப்பது, ஆடுவது, பாடுவது எனபவற்றில் அவர்கள் இறங்கி விட்டார்கள். மரண பயம் போய்விட்டது. ஒரு கணம் மெய் மறந்து ஆண்டவனைத் துதித்த பக்தி போய்; அவ்விடத்தை மாயை மூடிக்கொண்டுவிட்டது. வழக்கமான நமாஸ்களும் பிரார்த்தனைகளும் பின்னாலும் நடந்து வந்தன என்பது உண்மையே. ஆனாலும், அந்த பயங்கர நேரத்தில் இருந்த பயபக்தி, அவற்றில் இல்லை.

 

 

     அப்புயல் மற்றப் பிரயாணிகளுடன் என்னை ஒன்றாகப் பிணைத்துவிட்டது. இதுபோன்ற புயல்களின் அனுபவம் எனக்கு இருந்ததால் புயலைப்பற்றிய பயம் எனக்குச் சிறிதும் இல்லை. கடல் பிரயாணம் எனக்குப் பழக்கப்பட்டுப் போனபடியால், எனக்கு மயக்கம் வருவதே இல்லை. ஆகையால், பயமின்றிப் பிரயாணிகளிடையே நான் அங்கும் இங்கும் போக முடிந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வந்தேன். புயல் நிலைமையைக் குறித்துக் காப்டன் கூறிய தகவலைப் புயல் அடித்த போது மணிக்கு மணி அவர்களுக்குக் கூறுவேன். இவ்விதம் ஏற்பட்ட நட்பு, எவ்வளவு தூரம் எனக்கு உதவியாக இருந்தது என்பதை பின்னால் கவனிப்போம்.

 

     டிசம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி கப்பல் டர்பன் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. ‘நாதேரி’ என்ற கப்பலும் அன்றே வந்து சேர்ந்தது.

 

     ஆனால், உண்மையான புயல் இனிமேல்தான் அடிக்க வேண்டியிருந்தது!

 

  • 2. புயல்

 

டிசம்பர் 18 ஆம் தேதி, இரு கப்பல்களும் டர்பன் துறைமுகம் வந்து சேர்ந்தன என்பதைக் கவனித்தோம். தென்னாப்பிரிக்கத் துறைமுகங்களில் நன்றாக வைத்தியப் பரிசோதனை செய்யப்படுவதற்கு முன், பிரயாணிகள் இறங்க அனுமதிக்கப்படுவதில்லை. தொத்து நோயால் பீடிக்கப்பட்டவர் எவராவது கப்பலில் இருந்தால், அந்தக் கப்பலிலிருந்து யாரையும் இறங்கவிடாமல் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்தியக் கண்காணிப்பில், தூரத்தில் நிறுத்தி வைத்து விடுவார்கள். நாங்கள் கப்பல் ஏறிய சமயத்தில் பம்பாயில் பிளேக் நோய் பரவி இருந்ததால், கொஞ்ச காலத்திற்கு இந்த விதமான ‘சுத்திகரண’த்திற்கு நாங்கள் ஆளாக நேரலாம் என்று பயந்தோம். வைத்தியப் பரிசோதனைக்கு முன்னால், ஒவ்வொரு கப்பலிலும் ஒரு மஞ்சள் நிறக் கொடி பறக்க வேண்டும். யாருக்கும் நோய் இல்லை என்று டாக்டர் அத்தாட்சி கொடுத்த பிறகே அக்கொடி இறக்கப்படும். அந்த மஞ்சள் கொடியை இறக்கிய பின்னரே பிரயாணிகளின் உற்றார் உறவினர்கள் கப்பலுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

 

     அதன்படி எங்கள் கப்பலிலும் மஞ்சள் கொடி பறந்தது. டாக்டர் வந்து, எங்களைப் பரிசோதித்துப் பார்த்தார். ‘ஐந்து நாட்களுக்கு இக்கப்பலிலிருந்து யாரையும் இறங்க அனுமதிக்கக்கூடாது’ என்று டாக்டர் உத்தரவிட்டார். ஏனெனில், பிளேக் கிருமிகள் வளருவதற்கு அதிகபட்சம் இருபத்து மூன்று நாட்கள் ஆகும் என்பது அவர் கருத்து. ஆகையால், எங்கள் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட்டு இருபத்து மூன்றாம் நாள் முடியும் வரையில் அதிலிருந்து பிரயாணிகளை இறக்காமல் தனித்து வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்குக் காரணம் சுகாதாரத்தைப் பற்றிய கவலைமட்டும் அல்ல, அதைவிட முக்கியமான வேறு காரணங்களும் உண்டு.

 

     டர்பனில் இருந்த வெள்ளைக்காரர்கள், எங்களைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த உத்தரவுக்கு இக்கிளர்ச்சி ஒரு காரணம். டர்பனில் அன்றாடம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாதா அப்துல்லா கம்பெனியார் தவறாமல் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரர்கள் தினந்தோறும் பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தனர். தாதா அப்துல்லா கம்பெனியை, எல்லா விதங்களிலும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் அக் கம்பெனிக்கு ஆசை வார்த்தைகளையும் கூறி வந்தனர். இரு கப்பல்களும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டால் கம்பெனிக்குத் தக்க நஷ்டஈடு கொடுத்து விடுவதாகவும் சொன்னார்கள். ஆனால், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயந்து விடக் கூடியவர்கள் அல்ல தாதா அப்துல்லா கம்பெனியார். சேத்து அப்துல் கரீம் ஹாஜி ஆதம், அச்சமயம் அந்தக் கம்பெனியின் நிர்வாகப் பங்குதாரராக இருந்தார். ‘எப்படியும் கப்பல்களைக் கரைக்குக் கொண்டுவந்து, பிரயாணிகளை இறக்கியே தீருவது’ என்று அவர் உறுதி கொண்டிருந்தார். அவர் தினந்தோறும் விவரமாகக் கடிதங்களை எழுதி எங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். என்னைப் பார்ப்பதற்காக டர்பனுக்கு வந்த காலஞ்சென்ற ஸ்ரீ மன்சுக்லால் நாஸர், அச்சமயம் அதிர்ஷ்டவசமாக அங்கே இருந்தார். அவர் திறமை வாய்ந்தவர்; அஞ்சாதவர். இந்திய சமூகத்திற்கு வழிகாட்டி வந்தார். அக் கம்பெனியின் வக்கீலான ஸ்ரீ லாப்டனும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். வெள்ளைக்காரர்களின் போக்கை அவர் கண்டித்தார். இந்திய சமூகத்தினிடம் கட்டணம் வாங்கும் வக்கீல் என்ற முறையில் மட்டும் அன்றி அச் சமூகத்தின் உண்மையான நண்பர் என்ற முறையிலும் அவர்களுக்கு அவர் ஆலோசனை கூறி வந்தார்.

 

     இவ்வாறு சம பலம் இல்லாத இரு கட்சியினரின் போர்க்களமாக டர்பன் ஆயிற்று. ஒருபக்கத்தில் ஒரு சிலரேயான ஏழை இந்தியரும் அவர்களுடைய ஆங்கில நண்பர்கள் சிலரும்; மற்றொரு பக்கத்திலோ, ஆயுதங்களிலும் எண்ணிக்கையிலும், படிப்பிலும், செல்வத்திலும் பலம் படைத்திருந்த வெள்ளையர்கள்! நேட்டால் அரசாங்கமும் அவர்களுக்குப் பகிரங்கமாக உதவி செய்து வந்ததால், அரசாங்கத்தின் பக்க பலமும் அவர்களுக்கு இருந்தது. மந்திரி சபையில் அதிகச் செல்வாக்கு வாய்ந்த அங்கத்தினராயிருந்த ஸ்ரீ ஹாரி எஸ்கோம்பு, வெள்ளையரின் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகக் கலந்து கொண்டார்.

 

     கப்பல் பிரயாணிகளை அல்லது கப்பல் ஏஜெண்டுகளான கம்பெனியை எப்படியாவது மிரட்டி, பிரயாணிகள் இந்தியாவுக்குத் திரும்பிப் போய்விடுமாறு பலவந்தப் படுத்திவிட வேண்டும் என்பதே, கப்பல் கரைக்கு வராமல் நிறுத்தி வைத்ததன் உண்மையான நோக்கம். இப்பொழுது எங்களை நோக்கியும் மிரட்டல்களை ஆரம்பித்து விட்டார்கள். ‘திரும்பிப் போய்விடாவிட்டால் நீங்கள் நிச்சயம் கடலில் தள்ளப்படுவீர்கள்! திரும்பிவிட ஒப்புக் கொள்ளுவீர்களாயின் உங்கள் கப்பல் கட்டணத்தொகையும் உங்களுக்குக் கிடைத்துவிடும்’ என்று மிரட்டினர். இதற்கெல்லாம் நாங்கள் மசியவில்லை. என்னுடைய சகப் பிரயாணிகளிடம் சதா போய், அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். ‘நாதேரி’ கப்பலில் இருந்த பிரயாணிகளுக்கும் ஆறுதலான செய்திகளை அனுப்பிக்கொண்டு வந்தேன். அவர்கள் எல்லோருமே அமைதியாகவும் தைரியமாகவும் இருந்து வந்தனர்.

 

     பிரயாணிகளின் பொழுதுபோக்குக்காக எல்லா வகையான விளையாட்டுக்களுக்கும் ஏற்பாடு செய்தோம். கிறிஸ்துமஸ் தினத்தன்று, காப்டன், மேல் வகுப்புப் பிரயாணிகளுக்கு விருந்தளித்தார். விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் நானும் என் குடும்பத்தினரும். விருந்து முடிந்த பிறகு பிரசங்கங்களும் நடந்தன. அப்பொழுது நான் மேற்கத்திய நாகரிகத்தைப் பற்றிப் பேசினேன். பெரிய விஷயங்களைக் குறித்துப் பேச அது சமயம் அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், என் பேச்சு வேறுவிதமாக இருப்பதற்கில்லை. பிறகு நடந்த களியாட்டங்களில் நானும் பங்கெடுத்துக்கொண்டேன். ஆனால், என் மனமெல்லாம் டர்பனில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. உண்மையில் அப் போர் என்னை எதிர்த்து நடந்ததேயாகும். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டு:

 

1. நான் இந்தியாவில் இருந்தபோது நேட்டால் வெள்ளைக்காரர்களை அக்கிரமமாகக் கண்டித்தேன் என்பது.

 

2. நேட்டாலை இந்திய மயம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக, அங்கே குடியேறுவதற்கு இரு கப்பல்கள் நிறையப் பிரயாணிகளைக் கொண்டுவந்திருக்கிறேன் என்பது.

 

     என் பொறுப்பை நான் அறிவேன். என்னால் தாதா அப்துல்லா கம்பெனியார், பெரிய ஆபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். பிரயாணிகளின் உயிர்களுக்கு ஆபத்து இருக்கிறது. என் குடும்பத்தினரையும் அழைத்து வந்ததால் அவர்களையும் ஆபத்தில் வைத்துவிட்டேன் என்பவற்றை எல்லாம் அறிவேன்.

 

     ஆனால், நான் முற்றும் குற்றம் அற்றவன். நேட்டாலுக்குப் போகுமாறு நான் எவரையும் தூண்டவில்லை. பிரயாணிகள் கப்பலில் ஏறியபோது அவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. என் உறவினர் இருவரைத் தவிர கப்பலில் இருந்த பிரயாணிகளில் ஒருவருடைய பெயர், விலாசம் கூட எனக்குத் தெரியாது. நேட்டாலில் நான் இருந்தபோது வெள்ளைக்காரர்களைக் குறித்து நான் கூறாத வார்த்தை ஒன்றையேனும், இந்தியாவில் இருந்தபோது நான் சொன்னதே இல்லை. மேலும் நான் சொன்னது இன்னது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் இருக்கின்றன.

 

     நேட்டால் வெள்ளைக்காரர்கள் எந்த நாகரிகத்தின் கனிகளோ, எந்த நாகரிகத்தின் பிரதிநிதிகளாக இருந்து அதை ஆதரிக்கிறார்களோ அந்த நாகரிகத்திற்காக நான் வருந்தினேன். அந்த நாகரிகம் எப்பொழுதும் என் மனத்தில் இருந்து வந்தது. ஆகவே, அச்சிறு கூட்டத்தில் நான் பேசியபோது, அந்த நாகரிகத்தைப் பற்றிய என் கருத்தை எடுத்துக் கூறினேன். காப்டனும் மற்ற நண்பர்களும் பொறுமையுடன் கேட்டனர். எந்த உணர்ச்சியுடன் நான் பேசினேனோ அதே உணர்ச்சியுடன் என் பிரசங்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையின் போக்கை அப்பேச்சு எந்த வகையிலாவது மாற்றியதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னர் காப்டனுடனும் மற்ற அதிகாரிகளோடும் மோனட்டு நாகரிகத்தைக் குறித்து, நீண்டநேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். கிழக்கத்திய நாகரிகத்தைப்போல் அல்லாமல் மேற்கத்திய நாகரிகம் முக்கியமாக பலாத் காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று என் பிரசங்கத்தில் விவரித்தேன். என் கொள்கையை நானே நிறைவேற்ற முடியுமா என்று சிலர் கேள்வி கேட்டனர். அவர்களில் ஒருவர் காப்டன் என்பது எனக்கு ஞாபகம். அவர் என்னை நோக்கி “வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது உங்களுடைய அகிம்சைக் கொள்கையை எப்படிக் கடைப்பிடிப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “அவர்களை மன்னித்து, அவர்கள் மீது வழக்குத் தொடராமல் இருந்துவிடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்றே நம்புகிறேன். அவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை. அவர்களுடைய அறியாமைக்கும் குறுகிய புத்திக்கும் வருத்தமே கொள்ளுகிறேன். தாங்கள் இன்று செய்துகொண்டிருப்பது சரியானது, நியாயமானது என்று அவர்கள் உண்மையாகவே நம்புகிறார்கள் என்பதை அறிவேன். ஆகையால், அவர்கள் மீது நான் கோபம் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இல்லை”.

 

     கேள்வி கேட்டவர் சிரித்தார். ஒரு வேளை நான் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் அவர் சிரித்திருக்கலாம்.

 

     இப்படியாக நாட்கள் ஆயாசத்தை உண்டு பண்ணிய வண்ணம் நீண்டுகொண்டே இருந்தன. இப்படிக் கப்பல் ஒதுக்கி வைக்கப் பட்டிருப்பது எப்பொழுது ரத்தாகும் என்பது நிச்சயம் இல்லாமல் இருந்தது. இப்படிக் கப்பலை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட அதிகாரியோ, விஷயம் தம் கையை விட்டுக் கடந்துவிட்டது என்றும், அரசாங்கத்தின் உத்தரவு வந்ததுமே கப்பலில் இருந்து இறங்க எங்களை அனுமதித்து விடுவதாகவும் கூறினார்.

 

 

     கடைசியாக எனக்கும் பிரயாணிகளுக்கும் இறுதி எச்சரிக்கைகள் வந்து சேர்ந்தன. உயிரோடு நாங்கள் தப்பிப் போய்விட வேண்டுமானால், பணிந்துவிடுமாறு எங்களுக்குக் கூறப்பட்டது. எங்கள் பதிலில், பிரயாணிகளும் நானும் நேட்டால் துறைமுகத்தில் இறங்குவதற்கு எங்களுக்கு உள்ள உரிமையை வற்புறுத்தினோம். என்ன கஷ்டம் நேருவதாயினும், நேட்டாலில் பிரவேசித்தே தீருவது என்று நாங்கள் கொண்டிருந்த உறுதியையும் தெரிவித்தோம்.

 

     இருபத்து மூன்று நாட்கள் கழித்து, எங்கள் கப்பல்கள் துறைமுகத்திற்கு வர அனுமதித்தார்கள். பிரயாணிகள் இறங்குவதை அனுமதிக்கும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

 

 

கப்பல்களைக் கரையோரமாகக் கொண்டு போய் நிறுத்தினர்; பிரயாணிகளும் இறங்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஸ்ரீ எஸ்கோம்பு, காப்டனுக்கு ஒரு சமாசாரம் சொல்லியனுப்பியிருந்தார்: வெள்ளைக்காரர்கள் என்மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் என்றும், அதனால் என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்றும், நானும் என் குடும்பத்தினரும் இருட்டிய பிறகு கப்பலிலிருந்து இறங்கும்படி சொல்லுமாறும், அப்பொழுது துறைமுக சூப்பரிண்டெண்டென்டு ஸ்ரீ டாட்டம், எங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்ப்பார் என்றும் சொல்லி எச்சரித்தார். அப்படியே செய்வதாக நானும் ஒப்புக்கொண்டேன். அரை மணி நேரம்கூட ஆகியிராது. ஸ்ரீ லாப்டன், காப்டனிடம் வந்தார். அவர் சொன்னதாவது: “ஸ்ரீ காந்திக்கு ஆட்சேபம் இல்லையென்றால் அவரை என்னுடன் அழைத்துப்போக விரும்புகிறேன். ஸ்ரீ எஸ்கோம்பு உங்களுக்குச் சொல்லியனுப்பியிருப்பதை நிறைவேற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை. கப்பல் ஏஜெண்டான கம்பெனியின் சட்ட ஆலோசகன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன்”.

     பிறகு அவர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார்: “நீங்கள் பயப்படவில்லையானால், நான் ஒரு யோசனை கூறுகிறேன். ஸ்ரீமதி காந்தியும் குழந்தைகளும் ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டிற்கு, வண்டியில் முன்னால் போகட்டும். அவர்களுக்குப் பின்னால் நீங்களும் நானும் நடந்தே போவோம். இரவில் திருடனைப்போல் நகருக்குள் நீங்கள் பிரவேசிப்பது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. உங்களைத் துன்புறுத்தி விடுவார்கள் என்று அஞ்சுவதற்கு இடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இப்பொழுது எல்லாம் அமைதியாக இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கலைந்து போய்விட்டனர். ஆனால், எப்படியும் நீங்கள் ஒளிந்துகொண்டு நகருக்குள் வரக்கூடாது என்று மாத்திரம் நான் உறுதியாக எண்ணுகிறேன்.” இதற்கு நான் உடனே ஒப்புக்கொண்டேன். என் மனைவியும் குழந்தைகளும் வண்டியில் பத்திரமாக ஸ்ரீ ருஸ்தம்ஜியின் இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டனர். காப்டனின் அனுமதியின் பேரில் ஸ்ரீ லாப்டனுடன் நான் கப்பலிலிருந்து இறங்கினேன். துறைமுகத்திலிருந்து ஸ்ரீ ருஸ்தம்ஜி வீடு இரண்டு மைல் தூரம்.

     நாங்கள் கீழே இறங்கியதும், சில சிறுவர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். “காந்தி, காந்தி” என்று சப்தம் போட்டனர். இதைக் கேட்டதும் ஐந்தாறு பேர் அங்கே ஓடி வந்தார்கள். அவர்களும் சேர்ந்து கூச்சல் போட்டனர். கூட்டம் பலத்துவிடக் கூடும் என்று ஸ்ரீ லாப்டன் பயந்தார். பக்கத்தில் நின்ற ஒரு ரிக்ஷாவைக் கூப்பிட்டார். ரிக்ஷாவில் ஏறுவது என்பதே எனக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை. அப்படி ஏறியிருந்தால் அதுவே எனக்கு முதல் அனுபவமாக இருந்திருக்கும். ஆனால், நான் ரிக்ஷாவில் ஏறச் சிறுவர்கள் விடவில்லை. ரிக்ஷாக்காரனைக் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். அவன் ஓட்டம் எடுத்துவிட்டான். நாங்கள் போக ஆரம்பித்தோம். கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. மேற்கொண்டும் போக முடியாத அளவுக்குக் கூட்டம் பெருகிவிட்டது. முதலில் ஸ்ரீ லாப்டனைப் பிடித்து அப்புறப்படுத்தி எங்களைத் தனித் தனியாகப் பிரித்துவிட்டனர். பிறகு என்னைக் கற்களாலும் அழுகிய முட்டைகளாலும் அடித்தார்கள். ஒருவர் என் தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண்டார். மற்றவர்கள் என்னை அடிக்கவும் உதைக்கவும் ஆரம்பித்தனர். உணர்வு இழந்து சோர்ந்து விட்டேன். கீழே விழுந்து விடாமல் இருக்க ஒரு வீட்டின் முன்புறக் கிராதியைப் பிடித்துக் கொண்டேன். சற்று மூச்சுவிடலாம் என்று அங்கே நின்றேன். ஆனால், முடியவில்லை. அங்கே வந்ததும் என்னை முஷ்டியால் குத்தினர்; அடித்தனர். எனக்குத் தெரிந்தவரான போலீஸ் சூப்பரிண்டெண்டென்டின் மனைவியார் அப்பக்கம் வந்தார். அந்த வீரப் பெண்மணி என்னிடம் வந்தார். அப்பொழுது வெயில் இல்லை என்றாலும், தம் கைக்குடையை விரித்துக் கொண்டு எனக்கும் கூட்டத்திற்கும் நடுவில் நின்றுகொண்டார். ஜனக்கூட்டத்தின் கோப வெறியை இது தடுத்தது. போலீஸ் சூப்பிரிண்டெண்டென்டான ஸ்ரீ அலெக்ஸாண்டரின் மனைவிக்குத் துன்பம் இழைக்காமல் அந்த வெறியர்கள் என்னை அடிப்பது சிரமம் ஆகிவிட்டது.

     இதற்கு மத்தியில் இச்சம்பவத்தைப் பார்த்த ஓர் இந்திய இளைஞர், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். என்னைச் சுற்றி நின்று கொண்டு, நான் போக வேண்டிய இடத்தில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வருமாறு கூறிப் போலீஸ் சூப்பரிண்டெண்டென்டான ஸ்ரீ அலெக்ஸாண்டர், போலீஸ்காரர்களை அனுப்பினார். நல்ல சமயத்தில் அவர்களும் வந்து சேர்ந்தனர். போலீஸ் ஸ்டேஷன், நாங்கள் போகும் வழியில் இருந்தது. நாங்கள் அங்கே போனதும், ஸ்டேஷனிலேயே பத்திரமாகத் தங்கிவிடுமாறு சூப்பரிண்டெண்டென்டு கூறினார். அவர் யோசனைக்கு நன்றி கூறினேன். ஆனால், அங்கே தங்க மறுத்துவிட்டேன். “தங்கள் பிழையை உணரும்போது அவர்கள் சாந்தம் அடைந்துவிடுவது நிச்சயம். அவர்களுக்கு நியாய புத்தியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றேன். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன், மேற்கொண்டு எவ்விதத் துன்பமும் இல்லாமல் ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டை அடைந்தேன். உடம்பெல்லாம் இசிவு, ஊமைக்காயம் ஓர் இடத்தில் மாத்திரம் தோல் பெயர்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. அங்கே இருந்த கப்பலின் டாக்டர் தம்மால் சாத்தியமான எல்லா உதவிகளையும் செய்தார்.

     வீட்டிற்குள் அமைதியாக இருந்தது; ஆனால், வெளியிலோ வெள்ளையர், வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். இரவும் வந்து, ‘காந்தியை வெளியே அனுப்பு!’ என்று அந்த ஆவேசக்கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. நிலைமையை உடனே அறிந்துகொண்ட போலீஸ் சூப்ரிண்டெண்டென்டு, கூட்டம் கட்டுக் கடங்காது போய்விடாதபடி ஏற்கனவே வந்து சமாளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தை அவர் விரட்டவில்லை. அவர்களிடம் தமாஷ் செய்தே சமாளித்து வந்தார். என்றாலும், நிலைமை அவரும் கவலைப் பட வேண்டியதாகவே இருந்தது. பின்வருமாறு எனக்குச் செய்தி அனுப்பினார்: “உங்கள் நண்பரின் வீட்டையும் சொத்துக்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் பாதுகாக்க விரும்பினால், என் யோசனைப்படி மாறுவேடத்துடன் நீங்கள் வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்துவிட வேண்டும்.”

     இவ்விதம் ஒரே நாளிலேயே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு நிலைமைகளை நான் சமாளிக்க வேண்டியதாயிற்று. உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கற்பனையில் மாத்திரமே பயந்த ஸ்ரீ லாப்டன், என்னைப் பகிரங்கமாக வெளியில் வருமாறு யோசனை கூறினார். அந்த யோசனையை ஏற்று நடந்தேன். ஆபத்து முற்றும் உண்மையாகவே இருந்த சமயத்தில், மற்றொரு நண்பர் அதற்கு நேர்மாறான யோசனையைக் கூறினார். அதையும் ஏற்று நடந்தேன். என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதனால் அப்படிச் செய்தேனா, அல்லது என் நண்பரின் உயிருக்கும் சொத்துக்கும் என் மனைவி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட வேண்டாம் என்பதற்காக அப்படிச் செய்தேனா என்பதை யார் கூற முடியும்? மேலே கூறியது போல், முதலில், கூட்டத்தை நான் தைரியமாக எதிர்த்து நின்றது, பின்னால் மாறுவேடத்துடன் நான் தப்பியது ஆகிய இரண்டிலும் நான் செய்தது சரிதான் என்று யாரால் நிச்சயமாகச் சொல்ல முடியும்?

     நடந்து போய்விட்ட சம்பவங்களைக் குறித்து, அவை சரியா, தப்பா என்ற ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்குவது வீண் வேலை, அவைகளைப் புரிந்துகொள்ளுவதும், சாத்தியமானால் அவைகளிலிருந்து அனுபவம் பெறுவதும் பயன் உள்ளதே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட ஒருவர், இவ்வாறுதான் நடந்து கொள்ளுவார் என்று நிச்சயமாகச் சொல்லுவது கஷ்டம். அதோடு, ஒருவருடைய வெளிப்படையான காரியங்களிலிருந்து, அவருடைய குணத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டு அறிந்துவிட முடியாது என்பதையும் நாம் காணலாம். ஏனெனில், அவருடைய குணத்தைக் கண்டு அறிந்துவிட, அவருடைய வெளிப்படையான காரியங்கள் மாத்திரம் போதுமான ஆதாரங்கள் ஆகிவிடா.

     அது எப்படியாவது இருக்கட்டும். தப்பிப் போய் விடுவதற்குச் செய்த ஏற்பாடுகளில் என் காயங்களை மறந்து விட்டேன். சூப்பரிண்டெண்டென்டின் யோசனைப்படி, இந்தியக் கான்ஸ்டபிளின் உடையைப் போட்டுக்கொண்டேன். ஒரு சட்டி மீது மதராஸி அங்கவஸ்திரத்தைச் சுற்றிக் கவசமாகத் தலையில் வைத்துக்கொண்டேன். என்னுடன் இரண்டு துப்பறியும் போலீஸார் வந்தனர். அவர்களில் ஒருவர், இந்திய வர்த்தகர் வேஷம் போட்டுக்கொண்டார். இந்தியரைப்போல் தெரிய வேண்டும் என்பதற்காக அவர், தம் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டார். மற்றொருவர் என்ன வேடம் போட்டுக் கொண்டார் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு குறுக்குச் சந்தின் வழியாகப் பக்கத்துக் கடைக்குள் புகுந்தோம். அங்கே அடுக்கிக் கிடந்த சாக்குக் கட்டுகளின் ஊடேசென்று, அக் கடையின் வாசலை அடைந்தோம். அங்கிருந்து கூட்டத்திற்குள் புகுந்து, தெருக்கோடிக்குப் போனோம். அங்கே ஒரு வண்டி எங்களுக்குக்கென்று தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறி, போலீஸ் ஸ்டேஷனை அடைந்தோம். எனக்கு அடைக்கலம் தருவதாக ஸ்ரீ அலெக்ஸாண்டர், கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னதும், அதே போலீஸ் ஸ்டேஷன்தான். அவருக்கும் துப்பறியும் அதிகாரிகளுக்கும் நன்றி கூறினேன்.

     இவ்வாறு நான் தப்பி வந்துகொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீ அலெக்ஸாண்டர் ‘புளிப்பு ஆப்பிள் மரத்தில், கிழட்டுக் காந்தியைத் தூக்கில் போடு!’ என்று பாட்டுப்பாடி, அவர்களுக்குச் சுவாரஸ்யம் அளித்துக் கொண்டிருந்தார். நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டேன் என்பது தெரிந்ததும், அவர், பின்வரும் செய்தியைக் கூட்டத்தினருக்கும் வெளியிட்டார். “சரி நீங்கள் தேடும் ஆசாமி, பக்கத்துக் கடைவழியாகத் தப்பிப் போய்விட்டார். ஆகையால், இப்பொழுது நீங்கள் வீட்டுக்குப் போகலாம்”. இதைக் கேட்டுச் சிலர் கோபம் அடைந்தனர். மற்றவர்களோ சிரித்தனர். இக்கதையைச் சிலர் நம்பவே மறுத்துவிட்டனர்.

     சூப்பரிண்டெண்டென்டு கூறியதாவது: “நான் சொல்லுவதை நீங்கள் நம்பவில்லையென்றால், உங்கள் பிரிதிநிதியாக ஒருவரை அல்லது இருவரை நியமியுங்கள். அவர்களை வீட்டுக்குள் அழைத்துப் போக நான் தயார். அவர்கள் காந்தியை அங்கே கண்டுபிடித்து விட்டால் அவரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்கள் கண்டுபிடிக்கவில்லை யென்றால் நீங்கள் கலைந்து போய்விட வேண்டும். ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டை நாசப்படுத்த வேண்டும் என்பதோ, ஸ்ரீ காந்திஜியின் மனைவியையும் குழந்தைகளையும் துன்புறுத்த வேண்டும் என்பதோ உங்கள் நோக்கம் அல்ல என்று நம்புகிறேன்.”

     வீட்டைச் சோதிக்கக் கூட்டத்தினர் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பினார்கள். ஏமாற்றச் செய்தியுடன் அவர்கள் சீக்கிரமே திரும்பிவிட்டனர். கடைசியாகக் கூட்டமும் கலைந்தது. அவர்களில் பெரும்பாலானவர் சூப்பரிண்டெண்டென்டு சாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்திருப்பதைப் பாராட்டினர். மற்றும் சிலரோ, ஆத்திரத்தினால் குமுறிக் கொண்டே போனார்கள்.

     காலஞ்சென்ற ஸ்ரீ சேம்பர்லேன், அப்பொழுது குடியேற்ற நாடுகளின் மந்திரியாக இருந்தார். என்னைத் தாக்கியவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடருமாறு நேட்டால் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு அவர் தந்தி கொடுத்தார். ஸ்ரீ எஸ்கோம்பு என்னைக் கூப்பிட்டனுப்பினார். எனக்கு ஏற்பட்ட காயங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அவர் கூறியதாவது: “உங்கள் உடம்புக்கு மிகச் சொற்ப தீங்கு இழைக்கப்படினும் அதற்காக நான் வருந்தாமல் இருக்க முடியாது. இதை நீங்கள் நம்புங்கள். என்ன வந்தாலும் சரி என்று ஸ்ரீ லப்டனுடைய யோசனையை ஏற்கு கொள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் யோசனையை நீங்கள் கொஞ்சம் கவனித்திருப்பீர்களாயின், இந்தத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தே இரா என்பது நிச்சயம். அவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர நான் தயாராக இருக்கிறேன். நான் அவ்வாறு செய்ய வேண்டும் என்றே ஸ்ரீ சேம்பர்லேனும் விரும்புகிறார்.”

     அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “யார் மீதும் குற்றஞ்சாட்டி, வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. அவர்களில் இரண்டொருவரை நான் அடையாளம் கண்டுபிடிப்பதும் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தண்டனை அடையும்படி செய்வதால் என்ன பயன்? மேலும் அடித்தவர்களே குற்றஞ் செய்தவர்கள் என்று நான் கருதவில்லை. நேட்டால் வெள்ளையரைக் குறித்து, இந்தியாவில் இல்லாதது பொல்லாததை எல்லாம் நான் கூறி, அவர்களை அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் எண்ணும்படி செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு கூறப்பட்டதை அவர்கள் நம்பினார்கள் என்றால், அவர்கள் ஆத்திரம் அடைந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர்களைப் பற்றியும் நான் இப்படிக்கூறுவதை நீங்கள் அனுமதிப்பதாக இருந்தால், உங்களையும்தான் இதற்கெல்லாம் குற்றஞ் சொல்ல வேண்டும். மக்களைச் சரியான வழியில் நீங்கள் நடத்திச் சென்றிருக்கலாம். ஆனால், ராய்ட்டரின் செய்தியை நீங்களும் நம்பிவிட்டீர்கள். இல்லாததையெல்லாம் நான் கூறியிருப்பேன் என்று நீங்களும் எண்ணிக் கொண்டீர்கள். யார்மீதும் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. உண்மை தெரிந்ததும், தாங்கள் நடந்து கொண்டு விட்டதற்கு அவர்களே வருந்துவார்கள் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்.”

