Kāñcip purāṇam VI


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் VI
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப முனிவர் அருளிய
காஞ்சிப் புராணம் - இரண்டாங் காண்டம்
1. திருக்கண்புதைத்த படலம் ( செய்யுள் 1-285)



திருவாவடுதுறைக் கச்சியப்ப முனிவர்
அருளிய காஞ்சிப்புராணம்
திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் உரையுடன்


திருச்சிற்றம்பலம்
Source:
காஞ்சிப்புராணம்
திருக்கைலாயபரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்துமஹாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி
சித்தாந்த சரபம்- அஷ்டாவதானம்
பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்கள் மாணவரும்
மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரும்,மெய்கண்டசித்தாந்த ஞானசாத்திரப் பிரசாரக்ருமாகிய
வண்ணக்களஞ்சியம் சி.நாகலிங்க முதலியாரவர்களால்,
பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து
பெரியமெட்டு- வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் குமாரர் ஆதிமூலஞ்செட்டியாரால்
சென்னை: கலாரத்நாகரவச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
சாதரண வரூ- வைகாசி- 1910
----

காஞ்சிப்புராணம் -
    உள்ளடக்கம்
    படலம் செய்யுள்
    1. பாயிரம் 4
    2. திருக்கண்புதைத்தபடலம் 281 (5-285)
    3. கழுவாய்ப்படலம் 423 (286-709)
    4 அந்தருவேதிப்படலம் 80 (710-790)
    5. நகரேற்றுப்படலம் 279
    6. தீர்த்தவிசேடப்படலம் 158
    7. பன்னிருநாமப்படலம் 455
    8. இருபத்தெண்டளிப்படலம் 433
    ஆகமொத்தம் திருவிருத்தங்கள் 2110

திருவாவடுதுறைக் கச்சியப்ப முனிவர்
அருளிச்செய்த காஞ்சிப்புராணம் (இரண்டாங் காண்டம்)

அறிமுகம் /நூல் வரலாறு

(இந்த அறிமுக உரை வண்ணக்களஞ்சியம் சி.நாகலிங்க முதலியாரவர்களால், அவர் 1910ல் பதிப்பித்த காஞ்சிப் புராண முன்னுரையிலிருந்து எடுக்கப்பட்டது)

இக்காஞ்சி மஹா க்ஷேத்திர பிரபாவம் வடமொழியில் ஸ்காந்த புராணம் சனத்குமார சம்ஹிதை காளிகாகண்டத்தில் தீர்த்தமான்மியத்தில் கூறப்பட்டுள்ள ஐம்பத்தைந்து அத்யாயமாகிய பஞ்சாசத் என்கிற நூலினும், சிவபுராணம் பிரமாண்ட புராணம் முதலிய பல புராணங்களினின்றும் திரட்டப்பட்டுள்ள நூறு அத்தியாயமாகிய சதாத்தியாயம் என்கிற நூலினும் விஸ்தரிக்கப்பட்டுள்ள நூறு அத்தியாயமாகிய வித்தியா கண்டத்தில் பேசப்பட்டுள்ள பதினான்கு அத்தியாயமாகிய காமாட்சி விலாசம் என்கிற நூலினும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதனுள் பஞ்சாசத் என்கிற நூல் சிவமூர்த்தங்களுடைய கெளரவ பிரபாவங்களையும், சதாத்தியாயம் என்கிற நூல் தலம் தீர்த்தம் என்கிற இரண்டின் கெளரவ பிரபாவங்களையும், காமாட்சிவிலாசம் என்கிற நூல் மஹாதேவியினுடைய கெளரவப்பிரபாவங்களையும் எடுத்துக் கூறும்.

இம்மூன்றனுள் பஞ்சாசத் என்கிற நூலைத் திருகைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட மஹாபாஷ்ய கர்த்தராகிய சிவஞானயோகிகள் தென்மொழியிலே காஞ்சிப்புராணம் என்னும் பெயரினால் செய்தருளினார். சதாதியாயம் என்கிற நூலை மேற்படி சிவஞானயோகிகள் மாணாக்கருள்ளே சிறந்த கச்சியப்ப முநிவரர் காஞ்சிப் புராணம் இரண்டாங் காண்டம் என்னும் பெயரினால் தமிழிலே செய்தருளினார். காமாட்சிவிலாசம் என்கிறநூல் தமிழிலே செய்யுள் ரூபமாகக் காணப்படவில்லை. இதனை ‚கோளகிமட நிவாச பஞ்சசாட்சர சிவாச்சாரியார் மரபில் வந்தவரும் உபயவேதாந்த பிரவர்த்தகா சாரியரும், சிவாகம ஞானநிஷ்டாபரரும் திருவேகம்பநாதர் பூஜகரும் எனது ஞானாசாரியருமாகிய ‚மத் முத்துகச்சபேச்வர சிவாசாரிய சுவாமிகள்கட்டளையின்படி காமகோட்டபுராணம் என்னும் பெயரினால் பாடிக்கொண்டு வருகின்றேன்; சீக்கிரமே முகிந்து அச்சு வாகனமேறி வெளிவரக் கூடும்.

இஃதன்றித் தென்மொழியில் கலித்துறைக் காஞ்சிப்புராணம் என ஒன்றும் ,பண்டைய காஞ்சிப்புராணம் என ஒன்றும் காணப்படுகின்றன. இவ்விரண்டும் சொற்சுவை,பொருட்சுவைகளில் தனக்குத்தானே ஒப்பானவை.இதனாசிரியர் பிள்ளையார் பாளையம் ஆளவந்த தேசிகராதீனத்துச் சிதம்பரதேசிகர் என்றும்,வலியூர் பிரதாபமுதலியா ரென்றும்கூறுகின்றனர். இப்புராணம் இரண்டனுள்ளும் கூறப்பட்டுள்ள சரித்திரம் வேறு என்று மயங்கவேண்டாம். முதலிரண்டு காண்டம் அடங்கிய காஞ்சிப்புராணத்துள் கூறப்பட்ட சரித்திரங்களேயாம்.



காப்பு
கலிநிலைத்துறை

பகட சக்கர முதற்பல பவமெனுந் துயரி
னிகட சக்கரங் கடத்திடு நெடும்புணை விண்போழ்
முகட சக்கர வாளத்திற் சூழ்வினை முடிக்கும்
விகட சக்கர தந்திமென் மலரடித் துணையே.
[விகடசக்கர விநாயகர் காஞ்சிபுரத் தல விநாயகர். விகடசக்கர விநாயகரின் இருதிருவடிகள் , மலைபோன்ற இருவினையை ஒழித்து பிறப்பென்னும் துயர்க்கடல் கடத்திடும் தெப்பம் என்பது கருத்து. பகடு—யானை. அசம்- அஜம், ஆடு. கரம்- கழுதை. நிகடம் – சமீபம், அணிமை. நெடும்புணை- பெரியதெப்பம். விண்போழ் முகட- விண்ணைப் பிளக்கின்ற அளவு உயர்ந்த முகட்டினை (உச்சியினை) உடைய. சக்கரவாளகிரி சக்கரத்தைப் போல உலகத்தைச் சூழ்ந்துளது. இது புராணங்களில் பேசப்படும் ஒரு மலை. இதன் உச்சி விண்னையும் பிளக்கும்படியாக உயர்ந்துள்து. விகடசக்கர விநாயகரின் மலரடித் துணைகள் விண்ணையும் பிளக்கும் சக்கரவாள கிரியைப் போல உயர்ந்தும் பூமியின் பரப்புப் போலத் திரண்டும் உயிரைப் பந்தித்துள்ள இருவினையை அழிக்கவல்லது. தந்தி- தந்தம் என்னும் சினையின் பெயர் அதனையுடைய களிறுக்கும் பின் யானைமுகம் உடைய விநாயகப் பெருமானுக்கும் ஆகி வந்தது. ]
------------

கடவுள் வாழ்த்து

திருவேகம்பநாதர்
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

மழலைவண் டிமிருங் கொன்றை மாலிகை துவற்றுந் தேனும்
குழவிவெண் மதியும் நீருந் தருகுளிர்க் குடைந்தான் மானக்
தழல்விழித் தலத்து மங்கைத் தலத்தினு மேந்தி யாடும்
அழகனைத் திருவேகம்பத் தடிகளை வணக்கஞ் செய்வாம்         (1)
[மழலைமொழிபோல இனிமையாக முரலுகின்ற வண்டுக்கூட்டம் மொய்க்கின்ற கொன்றைமாலை துளிர்க்கின்ற தேனும் இளம்பிறையும் ஆகிய குளிர்ந்த பொருள்களைச் சிவபிரான் அணிந்துள்ளான். இந்த குளிர்ந்த பொருள்களால் உண்டாகும் குளிர்ச்சியால் வருந்தியவன், குளிர்ச்சியை நீக்கிக் கொள்ள விரும்புவோனைப் போல நெற்றி விழியினும் அழகிய கைத்தலத்திலும் நெருப்பினை ஏந்தி ஆடும் அழகனை, திருவேகம்பத்தடிகளை வணக்கம் செய்வோம். மழலை- திருத்தமில்லாத சொற்கள். இமிரும்- ரீங்காரம் செய்யும். உடைந்தான்- வருந்தினான். மான- போல. ]

காமாட்சியம்மை
முறுவலித் தருளுந் தோறு மொய்த்தெழு நிலவு பொங்கி
யுறைபடத் துளித்த வில்லே யொழுங்குறக் கிடந்தா லென்னப்
பிறைவடஞ் சுமந்த கொங்கைப் பேரமைத் தோளி மம்மர்க்
கறைதபு காமக் கண்ணி கழலிணை கருத்துள் வைப்பாம்.         (2)
[முறுவலித்தல்- சிறிதே பற்கள் தோன்றப் புன்முறுவல் செய்தல். மொய்த்து- திரண்டு. நிலவு- வெண்மையான ஒளி. உறை பட- மழைத்துளி போல. வில்- ஒளி. பிறைவடம்- சந்திரஹாசம் என்னும் மார்பணி. மம்மர்- மயக்கம், அறியாமை. மம்மர்கறை- அறியாமையையும் மயக்கத்தையும் செய்கின்ற மலம்.ஆணவமலம் அறியாமையச் செய்வது. மாயாமலம் மயக்கத்தை அளிப்பது. தபு- கெடுக்கும்.. அம்மை புன்முறுவல் பூக்கும்போது அவளுடைய பற்களிலிருந்து வெளியாகும் வெண்மை ஒளி மார்பின்மேல் படிந்திருப்பது போல சந்திரஹாசம் கிடந்தது. அமை- மூங்கில். தோளுக்கு உவமை. கழ்லிணை- தானியாகுபெயராய் திருவடிகளை உணர்த்திற்று.
--------
எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

வியன்சனற் குமார சங்கிதை தெரித்த மேன்மையீண் டறைந்தன மிதன்மே
லியம்புபல் வேறு புராணத்து மாண்டாண் டிலகிய காஞ்சி மான்மியத்தை
நயந்தெடுத் தொழுங்கு படத்தொ குத்துரைப் பான்புகுந்து முன்னவில்
பிரமாண்டத் தயன்சனற் குமாரன் றெளிதரத் தெருட்டு மற்புதக் காதைகட் டுரைப்பாம்
[சனற்குமார சங்கிதை- உபபுராணங்கள் பதினெட்டில் ஒன்று. இத்ற்கும் மேல் வேறு பல புராணங்களிலும் ஆங்காங்கு விளங்கும் காஞ்சிமான்மியத்தை தொகுத்து உரைக்கப் புகுகின்றேன்]

கடவுள் வாழ்த்து முற்றிற்று

1. திருக்கண் புதைத்த படலம் (5-287)


எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

நிலத்திடைச் சிறந்த நகரெனப் படுவநீள் புகழ யோத்தி மாமதுரை
மலர்ப்பொழிற் காசி யவந்திகை துவரைமாயை வண்காஞ்சி யென்றுரைப்ப
மலக்குறும் பறுக்கு நகரமே ழுள்ளு மேம்படு காஞ்சிமற் றதன்கட்
பலப்பல தளியு ளேழுநான் கதிகம் பகர்தரு மவற்றுண் மூன்றதிகம்         1
[எனப்படுவ- என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன. ஏழனுள்ளும் காஞ்சி சிறந்ததாகலின் இறுதியில் கூறப்பட்டது. மலக்குறும்பு- ஆணவமலத்தின் சேட்டை. மலக்குறும்பு அறுக்கும் நகரம்- அங்கு வழிபடுவதால் ஆணவமலத்தின் வலிமை நீங்கும் எழுநான்கு இருபத்தெட்டு.]

அன்னவை கச்ச பாலயம் காயா ரோகணங் கம்பமா மவற்றின்
இன்னறீர் பலாசு கூவிளஞ் சூத மெனப்படு மரங்கண்மூன் றுளவான்
முன்னுமத் தருக்கண் மாடுற வாணி திருவுமை மூவரு மென்று
மன்னினர் வழுத்தப் படைத்தளித் தழிப்பார் வடிவமாய்த் திகழுமத்தளிகள்         2
[பலாசு- வெண்முருக்கு. கூவிளம்- வில்வம். சூதம்-மாவாணி- கலைமகள். திரு- இலக்குமி. ]

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

பஞ்சதீர்த் தத்தவள் காஞ்சிப் பதியாள் மணித்தானத் துடையாள்
ஐஞ்சந் தியினில் வாழ்வாள் சேயாற்றங் கரையாள் கீர்த்திமதி
கஞ்ச வதனத் தென்மலையாள் காப்புத்தீர்த் தத்தவ ளென்னும்
துஞ்சுமிள வண்டுளர் கூந்தற் றுற்கைக் கூற்றி னெண்மர்களும்         3
[துர்க்கையின் அமிசமுடைய எட்டுத் தேவதையர் கச்சபேசத்தில் உள்ள இட்டசித்தி தீர்த்தக்கரையின் கிழக்கே எழுந்தருளியிருக்கும் அம்மை துர்க்கை துஞ்சும்வண்டு உளர்- தங்கும் வண்டுகள் கோதுகின்ற. ]

புரைதீர் கருப்பத் தானத்தி போற்றும் அம்பி காபுரத்தி
தரைசூழ் கோடி மாரணைதன் காயோற் காரகா ரணிசீர்
வரையா வென்றி யிலய சித்துப் பீடா புரத்தி மணிசிந்துங்
கரையாள் கூவத்தவள் என்றா காளி கூற்றின் எண்மர்களும்         4
[காளி கூற்றினர் எண்மர்]

சத்தி பீட முருத்திர னார்பீடஞ் சசாங்க மாபீட
முத்தி பீட மாரியைதன் பீடந் தரும முதற்பீடம்
பித்த ரணுகா வுயராதி பீடம் யோக பீடமென
நித்த நினைப்போ ரிடும்பையெலா நீக்கும் பீடமோ ரெட்டும்         5
[நினைப்போர் இடும்பை எல்லாம் தீர்க்கும் பீடம் எட்டு]

உரைக்கு மிரவி மதிகனலி சுவண மமிழ்த முறுபெயரான்
வரப்புட் கரணித் தடமைந்தும் வாசு தேவ னாரணனே
பிரத்து மினனோ டனுருத்தன் சங்க ருடண னெனப்பீதாம்
பரத்தன் பகுப்பி னைவர்தொடும் பஞ்ச தீர்த்த முதற்பலவும்         6
[கனலி- அக்கினி. சுவணம்- ஸ்வர்ணம்,பொன். புட்கரணி என்பதனை இரவி ஐந்தினொடும் கூட்டிக் கொள்க. பீதாம்பரத்தன் பொன்னாடை தரித்தவன். திருமால். ஐவர் தோண்டிய பஞ்ச தீர்த்தம்.]

மதுகை சான்ற கணநாதர் மருவு சாத்த ரெண்மர்களும்
முதுமா தவத்தோர் பலரிமையோர் மொய்பூங் கூந்த லரம்பையர்கள்
பொதுமை யிழந்த பலசமயத் தெய்வம் பூதம் பேய்பலவுங்
கதுவித் துவன்ற விறும்பூது கவினிப் பொலியுந் திருக்காஞ்சி         7
[மதுகை- வலிமை. பொதுமை இழத்தல்- ஒருசமயத்துக்கே உரித்தாதல். கதுவித் துவன்ற இறும்பூது கவினிப் பொலியும்- பற்றிப் பொலிதலால் அதிசயம் விளைத்து மிக்க அழகுடையதாய் விளங்கும்]

இனைய சிறப்பாற் பன்னிரண்டு திருப்பேர் படைத்த இவ்வரைப்பின்
அனைய பொழில்சூழ் இமயவரைப் பிராட்டி நணுகி வழிபட்டு
நினைவார்க் கினிக்கு மேகம்ப நிதியை யிறுகத் தழீஇக்கொண்டு
முனைவன் மேனி குழைத்ததிற மொருவா றிங்கு மொழிகின்றாம்         8
[வரைப்பு- எல்லை. நனை- அரும்பு. தழீஇக்கொண்டு- தழுவிக்கொண்டு. முனைவந் முதல்வன், சிவபெருமான். இது இப்படலத்தின் பெயர்க் காரணத்தை விளக்கிற்று.]

கலிநிலைத்துறை

செறுத்த வன்றிற லரக்கனைத் திருவடிவிரலா
லொறுத்த ஞான்றவன் வாய்திறந் தலறு பேரோதை
மறுத்திடா தின்னுமதிர்ந் தெனவயின் வயினருவி
வெறுத்த பூம்புனன் முழக்கறா வெள்ளிமால் வரையில்         9
[செறுத்த- பகைத்த. ஒறுத்த- தண்டித்த. ஞான்று- பொழுது. பேரோதை- பெரிய ஓதை, பேரோசை. மறுத்திடாது- நீங்காது. வயின்வயிந் எவ்விடத்தும். கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனைத் தண்டித்தபோது, அவன் எழுப்பிய பேரோசையைப் போலக் கயிலைமலையில் அருவிகள் முழங்கின. வெறுத்த பூம்புனல்- நிறைந்த அழகிய நீரருவி]

முடங்கு வாலுளை மடங்க லேற்றணை மிசைமுனியு
மடங்க லார்புரஞ் செற்றவ ரினிதமர்ந் தருளி
யுடங்கு வந்துதா ழும்பர்கோன் றிசைமுகன் பணிலக்
குடங்கை யாளிதங் குறைவினாய்த் திருவருள் வழங்கி         10
[முடங்கு- வளைந்த- உளை- பிடரி மயிர். மடங்கல்- சிங்கம். முனியும்- சினக்கும். அடங்கலார்- பகைவர்கள். உடங்கு- உடன்கூடி. உம்பர்கோன்- தேவேந்திரன். திசைமுகன்- பிரம்மா. பணிலம்- சங்கு. பாஞ்சசன்னியம். பணிலக் குடங்கை ஆளி- குவிந்த கரத்தில் சங்கை ஏந்தியவன்- திருமால். குறை வினாய்- குறையைக் கேட்டு]
எல்லை யில்பெருங் கருணையால் விடையளித் தெழுந்தாங்
கல்லி மென்மலர்த் தொங்கல் சூழுவளகத் தணுகி
வல்வி ரைந்தெதிர் கொண்டடி வணங்குமா லிமயச்
செல்வி தன்னை முன்றழீஇக் கொடுபள்ளி யிற்சேர்ந்தார்         11

[உவளகம்- அந்தப்புரம். வல்விரைந்து- மிகவிரைந்து]

அங்க ணாருயிர்த் தொகைக்கெலா மளப்பரும் போகம்
தங்கு மாட்சியின் றலைநின்று பழையன தணப்பப்
பொங்கொ ளிப்புதுப் பூண்பல வணிந்துபூந் தவிசி
னெங்க ணாயக ருமையொடு மகிழ்ந்துவீற் றிருந்தார்         12
[பழையன தணப்ப, புதுப்பூண் பல அணிந்து- உடுத்திருந்த ஆடை அணிகலன்களை நீக்கிப் புதியவற்றை அணிந்து. தவிசு- கட்டில். ஆருயிர்த் தொகைக்கெலாம் அளப்பரும் இன்பம் விளையும் பொருட்டு இறைவர் அம்மையொடு மகிழ்ந்து தவிசில் வீற்றிருந்தார்.]

அம்மை யப்பரா யகிலமும் படைத்தளித் தருளு
மெம்மை யாளுடைப் பேரரு ளிருதிறத் தவருந்
தம்மு ளின்னணங் களித்துவாழ்ந் துறையுழித் தணந்தோர்
மம்மர் கூரிள வேனில் வந்திறுத் ததுமாதோ         13
[மம்மர் கூர் – மயக்கம் மிகுதற்குக் காரணமான. தணந்தோர்- பிரிந்தோர்.காதலரைப் பிரிந்தவருக்கு இளவேனிற்காலம் வருத்தத்தைத் தரும்.. இறைவனும் இறைவியும் இவ்வாறு மகிழ்ந்து இருக்கும்பொழுது, காதலரைத் தணந்தோர் வருத்தமடைவதற்குக் காரணமான இளவேனில் வந்தெய்தியது.]

மலய மாதவன் றமிழ்ச்சுவை தெரிந்தவான் றென்றல்
கலைவி ளங்கிய வடமொழிச் சுவையையுங் காண்பான்
குலவு தண்மையும் வெம்மையு மணமுங்கொண் டெதிர்ந்தாங்
கிலயம் வார்பொழி லியற்றவந் துலாயது மன்னோ         14
[மலய மாதவன் - அகத்திய முனிவர் அகத்தியரால் பெறப்பட்ட தமிழ்ச்சுவையினைத் தெரிந்த மலயமாருதம்(தென்றல்), சகலகலைகளும் விளங்கும் வடமொழிச் சுவையையும் விரும்பி, வடகயிலையை அடைய, குளிர்ச்சியும் வெப்பமும் மணமுங் கொண்டு . அங்குள்ள பூஞ்சோலை கூத்தொடு (கூத்து- அசைவு) எதிர்கொண்டு உபசரிக்க உலவியது]

துன்று தம்வள முழுவதும் தொலைந்த பூஞ்சோலை
தென்றல் முற்றலும் பண்டையிற் செழித்திடுஞ் செயலா
னன்று மென்புபெண் ணாக்குநற் றமிழ்பயின் மலயத்
தொன்று தென்றலுஞ் சித்திமிக் குடையது போலும்         15
[ முன்பனி பின்பனியால் பூஞ்சோலை பொலிழந்திருந்தது. தென்றல் அங்கு வந்துறவே பூஞ்சோலை முன்பு போலவே தழைத்தது. என்பினைப் பெண்ணாக்கும் ஆற்றல் பெற்ற நற்றமிழ் பயிலும் பொதியமலையில் பிறந்தமையால் தென்றல் அச்சித்தியைப் மிக்குப் பெற்றது போலும் துன்று-நெருங்கிய. ]

புனித மென்றளிர் கஞலிய பூம்பொழிற் பொலிவு
பனியெ னுங்கொடுங் கோலனைப் பலர்புகழ் வேனி
லெனும னுக்குலத் தவனிறுத் திறுத்தபுண் கான்ற
கனலி யொத்தநெய்த் தோர்பரந் திட்டது கடுக்கும்         16
[சோலையின் அழகைப் பனிப்பருவம் எனுங் கொடுங்கோலரசன் அழித்து வனப்பினை இழக்கும்படிக் கொடுமை செய்தான். அக்கொடுங்கோலனைப் புலவர் பலரும் புகழ்ந்து பாடும் சிறப்பினை உடைய வேனிலான் (மன்மதன்) என்னும் மனுக்குல வேந்தன் தன் மலர்க்கணைகள் எய்து எய்து அழித்தான். கணைகள் தைக்கப் பெற்றுக் கொடுங்கோலன் உடலிலிருந்து பெருகிய குருதியைப் போலச் சோலையில் புத்தழகு பரவியது. புனிதம் கஞலிய- தூய்மை செறிந்த. நெய்த்தோர்- குருதி]

தளிர்த்த மென்றளிர்ச் சேயொளி ததைபொழிற் றோற்றம்
வெளிப்ப டாவகை யொளித்துவெவ் விருட்பகை நாளுங்
களித்து வைகிட மிதுவெனக் கதிரவ னங்க
ணொளிப்பி ழம்பெரி யூட்டநின் றொளிர்வதும் புரையும்         17
[தளிர்த்த மென்தளிர்கள் செவ்வொளிபரப்பின. செவ்வொளி பரந்த பூஞ்சோலையின் தோற்றம், இருளாகிய பகைவன் புறத்தே வெளிப்படாது செருக்குடன் மறைந்து வாழ்கின்ற இடம் இப்பூஞ்சோலை என்று கதிரவன் செவ்வெரி ஊட்டியதைப் போல ஒளி செய்தது.. பகைவரிருப்பிடத்தைத் தீக்கிரையாக்கல் வஞ்சித்திணையில் ‘எரிபரந்தெடுத்தல்’ என்றும்’ மழபுலவஞ்சி’ என்றும் பேசப்படும்]

நெருங்கு பன்மலர் நிரம்பிய காட்சிகா முகர்மே
லொருங்கு வெங்கணை சொரியுநா ளிதுவென வுன்னிப்
பருங்க ரும்பினான் றனதுபா சறைக்க ணோவாது
பொருங் கடன்படப் பூங்கணை துறுத்தது போலும்.         18
[மன்மதனின் போர்ப்பாசறை பூஞ்சோலை. அங்கு பலமலர்களும் நிரம்பியிருந்தன. மலர்கள் நிரம்பியிருக்கும் அக்காட்சி, மன்மதன், காமுகர்களின்மேல் மலர்க்கணை சொரியும் காலம் இது என்று தனது பாசறைக்கண் சலியாது மலர்களாகிய கணைகளைத் திரட்டிச் சேமித்து வைத்துக் கொண்டது போல இருந்தது.. கரும்பினான் – கரும்பு வில்லையுடைய மன்மதன். கருங்கரும்பு- பெரிய கரும்பு. ஓவாது- ஒழியாது..]

புரிமு றுக்குடைந் தலைத்தெழும் புதுமதுத் தோய்ந்து
விரிம லர்த்திர டோற்றிய பொலிவுவேட் குரிசி
லுரிய வன்சமரு ஞற்றுவா னொழுகுதன் கணையிற்
றுரிச கற்றநெய் பூசிய தொழின்மையே துணையும்         19
[கட்டுடைந்து, தேனொழுக விரிந்த மலர்த் திரள்களின்களின் பொலிவு, மன்மதன், உரிய கடும் போர் செய்யும் பொருட்டுத் தன் கணைகளில், மாசகற்ற நெய் பூசியதை ஒக்கும். போர்க்கலங்களின் க்றையைப் (துரு) போக்குதற்கு எண்ணெய் பூசுவர். புரி முறுக்கு- அரும்பின் கட்டு.. பொலிவு- அழகு. வேட்குரிசில்- மன்மதனாகிய தலைவன்]

தேந்து ளிப்புன றெளித்துநுண் சுண்ணமேற் சேர்த்தி
யேந்த லர்த்தவி சுள்ளெலா மிட்டுவண் காவு
பூந்தண் வார்கணை மதன்விழாப் பொலிவுறப் போது
மாந்தர் யாவரும் வைகுமா றழகுசெய் தமைக்கும்         20
[காவு- சோலை. சோலை மதன் விழாவுக்கு ஆயத்தம் செய்வதைக் கூறுகின்றது. தேனாகிய நீரினைத் தெளித்து, நுண்ணிய மகரந்தத் தூளை மேல் தூவி, மலர்களாகிய தவிசுகளை உள்ளிடங்களிலெல்லாம் இட்டுப் பூஞ்சோலை வசந்தவிழாவிற்கு வரும் மாந்தர் யாவரும் தங்கி மகிழுமாறு அழகு செய்து அமைக்கும். தேன்+துளி= தேந்துளி. சுண்ணம்- பொடி, மகரந்தம். ஏந்து- உயர்ந்த. மலர்த்தவிசு- மலரால் ஆன இருக்கைகள். வைகுமாறு- தங்குமாறு]

அயிற்கு ழாம்பொரு கண்ணியர் குரலென வகவும்
குயிற்கு ழாங்குடை காஞ்சியின் கோமளத் தாது
வெயிற் குழாமறைத் திருவிசும் பிருள்செய நோக்கி
மயிர்கு ழாமெழுந் தாடுவ மழையென மருண்டு         21
[அயில்-கூர்வேல். கூர்வேல் நிகர்த்த கண்களையுடைய மகளிரின் இனிய குரல் போலக் காஞ்சி மலரைக் குடைந்து அகவும். அக்காஞ்சி மலர்களின் கருநிற மகரந்தத் தாதுகள் கதிரொளியை மறைத்துக் கரிய ஆகாயத்தை மேலும் இருள் செய்யும். அதனைக் கார்மேகமென மருண்டு மயில் கூட்டங்கள் மகிழ்ந்து ஆடும்.. அகவும்- கூவும். காஞ்சியின் தாது கருநிறம் கொண்டது. இரு- பெருமையும் ஆம். விசும்பு- ஆகாயம். ]

கடம்பு சண்பகங் கன்னிகா ரங்கணி கடுக்கை
யடம்பு வில்லமென் போதவிழ் நறுந்துக ளெங்கு
மிடம்பெ றாவெயில் செய்தலிற் பகலென விரவு
நெடும்ப சும்பொழிற் கயத்துறை நேமியின் புறுமால்.         22
[கன்னிகாரம்- கோங்கு. கணி- வேங்கை. கடுக்கை- கொன்றை. இம்மரங்கள் பூப்பன. இம்மரங்களின் பூக்களில் உள்ள மகரந்தத் துகள்கள் எங்கும் பர்வி ஒளி வீசுதலின் எப்பொழுதும் அப்பூஞ்சோலையில் பகல் நிலவுகின்றது. எப்பொழுதும் ஒளியில் இருப்பதற்கு விரும்பும் சக்கரவாகப் பறவை தன் பெடையோடு அங்கிருந்து இன்புறுகின்றது. கயம்- குளம். நேமி- சக்கரம் இங்கு சக்கரவாலப் பறவையைக் குறித்தது.]

வார்பு னைந்தபூண் வனமுலை மாதரை யிசையாற்
போர்பு ரிந்துற வழைப்பன போலவும் பொழில்கள்
சீர்பு னைந்தமை தெரிப்பன போலவுங் குயில்க
ளார்பு மென்றளிர் கொழுதிநின் றாலுவ வெங்கும்         23
[இளமகளிரை இசைப்போட்டிக்கு அழைப்பன போலவும் சோலை தளிர், அரும்பு, பூ, காய், கனி, தேன், தாது முதலியவற்றைத் தாங்கி அழகுறப் பொலிவதை உலகுக்குத் தெரிவிப்பன போலவும் குயில்கள் மென் தளிர்களைக் கோதி ஆர்ந்து கூவுவன. ஆர்பு- செய்பு என்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சம்-, நுகர்ந்து. கொழுதி- கோதி. ஆலுவ- கூவுவ.]

செக்க ரம்புயந் ததைதடஞ் செழுங்கனற் குண்ட
மொக்கு மன்னதன் கரைப்பஃ றாதுகு புளினந்
தக்க நூன்முறை யாற்றினாற் றயங்குநுண் பொடிக
டொக்க பன்னிறச் சருப்பதோ பத்திரந் துணையும்.         24
[செக்கர் அம்புயம்- செந்தாமரை. அம்புயம்- அம்புஜம்- நீரில் பிறந்தது; நிரில்பிறந்த தாமரையைக் குறித்தது. தடம்- குளம். செழுங்கனல்- செவ்வெரி, நெருப்பு. குண்டம்- யாக குண்டம். செந்தாமரைக் குளம் யாக குண்டத்தைப் போலவும், அங்கு மலர்ந்திருந்த செந்தாமரை மலர்களின் சிவந்து விரிந்த இதழ்கள் நெருப்பை ஒப்பதாகவும் இருந்தன. தாமரைத்தடத்தின் கரையில் மணல் மீது உதிர்ந்து கிடக்கும் பலநிற மகரந்தத் துகள்கள், வேள்விக் குண்டத்தின் முன்பு பலநிறப் பொடிகளால் இடப்பட்ட இழைக்கோலங்களை ஒக்கும். புளினம்- மணல்மேடு. சருப்பதோ பத்திரம்- பாம்புக்கோலம்\]

சிலதர் தேனழித் தமைத்துமேற் றெங்கினம் உகுத்த
குலவு தீங்கனி மூடியங் கிருத்துபொற் குடந்தா
னலர வூழ்த்து திரணிமலர் மென்றளி ரேந்தி
யிலகு வேனில்வே ளருச்சனைக் கும்பமொத் திலங்கும்         25
[சிலதர்- ஏவலாட்கள். ஏவலர் தேனழித்து, உதிர்த்த தேங்காய்களின்மேல் பூக்கள் மென்தளிர்கள் மூடி வேனில் வேளாகிய மன்மதனை வழிபட வைத்த அருச்சனைக் கும்பத்தை ஒக்கும் அருச்சனைக் கும்பம்- பூசைக்கு நீர் நிறைத்து வைத்த கும்பகலசம்]

விழுந்த மாதுளங் கனிவனச் சிறார்விளை யாட்டா
னொழுங்க ஆயிடை யுறுத்தின மாவிலை செருகிச்
செழும்பொ னீர்க்கல சங்கள்சுற் றமைத்தெனத் திகழும்
தழைந்த கொம்பரின் உகுவன சமிதையிற் றதையும்         26
[உதிர்ந்த மாதுளங்கனிகளில் வனச்சிறுவர்கள் சோலையில் விளையாட்டாக ஒழுங்குபட வைத்தனர்.த்தனர். அவை வேள்விச் சாலையினை சுற்றிலும் மாவிலை செறுகிய பொன்னால் ஆன கலசங்களை அமைத்ததை ஒக்கும். மரங்களில் தழைத்த கொம்புகளிலிருந்து உகுவன வேள்விகுண்டத்தில் உகுக்கும் சமிதைகளை ஒக்கும்.]

முருங்கை புன்குகான் றுக்கபூ முகைகள்வெண் பொரியி
னெருங்கு நீனிறப் பூவையாதிக ணெகிழ்ந் துகுவ
மருங்கு தொக்கன வெண்முத லொன்பது வகையு
மொருங்கு மல்கிய தோற்றமொத் ததிசயம் விளைக்கும்.         27
[முருங்கை, புன்கு முதலிய மரங்கள் உதிர்த்த வெண்ணிறப் பூக்களோடு, காயா முதலிய மரங்கள் உதிர்த்த பலநிறப் பூக்கள் திரண்டிருப்பது, எள் முதலாகிய ஒன்பது வகை தானியங்கள் வெண்பொரியுடன் திரண்டு இருக்கும் அதிசயக் காட்சியை அளிக்கும். வெண்பொரி யுடன் நவதானியங்கள் ஓமத்தில் அவிசாக இடப்படும். தாமரைத் தடம் வேள்விக் குண்டமாக உருவகித்ததற் கேற்ப மலர்கள் வெண்பொரியாகவும் நவதானியங்களாகவும் கூறப்பட்டன. நவ தானியங்களாவன: எள், உழுந்து, கடலை, கொள்ளு, சாமை, தினை, அவரை, நெல், பயறு]

இடங்கொள் பூந்தட மெடுத்தெறி யூன்கழி கூர்மத்
தடங்க ளோடும்வெண் பணிலமுந் தளிர்த்தகார்ப் பொதும்ப
ருடங்கு வாக்குசெந் தேனிறைந் துறுவன நறுநெய்க்
குடங்க ளோடெரி கூர்க்குநெய் யகலெனக் குலவும்         28
[இடமகன்ற பூந்தடத்தின் அலைகள் எடுத்துக் கரைமீது எறிந்த ஊன் நீங்கிய ஆமை ஓடுகளும் வெண்சங்கும் சோலையிலுள்ள மலர்கள் வார்த்தசெந்தேன் நிறைந்துள்ளன. அக்காட்சி நெய்க்குடங்களோடு விளக்கம் மிக்க நெய்யகலோடு நிகர்க்கும். ஊன்கழி கூர்மம்- தசைகள் கழிந்த ஆமையோடு. பணிலம்- சங்கு. கூர்க்கும்- மிகுக்கும்.ஆமையோடும் சங்கும் முறையே நெய்க்குடமும் அகல்விளக்கும் போலத் தோன்றும்.]

