Kāñcip purāṇam VII


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் VII
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப முனிவர் அருளிய
காஞ்சிப் புராணம் - இரண்டாங் காண்டம்
2. கழுவாய்ப்படலம் ( செய்யுள் 286 -707 )



திருவாவடுதுறைக் கச்சியப்ப முனிவர்
அருளிய காஞ்சிப்புராணம் - இரண்டாவது காண்டம்
திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் உரையுடன்


திருச்சிற்றம்பலம்
Source:
காஞ்சிப்புராணம்
திருக்கைலாயபரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்துமஹாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி
சித்தாந்த சரபம்- அஷ்டாவதானம்
பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்கள் மாணவரும்
மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரும்,மெய்கண்டசித்தாந்த ஞானசாத்திரப் பிரசாரக்ருமாகிய
வண்ணக்களஞ்சியம் சி.நாகலிங்க முதலியாரவர்களால்,
பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து
பெரியமெட்டு- வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் குமாரர் ஆதிமூலஞ்செட்டியாரால்
சென்னை: கலாரத்நாகரவச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
சாதரண வரூ- வைகாசி- 1910
----

காஞ்சிப்புராணம் - உள்ளடக்கம்
படலம் செய்யுள்
1. பாயிரம் 4
2. திருக்கண்புதைத்தபடலம் 281 (5-285)
3. கழுவாய்ப்படலம் 423 (286-709)
4 அந்தருவேதிப்படலம் 80 (710-790)
5. நகரேற்றுப்படலம் 279
6. தீர்த்தவிசேடப்படலம் 158
7. பன்னிருநாமப்படலம் 455
8. இருபத்தெண்டளிப்படலம் 433
ஆகமொத்தம் திருவிருத்தங்கள் 2110

காஞ்சிப்புராணம் : இரண்டாவது காண்டம்
கழுவாய்ப்படலம் 423 (286-709)

கலிவிருத்தம்
குருவான் மதிவேய்ந் தகொழுஞ் சடிலப்
பெருமா னடிதாழ்ந் துபிறங் கருள்பெற்
றொருமா மலையீன் றவளொண் கனக
வரைமே வியவங் கண்வழிக் கொளலும்         1
[குரு- நிறம்- வான் – பெருமை. குரு வான் மதி- நிறமும் பெருமையும் வாய்ந்த சடிலம், மதிவேய்ந்த சடிலம், கொழுஞ் சடிலம் எனப் பொருள் கொள்க. சடிலம்- சடை. கொழுஞ் அடிலம்- அடர்ந்த சடை. பிறங்கு- விளங்குகின்ற. வழிக் கொளல்- பயணம் மேற்கொளல். அம்மை இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு பொன்வரைக்குப் பயணம் மேற்கொள்ளலும்].

பல்லா யிரகோ டியர்பாங் கியரும்
சொல்லா லமையா ததொகைப் படுவார்
வில்லார் நுதல்விண் ணரமங் கையரு
மெல்லா மடமா தருமீண் டினரால்         2
[பல்லயிரங்கோடி பாங்கியரும், சொல்லிமுடியாத தொகைப்படும் தேவமகளிரும் ஆகிய இளமகளிரும் விரைந்து திரண்டனர். வில் ஆர் நுதலார்- ஆர்- உவமவுருபு. விற்போன்ற நுதலினர்.]

காரார் மணிமே னியனுங் கமலச்
சீரா ரணைவா னவனுஞ் செழிபொன்
னூரான் புருகூ தனுமும் பர்களு
மேரார் கணநா தருமீண் டினரால்         3
[கரிய மணிபோன்ற மேனியனான திருமாலும் தாமரை அணையயனான பிரமனும் பொன் ஊரனாகிய புருகூதன் இந்திரனும் தேவர்களும் மற்றும் கனநாதர்களும் திரண்டனர்.]

முழவா திமுழங் கினமொய்ம் மணியாழ்
குழலா தியெழுந் தனகூர்ந் தடியிற்
றொழுவோ ரொலிபம் பினதூ மறையின்
வழுவா வொலிமல் கினமா மழைபோல்         4
[மழை மேகத்தின் இடிபோல் மத்தளங்கள் முதலியன முழங்கின; யாழ் குழல் முதலியன இயம்பின; திருவடியைத் தொழுவோர் ஆரவாரித்தனர்; புனித மறையின் பிழையா ஒலி நிறைந்தன. முழவு- மத்தளம். மற்றும் தம்பட்டம் முதலிய தோற் கருவிகள். ]

எட்டுத் திசையுஞ் செலிளங் கிரண
வட்டக் குடைமீ துவயங் கியதேர்
பட்டுக் கதிர்கான் றபனிக் கவரி
தொட்டுச் சிலமா தர்துளக் கினரே         5
[ எட்டுத் திசைகளிலும் இளங்கிரண ஒளிபரப்பும் வட்டக் குடை மீது பட்டுக். கதிரொளியக் கக்கின. குளிந்த சாமரையைப் பெண்கள் அசைத்தனர். வயங்கிய + ஏர். ஏர்- அழகு. தகர ஒற்று வேண்டா இடத்து வந்தது. கான்ற- வெளியிட்ட. துளக்கினர்- அசைத்தனர். ]

தேந்தா மநறுங் குழலார் சிலர்கள்
சாந்தாற் றியலைத் தனர்சார்ந் தனர்முன்
போந்தா டினர்சின் மடவார் புகழ்க
ளாய்ந்தோ தினர்பா டினரா யிரவர்.         6

[தேன் கமழும் மாலை சூடிய குழலை உடைய மகளிர் சிலர் விசிறி கொண்டு வீசினராகிச் அர்ர்ந்தனர். சிலர் முன் போந்து ஆடினர். சில மடவார்கள் இறைவவின் ஆய்ந்த புகழை ஓதினர். பாடினர் ஆயிரவர்.].

இவ்வா றெவருந் தொகவே கலுறு
மைவா ரளகக் கதிர்வண் பவளச்
செவ்வா யுமைமா துசெழுங் கயிலை
யவ்வார் பொழினின் றுமகன் றனளே         7
[ இவ்வாறு தன்னைச் சுற்றிப் பலரும் கூட ஏகலுறும் கரிய கூந்தல், பவளச் செவ்வாய் உமை மாது கயிலைமலையச் சார்ந்த பொழிலிருந்து அகன்றாள். தொக- கூட. ஏகல் உற- நீங்குகின்ற. மை- கருமை.வார்- நீண்ட. அளகம்- கூந்தல். வார்பொழில்- நீண்டசோலை]

கலிநிலைத்துறை
கடாமதக் களிற்றைவென்ற கஞ்சுகப் புராணரை
விடாதுளத் தமைத்துநீ ணெறிச்சென் மங்கை வில்லிடும்
வடாதுகுன் றிவர்ந்து சொன்ன வைப்பணைந்து காதலிற்
றடாதவன் புமீக்கொளுந் தவஞ்செயத் தொடங்கினான்         8
[ கடா மதம்- கடாம் என்றாலும் மதநீர் என்றாலும் ஒரே பொருளைக் குறிக்கும். கஞ்சுகம்- சட்டை. புராணர்- பழமையானவர். தடாத- தடைப்படாத, நீள் நெறி- நீண்ட வழி. வில்- ஒளி. வடாது- வடக்கில் உல்ல. இவர்ந்து- ஏறி. வைப்பு- இடம். மீ- மேல். குறையாத. யானையை உரித்துச் சட்டையாகத் தரித்த பெருமானை தனது உள்ளத்தில் நீங்காது அமைத்து(தியானித்து), நெடுவழி செல்லும் மங்கை உமை, வடக்கில் ஒளிவிடும் மலைமேற்சென்று அன்பு மேலும் அதிகரிக்கும் தவம் செய்யத் தொடங்கினாள். ]

சீதமல்கி வாசமேந்து தென்றல்வந்து முற்றுறும்
போதுபோதி கந்தசாதி போலவெற் புயிர்த்தசீர்
மாதர்பொற் சிலம்புதோரை வண்ணமுத்து மாலைபூங்
கோதையாதி மெய்யணிந்த கோலமுற்று நீவினாள்.         9
[சீதம்- குளிர்ச்சி. மல்கி- நிறைந்து. போது இகந்த- மலர்களை உகுத்த. சாதி- சாதிமுல்லைக்கொடி. வெற்பு – இமயமலை. உயிர்த்த- பெற்ற. இமய அரசன் வளர்த்தமையால் உயிர்த்த என்று உபசாமாகக் கூறப்பட்டது. பொற்சிலம்பு, பொற்தோரை எனக் கூட்டிக் கொள்க. தோரை- இடையணி. நீவினாள்- ஒழித்தாள். வாசத்தை ஏந்திய குளிர்ந்த தென்றல் வந்து வீசும்போது, மலர்களை உகுத்த முல்லக்கொடி போலத் தன் அணிகலன்களை முற்ரிலும் நீக்கினாள்.]

நீலவண்ண மாகிநீண்ட கொம்புதன் னி¢டைத்தலைச்
சாலவுஞ் சிவந்தமென் றளிர்க்கணந் ததைந்துநன்
றாலினா லெனப்பரந்த வல்குன்மீது வற்கலை
ஞாலமுற்றும் ஈன்றளித்த நம்பிராட்டி தாங்கினாள்.         10
[நீல நிறமுடைய நீண்ட மரக்கொம்பு தன்னிடம் மிகவும் சிவந்த தளிர்கள் நெருங்கினாற்போல ஞாலமுற்றும் ஈன்றளித்த நம்பிராட்டி வற்கலை தரித்தாள். அம்மை கரியவளாக இர்ந்ததனால் நீலக் கொம்பு உவமையாகக் கூறப்பட்டது. வற்கலை-மரவுரி. செந்நிறமாதலால் செந்தளிர் உவமையாகக் கூறப்பட்டது. கணம்- கூட்டம். ததைந்து- நெருங்கி. ஆலின் இலையெனப் பரந்த அல்குல். அம்மை செஉ தவப்பய்ன் உலகுர் அனைத்துக்கும்நன்மை பயத்தலின்,’ஞாலமுற்றும் ஈன்றளித்த’ என்றார்.]

கொழுங்கள்வாய் மடுத்துணக் குழீஇத்திரண்டு வண்டின
மொழுங்குகொண்டு சூழ்ந்தமொட் டுடைத்தகஞ்ச மொப்புறக்
கழங்குபந்து செய்யபங்க யங்கடிந்த தன்னிருஞ்
செழுங்கரத்தின் அக்கமாலை சீர்பெறத் தரித்தனள்         11
[கொழுவிய தேனினை மொய்த்து உண்ணத் திரண்ட வண்டுக் கூட்டம் ஓரொழுங்குடன் தாமைர் மொட்டினச் சூழ்ந்ததைப் போல, கழங்கு, பந்து முதலிய ஆடல்களை நீத்த , தாமரையை வென்ற தன்னிரு கரங்களிலும் உத்திராக்கமாலைகளைத் தரித்தனள். வண்டினம் ஒழுங்கு கொள்ளல்- ஒன்றன்பின் ஒன்றாக நிற்றல், அக்கமாலைக்கு உவமையாகலின் இவ்வாறு கூறப்பட்டது. கஞ்சம் –தாமரை. சீர்- அழகு, ஒழுங்கு]

காதலாற் பிணைந்திணங்கு காந்தனாரை நீங்கலான்
மாதர்மாமை போய்விளர்த்த வண்ணமென்ன வாசநீர்ச்
சீதமல்கு சந்தனந் திமிர்ந்திலங்கு மெய்யெலாம்
பூதநாத ரைந்தெழுத்து மோதிநீறு பூசினாள்         12
[காதலனைப் நீங்கியதால் அழகிய மாமை நிறம்போய் மெய் விளர்ஹ்த நிறம் பெற்றதற்போல, குளிர்ந்த சந்தனந் திமிர்ந்து விளங்கு தன் உடம்பெலாம் இறைவரின் திருவைந்தெழுத்து ஓதி வெண்ணீறு பூசினாள். காந்தந் காதலன். மாதர் மாமை- அழகுடைய மாமை நிறம். விளர்த்த- வெளிறிய, வெண்மையான. திமிர்ந்து- அப்பிய. பூதநாதர்- பூதகணங்களுக்குத் தலைவர்; சிவபெருமான். ஐந்தெழுத்து- சிவாயநம என்றோதி நீறணிதல் மரபு.]

வெள்ளிவெற்பி னண்டர்சூழ வீற்றிருக்கு மெய்யருள்
வள்ளலார்தம் மேனியைப் பகிர்ந்துதான் வதிந்தநாள்
வெள்ளவேணி யும்பகிர்ந்து கொண்டதொப்ப மென்மலர்க்
கள்ளறாத கூந்தலைக் கதிர்க்கும்வேணி யாக்கினாள்.         13
[திருக்கயிலாயமலையில் தேவர்கல் சூழ வீற்றிருக்கும் இறைவர்தம் திருமேனியிற் பாதியைப் பகிர்ந்துகொண்டு தான் உடன் வாழ்ந்த அந்த நாளிலே, அவருடைய கங்கை தங்கிய சடாமுடியையும் பகிர்ந்து கொண்டதொப்ப மென்மலர் அணிந்த வண்டு மொய்த்தலை ஒழியாத கூந்தலை வறட்சியால் ஒளிரும் சடை முடி யாக்கினாள்.]

அங்கிநாற் புறத்துமிக் கழற்றநாப் பணின்றுதன்
பொங்கரித் தடங்கணம் புயத்தைநிற் புறந்தரத்
தங்குகாத லான்மருங்கு சார்தியென்று போக்கியாங்
கங்கண்வான் சுடர்க்குநேர் கதிர்க்குமா றமைத்தனள்         14
[நெருப்பு நான்கு பக்ககளிலும் மிக அழற்ற, அதன் நடுவில் நின்று தன் செவ்வரி படர்ந்த பெரிய கண்களாகிய செந்தாமரையைக் காப்பாற்ற தங்கிய காதலோடு அருகு வருக என்று அழைத்தலைப்போல தன் அழகிய கண்களை சூரியனுக்கு நேர்பட விழிக்குமாறு அமைத்தாள். நாப்பண்- நடுவில். அழற்ற- வெப்பம் வீச. அரி- வரிகள். பொங்கரி என்றதால் செவ்வரி என்பது பெறப்பட்டது. நிற் புறந்தர- நின்னால் காப்பாற்றப்பட.. போக்கி- பார்வையால் அழைப்பு விடுத்து. வான் சுடர்- சூரியன். கதிர்க்குமாறு- இமையாது விழித்திருக்குமாறு. இஃதைப் பஞ்சாக்கினி தவம் என்பர்]

விரும்புதே னலங்கல்கந்தம் வீசுநான நீக்கியுங்
கரும்பனுக்கு தீஞ்சொனங்கை காரளாங் குழற்சடை
யரும்புதொன்மை வாசம்வேட்டு முன்புபோல வஞ்சிறைச்
சுரும்பெலா முரன்றெறிந்து சூழ்ந்துகொண்ட வென்பவே.         15
[வண்டுகள் விரும்பும் பூமாலைகள், நறுமணம் வீசும் கத்தூரிக்குழம்பு போன்ற போகப்பொருள்களை நீக்கியும், இனிமையினால் கரும்பின் சுவையைக் கெடுக்கும் இன்சொலாளாகிய நங்கை, உமையம்மையின் கார்மேகம் அனைய கூந்தலில் அரும்பும் நறுமணத்தை விரும்பி, முன்பு போலவே அழிகிய சிறகுகளை உடைய சுரும்புகள் எல்லாம் முரன்று பரவி சூழ்ந்து கொண்டன.
தேன் -தேனீக்கள். அலங்கல்- மாலை. கந்தம்- நறுமணம். நானம்- கத்தூரி. கரும்பு அனுக்கு தீங்சொல் – இனிமையால் கரும்பும் கசக்கும்படிச் செய்யும் இனியசொல். வேட்டு- விரும்பி. எறிந்து- பரவி.]

காரனங்குலாய்ப் படிந்த காட்சியொப்ப மெய்த்தவச்
சீர்புனைந்த காமர்மங்கை சென்றுமூன்று காலமும்
வார்தரங்க நீர்படிந்த வண்சுனைத் தடங்களு
மேர்புனைந்த தெய்வவாச மெங்கணு கஞற்றுமே         16
[கரிய அன்னம் விரும்பிப் படிந்த காட்சியை ஒப்ப, தவக்கோலங்கொண்ட அம்மை சென்று மூன்று காலமும் மூழ்கிய வளமான சுனைகளைக் கொண்ட தடாகங்கள் தெய்வமணத்தை எத்திசையிலும் வீசின. தடாகம் தெய்வ மணம் கம்ழ்ந்தஹற்குக் காரனம் கூறப்பட்டது. அன்னம் என்பது அனம் எனத் தொகுத்தல் விகாரம். வார்- நீண்ட. தரங்கம்- அலைகள். கஞற்றும்- பரவச்செய்யும்.]

ஐந்தழற்கு மெய்யினை யழற்றவைத்த வெள்ளிவெற்
பெந்தையாரை நீங்கலா லெழுந்த வெய்காமமாஞ்
செந்தழற்கு நெஞ்சினைச் சினக்கவைத் திவ்வாறுவேற்
கந்தனைப் பயந்தநங்கை காதன்மல்க நோற்றனள்         17
[நாற்புறமும் நெருப்பும் தலைக்கு மேல் கடுஞ்சுடர்ச் சூரியனும் ஆகிய அழல் தன் உடலை வெதுப்ப, திருக்கயிலையாகிய வெள்ளிமலையில் எந்தை இறைவனைப் பிரிந்து வந்ததால் எழுந்த காதற் தீ நெஞ்சினைச் சுட. காமம் நெருப்புப் போல நெஞ்சினை வருத்துதலால் சினக்க வைத்து என்றார். நோற்றனள்- தவத்தால் விளையும் உடற் துன்பங்களைத் தாங்கிக் கொண்டாள்.]

யகாலை யிற்றனா தருங்குலப் பெணாமெனா
மேயவன்பின் வெள்ளிமால் விலங்கல்கொண் டணைந்தெனத்
தூயவெள்வி டைக்கணெங்கள் சுந்தரப் புராதனர்
நாயகிக் கிரங்கியங்க ணும்பர்சூழ நண்ணினார்.         18
[திருக்கயிலைமலை பெரிய வடிவத்தாலும் வெண்மை நிறத்தாலும் இறைவனின் வாகனமாகிய விடைக்கு உவமையாயிற்று. தன் குலப் பெண் தவமேற்கொண்டுள்ளதைக் காண்பதற்கு வெள்ளிமலை அணைந்தது எனப் பெரிய விடைமேல் இறைவர், அம்மையின் தவத்துக்கு இரங்கித் தேவர்கள் சூழ அங்கு எழுந்தருளினார்.]

தோடுகொண்ட வும்பரார் துதிக்கு மோதையும்கணம்
பாடுமோ தையும்திருப் பதச்சிலம்பு கல்லென
ஆடுமோ தையுங்கறங் கியந்தரத் தெழுந்துலாய்ச்
சேடுகொண்ட பொற்குழைச் செவிப்புறத் திறுத்தலும்         19
[தோடு- தொகுதி. உம்பரார்- தேவர்கள். ஓதை- ஓசை.கூட்டமாகத் திரண்ட தேவர்கள் துதிக்கின்ற ஓசையும் தேவகணங்கள் பாடும் ஓசையும் திருப்பாதங்களில் சிலம்புகள் கல்லென ஒலிக்க ஆடும் ஓதையும் திரண்டொலித்து ஆகாயத்தில் எழுந்து பரந்து பெருமை கொண்ட பொற்குழைச் செவியிலே செ3ன்று தாக்கலும். தோடு- தொக்க கூட்டம். கணம்- திரள். கல்லென- ஒலிக்குறிப்பு. அந்தரத்து- ஆகாயத்தில் உலாய்- பரந்து. சேடு- பெருமை. இறுத்தலும்- சேர்ந்த அளவிலே.]

சாய்ந்தமஞ்ஞை காரினந் தழங்கவார்த் தெழுந்தென
வாய்ந்தமெய்த் தவத்திருந்த மங்கையோகை நீடிமிக்
கேய்ந்தவன்பு முந்துமா றெழுந்துநேர் குறித்தெதிர்
வீழ்ந்துவீழ்ந் தெழுந்தெழுந்து மெய்விதிர்ப்ப நின்றனள்.         20
[சாய்ந்த- மெலிந்த. கார் இனம்- கார் மேகம். தழங்க- இடி முழக்கம் செய்ய. வேனிலால் மெலிந்த மயில், கார்கால இடி ஓசையைக் கேட்டு ஆர்ர்த்து எழுந்ததைப் போல, மெய்த்தவத்திருந்த அம்மை, உவகை மிக்கு அபொருந்திய அன்பு முன் செல்ல இறைவன் முன் வீழ்ந்து எழுந்து வீழ்ந்து எழுந்து மெய்விதிர்த்து நின்றாள். பல்கால் வீழ்தலும் மெய்விதிர்த்தலும் பேரன்பின் மெய்ப்பாடுகள். ]

கண்டுகண்டு கண்கள்தாரை காலவுச்சி யிற்கரங்
கொண்டுபோற்று மெய்த்தவக் கொழுந்துமுன்னர் விண்ணெறிச்
செண்டுகொண்ட வேற்றி¢னைச் செலுத்தியண்மி யெண்ணிலா
வண்டரண்ட மும்படைக்கு மாதியான வண்ணலார்         21
[ கண்டு கண்டு கண்கள் நீரை தாரைதாரையாக வெளியிட, உச்சிமேல் கரங்கள் குவித்துப் போற்றுகின்ற மெய்த்தவக் கொழுந்தாகிய இறைவி முன்னர் ஆகாய வழியில் செண்டு நடைகொண்ட விடையினைச் செலுத்தி அணுகி எண்ணிலா அண்டர் அண்டமும் படைக்கும் ஆதி ஆன அண்ணலார். கால- வெளியிட. விண் நெறி- ஆகாய வழி. செண்டு- விடையின் நடை விசேடம். ஆதி- முதல்வர். அண்ணலார்- தலைவர்.]

தணந்தநோய் தணந்திடத் தழீஇயினார் தழுவலும்
வணங்குலா யனத்தினீர் வயங்குபாலி நீங்கியாங்
கிணங்குகா ளிமத்துவக்கு நீங்கியேற் றரக்கருக்
கணங்குறுத்து கன்னியாக வண்டமீன்ற வம்மையும்         22
[தணந்த நோய்- பிரிந்ததால் வந்த நோய். தணந்திட நீங்கிட. வண்ணம் வணம் என தொகுத்தல் விகாரம் வணம்- அழகு. நீர் வயங்கு பால்- நீருடன் கலந்த பால். காளிமத் துவக்கு- கருமை நிறத்துடன் கூடிய தோல். ஏற்றரக்கர்= ஏற்ற அரக்கர். ‘அ’ தொக்கது. போரேற்ற அரக்கர்.
பிரிவினால் உண்டான நோய் நீங்கிட, இருவரும் தழுவினாரைத் தழுவினார். தழுவவும், அழகு குலாவிய அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்தது போலப் பொருந்திய கருநிறத்தோல் நீங்கிப் போரேற்ற அரக்கருக்குத் துன்பத்தைத் தரும் கன்னியாக உலகங்களை ஈன்றெடுத்த அம்மையும்]

கவுரவா ன¢றத்தளாய்க் களிப்புமிக்கு மேலெழ
இவறிநாத னா¡ரருட் டிறத்தை எண்ணி யீர்ம்புனல்
குவளைவாட்கண் வாரவார்ந்த கோதைபோ லொசிந்துபொன்
அவிர்பதாம் புயத்தின்வீழ்ந் தெழுந்தகங் கைகூப்பினாள்.         23
[கவுரம்- செந்நிறம். களிப்பு- மகிழ்ச்சி. இவறி – விரும்பி. செவ்வான் நிறத்தளாகி மகிழ்ச்சி மேலோங்க விருப்பத்துடன், நாதனாருடைய அருளை எண்ணி குவளை மலர் போன்ற அழகிய கண் நீர் வார நீண்ட மாலைபோன்று தளர்ந்து பொன்னொளி வீசும் பதமாகிய தாமரையில் வீழ்ந்து வணங்கி எழுந்து கைகூப்பினாள்.]

சித்திரம் பொறித்தெனத் திகழ்ந்த நங்கை மேனியின்
புத்தெழிற் பெருக்கமும் பொருப்பெதிர்ந்த வெம்முலை
மத்தகக் களிற்றை வென்று வாய்ந்தெழுந்த வீக்கமும்
அத்தனார் தடங்கணார அள்ளியள்ளி யுண்டனர்         24
[ ஒவியத்தில் வரைந்ததெனத் திகழ்ந்த இறைவியின் மேனியின் புதிய அழகின் ஆக்கத்தையும், மலையை எதிர்த்து எழுந்த விருப்பத்தை வருவிக்கின்ற முலையில் மத்தகக் களிற்றை வென்றதால் தோன்றும் விக்கத்தையும் இறைவர்கண்டு தம்முடைய பெரிய கண்கள் ஆர அள்ளி அள்ளி உண்டார். மகளிரின் அழகை ஓவத்தன்ன பாவை எனல் மரபு. வெம்- விருப்பத்தைக் தருகின்ற ]

யிரத்தொ ரெட்டுமாற் றடுக்கல்வெற்பு மோர்கவின்
மேயதம்மை மெய்க்கவின் விரிந்தலங்கு பான்மையாற்
பாயவங்கண் யாவர்மெய்யும் பண்டைநீர்மை மாறிய
தூயவண்ண லேறுமின் றுலங்குவெண்மை நீத்தததால்         25
[ஆயிரத்தெட்டு மாற்றுடன் பிரகாசிக்கும் பொன்மலையும் அம்மையின் உடலழகு விரிந்து விளங்கிய இயல்பினால் புதுக் கவின் அடைந்தது. அங்குப் பரவிய அனைவர் உடலும் பழைய இயல்பு மாறி, தூய இறைவரின் காளை வாகனமும் தன் விளங்கிய வெண்மை நிறம் மாறியது .]

அஞ்சுதுந் துமிக்கறங்க லோதையார்ந்து விம்மின
விஞ்சுதேன் றுவற்றிவாச மிக்ககற்ப கத்தலர்
மஞ்சுலாவு வானின்வான வக்குலங்கள் சிந்தின
பஞ்சிசேரு மெல்லடித் துறக்கமாதர் பாடினார்         26
[பஞ்ச துந்துமிகள் கலந்து ஆர்த்து விம்மின. வாசம் மிக்க கற்பக மலர்களைத் தேனீக்கள் மேகங்கள் உலாவும் வானிலிருந்து தேன் துளிக்கும் கற்பக மலர்களை தேவர் கூட்டத்தினர் சிந்தினர். வானுலக மாதர்கள் பாடினார்.]

பூதரோடி யாடினார் புகழ்ந்துதொண்ட ராடினார்
மாதரோடி யாடினார் மகிழ்ந்துசித்த ராடினார்
ஈடில்பாங்கி மாரெலாரு மின்பவெள்ள மாடினார்
வீடுகொண்ட தென்னயாரும் விம்மிதத்த ராயினார்.         27
[ வீடு- முத்தி. விம்மிதம் மகிழ்ச்சியால் தோன்றும் மெய்ப்பாடு]

இன்னவான பல்சிறப் பிணங்கவென்னை யாளுடைக்
கன்னிவெற் புயர்த்தமாது கண்ணுதற் பிரானடி
மன்னுமன்பி னா¡ல்வணங்கி வாழ்த்தியான் வழுக்களைந்
துன்னையங்க ணணுகுமாறு வந்துமா தவஞ்செய         28
[இப்படிப் பல சிறப்புக்களும் பொருந்த, என்னை ஆளுடைய இறைவி, இமயமலை ஈன்ற அழகி, நெற்ரிக் கண்ணுடைய இறைவனடியை நிலைத்த அன்பினால் வணங்கித் துதித்து ‘ யான் என் பிழையைக் களைந்து உன்னைக் கயிலாயத்தில் அணுகி இருக்குமாறு வந்து பெரிய தவத்தைச் செய்ய. ]

மாதராடல் ஓவு¡வுறாத மாடமல்கு காஞ்சியிற்
போதநீத வாதகாதல் பொங்கருட் கணல்கென
ஓதவேத முற்றுயிர்த் தொழுக்கனைத்தும் வைத்தருள்
நாதர்ஆதி தேவனாரு முன்நயந் திசைந்துபின்         29
[மகிழ்ச்சியால் மாதர்களின் ஆடல் நீங்காத மாடங்கள் நிறைந்த காஞ்சியில், போவதற்கு நீ ஒழியாத காதல் பெருகு அருள்கண் நல்கு எனக் கூற, வேதங்கள் அனைத்தும் உயிர்த்து வேத ஒழுக்கங்களை அருளிய நாதனார், ஆதிதேவனார் முன் விரும்பி இசைந்து பின்,]

காதன்மங்கை பங்கயக் கரத்துமன் னுயிர்க்குலந்
தீதிலாது வாழநீ செறித்தறஞ்செய் யென்றுல
வாதபாச னத்தினோடி ரண்டுவண் சராவமும்
ஈதலீத்து வெள்ளிவெற்பை யெய்திடப் பிராட்டியும்        30
[காதன் மங்கை- இறைவரால் காதலிக்கப்பட்ட மங்கை- உமை. உலவாத பாசனம்- வற்றாத பாத்திரம். சராவம்- அகப்பை, கரண்டி. ஈதல் ஈத்து- ஈதலைச் செய்து. உமையம்மையின் தாமரை மலர் போன்ற திருக்கரத்திலே மன்னுயிர்க்குலம் துயரின்றி வாழ நீ காஞ்சி சேர்ந்து அறஞ் செய்க என்று பணித்து, வற்றாத பாத்திரமும் அகப்பை (துடுப்பு)யும் ஈந்தளித்து வெள்ளி வெற்பை எய்தினார். ]

ஈந்தபாச னஞ்சராவ முன்வணங்கி யேற்றனள்
ஏந்தலார் அணைந்ததிக்கு நோக்கிநின் றிறைஞ்சினாள்
போந்தநம்ப ரோடுபோய புந்திமீட்சி கண்டிலாள்
வாய்ந்தவன்புகொண்டுதான் வழிக்கொளக் குறித்தனள்        31
[ பிராட்டியும் பிரான் ஈந்த பாசனம் சராவங்களை முன் வணங்கி ஏற்றனள். இறிவனார் சென்ற திசை நோக்கி நின்று இறைஞ்சினாள். இறைவரோடு சென்ற தன் மனத்தை மீட்டுக் கொள்ள இயலாதவளாகி மிக்க அன்புகொண்டு தான் காஞ்சி செல்லும் வழியை மேற்கொளக் முடிவு செய்தனள். நம்பர்- நம்பற்கு உரியவர். குறித்தனள்- முடிவு செய்தாள்.]

சண்டிகைப் பிராட்டியும் ததைந்த சாரதங்களும்
அண்டவாண ருங்குலா யடர்ந்துசூழ ஈ£ற்றுநாள்
வெண்டரங்க வேலையேழு மிக்கெழுந் தொலித்தென
மண்டுபல் லியங்கறங்க மால்விடைக்க ணேறினாள்         32
[சண்டிகை- காளி. சாரதங்கள்- பூதங்கள். ததைந்த- நெருங்கிய. அண்டவானர்- தேவலோக வாசிகள். ஈற்ருநாள்- ஊழிக்காலம். மால்விடை- பெரிய காளை வாகனம். சண்டாதேவியும் சாரதப் படைகளும் அண்டவாசிகளும் திரண்டு நெருங்கி சூழ,ஊழிக்காலத்து வெண்மையான அலைகளை உடைய கடல்கள் ஏழும் மிக எழுந்து ஆர்ரவாரித்து ஒலித்ததென, நெருங்கிய பல்வகை வாத்தியங்களும் பேரொலி செய்ய பெரிய விடைமேல் ஏறினாள்]

பெருமைமிக்க தன்வழிப் பிறந்ததான் றனைத்தணந்
தொருவியேகு மாறறிந் துயிர்த்தரற்றி னாலென
வருவிவீழ்ந் தழுங்குபொன் னடுக்கனீத்து மற்றி¢டை
மருவுமெண்ணில் குன்றநீள் வனங்களுங் கடந்தனள்.         33
[ பெருமை மிக்க தனக்குப் பின் பிறந்த தன்னை (உடன்பிறந்த இளையவரை) பிரிந்து நீங்குவதை அறிந்து பெருமூச்சு விட்டு அரற்றினாற்போல அருவிகள் விழுந்து ஒலிக்கும் பொன்மலையைக் கடந்து மற்றும் வழியில் பொருந்திய எண்ணில்லாத குன்றுகளையும் வனங்களையும் கடந்தனள்.}

அங்கணங்கண் வைகுதேவ ராதியோர்க ளன்பினாற்
பங்கயப் பதந்தொழப் பரந்தநோக் களித்தளித்
தெங்குமா ரணங்களங்க மீண்டிவிம்ம மென்மெல
மங்கைநண்ணு காலைமுற்று வேனில்வந்த டுத்ததால்         34
[ அம்மை எங்கெங்கு தங்கினாளோ அங்கங்கு இருந்த தேவர் முதலியோர்கள் பத்தியினால் தன் தாமரத் திருவடிகளை வணங்க அவர்கள் மேல் தன் பரந்த கண் நோக்கு அளித்து, எங்கும் வேதமும் ஆறங்கமும் ஈண்டி ஒலிக்க மென்மெல அம்மை செல்லும் சமயத்தில் இளவேனில் நீங்கி முதுவேனில் வந்து அடுத்தது]

கற்பகத் தருக்களுங் கரிந்துநீழ லோவிடப்
பொற்பிலங்கும் அண்டரூர் பொரிந்துநீறு பட்டுக
விற்பிறங்கு கங்கையும் வறப்பவந்து மேயதால்
தற்பரப் பிரான்கடைத் தழற்கணன்ன வேனிலே.         35
[தேவலோகத்துக் கற்பக மரங்களும் கரிந்து நிழலின்றி ஒழிய, அழகாக விளங்கும் தேவர்களின் நகரங்களும் வெப்பத்தால் பொரிந்து பொடியாக உதிர, ஒளிவிடும் கங்கையாறும் வறண்டுபோக, தனக்குத் தானே பிரானாகிய சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் தழல்போல வேனில் மேவியது]

ஒற்றையாழி பூண்டவெய்ய தேர்கடாவு மும்பரான்
கற்றைவெங் கதிர்ப்பிழம்பு காற்றி யூற்று நீரொடும்
வற்றவேரி வாவியோடை மற்றும்வாய் மடுத்தனன்
வெற்றவேனி லுக்குடைந்து நீர்நசைக்கண் மிக்கென         36
[ ஒற்றைச் சக்கரத்தையுடைய தேரை ஊரும் தேவனாகிய சூரியன், வெப்பமான வேனிலுக்குச் சோர்ந்து (தோற்று) நீர் வேட்கை மிக்குத் தன்னுடைய வெவ்விய கதிர்ப்பிழம்பினால் வெதுப்பி நிலத்தடி ஊற்று நீருடன் ஏரி, வாவி, ஓடை மற்றும் உள நீர் நிலைகளெல்லாம் வற்றிப்போம்படிக் குடித்துவிட்டான். சூரியன் ஊர்ந்து வரும் தேர் ஒற்றைச் சக்கரத்தை உடையது. உம்பரான் ஆகாயத்தில் வாழ்பவன், தேவன், சூரியனைக் குறித்தது. காற்றி- வெதுப்பி, வாய் மடுத்தனந் குடித்துவிட்டான். நீர்நசை- நீர்வேட்கை.]

செஞ்சுடர்ப் பிரானும்வெண் டிரைப்பெருங் குளிர்க்கடல்
எஞ்சலின்றி வைகல்தோறும் மெய்திமூழ்கி யாற்றலாற்
அஞ்சுவான் வழிச்சரிக்க வல்லனாயி னானலால்
விஞ்சுவேனில் வெம்மை தாக்கி வீதலுண்மை போலுமால்        37
[ செஞ்சுடர்ப் பிரான் -சூரியன். வைகல்தோறும்- நாள்தோறும். சரித்தல்- இயங்குதல். வீதல்- அழிதல். சூரியனும் நால்தோறும் வெண்மையான அலைகளையுடைய பெரிய குளிர்க்கடலில் உடல் திளைக்க மூழ்குவதால் அச்சத்தைத் தரும் வான் வழியே இயங்க வல்லவனாயினன் அல்லாதபோனால் வேனிலின் வெப்பம் தாக்கி அழிதல் உண்மை போலும்]

திங்கண்மே லுயர்ந்து மெய்து செவ்விமாறி மாறியும்
அங்கண் வேனில் வெப்பமெய்ய டாதுதப்பி யுய்ந்ததால்
இங்கிவ்வாறி சூழ்ச்சியின்மை போலுமேனை வெய்யவன்
வெங்கனற் கொழுந்தளாவிமெய்வெதும்புகின்றதே.         38
[சந்திரன் வானின் மேல் உயர்ந்தும் தோன்றும் எய்தும் உடல் செவ்வி மாறி மாறியும்வெப்பம் எய்திடாது தப்பிப் பிழைத்தது. இத்தகைய சாமர்த்தியம் இல்லாமையால் போலும் சூரியன் வெவ்விய சூட்டினால் உடல் வெதும்புகின்றான். ]

உதித்தெழுந்த வெண்ணிறத் துடுக்களென்று கூறுவ
கதித்தெழுந்து மண்ணெலாங் கருக்கிமிக் குயிர்த்தொகை
விதிர்த்துவெவ் வுயிர்த்தழுங்க வேட்டையாடு வேனிலிற்
கொதித்தவெப் பின்மாகமேனி கொப்புளித்த போலுமால்.         39
[உதயமாகி எழுந்த விண்மீன்கள் என்று கூறுவது, கோபித்தெழுந்து மண்ணூலகெலாவற்றையும் கருக்கிக் கருப்பாக்கி, உயிர்த்தொகை நடுங்கி பெரூச்செறிந்து வருந்த வேட்டை யாடுகின்ற வேனிலில் கொதித்த வெப்பத்தினால் ஆகாயத்தின் மேனி கொப்பளித்த கொப்பளங்கள் போலும்.
உடுக்கள்- விண்மீன்கள். கதித்து- சினந்து. கருக்கி- கருப்பாக்கி. வேட்டையாடும்- வருத்தும். மாகம்- ஆகாயம். ]

வெங்கனற் கொழுந்துமஞ்சும் வேனிலைத்த ணித்தும்என்று
எங்கணும் பரந்துசூழும் ஏழ்கடற் குலங்களும்
அங்கணே யெழுந்து நோக்கி யஞ்சிமே லெடுத்திடும்
பொங்குவெண் டிரைக்கரம் பொருக்கெனச் சுருக்குமே         40
[நெருப்புக் கொழுந்தும் உடைய வேனில் சூட்டினைத் தணிப்போம் என்று எங்கணும் பரந்துசூழும் ஏழ்கடல்களும், அவ்வாறே மேல் நோக்கி எடுத்த பொங்கு வெண்திரைக் கரம் (சுடவே) அஞ்சிப் பொருக்கெனச் சுருக்கிடும். ]

பூதலக் கிழத்தியும் பொருந்துநீர் வறத்தலால்
ஏதமுற்று நாவறந் திருங்கடற் குடித்தெழீஇச்
சீதநீ ரொழுக்குகென்று செல்லினத்தை வாய்பிளந்
தாதரத்தி னோடிரப்ப தொக்குமங் குறுங்கமர்.         41
[நிலமகளும் நிலத்தில் பொருந்து நீர் வறண்டு போனதால், தீங்குற்று நா வறண்டு கடல் நீரினைக் குடித்து எழுந்து குளிர் நீறை ஒழுக்குக என்று மேகக் கூட்டத்தை வாய் பிளந்து ஆவலோடு இரப்பதை ஒக்கும் அங்கு உற்ற வெடிப்புகள். பூதலக்கிழத்தி- நிலமகள். ஏதம்- கேடு. எழீஇ- எழுந்து. சீதம்- குளிர்ச்சி. செல்லினம்- மேகக் கூட்டம். ஆதரம்- ஆசை. கமர்- நிலவெடிப்புகள்.]

விண்ணெலாம் பரந்துசென்று வேனில்வெப் புடற்றலால்
அண்ணல்வா னவக்குழா மழுங்கிவான கன்றொரீஇக்
கண்ணகன்ற பாதலங் கரந்துவாழ்து நாமெனா
மண்ணகழ்ந்து புக்கவாய்தலுங்கடுக்கும் வார்கமர்.         42
[விண்ணெலாம் பரந்து சென்று வேனில் வெப்பத்தால் வருத்தத்தைச் செய்தலால், வானுலகத்தில் வாழ்வோர் துன்புற்று வானத்தை விட்டு நீங்கி இடமகன்ற பாதாளத்தில் வெப்பத்திலிருந்து மறைந்து வாழ்வோம் நாம் என மண்ணினை அகழ்ந்துபுக்க வாயில்களையும் போன்றிருந்தன நிலவெடிப்புகள். அகன்று ஒரீஇ- அகன்று நீங்கி. வாய்தல்- வாயில்.]

மாயிரும் புவிக்கண்விண்டு வார்கமர்க் குலந்தொறும்
போயுலாவி யாதவன் பொழிந்த செங்கதிர்த்திரட்
டூயவெந்தழற் பிழம்பு துஞ்சுகின்ற தோர்கிலார்
பாயொளிக்க லென்பவா ளராவினம் பரித்ததே.         43
[, இரும் இரண்டும் பெரிய எனும் பொருளன, மிகப்பெரிய எனப்பொருள் தரும். விண்டு- பிளந்து. ஆதவன் சூரியன். தஞ்சுதல்- தங்கியிருத்தல். ஓர்கிலார்- நினைகிலார். அரா இனம்- பாம்புக்கூட்டம். பரித்தது- தாங்குதல். ஆதிசேடன் என்னும் பாம்பு புவியைச் சுமந்து கொண்டுள்ளது என்பது ஐதீகம்.
பூமிக்க்கு அடியில் பாம்புக் கூட்டங்கல் இருப்பது,பெரிய புவிதலம் பிளந்த திறந்த பிலங்கள்தொறும் போய் நிறைந்து செங்கதீரின் தழற்பிழம்பு தங்கியிருப்பதை அறியாராகி அங்குப் போய் ஒளிக்க நினைத்தனர்]

மான்இனந்தனைக் கவற்ற வல்லவேனில் நீர்த்திரள்
மேல்நிமிர்ந்து தாவியாடு பெற்றிவேனில் வாய்ப்படுந்
தீநிலங் கொதிக்கும் வெம்மை சென்றுடற்று நோவினைத்
தானுமாற்றி டாதுமெய் தவப்பதைப்ப தொக்குமே         44
கவற்ற- வருத்த. நீர்த்திரள்- கானல்நீர். உடற்று நோய்- வருத்தும் துன்பம். தவ- மிகுதியாக. வேனில்பொழுதில், கானல் நீர் , கீழிருந்து மேலெழுதல், மான்கூட்டத்தை வருத்த வல்ல மான்கூட்டத்தை வருத்த வல்ல கானல் நீர், நிலத்தில் பட்ட்வுடன் வேனிலின் கொடுமையைத் தாக்க முடியாமல் பதைத்து மேனோக்கித் துள்ளுதலை ஒக்கும். வேனிற்காலத்தில் தோன்றும் கானல்நீரினை நீரென நினைத்து அதன்பின் சென்று மயங்கும். அதனைக் கானலின் செயலாகக் கூறினார்.]

கொள்ளுமன்பர் தம்மைவெய்ய கூற்றம்வந்து கொண்டநாள்
உள்ளுநின்றி ரங்குவோரும் ஓர்துளிக்க ணீர்பெறார்
கள்ளியுங் கரிந்துலர்ந்து கட்படா திறக்குமேல்
அள்ளலாகும்வேனில்வீக்க மாருரைக்க வல்லரே.         45
[பிறரால் எத்துணை அன்பு செய்யப்பட்டவராயினும், இயமன் வந்தூயிரைப் பிரித்துச் செல்லுகின்ற காலத்தில், அன்புடையாரிடமிருந்து ஓர்கண்துளி நீரையேனும் பெற முடியாது. நீர் வேண்டாத கள்ளிச்செடியும் வேனில் வெப்பத்தால் உலர்ந்து கரிந்து கண்ணுக்குப் புலப்படாது இறந்துபோகு மென்றால் வேனிலின்வீக்கத்தை யாருரைக்க வல்லராவர்? அள்ளலாகும் வேனில் என்றது அதன் கடுமையை உணர்த்திற்று]

வேறு
வேனில் இன்னணம் எங்கணும் விரிந்திடும் பருவம்
தேன்நி லாவிய பணிமொழி முகிழ்முலைச் செவ்வாய்க்
கான்நி லாங்குழற் கதிர்மலைக் கொடிவரு நெறியால்
வான்நி லாம்புகழ் வயங்கிய மகதநா டணைந்தாள்.         46
[ வேனில், இவ்வாறு எவ்விடத்தும் விரிந்திடும் பருவத்தில் தேன் போல இனிமைதரும் மொழி பேசும் இறைவி ஆகாயம் வரை அளாவிய புகழைஉடைய மகதநாட்டினை அடைந்தாள் காந் நறுமணம். மலைக்கொடி- மலையின் மகள்.]