     “நீங்கள் கூறியதைத் தயவு செய்து எழுத்து மூலம் கொடுக்கிறீர்களா?” என்று ஸ்ரீ எஸ்கோம்பு கேட்டார். அவர் மேலும் கூறியதாவது: “ஏனெனில், அப்படியே நான் ஸ்ரீ சேம்பர்லேனுக்குத் தந்தி மூலம் அறிவித்துவிட வேண்டியிருக்கிறது. அவசரத்தில் நீங்கள் எதையும் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. திட்டமான ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், நீங்கள் விரும்பினால், ஸ்ரீ லாப்டனையும் மற்ற நண்பர்களையும் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒன்றை மாத்திரம் உங்களிடம் ஒப்புக்கொண்டு விடுகிறேன். உங்களைத் தாக்கியவர்கள் மீது குற்றஞ்சாட்டி, வழக்குத் தொடரும் உரிமையை நீங்கள் விட்டுக் கொடுத்து விடுவீர்களாயின், அமைதியை நிலைநாட்டுவதற்கு அதிக அளவு எனக்கு உதவி செய்தவர்கள் ஆவீர்கள். அதோடு உங்கள் பெருமையையும் உயர்த்திக் கொண்டவர்கள் ஆவீர்கள்”.

     “உங்களுக்கு நன்றி. நான் யாரையும் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. உங்களிடம் வருவதற்கு முன்னாலேயே இது சம்பந்தமாக நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என்னைத் தாக்கியவர்கள் மீது குற்றஞ் சாட்டி, வழக்குத் தொடரக்கூடாது என்பது என் கொள்கை. என் தீர்மானத்தை இப்பொழுதே எழுத்து மூலம் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்.” இப்படிக் கூறி அவசியமான அறிக்கையை எழுதிக் கொடுத்தேன்.

 

  • 4. புயலுக்குப் பின் அமைதி

 

இன்னும் போலீஸ் ஸ்டேஷனை விட்டு, நான் வீட்டுக்குப் போகவில்லை. இரண்டுநாள் கழித்துப் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபடியே என்னை ஸ்ரீ எஸ்கோம்பிடம் அழைத்துச் சென்றனர். எனக்குப் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை எதுவுமே தேவை இல்லாதிருந்தும் என் பாதுகாப்புக்காக இரு போலீஸாரை என்னுடன் அனுப்பினர்.

     கப்பலிலிருந்து இறங்கிய அன்று, மஞ்சள் கொடி இறக்கப்பட்டதும், ‘நேட்டால் அட்வர்டைஸர்’ பத்திரிகையின் பிரதிநிதி, என்னைப் பேட்டி காண்பதற்குக் கப்பலுக்கு வந்தார். அவர் என்னைப் பல கேள்விகள் கேட்டார். அவற்றிற்குப் பதில் அளிக்கையில், என்மீது கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நான் மறுக்க முடிந்தது. இந்தியாவில் நான் செய்த பிரசங்கங்கள் யாவும் எழுதிப் படித்தவை. இதற்காக ஸர் பிரோஸ்ஷோ மேத்தாவுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். அந்தப் பிரசங்கங்களின் பிரதிகளும் என்னிடம் இருந்தன. நான் மற்றபடி பத்திரிகைகளுக்கு எழுதியவைகளுக்கும் நகல் வைத்திருந்தேன். என்னைப் பேட்டிகாண வந்த நிருபரிடம் அவைகளையெல்லாம் கொடுத்தேன். தென்னாப்பிரிக்காவில், அதிகக் கடுமையான பாஷையில் சொல்லாதது எதையும் நான் இந்தியாவில் சொல்லி விடவே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன். ‘கோர்லாண்டு’, ‘நாதேரி’ கப்பல்களில் பிரயாணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததில், என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன். அப் பிரயாணிகளில் அநேகர், முன்பே அங்கே வசிப்பவர்கள். மற்றும் பலர் டிரான்ஸ்வாலுக்குப் போகிறவர்களேயன்றி நேட்டாலில் தங்க விரும்புகிறவர்கள் அல்ல. அந்தக் காலத்தில் செல்வம் தேட வருகிறவர்களுக்கு, நேட்டாலைவிட டிரான்ஸ்வால்தான் அதிகச் சௌகரியமானதாக இருந்தது. ஆகையால், இந்தியரில் அநேகர் அங்கே போகவே விரும்பினார்கள்.

     பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியும், என்னைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடர நான் மறுத்ததும், மிகச் சிறந்த வகையில் என் பேரில் நல்லெண்ணத்தை உண்டாக்கி விட்டன. தங்கள் நடத்தைக்காக டர்பன் ஐரோப்பியர்கள் வெட்கப்பட்டனர். நான் ஒரு பாவமும் அறியாதவன் என்று பத்திரிகைகள் கூறின; ஜனக்கூட்டத்தின் செயலைக் கண்டித்தன. இவ்விதம் என்னை ஆத்திரத்துடன் கொல்ல முயன்றது, எனக்கு அதாவது என் லட்சியத்திற்கு பெரும் நன்மையாகவே முடிந்தது. தென்னாப்பிரிக்காவில் இந்திய சமூகத்தின் கௌரவம் இதனால் உயர்ந்தது; என் வேலையையும் இது எளிதாக்கியது.

     மூன்று, நான்கு நாட்களில் நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். சீக்கிரத்திலேயே வழக்கம்போல் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டேன். மேற்கண்ட சம்பவம் என் வக்கீல் தொழிலிலும் வருமானம் அதிகமாகும்படி செய்தது.

     சமூகத்தின் கௌரவத்தை அது அதிகமாக்கியதுடன் சமூகத்தின்மீது இருந்த துவேஷத்தையும் அது வளர்த்து விட்டது. இந்தியன், ஆண்மையுடன் எதிர்த்தும் போராடுவான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட உடனே அவன், தங்கள் நலத்துக்கு ஓர் ஆபத்து என்றும் வெள்ளைக்காரர்கள் கருதலானார்கள். நேட்டால் சட்டசபையில் இரு மசோதாக்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஒன்று, இந்திய வர்த்தகர்களுக்குப் பாதகம் விளைவிக்கக்கூடியது; மற்றொன்று, இந்தியர் வந்து குடியேறுவதற்கு கடுமையான தடையை விதிப்பது. வாக்குரிமைக்காக நடத்திய போராட்டத்தினால் அதிர்ஷ்டவசமாக ஒரு பலன் ஏற்பட்டிருந்தது. அதாவது, நிறம் அல்லது இனத்தைக் குறித்துச் சட்டம் பேதம் காட்டக் கூடாதாகையால், இந்தியர் என்ற வகையில் அவர்களுக்கு விரோதமாக எந்தச் சட்டமும் செய்யக்கூடாது என்று முடிவாகி இருந்தது. ஆகையால், மேற்கண்ட மசோதாக்களின் வாசகம், எல்லோருக்கும் அச்சட்டம் அமுலாகும் என்ற முறையில் இருந்தது. ஆனால், அவர்களுடைய உண்மையான நோக்கம், நேட்டாலில் இருக்கும் இந்தியருக்கு மேற்கொண்டும் நிர்பந்தங்களை உண்டாக்குவதேயாகும்.

     இம் மசோதாக்கள், எனக்கு இருந்த பொது வேலையை அதிக அளவுக்கு அதிகமாக்கிவிட்டன. சமூகம், எப்பொழுதையும்விட நன்றாகத் தன் கடமையை உணர்ந்திருக்கும்படியும் இவை செய்தன. அம் மசோதாக்களில் மறைந்திருந்த விஷம நோக்கத்தைச் சமூகத்தினர் அறியும்படி செய்வதற்காக, அவைகளை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, முற்றும் விளக்கியும் வைத்தோம். குடியேற்ற நாட்டு மந்திரிக்கு விண்ணப்பித்துக் கொண்டோம். இதில் தலையிட அவர் மறுத்துவிட்டதால், மசோதாக்கள் சட்டம் ஆகிவிட்டன.

     நேரம் முழுவதையும் அநேகமாக நான் பொது வேலைக்கே செலவிட வேண்டியதாயிற்று. நான் முன்பு கூறியது போல், ஸ்ரீ மன்சுக்லால் நாஸர், டர்பனுக்கு முன்பே வந்து விட்டதால், அவர் என்னுடன் தங்கலானார். தம் நேரத்தை அவர் பொது வேலைகளில் செலவிட்டதால் ஓரளவுக்கு எனக்கு இருந்த வேலை குறைந்தது.

     நான் இல்லாதிருந்த சமயத்தில் எனக்குப் பதிலாக காங்கிரஸ் காரியதரிசியாக இருந்த சேத் ஆதம்ஜி மியாகான், போற்றத்தக்க வகையில் தமது கடமையை நிறைவேற்றியிருந்தார். அங்கத்தினர்கள் தொகையை அதிகமாக்கியிருந்தார். அதோடு, நேட்டால் இந்தியக் காங்கிரஸின் நிதியிலும் சுமார் ஆயிரம் பவுன் அதிகமாக்கியிருந்தார். இம் மசோதாக்களினாலும், நாங்கள் கப்பலிலிருந்து இறங்கியபோது நடந்த ஆர்ப்பாட்டங்களினாலும் இந்தியரிடையே ஏற்பட்டிருந்த விழிப்பை நான் நல்ல வழியில் பயன்படுத்திக் கொண்டேன். அங்கத்தினர்கள் அதிகமாகச் சேருவதுடன் பணமும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இப்பொழுது நிதி 5,000 பவுன் ஆயிற்று. காங்கிரஸு க்கு நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த நிதியைக்கொண்டு சொத்துக்களை வாங்கி, அச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்துவருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஒரு பொது ஸ்தாபனத்தை நிர்வகிப்பதில் எனக்கு இது முதல் அனுபவம். என் யோசனையை என் சக ஊழியர்களிடம் அறிவித்தேன். அவர்களும், இதை ஆதரித்தனர். வாங்கிய சொத்து, வாடகைக்கு விடப்பட்டது. கிடைத்த வட்டி, காங்கிரஸின் நடைமுறைச் செலவுக்குப் போதுமானதாக இருந்தது. சொத்தை நிர்வகிப்பதற்குச் செல்வாக்குள்ளவர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். இன்றும்கூட அது இருந்து வருகிறது. ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

     இந்தத் துக்ககரமான நிலைமை நான் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த பிறகு உண்டாயிற்று. ஆனால், இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறிவிட்டது. இப்பொழுதோ, பல பொது ஸ்தாபனங்களை நான் நிர்வகித்திருப்பதால் எனக்கு அதிக அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ‘நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்களை நடத்துவது நல்லது அல்ல’ என்பதே இப்பொழுது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது. நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்திற்கு இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும் அந்நிதியுடன் ஊன்றப்பட்டு விடுகிறது. பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்குப் பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்பிராயத்திற்கு மாறுபட்ட காரியங்களையும் அடிக்கடி செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தரும ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள், கணக்குக் காட்டுவது என்பதையே விட்டு விட்டன. தருமகர்த்தாக்களே, அச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள், யாருக்கும் பொறுப்பாளிகள் அல்ல. ‘இயற்கையைப் போல, அன்றைக்குத் தேவையானதைப் பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது’ என்பதில், எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்து வரும் உரிமையே இல்லை. வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத்தொகை, அதன் செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து. ஆனால், யாரும் என்னைத் தவறாக எண்ணிக் கொண்டுவிட வேண்டாம். சில ஸ்தாபனங்களை, அவைகளின் தன்மையை அனுசரித்து, நிரந்தரமான கட்டடம் இல்லாமல் நடத்த முடியாது. நான் கூறியவை, அத்தகைய ஸ்தாபனங்களுக்கு பொருந்தாது. பொது ஸ்தாபனங்களின் நடைமுறைச் செலவுகளை ஒவ்வொரு வருடமும் தானாகக் கிடைக்கும் சந்தாப் பணத்தைக் கொண்டு நிர்வகித்து வரவேண்டும் என்று சொல்லவே நான் விரும்புகிறேன்.

     தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக நாட்களில் இக் கருத்து ஊர்ஜிதமாயிற்று. அந்த மகத்தான போராட்டம், ஆறு ஆண்டுகள் வரை நடந்தது. அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படும். நிரந்தரமான நிதி எதுவும் இல்லாமலேயே அதை நடத்தினோம். சந்தா கிடைக்காவிட்டால் அடுத்த நாளைக்கு என்ன செய்வதென்று எனக்குத் தெரியாமல் இருந்த சமயங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன. ஆனால், வருங்காலத்தில் என்ன நேரும் என்பதை நான் இப்பொழுது சொல்லுவதற்கில்லை. இனிக் கூறப்போகும் வரலாற்றில், மேலே சொன்ன கருத்துக்கள் சரியானபடி நிரூபிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் காணலாம்.

 

  • 5. குழந்தைகளின் படிப்பு

 

1897 ஜனவரியில், டர்பனில் நான் இறங்கியபோது என்னுடன் மூன்று குழந்தைகள் இருந்தார்கள். என் சகோதரியின் பத்து வயதான மகன் ஒருவன்; ஒன்பது வயதும், ஐந்து வயதும் உள்ள என் புத்திரர்கள் இருவர். இவர்களை எங்கே படிக்க வைப்பது?

ப்பியக் குழந்தைகளுக்கு என்று இருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு நான் அவர்களை அனுப்பியிருக்கலாம். ஆனால், என் குழந்தைகளுக்குச் சலுகை அளித்து, விதிவிலக்குப் பெற்றால்தான் அங்கே சேர்த்துக் கொள்ளுவார்கள். வேறு எந்த இந்தியரின் குழந்தைகளையும் அப் பள்ளிக்கூடங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. இந்தியக் குழந்தைகளுக்கென்று, கிறிஸ்தவப் பாதிரிகள் வைத்திருக்கும் பள்ளிக்கூடங்களில் அளிக்கப்படும் கல்வி எனக்குப் பிடிக்கவில்லையாகையால் என் குழந்தைகளை அங்கே அனுப்ப நான் தயாராக இல்லை. இதற்கு ஒரு காரணம், அங்கே ஆங்கிலத்திலேயே எல்லாப் பாடங்களும் போதிக்கப்பட்டு வந்ததாகும். இல்லாவிட்டால், பிழையான தமிழ் அல்லது ஹிந்தியில் போதிப்பார்கள். இதையும் கஷ்டத்தின் பேரில்தான் ஏற்பாடு செய்யவேண்டி இருந்திருக்கும். இதையும் மற்ற அசௌகரியங்களையும் சமாளித்துக்கொண்டு போக என்னால் முடியாது. இதற்கு மத்தியில் இக் குழந்தைகளுக்கு நானே போதிப்பது என்று சொந்த முயற்சியும் செய்து கொண்டிருந்தேன். ஆனால், நான் சொல்லிக்கொடுப்பது என்றால் ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பதாக இருக்கமுடியாது. தக்க குஜராத்தி உபாத்தியாயரும் எனக்குக் கிடைக்கவில்லை.

 

     ஆகையால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். என் மேற்பார்வையில், குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஓர் ஆங்கில உபாத்தியாயர் தேவை என்று விளம்பரம் செய்தேன். இந்த உபாத்தியாயர் ஒழுங்காக ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டு வரவேண்டும். மற்றப்படிப்பு விஷயங்களைப் பொறுத்தமட்டும் எனக்கு ஒழிந்தபோது அப்போதைக்கப்போது நான் சொல்லிக் கொடுப்பதோடு குழந்தைகள் திருப்தியடைய வேண்டியதே என்று முடிவு செய்தேன். ஆகவே ஓர் ஆங்கில மாதை, மாதம் ஏழு பவுன் சம்பளத்தில், குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க அமர்த்தினேன். இந்த ஏற்பாடு கொஞ்சகாலம் நடந்து வந்தது. ஆனால், எனக்கு இது திருப்திகரமாக இல்லை; நான் எப்பொழுதும் குழந்தைகளுடன், தாய்மொழியிலேயே பேசிப் பழகி வந்தேன். இதனால், அவர்களுக்குக் கொஞ்சம் குஜராத்தி தெரிய வந்தது. குழந்தைகளைத் திரும்ப இந்தியாவிற்கு அனுப்பிவிடுவதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில், சிறு குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரிக்கவே கூடாது என்று, அந்த நாளிலிருந்தே நான் கருதிவந்தேன்.

 

     ஒழுங்கான ஒரு குடும்பத்தில், குழந்தைகள் இயற்கையாகவே அடையும் கல்விப் பயிற்சியை, மாணவர்களின் விடுதிகளில் அவர்கள் அடைய முடியாது. ஆகையால், என் குழந்தைகளை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். என் சகோதரியின் மகனையும் என் மூத்த மகனையும், இந்தியாவில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு பள்ளிக்குக் கொஞ்சகாலம் அனுப்பினேன். ஆனால், சீக்கிரத்திலேயே அவர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டுவிட வேண்டியதாயிற்று. பிறகு என் மூத்த மகன், வயதடைந்த வெகு காலத்திற்குப் பிறகு, என்னிடம் மனஸ்தாபம் கண்டு, இந்தியாவுக்குப் போய்விட்டான். அங்கே அகமதாபாத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான். ஆனால் என் மருமகனோ, என்னால் கொடுக்க முடிந்த கல்வியோடு திருப்தியடைந்து என்னுடனேயே இருந்துவிட்டான் என்று ஞாபகம். நல்ல வாலிபப் பருவத்தில் அவன் துரதிருஷ்டவசமாகச் சிறிது காலம் நோயுற்றிருந்து இறந்து போய்விட்டன். என் குமாரர்களில் மற்ற மூவரும் பொதுப் பள்ளிக்கூடத்திற்குப் போய்ப் படித்ததே இல்லை. ஆனால் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு இருந்தவர்களின் குழந்தைகளுக்கென்று நான் ஆரம்பித்துச் சிறிது காலம் நடத்திக்கொண்டிருந்த வசதிக் குறைவான பள்ளிக்கூடங்களில் இவர்கள் சிறிது காலம் ஒழுங்காகப் படித்து வந்தனர்.

 

     இந்தப் பரிசோதனைகளெல்லாம் அரைகுறையானவைகளே. நான் விரும்பிய அளவு, குழந்தைகளுக்காக என் நேரத்தைச் செலவிட என்னால் முடியவில்லை. அவர்கள் விஷயத்தில் போதிய கவனம் செலுத்த என்னால் முடியாது போனதும், தவிர்க்கமுடியாத வேறு காரணங்களும், அவர்களுக்கு நான் அளிக்க விரும்பிய இலக்கியக் கல்வியை அளிக்க முடியாதபடி செய்துவிட்டன. இவ்விஷயத்தில் என்மீது என் குமாரர்கள் குறைகூறியிருக்கின்றனர். எம். ஏ. அல்லது பி. ஏ. படித்தவரையோ அல்லது மெட்ரிகுலேஷனாவது படித்தவர்களையோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம், பள்ளிக்கூடப் படிப்பு இல்லாததன் கஷ்டத்தை அவர்கள் உணருவதாகத் தோன்றுகிறது.

 

     அது எப்படியானாலும் என் அபிப்பிராயம் வேறு. எப்படியாவது அவர்களைப் பொதுப் பள்ளிக்கூடத்தில் பிடிவாதமாகப் படிக்க வைத்திருந்தேனாயின், அனுபவம் என்ற பள்ளிக்கூடத்தில் மாத்திரம் கிடைக்கக்கூடியதான, பெற்றோருடன் இருப்பதால் அடைவதான கல்வி, அவர்களுக்கு இல்லாது போயிருக்கும். அவர்களைப்பற்றி நான் இன்று கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கிறேன்; இப்படி இருக்கமுடியாமலும் போயிருக்கும். என்னைவிட்டுப் பிரிந்து, இங்கிலாந்திலோ, தென்னாப்பிரிக்காவிலோ அவர்கள் பெற்றிருக்கக்கடிய இயற்கையல்லாத கல்வி, இன்று வாழ்க்கையில் அவர்கள் காட்டி வரும் எளிமையையும், சேவா உணர்ச்சியையும் அவர்களுக்குப் போதித்தே இராது. மேலும், அவர்களுடைய செயற்கை வாழ்க்கை முறை எனது பொது வேலைக்குப் பெரிய இடையூறாகவும் இருந்திருக்கும். ஆகையால், என் திருப்திக்கு ஏற்ற வகையிலோ, அவர்கள் திருப்தியடையும் வகையிலோ, அவர்களுக்கு இலக்கியக் கல்வியை அளிக்க என்னால் முடியாது போயிற்று. ஆனாலும், என்னுடைய சக்திக்கு எட்டிய மட்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய என் கடமையை நான் செய்யாமல் இருந்துவிடவில்லை என்று, என்னுடைய கடந்த ஆண்டுகளைத் திரும்ப எண்ணிப் பார்க்கும்போது நான் நிச்சயமாகக் கருதுகிறேன். பொதுப் பள்ளிக் கூடங்களுக்குக் குழந்தைகளை அனுப்பாது போனோமே என்று நான் வருந்தவே இல்லை. இன்று என் மூத்த மகனிடம் விரும்பத்தகாத குணங்களை நான் காண்கிறேன். கட்டுத் திட்டமும் ஒழுங்கும் அற்ற என் இளவயதின் எதிரொலியே அது என்று நான் எப்பொழுதும் உணருகிறேன். என் வாழ்நாளின் அப்பகுதி, அரைகுறையான அறிவும், சுகபோகப் பற்றும் நிரம்பியிருந்த காலம் என்று கருதுகிறேன். அந்த காலமும் என் மூத்த மகனுக்கு நன்றாகப் புத்தி தெரிந்த காலமும் ஒன்றாக இருந்தன. அது, நான் அனுபவம் இன்மையிலும், இன்ப நுகர்ச்சியிலும் திளைத்த காலம் என்று கருத இயற்கையாகவே அவன் மறுத்து விட்டான். இதற்கு நேர்மாறாக அதுவே என்னுடைய வாழ்க்கையின் மிக சிறந்த காலம் என்றும், பின்னால் எனக்கு ஏற்பட்ட மாறுதல்கள், அறிவுத்தெளிவு என்று தவறாகக் கூறப்படும் மதிமயக்கத்தினால் ஏற்பட்டவை என்றும் அவன் கருதிவிட்டான். அவன் அப்படியே எண்ணியிருக்கட்டும். என் வாழ்க்கையின் ஆரம்ப காலம், நான் புத்தித்தெளிவு பெற்றிருந்த காலம் என்றும் பெரிய மாறுதல்கள் ஏற்பட்ட பிந்திய காலமே மாயையும், அகந்தையும் நிறைந்த காலம் என்றும், அவன் ஏன் எண்ணக் கூடாது? அடிக்கடி நண்பர்கள் என்னைக் கீழ்வரும் பல கேள்விகளைக் கேட்டு மடக்கப் பார்த்திருக்கின்றனர். ‘உங்கள் குழந்தைகளுக்குக் கலாசாலைப் படிப்பு அளித்திருந்தால் அதனால் என்ன தீமை விளைந்திருக்கும்?’ ‘இவ்விதம் அவர்களுடைய சிறகுகளைத் துண்டித்துவிடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ ‘படித்துப் பட்டம் பெற்று, தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துறைகளை அவர்கள் மேற் கொள்ளுவதற்கு நீங்கள் ஏன் குறுக்கே நின்றிருக்க வேண்டும்?’

 

     இந்த விதமான கேள்விகளில் அதிக முக்கியத்துவம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனையோ மாணவர்களுடன் நான் பழகியிருக்கிறேன். கல்வியைக் குறித்து எனக்குள்ள கொள்கைகளை நானாகவோ, மற்றவர்களின் மூலமோ வேறு குழந்தைகளிடமும் அனுசரித்து, அதன் பலனையும் கவனித்திருக்கிறேன். என் புத்திரர்களின் வயதினரான மற்றும் பல இளைஞர்களை எனக்குத் தெரியும். மனிதனுக்கு மனிதன் ஒப்பிட்டுப் பார்த்தால், என் புதல்வர்களைவிட அவர்கள் எந்த விதத்திலும் மேலானவர்கள் என்றோ, அவர்களிடமிருந்து என் புதல்வர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய எதுவும் இருப்பதாகவோ நான் எண்ணவில்லை.

 

     ஆனால் என்னுடைய சோதனைகளின் முடிவான பலன், காலத்தின் கருப்பையில் இருக்கிறது. இந்த விஷயத்தை நான் இங்கே விவாதிப்பதற்கு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. நாகரிகவளர்ச்சியின் வரலாற்றை ஆராயும் ஒருவர், கட்டுப்பாட்டோடு கூடிய வீட்டுப் படிப்பிற்கும், பள்ளிக்கூடப் படிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும், பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையில் செய்யும் மாறுதல்களுக்கு ஏற்ற வகையில் குழந்தைகளிடையே ஏற்படும் மாறுதல்களையும் ஓரளவு அறிந்துகொள்ளக் கூடும் அல்லவா? இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு: சத்தியத்தை நாடும் ஒருவர், சத்தியத்தைக்கொண்டு, தாம் செய்யும் சோதனைகளில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கிறது என்பதையும் சுதந்திரத்தை நாடுபவரிடமிருந்து அக்கண்டிப்பான சுதந்திர தேவி, என்ன என்ன தியாகங்களை எதிர் பார்க்கிறாள் என்பதையும் காட்டுவதே அக்காரணம் ஆகும். எனக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாதிருந்திருக்குமானால், மற்றவர்களுக்குக் கிட்டாத கல்வி, என் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கொண்டு நான் திருப்தியடைந்து விடுபவனாக இருந்திருந்தால், அவர்களுக்கு நல்ல இலக்கியக் கல்வியை அளித்திருப்பேன். ஆனால், சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் அவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் படிப்பு, அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்காது. சுதந்திரம் அல்லது படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டி வரும் போது, படிப்பைவிடச் சுதந்திரமே ஆயிரம் மடங்கு மேலானது என்று யார்தான் கூறமாட்டார்கள்?

 

 

     இந்திய இளைஞர்களை, அவர்களுடைய அடிமைத் தனத்தின் கோட்டைகளில் இருந்து - அதாவது அவர்களுடைய பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் இருந்து - வெளியேறிவிடுமாறு 1920 இல் நான் அழைத்தேன். ‘அடிமை விலங்குகளுடன் இலக்கியக் கல்வி கற்கப் போவதைவிட, சுதந்திரம் பெறுவதற்காக எழுத்து வாசனையே இல்லாமல் இருந்து, கல்லுடைத்து வாழ்வதே எவ்வளவோ மேல்’ என்று அப்பொழுது அவர்களுக்குச் சொன்னேன். எந்த ஆதாரத்துடன் நான் இந்தப் புத்திமதியைக் கூறினேன் என்பதை இளைஞர்கள் இப்பொழுது கண்டு கொள்ளலாம்.

 

  • 6. தொண்டில் ஆர்வம்
  • என்னுடைய வக்கீல் தொழில் நன்றாகவே நடந்து வந்தது. ஆனால், அதைக் கொண்டு மாத்திரம் நான் திருப்தி அடைந்து விடவில்லை. மேற்கொண்டும் என்னுடைய வாழ்க்கையை எளிமை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், என்னுடைய சகோதர மக்களுக்கு உருப்படியான தொண்டு எதையாவது செய்ய வேண்டும் என்பதும் என் மனத்தில் இடையறாத ஆர்வமாக இருந்து வந்தன. அந்தச் சமயத்தில் ஒரு குஷ்டரோகி என் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஒரு வேளைச் சாப்பாட்டோடு அவரை அனுப்பிவிட எனக்கு மனம் இல்லை. எனவே, என் வீட்டிலேயே அவரை இருக்கச் சொல்லி அவருடைய புண்களுக்குக் கட்டுக் கட்டினேன். அவருக்கு வேண்டிய மற்ற சௌகரியங்களையும் கவனித்து வந்தேன். ஆனால், நான் நிரந்தரமாக இப்படிச் செய்துகொண்டு போக முடியாது. இது என்னால் ஆகாது. எப்பொழுதுமே அவரை என்னுடன் வைத்துக் கொள்ளுவதற்கான உறுதியும் என்னிடம் இல்லை. ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளருக்காக இருந்த அரசாங்க வைத்திய சாலைக்கு அவரை அனுப்பினேன்.
  •      ஆனால், என் மனம் மாத்திரம் அமைதி இல்லாமலேயே இருந்தது. நிரந்தரமான ஜீவகாருண்யத் தொண்டு செய்ய வேண்டும் என்று என் மனம் அவாவுற்றது. செயின்ட் எயிடானின் மிஷனுக்கு டாக்டர் பூத் தலைவராக இருந்தார். அவர் அன்பு நிறைந்த உள்ளம் படைத்தவர். தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக அவர் வைத்தியம் செய்து வந்தார். பார்ஸி ருஸ்தம்ஜியின் தருமத்தைக் கொண்டு, டாக்டர் பூத்தின் நிர்வாகத்தின் கீழ், ஒரு சிறு தரும வைத்திய சாலையை ஆரம்பிக்க முடிந்தது. அந்த வைத்திய சாலையில் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பலமாக இருந்தது. மருந்து கலந்து கொடுக்கும் வேலை தினமும் இரண்டொரு மணி நேரத்திற்கு இருக்கும். அந்த அளவுக்கு என் காரியாலயத்தின் வேலையைக் குறைத்துக்கொண்டு, அங்கே ‘கம்பவுண்ட’ராக இருப்பது என்று தீர்மானித்தேன். என் வக்கீல் தொழில் சம்பந்தமான வேலை, பெரும்பாலும் என் ஆபீஸிலேயே கவனிக்க வேண்டிய வேலைதான். சாஸனப் பத்திரங்களை எழுதுவதும் மத்தியஸ்தம் செய்வதுமே இந்தத் தொழிலில் என் முக்கியமான அலுவல். மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் எனக்குச் சில வழக்குகள் இருக்கும். ஆனால், அவை பெரும்பாலும் அதிக விவாதத்திற்கு இடம் இல்லாதவைகளாக இருக்கும். என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, அப்போது என்னோடேயே வசித்து வந்த ஸ்ரீ கான், நான் இல்லாத சமயத்தில் என் வழக்குகளைக் கவனித்துக் கொள்ளுவதாக கூறியிருந்தார். ஆகவே, அச் சிறு வைத்திய சாலையில் சேவை செய்வதற்கு எனக்கு அவகாசம் இருந்தது. அதாவது, காலையில் வைத்திய சாலைக்குப் போகவும் வரவும் உள்ள நேரத்தைச் சேர்த்து, தினம் இரண்டு மணி நேரம். இந்த ஊழியம் என் மனத்திற்குக் கொஞ்சம் சாந்தியை அளித்தது. வரும் நோயாளிகளின் நோயைக் குறித்து விசாரிப்பது, அந்த விவரங்களை டாக்டருக்குக் கூறுவது, மருந்துகளைக் கலந்து கொடுப்பது ஆகியவையே அந்த வேலை. அது துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியருடன், நான் நெருங்கிப் பழகும்படி செய்தது. அவர்களில் அநேகர் ஒப்பந்தத் தொழிலாளர்களான தமிழர், தெலுங்கர் அல்லது வட இந்தியர் ஆவர்.

         போயர் யுத்தத்தின் போது நோயுற்றவர்களுக்கும் காயம் அடைந்தோருக்கும் பணிவிடை செய்வதற்கு, என் சேவையை அளிக்க நான் முன்வந்தபோது, இந்த அனுபவம் எனக்கு அதிக உதவியாக இருந்தது.

         குழந்தைகளை எவ்விதம் வளர்ப்பது என்ற பிரச்சனை எப்பொழுதும் என் முன்பு இருந்து வந்தது. தென்னாப்பிரிக்காவில் எனக்கு இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களை வளர்ப்பது சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்க நான் வைத்தியசாலையில் செய்து வந்த தொண்டு பயனுள்ளதாயிற்று. என்னுடைய சுயேச்சை உணர்ச்சி, எனக்கு அடிக்கடி சோதனைகளைக் கொடுத்து வந்தது. என் மனைவியின் பிரசவ காலத்தில் சிறந்த வைத்திய உதவியை ஏற்பாடு செய்து கொள்ளுவது என்று நானும் என் மனைவியும் தீர்மானித்திருந்தோம். ஆனால், சமயத்தில் டாக்டரும் தாதியும் எங்களைக் கைவிட்டுவிட்டால் நாங்கள் என்ன செய்வது? அதோடு தாதி, இந்தியப் பெண்ணாகவும் இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற இந்தியத் தாதி கிடைப்பது இந்தியாவிலேயே கஷ்டம் என்றால் தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு கஷ்டம் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எனவே, பிரசவ சிகிச்சை சம்பந்தமாகத் தெரிந்திருக்க வேண்டியவைகளை யெல்லாம் நானே படித்துக் கொண்டேன். டாக்டர் திரிபுவனதாஸ் எழுதிய ‘தாய்க்குப் புத்திமதி’ என்ற நூலைப் படித்தேன். மற்ற இடங்களில் அங்கும் இங்குமாக நான் பெற்ற அனுபவங்களையும் வைத்துக்கொண்டு, அந்த நூலில் கூறப்பட்டிருந்த முறைகளை அனுசரித்து என் இரு குழந்தைகளையும் வளர்த்தேன். ஒவ்வொரு பிரசவ சமயத்திலும் குழந்தையைக் கவனிக்க ஒரு தாதியை அமர்த்துவோம். ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேல் அந்தத் தாதியை வைத்துக் கொள்ளுவதில்லை. தாதியை அமர்த்துவதும் என் மனைவியைக் கவனித்துக் கொள்ளுவதற்கே அன்றி, குழந்தைகளைப் பராமரிப்பதற்கு அன்று. அந்த வேலையை நானே பார்த்துக் கொண்டேன்.
  •      கடைசிக் குழந்தையின் பிரசவந்தான் என்னை மிகவும் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கி விட்டது. திடீரென்று பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனே வைத்தியர் கிடைக்கவில்லை. மருத்துவச்சியை அழைத்து வரவும் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. அவள் வந்திருந்தாலும் பிரசவத்திற்கு அவள் உதவி செய்திருக்க முடியாது. சுகப்பிரசவம் ஆகும்படி நானே கவனித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. டாக்டர் திரிபுவன தாஸின் நூலை நான் நன்றாகப் படித்து வைத்திருந்தது எனக்கு அதிக உதவியாக இருந்தது. எனக்குக் கொஞ்சமேனும் பயமே ஏற்படவில்லை.

