Che Guevara
வரலாறு
Backசேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்)
மாதவராஜ்
Contents
சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்)
1. முன்னுரை
2. முதல் அத்தியாயம்
3. 2ம் அத்தியாயம்
4. 3ம் அத்தியாயம்
5. 4ம் அத்தியாயம்
6. 5ம் அத்தியாயம்
7. 6ம் அத்தியாயம்
8. 7ம் அத்தியாயம்
9. 8ம் அத்தியாயம்
10. 9ம் அத்தியாயம்
11. 10ம் அத்தியாயம்
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
1
சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்)
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்… வாருங்கள்.
மாதவராஜ்.
மின்னஞ்சல்: jothi.mraj@gmail.com
வலைப்பக்கம்: http://mathavaraj.blogspot.in/
அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப்பட மூலம் – http://en.wikipedia.org/wiki/File:Last_Days_of_Che_Guevara_cover_art.jpg
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com
1
முன்னுரை
“இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்” என்கிறார் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ். மேலும் மேலும் அறிய வேண்டிய எதோ ஒன்றை அவரது மரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது. காட்டுப்பூச்சிகள் கடித்து உடலெல்லாம் வீங்கிப் போகிறது. பசிக்கு வேறு வழியின்றி குதிரை மாமிசம் சாப்பிட்டு வயிற்று வலியில் அவதிப்படுகிறார். மழையும் வெயிலுமாய் உயர்ந்து கிடக்கிற மலைவெளிகளில் ஆஸ்த்துமாவோடு மூச்சிறைக்க நடக்கிறார். அதற்கு முன்பு கியூபாவின் அமைச்சராக, விமானங்களில் பறந்து உலகத் தலைவர்களோடு கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தவர் அவர். தன் குழந்தைகளை கொஞ்சி ஆரத்தழுவிக் கொண்டவர் அவர்.
எல்லாவற்றையும் ஒருநாள் விலக்கிவிட்டு மீண்டும் காடுகளை நோக்கி துப்பாக்கியோடு செல்கிறார். எல்லோருக்குமான ஒரு கனவு உலகத்தை படைக்க வேண்டும் என்னும் தணியாத பேராசையின் பயணம். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வேட்டை. தவம் போலச் செய்கிறார். தன்னை முன்னிறுத்தி, தன்னையே பலியாக்கி வெளிச்சத்தைக் காட்டுகிற வேள்விதான் அது. கடைசி வரைக்கும் அவரது கண்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. மார்கோஸ் அதைப் பார்த்திருக்க வேண்டும்.
அந்தக் கண்களைப் பார்த்து அவர்களும் இப்போது வருகிறார்கள். சேவின் துப்பாக்கியில் இன்னும் குண்டுகள் இருப்பது தெரிந்து எதிரிகள் பதறுகிறார்கள். அடுத்த சதியை அரங்கேற்றுகிறார்கள். கழுகின் நிழலாய் அது நகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. ரச்சல் ராபர்ட் என்னும் கட்டுரையாளர் 2002 மார்ச் 15ம் தேதி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் எழுதிய வரிகளில் அப்படியொரு செய்தி இருக்கிறது.
“என்னுடைய சொந்த நகரமான பைரான்பேயில் சேகுவாரா வாழ்ந்து மூச்சுவிட்டுக் கொண்டு இருக்கிறார். நான் வழக்கமாக அவரைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இரவில் ரெயில்வே பாருக்கு வந்து குடித்துவிட்டு இசையைக் கேட்டுச் செல்கிறார். சில நேரங்களில் நண்பர்களோடு டீக்கடைகளில் நின்று அரட்டையடிக்கிறார். பெரும்பாலும் போஸ்ட் ஆபிஸில் அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றிருக்கிறேன். சிட்னியிலும், மெல்போர்னிலும் இருக்கிற நண்பர்களுக்கு அவர் போஸ்ட் கார்டுகள் அனுப்புவார்” இந்தக் கட்டுரையின் தலைப்பு ‘நெஞ்சில் இல்லாவிட்டாலும், மார்புகளில் சேகுவாரா வசிக்கிறார்”. ரேச்சல் ராபர்ட் என்ன சொல்ல வருகிறார் என்பது இப்போது புரிந்திருக்கும். இளைஞர்கள் அணியும் டீ ஷர்ட்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கும் சேகுவாராவைத்தான் அவர் குறிப்பிடுகிறார். உலகத்து மக்களால் நேசிக்கப்பட்ட அந்த முகத்தைக் காட்டி லாபம் சம்பாதிக்கும் காரியத்தை முதலாளித்துவம் செய்கிறது. ‘எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்’ என்ற குரலை அந்த முகத்திலிருந்து விலக்கி வைக்கிற கபடம் இது. போராட்டங்களின், அடக்கப்பட்டவர்கள் எழுச்சியின் வடிவமாய் இருக்கும் அந்த மனிதனை, எதோ சாகசங்கள் நிறைந்த பொழுது போக்கு நாயகனாக, சில்வஸ்டர் ஸ்டாலோனாக சித்தரிக்க முயலுகிறர்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டு இருக்கின்றன.
சென்ற வருடம் ஒரு பிரிட்டீஷ் கம்பெனி ஒரு புதிய பீருக்கு சேவின் படத்தைப் போட்டு வியாபாரம் செய்திருக்கிறது. அதன் விளம்பர வாசகம் “அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது” என்பது. ஆனால் அமெரிக்காவில்தான் அதிக விற்பனை ஆகியது. இறுதியில் கியூபாவால் தடை செய்யப்பட்டது. சேகுவாராவின் மனைவி அதை எதிர்த்து குரல் எழுப்பியதால் அந்த பீரிலிருந்து சேவின் படத்தையும், வாசகத்தையும் அகற்றினார்கள். சேகுவாராவின் பிம்பத்தையும், உணர்வையும் சிதைக்கிற சூழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக சேகுவாராவின் மகள் அலெய்டிடா சொல்கிறார்.
உலகச்சந்தையில் மிக வேகமாக விற்பனையாகும் பொருட்களில் ஒன்றுதான் சேகுவாரா என்கிறார் ஒருவர் மிகச் சாதாரணமாக. சேவின் படத்தையோ, கையெழுத்தையோ போட்ட தொப்பிகள், டீ ஷர்ட்கள், கீ செயின்கள், ஷூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவருடைய அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான முட்டாள்தனங்கள் மற்றும் கொரில்லப்போரின் தோல்விகள் எல்லாவற்றையும் மீறி அவர் நினைக்கப்படுவதாக ஆச்சரியப்படுகிறார்கள். நிலவுகிற ஒருவகையான கலாச்சார செல்வாக்கினாலும், காவியத்தலைவர் போன்ற பிம்பத்தினாலும் சேகுவார மீது ஒரு வகையான மோகம் இருப்பதாக அறிவிக்கிறார்கள். ஒளித்தட்டு அட்டைகளில் சே போல டிரஸ் போட்டுக்கொண்டு பாப் கவர்ச்சி ஆட்டக்காரி மடோனா சிரிக்கிறாள். மார்கோஸின் பேனாவிலிருந்து சேவின் இரத்தம் நிரம்பி வழிகிறது. இதுதானா சேகுவாரா. இவ்வளவுதானா அவரது வடிவம். இதற்குத்தானா அவரது வாழ்வும் மரணமும். சேவின் மரணத்தை திரும்ப ஒருமுறை உலகத்துக்கு உரக்க வாசிக்க வேண்டி இருக்கிறது. அதுதான் அவர் மீது படிய வைக்கப்பட்டு இருக்கும் அழுக்குகளையும், தூசிகளையும் துடைத்து தெளிவாக காண்பிக்கும்.
உணர்ச்சிக் கொந்தளிப்பும், அவசரமும் கொண்ட மனிதராக இல்லாமல் மிக நிதானமாக இருக்கிறார். ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் குண்டு தன் துப்பாக்கியில் மட்டும் இருக்கிறது என்று சொல்லியவர் இல்லை. தனது துப்பாக்கியிலும் ஒரு குண்டு இருந்தது என்று மட்டுமே சொல்ல விரும்பியிருக்கிறார். ஒரு நூற்றாண்டின் நீண்ட முயற்சியில் தன் உயிரும் ஒரு சில ஆண்டுகள் பங்கேற்றது என்பதே பெருமையாய் இருக்கிறது அவருக்கு. ‘புரட்சி தானாக உருவாவதில்லை….நாம் உருவாக்க வேண்டும்” என்கிறார். “தீ பற்ற வை. மக்கள் நெருப்பென எழுவார்கள்’ என்கிறார். பொலிவியா, அர்ஜெண்டினா, பெரு என தீ படர்ந்து படர்ந்து லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவி, ஏகாதிபத்தியம் என்னும் பயங்கர மிருகத்தின் ரோமம் கருகுகிற நாற்றத்தை தனது சுருட்டில் உணர்கிறார்.
ஏகாதிபத்தியம் தொடர்ந்து தோற்றுப்போன கதைதான் சேகுவாரா. கியூபா புரட்சியில் முதலில் காஸ்ட்ரோவிடமும் அவரிடமும் தோற்றுப்போனது. அடுத்து அவர் மீது அவதூறுகளை பரப்பியது. அவருக்கும், காஸ்ட்ரோவுக்கும் இடையில் முரண்பாடுகளை அதுவாக உருவாக்கி பார்க்கிறது. அதிலும் தோற்றுப் போகிறது. பொலிவியாவில் அவரைக் கொன்று அடையாளம் தெரியாமல் போகச் செய்கிறது. அதிலும் தோற்றுப் போகிறது. சே மண்ணிலிருந்து எழும்பி வருகிறார். இப்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர் பிம்பத்தை அதுவே கையிலெடுத்துச் சிதைக்கப் பார்க்கிறது. இதிலும் தோற்றுப் போகும். சே தோற்றுப் போகிறவர் அல்ல. ஏகாதிபத்தியம் தனக்கு அறைந்து கொள்ளும் சவப்பெட்டியின் முதல் ஆணியாக அவர் இருக்கப் போகிறார்.
அதற்குத்தான் அவர் திரும்பி வந்திருக்கிறார். கியூபாவிலிருந்து வெளியேறி மீண்டும் கியூபாவிற்கு அவர் வந்து சேர்கிற முப்பதாண்டுகள் நிறைய உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. சே பற்றி அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ மாறி மாறி குறிப்புகளை தயார் செய்து கொண்டே இருக்கிறது. வெற்றி அல்லது வீரமரணம் என்று போர்க்களத்தில் நின்ற சேவின் பொலிவிய நாட்குறிப்புகளில் நம்பிக்கை…நம்பிக்கை..நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. சி.ஐ.ஏவின் குறிப்புகளில் வார்த்தைகளுக்குள் குவிந்து கிடக்கின்றன.
மார்கோஸின் எழுதப்படாத பக்கங்களில் சே இன்னும் உயிரோடு நிரம்பி இருக்கிறார். அவர் விளையாடுகிறார். இது ஒரு நீண்ட செஸ் விளையாட்டு. ஆயுதங்களோடு இருக்கும் யுத்த களம். புத்தியால் காய்களை நகர்த்துகிற விளையாட்டு. சே தன்னையே ஒரு சிப்பாயாக ஓரடி முன் நிறுத்துகிறார். வெட்டப்படுகிறார். ஆட்டம் நின்று போகவில்லை. அடுத்த அசைவினை சே யோசிக்கிறார். காலத்தின் கட்டங்களில் காய்களை நகர்த்தும் இந்த விளையாட்டில் முப்பத்தேழு ஆண்டுகள் என்பது மிகச் சொற்பமான நேரமே. உலகம் காத்திருக்கிறது…
2
முதல் அத்தியாயம்
ஆனால் சின்சினா சாதாரணப் பெண். சேவின் மீது சாதாரணமான அன்பை வைத்திருந்தாள். திருமணத்திற்குப் பின் சே தன்னோடு இருக்க வேண்டும். தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தாள். வெனிசுலாக் காடுகளுக்குச் சென்று தொழு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற சேவின் திட்டம் அவளுக்கு உன்னதமானதாகவும், நெஞ்சத்தைத் தொடுவதாகவும் இருந்தது. யதார்த்தத்திற்கு புறம்பான கற்பனையாகவும் பட்டது. உன்னத லட்சியத்திற்கும்- சுகபோக வாழ்க்கைக்கும், கவிதைக்கும்-வாழ்வின் சாதாரண உரைநடைக்கும் இடையே இணக்கம் காணமுடியாத மோதல் வெடித்தது. இதை சமரசம் செய்து தீர்த்துவிட முடியாது. தத்தம் நிலையை விட்டுக் கொடுக்க கிஞ்சிற்றும் முன்வரவில்லை. எனவே இருவரும் சமாதானமாக பிரிந்தனர். அவள் வெற்றிகரமான திருமண வாழ்வை நோக்கியும், அவர் மீண்டும் திரும்பவே முடியாத பாதையிலும் பயணம் துவங்கினர்.
(1)
“அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய், சே ” வாலேகிராண்டேவில் அவர் புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் ஒரு பொது தொலைபேசி ஆபிஸ் சுவரில் இப்படி எழுதப்பட்டு இருக்கிறது. அந்த செய்தியில் மகத்தான கம்பீரமும், நம்பிக்கையும், வரலாறும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இலட்சியம் மிகுந்த காரியம் ஒன்று எல்லோர் முன்னும் காத்திருப்பதாக உணர முடிகிறது. இந்த அர்த்தங்களைத் தருகிற வாக்கியமாக்கி இருப்பது சே என்னும் ஒற்றை வார்த்தை. உயிர் ஊட்டக்கூடியவராய் சேகுவாரா இருக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சேகுவாராவின் உடல் தேடப்பட்டதிலிருந்து வாலேகிராண்டே கவரப்பட்டிருந்தது. 1995 நவம்பரில் சேவின் சரிதை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் ஜான் லீ ஆண்டர்சன் பல இடங்களுக்குச் சென்றார். சேவை அறிந்த மனிதர்களையெல்லாம் சந்தித்தார். கொன்றவர்களையும் சந்தித்தார். அப்படி ஒரு வேளையில் தான் பொலிவிய இராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற ஜெனரல் மேரியோ வர்காஸ் சேகுவாராவை புதைத்த இடம் தனக்குத் தெரியும் என்றார். வாலே கிராண்டே இராணுவ விமான தளத்திற்கு அருகில் சேவும் அவரது ஏழு தோழர்களும் புதைக்கப்பட்டனர் என்பதை சொன்னார். அவர்களை புதைத்ததில் பங்கெடுத்த புல்டோசரை ஓட்டியவரும் இதனை உறுதி செய்தார்.
இறந்து போன கொரில்லாக்களின் குடும்பத்தார் தொடர்ந்து பொலிவிய அரசுக்கு ஏற்கனவே நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தனர். தவிர்க்க முடியாமல் அரசு கண்டுபிடிக்க உத்தரவிட்டது. அர்ஜெண்டினா, கியூபாவில் இருந்து வந்திருந்த தடவியல் மற்றும் உடற்கூறு நிபுணர்களும், பொலிவிய சிப்பாய்களும் நான்கு எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். அதில் சேகுவாரா இல்லை.
மண்ணில் அவரைத் தேடுகிறார்கள்
போன வருடத்தின் கடைசியில் திரும்பவும் கியூபர்கள் தங்கள் தேடலைத் தொடர்ந்தனர். 1967ல் வாலேகிராண்டே பெட்டாலியனில் பணியாற்றிய சிப்பாய்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மனிதர்களையும் விசாரித்தனர். பத்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மண் பரிசோதனைகள் நடத்தி, புல்டோசரால் கிழிக்கப்பட்ட நிலத்தை தேட ஆரம்பித்தார்கள்.
இராணுவ விமானம் ஓடுகிற பாதையோரத்தில் இருக்கிற அந்த பொலிவிய கிராமத்தின் அருகே சேகுவாராவின் எலும்புக்கூடுகள் இருக்கின்றதா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும். ஏராளமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். “கிடைத்த தகவல்கள் உண்மையாக இருக்குமானால் நாங்கள் தோண்டக்கூடிய இடம் சரியானதாகவே இருக்கலாம்” என உடற்கூறு நிபுணர் அலேஜாண்டிரோ எச்சாருகே சொல்கிறார். சுரங்கங்களுக்கு பயன்படுத்தக் கூடிய நவீன ரேடார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எல்லாவற்றையும் கண்காணிக்கிற ஜெனரல் அர்மெண்டோ அல்காசருக்கு இப்படி தோண்டுவது ஒன்றும் பிடித்தமான காரியமாக இல்லை. 28 வருடங்களுக்கு முன்பு இறந்து போன மனிதனின், அதுவும் ஒரு எதிரியின் உடலின் மிச்சங்களை பார்ப்பதற்கு எந்த ஆவலும் இல்லை.
ஆனால் வாலேகிராண்டாவில் உள்ள மக்களின் உணர்வுகள் வேறு மாதிரி இருக்கின்றன. ஒரு வயதான அம்மாள், “சேகுவாரா உடல் கண்டுபிடிக்கப்பட்டால் வேறு எங்கும் கொண்டு செல்லக் கூடாது. அவர் இந்த மண்ணுக்கே சொந்தம். இங்கு புரட்சி நடத்தவே அவர் வந்தார்.”என்கிறார். இன்னொரு மனிதர் முன்னொருநாள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சேகுவாரா உடலின் போட்டோ ஒன்றை இன்னும் வீட்டில் பாதுகாத்து வருகிறார். அவரும் சேகுவாராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டால் அங்குதான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.
ஒசினகா
துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்ட சேகுவாராவின் உடல் கொண்டு வரப்பட்ட அந்த மத்தியானத்தை நெஸ்தாலி ஒசினகாவால் மறக்கமுடியவில்லை. அப்போது அவருக்கு வயது 19. வாலேகிராண்டே ஆஸ்பத்திரியில் ரோஜாச் செடிகளை வெட்டி ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள். பதற்றத்தோடு சிப்பாய்கள் ஆஸ்பத்திரியின் முக்கியக் கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள துணிகள் சலவை செய்யும் பகுதியில் கொண்டு வந்து கிடத்தினார்கள். “அவரது கண்கள் அகலத் திறந்திருந்தன. காயங்கள் இரத்தத்தால் மூடப்பட்டிருந்தன” என்று சொல்லிய ஒசினகாவுக்கு சேகுவாராவைப் பற்றியோ, பொலிவிய மலைகளில் நின்று புரட்சிகர அரசு அமைய போரிட்டதையோ பற்றி அப்போது அதிகமாக தெரிந்திருக்கவில்லை. ஆனால் இராணுவம் பயந்து போயிருந்ததை மட்டும் உணர முடிந்திருக்கிறது. “அன்று இரவு அவர் கொண்டு போகப்பட்டார். எல்லாம் ரகசியமாக நடந்தது” என்று எங்கோ வெறித்து பார்த்தபடி கூறுகிறார்.
வில்லாடோ
சேகுவாரை புதைத்த மனிதன் அமைதியாக நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு உண்மைகள் எல்லாம் தெரியும். கஸ்ட்டோவோ வில்லோடோ. அமெரிக்காவின் ஒரு மூலையில் ரகசியமான இடத்தில் மாந்தோப்பு பண்ணையில் இருக்கிறான். சேகுவாராவை வேட்டையாட அலைந்தவன் அவன். சி.ஐ.ஏவின் ஏஜண்ட்டான அவனுக்கு சேகுவாராவையும், காஸ்ட்ரோவையும் பழிவாங்க வேண்டும் என்பது அடியாழத்தில் இருந்தது.
1959 ஜனவரி 1ம் தேதி கியூபாவில் பாடிஸ்டா அரசு வீழ்த்தப்பட்ட சில நாட்களில் வில்லோடோ கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறைவைக்கப்படுகிறான். உதிரி பாகங்களை வாங்கி கார்களை உருவாக்குகிற அவனது தந்தையின் கம்பெனியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரின் முறையீட்டினால் அரசு இதனை செய்தது. அடுத்து கொஞ்ச நாட்களில் முந்தைய பாடிஸ்டா அரசிடமிருந்து முறையற்ற சலுகைகள் பெற்றிருப்பதாக கூறி அங்கிருந்த 360 கார்களோடு கம்பெனியையும் அரசே எடுத்துக் கொள்வதாக சேகுவாரா அறிவிக்கிறார்.
பிப்ரவர் 16ம் தேதி வில்லோடோவின் தந்தை ஏராளமான தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்து போகிறார். காஸ்ட்ரோவையும், சேகுவாரவையும் பற்றி குற்றச்சாட்டுகள் சுமத்தி நிறைய எழுதிவைத்திருந்தார். 29 நாட்கள் கழித்து வில்லோடோ கியூபாவை விட்டு வெளியேறுகிறான். கம்யூனிசத்திற்கு எதிராக மியாமியில் இருந்த அகதிகளோடு சேர்ந்து கொள்கிறான். அமெரிக்க தூண்டுதலால் காஸ்ட்ரோ அரசை எதிர்த்து கியூபாவின் மீதான பிக் வளைகுடா தாக்குதலில் பங்குபெற்று, அபாயகரமான சூழலில் உயிர்பிழைத்து நிகாரகுவாவுக்கு செல்கிறான். அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து கொரில்லாக்கள் மற்றும் அதனை எதிர்கொள்வது பற்றியுமான பயிற்சிகள் பெறுகிறான். 1964ல் சி.ஐ.ஏவில் சேர்ந்தான்.1959லிருந்து 1970க்குள் நாற்பது தடவைக்கு மேல் கியூபாவுக்குள் ரகசியமாக நுழைந்து சி.ஐ.ஏவின் பணிகளைச் செய்திருப்பதாக கூறுகிறான். என் தந்தையை அழித்த அமைப்பை நான் முற்றிலும் எதிர்க்கிறேன் என்கிறான்.
1965ல் காஸ்ட்ரோவின் புரட்சியை இதர நாடுகளுக்கும் பரவச்செய்ய வேண்டும் என்று சே நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தகவல் வந்ததும், சி.ஐ.ஏ வில்லோடாவையும், இதர கியூப அமெரிக்கர்களையும் களத்தில் இறக்கியது.
டொமினிக் குடியரசில் சே இருப்பதாக தகவல் கிடைத்ததும் வில்லோடோ அங்கு ரகசியமாக சென்றான். அங்கு அவர் இல்லை என்பது தெளிவாகியது. பிறகு அதே வருடத்தின் கடைசியில் வில்லோடோ காங்கோ சென்றான். அங்கு கலகக்காரர்களை அரசு முறியடித்ததும் சே தப்பி விட்டதாக அறிந்தான். சி.ஐ.ஏ அவனுக்கு இட்ட பணி சே எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. சேவை உயிரோடோ அல்லது உயிரற்றோ பிடிக்க வேண்டும் என்பதே வில்லோடாவுக்கு நினைப்பாயிருந்தது.
எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நாணையத்தை சுண்டிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதைப் போல அபாயத்தை எதிர்கொள்கிறான். ஒரு கொரில்லாப் போராளிக்கு, ஒரு மோதலைத் தொடர்ந்து அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது.-சே
காங்கோவுக்கு பிறகு சே மாதக்கணக்கில் மறைவாகவே இருந்தார். எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாமல் இருந்தது. முதல் எட்டு மாதங்களும் கொரில்லாத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் திட்டம் தீட்டுவதிலுமாக இருந்தார். நான்கு மாதங்கள் அமெரிக்க இராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பொலிவிய இராணுவத்திடம் கிடைக்காமல் இருந்தார். வில்லோடோ, ரொட்ரிப்கியுஸ், ஜூலியா கார்சியா ஆகிய மூன்று கியூப அமெரிக்கர்களை பொலிவியாவிற்கு சேவை கண்டுபிடிக்க சி.ஐ.ஏ அனுப்பியது.
வில்லோடோ பொலிவிய இராணுவ உடைகளையே அணிந்திருந்தான். பொலிவிய இராணுவ அதிகாரிகளுக்கே அவன் ஒரு சி.ஐஏ வின் ஆள் என்பது தெரியாமல் இருந்தது. பொலிவிய காடுகளில் சேகுவாராவோடு இருந்த பிரெஞ்சு சோசலிஸ்ட் தீப்ரேவை இராணுவம் பிடித்தது. அவரை வில்லோடோதான் விசாரணை செய்திருக்கிறான்.
சேவின் உடல் வாலேகிராண்டுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு மணி நேரத்தில் வில்லோடோ அங்கே சென்றிருக்கிறான். நூற்றுக்கனக்கில் பத்திரிக்கையாளர்களும், அந்த நகரத்தின் மனிதர்களும் அங்கே குழுமி இருந்தனர். “நான் சேவை உயிரோடு பார்க்கவில்லை. அவருடன் பேச வேண்டும் என்று அக்கறையுமில்லை” என்கிறான் வில்லோடோ. மேலும்,” அவர் என் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர் என்ற போதிலும் எனக்கு அது ஒரு பணி. அவ்வளவே” என்கிறான்.
அக்டோபர் 10ம் தேதி வாலேகிராண்டேவில் உள்ள ஒரே விடுதியான இரண்டு மாடிக் கட்டிடமான டெரசிட்டாவில் பொலிவிய இராணுவ உயர் அதிகாரிகளும், சி.ஐ.ஏ அதிகாரிகளும் சேவின் உடலை என்ன செய்வது என்று திட்டமிட்டனர். சேவின் உறவினர்கள் சேவின் உடலை பெற வாலேகிராண்டேவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்திருந்தது. வில்லோடா உடலை காணமல் போகச் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறான். “காஸ்ட்ரோவுக்கு சேவின் எலும்புகள் கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தோம். அதை வைத்து பெரிய நினைவிடம் எழுப்பி சித்தாந்த வஞ்சனை செய்யக்கூடாது என நினைத்தோம்” என்கிறான் வில்லோடோ.
யாரோ ஒருவர் எரித்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு வில்லோடோ “அப்படி எரித்தாலும் நாம் வெளிப்படையாகச் செய்ய முடியாது. ரகசியமாக எரிப்பது என்பது காலம் காலமாக பொலிவிய இராணுவத்தை இழிவாக பேசுவதில்தான் முடியும்”. என்று சொல்லி இருக்கிறான். ஜெனரல் ஒவாண்டா யாருக்கும் தெரியாமல் சேகுவாராவை புதைக்கும் பொறுப்பை வில்லோடாவிடம் ஒப்படைத்திருக்கிறான். மருத்துவ பரிசோதனை செய்த போது டாக்டர்களின் தோள்களுக்கு பின்னால் நின்று எட்டி பார்த்தபடி இருந்தான். பத்திரிக்கையாளர்கள் சென்ற பிறகு சேகுவாராவின் கைகள் அடையாளத்திற்காக வெட்டப்பட்டன. வில்லோடோ சேகுவாராவின் முடிகளை கொஞ்சம் வெட்டி வைத்துக்கொண்டானாம். இப்போதும் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கிறானாம்.
வில்லோடாவுக்கு ஒரு மெய்காப்பாளனும், கொரில்லாக்களின் உடல்களை எடுத்துச் செல்ல ஒரு டிரக்கர் டிரைவரும், மண்ணைத் தோண்டி மூட ஒரு புல்டோசர் டிரைவரும் உதவியாக அனுப்பிவைக்கப்பட்டனர். விடிகாலை 1.30 மணிக்கு வில்லோடோ புறப்பட்டான். அவர்கள் இராணுவ விமானப் பாதை வழியாக சென்றனர். ஒரு இடத்திற்கு வந்ததும் நிறுத்தச் சொல்லி புல்டோசரால் மண்ணைத் தோண்டச் செய்தான். பின் டிரக்கர் வண்டியை அந்த குழியின் முனை வரைக் கொண்டு நிறுத்தி சடலங்களை உள்ளே போட வைத்திருக்கிறான். புல்டோசர் டிரைவரிடம் அந்த குழியை மூடிவிடச் சொல்லி இருக்கிறான்.
சேகுவாராவும் அவரது தோழர்களும் எந்த மண்ணின் விடுதலைக்காக வந்தார்களோ அந்த மண்ணிலேயே தங்களை முழுவதுமாக கரைத்துக் கொண்டு விட்டனர். அன்றைக்கு புல்டோசர் ஒட்டிய டிரைவரிடம் விசாரித்திருக்கிறார்கள். சேகுவாராவையும், அவரது தோழர்களையும் புதைத்து மூடவும் மழை பெய்யத் துவங்கியதாகச் சொல்கிறார்.
உலகையே நேசித்த அன்பு உருவம்
முப்பது வருடங்களுக்குப் பிறகு இப்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வருகிறது. ஜூன் 28ம் தேதி அந்த எலும்புக்கூடுகளை நிலத்திலிருந்து பிரித்து வெளியே எடுத்தார்கள். உடற்கூறு நிபுணர்கள் அந்த எலும்புக்கூடுகளின் மீது படிந்திருக்கும் புழுதியைத் துடைக்கின்றனர். இரண்டாம் நம்பர் என்று அடையாளமிட்டு வைக்கப்படுகிற அந்த எலும்புக்கூட்டைப் பார்த்ததும் ஒசினகாவுக்கு சிலிர்க்கிறது. 1967 அக்டோபரில் அந்த கருப்புத்தோல் பெல்ட்டை அணிந்திருந்த கொரில்லாத் தலைவர் அவர்தான். “அந்த கணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது. அது சேகுவாராதான்” என்கிறார். இரண்டு வருடத் தேடலுக்குப் பிறகு கொரில்லாக்களின் எலும்புக்கூடுகளை கண்டு பிடித்ததில் ஒசினகாவுக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கிறது. கடந்த 30 வருடங்களாக ஒரு மூலையில் இருந்த அந்த மலைப்பிரதேச கிராமத்திற்கு சேகுவாரா ஒரு புதிர் மிகுந்த வடிவமாகியிருந்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் சுற்றிலும் ஏராளமான கதைகள் சொல்லப்பட்டு மேன்மைக்குரியவராயிருந்தார். “அவர் ஒரு மகத்தான மனிதர். கடவுள்.” என்கிறார் ஒசினகா இப்போது.