மகதநா டெலாமொன்பது வருட மூழ்வலியான்
முகில்வ ழங்குதலின்றி நீர்வறந் துயிர்முழுது
மிகுபெரும்பசி யுழந்து கண்சாம்பி மெய்தளர்ந்து
பகைமைகூ ரிலம்பாடு கோட்பட்டன வந்நாள்         47
[ மகத நாடு முழுவதும் ஊழ்வினைப் பயனால், மேகம் மழை பொழிதலின்றி, நீர் வற்றி, உயிர்கள் அனைத்தும் பெரும் பசியினால் மிகவும் வருத்தமுற்று கண் சோர்ந்து உடல் தளர்ந்து, பகைமை மிக்க வறுமையினால் பீடிக்கப் பட்டிருந்தது. முகில் வழங்கல்-மழை பொழிதல். இலம்பாடு- வறுமை]

நற்றி றந்தரு நறும்புன னாமமு மின்றி
யெற்றை நாள்களும் வேனிலே யனைய வித்தேயம்
பற்று வெந்தழல் வேனிலம் பருவத்தின் கடுமை
யிற்றெ னக்கிளந் தியம்புதற் குவமை யாதுளதே         48
[நல் திறம்- அறம். நாமமும் இன்றி- பெயரளவிலும் இல்லாமல். அறத்திற்குஇன்றியமையாமல் வேண்டப்படும் நீர் பெயரளவிலும் இல்லாமல், ஆண்டின் எல்லா நாள்களுமே வேனிற்காலமே எனப்படும்படியாக இம்மகதநாட்டைப் பற்றிய நெருப்புப் போன்ற வேனிலின் கடுமைக்கு உவமையாகச் சொல்லுவதற்கு யாதுளது ஒன்றும் இல்லையாம்.]

நங்கை கண்ணிணை புதைத்தலும் நுதன்மிசை நாட்டம்
செங்கண் ஏற்றவர் திறந்தநாள் அதற்படு மொளியே
எங்கு மாகவவ் வெரிவிழி வெம்மைதான் முழுதும்
அங்கண் வந்துவீழ்ந் தல்கினா லனையதவ் வீக்கம்         49
[நுதல்மிசை நாட்டம்- நெற்றிக் கண். இறைவி கண்ணினைப் புதைத்தலும் நெற்றிக் கண்ணை இறைவர் திறந்த அந்நாள் , அதனிலிருந்து தோன்றிய ஒளியே எங்குமாக, அந்நெறுப்புவிழியின் வெம்மைதான் முழுவதுமாக அங்கு விரும்பி வந்து தங்கியதைப் போன்றிருந்தது அங்கு வெப்பத்தின் மிகுது. நங்கை- பெண்களில் சிறந்தவள்- இறைவி. நாட்டம்- கண். ஏற்றவர்- காளை வாகனத்தை உடையவர். அக்காளை வாகனம் சிவந்த கண்ணை உடையது. வீழ்ந்து- விரும்பி. அல்கியது- தங்கியது. வீக்கம்- மிகுதி]

வழுவி லேனைய பருவங்கள்வந்தடுத் துழியுங்
கழிவதின்றி யீங்கிருக்க லாமெனப்பெறுங் களிப்பாற்
பழுதறும் புவிப்பரப்பெலாம் பரம்பியவேனின்
முழுதுமங்கொருங்கிறுத்தது மனையதம்முதிர்ச்சி         50
[ தவிராமல் ஏனைய பருவங்கள் வந்தபோதிலும் தான் நீங்காமல் என்றும் இங்கு இருக்கலாம் என்னும் களிப்பால் புவிப்பரப்பின்மீது பரவிய வேனிலெலாம் முழுதும் ஒன்று சேர்ந்து இங்குத் தங்கியது போலிருந்தது, அங்கு வேனிலின் முதிர்ச்சி]

வானினோடு புட்குலமும் வாட்போக்கியார் மலையின்
மேனிலாவிய காகமேயெனவெந்துவீழ்ந்த
தீநிலாவியபுழுவெனத் தீந்த கானகத்தி
மேனமெண்கு மானிபமரி யேனவு மிறந்த.         51
[ வானில் ஓடுகின்ற பறவைக் குலமும் வாட்போக்கியார் மலையின் மேல் உலாவிய காகம் வெந்து வீழ்ந்ததைப்போல தீயில்பட்ட புழுவெனத் தீய்ந்தன; கானகத்தில் பன்றி, கரடி, மான், யானை, சிங்கங்களும் பிறவும் இவ்வாறே இறந்து போயின. இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச்செய்தி. "காகம் அணுகாமலை" என்பர். "காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பரம்பு " என்பது நாகைக் காரோணப் புராணத் தொடர். ஏனம்- பன்றி. எண்கு- கரடி. இபம்- யானை. அரி-சிங்கம்.]

தண்டமா யிரமகழினுந் தண்புன லூறல்
கண்டிடார் பிறநாட்டுறு கயத்துநீர் முகந்து
கொண்டு நண்ணினு நண்ணுமுன் கொடுந்தழல் வெப்ப
முண்டு தேக்கிட வுணங்கு மழக்கொண்ட பொருள்போல்        52
[தண்டம்- ஆளுயரக்கோல். ஆயிரம் தண்டம் ஆழம் அகழினும் தண்ணீர் ஊற்றினைக் காணமாட்டார். வேறு நாட்டிலிருந்து கயத்து நீரை முகந்து கொண்டு இங்கு வந்தாலும், இங்கு வந்து சேருமுன் வேனிலின் கொடுந்தழல் வெப்பம் அந்த நீரினை உண்டுவிட வறண்டு விடும், பிறரை அழக் கொண்ட பொருள்போல். பயன்படாமல் முற்றும் அழிதற்கு அழக்கொண்ட பொருள் உவமை ஆயிற்று. ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம்’(திருக்குறள். 659)]

அறிவி லார்தமை வருத்துழி யொருபொழு தவர்பாற்
சிறிய புன்கொடை காணினு மத்தினத் தன்றி
உறுவ தின்மைபோல் வறுங்கிணற கழ்ந்துழி யொருகாற்
பெறினு மப்புனல் பிற்பொழு துரையொடுங் கெடுமால்         53
[ அறிவிலார்தம்மை வருத்தியபொழுது ஒரு சமயம் அவரிடமிருந்து மிகச்சிறிய பொருள் கிடைத்தாலும் அது அத்தினத்தன்றி நெடுகப்பயன்படுவதில்லை. அதுபோல் வறண்ட கிணற்றை அகழ்ந்தபோது ஒருசமயம் சொஞ்சம் நீர் பெற்றாலும் அது பின்னர் பெயரோடும் கெடும். நீரும் பெயரும் ஒருசேரக் கெடும் என்றவாறு. அறிவிலார்- பண்பற்றவர்கள்.]

மனையின் மக்களின் ஒக்கலின் நிதிகளின் மற்றும்
இனைய வற்றிடை எய்துவ தில்லையால் எவர்க்கும்
அனைய சேற்றுநீர்க் கலங்கன்மேல் வைத்திடுமன்பு
நினையி னோங்குதம் உயிர்க்குறும் அன்பையே நிகரும்.        54
[எவர்க்கும் சேற்று நீர்க் கலங்கல்மேல் வைத்த அன்பு மனைவி, மக்கள், சுற்றத்தார், செல்வம் மற்றும் இத்தகையவற்றின்மேல் எழுவதில்லை; ஆராயின் அவரவர் உயிர்மேல் வைக்கும் அன்பைப் போல.]

அலநெ டும்படை யுழவர்க ளங்கைதொட் டறியார்
நிலவு பண்ணைகள் நெடுவரப் பினநிலை குலைந்து
குலவு பேரொடு மறைந்தன குளங்கள் காலேரி
பலவுங் கோடுகள் அழிந்தன பண்பிலார் பொருள்போல்         55
[அலநெடும்படை- கலப்பை. உழவர்கள் நிலத்தை உழ்வு செய்யும் கலப்பைகளைத் தொட்டறியார்; வயல் வெளிகளின் வரப்புகள் நிலை அழிந்து வரப்பு என்னும் பெயரும் அழிந்தன; நீர்நிலைகளான குளங்கள், வாய்க்கால்கள், ஏரிகள் பலவும் கரை அழிந்தன. பண்பிலார் செல்வம் அழிவதைப் போல இருந்த அடையாளமும் இன்றிக் கெட்டன என்றவாறாம்.]

நிரப்பெ னும்பெரும் பகைவந்து நிலவலின் யாதும்
இரப்பி லார்களுங் கரப்பது துணிந்தனர் அம்மா
கரப்பி லார்களுங் கரப்பது துணிந்தனர் கருத்தின்
விருப்பி லார்களு மிழிந்தவும் விரும்புமா துணிந்தனர்.         56
[நிரப்பு- வறுமை. கரப்பு- ஒளித்தல், மறைத்தல். கருத்தின் விர்ப்பிலார்- மனத்தில் எவ்வித ஆசையும் இல்லாதவர்கள்.
வறுமை என்னும் பெரிய பகை நாட்டில்நிலவுதலினால், எதையிம் இரக்காதவர்களும் தங்களிடம் உள்ள இரக்கப்படாத பொருள்களையும் மறைக்கத் தொடங்கினர். எதையும் ஓளித்து வைக்காதவர்களும் அதாஅது கரவாது கொடுப்பவர்களும் மறைக்கத் தொடங்கினர். எந்த ஆசையும் இல்லாதவர்களும் வறுமையினால் இழிந்தவற்றையும் செய்ய்த் துணிந்தனர்.]

பொய்மை சொல்லுதற் கஞ்சிய புலனறிவோரு
மெய்மை சொல்லுதற் கஞ்சினார்விதியுளி யுகந்த
தெய்வ பூசனை செய்தன்றி மற்றொன்றுஞ் செய்யார்
உய்யு மாறு தேர்ந்துட லினையோம்பியே கழிந்தார்         57
[பொய் சொல்லுவதற்கு அஞ்சிய மெய்யறிவாளர்களும் உண்மை சொல்லுவதற்கு அஞ்சினர். ஆகமநூல்கல் விதித்தபடி தெய்வ வழிபாடு செய்தன்றி வேறொன்றினையும் ச்ய்யா ஒழுக்கம் உடையாரும் தாம் உயிர் பிழைப்பதற்காக வேண்டி உடலைப் பாதுகாதற்கு வேண்டியனவற்றைச் செய்தே காலம் கழித்தனர்]

களவுகேட் டறியார்களுங் களவினின் முயன்றார்
அளகமாதர் தம்முயக்கிடை தெரிந்தறி யாத
விளமை மைந்தரு மெய்திய பசியினால்யாவும்
உளம்வெறுத் தொரீஇ யின்பவீ டடைந்துளா ரொத்தார்.         58
[களவு என்பதனைச் சொல்லளவிலேனும் கேட்டும் அறியாதவர்களும் கூடக் களவில் பொருள்களைக் கொள்ள முயன்றனர். கூந்தல் மாதர்களின் கலவியினை இடையீடு இல்லாமல் துய்த்த இளமையுடைய மைந்தரும் பசியினால் இன்பத்தை வெறுத்து முத்தி இன்ப வீடடைந்தவர்களைப் போல இருந்தனர்.]

கண்ணும் ஆவியும் எனவுறு கேண்மையர் கனல்வேம்
மண்ணு டன்பசு மண்ணெனப் பகையின ரானார்
எண்ணு மூண்சிறி தெய்தினும் பாதியை நாளை
யுண்ணு வாமெனப் பசியினா ளொளித்துவைத் தமர்ந்தார் 59
[கண்ணும் உயிரும் எனக் கலந்த நட்புடையோரும் இப்பொழுது நெருப்பில் வெந்த மண்ணுடன் கலந்த பசுமண் என ஒட்டாது மாறுபாடுடையராயினர். பெரிதாக மதிக்கப்படும் உணவு சிறிது கிடைத்தாலும் அதனை முழுதும் உண்ணாமல் நாளை உண்ணுவோம் என விரும்பி மறைத்து வைத்தனர். கண்ணும் உயிரும் கலந்தே ஒருசேர ஒரு பொருளைக் காண்பதாகிய வினையைச் செய்கின்றன. எனவே அது இருவரின் நட்புக்கு உவமை யாயிற்று..]

மதுர மங்கல முழக்கமு மறையொலி முழக்கும்
அதிரும் வார்முர சோதையும் அறாமனை தோறும்
பொதிநி ரப்பினாற் பொன்றினார் அழுகையும் பறையும்
உதக மாதிகட் கூடிய கலாமுமே யோங்கும்.         60.
[இனிய மங்கல வாத்திய முழ்க்கொலியும் வேத பாராயண ஒலியும் ஒலிக்கின்ற அறமுரசொலியும் நீங்காத மனைகள் தோறும் இப்பொழுது பொதிந்துள்ள வறுமையினால் இறந்தவர்களை நினைந்த அழுகையும் பறையும் கண்ணீரும் கம்பலையுமே ஓங்கும். நிரப்பு- வறுமை. பொன்றினார்- இறந்தவர். உதகம் – நீர், உதகம் ஆதி கண்- கண்ணீர். கலாம்- வேறுபட்ட ஒலிகள். ]

வேள்வி மல்கிய தீம்புகைப் படலையும் வினைஞர்
ஆள்வி னைத்திறத் தட்டில்வாய்ப் புகையும் மானனையார்
வாள்வி டுங்குழற் கேற்றிய புகையொடு மாளக்
கோள் விறந்தவா னழக்கடக் கொழும்புகை மலிந்த         61
[ படலை- பரப்பு. வினைஞர்- சமையற் கலைஞரைக் குறித்தது. வேள்விப் புகையும் சமைக்கும் திறம் வல்லார் உணவு சமைக்குபொழுது எழும் இனியபுகையும், மான் அனைய இளமகளிர் கூந்தலுக்கு ஏற்றும் மணமிக்க புகையுடன் இறக்க, இப்பொழுது சுடுகாட்டில் பிணம் சுடும் வாடையுடன் கூடிய புகை ஆகாயத்தைக் கொண்டன கடம் – காடு. அழந் பிணம். அழற் கடம்- சுடுகாடு]

மாழை யாற்பெரி யோர்களு மாடெலாந் திரிந்தும்
வீழு மூண்வகை கிடப்பரு மெலிவினாற் பெரிதும்
பீழை யுற்றனர் சீபெரு நிதிபடைத் தென்னே
ஊழின் நல்லறம் பண்டுசெய் துள்ளக முவவார்         62
[பொன் படைத்த செல்வர்களும் எல்லாப்பக்கமும் திரிந்து தேடியும் விரும்பும் உணவுவகை கிடைக்காததால் மெலிந்துபோய்ப் பெரும் துன்பமுற்றனர். பெருநிதி படைத்திருந்தும் பயன் என்ன? முன்பு செல்வம் படைத்திருந்தும் நல்லறம் செய்யாத தீவினையின்ர்தாம் ஈழினால் இத்தகைய துன்பம் அடைவர். சி- இகழ்ச்சிக் குறிப்பு. பீழை- பெருந்துன்பம்]

அரசன் கொல்லினுங் கொல்லிய அதுநமக்கினிதே
விரவு நல்குரவளித் திடுமெலிவினு மென்னா
ஒருவர் உண்பதி னொருவர் போய்மிச்சிலைத் துமித்தங்
கிருக ரத்தினு மீர்ப்பர்மற் றவரெதிர் ஈர்ப்ப         63
[அரசன் கொல்லினும் அது நமக்கு இனிதே வறுமை கொடுக்கும் துன்பத்தைக் காட்டிலும் இறத்தல் இனிதே, என்று ஒருவர் உண்பதில்ஒருவர்போய் எச்சிலைஉமிழ்ந்து மற்றவர் எதிர் ஈர்ப்பத், தம்முடைய இருகரத்தாலும் ஈர்ப்பர். தம்முடைய எச்சிலை அவர் விரும்பார், வீசிவிடுவர் என்னும்நினைப்பால் அதன் மீது உமிழ்வர். ஆனால் பசி பிறர் எச்சிலையும் உண்ணச் செலுத்தும் என்க]

தகவ லாதவுந் தகவெனச் செய்தனர் தமக்கு
நுகரொ ணாதவும் நுகர்ந்தனர் நூலினான் மரபான்
இகவொ ணாதவு மிகந்தனர் என்னென வுரைக்கேன்
மகத நாடுறு பசிப்பெருங் கொடுமையை மாதோ.         64
[தமக்குத் தகுதியில்லாதனவற்றையும் தகுதியானதெனச் செய்தனர். தாம் உண்ணுதற்கு ஆகாதனவற்றையும் உண்டனர். நூல்களாலும் மரபாலும் கைவிடக் கூடாது என விதிக்கப்பட்ட ஒழுக்கங்களையும் கைவிட்டனர். மகத நாடு உற்ற பசியின் கொடுமையினை நான் என்னென்று உரைப்பேன்? ]

குழிந்த கண்களுங் கருகிய வாயும் பைங்குடரை
யொழிந்து நின்றதே எனமுது கொட்டிய வயிறுங்
கழிந்து வன்றசை யலகிட்டுக் காணலாம் படியென்
பெழுந்த மெய்யுங்கால்பின்னிய நடையுமே யெவர்க்கும்         65
[பசியால் குழிந்த கண்களும், உலர்ந்து கருகிய வாயும், பசிய குடரில்லாமல் எனக் கூறும்படியாக முதுகினை ஒட்டிய வயிறும், தசையே இன்றி கணக்கிட்டு எண்ணிவிடலாம்படி என்பு எழுந்த உடலும், கால் பின்னிய நடையுமே அங்கு எவருக்கும்.]

பிணங்க ளீட்டமே தெருத்தொறும் பிணநுகர் பெரும்பேய்க்
கணங்கள் ஈட்டமே கடிநகர்தொறுங் கணமாடும்
துணங்கை ஈட்டமே நாடுகள் தொறுந்துணங் கையைக்கண்டு
அணங்கு மாந்தரே மகததே யத்தலை யனைத்தும்.         66
[பிணங்களின் கூட்டமே தெருக்கள் அனைத்திலும் நிறைந்திருந்தது பெரும் பேய்களின் கூட்டமும் அப்பேய்களின் கூட்டம் ஆடும் துணங்கைக்கூத்தின் திரளே நாடெங்கிலும். அத்துணங்கைக் கூத்தைக் கண்டு அஞ்சும் மக்களே மகத நாடெங்கிலும்]

காவல் மன்னவன் பருமவெங் களிறும்வாம் கவன
மாவு மற்றவும் வழங்கிய வுணவி னாற்றாது
தாவும் வெப்பினாற் றுரும்பென வுணங்கிமெய்தளர்ந்து
நாவை நாற்றிநின் றுயிர்ப்பன நாய்களே யனைய         67
[பருமம்- யானைமேல் இடும் தவிசு. வாம்- வாவும் என்பதன் தொகுத்தல்விகாரம்- தாவும் கவன மா- காற்றென ஓடும் குதிரை. அரசனுடைய களிறுகளும் பாய்ந்து ஓடும் குதிரைகளும் அவைகளுக்கு அளிக்கப்பட்ட உணவு போதாமையாலும் பரந்த வெப்பத்தினாலும் துரும்பென வாடி வற்றி உடல்தளர்ந்து நாய்போல நாவினைத் தொங்கவிட்டு மூச்சுவிட்டன.]

கொடிய வன்பசிக் கோமகன ரசுவீற் றிருப்பப்
படியெலா மலங்காரஞ் செய்திட்டெனப் பசும்புன்
னெடிய திண்மரமாதி வெஞ்சாம்பரு மென்புங்
குடருஞ் சோரியுங் கொழுவுமெங் கணுங்குழீ இனவால்        68
[கொடிய வன்பசியாகிய அரசன் அரசு வீற்றிருப்பப் பூமியெலாம் அலங்கரித்ததைப்போல பசும்புல், நெடிய மரம் முதலியன அனைத்தும் கருகி வெஞ்சாம்பலும் எலும்பும் குடரும் இரத்தமும் நிணமும் எங்கும் திரண்டு இருந்தன.]

இன்னவா றெலாந் துயருறு மகத்தத்தி லெனையாள்
அன்னை சேறலு மங்குளா ரனைவரும் வருத்தந்
தன்னி னீங்கினார் தரைகிடந் தவரெழுந் திருந்தார்
பன்ன வாற்ற லிலார்களும் பன்னினா ரம்மா.         69
[இவ்வாறு எல்லாம் துயருரும் மகத நாட்டில் என்னை ஆளுடையளாகிய அம்மை வந்து சேறலும், அங்குளார் அனைவரும் வர்த்தங்கலை நீங்கினார். தரையில் கிடந்தவர் எழுந்திருந்தார். பேசும் சத்தி இல்லாதவர்களும் பேசினர். பன்ன- பேச.]

நடையி லார்களு நடந்தனர் நன்பொருள் சிறிதுங்
கொடையி லார்களும் உள்ளத்திற் கொடுத்திட முயன்றார்
கடைய செய்தவ றென்செய்தா மெனவுளங் கரைந்தார்
கொடிய ராயினார் குளிர்முகத் தினிய ராயினரே.         70
[நடக்க இயலாதவர்களும் நடந்தனர்; நல்லபொருள் ஒன்றும் கொடுக்க இயலாதவர்களும் கொடுப்பதற்கு உள்ளத்தில் விருப்பமுற்றார்கள். இவ்வாறு பாவியராவதற்கு எத்தகைய தற்றினைச் செய்தோமோ என உளம் கரைந்தார். கொடியராயினரும் குளிர்ந்த முகத்துடன் இனியராயினர்.}

அறஞ்செயா திறந்தமைக் குழைந்தார் சிலரன்பின்
திறஞ்செயா திறந்தமைக் குழைந்தார் சிலர்தெய்வம்
இறந்தி டாதினிக் காக்கு மென்றார் சிலர்தம்மை
அறிந்திடா தெழுமகிழ்ச்சி யாற்றம்முளீ தறைவார்.         71
[அறஞ்செய்யாமல் காலத்தினை வறிதே போக்கினமைக்கு வருந்தினர் சிலர். பிற உயிரிடத்து அன்பு செய்யாமல் கழிந்ததற்கு வருந்தினர் சிலர். இனி, தெய்வம் தம்மைப் பட்டினியால் சாவாமற் காக்கும் என்றனர் சிலர். சிலர் தம்மையறியாமலேயே தம்முள் எழும் மகிழ்ச்சியால் தமக்குள் இவ்வாறு பேசிக்கொண்டனர். குழைந்தார்- வருந்தினார்.]

நெருநல் போற்பசி நெருப்பிற்றை நாளெமை நெருக்கிப்
பொருது கின்றில தென்கொலோ போனமெய் வலியு
மருவு கின்றது வருத்தமுங் கவலையு முன்னம்
ஒருவு கின்றது காரணம் ஓர்கிலே மென்பார்         72
[நெருநல்- நேற்று. ஒருவுகின்றது- நீங்குகின்றது. ஓர்கிலேம்- அறிகிலேம்.
நேற்று எம்மை வருத்திய பசி இன்று எம்மை நெருக்கி வருத்த வில்லை. எம்மி விட்டு நீங்கிய உடற்பலம் மீண்டும் வந்து பொருந்துகின்றது. முன்னம் எம்மை கலக்கிய வருத்தமும் கவலையும் எம்மை விட்டு நீங்கின்றன. இம்மாற்றங்களுக்கெல்லாம் என்ன காரணம் அறிகிலேம் என்பார்.]

எமக்கு மன்னதே யாயதா லிந்நின்ற மாந்தர்
தமக்கு மன்னதே யாயது போலுந் தண்முகமு
மிமைக்குங் கண்களு மலர்ந்தன வெரிபெரும் பசியைக்
குமைக்கும் வாளுடை யாரெனக் குளிர்ந்தன ரென்பர்         73
[எமக்கும் அப்படியே ஆயிற்று. இங்குள்ள மாந்தர்கட்கும் அப்படியே ஆயது போலும். குளிர்ந்த முகமும் இமைக்கும் கண்களும் மலர்ந்தன. நெருப்பென எரிக்கும் பசியை வெல்லும் வாளினை உடையாரென உரைத்தார்.]

சுற்றி னெண்ணில் பல்பரிசனந் தொழுதுசூழ் வரவோர்
கற்றை வார்குழற் கன்னியிந் நாட்டிடைப் பெற்ற
முற்று வந்தன ளென்பரா லன்னவுத் தமியாற்
பெற்ற தேகொலாமிந் நலமெனப் பெரிது வப்பார்         74
[சுற்றிலும் எண்ணில்லாத பரிசனங்கள் தொழுது சூழ அம்மை இந்நாடுக்கு விருப்புடன் வந்தனள் எனக் கூறுகின்றனர். அந்த உத்தமியால் அந்த உத்தமியின் வரவால் பெற்றதே போலும் இந்நலமெலாம் எனப் பெரிதும் மகிழ்வார்.]

அன்ன மாதிவ ணகலுமேற் பண்டுபோ லழலி
னின்னல் வந்தெமை யிறுக்குமே யென்பரிவ் விடுக்கண்
தன்னை நாந்தணந் துய்யுநாள் வரினன்றிச் சாராள்
கன்னி யாதலிற் கடந்தன மிடும்பைநோ யென்பார்         75
[அத்தகைய மாது இவள் நம் நாட்டை விட்டு அகன்றால் முன்பு போல் துன்பம் வந்து எம்மை வருத்துமே என்பார். அங்ஙனமன்று, இந்தத் துன்பத்தை விட்டு நாம் நீங்கு நாள் வந்தாலன்றி இவள் இங்கு வாராள். கன்னி இங்கு வந்துற்றமையால் நாம் இடும்பை நோயினைக் கடந்து விட்டோம் என்பார்.]

வந்த மாதுமண் மகள்கொலோ வானவர் மகளோ
சிந்தை தேர்வரி தென்பர்கள் சேவுகைத் தருளும்
அந்த மாண்பினா லெய்துமுன் னஞர்கெட லானு
மிந்த வார்குழ லிறைவியே போலுமென் றிசைப்பார்         76
[இங்கு வந்துள்ள மாது நிலமகளோ? தேவமகளோ? நம் அறிவால் அறிவது அரிது என்பர்கள். விடையை ஊர்தியாகச் செலுத்தியருளும் அந்தப் பெருமையாலும், வரும்முன்னரேயே நம் துன்பம் அனைத்தும் நீங்குதலானும் இங்கு வந்துள்ள இவ்வார்குழலி இறைவியே போலும் என்று கூறுவார். மாது- அழகி. தேர்வு- தெளிவு. சே- காளை. மாண்பு- பெருமை. அஞர்- துயர். வார்குழல்- நீண்டகூந்தல். அன்மொழித்தொகையால் அதனை உடைய பெண்ணைக் குறித்தது.]

மாந்த ரின்னன தங்களுட் கூறினர் மகிழப்
போந்த வெம்பெரு மாட்டியும் புகுதுமத் தேயம்
வாய்ந்த தன்றிரு வாணையி னிகழுமூழ் வலியாற்
றீந்த தன்மையை நோக்கினள் சேல்விழி வெதும்ப.         77
[மக்கள் இவ்வாறு தங்களுள் கூறினராகி மகிழ, அந்நாட்டுக்குப் போந்த இறைவியும் தன் திருவாணையால் (சங்கற்பம்) நிகழும் ஊழ்வினை வ்லியினால் தீய்ந்த தன்மையைத் தன் சேல் போன்ற விழியினால் நோக்கி வெதும்பினாள். வெதும்பல்- துயருறல்.]

இரக்க முள்ளகத் தூற்றெழ வினையநா டனைத்துஞ்
சுரக்கு நீருண வாதியாற் றுயரெலாந் துரந்து
புரக்க வேண்டுமென் றுன்னினள் போதலைத் தணந்தாள்
பரக்கும் வின்மணிச் சாலைகள் நிருமித்தாள் பலவும்.         78
[கருணை தன் உள்ளகத்தில் சுரக்க, ப்ஞ்சத்தில் வாடும் இந்நாடு முழுதும் நீர், உணவு முதலியன இன்மையால்வருந் துயரனைத்தையும் ஓட்டிக் காப்பாற்றுதல் வேண்டும் என நினைத்தாள். மகத நாட்டைக் கடந்து போதலைத் தவிர்ந்தாள். அறச் சாலைகள் பல நிருமித்தாள்]

தூய செந்நெலின் கூடுகண் முதலிய துறுத்தாள்
காய முட்டிய காக்களு நந்தன வனமுந்
தோய முட்டிய தோடவிழ் மலர்த்தடம் பலவு
மேய சாலையின் புறமெலா மேதக விளைத்தாள்         79
[ நெல்லினைச் சேமிக்கும் கூடுகளைச் செறிய வைத்தாள். வானத்தை முட்டும் மரச்சோலைகளும் நந்தனவனங்களும் நீர் நிறைந்த மலர்த் தடாகங்கள் பலவும் சாலையின் புறமெலாம் சிறப்புற அமைத்தாள். கூடு- நெற்களஞ்சியம். துறுத்தல்- செறித்தல். காயம்- ஆகாயம், முதற்குறை. கா- சோலை. தோயம்- தண்ணீர். முட்டிய – முழுதும் நிரம்பிய. சாலை- நெடுந்தெரு. மேதக- சிறப்புற.]

உண்டி நால்வகை யறுசுவை யூற்றெழச் சமைத்துப்
பண்டி யேற்றினள் தெருத்தொறு முய்த்தனள் பகர்ந்தாள்
மண்டி வந்தவர் தமையெலாஞ் சாலையின் வகுத்து
முண்ட கச்செழுங் கரங்களான் முகந்தனள் படைத்தாள்         80
[நாவில் உமிழ் நீரினைச் சுரப்பிக்கும் அறுசுவையான நால்வகை உணவுகள், சமைத்து வண்டிகலில் ஏற்றினாள்; தெருத்தெருவாகச் செலுத்தினள்; உணவு கொண்டு வருதலைக் கூறி அறிவித்தாள். நெருங்கி வந்தவர்களுக்கெல்லாம் அறச்சாலையில் அமர்வித்துத் தன் தாமரைச் செழுங்கரங்களால் உணவினை முகந்து படைத்தனள். உண்டி நால்வகை: உண்ணல், தின்னல், நக்கல், பருகல் என்பன. அறுசுவை: இனிப்பு, புளிப்பு, காரம் , துவர்ப்பு, உவர்ப்பு, கைப்பு என்பன. பண்டி- வண்டி]

எரிசெய் நோய்ப்பசி யின்னலி னுழந்த வெல்லீரும்
வருக வந்திடின் விலாப்புடை மலையென வீங்க
இரத வுண்டிக ளுண்ணலா மெனநகர் தோறு
முரச றைந்தனிர் வருகென முடுக்கினாள் சிலரை.         81
[எரிக்கின்ற பசிப்பிணியினால் இன்னலுழந்த எல்லாவரும் வருக! வந்தால் விலாப்புடைக்க, மலைபோல் வயிறு வீங்கச் சுவையான உணவுகளை உண்ணலாம் என நகர்தோறும் முரசறைந்து வருக என ஆட்கள் சிலரை ஏவினாள். பசியால் ஏற்படும் துயரம் பெரிது ஆதலான் எரிசெய் நோய்ப்பசி என்றார். இரதம்- சுவை. முடுக்கினாள் – செலுத்தினாள்.]

கலனும் ஆடையுங் கமழ்விரைச் சந்தனச் சேறும்
இலகு மாழையும் மரதந வீட்டமும் எவையும்
அலகி லாதன அள்ளின ளிறைத்தனள் விலங்கின்
குலமும் புட்களும் பசிகெடக் கொளுத்தின ளிரைகள்         82
[அணிகலன்களும் ஆடைகளும் வாசனைத் திரவியங்களும் பொன்னும் இரத்தினங்களும் எவையும் அளவிலாதன அள்ளி இறைத்தனள். விலங்குகளும் பறவைகளும் பசி கெடுமாறு இரைகள் மிகுவித்தனள்.]

உண்ண வம்மினென் றுலம்பிய முரசறை யொலியும்
எண்ணி லார்களுங் குழுமினர் எய்துறு மொலியும்
வண்ண வான்சுவை யுணவுகள் வழங்குபே ரொலியும்
அண்ணி யுண்டவர் துதியொலி யுடனெங்கு மமலும்.         83
[உண்ண வருக என்று முரசு அழைக்கும் முரசொலியும், உண்ணுவதற்குக் கணக்கிலாதவர்கள் வந்து எய்தும் ஒலியும், பல்வகைசுவையான உணவுகளை வழங்குகின்ற பேரொலியும் நெருங்கி உண்டவர்கள் நன்றியுடன் துதி செய்கின்ற ஒலியுடன் கலந்து எங்கும் திரண்டொலிக்கும். உலம்பிதல்- ஒலித்தல். அண்ணி- அடைந்து. அமலும்- நிறையும்.]

மறைவ லாளர்கள் வேள்வியும் வளர்ந்ததுமனுவின்
நிறைவ லாளர்க ளியற்கையு மெழுந்தது வணிக
முறைவ லாளர்க ளொழுக்கமு முளைத்ததுஏர் உழவின்
நிறைவ லாளர்க ளிறைமையு நிலைத்ததா லெங்கும்         84
[நால் வருணத்தவர்களின் ஒழுக்கமும்செவ்வனே நடைபெற்றது. மறை வலாளர்கள்- வேள்வி அந்தனர்கள். மனுவின் நிறை வலாளர்கள்- மனுமுறைப்படு நடுநிலைமையில் ஆட்சி செய்யும் அரசர்கள். வணிக முறை வலாளர்கள்- வணிகர்கள். உழவின் நிறைவலாளர்கள் நிறைமை- உழவர்களின் மாட்சி. ]

பிணங்கண் மல்கிய விடமெலாம் பெருஞ்சனம்பேயின்
கணங்கண் மல்கிய விடமெலாஞ் சாலைகள்கணங்கள்
துணங்கை யாடிய விடமெலா நடந்துணங் கைகள்கண்
டுணங்கி மாந்தர்சா மிடமெலா நடங்கள்கண் டுவப்பார்.         85
[பிணங்கள் நிறைந்து இருந்த இடங்களிளெல்லாம் மக்கள் கூட்டம், பேய்க்கணங்கள் மல்கியிருந்த இடங்களிலெல்லாம் அறச்சாலைகள், பேய்க்கணங்கள் துணங்கைக் கூத்து ஆடிய இடமெல்லாம் நடந்து நங்கையர். வற்றி மாந்தர்கள் இறந்த இடமெல்லாம் நடனங்கள் கண்டு மகிழ்வர்.]

மறலி யூர்கடா மலையுலா விடந்தொறும் மன்னர்
முறையி னூர்கடா மலையுலா வினபிண முகந்து
செறிவு கொண்டுபூந் தேருலா விடந்தொறுஞ் செம்பொன்
உறும ணிச்செழுந் தேர்பல வுலாவின அன்றே.         86
[யமன் ஏறிய வாகனமாகிய கடா (எருமைக்கடா) உலவின இடந்தொறும் மன்னர்கள் தமக்குரிய முறையில் ஊர்ந்த கடாமலை (கடாம்- மதநீர், மதநீர் ஒழுகும் மலைபோற் பெரிய களிறு) உலாவின. பிணத்தை டுத்துக் கொண்டு பூந்தேர் (பூக்களால் தேர்போல் அலங்கரிக்கப் பட்ட பாடை) உலாவிய இடந்தொறும் எம்பொன்னால் ஆன மணிகட்டப் பட்டு ஒலிக்கும் செழுமையான தேர்கள் பல உலாவின. அன்றே- அசை.]

மகத நாடெலாம் மங்கலம் பொலியஎண் ணான்கு
நிகரி லாவற நிருமலி வளர்த்தனள் வருங்காற்
புகரி லாதவிப் பொலிவினை மகதநா டாளுந்
தகவின் மன்னவன் யாவருஞ் சாற்றிடக் கேட்டான்.         87
[மகத நாடெலாம் மங்கலம் பொலிய முப்பத்திரண்டு நிகரிலா அறங்களையும் அம்மை வளர்த்தனளாகி இருந்து வரும்பொழுது, குற்றமிலாத இப்பெருமையினை மகதநாட்டினை ஆளும் மன்னவன் எல்லாரும் சொல்லக் கேட்ட்னன். நிருமலி- இயல்பாகவே பாசங்அKஇன் நீங்கியவள், உமையம்மை. வளர்த்தனள்- முற்றெச்சம், வளர்த்தனளாகி. புகர்- குற்றம். தகவு இல்- தகுதி இல்லாத.அம்மை அறம்வளர்த்து வறுமையை ஓட்டியதை அரசன் தானே அறியாமல் பிறர் சொல்லெக் கேட்டே அறிகின்றான் என்பதே அவனுடைய தகவின்மைக்குச் சான்று]

கேட்ட மன்னவன் கிளரொளி யிறைவியென் றறியான்
வாட்டு நல்குரவோ வறிவின்மையோ மனத்தை
மூட்ட வவ்வறச் சாலையைக் கவருவான் முன்னிக்
கோட்டங் கொண்டன னஃ துமை திருவுளங் கொண்டனள்         88
[ அறம் வளர்த்தலைக் கேட்ட தகவில் மன்னவன், அறம் செய்பவள் இறைவி என்று அறியாதவனாய், அவனை வாடும் வறுமையோ அன்றி அறிவின்மையோ அவனுடைய மனத்தைச் செலுத்த, அவன் அவ்வறச்சாலையைக் கைப்பற்றக் கருதி மனக்கோட்டங் கொண்டனன். அதனை உமை திருவுளத்தில் அறிந்தாள். மூட்ட- செலுத்த. கவருவாந் கவரும் பொருட்டு. முன்னி- நினைத்து. கோட்டம்- மனக்கோட்டம், பொறாமை.]

உயிரெ லாந்தனக் கொருமக வெனவருள் சுரக்குங்
கயிலைநாயகி கண்சிவந் திலள்வழிக் கொண்டாள்
பயிலு நெல்லிறைகூடுக ளாதிய பலவு
மியலும் வார்சிறை யெய்தின பறந்தன வுடங்கு.         89
[உயிர்கள் அனைத்தும் தனக்கு ஒப்பற்ற மக்கள் என அருள்சுரக்கும் கயிலை நாயகி அரசனின் செயல் நினைந்து கண் சிவந்து சினக்கவில்லை; தன் வழியில் புறப்பட்டாள். நெற்கூடுகள் முதலிய பலவும் சிறகுகள் பெற்று எல்லாம் ஒரு சேரப் பறந்தன.]

இறைவிநீத் தகன்றது மிமவரை மகளாக்கு
நிறைவளங் களுஞ்சிறைமுளைத் துடங்கு நீத்ததுவும்
அறைகழற் சரண்மன் னவன்கேட்டன னச்சோ
நறைமலர்க் குழலுமை கொலோவென் றுளநைந்தாள்         90
[இறைவி மகதநாட்டைவிட்டு அகனறதையும் இம்யமலை மகளாம் இஉமை ஆக்குவித்த வளங்கலும் சிறகுகள் முளைத்து உடன் பறந்து நீங்கிய்தையும் மன்னவன் கேட்டனன்.அச்சோ வந்து இவ்வறம் பலவும் புரிந்தவள் இறைவி உமையோ என மனம் வருந்தினான்.]

எவண்படர்ந் தனளெவண்ப டர்ந்தன ளெனவெங்குங்
கவலையுற் றிடுங்கண்கணீர் பொழிதருங் கசியும்
புவனிமேற் புரண்ட ரற்றுமெய்ப் புளகமும் போர்க்கும்
தவறு செய்துவாழ்ந் திருப்பதிற் சாதல்நன் றென்னும்         91
[எங்கு சென்றனள் எங்கு சென்றனள் என்று எங்கும் கவலையுற்றுத் தேடினன். கண்ணீர் பெருக்கினன்; கசிந்தான்; நிலத்தின்மேற் புரண்டு அரற்றினான்; உடல் நடுக்கம் கொண்டான். தவறுசெய்து பின் வாழ்தலைக் காட்டிலும் சாவதே மேல் என்று கூறுவான்.]

பொருமுஞ் செய்த பொல்லாங் கினையுன்னி யுள்புழுங்கி
யிருமுமென் செய்தேமென்செய்தேமென்னுமென்குலத்தோர்
புரியுநல் வினையிருந் தின்றுகாத்த தாலென்னிக்
கருணை நாயகி க்ண்சுவ வாமியா லென்னும்.         92
[ மனம் குமுறுவான். தான் செய்த தீங்கினை நினந்து மனத்துள்வெந்து புளுங்கி இருமுவன்; என்செய்தேன் என்செய்தேன் என்பான்; என் குலத்து முன்னோர் செய்த தவம் இன்று என்னை இறைவியின் சிலத்திலிருந்து காத்தது என்பான். செய்யும் என்னும் முற்றுக்கள் இரண்டு செய்யுட்களிலும் படர்க்கை ஆண்பாலில் வந்தன.]

விண்ணு மண்ணும் பொல்லாதவ னெனவெனை வெறுப்ப
நண்ணி னேனெனும் நரகமுந் துயரமு நயப்பப்
பண்ணி னேனெனும் பற்பல நினைந்தனன் பசும்பொன்
வண்ண மாதினை வந்தித்துய் வேனென வெழுந்தான்.         93
[விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் என்னைப் பொல்லாதவன் என வெறுக்கும் நிலையை அடைந்தேன். நரகமும் துயரமும் விரும்பி என்னை அடையச் செய்தேன். எஅன்ப் பற்பல நினைந்தனன். இறைவியை வழிபட்டு பிழைத்து உய்குவேன் என உறுதி பூண்டு எழுந்தான்.]

ஆய்ந்த மந்திரத் தலைவ ரெலாம்புடை யணுகச்
சேந்த பங்கய வடிநிலந் தீண்டிமிக் கழுங்கப்
போந்து பூதரப் புதல்வியைக் கண்டனன் புகன்று
தாழ்ந்தெ ழுந்தனன் றணந்தனன் றணப்பருந் துயரம்.         94
[தன்னுடைய மந்திரச் சுற்றத்தார் அனைவரும் சூழ்ந்து வரத் தன் மிகவும் பாதங்கள் நோவ நடந்து சென்று இமயப் புதல்வியைக் கண்டனன். துதித்து வணங்கி எழுந்தனன். நீக்கற்கு அரிய துயரை நீத்தனன்.]

ஆடினான் பலமுறை யருமறைப் பெருந்துதிகள்
பாடினான் பலமுறை பணிமொழியினை வலமா
வோடினான் பலமுறை யுளமுருகி மெய்யன்பு
நீடினானெ திர்நின்றன னெடுங்கணீர் சொரிய         95
[ஆடினான்; பலமுறை அருமறைகள் பாடித் துதித்தான். பலமுறை இறைவியை வலம் வந்தான். அன்பினால் உடலுரூகினான். நீண்ட நேரம் பத்தி செய்தான். முன் நின்று கண்ணீர் சொரிந்தான்.]

குடந்தம் பட்டெதிர் நின்றிடுங் கோக்குலத் தரசன்
மடந்த விர்ந்துவந் தனைபுரி பத்திமை நோக்கி
யடர்ந்த பூங்குழற் பிராட்டியு மாரருள் வழங்கித்
தொடர்ந்த அன்பினோய் வேட்டதென் னென்றலுஞ் சொல்வான்.         96
[ குடந்தம்பட்டு- கைகுவித்து. மடம்- அறியாமை. தன்னைக் கைகுவித்து, அறியாமை நீங்கிப் பணிந்து நின்ற அரசகுலத்துவந்த மன்னவனை நோக்கி, நீ விரும்பியது என்ன என்று பூங்குழற் பிராட்டி கேட்டனள்.]

அறிவிலாமை யாருயிர்க் குணமென்பதை யறிந்து
நெறியிலேன் புரிபிழையினைப் பொருளென நினைந்து
கறுவுகொண் டிடாக்களை கணேயடியனேன் காவல்
செறியுநா டெலாமழைவளஞ் செழிக்கவென் றிரந்தான்.        97
[பேதைமை என்பது ஆருயிரின் குணம் என்பதை அறிந்து, முறைப்படாதவனாகிய நான் புரிந்த பிழையையினை ஒரு பொருளாகக் கருதி என்மேல் சினங்கொள்ளாத என் பற்றுக்கோடே! அடியேன் காவல் கொண்டுள்ள நாடு முழுவதும் மழை வளஞ்செழிக்க அருள் புரிய வேண்டும் என இரந்தான். அறியாமை- பேதைமை. நெறியிலேல்- நல்வழியிற் செல்லாதவன். கறுவு- சினம். களைகண்- பற்றுக் கோடு.]

தாங்க ளேகொடை வழங்குநர் தருகென விரந்தர
லாங்க ணில்லையென் றிசைப்பரே யல்லலுக் கிரங்கி
யோங்கு நல்லறம் வளர்த்தவ ளுவகைமீக் கூர்ந்து
தீங்கு தீர்வரங் கொடுத்தனள் சென்றனள் காசி         98
[ தாங்களே விரும்பிக் கொடை வழங்குவோர் ‘தருக’ என இரக்க அவருக்கு அவ்விடத்தில் இல்லையென்று கூறுவரோ? கூறார். இறைவியும் அரசன்படும் இன்னலுக்கு இரங்கி ஓங்கு நல்லறம் வளர்த்த இறைவி உவகை மிக அடைந்து அந்நாட்டின் தீங்கு தீர வரம் அளித்துப் பின் காசி சென்றாள்]

அரையர் சூழ்தர வரசனு மலையர சுயிர்த்த
பெரிய பெண்ணணங் கரசியைப் பெட்டனன் வணங்கி
யுரிய வேவல்பெற் றுயரிய தன்பதி யடைந்தான்
பரவு நீண்முகிற் பருவமு வந்ததப் பதத்தில்.         99
[அரையர்- அரசர். பெட்டனன் -விரும்பினனாகி, முற்றெச்சம். காசியரசன் பிற அரசர்கள் சூழ வந்து மலையுயிர்த்த மாதர்க்கரசியாகிய இறைவியை வணங்கி உரிய கட்டளைகளைப் பெற்றுத் தன் ஊர் அடைந்தான். கார்காலமும் வந்தது அப்பருவத்தில்]

கலிவிருத்தம்
பொறுப்பரும் வேனிலாற் பொன்று நாடெலாஞ்
சிறப்பநல் வரமருள் செல்வி கீர்த்திவிண்
ணெறிப்படர்ந் துலாயதே நிகர்ப்ப வெண்ணிற
வறப்பெரு முகிற்குல மாழி நோக்கின.         100
[தாங்கிக் கொள்வதற்கு முடியாத வேனிற் பருவத்து வெப்பத்தால் அழியும் நாடெல்லாம் வளத்தால் சிறக்க நல்வரம் அருளும் இறைவியின் கீர்த்தி ஆகாய வழிப் படர்ந்தது போல, வெண்ணீற மேகம் கடலை நோக்கிப் படர்ந்தது. கீர்த்தி கொடை , கல்வி முதலியவற்றால் வரும் புகழ். கீர்த்தி வெண்மை நிறம் என்பது இலக்கிய மரபு.]

