Kāñcip purāṇam IX


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் IX
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப முனிவர் அருளிய
காஞ்சிப் புராணம் - இரண்டாவது காண்டம்
6. பன்னிரு நாமப்படலம் (செய்யுள் 1226-1680)



திருவாவடுதுறைக் கச்சியப்ப முனிவர்
அருளிய காஞ்சிப்புராணம் - இரண்டாவது காண்டம்
6. பன்னிரு நாமப்படலம்
திரு. சிங்கை முத்துக்குமாரசாமி அவர்கள் உரையுடன்

    திருச்சிற்றம்பலம்
    Source:
    காஞ்சிப்புராணம்
    திருக்கைலாயபரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்துமஹாசந்நிதானம்
    ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி
    சித்தாந்த சரபம்- அஷ்டாவதானம் பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்கள் மாணவரும்
    மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரும்,மெய்கண்டசித்தாந்த ஞானசாத்திரப் பிரசாரக்ருமாகிய
    வண்ணக்களஞ்சியம் சி.நாகலிங்க முதலியாரவர்களால்,
    பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து
    பெரியமெட்டு- வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் குமாரர் ஆதிமூலஞ்செட்டியாரால்
    சென்னை: கலாரத்நாகரவச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
    சாதரண வரூ- வைகாசி- 1910
    ----
    காஞ்சிப்புராணம் - உள்ளடக்கம்
      படலம் செய்யுள்
      1. பாயிரம் --- 4
      2. திருக்கண்புதைத்தபடலம் 281
      3. கழுவாய்ப்படலம் 423
      4 அந்தருவேதிப்படலம் 80
      5. நகரேற்றுப்படலம் 279
      6. தீர்த்தவிசேடப்படலம் 158
      7. பன்னிருநாமப்படலம் 455
      8. இருபத்தெண்டளிப்படலம் 433
      ஆகமொத்தம் திருவிருத்தங்கள் 2110
      ----------

    கச்சியப்ப முனிவர் அருளிய
    காஞ்சிப் புராணம் - இரண்டாவது காண்டம்
    6.பன்னிரு நாமப்படலம்

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    அணிகெழு மலையுண் மேலா மவிரொளி மேரு வென்ன
    மணியொளிர் சூட்ட ராவுள் வாசுகிப் பாந்த ளென்னத்
    துணிபுன னதியுட் பாவந் துரக்கும் வான்கங்கை யென்னத்
    தணிவறு சுவையுள் வானிற் றலைப்படு மமிழ்த மென்ன.        1
    [அழகிய மலைகளுள் மேலான ஒளிவீசும் மேருமலை யென்னவும், மாணிக்கத்தையுடைய பாம்புகளுள் வாசுகிப் பாம்பென்னவும், தெளிந்த புனலையுடைய நதிகளில் பாவத்தை விரட்டும் தேவ கங்கை யென்னவும், சுவையுடைப் பொருள்களில் தேவலோகத்திற் கிட்டும் அமிழ்தம் என்னவும்]

    இருளறும் ஒளிகள் தம்முள் இலங்கு செம்பரிதி யென்ன
    மருமலர்க் கூந்த லாருண் மால்வரைப் பிராட்டி யென்ன
    அருள்சிவ னடியார் தம்முள் அச்சுதக் கடவு ளென்னப்
    பெருகிய மனிதர் தம்முட் பிறங்கிய மறையோ ரென்ன . 2
    [இருளை அகற்றும் ஒளிகள் தம்முள் செஞ்சூரியன் என்னவும், மணமிக்க கூந்தலையுடைய பெண்டிருள் மலையரையன் மகளாகிய பார்வதி எனவும், அருளுடைய சிவனடியார் தம்முள் அச்சுதப் பெயரினராகிய திருமால் எனவும், மக்கட் பிறப்பினருள் விளங்கும் மறையோர் என்னவும்]

    விடலருந் தவங்கள் தம்முள் விழையும்ஆ யாம மென்ன
    அடர்புகழ் அறங்கள் தம்முள் ஆருயிர் செகாமை யென்ன
    நடலைதீர் கல்வி தம்முள் ஞான நூற்கல்வி யென்னச்
    சுடரழல் வேள்வி தம்முட் சூழ்பரி மேத மென்ன        3
    [விடுதல் முடியாத தவங்கள் தம்முள் ஆயாமம் ( பிராணாயாமம்- மூச்சடக்குதல்) என்னவும், நெருங்கிய புகழுடைய அறங்கள் தம்முள் கொல்லாமை யெனவும், பாவந்தீர் கல்விகள் தம்முள் ஞானநூற்கல்வி யென்னவும், தீயோம்பிச் செய்யும் வேள்விகள் தம்முள் அசுவமேதம் என்னவும்]

    பொருந்துற வேட்ட வற்றுட் போக்கரும் வெறுக்கை யென்ன
    அரந்தைதீர் தானந் தம்மு ளபய நற்றான மென்னத்
    திருந்து மந்திரத் துட்காயத் திரியெனு மனுவே யென்ன
    வரந்தரு நோன்பு தம்முள் வளர்சிவ நிசியே யென்ன 4

    [அடைய விரும்பியவற்றுள் குற்றமற்ற செல்வம் என்னவும், துயரந் தீர்க்கும் தானங்கள் தம்முள் அபயம் அளித்தலாகிய நல்ல தானமே யெனவும், திருந்திய மந்திரங்களுள் காயத்திரி மந்திரமே யென்னவும், வரமளிக்கும் விரதங்களில் சிவராத்திரியே யென்னவும்]

    மன்னிய மதிகள் தம்முள் மார்கழித் திங்க ளென்ன
    நன்னர்நெஞ் சுவப்ப நல்குந் தானமேற் பவருள் நான்ற
    பொன்னவிர் சடையார்க் கன்பு பூண்டசீ ரடியா ரென்ன               5
    துன்னிய மிருகந் தம்முட் டூயவான் றேனு வென்ன
    [அடைந்த மிருகங்களுள் தூயதாகிய தேவலோகத்துக் காமதேனுவே யென்னவும், நிலைத்த மாதங்களில் மார்கழித் திங்கள் எனவும், தூய நெஞ்சுவந்து அளிக்கும் தானங்களை ஏற்பவருள், தொங்கும் பொற்சடையனாகிய சிவனுக்கு அன்புபூண்ட பெருமையுடைய அடியாரென்னவும்]

    திரைகடல் வரைப்பின் முக்கட் செல்வனா ரினிது வைகும்
    புரைதபு நகர்கட் கெல்லா மேம்படு பொற்பிற் றாமாற்
    றரைமிசைப் பொதும்ப ரூற்றுந் தண்ணறாத் தெருக்க டோறும்
    விரைசெல னதிக ளென்ன விராய்த்தவழ் காஞ்சி மூதூர்                6
    [அலைகடலால் சூழப்பட்ட நிலவுலகில் முக்கணுடைய சிவபிரான் மகிழ்ந்து தங்கும் குற்றம் அற்ற நகர்களுக்கெல்லாம் மேம்படும் பொலிவுடையதாகும்;, தரைமேல் சோலைகள், ஊற்றுக்கள் நிறைந்து குளிர்ந்த விரைந்து ஓடும் நதிகளென்ன தெருக்கள் விரவியுள்ள காஞ்சி மூதூர்..
    சாலைகள் நீண்டு அகலமாய்க் குளிர்ச்சிதரும் சோலைகளும் நீர்நிலைகளும் அமைந்து இருப்பதால் நதிகள் உவமையாயின]

    காயெரி மழுமா னேந்துங் கடவுளர்க் கரங்க மாகி
    மாயிரு ஞாலம் போற்ற வயங்குமக் கச்சி மூதூர்க்
    காயிர நாம மெய்து மூழிதோ றவற்றுண் மேலாம்
    பாயசீர் நிலைபெற் றோங்கும் பன்னிரு பெயர்கண் மாதோ.        7
    [மழுவையும் மானையும் ஏந்தும் கடவுளாகிய பரமசிவனாருக்கு ஐந்தொழிற் கூத்தியற்றும் அரங்கமாகி, பேருலகம் போற்ற விளங்கும் அக்கச்சி மூதூருக்கு ஊழிகள்தோறும் வழங்கிய ஆயிரம் பெயர்களுண்டு. அவற்றுள், பன்னிரு திரு நாமங்கள் பெருமையுடையன.]

    எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    உருக்காஞ்சி முப்புவன சாரங் காம பீடமுயர் தபோமயமும் மூர்த்தி வாசம்
    இருக்காலுந் துண்டீர புரம்வாழ் வெய்து மிலயசித்துப் பிரமபுர மிருண்ட நெஞ்சிற்
    றிருக்கீரும் விண்டுபுர மருளா னந்த சிவபுரமே சகலசித்தி கரமே யுள்ளப்
    பருக்காழைத் தபுங்கன்னி காப்பென் றோதப் பட்டனபன் னிருதிருப்பேராகு மாலோ        8
    [1.காஞ்சி.2. முப்புவன சாரம்.3. காமபீடம். 4. தபோமயம்.        5. மும்மூர்த்தி வாசம்.        6. துண்டீரபுரம்.        7.இலயசித்து.        8. பிரமபுரம்.        9. விண்டுபுரம். 10. சிவபுரம். 11.சித்திகரம். 12. கன்னிகாப்பு என்னும் பன்னிரு நாமமும் அந்நகரின் பெயர்களாகும்]

    முழங்குமறை யாகமநூல் வடிவ மாகி மூலமுதன் முழுவதுஞ்செங் கனக மாகிச்
    செழுங்கனிபூத் தளிர்கள்நவ மணிக ளாகிச் சேர்ந்தவர்க்கு நாற்பயனு மளிப்ப தாகி
    வழங்கிரவி மண்டலத்தின் காறுமோங்க வளர்ந்து நிழல்பிரியாத வண்மைத் தாய
    தழங்குபுகழ்த் திருக்காஞ்சி நிலைபே றெய்துந் தன்மையினாற் காஞ்சி யெனும்பெயரிற் றாமால்.        9
    [வேதம் ஆகம நூல் வடிவமாகி வேர் முதல் முழுவதும் பொன்னாகி, செழுமையான கனி,மற்றும் பூந்தளிர்கள் அனைத்தும் நவமணிகளாகித் தன்னைச் சார்ந்தவர்களுக்கு அறம் முதலாகிய நால் வகைப் பயன்களையும் அளிப்பதாகி , சூரிய மண்டலத்தின் வரை ஓங்க வளர்ந்து நிழல் (-ஒளி) என்றும் பிரியாத வலிமையுடைய திருக்காஞ்சி மரம் நிலைபேறெய்தும் சிறப்பினால், இந்நகரம் காஞ்சி எனும் பெயருடையது ஆயிற்று]
    கலிவிருத்தம்
    பண்ண றாதமெல் லிசைப யிற்றுறும்
    வண்ண வண்டினம் வந்து முற்றுறத்
    தண்ண றாவுகுந் தமனி யச்செழுங்
    கண்ண கன்றபூங் கமல வாழ்க்கையான்        10
    [ பண்ணை நீங்காத மெல்லிசையைப் பயிற்றுறும் அழகிய வண்டுக் கூட்டம் வந்து சூழ குளிர்ந்த தேனைச் சொட்டும் பொன்னிற செழுமையான அகன்ற தாமரைப் பூவில் வாழ்க்கையை உடையவன். (பிரமன்)

    ஆதி நாளையி லகில லோகமும்
    ஏத மில்படைப் பெய்த வார்குழன்
    மாதொர் பாகனார் வனச மென்கழற்
    போது நெஞ்சிரீஇப் போத நோற்றனன்         11
    [பண்டொரு நாளில் அகிலலோகத்தையும் குற்றமற படைக்கும் ஆற்றலைப் பெற மாதொருபாகனாராகிய சிவனின் திருவடித் தாமரையை மனத்திலிருத்தி மிகவும் தவம் செய்தனன்.]

    அலகில் காலமற் றருந்த வஞ்செய
    நிலவும் வானதி நீரு நாகமு
    மிலகு செஞ்சடை யிறைவ னார்தவங்
    குலவு வேதன்முன் குறுகி யோதுவார்.         12
    [அளவில் காலம் அருந்தவம் செய்யவே, கங்கையும் நாகமும் விளங்கும் செஞ்சடை இறைவனார், தவம் செய்யும் வேதன் முன் அடைந்து கூறுவார்.]

    பாட்ட ளிக்குலம் பயின்று சுற்றுமென்
    தோட்ட லர்த்தலைத் தோன்றும் அந்தணன்
    வேட்ட தோர்ந்தனம் மேத கும்படைப்
    பீட்ட மிங்குனக் கெய்து றாதுகாண்         13
    [பாட்டிசைக்கும் வண்டுக் கூட்டம் பயிலும் தோடுகள் விரிந்த மலர்மேல் இருக்கும் அந்தணனே! நீ விரும்பியதை அறிந்தோம். பெருமையுடைய படைப்புத் தொழில் இங்கு உனக்கு எய்துறாது. அறிவாயாக.]

    மற்றை வைப்பினில் வருந்திப் பல்பகற்
    பெற்றி டும்பல தருமப் பேறெலாஞ்
    சற்றி ருந்தொரு தருமம் ஆற்றுறின்
    முற்றும் அந்தரு வேதி முன்னியே.         14.
    [பிறதலங்களில் தங்கிப் பலகால் வருந்திப் பலநாள்கள் தவம் செய்து பெற்றிடும் பேறுகளையெல்லாம் அந்தருவேதியில் சிறிது காலந் தங்கி ஒருதருமம் செய்தால் முழுதும் முற்றுறும்.]

    அன்ன சூழலின் அன்பர் போற்றிட
    மன்னு நந்தமை வழாது பூசைசெய்
    தின்ன றீர்படைப் பெய்து கென்றொர்
    கன்னி பாகனர் கரந்து போதலும்                15
    [அத்தகைய பெருமை உடைய இடத்தில், அன்பர்கள் போற்றிட நிலைபெற்றிடும் நம்மை வழுவாது பூசை செய்து இன்னல் அற்ற படைக்கும் ஆற்றலை நீஎய்துக என்றார் மாதொருபாகர். இவ்வாறு உரைத்து மறையவே.]

    வள்ள லாரருள் வழங்கப் பெற்றனம்
    எள்ள ரும்படைப் பின்று முற்றினம்
    நள்ளு முத்தியு நண்ணி னாமென
    வுள்ள மீக்கொளு முவகை யாழியான்.         16
    [வள்ளலாராகிய சிவனால் அருளப் பெற்றோம். இகழ்தலிலாத படைப்பாற்றலைஇன்று கிடைக்கப் பெற்றோம். விரும்பத் தக்க முத்தியும் அடைந்தோம் என உள்ளத்தில் உவகைக் கடலில் திளைத்தான்.]

    வெருவி வாளைகள் மேக்கெ ழுந்துவிண்
    உருவ வெண்டிரை யுந்தி தோய்தரு
    பெருகு நீர்த்தடம் பிறங்கு மாங்கணைந்
    தருள்வ ழிச்சிவ பூசை யாற்றியே.         17
    [வாளைமீன்கள் அஞ்சி மேலெழுந்து விண் உருவ, வெண்மையான அலைகள் உந்தித் தோய்தரும் நீர்த்தடங்கள் விளங்கும் அங்கு அணைந்து சிவன் அருளிய ஆகமவழிச் சிவபூசை யாற்றினான்.]

    கருணை கூர்தருங் கம்ப நாயகர்
    அருள்கி டைத்துல கனைத்து மாக்கிடும்
    பெருவ லித்திறம் பெற்று நீங்கினான்
    மரும லர்த்தலை வாழ்க்கை யாளனே.        18.
    [கருணை மிக வுடைய ஏகம்பநாயகர் அருளினைப் பெற்று உலகனைத்தும் படைக்கும் பேராற்றல் பெற்று நீங்கினான், தாமரை மலரில் வாழ்க்கையுடைய பிரமதேவன்.]

    ஆசில் கவ்வெனும் அயனஞ் சித்திடு
    மாசில் சீர்மை யினானு மாநகர்
    காசி லாப்புகழ்க் காஞ்சி யாயதாற்
    பேசு காரணம் பிறவு முள்ளவே.        19.
    [ஆசு- அற்பம். ஆசில்- அறபம் இல்லாத, பெருந்தன்மையுடைய. க- அயனின் ஒரு பெயர். அஞ்சித்திடும் – பயபத்தியுடன் வணங்கும். மாசில் சீர்மை – குற்றமில்லாத பெருமை. காசு- குற்றம். ‘க’ எனும் பிரமன் அஞ்சித்திடுதலினால் காஞ்சி. பிற் காரணங்களும் உள]

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    கற்ப முடிவின் முச்சகத்தின் சார முழுதுங் கசிந்துருகி
    அற்பு முதிர்விற் றொழுதெழுவார்க் கருளானந்தப் பெருவாழ்வு
    பொற்ப வுதவும் பெருமாட்டி பொலம்பூட் காமக் கண்ணிமகிழ்
    சிற்பந் திகழ்பீ டத்தினெதிர் வித்தா யடங்கிச் செறிந்ததுவே.         20
    [கற்ப காலத்தின் முடிவில் மூவுலகங்களின் சாரம் முழுதும்,- கசிந்து உருகி அன்புமுதிர்வுற்றுத் தொழுது எழுவாருக்கு ஆனந்தப் பெருவாழ்வு பொலிய உதவும் பெருமாட்டி காமாட்சி மகிழ்ந்திருக்கும் பீடத்தினெதிர் வித்தாக அடங்கிச் செறிந்திருந்தது.]

    மற்றைக் கற்பத் ததினின்றுஞ் சிறிது வாங்கி வண்டினங்கண்
    முற்ற மதுநுண் துளிதுவற்றி முருகு நாறி யிதழ்துறுமிப்
    பொற்ற மலர்ப்பூஞ் சேக்கையினான் புவனம் படைத்த காரணத்தால்
    அற்றம் அறுஞ்சீர் முப்புவன சார மெனும்பே ரணிந்ததுவே.         21
    [மற்றொரு கற்பத்தில் அவ்வித்தினின்றும் ஒருசிறிது வாங்கி தாமரைப் பூஞ் சேக்கையினனான பிரமன் புவனம் படைத்த காரணத்தால் முடிவில்லாத பெருமையுடைய ‘முப்புவன சாரம்’ என்னும் பெயரை அடைந்தது. அற்றம்- முடிவு, அழிவு. சீர்- புகழ்]

    கொச்சகக் கலிப்பா
    முன்னையோர் கற்பத்தின் முழங்கு மறைநூற் கேள்வி
    துன்னிய நற்குலந் தழைப்பத் தோன்றினான் செழுங்கலையிற்
    தன்னிகர்வே றில்லாதான் றவத்தினுக்கோர் அரணானான்
    மன்னியசீர் மாவிரத னெனும்பெயரா னொருமறையோன்.         22
    [முன்பு ஒரு கற்பகாலத்தில், மறை நூற் கேள்வி நிறைந்த நற்குலம் தழைப்பத் தோன்றினான். மறைநூற்கல்வியில் தன்னிகர் இல்லாதவன்; தவத்திற்கு அரணாக அமைந்தவன்; மாவிரதன் என்னும் பெயருடைய மறையோன் ஒருவன்.]

    முறுகுபெரும் பசிக்கனலை மூட்டிமுறை பிறழ்விக்கும்
    வறுமையெனுங் கொடுங்கொலைய வன்மீனாற் கோட்பட்டான்
    அறுதியிலாத் துயர்க்கடலி னழுந்தினான் செல்வமெனும்
    உறுகரைசேர் புணைகாண்பா னுன்னியுளந் துணிந்தெழுந்தான்         23
    [முறுகியெழும் பசி எனும் நெருப்பை மூட்டி நன்னெறியிலிருந்து பிறழ்விக்கும் வறுமையென்னும் கொடிய கொலையைச் செய்யும் சுறாவினால் பீடிக்கப்பட்டான். எல்லையில்லாத் துயர்க்கடலில் அழுந்தியவன், கரை சேர்க்கும் செல்வமெனும் புணையை அடைவதற்கு நினைந்து துணிந்தெழுந்தான். வன்மீன் சுறா]

    மங்குன்மதி தவழ்ந்தேறு மணிமாட வரங்குதொறும்
    பங்கயக்கண் மடமாதர் பயின்றாடுஞ் சிலம்போதை
    பொங்குமுகி லினமுழங்கும் பொருவிலொலி தனக்கெதிருங்
    கங்கைநதி புறஞ்சூழ்ந்த காசிநகர் சென்றணைந்தான்.         24
    [ அவன், மேகம் தவழ்ந்தேறும் மணிமாட அரங்குகள்தோறும் தாமரைக் கண் மங்கையர் நடமாடும் சிலம்போசை, முகிலினொலிக்கு மாறு ஒலிக்கும், கங்கைநதி புறஞ்சூழ்ந்த காசிநகரை அடைந்தான்.]

    முருகுவிரி மலர்க்குவையு மொய்யொளிய மணிக்குவையும்
    பெருகியவெள் வளைத்திரளும் பிறங்கியவோ திமத்திரளும்
    திருமலிபல் சனக்குழுவுஞ் செறிவொழியாக் கங்கைநதி
    யுருகெழுநீர் படிந்தாடி யோங்குமிருந் தவம்புரிந்தான்         25
    [மணம்விரியும் மலர்த்திரளும் ஒளிவீசும் மணித்திரளும், பெருகிய வெண்சங்கின் திரளும் விளங்கும் அன்னக் கூட்டமும் பலதேசத்தவராகிய மக்கட் கூட்டமும் திரண்டிருத்தல் நீங்காத கங்கைநதியின் தெளிந்த நீரில் படிந்து ஆடி அங்கிருந்து நெடுந்தவம் புரிந்தான்.]

    பட்டினிவிட் டுடல்வாடிப் பலநாளுந் தவமுயல
    மட்டவிழு மிதழிநறு மலர்மாலைத் திரள்வளைத்துக்
    கட்டுசடைப் பெருமானார் வீற்றிருக்குங் காசிநகர்
    அட்டொளிமெல் லிதழ்த்துவர்வாய் அணங்கெதிர்நின் றருள்செய்யும்.         26
    [உணவு கொள்ளாமல் பட்டினியிருந்து பலநாளும் தவம் செய்யச் சிவபெருமானார் வீற்றிருக்கும் காசிநகர்த் தெய்வம் அவன் முன் தோன்றிச் செப்பும். மட்டு – தேன். இதழி- கொன்றை. அணங்கு- காசிநகர்க் காவல் பெண் தெய்வம். அட்டு ஒளி- தாக்கும் ஒளி.]

    என்பெழுந்த யாக்கையினோ டீங்கிருந்து தவமுஞற்றும்
    அன்புடையாய் விழைந்ததெவன் அறைதியால் எனலோடும்
    பொன்பிறங்கு சுணங்கலர்ந்த பூண்முலைச் சிற்றிடை யன்னாய்
    இன்பமுறு நாற்பயனு மெனக்கருளா யென்றிரந்தான்         27
    [எலும்புகள் மேலெழுந்து தோன்றும் வாடிய உடலுடன் இங்குத் தவம் முயலும் அன்பனே! நீ விழைந்தது யாது? எனக் கேட்டலும், அவன் அன்னையே! இன்பமளிக்கும் நால்வகைப் பயனும் எனக்கு அருள வேண்டும் என்று இரந்தான்.]

    ஈங்கடைந்தோ ருடற்கழிவின் முத்தியினெய் துவதன்றி
    யோங்கியநாற் பயனுமொருங் குறுவதிலை யென்றருள
    வீங்குபுகழ் நாற்பயனு முடங்களித்தென் மெலிவகற்றும்
    பாங்குபெறு தலத்துறுவ லென்றனனப் பதிதணந்தான்.         28
    [இங்கு அடைந்து உடலை நீத்தவர்கள் முத்தி அடைவரே யன்றி மிக்க அறம் முதலிய நாற்பயன்களை அடைவதில்லை என்று அருளிச் செய்ய, மிக்க புகழுடைய நாற்பயன்களையும் ஒருசேர அளித்து என் வறுமை மெலிவினை அகற்றும் பண்புடைய தலத்தை அடைவேன் என்று கூறிக் காசி நகரை விட்டு அகன்றான்].

    கதுவியபே ரன்பினொடுஞ் சென்றணைந்து கதிர்க்கற்றை
    விதுவணிந்த மணிமாட மேனிலையின் மடமாதர்
    புதுவதணிந் தாட்டயரும் பொற்புவிளங் கியவீதி
    மதுரைமுத லைந்தலத்து மன்னியருந் தவமுயன்றான்         29
    [பற்றிய பேரன்பினொடும் மகிழ்ச்சி நிலவும் பொலிவு நிறைந்த திருவீதிகளையுடைய மதுரை முதலிய ஐந்து தலங்களில் இருந்து அருந்தவம் முயன்றான்.’ கதிர்க்கற்றை- நிலவொளி. விது- சந்திரன். விது அணிந்த மணி மாடம்- மாளிகைகளின் உயர்ச்சிகுறித்தது. மாடமேனிலையில் மடமாதர் புதுவது அணிந்து ஆட்டயர்தல், மக்களின் பொருட்செல்வமும் கலைச்செல்வமும் மகிழ்ச்சியும் குறித்தது.]

    அவ்வவமா நகர்த்தெய்வ மெதிர்தோன் றியருட்காசித்
    தெய்வதம்போ லுரைத்திடலுந் திகைத்தவுளத் தினனாகி
    யெவ்வமறு நாற்பயனு மொருங்கீயுந் தலமொன்று
    கெளவைநெடுங் கடல்வரைப்பி னில்லைகொலோ வெனக்கவன்றான்.         30
    [ அந்தந்த மாநகர்த் தெய்வம் எதிர் தோன்றிக் காசிநகர்த் தெய்வம் கூறியவாறே உரைக்கவே, நாற்பயனும் ஒருங்கே அளிக்கும் புண்ணியத் தலம் கடல் சூழ் உலகில் இல்லைபோலும் எனக் கவலை கொண்டான்]

    ஆற்றுமருந் தவமுயற்சி யொழிந்தகத்தை வளைந்துருக்கி
    நீற்றுமழற் றுயரோடு நெறிச்செல்வா னெதிர்தோன்றும்
    ஊற்றிருக்கும் பசுந்தேற லொழுகவிளந் துளிர்துவன்றி
    நாற்றமிகுஞ் சண்பகப்பூஞ் சோலையினை நண்ணினான்.         31
    [செய்யும் தவமுயற்சியை ஒழித்து, உள்ளத்தை உருக்கி எரிக்கும் துயருடன் வழிச் செல்லும்போது எதிரே தேனொழுக, இளந்தளிர்கள் நெருங்கிய செண்பகச் சோலை ஒன்றைக் கண்டு அடைந்தான்]

    குயிலினத்தான் மொழிமிழற்றிக் குளிர்காலால் வியராற்றி
    மயிலினத்தா னடமாடி மலர்நிழலான் மெய்வருடிக்
    கயலனைய விழிமடவார் போலநறுங் காவகமுஞ்
    செயல்புரிய வாங்கொருசார் திருந்தவிருந் தயர்வுயிர்த்தான்         32.
    [கயல்மீன் போன்ற விழியை உடைய மகளிரிரைப் போலக் குயிலினங்களால் இனிய மொழி இசைத்து, குளிர்ந்த காற்றால் உடலின் வியர்வையை ஆற்றிக் களைப்பை ஒழித்து, மயிலினங்களால் நடமாடி, மலர் நிழலான் உடலை வருடி நறுமணங்கமழும் சோலையும் பணிசெய்ய அங்கு ஒருபக்கத்தில் இருந்து களைப்பு நீங்கினான்]

    வழிச்சென்ற வயர்வனைத்து மலர்ப்பொதும்பர்க் குளிர்நிழலான்
    ஒழித்துறையும் ஏல்வையின்முன் உஞற்றியமெய்த் தவப்பேற்றாற்
    கொழித்தெழுந்தோர் மொழிவானிற் கோதறுபற் பலவளமுஞ்
    செழித்ததிருக் காஞ்சியினைத் சேறியெனச் செவிமடுத்தான்.         33
    [ வழி நடந்த களைப்பெல்லாம் மலர்ச்சோலையின் குளிர் நிழலினால் ஒழித்து அங்குத் தங்கியிருந்த சமயத்தில் அவன் முன் இயற்றைய தவத்தின் பயனால் ஆகாயத்தில், நீ குற்ற மற்ற பலவளங்களும் நிறைந்த காஞ்சி மாநகரை அடைவாயாக என்றொரு அசரீரி எழச் செவிமடுத்தான்]

    ஆராத பெருங்காத லகத்தரும்ப முகத்துவிழி
    நீராரச் சென்னிமிசை நெடுங்கரங்கள் குவிந்தேறப்
    பாராரத் திசை நோக்கிப் பணிந்துபரு வரல்நீங்கிப்
    பேராத வுவகையுளம் பிணைந்தெழுந்து சென்றணைந்தான்.         34
    [ பேரன்பு அகத்தில் அரும்ப, விழியிலிருந்து கண்ணீர் முகத்தில் வழிய, கரங்கள் சென்னியின் மீது குவிந்து ஏற, காஞ்சி மாநகர் இருக்கும் திசை நோக்கிப் பணிந்து நீங்காத பெரிய உவகை உள்ளத்தைப் பிணிக்கச் சென்று அத்தலத்தை அடைந்தான்.]

    கருப்புவன மிடைகழனி புடையுடுத்துக் கடிகுலவுந்
    திருப்புவன சாரத்தைச் சென்றணைந்து பெருந்தவத்தோன்
    அருப்புவன சங்கவற்றும் அலர்முலைப்பா லமர்ந்தசிலைப்
    பொருப்புவன மலர்க்கரத்தார் தளிகள்தொறும் போற்றிசைத்தான்.         35
    [கருப்பு- கரும்பு. கருப்பு வனம்-கருப்பஞ்சோலை. கழனி- வயல். கடி- மணம், அழகு, காவல். அருப்பு- அரும்பு, வனசம்- வனஜம்- தாமரை; வனம்- நீர், நீரில் பிறப்பது. கவற்றும்- கவலையுறுத்தும். அலர்முலை- அன்மொழித்தொகையால் உமையம்மையைக் குறித்தது. சிலை- வில். சிலைப் பொருப்பு வன மலர்க்கரத்தார்- வில்லாக மலையை ஏந்து அழகியமர்க் கரத்தார்- சிவபெருமான். பெருந்தவத்தைச் செய்த மறையவன் திருப்புவன சாரத்தை அடைந்து உமையம்மையை ஒருபாகத்தில் விரும்பிய சிவபெருமானின் பலதளிகள்தோறும் சென்று வணங்கினான்]

    விடங்கலுழுங் கூரிலைவேல் விழியுமையா ளொளிர்தரள
    வடங்குலவு முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்தருளும்
    அடங்கலரூர் செற்றபிரா னாரருள்போற் பன்மலரும்
    உடங்கலருங் கம்பைநதி யுருகெழுநீ ராடினான்.         36
    [கலுழும்- உமிழும். உமையம்மையின் முலைச்சுவடும் வளைத் தழும்பும் அணிந்தருளுகின்றவரும், திருவருளில் அடங்காத அசுரரின் திரிபுரத்தை எரித்தவருமாகிய சிவபிரானின் திருவருளைப் போலப் பலமலரும் ஒருங்கே மலரும் கம்பை நதியின் ஒளிமிக்க நீரில் புனித நீராடினான்.]

    தேந்திவலை துளித்துமலர் செறிந்துநறுங் கனிதுவன்று
    மாந்தருவின் அடிமுளைத்த வள்ளலார் திருப்பதமும்
    ஏந்துமுலைத் திருக்காமக் கண்ணியிரு சேவடிமென்
    பூந்தளிரும் முப்பொழுதும் போற்றிசைத்து வைகினான்.         37
    [தேன்சொட்டும் மலர் செறிந்து, நறுங்கனி நிறைந்த மாமரத்தின் அடியில் முளைத்த ஏகாம்பரேசர் திருப்பதமும் காமக்கண்ணியின் இருசேவடிமலர்களையும் நாள்தொறும் முப்போதும் வணங்கி அங்கு வைகினான். ]

    சின்னாள்சென் றிடுமளவிற் றிருக்காஞ்சி நகர்த்தெய்வம்
    முன்னாகி நாற்பயனு மொருங்களிப்ப வுளமுருக்கும்
    இன்னாத பரிவனைத்து மிரித்தொருங்கு நாற்பயனும்
    பொன்னாடர் நறுமொறுப்பப் போதநுகர்ந் தின்புற்றான்.         38
    [சிலநாள்கள் கழிந்த பின்னர்திருக் காஞ்சிநகர்த் தெய்வம் அவன் முன் தோன்றி நாற்பயனும் ஒருசேர அளிக்கவே, உள்ளத்தை வருத்தும் துயரம் அனைத்தும் நீங்கி விலக, வானுலகத்தவரும் பொறாமையால் முணுமுணுக்குமாறு நாற்பயனும் போகமும் நுகர்ந்து இன்புற்றான்.]

    இவ்வாறு காமுற்ற நாற்பயனு மொருங்கீந்த
    வவ்வாய்மை யாற்காம பீடமென அலங்கியதாற்
    செவ்வாய்மைக் காசிமுதற் றிருத்தகுமூ விருநகரும்
    ஒவ்வாத மேன்மையதா யோங்குபுகழ்த் திருக்காஞ்சி.         39
    [காமுறுதல்- விரும்புதல். இவ்வாறு விரும்பிய நாற்பயனும் ஒருங்கு ஈந்த அந்த உண்மையினால் இந்நகர் காமபீடம் என விளங்கியதால், காசிமுதலாகிய பழமையான நகரங்கள் ஐந்தும் ஒவ்வாத மேன்மையான புகழ் ஓங்கி விளங்கியது.]

    கலிவிருத்தம்
    வண்டாயிர மேவி யுழக்கி வளைந்து
    தண்டாதொடு தேறல் தளிர்ப்ப நுகர்ந்து
    பண்டாழிசை பாட முறுக்கு விரிந்த
    வெண்டாமரை நாண்மலர் வட்டணை யும்பன்.        40
    [ஆயிரம்- எண்ணற்ற. எண்ணற்ற வண்டுகள் உழக்கிச் சூழ்ந்து குளிர்ந்த தாதுடன் தேன் துளிர்ப்ப , உண்டு, தாழ்ந்த இசையில் பண்பாடக் கட்டு விரிந்த தாமரையாகிய வட்டமான அணையில் இருக்கும் தலைவன் -பிரமன். உம்பன் -தலைவன்.]

    போழ்பான் மதிவேணி புனைந்தவர் பொற்ப
    வாழ்பாடளி மாவளர் கின்ற தளிக்குக்
    கீழ்பாலிமை யோரிறை யன்பு கிளர்ப்ப
    வூழ்பாறுயர் பூசைபு ரிந்த நகர்ப்பால்.        41
    [பாதிமதி அணிந்த சடையுடையவர் அழகுடன் வீற்றிருக்கும், வண்டுகள் பண்போல் முரல வளரும்திருக்கோயிலுக்குக் கீழ்த்திசையில் தேவர்கள் பத்தி கிளர்க்க ஊழ்வினையின் தீங்கினை ஒழிக்கும் உயர்ந்த பூசனை புரிந்த நகரினிடத்தே]

    வாடாமலர் மாலை முடிக்கணி வானோர்
    கோடாநெறி மாதவர் மற்றவர் கூடக்
    காடார்சடை யார்கழ னெக்குளம் நாடி
    யீடார்பரி மேதமி யற்றுத லானான்.         42
    [வானோரும் மாதவரும் ஏனோரும் கூடியிருக்க சிவபிரானுடைய கழல் நினைந்து நெக்குருகி ஈடில்லாத அசுவமேதயாகம் இயற்றத் தொடங்கினான்.]

    ஓராருயி ரீருடல் ஒப்ப இணங்குஞ்
    சீரார்தனை நீவி யுஞற்று திறம்பொன்
    வாரார்முலை வாணுதன் மைத்த நெடுங்கண்
    நேரார் கலைவாணியு மெய்த்து வெகுண்டு         43
    [ஓருயிர் இரண்டு உடல்களில் பொருந்தி இருப்பதைப் போன்ற சிறப்பினை உடைய இணக்கத்தை விட்டு நீங்கி தனித்து தவமும் அசுவமேத யாகமும் இயற்றுகின்ற திறம் நோக்கி பிரமனின் மனைவி கலைவாணி சினம் கொண்டாள். பொன் வார்- பொற்கச்சு. மத்த நெடுங்கண்- அஞ்சனம் அணிந்த கண்.]

    உரியாளவ ளாயுட னுற்றிடு காயத்
    திரிமாதொடு தேனினம் மொய்த்திசை பாடும்
    விரிபூவணை வேதிய னச்சுற மேவி
    யெரிவேள்வியை மாய விறுப்பது தேரா        44
    [உரியவள்- பத்தினி. வேள்வி செய உடன் இருப்பவள். பூவணை வேதியன் பிரமன். எரி வளர்த்துச் செய்யும் வேள்வி. கலைவாணி, காயத்திரியுடன் பிரமன் வளர்க்கும் அசுவமேத வேள்வியை அழிக்க இருப்பதை அறிந்து.]

    எழிலுந் திருவும் பெருவீடு மிறைஞ்சி
    வழிநின்றவர் தங்களின் நாளும் வழங்குஞ்
    செழுநுண்பில வம்பிகை சேவடி யன்பிற்
    றொழுதங்கருள் கொண் டனள் போதல் துனைந்து        45
    [அழகும் செல்வமும் முத்தியும் தன்னை இறைஞ்சி வழிபட்டு நிற்போருக்கு நாளும் வழங்கியருளும், அம்பிகையின் சேவடிய அன்பினால் தொழுது அவள் அருளைக் கொண்டுபோக விரைந்து. துனை- விரைவு]

    விண்ணத்தமர் வானவர் வீறு சழங்க
    மண்ணிற்பொலி மானுடர் சால மலங்கப்
    பண்ணைக்குரன் மாமல ராதிகள் பம்பி
    யெண்ணற்கரு நீர்வடி வாகி யெழுந்தாள்.         46
    [விண்ணுலகத்து தேவர்கள் கலக்கம் அடைய மண்ணுலகத்து மானுடர்கள் அச்சமுற அழகிய மலர்க்கொத்துக்கள் பரந்துகிடக்க நினைத்தற்கு அரிய வெள்ள வடிவங்கொண்டு எழுந்தாள்.]

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    திருமணி யிமைக்குங் கோட்டுச் சிலம்புகள் பெயர்த்து வீசி
    யிருநில மகழ்ந்து மோதி யெண்டிசைக் களிறு முட்கப்
    பெருகொலி யெழுப்பிப் பொன்னும் பிரசமென் மலருஞ்சந்து
    மருவிவல் விரைந்து வாணி வரநதி குறுக லோடும்         47
    [சிகரங்களை உடைய குன்றுகளைப் பெயர்த்து வீசி, பெரிய நிலத்தை அகழ்ந்து மோதி, எட்டுத் திசைகளிலும் இருக்கும் களிறுகளும் அஞ்சப் பேரொலி செய்து பொன்னும் தேன்மலரும் சந்தனமும் கலந்து மிக விரைந்து சரசுவதி நதி அடையவே]

    குருக்கிளர் மாழை மாடங் குழுமிய காஞ்சி மூதூர்
    இருக்கை கொண்டவ ரெல்லோரு மெழிற்பரி மேதம் ஆற்றும்
    உருக்கிளர் வேள்விச் சாலை யுறைந்தவ ரோடும் நோக்கிப்
    பொருக்கென வச்சம் பூத்துப் பொருமிய வுளத்த ரானார்.         48
    [குரு- நிறம். மாழை- பொன். காஞ்சிமாநகரில் வாழ்பவர்களும் அசுவமேத யாகம் செய்யும் வேள்விச்சாலையில் உறைந்தவர்களோடு சரசுவதி நதியின் வெள்ளத்தை நோக்கி அச்சம் கொண்டு மனக்கலக்கம் கொள்வாரானார்.]

    சுரிகுழற் காளி தன்னாற் றோற்றுமுன் இரியல் போன
    விரிகட லழிப்ப மீட்டும் மேவிய தொன்றோ முன்போற்
    புரிமணிக் கம்பை கம்ப ரேவலாற் போந்த தொன்றோ
    வருபுனல் வெள்ள மென்ன மலங்குவர் ஆங்கோர் சாரார் 49
    [சுரிந்த குழலினளான காளியினிடம் தோற்றோடிப் போன விரிந்த கடல் உலகை அழிப்ப மீண்டும் வந்ததோ? முன்பு போல, கம்பையாறு கம்பருடைய ஏவலால் போந்த தொன்றோ? இங்குப் பெருகி வருகின்ற வெள்ளம் என மயங்குவார் ஒரு சாரார்.]

    இல்லிடைப் புகுவார் மீட்டும் எரிமணி வீதி செல்வார்
    கல்லணி மாட மேடை கதழ்ந்தன ரிவர்ந்து பார்ப்பார்
    அல்லல்செய் வெள்ள நீத்தம் அண்மையின் இறுத்த தென்னா
    ஒல்லையின் இழிவார் உய்தி ஓர்ப்பரான் மற்றோர் சாரார்        50
    [அஞ்சி வீட்டினுக்குள் புகுவார். மீண்டும் வீதிக்குச் செல்வார். மாடமேடைகளின்மேல்விரைந்து ஏறிப் பார்ப்பார். துன்பம் செய்யும் வெள்ளம் அருகில் வந்தது என்று விரைவின் இறங்குவார். எப்படி உய்வது என்று ஆராய்வார் மற்றொரு சாரார்.]

    கன்றொடு பசுக்கள் தாம்பு கண்பரிந் தீர்த்துக் கொண்டு
    பொன்றிரள் மணிகள் வெளவிப் பொள்ளென இரியல் போகத்
    தொன்றுதொட் டிருந்து வாழுஞ் சுடர்மணி மனையும் மற்றும்
    இன்றுமுற் றழியு மேயென் றினைவரால் மற்றோர் சாரார்.        51
    [கன்றுகளுடன் பசுக்களின் தாம்புகளை அறுத்துக் கொண்டு பொன்மணிகளைக் கவர்ந்து கொண்டு விரைந்து ஓட, தொன்றுதொட்டு நீண்ட காலம் வழ்ந்துகொண்டிருக்கும் இந்த வளமான மனையும் செல்வ வளங்களும் இந்த வெள்ளத்தால் முற்றும் அழியுமே என்று பெருங்கவலை கொள்வர் சிலர்.]

    மலையெனத் திரைகள் வீசி வையக மூன்றும் உட்கத்
    தலைவரு வெள்ளந் தன்னைத் தடங்கணாற் காணுந் தோறும்
    அலைசிறைக் கலுழன் கண்ட அணன்மிடற் றரவு போல
    உலையுநெஞ் சினர்களாகி யுணங்குவர் மற்றோர் சாரார்.        52
    [மலைகளைப் போல அலை வீசி மூவுலகும் அஞ்சப் பெருகி வரும் வெள்ளத்தைக் கண்ணால் காணும்தோறும் கருடனைக் கண்ட பாம்பு போல அஞ்சும் நெஞ்சினராகி வாடுவர் சிலர். உட்க- அஞ்ச. தலைவரும் – பெருகி முன்வரும். அலை சிறை- அசைகின்ற சிறகுகள். கலுழன் -கருடன். அணல் மிடறு- நச்சுப்பையுடைய மிடறு உணங்குவர்- வாடுவர்.]

    உறுசுவை கொழிப்ப வட்ட வுணவினை யிடையி னீத்து
    முறுகிய காதல் பொங்க முயங்குறு கலவி யின்பச்
    செறிவினை யிடையி னீத்துந் திகைத்துடல் பதைத்து வாடி
    யிறுமுயி ராளர் போல விருப்பரான் மற்றோர் சாரார்.        53
    [ சுவைமிக்க உணவுண்பதை இடையில் நீத்தும், முற்றிய ஆசை பொங்கக் கலவியில் ஈடுபட்டோர் இன்பத்துடன் கூடுதலை இடையில் நீத்துத் திகைத்து உடல் பதைத்து வாடி உயிர் இறுவதைப் போன்றதுமான துயருறுவர் சிலர்.]

    சேலன நெடிய கண்ணீர் செங்கரம் நெரித்துப் பல்கால்
    ஆலிலை வயிறு நோவப் பிசைவதின் ஆவ தென்னே
    பாலகன் றன்னை யேந்தி வெளிக்கொளீர் பதியை விட்டுச்
    சாலவு முய்தற் கென்று சாற்றுவர் மற்றோர் சாரார்.        54
    [ சேல் போன்ற கண்களில் நீர் சொரிந்து செங்கரம் நெரித்து ஆலிலை போன்ற வயிற்றைப் நோவப் பிசைவதனால் பயன் என்னே? குழந்தையைக் கையிலேந்திக் கொண்டு இவ்வூரை விட்டு வெளியேறுங்கள், தப்பிப் பிழைத்தற்கு என்று கூறுவர் மற்றொர் சாரார்.]

    அகிலமும் படைக்க வல்ல அலரணைக் கிழவ னீங்குத்
    தகலுறு வேள்வி யாற்றுந் தன்மையி னிருக்கு மாற்றால்
    உகலுற வெழுந்த வெள்ளம் ஓங்குமிந் நகரி னுள்ளே
    புகலுறா தொதுக்கு மென்று புகலுவர் மற்றோர் சாரார்        55
    [உலகங்கள் எல்லாவற்றையும் படைக்க வல்லவனாகிய பிரமன் இங்கு தகவுற வேள்வி செய்வதினால் அழிக்க எழுந்த வெள்ளம் இந்த உயரிய நகருக்குள் புகுதாவண்ணம் அதனை ஒதுக்கும் என்பர் ஒரு சாரார்.]

    அன்னது கேட்டி லீரோ வம்புயக் கடவுண் மாட்டே
    துன்னிய சீற்றங் கொண்டு துணைமுலைக் கலைமா னன்றே
    நன்னதி வடிவு தாங்கி நண்ணுத லுற்றா ளந்தோ
    வென்னினிப் புகலுமா றென்றெங்குவர் மற்றோர் சாரார்        56
    [தாமரைக் கடவுளாகிய பிரமதேவன் மீது நெருங்கிய சீற்றங் கொண்டு கலைமகள் நல்லநதி வடிவங்கொண்டு வந்து அடைந்தாள்; இந்தச்செய்தியை நீயிர் கேட்டிலீரோ? அவளே இந்நகரை அழிக்க வந்துற்றால் இனிச் சொல்லுவதற்கு என் உள்ளது என்று ஏங்குவார் மற்றொரு சாரார்.]

    குங்குமக் களபந் தோய்ந்த குவிமுலைக் கிடைதள் ளாடும்
    மங்கைவெண் கமலத் தோட்டு வாணி தன்கொழு நன்மீது
    பொங்கிய சீற்றங் கொண்டு போந்தது மழகி தென்று
    செங்கர மறித்துச் சாலத் திகைப்பரான் மற்றோர் சாரார்.        57
    [இல்லக்கிழத்தியாம் கலைமகளே தன் கணவனாகிய பிரமன் மீது சினங்கொண்டு அழிக்க வந்தது நல்ல அழகாக இருக்கிறது என்று கை விரித்துத் திகைப்பர் , மற்றொரு சாரார். அழகிது என்றது , அழகன்று என்னுங் குறிப்பு. செங்கரம் மறித்தல் திகைத்தலாகிய மெய்ப்பாடு].

    குலவுமோர் மனையை நீத்து மாற்றவள் கூட வைக
    அலைவறு வேள்வி யாற்றும் அயன்றவ றுடைய னல்லாற்
    கலைமகள் தவற்றா ளென்று கழறுதற் கிடனின் றென்னா
    வுலைவுறு நெஞ்சின் வெம்பி யுரைப்பரான் மற்றோர் சாரார்.        58
    [தவற்றாள்- தவறுடையவள். மகிழ்வளிக்கும் ம்னைவியை நீத்து வேறொரு பெண்ணுடன் கூடித் தங்கித் துன்பொழிக்கும் வேள்வியைச் செய்யும் பிரமனே தவறுடையன்; அது அல்லாமல், கலைமகளைத் தவறுடையவள் என்று கூறுதற்கு இடமில்லை என கலக்கமடைந்த மனத்துடன் வெம்பி உரைப்பர்,ஒருசாரார்.]

