Cheei
பொது அறிவு
Backச்சீய்
சி.சரவணகார்த்திகேயன்
உள்ளடக்கம்
ச்சீய்…
சி.சரவணகார்த்திகேயன்
சமர்ப்பணம்
மின்னுரை
Foreplay
1. ஃப்ரெஞ்ச் கிஸ்
2. பிகினி
3. கற்பழிப்பு
4. கலவி
5. வெட்கம் விட்டுப் பேசலாம்
ச்சீய்…
சி.சரவணகார்த்திகேயன்
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
2
ச்சீய்…
நூல் : ச்சீய்…
ஆசிரியர் : சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு : தமிழ் மின்-பதிப்பகம்
எண் : 1
வகைமை : வரலாறு / கட்டுரை
வடிவம் : மின்னூல்
வடிவமைப்பு : மீனம்மா கயல்
பதிப்பு : ஜூலை 2015
விலை : ரூ.0
பக்கங்கள் : 40
உரிமை : ஆசிரியருக்கு
Licence : Creative Commons: Attribution-NonCommercial-NoDerivatives 4.0
அட்டைப்படம் : Ramaiya Vastavaiya [2013] திரைப்படத்திலிருந்து
உள்படங்கள் : Wikimedia Commons
தொடர்புக்கு : + 91 98803 71123
3
சி.சரவணகார்த்திகேயன்
சி.சரவணகார்த்திகேயன் (1984) அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியல் படித்து, தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் மென்பொருளாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஊர் கோவை – ஈரோடு. 2007ல் குங்குமம் இதழில் கவிப் பேரரசு வைரமுத்து இவரது ஒருத்திநினைக்கையிலே… என்ற படைப்பினை முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுத்தார். இவரது முதல் புத்தகமான சந்திரயான் (கிழக்கு பதிப்பகம்) 2009ம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நூல் விருது பெற்றது. பரத்தைகூற்று (அகநாழிகை), தேவதைபுராணம் (கற்பகம் புத்தகாலயம்) என்ற கவிதைத் தொகுதிகள் எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள் தொகுப்பு கிட்டதட்டகடவுள் (அம்ருதா). குங்குமம் இதழில் இவர் எழுதிய ச்சீய் பக்கங்கள் என்ற பேசத் தயங்கும் விஷயங்கள் குறித்த வரலாற்றுத் தொடர் வெட்கம் விட்டுப் பேசலாம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது (சிக்ஸ்த் சென்ஸ்). குஜராத்2002 கலவரம் (கிழக்கு பதிப்பகம்) என்ற அரசியல் வரலாற்று நூல் எழுதி உள்ளார். காதல் அணுக்கள் என்ற பெயரில் திருக்குறள் காமத்துப்பாலுக்கு கவிதை உரை எழுதி இருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், அம்ருதா, ஆழம், அகநாழிகை, மெல்லினம் (ஆஸ்திரேலியா), விளம்பரம் (கனடா), தமிழ்பேப்பர்.காம், அதிகாலை.காம் ஆகிய மின், அச்சு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. தமிழ் என்ற இலவச மின் காலாண்டிதழை நடத்தி வருகிறார்.
| http://www.writercsk.com/ | https://www.facebook.com/saravanakarthikeyanc | https://twitter.com/writercsk |
4
சமர்ப்பணம்
மதுமிதாவுக்கும்
சந்தியாவுக்கும்
5
மின்னுரை
ச்சீய் பக்கங்கள் 2012 – 2013 ஆண்டுகளில் குங்குமம் வார இதழில் தொடராக வந்தது. மொத்தம் 25 அத்தியாயங்கள். அது போக பதிப்பக வேண்டுகோளுக்கு இணங்கி நூலாக்கத்துக்கென கலவி பற்றி ஓர் அத்தியாயம் எழுதிச் சேர்த்தேன். ஆக மொத்தம் 26 அத்தியாயங்கள். ஆனால் அதில் 22 அத்தியாயங்கள் மட்டுமே 2014ல் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்த வெட்கம் விட்டுப் பேசலாம் புத்தகத்தில் இடம் பெற்றது. மீதமிருக்கும் 4 அத்தியாயங்களையும் நூலுக்கு எழுதிய முன்னுரையையும் தொகுத்து, புத்தகத்துக்கு முன்பு தீர்மானித்திருந்த ச்சீய்… என்ற பெயரில் இப்போது (2015) இலவச மின்னூலாக வெளியிடுகிறேன்.
6
Foreplay
(வெட்கம் விட்டுப் பேசலாம் நூலுக்கு எழுதிய முன்னுரையின் முழு வடிவம்)
“The only thing that is obscene is censorship.” –Craig Bruce, Australian TV Comedian
சில்லாயிரமாண்டுகள் நெடிய பாரம்பரியம் கொண்ட நம் தேசத்தின் கலாசாரத்தில் சில விஷயங்களை மட்டும் தான் பொதுவில் பேசலாம். உணவில் மட்டுமல்ல உரையாடலிலும் சைவம், அசைவம் என்று வகை பிரித்து வைத்திருக்கிறோம்.
ஆண்கள் நண்பர்களுக்குள்ளும், பெண்கள் தங்கள் தாய், சகோதரிகள் மற்றும் தங்கள் சிநேகதிகளுக்குள்ளும் தான் உடல், காமம் உள்ளிட்ட so-called ஆபாச சங்கதிகள் குறித்த ரகசிய சம்பாஷணைகளை நிகழ்த்திக் கொள்ள முடிகிறது.
காலத்திற்கேற்ப இப்படி ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரையறை மாறிக் கொண்டே வருகிறது என்பதும் முக்கியமானது.
80களின் இறுதியில் ஜூனியர் விகடல் சுஜாதா ஏன்? எதற்கு? எப்படி? என்ற விஞ்ஞான கேள்வி பதில் தொடர் எழுதுகையில் சுயஇன்பம் பற்றிய ஒரு கேள்விக்கு மிகுந்த பீடிகையுடனே பதில் அளித்திருக்கிறார். பிரபல்யத்தின் உச்சத்தில் உட்கார்ந்திருந்த அவருக்கே அது தான் நிலைமை அப்போது.
ஆனால் இன்று டாக்டர் நாரயண ரெட்டி, டாக்டர் காமராஜ், டாக்டர் ஷாலினி உள்ளிட்ட பாலியல் மருத்துவர்கள் இயல்பாய் சஞ்சிகைகளில் சுயஇன்பம் தொடர்பான கேள்விகளுக்கு விரிவாய்ப் பதில் சொல்லும் சூழல் உள்ளது.
காமசூத்ராவும் கொக்கோகமும் விதவிதமாக பல பதிப்பகங்களில் நூல்களா அச்சிடப்படுகிறது. இந்த இடத்தில் நான் கவிதை, சிறுகதை, நாடகம் உள்ளிகட்ட படைப்பிலக்கியங்கள் பற்றிப் பேசவில்லை. அவற்றில் சங்க காலம் தொட்டே பாலியல் உள்ளிட்ட விஷயங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
நான் பேசுவது புனைவு, கற்பனை போன்ற போர்வைகள் தாண்டி நேரடியாய் இவை குறித்தெல்லாம் பொதுவில் பேசவும் எழுதவும் கூடிய சாத்தியம் பற்றி.
சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்குப் பிறகு நள்ளிரவில் சன் டிவியில் மனவியல் நிபுணர் டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். இன்று பல தொலைக்காட்சிகளிலும் பரவி விட்டாலும் இன்றும் அதே நள்ளிரவு தான் (சேலம் சிவராஜ் சித்த வைத்தியரை காலையிலேயே அருள்வாக்கு சொல்வார் எனினும் அவரை நான் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியவில்லை),
அதாவது சில விஷயங்களைப் பேச இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாய் நம் சமூகம் சில துல்லியமான விழுமியங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவும் எழுதவும் சாத்தியப்படுகிறது.
இணையத்தின் வளர்ச்சி இதை லேசாய் அசைத்துப் பார்த்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாய் வலைப்பதிவுகள் மற்றும் சமூக வலைதளங்களின் வருகை நிறைய தனி மனிதர்களுக்கு (பெண்கள் உட்பட) அந்தரங்க விஷயங்களை பற்றிப் பேசும் / கேட்கும் உந்துதலையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது.
குங்குமம் இதழில் நான் எழுதிய ச்சீய் பக்கங்கள் தொடரும் இதன் நீட்சி தான்!
*
ச்சீய் பக்கங்கள் உண்மையில் ஒரு வரலாற்றுத் தொடர் தான். ஆனால் நாம் ச்சீய் என்று வெட்கப்படும் விஷயங்களின் வரலாறு. ப்ரேஸியர், பேண்டீஸ், காண்டம், சானிடரி நாப்கின் போன்ற விஷயங்கள் எங்கே எப்படித் தோன்றி இப்போதிருக்கும் வடிவை அடைந்திருக்கின்றன என்பதைத் தேடி அறிவது சுவாரஸ்யம் இல்லையா!
தவிர, ச்சீய் என்ற பதத்தில் “வேண்டாம்” என்பதை விட வெட்கப்பட்டுக் கொண்டே “வேண்டும்” என்று சொல்லும் தொனியே தெரிகிறது. மிருதுளா என்பவரின் ட்வீட் நினைவுக்கு வருகிறது – பெண் ‘ச்சீய்‘ என்றவுடன் நிறுத்திவிடுபவன் முட்டாள்.
அதனால் முட்டாளாக இல்லாமல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள விரும்பி தொடர்ந்து விட்டேன். அதாவது தொடர் எழுதி விட்டேன். யாரேனும் இத்தொடரை ச்சீய் என்று சொல்லி படிக்காமல் தவிர்த்துக் கடந்தார்களா எனத் தெரியவில்லை!
ஆங்கிலத்தில் கூட இப்படி தொகுப்பு முயற்சி இருக்கிறதா எனத் தெரியவில்லை. தமிழில் சுமார் பதினைந்து வருடங்கள் முன்பு கார்டூனிஸ்ட் மதன் இதைப் போல் ஒரு தொடர் எழுதிய ஞாபகம். ஹிட்லர் வாயுத்தொல்லையால் அவதிப்பட்டது, ஆண்மை விருத்திக்காக குதிரைகளின் விரைகளைப் பொடி செய்து உண்டது என்றெல்லாம் வரும். ஆனால் அது மிகக் குறுகிய காலமே வெளியானது. அதுவும் வாரம் ஒரு விஷயம் என்று எடுத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. பொதுவாய் வரலாற்றிலிருந்து பேச சங்கடப்படும் விஷயங்களை எழுதியதாய் நினைவு.
ச்சீய் பக்கங்கள் தொடருக்கு முன்னோடி என்று சொன்னால் அது ஒன்று தான்.