அப்போது சேகுவாரா இது போலத் தெரியவில்லை. 1967 மார்ச்சுக்கும் அக்டோபருக்கும் இடையில் உள்ளூர் மக்கள் கொரில்லா யுத்தத்தின் காரணம் அறியாமல் அவருக்கு உணவு கொடுக்கக் கூட மறுத்தார்கள். பயத்தில் அவர்களிடமிருந்து விலகி அவரது அசைவுகளை இராணுவத்திடம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் லாஹிகுவாரவிலிருந்து உடல் ஹெலிகாப்டரில் கொண்டு போகப்பட்ட தினத்திலிருந்து சேகுவாரா அவர்கள் மத்தியில் வளர ஆரம்பித்தார்.
வானம் பார்த்தவர்
கிழிந்து போன ஆடைகளோடும், இரத்தக் கறைகளோடு இருந்த அவரது தோற்றம் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போலிருந்ததாக கிராமத்து மனிதர்கள் சொல்கின்றனர். ‘சாண்டோ எர்னஸ்டோ’ என்று வழிபடவும் செய்கின்றனர். அவரிடம் மழை வரவும், பயிர்கள் நன்றாக விளச்சலை தரவும், நோய்களைத் தீர்க்கவும் வேண்டுகிறார்கள். தொடர்ந்து இருந்த வலதுசாரி அரசுகளால் பொது இடங்களில் சேகுவாராவை கொண்டாட தடைசெய்யப்பட்டிருந்தாலும் அங்குள்ளவர்கள் ரகசியமாக சேகுவாராவுக்கு வழிபாடு நடத்தவும், சேகுவாராவின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றவும் செய்தார்கள்.
இளைஞர்கள் அவரது எழுத்துக்களை கூட்டமாக உட்கார்ந்து படிக்கவும், பொலிவியாவில் அவர் காட்டிய வீரத்தை போற்றவும் செய்தனர்.லாஹிகுவாரா இன்னும் அப்படியே இருக்கிறது. பன்றிகளும், எருமைகளும், கோவேறு கழுதைகளுமாய் அலைகின்றன. மின்சாரம் இல்லாத வீடுகள் காணப்படுகின்றன. மலேரியாவும், தோல் வியாதிகளும் அந்த மக்களிடம் குடிகொண்டிருக்கின்றன.
வாலேகிராண்டேவிலிருந்து 250 கி.மீ தள்ளி இருக்கும் சாந்தா குரூஸில் ஜப்பானியர்களால் நடத்தப்பட்டு வரும் ஆஸ்பத்திரியில் எலும்புக்கூடுகள் துடைக்கப்பட்டு உலோகத் தட்டுக்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன. கிழிந்து நைந்து போன ஆடைகள், பெல்ட்டுகள், ஷூக்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு அந்தந்த எலும்புக்கூடுகளின் காலடியில் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு உடற்கூறு வல்லுனர் கம்யூட்டர் திரையில் கொல்லப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரில்லாக்களின் போட்டோக்களை பெரிதாக்கி, எலும்புக்கூடுகளோடு ஆராய்ந்து கொண்டிருந்தார். மற்றவர்கள் துப்பாக்கிகளால் சிதைந்த எலும்புகளின் எக்ஸ்ரேக்களை பரிசோதித்து 1967ல் பொலிவிய இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட காயங்கள் பற்றிய அறிக்கையோடும் ஒப்பிட்டனர்.
இரண்டாம் எண்ணிடப்பட்ட எலும்புக்கூட்டிற்கு இரண்டு கைகள் இல்லாமலிருந்தது. முக்கியமான தடயம். பற்களின் பரிசோதனை எல்லாம் முற்றிலும் பொருத்தமாயிருக்க சேகுவாரா அடையாளம் காணப்பட்டார். வாலேகிராண்டே புனித பூமியாகியிருந்தது. சேகுவாராவை கியூபாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
0
“அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய், சே” இந்த வரியில் நிறைய கேள்விகள் புதைந்திருக்கின்றன. யார் அந்த அவர்கள்? என்ன நினைத்தார்கள் அந்த அவர்கள்? அவர் எப்படி கொல்லப்பட்டார்? சே எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்? இதை தெரிந்து கொள்வதில் வரலாற்றின் புதிர் ஒன்றை அவிழ்க்கிற சுவராஸ்யம் இருக்கிறது. உண்மைகளை அறியும் மனிதத் துடிப்பு இருக்கிறது. அதுதான் வாலேகிராண்டேவில் புதைக்கப்பட்ட சேவின் உடலை மண்ணிலிருந்து மீண்டும் வெளியே கொண்டு வந்திருக்கிறது.
சேகுவாராவை பற்றி படிக்கிற போது, மற்றவர்கள் சொல்லி கேட்கிற போது, நட்சத்திரம் அணிந்த தொப்பியோடு பார்க்கிற போது சிலிர்ப்பு ஏற்படுகிறது. மனவெளியின் ஒரு அலைவரிசையில் அவரது அசாத்தியமான கனவுகள் பூத்துக் கொண்டே இருக்கின்றன. போராடுகிறவர்களுக்கும், நம்பிக்கை மிக்கவர்களுக்கும் சேகுவாரா ஆதர்சனமாக இருக்கிறார். அவருடைய எதோவொன்று மனிதர்களின் இதயத்துக்குள்ளும், மூளைக்குள்ளும் கலந்து விட்டிருக்கிறது. அது தைரியத்தையும், சக்தியையும் மீட்டிக்கொண்டே இருக்கிறது.
சேகுவாரா புரட்சிகளை உருவாக்கக் கூடியவராயிருந்தார். ஒன்று, இரண்டு, மூன்று என வியட்நாம்களை உருவாக்குவோம் என அறைகூவல் விடுத்தார். வியட்நாமில் நடக்கும் போர் நமது போர் என உணர்வுபூர்வமாக மக்களை சிந்திக்க வைத்தார். 1960களில் சேகுவாராவின் இந்தக்குரல் உலகமெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரித்தது. திரும்பிப் பார்த்தார்கள். சேகுவாரா ஒரு சர்வதேச புரட்சியாளராக காட்சியளிக்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எல்லைகளற்ற போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்தார். கொரில்லாப் போரை மக்களின் போராட்டமாகவே பார்த்தார். மக்களின் பேராதரவோடும், ஆனால் குறைவான ஆயுதங்களோடும் நடத்தும் போராட்டம் இப்படித்தான் இருக்க முடியும் என்றார்.
நடைமுறைப் போராளிகளாகிய நாங்கள் எங்கள் பாதைகளில் அடியெடுத்து வைத்தபோது மார்க்ஸ் என்கிற அறிஞரின் பார்வையோடு நடந்திருக்கிறோம்.- சே
வெறும் சாகசங்கள் நிறைந்ததல்ல அவரது வாழ்க்கை. தேடல். பயணம். இலட்சியம். கனவுகள். தீவீரம். உறுதி. எல்லாம் நிறைந்தது. சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கோபம். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம்.அந்த இதயத்தைத்தான் அவர்கள் சுட்டுக் கொன்றார்கள். காட்டு இலைகளின் பச்சை வாசனையும், பூச்சிகளின் ரீங்காரங்களும் படிந்து போன சேவின் பொலிவியன் நாட்குறிப்புகள் ஒருநாள் திடுமென நின்று போகிறது. சேகுவாராவோடு அவரது மரணத்தை பற்றிய உண்மைகளையும் அவர்கள் புதைத்து மறைத்தார்கள்.
சேகுவாரா புரட்சியின் அடையாளமாகிவிடக் கூடாது என்கிற பயம் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் மீறி அவர் மக்களின் மனதில் எழுந்துகொண்டே இருந்தார்.
பொலிவியக்காடுகளில் கொரில்லப்போரில் சேகுவாராவோடு இருந்த இண்டி பெரிடோ எழுதுகிறார்.”மிகக் கனமான சாக்கு ஒன்றை சுமந்துகொண்டு சே சென்று கொண்டிருந்தார். வழியில் வழுக்கி விழுந்தார். உடனடியாக சமாளித்து திரும்பவும் பயணத்தை தொடர்ந்தார்” இதுதான் சேகுவாரா. தொடர்ந்து செல்கிற வெப்பம் அவரிடம் இருந்து கொண்டிருந்தது. எதுவும் அவரை தடுத்து நிறுத்திடவில்லை. “நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்’ என்று அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.
இத்துடன் நின்று போகவில்லை. ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சேகுவாராவின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களும், புரட்சிகர சிந்தனை உள்ளவர்களும், மனிதாபிமானிகளும் நிறைய எழுதிக்கொண்டு இருக்கின்றனர். அவரைத் தூற்றுபவர்களும் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் அவரது மரணத்தை எழுதியவர்களின் குறிப்புகள் நிறைய சொல்கின்றன. அவை சேவின் மரணம் பற்றி மட்டும் பேசவில்லை. வரலாற்றின் மரணத்தையும் யோசிப்பது தெரிகிறது.
சேவின் மரணம் நடந்த இடத்தை அறிகிறபோது, வரலாற்றில் எந்த இடத்தில் அந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பதும் புரிய வருகிறது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால், ஏகாதிபத்தியத்தின் மரணத்தை இந்த மனிதர் எழுதியிருப்பாரோ என்று ஆச்சரியப்படவும் வைக்கிறது. அவர்களால் தனிப்பட்ட முறையிலும் கூட தூற்றவே முடியாத அவரது வாழ்க்கை தூய்மையான மழையின் துளியைப் போல நம்மீது சொட்டிக் கொண்டு இருக்கிறது.
சி.ஐ.ஏ வின் குறிப்புகளையும், சேவின் மரணம் குறித்த அவர்களது தகவல்களையும் படிக்கிறபோது ஏகாதிபத்தியத்தின் பயம் நம்முன்னே நிழலாடுகிறது. அவரை வட்டமிட்டுப் பறந்த கழுகின் கண்களிலிருந்து சேவைப் பார்க்க முடிகிறது. அவரைச் சுட்ட துப்பாக்கி முனையிலிருந்து இதயத் துடிப்புகளைக் துடிப்புகளைக் கேட்க முடிகிறது. சே இறந்துபோகாமல் இருக்கிறார். அத்தனை கம்பீரமானவர் அவர்.
ராட்சச மிருகமான ஏகாதிபத்தியத்தை கதி கலங்க வைத்த ஒரு மனிதர் நம் முன்னே அந்த வரிகளிலிருந்து உயிர்த்தெழுகிறார். ரகசியமாய் பாதுகாக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்களிலிருந்து அதிர்வுகளை ஏற்படுத்தியபடி வெளிவருகிறார் சேகுவாரா.
3
2ம் அத்தியாயம்
“தோழரே! பட்டவர்த்தனமாக சொல்வதென்றால் ஸ்பெயினின் எந்தப்பகுதியிலிருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என்பதை நான் அறியேன். நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்வீக வீட்டை விட்டு பிறந்தமேனியோடு வெளியேறிவிட்டனர். வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அதுபோல கிளம்ப மாட்டேன். நாம் நெருங்கிய உறவினர்கள் இல்லை என நினைக்கிறேன். இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.
-மரியோ ரோசரியோ குவாரா என்பவருக்கு 1964ம் ஆண்டு சே எழுதிய கடிதத்தில்.
(2)
அவர்கள் தங்கள் எதிரியை ஏற்கனவே அடையாளம் கண்டிருந்தார்கள். அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ சேகுவாராவைப்பற்றி தகவல்களை சேகரித்து ஒரு வாழ்க்கை குறிப்பை தயாரித்திருந்திருந்தது. சி.ஐ.ஏவின் கழுகுக் கண்கள் விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கின்றன. அவரது அசைவுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அவர்களின் வார்த்தைகளில், பார்வையில் சேவின் வாழ்க்கை இது. சி.ஐ.ஏ வின் பல்லாயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களில் இதுவும் ஒன்று. 1964 ஆகஸ்டில் தயாரிக்கப்பட்டது.
=====
சேகுவாரா
பொருளாதாரத்தின் ஜாராகிய சேகுவாரா தற்போது கியூப அரசின் பொருளாதார திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு வாரியத்தின் செயலாளராககவும், எதேச்சதிகாரமாக உருவெடுத்திருக்கும் கியூப கட்சியின் தேசீய இயக்குனராகவும், பிடல் காஸ்ட்ரோவின் சக்தி மிக்க ஆலோசகராகவும் இருக்கிறார். 1956ல் கிரான்மா இலட்சியப்பயணத்தில் உறுப்பினராக இருந்த அவர், மலைகளின் இராணுவ கமாண்டராக உயர்ந்து, பிறகு கியூப பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் குரலாக உருவெடுத்திருக்கிறார். துரிதமான தொழில்மயத்திற்கு ஆதரவாளரான அவர், சமீபத்தில் நுகர்பொருட்கள் கவனத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. கியூபாவின் பொருளாதார எதிர்காலம் தொழில்மயமாவதில் இருக்கிறது என்னும் அவரது நிலைபாட்டிற்கும், கியூபா தனது விவசாய வளங்களை பெருக்க வேண்டும் என்கிற விவசாய மறுசீரமைப்பு அமைச்சரான கார்லோ ரபேலின் பார்வைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. தற்சமயம் கார்லோ அதில் வென்றிருப்பதாக தெரிகிறது. கியூபா விவசாய மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. தேசீயமயமாவதற்கு உந்துதல் அளித்தவரும், பொருளாதாரத்தின் பன்முகத்தன்மைகளை மையப்படுத்தியவருமான சேகுவாரா அமெரிக்காவின் தீவீர எதிர்ப்பாளாராகவும், அமெரிக்க பொருளாதாரத்தின் நோக்கங்களோடு முரண்பட்டு பேசுபவரும், கியூபா சோவியத்தைச் சார்ந்து இருப்பதற்கு உந்து சக்தியாகவும் இருக்கிறார். மேலும் பலதடவை அவர் சோவியத்திற்கு சென்று வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசியிருக்கிறார். கியூபாவில் புதிய வர்த்தக திட்டங்களை உருவாக்க ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.
பொருளாதார உதவிகளில் சோவியத் ரஷ்யாவை சார்ந்திருக்கிற சேகுவாரா தத்துவார்த்த நிலைபாடுகளில் சீன கம்யூனிச கட்சியை பின்பற்றுகிறார். மா சே துங்கை நேசிக்கிற அவர் கியூபாவின் புரட்சியை லத்தீன் அமெரிக்கா முழுவதற்கும் பரவச்செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடுகிறார். கொரில்லா யுத்தத்தில் அவரது திறமை லத்தின் அமெரிக்க நாடுகள் பூராவும் பிரச்சாரம் செய்யப்பட்டு இருக்கிறது. மார்ச் 1959ல் ஹைட்டியிலும், ஜூன் 1959ல் நிகரகுவாவிலும், நவம்பர் 1959ல் கவுதமாலாவிலும் நடக்க இருந்த படையெடுப்புகளுக்கு முக்கிய உருவமாக இருந்திருக்கிறார். உருகுவேவிலும், பிரேசிலிலும், அர்ஜெண்டினாவிலும் புரட்சிக்காக மக்களை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
கல்லூரி நாட்களில் கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்ட போதெல்லாம் தான் எந்த கம்யூனிச கட்சியோடும் இணைந்ததில்லை என்றே சொல்லி வந்திருக்கிறார். 1959ல் ஒருமுறை இது போல குற்றம் சாட்டப்பட்ட போது “நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்” என்று பதில் சொல்லி இருக்கிறார். அர்ஜெண்டினா, கவுதமாலா, மெக்சிகோவில் உள்ள கட்சி உறுப்பினர்களோடு நெருக்கமான உறவுகள் வைத்திருந்த போதும் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. எப்படியிருந்தாலும் உணர்வுபூர்வமாக அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் அவர், கம்யூனிசத்தின்பால் அனுதாப பார்வை கொண்டிருக்கிறார். மிக முக்கியமாக, 1954ல் கவுதமாலாவில் கம்யூனிசத்திற்கு ஆதரவாக இருந்த அர்பென்ஸ் அரசை அமெரிக்கா இராணுவக் கலகம் ஏற்படுத்தி வீழ்த்த்யதை கடுமையாக கண்டித்திருக்கிறார்.
எர்னஸ்டோ சேகுவாரா அர்ஜெண்டினாவில் ரோசரியோவில் 1928 ஜூன் 6ம் தேதி பிறந்தார். வசதியான நடுத்தரக் குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில் மூத்தவர். கல்லூரி நாட்களில், அவரது தாயும் தந்தையும் பிரிந்திருந்தார்கள். சேகுவாராவின் தந்தை எர்னஸ்டோ சேகுவாரா லிஞ்ச் சர்வேயராகவும், கட்டிடக் கலைஞராகவும் இருந்தவர். ஆரம்பத்தில் காஸ்ட்ரோவின் இயக்கத்தை ஆதரித்தவர். தாய் செலியா டி லா செர்னா கம்யூனிஸ்டாக தன்னை அறிவித்துக் கொள்ளாத போதிலும், லத்தின் அமெரிக்க மகளிர் காங்கிரஸில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கியூப புரட்சியை ஆதரித்து பேசினார். சிறுவயதிலிருந்தே ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டாலும், தந்தையின் ஆலோசனையின் பேரில் சே (அர்ஜெண்டினா மொழியில் மொட்டு என்று அர்த்தம்) உடற்பயிற்சி, வேட்டை, மீன் பிடித்தல், மலையேறுதல் போன்றவற்றில், மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். ( இருப்பினும் எந்நேரமும் ஆக்ஸிஜன் இன்ஹேலரை வைத்திருப்பார்.)
1947ல் சேகுவாரா பியுனோஸ் எய்ரஸ் பலகலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். 1952ல் மருத்துவப் பட்டம் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. மாணவப் பருவத்தில் அரசியலில் ஈடுபட்டு பெரோன் ஆட்சிக்கு எதிராக புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கெடுத்திருக்கிறார். மருத்துவக்கல்லூரி இறுதியாண்டில் நண்பர் ஒருவருடன் கல்விச் சுற்றுலா என்று வெளியே சென்றிருக்கிறார். அர்ஜெண்டினா ராணுவத்திற்கான மனிதத்தேவைகளிலிருந்து தப்பிக்கவே அப்படி சென்றார் என்று தெரிய வருகிறது. இருந்தாலும் அந்த பயணத்தை அவர் சாகசங்கள் நிறைந்ததாக மேற்கொண்டிருக்கிறார். மோட்டார் சைக்கிளிலேயே அண்டஸ், சிலி, பெரு, அமேசானின் மேல்புறம், கொலம்பியா, வெனிசுலா சென்றிருக்கிறார். இறுதியாக மியாமியில் இருந்து அமெரிக்க அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார். மருத்துவப் பட்டம் பெற்ற பின்பும் இதே போன்று ஒரு பயணத்தில் கவுதமாலாவிற்கு சென்று உள்நாட்டு அரசியலில் பங்கு பெற்றிருக்கிறார்.
கம்யூனிச ஆதரவாளரான ஜேக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில்(1951-54) சேகுவாராவின் பங்கு முரண்பாடுகளோடு இருக்கிறது. திருப்திகரமான முடிவுக்கு வரமுடியவில்லை. அர்பென்ஸோடு அவருக்கு பழக்கமில்லை என்றாலும், பொருளாதார தேவைகளுக்காக அர்பென்ஸின் கடைசி நாட்களில் (ஜூன் 1954)கவுதமாலா அரசாங்கத்தில் ஒரு மருத்துவச் சேவகனாக பணிபுரிந்திருக்கிறார். கவுதமாலா அரசியலில் அவரது பங்கு என்னவாக இருந்தாலும், அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்திருக்கிறார். அமெரிக்காவை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்.
அர்பென்ஸ் அரசு வீழ்ந்த பிறகு சேகுவாரா மெக்ஸிகோவிற்கு நகர்ந்திருக்கிறார். மார்க்சிஸ்ட் பாப்புலர் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவரான வின்செண்ட் லொம்பர்டோ டோலெடனோவுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். லொம்பர்டோ சேகுவாராவிற்கு இரண்டு பொறுப்புகளை மெக்ஸிகோவில் பெற்று தந்ததாக உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று, அரசு பொது மருத்துவமனையில் டாக்டர். இன்னொன்று தேசீய பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவின் ஆசிரியர். 1956 கோடைக்காலத்தில் ஒருநாள் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் காஸ்ட்ரோ சேகுவாராவை எதேச்சையாக சந்திக்கிறார். காஸ்ட்ரோ தன்னுடைய அரசியல் சிந்தனைகளையும், கியூபாவை ஆக்கிரமிப்பது குறித்த திட்டத்தினையும் கோடிட்டு காண்பித்திருக்கிறார். கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்ட சேகுவாரா மருத்துவத் தகுதியின் பேரில் கொரில்லாப் படையில் இணைய ஒப்புக் கொண்டார். ஸ்பானிய குடியரசின் ஜெனரல் அல்பெர்ட்டோ பயோ கிரெட் மேற்பார்வையில் கொரில்லாப் பயிற்சி பெற்றார்.
ஜூலை 1956ல், அப்போதே மிக முக்கியமானவராய் கருதப்பட்ட சேகுவாரா உட்பட காஸ்ட்ரோவின் சதிகார கூட்டாளிகள் கியூப அரசாங்கத்தை அப்புறப்படுத்தும் காரியத்தில் சம்பந்தப்பட்டதாக மெக்ஸிகன் பாதுகாப்பு காவலாளிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். ஜூலை 25ம் தேதி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதுவே டிசம்பர் 1956ம் தேதி கிரான்மா இலட்சிய பயணத்திற்கும், புரட்சிக்கான அறைகூவலுக்கும் காரணமாயிற்று. 82 மனிதர்களோடு கியூபாவில் காலடி எடுத்து வைத்த அவர்களில் 12 பேர் கொல்லப்படவோ, பிடிபடவோ செய்தார்கள். தப்பித்தவர்களில் ஒருவரான சேகுவாரா காயம்பட்டிருந்தாலும், உற்சாகத்துடன் செயல்பட்டிருக்கிறார். சியரியா மேய்ஸ்டிரா இயக்கம் பலம் பெற்றது. சேகுவாரா போராளியாகவும், இராணுவ தளபதியாகவும் உருவெடுத்தார். தொடர்ந்து கலகப்படையின் உயர்ந்த பதவியை அடைந்தார். எப்போதாவது அல்லது தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவராக செயல்பட்டார். கலகக்காரர்களின் பெரிய குழுவின் கமாண்டராக உயர்ந்து பிடல் காஸ்ட்ரோவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தார். 1958ல் ஓரியண்ட் மாகாணத்திலிருந்து மத்திய லாஸ்வில்லாஸ் மாகாணத்திற்கு அவர் தலைமை தாங்கி நடத்திய பயணத்தால் தலைநகரான சாந்தா கிளாராவை கைப்பற்ற முடிந்தது.
1959 புரட்சிக்குப் பிறகு சேகுவாரா கியூபாவிலேயே இருப்பதற்கு குடியுரிமை அளிக்கப்பட்டார். புதிய அரசாங்கத்தில் சேகுவாரா வகித்த முதல் பொறுப்பு ஹவானாவில் உள்ள லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தது. அவருடைய அதிகாரத்தின் கீழ் மோசமான போர்க்கைதிகளுக்கான விசாரணை நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட பொதுமக்களும், இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். புரட்சிகர கோட்பாட்டிலான நீதியின் அடிப்படையில் யாரையும் கைதுசெய்யவும், தண்டனை கொடுக்கவும் சேகுவாராவால் முடிந்தது. கம்யூனிச நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு முந்தைய பாடிஸ்டா அரசில் செயல்பட்டவர்கள் மீதான விசாரணையில் தனிப்பட்ட விருப்புகளோடு செயல்பட்டார். தேசீய இராணுவத்தை மக்கள் புரட்சிக்கான முக்கிய ஆயுதமாக உருவாக்குவதில் காஸ்ட்ரோவுக்கு துணையாக இருந்தார். இராணுவ உத்தரவு பிறப்பிக்கும் துறையின் தலைவராக இருந்த சேகுவாரா கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் கோட்பாட்டை ஏற்படுத்துவதில் கவனமாயிருந்தார். கியூபாவின் பொதுமக்களை போராளியாக உருவாக்கிய பெருமை அவரைச் சாரும்.
இராணுவம் அல்லாத துறையில் அவர் வகித்த முதல் பொறுப்பு தொழில் துறையின் தலைவராக இருந்தது. நிலச்சீர்திருத்தத்தில் தீவீரமாக இருந்தபோதிலும் அந்தப் பதவியில் இரண்டே மாதங்கள்தான்(செப்டம்பர்- நவம்பர் 1959) இருந்தார். 1959 நவம்பரில் தேசீய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கான தகுதிகள் இல்லாத போதும், திறமையான ஆலோசகர்களை வைத்துக்கொண்டு மிக விரைவில் அதன் நுட்பமான விஷயங்களிலும் தலையிட்டு திறம்பட நிர்வகித்தார். தேசியமயமாக்குவதிலும், பொருளாதாரத்தின் பன்முகத்தன்மைகளை மையப்படுத்துவதிலும் வேகம் காட்டினார். பணசுழற்சியினை 62 சதவீதத்திற்கு உயர்த்தி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி புரட்சியின் விளைவை மக்களுக்கு காட்ட முனைந்தார்.
1961ல் அவர் வர்த்தக அமைச்சராகி தேசத்தின் பொருளாதார நடவடிக்கைகளை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகளை எடுத்தார். தனியார் மூலதனம் குவிந்து விடாமல் தடுத்திட ஏற்பாடுகள் செய்தார். இறக்குமதிகளை குறைப்பதற்கு கட்டுப்பாடுகள் மிக்க லைசென்சு முறையைக் கொண்டு வந்து டாலரின் நடமாட்டத்திற்கு கடிவாளம் போட்டார். உயர்தர மற்றும் நடுத்தர பிரிவினரின் மீது வரியை கடுமையாக்கி தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார்.
பிறகு கியூபாவின் பொருளாதார விஷயங்களில் சேகுவாராவின் செல்வாக்கு நிதானமாக அதிகரித்தது. 1960ம் ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பா மற்றும் சோவியத்திற்கு பொருளாதார குழு ஒன்றோடு சென்றார். கியூபாவின் மூலதனப் பொருட்களுக்கான வர்த்தக உடன்பாடுகளில் வெற்றி பெற்றார். மேலும் பல நாடுகளுக்கு வர்த்தக ரீதியான பயணங்கள் மேற்கொண்டார். 1961ல் நடந்த பண்ட்டா டெல் எஸ்டே சந்திப்பு மற்றும் 1964ல் நடந்த வர்த்தகம் மற்றும் முன்னேற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாடு உட்பட பல சர்வதேச மாநாடுகளிலும் கலந்து கொண்டார். இரணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும் சேகுவாரா ராணுவ உடையையே அணிந்து கொள்கிறார். 1963 டிசம்பரில் பினார் டெல் ரியொ மாகாணத்தில் உள்ள இராணுவத்திற்கு தலைமை தாங்கி ஒரு படையெடுப்பு நடத்த இருந்ததாக தெளிவற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இரக்கமற்ற, ஆதாயங்களை நோக்கும் மனிதரான சேகுவாரா மேற்கத்திய கலாச்சாரத்திற்கு பழக்கமாயிருந்தார். சியரியா மேஸ்ட்ரா நாட்களில் வீரர்களுக்கு சார்லஸ் டிக்கன்ஸ், பிரெஞ்ச் எழுத்தாளர் அல்போன்ஸ் டெடெட், கியூபாவின் புரட்சிகர கவிஞர் மார்ட்டி மற்றும் சிலி நாட்டு கம்யூனிச கவிஞர் பாப்லோ நெருடாவின் எழுத்துக்களை வாசித்துக் காட்டுவாராம். நல்ல உணவு, பிராந்தி, சிகரெட்டுகளுக்கு பிரியம் கொண்டவராக இருந்திருக்கிறார். மென்மையாக பேசக்கூடியவராக இருந்திருக்கிறார். இருந்தாலும் குளிப்பது பிடிக்காமல், உதாசீனமான தோற்றத்தோடுதான் காட்சியளிப்பார்.
பெருவிய நாட்டு ஹில்டா கெடியா அக்கோஸ்டாவோடு நடந்த அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பிறந்த ஒரு குழந்தை தாயோடு இருக்கிறது. அலெய்டாவோடு சிலகாலம் சேர்ந்து வாழ்ந்த பிறகு 1959 ஜூன் 3ம் தேதி சேகுவாரா அவரை திருமணம் செய்து கொண்டார். புரட்சி நடந்த சமயத்தில் அலெய்டா கணிசமான காலத்தை சியரியா மேஸ்ட்ராவில் கழித்திருக்கிறார். 1959 செப்டம்பரில் கம்யூனிச செல்வாக்கு உள்ள லத்தீன் அமெரிக்க மகளிர் காங்கிரசில் உறுப்பினரானார். மற்ற இடதுசாரி அமைப்புகளிலும் அவரது பேர் அடிபடுகிறது. 1960ல் ஒரு குழந்தை பிறந்தது. சேகுவாரா பிரெஞ்ச் மற்றும் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார்.