விழுமமார் மகதத்து வெந்த பன்மரக்
குழுவினி லெழுந்து விண்கூர்ந்த சாம்பர்மெய்
முழுவதும் பொதிதர முரிதி ரைக்கடற்
செழிபுன லாடப்போந் தகவிற் சென்றவால்         101
[விழுமம்- துன்பம் துயர் நிறைந்த மகதநாட்டில் பன்மரக் காடு கருகி எழுந்து ஆகாயஹ்தில் பரந்த சாம்பல் உடல் முழுதும் பொதிந்திருக்க, மேகம் கடலில் புனலாடப் போந்த தன்மையதாக இருந்தது, வெண்மேகம் கடலை நோக்கிச் சென்ற அக்காட்சி. மகதம் அம்மை வருவதற்கு முன் துன்பம் நிறைந்ததாக இருந்தது; அம்மை வந்தபின் மகிழ்ச்சி நிறைந்ததாக ஆயிற்று. விழுமம் என்ற சொல்லுக்குத் துன்பம் இன்பம் என்ற இருபொருளும் உண்டு. ‘விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் என்பது தொல்காப்பியம் உரியியல் நூற்பா. விழுமமார் மகதம் என்ற அடையினால் இவ்விருபொருளையும் உணர்த்தினார்.]

அள்ளிக் கோட்டக் கவந்நாட்டின் வெப்பினை
யுள்ளிக் குப்புற்று வந்துடற்று மென்றுவான்
பள்ளிக் கொட்புற் றெழுபளிக்கு மேகங்கள்
வெள்ளிக் குப்பாயம் போர்த் ததுவும் வீழுமே.        102
[அந்த நாட்டில் நிலவிய கடுமையான வெப்பத்தினை நினைத்து வருத்தும் என்று வானிடமெங்கும் பளிங்கு நிற மேகங்கள் வெள்ளைநிற சட்டை போர்த்தது போலக் கவிழ்ந்து வீழும் . வெப்பத்தின் மிகுதியைச் சுட்ட ‘அள்ளிக்கோள் தக்க வெப்பம்’ என்றார். முன்னரும் ‘அள்ளலாகும் வேனில்’ என்றார். மேகங்கள் குப்புற்று வீழும் என முடிக்க. குப்புற்று- கவிழ்ந்து. வான் பள்ளி- வானப் பரப்பு. கொட்பு- சுழற்சி. பளிக்கு- பளிங்கு. வெள்ளீக் குப்பாயம்- வெள்ளை நிற சட்டை]

அப்பெரு வெப்பினை யவிக்க மேகங்கள்
துப்பின அலவெனத் தோகை நீற்றுமெய்
ஒப்பறு கணங்களை விடுப்ப வூங்கவை
மைப்பெருங் கடலுண வழங்க லும்பொரும்         103
[அந்தப் பெரிய வெப்பத்தினை அவிக்க மேகங்கள் வௌவுடையன அல்ல என்று திருவெண்ணீறு அணிந்த தன்னுடைய கணங்களை உமையம்மை செல்ல் விடுக்கவே அந்த கணங்கள் சென்று உணவு வழங்குதலை ஒக்கும். துப்பு- வலிமை. கடலுண- கடல் நீராகிய உணவு]

முழங்குவ தின்றிவான் முடுகு மேகநீர்
வழங்குபு தன்னைநா மடிக்கச் சேறலை
அழுங்குவித் திடுமென வஞ்சி வேனிலுக்
கொழுங்கு கொண்டொளித் தொளித் தோட லொத்ததே.         104
[மழை நீரினை விடுக்கச் சொல்லி அன்னை விடுத்த கணங்கள் வருதலைக் கண்ட மேகங்கள் இடியோசையின்று வானில் வேகமாகச் செல்லும் மேகங்கள், வேனில், வெப்பப்பத்தில் தங்களை இருத்திடும் என்று அஞ்சிக் கடலை நோக்கி வேகமாக ஓடுதலை ஒக்கும்’ முழங்குவௌ- இடைத்தல். முடுகுதல்- வேகமாசச் செல்லுதல். வழங்குபு- செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் சேறல் என்பதுடன் முடிந்தது நாமடித்து- சினத்தைச் சுட்டும் சொல்வழக்கு. அழுங்குவித்திடும்- தங்குவித்திடும்.. ஒழுங்கு கொண்டு- வரிசையாக]

வேனிலுக் குடைந்தன போல மேகங்கள்
வானிடை நின்றும் வார்கடலின் வீழ்ந்தன
பேனநீர் மடுத்தன பெரிது நீர்நசை
தானற வுண்டன போலச் சாலவே.         105
[ வேனிலின் தாக்குதலுக்குத் தோற்றன போல மேகங்கள் வானத்திலிருந்து நீண்ட கடலில் வீழ்ந்தன. மிக்க நீர்வேட்கை நீங்க உண்டன போல நீரை மிகுதியாக உண்டன. வார்- நீண்ட. பேனம்- நுரை. மடுத்தன- குடித்தன. நீர்நசை- நீர்வேட்கை. அற- நீங்க. சால- மிகுதியாக]

ஆர்த்து நீர்வாய் மடுத்தல மருங்கருங்
கார்த்திரள் விசும்பிடை யெழுந்த காட்சிவிண்
சீர்த்த ஆயி ரவிழிச் செம்மற் சீறிய
போர்த்திற லவுணர்கள் போதல் போலுமே.         106
[ஆரவாரத்துடன் நீருண்டு சுழலும் கார்மேகம் விசும்பிடை எழுந்த காட்சி, ஆகாயத்தில் ஆயிரங்கண்ணுடைய தலைவனாகிய இந்திரனைக் கோபித்து போருக்கெழுந்த அவுணர்களைப் ஓல இருந்தது. அலமரும்- சுழலும். கருங்கார்த்திரள்- மிகக் கருமையான கார்மேகக் கூட்டம். ஆயிரவிழிச் செம்மல்- இந்திரன். சீறிய- சினந்த. போர்த்திறல்- போராற்றல்]

வெந்தழல் வேனிலை விளைப்ப தீதென
முந்துற விழுங்கிய முறைமை யேயெனச்
சுந்தரப் பரிதியின் றுளக்கங் காலற
வந்தர வெளியெலாம் அடைத்த நீன்முகில்.         107
[வெந்தழலை விளைப்பது ஈது என வேனிலை முந்துற விழுங்கிய முறைமை என- கொடிய வெப்பத்தை விளைவிப்பது என்று வேனிலை விழுங்கிய முறைமை போல, சூரியனின் இயக்கம் ஓய ஆகாய வெளியெலாம் கார்மேகம் செறிந்தது. துளக்கம்- இயக்கம். காலற- ஓய, இளைப்பாற. அடைத்தை செறிந்த. நீன்முகில் நீலமுகில், கார்மேகம்.]

மறக்கொடும் பாதகம் வளர்த்த வேனிலைப்
புறக்கொடை யறவெங் கும்புதைய முற்றியாங்
கிறப்பவுந் திசைதொறு மீண்டி யன்னதைத்
திறப்படச் சிரிப்பபோன் மின்னுக் கான்றவே         108
[மிகக் கொடும் பாதகத்தை வளர்த்த வேனில், புறமுதுகு காட்டித் தப்பி ஓடிவிடாதபடி எங்கும் சுற்றி வலைத்ததைப் போலக் கார்மேகம் திசையெல்ல்லாம் செறிந்தது. அவ்வேனில் புறமுதுகுகாட்டி ஓடுதலைப் பார்ஹ்து வீரத்துடன் சிரிப்பதுபோல் மின்னலைக் கக்கியது.]

பரிதியின் ஒளியறப் பகலும் பம்பிய
இருளிர வாயதால் இரவின் ஏற்றுறு
தெருளொளி விளக்கினைத் திசைதொ றும்புதை
கருமுகில் கான்றமின் காட்டிற் றென்பவே.         109
[சூரியனின் ஒளி இல்லையாகப் பரவிய இருளால் பகலும் இரவாயது. இரவுக் காலத்தில் ஏர்ருகின்ற விளக்கினைப் போல திசையனைத்தையும் புதைத்த கருமுகிலில் தோன்றிய மின்னல்கள் ஒளி காட்டின. பம்பிய- பரவிய.}

நாகவார் கலனணி நம்ப னாரைமுன்
மேகவா கனமெனத் தாங்கும் விண்டுவே
மாகமூ டியபுயல் மரும நின்றொளிர்
பாகுலா மொழியவள் பயிலு மின்னரோ         110
[நாகத்தை அணிகலனாக அணிந்த இறைவரை முன்னொரு முறை மேகவாகனமாகத் தாங்கிய திருமாலே ஆகாயத்தை மூடிய கர்முகில்; அவருடைய மார்பில் நின்று ஒளிவிடுகின்ற திருமகளே மின்னல். மாகம்- ஆகாயம். மருமம்- மார்பு. பாகுலா மொழியவள்- சர்க்கரைப் பாகுபோன்ற மொழி பேசுபவள், திருமகள். திருமால் மேகௌருவில் இறைவனைத் தாங்கிய வரலாறு காஞ்சிப்புராணம் முதற்காண்டம் புண்ணியகோடீசப்படலத்தில் மூன்றாம் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. ]

எடுத்துவாய் விழுங்கிய விபமெம் மான்கரந்
தொடுத்துநேர் கிழித்த புண்துணைய மின்னொளி
படுத்த காரெழிலி யப்பகட்டி னோதையின்
மடுத்த பேரொலி புவிமலங்க வார்த்தவே.         111
[இபம்- யானை. தாருக்கவனத்து இருடிகள் செய்த அபிசாரவேள்வியில் தோன்றி அவர்கள் இறைவன் மேல் விடுத்தயானை. எதிரில் கண்ட அனைத்தையும் கபளீகரம் செய்து வந்த யானையை எம்மானாகிய இறைவர் தன் கரத்தால் தொட்டு நேராகக் கிழித்த செம்புண் போன்றது கரியமுகிலின் ஓரங்களில் தோன்றிய மின்னொளி. கார்மேகத்தின் இடியொலி, இறைவன் தோலினை உரித்தபோது அந்த யானை செய்த பேரொலி போலப் புவி கலங்க ஆர்த்தது. பகடு-யானை. படுத்த – செய்த. மலங்க- கலங்க.]

துணையறு நெடுவெளி முழுதுந் தூமணிப்
பணைபொரப் பசியதோல் பரந்த கார்பொர
இணைதிரள் வார்கண் மின்னிழைய வோதைசெய்
குணிலென விந்திர திருவில் கொண்டதே.         112
[ ஆகாய நெடு வெளி முழுதும் தூயமணிகளால் அலங்கரிக்கப்பட்ட முரசம்; முரசின் மேல் போர்த்திய கருந்தோல் பரந்த கார்மேகம்;முரசில் வரிந்து கட்டப் பட்ட வார்கள் மின்னல்; ஒலிக்கின்ற குறுந்தடி இந்திரவில். என கார்காலம் அமைந்தது. பணை- முரசு. குணில்- முரசறையும் குறுந்தடி]

ஏர்த்து மின்னியங்கு இடிகள் பல்லியம்
நேர்த்தெழ விசும்பிடை நின்று மண்ணெனும்
வேத்தவை காண விண்ணெழினி நீக்கிவந்
தார்த்தெழு கூத்திய ராடல் போன்றவே.         113
[ஏர்- அழகு. பல்லியம்- இசைக்கருவிகள். எழினி- திரை. அழகுடன் இயங்கும் மின்னல்கள், இடிகள் இசைக்கருவிகளுக்கு நிகராக ஒலிக்க, விசும்பிலிருந்து மண்(நிலம்) என்னும் வேத்தவையினர் காண ஆகாயத் திரையை நீக்கி வந்து ஆர்த்துக் கூத்தாடுதலைப் போன்றிருந்தது]

வருங்குயின் வழங்குமின் வயங்கு பெற்றிமை
விரும்பிவெங் கதிரினை விழுங்கித் தாங்குறாக்
கரும்பணி யுமிழவங் காக்குந் தோறுமவ்
விருங்கதி ரொளிபுறத் திலங்கன் மானுமால்.         114
[குயின் -மேகம். வெங்கதிர்- சூரியன். கரும்பணி- இராகு. உமிழ்- கக்க. அங்காக்கும்- வாய்திறக்கும். இலங்கல்- விளங்குதல். மானும்- போலும். ஆகாயத்தில் வருகின்ற மேகங்கள் வழங்குகின்ற மின்னல் கீற்றுக்கள் விலங்கிய தன்மை, கரும்பாம்பாகிய இராகு, ஆசைப்பட்டுக் ஆசைப்பட்டு விழுங்கிய சூரியனைச் செறிக்க மாட்டாமல் ஆங்காங்கு கக்கியபோது, சூரியனின் செவ்வொளி புறத்தே விளங்கியதைப் போன்றிருந்தது]

கருங்கட னிகர்த்தது ககனக் கார்க்குழாம்
பெருங்குர னிகர்த்தது பிளிற்றுக் காரொலி
யிருங்கதிர் மணித்திரை யெழுந்த டங்குவ
பொருங்கடித் தடித்தினம் பூத்தொ டுங்குவ         115
[கருங்கடலுக்கு நிகராக இருந்தது ஆகாயத்தில் கார் மேகக்கூட்டம். கடலொலியை நிகர்த்தது, கார்மேகத்தின் இடியொலி. அச்சத்தை விளைக்கும் மின்னல் திரள், கடல் அலைக் கரங்களால் எடுத்து வீசும் மணிகளைப் போன்றன. ககனம்- ஆகாயம். காரொலி- இடியொலி. பிளிற்றுக் காரொலி- குமுறுகின்ற மேக ஒலி. கடி- அச்சம். தடித்தினம்- மின்னல் கூட்டம். பூத்து ஒடுங்குவ- கடலில் தோன்றி ஒடுங்குங் காட்சி]

மழைத்திரள் மின்னினம் வழங்கு தோறுநோய்
தழைத்தவம் மகதத்துத் ததைந்த மானிட
அழத்திர ளுண்ணமுன் நண்ணும் பேய்க்கணம்
விழுத்தழல் வாய்களங் காத்தல் வீழுமே..         116
[மழை மேகக் கூட்டம் மின்னல் திரள்களை வழங்குதோறும் நோய் தழைத்த அந்த மகத நாட்டில் ம்னிதப் பிணங்களை உண்ண வரும் பேய்க்கணம் தம்முடைய நெருப்பு ஆகிய வாய்களை அங்காந்தலைப் போன்றிருந்தது. நோய் தழைத்த-நோய் மிகுந்த. ததைந்த – பொருந்திய. அழம்- பிணம். வீழும்- நிகர்க்கும்.]

வருந்திய நாட்டினின் மழையு காமுனந்
திருந்திய பெருங்குளிர் செலுத்திப் பேரளி
பொருந்தினா லெனவுலாம் பொங்கு வேனிலின்
அருந்துய ருடனுழந் தழன்ற வூதையே.         117
[வேனில் வெப்பத்தால் வருந்திய மகத நாட்டினில் மழை பெய்வதற்கு முன், மிக்க பெருங்குளிரைச் செலுத்திப் பெருங்கருணையைப் பொருந்தியதைப் போல, வேனிலுன் துயர் வெப்பத்துடன் ஊதைக் காற்று உழன்றது]
இடம்வலந் திரிதலும் ஏவின் நேர்நடை
படுதலு மண்டிலம் பயின்று சுற்றலுந்
தடையற வாவலு முதல தாங்கலா
நெடுவளி ஐங்கதிப் பரிக ணேருமே         118
[இடமாகவும் வலமாகவும் திரிதலினாலும் அம்புபோல விரைந்து நேராகச் செல்லுதனிலாலும் மண்டலமகச் சுற்றி வருதலினாலும் தடைகளைத் தாண்டி வருதலினாலும் இத்தகையவற்றைச் செய்தலினால், நெடுஞ்சூறாவளிக் காற்று ஐங்கதி வல்ல குதிரைகளை நிகர்க்கும். ஏவின் – அம்பு போல. மண்டிலம்- வட்டம். வாவல்- தாண்டுதல். தாங்கலா- தாங்க முடியாத. நெடுவளி- சூறாவளிக் காற்று.]

மலைவிளை யாடியு மன்றற் சோலையின்
நிலைவிளை யாடியும் மரங்கள் நீணிலைத்
தலைவிளை யாடியுஞ் சார்ந்து மைந்தர்வெப்
புலையவின் பருள்வளி மாத ரொத்ததே.         119
[மலைச்சாரல்களில் விளையாடியும் நறுமனப்பூஞ்சோலைகளில் விலையாடியும் மரக்காக்களில் விளையாடியும் மைந்தர்களுடைய வெப்பு தொலைய இன்பத்தை அருளுதலினாலும் காற்று அம்மைந்தர்களின் காதலியர் ஒத்தது. நிலை, தலை- இடம். வெப்பு- காமம், சூடு.]

வழிநடந் தண்மியு மனையி னெய்தியுங்
குழலினை நீவியுங் குளிர மெய்யெலாந்
தழுவியுமாதர்க டழைப்பச்சேறலாற்
கழிமகிழ் மகிணரைக் கடுத்த தூதையே         120

[வழி நடந்து வந்து அடைதலானும், மனையில் வந்து எய்துவதனாலும், கூந்தலை நீவுதலினலும், உடலெலாம் குளிரத் தழுவி மாதர்மகிழச் சேரலானும் மிக்க (குறியிடத்து ] மகிழ்ச்சியை அடைந்த மைந்தரைத் தூதைக் காற்று ஒத்தது. அண்முதல்- நெருங்குதல். எய்தல்- அடைதல். நீவுதல்- தடவுதல் தழைப்ப மகிழ்ச்சியால் புளகிதம் அடைய. கழி- மிக்க. மகிணர்- மகிழ்நர்- காதலர். கடுத்த- உவமை உருபு. ஊதை- ஈரக் காற்று]
வரைமிசை மோதியு மரத்தின் மோதியுந்
தரைமிசை வீழ்ந்துநீர்த் தடத்தில் வீழ்ந்தும்வார்
கரைமிசை யிவர்ந்து நின்றுலாவுங் காட்சியாற்
புரைமது நுகர்ந்தவர் போன்ற தூதையே.         121
[ பாறைகளின் மீது மோதியும் மரங்களின் மேல் மோதியும் தரைமீது வீழ்ந்தும், நீர்த்தடாகங்களில் வீழ்ந்தும் நீண்ட கரைமீது ஏறி உலாவியும், நிகழ்த்தும் காட்சியால் கள் குடித்தவர் நிலையை ஒத்தது ஊதைக் காற்று. வரை- மலை, பாறை. இவர்தல்- ஏறுதல். புரை- குற்றம். ஊதை- ஈரக் காற்று]

அம்பிகை யருள்பெறும் அமையம் ஈதெனாப்
பம்பிய மணிக்கடல் பலவும் விண்ணெழீஇத்
தம்பயம் ஒழுக்குவ தகைய வண்புயல்
வெம்பய முகத்தன வடவை மின்செய         122
[அமையம்- சமயம். பயம்- நீர். வடவை- கடலில் உள்ளதாகக் கருதப்படும் நெருப்பு. அது குதிரை முகம் கொண்டதெனப் புராணங்கள் கூறும் வடமுகாக்கினி எனப்படும். கடல் நீல நிறத்தால் அம்பிகையாக உருவகம் செய்யப்பட்டது. மணி- நீலமணி. எழீஇ- எழுந்து.
மழை மேகம் கடலிடத்து வடவைத்தீ போல மின்னலைச் செய்ய நீரைப் பொழிவது, அம்பிகையின் அருளைப் பெறத் தக்க சமயம் இதுவே எனப் பரந்த நீலக்கடல் பலவும் விண்ணில் எழுந்து தம் நீரை ஒழுக்குவதைப் போன்றது.]

அவுணரைப் பொரப்புரு கூத னாக்குபல்
லிவரொளி வயிரவேற்கிடம்விண் ணின்றியிப்
புவனி யெங்கணு நிரைத்திட்ட போன்றன
தவமணி மழைக்குலங் கான்ற தாரையே.         123
[புருகூதன். –இந்திரன். வயிரம்- வச்சிராயுதம். தவ- மிகுதி. மணி- நீலமணி. அசுரர்களுடன் போரிட, இந்திரன் தன்னுடைய படைக்கலங்களான வச்சிராயுதம், வேல் முதலியவற்றை விண்ணும் போதாமல் தரையெங்கும் நிரப்பியதைப் போல மிகுந்த நீலமணி போன்ற கார்மேகங்கள் நீர்த்தாரையைப் பொழிந்தன.]

கலிநிலைத்துறை
ஏற்ற தானவர் கிளையற இறுத்து விண்ணரசன்
தோற்று ஞாலமாம் அவரினத் தொருவன்தொல் உடலம்
பாற்ற வச்சிரப் பகழிகள் நிரைத்ததும் பகரும்
ஊற்று தாரை வில்லுடன் பொலியுரறு கார்மேகம்.         124
[தானவர்- அவுணர், தேவர்களுக்குப் பகைவர். ஞாலமாம் அவரினத்து ஒருவன் – உலகம் எனப்பெயரிய அவ்வவுணர் குலத்து ஒருவன். வில்- ஒளி, மின்னல். உரறு கார்மேகம்-இடியொலியுடன் கூடிய மழைமேகம்.
போரினை ஏற்ற அவணர்களை அவர்களுடைய சுற்றத்தினருடன் அழித்து, இந்திரன், ஞாலமாகிய தோற்றுப்போன அவுணர்களில் ஒருவனின் உடலம் அழிய வச்சிராயுதம் அம்புகள் முதலியவற்றை நிரைத்ததைக் கூறும், கார்மேகம் இடி மின்னலுடன் பொழிகின்ற மழைத் தாரை.]

கலிவிருத்தம்
தன்னிறம் பசந்தக டுளைந்து தாங்குறா
தின்னிசை முழக்கினால் இரங்கிச் செய்யவாய்
மின்னினந் தெரித்தலான் மேகக் கன்னிநீர்
என்னுமோர் மகவினை யீன்ற செவ்வித்தே.         125
[பசத்தல்- ஒளி மழுங்குதல். அகடு- இடம், வயிறு உளைந்து- நொந்து, பிரசவ வேதனை, மேகத்தின் கருமை நிறம் பசந்து வெளிறியது. கார்மேகப் பரப்பு சுன்று உழன்றது தாய்கருவுயிர்க்கும்போது வயிறு உளைந்ததைப் போன்றிருந்தது. மழை முழக்கம் பிரசவ வேதனையில் அழுதது போன்றிருந்தது.மின்னல் மேகக் கன்னியின் சிவந்த வாயைக் காட்டியது. இவ்வாறு மேகமாகிய கன்னி நீர் என்னும் ஒரு மகவினை ஈன்ற தன்மைததாக இருந்தது].

அறைபல அடுக்கலிற் பெயர்ந்து தாரையான்
நிறையுமிங் குலிகநீ ரலைக்க நின்றன
பறையினு முளைத்தெழப் பார்த்து வச்சிரத்
திறைபினும் அரிந்திடத் துடிப்ப வென்பவே.         126
[முன்னொரு காலத்தில் மலைகளுக்குச் சிறகுகளிருந்தன. அவை பறந்து வேண்டும் இடங்களில் தங்கின. இந்திரன் அம்மலைகளின் சிறகுகளை அரிந்தான் என்பது புராணக் கதை. மலை அடுக்கல்களின் மேல் மழை பொழிந்து, மழைத் தாரைகள் அங்கு நிறைந்திருந்த இங்குலிகம் கலந்து அலைக்க நின்ற காட்சி, மீண்டும் மலைகளுக்கு இறகு முளைக்கப் பார்த்து இந்திரன் சிறகு அரிந்திடக் குருதி பாய்ந்து துடிப்பதை ஒத்தது]

முல்லைமென் குமிழ்முதிர் காந்தள்கோடுகள்
வில்லுமிழ் தாரையிற் றரையின் வீழ்ந்தன
வல்லவோர் வீரனான் மரிந்த வேள்வியிற்
பல்லுமூக் கங்கை பன்முலைகள் போன்றன.         127
[ மின்னுகின்ற மழைத் தாரையில் முல்லை அரும்புகள், குமிழ்ம்பூக்கள், காந்தள் மலர்கள் சிறு மலைக் குவடுகள் ஆகியன தரையில் வீழ்ந்தன. அவை தக்கன் வேள்விவியில் தண்டிக்கப்பட்டு அறுப்புண்ட மகளிரின் உறுப்புக்களைப் போன்றிருந்தன. முல்ல அரும்பு பல்லையும், குமிழம்பூ மூக்கையும், காந்தள் மலர் கையையும் சிறு குவடுகள் முலையையும் ஒத்திருந்தன. வீரர்- வீரபத்திரர்]

நெடுவிசும் பெழின்முகில் நிரையி னீளொலி
படுவதற் கெதிரகன் பாரும் பேரொலி
உடையது போற்றணந் துறுநர் தேரொலி
கடலுறழ் இயவொலி யுகந்து விம்மின         128
[ பிரிந்து சென்ற தலைவர் கார்காலம் வரத் தலைவியை நினைந்து மீண்டுவருவர் என்பது அகப்பொருள் மரபு. நெடிய விசும்பில் அழகிய கார்முகில் கூட்டம் எழுப்பும் நீண்டபேரொலிக்கு எதிர் அகன்ற பாருலகமும் பேரொலி உடையதுபோல், தணந்து சென்ற தலைவர் மீண்டு வரும் தேர் ஒலியும் பலவகை வாத்தியங்களின் ஒலிகளும் கலந்து விம்மின. தணத்தல் – பிரிதல்]

உருவினின் நிகர்த்த மையுண்ட வாள்விழி
மருவிய வினையினு மான வேட்டெனக்
கருமுகி லொடுமழைத் தாரை கான்றன
தெருமரத் தணந்தவர்ச் சிவணு றார்க்கெலாம்         129
[தெருமர- அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி (தொல். சொல். 311). கலக்கம். சிவணுதல்- கூடுதல். தனந்தவர்- பிரிந்த தலைவர். வேட்டென- விரும்பினாரென. கார் மேகம் மழைத் தாரை பொழிவது, கலக்கமுண்டாகப் பொருளை ஈட்டுதலை விரும்பி வினைவயிற் பிரிந்த தலைவர் கார்காலத்தினும் வராததனால் தலைவரைப் பிரிந்த தலைவியரின் மையுண்ட விழிகளில் நீர் சொரிவதைப் போன்றிருந்தது .}

வீங்கிய பெரும்பறை முழக்கும் வேற்றொலி
ஓங்கிய காலையா ழிசைக்க லுற்றவர்
தாங்களே யடங்கிய தன்மை போன்றது
தீங்குயில் எழிலிமுன் னடங்குஞ் செவ்வியே         130
[கார்காலத்தின் இடி முழக்கின்போது குயில்கள் கூவாது அடங்கிய தன்மை பெரும்பறையின் பேரொலியாகிய வேற்றொலி அதிகரித்தபொழுது யாழிசைக்க முற்பட்டவர் தாங்களே இசைக்காது அடங்கியதைப் போல இருந்தது.]

அளவிய னூல்வழி யறிந்தி லாதவர்
களகள மொழிக்கெதிர் கற்று மேதகு
வளமொழி தன்னமும் வழங்கு கிற்கிலாப்
பளகறு மேலவர் பண்பும் போன்றதே.         131
[அளவியல் நூல்- அளவைநூல், தருக்கசாத்திரம். களகளமொழி- வெற்று ஆரவாரமான பேச்சுக்கள். தன்னமும்- சிறிதும் பளகு- குற்றம். பளக்கு அரு- குற்றம் அற்ற. இடிமுழக்கம் அளவை நூலறிவிலாதவர்களின் ஆரவாரமான பேச்சு. அவர்கள் முன் சிறிதும் மொழியாத கற்ற பெரியோர்கள் கார்காலத்தில் கூவாத குயிலுக்கு உவமை.].

கருதுவா ருள்ளமுங் கனற்று வேனில்வல்
லிருதுவா மன்னனை யெழுந்த காரினம்
பொருதுவாய் மடுத்தலிற் பொன்று மன்னவன்
விருதுமாங் கவிந்ததும் வீழு மற்றது.         132
[நினைப்பவர்கள் உள்ளத்தையும் எரிக்கும் வேனிற்பருவமாகிய மன்னை எழுந்த கார் மேகக் கூட்டம் போரிட்டு வாய் மடுத்து உண்டலினால் அழியும் அன்னவனின் ஒளியும் அவிந்தது]

அகன்றவர் வரப்பெறா அணங்க னாரொடு
முகன்தளர்ந் தொடுங்கின மொய்த்த கோகிலம்
மிகுந்ததங் கணவர்வந் தெய்தப் பெற்றுளம்
புகன்றவ ரொடுபொலிந் தெழுந்த மஞ்ஞையே.         133
[பிரிந்து அகன்ற தலைவரை வரப்பெறா மடந்தையரைப் போல முகம் தளர்ந்து ஒடுங்கின, திரண்ட குயிலினங்கள். தம்முடைய கனவர் வந்தெய்த்தப் பெற்று உளம் மகிழ்ந்த மகளிரைப்போல புத்தழகுடன்மயில்கல் எழுந்தன. அணங்கனார்- தேவமகளிர். முகன்- முகம், னகரப்போலி. கோகிலம்- குயில். மொய்த்த- திரண்ட.. புகன்றவர்- மகிழ்ந்தவர்.]

எமதுருச் சாயல்பெற் றெம்மை யொத்திடும்
உமைமட வரலினால் உலகம் இன்புறு
அமைதி நன்றென மகிழ்ந்தாட லொத்தன
சிமய மெங்கணு மயிற்றிரள்க ளாட்டமே         134
[எம்முடைய நிறச் சாயல் பெற்று எம்மை ஒத்திடும் உமையின் வரவினால் உலகம் இன்புறும் இயல்பு நன்று என மகிழ்ந்து ஆடல் ஒத்தன, மலைகளெங்கணும் மயில் கூட்டங்களின் ஆடல்கள். உரு- நிறம். மடவல்- அழகிய இளம்பெண்.]

உணக்கிய வேனில்மன் னொழித்து வையகம்
வணக்கிய காரெனும் மன்னன் றன்னிசை
இணக்கிய விருதென வெழுந்த வெங்கணுங்
கணக்கில்கட் டோகைய கரையு மீட்டமே         135
[உலர்த்தி வாட்டியய வேனிலாகிய மன்னனை ஒழித்து வையகத்தைக் கைக்கொண்ட கார் என்னும் மன்னவனுடைய புகழை இயைத்த விருதென எங்கும் எழுந்தன எண்ணிலாத மயில்திரளின் அகவலோசையே. உணக்கிய- உலர்த்திய. வையகம்- உலகம். இசை- புகழ்,பிரதாபம். இணக்கிய – இயைத்த. விருது- அரசனுடைய மெய்க்கீர்த்திகள். கட்டோகை- கண்களை உடைய தோகை, சினை ஆகுபெயராக மயிலைக் குறித்தது.]

மண்டலம் எங்கணும் மலிந்த கோபங்கள்
திண்டிரை வான்பயந் தேக்கி வேனிலிற்
கண்டவ ருயிரெலாங் காற்றி யாக்கையி
னுண்டசெந் நீரைமீட் டுமிழ்வ தொத்தவே.         136
[மண்டலம்- நிலவுலகம். கோபங்கள் செந்நிறமான இந்திரகோப்பப் பூச்சிகள். திண்டிரை- அன்மொழித்தொகை,கடலைக் குறித்தது. வான் -சிறந்த.பயன் –நீர். செந்நீர்- இரத்தம். கடல் நீரைப் பருகி, சிறந்த நீரைத் தேக்கி, வேனிலில் கண்டவர் உயிரையெல்லாம் வருத்தி, உடலில் இருந்த குருதியைப் பருகி மீட்டும் உமிழ்வன போன்றிருந்தது, தரையெங்கும் இந்திரகோப் பூச்சிகள் பரந்த காட்சி.}

கவற்றிய வேனிலிற் கதித்த வெவ்வழல்
துவற்றிரும் பயத்தெமைத் தொலைக்க முற்றிய
இவற்றினைச் சுடுதுமென் றெழுந்து நீன்முகில்
அவற்றொடும் பொரவமன் றதுவும் போன்றவே.         137
[ கவற்றிய- வருத்திய. கதித்த- கோபித்த. துவற்று- தூவிய. பயம்- நீர். இந்திரகோபப் பூச்சிகள் நிலத்தில் பரந்திருந்த காட்சி, வருத்தும் வேனிலில் சினந்து எழுந்த நெருப்பு தூவிய மிக்க நீரால் எம்மைத் தொலைக்கப் போரிட வந்துள்ள இவற்றினைச் சுட்டூப் பொசுக்குவோம் என்று எழுந்து நீலமுகிலோடு போரிடுவது போலவும் இருந்தது.].

கடலுடை யாடையின் கன்னி மெய்யெலாம்
படுமழைத் தாரைவெம் பகழி புக்குறீஇக்
குடைநெடும் புண்வழி கொப்பு ளித்தெழுஞ்
சுடர்விடு குருதிநீத் துளியும் போன்றதே         138
[ சிவந்த இந்திரகோபப் பூச்சிகள் நிலத்தின் மீது பரந்திருந்த காட்சி, கடலாகிய ஆடையை உடுத்த நிலமடந்தையாகிய கன்னியினுடைய உடலெலாம் மழைத்தாரைகளாகிய கொடிய அம்பு துளைத்துக் குடைந்த நெடும் புண்வழியே கொப்புளித்தெழும் செந்நிற மிக்க இரத்தத் துளியும் போன்றிருந்தது.]

ஆடிய மழையெனு மன்பன் றாரையாஞ்
சேடுயர் கரங்களாற் சேர்ந்து புல்லுற
நீடுமின் பெனுங்கரு நிறைந்து நீணிலம்
பாடுருப் பசந்தது பசும்புல் லாதியால்.         139
[மழையெனும் கணவன் மழித்தாரை என்னும் நீண்டகரங்களால் தழுவிச் சேர்ந்ததனால் நீள் நிலம் என்னும் பெண் நீடும் இன்பம் என்னும் கரு நிறைந்து பசும்புல் முதலியவற்றால் பசப்புற்றாள். பசந்தது- பச்சை நிறம் பெற்றது; நிறம் வேறுபட்டது. ]

இழுமென விழுதரு மிலங்கு தாரையாற்
குழியு மெல்லுடல் குழியாமைப் பேணிவன்
செழுமணிக் கவயமேற் செறித்ததும் பொரூஉ
முழுநிலம் பலவுமெய் முகிழ்த்த தோற்றமே         140
[மழை பெய்தபின், நிலத்தில் புல் முதலாயின தோன்றின. அது, இழும் என்னும் ஓசையுடன் தொடர்ந்து பெய்த தாரையால், குழிந்து போன உடல் மேலும் குழிந்து விடாமல் பேணி, மரகதத்தால் (பச்சைக்கல்) சட்டை செய்து மேல் பொருத்தியது போலிருந்தது. இழும்- மழைபெய்கின்றபோது எழுகின்ற ஓசை. அனுகாண ஓசை என்பர். குழிதல்- நிலம் மெலிதல், குழிப்படுதல். மெய்ப்படுதல்- புல் பூண்டுகளாகிய உடல்கள் தோன்றுதல்.]

காம்புறழ் தோளியர் கடைக்கண் போற்சுடுந்
தேம்பு வெப்பரசன் கார்ச்சேனைக் கோடுழித்
தாம்பிழைத் தவன்குடை தவிர்ந்த தாமென
ஆம்பி களிடந்தொறும் அலங்கிப் பூத்தவே         141
[மூங்கில் போன்ற தோள்களையுடைய இளம்பெண்களின் கடைக்கண்களைப்போல் துயரத்தைச் செய்யும் வேனில் வெப்பமாகிய அரசன், கார்காலமாகிய அரசனின் சேனைக்கு அஞ்சித் தப்பி ஓடும்பொழுது நிலத்தில் போட்டுவிட்ட குடைகளைப் போல ஆங்காங்கே காளான்கள் பூத்தன. காம்பு- மூங்கில். தேம்பு- தேம்புகின்ற, மெலிந்த. வேப்பத்தை அரசன் என்று உருவகித்ததால், காரும் அரசனென்க. ஓடுழி- ஓடிய பொழுது. தவிர்ந்த- தங்கிய. ஆம்பி- குடைக்காளான்.]

மழைமுகி லசனியின் முழக்கங் கேட்டொறும்
முழைதொறும் ஒதுங்கிய மூரிப் பாப்பினச்
செழுமணி யொளிவன செறிந்த காரினை
அழலினம் பயந்துபுக் கொளித்த தாமென.         142
[மழை மேகங்கள் இடித்த குரலுக்கு அஞ்சிப் நிலப்பிளவுகளில் ஒதுங்கிய பாம்புகளின் மணிகளின் சிவந்த ஒளி, காருக்கு அஞ்சிய நெருப்பினம் பயந்து நிலவறையில் ஒளிந்து கொண்டது போலிருந்தது. அசனி- இடி. முழை- பிளவுகள், நிலவளை. மூரி- பெரிய. பாம்பினம் ப்பினம் என வலித்தல்விகாரம். செழுமணி- நாகமாணிக்கம். வயதான நாகப்பாம்புகளின் தலையில் மாணிக்கக் கல் இருக்கும், இடிக்குப் பாம்பு அஞ்சி முழையில் ஒடுங்கும் என்பன இலக்கிய வழக்கு. ]

அருந்தவ முயல்வுறு மந்ந லார்கள்பின்
இருந்தனி யிழையி னாலிலங்கி னாலென
வருந்திய வேனிலின் மரம்புல் லாதிய
பெருந்தளி ராதியாற் பிறக்க முற்றன         143
[ அரிய செய்து மெய் வாடிய மகளிர் பின் அழகும் அணிகலன்களும் பெற்றதைப் போல வேனிலால் வருந்திய மரம் புல் முதலிய தாவரங்கள் மிக்க தளிர் முதலியவற்றால் புஹ்தச்ழகும் விளக்கமும் பெற்றன. நலார்- நல்லார்,பெண்கள். இருந் தனி இழை- மிக்க, தனித்தன்மை உடைய அணிகலன். பிறக்கம்- விளக்கம்]

பெருத்த பன்மரங்களும் பின்னும் வல்லியும்
மருத்தளி ராதியின் வயங்கு தோற்றமால்
உருத்திடு பிரிவினா ருடங்கு தொக்குறீஇ
அருத்தியிற் கூடுழி யழகு காட்டுமே.         144
[பிரிந்த காதலர் மீண்டு வந்து அன்பினால் கூடிய பொழுது தலைவியின் மெய்யில் தோன்றும் புதுப் பொலிவினை, பெருத்த பல மரங்களும் அவற்றைப் பின்னிப் படரும் கொடிகளும் மணத்துடன் தளிர்க்கும் தளிர் முதலியனவும் காட்டும். பல்+ மரங்கள்= பன்மரங்கல். வல்லி- கொடி. மரு- மணம். உருத்திடல்- உருக்கொண்டு தோன்றுதல். உடங்கு- ஒன்று சேர. அருத்தி- அன்பு. ]

பொழிமழைத் தாரையிற் பூக்கள் சோர்ந்துமெய்
குழைவுறு கொடிகளுங் கொம்பர்க் கூட்டமும்
விழைவினர் கலவியின் மெலிதல் காட்டின
கழியிழை காட்டின கழன்ற பூக்களே.         145
[பொழிகின்ற மழைத் தாரையில் பூக்கள் சோர்ந்தும், உடல் தளர்ந்த கொடிகளும் கொம்புகளும் கலவியினால் மெலிதலைக் காட்டின; சிதற்க் கிடக்கம் பூக்கள், கலவியின் போது கழன்று விழுந்த அணிகலன்களைக் காட்டின. கொம்பர்- கொம்பு, அர் –போலி. விழைவினர்- காதலர். ]

தளியுகுந் தொறிந்தட வரைவ ரைப்பெலாம்
விளியழல் வேனிலின் வெப்பு நின்றுதம்
நெளியுடல் சுடவரா நிவர்ந்தி வர்ந்தெனக்
களிதரு கோடல் பாசரும்பு கான்றவே.         146
[மழைத்துளி உகுந்தொறும் மலைப்பக்கங்களிலெல்லாமழிகின்ற வேனிலின் வெப்பம் அங்கங்கு நின்று சுடுதலினாலே, பாம்புகள் படமெடுத்து மேலும் மேலும் ஊர்தல் போல அழகிய காந்தள் மலர்கள் அரும்பின. காந்தள் மலருக்கு பாம்பின் படத்தை உவமையாகக் கூறல் சங்க மரபு. கோடல்- காந்தள். கான்ற- அரும்பின.]

வாக்கிய தாரைதன் மார்பம் போழ்ந்துநொய்
தாக்கலும் வரைமகள் சாலு நில்லென
வோக்கிய கரமென வொளிர்ந்த காரெதிர்
நோக்கிய காந்தணொய் யிதழின் பூக்குலம்         147
[பொழிந்த மழைத் தாரகள் தன்னுடைய மார்பத்தைப் பிளந்து மெல்லிதாக ஆக்கவே, மலையாகிய மகள், போதும், நில் எனத் தடுத்தலென ஓச்சிய கரம் எனக் கார் மேகத்தை எதிர் நோக்கின காந்தள் பூக்குலம். வாக்கிய- பொழிந்த. போழ்ந்து- பிளந்து. நொய்து- மெல்லிது. வரைமகள்- மலையாகிய மகள். சாலும்- போதும். ஓக்கிய- உயர்த்திய. பூக்குலம்- பூத்திரள்.]

சுருப்பினந் தூவழி தொடங்க முல்லைகள்
அருப்பினம் முகிழ்ந்தநீர் அமையும் மாற்றெனக்
கருப்புயல் தனைக்கடிப் புறவம் பல்திறந்
திரப்பது போன்றன விடங்க டோறுமே.         148
[சுருப்பு இனம்- வண்டுக்கூட்டம். தூவழி- செவ்வழி, ஒருவகைப்பண். தொடங்க- பாடத்தொடங்க. அரும்பு- அருப்பென வலித்தது. மாற்ரு- நீங்கு. கடி- மணம். புறவம்- முல்லைக்காடு. வண்டுக் கூட்டம் செவ்வழிப்பண்ணினைப் பாடத் தொடங்க, முல்லை அரும்புகள், பொழிந்த மழைநீர் போதும், இனி நீங்குக எனக் கருமேகத்தை முல்லை நிலம் பல்லைக் காட்டி இரப்பது போன்ற காட்சிகள் முல்லை நிலமெங்கும் தோன்றின.]

பொறிவரிச் சுரும்பினம் புகுந்து தாதுண
வெறிமலர் பூத்தன கடுக்கை மேகநீர்
இறுதியுற் றிடும்புவி யென்று கங்கையிற்
செறிசடை யேற்பவந் தெழுந்த தேவென.         149
[கடுக்கை- கொன்றை. நிலவுலகத்துக்கு இறுதி வந்துற்ரிடும் என்று இறைவன் க்ங்கையைச் சடையில் தாங்கியது என, புள்ளிகளை உடைய வண்டுக்கூட்டம் மொய்த்து தேன் உண்ணும்படியாகக் மேக நீருடன் கொன்றை பூத்தன.]

பொன்னணி மார்பினான் புவனி காரினுக்
கின்னலுற் றழிந்திடு மென்று வெற்பினான்
மன்னுயிர் முழுது மாயாமற் றாங்கவந்
தந்நிலை யெழுந்தென வலர்ந்த பூவைகள்         150
[பொன் -திருமகள். கார்- கார்காலத்து மழை. பூவை- காயா. திருமகளை மார்பில் உடையவனான கண்ணன் உலகத்துக்குக் கார்கால மழையினால் அழிவு வந்துறும் என்று மலையைக் குடையாய்ப் பிடித்துக் காத்தது போல எழுந்தன காயாம்பூ மரங்கள். கிருஷ்ணர் கோவர்த்தனகியினைக் குடையாகக் கொண்டு ஆநிரைகலைக் காத்த வரலாறு. திருமால் காயா வண்ணத்தர்.]

கருங்களி றட்டவன் றனக்குங் காப்பதிங்
கருங்குரைத் தெனவவ னோடு தாங்கவப்
பெருங்கடல் வண்ணன் முன்பிறந்த செம்மலும்
ஒருங்கவ ணுற்றென மலர்ந்த வொண்பிடா.         151
[கருங்களிறு- குவலயாபீடம் என்ற யானை. கண்ணனைக் கொல்ல கம்சன் அனுப்பியது. களிறு அட்டவன் –கண்ணன்.அருக்குரைத்து- அருமையானது, கடுமையானது. தாங்க- எதிர்க்க. செம்மல்- பலராமன். கார்மேகம் குவலயாபீடம் போலிருந்தது. குவலயா பீடத்தைக் கொன்றவனாகிய கிருஷ்ணனுக்கும் இந்த யானையைக் கொல்வது அருமையுடைத்து என அதனை எதிர்க்கக் கண்ணனுக்கு முன் பிறந்த பலராமனும் அங்கு உற்றதைப் போலக் காயஃஅவுடன் பிடாவும் எழுந்து பூத்தன.]

திருமயி லெதிர்நடஞ் செய்ய வெட்சிதன்
இருபுறத்தி னுங்கொடி யெழுந்து பின்னுறக்
குருதியின் மலர்ந்தது கோல மஞ்ஞையூர்
முருகன் கார்க்கருள முன்னெழுந்த தொத்ததே.         152
[அழகிய மயில் எதிரே நடஞ்செய்ய, வெட்சி தன் இரு புறத்திலும் கொடிகள் எழுத்து சுற்ற, இரத்தம் போலச் சிவந்து மலர்ந்தது. இஃது அழகிய மயிலினை வாகனமாகக் கொண்ட முருகன் கார் காலத்துக்கு அருளும் பொருட்டு வள்ளி தெய்வயானை இருவரும் இருமருங்கிலும் நிறக மயிலுடன் தோன்றியதைப் போலக் காட்சியளித்தது.]