         குழந்தைகளைச் சரியானபடி வளர்க்க வேண்டுமானால், சிசுக்களைப் பேணும் முறை, பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். இது விஷயமாக நன்றாகப் படித்திருந்தது எவ்வளவு பயன் உள்ளதாக இருந்தது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நான் பார்த்திருக்கிறேன். இதைக்குறித்து நான் ஆராய்ந்து, அந்த அறிவைப் பயன்படுத்தியிராது போனால், என் குழந்தைகள் இன்று இருப்பதைப் போல் இவ்வளவு உடல் நலத்துடன் இருந்திருக்க மாட்டார்கள். குழந்தை, அதன் ஐந்து வயது வரையில் கற்றுக்கொள்ள வேண்டியது எதுவும் இல்லை என்ற ஒரு மூடநம்பிக்கை நமக்கு இருந்து வருகிறது. இதற்கு மாறாக உண்மை என்னவென்றால், ஒரு குழந்தை அதன் முதல் ஐந்து வயதிற்குள் கற்றுக்கொள்ளாததைப் பின்னால் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளுவதே இல்லை. கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையின் படிப்பு ஆரம்பம் ஆகிவிடுகிறது. கருத்தரிக்கும் போது, பெற்றோருக்கு இருக்கும் உடல், மன நிலைகளே குழந்தைக்கும் ஏற்பட்டு விடுகின்றன. கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் மனநிலைகள், ஆசாபாசங்கள், தன்மைகள் ஆகியவைகளால் குழந்தை பாதிக்கப்படுகிறது. பின்னர், குழந்தை பிறந்ததும், பெற்றோர்களைப் போலவே எதையும் செய்ய அது கற்றுக்கொள்கிறது. அப்புறம், அதிக காலம் வரையில் குழந்தையின் வளர்ச்சி, பெற்றோரைப் பொறுத்ததாகவே இருக்கிறது.
  •      இந்த உண்மைகளையெல்லாம் அறிந்துகொள்ளும் தம்பதிகள், தங்களுடைய காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக உடற்கலப்பு வைத்துக்கொள்ளவே மாட்டார்கள். குழந்தைப் பேறு வேண்டும் என்று விரும்பும்போது மாத்திரமே கூடுவார்கள். உண்பதையும் உறங்குவதையும் போல் ஆண்-பெண் சேர்க்கையும் அவசியமான செயல்களில் ஒன்று என நம்புவது அறியாமையின் சிகரமே ஆகும் என்று நான் கருதுகிறேன். உலகம் நிலைத்திருப்பது, சந்ததி விருத்திச் செயலைப் பொறுத்திருக்கிறது. உலகமோ ஆண்டவனின் திருவிளையாட்டு ஸ்தலம்; அவனுடைய மகிமையின் பிரதிபிம்பம். எனவே, இந்த உலகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலேயே சந்ததி விருத்திச் செயல் இருக்க வேண்டும். இதை உணருகிறவர்கள், எப்பாடுபட்டும் தங்கள் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவார்கள்; தங்கள் குழந்தைகளின் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் ஆன்ம நலனுக்கும் வேண்டிய அறிவைப் பெற்றுக் கொள்ளுவார்கள்; பெற்றுக்கொண்ட அறிவின் பயனைச் சந்ததிகளுக்கு அளிப்பார்கள்.

 

7. பிரம்மச்சரியம் – 1

 

இவ் வரலாற்றில், பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளுவதைப் பற்றி நான் தீவிரமாக நினைக்கத் தொடங்கிய கட்டத்திற்கு இப்பொழுது நாம் வந்திருக்கிறோம். எனக்கு மணமான காலத்தில் இருந்தே நான் ஏக பத்தினி விரதத்தில் உறுதிகொண்டிருந்தேன். என் மனைவியிடம் உண்மையோடு நடந்துகொள்ளுவது என்பது, சத்தியத்தினிடம் நான் கொண்டிருந்த பக்தியின் ஒரு பகுதியாயிற்று. ஆனால், என் மனைவி சம்பந்தமாகக்கூட பிரம்மச்சரியத்தை அனுசரிக்க வேண்டியது முக்கியம் என்பதைத் தென்னாப்பிரிக்காவிலேயே நான் உணர ஆரம்பித்தேன். இந்த வழியில் என் எண்ணத்தைத் திருப்பியது எந்தச் சந்தர்ப்பம் அல்லது நூல் என்பதை என்னால் திட்டமாகக் கூறமுடியாது. ராய்ச்சந்திர பாயைக் குறித்து நான் முன்பே எழுதியிருக்கிறேன். அவருடைய நட்பே இதில் முக்கியமான அம்சமாக இருந்திருக்கக் கூடும் என்பது என் ஞாபகம். ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன், தமது கணவரிடம் வைத்திருந்த அபார பக்தியைக் குறித்துப் புகழ்ந்து ஒரு சமயம் ராய்ச்சந்திரபாயிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஸ்ரீ கிளாட்ஸ்டன் பார்லிமெண்டுக் கூட்டத்தில் இருக்கும்போது கூட, அவருக்குத் தம் கையினாலேயே தேயிலைப் பானம் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர் மனைவி வற்புறுத்தி வந்தார் என்று நான் எங்கோ படித்திருந்தேன். புகழ்பெற்ற இத் தம்பதிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையில் இது ஒரு நியதியாக ஆகிவிட்டதாம். இதைக் கவிஞரிடம் நான் கூறியதோடு, சாதாரணமாக சதிபதிகளின் காதல் வாழ்வைப் பற்றியும் புகழ்ந்து பேசினேன். அதன் பேரில் ராய்ச்சந்திரபாய் என்னைப் பின்வருமாறு கேட்டார்: ‘ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன், மனைவி என்ற முறையில் தம் கணவரிடம் கொண்ட அன்பு பெரிதா? ஸ்ரீ கிளாட்ஸ்டனிடம் அவருக்கு உள்ள உறவு எதுவானாலும் அதைப் பற்றிய சிந்தனையின்றி ஸ்ரீமதி கிளாட்ஸ்டன் அவருக்குப் பயபக்தியோடு செய்து வந்த சேவை பெரிதா? இந்த இரண்டில் எதைப் பெரிது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அப் பெண்மணி, அவருடைய சகோதரி என்றோ, வேலைக்காரி என்றோ வைத்துக் கொள்ளுவோம். இதே கவனிப்போடு அப்போதும் தொண்டு செய்திருந்தால் அப்பொழுது நீங்கள் அந்தச் சேவையைப் பற்றி என்ன கூறுவீர்கள்? இத்தகைய அன்புள்ள சகோதரிகளையும் வேலைக்காரர்களையும் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லையா? அதே அன்பு நிறைந்த பக்தியை ஒரு வேலைக்காரனிடம் காண்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது ஸ்ரீமதி கிளாட்ஸ்டனின் விஷயத்தில் திருப்தியடைவதைப் போல் திருப்தியடைவீர்களா? நான் கூறிய இக் கருத்தைக்கொண்டு, விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.’

     ராய்ச்சந்திரபாயும் விவாகம் ஆனவரே. அவர் கூறியவை, கொஞ்சம் கடுமையாக இருந்ததாக அப்பொழுது எனக்குத் தோன்றின என்பது என் நினைவு. ஆனால், அவர் கூறியவை என் உள்ளத்தில் மிகவும் ஆழப் பதிந்துவிட்டன. கணவனிடம் மனைவி கொள்ளும் பக்தி விசுவாசத்தைவிட, வேலைக்காரனின் பக்தி, ஆயிரம் மடங்கு போற்றற்கு உரியது என்று நான் எண்ணினேன். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. ஆகையால் கணவனிடம் மனைவி பக்தி கொள்ளுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தப் பக்தி முற்றிலும் இயற்கையானது. ஆனால், எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையே இதற்கு இணையான ஒரு பக்தியை வளர்ப்பதற்கே விசேட முயற்சி அவசியம் ஆகிறது. கவிஞரின் கருத்து எனக்கு மெள்ள மெள்ள விளங்கலாயிற்று.

     ‘அப்படியானால், எனக்கும் என் மனைவிக்கும் இடையே இருக்கும் உறவு, எப்படி இருக்கவேண்டும்?’ இவ்வாறு என்னை நானே கேட்டுக்கொண்டேன். அவளிடம் உண்மையோடு நடந்துகொள்ளுவது என்பதில், என்னுடைய காம இச்சைக்கு அவளைக் கருவியாக்கிக் கொள்ளுவது என்பதும் அடங்கியிருக்கிறதா? காம இச்சைக்கு நான் அடிமையாக இருக்கும் வரையில், மனைவியிடம் நான் உண்மையான அன்போடு இருக்கிறேன் என்பதற்கு மதிப்பே இல்லை. என் மனைவியைப் பொறுத்தவரை, நேர்மையாகச் சொல்லுவதானால், காம இச்சைக்கு என்னைத் தூண்டுபவளாக அவள் என்றுமே இருந்ததில்லை என்றே கூறவேண்டும். ஆகையால், எனக்குத் திடமான உறுதி மாத்திரம் இருந்திருந்தால், பிரம்மச்சரிய விரதம் கொள்ளுவது எனக்கு மிக எளிதான காரியம். எனக்கு மன உறுதி இல்லாததுதான் அல்லது காம இச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது.

     இவ்விஷயத்தில் என் மனச்சாட்சி விழிப்படைந்து விட்டபிறகும் கூட, இரு தடவைகளில் நான் தவறிவிட்டேன். முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்த நோக்கம், உயர்வானதாக இல்லாது போனதனாலேயே நான் தவறினேன். மேற்கொண்டு குழந்தைகளைப் பெறாமலே இருக்க வேண்டும் என்பதே என் முக்கியமான நோக்கமாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்தபோது, செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளைக் குறித்து ஏதோ படித்திருந்தேன். சைவ உணவைப் பற்றிய அத்தியாயத்தில் டாக்டர் அல்லின்ஸனின் கர்ப்பதடைப் பிரச்சாரத்தை குறித்து, முன்பே கூறியிருக்கிறேன். அப் பிரச்சாரத்தினால் என் மனம் செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளில் சிறிதளவு சென்றிருந்தாலும், அத்தகைய முறைகளை ஸ்ரீ ஹில்ஸ் எதிர்த்துக் கூறியது என் மனத்தை உடனே மாற்றி விட்டது. ‘வெளி உபாயங்களுக்குப் பதிலாக உள் முயற்சியே, அதாவது புலன் அடக்கமே சிறந்தது’ என்று அவர் கூறியது, என் மனத்தில் ஆழப் பதிந்ததோடு, நாளாவட்டத்தில் மனத்தை ஆட்கொண்டும் விட்டது. ஆகையால், மேற்கொண்டும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்பதைக் கண்டதும், புலனடக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். ஆனால், இம் முயற்சியில் கணக்கில்லாத கஷ்டங்கள் இருந்தன. தனித் தனிப் படுக்கைகளில் தூங்க ஆரம்பித்தோம். நாளெல்லாம் நன்றாக உழைத்துக் களைத்துப் போன பிறகே படுக்கைக்குப் போவது என்று தீர்மானித்தேன். இந்த முயற்சிகளெல்லாம் அதிகப் பலன் தரவில்லை. ஆனால், வெற்றி பெறாதுபோன இத்தகைய எல்லா முயற்சிகளின் ஒருமித்த பயனே, முடிவான தீர்மானமாக உருவாகியது என்று, அக் காலத்தைப் பற்றி நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது உணருகிறேன்.

     இப்படியே காலம் கடந்து வந்து, 1906, ஆம் ஆண்டில்தான் இறுதியான தீர்மானத்திற்கு வர என்னால் முடிந்தது. சத்தியாக்கிரகம் அப்பொழுது ஆரம்பம் ஆகிவிடவில்லை. அப்போராட்டம் வரும் என்ற எண்ணங்கூட எனக்குச் சிறிதும் இல்லை. போயர் யுத்தத்தைத் தொடர்ந்து, நேட்டால், ‘ஜூலுக் கலகம்’ ஆரம்பம் ஆயிற்று. அப்பொழுதுநான் ஜோகன்னஸ்பர்க்கில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருந்தேன். அச்சமயம் எனது சேவையைத் தேசிய சர்க்காருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணினேன். என் சேவை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைக் குறித்து மற்றோர் அத்தியாயத்தில் கவனிப்போம். ஆனால், அவ்வேலை, புலன் அடக்கத் துறையில் என்னை வெகு தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது. வழக்கம்போல இதைக் குறித்தும் என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தேன். பிள்ளைப்பேறும், அதன் விளைவாக ஏற்படும் குழந்தை வளர்ப்பும் பொது ஜன சேவைக்கு உகந்தவை அல்ல என்பது எனக்கு உறுதியாகப்பட்டது. கலகத்தின்போது சேவை செய்வதற்குச் சௌகரியமாக இருப்பதற்காக ஜோகன்ஸ்பர்க்கில் இருந்த என் குடித்தனத்தைக் கலைத்துவிட வேண்டியதாயிற்று. சேவை செய்ய நான் ஒப்புக்கொண்ட ஒரு மாதத்திற்குள், எவ்வளவோ சிரமப்பட்டு வேண்டிய வசதிகளையெல்லாம் நான் செய்து வைத்திருந்த வீட்டை காலி செய்துவிட வேண்டி வந்தது. என் மனைவியையும் குழந்தைகளையும் போனிக்ஸூக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு, நேட்டால் படையுடன் சேர்க்கப்பட்டிருந்த இந்திய வைத்தியப் படைக்குத் தலைவனாகச் சென்றேன். அதிகக் கஷ்டங்களுடன் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அணி வகுத்துச் செல்ல நேர்ந்த அச் சமயத்தில்தான், முடிவான எண்ணம் என் மனத்தில் பளிச்சென்று உதயமாயிற்று. அதாவது, சமூகத்தின் சேவைக்கே என்னை இந்த வகையில் அர்ப்பணம் செய்து கொள்ள விரும்பினால், பிள்ளைப் பேற்றில் அவாவையும் பொருள் ஆசையும் அறவே ஒழித்துவிட்டுக் குடும்பக் கவலையினின்றும் நீங்கியதான வானப் பிரஸ்த வாழ்க்கையை நான் மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உதயமாயிற்று.

     அக் ‘கலகம்’ சம்பந்தமாக எனக்கு ஆறு வார காலமே வேலை இருந்தது. ஆனால், இந்தக் குறுகிய காலம், என் வாழ்க்கையில் மிக முக்கியமானதாயிற்று. விரதங்களின் முக்கியத்துவம், முன்பு இருந்ததைவிட எனக்கு இன்னும் அதிகத் தெளிவாக விளங்கியது. ஒரு விரதம், உண்மையான சுதந்திரத்தின் கதவை அடைத்து விடுவதற்குப் பதிலாக அக் கதவைத் திறந்து விடுகிறது என்பதை உணர்ந்தேன். போதிய அளவு உறுதி என்னிடம் இதற்கு முன்னால் இல்லை; என்னிடத்திலேயே எனக்கு நம்பிக்கை இல்லை. கடவுளின் அருளிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனம், சந்தேகமாகிய அலை பொங்கும் கடலில் அங்கும் இங்கும் அலைப்புண்டு, அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இதனாலேயே அச்சமயம் வரையில் நான் வெற்றியடையவில்லை. ஒரு விரதத்தை மேற்கொள்ள மறுப்பதனால் மனிதன் ஆசை வலைக்கு இழுக்கப்பட்டு விடுகிறான். ஒரு விரதத்தினால் கட்டுண்டுவிடுவது, நெறியற்ற வாழ்க்கையிலிருந்து உண்மையான ஏகபத்தினி மண வாழ்வுக்குச் செல்வதைப் போன்றது என்பதை அறிந்துகொண்டேன். ‘முயற்சி செய்வதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் விரதங்களினால் என்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை’ என்பது பலவீனத்தின் புத்திப் போக்கு. எதை விலக்க வேண்டும் என்று இருக்கிறோமோ அதனிடம் உள்ளுக்குள் ஆசை இருந்து வருகிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இல்லையானால், முடிவான தீர்மானத்திற்கு வந்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்கமுடியும்? பாம்பு என்னைக் கடித்து விடும் என்பது எனக்குத் தெரியும். அதனிடமிருந்து ஓடிவிடுவது என்று விரதம் கொள்ளுகிறேன். அதனிடமிருந்து ஓடிவிட வெறும் முயற்சி செய்வதோடு நான் இருந்துவிடுவதில்லை. வெறும் முயற்சிதான் என்றால், பாம்பு என்னைக் கட்டாயம் கடித்துவிடும் என்ற நிச்சயமான உண்மையை அறியாமல் இருக்கிறேன் என்பதுதான் பொருள். ஆகையால் வெறும் முயற்சியைக் கொண்டே நான் திருப்தி அடைந்து விடுவது, திட்டமான செயலின் அவசியத்தை நான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

     ‘வருங்காலத்தில் என் கருத்துக்கள் மாறிவிடுகின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். அந் நிலைமையில் என்னை விரதத்தினால் எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது?’ இத்தகைய சந்தேகமே நம்மை அடிக்கடி தடுத்துவிடுகிறது. குறிப்பிட்ட ஒன்றைத் துறந்தாக வேண்டும் என்பதில் தெளிவான எண்ணம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே அந்தச் சந்தேகம் காட்டுகிறது. இதனாலேயே, ‘ஒன்றில் வெறுப்பு ஏற்படாத துறவு நிலைத்திராது’ என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். எங்கே ஆசை அற்று விடுகிறதோ அங்கே துறவின் விரதம் இயல்பான, தவிர்க்க முடியாத பலனாக இருக்கும்.

 

 

8. பிரம்மச்சரியம் – 2

 

தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில் நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என் மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால், முடிவான தீர்மானத்திற்கு வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது. அதற்கு வேண்டிய மனபலம் என்னிடம் இல்லை. எனது சிற்றின்ப இச்சையை அடக்குவது எப்படி? ஒருவன் தன்னுடைய மனைவியிடம் கூடச் சிற்றின்ப உறவைப் போக்கிக் கொண்டுவிடுவது என்பது விசித்திரமானதாகவே அப்பொழுது தோன்றிற்று. ஆனால், ஆண்டவனின் அருள் பலத்தில் பூரண நம்பிக்கை வைத்து, துணிந்து விரதத்தை மேற்கொண்டேன்.

 

     அந்த விரதத்தை அனுசரித்து வந்திருக்கும் இருபது ஆண்டு காலத்தை நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது எனக்கு அளவற்ற ஆனந்தமும் ஆச்சரியமுமே உண்டாகின்றன. புலன் அடக்கத்தில் ஏறக்குறைய வெற்றிகரமாக அனுசரித்து வந்திருக்கும் பயிற்சி 1901-ஆம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால், விரதத்தை அனுசரித்த பிறகு எனக்கு ஏற்பட்ட சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் 1906-ஆம் ஆண்டிற்கு முன்னால் நான் அனுபவித்ததில்லை. விரதம் கொள்ளுவதற்கு முன்னால் எந்தச் சமயத்திலும் ஆசைக்கு அடிமை ஆகிவிடக்கூடும் என்ற நிலையில் நான் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ எந்த ஆசையினின்றும் என்னைக் காக்கும் நிச்சயமான கேடயமாக விரதம் இருந்து வருகிறது. பிரம்மச்சரியத்தின் அபார சக்தி, நாளுக்கு நாள் எனக்குப் புலனாகி வந்தது. நான் போனிக்ஸில் இருந்தபோது, இவ்விரதத்தை மேற்கொண்டேன். வைத்தியப் படைவேலை நீங்கியதும் போனிக்ஸு க்குப் போனேன். பிறகு ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பிவிட வேண்டியதாயிற்று. நான் அங்கே திரும்பிய ஒரு மாதத்திற்கெல்லாம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அடிகோலப்பட்டது. பிரம்மச்சரிய விரதம், எனக்குத் தெரியாமலே என்னைச் சத்தியாகிரகத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தது போல் இருந்தது. சத்தியாக்கிரகம், முன்னாலேயே யோசித்துச் செய்யப்பட்ட திட்டம் அன்று. நான் விரும்பாமலே அது தானாக வந்தது. ஆனால், என்னுடைய காரியங்களெல்லாம் அந்த லட்சியத்தில் கொண்டு போய் விட்டன என்பதைக் காண்கிறேன். ஜோகன்னஸ்பர்க்கில் அதிகமாக இருந்து வந்த வீட்டுச் செலவுகளையெல்லாம் குறைத்து விட்டேன். பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்வதற்கென்றே போனதைப் போல் போனிக்ஸு க்குச் சென்றேன்.

 

     ‘பிரம்மச்சரியத்தைப் பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்’ என்ற அறிவு, சாத்திரங்களைப் படித்ததனால் ஏற்பட்டதன்று. அனுபவத்தினால் இந்த அறிவு எனக்கு நாளாவட்டத்தில் மெள்ள மெள்ள வளர்ந்தது. இது சம்பந்தமான சாத்திர நூல்களை என் வாழ்க்கையில் பின்னால்தான் நான் படித்தேன். உடல், மனம், ஆன்மா ஆகியவைகளைக் காப்பதிலேயே பிரம்மச்சரியம் இருக்கிறது. விரதத்தின் ஒவ்வொரு நாளும் என்னை இந்த அறிவுக்குப் பக்கத்தில் கொண்டுபோயிற்று. ஏனெனில், பிரம்மச்சரியம், ஒரு கடுமையான தவமுறையாக எனக்கு இல்லை. ஆறுதலையும், ஆனந்தத்தையும் எனக்கு அளிப்பதாகவே அது இருந்தது. ஒவ்வொரு நாளும் அதில் ஒரு புதிய அழகைக் கண்டேன்.

 

     தினந்தோறும் ஆனந்தத்தை அதிகமாக்கும் விஷயமாகவே அது இருந்தாலும், அது எனக்கு எளிதாக இருந்துவிட்டது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். எனக்கு ஐம்பத்தாறு வயது ஆகிவிட்ட பிறகும்கூட, அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை அறிகிறேன். கத்தியின் முனைமீது நடப்பதைப் போன்றது அது என்பதை, ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிகமாக உணருகிறேன். என்றைக்குமே விழிப்புடன் இருந்து வர வேண்டியது அவசியம் என்பதையும் காண்கிறேன்.

 

     இந்த விரதத்தை அனுசரிப்பதில் அவசியமான முதல் காரியம், ருசி உணர்ச்சியை அடக்குவதாகும். ருசியை முற்றும் அடக்கி விடுவது, பிரம்மச்சரிய விரதத்தை அனுசரிப்பதை எளிதாக்கி விடுகிறது என்று கண்டேன். ஆகவே, சைவ உணவுக்காரன் என்ற வகையில் மாத்திரம் அன்றி பிரம்மச்சாரி என்ற வகையிலும் எனது உணவுப் பரிசோதனைகளை மேற்கொண்டும் நடத்தலானேன். இந்தச் சோதனைகளின் பலனாக, பிரம்மச்சாரியின் உணவு, ஓர் அளவுக்கு உட்பட்டதாகவும், எளிமையானதாகவும், மசாலை முதலியவைகள் கலக்காததாகவும், சாத்தியமானால் சமைக்கப்படாததாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கண்டேன்.

 

     பிரம்மச்சாரிக்கு ஏற்ற சிறந்த உணவு, பழங்களும் கொட்டைப் பருப்பு வகைகளுமே என்பதை ஆறு வருட அனுபவத்தில் அறிந்து கொண்டேன். இத்தகைய ஆகாரம் மாத்திரமே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சிற்றின்ப இச்சை இல்லாத நிலையை நான் அனுபவித்ததைப்போல் அந்த உணவை மாற்றிவிட்ட பிறகு நான் அனுபவித்ததில்லை. தென்னாப்பிரிக்காவில் பழங்களையும் கொட்டைப் பருப்புகளையும் மாத்திரமே நான் புசித்து வந்தபோது, பிரம்மச்சரியத்திற்கு என் அளவில் எந்தவித முயற்சியும் தேவைப்படவில்லை. ஆனால் நான் பால் சாப்பிட ஆரம்பித்த பிறகு அதிக முயற்சியின் பேரிலேயே பிரம்மச்சரிய விரதத்தைக் காக்கவேண்டியிருந்தது. என் பழ ஆகாரத்திலிருந்து திரும்பவும் பால் சாப்பிட வேண்டிய நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதைக் குறித்து அதற்கு உரிய இடத்தில் பிறகு கவனிப்போம். பால் ஆகாரம் பிரம்மச்சரிய விரதத்தை அதிகக் கஷ்டமானதாக்குகிறது என்பதை மாத்திரம் இங்கே சொன்னால் போதுமானது. இதிலிருந்து ‘பிரம்மச்சாரிகளெல்லாம் பால் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும்’ என்ற முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். பலவகையான ஆகாரங்களும், பிரம்மச்சரியத்தை எவ்விதம் பாதிக்கின்றன என்பதை, அநேக சோதனைகளின் பிறகே முடிவு செய்ய முடியும். பாலைப் போல் தசையை நன்றாக வளர்க்கக்கூடியதும், எளிதில் ஜீரணிக்கக் கூடியதுமான பழம் எதையும் நான் இன்னும் கண்டுபிடித்து விடவில்லை. இது சம்பந்தமாக டாக்டர்கள், வைத்தியர்கள், ஹக்கீம்கள் முதலிய பலரைக் கேட்டும் என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால், பால், காம உணர்ச்சியைத் தூண்டக் கூடியதுதான் என்றாலும், பாலை விட்டுவிடுமாறு இப்போதைக்கு யாருக்கும் நான் யோசனை கூறமாட்டேன்.

 

     பிரம்மச்சரியத்திற்கு உணவைத் தேர்ந்தெடுப்பதும், கட்டுப்படுத்துவதும் எவ்விதம் அவசியமோ, அதேபோல் அதன் புற உதவிக்கு, உண்ணாவிரதம் அவசியம். புலன் உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காதவை. மேலும், கீழும், எல்லாப் பக்கங்களிலும் சரியாகத் தடுத்து வைத்தால்தான் அவற்றை அடக்கிவைக்க இயலும். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால், உண்ணா விரதம் இருப்பது புலன்களை அடக்குவதில் அதிக உதவியாக இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால், சிலர் விஷயத்தில் பட்டினி விரதம் பயன் படுவதில்லை. ஏனெனில், சாப்பிடாமல் இருப்பதனால் மாத்திரம் புலன் அடக்கம் கைகூடிவிடும் என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இவர்கள் உடம்பைத்தான் பட்டினி போடுகிறார்களே அன்றி, உள்ளத்திற்கு விருந்து அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ‘பட்டினிவிரதம் முடிந்ததும் என்ன என்ன ருசியான ஆகாரங்களைத் தின்பது, என்ன என்ன ருசியான பானங்களைப் பருகுவது?’ என்பதைக் குறித்து எண்ணியவாறே இருக்கிறார்கள். இத்தகைய பட்டினி விரதங்கள், ருசியைக் கட்டுப்படுத்தவோ, காம இச்சையைக் கட்டுப்படுத்தவோ அவர்களுக்கு உதவுவதில்லை. பட்டினி கிடக்கும் உடலோடு, உள்ளமும் ஒத்து உழைத்தால்தான் பட்டினி விரதம் பயனுள்ளதாகும். அதாவது உடலுக்கு எவை மறுக்கப்படுகின்றனவோ அவைகளின் மீது பட்டினி விரதம் வெறுப்பை வளர்க்கவேண்டும். எல்லாப் புலன் உணர்ச்சிகளுக்கும் வேராக இருப்பது மனம். ஆகையால், பட்டினி விரதம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்தரும். பட்டினி விரதம் இருக்கும் ஒருவர், காமக்குரோத உணர்ச்சிகளுக்குத் தொடர்ந்து வயப்பட்டிருப்பவராகவே இருந்துவிடவும் கூடும். என்றாலும், பட்டினி விரதத்தை அனுசரிக்காமல் சிற்றின்ப இச்சையை அழித்து விடுவது சாத்தியமில்லை என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதற்கு அத்தியாவசியம் என்றும் சொல்லலாம்.பிரம்மச்சரியத்தை அனுசரிக்க முற்படுகிறவர்களில், பலர் தவறிவிடுகின்றனர். இவர்கள் மற்றப் புலன்களை உபயோகிப்பதில் பிரம்மச்சாரிகளாக இல்லாமல் இருப்பது தான் இவர்கள் தோல்வியடைவதற்குக் காரணம். ஆகவே, இவர்களுடைய முயற்சி, தகிக்கும் வெயில் காலத்தில், குளிர் காலத்தின் நடுக்கும் குளிரை அனுபவிக்கச் செய்யும் முயற்சியைப் போன்றதாகிறது. பிரம்மச்சாரியின் வாழ்க்கைக்கும், பிரம்மச்சாரிகள் அல்லாத மற்றவர்கள் வாழ்க்கைக்கும் தெள்ளத்தெளிவான வேறுபாடு இருக்கவேண்டும். இவ்விரு பிரிவினரின் வாழ்க்கையும் ஒன்றுபோல் இருப்பதெல்லாம் வெளித்தோற்றத்தில் தான். ஆனால், வித்தியாசம் பட்டப் பகல்போல் வெட்ட வெளிச்சமாக இருந்தாக வேண்டும். பிரம்மச்சாரி, பிரம்மச்சாரி அல்லாதவர் ஆகிய இருவரும் கட்புலனை உபயோகித்தே பார்க்கின்றனர். கடவுளின் மகிமையைக் காண்பதற்கே, பிரம்மச்சாரி கட்புலனைப் பயன்படுத்துகிறான். ஆனால், மற்றவனோ, தன்னைச் சுற்றிலும் உள்ள அற்பத்தனங்களைப் பார்க்கவே அதை உபயோகிக்கிறான். இருவரும் தங்கள் காதுகளை உபயோகிக்கின்றனர். இதில் ஒருவன், கடவுளின் புகழுரையைத் தவிர வேறு எதையும் செவிகொடுத்துக் கேட்பதில்லை. மற்றவனுக்கோ, ஆபாசப் பேச்சுக்களைக் கேட்பதே செவிக்கு விருந்தாக இருக்கிறது. இருவரும் இரவில் நீண்டநேரம் கண் விழிக்கின்றனர். ஒருவன், அந்நேரத்தைப் பிரார்த்தனையில் செலவிடுகிறான்; மற்றவனோ, வெறித்தனமான வீண் களியாட்டங்களில் பாழாக்குகிறான். அந்தராத்மாவுக்கு இருப்பிடமான உடலாகிய திருக்கோயிலுக்கே இருவரும் உணவளிக்கின்றனர். ஒருவன், ஆண்டவனின் திருக்கோயிலைப் பழுதுபடாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதற்கே அதைச் செய்கிறான். மற்றொருவனோ, கண்டவைகளையெல்லாம் அதில் போட்டு நிரப்பி, அந்தத் தெய்வீகப் பாத்திரத்தைத் துர்நாற்றம் அடிக்கும் சாக்கடை ஆக்கிவிடுகிறான். இவ்விதம் ஒருவருக்கொருவர் எவ்விதச் சம்பந்தமும் இன்றித் தொலைவிலேயே வாழ்கின்றனர். நாளாக ஆக இவ்விருவருக்கும் இடையே இருக்கும் தூரம் அதிகமாகுமே அன்றிக் குறையாது.