    வாள்விரி கனக மோலி மறையவன் கயவன் போல
    வேள்வியொன் றியற்றப் புக்கு மேதகு காஞ்சி யெல்லாந்
    தாள்வினை தவிர்ந்து நைந்து தளர்ந்தழி கிற்ப மாணா
    மூள்வினை புரிந்தா னென்று மொழிவரான் மற்றோர் சாரார்.        59
    [தாள்- ஊக்கம், விடாமுயற்சி. ஒளிவீசும் மகுடம் அணிந்த பிரமன் ஒரு கயவனைப் போல வேள்வி ஒன்றினை இயற்ற முனைந்து பெருமையுடைய காஞ்சிநகரமெல்லாம் ஊக்கத்தினை இழந்து நைந்து தளர்ந்து அழியுமாறு பெருமையில்லாத கேடு மூளும் வினையைச் செய்தான், என்று ஒருசாரார் மொழிவர்.]

    கடையுக வெள்ளம் வென்ற காஞ்சி மற்றெவர் களானும்
    இடையினில் அழிக்க லாமே ஈங்குறும் இடரும் வேலை
    விடமிட றணிந்த பெம்மான் விலக்குவன் ஐய மின்றென்
    றடைவுறு தேற்றந் தன்னால் அறைவரான் மற்றோர் சாரார்.        60
    [கடையூழி வெள்ளத்திலும் அழியாமல் வென்ற காஞ்சி மாநகர் மற்றெவராலும் அழிக்க இயலுமோ? வந்துற்ற இந்த இடுக்கணும் விடமுண்ட கண்டனான இறைவன் தன் அருளால் விலக்குவன்; இதற்கு ஒரு ஐயமில்லை என உறுதி மொழிவர் சிலர்.]

    செய்திடுந் தொழிலு மந்தச் செய்தொழி றன்னை நாடி
    வெய்துவந் தடையு மூறும் வேறு வேறாய்ந்து பாரா
    தைதொரு வேள்வி யாற்ற லாயினான் நினைந்தா னென்று
    வைதுபூஞ் சேக்கை யானை வெறுப்பரான் மற்றோர் சாரார்.        61
    [செய்யும் வேலை, அந்த வேலையினால் வந்தடையும் கேடு மற்றும் இவை போன்றவற்றை முன்பு தீர ஆராயாமல் இலேசாக இந்த வேள்வியைச் செய்ய பிரமன் நினைந்தான் என்று மலர்ப்பூஞ் சேக்கையானை வெறுப்பர் , சிலர்.]

    இன்னணம் நகர்சோ காக்கும் ஏல்வையின் னளிகள் மூசித்
    துன்னிய தாது மாந்துந் தோட்டலர்க் கமலத் தோன்றல்
    என்னினிச் செய்ய லாவ தென்றுளம் இரங்கி யாய்ந்து
    கன்னியந் துளவி னான்றன் கழலிணை வணங்கிச் சொல்வான்.        62
    [சோகாக்கும்- துன்புறும் நகர்- இடவாகுபெயராய் நகரில்வாழ் மக்களைக் குறிக்கும். ஏல்வை- சமயத்தில். மாந்தும்- உண்ணும். கன்னி- புதுமை. இவ்வாறு காஞ்சிநகரில் வாழ் மக்கள் துன்புறும் சமயத்தில், தாமரையில் வாழும் பிரமன் இனிச் செய்வதென்னே என்று உள்ளம் மிகவும் இரங்கி ஆராய்ந்து, பின்னர் துளசி மாலையினனாகிய திருமாலை அடைந்து வணங்கிச் சொல்லுவான்]

    முரிதிரைக் கடல்சூழ் வைய முழுவதுங் காக்கு நீயே
    விரிபுனல் நீத்தம் நீத்தென் மேதகு வேள்வி காத்திட்
    டுரியசீர்ப் பயனை நல்கென் றுள்ளமு முகமுஞ் சாம்பும்
    பரிவொடு நின்று பல்காற் பழிச்சின னுரைத்தல் செய்தான்.        63
    [கடல்சூழ் உலகம் முழுவதையும் காக்கும் நீயே இந்தப் புனல் வெள்ளத்திலிருந்து யான் செய்யும் வேள்வியைக் காத்து, யாகத்தின் பயனை யான் பெற அருள் செய்ய வேண்டும் எனத்துயரால் சாம்பிய முகத்தினனாகப் பலமுறையும் வணங்கிக் கூறினான்]

    முள்ளரைப் பசிய தண்டான் முருகுகொப் புளிக்குந் தேறல்
    அள்ளிதழ்க் கமல வாழ்க்கை அணங்குவீற் றிருக்கு மார்பன்
    நள்ளலர்க் கச்சம் பூக்கும் நகைசிறி தரும்பி வேறொன்
    றுள்ளலை நீத்தம் யானே யொழிப்ப லென்றதற்கு நேர்ந்தான்.        64
    [செந்தாமரை வாழ்க்கையை உடைய அணங்கு வீற்றிருக்கும் திருமார்பனாகிய திருமால், பகைவர்களுக்கு அச்சம் விளைக்கும் முறுவல் சிறிதே பூத்து, வேறொன்றும் நினைத்து வருந்தாதே, வெள்ளத்தை யானே ஒழிப்பன் என்று பிரமனின் வேண்டுதலுக்கு உடன்பட்டான்.]

    உட்டுளை எயிறு தோறும் உருகெழு காரி வாரும்
    நெட்டர வணையி னோடும் ஒய்யென நேரே போந்து
    மட்டலர் கமலச் செல்வி மணிமுலைக் களிறு பாயப்
    பட்டலர் துளவத் தண்டார்ப் பசுமுகில் படுத்த தன்றே.        65
    [துளை உள்ள பற்கள் தோறும் விஷத்தினைக் கக்கும் நீண்ட பாம்பாகிய அணையினுடன், ஒய்யென விரைவாகப் போந்து கமலச் செல்வியாகிய திருமகளின் அழகிய முலையாகிய களிற்றின்மேல் வெள்ளநீர் பாயத் துளவத் தண்டார் பசிய முகில் படுத்தது. ]

    வெள்ளியஞ் சிலம்பு மேலோர் விழுப்பெரு நீலக் குன்றம்
    வெள்ளிடை யடைத்து நீண்டு விலங்குறக் கிடந்தா லென்னக்
    கள்ளலர் துளவமார் காமரு சேடன் மேலாற்
    பள்ளிகொண் டிருக்குந் தன்மை படர்நதி வாணி கண்டாள்.        66
    [வெள்ளிமலைமீது ஓர் நீலக் குன்றம் பரப்பிடை அடைத்துக் கிடந்ததுபோல அழகிய ஆதிசேடனின் மேல் திருமால் பள்ளி கொண்டிருக்கும் தன்மையை படரும் நதியாகிய வாணி கண்டாள். சிலம்பு, குன்றம்- மலைகளின் வகை. வெள்ளிடை- வெட்ட வெளி. ]

    கண்டகண் ணெருப்புத் துள்ளக் கனன்றுபே ரண்ட மெல்லாம்
    விண்டிடத் தெழித்தோர் பாங்கர் விலகிமேற் சேற லோடும்
    வண்டுளர் கமலை வைகும் மார்பினான் மீட்டும் மீட்டும்
    மிண்டினன் றடுத்து மாற்றா மெலிவினை மலரோன் கண்டான்.        67
    [சரசுவதி நதி கண்களில் சினத்தினால் நெருப்பினைக் கக்க, அண்டமெல்லாம் விண்டு தெரிக்கும்படியான முழக்கத்தோடு, திருமாலை விட்டு விலகி மேற்செல்ல, திருமால் மீட்டும் மீட்டும் செருக்கோடு தடுத்தான். முழுவதுமாகத் தடுக்க முடியாத அவனது மெலிவினை பிரமன் கண்டான்.]

    அழிபுன னெடியோன் தட்ப அகலுமென் றுன்னி யுன்னிக்
    கழிமகிழ் பூத்த வுள்ளக் கருத்தெலாம் வெறிய னாகி
    விழியிணை கண்ணீர் வார வெம்பிமிக் கழுங்கித் துன்பச்
    சுழிபெருங் கடலுண் மூழ்கித் தொலைவரும் வெருட்சி கொண்டான்.        68
    [அழிக்கும் கருத்துடன் வரும் வெள்ளத்தைத் திருமால் தடுத்து அகற்றும் என நினைத்து நினைத்து மிக்க மகிழ்ச்சி பூத்த உள்ளக் கருத்தெல்லாம் ஒழிந்து வறுமையுடையனாகி, விழிகள் கண்ணீர் உகுக்க வெம்பி மிக அழுங்கித் துன்பக் கடலுள் மூழ்கிப் பிரமன் தொலைக்க முடியாத அச்சம் கொண்டான். தட்ப- தடுக்க. வெறியன் -உள்ளத்தில் ஒன்றுமில்லாத வறியன்]

    பலநினைத் தாவ தென்னே பாற்கடல் கடைந்த ஞான்று
    குலவுபல் லுயிரு மஞ்சக் கொதித்தெழுங் காள மேந்தி
    யுலகெலா முய்ய வுண்ட வோங்கிய கருணையாள
    னிலவிய திருவே கம்ப நிமல னுண்டென வெழுந்தான்        69
    [பலவும் எண்ணியெண்ணி இனி ஆகப் போவது என்ன? பாற்கடலைக் கடைந்த அன்று நிறைந்த பல உயிர்களும் அஞ்சக் கொதித்து எழுந்த ஆலகால விடத்தைத் தன் அங்கையால் ஏந்தி உலகெலாம் உய்ய உண்ட உயர்ந்த கருணையாளன் திருவேகம்பத்தில் இருந்தருளும் நிமலன் (மலமில்லாதவன்) உண்டேதுணை எனத் துணிந்தான்.]

    உடைநனி சழங்கித் தட்ப வுத்தரா சங்கஞ் சோரச்
    சுடர்மணி வடமு நூலுந் துயலுறீஇ மார்பிற் பின்ன
    முடிபடு சிகைதள் ளாடி முகந்தொறு முகப்ப வோடிக்
    கொடிமுகி லுரிஞ்சு மாடக் கோயிலுட் சென்று புக்கான்.        70
    [சழங்கி- நெகிழ்ந்து. உத்தராசங்கம்- மேலாடை. சோர- நழுவ. துயலுறீஇ- அசைந்தசைந்து. பின்ன- ஒன்ரனொடு ஒன்று.சிக்கலுற. முகப்ப- முகத்தை மூட. இடையிற் கட்டிய ஆடை நெகிழ, மார்பில் உத்தராங்கமாகத் தரித்த ஆடை நழுவ, மார்பில் பூணூல் அசைந்தசைந்து பின்னிக் கொள்ள, சிகை மயிர் அவிழ்ந்து முகத்தை மூட ஓடிச் சென்று கொடி மேகத்தைத் தடவும் மாடங்களை உடைய திருக்கோயிலை அடைந்தான்]

    அடியவர்க் கெய்ப்பின் வைப்பா யமர்ந்தரு ளமலத் தேவை
    யிடரினுக் கெதிரே தோன்றி யினிதருள் கருணை வாழ்வை
    மடலவிழ் கடுக்கை வேய்ந்த மாவடிக் குழகன் றன்னைப்
    படர்வினை யிடும்பை முற்றும் பாற்றுவா னேரே கண்டான்.        71
    [அடியவர்களுக்குத் தளர்ந்த இடத்து உதவும் பாதுகாப்பு நிதியாகக் காஞ்சியில் அமர்ந்தருளும் மலமற்றவனை, இடருற்ற பொழுது எதிரே தோன்றி நீக்கும் கருணையாளனை, இதழவிழ்ந்த கொன்றைமாலையை அணிந்துள்ள மாவடிக் குழகனைத் தன்மேல் படர்ந்து வரும் துன்பம் நீங்கும் பொருட்டு நேரே கண்டான்.]

    மறந்திடு துயரன் பொங்கி வார்புனற் கண்ணன் வேதஞ்
    சிறந்திடு நாவ னுச்சி கூம்பு செங்கை யனாகி
    நிறந்தரை யொன்ற வீழ்ந்து நெடிதுளந் திளைத்து நின்று
    விறந்தபூஞ் சடிலக் கற்றை வேந்தினை யிரக்க லுற்றான்.        72
    [நிறம்- மார்பு. தனக்குற்ற துயரத்தை மறந்தவனாய், நீர் பொங்கி வழியும் கண்ணனாய், வேதம் ஒலிக்கும் சிறந்த நாவனாகிய பிரமன், உச்சி மேற் குவித்த செங்கையுடன், மார்பு தரையில் பொருந்த வீழ்ந்து வணங்கி உள்ளம் அன்பினில் திளைத்து சடைக்கற்றை இறைவனாகிய ஏகம்பரிடம் இரக்கலுற்றான்.]
    வரம்பினிற் கடவா வேலை வையக மழிப்ப வந்த
    இரும்புனல் சடிலத் தேற்றாய் இமையவர் வரைப்பி னோடும்
    பெரும்புவி யஞ்சப் போந்த பிரளய முழுது மோப்பி
    அரந்தைதீர்த் தருளிக் காஞ்சி யணிநகர் புரந்தா யன்றே.        73
    [ எல்லையைக் கடவாத கடல் சூழ் உலகை அழிக்கவந்த கங்கைப் பெரும் புனலைச் சடையில் ஏற்றாய். இமையவர்களோடு மண்ணுலக மக்களும் அஞ்ச வந்த பிரளயத்தை நீக்கி, வருத்தத்தைத் தீர்த்துக் காஞ்சி அணிநகரை அன்று புரந்தாய்]

    அன்றுபோ லிரங்கி யின்றும் அடியனேன் ஆற்றும் வேள்வி
    பொன்றவார்த் தெழுந்து பொங்கிப் பொருதிரை திசையிற் போக்கிக்
    கன்றியெவ் வுயிரு மஞ்சிக் கலங்குறக் கதந்து முற்றும்
    மன்றலங் கூந்தல் வாணி வார்நதி தடுக்க வென்றான்.        74
    [ அன்று போல் இன்றும் மனமிரங்கி, அடியனேன் ஆற்றும் வேள்வியை அழிக்க ஆர்த்தெழுந்து, பொங்கி, மோதும் அலைகளை எத்திசையிலும் போக்கி, எவ்வுயிரும் அஞ்சிக் கலங்குமாறு சினந்து சூழும் வாணிநதியைத் தடுத்தருள வேண்டும் என்றான்]

    இரந்தவர் வறிய ராகா தீண்டிய விழைவு முற்றப்
    புரந்தருள் கருணை வள்ளல் புதுநிலா வணிந்த பெம்மான்
    பரந்தவெண் ணிலவு காலப் பனிநகை வறிது காட்டிச்
    சுரந்துமட் டொழுகுங் கஞ்சத் தோன்றலுக் கருளிச் செய்யும்.        75
    [இரந்தவர்கள் வெறுங் கையினராகாமல், விரும்பியது நிறைவேற அருள் செய்யும் கருணை வள்ளல், பிறையணிந்த பெருமான், புன்முறுவல் காட்டிக் கஞ்சத் தோன்றலாகிய பிரமனுக்கு அருளிச்செய்வான் . கஞ்சம்- தாமரை].

    விளரியாழ் மிழற்றிப் பாடி விழுப்பொறிச் சிறகர்த் தும்பி
    யுளருமென் றோட்டுக் கஞ்சப் பொகுட்டணை யும்பர் மேலாய்
    வளர்பிறை நுதலாள் காமக் கண்ணியை வழிபா டாற்றித்
    தளர்வறு தவங்கள் செய்து தண்ணருள் கோடி யென்றான்.        76
    [விளரி யாழ்- விளரிப்பண். வண்டு முரலுதல் விளரிப் பண் போன்றுளது. தாமரை மலர் மேலோனே! பிறைநுதலாள் காமாட்சியை வழிபாடாற்றி தவங்கள் செய்து அவளது தண்ணருள் கொள்வாயாக என்றான்.]

    உணங்கிய வுள்ளம் பொங்கு முவகையிற் றழைப்ப மாற்றார்க்
    கணங்குறுத் தருளுஞ் சூலத் தங்கை யெம்பெருமான் பாதம்
    வணங்கினன் விடைகொண் டேகி மறைமுடி விண்ணுங் காணாக்
    குணங்களைக் கடந்த ஞானக் குமரியைச் சரணஞ் சார்ந்து        77
    [வாடிய உள்ளம் பொங்கும் மகிழ்ச்சியில் தழைக்கும்படியாக, பகைவர்க்கு வருத்தத்தை அருளும் சூலத்தை அங்கையில் ஏந்தும் எம்பெருமானின் திருப்பாதத்தை வணங்கினான். அவரிடம் விடைகொண்டு வேதமுடிவுகளும் விண்ணுலகத்தவரும் காணவியலாத குணங்களைக் கடந்த ஞானக்குமரியாகிய காமாட்சியின் சரணத்தை அடைந்து. ]

    உடைதிரை சுருட்டுந் தெண்ணீ ரொலிகெழு தெய்வக் கம்பை
    யடைகரை மருங்குஞ் செய்ய வழலவிர்ந் தனைய செங்கேழ்
    மிடைதளி ரொருமா நீழ லிடத்தும்வெம் பவநோ யெல்லாம்
    விடைகொளும் பஞ்ச தீர்த்த விரிபுனற் கரையின் கண்ணும்.        78
    [உடை திரை- கரையில் மோதி உடைகின்ற அலை. சுருட்டுந்திரை- சுருண்டுவரும் அலை. கம்பையாற்றின் கரையில் நெருப்பு சுடர்விட்டு எரிவது போன்ற தளிர்களை உடைய ஒப்பற்ற மாவடியிலும், பிறவி நோயெல்லாம் விடைகொண்டு நீங்கும் பஞ்சதீர்த்தத்தின் கரையின்கண்ணும்]

    வெம்பிய காமக் காட்டை வேரறப் பறித்து வீடே
    நம்பிய சனக ராதி நற்றவ முனிவ ரோடும்
    அம்பிகை பாதம் நெஞ்சத் தழுத்தி மெய்யன்பு நீடிக்
    கம்பமற் றிருந்து மாதோ கரிசற நோற்றிட் டானே.         79
    [வெப்பத்தைச் செய்யும் காமமாகிய காட்டை வேரறபறித்து முத்தியையே விரும்பிய சனகன் முதலிய நல்ல தவம் செய்யும் முனிவர்களுடனும் அம்பிகையின் திருப்பாதத்தினை நெஞ்சத்தில் அழுத்தி உண்மையான அன்பு கொண்டு நடுக்கம் அற்று இருந்து குற்றமறத் தவம் செய்தான்.]

    எழுதிய வோவ மென்ன விருந்திருந் தவத்தின் மூண்ட
    செழுவிய திறத்தை நோக்கித் திருவுள மகிழ்ந்து கண்ணி
    னொழுகிய கருணை பாய வொளிர்நகை வதனம் பூப்ப
    முழுவதும் பயந்த நங்கை முன்னெழுந் தருள லோடும்        80
    [எழுதிய ஓவியம் என்ன அசைவற இருந்து செய்த தவத்தின் திறத்தை நோக்கித் திருவுளம் மகிழ்ந்து கண்ணிலிருந்து ஒழுகிப் பெருகும் கருணை நதியாய்ப் பாய முகத்தில் புன்னகை பூத்து உலகம் முழுவதையும் பெற்ற அம்மை முன் எழுந்தருளலும். ஓவம்- ஓவியம். ]
    எழுந்தனன் கரங்க ளுச்சி யேற்றினன் தரணி மீது
    விழுந்தனன் கவலை முற்றும் வீட்டினன் இன்ப வெள்ளத்
    தழுந்தினன் ஆடிப் பாடி யார்த்தனன் கண்க டோறும்
    பொழிந்தனன் றூநீர் வெள்ளம் போர்த்தனன் புளக மேனி.        81
    [தரையில் வீழ்ந்து வணங்கி எழுந்தனன்; கைகளை உச்சியின்மேற் குவித்தனன்; மீண்டும் தரையில் வீழ்ந்தனன்; கவலையை முற்றும் விட்டொழித்தனன்; இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தனன்; ஆடிப்பாடி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனன்; கண்களில் நீர் பெருக்கினன்; உடல் முழுதும் புளகாங்கிதம் அடைந்தனன்.]
    அலங்கலங் குழலு மன்பர்க் கருள்பொழி விழியும் வில்விட்
    டிலங்கிய முகமும் ஏற்போர்க் கீத்தருள் கரமும் மும்மை
    மலங்கெட வருளுந் தாளும் வடிவெலா நோக்கிப்
    புலங்களி சிறப்பப் பல்காற் போற்றிநின் றிரக்க லுற்றான்.        82
    [மாலை சூடிய குழலும், அன்பர்களுக்கு அருள்பொழியும் விழியும், ஒளிவிட்டு விளங்கிய திருமுகமும், ஏற்பவர்களுக்கு வேண்டியவற்றை ஈந்தருளும் திருக்காமும் ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களையும் கெடுத்தருளும் திருத்தாளும் ஆகிய அம்மையின் வடிவெலாம் கண்டு ஐம்புலன்களும் ஆரப் பல்காலும் போற்றி நின்று இரந்துகேட்கலுற்றான்.]
    வைத்தவேல் தடற்றுண் மூழ்க மலைந்திடு நெடிய வாட்கட்
    கத்திகை மாலை யோதிக் கருணையங் கடலே யிந்நாண்
    முத்தணிந் தெழுந்து வீங்கு முகிழ்முலைக் கலைமா னீங்குப்
    பைத்தநீர் நதியாய்ப் போதும் படர்ச்சியைத் தவிர்த்தல் வேண்டும்        83
    [வைத்த வேல்- கையில் வைத்துள்ள வேல். தடறு- உறை தடற்றுள்- உறையினுள். வாள் கண்.வாட்கண்- ஒளியுடையகண். கத்திகை- கத்தரிக்கோல். கத்திகை மாலை- கத்தரிக்கோலால் கத்தரித்துச் செப்பம் செய்யப்பட்ட மாலை. பைத்த- சினமுடைய. வாட்கண்னையும் மாலையும் உடைய கருணைக்கடலே கலைமான் (கலைமகள்) இங்குக் சினங்கொண்ட நதியாகப் படர்ந்து வருதலைத் தவிர்த்தல் வேண்டும்]

    ஒருகணந் தாழ்க்கி லம்மா வொலிகெழு கடலிற் றோன்றும்
    கருவிட நுகர்ந்த கண்டர் கழலிணை கருதி யாற்றுந்
    திருமலி வேள்வி யோடுந் திண்ணிய மதில்சூழ் காஞ்சிப்
    பெருநக ரழிக்கும் வல்லே பேணியெற் காக்க வென்றான்         84
    [ஒருகணமேனும் காலந் தாழ்த்தினால், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக வுண்ட நீலகண்டர் கழலிணையை வேண்டிச் செய்யும் செல்வமலி வேள்வியுடன் வலிய மதில்சூழ்ந்த காஞ்சிப் பெருநகரையும் அந்நதி அழிக்கும். அதனால் பேணி எம்மைக் காக்க என்றான். அம்ம- இரக்க ஒலிக்குறிப்பு]

    இறுநுசுப் பிரங்கி வாட வெழுந்து வெண்டரளம் பூண்டு
    நறுவிரைக் களபந் தோய்ந்த நகிற்றுணைச் சுவடு மாவின்
    முறுகிய காதல் பொங்க முளைத்தவர்க் கணிந்த நங்கை
    குறுநகை முகிழ்த்து நோக்கிக் குளிர்மொழி யருளிச் செய்யும்        85
    [இறும்- இற்று வீழும். நுசுப்பு- இடை. வெண் தரளம்- வெண்முத்து. மாவின் -மாவினிடத்து. . முளைத்தவர்- ஏகாம்பரேசுரர். காதல் பொங்க முலைச் சுவடு அளித்த நங்கை- காமாட்சி அம்மை. காமாட்சி புன்னகை செய்து குளிர்மொழி அருளிச் செய்யும்.]

    அஞ்சலை யுலக மீன்ற வலரணைக் கிழவ கேண்மோ
    நஞ்சென வெகுண்டு சீறி நன்னதி யாகிப் போதும்
    வஞ்சிநுண் மருங்கு லாளை மகிழ்விநீ யாற்று வேள்வி
    யெஞ்சலின் றினிது முற்று மேகுதி விரைவி னென்றாள்.        86
    [பூவணைமேலிருந்து உலகங்களைப் படைத்தவனே! அஞ்சலை. கோபித்து நல்ல நதியாகப் பாயும் கலைமகளை மகிழ்வி. நீ ஆற்றும் யாகம் குறிவின்றி நிறை வேறும். என்றாள்]

    அருள்தலைக் கொண்டு தாழ்ந்தங் ககன்றுவல் விரைந்து போந்து
    மருள்தலைக் கொண்டு சென்ற வாணியை யண்மி நல்ல
    பொருள்தலைக் கொண்ட சொல்லான் மகிழ்வித்துப் பொருந்தக் கொண்டு
    தெருள்தலைக் கொண்ட வேள்வி சீர்மையின் முடித்திட் டானே        87
    [அம்பிகையின் அருளைத் தலைமேற்கொண்டு, அங்கிருந்தகன்று, மயக்கம் கொண்டு சென்ற வாணியை அடைந்து, நற்பொருளுடய சொற்களான் மகிழ்வித்து தான் தலைக் கொண்ட்வேள்வியைச் சிறப்புடன் முடிவித்தான்.]

    பிறைநுதல் வாணி நீத்தப் பெருக்கினைத் தவிர்ப்பச் செய்யு
    நறைமலர்ப் பொகுட்டு மேலா னற்றவம் வளர்ந்த வாற்றா
    லிறையினி லிடும்பை யோப்புந் தபோமய மென்னு நாம
    மறைபுனற் பழனக் காஞ்சி யணிநக ரணிந்த தன்றே.        88
    [நீத்தம்- வெள்ளம். இறையினில்- சிறிதுநேரத்தில். ஓப்பும்- ஓட்டும். வாணியின் வெள்ளப்பெருக்கினைத் தவிர்க்கச் செய்யும் பிரமன் தவத்தின் வலிமையால், சிறிதுபொழுதில் இடும்பையை ஓட்டும் தபோமயம் எனும் பெயரைக் காஞ்சி அணிநகர் அணிந்தது]

    கலிவிருத்தம்
    அற்பக வெயிலுமி ழவிர்நவ மணிகுயில்
    விற்படு முடியினர் விண்ணவர் முனிவருங்
    கற்படு சிறையரி கடவுள ரிறைவனு
    முற்படு மொருதினங் குழுமினர் மொழிவார்.         89
    [அல்- இரவு. அவிர்- ஒளிவீசல். குயில்- பதி. நவமணி குயில்- நவமணிகள் பதித்த. விற்படு முடி- ஒளி வீசும் மகுடம். கல்- மலை. கற்படு சிறை அரி கடவுளர் இறைவன் – இந்திரன். குழுமினர் மொழிவார்- கூடியிருந்து தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.]

    வெள்ளிய பெருகொளி விரிகயி லையைமுதற்
    பள்ளியி னமர்வுறும் பண்ணவர் மூவரு
    மெள்ளருந் தரிசன மோருழி யெங்களுக்
    கொள்ளிதி னருளவு ஞற்றுது மென்னா.        90
    [கயிலை ஐ- கயிலைத் தலைவன் , சிவபெருமான். முதற்பள்ளி- கயிலை முதலாகிய இருப்பிடம். பண்ணவர் மூவர்- சிவன் முதலாய முத்தேவர்.தேவர். மூவரும் ஒருசேர- தரிசனம் அருளவேண்டும் என தவம் செய்வோம் என்று ]

    வரியளி யினமுரல் மதுவுமிழ் நறுமலர்
    விரியணை மிசையுறை வேதிய னிருகழ
    லுரியதம் அகமலர் உறநினைந் தனைவரும்
    அரிறபு தவநனி யாற்றுத லுற்றார்.         91
    [வரி அளி இனம்- வரிகளை உடைய வண்டுக் கூட்டம். முரல்- ஒலி செய்ய.மதுதேன். உமிழ்- உகுக்கின்ற. நறுமலர்- மணமிக்க மலர், தாமரை. நறுமலர் விரியணை மிசையுறை வேதியன் -பிரமன். பிரமனைத் தம் அகத்தில் நிறுத்தி குற்றமறத் தவம் பெரிதும் ஆற்றத் தொடங்கினர்.]

    எண்ணறு நாளிவ ரின்னண முயறலுந்
    தண்ணிய நறுமணத் தாதவிழ் தாமரை
    வண்ணமென் மலரணை வானவன் முன்னுற
    வெண்ணிற ஏற்றன மேல்கொடு வந்தான்.        92
    [அளவிலாத நாட்கள் இவ்வாறு தவம் முயலவே, தாமரை அணையின் மேல் வீற்றருளும் பிரமன் வெண்ணிற அன்னத்தின் மீது வந்தான். ஏற்றனம்- ஏறுதற்குரிய அன்னம். ஏறு- ஆண் எனலுமாம். அனம்- அன்னம், இடைக்குறை.]

    செழுமறை வேதி யனெதி ருறச் சேறலும்
    விழுமிய தவநவி லனைவரும் வெய்தெனக்
    கழுமமில் நெஞ்சகங் களிவரத் தெளிதரு
    முழுமறை யோதினர் முன்னுறத்தொழுதார்.        93
    [செழுமறை வேதியன் – பிரமன். பிரமன் நேரே தோன்றலும், சிறந்த தவமியற்றும் அனைவரும் விருப்பத்துடன் குற்றமிலாத நெஞ்சகம் மகிழ்ச்சி மிக வேதமந்திரங்களை ஓதி முன் நின்று தொழுதனர்.]

    எந்துநும் மனமுயல் வெனவின வியமறை
    யந்தணன் முகமல ரலர்தர மொழிதர
    எந்தை நின்னொடும் அரியரனையு மோரிடைச்
    சுந்தரப் பதமலர் தொழமுயல் கின்றாம்.        94
    [எந்து- என்ன? உம்மனத்தால் நீவிர் முயல்வுற்றது என்ன எனப்பிரமன் வினவ. ‘எந்தை உன்னுடன் அரி அரன் மூவரையும் ஓரிடத்தில் உங்கள் அழகிய திருவடி மலர்களைத் தொழ இத்தவம் முயல்வுற்றோம் என்றனர்.]

    அத்தகும் உறுபயன் முற்றுற ஆம்வகை
    யெத்திற மருளுதி யென்றலு மலரவன்
    கொத்துறு மவர்களு முடன்வரக் கொடுபுகுந்
    துத்திய வரவணை யும்பனைச் சேர்ந்தான்.        95
    [அத்தகைய பெரிய பயனை யாங்கள் முழுதும் பெறும் வகை யாது அருளுக எனக் கேட்க, அவர்களை அழைத்துக் கொண்டு பிரமன் பாம்பணைப் பள்ளியனாகிய திருமாலிடம் சேர்ந்தனன். கொத்து- கூட்டம். துத்தி- விஷப்பை. உம்பன் -தலைவன்.]

    வேறு
    கொடியிடைப் பணைமுலை கோல மாமக
    ளடியிணை வருட நெட்டர வப்பள்ளியிற்
    கடியவிழ் தாமரைக் கண்வ ளர்ந்திடு
    நெடியவன் பதமலர் நிலத்திற் றாழ்ந்தனன்        96
    [கொடியன்ன இடையும் பெருத்தமுலையும் அழகிய கோலமும் கொண்ட திருமகள் திருப்பாதங்களை வருட பெரும்பாம்பின் மீது தாமரைக்கண் வளரும் நெடியவனாகிய அரியின் பதமலர்களை நிலத்தில் வீழ்ந்து வணங்கினன்.]
    நெட்டரா வணையினின் றெழுந்து நெஞ்சகம்
    பெட்டசீர் விழைவொடும் பெரிது வந்துநீ
    சட்டவா னவரொடுஞ் சார்ந்த தென்னெனு
    மட்டுலாந் துளவினான் மகிழச் சொல்லுவான்.        97
    [நெடிய பாம்பணையினின்றும் எழுந்து, நெஞ்சகம் நிறைந்த விருப்பத்துடன் பெரிதும் உவந்து நீ வானவர்களுடன் செப்பமாக இங்கு வந்து அடைந்தது எது விரும்பி என, துளவமாலையினனாகிய திருமால் மகிழப் பிரமன் சொல்லுவான்.]

    என்னையு நினையுமற் றேறு யர்த்தநம்
    மன்னையு மொருவயிற் காணும் வாஞ்சையின்
    முன்னிய விவரெனை முற்ற யானுமிங்
    கன்னதன் பொருட்டுவந் தடைந்த தென்றனன்.        98.
    [என்னையும் நின்னையும் மற்றும் விடைக்கொடி உயர்த்திய நம் மன்னவனையும் ஒருசேர ஓரிடத்தில் காணும் விருப்பமுடைய இவர்கள் என்னை அடைந்தனர். யானும் இங்கு அதன்பொருட்டு நின்னை வந்து அடைந்தது என்றான்.]

    திவளொளிக் கவுத்துவந் திளைக்கு மார்பினான்
    உவகைய னாயினன் உவணப் புள்ளிவர்ந்
    தவரொடு மவ்வயி னகன்று சென்றனன்
    கவரொளிக் கற்றையங் கயிலை வெற்பினை        99
    [மார்பில் அசைகின்ற பிரகாசமான துளசிமாலையினனாகிய அரி, அதுகேட்டு, உவகையாக கருட ஊர்தியைலேறி பிரமன் முதலியவர்களுடன் ஒளிமிக்க கயிலை வெற்பிற்குச் சென்றனன்.]

    தேத்துளி ததும்பிய தெய்வக் கொன்றையும்
    ஆத்தியுங் கங்கையும் அளவ ளாவிய
    தூத்திரட் சடையரைத் தொழுதற் கவ்வயின்
    ஏத்தருங் கோயிலுள் வாயி லெய்தினான்.        100
    [தேத்துளி- தேன்துளி. தேன் துளி ததும்பிய தெய்வீகக் கொன்றையும் ஆத்தியும் கங்கையும் கலந்த தூய திரண்ட சடையராகிய சிவனைத் தொழுவதற்கு அங்கிருந்து ஏத்துதற்கு அருமையான திருக்கோயில் வாயில் எய்தினான்.]

    நவ்விபோல் விழியெறி நயன மாதிடம்
    வெளவிய புராணர் தம்வாய்தல் காத்திடும்
    ஔவிய மகன்ற நெஞ்சண்ணல் நந்திதான்
    செவ்வியின் றொழிகெனச் செப்ப மீண்டனன்.        101
    [பெண்மான் போல் மருண்ட விழியளாகிய அம்மை இடப்பாகத்தைக் கவர்ந்துகொண்ட பழமையானவர்தம் மாளிகை வாயில் காத்திடும் பணி செய்யும், வஞ்சகமற்ற நெஞ்சங்கொண்ட நந்தி தேவர் இப்பொழுது இறைவரைக் காணுதற்குச் செவ்வியில்லை , இடத்தை விட்டு நீங்குக எனக் கூறவே , மீண்டனன்.]

    இளமதி யயர்வுற எற்று தெண்டிரை
    வளநதி வேணியார் வனச மென்கழல்
    தளர்வறக் காணுவான் றவிர்ந்து மற்றவண்
    அளவறு பெருந்தவ மாற்ற லுற்றனன்.        102
    [பிறைநிலவு களைப்படையும்படி அலைமோதும் கங்கையினை அணிந்த சடைப்பெருமானின் தாமரைத் திருவடி காண்பதன் பொருட்டுத் தம்மிடத்திற்குப் பெயருதலைத் தவிர்ந்து அங்கேயே பெருந்தவம் ஆற்றலுற்றனன்.]

    கனைகுரல் வண்டினங் கஞலிக் கூட்டுணும்
    வனைபுகழ்த் தாமரை வள்ள லாதியோ
    ரனைவரும் வேறு வேறங்கண் வைகுபு
    தனைநிக ரருந்தவஞ் சால வாற்றினார்        103
    [முரலும் வண்டுக்கூட்டம் திரண்டு கூட்டமாகத் தேனுணும் அழகிய தாமரையில் வதியும் பிரமதேவனும் ஏனை அனைவரும் அரியைப் போல அங்கிருந்து தவம் மிக ஆற்றினர்.]

    கொம்பொரு பாகரைக் குறித்து நெஞ்சினை
    யைம்பொறி வழிச்செலா தடக்கி நோற்றுழி
    வம்பவிழ் மதசல மூறி வார்ந்திழி
    தும்பிமா முகத்தவன் தோன்றி னானரோ.        104
    [மாதொரு பாகரைக் குறித்து நெஞ்சு ஐம்புலன்வழி ஓடாதடக்கித் தவம் செய்தபோது மதசலம் புதிதாக ஊற்றெடுக்கும் யானைமுகக்கடவுள் அவன் முன்னர்த் தோன்றினர்.}

    ஆயிரம் பரிதியொன் றாகித் தோன்றியாங்
    கேயபே ரொளிவிடு முருவி னெந்தையை
    மாயிருங் களிகொள நோக்கி வல்லையிற்
    தூயதாட் டுணைமலர் தொழுது போற்றினார்.        105.
    [ஆயிரம் சூரியர்கள் ஒன்றாகித் திரண்ட பேரொளி உருவில் வந்த விநாயகப் பெருமானை மிக்கபெருங் களிப்புடன் நோக்கி அவருடைய தூயதிருவடிகளைத் தொழுது போற்றினர்.]

    மங்கையோர் பாகரைக் காணும் வாஞ்சையிற்
    பொங்கிய அருந்தவம் பூண்டு வைகினேம்
    அங்கவர் மதலையாம் நின்னை யன்பினால்
    இங்கி யாந்தொழப் பயனெளிதி னெய்தினாம்.        106
    [மாதொரு பாகராகிய உம் தந்தையாரைக் காணும் வேட்கையில் பொங்கிய அருந்தவம் பூண்டு இங்குத் தங்கினோம். அவருடைய பிள்ளையாகிய நின்னை அன்பினால் இங்குத் தொழும் பயனையும் பெற்றோம்.]

    தந்தையு மகனும் வேறன்மை சாற்றுவார்
    எந்தைநின் தரிசன மேறு யர்த்திடும்
    நுந்தைதன் றரிசன நுதலின் வேறிலை
    அந்தண வெனத்துதி யறைதன் மேயினார்         107
    [தந்தையும் மகனும் வேறிலை எனச் சொல்லுவர். எந்தை! நின் தரிசனமே உன் தந்தைதன் காட்சியை அளித்தலின் நீ அவனின் வேறிலை, அந்தணனே! எனத் துதிக்கத் தொடங்கினர்.]

    விழுத்தவம் உடையரை மெய்ய ருட்கடல்
    அழுத்திடும் ஒருமருப் பண்ணற் குஞ்சரம்
    வழுத்திய துதிக்குள மகிழ்ந்து மாறிலா
    முழுத்த பேரருளினான் மொழியு மென்பவே.        108
    [தூய தவம் உடையவரை மெய்யருட் கடலில் அழுத்திடும் ஒற்றைக்கொம்புடை அண்ணல் யானையாகிய விநாயகப் பெருமான் திருமால் வழுத்திய துதிமொழிகளுக்கு மகிழ்ந்து நிகரிலா முழுமையான பேரருளினால் கூறும். கூறிய மொழி அடுத்த பாட்டில்]

    அருந்திறற் சூற்படை யகில நாயகர்
    கருந்தடங் கண்ணியுந் தாமுங் காஞ்சியிற்
    றிருந்திய கம்பைநீர்க் கரையிற் றேனினம்
    விருந்துணு மாவடி மேவி வைகினார்.        109
    [சூற்படை- சூலப்படை. அகிலநாயக ராகிய இறைவனும் கருந்தடங்கண்ணியாகிய அம்மையும் காஞ்சிமாநகரில் கம்பையாற்றங்கரையில் வண்டுகள் கூட்டமாகத் தேனுணும் மாவடியில் தங்கினர்.]

    அத்தகு தபோமய நகரை யண்மிடின்
    மெய்த்தவ மாற்றிநீர் விழைந்த யாவையுங்
    கைத்தலக் கனியெனக் கூடுங் காண்மினென்
    றுத்தமக் களபமங் கொளித்துப் போந்ததே.        110
    [உத்தமக் களபம்- உத்தம இலக்கணங்கள் யாவும் உடைய களிறு., விநாயகர். அத்தகைய தபோமயநகரை அடைந்து மெய்த்தவம் ஆற்றிடின் நீர் விழைந்த யாவையும் அகங்கையில் நெல்லிக்கனிபோலக் கூடும் காண்மின் என விநாயகப் பெருமான் அருளிச் செய்து மறைந்தார்.]

    வழங்கிய அருள்தலைக் கொண்டு வார்கழல்
    தழங்கிய திருவடி தாழ்ந்தெ ழுந்துபோய்ப்
    பழங்கனிந் துகும்பொழிற் பாங்கர் வண்டினம்
    முழங்குறு காஞ்சிமா நகர முற்றினார்.        111
    [விநாயகப்பெருமான் வழங்கிய அருளைத் தலைமேற்கொண்டு அவருடைய கழல் விளங்கும் திருவடியைத் தாழ்ந்து வணங்கி, எழுந்துபோய்ப் பழங்கனிந்து உகும் சோலைகள் சூழ்ந்த, வண்டினம் முழங்கும் காஞ்சிமாநகரை அடைந்தனர். பழம் கனிந்து உகுதல் திருவருள் எளிதிற் கிடைத்தலுக்கும் வண்டினம் ஒலித்தல் மகிழ்ச்சிக்கும் குறிப்பு]

    செஃறவழ் தொறுஞ்செறி திமிரஞ் சீப்பநற்
    கஃறிவ ளொளிவிடு மாடக் காஞ்சியிற்
    பஃறளி தொறுந்தொறும் படர்ந்து நாதனார்
    விஃறவழ் சிலம்படி விழைந்து போற்றினார்.        112
    [செல் +தவழ்= செஃறவழ். செல்- மேகம். கல்+ திவளொளி, கல்- மணிகள். பல்=தளி= பஃறளி. பல தளிகள்- பலகோயில்கள். வில்+தவழ்= விஃறவழ். வில்- ஒளி.சீப்ப- விலக்க. மேகங்கள் தன்மேல் தவழ்தொறும் செறிகின்ற இருளை விலக்கும் மணிகள் ஒளிவிடும் மாடங்களை உடைய காஞ்சிநகரில் பலதளிகளுக்கும் சென்று இறைவரது ஒளிதவழும் சிலம்பணிந்த திருவடிகளைப் போற்றி வணங்கினர்.]
    கறங்கிமுத் தெறிந்து வன்கரைகொன் றார்த்தெழு
    மறங்கிள ருடைதிரை வார்ந்து லாவிய
    அறங்கிளர் பயனெலாம் அருளுங் கம்பைநீர்
    பிறங்குபே ரன்புளம் பெருக மூழ்கினார்        113
    [ஆரவாரித்து, முத்துக்களை எடுத்துவீசி, வலிமையான கரையை அழித்து, அலையெழுந்து கரைமீது மோதி உடைந்து உலாவும், அறப்பயன்களை எல்லாம் அருளும் கம்பையாற்றின் நீரில் பக்தி மிகும் உள்ளத்தினோடு மூழ்கினர்.]
    மழைத்திரள் அகடுகீண் டெழுந்து வார்ந்துபோய்க்
    குழைத்தபூஞ் சினையெலாங் குரங்கக் காய்படுந்
    தழைத்தவோர் மாவடி தன்னிற் றோன்றிய
    உழைத்தடங் கையினார் திருமுன் உற்றனர்.        114
    [மழைத்திரள்- கார்மேகம். அகடு- வயிறு. குரங்க- வளைய. உழை- மான்.மேகத்தின் வயிற்றினைக் கீறி உயர்ந்துபோய் தளிர்த்த கிளைகளெல்லாம் வளையுமாறு காய்களைக் கொண்டு தழைத்த ஒரு மாமரத்தின் அடியில் தோன்றிய, மானைக் கையில் கொண்ட இறைவனின் திருமுன் அடைந்தனர்.]
    நோக்கிய மலர்விழி பெரிது நுண்டுளி
    வாக்கமென் மலர்க்கரங் கூம்ப மாறிலாத்
    தேக்கிய வின்புளந் திளைப்ப யாவருங்
    காக்கு நாயக ரிருகழலிற் றாழ்ந்தனர்.         115
    [கண்ட மலர்க்கண்கள் பெரிதும் கண்ணீர் சொரிய மென்மலர்க்கரங்கள் உச்சிமேற் கூம்ப, தேக்கிய இன்பத்தில் உள்ளம் திளைப்ப அனைவரும் இறைவனின் இருதிருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.]
    ஏலவார் குழலிவீற் றிருக்கும் பாகரைக்
    கோலவார் சடையரைக் கும்பிட் டஞ்சுரும்
    பாலவார் மதுவுமிழ் அம்பு யத்தவன்
    சாலமா மறைக ளாற்சரண் பழிச்சினான்.        116
    [ஏலவார் குழலி பாகரை, அழகிய நீண்ட சடைமுடியினரைக் கும்பிட்டுச் சுரும்புகள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்கத் தேனை உமிழ்கின்ற தாமரையவனாகிய பிரமன் மறைமொழிகளால் இறைவனின் திருவடிகளைப் போற்றினான். அம்புயம்.அம்புஜம்- தாமரை. ஏலவார்குழலி பாகர், கோலவார்சடையர் இருபெயர்களும் ஒருவரையே சுட்டின.]

    சீரிய மறைத்துதிக் கிரங்கித் தேனினங்
    காரளி முழக்கறாக் காமர் மாவடிப்
    பூரணர் தாமரைப் பொகுட்டு மேவிய
    ஆரணன் காணவங் கருளித் தோன்றியே        117
    [பெருமையுடைய வேதமொழித் துதிகளுக்கு மனம் இரங்கித் தேனீக்கள் கூட்டம் வண்டுக்கூட்டம் முழக்கம் நீங்காத அழகிய மாவின் அடிப் பூரணராகிய ஏகாம்பரர் தாமரைப் பொகுட்டின் மேவிய வேதன் காண வந்து தோன்றி அருளினார். ஆரணம்- வேதம் ஆரணன் -வேதன், பிரமன்.]

    சிறையளி தேனினஞ் செற்றித் தாதளைஇ
    நறைநுகர்ந் தெதிரெடுத் தென்ன நல்லிசை
    முறைமுறை பயில்வுறு முண்ட கத்தினோய்
    நிறைவரங் கோடி நீயென நிகழ்த்தினார்.        118
    [சிறை அளி- சிறகுகளை உடைய வண்டுக்கூட்டம். செற்றி- தாக்கி. வண்டுகள் மலர்களின் தாதினை அளைந்து முரலும் இனிமையை எதிரொலித்து நல்லிசை முறைமுறை இடைவிடாது இசைக்கின்ற தாமரையினோய்! நீ விரும்பும் வரத்தினை நிறைவாகக் கொள்வாயாக’ என்றார்.]

    கிளர்ந்திடும் உவகையுங் கெழுமி மீமிசை
    வளர்ந்திடு பத்தியு மனங்கொ ளாதெழத்
    தளர்ந்திடு மொழியினன் தாழ்ந்து வண்டினம்
    உளர்ந்துணும் மதுமலர் உம்பன் ஒதுவான்        119
    [கிளர்ந்தெழும் மகிழ்ச்சியுடன் கூடி மேலும் மேலும் வளர்ந்திடும் பக்தியும் மனங்கொளாதபடி எழத் தழுதழுத்த மொழியினனாகித் தாழ்ந்து வணங்கி வண்டுக்கூட்டம் மொய்த்து உணும் தேன்மலர்த் தாமரைத் தலைவன் பிரமன் கூறுவான்]

    பிள்ளைவெண் மதியமும் பிரசக் கொன்றையும்
    வள்ளெயிற் றரவமும் மிலைந்த வார்சடை
    அள்ளிலைச் சூற்படை யமல நாயக
    எள்ளரு நினதருள் கிடைப்ப விவ்வுழி        120
    [பிள்ளை வெண்மதி- பிறை. பிரசம்- தேன். மிலைந்த – அணிந்த.பிறையும் கொன்றையும் கூரிய எயிறு உடைய அரவமும் மிலைந்த நீண்டசடையும் சூலப்படையும் உடைய அமலநாயகனே! உம்முடைய அருள் கிடைப்பதற்கு இவ்விடத்தில்]

    பெருகிய வானவ ரோடு பெட்டுநின்
    திருமுனர்ப் பரிமகஞ் செய்வல் மற்றவண்
    வருவது வேண்டுமென் றிரப்ப வார்கடல்
    இருள்விட மயின்றவ ரிசைந்திட் டாரரோ        121
    [திரண்டவானவருடன் விரும்பி நின் திருமுன்னர் அசுவமேத யாகம் செய்வன். அங்குத் தாங்கள் வருதல் வேண்டும் என்று இரப்ப, கடல்விடம் அயின்றவர் இசைந்திட்டார்.]