கிளியும் பூவையுங் குயில்களு மஞ்ஞையுங் கிளையு
மளியு மாறுகூ யாலுவ முறையுளி வழாமை
யொளிர் செழுங்கன லோம்புமத் தலைமறை மனுக்கள்
களிகொள் சிந்தையிற் சந்தையி னோதுநர் கடுக்கும்         29
[கிளிகள், நாகணவாய்ப் பறவை, குயில்கள் மயில்கள் முதலிய பறவைகள் இசைநரம்புகளும் விரும்பும்படு மாறி மாறிக் கூவுவன. அக்காட்சி, விதிவழி வழாமல் முறைப்படி வேள்வியில் செந்தழல் ஓம்பும் வேதியர்கள் வேத மந்திரங்களை உரிய சந்தப்படுஓதுதலை நிகர்க்கும். சந்தை- சந்தஸ். வேத மந்திரங்களை ஆசான் கூற மாணக்கர் அதனை இருமுறை மும்முறை ஓசை பிறழாது ஓதுதல். ]

வண்டு பாய்ந்துபாய்ந் துழக்குதோ றாவியின் மலர்ந்த
முண்ட கத்தினின் றெழுந்துகள் முழங்குவெங் கனலிக்
குண்ட நின்றெழும்பு லிங்கமே யுறழ்தருங் கொழுந்தே
னுண்டு வானெழுஞ் சுருப்பினம் புகையினை யுறழும்        
30
[ஆவி- குளம். வண்டுகள் பாய்ந்து பாய்ந்து உழக்குந்தோறும் குளத்தில் மலர்ந்துல்ல தாமரைமலர்களிலிருந்து எழும் மகரந்தத் துகள்கள் முழங்கி எரிகின்ற வேள்வித்தீயினின்றும் எழும்புகின்ற நெருப்புப் பொறிகளை நிகர்க்கும். மலர்களில் மொய்க்கும் வண்டுக் கூட்டம் மேலெழுவது வேள்வித்தீயினின்றெழும் புகையினை ஒக்கும். முண்டகம்- தாமரை. புலிங்கம்- நெருப்புப் பொறி. சுருப்பு- சுரும்பு, வண்டுகள்.]
ஏம மல்கிய வின்னபல் வளம்பயில் காட்சித்
தூம லர்ச்சினை செறிமரப் பசும்பொழிற் றோற்றம்
பூம ருங்கணை மாரனூற் பொருளறி வுறுப்போர்
காம தீக்கைசெய் கவின்பொலி சாலையுங் கடுக்கும்.         31
[ஏமம்- மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்குக் காரணமாகிய பல்வகைக் காட்சிகளும் நிறைந்த பூமரங்கள் செறிந்த இப்பசும்பொழிலின் தோற்றம் மலரம்புகள் தொடுக்கும் மன்மதன் கூறிய நூலாகிய காமாகமத்தின் பொருளை உபதேசிப்போர் அதற்குரிய தீக்கையைச் செய்யும் கண்கவர் சாலையை நிகர்க்கும்]

முருக்கு போர்புரி காலம்வந் தடுத்தமை முன்னித்
தருக்கு வேல்கணை மாசறக் கழுவிய தகைபோன்
மருக்கொ டாமரைத் தேம்பொழி நறுமல ரனைத்துந்
திருக்கு லாவின பனிபடக் கருகிய திறம்போய்         32
[முன்பனி, பின்பனிக் காலத்தில் பனியினால் தாமரை அரும்புகள் கருகின.அக்கருகின தன்மை நீங்கி, இளவேனிலில் அவை மணமுடன் மலர்ந்து அழகாக விளங்கின. அது, கொலை நிகழும் போர்புரி காலம் வந்துற்றதை நினைந்து வெற்றிச் செருக்குக்குக் காரணமான வெல், கணைகளைத் துரிசு நீக்கிப் பொலிவுப்பெறச் செய்ததை நிகர்க்கும்.]

கொழுது வண்டுலா மங்கையர் கருங்குழல் புரையப்
பழுதில் பூந்துகள் மலர்தளிர் பரித்துநுண் ணறல்கண்
முழுதும் வார்ந்துகட் புலப்பட மூரிநீர் குறுகுந்
தொழுதி யோதிமம் பயினதித் துறைதுறை தோறும்         33
[வண்டுகள் கோதி உலாவுகின்ற மங்கையரின் கரிய கூந்தல் ஒப்ப, மலர்கள் தளிர்கள் தாங்கி கருமணல் எவ்விடமும் பரந்து கண்ணுக்குப் புலப்பட, நீர்ப் பரப்பில், அன்னக்கூட்டங்கள் , துறைதொறும் பயின்றன.}

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

சிறுவளிக் கொடுஞ்சித் திண்டேர் செலுத்திவந் திறுத்த வைங்கோல்
பெறுசிலைக் குரிசி றன்னைக் காணிய பெட்டாற் போல
வுறுநல நுகர்ச்சி கொண்மா ரொண்ணகர் மாக்களெல்லா
முறுகிய காதல் பொங்க முன்னுவார் பனிப்பூஞ் சோலை         34
[ஐங்கோல்- பஞ்சபாணம். ஐந்து பூங்கணை. அவையாவன: ‘மாம்பூஅசோகப்பூ, தாமரைப்பூ முல்லைப்பூ தேம்பாய் தரு குவளைச்செம்பூ. ஐங்கோல்பெறுங் குரிசில்- மன்மதன். சிறுவளி- தென்றல். தென்றல் மன்மதன் ஊர்ந்துவரும் திண்தேர். கொடிஞ்சி- தாமரை மொட்டின் வடிவில் தேரின் முன் வைப்பதோர் உறுப்பு. தென்றலைத் தேர் என்றமையால் சிறுவளிக் கொடிஞ்சித் திண்தேர் என்று தென்றலுக்கு இல்லாதது ஒன்றையும் உடன் கூறினார். பெட்டல்- விரும்புதல். முறுகிய- முதிர்ந்த. முன்னுவார்- அடைவார்.
தென்றல் தேர் ஏறி வந்து தங்கிய மன்மதவேளைக் காண வீரும்பினாற்போல மிக்க இன்பத்தைக் கொள்ளும் பொருட்டு நகர மக்களெலாம் மிக்க விருப்பத்தோடு அக்குளிர் பூஞ்சோலையை அடைவார்கள்.]

தெள்ளமு தயின்றார் மானச் சிந்தையிற் களிப்புத் துள்ள
வள்ளெயிற் றணங்க னாரு மைந்தரு நுகர்ச்சி மேலா
னுள்ளக நெருங்கிச் சென்ற கிளர்ச்சியா னும்பர் நாடும்
வெள்ளுறச் சிறந்த வென்ப வியனகர் இருக்கை யெல்லாம்         35
[அமுதை உண்டவர்களை நிகர ச்ந்தையில் மகிழ்ச்சி துள்ள, மகளிரும் மைந்தரும் காமநுகர்ச்சியின் பொருட்டு நகரின் உள்ளகத்தில் நெருக்கமாகச் செல்லும் எழுச்சியால் தேவலோகமும் நாணத்தால் வெள்கும்படிச் சிறந்தது அப்பரந்த நகரின் இருக்கைகள் எல்லாம். மான- போல, உவம உருபு. வள்ளெயிறு- கூரிய பற்கள். முறுவலைக் குறித்தது. அணங்கனார்- தேவலோகத்தவர் போன்ற மகளிர்.நுகர்ச்சி- காமநுகர்ச்சி. கிளர்ச்சி- புணர்ச்சி விருப்பம். வியன் நகர்- இடமகன்ற நகரம். இருக்கை- மனைகள் ]

முழங்குறு மதுப்பெய் தண்டும் முருகுலா மெண்ணெய்த் தண்டும்
தழங்குமா னிழுதுத் தண்டுந் தண்பனி நறுநீர்ச் செப்புங்
குழங்கன்மா லிகைப்பூஞ் செப்புங் கூட்டமைக் கலவைச் செப்பும்
வழங்கிய வாசச் சுண்ண மான்மதச் சாந்துச் செப்பும்         36
[முழங்குறும் மதுப்பெய் தண்டு- மது புளிப்பின் கடுமையால் ஒலிக்கும். புளித்த மதுப் பெய்த மூங்கிற்குழாய். முருகு- வாசனை. முருலாம் எண்ணெய்த் தண்டு- வாசனைதைலம் நிறைத்த மூங்கிற் குழாய். தழங்கும் ஆன் இழுதுத் தண்டு- பசுநெய்நிறைத்த குழாய். தண்பனி நறுநீர்ச் செப்பு- குளிர்ந்த நறுமணமுள்ள நீர் நிறைத்த குடம். குழங்கலாகிய மாலை நிறைத்த செப்பு. நறுமணக் கலவைக்கூட்டு அமைத்த செப்பு. நறுமணச் சுண்ணம் நிறைத்த செப்பு. கத்தூரிகலந்த சந்தனச் செப்பு]

கடகமுங் குழையுந் தோடுங் கதிர்மணி வடமும் பூணும்
வடகமுந் துகிலு மற்றும் வகைவகை யமைத்து மூடும்
படலிகைக் குலமும் வேட்குக் கையுறை பரிப்ப தேய்ப்பச்
சுடரிழைத் தோழி மார்க ளேந்துவ தொகையி லாத         37
[கடகம்-கங்கணம். குழை- ஆண்களின் காதணி. குழை- மகளிர் காதணி. கதிர்மணி வடம்- இரத்தினங்கள் ஒலிக்கும் சங்கிலிகள். வடகம்- ஒருவகை மேலாடை (upper garment) துகில்- ஆடைகள். வகை வகை- பலவகை . மூடும் படலிகை – பூ இடும் பெட்டி... மன்மதவேளுக்குக் கையுறை ஏந்திச் செல்வதுபோல எண்ணற்றா இப்பல்வகைப் பொருள்களையும் தோழிமார்கள் தாங்கிவர.]
மாடமே லிருந்து தாங்கள் வார்மணிச் சிவிறி வீசும்
பாடமை பனிநீர் தோய்ந்த குங்குமச் சேறு பாய்ந்த
வாடக வீதி மன்ற வழுக்குமென் றஞ்சி னார்போற்
றேடரு மணியிற் செய்த சிவிகையி னிவர்ந்தார் சில்லோர்         38
[ சிவிறி- நீர் துருத்தி, நீர் தெளிப்பான். பாடமைப் பனிநீர்- பாடு-பெருமை. பெருமை பொருந்திய அரதனப்பொடிகளும், பசியபொற்சுண்ணமும், ஆராய்தற்கரிய வாசனையும் கலந்த நீர்.மாடங்கலிலிருந்துகொண்டு தாங்கள் அழகிய நீர்த்தெளிப்பான்களினால் வீசிய நறுமணப் பனிநீருடன் குங்குமச் சேறு பரந்துள்ள, தங்கத்தகடுகள் பதித்துள்ள வீதிகள் வழுக்கும் என்று அரிய மணிகள் பதித்துச் செய்த சிவிகையின் மீது சிலர் ஊர்ந்தனர்]

மறப்பெருந் திறத்தாற் சுற்றம் புறந்தரு மாண்பா லேணா
லிறப்பவுந் தோற்றுத் தம்மை யெடுத்தன சுமத்தல் போலப்
பறப்பளி யிமிருந் தானப் பருமிதக் களிநல் யானை
சிறப்புறு களிப்புத் துள்ள விவர்ந்தனர் மைந்தர் சில்லோர்         39
[பெருவீரம், சுற்றந்தழால், வலிமை ஆகிய பெருங்குணங்கள் களிறுகளுக்கும் உண்டு; இப்பெருங்குணங்கள் மிக்கிருக்கும் மந்தர்களுக்குத் தோற்றுப் போன களிறுகள் வென்றவர்களைச் சுமத்தல் போலச் சிலர் மிக்க களிப்புத் துள்ள களிறுகளின் மீது ஊர்ந்து பூஞ்சோலைக்கு வந்தனர். மைந்தருக்கும் உண்டு. போட்டியில் தோற்றவர் வென்றவரைச் சுமத்தல் சிறார் விளையாட்டுப் போட்டிகளில்இன்றும் காணக் கூடிய நிகழ்ச்சியாகும். பறப்பு அளி இமிரும் தானப் பருமிதக் களிறு: பறப்பு- பறக்கின்ற. அளி-வண்டுகள். தானம்-மதநீர். பருமிதம்- யானைக்குச் செய்யும் அலங்காரம்]

நடைத்திறங் கற்பத் தத்தம் நனந்தலைக் கானம் நீங்கிக்
கடைத்தலை பன்னாட் காப்பக் கருணைகூர்ந் தூர்ந்து மேன்மை
படைத்ததன் நடையைச் சாலப் பயிற்றுவார் மானக் கோலப்
பிடித்திர ளிவர்ந்தார் காமர் பெண்கனி மடவார் சில்லோர்         40
பெண்கள் சிலர் பிடியின் மேல் வந்தனர். நடையழகு கற்றுக்கொள்வதற்காகச் சிலபிடிகள் இடமகன்ற காடுகளை விட்டு நீங்கித் தங்கள் வாயிலில் பலநாட்கள் காத்திருக்கவே, கருணை கூர்ந்து, அவற்றின் மேலூர்ந்து, தங்கள் நடையை அவைகளுக்குப் பயிற்றுவதைப் போல அழகிய , பெண்மை முதிர்ந்த பெண்கள் பிடி ஊர்ந்து வந்தனர். மைந்தர் களிறு ஊர்வதும் மகளிர் பிடி ஊர்வதும் பண்டை வழக்கம்.]

வாரினால் விசித்த மாதர் வனமுலை தாக்க விள்ளும்
தாரினால் வனப்பாற் காமன் றனைப்புறங் காணத் தென்றற்
றேரினா னவனென் றெண்ணித் தாங்களுந் தேரூர் வார்போல்
ஏரினாற் பொலிந்த வைய மிவர்ந்தனர் புகன்று சில்லோர்         41
[அழகிய மாதரின் கச்சினால் இறுக்கப்பட்ட வனமுலை தாக்க அலரும் மலர்மலைகளின் வனப்பால் மன்மதனைக் காமப் போரினில் தோற்கடித்து புறமுதிகிடச் செய்ய தாமும் தென்றல் தேரினர்(மன்மதர்) போல அழகிற்பொலிந்த தேரினை விரும்பி ஊர்ந்தனர் சில்லோர். வார்-முலைக்கச்சு. விசித்த்- இறுகக் கட்டிய வனமுலை- அழகிய முலை. விள்ளும்- அலரும். தார்-மாலை. புறங்காணல்- தோற்கடித்தல். தென்றற் றேரினான் – தென்றலைத் தேராகவுடையவன், மன்மதன். ஏர்-அழகு. வையம்-தேர். இவர்ந்தனர்- விரும்பி ஏறிச் சென்றனர்]

எத்திறத் தரசன் நின்றா னத்திறத் தினிது வைகும்
பைத்த நீர்ஞால மென்னும் பழமொழி புதுக்கு வார்போல்
மொய்த்தெழு தென்றற் றேரான் முனைகெழு படையா யுள்ள
தத்தைமென் கிளவி யாரு மிவர்ந்தனர் தடந்தேர் சில்லோர்         42
[அரசன் எவ்வழி அவ்வழி உறைவது உலகு’ என்னும் பழமொழியைப் புதுக்குவார்போல மூண்டெழுகின்ற தென்றல் தேரானாகிய மன்மதனின் படையான கிளிபோல இன்மைபடப் பேசும் ஈளமகளிரும் சிலர் வலிய தேர் ஊர்ந்தனர். பைத்த நீர் ஞாலம்- பசிய கடலால் சூழப்பட்ட உலகு. தமிழில் பசுமை நீலம் கருமை ஒருதன்மையவாகக் கருதப்படும். பசுங்கடல், நீலக்கடல்ம் கருங்கடல் போன்ற வழக்குகள் காண்க. மொய்த்தல்- நெருங்குதல்,, சூழ்தல். இளமகளிர் காமனின் படை. தத்தை- கிளி. ]

விரியொளி நினது பொற்றேர் மென்னடைக் காலேயெங்க
ளுரியகொய் யுளைகள் சண்ட வுலவையென் றழகாற் றம்மோ
டரியபோ ரேற்குங் காமற் கறிவித்தச் சுறுத்து வார்போற்
பரியின மிவர்ந்தார் வீங்கும் பாழித்தோண் மைந்தர் சில்லோர்         43
[ மைந்தர்கள் சிலர் குதிரைகள் மீது கடுவேகத்தில் ஊர்ந்தனர். அக்காட்சி, மன்மதனை நோக்கி,’உன்னுடைய ஒளிவீசும் பொற்றேர் மந்தமாருதமாகிய தென்றலே; எங்கள் கொய்யுளைப் புரவிகள் சண்டமாருதம் என்று அறிவித்து மேனி அழகால் தம்மோடு போர் ஏற்கும் காமனுக்கு அறிவுறுத்து அச்சுறுத்துவார் போல வலிய தோள்களையுடைய மைந்தர்கள் பரிகள் ஊர்ந்தனர். மன்மதனனுக்குத் தென்றல் தேர் என்றது வெறும் ஊர்தி எனும் பொருட்டே. தென்றல்- மந்தமாருதம், மென்னடைக்கால். குதிரைகள் சண்டமாருதம். உலவை- காற்று.ஓரிடத்தில் நில்லாது எப்பொழுதும் உலவுவதால் வந்த காரணப்பெயர். கொய்யுளி- காத்தரிக்கப்பட்ட பிடரிமயிர். மைந்தர்கள் மன்மதனினும் அழகினர். அதனால் மன்மதன் போருக்கு வந்தனன். பாழி- வலிமை; பெருமையுமாகும்.]

ஒழுகிய வுதர பந்தி மடிப்பினா லுடைந்து வெள்கிச்
செழுவிய கடலில் வீழ்ந்த திரையினை யஞ்ச லென்னாக்
கழிசிறப் பளித்தா லென்னக் கலன்பல வணிந்து பாய்மா
விழுமிய வமுதங் காலும் விழியின ரிவர்ந்தார் சில்லோர்         44
[ஒழுகிய உதரபந்தி- நீண்ட வயிற்றினில் தோன்றும் முக்கீற்று. இது பெண்களின் வயிறுக்கு அழகெனக் கூறப்படும். மகளிரின் வயிற்றின் மடிப்புக்களின் அழகுக்குத் தோற்று வெள்கி அலைகள் கடலில் வீழ்ந்தன. அஞ்சல் என்று கூறி அவ்வலைகளுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தாற்போல, அமுதம் காலும் க்ண்ணினராகிய மகளிர் சிலர் குதிரைகள் ஊர்ந்தனர். குதிரைகளின் பாய்ச்சலுக்கு அலைகளை உவமையாகக் கூறுதலுண்டு. மா- குதிரை. ‘இருநோக்கு இவளுண்கண் உண்டு. ஒன்று நோய்நோக்கு. மற்றையது அந்நோய்க்கு மருந்து’ காமநோய்க்கு அமுதமாகிய நோக்கினை அமுதம் காலும் விழி என்றார்.]

மாக்கதி ரெறிக்கும் வெய்யோன் வாளொளி கரந்து மாய
மேக்கொளி கொளுந்துங் காமர் வெண்மணி மாலை வேய்ந்து
தூக்கிய கவிகை பிச்சந் தூமணி யூர்தி யாதி
நீக்கறத் துவன்றி யெங்கு நிழற்ற மேற்பிடித்துக் கொண்டார்         45
[வெய்யோன் - சூரியன். கரந்து மாய- மழுங்கி மறைய. மேக்கு-மேல். கவிகை- குடை. பிச்சம்- மயிற்பீலிக் குடை. தூமணி ஊர்தி- முத்தணிகள் தாங்கிய வாகனங்கள். மிக்க வெப்பத்துடன் எறிக்கும் சூரியனின் ஒளி கரந்து மாய, ஒளி வீசும் அழகிய வெண்மணிகள் வேய்ந்து தூக்கிய குடைகள் , தூய முத்தணி தாங்கிய பல்லக்குகள் முதலியன நெருங்கிச் செறிந்து நிழல் செய்தன.]

இழையொளி யிரதப் பந்தி யிலங்கொளி கவிகைக் காடு
பொழியொளி தகர்த்த செம்பொற் பொடியொளி மாதர் மூரல்
முழுதொளி மைந்தர் வெள்வேன் முதிரொளி யிமைக்கு மாற்றாற்
றழையொளி யிரவி மாய்ந்துஞ் சார்ந்தில திருளின் வீக்கம்         46
[அணிகலன்கள் வீசும் ஒளி, தேர்களில் விளங்கும் ஒளி, முத்துக் குடைகளின் கூட்டம் பொழியும் ஒளி, உதிர்ந்த செம்பொற்பொடியொளி, மகளிர் மகிழ்ச்சியால் பூத முறுவலின் ஒளி, மைந்தர்கள் கையில் ஏந்தியுள்ள வெள் வேல்களின் மிக்க ஒளி ஆகியவை ஒளிர்தலினால், ஒளிபரப்பும் சூரியன் மறைந்தும் இருளின் ஆதிக்கம் சாரவில்லை.}
அரிபரந் தகன்ற வாட்க ணந்நலா ரிரட்ட வார்ந்து
முரிதிரை யென்னத் துள்ளு முழுநிறக் கவரிக் கற்றை
யெரிமணிக் கோவை சுற்றி னிணக்குசாந் தாற்றி வெப்பம்
பரிமணி யால வட்டம் பதாகை மலிந்த பாங்கர்         47
[செவ்வரி பரந்து விசாலமான ஒளியுடைய கண்களை உடைய அழகிய பெண்கள் இரட்டக் கடலலையென்னத் துள்ளும் கவரிக்கற்றைகள், சுற்ரிலும் ஒளிவீசும் மணிகள் பதிக்கப்பட்ட சாந்தாற்றிகள், வெப்பத்தை ஓட்டுகின்ற ஆலவட்டங்கள், பதாகைகள் ஆகியன ஒருபால் மலிந்திருந்தன. இவை வெப்பத்தைத் தணிக்கும் கருவிகள்]
தழங்குபே ரோதை விம்மத் ததைந்த மாசனத்தி னீட்டம்
அழுங்கிய கடலே யென்ன வமரரு மயிர்த்து நோக்க
முழங்கின சங்க நாதம் முரன்றன சின்னங் காளம்
வழங்கின கலிப்புப் பேரி வங்கிய மாதி யெல்லாம்         48
[ஆரவாரிக்கும் பேரொலிகள் நெருங்கிய மக்களின் பெருங்கூட்டம் ஒலிக்கும் கடலே எனத் தேவரும் ஐயுற்று நோக்க, சங்கநாதம் முழங்கின; சின்னங்கள் முரன்றன; காளம், பேரிகை முதலிஅனவெல்லாம் ஒலித்தன. தழங்குதல்- ஒலித்தல். பேரோதை- பேரோசை. ததைந்த- நெருங்கிய. சனம்- மக்கள் ஈட்டம்- கூட்டம். அழுங்கிய- ஒலித்த. அயிர்த்து- ஐயுற்று. சின்னம்- A kind of trumpet. பேரி- பேரிகை. வங்கியம்- குழல். கலிப்பு- ஒலி]


இடைதெரி யாது தம்மைச் சுமந்துமிக் கெய்ப்ப நோக்கிப்
புடைநகர்ப் புறம்போ யந்த வெய்ப்பினைப் போக்கு வார்போற்
கொடிபயின் மாடப் பந்திக் கோணையுண் ணகர நின்று
நெடுமதில் வாய்த னீங்கி யென்னரு நெருங்கிப் போந்தார் .         49
[அகநகர் மக்கள் கூட்டம் இடமில்லாமல் சுமந்து மிகவும் சலிப்படைந்ததை நோக்கி, புடைநகர்ப் புறம் போய் அந்தச் சலிப்பினைப் போக்குவார்போல, மக்கள் கொடிகள் கட்டப்பட்ட மாடவரிசைகள் உள்ள அந்த அகநகர் வாயிலினை விட்டுப் பலரும் நெருங்கிப் போயினர். இடை- இடைவெளி. எய்ப்பு- சலிப்பு, கலைப்பு. கோள் நை உள் நகரம்- கொள்ள இயலாமல் நையும் (வருந்தும்) அகநகர். என்னர்- எல்லோரும், பலரும்.]

கரியின முலம்பு மோதை கவனவாம் புரவி யோதை
தெரிமணித் தேரி னோதை சிலம்புகிண் கிணியி னோதை
புரிகுழற் சுரும்ப ரோதை பொலஞ்சுட ரிழையி னோதை
யுரைமொழி யோதை தோற்றா தொழித்தன விசும்பு காறும்         50
[யானைக்கூட்டம் முழங்கும் ஓசை, காற்றுப்போல விரைந்து தாவிச் செல்லும் குதிரைகளின் கனைப்பொலி, தேர்கள் விரைந்தோடும் ஒச்சை, சிலம்பு, கிண்கிணிகளின் ஓசை, மகலிரின் சுருண்ட கூந்தலிலே மொய்க்கும் சும்பர்களின் முரலும் ஓசை, அணிகலன்கள் உராய்ந்துஎழுமோசை, பேச்சொலி முதலியன பலவும் கலந்து இன்னவொலி எனத் தெரியாவண்ணம் விசும்பள்வு சென்று ஒலித்தன. உலம்பும்- முழங்கும் . கவனம்- காற்று. வாம்- வாவும், தாவிச் செல்லும். புரவி- குதிரை. ஓதை- ஓசை. விசும்புகாறும்- விசும்பளவும்.]

மதனுறை பாச றைக்கு வழிக்கொண் மாத்திரையே பூங்கோல்
புதைபட வருந்தி யாங்குப் பொருகரி பரிக ளூருஞ்
சிதரரி விழியி னல்லா ரவைகள்செண் டாட நொந்து
நுதல்வியர்பொடிப்பக் கூந்தல் சோரமெய் நுடங்கா நின்றார்         51
[மன்மதன் தங்கியிருக்கின்ற பாசறை(பூஞ்சோலை) நோக்கிச் செல்லும்போதே மலர்க்கணைகளால் தைப்புண்டு வருந்தியதைப் போன்று, யானைகள் குதிரைகள் ஊர்ந்துவரும் செவ்வரி படர்ந்த விழியினராகிய அழகிய இளமங்கையர் கூட்டங்கள் மலர்ப்பந்தடித்து விளையாடக் களைப்புற்று நெற்றி வியர்வை பொடிப்பக் கூந்ஹல் சோர்ந்து விழ உடலசைவுற்று நின்றனர். மதனுறை பாசறை- காமன் போருக்குச் செல்லுமுன் தங்கியுள்ள கூடாரம்; பசிய அறை பாசறை;. பச்சையான இலைதழைகள் வேய்ந்த குடிசை எனலாம். மாத்திரையே – அளவிலேயெ. பூங்கோல்- மலரம்பு. புதைபட- தைக்கப்பட. சிதரரி விழி- செவ்வரி படர்ந்த கண்; செவ்வரி படர்ந்த கண் மகிழ்ச்சிக்கு அடையாளம். அவைகள் – கூட்டம். செண்டு- மலர்களால் ஆன பந்து. ]

மதகரி கொடிது வாங்கி வாம்பரி யேற்று கென்பார்
கதழ்நடை மாவும் வேண்டா காலிடை யேற்று கென்பார்
பிதிரொளித் தேரு நஞ்சே பெருநிலத் திறக்கு கென்பார்
குதலைமென் சொல்லார் துன்பே பழகுறா வினைமேற் கோடல்         52
[மதகளிறு கொடியது, ஆதலால் எம்மை தாவிச் செல்லும் குதிரைமீது ஏற்றுமின் என்பார்; பின், வேகமாகக் கடிது செல்லும் குதிரையும் வேண்டா தேர் மீது எம்மை ஏற்றும் என்பார், இந்தச் சாலைக்குத் தேர் ஆகாது ஆதலால் சத்தமிடும் தேரும் வேண்டா, என்பார். குதலைமொழி பேசும் பெண்கள் மீது காதல் கொண்டு பழகுதல் பெருந்துன்பமே. மதகரி- மதயானை. வாம்பரி- தாவிச் செல்லும் குதிரை. கதழ்நடை- கடுநடை.. கால்- சக்கரம், இங்கு சக்கரங்களால் செல்லும் தேருக்கு ஆயிற்று. தேர் ஓடும்போது, கரடுமுரடான சாலையில் எழுப்பும் ஒலி வெறுப்பைத் தருதலின் ‘பிதிரொளித் தேரு நஞ்சே’ என்றனர். பிதிர்- தெரித்தல். சக்கரம் தெருவில் உராய்ந்து பலவித ஒலிகளை எழுப்புதலினால் பிதிரொளி என்றார். சபல புத்தியுடைய பெண்கள்மீது காதல்கொண்ட ஆடவர்படும் துன்பத்தைக் கூறினார்]

மயிலனாய் மானை யஞ்சேல் வருகின்றேன் பாங்க ரென்பார்
குயிலனாய் முந்தே லொன்றாய்க் கூடினம் போது மென்பார்
தயனலாய் பொதும்ப ரீதே சார்ந்தன மென்பா ரங்கை
அயிலினா ரின்ன வாறே யறைந்தனர் கலந்து சென்றனர்         53
[மைந்தர்கள் தம் காதலியரை நோக்கி,’மயில் போன்றவளே! யானை, குதிரை முதலிய விலங்குகளைக் கண்டு அஞ்சேல். யான் அருகில் வருகின்றேன்’ என்பார். ‘குயில் அன்னவளே! நாமிருவரும் கூடிச் செல்வோம், முந்த வேண்டா’ என்பார்; ‘தையல் நலாய்! இதோ சோலையை அடைந்து விட்டோம்’ என்று கூறிக் காதலியருடன் கலந்து சென்றனர்.]

பொதும்பரைக் குறுகி யூர்தி பொள்ளென இழிந்து வேகக்
கதம்படு வேழ மாதி கஞற்றுழி கஞற்றி யாத்துக்
குதம்பைநான் றெருத்தி னீவக் கொண்கரோ டன்பிற் பின்னிப்
பதம்பனிப் பெய்த வுள்ளாற் படர்ந்தனர் பாவை யன்னார்         54
[பூஞ்சோலையை அடைந்து, ஊர்தியிலிஉந்து விரைவாக இழிந்து , சினமிகு களிறு முதலிய ஊர்திகளை அவையவை கட்டும் இடங்களில் கட்டி வைத்து, காதில் தொங்கும் குதம்பை பிடரியில் தழுவ, பாவையனைய மகளிர் தம் கணவரோடு , அன்பிற் கலந்து, பாதம் நடுங்க, சோலையினுள் மெதுவாகச் சென்றனர். கதம்- சினம், வேகம். இது வேழத்தின் இயல்பு. குதம்பை- பெண்களின் காதணி. கொண்கர்- கணவர். பதம் – பாதம். மெல்லியர் ஆதலின், அவர்களின் பாதம் தரையில் பட்டுக் கூசி நடுங்கியது.]

தூமணி விளக்க மல்கித் தூங்கிருள் புகாம லோப்பிக்
காமரு பொதும்பர் கற்பக் காவினை வென்ற வங்கண்
மேவர வின்பந் துய்ப்ப மேவிய மாந்த ரெல்லாம்
பூமரு கற்ப நாட்டுப் புலவரை வென்றா ரம்மா.         55
[தூய மணிகள் நிறைந்து செறிந்த இருள் புகாமல் ஓட்டியதால், பூஞ்சோலை கற்பகக் காவினை வென்றன; அங்கு இன்பந் துய்க்க மேவிய மாந்தரெல்லாம் மெய்யுறு புணர்ச்சியால் தேவர்களை வென்றனர். தூங்கிருள்- செறிந்த இருள். காமரு பொதும்பர்- விருப்பத்தை வருவிக்கின்ற சோலை. கற்பக நாடு- தேவலோகம். புலவர்- தேவர்கள்]

விருந்தெதிர் கொண்டா லென்ன மென்மொழி குயிலாற் சொல்லி
வருந்திய நடையின் வெப்ப மாய்ந்திட நீழ னல்கி
யிருந்துணர் சுண்ணப் போதுந் தேறலு மேந்திற் றென்ப
பொருந்திய புக்குள் ளார்க்குப் புதுமணப் பொதும்ப ரீட்டம்         56
[பொதும்பர் விருந்துபசரித்தலைக் கூறுகின்றது. வந்தோரைக் குயிலால் மென்மொழி கூறி வரவேற்று, நடந்து வந்த வருத்தத்தையும் வெப்பத்தையும் நிழல் அளித்து மாற்றி நறுமணப் பொடியினையும் தேனையும் மலர்க்கொத்துக்களில் ஏந்தி, புதுமணப் பொதும்பர் அகத்து வந்தவரை விருந்தெதிர் கொண்டது,]

சிங்கமுங் கோட்டு வேழத் திரள்களு மைந்தர் காட்ட
வெங்களிப் பிடியு மானு மயிலுமின் னனையார் காட்ட
மங்குறோய் மாட மேடை மலையொடு புளினங் காட்டப்
பொங்கரு மில்லே யென்னப் புகுந்தனர் மகிழ்ச்சி பூத்தார்         57
[மைந்தர்கள் சிங்கம், களிறுக் கூட்டம் ஆகியவற்றை நினைவூட்டினர்; மகிழ்ச்சியுடைய பிடியையும் மான்மயிலையும் மின் அனைய மகளிர் நினைவூட்டினர். மேகம் தோயும் மாடங்களும் மேடைகளும் மலையொடு மணல் மேடுகளைக் காட்டின. மகிழ்ச்சி பூத்த தம்பதியர் தம் இல்லமே அது எனச் சோலையினுள் புகுந்தனர். கோட்டு வேழம்- தந்தியாகிய மருப்புடைய களிறு. மங்குல்- மேகம். புளினம்- மணற்குன்று. ]


கிளிகுயில் பூவை மஞ்ஞை யாதிய கிளர்ந்து தத்தம்
அளியுறு பெடையி னூடல் அகற்றியும் புணர்ந்துங் கொம்பிற்
களியுறக் கண்டு மைந்தர் காமமீக் கொள்ள வல்லே
இளிமொழி மனைவி யாரை யிறுகுறத் தழுவிக்கொண்டார்         58

[கிளி, குயில், பூவை, மயில் போன்ற பறவைக் குலங்கள் கிளர்ச்சியுடன் தத்தம் அன்புக்குரிய பெடைகளின் ஊடல் அகற்றியும், புணர்ந்தும் களிப்படைவதைக் கண்டு மைந்தர்கள் காமம் மேற்கொள்ள விரைந்து இனிய மொழி பேசும் மனைவியரை இறுகத் தழுவிக் கொண்டனர். அளி- அன்பு. இளி- வீணை நரம்பின் ஒருவகை சுரம்.]