 

 

     பிரம்மச்சரியம் என்பது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் புலன்களை அடக்குவதேயாகும். மேற்கண்டதைப் போன்ற புலன் அடக்கத்தின் அவசியத்தை ஒவ்வொரு நாளும், மேலும் மேலும் நான் நன்றாக அறிந்துவருகிறேன். பிரம்மச்சரியத்திற்கான சாத்தியங்கள் எவ்விதம் எல்லையற்று இருக்கின்றனவோ, அதே போல் துறவுக்கும் எல்லையில்லாச் சாத்தியங்கள் உண்டு. அத்தகைய பிரம்மச்சரியத்தை ஒரு வரையறைக்கு உட்பட்ட முயற்சியினால் அடைந்துவிடுவது சாத்தியம் அல்ல. அநேகருக்கு அது வெறும் லட்சியமாக மாத்திரமே இருக்க முடியும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக விரும்புகிறவர், தம்மிடம் உள்ள குறைபாடுகளை எப்பொழுதும் உணர்ந்தவராக இருப்பார். தமது அடிமனத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஆசைகளைத் தேடிப்பிடித்து, அவற்றைப் போக்கிக் கொள்ளுவதற்கு இடைவிடாது பாடுபட்டு வருவார். எண்ணங்கள் முற்றும் உறுதி பெற்றாலன்றிப் பூரணமான பிரம்மச்சரியம் சித்திக்காது. தானாகத் தோன்றும் எண்ணம், உள்ளத்தின் ஓர் இச்சையாகும். ஆகையால், எண்ணத்தை அடக்குவது என்பது மனத்தை அடக்குவதுதான் என்று ஆகிறது. மனத்தை அடக்குவதோ, காற்றை அடக்குவதைவிட இன்னும் அதிகக் கஷ்டமானது. என்றாலும், உள்ளத்தினுள் ஆண்டவன் இருந்து வருவதால் மனத்தை அடக்குவதும் சாத்தியமாகிறது. ‘அது கஷ்டமாக இருப்பதால் அது சாத்தியமானதே அல்ல’ என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அது மிக உயர்வான லட்சியம். ஆகவே, அதை அடைவதற்கு மிக அதிகமான முயற்சி தேவையாவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

 

     ஆனால், அத்தகைய பிரம்மச்சரியத்தை மனிதப் பிரயத்தனத்தினால் மட்டும் அடைந்துவிடுவது முடியாத காரியம் என்பதை நான் இந்தியாவிற்கு வந்த பிறகே அறியலானேன். ‘அது வரையில், பழ ஆகாரத்தினால் மாத்திரமே, எல்லா ஆசைகளையும் போக்கிக் கொண்டுவிட முடியும்’ என்ற மயக்கத்தில் இருந்து விட்டேன். அதற்குமேல் நான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையில், எனக்குள் நானே பெருமையும் பட்டுக் கொண்டேன்.

 

 

     என்னுடைய போராட்டங்களைப் பற்றிய அத்தியாயத்தை நான் முன் கூட்டி இங்கே விவரித்து விடக் கூடாது. இதற்கு மத்தியில் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறிவிடுகிறேன். கடவுளை அடைவது என்ற நோக்கத்துடன் பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுகிறவர்களுக்குத் தங்களுடைய முயற்சியில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அவ்வளவு நம்பிக்கை கடவுளிடம் இருக்குமாயின், அவர்கள் மனச் சோர்வு அடைய வேண்டியது இல்லை.

 

     ‘இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள் இல்லை; ஆனால் ஆசை மட்டும் இருக்கும். பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவனுடைய ஆசையும் அழிகிறது.’

 

     ஆகவே, மோக்ஷத்தை நாடுகிறவனுக்கு ஆண்டவனுடைய திருநாமமும், ஆண்டவனுடைய பேரருளுமே கடைசி ஆதாரங்கள். இந்தியாவுக்குத் திரும்பிய பின்னரே இந்த உண்மை எனக்குப் புலனாயிற்று.

 

 

9. எளிய வாழ்க்கை

 

 எனது ஆரம்ப வாழ்க்கை சுகமானதாகவும் சௌகரிய மானதாகவுமே இருந்தது. ஆனால், அந்தப் பரிசோதனை நீடித்து நிற்கவில்லை. அதிகக் கவனத்துடன் வசதிக்கான சாமான்களை எல்லாம் வீட்டில் வாங்கிப் போட்டிருந்தேன். என்றாலும், அவற்றில் எனக்குப் பற்று ஏற்படவில்லை. ஆகவே, அந்த வாழ்க்கையை ஆரம்பித்ததுமே செலவுகளைக் குறைக்கவும் ஆரம்பித்துவிட்டேன். சலவைச் செலவு அதிகமாகிக் கொண்டிருந்தது. அதோடு ஒழுங்காகக் காலாகாலத்தில் வராமல் இருப்பதிலும் அந்தச் சலவைக்காரர் பெயர் பெற்றவர். இதனால் இருபது முப்பது சட்டைகளும் காலர்களும் இருந்தாலும் அவையும் எனக்குப் போதா என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. காலர்களைத் தினந்தோறும் மாற்றியாக வேண்டும். சட்டையைத் தினமும் மாற்றாவிட்டாலும் ஒன்று விட்டு ஒரு நாளாவது மாற்றியாக வேண்டும். இதனால் எனக்கு இரட்டிப்புச் செலவு ஆயிற்று. அது அனாவசியமான செலவு என்று எனக்குத் தோன்றிற்று. ஆகையால், அந்தப் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நானே சலவைச் சாமான்களைச் சேகரித்துக் கொண்டேன். சலவையைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்து, அக் கலையைக் கற்றுக்கொண்டதோடு, என் மனைவிக்கும் சொல்லிக் கொடுத்தேன். இதனால் எனக்கு வேலை அதிகமாயிற்று என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அத் தொழில் எனக்குப் புதுமையானதாகையால் அதைச் செய்வது இன்பமாகவே இருந்தது.

     நானே சலவை செய்து போட்டுக்கொண்ட முதல் கழுத்துப் பட்டை (காலர்)யை நான் என்றும் மறந்துவிட முடியாது. தேவைக்கு அதிகமாகக் கஞ்சி போட்டுவிட்டேன். தேய்க்கும் பெட்டியின் இரும்பில் போதுமான சூடு இல்லை. கழுத்துப்பட்டை எங்கே பொசுங்கிவிடுமோ என்ற பயத்தில் அதைச் சரியாக நான் அழுத்தித் தேய்க்கவும் இல்லை. இதன் பலன் என்னவெனில், கழுத்துப்பட்டை ஓரளவு விரைப்பாகத் தான் இருந்தது என்றாலும், அதிகப்படியாக அதற்குப் போட்டுவிட்ட கஞ்சி, அதிலிருந்து உதிர்ந்துகொண்டே இருந்தது. அந்தக் கழுத்துப்பட்டையைக் கட்டிக்கொண்டு கோர்ட்டுக்குப் போனேன். மற்ற பாரிஸ்டர்களின் பரிகாசத்துக்கு ஆளானேன். ஆனால், அந்த நாளிலேயே நான் பரிகாசத்துக்குப் பயப்படாதவன் ஆகிவிட்டேன்.

     “என் கழுத்துப்பட்டைகளை நானே சலவை செய்து கொள்ளுவதில், இது என் முதல் பரிசோதனை. அதனால்தான் கஞ்சி உதிர்ந்து கொண்டிருக்கிறது. அது எனக்கு எவ்விதத் தொல்லையையும் கொடுக்கவில்லை. அதோடு நீங்கள் இவ்வளவு சிரித்து, இன்புறுவதற்கு இது காரணமாகவும் இருக்கிறது” என்றேன்.

     “ஆனால், இங்கே சலவைக் கடைகளுக்குப் பஞ்சமே இல்லையே?” என்று ஒரு நண்பர் கேட்டார்.

     “சலவைச் செலவு அதிகமாகிறது. ஒரு கழுத்துப்பட்டையின் விலை எவ்வளவோ அவ்வளவு ஆகிவிடுகிறது அதைச் சலவை செய்யும் கூலி. அப்படியானாலும் ஆகட்டும் என்றால், என்றென்றைக்கும் சலவைத் தொழிலாளியையே நம்பி வாழ வேண்டியதாக இருக்கிறது. ஆகையால், என் துணிகளை நானே சலவை செய்து கொள்ளுவது மேல் என்று எண்ணுகிறேன்” என்றேன்.

     ஆனால், தம் வேலைகளைத் தாமே செய்து கொள்ளுவதில் உள்ள இன்பத்தை என் நண்பர்கள் உணரும்படி செய்ய என்னால் ஆகவில்லை. என் சொந்த வேலையைப் பொறுத்த வரையில், நாளாவட்டத்தில் சலவைத் தொழிலில் நான் அதிகத் தேர்ச்சி பெற்றவன் ஆகிவிட்டேன். என்னுடைய சலவை, சலவைத் தொழிலாளியின் சலவைக்கு எந்தவிதத்திலும் குறைவானதாகவும் இல்லை. என்னுடைய கழுத்துப் பட்டைகள், மற்றவர்களுடைய கழுத்துப்பட்டைகளை விட விறைப்பிலும் பளபளப்பிலும் குறைந்தனவாகவும் இல்லை.

     கோகலே, தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது, அவர் ஓர் அங்கவஸ்திரம் வைத்திருந்தார். அதை மகாதேவ கோவிந்த ரானடே, அவருக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார்; அந்த அருமையான ஞாபகச் சின்னத்தை கோகலே மிகவும் போற்றிக் கவனத்துடன் பாதுகாத்து வந்தார். விசேட சமயங்களில் மாத்திரமே அதை அவர் உபயோகிப்பார். அப்படிப்பட்ட விசேட சந்தர்ப்பம் ஒன்று வந்தது. ஜோகன்னஸ்பர்க் இந்தியர், கோகலேக்கு அளித்த விருந்துபச்சாரமே அந்தச் சந்தர்ப்பம். இதற்கு அந்த அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு போக, கோகலே விரும்பினார். ஆனால், அது கசங்கிப் போயிருந்ததால் ‘இஸ்திரி’ போடவேண்டி இருந்தது. சலவைத் தொழிலாளியிடம் அனுப்பி, ‘இஸ்திரி’ போட்டுக்கொண்டு வருவதற்கு நேரம் இல்லை. எனவே, அதில் என்னுடைய கைத்திறமையைக் காட்டுவதாகக் கூறினேன்.

     “வக்கீல் தொழிலில் என்றால் உம்முடைய திறமையில் நான் நம்பிக்கை வைக்க முடியும். ஆனால் சலவைத் தொழிலில் உமக்குத் திறமை இருப்பதாக நம்புவதற்கில்லை” என்றார் கோகலே. “அதைக் கெடுத்து விடுவீராயின் என்ன செய்வது? அது எனக்கு எவ்வளவு அருமையான பொருள் தெரியுமா?” என்றும் கூறினார். இவ்விதம் சொல்லி, அந்த அன்பளிப்பு தமக்குக் கிடைத்த வரலாற்றையும் அதிக ஆனந்தத்தோடு கூறினார். நானே அவ்வேலையைச் செய்வதாக மீண்டும் வற்புறுத்தினேன். வெகு நன்றாகச் செய்து கொடுப்பதாகவும் வாக்களித்தேன்! பிறகு அதை, ‘இஸ்திரி’ போட அனுமதி கிடைத்தது. அதைச் செய்து முடித்து அவருடைய பாராட்டையும் பெற்றேன். அதற்குப் பிறகு அவ்வேலைத் திறமைக்கு எனக்கு நற்சாட்சிப் பத்திரம் அளிக்க உலகமே மறுத்து விட்டாலும் எனக்குக் கவலை இல்லை.

     சலவைத் தொழிலாளிக்கு அடிமையாக இருப்பதிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டதைப் போலவே க்ஷவரத் தொழிலாளியை எதிர்பார்ப்பதையும் போக்கிக்கொண்டு விட்டேன். இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் எல்லோரும் க்ஷவரம் செய்து கொள்ளவாவது கற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், நான் அறிந்தவரையில், தங்கள் தலைமுடியையும் தாங்களே கத்தரித்துக் கொள்ளுவது என்பதை யாரும் கற்றுக் கொண்டதில்லை. நான் இதையும் கற்றுக்கொண்டு விட வேண்டியதாயிற்று. நான் ஒரு சமயம் பிரிட்டோரியாவில் ஆங்கிலேயர் ஒருவரிடம் முடி வெட்டிக் கொள்ளப் போனேன். அவர், அதிக வெறுப்புடன் என் தலை முடிவை வெட்ட மறுத்துவிட்டார். எனக்கு இது அவமரியாதையாக இருந்தது. உடனே முடிவெட்டும் கத்திரி ஒன்றை வாங்கினேன். கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, என் தலை முடியை கத்தரித்துக் கொண்டேன் முன் முடியை வெட்டுக்கொள்ளுவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றேன். ஆனால், பின்பக்கத்து முடியை வெட்டிக் கெடுத்து விட்டேன். கோர்ட்டில் இருந்த நண்பர்கள் அதைப் பார்த்துவிட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.

     “உமது தலை முடிக்கு என்ன ஆபத்து வந்தது, காந்தி? எலிகள் ஏதாவது வேலை செய்துவிட்டனவா?” என்று கேட்டனர்.

     “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வெள்ளைக்காரரான க்ஷவரத் தொழிலாளி என் கறுப்பு முடியை தொட இஷ்டப்படவில்லை. ஆகவே, எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி, என் முடியை நானே வெட்டிக்கொள்ளுவது என்று வெட்டிக்கொண்டு விட்டேன்” என்றேன்.

     என் பதில் அந்த நண்பர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. தலைமுடியை வெட்ட மறுத்தது அந்த க்ஷவரத் தொழிலாளியின் குற்றமல்ல. கருப்பு மனிதருக்கு அவர் முடி வெட்டி விடுவாரானால் வெள்ளைக்காரர்கள் அவரிடம் முடி வெட்டிக்கொள்ள வர மறுத்துவிடக் கூடும். நமது தீண்டாத சகோதரர்களுக்கு க்ஷவரம் செய்ய, நம் க்ஷவரத் தொழிலாளியை நாம் அனுமதிப்பதில்லையே! இந்தப் பாவத்திற்கு உரிய பலனை நான் தென்னாப்பிரிக்காவில் ஒரு தடவை அல்ல, பல தடவைகளில் அனுபவித்தேன். ‘இதெல்லாம் நாம் செய்த பாவத்திற்குத் தண்டனையே’ என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் நான் கோபம் அடையவில்லை.

     எனக்கு வேண்டியவைகளை யெல்லாம் நானே செய்து கொள்ளுவது என்பதிலும், எளிய வாழ்க்கையிலும், எனக்கு இருந்த ஆர்வம் எவ்வளவு தீவிரமான முறைகளில் வெளியிடப்பட்டது என்பதைப் பற்றிய விவரங்களை அதற்குரிய இடம் வரும்போது கூறுகிறேன். விதை, நீண்ட காலத்திற்கு முன்பே போடப்பட்டு விட்டது. வேர் இறங்கி, அது பூத்துக் காய்க்க, அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியதே பாக்கியாக இருந்தது. அதற்குத் தண்ணீர் பாய்ச்சுவதும் உரிய காலத்தில் நடந்தது.

 

 

10. போயர் யுத்தம்

 

  1894-ஆம் ஆண்டுக்கும் 1899-ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்ட மற்றும் பல அனுபவங்களையெல்லாம் விட்டுவிட்டு நேரே போயர் யுத்தத்திற்கு வரவேண்டும்.

 

     அந்தப் போர் ஆரம்பம் ஆனபோது என் சொந்தக் கருத்துக்களை வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை என்றே நான் நம்பினேன். இது சம்பந்தமாக என் உள்ளத்தில் அப்பொழுது ஏற்பட்ட போராட்டத்தைக் குறித்து, நான் எழுதியிருக்கும் ‘தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திர’த்தில் விவரமாகக் கூறியிருக்கிறேன். அந்த வாதங்களை இங்கே திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதை அறிய விரும்புவோர் அப் புத்தகத்தில் பார்த்துக் கொள்ளுவார்களாக. பிரிட்டிஷ் ஆட்சியிடம் நான் சொண்டிருந்த விசுவாசம், அப்போரில் பிரிட்டிஷ் பக்கம் என்னைச் சேரும்படி செய்துவிட்டது என்பதைச் சொல்லுவது மட்டும் இங்கே போதுமானது. பிரிட்டிஷ் பிரஜை என்ற வகையில் நான் உரிமைகளைக் கோரினால், அந்த பிரஜை என்ற வகையில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட வேண்டியதும் என் கடமை என்றே நான் கருதினேன். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தயவினாலேயே அந்த ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டு, தனது பூர்ணமான கதிமோட்சத்தை இந்தியா அடைய முடியும் என்பதும் அப்பொழுது என் கருத்து. ஆகையால், என்னால் முடிந்த வரையில் தோழர்களைத் திரட்டினேன். அவர்களைக் கொண்டு வைத்திய உதவிப் படையும் அமைத்து, கஷ்டப்பட்டு, அப்படையின் சேவையைப் பிரிட்டிஷார் ஏற்றுக்கொள்ளும் படியும் செய்தேன்.

 

     ‘இந்தியன் பயங்காளி, ஆபத்துக்குத் துணியாதவன், உடனடியான தனது சொந்த நன்மையைத் தவிர வேறு எதையும் எண்ண மாட்டான்’ என்பதே பொதுவாக ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம். ஆகையால், நான் என் யோசனையைக் கூறியதும், பல ஆங்கில நண்பர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால், டாக்டர் பூத், என் திட்டத்தை மனமார ஆதரித்தார். வைத்திய உதவிப் படை வேலைக்கு, அவர் எங்களுக்குப் பயிற்சியும் அளித்தார். சேவைக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் எங்களுக்குக் கிடைக்கவும் உதவினார். ஸ்ரீ லாப்டனும், காலஞ்சென்ற ஸ்ரீ எஸ்கோம்பும் இத்திட்டத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தார்கள். கடைசியாகப் போர்முனையில் சேவை செய்வதாக மனுச் செய்து கொண்டோம். அரசாங்கம், வந்தனத்துடன் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால், எங்கள் சேவை அப்போதைக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது.

 

     இந்த மறுதலிப்புக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நான் சும்மா இருந்துவிடவில்லை. டாக்டர் பூத்தின் உதவியின் பேரில் நேட்டால் பிஷப்பிடம் (பாதிரியாரிடம்) சென்றேன். எங்கள் வைத்திய உதவிப் படையில் இந்தியக் கிறிஸ்தவர்கள் பலர் இருந்தனர். என் திட்டத்தை அறிந்து, பிஷப் மகிழ்ச்சியடைந்தார். எங்கள் சேவை அங்கீகரிக்கப் படுவதற்கு உதவி செய்வதாகவும் வாக்களித்தார். காலமும் எங்களுக்கு உதவியாக இருந்தது. எதிர் பார்த்ததைவிட அதிகத் தீரத்தோடும், உறுதி உடனும், திறமையாகவும் போயர்கள் போராடினார்கள். ஆகவே, முடிவில் எங்கள் சேவையும் அவசியமாயிற்று.

 

     எங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவர்களையும் கொண்டது. இவர்களில் சுமார் முந்நூறு பேர் சுயேச்சையான இந்தியர்; மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். டாக்டர் பூத்தும் எங்களுடன் இருந்தார். படையும் நன்றாக வேலை செய்து புகழ் பெற்றது. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்கு வெளியில்தான் எங்கள் வேலை என்று இருந்தும், செஞ்சிலுவைய் படையின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட வரையறை, நாங்கள் விரும்பிப் பெற்றது அன்று. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் நாங்கள் இருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஸ்பியன் காப் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் முறியடிக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெனரல் புல்லர் ஒரு செய்தி அனுப்பினார். ‘ஆபத்திற்கு உடன்பட நீங்கள் கடமைப்பட்டிராவிடினும், நீங்கள், அவ்விதம் செய்து, போர்க்களத்திலிருந்து காயம்பட்டவர்களைக் கொண்டு வருவீர்களானால் அரசாங்கம் நன்றியறிதல் உள்ளதாக இருக்கும்’ என்று அச்செய்தி கூறியது. இதற்கு நாங்கள் தயங்கவே இல்லை. இவ்விதம் ஸ்பியன் காப் யுத்தத்தின் பயனாக, நாங்கள் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவர்களை, டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. காயம் அடைந்தவர்களில் ஜெனரல் வுட்கேட் போன்ற போர்வீரர்களைத் தூக்கிச் சென்ற கௌரவமும் எங்களுக்கு கிடைத்தது.

 

 

     ஆறு வாரங்கள் சேவை செய்த பிறகு, எங்கள் படை கலைக்கப் பட்டுவிட்டது. ஸ்பியன் காப்பிலும், வால்கிரான்ஸிலும் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, லேடி ஸ்மித் என்ற இடத்தையும் மற்ற இடங்களையும் அவசர நடவடிக்கைகளினால் மீட்பதற்கு முயல்வதைப் பிரிட்டிஷ் தளபதி கைவிட்டுவிட்டார். இங்கிலாந்திலிருந்தும் இந்தியாவில் இருந்தும் மேற்கொண்டு உதவிக்குப் படைகள் வந்து சேரும் வரையில் மெதுவாகவே முன்னேறுவது என்று முடிவு செய்தார்.

 

     எங்களுடைய சொற்ப சேவை, அச்சமயம் வெகுவாகப் பாராட்டப்பெற்றது. இந்தியரின் கௌரவமும் உயர்ந்தது. ‘எப்படியும் நாம் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் புத்திரர்களே’ என்பதைப் பல்லவியாகக் கொண்ட பாராட்டுப் பாடல்களைப் பத்திரிகைகள் பிரசுரித்தன. இந்திய வைத்தியப் படையின் சேவையை, ஜெனரல் புல்லர், தமது அறிக்கையில் பாராட்டியிருந்தார். இப்படையின் தலைவர்களுக்கும் யுத்தப் பதக்கங்களை வழங்கினார்கள்.

 

     இந்திய சமூகம் அதிகக் கட்டுப்பாடுடையதாயிற்று. ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டாயிற்று. அவர்களும் அதிகமாக விழிப்படைந்தார்கள். ‘ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், குஜராத்திகள், சிந்திகள் என்ற எல்லோரும் இந்தியரே; ஒரே தாய் நாட்டின் மக்களே’ என்ற உணர்ச்சி இவர்களிடையே ஆழ வேர் ஊன்றியது. இந்தியரின் குறைகளுக்கு இனி நிச்சயமாகப் பரிகாரம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் உண்டாயிற்று. வெள்ளைக்காரரின் போக்கும் தெளிவாக மாறுதலை அடைந்துவிட்டது என்றே அச்சமயம் தோன்றியது. யுத்த சமயத்தில் வெள்ளையருடன் இந்தியருக்கு இனிமையான வகையில் நட்பும் ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரச் சிப்பாய்களுடன், அப்பொழுது நாங்கள் பழகினோம். அவர்கள் எங்களுடன் நண்பர்களாகப் பழகினர்; தங்களுக்குச் சேவை செய்வதற்காக நாங்கள் அங்கே இருப்பதைக் குறித்து நன்றியுள்ளவர்களாகவும் இருந்தனர்.

 

 

     சோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் எவ்வளவு உயர்ந்த விதத்தில் தென்படுகிறது என்பதற்கு, நினைத்தாலும் இன்பம் தருவதாக உள்ள ஒரு சம்பவத்தின் உதாரணத்தை நான் இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. சீவ்லி முகாமை நோக்கி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். லார்டு ராபர்ட்ஸின் மகனான லெப்டினெண்டு ராபர்ட்ஸ் அங்கே படுகாயமடைந்து இறந்தார். போர்க்களத்திலிருந்து அவருடைய சவத்தைத் தூக்கி வந்தது எங்கள் படையே. அன்று வெயிலின் புழுக்கம் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் தாகத்தினால் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். தாகத்தைத் தணித்துக்கொள்ள வழியில் ஒரு சிற்றோடை இருந்தது. ஆனால், அதில் யார் முன்னால் இறங்கித் தண்ணீர் குடிப்பது? ‘வெள்ளைக்காரச் சிப்பாய்கள் குடித்துவிட்டு வந்த பிறகே நாங்கள் நீர் அருந்துவது’ என்று தீர்மானித்திருந்தோம். ஆனால், அவர்கள் முன்னால் போகவில்லை. முன்னால் இறங்கி நீர் அருந்துமாறு எங்களை வற்புறுத்தினர். இவ்விதம் யார் முன்னால் போய்த் தண்ணீர் குடிப்பது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் அங்கே மகிழ்ச்சி தரும் போட்டியே நடந்தது.

 

 

  • 11. சுகாதார சீர்திருத்தமும் பஞ்ச நிவாரணமும்

 

 சமூகத்தைச் சேர்ந்த எந்த ஓர் உறுப்பினரும், அந்தச் சமூகத்திற்குப் பயன்படாதவராக இருப்பதைச் சகித்துக் கொண்டிருக்க என்னால் எப்பொழுதுமே முடிவதில்லை. சமூகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைப்பதையோ, அக்குறைகளுக்கு உடந்தையாக இருப்பதையோ நான் எப் பொழுதுமே வெறுத்து வந்திருக்கிறேன். சமூகத்தின் குற்றங் குறைகளைப் போக்கிக்கொள்ளாமல் அதன் உரிமைகளைப் பெற மாத்திரம் போராடுவதும் எனக்குப் பிடிக்காது. இந்திய சமூகத்தின் ஒரு குறையைக் குறித்து அதன்மீது குற்றஞ்சாட்டப் பட்டு வந்தது. அக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இல்லாமலும் இல்லை. ஆகையால் நான் நேட்டாலில் குடியேறியது முதல் அக்குற்றச்சாட்டிலிருந்து நம் சமூகத்தை விடுவிக்க முயன்று வந்தேன். ‘இந்தியர் சுத்தத்தைக் குறித்து கவலைப்படாதவர்கள்; தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் அவர்கள் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில்லை’ என்று இந்தியர்மீது குறை கூறப்பட்டது. சமூகத்தில் முக்கியமானவர்களான இந்தியர்கள், தங்கள் வீடு வாசல்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முன்னமேயே ஆரம்பித்து விட்டனர். ஆனால், டர்பனில் பிளேக் ஏற்படக் கூடும் என்று அறிவிக்கப்பட்ட போதுதான் வீடுதோறும் சென்று பார்க்க ஆரம்பித்தோம். ‘இதில் எங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்’ என்று நகரசபை உறுப்பினர்கள் விரும்பினர். ஆகவே, அவர்களைக் கலந்து ஆலோசித்து, அவர்கள் அங்கீகாரமும் கிடைத்த பின்னரே இந்த வேலையில் இறங்கினோம். எங்கள் ஒத்துழைப்பு, அவர்களுடைய வேலையை எளிதாக்கியதோடு, எங்களுடைய சிரமங்களையும் குறைத்தது. ஏனெனில், தொத்துநோய்கள் பரவும்போதெல்லாம் நிர்வாக அதிகாரிகள் வெகு சீக்கிரத்தில் பொறுமையை இழந்துவிடுகிறார்கள்; கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளுகின்றனர். தங்களுக்குப் பிடிக்காதவர்களிடம் அவர்கள் அதிகக் கடுமையாக நடந்து கொள்ளுவதும் பொதுவான வழக்கம். இந்திய சமூகம், தானே வலியச் சுகாதார முறைகளை அனுசரிக்க முற்பட்டதால் இப்படிப்பட்ட கொடுமையில் சிக்காமல் மீண்டது.

     ஆனால், எனக்கு வருந்தத்தக்க அனுபவங்கள் சில ஏற்படாது போகவில்லை. உரிமையைக் கோருவதில் சமூகத்தின் உதவியைப் பெறுவது எளிது. ஆனால், சமூகம் தன்னுடைய கடமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்பதில் அதே சமூகத்தின் உதவியை நான் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது என்பதைக் கண்டேன். சில இடங்களில் அவமதிக்கப்பட்டேன். மற்ற இடங்களிலோ, என்னிடம் மரியாதை காட்டினார்கள். ஆனால், நான் கூறிய யோசனைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. தங்களைச் சுற்றியுள்ள இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் முயற்சி எடுத்துக்கொள்ளுவது, மக்களுக்கு அதிகக் கஷ்டமாகவே இருந்தது. இந்த வேலைக்கு அவர்கள் பணம் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கே இல்லை. அளவற்ற பொறுமையினாலன்றி இந்த மக்கள் எந்த வேலையும் செய்யும்படியாகச் செய்வது முடியாத காரியம் என்பதை, மற்றெல்லாவற்றையும்விட இந்த அனுபவங்கள், எனக்கு நன்றாகப் போதித்தன. சீர்திருத்த வேண்டும் என்ற கவலை, சீர்திருத்தக்காரருக்குத்தான் உண்டு. சமூகம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், அவர் சமூகத்தினிடமிருந்து எதிர்ப்பையும், வெறுப்பையும், உயிருக்கே அபாயமான கொடுமைகளையும் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. சீர்திருத்தக்காரர், தம் உயிரினும் முக்கியமானது என்று கருதும் ஒரு சீர்திருத்தத்தை மிகவும் பிற்போக்கானது என்று கூடச் சமூகம் கருதிவிடலாம் அல்லவா?

     என்றாலும், இந்தக் கிளர்ச்சியின் பயனாக இந்திய சமூகத்தினர், தங்கள் வீடு வாசல்களையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை ஒருவாறு கற்றுக் கொண்டார்கள். அதிகாரிகளின் நன்மதிப்பும் எனக்கு ஏற்பட்டது. இருக்கும் குறைகளை எடுத்துக்கூறி உரிமைகளை வற்புறுத்துவதே என் வேலையாக இருந்தாலும், சுயத் தூய்மையைச் சமூகம் அடைய வேண்டும் என்பதிலும் நான் சிரத்தையுடன் விடாப் பிடியாகவும் இருந்ததை அவர்கள் கண்டார்கள்.

     ஆயினும், செய்து தீரவேண்டிய ஒரு வேலை இன்னும் பாக்கியாகவே இருந்தது. நாடு கடந்து வந்திருக்கும் இந்தியர்கள், தாய் நாட்டுக்குத் தாங்கள் செய்தாக வேண்டிய கடமையை உணரும்படி செய்வதே அந்த வேலை. இந்தியா ஏழை நாடு. செல்வத்தைத் தேடுவதற்காக இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு வந்தார்கள். தாய்நாட்டு மக்களுக்குக் கஷ்டம் ஏற்படும் சமயத்தில், இந்த இந்தியர், தங்கள் வருவாயில் ஒரு பகுதியை அளித்துத் தாய் நாட்டுக்கு உதவ வேண்டியது அவர்களுடைய கடமையாகும். 1897, 1899 -ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டபோது, தென்னாப்பிரிக்க இந்தியர்கள், இந்த உதவியைச் செய்தனர். பஞ்ச நிவாரண வேலைகளுக்குத் தாராளமாகப் பண உதவி செய்தார்கள். 1897-ஆம் ஆண்டில் செய்ததைவிட 1899-ஆம் ஆண்டில் அதிக உதவி செய்தனர். இதற்கு ஆங்கிலேயரும் பண உதவி செய்ய வேண்டும் என்று கோரினோம். அவர்களும் தாராளமாக உதவ முன்வந்தனர். இந்திய ஒப்பந்தத் தொழிலாளரும், தங்கள் பங்கைக் கொடுத்து உதவினர். இந்தப் பஞ்சங்கள் தோன்றிய சமயத்தில் ஏற்பட்ட இந்த உதவி முறை, அப்பொழுதிலிருந்து தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. இந்தியாவில் பெரிய துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் பெருந்தொகையை இந்தியாவுக்கு அனுப்பி உதவுவதற்குத் தென்னாப்பிரிக்க இந்தியர் தவறுவதே இல்லை.

     இவ்விதம், தென்னாப்பிரிக்க இந்தியரிடையே நான் செய்து வந்த சேவை, ஒவ்வொரு கட்டத்திலும், சத்தியத்தின் புதிய தன்மைகளை எப்பொழுதும் எனக்குக் காட்டி வந்தது. சத்தியம் என்பது ஒரு பெரிய மரத்தைப் போன்றது. அதை நீர் ஊற்றி நாம் வளர்க்க வளர்க்க அது மேலும் மேலும் கனிகளை அதிகமாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சத்தியத்தின் சுரங்கத்தில் மேலும் ஆழத்தில் போய், நாம் தேடத் தேட அதில் பொதிந்து கிடக்கும், மேலும் மேலும் அதிக விலை மதிப்புள்ள ரத்தினங்களைக் காண்கிறோம்.பல வகைகளிலும் சேவை செய்வதற்கு ஏற்படும் வாய்ப்புகளே அந்த ரத்தினங்களாகும்.

 

 

  • 12. இந்தியாவுக்குத் திரும்ப முடிவு

 

 

 யுத்த சேவையிலிருந்து நான் விடுவிக்கப்பட்டதும், ‘இனி நான் செய்ய வேண்டிய வேலை, இந்தியாவில்தானே அன்றி தென்னாப்பிரிக்காவில் அல்ல’ என்பதை உணர்ந்தேன். இப்படி நான் எண்ணியதற்குக் காரணம், தென் ஆப்பிரிக்காவில் இனி செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது அல்ல. ஆனால், அங்கே என் முக்கியமான வேலை, பணம் சம்பாதிப்பதாகவே ஆகிவிடும் என்று அஞ்சினேன்.