பொருந்தனி வேலனைப் புயலைப் போக்கெனாத்
திருந்தடி வணங்குவ சிவண வெட்சிமுன்
குருந்துபொற் கூவிளங் குல்லை பாங்கரும்
இருந்தலை குரங்குவ விணர்க்க ணத்தினால்.         153
[ போர் வேல் முருகனை மழையைப் போக்கு என வேண்டி அவனதி திருந்திய திருவடியை வணங்குவன போல வெட்சி, குருந்து, கூவிளம், குல்லை முதலியன அருகில் தலைதாழ்த்தி வணங்குவனபோல் மலர்க்கொத்துக்களை அசைத்தன]

மரந்தொறும் மலர்தொறும் வண்டுசெல்வன
உரந்தபும் வேனிலின் உயங்கி னீர்க்கெலாம்
அரந்தைகள் தீர்ந்தவோ வம்ம என்றுவிண்
பரந்தகார் வினாவுறப் படர்தல் போன்றவே.         154
[மரங்கள்தோறும் மலர்கள்தோறும் வண்டுகள் செல்லும் காட்சி, வலிமையை அழிக்கும் வேனிலினால் வருந்தியவர்களுக்கெலாம் உங்கள் இன்னல்கள் தீர்ந்தனவோ என்று ஆகாயத்தில் பரந்த கார் உசாவப் படர்தல் போன்றிருந்தது. உரம்- மனவலிமை. தப- கெட. உயங்கினீர்- வாடினீர். அரந்தை- துன்பம். அம்ம- இரக்கக் குறிப்பு.]

கானலை நீரெனக் கருதிப் பின்றொடர்ந்
தூனழி தங்களை யுய்யச் செய்திடும்
வானினைத் தலைப்பட மகிழ்ந்தெ ழுந்தென
வானுறத் தாவின மானி னங்களே.         155
[பேய்த்தேரினை நீரென எண்ணிப் பின் தொடர்ந்து உடலிளைத்த தங்களை மழையைத் தந்து உயிர்ப்பிக்கச் செய்திடும் வானினைச் சந்திக்க மகிழ்ச்சியால் வானுறத் தாவின மான் கூட்டங்கள்.]

குளகமிக் குண்டுடல் கொழுத்த வேழங்கள்
களகள முழங்குவ கடங்கள் சிந்துவ
இளைமுகி லினமென மேக்குக் கைநிமிர்த்
தளவளா யாடுவ வடுக்க றோறுமே.         156
[குளகம்- தழை உணவு. களகள- ஒலிக்குறிப்பு. தழை உணவினை மிக உண்டு உடல் கொழுத்த வேழங்கள் களகள என அருவி முழங்குதலைப் போல மதநீரினைச் சிந்துவனவாக, இளைய முகில்களைப் போல மலைமேல் துதிக்கைகளை மேல் உயர்த்தி விளையாடுவ.]

பைத்தபாம் புலகினும் விடரிற் பாய்ந்துபோய்ப்
பொத்துதீச் சூட்டையும் புரட்ட மண்கிளைஇ
மைத்தகா ருழப்பது மானப் புற்றினங்
கொத்துறு மெண்குக ளகழ்ந்து கொட்குமே.         157
[பைத்த- நச்சுப்பையை உடைய. பாம்பு உலகு- நாகலோகம். விடர்- பிலம்., வெடிப்பு. எண்கு- கரடி. கொட்கும் சுழன்று திரியும். நிலவெடிப்பின் வழியே நாகலோகத்திலும் போய்ப் ஒளிந்து கொண்ட தீச்சூட்டைப் புரட்ட மண்ணைக் கிளைத்து மரிய கார் மேகம் உழப்பது போலக் கரடிக் கூட்டம் புற்றுக்களைக் கிளைத்து எங்கும் சுழலும்]

பாதல மருங்கினும் பனிவி ராயது
போதர லென்றுபோம் புயன்ம றுப்பபோல்
மீதெழுந் தீயல்கள் பறந்து மென்சிறை
தீதினர் செல்வம்போற் சிதைந்து வீயுமே.         158
[பாதலத்திலும் கார்காலத்துப் பனி விரவியது, அங்கிருந்து போக மாட்டோம் என்று மேகம் மறுப்பதைப் போல மேலெழுந்து ஈசல்கள் பறந்து மென்சிறகுகள், தியோர் செல்வம் அழிதலைப் போலச், சிதைந்து வீழ்ந்தன. போதரல்- மீளல். தீயோர் தீய வழியில் பெற்ற செல்வம் விரைந்து அழிதல் திண்ணமாகலின் உவமம் ஆயிற்று ]

திகழ்கயல் பாய்ந்ந்தெடுத் துயர்ந்து சீர்ச்சிரல்
தொகுசிறை யலைப்பன தோயத் தெல்லைதேர்ந்
துகுமழை போதும் வேண்டாவென் றொண்கையால்
முகிலினை மறுத்திடு முறைமை போன்றவே         159
[கயல் மீன் பய்ந்தெடுத்து உயர்ந்து சிரல் பறவை தொகுசிறகு அலைப்பதாகிய காட்சி, நீரின் பெருக்கத்தைக் கண்டு, இனி மழை போதும் , மேலும் வேண்டா எனக் கையால் முகிலினை மறித்தத முறைமை போலும் . சிரல்- சிச்சிலிப் பறவை. மீன்கொத்தி. தோயம்- நீர். ]

வேறு
மேனி லத்தின் விராவிமைந்தருங்
கான்நி லைத்த கருங்குழன் மாதருங்
கீழ்நி லத்திற் கெழீஇயகிற் சேக்கைமேல்
தாம்நி லைத்துத் தழீஇநுகர்ந் தாரரோ         160
[மேல் நிலம்- மேல்தளம். கான் -நறு மணம். கீழ்நிலம்- கீழ்த்தளம். அகிற் சேக்கை- அகிற்புகையூட்டப்பெற்ற படுக்கை.. வேனிற்காலத்தில் மேல்தளத்தில் வாழ்ந்த இளமைந்தரும், நறுமணக் கூந்தல் மகளிரும் கார்காலத்தில் கீழ்த்தளத்திற்கு வந்து அகிற்புகி யூட்டப்பட்ட படுக்கையில் கலந்து இன்புற்றனர்.]

தேங்கு நீரிற் சிதர்ந்துகு தாரையான்
ஓங்கு புற்புதம் ஒண்டரை வேனிலின்
தாங்கு வெப்பிற் றளர்ந்து தண்ணீர்களும்
வீங்கு கொப்புள் விராயது போலுமே.         161
[தேங்கி நிற்கும் நீரில் மழைத் தாரகள் விழுவதனால் தோன்றும் குமிழிகள், வேனிலின் வெப்பத்தைத் தாங்கும் அளவினைத் தளர்ந்து தண்ணீர்களும் வேனிற் கொப்புளங்கள் கொண்டன போலும். புற்புதம்- நீர்க்குமிழி. கொப்புள்- கொப்புளம்.]

முக்க ணாரரு ளுள்ள முளைத்தலுந்
தொக்க பல்பிற வித்துயர்த் தொல்வழி
யக்க ணத்திலடைத்திடப் பட்டெனப்
பக்க மண்கமர் வாயடை பட்டன         162
[முக்கணார்- சிவபெருமான். முக்கணார் அருள்- சத்திநிபாதம். கமர்- நிலவெடிப்புக்கள். சிவபெருமானின் திருவுள்ளத்தில் அருள் தோன்றியவுடன் துன்பமயமான பலபிறப்புக்களும் வரும் வாயில் அடைபட்டாற்போல மழையினால் பக்க மண்சரிந்து நிலவெடிப்புக்கள் அடைபட்டன. சிவபெருமானின் திருவருளாகிய சத்திநிபாதம் நிகழ்தலும், பிரவாக அநாதியாய் வந்து கொண்டிருந்த பிறவி வழி அடைபடும்.]

குன்ற மும்புற வுங்குளிர் பண்ணையும்
ஒன்றுந் தோன்றில வாயுத கத்தினுண்
மன்ற மூழ்கின வெப்பற வாரியே
சென்று சூழ்ந்தெங்குந் தேங்கிய தொப்பவே.        163
[குன்றுகளும் முல்லை நிலங்களும் மருத நில குளிர்ந்த வயல்களும் ஒன்றும் வேறுபாடு தோன்றாதனவாய் நீரால் பெரிதும் மூழ்கடிக்கப் பட்டிருந்தன, வேனில் வெப்பு அற கடல் எங்கும் சூழ்ந்து பரந்து தேங்கியது நிகர்ப்ப். புறவு- முல்லைக் காடு. பண்ணை- வயல்வெளி. உதகம்- நீர். வாரி- கடல்]

எட்ட றைக்கு ளெரிக்கினும் இன்னகிற்
கட்ட ழல்கடு கக்கெடு கின்றதாற்
பட்ட மாரி தனைப்பயந் தாலென
மொட்டி ளமுலை வெப்பும் முடிந்ததே.         164
[மழை ஈரத்தினால் எத்துணை ஆழமான அறைக்குள் வைத்து எரித்தாலும் நெருப்பு அவிகின்றது. வேனிலின் வெப்பும் முடிந்தது. எட்டு என்பது அதற்கு மேலாகிய பன்மை என்பது குறித்து நின்றது. பட்டமாரி- பொழிந்தமாரி பயந்தாலென- பயந்ததால், பெற்றதால்]

அமையு மென்றறை வாருரை யன்றிநீர்
உமிழ்தல் வேண்டுமென் பாருரை யில்லைவாய்
அமிழ்த மேனும் அகட்டிட முட்டுமேல்
உமிழ்வ தன்றிப்பின் னுண்ணவுங் கூடுமே.         165
[போதும் போதும் என்று கூறுவார் உரை அன்றி (மழை)நீர் பெய்ய வேண்டும் என்பார் உரை இல்லையாம். அமிழ்தமே என்றாலும் வயிறு முட்டுமேல் உமிழ்வதே யன்றி உண்ணவும் கூடுமோ? அமையும்- போதும். உமிழ்தல்- பெயல். அகடு- வயிறு. முட்டுமேல்- தேக்கிடுமேல் கூடுமே- எக்காரம் எதிர்மறை]

இன்ன வாறிரு திங்களு மின்மழை
மன்னி நின்றன மாமக தப்புலந்
துன்னு மின்னறு மித்தின்பு கூர்ந்ததால்
அன்ன தேயம் நிகர்த்த அனைத்துமே         166
[இவ்வாறு இரண்டு மாதங்களும் இனிய மழை நிலைத்து நின்றது. மகதநாடு தன்னை நெருங்கியிருந்த துன்பங்களை யெலாம் ஒழித்து அந்த நாட்டிலிருந்த உயிரினங்களெல்லாம் இன்பம் மிக அடைந்தன. திங்கள்- மாதம். புலம்- தேசம். துன்னும்- நெர்ங்கும். துமித்து- ஒழித்து.]

வாய்ந்த மாமக தப்புல மன்னவன்
ஆய்ந்த நுண்ணிடை யம்பிகை பேரருள்
ஏய்ந்த வாறெண்ணி யின்பநீ ராடினான்
தோய்ந்து ளாரெவ ரும்புதுத் தோயமே.         167
[மகதநாட்டுக்கு அரசனாகப் பெற்றவன், அழகிய நுண்ணிய இடையாளாகிய அம்பிகையின் பேரருள் பெற்றதை எண்ணி இன்பநீராடினான், மக்கள் அனைவரும் புது நீரில் தோய்ந்து களித்தனர்.]

கருணை நாயகி யுங்கடிக் கங்கைசூழ்
திருநி லாவுசெ ழும்புகழ்க் காசியின்
மருவி விச்சுவ நாதன் மலர்க்கழற்
பொருவில் பூசை புரிந்திருந் தாளரோ.         168
[அம்பிகையும் கங்கைநதி சூழும் ஞானச் செல்வம் நிலவுகின்ற புகழுடைக் காசிநகரை அடைந்து விசுவநாதன் திருவடிகளில் பூசை புரிந்திருந்தாள். அரோ- அசை]

கடவுள் வாட்கண் கரந்திடு நாளென
மடந லாள்மக தத்திறைக் கீந்தருள்
அடையி லாவரத் திற்றழை காரினான்
மிடையு நீளிருண் மென்மெல நீங்கிற்றே.         169
[இறைவனுடைய திருக்கண்கலை இறைவி மறைத்த நாளில் போல, அம்பிகை மகத நாட்டுஅரசனுக்கு ஈந்த அருளால் தழைத்த மழை மேகத்து நீண்ட இருள் சிறிது சிறிதாக நீங்கிற்று]

விண்ணி வர்ந்த மழைக்குல மேதகு
மண்ணி றங்கிய தென்ன மணிக்கனத்
தண்ண லோதைய டங்கின வம்புவித்
தண்ணெ னீர்க்கட் டழங்கொலி மிக்கதே.         170
[ஆகாயத்தில் மேல் இருந்த மழை மேகங்களெல்லாம் நிலத்தின்மேல் வந்திறங்கியது என்னும் படியாக, மேகத்தின் இடியோசை அடங்கின; அழகிய நிலத்தின் மீது நிறைந்த நீர்நிலைகளில் நீரலை ஓசை மிக்கது. மணிக்கனம்- நீலமணி போல ஒளிவீசும் கார்மேகம்.]

மாத ரோதியின் மென்மெல வானிமிர்
ஓதை நீண்முகில் வெண்ணீற முற்றன
போதல் மேயின பொள்ளென மென்றுளிக்
கூதிர் வந்து குலாவிய தென்பவே.         171
[பெண்களின் கூந்தலைப்போலத் திரண்ட கார்மேகம் மெள்ள மெள்ளக் கருநிறம் நீங்கி வெண்ணிறம் உற்றன. மழைநீங்கி மழைதுளிக்கும் கூதிர்காலம் வந்துற்றது.]

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
கோடலந் தீப மேந்திக் கண்டன குன்றங் கானம்
நீடிய கொடிக ளேந்திக் கண்டன நிறைபூம் பண்ணை
பாடுசெய் பணிலம் ஊதிக் கண்டன பரவை சால
ஆடிமுற் கண்ட கூதிர் அரசிளங் குமரன் றன்னை         172
[கோடலம்- கோடல்- காந்தள். பண்ணை- மருதநிலம், வயல்கள். பணிலம்- சங்கு. அரசர் போன்ற பெரியோர்களை மங்கலப் பொருள்களை முன் வைத்துக் காண்பது மரபு. அவ்வாறே, கூதிர் என்னும் அரசிளங்குமரனை, குறிஞ்சி நிலத்தில் காந்தள் மலர்களாகிய தீபங்களை ஏற்றிக் கண்டன. முல்லை நிலமாகிய கானம் உயர்ந்த கொடிகளேந்திக் கண்டன. (முல்லை நிலத்துக்குரிய முல்லை முதலிய கொடிகள் , துணிக் கொடியைச் சுட்டின.); மருத நிலமாகிய வயல் வெளிகள் நீர் வளத்தினால் ஒலிக்கின்ற சங்குகளை ஊதிக் கண்டன.; நெய்தலாகிய கடல் அலைகளை வீசி ஆடிக் கண்டன.]

துணைவரைப் பிரிந்தோர்க் கெல்லாந் துயர்நனி கூர்க்கும் வெய்ய
கணைகளா யணையார் தம்முட் கலந்தனர் கூடச் செய்யுந்
தணவருந் தூத ராயுந் ததைந்தன கூதிர்க் காலை
அணவிய வெழிலி தூர்க்கு மரும்புனற் றிவலை யம்மா.         173
[கூதிர்காலம் தூவிய நீர்த்திவலைகள் துணைவரைப் பிரிந்தீருக்கு எல்லாம் மிக்க துயரைச் செய்யும்; ஊடலால் அணையாதவரை (மன்மதன் விடும் மலர்க் ) வெய்ய கணைகளால் தம்முட் கலந்து கூடச்செய்கின்ற தூதாயும் நெருங்கின]

தேம்பிழி யளைந்துந் தூற்றுஞ் சிறுதுளி யளைந்துந் தண்ணென்
றாம்பரி சுடையதாயு மகனெலாம் வெதும்பி யாரும்
பாம்புகொ லென்னப் பாயும்பகழி கொலென்னக் கொல்வான்
வாம்புலி யென்னத் தாவி வளாயது கூதிர்க் காற்று         174
[இனிய தேனை அளைந்தும், நீர்த்துளிகளை அளைந்தும் குளிர்ச்சியுடன் தாவும் இயல்பினதாய், யாரும் உள்ளமெலாம் கலங்க, பாம்போ எனவும் பாயும் அம்போ எனவும் ; கொல்ல வந்த புலியோ எனவும் கலங்கக் கூதிர்க்காற்று எங்கும் சூழ்ந்தது]

கள்ளவாய் நுகர்ந்து கண்ணிற் கறங்கு மென்சுரும்ப ரீட்டம்
வள்ளவாய் மலரின் குப்பை வால்வளைக் குப்பை சூழ்ந்த
புள்ளவா யிசையின் சும்மை பொங்கி யொண்மணி நீர்சால
வுள்ளவாய் நிறைந்த வேரியுறு தடமாதி யெல்லாம்.         175
[கள்- தேன். அவாய்- விரும்பி. கண்ணின் – இன் உவம உருபு,கண்ணினைப்போல. கறங்கும்- சுழலும். சுரும்பர் ஈட்டம்- வண்டுகளின் கூட்டம். வள்ளம்- கிண்ணம். வால்வளை- வெண்சங்கு. குப்பை- திரட்சி. புள்- பறவைகள். சும்மை- ஆரவாரம். வேரி- தேன். தேனினை விரும்பி உண்டு கண்ணினைப்போலச் சுழன்று திரியும் வண்டுக் கூட்டங்கள். கிண்ணத்தின் வாய் போல அகன்ற இதழ்களை யுடைய மலர்த்திரள், வெண்சங்குத் திரள் சூழ்ந்த பறவைகளின் ஆரவாரவொலி, ஒளி வீசும் மணி போன்ற இயல்பினையுடையவாய் தேன்கலந்த நீர் நிறைந்தன பெரிய குளங்கள் எல்லாம்]

உடைகடை யடைக்கு மோதை யுயர்த்திய மண்ணை வாரிப்
படுமவல் தூர்க்கு மோதை பற்பல கால்கள் தோறும்
விடுபுன லொதுக்கு மோதை விரிபணை விளைவு மூடிக்
கெடுபுன லொதுக்கு மோதை கிளர்ந்தன தேய மெல்லாம்         176
[மழை நீரால் உடைந்துபோன வாய்க்கால்களை அடைக்கும் ஒலியும், மேடாக உயர்ந்த மண்ணைவாரி பள்ளங்களைத் தூர்க்கும் ஓசையும், பற்பல வாய்க்கால்கள்தோறும் நீரினைத் திருப்பி விடும் ஓசையும், வயல்களை மூடிக் கெடுக்கும் வெள்ளத்தை ஒதுக்கும் ஓசையும் ஆகியபேரொலிகள் எங்கும் கிளர்ந்தெழுந்தன]

அருள்பிரி யாவி யெண்ணில் புவனத்து நுகர்ச்சி யார்ந்தவ்
வருளினைக் கூடுமா போலலை கடனீரே மேகந்
தரமலை யாதி யுள்ள வளமெலாந் தழுவி யாறாய்க்
கரைபொரு திரங்கு வேலைக் கடலக நிறைந்த தன்றே.         177
[அருள் பிரி ஆவி- திருவருள் வியாபகத்தில் அடங்கியிருந்தும் அதனோடு கூடாமல் பிரிந்திருக்கும் உயிர்கள். அவற்றைத் தன் வியாபகத்தில் வியாப்பியமாக அடக்கிக் கொள்ளும் கருனையினால் இறைவன் பல்வேறு பிறவிகளைத் தந்தருள்கின்றான். அதுவே இங்கு உவமையாயிற்று. திருவருளால் பிரிந்த உயிர்கள் எண்ணிலாத புவனங்களில் போகங்களை நுகர்ந்து, பின் அத்திருவருளைக் கூடுமாறு போல, அலைகடலின் நீரே மேகம் கொண்டுவந்து பொழிய, மலைகள் முதலிய இடங்கல் எல்லாம் எல்லா வளங்களும் பெற்றுச் செழிப்படைய ஆறாய்ப் பெருகி, கரையை அலைகளாற் தாக்கும் ஒலியினை உடைய கடலில் நிறைந்தது.]

பறந்தலை யுழக்கிப் பேய்க்கும் பருந்துக்கும் விருந்துசெய்யு
மறந்தலைக் கொண்டார் ஆவிமட நலார்மாட்டு நண்ணிற்
சிறந்திடுங் குணமே யென்னத் தேம்பிய வேனிற் கொன்ற
நிறந்திகழ் பரிதி வெப்பந் தன்னமு நிகழ்ந்திடாதால்.         178
[பறந்தலை- போர்க்களம். மறம்- கொடுமைக் குணம். ஆவி- உயிர்போன்ற. மடநலார்- அழகியமகளிர். சிறந்திடும் குணம்- இரக்க குணம். வேனிற் றோன்ற- வேனிலில் தோன்றிய . தன்னமும்- சிறிதும். போர்க்களத்தில் பகைவரை இரக்கமின்றிக் கொன்று பேய்க்கும்பருந்துகளுக்கும் விருந்து செய்யும் மறக்குணங் கொண்டோரிடத்தும் தமக்கு ஆவியைப் போன்றமகளிரைப் பள்ளியிடத்துக் கண்டபோது, சிறந்த குணமாகிய அன்பே தோன்றுவதைப் போல வேனிற்காலத்தில் உயிர்களை வதைத்த சூரியனிடத்தில் வெப்பம் சிறிதும் நிகழாது]

மினற்றழற் கிரணக் கற்றை விரிக்கு மாதவனை வைது
கனற்றினா னென்று வேனிற் காலத்து வெறுத்தார் தாமே
யனற்றினா னல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தா ரந்தோ
இனற்றிற முற்றார்க் கின்ன சொல்லலா மென்ப தின்றே.         179
[மின்னலைப் போல நிறமுடைய அழலைச் செய்யும் கிரணக் கற்றைகளை விரிக்கின்ற மாதவனாகிய சூரியனை வைது வெப்பத்தைச் செய்தான் என்று மக்கள் வைதனர். அவர்களே இப்பொழுது கூதிர்காலத்தில் சூரியன் வெப்பத்தைத் தாரான என்று வெறுத்தார். அந்தோ! துன்பபபட்டவர்கட்கு இன்னது சொல்லலாம் இன்னது சொல்லக் கூடாது என்ற வரையறை இல்லை. மினல்- மின்ன்ல், இனல்- இன்னல்- இடைக்குறை. கனற்றினான் -கனலைச் செய்தான், கனல்- வெப்பம். அனல்- வெப்பம்., சூடு. ]

இரவுநன் பகலுமாறி யிரவியு மதியு மாறி
வருவன வென்ன வெய்யோனொளிமிகமழுங்கிச்செல்லப்
பரவுபைங் கிரணக் கற்றைப் பானிலாச் சாலக்கான்று
விரவிய மாந்தர்க் கின்பம் விளைத்தது பனிவெண் டிங்கள்         180
[ இரவாக கடும் பகலுமாறி, சூரியனும் நிலவும் தம்முள் மாறி வருவன என்னும்படியாக, ஞாயிற்றினொளி மழுங்கிச் செல்ல, பரவிய பசுங்கதிரொளி பால்போன்ற நிலவைச் செய்ய , மக்களுக்கு இன்பம் விளைத்ததது, பனிவெண் திங்கள்.]
அரவிரி யல்கு லார்தம் அரதநக் குவவுக் கொங்கை
கரவினிற் புணர்வோர் செல்லுங் கடங்களுந் தேய்ந்த கூதிர்
விரவலின் ஒடுங்கி வேழக் கடங்களுந் தேய்ந்த வெற்பர்
குரவைகள் தழுவி யாடுங் குமரவேள் குன்ற மெங்கும்.         181
[ கடம்- காடு, மதநீர். பாம்பின் மலைநிலமக்கள் குரவைதழுவி ஆடும் குமரவேளின் குன்றமெங்கும் படம் போன்று அகன்ற அல்குலுடையார் (தலைவியர்)தம் அரதனமணி வடம் அணிந்த கொங்கைகளைத் தழுவும் பொருட்டு கள்வொழுக்கத்தில் புணர்வோர் செல்லும் காட்டு வழிகளும் தேய்ந்து போயின; கூதிர்காலம் பரவுதலினால் யானைகளின் மதநீரும் வற்றித் தேய்ந்தன;]

தங்களுக் கின்ப நல்குந் தண்புயற் பருவஞ் சாடிப்
பொங்கிய கூதிர் நோக்கிப் பொருமிநின் றழுவ தேய்ப்பத்
திங்களங் கதிர்தோய் கோட்டுத் தேம்பயின் மரங்க ளெல்லாங்
கொங்குயிர் சினையின் மேகக் குறுந்துளி துவற்றா நின்ற.         182
[தங்களுக்கு இன்பம் நல்கும் கார்காலத்தை மோதிப் பொங்கிய கூதிரை நோக்கிப் பொருமி நின்று அழுவதைப் போல நிலவைதொட்டு உயர்ந்து நின்ற தேனீக்கள் மொய்க்கும் மரங்களின் கொம்புகளெல்லாம் நீர்த்துளிகள் தூவி நின்றன.]

இருந்துளி கிளைக டூற்று மியல்பினாற் சோலை யுள்ளும்
பருந்துளி கூதிர்வீசும் பான்மையாற் சோலைப் பாங்கும்
பொருந்துறாப் பறவைக் கூட்டம் பூவையர் வேது செய்யுந்
திருந்தொளிப் புகையின் மாடஞ் சேக்கையாய்ப் பயிலுமன்றே.         183
[தூற்றுதல்- தெளித்தல். பருந்துளி- பெரிய துளி. பாங்கு- புறம். பூவையர்- மகளிர். வ்பேது- வெம்மை. சேக்கை- இருப்பிடம், தங்கும் இடம். மரக்கிளைகள் சிந்தும் நீர்த்துளிகளினால் சோலையுள்ளும், பெரிய நீர்த்துளிகளைக் கூதிர்ப்பருவம் வீசும் இயல்பினால் சோலைப் புறத்தும், தங்கிய பறவைக் கூட்டம், மகளிர் வெம்மை செய்யும் புகையுடைய இருக்கைகள் போல் காட்சி தரும்]

ஈண்டிய குளிரா னுள்ள மிளகிய விளையமந்தி
தீண்டுதற் கரிய வெந்தீச் செறிவென வுவந்து துள்ளிக்
காண்டக மலர்ந்த செங்கேழ்க் காந்தளம் பூவை யண்மி
மூண்டதன் கூதிர் மாய முன்கைமே னீட்டு மன்றே.         184
[ நெருங்கிய குளிரால் உள்ளம் தளர்ந்த இளையமந்தி, தீண்டுதற்கு அரிய தீக்கனல் என மனமகிழ்ச்சியுடன் துள்ளிச் சென்று, கண்ணுக்கழகாகப் பூத்துள்ள செங்காந்தள் மலர்களை நெருங்கி, மூண்ட குளிர் நீங்கத் தன் முன்கைகளை அக்காந்தள் மலர்களின் மேல் நீட்டும். அன்றே- அசை. ஈண்டிய- நெருங்கிய. இளகிய – தளர்ந்த. தீண்டுதற்கு அரிய- தொட முடியாத. வெந்தீ- வெப்பத்தைச் செய்யும் தீ. காண் தக- காட்சிக்க்கு அழகாக. செங்கேழ்-செந்நிறம். ]

தடித்தெழுந் திடித்துப் பெய்யுந் தண்புய லொழியுங் காறும்
அடித்தலம் பெயர்த்தா னாமை யாடிய விளைப்பான் ஊக்க
மடித்தது போலப் பூவை மலர்புரையெருத்து மஞ்ஞை
கடித்தழை தோகைகூப்பிக் கவன்றன காவு தோறும்.         185
[மின்னி இடித்துப் பெய்யும் மழை ஒழியும் வரைக்கும் தன்னுடைய கால்களைப் பெயர்த்து மாறி மாறி நின்று ஒழியாமல் ஆடிய களைப்பினால் செயல் இன்றிக் காயாம்பூ நிகர்த்த கழுத்தை உடைய மயில்கள் சோலைகள் தோறும் தம் தோகையைக் குவிதது வருந்தின. தடித்து- மின்னி. தண்புயல்- குளிர்ந்த மழை மேகம். ஆனாமை- குறையாமல். இளைப்பு- தளர்ச்சி. ஊக்கம் மடிந்தது- எழுச்சி நீங்கியது. பூவை- காயாமலர். புரை- உவம உருபு. எருத்து- கழுத்து, பிடரி. கூப்பி- குவிந்து கவன்றன- வருந்தின. கவல்- கவலை,வருத்தம். காவு- மரச்சோலை]

தொடங்கிய கூதி ருள்ளந் துளக்கலுந் துணைக ளோடு
மடங்கலுங் கயமு மெண்குமரைகளும் புலியு மற்றும்
அடங்கின வறைசூன் றன்ன விடரக மனைத்தின் மாட்டுந்
தடங்கொள் வெம்முலையார் மைந்தர் தனியகத் தொடுங்கியாங்கு         186
[துளக்கலும்- வருத்தலும். மடங்கல்- சிங்கம். கய்ம்- யானை. எண்கு- கரடி. தனியகம்- அந்தப்புரம். கூதிர் உள்ளத்தை வருத்தலும் தத்தம் துணைகளோடு சிங்கங்களும் யானைகளும் கரடிகளும் மான்களும் புலிகளும் பாறைகளைக் குடந்தன போன்றமைந்துள்ள குகைகள் அனைத்தின் அகத்தில் அடங்கின, மங்கையரும் மைந்தரும் அந்தப்புரத்தில் ஒடுங்கியமையைப் போன்று. }

கைத்தலங் குலைய மெய்யிற் கனைமயிர் பொடிப்ப ஆம்பல்
செத்தொளிர் பவளச் செவ்வாய் துடிப்பத் தேமொழி தள்ளாட
இத்திறத் திருக்கும் மாந்தர் யாவரும் இனைய வந்து
தத்திய கூதிர் தன்னைச் சாலவும் வெகுண்டா ரொத்தார்.         187
[குலைய- நடுங்க. கனைமயிர்- செறிந்த மயிர். பொடிப்ப- கூச்செறிய. செத்து- போன்று. மொழி தள்ளாட- மொழி குழற. இனைய- வருந்த. கைகள் நடுங்க, உடலில் செறிந்த மயிர்கள் கூச்செறிய, ஆம்பல் மலரிதழைப் போலச் சிவந்தவாய் துடிப்ப, தேன் போன்று இனிக்கும் மொழி குழற இப்படியிருக்கும் மாந்தர் யாவரும் வருந்த வந்து பரவிய கூதிரினை மிகவும் கோபித்தவரை ஒத்தவரானார். கூதிரால் நடுங்குவோர்க்கும் கோபித்தவருக்கும் இம்மெய்ப்பாடுகள் தோன்றும்.]

பத்தியிற் கலவி செய்யும் பள்ளிக டோறும் வைகுஞ்
சித்திர மேடை தோறுந் தெற்றிக டோறு மெங்கும்
பொத்திய கூதிர் காயப் பொருந்திய வகலிற் செந்தீ
நித்திய வேள்விச் சாலை நெருப்பினுஞ் சிறந்த தன்றே.         188
[பத்தி- காதல். தெற்றி- திண்ணை. காதலர் அன்பினிற் கலவி செய்யும் பள்ளியறைகள் தோறும், மக்கள் அமரும் அழகிய மேடைகள் தோறும், ஹிண்ணைகள்தோறும் எங்கும் அகலில் செந்தீ, அக்கினி காரியம் செய்வோரின் நித்திய வேள்வித்தீயினும் சிறப்பாகப் பேணப்பட்டது]

செய்யதா மரைகள் வென்ற செழுமுகஞ் சேப்பநீல
மையுலாங் கண்ணி னல்லார் மதுநுகர்ந் தில்லந்தோறும்
பையர வல்குல் விம்மப் பணைமுலை விம்மச் சேக்கை
நெய்யுலாங்கூந்தல் சோரக் கலவியின் நிகழ்ச்சி மிக்கார்         189
[சிவந்த தாமரைகளை வென்ற செழுமையான முகம் சிவப்ப, மையுண்ட கண்ணியராகிய அழகிய மடந்தையர் மது உண்டு, வீடுகள் தோறும் கட்டிலில் நெய் தாவிய கூந்தல் சோரக் காதலருடன் கலவியில் மிக்காராயினர்.].

விதிப்படி தோயம் ஆட விதித்தருள் கவுரி பாகர்
கழித்தெழுங் கூதிர்நோக்கிக் கவலுறா வண்ணம்போலும்
அதிர்த்தெழும் அங்கிவேட்டல் பின்னுற அமைத்த செய்கை
கொதித்தெழும் பாச மாற்றித் திருவருள் கூடுவார்க்கே.         190
[கொதித்து- சினந்து. தோயம்- நீர். சினந்து எழும் மலவலியைக் கெடுத்து திருவருளைக் கூடுவாருக்கு இறைவன் முறைப்படி நீராட விதித்துப் பின்னர் சிவாக்கினிவேள்வியைப் பின் அமைத்த செயல், மிக்கு எழும் கூதிரைக் கண்டு அஞ்சாமலிருக்கும் பொருட்டுப் போலும்]

விற்படு நுதலின் மாதர் வேணவா என்ன ஆர்க்குஞ்
சொற்பட லரிய வாகித் தூமணிப் பண்ணை தோறும்
நெற்பலன் விளைந்த கன்னல் நிறைந்தன நெடியவாழை
அற்படப் பொதுளி வானம் அளந்த நெடுமா லென்ன.         191
[வில் போன்ற நெற்றியினராகிய பொருட் பெண்டிரின் அளிவுபடாத ஆசை என்ன, சொல்லமுடியாத அளவு வயல்கள் தோறும் நெற்பயன் விளைந்தன; கரும்புகள் நிறைந்தன. நெடிய வாழை இருள்படப் பொதுளி வானம் அலந்தன, நெடிய மாலெனும்படியாக.]

தெருள்மணித் தெண்ணீர் பாய்ந்து தேங்கிய பட்டம் ஆதி
மருவிய மீனக் குப்பை வரும்புனற் கெதிர்ந்து மீண்டும்
வெருவிமே லெழுந்தும் வீழ்ந்தும் மென்மல ரலைத்துங் கொட்கும்
பெருவள மெய்தப் பெற்ற பீடிலா வற்ப ரென்ன         192
[தெருள்மணி- பளிங்கு. பட்டம்- நீரோடை. மீனக் குப்பை- மீன் கூட்டம். பளிங்கு போன்ற தூய, தெளிந்த நீர் பாய்ந்து தேங்கிய நீரோடைகளில் பொருந்திய மீன்கூட்டம் வரும் புனலுக்கு எதிராகச் சென்றும் மீண்டும் துள்ளி மேலெழுந்தும் வீழ்ந்தும் மென்மையான மலர்களை அலைத்தும் திரியும், பெருஞ்செல்வம் பெற்ற கீழ்மக்களைப் போல.]

இத்தகைக் கூதிர்த் தோற்றத் திமயமீன் றெடுத்த நங்கை
முத்தலைக் கங்கை சூழ்ந்த முதுநகர்க் காசி வைகும்
அத்தனை வணங்கி யாங்குப் புறவிடை கொண்டு போந்து
பைத்தநீர்க் காஞ்சி மூதூர்ப் படர்தர நெறிக்கொண் டுற்றாள்.         193

[இத்தகைய கூதிர்காலத் தோற்றத்தில் இமயமலை பெற்றெடுத்த நங்கையாகிய இறைவி, முத்துக்களும் அலைகளும் உடைய கங்கை சூழ்ந்த பழநகராகிய காசியில் குடியிருக்கும் ஐயன் விசுவநாதனை வணங்கி , நகரை நீங்கிச் செல்ல விடை கொண்டு காஞ்சியை நோக்கிப் புறப்பட்டாள். அம்மை இமயமலையால் வளர்க்கப்பட்டாளாதலின் உபசாரமாக இமயம் ஈன்ற நங்கி எனப்பட்டாள். முத்து+ அலை= முத்தலை. =முத்தும் அலையும்.அத்தந் ஐயன். புறவிடை- புறப்படுதற்கு விடை.]

வேறு

எண்டிசையுங் குதுகுதுப்பத் தெய்வமடவார்
      கஞல விமையோ ரேத்த
மண்டியவெண் மணிக்கவிகை மேனிழற்றச்
      சாமரைகண் மருங்கிற் றுள்ளக்
கண்டவர்கள் களிதூங்க வெழுந்தருளு
      முமைமாது கயற்கண் சாத்தச்
சண்டிகைமங் கலையெனுந் தோழியர்
      வழிக்கண் வளமெடுத்துச் சாற்று கின்றார்.         194
[எட்டுத்திசையில் உள்ளோரும் விருப்பு எய்த, தேவலோகப் பெண்டிர் நெருங்கி வர,வானவர்கல் புகழ, வெண்மணிக் குடை மெல் நிழலைச் செய்ய, சாமரைகள் பக்கங்களில் இரட்ட, கண்டவர்களின் கண்களில் மகிழ்ச்சி தங்க, உமையம்மை திருக்கண் நோக்கம் செய்ய, சண்டிகை, மங்கலை எனும் தோழியர், காஞ்சியை நோக்கிச் செல்லும் வழியின் வளத்தினை எடுத்து மொழியத் தொடங்கினர். குதுகுதுப்பு- விருப்பம். கஞலௌதல்- நெருங்குதல். ]

பொங்குமொளி முகமதிய முணவாரித்
      திரட்டுமிருள் போலுங் கூந்தால்
தங்கையெனும் நினைக்காண வரிசைகொடு
      வருவதுபோல் தழங்கி யாடுங்
கங்கைநதி அகில்நறுஞ் சந்தனமலர்
      கற்பூரமிளங் கனிகாய் தேறல்
செங்கனக மணிபலவுந் திரைக்கரங்கொண்
      டணைவதனைச் சிறிது பாராய்         195
[ கூந்தல்- கூந்தலைஉடைய உமைக்கு ஆகிவந்தது; சினையாகு பெயர். கூந்தால் என விளியேற்றது.முகமாகிய மதியில் பொங்கும் நிலவொளி உண்ணும் பொருட்டு வரித் திரட்டி வைத்துள்ள இருள் போலும் கூந்தலை உடையவளே! தங்கையாகிய உன்னைக் காணும் பொருட்டு சீர்வரிசைகளுடன் வருவதைப்போல், அலைகளால் தழங்கி மகிழ்ச்சியால் ஆடும் கங்கை நதி, அகில் நறுஞ்சந்தனம் மலர்கள் கற்பூரம் புதியகனை காய் தேன் செம்பொன் மணி முதலிய பலவற்றையும் அலைகளாகிய கரங்களில் ஏந்தி வந்து அணைவதைப் பாராய். ]

நிறங்கூர்ந்த கருஞ்சுரும்பர் விளையாடு
      முளரிமுக நிமலாய் சால
வறங்கூர்ந்த தாங்கள்பெரு வளம்படைப்ப
      மழைக்கருணை வழங்கிப் போந்த
அறங்கூர்ந்த நினையமுனை முதல்கடவுள்
      நதிபலவும் மலர்கள் தூவிக்
கறங்கோதை வழுத்தெடுத்து மகிழ்கூர்ந்து
      முன்வணங்குங் காட்சி காணாய்         196
[கூர்தல்- மிகுதல். கருஞ்சுரும்பர்- கரிய வண்டுகள். முளரிமுகம்- தாமரையாகிய முகம். நிமலை- மலமற்றவள். ஆய்- விளியுருபு. வறங் கூர்ந்த- வறட்சி மிக. மழைக் கருணை- மழையாகிய கருணை. கறங்கு ஓதை- பேரோசை. கருநிறம் மிகுந்த வண்டுகள்(கண்கள்) விளையாடும் தாமரையாகிய முகமுடைய நிமலையே! மிகவும் வறுமையுற்ற தாங்கள் நீராகிய பெருவலம் அடைய மழையாகிய கருணை வழங்கிப் போந்த அறம் மிக்க நின்னை, யமுனை முதலிய நதிக்கடவுள்கள் பலவும் மலர்கள் தூவிக் சுழலும் ஓதையால் நின்னை வாழ்த்திப் போற்ரி உன் முன் வணங்கும் காட்சியினைக் காணாய்!]

மணங்கமழுங் கருங்கூந்தற் புயலுயிர்த்த
      சிலைநிகர் வாணுதலாய் பூத
கணங்களொடு நீவருவ தறிந்துதொழக்
      காத்திருந்தாங் கடுப்ப மேகம்
இணங்கும்மலர்ச் சோலையினின் றிரைதேரப்
      புகுதாமல் ஈர்ந்தண் கூதிர்க்
கணங்கினவாய்ப் பஞ்சரங்க டொறுமொடுங்கும்
      புட்டொழுதி யழகு காணாய்         197
[மணங்கமழும் கருங்கூந்தலாகிய புயல் பெற்றெடுத்த இந்திரவில் நிகர்க்கும் ஒளிவீசும் நெற்றியினாய்! அடியார் கூட்டத்துடன் நீ எழுந்தருளுவதை அறிந்து, உன்னைத் தொழக் காத்திருப்பதைப் போல மேகக் கூட்டம் தங்கியிருக்கும் மலர்ச்சோலையிலிருந்துகொண்டு, இரைதேடப் புகுதாமல், இர்ரப்பதமிக்க கூதிர்க்கு வருந்தினவாய்க் கூடுகள்தோறும் ஒடுங்கும் பறவைக் கூட்டங்களின் அழகு காணாய்!]

விழிக்கெண்டை பொருதலையா தச்சுறுத்த
      மகரமொடு விளங்கு காதோய்
செழிக்கின்ற வளனொழிந்த காலையு
      மேன்றன கொண்டு சிறப்பிப் பார்போற்
கொழிக்கின்ற மலர்வேரி கூதிரினீத்
      தொழிமரங்கள் குளிர்ந்த நீரான்
வழிக்கொண்டே நின்னெதிரே குறுந்தூளிதோய்ப்
      பணிமாறும் வனப்பு நோக்காய்        198
[விழியாகிய கெண்டைமீன் தாக்கி அலைத்து அச்சுறுத்திய சுறா (மகரம்போன்ற காதணி) விளங்குகின்ற காதினை உடையாய்! செல்வம் ஒழிந்த காலத்திலும் தமக்கு இயல்வதைக் கொண்டு அறம் செய்வாறைப்போல , கொழிக்கும் மலர்களில் தேன் கூதிரால் நீத்து ஒழிந்த மரங்கள் குளிர்ந்த நீரினால் நீ வரும் வழியில் நீர்த்துளிகளைத் தூவிப் பணிசெய்யும் வனப்பினை நோக்குவாயாக!. ]

அலையுமிரு விழிப்புணரிக் கிடையிடுபே
      ரணையெனமூக் கலங்கு மாதே
கொலையுகளுஞ் செழுங்குலிசப் படையாளி
      நினதடிக்கோ கனகப் போது
தலையுயர்கா தலின்விசும்பி னின்றுதொழு
      மாறொதுக்குந் தன்மை யேய்ப்ப
நிலையுமறுத் துகண்முழுது நீங்குநெடு
      வான்விளக்க நெடுங்கண் சாத்தாய்         199
[அலைகின்ற விழிகளாகிய கடல்களுக்கு இடையிலே இடப்பட்ட பெரிய அணையென நீண்ட அழகிய மூக்கினை உடைய மாதே! கொலைக் கருவியாகிய வஜ்ராயுதப் படையை ஆளும் இந்திரன் நின்னுடைய செந்தாமரைப் போதாகிய திருவடிகளை விண்ணிலிருந்து தொழுமாறு தூய்மை செய்தது போல துகள் முழுதும் நீங்கிய நீண்ட ஆகாயப் பரப்பு தூய்மையாக விளங்குவதைத் திருக்கண் சாத்துவாயாக!. அம்மையின் கண்கள் கடல்போலப் அகலமானவை; கருணைக்கடல். குலிசப்படையாளி- இந்திரன். மறுத்துகள்- தூசு, களங்கம்.]

பொங்கியவாள் நுதல்மதிகண் டலர்ந்தகருங்
      குவளையெனப் பொலிந்த கண்ணாய்
அங்கணன் ஆனனத் தழுங்கத்தனைப் புதைத்த
நினைச்சால வஞ்சி னான்போற்
செங்கதிர்வா னவனழற்றுந் தீக்கதிர்நின்
      றிருமேனி செலுத்தா னாகிப்
பைங்கதிர்வாண் மதியெனநண் பகலும்வயங்
      குறும்பரிசு பார்வைக் கீயாய்         200
[ஒளி பொங்கிய உன் நுதலாகிய மதிகண்டு அலர்ந்த கருங்குவளை எனப் பொலிந்த கண்களை உடையவளே!, அழகனாகிய இறைவனின் திருமுகம் அழுங்கத் தன்னைப் புதைத்த நின்னை மிகவௌம் அஞ்சினான்போல் சூரியன் தன் வெப்பமான தீக்கதிர்களை நின்மேல் செலுத்தானாகி குளிர்ந்த கதிரொளி வீசும் மதியம் நண்பகலும் விளங்குவதைப் போன்று ஒளிதருதலை நின் பார்வைக்கு ஈவாய்!. அங்கணந் அழகன், கருணியாளன். ஆனனம்- முகம். அழுங்க- அழுந்திக் கன்றிப்போக. வயங்குறும் – விளங்கும். பரிசு- இயல்பு]

நெடியவிழிக் கடலெறிந்த செழும்பவள
      மெனவதர நிலவுவாயாய்
படியிவர்வெண் கயிலையினீ யிருத்தலினா
னதுகாறும் படர மாட்டா
தடிவரையிற் றவழ்மதியின் றமையமெளி
தாதலறிந் தலர்ந்தகஞ்சக்
கடிமலர்நின் முகவொளியைக் கவர்ந்து
      கவர்ந்தொளி மிகுத்த கவினைப் பாராய்.         201
[நெடிய விழியாகிய கடல் கரையிலெறிந்த சிவந்த பவளம் எனச் செவ்விதழ் நிலவு வாயினை உடையவளே! நிலத்தின் உயர்ந்த கயிலை மலையில் நீ இருந்தவரைக்கும் அம்மலயின் மீது பரரவியலாமல், அதன் தாழ்வரையில் தவழ்ந்த மதி, இப்பொழுது தனக்கு எளிதான சமயம் ஆதல் அறிந்து , அப்பொழுது அலர்ந்த தாமரைக் கடிமலர் நிகர்க்கும் உன் முகவொளியைக் கவர்ந்து விண்ணில் ஒளி மிகுத்த அழகினைப் பாராய்!]