=====
ஆவணம் முடிவடைகிறது.
இந்த ஆவணத்தில் சேகுவாராவின் நடவடிக்கைகளைப் பற்றி மட்டுமே சொல்லப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து அவருடைய சிந்தனைகளின் சிறு வெப்பத்தை மட்டுமே ஸ்பரிசிக்க முடியும். உரைகள், எழுத்துக்கள், அறைகூவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேகுவாராவின் மீது ஏற்பட்டிருந்த எரிச்சல் தெரிகிறது. காஸ்ட்ரோவின் மீது உள்ள வன்மம் தெரிகிறது. கியூபாவின் மீதுள்ள வெறி தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிசத்தின் மீதுள்ள மிரட்சியும் தெரிகிறது. இந்த குறிப்புகளோடு சேகுவாராவைப் பற்றி சி.ஐ.ஏ இன்னொரு தகவலையும் சேமித்து வைத்திருந்தது. அது உண்மையானது. சேவால் ஒரு இடத்திலேயே தொடர்ந்து இருந்திட முடியாது என்பதுதான் அது.
சேகுவாராவுக்குள் என்ன ஓடிக் கொண்டிருந்தது என்பதை ஓரளவுக்கு புரிந்து வைத்திருந்தவர் காஸ்ட்ரோ மட்டுமே. அவராலும் சேகுவாராவை தடுத்த நிறுத்திட முடியாது.
1964 டிசம்பர் 9ம் தேதி கியூபாவின் தலைநகரான ஹவானாவிலிருந்து புறப்பட்டு நியூயார்க் சென்றார். ஐ.நா சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆற்றிய உரை உலகை திரும்பிப் பார்க்க வைத்திருந்தது. “நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைன். நான் யருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்க தேச பக்தன். இங்கே வந்திருக்கும் லத்தீன் அமெரிக்க முக்கிய மனிதர்கள் யாரும் தங்களை நான் அவமதித்து விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதாவது ஒன்றின் விடுதலைக்கு எந்த பலனும் கேட்காமல், யாரையும் பலி கேட்காமல் நான் என்னையே தருவதற்கு தயாராக இருக்கிறேன்” என்னும் பிரகடனத்தில் தீர்க்கமான லட்சியம் இருந்தது.
எட்டு நாட்கள் அங்கிருந்த சே 17ம் தேதி புறப்பட்டு கனடா வழியாக அல்ஜீரியா சென்றார். ஆசிய ஆப்பிரிக்கா நாடுகளின் ஒற்றுமைக்கான அமைப்பில் இரண்டாவது பொருளாதாரக் கருத்தரங்கில் பங்கேற்றார். அங்கிருந்து காங்கோ, கினியா, கானா, தாமோ ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பாரிஸ் வழியாக தான்சானியா சென்றார். தொடர்ந்து கெய்ரோவுக்கும் மீண்டும் அல்ஜீரியாவுக்கும் சென்றார். மீண்டும் கெய்ரோ சென்று அங்கிருந்து கியூபாவிற்கு திரும்பியிருந்தார். மொத்தமாய் மூன்று மாதங்கள்.
ஏராளமான அனுபவங்களை அவர் பெற்றிருந்தார். ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் உள்ள புரட்சிகர சக்திகளையும், அங்குள்ள நிலைமைகளையும் பற்றி அறிந்துகொண்டிருந்தார். காங்கோவில் லூமும்பாவின் கொலைக்குப் பிறகு அவரது ஆதரவாளர்கள் நடத்துகிற கொரில்லா நடவடிக்கைகள், அல்ஜீரிய வீரர்கள் தங்கள் மண்ணிலிருந்து பிரான்ஸை விரட்டியடித்த நாட்கள், லத்தீன் அமெரிக்காவில் இயங்கிவந்த கொரில்லா குழுக்கள் எல்லாம் அவருக்குள் மேலும் வேகத்தை உருவாக்கியிருந்தது.
இன்னொரு கியூபாவாக ஒரே ஒரு லத்தீன் அமெரிக்க நாடு சிலிர்த்துக் கொண்டால் போதும். அதுவே பொறியாகி விடும். ஏகாதிபத்தியத்தை சுற்றி தீ பரவச் செய்ய வேண்டும் என்கிற வேட்கை அவரைத் துரத்திக் கொண்டு இருந்தது.
வட்டமிட்டுக் கொண்டிருக்கிற கழுகின் பார்வையை அவர் உணர்ந்து, அதிலிருந்து தன்னை மறைத்துக் கொள்கிறார். கொரில்லாவின் முதல் நடவடிக்கை அதுதான்.
4
3ம் அத்தியாயம்
“நாம் அந்த நிலங்களை விற்க வேண்டும். அவர்களால் வாங்க முடியாத போது, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நாம் அவர்களுக்கு கடன்கள் வழங்கி நிலங்களை வாங்கச் செய்யலாம்.”
” இது மிகவும் பிற்போக்குத்தனமான கருத்து’. என்று சே எரிச்சலுடன் தொடர்ந்தார். “நாம் நிலங்களை எவ்வாறு உழுபவர்களிடம் விற்க முடியும்? சமவெளியில் வாழ்கிற மனிதர்களைப் போலவே நீங்களும் பேசுகிறீர்கள்.”
நான் எனது பொறுமையை இழந்தேன். “நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள். அவர்களுக்கு நிலங்களை இலவசமாக கொடுக்க வேண்டுமென்றா? மெக்சிகோவில் செய்தது போல இங்கேயும் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கட்டும் என்றா விரும்புவார்கள். ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கினால்தான் அதன் அருமை மனிதர்களுக்குப் புரியும்”
“சீ..தேவடியா மகனே” சே கத்தினார். அவரது கழுத்து நரம்புகள் புடைத்து தெரிந்தன.
-தனக்கும், சேவுக்கும் நடந்த உரையாடல் பற்றி எழுத்தாளரும் அரசியல் பிரமுகருமான் சியாரா.
(3)
எல்லாம் இயல்பாய் நடந்துகொண்டிருப்பதாக தோன்றினாலும் ஒரு நிசப்தம் இருந்தது கியூபாவில். மெல்ல மெல்ல எல்லோர் கண்ணிலும் வித்தியாசமானதாய் தட்டுப்பட ஆரம்பித்தது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு மார்ச் 14ம் தேதி கியூபாவிற்கு திரும்பிய சேகுவாராவை அதற்குப் பிறகு எங்கும் பார்க்க முடியவில்லை. நாட்டின் உயர்ந்த பொறுப்புகளிலிருந்த மனிதர் அவர். நடவடிக்கைகளாலும், சிந்தனையாலும் உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் வைத்திருந்த புரட்சிக்காரர். அவர் இல்லாத இடம் எப்படி தெரியாமல் போகும். இருக்கிற இடம்தான் தெரியாமல் தவித்துப் போனார்கள்.
பிடிபடாத சேவின் குணாம்சங்கள் அவரைப் பற்றி தீவிரமாக யோசிக்க வைத்தன. சே என்ன ஆனார் என்பதை ஆராய்வதில், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில் எங்கும் குழப்பம் இருந்தது. லண்டனில் ஈவினிங் போஸ்ட் பத்திரிக்கை சே சீனாவில் இருக்கிறார் என எழுதியது. உருகுவே வாரப்பத்திரிக்கை மார்ச்சாவில் சே ஒரியண்டே மாநிலத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு எழுதுகிறார் என செய்தி வந்தது. வியட்நாமில் இருக்கிறார், கவுதமாலாவில் இருக்கிறார், வெனிசூலாவில் இருக்கிறார், கொலம்பியாவில் இருக்கிறார், அர்ஜெண்டினாவில் இருக்கிறார், ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றில் இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. அவர் ஒரு நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவர் இல்லை என்பதும், ஒரு சர்வதேச புரட்சிக்காரர் என்பது மட்டுமே இந்த தவறான செய்திகளில் இருக்கிற உண்மை.
பெறுவதற்கு ஒன்றும் இல்லை. இழப்பதற்கு நிறைய இருக்கின்றன.-சே
உண்மை என்ன என தெரிந்து கொள்வதைக் காட்டிலும் இதுதான் சந்தர்ப்பம் என ஏகாதிபத்தியக் குரல்கள் வதந்திகளையும், அவதூறுகளையும் வேகவேகமாக கியூபாவிற்கும், பிடலுக்கும் எதிராக பரப்ப ஆரம்பித்தன. ‘சே, கைது செய்யப்பட்டு விட்டார்’, ‘சே கொலை செய்யப்பட்டு விட்டார்’, ‘கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்’ என்றெல்லாம் சரமாரியாக பேசப்பட்டன. எழுதப்பட்டன. ‘கியூப ரகசியங்களை பத்து மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு சே தலைமறைவு ஆகிவிட்டார்’ என்று அமெரிக்க பத்திரிக்கை நியுஸ்வீக் 1965 ஜூலை 9ம்தேதி எழுதியது. கியூப மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஜூன் 17ம் தேதி பிடலிடம் சேகுவாராவின் இருப்பிடம் பற்றிக் கேட்கப்படுகிறது. “எங்கே இருக்கிறார் என்று கூறமுடியாது. ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறார்” என்றார். அவரைப்பற்றி தகவல்கள் எப்போது தெரியும் என்று கேட்டதற்கு “சேகுவாரா எப்போது விரும்புகிறாரோ அப்போது தெரியும். இதில் நாங்கள் என்ன சொல்ல முடியும். சே எப்போதும் புரட்சிகர வழியில் வந்தவர். அதேவழியில்தான் பணியாற்றுவார் என நினைக்கிறோம்” என்றார்.
மீண்டும் பத்திரிக்கைகளில் வேறொரு கோணத்தில் இருந்து தாக்குதல்கள் ஆரம்பித்தன. ‘சேவுக்கும் கியூப தலைவர்களுக்கும் மோதல்’, ‘பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்’, கம்யூனிச ஆட்சியில் மனிதர்கள் தடம் தெரியாமல் அழிந்து போவார்கள்’ ‘அதுகுறித்து விளக்கமும் தர மாட்டார்கள்’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
வதந்திகளை உற்பத்தி செய்கிற, எங்கும் துப்பி விடுகிற ஒரு அமைப்பு இதற்கு பின்னால் இருக்கிறது. அது ரகசிய சதிவேலைகளை எப்போதும் செய்துகொண்டே இருக்கிறது. சேகுவாராவைப் பற்றி சி.ஐ.ஏவின் அடுத்த ஆவணம் தயாராகிறது. இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசுகின்றன அந்த காகிதங்கள். சேவின் இருப்பிடத்தை அறியமுடியாத கழுகுகள் ஆத்திரத்தில் இரைகின்றன.
=====
சி.ஐ.ஏ
உளவுத்துறை
1965 அக்டோபர், 18.
‘சேகுவாராவின் வீழ்ச்சியும், மாறும் கியூப புரட்சியின் முகமும்’
எர்னஸ்டோ சேகுவாராவை கீழிறக்குவது என்னும் காஸ்ட்ரோவின் விருப்பம், கடந்த வருடத்திலிருந்து கியூபா அதன் கொள்கைகளிலிருந்து மாறிக்கொண்டு இருப்பதையே காட்டுகிறது. அன்றாட நடவடிக்கையில் சோவியத் சொல்கிற ஆலோசனைகளை விடாமல் எதிர்த்துக் கொண்டு வந்ததால்தான் அதிகாரத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சோவியத் மீது அவருக்குள்ள வெறுப்பு கியூபாவின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் பிரதிபலித்திருக்கிறது.
கியூபாவின் தீவீர புரட்சிகர பிரச்சாரகராக இருந்த சேகுவரா, சீனாவுக்கும் சோவியத்திற்கும் உள்ள பிரச்சினையில் காஸ்ட்ரோ சோவியத்தின் பக்கம் சாய்வது பிடிக்கவில்லை. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் புரட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்னும் கியூபாவின் விருப்பம் குறைந்து கொண்டே வருவதையும் அவர் வெறுத்தார். இது போன்ற முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஆவணம் அந்த இரண்டு மனிதர்களுக்கு இடையிலான முரண்பாடுகளில் கவனம் செலுத்துகிறது.
காஸ்ட்ரோவுக்கு ஆதரவாக இருக்கும் வரைக்கும், சேகுவாரா கியூபாவின் பொருளாதாரத்தை வடிவமைக்கிற சிற்பியாக கருதப்பட்டார். அவரது பொருளாதாரத் திட்டங்கள் தவறு என்று நிருபணமாயின. மற்ற கொள்கைகள் கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்தன.
அழிவுத்தன்மை கொண்ட சேகுவாராவின் திட்டங்களை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு இப்போது காஸ்ட்ரோவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே சேகுவாரா வேகமான தொழில்மயமாக்கலையும், எல்லாவற்றையும் தேசீய மயமாக்குவதையும் ஊக்கப்படுத்தி வந்தார். ஒரு பயிற்சியளிக்கப்பட்ட பொருளாதார நிபுணராக இல்லாவிட்டாலும் கார்லோஸ் போன்றவர்களின் ஆட்சேபணைகளையும் கடந்து, காஸ்ட்ரோவை சம்மதிக்க வைத்து தொழில்மயமாக்கலை துரிதப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை உடைப்பதற்காக விவசாய உற்பத்தியிலிருந்து தொழிற்சாலைகளுக்கான முதலீடுகளுக்கு கியூபாவின் பொருளாதாரத்தை திசை திருப்பி இருக்கிறார். சேகுவாராவின் இந்த கொள்கைகளால் கியூபாவின் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு சீரழிந்திருக்கிறது.
சேகுவாராவுக்கு பிரான்சு நாட்டைச் சேர்ந்த கம்யூனிச சித்தாந்த அடிப்படை கொண்ட பொருளாதார நிபுணரான சார்லஸ் பெத்தல்ஹேம் முக்கிய எதிரியாக இருக்கிறார். காஸ்ட்ரோ அழைத்ததன் பேரில் பெத்தல்ஹேம் பலமுறை கியூபாவிற்கு வந்து பொருளாதார நடவடிக்கைகள் விவசாயத்தைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். ஆனாலும் சேகுவாரா தனது நிலைபாடுகளில் உறுதியாக இருக்கிறார் 1964 மார்ச்சில், சேகுவாரா மிகத் தெளிவாகச் சொல்கிறார். மையப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கோட்பாடுகளை அனைத்து முனைகளிலும் நின்று பாதுகாப்பது நமது மிக முக்கிய கடமை என்கிறார். கியூபா தனது தத்துவார்த்த கொள்கையிலிருந்து விலகிவிடாமல் இருப்பதற்கு இந்த மையப்படுத்துதல் தேவையானதாய் சேகுவாரா கருதுகிறார். ஆனால் பெத்தல்ஹேம் அனைத்து முனைகளிலும் தேவையில்லை, தனிமனித உற்பத்தியை பெருக்குவதற்கு கொஞ்சம் தாராளமாக இருப்பது சரியானதாயிருக்கும் என்கிறார்.
=====
இந்த ஆவணம் இப்படியே நீள்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகள், வெளியுறவுக் கொள்கைகள் குறித்து நிறைய பேசிவிட்டு, சேகுவாராவின் இருப்பிடம் அறிய முடியாத எரிச்சலோடு தொடர்கிறது.
=====
சேகுவாரா மார்ச் 13ம் தேதி ஹவானா வந்தார். காஸ்ட்ரோ விமான நிலயத்திற்கு சென்று வரவேற்றார். ஹவானா பத்திரிக்கைகளின் மூலம் அவர் மார்ச் 20ம் தேதி ஒரு பொது இடத்தில் பேசியிருப்பதாக தெரிய வருகிறது. அதற்குப் பிறகு யார் கண்ணிலும் தட்டுப்படவில்லை. இந்த அதிகாரப் போட்டியின் முதல் விரிசல் ஜூன் மாதத்தில் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. சேகுவாராவின் ஆதரவாளராயிருந்த தேசிய வங்கியின் இயக்குனர் சல்வாடர் அதிலிருந்து அகற்றப்பட்டு ஹவானா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படுகிறார்.
ஜூலை 27ம் தேதி காஸ்ட்ரோவின் பேச்சு கியூபாவை சேகுவாராவின் பார்வையிலிருந்து அப்படியே திருப்புவதாக இருக்கிறது. சேகுவாராவின் இறுக்கமான கொள்கைகளுக்கும், பெத்தல்ஹேமின் நெகிழ்வுத்தன்மையான கொள்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வரும்போது காஸ்ட்ரோ சேகுவாராவையே ஆதரித்து வந்தார். ஆனால் அவர் இப்போது தனது நிலையில் பெரும் மாற்றங்களை கொண்டிருக்கிறார். பழைய முறையிலிருந்து முழுமையான மாற்றங்களும், சீர்திருத்தங்களும் கொண்டு வரவேண்டும் என்கிறார். அதிகாரத்தை மையப்படுத்திய சேகுவாராவின் நடவடிக்கையிலிருந்து அதிகாரப்பரவலுக்கான கொள்கைகளை காஸ்ட்ரோ முன்மொழிந்தார். “மாகாணத்தின் ஒரு நகரத்தில் நின்று ஒரு நாய் சேட்டைகள் செய்து கொண்டிருக்குமானால், அங்கே பொறுப்பில் உள்ளவர்கள் அதை அகற்றியே ஆக வேண்டும்” என்றே சொன்னார்.
செப்டம்பர் 28ம் தேதி காஸ்ட்ரோவின் பேச்சு இன்னும் தெளிவாக இருக்கிறது. “நான் உள்ளூர் வளர்ச்சியையும், நிர்வாகத்தையும் மட்டுமே ஆதரிக்கிறேன்”. சேகுவாராவின் தீவீரமான கொள்கைகளுக்கு இது நேர் எதிரானது.
அக்டோபரில் நடந்த கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியின் கூட்டம் சேகுவாராவின் கொள்கைகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் சாதகமானதாக இல்லை. நெகிழ்வுத்தன்மையுள்ள புதிய பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவான வேறு பொறுப்பாளர்களை நியமிக்கிறது.
அக்டோபர் 2ம் தேதி கூட்டமொன்றில் சேகுவாரா எழுதிய கடிதம் ஒன்றை காஸ்ட்ரோ வாசிக்கிறார். அதன் முக்கிய சாராம்சம் சேகுவாரா தனது புரட்சிகரத் தன்மைகளை வேறெங்காவது உபயோகப்படுத்தப்போவதாக சொல்லியிருப்பதுதான். ஒரு இடத்தில் சேகுவாரா இப்படி எழுதுகிறார்: “கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை நான் செய்கிறேன்”. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. புரட்சியை ஏற்றுமதி செய்யும் காஸ்ட்ரோவின் திட்டமும், பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்களும் சேகுவாரவின் வீழ்ச்சிக்கு காரணமாகி இருக்கிறது. இனி உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் கியூபா சோவியத்தின் புத்திமதிகளின்படிதான் நடந்து கொள்ளும்.
இந்த புதிய அணிசேர்க்கையால் கியூபாவிற்கும் சீனாவுக்கும் ஏற்கனவே இருந்த உரசல்கள் மேலும் அதிகரிக்கும். கொள்கை ரீதியான கம்யூனிஸ்ட் கட்சிகளை இனி ஆதரிக்கும் என்றும் பீகிங் ஆதரவு பெற்ற போராளிக்குழுக்களை ஆதரிக்காது என்றும் போன நவம்பரில் லத்தீன் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கியூபா சொல்லியிருக்கிறது. இதுகுறித்து விளக்குவதற்காகவே சேகுவாரா இந்த பிப்ரவரியில் சீனா சென்று வந்ததாகவும் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும் சீனா, கியூபாவை இனி திரிபுவாதிகள் என்றே அழைக்கும். இதுவரை வெளிப்படையாக அப்படி அறிவித்ததில்லை. சேகுவாராவின் வீழ்ச்சியோடு கியூபாவின் புரட்சி புதிய பரிணாமம் பெறுகிறது. கியூபாவின் வெளியுறவுக்கொள்கையில் முக்கிய மாற்றம் ஏற்படுவதில் போய் முடிகிறது.
=====
ஆவணம் முடிகிறது.
இந்த ஆவணம் ஏகாதிபத்தியத்தின் அபிலாசைகளால் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஒரு சின்னஞ்சிறு நாடு, அதுவும் தனக்கு மிக அருகில் இருந்துகொண்டு புரட்சி நடத்தி சோஷலிச பாதையில் காலடி எடுத்து வைப்பது தாங்க முடியவில்லை. கியூபாவில் சோஷலிசத்தை எப்படி தீர்த்து கட்டுவது என்கிற சதியின் கைகள் இந்த ஆவணத்தில் ஒளிந்திருக்கின்றன. புரட்சி நடத்தி, பழைய உலகிலிருந்து ஒரு புதிய உலகிற்கு காலடி எடுத்து வைக்கிற போது ஏற்படுகிற சிரமங்களை கொச்சைப்படுத்துகிறது. தானே அந்த நாட்டிற்கு தடைகளை விதித்து விட்டு அதை அந்த நாடு சமாளித்து எழுந்து நிற்பதை பார்க்க முடியாமல் பொருமுகிறது. தலைவர்களுக்குள், கொள்கைகளுக்குள் முரண்பாடுகள் என்று அதனை ஊத ஆரம்பிக்கிறது. கியூப புரட்சிக்குப் பிறகு சி.ஐ.ஏ பலமுறை காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. ஹாவானாவின் மீது விமானத்தில் பறந்து குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. அதன் ஏஜண்டுகள் கியூபாவிற்குள் நுழைந்து நாசவேலைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த ஆவணமும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
காஸ்ட்ரோவுக்கும் சேகுவாராவுக்கும் இடையில் நுழைந்து சோவியத்துக்கும், சீனாவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் வரை அதுபாட்டுக்கு பேசிக்கொண்டே இருக்கிறது. தான் எதுவெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் பைத்தியம் பிடித்தது போல எழுதி தள்ளியிருக்கிறது.
ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக, சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும். எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும். அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும். -சே
பைத்தியம் என்று சொல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. சேகுவாராவை சோவியத்தின் எதிர்ப்பாளராக சித்தரிக்கிறது இந்த ஆவணம். ஆனால் அமெரிக்காவிலேயே இருந்து கொண்டு 1964 டிசம்பர் 11ல் ஐ.நா சபையில் சேகுவாரா பேசியதை எங்கே கொண்டு போய் ஒளித்துவைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவை சுட்டிக்காட்டி உலகறிய சொன்னார் “…நாங்கள் மார்க்சீய லெனினியவாதிகளாக இருந்தாலும் எங்களது நாடும் நடுநிலை நாடு என்று பிரகடனம் செய்கிறோம். ஏனெனில் நடுநிலை நாடுகளும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகின்றன. நாங்கள் எங்களது மக்களுக்கு உன்னதமான வாழ்க்கையை அமைத்துத் தர விரும்புகிறோம். ஏகாதிபத்தியமோ ஆத்திரமூட்டிக் கொண்டு இருக்கிறது…” அமெரிக்கா சார்பாக பேசிய ஸ்டீவன்சன் சேகுவாராவை தாக்கி பேசினார். அமெரிக்க விதித்த தடையால் கியூபாவுக்கு நேர்ந்த பொருளாதாரக் கஷ்டங்களை பற்றி பேசியதற்காகவும், கம்யூனிஸ்டாக இருப்பதற்காகவும் குற்றம் சாட்டினார். சேகுவாரா பதில் சொன்னார். “கியூபாவுக்கு எதிரான அமெரிக்கப் பொருளாதாரத் தடையின் உண்மை வரலாற்றை நான் மீண்டும் கூறப்போவதில்லை. சோஷலிச நாடுகளின் சகோதர உதவியால், குறிப்பாக சோவியத் யூனியன் உதவியால் நாங்கள் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை வென்று வருகிறோம். எதிர்காலத்திலும் வெல்லுவோம் என்று கூறிக் கொள்கிறேன்”. சோவியத் யூனியன் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த ஒரு மனிதரைத்தான் சி.ஐ.ஏ ஆவணம் தன் இஷ்டம் போல சிதைக்க முயற்சிக்கிறது.
புரட்சி பற்றிய சில விமர்சனங்கள் என்னும் தனது கட்டுரையில் சே எழுதுகிறார்… “கியூபாவை மண்டியிடச் செய்ய வேண்டுமென்று விரும்பிய எதிரிகள் கியூபாவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்திய போது சோவியத் துறைமுகங்களில் இருந்து தேவையான அளவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சோவியத் கப்பல்கள் கியூபா நோக்கி புறப்பட்டன. கியூபாவை அடிபணியச் செய்ய வேண்டுமென்று விரும்பிய எதிரிகள் சர்க்கரை வாங்க மறுத்த போது சோவியத் வாங்கிக் கொண்டது. அமெரிக்க மண்ணிலிருந்து செலுத்தப்பட்ட படையெடுப்பு ஆயத்தங்களை சோவியத்தின் எச்சரிக்கை தடுத்து நிறுத்தியிருப்பதால்தான் கியூபா இன்று இறையாண்மையோடு இருக்க முடிகிறது”. சேவின் இந்த வார்த்தைகள் சி.ஐ.ஏவின் வார்த்தைகளை சுட்டு வீழ்த்துகின்றன.
சேகுவாராவை நாய் என்பது போல பிடல் சொன்னதாக எழுதுகிறது. அந்த இரண்டு உள்ளங்களுக்கு இடையில் நிகழ்ந்திருந்த அன்பின் உறவுகள் குறித்து உளவாளிகளுக்கு என்ன தெரியும்? “பிடல் என்னைவிட சிறந்த மூளையுடையவனை கண்டுபிடித்து விடலாம். ஆனால் அவரது கருத்துக்களோடு அதிகம் ஒத்துப் போகிற ஒருவனை அவர் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல” என்று சேகுவாராவே சொல்கிறார். சோவியத் எழுத்தாளர் அனஸ்டஸ் இவினோவிச் மிகோயின் இன்னும் அழுத்தமாகச் சொல்கிறார். “பூரண பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல் என்ற குணங்கள் ததும்பிய அந்த சிறந்த நட்பைக் கண்டுகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த இரண்டு புரட்சிக்காரர்களின் தனிப்பட்ட குணங்கள் முற்றிலும் மாறுபட்டவை. ஆனால் ஒருவர் மீது ஒருவர் உயர்ந்த கருத்துக்களை உடையவர்களாய் இருந்தனர்.”
அற்புதமான அந்த தோழமையை சேகுவாரா எழுதி கொடுத்திருந்தார். மேலே படித்த இந்த சி.ஐ.ஏ வின் ஆவணத்தில் கூட அக்டோபர் 2ம் தேதி ஒரு கூட்டத்தில் காஸ்ட்ரோ அதை வாசித்ததாக ஒரு தகவல் வந்திருக்கிறது. அதில் ஒரு வரியை மட்டும் சொல்லி கயமைத்தனத்தோடு அர்த்தம் சொல்கிறது. அன்பும், மனிதநேயமும் கொண்ட இதயத்திற்கு அதன் அர்த்தங்கள் யாரும் சொல்லாமலேயே விளங்கும். சேகுவாரா மிக அமைதியான குரலில் இதயத்திலிருந்து பேசுகிறார். உலகை நேசித்த அவரது கனவுகள் அதில் வடிக்கப்பட்டிருந்தன. எப்பேர்ப்பட்ட காரியத்திற்காக, தன்னை அர்ப்பணிக்க இருக்கிறார் என்பதை சொல்கிறார். யுத்த களத்துக்கு புறப்பட்டுவிட்ட அவர் பிரியா விடையோடு பிடலுக்கு எழுதிய கடிதம் அது.
5
4ம் அத்தியாயம்
பிடலுக்கு மட்டும் அவர் எழுதியிருக்கவில்லை. தாய் தந்தையருக்கும், குழந்தைகளுக்கும், மனைவிக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவைகளில் பரிபூரண தியாகம் நிறைந்திருக்கிறது. 1965லிருந்து 1967ற்குள் வேறு வேறு தருணங்களில் எழுதப்பட்டவையாயிருந்த போதும் எழுத்துக்களில் அதே உறுதி படிந்திருக்கிறது. யுத்தகளத்திற்கு புறப்பட்டுவிட்ட ஒரு புரட்சிக்காரனின் இதயம் கிடந்து துடித்துக் கொண்டிருக்கிறது. மரணத்தை அழைத்துக் கொண்டு அவர் டான் குயிக்சாட்டின் ரோசினாண்டே குதிரையில் சென்று கொண்டிருக்கிற காட்சி கண்முன்னே விரிகிறது. உலகை குலுக்குகிற வெடிச் சத்தத்தை அவரது துப்பாக்கி அடைகாத்து கொண்டிருக்கிறது.
பிடலுக்கு எழுதிய கடிதம் :
=====
ஹவானா
பிடல்,
இந்த நேரத்தில் எனக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோணியாவின் வீட்டில் சந்தித்தது, உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது, புறப்பட தயாரானபோது ஏற்பட்ட பரபரப்பு. இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போதுதான் உண்மை உறைத்தது. பிறகு எல்லாம் புரிந்து போனது. புரட்சியின் போது ஒருவர் இறக்கவும் செய்யலாம் அல்லது வெற்றியும் பெறலாம். வெற்றிக்கான பாதையில் பல தோழர்கள் இறந்து போனார்கள்.