     தாய் நாட்டில் இருந்த நண்பர்களும், திரும்பி வந்துவிடுமாறு என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில் நான் அதிகமாகச் சேவை செய்ய முடியும் என்றும் எண்ணினேன். தென்னாப்பிரிக்காவிலிருக்கும் வேலைகளுக்கோ, ஸ்ரீகானும், ஸ்ரீமன்சுக்லால் நாஸரும் இருக்கிறார்கள். ஆகையால், என்னை விடுவிக்குமாறு எனது சக ஊழியர்களைக் கேட்டுக்கொண்டேன். என் கோரிக்கை அதிகச் சிரமத்தின் பேரிலும், ஒரு நிபந்தனையின் பேரிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஓர் ஆண்டிற்குள் தென்னாப்பிரிக்க இந்தியர் சமூகம் என்னை விரும்பினால், தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிவிட நான் தயாராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இது கஷ்டமான நிபந்தனை என்று கருதினேன். ஆயினும், சமூகத்தினுடன் என்னைப் பிணைத்திருந்த அன்பின் காரணமாக அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டேன். ‘அன்பெனும் நூலிழையினால் கண்ணன் என்னைக் கட்டிவிட்டான். நானும் அவனுக்கு முழு அடிமையாகிவிட்டேன்’ என்று மீராபாய் பாடினாள். சமூகத்துடன் என்னைப் பிணைத்திருந்த அன்பெனும் நூல் இழை, என்னைப் பொறுத்த வரையிலும் கூட, அறுந்துவிட முடியாததாகப் பலம் உள்ளதாகத்தான் இருந்தது. பொதுஜன வாக்கே கடவுள் வாக்கு. இங்கே நண்பர்களின் வாக்கு, மனப்பூர்வமான உண்மைவாக்காக இருந்ததால், அதைத் தட்டிவிடவும் முடியவில்லை. நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு, புறப்படுவதற்கு அவர்களுடைய அனுமதியைப் பெற்றேன்.

     அச் சமயம் எனக்கு நேட்டாலுடன் மாத்திரமே நெருங்கிய தொடர்பு இருந்தது. நேட்டால் இந்தியர் அன்பு என்ற அமிர்தத்தை என்மீது பொழிந்துவிட்டார்கள். ஒவ்வோர் இடத்திலும் பிரவுபசாரக் கூட்டம் நடத்தினார்கள். விலையுயர்ந்த வெகுமதிகளையும் எனக்கு அளித்தார்கள்.

     1899-இல் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும் இத்தகைய வெகுமதிகளை எனக்குக் கொடுத்தனர். ஆனால், இத்தடவையிலோ, பிரிவுபசாரம் அளவு கடந்ததாக இருந்தது. வெள்ளி, தங்கச் சாமான்களும் அன்பளிப்பில் அடங்கியிருந்ததோடு, விலையுயர்ந்த வைரச் சாமான்களும் இருந்தன.

     இந்த வெகுமதிகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவைகளை யெல்லாம் வாங்கிக் கொண்ட பிறகு, ஊதியம் பெறாமல் சமூகத்திற்குச் சேவை செய்து வந்திருப்பதாக நான் எண்ணிக்கொள்ளுவது எப்படி? என் கட்சிக்காரர்கள் கொடுத்த சில வெகுமதிகளைத் தவிர மற்றவை யாவும், சமூகத்திற்கு நான் செய்த சேவைக்கு என்றே முற்றும் எனக்கு அளிக்கப்பட்டவைகள் ஆகும். என் கட்சிக்காரர்களும் பொது வேலையில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, கட்சிக்காரர்கள் வேறு, பொது ஊழியர்கள் வேறு என்று பாகுபாடு செய்துகொள்ளுவதற்கும் இல்லை.

     கிடைத்த வெகுமதிகளில் ஒன்று தங்கச் சங்கிலி. அது 52 பவுன் பெறுமானம் உள்ளது. என் மனைவிக்கு என்று அதை அளித்தனர். ஆனால், அதுவும்கூட என்னுடைய பொதுசேவைக்கு அளிக்கப்பட்ட வெகுமதியே. ஆகையால் மற்றவைகளிலிருந்து அதை நான் தனியாக பிரித்துவிட முடியாது.

     ஒரு நாள் மாலை, இந்த வெகுமதிகளில் பெரும் பகுதியை எனக்கு அளித்தார்கள். அன்று இரவெல்லாம் என்னால் தூங்கவே முடியவில்லை. என் அறையில் அங்கும் இங்கும் இரவெல்லாம் உலாவினேன்; தீவிரமாகச் சிந்தித்தேன். ஆனால், ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆயிரக்கணக்கில் மதிப்புள்ள இந்த வெகுமதிகளை வேண்டாம் என்று துறந்து விடுவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அவைகளை வைத்துக் கொள்ளுவதோ இன்னும் அதிகக் கஷ்டமாக இருந்தது. அவைகளை நான் வைத்துக் கொள்கிறேன் என்றாலும் என் குழந்தைகளின் சங்கதி என்ன? என் மனைவியின் விஷயம் என்ன? சேவைக்கு வேண்டிய வாழ்க்கை நடத்த அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். சேவை ஒன்றே அதற்குரிய சன்மானம் என்றும் அவர்களுக்குச் சொல்லி வந்திருக்கிறேன்.

     வீட்டில் என்னிடம் விலை உயர்ந்த நகை எதுவும் இல்லை. எங்கள் வாழ்க்கையையே விரைவாக எளிமை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படியிருக்கத் தங்கக் கடிகாரங்களை நாங்கள் எவ்வாறு வைத்துக் கொள்ள முடியும்? தங்கச் சங்கிலிகளையும் வைர மோதிரங்களையும் நாங்கள் எவ்வாறு அணிந்து கொள்ள முடியும்? மக்கள், நகைகளின் மீது இருக்கும் ஆசையை விட்டுவிட வேண்டும் என்று பல தடவை நான் மக்களுக்கு உபதேசம் செய்தும் இருக்கிறேன். அப்படியிருக்க என்னிடம் வந்திருக்கும் நகைகளை நான் என்ன செய்வது?

     இந்த வெகுமதிகளையெல்லாம் நான் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இவற்றையெல்லாம் சமூகத்திற்கே சொந்தமானதாக்கி, இதற்குச் சில தரும கர்த்தாக்களை நியமித்து, ஒரு கடிதம் எழுதினேன். பார்ஸி ருஸ்தம்ஜியையும் மற்றும் சிலரையும் தருமகர்த்தாக்களாக நியமித்தேன். காலையில் என் மனைவியுடனும் குழந்தைகளோடும் ஆலோசனையை நடத்தி இப் பெரும் பாரத்தை நிவர்த்தி செய்து கொண்டேன்.

     இதற்கு என் மனைவியைச் சம்மதிக்கச் செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும் என்பதை அறிவேன். குழந்தைகளைப் பொறுத்த வரையில் எந்தவிதமான கஷ்டமும் இராது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களையே என் வக்கீல்கள் ஆக்கிக்கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

     என் யோசனைகளைக் குழந்தைகள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர். “இந்த விலையுயர்ந்த வெகுமதிகள் நமக்குத் தேவையில்லை. ஆகையால், அவற்றைச் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடவேண்டியதே. அவை நமக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால் நாம் அவற்றை எளிதில் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்” என்று குழந்தைகள் கூறினர்.

     நான் ஆனந்தம் அடைந்தேன். “அப்படியானால், உங்கள் தாயாரிடம் இதைக் குறித்து எடுத்துக் கூறி, அவளும் இதற்குச் சம்மதிக்கச் செய்வீர்கள் அல்லவா?” என்று கேட்டேன். “நிச்சயமாகச் செய்வோம். அது எங்கள் வேலை. அம்மாவுக்கு நகைகள் வேண்டியதில்லை. அவைகளை எங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்றே அவர் விரும்புவார். ‘எங்களுக்கு அவை தேவையில்லை’ என்று நாங்கள் கூறும்போது, அவைகளைக் கொடுத்துவிட அம்மா ஏன் சம்மதிக்க மாட்டார்?” என்றும் கூறினார்கள்.

     பேச்சளவில் இது எளிதாகத்தான் இருந்தது. ஆனால், காரியத்திலோ அது அதிகக் கஷ்டமாக இருந்தது. என் மனைவி கூறியதாவது: “இவையெல்லாம் உங்களுக்குத் தேவைப்படாமல் இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கும் அவை வேண்டாம் என்று இருக்கலாம். அவர்களை நீங்கள் தட்டிக் கொடுத்தால், உங்கள் இஷ்டப்படியெல்லாம் அவர்கள் கூத்தாடுவார்கள். நகைகளை நான் போட்டுக் கொள்வதை நீங்கள் அனுமதிக்காமலிருப்பதை நான் புரிந்து கொள்ளுகிறேன். ஆனால், என் மருமகப்பெண்கள் வரும்போது அவர்கள் விஷயம் என்ன? நிச்சயம் அவர்களுக்கு நகைகள் வேண்டியிருக்கும். நாளைக்கு நம் நிலைமை எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அதிக அன்போடு அளிக்கப்பட்ட இந்த வெகுமதிகளைத் திருப்பிக் கொடுத்துவிட நான் ஒரு போதும் சம்மதிக்கவே மாட்டேன்.”

     இவ்வாறு அவள், வாதங்களைச் சண்டமாருதமாகப் பொழிந்தாள். முடிவில் கண்ணீர் வடித்தும் அவற்றைப் பலப்படுத்தினாள். ஆனால், குழந்தைகளோ உறுதியுடன் இருந்தார்கள். நானும் அசையவில்லை. நான் சாந்தமாகப் பின்வருமாறு கூறினேன்: “குழந்தைகளுக்கு இனிமேல்தான் விவாகம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே விவாகம் செய்து வைத்துவிட நாம் விரும்பவில்லை. அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் காரியங்களை அவர்களே முடித்துக்கொள்ளுவார்கள். மேலும், நகைப் பித்துப் பிடித்த பெண்களை நம் குமாரர்களுக்கு நாம் மணம் செய்துவைக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம். அவர்களுக்கு நகை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவற்றை வாங்கிக் கொடுக்க நான் இருக்கிறேன். அப்பொழுது நீ என்னைக் கேள்.”

     அதற்கு அவள், “உங்களைக் கேட்பதா? இவ்வளவு நாள் பழகியும் உங்களை எனக்குத் தெரியாதா? என் நகைகளைப் பிடுங்கிக் கொண்டீர்கள். அவற்றை நான் போட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கவும் நீங்கள் என்னை விடவில்லை. இப்படிப்பட்ட நீங்கள் மருமக்கள்மார்களுக்கு நகை வேறு செய்து போட்டுவிடப் போகிறீர்களாக்கும்! முடியாது. நகைகளை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. மேலும், என்னுடைய கழுத்துச் சரத்தைக் கேட்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றாள்.

     “ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவோ, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்.

     “உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களை யெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச் செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி.

     இச் சொல்லம்புகள் என் உள்ளத்தில் தைத்தன. அவற்றுள் சில ஆழப் பதிந்தன. ஆனாலும், நகைகளைத் திருப்பிக் கொடுத்து விடுவது என்று நான் உறுதி கொண்டுவிட்டேன். இதற்கு அவளும் முடிவாகச் சம்மதித்துவிடும்படி செய்வதில் எப்படியோ வெற்றிபெற்றேன். 1896, 1901-ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன. ஒரு தருமகர்த்தாப் பத்திரம் தயாரித்தேன். அந்த வெகுமதிகளை யெல்லாம் ஒரு பாங்கில் ஒப்படைத்தேன். என் விருப்பப்படியோ, தருமகர்த்தாக்களின் விருப்பப்படியோ, இந் நிதியைச் சமூகத்தின் சேவைக்குப் பயன்படுத்துவது என்று ஏற்பாடு செய்தேன்.

     பொதுஜன காரியங்களுக்கு நிதி எனக்குத் தேவைப்பட்டு, ‘இந்தத் தரும நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதே’ என்று நான் எண்ணிய போதெல்லாம், தேவைக்கு வேண்டிய பணத்தை வெளியிலேயே வசூல் செய்துகொள்ள என்னால் முடிந்திருக்கிறது. ஆகையால், அந்த நிதி அப்படியே செலவாகாமல் இருந்தது. அந்த நிதி இன்னும் இருந்து வருகிறது. தேவைப்படும் போது செலவிட்டு வருகிறார்கள். ஒழுங்காக அந் நிதி சேர்ந்து கொண்டும் வருகிறது.

     இவ்வாறு இந்நிதியை உண்டாக்கியதற்காக நான் என்றும் வருந்தியதே இல்லை. சில ஆண்டுகளானதும், அப்படிச் செய்தது தான் புத்திசாலித்தனமானது என்பதை என் மனைவியும் அறிந்து கொண்டாள். எத்தனையோ ஆசைகளிலிருந்து அது எங்களைப் பாதுகாத்தது.

     பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய திடமான அபிப்பிராயம்.

 

 

  • 13. திரும்பவும் இந்தியாவில்

 

 ஆகவே, நான் தாய்நாட்டிற்குப் பயணமானேன். மத்தியில் கப்பல் நின்ற துறைமுகங்களில் மொரீஷியஸ் (மோரிஸ்) தீவும் ஒன்று. அங்கே கப்பல் கொஞ்சம் அதிகமாகத் தாமதித்ததால் நான் கரையில் இறங்கி, இத்தீவிலிருந்த நிலைமையை ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் இரவு, அந்தக் காலனியின் கவர்னர் ஸர் சார்லஸ் புரூஸின் விருந்தினனாக இருந்தேன்.

     இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும் நாட்டைச் சுற்றிப் பார்ப்பதில் கொஞ்ச காலத்தைக் கழித்தேன். அது 1901-ஆம் ஆண்டு. அப்போது கல்கத்தாவில் ஸ்ரீ (பிறகு ஸர்) தின்ஷா வாச்சாவின் தலைமையில் காங்கிரஸ் மகாநாடு நடந்தது. நானும் மகாநாட்டிற்குப் போயிருந்தேன். காங்கிரஸைப்பற்றிய என் முதல் அனுபவம் அதுதான்.

     தென்னாப்பிரிக்க நிலையைக் குறித்து, ஸர் பிரோஸ்ஷா மேத்தாவுடன் நான் பேசவேண்டியிருந்ததால், பம்பாயிலிருந்து அவர் பிரயாணம் செய்த அதே ரெயிலில் நானும் பிரயாணம் செய்தேன். அவர் எவ்விதமான ராஜபோக வாழ்க்கையை நடத்தி வந்தார் என்பதை நான் அறிவேன். தமக்கு என்று அவர், எல்லா வசதிகளும் உள்ள தனிப்பெட்டி ஒன்றை ரெயிலில் அமர்த்திக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட இரு ஸ்டேஷன்களுக்கு இடையில் அவருடைய தனிப்பெட்டியில் நான் பிராயணம் செய்து, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொள்ளலாம் என்பது எனக்கு இடப்பட்டிருந்த கட்டளை. ஆகவே, குறிப்பிட்ட ஸ்டேஷனில் அவருடைய தனிப்பெட்டிக்குப் போய், நான் வந்திருப்பதை அவருக்குத் தெரிவித்துக் கொண்டேன். அவருடன் ஸ்ரீ வச்சாவும் ஸ்ரீ (இப்பொழுது ஸர்) சிமன்லால் சேதல்வாடும் இருந்தனர். ராஜீய விஷயங்களைக் குறித்து, அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஸர் பிரோஸ்ஷா என்னைப் பார்த்ததும் பின்வருமாறு கூறினார்: “காந்தி, உமக்கு எதுவும் என்னால் செய்ய முடியாது போல் தோன்றுகிறது. ஆனால், நீர் விரும்பும் தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். நம் சொந்த நாட்டிலேயே நமக்கு என்ன உரிமை இருக்கிறது? நம் நாட்டில் நமக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லாதிருக்கும் வரையில், காலனிகளில் நீங்கள் சுகமடைய முடியாது என்றே நான் நம்புகிறேன்.”

     இதைக் கேட்டு நான் திடுக்கிட்டுப்போனேன். அக் கருத்தை ஸ்ரீ சேதல்வாடும் அங்கீகரிப்பதாகத் தோன்றியது. ஸ்ரீ வாச்சா, என்னைப் பரிதாப நோக்குடன் பார்த்தார். பிரோஸ்ஷாவிடம் என்னுடைய கட்சியை எடுத்துக்கூற முயன்றேன். ஆனால், பம்பாயின் முடிசூடா மன்னரான அவரை, என்னைப்போன்ற ஒருவன், தனது கட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து விடுவதென்பதற்கு இடமே இல்லை. என்னுடைய தீர்மானத்தைக் கொண்டுவர அனுமதிக்கப்படுவேன் என்பதைக் கொண்டு திருப்தியடைந்தேன்.

     “தீர்மானத்தை முன்னதாகவே காட்டுவீர்கள் அல்லவா?” என்று என்னை உற்சாகப் படுத்துவதற்காக ஸ்ரீ வாச்சா கேட்டார். அவருக்கு நன்றி தெரிவித்தேன். ரெயில் அடுத்த ஸ்டேஷனில் நின்றதும் அந்தப் பெட்டியிலிருந்து இறங்கி, என் பெட்டிக்குப் போய்விட்டேன்.

     கல்கத்தா போய்ச் சேர்ந்தோம். வரவேற்புக் கழகத்தினர் அக்கிராசனரை மிகுந்த சிறப்புடன், அவருடைய முகாமுக்கு அழைத்துச் சொன்றனர். நான் எங்கே போகவேண்டும் அன்று ஒரு தொண்டரைக் கேட்டேன். என்னை ரிப்பன் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பல பிரதிநிதிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதிர்ஷ்டம் எனக்கு உதவியது நான் இருந்த பகுதியிலேயே லோகமான்யரின் ஜாகையும் இருந்தது. அவர் ஒரு நாள் பிந்தி வந்தார் என்று எனக்கு ஞாபகம்.

     லோகமான்யர் இருக்குமிடத்தில் வழக்கம்போல் அவருடைய தர்பார் நடக்காமல் இருக்காது. படுக்கையில் அவர் உட்கார்ந்திருந்த சமயத்தில், நான் அவரைப் பார்த்தேன். அந்தக் காட்சி முழுவதும் இன்றும் என் நினைவில் அப்படியே இருந்து வருகிறது. நான் ஓவியக்காரனாக இருந்தால், அக் காட்சியை அப்படியே சித்திரமாகத் தீட்டிவிடுவேன். அவரைப் பார்த்துப் பேசக் கணக்கற்றவர்கள் வந்தனர். அவர்களில் ஒருவரை மாத்திரமே இப்பொழுது எனக்கு நினைவிருக்கிறது. ‘அமிர்த் பஜார்’ பத்திரிகையின் ஆசிரியரான காலஞ்சென்ற பாபு மோதிலால் கோஷே அவர். அவர்களுடைய பலத்த சிரிப்பும், ஆளும் இனத்தினரின் தவறான செய்கைகளைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்ததும் என்றுமே மறந்துவிடக் கூடியன அல்ல.

     இந்த முகாமின் நிலைமையைக் குறித்துக் கொஞ்சம் விவரமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். தொண்டர்கள் ஒருவரோடொருவர் சச்சரவிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் ஏதாவது செய்யுமாறு நீங்கள் கூறினால், அதை அவர் இன்னொருவரிடம் சொல்லுவார். அப்படிச் சொல்லப்பட்டவர், மூன்றாமவரிடம் கூறுவார். இப்படிப் போய்க்கொண்டே இருக்கும். பிரதிநிதிகளைப் பொறுத்த வரையில், அவர்கள் திக்குத் திசை தெரியாமல் தவித்தனர்.

     தொண்டர்கள் சிலருடன் சிநேகம் செய்துகொண்டேன். தென்னாப்பிரிக்காவைப் பற்றி அவர்களிடம் சில விஷயங்களைக் கூறினேன். அவர்கள் கொஞ்சம் வெட்கம் அடைந்தனர். சேவையின் ரகசியத்தை அவர்கள் அறியும்படி செய்ய முயன்றேன். அவர்கள் உணர்ந்ததாகவே தோன்றியது. ஆனால், தொண்டு என்பது கண்டபடியெல்லாம் உடனே முளைத்து விடக் கூடியதன்று. இதற்கு, முதலில் மனத்தில் விருப்பம் வேண்டும். பிறகு அனுபவமும் தேவை. நல்லவர்களான, கள்ளங் கபடமற்ற அந்த இளைஞர்களைப் பொறுத்தவரையில் விருப்பத்திற்குக் குறைவில்லை. ஆனால், அனுபவந்தான் அவர்களுக்கு இல்லை. காங்கிரஸ், ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் கூடிவிட்டுப் பிறகு தூங்கிவிடும். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மூன்று நாள் திருவிழாவில் ஒருவருக்கு என்ன அனுபவம் ஏற்பட முடியும்? தொண்டர்களைப் போன்றே பிரதிநிதிகளும் இருந்தார்கள். இவர்களைவிட அவர்களுக்கு மேலான நீண்ட பயிற்சி எதுவும் இல்லை. அவர்கள் தாங்களாக எதுவுமே செய்ய மாட்டார்கள். அதனால், “தொண்டரே! இதைச் செய்யும்”, “தொண்டரே! அதைச் செய்யும்” என்று அவர்கள் இடைவிடாமல் கட்டளையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

     இங்கும் கூட ஓரளவுக்கு நான் தீண்டாமையை நேருக்கு நேராகக் கண்டேன். தமிழர்களின் சமையல்கூடம் மற்றவர்களின் சமையல் கூடத்திற்கு தொலைவில் தனியாக இருந்தது. தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் பார்த்துவிட்டால் கூடத் தோஷம் என்று, தமிழ்ப் பிரதிநிதிகள் கருதினார்கள். எனவே, அவர்களுக்கு என்று தனியான சமையல் கூடத்தைக் கல்லூரி மைதானத்தில் அமைத்திருந்தார்கள். நாற்புறமும் தட்டி வைத்து, இந்தக் கூடம் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரே புகை; யாரையும் மூச்சுத் திணறச் செய்துவிடும். சமைப்பது, சாப்பிடுவது, கையலம்புவது எல்லாம் அதற்குள்ளேதான். திறப்பே இல்லாத இரும்புப் பெட்டிபோல் இருந்தது, அந்த இடம். இது வருண தருமத்தின் சீர் கேடாகவே எனக்கு தோன்றிற்று. காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குள்ளே இத்தகைய தீண்டாமை இருந்து வருகிறதென்றால், இவர்கள் யாருக்குப் பிரதிநிதிகள் என்று வந்திருக்கிறார்களோ அந்த மக்களிடம் தீண்டாமை இன்னும் எவ்வளவு மோசமாக இருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை எண்ணியதும் பெருமூச்சு விட்டேன்.

     அங்கே இருந்த சுகாதாரக் கேட்டிற்கோ எல்லையே இல்லை. எங்கும் தண்ணீர், குட்டை குட்டையாகத் தேங்கிக் கிடந்தது. சில கக்கூசுகளே இருந்தன. அங்கிருந்த நாற்றத்தை இப்பொழுது நினைத்தாலும் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இதைப்பற்றித் தொண்டர்களிடம் சொன்னேன். “அது எங்கள் வேலை அல்ல, தோட்டிகளின் வேலை” என்று அவர்கள் திட்டவட்டமாகப் பதில் சொல்லிவிட்டார்கள். விளக்குமாறு ஒன்று வேண்டும் என்று கேட்டேன். உடனே, அந்த மனிதர் ஆச்சரியத்தோடு என்னை விழித்துப் பார்த்தார். ஒரு விளக்குமாற்றைத் தேடிப் பிடித்துக் கக்கூசைச் சுத்தம் செய்தேன். ஆனால், எனக்காகவே நான் சுத்தம் செய்து கொண்டேன். கூட்டமோ மிகவும் அதிகம்; கக்கூசுகளோ மிகக் கொஞ்சம். ஆகையால், அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாயிற்று. ஆனால், அந்த வேலை நான் ஒருவனாகச் செய்துவிடக் கூடியது அல்ல. ஆகவே, என் காரியத்தை நான் பார்த்துக் கொள்ளுவதோடு திருப்தியடைய வேண்டியவனானேன். மற்றவர்கள், துர்நாற்றத்தைக் குறித்தோ, அசுத்தத்தைப் பற்றியோ கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.

     அதோடு போகவில்லை. சில பிரதிநிதிகள், தாங்கள் இருந்த அறைகளுக்கு வெளிப்புறமிருந்த தாழ்வாரத்தில் இரவு நேரத்தில் கொஞ்சமும் கவலைப்படாமல் மலஜலம் கழித்து வந்தார்கள். காலையில் இந்த இடங்களைத் தொண்டர்களுக்குக் காண்பித்தேன். சுத்தம் செய்யும் வேலையை மேற்கொள்ள யாரும் தயாராக இல்லை. அதைச் செய்யும் கௌரவத்தில் என்னுடன் பங்குகொள்ள யாரும் கிடைக்கவில்லை. நிலைமை இப்பொழுது அதிக அபிவிருத்தி அடைந்திருக்கிறது. ஆனால், தங்கள் இஷ்டப்படியெல்லாம் கண்ட கண்ட இடங்களில் மலஜலம் கழித்து ஆபாசப்படுத்தி விடும் யோசனையற்ற பிரதிநிதிகள் இன்றும் கூட இல்லாது போகவில்லை. அவர்கள் அவ்விதம் செய்துவிட்ட இடங்களை உடனே சுத்தம் செய்துவிட எல்லாத் தொண்டர்களும் தயாராக முன்வந்து விடுவதுமில்லை.

     காங்கிரஸ் மகாநாடு மேலும் சில நாட்கள் நீடித்து நடக்க வேண்டி வந்தால், அங்கே தொத்து நோய் உண்டாவதற்குரிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதையும் கண்டேன்.

 

 

  • 14. குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும்

 

காங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. கொஞ்சம் அனுபவம் பெறுவதற்காகக் காங்கிரஸ் காரியாலயத்திற்கு என் சேவையை அளிப்பது என்று முடிவு செய்து கொண்டேன். கல்கத்தாவுக்கு வந்து, அன்றாடக் கடன்களை முடித்துக்கொண்டதும், நேரே காங்கிரஸ் காரியாலயத்திற்குச் சென்றேன்.

     பாபு பூபேந்திரநாதவசுவும், ஸ்ரீ கோஷாலும் காரியதரிசிகள். பூபேன் பாபுவிடம் சென்று, நான் தொண்டு செய்ய விரும்புவதாகச் சொன்னேன். அவர் என்னை உற்றுப்பார்த்துவிட்டு, “உமக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேலை இல்லை. கோஷால் பாபுவிடம் ஏதாவது வேலை இருக்கக் கூடும். தயவு செய்து அவரைப் போய்ப் பாரும்” என்றார்.

     ஆகவே, அவரிடம் போனேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “உமக்குக் குமாஸ்தா வேலைதான் கொடுக்க முடியும். அதை நீர் செய்வீரா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

     “நிச்சயம் செய்கிறேன். என் சக்திக்கு உட்பட்ட எந்தப் பணியையும் இங்கே செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றேன்.

     “இளைஞரே, அதுதான் சரியான மனப்பான்மை” என்றார். தம்மைச் சுற்றிலும் இருந்த தொண்டர்களை விளித்து, “இந்த இளைஞர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குக் கேட்டதா?” என்றார்.

     பிறகு என்னைப் பார்த்து அவர் கூறியதாவது: “அப்படியானால் சரி, இங்கே கடிதங்கள் பெருங்குவியலாகக் கிடக்கின்றன. அந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, அவற்றைக் கவனியுங்கள். நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள் என்பதை நீங்களும் கவனிக்கிறீர்கள். நான் என்ன செய்வது? அவர்களைச் சந்தித்துப் பேசுவதா அல்லது இந்த வேலையற்றவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருப்பதா? இந்த வேலையை ஒப்படைப்பதற்கு என்னிடம் குமாஸ்தாக்கள் இல்லை. இக் கடிதங்களில் பலவற்றில் ஒன்றுமே இருக்காது என்றாலும், அவற்றை நீங்கள் படித்துப் பாருங்கள். அவசியம் என்று தோன்றும் கடிதங்களுக்கு அவை கிடைத்ததாகப் பதில் எழுதுங்கள். கவனித்துப் பதில் எழுத வேண்டியவை என்று தோன்றும் கடிதங்களை என்னிடம் காட்டுங்கள்.”

     அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையைக் குறித்து மகிழ்ச்சியடைந்தேன். ஸ்ரீ கோஷால், இவ் வேலையை என்னிடம் கொடுத்த போது என்னை அவருக்குத் தெரியாது. பிறகே என்னைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

     அக்கடிதக் குவியலைப் பைசல் செய்யும் வேலை மிக எளிதானது என்பதைக் கண்டேன். சீக்கிரத்திலேயே அவ் வேலையை முடித்துவிட்டேன். ஸ்ரீ கோஷால் அதிகச் சந்தோஷம் அடைந்தார். அவர் ஓயாது பேசும் சுபாவமுள்ளவர். மணிக்கணக்கில் பேசித் தீர்த்து விடுவார். என்னுடைய வரலாற்றைக் குறித்து என்னைக் கேட்டுக் கொஞ்சம் தெரிந்து கொண்டதும், எனக்குக் குமாஸ்தா வேலை கொடுத்ததற்காக வருத்தப்பட்டார். அதற்கு நான், “இதைப் பற்றித் தயவு செய்து நீங்கள் கவலைப்படவேண்டாம். தங்களுக்கு முன்பு நான் எம்மாத்திரம்? காங்கிரஸ் தொண்டிலேயே வயது முதிர்ந்து நரைத்துப்போனவர்கள் நீங்கள். ஆனால், நானோ, அனுபவமில்லாத இளைஞன். இந்த வேலையை நீங்கள் என்னிடம் கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி செலுத்த நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஏனெனில், நான் காங்கிரஸ் வேலை செய்ய விரும்புகிறேன். நீங்களோ, விவரங்களை அறிந்து கொள்ளுவதற்கான அரியவாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறீர்கள்” என்று அவருக்குக் கூறினேன்.

     “உண்மையைச் சொல்லுவதென்றால், ஒருவருக்கு இருக்க வேண்டிய சரியான மனோபாவம் இதுதான். ஆனால், இக்கால இளைஞர்கள் இதை உணருவதில்லை. காங்கிரஸ் பிறந்ததில் இருந்தே நான் அதை அறிவேன். உண்மையில், காங்கிரஸைத் தோற்றுவித்ததில் ஸ்ரீ ஹியூமுடன் எனக்கும் சிறிதளவு பங்கு உண்டு” என்றார், ஸ்ரீ கோஷால்.

     இவ்வாறு நாங்கள் சிறந்த நண்பர்களானோம். மத்தியானத்தில் தம்முடன் சாப்பிடுமாறு அவர் என்னை வற்புறுத்தி வந்தார்.

     ஸ்ரீ கோஷாலின் சட்டைக்கு அவருடைய வேலைக்காரன் தான் பித்தான் போட்டு விடுவது வழக்கம். அப் பணியாளின் வேலையை நான் செய்ய முன்வந்தேன். பெரியவர்களிடம் எப்பொழுதுமே எனக்கு அதிக மரியாதை உண்டு. ஆகையால் இப்பணியை செய்ய நான் விரும்பினேன். இதை ஸ்ரீ கோஷால் அறிய நேர்ந்தபோது, அவருக்குத் தொண்டாக இது போன்ற சிறு காரியங்களை நான் செய்வதை அவர் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் இதற்காக அவர் மகிழ்ச்சியே அடைந்தார். தம் சட்டைக்குப் பித்தான் போடச் சொல்லி அவர் என்னிடம், “பாருங்கள், காங்கிரஸ் காரிய தரிசிக்குத் தமது சட்டைக்குப் பித்தான் போட்டுக் கொள்ளக் கூட நேரம் இல்லை. அவருக்கு எப்பொழுதும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது” என்பார். அவருடைய கபடமில்லாத பேச்சு எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்ததேயன்றி, அப்படிப் பட்ட சேவைகளில் எனக்கு வெறுப்பை உண்டாக்கிவிடவில்லை. இத்தகைய சேவையினால் நான் அடைந்த நன்மை அளவிட முடியாதது.