அளியெறிந் திருந்து தேற லருந்தவாய் கிழிந்த செங்கேழ்ச்
சுளைபயில் கனியும் வாழைச் சுவைப்பழத் திரளு மாவின்
விளைமதுப் பழமு மற்றும் விழியுற நோக்கா முன்னந்
திளைமண முயிர்த்து நாவிற் றீம்புன லூற நின்றார்         59
[அளி- வண்டுகள். வண்டுகள் மொய்த்துச் சாறு அருந்த வாய்திறந்த சிவந்த நிறமுடைய பலாக்கனியும் சுவையான வாழைக்கனித் திரளும் சாறு விளையும் மாங்கனியும் கண்ணால் காணாமுன்னம் அவற்றின் நறுமணத்தை நுகர்ந்து நாவில் நீரூற மக்கள் நின்றனர். சுளை பயில்கனி- பலாக்கனி. ]

அஞர்த்திறம் அனத்தை யேய்க்கு நடையவ ரமரத் தீஞ்சொல்
உஞற்றிய கிளியின் ஓதை யொண்சிறைக் குயிலி னோதை
மிஞிற்றின முரலு மோதை யேனவும் விம்மி யெங்கும்
கஞற்றிய பண்ணை யீட்டங் கேட்டொறுங் களிய ரானார்         60
[அஞர்- துன்பம். அனத்தை- அன்னத்தை; குறுக்கல்விகாரம். நடையில் அன்னப்பறவைகளை ஒக்கும் மகளிர் விரும்பும்படி இனிமையாய்ப் பேசிய கிளியின் ஓசை, ஒளிமிக்க சிறகுகளையுடைய குயிலின் ஓசை, வண்டுகள் முரலும் ஓசை, இவைபோன்ற பிற ஓசைகள்நெருங்கிய் மகளிர் விளையாட் டிடங்களி லெல்லாம் ஒலிக்க அதனைக் கேட்ட மைந்தர் தம்மை மறந்த மகிழ்ச்சியரானார். அத்துன்பம் காதலியரைப் பிரிந்ததால் நேர்ந்தது. அப்பிரிவுத் துன்பம் பண்ணைதோறும் எழும் இவ்வொலிகளால் நீங்கியது, அவை காதலியரின் பேச்சின்பத்தைத் தருதலினால். அமர- விரும்பும்படி. உஞற்றிய- செய்த, இங்கு பேசிய எனும் பொருளில் வந்தது. மிஞிறு+இனம்= மிஞிற்றினம், வண்டுக் கூட்டம். வண்டுகள் மொய்க்கும்போது எழுப்பும் ஓசைக்கு முரலுதல் என்பது மரபுச் சொல். விம்மி- ஒலித்து. கஞற்றிய – நெருங்கிய]

புள்ளகம் பிணிக்குஞ் சோலைப் பொலிவும் அப்பொழிலின் உள்ளாற்
கள்ளகம் பிணிக்குங் கஞ்சக் கயங்களுங் கதிரின் தேரை
நள்ளகம் பிணிக்குங் கோட்டு நாகமும் புளினச் சீரும்
உள்ளகம் பிணித்துக் கொள்ள நோக்கினர் உலாவி யெங்கும்         61
[பறவைகளைத் தன்னகத்தே விரும்பி இருக்கச் செய்யும் சோலியின் பொலிவும், தேன்மதுவத் தன்னகத்தே செறித்து வைக்கும் தாமரைத் தடாகங்களும், சூரியனின் தேர் தன்னைத் தண்டிச் செல்லாமல் பிணிக்கும் சிகரங்களையுடைய மலையும் மணற்குன்றுகளின் அழகும் தம் உள்ளத்தைக் கவர எங்கும் உலாவி அவ்வழைய காட்சியை நோக்கினர். கஞ்சம்- தாமரை. கயம்- தடாகம். கதிர்- சூரியன். நள் அகம்- நடு. கோடு- சிகரம். நாகம்- மலை. ]

பொங்கருள் ளகத்துச் சால பொங்கிய வளனை யெல்லாந்
தங்களுட் பகுந்து தத்தந் தனியடை யாள மிட்டாங்
கெங்கணு மெழினி வாங்கி யெழில்பெற விதானித் தும்பர்ச்
சிங்கவல் லேற்றுக் கட்டில் கம்பலந் திகழ விட்டார்         62
[பூஞ்சோலையின் அகத்து மிகவும் நிறைந்த செல்வங்அளையெல்லாம் தங்களுள் பகுத்துத் தனைத்தனியே அடையாளம் இட்டு வைப்பதைப் போல எவ்விடத்திலும் திரைச்சீலையால் வளைத்து, அழகுபெற மேற்கட்டி கட்டி, கம்பளம் விரித்து அதன்மேல் சிங்கக் கட்டில் திகழ வைத்தார். எழினி- திரைச்சீலை. விதானம்- மேற்கட்டி. ]

மாடக முறுக்கும் யாழின் மதுரமெல் லிசையுங் காமர்
நாடகத் திறனுங் கேட்டு நோக்கியு நயந்தார் மைந்தர்
ஆடக மசும்பு கொங்கை யந்நலார் குழாங்கு ழாமாய்த்
தோடகந் துறுத்த செந்தேன் சொரிமலர் கொய்வான் புக்கார்         63
[மாடக யாழின் முறுக்கிய நரம்பினெழும் தேனொழுகும் மெல்லிசையைக் கேடும் விருப்பத்தை வருவிக்கின்ற நாட்டியத்திறனை நோக்கியும் மகிழ்ந்தனர், மைந்தர். பொன் நிறத்த கொங்கைகளை உடைய அழகிய மகளிர் திரள் திரளாக தேன் நிறைந்த இதழ்களுடைய மலர்களைக் கோயும் பொருட்டு வனத்தினுள் சென்றனர். மாடகம்- யாழ் வகைகளில் ஒன்று. காமம்- விருப்பம். காமர்- விருப்பத்தைத் தருகின்ற. நயந்தார்- விரும்பினார். ஆடகம்- பொன். அசும்பு- ஒழுகும், இங்கு பொன் நிறத்த தேமலைக் குறித்தது. இது பெண்களுக்கு அழகைத் தருவது. தோடு அகம் துறுத்த செந்தேன். தோடு- மலரிதழ். இதழ்களிலே செறித்துவத்த செந்தேன். கொய்வான்- கொய்யும் பொருட்டு]

நித்தில வடந்தாழ் கொங்கை நிரைமணி மகுட மேந்தி
முத்தவிர் கருப்பு வில்லி முடிமிசைக் கவிப்ப வன்னான்
எத்தலை யுள்ளா னென்று நேடுவா ரென்ன வெங்குந்
தத்தமக் கொத்த வாறே திரிந்தனர் தையல் நல்லார்         64
[முத்து மாலைகள் தாழ்ந்த கொங்கையாகிய மணிமகுடமேந்தி கரும்பு வில்லியாகிய மன்மதன் முடிமேற் கவிப்ப, அவன் எவ்விடத்துள்ளான் எனஎங்கும் தேடுவார் போல மகளிர் தத்தம் மனம் போனவாகில் அங்குமிங்குமாகத் திரிந்தனர். நித்திலம்- முஹ்து. மன்மதனின் முடிமகுடம் பெண்களின் கொங்கை. நேடுதல்- தேடுதல். தலை- இடம்.]

தங்களைப் புலம்பு நோக்கித் தழலெனச் சரம்பெய் வேளை
யங்கவ னென்னத் தாமு மலர்க்கணை சொரிந்து போரான்
வெங்களி காற்றி வாட்ட முயற்சியின் மேவு வார்போற்
பங்கய வதன நல்லார் பன்மலர் கரத்திற் குற்றார்.         65
[தங்களுடைய தனிமையை நோக்கித் தழல் எனச் சுடும் மலரம்புகளை எய்யும் மன்மதவேளை, அவனைப்போலவே தாமும் மலர்க்கணை சொரிந்து போரிலே செருக்குற்று அவனை வெல்ல முயல்வாரைப் போலப் பலவகை மலர்களைக் கையிற் பறித்தனர். புலம்பு- தனிமை. சரம்- கணை. வேள்- காமவேள். களி- செருக்கு. காற்றி- கக்குவித்து, தம்மேல் எய்ததனைத் தாமும் அவன் மேல் எய்து]

மின்னுறழ் இடையார் கொய்த வெண்மலர் கரத்துச் செம்மை
துன்னலும் நோக்கி வெண்பூத் துவர்மல ராய தென்று
முன்னுறக் காட்டிக் கேள்வர் வாங்கித்தம் முலைமேற் சேர்த்தி
யன்னது பொற்கென் றாய தறிகென நாணுக் கொண்டார்         66
[மின்னல் போன்று நுடங்கும் இடையை உடைய மகளிர் தாம் கொய்த வெண்மலர்கள் அவர்களுடைய செங்கரத்தில் செம்மை நிறம் அடைந்ததைத் தம் கணவருக்குத் தம் வித்தகத்தால் நிறத்தை மாற்றியதாகக் காட்டித் ‘துவர் மலராயது’ என்றனர். காதலர் அதைவாங்கி அவர்களுடைய முலைமேற் சேர்த்தவுடன் அவை முலைகலின் நிறமாகிய பொன்னிறம் அடைந்தது.. அத்துவர் நிறப்பூக்கள் இப்பொழுது பொன்னிறமாயது பாரீர் என்றலும் அம்மகளிர் நாணம் கொண்டனர். அவர்தம் பேதைமை காரணமாகவும் காதல்ர் முலையைத் தீண்டினமையானும் மகளிர் நாணினர் என்க. துவர்- செந்நிறம்.]

இணர்மலர் பறிக்குந் தோறும் இருத்திய பாரந் தீர்ந்து
தணிமலர்க் கொம்பு மேன்மே லெழுதலும் தருவுந் தன்பால்
அணிகுறை கின்ற தென்றீங் கலர்கொடா தகல்வ தென்னாப்
பிணிமலர்க் கோதை நல்லார் பெருவியப் பினராய் நின்றார்         67
[மலர்க்கொத்துக்களைப் பறிக்குந்தோறும் தன்னிடம் இருத்திய பாரந்தீர்ந்து அழகிய மலர்க்கொம்பு மேன்மேல் எழுதலும், மரமுங்கூட தன்னிடத்தில் அழகு குறைகின்றது என்று இப்பொழுது மலரைக் கொடுக்காமல் அகல்கின்றது என்று அழகிய மகளிர் பெருவியப்பினராக நின்றார். மகளிரின் பேதைமையால் அவர்களுக்கு வியப்பு என்னும் மெய்ப்பாடு நிகழ்ந்தது. இணர்- கொத்து. ]

சுந்தர வனங்கன் வாளி தொடவிளை விகார மென்னக்
கந்தமென் கதுப்புச் சோரக் கால்கரம் விதிர்ப்ப வாங்குஞ்
சிந்துர நுதல்வே ராடச் சிற்றிடை யொசிய நின்றார்
உந்தியங் காந்து கோட்டி னுறுமலர் பறிக்கு மாதர்         68
[அழகிய காமன் மலர் வாளி தொடுக்க விளைந்த காம விகாரமென்ன, மணமுள்ள கூந்தல் சோர, கைகால்கள் நடுக்கம் எய்த, சிந்துரதிலகம் அணிந்த நெற்றியில் வியர்வை அரும்ப, சிற்றிடை ஒசிய , உந்தி, மேல்நோக்கி மரக்கிளையில் உள்ள மலர்களைப் பறிக்கும் மாதர் நின்றார். காமன் அம்புகளாகிய மலர்களைத் தொட்ட உடனேயே இவி நிகழ்ந்தன . அங்காந்து- வாய்திறந்து, தலைக்கு மேல் நோக்கி]

பிடிநெடுந் துளைக்கை நீட்டிப் பிடித்திழுத் தெனப்பூங் கையாற்
கடியவிழ் சினைகள் வாங்கிக் காமர்பூக் கொய்யு மாதர்
கொடியென நினைந்து தம்மைக் குமரரோ டாங்கு ஏற்று
மடவியர் கலவி யாற்றத் தணந்தனர் மயிலிற் றோன்றி.         69
[ பிடிகள் தம் நீண்ட துதிக்கையால் நீட்டிப் பிடித்து இழுத்ததெனத் தம் அழகிய கைகளை நீட்டி கிளைகளைப் பற்றி அழகிய பூக்களைக் கொய்யும் மாதரைக் கொடியென ஏற்று கலவியாற்றப் பின் மயிலினைப் போல அவ்விடத்தை விட்டு நீங்கினர்]

மருத்தபூங் கோடெட் டாமை வருந்துவாள் பறியென் றன்பன்
இருத்திய திணிதோள் தன்னை யேந்திய களிப்பால் விந்தப்
பொருப்பென வீங்க வும்ப ருடனெழீஇப் பொதும்பர் தாழத்
திருப்பொலி மார்ப னேயென் றயிர்த்தனள் பரிவுந் தீராள்.         70
[மணமுடைய பூங்கொம்பு எட்டாமைக்கு வருந்துவாள் ஒருத்தி, பறி யென்று சொல்லிக் காதலன் அவளைத் தன் தோள்மேல் இருத்தி ஏந்திய களிப்பினால், அவனுடைய தோள் விந்தியமலையென வீங்கி உயர்ந்தது. தோள் உயரவே பொதும்பர் தாழ்ந்தது. அதனால் அவள் ‘திருப்பொலிமார்பனே’ என்று ஐயுற்றனள். வருத்தமும் தீர்ந்திலள் வருத்தம் தீராமைக்குக் காரணம், தோள்மேல் இருந்த தான் மிக உயர்ந்து, பூங்கொம்பு தாழ்ந்து, மலர் பறிக்க இயலாமையினால்.திருப்பொலி மார்பன் - திரிவிக்கிரமன்]

வேறு
அல்லிமலர்க் குழலியரெம் மூரல்நிக ராதென்றே யரும்பு தோற்றாய்
முல்லையென நகையாட அவையும்எம தரும்புறழா முறையால் அன்றோ
பல்லிதழ்வா யொளித்த பரிசறிந் தேமென் றெதிர்நகைத்த பண்புமான
மெல்லரும்பு ஈனலும்வெகுண்டு தெண்டம்விளைப் பாரென்ன விரைவிற் கொய்தார்.         71
[ முல்லை மகளிர் நகைக்க மலர்வது.அல்லிமலரை யணிந்த குழலியராகிய மகளிர், நகை முகத்துடன் மலர் கொய்தனர். அது,’முல்லை! உன்னுடைய அரும்புகள் என் மூரலுக்கு நிகராகாது’ என நகையாட,, அம் முல்லையும் பதிலுக்கு, ‘ உன் மூரல் எமதரும்புக்கு நிகராகாமையினால் அல்லவா பல்லும் இதழும் காவலாக உள்ள வாயினுள் போய் ஒளிந்து கொண்டது’ என எதிர்த்துப் பழித்ததுபோல மெல்லிய அரும்பு ஈன்றது. அது கண்டு தண்டம் விளைப்பார் போன்று அவ்வரும்பினை விரைந்து பறித்தனர். தம்மஃஇ இகழ்ந்து பழித்தவரது பல்லைப் பிடுங்குவது போல என்பது தொனிப் பொருள். முல்லை அரும்புகள் மகளிரது பற்களுக்கு உவமை. அது பல்தெரியச் சிரிக்கும் புன்முறுவலைக் குறித்தது.]

கணவரொடு நெடுங்கானத் துடன்போக்கிற்
      கதிர்ப்பரிதி கனற்றும் வெம்மை
தணியநறு நிழல்கஞற்றித் தளர்வகற்றும்
      பண்டையநன் றோர்ந்தா ரென்ன
மணமலர்கொய் திலம்படுமே ழிலைம்பாலை
      மரத்தோடு நட்புச்செய்து
துணர்விரிபா லையுநண்பு பூண்டென்ன
      மலர்முகிழ்ப்பத் துனைந்து கொய்தார்.         72
[ ஏழிலைம்பாலை மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. தம் கணவருடன் நீண்ட கானகத்திற் உடன்போக்கு நிகழ்த்தியபோது, செஞ்ஞாயிறு கனற்றும் வெம்மை தணிய நறுநிழல் நிறைத்து தளர்ச்சியினை அகற்றிய பழைய நட்பினை நினைவு கூர்ந்தா ரென்னும்படியாக, மணமிக்க மலர்கள் கொய்யப்பட்டதால் வறுமையடைந்த ஏழிலைம்பாலை மரத்துடன் நட்புச் செய்து, அந்தநட்பினால் கொத்து விரிந்தது போல மலர் முகிழ்ப்ப நெருங்கி அதனைக் கொய்தார். இலம்பாடு- வறுமை. இது வேனிற்காலத்து இலை முதலியன உதிர்ந்து வறுமையாக நிற்றலைக் குறிக்கும். துனைந்து- விரைந்து, நெருங்கி. கஞற்றி- நிறைத்து.]

தோடணிந்து நனிபூத்திங் கெமைப்போலுநீ
      யெமக்குச் சுரும்ப ரார்ப்ப
ஏடவிழு நறும்போது நல்காவாழ்
      வென்னேயென் றிகழ்ந்து கூறப்
பாடிரியும் பழிப்பஞ்சி யிகழாதி
     ரெனப்பணிந்தாங் கெட்டா தோங்குங்
கோடமல மீட்டுமலர்ந் தெதிர்குரங்கும்
      பாடலத்திற் கொழும்பூக் குற்றார்         73
[பாடலம்- பாதிரி. இது மகளிர் இகழ மலர்வது. மலர் கொய்யும் மகளிர், பாதிரிப் பூக்கள் கொய்யவியலா உயரத்தில் இருப்பதைக் கண்டு, அம்மரத்தை இகழ்ந்தனர். ‘ பாடகமே! நீ தோடணிந்து நனி பூத்து எங்களை ஒப்ப் இரந்தும் எங்களுக்கு இதழ் விரியும் மணமுள்ள போதினி நல்காதது என்னே’ என இகழ்ந்தனர். தோடு சிலேடையாக, மகளிரின் காதணியையும் மலரிதழையும் குறிக்கும். நனி பூத்து, என்பது சிலேடையாக மலர்கள் நிறையப் பூத்திருத்தலையும் மகளிர்கள் இன்பத்துய்த்தற்குரிய பருவம் எய்தியிருத்தலைம் குறிக்கும். இவ்வாறு இகழ்ந்து கூறப் பெருமை நீங்கும் பழிப்புக்கு அஞ்சி எம்மை இகழாதிர் எனப் பணிந்ததைப் போல எட்டாது ஓங்கும் கிளையில் மீண்டும் செறிந்து மலர்ந்து தம் எதிரில் வளையும் கொம்பிலிருந்து பாதிரிமலர்களைக் கொய்தனர். பாடு- பெருமை. இரியும்- விட்டு நீங்கும். கோடு- கொம்பு,கிளி. அமல- செறிய. மீட்டு- மறுபடியும். குரங்கும்- வளையும்.

செழுமதியைப் புறக்கொடைகண் டெக்கழுத்தம்
      படுமுகத்தார் சில்லோர் தங்கள்
நிழல்படுபெற் றியின்முழுதும் அறப்பறிக்குந்
      தொறுமீட்டு நிரம்பப் பூத்துத்
தழைதருசண் பகநோக்கி யேதுவிஃ தெனக்
            காணார் தழங்கும் வண்டு
விழையகிலாச் சண்பகமு முலவாப் பொற்கிழிகொ
      லெனவியந்து நின்றார்         74
[செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. முழுமதியைப் புறங்கண்டு இறுமாப்புக் கொண்ட அழகிய முகமுடைய மகளிர் சிலர் தங்கள் நிழல்பட்டதனால் முழுதும் அறவே பறிக்குந்தோறும் மீட்டும் மீட்டும் நிரம்பப் பூத்துத் தழைக்கும் காரனத்தை அறியாமல் வண்டு மொய்க்காத சண்பகமரமோ அல்லது உலவாப் பொற்கிழியோ என வியந்து நின்றார். செழுமதி- முழுமதி. புறக்கொடை- தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடுதல். எக்கழுத்தம்- இறுமாப்பு, தலையெடுப்பு.. ஏது- காரணம். உலவாப் பொற்கிழி- எடுக்க எடுக்கக் குறையாத பொன்முடிப்பு. சண்பகமலரில் வண்டு மொய்ப்பதில்லை என்பது இலக்கிய வழக்கு. ]

தம்முடைய வடிவொப்பத் தளிர்த்ததென
வழுக்கற்றுத் தடந்தாட் கொக்கின்
செம்மைநிறத் தளிரனைத்துங் கொய்தொறுந்தம்
விழிப்பார்வை செறியுஞ் சீரால்
அம்மரனும் எதிரிகலி யாங்குமிகத்
தளிரீன அதற்கு நாணிக்
கொம்மைமுலை மடமாதர் தோற்றென்னக்
கொய்தளிர்க்கை யிளைத்து நீத்தார்         75
[மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மாந்தளிரின் நிறம் மாமை எனப்படும். மாமை இளமகளிரின் நிறமுமாகும். மகளிர் மாவிளந்தளிரைத் தம்முடைய நிறமொப்பத் தளிர்த்தது என அழுக்காறுற்று பருத்த அடியை உடைய மாவின் செம்மைநிறத் தளிர் அனைத்தையும் கொய்யுந்தோறும், அவர்களுடைய விழிப்பார்வை செறிதலினால், அந்தமரமும் எதிர்ப்பது போலத் தளிர்களை மிகுதியாக ஈன, அதற்கு நாணி, அம்மகளிர் தாம் தோற்று விட்டதைப் போலக் கொய்தலை நீத்துக் கை சோர்ந்து இளைத்தனர். அழுக்கற்று- பொறாமை கொண்டு. தடநதாள்- பருத்த அடிமரம். கொக்கு- மா. எதிர் இகலி- மாறுபட்டு எதிர் போர் செய்து. கொம்மை- பருமை. கொய் தளிர் கை- தளிர் கொய் கை என மாற்றுக. நீத்தார்- கொய்தலைக் கைவிட்டார்.]
இக்கிளையின் மலர்முன்னம் யான்பறிப்ப
லென்றாங் கொட்டிப்
பக்கசில ரொருகரத்தாற் சினைபற்றி
மலர்பறித்து மான நோக்கித்
தொக்கமலர் சினைவாயிற் கெளவியிரு
கைபறித்துந் தொலையா வண்ண
மிக்கலரு மகிழ்மரத்தை நடுப்பிழைத்த
தெனக்கனன்று விடுத்தார் சில்லோர்         76
[ மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். இந்தக் கிளையில் உள்ள மலர்களை நான்தான் முதலிற் பறிப்பேன் எனப் போட்டியிட்டுக் கொண்டு அருகில் சிலர், ஒர்கையினால் மரக்கொம்பினைப் பற்றி மலர் பறித்துபின், வெற்றி பெற வேண்டும் எனும் மான நோக்கினால் மலர்க்கிளையை வாயினால் பற்றிக் கொண்டு இருகையினாலும் பறித்தும் மலர்கள் குறையாமையைக் கண்டு, மகிழமரம் நடுநிலைமை பிழைத்தது என்று சினந்து பறித்தலைக் கைவிட்டனர் சிலர். ஒட்டி- சபதம் செய்து. மானம்- நிலை தாழாமை. கனன்று- சினந்து.]

பஞ்சழுத்த மிகப்பனிக்கும் பரிபுரச்சீ
றடிமடவார் பல்லோர் செய்ய
கஞ்சமலர் வாய்திறந்து தம்மியல்பிற்
பாடுதலுங் கமழ்தேன் வார்ந்து
விஞ்சமலர் பூத்துகுமா தவியைவேறு
சிலரு வந்து நோக்கித்
தஞ்சரிமென் கரமலரான் முகமதியம்
வியரரும்பச் சார்ந்து கொய்தார்         77
[மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, மெல்லிய பஞ்சு பட்டாலே மிக நடுங்கும் மகளிர் சிலர் தங்கள் தாமரைமலரிதழ் போன்ற வாய் திறந்து தம்மியல்பிற் பாடவே, தேன் வார மாதவி மிகுதியாகப் பூத்துகுத்தது. அதனை வேறு சிலரும் வந்து பார்த்துது தம் கைமலரால் அம்மலரை முகத்தில் வியர் அரும்பக் கொய்தார். பஞ்சழுத்த மிகப் பனிக்கும்- மகளிரின் மென்மையைக் குறித்தது. பரிபுரம்- சிலம்பு. கஞ்சமலர்- தாமரை. தம்மியல்பிற் பாடுதலும்- பிறருக்காகவன்றி தாமாகவே பாடுதலும். விஞ்ச- மிகுதியாக. சரி- வளை. சரி மென்கரம்- வளையல் அணிந்த கரம்.]

ஒளியுமிழ்தம் முருவெழிலை யொண்டளிராக்
கவர்ந்தமைகண் டொறுப்பார் மானக்
கிளைநரம்பி னிசைமொழியார் கமுகிலிடுங்
கேழ்த்தமணி யூச லேறித்
தளிரடியி னுதைந்தாடுந் தொறுந்தவப்பூத்
தசோகுமலர் தரையிற் கொட்ட
வளவின்மகிழ்ச் சியின்வருந்தா தவையனைத்தும்
வேறுசில ரள்ளிக் கொண்டார்         78
[மகளிர் உதைக்க மலர்வது அசோகு. யாழினிசை போல இனிமையாகப் பேசும் மகளிர் சிலர் உயர்ந்த கமுக மரத்தில் கட்டப் பெற்ற ஊசலேறி எதிரே இருந்த அசோக மரத்தை, ‘ ஒளியுடைய எம் நிறத்தைக் கவர்ந்தீர்’ எனக் கோபித்து உதைத்தலைப் போலத் தம் மெல்லடியால் உதைந்து ஆடினர். அவ்வாறு உதைக்குந்தோறும் மிகுதியாகப் பூத்துத் தரையில் கொட்டும் அசோக மலரினை முயற்சியின்றிக் கிடைத்தமையால் மகிழ்ச்சியுடன் வேறிலர் அவற்றை அள்ளிக் கொண்டு சென்றார்.]

அலம்புமணி மேகலையு மரிக்குரற்கிண்
கிணியுமணிச் சிலம்பு மார்ப்பக்
கலம்படுபொற் குயமடவா ராடுதலும்
ஆட்டமைதி கவினக் கண்டு
நலம்படுபொற் பரிசிலெதிர் வீசுவபோ
லிளம்புன்னை நறிய வீயின்
குலம்புதிது பூத்துகுப்ப விம்மிதராய்ச்
சிலரிவர்ந்து குற்று நின்றார்         79
[ புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. ஒலிக்கும் மணிமேகலையும் தவளைபோல ஒலிக்கும் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப, நகைகள் சார்ந்த பொன்னிற முலைகளை உடைய இளமங்கையர் ஆடுதலும் நாட்டியத்தின் சிறப்பாக அமைந்திருத்தலைக் கண்டு பொற்பரிசில்களை எதிர் வீசுவார்போல இளம் புன்னை நறிய மலர்களைப் புதிதாகப் பூத்து உகுப்ப அதிசயத்துடன் விரும்பி சிலர் பறித்துச் சென்றார். அலம்பல்- ஒலித்தல். அரிக்குரல்- தவளை இரட்டல் ஒலி. கலம்- ஆபரணம். குயம்- முலை. அமைதி- இலக்கணம். கவின- அழகுற. விம்மிதம்- அதிசயம். இவர்தல்- விரும்புதல்]

ஓக்குமணி யம்மனைதன் னுயர்பாவைக்
களிப்பதுபோற் சினைமே லேந்து
மாக்குரவை யந்நலாரி வர்ந்துகொளத்
தழுவலுநம் மகவை யின்னோர்
தாக்குவரென் றஞ்சியடி தாழ்வதென
மலர்நெருங்கிச் சாகை தாழப்
பூக்களுட னம்மனையுந் தாழ்ந்தெமக்குத்
தந்ததெனப் புகழ்ந்து கொய்தார்.         80
[ மகளிர் தழுவ மலர்வது குரவம். குரவினது மலர் பாவையைப் போல இருப்பதால் பாவை எனப்படும். விளையாட்டில் மணியால் செய்த அம்மனையை மேலே வீச, அது குராவின் பாவைக்கு அளித்ததைப் போல குராவினது சினை ஏந்தியது.. அந்த அம்மனையை எடுக்கக் குரவ மரத்தின் மேல் இவர விரும்பிய அம்மகளிர் அம்மரத்தைத்தழுவினர். குரவைப் பாவையாகிய நம் மகவை இம்மகளிர் தாக்குவர் என்று அஞ்சி அப்பெண்டிரின் காலில் வீழ்ந்து வணங்குவதுபோல மலர்கள் நெருங்கிய கிளை தாழ, மகளிர் பூக்களுடன் அம்மனைப்பந்தையும் குரவமரம் தந்ததெனப் புகழ்ந்து மலர் கொய்தார். அம்மனை- அம்மனைப் பந்து. ஓக்கும் – மேலே வீசிய. இவர்தல்- ஏறுதல். சாகை-கிளை.]

பண்ணைபொர முரல்ஞிமிறு பாய்ந்துழக்கத்
துயருண்டு பாரின் வீழ்ந்து
வண்ணமலர்த் துகணெருங்குஞ்
சனமிதித்தற் கஞ்சிமா மலரின் மீட்டு
நண்ணவெழு வதுபோன்று மேக்கெழக்கந்
துகந்தழுவி நடுத்தள் ளாட
வொண்ணுதலின் வியர்பொடிப்பக் கரஞ்சேப்ப
வுடல்குழையப் புடைத்தார் சில்லோர்         81
[பண்ணொடு ஒப்ப முரலும் வண்டுகள் பாய்ந்து மலர்களை உழக்க வண்ணமலர்த்துகள்கள் பார்மீது வீழ்திருந்தன. மக்கட்கூட்டத்தால் மிதிபட அஞ்சி அவ்வண்ணத்துகள் மீட்டும் மலரை அடைய எண்ணி மேலே எழுவது போல, மகளிர் பந்துகளைத் தழுவி , இடைதள்ளாட், ஒளியுடைய நெற்றியில் வியர்வை பொடிப்ப, கைகள் சிவப்ப, உடல் குழைய சிலர் புடைத்தார். பண்- இசை. பொர- ஒப்ப. சனம்- மக்கள்,ஜனம். நண்ண- அடைய. மேக்கெழ- மேலே எழ. நடு- இடை. பந்தடிக்கும்போது தோன்றும் மெய்ப்பாடுகளைக் காண்க.]

வெள்ளிமலை யெனக்குவவிக் கிடந்தநெடும்
புளினமிசை வதிந்தும் வாசக்
கள்ளுயிர்க்கு முழைக்குவட்டுக் கண்மணிப்பொற்
சிலம்பெதிர்கூய்க் களித்தும் வட்டத்
தெள்ளொளிய பளிக்கறையிற் கண்ணடியிற்
றிருவழகு தெரிந்து மைந்த
ருள்ளுருக வெவ்வேறு விளையாட்டுத்
திறங்குயிற்றி யுவந்தார் சில்லோர்         82
[வெள்ளிமலை(கயிலாயம்) எனக் குவிந்து கிடந்த மணற்குன்றுகளின் மீது தங்கியும், தேனீ வாழும் மலைமுழைகளில் எதிரொலிக்குமாறு மாறு கூவியும், தெளிந்த பளிக்கறையில் கண்ணாடியில் தம் மிக்க அழகு தோன்ற மைந்தர் காதலால் உள்ளுருக வெவ்வேறு விளையாட்டுக்களைக் காட்டியும் சிலர் மகிழ்ந்தார். குவவி-குவிந்து. வாசக்கள்- மணமிக்க தேன். முழை- குகை. குவடு- சிகரம். ]
கலிவிருத்தம்

சாயலி னிகர்மஞ்ஞை தளரிய பொழிலாடன்
மேயவர் நடைநோக்கி வெள்ளனம் அயர்கூர
நாயக ரொடும்வெள்ள நதிகய முதலெங்கும்
பாயினர் கரியோடும் படர்தரு பிடியென்ன         83
[சாயலில் தமக்கு நிகராகிய மயில்கள் தளரும்படி பொழிலில் ஆடியவர்களின் நடையைப் பார்த்து வெண்ணிற அன்னம் மயலடைய, தம் நாயகரொடு வெள்ளம் பாயும் நதி, குளம் முதலிய துறைகளில் கரியுடன் செல்லும் பிடியென மக்ளிர் பரவினர். ]

பங்கய மலர்மானும் பாவைய ரடியூட்டும்
பொங்கிய செம்பஞ்சி போகற லிடைதோறுந்
தங்குவ வவர்நீலத் தண்குழல் பொருதட்ட
செங்கன லுறழ்நெய்த்தோர் சிவணிய புண்போலும்         84
[மகளிரின் தாமரை மலரை ஒக்கும் அடிக்கு ஊட்டும் செம்பஞ்சிக் குழம்பானது, ஆற்றினிடை வார்ந்த கருமணலிடைதோறும் தங்கின. அது, அம்மகளிருடைய கரிய குழல் போர் செய்து அட்ட சிவந்த நெருப்புப் போன்ற, குருதி பொருந்திய புண்போலும். போகு அறல்- ஆற்றுப் படுகையில் வார்ந்த கருமணல். நெய்த்தோர்- இரத்தம். ]

கிண்கிணி யொலிபூணிற் கிளரொலி குழல்வண்டின்
பண்கனி யொலியெல்லாம் பரவலின் நனியுட்கி
ஒண்கயல் மிசைத்துள்ளுந் தமையுறழ் தருமாதர்
கண்களின் வரவைத்தாங் காணிய வெழுவதென         85
[சலங்கையொலி, அணிகலன்கள் உராய்வதால் எழும் ஒலி, குழல்போல் முரலும் வண்டின் இசை கனியும் ஒலி இவைபோன்றன துறைகள் தொறும் பரவுதலினால் ஒள்ளிய கயல்கள் மிகவும் பயந்து, ஆனால், தமக்கு ஒப்பாவன என்று கூறப்படும் அம்மகளிரின் கண்களைக் காண்பதற்கு எழுவன போலத் துள்ளும்]

மைந்தரு மடவாருந் தங்களுண் மயிர்நீவிக்
கந்தமதி டுமெண்ணெய் கமழ்தர முடிதேய்ப்ப
சுந்தர மலரோன்முன் றொகுபல விதியுள்ளும்
வெந்துய ரனதேய்த்து வீத்திடு திறமான         86
[மைந்தரும் மகளிரும் முன்னர் பிரமன் தலையில் எழுதிய விதிகளுள் வெந்துயர் அளிப்பனவற்றைத் தேய்த்து அழிப்பவர்போல ஒருவருக் கொருவர் நறுமணம் ஊட்டப்பட்ட எண்ணெய் கமழ முடிதேய்ப்பர். சுந்தர மலரோன் பிரமன். வீத்திடு- அழித்திடும் திறம் மான- திறத்தைப் போல.]

ஒண்ணிற மணிசாலக் கழுவுதொ றொளிகான்று
நண்ணுவ தெனமிக்கு நள்ளிருள்குடிகொள்ளக்
கண்ணிகொண் மயிர்நெல்லிக் கமழ்விழு தினிதூட்டி
மண்ணினர் கடிவீசும் வார்புனல் குடைகின்றார்         87
[ஒளியுடைய நீலமணியக் கழுவுதொறும் மேலும்மேலும் ஒளி வீசுவதைப் போல மிக்க இருள் குடிகொள்ளும் வகை கூந்தலுக்கு மனமுடைய நெல்லிவிழுது ஊட்டிக் கழுவி மகளிர் குடைந்து புனலாடினர்,]

வேறு
தனதின மென்றுபின் சார்தரு தோகை
அனமென மீண்டலர் பொங்கரை யண்மக்
கனமுறழ் கூந்தலி னார்கரை நின்றும்
புனலலை யும்படி பாய்ந்தனர் புக்கார்         88
[சாயலினால் தனது இனம் என்று மகளிரைச் சார்ந்த மயில், அவர்களை அன்னம் எனக் கருதி மீண்டும் மலர்ப் பொங்கரை அடைந்தன. மேகம் போன்ற கூந்தலினார் கரையில் நின்று அலைபாயும்படி வாவிகளில் பாய்ந்து புகுந்தனர். சாயலால் மயிலொப்பர். நடையால் அன்னம் ஒப்பர் மகளிர். கனம்- மேகம் . நிறத்தாலும் திரட்சியாலும் கூந்தலுக்கு உவமையாயிற்று.]

மான்மத வேழ மதங்கொடு வீழ்ந்தாற்
போன்மென ஆட வரும்புனல் பாய்ந்தார்
ஊன்மலி வேல்பொரும் ஒண்டொடி யார்கண்
தான்மருள் மீனம்விண் டாயதை யன்றே         89
[ஆடவர் மதங்கொண்ட பெரிய யானை கயத்தில் வீழ்ந்தாற்போலப் புனலில் பாய்ந்தனர். அதனால், ஊன் நிறைந்த கூரிய வேல் போன்ற மகளிரின் கண்களைக் கண்டு மருண்ட மீன்கள் விண்ணிற் தாவின. மகளிரின் கண்கள் தம்மைப்போலவே இர்ந்ததைக் கண்டு மீன்கள் மருண்டன எனவாம்}

மாதர் எனுங்களி மாமயில் ஈட்டம்
தாதவிழ் தந்துறை சார அவற்றின்
போதுறு பொங்கர் புகுந்திறல் மான
ஓதிம மஞ்சின வோடின சோலை         90
[மயில் போன்ற சாயலை உடைய மகளிர் தாதவில் மலர்களையுடைய நீர்த்துறையைச் சார்ந்தனர். மயில்கூட்டம் நீர்த்துறைக்கு வந்ததன என்று அஞ்சியதைப் போல அன்னங்கள் வாவியில் உள்ள மலர்களை நீங்கிச் சோலையுள் ஓடின களி- மகிழ்ச்சி. தாது- மகரந்தம் போது- மலர்கள். மான- ஒப்ப. ஓதிமம்- அன்னம்]
தலைவ ரெனுமத தந்தியை மாதர்
வலவரின் வங்க மெனும்பிடி யூரா
அலர்ததை மாலை யருந்தொடரோங்கிப்
பலமுறை யண்மினர் பற்ற முயன்றார்.         91
[காதலர் எனும் மதகளிறை, செலுத்துநரில்லா படகுபோல் (கட்டுப்பாடின்றிச்) செல்லும் பிடியினை ஊர்ந்து மலர் மாலையாகிய சங்கிலியால் கட்டப் ப்லமுறை நெருங்கிப் பற்ற முயன்றார். தந்தி- களிறு. தந்தத்தையுடையது தந்தி. வலவர்- செலுத்துநர். வங்கம்- படகு. அலர்- மலர். களிறைச் சங்கிலியால் காட்ட முயல்வதைப் போல மலர்மாலையால் தலைவரைக் கட்ட முயன்றனர்]

தொங்கலை வாரி னொழுக்குபு தூய
வெங்களின் மாலை வலைத்திரள் வீசி
மங்கைய ராம்உழை மானை வனத்தின்
அங்களி வேடரி னாடவர் சூழ்ந்தார்.         92
[ஆடவர் செயல் மான் வேட்டையாடுபவர் செயல் போலக் கூறப்பட்டது. தொங்கல்- மாலை விசேடம். தோளின் இருபுறமும் தொங்க விடப்படுதலினால் தொங்கல் எனப்பட்டது. இக்காலத்து ஆண்டாள் மாலை என்றழைக்கப்படுகின்றது. கள்- தேன். வெங்கள்- விருப்பத்தைத் தருகின்ற தேன். வேடர்கள் வேட்டையாடும் இடத்தைச் சுற்றிலும் வார்களைத் தொங்க விட்டு வலைகட்டி விலங்குகளை அதனுட் செலுத்திப் பிடிப்பர். ஆடவர்கள் தொங்கல் மாலைகளை வார்போலத் தொங்கவிட்டு, தேனொழுகு மலர்மாலையகிய வலைக் கூட்டத்தை வீசி, மங்கையர்களாகிய உழைமானைப் பிடிக்க வேடுவர்களைப் போல அங்கு சூழ்ந்தனர்.]