கந்தரமென் கமுகுகுத்துக் கிடந்தவிரு
      பாகனைய களபத் தொய்யிற்
சுந்தரப்பொற் கனதனத்துத் தூமொழிச்
      சிற்றிடைக் கொடியாய் சுரர்கண் மாதர்
அந்தரநின் றுனைத்தொழவந் தடைவதுபோற்
      கார்வரமுன் னகன்று போகி
இந்திரநாட் டெய்துமனத் தொழுதியெறி
      நீர்மருத மெய்தல் காணாய்         202
[கந்தரம்- கழுத்து. பாகு- பாக்கு. கனதனம்- பெரிய கொங்கை. இந்திர நாடு- தேவலோகம், மருதம். அனம்- அன்னம். மென்கழுத்து எனும் கமுகமரம் உகுத்துக் கிடந்த பாக்கு அனைய சந்தனக் குழம்பினால் எழுதிய தொய்யிலுடன் அழ்கிய பொன்னிறக் கொங்கையினையுடைய , தூயன பேசும் சிற்றிடைக் கொடியாய்! தேவமகளிர் வானுலகத்திலிருந்து உன்னைத் தொழவந்து அடைவதுபோலக் கார் மேகக் கூட்டம் வர, தேவலோகம்போலக் காட்சி அளிக்கும் அன்னப்பறவைகளின் கூட்டம் நீரினை அலைத்துவிளையாடும் மருத நிலத்தை எய்தல் காண்பாயாக! அன்னத் தொகுதி நீரலைத்து விளையாடுவது தேவலோகப் பெண்கள் விளையாடுவது போலக் காட்சி தருகின்றது எனவாம்.}

மல்குவிட நுகர்ந்தபிரான் வானவர்போ
      லமுதுமுண வாஞ்சை மீக்கொண்
டல்குல்மணிக் கடல்கடைய வமைந்தபெருங்
      குன்றமுநீ ளரவும் போலப்
பல்குமிள முலையுமயி ரொழுங்குமொளிர்
      பசுங்கொடியே பண்ணைச் சாலி
பில்குமணி கொடுநின்னை யருச்சனைசெய்
      தெதிர்வணங்கும் பெற்றி பாராய்.         203
[ஆலகால நஞ்சினை உண்டபிரான், தேவர்களைப் போலத் தானும் அமுது உண்ண விரும்பி, அல்குலாகிய கடலைக் கடைய அமைத்த மந்தரமலையும் நீண்ட பாம்பும் போலப் பெருகிய இளமுலையும், மயிரொழுங்கும் ஒளிர்கின்ற பசிய கொடியே! வயல்களில் உள்ள சாலிப் பயிர்கள் தம்முடைய நெல்மணிகலைக் கொண்டு உன்னை அருச்சித்து எதிர் வணங்கும் இயல்பினைப் பாராய்! சாலி- உயர்ந்த நெல்வகை]

பணங்கவற்று மல்குன்மணித் தேரிவர்ந்து
      குழற்பொழிற் பாசறைகட் போத
மணங்கமழு மயிரொழுக்குத் தொடர்பூட்டிப்       பண்ணமைத்து வகுத்த கொங்கை
யிணங்குகரி நேர்செலுத்து மனங்கனென
      நுணுகுமிடு கிடைநல் லாய்நின்
ணிணங்கொளயில் விழிக்குடைந்து நீர்நிலையிற்
      கயலிரிவ நெடுங்கண் சாத்தாய்.         204
[பணம்- பாம்பின் படம். கவற்றும்- கவலையுறுத்தும்; உவமைச்சொல்லுருபு. குழ்ற்பொழில்- குழலாகிய பொழில். பண்ணமைத்து- அலங்கரித்து. கரி- யானை. இணங்கு கொங்கை- ஒன்றுக்கொன்று இணையான கொங்கைகள்..அனங்கன் – உடம்பு இலாதவன். மன்மதன் காட்சிக்குப் புலப்படாதவன்; அம்மையின் இடையும் புலப்பட்டதது. ஆகையால் அம்மையின் இடைக்கு மன்மதன் உவமையானான். பாம்பின் படத்தை வெருட்டும் அல்குலாகிய மணித்தேர் ஏறி, கூந்தலாகிய பாசறைக்கண் போவதற்கு, மணங்கமழும் மயிர் ஒழுக்காகிய சங்கிலையைப் பூட்டி, அலங்கரிக்கப்பட்ட கொங்கையாகிய கரிகளைச் செலுத்துகின்ற காட்சிப்படாத மன்மதனைப் போன்று நுண்ணிய இடுகு இடை உடைய அழகியவளே! செம்புலால் கொள் அயில்வேல் நிகர்க்கும் உன் விழிக்குத் தோற்று இரிந்து ஓடும் கயல் மீன்கள் மேல் உன்றன் நெடுங்கண் பார்வையைச் சாத்துவாயாக!]

இடங்கொளுல கனைத்தினுக்குஞ் சிவபெருமா
      னல்லதுவே றிறையி லாமை
நடங்குயிலு மவ்விறைவன் விழிபுதைத்துத்
      தெரித்தசெழு நளினக் கையாய்
அடங்கரு நீர்க்கயங்க ணினைக்காண
      விழியாயிரம்பெற் றமைந்தான் மான
வுடங்கவிழு மெல்லிதழுற் பலங்கள்பல
      மலர்ந்தொளிரு மொண்மை காணாய்         205
[நடம் குயிலும்- நடனத்தைச் செய்யும். நளினம்- தாமரை. நீர்க்கயங்கள்- தடாகங்கள். உடங்க அவிழும்- ஒருசேர மலரும். ஒண்மை- விளக்கம். நிலமகன்ற உலகங்கள் அனைத்தினுக்கும் சிவபெருமான் அல்லது வேறு இறைவன் இலாமையாகிய உண்மையை, அவ்விறைவனின் விழிகளைப் புதைத்துத் தெளிவித்த செழும் தாமரையாகிய கையாய்! கரைகளுக்கு அடங்காத தடாகங்கள் நின்னிக் காண விழி ஆயிரம் பெற்றமைந்தது போல செவ்வாம்பல் மலர்கள் மலர்ந்து ஒளிரும் விளக்கத்தைக் காண்பாயாக! ]

கொம்மைமுலை மலையுயிர்த்த கொழுங்காந்த
      ளெனமலர்ந்த கோலக் கையின்
விம்முமிசைக் கிளிபரித்த விளக்கொளியே
      தவக்கொழுந்தே விரைப்பூங் கோதாய்
மும்மையுல கீன்றளிக்கு நின்முகந்தன்
      போலிருந்த முறைமைநோக்கிச்
செம்மைமலர்த் தாமரைமிக் குவப்பதென
      வலர்ந்தசெழுந் தடங்கள் காணாய்         206
[கொம்மை- திரட்சி. பரித்த- ஏந்திய. திரண்ட முலையாகிய மலை பெற்ற கொழுங் காந்தள் என மலர்ந்த அழகிய கையில் இனிமையாகப் பேசும் கிளியை ஏந்திய விளக்கொளியே! தவக்கொழுந்தே! மணமாலையே! மூன்று உலகங்களையும் ஈன்று காப்பாற்றும் உன்னுடைய முகம் தன் முகம்போல் இருந்த முறைமையை நோக்கி செந்தாமரை மலர் மிக மகிழ்வது போல அலர்ந்த செழுமையான தடாகங்களைக் காணாய்!]

மயிரொழுக்குப் பணிவிரித்த மணிப்படத்திற்
      கவின்றவள நிதம்ப மாதே
செயிரொழிக்கு மடக்கொடியே தெய்வதமே
      தேவர்தொழு குலமே தெண்ணீர்
அயிரொழுக்குந் திரைப்புணரிநின்
      வரவிங்கறிந்து தனதுவர்ப்பு நீப்பான்
வெயிலொழுக்கு மணித்திரள்கள் எதிர்குவித்து
      வீழ்ந்திறைஞ்சு நெய்தல் காணாய்         207
[மயிர் ஒழுக்காகிய பாம்பு விரித்த மணியுடைய படத்தைப் போல அழகிய வளமான நிதம்பத்தை உடையவளே! மலமாகிய குற்றத்தை ஒழிப்பவளே! தெய்வமே! தேவர்கள் தொழும் இறைவியே! நுண்மணல்களை ஒழுக்கும் அலைகளை உடைய கடல் நின்னுடைய வரவினை அறிந்து ( நீ செயி ரொழிப்பவ ளாதலால்) தன்னிடம் இருக்கும் உவர்ப்பாகிய குற்றத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒளிவீசும் மணித்திரள்களை எதிர் குவித்து நிலத்தில் வீழ்ந்து இறைஞ்சும் நெய்தலைக் காணாய்.]

மூத்தமக னியல்காட்டுங் கரிநோக்கி
      யிரியாமை முன்னி யாங்கம்
மாத்தடக்கை யெழில்துமிக்குங் குறங்கினைமென்
      பட்டுடையான் மறைத்த மானே
நாத்திகச்சொற் கொருகரிபோ யிழிந்தேனை
      யிறைமுடிப்ப நல்கா யென்று
தேத்துளிய நறுங்கைதை மடற்போது
      தலைவணக்குஞ் செயலை நோக்காய்         208
[மூத்தமகன் – விநாயகப் பெருமான். மாத்தடக்கை- பெரிய வைய துதிக்கை. துமிக்கும்- பொடிபடச் செய்யும். உன் மூத்தமகனாகிய யானை முகக் கடவுளின் இயல் காட்டும் ஒப்புமையையினால் நீங்கி அப்புர்றம் போகாத கரியின் பெரிய துதிக்கையின் எழிலினைத் துமிக்கும் தொடையினை (தொடைக்கு யானையின் துதிக்கை உவமை) மெல்லிய பட்டாடையினால் மறைத்த மானே!, பிரமனின் பொய்மொழிக்குச் சான்றுபோய்கீழ்ப்பட்டவனாகிய என்னை, இறை தன் சிரசில் முடிக்க எனக்கு அருள் நல்காய் ர்ன்று தேன் துளிக்கும் மணமுள்அ தாழம்பூ தலைவக்குஞ் செயலை நோக்காய்!. தாழையை நெய்தல் நிலத்து மரம். ]

எழுதாத மறைமுடியும் இறைஞ்சுமடி
      யார்முடியும் இலங்கப் பூத்துக்
கொழுதாடு சிறைச்சுரும்பின் அன்பர்துதி
      குடிகொண்ட கொழும்பூந் தாளாய்
அழுதார்வம் மிக்குடையார் அலர்தூவிப்
      பணிந்தெனத்தே னசும்பத் தும்பி
உழுதாலு மலரிறைத்துக் குரங்குசினை
      நறும்புன்னை யொசிவ பாராய்         209
[எழுதாத மறை- எழுதாக் கிளவி , வேதம். மறைமுடி- உபநிடதம், வேதாந்தம். கொழுது- கோதி ஆடும்- மகிழும். சுரும்பின் – இன் உவம உருபு. சுரும்பினைப் போல. சுரும்பினைப் போல அடியவர்கள்; சுரும்பு கோதும் மலர், அன்னையின் திருவடி. திருவடியை மனத்தால் தீண்டி அன்பர்கள் மகிழ்வது, சுரும்புகொழுதி ஆடுதல். அசும்ப- துளிக்க. குரங்கு சினை- வளைந்த கிளை. வேதத்தின் சிரசிலும் வழிபடும் அடியவர்களின் முடியிலும் விளங்கிப் பூத்து, கோதி மகிழும் சுரும்பினங்களைப் போல அன்பர்களின் துதியில் குடிகொண்ட தாமரையாகிய திருவடியை உடையவளே ! பத்தி உணர்வு மிக உடையார் கண்ணில் நீர் ததும்ப மலர் தூவி பணிந்தது எனும்படியாகத் தேன் துளிக்கத் தும்பி உழுது விரிந்த மலர்களை இறைத்து வளைந்த கிளையினை உடைய மணமுள்ள புன்னை அசைவதைப் பாராய்! ]

தெள்ளரிய வானந்தச் செழுங்கடலி னெமைத்தோய்க்குஞ்
      செல்வ மாதே
துள்ளுமறி விழியுநறுங் குமிழ்மூக்குஞ் சுடர்க்கோபத்
      தொண்டை வாயுங்
கள்ளுயிர்க்குங் கடுக்கைமணிக் குழலுநறுந் தளவநகைக்
      கணமுந் தோற்றித்
தள்ளுகொடி யிடைநுடங்கப் புறவமக ளெதிர்கொள்ளுந்
      தகைமை பாராய்         210
{தெளிந்த கிடத்தற்கரிய ஆனந்தச் செழுங்கடலில் எமை அமிழ்த்தும் ஞானச் செல்வியே! துள்ளும் மானின் விழியும்,நறுவிய குமிழம் பூவாகிய மூக்கும், செவ்வொளி வீசும் இந்திரகோபம் போன்ற தொண்டைப் பழமாகிய செவ்வாயும் தேன் துளிக்கும் கொன்றைக்காயாகிய கருங் கூந்தலும் முல்லையரும்புகளாகிய பற்கூட்டமும் தோற்றி ஒசிகின்ற கொடியாகிய இடை நுடங்கப் புறவமாகிய மகள் உன்னை வந்து எதிர்கொள்ளுவதைப் பாராய்! புறவம்- முல்லை நிலம். முல்லை நிலத்துக் கருப்பொருள்கள் முல்லை என்னும் மங்கையின் உறுப்புக்களாக உருவகிக்கப்பட்டது.]

படைத்தளித்துத் துடைத்துமறைத் தருள்புரியு
      மைந்தொழிலும் பதுமப் புத்தேள்
முடைத்தலையி னிரந்துண்டநின் கணவர்க்குட
      னிருந்து முடிக்கு மன்னாய்
சடைத்தலைவர் கரத்துழைவந் துனதுசெய
      லொற்றியவற் சாற்ற லோடு
நடைத்திறம்போ லெழுந்துகளு நவ்வியின்பி
      னினதுவிழி நவ்வி போக்காய்.         211
[பதுமப் புத்தேள்- வெண்டாமரையில் இருந்து தொழில் புரியும் பிரமன். முடைத்தலை- முடை நாற்றம் வீசும் பிரம கபாலம். அன்னை இறைவனுக்கு அந்தொலில் நடாத்தும் தலைமை அளித்தவள். கரத்து உழை- கரத்தில் இருக்கும் மான். ஒற்றி- ஒற்றிப் பார்த்து. இறைவன் கரத்திலேந்திய மான் அவரது காதோரத்தில் பார்வை யுடையதாயிருக்கும். படைத்து, காத்து, ஒடுக்கி, மறைத்து, அருளலாகிய ஐந்தொழில் புரியும் தலைமையை, பிரம கபாலத்தில் இரந்துண்ணும் உன்னுடைய கணவருக்கு அவரோடு இருந்து செய்து முடிக்கும் அன்னையே! சடையை உடைய அந்தத் தலைவரின் காதில்,அவர் கையில் ஏந்திய மான் உன் செயலை ஒற்றாராய்ந்து கூறியதோடு, உன்னுடைய நடையின் தன்மைபோல எழுந்து உகளும் மானின் பின் உன் விழியாகிய மானைப் போக்குவாயாக! உகளும்- துள்ளும். நவ்வி- மான். மானின் பின் மானைப் போக்காய். என்பது நயம்.]

திருமாதுங் கலைமகளுஞ் சயசயவென்
      றேத்தெடுக்குந் தெய்வப் பெண்ணே
யொருமாணிக் கருள்புரிந்து தம்மரசுக்
      கரசையுதைத் துருட்டு முக்கட்
பெருமானுக் கொருமனையா ளெனநின்னைச்
      செறுவதுபோற் பிறங்குங் கானப்
பருமேதி முகஞ்சுழித்துப் பார்ப்பதவ
      ணினதுவிழிப் பகழி தூண்டாய்         212
[திருமாது- இலக்குமி. ஒரு மாணி- ஒர் பிரம்மச்சாரி. இங்கு மார்க்கண்டேயரைக் குறிக்கும். மேதி- எருமை. எருமைக்கு அரசு கடா. அதற்கு அரசு இயமன். முகஞ்சுழித்துப் பார்ப்பது சினக்குறிப்பு. திருமகளும் கலைமகளும் சயசய் என்று போற்றித் துதிக்கும் தெய்வப்பெண்ணே! மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்து தன் அரசுக்கு அரசனான இயமனை உதித்து உருட்டும் முக்கட் பெருமானுக்குச் சிறந்த மனையாள் என்று நின்னைச் சினப்பதுபோல் காட்டெருமை முகஞ்சுழித்துப் பார்ப்பதாகிய அவ்விடத்து நின்னுடைய விழியாகிய அம்பினைச் செலுத்துவாயாக!]

சுரிந்தவளைக் கரத்தானுந் தோட்டலர்த்
      தாமரையானுந் துருவிக் காணாய்
பிரிந்தகொடுந் துயருடற்று மாற்றாமைநீக்
      குதற்கும் பிழைத் தாருட்க
வரிந்தகழற் கணத்தொடுநீ செலும்வனப்பு
      நோக்குதற்கும் வாஞ்சை கூர்ந்து
விரிந்தபுகழ்க் கணவரெதிர் வந்தனைய
      கடுக்கையினின் விழிப்பூச் சாத்தாய்         213
[சங்கேந்திய கரத்தானாகிய திருமாலும் தாமரையில் இருக்கும் பிரமனும் தேடியும் காண்பதற்கு அரியாய்! உன்னைப் பிரிந்ததாகிய கொடுந்துயர் வருத்தும் ஆற்றாமையை நீக்குவதற்கும் இன்னைப் பிழைத்தவர்கள் அஞ்சுமாறு நீ உன் கணத்தவருடன் நீ செல்லும் அழகினை நோக்குவதற்கும் ஆசை கூர்ந்து பரந்த புகழையுடைய உன் கணவர் வந்ததுபோல் நிற்கும் கொன்றை மரத்தின் மீது நின் விழியாகிய பூவினைச் சாத்தாய்!].

மங்கலமுந் தவப்பேறும் வாழ்க்கையுமிங்
      கெமக்கருளும் வஞ்சி யன்னாய்
தங்கள்குலத் தொருகொடிக்கு மணம்புரியப்
      புகுந்ததுவே சார்பா வேணி
யங்கணனா ருழைநீங்கி யறம்வளர்த்தெல்
      லாவுயிரு மளிக்குமேன்மை
யிங்கறிந்து நகைமுகத்தின் மகிழ்வனபோற்
      றளவரும்பு மியல்பு காணாய்         214
[புண்ணியமும் தவமாகிய செல்வமும் இக வாழ்க்கையும் எமக்கு இங்கு அருளும் வஞ்சிக் கொடியாகிய அன்னையே! தங்கள் குலத்தில் ஒரு கொடிக்கு நீ திருமணம் செய்துவைத்த அச்சார்பினால், சடைதரித்த அழகரை நீங்கி அறம் வளர்த்து எல்லா உயிருக்கும் அருள் தழைக்கும் மேன்மையை இங்கு அறிந்து, இன்முகத்தோடு மகிழ்வனபோல முல்லை அரும்பும் இயல்பினைப் பாராய்! மங்கலம்- புண்ணியம். தவப் பேறு- மேலும் சிவபுண்ணியங்கல் செய்வதற்கு வேண்டிய நல்ல சூழல். வாழ்க்கை- இந்த உலககத்தில் நிறைவுடன் வாழும் வாழ்க்கை வேணி- சடை. அங்கணனார்- அழகர், கருணையாளர், சிவபெருமான். நகைமுகம்- இன்முகம். தளவம்- காட்டுமுல்லை.]

பிறந்தவர்க்கும் பிறப்போர்க்கு நினையன்றி
      வீடணுகாப் பிறங்கற் கொம்பே
யிறந்துபடா துலகளிக்குநின் வரவுகாணலு
      மிங்கிறைவி யெய்தச்
சிறந்ததவ மாற்றினமென் றுளத்துவகை
      மீக்கிளைப்பத் திளைத்தார்த் தென்ன
விறந்தொழுகு மருவிபல கறங்கோதை
      பயில்குறிஞ்சி விளக்க நோக்காய்.         215
[ஏற்கெனவே பிறப்பினை அடைந்தவர்களுக்கும் இனி பிறப்பினை அடைய இருப்பவர்களுக்கும் உன்னையன்றி வீடு பேறு கிட்டா தென விளங்கும் மலையிற் பிறந்த கொம்பே! உலகுயிர்கள் அழிந்து போய்விடாமல் காத்தளிக்கும் உன்னுடைய வரவைக் காணவே , இங்கு இறைவி வரச் சிறந்த தவம் செய்தோம் என உள்ளத்துள் உவகை மேலும் மேலும் கிளர்ந்து தோன்ற ஆரவாரித்ததென, செறிந்த அருவிகள் பல ஆர்த்தொலிக்கும் குறிஞ்சி நிலத்தின் அழகினை நோக்குவாயாக! பிறங்கல்- மலை, இமயமலை. கொம்பு- உவமையாகுபெயர். மீ- மேல். கிளைப்ப- கிளர்ந்து எழ. விறந்து- செறிந்து. கறங்கோதை-.கறங்கு- சுழன்று, ஓசை.= சுழன்று ஒலிக்கும் ஓசை.]

கருமுகிலின் நிகர்த்தவுருக் கவுரநிறம்படைத்
      தொளிருங் கனகப் பாவாய்
அருவிபடி சுனைதோய்ந்தும் பொழில்புகுந்தாட்
      டயர்ந்தும் அமர்ந்திருந்தும் தன்னை
மருவியநீ தணந்ததனால் வழிமறுப்பப்
      பலவுருவாய் வந்து வெள்ளிப்
பெருவிலங்கல் கிடந்தனைய அருவிபொதி
      சிலம்புகளின் பிறக்கங் காணாய்.        216
[கரியமேகம் நிகர்த்த மேனி செந்நிறம் படைத்து ஒளிரும் பொற்பாவாய்! அருவிகளி படிந்தும், சுனைகளில் தோய்ந்தும், பொழில்களில் புகுந்து விளையாடியும் வீற்றிருந்தும் இவ்வாறு தன்னோடு மகிழ்ந்திருந்த நீ, பிரிந்ததனால் வருந்திய கயிலைமலை, நீ செல்லும் வழிகளில் வறி மறிக்கப் பலவுருவாய் வந்து கிடப்பதைப் போன்று ஒலிக்கும் பல அருவிகள் செறிந்த மலைகலைக் காண்பாயாக. கவுரநிறம்- செந்நிறம். கனகம்- பொன். அருவியில் படிதலும் சுனையில் தோய்தலும் மரபு வினை. தணந்ததனால்- பிரிந்ததனால். வெள்ளிப் பெருவிலங்கல்- கயிலைமலை. சிலம்பு- மலை.]

கொடியபுரி சூர்முதலைக் கொடியபுரி
      யொடுங்குலைத்த குழவி யீன்றோய்
படியகத்தி னறம்வளர்த்த பரிசுணர்ந்து
      நுந்தைகுலப் பறம்பு வானக்
கடியவிழ்கற் பகத்தரசாற் கழிந்தசிறை
      பெறப்புகன்று கரமேற் றுன்பா
லொடிவறுநல் வரமிரப்ப தொப்பநறை
      காந்தண்மல ரூழ்ப்ப நோக்காய்         217
[கொடுஞ்செயல்கள் புரிந்த அசுரர்களின் தலைவனான சூரபன்மனையும் அவனுடைய நகரான மகேந்திரபுரியையும் ஒருங்கே ஒழித்த குழந்தையைப் பெற்றவளே! பூவுலகத்தில் அறம் வளர்த்த பரிசினை உணர்ந்து உன்னுடைய தந்தையாகிய இமயமலையின் குலத்தைச் சார்ந்த மலை மணம் விரிக்கும் கற்பகதருவுக்கு அரசனாகிய இந்திரனால் வெட்டப் பெற்ற சிறகுகளை மீளப் பெற விரும்பி கரத்தை மேல் உயர்த்திக் கொண்டு உன்பால் அழிதலில்லாத நல்வரம் இரத்தல் ஒப்ப மணமுள்ள காந்தள் மலர் மலர்வன, அவற்றைப் பாராய். சூர்முதல்- சூரர்களின் தலைவன். புரி- நகர். இங்கு சூரபன்மனின் தலைநகராகிய மகேந்திரபுரி. குலைத்த- அழித்த. நுந்தை- உன்னுடைய தந்தை, இமயம். பறம்பு- மலை. ஊழ்ப்ப- மலர.}

முழங்குமத களிற்ருருவி னொருமகனை
      முறையளிக்க முகிழ்த்த மின்னே
தழங்குபுய லிடிக்குவிட ரகத்தொளித்த
      தடம்பாந்தள் சாலவிந்நாள்
வழங்குவன தமதினத்தை மணியணியாப்
      பரித்தவர்க்கு மனையா நின்னைப்
பழங்கணறத் தரிசனஞ்செய் பாக்குவெளிப்
      படர்வதனைத் தெரிப்ப பாராய்         218
{மதகளிற்று உருவின் ஒருமகன் விநாயகப் பெருமான். முறையளிக்க- வழிபடுவோரின் விக்கினங்களை நீக்குதலும் வழிபடாதாருக்கு விக்கினங்கள் உண்டாக்குதலும். மின் -மின்போன்றவள், பண்பு உவமை ஆகுபெயர். தடம்- பெரிய. பாந்தள்- பாம்பு. பரித்தவர்- தாங்கியவர். பழங்கண்- துன்பம். செய்பாக்கு- செய்வதற்கு. விநாயக்ப் பெருமானை மூத்தமகனாகப் பெற்றவளே ! மழைமேகத்தின் இடியொலிக்கு அஞ்சி நிலத்தின் பிளவில் சென்று ஒளிந்துகொண்ட பெரிய பாம்பு இந்நாள், தமது இனமான பாம்பினை அணிகளனாகத் தாங்கியுள்ள இறைவருக்கு மனையாளாகிய நின்னைத் தங்கள் துன்பன்பங்கள் நீங்கத் தரிசனஞ் செய்வதற்கு வெளிப்பட்டுப் படர்வதனைப் பாராய்.}

கருப்புமத னுருக்கனற்றுங் கண்ணுதற்கு
      விருப்பளிக்குங் காமர் பொன்னே
யருப்பிளவெம் முலைக்கெதிர்ந்து பகைத்தமதக்
      களிற்றியானை யறிவிற் றேர்ந்துன்
றிருப்பதத்துக் குறவாதல் வேட்டுனது
தோட்கெதிருஞ் செயலை நாடிப்
பொருப்பெழுந்து வளர்பணையைப் புழைக்கைவளைத்
      தொசித்தலைக்கும் பொலிவு பாராய்         219
[கருப்பு- கரும்பு, வலித்தல் விகாரம். அருப்பு- அரும்பு. முலைக்கு களிறு உவமை. தோளுக்கு மூங்கில் உவமை. புழைக்கை- துதிக்கை. கரிய மன்மதனின் உடல் எரிய நெருப்பைக் கனற்றும் நெற்றிக்கண்ணுடைய இறைவருக்கு விருப்பத்தைத் தரும் பொன்னே! தாமரை அரும்பு போன்ற உன்முலைக்கு எதிர்ந்து பகைத்த களிற்று யானை, தன்னுடைய அறிவில் உன் உயர்வைத் தெளிந்து, உன்னுடைய திருவடிக்கு உறவாதலை விரும்பி, உன்னுடைய தோளுக்கு நிகராக மலையில் தோன்றி வளரும் மூங்கிலைத் தன் துதிக்கையால் முறித்து அலைக்கும் அழகினைப் பாராய்!]

அடைந்தவடி யாரகத்தில் அள்ளூறுந்
      தீஞ்சுவைத்தெள் ளமுத மன்னாய்
வடந்தழுவி யிறுமாந்து பணைத்தெழுந்த
      கொங்கையொடுமானா வாகி
யுடைந்தகுவட் டினநின்னைக் காணுதற்குமிக
      நாணியுருத் தோற்றாமற்
படர்ந்தொழுகுபெருவெள்ளப் பரப்பிடைப்புக்
      கொளித்திருக்கும் பண்பு பாராய்         220
[அள்ளூறும்- ஊறிப் பெருகும். வடம்- முலைக்கச்சு. மானா-ஒப்பாகா. குவடு- மலைச்சிகரம். உன்னைச் சரணடைந்த அடியவர்கலின் உள்ளத்தில் பெருகியெழும் தீஞ்சுவத் தெள்ளமுதமாகிய அன்னையே! கச்சுக் கடங்காது இறுமாந்து கிளர்ந்தெழுந்த உம் கொங்கையொடு ஒப்பாதனவாகித் தோற்ற சிகரங்கள் உன்னைக் காணுவதற்கு நாணி படர்ந்து ஒழுகுகின்ற நீர்ப்பரப்பில் புகுந்து ஒளிந்து கொண்டிருக்கும் பண்பினைப் பாராய்!. ( தோற்றவர் நாணத்தால் முக்காடிட்டு முகத்தை மறைத்துக் கொள்வதைப்போல)]

போத்தனுக்க வுயிர்கடொறு மிருளிடத்துங்
      கலந்தருட்டேன் பொழியு நங்காய்
தீத்தகைய புரிந்தொழுகுஞ் சிதடர்களும்
      பெருங்கருணை தேக்கு நின்றன்
மாத்தடங்க ணருள்வாய்ப்பி னல்லவரு ணல்லவராய்
      வயங்கு வார்போற்
கூத்தியற்று மழன்முரம்புங் குளிர்புனன்மிக்
      கூற்றிருக்குங் கொள்கை பாராய்         221
தனு- உடல். போத்தனுக்க உயிர்- உடலெடுத்ஹுப் பிறந்த உயிர். இருள்- ஆணவமலம். கலந்து அருள் தேன் பொழியும்- திருவருள், திரோதானமாய் ஆணவமலம் பரிபாகம் அடையும் வரை அதற்குத் துணையாக நின்று உயிரைப் பிறப்பிறப்பில் ஆழ்த்தும்; இம்மைப் போகம் அளிக்கும். சிதடர்- அறிவிலார். முரம்பு- பரற்கற்கள் நிறைந்த வன்னிலம். கூத்தியற்றும் அழல்- வெப்பம் தாண்டவமாடும் வன்னிலம். உடலெடுத்த உயிர்கள் தோறும் ஆணவமலத்திடத்தும் கலந்து உயிருக்கு அருளாகிய தேனைப் பொழியும் நங்காய்! தீய செயல்களையே செய்தொழுகும் அறிவிலாதவர்களும் பெருங்கருணையைத் தேக்கி வைத்திருக்கின்ற உன்னுடைய மிகப்பெரிய திருக்கண் அருள் பெற்றால் அல்லவரும் நல்லவராய் விளங்குவார்போல், வெப்பமாகிய அழக் தாண்டவமாடும் பரற்கற்கள் நிரம்பிய முரம்பும் ஊற்றுக்கள் மிகுந்து குளிர்ந்த நீர் மிக்கு இருத்தலைக் காணாய்!]

இத்தகைய வளம்பலவு மிகுளையர்க
      ளெடுத்துரைப்ப வெழிற்கண் சாத்தித்
தத்துதிரைப் பணைமருத முதலியபன்
      னிலங்கடந்து தரங்கத் தெண்ணீர்
முத்தலைத்துக் கரையொதுக்கி முருகுயிர்க்கு
      மலர்துறுமி முடுகி யோடிப்
பைத்ததிரைக் கடலகடு கிழித்தொழுகும்
      பாலிவட கரையைச் சார்ந்தாள்.        222
[ இகுளையர்- சண்டிகை, மங்கலை எனும் இருசேடியர். பாலி யாற்றின் வளம் கூறியது. கடல் அகடு- கடலின் நடு.நடுவாகிய அகட்டினை வயிறு எனக்கூறுவது இலக்கணை. இத்தகைய வளங்கள் பலவற்றையும் சேடியர் எடுத்துரைக்க, தன் அழகிய கண்களாற் கண்டு, தத்துகின்ற நீரலைகின்ற வயல்களையுடய மருதம் முதல் பல நிலங்களையும் கடந்து தெளிந்த நீரலைகளால் முத்துக்களைக் கொழித்துத் கரையில் ஒதுக்கி, மணம் கமழும் மலர்கள் செறிந்து விரந்து ஓடி அலைகளை வீசும் நீலக் கடலின் வயிற்றைக் கிழித்தொழுகும் பாலியாற்றின் வடகரையைச் சார்ந்தாள்]

திருநகரை யெதிர்நோக்கிப் பணிந்தெழுந்து
      துதிகள்பல செப்பி வெள்ளி
யொருநகத்தின் வலம்பிரியா வுத்தமனா
      ரெய்தியவ ணுள்ளவெல்லா
மருளறநிற் றெரித்துமென வுரைத்தருளு
      மொழிநினைந்து மழையை வேட்ட
கருநிறத்த கலவமயி லெனநின்றா
      ளுலகளிக்குங் களைகண் மாது.         223
[நகம்- மலை; வெள்ளிமலை- கயிலாயம். மருள் அற- மயக்கம் அற. களைகண்- பற்றுக்கோடு. காஞ்சித் திருநகரை எதிர்நோக்கிப் பணிந்தெழுந்து, துதிகள் பல கூறி, திருக்கயிலாயமலையினைப் பிரியா உத்ஹனனாராகிய பெருமான், காஞ்சிக்கு வந்து அங்குள்ள சிறப்பெல்லாம் மயக்கம் அற உனக்குத் தெரிவிக்கின்றோம் என உரைத்தருளும் மொழியை நினைந்து மழையை விரும்பிய கரிய தோகையை உடைய மயிலென நின்றாள், உலகத்திக் காதுக் கருணை செய்யும் பற்றுக் கோடாகிய அன்னை. ]

அந்நிலையே வழிபார்த்து நின்றார்போ
      லாளுடைய பெருமா னார்தாஞ்
செந்நிலைசே ரைப்பசியிற் பூரநாள்
      சிறந்தோங்கு மற்றை ஞான்று
மன்னிவளர் தினகரமண் டிலத்தினொடுஞ்
      சார்வதென வயங்குஞ் செங்கேழ்ப்
பொன்னணி திண்டேருகைத்துப் பூதகணம்
      புடைசூழப் போந்தா ரங்கண்         224
[இந்த நிலையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்போல எம்மை ஆளுடைய பெருமானாரும் மங்கலம் சேர் ஐப்பசி பூர நன்னாளில் சூரியமண்டிலத்தினொடும் சேர்வது என விளங்கும் சேம்பொன்னிறத்த வலிய தேரேறிப் பூதகணம் பக்கம் சூழ அங்குப் போத்தந்தார்.]

செங்கிரண மண்டலமு மழுங்கவருந்
      தேரையெதிர் காண்ட லோடு
மங்கமெலா மயிர்பொடிப்ப வகத்துவகை
      முகமலரி னரும்பித் தேங்கக்
கொங்குமலி மலர்சிலதிமார் கொடுப்பவாங்
      கியெதிர் குவவத் தூவிப்
பொங்குபெருங் காதலினாற் படியின்விழுந்
      தெழுந்துபொலங் கொடியி னின்றாள்         225
[செஞ்ஞாயிற்று மண்டலமும் ஒளி மழுங்கவரும் தேரை எதிரே கண்டவுடன் உடலெலாம் சிலிர்ப்ப உள்ளத்து உவகை முகமலரில் வெளிப்பட்டுத் தேங்க, சேடிமார் மணமிக்கமலர்களைக் கொடுக்க வாங்கி எதிரில் குவித்துத் தூவி மிகுந்த அன்பொடு நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து பொற்கொடி போல நின்றாள்.]

மன்றனறுங் கடுக்கைமலர் மிலைத்தசடைப்
      பிரானாரு மகிழ்ந்து முன்னர்
நின்றமலைக் குலக்கொடியைத் தமதொருபா
      லாட்சிகொண்ட நிலைமை யாளைப்
பொன்றயங்கு மணித்தேரினு டனேற்றிக்
      கொண்டுபுரம் வலமாய்ச் செல்வா
ரன்றனைய வளநகரி னற்புதங்க
      ளனைத்துமவட் கருள லுற்றார்.         226

[மணமிக்க கொன்றை மலர் மிலைத்த சடைப் பிரானாரும் மகிழ்ந்து தமக்கு முன்னர் நிற்கும் இமயமலைக் கொடியைத், தமது ஒருபங்கை ஆட்சிகொண்டவளை, பொற்றேரில் ஏற்றிக் கொண்டு காஞ்சிபுரத்தின் வலமாகச் செல்வாராகி, அன்று அந்தவளநகரின் அற்புதங்கள் அனைத்தையும் அவளுக்கு அருளலுற்றார். மன்றல்- வாசனை. மிலைத்த- சூடிய. புரம்- காஞ்சிபுரம்.]

மருவியகற் பங்கடொறு மணிமார்பன்
      விரிஞ்சன்முதல் வானோ ரெல்லா
மிருவியெமை பூசித்துநனி வரம்பெற்
      றோங்குமிடம் புவிமேற் காஞ்சி
யொருதலமே யாமிதனுட்பல தளிகளுள
வவற்றுட் காரைக் காட்டார்
திருமலியிந் திரர்தொழுஞ் சத்தியவிரதத்
      தலமிதுதீங் குதலைச் சொல்லாய்.         227
[ இனிய குதலை மொழி பேசுபவளே! கற்பகாலந்தொறும் திருமால் பிரமன் முதல் தேவர்களெல்லாம் எம் குறியை இருத்தி எமைப் பூசித்து மிக்க வரம் பெற்று உயர்ந்த இடம் உலகில் காஞ்சி ஒருதலமேயாம்.இத்தலத்தினுள் பலதளிகள் உள. அவற்றுள் காரைக்காட்டில் செல்வமிக்க இந்திரன் தொழுஞ் சத்திய விரதத் தலமிது. . இத்தலம் திருநெறிக்காரைக்காடு என வழங்கப் பெறும்.]

வெண்ணிறவிண் கரியரியை வழிபட்ட
      மலையஃதவ் விண்டு போற்றும்
புண்ணியகோ டீசமிது அதுசேடன்
      மணிகளினாற் பூசை யாற்றி
மண்ணிலந்தாங் கெறுழ்படைத்த தாகுநம
      தேவல்வழி மாயோன் சீறி
கண்ணியசீர் வேகவதி தடுத்ததிது நறுங்களபக்
      கொங்கை நல்லாய்         228
[வெண்ணிற விண் கரி- , கஜேந்திரன், அரி- திருமால். விண்டு- திருமால். சேடந் ஆதிசேடன். மண் நிலம் தாங்கும் எறுழ்- பூமியைத் தாங்கும் வலிமை. வெள்ளையானை அரியை வழிபட்ட மலை அஃது. திருமால் வழிபட்ட புண்ணியகோடீசம் இது. ஆதிசேடன் தன் மணிகளினால் அர்ச்சித்து எம்மை வழிபட்டு மண்ணுலகத்தைத் தாங்கும் வலிமையை வரமாகப் பெற்றது. எம்முடைய எவ்வல் வழி திருமால் வேகவதி ஆற்றின் வெள்ளத்தைத் தடுத்தது இது, நங்காய். இந்த வரலாறுகளைக் காஞ்சிப்புராணம் முதற்காண்டம்,பணாமணீசப்படலம், மணிகண்டேசப்படலம், ஆதிபிதேசப்படலம் ஆகியவற்றில் காண்க.]

இலகுமணிப் பாப்பரசு நமைப்போற்றி யிருநான்கு
      பணிக்கும் வேந்தாய்க்
குலவுதல மிதுகாயா ரோகணமற் றதுபருத்திக்
      குன்றீ தாகும்
வலிகெழுபோர்க் கயமுகனைச் செகுத்தவன்றன்
      மத்தகத்து மணியான் நம்மை
யுலவையொரு பாற்படைத்த நின்புதல்வன்
      பூசித்த ததுவாங் கண்டாய்         229
[சிரசில் மணி விளங்கும் பாம்புகளுக்கு அரசனான ஆதிசேடன் நம்மைப் போற்றி உலகத்தைத் தாங்கும் எட்டுப் பாம்புகளுக்கும் வேந்தனாய் மகிழும் தலமிது. அது காயாரோகணம். அது பருத்திக் குன்று. போர் வலிமிக்க கயமுகாசூரனை அழித்து அவனுடைய மத்தகத்தில் இருந்த மணியினால் ஒற்றைத் தந்தத்தை ஒருபால் உடைய உன்மகன் நம்மைப் பூசித்த தலம் அதுவாம் கண்டாய், உலவை- தந்தம்- விநாயகப் பெருமான்பூசித்த இடம் அநேகதங்காவதம்.]

கச்சபாலய மிதுகேத்திர பாலன்புழைக்
      கரத்துக் கடவுள் கன்னி
செச்சைநிறக் கதிர்யாமென்றைந் திறத்தேங்களுஞ்
      சிவணுஞ் சேக்கையீது
நச்சியிடு மோணகாந்தன் றளியீ தெனமுழுது
      நவின்றாங் குள்ள
வெச்சிறப்பு மெடுத்தியம்பி யேகம்பத்
      தளிக்கோயி லெய்திச் சொல்வார்         230
[கேத்திரபாலர் ஐயனார். புழைக்கரத்துக் கடவுள்- விநாயகர். கன்னி- துர்க்கை. செச்சைநிறக் கதிரோந் சூரியன். யாம்- வயிரவர், சிவமூர்த்தம் இருபத்தைந்தனுள் வயிரவருமொன்று, ஆதலின் யாம் என்றார். சேக்கை- தங்கும் இடம் சேர்கை>சேக்கை. கச்சபாலயம் இது; ஐயனார், விநாயகன், துர்க்கை, சூரியன், வயிரவர் ஆகிய கடவுளர் கூடும் இடமிது. விரும்பிடும் ஓணகாந்தன் தளியிது எனக் காஞ்சிபுரத்தின் சிறப்பு முழுவதையும் எடுத்துஇயம்பி திருவேகம்பத் தளிக் கோயில் எய்திச் சொல்வார்]

இடைதெரியா தெத்தினத்து மெப்பொழுதும்
      யாங்குடிகொண் டிருக்கு மேன்மை
யுடையதுதண் கடலாடை நிலவரைப்பிற்
      றேரிலிது வொன்றே யான
வடைவதனாற் கணங்குழையே காம்பரமென்
      றொருபெயர்கொண் டகில மெல்லாம்
நெடுமொழிசென் றுறநின்ற திதன்சீர்மற்
      றெவராலும் நிகழ்த்தொ ணாதால்         231
[இடைவெளியின்றி யாம் எத்ஹினத்தும் எப்பொழுதும் குடிகொண்டிருக்கும் மேன்மை உடையது, கடலால் சூழப்பட்ட நிலவரையில் இதுவொன்றே. எனும் புகழ் வாய்ந்தது. இதன் பெருமைகளை யாராலும் எடுத்துக் கூற ஒணாதது]

கருணையொரு கோழரையாய்த் தவங்கவராய்ச்
      சந்தைகஞல் சாரையாகிப்
பரவும்அறம் உள்ளீடாய்ச் சிவமுயிராய்
      நாற்பயனும் பழமாஞ் சூத
மரமிதன்கீழ் எமைப்பூசை புரிநமக்குக்
      கூட்டமிவண் மருவு கென்னாக்
கரையிறந்த காதலொடும் பஞ்சதீர்த்
      தக்கரையிற் கொண்டு புக்கார்.        232
[மாமரம் உருவகிக்கப்படுகிறது. கோழ் அரை- பருத்த அடிமரம். கவர்- கப்பு. சந்தை- யாப்பு. சாரை- சாகை, கிளைகள். உள்ளீடு- காழ்.வயிரம். சூதம்- மா. கருணையே பருத்த அடியாகவும், (சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய) தவமே கப்பாகவும், சந்தசு (யாப்பு) சாகைகளாகிய கிளைகளாகவும், தருமம் வயிரமாகிய உள்ளீடாகவும், சிவம் உயிராகவும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பயனும் பழமுமாகிய வேதமே மாமரமாக உள்லது; இதன் கீழ் எமைப் பூசை புரிக! நமக்கு உன்னுடன் இங்குக் கூட்டம் நிகழும் என்று கூறி இறைவியை இறைவன் காதலுடன் பஞ்சதீர்த்தக் கரைக்கு அழைத்துச் சென்றார்.]

திருவளர்கா மக்கோடி மணிப்பீடத் துயர்ச்சியெலாந்
      தெரித்துப் பின்னர்
மருவிஅவண் அருந்தவஞ் செய்தறங்க ளெலாமாறாது
      வளர்த்துக் காவென்
றருளிமறைந் தருளுதலும் அம்பிகையங்
      கிடமுலையுங் கண்ணும் ஆடப்
பெருவிருப்பி னணித்தாகக் கூட்டுறவுண்
      டெனப்பிறங்கு மகிழ்ச்சி பூத்தாள்.        233
[திரு- ஞானம். உயர்ச்சி- பெருமை. தெரித்து- அறிவித்து. இடமுலையும் இடக்கண்ணூம் துடித்தல் மகளிர்க்கு நன்னிமித்தம். அணித்தாக- விரைவில். கூட்டுறவு- கூடுதல். ஞானம் வளரும் இடமாகிய காமக்கோடிப் பீடஹ்தின் பெருமைகளை யெல்லாம் அறிவித்துப் பின்னர் அம்மையை நோக்கி,நீ இங்குப் பொருந்தி அருந்தவங்கள் செய்திடுக, அறங்கள் அனைத்தையும் மாறாது வளர்த்துக் காப்பாயாக என்று அருளிச் செய்து மறைந்தார். அம்மைக்கு இடமுலையும் இடக்கண்ணும் நன்னிமித்தமாகத் துடித்தன. அன்னையும் நமக்கு இறைவனுடன் கூட்டம் விரைவில் கூடும் என் மகிழ்ச்சி பூத்தாள்.]