வடிவத்தை எடுத்துக் கொண்டால் ச்சீய் பக்கங்கள் தொடருக்கு அருகில் வருபவை என்று ஆனந்த விகடனில் வேல்ஸ் எழுதிய வாவ் 2000, குங்குமத்தில் லதானந்த் எழுதிய எனப்படுவது ஆகிய வாரத் தொடர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
*
தமிழ் ட்விட்டர் உலகின் முதல்வனான ‘ஆல்தோட்ட பூபதி’ @thoatta ஜெகன் தான் இத்தொடருக்கான தொடக்கப்புள்ளி. அப்போது அவர் குங்குமம் இதழில் நயம்படப் பேசு என்று சமகால நிகழ்வுகளை அங்கதம் செய்யும் தொடரை எழுதி வந்தார். அந்தத் தொடர்பின் அடிப்படையில் என்னிடம் குங்குமம் இதழில் ஏதாவது தொடர் எழுத முயற்சிக்கலாம் எனக் கேட்டார். அப்போது அவரை நிறைய பழக்கமில்லை. ஆனால் என் எழுத்து மீதான நம்பிக்கையில் அல்லது என் மீதான ப்ரியத்தில் என்னைக் கேட்டார். அப்போது கிட்டத்தட்ட பத்து தொடர்களுக்கான ஐடியாவை அவரிடம் சொன்னேன். அதில் அவரே பொறுக்கித் தேர்ந்தெடுத்து குங்குமம் ஆசிரியருக்கு அனுப்பி வைத்த இரண்டு ஐடியாக்களுள் ஒன்று தான் ச்சீய்.
நியாயமாய்ப் பார்த்தால் ஜெகன் இதை எனக்கு செய்திருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. எழுதும் வகைமை வேறு வேறு என்றாலும் சமகாலத்தில் எழுதுகிறோம் என்பதால் ஒருவகையில் அவரும் நானும் போட்டியாளர்கள். ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எனக்கு வாய்ப்பு பெற்றுத் தர முயன்றார். அது எனக்கு நிஜமாய் பேராச்சிரியம். நான் அவரிடத்திலும் அவர் என் இடத்திலும் இருந்திருந்தால் அவருக்கு நான் இப்படி உதவி இருப்பேனே என்பது சந்தேகமே. அவருக்கு என் அன்பினை உரித்தாக்குகிறேன், அந்த நன்றியுணர்வின் நீட்சியாகவே இந்தப் புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
குங்குமம் முதன்மை ஆசிரியர் தி.முருகன் நான் அனுப்பி வைத்த ச்சீய் சாம்ப்பிள் அத்தியாயங்களை வாசித்து அங்கீகரித்து, பொறுமையாய் காத்திருந்து குழுமத்தின் ஒப்புதல் வாங்கினார். நான் அறிந்த வரை அவர் மிகுந்த தேடல் கொண்டவர். நான் எந்த விஷயத்தையும் புதிதாக அவரிடம் சொல்லி விட முடியவில்லை. எல்லாமே அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அதனால் எதைக் குறித்தும் நான் விளக்க வேண்டி இருக்கவில்லை. வாரா வாரம் தலைப்பு சொல்லி அதை எழுதலாமா என்று அவரது முடிவு கேட்க வேண்டியது மட்டுமே ஒரே வேலையாக இருந்தது.
இடையில் ச்சீய் என்று தலைப்பிட்டு தொடர் தொடங்க முடிவான வேளையில் குமுதம் இதழில் ஏ ஜோக் பகுதி ஒன்றினை அதே பெயரில் தொடங்கினார்கள். அதனால் என் தொடருக்கு ச்சீய் பக்கங்கள் என்று பெயர் மாற்றினார் தி.முருகன்.
தொடரை மங்களகரமாய் ப்ரேஸியரில் தொடங்கினேன். மொத்தம் 25 வாரங்கள் எந்தத் தடையும் இல்லாமல் தொடர் வெளிவந்தது. வாரா வாரம் குங்குமம் வாசகர் கடிதங்கள் பகுதியில் ச்சீய் பக்கங்கள் தொடர் குறித்து ஒரு நேர்மறை கருத்தாவது வெளியாகிக் கொண்டிருந்தது. தி.முருகனிடம் பேசிய போதும் சிக்கலான விஷயங்கள் குறித்து ஆபாசம் கலக்காமல் நாசூக்காக எழுதிப் போவதாகவே பெரும்பாலான விமர்சனங்கள் வருவதாகத் தெரிவித்தார்,
வெகுஜன இதழ்களுக்கு எழுதி அனுபவமில்லா ஓர் இளம் எழுத்தாளனின் முதல் தொடருக்கு விற்பனையில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் ஒரு பிரபலமான வார இதழ் ஆறு பக்கங்களை ஒதுக்கித் தருமா? தி.முருகன் அதைச் செய்தார். இத்தருணத்தில் அவருக்கு என் நன்றியினைப் பதிகிறேன்.
அம்ருதா இலக்கிய இதழில் 2011 நொபேல் பரிசுகள் பற்றிய ஒரு தொடரை ஏற்கனவே எழுதி இருக்கிறேன் என்றாலும் ஒரு வெகுஜன இதழில் தொடர் எழுதுவது அது தான் முதல் முறை. தவிர அது வாரா வாரம் எழுத வேண்டி இருந்தது. அதற்காக நிறைய தகவல் திரட்ட வேண்டி இருந்தது. இன்றைய இணைய வசதி மிகுந்த சூழலில் இது எனக்கு ஓரளவுக்கு எளிமைப்பட்டது என்றாலும் அது மிகுந்த அழுத்தம் தரும் அனுபவமாகவே அமைந்தது.
இந்த வசதி எல்லாம் இல்லாத காலத்தில் இது போல் எழுதிய சுஜாதாவும் மதனும் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
தொடருக்கு லேஅவுட் செய்தவர்களுக்கு என் பிரத்யேக நன்றிகள். ஒவ்வொரு வாரமும் மிக அழகான டிஸைனும் மிகப் பொருத்தமான புகைப்படங்களும் இடம் பெற்றன. குங்குமம் இதழை வாங்கிப் புரட்டுபவர்கள் இந்த அளவு கவர்ச்சியான லேஅவுட்டைக் கண்ட பின் தாண்டிச் செல்ல முடியாது. படிக்க வைத்து விடும்.
என் இதுவரையிலான அத்தனை எழுத்துக்களிலும் அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட படைப்பு ச்சீய் பக்கங்கள் தொடராகவே இருக்கும். குங்குமம் இதழின் பரந்துபட்ட வாசகக் கூட்டமே காரணம். என் எழுத்துப் பிரயாணத்தின் ஒரு மைல்கல் இது.
ச்சீய் பக்கங்கள் தொடர் குங்குமம் இதழில் 2012 பிற்பகுதியில் தொடங்கி 2013ன் முற்பாதி வரை வெளியானது! இந்தத் தொடர் வெளிவந்து கொண்டிருக்கும் போதே நிறைய நண்பர்கள் இது எப்போது தொகுப்பாக வெளிவரும் என்பதை விசாரித்தபடி இருந்தார்கள். சில இடங்களில் சில காரணங்களால் பதிப்பிக்கத் தயங்கி இப்போது இறுதியாக ஆர்.முத்துக்குமாரின் உதவியுடன் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் மூலம் இந்தத் தொடர் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகிறது.
வாரா வாரம் குங்குமம் இதழுக்கு அனுப்பும் முன்பே இந்தத் தொடரின் முதல் வாசகியாக இருந்தவள் என் மனைவி. இப்படி ஒரு தொடரை அவள் கணவன் எழுதுவது தொடர்பாய் அவள் ஒருபோதும் அசூயைப்படவில்லை. மாறாக முடிந்த அளவு இந்தத் தொடரை தெரிந்தவர்களிடத்தில் அறிமுகப்படுத்தினாள். எங்கள் அப்பார்ட்மெண்ட்டிலேயே இதற்கு தீவிர தொடர் வாசகிகள் உருவானார்கள்.
இதைத் தொடர்ந்து வாசித்து விமர்சிக்கவும் ஊக்குவிக்கவும் செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர் தன் வடிவத்தைக்கண்டெடுக்க அவர்கள் உதவினர்.
என் அம்மா தான் இதை எழுதுவதை எதிர்த்தார். ஆனாலும் தொடர்ந்து வாசித்தார்!
*
இந்தப் புத்தகத்திற்கான தலைப்பாக தொடருக்கு ஆரம்பத்தில் உத்தேசித்திருந்த தலைப்பான ச்சீய் என்பதையே வைத்து விட்டேன். Short, Sweet and Sexy!
ச்சீய் பக்கங்கள் இரண்டாம் பாகம் எழுதும் அளவு தலைப்புகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. நல்ல தோதான தளமும் சூழலும் வாய்க்கும் போது எழுதுவேன்.
*
பெங்களூரு சி.சரவணகார்த்திகேயன்
25-ஃபிப்ரவரி-2014 c.saravanakarthikeyan@gmail.com
1
ஃப்ரெஞ்ச் கிஸ்
“I thought it was my job to give all the boys their first kiss.”
Jessica Alba, Hollywood Actress
ஃப்ரெஞ்ச் கிஸ் என்பது பொதுவாய் ஆணும் பெண்ணும் காதலின் / காமத்தின் நிமித்தம் உதட்டோடு உதடு வைத்து பரிமாறிக் கொள்ளும் ஒரு வகை முத்தம். லிப் லாக், மௌத் கிஸ் எனப் பலவாறாக இது அழைக்கப்படுகிறது. உதடுகள் கலப்பது என்பதைத் தாண்டி நாக்குகள் பரஸ்பரம் துழாவிக் கொள்வதும் அதன் நீட்சியாய் எச்சில் பரிமாற்றமும் நிகழும். நெற்றி, கன்னம், புறங்கை பகுதிகளில் முத்தமிடுவதை விட அந்தரங்கமானதாக ஆனந்தரகமானதாக கருதப்படுவது இது!
செசர் லம்ப்ரோஸோ காதலர்களிடையேயான உதட்டு முத்தம் ஆதிகாலத்தில் தாய்க்கும் சேய்க்கும் இடையேயான வாய்வழி உணவு ஊட்டும் பழக்கத்திலிருந்து உருவானதாகச் சொன்னார். எர்னெஸ்ட் க்ராலி பறவைகள் அலகுகளில் கொஞ்சிக் கொள்வதும், பூச்சிகள் உணர்கொம்புகளில் முட்டி விளையாடுவதும் கூட உதட்டு முத்தத்தின் பரிமாணமே என்றார். மனிதக்குரங்குகளில் உதட்டு முத்தம் சகஜம் – சிம்பன்ஸிக்கள் திறந்த வாயுடனும், போனோபோக்கள் நாக்கு தொடுமளவும்.
பொதுவாய் முத்தம் என்பதே பிரத்யேகத் தொடுகை. அதிலும் உதட்டு முத்தம் இன்னமும் ஸ்பெஷல்! காரணம் விரலின் நுனிகளைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக உணர்ச்சிகரமானவை உதட்டின் இதழ்கள். பாலியல் உறுப்புகளுக்குக் கூட அவ்வளவு துல்லிய உணர்ச்சி கிடையாது. முத்தமிடும் போது 34 முகத்தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது – குறிப்பாய் உதட்டிலிருக்கும் ஆர்பிக்யூலரிஸ் ஓரிஸ் தசை. இதை முத்தமிடும் தசை என்று சொல்கிறார்கள்.