நறைக்குழல் சோர்தர நங்கையர் பந்தின்
முறுக்கிய தாரை முகங்கிழி செய்து
பொறைக்குய மார்பு புதைப்புற மைந்தர்
நிறைக்குந ராயினர் தாரைக ணீரான்         93
[பந்து, தாரை இரண்டும் நீர்த் துருத்திகள். பந்து-மட்டத்துருத்தி. பெண்கள் கைக்கொள்வது. தாரை- நெடுந்துருத்தி. ஆடவர் கைக்கொள்வது. இரண்டும் நீர்விளையாட்டுக்கான கருவிகள். மணமுள்ள குழல்கள் சரிந்து விழ மங்கையர் பந்தினால் ஆடவ்ர் மீது நீர் சொரிய , அவர்கள் எரிந்த நீரைகிழித்துக் கொண்டுபோய் சிறு குன்றை ஒத்த கொங்கைகளையுடைய அவர்கல் மார்பில் புதையும்படி தாரைகளிலிருந்து நீரைச் சொரிந்தனர்.]

சுண்ண மெடுத்தெதிர் தூவினர் சந்த
வண்ண நறுங்களி வாரி யெறிந்தார்
கண்ணெகிழ் பூக்கள் கஞன்றினர் சிந்தி
யுண்ணிக ழோகையி னும்பரை யொத்தார்         94

[வாசனைப் பொடிகளை ஒருவர்மேல் ஒருவர் தூவினர். நறுமணச் சந்தனச் சேற்றி வாரி எறிந்தனர். தேனிக்கள் நெகிழ்க்கின்ற மலர்களை நெருங்கிச் சிந்தினர். உள்ளத்து நிகழ்கின்ற உவகையில் தேவர்களை ஒத்தனர்.]
வீக்கிய தாரைகள் வெய்துற வாங்கி
யோக்கின னோர்மக னோர்மக ளாற்றாள்
வாக்கிய தாரை மழைக்கொசி கின்ற
பூக்கொடி போற்பொரு மித்தளர் வுற்றாள்         95

[ஒருவன் நெடுந்துருத்தி வாங்கி வேகமாகநீரை மழை எனச் சொரிந்தனன். அதற்கு ஒருபெண் மழைக்கு ஒசிகின்ற பூங்கொடி போல மிகத் துன்புற்றுத் தளர்வுற்றாள். வெய்துற- வேகமாக. ஒசிகின்ற- தளர்வுறுகின்ற. பொருமி-துன்புற்று.]

பூச லெதிர்ந்தொரு பூவை துனைந்து
வீசிய குங்கும மேதகு சாந்தம்
காச விர்மார்பு கலந்துற நின்றான்
மாசறு செந்திரு மார்பனை யொத்தான்         96
[பூசல்- போர். பூவை- உவமையாகுபெயராய்ப் பெண்னைக் குறித்தது. துனைந்து- விரைந்து. காசு- மணிமாலைகள்.அவிர்- விளங்கும். மாசறு- குற்றமற்ற. செந்திரு- இலக்குமி. செந்திருமார்பந் திருமால்]

களிப்பினோர் மாதெறி காமரு தொங்கல்
வளைப்புற மார்பின் வனத்திடை நின்றா
னளப்பரு வேலை யராவிடா யாத்துத்
திளைப்புற நட்ட செழுங்கிரி யொத்தான்         97
[களிப்புடன் ஒருமாது எறிந்த மாலை நீரில் நின்றிருந்த ஒருவனின் மார்பை வளைக்க, நீரிடை நின்ற அவன் பாற்கடலிடத்து பாம்பால் கட்டப்பட்ட மந்தரமலை ஒத்தான். வனம்-நீர். வேலை-கடல். அரா- வாசுகிஎனும் பாம்பு.]

ஆற்றல ளாயவிழ் சோர்குழல் போர்த்த
கோற்றொடி மேற்கொழுந் தாரை யுறுத்தான்
மாற்றருங் கூடன் மறைத்திடு மேக
மேற்றழை தாரை விடுங்கன மொத்தான்         98
[அது நிகரற்ற கூடல் மாநகரத்தை(மதுரை) மறைத்து மழைத் தாரையை விடும் மேகத்தை ஒத்து ஒருவன் தாரையெனும் நீண்ட துருத்தியால் ஆற்றாலாகி கூந்தல் சோர நின்ற ஒருத்திமேல் நீரைச் சொரிந்தான். கோல்+ தொடி=கோற்றொடி- திரட்சியான வளை. அன்மொழித்தொகையாக ஒரு பெண்ணைக் குறித்தது. இரண்டு தாரையுள் முன்னது நீண்ட நீர்த்துருத்தியையும் பின்னது மழைத் தாரையையும் குறித்தது. தாரை-கனமழை. கனம்- மேகம். மாற்றரும்- அழிக்க முடியாட எனவுமாம் கூடல் நான்மாடக்கூடலாகிய மதுரை. திருவிளையாடற்புரானம் நான்மாடக் கூடலான படலம் காண்க.]

உறுங்களி மாதர்க ளோக்கிய தாரை
கறங்கிய கைத்தொடி கார்க்குரல் செய்ய
விறங்குய கூந்த லிடைப்பொலி மெய்ம்மின்
றிறங்குல வப்புயல் சிந்துவ வொத்த         99
[மகிழ்ச்சியுற்ற மாதர்கள் நீர்த்துருத்தி எந்ந்திய கைகளில் தொடிகள் உராய்ந்து மேகங்களைப் போல் ஒலிக்க, அவிழ்ந்த கூந்தலினிடையே அவர்களுடல் மின்னலையும் கூந்தல் மழைத் தாரையுயும் ஒத்தன. வளை ஒலி- மேகமுழக்கம்; இடைஇடை உடலின் தோற்றம்- மின்னல்; அவிழ்ந்த கூந்தல்- மழைத் தாரை.]

தரவு கொச்சகக்கலிப்பா
மருப்பதும மலர்நீல மலர்பறித்து மங்கையரும்
விருப்புறுமைந் தருந்தம்முள் வீசிவிளை யாடினார்
கருப்புகொடுஞ் சிலையானுங் காமரிர தியுந்தம்மு
ளுறப்பொலியு மலர்வாளி கொண்டுடற்றுந் திறனிகர்ப்ப         100
[வளைந்த கரும்புவில்லுடைய மன்மதனும் அழகிய இரதிதேவியும் தம்முள் மலரம்பு கொண்டு போர் செய்வது ஒப்ப, மங்கையரும் காதலுற்ற மைந்தரும் மனமுள்ள தாமரை மலர்களையும் குவளைமலர்களையும் பறித்து ஒருவர்மேல் ஒருவர் வீசி விளையாடினர்.]

துருத்தியினீர்க் குடைந்துபுன லொளித்தோடுந் தோகையரை
வருத்தமுறப் பிணித்தார்சை வலமகிணர் தமைக்காட்டும்
பெருத்தமுலை மடமாதர் பிரசமலர்க் கூந்தலினா
லுருத்தபழம் பகைமுடிக்குங் காலமென வுன்னியபோல்         101
[சைவலம் – நீர்ப்பாசி. இது நீர்ப்பரப்பின்மீது பரவிக் கிடத்தலின் நீராடும் மகளிரின் கூந்தலுக்கு உவமையாகக் கூறப்படும். திரட்சியாலும் பரப்பினாலும் மிக்கிருக்கும் சைவலம் அத்தகைய கூந்தலுக்குப் பகை என்பது ஒரு செய்யுள் அலங்காரம். துருத்தியிலிருந்து பீச்சப்படும் நீருக்குத் தோற்று மகளிர் புனலுக் கடியினில் ஒளித்தோடுகின்றனர். அவர்கள் கூந்தல் நீரின் மேற்பரப்பினில் பரந்து கிடக்கின்றது. இதுதான் தம்முடைய பகையை முடித்துக்கொள்ள தக்க சமயம் என்று சைவலம் கருதியதுபோல் அம்மகளிரின் காதலருக்குச் சைவலம் கூந்தல் போலக் காட்டியது. சைவலத்தைக் கையால் இறுகப்பற்றிக் களைவதுபோல் மைந்தர் தம் காதலியரின் கூந்தலைச் சைவலம் என்று கருதி இறுகப் பிணித்தனர். துருத்தி- நீரைப் பீய்ச்சி அடிக்கும் கருவி. உடைந்து- தோற்று. தோகையர்- உவமையாகுபெயராய் மகளிரைக் குறித்தது. தோகை- மயிலின் தோகை போன்ற கூந்தல். - மகிழ்நர்> மகிணர்= காதலர். மகிணர் தமைக் காட்டும்- தமக்குக் காட்டும். இரண்டாம் வேற்றுமை உருபு நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்த உருபு மயக்கம். பிரசம்- தேன். உருத்த பழம் பகை- உருவினால் வந்த பழைமையான பகை.]

போர்க்குடைமங் கையர்முகமே புறந்தோற்றிப் புனலொளிப்ப
வார்க்கழலா ரதுவனச மெனவிடுத்துத் துருவுருவார்
சீர்க்கவுளத் தினிதிருந்துஞ் சிவபெருமான் சேவடிகள்
பார்க்குளிலைப் புரைகிளைத்துப் பருவந்த வரிபோன்றார்         102
[ சிவபெருமானின் திருவடிகள் தன்னுடைய உளத்தில் இனிதாக வீற்றிருந்தும் திருமால் புறத்தே இலைதோறும் உள்ள புரைகள் அனைத்திலும் துருவித் தேடிக் காண முடியாது இளைத்ததுபோல, புனலாடுதலாகிய போரிலே தோற்ற மங்கையர் நீர்ப்பரப்பிலே தம் முகம் மாட்டுமே தோன்ற புனலுள் ஒளித்தனர். மைந்தர், முகத்தைத் தாமரை என விடுத்துப் பிற இடங்களில் துழாவிக் களைத்தனர். உடைதல்- தோற்றல். வனசம்- தாமரை. துருவுதல்- தேடுதல் (combing).இலைப் புரை- இலையில் உள்ள உட்டுளைகள். அவ்வுட்டுளைகள் கண்ணுக்குப் புலப்படாதவை. அத்துளைகளுள்ளும் அரி கிளைத்துத் தேடினான். இதனால் தேடுதலின் தீவிரம் புலப்படும்]

முழுகுமட மாதர்குழன் மூசுமிளஞ் சுருப்பினம்போய்க்
கொழுதிமுழு வதும்பரந்து குடிகொண்ட கமலமல
ரொழுகொளிய வவர்வதன வொண்கமல மொடுபொருவான்
விழுமியகா ழகக்கவயம் வீக்கியது பொருமன்றே.         103
[ ஒளியுடைய மாதரின் வதனத்தொடு ஒப்பான தாமரைமலரைக் கருமையான கைக்கவசம் (glouse, armour) தாக்கியது போன்று, புனலில் முழுகும் இளமாதர்களின் குழலை மொய்த்திருந்த வண்டுக்கூட்டம் போய் தாமரை மலர்களைக் கொழுதி மலர்முழுவதும் பரந்து குடிகொண்டது. காழகம்- கருமை. கவயம்- கவசம். குத்துச்சண்டை வீரர்கள் கையில் அணியும் கவசம் போன்றிருந்தது கருவண்டுகளின் திரட்சி. அது தாமரை மலரில் திரண்டிருந்தது, மலரைக் கவசம் தாக்கித் தங்கியது போலிருந்தது]

அரிவையர்வாண் முகமதியா லாம்பன்மலர் தரநோக்கி
யிரவணைந்த தெனக்கரையி னிவர்ந்தவைமீட் டஃகுதலும்
பொருகளத்துச் சயத்திரதன் பொன்றியநா ளிதுகொலென
விரவியவிம் மிதராகி மீட்டுமிரும் புனல்குடைந்தார்         104
[ஆம்பல் – அல்லி; இரவில் மலர்வது. மகளிரின் முகத்தை நோக்கி இரவு வந்ததென்று ஆம்பல்கள் மலர்ந்தன. கரையில் சேர்க்கப்பட்டவை வாடியதால் புதுமலர் கொய்ய மீட்டும் புனலுள் மூழ்கினார்ர். சயத்திரதனைச் சூரியன் அத்தமிப்பதற்குள் கொல்வேன் என அருச்சுனன் சபதம் செய்தான். அஞ்சிய சயத்திரதன் விஷப்பாம்பு நடுக்கத்துடன் புற்ருள் ஒளிந்திருப்பதைப் போல யார்ம் அறியாவிடத்தில் மறைந்திருந்தான். கிருஷ்ணன் தன்சங்கால் சூரியனை மறைக்கச் ச்சுரியன் மறந்தான் எனச் செருக்குடன் சயத்திரதன் வெளிவந்தான். கிருஷ்ணன் சங்கை மீளக்கொண்டு, அருச்சுனனைச் சயத்திரதனைக் கொல்லும்படிக் கூறினான். மாதர் முகத்தை நோக்கி மலர்ந்ததும் கரையில் உள்ளவை வாடியதும் சயத்திரதன் சூரியன் மறைந்தான் என மறைவிடத்திலிருந்து வெளிவந்ததும் சூரியன் அத்தமிக்கவில்லை என வாடியதும் உவமை. ]

சந்தனங்குங் குமஞ்சுண்ணந் தார்மாலை விழக்குழம்பி
யிந்துவொளி படைத்தபுன லிரவியொளி படைத்தன்றால்
வந்துதனை வருத்தமுறக் வுழக்கலுறு மாந்தரைப்பொன்
சிந்துமணிக் கரையுறுப்பான் சிவந்தெழுந்த திறம்போல         105
[சந்திரனொளி பெற்ற புனல், சந்தனம், குங்குமம், சுண்ணம் மாலைகள் விழக் குழம்பி சூரியனின் செந்நிறவொளி பெற்றது. புனலின் அச்செந்நிறம் தன்னிடமிருந்த சந்தனம் முதலியவற்றைக் கரையை அடைவிப்பதுபோல வந்து புனலில் குடைவாரைச் சினந்து எழுதலைப் போன்று இருந்தது சிவப்பு சினத்தின் நிறம். கரையுறுப்பான் – கரையை அடைவிக்கும் பொருட்டு. பான் – வினையெச்ச விகுதி. பொருட்டுப்பொருளது. ]

வளைகுலமுங் கயற்குலமு மலர்க்குலமும் விளையாட்டி
லிளைக்குமிகு துயர்க்கிரங்கி யேறுவாரெனப் போகம்
விளைக்குமணி முலைக்குவட்டு மெல்லியருங் காளையருந்
தளைக்குமனக் களிப்பினராய்த் தடங்கரையின் மருங்கணைந்தார்         106
[நீர் விளையாட்டினால் சங்குக் கூட்டமும் மீனினமும் மலர்க்கூட்டமும் வாட்டமடையும் துயருக்கு இரங்கிக் கரையேறுவாரென மைந்தரும் மகளிரும் மனமகிழ்ச்சியுடன் நீர்த்துறைக் கரையேறினர். வளை- சங்கு. கயல்- மீனினத்தைக்குறித்தது. போகம் விளைக்கு மணி முலை- காம இன்பத்துக்குச் சிறப்பான உறுப்பு. குவடு- குன்று. தளைக்கும்- பிணிக்கும். களிப்பினிற் தளைக்கும் மனத்தர்.]

தனக்குநிக ரெனரெனக் கிடந்த சைவலத்தைத் தாக்குதற்குச்
சினத்தெழுந்து செல்வதனை வலிந்துதடை செய்பவர்போல்
கனக்குழலோர் கரந்தாங்கிக் கலைகலையோர் கரந்தாங்கிப்
புனக்கிளியன் னவர்சில்லோர் புணர்ந்தவர்போற் றோன்றினார்         107
[நீராடி மீளும் பெண்களின் நிலையை கூறிற்று. த்னக்கு நிகர் எனத் திரண்டு நீண்டு கிடந்த நீர்ப்பாசியைத் தாக்குவதற்குச் சினந்து எழுந்த கூந்தலினை வலிந்து தடை செய்பவர்கள் போல ஒருகரத்தில் கனங்குழலைத் தாங்கியும் கலைந்த ஆடையை மற்றோர் கரத்தில் தாங்கியும் கிளிபோன்ற மகளிர் சிலர் புணர்ச்சி மகிழ்வுற்றவர் போல் தோன்றினர். அவிழ்ந்த கூந்தலைத் தாங்கலும் நெகிழ்ந்த உடையத் தாங்கலும் புணர்ச்சிப்பின் தோன்றும் மெய்ப்பாடுகள். கலைகலை- கலைந்த ஆடை. ]

அலைக்குமணி நீராட்டி னற்றுவிழு மேகலையுங்
கலைக்குலமும் புனல்பரப்பக் காணாது தாமரையி
னிலைக்குலத்தாற் பின்னியுடை யிணக்கிய வல்குலினோடு
மலைக்குறவர் மகளிரென மாதர்சிலர் தோன்றினார்         108
[அலைபாயும் நீராட்டத்தில் அறுந்து விழுந்த மேகலையும் உடையும் புனற்பரப்பில் காணவியலாமையால், தாமரை இலைகளைத் தைத்து ஆக்கப்பட்ட உடையையை உடுத்துத் தழையாடை உடுத்த மலைக்குறப் பெண்களெனச் சிலர் தோன்றினர். மணி நீர்- தூய நிறமுள்ள நீர். கலை- ஆடை. உடை இணக்கிய- உடையாகப் பொருந்திய. ]

களித்துநறுந் திரைகெழுநீர் காதலிற்றம் முடனாடி
யிளைத்துமிக வருந்தியபோ லீர்ம்புனற் பட்டழுந்தி
முளைத்தெழுந்து கொழுந்தோடு மொய்யொளிமே கலையோதை
யொளித்தொழியச் சிலமாத ரொய்யெனமேற் றோன்றினார்         109
[அலைபாயும் நீரில் மகளிருடன் தாமும் திளைத்து நீராடிக் மிக இளைத்து வருந்தினபோல் மேகலை முதலிய அணிகள் ஒளியும் ஒச்சையும் ஒளித்தொழியச் சிலமாதர் விரைந்து கரைமேல் தோன்றினர்.]

கலிவிருத்தம்
வளர்ந்துதுளி சிந்துமயிர் வண்டுகிலி னொற்றி
யூர்ந்தொழுகு மாதகர மூட்டி விரனீவி
யார்ந்தவகி லின்புகையி னாட்டியளி சூழ்தேன்
கூர்ந்தமலர் மாலிகை கொளுத்தினர் களித்தார்         110
[ கூந்தலினில் ஒழுகிச் சிந்தும் நீர்த்துளியினை வளமாகிய துகிலினால் ஒற்றி, தகரச் சாந்து தடவி, விர்ல்களால் சிக்கு நீவி, அகிற்புகையாட்டி, வண்டுகள் மொய்க்கும் மலர்மாலிகை சூட்டிக் களித்தனர் சிலர். தகரம்- மயிற்சாந்து வகை. An aromatic unguent for the hair; ]

நெற்றியி னறுந்திலகம் வைத்துநிழல் காலும்
பொற்றகுழை காதினொடு நான்றுபுய நக்கி
விற்றழைய விட்டுவிலை யின்றுயர் சிறப்பின்
மற்றையணி யும்பல வளம்பட வணிந்தார்         111
[நெற்றியில் மணமுள்ள திலகம் வைத்து ஒளிபரப்பும் பொற்குழை காதிலிருந்து தொங்குத் தோளினைத் தடவ, ஒளிவீசும் விலைமதிப்பரிய சிறப்பான பிறவணிகளும் செல்வமிகுதி தோன்ற அணிந்தார்.]

அனங்கனிவர் மெய்தழுவ வாக்கையில னென்னா
மனங்கனிய மாதர்கள் வனப்பிடை யுயர்ந்தார்
தனங்களிவர் தோளுறு தவம்புரிகி லேனென்
றினைந்திரதி நோவவெழி லாடவர் மிகுத்தார்         112
[மன்மதன், இம்மாதர்களின் உடலைத் தழுவ யாக்கையிலேனே என மன வருந்த, அம்மாதர்கள் அழகிலுயர்ந்தனர். தனங்களினால் இவர்களுடைய தோள்களைத் தழுவும் தவம் புரிந்திலேனே என இரதி நோவ எழில் ஆடவர் மிகுத்திருந்தார்.[

மின்னுபளி தக்குவையின் மீமிசை நிவந்து
மன்னியெரி தீபமென வார்புளின வுச்சி
யன்னநடை யன்னநடை யார்கள்சிலர் நின்று
துன்னுகுழ லாற்றினர்ப ரப்பினர் தொகுத்தார்         113
[பளிதக் குவை- கற்பூரக் குன்று. அது வெண்மணற்குன்றுக்கு உவமை. அதன்மேல் எரி தீபம் என அன்னம் போன்ற நடையுடைய மகளிர் சிலர் நின்று நெருங்கிய தம் கூந்தலை ஈஈரம் புலர்த்தினர், விரித்துக் காய வைத்தனர். தொகுத்துக் கட்டினர். மீமிசை- உச்சியில். நிவந்து- மேலுயர்ந்து. அன்னநடையன்னநடை- அன்னத்தினது நடை அனைய நடை. துன்னு- அடர்த்தி, நெருக்கம்]

மொட்டிள வடச்செழு முலைக்குநிக ராகிப்
பட்டபகை யாற்பிதிர் படுக்குநர் கடுப்ப
நெட்டிலைய தெங்குகளி னின்றுவிழு காயை
வட்டவறை யிற்சிலர் புடைத்தறன் மடுத்தார்         114
[தாமரை மொட்டுப்போன்று இளமையான, சங்கிலி த்ழுவிய செழுமையான முலைக்கு நிகராக இருக்கும் பகை காரணமாகச் சிதறடிப்பவர்போல, தன்னமரத்தினின்றும் விழும் காயை வட்டமான பாறையில் மோதி அறம்(நீதி) செய்தனர் சிலர். அறன் நீதி, நீர் அறன் மடுத்தார்- நீதிசெய்தார். நீர் பருகினார்].

கோங்கொடு நிகர்த்த குவவுத்தன மினாரும்
வீங்குபுய வாடவரும் வெய்யகல விக்கட்
டாங்கணுகர் வாய்க்கனி தனக்குநிகர் தேர்வா
னாங்கநுகர் வாரென நறுங்கனி யயின்றார்.        115
[கோங்கு நிகர்த்த திரண்ட முலையையுடைய மின்னலைப் நிகர்த்த ஒளியுடைய மங்கையரும் வீங்கிய புயத்தையுடைய ஆடவரும் விரும்பும் கலவிக்கண் தாங்கள் நுகர்ந்த வாய்க்கனிக்கு (முத்தத்திற்கு) நிகரோ எனத் தேர்வார் போல நறுங்கனி உண்டார். ]

நெய்யிடை மிதந்தகறி நீண்டுதிசை யெல்லாங்
குய்யணவி நாறிய கொழுங்கருனை பாலாற்
செய்யுமுண வாதிமடை நூலவர் செறிப்ப
வெய்யவர்க ளாகிவிருந் தோடினிது துய்த்தார்         116
[மடை நூலவர்- சமையற்கலை வல்லவர். கு- தாளித்ம். அணவி- கலந்து. நாறிய மணம் வீசிய. கருனி- பொரிக்கறி. வெய்யவர்- விருப்பம் உடையவர். துய்த்தார்- உண்டார். நெய்யில் மிதந்த கறி, திசையெலாம் மணம் வீசும் தாளிதம் உடைய பொரிக்கறி, பாலால் செய்யும் உணவு முதலியன, சமையற்கலை வல்லார் மிகுத்து வைக்க, மிக்க விருப்பினராகி விருந்தினரோடு அவற்றை உண்டார்]

வாசமொடு பாகடைய யின்றுமகிழ் கூர்ந்து
தேசவிரும் யாழ்குழல் செவித்துளை நிரப்பி
வீசுமண மாருதமெய் யேற்றுவிளை யாடி
வேசையரின் வீடரிய வெங்கணுகர் வுற்றார்.         117
[ வாசம்- வாசனைப் பொருள்கள். பாகு- பாக்கு. அடை- வெற்றிலை. அயின்று- மென்று. வெற்றிலை மென்று, யாழ், குழல் இன்னிசைசெவிமடுத்து, தென்றற்காற்றினை உடல்மீது ஏற்று இன்புற்று, வேசையரின் விடுதற்கரிய விருப்பத்தை நுகர்வுற்றார். வெங்கண்- சினம். ஊடலில் விளைவது]
வேறு
சாடியி னறவினைத் தவள வட்டிலிற்
பாடமை விளிம்புவாய் நிரம்பப் பாய்த்தினா
ராடிநோக் குவதென வங்கை யேந்தினா
ரேடவி ழாம்பல்வாய்ப் பருகியின் புற்றார்.         118
[சாடி- பானை. நறவு- கள். தவள் வட்டில்- வெள்ளீ வட்டில் பாடமை விளிம்பு- அழகிய வேலைப்பாடுகள் அமைந்த விளிம்பு. ஆடி- முகம் பார்க்கும் கண்ணாடி. சாடியில் புளித்த மதுவினை வெள்ளி வட்டிலில் விளிம்புவரை நிரம்ப வார்த்து, கண்ணாடியில் முகம் பார்ப்பவர்போல ஏந்தி, ஆம்பல் நாறும் வாயிற் பருகி இன்புற்றார்.]

மகிழ்ந்து முன்வாக்கிய வட்டிற் றேறலை
நுகர்ந்திடு மயக்கினால் வட்டி னோக்கினா
ரகங்கையி னவிர்மதி யதனை நாப்பணே
யகழ்ந்தெனக் களித்தனர் யாரை யென்றனர்         119
[முன் வட்டிலில் வாக்கிய தேறலை நுகரும் மய்க்கத்தினால் வட்டிலை நோக்கினர். தம் அகங்கையின் நடுவில் சந்திரனைக் கண்டதெனத் தம் முகத்தைக் கண்டு யாரை நீ என வினவினர்]

தொட்டவெண் மதியுடற் கூறு தொக்கதென்
றட்டபான் மதுநுரை யதனை வாரியவ்
வட்டில்வாய் நிறைத்துவிண் வாழப் போதியென்
றுட்டவழ் கருணையி னோக்கிப் போக்கினார்         120
[தொடுதல்- அகழ்ந்து எடுத்தல். அகழ்ந்தெடுத்து மதியின் உடற்கூறுகள் ஒன்றாகத் தொக்கன என்று காய்ச்சிய பாலின் ஆடைபோல மதுவின் நுரையை வாரி, அட்டிலில் வைத்து, விண்ணிலே வாழ்ப் போதி என்று கருணையுடன் நோக்கி வீசினர்]

எதிருற விருந்துசூ தாடு மாடவர்
கதிரிழை யொதுங்கலு மல்குல் கண்ணுறீஇ
யதிரிடை யாய்கொடி யகத்தை யுள்ளுறப்
பொதிவதென் னொழியெனப் பூங்கை நீட்டினார்         121

மங்கைய ரெடுத்துமாட் டிருத்தும் வல்லினைச்
செங்கனி யெனக்குயில் கவரச் செல்வர்பி
னங்கது கொடுமென வற்றஞ் சாற்றல்கேட்
டிங்கிதோ வுளதென முலையை யீர்த்தனர்         122
[வல் –சூதாடு கருவி; முலைக்கு உவமை. மங்கையர் பக்கத்தில் வைத்த வல்லினைச் செங்கனியெனக் குயில் கவர்ந்து செல்ல, ஆடவர்கவர்ந்தார் என அவர்மேல் குற்றம் சாற்ற, அவர்கல் ஈங்கிதோ உளது என மகலிரின் முலையைப் பற்றினர்.]

மேகலை யுடைபுவி வீழ வல்குலை
நாகமென் றஞ்சிநன் கரத்திற் றள்ளியும்
போகுத லின்மையிற் பூவை மார்குகன்
வாகன முன்னுற வெளவென் றோடினார்         123
[மேகலையுமுடையும் நழுவி வீழ அல்குலைக் கண்ட மங்கைமார் நாகம் என்று கையினால் தள்ளியும் போகுதல் இல்லாமையால் முருகனின் வாகனமாகிய மயில் வரவும் அது வெளவுக என்று ஓடினார்]

ஆடியி னோக்குமா னனத்தின் வேற்றுமை
நாடியென் முகத்தினை வெளவி நாளமேல்
தோடவிழ் செம்மலர் சுடர வைத்துளார்
ஏடியா ருரையென வொருத்தி வேண்டினாள்         124
[ஒருத்தி, தாமரைமலரோடு முகத்துக்கு வேற்றுமை காணக் கண்ணாடியில் நோக்கி, என்முகத்தினைத் திருடி நாளத்தின் மேல் இதழவிழ்ந்த செந்தாமரை மலர் வைத்தவர் யாரடி உரைமின் என வேண்டினாள்]

நின்முகங் கவர்ந்தவ ரிவரெ னாநிறை
யின்மதுக் கலமெதிர் காட்ட நோக்குபு
தன்னிழன் முகமுந்தன் முகமு மொத்தலின்
யன்னதுந் தாமரை யாமென் றூடினாள்         125
[உன்னுடைய முகத்தைக் கவர்ந்தவர் இவரென மது நிறைந்த கலத்தைக் காட்டினர். அதனில் தன் முகத்தின் சாயலை நோக்கித் தன் முகமொத்தலின், அதுவுந் தாமரையே என ஊடினாள்]

வண்டுளர் கூந்தலோர் மங்கை தோழியென்
றெண்டகு மஞ்ஞைமு னினிய தேறலைக்
கொண்டிஃ துண்கெனக் குறுகி யோடலு
முண்டிடு மிச்சிலென் றொழிதியோ வென்றாள்         126
[வண்டுகள் கோதுகின்ற கூந்தலையுடைய தன்னுடைய தோழி என்று கருதிய மங்கை யொருத்தி, மயிலின் முன் இனிய தேறலைக் கொண்டு சென்று இஃது உண்க எனக் குறுக, மயில் அஞ்சியோடலும், இதனை உண்ட மிச்சில் என்று ஒழித்தாயோ என்றாள்]

ஊடிய மாதகன் றொழிய முன்னுற
வாடிய கொம்பினை யவளென் றங்கையாற்
சேடுறு காதலிற் சென்று புல்லினான்
நாடவர் நகைப்பவோர் நம்பி யென்பவே         127
[ஊடல் கொண்ட மாது ஒருத்தி அகன்று நீங்கவே, தன் முன்னுறும் வாடிய கொம்பொன்றினைத் தன் காதலி என்று காதலன் காதலால் புல்லினான், கண்ட நாடவர் நகை கொள்ள]

தன்னுறு வேற்றுமை தன்னை நோக்குறீஇ
முன்னைய தன்மையின் முயங்கு காதல
னென்னை யாரோவென விகக்கு மேயென
வுன்னின ளுயங்கின ளொருபெண் மாதராள்         128
[களியாட்டத்தினால் தன்னுடைய உருவில் தோன்றிய வேற்றுமையைக் கண்டு, காதலின் தன்னை முயங்கிய காதலன் தன்னை வேறு யாரோ எனக் கருதி நீங்குமோ என வருந்தினாள் ஒரு பெண்மாதராள்.]

முருகவிழ் குழலினார் முயங்கு காதலாற்
பெருமகிழ் மதுவுணும் பெற்றி நோக்கியான்
பருகினே னில்லைகொல் பருகி னேன்கொலென்
றொருமட மயிலனா ளைய மோவிலள்         129
[மணங்கமழும் கூந்தலையுடைய மகளிர் காதலால் பெருமகிழ்வோடு மது உண்ணும் மயக்கத்தினால், ஒருத்தி யான் மது உண்டேனோ பருகவில்லையோ என்று சந்தேகம் ஒழிந்திலள். முயங்கியதால் வந்த அறிவு மயக்கமோ கள்ளுண்ட களிப்போ என அறிய இயலாதவலாக ஐயுற்றாள் என்க]

கூடினார் மறுவலுங் கூடி லோமென
ஆடமைத் தோளினால் அன்பர்ப் புல்லினா
ரூடினார் மறுவலு மூடி லேமென
நீடெரிப் பிழம்பெனப் புலந்து நீங்கினார்         130
[காதலரோடு புணர்ந்தார் மறுபடியும் கூடிலோம் என மகளிர் மூங்கில் போன்ற தம்தோளினால் அன்பரைப் புல்லினார். காதலரோடு ஊடியவர்கள் மற்படியும் ஊடிலேம் என எரிப்பிழம்புபோல சினந்து ஊடினார்.]

ஆடினார் சிற்சில ராடி வீணையிற்
பாடினார் சிற்சிலர் பாடி யன்பர்முன்
ஓடினார் சிற்சில ரோடி யூடலின்
நீடினார் சிற்சிலர் நீலக் கண்ணினார்         131
[குவளை மலர் போன்ற கண்ணினராகிய மகளிர் சிலர் ஆடினார்; சிலர் வீணையோடு பாடினார்; சிற்சிலர் பாடிக்கொண்டு அன்பர் முன் ஓடினார் சிற்சிலர் ஊடலில் நெடும் பொழுதைக் கழித்தனர். ]

ஆன்றவர் நோக்கிநீள் பனையு மம்மவோ
சான்றவிக் கள்ளினைத் தரித்தலா னன்றே
சூன்றென வகந்துளைப் பட்ட தென்னவே
மான்றுளம் புழைபட மான நீங்கினார்         132
[ஆன்றவர் (கள்ளுண்டவர் நிலையை) நோக்கி, நீண்ட பனைமரமும் நிறைந்த இக்கள்ளினைத் தாங்கியதாலல்லவா தோண்டிய புழைபோலத் துளைப்பட்டது என உள்ளம் வறிதாக அதனை நீங்கினார். ஆன்றவர்- அறிஞர். சான்ற- நிறைந்த. தரித்தல்- தாங்குதல். சூன்றென- தோண்டியதென. புழைபட- வறிதாக. மான நீங்கினார்- மானத்தினராக நீங்கினர். தீயாரைக் காண்டலும் தீதே என்பதைப்போல அதனை நீங்கினார்.]

பறைந்த பேரறிவினும் பதின்ம டங்கெதிர்
நிறைந்துவெங் காமநோ யகத்து நீடலால்
உறந்தபூ வணைமிசை யும்ப ராரெனச்
சிறந்தமெய்க் கலவியிற் றிளைக்கப் புக்கனர்         133

[உரனும் பெருமையும் காமத்திற் செல்லும் மனத்தைனைத் தடுப்பன. உரன் –நல்லது கெட்டதை ஆராயும் அறிவு. இந்த அறிவு மழுங்கினாலே மன காமத்தின் வழிச் செல்லும் அழிந்து போன இப்பேரறிவினும் வெங்காம நோய் பதின்மடங்கு எதிர் நிறைந்து நீளுதலால், பூவணைமேல் தேவர்களென சிறந்த மெய்யுறு புணர்ச்சியில் திளைக்கச் சிலர் புகுந்தனர்]
கலிநிலைத்துறை

தூது சென்றுசென் றுழல்வதுபோற் சுரும்பி னங்கள்
போதி னாக்கிய மாலையி லெதிரெதிர் போகித்
தாது நொண்டிசை மிழற்றுற விருந்தனர் தம்முண்
மாதர் வாண்முக நகையினான் மனக்குறிப் புரைத்தார்         134
[ஆடவர் மகளிரிடையே தூது சென்று உழல்வது போல வண்டினங்கள் அவர்கள் அணிந்திருந்த மாலையில் மாறிமாறிப்போய் தாதினை முகந்து நுகர்ந்து முரன்றன. அவாறு இருந்தவர்களிடையே மாதர் தம்முடைய முகநகையால் தம் மனக் குறிப்பை வெளிப்படுத்தினர்]

சாலப் பண்ணினைப் பயிற்றி யுந்தடமுலை யலைத்து
மேலத் தண்குழ லவிழ்த்தெதிர் முடித்துமீந் தளிரின்
கோலக் கொம்பினைக் குழைதரப் புல்லியுங் குறிப்பாற்
சீலப் பாவையர் கருத்தினைக் கொண்கரைத் தெளித்தார்         135

[பண்ணிசை பயிற்றல், தடமுலை அலைத்தல், தண்குழலவிழ்த்து எதிர் முடித்தல், கோலக் கொம்பினைப் புல்லுதல் என்பன காமக் குறிப்பினை வெளிப்படுத்தும் தொழில்கள். இவற்றால் மகளிர் தம் கருத்தினைக் கொண்கருக்குத் தெளிவித்தனர்]

தொய்யி லந்நலார் முலைமிசைத் தொழில்பெற வரிந்தும்
மையுண் கண்களி னஞ்சன மெழுதியும் வாச
நெய்யுண் கூந்தலின் நிறைமலர் செருகியும் நுதலிற்
செய்ய சிந்துரந் தீட்டியு மாடவர் களித்தார்         136
[அழகிய மகளிரின் முலைமேல் தொய்யில் எழில்பெற எழுதியும் கருமையானகண்களில் அஞ்சனம் தீட்டியும் வாசனைத்தைலம் பூசப்பெற்ற கூந்திலில் நிறைய மலர்களைச் செஉகியும் நெற்ரியில் சிந்தூரம் தீட்டியும் ஆடவர் மகிழ்ந்தனர்]

முலையுந் தோள்களு மிறுகுற முயங்கியு மமிழ்த
கலைநி லாவிய முகத்தின் முத்தாடியுங் கலையுஞ்
சுலவு காரளி யோதியுந் தொடிகளுஞ் சோர
விலகு சூட்டரா வெனவுடற் பின்னியு மணந்தார்         137
[முலையும் தோள்களும் இறுகுறத் தழுவியும், அமிழ்த கலை நிரம்பிய நிறைமதி போன்ற முகத்தில் முத்தாடியும், ஆடையும் கூந்தலும் வளைகளும் சோர படமுடைய பாம்புகளைப் போல உடற் பின்னியும் மகலிரும் மைந்தரும் புணர்ந்தார்.]