     சில தினங்களுக்குள், காங்கிரஸின் நடைமுறையைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு விட்டேன். தலைவர்களில் பெரும்பாலோரைச் சந்தித்தேன். கோகலே, சுரேந்திரநாத் போன்ற பெருந்தலைவர்களை அருகில் இருந்தும் பார்த்தேன். நேரம், அநியாயமாக வீணாக்கப்படுவதையும் கவனித்தேன். நமது காரியங்களில் ஆங்கில மொழி வகித்துவரும் பிரதான ஸ்தானத்தை அன்று கூட வருத்தத்துடன் கவனித்தேன். சக்தியை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்று யாருமே கவலைப்படவில்லை. ஒருவர் செய்யக்கூடிய வேலையைப் பலர் செய்தனர். முக்கியமான பல வேலைகளைக் குறித்து யாருமே சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

     இவ்வாறு என் மனம் குறைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. என்றாலும் பிறர் கஷ்டங்களை உணரும் சுபாவமும் எனக்கு உண்டு. ஆகவே, இருந்த நிலைமையில் இதற்கு மேல் நன்றாகச் செய்திருக்க முடியாது என்று எப்பொழுதும் நான் எண்ணிக் கொள்வேன். எந்த வேலையையும் குறைவாக மதிப்பிட்டுவிடும் துர்க்குணத்திலிருந்து இந்த இயல்பே என்னைக் காத்தது.

 

 

  • 15. காங்கிரஸில்
  • கடைசியாகக் காங்கிரஸ் மகாநாடு நடந்தது. பிரம்மாண்டமான பந்தலும், தொண்டர்கள் கம்பீரமாக அணிவகுத்து நின்றதும், மேடைமீது தலைவர் வீற்றிருந்ததும் என்னைப் பிரமிக்கச் செய்தன. இந்தப் பிரம்மாண்டமான மகாசபையின் முன்பு நான் எம்மாத்திரம் என்று எண்ணி வியப்புற்றேன்.
  •      தலைவரின் பிரசங்கம் ஒரு தனிப் புத்தகமாகவே இருந்தது. அதை ஆரம்பம் முதல் கடைசி வரையில் படிப்பது என்பது முடியாத காரியம். ஆகையால், அதிலிருந்து சில பகுதிகள் மாத்திரமே படிக்கப்பட்டன. அதன் பிறகு விஷயாலோசனைக் கமிட்டித் தேர்தல். கமிட்டிக் கூட்டங்களுக்குக் கோகலே என்னை அழைத்துப் போனார்.

         என் தீர்மானத்தை அனுமதிப்பதாக ஸர் பிரோஸ்ஷா ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் விஷயாலோசனைக் கமிட்டி முன்பு அதை யார், எப்பொழுது கொண்டு வருவார்கள் என்று திகைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், ஒவ்வொரு தீர்மானத்தின் பேரிலும் நீண்ட சொற்பொழிவுகள் நடந்தன. எல்லாம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்தான். ஒவ்வொரு தீர்மானத்தையும் யாராவது ஒரு பிரபலமான தலைவர் ஆதரித்து வந்தார். முக்கியஸ்தர்களின் பேரிகை முழக்கத்தின் நடுவே என் குரல் ஈனக்குரலாக இருந்தது. இரவும் நெருங்கவே என் நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது. கடைசியாக ஆலோசனைக்கு வந்த தீர்மானங்களை, மின்னல் வேகத்தில் முடிவு செய்துகொண்டு போனார்கள் என்றே எனக்கு ஞாபகம். வெளியே போவதற்கு ஒவ்வொருவரும் அவசரப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இரவு 11 மணி. எழுந்து பேச எனக்குத் துணிவு இல்லை. முன்னாலேயே கோகலேயைப் பார்த்தேன். என் தீர்மானத்தை அவர் பார்த்தும் இருக்கிறார். அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகே போய், “தயவு செய்து எனக்கு ஏதாவது செய்யுங்கள்” என்று குசுகுசுவென்று சொன்னேன். “உங்கள் தீர்மானத்தை நான் மறந்துவிடவில்லை. தீர்மானங்களை எவ்வளவு வேகத்தில் அடித்துக்கொண்டு போகிறார்கள் என்பதைப் பாருங்கள். ஆனால், அவர்கள் உங்கள் தீர்மானத்தை விட்டுவிட்டு, அப்பால் போய்விடாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்றார், கோகலே.

         “ஆகவே, எல்லாவற்றையும் முடித்து விட்டோமல்லவா?” என்றார், ஸர் பிரோஸ்ஷா மேத்தா.

         “இல்லை, இல்லை, தென்னாப்பிரிக்கா பற்றிய தீர்மானம் பாக்கியாக இருக்கிறது. ஸ்ரீ காந்தி நீண்ட நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று உரக்கக் கூறினார், கோகலே.

         “நீங்கள் தீர்மானத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார் ஸர் பிரோஸ்ஷா.

         “பார்த்தேன்.”

         “அது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”
  •      “மிக நன்றாகவே இருக்கிறது.”

         “அப்படியானால், அதை எடுத்துக்கொள்ளுவோம். காந்தி, அதைப் படியும்.”

         நான் நடுங்கிக்கொண்டே அதைப் படித்தேன். கோகலே அதை ஆமோதித்தார். “ஏகமனதாக நிறைவேறியது” என்று எல்லோரும் கூவினார்கள்.

         “காந்தி, இத் தீர்மானத்தின்மீது நீர் ஐந்து நிமிட நேரம் பேசலாம்” என்றார், ஸ்ரீ வாச்சா.

         இந்த நடைமுறை எனக்குக் கொஞ்சம் திருப்தியளிக்கவே இல்லை. தீர்மானத்தைப் புரிந்துகொள்ள யாருமே கவலைப்படவில்லை. ஒவ்வொருவரும் போவதற்கு அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இத் தீர்மானத்தைக் கோகலே பார்த்து விட்டார் என்பதனால் மற்றவர்கள் அதைப் பார்க்க வேண்டியதோ, புரிந்துகொள்ள வேண்டியதோ அவசியம் என்று எண்ணவில்லை!

         காங்கிரஸில் நான் செய்யவேண்டிய பிரசங்கத்தைப் பற்றியே காலையில் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஐந்து நிமிடங்களில் நான் எதைச் சொல்லுவது? ஓரளவுக்கு நன்றாகவே நான் தயார் செய்துகொண்டிருந்தேன். ஆனால், சமயத்தில் சொற்கள் தான் எனக்கு வருவதில்லை. என் பிரசங்கத்தை எழுதிப் படிப்பதில்லை; நினைவிலிருந்தே பேசுவது என்று முடிவு செய்து கொண்டிருந்தேன். பேசுவதற்குத் தென்னாப்பிரிக்காவில் நான் பெற்றிருந்த ஆற்றல் அச்சமயம் என்னைவிட்டுப் போய்விட்டதென்றே தோன்றியது.

         என் தீர்மானம் வந்ததும் ஸ்ரீ வாச்சா, என் பெயரைச் சொல்லி அழைத்தார். நான் எழுந்து நின்றேன். எனக்கு தலை சுற்றியது. எப்படியோ தீர்மானத்தைப் படித்துவிட்டேன். வெளிநாடுகளுக்குப் போய்க் குடியேறுவதைப் புகழ்ந்து ஒருவர் கவி பாடி, அதை அச்சிட்டுப் பிரதிநிதிகளுக்கு விநியோகம் செய்திருந்தார். அப்பாட்டை வாசித்துவிட்டுத் தென்னாப்பிரிக்காவில் குடியேறி இருப்பவர்களின் குறைகளைப் பற்றிக் குறிப்பிட்டேன். அந்தச் சமயத்தில் ஸ்ரீ வாச்சா மணியை அடித்தார். நான் ஐந்து நிமிட நேரம் பேசிவிடவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். இன்னும் இரண்டு நிமிடங்களே பாக்கி இருக்கின்றன. அதற்குள் நான் பேச்சை முடித்துவிட வேண்டும் என்று என்னை எச்சரிக்கை செய்வதற்காகவே மணி அடிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. மற்றவர்கள் அரை மணி, முக்கால் மணி நேரம் பேசியும் மணியடிக்கப்பட்டதில்லை என்பதையும் அறிவேன்.
  •      ஆகவே, நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். மணியடித்ததுமே உட்கார்ந்து விட்டேன். ஆனால், ஸர் பிரோஸ்ஷாவுக்குச் சரியான பதில் அப்பாடலில் அடங்கியிருக்கிறது என்று குழந்தை போன்ற என் புத்தி எண்ணியது. தீர்மானம் நிறைவேறிவிட்டது என்பதைக் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. அந்த நாட்களில் காங்கிரஸ் மகாநாட்டிற்கு வேடிக்கை பார்க்க வருவோருக்கும் பிரதிநிதிகளுக்கும் அதிக வித்தியாசம் எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் கையைத் தூக்குவார்கள், எல்லாத் தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேறும். என் தீர்மான விஷயத்திலும் இதே தான் நடந்ததாகையால் அதன் முக்கியத்துவம் போய்விட்டதாகவே நான் கருதினேன். என்றாலும், காங்கிரஸில் அது நிறைவேறியது என்பது மாத்திரமே என் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கப் போதுமானதாக இருந்தது. காங்கிரஸ், முத்திரை வைத்துவிட்ட தென்றால், அதை நாடு முழுவதும் அங்கீகரித்து விட்டது என்று ஆகுமாகையால் எவருக்கும் மகிழ்ச்சியளிக்க அதுவே போதும்.

 

16. லார்டு கர்ஸானின் தர்பார்

 

காங்கிரஸ் மகாநாடு முடிந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவிலிருந்த வேலை சம்பந்தமாக வர்த்தகச் சங்கத்தையும் மற்றும் பலரையும் நான் காண வேண்டியிருந்ததால் கல்கத்தாவில் ஒரு மாத காலம் தங்கினேன்.இத் தடவை ஹோட்டலில் தங்கவில்லை. அதற்குப் பதிலாக, ‘இந்தியா கிளப்’பில் ஓர் அறையில் தங்குவதற்கு வேண்டிய அறிமுகத்தைப் பெற ஏற்பாடு செய்துகொண்டேன். அந்தக் கிளப் உறுப்பினர்களில் சில பிரபலமான இந்தியரும் உண்டு. அவர்களுடன் தொடர்புகொண்டு, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வேலையில் அவர்களுக்குச் சிரத்தையை உண்டாக்க வேண்டும் என்றும் எண்ணினேன். பிலியர்டு விளையாடுவதற்காகக் கோகலே இந்தக் கிளப்புக்கு அடிக்கடி வருவது உண்டு. நான் கல்கத்தாவில் கொஞ்ச காலம் தங்கவேண்டியிருந்தது என்பதை அவர் அறிந்ததும், தம்முடன் வந்து தங்குமாறு அவர் என்னை அழைத்தார். இந்த அழைப்பை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால், நானாக அங்கே போவது சரியல்ல என்று எண்ணினேன். அவர் இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்தார். நான் வராது போகவே அவரே நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றார். கூச்சப்படும் என் சுபாவத்தைக் கண்டுகொண்டதும் அவர் கூறியதாவது: “காந்தி, நீங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டியவர். ஆகவே, இப்படிக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது. எவ்வளவு பேரோடு பழகுவது சாத்தியமோ அவ்வளவு பேரோடும் நீங்கள் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் காங்கிரஸ் வேலை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

 

     கோகலேயுடன் நான் தங்கியதைப்பற்றிக் கூறுமுன்பு இந்தியா கிளப்பில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தச் சமயம் லார்டு கர்ஸான் தமது தர்பாரை நடத்தினார். தர்பாருக்கு அழைக்கப் பெற்றிருந்த ராஜாக்களும் மகாராஜாக்களில் சிலரும் இந்தக் கிளப்பில் அங்கத்தினர்கள். கிளப்பில் இருக்கும்போது அவர்கள், எப்பொழுதும் வங்காளிகள் வழக்கமாக அணியும் உயர்ந்த வேஷ்டி கட்டி, சட்டையும் அங்கவஸ்திரமும் போட்டிருப்பார்கள். ஆனால், தர்பார் தினத்தன்று அவர்கள் வேலைக்காரர்கள் அணிவதைப் போன்ற கால்சட்டைகளைப் போட்டுக்கொண்டு, பளபளப்பான பூட்ஸூகளும் அணிந்து இருந்ததைக் கண்டேன். இதைப்பார்த்து என் மனம் வேதனையடைந்தது. இந்த உடை மாற்றத்திற்குக் காரணம் என்ன என்று அவர்களில் ஒருவரை விசாரித்தேன்.

 

     “எங்களுடைய துர்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம்” என்று அவர் பதில் கூறினார்.

 

     “ஆனால், வேலைக்காரர்கள் அணியக்கூடிய இந்தக் கால் சட்டையும் பளபளப்பான பூட்ஸூகளும் எதற்காக?” என்றேன்.

 

     “எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருப்பதாகக் காண்கிறீர்களா?” என்று அவர் சொல்லிவிட்டு மேலும் கூறியதாவது: “அவர்கள் எங்கள் வேலைக்காரர்கள்; நாங்களோ, லார்டு கர்ஸானின் வேலைக்காரர்கள்; தர்பாருக்கு நான் போகாமல் இருந்துவிட்டால், அதன் விளைவுகளை நான் அனுபவிக்க நேரும். நான் எப்பொழுதும் அணியும் ஆடையுடன் அதற்குப் போனால், அது ஒரு குற்றமாகிவிடும். லார்டு கர்ஸானுடன் பேசும் சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காக நான் அங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமே இல்லை!”

 

     இவ்விதம் மனம் விட்டுப் பேசிய அந்நண்பருக்காகப் பரிதாபப்பட்டேன். இது மற்றொரு தர்பாரை எனக்கு நினைவூட்டுகிறது.

 

     ஹிந்து சர்வகலாசாலைக்கு லார்டு ஹார்டிஞ்சு அஸ்திவாரக் கல் நாட்டியபோது அங்கே ஒரு தர்பார் நடந்தது. ராஜாக்களும் மகாராஜாக்களும் குழுமியிருந்தனர். இந்த விழாவுக்கு வருமாறு பண்டித மாளவியாஜி என்னைப் பிரத்தியேகமாக அழைத்திருந்தார். நானும் போயிருந்தேன்.

 

     மகாராஜாக்கள், பெண்களைப் போல ஆடை அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருப்பதைப் பார்த்து, மனம் வருந்தினேன். அவர்கள் பட்டுக் கால்சட்டை போட்டுக் கொண்டு, பட்டுச் சட்டைகளும் அணிந்திருந்தனர். கழுத்தைச் சுற்றி முத்துமாலை தரித்திருந்ததோடு, கைகளில் கொலுசுகளும் போட்டிருந்தார்கள். அவர்களுடைய தலைப்பாகைகளில் முத்து, வைரப் பதக்கங்கள் இருந்தன. இவ்வளவும் போதாதென்று தங்கப் பிடி போட்ட பட்டாக் கத்திகள், அவர்களுடைய அரைக் கச்சைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன.

 

     இந்த ஆடை, அலங்காரங்களெல்லாம் அவர்களுடைய அடிமைத்தனத்தின் சின்னங்களேயன்றி அவர்களது ராஜ சின்னங்கள் அல்ல என்பதைக் கண்டேன். தங்களுடைய பேடித்தனத்தைக் காட்டும் இப்பட்டையங்களை யெல்லாம் இவர்கள் தங்கள் இஷ்டப்படி விரும்பி அணிந்திருந்தார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், இந்த ராஜாக்கள் தங்களுடைய ஆபரணங்களை யெல்லாம் இத்தகைய வைபவங்களுக்கு அணிந்துகொண்டு வர வேண்டும் என்பது கட்டாயம் என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன். இப்படி நகைகளையெல்லாம் அணிவதைச் சில ராஜாக்கள் மனப்பூர்வமாக வெறுக்கின்றார்கள் என்பதையும், இந்தத் தர்பார் போன்ற சமயங்களில் அல்லாமல் வேறு எப்பொழுதுமே அவைகளை அவர்கள் அணிவதில்லை என்பதையும் அறிந்தேன்.

 

 

     எனக்குக் கிடைத்த இந்த விவரங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மற்றச் சமயங்களிலும் அவைகளை அவர்கள் அணிந்தாலும், அணியாது போயினும், சில பெண்கள் மாத்திரமே அணியக்கூடிய நகைகளை அணிந்து கொண்டுதான் அவர்கள் வைசிராயின் தர்பாருக்குப் போகவேண்டியிருக்கிறது என்பது ஒன்றே மனத்தை நோகச் செய்வதற்குப் போதுமானதாகும்.

 

     செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்!

 

 

17. கோகலேயுடன் ஒரு மாதம் – 1

 

 நான் கோகலேயுடன் வசிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் சொந்த வீட்டில் வசிப்பதுபோல் நான் உணரும்படி அவர் செய்துவிட்டார். தமது சொந்தத் தம்பியைப் போன்றே பாவித்து அவர் என்னை நடத்தினார். என் தேவைகள் யாவை என்பதை எல்லாம் அறிந்து கொண்டார். எனக்கு வேண்டியவை யாவும் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். அதிர்ஷ்டவசமாக எனக்குள்ள தேவைகளோ மிகக் கொஞ்சம். அதோடு எனக்கு வேண்டியதை எல்லாம் நானே செய்துகொள்ளுவது என்ற பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தேன். ஆகையால், வேலைக்காரரின் உதவி எனக்குத் தேவையே இல்லை. என் காரியங்களையெல்லாம் நானே செய்துகொண்டதும், நான் சுத்தமாக இருந்ததும், என்னிடமிருந்த விடாமுயற்சி, ஒழுங்கு முதலிய குணங்களும் அவர் மனத்தைக் கவர்ந்து விட்டன. அவர் அடிக்கடி என்னை மிகவும் புகழ்ந்து பேசுவார்.

     தமது காரியம் எதையும் எனக்குத் தெரியாமல் அவர் ரகசியமாக வைத்திருந்ததாகத் தெரியவில்லை. தம்மைப் பார்க்க வரும் முக்கியமானவர்களிட மெல்லாம் என்னை அறிமுகம் செய்து வைப்பார். இவ்விதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் என் நினைவில் முக்கியமாக நிற்பவர் டாக்டர் (இப்பொழுது ஸர்) பி.ஸி. ராய். கோகலேயின் ஜாகைக்கு வெகு கிட்டத்திலேயே அவர் வசித்து வந்தார் ஆகையால், அடிக்கடி வருவார். “இவர் தான் பேராசிரியர் ராய். இவருக்கு மாதச் சம்பளம் ரூ. 800. அதில் தமக்கென்று ரூ.40 வைத்துக்கொண்டு மீதியைப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார். இவருக்கு விவாகம் ஆகவில்லை. விவாகம் செய்துகொள்ள விரும்பவும் இல்லை” என்று சொல்லி அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

     டாக்டர் ராய், இன்று இருப்பதற்கும் அன்று இருந்ததற்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. அவருடைய ஆடையும் இப்பொழுது இருப்பதுபோலவே அப்பொழுதும் எளிமையானதாக இருந்தது. ஆனால், ஒரு வித்தியாசம் உண்டு. அந்த நாளில் இந்திய மில் துணி ஆடை அணிந்துவந்தார். இப்பொழுது கதர் உடுத்துகிறார். கோகலேயும் டாக்டர் ராயும் பேசிக் கொண்டிருப்பதை எவ்வளவு நேரம் கேட்டாலும் எனக்கு அலுப்புத் தட்டுவதே இல்லை. ஏனெனில், அப் பேச்சு பொதுநன்மையைப் பற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால் அறிவை ஊட்டுவதாக இருக்கும். சில சமயங்களில் இப் பேச்சு, பொது ஜனத் தலைவர்களின் நடத்தையைக் கண்டிப்பதாகவும் இருக்கும். அப்பொழுது அதைக் கேட்பது, மனத்திற்கு வேதனையைத் தரும். இதன் பயனாக, முக்கியமான வீரர்களாக எனக்குத் தோன்றி வந்தவர்களில் சிலர், மிகவும் சின்ன மனிதர்களாகத் தோன்ற ஆரம்பித்தனர்.

     கோகலே, வேலை செய்வதைப் பார்ப்பது இன்பம் தருவதாக மாத்திரமின்றி, ஒரு போதனையாகவும் இருக்கும். ஒரு நிமிட நேரத்தைக்கூட அவர் வீணாக்குவதில்லை. அவருடைய தனிப்பட்ட உறவுகள், நட்புகள் எல்லாமே பொது நன்மையை உத்தேசித்துத் தான் இருக்கும். அவர் பேசுவதெல்லாம் நாட்டின் நன்மையைக் குறித்தே. அதில் உண்மையல்லாததையோ, கபடமானதையோ ஒரு சிறிதேனும் காணமுடியாது. அவருக்கிருந்த பெரிய கவலையெல்லாம், இந்தியாவின் வறுமையும் அடிமைத்தனமும் எப்படி ஒழியும் என்பதே ஆகும். வேறு பல விஷயங்களிலும் அவருக்குச் சிரத்தை உண்டாகும்படி செய்யப் பலர் முயல்வார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின் வருமாறு ஒரே பதிலேயே அவர் கூறுவார்: “அக் காரியத்தை நீங்களே செய்யுங்கள். என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்பதே. இதில் வெற்றி பெற்று விடுவோமானல் மற்றவைகளைப்பற்றி நான் சிந்திக்கலாம். இன்று என் முழு நேரத்தையும் பக்தியையும் ஈடுபடுத்துவதற்கு இந்த ஒன்றே போதுமானது.”

     ரானடேயிடம் அவர் கொண்டிருந்த அபார பக்தியை ஒவ்வொரு நிமிடமும் காணலாம். ஒவ்வொரு விஷயத்திலும் ரானடேயின் கருத்துத்தான் இவருக்கு வேத வாக்காக இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் ரானடேயின் கருத்தை எடுத்துக் காட்டுவார். நான் கோகலேயுடன் தங்கியிருந்தபோது, ரானடேயின் சிரார்த்த தினம் (அல்லது பிறந்த தினமா என்பது எனக்கு நினைவு இல்லை) வந்தது. கோகலே, இத்தினத்தைத் தவறாமல் அனுசரித்து வந்தார். அப்பொழுது அவருடன் என்னைத் தவிர அவருடைய நண்பர்களான பேராசிரியர் கதாவடே, ஒரு சப்ஜட்ஜ் ஆகியவர்களும் இருந்தனர். இத் தின வைபவத்தில் கலந்து கொள்ள எங்களைக் கோகலே அழைத்தார். அப்பொழுது அவர் பேசியபோது, ரானடேயைப் பற்றிய தமது நினைவுகளை எங்களுக்கு எடுத்துக் கூறினார். அச்சமயம் ரானடே, திலாங், மண்டலிக் ஆகியவர்களை ஒப்பிட்டுச் சொன்னார். திலாங்கின் அழகிய எழுத்து நடையைப் பாராட்டினார். சீர்திருத்தவாதி என்ற வகையில் மண்டலிக்கின் பெருமையைச் சொன்னார். இவர், தமது கட்சிக்காரர்களின் விஷயத்தில் எவ்வளவு சிரத்தை காட்டி வந்தார் என்பதற்கு ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டார். அவர், வழக்கமாகப் போக வேண்டிய ரெயில் ஒரு நாள் தவறிவிட்டதாம். தமது கட்சிக்காரரின் நன்மையை முன்னிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் தாம் கோர்ட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தனி ரெயிலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு போய்ச் சேர்ந்தாராம். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட ரானடே தலைசிறந்தவர் என்றும், எல்லாவற்றிலும் சிறந்த மேதாவி என்றும் கோகலே சொன்னார். அவர் சிறந்த நீதிபதி என்பது மாத்திரம் அல்ல, அதேபோல் சிறந்த சரித்திராசிரியரும் பொருளாதார நிபுணரும், சீர்திருத்த காரருமாவார் என்றார். அவர் நீதிபதியாக இருந்தும், கொஞ்சமும் பயப்படாமல் காங்கிரஸ் மகாநாட்டிற்குச் சென்றார். அவருடைய அறிவாற்றலில் எல்லோருக்கும் நம்பிக்கை உண்டாகையால் அவர் கூறும் முடிவுகளை, எல்லோரும் எந்தவித ஆட்சேபமும் கூறாமல் ஏற்றுக்கொண்டு விடுவார்களாம். தமது குருவின் உள்ளத்திலும் அறிவிலும் இருந்த இந்த அபூர்வ குணாதிசயங்களை விவரித்துக் கூறும்போது கோகலேக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

     அந்த நாளில் கோகலே ஒரு குதிரை வண்டி வைத்திருந்தார். குதிரை வண்டி அவருக்கு என்ன காரணத்தினால் அவசியமாயிற்று என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, இதைக்குறித்து அவரிடம் வாதாடினேன். “தாங்கள் டிராம் வண்டியில் போய் வரக்கூடாதா? அப்படிப் போய் வந்தால், தலைவர் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமா?” என்றேன்.

     இக்கேள்வி அவருக்குக் கொஞ்சம் மனவருத்தத்தையே உண்டாக்கிவிட்டது. அவர் கூறியதாவது: “அப்படியானால் நீங்களும் என்னை அறிந்துகொள்ளத் தவறிவிட்டீர்கள்! கவுன்ஸில் அங்கத்தினர் என்பதற்காக எனக்குக் கிடைக்கும் படிப்பணத்தை நான் சொந்தச் சௌகரியத்திற்காக உபயோகித்துக் கொள்ளுவதில்லை. டிராம் வண்டிகளில் போய் வருவதில் உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன். அப்படி நானும் போய் வர முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன். என்னைப் போல் நீங்களும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வகையில் விளம்பரத்தைப் பெற்றுவிடும் துர்பாக்கியத்தை அடைந்துவிடும் போது, டிராம் வண்டிகளில் நீங்கள் போய் வருவது அசாத்தியம் என்று ஆகாவிட்டாலும் கஷ்டமானதாகவே இருக்கும். தலைவர்கள் செய்வதெல்லாம் தங்கள் சொந்தச் சௌகரியத்திற்காகவே என்று ஊகித்துக்கொண்டு விடுவதற்கு எவ்விதமான காரணமும் இல்லை. உங்களுடைய எளிய பழக்கங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. என்னால் இயன்ற வரை எளிய வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஆனால், என்னைப்போன்ற ஒருவருக்குச் சில செலவுகள் தவிர்க்க முடியாதவை.”

     என்னுடைய புகார்களில் ஒன்றுக்கு இவ்வாறு அவர் திருப்தியளிக்கும் வகையில் பதில் சொல்லிவிட்டார். ஆனால், மற்றொரு புகாருக்கோ எனக்குத் திருப்தி உண்டாகும் வகையில் அவரால் பதில் சொல்லிவிட முடியவில்லை.

     “நீங்கள் உலாவுவதற்குக் கூடப் போவதில்லை! நீங்கள் எப்பொழுதும் நோயுற்றே இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? பொதுவேலையில் ஈடுபடுவதனால் தேகாப்பியாசத்திற்கு நேரமே இல்லாது போக வேண்டுமா?” என்றேன்.

     “உலாவப் போவதற்கு எனக்கு எங்காவது நேரம் இருப்பதைப் பார்க்கிறீர்களா?” என்று பதிலளித்தார். கோகலே.

     கோகலேயிடம் எனக்கு அபாரமான மதிப்பு இருந்தது. ஆகையால், அவரை எதிர்த்துப்பேச எனக்குத் துணிவு வருவதில்லை. மேற்கண்ட பதில் எனக்குத் திருப்தியளிக்கவில்லையெனினும் மௌனமாக இருந்துவிட்டேன். ஒருவருக்கு என்னதான் அதிகமான வேலை இருந்தாலும் சரி, அவர் சாப்பிடுவதற்கு எப்படி நேரம் வைத்துக் கொள்ளுகிறாரோ அதே போலத் தேகாப்பியாசம் செய்வதற்கும் அவகாசம் தேடிக்கொள்ள வேண்டும் என்று அப்பொழுது கருதினேன். இன்றும் அவ்வாறே கருதுகிறேன். அப்படிச் செய்வது, ஒருவனுடைய வேலை செய்யும் சக்தியைக் குறைத்து விடுவதற்குப் பதிலாக அதிகப்படுத்தவே செய்கிறது என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

 

 

18. கோகலேயுடன் ஒரு மாதம் – 2

 

நான் கோகலேயுடன் தங்கியிருந்தபோது எப்பொழுதும் வீட்டிலேயே இருந்துவிடாமல் வெளியிலும் சுற்றிக் கொண்டிருந்தேன். இந்தியாவில் இந்தியக் கிறிஸ்தவர்களைச் சந்தித்து. அவர்களுடைய நிலைமையையும் தெரிந்து கொள்ளுவேன் என்று தென்னாப்பிரிக்கக் கிறிஸ்தவ நண்பர்களிடம் சொல்லி இருந்தேன். பாபு காளிசரண் பானர்ஜியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அவரிடம் எனக்குப் பெரு மதிப்பும் இருந்தது. காங்கிரஸின் நடவடிக்கைகளில் அவர் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார். சாதாரணமாக இந்தியக் கிறிஸ்தவர்கள், காங்கிரஸில் சேராமல் ஒதுங்கி இருந்து விடுகிறார்கள்; ஹிந்துக்கள், முஸ்லிம்களுடன் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து விடுகின்றனர் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், பாபுகாளிசரண் பானர்ஜி விஷயத்தில் அத்தகைய சந்தேகம் எதுவும் எனக்கு இல்லை. அவரைச் சந்திக்க எண்ணியிருக்கிறேன் என்று கோகலேயிடம் சொன்னேன். “நீங்கள் அவரைப் பார்ப்பதால் என்ன பயன்? அவர் மிகவும் நல்லவர். ஆனால், உங்களுக்குத் திருப்தி அளிக்கமாட்டார் என்றே அஞ்சுகிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். என்றாலும், நீங்கள் விரும்பினால் அவரைப் பார்த்து விட்டு வாருங்கள்” என்றார்.

     அவரைப் பார்க்க விரும்புவதாக அனுமதி கோரி எழுதினேன். அவரும் உடனே பதில் அனுப்பினார். நான் அவரைப் பார்க்கச் சென்ற அன்று அவருடைய மனைவி மரணத் தறுவாயில் இருந்தார் என்பதை அறிந்தேன். காங்கிரஸில் அவரை நான் பார்த்தபோது கால்சட்டையும் கோட்டும் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இப்பொழுதோ ஒரு வங்காளி வேட்டி கட்டிக்கொண்டு சட்டை போட்டிருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தேன். அச்சமயம் நான் கால்சட்டையும் பார்ஸிக்கோட்டும் அணிந்திருந்த போதிலும் அவருடைய எளிய உடை எனக்குப் பிடித்திருந்தது. அனாவசியப் பேச்சு எதுவும் வைத்துக்கொள்ளாமல் எனக்கு இருந்த சந்தேகங்களை நேரடியாக அவருக்குக் கூறினேன். “மனிதன் ஆரம்பத்தில் பாவம் செய்தே கேடுற்றான் என்ற தத்துவத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?” என்று அவர் என்னைக் கேட்டார். “ஆம். நம்பிக்கை உண்டு” என்றேன்.

     “அப்படியானால் சரி. ஹிந்து மதம் அதற்கு விமோசனம் அளிப்பதில்லை. கிறிஸ்தவ மதம் அளிக்கிறது” என்று அவர் சொல்லிவிட்டு, மேலும் கூறியதாவது: “பாவத்தின் ஊதியம் மரணமேயாகும். ஏசுவினிடம் அடைக்கலம் புகுவது ஒன்றே அதனின்றும் விடுதலை பெறுவதற்குள்ள ஒரே மார்க்கம் என்று பைபிள் கூறுகிறது.”

     பகவத் கீதை கூறும் பக்தி மார்க்கத்தைக் குறித்து நான் சொன்னேன். ஆனால், அது பயன்படவில்லை. அவர் என்னிடம் காட்டிய அன்பிற்கு நன்றி கூறிவிட்டு, விடை பெற்றுக்கொண்டேன். எனக்குத் திருப்தியளிக்க அவர் தவறி விட்டார். ஆனால், இச் சந்திப்பினால் நான் பயன் அடைந்தேன்.

     இந்த நாட்களில் நான் கல்கத்தாத் தெருக்களில் இங்கும் அங்குமாகத் திரிந்துகொண்டிருந்தேன். அநேக இடங்களுக்கு நடந்தே போய்வருவேன். எனது தென்னாப்பிரிக்காவின் வேலைக்கு நீதிபதி மித்தர், ஸர் குருதாஸ் பானர்ஜி ஆகியவர்களின் உதவி எனக்கு வேண்டியிருந்தது. அவர்களைப் போய்ப் பார்த்தேன். அதே சமயத்தில் ஸர் பியாரி மோகன் முக்கர்ஜியையும் சந்தித்தேன்.