பெயர் ஃப்ரெஞ்ச் முத்தம் என்றாலும் இதன் ஆரம்பம் நம் இந்தியாவில் தான். வேதங்களில் (கிமு 1500) உதட்டு முத்தம் பற்றி சொல்லப்படுகிறது. பின் கிமு 1000ம் ஆண்டு வாக்கில் உண்டாக்கப்பட்ட கஜுராஹோ சித்ரகுப்தா கோவிலில் ஆணும் பெண்ணும் உதட்டில் முத்தமிட்டுக் கொள்ளும் சிற்பம் இருக்கிறது. பிற்பாடு கிமு 326ல் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த போது கிரேக்கர்கள் நம்மிடமிருந்து உதட்டு முத்தம் பற்றிக் கற்றுக் கொண்டார்கள்.
பல நூற்றாண்டுகளாக நம் தேசம் முழுக்க வாய்மொழிக்கதையாக இருந்து கிபி350ல் எழுத்து வடிவம் பெற்ற மகாபாரதத்தில் உதட்டு முத்தம் காதலின் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பின் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாத்ஸாயனரின் காமசூத்ரா 30 வகை உதட்டு முத்தங்களை விவரிக்கிறது
கிமு 200ம் ஆண்டில் லத்தீன் கவிஞர் ப்ளாடஸ் எழுதிய ஒரு படைப்பில் ஓர் அடிமை ஒரு பெண்ணிடம் “என்னை ஒரு சர்ப்பமாக மாற்றி விடு, இரண்டு நாக்குகளையும் கொடு” என்று சொல்வதாக வருகிறது. அது தான் இந்தியா அல்லாத அந்நிய தேசத்திலிருந்து உதட்டு முத்தம் பற்றி வரும் முதல் குறிப்பு.
ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதைகளில் கொட்டாவி விடும் காதலனை ஒரு பெண் தன் உதடுகள் கொண்டழுத்தி நாக்கை ஆழச் செலுத்தி நடனமாடி வாயைத் துழாவுவதாக கதைசொல்லியான சேஹெரஸாட் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
ரோமானிய சாம்ராஜ்யத்தில் மூவகை முத்தம் மிகப்பிரபலமாக இருந்திருக்கிறது. முதல் வகை ஆஸ்குலம் – சாதாரணமாக கன்னத்தில் முத்தமிடுவது. இரண்டாம் வகை பேஸியம் – உதட்டில் ஒரு முறை ஒற்றி எடுப்பது. மூன்றாவது வகையான சேவோலியம் தான் நாக்கு வரை நீளும் நீடிக்கும் அசல் ஃப்ரெஞ்ச் முத்தமாகும். இந்த மூன்றாம் வகை முத்தத்தை உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் கொடுத்துத் தான் ஆணும் பெண்ணும் திருமணம் செய்ததை அறிவிப்பது வழக்கம்.
கிபி 300ல் ரோமில் கணவர்கள் வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய பின் மனைவியரை உதட்டில் முத்தமிடுவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். அது காதலின் பொருட்டன்று; மது அருந்தியிருக்கின்றனரா என அறியும் நோக்கில்.
1590களில் ஷேக்ஸ்பியரின் ரோமியோ – ஜூலியட் நாடகம் மேடையேற்றப்பட்ட போது ரோமியோ ஓர் உதட்டு முத்தத்துடன் இறந்து போவதாக இருந்த காட்சி நிகழ்த்தப்பட்டது. 1763ல் முத்தத்தை XOXO என்று எழுதும் முறை அறிமுகமானது.
1784ல் இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களில் ஜார்ஜியானா என்ற அரச குடிப் பெண் தேர்தலில் போட்டியிட்ட நண்பருக்கு ஆதர’வாய்’ப் பிரச்சாரம் போய் ஆட்களுக்கு லஞ்ச உதட்டு முத்தம் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது – “kisses for votes” scandal!
உதட்டு முத்தத்திற்கு ஏன் ஃப்ரெஞ்ச் முத்தம் என்று பெயர் வந்தது? ஃப்ரான்ஸுடன் காலனியாதிக்கப் போட்டி உச்சத்தில் இருந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டினர் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இந்தச் சொல்லை உருவாக்கினார்கள். ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரை உதட்டில் முத்தம் தருவது இங்கிதமற்ற செயல். அதனால் அதனை தங்கள் வைரிகளின் பெயரால் கிண்டலாக ஃப்ரெஞ்ச் கிஸ் என்று சொன்னார்கள். 1923ல் இச்சொல் பரவலாய்ப் புழங்கத் தொடங்கியது.
முதல் உலகப் போரில் ஈடுபட்டு ஊர் திரும்பிய பிரிட்டிஷ் சிப்பாய்கள் தம் காதலியர், மனைவியரிடம் ஃப்ரெஞ்ச் முத்தத்தைப் பிரபலமாக்கி விட்டனர்.
1889ல் ஃப்ரெஞ்சுக்காரரான அகஸ்டி ரோடின் ஓர் ஆண் ஒரு பெண்ணை மடியில் இருத்தி உதட்டில் முத்தமிடுவதாய் அமைந்த புகழ்பெற்ற The Kiss சிற்பத்தை வடிவமைத்தார். இன்றும் அதன் மினியேச்சர்கள் உலகெங்கும் விற்கப்படுகின்றன.
1896ம் ஆண்டு The Kiss என்ற படத்தில் ஜான் ரைஸ் – மே இர்வின் இருவரிடையே முதல் முத்தக்காட்சி இடம் பெற்றது. நம் கமல்ஹாசனுக்கெல்லாம் தாத்தா இவர். 1918 ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ‘Private Lindner’s Letters: Censored and uncensored’ என்ற புத்தகத்தில் ஃப்ரெஞ்ச் கிஸ் என்ற சொல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
1937ல் புகழ்பெற்ற ஸ்னோ வைட் என்ற டிஸ்னி கார்ட்டூன் கதையில் உறங்கும் இளவரசியை உதட்டில் முத்தமிட்டு இளவரசன் உயிர்த்தெழச் செய்யும் காட்சி பிரபலமானது. 1945 லைஃப் இதழில் ஒரு மாலுமி ஒரு செவிலியை தெருவில் முத்தமிடும் அட்டைப்படம் இடம்பெற்றது. தலைமுறைகள் தாண்டி இன்றும் ஓர் அபாரமான ரொமான்டிக் சித்திரமாக மக்கள் மனதில் அப்படம் உறைந்திருக்கிறது.
1946ல் ஆல்ஃப்டெட் ஹிட்ச்காக்கின் Notorious படத்தில் இன்க்ரிட் பெர்க்மன், கேரி க்ராண்ட் இடையேயான முத்தம் படங்களில் ஆக செக்ஸியானதாகச் சொல்வர்!
Don Juan (1926) படத்தில் ஜான் பேரிமோர், மேரி ஆஸ்டர் இடையே 127 முத்தங்கள் இடம்பெற்றன. 1961ன் Splendor in the Grass திரைப்படத்தில் நடாலி வுட், வாரன் பீட்டி முத்தம் ஹாலிவுட்டின் முதல் ஃப்ரெஞ்ச் கிஸ். 1963ன் ஆண்டி ஆண்டிஹோலின் Kiss படத்தில் மிக நீளமான முத்தக்காட்சி 54 நிமிடங்களுக்கு இடம்பெற்றது.
2002ல் வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் போபே மாகுய்ர், க்ரிஸ்டென் டன்ஸ்ட்க்குத் தரும் மிகப் புகழ்பெற்ற தலைகீழ் உதட்டு முத்தம் இடம்பெற்றது.
2003ல் நடந்த எம்டிவி ம்யூசிக் அவார்ட்ஸ் நிகழ்வில் பிரபல பாப் பாடகிகளான மடோனாவும் ப்ரிட்னி ஸ்பியர்ஸும் மேடையிலேயே முத்தமிட்டுக் கொண்டனர். அவர்கள் வாயடைத்துக் கொண்டதை உலகமே உலகம் வாயடைத்துப் பார்த்தது!
2003ல் நடந்த ஒரு நிகழ்வில் ஹாலிவுட் நடிகை ஷாரன் ஸ்டோன் முத்தத்தை ஏலம் விட்டார். ஜானி ரிம் என்ற அமெரிக்கர் 50,000 டாலர்களுக்கு அந்த ஒற்றை முத்தத்தை ஏலம் எடுத்துப் பெற்றார். அந்தப் பணம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உணவு வசதி ஏற்பாடு செய்ய ஒரு தொண்டு நிறுவனத்திற்குத் தரப்பட்டது.
எம்டிவி மூவி ஆவார்ட்ஸில் ஆண்டுதோறும் திரைப்படங்களில் இடம்பெற்ற சிறந்த முத்தத்திற்கு விருது வழங்கி வருகிறார்கள். 2009லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக Twilight சீரிஸில் தவறாது இடம்பெறும் கிரிஸ்டென் ஸ்டீவர்ட் – ராபர்ட் பேட்டின்ஸன் முத்தக்காட்சிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றன.
1990ல் மின்னெஸோட்டா மறுமலர்ச்சி திருவிழாவில் ஆல்ஃப்ரெட் வுல்ஃப்ரம் 8001 பேரை எட்டு மணி நேரத்தில் முத்தமிட்டு சாதனை படைத்தார் – நிமிடத்திற்கு 16 உதடுகளுக்கு மேல்! 2012ல் காதலர் தினத்தின் போது தொடர்ந்து 50 மணி நேரம் 25நிமிடம் 1 வினாடி தாய்லாந்தைச் சேர்ந்த நொந்தவாட் சரோன்கேஸொர்ன்ஸின் மற்றும் தனகோர்ன் சித்தியம்தாங் என்ற ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்தது.
முத்தமிடுவதால் மன அழுத்தம் குறைந்து ஆண் பெண் உறவுகளில் திருப்தியும் நிம்மதியும் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடம்பின் கொலஸ்ட்ரால் குறைவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். முத்தமிடும் போது அதீத அட்ரினலின் சுரப்பால் இதயம் வேகமாகத் துடிக்கிறது (நிமிடத்திற்கு 100 வரை). உடற்பயிற்சிக்கு சமானமாய் இது உடம்புக்கு நன்மை பயக்கிறது. அலெக்ஸாண்டர் டீவீஸ் என்பவர் முத்தமிடுவதால் நிமிடத்திற்கு 2 முதல் 3 கலோரி வரை எரிக்கலாம் என்கிறார்.
உதட்டு முத்தத்தால் மோனோந்யூக்ளியோசிஸ், ஹெர்ப்ஸ் சிம்ப்ளெக்ஸ் போன்ற எச்சிலின் வழி பரவும் வியாதிகள் ஏற்படுகின்றன. மிக அரிதாய் எயிட்ஸ் கூடப் பரவும்! 1997ல் அப்படிப்பட்ட ஒரு கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட ஆண் பெண் இருவருக்கும் ஓர் ஈறு நோயினால் பாதிக்கப்பட்டிருக்க, உதட்டு முத்தத்தின் போது ரத்தத்தின் சேர்க்கை காரணமாய் ஹெச்ஐவி தொற்றிவிட்டது.