இன்று நாம் பக்குவப்பட்டிருப்பதால் அவையெல்லாம் அத்தனை உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்கலாம். அந்த நிகழ்ச்சி திரும்புகிறது. கியூப புரட்சியின் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றி விட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.
கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், என்னுடைய அமைச்சர் பதவியிலிருந்தும், கமாண்டர் பொறுப்பிலிருந்தும், கியூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். கியூபாவுடன் சட்டரீதியாக எனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இவைகளைப் போல விலக்கவே முடியாத வேறு உறவுகள் இருக்கின்றன. அவைகளை என்னால் உதறிவிட முடியாது.
புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைக்கிற அர்ப்பணிப்போடும், முழு ஈடுபாட்டோடும் நான் கடந்த காலத்தில் பணிபுரிந்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய மோசமான தவறு ஒன்றுதான். சியரியா மாஸ்ட்ரோவின் ஆரம்ப நாட்களில் உங்கள் மீது மேலும் நம்பிக்கை வைக்காமலிருந்து விட்டேன். தலைமைக்கும், புரட்சிகரத்தன்மைக்கும் தகுதியான உங்கள் குணநலன்களை உடனடியாக புரிந்துகொள்ளவில்லை.
அற்புதமான நாட்களில் நான் வாழ்ந்திருக்கிறேன். கரீபீய சிக்கல் எழுந்த சோகமான ஆனால் வேகமான தருணங்களில் உங்களோடு சேர்ந்து மக்களின் பக்கம் நின்ற பெருமையை உணர்கிறேன். அந்த சமயத்தில் உங்களைப் போல எந்தவொரு தலைவரும் அவ்வளவு பிரமாதமாக செயல்பட்டிருக்க முடியாது. அபாயங்களையும், கொள்கைகளையும் சரியாக எடுத்துரைத்த உங்களை சரியாக புரிந்து கொண்டு எந்த தயக்கமுமின்றி பின்தொடர்ந்ததற்கு பெருமைப்படுகிறேன்.
என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும். நாம் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது.
சந்தோஷத்தோடும், வருத்தங்களோடும்தான் நான் இதனை செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான உலகத்தை கட்டி எழுப்புவார்கள் என்கிற தூய்மையான எனது நம்பிக்கைகளை இங்கு விட்டுச் செல்கிறேன். தங்கள் மகனாக என்னை வரவேற்ற மக்களை நான் விட்டுச் செல்கிறேன். இதுதான் உயிரை வேதனைப்படுத்துகிறது. புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையை கொண்டு செல்கிறேன். மக்களின் புரட்சிகரத்தன்மைகளைப் பெற்று செல்கிறேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகிற உணர்வை ஏந்திச் செல்கிறேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆழமான காயங்களை சரிசெய்கிறது.
கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்கியதைத் தவிர என் காரியங்களுக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. வேறோரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்ததற்கும், நீங்களே முன்னுதாரணமாய் விளங்கியதற்கும் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகளால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன்.
நம்முடைய புரட்சியின் வெளியுறவுக் கொள்கையோடு அடையாளம் காணப்பட்டவன் நான். எங்கிருந்தாலும் அப்படியே இருப்பேன். கியூப புரட்சியாளனுக்குரிய பொறுப்பை உணர்ந்தே இருக்கிறேன். அப்படியே நடந்து கொள்வேன். என்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் எதையும் விட்டுச் செல்லவில்லை என்று எந்த வருத்தமும் கிடையாது. சந்தோஷம்தான். வாழ்வதற்கு தேவையானவற்றையும், கல்வியையும் கொடுப்பதற்குமான ஒரு அரசு இருக்கிறது.
உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் அவை தேவையில்லை என நினைக்கிறேன். வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.
நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம்.
எனது முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.
சே
=====
பெற்றோருக்கு எழுதிய கடிதம் :
=====
அன்பிற்குரியவர்களே!
மீண்டும் என் கால்களுக்கடியில் ரோசினாண்டேயின் விலா எலும்புகளை உணர்கிறேன். கேடயத்தை கைகளில் ஏந்திக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பும் இதே போல விடைபெற்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அதில் நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டிருந்தேன். இன்று நான் அவ்வளவு மோசமான படைவீரன் அல்ல.
மேலும் நம்பிக்கையுள்ளவனாக நான் இருப்பதைத் தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை. என்னுடைய மார்க்சீயம் இன்னும் ஆழமானதாகவும், தூய்மையானதாகவும் ஆகியிருக்கிறது. தங்களை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு போராடும் மக்களுக்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் மட்டுமே தீர்வு என்று நம்புகிறேன். அதன்படியே நடக்கிறேன். பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்.
இதுவே முடிவாகக் கூட இருக்கலாம். நான் விரும்பாவிட்டாலும் கூட, எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படியிருந்தால் உங்களை கடைசி முறையாக தழுவிக்கொள்கிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன். அதை வெளிப்படுத்த எனக்குத் தெரியவில்லை. நான் எனது செயல்களில் மிகவும் உறுதியானவன். பலசமயங்களில் நீங்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை. இருக்கட்டும். இன்று என்னை நம்புங்கள்.
நொய்ந்து போன என் கால்களையும், ஓய்ந்து போன எனது நுரையீரல்களையும் மனவலிமையால் ஒரு கலைஞனின் நுட்பத்தோடு சரி செய்து வைத்திருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டின் இந்த சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள். சிலியா, ராபர்ட்டோ, மார்டின், பீட்ரிஸ், மற்றும் அனைவருக்கும் எனது முத்தங்கள்.
என் அன்பு தாய் தந்தையே, உங்களுக்கு கீழ்படியாத, இந்த தறுதலைப் பிள்ளையின் தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.
-எர்னஸ்டோ
=====
மனைவிக்கு எழுதிய கடிதம்:
=====
1966,நவம்பர் 11
பிரியமானவளே!
உன்னைப் பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்திற்காக எப்போதும் தியாகங்கள் செய்ய விரும்புகிற மனிதன் என்று என்னை நீ புரிந்து கொள்வாய்.
தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வறுமையையும் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன்.
உனக்கு அடுத்த கடிதம் எழுத நீண்ட காலம் ஆகலாம். காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும் எண்ணத்தால் உங்களோடு இருப்பேன்.
எனது அன்புக்குரிய மனிதர்களை, உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப் படுகிறேன். பிறநாடுகளில் கோடிக்கணக்கான மக்களைச் சுரண்டும் எதிரியோடு போரிடப் போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது.
உடல்நலத்தை கவனித்துக் கொள். குழந்தைகளை பார்த்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை மனைவியாக பெற்றதையும் என் வாழ்க்கையின் அற்புத விஷயங்களாக கருதுகிறேன்.
இந்தப் போராட்டத்தில் இறக்க நேருமானால் சாகும் தறுவாயில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.
-சே
=====
குழந்தைகளுக்கு எழுதிய கடிதம் :
=====
அன்புள்ள ஹில்டிடா, அலெய்டா, காமிலா, சிலியா, எர்னஸ்டோ ஆகியோருக்கு
இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கிற போது நான் உங்களோடு இருக்க மாட்டேன்.
என்னைப் பற்றி உங்களுக்கு அதிகம் நினைவிருக்காது. உங்கள் தந்தை தனது நம்பிக்கைகளுக்கு உண்மையாக செயல்படுகிறவன். தனது தத்துவத்திற்கு விசுவாசமானவன்.
நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வரவேண்டும். கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெற வேண்டும். அறிவுதான் இயற்கையை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியம் அல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது.
எல்லாவாற்றையும் விட, எப்போதும் உலகத்தின் எங்கேனும் யாருக்காவது நடக்கிற கொடுமைகளுக்கு வருத்தப்படுகிறவர்களாக இருங்கள்.
குழந்தைகளே, விடை கொடுங்கள். மீண்டும் உங்களை நான் காண்பேன் என நம்புகிறேன்.
அன்பு முத்தங்களும், அரவணைப்பும்.
-சே
=====
மூத்த மகளுக்கு எழுதிய கடிதம் :
=====
அருமையான ஹில்டிடா
இப்போது எழுதிக் கொண்டிருக்கிற இந்தக் கடிதம் உனக்கு ரொம்ப காலத்திற்கு பிறகு பெறுவாய். உன்னைப்பற்றியும், சந்தோஷமான உனது பிறந்த நாளை கொண்டாடுவதையும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ இப்போது பெரியவளக இருப்பாய். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல எழுத முடியாது.
தொலைதூரத்தில் நமது எதிரிகளோடு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறேன். இது ஒன்றும் மகத்தான விஷயமல்ல. எதோ ஒன்றை செய்கிறேன். நான் உன்னைப் பெருமையாய் நினைப்பதைப் போல நீயும் என்னை பெருமையாக நினைப்பாய் என நம்புகிறேன்.
இன்னும் நிறைய காலம் போராட வேண்டியிருக்கிறது. வளர்ந்த பிறகு நீயும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். அதற்கு உன்னை தயார் செய்து கொள். புரட்சிகரமானவளாய் இரு. உன்னுடைய வயதில் நிறைய படிப்பதும், நியாயங்களை ஆதரிப்பதும்தான் அவைகள். அம்மா சொல்கிறபடி கேள். உனக்கு சீக்கிரமே எல்லாம் தெரிந்துவிடும் என நினைக்காதே. காலாகாலத்தில் அவை உன்னை வந்து சேரும்.
பள்ளியில் நீ சிறந்தவளாக இருக்க வேண்டும். சிறந்தவள் என்றால் எல்லா அர்த்தத்திலும். படிப்பதும், புரட்சிகரமாய் இருப்பதும்தான். சொல்லப்போனால், நல்ல நடத்தை, அர்ப்பணிப்பு, தோழமையான நேசம் போன்றவைகள்தான் அவை. உன்னுடைய வயதில் நான் அப்படி இல்லை. வேறோரு சமூகத்தில் வாழ்ந்தேன். அங்கு மனிதன் மனிதனுக்கு எதிரியாக இருந்தான். நீ இன்னொரு அத்தியாயத்தில் வாழ்கிறாய். அதற்கு நீ பொருத்தமானவளாக இருக்க வேண்டும்.
வீட்டில் மற்ற குழந்தைகள் படிப்பதிலும், நன்றாக நடந்து கொள்வதிலும் கவனம் செசலுத்த வேண்டும். முக்கியமாக அலெய்டிடா. அக்கா என்று உன்னிடம் அதிகமாக அன்பு வைத்திருக்கிறாள் அவள். சரி. பெரிய மனுஷியே! திரும்பவும் உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அம்மாவையும், கினாவையும் அணைத்துக்கொள். உன்னைப் பிரிந்திருக்கிற காலம் எல்லாவற்றிற்கும் சேர்த்து உன்னை ஆரத்தழுவுகிறேன்.
அப்பா.
=====
எப்போதுமே அவர்களை ஆரத்தழுவிக் கொள்ளவே முடியாமல் போய்விட்டது. எல்லோருக்கும் அன்பினை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். நண்பனாக, தந்தையாக, மகனாக, கணவனாக, உலக மக்களின் சேவகனாக இருந்தாலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராளி என்னும் ஒரு முகத்தோடு மட்டுமே இருந்தார். அது உறுதிசெய்யப்படுகிறது. மரணமே அவரை தழுவிக் கொள்கிறது. தொலைதூரத்தில் பொலிவியாவில் ஒரு பள்ளிக்கூடத்தின் அறையில் வெடித்த துப்பாக்கி குண்டுகள் உலகையே கதற வைக்கின்றன.
6
5ம் அத்தியாயம்
1967 அக்டோபர் 10ம் தேதி.
“நீங்கள் இதை நம்புகிறீர்களா? அவர் உண்மையிலேயே இறந்திருக்க மாட்டார் தானே?” சான்பிரன்சிஸ்கோ மாநிலக்கல்லூரியின் அந்த மாணவி பேராசிரியர் ஜான் கேரஸிடம் கேட்கிறார். ‘வெற்றி நமதே’ என சேகுவாராவின் படைப்புகளையும், உரைகளையும் பின்னாளில் ஜான் கேரஸ் தொகுத்திருக்கிறார். அன்று வகுப்பு முழுவதும் சேகுவாரா பற்றி, அவரது கொரில்லாப் போர் பற்றி, அவருடைய தனிப்பட்ட திறமைகள் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்த வகுப்பில் இருந்த அறுபது மானவர்களும் சேகுவாரா இறந்து போன செய்தியை நம்ப மறுத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் அவர் மீது ஈடுபாடு கொண்டவர்கள், லத்தீன் அமெரிக்க மக்கள், ஐரோப்பாவின் மாணவர்கள் அனைவருமே திகைத்துப் போய் இருக்கிறார்கள்.
காஸ்ட்ரோவும் அந்த செய்தியை முதலில் நம்ப முடியாமல் இருந்தார். கியூபாவின் உளவுத்துறை அதிகாரி மானுவே பினைரோ அந்த காட்சியினை ஒரு பேட்டியில் விவரிக்கிறார். 1967 அக்டோபர் 10ம் தேதி அவருக்கு அந்த ரேடியோ போட்டோ கிடைத்திருக்கிறது. உடனே காஸ்ட்ரோவுக்கு செய்தி அனுப்பி வரச்சொல்லி இருக்கிறார். எதோ ஒரு கிராமத்து சலவை அறையில் ஒரு மேஜையில் சேகுவாராவின் உடல் கிடத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சேகுவாராவா என்று சரியாக தெரியாமல் இருக்கிறது. காஸ்ட்ரோ அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு செலியா சான்செஸோடு திரும்பவும் வருகிறார். அதற்குள் ரேடியோ போட்டோ முலம் இரண்டாவது போட்டோ கிடைக்கிறது. இப்போது தெளிவாக தெரிகிறது. சேகுவாராவேதான். அந்த அறையில் கனத்த மெனம் சூழ்கிறது.
சேவின் மனைவி அலெய்டா எங்கிருக்கிறார் என்று அறிந்து உடனே அழைத்து வரச்சொல்கிறார் காஸ்ட்ரோ. எஸ்கம்பரோ மலைகளில் ஆராய்ச்சிக்குச் சென்றிருந்த அலெய்டா விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது. கட்சித்தலைவர்களை அழைத்து செய்தியை சொல்கிறார். காயமும் வலியும் எல்லோர் முகத்திலும் தெரிகிறது. மக்களிடம் இந்தச் செய்தியை எப்படி சொல்வது என்று பேசுகிறார். இந்தக் கடுமையான செய்தியை தாங்குவதற்கு மக்களை எப்படி தயார் செய்வது என்றும் விவாதிக்கிறார். அங்கேயே அலெய்டாவின் வருகைக்காக காஸ்ட்ரோ அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறார்.
மானுவே பினைரோ தனது பேட்டியில், சேகுவாராவின் மரணச்செய்தி கியூபாவுக்கு வந்து சேர்ந்ததை இப்படி சொல்லி நிறுத்திக்கொள்கிறார். அலெய்டாவும் , குழந்தைகளும், கியூப மக்களும் கிடந்து தவித்ததை, எங்கும் அழுகையும் கோபமும் நிறைந்து போனதை அந்த அமைதி உணர்த்துகிறது. அந்த மண்ணில் பிறக்காவிட்டாலும் தங்கள் நாட்டின் புரட்சியில் முன்னணி வகித்த அந்த அற்புத மனிதரை, சிரித்த அந்த முகத்தை, செய்திகளில் வந்த அமைச்சரை, தங்கள் வீரப் புதல்வரை இழந்து நின்றது கியூபா.
மானுவே பினைரோ போட்டோவில் பார்த்த காட்சியை அமெரிக்காவின் கார்டியன் பத்திரிக்கையின் நிருபர் ரிச்சர்ட் கோட் நேரில் பார்க்கிறார். வாலேகிராண்டேவுக்கு அருகில் உள்ள அந்த மலைப்பிரதேச கிராமத்துக்கு அந்த ஹெலிகாப்டர் காலை 5 மணிக்கு வருகிறது. வேண்டுமென்றே மக்கள் கூட்டமாய் நிற்கும் இடத்திற்கு தொலைவிலேயே அது தரையிறங்குகிறது. ஸ்டிரெச்சரிலிருந்து அந்த உடல் இறக்கப்படுகிறது. இராணுவ உடையிலிருந்த ஒரு மனிதர் அதனை தூக்குகிறார். அங்கிருந்த அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும் அவரைத் தெரிகிறது. அமெரிக்க உளவுத்துறையின் மனிதர்.
உடல் உடனடியாக வேனுக்கு மாற்றப்படுகிறது. பத்திரிக்கையாளர்கள் அந்த வேனை தொடர்கிறார்கள். ஆஸ்பத்திரியின் கதவுகள் அலறும்படியாக திறக்கப்படுகின்றன. வேனிலிருந்து வெளியே வந்த அவர் “நாங்கள் போக வேண்டும். தள்ளித் தொலையுங்கள்’ என்று போர்க்கூச்சல் போடுகிறார். “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்’ என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்கிறார். “எங்கிருந்தும் அல்ல” என்கிறார். சலவை அறை போலிருக்கும் அந்தச் சின்னக் குடிசையை நோக்கி உடல் கொண்டு போகப்படுகிறது. ஆலிவ் பச்சையிலான உடை, அந்த உடலை சேகுவாரா என்று சொல்கிறது. ரிச்சர்ட் கோட் 1963ல் கியூப தூதரகத்தில் சேவை பார்த்திருக்கிறார். சின்னப் புதர் போன்ற கறுப்பு தாடி, ஒட்டிக் கிடந்த நீண்ட முடியோடு இருந்தார். கழுத்துக்கு கீழே இரண்டு இடங்களிலும், வயிற்றில் ஒரு இடத்திலும் குண்டடி பட்ட காயங்கள் தெரிந்தன. சே ஒல்லியாகவும், சின்னதாகவும் தெரிந்தார். மாதக்கணக்கில் காடுகளில் வாழ்ந்த மனிதர் தனது இயல்பான உருவத்தையும், தோற்றத்தையும் இழந்திருக்க வேண்டும்.
அந்த அமெரிக்க ஏஜண்ட் கூட்டத்தை விரட்டுவதிலேயே கவனமாய் இருக்கிறார். அவரது திசையில் காமிராக்கள் படம் எடுக்கும் போதெல்லாம் பதற்றத்தோடு காணப்பட்டார். சேகுவாராவைப் போல அவரும் கியூபாவிலிருந்து வந்தவர்தான். நேரடியாக சேகுவாராவுக்கு எதிரான போரில் இறங்கினால் லத்தீன் அமெரிக்கா முழுவதும் தனக்கு எதிரான கோபத்தை உருவாக்கிவிடும் என்பதால் அமெரிக்கா, கியூபப் புரட்சியால் பாதிக்கப்பட்ட இதுபோன்ற நபர்களை பொலிவியாவில் இறக்கியிருந்தது.
மக்கள் கூட்டம் திரண்டு சேகுவாராவைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று அப்போது ஆவேசத்தோடு சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தனர். அந்தக் குரல்கள் இன்றுவரை அடங்காமல் இருக்கின்றன. பாரிஸ், பிரேக், பெல்கிரேட் நகரங்களில் ‘சே வாழ்கிறார்’ குரல்கள் எதிரொலித்தன. சிலியில் 85000 பேர் கலந்து கொண்ட மக்கள் கடலிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அலைகள் எழும்பின.
சேகுவாராவின் மரணம் குறித்த முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன. அக்டோபர் 8ம் தேதியே பொலிவிய இராணுவத்திற்கும் கொரில்லாக்களுக்கும் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பாட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியாகிறது. சேகுவாராவை கைது செய்து அக்டோபர் 9ம் தேதிதான் கொல்லப்பட்டு இருக்கிறார் என்று இன்னொரு தகவலும் சொல்லப்பட்டது.
சேகுவாராவின் உடலை கியூபாவிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வாலேகிராண்டேவில் எதோ ஒரு இடத்தில் கொரில்லா போராளிகளை மொத்தமாய் புதைத்து விட்டதாக சொல்லப்பட்டது. எரித்துவிட்டதாகவும் சொன்னார்கள். அவரது உடலைத் தரவும் மறுத்தார்கள். கியூபாவின் மக்கள் அந்த மகத்தான மனிதரின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
7
6ம் அத்தியாயம்
அக்டோபர் 18ம் தேதி கியூபாவில் ஒரு மிகப் பெரிய அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. மார்ட்டியின் நினைவுச்சின்னத்திற்கு கீழே மேடை போடப்பட்டிருந்தது. பிடல் காஸ்ட்ரோ, உதவி பிரதமர் ரால் காஸ்ட்ரோ, அதிபர் டோர்ட்டிகாஸ், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆர்மண்டோ ஹார்ட் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். கியூபாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
கியூப கவிஞர் நிக்கோலஸ் கியுல்லன் சேகுவாராவிற்கு அஞ்சலி செலுத்தி கவிதை வாசிக்க நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. பிளாசாவின் பெரிய திரையில், முக்கிய நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டிருந்த சேகுவாராவின் அசைவுகள் காண்பிக்கப்படுகின்றன. பின்னணியில் அவரது பேச்சு இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கொண்ட வியட்நாமின் வெற்றிகளை, இதர நாடுகளின் விடுதலை போராட்டங்களை அவர் பேசுகிறார். பத்திரிக்கைகளில் வந்த அவரைப் பற்றிய செய்திகள் காட்டப்படுகின்றன. முடிவில் சேகுவாராவின் முகம் மிக நெருக்கத்தில் காட்டப்படுகிறது. கூட்டம் உறைந்து போயிருக்கிறது. 21 குண்டுகள் முழங்க அந்த நிசப்தம் மேலும் அடர்த்தியாகிறது.
பிடல் காஸ்ட்ரோ எழுந்து வருகிறார். மைக்கின் முன் நின்று பேச ஆரம்பிக்கிறார்.
“1955ம் ஆண்டு, ஜூலையிலோ, ஆகஸ்டிலோ ஒருநாள் நாங்கள் சேவை சந்தித்தோம். பின்னாளில் நடந்த கிரான்மா பயணத்தில் தன்னையும் ஒருவராக அவர் அந்த ஒரு இரவில் இணைத்துக் கொண்டார். கப்பலோ, ஆயுதங்களோ, போராளிகளோ அப்போது இல்லை. இப்படித்தான் ரால் காஸ்ட்ரோவும் அவரும் நமது பயணத்தில் இணைந்த முதல் இருவராக இருந்தனர்.
12 வருடங்கள் ஓடிவிட்டன. போராட்டங்களும், வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஆண்டுகள். மதிப்புமிக்க, ஈடுசெய்ய முடியாத பல தோழர்களை மரணம் இந்த காலத்தில் நம்மிடமிருந்து பிரித்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் புரட்சியால் வார்க்கப்பட்ட பல அற்புதமான தோழர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும், நமது மக்களுக்கும் இடையில் நட்பும், பரிவும் மலர்ந்திருக்கிறது. அவைகளை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கஷ்டமானது.
இன்று நீங்களும், நானும் இங்கு அப்படியொரு உணர்வை வெளிப்படுத்தவே கூடியிருக்கிறோம். நம் எல்லோருக்கும் மிகவும் பழக்கமான, மிகவும் பிடித்தமான, மிகவும் பிரியமான மனிதர் அவர். நமது புரட்சியின் தோழர்களில் சந்தேகமே இல்லாமல் மகத்தானவர் அவர். வரலாற்றின் ஒளிபொருந்திய பக்கத்தை எழுதியிருக்கிற அந்த மனிதருக்கும், அவரோடு இறந்து போன சர்வதேச படையின் நாயகர்களுக்கும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.
எல்லோருக்கும் சேகுவாராவை உடனே பிடித்துவிடும். அவரது தனித்தன்மைகள் வெளிப்படும் முன்னரே எளிமையால், இயல்பான தன்மையால், தோழமையால், ஆளுமையால் பிடித்துவிடும். ஆரம்ப காலத்தில் நமது போராளிகளுக்கு மருத்துவராக இருந்தார். அப்படித்தான் நமது உறவு மலர்ந்தது. உணர்வுகள் பிறந்தன. விரைவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு அவருக்குள் கருக்கொள்ள ஆரம்பித்தது. இதற்கு பக்குவம் பெற்றிருந்த அரசியல் பார்வை மட்டும் காரணமல்ல. கவுதமாலாவில் புரட்சியை நசுக்கிட ஏகாதிபத்தியம் படையை அனுப்பி தலையிட்டதை நேரடியாக பார்த்தவராக இருந்தார்.
அவரைப் போன்ற மனிதர்களுக்கு விவாதங்களே தேவையில்லை. அதே போன்று கியூபா இருந்தது என்பதே போதுமானது. அதே போன்று மனிதர்கள் கைகளில் ஆயுதந்தாங்கி போராட முன்வந்திருக்கிறார்கள் என்பதே போதுமானது. அந்த மனிதர்கள் புரட்சிகரமானவர்களாகவும், தேச பக்தர்களகவும் இருப்பதே போதுமானது. இப்படித்தான் அவர் 1955ல் நம்மோடு கியூபாவை நோக்கி புறப்பட்டார். பயணத்தின்போது அவருக்குத் தேவையான மருந்துகளைக் கூட அவர் எடுத்து வராததால் மிகவும் சிரமப்பட்டுப் போனார். மொத்த பயணத்தின் போதும் ஆஸ்துமாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். சிறு முணுமுணுப்பு கூட அதுகுறித்து அவரிடம் இல்லை.
வந்து சேர்ந்தோம். முதல் அணிவகுப்பை நடத்தினோம். பின்னடைவை சந்தித்தோம். தப்பிப்பிழைத்த நாங்கள் சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தோம். அதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். வெற்றிகரமான முதல் சண்டை நடத்தப்பட்டது. அப்போது சே போர்வீரராக உருவெடுத்தார். இரண்டாவது வெற்றிகரமான சண்டை நடந்தது. சே என்னும் அந்த மருத்துவர் மிகச் சிறப்பான போர்வீரராகி இருந்தார். ஒரு தனிப்பட்ட மனிதரிடம் சகல திறமைகளும் வெளிப்பட்டன.
நமது வலிமை பெருகியது. மிக முக்கியத்துவம் பெற்ற சண்டைகள் நடந்தன. நிலைமை மாறியது. வந்த தகவல்கள் பல வகையிலும் தவறாக இருந்தன. கடற்கரையில் மிகுந்த ஆயுதபலத்தோடும், பாதுகாப்போடும் இருந்த எதிரியின் முகாமை ஒரு காலையில், நல்ல வெளிச்சத்தில் தாக்க திட்டமிட்டோம். எங்களுக்கு பின்னால், மிக அருகில் எதிரியின் துருப்புகள் இருந்தன. குழப்பமான நிலைமையில், நமது ஆட்கள் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியாக வேண்டும். தோழர்.ஜான் அல்மைடா தேவையான ஆட்கள் இல்லாதபோதும், கடினமான பாதையை தனக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டார். தாக்குதலுக்கான படை இல்லாமல் எங்கள் திட்டம் ஆபத்திலிருந்தது.
மருத்துவராயிருந்த சே மூன்று அல்லது நான்கு ஆட்களை தனக்கு கேட்டார். அதில் ஒருவரிடம் தானியங்கி துப்பாக்கி இருந்தது. சில வினாடிகளில் தாக்குதலை ஆரம்பிக்க அந்த திசையில் சென்றார். காயம்பட்ட நமது தோழர்களை மட்டுமல்ல, எதிகளின் வீரர்களையும் அவர் கவனித்துக் கொண்டார். அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றிய பிறகு எதிரிகளின் கண்காணிப்பிலிருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. காயம்பட்டவர்களோடு யாராவது இருக்க வேண்டி இருந்தது. சே அங்கு சில வீரர்களோடு தங்கிக் கொண்டார். நன்றாக பார்த்துக் கொண்டார். அவர்களின் உயிரைக் காப்பாற்றி எங்களோடு பிறகு வந்து சேர்ந்து கொண்டார்.
அந்த சமயத்திலிருந்து பிரமாதமான, தகுதியான, தைரியம் மிகுந்த தலைவராக விளங்கினார். எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையிலும், நீ போய் இதை முடிக்க வேண்டும் என்று கேட்பதற்கு காத்திருக்க மாட்டார். உவேராவில் நடந்த சண்டையில் இதைச் செய்தார். இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு எதிரிகள் திடீரென்று விமானத் தாக்குதல் நடத்திய போதும் இதைச் செய்து காட்டினார். தப்பி கொஞ்சதூரம் வந்த பிறகுதான் எங்களோடு இணைந்து போரிட்ட விவசாயத் தோழர்கள் தங்கள் குடும்பங்களைப் பார்க்க அனுமதி கேட்டு சென்றபோது துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்று விட்டனர் என்பது தெரிந்தது. துப்பாக்கிகளை இழந்து விட்டோம் என்றே நினைத்தோம். கொஞ்சங்கூட தாமதிக்காமல் சே விமானங்களின் குண்டுமழைக்கு அடியில் தானாகவே ஒடிப்போய் துப்பாக்கிகளை திரும்பக் கொண்டு வந்துவிட்டார்.