    கீற்றிளம் பிறையவிர் கேழ்த்த செஞ்சடை
    நீற்றணி திகழ்ந்தமெய் நிமலர் ஏற்றெதிர்
    கூற்றுயிர் குடித்த தாள்குறித்து நூல்வழி
    யாற்றினன் பரிமகம் அயனும் என்பவே.        122
    [கீற்றுப் போல விளங்கும் பிறை ஒளிரும் நிறமுடை செஞ்சடையும் திருநீற்று அழகும் திகழும் திருமேனி நிமலர் மாறுபட்டு நின்ற எமனுடைய உயிரைக் குடித்த திருத்தாளினைக் குறித்து மறைநூல்வழி அசுவமேத யாகம் பிரமன் செய்து முடித்தனன். தாள்- திருவருள்]

    முறுகிய மணப்புகைப் படலை மொய்த்துவான்
    நறுமலர்க் கற்பக நனைகள் வாட்டுறு
    மறைநெறி வேள்வியின் வயங்கு செஞ்சடைப்
    பிறையணி கூத்தனார் பிறங்கித் தோன்றினார்.        123.
    [வலிமை யுற்ற மணமுடைய புகைப்படலம் மேலெழுந்து தேவலோகத்தை மொய்த்து கற்பகமரத்தின் தளிர்களை வாடச்செய்யும் வேத நெறிப்படி ஆற்றிய வேள்வியின் விளங்கும் பிறையணி கூத்தனாராகிய இறைவன் விளங்கித் தோன்றினார்.]

    விம்மிதந் தலைக்கொள விழிக ணீருக
    இம்மெனு முன்னெழுந் திறைஞ்சி வாழ்ந்தனர்
    அம்மலர்ப் பொகுட்டின் மேலயனு மார்பிடைச்
    செம்மலர்த் திருவமர் செல்வத் தோன்றலும்        124
    [விம்மிதம்- அச்சம், அதிசயம். இம்மெனும்- விரைவுக் குறிப்பு. அச்சமும் அதிசயமும் மேற்கொள விழிகள் கண்ணீர் உகுக்க வீழ்ந்து வணங்கி எழுந்தனர், பிரமனும், திருமாலும்]

    மற்றை வானவர்களு மறுவி லாத்தவம்
    முற்றுமா தவர்களு மொருங்கு மூவர்தம்
    பொற்றதா மரையடிப் போது தாழ்ந்தெழுந்
    தற்றமிழ் விழைவவண் ஆர முற்றினார்        125
    [ஏனைய தேவர்களும் குற்றமற்ற தவம் முற்றும் மாதவர்களும் ஒருங்கு அயன் அரி அரன் மூவர்தம் திருவடித் தாமரைமலர்களைத் தாழ்ந்து வணங்கித் தாம் விரும்பியதை அங்கு எய்தினர். ]

    அன்பருக் கருள்புரிந் தமல நாயகர்
    பொன்பொதி யிளமுலைப் பூவை தன்னொடும்
    இன்பழங் கனிந்து தேனிறைக்கு மாவடி
    முன்புபோல் வைகினார் முகிழ்த்த காதலால்.        126
    [அன்பர்களுக்கு அருள்:புரிந்த இறைவர், அம்மையொடும் மாமரநீழலில் முன்புபோல் அன்புடன் தங்கினர்]
    பாற்றரும் பவத்தொடர் பாற வல்வினை
    நீற்றிடு மழுப்படை நிமல நாயகர்
    போற்றரும் பதமலர் போற்றி யன்பினால்
    ஆற்றரு வேள்வி செய்தய னிருந்தனன்        127
    [ஒழித்தற்கு அரிய பிறவித் தொடர்ச்சியை ஒழிக்க, சஞ்சித வினையை அழித்திடும் இறைவரின் பதமலரைப் போற்றி அன்பினால் செய்தற்கு அரிய வேள்வியைச் செய்து அயன் இருந்தனன்.]

    பாவிய வுத்தர வேதி பாங்கரிற்
    பூவலர் துளவினான் பொற்ப வைகினான்
    தாவிலப் பரிமகச் சாலை வேதிதான்
    மேவரு மத்திவெற் பென்ன வோங்குமே        128
    [பரவிய உத்தர வேதிப் பக்கத்தில் துளவமாலையினனாகிய அரி அழகுடன் தங்கினான். அசுவமேத வேள்விச் சாலையின் அவ்வேதிதான் அத்திவெற்பு என ஓங்கும்.]

    இருவரு நாடொணா விறைவ ரோடுமற்
    றிருவரு மின்னணம் வதியு மேதுவான்
    மருமலி காஞ்சி மும்மூர்த்தி வாசமென்
    றொருபெயர் படைத்த தாலுலகு போற்றவே.        129
    [ அயன் அரி இருவரும் தம்மால் காணமுடியாத இறைவருடன் இவ்வாறு தங்கியிருத்தலால் மணமலி காஞ்சி மும்மூர்த்தி வாசம் என்றொரு பெயரும் உலகு போற்றப் படைத்தது.]

    எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    துள்ளி வீழ்தரு மாலை வெள்ளருவி துளைத்த நெட்டறைப்
    பெருங்குழி யிடத்துப்
    புள்ள றாத மென்சினைப் பொழிலு குத்த போது சாலவும்
    போந்த காரணத்தாற்
    பள்ள மீதென வறிந்திடா தியலும் பனைக்கை வேழம்வீழ்ந்
    துலம்பிமுன் னரக்கன்
    றெள்ளு றாதுவந் தெடுத்திசை யெழுப்புஞ் செய்கை காட்டுமக்
    கயிலைமால் வரையின்.        130
    [துள்ளி வீழும் இயல்புடைய வெண்மையான அருவி துளை செய்த பாறையின் பெருங்குழியில், புள்ளினம் நீங்காத கிளைகளையுடைய மரப்பொழில் உகுத்த மலர்கள் மேல் மிகுந்த காரணத்தால், பள்ளம் ஈது என்று அறிந்திடாது அங்கு நடமாடும் பனைமரம்போன்ற கையை உடைய வேழம் வீழ்ந்து பிளிறி, முன்பு அரக்கன் இராவணன் புத்தியின்றி எடுத்துப் பின் இசை எழுப்பும் செயலை அக்கயிலை மால்வரை காட்டும். உலம்பி- அலறி. தெள்ளுறாது- தெளியாது.]

    தேய்ந்த வெண்மதிக் குழவிதான் வளர்ந்து செழிப்ப முன்னி
    மந்தாகினி நறுநீர்
    தோய்ந்து துன்னிய செஞ்சடை வனத்துச் சூட்டராவினந்
    தழல்விடங் கொழித்துக்
    காய்ந்து வன்படம் விரிக்கும்வெந் நிழலிற் கதுவி வைகலு
    மருந்தவ முயலும்
    ஆய்ந்த மெல்லிதழ்த் தொடரிய கடுக்கை யலங்கல் சூழ்ந்தெழில்
    அசும்பிய முடியார். 131
    [தேய்ந்துபோன பிறைக் குழவி தான் வளர்ந்து செழிக்க நினைந்து, கங்கைநதியின் தூய நீரில் மூழ்கி நெருங்கிய செஞ்சடையாகிய காட்டில் பாம்பினம் சினந்து வலியபடம் விரிக்கும் கொடுநிழலில் பொருந்தி நாளும் அருந்தவம் முயலும் மெல்லிய இதழ்கள் தொடரும் கொன்றை மாலை சூழ்ந்த எழில் ஒழுகும் திருமுடியுடையவர்(இறைவர்)]

    மாண்ட வின்னிசைச் சுரும்பின முரன்று மணங்குலாவு
    செம்மட்டு வார்ந்தொழுக
    ஈண்டு மெல்லிதழ் மலர்த்தொடை செருகு மிருட்க ருங்குழ
    லிறைவிதன் னோடுங்
    காண்ட குங்கதிர்க் குடைமிசை நிழற்றக் கவின்ற சாமரை
    யிருபுற மிரட்டப்
    பூண்ட காதலிற் பொலந்தவி சிவர்ந்து பொற்ப முன்னொரு
    நாளினிதி ருந்தார். 132
    [(இறைவர்) பெருமையுடைய இன்னிசை ஒலிக்கும் வண்டினங்கள் முரன்று மணமிக்க செந்தேன் வார்ந்தொழுக, நெருங்கிய மலர்த்தொடை செருகிய இருள் போன்ற கருங்கூந்தல் இறைவியுடன், கண்கவர் ஒளியுடை குடை நிழலைத் தர, சாமரை இரட்ட, உயிர்கள்மேல் கொண்ட அன்புடன் பொற்றவிசின் மீது பொலிவுடன் முன்பொருநாள் வீற்றிருந்தார்.]

    அண்டம் யாவையும் படைத்தளித் தழிக்கு மாற்றல் வல்லசீர்
    நந்தி வேதண்டன்
    மண்டு மாதவப் பிருங்கி துண்டீரன் மற்று மல்கிய பெருங்கண நாதர்
    கொண்டல் வெள்ளெனக் கறுத்துவெண் புணரி கொதித்தெழுந்த
    வல்விட நுகர்ந்திருண்ட
    கண்டர் சேவடிக் கமலநாண் மலரைக் கசிந்து போற்றிநின்
    றன்பினிற் றிளைத்தார்.        133
    [அண்டங்கள் யாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கும் ஆற்றல் வல்ல பெருமையுடைய கயிலை மலை போன்ற தோற்றமுள்ள நந்தி, பெரியதவம் செய்யும் பிருங்கி, துண்டீரன், மற்றும் பெருகிய கணநாதர்கள் – கார் மேகமும் வெள்ளை எனும்படியாகப் பாற்கடலில் கறுத்துப் பொங்கிக் கொதித்து எழுந்த கொடிய விடத்தை நுகர்ந்ததனால் இருண்ட கண்டத்தை உடைய பெருமானின் சேவடியாகிய செந்தாமரைப் போதினை உளங்கசிந்து போற்றிப் பத்தியில் திளைத்திருந்தனர்.]

    அரிப ரந்திருண் டகன்றுநெட் டிலைவேல் அம்ப லைத்துநீண்
    டஞ்செவிக் குழையைச்
    சரிய மோதுமை விழிச்சியை முதலாஞ் சத்தி மாதர்க
    ளெண்ணிலார் குழுமிக்
    கரிய கண்டர்தம் மருங்குவீற் றிருக்குங் காமர் வாண்முக
    மலர்ப்பசுங் கொடிதன்
    பரிபு ரச்செழுஞ் சீறடிக் கமலம் பணிந்து போற்றிநின்
    றின்றன்பினில் திளைத்தார்        134.
    [செவ்வரி பரந்து கருவிழி இருண்டு அகன்று நெடிய இலையுடைய வேல் அம்பு ஆகியவற்றைத் தோற்கடித்து அழகிய செவியில் உள்ள குழை சரிய மோதும் விழிச்சியராகிய சத்திமாதர்கள் எண்ணிலார் திரண்டு நீலகண்டரின் பக்கத்தில் வீற்றிருக்கும் அழகிய ஒளியுடைமுகப் பசிய கொடியாகிய இறைவியின் பரிபுரம் அணிந்த சீறடிக் கமலத்தைப் பணிந்துபோற்றி நின்று இன்பத்தினில் திளைத்தனர்.]

    போற்றி இன்னண நின்றிடு மேல்வை போக்க ருந்தவம் வல்ல துண்டீரன்
    ஆற்று முன்னைவல் வினைப்பயன் றொடர வறிவு வேறுபட் டாதவ
    னுருப்பம்
    மாற்று பூஞ்சினை மலர்ப்பொழிற் றெய்வ மால திப்பெயர் மாதராள் கனகக்
    கோற்றொ டிப்பசும் பணைபுரை நெடுந்தோட் கோதை மீதுதன் மனஞ்செல
    விடுத்தான்.        135
    [அனைவரும் இவ்வாறு இறைவனையும் இறைவியையும் போற்றி வழிபட்டு நிற்கும் வேளையில், தவமுடைய துண்டீரன், முன் செய்த தீவினைப் பயன் தொடரவே, அறிவு வேறுபட்டு மாலதி எனும் மலரின் பெயர் கொண்ட ஒரு பெண்ணின் மீது தன்மனம் செல்ல விடுத்தான்]

    வணங்கு நுண்ணிடை வருத்திமே லெழுந்து
    மதர்த்தபூண் முலைமாலதிப்பே
    ரணங்கு மாயிடைப் புகுமுகம் புரிந்தே யார்வமீக்
    கொளக் கட்கடை விடுத்தா
    ளிணங்கு மாரனுந் தன்வலி காட்டி யிடையி னெய்துழி
    யெழுந்த மெய்யுணர்வால்
    உணங்கரும் புகழாளன் மற்றவள் பாலுற்ற நெஞ்சினை
    யொய்யென மீட்டான்.        136
    [இளைத்த நுண்ணிய இடையை மேலும் வருத்தி எழுந்த மதர்த்த பூண்முலை மாலதி என்னும் பெயர் கொண்ட பெண்ணும் அங்கு அம்முனிவனின் காதலை எதிர்கொண்டாள்; காதல் பார்வைக் கடைக்கண்ணை அவன் மீது விடுத்தாள்; இடையில் மன்மதன் நின்றான். நல்லறிவு தோன்ற துண்டீரன் அவள்பால் உற்ற நெஞ்சினைவிரைவில் மீட்டான். புகும்கம் புரிதல்-தலமகன் தன்னைக் காணுதலைத் தலைமகள் விரும்புதல்.கட்கடை- கடைக்கண்பார்வை. ஒய்யென- விரைவில் ]

    என்னை செய்தனன் நன்றுநன் றிதுகா றீட்டு மேன்மையுந் தவங்களு மிறப்ப
    வன்ன மென்னடைப் பிராட்டி யி னோடும் அமரும் அண்ணலார் திருமு
    னிவ்வாறு
    கொன்னு தீவினை யீட்டிய வஞ்சக் கொடிய னேற்கினி யுய்வகை யாதென்
    றுன்னி யுன்னி நெக்குருகி வெய்துயிரா வுளமெலாம் பதைபதைத்து
    மிக்கழிவான்.        137
    [எத்தனை பெரிய தவற்றினை நான் செய்துவிட்டேன்? நன்றுநன்று. இதுவரைக்கும் நான் ஈட்டிய மேன்மையும் தவங்களும் அழிய, எம்பிராடியுடன் இருக்கும்அண்ணலார் திருமுன்னர் இத்தகைய பெரிய தீவினையைச் செய்து பாவம் ஈட்டிய வஞ்சகக் கொடியவனாகிய எனக்கு உய்வகை யாது என்று நினைத்து நினைத்து நெக்குருகி பெருமூச்செறிந்து உள்ளமெலாம் பதைபதைத்து மிகவும் வருந்துவான். நன்று நன்று; இகழ்ச்சிக் குறிப்பு; மிகத்தீது என்பது பொருள். கொன் -அச்சம் உன்னி- நினைந்து. ]

    உடங்கு தன்னுட னின்றுபே ரன்பி னும்பர்
    நாயகர் சேவடி பரசும்
    மடங்க டிந்தமெய் யடியரை நோக்கி மதியின்
    நாணுறுந் தன்னையே பழிக்கும்
    விடங்கொ தித்தென வந்த தீவினையை வெருவும்
    ஓவரு கவற்சியில் துளையும்
    படங்க வின்றவா ளரவணிந் தவரைப் பரசி யுய்துமென்
    றுளந்துணிந் தெழுந்தான்.        138
    [தன்னுடன் நின்று, உம்பர்நாயகனின் திருவடியைப் பரவுகின்ற, அறியாமையை வென்ற மெய்யடியரை நோக்கித் தன்னுள்ளே தானே நாணுவான்; தன்னையே பழித்துக் கொள்வான்;தீவிடம் வந்து தாக்கியதென வந்த தீவினையை அஞ்சுவான்; ஒழியாத வருத்தத்துடன் நொந்துகொள்வான்; அரவணிந்த பெருமானை வழிபட்டு உய்வோம் என உள்ளத்தில் துணிந்து எழுந்தான். உடங்கு uṭaṅku, n. cf. ஒருங்கு. Propinquity, side, nearness; பக்கம். எமதுடங்கிற் பலித்ததோ (விநாயகபு.        62, 19).--adv. 1. Amicably, harmoniously; ஒத்து. உம்பர்- தேவர். உம்பர் நாயகன் -தேவாதி தேவன். மடம்- அறியாமை. n. < மட-மை +. 1. Stupidity, dullness; மூடகுணம். கவற்சி- கவலை. ஓவரு- ஒழிவிலாத. துளையும்- வருந்தும்.]

    அன்னை யேநிகர் குருமனைக் கிழத்தி யலர்முலைத்
    தடந்தோய்ந்து செம்மாக்கும்
    மின்னு பூங்கதிர்த் திங்களுக் கிரங்கும் வித்தகா
    விரிநீர் கடலெழுந்து
    முன்னு தீவிடந் திருமிடற் றடக்கி முறைதிறம்பிய
    வானவர்க் கெல்லாம்
    நன்னர் வான்பத மளித்தருள் கருணை நாத வென்னையுங்
    காப்பதுன் கடனே.        139
    [பெற்ற தாய்க்கு நிகரான குருபத்தினியைத் தோய்ந்து களித்த சந்திரனுக்கும் மனம் இரங்கும் வித்தகனே! கடலில் எழுந்து நெருங்கிய தீய விடத்தை திருமிடற்றில் அடக்கி, நெறி திறம்பிய தேவர்களுக்கெல்லாம் இனிய வான்பதம் அளித்தருளும் கருணை நாதனே என்னையும் காப்பதுன் கடனே. வித்த- வித்தகனே!; அண்மைவிளி. வித்தகன்¹ vittakaṉ, n. < vitta-ka. Wise person; பேரறிவாளன்]

    என்று பல்வகைத் துதியெடுத் தியம்பி யிறைஞ்சிநின் றிருகரஞ் சிரங்குவியத்
    துன்றும் என்பெலாம் நெக்குநெக் குடையத் துணைக்க ணீர்மழைத்
    தாரையிற் பொழியக்
    கன்றும் உள்ளகங் கரைபுரண் டெழுந்த காதன் மெய்யருட் டிறத்தினில்
    திளைத்தான்
    குன்ற வில்லியார் திருவுள மிரங்கிக் குளிர்ந்த வாணகை முகத்தரா யருள்வார்
            140
    [ என்று இவ்வாறு பலவகையாகத் துதித்து இறைஞ்சினான்; இருகரங்களும் குவிய, நெருங்கிய எலும்பெலாம் நெக்கு நெக்கு உடைந்து உருக, இருகண்களிலும் கண் நீர் மழைத் தாரையெனப் பொழியக், கனிந்த உள்ளத்தில் கரைபுரண்டெழுந்த பத்தி வெள்ளமாகிய மெய்யருளில் திளைத்தான்; மலைவில்லியாராகிய சிவன் திருவுளம் இரங்கி இன்முகத்தராய் அருள்வார். கன்றும் – மிகக் கனியும். குன்ற வில்லியார்- மேருமலையை வில்லாக வளைத்தவர்.]

    இன்ன லுற்றுமிக் கஞ்சலை கேட்டி இலங்கு வேற்படை யரசர்தங் குலத்துத்
    துன்னு பூங்குழன் மாலதி யொடுநீ தோன்றி யொன்னலர் வணங்கு துண்டீர
    மன்ன னாகி மற்றிவள் முலைப்போக மணந்து காஞ்சியின் வதிந்தரசி யற்றிப்
    பின்னர் நம்மருளா லிவணெய்தப் பெறுவை யாலெனத் திருவருள் புரிந்தார்.
            141
    [அஞ்சித் துன்பமுறாதே! கேட்பாயாக! வேற்படையரசர் குலத்தில் பூங்குழல் மாலதியொடு தோன்றி நீ . பகையரசர்களெல்லாம் வந்து வணங்கும் துண்டீரன் என்னும் மன்னனாகி, இவளை மணந்து போகந்துய்த்து, காஞ்சிமாநகரில் வதிந்து அரசியற்றிப் பின்னர் நம்முடைய அருளால் இங்கு வந்தெய்தப் பெறுவாய்! எனத் திருவருள் புரிந்தார்.]

    அருளும் வாய்மொழி கேட்டலும் நடுங்கி யண்ண லார்மருங் கருட்பணி
    உரிமை
    மருவி வாழ்தரும் பேறும்வந் தடுத்த மண்ணின் மானுடப் பிறவியு நோக்கித்
    தெருளு றாதுளங் கலங்கியென் னினிமேற் செய்வ தென்றுசோ காந்துநா
    யகனார்
    கருணை யேபுரந் தருளுமென் றெண்ணிக் கசிந்து தாழ்ந்தனன் புறவிடை
    கொண்டான்.        142
    [இறைவன் அருளிய வாய்மொழியைக் கேட்டலும் நடுங்கி அண்ணலார் அருகிலிருந்து அவர் அருளிய பணியைச் செய்யும் பேற்றின் உயர்வையும், வந்து அடுத்த மானுடப் பிறவியின் இழிவையும் நோக்கி, தெளிவைடையாது மனங்கலங்கினான்; இனிமேற் செய்வது யாது என்று கவலையுற்றான்; எப்படியும் இறைவனாரின் கருணையே காத்தருளும் என்று எண்ணிக் கசிந்து வணங்கினா; விடைகொண்டு புறப்பட்டான்.]

    அல்ல ழுத்திய தெனவிருண் டொழுகு மஞ்சி
    லோதிமென் மலர்முக நெடுங்கட்
    கல்ல ழுத்திய குதம்பை நான்றெருத்திற் கதிர்க்குஞ்
    செஞ்செவி மாதொடெண் டிசையுஞ்
    சொல்ல ழுத்தி நாற்பயன்களு மெவர்க்குஞ் சுரக்குங்
    காஞ்சியம் பெரும்பெயர்த் தலத்து
    மல்ல ழுத்திய மணிவரைத் தடந்தோண் மதுகை
    மன்னர்தங் குலத்துவந் துதித்தான்.        143
    [இருளைத் திரட்டி அழுத்தியது என இருண்டு நீண்டு இருக்கும் கூந்தலையும் மென்மையான தாமரைமலர் போன்ற முகமும் நெடுங்கண்களையும் கொண்டவள்; கல் அழுத்திய காதணி தொங்கிக் கழுத்தில் சுடர் விடும் சிவந்த செவியினையும் கொண்ட வளாகிய மாலதியுடன், புகழுடைய அறம்பொருள் இன்பம் வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களையும் எவர்க்கும் சுரந்து அளிக்கும் காஞ்சி என்னும் பெருமையுடைய தலத்தில் மற்போரில் வலிய தடந்தோள் மதுகையுடைய மன்னர்குலத்தில் வந்து பிறந்தான். அல்- இருள் அஞ்சில் ஓதி. - அழகிய சிலவாகியகூந்தலை உடைய. குதம்பை – காதணி. நான்று- தொங்கி. எருத்து- பிடரி.மல் –மற்போர். மதுகை- வலிமை]

    குழவி வெண்மதி போன்மென வளர்ந்து கோதிலாத பல்கலைகளும் பயின்று
    மழலை மென்மொழி மாலதி மாதை மணந்து காஞ்சியைக் காவல்பூண் டிகலி
    யழலு மன்னவ ரனைவரும் பனிப்ப வடுநெ டும்படை விதிர்த்தரட் டடக்கி
    நிழல்செய் வெண்மதிக் குடைமிசை கவிப்ப நீதி வாய்மையா லரசுசெய் திருந்தான்.        144
    [இளம்பிறை போலும் என வளர்ந்து குற்றமற பலகலைகளும் கற்று, மழலைமென்மொழி பேசும் மாலதி மாதை மணந்து, காஞ்சியைக் காவல் பூண்டு, மாறுபட்டுப் போருக்கு வரும் மன்னர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கப் பெரும்படை செலுத்திப் பகைக் குறும்படக்கி வெண்கொற்றக் குடை நிழல் கவிப்ப நீதியால் அரசு செலுத்தி வாழ்ந்தான். ]

    சுணங்கு பூத்தெழுந் தொளிவடந் தழுவித் தொய்யின்
    மேற்பரித் தமுதமுள் பொதிந்து
    வணங்கு நுண்ணிடைக் கொடியினைச் சினந்து
    மதர்த்த பூண்முலை மாலதிப் பெயரின்
    அணங்கு மெல்லிதழ்க் குமுதவாய்த் தேற
    லார மாந்தி யின்பப் பெருங்கடலின்
    இணங்கி வாழ்ந்துபின் இறையவர் அருளால்
    இலங்கு வெள்ளியம் பொருப்பினைச் சேர்ந்தான்.        145
    [துண்டீரன் மாலதியுடன் இன்பந்துய்த்து வாழ்ந்து பின் இறையவர் அருளால்கயிலைமலையைச் சேர்ந்தான். மாலதியின் அழகுவர்ணனை. சுணங்கு- தேமல். இளமகளிரின் மேனியில் தோன்றும் நிற வேறுபாடு. ஒளி வடம்- ஒளியுடைய சங்கிலிகள். தொய்யில்- மகளிர் மார்பின் மீது எழுதப்படும் கோலங்கள். மதர்த்த பூண்முலையின் பாரத்தைத் தாங்கவியலாமல் நூல்போன்ற இடை வணங்கியது. அணங்கு- அழகிய பெண்;மாலதி. மெல்லிதழ்க் குமுதவாய்- மென்மையான இதழ்களையுடைய குமுதமலர் போன்றவாய். இஹழின் மென்மை மலரிதழுக்கும் மாலதியின் வாயிதழுக்கும் பொதுப்பண்பு. தேறல்- குமுதமலரில் உள்ள தேன்; மாலதியின்வாயூறல்.]

    எற்று தெண்டிரை வேலைசூழ் ஞால மேந்து தோளிணை பரித்திகல் கடந்து
    முற்று சீர்த்தியன் வயங்கு துண்டீரன் முழுத்த கேள்விய னாண்ட காரணத்தாற்
    கற்றை வார்சடைத் தெய்வ நாயக ரேகம்ப நாயகர் காக்கு நாயகர்வாழ்
    பொற்ற மாநகர்க் காஞ்சி துண்டீர புரமெனும் பெயர்பூண் டதுமாதோ.        146
    [துண்டீரன் ஆண்ட காரணத்தால் காஞ்சிபுரம் துண்டீரபுரம் எனப் பெயர் பெற்றது. எற்று- மோதுகின்ற. தெண் திரை- தெளிந்த அலை. வேலை- கடல் ஞாலம்- உலகம்; பூமி அந்தரத்தில் தொங்குவதால் இப்பெயர் பெற்றது. பரித்து- தாங்கி. அரசன் தன் நாட்டினைத் தன் தோள்களால் தாங்குகின்றான். இகல் – போர்; கடந்து- வென்று. சீர்த்தி – கீர்த்தி- பொரில் அடையும் வெற்றியால் வரும் புகழ். முழுத்த கேள்வியன் -நிறைந்த அறிவுடையவன். பொற்ற மாநகர்- பொலிவுடைய மாநகர்.]

    கலிவிருத்தம்
    தொடைவாய்ந் தபசுந் துளவன் முதலா
    முடிவா னவர்யா ருமுடிந் தொழியுங்
    கடைநா ளுறுகா லையிலெங் குமிகப்
    படரா ழியெழுந் துபரந் ததுவே.        147
    [துளசிமாலையணிந்த திருமால் முதலாக வானவர்கள் யாவரும் மடிந்தொழியும் மகாசங்காரகாலத்தில் எங்கும் கடல் பொங்கிப் பரந்தது. தொடை- மாலை. துளவம்- துளசி. துளவன் – துளவமாலை அணிந்த திருமால். கடைநாள்- ஊழிக்காலம். ஆழி- கடல்.]

    மாலா ரணன்மற் றுளவா னவருஞ்
    சாலா வினைமாட் டியதா பதரும்
    கோலா கலமா கிவருங் குரைநீர்
    ஆலா கலநோக் கியயர்ந் தனரே.        148
    [திருமால், வேதன் மற்றும் உள வானவர்கள் யாவரும் பெருமையில்லாத வினைவந்து தங்களை பற்றியதாகப் பதறுவார்கள்; ஆரவாரமாக எழுந்து பேரொலியுடன் வரும் கரிய வெள்ளத்தைக் கண்டு ஆலகால விஷமோ என ஐயுற்றனர்.]

    அந்தோ வினியென் செயலா வதெனச்
    சிந்தா குலமுற் றனர்திக் குவிராய்
    முந்தார் பெருநீர்க் கடன்மூழ் குமுன்
    நந்தா தபயக் கடனண் ணினரால்        149
    [ ஐயோ, இனி என்ன செய்வது? என சிந்தையில் கலக்கம் உற்றனர்; எல்லத்திசைகளைபும் விரவி ஆரவாரித்து எழும் கடல் வெள்ளத்தில்மூழ்கும் முன்னம் குறைவிலாத அபயக் கடலை அடைந்தனர்.நந்தாத- குறைவில்லாத. அபயக்கடல்- சிவபெருமான்.]

    கழுமக் கருமக் கடுவன் பிறவி
    எழுமைக் கடனின் றுமெடுத் தருளாஞ்
    செழுமைக் கரைசே ரவிடுத் தருளும்
    விழுமக் குளிர்காஞ் சியைமே வினரே         150
    [அறிவை மயக்கும் வலிய வினையினால் தோன்றும் கொடிய பிறவியாகிய ஏழுகடலில் அமிழ்ந்து கிடக்கும் உயிர்களை எடுத்துத் தனருளாகிய வளமான கரையை அடைய அருளும் பெருமையுடைய தண்ணிய காஞ்சிநகரை அடைந்தனர். கழுமம்- மயக்கம்.கடுமையானதும் வலிமையானதும் ஆகிய பிறவி- பிறப்பின் கொடுமை குறித்தது. காஞ்சி பிறப்பறுப்பது.]

    கம்பா நதியின் கரைமீ துநறை
    வம்பா ரிணர்மா வின்வதிந் தருளுங்
    கொம்போர் புடையார் குளிர்செஞ் சரண
    வம்போ ருகமன் பொடிறைஞ் சினரே.          151
    [கம்பை ஆற்றின் கரைமீது, தேன்மலர்க் கொத்துக்கள் உடைய மாவின் அடியில் எழுந்தருளும் கொம்பினை ஒருபக்கத்தில் உடையவரின் சிவந்த திருவடிகளாகிய தாமரையினை அன்புடன் வணங்கினர். நறை- தேன். இணர் – கொத்து. கொம்பு- கொம்பு போன்றா இறைவியார். கொம்போர் புடையார்- எகாம்பரர். அவர் மாவில் வதிபவர் ஆதலால் அம்மையார் கொம்பு எனப்பட்டார். அம்போருகம்- தாமரை.]

    புரமூன் றுமொருங் குபொடித் தருளும்
    பரமா வுலகங் கள்பதைப் பவெழு
    முரவார் கடலோப் பியுயக் கொளுவாய்
    வரதா வெனவன் பின்வழுத் திடலும்               152
    [அசுரர்களின் மதில்கள் மூன்றனையும் ஒருசேரப் பொடித்தருளும் பரமனே! உலகங்கள் நடுங்க எழுகின்ற வலிய கடலை விலக்கி எம்மை உய்யக் கொள்வாய் ! வரதனே! எனப் பத்தியுடன் வணங்கவும்]

    மொழியுந் துதிகேட் டருண்முக் கணனார்
    அழியுந் துயரோப் புதிரென் றருளாற்
    குழிவந் தவர்நெஞ் சுகுளிர்ப் பவமிழ்
    திழியுஞ் சுவைமென் மொழியீந் தருளி.        153
    [ தேவர் முதலியோர் சொன்ன துதியைக் கேட்டருள் முக்கண்ணனார், குழுமி வந்தவர் நெஞ்சு குளிருமாறு அமிழ்தம் என ‘ துயரை ஒழியும்’ எனக் கூறியருளி. குழி- குழுமி, கூட்டமாக. அமிழ்து இழியும்- அமிழ்து சொட்டும். அழியும் உயிரை தளிர்க்கச் செய்த சொல்லாதலின் அது அமிழ்து ஒழுகுவதாயிற்று]

    செழுவண் டுமுரன் றுதிளைப் பமதுப்
    பொழியுந் தொடைவேய்ந் தெழில்பூத் தகுழன்
    மழையுண் விழிமா தொளிர்கா ளிதனை
    யெழுவே லையடக் கெனவே வினரே.               154
    [செழுமையான வண்டுகள் முரன்று திளைப்பத் தேன் பொழியும் மலர்மாலை அணிந்து அழகுபூத்த குழலையும் குளிர்ந்த கருவிழிகளையும் உடைய காளியை எழுந்து பெருகிவருகின்ற கடலை அடக்கு என ஏவினார்.]

    அயில்கண் டனகூர் விழியவ் வடிவின்
    மயில்கண் டனசா யன்மடந் தைவிடம்
    பயில்கண் டர்பதந் தொழுதா ழிபனி
    வெயில்கண் டெனவா டமுன்மே வினளே.        155
    [வேல் போன்ற கூர்த்த விழியையும் மயில் போன்ற சாயலையும் உடைய காளி , விடம் தங்கிய கண்டரின் திருவடிகளைத் தொழுது, சூரியனைக் கண்ட கடல் போன்ற பனியென வாட மேவினள். ஆழி- கடல். பனி வெயில் கண்டென- சூரியனைக் கண்ட பனியென.]

    முன்னுற் றுமுருக் கமுயன் றருளும்
    வன்னித் திரள்கால் படைமங் கையினைக்
    கன்னிக் கடல்கண் டுகலங் கியவள்
    தன்னைத் தொழுதுந் துதணிந் ததுவே.        156
    [முன்னே தோன்றி அழிக்க முயன்று அருளும் நெருப்பினை உமிழும் படையை ஏந்திய காளியைக் கடலாகிய மங்கை கண்டு கலங்கி அவளைத் தொழுது எழுச்சி அடங்கியது. முருக்க- அழிக்க. வன்னி- நெருப்பு. கால்- உமிழும்]

    இலயப் புனல்வெள் ளமெழா துதணிந்
    துலையப் புரியுத் தமிமீண் டருளா
    லலையப் பணிவார் திருமுன் னமர்பூ
    வலயத் தவர்போற் றவதிந் தனளே. 157
    [உலகத்தை ஒடுக்க என எழுந்த பிரளய வெள்ளம் எழாது அடங்கி நிலைகுலையப்புரிந்த உத்தமியாகிய காளி மீண்டு, அலைகின்ற புனலை அணிந்த இறைவர் திருமுன் அமர்ந்து உலகத்தவர் போற்றத் தங்கினள். இலயம்- ஒடுக்கம். உலைய- குலைய. அலை அப்பு அலைகின்ற நீர் அல்லது அலைகளையுடைய நீர்; கங்கை. அலை அப்பு அணிந்த எனக் கொள்க., கட்டளையிட்ட. அமர்பு- அமர்ந்து; செய்பு என்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சம்]

    வெருவிப் பருவந் தவிணோ ரெவருங்
    கருணைச் செயல்கண் டுகளித் தஞர்நோ
    யொருவித் தனிமா வடிஉம் பர்பிரான்
    இருபொற் கழலேத் தியிறைஞ் சினரால்                158
    [அச்சத்தால் துன்பமுற்ற தேவர்களெல்லாம் இறைவனின் கருணைச் செயலைக்கண்டு களித்து வருத்தம் நீங்கி ஒப்பற்ற மாமரத்தின் அடியில் எழுந்தருளும் தேவர் பிரானின் பொலிவுடைத திருவடிகளை ஏத்தி இறைஞ்சினார்கள்.]

    எற்றித் திரைபா யிலயப் புனலை
    வெற்றித் திரள்காட் டிவிலக் குதலாற்
    றொத்துப் பொழில்சூழ் நகர்தா னிலய
    சித்துப் பெயர்வாய்ந் துதிகழ்ந் ததுவே.        159
    [ அலைமோதுகின்ற பிரளயகால வெள்ளத்தை, வெற்றியின் வலிமை காட்டி விலக்குதலால் மலர்க் கொத்துக்களை உடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த காஞ்சிநகர்தான் இலயசித்து என்னும் பெயர் வாய்த்துத் திகழ்ந்தது.]

    கலிநிலைத்துறை.
    பண்டு ழாவிய பாட்டிசை பயிற்று தீங்குரல்
    வண்டு பாய்ந்துபாய்ந் துழக்குமென் மலர்ப்பொகுட் டோனும்
    விண்டு தேத்துளி துவற்றிமே தகுமணங் கமழ்ந்த
    தண்டு ழாய்த்தொடை துயல்வரு ந் தடம்புயத் தவனும்.        160
    [ பண்ணோடு விராவிய பாட்டிசை இசைக்கும் இனிய குரல் வண்டு பாய்ந்து பாய்ந்து உழக்குகின்ற மெல்லிய பொகுட்டினையுடைய தாமரை மலரின்மேல் இருப்பவனாகிய நான்முகனும்,இதழ் விரிந்து தேந்துளிகள் சிந்தும் மணங்கமழும் குளிர்ந்த துளசி மாலை அசைதரும் வலிய புயத்தவனாகிய திருமாலும்]

    பண்டை யோர்தினம் பரவைநீர்ப் பெருக்கிடைத் தம்முட்
    கண்டி யாரையென் றொருவன்மற் றொருவனைக் கடாவி
    மிண்டி யான்முதல் யான்முத லென்றனர் வெகுண்டு
    மண்டு போரிடை மூண்டனர் மாதிர மயங்க.        161
    [முன்பொரு தினம் கடல்சூழ் நிலப்பரப்பிடை ஒருவரையொருவர் கண்டு யாரையோ நீ என ஒருவரையொருவர் வினவி யானே முதல்வன் என வெகுண்டு நிலவுலகம் கலக்கம் கொளச் சண்டையிடத் தொடங்கினர்]

    முழங்க வார்த்தெழுந் திருவரும் முறைமுறை படைகள்
    வழங்கு நாப்பணெவ் வுயிர்க்கும்வல் வினைப்பவத் தொடக்கின்
    அழுங்கு றாதருள் அண்ணலார் அற்புத வடிவாய்
    ஒழுங்கு கொண்டபல் லண்டமும் உறநிமிர்ந் தனரால்        162
    [இருவரும் ஆரவாரித்து முழங்கி ஒருவர்மேல் ஒருவர் ஆயுதங்களை எய்து போரிடும் வேளையில், எவ்வுயிருக்கும் வலிய வினைத் தொடக்கினில் அழுந்தி வருந்துறாத வண்ணம் அருளுகின்ற அண்ணல் சிவபெருமான் ஒழுங்குற அமைந்த பல்லண்டங்களையும் ஊடுருவி நிமிர்ந்து ஓங்கி நின்றார். நாப்பண்- நடுவில்; அவர்கள் செய்யும் போருக்கு இடையில். படைகள் வழங்கும்- படைகளை எய்யும். தொடக்கு- கட்டு. அழுங்குறாது- அழுந்திவிடாதவாறு. அற்புதம்- உலகில் நிகழாதது. ஒழுங்கு கொண்ட பல்லண்டம்- ஒன்றன் கீழ் ஒன்றாக ஒழுங்குபட அமைந்த பல் அண்டங்கள்]

    முதிர்செ ழுஞ்சுடர்ச் சோதியாய் முளைத்திடை யெழுந்த
    எதிர றுந்திரு வடி விடை யிகலினர் வழங்குங்
    கதிர்ப டைக்கலம் முழுவது மெய்தின கரப்ப
    அதிரும் வெஞ்சமர் தணந்தனர் அற்புதம் முகிழ்த்தார்.        163
    [மிக்க பெருஞ்சோதிப் பிழம்பாய் இடையே முளைத்தெழுந்த வடிவில், பகைத்தவர் இருவருமெய்த படைக்கலன்கள் முழுவதும் பொருந்தி மறைந்தன. இருவரும் அதிர்த்துச் செய்த போரினைத் தவிர்த்தனர். அற்புத உணர்வில் திளைத்தனர்]

    அண்ட கோளகை முழுவது மவிரொளி யசும்பக்
    கொண்ட பேரழல் வடிவினை யடிமுடி குறுகிக்
    கண்டு மீளுது மெனக்கலாய் முரணினர் கடுகி
    மண்டு காதலிற் றுருவுவான் புகுந்தனர் மாதோ.        164
    [ அண்டம் முழுவதும் படர்ந்து வீசிய பேரழல் வடிவின் அடிமுடிகளை நெருங்கிக் காண்போம் என இதுவரை தம்முள் போரிட்டுவந்த இருவரும் விரைந்து மிக்க அன்புடன் தேடத் தொடங்கின. கோளகை kōḷakai, n. < id. 1. Sphere, globe, orb; வட்டவடிவம். துருவு- v. tr. cf. துருவு-. To search after; தேடுதல்]

    மருப்பு வாய்ந்தவல் லெறுழிபாய் மாதிரக் கயமும்
    பொருப்பு மேனவு மதிர்வுறப் புவிமுழு தகழ்ந்து
    திருப்பொன் மார்பினான் றேடினன் றிருவடி காணான்
    விருப்பு மாய்ந்தனன் வெள்கினன் தளர்வொடு மீண்டான்.        165
    [கொம்பு வாய்த்த வலிய பன்றி பாய எட்டுத்திசைக் களிறுகளும் எட்டுமலைகளும் மற்றையவும் கலங்க, நிலம் முழுவதையுமுழுதும் திருவாழ் மார்பினன் திருவடியைக் காணாது ஆசை அழிந்தனன்; வேகம் கொண்டான்; தள்ர்வுடன் மீண்டான். மருப்பு- தந்தம். எறுழி- பன்றி. மாதிரம்- திக்கு. கயம்- யானை. எட்டுத்திக்குகளிலும் உலகத்தை எட்டு யானைகள் தாங்கி நிற்பதாக ஐதிகம். பொருப்பு- அட்டபர்வதம். திரு- திருமகள். விருப்பு- காணும் ஆசை.]

    மின்ன ளாவிய விரிசிறைப் பவளம்வீழ் துவர்வாய்
    அன்ன மாகிவிண் நிவந்தெழும் அம்புயப் புலவன்
    கன்னி பாகனார் கதிர்முடி கண்ணுறக் கடுப்பின்
    முன்னி நேடினன் காண்கிலன் முயற்சியுந் தளர்ந்தான்.        166
    [பொன்னிறச் சிறகுகளும் பவளம்போன்ற துவர் அலகும் உடைய அன்னப்பறவையாகி, வெண்டாமரையில் இருக்கும் பிரமன், மேலெழுந்து கன்னிபாகனாரின் ஒளிரும் முடியினைக் கண்ணாற்காணப் பரபரப்புடன் முனைந்து தேடினான்; காண இயலானாகி முயற்சி தளர்ந்தான். நிவந்து- மேலெழுந்து. கன்னி பாகனார்- திருவேகாம்பரேசுவரர். கடுப்பு- பரபரப்பு, வேகம். முன்னி- முனைந்து. நேடினன் -ஆராய்ந்தான்.]

    வன்ன வொண்சிறை முரிந்துடல் முழுவதும் வருந்தி
    நன்னர் நெஞ்சகத் தெழுந்ததோ ரூக்கமும் நலிந்தான்
    அன்ன மாயவ னடியிணை காண்பனே யினியான்
    என்ன செய்வ லென்றுழந் திடர்ப்படு மேல்வை.        167
    [அழகிய ஒல்லிய சிறகுகள் முரிந்துபோய் உடல் முழுதும் களைப்பினால் மிகத் தளர்ச்சியுற்று மனஊக்கமும் அழிந்தான். போட்டியிட்ட மாயவன் திருவடியைக் காண்பனே, இனியான் என்செய்வேன் என மனம் புழுங்கி இடர்ப்படும் வேளையில்]

    துதிசெய் வார்மனக் கோயில் கொண்டருளிய தூயோர்
    நதிநி லாந்திரு முடியினின் றிழிந்துமுன் நணுகும்
    பொதிநுண் டாதுறைத் தலர்ந்துசெந் தேன்பொழிந் திலகும்
    புதிய நாட்பொலந் தாழையம் போதினைக் கண்டான்.        168
    [துதிசெயும் அன்பர்களின் மனத்தையே கோயிலாகக் கொண்ட தூயவராம் சிவபெருமானது கங்கைநதி தங்குந் திருமுடியிலிருந்து இழிந்து, தன் முன்னர் வரும் மகரந்தத் தாது பொதிந்து, செந்தேன் பொழிந்து விளங்கும் புதிது மலர்ந்த தாழையம்போதினைக் கண்டான். தூயோர்- நிமலர். இழிந்து- இறங்கி என்பதொருபொருள்; தன் நிலையினின்றும் இழிவுபட்டு என்பது மற்றொரு பொருள். ]

    முண்டகத்தினைக் கடாயினன் முடிவில்பல் லுகத்தான்
    அண்டர்கோன் முடிநின் றிழிந் தணைவது கேட்டான்
    கொண்ட வோகையன் இவன் றிருமுடியினைக் குறுகிக்
    கண்டுளா னென்றோர் பொய்க்கரி போக்கெனக் கரைந்தான்.        169
    [முண்டகம்- தாழம்பூ. கடாயினன் -வினவினன். ஓகையன் -உவகையன். தாழம்பூவினைவிசாரித்தான்; முடிவில்லாதவனும் ஊழிபலகடந்தவனும் அண்டர்கோனும் ஆகிய சிவபெருமானின் முடியினின்றும் இழிந்து வருவது கேட்டான்; உவகை கொண்டான்; இவன் (பிரமன்) சிவனின் திருமுடியினைக் கண்டுளான் என்று பொய்சாட்சி கூறுக எனக் கெஞ்சினான். கரைந்தான்; கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.]

    இரந்தி ரந்துநைந் தேங்கியா ருயிரெலாந் தளர
    அரந்தை யுற்றது நோக்கி யற்றாகென விசைந்த
    சுரந்த நுண்டுளித் தேன்கொழி தோட்டல ரோடும்
    பரந்த வெண்கடற் பாயலான் மருங்குறப் படர்ந்தான்.        170
    [நான்முகன் ஏங்கி உயிரும் உருகும்படி இரந்திரந்து கெஞ்சி வருத்தியதை நோக்கி ‘அப்படியே ஆகுக’ என்று இசைந்த தேன்துளிக்கும் இதழ்த் தாழைமலருடன் பாற்கடற் பள்ளிகொண்டவனிடம் சென்றான்.]