உதட்டு முத்தமிடுகையில் மூன்றில் இரண்டு பங்கினர் தம் தலையை வலது பக்கம் திருப்புவதாக ஓனக் குண்டூர்கம் என்ற ஜெர்மனிய சைக்காலஜிஸ்ட் கண்டுபிடித்திருக்கிறார். இந்த குணம் கருவில் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டு விடுவதாகவும் சொல்கிறார் இவர்.
முத்தம் தொடர்பாய் மருத்துவ ஆராய்ச்சிகள் புரிந்த மார்ட்டின் மூரியர் என்பவர் உலக ஜனத்தொகையில் பாதிப்பேர் ஃப்ரெஞ்ச் முத்தம் இடுவதாகக் குறிப்பிடுகிறார்.
சில ஆப்ரிக்கப் பழங்குடியினர் உயிர் மூச்சு பரிமாறப்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாக உதட்டு முத்தமிட்டுக் கொள்வதில்லை. மொஸாம்பிக்குவைச் சேர்ந்த பிக்மிக்கள், தொங்காக்கள் உதட்டு முத்தம் சுகாதாரமானதல்ல என்றெண்ணுவதால் அதைத் தவிர்க்கின்றனர். மாஞ்சா என்ற ஆப்ரிக்க பழங்குடியினப் பெண்கள் மேல் உதட்டில் துளையிட்டு ஒரு மரவட்டும் இரு கொக்கிகளும் அணிவது வழக்கம். அவர்களுடன் உதட்டு முத்தம் முயற்சிக்கும் ஆண் வாய் கொத்து பரோட்டாவாகி விடும் சாத்தியம் அதிகமுண்டு என்பதால் அவர்களும் அதை முயற்சிப்பதில்லை.
சீனர்கள் ஃப்ரெஞ்ச் முத்தம் ஆபாசமானது என எண்ணுகின்றனர். பொதுவிடத்தில் அதை நிகழ்த்துவது பெரும் அசிங்கமாகக் கருதப்படுகிறது. பாப்பா நியூ கினியா மக்கள் யாராவது உதட்டு முத்தமிடுவதைப் பார்த்து விட்டால் பெரும் சிரிப்புடன் குலவையிடுகின்றனர். பாலித்தீவு மக்கள் உதட்டு முத்தம் இட்டுக்கொள்வதில்லை; பதிலாக ஆணும் பெண்ணும் முகங்களை தம் நெருக்கமாக வைத்துக் கொண்டு முகர்ந்து பார்த்து, தேக வெம்மையை உணர்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். தகித்தியர்கள் ஆண் பெண் மூக்கில் மூக்கு வைத்துத் தேய்த்துக் கொள்கின்றனர். எஸ்கிமோக்கள் மூக்கை உறுஞ்சிப் பார்த்து நாவுகளை ஒட்டிக் கொள்கின்றனர்.
உலகம் உள்ளளவும் உதட்டு முத்தம் ஏதேனும் வடிவில் இருந்து கொண்டிருக்கும்.
*
Stats சவீதா
ஒரு மனிதன் தன் ஆயுளில் 2 வாரங்களை முத்தமிடுவதில் கழிக்கிறான்.
உதட்டு முத்தத்தின் போது 100 கோடி பேக்டீரியாக்கள் பரிமாறப்படுகின்றன.
70% பேர் தம் முதல் முத்தத்தை 15 வயதில் அனுபவித்தாக சொல்கின்றனர்.
ஓர் அமெரிக்கப்பெண் 79 ஆண்களை திருமணத்திற்குமுன் முத்தமிடுகிறாள்.
39% பெண்கள் மிலிட்டரி உடை ஆண்களை முத்தமிட விரும்புகின்றனர்.
***
2
பிகினி
“I don’t like posing in a bikini as there is nothing to hold on to.”
Maria Sharapova, Russian Tennis Player
பிகினி என்பது பெண்கள் அணியும் டூபீஸ் நீச்சலுடை. இதில் ஒரு பீஸ் ப்ரேஸியர் போல் மேலே மார்பிலும் மற்ற பீஸ் பேண்டீஸ் போல் கீழே இடுப்பிலும் அணிவர். பிகினி அணியும் பெண்கள் அந்தரங்கங்கள் மற்றும் அவை சார்ந்த பிரதேசங்களின் ரோமங்களை மழித்தகற்றி விடுகின்றனர். இதற்கு பிகினி வேக்ஸிங் என்று பெயர்.
கிமு 1600ல் கிரேக்க மினோயன் நாகரிகத்தின் சுவற்றோவியங்களில், தாழிகளில் பெண்கள் டூபீஸ் உடையில் காட்சியளிக்கின்றனர். கிபி 100ம் ஆண்டைச் சேர்ந்த சிலையில் கிரேக்க பெண் கடவுள் வீனஸ் பிகினியில் காட்சியளிக்கிறார். கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த Villa Romana Del Casaleன் ரோமானிய மொசைக்களில் எட்டு பெண் அத்லெட்கள் பிகினியணிந்து விளையாடும் ஓவியம் இடம் பெற்றிருக்கிறது.
இதற்கு பிறகு பிகினி 19ம் நூற்றாண்டின் மத்தியில்தான் மறுபடி எட்டிப்பார்க்கிறது. 1890களில் விக்டோரியன் காலத்துப் பெண்டிர் பொதுவில் பிகினி அணிய கூச்சம் கொண்டு பல தந்திரோபாயங்களைக் கையாண்டிருக்கின்றனர். குளியல் இயந்திரம் என்ற உடைமாற்றும் அறைகொண்ட மரவண்டி அதில் முக்கியமானது (இன்றைய நடிகைகளின் கேராவன்களுக்கு ஒப்பானது). குளிக்கும் பெண் சாதாரண உடையில் வண்டியில் ஏறுவாள். குதிரை (சமயங்களில் மனிதர்கள்) வண்டியை கடலுக்குள் இழுத்துச் செல்லும். அவள் அந்த வண்டிக்குள்ளேயே பிகினிக்கு மாறி கடலுக்குள் இறங்குவாள். இவ்வாறு ஆண்களின் பார்வையிலிருந்து சுலபமாய்த் தப்பித்தார்கள்.
1907ல் ஆஸ்திரேலிய மௌனப்பட நடிகை மற்றும் நீச்சல் வீராங்கனையான அன்னெட் கெல்லர்மேன் போஸ்டனின் ரெவரே பீச்சில் இறுக்கமான ஸ்லீவ்லெஸ் நீச்சலுடை அணிந்துவந்த காரணத்துக்காக கைதுசெய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பெண்கள் நீச்சலுடை அணிந்து வருகிறார்களா என போலீஸ்காரர்கள் அளந்து சோதிப்பது அப்போது அமெரிக்க பீச்களில் சகஜமான காட்சியாக இருந்தது.
1913 ஒலிம்பிக்கில் கார்ல் ஜேண்ட்சென் விளையாடும் போது வசதியாக இருக்கும் பொருட்டு இறுக்கமான ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட் என டூபீஸ் உடையில் கலந்து கொண்டார். 1915ல் மல்லியாட் என்ற ஒன்பீஸ் உடை (தற்போது ஜிம்னாஸ்டிக்ஸ் பெண்கள் அணிவது போன்றது) அமெரிக்க பெண்கள் மத்தியில் பிரபலமானது.
1930களில் ஐரோப்பிய பெண்கள் முதன்முதலாக டூபீஸ் நீச்சலுடை அணிந்தனர். ஹால்டர் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் கொண்ட அதில் இரு பீஸ்களுக்குமிடையே இடுப்புன் சிறுபகுதி மட்டுமே கீற்று போல் தீற்றலாய்க் காட்சியளிக்கும். தொப்புள் தெரியாது. மேக் சென்னெட்டின் Bathing Beauties, டோரதி லாமோர் நடிந்த Hurricane, My Favorite Brunette ஆகிய படங்களிலும், 1948ல் வெளியான Life இதழின் அட்டைப் படத்திலும் இந்த சைவ பிகினி இடம் பெற்றது. அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் உடைகளின் ரேஷன் முறை புழக்கத்தில் இருந்த சமயம் தான் இந்த வகை பிகினி உள்ளே நுழைந்தது. 1940களின் ஆரம்பத்தில் அவா கார்ட்னர், ரீடா ஹேவொர்த், நானா டர்னர் போன்ற ஹாலிவுட் நடிகைகள் அமெரிக்க பீச்களில் இந்த நீச்சலுடையில் வலம் வருவது சகஜமாக இருந்தது.
ஐரோப்பாவிலோ போர் காரணமாக கடற்கரைகள் செறிச்சோடிக் காட்சியளித்தன. இதனால் நீச்சலுடைகளில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. போர் முடிந்த 1946ன் கோடைக்காலத்தில் தான் அங்கே மீண்டுமொரு சுதந்திர உணர்ச்சி மெல்ல ஊடுருவியது. Nuts என்ற ஆண்கள் பத்திரிக்கை ஆசிரியர் டொமினிக் ஸ்மித் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் “போருக்கு பின் பூமியில் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பக் கொண்டு வரும் ஒரு சங்கதி மனிதகுலத்துக்குத் தேவைப்பட்டது. அது தான் பிகினி” என்கிறார். போருக்குப் பின்னர் பிகினி ஆராய்ச்சி களை கட்டியது.
ஜேக்ஸ் ஹெய்ம் என்ற ஃப்ரெஞ்சு டிசைனர் சிறிய நீச்சலுடை ஒன்றை உருவாக்கி அதற்கு atome என்று பெயர் இட்டார் (அணு என்பதற்கான பிரெஞ்சுச் சொல் அது). தன் தயாரிப்பை “உலகின் மிகச்சிறிய குளியல் உடை” என விளம்பரம் செய்தார்.
இதற்கு மூன்று வாரங்களுக்குப்பின் ஜூலை 5, 1946ல் ஃபிரெஞ்சு டிசைனர் லூயி ரியர்ட் என்பவர் மற்றொரு சிறிய நீச்சலுடையை “உலகின் மிகச்சிறிய குளியல் உடையை விட சிறியது” என்ற போட்டி விளம்பரத்துடன் அறிமுகப்படுத்தினார்.
நிறையப் பேர் மறுத்த பின் மிகுந்த சிரமத்துக்கிடையே மிச்சலின் பெர்னார்டினி என்ற பெண்ணை மாடலாகப் பிடித்து, இதை அணியச்செய்து பிஸ்கின் மொலிடர் என்ற பாரிஸின் புகழ்பெற்ற நீச்சல்குளத்தில் புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் வெளியிட்டார். அது மிகப்பெரிய ஹிட். 50,000 வாசகர் கடிதங்கள் வந்தன அதற்கு!