அலையெறியும் மணித்திருத்தம் ஐந்தினும்நீர்
      தோய்ந்து கரையண்மி வேறு
கலைகொடுநீர் புலர்த்தியுடை யுடுத்தி
      முறையுளி நீறுகமழச் சாத்திக்
குலவுமணி அக்கவடமணிந்து புரிதக்க
      வெலாங் குறையா தாற்றி
உலகுபுகழ் அஞ்செழுத்தும் விதிப்படி
      யுச்சரித்துடையா ரடிகள் பேணி         234
[ அலைகள் வீசும் தெளிந்த நீருடைய தீர்த்தங்கள் ஐந்திலும் படிந்து கரையை அடைந்து வேறு துணி கொண்டு நீரினைப் புலர்த்தி வேறு உடை உடுத்தி முறைப்படி திருநீறு மணங்கமழச் சாத்தி, அக்கமணி வடங்கல் அணிந்து, செய்யவேண்டிய கடன்களெல்லாம் குறையாது செய்து முடித்து, திருவைந்தெழுத்தும் விதிப்படி உச்சரித்துத் தன்னை உடையாரின் அடிகள் போற்றி. ]

ஆயிடைநின் றானந்தப் பரவெளியாம்
      பிலச்சூழ லணையச் செல்வாள்
பாயமணிப் பெருவாய்த லேழனையுந்
      தான்றுறந்து பையவுள்புக்
கேயுமருள் பீடத்தினியல் நோக்கி
      விம்மிதமிக் கெய்தி யந்த
மாயிரும்பீ டத்தலையின் முக்கோண
      வடிவினெலா மகிழ வைகி         235
[அம்மையின் யோகப் பயிற்சி கூறப்படுகின்றது. அவ்விடத்திருந்து, ஆனந்தப் பரவெளியாம் சிதாகாயத்தை அணையச் செல்வாள், சஹ்தாவரணம் எனும் பெருவாய்தல்கள் ஏழனையும் கடந்து பைய வுள்புக்கு அங்கேயுள்ள பீடத்தினை நோக்கி விம்மிதம் எய்தி அப்பீடத்தின் உச்சியில் அமைந்துள்ள முக்கோண்ன வடிவில் உலகமெலாம் மகிழ அமர்ந்து]

நின்மலமாய்ப் பேரொளியாய் நிறைவாகி
      யானந்த நிலையா யோங்குஞ்
சின்மயத்தின் இரண்டன்றி ஒன்றன்றிக்
      கலந்து செயலற்றுத் தன்றன்
தன்மையெலாம் ஒழிந்துளம் போற்றமனியப்
      பொற்றிரு வுருவஞ் சலியா வண்ணம்
நன்மையதாஞ் சிவயோகத்தினி திருந்தா
      ளுலகமெலா நடலைமாய         236
[அம்மையின் சிவயோகத்தின் நிலை கூறப்படுகின்றது. மலமில்லாததாய், பேரொளியாய், எங்குஞ் செறிந்ததாய் (வியாபகமாய்) ஆனந்தநிலையாய், பெருகுகின்ற ஞானவெளியில் அது வேறு தான் வேறு என இரடுமாயும் அன்றி ஒன்று கெட்டு ஒன்றாகிவிடலுமன்றிக் கலந்து தன் செயலற்றுத் தன்னுடைய தன்மையெலாம் ஒழிந்து ( எதற்போதமற்றுச் சிவபோதமாய்) தன்னுடைய உள்ளம் போல பொன்போலும் உடலும் எச்சலனமும் இல்லாதபடி இன்பமாம் சிவயோகத்தில் இறைவி இருந்தாள், உலகமெலாம் துயர் நீங்க. நடலை- பொய்ம்மை,வஞ்சனை.]

பெருகுசிவ போகத்தி னிடைதிளைத்த
      பின்பறங்கள் பிழையா தோம்பக்
கருதியறச் சாலைபல நிருமிதஞ் செய்தமைத்து
      மணிக்கனக வெற்பின்
ஒருதலைவர் அளித்தருளும் உலவாத
      பாசனம்ஒண் சராவம் தம்மாற்
பொருவரிய வண்டமெலாங் களிதூங்க
      அறம்பலவும் போற்றா நின்றாள்.        237
[பெருகி வளர்கின்ற சிவபோகத்தில் திளைத்த பின்பு அறங்கள் பிழையாது செய்யக் கருதி அறச்சாலைகள் பல நிருமித்து இறைவர் அளித்தருளிய பாசனம், சராவம் தம்மால் ஒப்பற்ற அண்டங்களெல்லாம் மகிழ்ச்சியில் நிற்க அறம்பலவும் செய்து நின்றாள்}

கலிவிருத்தம்
தூங்கிய தசைகழுத் துடைய தூயவான்
வீங்குகண் டூதி யைவிளித் துரிஞ்சுற
வோங்கிய சிலையினா னொழுங்கச் செய்தறி
பாங்குற விடந்தொறும் பயில நாட்டினாள்         238
[தூங்கிய தசை கழுத்துடைய தூய ஆன்- அலைதாடியுடன் கூடிய பசு. கண்டூதி- தினவு. உரிஞ்சி விளித்துற- உராய்ந்து போக்கிக் கொள்ள. சிலை- கல். பசுக்கூட்டம் உராய்ந்து தினவினைப் போக்கிக் கொள்ள ஆதீண்டு குற்றிகளை விலங்குகள் கூடும் இடந்தொறும் நிறுவினாள். இவை ஏனைய விலங்குகளுக்கும் பயன்படும் என்றாலும் ஆக்களின் சிறப்பு நோக்கி ஆதீண்டு குற்றி எனப்பட்டது] .

வளர்ந்துநீண் டருங்குயத் தரிந்து வந்திடும்
இளம்பசும் புல்லிணர்த் தருவின் மூலத்தில்
தளர்ந்தஞர் பசியெலாந் தளர ஆனினம்
உளந்தழைத் துண்டுடல் வீக்க வுய்த்தனள்         239
[குயம்- அரிவாள். தருவின் மூலம்- மரத்தின் அடி. அஞர்- களைப்பு. நீண்ட அரிவாளால் மெல்லிய பசும்புல் அரிந்து கொண்டுவந்து, மரத்தினடியில் பசிக்களைப்புடன் கிடக்கும் பசுக்கூட்டம் தளர்ச்சி நீங்கி உண்டு பெருக்க வழங்கினாள். பசுவிற்கு வாயுறை]

இருவகைப் பற்றினை யிகந்து வீடெனும்
ஒருபெரும் பற்றையே யுளத்திற் பற்றிமெய்த்
திருமலி பிச்சையிற் றிரிகின்றார்க் குமுன்
னருமைசெய் தட்டவூண் ஆற்ற நல்கினாள்         240
[யான் எனது என்னும் இருவகைப் பற்றினையும் விட்டு, பிறவாமை என்னும் ஒப்பற்ற பற்றையே உள்ளத்தில் பற்றிச் சிவஞானம் என்னும் செல்வம் மலிய பிச்சையேறூத் திரிபவர்க்குச் சிறப்பாகச் சமைத்த உணவினை நிரம்ப அளித்தாள். இது துறந்தோர்க்கு உணவு.]

தந்தைதாய் முதலிய கடும்புதா மின்றி
வெந்துய ரிடைப்படு மகவை மேதகு
புந்தியிற் களிவரப் புகன்று தாயென
எந்தநல் வரிசையும் இயற்றி யோம்பினாள்         241
[கடும்பு- சுற்றம். தந்தை தாய் முதலிய எச்சுற்றமும் இன்றி கடுந்துயர்ப்படும் குழந்தை மனதில் மகிழ்ச்சி கொள்ள ஆதரவுடன் வேண்டுவன அனைத்தையும் கொடுத்துப் பாதுகாத்தாள். அநாதைக் குழ்ந்தைகளை ஓம்பும் இவ்வறம் மகவளர்த்தல் எனப்படும்.]

மயரறும் பழமறை வகுப்பு மாமலச்
செயிரறு மாகமத் திரளு மேவரு
மியலிசை நாடகத் தமிழும் யாவையும்
அயர்வறப் பயிற்றினள் அனைத்தும் ஈந்தரோ         242
[மயர்- அறிவு மயக்கம். மா மலச் செயிர் – ஆணவமலம் எனும் குற்றம். இது உயிருக்கு அறியாமையைச் செய்வது. அறிவு மயக்கத்தைப் போக்கும் வேதக்கல்வியும் ஆணவமலக் குற்றதைக் களையும் ஆகமக்கல்வியையும் யாவரும் விரும்பும் இயலிசை நாடகத் தமிழும் யாவையும் தளர்ச்சியின்றிப் பயில்வித்தாள் இது ஓதுவித்தல் எனும் அறம்]

ஈன்றவள் இராதுயிர் இறத்த லாலிருந்
தான்றபான் முலைசுர வாமை யாற்பசி
சான்றழு குழவிக்குத் தண்ணம் பால்நனி
கான்றெழு முலையராற் களிக்க வூட்டினாள்         243
[ ஈன்றவள் இறந்துபடுதலினாலும், தாயிருந்தும் முலை சுரவாமையினாலும் பசியினால் அழும் குழவிக்குப் பால் மிகச் சுரக்கும் அருளுள்ள தாயரைக் கொண்டு அக்குழந்தைகள் களிக்க ஊட்டினாள். இது மகப்பால் கொடுப்பித்தல் எனப்படும் அறம்.]

அறுவகைச் சமயத்தி லமைந்தவர்க் கெலாம்
பெறலறுந் தன்னுயர் பெருமை தேற்றுறீஇச்
செறுவுகொள் கருணையாற் றெய்வத் தீஞ்சுவைக்
கறிமுத லுணவெலாங் கமழ வீசினாள்         244
[ அறுவகைச் சமயஹ்தில் நின்று ஒழுகுபவர்க்கெல்லாம், தன்னுடைய பெறல் அரும் பெருமை தோன்றச் செறிந்த கருணையால் இனியசுவைக் கறி முதலாகிய உணவுகளைத் தாராளமாக வழங்கினாள். இது அறுவகைச் சமயத்தோருக்கு உண்டி எனும் அறம்.]

வருந்திய பீளுடை மாதர் தங்களை
இருந்துயர் உழவன்மின் இனிக்க ணத்தொளி
திருந்து மாண்மகன் வருமென்று தேற்றிநன்
கருந்தலை யளிபுரிந் தருளிக் காத்தனள்         245
[பீள்- கருப்பம். கருவுற்றுத் துன்புறும் மாதர்களை ‘பெருந்துயர்ப் பட வேண்டா, விரைவில் ஆண்மகன் பிறப்பான் எனக் கூறித் தேற்றிப் பெருங்கருணை புரிந்து காத்தனள். இது கருவாய்த்த மகளிரைக் காத்தல் எனும் அறம். ]

பண்ணிய வேழமும் பரியுந் தேர்களுந்
திண்ணிய மாடியந் தானைச் செல்வரு
மண்ணினர் சூழ்தர அண்மும் வேந்தருக்
குண்ணுவ முதலிய வூழின் நல்கினாள்         246
[அலங்கரிக்கப்பட்ட யானைகளும் குதிரைகளும் தேர்களும் தறுகண்மையும் பெருமையும் உடைய வீரர்களும் கொண்ட சேனைத்தலைவர்களும் மண்ணுலகம் பரப்பி நெருங்கும் வேந்தருக்கும் உண்ணுவ முதலிய முறையின் நல்கினாள். இது ஒப்புரவு என்னும் அறம்]

சூலைநோ யாதிய தொடக்கப் பட்டுளோர்க்
கேலுறு மருந்துக ளியற்றி யன்பினாற்
காலையு மாலையுங் கைத்து றாவகை
சாலுமின் மொழிகளாற் சாற்றி யூட்டினாள்         247
[சூலை முதலிய நோயான் பீடிக்கப்பட்டுளோர்க்கு ஏற்ற மருந்துகளை உண்டாக்கி அன்பினால் காலையும் மாலையும் அவர்கள் வெறுப்புறாதவாறு இன்மொழிகள் பல கூறி ஊட்டினாள். இது பிணியாளருக்கு மருந்து என்னும் அறம்.]

நறுஞ்சினை பொதுளிய நாகு சோலைகள்
செறிந்திட விடந்தொறுஞ் செழிப்ப வைத்தவற்
றுறுஞ்சிறை மயில்கிளி யாதி யுண்ணிய
பெருஞ்சுவை யுணாத்திரள் பெரிது மோக்கினள்         248
[கிளைகள் செழித்துத் தழைத்த இளமரச்சோலைகள் எங்குஞ் செறிந்திட வைத்து அவற்ற்ல் வந்து தங்கும் மயில் கிலி முதலிய பறவைகள் உண்ணும் பொருட்டுப் பழம் முதலிய உணவுகள் உண்டாக்கினாள்.]

தேத்துளி பிலிற்றிதழ்த் தெய்வத் தாமரை
பூத்துறு பொய்கையும் பொங்கு வாவியுந்
தூத்தட மாதியுந் தொட்டு நல்லுண
வீத்தனள் கயன்முத லினங்க ளுண்ணவே         249
[ கயல் முதலிய நீர்வாழ்வன உண்ணும்பொருட்டு தேன் துளிகளைப் பிளிற்றும் தெய்வத் தாமரைகள் பூக்கும் பொய்கையும், வாவியும் தூய நீருடைய தடங்களும் தொட்டு நல்லுணவு அளித்தனள்.]

வானரக் குலங்களு மானி னீட்டமுங்
கானிவர் மதக்கவுட் களிற்றி னீட்டமு
மேனைய மான்கண மெவையு மின்புறத்
தேனுமிழ் கவளங்க டிரட்டி வீசினாள்         250
[வானரக் குலமும் மானின் திரளும் காட்டிலிருக்கும் மதயானைகளின் கூட்டமும் மற்றும் இவைபோன்ற ஏனைய விலங்குகள் எவையும் இன்புற அவற்றிற்கு இனிமை பயக்கும் உணவுகளைத் திரட்டித் தாராளமாக அளித்தாள். இது விலங்கிற்கு உணவு எனும் அறம்.]

உள்ளக இருள்கெட ஒருவன் கூறிய
தெள்ளிய தேமொழிப் புராணஞ் செஞ்செவி
அள்ளி யுண்டனை வருமன்பு மீக்கொளப்
பள்ளிக ளெங்கணும் படிப்பித் தாளரோ         251
[அக இருளாகிய அறியாமை கெட இறைவன் அருளிய தெள்ளிய தேன்போல் சுவைக்கும் புராணங்களைச் செஞ்செவி அள்ளீ உண்டு அனைவரும் அன்பு மேலிடப் பள்ளிகளை அமைத்துப் படிப்பித்தாள். இது அறவுரை கேட்பித்தல் என்னும் அறம். தெள்லிய- ஆராய்ந்த, தெளிந்த. செஞ்செவி- செவ்விய காது, செவி பெற்ற பயனாகிய சிறந்த பொருளைக் கேட்டலினால் செஞ்செவியாயிற்று.]

ஞானமே முதலிய நான்கும் வேட்டவர்க்
கூனமில் குரவரா லுயர்ந்த தீக்கைசெய்
தீனவன் மலமற வஞ்செழுத் தையுந்
தேனென வமிழ்தெனச் செவியி லேற்றினாள்         252
[சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய தவம் நான்கையும் இயற்ற விரும்பிய சைவ சாதகர்களுக்கு நல்ல குருமார்களைக் கொண்டு இழிவான வலிய மலம் நீங்க அஞ்செழுத்தினை உபதேசம் செய்வித்தாள். செவியிலேற்றினாள்- தீக்கை செய்வித்தாள். ஈனம்- இழிவு. தீக்கை செய்தல் என்னும் அறம்]

பனிமதி மிலைச்சிய பகவன் தாள்துணை
கனிவுறு பத்தியிற் கலந்த நேயரும்
முனிவரும் வைகிய முறையி னெங்கணும்
தனியுயர் மடம்பல சமைத்துப் பேணினாள்.         253
[பிறையைச் சூடிய பெருமானின் திருவடியையே துணையாக்கக் கொண்டு கனிந்த பத்தியில் கலந்த அடியார்களும் முனிவர்களும் தங்கியிருக்கும் முறையில் எங்கும் உயர்ந்த மடங்கள் அமைத்துப் பேணினாள். இது அறவோர் இருக்கை எனும் அறம்.]

ஆனின்நெய் வாக்கியட் டெடுத்த வுண்டியுந்
தேனினில் அடுஞ்சுவைக் கறியுந் தேனுவின்
பானனி பெய்தடும் பாளி தங்களும்
ஈனவர்க் குய்த்திடுஞ் சாலை ஈட்டினாள்.         254
[பசுநெய் வார்த்து அட்ட உண்டிகளும், தேனினில் அடும் சுவைக் கறியமுதமும் பசும்பால் பெய்து அட்ட பாற்சோறும் ஏழைகளுக்கு உதவிடும் அன்னசாலைகளை அமைத்தாள். ஈனவர்- ஏழைகள். இது ஆதுலர்க்குச் சாலை எனும் அறம்.]

வேண்டிய பொருள்வியப் பெய்த ஈன்றவர்க்
கீண்டுற வளித்தெழிற் கன்னி மார்களைக்
காண்டகு கலன்பல வணிந்து காழிலா
மாண்டமைந் தருக்குநீர் வாக்கி நல்கினாள்         255
[மக்களை ஈன்றவருக்கு வேண்டிய பொருள்களை அவர்கள் வியப்பு எய்த நிரம்ப அளித்து அழகிய கன்னிமார்களை அழகு தக்கிருக்கும்படி அணிகலன்கள் பல அணிவித்துக் மாட்சிமைப்பட்ட மைந்தருக்கு நீர் வார்த்து மணம் செய்வித்தாள். இது கன்னிகா தானம் என்னும் அறம்.]

தாயினைக் கண்டெனச் சார்ந்து வாங்கிப்பின்
பேயினைக் கண்டென வொளித்துப் பேதுறீஇ
ஈயவொன் றில்லவர் கடன்கள் ஏற்றவர்
மாயிருங் களிகொள வழங்கிப் போக்கினாள்         256
[பெற்ற தாயினைக் கண்டதுபோல் பிரியத்துடன் சார்ந்து கடன் பெற்ருப் பின் பேயினைக் கண்டதுபோல் ஒளிந்து துன்புற்று, கடனைத் திருப்பித்தரப் ஒன்றும் இல்லாத வறியவர்களின் கடன்களை ஏற்று அவர்கள் மகிழ்ச்சிகொள்ள வழங்கித் துன்பத்தைப் போக்கினாள். பேதுறல்- துயரடைதல். இது தீராக்கடன் தீர்த்தல் எனும் அறம். ]

சந்தனக் களபமுந் தயங்கு பூண்களுங்
கந்தமென் றொடைகளுங் கலையு மற்றவும்
இந்திரன் திருவென வியற்றி வேசையர்த்
தந்தனள் காமுகர் தளர்வு தீரவே         257
[சந்தனக் களபம், ஒளி விளங்கும் அணிகலன்கள், மணமாலைகள், ஆடைகள் பிறவும் இந்திரனுடைய செல்வம் எனப் பொருட்பெண்டிருக்கு அளித்துக் காமுகர் தளர்வு தீர்த்தாள்.]

ஐந்தணை யமளியும் அம்பொன் மாளிகைச்
சுந்தர விடங்களுஞ் சுடர்ந்த தீபமுங்
கொந்தொளி மணிக்கடங் குலவு நீரொடும்
எந்திடத் தினுந்துயிற் கியற்றி னாளரோ         258
[ஐந்தணைப் படுக்கை, துயிலுவதற்கு அழகிய மாளிகை, விளக்கு, ஒளிமிக்க குடத்தில் பருகுதற்கு உரிய நன்னீர் ஆகியவற்றை எந்த இடத்திலும் துயிலுக்கு உதவ இயற்றினாள். இது படுக்கை அளித்தல் என்னும் அறம்]

புதுக்கலத் தொளிகடற் பூக்கு முன்னெடுத்
ததற்படு வாசங்க ளட்டு நீர்களும்
மதுப்பழத் தேறலும் வழங்கும் பல்விரை
விதத்தவும் மேவுநீர்ப் பந்தர் ஈட்டினாள்         259
[புதிய மண்பாண்டங்களில், சூரியன் கீழ்க்கடலில் உதயமாகும் முன்னர் நீரினை எடுத்து அதற்குப் பொருத்தமான நறுமணப்பொருள்கள் இட்டு தேனினும் இனிய கனி வகைகளும் பழ்ச்சாறும் வழங்கும் தண்ணீர்ப் பந்தர்கள் அமைத்தாள். ஒளி- சூரியன். தமிழகத்தில் சூரியன் கீழ்க்கடலில் உதித்து மேற்கடலில் மறைவதனால், ‘கடற்பூக்கு முன்’ என்றார். அதற்படு- நீஇருடன் சேர்ப்பதற்கு ஏற்ற. தேறல்- பழச்சாறு. தண்ணீர்ப்பந்தல் வைத்தல் என்னும் அறம்.]

பிணங்கிய வுயிர்களைப் பிடித்தி ழுத்துத்தன்
இணங்கருள் கொளுத்துவ தேய்ப்ப இன்சுவை
மணங்கம ழுணவினை மறுத்தி டுந்தொறுங்
கணங்கெழு சிறார்க்கிதங் கழறி யூட்டினாள்         260
[தன்னுடன் மாறுபட்ட உயிர்களைப் பிடித்து இழுத்துத் தன்னுடன் இணங்கச் செய்து அருள் கொடுப்பது போன்று, நறு மணத்துடன் கூடிய இனிய சுவையான உணவை மறுத்திடும் சிறார்க்கு இதமான மொழிகளைக் கூறி ஊட்டினாள். இது சிறார்க்கு உணவளித்தல் என்னும் அறம். பிணங்கிய- மாறுபட்ட. பிடித்திழுத்தல்- வலிய வந்து ஆட்கொள்ளுதல். ]

கலிநிலைத்துறை
கரக்கும் மாந்தர்தமுன் உளமெலாங் கலங்கியும் அருளிப்
புரக்கும் மாந்தர்முன் முகமெலாம் பூவென மலர்ந்தும்
பரக்கும் வெள்ளொளி படச்செழும் பற்களைத் திறந்துற்
றிரக்கு மாந்தருக் கெடுத்தனள் சாலைக ளனந்தம்.         261
[இரப்பாருக்கு ஈயாமல் பொருள்களை மறைக்கும் மக்கள் முன் கலங்கியும், ஆதரிக்கும் மாந்தர்முன் முகமெலாம் மலர்த்தியும் பற்கள் வெளியே தெரியும்படித் திறந்தும் இழிவந்து இரக்கும் மாந்தருக்கென அறச்சாலைகள் எண்ணிலாதன எடுத்தனள்.’பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டி’ எனத் தொடங்கும் பாடலைக் காண்க. இது இரப்போர்க்கு ஈதல் என்னும் அறம்.]

திருத்த யாத்திரை செல்பவர் தெய்வ யாத்திரையின்
அருத்தி யோடு செல்பவர் மற்றை யேதுவானடைவார்
கருத்துக் கேற்புறக் கமழ்சுவை யுணவுக ளூட்டும்
விருத்து மாமணிச் சாலைக ளிடந்தொறும் விளைத்தாள்         262
[திருத்த யாத்திரை- தீர்த்த யாத்திரை. அருத்தி- விருப்பம். மற்றை ஏது- பிறகாரணங்கள். விருத்து- விருந்து. புனித நீராடுதல் ஏதுவாகவும் தெய்வங்களைத் தொழுதல் காரணமாகவும் பிற காரணங்களுக்காகவும் யாத்திரை மேற்கொண்டவர்களுக்கு, அவரவர்களுக்கு ஏற்புடைய சுவையான உணவினை அளிக்க அன்னசாலைகளை அவ்வவ்விடங்கள்தோறும் அமைத்தாள். இது அன்னசத்திரம் நாட்டல் எனும் அறம்]

பொரியு நோலையும் பிண்டியும் புழுக்கலும் வாசம்
விரியும் பண்ணிய வகைகளு மேம்படு பிறவும்
உரிய தாயினுங் கருணைவைத் துறுசிறார் மகளிர்
பெரிய மாந்தரு நுகர்வுறப் பெட்டுமிக் களித்தாள்         263
[நோலை- எள்ளுருண்டை, பிண்டி- மாவால் செய்யப்பட்ட தின்பண்டம். புழுக்கல்- சுண்டல். பண்ணியம்- பணியாரம். எள்ளுருண்டை முதலிய தின்பண்டங்களை தாயினும் பெரிய அன்புடன் சிறுவர், மகளிர், வயதானோர் முதலியோர் உண்ண விருப்பத்துடன் மிக அளித்தாள்.]

பூவர் சோலையும் பொய்கையும் எழுதிய துகிலும்
பாவு நுண்ணிழைப் பட்டுடை விதங்களும் பலவாங்
கோவை வாய்மணி மேகலை யாதியுங் குவவி
மேவினார்க்கெலாம் மேவியாங் குதவினன் மிகவே         264
[பலவகைச் சித்திரங்கள் எழுதிய ஆடைகளும் மெல்லிய பட்டுடை வகைகளும் பலவகை அணிகலன்களையும் விரும்பி வந்தோர்க்கெல்லாம் அவர்கள் விரும்பியவாறு கொடுத்தான். ]

சிறக்க ஈட்டினர் கெடுதலாற் செழும்பொருள் கெடலாற்
பிறக்கும் வேறிடர் பகையினாற் பிறங்குத லின்றி
இறக்கு மாலைய பிறர்அறம் எண்ணிலா தனவுந்
துறக்கம் வாழ்நரும் வியப்புறத் தொடங்கினள் வளர்த்தாள்.         265
[பொருள் தேடி வைத்தவர்கள் நலிதலினாலும், அறத்திற்கு ஈட்டி வைத்த பொருள் கெடுதலாலும், வேறு இடர்கள்,பகைவர்கள் ஆகிய காரணங்களால் விளங்குதல் இல்லாமல் கெட விருக்கும் அறங்கள் எண்ணிலாதனவும் விண்ணூலகம் வாழ்வோரும் வியக்கும்படிக் காத்து வளர்த்தாள் இது முன்னோர் இயற்றிய அறங்களளைக் காத்தல் என்னும் அறம்]

கடும்பி லாப்பிணம் பொருளறும் பிணங்கடும் பங்கள்
நுடங்கு றாப்பிணம் இன்னவை தம்மையொள் ளெரிவாய்
இடங்கொள் ஈமத்தின் இட்டியற் றருங்கடன் யாவும்
அடங்க ஆற்றுமா றருளினள் அலகிலா தவரை         266
[கடும்பு- சுற்றம். பொருள் அறும் பிணம்- வறிய பிணம். கடும் பங்கள் நுடங்குறா- கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட. சுற்றமில்லாத அநாதைப் பிணம், ஈமச் சடங்குகள் செய்யப் பொருளில்லா ஏழைப்பிணம், கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தபிணம் இவை போன்றவற்றை சுடுகாட்டில் எரியூட்டி ஈமச் சடங்குகள் முழுமையாக ஆற்றுமாறு செய்தாள். இது அறவைப் பிணம் அடக்கல் என்னும் அறம்.]

அழுங்க லாக்குவான் பற்றிய பறவை யாதிகளை
யொழுங்கு நூன்முறைதெரித்து மின்மொழிபல வுரைத்தும்
வழங்கு மாழையா னிரப்பியுந் தன்னுழை வாங்கிப்
பழங்க ணீத்துயிர் காத்தனள் பயந்தமைந் தர்கள்போல்         267
[அழுங்கல்- வருத்தல். வருத்துவதற்குப் பற்றிய பறவை முதலியவற்றை நூல்களில் கூறப்பட்டுள்ள அறங்களைத் தெரிவித்தும் இனியமொழிகளைக் கூறியும் பொன் கொடுத்தும் தன்னிடம் வாங்கி, அவற்றின் துன்பத்தை நீக்கி தான் பெற்ற மைந்தர்களைப் போன்று அவற்ரின் உயிரைக் காத்தனள். இது விலைகொடுத்து உயிர் காத்தல் என்னும் அறம்.]

நவைகொள் தூசினைக் காண்டலும் நயந்தன ரண்மி
யிவைகொ டுக்கிய ரொலித்துவந் தீதுமென் றேலா
வுவரு மாப்பியு முறுத்தெரி யேற்றிநன் கொலிக்குந்
தவறிலாத வேகாலிய ரிடம்பல சமைத்தாள்         268
[நவை- அழுக்கு. தூசு- ஆடை. நயந்தனர்-நயந்தனராகி, பிரியமுடயராய், அன்புடையராய். அண்மி- நெருங்கி. கொடுக்கியர்- கொடுப்பீராக, இயர் வியங்கோள் விகுதி. ஒலித்து- தூய்மை செய்து. உவர்- உவர்மண்.ஆப்பி- சாணம். ஏகாலியர்- ஆடை ஒலிப்பவர். அழுக்கு ஆடைஉடுத்திருக்கும் ஏழகளைக் காணின் அன்போடுஅவரை அணுகு, உம்முடைய ஆடையத் தாருங்கள், தூய்மை செய்து தருதும் என வாங்கி உவர்மண், சாணம் ஆகியவற்றை ஊட்டி நன்கு தூய்மை செய்து அளிக்கும் ஏகாலியர் இடம் பல சமைத்தாள் இது தூசொலிப்பித்தல் என்னும் அறம்.]

நீளு கின்றமென் மயிரினைக் காண்டலு நெடிது
மூளு மன்பினான் முன்னுறப் போந்தின்ன திதியும்
நாளும் நல்லன வெனவழைத் துவப்ப நல்வினைசெய்
கோளி லாப்பெரு மஞ்சிகர் குலம்பல துறுத்தாள்         269
[ முடி வளர்ந்தோரைக் கண்டவுடன், மூழும் அன்பினால் அவர் முன்போந்து, இன்ன திதியும் நாளும் சவரம் செய்துகொள்ள நல்லனவாம் என்று கூறி அழைத்து வந்து நன்காற்றும் குற்றமிலா நாவிதர் வாழிடங்கள் பல செய்தாள். மஞ்சிகர்- நாவிதர். குலம்- இருப்பிடம். இது மயிர்கழிப்பித்தல் என்னும் அறம்]

இனைய முப்பதிற் றிரண்டறம் ஓங்கலும் விசும்பின்
அனைவ ருங்களி தூங்கினர் அலைகடல் வரைப்பின்
துனைய யாவரும் உய்ந்தனர் சூழறக் கடைகள்
புனையு நாமமு மிறந்தன புகழ்பெறார் பெயர்போல்         270
[இத்தகைய முப்பத்திரண்டு அறங்களும் சிறந்தோங்கவே விண்ணுலகத்தவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். மண்ணுலகத்தவர் யாவரும் துயரம் நீங்கி உய்ந்தனர். உலகில் சூழ்ந்த பாவங்கள் புகழ் பெறாதார் பெயரும் மறக்கப் பெறுதலை போலப் பாவங்களின் பெயரும் ஒழிந்தன.( பாவச்செயல்களின் பெயர்களும் வழக்கொழிந்தன; புண்ணியச் செயல்களே வழக்கில் இருந்தன]

பூத லத்துள மாந்தரே யலர்பொழிற் கற்ப
மாத லத்துள வமரரு மணிகிடந் திமைக்கும்
பாத லத்துள வுரகருங் காஞ்சியிற் படர்ந்து
காத லித்துமை யருளுண வுண்டுகா ழறுப்பார்.         271
[ நிலவுல்கில் உள்ள மாந்தரே அல்லாமல் கற்பக நாடாகிய தேவலோக வாசிகளும் மணி இமைக்கும் நாகங்கள் உறையும் நாகலோக வாசிகளும் காஞ்சியில் தங்கி பத்திசெய்து மலக் குற்றம் அறுத்தனர்.]

இரவ லாளரை யறிவிலார் தமையிடும் பையரை
விரவு தீவினை புரிநரைச் செல்வ மேவலரைக்
கரவை யாதியவுடையரை யிழந்தன காஞ்சிப்
புரியொன் றேயல வுலகங்கண் முழுவதும் போலும்         272
[இரப்பவரை, அறிவிலாரை, துன்பப்படுநரை, பாவம் செய்பவரை, வறிஞரை, களவு வஞ்சகம் உடையோரை காஞ்சிப்பதி மட்டும் அன்றி உலகமே இழந்தது. (இறைவியின் அறச் செயலால்]

விண்ணு ளார்களும் பாதலத் துரகரும் விரிநீர்
மண்ணு ளார்களு மேயலர் மலைமக ளறத்தாற்
றிண்ணென் வல்வினை முழுவதுஞ் சிதர்பட வுதறி
யண்ணல் வீட்டினை யடைந்தன மிருகமா திகளும்         273
[விண்ணுலக தேவர்களும் பாதலத்து நாகலோக வாசிகளும் கடலால் சூழப்பட்ட மண்ணுலகத்தவரும் மட்டுமேயன்றி, இறைவி ஆற்றிய அறத்தால் திண்ணிய வல்வினைகள் முழுவதும் பொடிபட உதறித்தள்ளி மிருகம் முதலியனவும் சிவலோகத்தை அடைந்தன]

புறங்கொள் வேலையும் பொங்குமேழ் வேலையும் ஈற்றிற்
கறங்கு மேகமுங் கலந்தெனக் கவுரிநா யகிதன்
அறங்கொள் சாலையின் அடைபவ ரோதையும் வெளிக்கொள்
பிறங்கு மோதையுங் களிப்புறு மோதையும் பிணங்கும்.         274
[நிலத்தின் புறத்தே உள்ள கடலோசையும் எழுகடலோசையும் மேகத்தின் இடியோசையும் கலந்ததென கவுரி நாயகி அமைத்த அறச்சாலைகளை அடைவோருடைய ஓசையும் வெளியே செவோருடைய ஓசையும் அங்கே அறத்தை நுகர்ந்து களிப்போர் ஓசையும் பிணங்கும்.]

எண்ணி லாதவான் மகளிர்இன் னடிசில்கள் பகரும்
வண்ண முன்கை வால்வளைகளும் வயங்குமேகலையுந்
தண்ணந் தாமரைச் சிலம்புமுண் ணியரெனச் சாற்றும்
பண்ண மைந்தவின் கிளவியும் பன்முறை தழங்கும்         275
[எண்ணற்ற அரமகளிர் இன்னடிசில்களை சமைக்கும் அவர்களுடைய அழகிய முன்கையில் உள்ள சங்கு வளையல்கலும், விளங்கு மேகலையும் தாமரை மலரிதழ் போன்ற பாதத்திலுள்ள சிலம்பும் உண்ணுங்கள் எனக்கூறும் இனிய சொல்லும் பலமுறை முழங்கும்.]

கவையெலா நிருமித்த வளமைத்த தூவடிசிற்
சுவையை யிற்றெனத் துய்த்தவர் தாங்களு மறியார்
சுவைய வான்சுதை சுரர்களும் வெறுத்தன ரெனிலச்
சுவையுன் மேன்மைமற் றெம்மனோர் சொல்லுதத் கெளிதோ         276
[சுவைகள் எல்லாவற்றையும் நிருமித்தவளாகிய இறைவி தூய உணவின் சுவையை இத்தன்மையது எனத் துய்த்தவர்களும் அறியார். மிகச் சுவையை உடைய அமிர்தத்தையும் தேவர்கள் வெறுத்தனர் என்றால் அம்மை சமைத்த அடிசிலின் சுவையை எம்மனோர் சொல்லுவது எளிதோ? வினா எளிதன்றுஎன்பதைக் குறித்தது. துய்த்தவர்- உண்டவர். சுதை- தேவாமிர்தம்]
பூமென் கோதைய ரெழுப்பிய புரிநரப் பிசையுஞ்
சோம வாண்முக நகையொடு துளும்புபாட் டிசையுந்
தாமநூ புரமாதிய தழக்கமு மல்லாற்
காம சாலைகள் இளைஞரைப் புறத்தினிற் காலா.         277
[ மலரணிந்த கூந்தலினர் எழுப்பிய யாழ்நரப்பிசையும், சந்திரன் போன்ற முகத்தில் முறுவல் துளும்பும் பாட்டிசையும் மணிவடம் சிலம்பு முதலியவற்றின் ஒலியுமே புறத்தே கேட்கப்படுவன அல்லாமல் காமசாலைகள் இளைஞரைப் புறத்தே செலுத்தா. சோமன் – சந்திரன். துளும்பு- ததும்புகின்ற. தாமம்- மணிவடம். நூபுரம்- சிலம்பு. காமசாலை- பொருட்பெண்டிர் இருப்பிடம்]

திருவ நீண்மறு கிடந்தொறுந் தெரிவைமார் தம்மை
மருவு தானமா வழங்கிய மன்றலின் மகிழ்வான்
ஒருவர் தோளினை யொருவர்கள் தமுழுவலும் உயர்வான்
பெரிதுமுத் தரியத்தினையெறிதலும் பிறங்கும்.         278
[செல்வம் நிறைந்த நீண்ட தெருக்கள் தோறும் மகளிரைத் தானமாக வழங்கிய திருமணத்தால் மகிழ்ச்சிகொண்ட ஆடவர்கள் ஒருவர் தோளினை ஒருவர் தழுவலும் உயர்வானில் உத்தரியத்தினை எறிதலும் விளங்கும். தழுவிக் கொள்ளுதலும் உத்தரியத்தை மேலேவீசுதலும் மகிழ்ச்சிக்குறிப்பு. ஒருவர்கள்- கள்- அசை]

அற்றை நாள்நகர் வளங்கெழு சிறப்புமங் கெவரும்
பெற்ற வோகையும் பேசுவ தரிதம்மா
எற்றை நாளுமவ் வறமெலாம் வழங்குமா றியற்றும்
முற்றிலா முகிழ்முலை மற்றிது முயலும்         279
[இறைவி காஞ்சியில் அறம்புரிந்த அன்று காஞ்சிநகரின் சிறப்பும் அங்கு எவரும் பெற்ற உவகையும் கூறி முடியாது. எந்ட நாளும் அந்த அறமெல்லாம் நின்று நிலவுமாறு இயற்றும் இறைவி இஃது முயன்றாள். இறைவி முயன்ற செயல்கள் இனி வரும் செய்யுட்களில் கூறப்படும்.]

கொச்சகக்கலிப்பா
துப்புநிகர் செங்கனிவாய்த் தூமுறுவற் பசும்பணைத்தோள்
வைப்பெருவே லிகந்தவிழி மங்கலைக்கு மணிகடந்த
செப்புமுலைச் சண்டிகைக்குஞ் செய்தவறந் திறம்பாமே
யெப்பொழுதுங் காமினென வியம்பியருள் பணித்தருளி         280
[தன்னுடைய சேடியராகிய மங்கலைக்கும் சண்டிகைக்கும் தான் செய்த அறங்களை அழிந்து விடாமல் எப்பொழுதுங் காக்குமாறு கூறி ஆணையிட்டு. துப்பு- பவளம். செம்மை பவளத்ஹுக்கும் வாயித்ழுக்கும் ஒப்பு. கனி- கொவ்வைக்கனை. பணை- மூங்கில் தோளுக்கு உவமை. வேலை முறியடித்த விழி.கூர்மை ஒப்பு. வை- கூர்மை. தூமுறுவல்- வெண்பற்கள். ]

உடங்கணைந்த மலர்த்தவிசி னொள்ளிழையா ரிருவரையு
மடங்கவற்றும் பசுவில்வ மலர்ப்பலா சிடத்தெய்திப்
படங்கிளர்பாப் பணியாரைப் படர்ந்துதவஞ் செய்மினெனத்
தடங்கணருள் கொழித்தொழுகச் சாற்றிவிடுத் தருளியபின்         281
[மலர்த் தவிசின் ஒள் இழையார்- மலராகிய தவிசில் இருப்பவர்கள், கலைமகளும் திருமகளும். மடம் கவற்றும்- அறியாமையைப் போக்கும். கலைமகளையும் திருமகளையும் அறியாமையை நீக்கும் வில்வத்தினிடத்தும் மலரும் பலாசிடத்தும் எய்தி பாம்பணியை அறிந்த சிவபெருமானை நோக்கித் தவம் புரிக என்று ஏவியபின் பலாசு- கல்யாண முருங்கை. காயாரோகணத் தலவிருட்சம் வில்வம். கச்சபேசத் தலவிருட்சம் முருக்கு.]

கலிவிருத்தம்
விற்கால் மதிபோல் நுதல்மெல் லியலாள்
சொற்கா முறுமத் தகுசூ ழலிடை
நற்கா மர்நறுங் கொடிமா லதியைப்
பொற்காஞ் சியெனப் பொலியக் கருத         282
[வில்- ஒளி. கால்- வெளியிடும் சொல்- புகழ். காமுறும் – விரும்பும். ]

வண்டார் தருமா லதிமென் கொடியும்
விண்டாழ் கயிலைக் கிரிவிட் டெவருங்
கொண்டா டுபிலத் தயலிற் குறுகி
யுண்டா யதொளிர்ந் தெழுகாஞ் சியென         283
[ வண்டு ஆர்தரு மாலதி- வண்டு மொய்க்கும் மாலதி. விண் தாழ் கயிலைக் கிரி- விண் தாழுமாறு உயர்ந்த கயிலைமலை. விண் என்பது விண்ணோர் எனக் கொண்டு தேவரும் வ்ழிபடும் கயிலை எனலுமாம். பிலம்- குகை. பொற்காஞ்சியெனப் பொலிய பிலத்தயலிற் குறுகி உண்டாயது என முடிக்க]

நளிபட் டகருங் கடனா றிவருந்
தெளிபட் டசெழுஞ் சுடருஞ் சிதையத்
தளிர்பட் டொளிர்சா கைதொறுங் கவினி
யொளிபட் டெழுதண் கதிரூழ்த் ததுவே .         284
[நளிர்- குளிர்ச்சி. அகர்- வைகறைப்பொழுது. நாறி- தோன்றி. காஞ்சி, குளிர்ந்த கடலில் வைகறைப் பொழுதில் தோன்றிவரும் செழுஞ்சூரியனும் தோற்குமாறு செந்தளிர்கள் உளதாகி ஒளிரும் கிளைகளைகளொடு அழகிதாக குளிர்ந்த ஒளிக்கதிர்களைச் சொரிந்தது]

சேண்டாழ் பிலம்வை கியதேத் துமணித்
தூண்டா தசுடர்க் கதிரைத் தலையி
னேண்டாங் கரவின் மணியின் கதிரோ
டாண்டார்ந் துநிரம் பியதக் கதிரே         285
[சேண்- சேய்மை. தாழ்- தாழ்ந்த. பிலம்- குகை. தேத்து- இடத்தில். ஏண்- திண்மை. ஆண்டு- அவ்விடத்தில், பிலத்தில் பிலத்தில் சேய்மையில் தாழ்ந்து தங்கிய அந்த தூண்டாசுடர்க் கதிர் பூமியைத் தாங்கும் திண்மைபடைத்த அரவின் மணியின் கதிரோடு அவ்விடத்தில் நிறைந்து நிரம்பியது.]

அரவின் மணிதூண் டலடா தசுடர்
குரவங் கமழ்காஞ் சிகொழிக் குமொளி
விரவுற் றிடுமத் தலைவில் லொளிமூன்
றுரவுற் றபிரான் முகமொத் ததுவே.         286
[அத்தலை- அவ்விடம். அரவின் மணி ஒளி, தூண்டா சுடரொளி, காஞ்சி கொழிக்கும் ஒளி மூன்றும் விரவி, சந்திரசூரிய அக்கினி என மூன்றொளிகளை முகத்தில் உடைய சிவபிரானை ஒத்திருந்தது அந்த இடம்.]

மாணுற் றுவயங் கியகாஞ் சியிழு
தூணுற் றிடலின் றியொளிர்ந் தசுடர்
காணுற் றிடவந் துகதிர்ப் பரிதி
பூணுற் றவணின் றதுபோன் றதரோ         287
[மாண்- பெருமை. இழுது- நெய். பெருமையுடன் விளங்கிய காஞ்சி, நெய்யுண்ணுதலில்லாமல் ஒளிரும் சுடரைக் கானவந்து, கதிரொளியுடைய பரிதியைப் பூண்டு அவ்விடத்து நின்றது போன்றது.]

பொன்னின் மயமாய்ப் புரைதீர்ந் தநவ
மின்னும் மணிமென் றளிர்பாச டைபூ
துன்னுங் கனிகாய் துறுதொத் தினமா
மன்னிக் கவின்மல் கியதம் மரமே         288
[அந்த மரம் பொன்மயமாய், மின்னும் குற்றமற்ற நவமணிகள் மெந்தளிர், ப்சிய இலை, பூ, நெருங்கிய கனி காய்கள் கொத்துக் கொத்தாகக் கொண்டு அம்மரம் அழகுடன் இருந்தது.]

மணிபொன் னலர்கற் பமரத் தொகையாற்
றணிவின் றுயர்பொன் னகர்தன் னிறுமாப்
பணிமல் கியகாஞ் சியினா னுமருட்
டிணிமல் கியகாஞ் சிசிதைத் ததுவே.         289
[கற்பமரம்- கற்பகமரம். பொன்நகர்- அமராவதி. தேவேந்திரனின் தலைநகர். காஞ்சிநகர் காஞ்சிமரத்தின் பொலிவினால் பொன்மலர்களி மலர்கின்ற கற்பகமரத்தையுடைய பொன்னகராகிய அமராவதியின் இறுமாப்பையும் கற்பகமரத்தின் செருக்கையும் வென்றது.]

சினைதோ றவிர்செம் மணியம் மரமங்
கினிதுற் றுறைபாம் பொடிருப் பநினைந்
தினவொண் மணியா யிரமெய் துபணத்
தனிவா ளரவெய் தியதன் மைபொரும்.         290
[அம்மரத்தின் கிளைகள்தோறும் செம்மணிகள் பிரகாசத்துடன் விளங்கின. அக்காட்சி, அம்மரத்தில் மணியுடைய பாம்பு இனிது வாழ்தலை நினைந்து உறவு கொண்டாட நினைந்து மணி ஆயிரங்கொண்ட படம் ஆயிரமுடைய பெரியபாம்பாகிய ஆதிசேடன் அங்கெதியதை ஒக்கும்.]