    கள்ள றாதசெந் தாமரைப் புதுமலர் கடுக்கும்
    வள்ள லார்திருச் சேவடி காண வல்லாத
    புள்ள வாவிய துளவணி புயத்தகே ளென்னா
    வுள்ள மீக்கொளுங் களிப்பினா லுரைத்தன்மே யினனால்        171.
    [ தேன் நீங்காத செந்தாமரைப் புதுமலர் போன்ற சிவனின் திருவடிகளைக் காண இயலாத கருட வாகன!, துளவ மாலை அணிந்த புயத்த! கேட்பாயாக! என்று உள்ளம் மீக்கொளும் களிப்பினொடு கூறத்தொடங்கினான். ]

    அரவம் பூண்டுபொன் னம்பலத் தருணடங் குயிற்றுங்
    குரவ னார்தம திளங்கதிர்க் கூன்மதிக் குழவி
    பரவு நீண்முடி கண்டன னென்றனன் பரவி
    வருவ தோர்ந்தெவ ருரைக்குநர் மம்மர்கோட் பட்டார்.        172
    [பாம்பணிந்து, பொன்னம்பலத்தில் அருள் நடனம் இயற்றும் இறைவனாருடைய, ஒளிரும் வளைந்த பிறைபரவும் நீண்ட முடியைக் கண்டனன் என்று வணங்கிக் கூறினான். இனி வருவதை தெரிந்தும் இவ்வாறு பொய் கூறுவார் அறிவு மயக்கத்தின் பாற்பட்டவரே. ஓர்ந்து- ஆராய்ந்து, அறிந்து. மம்மர்- மயக்கம் ]

    போழம் போவெனுங் கண்ணி யோர் புடையினர் முடியைக்
    கேழம் போருகன் கண்டன னெனக்கிளர்ந் தெழுந்து
    சூழம் போதியிற் கண்டுயில் துளவணிந் தவன்முன்
    தாழம் போதும்ஓர் பொய்க்கரி சாற்றிய தம்மா.               173
    [ பிளக்கின்ற அம்போ எனும்படியான கண்ணையுடைய அம்பிகையைத் தன் பங்கிலுடைய இறைவனின் திருமுடியை தாமரையோன் கண்டனன் என மனக் கிளர்ச்சியுடன் சூழும் கடலில் அறிதுயில் கொள்ளும் துளப மாலை அணிந்தவன் முன் தாழம்பூ ஒரு பொய்க்கரி சாற்றியது. போழ்- பிளக்கும். கேழ்- நிறம். அம்போருகம்- தாமரை. அம்போருகன் -நான்முகன். அம்போதி- கடல். கரி- சாட்சியம். கிளர்ச்சி- பொய் கூறுவதில் தோன்றிய மன ஊக்கம்.]

    கோட்ட முற்றுரை கிளத்தலுங் குரைபுனல் பொதிந்த
    நீட்டு வேணியார் தோன்றி முன்னெருப்பெழச் சினவி
    யோட்டை நெஞ்சினை பொய்க்கரி யுரைத்தனை மலர்நீ
    யீட்டு பூசனைக் காகலை யெமக்கென் விகந்தார்.        174
    [தாழம்பூ மனக் கோணல் உற்று இவ்வாறு உரைத்தலும், ஒலிக்கும் கங்கையாற்றைப் பொதிந்த நீண்ட சடைமுடியராகிய சிவபெருமான் முன் எதிர் தோன்றி நெருப்பெனச் சினந்து, ஓட்டைநெஞ்சினை உடையாய்! பொய்சாட்சி உரைத்தனை! மலராகிய நீ எம்மைப் பூசித்தலுக்கு ஆகாய் எனக் கழித்தார். கோட்டம்- கோணல். ஓட்டை நெஞ்சு- உண்மையில்லாத நெஞ்சு. கரி- சாட்சியம். ஈட்டு பூசனை- புண்ணியம் ஈட்டுவதற்குகந்த பூசனை.]

    மறைக ளோதியு மறைப்பொரு டெள்ளியும் மனத்துக்
    கறையை யோம்பலை பொய்யுரை கரைந்தனை முகடி
    நிறையு மாருயிர் படைக்கு நின்பதமு நீள்வாழ்வும்
    இறையி னீங்குதி யெனவயன் றன்னையு மிகந்தார்.        175
    [வேதம் ஓதியும் வேதப் பொருள் தெளிந்தும் மனதில் களங்கம் கொண்டாய்!; பொய் உரைத்தாய்!;மூதேவி; நிறைந்த அரிய உயிர்களுக்கு உடலுலகு படைக்கும் நின்பதவியும் தெய்வமெனத் தொழப்படும் நின் பெருவாழ்வும் விரைவில் நீங்குவாய்! என நான்முகனையும் கழித்தார். கறை- களங்கம்.பொய்யான சிந்தை மனக் கறை. அதுவராமல் காத்தல் வேண்டும். முகடி- மூதேவி; முகடி mukaṭi, n. prob. id. Goddess of Misfortune; மூதேவி. மடியுளாண் மாமுகடி யென்ப (குறள்,        617).

    கள்ள லங்கிய கடிமலர்ப் பொகுட்டணைப் புலவன்
    அள்ளி வார்கையின் அழிமதக் குஞ்சரம் அயின்ற
    வெள்ளி லங்கனி வீழ்தரப் பதமிழந் திழிப்புண்
    டுள்ள மிக்குடைந் தலக்கணீ ருவரியிற் படிந்தான்.        176.
    [தேன் தேங்கிய மணமுள்ல தாமரைப் பொகுட்டின்மேல் இருக்கும் நான்முகன் மதமிக்க யானை தன் நீண்ட துதிக்கையினால் எடுத்து உண்ட விளங்கனி போலத் தன் பதம் இழந்து உள்ளம் உடைந்து துன்பக்கடலில் மூழ்கினான். புலவன் -வேதியன். குஞ்சரம் யானை வேழம். வேழம் என்பது விளாங்கனிக்கு வரும் ஒரு நோய். அந்த நோய் தாக்குண்ட விளம்பழத்தின் மேல் ஓடு நன்றாக இருந்தும் உள்ளில் ஒன்றும் இன்றி வற்றி இருக்கும். ஆனையுண்ட விழங்கனி என்பது ஒரு நியாயம். புறத்தே எவ்வித மாற்றமும் இன்றி அகத்தே அனைத்தும் வற்றி ஒழிந்து விடுவதற்கு ஆனை உண்ட விளங்கனி என்பர்.]

    சட்ட வான்பதந் தனையிழந் தி யாவரும் இழிக்கப்
    பட்டு ளேனினி யெவன்செயற் பாலதென் றெண்ணிக்
    கட்ட வெந்துயர்க் களைதருங் காஞ்சி மாநகரைப்
    பெட்ட வேட்கையி னெய்தினான் றன்பதம் பெறுவான்.        177
    [ விரைந்து உயர்ந்த பதத்தினை இழந்து எல்லோராலும் இகழப் பட்டுளேன்; இனி யான் செய்யத்தக்கது யாது என்று சிந்தித்துக்,தான்படும் கொடிய துயர்தனை களைந்தருளும் காஞ்சிமாநகரை தன்னுடைய இழந்த பெரும்பதத்தை அடையும் விருப்பத்தினால் ஆவலுடன் அடைந்தான்.. சட்ட- விரைய.வான்பதம்- உயர்ந்த பதவி. எவன் – என்; யாது? கட்ட- மிகுதியான. பெட்ட- விருப்பமான. வேட்கை- அவா.]

    ஒட்ட லார்புரம் உருத்தவன் ஏகம்பந் தொழுது
    சிட்டர் போற்றுறுங் கச்சபா லயத்தினைச் சேர்ந்து
    வட்ட வாய்ச்செழுங் கமலமுங் குமுதமு மலரும்
    இட்ட சித்தி வெண்டிரைப் புனலிது தோய்ந்தனனால்.        178
    [பகைவர்களின் முப்புரத்தைச் சினந்தவன் எழுந்தருளும் ஏகம்பத்தைத் தொழுது பின்னர், சிட்டர்கள் போற்றும் கச்சபாலயத்தை அடைந்து வட்டமாகத் தாமரையும் குமுதமும் மலரும் இட்டசித்தி என்னும் தீர்த்தத்தினில் இனிது தோய்ந்தனன். ஒட்டலர்- ஒட்டாதவர்கள்; பகைவர். புரம்- மதில். உருத்தவன் -கோபித்தவன். சிட்டர்- சிரேஷ்டர், பெரியோர். ]

    பற்று வெந்துயர் நரகிடைப் படுத்தும் வல்வினையை
    முற்று நீற்றிடுங் கச்சபா லயத்தமர் முதல்வர்
    பொற்ற தாமரைத் தாளிணை போற்றினன் பழிச்சி
    யற்ற வைம்பொறி யொடுமுயன் றருந்தவம் புரிந்தான்.        179
    [பற்றி வெந்துயராகிய நரகத்தினிடைப்படுத்தும் வலிய வினை முழுவதையும் சுட்டெரித்துவிடும் கச்சபாலயத்தில் அமர்ந்திடும் முதல்வரின் பொற்றாமரை போலும் திருவடிகளை வணங்கித் துதித்தனன்; ஐம்புலன்கலையும் நீத்து அரிய தவம் புரிந்தான்.]

    கால மெண்ணில அருந்தவம் ஆற்றுறுங் காலை
    ஆல முண்டவர் திருவுளம் இரங்கியங் கெதிர்நின்
    றேல வின்னருள் புரிதரப் போற்றிள மதியக்
    கோல வேணியார் திருமுன்பு குலாவிவாழ்ந் தனனே        180
    [எண்ணற்ற காலம் அரிய தவத்தினைச் செய்துவரும்பொழுது, நஞ்சுண்டகண்டர் திருவுள்மிரங்கி அங்கெதிர் தோன்றினார். அவர் இன்னருள் புரிய அவர் திருமுன்பு மகிழ்ந்து வாழ்ந்தனன்]

    நாறு தாமரைச் சேக்கையான் றன்பத நாடி
    ஏறு யர்த்தவர் அருள்கிடைத் திருந்தகா ரணத்தாற்
    பேறு தந்தருள் பிரமமா புரமெனு நாம
    மீறு கண்டிடாக் காஞ்சிமா நகரமெய் தியதே.        181
    [மணமுள்ள தாமரைமலரை இருக்கையாகக் கொண்ட பிரமன் இடபக்கொடி உயர்த்த ஏகாம்பர் அருள் பெற்றிருந்த காரணத்தால், அப்பேறு தந்தருள் பிரமாபுரம் என்னும் நாமம், ஈறிலாக் காஞ்சி நகரம் எய்தியது.]

    கலிவிருத்தம்
    மற்றொர் காலத்து வார்மதுத் தாமரைப்
    பொற்ற பூம்பொகுட் டண்ணலம் புங்கவன்
    முற்று மாக்கு முதற்றொழில் பல்குதற்
    குற்ற சூழ்ச்சி யெவனென வுன்னினான்.        182
    [மற்றொரு காலத்தில், தாமரைமலரின் அழகிய பொகுட்டில் தங்கும் தேவனாகிய பிரமன் உலகம் முழுவதையும் படைக்கும் முதற்றொழில் விருத்தி யடைவதற்கு உற்ற சாதனம் யாது என நினைந்தான்.]

    வம்பு நாறு மணிக்கலு ழிக்கடக்
    கம்ப மால்வெண் கதக்களி றூர்தரும்
    அம்பொன் மோலி வலாரியை யாதியாம்
    உம்ப ராரவர் தம்மொ டுசாவியே        183.
    [புதிது நாறும் மதநீர் பொழியும் வெள்ளையானையை வாகனமாக ஊர்தரும் இந்திரன் முதலாகிய தேவர்களுடன் விசாரித்து. வம்பு- புதுமை. நாறும் – மணக்கும். மணிக்கலுழிக் கடம்- கடம்- மதம் ; கலுழி- கலங்கல் நீர். சேறு. மணிக்கலுழி- கரிய சேறு- மதநீர் கரிய கலங்கல் நீர் போன்றது. கம்பம்- அசையும். கதம்- கோபம். வலாரி- வலாரன் என்ற அசுரனைக் கொன்றமையால் இந்திரனுக்கு வலாரி என்பதொரு பெயர். உம்பர் – தேவர்கள். உசாவு- விசாரி]

    ஒற்றை யாழியந் தேரவ னுள்ளுறப்
    பற்றி யீர்க்கும் பசுஞ்சினைப் பூம்பொழில்
    சுற்று மல்குந் தபோமயத் தொன்னகர்
    அற்ற மில்லதோர் அன்பொடும் ஏகினான்.        184
    [ஒற்றை ஆழியந் தேரவன் -சூரியன்; சூரியனின் தேருக்கு ஒற்றைச் சக்கரமேயுண்டு. சூரியனின் உள்ளத்தைப் பற்றித் தன்பாலீர்க்கும் பழமையானதுவும் தழைந்த பூஞ்சோலைகளை உடையதுமாகிய தபோமயம் என்னும் பெயரிய நகருக்குக் குற்றம் அற்ற அன்பொடும் ஏகினான்.

    பரக்கு நீர்நதிக் கம்பை படிந்துபோந்
    தரக்கு வார்தளிர்க் கொக்கடி வைகிய
    கரக்குன் றீருரிக் கண்ணுத லாற்பதஞ்
    சுரக்கு மோகை துளும்புறப் போற்றினான்.        185
    [ பரந்த நீர்ப்பரப்புள்ள கம்பையாற்றில் மூழ்கிப்போய், அரக்கு நிறத் தளிர்களையுடைய மாவடியின் நீழலில் எழுந்தருளியவரும் யானையின் தோலை உரித்தவருமாகிய கண்ணுதலின் திருவடிகள் சுரக்கும் உவகை தளும்ப வழிபட்டான். அரக்கு- கருஞ்சிவப்பு. கொக்கு- மா. கரக்குன்று- கையை உடையமலை; யானை. கண்ணுதலார்- சிவன். ஓகை- உவகை. துளும்ப- தளும்ப.]

    கொங்கு லாம்பொழிற் புண்ணிய கோடிமுன்
    அங்கண் வைகி அருமறை யாற்றினாற்
    புங்க வானவர் புங்கவர் சூழ்தரத்
    துங்க வாம்பரி வேள்வி தொடங்கினான்.           186.
    [தேன் நிறைந்த பூஞ்சோலைகளையுடைய புண்ணியகோடி முன் அத்தலத்தில் தங்கி வேதநெறிப்படி தேவர்களும் மேலோர்களும் புடைசூழ மேன்மையுடைய அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான்.]

    விடுத்த கொய்யுளை வெய்யமா யாவியென்
    றெடுத்தி யம்பும் அவுணன் இறையின்வந்
    தடுத்து வேள்வி யலையெறி சுத்தநீர்
    மடுத்த வேலை கரந்தவண் வைகலும்.        187
    [வேள்வியில் விடுத்த குதிரையை மாயாவி என்ற பெயருடைய கொடிய அவுணன் விரைவில் வந்து பற்றி வேள்வியில் அலையெறிந்த சுத்தநீரினைப் பருகிய கடலில் மறைத் து வைத்து அங்குத் தங்கவே. கொய்யுளை- குதிரை; உளை- பிடரி; கொய்யுளை கத்தரித்த பிடரி; அன்மொழித்தொகையாய்க் குதிரையைச் சுட்டியது. ]

    கலணை வாம்பரி காண்கில னொய்யெனப்
    புலனழிந்தனன் புந்தி திகைத்தனன்
    உலையு நெஞ்சம் உருகினன் மாவடித்
    தலைவர் சேவடி தஞ்சமென் றண்மினான்               188
    [ குதிரையைக் காணாது புத்தி மயங்கினன்; அறிவழிந்தனன்; வருந்தும் நெஞ்சம் உருகினன்.; மாவடித் தலைவராகிய ஏகம்பரின் சேவடியே தஞ்சம் என்று அங்கு அடைந்தான். கலணை- சேணம். வாவும் – தாவும். ஒய்- விரைவுக் குறிப்பு. ]

    ஊற்று கட்புனல் வார்ந்தொளி ருந்திரு
    நீற்று மெய்யிடை வண்ட னிலாவுறப்
    போற்றி நின்றபொற் றாமரை யண்ணன்முன்
    னேற்றின் மேலவர் தோன்றி யியம்புவார்.               189
    [நீரூற்றுப் போலக் கண்கள் புனல் பெருகி மேனியின் மேல் பூசியிருந்த திருநீற்றினை வண்டலாகச் செய்ய, வணங்கிநின்ற பிரமன் முன் ஏற்றுவாகனமுடைய இறைவர் வந்து தோன்றிக் கூறுவார். திருநீற்று மெய்- திருநீற்றினைப் பூசிய மேனி. பொற்றாமரையண்ணல்- அயன்.ஏற்றின் மேலவர்- சிவபெருமான்.]

    முச்ச கங்கள் முகிழ்க்கும் முளரியோய்
    எச்ச கங்களும் தத்த மியல்பினால்
    வைச்ச நம்மொரு பாதி வடிவமாம்
    எச்சன் ஈர்ந்துள வத்தொடை மாயவன்        190
    [மூவுலகங்களையும் தோற்றுவிக்கும் தாமரைத் தவிசினோய்! எவ்வுலகங்களையும் அதனதன் இயல்பில் இருக்குமாறு வைத்த, நம்மில் ஒரு பாதிவடிவமான எச்சன்; ஈரமான துளசிமாலை யணிந்த மாயவன். முகிழ்க்கும்- தோற்றுவிக்கும். முளர்- தாமரை. முளரியோன் - நான்முகன். எச்சன் – யாகத் தலைவன்; யாகவடிவினன்;]

    கன்னி யந்துள வக்கடி மார்பினான்
    மன்னு மைங்கதி வாம்பரி யைக்கொணர்ந்
    துன்ன வாவை நிரப்புவ னூங்குவன்
    றன்னை வேண்டு கெனவரு டந்துபின்               191
    [மணமுள்ள துளசிமாலை அணிந்த மார்பினனாகிய அவன், ஐந்து கதிகளையுடைய குதிரையினை மீட்டுக் கொணர்ந்து உன் ஆசையை நிறைவு செய்வான்; அவனை வேண்டுக என்று அருள்தந்து பின். கன்னி- புதுமை. கடி- மணம். ஐங்கதி; குதிரையின் நடை ஐந்து; அவையாவன: மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி, இடபகதி என்பன. ]

    அரவப் பள்ளியி னானை அழைத்தவன்
    பரவக் கண்ணருள் தந்தயன் பாய்பரிக்
    கரவைக் கண்டு கொணர்ந்து கடிமகப்
    புரவைக் கொள்கெனப் பூமகள் கேள்வனும்        192
    [திருமாலை அழைத்து, அவன் வழிபடக் கடைக்கண்ணருள் செய்து, பிரமனின் வேள்விப் பரி மறைந்துள்ள இடத்தைக் கண்டு அதனைக் கொணர்ந்து வேள்வியைப் புரப்பாயாக என்று கூற, திருமாலும்]

    வணங்கி மீண்டு மலர்த்தவி சொன்றினோய்
    உணங்கல் வெம்பரி யொய்யென மீட்டிவண்
    இணங்கு நின்மகம் காப்பலென் றேற்றவர்
    அணங்க மாவினைத் தேடுவா னாயினன்.        193
    [திருமாலும், இறைவனை மீண்டும் வணங்கி, ‘மலர் இருக்கையோய்! வாடுகின்ற குதிரையை விரைவில் மீட்டு இங்கு உன்னுடைய மகத்தைக் காப்பன்’ என்று கூறிக் குதிரையைத் தேடத் தொடங்கினன். உணங்கல்- வாடல். ஏற்றவர் – குதிரையைப் பற்றியவர். அணங்க- வருந்த.]

    எங்கும் நேடினன் காண்கிலன் ஏகுழிப்
    பொங்கு சுத்தப் புனற்கடல் உள்ளுறத்
    தங்கி வைகிய தன்மை யறிந்தனன்
    அங்கண் வெய்தென அண்மினன் என்பவே.        194
    [எல்லாவிடங்களிலும் தேடினான்; காண்கிலன்; செல்லும் வழியில் சுத்தநீர்க்கடலில் குதிரை இருப்பதை அறிந்தனன்; விரைந்து அங்கடைந்தனன்.]

    ஏற்றெ திர்ந்த அவுணனை இன்னுயிர்
    பாற்றி னான்பரி பற்றினன் வேலைமேல்
    தோற்றி னான்மலர்த் தோன்றல் துயர்க்கடல்
    மாற்றி னான்பரி மாவை வழங்கினான்.               195
    [போரேற்று எதிர்த்த அவுணனின் இன்னுயிரை ஒழித்தான்; குதிரையைக் கைப்பற்றினான்; கடலின்மேல் எழுந்தான்; பிரமனின் துயர்க்கடலைப் போக்கினான்; குதிரையை அவனுக்கு அளித்தான்]

    தண்ண றாமல ராளி சதமகன்
    எண்ணில் வானவர் யாவரும் நோக்கியே
    யுண்ணி லாவிய வோகையின் மாயனைப்
    பண்ணி னாலிசை பாடிப் பழிச்சினார்.               196.
    [குளிர்ச்சி நீங்கா தாமரைமலர் மேலிருக்கும் முதல் எண்ணிலாத தேவர்கள் யாவரும் திருமாலினை நோக்கியே அகம் நிறைந்த உவகையில் பண்ணோடு இசைபாடிப் போற்றினர்]

    படர்து வர்க்கொடிப் பாற்கட லன்றெழுந்
    துடலு நஞ்சமு துண்டருள் காரணர்
    தொடலை மென்குழற் றோகை யுடன்மகிழ்ந்
    தடல ராவணை யாற்கருள் செய்வரால்               197
    [பாற்கடலில் அன்றெழுந்து வருத்திய நஞ்சினை உண்டருளிய பரமகாரணர், மலர்மாலைசூடிய குழலி உமையம்மையுடன் மகிழ்ச்சியுடன்தோன்றி பாம்பணையானாகிய திருமாலுக்கு அருள் செய்தார். துவர்- செந்நிறமான பவளக்கொடி; இது சாதியடை. பாற்கடலில் பவளம் தோன்றியதாக செய்தியில்லை. தொடல- தொடுக்கப்பட்டது, தொடலை. தோகை- உமை. ]

    கருட வூர்திக் கருமுகில் வண்ணகேள்
    குருதி வாட்படைத் தானவற் கொன்றொறீஇ
    உருவ வாம்பரி பற்றி யுதவிநா
    மருளு மேவலின் நின்றனை யாதலால்        198
    [கருடவாகனக் கருமுகில் வண்ணனே! கேள்! குருதிபடிந்த வாட்படை அவுணனைக் கொன்றொழித்துப் பொலிவுடைய குதிரையை மீட்டு உதவி நம்முடைய ஏவலின் வழி நின்றனை! ஆதலால்,]

    நாற்றக் கஞ்ச நறும்பொகுட் டண்ணல்தான்
    ஆற்றப் புக்க மகத்தவிப் பாகநீ
    ஏற்றிட் டுத்தர வேதி யிருத்தியென்
    றூற்றத் தேமொழி யோதி யருளினார்.        199
    [ தாமரைப் பொகுட்டில் இருக்கும் பிரமன் ஆற்றப் புகுந்த இவ்வேள்வியில் அவிப்பாகம் நீ ஏற்றுக்கொள வேதியில் இருத்தி என்று தேனூறு மொழி ஓதி அருளினார்.]

    தயங்கு செஞ்சடை யாரருள் தாங்கியங்
    கியங்கு வேள்வியி னின்னவிப் பாகமேற்
    றுயங்கு சிற்றிடை யொண்டிரு மாதொடும்
    வயங்கு முத்தர வேதி வதிந்தனன்.        200
    [தொங்கும் செஞ்சடையராகிய சிவபெருமானின் அருளப் பெற்ரு, அங்கு நடை பெற்ற வேள்வியின் இனிய அவிர்ப்பாகத்தை ஏற்றுத் திருமகளொடும் விளங்கும் உத்தர வேதிகையில் தங்கினன்]

    ஆங்கண் அன்னணம் கம்பர் அருளினால்
    பூங்கள் தார்துள வப்புயல் வைகலால்
    ஓங்கு விண்டு புரமென வோர்பெயர்
    தீங்கு தீர்திருக் காஞ்சி புனைந்ததே.        201
    [அங்கு அவ்வாறு ஏகம்பர் அருளினால் பூந்தாதும் தேனும் உடைய துளசிமாலை அணிந்த திருமால் தங்கியதால் உயர் விண்டுபுரம் எனஒரு பெயரைக் குற்றமிலாக் காஞ்சி புனைந்தது.]

    மல்லல் வைகுண்ட வான்பதம் வேட்டரி
    அல்ல லலர்ந்த களத்தரை யவ்வுழிப்
    புல்லு மன்பொடு பூசித்த லானுமச்
    செல்வ மப்பெயர் பெற்றதச் சீர்நகர்.        202
    [செல்வமிகு வைகுண்ட மேலாம் பதத்தைப் பெற விரும்பி அரி, நீலகண்டரை அவ்விடத்து மிக்க அன்புடன்பூசித்தலானும் அப்பெயரைப் பெற்றது, அப்பெருமைமிகு நகர்.]

    கலிநிலைத்துறை
    மருளு மைவகை மலப்பெருந் தொடக்கினைக் கடந்து
    தெருளு மானந்தச் சுடர்ப்பிழம் பாய்வினைத் தீமை
    யொருவி னாரக விளக்கதா யிருசுட ருயிர்வான்
    பெருகு காலழல் புனனில மாய பேரொளிதான்.        203
    [ மயக்கத்தைச் செய்யும் ஐவகையாகிய பாசப் பெரும் பந்தத்தினைக் கடந்து, தெருளும் ஆனந்தச் சுடர்ப்பிழம்பாய், இருவினைத் தீமையைக் கடந்தவர்களின் உள்ளத்தில் ஒளியேற்றும் அகவிளக்கதாய், ஞாயிறு ,திங்கள், புருடன், ஆகாயம், வாயு, தீ, நீர், நிலம் ஆகிய எட்டு மூர்த்திகளாக நின்ற பேரொளி தான், அடுத்தபாடலொடு கருத்துத் தொடருகின்றது. இது குளகம் எனப்படும் ஐவகைப் பாசம்-: ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்பன. ஒருவினர்- நீங்கினவர். ]

    மலக்க ணத்தினாற் சிமிழ்ப் புண்டு மயங்கு மாருயிரை
    யலக்க ணீத்தெடுத் தாள மிக்கலர்ந்த பேரருளான்
    னலக்கு மாமறை மாவடி நறுநிழன் முளைத்து
    விலக்க ரும்புக ழேகம்ப ரெனப்பெயர் மேவி.        204
    [ மலக்கூட்டத்தால் மறைப்புண்டு மயங்கும் அரிய உயிரை அது படும் துயரத்திலிருந்து எடுத்து ஆள விரிந்த பேரருளினால், நன்மை பயக்கும் வேதங்களாகிய மாமரத்தின் நீழலில் முளைத்து, ஒழிவரும் புகழுடைய ஏகம்பர் எனும் திருநாமம் பொருந்தி. (கருத்துத் தொடர்கின்றது. )அலக்கண் ala-k-kaṇ, n. < அல- +. Sorrow, distress, misery; துக்கம். (பிங்) நலக்கு-தல் nalakku-,        5 v. intr. prob. நலம். To do good; நன்மைபயத்தல். உயிர்க்குயிராய் நலக்கு மிறை (திருவானைக். புராணம். 41).

    தூய ஐந்தொழில் உயிர்க் கெலாம் இயற்றிமின் துறுத்த
    பாய மேகலை வழிபடப் பரிந்துவீற் றிருக்கும்
    ஆய சீர்மையால் அகிலமும் புகழ்திருக் காஞ்சி
    மேய தாற்சிவபுர மெனும் மேதகு நாமம்.        205.
    [தூய்மை பொருந்திய திருவைந்தொழிலை உயிர்களுக்கு இயற்றி ,மின்னொளிபொருந்திய மேகலை அணிந்த அம்மை வழிபட அன்புடன் வீற்றிருக்கும் பெருமையுடைமையால் அகில உலகமும் புகழ் திருக்காஞ்சி சிவபுரம் என்னும் மேன்மையுடைய திருநாமம் மேவியது. ஐந்தொழில் உயிர்களுக்கு அருளற்பொருட்டுச் செய்யப்படுவதாதலின் தூய ஐந்தொழில் ஆயிற்று. .துறுத்துTo place, set up; அமைத்தல். விளக்குந் துறுத் தனர் (விநாயகபு. 3, 13).

    கொச்சகக்கலிப்பா
    கறங்குதிரைப் பெருங்கடலிற் கதிர்பரப்பி முளைத்துலகி
    லறங்களெலாந் தழைத்தோங்க வழங்குமழற் கதிர்மரபின்
    மறங்குலவும் பகைவெருவ வாள்விதிர்க்குந் திறல்வேந்தன்
    பிறங்கியசூ ரியச்சோதி யெனத்திகழும் பெயருடையான்.        206
    [அலைகின்ற அலைகளையுடைய பெரிய கடற்பரப்பில் முளைத்து, உலகில் அறங்களெல்லாம் தழைத்தோங்கக் கதிரொளிபரப்பும் சூரியனின் மரபில், பகைவர்கள் அச்சம்கொள்ள, வாட்போர் செய்யும் ஆற்றல்மிகு வேந்தன், சூரியச் சோதி எனத் திகழும் பெயருடையவன் . கறங்கு- அலைதல்]

    அறுசீரடி யாசிரிய விருத்தம்
    மழலைமென் குதலைச்செவ்வாய்த் தளர்நடைமகப் பேறின்றிக்
    கழிதுயர் நாளுங்கூர்ந்து கதியிடைத் தப்பா துய்க்கும்
    விழைதரு மகப்பே றில்லா வாழ்வு மேதக்க தேயென்
    றழல்படு மெழுகுபோல வகமெலா முருகி நைந்தான்.       207
    [ மகப்பேறு இல்லாமையால் மிக்கதுயரம் கொண்டு, நற்கதிக்குத் தப்பாது செலுத்தும் மகப்பேறு இல்லாத வாழ்க்கைக்கு என்ன பெருமை இருக்கின்றது என உள்ளம் உருகி நைந்தான். மழலை மென்குதலைச் செவ்வாய்த் தளர்நடை- குழந்தை வருணனை. மழலை- - திருந்தாத பேச்சு. குதலை- பொருளற்ற ஒலி. மழலையும் குதலையும் பேசும் சிவந்த வாயும் தளர்ந்த நடையும் உடைய மகவு. தென்புலத்தார் கடன் நற்புதல்வரைப் பெறுதலான் தீர்க்கப்படுதலால், ‘கதியிடைத் தப்பாது உய்க்கும் விழைதரு மகப் பேறு என்றார். விழைதல்- விரும்புதல்.]

    ஆரண நாடி யின்னு மளவிடற் கரிய முக்கட்
    பூரண ரினிது வைகும் பொற்பின தாகித் தன்றன்
    சீரணி குலத்துக் கெல்லாந் திருத்தகு முதன்மைத் தாய
    வேரணி பரிதித் தெய்வத் திருங்கழல் போற்ற லுற்றான்.        208
    {ஆரணம்- வேதம். ஏர்- அழகு. இருங்கழல்- வலிய கழல்கலைஅணிந்த திருவடி.வேதங்கள் தேடி இன்றளவும் அளவிட முடியாத மூன்றுகண்களை உடைய பரிபூரணர், மகிழ்ந்துஎழுந்தருளியிருக்கும் பொலிவினை உடையதும், பெருமையுடைய தன் குலத்துக்கு முதன்மையாயதும் ஆகிய அழகிய சூரியனின் திருவடிகளை வணங்கிப் போற்றல் செய்தான். சிவபரம்பொருள் சூரியனின் நடுவில் வீற்றுளான் என்றும், ‘அருக்கனாவான் அரனுரு’ என்றும் சைவம் போற்றும்.]

    பண்தரு சுரும்பு மூசிப் பாடமொட் டவிழ்ந்து வாசத்
    தண்துளித் தேறல் வார்ந்து ததைந்த செங்குவளைப் போதான்
    மிண்டிய பொறிகள் செற்று மேதக வழிபாடாற்றி
    மண்டிய கிரணப் புத்தேள் மந்திரங் கணித்தல் செய்தான்.         209
    [ பண் இசைக்கின்ற வண்டுகள் மொய்த்தலினால் மொட்டவிழ்ந்து மணமுடைய தேன் துளிகள் ஒழுக, நெருங்கிய செங்குவளைப் போதினை அணிந்தவன், ஐம்புலன்களையும் அடக்கிச் சிறப்பன வழிபாடாற்றி ஆதித்ய மந்திரம் செபித்தல் செய்தான்.].

    மங்கருங் காதன் மல்க வின்னணம் வழிபா டாற்றித்
    திங்களீ ராறு செல்லச் செறியிருட் படலம் வாரி
    நுங்குசெங் கிரணக் கற்றை நொறிலுளை மான்றேர்ப் புத்தேள்
    பொங்கிய கருணை தன்னாற் புதல்வர்ப்பே றளித்திட் டானே.        210
    [பன்னிரண்டு மாதங்கள் இவ்வாறு மிகுந்த பத்தியுடன் வழிபாடாற்றிய பின், இருளை வாரி விழுங்கும் சிவந்த ஒளிக்கற்றைகளையுட்யும் விரைவாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் தேவனாகிய சூரியன் கருணையோடு புதல்வற்பேறு அளித்தான். மங்கு அரும் காதல் – குறையாத பத்தி. மங்குதல்- குறைதல் அரிய- இல்லாத. சூரியன் இருட்படலத்தை வாரி நுங்குகின்றான் என்றது இலக்கணை. நொறில்- விரைவு. நொறில் உளை மான் தேர்ப் புத்தேள் – சூரியன்.]

    தேவிய ரிருவர் தம்முட் டிருவளர் யசோவதிப்பேர்ப்
    பாவைதன் வயிற்று நீண்ட பனிக்கட லுடுக்கை வையத்
    தேவரும் புகழத் தக்க விராச்சிய வர்த்தனப்பேர்
    மேவருங் காலைவந்து விழுத்தகத் தோன்றினானே.        211
    [சூரியச் சோதியின் மனைவியர் இருவரில் அழகு வளரும் யசோவதி என்னும் பாவையின் வயிற்றில், கடலாடையை உடுத்த பூமியில் வாழும் சுரர்களான மறையோர் புகழும் பெருமையுடைய இராச்சிய வர்த்தனன் என்னும் பெயருடையவன் நல்ல நேரத்தில் பிறந்தான்.]

    பொருதிரைப் புணரி வையம் புகழ்சுத ரிசனப் பேரான்
    குருமணிக் கடக முன்கைக் குவிமுலைப் பரும வல்குற்
    கருநெறிக் கூந்தற் செவ்வாய்க் கலாவதி யென்னு நாம
    மருவிய மாதர் நல்லாள் வயிற்றில்வந் துதய மானான்.         212.
    [உலகத்தார் புகழும் சுதரிசனன் எனும் பெயரை உடையான் கலாவதி என்னும் நாமம் உடைய மங்கை நல்லாள் வயிற்றில் வந்து தோன்றினான். பொருதிரை- மோதுகின்ற அலைகள். புணர்- கடல். புணரி வையம்- புணரியால் சூழப்பட்ட வையம். வையம்- வையத்தில் வாழ்கின்ற மக்களைக் குறித்தது. கடகம்- வளையல். குருமணி- ஒளியுடை மணிகள். பருமம்- உயர்ச்சி.]

    தத்தொலித் தரங்க வேலைத் தாரணி முழுது மூடி
    மைத்தவல் லிருள்சீத் தோங்கு மிளங்கதிர் மதியம் போல
    நித்தலும்வளர்ந்து மைந்த ரிருவரும் நிகரி லாத
    புத்தெழிற் பெருக்கம் வாய்ந்து புகர்தப விளங்கி னாரே.        213
    [ கடல் சூழ் உலகம் முழுதையும் மூடிய கரிய வலிய இருளை அழைத்து ஓங்கும் இளஞ்சூரியனையும் சந்திரனையும் போல நாளும் வளர்ந்து மைந்தர் இருவரும் ஒப்பிலாத அழகும் ஆக்கமும் பெற்றுக் குற்றமின்றி விளங்கினர். தரங்கம்- அலை தத்துதலும் ஒலித்தலும் உடைய அலை. மை- கருமை. சீத்து- அழித்து. புகர்- குற்றம். தப- நீங்க.]

    தளர்நடைப் பருவந் தீர்ந்து தபனிய மாடத் தாடி
    வளமலி வீதி யெய்தி மகாரினத் தோடு மாடிக்
    குளநதி மலர்ப்பூஞ் சோலைக் குன்றினும் விளையாட் டாடி
    இளமழ ஏறு போல்வா ரின்னணஞ் செல்லு நாளில்.        214
    [தளர்நடைப் பருவம் கடந்து பொன்மாளிகை மாடங்களில் விளையாடி, செல்வம் நிறைந்த வீதிகளில் தம்மையொத்த சிறார்களுடன் விளையாடி, குளம் நதிமுதலிய நீர்நிலைகளிலும் பூஞ்சோலைகளிலும் குன்றுகளிலும் விளையாட்டாடி இளமையும் அழ்கும் உடைய காலைபோல்வார் இருவரும் இவ்வண்ணம் வளர்ந்து வரும் நாளில்--]

    மருவிய இளமைக் கேற்ற மடமையா லரச மைந்தர்
    இருவரும் தம்முள் மாறுண் டெரியுகச் சினந்து வல்லே
    ஒருவனை யொருவன் றாக்கி உலப்பரு நிதியந் துஞ்சுங்
    குருமணி மாடக் கொற்றக் கோயிலுட் சென்றா ராக.        215
    [ இளமைக்குப் பொருந்திய அறியாமையினால் அரசகுமாரர்கள் இருவரும் முரண்பட்டு, நெருப்பு உமிழ்வது போலச் சினந்து, விரைவில் ஒருவனை ஒருவன் தாக்கியவாறே, வற்றாத செல்வம் தங்கும் ஒளிமிக்க மணிமாட அரசமாளிகையுட் சென்றனர்.]

    கருநெறிச் சுரிமென் கூந்தற் கலாவதி மாதுநோக்கி
    ஒருவரும் பொறாமை பொங்கவுளத் தெழும் வெகுட்சி துள்ள
    விருநெடுங் கயற்கண் சேப்ப இராச வர்த் தனனைச் சால
    வெருவுறப் பகைஞர் போன்று வெய்தெனச் சீறி னாளே.        216
    [கலாவதி எனும் அரசி , நீக்க முடியாத பொறாமை பொங்க, உள்ளத்தில் சினம் துள்ள, இருநீண்ட கன்களும் சிவப்ப, இராசவர்த்தனனை நோக்கி பகைவரைப்போலச் சீறினாள். கருமையும் வகிடும் சுரிந்ததுமாகிய கூந்தல். ஒருவுதல்- நீங்குதல், விலகுதல். பொறுமைxபொறாமை. வெகுட்சி- சினம். வெய்து- வெப்பமாக; வெப்பம் சினத்தால் தோன்றுவது.]

    மாற்றலர் தடந்தோட் கொற்ற வலியெலாம் இமைக்கும் முன்னர்க்
    காற்றும்நெட் டிலைவேல் தந்தை கதிர்விடு கனகக் குன்றந்
    தோற்றிட இறுமாந் தோங்கித் தொய்யின்மேற் பரித்த கொங்கைக்
    கோற்றொடி வேற்றுத் தாய்க்கங் குடன்படுங் குறிப்பின் நின்றான்.        217
    [பகைவர்களின் தோளாற்றல்களையெல்லாம் இமைக்கும் நேரத்தில் அழிக்கும் நீண்ட வேலுடைய தந்தை, கதிரொளி வீசும் பொற்குன்று தோற்றிட இறுமாந்து தொய்யில் கொடிகளைத்தாங்கும் கொங்கைகளையுடைய மாற்றாந் தாய்க்கு அங்கு உடன்படும் குறிப்பினோடு நின்றான். அரசனுடைய ஆற்றல் வேலின்மீது ஏற்றிக் கூறப்பட்டது. ]

    இழைதவழ்ந் தொளிருந் தொய்யிலேந் திளங்கொங்கை நல்லா
    ளழலெனச் சிவந்தவாறு மதற்குடம் பட்டானாகி
    முழவுறழ் குவவுத் தோளா னருண்முனிந் திருந்த வாறு
    மழவிள மடங்க லன்னான் மதித்தனன் கவற்சி கொண்டான்.        218

    பொருமியுள் ளழுங்கிவேவப் பூம்புனல்விழிகள் காலத்
    திருநுதல் வியர்வுகாட்டச் சீறடி நடைகள் தள்ளாட
    வுருவெழில் வேற்காட்ட வொளிர்முகங் குவிந்து வாட
    கருணையிற் பெரிய நற்றாய் தன்புடை கடிது போந்தான்.        219

    இருவருங் கலாய்த்தேம் அந்த வேதுவான் நினக்கு மாற்றாள்
    உருகெழச் சினந்தாள் எந்தை யதற்கு டன்பட்டான் மன்ற
    மருவியிங் கிருக்க கில்லேன் மறாது நீயருளி னேகிப்
    பெருகிய வரங்கள் பெற்றுப் பின்னிவண் வருவ னென்றான்.        220
    [இருவரும் சண்டையிட்டுக் கொண்டோம். அதன் காரணத்தால் உனக்கு மாற்றாளாகிய என் சிற்றன்னை இருவரும் என்மேல் சினங்கொண்டாள். அதற்கு எந்தையும் உடன்பட்டான். இனி நான் இங்கே இருக்க மாட்டேன். மறுக்காது நீ அருள் செய்தால் நான் நாட்டைவிட்டுச் சென்று மிக்க நல்வரங்கள் பெற்றுப் பின் இங்கு வருவேன் என்றான்.]

    கேட்டலு மிரங்கி நொந்து கெழுமுபே ரார்வங் கூரக்
    கோட்டமி னற்றாய் வல்லே கொங்கையி னணைத்துப் புல்லி
    வாட்டடங் கண்ணீ ராட்டி மங்கலம் புகன்று கூறி
    வேட்ட வாறெய்து கென்னா விடைதரப் பெற்று மீண்டான்.        221
    [மகன் கூறியதைக் கேட்ட அன்புள்ள தாய் வருந்தி மிகவும் நொந்து மிக்க ஆர்வம் அதிகரிக்க மார்போடு மகனை அணைத்துத் தழுவி தன் கண்ணீரால் அவனைக் குளிப்பாட்டி, மங்கல வார்த்தைகள் கூறி நீ விரும்பியவாறு அடைக என்று கூறி விடையளித்தாள் அவள் விடைதர மீண்டான்.]

    தந்தையுந் தாயும் வைகுந் தன்னுடை நகர நீத்து
    கந்தரந் தவழுந் தோறுங் கணநிரைச் சினையான் மோதும்
    பந்தியி னுயர்ந்த சோலைப் பாரியாத் திரமென் றோதுஞ்
    சுந்தர வரைப்பிற் றீர்க்க தவன்றனைத் துன்னிக் கண்டான்.        222
    [தன்னுடைய தாயும் தந்தையும் வாழும் அந்த நகரத்தை விட்டு நீங்கி மேகம் தவழும்தோறும் கூட்டமான நெருங்கிய கிளைகளால் மோதும் வரிசையான உயர்ந்த சோலைகளையுடைய பாரியாத்திரம் என்று கூறப்படும் அழகிய மலைச்சாரலில் தீர்க்க தவன் என்னும் ஞானி ஒருவனைக் கண்டான் கந்தரம்- மேகம். கணம்- கூட்டம். நிரை- வரிசை. சினை- கிளைகள் கொம்புகள் முதலியன .பந்தி- வரிசை. தீர்க்க தவன் - தவஞானி]

    முன்னைநற் றவத்தின் பேற்றான் முழுத்த பேரறிவு சான்ற
    இன்னமெய்க் குரவன் றன்னை யெய்துறப் பெற்றே னென்று
    கொன்னவில் உவகை பொங்கக் குதுகுதுத் தன்பு நீடிப்
    பொன்னடிப் போது தாழ்ந்து போற்றெடுத் தெதிரே நின்றான்.        223
    [முற்பிறவிகளில் செய்த நல்ல தவத்தின் பேற்றால் முழுஞானம் நிறைந்த இத்தகைய சற்குருவினை அடையப் பெற்றேன் என்று மிக்க உவகை பொங்கக் குதுகுதுத்து அன்பு மிக, அவனுடைய பொற்றாமரை மலர் போன்ற திருவடிகளில் தாழ்ந்து வணங்கிப் போற்றி நின்றான்]

    பூண்டமெய்க் காதல் பொங்கப் புளகங்கண் மெய்யிற் போர்ப்ப
    மாண்டசீர் வழிபா டாற் று மன்னவ குமரன் றன்னைக்
    காண்டகு விஞ்சை யெல்லாங் கரிசற வுணர்ந்து மேன்மை
    யீண்டிய குரவன் றீர்க்க தவனென்பா னோக்கி னானே.        224
    [அன்புமிக மெனி புளகம் பூப்ப வழிபாடாற்றும் மன்னவன் மகனை மேன்மைபொருந்திய குரவன் தீர்க்கதவன் என்பான் நோக்கினான்.]

    ஆங்கவன் வரவு முற்று மருட்கணா லறிந்து பின்னர்
    வீங்கிய கருணைப் பார்வை விழுத்தகப் பெரிது நல்கி
    யோங்கிய மகிழ்ச்சி கூர வுடலெலாந் தைவந் திட்டுத்
    தாங்குநின் கவற்சி யெல்லாந் தணமதி யென்று கூறி        225
    [மன்னவ குமரன் அங்கு வந்த வரவின் காரணத்தைத் தன் அருட்கண்ணால் நோக்கி அறிந்து , தன் அருட் பார்வையை அவனுக்கு நல்கி, மிக்க மகிழ்ச்சி பெருக, அவனுடைய உடலை ஆதரவாகத் தடவி, உன்னுடைய கவலைகளையெல்லாம் விட்டொழி என்று கூறி—]

    பூதலத் தவரும் விண்ணிற் புலவரும் வியக்கத் தக்க
    மேதகு சித்தி யெட்டும் விளங்குக நினக்குச் சிங்க
    வாதனத் தினிது வைகி யவனி காத்தருளு நுந்தை
    நீதியி னடவுஞ் செங்கோ லரசு நிற்சேர்க வென்றான்.        226
    [மண்ணுலகத்து மக்களும் விண்ணுலகத்துத் தேவரும் வியக்குமாறு அட்டமாசித்திகளும் நின்னிடத்தில் விளங்குக.! உனக்குச் சிங்காதனத்திலிருந்து உலகத்தைக் காத்திடும் உன்னுடைய தந்தை நீதிமுறைப்படிநடத்தும் செங்கோலரசு நின்னை வந்துசேரும் என்றான். புலவர்- தேவர்கள். ]

    தவழ்மழை யுமிழ்ந்த தெண்ணீர் தடையின்றிப் புவியில் வீழ்ந்தாங்
    கவமற நோற்று வல்ல ஆரியனருள லோடுங்
    கவிழ்மதக் களிநல்யானைக் காவலன் மைந்தன் முன்னே
    இவருறு சித்தியெட்டுந் தோன்றிமற் றிதனைக்கூறும்.        227
    [ வானில் தவழுகின்ற மேகம் உமிழ்ந்த மழைநீர் தப்பாமல் நிலத்தில் வீழ்வதைப்போல, ஐயமற முக்காலமும் உணர்ந்த தவஞானி அருளலும், அரசகுமரன் முன்னே விரும்பத்தக்க சித்திகள் எட்டும் தோன்றிப் பின்வருமாறு கூறும். மழை உமிழ்ந்த தெண்ணீர்புவியில் வீழ்தல் தப்பாது எய்தும் பயனுக்கு உவமை. அவம்- குற்றம். ஆரியன் -ஐயன், ஞானி. இவர்தல்- விரும்புதல்.]