காசு கண்பரிந் துக்கன காழினம் பரும
மாசை வண்சிலம் பொலித்தன மருவுலாங் களபம்
பூசு குங்கும மழிந்தன பூவணை மேலா
னேச வின்புமீக் கிளர்ந்தன புணர்ச்சிநீடு நர்க்கு.         138
[மலர்படுக்கைமேல் புணர்ச்சியில் நீண்டு தங்கினவர்களுக்கு மணிவடங்கள் அற்று உகுந்தன. காழ்- எட்டுமணிக்கோவை. பருமம்- பன்னிரண்டு மணிக்கோவை. மாசை- பொன். காழும், பொற்சிலம்பும்ப்லித்தன. மேற்பூசின களபமும் குங்குமமும் அழிந்தன. நேச அன்பு மேலோங்கின ]

அப்பு மாரிதூய்ப் பணிபுரி யனங்கனு மன்பர்
செப்பு நேர்முலை மகளிரிற் றிளைத்திடு நுட்ப
வொப்பி லாத மெய்க்கலவியை உடனின்று கவர்ந்தான்
துப்பு நேர்சடை யான்விழிக் கனலினைத் துதித்தான்         139
[அப்பு மாரி- அம்பு மாரி, மலர்க்கணைகள். மன்மதம்கலவிக் கலைக்கு அதிபன். செப்பு நேர் முலை மகளிரொடு மைந்தர் திளைத்திடும் மெய்யுறு புணர்ச்சியின் நுட்பத்தை உருவிலியாதலின் உடன் நின்று கவர்ந்தான். மன்மதன் தன்னை உருவிலியாக்கிய பவளச் சடையானாகிய சிவபிரானுடைய நெற்றி விழிக் கனலை நன்றியுடன் துதித்தான்]

தடக்கை வார்சிலை கணைகளுந் தொலைந்தன தழங்கி
மடைக்கண் வால்வளை மணிசொரி பண்ணையிற் சுரும்பும்
பொடிக்குந் தேம்பொழிற் பொய்கையிற் பல்வகைப் பூவும்
தொடுக்க அற்றன முழுவது அனங்கனுந் தோற்றான்         140
[வலிய கையில் தாங்கும் வில்லிலிருந்து தொடுக்கும் மலர்க்கணைகள் முற்ரிலும் தீர்ந்து விட்டன. நீர்த்துறைகளில் வெண்மையான சங்குகள் மணி சொரியும் வயல்களில் சுரும்பும், பொய்கையில் பல்வகைப்பூவும் முழுவதும் எய்து முடிந்தமையால் அற்றுப் போய்விட்டன. எய்யக் கணையில்லமல் போய்விட்டமையால் மன்மதனும் தோற்றான்]

வேறு மாந்தர்க ளணிமையின் மேவின ரென்னா
மாறி லாநலக் கலவியை யிடைமறுத் தொழியத்
தேறு வான்கலை சிறைக்கிளி பூவையைத் தெளித்துக்
கூறு மன்னவர் வாங்கிய வெழினியுட் குறுகி         141
[வேற்று மனிதர்கள் அண்மையில் வந்தனர் என்று ஒப்பில்லத புணர்ச்சியை இடையீடுற்றுத் தவிர்த்து, கிளி, பூவையைத் தேற்றி அவற்றோடு திரைக்குப் பின் குறுகி, இடைமறுத்து ஒழிய- பாதியில் தவிர்த்து. சிறைக் கிளி- சிறகுகளை உடைய கிளி; கூண்டுக்கிளியுமாம். தேறுவான் கலை என்பதனைக் கலை தேறுவான் என மாற்றுக. இனிமையாகப் பேசும் கலை குறித்தது. தெளித்து- தெளிவித்து. எழினி- திரை]

அனங்கன் போர்விளை மாதர்தம் மணிமிடற் றொலியை
இனங்க ளின்குர லாமென எண்வகைக் குருகுந்
துனைந்து வாங்கிய வெழினியுள் துவன்றின அவர்தங்
கனிந்த தீங்குரற் பொலிவுகற் பான்புகுந் தனபோல்         142
[அனங்கன் போர்- கலவி. கலவியின்போது மாதர்தம் மணிமிடற்றிலிருந்து எழும் ஒலியைத் தம் இனங்களாகிய பறவைகளின் பயிர்ப்புக் குரலாம் என எண்வகைப் பறவைகள் நெருங்கித் தொங்கவிடப்பட்ட திரைக்குள் திரண்டன, அம்மாதர்தம் கனிந்தை இனியகுரலைக் கற்பதற்குப் புகுந்தனபோல். கலவியில் மகிழும் மங்கையரின் மிடற்றிலிருந்து புறா முதலிய எண்வகைப் பறவைகளின் குரல் எழும் என்பர் காமநூல் வல்லோர்.]

உடலு மாரனைத் துணைவரோ டொற்று மையாகி
யடலி னோப்பிய திறற்பி ரதாபமு மலங்கிப்
படருங் கீர்த்தியு மறிவுறுத் தனபனி மொழியார்
மடமை நோக்கமு மணிமுருக் கதரமு மாதோ         143
[உடலும்- போரிடும். காமப்போரிடும் மாரனைத் தம் துணைவரோடு ஒக்க நோக்கி, கலவிப்போரில் புறங்கண்ட வெற்றிப் பிரதாபமும், காம மயக்கத்தைக் கொடுத்தலால் வரும் கீர்த்தியும் குளிர்ந்த மொழியுடையாராகிய மகளிரின் மடமை நோக்கமும் மணிமுருக்கு அதரமும் அறிவுறுத்தன. நோக்கு- கண். அதரம் வாயிதழ். கலவியால் கருங்கண் சிவந்தன. செவ்விதழ் வெளுத்தன. செந்நிறம் வெற்றியின் நிறம்; பிரதாபம் எனப்படும். வெண்ணிறம் கொடையால் வரும் கீர்த்தியின் நிறம்.]

களவிற் கூடிய கற்பினர் கருவிழி சிவந்த
வளனை நோக்கிய செவிலிய ரயிர்த்தவர் மலர்த்தேன்
றுளியிற் றோய்குழ னோக்கலு மிகத்துளைந் தாடுந்
தெளிகொ ணீர்விளை யாட்டதென் றகத்திடைத் தெளிந்தார்         144
[களவொழுக்கத்தில் காதலரொடு புணர்ச்சி கொண்ட தலைவி விழிச் சிவப்பின் செழுமையைக் கண்டு , இச்சிவப்பு கலவியினாலாயிற்றொ அன்றி நீர்விளையாடலின் ஆயிற்றோ என ஐயுற்ற செவிலியர், கூந்தலில் சூடிய மலரிலிருந்து சொட்டும் தேன் துளியினைக் கண்டு, இச்சிவப்பு நீர் விளையாட்டின் ஆயது எனத் தெளிந்தார். தேன் துளிர்த்ததை நீர்த்துளி என மயங்கினர் எனவாம். கலவியில் நிகழ்ந்ததை நீர்விளையாட்டில் ஆயதெனச் செவிலி தெளிந்தாள்.]

புலந்து போதுழி யாடவர் பொலந்துகி லீர்ப்ப
மலர்ந்த வல்குலைக் கதுமெனக் குடங்கையான் மறைப்ப
விலங்கு பாம்பபி மந்திரத் தடங்குமோ வெனலு
நலங்கொண் மின்னனார் குறுநகை விளைத்தனர் நாணி         145
[ஊடலுடன் தலைவியர் செல்வுழி, காதலர் துகிலினைப் பற்றி ஈர்த்தனர். உடை நழுவவே, மகளிர் காட்ச்சிபடும் அல்குலை விரைவாகத் தம் அங்கையால் மறைத்தனர். காதலர், அது நோக்கி, அகலும் பாம்பு அபிமந்திரத்து அடங்குமோ? என்றனர். அது கேட்ட மங்கையர் நாணங்கொண்டு குறுநகை விளைத்தனர்.]

கலையின் வென்றியுங் கரிபரி யிரதமே காலாண்
மலையும் வென்றியுஞ் சூட்டுடை வாரணங் குறும்பூ
ழுலைய மோதுவன் கடாப்பிற போரிடை யுறுத்திக்
குலவும் வென்றியுங் கொண்டன வாடவர் குழுக்கள        146
[கலையின் வென்றி- செம்மறிக்கிடாய்ப் போர்வெற்றி, யானை, குஹிரை, இரதம் , காலாள் போட்டிகளில் வெற்றி, சூட்டுடை வாரணம்- உச்சிக்கொண்டையை உடைய சேவல். குறும்பூழ்- காடை. கடா- எருமைக் கடா இவற்றைப் போரிடைச் செலுத்தி அடையும் வெற்ரியைக் கொண்டனர் ஆடவர்கள். தாம் வளர்த்தும் விலங்கினங்களின் வெற்றி தம்முடையனவே யாகலின் வென்றியும்ங்கொண்டனர் என்றார்.] .

பாடல் வென்றியும் பரிபுரஞ் சீறடிச் சிலம்பு
மாடல் வென்றியு மஞ்சுகம் பூவைவெம் பிடியி
னீடில் வென்றியு மேனைய வென்றியுங் கொண்டார்
வீடி லின்பமே விளையும் வெம்முலைக் கொடிமடவார்         147
[இசைப்போர் வெற்றி, நாட்டியத்தில் வெற்றி, கிளி, பூவை ஆகியவற்றைப் பிடிப்பதில் வெற்றி, இவை போன்ற ஏனைய விளையாட்டிலும் வெற்றி கொண்டார், இணையில்லாத இன்பமே விளையும் முலைகொண்ட மகளிர்.]

வேனி லின்னண மிறுத்தவேள் விழாத்தினத் தொருநாண்
மானை வென்றகண் மடவர லுடன்மலர்த் தவிசி
னானுயர்த் தவரகிலமுங் களிப்புறும் பொருட்டுத்
தாநிகழ்த் துமத்தனி விளையாட்டிடை மாதோ         148
[ இவ்வாறு வந்து தங்கிய இளவேனிலில் காமவேள் விழா நாளில் ஒருநாள், மானின் மருட்சியை வென்ற கண்ணளாகிய அம்மையுடன் மலர்த்தவிசில் விடைக்கொடி உயர்த்தவராகிய இறைவன் அகில உயிர்களும் களிப்புறும் பொருட்டுத் தாம் நிகழ்த்தும் ஒப்பற்ற இன்பவிளையாட்டினிடையில்--]

வெள்ளி வெற்பின்மேல் விரைமலர்ப் பொதும்பர்காத் தமரு
முள்ளெ யிற்றர வல்குல் வெம்முலை முறுக்க விழ்த்துக்
கள்ளு யிர்க்குமென் மலர்க்குழற் றெய்வதக் கன்னி
தள்ள மெல்லிடை யுவளக மருங்குசார்ந் தனளால்         149

[வெள்ளீவெற்பு- கயிலைமலை. வெம்மை- விருப்பம். கள்ளுயிர்க்கும்- தேனைச் சொட்டும். பொதும்பர் காத்து அமரும் தெய்வதக் கன்னி- பூஞ்சோலையைக் காவல்கொண்டு அங்கிருக்கும் தெய்வப் பெண். முள்ளெயிற்று- கூரிய பற்கள். தெய்வதக்கன்னியின் அழகு. இடை தள்ல- இடை அசைய. உவளகம்- அந்தப்புரம். சோலையைக் காக்கும் தெய்வக்கன்னி கயிலையில் அந்தப்புரத்தைச் சார்ந்து.]

அங்கு வந்தடி வணங்கர மகளிர்க ளோடுஞ்
செங்கை கூப்பின டிருமுன்பு பணிந்தன ளெழுந்தா
ளெங்க ணாயக சயசய வெனத்துதி யிசைத்தா
ணங்கை பாலமர் நாயனார் தமக்கிது நவில்வாள்         150
[அங்கு வந்து அடி வணங்கும் தேவ மகளிர்களோடு செங்கை கூப்பினள்; பணிந்த்து எழுந்தாள். ‘எங்கள் நாயகனே! சயசய! எனதுதி இசைத்தாள். பின் இறைவியுடன் அமர்ந்திருக்கும் இறைவர் தமக்கு இவ்வாறு கூறத் தொடங்கினாள்.}

கருவி வான்முகில் குடியிருந் தனையகார்க் கூந்தற்
றிருவின் மேலவள் திதலைவெம் முலைக்களிற் றுலவை
பொருது வார்ந்திழி புலவுநீ ரெனப்புது தேற
லருவி தாழ்தொடை மார்ப வந்தன்றிள வேனில்         151
[கருவி வான் முகில்- இடி மின்னல் தொகுதிகளையுடைய கருமேகம். கார்க்கூந்தல் திரு- இறைவி. அவளுடைய பொன்போன்ற தேமல் படர்ந்த முலைகளாகிய வெங்களிற்றின் தந்தங்களின் மேற்பொருது வார்ந்து இழிகின்ற மதநீரெனப் புதிய தேன் அருவிபோல் சொரியும் தாழ்ந்த மாலை மார்பனே! இளவேனில் வந்தது’ காம இன்பத்துக்குரிய காலமாதலின் இறைவன் மார்பின் மாலை அதற்கேற்றபடி வருணிக்கப்பட்டது]

பாற்ற னிக்கடற் றுகிரெனப் பைந்தொடி முலையி
னேற்று குங்கும மெழுதிய நீற்றணி மார்ப
தோற்ற வேனில் வேடூது விட்டாலென மலையக்
காற்று மென்மெல வசைந்தது நங்கயி லாயம்         152
[பாற்கடலில் பவளம் கிடந்ததுபோல அம்மை திருமாற்பிற் குங்குமம் பதிந்துள்ள நீறணி மார்பனே! உனக்குத் தோற்ற வேனில்வேள் போர்க்குத் தூது விட்டாலென மலயமாருதம் நம்முடைய கயிலாயத்தில் மென்மெல அசைந்து உலாவியது. தனி- நிகரில்லாத. துகிர்- செம்பவளம். வேனில் வேள்- மன்மதன். மலயக் காற்று- தென்றல்.]

நானம் மல்கிய நறுங்குழல் நளிர்முக மலரில்
தேன ருந்துவ போல்விழி செல்லும்வாண் முகத்தாய்
வேனின் மைந்தனை மேதினி யீனவெள் ளணிகல்
தான ணிந்தென வயங்கின பரந்துதா ழருவி         153
[கத்தூரிக் குழம்பு பூசியமணம் மிக்க அறுங்குழலளாகிய பார்வதியின் குளிர்ந்த முகமாகிய தாமரைமலரில் தேனருந்தச் வண்டுபோல் விழிசெல்லும் பிரகாசமானமுகத்தை உடையாய்! இளவேனிலாகிய மைந்தனை நிலம் ஈன, வெள்ளணி அணிந்தாற்போல மலைகளில் அருவிகள் பாய்ந்தொழுகுகின்றன. இறைவரின் திருக்கண்களாகிய வண்டுகள், இறைவியின் திருமுகத்தாமரையின் தேனுண்ணும். முகத்தன், சிவபெருமானைக் குறித்தது. வெள்ளணி- தான் புதல்வனைப் பெற்றமையைத் தலைவனுக்கு அறிவித்தற்கு நினைத்து வெண்மலர் முதலியவற்றை அணிந்து கொள்ளச் செய்து ஒருத்தியைத் தலைவியானவள் தலைவன்பால் விடுத்த ல்.

நிணந்து ழாவு வேல் நிகர்உமை விழியுடன் அளியின்
கணந்து ழாவிய கடுக்கையந் தொடைகமழ் புயத்தாய்
தணந்து ளார்ப்பெறு மாதர்போற் றளர்வுமுற் றொழிந்து
மணந்து ழாம்பொழி றென்றலால் வளம்படைத் தன்றே.         154
[மாமிசத்தைத் துழாவிய வேலினை நிகர்த்த செவ்வழி படர்ந்த உமையின் விழியுடன், வண்டுக் கூஉட்டங்கள் துழாவிய கொன்றைமாலை கமழ்கின்ற திருத்தோளினை உடையாய்! முன்னர்ப் பிரியப்பெற்ற காதலனை மீளப்பெற்றுத் தலர்வு நீங்கிய மாதர்போல் நறுமணம் துழாவப் பெற்ற மலர்ப்பொழில் தென்றலால் வலம் படைத்தது. உமையின் கண் செவ்வரி படர்ந்து வேலின் இலைபோல அகன்றும் கூரிய கடையைக் கொண்டும் இருத்தலால் நிணந்துழாவு வேல் நிகர் விழி எனப்பட்டது. போலக் கூர்மகளிர் காதலால் அணைவதற்குரிய உறுப்பு,ஆடவர்க்குச் சிறந்த தோள். ஆதலால் உமையின் கண்கள் இறைவனின் தோளில் படிந்தன துழாவிய- படிந்த}.

வார்நி றுத்திய வனமுலை மங்கைகட் கடையின்
கூர்நி றுத்திய குறுநகை யாய்திறை யென்னப்
போர்நி றுத்திய கருப்பினான் புனைமணி நெடும்பொற்
றேர்நி றுத்திய தொத்தது செழுமலர்க் கோங்கம்         155
[வார்- முலைக்கச்சு. இறைவனின் குமிண் சிரிப்பு அம்மையின் கண்களுக்கு விருந்தாக அமைதலினால், ‘மங்கை கட்கடையின் கூர்நிறுத்திய குறுநகை’ என்றார். நாணத்தினால், அம்மை இறைவனை நேராகப் பார்க்காமல் கடைக்கண்ணால் நோக்கினா ளாதலால், ‘ கட்கடையின் கூர் நிறுத்திய ‘ என்றார். கருப்பினந் கரும்பு வில்லினனாகிய மன்மதன். போருக்குப் பின் தோற்ற அர்சர்கள் வென்றவனுக்குத் திறைசெலுத்துவர். அதுபோல, கோங்க மரங்கள் பூத்தது, மன்மதன் அலங்கரிக்கப் பட்ட தேரினைத் திறையாக நிறுத்தியதை ஒத்திருந்தது.]

மடுத்த வல்விடம் வயங்கிய மிடற்றினாய் நீயிக்
கடுத்த தும்பிய கருங்கணா ளுடன்விளை யாட்டி
னடுத்த தன்றெனக் களைந்தெறி புலியதள் போர்ப்ப
வெடுத்து நின்றதே போன்றதா லிணர்விரி வேங்கை         156
{வாய் மடுத்த கொடிய விடம் விளங்கும் கண்டத்தை யுடையவனே! நீ, விடம் ததும்பும் இக்கண்ணினாளுடன் (பார்வதியுடன்) இன்ப விளையாட்டுக்குப் பொருத்தமாவதன்று எனக் களைந்து எறிந்த புலியதளைத் தான் போர்த்துக் கொண்டு நின்றதே போன்றன் மலர்க் கொத்துக்களைப் பூத்து விரித்து வேங்கை மரங்கள். மடுத்த- உண்ட. வல்விடம்- உண்டாரைக் கொல்லும் கொடிய விடம். வயங்கிய-விளங்கின. கடுத் ததும்பிய- நஞ்சு துளும்பிய; சிவனுக்குக் காமநோய் விளைப்பதாகலின் கடுத்ததும் பிய என்றார். அவர்க்குக் காமநோய் தணித்துக் கருணை செய்தலின் கருங்கணாள் என்றார். கருங்கண்- குளிர்ச்சியுடையகண். “இருநோக்கு இவளுண்கண் உள்ளது, ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்றந்நோய்க்கு மருந்து’( 1091) எனும் திருக்குறள் காண்க. இங்குப் புலியென்றது, வரிப்புலியை அன்று. புள்ளித்தோலாடையுடைய வேங்கைப்புலியையாம்]

பொன்னொ டாடிய புரிசடைப் புராதன பொருப்பின்
மின்னொ டாடிய திறனறிந் தராவணை மேலான்
றன்னொ டாடவுஞ் சார்ந்துகாத் திருப்பது தகையுந்
தென்னொ டாடிய செறிமல ரூழ்த்துகு காயா.       157
[பொலிவால் பொன்னை வென்ற சடை; புரிசடை. ‘புராதன- பழமையானவனே. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!. ‘புராதனனே! நீ, மலையர்சன் மகளுடன் மகிழ்ந்தாடிய திறத்தை அறிந்து பாம்பணைத் துயின்றவனாகிய திருமால், தன்னோடும் ஆட,அடுத்துக் காத்திருப்பது போன்று காயாமரங்கள் செறிமலர் ஊழ்த்து உகுக்கின்றன. நிறத்தால் காயமலர் திருமாலை ஒக்கும். திருமாலுக்குக் காயமலர்வண்ணன் என்பதொரு பெயர்]

பருப்பு ழைக்கரக் களிற்றுரிப் போர்வையம் பகவ
பொருப்பு மாதுட னாட்டயர் பொலிவினைக் கேளா
கருப்பு வில்லினா னினிப்பய மின்றெனக் கணைகள்
விருப்பி னெய்யவந் திட்டதே வீழ்ந்தது காஞ்சி       158
[துளைக்கையுடைய பெரிய களிற்றின் தோலைப் போர்வையாய்ப் போர்த்திய பகவனே! மலையான் மகளுடன் ஆடல் விரும்பிய நின் தோற்றப் பொலிவினைக் கெட்டு மன்மதன் இனிப் பயமில்லாமல் நின்மேல் மலரம்புகளைத் எய்யலாம் என விரும்பி வந்திட்டதை ஒக்கக் காஞ்சிமரம் நின்றது.]

குழந்தை வெண்மதி மிலைச்சிய குரூஉச்சடைக் குழகா
இழந்த பல்லினை யெய்துவா னிரவியெற் பிழம்பு
பொழிந்த சேயொளித் தேரொடும் புக்கதே போலும்
வழிந்து தேன்கமழ் மலர்த்திர டதைந்ததண் செருந்தி       159
[பிறைமதியை நிறமும் திரட்சியுமுடைய சடையில் தரித்த அழகனே!, தான் இழந்த பற்களை மீள அடையும் பொருட்டு சூரியன் சிவந்த ஒளிகாலும் தேரொடு புக்கிருந்தது போலும் தேன் வழியும் மலர்திரள் செறிந்த குளிர்ந்த செருந்தி மரங்கள் நின்ற காட்சி. குழந்தை வெண்மதி- பிறைச் சந்திரன். மிலைச்சிய- தரித்த. குரூஉ- நிறம், திரட்சி. குழகந் அழகன். சூரியன் தக்கயாகத்தின்போது வீரபத்திரரிடம் பற்களை இழந்தான். இரவி- சூரியன். எல்- ஒளி. செந்நிறத்தேர். ததைந்த – நெருங்கித் திரண்ட]

சினங்கொள் வாளராத் தொடையல்சூழ் செஞ்சடைக் கூத்தன்
அனங்க வேளெனுந் தமையனுக் கணியுருத் தருகென்
றினங்கொள் வான்றவ மியற்றுவா னவனுடை யிளவன்
மனங்கொள் காதலின் வந்தெனத் திகழ்ந்தது ஞாழல்       160
[சினமிக்க கூரிய பற்களையுடைய பாம்புகள் மாலையாகச் சூழ்ந்த செஞ்சடைக் கூத்தன்(சிவன்), அனங்க வேளெனும் தமையனுக்கு (காமனுக்கு) அவனுடைய அழகிய உருத் தருக என்று தவம் இயற்றும் பொருட்டு அவனுடைய தம்பி சாமன் மனத்தில் ஆசையுடன் வந்ததென ஞாழல் மரம் திகழ்ந்தது.]

கோதை வார்சிலைப் பொலங்கிரி குழைத்தெயில் குலைத்தோய்
பாத தாமரை படர்ந்தருந் தவத்தினிற் பயிலும்
பூதி பூசிய புண்ணியத் தொண்டரே போலு
மாதர் வெண்மல ரூழ்த்தநீண் மராமரத் தொகுதி       161
[மேருவாம் பொன்மலையை வளைத்து அசுரர்களுடைய மூன்று எயில்களைச் சிதறடித்தவனே! நடைப்பயண மாகிய தவத்தை மேற்கொண்ட விபூதி பூசிய மெய்த்தொண்டரே போலும், அழகிய வெண்மலர்களை மலர்ந்த வெண்கடம்பு மரங்கள் கோதை- உறை அல்லதுமாலை. பொலங்கிரி- பொன்மலை குழைத்து- வளைத்து. பாத தாமரை படர்தல்- தாமரை போன்ற பாதங்களில் பயணித்தல். (ஊர்தியில் செல்லாமல்) வெண்ணிற மலர்கள் பூத்த மராமரங்கள் முழுநீறு பூசிய அடியவர்களை ஒத்திருந்தது]

முனைய சூற்படை முழங்கழல் பிலிற்றுசெங் கரத்தோய்
நினையு மாதவர் தமக்குநின் னேவலாற் குறுகிக்
கனைஅ வாநிரப் புறுமுருத் திரகணங் கடுக்கு
மனைய நீண்மராத் தருகெலா மலர்ந்தகூ விளங்கள்       162
[போர் முனையில் முழங்கு அழல் பொன்ற நிறத்த சூலப்படையை ஏந்திய செங்கரத்தோய்! நின்னையே நினையும் மாதவர்களுக்கு நின் ஏவலால் அவர்களை அடைந்து அவர்களுடைய மிக்க விருப்பங்களை நிரப்புகின்ற உருத்திரகணங்களைப் போன்றன, நீண்ட மராமரங்களை அடுத்து மலர்ந்த கூவிளங்கள். கூவிளம்- வில்வம். மரா- அடியவர். ]

என்ன விவ்வகை தனித்தனி வனத்தெழின் முழுதும்
பன்னி மற்றுமீ துவகையிற் பகருத லுற்றாண்
மன்னு மெம்பிரான் குடங்கையால் வளர்த்தமாங் கன்றும்
அன்னை தன்கரத் தன்பினால் வளர்த்த மாலதியும்      163
[ என்று இவ்வாறு வனத்தெழில் முழுவதையும் பலபடக் கூறி மேலும் உவகையோடு கூறலுற்றாள். எம்பிரான் தன்னுடைய குடங்கையால் வளர்த்த மாங்கன்றும், அன்னை உமை தன் கரத்தால் வளர்த்த மாலதியும். (மாலதி- முல்லை, குருக்கத்தி)]

செய்ய நின்றிரு மேனிபோற் செந்தளிர் தளிர்த்தும்
மையுண் கண்ணிதன் மூரலின் வாண்முகை முகிழ்த்தும்
ஐய சீரிய வாயின வலங்குபொற் சடையி
னெய்யுண் கூந்தலின் மிலைச்சுதற் கமைந்தன வென்றாள்       164
[சிவந்த நின்னுடைய் திருமேனி போல செந்தளிர் தளிர்த்தும், மையுண்ட கண்ணி உமைதன் புன்முறுவலைப் போல வெண்மையான அரும்புகள் முகிழ்த்தும் தைலம் பூசிய கூந்தலில் அணிவதற்கு அமைந்தன என்றாள். மூரல்- பற்கள். வாண் முகை- வெண்மையான மொட்டுகள். நெய்- வாசனைத் தைலம்.மாந்தளிர் சடையிலும் முல்லை குழலிலும் அணியத் தகுவனவாயின.]

கருணை நாயகர் கேட்டலுங் குறுநகை காட்டித்
திருவின் மேலவள் செழுமுகத் தாமரை நோக்கி
யரிவை தன்மனக் குறிப்பறிந் தவையிரண் டினுக்கு
மிருமை மன்றல் செய்வாமென வுமையொடு மெழுந்தார்      165
[சோலையைக் காக்கும் தெய்வக் கன்னி கூறியதை கருணை நாயகராகிய இறைவர் கேட்டலும், மகிழ்வுடன் குறுநகை காட்டினார். த்ருமகளின் மேலான அழகுடையவலின் (உமையின்) செழுமையான தாமரை அனைய முகம் நோக்கினார். இறைவியின் மனக் குறிப்பையும் அறிந்து, அவை இரண்டனுக்கும் (மாந்தளிர், முல்லை) மணம் செய்வாம் என்று உமையொடும் எழுந்தார்]

மணிப்பொற் கோவையும் பூண்களு மருமலர்த் தொடையு
மணிப்பொற் சுண்ணமுங் குங்குமச் சேறுமா டைகளுந்
தணிப்பில் சீதளக் களபமுந் தனிவிரை பிறவுங்
கணிப்பி லாவர மகளிர்கைக் கொண்டுடன் சார       166
[பொன்மணி மாலைகளும்,அணிகலன்களும், மணமாலைகளும், நறுமணப் பொடிகளும்,குங்குமக் குழம்பும், ஆடைகளும் குளிர்ந்த சந்தனக் கலவைகளும் வேறு நறுமணத்திரவியங்களும் அளவிலாதன தேவமகளிர் கைக்கொண்டு வர.]

ஆடி யேந்தினர் சிலர்வர வடப்பையேந் தினராய்த்
தோடு கொண்டுசில் லோர்வரச் சுருண்முக வாசம்
ஓடி முந்துற நீட்டுவார் சிலர்வர வுமிழ்நீர்
பீடி னேந்துவார் சிலர்வரப் படியகம் பிடித்து.       167
[கண்ணாடி ஏந்தி சிலர் வர, வெற்றிலைத் தாம்பூலம் ஏந்திச் சிலர் வர , சுருள் முகவாசம்- வாசனைப் பொருள்களுடன் கூடிய வெற்றிலைச் சுருள் (இக்காலத்து ‘பீடா’ என்ப்படுகின்றது) ஓடி ஓடு முன் செல்லுவார்க்கு நீட்டுவார் சிலர், வெற்றிலை மென்று உமிழ்நீரைத் துப்புவார் முன் படிக்கம் பெருமையுடன் பிடிப்பார் சிலர். ஆடி- முகம் பார்க்கும் கண்ணாடி. மங்கலப் பொருள்களில் ஒன்று. அடைப்பை- வெற்றிலை பாக்கு. படியகம்- படிக்கம். உமிழ்நீரைப் பிடிக்கும் பாத்திரம்]

மாட கத்தனி யாழ்குழன் முதலிய வகையாற்
பாட லிற்பயின் றந்நலார் முன்பினும் படரச்
சூட கத்தொகை மேகலை சிலம்பொலி தோற்றி
நாட கத்தொழி லாற்சிலர் முந்துற நடப்ப       168

[சிறந்த மாடகயாழ், குழல் முதலிய கருவிகளுடன் பாடல்கள் இசைக்கும் அழகிய மளிர் முன்னும் பின்னும் செல்ல, சூடகம் (தோள்வளை) மேகலை, சிலம்பு முதலிய அணிகலன்கள் ஒலிக்க நாட்டியத் தொழில் தோன்ற சிலர் முந்துற நடக்க,]
வட்ட வெண்குடை மீமிசை நிழற்றவார் கவரி
யிட்டி டைக்கொடி யாரிரு மருங்கினு மிரட்டப்
பட்ட வொள்ளொளி பரப்புசாந் தாற்றிகள் பரவ
கட்டெ ழிற்றிருப் பாதுகை கழலிணை சூட       169
[வட்டமான வெண்குடை மேலே நிழலளிக்க, பெரிய கவரியைச் சிற்றிடைக் கொடிபோல்வார் இருபக்கத்திலும் இரட்ட, ஒள்ளொளி பரப்பும் சாந்தாற்றிகள் பரவ, மிக்கெழ்ல் உடைய திருப்பாதணிகள் கழலிணை சூட. சாந்தாற்றி- விசிறி, கட்டெழில்- பேரழகு]

தமது சீர்முகத் துமைவிழி யுமைதனி முகத்துத்
தமது வாள்விழி யெதிரெதிர்ச் சார்ந்தன களிப்பத்
தமது தோளணி யுமைபுயத் துமைபுயத் தார்கள்
தமது தோளுறத் தங்கையு முமைகையுங் கோப்ப       170
[ தமது (சிவனது) அழகிய முகத்து விழிகளும் உமையின் ஒப்பற்ற முகத்து வாள்விழிகளும் சார்ந்து திருமுகத்தழகினைப் பருகிக் களித்தன; தமது தோளணி உமைபுயத்தும் உமைபுயத்துத் தார்கள் தமது தோளுறவும் திளைத்தன; தமது அக்ங்கையும் உமையின் அங்கையும் கோத்தன]

மந்த மாருத மருங்குவந் தசைதர வீணை
மைந்தர் பாடலின் வண்டுபாண் முரல்வன நோக்கி
மந்த மென்னடை யால்வழிக் கொண்டனர் நடந்தார்
மந்த ரத்தன மடந்தையர் தங்களுண் மொழிவார்      171
[தென்றல் பக்கங்களில் வந்து அசைதர, வீணையிசை போல வண்டு முரல்வன நோக்கி மைந்தர் மந்த மென்னடை கொண்டு நடந்தார். மந்தர மலை போன்ற தனத்தினராகிய மகளிர் தங்களுள் பின் வருமாறு பேசிக்கொண்டனர். மந்த மாருதம்- தென்றல்.]

கலிவிருத்தம்
குரும்பை வெம்முலையி னாள்பாங்கர்க் குண்டுநீர்ச்
சுரும்புளர் காவிகள் தோட விழ்த்தன
பெரும்பெயர்க் கடவுள்பாற் சுனையிற் பெண்டிர்காள்
அரும்ப விழ்த்தில வலர்க்காவி யென்கொலோ       172
[குரும்பை மென்முலையாள்- உமை. பெரும்பெயர்க் கடவுள்- மகாதேவன்; இறைவன். இறைவியின் பக்கத்தில் வாவியில் வண்டுகள் மொய்க்கும் காவிகள் இதழ் விரிந்தன; இறைவன் பக்கத்தில் உள்ல வாவியில் காவிகள் அரும்பு அவிழவில்லை. இதற்கு என்ன காரணம்? அம்மையின் கண்களில் உள்ள தட்பமும் ஐயனின் கண்களில் உள்ள வெப்பமுமே காரணம் என்பது குறிப்பு.]