இந்த மண்ணில் பிறக்காதபோதும் எங்களோடு இணைந்து போராடினார். தெளிந்த கருத்துக்களை கொண்டிருந்தார். கண்டத்தின் இதர பகுதிகளிலும் விடுதலை போராட்ட கனவுகளோடு இருந்தார். கொஞ்சங்கூட சுயநலமில்லாமல் இருந்தார். தொடர்ந்து தனது உயிரை பணயம் வைக்கிறவராக இருந்தார். இதனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே இருந்தது. இப்படித்தான் அவர் சியராவில் அமைக்கப்பட்ட நமது படையின் இரண்டாவது பிரிவுக்கு கமாண்டராக உயர்ந்தார். இப்படித்தான் அவரது புகழ் கூடியது. இதுவே போர் நடந்து கொண்டிருக்கும் போது அவரை உயர்ந்த பதவிகளில் கொண்டு போய் சேர்த்தது.
சே தோற்கடிக்க முடியாத வீரர். கமாண்டர். ஒரு இராணுவத்தின் பார்வையில் அவர் மிக தைரியமான மனிதர். அசாதாரணமாக தாக்குதல் நடத்துபவர். அவருடைய மரணத்திலிருந்து எதிரிகள் முடிவுகளை எடுக்க முயற்சிக்கின்றனர். சே போர்க்கலையில் சிறந்தவர். கொரில்லப்போரில் ஒரு நுட்பமான கலைஞர். இதை அவர் எத்தனையோ முறை காட்டி இருக்கிறார். மிக முக்கியமாக இரண்டு தடவைகள். ஒருமுறை கொஞ்சங்கூட பழக்கமில்லாத, சமவெளியான ஒரு இடத்தில் காமிலே என்னும் அற்புதமான தோழருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான எதிரிப் படைவீரர்களை தாக்கி அழித்தார். லா விலாஸ் பிரதேசத்தில் நடந்த தாக்குதலின்போதும் அதை நிருபித்தார். டாங்கிகள், ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்த ஏழாயிரம் தரைப்படை வீரர்களை 300 படைவீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு சாந்தா கிளாராவில் நடத்திய தாக்குதல் மகத்தானது.
இப்படிப்பட்ட ஒருவரின் வீர மரணத்திற்குப் பிறகு, அவரின் கொள்கைகள், கொரில்லக் கோட்பாடுகளின் மீது புழுதிவாரி இறைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அந்தக் கலைஞர் வேண்டுமானால் இறந்திருக்கலாம். ஆனல் எந்த கலைக்காக தனது வாழ்க்கையையும் அறிவையும் அர்ப்பணித்துக் கொண்டாரோ, அது ஒரு போதும் அழிந்து போகாது.
இப்படிப்பட்ட கலைஞர் போரில் இறந்தார் என்பதில் என்ன விசித்திரம் இருக்கிறது. நமது புரட்சிகரமான போராட்டத்தில் இது போல பலமுறை தனது உயிருக்கு ஆபத்தான காரியங்களில் இறங்கி இருக்கிறார். அப்போதெல்லாம் இறக்காமல் இப்போது இறந்ததுதான் விசித்திரம். கியூப விடுதலைக்கான போராட்டத்தில், முக்கியத்துவமற்ற காரியங்களில் ஈடுபட்டு ஆபத்தை விலைக்கு வாங்க முன்வந்த பலசமயங்களில் அவரை தடுத்து நிறுத்த பெருமுயற்சி செய்ய வேண்டி இருந்தது. அவர் போராடிய எத்தனையோ போர்க்களங்களில் ஒன்றில் உயிரிழந்திருக்கிறார். எந்த சூழலில் இறந்தார் என்பதை அறிந்துகொள்ள நம்மிடம் சாட்சிகள் இல்லை. ஆனால் ஒன்றை திரும்பவும் சொல்கிறேன். உயிரைத் துச்சமாய் மதிக்கும் எல்லை மீறிய அவரது போர்க்குணமே காரணமாய் இருந்திருக்கும்.
இந்த இடத்தில்தான் அவருடன் ஒத்துப் போக முடியவில்லை. நமக்குத் தெரியும். அவருடைய வாழ்க்கை, அவரது அனுபவம், அவரது தலைமை, அவரது புகழ், அவரது வாழ்வில் முக்கியமான எல்லாம் மிகவும் மதிப்புமிக்கவை என்பது நமக்குத் தெரியும். அவர் அவரைப் பற்றி வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டிலும் அவை ஒப்பிடமுடியத அளவுக்கு உயர்ந்தவை. தனிமனிதர்களுக்கு வரலாற்றில் மிகச் சிறிய பாத்திரமே உள்ளது என்பதிலும், மனிதர்கள் வீழ்ந்துவிடும்போது அவர்களோடு சேர்ந்து அவர்களது கொள்கைகளும் வீழ்ந்து விடுகிறது என்பதில் நம்பிக்கை இல்லாததாலும், மனிதர்கள் வீழ்வதால் வரலாற்றின் தொடர்ச்சி முடிந்துவிடுவதில்லை என்பதையறிந்ததாலும் அவர் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இது உண்மை. சந்தேகமே தேவையில்லை.
இது மனிதகுலத்தின் மீதிருக்கும் அவரது நம்பிக்கையை காட்டுகிறது. சிந்தனைகளில் இருந்த அவரது நம்பிக்கையை காட்டுகிறது. ஒருசில நாட்களுக்கு முன்பு கூறியபடி அவரது தலைமையின் கீழ், அவர் காட்டிய திசையில் வெற்றிகள் வந்து குவிய மனப்பூர்வமாக விரும்பினோம். அவருடைய அனுபவமும், தனித்திறமையும் அப்படிப்பட்டது. அவருடைய முன்னுதாரனத்தின் முழுமதிப்பினையும் நாம் பாராட்டுகிறோம். பூரணமான ஈடுபாட்டுடன் திகழும் அவரது முன்னுதாரணம், அவரைப் போன்ற மனிதர்களை சமூகத்திலிருந்து உதித்தெழச்செய்யும்.
அப்படிப்பட்ட அற்புத குணங்கள் எல்லாம் ஒரு மனிதனிடம் ஒருசேர நிறைந்திருப்பதை காணமுடியாது. தானாகவே அவைகளை தனக்குள் வளர்த்துக் கொண்ட ஒரு மனிதனை காணமுடியாது. அவருக்கு ஈடாக நடைமுறையில் தன்னை வளர்த்துக் கொள்வது எளிதான விஷயம் அல்ல. தன்னை போன்ற மனிதர்களை உருவாக்குவதற்கான ஆதர்ச புருஷர் அவர் என்பதையும் சொல்ல வேண்டும்.
சே ஒரு போராளி என்பதால் மட்டும் நாம் அவர் மீது மதிப்பு வைக்கவில்லை. அசாதாரண சாதனைகளை செய்து காட்டக் கூடியவர். ஏகாதிபத்தியத்தால் பயிற்சியளிக்கபட்டு, ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட ஒருநாட்டின் ஆளுங்கட்சியின் இராணுவத்தை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை வைத்துக்கொண்டு எதிர்த்த செயலே அசாதாரணமானது. வரலாற்றின் பக்கங்களில் இவ்வளவு குறைவான தோழர்களை வைத்துக் கொண்டு, இவ்வளவு முக்கியமான காரியத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனை பார்க்க முடியாது. இது அவரது தன்னம்பிக்கையின் அடையாளம். மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம். அவரது போராளிகளின் திறமைகள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம். இதனை வரலாற்றின் பக்கங்களில் எங்கு தேடினாலும் கிடைக்காது.
அவர் வீழ்ந்து விட்டார். எதிரிகள் அவரது கருத்துக்களை தோல்வியுறச் செய்து விட்டதாக நம்புகிறார்கள். கொரில்லாக் கொள்கைகளை தோல்வியுறச் செய்துவிட்டதாக நம்புகிறார்கள். ஆயுதந்தாங்கிய புரட்சியின் கண்ணோட்டதை தோல்வியுறச் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவரது உடலை அழித்துவிட்டது மட்டுமே அவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். யுத்தத்தில் அவர்கள் எதிர்பாராத ஒரு சாதகத்தை ஏற்படுத்திகொண்டது மட்டுமே மிச்சம். ஒரு யுத்தத்தில் இது நடக்கக் கூடியதே. ஆபத்தை துச்சமாக மதிக்கக்கூடிய சேகுவாராவின் மிதமிஞ்சிய போர்க்குணம் அவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவிசெய்து இருக்கும் என்பது தெரியவில்லை. நமது சுதந்திரப் போராட்டத்திலும் இது போல நடந்தது. டாஸ் ரியோசில் அவர்கள் அப்போஸ்டலஸைக் கொன்றனர். நூற்றுக்கணக்கான களங்களைக் கண்ட அண்டோனிய மாரியோவைக் கொன்றனர். நமது தலைவர்கள் பலரும் தேசபக்தர்களும் கொல்லப்பட்டனர். அதனால் கியூபாவின் சுதந்திரப் போராட்டம் பின்னடைந்து போகவில்லை. அதிர்ஷ்டத்தின் குண்டுகளால் கொன்றவர்களைக் காட்டிலும் அவர் பல்லாயிரம் மடங்கு மேன்மையானவர்.
இருந்தாலும் இத்தகைய கடுமையான பின்னடைவை புரட்சியாளர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்வது? சே இருந்திருந்தால் அவர் என்ன ஆலோசனைகள் சொல்லியிருப்பார்? லத்தீன் அமெரிக்க ஒருமைப்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்றில் ஒரு கருத்து தெரிவித்து இருந்தார். ‘நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமனால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில் இயந்திரத்துப்பாக்கியின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் மரணம் திடீரென ஆச்சரியப்படுத்தும் போது கூட, நாம் அதை வரவேற்கலாம்”. இந்த புரட்சியின் அறைகூவல் ஒரே ஒரு காதை மட்டும் அடையவில்லை. கோடிக்கணக்கான காதுகளை அடைந்திருக்கிறது. அவர் கைகளில் இருந்து விழுந்த ஆயுதத்தை எடுக்க ஒரே ஒரு கரம் மட்டும் நீளவில்லை. கோடிக்கணக்கான கரங்கள் நீண்டுள்ளன. புதிய தலைவர்கள் எழுந்து வருவார்கள்.
அவரது அறைகூவலுக்கு செவிசாய்த்த சாதாரண மக்களிடம் இருந்து புதிய தலைவர்கள் வருவார்கள். உடனேயோ அல்லது பிறகோ ஆயுதந்தாங்கி போராடப் போகிற கோடிக்கணக்கான கரங்களுக்கு சொந்தக்காரர்களிடமிருந்து அந்த தலைவர்கள் எழுந்து வருவார்கள். புரட்சியின் போராட்டத்தில் சில பின்னடைவுகளோ, மரணமோ ஏற்படும் என்பதை நாங்கள் உணராமல் இல்லை. சே ஆயுதத்தை மீண்டும் எடுத்த போது உடனடி வெற்றி குறித்து சிந்திக்கவில்லை. ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒரு வேகமான வெற்றி குறித்து அவர் சிந்திக்கவில்லை. ஒரு அனுபவம் வாய்ந்த போராளியாக ஐந்து, பத்து, பதினைந்து, இருபது வருடங்களுக்கு தொடர்ந்து போராடுகிற பயிற்சி பெற்றிருந்தார். அவரது வாழ்க்கை முழுவதுமே போராடுவதற்கு தயாராக இருந்தார்.
அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள் கூட அவரது அனுபவம் மற்றும் தலைமையின் திறமையோடு அதைப் பொருத்திப் பார்க்க முடியமல் போவார்கள். சேவை நினைக்கும்போது நமக்கு அவரது ராணுவத்திறமை முதலில் முன்னுக்கு வருவதில்லை. யுத்த நடவடிக்கை ஒரு வழிமுறையே. அது முடிவல்ல. போராளிகளுக்கு யுத்த நடவடிக்கை ஒரு சாதனம். முக்கியமானது புரட்சி, புரட்சிகர கருத்துக்கள், புரட்சிகர உணர்வு மற்றும் புரட்சிகர பண்புகள். இந்த விஷயங்களில் நாம் எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது. அவருக்குள் ஒரு செயல்வீரனும், சிந்தனாவாதியும் நிறைந்திருந்தார்கள்.
முழுமையான நேர்மை கொண்டவராக, ஒழுக்க நெறிகளை மதிப்பவராக, மிகவும் உண்மையுள்ளவராக இருந்தார். அப்பழுக்கற்ற நடத்தை கொண்டவராக விளங்கினார். புரட்சிக்காரர் இப்படித்தான் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டி விட்டார். மனிதர்கள் இறக்கும் போது அவர்களைப் பற்றியும், அவர்களது சிறப்புகள் பற்றியும் பேசப்படுகிறது,. ஆனால் சேவைப் போல ஒரு மனிதரிடம் இருக்கும் நற்பண்புகளைப் பற்றி துல்லியமாக பேச முடியாது.
அவர் வேறோரு குணாம்சமும் பெற்றிருந்தார். அது அவரது மென்மையான இதயம். அசாதாரண மனித நேயம் பெற்றவராகவும், மிக நுட்பமான உணர்வுகள் கொண்டவராகவும் இருந்தார். இதனால்தான் அவரது வாழ்வைப்பற்றி கூறும் போது, எஃகு போன்ற உறுதிமிக்க செயல்திறனும் இது போன்ற அற்புதமான பண்புகளும், சிந்தனைகளும் கலந்த மிக அரிதான மனிதராக நாம் பார்க்கிறோம். வருங்காலத் தலைமுறையினருக்கு அவரது அனுபவத்தை மட்டும் விட்டுச் செல்லாமல் போராளியின் அறிவையும், புத்திசாலியின் பணிகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். மொழியின் மீதுள்ள ஆளுமையோடு எழுதி இருக்கிறார். சிந்தனையின் ஆழம் ஈர்க்கக் கூடியது. போர் குறித்த அவரது வர்ணனைகள் ஒப்பிட முடியாதவை. எதையும் ஒரு தீவீரத்தன்மை இல்லாமலும் ஆழம் இல்லாமலும் எழுதியதில்லை. புரட்சிகர சிந்தனைகளுக்கு அவரது பல எழுத்துக்கள் மிகச்சிறந்த ஆவணங்களாக இருக்கும். அவர் விட்டுச் சென்றிருக்கிற எண்ணற்ற நினைவுகளும், கதைகளும் அவரது இந்த முயற்சி இல்லாவிட்டால் அழிந்து போயிருக்கும்.
இந்த மண்ணுக்காக அவர் நேரங் காலம் இல்லாமல் உழைத்திருக்கிறார். ஒரு நாள் கூட அவர் ஒய்வு எடுத்துக் கொண்டது கிடையாது. பல பொறுப்புக்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. தேசீய வங்கியின்ன் தலைவர். திட்டக்குழுவின் இயக்குனர். தொழில்துறை அமைச்சர். ராணுவ கமாண்டர். அதிகார பூர்வமான அரசியல் மற்றும் பொருளாதார குழுக்களின் தலைவர். எந்த வேலை கொடுத்தாலும் அதை மிக உறுதியோடு செய்யும் அசாத்திய அறிவாற்றல் அவருக்கு இருந்தது. பல சர்வதேச மாநாடுகளில் நமது தேசத்தை மிகச் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்.
அவரது அறையின் ஜன்னல் வழியே பார்த்தால் இரவு முழுவதும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதையும், அவர் வேலை செய்து கொண்டிருப்பதையும், படித்துக் கொண்டிருப்பதையும் பார்க்கமுடியும். அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாணவனைப் போல அணுகியதால் களைப்படையாத படிப்பாளியாக இருந்தார். கற்றுக்கொள்ள இருந்த தாகம் தணிக்க முடியாததாய் இருந்ததால் அவர் தனது தூக்கத்தில் இருந்து நேரத்தை திருடி படித்தார். வேலை இல்லாத நாட்களிலும் தானாக முன்வந்து வேறு வேலைகள் செய்வதற்கு பயன்படுத்தி கொண்டார். பலருக்கு தூண்டு கோலாக இருந்தார். நமது மக்கள் மேலும் மேலும் முயற்சி செய்யும் செயல்பாடுகளை தூண்டி விட்டார்.
கியூபா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அவரது அரசியல் மற்றும், புரட்சிகர சிந்தனைகள் என்றென்றும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள். ஆனால் ஏகாதிபத்திய வாதிகளுக்குத் தெரியாது. அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களில் ஒன்றுதான் அந்த செயல்வீரனின் முகம். ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம் கொள்ளவில்லை. உயர் நடத்தை கொண்ட ஒரு மனிதனை இழந்து நிற்கிறோம். உன்னத மனித உணர்வுகள் கொண்ட மனிதனை இழந்து நிற்கிரோம். இறக்கும் போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம். இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால் துயரம் கொள்கிறோம்.
துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. மோதலின் போது தீவீரமாக காயமடைந்தபின் அவரை கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக்கொண்டுள்ளனர். கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக்கைதியை சுட்டுக் கொல்ல ஒரு கூலிப்பட்டாளத்திற்கு, பொறுக்கிகளுக்கு உரிமை இருக்கிறது என்பது போல அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். சேவின் வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும், அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. உண்மையோ பொய்யோ உடலை அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகளை அழித்துவிட முடியாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.
சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்துவிட்டார். இப்பூவுகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காகவும், ஏழைகளுக்காவும் இறந்து விட்டார். சுயநலமற்று போராடி இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக்கொள்வார்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொருநாளும் உயர்ந்து கொண்டே போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள். அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை பின்பற்றுவார்கள். இந்த கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.
அவரது புதிய எழுத்துக்களை நாம் மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க முடியாதுதான். அனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச் சென்றுள்ளார்.
நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால், வருங்காலத்தைச் சார்ந்த மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதன் சே என்று என் இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன்.
புரட்சிகர அர்ப்பணிப்பை, புரட்சிகர போராட்டத்தை, புரட்சிகர செயல்பாட்டை சே மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். மார்க்சீய-லெனிய கோட்பாட்டை அதன் புத்துணர்ச்சி மிக்க, மிகத் தூய்மையான நிலைக்கு எடுத்துச் சென்று விட்டார். நமது காலத்தில் வேறு யாரும் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு அவைகளை எடுத்துச் செல்லவில்லை. வருங்காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியின் உதாரணம் பற்றி பேசும் போது மற்ற எல்லோரையும் விஞ்சி அங்கே சே இருப்பார். தேசீயக் கொடிகள், நடுநிலையற்ற தன்மை, குறுகிய தேசீய வெறி ஆகியவை அவரது இதயத்திலிருந்தும், எண்ணங்களிலிருந்தும் அடியோடு மறைந்து விட்டிருந்தன.
போராட்டத்தில் காயமடைந்து இந்த மண்ணில் அவர் இரத்தம் கலந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக போராடி பொலிவிய மண்ணில் அவர் இரத்தம் கலந்திருக்கிறது. அந்த இரத்தம் லத்தீன் அமெரிக்க மக்களுக்காக சிந்தப்பட்டது. வியட்நாமில் உள்ள மக்களுக்காக சிந்தப்பட்டது. தோழர்களே, எதிர்காலத்தை உறுதியோடும், நம்பிக்கையோடும் எதிர்நோக்க வேண்டும். சேவின் உதாரணம் நமக்கு உத்வேகமளிக்கிறது. எதிரியை பூண்டோடு அழிப்பதற்கான உத்வேகம். சர்வதேச பார்வையை வளர்த்துக் கொள்வதற்கான உத்வேகம்.
மனதில் பதிந்து போன இந்த நிகழ்வின் முடிவில், அர்ப்பணிப்பும் கட்டுப்பாடும் மிக்கதால் மகத்துவம் பெற்ற மாபெரும் மனிதக் கூட்டத்தின் அஞ்சலிக்கு பிறகு இந்த இரவு, நாம் உணர்வு பூர்வமானவர்கள் என்று காட்டி நிற்கிறது. போரில் இறந்து போன ஒரு தைரிய புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி என்று உணர்ந்த பாராட்டுக்குரிய மனிதர்கள் என்று காட்டி நிற்கிறது. தங்களுக்கு பணிபுரிந்தவனுக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி என்று உணர்ந்த மக்கள் இவர்கள் என்று காட்டி நிற்கிறது. புரட்சிகர போராட்டத்தை எப்படி இந்த மனிதர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறது. புரட்சிகர கொள்கையை, பதாகைகளை எப்படி தூக்கி பிடிப்பது எனபதை அறிந்த மக்கள் இவர்கள் என்று காட்டி நிற்கிறது. இன்று இந்த அஞ்சலியில் நாம் நமது சிந்தனைகளை உயர்த்திக் கொள்வோம். நம்பிக்கையோடு, முழு நம்பிக்கையோடு இறுதி வெற்றி குறித்து சேவிடமும் அவரோடு சேர்ந்து இறந்து போன நாயகர்களிடமும் சொல்வோம். எப்போதும் வெற்றி நோக்கியே நமது பயணம். தாய்நாடு அல்லது வீர மரணம். வெற்றி நமதே.
காஸ்ட்ரோ வரலாற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
மற்றவர்கள் நிறைய பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பொலிவியாவில் கொரில்லாப் போர் தோற்றதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. சேகுவாராவே தனது பொலிவிய நாட்குறிப்புகளில் குறித்து வைத்திருப்பதையும் காட்டுகிறார்கள். விவசாயிகள் மெல்ல மெல்லத்தான் எழுச்சி பெறுவார்கள். அவர்கள் ஆதரவு பெறுவதற்கு நாளாகலாம். நிதானமாக காத்திருக்க வேண்டும் என்கிறார். அதற்குள் ஏகாதிபத்தியம் அவரை தீர்த்துவிட்டிருந்தது. பொலிவிய கம்யூனிச கட்சியில் உறுதியான தலைவர்கள் இல்லாமல் போனதால் அவர்களுடைய ஆதரவும் பெறமுடியாமல் போய்விட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சேகுவாராவின் மரணத்தின் விளைவுகளும் பலவிதமான பேசப்பட்டன. “ஆறு மாதத்துக்கும் குறைவான இந்தக் கொரில்லாப் போரினால், ஒரு மனிதனின் தோல்வியால் லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே மார்க்சீய புரட்சிகர போராட்டம் பலவீனமடைந்துவிட்டது” என்றனர்.”அரசியல் ரீதியான தீர்வை விட்டு விட்டு வன்முறையையே தீர்வாக்கிக்கொண்டார். அதன் தோல்வி” என்றனர். இருந்தபோதிலும் அவர்கள் அனைவருமே சேகுவாராவின் மரணம் மிகப்பெரிய பின்னடைவு என்பதை ஒப்புக் கொண்டிருந்தனர்.
பாரிஸில், ஜெர்மனியில், பிரேசிலில், ஆப்பிரிக்காவில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் என உலகம் முழுவதும் சேகுவாராவின் படத்தோடு அமெரிக்க தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பரித்த இளைஞர்களின் குரல்கள் அந்த மனிதர் எவ்வளவு மகத்தான வெற்றியடைந்திருக்கிறார் என்பதை பறைசாற்றியது. சேகுவாரா இறக்கவில்லை என்றார்கள் அவர்கள். காஸ்ட்ரோ சேகுவாராவுக்கு அஞ்சலி மட்டும் செலுத்தவில்லை. எதிரிகள் சொல்லிக் கொண்டிருந்தது போல சேகுவாரவை தனியாக விட்டுவிடாமல் எல்லாவற்றுக்கும் பொறுப்பெற்றுக் கொள்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை மேலும் உறுதி செய்து கொள்கிறார். உலகமே காஸ்ட்ரோவின் இந்த அஞ்சலியுரையை கேட்டது. சி.ஐ.ஏவும் கேட்டு தங்கள் குறிப்புகளில் பதிவு செய்து கொள்கிறது. மனிதகுல எதிரிகள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.
(இன்னும் இருக்கிறது….)
இ து வ ரை….
8
7ம் அத்தியாயம்
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ தனது அடுத்த ஆவணத்தை தயாரிக்கிறது. சேகுவாராவின் மரணம் லத்தீன் அமெரிக்காவில் என்ன விளவுகள் ஏற்படுத்தும் என்று எழுதுகிறார்கள். அங்குள்ள ஒவ்வொரு நாடு குறித்தும் அலசுகிறார்கள். வரலாற்றை தாங்களே எழுத வேண்டும் என்கிற வெறி அவர்களுக்கு இருப்பது தெரிகிறது.
இறந்த பிறகும் சே அவர்களை படுத்துகிற பாடு எழுதாமலேயே விளங்குகிறது. அவர்களால் வெற்றியை கொண்டாட முடியாத தவிப்பை காட்டுகிறது. சேவின் மரணம் வரலாற்றின் எந்தப் புள்ளியில் நிகழ்ந்திருக்கிறது என்பதை மிகச்சரியாக உணர்த்துவதோடு ஏகாதிபத்தியத்திற்கும், சோஷலிச முகாமுக்கும் நடக்கிற யுத்தத்தின் எதிர்கால திசையைத் தேடுகிறது.
=====
சேகுவாரவின் மரணம்- லத்தீன் அமெரிக்காவிற்கான அர்த்தம்
சேகுவாராவின் மரணம் பொலிவியாவில் கொரில்லா இயக்கத்தை முறித்து விட்டது. சொல்லப்போனால் மரண அடி கொடுத்திருக்கிறது. ஏறத்தாழ அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வன்முறை மூலம் புரட்சி நடத்த வேண்டும் என்னும் பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கைகளுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த உலகத்தில் உள்ள மிக பலவீனமான ஒரு இராணுவத்திடம், கியூப புரட்சியின் தலைசிறந்த தந்திரக்காரர் தோற்று போயிருப்பது கியூபாவைப் போன்று கொரில்லாப் போர் தொடுக்க வேண்டுமென்று தயாராகி வரும் கம்யூனிஸ்டுகளையும், மற்றவர்களையும் கொஞ்ச காலத்திற்காவது சோர்ந்து போக வைத்திருக்கும். காஸ்ட்ரோவும் அவரை பின்பற்றுபவர்களும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கலகக்காரர்களை ஆதரிப்பதற்கு சிறிதளவு வாய்ப்புகளே உள்ளன. ஒருவேளை தந்திரங்களில் சில மாறுதல்கள் செய்து நடத்தலாம்.
பிடல் காஸ்ட்ரோவின் வலது கரமாக விளங்கிய சேகுவாரா 1965ல் மாயமாய் மறைந்து போனார். அவர் நோய்வாய்ப்பட்டு விட்டதாகவும், காஸ்ட்ரோவால் கொல்லப்பட்டு விட்டதாகவும், டொமினிக் குடியரசில் இருப்பதாகவும், வியட்நாமிலோ, காங்கோவிலோ இருப்பதாகவும் வதந்திகள் உலாவின. கடைசியாக காஸ்ட்ரோ 1965 அக்டோபரில் அறிவித்தார். சேகுவாரா கியூபாவின் குடியுரிமையை துறந்து விட்டதாகவும், அவர் மற்ற நாடுகளில் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் சொன்னார். அவர் எங்கேயிருக்கிறார் என்பது குறித்து வதந்திகள் தொடர்ந்தன. மிகச் சமீப காலம் வரைக்கும் அவர் உயிருடன் இருந்தார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது.