    கவனவெங் கலினமாவுங் கமழ்மதக் கலுழித்தோலும்
    குவிதலைத் தேரு மற்றுங் கோயின்முன் னெங்குஞ்சூழத்
    தவளவொள்ளொளி கான்மாலைத் தனிக்குடை நிழற்றச் சிங்க
    வவிர்மணித் தவிசின் மன்னியரசு செய்திருக்கும் போது.        228
    [வேகமாகச் செல்லும் கடிவாளம் பூட்டப்பட்ட குதிரைகளும் நாறும் மதநீர் ஒழுகும் களிறுகளும் குவிந்த உச்சிகளைக் கொண்ட தேர்களும் மற்றும் படைகளும் அரண்மனையின்முன் எங்குஞ்சூழ, வெள்ளொளி வீசும் வெண்கொற்றக் குடையின் கீழ் சிங்காதனத்தில் இருந்து அரசு செய்திருக்கும்போது—கவனம்- வேகம். கலினம்- கடிவாளம். தோல்- யானை. குவிதலை- குவிந்த கலசம் ]

    தருக்கினா லறத்தி னீதி தவறுறா துயிர்கட் கெல்லாம்
    வெருக்கொள விடுக்க ணொன்றும் விளைத்திடா திருப்ப யாகி
    லொருக்குநின் மாட்டு நீங்கா திருத்து மல்லாயி னுன்னைப்
    பொருக்கென விடுத்து நீப்பே மறிகெனப் புகன்ற மாதோ.        229
    [அகந்தையினால் நீ , நீதி தவறாது உயிர்களுக்கெல்லாம் அச்சம் தோன்ற துன்பம் விளைக்காதிருப்பயாயின் உன்னிவிட்டு நீங்காது இருப்போம்; அல்லாவிடில், பொருக்கென உன்னை விட்டு நீங்கிவிடுவோம். இதனை அறிக என்று புகன்றன. மாதோ- முன்னிலை அசை. தருக்கு- கர்வம், செருக்கு. வெருக்கொள- அச்சம் கொள்ள. ஒருக்கு- ஒருங்கு என்பதன் வலித்தல் விகாரம். பொருக்கென- விரைவுக் குறிப்பு]

    நீயிரிங் குரைத்த வாறே நெறியிடைப் பணையே னாகி
    மாயிரு ஞால மோம்பி வைகுவே னென்று நேர்ந்து
    பாயமெய்ச் சித்தி யெல்லாம் பரிவொடும் தழுவிக் கொண்டு
    தூயவா ரியன்பொற் பாதந் தொழுதனன் விடைகொண் டேகி.        230
    [நீங்கள் இங்கு உரைத்தவாறே அறநெறியில் பிழையேனாகி இப்பெரிய உலகத்தைப் பேணிக் காப்பேன்; என்று உடன்பட்டு பரந்த எண்வகைச் சித்திகளையும் விருப்பத்துடன் தழுவிக் கொண்டு தூய ஞானாச்சாரியனிடமிருந்து விடை கொண்டான். பணைத்தல்- To miss, fail, err; பிழைத்தல். பணைத்த பகழி (நற். 165. பரிவு- விருப்பம், அன்பு.]

    காரென முழங்குந் தானக் கடுங்களிற் றரசன் மைந்தன்
    பாரியாத் திரத்தி னீங்கிப் படர்நெறி விரைந்து நீந்தி
    வேரியு மலருந் தாதும் விரைகமழ் பொதும்பர் சூழ்ந்து
    சீரிதி னோங்குந் தங்கள் செழும்பதி மருங்கு சார்ந்தான்.        231
    [ அரசகுமாரன் பாரியாத்திரத்தின்லிருந்து நீங்கி விரைவில் தன்னுடைய வளமான நாட்டை அடைந்தான்.]

    மாதவன் றன்னை யண்மி மருவருஞ் சித்தி பெற்று
    மேதக வணையு மைந்தன் விழுத்தகு வரவு கேட்டுக்
    காதலுங் களிப்பும் பொங்கக் கதிர்மணி நெடுவேற் றந்தை
    யாதரித் தெதிர்கொண் டெய்தி யணைத்துடன் கொண்டு புக்கான். 232
    [ பெரிய தவபலம் உடையவனை அடைந்து அடைதற்கரிய சித்திகளெல்லாம் பெற்று மன வருவதை அறிந்தது, அன்பும் மகிழ்ச்சியும் பொங்க தந்தையாகிய அரசன் விருப்பத்துடன் முன் சென்று மகனை அணைத்துக் கொண்டு நகருக்குச் சென்றான்.]

    கோயிலி னணைந்து சிங்கக் குருமணித் தவிசி லேற்றிப்
    பாய்பரி யரசர் போற்றப் பரவைநீ ருலகங் காக்கு
    மேயசீ ரரசு நல்கி வெற்புறழ் தடந்தோள் வைத்த
    மாயிரும் புவியின் பார மகன்புயத் தேற்றி னானே        233
    [அரண்மனைக்குச் சென்று மகனைச் சிங்காதனத்தின் மேலேற்றிப் அரசர்கள் போற்றக் கடல்சூழ் உலகத்தைக் காக்கும் பெருமையுடைய அரசாட்சியை நல்கி , தன் தோள் மீது இருந்த அரசபாரத்தினை மகனின் தோள் மீது ஏற்றி வைத்தான் ]

    கரிசறு குரவன் றந்த காமரு வரத்தின் பேற்றாற்
    பரசுறு சித்தி யோடும் படர்புகழ்த் தந்தை நல்கும்
    அரசுகைக் கொண்டு மன்ன ரருங்கறை யளப்ப வீறித்
    துரிசறு மனுநூ லாற்றிற் றொடுகட லுலகு காத்தான்        234
    [குற்றங்களை நீக்குகின்ற குரு அருளிய வரத்தின் பேற்றால் போற்றுதற்குரிய எண்வகை சித்திகளுடன் புகழுடைத் தந்தை ஈந்த அரசினையும் கைக்கொண்டு மன்னர்கள் திறைசெலுத்த மிக்கசிறப்புடன் குற்றமறுத்த மனுநூலின் வழியில் உலகினைக் காத்தான். கரிசு, துரிசு- குற்றம். காமரு வரம்- விருபத்தக்க வரம். பேற்றால்- நன்மையால். அறுங்கறை- அரிய திறை, கப்பம். வீறு- பிறருகில்லாத சிறப்பு.]

    எண்ணருஞ் சித்தி யெட்டு மினிதுற வெய்தும் பேற்றால்
    நண்ணுறும் பகையொன் றின்றி நலத்தகு மேன்மை வாய்ந்து
    கண்ணுத லடியிற் றாழுங் கருத்தினர் தம்பாற் சேரும்
    புண்ணிய மென்ன நாளும் பொருவறு செல்வங் கூர்ந்தான்.        235.
    [நினைக்கவும் அரிய எண்வகைச் சித்திகள் இனிதாக அடையப் பெற்ற பேற்றினால், எப்பகையும் இன்றி, நன்மையே பெறும் மேன்மை வாய்க்கப்பெற்றுச் சிவபிரான் அடியில் தங்கும் மனத்தினரின்பாற் சேரும் புண்ணியம் எனும்படியான ஒப்பற்ற செல்வம்நாளும் பெருகப் பெற்றான்.]

    தணிப்பருஞ் செல்வ நோக்கித் தருக்கினன் செருக்கு மிக்கான்
    கணிப்பருஞ் சித்தியெட்டுங் கழறிய வுறுதி விட்டான்
    மணிப்பெரு வேலை சூழ்ந்த வையகத்தி யாவ ரம்மா
    அணிப்பெருஞ் செல்வ மெய்தின் அதற்படு மம்ம ரெய்தார்?        236
    [ தன்னுடைய குறையாத செல்வத்தினால் கருவங்கொண்டான்.நினைக்கவும் அரிய அட்டமா சித்திகளைக் கைவிட்டான். கடலால் சூழப்பெற்ற இவ்வுலகில் பெருஞ்செலவம் அடையப் பெற்றால் அதனால் வரும் மயக்கத்தைத் அடையாதவர் உஆர்? ஒருவருமிலர் என்பதாம்.]

    மேவரும் அறனில் தப்பி விழுப்பெருங் கவற்சி சான்ற
    பாவமும் பழியும் ஆற்றிப் பல்லுயிர்க் கலக்க ணேய்த்துத்
    தேவரை முனிவர் தம்மைச் சிந்தையிற் கலக்கங் காட்டி
    ஓவிய நீதிச் சாகா டுருகெழ வுகைத்த லோடும்.        237
    [விரும்பத்தகும் அறத்தினின்றும் நீங்கிப் பழியும் பாவமும் செய்து உயிர்கள் அனைத்துக்கும் துன்பம் செய்து தேவர்கள், முனிவர்கள் முதலிய பெரியோர்கள்மனத்திற் கலக்கம் தோன்றச் செய்து செங்கோல் நடவாத ஆட்சி செய்தலோடும்.--. மேவும்- விரும்பும் தப்பி- வழுவி. கவற்சி- கவலை; வருத்தம். அலக்கண்- துன்பம். ஓவிய- நீங்கிய சாக்காடு- சக்கரம் நீதிச்சாக்காடு- அறவாழி. செங்கோல் பிழைத்து கொடுங்கோல் ஆட்சி செய்ததை, ஓவிய சாக்காடு உருகெழ உகைத்தலோடும் என்றார். உகைத்தல்- செலுத்துதல்.]

    விளங்குமெண் சித்தி நோக்கி விதியிலா வுயிர்க ளெல்லாந்
    துளங்குறக் கொடுங்கோ லோச்சித் துயரிடைப் படுத்தா யெங்கள்
    வளங்கெழு மொழியை யிந்நாள் மறந்தனை சேறும் யாமென்
    றுளங்கொள வெறுத்துக் கூறி யொய்யென விடுத்துப் போந்த        238
    [விளங்கிய எண்வகை சித்திகளும் அவனை நோக்கி,’ எல்லா உயிர்களும்கலக்கங்கொள கொடுங்கோலோச்சித் துயரடையச் செய்தாய்; யாம் உனக்குக் கூறிய நன்மொழியை இந்நாள் மறந்தாய். நாங்கள் செல்கின்றோம்’ என்று கூறி விரைவில் பிரிந்து சென்றன].

    ஆலையிற் படுத்த வேழத் தருஞ்சுவைச் சாறு போலக்
    கோலவண் சித்தி முற்றும் நீங்கலும் குறுகும் வேனில்
    வேலையின் முன்னர்ப் போது மெல்லிலை யூழ்த்து வீழ்த்த
    சோலையின் வெறிய னாகித் துயர்ப்பெருங் கடலிற் றாழ்ந்தான்        239
    [கரும்பின் அரிய சுவைச் சாறுபோலும் இனிய சித்திகள் முழுவதும் நீங்கவே, முதுவேனில் வெப்பத்தின் முன்னர்ப் போதும் தளிர்களும்முகிழ்த்து உதிர்ந்து பொலிவற்ற சோலையினைப் போலப் வெறுமை உடையனாகித் துயர்க்கடலில் அமிழ்ந்தான். ஆலை- இயந்திரம். வேழம்- கரும்பு. வேலை- எதுகை நோக்கி ‘ளை’ , ‘லை’ ஆயிற்று. வேலை- கடலெனக் கொண்டு, கடல் போன்ற வேனில் எனலுமாம். வெறியன் – பொலிவிழந்தவன்.]

    என்னினிச் செய்யு மாறென்றி ரங்கிமா ழாந்து தேர்ந்து
    முன்னமக் கருளிச் செய்த முனிவனை யின்னும் வேண்டின்
    மன்னுமெண் சித்தி மீட்டும் வருமெனத் துணிந்து வல்லே
    தன்னகர் வரைப்பி னின்றுஞ் சார்ந்தனன் குரவன் றன்பால்        240
    [இனிச் செய்யத் தக்கது யாது என்று மனம் வருந்தி, மயங்கிப் பின் தெளிந்து, முன்னம் நமக்கு அருளிச் செய்த முனிவனை அடைந்து மீண்டும் வேண்டினால் எண்வகைச் சித்திகளும் மீண்டும் வரும் எனத் துணிந்து விரைந்து தன்னுடைய நகரின் எல்லையை விட்டு நீங்கிக் குரவனை அடைந்தான்.]

    தொழுதெழுந் தாடிப் பாடிச் சொல்லுவான் நெறியி னின்றும்
    வழுவினேன் மொழிந்த மாற்றம் மறந்தனேன் ஆதலானே
    செழுவிய சித்தியெட்டுந் தீர்ந்தன சிறியேன் செய்த
    பிழைபொறுத் தருள வேண்டும் பெரியவ என்று நின்றான்.        241
    [குரவனைத் தொழுதெழுந்துஆடிப்பாடிச் சொல்லுவான்;’ கூறிய நெறியினின்றும் வழுவினேன்; உறுதியாகக் கூறிய சொல்லினை மறந்தேன்; ஆதலாலே, சித்திகள் எட்டும் என்னிவிட்டு நீங்கின; சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும், பெரியவரே!’ என்று இரந்து நின்றான். ]

    அருளுறு குரவன் கேளா வஞ்செவி புதைத்துத் தீயில்
    உருகிய செம்பு பெய்தாங் குரைசெவி யேற்று கின்றாய்
    திருவிலி முகடி யென்னை செய்தனை யறிவிலாயென்
    றிருசெவி முழுதுங் கைப்ப வாயுறை யியம்பிச் சொல்வான்.        242
    [ அருளுடைய குரவன், அரசன் கூறிய அந்த சொற்களைக் கேட்டு, தன்செவிகளைக் கைகளால் பொத்தி, செவியில் செம்பினைக் காய்ச்சி ஊற்றியதைப் போலச் சுடு சொற்களை ஏற்றுகின்றாய். நல்லூழ் இல்லாத மூதேவி! அறிவிலாதவனே! எத்தகைய செயலைச் செய்துளாய்!’ என்று இருசெவிகளும் கசக்கும்படியாகச் சொற்களாகிய மருந்தினை சொல்லுவான்.]

    மருவலர்க் கிடியே றன்னாய் வையக மிறும்பூ தெய்த
    வொருவிய சித்தி மீட்டு முற்றிட விழைந்தா யாகில்
    அருவென வுருவ மென்ன வருவுரு வென்ன நின்ற
    கருணையெம் பெருமான் வைகுங் காஞ்சிமா நகர மெய்தி.        243
    [பகைவர்களுக்கு இடியேறு போன்றவனே! உலகம் ஆச்சரியப்படும்படியாக நீ எய்திய சித்திகள் நீங்கிட, மீண்டும் அதனை அடைய விரும்பினாயென்னில் அருவெனவும் உருவம் எனவும் அருவுருவெனவும் நின்ற அருளுடைய எம் பெருமான் வைகும் காஞ்சிநாநகரம் அடைந்து]

    மறைநெறி யொழுக்க மோம்பி வதிந்திருத் தீர்த்த மாடிக்
    கறைகெழு பிறவி வேலை கடத்திடுங் காமக் கண்ணி
    யிறைவி பொற்பாதம் போற்றி யிறைஞ்சுதி சித்தி யெல்லாம்
    நிறைதரப் பெறுவா யென்று நிகழ்த்தினன் விடைதந் தானே.        244
    [ வேதநெறி வழக்கினைப் பாதுகாத்து அங்குத் தங்கி பெருமையுள்ள தீர்த்தம் ஆடி, குற்றமுடைய பிறவிக்கடலைக் கடத்திடும் காமாட்சி இறைவி பொற்பாதத்தினைப் போற்றி இறைஞ்சுவாயாக. இழந்த சித்திகளை மீளப் பெறுவாய் என்று கூறி

    புறவிடை கொண்டு தாழ்ந்து பொருக்கென நெறிக்கொண் டேகி
    நிறைமலி மணியிற் செய்த நீள்கொடி மாடந் தோறு
    நறைவிரி கூந்த னல்லார் நாடகம் பயிற்ற லோவா
    அறமலி காஞ்சி மூதூர் அகநகர் கண்ணுற் றானே.        245
    [அரசன் புறத்தே வந்து விடை கொண்டு அறம் நிறைந்த காஞ்சி மூதூரின் அகநகர் அடைந்தான்.]

    கம்பைநீர் தோய்ந்தே கம்பர் கழலிணைப் போது போற்றி
    உம்பரும் ஆடல் ஓவா ஓங்குல காணித் தீர்த்தப்
    பைம்புனல் படிந்து காமக் கண்ணிதன் பாதந் தாழ்ந்து
    செம்பொருட் டுதிக ளாரச் செய்தனன் செய்யுங்காலை        246
    [கம்பையாற்றில் மூழ்கி, ஏகம்பர் கழலிணை மலர்களைப் போற்றி, தேவர்களும் ஆடல் நீங்காத உயர்ந்த உலகாணி தீர்த்தக் குளிர்புனல் படிந்து காமாட்சியின் திருப்பாதம் வணங்கித் துதிகள் மிகுதியாகச் செய்தனன். அவ்வாறு செய்யும் நாளில்]

    முப்புரம் பொடித்த முக்கண் முதல்வரை யிறுகப் புல்லிச்
    செப்பன முலையான் மார்பிற் றிருவடை யாளம் வைத்த
    துப்புறழ் தொண்டைச் செவ்வாய்ச் சுடர்வடி நெடுவே லுண்கண்
    மைப்படு குழலாள் சாலத் திருவுள மகிழ்ச்சி கூர்ந்து        247
    [திரிபுரத்தைச் சாம்பலாக்கிய முக்கண் முதல்வராம் சிவனை இறுக அணைத்துச் செப்புப் போன்ற முலையினால் மார்பில் திருவடையாளம் பொறித்து வைத்த பவளம் போலச் சிவந்த வாயும் சுடர் வடிவேல் போன்ற மையுண்ட கண்ணும் கருங்கூந்தலும் கொண்ட காமாட்சி மிகவும் திருவுளம் மகிழ்ந்து]

    இளமரக் காவு வாங்கி யேர்குடி யிருக்குங் காஞ்சி
    வளநகர்த் தெய்வந் தன்னை வழங்கென வழங்கலோடும்
    பளகறுத் தருளுங் காஞ்சிப் பதிப்பெருந் தெய்வ முன்னின்
    றளிமுர லலங்க லாற்குச் சித்திக ளருளிற் றன்றே.        248
    [ பூஞ்சோலைகள் சூழ்ந்து அழகு குடியிருக்கும் காஞ்சிநகர்த் தெய்வத்தை வழங்குக என ஆணையிட அத்தெய்வம் வழங்கலோடும் குற்றமறுத்தருளும் காஞ்சிப்பதியின் பெருந்தெய்வம் முன்னின்று வண்டு முரலுந் தாரினனாகிய அரசனுக்குச் சித்திகள் அருளிற்று. அன்றே-அசை. வாங்கி- வளைத்து. பளகு- குற்றம்]

    தலைவரு சித்தி யெட்டும் பண்டுபோற் சார்தலோடும்
    இலைமுதல் உகுத்துச் சால இலம்படு பொதும்பர் மீட்டும்
    மலரொடு தளிருந் தாதுந் துவன்றுபு வளமிக் காங்குத்
    தொலைவரு மாக்கம் வாய்ந்து தோன்றினா னரசர் கோமான்.        249
    [எதிர்வரும் எட்டு சித்திகளும் முன்பு போல வந்தடையவே, இலை முதலியவற்றை உதிர்த்து மிகவும் வறுமைப்பட்டுப் போன பூஞ்சோலை மீண்டும் மலரொடும் தளிரும் தாதுவும் மிகுந்து வளமிக்கப் பெற்றதைப் போலச் செல்வம் வாய்ந்துஅரசர்மணி கோமான் தோன்றினான். இலம்பாடு- வறுமை.]

    காதரம் இரிக்குங் காமக் கண்ணிதன் அருளால் வேந்தன்
    தீதறு சித்தி யெட்டுந் திருத்தகப் பெற்ற வாற்றான்
    மேதகு சருவ சித்தி கரமென விளங்கு நாமம்
    மாதர்வண் மதில்சூழ் காஞ்சிமா நகர் பூண்ட தன்றே.        250
    [தீவினைகளை ஓட்டும் காமாட்சியின் அருளால் வேந்தன் குற்றமற்ற எண்வகைச் சித்திகளையும் இத்தலத்தில் திருத்தமாகப் பெற்ற காரணத்தால் மேன்மையுடைய சர்வசித்திகரம் என விளங்கும் திருப்பெயரை அழகிய மதில்சூழ்ந்த காஞ்சிமாநகரம் பூண்டது. அன்றே- அசை. காதரம்- தீவினை.]

    பூவலர் தனிமா மூலப் புதுநிழற் புராண ரோடும்
    காவியங் கூந்தற் காமக் கண்ணியை நாளும் போற்றி
    ஆவயி னின்னும் பல்லோர் அணவருஞ் சித்தி யெல்லாம்
    மேவரப் பெறுத லானும் விளங்கிய தனைய நாமம்.        251.
    [பூக்கள் அலர்ந்த ஒப்பற்ற மாமரத்தின் அடியில் எழுந்தருளும் பழையோருடனும் காவிமலர் அணியும் கூந்தல் காமாட்சியை நாள்தோறும் போற்றி அங்கு இன்னும் பலர் அடைதற்கரிய சித்திகளை யெல்லாம் அடையப் பெறுதலானும் அப்பெயர் விளங்கியது.]

    கலிவிருத்தம்
    முள்ள ரைச்செழு முண்டக னோர்சிரங்
    கிள்ளுங் கூருகிர்க் கேழ்கிளர் செங்கையெம்
    வள்ள லாரொரு கற்பத்து வானளாம்
    வெள்ளி யங்கிரி மீமிசை வைகுழி.        252
    [முள் தண்டினையுடைய செழுமையான தாமரை மலரின்மேல் இருக்கும் பிரமனின் ஒரு சிரத்தைக் கொய்யும் கூரிய நகத்தையுடைய சிவந்த நிறமுடைய கையராகிய எம்முடைய வள்ளலார், சிவபெருமான் முன்னொரு கற்பத்து வானளாவிய திருக்கையிலையில் மீது எழுந்தருளியிருந்தபோது]

    வாளை வென்று மதர்த்துக் குடங்கையி
    னீளும் வேல்விழி நித்தில வெண்ணகைத்
    தாள மென்முலைப் பார்ப்பதித் தையலைக்
    காளி யென்று கரைந்து விளித்தனர்.        253
    [வாளை மீனை வென்று மதர்த்துக் குடங்கையின் அடங்காது நீளும் வேல்போற் கூரிய விகளும் முத்துப்போன்ற வெண்மையான பற்களையும் தாளம் போன்ற முலைகளையும் உடைய பார்வதி அம்மையைப் பார்த்துக் ‘காளி’ என்றுஅழைத்தனர்.]

    கருணை நாயகர் காளியென் றோதிய
    வுரைசெ வித்துளை யேறலு மொய்யெனப்
    பொருமி யுள்ளம் புழுங்கித் தவம்புரிந்
    தருளி னாலவ் வுருத்தனை நீங்கினாள்.        254
    [கருணை நாயகர்- இறைவர். காளி- கருநிறம் கொண்டவள். இறைவர் தன்னைக் ‘காளி’ என்று அழைக்க, அந்தச் சொல் செவிதுளையுட் புகவும் அம்மை உள்ளம் பொருமிப் புழுங்கித் தவம் இருந்து காளியுருவினை நீத்தாள்.]

    கோங்கை வென்ற குவிமுலை யாள்வயின்
    நீங்கி வேறுறு நீலுரு வாயிடை
    ஓங்கி ஆயிரங் கால்கரம் மொண்முகம்
    தாங்கியச் சுறத் தையலென் றாயதே.        255
    [கோங்கை வென்ற குவிமுலையளாகிய உமையம்மையிடமிருந்து நீங்கிய நிறம் வேறு கரிய நிறத்துடன் பலகால், கைகள், ஒளியுடைய முகம் தாங்கி அச்சத்தை விளைக்கும் பெண் என ஆயது. ஆயிரம் என்றது பல எனும் பொருளது. நீல் உரு- கரிய உரு. ஒள்+முகம்= ஒண்முகம். ஒள்- ஒளி, பிரகாசம். அச்சுற- அச்சம் உற. தையல்- பெண்]

    அன்ன கன்னி யடுக்கற் குலவரை
    மன்னன் ஈன்றருள் மாதுநல் லாளிரு
    பொன்னஞ் சீறடி போற்றி யெழுந்துநின்
    றென்னை செய்பணி யென்றனக் கென்றலும்        256
    [அம்மை நீத்த அவ்வுருவாகிய கன்னி பார்வதியின் திருவடிகளைப் பணிந்து போற்றி எழுந்துநின்று தன் செய்யவேண்டுவதை உத்திரவு செய்தருள்க என்றலும். அடுக்கல் – சாரல். குலவரை- உயர்ந்த மலை. அடுக்கல் குலவரை மன்னந் இமயபருவத அரசன். மாது நல்லாள்- பர்வதராசனின் மகளாகிய பார்வதி. ]

    விமல நாயகி நோக்கி வியந்துநீ
    சமரின் ஏற்றுத் தறுகண் அவுணர்தங்
    குமரி யாவி குடித்துச் சகமிசை
    யமலும் இன்னல் முழுதும் அகற்றியே        257
    [ விமலநாயகி- இறைவி, பார்வதி. சமர்- போர். தறுகண்- வன்கண்மை. குமரி ஆவி- அழியாத உயிர். அமலும்- செறிந்த. பார்வதி தேவியார் அந்த உருவைப் பார்த்து வியந்து, நீ அசுரர்களைப் போரில் எதிர்த்து அவர்களுடைய அழியா உயிரைக் குடித்து உலகின்மேல் செறிந்த இன்னல்களை அகற்றி]

    தொழுத குந்திருத் துர்க்கையென் றோர்பெயர்
    தழுவி வையகந் தாண்மல ரேத்திட
    வழுவில் காஞ்சி வளம்பதி காவல்கொண்
    டழிவி லந்நகர் வைகென் றருளினாள்.        258
    [ தொழப்படும் திருத் துர்க்கை என்று ஒரு சிறந்த பெயர்கொண்டு உலகம் உன் தாள்மலர்களை வணங்கிட குற்றமில் காஞ்சி நகரைக் காவல்கொண்டு அழிவில்லாத அந்த நகரில் தங்குக என்று அருளினாள்.]

    அருளும் வண்ணம் அவுணரை ஆவியுண்
    டிருளு மென்மலர்ச் சோலைகள் ஈண்டிய
    தெருளு லாந்திருக் காஞ்சியைக் காவல்பூண்
    டொருமை அன்பில் உறைந்தனள் கன்னியே.        259
    [ இறைவி அருளிய வண்ணம் அசுரர்களின் உயிரை உண்டு மெல்லியமலர்ச்சோலைகள் நிரம்பிய விளக்கமுடைய காஞ்சிமாநகரைக் காவல் பூண்டு நிகரற்ற அன்புடன் அங்கு அக்கன்னி வாழ்ந்தனள்.]

    அன்னை காளிம வாக்கையிற் றோன்றிய
    கன்னி காத்தருள் காரணத் தாற்றிருக்
    கன்னிகாப் பெனுநாமங் கைக்கொண்டதால்
    அன்னம் ஆடும் அகன்றுறைக் காஞ்சியே.        260
    [ இறைவியின் கரிய நிற உடலினின்றும் தோன்றிய கன்னி காத்தருளிய காரணத்தால், திருக்கன்னி காப்பு என்னும் நாமம் கைக்கொண்டது அக்காஞ்சி நகர். அன்னம் ஆடும் அகன்துறைக் காஞ்சி- காஞ்சியின் நீர்வளம் கூறிற்று.]

    பன்னு மாநகர் பன்னிரு பேர்பெறுந்
    தன்மை கூறினஞ் சாற்றுமப் பேர்செவி
    துன்ன லால்வினை சுட்டொரு வேதியன்
    நன்னர் வான்பத நண்ணிய தோதுவாம்        261
    [பாராட்டப்பெறும் மாநகரின் பன்னிரண்டு பெயர்களின் தன்மை கூறினம். அப்பெயர்கள் செவியில் நெருங்கினமையால் வினை ஒழியப்பெற்றுவேதியன் ஒருவன் நல்ல மேலான பதம் எய்திய வரலாறு ஓதுவோம்.

    வேறு
    தரைய கம்புகழ் செழுங்கல்வி சான்றவன்
    கரைமறை முழுவதுங் கண்ட நாவினன்
    புரைதபு கெளசிக மரபிற் பூத்தவன்
    உரைதகு மேதையோர் அந்த ணாளனே.        262.
    [உலகமெலாம் புகழும் நல்ல கல்விநிறைந்தவன்;சொல்லப்படுகின்ற வேதம் முழுவதும் அறிந்த நாவினன்; குற்றமற்ற கெளசிகமரபில் பிறந்தவன்; புகழத்தக்க சான்றோனாகிய அந்தணாளன். தரை- உலகம். கரை- சொல். கண்ட- அறிந்த. புரை- குற்றம். தபு- நீங்கிய. உரை- புகழ்.]

    செழுக்குல மரபின் வந்துயிர்த்த சீர்த்தியும்
    வழுக்கறு கலையெலாம் வல்ல வாண்மையும்
    ஒழுக்குறு மேன்மையும் உன்னி யுன்னிமிக்
    கழுக்குறு மனத்தனாய்த் தருக்கி னானரோ.        263
    [அவன் தான் பிறந்த குலத்தின் பெருமையையும் பிழையறக் கலைகளெல்லாவற்றையும் கற்றுணர்ந்த அறிவாண்மையையும் தன் ஒழுக்க மேன்மையையும் நினைந்து நினைந்து அழுக்குறு மனத்தனாய் கருவம் மிகக் கொண்டவனாயினன். உயிர்த்த- பிறந்த. வழு- பிழை; அவை ஐயமும் திரிபும். ஒழுக்குறு மேன்மை- குலாச்சாரத்தில் மேம்படுதல். உன்னி- நினைந்து. தருக்கு- அகந்தை]

    பெரியவர் தம்மையும் பேணு கின்றிலன்
    உரியவர் தம்மையும் ஓம்பு கின்றிலன்
    விரிகலை பயின்றவர்க் காணின் வேழமேல்
    அரியென மீச்செலும் அறனில் சிந்தையான்.        264.
    [பெரியோர்களையும் மதிக்கமாட்டான்; ஆதரிக்கக் கடமைப் பட்டவர்களையும் பாதுகாக்கிலன்; கற்றாறிந்தவர்களைக் கண்டால் யானைமேற் பாயும் சிங்கம் போலப் பாய்ந்து வாதுக்கிழுக்கும் அறமில்லா உள்ளத்தவன். பேணுதல்- மதித்தல். ஓம்புதல்- பாதுகாத்தல். வேழம்- யானை. அரி- சிங்கம். அறனில் சிந்தை- கொடிய மனம்.]

    அல்லதை யாமென வறைந்து நாட்டியும்
    இல்லதென் றுள்ளதை யெடுத்துத் தள்ளியும்
    வல்லவர் தம்மையு மருட்டி வாதினால்
    வெல்லுந ரில்லென மேம்பட் டோங்கினான்.        265
    [தகாததைத் தக்கது என்று வலிந்துநாட்டியும், உள்ளதை இல்லையென்று எடுத்துத் தள்ளீயும் கற்றோர் தம்மையும் வாதத்திறமையால் மருட்டித் தன்னை வெல்லக்கூடியவர் யாரும் இல்லையென்று கருவங்கொண்டு ஒழுகினான்.]

    இன்னணம் வென்றிகொண் டியங்கு நாளையிற்
    பன்னுபல் கலைகளும் பயின்ற நாவினர்
    துன்னிய கேள்வியர் தூய வந்தணர்
    மன்ன வைக்களத் திடைவந்து முற்றினார்        266
    [ இவ்வாறு வாதத்தினால் எவரையும் வெற்றி கொண்டு இயங்கும் நாளில், பலகலைகளும் கற்றவர், செறிந்த கேள்வியறிவுடையவர், தூய ஒழுக்கமுடைய அந்தணர் அரசனின் அவைக்களத்துக்கு வந்து சேர்ந்தார்.]

    வரும்பெரி யவர்தமை வாதின் வென்றழித்
    தரும்பிய மடமையிற் றருக்கி யங்கணோர்
    துரும்பென விகழ்ந்து நெஞ்சுளையச் சொல்லியே
    யிரும்புகழ் படத்தனை யுயர்த்தி யம்பலும்        267
    [ வந்த பெரியவரை வாதுக்கு இழுத்து வென்று அழித்து, தன்னிடம் முளைத்த அறியாமையினால் கருவம் கொண்டு அவரை ஒரு துரும்பென இகழ்ந்தும் தன்னைப் பெரும்புகழ்பட உயர்த்தியும் பல இயம்பினான்.]

    இருபுரு வங்களு நெற்றி யேறமென்
    மருமலர்க் கண்ணிணை வயங்கிச் சேப்பமிக்
    குருவவா ரதரமுந் துடிப்ப வூங்குவர்
    வெருவரா தவன்றனை வெகுண்டு சொல்லுவார்        268
    [ அவ்வந்தணப் பெரியவர், இருபுருவங்களும் நெற்றிமேல் ஏற, மெல்லிய நறுமணமுள்ள மலர்போன்ற கண்கள் சிவந்து விளங்க, வாயிதழ்களும் துடிப்ப, அவனை அஞ்சாது வெகுண்டு சொல்லுவார்.]

    நூலுணர் பெரியவர் நொடிக லார்நனி
    மாலுறு பித்தரிவ் வாறு செப்புவார்
    ஏலுமா றுரைக்கலா இழுதை நீதுயர்
    சாலும்வல் லரக்கனாய்த் தளர்க வென்றனர்.        269
    [கற்றுணர்ந்த பெரியோர் இங்ஙனம் பேசமாட்டார்; அறிவுமயங்கிய பித்தரே இவ்வாறு செப்புவர். தகுதியற்றவற்றை உரைக்கும் கீழ்மக னாகிய நீ துக்கம் மிக்க வலிய அரக்கனாக வாடுக என்று சபித்தனர். நொடிகலார்- கூறார். மால்- மயக்கம்.இழுதை- கீழ்மகன். சாலும்- நிறையும். ஏல்² ēl, n. < ஏல்-. 1. [M. ēl.] Suitability, appropriateness, fitness;தகுதி; பொருத்தம். ]

    வடுவறு நாவினர் கொதித்து வல்லையில்
    இடுமொழிச் சாபந்தன் செவியி னேறலும்
    வெடிபடு முருமொலி கேட்டு வேதனை
    படுமர வெனவுளம் பதறி நைந்துபின்.        270
    [குற்றமற்ற செந்நாவினராகிய அந்தணர் சினந்து இட்ட சாபமொழி தன்னுடைய செவியிற்படவும் வெடிபடும் இடியோசை கேட்ட நாகத்தினைப்போல உளம் பதறினான்; வருந்தினான்; பின்பு, வடுவறு நா- செந்நா; கூறியது அப்படியே பலித்துவிடும் மந்திரமொழி கூறும் நா. கொதிப்பு- வெப்பம்; சினத்தால் வருவது. நந்து- வருந்தி]

    தீர்திறம் வேண்டுது மென்று சென்றவர்
    வார்தரு கழலிடை வணங்கி நாயினேன்
    கார்தரு மனத்தினாற் கழறி னேன்இவண்
    நீர்தரு சாபம்நீத் தருளு கென்றனன்.        271
    [இச்சாபம் தீரும் வழியினை வேண்டுவோம் என்று சென்று அவருடைய திருவடிகளை வணங்கி ‘நாயினேன் அறியாமையில் இருண்ட மனத்தினால் பொல்லா மொழிகளைப் பேசினேன்; இப்பொழுது தாங்கள் இட்ட சாபத்தினை நீத்தருள்க’ என்றனன். தீர்திறம்- சாபம் நீங்கும் வழி, பரிகாரம். கார்- கருமை, இருள்; அழுக்காறு;அறியாமையால் விளைவது. ]

    தளர்ந்துநொந் தடியிணை தாழ்ந்து வேண்டலும்
    வளர்ந்தெழுங் கருணையாற் காஞ்சி வைப்பினைக்
    கிளந்திடும் பன்னிரு பெயருங் கேட்கினன்
    றுளைந்தருஞ் சாபமென் றுரைத்துப் போயினார்.        272
    [ மனம் தளர்ந்து, தன் பிழைக்குத் தன்னையே நொந்து அந்தணனின் அடியிணையில் தாழ்ந்து வணங்கி வேண்டவே, வளரும் கருணையினால் காஞ்சி நகருக்குக் கூறப்படும் பன்னிரு நாமங்களையும் செவியுறக் கேட்ட நாளில் வருத்தும் இச்சாபம் வெறுத்து நீங்கும் என்று அவர் உரைத்தனர். வைப்பு- நகரம். உளைந்து- வெறுத்து. அறும்- நீங்கும்.]

    ஆவயின் வெருக்கொளும் அரக்க னாகிநீர்
    வாவியிற் சோலையின் மன்றின் எங்கணும்
    மேவரிதாகி வெள்ளிடை திரிந்தழிந்
    தோவறு கறங்கென வுழலு மேல்வையின்.        273
    [அதுவரையில் பயப்படத்தக்க அரக்கனாகி நீர் குளம், சோலை, மன்றுகள், எவ்விடத்திலும் தங்குதல் இயலாதவராகி வெற்றிடங்கள்தோறும் திரிந்து அழிந்து காற்றாடி போல சுழன்று அலைவீர். அக்கலத்தில்,]

    செந்தழல் தண்ணெனச் செகுக்குஞ் சாபமுன்
    வந்தநாள் தீர்வவர் வகுத்து ரைப்புழி
    எந்தவாழ் வுந்தருங் காஞ்சி யென்றொரு
    மந்திரஞ் செவியுறும் மல்லற் பேற்றினால்.        274
    [செந்தழல் குளிரும்படி, வருந்தும் சாபத்துக்குக் கழுவாய் அந்தணர் வகுத்து உரைக்கும் போது எத்தகைய உயர்வான வாழ்க்கையையும் அளிக்கும் காஞ்சி என்று ஒரு மந்திரம் செவியில் வந்து உறும் வளமான நற்பேற்றினால். மல்லல்-மல்லல்² mallal, n. < மல்கு-. 1. Abundance; மிகுதி. (சூடா.) 2. Wealth; செல்வம். மல் லற்கேண் மன்னுக (பரிபா. 11, 121). 3. Fertility, richness; வளம். (தொல்.)

    இசையெனு நாடக மகளை யீண்டிய
    திசையெலா நடஞ்செய விடுத்துத் தேசுசால்
    வசையறு காஞ்சியின் மருங்கு கானினோர்
    பசைநிழல் ஆலினைப் பற்றி வைகினான்.        275
    [புகழ் என்னும் நாடக மகளை நெருங்கிய திசைகள் எல்லாவற்றிலும் நடஞ்செய விடுத்து ஒளியுடன் குற்றமறத் திகழும் காஞ்சி மாநகரின் பக்கத்தில் இருந்த கானில் ஓர் பசுமையான நிழல் பரப்பும் ஆலமரத்தினை பற்றித் தங்கினான்]

    முழங்கிசைச் சுருப்பின முரலுந் தேமலர்ப்
    பழங்கனிந் துகுமரப் பசிய கானிடை
    வழங்குநர் தமைநெறி மறுத்து நெஞ்சகஞ்
    சழங்குறப் பழங்கணிற் றாழ்த்துச் செல்லுநாள்.        276
    [வண்டுக்கூட்டம் இசையுடன் முரலும் தேன் ,மலர், பழம் கனிந்து உகுக்கும் பசிய கானகத்திடைச் செல்லுவோர்களைத் துன்பத்தில் அமிழ்த்துயருறச் செலுத்தும் நாளில், சழங்குற- கலங்க. பழங்கண்- துன்பம். தாழ்த்து- அமிழ்த்தி]

    வேறு
    கருமச்சிறை முற்றும் அறுத் தருள் காட்டிடும்
    பெருமைச்செறி காஞ்சி யரன்கழல் பேணினான்
    அருமைச்செழு மாமறை யாய்ந்தறி கேள்வியான்
    தருமச்சுரு திப்பெயர் தாங்குமொர் வேதியன்        277
    [இருவினையாகிய சிறையை முற்றும் அறுத்து அருள் வழி காட்டிடும் பெருமை செறிந்ஹ காஞ்சியம்பதியின் அரன், ஏகாம்பரநாதனின் திருவடிகளைப் போற்றுபவன், அரிய வேதங்களை ஆராய்ந்து அறிந்த கேள்விஞானம் உடையவனாகிய தருமச்சுருதி என்னும் பெயருடைய வேதியன் ஒருவன். வேதம் கேட்டுப் பயில்வது ஆகையால், மாமறை ஆய்ந்தறிந்த கேள்வியான் என்றார்.]

    நடக்கும்பொழு துங்கமழ் சேக்கை நலத்தகக்
    கிடக்கும்பொழு தும்பல காலுங் கிளர்ந்தறம்
    எடுக்குந்திருக் காஞ்சியின் ஈரறு நாமமும்
    அடக்கும்பொறி நெஞ்சின் அழுத்தி விளம்புவான்.        278
    [நடக்கும்போதும் மணமுள்ள படுக்கையில் இன்புற்றுக் கிடக்கும்போதும் எப்பொழுதும் பலமுறை அறம் வளர்க்கும் திருக்காஞ்சியின் பன்னிரண்டு திருநாமங்களையும் ஐம்புலனை வென்ற நெஞ்சில் இருத்தி விளம்புவான்.]

    அன்னானொரு நாள்வளர் அவ்வன மெய்தினான்
    ஒன்னாரென ஆதவன் வெப்ப முடற்றலும்
    இன்னாமையு ழக்கும்அரக்கன்இ ருக்குமம்
    மன்னால மரத்தடி நீழலின் வைகினான்        279
    [அத்தகையோன் ஒருநாள் அந்த வனத்தை அடைந்தான். பகைவர் எனச் சூரியன் வெப்பத்துடன் காயவே, துன்பம் செய்யும் அரக்கன் வாழும் அந்தப் பெரிய ஆலமரத்தடியின் நிழலில் தங்கினான். அன்னோந் அத்தகை இயல்புடையவன். ஒன்னார்- பகைவர். மன்- பெரிய. ]

    தண்ணங்குளிர் நீழலின் வெம்மை தணந்துயர்
    கண்ணன்கடி மாமலர் நான்முகன் காண்கிலா
    வண்ணன்கழல் சிந்தையில் வைத்து வளம்பதி
    எண்ணுந்திரு நாமமி ராறுமி யம்பினான்.        280
    [தட்பமுடைய குளிர்ந்த நிழலில் சூரியனின் வெப்பத்தை நீங்கி திருமாலும் நான்முகனும் கான அரிதாய வண்ணமுடையவனின் திருவடிகளைச் சிந்தையில் வைத்து காஞ்சி வளம்பதியின் பன்னிரு திருநாமங்களையும் இயம்பினன். எண்ணும் – கணிக்கும், தியானம் செய்யும்.]

    கண்டுங்கனி யுங்கமழ் தேனும்வி ராயென
    மண்டுஞ்சுவை நாமமி ராறும்ம ரத்தின்மேல்
    கொண்டங்கமு லர்ந்துகு ழைந்தவ ரக்கன்றன்
    மிண்டுந்துயர் விள்ள வகஞ்செவி மேயவே.        281
    [கற்கண்டும் கனியும் தேனும் கலந்து மிகுந்த சுவையுடைய திருநாமங்கள் பன்னிரண்டும் மரத்தின்மேல் இருந்து உடல் உலர்ந்து வற்றி வருந்தும் அரக்கனுடைய மிக்க துயர் நீங்க அவனுடைய செவியகம் நுழைந்தனவே. விராய்- விரவி மண்டும்- செறியும் அங்கம்- உடல். உலர்ந்து- வற்றி. குழைந்து- வாடிய. மிண்டும்-வருத்தும் விள்ள- விட்டு நீங்க. அகஞ் செவி என்பதை செவி அகம் என மாற்றுக]

    பெயர்சென்று செவித்துளை யிற்பெரி தேறலு
    மயர்முற்று மகன்று முதுக்குறை வாய்ந்தனன்
    துயருற்ற அரக்கவு ருத்தொகு சாபவெவ்
    வயர்வைத் தணிவித் துவகைக்கட லாடினான்        282.
    [காஞ்சியின் பன்னிரு திருநாமங்களும் அவ்னுடைய செவித் தொளையில் சென்றேறலும் அவனுடைய மயக்கவுணர்வு முற்ரிலும் அகன்று பேரறிவு வாய்ந்தனன். துன்பந்தரும் அரக்கவுருக் கூடிய சாபம் ஆகிய களைப்பு நீங்க உவகைக் கடலில் நீராடினான். மயர்- மயக்கம். முதுக்குறை – பேரறிவு. தொகு- கூடும். அயர்வு- களைப்பு ]

    கணித்தோதிய காஞ்சியி னாமநன் மந்திர
    பிணித்தாவயின் முன்னுற விட்டருள் பெற்றிபோன்
    மணித்தாழ் விழுதூன்றிய வால்வயி னின்றிழிந்
    தணித்தாக நடந்தரு ளான்றனை யண்மினான்.        283
    [தியானித்து ஓதிய காஞ்சியின் பன்னிருநாம மந்திரத்தின் அருளியல்பினைப்போல் முன்பு அழகுடன் நிலத்தின் மீது வீழ்ந்து ஊன்றிய விழுதினைப் பற்றி இரங்கிவந்து அருளுடை அந்தணனை அடைந்தான். கணித்தல் – எண்ணுதல், தியானித்தல். பிணித்து- பற்றி. பெற்றி- இயல்பு. மணித்தாழ் விழுது – அழகுடயதாகத் தாழ்ந்த விழுது]

    தொழுதார்வினை தூளிப டுத் தருள் தூயசீர்
    முழுநான்மறை முற்றிய நாவின னீர்ங்கழல்
    அழுதார்வமொ டாரவ ணங்கியெ ழுந்தனன்
    பழுதோவிய மெய்ப்புகழ் கொண்டுப ழிச்சினான்        284
    [தன்னைத் தொழுதவர்களுடைய பாவத்தைப் பொடிபடுக்கும் அருளுடையவனும் அறங்கறையும் நாவின்னுமாகிய அந்தணனின் திருவடிகளில் விழுந்து அழுது தொழுதான். புகழ்மொழிகளால் துதித்தான். பழுதுஓவிய –குற்றமற்ற.]

    குழியும் விழியும் பிறழ்கூ ரெயிறுங்குலைந்
    திழிபுன் மயிருங் கரியேர் முகமுந்தசை
    யழியும் வடிவும் மெதிர்கண்ட வரஞ்சமுன்
    வழிபாடு செய்வானை மருட்கையி னோக்கியே.        285
    [ குழிந்த விழிகளையும் வரிசை பிறழ்ந்த கூரிய பற்களையும் பரட்டைத்தலை மயிரினையும் கரிய முகத்தினையும் தசை வற்றிக் காய்ந்தஉடலினையும் கொண்டதொரு உருவத்துடன் எதிரே வந்து வணங்குவோனைக் கண்டு மருட்கையுடன் நோக்கி]

    வெருவுந் திற லாக்கையை மேதகு வந்தனை
    புரியுந்தனி யன்பினை யார்புக லாயெனத்
    திரியுந்திரி யிஞ்சிக டந்தருள் சேவகர்
    அருளன்றியி லாமறை யாளன்வி னாயினான்.        286
    [ அச்சம் தரும் இயல்புடைய உடம்பினை; மகிழ்வுடன் வணக்கம் புரியும் ஒப்பற்ற அன்பினை உடையாய்; இ யாரென்று கூறுவாயாக என முப்புரம் எரித்த சிவபெருமானின் அருளன்றி வேறு பற்று இலாத அந்தணன் வினவினான்.]

    நந்தாத பெரும்புகழா னவிலென்றலுஞ்
    சிந்தா குலமுற் றுமிரித்தடி சேர்ந்தவ
    னுய்ந்தே னடியே னெனவோகை யுளத்தெழ
    வெந்தா யிதுகே ளெனவங்க ணிசைக்குமே.        287
    [குன்றாத பெரும் புகழோனாகிய அந்தணன் கூறுக என்றலும், மனத்துயரினை முற்றும் நீங்கியவன்,’உய்ந்தேன் அடியே’ என உவகை உள்ளத்தில் எழ, ‘எந்தாய்! இது கேளாய்’ எனக் கூறத் தொடங்கின்ன்.]

    பீடார் தருவே தசன்மா வெனும்பேரினேன்
    கோடா தவுளத் தவர்தங் குழுவிற்புகா
    வாடா தெதிர்வாதி னிகழ்ந்திறு மாத்தலின்
    வீடாத வரக்க வுருத்தனை மேயினேன்.        288
    [பெருமை உடைய வேதசன்மா எனும் பெயரினேன். செம்மையுளத்தவர் சபையினிற் புகுந்து தயங்காது எதிர்வாதம் நிகழ்த்தி இறுமாந்து இருந்த்தின் பயனாக நீங்காத அரக்க உருவினைப் பெற்றேன்.]

    அவ்வாறுவ ருந்துய ரத்தனை யுங்கணத்
    திவ்வாறுபு குந்தெழி லார்திருக் காஞ்சியின்
    செவ்வாய்மை யிரும்பெயர்செப்பியொ ழித்தனை
    யுவ்வாறடி யேன்செய லென்றுரை யாடினான்.        289
    [அரக்க உடலில் வருந் துயரனைதையும் ஒரு கணத்தில் இவ்விட்த்தில் நீவிர் வந்து அழகுமிகு காஞ்சியின் செம்மை மிகு பெயர்களைச் செப்பி ஒழித்தீர். இதுவே என் வரலாறு என்று உரையாடினான்.]