மலருற் றிழிதா ரைமதுப் புனலால்
அலரிற் பொலிகாஞ் சியளித் துவளர்
தலைமைக் கொடிநீங் கியதன் துயர்முன்
நிலவித் தெரிவிப் பதுநேர்ந் ததுவே.         291
[விரிந்து தாரையாக ஒழுகுகின்ற தேனாகிய புனலால் அலர்ந்ததைப் போன்ற காஞ்சி, தன்னைக் கருணையுடன் வளர்க்கின்ற தலைமைக் கொடியாகிய இறைவியிடம் அவளைவிட்டு நீங்கியதால் நேர்ந்த துயரைத் தெரிவிப்பது போன்றிருந்தது.]

நற்பா லனநல் லவர்பா லணுகிற்
பொற்பூ மணமும் பெறல்போ லுமெனும்
சொற்பா ரினிறீஇ யதுதூ யவிதன்
விற்பாய் மணமே தகுபொன் மலரே.         292
[ நல்லவர்களை அடைந்தால் நல்லன வந்து அடையும்; பொன்னாலாகிய பூ ஒளியுடன் மனமும் பெற்றதைப் போல எனும் சொல் பாரில் நிலை நிறுத்தியது போன்றிருந்தது காஞ்சியின் பொன்மலர் மனத்துடனும் கூடியது. அம்மை காளிம உருவம் நீங்கிக் கவுரவ நிறத் திருவுருவம் பெற்றனர். அவ்வாறே, பசிய முல்லைக் கொடியும் பொன்னிறக் காஞ்சியாய் அம்மைபோல் பொலிந்தது.]


முன்னர்க் கருமெய் யுருமுற் றொழியும்
அன்னைக் குநிகர்த் ததடுக்க லின்முன்
மன்னிப் பொலிப்பாசுருவங் கழுவிப்
பொன்னிற் பொலிபூ வுடைநன் மரமே         293
[ முன்னம் அம்மையார் கரிய காளிம நிறம் நீங்கிச் செந்நிறத் திருவுருவம் பெற்றனர். அதுபோல மலைச்சாரலில் முல்லைக் கொடிகள் தம் பசிய நிறம் நீங்கிப் பொன்னிறமாகப் பொலிவு பெற்றன.]

கயிலைக் கிரியே கருமப் புவியா
வியனற் பதமுத் தியிடங் கலைகள்
பயில்பொற் பமர்காஞ் சிநெடும் பதியா
வுயர்முத் தரையுத் ததுபூ மரமே.         294
[ வினைசெயற்குரிய நிலவுலகே கயிலைமலையாக, கலைகள் பயிலிடமாகிய அழகிய காஞ்சிப்பதியே பதமுத்தியிடமாக, அங்கு விளங்கும் பூமரம் சீவன்முத்தராகவும் பொலிந்தது.]

உலகே துறினுங் கலையோ வியருள்
நிலையே நிலையா கநிலைத் தவர்கள்
அலையா ரதுபோ லொளியாங் குறினுஞ்
சலியா தடிநின் றொளிர்தண் ணிழலே.         295
[ எந்த உலகத்தில் இருந்தாலும் பாசஞானம் நீங்கித் திருவருளே சார்பாக நிலைத்தவர்கள் மனம் சலியார். அதுபோன்று ஒளி(சூரியன்) எங்கு உற்றாலும் அம்மரத்தில் அடியில் நிழல் சலியாது நின்றது]

சீரார் தவமாற் றுறுசெவ் வியினில்
வாரார் முலைவல் லிதன்மீ துவெயில்
ஆரா துறுபொற்குடையா னதரோ
பேரா துபிறங் கியவந் நிழலே         296
[ பெருமைமிகு தவம் ஆற்றும் தருணத்தில் அம்மைமீது வெயில் படாது அம்மரநிழல் பொற்குடையாயது]

கிளிபூ வைகள்கேழ் கிளர்மஞ் ஞைகுயில்
அளிதே னிஇனமா திஞெமிர்ந் துலவக்
களிமா சனநோக் கியகண் களுடன்
உளமோ டிநெருங் கியுலா வியவே         297
[கிளிகள், பூவைகள்,நிறமிக்க மயில்கள் குயில்கள், வண்டுகள், தேனீக்கள் இவற்றினம் பரவி உலவகண்டு களிகொண்ட மக்கள் நோக்கிய கண்களுடனுளமும் அங்கு நெருங்கி உலாவின.]

அருளே யிஃதென் மருமா ரணநூற்
பொருளே யிஃதென் மருமாய்ப் புகழா
வருவா னவர்யா ரும்வலங் கொடுமுன்
பெருகோ கையின்வீழ்ந் தொளிபெற் றனரே.         298
[இறைவனின் அருளே இஃது என்போரும் அரிய வேதநூர் பொருளே இஃது என்போராய்ப் புகழ்ந்து வரும் தேவர்கள் யாவரும் இக்காஞ்சியினை வலம் வந்து வணங்கி பெருகுகின்ற மகிழ்ச்சியில் ஒளி பெற்றனர்.ஆரணம்- வேதம். ஓகை- உவகை.]

இவ்வா ரெழுகாஞ் சியிருங் கவினைச்
செவா யுமைமா திருசேல் விழியால்
துவ்வா மகிழ்கூர்ந் துதொழுந் தகைமை
யவ்வாள் விடுதா ருவடித் தலையின்         299
[இப்படி எழுகின்ற காஞ்சிமரத்தின் பெரிய அழகினைச் செவ்வாய் உமைமாது தனதிரண்டு சேல்மீன் போன்ற விழிகளால் துய்த்து மகிழ்ச்சியினை மிக அடைந்து அடியில் வணங்குதற்குரிய தெய்வத் தன்மையதாய் இருந்தது அந்தத் தாரு. தாரு- மரம். தொழுந்தகைமய- தொழப்படும் தெய்வத் தன்மையதாய். வாள்- ஒளி]

முக்கோ ணமைந் தமுழுத் தவிசின்
மிக்கோர் சடைவற் கலைமெய் யொளிர
எக்கா ழுமிகந் துலகின் பமுற
அக்கா லையமர்ந் துதவம் புரிவாள்         300
[முக்கோண வடிவில் அமைந்த நல்ல இருக்கையில் மிக்க சடை, மரவுரி உடலில் மிளிர எக்குற்றமும் நீங்கி உலகு இன்பமுற அந்நாள் அமர்ந்து தவம் புரிவாள். தவிசு- பீடம். வற்கலை- மரவுரி. மெய்- உடல். காழ்- குற்றம், துயரம். காலை- பொழுது, நாள்.]

காக்குந் தனிநா யகரைக் கருதி
நோக்கங் குமிழ்மூக் கினுனிக் கணுறத்
தேக்கும் பரவின் புதிளைப் பவறம்
பூக்குங் கொடிபோல் பவணோற் றனளே.         301
[ உயிர்களைக் காக்கின்ற ஒப்பற்ற தலைவராகிய சிவபரமேசுவரரை மதில் இருத்திப் பார்வை குமிழ்போன்ற மூக்கின்கண் இருத்தி தேக்கும் பரவின்பத்தில் திளைத்து, அறம் பூக்கும் கொடி போன்றவலான இறைவி தவம் செய்தாள். நோக்கம்- பார்வை, கண். பரவின்பம்- பேரின்பம்]

ஈகைத் தழைகாஞ் சிதனக் கிடையத்
தோகைக் களிமா மயிலுஞ் சுடர்பொன்
னாகித் தவிரற் புதமொத் ததுதீம்
பாகைத் தவிர்சொல் லிபதிந் ததுவே.         302
[இனிமையால் தேம்பாகையும் வென்ற சொல்லி அங்குத் தங்கியதால், பொன் தழக்கும் காஞ்சிமரத்தின் அடியில் தோகைக் களிமாமயில் போன்றவளும் சுடர்பொன்னாகி ஒளிரும் அற்புதத்தைப் பொருந்தியது.]

கொச்சகக்கலிப்பா
முப்பொழுது மைந்தீர்த்த முறையுளிதோய்ந் தலர்காஞ்சி
வைப்பின் னருந்தவ மாற்றி வள்ளலா ரருள்கிடைத்துப்
பொற்புமலி யேகம்பந் தொழுதேத்தப் புறம்போந்து
செப்பரிய வளநகரத் திருவீதி சென்றணைந்தாள்         303
[ மூன்று பொழுதும் ஐந்து தீர்த்தங்களிலும் முறைப்படி நீராடிமலர்ந்த காஞ்சிமரத்தின் நீழலில் அருந்தவம் ஆற்ரி, இறைவனின் அருள் கிடைக்கப் பெற்று, அழகு நிறைத்த திருவேகம்பத் திருக்கோவிலில் ஏகம்பரைத் தொழுதேத்தப் புறப்பட்டு சொல்ல முடியாத செல்வவளங்களை யுடைய திருவீதி சென்றணைந்தாள்.]

தோரணங்க ளிடங்கடொறும் புதிதாகத் தொடுத்தணிவார்
காரணவ வோங்குநடைக் காவணமெங் கணுங்கவரி
நாரணவு மலர்மாலை நகைமணிமா லைகள் செறிப்பார்
தாரணிபொற் கொடிநிறுப்பார் தமனியவா டைகள்விரிப்பார்         304
[ அம்மை எழுந்தருளப்பெறும்போது மக்கள் செய்வது கூறப்படுகின்றது. இடங்கள்தொறும் புதிதாகத் தோரனங்களைத் தொடுத்து அணிவிப்பார்கள். மேகத்தை அணவும் படியாக உயர்ந்த நடைபந்தல்களை அமைப்பார். கவரிவீசுவார். நாரால் தொடுக்கம்ப்பட்ட மலர்மாலைகளும் ஒளிவீசும் மணிமாலைகளையும் செறித்து வைப்பார். நிலத்துக்கு அழகளிக்கும் பொர்கொடிகளை நிறுத்துவிப்பார். பொன்னாடைகளை நடைபாவாடைகளாக விரிப்பார். அணவ- பொருந்த. நடைக்காவணம்- நடைபந்தல். தமனியம்- பொன். தமனிய ஆடை- பீதாம்பரம். தமனிய ஆடை விரிப்பார்- பீதாம்பர ஆடைகளை நடை பாவாடையாக விரிப்பார்.]

தெருவீதி திருவலகுப் பணிபுரிவார் தெண்பனிநீர்
மருவாரத் தெளித்தொழுக்கி மான்மதங்குங் குமந்தொகுப்பார்
முருகாலு மலர்மாரி முகில்நாண வெதிர்சொரிவார்
உருகார்வ முடனோடி யொண்மணிமா ரிகள்தூர்ப்பார்.         305
[தெருக்களையும் வீதிகளையும் திருவலகினால் பெருக்கித் தூய்மை செய்வார். குளிர்ந்தநீர் மணம் நிறையத் தெளிப்பார். மான்மதம் குங்கும்க் குழம்புகொண்டு மெழுக்கிடுவார். மணமலர்களை மழையென மேகங்களும் நாண சொரிவார். உருகும் ஆறவத்துடனோடி ஒள்ளிய மணிகளை மாரியெனத் தூர்ப்பார். தூர்ப்பார்- நிறைவிப்பார். திருவலகு- விளக்குமாறுக்கு மங்கலவழக்கு. முருகு- மணம். ]

முன்பணிவார் பின்பணிவார்முன்னோடி யெதிர்பணிவார்
என்பணிவார் திருமனைவி யென்பணியேற் றருளென்பார்
மின்பணில முதலியங்கள்விரியோதை யெண்டிசையின்
மன்பணிகண் முடிதுளக்க மங்கையர்க ணடம்புரிவார். .         306
[முன்னே வணங்குவார், பின்னே வணங்குவார், முன்னால் ஓடி எதிரே வணங்குவார். திருமாப் பிரமன் ஆகியோருடைய என்பினை அணியாக அணிவாரின் மனைவியாகிய என் பணியை ஏற்றருள்க என்பார். ஒளியுடைய சங்கு முதலிய இசைக்கருவிகளின் இசைஓசைக்கு எட்டுத்திசைகளிலும் உள்ள எட்டு நாகங்களின் முடி துளங்க மங்கையர் நடனம் புரிவார். என்பு- திருமாலாதியர் என்பு. பணிலம்- சங்கு. பணிகள்- பாம்புகள். பூமியைத் தாங்கும் எட்டுப் பாம்புகள்.]

மணிவிளக்கும் நிறைகுடமும் மங்கலமும் எதிர்கொணர்வார்
அணிவிளக்கி யிடங்கடொறும் அமர்ந்தருளி யெழுகென்பார்
பிணிவிளிக்கும் மலர்ப்பாதம் பெயராது தொழுதணைவார்
தணிவளிக்கின் உயர்வளிக்குந் தையலரு ளென்னென்பார்.         307
[மணி விளக்கு- அழகிய விளக்கு; மாணிக்க விளக்குமாம். நிறைகுடம்- பூரணகலசம். பிணி விளிக்கும் மலர்ப்பாதம். பிணி- பிணிக்க, ஒன்ற. விளிக்கும்- அழைக்கும் மங்கலப்பொருள்களான மணிவிளக்கு, நிறைகுடம் முதலியனவற்றைஎதிர் கொனர்ந்து , அருகில் உள்ள இடங்களைத் தூய்மை செய்து, அவ்விடங்களில் அமர்ந்தருளிச் செல்லுமாறு வேண்டுவார் தன்னோடு ஒன்ற அழைக்கும் தாமரை மலர்போன்ற திருவடிகளை நீங்காமல் தொழுது அணைபவர்கள், தாழ்ந்து வணங்குவோருக்கு வாழ்வளிக்கும் தயலாய்! அருள்க ! என்பார்.].

எத்தவமுன் னியற்றினம்இங் கிவட்காண்டற் கெனவியப்பார்
அத்தகைய தவமிலதே லரியயனுந் தெரியாத
வுத்தமிநற் றிருக்காட்சி யுதவுமோ வெனநயப்பார்
மைத்தபொழிற் காஞ்சிநகர் வாழ்ந்தபய னிதுவென்பார்.         308
[எத்தகைய தவம் நாம் முன் இயற்றினோமோ இங்கு இவளைக் காண்பதற்கு? அத்தகைய தவத்தை நாம் முன்பு புரிந்திராதபோனால், அரியும் அயனும் காணமுடியாத இந்த உத்தமியின் நல் திருக்காட்சி நமக்கு அவள் அருளுமோ என அன்புசெய்வார். காஞ்சி மாநகரில் வாழ்ந்தமையால் பெற்ற அரிய பயன் இது என்பார்.]

கொம்மைமுலை யிவள்வளர்க்குங் கோதிலறப் பெரும்பேற்றால்
இம்மையொடு மறுமைநலம் எவையும்நுகர்ந் தனமென்பார்
செம்மையெனத் துறக்கவளஞ் சேர்ந்துநுகர் பண்ணவரும்
அம்மவிதற் கிவரெனில் அதனலமென் னேயென்பார்         309
[இவள் வளர்க்கும் குற்றமற்ற அறத்தின் மேன்மையினால் இம்மையொடு மறுமை நலம் எல்லாவற்றையும் அனனபவித்தோம் என்பார். மேன்மையானது எனப்படும் சுவர்க்க சுகத்தை நுகரும் தேவர்களும் இங்கு வருவர் எனில் அக்காஞ்சி பெருமை என்னே என்பார். கோது- குற்றம். செம்மை- பெருமை, மேன்மை. துறக்கம் – சுவர்க்கம். பண்ணவர்- தேவர்கள். இவர்வர்- விரும்பி வருவர்.]

மரகதமென் றளிரென்ன வயங்கு முருவிவட் கென்பார்
பரவுமொளிக் கவுரநிறம் படைத்திருந்த தென்னென்பார்
அரவணிவார் திருவருளாற் றணந்திடு மவ்வுருக்கண்டீர்
ஒருபுடையில் வருநீல வுருக்கன்னி யெனமொழிவார்.         310
[மென் தளிரின் பச்சை என விளங்கும் நிறம் இவள் உரு என்பார். இவள் போற்ரும் கவுர நிறம் படைத்தது எப்படி என்பார். பாம்பணிப் பிரான் திருவருளால் பச்சை நிறம் தணந்தது (பிரிந்தது) என்பார். அருகில் வருவது நீலவுருக் கன்னி (காளி) என மொழிவார்.]

ஓருருவில் அங்கணனார் உடன்பயிலு முத்தமிதான்
ஈருருவாத் தணந்துதவம் இயற்றுதிற மென்னென்பார்
பாருலகிற் றானந்த படிநடந்து நாமெல்லாம்
சீருருவக் கதியடையுந் திருக்கருணைத் திறமென்பார்         311
[அங்கணனார்- சிவபெருமான். சிவபரம்பொருளுடன் ஓருவாகப் பயிலும் இவள் ஈருருவாகப் பிரிந்து தவம் இயற்றுவது ஏன் என்பார். பாருலகில் அவள் வாழ்ந்தொழுகியபடி நாமும் வாழ்ந்து நற்கதி அடைவதற்கு வாழ்ந்து காட்டிய கருணைத் திறம் என்பார்.]

இருள்பரவி யெவ்வுலகு மிடருழப்பத் தனிக்கணவர்
மருமலர்க்கண் புதைத்தருளு மணிக்கரமீ தோவென்பார்
தெருமருமவ் வுலகமெலா மகிழ்விக்குந் திறம்போலும்
பெருகுபர மானந்தப் பேரறமாற் றுவதென்பார்.         312
[ இருள் பரவி எல்லா உலகும் துன்பப்பட ஒப்பற்ற கணவரின் மலர்க்கண்களைப் புதைத்தருளும் அழகிய கரங்கள் இவையோ? மயக்கமடைந்த அவ்வுலகமெல்லாம் மகிழ்விக்கும் திறம்போலும் பெருகும் பேரறம் ஆற்றுவது என்பார்]

சுந்தரவெங் கதிரவனுஞ் சோமனுமற் றேனையவுந்
தந்தமியல் பினினிருப்பச் சார்ந்ததெவ னிருளென்பார்
எந்தவொளி தனக்குமுயி ரெனப்படுவ திவள்புதைத்த
அந்தணனார் முகத்தொளிரு மலர்விழியி னொளியென்பார்         313
[சந்திர சூரியர்களும் பிறவொளிகளும் தத்தம் இயல்பில் இருக்க இருள் வந்ததெப்படி என்பார். எந்தவொளிக்கும் இவள் புதைத்த அந்தணனாராகிய சிவ பரம்பொருளின் முகத்தில் ஒளிரும் விழியின் ஒளியே உயிர், மூலகாரணம் என்பார்]

இவள்புதைப்ப வேதுவா யிருந்தவென மாலதியைக்
கவிழ்சினைய தளிர்மாவைக் கைதொழுவார் கண்புதைத்த
பவளமலர்க் கரங்களையும் பணிகிற்பார் பதகனெனத்
தவறுபுரி மகதனையுஞ் சரண்பணி வார்பயன் பெறுவார்.         314
[இறைவனின் கண்களை இவள் புதைப்பதற்கு ஏதுவாக இருந்த மாலதிக் கொடியையும் கீழ்நோக்கிய அரும்புகளையுடைய மாவினையும் கை தொழுவார். அவருடைய கண்ணைப் புதைத்த பவளநிற மலர்க்கரங்களையும் பணிவர்கள். மகதன் – இது பதகன் அல்லது மதனன் என்று இருக்க வேண்டும். பதகந் கீழ்மகன். இறைவன் இறைவி மீது மலர்க்கனை தொடுத்தலின் பதகன் எனப்பட்டான். மதனன் -மன்மதன். அவன் செயலல்லவா இறைவி இறைவனின் கண்ணைப் புதைத்தது மன்மதன் செயலால் அல்லவா/ அதனால் அவனையும் பணிவார்.]

அறம்வளர்க்கும் மணிச்சாலை யகப்படுத்திக் கொளநினைந்த
மறமுயிர்வேன் மகதனுக்கும் வரம்வழங்கி னாளென்பார்
நிறையருளி னுலகனைத்தும் நெடிதோம்பி யினிதளிக்கு
மிறைவிபொறா ளாயிடின்மற் றெவர்பொறுப்பார் பிழையென்பார்.         315

[அவள் அறம் வளர்க்கும் தருமசாலைகளையும் கைப்பற்றிக் கொள நினைத்த கீழ்மகனுக்கும் வரம் வழங்கினால் என்பர். நிறைந்த அருளினால் உலகனைத்தையும் நெடிதோம்பிக் காத்தளிக்குமிறைவி பிழை பொறாளாயின் எவர்தாம் பொறுப்பர் என்பார்.]

அலகிறந்த விம்மிதத்தோ டொன்றாக வம்பிகையா
னிலகுமணிக் காஞ்சியுமற் புதமாயிற் றிவணென்பார்
பலபலவற் புதமுமுனம் படைத்தவளே யிவளின்னு
நிலவுமதி சயமென்ன நிகழ்த்துமோ வெனவியப்பார்         316
[விம்மிதம்- அதிசயம். காஞ்சி பல விம்மிதங்கள் நிறைந்தது. அத்துடன் அம்பிகை இங்குக் கூடியிருப்பதும் ஒரு அற்புதமாயிற்று என்பார். பலப்பல அற்புதங்களைப் படைத்தவளே இவள்; இனி இங்கு இன்னும் என்னென்ன அதிசயம்நடத்துமோ என வியப்பார்]

சடைமுடியும் வெண்ணீறுந் தாழ்வடமு மரவுரியும்
உடையவளாய்த் தவம்புரிந்தும் உருநிழற்ற விலையென்பார்
கடைபயின்ற மடமுடையீர் கரிசுபடு மாயையினாம்
வடிவதுவோ வானந்த வடிவன்றோ யிதுவென்பார்.         317.
[சடைமுடியும் உருத்திராட்ச மணிமாலையும் வெண்ணீறும் மரவுரியும் உடையவளாகத் தவம் புரிந்தும் அவலுடைய உடலின் நிழல் நிலத்தில் படவில்லை என்பார். முட்டாள் கடையர்களே! குற்றமுடைய மாயையினால் ஆயது நம் வடிவம். அதுவோ ஆனந்த வடிவல்லவோ/ எங்ங்அனம் நிழல்படும்? என்பார்.]

இவ்வாறு பலர்போற்ற வெழுந்தருளி வருநெறிக்கட்
செவ்வாய்மைப் பாங்குபுரி திறத்தொழுகு மங்கலையா
மைவார்மென் குழன்மடந்தை மனமகிழ்விற் றாழ்ந்தெழுந்து
துவ்வாத வமிழ்தனையாட் கெதிர்காட்டிச் சொல்லுவாள்         318
[இவ்வாறு பலரும் போற்ற எழுந்தருளி வரும் வழியில் அருகிறுந்து செம்மையாகத் தொண்டு செய்யும் மங்கலை என்னும் கரியகுழல் மடந்தையாகிய சேடி மனமகிழ்வோடு வணங்கிஅமிழ்தனையாளுக்குப் பின் வருமாறு கூறினாள்..]

அடியனேன் குளிர்தடமொன் றகழ்ந்தொருமண் டபமெடுத்தே
னிடுகிடைமெய்த்தவக்கொழுந்தே யிவையவையா மித்தகைய
தடவரைப்பு நீவதியத் தக்கதெனச் சாற்றுதலு
மடநடையாட் கவ்வாறு வரமருளி யவணெய்தி         319

[அடியனேன் குளிர்ந்த தடாகம் ஒன்று அகழ்ந்து அருகில் ஒரு மண்டபமும் எடுத்தேன். தவக்கொழுந்தே! இவையாம் அவை. இம்மண்டபம் நீ தங்குவதற்குத் தக்கது எனச்சொல்லவே,அம்பிகை அவ்வாறே ஆகுக என வரம் அளித்து அங்கு எய்தினாள்.]

மலர்கொழிக்கும் புனற்றடமும் மணிகொழிக்கும் மண்டபமும்
மலர்கருணை விழிசாத்தியாங் கொழிந்துமென் மெலப்போய்ச்
சுலவுதிரைக் கம்பைநதித் துறைமருங்கு சென்றெய்திப்
பலர்புகழும் மங்கலைக்குஞ் சண்டிகைக்கும் பணித்தருள்வாள்         320

[மலர்கொழிக்கும் புனல் தடாகத்தையும் மணி மண்டபத்தையும் கண்டு பின் அங்கிருந்து நீங்கிக் கம்பைநதித் துறையருகு சென்று பின் மங்கலை, சண்டி ஆகிய சேடியரிடம் இவ்வாறு பணித்தருள்வாள்]

கலிவிருத்தாம்
பிறைநிகர் வாணுதற் பேதை மீரிவண்
மறைதிரண் டுருக்கொளு மாவி தாகுமால்
இறைவன் என்றுமிங் கினிது வகிகலான்
நிறைவுடை யிதன்றிற நிகழ்த்தொ ணாதரோ         321
[பிறையை நிகர்க்கும் நெற்றியுடையீர்! இங்கு வேதங்கள் திரண்டு உருக்கொண்ட மாமரம் இதாகும். இறைவன் என்றும் இங்கு வசிப்பதனால் இதன் நிறைந்த சிறப்புக்களை எடுத்துக் கூறுதல் அரிதாகும்.]

மாவடி வாகிய பொழுது மாமறை
மூவர்கள் முதல்வனைப் பழிச்ச மூண்டெனப்
பூவலர் சினைதொறும் புக்கவண்டினம்
பாவல ரிசைக்குரல் பயிற்றல் கேண்மினோ         322
[வேதங்கள் மாமரமாகிய பொழுது, மூவர்களுக்கும் முதல்வனாகிய இறைவனைத் துதிக்கக் குழுமியதென பூத்த கிளைகள்தொறும் வண்டினம் இசை பயிற்றலைக் கேளுங்கள் ]

யான்றழு வியபொருண் மெய்யின் ஈர்ங்குழல்
மான்றழு வியபரன் என்று மாந்தரைத்
தான்றெளி வுறுப்பது தகைய அவ்விறை
போன்றுபா சடைதளிர் பொதுளல் காண்மினோ         323
[மறையாகிய யான் தழுவிய (உள்ளடக்கிய) பொருள் உண்மையில் உமாதேவியார் தழுவிய பரனே என்று மாந்தருக்குத் தான் தெளிவுறுப்பது போல பசுமையான இலையும் செம்மையான தளிரும் நெருங்கித் தழைத்தலைக் காண்க. ஈர்ங்குழல் மான் – ஈரமான, மெல்லியகுழல் மான் அடையடுத்ஹ உவமையாகு பெயராக உமையம்மையைக் குறித்தது. பாசடை- பசிய இலை.]

என்னையா ளுடையவன் எனது மாணிழன்
மன்னை ஐமுக வள்ளல் காண்எனாப்
பொன்னவி ருலகினைப் புகலப் போதல்போற்
பன்னெடுங் கிளைநிமிர் பரிசு காண்மினோ         324
[(மாமரமாகிய) என்னை ஆளுடையவன் எனது பெருமையுடைய நீழலில் நிலைபெற்றிருக்கும் ஐமுக வள்ளல் காண்க என்று உலகினுக்கு உரைப்பதுபோல் கிளைக்கள் நிமிர்ந்து இருக்கும் இயல்பினைக் காண்க. ஐமுக வள்ளல்- ஐந்து முகங்களை உடையவனாகி சிவபெருமான். ]

பிரிந்தமைக் கிரங்கியென் பெரியபூண்முலை
விரைந்தரன் புணரவோர் முயற்சி வேட்டென
அரந்தைதீர்த் தருளுமவ் வண்ணன் மெய்யெலாம்
புரிந்துமென் மலர்க்கணை பொழிதல் காண்மினோ         325
[உமையைப் பிரிந்த பிரிவுக்கு வருந்தி அவளைப் புணர விரும்பி முயற்சி செய்ததென, அவ்வண்ணலின் உடல்மேலெல்லாம் மலரம்புகள் சொரிதல் காண்மினோ. (மாவடி நீழலில் இருக்கும் இலிங்கத்தின்மீது மாம்பூ கிடப்பதை இவ்வாறு கூறியது மாம்பூ மன்மதன் கணைகளில் ஒன்று. ) ]

இனியன இவைநுகர் கென்று தன்முதற்
புனிதனுக் களித்திடத் தாழ்ந்த பொற்பெனக்
கனிநறுங் காய்ஞெமிர் கனத்தி னாற்கொழுஞ்
சினைநனி குரங்கிய செய்கை காண்மினோ         326
[இனியனவாகிய இவற்றை நுகர்க என்று தன் முன் முதலாகிய புனிதனுக்கு அளித்திடத் தாழ்ந்த இயல்பினதெனக் கனி நறுங்காய்கள் ந்ருங்கிய பாரத்தினால் கிளைகள் வளைந்துள்ள செய்கையினைக் காண்மினோ. தன் முதல்- தனக்கு ஆதாரம். புனிதன் – தூயவன், சிவன். ஞெமிர் கனத்தினால்- வளைதற்குரிய பாரத்தால். குரங்கிய- வளைந்த.]

கொச்சகக்கலிப்பா
இன்னவகை மறைமாவின் வளம்பலவும் எடுத்தியம்பிக்
கன்னிமா வடிமுளைத்த கண்ணுதலார் பெருமையுமற்
றன்னவர்கட் கறிவுறுத்தி யண்ணலார் சிவபூசை
இந்நிலையில் யான்புரிய வெப்பொருளுங் கொணர்கென்றாள்         327
[இப்படியாக வேதமாகிய மாமரத்தின் பெருமைகள் அனைத்தையும் எடுத்து விரித்து ஓதி, இளமையான மாவடியின் முளைத்த சிவபெருமானின் பெருமையும் அவர்களுக்கு அறிவுறுத்தி , சிவபூசை புரியத் தேவையான எல்லாப்பொருள்களையும் கொண்டு வருக என அம்மை இயம்பினாள்.]

உய்ந்தன முய்ந்தனம்யா மென்றொளிர் கமலப்பதம் வணங்கிச்
சந்தநறுங் களபமுலைத் தையலா ரிருவர்களுங்
கந்தமலி கற்பகமுங் கதிர்மணியு மிருநிதியும்
வந்துவளம் முழுதளிப்ப வகுத்துவினைத் தலைநின்றார்         328
[அம்மை கூறிய பணியைக் கேட்ட மங்கலை சண்டிகை இருவரும் உய்ந்தோம் உய்ந்தோம் என்று கூறி இறைவியின் ஒளிர்கின்ற தாமரையாகிய திருவடிகளை வணங்கி மணமிகு கற்பகமும் ஒளிமிகு சிந்தாமணியும் பூசைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் முழுமையாக அளிக்க, அன்னியின் பூசைக்குத் துணையாக முன்னின்றனர். ]

பீடுமலி சிவபூசை பேரன்பிற் செயத்தொடங்கி
ஆடுதற்குஞ் சிவன்முடியின் ஆட்டுதற்கும் இருதீர்த்தந்
தேடருஞ்சீர்க் கம்பத்தின் றென்பாலும் வடபாலும்
கோடுயர்வெற் புயிர்த்தெடுத்த கொம்பனையாள் நிருமித்தாள்         329
[ பெருமைமிகு சிவபூசையைப் பேரன்பினுடன் செயத் தொடங்கித் தான் ஆடுதற்கும், சிவன் முடிமேல் ஆட்டுதற்கும் இரு தீர்த்தங்களைப் புகழ்மிக்க கம்பத்தின் தென்பாலும் வடபாலும் இமயமலை பெற்ற கொம்பனையாள் நிருமித்தாள்]

கீர்த்திமிகு மவ்விரண்டுங் கிளக்குமுமா பத்திரம்நன்
கீர்த்திமதி யெனநாமங் கிளர்தரச்செய் துலகத்துக்
கீர்த்திபெறு தீர்த்தமெலாங் கெழுவித்தாள் காப்பதற்குக்
கீர்த்திமதி யெனுமணங்கை நிறீஇனாள் கேடில்லாள்         330
[பிறப்பிறப்பிலாளாகிய அன்னை, புகழ்மிக்க அத்தீர்த்தங்கள் இரண்டனுக்கும் முறையே உமாபத்திரம் , நன்கீர்த்திமதி எனப் பெயர் சூட்டி, உலகத்தில் கீர்த்தி பெற்ற தீர்த்தங்களையெல்லாம் அவற்றில் நிறைவித்து, அவற்றைக் காக்க கீர்த்திமதி எனப் பெயரிய அணங்கொருத்தியையும் நியமித்தாள்.]

தென்பாலிற் கூவனறுந் தீர்த்தவுமா பத்திரத்தின்
மின்பாய்ந்து துளைவதென விதிப்படிநீர் தோய்ந்தருளிப்
பொன்பாவுதிருமேனி பொலிதக வெள்ளணியணிந்து
கொன்பாவு வெண்ணீற்றுக் குருக்கவயத் திடைப்புக்காள்         331
[கூவல்- கிணறு. இங்கு அம்மை அமைத்த தீர்த்தம். தென்பாற் தீர்த்தமாகிய உமாபத்திரத்தில் மின்னல் பாய்ந்து துளைவதைப்போல் விதிப்படி நீராடி பொன்னிறத் திருமேனி பொலிய வெண்மையான ஆடை அணிந்து, திருவெண்ணீற்றைக் கவசத்திடைப் புகுந்தாள். வெண்ணீற்றுக் கவசம்- உடல் முழுதும் திருநீற்றினை நீரிற் குழையாமல் உத்தூளனமாகப் பூசுதல். கொந் பெருமை. குரு- நிறம். கவயம்- கவசம்.]

வெள்ளனத்து மிசைக்கிடந்த வெள்வரிக ளெனமெய்யின்
ஒள்ளொளிய வுத்தூளத் தொழுங்குறுபுண் டரந்தீட்டிக்
கள்ளவினைக் கட்டறுக்குங் கடவுண்மணித் தொடைபூண்டு
தெள்ளுமுறை யாலங்கட் செய்வனவெல் லாஞ்செய்தாள்         332
[வெள்ளை நிற அன்னப் பறவை மீது வெண்மைநிற வரிகள் கிடந்தாற்போல தன் உடலில் உத்தூளனமாகக் கிடந்த நீற்றின் மீது ஒழுங்கமைந்த திரிபுண்டரங்கள் தீட்டினாள்; வஞ்சவினைத் தொடர்பறுக்கும் அக்கமணிவடம் பூண்டாள்; பூசைக்குக் குழப்பமின்றிச் செய்வன எல்லாம் திருந்தச் செய்தாள். அனம்- அன்னம், இடைக்குறை. புண்டரம்- திருநீற்றினை நீரிற் குழைத்து மும்மூன்று வரிகளாக நெற்றி முதலாய இடங்களில் அணிதல். கள்ளவினை- வஞ்சவினை. கடவுண்மணி- உருத்திராக்கம். ]

கலவமயில் நடந்ததெனக் கமழ்புனலின் கரைநின்றுங்
குலவியுயர் தனிமாவைக் குறுகுவாள் சென்றெய்தி
யலகில்புகழ் அரசன்னம் ஐங்கரனைத் தென்மேற்பால்
பலவிடர்க்கும் பலவிடரைப் பண்ணுகவென் றிருவினாள்        333
[கலவம்- கலாபம், தோகை. குறுகுவாள்- அணுகுவாளாய். இடருக்கு இடர்செய்க. இருவினாள்- இருத்தினாள்.
தோகைமயில் நடந்ததென தீர்த்தக் கரியினின்றும் நடந்து ஒப்பற்ற மாமரத்தினை அணுகுவாளாகிச் சென்றடைந்து, அரசன்னமாகிய அம்மை, ஐங்கரனாகிய விநாயகப் பெருமானைச் சிவபூசைக்கு வரும் இடையூறுகளுக்கு இடையூறு செய்யுமாறு பணித்து இருத்தினாள்.]

ஆனாத பேரறிவா யகம்புறமு நிறைந்தெல்லாம்
தானாகி நின்றருளுந் தனிமுதலை யேகம்பத்
தீனோரும் வழிபடுமா றெளிவந்த தெள்ளமிழ்தை
யூனாதி கசிந்துருக வுயர்பூசை புரிகுவாள்         334
[ஆனாத- குறையாத, நீங்காத. ஈனோர்- விதிப்படி வழிபடும் ஆற்றலும் அறிவும் இல்லாதவர்கள். நீங்காத பேரறிவாய், உலகுயிர்களின் உல்லும் புறமும் நிறைந்து, அனைத்தும் தானாகி நின்றருளும் ஒப்பற்ற முதலை, வழிபடும் வலிமையில்லாதவர்களும் வழிபடுமாறு எளிவந்த தெளிந்த அமிழ்து போல்வானை, ஊன் முதலியனவும் கசிந்துருக உயர்பூசனை செயத் தொடங்கினாள்.]

சுருக்கமிலா கமவிதியா லைவகைச்சுத் தியுமமைத்து
மருக்கிளர்பூங் குழன்மடவார் மாறாது பணிகேட்ப
ஒருக்குமனத் தினளாகி யுயர்கீர்த்தி மதித்தீர்த்தந்
திருக்கிளர்பா றயிரனைத்துஞ் சிவமனுவா லாட்டினாள்         335
[ஆகமவிதியினால் உலோபமின்றிப் பூத முதலாகிய ஐவகைச்சுத்தியும் செய்து சேடியர் ஏவிய பணிகளைத் தடையின்றி செய்ய, ஒன்றிய மனத்தினளாகி உயர்ந்த கீர்த்திமதி தீர்த்தம் ஞானமலி பால் தயிர் ஆகிய அனைத்தையும் சிவமந்திரம் உரைத்து ஆட்டினாள். ஆகம வழிப்படி செய்யும் பூசனையே சிறந்தது.]

நுழையிழைநூற் கலிங்கத்தாற் றிருமேனி நொய்தொற்றி
விழைதருகோ வணமரைநாண் மேதகுபட் டுடையணிந்து
குழைவிரைச்சந் தனச்சேறு கொட்டிமணத் துகளட்டி
இழைவருக்கந் திருமேனி யெங்குமெடுத் தலங்கரித்தாள்         336
[நுண்ணிய நூலிழையாலான ஆடையினால் ஈரத்தை ஒற்றி எடுத்தாள்; விருப்பத்தைத் தரும் கோவணஆடை அரைஞாண் பட்டுடை அணிவித்தாள்; சந்தனக் குழம்பு சாத்தினாள்; அதன்மேல் வாசனைப் பொட்டி அட்டினாள். மாலை வருக்கம் திருமேனி எங்கும் சாத்தினாள்.]

சுவையாறும் பழுத்தொழுகுந் தூயநால் வகையுண்டி
நவைதீர்ந்த பொற்கலத்தின் நயந்தமுது செய்வித்தாங்
கவிர்தூப தீபமுதற் பணிமாறி யன்பாற்றின்
இவர்தருசை வாகமநூல் விதியெலா மியற்றினாள்         337
[அறுசுவை மிக்க நால்வகை உண்டிகளைக் குற்றமற்ற பொற்கலத்தில் இட்டு அமுது செய்வித்து, தூபதீபங்காட்டி அன்பினால் மேன்மைதரும் சைவாகம விதிப்படி எல்லாச் செயல்களையும் இயற்றினாள்.]

இவ்வாறு நாடோறும் மேன்மேல்வந் தெழும்அன்பிற்
செவ்வாய்மைத் திருவுள்ளங் களிசிறப்பத் தேம்புமிடை
மைவாருங் குழற்கவுரி மதின்மூன்று மொருகணையால்
எய்வாரைப் பூசனைசெய் தினிதிருந்தா ளக்காலை         338
[இவ்வாறு நாள்தோறும் மேலும்மேலும் வந்து எழும் அன்பினால் கள்ளமிலாத் திருவுள்ளத்தில் மகிழ்ச்சி ஓங்க, கவுரி,ஒருகணையால் திரிபுரம் மூன்றையு மெரித்த பிரானாரைப் பூசனை செய்து இனிதிருந்தாள். அந்நாளில், தேம்பும் இடை- ஒசியும் இடை. மைவாருங்குழல்- கருங்குழல். மை- கருமை.]

கலிவிருத்தம்
உலையுங் குளிர்கூ திரொழிந் ததுவில்
மலையங் கையினா ரைவழுத் தியருள்
குலவம் பிகைபா லுறுதன் குளிர்போய்ச்
சுலவுந் திறமஞ் சியசூழ்ச் சியென.        339
[ வில்லாக மலையைக் கையில் உடையவரை வழுத்தி அவருடைய அருள்கலந்து இருக்கும் அம்பிகையிடத்து உறுதலைக் குளிர் அஞ்சியதைப் போல வருத்தும் குளிருடைய கூதிர் ஒழிந்தது]

தானா டியதண் மலையீன் றவிள
மானாடியவண் டவநோக் கியமண்
மேனாடி யெழுந்ததுவீ ழநறும்
பானாடியமுன் பனியாய்ந் ததுவே.         340
[தான் விளையாடிய குளிர்ந்த இமயமலை ஈன்ற மானாகிய அம்மை விரும்பி மேற்கொண்ட தவத்தைக் காணும் பொருட்டு மண்மீது நாடி எழுந்தது போலக் காட்சி அளித்தது, பால்போன்ற வெண்பனி வீழ்ந்தது. தான்+ ஆடிய. இளமான் நாடிய, மேல் நாடி ]

வேறு
கூதி ராலுமுன் குழைந்த மாதர்கள்
ஏது செய்துமற் றிதனுக் கென்றுளம்
போத நோதகப் பொங்கு தண்பனிச்
சீத வெண்முகில் செறிவு கொண்டதே.         341
[கூதிரால் வருந்திய மாதர்கள் இக்கூதிருக்கு என் செய்குவோம் என்று உளம் மிகவும் வருந்த குளிர்ந்த பனியின் குளிர்ச்சியுடன் வெண்முகில் நிறைந்தது. முந் ஏழாம் வேற்ருமைச் சொல்லுருபு. குழைந்த- வருந்திய. போத- மிகவும். நோதக- வருந்த]

பிரிந்து ளாருளம் பீழை மல்கலாற்
பொருந்தி னாருளம் பொலிவு மல்கலாற்
பரந்து நின்றுவீழ் பனியின் மென்றுளி
வரிந்த வேள்சிலை வாளி போன்றதே        342
[ பனிக்காலம் காதலர்ப் பிரிந்தாருக்குத் துன்பத்தையும் கூடியவர்க்கு இன்பத்தையும் தருதலினால், பனியின் மென் -துளி மன்மதனின் கட்டமைந்த வில்லினின்றும் புறப்படும் மலர்க்கணை போன்றது.]

ஐய புல்லறு காதி யெங்கணும்
பெய்யு நுண்பனித் துளிபி றங்கின
வைய மங்கைதன் மகிழ்நர் தோண்மரீஇ
மெய்யெ லாம்வியர் பொடித்தல் வீழுமே.         343
[எங்கணும் மெல்லிய புல் அறுகு முதலிய தாவரங்களில் நுண்ணிய பனித்துளிகள் ஒளிர்ந்தன; பூமியாகிய மங்கை தன்னுடைய கணவர் தோளினை அணைந்து உடல் முழுதும் வியர்வை பொடித்தலைப் போலும்.]

அன்ன மென்றுளி யவனிமங் கைதான்
றன்னி டத்துமை தவமி யற்றலுங்
கொன்ன றம்புரி கோல மும்வியந்
துன்னி யுற்றமெய்ப் புளகமும் பொரூஉம்         344
[ அத்தகைய மெல்லிய பனித்துளி நிலமடந்தை தன்னிடத்து வந்து உமையம்மை தவமியற்றுவதும் மிக்க அறம்புரி தவக்கோலமும் கண்டு வியந்து நினைக்க உற்ற மெய்சிலிர்ப்பு ஒக்கும்.]

மலியு நீற்றுடற் கவுரி மானநோய்
மெலியி மத்தினான் விளர்த்த யாவையு
முலக முற்றுமை யுருவ மென்பதை
யிலகு காட்சியிற் றெளிவித் தென்னவே.        345
[உடல் முழுதும் வெண்ணீற்றுப் பூச்சு நிறைந்த கவுரியைப் போல, வெண்பனியினால் விளர்த்து வெளிறிப்போன யாவையும் , உலகம் முற்றும் உமையின் உருவம் எனும் உண்மையைக் காட்சி அளவையில் தெளிவித்தன. மலியும்- நிறையும். மான- போல, உவம உருபு. இமம்- பனி. விளர்த்த- வெளிறிய. காட்சியில்- காட்சி அளவையில்]

அனைய தண்பனி யால்வெளுத் தொளிர்
கனைக டற்புவிக் கன்னிதா னுமெய்
வனிதை போற்றவ மருவ மெய்யெலாம்
புனித நீறுதோய் பொலிவும் போன்றதே.         346
[ அத்தகைய வெண்பனியினால் வெளுத்து மிளிர்கின்ற புவியாகிய கன்னியும், உமையம்மையைப் போலத் தவம் ஏற்க உடலெலாம் புனித வெண்ணீறு தோய்ந்தமை போன்ற பொலிவு பெற்றது. கனைகடல்- ஒலிக்கின்றகடல். கடற் புவி- கடலால் சூழப்பட்ட புவி. புவிக்கன்னி- நிலமகள். மெய்வனிதை- உமை. பொலிவு- அழகு, காட்சி.]