காஸ்ட்ரோ வன்முறை புரட்சியில் தனது தொனியை குறைத்துக்கொண்ட நேரத்தில், சோவியத் ஆதரவான லத்தீன் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளோடு முரண்பாடுகளை சரிசெய்ய முயற்சிக்கின்ற நேரத்தில் 1965 மார்ச்சில் சேகுவாரா காணாமல் போனார். ஆனால் சமீபத்தில் காஸ்ட்ரோ கியூபா புரட்சிக்கு அவரும் சேகுவாராவும் சேர்ந்து வகுத்த புரட்சி குறித்த பார்வையை திரும்பவும் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார். 1966 ஜனவரியில் நடந்த மூன்று கண்டங்களுக்கான மாநாட்டில் தனது இந்த பார்வையை மேலும் தீவீரமாக்கிக் கொண்டு பிரெஞ்ச் மார்க்சீய அறிவுஜீவியும், காஸ்ட்ரோவின் கொள்கையை ஆதரிப்பவருமான ஜூலியஸ் தீப்ரே (இப்போது பொலிவிய விசாரணையில் இருக்கிறார்) எழுதிய ‘புரட்சியின் புரட்சி’ என்னும் புத்தகத்தை தூக்கி பிடித்து பேசியிருக்கிறார். ‘அமைதியான வழியில் அதிகாரம்’ என்னும் பழைய கம்யூனிஸ்டுகளை, குறிப்பாக வெனிசுலா கம்யுனிஸ்ட் கட்சியையும், மற்ற சோவியத் சார்புடையவர்களையும் வெறுத்து ஒதுக்கிய காஸ்ட்ரோவும் தீப்ரேவும் லத்தீன் அமெரிக்காவில் இப்போது கலகம் செய்வதற்கு தகுந்த நேரம் என்று சொல்லி இருக்கின்றனர். நகரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியைவிட மற்ற குழுக்களை விட கிராமப்புறத்து கொரில்லா இயக்கங்களே புரட்சிக்கான தலைமையிடங்களாக இருக்க முடியுமென்று அழுத்தத்தோடு சொல்லி இருக்கிறார்கள். தத்துவத்தை செயல்களே அழைத்துச் செல்ல முடியுமென்று அறிவித்திருக்கிறார்கள். மார்க்சீய லெனினிய கட்சிக்கு கொரில்லா இயக்கமே மையப்புள்ளி என்றும் அதுதான் வெற்றியின் விளைவுக்கு இட்டுச் செல்லக்கூடிய புறச்சூழலை உருவாக்கும் எனவும் விவசாயிகளை தன்பக்கம் இழுக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
ஏபரல் 17ம் தேதி காஸ்ட்ரோ- சேகுவாரா-தீப்ரே கருத்துக்களை முன்வைக்கிற சேகுவாராவின் கட்டுரை ஒன்றை கியூப பத்திரிக்கைகள் வெளியிட்டு பிரமாதப்படுத்தி இருக்கின்றன. இரண்டு நாள் கழித்து காஸ்ட்ரோ அதை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். லத்தீன் அமெரிக்க ஒற்றுமைக்கான முதல் மாநாட்டின் சிறப்பம்சமானது மரபார்ந்த கம்யூனிஸ்டுகளின் மறுப்புதான். இந்தக் கோடையில் ஹவானாவில் நடைபெற்ற அந்த மாநாட்டில் காஸ்ட்ரோவின் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஒருசில லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே தற்சமயம் வன்முறை புரட்சி நடத்துவதற்கான சூழல் இருக்கிறது என்றனர். அந்தந்த நாட்டில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகளே அவர்கள் நாட்டில் எந்த கொள்கைகளை, எந்த தந்திரங்களை கையாளுவது என்று தீர்மானிக்க வேண்டும் என்றும் இதில் கியூபாவோ, மற்றவர்களோ தலையிடக் கூடாது என்றும் வாதிட்டனர். சேகுவாரா இல்லாமலேயே, கெரவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மாநாடு பிரதிநிதிகளிடையே இணக்கம் இருப்பதுபோல வெளியே காட்சியளித்தாலும் உள்ளுக்குள் மாஸ்கோ அபிமானிகளுக்கும், உடனடியாக புரட்சியை ஏற்படுத்த நினைத்தவர்களுக்குமிடையே இடைவெளியை அதிகப்படுத்தி இருக்கிறது. பொலிவியாவில் ஏற்பட்ட கொரில்லாக்களின் நடவடிக்கைகள் 1967 மார்ச் மாதத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. லத்தீன் அமெரிக்காவின் கொரில்லா இயக்கங்களின் மீது ஒரு சர்வதேச ஆர்வத்தை ஏற்படுத்தியது. கவுதாமாலா கொரில்லாக்கள் விடுதலைக்கான போராட்டத்திற்கு தயாரானதாய் தெரியவில்லை. வெனிசுலாவிலும், கொலம்பியாவிலுமுள்ள கொரில்லா சக்திகள் அமைதியாக இருந்தார்கள். புதிய இந்த கொரில்லா நடவடிக்கைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தது. காஸ்ட்ரோவோடும், லத்தீன் அமெரிக்காவில் உள்ள அதிதீவீர கம்யூனிஸ்டுகளோடு இணக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியாக மரபார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் பொலிவிய கொரில்லாக்களை ஆதரித்தனர். தீப்ரே பொலிவிய இராணுவத்திடம் பிடிபட்டதும், சேகுவாராதான் கொரில்லாக்களை இயக்குகிறார் என்று அவர் சொல்லியதும் நிறைய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரில்லாக்களோடு நடந்த ஆரம்ப சண்டைகள் போதிய பயிற்சியளிக்கப்படாத, மோசமான ஆயுதங்களுடைய பொலிவிய இராணுவத்திற்கு பெரும் சேதங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்தி இருந்தது. கைவிரல்களால் எண்ணிவிடக்கூடிய அளவுக்கு மிகச்சிலரே இருந்த கொரில்லாக்களிடம் இராணுவம் தோற்றுப் போனது மொத்த பொலிவிய அரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பரிதாபமாக அமெரிக்காவின் உதவியை கேட்டது. பக்கத்து நாடுகள் தாங்கள் என்ன நடவடிக்கை எடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். கொரில்லாக்கள் தவறு செய்யாதவர்களாகவும், வெல்லமுடியாதவர்களாகவும் இருந்தார்கள். ஜூலை மாதத்தில் கொரில்லாக் குழுவிலிருந்த மற்றும் அவர்களோடு தொடர்புடைய தீப்ரே மற்றும் சிலர் பிடிபட்டனர். அவர்கள் சொல்லிய வாக்குமூலத்தாலும், பொலிவிய அரசுக்கு விசுவாசமாக இருந்த விவசாயிகளின் ஒத்துழைப்பாலும் இராணுவம் கொரில்லாக்களுக்கு சில சேதங்களை ஏற்படுத்த முடிந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இராணுவத்தின் திடீர் தாக்குதலால் கொரில்லாக்களின் ரகசிய முகாம் ஒன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அக்டோபர் 8ம் தேதி கொரில்லாக்களின் முக்கிய பிரிவோடு நடந்த வெற்றிகரமான சண்டையில் இராணுவம் சேகுவாராவை கொன்று தன்னை தக்க வைத்துக் கொண்டது.
சேகுவாராவின் மரணம் பொலிவிய அதிபர் பாரியண்டோஸுக்கு முக்கியமான சாதனையாகும். அரசுக்கு கொரில்லா இயக்கம் விடுத்த மிரட்டலின் முடிவாக இருக்கலாம். பாரியண்டோஸுக்கு மிக உறுதுணையாக இருக்கிற, ரொம்ப காலமாய் துவண்டு கிடந்த இராணுவத்தின் தன்னம்பிக்கையையும், வலிமையையும் இது அதிகரிக்கும். ஆனால் கொரில்லாக்களுக்கு எதிராக நேரடியாக ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலருக்கு அரசியல் அபிலாஷைகள் ஏற்பட்டு அவர்களே குடியரசின் காப்பாளர்களாக தங்களை முன்னிறுத்தவும் கூடும்.
உணர்வுகளை உடனடியாக ஏற்படுத்துகிற அளவுக்கு கியூபாவின் உள்நாட்டு பத்திரிக்கைகளில் சேகுவாராவின் மரணத்தைப் பற்றி அதிகமாக சொல்ல முடியவில்லை. ஹவானா மக்களின் பொதுவான மனோநிலை புரிகிறது. வீரமரணம் அடைந்த சேகுவாரா புரட்சிக்காரர்களின் உதாரண புருஷராக கருதப்படுகிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், உலகெங்கும் இருக்கிற எதுவும் செய்யாத, பழைய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகளுக்கு வியாக்கியானம் தருகிற, வறட்டுத்தனமான புரட்சிக்காரர்களுக்கு சேகுவாரா முற்றிலும் மாறுபட்டு காட்சியளிக்கக் கூடும். காஸ்ட்ரோ-சேகுவாரா கொள்கைகள் தூக்கிப் பிடிக்கப்படும். ஆயுதந்தாங்கிய போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சேகுவாராவின் மரணத்திற்கு வழக்கம்போல அமெரிக்காவின்மீதும் சி.ஐ.ஏவின் மீதும் பழி சுமத்தப்படும். வீழ்ந்து விட்ட தலைவனின் பதாகைகளைத் தூக்கிப் பிடித்து இறுதி வெற்றியடைய புதிய சேகுவாராக்களுக்கு அறைகூவல் விடப்படும்.
இருந்தாலும் காஸ்ட்ரோவும், அவரது சகாக்களும் தங்களுக்குள் இந்த ‘புரட்சி ஏற்றுமதி’ குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அலசுவார்கள். சேகுவாராவின் மரணத்தினால் மற்ற நாடுகளில் புரட்சி ஏற்படுத்துவது நின்று போகாது, மேலும் வலுப்பெறும் என்று கியூப மக்களிடம் காஸ்ட்ரோ சூளுரைக்கலாம். அதுதான் அவரது குணாம்சம். அல்லது நிலைமைகளை ஆராய்ந்து ஒருவேளை இது போன்ற அந்நிய முயற்சிகளை நிறுத்தி வைக்கலாம். அல்லது சேகுவாராவின் முயற்சிகளை ஆராய்ந்து கொரில்லா இயக்கத்தில் சில மாறுதல்களைச் செய்து தொடரலாம். மொத்தத்தில், சேகுவாராவின் தியாகத்தை முன்னிறுத்தி, சில மாற்றங்களோடு காஸ்ட்ரோ தனது முயற்சியைத் தொடருவார் என்றுதான் தெரிகிறது. விரைவில் தங்கள் நாட்டிலும் புரட்சி ஏற்பட்டுவிடும் என பயந்துகொண்டிருந்த இடதுசாரிகள் அல்லாத மற்ற லத்தீன் அமெரிக்கர்களுக்கு சேகுவாராவின் மரணம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கும். கைதேர்ந்த அந்த புரட்சிக்காரனின் மரணம், சில லத்தின் அமெரிக்கர்களுக்கு இந்த கலகங்கள் மற்றும் அதற்கான சமூக காரணங்கள் குறித்த தீவீரத்தை குறைக்கவும் செய்யலாம். அதற்கு நேர் எதிராக, எந்த வகையான இடதுசாரிகளாயிருந்தாலும் கம்யூனிஸ்ட்கள் சேகுவாராவை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக கியூப புரட்சிக்கு அவர் ஆற்றிய பங்கினை எடுத்துச்சொல்வார்கள். அதற்கான காரணங்கள் களையப்படும் வரை புரட்சி தொடரும் என்பார்கள்.
காஸ்ட்ரோவோடு முழுமையான முரண்பாடுகள் கொண்டிருக்கிற, கொரில்லா போராட்டத்தை வாயளவில் மட்டும் ஆமோதித்துக் கொண்டு இருக்கிற லத்தீன் அமெரிக்காவில் உள்ள பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் காஸ்ட்ரோ-சேகுவாரா- தீப்ரே கொள்கைகளை எதிர்த்து இன்னும் வலிமையாக வாதங்கள் செய்வார்கள். புரட்சிக்கு தகுந்த சூழல் உள்ள ஒரு நாட்டில், மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு கொரில்லா புரட்சிக்காரன் தோற்றுப்போனதை அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். சேகுவாராவை முழுமையாக குறைத்துப் பேசாவிட்டாலும், பொலிவிய கொரில்லாப் போராட்டத்திற்கு பொலிவியர்கள் அல்லாதவர்கள் தலைமை தாங்கியதால் அங்குள்ள விவசாயிகளின் ஆதரவைப் பெற முடியாமல் போய்விட்டது என குற்றம் சுமத்துவார்கள். அங்குள்ள இடதுசாரி கட்சிகளே புரட்சிக்கு தகுந்த தருணத்தை அறியமுடியும் என்றும் அந்த மண்ணில் உள்ளவர்களால்தான் புரட்சி நடத்தப்பட முடியும் என்றும் சொல்வார்கள். சேகுவாராவின் பொலிவிய முயற்சிகளிலிருந்து காஸ்ட்ரோ தன்னை துண்டித்துக்கொள்ள முடியாது. நாங்கள் ஏற்கனவே சொன்னோம் என்கிற குரல்களை கேட்க வேண்டி வரும். கியூபாவின் கொள்கைகளை ஆதரித்தவர்கள் அதை மறுபரிசீலனை செய்தாலும் காஸ்ட்ரோவுக்கு இளம் கம்யூனிஸ்டுகளிடம் செல்வாக்கு குறைந்து விடாது.
=====
அக்டோபர் 8ம் தேதி நடந்த போரில் சேகுவாரா கொல்லப்பட்டார் என்று இந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படுகிறது. பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். காஸ்ட்ரோ அதை அவிழ்க்கிறார்.
இந்த ஆவணத்திற்கும் அவர்கள் ஏற்கனவே எழுதிய ஆவணங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் தெரிகிறது. காஸ்ட்ரோவுக்கும் சேவுக்கும் உள்ள முரண்பாடுகள் பேசப்படவில்லை. அவர்கள் இனி அதை பேசவும் முடியாது. கியூபா மக்கள் காஸ்ட்ரோவோடு இணைந்து நின்று அவர்கள் வாயை அடைத்து விட்டார்கள்.
ஆனால் உலகில் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு முன்னால் ஒரு கேள்வியை அவர்கள் வைத்து விட்டார்கள். சேவின் மரணம் எழுப்பியிருக்கும் கேள்வி அதுதான். காஸ்ட்ரோவே அதற்கும் பதில் சொல்கிறார்.
9
8ம் அத்தியாயம்
அவர் பொலிவியாவில் இறந்து போனார் என்பது தெரிகிறது. பொலிவியாவுக்கு எப்போது சென்றார். அங்கு என்ன செய்தார். எப்படி இறந்து போனார் என்கிற கேள்விகளுக்கு விடைகள் இல்லை. காலம் கொஞ்சம் கொஞ்சமாய் அவைகளை அவிழ்க்கிறது.
பாரியண்டோஸின் நம்பிக்கைக்குரிய சகாவும், சி.ஐஏ ஏஜண்டாகவும் இருந்த அண்டோணியா அர்குயா என்பவர் தனது தவறுகளை உணர்ந்து பிராயச்சித்தமாக சி.ஐ.ஏ கைப்பற்றிய சேகுவாராவின் பொலிவிய நாட்குறிப்புகளை கியூபாவுக்கே 1968ல் அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
காஸ்ட்ரோ அந்த டைரியை அச்சடித்து அதற்கு ஒரு ‘அவசியமான முன்னுரை’ எழுதி கியூபா மக்களுக்கு இலவசமாக வெளியிட்டு விட்டார். பொலிவிய நாட்குறிப்புகளை சிதைத்து சேவின் மீதும், கியூபா மீதும், காஸ்ட்ரோ மீதும், புரட்சிகர சக்திகள் மீதும் அவதூறுகளை பரப்ப இருந்த திட்டங்கள் முறியடிக்கப்பட்டது. சி.ஐ.ஏவின் கைகளிலிருந்த டைரியின் பக்கங்களை வெறும் நகல்களாக்கி விட்டார். பொலிவிய நாட்குறிப்புகளை, சி.ஐ.ஏவும், பொலிவிய அரசுமே வெளியிடாமல் இருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. மிகச் சிலபேரை வைத்துக் கொண்டு பொலிவிய ராணுவத்தை மாறி மாறி தோற்கடித்த நாட்கள் அதில் இருந்தன. அந்த அவமானத்தை வெளியேச் சொல்ல விரும்பவில்லை அவர்கள். அது கொரில்லாப் போராளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டும் என்று பயமும் இருந்தது.
காஸ்ட்ரோ தனது முன்னுரையில், நிரந்தரமற்ற நாட்களின் விளிம்பில் உட்கார்ந்து ஒவ்வொரு நிகழ்வையும் சுய விமர்சனங்களோடு எழுதியிருக்கிற சேவின் தெளிவு கண்டு வியந்து போகிறார். காடுகளில் ஓய்வுக்கு ஏங்கும் உடலின் அசதி அந்தப் பக்கங்களில் எங்குமே தென்படவில்லை. ஒவ்வொரு புரட்சிக்காரனுக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இருக்கும் என்று ‘பொலிவிய நாட்குறிப்புகளை’ அறிவிக்கிறார். சேவின் மனைவி அலெய்டாவின் பங்கும் இதில் மகத்தானது. தன்னில் கலந்த பிரியமான தோழனின் கடைசி அத்தியாயங்களை அவரது எழுத்துக்களில் படித்து எல்லோருக்கும் புரிய வைத்தவர் அவர்தான்.
சேகுவாராவின் இருபதாவது நினைவு தினத்தை ஒட்டி அக்டோபர் 8, 1987ல் ‘நான் சேகுவாராவை நினைக்கும் போது’ என்று ஒரு டாகுமெண்ட்ரி படம் எடுக்கப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ இத்தாலிய பத்திரிக்கையாளர் ஜியானி மின்னா என்பவருக்கு கொடுத்த பேட்டியினை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறது. அந்தப் பேட்டியில் தான் அறிந்தவற்றை மனம் விட்டு பேசுகிறார். சில கேள்விகள் உடைபடுகின்றன. சில கேள்விகள் உருவாகின்றன,
சே இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கனவில் வந்து என்னோடு பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் உயிரோடு இருக்கிறார். அவரது வடிவம், நடத்தை, கொள்கைகளால் நிரந்தரமான காட்சியாகி இருக்கிறார்.
நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பொறுத்து நான் செயல் வீரர்களை பயன்படுத்துவேன். ஒரு தொண்டன் திறமைகளையும், அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டுவிட்டால் புதியவர்களை பயன்படுத்துவேன். அப்போதுதான் அவர்களும் கற்றுக் கொள்ளவும்,, தங்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும். அபாயகரமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒருவரையே பயன்படுத்தினால், ஒருதடவை இல்லை, மற்றொரு தடவை நாம் அவரை இழக்க நேரிடும். செயல்வீரர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றி இருக்காவிட்டால் சேகுவாராவை எப்போதோ இழக்க வேண்டியிருந்திருக்கும்.
அவர் தென் அமெரிக்காவுக்கு போக வேண்டும். அது அவருடைய பழைய திட்டம். அவர் எங்களோடு மெக்ஸிகோவில் சேர்ந்தபோது, எந்த நிபந்தனையும் விதித்திருக்கவில்லை. ஆனலும் அவர் ஒன்று கேட்டார். புரட்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தபிறகு அவர் தனது பிறந்த பூமியான அர்ஜெண்டினாவுக்கு போக அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நான் உறுதியளித்தேன். அதற்கு வெகுதூரம் போக வேண்டி இருந்தது. முதலில் போரில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். பிறகு யார் யாரெல்லாம் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். அவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏனென்றால் விளைவுகளைப் பற்றி யோசிக்காத மனம் அவருடையது. ஆனாலும் அடிக்கடி தன்னுடைய வேண்டுகோளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்.
சியரியா மேஸ்ட்டிரியாவின் அனுபவங்களைப் பெற்ற பிறகு, தென் அமெரிக்காவில் புரட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்னும் தாகம் மேலும் வளர ஆரம்பித்தது. எங்களோடு சேர்ந்து மிக மோசமான தருணங்களை பார்த்த பிறகு, எங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இராணுவத்தை பலம் வாய்ந்ததாக உருவாக்க வேண்டியிருந்ததை புரிந்து கொண்டார். தென் அமெரிக்காவில் புரட்சிகர இயக்கத்திற்கான சாத்தியங்கள் இருப்பதை நம்பினார். தென் அமெரிக்கா என்று நான் சொல்வது, தென் அமெரிக்காவின் தெற்கு பகுதிகளை. நாங்கள் அவரது திட்டத்திற்கு மதிப்பளித்தோம்.
புரட்சி வெற்றியடைந்ததும், நிறைய பொறுப்புகளும், பிரச்சினைகளும் முன் வந்து நின்றன. அரசியல்ரீதியான பிரச்சினை. இயக்கத்தை மேலும் ஒன்றுபடுத்தி நிற்க வைக்க வேண்டிய பிரச்சினை. நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினை. முந்தைய அரசின் எதுவும் இல்லாத வெறுமையில் நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தொழில்துறையின் அமைச்சராக சே நியமிக்கப்பட்டார். மிகத் திட்டமிடும் தொழிலாளி அவர். அவர் மேலும் பல பொறுப்புகளை வகித்தார். எப்போதெல்லாம் எங்களுக்கு முக்கிய பொறுப்புகளை கவனிப்பதற்கு தீவீரமான ஒரு மனிதர் தேவைப்படுகிறாரோ அப்போது அவர் முன் வருவார். அப்படித்தான் தேசிய வங்கிக்கு அவர் தலைவரானார். அது குறித்து கேலியும், கிண்டல்களும் உண்டு. எக்கனாமிஸ்ட்டை கேட்டால் இவர் வந்திருக்கிறாரே என்று பேசினார்கள். இது குறித்து அவரிடம் கேட்டபோது, நான் எக்கனாமிஸ்ட் இல்லை. கம்யூனிஸ்ட் என்றார்.
தேசத்திற்குள் அப்போதுதான் நாங்கள் எங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தோம். வலதுசாரிகள் அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டினர். இருந்தபோதும், சே அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மிக புத்திசாலித்தனமாகவும், திறம்படவும் செய்து முடித்தார். உற்பத்தியை பெருக்குவதிலும், கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதிலும் கடினமாக உழைத்தார். அவர் செய்த எல்லாவற்றிலும் அவர் ஒரு முன்மாதிரிதான்.
இப்படித்தான் புரட்சிக்குப்பின் முதல் வருடங்களை அவர் சந்தித்தார். பிறகு ஏற்கனவே அவரிடமிருந்த பழைய திட்டங்களையும் சிந்தனைகளையும் செயல்படுத்த வேகம் கொண்டார். அந்த வேளை அவருக்கு சரியானதாய் பட்டிருக்கிறது. சிறப்பான உடல்நிலை அவரதுநடவடிக்கைகளுக்குத் தேவை. அப்போது உண்மையாகவே அவர் மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான நிலைமையிலிருந்தார். நமது நாட்டிலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகள் அவரிடம் இருந்தன. எதைச்செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருந்தது.
அந்த நேரத்தில்தான் இன்று ஜேயர் என்றறியப்படும் காங்கோவில் தலையீடு வந்தது. லுமும்பா இறந்து போனார். ஆயுதந்தாங்கிய இயக்கம் ஏற்பட்டது. புரட்சிகர இயக்கம் எங்கள் உதவியை நாடியது. ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்திருந்த சமயத்தில், அவர் அங்கு செல்வது அவருக்கு மேலும் அனுபவங்களை தரும் என ஆலோசனை சொன்னேன். அவர் தலைமையில் 100 பேர் கொண்ட குழு காங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அங்கு பல மாதங்கள் இருந்தார்கள்.
அங்கு சென்று போர் தொடுப்பது எங்கள் திட்டமல்ல. ஆப்பிரிக்கர்களுக்கு பயிற்சி அளிப்பதும் உதவுவதும்தான் நோக்கம். அங்கு இயக்கம் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. வலிமையோ, ஒற்றுமையோ கிடையாது. நமது ஆட்களை அங்கிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளலாம் என சே சொன்னார். அவரது கருத்துக்களை ஒப்புக்கொண்டு நாங்கள் எங்கள் தோழர்களை அழைத்துக்கொண்டோம். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல போதுமான சூழல் அங்கில்லை.
ஆப்பிரிக்காவில் தங்கியிருப்பதை தற்காலிகமான ஒன்றாகத்தான் சே திட்டமிட்டிருந்தார். தென் அமெரிக்காவுக்கு செல்வதற்கு தகுந்த நேரத்தை சே எதிர்பார்த்திருந்தார். ஆனால் எங்களுக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. சே ஏற்கனவே ‘போய் வருகிறேன்” என்று சொல்லியிருந்தார். அவர் கியூபாவைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் கடிதத்தை கொடுத்திருந்தார். மிக அமைதியாக சென்று விட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு ரகசியமான பிரிவு. நாங்கள் அவரது கடிதத்தை வைத்திருந்தோம். ஆனால் மிக மோசமான, தரங்கெட்ட வதந்திகளும், அறிக்கைகளும் வீசப்பட்டன. ‘சே, மறைந்துவிட்டார்’, ‘சே, இறந்துவிட்டார்’ ‘எனக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள்’ என்றெல்லாம் பேசப்பட்டன. நாங்கள் எல்லாவற்ரையும் எங்கள் மெனத்தில் புதைத்துக் கொண்டோம். அவரது இயக்கத்தை காப்பாற்றவும், அவரையும் அவரோடு சென்றிருக்கும் மனிதர்களையும் பாதுகாக்கவே அப்படி இருந்தோம்.
காங்கோவை விட்டு வெளியேறிய பிறகு சே தான்சேனியாவுக்கு சென்றார். அப்புறம் ஐரோப்பாவில் உள்ள ஒரு சோசலிஷ நாட்டிற்கு சென்றார். கியூபாவிற்கு திரும்ப விரும்பவில்லை. நாங்கள் அமைதியாயிருந்த நேரத்தில் செய்யப்பட்ட பிரச்சாரம் எங்களை காயப்படுத்தியது. எங்களுக்கு வேறு வழியில்லை. அந்தக் கடிதத்தை வெளியிட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது.
தவிர்க்க முடியாமல் அந்தக் கடிதத்தை எல்லோருக்கும் தெரிவித்ததால், சேவுக்கு இன்னும் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. ‘விடை பெறுகிறேன்’ என்ற அவரது வார்த்தைகளை தெரிவித்த பிறகு அவரால் கியூபாவிற்கு திரும்பவே முடியாது. அது அவரது விசேஷமான குணம். நான் அவரோடு தொடர்பு கொண்டு கியூபாவிற்கு வரவேண்டும் என தொடர்ந்து அழைத்தேன். அவர் எதைச் செய்ய நினைத்தாரோ அதற்கேற்ற ஒரு நடவடிக்கையாக இருந்தது. அவர் வந்தார். திரும்பவும் யாருக்கும் தெரியாமல் சென்றார். மிக கடினமான மலைகளுக்கு பயிற்சிக்காக சென்றார்.
உதவும் பொருட்டு அவரது பழைய தோழர்களையும், பழைய கொரில்லா போராளிகளையும், மற்றும் சில புதிய வீரர்களையும் கேட்டார். அவர்களோடு பேசி, அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அனுபவம் வாய்ந்த தோழர்களின் குழு ஒன்றை அவரோடு செல்ல அனுமதித்தோம். சில மாதங்கள் அவர்களோடு பயிற்சி பெற்ற அவர், பொலிவியாவில் தேவையான பூர்வாங்க வேலைகள் முடிந்ததும் அந்தக் குழுவோடு அங்கு சென்றார்.
சே எங்களை விட்டு சென்ற அந்த தினம் சக தோழர்களோடு ஒரு விளயாட்டு நடத்தினேன். ஒரு நல்ல காரியத்திற்காக சே செல்வதால் மிக நெருங்கிய தோழர்களை மட்டும் அழைத்து இரவு உணவை ஒரு சிறப்பு விருந்தினருக்காக கொடுத்தேன். சே அந்த சிறப்பு விருந்தினர். மாறுவேடத்தில் இருந்தார். யாரும் அடையாளம் காணவில்லை. நான்தான் அவர்களுக்கு சே என்று சொல்ல வேண்டி இருந்தது.
எல்லைகளை தேர்ந்தெடுத்து அவரே திட்டம் வகுத்தார். அர்ஜெண்டினாவில் புரட்சி ஏற்படவேண்டுமென்றுதான் விரும்பினார். அந்த நாடுகளோடு எந்தவிதமான தொடர்பும் அரசியல் ரீதியாக வைத்திருக்காததால் அதிலிருந்து நாங்கள் பின்வாங்கினோம். மேலும் அந்த நாடுகள் கியூபாவை எதிர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்திருந்தன.
முன்னதாக அர்ஜெண்டினியர்களை இணைத்த ஒரு குழுவை சே அமைத்திருந்தார். அதில் ஒருவர் அர்ஜெண்டினா நிருபர் மாசெட்டி என்பவர். சேவின் ஏற்பாட்டின்படி மாசெட்டி வடக்கு அர்ஜெண்டினாவில் சலியாப் பகுதியில் ஒரு முன்னணி ஏற்படுத்தியிருந்தார். அந்த நடவடிக்கையில் மாசெட்டி இறந்து போனார். தன்னால்தான் சில தோழர்களை இழந்தோம் என்னும் உணர்வுக்கு ஆட்பட்டு உடனடியாக காரியத்தில் இறங்க வேண்டும் என்று அவரை தூண்டியிருக்க வேண்டும்.
சே அந்த பகுதியைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தார். அது அர்ஜெண்டினாவின் எல்லையை ஒட்டி அமைந்திருந்தது. பொலிவிய விவசாயிகளைப் பற்றியும் தெரிந்திருந்தார். அவர்கள் அமைதியான, நம்பிக்கையற்ற மனிதர்களாயிருந்தனர். கியூப விவசாயிகளிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதும் தெரியும். கல்லூரி நாட்களில் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றிருந்தார். அமேசான் பகுதிகளுக்கும், இன்னும் பல பகுதிகளுக்கும் சென்றிருந்தார். பலதடவைகள் அவர்களைப்பற்றியும், அவர்களுக்கு உதவ எதாவது செய்ய வேண்டுமென்றும் என்னிடம் சொல்லியிருந்தார். அந்த வேலை கடினமானது என்பதை தெரிந்தே வைத்திருந்தார்.
ஆனால் முதலில் ஏற்பட்ட பின்டைவுகளுக்குப் பிறகு நம்பவே முடியாத எங்கள் அனுபவங்களிலிருந்து சே நிறையவே கற்றுக் கொண்டிருந்தார். கடினமான நிலைமைகளில் ஒரு சின்னக் குழு போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்கிறது என்பதை பார்த்திருந்தார். இது போன்ற போராட்டங்களிலும், அதன் சாதகங்களிலும் சேவுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. எனவே போராட்டம் எங்கே அமைய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்திருந்தார். அதில் எந்த தவறும் ஏற்படவில்லை. அமைப்பாக உருவெடுத்திருந்த அரசியல் சக்திகளின் ஆதரவினை பெற முயற்சி செய்தார். பொலிவியன் கம்யூனிச கட்சியின் ஆதரவினையும் கணக்கிலெடுத்துக் கொண்டார். பொலிவியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சில பிளவுகள் இருந்தன. நிறைய தலைவர்கள் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மோஞ்சேவை சந்தித்து தனது திட்டத்தை விவரித்தார். இந்த இயக்கத்தில் வேறு சில தலைவர்களும் இருந்தனர். மோஞ்சேவுக்கு அது சில பிரச்சினைகளை ஏற்படுத்தின. மோஞ்சேவுக்கும் சேகுவாராவுக்கும் முரண்பாடுகள் தோன்றின. ஒரு அமைப்பாக உருப்பெருவதற்குள் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனர். வரலாற்று ரீதியாக பொலிவியன் கம்யூனிச கட்சியை இதற்கு குறை கூறிவிட முடியாது. நிறைய கம்யூனிஸ்டுகள் சேவோடு சேர்ந்தனர். முரண்பாடுகள் இருந்தபோதும் மிகவும் உதவிகரமாக விளங்கினர். யாரையாவது குற்றம் சொல்ல வேண்டுமென்றால் மோஞ்சேவைத்தான் சொல்ல வேண்டும்.