அமெரிக்கா அப்போது தான் பசிஃபிக் பெருங்கடலிலிருக்கும் மார்ஷல் தீவுகளில் பிகினி அடோல் என்ற இடத்தில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தி, பரபரப்பாக மீடியாக்களில் அடிபட்டுக் கொண்டிருந்த சமயம். அதையொட்டியே ரியர்ட் தன் சிறிய நீச்சலுடைக்கு பிகினி என்று பெயரிட்டார். நவீன நீச்சலுடை பிறந்தது.
ரியர்டின் வியாபாரம் பெருகியது. பிகினி தயாரிப்பு நிறுவனங்கள் புற்றீசலாய்ப் பெருகின. “ஒரு நல்ல பிகினி என்பது ஒரு திருமண மோதிரத்தினுள் சுலபமாய் நுழைத்து வெளியே எடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்” என்றார் ரியர்ட்.
ஃப்ரெல் கோல் என்ற அமெரிக்க டிசைனர் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் “ஃப்ரெஞ்சுப்பெண்களுக்கு குட்டையான கால்கள், அதனால் அவர்கள் கால்களை நீளமாய்க் காட்டும் நோக்கிலேயே பிகினிக்கள் உருவாக்கப்பட்டன” என்றார்.
பிரான்ஸில் பிகினி பரவினாலும் பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிகினி தடைசெய்யப்பட்டது. வாடிகனில் பிகினியணிவது பாவம் என்று அறிவிக்கப்பட்டது. 1951ல் லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டிக்குப்பின் உலகெங்கிலும் பிகினி தடை செய்யப்பட்டது. 1950களின் இறுதி வரை அமெரிக்க பீச்களில் பிகினி காணுவது அரிதாகவே இருந்தது. 1960களின் மத்தியில் ஹிப்பிகள் கலாசாரம் வரும் வரை பிகினி அமெரிக்காவில் எதிர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.
எஸ்தர் வில்லியம்ஸ் என்ற நடிகை பல படங்களில் நீச்சலுடையில் தோன்றினார். மார்கிட் ஃபெல்லெகி என்ற ஆடை வடிவமைப்பாளர் பிகினி டிசைன்களில் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். Catalina என்ற பிகினி தயாரிப்பு நிறுவனம் ஜிஞ்சர் ரோஜர்ஸ் மற்றும் மர்லின் மன்றோ ஆகியோரை விளம்பர மாடல்களாகப் பயன்படுத்தியது.
1957 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்த நடிகை ப்ரிகிட்டி பார்காட் ஃபிரான்ஸ் கடற்கரைகளில் பிகினியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. 1960ல் பாப் பாடகர் ப்ரயன் ஹைலேண்ட் “Itsy Bitsy Teenie Weenie Yellow Polka Dot Bikini.” என்ற பாடலின் மூலம் பிகினியை பிரபலம் ஆக்கினார். 1962. Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பெல்ட்டுடன் கூடிய வெண் பிகினி அணிந்து நடிகை உர்சுலா ஆன்ட்ரஸ் தோன்றிய காட்சி மிகப் பிரபலம். (2001ல் இந்த பிகினி 61,500 டாலர்களுக்கு ஏலம் போனது. நாற்பதாண்டுகளுக்குப் பின் இதை நினைவூட்டும் வண்ணம் Die Another Day படத்தில் ஹேல் பெர்ரி இதே மாடல் நீச்சலுடையை அணிந்து நடித்தார்).
1962ல் Playboy பத்திரிக்கை அட்டைப்படத்தில் பிகினி மாடலை அச்சிட்டது. 1963ல் அன்னெட்டி ஃபுனிசெல்லொ பிகினி அணிந்து Beach Party, How To Stuff a Wild Bikini ஆகிய படங்களில் தோன்றினார். அதே ஆண்டில் Beach Boys குழு California Girls, Surfin’ Safari போன்ற பிகினியை விதந்தோதும் பாடல்களைப் பாடி வெளியிட்டது.
Sports Illustrated இதழ் தான் முதன் முதலில் பிகினியை அட்டைப்படத்தில் போட்ட வெகுஜனப் பத்திரிக்கை. 1964ன் குளிர்காலத்தில் எந்த முக்கிய விளையாட்டுகளும் இல்லாது போக, அதன் ஆசிரியரான ஆன்ட்ரே லாகுவரே ஃபேஷன் நிருபர் ஜூல் கேம்ப்பெல் என்பவரை பக்கங்கள் நிரப்ப ஏதாவது விஷயம் செய்து தரச்சொல்லிக் கேட்க, அவர் பேபட் மார்ச் என்ற பிகினி மாடலை அட்டைப்படத்தில் போட்டார்.
1966ல் வெளியான One Million Years B.C. படத்தில் கற்கால குகை வாசிப் பெண்ணாகநடிகை ராக்குவல் வெல்ச் மிருகத்தோலால் ஆன பிகினி அணிந்து தோன்றினார்.
பிகினியானது மெல்ல மெல்ல அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ப் பரவியது.
1964ல் ரூடி கெர்ன்ரீச் என்பவர் மோனோகினியை அறிமுகப்படுத்தினார். மார்புகள் மறைக்காமல் ஸ்ட்ராப்கள் கீழாடையுடன் இணைக்கப்பட்ட ஒன்பீஸ் உடை இவை.
1967ல் இந்தியாவில் முதன்முதலாக ஷர்மிளா தாகூர் An Evening in Paris படத்தில் பிகினியில் நடித்தார், Filmfare இதழின் அட்டைக்கு பிகினியில் போஸ் கொடுத்தார்.
1960களின் இறுதியில் பிரான்ஸின் கடற்கறையான ஃப்ரெஞ்ச் ரிவியெரா ஸ்ட்ரிங் பிகினி என்ற மிகச்சிறிய நீச்சலுடை பரவலாக முக்கியக் காரணமாக இருந்தது. 1970களில் அமேஸான் காடுகளின் பழங்குடியினத்தவர் அணியும் ஆடையை ஒட்டி பிரேஸிலில் ரியோ, செயிண்ட் ட்ரோபெஸ் ஆகியோரால் தாங் பிகினி அறிமுகம் செய்யப்பட்டது. பிருஷ்டத்தை மறைக்காது முழுக்கக் காட்டும் வகையில் இவை
கயிறால் அமைந்தவை. 1980களில் தாங் பிகினிக்கள் அமெரிக்காவில் நுழைந்தது.
1976ல் ஃபாரா ஃபாவ்செட் அணிந்த ஒன்பீஸ் பிகினி பிரபலம். 1983ல் பீச்களிலிருந்து வெளியே வந்து விண்வெளியில் பிகினி நுழந்தது. Star Wars: Episode VI – Return of the Jedi படத்தில் இளவரசி லெயாவாக நடிகை கேரி ஃபிஷர் பிகினியணிந்து நடித்தார். 1989 முதல் 1999 வரை மிகப்பிரபலமான Bay Watch டிவி சீரியல் ஒளிபரப்பானது. பமீலா ஆண்டர்சென் இதன் மூலம் புகழ்பெற்றார். 1997ல் கேப்ரியல் ரீஸ் பிகினி அணிந்து பீச் வாலிபால் விளையாட்டை பிரபலமாக்க விளம்பரங்களில் நடித்தார்.
2006ல் சச்சா பேரான் கோஹென் என்பவர் ஆண்களுக்கான பிகினியான மேன்கினி என்பதை அறிமுகப்படுத்தினார். சுமாராய் விற்றது. 2009ல் கேட்டி பெர்ரி புகழ்பெற்ற பச்சை பிகினியில் தோன்றினார். 2010ல் சேவோபௌலோ பேஷன் நிகழ்வில் ஈவா ஹெர்ஸொகோவா லெதர்பிகினியை முதன்முறையாக வெளியுடையாக அணிந்து வந்தார். 2011ல் நடிகை கைனெத் பால்ட்ரோ தன் இரு குழந்தைகளுடன் சிக்கென்ற உடலுடன் பிகினியில் இருந்த படங்கள் வெளியாகி மத்திம பெண்கள் மத்தியில் பொறாமையைக் கிளப்பியது. 2012ல் கேட் அப்டன் Sports Illustrated அட்டைப்படத்தில் மிக மிக மிகச் சிறிய பிகினியில் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
2006ல் சூஸன் ரோசென் தயாரித்த 150 கேரட் வைரங்கள் பதிக்கப்பட்ட பிகினி உலகின் மிக விலை அதிகமானதாகும் – விலை 20 மில்லியன் பவுண்ட்கள்.
நுமோகினி, ஸீகினி, டேங்கினி, கேமிகினி, தாங்கினி, ஹிகினி, மினிமினி,மைக்ரோ டியர்ட்ராப், ஸ்லிங்ஷாட் எனப் பலவகை பிகினி இன்று புழக்கத்தில் இருக்கின்றன.
மற்ற உடைகளின் கவர்ச்சியானது அவை வெளிக்காட்டும் பகுதிகளில் இருக்கிறது. ஆனால் பிகினியின் கவர்ச்சியோ அது மறைத்திருக்கும் இடங்களில் இருக்கிறது!
*
Stats சவீதா
அமெரிக்கா ஓராண்டில் பிகினிக்கு செலவிடும் தொகை 8 பில்லியன் டாலர்.
அமெரிக்காவில் பெண்கள் பிகினி ஒன்றின் சராசரி விலை 24.26 டாலர்கள்.
ஓர் அமெரிக்கப் பெண் வைத்திருக்கும் சராசரி பிகினிகள் எண்ணிக்கை 4.
25% பேர் தம் பிகினி பற்றி நேர்மையாக விமர்சிப்பதில்லை என்கின்றனர்.
80% பெண்கள் பிகினி உடல்வாகுள்ளவருடன் பீச் செல்ல விரும்புகின்றனர்.
***
3
கற்பழிப்பு
“Rape is the only crime in which the victim becomes the accused.”
Freda Adler, US criminologist and educator
கற்பழிப்பு என்பது ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர் (பொதுவாய் ஆண்கள்) இன்னொருவரின் (பொதுவாய்ப் பெண்) சம்மதமின்றி வன்முறையாய்க் கட்டாயக் கலவியில் ஈடுபடுதல் ஆகும். கற்பழிப்பு என்பது பிற்போக்கான / ஆணாதிக்கச் சொல்லாடல் என்பதால் பாலியல் வல்லுறவு என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.
கிமு 1780ல் பாபிலோனியாவின் ஹம்முராபி சட்டங்களில் கன்னிப் பெண்ணைக் கற்பழிப்பது அவளின் தந்தைக்கு நேரும் சொத்துச் சேதமாகச் சொல்லப்படுகிறது. திருமணமான பெண் கற்பழிக்கப்பட்டால் அவள் நடத்தை கெட்டவள் என சொல்லி ஆற்றில் வீசி எறிந்திருக்கிறார்கள். பின் மோஸைக் சட்டத்தில் ஒரு கன்னிப்பெண் கற்பழிக்கப்பட்டால் அவளது தந்தை அல்லது சகோதரர்களில் எவரேனும் தவறு செய்தவனின் குடும்பப்பெண்களில் ஒருவரை கற்பழித்துக் கொள்ளலாம் என்கிறது.