பண்ணை மென்மொழி யினாள்பாங்க ரீர்ம்புனல்
வண்ண வம்புய மலர்வல்லை கூம்பின
அண்ண றன்புடை யகன்சுனையி னவ்விநேர்
கண்ணி னீர்குவிந் திலகமல மென்கொலோ       173
[பண்ணின் மொழியால் (உமை) பாங்கர் நீர்நிலையில் உள்ள தாமரை என்னோ மலரவில்லை, கூம்பின; ஆனால், அண்ணலின் (இறைவன்) புடையுள்ள அகன்ற சுனையில் மானின் மருண்ட கண் போன்ற் கண்ணினீர்!, தாமரை மலர் குவிந்தில.காரணம் என்கொலோ அம்மையின் திருக்கண்கள் நிலவொளி வீசலின் தாமரை மலர் குவிந்தன. இறைவனின் கண்கள் வெச்சென ஒளிவீசலின் குவிந்தில]

மான்றபூண் முலையினாண் மருங்கில் வாலொளி
யான்றதண் மதிச்சிலை யரும்பிற் றீர்ம்புனல்
சான்றவர் தொழும்பிரான் புடையிற் றையலீர்
கான்றில தொழுகுநீர் கலைக்க லென்கொலோ       174
[மான்ற- மயங்கிய, கலந்த. மதிச்சிலை- சந்திரகாந்தக் கல், கலைக்கல் என்றதுவும் சந்திரகாந்தக்கல்லே. நிலவொளியில் நீரொழுகும். ஒன்றோடொன்று மயங்கிய அணிகலன்களை அணிந்த பூண்முலையினாள் (இறைவி) பக்கத்தில் தூய்மையான ஒளியுடைய சந்திரகாந்தக் கல் புனல் அரும்பிற்று. அறிஞர் தொழும் பிரான் (இறைவன்) பக்கத்தில், தையலீர்! சந்திரகாந்தக்கல் ஒழுகுநீர் கான்றில. என்ன காரணம்? அம்மையின் திருமுகம் சந்திரனைப்போல தண்ணொளி வீசலின் சந்திரகாந்தக்கல் நீரரும்பியது. ஐயனின் திருமுகம் அவ்வாறின்மையிம் கலைக்கல் நீர் கான்றிலது]

களித்தளி யுளர்குழற் கன்னி பாலரக்
கொளித்தனிக் கதிர்ச்சிலை தீயு மிழ்ந்தில
தெளித்தருள் தருமிறை தேத்து நங்கைமீர்
அளித்தன செழுந்தழ லரிக்க லென்கொலோ       175
[மகிழ்ச்சியுடன் வண்டுகள் சுழல்கின்ற குழலையுடைய இறைவியின் பால் செவ்வொளி உடைய சூரியகாந்தக்கல் தீயுமிழ்ந்தில. அருள்தரும் இறைவன்பால் சூரியகாந்தக் கல் செழுந்தழல் அளித்தன். இது என்கொல்லொ. இறைவன்முகன் சூரியனைப் போல ஒளிகாலுவதும் அம்மையின்முகம் நிலவுபோல ஒளி காலுவதுமாகும். கதிர்ச்சிலை, அரிக்கல் இரண்டும் சூரிய காந்தக்கல்லைக் குறித்தன.]

இறைவிதன் பாங்குற விறைவன் பால்வளர்
சிறைபடு சகோரமுங் களித்துச் செல்லுவ
மறைமுதல் புடையுமை மாட்டு நேமியும்
பறையடித் துவகையிற் படர்வ தென்கொலோ       176
[இறைவன் பக்கத்தில் வளர்கின்ற சகோரப்பறவை இறைவியின் பக்கத்தில் களித்துச் செல்லுகின்றன. வேதமுதல்வன்பால் இறைவியின் பக்கத்தில் உள்ள நேமியும் சிறகுகளை அடித்துக் கொண்டு உவகையொடு படர்கின்றன. இஃதுஎன்கொலோ? நேமி- சக்கரவாகப் பறவை.. சகோரம் என்னும் பறவை நிலவை உண்பது. சக்கரவாகப் பறவைகள் அன்றில் எனப்படுவன. ஆணும் பெண்ணுமாய்ப் பகற்பொழுதெல்லாம் கூடிக் களிப்பன. இறையிடத்து வளர் சகோரங்கள் இறைவியிடம் களித்துச் செல்வன. இறைவியிடம் வலர் சக்கரவாளப் பறவைகள் மறைமுதல்வனிடம் மகிழ்ந்து படர்வனவாயின. ]

எம்மையா ளுடையவ ளிடத்திற் சார்தொறு
நம்மெலா வுடல்களுந் தண்மை நண்ணுறச்
செம்மல்பாற் புகுந்தொறுஞ் செல்வப் பேதைமீர்
வெம்மையார்ந் துடல்வெதுப் புறுவ தென்கொலோ       177
[எம்மையாளுடையவளாகிய பெருமாட்டியைச் சார்தொறும் நம் எல்லாருடைய உடலும் தட்பம் அடைய, இறைவனாகிய செம்மல்பாற் செல்லுந்தொறும் வெம்மையார்ந்து உடல் வெதுப்புவதேன்? இறைவன் பகுதி வெப்பமும் இறைவியின் பகுதிகுளிர்ச்சியும் உடைமையான்]

வேறு
என்றனர் தம்முளிவ் வாறு கூறுபு
மன்ற லோதியர் மகிழ்கூர விம்மித
மின்றிகழ் விழிகளால் விளைத்துப் புக்கனர்
அன்றினார் புரஞ்சுடு மடிகள் சோலையின்.       178
[என்று பேசிக் கொண்டு, தன்னைப் பகைத்தவர்களின் புரங்களைச் எரித்த பெருமானின் சோலையுள் மணம் நாறும் கூந்தலுடைய மகளிர் மகிழ்ச்சி கூர, தங்கலுடைய கண்களில் அற்புதமாகிய மின்னலை விளைவித்துப் புகுந்தனர். இம்மிதம்- அற்புதம்; நிகழாதவொன்று நிகழக் கண்ட மெய்ப்பாடு. அது கண்களில் வெளிப்பட்டது.}

புகுந்தபே ரருளுடைப் புனிதர் பொற்சிதர்
திகழ்ந்தபூண் மணிமுலைத் தெய்வக் கற்பினாட்
ககங்களி பயப்பமெல் லரும்பர்ச் சோலையி
னுகந்தபல் வளமெலா முலாவிக் காட்டுவார்       179
[சோலையினுட் புகுந்த பேரருள் புனிதராகிய இறைவர், பொன்போல் திகழும் தேமல் உடைய தெய்வக் கற்பினளாகிய இறைவிக்கு, அவளுடைய மனக்களிக்குமாறு சோலையிலுள்ள பல வளங்களையும் காட்டுவாராயினர்.}

எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
முறுக்குடைந் தலர்ந்த மலர்களுந் தளிரு முருகுலாய்க் கவின்றபூங் கொம்பர்
நறைக்கொடி படர்ந்து தழுவிவந் தலைக்கு நாகிளங் காலினா லசைவ
நிறைக்களித் தலைவ ரொடுமட மகளிர் நிகழ்த்திடு கலவிதோற் றுவபார்
கறைக்கன மிகந்து மதுத்துளி துளிக்குங் கடிமலர்க் கதுப்பிளந் தோகாய்      180
[கறைக் கனம்- கருக்கொண்ட மேகம். இகந்து- மிக்கு. கடிமலர் – நறுமண மலர். கதுப்பு- கூந்தல், தோகாய்- உவமையாகு பெயர். தேன் சிந்தும் நறுமண மலரை அணிந்த மயில் போன்றவளே. இறைவிக்கு விளி. கருக்கொண்டமேகம், மதுத் துளி துளித்தற்கும், கூந்தலின் நிறத்திற்கும் உவமை.பிணிப்புத் தளர்ந்து அலர்ந்த மலர்களும் தளிரும், மணங்கமழ்ந்து , பூக்களுடைய கொம்பினை நறுமணமலர்க்கொடி தென்றல் வீச வந்து தழுவி அசைவது தலைவரொடு மடமகளிர் நிகழ்த்திடும் கலவியைத் தோற்றுவதைப் பார். . நாகு இளங்கால்- தென்றல்.]

தென்றல் வந்தசைப்பத் தரைவிழுந் தொசியுந்
      தேங்கமழ் மலர்க்கொடிப் பாங்கர்
மன்றலந் துணர்ப்பூங் கொம்பர்கள் குரங்கி
      யாடுவ புலந்தமங் கையரைக்
கன்றிய காமத் தலைவர் செந்தளிர் மென்கழல்
      பணிவதுதெரிப் பனபார்
வென்றி கொள்சிலையும் பிறையு மேக்கறுப்ப
      விளங்கிய திலகவா ணுதலாய்       181

[வெற்றி கொள்ளும் வில்லும் பிறையும் ஏங்குமாறு விளங்கும் அழகிய நுதலுடையாய்! (நுதலை யுடையவள் இறைவி). தென்றற்காற்று வந்து அசைக்க, அசையும் தேன்கமழ் மலர்க்கொடியின் அருகில், மணமலர்ப்பூங்கொம்புகள் வளைந்து ஆடுவது, ஊடிய மங்கையரைக் காமம் தழும்பிய மைந்தர்கள் குனிந்து காலில் பணிந்து ஊடல் தணிக்கும் முறையினைத் தெரிவிப்பது பாராய். குரங்கி- வளைந்து. செந்தளிர் மென்கழல்- தலைவியரது அசோகந்தளிர் போன்ற மெல்லிய பாதம். வில்லும் பிறையும் நெற்றியின் வளைவுக்கும் ஒளிக்கும் உவமை.]

கடித்துணர்ப் பனிப்பூந் தேறல்வாய் மடுப்பக்
      காமர்கொம் பிடத்துமண் கிடந்த
கொடித்திர ளிடத்துஞ் சென்றுசென் றணவுங்
      குரற்சுரும் பிளையவர் பாலும்
பொடித்தபொற் றனத்தார் மருங்கிலுந்
      திரியும் புலவிதீர் சேடர்போல் வனபார்
பிடித்தயிற் பகழி தொடுத்திடா தமர்செய்
      பெருவிறற் புருவவிற் படையாய்       182

[கூரிய அம்பு தொடுத்திடாது போர் செய்கின்ற பெரிய வெற்றியை உடைய புருவமாகிய விற்படையை உடையவளே! மணமுள்ளதும் கொத்தானதும் குளிர்ச்சியுடையதுமாகிய மலர்களில் உள்ள தேரலை வாய்மடுப்ப மலர்க் கொம்பிடத்தும், மண்மேற் கிடந்த கொடித்திரள்களிடத்திலும் சென்று சென்ரு பொருந்துகின்ற குரல் என்னும் சுரத்தில் இசைகின்ற சுரும்புகள், மைந்தர்களிடத்திலும் பொன்போன்ற தேமல் பரந்த தனத்தையுடைய மகளிரிடத்திலும் ஊடல் தீர்க்கும் சான்றோர்கள் போன்றிருத்தலைக் காண்பாயாக. கடி- மணம், புதுமை, துணர்- கொத்து,. மண் கிடந்த கொடித்திரள்- ஊடலில் சினங்கொண்ட மகளிர் நிலத்தில் கிடத்தலைப் போல கொடித்திரள் மண்மேற்கிடந்தது. குரல்- ஏழு சுரங்களில் ஒன்று. சேடர்- சான்றோர். உட்டிய மகளிரைத் தலைவருடன் சேர்த்து வைக்கும் வல்லமையுடைய சான்றோர். ]

அரிக்குரற் சிலம்பு மிழற்றிய சும்மைக்
      கஞ்சிறைச் சுரும்பின மிரிவ
வெரிக்கணி னவிந்த காமனுக் கந்நா
      ளிருஞ்சிலை நாணெனப் போந்து
பரிக்குந்தம் பிழையை நினைந்துமுன் னிற்கப்
      பயந்தமை தெரிப்பன பாராய்
விரிக்கும்வெண் டரங்க வேலையி னகன்று
      வேலெனக் கூர்த்தவாள் விழியாய்      183

[வெள்ளலைகள் வீசும் கடலைப் போன்று அகன்று வேலினைப் போன்று கூர்த்த விழியினை உடையாய்!, தவளைகள் போல ஒலிக்கும் உன் சிலம்பின் ஓசைக்கு அஞ்சிய சுரும்பினங்கள் நெருப்புக் கண்ணால் எரிந்துபோன காமனுக்கு அந்தநாளிலே கரும்பு வில்லுக்கு நாண் எனப்போந்து சுமக்கும் பிழையை நினைந்து முன் நிற்க அஞ்சியமையைத் தெரிவிப்பன பாராய்!. அரிக்குரல் – தவளையின்குரல். இரிவ- அகல்வ. பரிக்கும்- சுமக்கும். தவறு செய்தவர் செய்யப்பட்டவர்க்கு முன் நிற்க அஞ்சி அகல்வர் என்ற உண்மையை சுருப்பினம் மேல் வைத்துக் கூறினார்.]

நந்தமை நோக்குங் கிள்ளைகள் பூவை
      நயப்புற நுதல்விழிப் பெருமான்
வந்தன னறிகென் றுரைப்பன தேரின்
      வாம்பரி யெனத்தமை யுடையாற்
கந்திலம் மதவேள் பாசறை தனில்யா
      மணைதிற மொழிவதேய்ப் பனபார்
கொந்தொளி மணிப்பொற் குதம்பைநான்
      றெருத்திற் குலாவுறும் வார்செவிப் பாவாய்      184
[குதம்பை- காதணி வகை. ஒளி எரிக்கும் மணிப் பொற்குதம்பை பிடரியில் தாக்கும் வகை தொங்கும் செவியுடைப் பாவையே!, நம்மை நோக்கும் கிள்ளைகள் பூவைகள் விருப்பத்துடன் நெற்றிக்கண்ணுடைய பெருமான் வந்தனன்; அறிக என்று தென்றல் தேரில் பாய்கின்ற பரிகள் எனத் தம்மை உடையானாகிய மன்மதவேளுக்கு யாம் அவனுடைய பாசறைக்கு அணைவதை உரைக்கும் திறம் போல மொழிவதைக் காண்.மன்மதனது தேர் தென்றல். அதனை ஈர்ப்பன கிளிகளும் பூவைகளும். மதவேள் பாசறை- பூஞ்சோலை. எருத்து- பிடரி.]

மட்டவி ழிதழின் வனமுருக் கெதிரே
      முழுவது மலர்ந்தொளிர் தோற்றங்
கட்டழ குடைய காமன்பா சறைக்கட்
      கண்டெமைப் பொரவுருக் கொண்டு
சட்ட வந்தழலின் மறுவலு மெரியுந்
      தன்மையைத் தெரிப்பன பாரா
யட்டொ ளியரத்தச் செய்யவாய்க் குமுத
      வலர்பொருங் கோமளக் கோதாய்      185

[செவ்வல்லி போலச் சிவந்த இதழ்கொண்ட இளமங்கையே! தேன் அவிழும் இதழுடன் அழகிய முருக்கு எதிரே திரண்டு மலர்ந்து ஒளிரும் தோற்றம்மிக்க அழகுடைய காமனைப் பாசறையின்கண் கண்டு எம்முடன் போரிட உருக்கொண்டு விரைந்து வந்து அழலில் மீண்டும் எரியும் தெரிவிப்பன பாராய். வன முருக்கு- முள் முருங்கை அதன் மலர் தீயின் வண்ணமுடையது. சட்ட- விரைவாக. மறுவலும்- மறுபடியும். மட்டு- மது, தேன்.கோமளம்- இளமை.]

அளியின முரலத் தளிர்த்தலர் கொடிமுன்
      னலைந்துவீழ்ந் தொசிவுறு தோற்ற
மொளிவிழித் தழலி னுருவழி வேளை
      யுதவுகென் றன்னவன் மனையாந்
தெளியிழை யிரதி மறுவலும் வணங்கி
      யிரப்பது தெரிப்பது பாராய்
தளிரிடை யரும்புந் தளவவெண் முகையிற்
      றயங்கிய தவளவா ணகையாய்       186

[தளிர்களின் இடையில் அரும்பும் காட்டு முல்லைமுகைபோல விளங்கும் வெண்மையான பற்களை உடையாய்! வண்டினம் முரலத் தளிர்த்து மலரும் கொடி நம் முன் அலைந்து ஒசிந்து விழும் தோற்றம், நெற்ரி விழித் தழலில் உருவழிந்த காமவேளை உயிர்ப்பித்து அருளுக என்று அவனுடைய மனையாளாம் இரதி பலச்காலும்ம் வணங்கி இரப்பதைத் தோற்றுவது காணாய்.]

பாசொளி விரிக்கும் நினதுரு நோக்கிப்
      பசுமுகிலென மடமயில்பே
ராசையி னெழுந்து நடிப்பன தமையூ
      ரறுமுகக் குரிசிலை யுயிர்த்த
நீசர ணொதுங்கி வரப்பெறும் பேற்றா
      னிகழ்களி தெரிப்பன பாராய்
தேசவிர் முருக்கி னிறங்கவர்ந் தமிழ்தத்
      தீஞ்சுவை பயின்றவா யிதழாய்       187
[தம் இன மயிலை ஊரும் அறுமுகனைப் பெற்ற நின் திருவடிஅருகில் ஒதுங்கி வரப் பெறும் பேற்றால் பச்சையொளி விரிக்கும் நினது உருவைநோக்கிப் பசிய முகில் என அழகிய மயில் மிக்க விருப்பத்துடன் எழுந்து நடனம் ஆடுவதைப் பாராய்! முருக்கின் செந்நிறங்கவர்ந்து அமிழ்தத் தீஞ்சுவை பயின்ற வாயினையுடையாய்! பாசொளி- பச்சையொளி- அம்மையின் நிறம். நீலம், பச்சை, கருப்பு இம்மூன்றும் ஓரினமாகக் கூறப்படும்].

நெருப்பவிர்ந் தனைய செய்யமாந் தளிர்க
      ணீனிறக் குயில்கொழு துவநின்
குருப்பொலி மணிவாய் மொழிக்கு நேராகக்
      கருதிநின் கொழுங்கனி வாயி
னுருப்பொலி வுடைய செந்தளி ரிரத
      முண்பது தெரிப்பன பாராய்
மருப்பொலி கமுகின் கண்டமும் வளையும்
      மறலிய மங்கல மிடற்றாய்       188

[மணம் பொலிகின்ற கமுகின் கண்டத்தையும் சங்கினையும் மாற்பட்டு வென்ற மங்கல மிடற்றை உடையாய்!, உன்னுடைய அழகிய மணிவாயின் சொற்களுக்கு நிகரான இனிமையைப் பெறும் பொருட்டு நெருப்புப் போல ஒளிவிடும் மாந்தளிர்களைக் கருங்குயில்கள் கொழுதி நிறப் பொலிவுடைய செந்தளிரின் இரசத்தை உண்பதைத் தெரிவிப்பதைப் பாராய்.]

இடைதெரி யாமற் குயிற்குல மிசையி
      னிரங்குவ எந்தமைக் காணூஉக்
கொடியின மெடுத்த குடம்பை கள்நேடிக்
      கொழுங்கரு வுயிர்த்திட லரிதா
லுடைய வயாமே வளர்த்திய வருளென்
      றோலிட றெரிப்பன பாராய்
சுடர்மணி யுகுக்கு மமையொடு கரும்பைத்
      தொலைத்தெழில் வாய்ந்தபூந் தோளாய்      189
[ஒளிவீசும் மணிகளை உகுக்கும் மூங்கிலொடு கரும்பை வெற்றிகொண்ட எழில் வாய்ந்த அழகிய தோளினாய்! (வடிவால் மூங்கிலும் இனிமையால் கரும்பும் தோளுக்கு உவமை). எம்மைக் கண்டு காக்கைக் கூட்டம் கட்டிய கூடுகளில் தேடி கொழுங்கரு உயிர்த்திடல் இல்லை; யாமே அன்பினால் அவற்றை வளர்த்தோம் என, இடைவெளி விடாமல் குயில் கூட்டம் இசைக்கின்றன இடைவெளி விடாமல் குயில் கூட்டம் இசைக்கின்றன பாராய். இடை- சமயம். காணூஉ-கண்டு, செய்யூ என்னும் வாய்பாட்டு வின்யெச்சம். கொடி-காக்கை. குயில், தன் முட்டையைக்காக்கையின்கூட்டில் இடு. அக்காக்கை அடைகாத்தலின் குஞ்சு வெளிப்படும். வெளிப்பட்ட குஞ்சுவின் குரல் மாறுபட்டொலிபதனால், காக்கை அதனை வெளியே த்ரத்தும். சிவனிடம் குயிற்குலங்கள் தாமே குஞ்சுகளை உயிர்ப்பித்ததாக முறையிடுகின்றன போல இடையீடின்றிக் கூவுகின்றன. ஓலிடல்- முறையிடல். நேடி- தேடி]

மலைத்தமிழ் முனிபாற் பழகிய பயிற்சி
      மாண்பினைத் தெரிப்பது போல
அலைத்திரட் சுனைநீர் படிந்து மாதவர்மெய்
      அலங்கிய பூதிமெய் தோய்ந்து
கலித்திர ளருவித் துளிமணந் தென்றல்
      கவர்ந்துலாய் வழிபடல் காணாய்
ஒலித்தடத் துயிர்க்குங் கமலநீத் தடுக்கற்
      காந்தளோ டுறவுகொள் கரத்தாய்       190

[ஒலிக்கின்ற தடத்தில் பூக்கின்ற தாமரை மலரை ஒதுக்கி, மலைச்சாரலைல் மலரும் காந்தளூடன் உறவு கொள்ளும் கரத்தாய்! (காந்தள் மகளிரின் கரத்துக்கு உவமை) பொதியமாமலை முனிவராகிய அகத்தியருடன் பழகிய பயிற்சியின் சிறப்பைத் தெரிவிப்பது போன்று, தென்றல் அலைகளை உடைய சுனைநீரில் மூழ்கி, மாதவர்களின் உடலில் விளங்கும் திருநீற்றினைப்போல் மகரந்தப்பொடி தோய்ந்து ஒலிக்கின்ற அருவியின் நீர்த்துளி மணக்க வந்து உலவி வழிபடல் காணாய்!. மலைத்தமிழ் முனி- அகத்தியர். தென்றல் அகத்தியரின் பொதியமலையில் பிறந்தது..]

எழுதரு நினது மெய்யுறுப் பாதி யெழிலினைக்
      கவருவான் முன்னிக்
குழுமிய செயல்போற் குஞ்சரஞ் சீயங்
      கோலமான் பிணைமயில் கிள்ளை
வழுவில்பாண் மிழற்றும் பூவைகள் பிறவும்
      வயின்வயின் வெறுத்தமை பாராய்
செழுமணித் தரள வடஞ்சுமந் தெழுந்து
      சேண்வெளி யடைக்கும்பூண் முலையாய்      191
[முத்துமணி மாலைகளைச் சுமந்து எழுந்த முலைகளை உடையாய்! ஓவியத்திலு எழுதற்கு அரிய நின்மேனியின் அழகினைக் கவர நினைத்துக் கூடியதைப் போல, யானை, சிங்கம், கோலமான்பிணை, மயில், கிள்ளை, இசைபாடும் பூவை, மற்றும் பிறவும் ஆங்காங்கே திரண்டு இருத்தல் காணாய்! யானை- நடை, சிங்கம்- இடை, மான் பிணை- கண் மருட்சி, மயில்- சாயல், கிள்ளை, பூவை- மொழி இனிமை. ]

நாம்புகு மளவிற் பசும்பொழி லெமக்குக்
      கையுறை நல்குவ தென்ன
மாம்பழம் வாழைப் பழநெடுஞ் சுளைய
      வருக்கைநீள் பழம்விளம் பழங்க
டேம்படு பூகந் தெங்குமுந் திரிகைச்
      செழும்பழ மாதிசிந் துவபார்
பாம்பெனக் கவின்ற நிதம்பமேற் றழங்கும்
      பருமமே கலையணி மடவாய்      192

[பாம்பு என அழகிய நிதம்பமேல் விளங்கும் பெரிய மேகலை அணிந்த இளமகளே! நாம் சோலையினுட் புகுந்த அளவிலே நமக்குக் கையுறை அளிப்பதுபோல, மாம்பழம், வாழைப்பழம், நீண்ட சுளையுடைய பலாப்பழம், விளாம்பழங்கள், இனிய பாக்கு, தெங்கு, முந்திரிகைச் செழும் பழம் முதலியவற்றைச் சிந்துவ பாராய்!]

புரிமுறுக் குடைந்து மலர்த்திர ளுகுக்கும்
      புதுமதுத் தோய்ந்துதா தளைந்து
விரியொளி தவளக் குவட்டினஞ் சேப்ப
      விரைகெழு குங்குமச் சேற்றுப்
பெரியநின் முலைக ளொக்குமா முயலும்
      பெற்றிமை தெரிப்பன பாராய்
கரிநெடுந் தடக்கை கதலியென் றிரண்டுங்
      கவற்றுறச் சேர்ந்துவார் தொடையாய்       193
[யானையின் நீண்ட தும்பிக்கை, வாழைமரம் இரண்டும் தோற்ருக் கவலையுறுமாறு அழகிய நீண்ட தொடையுடையாய்!, பிணிப்புத் தளர்ந்து மலர்க்கூட்டங்கள் உகுக்கும் புதிய தேன் தோய்ந்து, மகரந்தத் தாது அளைந்து ஒளிவிரிக்கின்ற வெண்மையான சிகரங்களை உடைய மலைகள், குங்குமச் சேற்றால் சிவந்து, மணங்கமழ்கின்ற பெரிய நின் முலைகளுக்கு நிகராதற்குச் செய்யும் முயற்சியை வெளிப்படுத்தலைப் பாராய்! குவட்டு இனம்- இரு மலைகள். தவளக் குவடு- வெள்ளிமலை. தவளக் குவட்டினம் தோய்ந்து அளைந்து சிவத்தலால் முலைகளொக்குமா முயலும் ]

தேந்துளி துவற்றி யிளந்தளிர் பரப்பிச்
      சீறிதழ் மலர்த்திரள் குவவிப்
பூந்துக ளதன்மேற் புதைபடச் சொரிந்துன்
      பொலங்கழல் பனிப்புறா வண்ண
மேந்தலர்ப் பொதும்பர் சிலதிய ரெனநின்
      னேவலி னிற்பது பாராய்
காந்துபன் மணியி னரிக்குரற் சிலம்பு
      கறங்குபொற் கமலச்சீ றடியாய்       194

[ஒளி வீசுகின்ற, மணிப் பரல்களை உடைய, தவளையினத்தின் ஒலிபோல ஒலிக்கின்ற சிலம்பு அணிந்த அழகிய செந்தாமரை மலர் போன்ற சிறிய அடியை உடையாய்! அலர்களை ஏந்திய பூஞ்சோலை தேனைத் தெளித்து, இளந்தளிர்களைப் பரப்பி, சிறிய இதழ்களையுடைய மலர்கலைக் குவித்து, அவையெல்லாம் புதைபடுமாறு தாதுப் பொடித்திரளை அதன் மேல் பரப்பி, உன்னுடைய அழகிய பாதம் உறுத்து நடுக்குறாவண்ணம் செய்து, ஏவலுக்குக் காத்திருக்கும் பணிமகளிர் போல நிற்றலைக் காண்பாயாக! தேம்- தேன். துவற்றி- கலந்த. சீறிதல்மலர்- சிறிய இதழ்கள், பெரிய இதழ்கள் காலை வருத்துமாதலின். குவவி- குவித்து, எங்கும் பரப்பி, கழல்- தானியாகு பெயராகப் பாதத்தைக் குறித்தது. பனிப்பு- உறுத்தலினால் ஏற்படும்நடுக்கம். சிலதியர்- பணிமகளிர். காந்து- பேரொளி செய்யும்.]

நெட்டிள மூங்கில் கண்தொறும் தரளம்
      நிரைபட வுகுப்பன வனிச்ச
மட்டவிழ் மலர்மேன் மிதிக்கினும் பனிக்கு
      மலர்புரை நினதுதாள் பொதும்பர்
உட்டதை மலர்மேல் என்படா தெனமிக்
      குருகிநின் றழுவநேர் வனபார்
அட்டொளியுருவச் சாயலான் மயிலென் றயிர்ப்புறு
      நுணங்குசிற் றிடையாய்       195

[உருவச் சாயலினால் மயிலோ என ஐயுறப்படும், நுண்ணிய சிற்றிடையாய்!, தேன் அவிழும் மெல்லிய அனிச்ச மலரை மிதிக்கினும் நடுக்குறும் மலர்போன்ற நின் பாதம், சோலையுள் மிகுந்து பரந்துகிடக்கும் மலர்களின் மேல் பட்டால் எத்தகைய வருத்தத்தை அடியுமோ என உருகி நின்று அழுவபோல, மூங்கில்கள் கணுக்கள் தோறும் முத்துக்களைச் உகுக்கும் காட்சியினைப் பாராய். ‘’அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்” நெட்டிள மூங்கில்- நீண்ட மூங்கில், இள மூங்கில். கண்தொறும் – கணுக்கள் தோறும். தரளம்- முத்து. நிரைபட- வரிசையாக. அயிர்ப்பு- ஐயம். நுணங்கு- நுண்-சிறுமை,]

வளையின முயிர்த்த மணியினா லரவ
      மணியினா லன்றியஞ் சுடர்கண்டு
ஒளியித ழவிழாக் குமுதவம் புயங்க ளுறந்தநீர்
      நிலையகம் பொலிவ
களிவரு வேனிற் குடைந்துசார்ந் தொளித்த
      கரவினைத் தெரிப்பன காணா
இளிவரு தீஞ்சொ லமுதென விசைக்கு
      மிணைவரா லனகணைக் காலாய்       196

[வளை இனம்- சங்குக் கூட்டம். அஞ்சுடர்- சந்திர சூரியர்கல். அம்புயம்- தாமரை. உறந்த நீர் நிலை- நீர்நிறைந்த தடங்கள். களி வரு வேனில்- மயக்கந்தரும்வேனிற்காலம். உடைந்து – தோற்ரு. ஒளித்த கரவு- மறைந்து வாழும் சூது. தெரிப்பன- விளக்குவன.இளி- இசையின் வகை.இளி என்னும் இசையுடன் அமுதென இனிக்கும் பேச்சினையும் இணையான வரால் மீன்கலிஅயிஒத்த கணைக்கால்களையும் உடையோய்! சங்குக் கூட்டம் உயிர்த்த மணிகளும் (முத்துக்கள்,வெண்ணிறமானவவை), நாகமாணிக்கம் (செந்நிறம்) ஆகிய இரண்டின் ஒளியினாலன்றி இதழ் விரியாத குமுத மலர்களும் தாமரை மலர்களும் நீர் நிலைகள் பொலிய மலர்ந்திருப்பது வேனிலுக்குத் தோற்றுச் சந்திரனும் சூரியனும் அங்கு மறைந்து வாழ்வதனைத் தெரிவிக்கின்றன காணாய்!. சந்திரனைக் கண்டன்றி அவிழாக் குமுதமும் சூரியனைக் கண்டன்றிமலராத் தாமரையும் முறையே வளையின் ஈண்ற முத்துக்களைகண்டும் நாகமணியைக் கண்டும் இதழ் அவிழ்ந்தன. இந்நிகழ்ச்சி சந்திர சூரியர்கள் அச்சோலையில் மறைந்து உறைவதனைக் காட்டின.]

பல்வகை நிறத்த மலர்களுந் துறுமிப்
      பரந்தொளிர் பொதும்பரி னீட்டங்
கல்வள ரடுக்கற் குவடுசூழ் கயிலைக்
      காரிகை மடவர லணங்கு
வில்வளர் நுழைநூற் சித்திர வுடுக்கை
      விரித்துடுத் தமைபொர னோக்காய்
மல்வள ரிபமும் தோகையும் அனமு
      மருட்டுகட் கினியமென் னடையாய்       197

[வலிமை மிக்க யானையும் மயிலும் அன்னமும் மருளுதற்குக் காரணமான காட்சிக்கினிய நடையின உடையாய்!, பலவகை நிறத்த மலர்களும் நெருங்கி, ஒளிபரப்புகின்ற சோலையின் திரட்சி, அடுக்கல் சிகரங்கள் சூழ்ந்த கயிலைமலை என்னும் பெண்ணழகி , ஒளி மிக்க பல்வகை நிறத்த சித்திரங்கள் உள்ள ஆடையை விரித்து உடுத்தது போன்றிருப்பதைக்காணாய்!. துறுமி- நெருங்கி. வில்- ஒளி. உடுக்கை- ஆடை. இபம் – யானை. பலநிறங்களுடைய மலர்கள் நிறைந்த சோலை, கயிலைமலையாகிய பெண் உடுத்த பன்னிறச் சேலையை ஒக்கும்.]

இனையவா றளவில் வளங்களுங் காட்டி
      யென்னையா ளுடையவ ளோடுங்
கனையுமா மறைப்பொற் சிலம்புகள் கறங்கக்
      கழலடி மென்மெலப் பெயர்த்து
வினைகணீத் துலக முந்திடச் செல்லும்
      வெண்பிறைக் கண்ணியா ரங்க
ணனையவாஞ் சோலை நடுவண் வீற்றிருக்கு
      நனந்தலை மண்டபங் கண்டார்       198

[இவ்வாறு கயிலை மலைச்சோலையில் அமைந்து கிடந்த அளவில்லாத வளங்களையும் சுட்டிக் காட்டி, என்னை ஆலுடையவளாகிய இறைவியொடும் மறைகளாகிய பொற்சிலம்புகள் ஒலிக்கக் கழலணிந்த அடிகளை மென்மெலப் பெயர்த்து வெண்பிறையக் கண்ணியாக உடைய இறையவர் அத்தகைய சோலைக்கு நடுவில் அழ்குடன் திகழ்ந்த இடமகன்ற மண்டபத்தைக் கண்டார்.
கனைதல், கறங்கல்- ஒலித்தல். உலகம்- உயிர்கள். உயிர்கள் வினைகளை ஒழித்து முன்னேறுவத்ற்காக முன் செல்லும் . கண்ணி-தலைமாலை]

கலிவிருத்தம்
எண்ணில்வள னும்புரிய வல்லமென எண்கண்
அண்ணலொடு தெய்வவய னாதியர் தருக்கா
வண்ணநதி வேணியவ ரேபுரி வனப்பி
னண்ணுமணி மண்டபந லஞ்சிறி துரைப்பாம்.       199.
[மனத்தாலும் கருதமுடியாத பல வளங்களும் படைக்க வல்லேம் எனப் பிரமனும் தெய்வத்தச்சர் முதலியோர் தருக்கடையா வண்ணம் கங்கையணி சடையராகிய எம்பிரானே படைத்தவற்றின் சிறப்பில் பொருந்தும் மணிமண்டபத்தின் நலனைச் சிறிது உரைப்பாம்.]

வெண்மணிய டித்தலம் விரித்திடை யிணங்க
வொண்மையொளி காலும்வயி டூரிய முறுத்தி
யண்ணன்மணி நீலமத னும்பரி னழுத்தி
வண்ணமலி பொற்குறடு வையம்விலை கொள்ளும்       200
[வெண்மை நிறம் உடைய மணியால் அடித்தலம் வேய்ந்து, அதில் ஒளிவீசும் வயிடூரியங்களைப் பொருத்தி, விலைமதிப்புடைய நீலக்கல்லினை அதன்மேல் அழுத்திய நிறம்மலைந்த அழகிய திண்ணை உலகத்தையே விலை கொள்ளும். அண்ணல் மணி நீலம்- மதிப்பு உயர்ந்த நீலக்கல். அழுத்தி- அழுத்திய- குறுக்கல் விகாரம். வண்ணம் நிறம். பொன் – அழகு . குரடு- திண்ணை.]

நீலநில மீதுநிகழ் செக்கர்மணி விற்றூண்
சாலமிசை யோங்குவ தழங்கு மிருள்வேலைப்
பாலணவு துப்புவரில் பாணியுண வேட்டு
மேலமரு முந்திசெல மேக்கெழுவ போலும்       201
[வில் தூண்- ஒளியுடைய தூண். நீலக்கால் பாவிய தரைமீது சிவந்த மணி யாலான ஒளிமிக்க தூண் மிக உயர்ந்து விளங்கின. அது இருள்போன்ற நீலக்கடலி தோன்றிய பவளம் உவர்ப்பு இல்லாத நல்ல நீரினை விரும்பி, கங்கையை நோக்கி மேல் எழுவது போன்றிருந்தது. தழங்கும்- விளங்கும். இருள் வேலை- கருங்கடல். வேலைப்பால்- கடலிடத்து. துப்பு பவளம்,செந்நிறமுடையது. வேட்டு- விரும்பி. மேல் அமரும் உந்தி- வானகங்கை ஆறு. உந்தி- ஆறு. மேக்கு- மேலே]

அன்னவொளிர் தூணமிசை வச்சிர மரிந்து
மின்னுகமு கட்டுவெளி மேய்ந்ததிறம் விண்ணின்
முன்னியெழு செந்துகிர் முகந்தகுளிர் கங்கை
நன்னதிப ரந்தொளிர் பரப்பென நலக்கும்.      202
[அன்ன ஒளிர்- அங்ஙனம் ஒளிர்கின்ற. தூணமிசை- தூணின் மேல். வச்சிரம் அரிந்து- வயிரக் கல்லைத் துணித்து. முகட்டு வெளி- மேற்கூரை. பவளம் மேலெழுந்து முகந்த கங்கையாறு பரந்து ஒளிர் பரப்பல் ஒக்கும். நலக்கும்-அழகு செய்யும்.]