பொலிவிய இராணுவம் எதோ நடக்கிறது என்று பார்த்தது. அதேநேரத்தில் மற்ற காரியங்களும் நடந்து கொண்டிருந்தன. பெரிய குழுவோடு சென்று ஒரு இடத்தை தகர்க்க சே திட்டமிட்டார். குறைவான அனுபவம் கொண்டவர்களும், புதியவர்களும் அந்த பயணத்தின் பின்னால் இருந்தனர். பல வாரங்கள் பிடித்தது. பெரிய குன்றுகளும், வெள்ளமும், முகடுகளும் கொண்ட பிரதேசம் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை சே பொலிவிய நாட்குறிப்புகளில் விவரிக்கிறார். சிலரை இழக்கவும் நேரிட்டது.
பல வாரங்கள் கழித்து திரும்பவும் தங்கள் இருப்பிடத்திற்கு களைப்படைந்த வீரர்கள் திரும்பிய போது அங்கு ஒழுங்கின்மை உள்ளிட சில பிரச்சினைகளை சே பார்த்தார். பலவீனமாகியிருந்த, களைப்படைந்திருந்த வீரர்கள் ஒய்வெடுக்க அவகாசமேயில்லை. அடுத்த சில நாட்களில் இராணுவத்தின் முதல் தாக்குதல் நடந்தது. கொரில்லாக்கள் அனுபவமிக்கவர்களாக இருந்ததால் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பதுங்கி, சட்டென திருப்பித் தாக்கி ஆயுதங்களை பறித்துக் கொண்டதோடு பெரிய சேதங்களையும் இராணுவத்திற்கு ஏற்படுத்தினர். இவையெல்லாம் மிகச் சீக்கிரமாகவே நடந்து விட்டது என்றுதான் நான் சொல்வேன்.
முதல் நிகழ்ச்சிகளுக்கு பிறகு அடுத்த தாக்குதல் திட்டமிடப்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து கொண்டனர். பிறகு ஒருபோதும் அவர்கள் சந்திக்கவேயில்லை. தேவையான மருந்துகளையும் சே எடுத்துச் செல்லவில்லை. அது அவருக்கு சிரமத்தை அளித்திருக்கும். கிரான்மாவில் நடந்த விஷயம் திரும்பவும் நடந்தது. பல மாதங்கள் இராணுவத்தை எதிர்த்து போரிட்டனர்.
விதிகளற்ற போர்முறையை சே நம்பினார். அவருக்கு அது நன்றாக தெரியும். இந்தப் போர் முறையில் போராளிகள் ஒருவரையொருவர் சார்ந்து மட்டுமே இருக்க முடியும். வெளியிலிருந்து அவர்களுக்கு ஆதரவோ, உதவியோ எதிர்பார்க்க முடியாது. அது ஏற்கனவே சாத்தியமற்றதாகியிருந்தது. ரகசியமாக வெளியிலிருந்து கிடைத்த உதவிகளும் அழிக்கப்பட்டிருந்தது. இருபது பேரே கொண்டிருந்தாலும், அந்த நேரத்திலும் போராட முடியும் என்பது சேவுக்கு தெரியும். நன்றாக பழக்கப்பட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த திசையில்தான் சே தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார். அனால் நடந்தவைகளை சேவின் டைரியின் மூலமாக மட்டுமல்ல, இராணுவத்தின் விவரங்களிலிருந்துகூட விவரிப்பது என்பது நம்ப முடியாதவைகளாக இருக்கின்றன. இராணுவத்தோடு ஏற்பட்ட மோதல்கள் உண்மையிலேயே காவியமாய் இருக்கிறது.
இன்னொரு குழு முற்றிலும் அழிந்து போனது சேவை கடுமையாக பாதித்திருக்க வேண்டும். அந்தக் குழுவின் மரணத்தை வெளிநாட்டு பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. சே அதை நம்ப மறுத்தார். இராணுவத்தின் இன்னொரு பொய்யென்று நினைத்தார். அவருடைய டைரியில் ரொம்ப காலம் கழித்துத்தான் அந்தக் குழுவின் மரணத்தை எழுதுகிறார். பிறகு சே மக்கள் வாழும் ஒரு பகுதியை அடித்தளமாக அமைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்கிறார். இதற்குள் பல நல்ல பொலிவிய நாட்டு வீரர்களும் அவருக்கு கிடைத்திருந்தார்கள். இந்த நடவடிக்கை மிகச் சரியான ஒன்று. இன்னும் போராடுவதற்கு வாய்ப்பிருந்தது.
அவர் முன்னேறி கொண்டிருந்தார். ஒரு நல்ல வெளிச்சமான நேரத்தில் ஒரு கிராமத்திற்கு வருகின்றனர். காலியாய் இருந்த கிராமம் ஏதோ நடப்பதற்கான அடையாளமாயிருந்தது. சண்டை நடக்கப் போகிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். பாதையில் காத்திருப்பதுதான் எல்லா இராணுவங்களும் செய்யும் காரியம். வெளிச்சத்தில் போராளிகள் வெறிச்சிட்டிருந்த மலைகளை நோக்கி சென்றனர். இராணுவமே அங்கு இல்லாதது போல நடந்து கொண்டிருக்கின்றனர்.
திடீர் தாக்குதலுக்கு போராளிகள் உள்ளாயினர். பலர் கொல்லப்பட்டனர். உடல்நலம் குன்றிய சில மனிதர்களை குழு கொண்டு சென்றது. பெரும் சிரமத்தை அளித்தாலும் அவர்களை கொண்டு சென்றுவிடவே சே வலியுறுத்தினார். நாங்கள் இது போல பல தடவை செய்திருக்கிறோம். அவர்களை விட்டுச் செல்ல ஒரு இடத்தை பார்ப்போம். சேவும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். தான் குறி வைக்கப்பட்டு விட்டோம் என்பதை அறிந்திருந்தார். வெட்ட வெளியில் இருந்தார். நல்ல பொலிவியன் தோழர்களை இழந்திருந்தார். மாதக் கணக்கில் இராணுவத்தை எதிர்த்து தீரச் செயல்களை புரிந்திருந்த அவருக்கு இந்த நிலைமை மிக கஷ்டமான ஒன்று. அவருடைய துப்பாக்கி அழிக்கப்பட்டது. கைதியாக்கப்பட்டார்.
எதோவொன்று அவரை கடுமையாக பாதித்திருக்க வேண்டும். மரணத்தை பற்றிய பிரக்ஞையற்ற தன்மையில் இருந்திருக்க வேண்டும். பல தடவைகள் இது போல மரணத்தோடு சவால் விட்டிருக்கிறார். அவர்கள் எச்சரிக்கையாக முன்னேறியிருக்க வேண்டும். சாலைகளை உபயோகித்திருக்கக் கூடாது. வேறு வழிகளை ஆராய்ந்து இரவில் சென்றிருக்க வேண்டும். எதிரிகளை அவர் குறிபார்த்திருக்க முடியும் அப்போது.
அவர் என்ன செய்தாரோ அதனை நாங்கள் நம்புகிறோம். நான் அடிக்கடி சொல்வதுண்டு. வெற்றியும் தோல்வியும் நமது பாதைகளை சரியென்றோ, தவறென்றோ தீர்மானிப்பதில்லை. எங்கள் போராட்டத்தில் அனைவருமே செத்திருக்கக் கூடும். பலதடவை மரணத்தை நெருங்கியிருக்கிறோம். இறந்து போயிருந்தால், நாங்கள் தவறான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டதால் இறந்து போனோம் என்றுதான் பலர் சொல்லியிருப்பார்கள். மரணம் பாதையை தவறானதாக அர்த்தப்படுத்திட முடியாது. பாதை சரியானதென்று நம்புகிறேன். அவரது வழிமுறைகளில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என்ன சொல்ல வருகிறேனென்றால், போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் அவர் தள்ளியே இருந்திருந்தால் சிறப்பானதாய் இருந்திருக்கும். போராட்டத்தில், அரசியல் மற்றும் இராணுவ தலைவராக மட்டும் அவர் இணைந்திருந்தால் சரியானதாய் இருந்திருக்கும்.
சேவுக்கும் எனக்கும் அற்புதமான உறவுகள் உண்டு. நல்ல நண்பர்களாயிருந்தோம். ஒருவரை ஒருவர் நம்பினோம். எனது கருத்துக்களுக்கு மிகுந்த கவனம் கொடுப்பார் சே. ஆனால் அவர் சில இலட்சியங்களை வைத்திருந்தார். அவரைத் தடுப்பது என்பது எங்களால் முடியாமல் போய்விட்டது. கருத்துக்களை அவர் மீது திணிக்க முடியாது. செய்ய முடிந்தது அவருக்கு உதவுவதுதான். முடிந்த அளவுக்கு உதவினோம். அவருடைய இலட்சியம் அசாத்தியமானதாயிருந்தால் உதவியிருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால், இது முடியாது, எங்கள் தோழர்களை தியாகம் செய்ய முடியாது என்றே சொல்லியிருப்போம். ஆனால் அவர் என்ன செய்தாரோ, அதை செய்தார். அவர் செய்ததில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
சேவின் உடலை அவர்கள் என்ன செய்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை. அவரது சடலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. உபயோகித்த பொருட்கள் கிடைத்திருக்கின்றன. என்ன நடந்தது என்பது இரு தரப்புகள் மூலமாகவும் தெரிய வருகிறது. ஆனால் சே எங்கே புதைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. அவர் காணாமல் போக வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். இருந்த போதிலும் சே இந்த உலகின் மிகப் பெரிய சின்னமாக இருக்கிறார். புரட்சிகரத்தன்மைக்கும், தைரியத்திற்கும், உயர்ந்த பண்புகளுக்கும் உதாரண புருஷராகி விட்டார்.
மூன்றாம் உலகத்தின் போர்க்குணமிக்க புரட்சிக்காரனுக்கு பிரத்யேகமான அடையாளமாகி விட்டார்.
பிடலின் பேட்டி முடிவடைகிறது.
சே பொலிவியாவுக்கும் சென்றதும், அங்கே நடந்தவைகளும் ஓரளவுக்கு இப்போது பிடிபடுகின்றன. அவர் மரணம் நிகழ்ந்தவிதம் மட்டுமே இன்னும் அறியப்பட முடியாமல் இருக்கிறது. அதையும் அவர்கள் எழுதி வைத்திருந்தார்கள்.
10
9ம் அத்தியாயம்
சேகுவாராவின் முப்பதாவது நினைவு தினத்தையொட்டி கியூப அரசின் தேசீய பாதுகாப்புத் துறையிலிருந்து அவரது மரணம் குறித்த ஆவணங்களை சேகரித்து முழுமையான தகவல்களை பெற முயற்சி எடுக்கப்பட்டது. சி.ஐ.ஏ, அரசு, மற்றும் பெண்டகனிலிருந்து சில ஆவணங்கள் கிடைத்தன. ஏராளமான தகவல்களை சேகரித்து அமெரிக்க எழுத்தாளர்கள் சேகுவாராவைப் பற்றி இரண்டு புத்தகங்களை எழுதியிருந்தார்கள். சுட்டுக்கொல்லப்படும் வரை அருகில் இருந்த சி.ஐ.ஏ எஜண்ட் ரொட்ரிப்கியுஸ் அறிக்கை சில விஷயங்களைத் தருகின்றன. சி.ஐ.ஏ பாதுகாத்து வரும் இன்னும் ஏராளமான ஆவணங்கள் ரகசியமாகவே இருந்தன.
கிடைத்த ஆதாரங்களில் இருந்து உண்மைகளின் ஒரு பகுதி மட்டுமே தெரிய வருகிறது. வெள்ளை மாளிகைக்குள் சேகுவாரா பற்றிய தகவல்கள் சென்று வருவதையெல்லாம் பார்க்க முடிகிறது. உலகின் சக்தி மிக்க பீடமாக கருதப்படும் அந்தக் கட்டிடம் சேகுவாராவின் மரணத்தை எதிர்பார்த்து நிற்கிற காட்சி தெரிகிறது.
“கியூப புரட்சியின் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றி விட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.”
என கடிதம் முடிகிறது. 1965, அக்டோபர் 3ம் தேதி ஒரு கூட்டத்தில் காஸ்ட்ரோ ஏப்ரல் மாதத்தில் எழுதப்பட்ட சேகுவாராவின் அந்த கடிதத்தை படிக்கிறார். கடிதத்தில், கியூபா அரசாங்கத்தில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் ராஜினாமா செய்திருந்தார்.
சேகுவாராவின் இந்த முடிவு குறித்து 1965 அக்டோபர் 18ம் தேதி சி.ஐ.ஏ ஆராய்கிறது. இதர கியூபாவின் தலைவர்கள் உள்நாட்டு பிரச்சினைகளிலேயே அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்க, சேகுவாரா மற்ற லத்தின் அமெரிக்கா நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் கியூபாவைப் போன்று புரட்சி நடத்திட வேண்டும் என விரும்பியதாக அறியப்படுகிறது. டிசம்பர் 1964ல் சேகுவாரா ஐக்கிய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவுக்கு மூன்று மாத காலம் பயணம் மேற்கொண்ட பிறகே இந்த முடிவுக்கு வந்ததாக சி.ஐ.ஏ கருதுகிறது.
சேகுவாரா 1966ம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் வாரத்திற்கும், நவம்பர் முதல் வாரத்திற்கும் இடையில் பொலிவியாவிற்கு சென்றதாக தகவல் கிடைக்கிறது. போலி பாஸ்போர்ட்டு தயாரித்து கம்யூனிச கொரில்லா இயக்கம் நடத்தவே அங்கு நுழைந்திருக்கிறார் என்பதும் நிச்சயமாகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்களில் பொலிவியா ஒன்றும் முக்கியமானதாக கருதப்படவில்லை. பொலிவியாவின் சமூக நிலைமைகளும், வறுமையும் புரட்சிகர தத்துவத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. இறுதியாக பொலிவியாவின் எல்லைப்புறம் ஐந்து நாடுகளோடு ஒட்டியிருக்கிறது. எனவே பொலிவியாவில் புரட்சிகர நடவடிக்கை வெற்றி பெற்றால் இதர நாடுகளுக்கும் எளிதாக அது பரவுகிற வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று காரணங்களால் பொலிவியாவில் கொரில்லா இயக்கம் நடத்த சேகுவாரா தீர்மானித்திருக்கலாம் என்ற முடிவுக்கு சி.ஐ.ஏ வருகிறது.
1967ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் பொலிவிய இராணுவத்தின் ஜெனரல் ஒவாண்டாவுக்கும், அமெரிக்க இராணுவத்தின் ஒரு துணைப்பகுதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பொலிவிய இராணுவத்தின் இரண்டாம் ரேஞ்சர் பெட்டாலியனுக்கு பயிற்சியளிப்பது அளிப்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். அமெரிக்க அதிபர் லிண்டன் பி.ஜான்சனின் பிரதம ஆலோசகரான வால்ட் ரோஸ்ட்டோவ் ஒரு தகவல் அனுப்புகிறார். சேகுவாரா தென் அமெரிக்காவில் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார். இன்னும் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் சொல்கிறார். இது நடந்தது 1967 மே 13ம் தேதி. இதற்குப் பிறகு காரியங்கள் வேக வேகமாக நடக்க ஆரம்பிக்கின்றன.
ஜூன் மாதத்தில் ஒரு நாள் கியூபாவில் பிறந்து, புரட்சிக்காலத்தில் தப்பியோடி அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜண்டாக இருக்கிற பெலிக்ஸ் ரொட்ருப்குயுஸிற்கு சி.ஐ.ஏ ஆபிஸர் எஸ்.லாரியிடமிருந்து போன் செய்தி வருகிறது. ரொட்ருகுயுஸிற்கு தென் அமெரிக்காவில் ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும், கொரில்லா யுத்தத்தின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு அவர் தனது திறமைகளை உபயோகிக்க வேண்டுமென்றும் யோசனை முன்வைக்கப்படுகிறது. சேகுவாராவையும் அவரது கூட்டத்தாரையும் குறிவைத்து பிடிப்பதற்கு பொலிவிய இராணுவத்திற்கு உதவுவதே பணி என்றும் அவருக்குத் துணையாக எஜுரடோ கோன்சுலஸ் இருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
1967, ஆகஸ்ட் 2ம் தேதி ரொட்ருகுயுஸ் பொலிவியாவிற்கு வருகிறார். கோன்சுலஸை லாபாஸில் சந்திக்கிறார். பொலிவியாவின் இடம்பெயர்தலுக்கான அதிகாரியும் சி.ஐ.ஏ ஏஜண்ட்டுமான ஜிம்மும் அவர்களை சந்திக்கிறார். சி.ஐ.ஏவுக்கான இருப்பிடத்தை லாபாஸில் ஜான் டில்ட்டன் என்பவர் நடத்தி வருகிறார். காஸ்ட்ரோவை வெறுக்கிற, கியூபாவில் பிறந்த அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜண்ட் கஸ்ட்டோவா வில்லோடோவும் அவர்களோடு இணைந்து கொள்கிறான்.
ஆகஸ்ட் 31ம் தேதி பொலிவிய இராணுவத்திற்கு முதல் வெற்றி கிடைக்கிறது. சேகுவாராவின் மனிதர்களில் ஒரு பங்கை அழித்துவிடுகிறது. பகோ என்றறியப்படும் ஜோஸ் காஸ்டில்லோ சாவெஸ் பிடிபடுகிறார். கொரில்லாக்கள் பதுங்குகின்றனர். சேகுவாராவின் உடல்நலம் கெடுகிறது.
பொலிவிய அரசு செப்டம்பர் 15ம் தேதி விமானத்தின் மூலம் பிரசுரங்களை வீசுகிறது. அதில் சேகுவாராவை பிடித்து கொடுப்பவர்களுக்கு 4200 டாலர்கள் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாட்கள் கழித்து 18ம் தேதி தென்கிழக்கு காடுகளில் கொரில்லா வீரர்களுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து கொடுத்த 15 கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்படுகின்றனர்.
செப்டம்பர் 22ம் தேதி பொலிவியாவில் ஆல்டோசெகொ கிராமத்திற்கு சேகுவாராவின் கொரில்லா வீரர்கள் செல்கின்றனர். இண்டி பெரிடோ என்னும் வீரன் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு கொரில்லா இயக்கத்தின் நோக்கங்கள் பற்றி எடுத்துரைக்கிறார். அந்த இரவின் பிற்பகுதியில் அந்த கிராமத்திலிருந்து தேவையான உணவினை பெற்றுக் கொண்டு கிளம்புகின்றனர்.
அதே நாளில் பொலிவிய அயல்துறை அமைச்சர், பொலிவியாவில் சேகுவாரா கொரில்லா யுத்தம் தலைமை தாங்கி நடத்துவதற்கான ஆதாரங்களை வெளியிடுகிறார். அந்த இயக்கத்தில் கியூபா, பெரு மற்றும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர்கள் இருப்பதற்கான சாட்சியங்களை விளக்கி “பொலிவியாவை மற்றவர்கள் யாரும், எப்போதும் திருடிச்செல்ல அனுமதிக்க மாட்டோம் என சூளுரைக்கிறார்.
செப்டம்பர் 26ம் தேதி கொரில்லாக்கள் லாஹிகுவரா என்னும் கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு யாரும் இல்லாததை அறிகின்றனர். கொரில்லாக்கள் அருகில் இருப்பதாகவும், தகவல் அறிந்தால் உடனே வாலேகிராண்டேவுக்கு தெரிவிக்க வேண்டுமென அந்த கிராமத்து மக்களுக்கு பொலிவிய இராணுவத்தால் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அருகில் உள்ள ஜாஹுயே நகரத்துக்கு அனைவரும் விழாக் கொண்டாட்டங்களுக்கு சென்றிருப்பதாக சொல்கின்றனர். அப்போது நேரம் மதியம் ஒன்று இருக்கும். கொரில்லாக்களும் அந்த நகரத்துக்கு செல்ல எத்தனித்தபோது சாலையிலிருந்து குண்டுகள் சத்தம் கேட்டது. அந்த கிராமத்திலேயே இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. சேகுவாராவிற்கு மிக நெருக்கமான ரோபெர்ட்டொ பெரிடோ, ஜூலியோ மற்றும் அண்டோனியோ ஆகிய மூன்று கொரில்லாக்கள் சண்டையில் இறந்து போனார்கள். ரியோ கிராண்டேக்கு போகும் சாலை வழியாக தப்பிக்க சேகுவாரா கட்டளையிடுகிறார். பொலிவிய இராணுவத்திற்கு இது மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
சேகுவாராவும் அருகில்தான் இருக்க வேண்டும் என்பதை அண்டோனியாவின் மரணம் அடையாளம் காட்டுகிறது. சி.ஐ.ஏ ஏஜண்ட் ரோட்ரிப்கியுஸ் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனை உடனடியாக வாலேகிராண்டேவுக்கு நகருமாறு வேகப்படுத்துகிறார். பெட்டாலியன் தலைவரான ஜெனெட்டோ இன்னும் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனின் பயிற்சிகள் முடியவில்லை என்று வாதிடுகிறார். சேகுவாராவின் அடுத்த அசைவினை எடுத்துச் சொல்லி ஜெனெட்டோவை சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையில் ‘கம்பா’ என்றழைக்கப்படும் கொரில்லா பிடிபடுகிறார். மிக மோசமான உடையிலும் உடல்நலத்திலுமாக அவர் இருந்தார். இராணுவத்திற்கு உற்சாகத்தை தந்தது. தாங்கள் நினைத்திருந்ததைப் போல கொரில்லாக்கள் பலம் வாய்ந்தவர்களாக இல்லை என்று தைரியம் வந்தது. கொரில்லாக் குழுவிலிருந்து வழிதப்பிவிட்டதாகவும், சேகுவாராவை பார்ப்பதற்காக சென்று கொண்டிருப்பதாகவும் கம்பா சொன்னார்.
செப்டம்பர் 26ம் தேதி ஜெனெட்டோ இரண்டாம் ரேஞ்சர்ஸ் பெட்டாலியனை வாலேகிராண்டேவுக்கு அனுப்புகிறார். இவர்கள்தான் அமெரிக்க சிறப்பு படையினரால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். செப்டம்பர் 30ம் தேதி சேகுவாராவும் அவரது குழுவும் கிராண்டே நதிக்கு தென்பகுதியில் வால்லே செரென்னோவில் உள்ள கன்யான் காடுகளில் இருப்பதாக கண்டுபிடிக்கிறார்கள். ரேஞ்சர்ஸ் பெட்டாலியன் நகருகிறது.
அக்டோபர் 7ம் தேதி. பொலிவியாவில் கொரில்லா இயக்கம் ஆரம்பித்து பதினோரு மாதங்களுக்குப் பிறகு சேகுவாரா தனது டைரியில் கடைசியாக எழுதியது இன்றுதான். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு வயதான அம்மாளிடம் கொரில்லாப்படையினர், இந்தப் பக்கம் சிப்பாய்கள் யாரும் வந்தார்களா என்று கேட்கின்றனர். உற்றுப்பார்த்தவளிடம், சொன்னால் பணம் தருவதாகவும் சொல்கின்றனர். சேகுவாரா தனது டைரியில் அவள் அப்படி சொல்வாள் என்று கொஞ்சம்தான் நம்பிக்கை இருந்ததாக எழுதுகிறார். அன்று மாலை சேகுவாராவும் அவரது மனிதர்களும் குவப்ராடா டெல் யுரோவில் ஒரு செங்குத்தான குறுகிய நதிக்கரையில் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.
அக்டோபர் 8ம் தேதி இராணுவத்திடம் ஒரு வயதான அம்மாள் நதிக்கரையில் சத்தங்கள் கேட்டதாக துப்பு கொடுக்கிறாள். சேகுவாராவும் அவர் தோழர்களும் நேற்று இரவு ஓய்வெடுத்த அதே இடத்தை பெட்டாலியன் நெருங்குகிறது. சண்டை நடக்கிறது. பகல் 12 மணியளவில் இரண்டு கொரில்லாக்கள் கொல்லப்படுகின்றனர். பலர் காயமடைகின்றனர்.
மதியம் ஒன்றரை மணிக்கு அந்த இறுதி சண்டை நடக்கிறது. வில்லி என்றழைக்கப்படும் பொலிவிய சுரங்கத்தொழிலாளி சரபியா கொரில்லாக்களுக்கு தலைமை தாங்குகிறார். சேகுவாரா அவருக்குப் பின்னால் இருக்கிறார். காலில் சுடப்பட்டிருக்கிறார். சேகுவாராவைத் தூக்கிக்கொண்டு சரபியா அந்த இடத்திலிருந்து செல்ல முயற்சி செய்கிறார். துப்பாக்கிகள் தொடர்ந்து சுடுகின்றன. சேகுவாராவின் தொப்பி வீழ்த்தப்படுகிறது. சேகுவாராவை கீழே உட்கார வைத்து விட்டு சரபியா சுடுவதற்கு தயாராகிறார். பத்து அடிகளுக்குள் அவர்களை சுற்றி வளைத்து நின்றது பெட்டாலியன்.
கைதியாக..
இராணுவக்காரர்கள் குண்டுகளை நிரப்பி துப்பாக்கிகளால் குறி பார்க்கிறார்கள். சேகுவாரா ஒரு கையால் துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு போராடுகிறார். அவரது வலது காலில் மீண்டும் சுடப்படுகிறது. வலது முன்கையில் குண்டு ஒன்று துளைத்துச் செல்ல துப்பாக்கி விழுகிறது. படைவீரர்கள் சேகுவாராவை நெருங்குகிறார்கள். சகலத்தையும் இழந்த நிலையில் சரபியா “இவர் எங்கள் கமாண்டர் சேகுவாரா. மரியாதையுடன் நடத்த வேண்டும்” என்று சொல்கிறார். சேகுவாரா கைதி செய்யப்பட்டார். அப்போது மணி சரியாக மாலை 3.30.
கேப்டன் பிரடோவின் முன்பு அவர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர். ரேடியோ ஆபரேட்டர் மூலம் சேகுவாரா பிடிபட்டார் என்ற தகவல் அனுப்பப்படுகிறது. நம்பிக்கையற்று ஜெனெட்டோ திரும்பவும் ரேடியோ ஆபரேட்டர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார். சேகுவாராவை உடனடியாக லாஹிகுவாராவிற்கு கொண்டு வர பிரடோவிற்கு உத்தரவிடுகிறார். வாலேகிராண்டேவில் ரோட்ரிப்கியுஸிற்கும் தகவல் போய்ச் சேருகிறது.
சேகுவாரா படுக்க வைக்கப்பட்டு நான்கு சிப்பாய்களால் லாஹிகுவராவிற்கு தூக்கிச் செல்லப்படுகிறார். கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட சரபியா பின்னாலேயே நடந்துவர வைக்கப்படுகிறார். இருட்டிய பிறகு லாஹிகுவாராவை அடைகிறார்கள். ஒரு பள்ளிக்கூடத்தின் அறையில் அடைத்து வைக்கப்படுகின்றனர். பின்னிரவில் மேலும் ஐந்து கொரில்லாக்கள் கொண்டு வரப்படுகின்றனர்.
அதிகாரபூர்வமான இராணுவம் தென்கிழக்கு பொலிவியாவில் நடந்த சண்டையில் சேகுவாரா கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் தவறான தகவலை அனுப்புகிறது. இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை.
அக்டோபர் 9ம் தேதி வால்ட் ருஸ்டோவ் அமெரிக்க அதிபருக்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார். பொலிவியர்கள் சேகுவாராவை பிடித்து விட்டதாகவும், அந்த படைப்பிரிவுக்கு அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்டது என்றும் அதில் இருக்கிறது. அதேநாள் காலை ஆறே கால் மணிக்கு ரோட்ரிப்கியுஸ் ஹெலிகாப்டரில் ஜெனெட்டோவோடு வருகிறார். சக்தி வாய்ந்த ரேடியோவும், காமிராவும் கொண்டு வந்திருந்தார். ‘இதோ… எனது சக மனிதர்கள் பலரை கொன்று குவித்த ஒருவனை பார்க்க போகிறோம்’ என்று ரோட்ரிப்கியுஸ் உள்ளே நுழைந்தார். ஆனால் சேகுவாராவை பார்த்த போது துயரகரமாக இருந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்டு, கால்களும் கட்டப்பட்டு, சக தோழர்களோடு அசுத்தமான இடத்தில் கிடந்த சேகுவாராவை பார்த்தபோது நிலைமை மிக மோசமாக இருந்தது. சீக்குப் பிடித்த முடி, கந்தலாகியிருந்த உடை, பிய்ந்து பிய்ந்து போயிருந்த தோலாலான ஷூக்களோடு சேகுவாரா இருந்தார்.