ஹீப்ரூ சட்டம் ஒரு கன்னிப்பெண் நகரத்துக்குள் கற்பழிக்கப்பட்டால் அவளையும், செய்தவனையும் கல்லால் அடித்துக் கொல்லச் சொல்கிறது. நகர எல்லைக்குள் அவள் கத்தி ஊரைக்கூட்டி அதிலிருந்து தப்பியிருக்கமுடியும் என்பதால் அந்நிகழ்வு அவள் சம்மதத்தின் பேரில் நடைபெற்றிருக்கும் என்ற அடிப்படையில் அவளுக்கும் சேர்த்து தண்டனை தரப்பட்டது. அதுவே நகரத்திற்கு வெளியே கற்பழிக்கப்பட்டால், அவள் கத்தி இருப்பாள், ஆனால் உதவிக்கு ஆள் வரவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டாள். கல்யாணமாகாதவள் எனில் கற்பழித்தவன் அவள் தந்தைக்கு அபராதத்தொகை கொடுத்து திருமணமும் செய்ய வேண்டும்.
பைபிளின் பழையஏற்பாடு உபாகமம் 22ல் “நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.” (28-29) என்று வருகிறது.
கிரேக்கப் புராணத்தில் கடவுள் ஜீயஸ் யூரோப்பா என்ற பெண்ணையும் கேனிமெட் என்ற ஆணையும் கற்பழித்ததாய்க்கதை உண்டு. லாயஸ் என்பவன் க்ரைஸிப்பஸ் என்பவனைக் கற்பழித்ததற்கு அவன் மட்டுமல்லாது அவன் மனைவி, மகன், பேரக் குழந்தைகள் என அனைவரும் அழிக்கப்பட்ட கதையும் உண்டு (இதன் நீட்சியாய்த் தான் ஆண் கற்பழிப்புகளை பொதுவாய் லாயஸ் குற்றம் எனக் குறிப்பிட்டார்கள்).
கிமு 50களில் ரோமானியக் கவிஞர் லுக்ரேஷியஸ் கற்பழிப்பு நாகரிகத்திலிருந்து பின்தங்கிய செயல் என வர்ணிக்கிறார். ரோமானிய சட்டங்களில் raptus என்பது கடத்தலையும், விருப்பத்திற்கெதிராக நடத்து கொள்தலையும் குறித்தது. பாலியல் வன்முறை அதில் பிரதானமில்லை. பின் ரோமானியக் குடியரசு உருவான போது Raptus ad stuprum என்று விருப்பத்திற்கெதிராக பாலியல் வல்லுறவில் ஈடுபடுதல் தனியாய்ப் பிரிக்கப்பட்டது (ரோமானிய முடியாட்சி தூக்கிஎறியப்பட்டு குடியாட்சி வந்ததற்குக் காரணமே அரசனின் மகன் லுக்ரேஷியா என்பவளைக் கற்பழித்து அவள் தற்கொலை செய்து கொண்டதுதான் காரணம்). பின் 3ம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீஸரின் காலத்தில் Lex Julia de vi publica என்ற சட்டம் கற்பழிப்பைப் பையன்கள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றமாகத் தெளிவாகப் பிரித்தது.
3ம் நூற்றாண்டில் ரோமானிய அரசர் டியோக்ளேஷியன் காலத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர்; திருமணத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். ஆனால் கற்பழிக்கப்பட்டவர்களுக்கு எந்ததண்டனையும் இல்லை; திருமணமும் செய்யலாம். ஆனால் கற்பழிப்புச் சட்டங்கள் வர்க்கரீதியில் இருந்தன. அடிமை கற்பழிக்கப்பட்டால் அது எஜமானரின் சொத்து இழப்பென்றனர்.
ரோமானிய ராஜ்யத்தில் கற்பழிப்பு மரண தண்டனைக்குரிய குற்றம். பெற்றோரைக் கொல்வதற்கு, கோயிலைக் கொள்ளையடிப்பதற்கு இணையான பாவம் என்றனர்.
ஹோமர், லெரோடாட்டஸ், லிவி ஆகியோர் படைப்புகள்வழி கிரேக்க ரோமானியப் படைகள் போர்க்காலங்களில் கற்பழிப்புகளில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. தோற்ற நாட்டின் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஹோமோசெக்ஸுக்குப் பயன்படுத்தினர்.
ரோமானிய ராஜ்யத்தில் கிறித்தவம் நுழைந்த பின் கற்பழிப்பு பற்றிய பார்வை மாறியது. புனித அகஸ்டின் லுக்ரேஷியா தற்கொலை செய்து கொண்டது கூட அவள் கற்பழிப்புக்கு உடன்பட்ட குற்ற உணர்ச்சியில் தான் என்றார். முதல் கிறித்தவ ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைன் கற்பழிப்பை தனி மனிதக் குற்றமாக அல்லாமல் பொதுப் பிரச்சனையாக அறிவித்தார். பெண்ணின் சம்மதத்துடன் கற்பழிப்பு நடந்திருந்தால் இருவரையும் உயிருடன் எரித்தனர். அவள் சம்மதம் இல்லாமல் நடந்திருந்திருந்தாலும் அவள் கத்தி உதவி பெற்று தப்பியிருக்க முடியும் என்று சொல்லி தண்டனை தரப்பட்டது. கற்பழித்தவனை அவளுக்குத் திருமணம் செய்விப்பது செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டது.
சில கலாசாரங்களில் கன்னிப்பெண்ணைக் கற்பழிப்பது மட்டுமே குற்றம். மனைவி, விதவை, விபச்சாரி போன்றவர்கள் ஏற்கனவே கன்னித்தன்மை இழந்து விட்டதால் அவர்களுடனான கட்டாய உறவு கொள்வது கற்பழிப்பு எனக் கொள்ளப்படவில்லை.
8ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படையெடுத்த ஸ்காண்டிநேவியர்கள் பிரிட்டன், அயர்லாந்து பெண்களை உடமையாக்கிக் கொண்டனர். இஸ்லாமியச் சட்டப்படி கற்பழிப்பில் பெண்களுக்கு தண்டனை இல்லை; செய்தவனுக்கு மரண தண்டனை.
1290ல் Fleta என்ற பிரிட்டிஷ் சட்ட நூல் பெண்ணின் சம்மதமின்றி அவள் கருவுற முடியாது என்கிறது. 13ம் நூற்றாண்டில் சாக்ஸன் சட்டப்படி கற்பழிக்கப்பட்டபெண் கன்னியா, மனைவியா, விதவையா, விவச்சாரியா என்பதைப்பொறுத்து தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்ட் மன்னர் கற்பழிப்பில் கன்னி, கன்னியல்லாதோர் என்ற பாகுபாட்டை உடைத்தார். 12 வயதுக்குக் கீழ் பெண் சம்மதத்துடன் நடந்தாலும் அது கற்பழிப்புதான் என்றார்.
14ம் நூற்றாண்டில் இரண்டாம் ரிச்சர்ட் மற்றும் ஐந்தாம் ஹென்றி காலங்களில் போரின் போதான கற்பழிப்பு குற்றமாக அறிவிக்கப்பட்டது. நூற்றாண்டுப்போரில் கற்பழித்தவர்களைத் தண்டிக்க இச்சட்டமே உதவியது. நெப்போலியன் எகிப்திய படையெடுப்பில் கற்பழிக்கும் வீரர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் என அறிவித்தார்.
மத்திய கால அரபு அடிமை வியாபாரத்திலும், செங்கிஸ்கான் படையெடுப்புகளின் போதும், அபர்தீனின் உள்நாட்டு யுத்தத்தின் போதும் கற்பழிப்புகள் மிகுந்திருந்தன.
1670ல் கணவன் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது கற்பழிப்பு ஆகாது என சர் மேத்யூ ஹேல் என்ற ஆங்கிலேயே நீதிபதி குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். கறுப்பினப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் வெள்ளை நீதிப் புத்தகங்களின் படி கற்பழிப்பு கிடையாது.
17ம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் பெற்றோர் சம்மதமின்றித் திருமணம் செய்வதே கற்பழிப்பு என சொன்னார்கள். 18, 19ம் நூற்றாண்டுகளில் கற்பழிப்புப் புகார் கூறும் பெண் எப்படி அந்நிகழ்வை நிரூபிப்பது என்பதில் குழப்பம்நிலவியது. கன்னித்திரை கிழித்திருப்பதையும், விந்துக்கறைபடிந்திருப்பதையும் ருசுப்பிக்க வேண்டிஇருந்தது.
1814ல் ஆங்கில மருத்துவர் சாம்யுவல் ஃபார் எழுதிய Elements of Medical Jurisprudence நூல் பெண் காமக்களிப்பில் உச்சத்தை அடையாமல் கருவுற முடியாது என்றது. முழுமையான கற்பழிப்பில் பெண் கர்ப்பமடைய வாய்ப்பில்லை எனக்குறிப்பிட்டார்.
1857ல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக இந்தியாவில் நடந்த முதல் சுதந்திரப் போரில் இந்தியர்களால் பிரிட்டிஷ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக ஆவணங்களைத் தயாரித்தனர். தம் அட்டூழியங்களை நியாயப்படுத்த இதைப் பயன்படுத்தினர்.
19ம் நூற்றாண்டில் டாக்டர் லாசன் டெய்ட் என்பவர் பெண்ணின் சம்மதமின்றி ஆண் அவளைக் கற்பழித்து விட முடியாது என்றார். பெண் தன்னை அசைத்து உதறிக் கொண்டிருந்தால் கற்பழிப்பு சாத்தியமில்லை என்பதைச் சொல்ல ஊசலாடும் ஊசியில் நூல் கோர்க்க இயலாது என்று உவமை சொன்னார்!
1890களில் பெண்ணியவாதிகள் கற்பழிப்பு வழக்குகளில் பெண்ணின் சம்மத வயதை 18 ஆக உயர்த்தக் கோரினர். அதற்குப் போட்டியாக சில சட்ட வல்லுனர்கள் சம்மத வயதை 81 ஆக உயர்த்த வேண்டும் என்று கேலியான கோரிக்கையை விடுத்தனர்.
சீனாவில் பாக்சர் புரட்சியின்போது மேற்கத்திய நாட்டுப்படைகள் சீனப்பெண்களைக் கற்பழித்தனர். பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஜப்பானிய வீரர்கள் மட்டும் உடன் விபச்சாரிகளை அழைத்து வந்ததால் கற்பழிப்பில் ஈடுபடவில்லை.
முதலாம் உலகப்போரில் ஜெர்மானிய வீரர்கள் பெல்ஜியம் நாட்டில் கற்பழிப்பை தினசரிக் கடமையாக வைத்திருந்தனர். இரண்டாம் உலகப்போரில் சுமார் 2 லட்சம் கொரிய, சீன, தைவான், ஃபிலிப்பைன் பெண்கள் ஜப்பான் ராணுவ முகாம்களில் வைத்து கற்பழிக்கக்கட்டனர். இவர்களை Comfort Women என்று அழைத்தனர்.