    கருமே னியனின் னகரைந்தமை கேட்டலும்
    பெருகோகை நெடுங்கடலிற் பெரிதாடினான்
    முருகார் பொழில்விண்டு புரப்பெயர் மொய்யரு
    டருமாறு நினைந்து தழைத்தன னுள்ளமே.        290
    [கரிய மேனியன் இவ்வாறு கூறக் கேட்டலும் அந்தணன் பேருவகைப் பெருங்கடலில் ஆடினன். மணங்கமழ் பூஞ்சோலைகள் சூழ்ந்த விண்டுபுரப் பெயர் அருள்தருமாற்றை நினைந்து உள்ளம் மகிழ்ந்தனன்.]

    இருவோர்களு மிங்ஙன மின்புறு மேல்வையில்
    தருவீந்த பொலந்தொடை மோலியர் தாம்பலர்
    திருவான்ற விமான மொடுஞ் செறிவுற்றலர்
    மருவார்ந்த வனத்திடை வந்தனர் முற்றினார்.        291
    [ இவ்வாறு இருவரும் மகிழ்ந்திருக்கும் சமயத்தைல் கற்பக மலர்மாலைகளைத் தலைக்கணியாக அணிந்த வானவர்கள் பலர் அழகிய வானவூர்தியில் மலர்கள்செறிந்த அவ்வனத்திடை வந்தனர். ஏல்வை- சமயம். தரு- மரம், கற்பகமரத்தைக் குறித்த்து. பொலந்தொடை- பொன்மாலை; பொன் அழகுமாம். மோலி- மௌலி; சிரம் மரு- மணம்.]

    விழுநீர் மையன் வேதசன்மா வெனும் வேதிய
    னொழியாத விடும்பை யரக்க வுருத்தனைக்
    கழியாமிகு காமர்பிணைந்து கதிர்த்திடுஞ்
    செழுமேனியின் வானவனாய்த் திகழ்வுற்றனன்.        292
    [விழுகிய இயல்பின்னாகிய வேதசன்மா எனும் வேதியன் நீங்காத துயரைத்தரும் அரக்க வுவினைக் கழித்து, மிகுந்த அழகுடன் ஒளி திகழும் மானியனாகிய வானவனாய்த் திகழ்வுற்றான். விழுநீர்மை- சீர்மை.கழியா- கழித்து.]

    பெடையோடு மணிக்குயில் பின்னி யிணங்குறு
    மடல்வா யவிழ்பூம் பொழில்வாங் கியகாஞ்சியி
    னெடுநாம மிராறு நிகழ்த்திய வேதிய
    னடிநீண்முடி சூடின னங்கருள் பெற்றனன்.        293
    [ காஞ்சியின் பன்னிரு நாமங்களையும் நிகழ்த்திய வேதியனின் அடியை முடியிற் சூடினன். அவனுடைய அருளைப் பெற்றான்]

    அரமங்கையர் சாமரை பாங்கர சைத்திடச்
    சுரர்தத்தந லங்கெழு செய்கை தொடங்கிட
    விரியுங்கிர ணத்தவி மானமி வர்ந்தெழீஇப்
    பரவும்புல வோர்பதி சென்றுபு குந்தரோ         294
    [தேவமங்கையர் சாமரைகள அசைத்தனர். தேவர்கள் தத்தம் மங்கலச் செய்கைகளைச் செய்யத் தொடங்கினர். ஒளிக்கதிர் வீசும் விமானம் ஆகாயத்தின் மீது எழுந்து தேவலோகம் சென்றது.]

    வள்ளத்தைநி கர்த்த மணிக்குரு மாமுலைக்
    கள்ளக்கருங் கட்கட வுண்மட வாரொளி
    துள்ளுற்றவி தழ்ப்பவ ளச்சுவை வார்மது
    வள்ளிப்பரு கிப்பெரு வாழ்வின மர்ந்தனன்.        295
    [வேதசன்மன் தேவலோகத்தில் தேவமகளிருடன் கூடி இன்புற்றிருந்தனன்.]

    மல்கும்பவ நூறிமெய் வாழ்வுவ ழங்குமிவ்
    வல்கும்பெயர் பீழைய றுத் திமை யார்பதி
    நல்குந்திற மற்புத மேகொன யந்தினி
    யொல்கும்புய லூர்திக ணித்தது ரைக்குவாம்.        296
    [மிகுந்துவரும் பல பிறப்புக்களையும் ஒழித்து மெய்ஞ்ஞான வாழ்வளிக்கும் காஞ்சிநகரின் திருப்பெயர்கள் உடற்றுன்பம் ஒழித்து வானவருலகம் நல்கும் திறம் அற்புதம் ஆமோ? ஆகாதென்க. இனி, மேகவாகன்னகிய இந்திரன் இத்திருப்பெயர்கலைக் கணித்துப் பேறு பெற்றது உரைப்பாம்.]

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    தண்ணந் தரளக் குடைநிழற்றத் தயங்கு மணிச் சாமரை யிரட்டச்
    சுண்ணந் ததைந்த மலர்க்கூந்தற் றோகையனையார் நடங்குயிற்ற
    வண்ணந் தழைத்த விசைவீணை வல்லோ ரமிழ்த மெனப்பாட
    விண்ணந் தளிர்ப்ப வரியணைமேன் மேவியரசு செயுந்திறலோன்        297
    [வெண்முத்துக் குடை குளிர்நிழல் அளிப்ப, அழகியசாமரகள் இரட்ட, மகரந்த மணம் கம்ழும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மயிலனைய மகளிர் நடனமாட, நிறம் விளங்கும் இசையை வீணை வல்லோர் அமிழ்தம் எனப் பாட, வானுலகம் செழிப்புடன் விளங்க சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசு செய்யும் திறலோனாகிய இந்திரன். தண்- குளிர்ச்சி. தரளம் – முத்து.சுண்ணம்- மகரந்தம். வண்ணம்- இராகத்தின் பல வண்ணங்களும் தோன்ற இசைத்தல். விண்ணம்- விண்ணுலகம்]

    அன்னம் பொருவு மகலியைமெல் லமிழ்தார் சாயற் பெண்ணரசின்
    பொன்னம் பிதிரிற் சுணங்கலர்ந்து பூரித்தெழுந்த முலைக்களிறும்
    வன்னம் பிதிரும் மணிப்பருமம் வயங்கு நிதம்பத் தடந்தேருங்
    கொன்னம் பழுத்த விழிப்படையுஞ் சமரம் புரியக் கோட்பட்டான்.        298
    [அன்னம் போன்ற மெல்லிய சாயலை உடைய பெண்ணரசியாம் அகலியையின் பொந்துகள் போன்ற சுணங்கு படர்ந்து பூரித்தெழுந்த முலைகளாகிய களிறும், அல்குலாகிய வலிய தேரும் கூர்மையான விழிப்படையும் செய்யும் போரில் சிக்கினான்.பிதிர்- பொடி. நிதம்பம்- அல்குல்.]

    குவளைக் கருங்கட் டுணைசேப்பக் கொழிக்கும் பசுந்தெள் ளமிழ்தொழுக்கும்
    பவளக் கடிகை இதழ்விளர்ப்பப் பணைத்துத் துணைத்துச் சுணங்கலர்ந்த
    தவளத் தரள முலைஞெமுங்கத் தடவுநிதம்பக் கடல்பொங்கக்
    கவளக் களிறும் பிடியுமென அற்றம் நோக்கிக் கலந்தனரால்.        299
    [ குவளை மலரினைப் போன்ற கரிய கண்கள் சிவக்கவும் பசிய தெள்ளமிழ்தம் நிகர்த்த எச்சிலை ஒழுக்கும் பவளத்துண்டு போன்ற வாயிதழ்கள் வெளுத்து விளர்க்கவும் பெருத்து இரண்டாய் சுணங்காகிய தேமல் பூத்த வெண்முத்துமாலை புரளும்முலைகள் நசுங்கவும் பெருத்த நிதம்பமாகிய கடல் பொங்கவும் கவளவுணவு விழுங்கும்களிறும் பிடியும் எனத் தக்க சமயம் நோக்கிப் புணர்ந்தனர். கடிகை- துண்டம். பணைத்து- பெருத்து. துணைத்து- இரண்டாய். அற்றம்- தக்க சமயம்.]

    நீலம் நிறைந்த மழைத்தடங்கட் சுரமா மகளிர் நெடுங்கழுத்துக்
    கோலம் நிறைந்து தழைத்தோங்கக் குரைவெண் கடலிற் கொதித்தெழுந்த
    ஆலம் நிறைந்த திருமிடற்றா ரடித்தா மரையிற் கருத்திருத்துஞ்
    சீலம் நிறைந்த கெளதமனா ரனைய களவைத் தெரிந்தருளி.        300
    [கரிய, குளிர்ந்த, பெரிய கண்களையுடைய தேவமகளிர்தம் நீண்ட கழுத்தில் மங்கலம் நிறைந்து தழைத்தோங்க, ஒலிக்கின்றகடலில் வெப்பத்துடன் தோன்றிய ஆலகால நஞ்சு நிறைந்த மிடற்றினரின் திருவடித் தாமரைகளி தம்முடைய சிந்தையை நிறுத்தும் ஒழுக்கமுடைய கௌதம முனிவர் அந்தக் களவினை அறிந்து. நீலம்- கருமை. சுரமா மகலிர்- தேவமாதர். கோலம்- மங்கலம், மங்கலநாண். குரை- ஒலிக்கும். ]

    இரும்பு குழைக்குங் கற்பின்வலி யெளிதிற் குழைத்தாய் நெடியபசுங்
    கரும்பு குழைக்கு மதன்கணைக்குக் கலங்கும் புலையா யோனிதனை
    விரும்பி முறையிற் பிறழ்ந்தனையான் மிளிருநினது மெய்முழுது
    மரும்பும் பலயோனிக டழுவியலக்க ணுறுவா யெனச்சபித்தார்.        301
    [ இரும்பின் வலிமையையும் வெல்லும் கற்பின் வலிமையை எளிதில் குழைத்துவிட்டாய். நீண்ட கரும்புவில்லினை வளைக்கும் மன்மதனின் மலர்க்கணைகளுக்குக் கலங்கும் புலையனே! பெண்ணின் யோனியை விரும்பி ஒழுக்கந் தவறினாய். ஒளிரும் உன்னுடைய உடல் முழுவதும் யோனிகள் அரும்பத் துன்பமுற்றலைவாய் எனச் சபித்தார்]

    செல்லல்தப முக்குறும்பெறிந்து தெருளானந்தக் கடற்குளிக்கு
    மல்லற் றவத்துக் கௌதமனார் வகுத்தசா பந்தொடக்குதலும்
    அல்லற் கடற்கோர் விருந்தாகி யைஞ்ஞூற்றிரட்டி யோனியுடற்
    புல்லிப் பருவந் துயிர்சாம்பிப் பொலிவு மாழ்கி யறிவழிந்தான்.        302
    [செல்லல் cellal, n. < செல்-. 1. Sorrow, suffering, affliction; துன்பம். (தொல். சொல். 302.) 2. Disgust; வெறுப்பு. (W.) 3. [T. jella.] Fresh- water fish, yellowish, attaining 3 in. துன்பம் கெடக் காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்று குற்றங்களையும் வென்று தெளிந்த ஆனந்தக் கடலில் குளிக்கும் தவச் செல்வம் உடைக கௌதமனார் இட்ட சாபம் பற்றியதும் ஆயிரம் யோனி உடலிற் கூடித் துன்ப்ப்பட்டு உயிர் வருந்திப் பொலிவு அழிந்து அறிவழிந்தான்]
    தூண்டா விளக்கினெழில் கொழிக்குஞ் சுரமா மகளிர் நடநவிற்றப்
    பூண்டாங் கிளமென் முலைச்சசிதன் புடைவீற் றிருப்பப் புத்தேளிர்
    ஈண்டா வேவற் பணிகேட்ப வெறுழ்மான் றவிசினர சிருப்பு
    வேண்டா னாணுத் தலைக்கொண்டான் மெலிந்தான் மேருவரை [யடைந்தான்.        303
    [நந்தாவிளக்குப் போல அழகு கொழிக்கும் தேவமகளிர் நடனம் ஆட, இளமை கொழிக்கும் இந்திராணி அருகில் வீற்றிருப்பத் தேவர்கள் திரண்டு ஏவிய பணி செய்யச் சிங்காதனத்தில் வீற்றிருக்கும் இந்திரபதவி வேண்டானாகி நாணம் மிகக் கொண்டு மேருமலையை அடைந்தான்.]

    ஆண்டு வளமொய்த் தெழில்பரப்பி யலங்கி யொருநூற் றோசனைக
    ணீண்டு குளிர்ந்து வெண்டரங்க நிரையிற் றவழுந் தடம்பொய்கை
    பூண்ட விசைமென் சுருப்பிஅங்கள் பொழிதேன் மடுத்துத் தாதருந்து
    மாண்ட கனகச் செழுக்கமல மணிமொட் டகத்திற் கரந்தி ருந்தான்        304
    [அங்கு நீர்வளம் மிகுந்து அழகு பரப்பி, நூறு யோசனை தூரம் விரிந்து குளிர்ந்து வெண் திரைகள் வரிசையில் தவழும் பெரிய பொய்கையில் வண்டுகள் இசையுடன் மொய்த்துத் தாதருந்தும் பொற்றாமரையன்ன மலர் மொட்டகத்தில் மறைந்திருந்தான்]

    புங்க மறையோன் மனைமுலையைப் புணர்ந்த விழைவு தணியாதக்
    கொங்கை நிகர்வ திதுவென்று குறித்துக் கலந்து வாழ்வான்போற்
    பொங்கு நறுந்தாமரை முகிழ்க்கட் பொள்ளென் றொளித்தங் கவனிருப்பத்
    துங்க நெடுவான வர்காணார் துண்ணென் றயிர்புற் றுளந்தி கைத்தார்        305
    [மேன்மையுடையஃ மறைவனுடைய மனைவியின் முலையுடன் கூடிய ஆசை தணியது அந்தக் கொங்கையை ஒப்பது இது என்று அத்னுடன் கலந்து வாழ்பவனைப்போல முகிழ்த்த நறுமணமுள்ள தாமரை மொட்டின்கண் ஒளிந்து கொண்டு அவன் இருக்கவே, தேவர்கள் தங்கள் தலைவனைக் காணாது உளம் திகைத்தார்கள். . புங்கம் puṅkam (திருவாச.        5,        71). 2. Height; உயர்ச்சி. (பிங்.) துங்கம்- உயர்ச்சி]

    வரியுங் கழற்கால ரசின்றிப் புல்லென் றழுங்கும் வானாடர்
    சுரிசங் கலறி வயிறுளைந்து தோற்றும் புதுநித்தில முறுவற்
    புரிமென் கூந்தற் சசியோடும் பொருக் கென்றேகி வினையனைத்து
    மிரியுந் தவத்தான் மேம்பட்ட வெறுழ்சால் குரவன்றனைக் கண்டார்.        306
    [தங்களுடைய அரசனைக் காணாமையினாலே, கலங்கிய தேவர்கள் இந்திராணியுடன் வினையனைத்தும் நீங்கி, தவத்தால் மேம்பட்ட வலிமையுடைய முனிவனைக் கண்டார்கள். சுரிசங்கு அலறிவயிறு உளைந்து தோற்றும் நித்திலம்- சுரிந்த சங்கு ஓலிட்டு வயிறு நொந்து தோற்றுவித்த முத்து- வெண்மையான முத்து ச்சியின் நகைக்கு உவமை. ]

    கடிக்கற் பகமென் மலர்மாரி கமழச் சொரிந்து கழலிணைதம்
    முடிக்கட் புனைந்து பணிந்தெழுந்து முறையிற் பழிச்சி யிடும்பையெலா
    மிடிக்கும் கருணை யருட்குருவே யிறைவா வெறுழ்த்தோள் வலனுயிரைக்
    குடிக்கும் படையான் றனைக்காணேம் யாங்க ணுளனோ கூறென்றார்.         307
    [மணமிக்க கற்பக மலர்களைச்சொரிந்து, முனிவனின் திருவடிகளில் வீழ்ந்து முறையிற் பணிந்து, துயரங்களையெலாம் ஒழிக்கும் கருணையுடைய குருவே! இறைவா! வலர்ரியினைக் கொன்ற வலிய தோளன் இந்திரனைக்காணோம். எங்குளன் கூறுக என்றார்.]

    தேவ குரவ னதுகேளாச் செங்கேழ்ச் சடிலப் பிறைமோலி
    மூவர் முதல்வ ரடிபோற்றி யறிவி னாடி முதுவிசும்பு
    காவ லரசன் முனிமனையைக் காமுற் ரிழுக்கி யஞருழக்கும்
    பாவ காரியாய்க் கரந்து பயிலுந் திறந்தேர்ந் துரைசெய்வான்.        308
    [தேவர்களின் குருவான சுக்கிரன் அது கேட்டு, செஞ்சடையில் பிறையைத் தரித்தவனும் மூவர்களின் முதல்வனுமாகிய சிவபெருமானின் திருவடியைப் போற்றி ஞானக் கண்ணால் ஆராய்ந்து, தேவர்களின் அரசனாகிய இந்திரன் முவனின் மனைவியைக் காமுற்றுக் குற்றமிழைத்து, துன்பமுறும் பாவியாய் மறைந்துவாழும் திறத்தினைத் தெரிந்து உரை செய்வான்]

    ஒலிவி லுகுக்குந் தரளமணி ஒலியல் வயங்குந் தடம்புயத்தீர்
    வலியின் உயர்ந்த இறைமுனிவன் மனையை விழைந்து கொடுஞ்சாபம்
    நலியப் பலயோ னியனாகி நகைகால் மேரு வரைத்தடத்து
    மெலிய கமல முகிழ்கரந்தான் மேவிக்கொணர்தும் எனஎழுந்து.        309
    [தழைக்கும் மின்னொளியை உகுக்கும் மணிமாலை விளங்கும் வலிய தோள்களை உடையவர்களே! ஆற்றல் மிக்க முனிவனின் மனைவியை விரும்பி கொடிய சாபத்தால் யோனிகள் பலவுடைய உடலனாகி, மேருமலையை அடைந்து , அங்கு மெல்லிய தாமரமலர் மொட்டில் கரந்துள்ளான் எனக் கூறக் கேட்டு, அங்கு சென்று அவனை மீட்டுக் கொண்டுவருவோம் என எழுந்து சென்றனர், 4 v. intr. To shoot forth; to be luxuriant; to prosper, thrive; தழைத்தல். ஒலிந்த கூந்தல் (பதிற்றுப். 31, 24 ஒலியல்- மாலை]

    விடுக்கும் கிரண மணிமோலி விண்ணோர் தனதுபுடை வரப்போய்
    அடுத்து விளிப்ப நளின முகையகத்துக் கரந்த புருகூதன்
    றொடுத்த சமழ்ப்புள் அகமலைப்பத் துனைவின் வெளிக்கொண்
    [டன்பினொடு
    மடுத்த கருணைக் குரவனிரு மலர்த்தாள் பணிந்து வேண்டினான்.        310
    [ஒளிவீசும் மகுடங்களை அணிந்த தேவர்கள் தன்னைச் சூழத் தாமரையை அடுத்து அழைக்கவே, மலர் மிட்டில் இருந்த இந்திரன் நாணம் உள்ளத்தை அலைக்க, விரைவில் வெளிவந்து அன்பினொடும் வந்த் கருணைக் குருவின் மலர்ப்பாதங்களைத் தொழுது வேண்டினான். புருகூதன் -இந்திரன். சமழ்ப்பு – வெட்கம். துனை- விரைவு.]

    வந்து பணிந்த நாகநகர் மகவான்றனைக் கொண்டருட் குரவன்
    கந்த மலிந்த மலர்த்திரளுங் கதிருமணியும் பொலங்குவையும்
    உந்தி நெடுங்கோட் டகத்தொதுக்கி யொலிந்த சினைக்கோ ழரையகிலுஞ்
    சந்தும் பெயர்க்கும் பிரயாகைத் தடநீர்த் திருத்தமருங் கணைந்தான்.        311
    [வந்து வணங்கிய இந்திரனை அழைத்துக் கொண்டு அருட்குரவன் பிரயாகை தீர்த்த்த்துக்கு வந்தான். நாகர்- தேவர். நாகநகர்- தேவலோஒகம். மகவான்இந்திரன். கந்தம்- மணம். மலிந்த- நிறைந்த.பொலம்-பொன். குவை- திரள். உந்தி- தள்ளீக்கொண்டு. கோடு- கரை. திருத்தம்- தீர்த்தம்.]

    அரக்கு விரிந்த நெடுஞ்சலடித் தடிகள டிகளுற நினைந்திப்
    பரக்கும் புனலால் விதியாற்றாற் படியென் றுரைத்தா னுரைத்தாற்குச்
    சுரக்கு மதுநுண் டுளிதுவற்றுஞ் சுடர்ப்பூந்தருக் கற்பக நாடு
    புரக்குந் தடவுப் புயத்தானு மவ்வாறங் கட்புனல் படிந்தான்.        312
    [ அரக்கு விரிந்ததைப் போன்ற சிவந்த சடைமுடியுடைய அடிகளை மனத்தில் நினைந்து விரிந்த பிரயாகைகைப் புனலி விதிப்படி ஆடுக என்று உரைத்தான். கற்பக நாட்டைப் புரக்கும் இந்திரனும் அவ்வாறு பிரயாகைத் தீர்த்தத்தில் படிந்தான்.]

    சுலவுந் தரங்க மெடுத்தெறியுஞ் சுடர்வெண் பணிலம் வயல்கடொறுங்
    கலவும் பெருநீர்த் தடநதியிற் களிப்புற்றாடிக் கரையெழலும்
    நிலவுங் கொடிய பெரும்பாவந் தணந்தான் வடிவி னிகழ்குறிகள்
    பலவுந் தணவாத் திறநோக்கிப் பொன்னோ னிதனைப் பணித்தருள்வான்.         313
    [பிரயாகை நதியில் இந்திரன் களிப்புற்றாடிக் கொடிய பாவந் தணந்தான். ஆஃனால் உடலில் இருந்த குறிகள் பலவும் நீங்காத நிலைமை நோக்கி தேவகுரு வியாழன் இவ்வாறு பணித்தருள்வான்.]

    கண்டார் நகைக்க நினதுடம்பிற் கஞலும் யோனி தணப்பதற்கு
    மண்டார் கலிசூழ் நிலவரைப்பின் மருந்து வேறொன் றிலை யால
    முண்டார் வதியுங் காஞ்சிநக ருறும்பேர் கணிக்கற் பாலையெனக்
    கொண்டாங் கவனுக் கிராறு திருப்பெயருஞ் செவியிற் கூறினனால்.        314
    [உன்னைக் கண்டார்கள் சிரிக்கும்படி உன்னுடலில் பொருந்தியுள்ள யோனிகளைத் தணப்பதற்கு கடல்சூழ் உலகில் வேறு மருந்து இல்லை. ஆலமுண்டார் வதியும் காஞ்சிநகருக்கு உற்ற பெயர்களை செபிப்பாயாக எனக் கூறி அவனுக்கு அப்பன்னிரு பெயர்களையும் உபதேசமாகச் செவியிற் கூறினான்]

    அருளிற் புகுத்துந் திருக்காஞ்சிப் பெயரா றிரண்டுங் கணித்தோதித்
    தெருளுய்த் தருளு மேகம்ப நாதர் செழுந்தா ளகத்திருவி
    மருளிற் றணந்த பெரும்பேற்றான் மாறா யோனி யாயிரமு
    முருவத் தடங்க ணெனப்பொலியக் கண்டா னுவகைக் கடற்றிளைத்தான்         315.
    [திருவருளிற் செலுத்தும் திருக்காஞ்சிப் பெயர் பன்னிரண்டும் மனைத்தில் எண்ணி ஓதி, தெருள் உய்த்தருளும் ஏகம்பநாதரின் திருவடிகளை மனத்தில் இருத்தி மயக்கத்தினைத் தவிர்ந்த பெரும் பேற்றினைப் பெற்றான் தன் மேனியிலிருந்த யோனிகள் அனைத்தும் நீங்க பெரியகண்கள் எனப் பொலியக் கண்டான். மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான்.]

    இணங்கு காஞ்சி நகர்மேன்மை யெண்ணு தொறும்பே ரற்புதனாய்
    வணங்கி யிமையோ ராயிரங்கண் மகவா னென்று போற்றிசைப்பச்
    சுணங்கு பூத்த மணிமுலையார் பழிச்சத் துறக்க நாடெய்தி
    யணங்கு மடங்கற் றவிசேறி யரசு புரிந்து வாழ்ந்தனனால்        316
    [ காஞ்சி நகரின் மேன்மையை எண்ணுந்தொறும் பேரற்புதம் அனுபவத்திற் கண்டு, இமையோரால் ‘ஆயிரங்கண் மகவான்’ எனப்பாராட்டப் பெற்றுத் தேவமகளிர் வணங்கத் துறக்க நாடெய்தி வணக்கத்திற்குரிய சிம்மாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிந்து வாழ்ந்தனன்.]

    ஊற்று மதநீ ரசும்புமுகத் தொளிர்கோட் டயிரா வதப்பாகன்
    சாற்றி யலகிட் டெய்தரும் பேறெய்துந் திறஞ்சாற் றினமிப்பாற்
    கூற்ற நடுங்க வேற்றெதிர்ந்து குறுகா வரசர் மிடன்முழுதுங்
    காற்று மயிவே லொருவேந்தன் கணித்து வரம்பெற் றதுமுரைப்பாம்.        317
    [ஆயிரம் கொம்புடை அயிராவதம் என்னும் மதயானைப் பாகனாகிய இந்திரன் காஞ்சிநகர்த் திருநாமங்கள் கூறி அளவிலாத பேறெய்தும் திறம் கூறினேம். இனி , எமனும் நடுங்கப் பகையரசர் வலிமை முழுவதையும் அழிக்கும் அரசன் ஒருவன் பன்னிரு நாமங்களைக் கணித்து வரம் பெற்றது உரைப்போம்]

    வேறு
    தவளம ருப்பின வொழுகுப ணைக்கைய தறுகண்மு கத்தநெடுங்
    கவளம தக்களி றுற்றுமு ழக்கொலி கருமுகி லஞ்சவெழுஞ்
    சுவணபு ரத்திடை மிகுபுகழ் துற்றத னஞ்சய னென்றொருவன்
    உவண முயர்த்தவ னிகர்மிடல் பெற்றுள னொளிறு மணிக்கழலான்.        318
    [வெண்மையான தந்தங்களையும் நிலத்தில் தோயுமாறு நீண்ட துதிக்கையினையும் சினமிக்க முகத்தினையும் உடைய கவளம் உண்ணும் மதக் களிறுகள் கரிய மேகமும் அஞ்சுமாறு பிளிரும் முழக்கொலியுடைய சுவர்ணபுரம் எனும் நகரில் கருடக்கொடி உயர்த்தவனாகிய திருமாலினைக் நிகர்க்கும் வலிமையுடைய அரசன் இருந்தான். தவளம்- வெண்மை. பணைக்கை- பெரியகை. தறுகண்- வீரம். கவளம்- சோற்ருருண்டை. சுவணபுரம்- சுவர்ணபுரம், பொன்னகரம். உவணம்- கருடன். மிடல்- வெற்றி,வலிமை.]

    இகன்மற மன்னர்கண் முழுது முடைந்தன ரிளகுவனம் புகுதத்
    திகழெரி சிந்துபல் படைகள்சொ ரிந்தவர் தேயமொ ருங்குதழீஇ
    யகனில மின்புற மகவினை யாதிய றங்கள்வ ளர்த்தறநூற்
    றொகுமுறை முற்றுற வுலகு புரந்தரு டொழிறலை நின்றிடுநாள்        319
    [பகையரசர்கள் முழுதும் போரினில் தோற்றனராய் தளிர்த்தவனங்களில் மறைய, போரிட்டு அவர்களுடைய நாடுகளை ஒருங்கே கைக்கொண்டு , உலகமெலாம் இன்புற வேள்வி முதலிய அறங்களை வளர்த்து அறநூல்கள் தொகுத்த அறவழி ஆட்சி புரிந்தொழுக் நாளில். இகல்- பகை. உடைந்தனர்- தோற்றனராய். திகழெரி சிந்து பல் படைகள் சொரிந்து- நெருப்பு உமிழும் போர்க்கலன்களைச் செலுத்தி. படி செலுத்துவோரின் கோபத்தைப் படைகளின் மேலேற்றி எரி சிந்தும் பல்படை என்றார். மகம்- வேள்வி. ]

    தீதுறு பண்டை யுஞற்றிய வூழ்வினை சென்று தொடங்குதலிற்
    கோதி லமைச்ச ருரைக்கு நலங்கள் கொளாது பகற்பொழுது
    சூது வினைக்கண் முயன்று கழித்திருள் துன்னுமிராப் பொழுதுங்
    காதன் மடந்தையர் காமரு தோணல முண்டு கழித்தனனே        320
    [முன்பு செய்த தீவினையின் பயன் தொடங்கியதினால், குற்றமற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை மனதிற்கொள்ளாமல் பகற்பொழுதெல்லாம் சூதாட்டங்களிலும் இரவெல்லாம் மகளிர் தோள் நலமுண்டும் கழித்திருந்தான்]

    மல்லலொ ருங்குத பும்படை யாகிய சூதினும் வாலொளிகான்
    முல்லைய ரும்புநி கர்க்குந கைக்கரு மொய்குழல் மாதரினு
    மொல்லும னத்தின னாதலின் வேலையு டுத்தநெ டும்புவியிற்
    செல்லுறு காவ லுறங்குநர் கைப்பொருள் செத்தொழி வுற்றதரோ.        321.
    [செல்வத்தை யெல்லாம் ஒருசேர அழிக்கும் படையாகிய சூதிலும், முல்லையரும்பைநிகர்க்கும் வெண்மையான பற்களையுடைய மகளிர் போகத்தினும் பொருந்தின மனத்தினனாதலினால், அவனௌடைய செல்வம் எல்லாம் காவலிலாமையினால் உறங்குபவன் கைப்பொருள்போல அழிவுற்றன. மல்லல் – வளம், செல்வம். தபு- அழி. வால்- வெண்மை. நகை- பற்கள். வேலை- கடல். செத்து- ஒப்ப.]

    அரசுரி மைத்தொழி லிகவுபெ றத்தனி யடல்வலி சூதினும்
    விரைசெறி குங்கும முலையின ரின்பினும் வீழ்வகை கண்டுபகைப்
    புரசைம தக்கரி யாசர்கள் வென்றிகொள் பொழுதிஃ தாமெனவே
    யுரைசெயு முன்னெதிர் படைகொடு முற்றின ரொலிகடல் சூழ்ந்ததென        322
    [அரசுரிமை தன்னை விட்டு நீங்குமாறு சூதிலும் பெண் இன்பத்திலும் அரசன் வீழ்வதைக்கண்டு பகையரசர்கள் அவனை வெற்றி கொள்வதற்கு இதுவே தக்க தருணமென்று விரைந்து படையெடுத்து வந்து கடல் சூழ்ந்ததென முற்றுகையிட்டனர். இகவு- நீங்க. அடல்வலி சூது- சூதின்மேல் பற்று வைத்தவன், பின் அதனைவிட்டு நீங்க முடியாது. புரசை – யானையின் கழுத்திற் கட்டப்படும் கயிறு. யானைப்படை மட்டும் கூறினார், ஏனைப்படைகளும் கொள்க. உரை செயும் முன்னர்- விரைவு குறித்தது.]

    கவனவ யப்பரி யுந்தினர் தேர்கள்க டாவினர் வார்மழையிற்
    றவழ்மத வும்பலு கைத்தனர் வீரர்க டங்களை யேயினர்கூற்
    றிவர்நுதி வாளிதொ டுத்தன ராழியெ றிந்தனர் வெங்கனலி
    யவிர்முனை நாந்தக மோச்சின ரார்த்தன ராடமர் செய்தனரே.        323
    [போர் நிகழ்ச்சி கூறப்பட்டது. கவனம்- வேகம்; , n. cf. gamana. [K. gavana, M. kavva, Tu. gava.] 1. Attention, care; கருத்து. உன்கவனத்தைச் செலுத்து. 2. cf. javana. Swiftness, rapidity, velocity; வேகம். கவன வாம்பரி (கந்தபு. படையெழு. 18). உந்தல்- காலால் உதைத்துச் செலுத்துதல். உம்பல்- யானை. நாந்தகம் – வாள். ஆடமர் வெற்றிப் போர்.]

    மாற்றலர் வந்துவ ளைந்தமர் செய்ய மறங்கனியச் சினவிக்
    கூற்றென வார்த்து மலிந்த தனாது கொடும்படை தன்னொடுநே
    ரேற்றுநெ டும்பிண மெங்குநெ ருங்கவெ றிந்தம ராடல்புரிந்
    தாற்றல னாகியு டைந்துவி டுத்தன னவ்வயி னீங்கினனே.        324
    [பகைவர் வந்து முற்றுகையிட்டு அமர் செய்ய, போரினை ஏற்றுச்சினந்து கூற்றேன ஆரவாரம் செய்து தன்னுடைய படையின் துணையொடு கடும்போர் செய்தனன். எங்கும் பிணக்குவியல். பகைவர்வலிமைக்கு ஆற்றாதவனாகிப் போர் செய்வதைக் கைவிட்டுப் போர்க்களத்தை விட்டு நீங்கினன். ]
    வேறு
    கோற்றொடி மனைவி தன்னை யரதன கூடமென்னும்
    ஆற்றல் சாலரணக் காப்பின் வைத்துநல் லமைச்சன் றன்னைப்
    போற்றுகென் றிருவிப் புந்தி விழைந்தவை பெறுவான் பொற்பின்
    மாற்றரு மதுகை வேந்தன் வடதிசை நோக்கிச் செல்வான்.        325
    [தன்மனைவியை அரதன கூடம் என்னும் வலிமையுடைய கோட்டையில் த்ங்க வைத்து, தன்னுடைய நல்ல அமைச்சனை அவளைக் காக்கும்படி நிறுவி, தான் தன் மனத்தில் விரும்பியதனை அடையும் பொருட்டு வேந்தன் வடதிசை நோக்கிச் செல்வான். கோற்றொடி- கைவளையல். அரணம்- கோட்டை. இருவி- நியமித்து .மதுகை- matukai, n. perh. மத. 1. Strength; வலிமை. அறியுநர் கொல்லோ வனைமதுகையர் கொல் (குறுந். 290). 2. Knowledge; அறிவு. வானுயர் மதுகை]

    புரிமுறுக் குடைந்து செந்தேன் பொழிசெழுங் கமலமேறி
    வரிவளை யலறியீன்ற மணிக்குவை நிலவுகால
    வரிவையர் செவா யெனா வாம்பல் மொட்ட்விழு மோடை
    நெறிதரு பழனஞ் சூழ்ந்த நெடுநகர் பலகொட் புற்றான்.        326
    [கட்டவிழ்ந்து தேன் பொழியும் தாமரை மலர்களின் மீதேறிவரிகளையுடைய சங்குகள் வாயலறி ஈன்ற முத்துக் குவைகள் வெண்மையான ஒளியை வீச, மகளிரின் செவ்வாய் எனும்படியான ஆம்பல்கள் மொட்டவிழும் ஒட்டைகள் நெருங்கிய பழனங்கள் சூழ்ந்த வளநகர்கள் பல்வற்றிலும் அலைந்து திரிந்தான். புரிமுறுக்கு¹ puri-muṟukku., n. < id. +. 1. See புரிமுறுக்கல். 2. Unblown lotus; மலராத தாமரைப்பூ. . மருத நிலங்களில் அலைந்ததைக் கூறியது.]

    தவவள ரேனல் காவற் றடங்கருங் குவளைக் கண்ணார்
    கவணை யினோச்சு கின்ற கதிர்மணிக் குலங்கள் வானின்
    றவிரொளி மீன்க ளுக்காங் கலங்கிவீழ் சாரற் குன்றத்
    துவலைய குரம்பைச் சீறூ ரொண்பதிபல கொட்புற்றான்.        327
    [ வளமாக வளர்ந்திருக்கின்ற தினைப் புனங்களில் காவலிருக்கின்ற கர்ங்குவளை போன்ற மகளிர் கவணில் எறிகின்ற மணிக்கற்கள் வானத்திலிருந்து கலங்கி வீழும் விண்மீன்கள் போல் பிரகசமான ஒளிவீசும் சாரல்களையுடய குன்றுகளில் தழை வேய்ந்த குடிசைகள் இருக்கும் ப்ல சிற்றூர்களில் சுற்றி அலைந்தான். தவ-மிகுதி. ஏனல் –தினை. குரம்பை- குடிசை. உவலைய குரம்பை- கூரையாகத் தஃழை வேய்ந்த குடிசை.. குறிஞ்சி நில த்தில் சுற்றி அலைந்ததைக் கூறியது.]

    ஏந்திள முலைந லாரின் இளவன நடைகள் கற்கும்
    பூந்துணர் நாகச் சோலைப் புறமெலா மதலை யீட்டந்
    தாந்திரை விலங்கி யுய்த்துத் தரும்பெரு வளங்க ளோங்குந்
    தீந்துறை நெய்தல் வேலிச் செழும்பதி பலகொட் புற்றான்.        328
    [இளமகளிரின் அழகிய நடையைக் இளமையான அன்னப்பறவைகள் கற்கும் சுரபுன்னை சோலைகள் சூழ்ந்த பக்கங்களில் தோணிகள் கூட்டம் அலைகளை விலக்கிக் கொண்டு வந்து பொருள்வளம் ஓங்குகின்ற இனிய துறைகளையுடைய நெய்தல் மரங்களை வேலியாகக் கொண்ட வளமான பதிகள் தொறும் சுற்றி அலைந்தான். அனம்- அன்னம்; இடைக்குறை. துணர்- கொத்து. நாகம்- சுரபுன்னை. மதலை- தோணி. ஈட்டம்- கூட்டம். திரை- அலை. தீந்துறை- காட்சிக்கினிய துறை. நெய்தல் நிலத்து ஊர்களில் சுற்றி யலைந்ததைக் கூறியது.]

    ஆய்களிற் றினங்க ணீர்வேட் டலமர லெய்திப் பாங்கர்த்
    தோய்கய நேடித் தத்தந் துணையொடு மறுகி யோடுங்
    காய்கட மியங்குவோரைக் கலங்கஞ ருறுத்து வெளவி
    மாய்தரும் பசிதீர் மாக்கள் வாழ்பதிபல கொட்புற்றான்.        329
    [உணவின்மையான் மெலிந்த யானைக்கூட்டம் நீர் வேட்டு சுழன்றுதிரிந்து, தாம் தோய்தற்கு நீர்நிலைகளைத்தேடித் தத்தம் துணையோடு வருத்தத்துடன் ஓடும் வெப்பத்தினால் காய்ந்த வழிகளில் செல்வோரை அச்சம் கொளும்படி வருத்திக் கவர்ந்தபொருளால் பசிதீரும் ஆறலைக் கள்வர் வாழும் ஊர்களில் சுற்றித் திரிந்தான். ஆய்- ‘ஆய்தல் ஓய்தல் உள்ளதன் நுணுக்கம்’. கயம்-நீர் நிலை. மறுகுதல்- வருந்துதல். கடம்- வழித்தடம். மாய் தரும் பசி- சாவினைத் தரும் பசிநோய். பாலைநிலத்தில் சுற்றி அலைந்ததைக் கூறியது.}

    அவரையுந் துவரங் காடும் அரில்படு வரகும் மற்றும்
    இவர்வளம் பெருக்க மான்க ளிணங்குத மினத்தோ டாடிக்
    கவிழ்சினைக் குருந்தி னீழற் கண்படை கொள்ளும் பாடி
    தவமலி நெடிய கானத் தனிநகர்பல கொட்புற்றான்.        330
    [அவரையும் துவரையும் வரகும் மற்றும் புன்செய்வளம் மிகுக்க, மான்கள் தம் பெடையுடனும் இனத்துடனும் மகிழ்ந்து விளையாடி, தாழ்ந்த கிளைகளையுடைய குருந்த மரத்தின் நீழலில் கண்ணுறங்கும் பாடிவீடுகள் நிறந்த முல்லைக் காடுகளில் உள்ள நகர்களில் அலைந்து திரிந்தான்.அரில்- , n. 1. Interlacing, as of bamboo stalks growing together; பிணக்கம். மூதரி னிவந்த முதுகழை யாரிடை (பு. வெ. 10, 2) அவரை துவரையுடன்பிணைந்துவிளைந்த வரகு. முல்லை நிலத்தில் சுற்றி அலைந்ததைக் கூறிற்று.]

    நெடிபடு கானி லங்கோர் நெடுவதி படரு மேல்வைக்
    கொடிபடு நகர மாதிக் கொருவளங் கவர்ந்து தன்பான்
    முடிவருங் கவற்சி வைத்த பகைஞர்போன் மொய்த்த வெம்மை
    மடிவரும் பகலோ னுச்சி வந்தன னுலகல் லாப்ப.         331
    [சிள்வண்டுகள் ஒலிக்கின்ற கானில் ஆங்கு ஒரு நீண்ட வழியில் எல்லும் பொழுது, கொடிகள் ஆடும் வள நகரின் செல்வம் முதலியவற்றைக் கவர்ந்துகொண்டு, தன்னிடத்தில் முடிவில்லாத துன்பத்தை வைத்த பகைவர் போல நெருங்கிய வெப்பத்தால் உலகு சாம்பி அல்லல்படச் சூரியன் உச்சி வந்தனன். நெடுபடு காந்சிள் வண்டுகள் ஒலிக்கின்ற காடு; வண்டு விசேடம். வதி- வழி. அல்லாப்ப- கலங்க, அலமர. கவற்சி- கவலை, துயரம். மொய்த்த- நெருங்கிய. மடி- தளர்ச்சி. கொடி- வளத்தைக் குறிக்கும்.]

    கலிநிலைத்துறை
    பில்கு பேரொளிக் கதிர்க்கையாற் பிறங்குசெங் கதிரோன்
    புல்கு சீர்மணக் கலவியாற் பொலிவழிந் தனபோன்
    மல்கு வாரிதழ் வாடின வயின்வயிற் கதிர்க்கும்
    பல்கு வாண்மணி நித்திலப் பழனமென் கமலம்.        332
    [ஒளிரும் பேரொளிக் கதிர்களாகிய கைகளால் சூரியன் இறுகப்பற்றிப் புணர்ந்த கலவியினால் தம் பொலிவழிந்தனபோல் பழனங்களில் மெல்லிய தாமரை மலர்கள் செறிந்த இதழ்கள் வாடின. வயின்வயின் கதிர்க்கும் பல்கு வாள்மணி நித்திலப் பழனம்- இடங்கள் தோறும் கதிரொளி பரப்பும் வெண்மணி முத்துக்கள் கிடக்கும் பழனம். பில்கு- ஒளிரும், கசியும். கதிர்க்கை-கதிராகிய கை. புல்கு- புணரும், அணையும். வார் இதழ்- நீண்ட இதழ். வயின் -இடம். வாள்- ஒளி நித்ஹிலம்- முத்து]

    இரவி நீங்குதன் செயலையோ ரேழைதோட் புணரக்
    கரவி னீங்கிய தெனக்கனன் றுறங்கிய கமலம்
    மரும லர்ப்பதந் தைவந்து மணப்பவன் மானப்
    பரிதி வானவன் கதிர்க்கையாற் பனிப்புனல் சுவற்றும்.        333
    [சூரியனாகிய கணவன் மறையும் செயலை, வேறொரு பெண்ணின் தோளினைப் புணர மறைந்து நீங்கியதெனக் கோபித்து, வாடிக் கூம்பிய தாமரை மலரின் மணமுள்ள பதத்தைத் தடவி கூடும் ஆடவனைப் போல சூரியன் தன் கதிர்க்கையால் குளிர்ந்த நீரினை வற்றச் செய்யும்.]

    நெறியி யங்குநர் தமக்குநீர் வேட்கையைத் தணப்பச்
    செறிபு னற்றடந் தெளிந்தன போற்செழுந் தடத்துப்
    பிறிவ ரும்பசும் பாசியும் பிரிந்துநீ ரகத்து
    ளறிவு கூர்பொழு தாணவமென வடங்கியதே.        334
    [வழியிற் செல்வோரின் நீர் வேட்கையைத் தணிப்பதற்கு நீர் நிறைந்த குளம் தெளிந்ததைப் போல, நீரைவிட்டு நீங்காத பசிய பாசியும் நீர்நிலையை விட்டு அகன்றது, மெய்யறிவு விளங்கும்போது அறியாமையச் செய்யும் ஆணவமலம் அடங்குதல் போல.]

    மேற்பி றங்கிய பாதிநீர் வெம்மையுந் தன்கீழ்ப்
    பாற்ப ரந்திடு பாதிநீர் பனியுமாந் தடங்க
    ணாற்ப ழங்கவிக் கவுணியர் நலக்கவோர் புறத்தி
    னேற்ப நீறணி பாண்டிய னுடலமேய்த் தனவே.        335
    [நீர் நிலைகள், நீர்ப்பரப்பின் மேலே வெம்மையும் கீழ்ப்பால் பர்ந்தநீர் குளிர்ச்சியுமா விளங்கி, நலம் பெறும் பொருட்டுத் திருஞான சம்பந்தரால் திருநீறு பூசப்பட்ட கூன்பாண்டிய மன்னனின் உடலை ஒத்தன.]

    அள்ள லாங்கதிர்ச் சூட்டினை யஞ்சி மீனாதி
    யுள்ளு லாய்க்கரந் துறையநன் றோம்புநீர் நிலைகள்
    கொள்ளை யாட்டயர் கொடியகோ லரசனைக் காணிற்
    றெள்ளி யோர்வள மொளித்துவாழ் செயறெரித் தனவே.        336
    [ஞாயிற்றின் மிக்க கதிரின் வெப்பத்திற்கு அஞ்சிய நீர்வாழ் உயிர்களான மீன் முதலியன எஈரின் அடியில் மறைந்து வாழும் ந்லைமையை உடைய நீர்நிலைகள், கொள்ளையடிக்கின்ற கொடுங்கோலரசனைக் காணின் தெளிந்த அறிவுடையவர்கள் தங்கள் செல்வத்தை ஒளித்து வாழ்கின்ற செயலை எடுத்துக் காட்டின. அள்ளல்- நெருக்கம். உள் உலாய்- நீர்நிலையின் அடியில் உலவி. கரந்து- மறைந்து. தெள்ளியோர்- தெளிந்த அறிவினை உடையவர். தெரித்தன- விளக்கின.]

    மடமை யோப்புகி லார்சில ரிழிஞர்வா லறிவங்
    குடையர் போற்றமைத் தோற்றிமா ணாக்கரை யுலைத்தாங்
    கடரும் நீர்நசை மான்களை யறலென மருட்டி
    இடரி னேய்த்தன விடந்தொறும் பரந்துவெண் டேர்கள்.        337
    [அறியாமை நீங்காதவர் சிலர் நல்லறிவுடையவர்களைப் போல நடித்து, மாணாக்கரை ஏமாற்றி வருத்துவது போல, வருத்தும் நீர் வேட்கை உடைய மான்களை நீரென மயக்கி, துன்பத்திற் செலுத்துவன அவ்விடங்கள்தோறும் பரந்த பேய்த்தேர்கள் {கானல்நீர்).]

    குளிர்த புஞ்சுட ருச்சியிற் குறுகுமப் பதத்திற்
    றெளியும் வெண்பளிக் கறைக்குலந் தன்னிடைச் சேர்ந்த
    வொளிரும் வன்னம் பற்றாத சீருருத்திடும்வெயிலாற்
    றளர்வு கொண்டு தனூக்க முற்றொழிந் ததுதகையும்        338
    [ குளிரினைப் போக்கும் ஞாயிறு உச்சிப்போதினை அடையும் அந்த வேளையில் தெளிந்த வெண்பளிங்கு தன்னிடைச் சேர்ந்த நிறத்தினை உறாத தன்மையை , உயிர்களெலாம் வெயிலினால் தளர்ச்சி கொண்டு மனவூக்கத்தை முற்றுமாக நீங்கியதை நிகர்க்கும். தபும்- அழிக்கும். குறுகும்- நெருங்கும். பதம்- நேரம். பளிகு அறை- பளிங்குக் கல். வன்னம்- நிறம். தளர்வு- சோர்வு. சீர்- தன்மை. முற்று- முற்றும்.]