ரோட்ரிப்கியுஸ் பள்ளிக்கூடத்தில் நிலவிய சூழலையும், கிடைத்த ஆவணங்களையும் அமைதியாக பார்வையிட்டார். தனது ரேடியோ டிரான்ஸ்மீட்டரில் சி.ஐ.ஏ நிலையத்திற்கு சங்கேத வார்த்தைகளால் செய்தி அனுப்பினார். சேகுவாராவின் பொலிவிய டைரியின் பக்கங்களை படம் பிடித்தார். பிறகு ரோட்ரிப்கியுஸ் சேகுவாராவோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரோடு சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார். அங்கு வந்து சென்றவர்களையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் சேகுவாரா.
நேரம் ஆகிக் கொண்டிருந்தது. காலை பத்து மணிக்கு சேகுவாராவை என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்தது. அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால் அது சேகுவாராவின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்த்து அவர் மீதும் கியூபாவின் மீதும் அனுதாபத்தை உருவாக்கும் என்று நினைத்தார்கள். சேகுவாராவை உடனடியாக கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேவேளையில் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்து போனார் என்று அதிகார பூர்வமாக தெரிவிப்பது எனவும் ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.
ரோட்ரிப்கியுஸுக்கு வாலேகிராண்டேவிலிருந்து செய்தி வந்தது. அதில் ‘ஆபரேஷன் ஐநூறு அறுநூறு’ என்று சொல்லப்பட்டிருந்தது. ஐநூறு என்றால் பொலிவியன் சங்கேத வார்த்தையில் சேகுவாராவையும், அறுநூறு என்றால் கொல் என்றும் அர்த்தம். ரோட்ரிப்கியுஸ் அதனை ஜெனெட்டோவுக்கு தெரிவிக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்க அரசு சேகுவாராவை உயிரோடு பிடித்து வர வேண்டும் எனச் சொன்னதாகவும் தெரிவிக்கிறார். சேகுவாராவை பனாமாவுக்கு கொண்டு சென்று விசாரனை நடத்த அமெரிக்க அரசு ஹெலிகாப்டர்களை அனுப்பியதாக ரொட்ரிப்கியுஸ் சொல்கிறார்.ஜெனெட்டோ தங்கள் முடிவை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தாக சொல்லப்படுகிறது.
ஒரு பள்ளி ஆசிரியை சேகுவாராவின் மரணத்தை ரேடியோவில் கேட்டதாக சொன்னதும், நிலைமையை மேலும் நீடிக்க முடியாது என்பதை ரோட்ரிப்கியுஸ் உணர்ந்து கொண்டார். சேகுவாரா இருந்த பள்ளியின் அறைக்குள் சென்று பொலிவிய அரசின் மேலிடம் எடுத்துள்ள முடிவினை சொன்னார்.” பரவாயில்லை…நான் உயிரோடு பிடிபட்டு இருக்கக் கூடாது” என்று சொன்னாராம். பிடலுக்கும் தனது மனைவிக்கும் தனது செய்தியினை ரோட்ரிப்கியுஸிடம் கொடுத்திருக்கிறார். “பிடலிடம்…நம்பிக்கையாக இருக்கச் சொல்லுங்கள். லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் புரட்சி வெற்றி பெறும் நாள் வரும்’ “அலெய்டா மறுமணம் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்பவைகளே அந்த செய்திகளாயிருந்தன. ரோட்ரிப்கியுஸ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
லாஹிகுவாராவில் இருந்த உயர் அதிகாரிகள் சேகுவாரவை யார் கொல்வது என்று முடிவு செய்கிறார்கள். சார்ஜெண்ட் டெர்ரனிடம் அதற்கான ஆணை பிறப்பிக்கப்படுகிறது. டெர்ரன் சேகுவாராவின் அறைக்குள் செல்கிறான். சேகுவாரா சுவரில் கைகளை அப்பிக்கொண்டு அதன் பலத்தில் மெல்ல எழுந்திருக்க முயற்சி செய்கிறார். “கொஞ்சம் பொறு நான் எழுந்து நின்று கொள்கிறேன்” என்கிறார். டெர்ரனுக்கு நடுக்கமெடுத்தது. திரும்ப வந்துவிட்டான். ஜெனெட்டோ அவனை திரும்பவும் உத்தரவிட்டு உள்ளே அனுப்பி வைக்கிறார். அதற்குள் இன்னொரு சார்ஜெண்ட் வில்லி இருக்கும் அறைக்குள் நுழைகிறான். சேகுவாராவுக்கு பத்து மீட்டர் தள்ளி இருந்தது அந்த இடம். சில வினாடிகளில் துப்பாக்கியின் சத்தம் அந்தப் பிரதேசத்தையே அலறவைக்கிறது. சகதோழனின் உயிர் வெடித்த சத்தம் சேகுவாராவுக்கு கேட்டிருக்க வேண்டும்.
டெர்ரன்
இனி டெர்ரனின் முறை. மது அருந்திவிட்டு திரும்பவும் உள்ளே நுழைகிறான். சேகுவாரா அந்த வலியிலும் எழுந்து நிற்கிறார். “நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று தெரியும். நான் தயார். ஒரு மனிதனைத்தானே கொல்லப் போகிறாய். கோழையே சுடு.” என்றாராம். டெர்ரன் சேகுவாராவின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியினைப் பிடித்துக் கொண்டு, சேகுவாராவின் முகத்தை பார்க்க முடியாமல் வேறு பக்கம் தன் முகத்தை திருப்பிக் கொண்டு ஆறு குண்டுகள் சுட்டான். சேகுவாரா சுவரில் சாய்ந்து விழுந்தார்.
சேவின்மரனம் நிகழ்ந்த விதத்தை அவர்களது இப்படித்தான் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கனவு கண்ட அழகிய ஒரு உலகை அடைகாத்தபடி சேகுவாரா துடிப்புகள் அடங்கிப்போனார். வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக பெருங்குரல் கொடுத்த சேகுவாரா தனது இரத்தத்தில் மிதந்து கிடந்தார். வெறிச்சிட்ட கண்களில் பார்வை தொலைதூரத்தில் நிலைகுத்தி இருந்தது. ஏகாதிபத்தியத்தை வைத்த குறி அப்படியே நிலைத்து இருந்தது.
உயர் அதிகாரிகளும் ரோட்ரிப்கியுஸும் வாலேகிராண்டேவில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு ஹெலிகாப்டரில் திரும்பினார்கள். காஸ்ட்ரோவின் ஆட்கள் யாராவது தன்னைப் பார்த்துவிடக்கூடும் என்பதால் ரோட்ரிப்கியுஸ் பொலிவிய இராணுவ வீரனின் தொப்பியணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் சேகுவாராவின் உடலும் ஹெலிகாப்டரில் வாலேகிராண்டேவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அங்கு அவரது கைரேகைகள் எடுக்கப்படுகின்றன.
அக்டோபர் 10ம் தேதி காலை மோசஸ் ஆபிரஹாம் பாடிஸ்டா மற்றும் ஜோஸ் மார்டினஸ் கசோ என்னும் இரண்டு டாக்டர்கள் வாலேகிராண்டேவுக்கு வந்து சேகுவாராவின் மரண சர்ட்டிபிகேட்டை அளிக்கின்றனர். “நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து 40 வயதான எர்னஸ்டோ சேகுவாரா மரணமடைந்திருக்கிறார்” என அந்த சர்ட்டிபிகேட்டில் எழுதப்பட்டு இருந்தது. அன்று இரவுதான் சேவின் உடலை சி.ஐ.ஏ ஏஜண்ட் வில்லோடோ யாருக்கும் தெரியாமல் புதைத்திருந்தான்.
அக்டோபர் 11ம் தேதி சேகுவாரா வாலேகிராண்டேவில் புதைக்கப்பட்டதாக ருவாண்டா அறிவிக்கிறார். அதே தினம் அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு “சேகுவாரா 99 சதவீதம் இறந்து விட்டதாக இன்று காலை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது” என்று ஒரு தகவல் வெள்ளை மாளிகையை போய்ச் சேருகிறது. அவரது மரணம் குறித்த தெளிவான செய்திகள் இன்னும் இல்லை. சி.ஐ.ஏ வின் குறிப்புகளிலும், இதர அதிகாரிகளின் வாக்குமூலங்களிலும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.
முதலாவதாக சேகுவாராவின் மரணச் சான்றிதழில் அவர் இறந்த நேரம் குறிப்பிடப்படவில்லை. சிறு காயங்களோடுதான் அக்டோபர் 9ம் தேதி பிடிபட்டார் என்றும், ஆரோக்கியமாக இருந்த அவரிடம் நடத்திய விசாரணையில் எந்த உபயோகமான தகவல்களும் கிடைக்காமல் போன பிறகே கொன்றனர் என்றும் ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. அக்டோபர் 8ம் தேதியே சண்டையில் இறந்து போனார் என்கிற கமாண்டர் ஜெனெட்டோவின் தகவலுக்கும், அக்டோபர் 9ம் தேதி சேகுவாரா இறந்தார் என்கிற இராணுவத்தளபதி ருவாண்டாவின் தகவலுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்றன. சேகுவாரவை கொல்ல பொலிவிய அரசு முடிவெடுக்கவில்லை…. சி.ஐ.ஏ தான் அந்த முடிவெடுத்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு விஷயம் மறைக்கப்பட முடியாமல் தெரிகிறது. மரணத்தின் கடைசி தருணத்தையும் சேகுவாரா தனது வாழ்க்கையைப் போலவே கம்பீரமாகவே எதிர்கொண்டிருக்கிறார்.
11
10ம் அத்தியாயம்
தங்கள் தாய்நாட்டின் மண்ணில் சேகுவாராவின் உடல் கொண்டு வரப்பட வேண்டும் என்னும் கியூபாவின் தொடர்ந்த முயற்சி முப்பதாண்டுகளுக்குப் பிறகு நிறைவேறி இருக்கிறது.
பெண்கள் அழுதுகொண்டு நிற்கின்றனர். குழந்தைகள் உற்று பார்க்கின்றனர். இளம்பெற்றோர்கள் அவர்களுக்கு கியூபாவின் கொடி பறக்கிற சேகுவாராவின் எலும்புகள் அடங்கிய பெட்டியை காண்பித்து பெருமையோடு சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். “அவர் அப்போது எங்களை எவ்வளவு நேசித்தாரோ, அவ்வளவு நாங்கள் இப்போது அவரை நேசிக்கிறோம்.” கியூபாவில் சேகுவாராவின் எலும்புகளைப் பார்த்து அழுதபடி 67 வயது ராவுல் பரோசோ சொல்கிறார். சேகுவாராவின் எலும்புகள் மீண்டும் அடக்கம் செய்யப்படுகின்றன.
“நன்றி சேகுவாரா, உனது வரலாற்றிற்கும், வாழ்க்கைக்கும், உதாரணத்திற்கும் நன்றி. கடுமையாக போராடிய உனது சிந்தனைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களுக்கு உத்வேகமளிக்க மீண்டும் நீ வந்ததற்கு நன்றி” என்று திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய மக்களின் சார்பில் 1997 அக்டோபர் 18ம் தேதி ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோ பேசுகிறார்.
காஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் இப்போதும் சும்மாயிருக்கவில்லை. ‘அவர் நினைத்திருந்தால் எப்போதோ சேகுவாராவை கியூபாவிற்கு கொண்டு வந்திருக்கலாம். சோவியத் வீழ்ந்த பிறகு அவர் தூக்கிப் பிடித்த தத்துவம் அனாதையாகிப் போயிருந்தது. அதிலிருந்து மீட்கவே அவர் சேகுவாராவை தோண்டி எடுத்து வரவேண்டி இருந்திருக்கிறது’ என்கின்றனர். கலாச்சார ரீதியாக சீரழியும் இளஞர்களுக்கு முன்பு சேகுவாராவை ஒரு இலட்சிய புருஷனாக நிறுத்த வேண்டிய அவசியம் காஸ்ட்ரோவுக்கு ஏற்பட்டிருக்கிறது என தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிடுகின்றனர்.
சேகுவாராவின் மகள் அலெய்டாவிடம் “நீங்கள் உங்கள் தந்தையைப் போல இருக்க விரும்புகிறீர்களா” என்று ஒரு நிருபர் கேட்கிறார். நான் மட்டும் இல்லை…கியூபாவில் இருக்கிற அனைவரும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார்.
பொலிவியாவில் சேகுவாராவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருக்கிறது. சேகுவாரா தங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டதில் பொலிவிய மக்களுக்கு வருத்தம். பொலிகார்பியா கோர்ட்டஸ் என்னும் விவசாயிக்கு தன்னை தொட்டுப் பார்த்த சேவின் முகத்தை மறக்கவே முடியவில்லை. இரண்டு முறைதான் அவர் சேவை பார்த்திருந்தார். போராளிகளோடு லாஹிகுவாரா கிராமத்துக்கு வந்த போது கோர்ட்டஸ் சரியான காய்ச்சலில் இருந்திருக்கிறார். சேகுவாரா வைத்தியம் பார்த்து குணமாக்கி இருக்கிறார். இன்னொரு முறை கோர்ட்டஸ் பார்த்தது, சே பிடிபட்டு அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது. அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தார். “எப்பேர்ப்பட்ட மகான்…எங்களின் விடுதலைக்காக அவர் இங்கு வந்தார்” என்று சொல்லி மாய்ந்து போகிறார். இதுபோன்ற மனிதர்கள் பொலிவியாவின் தெற்கு பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.
சே சுட்டுக் கொல்லப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் பெரிய நினவுச்சின்னமாக மாறிவிடும் என்று பயந்து போன பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் அப்போது பள்ளிக் கூடத்தையே தரை மட்டமாக்கிவிடச் சொன்னான். ஒரு சிறு மருத்துவமனையை கட்டியிருந்தான். இன்று எல்லாம் மாறிப்போயிருக்கிறது. திரும்பவும் அங்கு ஒரு பள்ளிக்கூடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் சேகுவாரா “உயிரோடிருந்தால் இங்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்” என்று அந்த பள்ளிக்கூடத்து ஆசிரியை கார்ட்டஸிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்திருக்கும்.
அந்த மலைப் பிரதேசங்களில் ரகசியமாய் சே நடந்த பாதை முழுவதையும் பாதுகாக்கிறார்கள். ‘சேவின் காலடிகளை தொடருங்கள்’ என்று சுற்றுலாத்துறை அறிவிக்கிறது. அவர் சென்ற அறுநூறு மைல் நெடுகிலும் இப்போது உலகெங்கிலுமுள்ளவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் உட்கார்ந்து இளைப்பாறிய மரத்தடிகள் இன்று புனிதம் பெற்றிருக்கின்றன. சே மியூசியத்தில் பொலிவியக் காடுகளில் அவர் உபயோகித்த பொருட்களும் அழியாமல் இருக்கின்றன. சுடப்படுவதற்கு முன்பு கடைசியாக உட்கார்ந்திருந்த நாற்காலி எதையோ சொல்ல முயற்சிக்கிறது. அந்த இரவில் சேவைப் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் வெளியே மதுவிலும், ஆட்ட பாட்டங்களில் முழ்கியிருந்த போது உள்ளே தனிமையில் கிடந்த சேகுவாராவின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பதற்கு ஒரு குறிப்பு அந்த நாற்காலி.
இவையெல்லாம் சேவுக்கு எந்த மகிழ்ச்சியும் அளிக்காது. தனது காலடிகளை மக்கள் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் இப்படி அல்ல. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கோபத்தோடு வரச்சொல்லி இருந்தார். தான் ஒரு காட்சி பொருளாகவோ, காவியத்தலைவராகவோ அறியப்படுவோம் என்று தெரிந்திருந்தால் திசைகளை வேறு விதமாகக் கூட யோசித்திருக்கக் கூடும். எப்போதும் தன்னை ஒரு எளிய போராளியாக மட்டுமே வரித்துக் கொண்டிருந்தார்.
சேகுவாராவின் நண்பரும் முன்னாள் அல்ஜீரிய அதிபருமான அகமது பென் பெல்லாவின் வார்த்தைகள் அர்த்தத்தோடு வெளிப்படுகின்றன.”சே நமது மனசாட்சியை கேள்வி கேட்டிருக்கிறார். வெறித்த அவரது கடைசி பார்வை நமது ஆழ்மனதுக்குள் சென்று கொண்டே இருக்கிறது”.சேவின் வாழ்வையும் மரணத்தையும் அறிந்தவர்கள் தங்களுடைய வாழ்வை சாவகாசமாகவோ, சாதாரணமாகவோ எடுத்துக் கொள்ளவே முடியாது. தெருக்களில் தூக்கியெறியப்பட்டிருக்கும் எளிய மக்களுக்காக அழுவார்கள். பசியின் வேதனையில் அடிவயிற்றிலிருந்து நீளும் குழந்தையின் கைகளை ஆதரவோடு பற்றிக்கொள்வார்கள். இவர்களை மனிதர்களாகவே கருதாத ஆட்சியாளர்களையும், அமைப்பையும் எதிர்த்து ஆயுதம் தூக்க வேண்டுமென்று இல்லை, ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்கிற உக்கிரமும், தீவீரமும் அவர்களை பற்றிக் கொள்ளும். அது சாகும் வரை விடாது.
ஒரு நிமிடம்கூட சும்மா இருக்கவிடாத வேகம்தான் சேகுவாரா. காடுகளில் ஒருநாள் எந்த நிகழ்ச்சியுமில்லாமல் கழிந்து போனால் அதை மிகுந்த வேதனையோடு தனது நாட்குறிப்பில் எழுதி வைக்கிறார். ஒவ்வொரு கணமும் செயல்களாலும், சிந்தனைகளாலும் நிரம்பியிருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியிருக்கிறார். மருத்துவராக, மோட்டார் சைக்கிள் பயணியாக, செஸ் விளையாடுபவராக, போட்டோகிராபராக, மலையேறுபவராக, கொரில்லாப் போராளியாக, விமான ஓட்டியாக, பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, வங்கித்துறையின் தலைவராக, வெளியுறவு மந்திரியாக இருந்தவர். இன்னும் இருக்கிறது. கரும்பு வயல்களில் அறுவடை இயந்திரத்தை இயக்குபவராக, இயந்திரங்கள் பழுது பார்ப்பவராக, சுரங்கத் தொழிலாளியாக, கட்டிட வேலையாளாக, ஆலைத் தொழிலாளியாக என்று சொல்லிக் கொண்டே போகலாம். காலத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்ளும் அடங்காத வெறி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது.
நதியைப் போல பயணங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஒரு இடத்தில் நின்றவரில்லை. நாடுகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி, இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டிச் சென்றவர். அதுதான் சே தங்களுடையவர் என்று எல்லோராலும் சொல்ல முடிகிறது. பூமியின் நிலப்பரப்பு முழுவதையும் ஆரத்தழுவிக்கொள்ள அவரது கைகள் நீண்டிருக்கின்றன. சர்வதேசியம் என்ற சொல்லுக்கு உருவத்தை கொடுத்திருக்கிறார்.
கடவுளாக்கினாலும், காட்சிப் பொருளாக்கினாலும், விற்பனைப் பொருளாக்கினாலும் அவைகளில் அடைபடாமல் இரத்தமும் சதையுமாய் வெளிவந்து விடுகிற சக்தி அந்த மனிதருக்கு உண்டு. அப்படியொரு உண்மையும் வல்லமையும் பெற்றிருக்கிறர். காடுகளுக்குச் சென்று ஞானம் பெற்று மனிதர்களிடம் திரும்பி வந்து உபதேசமோ, பிரசங்கமோ செய்தவர் அல்ல. மனிதர்களிடமிருந்து ஞானம் பெற்று காடுகளுக்குச் சென்று போராடிக் காட்டியவர். மனிதர்களை உலுக்கி அவர்களிடம் புதைந்திருக்கிற புரட்சிகரத் தன்மைகளை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் அவருக்குண்டு. ஏகாதிபத்தியம் மீண்டும் ஒருமுறை அவரிடம் தோற்றுப்போக இருக்கிற இடம் இதுதான்.
அவர் இன்றும் நினைக்கப்படுவதற்கு அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கலாம். தான் வாழ்ந்த காலத்தில் மனிதகுல எதிரிகளை மிகச் சரியாக அடையாளம் கண்டதால்தான் சே இன்னும் நினைக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை. சர்வ வல்லமை மிக்க ராட்சச மிருகத்தை மிகுந்த நம்பிக்கையோடு வேட்டையாடச் சென்றதால்தான் நினைக்கப்படுகிறார். அவர்களை கடைசி மூச்சு வரை எதிர்த்து போராடியதால்தான் நினைக்கப்படுகிறார். அந்தப் போராட்டத்திற்கு அவர் முற்றுப் புள்ளியல்ல என்பதால்தான் நினைக்கப்படுகிறார்.
சேவின் மரணத்திற்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் கொரில்லா இயக்கங்கள் முடிந்து விடவில்லை. புரட்சிகர சக்திகளும் ஓய்ந்து போகவில்லை. தங்கள் ஆட்சியாளர்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் கோபங்கள் இன்றுவரை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாகவே இருக்கின்றன. “நீங்கள் பூக்களை வெட்டி பறித்து விடலாம். ஆனால் வசந்தத்தை அது நிறுத்தி விடாது” என லத்தின் அமெரிக்க நாடுகளின் வீதிச் சுவர்களில் சேகுவாராவின் படத்தோடு எழுதப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அக்டோபர் 9ம் தேதியும் தங்கள் தூதரகங்களுக்கும் முன்னால் உலகம் முழுவதும் மக்கள் நின்று கண்டனம் தெரிவிப்பதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், அகதிமுகாம்களில், துருக்கியின் தெருக்களில், கொலம்பிய மலைகளில், உட்டோவை எதிர்த்த போராட்டங்களில், ஈராக் யுத்தத்தை எதிர்த்த மகத்தான பேரணிகளில் சேகுவாராவின் முகங்கள் மிதந்து வருகின்றன. கியூபாவின் குழந்தைகள் தினமும் பள்ளியில் பறந்து கொண்டிருக்கிற தங்கள் கொடியை பார்த்தபடி சேகுவாராவைப்போல இருப்பேன்” என உறுதி எடுக்கிறார்கள்.
சேவோடு பொலிவியக் காடுகளில் தோளோடு தோழனாய் நின்ற இண்டி பெரிடோ சேவின் மரணம் அறிந்து துடித்துப் போனார். அந்தக் கடைசி நாளில் அவர் அதே பொலிவியக் காடுகளில் இன்னொரு கொரில்லாக் குழுவோடு இருந்தார். கியூபாவிற்கு திரும்பிய இண்டி பெரிடோ சேவின் கண்களின் கேள்விக்கு பதில்சொல்ல மீண்டும் பொலிவியக் காடுகளுக்குச் சென்றார். போராளிகளுக்கான அவரது அழைப்பு சேவின் ஆன்மாவோடு கலந்து நின்று ஒலித்தது.
“பொலிவியாவில் கொரில்லாப் போர் இறந்து போகவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய தலைவன் சேவை நாங்கள் இழந்தாலும், இன்னும் போர்க் களத்தை இழக்கவில்லை.
எங்களது போர் தொடர்கிறது. அது ஒருபோதும் நிற்காது. ஏனென்றால் நாங்கள், மண்டியிடுதல் என்கிற வார்த்தையையே அங்கீகரிக்காத சேகுவாராவின் பக்கம் நின்று போராடியவர்கள். எங்கள் போராளிகளோடு அவரது இரத்தமும் பொலிவிய மண்ணில் தூவப்பட்டிருக்கிறது. அந்த விடுதலையின் விதைகளுக்கு நாங்கள் உயிர் கொடுப்போம். இந்த கண்டத்தையே எரிமலையாக்குவோம். அந்த நெருப்பில் ஏகாதிபத்தியத்தை எரித்து அழிப்போம்.
சே நேசித்த வியட்நாமைப்போல நாங்களும் வெற்றி பெறுவோம். இந்த லட்சியங்களுக்காக வெற்றி அல்லது மரணம் என உறுதி கொண்டுவிட்டோம். கியூபாவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பெருவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பொலிவியா தோழர்கள் இறந்திருக்கிறார்கள்.
கையில் ஆயுதத்தோடு இறந்து போய்விட்ட ஒவ்வொருவரையும் போற்றி வாழ்த்துவோம். தானியா, பப்லோ, மோய்சஸ், வஸ்கியுஸ், ரெய்னகா அனைவரையும் போற்றி வாழ்த்துவோம். எங்கள் கொடி துவண்டு போகாது.
லத்தின் அமெரிக்காவின் புதிய பொலிவியராகிய சேகுவாராவின் முன்னுதாரணத்திற்குரிய வாரிசாக தேசீய விடுதலைப் படை வருகிறது. அவரை கொன்றவர்கள் அவர் முன்னுதாரணமாக இருப்பதை ஒருபோதும் கொல்ல முடியாது.
ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடிகளும் வெற்றியின் கீதங்களை பாடுவதை நிறுத்திக் கொள்ளட்டும். போர் இன்னும் முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பிக்கிறது.
நாங்கள் மலைகளுக்கு திரும்புகிறோம்.
‘வெற்றி அல்லது வீரமரணம்’ எங்கள் குரல்களை பொலிவியா மீண்டும் கேட்கும்.”
இண்டி பெரிடோவும் வீரமரணம் அடைகிறார். ஆனால் வெற்றி நோக்கிய பயணம் தொடர்கிறது. மலைமுகடுகளில் இருந்து சேகுவாரா உலகத்தையே அழைக்கிறார். காலவெளியில் அந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
முப்பத்தேழு வருடங்களுக்கு முன்பு பொலிவியாவின் எங்கோ ஒரு மூலையில், ஒரு இரவில் யாருக்கும் தெரியாமல் கொல்லப்பட்டவரின் கடைசி மூச்சுக்காற்றை, கண்டங்களைத் தாண்டி இப்போதும் சுவாசித்துப் பார்க்க முடிகிறது. உள்ளிழுத்த அந்த மூச்சுக்காற்றோடுதான் கிறிஸ்ட்டோபர் லீக்கின் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
“பனிபடர்ந்த காரின் கண்ணாடியில்
நான் எழுதினேன்
‘சே வாழ்ந்து கொண்டிருக்கிறார்’
காலம் கடந்து வந்த பறவைகள்
தங்கள் சிறகுகளை சடசடவென்று அடித்துக் கொண்டன”.
“அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இருக்கிறாய், சே “
(நிறைவு பெறுகிறது)
References:
*1987 INTERVIEW ITALIAN DOCUMENTARY ON CHE GUEVARA
* 30th anniversary of Che Guevara’s death
* Lessons of the struggle
* “On the 30th Anniversary of the Death of Che Guevara: Che as I knew him.”-Ahmed Ben Bella (October 1997)
* Che Guevara legacy lives on in Bolivia -By David Atkinson
* Castro digs up memories of Che Guevara-Che Guevara Information Archive
* Che buried in Cuba 30 years after death -From CBC Newsworld.
* Che Guevara: A battle cry against imperialism – Cat Wiener
* Che Guevara and the FBI -review by Jon Elliston, Dossier Editor
* CHE GUEVARA IN BOLIVIA- Major Donald R. Selvage, USMC (ABSTRACT)
* Che Guevara Symbol of Struggle – Tony Saunois September 1997
* Che, Dead or Alive by Jason Evans
* CHE’S BONES- Jon Hillson
* Che’s spirit lives on—so does interest in revolution- By Brenda Sandburg and Richard Becker, San Francisco
* Cuba salutes ‘Che’ Guevara – October 17, 1997- CNN
* Cuba honours icon Che, From the Toronto Star, Sunday Oct. 12, 1997
* Cuba remembers Che Guevara 33 years after his death ,Voila News. October 9, 2000
* The Che of every day, BY RAUL ROA KOURI
* US Intelligence agent in at Che Guevara’s death -Richard Gott, Tuesday October 10, 1967
* I. Lavretsky “Ernesto Che Guevara”, 1976
* Journey around my father- Interview of Che Guevara’s eldest daughter Aleida
* VIOLENT UPHEAVAL IN LATIN AMERICA by Frank E. Smitha
* Latin American Political Affairs- Volume 5, Number 45 Dec 1, 1995
* Pombo: A Man of Che’s Guerrilla. With Che Guevara in Bolivia 1966-68. By Harry Villegas- Book Review by Javier Molina
* Che Guevara lives on, if not in our hearts at least on our chests
By Rachel Roberts, Sydney Morning Herald, 15 March 2002
* Return of the Rebel, by Brook LARMER
* CHE CONTINUES TO INSTILL FEAR IN THE OPPRESSORS, By Ricardo Alarcón
* The CIA Murder of Ernesto Che Guevara- Revolutionary Worker, October 12, 1997
* The Death of Che Guevara: Declassified by Peter Kornbluh
* A review of Che Guevara, A Revolutionary Life, Grove Press, 1997, Author: Jon Lee Anderson
*The Man Who Buried Che, BY JUAN O. TAMAYO
* A revolutionary leader 40 years ago. . . Ernesto Che Guevara, By Firoozeh Bahrami
* Bolivian General Reveals Che Guevara’s Burial Site BY LAURA GARZA
* The real Che , by Anthony Daniels
* Bones or not, Vallegrande’s a must stop on the ‘Che Route.’ by Joshua Hammer
* Cuba Honors ‘Che’ Guevara Who Would Be 75 Today-By Nelson Acosta
* Che-Lives_com
* Che Guevara Internet Archive
* companero che .com
* Ernesto Che Guevara de la Serna.htm
கருத்துகள்
கருத்துரையிடுக