வேய்ந்தமுக டெங்கும்வளை மீன்கமட மன்னம்
பாய்ந்துதிரி வண்டுபது மங்குமுத மாதி
காந்துமணி யிற்புனை கவின்றவுரு விண்ணத்
தேய்ந்தநதி மல்குவள னென்னவெழில் காட்டும்       203
[வச்சிரம் வேய்ந்த முகடு(கூரை) எங்கும் சங்கு, மீன், ஆமை, அன்னம், பாய்ந்தி திரி வண்டுகள், தாமரை, குமுதம் முதலியன ஒளி காந்தும் மணியினால் சமைந்த உருவங்கள் கங்கை நதியின் வளமென எழில் காட்டும்]

முத்தணிவடங் கண்முழு வெண்ணிலவு காலக்
கொத்தொளிய நாகமணி கூர்ந்த வெயில்காலத்
தத்தொளிய நாசிகட யங்குவன வேணி
வித்தகர்மு கங்களென மிக்குவகை யேய்க்கும்.       204
[மண்டபத்தில் இருந்த தோரணங்கள் முத்துவடங்கள். அவை முழு வெண்ணிலவு வீசின.நாகமணிக் கொத்துக்கள் சூரியவொளி உமிழ்ந்தன. இவ்வாறு இருவகையொளியையும் வீசும் நாசிகள் விளங்குவது, சடையுடை வித்தகராகிய சிவனது முகங்களை ஒக்கும். நாசி- உத்தரத்தின் மேல் அமைக்கப்படும் ஒருவகை உறுப்பு. அவ்வுறுப்பிலிருந்து இவ்விருவகை ஒளிகளும் பரவலால் சிவனது முகத்தை நாசிகள் ஒக்கும். சூரிய சந்திரர்கல் சிவனது முகத்தில் உள்ள கண்கள்]

மாயவனி கர்ப்பமணி வாய்ந்தநில நாப்பட்
சேயொளி யமார்பின்மணி யொப்பவிருள் சீத்துக்
காயுமொளி வித்துரும மேடையெழில் காட்ட
வேயுமதன் மேலணை மணிக்கிரண மென்ன.       205
[மாயவன் நிகர்ப்ப மணி- நீலமணி- நாப்பண்- நடுவில். வித்துருமம்- பவளம். மார்பின் மணி கவுத்துபம்.நீலநிறத் தரை மீது செந்நிற பவள மேடை திருமாலின் மார்பில் கவுத்துப போல் விளங்கியது அதன் மேல் மணிக்கிரணம் போல அணை இருந்தது]

பத்தியின் வரைந்தபல வுங்கதிர் விராவித்
தத்தமுண் மயங்கியிதன் வண்ணமிது வென்ன
மெய்த்த வறிவாளர்களும் வேறறிய லாகாச்
சித்திரமி யன்றுதிசை போயதிசை மாதோ       206
[மண்டபத்தில் வரிசையாகத் தீட்டப்பட்ட பன்னிற சித்திரங்கள் இருந்தன. மெய்யுணர்வு உடையவர்களும் இஃது இன்ன நிறம் இன்ன உருவமென்று வேறறிய இயலாது என உலகெலாம் புகழ் உடையது. வேறறிதல்- பொது நீக்கி உண்மை அறிதல்.இசை- புகழ். திசை போயது இசை- உலகெலாம் பரவிய புகழ்.]

எந்தைமலை மீமிசை யியங்கின ரிலாமென்
றந்தர மியங்குநர்க ளஞ்சியடை யாளஞ்
சிந்தையுற வாய்ந்தன ரமைத்ததிற மானுங்
கொந்தொளி ஞெமிர்ந்த சிகரக்குரு மணிக்கல்      207
[எந்தை- எங்கள் தந்தை. எங்களுடைஅய் தந்தை உறையும் இல்லம் இது என்று ஆகாயத்தில் இயங்குகின்ற சூரியர்கள் அடையாளம் கண்டு சிந்தையுள் அச்சம் கொள்ளுமாறு அமைத்த திறத்தை ஒக்கும், கோபுரத்தில் ஒளிபரப்பும் குருமணிக்கல். இயங்கும் இனர் இனர்- சூரியர் அவர் பன்னிருவர் ஆதலால் இனர் எனப் பன்மையில் கூறப்பட்டது. அந்தரம்- ஆகாயம். சிந்தையுற- எச்சரிக்கப்பட. ஞெமிர்ந்த- பரப்பிய. சிகரம்- கோபுரம். குருமணி- சுடர்வீசும் மணிக்கல்]

ஊடுபடை சோலையி னொளிப்பவது காணா
வாடுகிளி பேடையென வந்துசிக ரத்தின்
நீடிய மணிக்கிளியை நேசமுட னண்மிக்
கூடவென வூடலுணர் வித்துமதி கொட்கும்.       208
[ஊடிய பெண்கிளி சோலையில் ஒளிந்துகொள்ள, அதைக் காணாது வாடிய ஆண்கிளி தன்னுடைய பெடை எனக் கருதி கோபுரத்தின் மேல் நிலையாக இருக்கும் மாகதமணிக்கல் கிளிய ஆசையுடன் நெருங்கிக் கூடுவதற்கு ஊடல் உணர்த்த முயன்று (அது பெடை அன்மையினால்) மனம் மயங்கும். ஊடு- ஊடி . படைசோலை- நெருங்கிய சோலை. மதி கொட்கும்- அறிவு மயங்கும்]

தத்தமது பேடைபுடை தங்கவும ருண்டு
சித்திர மணிப்புற வணைக்கு மிவர் சேவல்
அத்தகைய சேவல்புடை வைகவும ணைக்கும்
புத்தொளிர் மணிப்புறவை வீழ்ந்திடுபு றாக்கள்      209
[தத்தமது பெடை தம் பக்கத்தில் தங்கவும் மயங்கி, சேவல்கள் அழகிய ஓவிய மணிப்புறவினை அணைக்கும். அடததகைய சேவல் அருகிருக்கவும் யங்கிய பேடை புத்தொளிவீசும் மணிக்கல்லினாலாய புறவை விரும்பிடும். ஓவியம் மற்றும் பதுமைகளாகியவற்றின் சிறப்பை உணர்த்திற்று]

தூற்றுமொளி மாழையி னியற்றியசோ பானம்
நாற்றிசை மருங்கினு நலக்கவியை வித்துச்
சீற்றமலி யாளிதிணி வச்சிரமி ழைத்துப்
பாற்றழுவு மாறுபயில் வித்துளதை யன்றே.       210
[ஒளிசிதறும் பொன்னால் ஆன படிகளுடன் கூடிய மேடையை நான்கு திசைகளிலும் அன்றாக அமைத்து சினமிக்க யாளி உருவங்களை திண்மையான வச்சிரத்தில் செய்து அம்மேடைகளின் மீது பயில்வித்துளது அம்மண்டபம். தூற்றும் – சிதறும். மாழை- பொன். சோபானம்- மேடை நலக்க- அழகாக. இயைவித்து- இயற்றி. பால்- பக்கம். ]

துப்புறும லத்தொகை துரந்தவடி யார்கட்
கெப்புடையு நேரறிய லாகுமிறை யென்ன
வெப்புடையி னின்றுமெழி னோக்கவெளி யாகி
யப்பெரிய மண்டபம லங்கிமண நாறும்.      211
[வலியுடைய மும்மலத்தையும் நீத்த அடியார்களுக்கு இறைவனை எந்த இடத்திலும் நேரேஅறியலாகும் என்னும்படியாக, எப்பக்கத்தில் நின்றாலும் அழகினைக் காணும்படியாக அம்மண்டபம் விளங்கி மகிழ்ச்சி தோற்று விக்கும். துப்பி- வலிம. மலத்தொகை- ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலக்கொத்து. துரந்த- நீங்கிய புடை- பக்கம். அலங்கி- விளங்கி.]

கந்தமலி தெண்புனல் கலந்தன ரொழுக்கும்
சந்தனவ சும்புதவழ் தண்ணிய நிலந்தான்
சிந்துரந றும்பொடிகள் சிந்தியகி லாதி
யுந்துபுகை யேற்றிவிழி யொள்ளொளியை வாங்கும்.      212

[மணமிக்க தூய புனலில் கலந்து மெழுகிய சந்தனக் குழம்பு தவழும் குளிர்ந்த நிலம், செந்நிற சிந்துர நறும் பொடிகள் சிந்தி, அகில் முதலிய நறுமணப் புகையேற்றிக் காண்பார் விழியைத் தன்பாலே வாங்கும். அசும்பு- குழம்பு விழி ஒள் ஓலியை வாங்கும்- கான்பார் பார்வையை அகலாமல் தன்பாலே ஈர்த்து வைத்துக் கொள்ளும்.]

மண்டபம ருங்குற வயங்குநெடு வாவி
முண்டகந றுங்குமுத மூசளிய நீலங்
கொண்டுகுரு கார்ப்பவிரை கூரருவி பாய
வெண்டிரை பயின்றுமணி வீசிவிளை யாடும்.       213
[மண்டபத்தின் பக்கத்தில் விளங்கும் நீண்ட தடாகம் தாமரை, நறுங் குமுதம் வண்டு மூசும் குவளை மலர்கலைக் கொண்டு, பறவைகள் ஆர்ப்பரிக்க, மணம் மிக்க அருவி பாய , வெண்மையான திரைகள் ஓயாது மணிகளை வீசி விளையாடும்]

ஆடுவன பாடுவன ஐயவரு கென்னா
ஓடியெதிர் கொள்ளுவன வாகியுழல் பாவை
நீடுமொளி யாடிமணி மாலைக ணிரம்பிப்
பீடினுயர் பந்தர்பெரி தோங்குமதன் மாடே       214
[மண்டபத்தின் அருகே பந்தல் இருந்தது. அதில் நெடிய ஒளி வீசும் கண்ணாடி மணி மாலைகள் அலங்காரமாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. அம்மாலைகள் அசையுந்தொறும் ஆடிப்பாவைகள் ஆடுவனவாகவும் பாடுவனவாகவும் இரைவனை ஐய! வருக என்று ஓடி எதிர் கொள்ளுவனவாகி அங்கும் இங்கும் உழல்வனபோல் காட்சிஅளித்தன. இத்ஹகைய பீடு பெருமை)உடையதாக அப்பந்தர் இருந்தது.]

எவ்வழகும் எவ்வவர் தமக்கும்இயை விக்கும்
அவ்வழகர் அம்மையுடன் ஆடியமர் வெய்துஞ்
செவ்விமணி மண்டபம தன்திருவ ளத்தைப்
பௌளவவுல கத்தொருவர் பன்னிடவு மாமே.       215

[எவ்வெவருக்கும் எந்தெந்த அழகையும் இயைவிக்கும் சுந்தராகிய இறைவர் அம்மையுடன் விளையாடல் விரும்பி அமரும் அச்செம்மையான மணி மண்டபத்தின் வலப்பத்தையெல்லாம் இக்கடல் சூழ் உலகத்தில் யாரொருவரால் கூற முடியும்?]

வேறு
இன்னணங் கவினிய வீடிலா மண்டப
முன்னுறக் கண்டருண் முதல்வனா ரிமவரை
யன்னையோ டாயிடை யண்மினா ரகனிலாய்
மின்னுகும் பூவணை வீற்றிருந் தாரரோ       216
[இத்தகைய அழகிய ஒப்பிலா மண்டபத்தைக் கண்டு அருள் முதல்வனார் இமயவரை அன்னையாம் இறைவியுடன் அவ்விடத்தை அணைந்து இடமகன்று மின்னொளி உகுக்கும் பூவணைமிசை வீற்றிருந்தார். அரோ- அசை.]

இயலினான் மயிலென விளமயி லீட்டமும்
குயிலென மொழியினாற் கோகில வீட்டம்
மயலுலாய் அண்முற அந்நலார் ஓகையிற்
செயனிலாய்ப் பணிபல செய்குவா ராயினார்       217
[சாயலினால் மயில் என இளமயிலனையார் கூட்டமும், மொழியினால் குயிலனைய , குயிலினார் கூட்டமும் மையலுடையராய் நெருங்கி, உவகையில் பணிபல செய்குவாராய் இருந்தனர்]

செழுமணிப் பாசனத் தேம்புனல் கொணர்குவார்
கொழுமணித் திருவுருக் குளிரநீ ராட்டுவார்
இழைநுழை யாடையா னீர்ம்புன லொற்றுவார்
விழுமிய சந்தன மெய்யெலாங் கொட்டுவார்       218
[ஒளியுடைய பத்திரங்களில் இனிய நீர் கொண்டு வருவார்; உடல் குளிர நீராட்டுவார்; மெல்லிய ஆடையால் ஈரத்தை ஒற்றுவார்; சந்தனக் கலவையை உடலில் அப்புவார்.]

தூவொளித் தமனியச் சுண்ணமே லட்டுவார்
மேவருங் காரகில் விரைபுகைத் தேற்றுவார்
தாவில்சாந் தாற்றியாற் றண்ணென வீசுவார்
கோவைவாய் மணிகளாற் கோலமிக் காற்றுவார்       219
[தூய பொன்னிறப் பொடியினை மேல் பூசுவார்; காரகிலின் மணப்புகையை ஊட்டுவார்; விசிறிகொண்டு குளிர்ச்சிபட வீசுவார்; அழகிய மணிவடங்களால் அழகுறுத்துவார் தமனியச் சுண்ணம்- பொற்சுண்ணம். மேவரும்- விருப்பம் வரும். தாவில்- குறையில்லாத. சாந்தாற்றி- விசிறி. கோல்ம்- அழகு]

குதம்பையும் பட்டமும் குருமணிப் பூணுடை
விதங்களுங் கதிருக மேதக வணிகுவார்
கதழ்ந்துபோய் நீண்மரக் கடிமலர் கொய்துறீஇப்
பதந்தனிற் சென்னியிற் பரிவுடன் சொரிகுவார்       220
[குதம்பை- காதணி. பட்டம்- நெற்றிச் சுட்டி. காதணியும் பட்டமும் நிறமுடைய ஆடைவகைகளையும் ஒளிஉக அணிவிப்பார். விரைந்து போய் சோலையில் மலர்களைக் கொய்து வந்து திருவடிகளிலும் சென்னியிலும் அன்புடன் சொரிவார்]

கண்ணடி சீரெலாங் காணிய காட்டுவார்
வண்ணவூ ணறுவகைச் சுவையொடும் வட்டிலி
னுண்ணிய வென்றுமு னுய்த்தன ரேத்துவார்
தண்ணிய நீரினாற் றாழ்கரம் பூசுவார்       221
[கண்ணாடியில் அழகெலாம் காணுமாறு காட்டுவார். அறுவகைச் சுவையுடைய பலவகை உணவுகலை வட்டில்களில் ஏந்தி வந்து உண்ணுக உபசரித்து ஊட்டுவார். குளிர்ந்த நீரினால் நீண்ட கரத்தைக் கழுவுவார். சீர்- அழகு. காணிய-காணுமாறு. பூசுவார்- கழுவுவார்.]

வாசமார் பாகடை நீட்டுவார் வண்சிலம்
போசையார் நாடக மோகையி னாடுவார்
வேசற வின்றியாழ் பாடுவார் மென்குயில்
கூசநின் றின்சொலான் மங்கலங் கூறுவார்       222
[வாசமுள்ள தாம்பூலத்தை நீட்டுவார்; சிலம்பு ஒலிக்க நடனக்கூத்து உவகையினோடு ஆடுவார்; யாழினோடு வருத்தமின்றிப் பாடுவார்; குயிலும் கூசுமாறு மென்குரலில் மங்கலங் கூறுவார்]
வேறு

பாவை மார்க ளிப்பரிசு போற்றிட
வோவி லின்பமுற் றுறையு மேல்வையின்
மூவ ருந்தொழு முதல்வி யாகிய
தேவி மற்றிது செய்கின் றாளரோ .       223
[பாவை போன்ற சிலதியர் இவ்வாறு பணிவிடைஅகள் ஆற்ற, குறைவிலாத மகிழ்ச்சி கூடியுள்ள இந்நிலையில் மூவருந் தொழும் முதல்வியாகிய இறைவி இவ்வாறு செய்தாள்.]

மாதர் மாலதி வல்லி காணிய
போது வாமெனப் பொங்கி மேலெழுங்
காத லீர்த்தலா லெழுந்து காந்தனார்
பாத மேத்தினள் படர்த லுற்றனள்       224
[அழகிய மாலதிக் கொடியைக் காண்பதற்கு ஆசை ஈர்த்தலால் எழுந்து, கணவனாருடைய பாதத்தை வணங்கினால்; அங்குச் செல்லலுற்றனள். மாதர்- அழகு. மாலதிவல்லி- முல்லைக்கொடி. காதல் போதுவாம் என ஈர்த்தலால் ஏத்தினள் படர்தலுற்றனள்]

நேட ருந்தகை நிமல னாரவ
ணாடு வாரலர்க் கொடிக ளேயிசை
பாடு வார்பசுங் கிளிக ளேபணி
கூடு வார்கொழுந் தென்ற லேயென       225
[(சேடியர்) ‘நேடுதல்- தேடுதல். உயிர்கள் தம்மறிவால் தேடி அறிதற்கு அரியவராகிய நிமலனார் (மலமற்றவர்) இங்கு இனிது வீற்றிருந்தருள்க’ என கொடிகளே!, கிளிகளே! தென்றலே! என அழைத்துப் பாடுவார்; பணி செய்வார்.]

இனிது வீற்றிருந் தருள வேழைமா
ரனைவ ரும்பிரா னருளி னெய்தியே
தனது பாங்கரிற் றதைய மங்கலப்
புனித வாழ்த்தொலி பொங்கி மேலெழ       226
[ தனது- தேவியாரது. நிமலர் இனிதுஇங்கு வீற்றருள் செய்திட வேண்டி, செடியர் அனைவரும் பிரானின் அருளில் அங்கு அடைந்து, தேவியாரின் அருகில் நெருங்கி , மங்கல வாழ்த்தொலி பொங்கி மேலெழ]

சங்கு துந்துமி தாரை தண்ணுமை
வங்கி யங்கிளை மகர யாழுட
னங்க நான்மறை யாதி மல்கிசை
யெங்கு நீண்டுவெற் பெதிரி சைப்பவே       227
[சங்கு, துந்துபி, தாரை, தண்ணுமை, வங்கியம்,மகரயாழ், ஆறங்க நான்மறை முதலியவற்றின் இசையினால் நிறைந்த இசை எங்கும் நிறைந்து கயிலாயமலையில் எதிரொலிக்க, ]
சிலம்பு கிண்கிணி செவ்வித் தாமரைக்
குலம்ப ழித்தநின் கோலச் சேவடி
நிலம்ப டப்பொறா தென்று நெஞ்சுளைந்
தலம்பி னாலென வலம்பி யார்ப்பவே.       228
[அழகிய தாமரை மலர்களின் குலத்தைப் பழித்த(வென்ற) , ஒலிக்கின்ற கிண்கிணி அணிந்த நின்னுடைய அழகிய சிவந்த திருவடிகல் நிலத்தில் படப் பொறாதென்று நெஞ்சு வருந்தி அரற்றிவன போல ஆரவாரிக்கும். செவ்வி- பருவத்தே தோன்றும் அழகு. கோலம்- அழகு. சேவடி= செம்மை+அடி. குலம்- இனம், கூட்டம். உளைந்து- கலக்கத்தினால் தோன்றும் வருத்தம். அலம்பி- அரற்றி. ஆர்ப்பவே- ஒலித்தன.]

என்னை நேர்கிலா விளங்கொ டிக்கிவள்
தன்ன ருட்டிறந் தந்த ளிக்குமா
றுன்னி னாளென வுளைந்து நொந்தென
மின்னி டைக்கொடி மெலிந்து தேம்பிட       229
[ எனக்கு எவ்விதத்திலும் நிகர்கிலாத இளங்கொடிக்குத் தன்னருள் திறத்தைத் தந்து அன்பு செய்யுமாறு நினைத்தால் என மனக்கலங்கி வருந்தியதென்ன மின்னற்கொடி போன்ற இடை மெலிந்து தேம்பிட. நேர்கிலா- நிகரில்லாத. இளங்கொடி- அம்மை வளர்த்த முல்லைக் கொடி. மெலிந்து தேம்பிட- மிக மெலிய. அம்மையின் நுண்ணிடையின் நுண்மையைக் கூறியவாறு.]

சோலைக் கொம்பர்வாழ் தும்பி யைக்குழன்
மாலைக் கூட்டுணப் படர்ந்து வம்மினென்
றாலிக் கூவியாங் களகத் தொங்கலி
னீலக் காரளி நிரைக ளார்த்தெழ       230
[சோலையில் கொம்பின் மீது வாழ்கின்ற தும்பியைக் கூந்தலில் உள்ள மலர்மாலையின் தேனினைக் கொள்ளை கொண்டுண்ணத் திரண்டு வம்மின் என ஆரவாரித்து அழைப்பது போலக் கூந்தலில் தொங்கும் மாலையில் மொய்க்கும் கரிய வண்டுகள் ஆர்த்து எழுந்தன. குழன் மாலை- குழலில் உள்ள மாலை. கூட்டுண- பகிர்ந்து உண்ண. படர்ந்து- திரண்டு. ஆலி- ஆரவாரித்து. அளகம்- கூந்தல். தொங்கல்- தொங்கும் மலர்மாலை. நீலக் காரளி- மிகக் கரிய வண்டு. ]

கட்டொ ளிக்கதிர் காண ரும்பொழில்
இட்ட லைப்படு மிருளொ துங்குமா
வட்ட மிட்டொளி வார்ந்த காதிடைப்
பட்ட பொற்குழை பகல்வி ளக்குற.       231
[கதிர் – சூரியன். கட்டொளிர்- மிக்க ஒளி. இட்டலைப் படும் இருள்= இல்லைத் தலைப்படும் இருள். வீட்டில் தங்கும் இருள். இருள் தனக்குப் பகையாகிய சூரியனது பேரொளி தன்னைக் கண்டு பிடிக்க முடையாத சோலையாகிய தன்னுடைய வீட்டில் ஒளிந்தது போல கரிய கூந்தலின் வெளியே பெரிய காதில் பொன்னாலாகிய கதிர் சூரியனைப் போல விளக்கம் செய்ய. சூரியனின் கதிர் உட்செல்லலாகாத சோலிக்குக் கரிய கூந்தலும் சோலிக்கு வெளியே சூரியன் பிரகாசித்தலுக்கு வார்காதிற் பொற்குழையும் உவமையாயின. ஒதுங்குதல்- ஒளித்தல். வார்ந்த காது – நீண்டகாது. பகல்- சூரியன். பகல் செய்தலின் சூரியன் பகல் எனப்பட்டான்]

கற்கு ழைக்கதிர்ப் பரிதி கண்டதன்
விற்க லங்கியைக் கான்று மெல்லிணர்
தொக்க மாலதி மன்றல் சூழ்வினைக்
கக்க ணாக்குறு மங்கி காட்டவே       232
[கற்குழைக் கதிர்ப் பரிதி- கல் பதிந்த குழையாகிய பரிதி. விற்கல்- சூரிய காந்தக் கல். அங்கி- அக்கினை. கான்று- கக்கி, விளியிட்டு. அக்கண்- அந்த இடத்தில் நாக்குறும் அங்கி- அவிசை உண்ணும் நாகுடைய வேள்வி அக்கினி..
காதிற் குழையாகிய பரிதியைக் கண்ட சூரிய காந்தக் கல் நெருப்பினைக் கக்கி, அந்த இடத்தில் மாலதியின் மணவினைக் குரிய வேள்வித் தீயைக் காட்டியது.]

தேசு லாமுகத் திங்கள் கண்டதன்
ஆசி லாதக லறலு யிர்த்தவள்
ஈசர் மாவினுக் கீந்து வாக்குறும்
வாச மல்குநீர்த் தாரை மானவே       233
[அம்மையின் ஒளி உலவும் முகமாகிய சந்திரனைக் கண்டு, சந்திரகாந்தக் கல் நீர் அவள், ஈசராகிய மாவினுக்கு ஈந்து வார்க்கும் நீர் போல உயிர்த்து வாக்கும். ஆசு இலாத கல்- குற்றமிலாத சந்திரகாந்தக்கல்அறல்- நீர். அறல் உயிர்த்தல்- நீரைக் காலுதல். மா- மாங்கன்று.]

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
கருப்புச் சிலைக்கு நாணா வெம்மைக் கைக்கொண் டருள்கென்
றொருப்பட் டண்மி மொய்த்த லுறழப் பொதும்பர் வண்டு
குருப்பொன் மகரப் பகுவா யொளிருங் கூந்தற் கொழுந்தேன்
மருப்பட் டலருந் தொடையன் மருங்கு வந்து சூழ       234
[மன்மதனின் கரும்பு வில்லுக்கு நாணாகிய எம்மை ஆட்கொண்டருளுக என்று கூடி மொய்த்தலைப் போல, சோலையிலுள்ள வண்டுகள் நிறமுடைய சுறாவினது பிளந்த வாய் போன்ற தலைக்கோலம் ஒளிரும் கூந்தலில் மணத்துடன் அலரும் மலர்த்தொடையலை வந்து சூழ. அம்மை கரும்பு வில்லை உடையவர். மன்மதனின் கரும்பு வில்லுக்கு நாண் வண்டுகள். தம்மைத் தன் கரும்புவில்லுக்கு நாணாகக் கொள்ளுமாறுவேண்டின]

தத்தை யொன்று முன்கை தரித்த நீமற் றெமையும்
வைத்துப் புரத்தல் வேண்டும் வல்லை யருள்கென் பனபோல்
கொத்தின் மலர்கொள் சோலைக் குழுமு கிளிகண் மொழியின்
றித்திப் பிசையி னமரச் சேர்ந்து மருங்கு மொய்ப்ப       235
[தத்தை- கிளி. கிளியொன்றைக் கையில் தாங்கியுள்ள நீ, எம்மையும் காத்தருளல் வேண்டும், விரைவாக அருள்க என்பனபோல, மலர்க் கொத்துக்கள் உள்ள சோலையில் குழுமிய கிளிகள் இனிமையாக இசைத்தவாறு பக்கங்களில் மொய்ப்ப. அம்மை கரத்தில் கிளியை ஏந்தியுள்ளாள். வல்லை- விரைவில். தித்திப்பு இசை- இனிய இசை]

அண்ணல் கரத்து மான்போ லளியி னெமையுந் தாங்கும்
வண்ண மருள வேண்டு மென்று வணங்க வந்தாங்
கெண்ணி னகன்ற விழியி னியல்பை நோக்கி யினமாக்
கண்ணி யுகளு மான்கள் கஞலி யருகு வளைய       236
[ இறைவன் ஏந்தியகரத்து மான்போல அருளினோடு எம்மையும் தாங்கும் வண்ணம் அருளவேண்டும் என்று வணங்க வந்ததைப் போல், அகன்ற விழியின் இயல்பை நோக்கித் தம் இனமாகக் கருதி மான்கள் இறைவியை நெருங்கிச் சுற்றிலும் வளைத்துக் கொள்ள. இறைவன் கரத்தில் மானேந்தியுள்ளான். அளியில்- கருணையினால். எண்ணின் அகன்ற விழி- மிக அகன்ற விழி. கண்ணி- நினைத்து. உகளும்- துள்ளும். கஞலி- நெருங்கி]

காமர் முருக வேட்குக் காதல் யாமுங் கடவுஞ்
சேமப் பரிக ளாகத் திருக்க ணருளென் றுற்றாங்கு
ஏமப் பிறவி யீரு மியலி னினமா வெண்ணிப்
பூமென் கலவ மஞ்ஞை புடையின் மிகவுந் திரள       237
[அழகிய முருகவேளுக்கு யாமும் காதலுடையேம் எம்மையும் சேமப் பரிகளாக (கையிருப்பாக)த் திருக்கடைக்கண் அருளுக என்று அடைந்ததைப் போல, தம்முடைய இனமா எண்ணீ அழகிய தோகையுடைய மயில்கள் அருகில் மிகவுந் திரள. பரி- மயில்; ஊர்தி எனும் பொருளில் வந்தது. எமம்- மய்க்கம், துன்பம். ஏமப்பிறவி ஈரும்- துன்பமுடைய பிறவியை நீக்கும்]


தளிர்மெல் லடிகள் நிலமேல் தங்கி வருந்தும் என்னை
அளியி னூரு கென்னா அன்பின் அனைத்தும் வந்தாங்
கொளிர் பொற்சி லம்பின் ஒலியும் நடையும் பயில வுன்னி
வெளிய அன்னத் தொகுதி மேவிப் புடையின்ஞெமிர       238
[ தளிர் போன்ற உன்னுடைய பாதங்கள் நிலமேல் பட்டு வருந்தும். அதனால், என்னை அருளோடு ஊர்க என்று எல்லாம் திரண்டு வந்ததுபோல், இறைவியின் நடையையும் அவளுடைய சிலம்பின் ஒலியையும் கற்க எண்ணி, வெண்மை நிறமுள்ள அன்னக் கூட்டங்கள் பக்கத்தில் பரவ. சிலம்பொலிக்கு அன்னத்தின் ஒலி உவமையாகக் கூறப்படும். ஞெமிர- பரவ.]
தங்க ளினத்துக் கொடியுந் தருவும் புணர்க்கும் வதுவை
பொங்க இயற்று நினைவாற் போதுஞ் செயலை நோக்கி
அங்கங் கெழுந்த கொடியும் மரமும் மலர்க ளூழ்த்துச்
செங்கட் புனலும் வாக்கி மகிழ்ந்து சேவை புரிய       239
[ தங்கள் இனத்து மாந்தருவையும் முல்லைக் கொடியையும் புணர்க்கும் திருமணத்தை மகிழ்ச்சி பொங்க இயற்றும் நினைவால் அங்கங்கெழுந்த கொடியும் மரமும் மலர்களைப் பூத்து, சிவந்த தேனாகிய புனலையும் வார்த்துச் சேவை புரிய. வதுவை- திருமணம். ஊழ்த்து- மலர்ந்து. செங்கட்புனல்- சிலேடை சிவந்த கண் உவகையால் சொரியும் நீர். கள் நீர்- நீர்போலச் சொரியும் தேன். சேவை- பணிவிடை.]

அருகு நீட்டு மகளி ரம்பொற் கடக முன்கைக்
குருகு கறங்கப் பற்றிக் கோல வடிக ளொதுங்கிக்
கருவி வான மின்னுக் காவி னடைகற் றென்னப்
பொருவின் மகிழ்ச்சி துள்ள மெல்லப் பெயர்ந்து போந்தாள்       240
[அருகில் மகளிர் நீட்டிய கடகம் அணிந்த முன்கையை வளைகள் ஒலிக்கப் பற்றி, வானமின்னல் சோலையில் நடைகற்பதற்கென வந்தது போல அழகிய திருவடிகளை மெல்லப்பெயர்த்துப் போந்தாள்.

வண்டு சூழ, கிளிகல் மொய்ப்ப, மான்கள் வளைய, மயில்கள் திரல, அன்னத்தொகுதி ஞெமிர, கொடிகளும் மரங்களும் சேவை புரிய, பற்றி, ஒதுங்கி, கற்றென்னப் பெயர்ந்து போந்தாள்}

கலிவிருத்தம்
போந்தவிம யத்தலைவி பூத்தகொடி யண்மிச்
சேந்ததளிர் மெல்லடிகள் செங்கை யொளிர் வாயா
வாய்ந்தமுகை மூரன்மலர்த் தொத்துமுலை வாட்கண்
ஏய்ந்தஅளி யாகமக ளென்னவெதிர் கண்டாள்       241
[தான் வளர்த்த முல்லைக் கொடியை அம்மை மகளாகக் கண்டாள். இவ்வாறு போந்த இமயத்தலைவியாகிய இறைவி, பருவமடைந்த முல்லக் கொடியை அணுகி, செந்தளிர்களை மெல்லடிகளாகவும், செங்கரங்களாகவும். வாயாகவும், அரும்புகளைப் பற்களாகவும், மலர்க்கொத்துகளை முலையாகவும் மொய்க்கும் வண்டுகளைக் கண்ணாகவும் இவ்வாறு முல்லைக் கொடியைத் தன் மகளாகத் திருக்கண் சாத்தினாள்.]

ஒண்டொடி மணிக்கையின் வளர்த்த வொருதன்னைக்
கண்டடி வணங்குபு கசிந்து துதியாரக்
கொண்டதென வந்தகுளிர் காலின்முடி கோட்டி
வண்டிசை யிசைப்புநனி மல்கவெதிர் கண்டாள்       242
[ஒளியுடைய தொடியை அணிந்த மணிக்கையினால் வளர்த்த ஒப்பற்ற இறைவியைக் கண்டு அடி வணங்கிக் கசிந்து துதித்ததென, வந்த குளிர் காற்ரினால் முடியை(தலையை) வளைத்து (வணங்கி), வண்டுகள் மிகவும் இசைப்ப எதிர் கண்டாள்]

மன்றல்வினை செய்வகை யறிந்துவது வைச்சீர்
நன்றுபுரி பாங்கியரின் நாறியய னின்ற
கொன்றைநிறை பொன்னணி கொளுத்தி மதுவார்ந்த
மென்றுக ளெனுங்கலவை மெய்யணிவ கண்டாள்         243
[திருமணப் பெண்ணுக்குச் செய்யும் ஒப்பனைகளை செய்யும் முறை அறிந்து வதுவைச் சீர்களை நன்றாகச் செய்கின்ற பாங்கியரைப் போல, நறுமணம் வீசி அயல் நின்ற கொன்றைமரம் நிறையப் பொன்னால் ஆன அணிகளைப் பூட்டி, தேனுடன் கூடிய மகரந்தத் துகளென்னும் கலவையை மணமகளாம் முல்லைக் கொடியின் உடலுக்கு அணிவதைக் கண்டாள். வதுவைச் சீர்- திருமனத்துக்குரிய அலங்காரம். கொன்றை மரத்தை அலங்காரம் செய்யும் பாங்கியராக உருவகித்தது]

தன்னிரு விழிக்கருணை தாங்கள்பெற வெண்ணி
யின்னது செயக்கடவ மென்றமரர் நாட்டுக்
கன்னிய ரதற்க ணொருகாப்புறுவ தேய்ப்ப
மன்னுகுரப் பாவையொடு மாடமமர்வ கண்டாள்         244
[தன் என்றது இறைவியைச் சுட்டியது. இறைவியின் இருவிழிக் கருனையைத் தாங்கள் பெற எண்ணி, இன்னது செய்யக் கடவேம் என்று தேவமகளிர் அங்கு காத்திருத்தலைப் போலக் குராமரங்கள் குரப்பாவையுடன் விருப்பத்தோடு அங்கு இருத்தலைக் கண்டாள். குராமலர்களைப் குரப்பாவை எனல் மரபு. ஏதெமைப் பணிகொளுமாறது கேட்போம் என அரமகளிர் இருந்ததைப் போலக் குராமரங்கள் நின்றிருந்தன.]

ஓங்குமண மன்றல்வினைக் குய்ப்பமலர் மாலை
தாங்கிமட மாதர்பலர் தங்கியது போலப்
பாங்கரின் வளர்ந்துபல வீழ்விழல் கடுப்பத்
தூங்குமலர் மல்குமர வந்துதைவ கண்டாள்         245
[திருமணத்திற்கு வேண்டிய மலர்மாலைகளைத் தாங்கி இளமாதர் பலர் தங்கியதுபோலப் பக்கங்களில் விழுதுகள் வீழ அதில் மலர்கள் தொங்கும் மரவமரங்கள் (வெண்கடம்பு) நெருங்கி இருப்பதைக் கண்டாள்]

மாலதி நறுங்கொடியை மன்றல்வினை யாற்றன்
பாலுரிமை யாக்கவரு பண்பினை யறிந்தாங்
காலிமகிழ் மென்குயில ணைக்குமிள மாவுங்
கோலநிறை வேய்ந்துகுளிர் தூங்குவது கண்டாள்         246

[மன்றல்- திருமணம். ஆலி- ஆரவாரித்து. முல்லைக் கொடியை த் திருமணம் புரிந்து தனக்கு உரிமையாக்க வரும் பண்பினை அறிந்ததைப்போல், ஆர்ப்பரிக்கும் குயிலைத் தன்பால் அணைத்து இளமாமரம் அழகு நிறைந்து குளிர்சியுடன் நிற்பது கண்டாள். மணமகனின் உளக் களிப்பினைக் கோலநிறை வேய்ந்து குளிர் தூங்குவது கண்டாள்’ எனும் தொடரில் உணர்த்தினார்.]