    சுடர்ந்து தன்வயின் தோன்றழல் சுற்றேஏலாங் கதுவக்
    கிடந்த ஆதவன் மணிச்சிலை கிளர்வெயில் பிழம்புக்
    குடைந்து மற்றிதின் உயங்கலிற் சாதல்நன் றென்னப்
    படர்ந்த செந்தழல் குளித்திடும் பரிசுதேற் றினவே.        339
    [ஒளியுடன் தன்னிடத்தில் தோன்றிய அழல் சுற்ருப் புறமெலாம் பற்றி எரியக் கிடந்த சூரிய காந்தக்கல், பரந்த சுடர் வெயிலில் வருந்திச் சாவதைக் காட்டிலும் படர்ந்த செந்தழலில்குளித்தல் நன்று எனக் கருதும் நிலையைத் தோற்றியது. ஆதவன் மணிச்சிலை- சூரியகாந்தக்கல். வெளியில் பரந்து கிடக்கும் வெயிலின் வெப்பத்தை விடத் தன்னின்னின்றும் தோன்றும் நெருப்பு குளிர்ந்ததெனச் சூரியகாந்தக் கல் கருதுவதாக் கூரியது, தற்குறிப்பேற்றம்]

    முருகு நாறுபொன் இதழியார் முண்டகப் பதத்தின்
    ஒருவும் ஆருயிர் பருவத்தின் மீளவுற் றிடல்போல்
    பருதி வானவன் உச்சமாம் பதத்துமென் மலர்ப்பூந்
    தருவின் நீங்கிய நிழலெலாந் தருவடி அடைந்த.        340

    [மணம் நாறும் பொன்னிறக் கொன்றை மாலையராகிய சிவபெருமானின் தாமரை மர்போன்ற திருவடியினின்றும் நீங்கித் தோன்றிய ஆருயிர் மீண்டும் அத்திருவடியை அடைதலைப் போல உச்சிப்போதச் சூரியன் அடைந்த போதுமெல்லிய மலர்களைப் பூக்கும் மரத்தினின்றும் நீங்கிப் படர்ந்த நிழலெலாம் மரத்தின் அடியை அடைந்தன. ]
    வயங்கு வெங்கதிர் உச்சமாம் பொழுதுநீள் வழியின்
    இயங்கு மாந்தர்போல் மரத்தடி எய்தியங் கிருந்து
    தயங்கு செங்கதிர் சாய்தலும் தணத்தலால் நிழலும்
    உயங்கு வெப்பினுக் குடைந்துளந் தளர்ந்ததொத் ததுவே.        341
    [வெப்பத்துடன் விளங்கும் கதிரொளி உச்சிப் பொழுதில் நீண்ட வழ்ச் செல்லும் மாந்தர்கள்போல் தன் அடியை அடைந்து அங்கிருந்து, வெயில் சாய்ந்தபொழுது மரத்தடியை விட்டு நீங்கலால், நிழலும் வருத்தத்தைச் செய்யும் வெப்பஹ்தினுக்கு உடைந்து உள்ளம் தளர்ந்தது ஒத்தது]

    கொழிக்கும் வெம்மைகூர் உச்சியில் அடியிடைக் குறுகிச்
    செழிக்கும் ஏனைய பொழுதுசேண் அகற்சிசெய் நீழல்
    அழிக்கும் நோய்படும் பொழுதடுத் தண்மியத் துயர்நோய்
    ஒழிக்கும் ஏல்வையின் நீங்குதம் ஒக்கலே போன்ற.        342.
    [வெப்பம் மிகுதியான உச்சிப் பொழுதில் அடியினை அடைந்து, ஏனைய பொழுதில் துரம் அகலுதல் செய்கின்ற நிழல், சாவினைச் செய்யும் நோய் வந்த பொழுது நெருங்கியிருந்து, அந்தத் துயரைச் செய்யும் நோய் நீங்கியபோது அகலும் தம்முடைய சுற்றத்தார் போன்றது.].

    அழற்கொ ழுந்துகா லவிரொளிப் பருதியங் கடவுள்
    கிழக்கு வந்தெழக் குடாதுபோய்க் கிடந்துமேற் றிசையின்
    வழிக்கொண் டேகுறின் குணாதுசெல் வார்நிழற் கணங்கள்
    உழக்கும் வெப்புடைச் சுடரொடும் பகைத்தவொத் தனவால்.        343
    [நெருப்பினைப் போல ஒளியையும் வெப்பத்தையும் உமிழும் சூரியன் கிழக்குத் திசையில் எழுந்து மேற்கு நோக்கிச் செல்லும்போது கிழக்கு நோக்கிச் செல்வாரின் நிழற் கூட்டம் வருத்தும் வெப்புடைத் சூரியனோடு பகைத்ததொக்கும்.]

    நிலவு பற்பல பொருளுடை நீழலும் விகாரங்
    குலவ லாலுயிர் போன்றன குளிர்புனல் நீழல்
    அலைவி லாமையெஞ் ஞான்றுமோர் அமைதியுற் றிடலால்
    இலைய சூற்படை இறைவரே நிகர்த்தது மாதோ.        344
    [பொருள்கள் பலவற்றின் நிழலும் அப்பொருளுக்கேற்ற பலவகை விகாரங்களுடன் காணப்படலால் அவை உயிர்கள் போன்றன. நீர்நிலைகளில் நீருக்குள் இருக்கும் நீர் நிழல் அத்தகைய விகாரமுமின்றி எஞ்ஞான்றும் ஒருபடித்தாக இருத்தலால் அது மூவிலைச் சூலப்படையேந்திய சிவபிரானை நிகர்க்கும். நீர் ஒருபொருளாதலின் அதனுள்ளும் வெளியுண்டு;நிழல் உண்டு. அந்த நிழல் கண்ணுக்குப் புலனாவதில்லை.]

    உரிய தன்மனைக் கிழத்தியாம் ஒள்ளிதழ்க் கமலம்
    இரிய வென்றிகொள் முகமலர் ஏய்ந்துளார் என்ன
    விரிக திர்ச்சுடர் உடற்றலும் வெதும்பியச் சூட்டைப்
    பரியும் நீள்குடை மீமிசைப் பற்றினார் பதிகர்.        345.
    [தன்னுடைய உரிமை மனைவியாகிய தாமரை மலர் தோற்க அழகிய முகமலர் பொருந்தியுளார் என்று விரிகதிர்ச் சுடராம்சூரியன் கதிரால் வெப்பத்தைச் செய்து வருத்த, அந்தச் சூட்டை நீண்ட குடையினைத் தலைக்கு மேல் பற்ரித்தடுத்தனர், வழிச்செல்வோர். தாமரை மலரைச் சூரியனின் மனைவியாகக்கூறுவதுகவி மரபு. பரியும்- தாங்கும். மீமிசை- அடுக்குச் சொல், தலைக்கு மேல் என்பது குறித்தது. பதிகர்- வழிச்செல்வோர்]

    பொங்கு பேரொளிக் கதிரவன் பொறிவெயிற் றழல்மற்
    றங்கண் மாநிலத் துயிரெலாம் ஐதுறத் துயிற்றி
    அங்கி காரியம் துயிலென அறையும்ஆ கமநூல்
    துங்க வான்பொருள் புலப்படத் தோற்றிய தன்றே. 346.
    [சூரியன் தன்னுடைய வெப்பத்தினால் நிலத்தில் வாழும் உயிர்களையெலாம் அழகுற் உறங்கும்படியாகச் செய்து உறக்கம் அக்கினியின் செயல் என ஆகமம் உரைத்தலைப் புலப்படச் செய்தது.]

    தன்னை யுள்பொதிந் தோம்புநெட் டுடல்வெயிற் றழலா
    லின்ன லெய்துவ தொழிப்பமேற் போர்த்தமை யிழைய
    மன்னு மாக்கையின் மணிப்புனன் மாந்தர்யா வருக்குந்
    துன்னு வேர்வையா யெங்கணுந் தோன்றிவார்த் ததுவே.        347
    [நீர் தன்னை உள்வைத்துப் பாதுகாக்கும் நீண்டவுடல் வெயிலின் வெப்பத்தால் இன்னல் எய்துவதை ஒழிக்க வேண்டி உடலைப் போர்வையால் மூடுவது ஒப்ப, ஆக்கையின் புறமெலாம் வேர்வையாய்த் தோன்றி வார்த்தது. மணிப்புனல் , வேர்வையாய்த் தோன்றி வார்த்தது எனக் கொள்க.]

    இரவி கான்றவெந் தழற்பிழம் பிணர்த்தகற் பகத்தின்
    குரவ நாறிய வுலகினுங் குலாவுமே லங்கண்
    விரவி வாழ்தரு வில்லுகு மணிப்பசு மோலிச்
    சுரர்கள் யாவரும் வெயரிலா ரெனச்சொலப் படாரே.        348
    [சூரியன் உமிழ்ந்த தழற் பிழம்பு கொத்தாக மலரும் கற்பகமலர் மணக்கும் தேவலோகத்தின் மேலும் விரவுதலால் அங்கு வாழும் தேவர்கள் யாவரும் வியர்வை இலாத உடலுடையவர் எனச் சொலப்படார்]

    வெயில்ப ரப்பிய வெப்பொடு விரவிமென் காற்றுக்
    குயினு ழைந்தெழு மாடமுங் குளிர்ந்தகா வணமும்
    பயின்ம ரப்பனிப் பொதும்பரும் பாய்ந்தழற் றியதாற்
    சயவெ ரித்துணை யென்பது புதுக்கினால் தகைய.        349
    [ ஞாயிற்றின் வெயில் பரப்பிய வெப்பத்துடன், மெல்லிய காற்றும் கலந்து வீசி, மேகம் உட்புகுந்தெழும் உயர்ந்தமாடங்களிலும் குளிர்ந்த மண்டபங்களிலும் மரங்கள் நிறைந்த சோலைகளிலும் பாய்ந்து அனலச் செய்தது. இது, காற்று நெருப்புக்குத் துணை(நண்பன்) என அறிவுறுத்தியது போன்றது. காவணம்-, n. Open hall; மண்ட பம். தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்ட. 2). சய- வெற்றி. புதுக்கு- அறிவுறுத்து துணை- நண்பன்.]

    தரையும் வெம்பின தண்ணறா வடைகிழிந் தொழுகும்
    வரையும் வெம்பின மல்கிய மணலொடு புணரித்
    திரையும் வெம்பின தீங்குளிர் பயிற்றுபூஞ் சோலை
    நிரையும் வெம்பின நெருப்பென வுடற்றிய வெயிலால்.        350
    [நெருப்பு என அனலெழ வருத்திய வெயிலினால், தரை வெம்பின; அடை கிழிந்து தேன் சொரிந்து வழியும் மலைகளும் வெம்பின; கடற்கரையில் நிறைந்த மணல்களும் வெம்பின; கடல் அலைகளும் வெம்பின; இனிய குளிர் எப்பொழுதும் இருக்கும் பூஞ்சோலைகளும் வெம்பின. ,        5 v. intr. < வெம்- மை. 1. To be very hot; மிகச்சூடாதல். மலை வெம்ப (கலித். 13). 2. To fade; to be dried with heat; வாடுதல்.

    கன்னி பாகனார் கங்கைநீர் சடையிலேற் றதுவும்
    பொன்ன ளாவிய மார்பினான் புணரி வீழ்ந்ததுவும்
    அன்னம் ஊர்பவனீர்ம் புனலலரின் மேயதுவும்
    இன்ன நண்பக லின்னலுக் குடைந்தமை போலும்.         351
    [ மாதொருபாகரகிய சிவன் கங்கைநீரைச் சடையில் ஏற்றதுவும் பொன்னாகிய திருமகளை மார்பில் கொண்ட திருமால் கடலில் வீழ்ந்ததுவும் அன்னம் ஊர்பவனாகிய பிரமன் குளிர்ந்த நீரிலே மலரும் தாமரை மலர்மேல் இருப்பதுவும் இத்தகைய நண்பகல் வெயிலுக்கு வருந்தினமையாற் போலும்.]

    இனைய வாறுநண் பகற்பொழு திறுத்தலு மரசன்
    றுனைய வோர்குளிர் மரத்தடிச் சூழலைத் துன்னி
    நினைவி னாற்பலவெண்ணிநெஞ் சுளைந்தன னிருந்தான்
    அனைய வேல்வையிற் சாய்ந்தன னவிர்கதிர்ச் சுடரோன்.        352.
    [இவ்வாறு நண்பகற் பொழுது வந்திருக்கவே, அரசன் ஒரு குளிர்ச்சி தரும் மரத்தடியை அடைந்து பலவித எண்ணங்களால் நெஞ்சுவருந்தி இருந்தனன். அச்சமயத்தில் சூரியனும் மேற்கே மறைந்தனன்.]

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    வேய்தரு பணைத்தோண் மாதர் வீங்கிள முலைகள் கீழாச்
    சாய்தொறும் இளைஞர்க் கார்வத் தழற்பிழம் பாறு மாபோற்
    காய்தரு பரிதி மேலைக் கடல்விழத் தாழுந் தோறும்
    பாய்தரு கிரணக் கற்றைப் படர்வெயி லாறிற் றன்றே.        353
    [மூங்கில் போன்ற பருத்த தோள்களையுடைய மகளிரின் வீங்கிள் முலகள் தளர்ந்து கீழாகச் சாய்யும்தொறும் இளைஞர்களுக்கு அவர்கள் மீது ஆர்வம் குறைவதைப் போல சூரியன் மேலைக் கடலில் விழத் தாழுந்தோறும் பரந்த கதிர் வெப்பம் குறைந்து ஆறத் தொடங்கியது.]

    தேங்கமழ் கமலச் செவ்விச் செழும்பொகுட் டளவ ளாவி
    யோங்கிய தொழுதி அன்னம் உயர்மரச் சேக்கை நோக்கி
    நீங்கின பரிதி வட்டம் நீங்குறும் ஆற்றால் தம்மைத்
    தாங்கிய கமலங் கூம்புந் தன்மைதேர்ந் தொழிந்தான் மான.        354
    [தேன் கமழும் அழகிய செவ்வியுடைய தாமரை மலரில் மகிழ்ந்து தங்கிய அன்னப் பறவைகளின் கூட்டம் அம்மலரைவிட்டு நீங்கி உயர்ந்தமரங்களில் உள்ள கூட்டினை நோக்கி, பருதி வட்டத்தைப் போல நீங்கும், காட்சி, சூரியன், தன் மனையாளாகிய தாமரைமலர் கூம்பும் தன்மை அறிந்து நீங்க்யதப் போல இருந்தது. சேக்கை- கூடு, படுக்கை.]
    முள்ளரைக் கமல நங்கை முகிழ்முலை வருடி மெல்லென்
    வள்ளிதழ்த் தேறன் மாந்தி மணியுருக் கலந்த வாற்றா
    வள்ளொளி நறுந்தா தென்னுங் குங்கும வளறு தோய்ந்த
    தெள்ளோளி போலு மென்னத் தினகரன் மேனி சேந்தான்.        355
    [தாமரை யாகிய நங்கையின் முலையாகிய மொட்டினை வருடி மெல்ல மலரிதழ்ஆகிய வாயினின்றும் ஒழுகும் தேனாகிய எச்சிலை மாந்தி, அவளுடன் கலந்த முறையால், முலையின்மேல் அணியப்பட்டிருந்த குங்குமச் சேறு தோய்ந்த நிறம்போலச் சூரியன் மேனி சிவந்தான். அரை- தண்டு. அளறு- சேறு. தினகரன் சூரியன். சேந்தான் - சிவந்தான்]

    மேற்றிசை வரைப்பின் மூடும் தெவ்விருட் செறிவுஞ் சீதந்
    தோற்று வெம்பனியுந் தோலா வவுணருந் தொலைய வெம்போ
    ராற்றுவான் வடிவிற் செங்கே ழரணம் வீசியதும் போலும்
    நாற்றிசை பரசுங் கஞ்ச நாயகன் சேந்த வண்ணம்        356
    [மேற்குத் திசையில் மலைமுகடுகளை பகையாகிய இருள் செறிவும் குளிரைத் தோற்றுவிக்கும் பனியும் ஆகிய தோற்காத அவுணரைத் தொலைக்கக் கொடிய போரினைச் செய்யும் பொருட்டித் தன்மேனிமேல் சிவந்த கவசம் போர்த்தது போலிருந்தது, எல்லோரும் போற்றும் தாமரை நாயகனாகிய சூரியன் சிவந்த நிறம் கொண்ட தன்மை. அரணம்- கவசம்.]

    வந்தெதி ரவுணர் தங்கண் மணிநிறத் திட்டு வாங்குங்
    கொந்தொளிக் குருதி தோய்ந்த கூர்நுதி யீட்டி போலுங்
    கந்தமிக் கரும்புங் கஞ்சக் கடிமலர் மணந்த கேள்வன்
    சிந்திய கிரணக் கற்றை செந்நிறம் படைத்த தோற்றம்        357
    [மணத்துடன் அரும்பும் தாமரை மலரை மணந்த கணவனாகிய சூரியன் சிந்திய செந்நிறக் கற்றைக் கதிர்ரொளி, வந்து தன்னைஎதிர்த்த அவுணர்களின் மார்பினை ஊடுருவி எடுத்த குருதி தோய்ந்த கூர் நுதி ஈட்டி போலும். நிறம்- மார்பு. இட்டு- செலுத்தி]

    வளர்மலைக் கொங்கை தோய்ந்து வாவிவாய் நறுநீர் மாந்திக்
    களிவர மணந்த கேண்மைக் கதிரவன் றணத்தல் காணூஉ
    அளமர லுற்றுத் தென்றிக் கணங்கு மெய்ப்பசலை பூத்தாங்
    கொளிநிற மழுங்கிப் பொற்கென் றொளிர்வெயில் பரந்த தன்றே.        358
    [ மலையாகிய வளர்ந்த கொங்கையைத் தழுவி, வாவிகளாகிய வாயில் ஊறும் நீரினை மாந்தி, மகிழ்ச்சி தோன்றக் கலவி செய்த சூரியனாகிய தலைவன் தன்னை விட்டுப் பிரிவதைக் கண்டு கலங்கி அழகிய திசையாகிய தெய்வமகள் உடம்பில் பசலை கொண்டது போல தரையின்மீது பகல் ஒளிமழுங்கி பொலிவற்ற அந்தி வெயில் பரந்தது.அலமரல் என்பது எதிகை நோக்கி அளமரல் என ஆயிற்று. தென் – அழகு. திக்கு- திசையாகிய தெய்வமகள்].

    சுடர்வெயில் புவியி னீங்கிச் சூளிகை மாடம் பற்றி
    மடலவிழ் சோலை வாவி மலைகளி னெறிக்குங் காட்சி
    கடனுறு தன்னை நல்குங் கனைகதிர்ச் செல்வன் யாண்டுப்
    படர்தரு கின்றா னென்று பார்ப்பமே லிவர்ந்த தொக்கும்.        359
    [பகலொளி தரையை விட்டு அகன்று நிலாமுற்றங்கள், மாடங்கள் ஆகியவற்றைப் பற்ரி பூஞ்சொலைகள் , வாவிகள், மலைகளில் ஒளிரும் காட்சி, தனக்குக் கடமைப்பட்டு அருளும் சூரியன் தன்னைஇட்டு எங்குச் செல்கின்றான் என்று பார்ப்பதற்கு மேலேறியது ஒக்கும். சூளிகை- நிலாமுற்றம். கனைகதிர்ச் செல்வன் – சூரியன்.]

    துணிகதிர்க் கற்றை துற்ற சுடரவன் விசும்பி னீங்கி
    மணிவெயி லெறிக்கும் வேலை முகட்டினில் வயங்குந் தோற்றம்
    அணிமதன் போர்செய் காலம் அண்மலி னொலிமிக் கார்ப்பக்
    குணில்பொரு முரசந் தீயிற் காய்த்திடுங் கொள்கை போலும்.        360
    [செறிந்த ஒளிக்கதிர்கற்றை உற்ற சூரியன் ஆகாயத்தை விட்டு நீங்கி செந்நிற ஒளி எறிக்கும் கடற்பரப்பினில் விளங்கும் தோற்றம், அழகியமன்மதன் போர் செய்காலம்நெருங்கியது என்று, பேரொலி எழுமாறு குணில் அறையும் முரசம் தீயினிற் காய்தலை ஒக்கும். துணி- செறிந்த. மணிவெயில்- செந்நிற வெயில். வேலை- கடல். முகடு- பரப்பு . அணி- அழகு. மதந் மன்மதன். போர் செய் காலம்- காமக் கிளர்ச்சியைத் தோற்று விக்கும் காலம். அண்மலின் -நெருங்குதலின். குணில்- முரசினை அறியும் குச்சி. மன்மதனுக்கு முர்சம் கடல். முரசில் பேரொலி எழ அறையும் முன் தீயில் வாட்டுவது மரபு.]

    அன்மருள் பரவை முந்நீர்ஆர்கலிக் கரிய பாந்தண்
    மென்மெல விழுங்கப் பட்டு விரிகதிர்ப் பிழம்பு காலும்
    பொன்மலி கொடிஞ்சித் திண்டேர்ப் போக்கரும் பரிதிப் புத்தேள்
    பன்மணிக் கரங்கள் கூப்பிப் பைப்பைய மறைந்து புக்கான்.        361
    [இருள் போலப் பரந்த கரியகடலாகிய வெல்லுதற்கு அரிய இராகு என்னும் பாம்பினால் மெல்ல மெல்ல விழுங்கப்பட்டுஒளிப்பிழம்பினை உமிழும்சூரிய தேவன் தன்னுடைய பலவாகிய ஒளிகதிர்க் கரங்கள் கூப்பிப் பைப்பைய மறைந்து கடலில் புகுந்து மறைந்தான். அன்மருள்- அல் மருள்- அல்- இருள். முந்நீர் ஆர்கலி- முந்நீராகிய ஆர்கலி – இருபெயரொட்டுப் பண்புத் தொகை. இருபெயர்களுமே கடலைக் குறிக்கும். முந்நீர்- ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர். இடைவிடாது ஆரவாரிப்பதனால்கடலுக்கு ஆர்கலி என்று பெயர். கரிய பாந்தள்- கரிய பாம்பு; இராகுவைக் குறிக்கும்.]

    இவ்வணம் பகலோன் சாய்ந்த ஏல்வையி லெழுந்து வேந்தன்
    தெவ்வர்கண் மூட்டி விட்ட கவலைத்தீ சிந்தை வாட்ட
    ஔவிய மனத்த வான ஆளியும் புலியு மெண்கும்
    நவ்வியும் அல்லான் மாந்தர் நடப்பரு நெறிச்செல் வேலை        362
    [ இவ்வாறு சூரியன் மறைந்த சமயத்தில் அரசன் எழுந்து பகைவர்கள் மூட்டி விட்ட கவலைத் தீ அவன் உள்ளத்தை வருத்த, வஞ்ச மனத்தவான சிங்கம் புலி கரடி மான் முதலிய காட்டு விலங்குகளல்லால் மாந்தர் இயங்குதற்கரிய வழியில் செல்லும் போதில். ஏல்வை- பொழுது. தெவ்வர்- பகைவர். ஔவியம்- கள்ளம், வஞ்சம். ஆளி- சிங்கம். நவ்வி- மான். நெறி- வழி, பாதை.]

    வரைநிகர் தடந்தோட் காதன் மகிணரைத் தணந்து வைகும்
    நிரைவளைத் தொடிக்கை யார்க்கு நெருப்புமாய் மணந்தார்க் கெல்லாம்
    விரைகம ழமுத மாகி மேவிய துயிர்க ளெல்லாந்
    தரைமிசை யிடங்க ணாடிச் சார்தரு மருள்கூர் மாலை       363
    [ உயிர்களெல்லாம் தத்தம் இடங்களை நாடிச் செல்லும் மயக்கங்கூர் மாலை, மலைபோன்ற வலிய தோள் கொண்ட அன்புடைக் கணவரைப் பிரிந்திருக்கும் மகளிருக்கு நெருப்புமாய், தலைவருடன் கூடியிருப்பவர்களுக்கு மணங்கமழ் அமுதமுமாகிச் சார்ந்தது.]

    தற்பகை யாய தண்ணீர் தனக்கெலா மரச னாகி
    நிற்பவ னிவனா மென்னு நினைவினாற் பொருது வெல்வான்
    விற்படு தழல்க ளெல்லா மேற்றிசைத் தலைவன் மீது
    முற்படவிறுத்தா லென்ன முகிழ்த்தது செக்கர் வானம்.        364
    [ தனக்குப் பகையாகிய தண்ணீருக்கெலாம் அரசனாக இருப்பவன் இவனாம் என்னும் நினைவில், பொருது வெல்வது கருதி, தனது ஒளிமிக்க தழல்களகிய படைகளையெல்லாம் மேற்குத் திசைத் தலைவனை எதிர்த்து நிற்க வைத்தாற் போலச் செக்கர் வானம் முகிழ்த்தது. மேற்றிசைத்தலைவன் – வருணன்]

    பொத்தி மேற்றிசையின் மல்கும் புகரிரு ளிரிக்கப் போதும்
    உத்தமன் றெனாது திக்கி னோங்குவெந் திமிரம் பின்னர்
    மொய்த்துவந் தடரா வண்ணம் முனிதர வழியிற் காவல்
    வைத்ததன் னொளியே போன்றும் வாய்ந்தது செக்கர் வானம்        365
    [மேற்குத் திசையில் படர்ந்து நிறையும் இருளாகிய பகையை ஓட்டபோகும் உத்தமாரசனாகிய சூரியன் தெற்குத்திசையில் பெருகும் இருட்பகைஞன் பின்னர் வந்து வருத்தாதவாறு தன் ஒளியைக் காவல் வைத்துச் சென்றதுபோல் செக்கர் வானம் வந்து வாய்த்தது.]

    புட்டில்வார் விரலின் வீக்கிப் போகுயர் கருப்பு வில்லு
    வட்டமா வளைய வாங்கி மாரவேள் தணந்தார் தம்மேல்
    விட்டிடக் கூர்செய் தாங்கு மற்றவன் விசிக மாய
    மட்டவிழ் தோட்டுக் கஞ்ச மலரெலாங் குவிந்த மன்னோ.        366
    [மன்மதன் பிரிந்திருக்கும் காதலர்கள்மேல் செலுத்துவதற்குத் தன்னுடைய அம்புகளைக் கூர்மை செய்ததைப் போலத் தாமரை மலர்களெல்லாம் குவிந்து கூம்பின. புட்டில்- அம்பறாத் தூணி. கருப்பு வில்- கரும்புவில். விசிகம் – அம்பு. தோட்டுக் கஞ்சம்- இதழ்களையுடைய தாமரைமலர்.]

    வினைவயிற் றணந்த கேள்வர் விலாழியம் பரித்தே ரூர்ந்து
    மனைவயிற் புகுத லோடும் மகிழ்ச்சிகூர் மடந லார்தந்
    தளைநிக ரமிழ்த மூறுந் தரளவெண் முறுவற் கஞ்சி
    நனையுக வுடைந்தா லென்ன மலர்ந்தன நறிய முல்லை.        367
    [வினைமேற்கொண்டு பிரிந்த கணவர் குதிரை பூட்டிய தேரினை ஊர்ந்து இல்லம் புகுதலினால் மகிழ்ச்சி மிக்க அழகிய மகளிருடைய அமுதமூறும் தமக்குநிகரான முறுவலுக்கு அஞ்சி கூருடைந்தால் என்னும்படியாக மலர்ந்தன வாசனைமிக்க முல்லைமலர்கள். முல்லை அரும்புகள் மகளிரின் பற்களுக்கு உவமை. நகை-பற்கள்]

    மோட்டிள முலையி னார்க்கு மூரியங் களிற னார்க்குஞ்
    சேட்டி ருங்கலவிப் பூசல் செய்விப்பான் கருப்பு வார்விற்
    கோட்டு வேள்படை யெழுச்சி ஆர்ப்பென குளிர்ப்பூஞ் சோலை
    யீட்டு புன்குடம்பை தோறும் இரட்டின துழனி புட்கள்.        368
    [பருத்த இளமையான முலையுடையவர்களுக்கும் வலிய களிறு போன்ற காளையருக்கும் நெருங்கிய கலவிப்போர் செய்விக்கும் பொருட்டு கரும்பு வில்லினையுடைய மன்மதனின் படையெழுத்தி ஆரவாரம் என குளிர்ந்த பூஞ்சோலையிலுள்ள புல்லிய குடம்பைகள் தோறும் பறவைகள் முழங்கின. , n. 1. cf. மோடு¹. Bigness, bulkiness; பருமை. (J.) 2. Plenty; மிகுதி. மூரி- வலிமை.. கருப்பு வார்வில் கோட்டு வேள்- கரும்பாகிய பெரிய வில்லை வளைக்கும் மனமத வேள்.]

    தோமறு பரிதி வட்டந் தொடுகடல் குளித்த மாலை
    வீமலி தொடையன் மார்பர்ப் பிரிந்த மெல்லியலார் தங்கள்
    காமரு வதனஞ் சாலக் கூம்பி வான்கவிக ளெல்லாந்
    தாமரை யென்று கூறுந் தனிப்பொருள் விளக்கிற் றம்மா.        369
    [குற்றமற்ற பருதி வட்டம் சகரரால் தோண்டப்பட்ட மேலைக்கடலில் மூழ்கிய பின்னர், தலைவரைப் பிரிந்திருக்கும் மெல்லியலராகிய மகளிரினழகிய முகம் வாடிக் கூம்பி, கவிஞர்கள் மகளிரின் முகம் தாமரை என்று உருவகம் உவமம் கூறும் ஒப்பற்ற பொருளை விளக்கிற்று. தோம்-குற்றம். தொடு கடல்- தோண்டப்பட்ட கடல். காமரு வதனம்- கண்டவருக்கு அன்பினை வருவிக்கும் முகம். கவி- கவிஞர்கள்.]

    கடலிடைக் குளிப்பான் போன்று கரந்து பல்லுருவு கொண்டு
    வடவரை யனைய தோளார் மலர்முகத் தெழிலை வௌவப்
    படரொளிப் பரிதிப் புத்தேள் பயில்வது போலச் சீர்த்துத்
    தடநெடு மனைக டோறுந் ததைந்தன விளக்கி னீட்டம்.        370
    [கடலில் குளிப்பவனைப் போல மறைந்து சூரிய தேவன் மகளிரின் தாமரை மலர் போன்ற எழிலினைக் கவரும் பொருட்டுப் பல்வேறு உருவு கொண்டு வந்தது போன்றது, வீடுகள்தோறும் விளக்குகளின் கூட்டம்.]

    அனையபுன் மாலைக் காலத் தியல்புளி யாற்றும் அந்தி
    வினைதபு கடன்கண் முற்றி மேவரு நடவை நீந்து
    நனைமல ரலங்கற் றோளா னன்னிமித் தங்கள் காணூஉ
    வினையவை பயப்ப தென்னே யீண்டெனச் செல்லும் போது        371
    [அத்தகைய பொலிவற்ற மாலைக் காலத்தில் வழக்கம்போல அந்திநேரத்தில் வினைகளை யொழிக்கும் கடன்களைச் செய்து முடித்து மேல்வரும் வழியில் நடக்கும் அரசன் நல்ல நிமித்தங்களைக் கண்டு இவை பயக்கும் நன்மை யாதோ எனஎண்ணிச் செல்லுங்காலை ]

    ஒற்றை யந்திகிரித் தேரோ னவுணர்நாட் டுருத்து மூட்டப்
    பற்றிய செக்கர்வானப் படரெரிப் பிழம்பு கான்ற
    கற்றையம் படலைக் கூட்டக் கருப்புகை மண்டி விம்மி
    முற்றிய திறனே யென்ன யீண்டெனச் செல்லும் போது         372
    [ஒற்றைச் சக்கரத் தேர் ஊர்பவனாகிய சூரியன் அசுரர் நாட்டினைக் கோபித்து மூட்டிய செக்கர் வானமாகிய தழலெரிப் பிழம்பு வெளியிட்ட கரியபுகை என நெருங்கி இங்குத் திரண்டது என்று இருளில் செல்லும்போது]

    கொண்கரைக் களவிற் சேர்வார் கொழுநரைப் பிழைத்துச் செல்வோர்
    கண்கழல் வளையாய்க் கூகை கள்ளுநர் முதலோர்க் கெல்லாம்
    எண்கழி யுவகை காட்டி யேனை யோர்க்கி டுக்கண் காட்டி
    வண்கழ லரசன் நோவ வல்லிருள் இறுத்த தன்றால்        373
    [தலைவரைக் களவில் கூடுவார், கணவனை ஏமாற்றி வேறு ஆடவரிடம் செல்வோர், கண்கழண்டு சுழலும் ஆந்தை, திருடர் முதலியோருக்கெல்லாம் அளவற்ற உவகை காட்டி, ஏனையோருக்கு பெருந்துன்பத்தைக் காட்டி, அரசன் துன்பமுற பேரிருள் வந்து தங்கியது.]

    விழிப்பினு மிமைத்தற் கண்ணும் வேறு பாடின்றித் துன்னுங்
    கழிப்பருங் கொடிய கங்குற் கருகிருட் போது செல்லல்
    அழித்தடி பெயர்க்க லாற்றான் ஆண்மையான் வலிந்து போகி
    வழித்தடந் தப்பி யாரும் வழங்கருங் கடத்திற் புக்கான்.        374
    [ விழித்திருந்தாலும் இமைத்திருந்தாலும் வேறுபாடின்றிச் சேஇந்திருக்கும் நீக்கற்கரிய கொடிய இருட்பொழுதில் மேலே செல்லுதற்கு அடிவைக்க இயலாதவன், தன்னுடைய ஆண்தன்மை செலுத்த வலிந்து சென்று யாரும் செல்லாத கடக்க முடியாத வழியில் சென்றான்]

    துன்னரு வனத்துச் செல்வான் றொடர்ந்தெரி வளைக்கப் பட்டுப்
    பன்னிரு படப்பாம் பொன்று பதைபதைத் தழுங்கக் கண்டா
    னன்னதற் கிரங்கி வல்லே மந்திர வலியா லந்த
    வன்னியின் வெப்ப மாற்றி வாளரா வுய்யச் செய்தான்.        375
    [நெருங்குதற்கு அரிய வனத்தில் செல்லத் தொடங்கி, நெருப்பால் சுற்றிவளைக்கப்பட்டு வருந்தும் பன்னிருபடப் பாம்பொன்று பதைபதைப்பது கண்டான். அதற்கு இரங்கி, விரைவில் தன் மந்திர ஆற்றலினாலந்த நெருப்பின் வெப்பத்தை மாற்றி பாம்பினை உயிர் பிழைக்கச் செய்தான்.]

    உய்வித்த வேந்து தன்னை யுரக வேந்தினிது நோக்கி
    கவ்வைக்கோர் புணையாய்த் தோன்றுங் களைகணே யெயிறு தோறு
    மைவத்த நஞ்சு காலு வலியினேன் றனையு முய்யச்
    செய்வித்த வுதவிக் கென்னே செய்தக்க தென்று கூறும்.        376
    [தன்னைக் காப்பாற்றிய வேந்தனை நோக்கிப் பாம்பு வேந்தன், ‘துன்பக்கடலைக் கடக்கப் புணையாய்த் தோன்றிய பற்றுக் கோடே!, பற்கள் தோறும் நஞ்சினை உமிழும் கொடியனேனையும் உயிர் பிழைக்கச் செய்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்’ எனக்கூறியது.]

    கலிவிருத்தம்
    எவ்வுயி ராயினு மிடுக்கட் பட்டுழி
    யவ்வுயிர் காப்பதே யறமென் றோர்ந்தனை
    செவ்விய வென்றுநன் முகமன் செப்புபு
    கௌவைநோய் களையுமா றிதுவுஞ் சொல்லுமே.        377
    [எந்த உயிராக இருந்தாலும், அது துன்பப்படும் காலத்தில் அதனைக் காப்பதே நல்லறம் என்று நினைந்து செய்தாய் என நன்றியாக முகமனான வார்த்தைகளைக் கூறு துன்பநோய்களைக் களைமாறு மேலும்சொல்லும்.]

    வரையிரண் டெனத்திரண் மணிபொற் றோளினாய்
    குரையெறுழ்த் தழலினாற் கோட்பட் டுய்ந்தயான்
    றரையகம் புகழ்தரு சங்க சூடனென்
    றுரைதரு பெயரினே னுயர்ந்த கேள்வியேன்        378
    [குன்றுகள் இரண்டெனத் திரண்ட அழகிய தோள்களையுடையாய்! ஒலிக்கின்ற வ்லிய நெருப்பினில் சிக்கி உயிர் பிழைத்த யான் உலகம் புகழும் சங்கசூடன் என்ற பெயரினேன்; நல்ல கல்வியுடையேன்.]

    அரந்தைநோய் முழுவதும் அனுக்கி மேதகு
    வரந்தரு காஞ்சி வண்பிலத்து வாய்தலி
    லுரந்தகு காவல்கொண் டுலகு பாம்பென
    விருந்த மாபதுமன் மற்றெனக்குத் தோழனே.        379
    [துன்பநோய் முழுவதையும் ஒழித்து நல்வரம் தரும் காஞ்சிகுகை வாயிலில் வலிமையான காவல் கொண்டு உலகினர் பாம்பெனக் கூற இருந்த மாபதுமன் எனக்குத் தோழன். ]

    ஆங்கவன் செவியறி வுறுப்ப ஆழிபோல்
    ஏங்குநீர்க் காஞ்சியி னிராறு நாமமும்
    பாங்குறக் கணித்தெறுழ்ப் பறவைக் கோபகை
    நீங்கியெங் கணுந்திரி யாற்ற னீடியேன்        380
    [அவன் செவியறிவுறூஉவாக எனக்குக் காஞ்சியின் பன்னிரு நாமங்களும் உபதேசிக்க, நான் அதனைத் தியானித்து கருடனின் பகை நீங்கி எங்கும் திரிதரும் ஆற்றலைப் பெற்றேன்]

    இற்றைநா ளீங்கொரு பிலத்தி னேந்திய
    முற்றிலா முகிழ்முலை நாக கன்னிதன்
    பொத்ததோட் புணர்ச்சியாற் புந்தி சாம்பியப்
    பற்றுடைப் பெயர்களைக் கணித்தல் பாற்றினேன்.        381
    [ பின்னர் ஒருநாள் இங்கொரு பிலத்தில் அழகிய் நாககன்னியொருத்தியின் பொதிந்த தோள் புணர்ச்சியால் புத்தி மயங்கி பற்று வைத்திருந்த காஞ்சிப்பதியின் பன்னிரு நாமங்களையும் தியானித்தலை ஒழிந்தேன்.]

    பாற்றிய வறன்கடை தொடக்கப் பாயெரிக்
    கூற்றின்வாய்க் கவன்றனேன் குழையு மேல்வையிற்
    போற்றுமப் பெயர்களைப் புந்தி யெண்ணலான்
    மாற்றினே னத்துயர் நின்னின் மன்னனே.         382
    [ அந்தபாவத்தின் விளைவாய் நெருப்பாகிய கூற்றுவனின் வாயில் துன்பமுறும் சமயத்தில் போற்றுதலுக்குரிய அப்பெயர்கள் நினைவுக்கு வந்தன. அப்புண்ணியப் பயனால் அந்தத் துயரை நின் வழி நீங்கினேன், மன்னனே!]

    சித்திகள் வேண்டினும் செல்லல் தீர்பர
    முத்தியே வேண்டினு மூசு வண்டுலாந்
    தொத்தலர்த் தாரினாய் துனைய நல்குமா
    லத்தகு காஞ்சியின் பெயரி ராறுமே.        383
    [எண்வகைச் சித்திகள் வேண்டினாலும் துன்பங்கள் தீர பர முத்தி வேண்டினும், வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்தவனே! அவற்றைக் காஞ்சிப்பதியின் ஈராறு திருப்பெயர்களும் விரைவில் அளிக்கும். துனைய- விரைய]

    மும்மையி னிகழ்பவு முறையிற் றேர்ந்துள
    செம்மையேன் ஆனதலிற் செம்மல் நின்னுள
    விம்மல்நோய் எய்த்தனன் வெருவல் இன்னினி
    யம்மனுப் பெயர் செவியறி வுறுப்பலே        384
    [ முக்கால நிகழ்வுகளையும் முறையாகத் தெரிந்துள செம்மையுடையேன். ஆனதனால், செம்மலே!, உன் உளம் விம்மும் நோயினை அறிந்தேன். இப்பொழுது அம்மந்திரப் பெயர்களை உனக்குச் செவியுறுப்பேன். எய்த்தனந் அறிந்தேன்]

    மேதகு பத்தியின் விழைந்தந் நாமங்கள்
    ஓதுழி நான்கெனு முருபு கூட்டுபு
    பேதமில் சத்தியம் ஆதி யாப்பிணித்
    தீதுதீர் நமோந்த மாச்செய்து செப்புக.        385
    [உயர்ந்த பத்தியுடன் விரும்பி அந்தத் திருநாமங்களை நான்காம் உருபாகிய ‘கு’ என்பதனைக் கூட்டி, முதலில் ‘ஓம்’ எனும் பிரணவத்தைக் கூட்டி, குற்றம் தீர்க்கும் ‘நம’ அந்தமாகச் செப்புக பேதமில் சத்தியம்- என்றும் மாறாத உண்மையாகிய பிரணவம்}

    முள்ளரைக் காம்பிவர் முளரி யுற்பலங்
    கள்ளலைத் தொழுகு செங்குமுதங் காஞ்சன
    வள்ளிதழ்ச் சண்பக மறுகு வாலரி
    யெள்ளு நெய்பா றயிர் தேனின் பாளிதம். 386

    கொளத்தகு மேனவுங் கொண்டு நூன்முறை
    யளப்பருஞ் சித்தியின் பொருட்டங் காகுதி
    விளைத்தி டும்பத்தினுக் கொன்று மேவர
    வளபடு மப்பெயர் மனுக்கள் பன்னியே.        387
    [ தாமரை, நீலோற்பலம், செங்குமுதம், சண்பகம், அறுகு, சுத்தான்னம், எள், நெய், பால் தயிர், பாற்சோறு, கொள்ளுதற்குரிய பிறவும் கொண்டு ஆகமநூன் முறையில் எண்ணற்ற சித்திகளை அடையும் பொருட்டு, காஞ்சித் திருப்பெயர்களாகிய மந்திரங்களை ஓதி , ஆகுதி செய்ய அவை ஒன்றுக்குப் பத்தாக வளப்படும்.]

    திருத்தகு காஞ்சியந் தேத்த லாலொரு
    வரைப்பினுஞ் செய்பயன் வல்லை முற்றுறா
    குருப்பொலி மணிமுடிக் கொற்ற வேந்தவம்
    மருப்பொழிற் கச்சியிற் கணித்து வைகுதி        388
    [அழகிய காஞ்சியாகிய தேயத்து அலால் வேறெந்த இடத்திலும் செய்த நல்வினைப்பயன் முற்றுமாகக் கிடையாது. ஆதலால் வேந்தனே ! காஞ்சிப்பதியில் இம்மந்திரங்களைக் கணித்துத் தங்குவாயாக]

    முன்னிய விழைவெலா முற்று மாலெனப்
    பன்னிரு பெயரும் பன்னிரண்டு வாயினு
    மன்னவன் செஞ்செவி யுரைத்து வாளராத்
    தன்னுடைப் பிலத்தினைச் சார்ந்த தென்பவே. 389
    [ அரசனே நீவிரும்பிய பயன் அனைத்தும் கிட்டும் எனவாழ்த்திப் பாம்பரசன் தன்னிரு பன்னிரண்டு வாய்களாலும் அரசனுக்குக்குக் காஞ்சிப் பதியின் பன்னிரண்டு திருப்பெயர்களையும் உரைத்துவிட்டுத் தன்னுடைய புற்றினை அடைந்தது]

    ஆங்கு வேன்மணிப் புயத்தரச னுள்ளகத்
    தோங்கிய வுவகையா னுடலஞ் சாலவும்
    வீங்கினன் றுயரெலாம் விளிய நீத்தொரு
    பாங்கரி னிருந்தயர் வுயிர்க்கும் பாணியின்.        390
    [ அரசன் மகிழ்ச்சியால் உடலம் பூத்தனனாகி, வழிக் களைப்பு நீங்கும் பொருட்டு ஆங்கு ஓரிடத்தில் இருந்தனன்.

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    தெள்ளுசீர்க் காஞ்சி நாமஞ் செவியறி வுறுத்தப் பட்ட
    கள்ளவிழ் மலர்ப்பூந் தொங்கற் காவலன் முகத்திற் றுள்ளு
    மள்ளொளி வனப்பு வௌவ வையெனத் தோன்றி யாங்கு
    வெள்ளொளிக் கதிர்ப்பூந் திங்க ளெழுந்தது விசும்பு சீர்ப்ப        391
    [திருக்காஞ்சியின் பன்னிருநாமங்களும் செவியிலறிவுறுக்கப்பட்ட அரசனின் முகத்தில் துள்ளும் ஒளியின் வனப்பினைக் கவர்ந்து கொள்ள மெலிதாகத் தோன்றுதலைப் போல வெண்மையான ஒளி பரப்பும் திங்கள் எழுந்தது, ஆகாயம் அழகுபெற. கள்- தேன். தொங்கல்- மாலை. காவலந் காக்கும் தொழிலைச் செய்யும் அரசன். அள்ளொளி- அள்ளிக் கொள்ளலாம்படி அமைந்த. வௌவ- கவர. கதிர்ப் பூந்திங்கள்- கதிரினைப் பூக்கும் திங்கள்]

    கோட்டுமா நேமிக்குன்றங் குருமணி குயின்ற வாழிச்
    சூட்டென நடுவட் டோன்றுஞ் சுடர்மதிக் குழிசி யென்னப்
    பூட்டிய வார்களாயப் பொழிநிலாத் திங்கள் கான்ற
    சேட்டொளிக் கிரணக் கூட்டம் திசைதொறும் பரந்த வம்மா        392
    [நேமிக் குன்றம்- சக்கரவாளகிரி. சக்கரவாளகிரி சக்கரத்தின் வட்டையாகவும், நடுவிக் நின்ற சந்திரன் சக்கரத்தின்குடமாகவும், சந்திரனின்கதிர்கள் சக்கரத்தின் ஆரைகளாகவும் காட்சியளித்தன. சந்திரனின் நிலவொளி திசையெங்கும் பரந்தது]

    மையிருட் போர்வை நீக்கி வார்கதிர்க் கரத்தாற் றிங்கள்
    பையமென் புணரி யல்குற் பன்முறை நீவிக் குன்றச்
    செய்யபொன் முலைதைவந்து திளைத்த லான்நாணி யாங்கு
    வையக மடந்தை சால விளர்த்தன ணிலாவின் மாதோ.        393
    [ நிலவு, கரிய இருளாகிய போர்வையை நீக்கி, தன் கதிர்க்கரத்தால் மெல்ல மெல்லிய புணரி(கடல்) யாகிய அல்குலைப் பலமுறைதடவி, குன்றாகிய சிவந்த முலையைத் தடவித் திளைத்தலினால். வைகக மடந்தை பெரிதும் நாணி வெளிறினள்]

    களித்ததன் வேழ மூர்ந்து கணைபொழி கருப்பு வில்வேள்
    இளைத்தல் கண்டதனை வைகற் கிணங்கு பாசறைக்க ணேய்த்துத்
    தளைத்தது போலு மெங்குந் தணந்துகார்த் திமிர வீக்கம்
    அளித்திரண் முரலுஞ் சோலை யகங்குடி கொண்ட தோற்றம்.         394
    [மதமிக்க தன் வேழமாகிய கார் மேகத்தை ஊர்ந்து சென்று மலரம்புகளைத் தொடுக்கும் கருப்பு வில்லுடையவேளாகிய மன்மதன், போர் செய்து அவ்வியானை களைத்தமைகண்டு, அதனைத் தங்குதற்குப் பொருந்திய பாசறைக்கண் செலுத்திச் சென்று அங்கு அதனைக் கட்டிவைத்தது போன்றிருந்தது,இருள் மிகுதி, வெளியெங்கிலும் விட்டு நீங்கிப் பிரிந்து வண்டுக்கூட்டம் முரலும் சோலையகத்துக் குடி கொண்ட காட்சி.]