     காளி கோயிலைப்பற்றிக் காளி சரண் பானர்ஜி என்னிடம் கூறினார். முக்கியமாக, புத்தகங்களிலும் அதைக் குறித்து நான் படித்திருந்தால் அதைப் பார்க்க ஆவலுடன் இருந்தேன். ஆகவே, ஒரு நாள் அங்கே போனேன். அதே பகுதியில்தான் நீதிபதி மித்தரின் வீடும் இருந்தது. எனவே, நான் அவரைப் போய்ப் பார்த்த அன்றே காளி கோயிலுக்கும் போனேன். காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஆடுகள், மந்தை மந்தையாகப் போய்க்கொண்டிருந்ததை வழியில் பார்த்தேன். கோயிலுக்குப் போகும் சந்தின் இரு பக்கங்களிலும் வரிசையாகப் பிச்சைக்காரர்கள் இருந்தனர். அவர்களில் சில சாதுக்களும் இருந்தனர். உடல் வலுவுடன் இருக்கும் யாசகர்களுக்குப் பிச்சை போடுவதில்லை என்ற கொள்கையில் நான் அந்த நாளிலேயே உறுதியுடன் இருந்தேன். அவர்களில் ஒரு கூட்டம் என்னை விரட்டிக்கொண்டு வந்தது. சாதுக்களில் ஒருவர் ஒரு தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னை நிறுத்தி, “தம்பி, நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார். நான் கோயிலுக்குப் போகிறேன் என்றதும், என்னையும் என்னுடன் வந்தவரையும் உட்காரும்படி சொன்னார். அப்படியே உட்கார்ந்தோம்.

     “இந்த உயிர்ப்பலியை மதம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டேன்.

     “மிருகங்களைக் கொல்லுவதை மதம் என்று யாராவது கருதுவார்களா?” என்றார், அவர்.

     “அப்படியானால், அதை எதிர்த்து நீங்கள் ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது?”

     “அது என் வேலை அல்ல. கடவுளை வழிபடுவதே நமது வேலை.”

     “கடவுளை வழிபடுவதற்கு உங்களுக்கு வேறுஇடம் கிடைக்கவில்லையா?”

     “எங்களுக்கு எல்லா இடமும் நல்ல இடந்தான். மக்கள், ஆடுகளைப் போலத் தலைவர்கள் இட்டுச் செல்லும் இடங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். சாதுக்களாகிய எங்கள் வேலை அதுவன்று.”

     இந்த விவாதத்தை நாங்கள் வளர்த்துக் கொண்டிருக்கவில்லை. கோயிலுக்குப் போனோம். ரத்த ஆறுகள் எங்களை எதிர் கொண்டு அழைத்தன. அங்கே நிற்கவே என்னால் முடியவில்லை. நான் ஆத்திரமடைந்தேன்; அமைதியையும் இழந்துவிட்டேன். அந்தக் காட்சியை என்றும் நான் மறக்கவே இல்லை.

     அன்று மாலையே சில வங்காளி நண்பர்கள் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே ஒரு நண்பரிடம், இந்தக் கொடூரமான வழிபாட்டு முறையைக் குறித்துச் சொன்னேன். அதற்கு அவர் கூறியதாவது: “ஆடுகளுக்குத் துன்பமே தெரியாது. பேரிகை முழக்கமும் மற்ற சப்தங்களும் அவைகளுக்கு துன்ப உணர்ச்சியே இல்லாதபடி செய்து விடுகின்றன.”

     இதை ஒப்புக்கொண்டுவிட என்னால் முடியவில்லை. “ஆடுகளுக்கு வாயிருந்தால் அவை வேறு கதையைச் சொல்லும்” என்றேன். அக்கொடூரமான பழக்கம் நின்றாக வேண்டும் என்றும் எண்ணினேன். புத்தரின் கதையை நினைத்தேன். ஆனால், இவ்வேலை என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதையும் கண்டேன்.

     அன்று எனக்கு இருந்த அபிப்பிராயமே இன்றும் இருக்கிறது. மனிதனுடைய உயிரைவிட ஓர் ஆட்டுக் குட்டியின் உயிர் எந்த வகையிலும் குறைவானதாக எனக்குத் தோன்றவில்லை. மனித உடலுக்கு ஓர் ஆட்டின் உயிரைப் போக்குவதற்கு நான் உடன்படக்கூடாது. ஒரு பிராணி எவ்வளவுக்கெவ்வளவு ஆதரவற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது, மனிதனின் கொடுமையிலிருந்து காக்கப்படுவதற்கு உரிமைப் பெற்றிருக்கிறது என்று கருதுகிறேன். அத்தகைய சேவையைச் செய்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளாதவர், அதற்கு எவ்விதப் பாதுகாப்பையும் அளித்துவிட முடியாது. ‘அக்கிரமமாக பலியிடப் படுவதிலிருந்து இந்த ஆடுகளைக் காப்பாற்றிவிடலாம்’ என்று நான் நம்புவதற்கு முன்னால் நான் அதிக சுயத் தூய்மையையும் தியாக உணர்ச்சியையும் அடைந்தாக வேண்டும். ‘இந்தத் தூய்மையையும் தியாகத்தையும் அடையப் பாடுபடுவதில் நான் உயிர் துறக்க வேண்டும்’ என்று இன்று எண்ணுகிறேன். இத்தகைய கோரமான பாவத்திலிருந்து நம்மை விடுவித்து, கோயிலையும் புனிதப்படுத்துவதற்கு தெய்வீகக் கருணையுடன் கூடிய ஒரு பெரிய ஆத்மா, ஆணாகவோ பெண்ணாகவோ, இப்புவியில் பிறக்க வேண்டும் என்பதே என்னுடைய இடை விடாத பிரார்த்தனை. எவ்வளவோ அறிவும், தியாகமும், உணர்ச்சி வேகமும் கொண்ட வங்காளம், இப்படுகொலைகளை எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறது?

 

  • 19. கோகலேயுடன் ஒரு மாதம் – 3

 

மதத்தின் பெயரால் காளிக்கு அளிக்கப்பட்ட கொடூரமான பலி, வங்காளிகளின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது. பிரம்ம சமாஜத்தைக் குறித்து அதிகமாகப் படித்திருக்கிறேன்; நிறையக் கேள்விப் பட்டும் இருக்கிறேன். பிரதாப் சந்திர மஜு ம்தாரின் வாழ்க்கையைப் பற்றியும் சிறிது அறிவேன் அவர் பேசிய சில கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன். கேசவசந்திரசேனரின் வரலாற்றைக் குறித்து, அவர் எழுதிய நூலை வாங்கி அதிகச் சிரத்தையுடன் படித்தேன். சாதாரணப் பிரம்ம சமாஜத்திற்கும் ஆதி பிரம்ம சமாஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டேன். பண்டித சிவநாத சாஸ்திரியைச் சந்தித்தேன். பேராசிரியர் கதாவடேயுடன் மகரிஷி தேவேந்திரநாத டாகுரையும் பார்க்கப் போனேன். அச் சமயம் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப் படாததனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. ஆனால், அவர் இருப்பிடத்தில் நடந்த பிரம்ம சமாஜ விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தோம். அங்கே இனிய வங்காளி சங்கீதத்தைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுமுதல் நான் வங்காளி சங்கீதப் பிரியனானேன்.

     பிரம்ம சமாஜத்தைக் குறித்து வேண்டிய அளவு தெரிந்து கொண்டேன். ஆனால், சுவாமி விவேகானந்தரைப் பார்க்காமல் என்னால் திருப்தியடைய முடியவில்லை. ஆகவே, அதிக உற்சாகத்தோடு பேளூர் மடத்திற்குப் போனேன். அநேகமாக, முழுத்தூரமும் நடந்தே அங்கே சென்றதாக ஞாபகம். மடம் அமைந்திருந்த ஏகாந்தமான இடம், என் மனதைக் கவர்ந்து இன்பம் ஊட்டியது. சுவாமி, தமது கல்கத்தா வீட்டில் இருக்கிறார்; நோயுற்றிருப்பதால் அவரைக் காண்பதற்கில்லை என்று சொல்லக் கேட்டு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன்.

     பிறகு சகோதரி நிவேதிதா இருக்கும் இடத்தை விசாரித்து தெரிந்துகொண்டு, சௌரிங்கி மாளிகையில் அவரைச் சந்தித்தேன். அவரைச் சுற்றி இருந்த ஆடம்பரங்கள் என்னைத் திடுக்கிடச் செய்தன. அவரிடம் பேசியப் பிறகு, நாங்கள் இருவரும் அநேக விஷயங்களில் ஒத்துப் போவதற்கு இல்லை என்பதைக் கண்டேன். இதைக் குறித்து கோகலேயிடம் பேசினேன். அவரைப் போன்ற உணர்ச்சி வேகமுள்ள ஒருவருக்கும் எனக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கருத்து ஒற்றுமை ஏற்பட முடியாது போனதில் ஆச்சரியமில்லை என்று கோகலே கூறினார்.

     ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் வீட்டில் மீண்டும் நிவேதிதாவைச் சந்தித்தேன். பேஸ்தன்ஜியின் வயதான தாயாருடன் சகோதரி நிவேதிதா பேசிக்கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே போக நேர்ந்தது. ஆகவே, அவ்விருவருக்கும் மொழி பெயர்த்துக் கூறுபவனானேன். அவருடன் எந்த ஒருமைப்பாட்டுக்கும் என்னால் வரமுடியவில்லை என்றாலும், ஹிந்து தருமத்தினிடம் அவருக்கு இருந்த அளவுகடந்த அன்பைக் கண்டு வியக்காமல் இருக்க என்னால் முடியவில்லை. அவர் எழுதிய நூல்களைக் குறித்து பின்னால் தான் அறிந்தேன்.

     தென்னாப்பிரிக்காவிலிருக்கும் வேலை சம்பந்தமாக கல்கத்தாவில் இருக்கும் முக்கியமானவர்களை சந்தித்துப் பேசுவதிலும் நகரில் இருக்கும் மத சம்பந்தமான பொது ஸ்தாபனங்களுக்குச் சென்று, அவற்றை அறிந்து கொள்வதிலும் ஒவ்வொரு நாளும் என் நேரத்தைச் செலவிட்டு வந்தேன். டாக்டர். மல்லிக்கின் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், போயர் யுத்தத்தில் இந்திய வைத்தியப் படையினர் செய்த வேலைகளைக் குறித்துப் பேசினேன். ‘இங்கிலீஸ்மன்’ பத்திரிக்கையுடன் எனக்கு ஏற்பட்டிருந்த அறிமுகம் இச் சமயத்தில் எனக்கு உதவியாக இருந்தது. அப்பொழுது அதன் ஆசிரியர் ஸ்ரீசாண்டர்ஸ் நோயுற்றிருந்தார். என்றாலும், 1890-ல் உதவி செய்ததைப் போன்றே அதிக உதவியைச் செய்தார். என் பிரசங்கம் ஸ்ரீ கோகலேக்கு அதிகமாகப் பிடித்திருந்தது. டாக்டர். ராய், அதைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு, அதிக மகிழ்ச்சியடைந்தார்.

     கோகலேயுடன் நான் தங்கியிருந்ததனால் இவ்வாறு கல்கத்தாவில் என் வேலைகள் மிகவும் எளிதாயின. முக்கியமான வங்காளிக் குடும்பங்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. வங்காளத்துடன் நான் நெருங்கிய தொடர்பு கொள்ளுவதற்கு இது ஆரம்பமாகவும் அமைந்தது.

     மறக்க முடியாத அந்த மாதத்தைப் பற்றிய மற்றும் பல நினைவுகளைக் கூறாமல் தாண்டிச் செல்ல வேண்டியவனாகவே நான் இருக்கிறேன். இதற்கிடையில் பர்மாவுக்குப் போய் விட்டுச் சீக்கிரமே திரும்பியதைக் குறித்தும் அங்கிருக்கும் பொங்கிகளைப் பற்றியும் மாத்திரம் கொஞ்சம் குறிப்பிட்டு விட்டு, மேலே செல்லுகிறேன். பொங்கிகள் என்னும் அந்தச் சந்நியாசிகளின் சோம்பல் வாழ்க்கையைக் கண்டு என் மனம் வேதனைப்பட்டது. அங்கே தங்கக் கோபுரத்தையும் பார்த்தேன். கோயிலில் எண்ணற்ற சிறு மெழுகுவத்திகள் கொழுத்தி வைக்கப்பட்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கர்ப்பக் கிரகத்தில் எலிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. இது, மோர்வியில் சுவாமி தயானந்தருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எனக்கு நினைவூட்டியது. பர்மியப் பெண்களின் சுயேச்சையும் சுறுசுறுப்பும் என்னைக் கவர்ந்தன. ஆனால், பர்மிய ஆண்களின் மந்தப் போக்கோ எனக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. நான் பர்மாவிலிருந்த சில தினங்களுக்குள்ளேயே ஒன்று தெரிந்து கொண்டேன். அதாவது, ‘பம்பாய் எவ்விதம் இந்தியா ஆகிவிடாதோ அதே போல் ரங்கூன் பர்மா ஆகிவிடாது’ என்பதை அறிந்தேன். இந்தியாவிலிருக்கும் நாம் எவ்விதம் பிரிட்டிஷ் வர்த்தகர்களின் தரகர்களாக இருக்கிறோமோஅதேபோல் பர்மாவிலும் நம்மவர்கள், ஆங்கில வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டு, பர்மிய மக்களைத் தமது தரகர்களாக்கி யிருக்கிறார்கள் என்பதையும் கண்டுகொண்டேன்.

     பர்மாவிலிருந்து நான் திரும்பி வந்ததும் கோகலேயிடம் விடை பெற்றுக்கொண்டேன். அவரிடமிருந்து பிரிவது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், வங்காளத்தில் முக்கியமாகக் கல்கத்தாவில் எனக்கு இருந்த வேலைகள் முடிந்து விட்டன. இனியும் அங்கே நான் தங்குவதற்கு எவ்வித முகாந்தரமும் இல்லை.

     ஓரிடத்தில் நிலையாகத் தங்கிவிடுவதற்கு முன்னால், இந்தியா முழுவதையும், மூன்றாம் வகுப்பு ரெயிலில் பிரயாணம் செய்து பார்த்து, மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் கஷ்டங்களை நானே அறிந்துகொள்ளுவது என்று எண்ணினேன். இதைப்பற்றிக் கோகலேயிடம் பேசினேன். ஆரம்பத்தில் என் யோசனையை அவர் பரிகசித்தார். நான் காண விரும்புவது இன்னதென்பதை அவருக்கு விளக்கிக் கூறியதும் அவரும் உற்சாகமாக என் யோசனையை அங்கீகரித்தார். ஸ்ரீமதி அன்னி பெஸன்ட் நோயுற்று, அப்பொழுது காசியில் இருந்து வந்தார். அவருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துவதற்கு முதலில் காசிக்குப் போவது என்று திட்டமிட்டேன்.

     மூன்றாம் வகுப்பு வண்டிப் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் புதிதாகச் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. கோகலே எனக்கு ஒரு பித்தளைச் சாப்பாட்டுப் பாத்திரத்தைக் கொடுத்தார். அதில் மிட்டாய்களையும் பூரியையும் நிறைய வைத்தார். பன்னிரெண்டு அணாக் கொடுத்து, ஒரு கித்தான் பை வாங்கினேன். சாயக் கம்பளியினாலான மேற் சட்டை ஒன்றையும் வாங்கி கொண்டேன். இந்த சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஓர் உள்சட்டை ஆகியவைகளை வைத்துக் கொள்ள அந்த கித்தான் பை. போர்த்துக்கொள்ள ஒரு துப்பட்டியும், தண்ணீர் வைத்துக் கொள்ளுவதற்குச் செம்பும் என்னிடம் இருந்தன. இவ்விதமான ஏற்பாடுகளுடன் நான் பிரயாணத்திற்குத் தயாரானேன். என்னை வழியனுப்புவதற்காகக் கோகலேயும் டாக்டர் ராயும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். ஸ்டேஷனுக்கு வரும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றே அவர்கள் இருவரையும் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. ‘நீங்கள் முதல் வகுப்பில் சென்றால் நான் வந்திருக்க மாட்டேன். இப்பொழுதோ நான் கட்டாயம் வர வேண்டும்’ என்றார், கோகலே.

     கோகலே, பிளாட்பாரத்திற்குள் வந்தபோது அவரை யாரும் தடுக்கவில்லை. அவர் வேட்டி கட்டிக்கொண்டு, பட்டுத் தலைபாகையும் குட்டைச் சட்டையும் போட்டிருந்தார். டாக்டர் ராய், வங்காளி உடையில் வந்தார். அவரை டிக்கெட் பரிசோதகர் நிறுத்தி விட்டார். அவர் தமது நண்பர் என்று கோகலே சொன்ன பிறகே அவரை அனுமதித்தார். இவ்விதம் அவர்களுடைய நல்லாசியுடன் என் பிரயாணம் ஆரம்பமாயிற்று.

 

  • 20. காசியில்

 

கல்கத்தாவிலிருந்து ராஜ்கோட்டுக்கு என் பிரயாணம்; வழியில் காசி, ஆக்ரா, ஜெய்ப்பூர், பாலன்பூர் ஆகிய ஊர்களில் தங்குவது என்று திட்டமிட்டேன். இவைகளைத் தவிர அதிக ஊர்களைப் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஒவ்வோர் ஊரிலும் ஒரு நாள் தங்கினேன். பாலன்பூர் தவிர மற்ற ஊர்களில் சாதாரண யாத்திரிகர்களைப் போல் தரும சத்திரங்களிலோ, பண்டாக்கள் வீடுகளிலோ இருந்தேன். இந்த யாத்திரையில் ரெயில் கட்டணம் உள்பட ரூ.31-க்கு அதிகமாக நான் செலவு செய்யவில்லை என்பதே எனக்கு ஞாபகம்.

 

     ரெயிலில் சாதாரண வண்டிகளை விட மெயில் வண்டிகளில் கூட்டம் அதிகம்; கட்டணமும் அதிகம் என்பதை அறிவேன். அதனால், மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் மெயில் ரெயில்களை விடச் சாதாரண ரெயிலிலேயே நான் பிரயாணம் செய்தேன்.

 

     மூன்றாம் வகுப்பு வண்டிகள் இப்பொழுது எவ்வளவு அசுத்தமாக இருக்கின்றனவோ அவ்வளவு அசுத்தமாகவே அப்பொழுதும் இருந்தன. கக்கூசுகளும் இப்போதிருப்பதைப் போலவே அப்பொழுதும் அசுத்தமாக இருந்தன. இப்பொழுது ஏதோ கொஞ்சம் அபிவிருத்தி இருக்கக்கூடும். ஆனால், முதல் வகுப்புப் பிரயாணிக்கு அளிக்கப்படும் வசதிக்கும், மூன்றாம் வகுப்புப் பிரயாணிக்கு அளிக்கப்படும் வசதிக்கும் உள்ள வித்தியாசம், இவ்விரு வகுப்புகளின் கட்டணங்களுக்கும் உள்ள வித்தியாசத்திற்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாததாக இருக்கிறது. மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் ஆடுகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்குள்ள வசதிகளும் ஆடுகளுக்கு இருக்கும் வசதிகள்தான். ஐரோப்பாவில், நான் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்து வந்தேன். முதல் வகுப்புப் பிரயாணம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஒரே ஒரு தடவை மாத்திரம் முதல் வகுப்பில் பிரயாணம் செய்தேன். ஆனால், முதல் வகுப்புக்கும் மூன்றாம் வகுப்புக்கும் இங்கே இருப்பதைப் போன்ற பேதத்தை நான் அங்கே காணவில்லை. தென்னாப்பிரிக்காவில் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் அநேகமாக நீக்ரோக்களே. ஆயினும், இங்கே இருப்பதை விட அங்கே மூன்றாம் வகுப்பு வசதிகள் நன்றாக இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் சிலபகுதிகளில் மூன்றாம் வகுப்பு வண்டிகளில், பிரயாணிகள் தூங்குவதற்குரிய இட வசதியும், மெத்தை தைத்த ஆசனங்களும் உண்டு. கூட்டம் அதிகமாகி, இடநெருக்கடி ஏற்பட்டுவிடாத படியும் பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கேயோ, மூன்றாம் வகுப்பு வண்டிகளில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாகப் பிரயாணம் செய்வதே வழக்கமாக இருந்து வருகிறது.

 

     மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் சௌகரியங்களைக் கவனிப்பதில் ரெயில்வே அதிகாரிகளுக்கு இருந்து வரும் அசிரத்தை ஒரு புறம். மற்றொரு புறத்தில், பிரயாணிகளின் ஆபாசமான, யோசனையில்லாத பழக்கங்கள். இந்த இரண்டும் சேர்ந்து, சுத்தமான பழக்க வழக்கமுள்ள ஒருவருக்கு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதை ஒரு சோதனையாக்கி விடுகின்றன. கூடஇருக்கும் பிரயாணிகளின் சௌகரியம், சுகம் ஆகியவைகளைக் குறித்துக் கொஞ்சமேனும் கவனிக்காமல், வண்டிக்குள்ளேயே கண்டபடி எல்லாம் குப்பையைப் போடுவது, நினைத்த போதெல்லாம் நினைத்த இடத்திலெல்லாம் சுருட்டுப் பிடிப்பது, வெற்றிலை பாக்குப் புகையிலை போட்டு வண்டி முழுவதையும் எச்சில் படிகமாக்கிவிடுவது, கூச்சல் போட்டுப் பேசுவது, கத்துவது, ஆபாசமாகப் பேசுவது போன்றவை பிரயாணிகளிடம் பொதுவாக இருக்கும் பழக்கங்களாகும். 1902-இல் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தேன். 1915 முதல் 1919 வரையில் இடைவிடாமல் மூன்றாம் வகுப்பில் சுற்றுப்பிரயாணம் செய்தேன். இந்த இரு தடவைகளிலும், மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் எந்த விதமான வித்தியாசத்தையும் நான் காணவில்லை.

 

     பயங்கரமான இந்த நிலைமையைச் சீர்திருத்துவதற்கு எனக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றுகிறது. படித்தவர்கள், மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்வது என்று முடிவு செய்துகொண்டு, மக்களின் பழக்கங்களைச் சீர்திருத்துவதே அந்த வழி. அதோடு ரெயில்வே அதிகாரிகளை நிம்மதியாக இருக்க விடக்கூடாது. அவசியமாகும் போதெல்லாம் புகார்களை அனுப்ப வேண்டும். தங்களுக்கு வசதியைத் தேடிக் கொள்ளுவதற்காக லஞ்சம் கொடுப்பது போன்ற சட்ட விரோதமான காரியங்களை இந்தப் படித்தவர்கள் செய்யாது இருக்க வேண்டும். விதிகளை யார் மீறி நடந்தாலும் அதைச் சகித்துக் கொண்டு இருந்துவிடக்கூடாது. இவற்றை எல்லாம் செய்தால், அதிக அபிவிருத்தி ஏற்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

 

     1918-19-இல் நான் கடுமையான நோய்வாய்ப்பட்டதால், எனது மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தைத் துரதிருஷ்ட வசமாகக் கைவிடும்படி நேர்ந்தது. இது எனக்கு இடைவிடாத மன வேதனையாகவும் வெட்கமாகவும் ஆகிவிட்டது. ஏனெனில், முக்கியமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் கஷ்டங்களைப் போக்கியாக வேண்டும் என்ற கிளர்ச்சி வலுவடைய ஆரம்பித்த சமயத்தில் இவ்வாறு நேர்ந்தது. ஏழைகளான ரெயில்வே, கப்பல் பிரயாணிகளின் கஷ்டங்கள், அக் கஷ்டங்களை அப்பிரயாணிகளின் பழக்கங்கள் அதிகமாக்குவது, வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அரசாங்கம் அனுமதித்து வரும் அக்கிரமமான வசதிகள் இவை போன்றவை முக்கியமான விஷயங்களாகும். விடாமுயற்சியும் திறமையும் உள்ள இரண்டொரு பொது ஜன ஊழியர்கள் தங்கள் முழு நேரத்தையும் செலவிட்டு, வேலை செய்வதற்கு இவை ஏற்ற துறைகளாகும்.

 

     ஆனால், மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை இதோடு விட்டு விட்டுக் காசியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு இனி வருகிறேன். காலையில் அங்கே போய்ச் சேர்ந்தேன். ஒரு பண்டாவின் வீட்டில் தங்குவது என்று தீர்மானித்தேன். ரெயிலிலிருந்து இறங்கியதுமே, அநேக பிராமணர்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டனர். அவர்களுள் கொஞ்சம் சுத்தமாகவும், மற்றவர்களைவிடச் சுமாராகவும் தோன்றிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அவர் வீட்டுக்குச் சென்றேன். நான் சரியாகவே தேர்ந்தெடுத்திருந்தேன் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவருடைய வீட்டு முற்றத்தில் ஒரு பசு கட்டியிருந்தது. நான் தங்குவதற்குக் கொடுத்திருந்த இடம் மாடியில். கங்கைக்குப் போய் வைதிக முறைப்படிஸ்நானம் முதலிய அனுஷ்டானங்களை யெல்லாம் முடித்துக் கொள்ளாமல் சாப்பிட நான் விரும்பவில்லை. இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்டா செய்தார். அவருக்கு ஒரு ரூபாய் நான்கணாவுக்கு மேல் எக்காரணத்தை முன்னிட்டும் தட்சிணை கொடுக்கமாட்டேன் என்பதை முன்கூட்டியே அவரிடம் சொல்லிவிட்டேன். ஆகையால், இதை மனத்தில் வைத்துக் கொண்டே ஏற்பாடுகளைச் செய்யும்படியும் சொன்னேன்.

 

     பண்டா மறுவார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டார். “யாத்திரிகர் ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் எங்கள் சேவை ஒரேமாதிரிதான். ஆனால், எங்களுக்குக் கிடைக்கும் தட்சிணை, யாத்திரிகரின் இஷ்டத்தையும் சக்தியையும் பொறுத்தது” என்றார். வழக்கப்படி செய்யவேண்டியவைகளைப் பண்டா என் விஷயத்தில் சுருக்கிவிட்டதாகவும் நான் காணவில்லை. பன்னிரண்டு மணிக்குப் பூஜை முடிந்தது. நான் சுவாமி தரிசனத்திற்காகக் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போனேன். அங்கே நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன. 1891-இல் நான் பம்பாயில் பாரிஸ்டராக இருந்த சமயம், பிரார்த்தனை சமாஜ மண்டபத்தில் ‘காசிக்கு யாத்திரை’ என்பது பற்றி நடந்த ஒரு பிரசங்கத்தைக் கேட்க நேர்ந்தது. ஆகையால், ஒரளவு ஏமாற்றத்திற்கு நான் தயாராகவே இருந்தேன். ஆனால், உண்மையில் நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது.

 

     குறுகலான, வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போக வேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. தியானத்திற்கும் தெய்வசிந்தனைக்கும் ஏற்ற சூழ்நிலை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கத்தக்க அந்த இடத்தில் அது இல்லவே இல்லை. அந்தச் சூழ்நிலையை ஒருவர் தம் உள்ளத்தினுள்ளே தான் தேடிக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி, மெய்ம் மறந்தவர்களாகச் சகோதரிகள் தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தேன். இதற்காகக் கோயில் நிர்வாகிகளை யாரும் பாராட்டி விடுவதற்கில்லை. கோயிலைச் சுற்றிலும் சுத்தமான, இனிய, சீரிய சூழ்நிலையை உள்ளும் புறமும் உண்டாக்கி, அது நிலைத்திருக்கச் செய்வது, நிர்வாகிகளின் பொறுப்பு. இதற்குப் பதிலாகக் கபடஸ்தர்களான கடைக்காரர்கள், மிட்டாய்களையும், புது நாகரிக விளையாட்டுப் பொம்மைகளையும் விற்கும் கடைத் தெருவையே நான் அங்கே கண்டேன்.

 

     நான் கோயிலுக்குள் போனதும் வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. உயர்ந்த சலவைக் கற்களாலான தரை. ஆனால், அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன.

 

     ஞான வாவி (ஞானக் கிணறு)க்குப் பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால், நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாயில்லை. ஞான வாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சிணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்து விட்டார். “இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்!” என்று கூறி என்னைச் சபித்தார்.

 

     இதைக் கேட்டு நான் பரபரப்படைந்து விடவில்லை. “மகராஜ்! என் விதி எப்படியானாலும் சரி. ஆனால், இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்” என்றேன்.

 

     “போய்த் தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம்” என்றார். தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்.

 

     தரையில் தம்படியை எடுத்துக்கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். பிராமணர் ஒரு தம்படியை இழந்தார், எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன். ஆனால், மகராஜ், அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். “அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப் போ. உன்னைப்போலவே நானும் இருந்துவிட முடியாது. உன் தம்படியை வாங்கிக்கொள்ள நான் மறுத்துவிட்டால் அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும்” என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒருமுறை பெருமூச்சு விட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்.

 

     அதற்குப் பிறகு இரு முறை காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போயிருக்கிறேன். ஆனால், அது ‘மகாத்மா’ பட்டம் என்னைப் பீடித்த பிறகு. ஆகவே, நான் மேலே கூறியிருப்பதைப் போன்ற அனுபவங்கள் அப்பொழுது ஏற்படுவது அசாத்தியமாயின. என்னைத் தரிசிப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கும் மக்கள், கோயிலில் சுவாமியை நான் தரிசிப்பதற்கு என்னை அனுமதிக்க மாட்டார்கள். ‘மகாத்மா’க்களின் துயரங்கள் ‘மகாத்மா’க்களுக்கு மாத்திரமே தெரியும். மற்றபடி அழுக்கும் சப்தமும் முன்பு இருந்தது போலவே இருந்தன.

 

     கடவுளின் எல்லையற்ற கருணையில் யாருக்காவது சந்தேகம் இருக்குமாயின், அவர்கள் இப் புண்ணிய ஷேத்திரங்களுக்குப் போய்ப் பார்ப்பார்களாக. மகா யோகியான கடவுள், தம் தெய்வீகப் பெயரைக் கொண்டே செய்யப்படும் எவ்வளவு வஞ்சகங்களையும் அதர்மங்களையும் சகித்துக்கொண்டிருக்கிறார்! “யே யதாமாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம் யஹம்” (மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான்) என்று ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை அனுபவிக்காமல் யாரும் தப்பிவிடவே முடியாது. ஆகையால், இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியமே இல்லை. அவர் இச் சட்டத்தை இயற்றிவிட்டு விலகிக்கொண்டார் என்றே சொல்லலாம்.

 

 

     கோயிலுக்குப் போய் வந்த பின்னர் ஸ்ரீ மதி பெஸன்டைப் பார்க்கப் போனேன். அவர் நோயுற்றிருந்து அப்பொழுதுதான் குணமடைந்தார் என்பதை அறிவேன். என் பெயரை எழுதி உள்ளே அனுப்பினேன். அவர் உடனே வந்தார். அவருக்கு என் வணக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று மாத்திரமே நான் விரும்பினேன். ஆகையால், “தங்களுக்கு உடல் நலமில்லை என்பதை அறிவேன். என் வணக்கத்தைத் தங்களுக்குச் செலுத்திக் கொள்ள மாத்திரமே விரும்பினேன். தங்களுக்குச் சரீர சுகம் இல்லாதிருந்தும் என்னைப் பார்க்க அன்புடன் தாங்கள் இசைந்ததற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குமேல் தங்களுக்குத் தொந்தரவு கொடுக்க நான் விரும்பவில்லை” என்று கூறி அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன்.

 

 

  • 21. பம்பாயில் குடியேறினேன்?

 

நான் பம்பாயில் குடியேறி, வக்கீல் தொழிலை நடத்திக் கொண்டு பொதுவேலையில் தமக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கோகலே அதிக ஆவலுடன் இருந்தார். அந்த நாளில் பொது வேலை என்றால் காங்கிரஸ் வேலையே. கோகலேயின் உதவியினால் ஆரம்பமான ஸ்தாபனத்தின் முக்கியமான வேலையும், காங்கிரஸின் நிர்வாகத்தை நடத்திக் கொண்டு போவதுதான்.

 

     கோகலேயின் யோசனை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், பாரிஸ்டராக இருந்து வெற்றி பெற முடியும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. முன்னால் நான் இதில் கண்ட தோல்வியின் வருந்தத்தக்க நினைவுகள் இன்னும் எனக்கு இருந்து வந்தன. கட்சிக்காரர்களைப் பெறுவதற்காக முகஸ்துதி செய்வதை விஷம் போல நான் இன்னும் வெறுத்து வந்தேன்.