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
இன்னவா றழகு நோக்கு மெம்பெரு மாட்டி யோகைக்
கொன்னெடுங் கடலுண் மூழ்கிக் குளிர்முக மலர்ச்சி காட்டத்
தென்னிறை மன்றல் செய்யச் சிவபிராற் குணர்த்தும் போயென்
றுன்னின ளுங்க ணின்றும் பெயர்ந்தன ளொலிசங் கார்ப்ப         247

[ஒகை- உவகை. கொன்- மிகுதி. தெந் இனிமை. உங்கண்- உவ்விடம். இவ்வாறு அழகிய காட்சிகளைக் கண்ட எம்பிராட்டி, பெரிதும் மிக்க உவகைக் கடலுள் மூழ்கி, உளமகிழ்ச்சியை முகங்காட்ட, இனிய திருமணத்தைச் செய்ய, போய்ச் சிவபிரானுக்கூணர்த்துவோம் என்று நினைத்தவளாக அவ்விடத்தினின்றும் சங்குகல் ஒலிக்கப் பெயர்ந்தாள்.}

தடம்படு குளிர்பூஞ் சோலைத் ததைபெரு வளங்க ணோக்கி
யிடந்தொறுஞ் சார்ந்து மெல்ல வேகுவா ளுரிமை பூண்ட
மடந்தையர் மலர்கள் கொய்து வந்தனர் நீட்ட நீட்டக்
குடங்கையி னினிது வாங்கிக் குளிர்மண முயிர்த்து மோந்தும்         248
[தடம்- நீர்நிலகள். குடங்கை-குழிந்தகை. உயிர்த்து மோந்து- மூச்சினை உள்ளிழுத்து முகர்ந்து. நீர்நிலைகள் அமைந்துள்ள குளிர்ந்த மலர்ச்சோலையில் நெருங்கிய பெருஞ்செழிப்பினை நோக்கி, சேடியர் மலர்கல் கொய்து வந்து நீட்ட நீட்ட அவற்றை வாங்கி அவற்றின் குளிர்ந்த மணத்தை உயிர்த்து முகர்ந்தவாறே ஒவ்வோரிடத்தையும் கடந்து மெல்ல நடந்து சென்றாள்.]

இமிழுசைச் சுரும்புந் தேனு மின்மது நுகர்ந்து கொட்குந்
தமனிய வீழ்நான் றன்ன தளையவிழ் கடுக்கை நோக்கி
யமரர்கள் பெருமான் றெய்வ வலங்கலென் றண்மித் தானே
யுமிழொளிக் கரத்தாற் கொய்து பூங்குழ லும்பர்ச் சேர்த்தும்         249
[இசையாய் ஒலிக்கும் வண்டுகளும் தேனீக்களும் இனிய தேன் உண்டு சுழலும்,பொற்கொடிகள் தொங்கியதைப் போல பிணிப்பு அவிழ்ந்த கொன்றையை நோக்கி, தேவாதிதேவனாகிய எம்பெருமானின் தெய்வத்தன்மை உடைய மாலை இஃது என்று கொய்து அழகிய குழலின் மேல் சேர்த்தியும். சிவபிரானின் அடையால மாலை கொன்றை.இமிழ்- ஒலிக்கும். சுரும்பு- வண்டுகளின் ஒருவகை. கொட்கும்- சுழலும். தமனியந் பொன். வீழ்- விழுது. நான்றன்ன- தொங்கியது போல. தளை- பிணிப்பு. கடுக்கை- கொன்றை. அலங்கல்- மாலை]

இணர்விரி பொதும்பர் நாப்ப ணெறிதிரைப் பட்டம் பூத்த
மணநறு நீலங்கொய் துவந்தனர் நீட்ட வாங்கி
நிணமளை முனைய வேற்க ணீலங்க ளளவ ளாவத்
தணவருங் கடிப்புக் காதிற் றண்ணறா வொழுக வைத்தும்         250
[இணர்- பூங்கொத்து. நாப்பண்- நடுவில். பட்டம்- ஓடை. நீஅலம்- குவளை மலர்; நீலோத்பலம். கருங்அண்ணுக்குவமை. தணவரும் – பிரிய இயலாத. காதணி மங்கலிய மகளிர் பிரியக்கூடாத மங்கலஅணி. பூங்கொத்துக்கள் விரிந்த சோலையின் நடுவே அலைகள் எறிகின்ற ஓடையில் பூத்த நறுமணமுள்ள குவளை மலர்கலைக் கொய்துவந்து உவகையுடன் நீட்ட, வாங்கி மாமிசத்தை அளைந்த கூரிய வேல் நிகரும் கண்ணாகிய நீலங்களோடு குலாவ காதணி உடைய காதில் தேன் ஒழுக வைத்தும். ]

அள்ளிதழ்க் கமலச்செங்கே ழலர்பல கயத்துட் குற்று
வள்ளித ழாய்ந்து கட்டி நீட்டிய தொங்கல் வாங்கித்
தெள்ளொளித் தரள மாலை திணிமுலைக் கமல மொட்டு
நள்ளுமா றவற்றி னுச்சி நாலவொண் கழுத்திற் பூட்டும்.        251
[அள் இதழ்- செறிந்த இதழ். செங்கேழ்- செந்நிறம். கயம்- வாவி. குற்று – பறித்து. குறுதல், மலர் பறித்தலுக்கு மரபுச் சொல். வள் இதழ்- செழுமையான இதழ். ஆய்ந்து- அராய்ந்து. தொங்கல்- நீண்டு தொங்கும் மாலை. தெள் ஒளி- தெளிந்த ஒளி, வெண்மையான ஒளி. தரளம்- முத்து. நள்ளுமாறு- நட்புக் கொள்ளுமாறு. நால- தொங்க. செந்தாமரை மலர்களை வாவியினின்றும் பறித்து வந்து இதழ்களை ஆய்ந்து தொடுத்த மாலையை திண்ணிய முலையாகிய தாமரை மொட்டுடன் நட்புக் கொள்ளுமாறு அதன் உச்சியின் மேல்படத் தொங்க விட்டும்.]

புலியுரு மருளப் பூத்த பூந்துணர் வேங்கை யொள்வீப்
பலபறித் துகுத்த தாது பைந்தொடி மகளிர் நீட்ட
அலர்கரத் தேந்தி யம்பொற் சுணங்கெனும் வேங்கை யோடுங்
குலவவெங் களபக் கொங்கைக் குவட்டின்மேற் செறியப் பெய்தும்         252
[புலியோ என மருளும்படிப் பூத்த வேங்கைமரத்தின் ஒளியுடைய மலர்களை பறித்ததால் உகுத்த மகரந்தத் தூள் தொடியணிந்த கிகளை மகளிர் நீட்ட அலர்ந்த கரத்தில் ஏந்தி அழகிய பொற்சுணங்கு ஏனும் வேங்கையொடும் குலவ கொங்கைக் குன்றின்மீது செறிய அப்பினார். புலி உரு மருள்- கண்டோர் புலியின் வடிவு என்று கருதி மயங்கும்படை. வேங்கை அலர் உகுத்த தாதுக்களைக் கையலரால் ஏந்தி வேங்கப் பூப் போலத் தேமல் பூத்திருக்கும் கொங்கைக் குன்றின் மீது அப்பினர். வேங்கை உகுத்த தாதினை வேங்கயுடனே சேர்த்தலைப் போல]

மருதிளந் தளிர்கண் மாவி னறுந்தளிர்ச் செயலைச் செங்கேழ்
உருகெழு தளிர்கண் மற்று மொய்யெனக் கொணர்ந்து முன்னர்
இருநிலம் பரப்பி மெல்ல வெழுந்தரு ளென்று வேண்டத்
திருவடித் தளிர்கள் சேப்பப் பையப்பையச் செல்லா நின்றாள்         253
[மருத மரத்தினது இளந்தளிர்கள், மாவினது இளந்தளிர்கள், அசோகினது இளந்தளிர்கள் மற்றும் இவைபோன்ற இளந்தளிர்களைக் கொணர்ந்து விரிந்த நிலமெங்கும் பரப்பி மெல்ல எழுந்தருள்க எனப் பாங்கியர் வேண்ட, திருவடித் தளிர்கள் கன்றிச் சிவப்ப இறைவி பைப்பய நடந்து சென்றனள்.]

செக்கர்வா னுருக்கொண் டென்னச் செந்தளி ரிளமா நோக்கி
முக்கண னுருவந் தோற்று முதன்மையைக் குறித்து நீவிர்
இக்கடி மரத்துக் கார வீர்ம்புனல் வாக்கு கென்னாத்
தக்கதன் புடைசூழ் மின்னார் தங்களுட் சிலரை யேவி         254
[செவ்வானத்தைப் போல உருக்கொண்டு எழுந்த செந்தளிர்களைக் கொண்ட இளமாமரத்தை நோக்கி, முக்கணனாகிய இறைவனைன் உருவத்தைத் தோற்ரும் சிறப்பினைக் குறித்து ‘ நீவிர் இக்கடிமரத்திற்கு நிறையத் தண்ணீர் வாக்குமின்’ என்று தன்பக்கல் சூழ்ந்திருந்த மின்னார் பாங்கியருட் சிலரை ஏவி தோற்றும்- செம்மேனி எம்மானை நிறத்தால் புலப்படுத்து. கடி- வாசனை ]

தென்றலா லலைந்து வீழ்ந்து தளர்ந்தெழில் சிதையு மற்றோர்
மன்றலங் கொடியை நோக்கி வல்லியன் னீர்கள் நீவிர்
நன்றிது தன்னைப் பற்றி நாகிள மரத்தி னேற்றி
ஒன்றுற யாத்துப் பின்னர் உறுகெனச் சிலரை யேவி         255

[ தென்றற்காற்று வீசுதலால் அலைந்து வீழ்ந்து தளர்ந்து அழகு சிதையும் மற்றொரு வாசனையுடைய கொடியை அருளுடன் பார்த்து, ‘கொடி போன்றவர்களே! நீங்கள்நன்றாக இக்கொடிதன்னைப் பற்றி இள மரத்திலேற்றி ஒன்றாக இருக்கும்படிப் பினைத்துப் பின்னர் எம்பால் வருக’ எனச் சிலரை ஏவி. மன்றல்- வாசனை. வல்லி- கொடி. நாகு இள மரம்- மிக இளைய மரம். ஒன்றுற யாத்து- நழுவிக் கீழே விழுந்து விடாமல் நன்றாகப் பிணைத்து]

தெற்றிய மலர்க ளானுந் தேத்துளி பருக வந்து
முற்றிய சுரும்பி னானு முரிவது போலத் தாழ்ந்த
மற்றொரு மரத்தை நோக்கி நீயிர்வண் டுண்ணப் பூவைக்
குற்றுமண் ணுகுத்துக் காமின் கோடெனச் சிலரை யேவி         256
[நெருங்கிய மலர்களாலும் தேந்துளியினைப் பருக வந்து சூழ்ந்து தங்கிய சுரும்புகளானும் முரிந்து விழுவது போலத் தாழ்ந்த மற்றொரு மரத்தைப் பார்த்து அருள் கொண்டு, ‘ நீயிர் வண்டுண்ணப் பூவை மண்ணின்மீது உகுத்து கொம்பினை காப்பாற்றுங்கள்’ என்று சிலரை ஏவி. தெற்றிய- நெருங்கிய. தேத்துளி= தேன்+துளி. குற்று- பறித்து. கோடு- கொம்பு. காமிந் காப்பாற்ருமின்]

ஒளிகுலாம் பளிக்குப் பாறை யுமிழ்கதிர் பாலென் றெண்ணி
வளைகுலாம் வாயிற் கவ்வி வருந்துபைங் கிளியை நோக்கி
யளிகுலாய் நீயிர் தேவ ரான்பயங் கொணர்ந்து வல்லே
கிளியினை யூட்டுமென்னாக் கேண்மையிற் சிலரை யேவி         257
[ஒளி மிக்கிருக்கும் பளிக்குப் பாறை உமிழ்கின்ற வெண்கதிரைப் பாலென்று நினைத்து, தன்னுடைய வளைந்த அலகினையுடைய வாயினாற் பற்றி ஏமாந்து வருந்து வருந்தும் கிளியைப் பார்த்து, அருள்கொண்டு,’நீயிர் காமதேனுவின் பால் கொண்டு வந்து இக்கிளியினுக்கு ஊட்டுமின்’ என்று நட்புடன்சிலரை ஏவி. குலாம். குலவும்- மிக்கிருக்கும். பளிங்கு+பாறை= பளிக்குப் பாறை. வளை குலாம்- வளைந்து இருக்கும். அளி குலாய்- மிக்க அருள் கொண்டு. தேவர் ஆந் காமதேனு. பயம்- பால். வல்லே-விரைவில். கேண்மை-நட்பு.]

படுபணை யுரிஞ்சிக் கான்ற படரெரி தாவி வாடு
நெடுமர மொருசார் நோக்கி நீயிர்விண் னரசின் வைகு
முடியுடைக் கடவுட் கூவி முகின்மழை பொழியு மாறு
விடுமதி யென்று சாற்று மின்னெனச் சிலரை யேவி         258
[ படு பணை- ஒலிக்கின்ற மூங்கில், பெரிய மூங்கில் உரிஞ்சி- உராய்ந்து. கான்றை வெளியிட்ட. மூங்கில் உராய்வதால் வெளிப்பட்டுப் படர்ந்து தாவிய நெருப்பால் வாடுகின்ற நெடிய மரத்தினை ஒருபக்கல் கண்டு அருள்கொண்டு, ‘ நீயிர் விண்ணில் அரசாக இருக்கின்ற தேவேந்திரனைக் கூவி அழைத்து, கருமேகம் மழைநீர் பொழியுமாறு விடுக என்று சாற்றுவீர்’ எனச் சிலரை ஏவி.]

இன்னணம் விளையாட் டாற்றின் யாரையும் விடுத்து மெல்லத்
தன்னையே யனையா ளையர் வெரிந்புறஞ் சாரச் சென்றாள்
முன்னொடு நடுவீ றில்லார் முழுமணித் தவிசி னும்பர்
மன்னிவீற் றிருக்கும் கோலம் வாள்விழி களிப்பக் கண்டாள்         259
[இவ்வாறு விளையாட்டுப் போலச் சேடியர் யாவரையும் ஏவி விடுத்து மெல்ல, தனக்கு நிகர் தானே யானவள், இறைவரின் முதுகுப் புறம் சாரச் சென்றாள். முன்னும் பின்னும் நடுவும் இல்லார் முழுமணித் தவிசின் மீது வீற்ரிருக்கும் கோலத்தைத் தன் ஒளிமிக்க கண்கள் களிப்பக் கண்டாள். வெரிந்- முதுகு. முன்னொடு நடு ஈறுஇல்லார்- ஆதி மத்தி யாந்த ரகிதர். ஆதியும் அந்தமும் அற்றவர். அதனால் நடுவும் இல்லாதவர்.]

அரும்பிள முலைக டோற்றி யலர்முகங் காட்டி மென்கான்
மருங்குவந் தசைப்ப மின்னா ரெனப்புடை மலர்ப்பூங் கொம்பர்
கருங்குயில் பாட வாடு மாடலிற் கருத்து வைத்துத்
தெருண்டவர்க் கமுத மன்னார் தனித்துறை செவ்வி நோக்கி         260
[மலர்களுடைய பூங்கொம்புகள் அரும்புகளாகிய இளமுலைகள் காட்டி, மலர்களாகிய முகத்தைக் காட்டி, மெல்லிய காற்று வந்து பக்கத்தில் அசைப்ப மின்னல் போன்ற மகளிரை ஒப்ப, கருங்குயிலின் பாட்டுக்கு ஆடும். தெளிந்த மெய்ஞான முடையாருக்கு அமுதம் அனைய சிவபெருமானார் இச்சோலையில் தாம் மட்டும் தனித்து இருக்கின்ற செவ்வியினை (நேரம்0நோக்கி]

வளத்தின்மிக் குயர்ந்த தொண்டை மண்டலத் துறைவோ ருய்யக்
கிளைத்தபுண் ணியத்தின் பேறோ கிளரொளிக் காஞ்சி மூதூர்
விளைத்தபுண் ணியத்தின் பேறோ மேதகு மறமெண் ணான்குந்
திளைத்தபுண் ணியத்தின் பேறோ விதுவெனத் தெரிதல் தேற்றோம்         261
[வளங்களின் மிக்குயர்ந்த தொண்டைமண்டலத்தில் வாழ்வோர் உய்யத் தோன்றிய புண்ணியத்தின் பயனோ, ஒளிமிக்க காஞ்சி மூதூர் ஆற்றிய புண்ணியத்தின் பயனோ, முப்பத்திரண்டு அறங்களும் செய்த புண்ணியத்தின் பயனோ இதுவெனச் சோல்லுதல் அறியேம். தொண்டைநாட்டுக் காஞ்சித் திருநகரே அம்மையார் தவஞ் செய்தற்கு இடனாக அமைந்தமையால், அப்பேஏற்றினைப் பெற்ற நாட்டினையும் நகரத்தினையும் இவ்வாறு கூறினார். ]

சிலம்பணி யொதுக்கித் தேம்புஞ் சிற்றிடைப் பருமம் பற்றி
யலம்புற வண்ண மெய்யி னணிகலந் திருத்திக் கொண்டு
குலம்புரி மஞ்ஞை செம்பொற் குன்றினை யணைந்தா லென்ன
வலம்புரி மிடற்றாள் கேள்வர் வெரிந்புடை மறைந்து நண்ணி         [262
[ஒதுக்கி- மேலேறச் செருகி. தேம்பும்- மெலியும். பருமம்- பதினெட்டு வடங்கொண்ட அரைப் பட்டிகை. அலம்புறா வண்ணம்- ஒலிக்காத வண்ணம். காலில் உள்ள சிலம்புகள் அசையாவண்ணம் மேனோக்கி செருகி, தேம்பும் சிற்றிடையில் அணிந்துள்ள அரைப்பட்டிகை மற்றும் அணிகலன் ஓசை செய்யாவண்ணம் பற்றித் திருத்திக் கொண்டு, மயிலொன்று செம்பொற் குன்றினை அணைவதைப் போல, வலம்புரிச் சங்கினை யொத்த மிடற்ரினையுடையாளாகிய இறைவி , தன் காதலரின் முதுகுப் பக்கம் மறைவாக அடைந்து. வலம்புரிச் சங்கு அன்னையின் கழுத்துக்கு உவமை. ]

செழுநலக் கலவி யாற்றுஞ் செவ்வியி னொளிகான் றுள்ள
முழுவது நாணச் செய்வ விவையென முனிவாள் போலப்
பொழிகதிர்ச் சுடர்ப்பூங் கண்க ளிரண்டையும் பூங்கை நீட்டிக்
கழிகளி யகத்துப் பொங்கக் கதுமெனப் புதைத்தல் செய்தாள்.         263
[இறைவனுடைய கண்கள் ஒளியைச் செய்வன. கலவி இன்பத்தை நுகரும்போது அக்கண்கள் ஒளி கான்று, நெஞ்சம் முழுதையும் நாணம் கொள்ளச் செய்வன இவை எனக் கோபிப்பாள் போல ஒளியைப் பொழியும் கண்களிரண்டையும் தன்னுடைய மலர்க்கைகளை நீட்டி, மனத்தில் பேருவகை பொங்கக் கதுமெனப் புதைத்தல் செய்தாள்]

முருகுகொப் புளிக்குங் கொன்றை நறுந்தொடை முடித்த வேணி
யொருவர்வாண் முகத்துக் கண்ணா யுறையினும் விடேங்க ளென்றங்
கிருதிறத் தரவுங் கூடி யேல்வைபார்த் துண்ட தொக்கும்
விரிமலர்க் கரங்கள் தம்மால் விழிச்சுடர் புதைத்த தோற்றம்         264
[தேனை உயிர்க்கும் கொன்றைப்பூவை முடித்த சடையராகிய எம்பிராணுடைய ஒளிமிக்க முகத்தில் கண்ணாக உறைந்தாலும் யாங்கள் விடேமென்று இராகு கேது எனும் இருவகைப் பாம்புகளும் கூடித் தக்க த்ருணம் பார்த்திருந்து உண்டதை ஒக்கும், தன்னுடைய விரிந்த மலர்க்கரங்களால் இறைவி விழிகளாகிய சுடர்களைப் புதைத்த தோற்றம்]

இன்னணம் விளையாட் டாக விமய மீன்றெ டுத்த நங்கை
பொன்னவிர் சடையார் கண்கள் புதைத்தலும் புவன மெல்லாந்
துன்னிய சகலத் தன்மை யெய்தியுந் தொல்லை நாட்கண்
மன்னுகே வலமே யென்னச் செயலற விருள்வந் தன்றே.         265
[இவ்வாறு விளையாட்டாக இமயமீன்ற அன்னையாகிய உமை பொன்னவிர் சடையானின் கண்களைக் கைகளால் புதைக்கவே, சகல புவனங்களும் நெருங்கிய சகலத் தன்மை எய்தியும் பண்டைய கேவலமே உற்றதென்று சொல்லும்படியாக இருள் வந்து அடைந்தது. சகலத்தன்மை- உயிருக்கு உடல் கருவிகள் உலகம் நுகர்ச்சி ஆகியவை கூடிய நிலை. கேவலம்- ஆணவ இருளொடு கூடி அறியாமையில் இருளொடு இருளாகக் கிடந்த நிலை.]

நித்திய கேவ லங்க ளின்பமே நிகழ்த்த லானும்
பித்தென மருளுந் தொல்லைப் பெரியகே வலமுந் துன்பக்
கொத்தினைப் பகுத்துக் காட்டாக் கொள்கையி னானும் வாட்கண்
பொத்திய விருளின் வீக்க மிற்றென வுரைப்பார் யாரே.        266
[நித்திய கேவலம்- இஃது நாள்தொறும் தோன்றும் உறக்க நிலை. இஃது உயிருக்கு இன்பத்தையே நிகழ்த்துகின்றது. தொல்லைக் கேவலம் எனப்படும் காரண கேவலத்தின் இயல்பும் அதனால் விளையும் துன்பத்தைப் பகுத்துக் காட்ட முடியாத இயல்பினை உடையதாகலின் , இறைவனில் ஒளிக்கண்களை பொத்தியதால் விளைந்த இருளின் மிகுதியை இத்தன்மைத்து என்று யாரால் கூற முடியும்.? முடியாது என்க. காரண கேவலம்- படைப்புக்கு முன்னிருந்த இருண்மை.]

விளக்கிரு சுடரும் வேலை விரியொளித் தழலு மற்று
மளப்பறுந் திறல்பல் வேறு காரிய வழலு மேனைத்
துளக்கில்கா ரணமாம் பூத வன்னியுஞ் சுடரா வாகி
யொளிக்குமே லிருளின் வீக்க மிற்றென வுரைப்பார் யாரே        267
[பொருள்களை விளக்கும் சூரிய சந்திரர்களாகிய இரு சுடர்களும், கடலில் தோன்றிய வடமுகாக்கினி எனும் தழலும், அளவில்லாத வேறு பல்வகைய காரிய நெருப்புக்களும் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய அக்கினியும் இவ்விருளில் ஒளிவிடாதவாறு இவ்விருள் ஒளிக்கும் என்றால் இவ்விருளின் மிகுதியை யாரே உரைப்பர். உரைக்கக் கூடியவரொருவரும் இலர். ]

இருந்தவா றிருந்து பம்பு மெண்ணிலா வுயிரும் வாடி
வருந்திடு மிடும்பை நோக்கி வள்ளலார் வறிதே நெற்றித்
திருந்தழல் விழியை வல்லே திறந்த னரிள மகார்கள்
கருந்துய ருழக்க வீன்றோர் காண்பரோ சிறிது போதும்         268

[பம்பு- நிறைந்த. உலகில் நிறைந்துள்ள எண்ணிலா உயிர்களும் தொழிலின்றி, இருந்தபடி இருந்து வாடி வருந்தும் துன்பத்தை நோக்கி இறைவர் தம் நெற்றியில் உள்ள தழல் விழியைச் சிறிதே திறந்தனர். தாம் பெற்ற மக்கள் துன்பத்தில் சிறிதும் வாடக் காண்பரோ ஈன்றவர்கள். அனைத்துயிருக்கும் தந்தை சிவனே ஆதலால் இருளால் வரும் துன்பத்தைஇவ்வாறு நீக்கினார்]

ஆரிய னருளாற் பாச மனைத்தும் விட்டு இரிய ஞானப்
பேரொளி நிரம்பி யாங்குப் பிஞ்ஞகர் கனற்க ணோக்காற்
காரிரு ளொதுங்கிச் சாம்பக் கதிர்வெயிற் கற்றை மாதோ
பாரிடந் துறக்க மெங்கும் பரந்ததா லிறும்பூ தெய்த         269
[ஆரியன் – ஞானாசாரியன். ஞானகுருவின் அருளுபதேசத்தினால் பாசமனைத்தும் நீங்கி ஞானப் பேரொளி நிரம்புவதைப் போல, இறைவனின் நெருப்புக் கண்ணின் நோக்கத்தினால் பேரிருள் நீங்கி ஒதுங்கக் கதிரொளிக் கற்றை பாரிடம் மேலுலகம் எங்கும் பரந்தது , எவரும் அதிசயம் கொள்ள. இரிய- நீங்க. ஞானப் பேரொளி- சிவப்பிரகாசம். பிஞ்ஞகர்- பிஞ்ஞகம் தலைக் கோலம். கொக்கிறகைத் தலைக்கோலமாக அணிந்த சிவபெருமான். கனற்கண்- நெற்றிக்கண். காரிருள்- கரிய பேரிருள். சாம்ப- ஒடுங்க. பாரிடம்- நிலவுலகம். துறக்கம்- மேலுலகம். இறும்பூது- அதிசயம்]

எண்ணிலா வுயிரு மின்ப மெய்தின விறைவர் கண்கள்
பண்ணுறு மொழியாண் மூடும் பொழுதினும் பரனார் நெற்றிக்
கண்ணினைத் திறந்த போதுங் கதிர்ச்சுடர் மூன்றுந் தத்தம்
வண்ணவா ளொளிபெ றாமை மழுங்குத லுற்ற வன்றே.         270
[(இறும்பூதெய்த) எண்ணிலாவுயிர்களும் இன்பமெய்தின. இறைவருடைய கண்களை இறைவி மூடியபொழுதினும், இறைவர் நெற்றிக் கண்ணினைத் திறந்த பொழுதினும் சூரியசந்திரர் அக்கின் ஆகிய முச்சுடர்களும் தத்தம் வண்ணவொளி பெறாமல் ஒளி மழுங்கின.
அம்மையார் இறைவரைத் தீண்டிய வகையில் ஊற்றின்பம் அனைத்துயிரும் பெற்றின்புற்றன. பெருமான் திருநுதற் கண்ணால் ஒளி பரப்பியபோழ்தும் அவ்வொளியில் மூழ்கி இன்புற்றன. கதிர்ச்சுடர் மூன்றற்கும் ஒளி கொடுப்பாவன் இறைவனே. (சிவஞான சித்திசூ1.செ52]

எரிவிழி திறத்த லோடு மிருட்குழா முடைந்து நம்பர்
வெரினுடைப் புறத்தி லோடி யொளித்ததே விழைய வந்நாட்
கரிநிற வுருவம் பெற்ற காரிகை கரங்க ணீத்துப்
பரிவொடு பணிந்து நெஞ்சிற் பயங்கிடந் தலைப்பக் கூறும்      271
[இறைவன் நெருப்புக் கண்ணைத் திறந்தவுடன் இருள் கூட்டம் தோற்றுப் புறங்கொடுத்து ஓடி ஒளிந்தது. அந்நாளில் இறைவி கரிநிறம் பெற்றாள். தன்னுடைய கரங்களைக் கண்களை விட்டு நீக்கி வர்த்தத்துடன் நெஞ்சில் பயம் கிடந்து வருத்த இறிவரிடம் கூறுவாள். உடைந்து- தோற்று. பரிவொடு- வருத்தத்துடன். அலைப்ப – வருத்த.]

அடியனேன் விளையாட் டாக வலர்விழி புதைத்தே னந்தக்
கொடியதோர் செயலால் விண்ணுங் குரைகட லுலகு மெங்குங்
கடியிருண் மிடைந்த திந்தக் கடும்பிழை பொறுத்தி யென்னாத்
துடியிடை மடந்தை மீட்டுந் துணையடி வணங்கி நின்றாள்         272
[மிடைந்தது- செறிந்தது. அடியனேன் விளையாட்டாக நின் மலர்ந்த விழியைக் கரத்தால் புதைத்தேன். அந்தக் கொடிய செயலால் விண்ணையும் கடலால் சூழப்பட்ட நிலவுலகையும் அச்சந்தரும் இருள் செறிந்தது. இந்தக் கடும்பிழையைப் பொறுத்தருள்க என்று துடி போன்ற இடையை உடைய இறைவி இறைவனின் துணையடிகளை மீண்டும் வணங்கி நின்றாள். கடி- அச்சம், மிகுதியுமாம். துடி- உடுக்கை.]

நாயகி பரிவை நோக்கி நம்பனா ரருளிச் செய்வார்
பாயின பரும வல்குற் பசுங்கொடி பின்னர் வந்து
நீயெமை யறியா வண்ணம் புதைப்பினு நீயே யென்று
சேயிதழ்க் கரங்க டோய்ந்த வூற்றினாற் றெளிந்து கொண்டாம்         273
[இறைவியின் வருத்தத்தை நோக்கி இறைவனார் அருளிச் செய்வார்-‘ பசுங்கொடியே! நீ, எம்மை அறியாவண்ணம் பின்புறம் வந்து கண்ணைப் புதைப்பினும், நீயே என்று உன்னுடைய சிவந்த தாமரை இதழ்க் கரங்களின் ஊற்ரின்பத்தால் அறிந்து கொண்டோம். பரிவு- வருத்தம். பாயின- பரவின. பருமம்- அரை அணி. தெளிந்து கொண்டேந் உறுதியாக அறிந்து கொண்டேன்]

ஆயினு நினக்கு மைந்த ராகிய வுலகத் துள்ளோர்
மேயின வலக்க ணீப்பா னுதல்விழி விழித்தாங் கண்டாய்
பாயின விருளா னீயுங் காளிமம் படைத்தா யென்ன
மாயிரு ஞால மீன்றாள் மறுவலு மிதனைக் கூறும்         274
[ ஆயினும் உனக்குப் பிள்ளைகளாகிய உலகத்துள்ளோர் அடைந்த துன்பத்தை நீக்கும் பொருட்டு நெற்றி விழியை விழித்தோம். பரவின இருளால் நீயும் கருநிறத்தவளானாய். என்று இறைவர் கூற, உலகமீன்ற அன்னை மீணும் இதனைக் கூறுவாள். மேயின- மேவின, அடைந்த. அலக்கந் துயரம். காளிமம்- கருநிறம். படைத்தாய்- உடையை ஆயினாய். மறுவலும்- மறுபடியும்.]

பற்பல வுயிர்க ளெல்லாம் பருவர வடிகே ணின்றன்
விற்படு சுடர்கண் மூடி விளைத்ததீ வினையின் பேறும்
அற்பனேன் உடம்பின் மாசுங் கழியுமா தவங்கள் ஆற்றப்
பொற்பம ரிடமுங் காட்டி விடையருள் புரிதி யென்றாள்.        275
[பற்பல உயிர்கள் எல்லாம் துன்பத்தை அடையுமாறு, சுவாமி!, உம்முடைய சுடர்க்கண்களை மூடி விளைத்த தீவினையின் பயனாகிய பாவத்தையும், என் உடம்பின் கருநிறத்தையும் போக்கிக் கொள்ளும் தவங்கள் ஆற்றத் தகுந்த இடமுங் காட்டி, விடையும் அருள்புரிவீராக! என்றாள்.

எள்ளருங் காதற் பாவாய் நிற்றணந் திருத்த லாற்றேம்
ஒள்ளிய தவத்தின் மூண்ட வுளத்தினை வறிது மீட்டுக்
கொள்ளலுந் தகுதி யன்றிக் கொள்கையான் எவ்வாற் றானும்
மெள்ளயா மாற்றி யிங்கண் மேவுதும் விரைந்து நீயும்.         276
[எள்ளரும்- ஒதுக்க முடியாத; எள்ளூதல்- இகழ்தல். தணத்தை- பிரிதல். ஆற்றல்- பொறுத்தல். வறிது- வீணே, பயனின்றி. மூண்ட- ஒருப்பட்ட. ‘என் அன்புடைய பாவையே! உன்னைப் பிரிந்திருக்க யாம் ஆற்றேம். ஆயினும் நீ புண்ணிய தவம் செய்தற்கு முற்பட்ட உனது உள்ளத்தை அதைச் செய்யாமல் மீட்பதும் தகுதியன்று. யாம் எவ்வகையாலும் நின் பிரிவைப் பொறுத்துக் கொண்டு இங்கு மீண்டும் அடைவோம். நீயும் என்பதை அடுத்தபாடலுடன் சேர்த்துக் கொள்க]

வெயில்கிடந் திமைக்குஞ் செம்பொன் விலங்கலின் வடபா லெய்திச்
செயிர்தபு தவங்க ளாற்றிக் காளிமந் தீர்ந்து தீஞ்சொற்
குயிலனாய் கவுரி யாகிக் குழைகிழித் தொழுகும் வாட்கண்
மயிலனார் மாட வீதி வளநகர்க் காஞ்சி நண்ணி.         277
[இமைக்கும்- ஒளிவிடும். விலங்கு- மலை. செம்பொன் விலங்கு- மேருமலை. செயிர்- குற்றம். தபு- அழிக்கும். காளிமம்- கருநிறம். கவுரி- செந்நிறத்தவள். ‘நீயும் பகல் போலப் பிரகாசிக்கும் மேருமலையின் வடபால் எய்திக் குறம் நீக்கும் தவங்களாற்றிக் கருநிறம் நீங்கிச் செந்நிறம் பெற்று கவுரியாகி வளநகர்க் காஞ்சியை அடைந்து. இறைவியின் கண் பெருந்தடங்கண் ஆகலின் காதிலே இருக்கும் குழை கிழித்தொழுகும் வாட்கண் என்றார்.]

திருந்தநம் பூசை யாற்றி விழிபுதை செயலால் வந்த
வருந்தவ றொழிவா யாக வங்கண் மாலதியு நின்றன்
பெருந்தனி யிருக்கை வைப்பிற் பிரசம்வார் காஞ்சி யாகி
வருந்தடங் கருங்கட் பாவாய் மற்றுநம் மிருக்கை தன்னில்         278
[நலமுடன் சிவபூசை யாற்றி எம் விழியைப் புதைத்த செயலால் வந்த கடத்தற்கு அரிய தவரால் வந்த தீவினையை ஒழிவாயாக. அவ்விடத்தில் முல்லைக் கொடியும் நின்னுடைய ஒப்பற்ற இருப்பிடத்தில் தேனொழுகும் காஞ்சியாகி வரும். நம் இருப்பிடத்தில். ]

இந்நெடுந் தளிர்ப்பூங் கொக்கி னினத்தொரு சுருதிச் சூத
மன்னிடு மமிழ்த மூற்று வாலெயிற் றணங்கே யந்தப்
பொன்னெயி லுடுத்த கச்சிப் புரத்தொரு மாவின் பாங்கர்
நன்னெடும் புணர்ச்சி மன்ற னமக்கினி துறுக வென்றார்.         279
[நெடிய பூக்களுடன் தளிர்த்த மாமரத்தின் இனத்தில் ஒரு வேதமாமரம் தோன்றும். அமிழ்தம் ஊறும் வெண்மையான பற்களையுடைய அணங்கே! அந்த அழகிய மதில்களையுடைய காஞ்சிபுரத்தில் ஒப்பற்ற மாவின் பக்கத்தில் நம்முடைய திருமணம் நமக்கு இனிது உறுக என்று இறைவர் அருளிச் செய்தார்.]

இறைவரைத் தணத்த லெவ்வா றெனமிகப் பிணங்கு நெஞ்சை
யிறையவர்பா லிருவித் தாழ்ந்து விடைகொண்டங் கிமய மீன்ற
விறைவிபொற் சயில நோக்கி நடந்தன ளென்னை யாளு
மிறைவருந் தமிய ராகி யெழில்வளர் கோயில் புக்கார்         280
[இறைவரைப் பிரிதல் எவ்வாறு கூடும் எனத் தன்னொடு பிணங்கும் நெஞ்சை இறைவரிடமே விட்டுவைத்து, இமயமீன்ற பொற்செல்வி, இறைவரை வணங்கி, விடைகொண்டு, மேருமலை நோக்கி நடந்தனள். இறைவரும் இறைவி தன்னொடு இன்மையால் தனியராகித் தம்முடைய எழில் வள்ர் கோயிலுட் புகுந்தனர். பிணங்குதல்- மாறுபடுதல், சண்டையிடல். இருவி- இருத்தி பொற்சயிலம்- பொன்மலை அம்மையின் இருப்பிடம், மேருமலை.]

அகளமெய் வடிவானந்த வற்புதக் கூத்த னார்தம்
முகவிழி நங்கை செங்கை முளரியாற் புதைத்த காதை
நிகழ்வினை யுரைத்தா மிப்பா லவரடி நினைந்து போற்றித்
தகவுமை கழுவா யாற்றுந் தன்மையிற் றன்னஞ் சொல்வாம்         281
[நிஷ்கள வடிவான ஆனந்த அற்புதக் கூத்தனார் தம் முக விழிகளைத் தன்னுடைய சிவந்த கைகளாகிய தாமரைமலர்களால் புதைத்த நிகழ்ச்சியினை உரைத்தோம். இனி, அவருடைய திருவடியை நினைந்து துதித்து, பெருமையுடைய உமை கழுவாய் ஆற்றும் இயல்பிற் செய்வவற்றை அவ்வாறே சொல்லுவாம்]

திருக்கண் புதைத்த படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் - 285
-------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III