உலகின் மாபெரும் கற்பழிப்பு என வர்ணிக்கப்படுவது 1944 – 1945 காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போரின் முடிவில் சோவியட் செம்படை ஜெர்மன் பெண்களின் மீது கட்டவிழ்த்து விட்ட பாலியல் வல்லுறவுகள் தாம். 8 வயதிலிருந்து 80 வயது வரையிலான சுமார் 20 லட்சம் பெண்கள் தொடர்ந்து 60 – 70 முறை பல பேரால் கற்பழிக்கப்பட்டனர். இரண்டரை லட்சம் பெண்கள் இதில் இறந்தனர். பெர்லினில் மட்டும் ஒரு லட்சம் பெண்கள் இதனால் கருக்கலைப்பு செய்து கொண்டனர்.
1972ல் தேசிய பெண்கள் நிறுவனம் (NOW) பெண் விடுதலை அமைப்பு D.C. Rape Crisis Center என்ற மீட்பு மையத்தைத் தொடங்கியது. கற்பழிப்பு ஒரு பெண்ணுக்கு எத்தகைய விழைவுகளைத் தரும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றது.
1975ல் கணவன் மனைவியை சம்மதமின்றிப் புணர்ந்தாலும் அது கற்பழிப்பு தான் என அமெரிக்காவின் சௌத் டகோட்டா மாகாணத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
1971ல் பங்களாதேஷ் சுதந்திரப் போர், 1975ல் லைபீரிய உள்நாட்டுப் போர், 1990ல் குவைத்தின் மீதான ஈரான் ஆக்ரமிப்பு, 1980களில் இலங்கையில் இந்திய அமைதிப் படை நடவடிக்கைகள், 1992ல் போஸ்னிய யுத்தம், 1994ல் ருவாண்டா இன அழிப்பு, 1996ல் கொசாவா யுத்தம் – அத்தனையிலும் கற்பழிப்பின்கறை படித்தே இருந்தது.
1980களில் போதை மருந்து கொடுத்து கற்பழிப்பது முதல்முறை பிரச்சனைக்குரிய விஷயமாக முன்னிலைப்படுத்தப்பட்டது. தேசிய அளவில் பாலியல் புகார்களை கவனிக்கும் அமைப்பான RAINN தொடங்கப்பட்டது. கற்பழிப்பு ஆராய்ச்சி, சர்வே செய்வதும் கற்பழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சி செய்தது.
2000ல் ராண்டி தார்ன்ஹில், க்ரெய்க் பால்மர் என்ற இருவர் A Natural History of Rape புத்தகத்தை எழுதினர். சூஸன் ப்ரௌன் மில்லரின் Against Our Will முன்வைக்கும் புகழ்பெற்ற சித்தாந்தமான கற்பழிப்பு பாலியல் நோக்கில் செய்யப்படுவதில்லை என்பதை தர்க்கரீதியாக விமர்சித்தது இது. பாலியல் வேட்கை மற்றும் வன்முறை மனப்பான்மையின் காரணமாகவே கற்பழிப்புகள் நிகழ்கின்றன என வாதிட்டது.
கிழக்கு காங்கோ போர், டார்ஃபர் யுத்தம், இராக் யுத்தம், இலங்கை இறுதிப்போர் ஆகியவை யுத்தத்துடன் கற்பழிப்பு கைகோர்த்த சமீபத்திய கோர உதாரணங்கள்,
2011ல் லிபிய உள்நாட்டு யுத்தத்தைக் கலைக்க சர்வாதிகாரி கடாஃபியின் படைகள் கற்பழிப்பை ஆயுதமாகப் பயன்படுத்தின. அதே ஆண்டு ஹைதியில் ஐநா அமைதிப் படை சிறுவர்களைக் கற்பழித்ததாகப் புகார் எழுந்தது. இருவாரம்முன் டெல்லியில் நண்பனுடன் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவி சிலரால் பேருந்தில் வைத்துக் கற்பழிக்கப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பருத்தி வீரன், புதிய பாதை, ஹே ராம், ஆயிரத்தில் ஒருவன் படங்களில்பாலியல், பணம்,கலவரம், யுத்தம் எனப்பல பின்புலங்களில் கற்பழிப்பு நிகழ்வதைக்காட்டினர்.
கற்பழிப்பு பெண்ணுக்கான சுதந்திரத்தை மறுக்கும் மனிதத்தன்மையற்ற செயல்.
*
Stats சவீதா
6ல் ஒரு பெண் 33ல் ஓர் ஆண் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்
அமெரிக்காவில் கற்பழிக்கப்படுபவர்களில் 44% 18 வயதுக்குட்பட்டவர்கள்.
2 நிமிடங்களுக்கு ஒரு பெண் அமெரிக்காவில் கற்பழிக்கப்படுகிறாள்.
அமெரிக்காவில் 54% கற்பழிப்புகள் போலீஸில் சொல்லப்படுவதில்லை.
3ல் 2 கற்பழிப்புகள் தெரிந்த நண்பர், உறவினர்களால் செய்யப்படுகிறது.
***
4
கலவி
“Sex is a part of nature. I go along with nature.”
Marilyn Monroe, American Actress
கலவி என்பது ஆணும் பெண்ணும் உடலின்பத்தின் பொருட்டு (இயற்கை விதிப் படி மறைமுகமாக இனப் பெருக்கத்தின் பொருட்டு) இணைந்து உறவு கொள்தல். இதைப் புணர்ச்சி, உடலுறவு என்றும் சொல்வர். ஆங்கிலத்தில் Sexual Intercourse. சுருக்கமாக செக்ஸ். நம்மூரில் ‘மேட்டர்’ என்ற மிதமான சொல்லும் உண்டு.
முன்விளையாட்டு, ஆசன புணர்ச்சி, வாய்ப் புணர்ச்சி போன்ற பல விஷயங்கள் இதில் இருந்தாலும் ஆண் குறி பெண் குறியில் நுழைந்து கலக்கும் புணர்ச்சியே பொதுவாய் கலவியில் பிரதானம். போலவே ஒரே பாலினத்தவர்கள் கலப்பதும், சிறுவர்களோடு உறவு கொள்வதும் விலங்குகளுடன் புணர்வதும் கூட கலவி தான் என்றாலும் நாம் பேசவிருப்பது பொதுவான ஆண் பெண் புணர்ச்சி பற்றி மட்டுமே!
கலவியின் வரலாற்றை எழுதுவதென்பது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மானுட குல வரலாற்றை எழுதுவதற்கு ஒப்பானது. அதனால் பதிவு செய்யப்பட்ட கலவியின் கதையை மட்டும் பார்க்கலாம். சீனாவில் 16.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய, இரு பூச்சிகள் கலவி கொண்ட நிலையில் புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது. அது தான் கலவி தொடர்பாய் நம்மிடம் இருக்கும் மிகப் பழமையான சான்று.
ஜெர்மனியில் 7,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆண் பெண் உடலுறவு பற்றிய கல் வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. கலவி பற்றிய பழமையான மனிதப் படைப்பு இது.
இந்தியாவில் ஆதி காலந்தொட்டே கலவி குறித்த விஷயங்கள் பல நூல்களில் பேசப்பட்டு வந்திருக்கிறது. வேதங்களில் திருமணம், கலவி, குழந்தைப்பேறு, சம்மந்தப்பட்ட வழிபாட்டுப் பாடல்கள் காணப்படுகின்றன. இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் ஒரு தம்பதியின் மிக முக்கியமாக கடமை என கலவியில் பரஸ்பரம் சமமாகத் திருப்தி செய்வதையே குறிப்பிடுகிறது.
கிமு 5500ஐச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் கலவி தொடர்பான எந்த சமூகப் பார்வையும் இருந்தற்கான சான்று இல்லை. ஆனால் அவர்கள் குழந்தைப்பேறு சம்மந்தப்பட்ட சில சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.
வாத்ஸாயனரின் காமசூத்ரா ஆண் பெண் கலவியின் வெவ்வேறு முறைகளை நுட்பங்களை இன்பங்களை விளக்கமாய்ச் சித்தரிக்கிரது. இது இந்தியாவிலிருந்து புத்த மத கல்வெட்டுகளின் வழியாக சீனாவுக்குச் சென்றது. சீனாவிலும் இதை ஒட்டி கலவி தொடர்பான நூல்கள் இயற்றப்பட்டன. தொடர்ந்து ரதிரகஸ்யா, பஞ்சசஹ்யா, ரதிமஞ்சரி, அணுகருங்கா, கொக்கோகம், காமசாஸ்திரா என பல காமம் மற்றும் கலவி தொடர்பான நூல்கள் இந்தியாவில் இயற்றப்பட்டன. கஜுராஹோ கோயில்களில் கலவி நிலைகளின் சிற்பங்கள் இடம் பெற்றன.
இந்திய தாந்த்ரீக மரபில் கலவி என்பது ஒரு மனிதனின் புனிதக் கடமையாக சொல்லப்படுகிறது. யோனி தாந்த்ரீகம் முரட்டுத்தனமான கலவியைப் பற்றிப் பேசுகிறது. புத்த மத தாந்த்ரீகம் விந்து வெளியேற்றுவதை ஒரு குற்றமாகச் சொல்கிறது. அதாவது கலவி என்பது உன்னதமான ஞானத்தை அடைவதற்கான மார்க்கம் மட்டுமே ஒழியே, அற்பமான உடல் இன்பத்துக்காக அல்ல என்கிறது.
பின் இந்தியாவில் நுழைந்த இஸ்லாமிய ஆட்சியும், ப்ரிட்டிஷ் ஆட்சியும் நம் நாட்டில் நிலவிய கலவி குறித்த முற்போக்கான பார்வைகளைப் பின்னிழுத்தன. இன்றைய தேதி வரை அதன் பாதிப்பை நாம் கண்டு வருகிறோம். தற்போது இந்த நிலைமை மெல்ல மாறி வருகிறது என்றாலும் இன்னமும் கிராமங்களில், அதுவும் படிப்பறிவில்லா மக்களிடையே கலவி குறித்த திறந்த பார்வை இல்லை. இந்த உலகத்திகே காமம் உரைத்தவர்கள் இன்று கட்டுப்பெட்டிகளாய் இருக்கிறோம்.
பண்டைய சீனாவில் I Ching என்ற புத்தகத்தில் இந்த உலகத்தை விளக்கவே கலவியைத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதாவது சொர்க்கம் பூமியுடன் கலவி செய்வதாக அந்நூல் குறிப்பிடுகிறது. இது போக Zhuang Zi, Yingying Zhuan, Fu Sheng Liu Ji , Jin Ping Mei, Hong Lou Meng எனப் பல புத்தகங்களிலும் கலவி பற்றிய குறிப்புகள் உண்டு. Rou Bu Tuan என்ற நாவல் சிறப்பான கலவிக்கு இன்ன பிற மிருகங்களின் உறுப்புகளை மாற்றி அறுவை செய்வதைப் பற்றிப் பேசுகிறது. தாவோயிஸமும் கலவி பற்றிய விஷயங்களை முன்வைக்கிறது. அவர்களின் உடலுறவு வித்தைகளுக்கு மூன்று நோக்கம்: ஆரோக்கியம், ஆயுள், ஆன்மீகம்.