    தேந்துணர்க் கற்பத் தண்டார்த் தேவர்கள் பலகா லண்மிக்
    காந்துதண் கலைவெண் டிங்கட் கடவுண் மாட்டள்ளீக் கொண்டு
    போந்தொறுஞ் சிந்தா நின்ற புதுச்சுதைப் புள்ளி போன்ற
    வாய்ந்தொளி விசும்பிற் பூத்து வயங்கிய வுடுவின் கூட்டம்.        395
    [தேன் துளிக்கும் மலர்க்கொத்துக்களைக்கொண்ட கற்பக மலரின் குளிர்ந்த மாலைகளை அணிந்த தேவர்கள் நெருங்கி அடைந்து, கலைகள் நிறைந்த திங்களிடமிருந்து அள்ளிக் கொண்டு போகுந்தொறும் சிந்திய புத்தமுதத்தின் துளிகள் போன்றன வானத்தில் பூத்து விளங்கிய விண்மீன்களின் கூட்டம்.]

    சீரிய மதியை நோக்கித் தேவர் போலமிழ்தம் யாமும்
    ஆரிய வாக்கு கென்னா நீரர மகளி ரெல்லாம்
    ஏரியல் பவளச் செவ்வாய் திறந்தன ரென்னப் பொங்கும்
    வேரியங் குமுதக் குப்பை விரிந்தநீர் நிலைக டோறும்.        396
    [பெருமையுடைய மதியை நோக்கித் தேவர்களைப்போல யாமும் அமிழ்தம் உண்ண வார்க்க என்று நீரர மகளிரெலாம் அழகிய பவளம் போலச்சிவந்த வாயினைத் திறந்தனர் என்று கூறும்படியாகத் தேன் வழியும் குமுதமலர்களின் கூட்டம் விரிந்தன நீர்நிலைகள் தோறும்]

    தடுத்துவிண் ணவரள் ளாமைத் தள்ளிய வவுண ராய்ந்தங்
    கடுத்துமற் றெமக்குஞ் சால வாரமிழ் தருள் நின்பாற்
    றொடுத்த வன்புடையார்க் கின்னே சொல்லென விரந்தால் மான
    மடுத்தலை யாம்ப றோறும் வண்டுபாய்ந் திசைத்த தாலோ.        397
    [ தேவர்கள் முழுவதையும் அள்ளிச் சென்றுவிடாமல் தடுத்து எமக்கும் அமிழ்தம் சால நன்கு வழங்க நின்பால் அருளுடையாரிடம் இப்பொழுதே சொல்லுக என்று இரந்தற்போல அம்பல் மலர்கள்தோறும் வண்டுகள் பாய்ந்துமுரன்றன. ஆம்பல் மலரைச் சந்திரனின் கிழத்தியர் எனல் கவி மரபு]

    மலையெனத் திரண்ட தோளும் வார்கிழித் தெழுந்ததண் ணாந்த
    முலைகளு மிறுக மாந்தர் முயங்குமா றெய்யு மாரன்
    சிலைபடு நாணி னோதை தெழித்துமிக் கெழுந்த தேபோ
    லிலைபடு பொதும்ப ரெங்கு மெழுந்தது சுரும்ப ரார்ப்ப.        398
    [மலையெனத் திரண்ட தங்கள் தோளும் காதலியருடைய கச்சைக் கிழித்துப் புறப்பட்ட முலைகளும் இறுக மாந்தர் முயங்குமாறு மன்மதன் எய்யும் கரும்பு வில்லின் நாணோசை தெரித்து மிக்குஎழுந்ததே போல் செழித்த சோலைகள்தோறும் சுரும்புகள் ஆரவாரித்தன. பொருக்கு முன் வில்லின்நாணேற்றி ஒலியெழுமாறு அதனைத் தெரித்தல் மரபு. மன்மதனைன் கருப்பு வில்லுக்கு வண்டு வரிசை நாண். என்பதுகவி மரபு]

    செந்தழல் சான்றா வேட்ட செல்வரைப் பிழைத்த மாதர்
    பைந்துகின் மெய்யிற் போர்த்துப் பன்மரப் பத்திநீழல்
    நனந்தெழின் மாட நீழற் பற்றினர் நடந்தார் வீழ்ந்த
    மைந்தரைக் கலவிப் போரான் வணக்கிய வயின்க டோறும்.        399
    [ செந்தழல் சான்றாக மணந்த கணவரை வஞ்சித்த மாதர்கள், பசிய துகிலைத் தம்மேற் போர்த்துக் கொண்டு மரவரிசைகளின் நிழலிலே மறைந்து தாம் விரும்பிய மைந்தரைக் கலவிப்போரில் மடக்கும் பொருட்டுத் தெருப் பக்கங்களில் நடந்தனர்.]

    கறைகெழு விசும்பிற் றிங்கள் கலையமிழ் தினிது மாந்து
    நிறைமணி மோலித் தேவர் நிரந்தர மழுக்கா றெய்த
    மறுவறு வதனத் திங்கள் வாக்கு தெள்ளமிழ்த முண்டா
    ரிறுநுசுப் பந்நலாரு மிளைஞருந் தம்முட் கூடி        400
    [கரிய ஆகாயத்தில் உள்ள சந்திரனின் கலையமிழ்தத்தினை இனிது மாந்தும் தேவர்கள் நிரந்தமாகப் பொறாமைப்படும்படியாக மாசற்ற முகமாகிய திங்களின் வாக்காகிய தெள்ளமிழ்தத்தை உண்டார், முலைக்கனத்தால் இறும் இடையுடைய இளைய மகளிரும் இளைஞரும் தம்முட் கூடி.]

    இத்தகு வனப்பு மல்க இடையிரா விறுத்த லோடும்
    அத்தகு கானம் வைகும் அடல்கெழு தனிவேற் காளை
    மைத்தபூஞ் சோலைக் காஞ்சி வளநகர் நோக்கி வல்லே
    மொய்த்தெழு மகிழ்ச்சி பொங்க முன்னினான் அதர்கள் தேர்ந்து.        401
    [இத்தகைய அழகு நிறைய இரவு நீங்கலோடும் அத்தகைய கானத்தில் தங்கிய அரசன் பூஞ்சோலைகள் நிறைந்த காஞ்சிவளநகர் அடையும் வழியினை அறிந்து புறப்பட்டான்.]

    காவதஞ் சிலசெல் காலைக் கனியிதழ்ப் பவளச் செவ்வா
    யாவியங் கூந்தன் மாத ரழுங்கியுள் வெதும்பிச் சேரிப்
    பாவையர் நுகர்ச்சி முற்றிப் படர்தருங் கணவர் மாட்டு
    மேவிய துனியின் வைகும் விடியல்வை கறைவந் தன்றே.        402
    [சிலகாவத்ம் கடந்து செல்லும்போது,கொவ்வைக்கனியிதழ்,பவளச் செவ்வாய் அழகியகூந்தல் மகளிர்வருந்து நெஞ்சு வெதும்பிச் சேரிப் பரத்தையர் மாட்டு நுகர்ச்சி விரும்பிச் சென்ற கணவர்களிடத்துகொண்ட துனியுடன் தங்கும் வைகறை வந்தது.]

    கலிவிருத்தம்
    சரியையா தியபுரி தரும் மைந்தர்கள்
    எரிசடைக் கடவுளைத் தொழுதின் பார்ந்தனர்
    உருவிலிக் குடைந்தமைந் தர்களும் ஊடிய
    அரிமதர் மழைக்கணார்ப் பணிந்தின் பார்ந்தனர்.        403
    [சரியை ஆதிய தவங்கள் புரியும் மைந்தர்கள் எரிசடைக் கடவுளாம் சிவனைத் தொழுது இன்பார்ந்தனர். உருவிலியாகிய மன்மதனுக்குத் தோற்ற மைந்தர்கள் செவ்வரிபடர்ந்த குளிர்ந்த கண்ணினை உடைய மகளிரைப் பணிந்து இன்படைந்தனர்.]

    ஆற்றல்வேண் டுநரெலாம் அரனை யன்பினால்
    போற்றி யிம்மனுப் புகல்கென்னல் போன்றமுன்
    சாற்றிய மந்திரந் தன்னைக் கார்க்குரீஇ
    வீற்று வீற்றா விருந்துரைத்தன் மேயின.        404
    [ ஆற்றல் வேண்டுநர் எல்லாம் அரனை யன்பினால் போற்றி, இந்த மந்திரத்தை ஓதுக என்னல்போல், கார்க்குருவிகள் வரிசை வரிசையாக இருந்து மந்திரந்தன்னை உரைத்தன.]

    பரவைவை யகமடிப் படுப்ப வெய்யவன்
    வரவறிந் துள்ளகங் கவன்று மம்மர்நோய்
    விரவலாற் சழங்கிய தென்ன மென்மெல
    இரவுசெய் கதிரொளி மழுங்கிற் றென்பவே.        405
    [கடலைத் தன் ஆளுகைக்கீழ்க் கொண்டு வர சூரியன் வரவினை அறிந்து நெஞ்சம் வருந்தி, கவலைநோய் கொண்டு வாடியதைப்போல் மென்மெல இரவில் ஒளிசெயும் சந்திரனைன் நிலவொளி மழுங்கியது. பரவை- கடல். வெய்யவந் வெப்பத்தைச் செய்யும் சூரியன். சழங்கிய்து- வாடியது இரவுசெய் கதிரொளி- இரவில் கதிரொளி வீசும் நிலவு]

    காதலர்க் கடுத்தது காதன் மாதர்க்கும்
    போதவுற் றிடுமெனல் புதுக்கி னாலெனச்
    சீதவெண் மதியொளி தேய்ந்து வீதொறு
    மாதர்வில் லுடுக்களு மழுங்கித் தோய்ந்தன.        406
    [தலைவர்கட்கு வந்தது தலைவியருக்கும் வந்து சேரும் என்னும் சொல்லைப் புதுக்கினாற்போல் குளிர்வெண்மதி யின் ஒளி தேய்ந்து அழியுந்தோறும், விண்மீன்களும் ஒளிமழுங்கித் தேய்ந்தன. விண்மீன்களைச் சந்திரனின் மனைவியர் எனல் கவி மரபு]

    தணிவருங் காரிருள் சால வாய்மடுத்
    துணவுளத் ததுநிறைந் தொளியை வீத்தென
    மணிநிறை மாளிகை வயின்றோ றேற்றிய
    வணிநிறை விளக்கெலாம் விளக்க மற்றன.        407
    [நீக்குதற்கு அரியதாகிய கரிய இருள் வயிறு நிறைய ஒளியை உண்டு மீத்து வைத்தது போல அழகிய மாளிகைகள் தோறும் ஏற்றிய வரிசையான விளக்குகள் எல்லாம் ஒளி நீங்கின.]

    எய்துமு னாருயி ரிகப்பு றாவகை
    யைதுபோய்த் தாமரை யணங்கை யாற்றெனா
    வெய்யவன் விடுப்பமுன் மேவி னாலெனச்
    செய்யசீ ரருணன்முன் றிகழத் தோன்றினான்.        408
    [தலைவனாகிய தான் வந்து சேர்ந்திடாமுன்னம் உயிர் நீங்காதவண்ணம் தன் வருகையை அறிவித்துத் தாமரை மலராகிய தலைவியைத் தேற்றச் சூரியன் விடுத்த தூதெனெச் சிவந்த அழகிய அருணன் வந்து விளங்கத் தோன்றினான்]

    இனையதோர் வைகறைப் பாணி யெய்தலுந்
    துனைவுகொண் டாறு செஃ றோன்றல் செய்திடும்
    வினையெலா மேதகு விழைவி னாற்றினான்
    றனைநிகர் காலையுஞ் சார்ந்த தென்பவே.        409
    [ இப்படியாக வைகறைப் பொழுது வந்து சேரவே, விரைந்து வழிச்செல்லும் வேந்தன் காலைக்கடன்களையெல்லாம் விரைவில் செய்து முடித்தான், தன்னைப் போல அந்தக் காலையும் அங்கு வந்து சேர்ந்தது என்று.]

    வடதிசைப் படர்ந்தருள் வாக்கின் மன்னரங்
    கிடனுடைப் பொய்கையி னிழிந்தை யாற்றுநீர்
    தடமிசை யெழுந்தமை தகைய மேற்றிசைக்
    கடல்விழு சுடர்குணக் கடலிற் பூத்ததே.        410
    [வடதிசை நோக்கிச் சென்ற வாக்கின் மன்னராகிய அப்பாடிகள் அங்கிருந்த பொய்கையில் இழிந்து திருவையாற்றுக் குளத்தில் எழுந்தமை நிகர்க்க, சூரியன் மேற்றிசைக்கடலில் விழுந்து குணதிசைக் கடலில் தோன்றியது]

    வாக்கினுக் கரையரை யாற்று வாவிநீர்
    மேக்கெழக் கண்டமெய் யன்பர் போன்மெனப்
    பூக்கமலத் தொகை பொலிந்த வாம்பல்கள்
    தீக்குணப் பரமதத் தவரிற் றேம்பின.         411
    [வாக்கின் மன்னர் திருவையாற்று வாவிநீரின் மேல் எழக் கண்ட மெய்யன்பர்கள் முகம்போல மலர்ந்தன தாமரை மலர்கள்; ஆம்பல்கள் தீக்குணப் பரமதத்தவர் போலச் சாம்பின]

    ஆறுசென் றுயங்கினை யயர்வு யிர்த்தரு
    ளீறிலா யுண்டிது வென்று பானுமுன்
    வேறுவே றந்தணர் விருந்து செய்வபோற்
    கூறுமந் திரத்துநீர் குடங்கை யேந்தினார்.        412
    [நீண்ட வழி சென்று அருந்தினை; ஈறு இலாதவனே! இதனை உண்டு களைப்பு நீங்குக என்று சூரியன் முன்னர் தனித்தனி இருந்து அந்தணர் மந்திரமோதி குவிந்த கரங்களில் நீர் ஏந்தினர்.]

    மண்ணெலா மலர்ப்பொழின் மணஞ்சு லாவின
    விண்ணெலாம் வேள்வியின் புகைவி ராவின
    கண்ணெலாங் கண்ணுதல் கழலி லேறின
    எண்ணெலாம் அவனடி யிணையிற் றாழ்ந்தன       . 413
    [நிலமுழுதும் மலர்ச்சோலைகளின் மணம் வீசியது. விண்ணெலாம் வேள்வியின் புகை நிறைந்தது. கண்கள் எலாம் சிவபிரானின் கழலில் நின்றன. சிந்தையெலாம் அவன் அடியிணையிலொன்றின.]

    ஏடுசூழ் தாமரை யீர்ந்த டந்தொறும்
    தோடுசூழ் சிறையனத் தொழுதி சென்றன
    பாடுசூ ழவற்றெழில் பார்ப்ப போன்மனைப்
    பீடுசூ ழன்னமுங் குடையப் போந்தன.        414
    [இதழ்கள் சூழ்ந்த தாமரை மலர்கள் பூத்த குளிர்ந்த தடாகங்கள்தோறும் தோலினைச் சூழ்ந்த சிறகுகளையுடைய அன்னக் கூட்டம் சென்றன. அவற்றின் அழகினைப் பார்ப்பபோல் இல்லங்களில்வாழும் பெருமையுடைய (மகளிராகிய) அனங்கள் தடாகங்களில் குடைந்து ஆடச் சென்றன.]

    இன்னபல் வளஞ்செறி காலை யெல்லையின்
    மன்னவ னெழுந்து பன்மலையுங் கானமுங்
    கன்னலங் கழனியுங் கடந்து சார்ந்தனன்
    துன்னிய மலர்ப்பொழிற் காஞ்சித் தொன்னகர்.        415
    [இத்தகைய பல வளமுஞ் செறிந்த காலைப் பொழுதில் மன்னவன் எழுந்து பலமலைகளும் கானகமும் கரும்புக் கழனியும் கடந்து நெருங்கிய மலர்ப்பொழில்கள் சூழ்ந்த காஞ்சித் தொன்னகரை அடைந்தான்.]

    கருத்தொகை துமித்தருள் காமக் கோட்டத்தை
    யருத்தியி னண்மியாங் காற்றப் போற்றுபு
    மருத்த பூங்குழலுமை மாதை யுள்ளகத்
    திருத்தி னன்கணித்தன னி ராறு நாமமும்.         416
    [பிறப்புக்குக் காரணமான வினைத்தொகையினை ஒழித்தருளும் காமக்கோட்டத்தை விருப்பத்துடன் நெருங்கி மணம் வீசும் குழலுடைய உமைஅம்மையை மிகப்போற்ரி உள்ளகத்திருத்தினன்; காஞ்சியின் பன்னிரு நாமங்களையும் தியானித்தனன்.]

    இறைவிதன் னேவலா லிணர்த்த பூம்பொழி
    னறைகமழ் காஞ்சி மாநகரத் தெய்வதம்
    நிறையெறுழ் தாக்கநீ டாயுள் ஏனவும்
    பெறுகென வருளலும் பெற்று நீங்குபு.        417
    [இறைவியின் ஏவலால் காஞ்சிமாநகர்த் தெய்வம் , n. < நிறை¹- +. 1. Satisfied, contented state of mind; திருப்தியுள்ள மனத்தன்மை. 2. Cheerful disposition; மகிழ்ச்சியுள்ள சித்தம். எறுழ் eṟuḻ, n. 1. Strength, might; வலிமை. சிலைநவிலெறுழ்த்தோ ளோச்சி (தொல். சொல். 388, உரை). செல்வம், நீண்ட ஆயுள் அகியனவும் பிற நன்மைகளும் பெறுக அருளலும் அவற்றைப் பெற்று நீங்கி,]

    பொற்றதன் னாட்டிடைப் புகுந்து போரொடு
    முற்றிய பகைஞரை முருக்கி யெங்கணும்
    வெற்றியந் திகிரி சென்றுருள வீற்றிருந்
    தற்றமி லரசு செய்தவனி காத்தனன்.        418
    [சிறந்த தன் நாட்டிடைப் புகுந்து போரிட்டு பகைஞரை வென்று எங்கும் தன் வெற்றிச் சக்கரம் சென்றுருள வீற்றிருந்து நாட்டினைக் காத்தனன். பொற்ற - Good, excellent, fine; சிறந்த. பொற்ற சுண்ணமெனப் புகழ்ந்தார் (சீவக. 885]

    விண்ணவர் வியத்தகும் விண்டு மாபுரத்
    தண்ணலந் திருப்பெய ரலகிட் டின்னண
    மெண்ணீய வெண்ணியாங் கெய்தினோ ரின்னு
    மெண்ணில ரவற்றுடைப் பெருமை யென்சொல்கேன்        419
    [ தேவர்களும் வியந்து போற்றும் விண்டு மாபுரத்தின் தலைமை வாய்ந்த திருப்பெயர்களைக் கணித்துத் தாம் எண்ணிய எண்ணியவாறு எய்தினோர் கணக்கற்றோராவர். அவற்றின் பெருமையை எவ்வாறு சொல்வேன். அலகிட்டு- கணித்து, தியானித்து.]

    கன்னிகாப் பணிந்தவப் பெயருட் காஞ்சியென்
    றென்னரு மேதக வியம்பு நற்பெயர்
    தன்னையோர் வேதியன் கேட்டுத் தாவொரீஇ
    யுன்னரும் பேறு பெற்றதுவு மோதுவாம்.        420
    [கன்னி காப்பெனும் அந்நகரின் பெயருள் காஞ்சி என்னும் மேன்மையான அரிய நற்பெயரினை ஒரு வேதியன் கேட்டுத் துன்பம் நீங்கி நினைக்கமுடியாத பேறு பெற்றதுவும் கூறுவோம்.]

    கொச்சகக்கலிப்பா
    அலங்கன்மணிப் புனற்றடஞ்சூ ழயோத்திநகர்வாழ் வாழ்க்கையினான்
    நங்கதுவும் பலகலையு நான்மறையு முழுதுணர்ந்தான்
    இலங்குபுகழ்த் தனியொழுங்கின் எச்சசன்மா வெனுமறையோன்
    மலங்குதுயர்க் கடலழுத்தும் நல்குரவால் வருந்தினான்.        421
    [எச்சசன்மா எனும் பெயருடைய அந்தணன் ஒருவன் அயோத்திநகரில் வாழ்ந்திருந்தான். நல் ஒழுக்கம் உடையவன். பலகலைகளையும் நான்மறைகளையும் கற்று முழுதும் நன்குணர்ந்தான். துயர்க்கடலில் அழுத்தும் வறுமையால் வருந்தினான். அலங்கல் alaṅkal, n. < அலங்கு-. 1. Light; ஒளி. (ஈடு, 10, 1, 2.) மலங்கு- + அடி-. Confusion of mind, bewilderment; மனக்கலக்கம். ]

    கரந்தறியா விழுத்தகையோர் கண்ணுற்று விதியாற்றான்
    இரந்துகடும் பொடும்பசி தீர்ந்தின்னுயிரோம் பினன்வருநாட்
    சுரந்தபொருள் வேட்கையினாற் சுலாயெங்கு மாறின்றிப்
    பரந்தபொரு ளீட்டியுந்தன் பாழார்வந் தணிந்திலனாய்        422
    [தங்களிடம் உல்ல பொருளை மறைத்தறியாத சிறந்த குணமுடையவர்களிடம் சென்று முறைப்படி இரந்து சுற்றத்தாரொடு பசி தீர்ந்து இன்னுயிர் ஓம்பினன். இவ்வாறு வரும் நாளில் தோன்றிய பொருளாசையினால் பெரும் பொருள் ஈட்டியும் ஆசை தணியாதவனாய். கரத்தல் – மறைத்தல். விழுத்தகைமை- பெருமைக்கு ஏதுவான நற்குணம். விதிப்படி- எப்படி இரக்க வேண்டுமோ அப்படி. சுலாய்- அலைந்து திரிந்து. பாழ் ஆர்வம்- பாழினைச் செய்யு ஆர்வம்]

    காண்டகுசீர் வளம்படைத்த காசிநகர் சென்றெய்தி
    யாண்டிருந்து பலவருட மலைசுருட்டி மணிகொழித்து
    வேண்டுவரந் தருகங்கை விரைப்புனலா டுனர்மாட்டு
    மாண்டகுபல் தானங்கள் வைகறொறும் விழைந்தேற்றும்.        423
    [கண்ணுக்கழகிய வளம் படைத்த காசிநகர் சென்றடைந்து, பலவருடக்கள் அங்கிருந்து,வேண்டுவார்க்கு வேண்டும் வரம்தரும் கங்கை நதிபுனித தீர்த்தம் ஆடுவாரிடம் பலசிறந்த தானங்களை விரும்பிப் பெற்றும்]

    பரிதியைவெங் கொலையரவம் பற்றுதினத் தாற்றுநர்தம்
    இருளிரிக்கும் மாதானம் ஏற்றுநிதிமல் குதலாற்
    பெருகியதன் பொருளர்வம் பெரிதுமமைந் தோங்கியதன்
    றிருநகரஞ் செல்பாக்குத் திரணிதியோ டவணிங்கி        424
    [சூரிய கிரகணத்தன்று பிராயச்சித்தம் செய்வோரின் பாவம் நீக்கும் தானங்கள் ஏற்றும் செல்வம் மிகுதலால் பொஉள்மேற்கொண்ட பேராசை பெரிதும் அமைந்து தன்னுடைய திருநகரத்திற்குத் திரும்ப வேண்டி, ஈட்டிய பெருஞ் செல்வத்துடன்]

    பலநகர மிடைகடந்தோர் பழுவமடுத் திறந்திடுங்கா
    னிலவியவாழ் நாளுலப்ப நிலமிசைவீழ்ந் துடல்விடுத்துக்
    குலவுபஃ றானங்க ளேற்றகொடும் பாவத்தால்
    அலகிறுயர்க் காகரமா யரக்கவுருச் சிமிழ்ப்புண்டான்.        425
    [நகரங்கள் பல கடந்து ஒரு மரநிழலை அடுத்துத் தங்கியபொழுது அவனுடைய வாழ்நாள் தீரவே, நிலத்தின்மீது வீழ்ந்து உயிர் துறந்தான். பலவகையான தானங்களும் ஏற்ற கொடும்பாவத்தால் அளவிலாத துயருக்கு இருப்பிடமான அரக்கவுருவில் சிக்குண்டான்]

    வருந்திநனி யீட்டியுமவ் வான்பொருளற் பயன்யாதும்
    பொருந்தினா னலனிறந்த பொழுதுமொரு கதியிலான்
    றிருந்தியவிக் கதைகேட்டுஞ் சிலரன்னோ முறைதிரும்பிப்
    பெருந்தரையிற் றவப்பொருள்கள் பெருக்குவா ரென்னினைந்தோ.        426.
    [ மிக வருந்தித் திரட்டியும் அப்பெருஞ்செல்வத்தால் அம்மறையவன் எப்பொருளையும் அடைந்திலன்.இறந்தபொழுதுநற்கதியடைந்திலன். இந்த நல்ல கதையைக் கேட்டும் சிலர் இந்நிலமீதிற்கொண்ட பொருளாசையை பெருக்குகிறார்கள். அப்பொருளை எப்பொழுது அனுபவிக்க நினைந்தோ? அந்தோ பாவம்.]

    உருக்கியுயிர் நனிகவற்று முண்புனல்வேட் கையுஞ்சால
    வெருக்கொள் பசித்தழற் பிணியும் விராயுடறத் துயர்வசமாய்
    நெருப்புறழ் வெஞ்சுரத் தொருசார்நிற்கு மொருதடம் போதித்
    தருத்தனைச்சேர்ந் தவரக்கன் றளர்ந்தினைந் துவதியுநாள்.        427
    [உயிரினை உருக்கி மிகவருத்தும் நீர் வேட்கையும் மிகவும் அச்சுறுத்தும் பசிப்பிணியும் விரவித் துன்புறுத்தத் துயரடைந்து நெருப்பு தகிப்பது போன்றகொடிய பாலை நிலத்து வழியில் ஒரு அரசமரத்தினைச் சார்ந்து அவ்வரக்கன் தன் நிலை நினைந்து வருந்தி வசிக்கும் ஒரு நாளிலே]

    கலித்துறை
    சுரும்புதூ வழிமிழற்ற மென்மலர் மதுத்துளிக்கு
    மரும்புவாய்ந்த பூம்பொதும்பரின் புறமெலாம் மடுத்துக்
    கரும்புஞ் செந்நெல்லுங் கதலியும் பூகமும் காட்டும்
    பெரும்புனற் பணைமதுரையிற் பேணு வாழ்க்கையினான்.        428

    நாட்ட மூன்றுடை நம்பனார் நளின மெல்லடிக்கே
    கோட்டு சென்னியன் குறும்புசெய் மலப்பகை முழுதும்
    வாட்டு பீமசன்மா வெனுமறையவன் மைந்தன்
    சேட்டி ரும்புகழ்ச் சோமசன்மா வெனுந்திலதன்         429
    [வண்டுகள் செவ்வழிப்பண் மிழற்ற,மெல்லிய மலர்கள் தேன் துளிக்கும் அரும்புகள் நிறைந்த பூஞ்சோலைகள் புறத்தெ அமைந்து கரும்பும் செந்நெல்லும் கமுகும் எழித்த நீர் வளமிக்க வயல்கள் சூழ்ந்த ம்துரையில் வாழ்பவன்..,
    கண்மூன்றுடைய நம்பற்குரியவரின் மெல்லிய திருவடிக்கே வணங்கும் தலையுடையவன், துயரம் செய்யும் மலப்பகை முழுவதையும் வாட்டியவன் பீமசன்மன் எனும் மறையவனின் மைந்தன் மிக்கபுகழ் வாய்ந்த சோமசன்மன் எனும் பெரியோன்]

    புரங்க டந்தவர் பூணிளவன முலையோடுந்
    தரங்கவார் புனற்கம்பையின் றடங்கரை யமரும்
    அரங்க மாளிகைக் காஞ்சிமா நகர்த்தலை யமலும்
    இரங்கு வெண்டிரைத் தீர்த்தங்க ளாட வெண்ணினான்.        430
    [முப்புரங்களையும் வென்றவர் உமையம்மையுடன் அலைகள் வீசும் கம்பையாற்றின் பெரிய கரையில் பெரிய மாளிகைகள் கொண்ட காஞ்சி மாநகரில் செறிந்துள்ள ஒலிக்கும் தீர்த்தங்கள் ஆட எண்ணினான்]

    கடங்க விழ்க்கும்வா ரணமுகக் கடவுளை யிதழ்கள்
    உடங்க விழ்க்குமென் கடம்பணி யொருவனை வேள்விச்
    சடங்க விக்கவோர் வீரனைத் தந்தருள் அரவம்
    படங்கவிக்கும் வார்சடையரை யுமையொடும் பணிந்தான்.        431
    [கங்கைநீர்க் கரகம் கவிழ்க்கும் யானைமுகக் கடவுளை, இதழ்கள் ஒருங்கு அவிழ்க்கும் மெல்லிய கடம்பமலர்மாலை அணிந்த முருகனை, தக்கனது வேள்விச் சடங்கினை அவிக்க ஓர் வீரனாகிய வீரபத்திரக் கடவுளைத் தந்தருள், பாம்பு தன் படத்தால் கவிக்கும் நீண்ட சடையுடைய ஏகாம்பரேசரை உமையொடும் பணிந்தான்.]

    கற்பு மேதகு மனைவியுங் காமர் மைந்தர்களும்
    பொற்ப வோது மாணாக்கரும் போக்கில் சுற்றமுமாம்
    பற்ப லாரொடுநியதி பூண்டப்பதி நீங்கி
    யற்பு மாமனங் களிகொள வாறுசென் றனனே.        432
    [கற்பு மேம்பட்ட மனைவியும் அன்புடைய மைந்தர்களும் பொலிவுடன் தன்னிடம் பயிலும் மாணாக்கர்களும் தன்னையன்றி வேறு போக்கிலாத சுற்றத்தாரும் மேலும் பற்பலாருடன் முறைப்படி அப்பதி நீங்கி பத்தியுடன் யாத்திரை வழிச் சென்றனன். ]

    செல்லும் வைகளுள் ஒருதினம் செல்லலிற் றுளையும்
    வல்ல ரக்கன்வை கழற்கடம் வழங்கிடு மேல்வை
    வில்லொ ழுக்கிய வெய்யவன் வெங்கதி ருடற்ற
    வல்ல லுற்றன னவ்வர சடியினைச் சார்ந்தான்.        433
    [இவ்வாறு செல்லும் நாள்களில் ஒருநாள் துன்பத்தில் துளையும் வலிய அரக்கன் தங்கியிருக்கும் கொடிய வழியைக் கடக்கு ம்போது நண்பகல் சூரியனின் வெப்பக்கதிர்கள் உடற்ற அவ்வரக்கன் இருக்கும் அரசமரத்தடியினைச் சார்ந்தான்]

    நெருங்கு பல்வளப் பெருக்கமு நிலையுத லிலவாய்ச்
    சுருங்குங் காலையும் விருந்தினைப் புறந்தருந் துகடீர்
    பெருங்கு ணத்தரி னரசுகா னீழல்பெட் டிறைகொண்
    டொருங்கு வந்ததன் சுற்றமோ டயர்வுயிர்த் தனனே.        434
    [நிறைந்திருந்த செல்வமெலாம் சுருங்கியபோதும் விருந்தினரைப் புறந்தரும் பண்பு சுருங்காத குற்றமற்ற பண்பினரைப்போல அரசமரம் வெளியிடும்நிழலினை விரும்பித் தன்னுடன் வந்த சுற்றம் முதலியவருடன் தங்கி களைப்பு நீங்கினன்.]

    வருத்தம் நீங்கியங் கிருப்புழி மணித்திரை கொழிக்கும்
    மருத்த பூந்தட மருங்குகால் வளைத்தகாஞ் சியைச்சென்
    றருத்தி யோடுமே கம்பர்த மடியிணை தொழுது
    திருத்த குஞ்சிலர் மறையவர் மீண்டனர் சென்றார்.        435
    [வழிநடந்த வருத்தம் நீங்கி அங்கிருக்கும்போது, காஞ்சிக்குச் சென்று அங்கு பத்தியுடன் ஏகம்பர்தம் அடியிணை தொழுது புண்ணிய மிக்க மறையவர் சிலர் மீண்டு அவ்வழி வந்தனர்.]

    அடுப்ப வண்மிய வந்தணர் தம்மைநேர் நோக்கிக்
    கெடுத்த வைம்பொறிச் சோமசன்மா கிளர்ந்தெழுந்து
    மடுத்த காதலின் வரவெதிர் கொண்டு பூந்தவிசு
    கொடுத்து மேலிரீ யளவளாய்க் குழைந்தகங் களித்து.        436.
    [நெருங்கி வந்த அந்தணர்களை நேர்கொண்டு ஐம்பொறிகளை வென்ற சோமசன்மா விரவில் எழுந்து அன்புடன் வரவெதிர்கொண்டு மெல்லிய இருக்கைக்ள் அளித்து மேலிருத்தி அளவளாவினான். அகங்குழைந்து]

    எங்கி ருந்திவட் போந்தனி ரெங்கணே குதிரென்
    றங்கண் வேதியர் தங்களை வினாயினா னவருங்
    கொங்கி ணர்ப்பொழிற் காஞ்சியைக் குறுகினம் போற்றித்
    தங்கு மெம்பதி போதுவான் சார்ந்தன மென்றார்.        437
    [எங்கிருந்து இங்குப் போந்தனிர், எங்குச் செல்லுகின்றீர் என்று அவ்வேதியரை விஅவ, அவர்களும் காஞ்சியை அடைந்து வழிபட்டுப் பின் ஊருக்குப் போகும் வழியில் இங்கு அடைந்தோம் என்றனர்]

    அளறு பாய்மதக் கலுழிநீ ராறுபாய் முகத்துக்
    களிறு வாரிதி மடுத்தெழுங் கருமுகில் சமழ்ப்பப்
    பிளிறு மோதைசூழ் காஞ்சியம் பெருபதி யின்னும்
    ஒளிறு நெஞ்சினி ரெவ்வள விற்றென வுரைத்தான்.        438
    [சேறாகுமாறு மதநீர் ஆறுபாய்கின்ற முகத்தினை உடைய களிறு, கடல் நீர் பருகி எழும் கருமுகில் தோற்கப் பிளிறும் ஓசை சூழ் காஞ்சியம்பதி, அறிவொளி வீசும் நெஞ்சினீர்! இன்னும் எவ்வளவு தூரத்தில் உள்ளது என வினவினன்.]

    அளவை யிற்றென மொழிந்தவர் அகறலு மாங்கு
    வளமை பெற்றசீர்க் காஞ்சி யென்றவர் முனம்வகுத்த
    கிளவி போய்ச்செவி நுழைதலுங் கெழுமு வல்லரக்க
    விளிவி லாக்கையை விடுத்தன னரசின்மே லிருந்தான்.       439
    [காஞ்சியம்பதி இத்துணை அளவிலுளது என்று மொழிந்து அவ்வேதியர்கள் அகறலும், வளமை பெற்ற காஞ்சி என்று அப்பெயர் சென்று செவியில் ஏறலும் அழிவிலாத வலிய அரக்கவுடல் விடுத்து அரசின் மேலிருந்த அந்தணன் கீழ் இறங்கிவந்தான்.]

    மற்று ரைத்தவக் காஞ்சியின் கேள்வியால் வாசந்
    துற்ற கற்பகத் தோட்டலர்த் தொடையன் மார்பலையக்
    கற்றையங் கதிரொளியுடன் முழுவதுங் கஞலப்
    பொற்ற வானவ னாயினன் புவியெலாம் வியப்ப        440
    [வழிச் செல்லும் மறையவர் கூறிய காஞ்சி என்னும் பெயர் கேட்ட கேள்விப்புண்ணியப் பயனால் நறுமணம் மிக்க கற்பக மலர்த்தொடையனாக் அம்மாலை மார்பினை அலங்கரிக்க கதிரொளி வீசும் பொன்னுடலனாகிய வானவன் ஆயினன், நிலவுலகெலாம் அதிசயிக்க.]

    நிழலின் வைகிய சோமசன் மாவைநேர் குறுகிக்
    கழலிற் றாய்ந்திரு கட்பனியுகக் கரைந்தியம்பு
    மொழிதள் ளாட வின்றுதி பலமுழக்கி யுள்ளகத்துக்
    கழிபெருங் களியெழக் கரமுகிழ்த் தெதிர்நின்றான். 441.
    [அரசமர நிழலில் தங்கிய சோமசன்மாவை நேரடைந்து குறுகித் தாழ்ந்து வணங்கீருகண்களும் கண்ணீர் உகுக்க மனங்கரைந்து, மொழி தளுதளுக்க உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி பொங்க , இருகரமுங் கூப்பி , இனிய துதி மொழிகள் பல இயம்பி எதிரே நின்றான்.]

    யாரைநீ யெனவினவிய விருபிறப்பாள
    னோரு மாறு தன்செய்திகளு வந்தெடுத் துரைப்பான்
    சீரு லாமறைக் குலத்தினென் காசியிற் சிவணி
    யார வான்பொரு ளறம்பிழைத் தீட்டிமீண் டிறந்தேன்.         442
    [ நீ யார் என வினவிய சோம சன்மாவுக்குத்தன் செய்திகளை எடுத்துரைத்தான். பெருமை வாய்ந்த மறைக் குலத்தவன் யான். காசிக்குச் சென்று மிக்க பொருளை அறம் பிழைத்துத் திரட்டி, மீண்டு வரும் வழியில் இங்கு இறந்தேன்.]

    இறந்த விக்கடத் தெரியெனப் பெருந்துய ரலைப்ப
    வுறந்த சாகை நெட்டரசினை யுறைந் திருந்தனன்மற்
    றறந்த ழைத்தநின் வரவினா லமரனாய் ப்பொலிந்தேன்.
    சிறந்த வேதிய விதற்கெவ னேதுசெப் பென்றான்.        443
    [இறந்த இவ்வழியில் நெருப்பெனப் பெருந்துயர் வருத்த செறிந்த கிளைகளையுடை நெடிய இவ்வரசமரத்தில் வாழ்ந்திருந்தேன். புண்ணியனாகிய நின் வருகையினால் தேவனாகிப் பொலிந்தேன். சிறந்த வேதியனே! இஹற்குக் காரணம் யாது? என்றான்.]

    செப்புமென் மொழியமிழ் தெனச்செவி துளைநிறைப்ப
    வொப்பில் சோமசன்மா வெனுமுத்தமன் மகிழ்ந்து
    துப்புநேர் சடையா ரருள்வாரியிற் றுளைந்தங்
    கெய்ப்பு நீவிய பண்ணவ னின்புறக் கிளப்பான்.        444
    [கூறிய மென்மொழி அமிழ்தம் எனத் தன் செவித் துளை நிறைப்ப, ஒப்பிலத சோமசன்மாவெனும் உத்தமன் மகிழ்ந்து பவளம் போலச் சிவந்த நீண்டசடையாராகிய சிவபிரானின் அருளாகிய கடலில் திளைத்து, வருத்தம் நீங்கிய அந்தணன் இன்பமுறச் சொல்லுவன்.]

    சுருட்டு வெண்டிரைத் தொகுதிகள் சுடர்வளைக் குலங்கொண்
    டுருட்டி வார்கரை யொதுக்கு நீர்க்கங்கைசூழ் காசிப்
    பொருட்கு வைகிய பொருவறு புண்ணியப் பேற்றா
    லிருட்டனுக்கு நற்காஞ்சி யென்றிரும்பெயர் கேட்டாய்.        445
    [சுர்ண்டு வருகின்றவெண்மையான அலைகள் ஒளியுடைய சங்குக் கூட்டங்களை உருட்டிக் கொண்டு நீண்ட கரைகளிலே ஒதுக்கும் நீரையுடைய கங்கையாறு பாய்கின்ற காசியில்பொருளுக்கா தங்கிய புண்ணியப்பேற்றால் , பாவ இருளோட்ட நற்காஞ்சி யெனும் பெரும்பெயர் கேட்டாய்]

    அனைய கேள்வியா லரும்பயன் பெற்றனை யென்னா
    நனைம லர்ப்பொழில் நனந்தலைப் புரிசைசூழ் காஞ்சி
    புனைபெ ரும்புகழ் புகழ்ந்திடு மேல்வை வானின்றுங்
    கனைக திர்ப்பொலங் கடவுளர் விமானம் வந்த தன்றே.        446
    [அத்தகைய காஞ்சியின் பெயர் கேட்டலால் அரும்பயன் பெற்றனை என்று காஞ்சியம்பதியின் பெரும்புகழைக் கூறிப் புகழ்ந்திடும் வேளை வானினின்றும் ஒளிவீச தேவர் விமானம் வந்தது]

    விம்மு வால்வளை தெழித்தெழ விமான மேல்கொண்டு
    கொம்மை வார்முலை யரம்பையர் குழீஈ முறைபழிச்ச
    மும்மை வையக முழுவது முகமலர் மலர
    விம்மென் முன்பு போயெய்தி னானிமையவ ருலகம்.        447
    [வெண்சங்கு மங்கலமாக ஒலிக்க விமானத்தின் மேற்கொண்டு தேஅமடந்தையர் கூடிப் போற்ற மூவுலகில் உள்ளோரும் முகமலர் மலர இம்மென்னும் முன் இமையவர் உலகம் எய்தினான். நல்லதொரு ஆன்மா மேனிலையடையும்போது உலகத்து உயிர்களெல்லாம் அக்கணம் னந்தெரியா மகிழ்ச்சி எய்தும் என்பது மரபு- இம்மென் முன்பு- விரைவுக்குறிப்பு]

    அனைத்தும் நோக்கியற் புதத்தனா யகங்களி துளும்பும்
    வினைத்தொ டக்கறுஞ் சோமசன் மாவெனும் மிக்கோன்
    றனைத்தொ டர்ந்த பல்சனத் தொடுமாவயிற் றணந்து
    கனைத்து வண்டிமிர் சோலைசூழ் காசியை யடைந்தான்.        448
    [ நிகழ்ந்த அனைத்தையும் கண்டு விம்மிதனான வினைத் தொடக்கு நீங்கியசோமசன்மா உள்ளகம் மகிழ்ச்சி துளும்ப தன்னொடு தொடர்ந்த சுற்றத்தாருடன் அவ்விடத்தைவிட்டு நீங்கிக் வண்டுகள் ஒலிக்கும் சோலைக் காசியினை அடைந்தான்.]

    சங்கு மிப்பியுந் தண்டுறை தொறுமணி கொழிக்குங்
    கங்கை வார்நதி தோய்ந்து செய்கடனெலா முடித்துத்
    துங்க வேற்படைத் தோன்றலைச் சூர்தப வுயிர்த்த
    பங்கம் நீத்தருள் விச்சுவ நாதரைப் பணிந்தான்.        449
    [ சங்கும் கிளிஞ்சிலும் துறைகள்தோறும் மணிகொழிக்கும் கங்கைப் பெருநதியில் தோய்ந்து செய்யவேண்டிய கடன்கலையெல்லாம் செய்து முடித்துமேன்மையுடைய வேற்படை எந்ந்திய தோன்றலாகிய சூரபன்மன் அழியௌயிர்த்துத் தந்த பிறவிப்பங்கம்
    நீக்கியருளும் விசுவநாதரைப் பணிந்தான்]

    அங்கண் நீங்கிவந் தண்மினான் அன்னமுங் குருகும்
    பங்க யத்தடம் போதெலாம் பள்ளிகொண் டுறங்கும்
    கொங்கு விம்மிய குளிர்புனல் இலஞ்சிக ளுடுத்த
    மங்குல் வான்றொடு மாளிகைக் காஞ்சிமா நகரம்.        450
    [ அங்கிருந்து நீங்கிவந்து அன்னமும் கொக்கும் தாமரைத் தடாகங்களில் மலர்களில் பள்ளிகொண்டு உறங்கும் குளிர்ந்த நீத்தடாகங்கள், இலலஞ்சிகளை உடுத்ததும் உயர்ந்த மாலிகைகளை உடையதுமாகிய காஞ்சி நகரை அடைந்தான்.]

    விழியு முள்ளமும் வேசையர் போற்றிறை கொள்ளுங்
    கழிப்பெருஞ் சிறப்பணி நகர்க்கவி னெதிர்நோக்கிப்
    பொழியு மன்பினன் போந்தனன் புகர்துமித் தின்ப
    வழியி னுய்த்திடுஞ் சாருவ தீர்த்தத்தின் மருங்கு.        451
    [விழியினையும் உள்ளத்தினையும் பரத்தையரைப்போலக் கொள்ளை கொள்ளும் மிக்க பெருமையுடய நகரின் அழகினை எதிர் நோக்கி மிக்க பத்தியினனாகச் சாருவ தீர்த்தத்திற்குச் செல்லும் வழியின் மருங்கில் போந்தான்.]

    ஆங்கு நூன்முறை மயிர்வினை யாற்றிவார் தரங்கம்
    வீங்கு வெள்ளநீர்த் தீர்த்தமே வரப்படிந் தாடி
    யோங்கு பிண்ட மீடாதிய செய்கட னுழற்றித்
    தேங்கு லாவிய தெய்வத வேகம்பஞ் சேர்ந்தான்.        452
    [அங்கு நூல்களில் விதித்தபடி மயிர் நீக்கும் மணவினை ஆற்றி, அலைவீசும் சாருவதீர்த்தத்தில் நீராடிப் பிதிர்ப் பிண்டம் வழங்கள் முதலிய செய்கடன்களைச் செய்து முடித்து தெய்வதம் பொருந்திய ஏகாம்பரேச்வரத்தை அடைந்தான்]

    மட்டு வார்ந்திழி மலர்ப்பசு மாவடி முளைத்த
    அட்ட மூர்த்தியார் அணிமலர்ச் சேவடி தாழ்ந்து
    பெட்ட காதலி னாலயம் பலவுஞ்சென் றிறைஞ்சி
    முட்டு மானந்த வெள்ளத்தின் முழுகியொன் றானான்        453
    [தேன் வார்ந்திழியும் மலர்களையுடைய பசிய மாமரத்தின் அடியில் தோன்றிய அட்டமூர்த்தியாராகிய சிவத்தின் அழகிய மலர்ச்சேவடிகளில் தாழ்ந்து பணிந்து விரும்பும் ஆலயங்கள் பலவற்றிலும் சென்று இறைஞ்சி வழிபட்டு தேக்கும் ஆனந்தமே வடிவதாயினன்]

    மற்று முள்ள பன்மணி நற்ந்தீர்த்த நீராடிப்
    பற்று காதலி னாலயம் பலவுஞ்சென் றிறைஞ்சி
    யற்றந் தீரடியாரொடு மளவளாய் வதிந்து
    சுற்ற மோடுமெய் வீட்டினைத் துன்னினா னன்றே.        454
    [மற்றும் அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி, ஆர்வத்துடன் பலஆலயங்களுக்கும்சென்று வழிபட்டு நல்லடியர்களுடன் அளவளாவி அங்கு வதிந்துப் பின் சுற்றமோடு மெய்வீட்டினை அடைந்தான்]

    உன்னு வார்வினை யோசனைக் கப்புறத் தொதுக்கும்
    மன்னு சீர்ப்பெயர் முகத்தினாற் காஞ்சிமா நகரந்
    துன்னு மேன்மையிற் சிறிதெடுத் துரத்தனந் துகடீர்
    அன்ன மாநகர் மூர்த்தியின் பெருமைமற் றறைவாம்.        455
    [தன்னை நினைப்பவர் வினைக் குற்றத்தை யோசனை தூரத்துக்கப்புறம் ஒதுக்கும் பெயர்ப்பெரூமையுடைய காஞ்சிமாநகரத்தின் மேன்மையைச் சிறிது எடுத்து உரைத்தனம். குற்றமற்ற அம்மாநரில் குடிகொண்டிருக்கும் மூர்த்தியின் பெருமையை இனிப் புகல்வாம்]

    பன்னிருநாமப் படலம் முற்றிற்று
    ஆகத் திருவிருத்தம் 1680


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III