 

     ஆகையால், முதலில் ராஜ்கோட்டில் தொழிலை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன். முன்னாலிருந்தே என் நலனை விரும்புகிறவரும், நான் இங்கிலாந்துக்குப் போக வேண்டும் என்று தூண்டியவருமான கேவல்ராம் மாவிஜி தவே அங்கே இருந்தார். அவர் உடனேயே ஆரம்பமாக மூன்று வக்காலத்துக்களைக் கொடுத்தார். அவைகளில் இரண்டு, கத்தியவார் ராஜீய ஏஜெண்டின் நிதி உதவியாளர் முன்பு செய்யப்பட்டிருந்த அப்பீல்கள். மற்றொன்று, ஜாம் நகரில் அசல் வழக்கு. கடைசியாகச் சொன்ன இந்த வழக்கே மிகவும் முக்கியமானது. இந்த வழக்கைத் திறம்பட நான் நடத்த முடியும் என்று எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று சொன்னேன். உடனே கேவல்ராம் தவே, “வெற்றி பெறுவது, தோல்வியடைவது என்பதைப்பற்றி உமக்குக் கவலை வேண்டியதில்லை. உம்மால் முடிந்த வரையில் முயன்று பாரும். உமக்கு உதவி செய்வதற்கு நான் இருக்கவே இருக்கிறேன்” என்றார்.

 

     எதிர்த்தரப்பு வக்கீல் காலஞ்சென்ற ஸ்ரீ சமர்த். ஓரளவுக்கு நான் நன்றாகவே அவ்வழக்கு சம்பந்தமாகத் தயார் செய்து வைத்திருந்தேன். இந்தியச் சட்டம் எனக்கு அதிகம் தெரியும் என்பதல்ல; ஆனால், கேவல்ராம் தவே அவ்வழக்குச் சம்பந்தமாக எனக்கு முழுவதும் சொல்லிக் கொடுத்திருந்தார். ‘ஸர் பிரோஸ்ஷா மேத்தாவுக்குச் சாட்சியைப் பற்றிய சட்டம் முழுவதும் தலைகீழ்ப் பாடமாகத் தெரியும்; அவருடைய வெற்றியின் ரகசியமே அதுதான்’ என்று நான் தென்னாப்பிரிக்காவுக்குப் போவதற்கு முன்னால் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை மனத்திலேயே வைத்தும் இருந்தேன். எனவே, என் கப்பல் பிரயாணத்தின் போது இந்திய சாட்சியச் சட்டத்தை, அதைப் பற்றிய விளக்கங்களுடன் சேர்த்துக் கவனமாகப் படித்திருந்தேன். அதோடு, தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலில் எனக்கு ஏற்பட்ட அனுபவமும் சாதகமாக இருந்தது.

 

     இவ்வழக்கில் வெற்றி பெற்றேன். கொஞ்சம் நம்பிக்கையும் உண்டாயிற்று. அப்பீல்களைக் குறித்து எனக்குப் பயமே இல்லை. அவற்றிலும் வெற்றி பெற்றேன். பம்பாயில் தொழில் நடத்தினாலும் நான் தோல்வியடைய மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கையை இவையெல்லாம் எனக்கு உண்டாக்கின.

 

     பம்பாய்க்குப் போய்விடுவது என்று நான் தீர்மானித்ததைக் குறித்த சந்தர்ப்பங்களைப் பற்றிச் சொல்லும் முன்பு, பிறர் கஷ்டத்தை உணராத ஆங்கில அதிகாரிகளின் போக்கைக் குறித்தும், அவர்களுடைய அறியாமையைப் பற்றியும் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூற விரும்புகிறேன். நீதி உதவியாளரின் கோர்ட்டு ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய்க்கொண்டே இருக்கும். அந்த நீதிபதி சதா சுற்றுப் பிரயாணம் செய்துகொண்டே இருப்பார். வக்கீல்களும் கட்சிக் காரர்களும் அவர் முகாம் போகும் இடத்திற்கெல்லாம் போய்க் கொண்டிருக்க வேண்டியிருக்கும். தலைமை ஸ்தானத்தை விட்டு வெளியூர் போக வேண்டும் என்றால் வக்கீல்கள் அதிகக் கட்டணம் கேட்பார்கள். இதனால், கட்சிக்காரர்களுக்குச் சகஜமாகவே செலவு இரட்டிப்பு ஆகும். இவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைப் பற்றி நீதிபதிக்குக் கவலையே இல்லை. நான் மேலே சொன்ன அப்பீல் விசாரணை வேராவலில் போடப் பட்டிருந்தது. அவ்வூரிலோ பிளேக் நோய் கடுமையாகப் பரவியிருந்தது. 5,500 பேரையே கொண்ட அவ்வூரில் தினமும் 50 பேருக்கு அந்நோய் கண்டுகொண்டிருந்தது என்பதாக எனக்கு ஞாபகம். உண்மையில், அந்த ஊரில் யாருமே இல்லை எனலாம். அவ்வூரிலிருந்து கொஞ்ச தூரத்திலிருந்த ஆளில்லாத தரும சத்திரத்தில் நான் தங்கினேன். ஆனால், கட்சிக்காரர்கள் எங்கே தங்குவது? அவர்கள் ஏழைகளாக இருந்துவிட்டால், கடவுளின் கருணையில் நம்பிக்கை வைத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு கதி இல்லை.

 

     இதே கோர்ட்டில் என் நண்பர் ஒருவருக்கும் வழக்குகள் இருந்தன. வேராவலில் பிளேக் நோய் பரவி இருப்பதால் கோர்ட்டை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரி மனுச் செய்து கொள்ளும்படி அவர் எனக்குத் தந்தி கொடுத்திருந்தார். இந்த மனுவை நான் கொடுத்ததன் பேரில் துரை, “உங்களுக்குப் பயமாக இருக்கிறதா?” என்று கேட்டார்.

 

     “எனக்குப் பயமாயிருக்கிறதா, இல்லையா என்பது விஷயமல்ல. நான் எப்படியாவது வெளியில் இருந்துவிட முடியும். ஆனால், கட்சிக்காரர்களின் நிலைமை என்ன?” என்று பதில் சொன்னேன்.

 

     இதற்குத் துரை கூறியதாவது: “பிளேக் இந்தியாவில் நிரந்தரமானதாகிவிட்டது. அப்படியிருக்கப் பயப்படுவானேன்? வேராவலின் சீதோஷ்ண நிலை மிகவும் நன்றாக இருக்கிறது. (துரை டவுனுக்கு வெகு தொலைவில் கடற்கரையில் அமைக்கப் பட்டிருந்த அரண்மனை போன்ற ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தார்.) இவ்வாறு திறந்த வெளியில் வசிப்பதற்கு மக்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும்.”

 

     இப்படிப்பட்ட வேதாந்தத்திற்கு எதிராக விவாதித்துப் பயனில்லை. கடைசியாக, துரை தமது சிரஸ்தேதாரிடம், “காந்தி கூறுவதைக் கவனித்துக் கொள்ளும். வக்கீல்களுக்கோ, கட்சிக் காரர்களுக்கோ அதிக அசௌகரியமாக இருக்கிறதென்றால் எனக்கு அறிவியும்” என்றார்.

 

     சரியானது என்று தாம் நினைத்ததைத் துரை யோக்கியமாகச் செய்தார். ஆனால், ஏழை இந்தியரின் கஷ்டங்களைக் குறித்து அவருக்கு எப்படித் தெரியமுடியும்? மக்களின் தேவைகள், குணாதிசயங்கள், பைத்தியக்காரத்தனங்கள், பழக்கங்கள் ஆகியவைகளை அவர் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? தங்க நாணயங்களைக் கொண்டே பொருள்களை மதிப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று சின்னச் செப்புக்காசுகளைக் கொண்டு எப்படிக் கணக்கிடுவார்? யானைக்கு எறும்பினிடம் நல்லெண்ணமே இருக்கலாம். ஆனால், எறும்பின் தேவையையும் சௌகரியத்தையும் கொண்டு சிந்திக்கும் சக்தி எவ்வாறு யானைக்கு இல்லையோ அதேபோல இந்தியருக்குச் சௌகரியமான வகையில் சிந்திக்கவோ, சட்டம் செய்யவே ஆங்கிலேயருக்குச் சக்தியில்லை. இனித் திரும்பவும் கதைக்கு வருவோம். வக்கீல் தொழிலில் நான் வெற்றிபெற்ற போதிலும், இன்னும் கொஞ்ச காலம் ராஜ் கோட்டில் இருப்பது என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள் கேவல்ராம் தவே என்னிடம் வந்தார். “காந்தி, நீங்கள் இங்கே அதிக வேலையில்லாதிருப்பதை நாங்கள் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் பம்பாய்க்குக் குடிபோய்விட வேண்டும்” என்றார்.

 

     “ஆனால் அங்கே எனக்கு யார் வேலை தேடிக்கொடுப்பார்கள்? என் செலவுக்கு வேண்டிய ஏற்பாடுகளை நீங்கள் செய்வீர்களா?” என்று கேட்டேன்.

 

     இதற்கு அவர் கூறியதாவது: “சரி, நான் செய்கிறேன். பம்பாயிலிருந்து பெரிய பாரிஸ்டர் வருகிறார் என்று சில சமயங்களில் உம்மை இங்கே கொண்டு வருவோம். மனுத் தயாரிப்பது போன்ற வேலையை அங்கேயே அனுப்புகிறோம். ஒரு பாரிஸ்டரைப் பெரியவராக்குவதோ, ஒன்றுமில்லாதபடி செய்து விடுவதோ வக்கீல்களாகிய எங்கள் கையில் இருக்கிறது. உமது திறமையை ஜாம்நகரிலும் வேராவரிலும் நிரூபித்துக் காட்டிவிட்டீர். ஆகையால், உம்மைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையே இல்லை. நீர் பொதுஜன சேவைக்கென்றே பிறந்திருப்பவர். நீர் கத்தியவாரில் புதைந்து கிடந்துவிட நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எனவே, எப்பொழுது பம்பாய் போகிறீர்? சொல்லும்.”

 

 

     “நேட்டாலிலிருந்து பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது வந்ததும் நான் போகிறேன்” என்றேன்.

 

     இரண்டு வாரங்களில் பணம் வந்துவிட்டது. நானும் பம்பாய் சென்றேன். பேய்னே, கில்பர்ட், சயானி ஆபீஸ் கட்டடத்தில் என் அலுவலகத்தை அமைத்துக்கொண்டேன். அங்கேயே நான் ஸ்திரமாகக் குடியேறி விட்டதாகவே தோன்றியது.

 

 

  • 22. கொள்கைக்கு நேர்ந்த சோதனை

 

கோட்டையில் அலுவலகத்திற்கு அறைகளையும், கீர்காமில் வீட்டையும் அமர்த்திக்கொண்டேன். ஆயினும் அமைதியாக நிலை பெற்றிருக்க ஆண்டவன் என்னை விடவில்லை. புதிய வீட்டுக்குக் குடிபோனவுடனேயே என்னுடைய இரண்டாவது மகன் மணிலாலுக்குக் கடுமையான அஸ்தி சுரம் (டைபாய்டு) கண்டுவிட்டது. அத்துடன் கபவாத சுரமும் (நிமோனியா) கலந்துகொண்டது. இரவில் ஜன்னி வேகத்தினால் பிதற்றல் போன்ற அறிகுறிகளும் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னால் இவன் வைசூரியால் கடுமையாகப் பீடிக்கப் பட்டவன்.

 

     டாக்டரை அழைத்து வந்தேன். மருந்தினால் அதிகப் பயன் ஏற்படாது என்றும், முட்டையும், கோழிக்குஞ்சு சூப்பும் கொடுப்பது நல்லது என்றும் அவர் கூறினார். மணிலாலுக்கு வயது பத்துதான். ஆகையால், அவனுடைய விருப்பத்தைக் கேட்டு எதுவும் செய்வது என்பதற்கில்லை. அவனுக்கு நானே போஷகனாகையால், நான்தான் முடிவுக்கு வரவேண்டும். டாக்டர் பார்ஸி வகுப்பைச் சேர்ந்தவர், மிகவும் நல்லவர். நாங்கள் சைவ உணவே சாப்பிடுகிறவர்கள் என்றும், ஆகவே அவர் கூறிய அந்த இரண்டில் என் மகனுக்கு எதுவும் கொடுப்பதற்கில்லை என்றும் சொன்னேன். எனவே, கொடுக்கக்கூடியதான வேறு எதையாவது அவர் கூறுகிறாரா என்று கேட்டேன்.

 

     இதற்கு அந்த டாக்டர் கூறியதாவது: “உங்கள் மகனின் உயிர் அபாய நிலையில் இருக்கிறது. பாலில் நீரைக் கலந்து அவனுக்குக் கொடுக்கலாம். ஆனால், அது அவனுக்கு வேண்டிய போஷணையைத் தராது. எத்தனையோ ஹிந்துக் குடும்பங்களில் என்னை கூப்பிடுகிறார்கள். நோயாளிக்குக் கொடுக்கும்படி நான் கூறுவது எதையும் அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. உங்கள் மகன் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு கடுஞ் சித்தத்தோடு இல்லாமல் இருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைக்கிறேன்.”

 

     இதற்கு நான் பின்வருமாறு கூறினேன்: “நீங்கள் கூறுவது முற்றிலும் சரியானதே. டாக்டர் என்ற வகையில் நீங்கள் வேறு எதுவும் செய்வதற்கில்லை. ஆனால், என் பொறுப்பு மிகவும் அதிகமானது. பையன் வயது வந்தவனாக இருந்தால், அவனுடைய விருப்பத்தை அறிய நான் நிச்சயம் முயன்று அதன்படி நடந்திருப்பேன். ஆனால், இப்பொழுதோ அவனுக்காக நானே சிந்தித்து முடிவு செய்ய வேண்டியவனாக இருக்கிறேன். இதுபோன்ற சமயங்களிலேயே ஒருவருடைய நம்பிக்கை சோதனைக்கு உள்ளாகிறது என்று கருதுகிறேன். சரியோ, தவறோ, மனிதன் மாமிசம், முட்டை போன்றவைகளைத் தின்னக்கூடாது என்பதை என்னுடைய மதக் கொள்கைகளில் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறேன். நாம் உயிர் வாழ்வதற்கென்று மேற்கொள்ளும் சாதனங்களுக்கும் ஓர் எல்லை இருக்கவேண்டும். உயிர் வைத்திருப்பதற்கு அவசியம் என்றாலும் சில காரியங்களை நாம் செய்யக்கூடாது. இத்தகைய சமயங்களில் கூட, நானோ அல்லது என்னைச் சேர்ந்தவர்களோ மாமிசம், முட்டை போன்றவைகளை உபயோகிப்பதை என் மதம், நான் அறிந்து கொண்டிருக்கிற வரையில், அனுமதிக்கவில்லை. ஆகையால், ஏற்பட்டுவிடக் கூடும் என்று நீங்கள் கூறும் ஆபத்துக்கும் நான் தயாராக இருக்க வேண்டியதுதான். ஆனால், உங்களை ஒன்று வேண்டிக் கொள்கிறேன். உங்களுடைய சிகிச்சையை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாததனால், எனக்குத் தெரிந்திருக்கும் நீர்ச் சிகிச்சை முறைகளைக் கையாண்டு பார்க்கப் போகிறேன். ஆனால், சிறுவனின் நாடித்துடிப்பு, இருதயம், நுரையீரல் ஆகியவைகளைச் சோதித்துப் பார்த்து நிலையை அறிந்துகொள்ள எனக்குத் தெரியாது. தாங்கள் அவ்வப்போது வந்து அவனைச் சோதித்துப் பார்த்து இருக்கும் நிலையை எனக்கு அறிவிப்பீர்களாயின் நான் நன்றியுள்ளவனாவேன்.”

 

     நல்லவரான அந்த டாக்டர் எனக்கிருந்த கஷ்டங்களை உணர்ந்து கொண்டார். என் கோரிக்கைக்கும் சம்மதித்தார். இதில் ஒரு முடிவுக்கு வருவதற்கான வயது மணிலாலுக்கு இல்லையாயினும், நானும் டாக்டரும் பேசிக்கொண்டிருந்ததை அவனுக்குக்கூறி அவன் அபிப்பிராயத்தையும் கேட்டேன். உங்களுடைய நீர்ச் சிகிச்சையையே செய்யுங்கள். எனக்கு முட்டையோ, கோழிக்குஞ்சு சூப்போ வேண்டாம்” என்றான்.

 

     இந்த இரண்டில் அவனுக்கு நான் எதைக் கொடுத்திருந்தாலும் அவன் சாப்பிட்டிருப்பான் என்பது எனக்குத் தெரியும். என்றாலும், அவன் சொன்னது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

 

     கூனே என்பவரின் சிகிச்சை முறை எனக்குத் தெரியும். நான் அதைச் செய்தும் பார்த்திருக்கிறேன். பட்டினி போடுவதையும் பயனுள்ள வகையில் உபயோகித்துக் கொள்ளலாம் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, கூனேயின் முறைப்படி மணிலாலுக்கு ஆசனக்குளிப்புச் (Hip Baths) செய்வித்தேன். தொட்டியில் அவனை மூன்று நிமிடங்களுக்கு மேல் வைத்திருப்பதில்லை. அத்துடன் ஆரஞ்சுப் பழ ரசத்துடன் தண்ணீர் கலந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தேன்.

 

     ஆனால், சுரம் குறையவில்லை; 104டிகிரிக்கும் ஏறியது. இரவில் ஜன்னி வேகத்தில் பிதற்றிக்கொண்டிருந்தான். எனக்கு ஒரே கவலையாகிவிட்டது. என்னை ஊரார் என்ன சொல்லுவார்கள்? என்னைப்பற்றி என் தமையனார்தான் என்ன நினைத்துக் கொள்ளுவார்? வேறு ஒரு டாக்டரையாவது கூப்பிடக் கூடாதா? ஆயுர்வேத வைத்தியரை ஏன் கொண்டு வரக்கூடாது? தங்களுடைய கொள்கைப் பித்துக்களையெல்லாம் குழந்தைகள்மீது சுமத்தப் பெற்றோருக்கு என்ன உரிமை இருக்கிறது?

 

     இது போன்ற எண்ணங்களெல்லாம் ஓயாமல் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன. பிறகு இதற்கு நேர்மாறான எண்ணங்களும் தோன்றும். எனக்கு என்னவிதமான சிகிச்சையை நான் செய்து கொள்ளுவேனோ அதையே என் மகனுக்கும் செய்வது குறித்துக் கடவுள் நிச்சயம் திருப்தியடைவார். நீர்ச் சிகிச்சையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. மாற்று மருந்து கொடுக்கும் வைத்திய முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. குணமாகிவிடும் என்று டாக்டர்களாலும் உத்திரவாதம் அளிக்க முடியாது. அவர்களால் முடிகிற காரியம் பரிசோதனை செய்து பார்ப்பதுதான். உயிர் இருப்பதும் போவதும் கடவுள் சித்தத்தைப் பொறுத்தது. அதை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் பெயரால் எனக்குச் சரியென்று தோன்றும் சிகிச்சை முறையை ஏன் அனுசரிக்கக் கூடாது?

 

     இவ்விதம் இருவகையான எண்ணங்களுக்கிடையே என் மனம் அல்லல் பட்டுக்கொண்டிருந்தது. அப்பொழுது இரவு வேளை. மணிலாலின் படுக்கையில் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். ஈரத்துணியை அவன் உடம்பில் சுற்றி வைப்பது என்று தீர்மானித்தேன். எழுந்து ஒரு துப்பட்டியை நனைத்துப் பிழிந்தேன். அதை, அவன் முகத்தை மாத்திரம் விட்டுவிட்டு உடம்பெல்லாம் சுற்றினேன். பிறகு மேலே இரண்டு கம்பளிகளைப் போட்டுப் போர்த்துவிட்டேன். தலைக்கும் ஒரு ஈரத்துணியைப் போட்டேன். பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல அவன் உடம்பெல்லாம் கொதித்தது. ஒரே வறட்சியாகவும் இருந்தது. கொஞ்சங்கூட வியர்வையே இல்லை.

 

     நான் மிகவும் களைத்துப் போனேன். மணிலாலைப் பார்த்துக் கொள்ளுமாறு அவன் தாயாரிடம் விட்டுவிட்டு வெளியே கொஞ்சம் உலாவி வரலாம் என்று சௌபாத்தி கடற்கரைக்குப் போனேன். அப்பொழுது இரவு பத்து மணி இருக்கும். அங்கே இரண்டொருவரே நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை நான் பார்க்கக்கூட இல்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினேன். “ஆண்டவனே, இச் சமயத்தில், என் மானத்தைக் காப்பது உன் பொறுப்பு” என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். என் உதடுகள் ராம நாமத்தை உச்சரித்தவண்ணம் இருந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பினேன். இருதயம் பட படவென்று அடித்துக்கொண்டிருந்தது.

 

     மணிலால் படுத்திருந்த அறைக்குள் நான் நுழைந்ததுமே அவன், “வந்துவிட்டீர்களா, பாபு?” என்றான்.

 

     “ஆம், கண்ணே” என்றேன்.

 

     “என் உடம்பெல்லாம் எரிகிறது. தயவுசெய்து என்னை வெளியே எடுத்துவிடுங்கள்.”

 

     “உனக்கு வேர்க்கிறதா, குழந்தாய்?”

 

     “வேர்வையில் ஊறிப் போய்க் கிடக்கிறேன். என்னை வெளியே எடுத்துவிடுங்கள்.”

 

     நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். முத்து முத்தாக வேர்த்திருந்தது. சுரமும் குறைந்துகொண்டு வந்தது. கடவுளுக்கு நன்றி செலுத்தினேன்.

 

     “மணிலால், உன் சுரம் நிச்சயமாகக் குறைந்துவிடும். இன்னும் கொஞ்சம் வேர்க்கட்டும். பிறகு உன்னை வெளியே எடுத்துவிடுகிறேன்” என்று கூறினேன்.

 

     “வேண்டாம், அப்பா. இந்த உலையிலிருந்து என்னை இப்பொழுதே எடுத்துவிடுங்கள். வேண்டுமானால், அப்புறம் எனக்குச் சுற்றிவிடுங்கள்” என்றான்.

 

     வேறு பேச்சுக்கொடுத்துக்கொண்டே மேலும் சில நிமிடங்கள் அப்படியே போர்த்தியவாறு அவனை வைத்திருந்தேன். வேர்வை அவன் தலையிலிருந்து அருவியாக வழிந்தது. அவனுக்குச் சுற்றியிருந்த துணிகளையெல்லாம் எடுத்துவிட்டு, உடம்பு உலரும்படி செய்தேன். ஒரே படுக்கையில் தகப்பனும் மகனும் தூங்கிப் போனோம்.

 

 

     இருவரும் மரக்கட்டைபோலவே தூங்கினோம். மறுநாள் காலையில் மணிலாலுக்குச் சுரம் குறைந்திருந்தது. இவ்விதம் நாற்பது நாட்கள் நீர் கலந்த பாலும் ஆரஞ்சு ரசமுமே சாப்பிட்டு வந்தான். இப்பொழுது அவனுக்குச் சுரம் இல்லை. அது மிகவும் பிடிவாதமான வகையைச் சேர்ந்த சுரம். ஆயினும், அது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

 

     என் புதல்வர்களில் மணிலாலே இன்று நல்ல தேக சுகம் உள்ளவனாக இருக்கிறான். அவன் பிழைத்தது கடவுள் அருளினாலா? அல்லது நீர்ச் சிகிச்சையாலா? இல்லாவிட்டால் ஆகாரத்தில் எச்சரிக்கையுடன் இருந்தாலும் நல்ல பணிவிடையாலுமா? இதில் எது என்று யாரால் சொல்ல முடியும்? அவரவர்கள் தத்தம் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் முடிவு செய்து கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரையில் என் மானத்தைக் கடவுளே காப்பாற்றினார் என்றுதான் நான் நிச்சயமாக எண்ணுகிறேன். அந்த நம்பிக்கை இன்றளவும் எனக்கு மாறாமல் இருந்து வருகிறது.

 

 

  • 23. மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு

 

  மணிலாலுக்கு உடம்பு குணமாகிவிட்டது. ஆனால், கீர்காமில் குடியிருந்த வீடு, வசிப்பதற்கு ஏற்றது அல்ல என்பதைக் கண்டேன். அது ஈரம் படிந்த வீடு; நல்ல வெளிச்சமும் இல்லை. எனவே, ஸ்ரீ ரேவாசங்கர் ஜகஜ் ஜீவனுடன் கலந்து ஆலோசித்து, பம்பாய்க்குச் சுற்றுப் புறத்தில் காற்றோட்டமான ஒரு பங்களாவை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். பாந்தராவிலும் சாந்தா குருஸிலும் தேடி அலைந்தேன். பாந்தராவில் மிருகங்களைக் கசாப்புக்கடைக்காகக் கொல்லுமிடம் இருந்ததால் அந்த இடம் வேண்டாம் என்று முடிவு செய்தோம். கட்கோபரும் அதை அடுத்த இடங்களும் கடலுக்கு வெகு தொலைவில் இருந்தன. கடைசியாகச் சாந்தா குருஸில் ஓர் அழகான பங்களா கிடைத்தது. சுகாதாரத்தைப் பொறுத்த வரையில் அதுவே மிகச் சிறந்தது என்று அதை வாடகைக்கு அமர்த்தினோம்.

 

     சாந்தா குருஸிலிருந்து சர்ச்கேட்டுக்குப் போய் வர முதல் வகுப்பு ரெயில் ‘ஸீஸன்’ டிக்கெட்டு வாங்கிக்கொண்டேன். என் வண்டியில் நான் ஒருவனே முதல் வகுப்புப் பிரயாணியாக இருப்பதைக் குறித்து நான் அடிக்கடி ஒருவகையான பெருமை கொண்டதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அடிக்கடி பாந்தராவுக்குப் போகும் வேகமான ரெயிலில் செல்வதற்காகவே நான் அங்கே போய்விடுவேன்.

 

     வக்கீல் தொழில் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே எனக்கு வருமானம் கிடைத்து வந்தது. எனது தென்னாப்பிரிக்கக் கட்சிக்காரர்கள், அவ்வப்போது எனக்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கிடைத்த வருமானம், என் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போவதற்குப் போதுமானதாக இருந்தது.

 

     ஹைகோர்ட்டு வழக்கு எதுவும் எனக்கு இன்னும் கிடைத்தபாடில்லை. அக் காலத்தில் பயிற்சிக்காக நடந்துவந்த சட்ட விவாதக் கூட்டங்களில் பங்கெடுத்துக்கொள்ள நான் என்றுமே துணிந்ததில்லையெனினும் அக் கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தேன். அவைகளில் ஜமியத்ராம் நானா பாய் முக்கியமாகப் பங்கெடுத்துக் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. மற்றப் புதுப் பாரிஸ்டர்களைப் போலவே நானும், ஹைக்கோர்ட்டில் நடக்கும் விசாரணைகளைக் கவனிக்கப்போவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்படி அங்கே போய்கொண்டிருந்ததன் நோக்கம், என் அறிவை வளர்த்துக் கொள்ளுவதை விடக் கடலிலிருந்து நேராக அங்கே அடித்துக் கொண்டிருக்கும், நித்திரையை அளிக்கும், இன்பக் காற்றை வாங்குவதற்குத்தான். இந்தச் சுகத்தை அனுபவித்து வந்தவன் நான் ஒருவன் மாத்திரம் அல்ல என்பதையும் கவனித்தேன். அது ஒரு நாகரிகச் செயலாகவே ஆகிவிட்டதால் அதைக் குறித்து வெட்கப்படவேண்டியது எதுவும் இல்லை.

 

     என்றாலும், ஹைக்கோர்ட்டுப் புத்தகசாலையைப் பயன்படுத்திக் கொண்டேன். பலருடன் புதிதாகப் பழக்கமும் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே எனக்கு ஹைக்கோர்ட்டிலும் வேலை இருக்கும் என்று தோன்றிற்று.

 

     இவ்வாறு ஒரு புறத்தில் என் தொழில் சம்பந்தமான கவலையே நீங்கிவிட்டதாகக் கருதலானேன். மற்றொரு புறத்திலோ, என் மீது சதா கண் வைத்திருந்தவரான கோகலே, எனக்காகத் தமது சொந்தத் திட்டங்களைப் போடுவதில் சுறுசுறுப்பாக இருந்து வந்தார். ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று தடவைகள் என் அலுவலகத்திற்கு வருவார். நான் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கருதும் நண்பர்களுடனேயே அவர் எப்பொழுதும் வருவார். தாம் செய்துவரும் வேலையின் தன்மையைக் குறித்து அவ்வப்போது எனக்குச் சொல்லி வருவார்.

 

     என் சொந்தத் திட்டங்கள் எவையும் நிலைத்திருக்கக் கடவுள் என்றுமே அனுமதித்ததில்லை என்றே சொல்ல வேண்டும். என் திட்டங்கள் அவர் வழியில் அவர் பைசல் செய்துகொண்டிருந்தார்.

 

     நான் எண்ணியவாறு நான் பம்பாயில் நிலைத்து விட்டதாகத் தோன்றிய சமயத்தில் எதிர்பாராத விதமாகத் தென் ஆப்பிரிக்காவிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. “சேம்பர்லேன் இங்கே எதிர்பார்க்கப்படுகிறார். தயவு செய்து உடனே திரும்பி வாருங்கள்” என்பதே அந்தத் தந்தி. நான் வாக்களித்திருந்தது நினைவுக்கு வந்தது. பிரயாணத்திற்கு எனக்குப் பணம் அனுப்பியதுமே நான் புறப்படத் தயாராக இருப்பதாகப் பதில் தந்தி கொடுத்தேன். அவர்களும் உடனே பணம் அனுப்பி விட்டார்கள். என் அலுவலகத்தைக் கைவிட்டுவிட்டுத் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன்.

 

     அங்கிருந்த வேலை முடிய ஓர் ஆண்டாவது ஆகும் என்று எண்ணினேன். எனவே, பம்பாயில் பங்களாவை அப்படியே வைத்துக்கொண்டு என் மனைவியையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுச் சென்றேன்.

 

     நாட்டில் ஒரு வேலையும் அகப்படாமல் கஷ்டப்படும் ஊக்கமுள்ள இளைஞர்கள், மற்ற நாடுகளில் குடியேறிவிட வேண்டும் என்று இப்பொழுது நம்பினேன். ஆகையால், அப்படிப்பட்ட இளைஞர்கள் நான்கு, ஐந்து பேரை என்னுடன் அழைத்துச் சென்றேன். அதில் ஒருவர் மகன்லால் காந்தி.

 

     காந்தி குடும்பம் எப்பொழுதுமே பெரிய குடும்பம். பழைய சுவட்டிலேயே போய்க் கொண்டிருக்க விரும்பாதவர்களைக் கண்டுபிடித்து வெளிநாடுகளுக்குத் துணிந்து போகும்படி செய்ய விரும்பினேன். இவர்களில் அநேகரை என் தந்தையார் சமஸ்தான உத்தியோகங்களில் அமர்த்தி வந்தார். அத்தகைய உத்தியோக மோகத்திலிருந்து அவர்களை விடுவிக்க விரும்பினேன். அவர்களுக்கு வேறு வேலை தேடிக் கொடுக்கவும் என்னால் முடியாது. அவர்கள் சுயநம்பிக்கையில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

 

     ஆனால், என் லட்சியங்கள் உயர்வானவை ஆக ஆக, என் லட்சியங்களையே ஏற்றுக்கொள்ளும்படி அந்த இளைஞர்களைத் தூண்ட முயன்றேன். மகன்லால் காந்திக்கு வழிகாட்டிய வகையில் என் முயற்சி மிகப் பெறும் வெற்றியை அடைந்தது. இதைப் பற்றிப் பிறகு கூறுகிறேன்.

 

     மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிவது, நிலையான குடித்தனத்தை நடுவில் குலைப்பது, நிச்சயமானதொரு நிலையிலிருந்து நிச்சயமற்ற நிலைக்குப் போவது ஆகிய இவை யாவும் ஒரு கணம் எனக்கு வேதனை தருவனவாகவே இருந்தன. ஆனால், நிச்சயமற்றதான வாழ்வைக் கண்டு அஞ்சாத தன்மை எனக்கு இருந்தது. சத்தியமாக இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லாமே நிச்சயமற்றதாயிருக்கும் இவ்வுலகத்தில் நிச்சயமான வாழ்வை எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணுகிறேன். நம்மைச் சுற்றிலும் தோன்றுபவை, நிகழ்பவை ஆகிய எல்லாமே நிச்சயமற்றவையும் அநித்தியமானவையுமே ஆகும். ஆனால், இவற்றிலெல்லாம் மறைந்திருக்கும் எல்லாவற்றிலும் மேலானதான பரம்பொருள் ஒன்றே நிச்சயமானது. அந்த நிச்சயமான பரம்பொருளை ஒரு கணமேனும் தரிசித்து, அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுபவனே பெரும் பாக்கியசாலி. அந்தச் சத்தியப் பொருளைத் தேடுவதே வாழ்வின் நித்தியானந்தமாகும்.

 

 

     சரியான தருணத்தில் நான் டர்பன் போய்ச் சேர்ந்தேன். அங்கே வேலை எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது. சேம்பர் லேனிடம் தூது செல்வதற்குத் தேதியும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரிடம் சமர்ப்பிப்பதற்கு மகஜரைத் தயாரிப்பதோடு நானும் தூது கோஷ்டியுடன் சென்று அவரைப் பார்க்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I