உலகின் முதல் நாவலான Genji Monogatari ஜப்பானில் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அது கெஞ்சி என்ற இளவரசனின் காம வாழ்வை சித்தரிக்கிறது. இசை போல், இன்ன பிற கலைகள் போல் கலவியும் ஒரு கலாச்சாரப்பூவமான வாழ்க்கை முறைக்கு மிக அத்தியாவசியமானது என அந்நூல் சொல்கிறது. மெய்ஜி மறுசீரமைப்புக் காலகட்டம் வரை கலவி என்பதைத் தவறான ஒரு விஷயமாக ஜப்பானிய கலாசாரர்த்தில் பாத்ததற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை.
பண்டைய கிரேக்கத்தில் பெண்கள் வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவியாகவே பார்க்கப்பட்டனர். Eromenoi, Hetaeras மற்றும் அடிமைப் பெண்கள் என தம் சொந்த வீட்டுக்குள்ளேயே அவர்கள் விபச்சாரிகளுடன் போட்டி போட வேண்டி இருந்தது. பெண்கள் ஆண்களின் குறிகளைக் கண்டு பொறாமை கொள்வர் என நம்பினர்.
பண்டைய ரோமானிய சாம்ராஜ்யத்தில் உடல் இச்சையை அடக்கி கட்டுப்பாடாய் இருப்பதையே ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒழுக்கம் என வகுத்திருந்தனர். ஆனால் பல வெளிப்படையான கலவிக் கலைகளும் இலக்கியங்களும் கூட உருவானது அங்கே தான். பொம்பெய், ஹெர்குலேனியம் ஆகிய இடங்களில் பல கலவி முறைகளையும் சம்பவங்களையும் செதுக்கி வைத்திருந்தார்கள். ஓவிட் என்ற கவிஞரின் The Art of Love என்ற நூல் ஆணும் பெண்ணும் எப்படி காதல் கொண்டு இன்புறுவது என விளக்குகிறது. லூக்ரெடியஸ், செனெகா ஆகியோர் கிரேக்க மரபை ஒட்டி கலவி குறித்த விரிவான சித்தாந்தங்களை உருவாக்கினர்.
சிசேரோ என்ற ரோமானிய அறிஞர் கலவிக்கான இச்சையே குடியரசுக்கான விதை என்றார். அதாவது கலவி ஆசையே திருமணம் செய்யத் தூண்டும், குடும்பத்தை உருவாக்கும், சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தும், குடியரசுக்கு அடித்தளமாகும்.
ஃப்ரெஞ்ச் பாலினேஷியா தீவுகளில் கலவி விஷயத்தில் பொதுவாய் மேற்கத்திய கலாசாரத்தில் தவறாகப் பார்க்கப்பட்ட பல விஷயங்கள் இயல்பாகப் புழங்கின. உதாரணமாய் தாய் தந்தையுடன் ஒரே அறையில் இருக்க நேர்ந்த குழந்தைகள் அவர்களின் கலவியைக் கண்ணுற்றன. அப்படிப் பார்த்த சிறுவர்களை பாலியல் தூண்டுதல்களுக்குப் பயன்படுத்தினார்கள். வயது வந்தவுடன் நிஜக் கலவிக்கும்.
அந்தத் தீவு பற்றி சார்லஸ் பியரி மற்றும் எட்டினி மர்ச்சண்ட் என்ற மாலுமிகள் எழுதிய நூல் ஒன்றில் 8 வயதுச் சிறுமி தகாத கலவி நடவடிக்கைகளில் அதுவும் பொது இடத்தில் தயக்கமின்றி ஈடுபட்டிருந்ததைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆதம் ஜோஹன் என்பவர் தன் நூலில் ஒரு தந்தை தன் 10 வயது மகளை பல கப்பல் மாலுமிகளுடன் கலவி செய்ய வைத்ததைக் கண்டதைக் குறிப்பிடுகிறார்.
யூத மதம் திருமண பந்ததுக்குள் நடக்கும் கலவியை மட்டும் பாவமில்லை என சலுகை வழங்கியது. ஆனால் விந்து உள்ளிட்ட காமக் கழிவுகள் உடலுக்கு வெளியே சிந்துவதை அபச்சாரமாகக் கருதி சுத்தப்படுத்துவதை வலியுறுத்தியது.
பண்டைய கிறிஸ்துவம் கலவியை பிள்ளைப்பேறுக்கான வழிமுறை என்பதாக மட்டுமே பார்த்தது. பெண் மாதவிலக்காக இருக்கும் போது அவளுடன் கலவி செய்தல் கூடாது என்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் லேவியராகமத்தில் 18ம் அதிகாரத்தில் 19ம் வசனத்தில் “ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்தில் இருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.” என வருகிறது.
புனித அகஸ்டின் ஆதாம் தடைசெய்யப்பட்ட கனியை உண்ணும் முன் கலவி என்பதில் காமம் கலந்திருக்கவில்லை, அது இனப்பெருக்கத்துக்கான வழியாக மட்டுமே இருந்தது என்கிறார். பிற்காலக் கிறிஸ்துவமும் இந்தக் கருத்தை வழிமொழிகிறது. உடலுறவில் காமம் கலந்திருப்பதைப் பாவச்செயல் என்கிறது.
இது பிற்பாடு திருமணத்துக்கு வெளியே கொள்ளும் காமத்தை மட்டும் பாவம் என்பதாய் மாறியது. கிறிஸ்துவம் திருமணம் என்பதற்கான நோக்கம் என மூன்று விஷயங்களை வரையறுக்கிறது. பரஸ்பர ஊக்கம், ஆதரவு, சந்தோஷம், குழந்தை பெறுதல், வேறு ஆளுடன் தவறான உறவு எனும் பாவத்தைத் தடுத்தல் என்கிறது.
இஸ்லாமும் திருமணத்துக்கு வெளியே கலவியை பாவம் என வரையறுக்கிறது. புனித குர்ஆன் இதை ஸினா என்று அழைக்கிறது. இதற்கு தண்டனையும் உண்டு.
மத்திய காலத்தில் சர்ச்கள் குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே கலவி செய்யலாம் என்றன. ஆல்பர்டஸ் மேக்னஸ் ஐந்து நிலைகளே ஏற்றுக்கொள்ளப்பட்டவை என வரிசைப்படுத்துகிறார். 1. ஆண் மேலே, பெண் கீழே 2. பக்கவாட்டில் படுத்தல் 3. நின்று கொள்தல் 4. அமர்ந்து செய்தல் 5. பின்புறத்திலிருந்து செய்தல். மற்ற நிலைகளில் உறவு கொள்வது பாவம். ஆனால் உடல் பருமன் போன்ற பிரச்சனை கொண்டவர்களுக்கு வசதியான பிற கலவி நிலைகளும் அனுமதிக்கப்பட்டன.
இதே காலகட்டத்தில் காமத்தை ஒட்டிய சில ஃபேஷன் சமாச்சாரங்கள் உயர்குடி ஆண்கள் மத்தியில் பரவலாய்க் காணப்பட்டன. காட்பீஸ் என்பது பஞ்சு அல்லது மரத்தூளால் நிரப்பட்ட ஒரு பொருள். அதைப் பேண்ட்டில் ஆண் குறிக்கருகே பொருத்திக் கொள்வர். அது உறுப்பைப் பெரிதாக்கிக் காட்டும். இது ஆண்மையின் அடையாளமாகக் கருதப்பட்டது. அதே போல் பௌலைன் என்ற கூரான முனை கொண்ட நீளமான ஷூக்களையும் அணிந்தனர். அதுவும் குறியின் நீளத்தையும் வீரியத்தையும் குறித்தது. இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றியின் ஓவியம் ஒன்றில் அவர் இது இரண்டையுமே அணிந்துள்ளார். வழக்கம் போல் அக்கால சர்ச்கள் இது போன்ற ஃபேஷன் விஷயங்களையும் பாவம் என்றே சொல்லின.
1800களில் தொழிற்புரட்சி ஐரோப்பாவில் நடந்த போது வேலையிடங்களில் ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழக நேர்ந்தது. இந்தக் காலத்தில் தான் திருமணத்திற்கு வெளியே உறவுகள் பெருகின. இது கலவியை அதிகரித்தது. இந்த விஷயத்தில் சுதந்திரமயமாக்கல் நுழைந்ததால் முதல் கலவிப் புரட்சி எனலாம்.
இதன் தொடர்ச்சியாக 19ம் நூற்றாண்டில் பெண்கள் பிற ஆடவருடன் கலக்காமல் கற்புடனிருக்க வைப்பதற்காக இரும்பால் ஆன பெல்ட்களை இடுப்பில் பேண்டீஸ் போல் அணிவித்தனர். இந்தக் கருவியை கற்பு பெல்ட்கள் என அழைத்தனர்.
1960களிலும் 1970களிலும் கலவியில் இரண்டாவதாய் ஒரு புரட்சி ஏற்பட்டது. நவீனக் கருத்தடை மாத்திரைகளும், பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகளும் புழக்கத்துக்கு வந்த காலகட்டம் அது. இரண்டு விஷயங்களும் சட்டப்பூர்வமாக பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டன. அதனால் ஆண்களும் பெண்களும் கர்ப்பமுறுதல் குறித்த கவலை இன்றி சுதந்திரமாக கலவியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
மடோன்னா 1992ல் Sex என்ற காஃபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார். கலவி பல்வேறு புகைப்படங்களும் கொண்ட ஆல்பம் அது பலத்த சர்ச்சைக்குள்ளானது.
இன்று உலகம் முழுக்க காமமும் கலவியும் சந்தைப்பொருள் ஆகி விட்டது. உலகமயமாக்கலின் முக்கிய விளைவுகளில் ஒன்று இது. நாம் விரும்பா விட்டாலும் அது நம்மை நேரடியாகவோ மறைமுகமாகவோ வந்தடையும்.
கலவி என்பது மனித இனத்தின் பேரின்பம். அதை திருமணம் எனும் பந்தத்துக்குள் விதவிதமாய் அனுபவித்துக் கொள்வதே ஒழுக்கமானது. பாதுகாப்பானதும் கூட.
*
Stats சவீதா
56 % பேர் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்கின்றனர்.
5ல் 3 பேர் கலவியை மேம்படுத்த இணைய உதவியை நாடுகின்றனர்.
62% இந்தியர்கள் தம் கன்னித்தன்மையை காதலரிடம் இழந்துள்ளனர்.
26% இந்தியர்கள் செக்ஸ் ஒரே மாதிரியாக போர் அடிக்கிறது என்கிறனர்.
64% பெண்களே சமீபத்திய கலவியில் உச்சம் கண்டதாகச் சொல்கின்றனர்.
***
5
வெட்கம் விட்டுப் பேசலாம்
அடுத்த 22 அத்தியாயங்கள் கொண்ட
வெட்கம் விட்டுப் பேசலாம்
நூலை ஆன்லைனில் வாங்க: wecanshopping.com
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் | விலை: ரூ.145 | பக்கம்: 192 | செல்பேசி: 72000 50073
கருத்துகள்
கருத்துரையிடுக