கதிரி னால்தனைக் காதும் வெய்யவன்
வதுவை செய்மனை யாவ தோர்ந்தெனப்
பொதியும் வெப்பி னிற்பொழி வழிந்துதண்
பதுமம் வாடு றப்பகை விளைத்ததே         347
[வெய்யவன் -சூரியன். வதுவை- கலியாணம். மனை- மனவி, வீடும் ஆம். பதுமம்- தாமரை. காதும்- கொல்லும். சூரியன் தன்னுடைய கதிரினால் தன்னைக் கொல்லுதலால், குளிர்பனி, சூரியனின் மனையாள் ஆவது நினைந்து மூடும் வெப்பத்தினால் பொலிவழிந்ததைப் போல் தாமரை மலர் வாடும்படியாகப் பகை விளைத்தது]

கரிந்த தாமரைக் கதிய வண்டினம்
புரிந்து போதுவ பெட்பி னோயினாற்
பரிந்த நுண்ணிடைப் பாவை மார்தமைத்
தெரிந்து காமுகர் நீங்கிச் சேறல்போல்         348
[கதிய- கதுவிய. பெட்பு இல் நோய்- விருப்பம் இல்லையாதற்குக் காரணமாகிய நோய். பரிந்த – இரங்கிய, வருந்திய.
குளிர்பனியினால் கருகிய தாமரையைப் பற்றியிருந்த வண்டுக் கூட்டம் விருப்புடன் பிரிந்து போதல், விருப்பம் இன்மைக்குக் காரணமாகிய நோயினால் பீடிக்கப்பட்டு வருந்தும் நுண்ணிடைப் பாவைமார்களை, அவர்களின் நிலையைத் தெரிந்து காமுகர்கள் நீங்கிப் போதலைப் போலாம்.]

நோயி னாலுயிர் நொந்து மென்மல
வீயு மாந்தர்போல் வெய்ய தண்பனி
பாய நீரினாற் பங்க யக்குலந்
தீயு டன்றென முழுதுந் தீந்தவே         349
[நோயினால் உயிர்வருந்தி மெலமெல்ல இறக்கும் மாந்தர்களைப்போல கொடிய குளிர்ந்த பனி பாயும் இயல்பினால் தாமரைமலர்கள் தீயில் வாட்டியது போல முழுதும் தீய்ந்து போயின]

ஆடு மாந்தருக் கார்வ மற்றெனத்
தோடு கொண்டதூ வெள்ளை யன்னமு
நீடு தண்டுறை யாடல் நீங்கின
பேடை யோடுதண் சோலை பேணிண         350
[நீரில் விளையாடும் மாந்தருக்கு அதில் ஆர்வம் நீங்கியது போலத் தோகை கொண்ட தூய வெள்ளை அன்னமும் குளிர்ந்த நீர்த்துறையில் ஆடல் நீங்கித் தன் பேடையுடன் குளிர்ந்த சோலைக்குள் செல்லுவதை விரும்பின]

அணங்கு வெம்பனிக் கழக ழிந்துகார்
இணங்கு மெய்யினார் எவரும் ஆதலாற்
றணந்து ளாரையுந் தலைப்பட் டன்பினான்
மணந்து ளாரையும் வகுக்கொ ணாதரோ         351.
[அணங்கும்- வருத்தும். தணந்துளார்- பிரிந்துளார். மணந்துளார்- கூடியுள்ளார். வருத்துகின்ற கொடிய பனியினால் அழகழிந்து கருத்துப் போன உடம்பினா எவரும், ஆதலால் காதலரைப் பிரிந்து வருந்துவாரையும் காதலரை மணந்து மகிழ்ந்துளாரையும் பிரித்து அறிய முடியாததாயிற்று]

மண்டு வெம்பனி மறலுநீர் மையான்
விண்ட வூறுமான் மேயவன் பர்தே
னுண்ட பற்குறி யூறும் வேற்றுமை
கண்டி டப்படா கன்னி மாரிதழ்         352
[மண்டு- மூண்ட, நெருங்கிய. மறலும்- பகைகொளும், மாறுபடும். விண்ட ஊறு- வெடித்த புண். மூண்ட கொடிய பனி பகைத்த இயல்பினால் வெடித்த புண்ணும், காதன்மயக்கத்தினால் அன்பர் இதழமிழ்தம் உண்ட பற்குறியும் வேற்றுமை கண்டிடப்படாதனவாயிருந்தன, கன்னிமார்களின் வாயிதழ்கள்.]

களவி னன்பரைக் கலந்த மாதருள்
அளவு பற்குறிக் கஞ்சு வாரிலை
இளிவு றுத்திமத் திதழ்வெ டித்ததோர்
பிளவி தாமெனப் பெயர்க்கு மாற்றலால்         353
[அளவு- அளவை. களவுக் கூட்டத்தில் தலைவனைக் கலந்தின்புற்ற மாதருள் பற்குறி களவொழுக்கத்தினைக் காட்டும் அளவையாகும். ஆனால் பனிக்கு இதழ் வெடித்தது எனக் கூறிப் பெயரலால் களவு மாதரில் பற்குறிக்கு அஞ்சுவாரில்லை. ]

இரவி மேற்கட லெய்து முன்னரே
விரவு மாந்தர்கள் விளங்கு மாளிகைப்
புரவி பூண்டனர் புகுவ ரல்லது
பரவை வீதி யிற்படர் கிலார்நிசி         354
[ சூரியன் மேற்கடலில் சாயும் முன்னமேயே மாந்தர்கள் மாளிகையில் புகுவரல்லது, கடல் போன்ற வீதியில் இரவில் செல்லமாட்டார்.]

அரமி யங்க ளுமலர் பொதும்பரும்
பரவு சீத ளப்பனி மதிக்கலும்
விரவு மேனி லமேடை யுங்கவி
னிரியல் போயின வெவரு நீத்தலால்         355
[அரமியம்- நிலா முற்றம். நிலா முற்றங்கலும் மலர்ச்சோலைகளும் திண்ணைகளும் குளிர் பனி அரித்தலினால் அவற்றை எவரும் ஒதுக்கவே அவற்றின் அழகு அழிந்தன.]

சந்த னங்க ளுந்தரள மாலையுங்
கந்த நீர்களுங் கமழ்செய் மாலையும்
அந்தில் ஏந்துறா ஆவ வணங்களு
நொந்தி மத்தினால் தாமும் நூக்கல்போல்         356
[அந்தில்- அசை. ஆவணங்கள்- கடைகள். இமம்- பனி. நொந்து- வருந்தி. நூக்கல்- பரிகரித்தல்.பனியினால் வருந்தி தாமும் பரிகரிப்பனபோல் கடைவீதிகள் சந்தனம், முத்துமாலைகள், வாசனைத் திரவங்கள், மணமாலைகள் போன்றவற்றைக் விற்பனை செய்யா.]
திங்கள் காலொளித் தெண்ணி லாவுடற்
றங்கு தோறுயிர் தளர்வர் யாவரும்
பொங்கு மில்லறம் புகரென் றோம்பினார்
நங்கை மார்கரந் தீண்ட நைந்தென         357
[ கால்- வெளியிடும். ஒளித்து- ஒளியினால். புகர்- குற்றம். புகரென்று ஓம்பினர்- துறவியர்.பெண்டிருடன் வாழும் இல்லறம் குற்றமுடைத்தென்று துறந்து வாழும் துறவியர் மகளிர் கைபட நைந்ததைப் போலச் சந்திரனின் ஒளி தீண்ட உடல்தோறும் தங்கும் உயிர் தளர்வர்]

அழற்று வெம்மைய வங்க ராகமுஞ்
செழுத்த காரகிற் செறித்த தூமமு
மிழித்தி லாவெலி மயிரின் போர்வையுங்
கழித்தி லாரரைக் கணமும் யாவரும்         358
[அங்கராகம்- உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம். தூமம்- புகை. கழித்திலார்- நீக்கார். கொதிக்கின்ற வெப்பமே உடலிற் பூசும் பரிமளதிரவியம், கரிய அகில் எரித்த செறிந்த புகைம், இழிவானதெனப்படா எலி மயிற்கம்பளம் ஆகியவற்றை யாவரும் அரைக்கணமும் நீக்கார்.]

ஒருவர் மெய்வெதுப் பொருவர் மெய்யினின்
மருவி வன்குளிர் மாய மார்பெலாம்
பொருமு கொங்கைகள் புதையப் புல்லுவார்
திருவ னார்களுஞ் செல்வ மைந்தரும்         359
[மெய் வெதுப்பு- உடல் வெப்பம். வன்குளிர்- கடுமையான குளிர். திரு- திருமகள். ஒருவருடம்பின் வெப்பம் ஒருவர் உடம்பினில் பொருந்தி கடுங்குளிர் நீங்க, தம்முடைய மார்பகலத்தில் விம்மும் கொங்கைகள் புதையப் புல்லுவார் திருமகள் அனைய மகளிரும், செல்வமைந்தர்களும்.]

புகையு மப்புறம் போதொ ணாவகைத்
தகையு முள்ளறைத் தடவுச் சேக்கையி
னகிலி னிற்புகை யார்த்தி வைகலாற்
பகவன் ஆருமால் படிவ மெய்தினார்         360
[தகையும்- தடுக்கும். தடவு- தீச்சட்டி. சேக்கை- படுக்கை. பகவன் -சிவன் பகவன் ஆருமால்- சிவனொடு கூடிய மால்., சங்கரநாராயணன். புகையும் அப்புறம் போக ஒண்ணாதவகை தடுக்கும் உள்ளறையில் தீச்சட்டியில் அகிலிற்புகை எழுப்பிப் படுக்கையில் தங்கலினால் சங்கரநாராயண வடிவம் எய்தினார். நெருப்புச் சுடர் படிந்தபக்கம் செந்நிறத்ததாய்ச் சிவனாகவும் புகைபடிந்த பக்கம் கருநிறத்ததாய் நாராயணனுமாகவும் உருவகித்தார்.]

மாலும் வானவ ரிறையு மாரனுங்
கால வெம்பனி காத நொந்துமு
னீல வொண்புகை யாத்த நீர்மையாற்
போலு மெய்யெ லாம்புகர் படைத்ததே.         361
[திருமாலும் வானவர் அரசனாகிய இந்திரனும் மன்மதனும் இயமனைப் போலக் கொடிய பனி தாக்குதலினால் நொந்து கருகிப் போன இயல்பினால்போலும் உடலெலாம் கருமை படைத்தது. புகர்- குற்றம்- கருமை. இம்மூவரும் கருநிறத்தவர்]

நெடிய வானமு நீண்ட வேலையுங்
கடிய சோலையுங் கரிய குன்றமு
மடமை மாதரார் வளர்மென் கூந்தலுங்
குடிகொள் காருமக் கொள்கை போலுமால்         362
[நீண்ட ஆகாயமும் நீண்ட கடலும் மணமுள்ள சோலையும் கரியகுன்றமும் இளைய மாதரார் நீண்ட கருங்கூந்தலும் கருமை கொண்டது முன்னற் கூறியவாறு அகிலின் புகையைக் கொண்டமையால் போலும். குளிரின்மிகுதியும் அதைப் போக்க இட்ட அகிற்புகையின் மிகுதியும் குறித்தவாறு]

முடங்கு வார்கழன் முன்கை மார்புவைத்
தடங்கி யன்னைய ரகட்டி னொன்றுற
வொடுங்கி மைந்தர்க ளுறக்க மேயினார்
வடங்கொ ணித்திரை மாய னொத்துளார்.         363
[முடங்கு வார்கழல்- கழல் ஆகுபெயராய்க் காலினை உணர்த்திற்று. முடங்கு- மடக்கிய. அடங்கி- குறுகி. அகடு- வயிறு. வடம்- ஆலிலை. மடங்கிய கால்களையும் முன்கைகளையும் மார்பில் வைத்துக் குறுகித் தாயர் வயிற்றிலே வயிறோடு ஒடுங்கி மைந்தர்கள் கிடப்பது போல உறக்கம் கொண்டவர்கள் ஆலிலையில் நித்திரை கொண்ட மாயனை ஒத்தார். வடங்கொள் நித்திரை மாயன் -ஆலிலைக் கண்ணன்]

அறையும் போர்வையு மடுத்த ணைத்தனர்
உறைத லாற்றுயில் எவர்க்கு மோங்கலான்
மறையிற் புல்லப்போ மகளிர்க் கவ்விராக்
குறையின் றாயது கூதிர் போலவே.         364
[அறைக்குள் போர்வை போர்த்தி அணைத்தனராகி உறைதலால் எவருக்கும் துயிலே மிக்கது. அதனால் களவில் காதலரைக் கூடப் போகும் மகளிருக்கு அவ்விராக் குறைவின்றாயது, குறையாக் கூதிர் போலவே. மறை- களவொழுக்கம். ஓங்குதல்- மிகுதல். குறையின்றாயது- குறிவின்றிப்பெருகியது.]

கந்தை பின்புறங் காக்க விட்டுமூ
மந்தி போலமுள் காந்து வார்கழற்
பந்த முற்றுறப் பாணி கோத்துள
நொந்தி ருப்பர்முன் னோற்றி லாரெலாம்         365
[முன்னைப் புண்ணியம் இல்லாரெல்லாம், கந்தைத்துணி முதுகுப்புறம் காக்க விட்டு, முதியமந்தி முள்காந்திருப்பதுபோல கால்களைக் கைகளைக் கோத்து கட்டிக்கொண்டு தம்மை நொந்திருப்பர். மூ மந்தி- கிழட்டுமந்தி. முள்காந்து- குத்தவைத்து உட்கார்ந்து கால்களைக் கைகளால் கட்டிக் கொண்டு முகத்தை முழங்காலின் மேல் வைத்துச் சோம்பியிருத்தல், மவுனமாயிருத்தல், குக்குடாசனம் இட்டிருத்தல் எனலுமாம்]

முதுமை மாந்தர்கள் மூரற் பந்திகள்
ததைய மோதுவ தாள மாகவாய்க்
கதிகொண் மெல்லிசை கறங்கி யங்களா
வதர மாடுவ வங்கை யாடுவ.         366
[முதிய மக்களின் பல்வரிசைகள் நெருங்கி மோதுவதே தாளமாகவும், வாயசைவினால் வரும் ஓசை மெல்லிசையாக ஒலிக்க வாய் களமாக அதரம் ஆடும், கைகளும் ஆடும். குளிரால் வாயும் கையும் நடுங்குவது கூறப்பட்டது. மூரற் பந்திகள்- பல்வரிசைகள். கதி- அசைவு கறங்கி- ஒலித்து. அதரம்- உதடுகள்]

தலைவர் நீங்கிய தையன் மெல்லியர்
உலையும் வாடையா லுடைந்து மாமழை
புலவு வேல்விழி பொழியப் பீர்முலை
மலைகள் பூப்பமுன் மாரி காட்டுவார்.         367
[தலவரைப் பிரிந்த அழகிய இளமகளிர் வருத்தும் வாடைக்கு உள்ளம் உடைந்து மிக்க மழைபோலக் கண் நீர் பொழிய, பீரினை முலைகளாகிய மலைகள் பூப்ப மழைமேகத்தைக் காட்டுவர். மகளிர் மாரி காட்டுவர் எனக் கூட்டுக. புலவு வேல் விழியின் கூர்மையச் சுட்டியது. பீர்- பசலை. தலைவரைப் பிரிந்த மகளிருக்கு வரும் நிற வேறுபாடு. பீர்க்கம்பூ நிறம் கண் நீர் பொழிய முலை பீர் பூக்கும் என்பது நயம்]

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
நாரணர் விரிஞ்சர் தேறா நம்பனார்க் கலர்கள் கொய்வான்
பூரணி விடியற் காலை புகுந்திற னுணர்ந்தா லென்னக்
காரணி சோலை முற்றுங் கழீஇப்பெருந் தூய்மை செய்யு
மேரணி சிறப்பு வாய்ப்ப விறுத்தபின் பனிமா மேகம்         368
[திருமால், பிரமன் காணா இயலாத இறைவரை வழிபட மலர்களைக் கொய்யும் பொருட்டு இறைவி விடியற்காலையில் சோலைக்குள் புகும் இயல்பினை அறிந்ததைப் போன்று பனிமேகம், கார் மேகம் தோயும் சோலையை முற்றும் கழுவித் தூய்மை செய்யும் பேரழகின் சிறப்பு வாய்ப்பத் தங்கியதற்பின்]

அருள்கொழித் தொழுகும் வாட்கணம் பிகைபுரி பூசைக்கு
மருமிகுத் தொழுகுந் தேறன் மலர்நனி யுதவித் தங்கள்
இருள்பழுத் தொழுகும் நீல நிறமிரித் திட்டா லென்னச்
சுருள்விரித் தொழுகுஞ் சோலை தூத்தக வெளுத்த தம்மா.         369
[அருள் கொழித்து ஒழுகும் ஒளியுடைக்கண் அம்பிகை புரியும் பூசைக்கு மணமிகுத்துத் தேன் ஒழுகும் மலர்கலை மிக உதவித் தங்கள் இருள் மிகுத்து ஒழுகும் இருள் நிறத்தை ஒழித்தது என்னும்படியாகச் சோலை தூய்மை தோன்ற வெளுத்தது.]

இறைமக னாகி வாழு மிறும்புசூ ழிமயக் குன்றங்
கறைகொடா திருப்பச் சீறிக் கடாவலும் இறந்து முற்றி
நிறையமேல் இவர்ந்து வண்மை நிலைகெட வளைத்த தேய்க்குங்
குறையறு வளஞ்சூ ழெல்லாக் குன்றினும் பனிசூழ் தோற்றம்.         370
[ இறும்பு- சிறு குன்றுகள். கறை- கப்பம், திறை, கடாவல்- கேட்டல் குன்றுகள் சூழ அரசனாகி வாழும் இமயமலை, கப்பம் கேட்டுக் கொடாமையினால் அம்மலைகளைக் கடந்து முற்றுகையிட்டு வளைத்ததை ஒக்கும், குறைவற்ற வளங்கள் கொண்ட எல்ல மலைகளின் மேலும் பனிகவிந்த தோற்றம். இமயமலை பனியும் தலைமையும் உடைமையின், ஏனைய மலைகளின் ப்னிசூழ் தோற்றத்தை இவ்வாறு உரைத்தார்.]

வலம்புரி தடந்தோ ளன்பர் வரப்பெறு மாத ரார்க்குக்
கலம்புரி வெந்நீ ராட்டுங் கடும்பனி கணவ ரெய்தாப்
புலம்புறு மாத ரார்க்கும் புணர்விழி வெந்நீ ராட்டி
நலம்புரி யறிஞர் போல வொப்புர வாற்று நாளும்.         371
[கடும் பனி, வெற்றி புரிகின்ற வலிமையான தோள் தலைவர் வரப் பெற்ற மாதரார்க்குக் கலத்தில் மொண்டு ஆட்டும் வெந்நீராட்டியும், கணவரோடு கூடப் பெறாத தனிமையுறு மாதர்க்கு கண்ணீராகிய வெந்நீராட்டியும் நடுவுநிலைமையில் நிற்கின அறிஞர் போல நாளும் ஒப்புரவாற்றும்]

கணவரைப் பெற்றா ரன்னோர் கமழ்புயந் துணையாக் கொண்டு
மணியணை நீங்கி முன்றில் வந்திடார் கதிர்தோற் றத்துந்
துணைவரை யுறாரு மன்னோ துன்பமே துணையாக் கொண்டு
பிணிமலர்ச் சேக்கை நின்றும் பெயர்ந்திடார் கலந்தா ரொத்தார்.         372
[கணவரைப் பெற்றோர் அவ்ருடைய தோளைத் துணையாகக் கொண்டு அழகிய அணை(படுக்கை) நீங்கி முன்றில் வந்திடார்; துணைவரைப் பெற்றிடார், சூரியன் உதித்த பின்னும், துன்பமே துணையாக் கொண்டு தம்மைப் பிணிக்கும் படுக்கையிலிருந்து பெயர்ந்திடார்.; அதனால் தலைவனொடு கலந்தாரை ஒத்தார். அன்னோ- இரங்கற் குறிப்பு. படுக்கையைவிட்டுப் பெயராமை கலந்தார்க்கும் பிரிந்தார்க்கும் பொது]

காலையுமிரவே யென்னக் கள்ளுயிர்த் தலர்ந்த பல்வீச்
சோலையும் ஆறுங் குன்றுஞ் சூழ்ந்துகொள் பனியின் தோற்றம்
வாலரை முதலா யுள்ளோர் குளிர்ப்பிணி மடங்கக் காய்வான்
சாலவும் வளர்த்த செந்தீ தருபுகைப் படலை யொக்கும்         373
[காலை- பகல். கள்-தேன். வீ- மலர். வாலர்- பாலர், பதினாறு ஆண்டுப் பருவத்தினர். பகலும் இரவே எனும்படியாகத் தேன் சொட்ட மலர்ந்த பலவகை மலர்கள் கொண்ட சோலையும் ஆறும் குன்றும் சூழ்ந்து கொண்ட பனியின் தோற்றம், பாலர் முதலாக உள்ளோர் குளிராகிய பிணி நீங்கக் காயும்பொருட்டு வளர்த்த செந்தீயில் எழுந்த புகைப்படலம் ஒக்கும்.]

மாதரார் புலரிக்காலைப் புறஞ்செலா வருத்த நோக்கி
மோதுதண் பனிதா னன்னோர் முன்றிலு மறுகு மெங்குஞ்
சீதநல் வாடை தன்னாற் றிருவல கிட்டு நாளு
மேதகு மாப்பி நீரா மென்றுளி துவற்று மன்றே.         374
[பெண்கள் விடியற்காலையில் புறஞ்செல இயலாமல் வருந்துவதை நோக்கி தாக்கும் குளிர் பனிதான் அவர்களுடைய இல்முற்றத்திலும் தெருவிலும் எங்கும் குளிர்வாடைக் காற்றால் நாளும் திருவலகிட்டுச் சாணநீராக மென் துளிகள் தெளிக்கும்.]

காலைவெங் கதிர்கா யாரும் கனலிடைக் குளிர்கா யாரும்
சாலவும் முறுகும் வெந்நீர் குளித்திடா தாரும் மஞ்ஞை
போல்பவர் முலையின் மார்பும் புயங்களும் ஞெமுங்கா தாரும்
ஆலுமப் பனியத் தில்லை அலர்தலை உலகின் மாதோ         375
[ காலை நேரத்தில் வெயிலில் காயாதவர்களும் நெருப்பினிற் குளிர் காயாதவர்களும் மிகவும் சூடான வெந்நீரில் குளியாதவர்களும் மயில் போலும் சாயலுடைய மகளிர் முலையில் மார்பும் புயங்களும் அழுந்தாதவர்களும் அப்பனிக்காலத்தில் அகன்ற உலகில் ஒருவிரும் இல்லை]

சேணிடைத் தணந்தோர் தாமும் வெம்பனிச் சீத நீங்கப்
பூணுடைக் கிழத்தி மார்தம் புணர்முலை வெம்மை தங்கள்
ஏணுடை மார்பி னொற்றி யின்புறு பாக்கு வல்லே
மாணுடை யிரத மூர்ந்து வந்தனர் மகிழ்ச்சி பூப்பார்.         376
[சேய்மைக்கண் பிரிந்து சென்ற தலைவர்கள் தாமும் கொடிய பனியின் குளிர் நீங்க அணிகளுடைய தலைவியர்களுடைய நெருங்கிய முலை வெம்மையைத் தங்கள் பெருமையுடைய மார்பில் ஒற்றி இன்புறும் பொருட்டு விரைவாக மாட்சிமையுடைய தேர்களில் உர்ர்ந்து வந்து மகிழ்ச்சியில் மலர்வார்கள்.]

திங்களுங் கங்கை யாறுந் தண்ணெனச் சென்னி தாங்கு
மெங்கணா யகரு மந்நா ளித்தகு பனியிற் பட்ட
வெங்குளிர்க் குடைந்து செம்பொன் வெற்பர சுயிர்த்த நங்கை
கொங்கையின் வெம்மை மார்பி னொற்றிடுங் குறிப்போ தேறாம்        377
[இறைவரின் மாதொருபாக வடிவம் பற்றிக் கூறியது. சந்திரனையும் கங்கையாற்றினையும் குளிர்ச்சியாககச் சென்னியில் தாங்கியருள் எங்கள் இறைவரும் அந்த நாளில் இன்று இங்கு நிலவுவது போன்ற பனியினால் தோன்றிய வெவ்விய குளிருக்குத் தோற்று மேருமலை உயிர்த்த நங்கையாகிய உமையம்மையின் வெதுவெதுப்பான மார்பின் ஒற்றிடும் குறிபோ மாதொருபாக வடிவம், தெரியவில்லை]

பங்குனிப் பருவந் தன்னிற் பண்டுபோ லொருநா ளன்பின்
மங்கலக் கவுரமேனி மடமயின் மாண்ட சாயற்
றொங்கலங் குழலாள் பூசைத் தொழிறலை நின்ற காலைச்
செங்கைமான் மறியா ரங்கோர் திருவிளை யாடல் செய்வார்         378
[மங்கலமான கவுரமேனி (செந்நிறம்) மடம்யில் உமையமை வழக்கம்போல பூசை செய்துவரும் நாளில் ஒரு பங்குனி மாதத்தில் மானேந்திய கரத்தினராகிய எம்பெருமான் ஒரு திருவிளையாடல் நிகழ்த்த மனங்கொண்டார்.]

கங்கையந் தீர்த்த முன்னாங் கடும்பவங் கழுவுந் தெண்ணீர்
பொங்குமேழ் நதியு மெய்தத் திருவுளம் புரித லோடு
மங்கவை யேழும் போந்து தொழுதருட் பூசை யாற்று
மங்கைமற் றறியா வண்ண மறிந்தொரு புடைநின் றோதும்         379
[ முன் ஆம்- தொடர்ந்து வருகின்ற. கடும்பவம்- கடுமையான பிறவி நோய். பூசை ஆற்றும் மங்கை- உமையம்மை. கங்கையாறு, தொடர்ந்து வருகின்ற பிறவி நோயைப் போக்குகின்ற கங்கை முதலான ஏழு நதிகளுடனுங்கூடத் தன்முன் வருதல் வேண்டும் எனத் திருவுளத்தில் நினைக்க,அந்நதிகள் எய்தி , பூசைபுரியும் இறைவி அறியாத வண்ணம் ஒரு புறம் மறைந்து நின்று இவை கூறும். (கூறுவது தொடர்கின்றது)]

சிறியரேம் யாங்க ளெம்மான் றிருவுளஞ் செய்யப் பெற்றே
மறிவுறுத் தருளாய் செய்யும் பணியென வருளி னோக்கி
யிறையிலிக் கம்பை யாற்றி னுடன்கலந் தெங்கும் விம்மிப்
பிறைநுதல் பூசை முற்றாப் பெற்றியின் வம்மி னென்றார்.         380
[சிறியோமாகிய எங்களை எம்பெருமான் திருவுளத்தில் நினைக்கும் பேறு பெற்றோம். யாங்கள் செய்யத்தக்க பணியாது என அருள வேண்டும் என்றனர். இறைவன் அருளினால் அந்நதிகளை நோக்கித் தனக்கி மேல் இல்லாஹ கம்பை யாற்றினுடன் நீங்கல் கலந்து எங்கும் பொங்கி இறைவியின் பூசை முற்றுறாத வண்ணம் பெருகி வருக என்றார்.]

நன்றென வணங்கியேழு நதிகளுமேல்பா லெய்தி
யொன்றல வேலை யேழு மொருபுறக் கடலிற் கூடி
மன்றவிங் கெழுந்தா லென்னத் தன்னிடை மருவி யீண்டப்
பொன்றிரை கொழிக்குங் கம்பை யெழுந்தது புவன மஞ்ச         381
[நதிகள் ஏழும் ‘நன்று’ என்று கூறி வணங்கி, மேற்குத் திசையை எய்தி, ஏழுகடல்களும் ஒருகடலெனத் திரண்டாற்போலத் தன்னிற் கலந்து கம்பையாறு உலகம் அஞ்சுமாறு அலைவீசிப் பெருகியெழுந்தது.

ஏழுயர் நதியு மேலை யேழெனு முலகும் போர்ப்பக்
கீழுலக னைத்துங் கம்பைத் திருநதி கிழிப்ப தொத்து
வாழிய பரந்து பொங்கி வரும்பெரு வெள்ள நீத்த
மூழியீற் றளக்க ரென்ன வொல்லொலித் தெழுந்த தம்மா         382
[புண்ணிய நதிகளேழும் மேலே உள்ள ஏழுலகும் மூழ்க, கீழேலுலகமும் அழிப்பதை ஒத்துக் கம்பைத் திருநதி பரந்து பொங்கி ஊழிக்காலத்தில் உலகமழியத் தோன்றும் கடலெனப் பேரொலியுடன் எழுந்தது.]

எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
வன்னப் பனிவரை யரையன் பெறுதனி மகள்கண் டிகலியுண் மறநீடிக்
கொன்னப் படைவிழி யெரிசிந் தினுமுயிர் குழையா திரிதர நினைவுற்று
முன்னர்ப் பலநெறி கண்டா லெனமிசை யண்டச் சுவரொடு முந்நீர்சூழ்
கன்னிப் புவிமக ளுடல்விண்டெழுவது கம்பைக் கலிகெழு நதிமாதோ         383
[இமயமலையாகிய அரசன் பெற்ற ஒப்பற்ற தனிமகளாகிய இறைவி கண்டு சினமுற்று கண்ணில் நெருப்புப் பொங்க விழிக்கினும் அச்சத்தில் உயிரழியாது தப்பிப் பிழைப்பதற்குப் பல வழிகளைப் படைத்துக் கொள்வது போல வழியில் பலதடைகளை அழித்து, புவிமகள் கடல் நீரில் மிதப்பது போலக் கம்பை நதி ஆரவாரத்துடன் எழுந்தது.]

கயிலைத் திருமலை யுடையா ரவரிரு கண்ணா யுறைதரு நுந்தம்மை
யயரக் கரமலர் கொடுபொத் தியவுமை யவளச் சுறவிவ ணுறுகின்றாம்
வெயில்விட் டெழுமிரு சுடர்கா ணீவிர்க டுணையா மேவுதி ரெனவெளவி
யியலுற் றெனமிசை யுழலுஞ் சுடர்களை யெற்றிப் பெயர்வது புகழ்கம்பை         384
[கயிலைத் திருமலைக்கு நாயகராகிய இறைவனின் இரு கண்களாக உறைகின்ற உங்களை நீங்கள் மயங்குமாறு கரங்களாகிய மலர்களைக் கொண்டு பொத்திய உமையவள் அச்சுற இங்கு யாம் வருகின்றோம் ஒலிவிட்டு எழுகின்ற சுடர்களே! நீங்கள் எமக்குத் துணயாக வருக எனப் பற்றியதைப் போல பூமியில் சுழலும் இருசுடர்களையும் தாக்கிப் பெருமையுடைய கம்பையாறு பெயரும்.}

கடையிற் பெருகிய கடல்நீர் இதுபுனல் கடைநாளிது தினமென வெண்ணி
உடைவுற் றரியயன் முதலாம் அமரர்கள் உறைதத் தமதிடம் விட்டோடி
விடையிற் பொலிவுறு விகிர்தக் கடவுளை விண்ணிற் சிவபுர நண்ணிச்சென்
றடைவுற் றனநினை யடிகேள் புரவென அயரப் பெயர்வது புகழ்கம்பை.         385
[ஊழிமுடிவில் பிரபஞ்சத்தை அழிக்க எழுந்த கடலிது வென்ன, நீரில் மூழ்கி உலகம் அழியும் கடைநாள் இதுவென்ன எண்ணி, அஞ்சி அரி அயன் முதலாய தேவர்கள் தம் உறையும் தத்தமது வாழிடங்களை விட்டோடி காளை வாகனத்தில் பொலியும் விகிர்தன் (உலகியல்பின் வேறுபட்டவன்; கடவுள்)உறையும் விண்ணூலகமாகிய சிவபுரத்தை அடைந்து அடிகேள் நின்னைச் சரணடைந்தேம் எம்மைக் காப்பாய் எனக் கலங்கப் பெயர்வது கம்பை நதி]

தரளத் தொகுதிக ளெனவுந் ததைநர ரெனவுந் தாரகை யுடன்வானில்
விரவிப் பயில்சுரர் குழுவைப் புவிமிசை மிடையத் திரைகொடு தள்ளிப்பின்
உரவுத் தாரகை யெனவுந் தேவர்க ளெனவும் பலமணி யுடன்மல்கு
நரரைத் தாவில்வி ணிடுவிஞ் சையினொடு நடையுற் றெழுவது புகழ்கம்பை.         386
[விண்மீன்களுடன் வானில் விரவிப் பயிலும் தேவர்களை மண்ணில் தரளத் தொகுதிஎனவும் மனிதர்கள் எனவும் தள்ளி, மண்ணில் இருக்கும் மணிகளை விண்மீன்கள் எனவும் மனிதர்களைத் தேவரெனவும் புரட்டிப் பெயர்தலைக் கம்பை உடையதாயிற்ரு.விஞ்சை- வித்தை. நடை- வெள்ள ஒழுக்கு.]

விண்ணத் துயரிய தருவும் பதுமம்வெள் வளையென் றுரைபெறு நிதிதாமும்
மண்ணிற் குழுமிய மரமுங் கமலமென் மலருங் கதிர்பணி லமுநேரே
நண்ணிக் கிழமையி னண்மிக் குழுமுற நாடிச் சந்திசெய் தூதாகி
யெண்ணற் கரியபல் வளனங் கவைதர வேந்திப் பெயர்வது புகழ்கம்பை         387

[விண்ணுலகத்தில் உயர்ந்த கற்பகமரமும் பதுமம் வெண்சங்கம் எனப் பெயர்பெறு நிதிதாமும், மண்ணில் நெருங்கிய மரங்களும் தாமரை மலர்களும் ஒளிர்சங்குகளும் நெருங்கி உறவாடச் சந்து செய் தூதாகி எண்னற்கு அரிய பல வளங்களும் ஏந்திப் பெயர்வது புகழ் கம்பை நதி. சந்தி செய்தல்- இருபிரிவினரைப் பொருத்தல். சந்தி செய்த செயலுக்குப் பரிசு பெற்றமைபோலப் பலபொருள்களைக் கம்பை தாங்கி வந்தது என்க]

அம்மென் றளிரிய லுமைபோ லிறையவ ரடிவந் தனைசெய வுறுபொற்பின்
விம்முங் கதிரொளி மணியுந் தளிர்களும் விரைபொங் கியமலர் களுநாறுஞ்
செம்மென் பளிதமொள் ளகில்சந் தனநறை செழுமைக் கனிநனி
பலகொண்டு
கொம்மென் றெழுவது குரைமந் திரவொலி குலவத் திரைபடு முயர்கம்பை         388

[இறைவியைப் போலக் கம்பைநதியும் இறைவனைப் பூசிக்கப் பல்வகைப் பொருள்களுடன் வருவதாகக் கூறப்படுகின்றது. தளிர் போன்ற சாயலுடைய உமையம்மை போல் இறையவர் திருவடிக்குப் பூசனை செய்து வழிபடச் சூரியனைப் போல ஒளி விம்மும் மணிகளும் தளிர்களும் மலர்களும் மணம் வீசும் பளிதமும் அகில் சந்தனம் பல பழவகைகள் ஆகியவற்றைக் கொண்டு ஒலிக்கின்ற மந்திரவொலியும் கொண்டு எழுவது கம்பைநதி.]

துங்கத் திரைபடு நதிகட் கிறையென மருவுங் கனைகட றுயர்கூர
மங்குற் கடவுளர் கடைமத் தெனவுறு மலைமேல் நிகழ்வயி ரத்தாலச்
சிங்கத் திரள்பயில் சிலைதன் குலமென வெதிர்நின் றுயரிய
சிலையெல்லாம்
பொங்கிச் சினமுடன் அகழ்வுற் றலைசெய்து போதுந் திறலது புகழ்கம்பை         389
[துங்கம்- உயர்வு. நதிகளாகிய மகளிர்க்குக் கடல் நாயகன் என்பது வழக்கு. மங்குல்- வானம். மங்குல் கடவுளர்- தேவர்கள். மத்தெனவுறு மலை- மந்தரமல. வயிரம்- சினம்.செற்றம். தன் நாயகனாகிய கடல் வருந்துமாறு கடைய தேவர்களுக்கு மத்தாக நின்றது மந்தரமலை. கணவனை வருத்திய மந்தரமலை மேல் விளைந்த செற்றத்தால், அதன் குலமெனா உயரிய மலைகளையெல்லாம் பெயர்த்து அலைப்பது போலெழுந்தது கம்பை நதி வெள்ளம்]

ஆனைக் கொடிமிசை யுடையார் திருவருள் கடவா தணைவுற விசையுந்தன்
மானப் பெருவிறல் வரவைப் பூசனை வழுவா நியதியி னொடுபேணும்
ஞானப் பரையைமுன் அறிவித் தவளரு ணலமும் பெறுமுறை யுறுமாபோல்
மீனக் கடல்களும் அவியப் பெருகொலி விளைவித் தெழுவது புகழ்கம்பை         390
[ஆனைக் கொடி- ஆன் கொடி. ரிஷபக் கொடி.திருவருள்- இறைவரது ஆணை. ஞானப்பரை- இறைவி. விடைக்கொடி உடையாராகிய சிவபெருமானின் திருவருளாணையின் வழியொழுகிஅவர் தன்னை அணைவுற வரும் வரவி, பூசனை நெறி வழுவா நியதியுடன் ஆற்ரிவரும் இறைவிக்கு முன்னதாக அறிவித்து அவளுடைய அருள் நலமும்பெறும் முறையில் கடலொலியும் அவியப் பேராரவாரத்துடன் எழுவது புகழுடைய கம்பைநதி.]

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
புனலுடை யண்டந் தம்மு ளிஃதுமோர் புனல்சே ரண்ட
மெனவெழு கம்பைத் தெண்ணீ ரேகமாய்க் கோத்துச் செல்லத்
தனைமறந் தறிமால் கொண்டு தலைவனார் பூசை யாற்றும்
வனமயி லனையா ணோக்கி மனம்விதிர்த் தச்சம் பூத்தாள்.        391
[நீருடை அண்டங்களில் இது நீரே ஒரு அண்டமாயது என எழும் கம்பை ஆற்று வெள்ளம் எல்லாவற்றையும் ஏகமாய் இழுத்துச் செல்ல, அயரா அன்பின் தனை மறந்து தலைவனைப் பூசனை ஆற்றும் அம்மை நோக்கி மனம் விதிர்த்து அச்சம் கொண்டாள்.]

அருந்தவம் நெடுநாளாற்றி யரிதுயிர் புனிற்றுப் பிள்ளை
மருங்கொரு பாந்தள் வெளவ வந்தஞான் றவ்வை மானக்
கருங்குழ லுமையும் வேறு காரண நினையா ளாகி
யிருங்கரத் துணையால் வீழ்ந்து தழுவினா ளிறைவ னாரை         392
[ புனிற்றுப் பிள்ளை- அண்மையில் பெற்ற பிள்ளை. பாந்2தள்- பாம்பு. வெளவ- பற்ற. னான்று- பொழுது. அவ்வை- தாய். நெடுங்காலம் செய்தற்கு அரிய தவத்தைச் செய்து அருமையாகப் பெற்ற பிள்ளையைப் பாம்பு பற்ற வந்த நேரத்தில் அப்பிள்ளையைப் பெற்ற தாயைப் போல உமையும், தன்னியற்கையாகிய முடிவிலாற்றல் முதலிய அருட்குணங்களை நினையாளாகித் தன்னிருகரங்களால் இறைவனாரைத் தலையன்பினால் காப்பாற்றும் பொருட்டு ஆரத் தழுவினாள்.]

இருவளைக் கரங்க ணீட்டி யிளமுலைப் பொருப்புத் தண்டார்
மருமமுற் றழுந்தப் புல்லுங் காட்சியும் மலைபோற் பொங்கி
வருபுனல் நோக்கி நோக்கி மறுக்கமும் பீடத் தூன்றும்
ஒருமுழந் தாளு மண்ணி னொற்றைத் தாணிலையு மானாள்         393
[வளைகள் அணிந்த இருகரங்களையும் நீட்டித் தன் இளமுலையாகிய மலை, குளிர்மாலை யணிந்த இறைவனின் மார்பில் அழுந்தத் தழுவி, மலைபோலப் பொங்கி வரும் கம்பை நதி வெள்ளத்தை நோக்கி நோக்கிக் கலங்கிப் பீடத்தில் ஒரு தாளூன்றி மற்றைய தாள் நிலைத்தல் உடையலானாள்.]

நறுவிரைத் தெண்ணீ ராட்டி நலத்தகு களபஞ் சேர்த்தித்
தெறுகதி ரிழைகள் சாத்தித் திருக்கிளர் கோலஞ் சாலப்
பெறுதனிக் கொழுநர் மேனிப் பேரெழி னோக்கிக் காதன்
முறுகிடத் தழீஇய தேய்ப்ப முகிழ்முலை தழுவ லோடும்         394
[மணமிக்க நீரால் திருமஞ்சனமாட்டி, நறிய களபம் சேர்த்தி, ஒளிரும் அணிகலன்கள் சாத்தி, தன் கொழுநருடைய பேரெழிலினை நோக்கிக் காதல் பெருகிடத் தழீயது ஒப்ப இறைவி இறைவனை இறுகத் தழுவலொடும்]

இருவரும் புணர்ச்சி வாய்ந்த செயலுணர்ந் தெழுந்த வெள்ள
மருகுற நாணுக்கொண்டாங் காயிடை யஞ்சி நிற்பக்
கருணையங் கடலினாருங் கவினுருக் குழைந்து மாதர்
திருமுலைச் சுவட்டினோடு செறிவளைத் தழும்பு பூண்டார்,         395
[அம்மையும் இறைவனும் புணர்ச்சி உற்றதை உணர்ந்து வெள்ளம் அருகில் உற நாணம் கொண்டதைப் போல அவ்விடத்தில் அஞ்சி ஒதுங்கி நிற்கக் கருணைக் கடலாகிய பெருமானும் தன் அழ்கிய திருவுரு குழைந்து இறைவியின் திருமுலைச் சுடட்டினோடு செறிந்த கை வளையலின் தழும்பும் பூண்டார்.]

வலியன எவற்றி னுள்ளும் வலிய ரென்ப தற்குச் சான்று
இலகொளி மேருவாங்கிக் குழைத்தமை விளக்க மற்றை
மெலியன எவற்றினுள்ளும் மெலிய ரென்ப தற்குச் சான்று
குலவுமென் முலைக்குச் சாலக் குழைந்தமை விளக்கிற் றம்மா.         396
[இறைவர் வலியன எவற்றினும் வலிமையுடையவர் என்பதற்குச் சான்று மேருமலையை வளைத்துக் குழைத்தமை விளக்க, மெல்லியன எவற்றினும் மெல்லியர் என்பதற்குச் சான்று அம்மையின் மென்முலைக்குக் குழைந்தமை விளக்கிற்று. வாங்கி- பற்றி வளைத்து.]

காமவேள் பகழியாய கமலமென் முகைகள் என்றுந்
தாமமால் ஓடை யானைத் தரள நீளுலவை யென்றும்
பாமலி புலவர் கூறும் பதப்பொருள் விளைப்ப வையர்
தூமணி மார்பந் தைத்த துடியிடை மடவாள் கொம்மை         397
[மன்மதனுடைய அம்பாகிய தாமரையின் மென்முகிகள் என்றும், மாலை அணிந்த நெற்றிப் பட்டம் சூடிய பெரிய யானையின் வெண்மையான நிண்ட தந்தம் என்றும் புலவர்கள் கூறும் பதத்துக்குபொருள் தோன்ற இறைவனின் அழகிய மணி மார்பத்தைத் தைத்தன, அம்மையின் கொங்கைகள். பகழி- அம்பு. தாமம்- மாலை. மால்- பெரிய. ஓடை- நெற்றிப் பட்டம். தரளம்- முத்து, வெண்மை. உலவி- தந்தம். கொம்மை- கொங்கை.]

தொடிபொலி தடக்கை நீட்டித் துளங்கவெண் கயிலைக் குன்றம்
அடல்வலி அரக்கர் கோமான் பெயர்த்தநா ளதனிற் சால
இடனுடைத் திருவேகம்பத் தெந்தையார் கம்பைக் கஞ்சிப்
பெடைமயில் தழுவு ஞான்று பெரிதுளமகிழ்ச்சி பூத்தார்.         398
[தொடியணிந்த தன்னுடைய வலிய கரங்களால் அரக்கர் கோமானாம் இராவணன் கயிலைமலை அசையப் பெயர்த்த நாளில் உமையம்மை இறைவனை அச்சத்தைனால் அணைத்துக் கொண்டாள். அந்த நாளினும் திருவேகத்து எந்தையாம் ஈசன் கம்பை நதி பெருகிவருவதைக் கண்டு அஞ்சி அம்மை தழுவிக் கொண்ட இந்தநாள் பெரிதும் உளம் மகிழ்ந்தார்.]

பயங்கிள ருயிர்க ளெல்லாம் பரவச மகிழ்ச்சி கூர்த்த
இயங்களோ ரைந்தும் வானத் திடியெனமுழங்கி யார்த்த
கயங்கிளர் சமய முற்றுங் காலற மறைக ளார்த்த
நயங்கிள ரமரர் பெய்யு நறைமலர் விசும்பு தூர்த்த         399
[முன்பு அச்சங்கொண்ட உயிர்கள் எல்லாம் பரவசமடைந்து மகிழ்ச்சி மிக்கன. தோற்கருவிகள் முதலாகிய ஐவகை இசைக்கருவிகளும் வானத்து இடியென முழங்கி ஆர்த்தன. கீழான சமயங்கள் முற்றும் வேரோடு ஒழிய வேதங்கள் ஒலித்தன. பக்தியுடன் வானவர்கள் பெய்த நறுமலர்கள் ஆகாயத்தைத் தூர்த்தன.]

உள்ளகம் மகிழ்ச்சி பூப்பக் கணங்களும் உறுவர் தாமுந்
தெள்ளிய தீந்தண் பாடற் றிவவியாழ்ப் புலவ ராதி
வள்ளயிற் படைவாள் விண்ணோர் வகுப்பும்ஆங் கெய்தவேதன்
கள்ளவிழ் துளபத் தாமக் கடவுளோ டடியிற் றாழ்ந்தான்         400
[உறுவர்- முனிவர். திவவு- வார்க்கட்டு. வள் அயில்- கூர்மை மிக்க. வேதந் பிரமா. துளபத் தாமக் கடவுள்- துளசி மாலை அணிந்த திருமால். அடியார் கூட்டமும் முனிவர்கள்தாமும் உள்ளமெலாம் மகிழ்ச்சி பூப்ப, இனிய இசையை யாழுடன் இசக்கும் கந்தருவர்களும், கூரயில் படைவாள் தேவர்களின் கூட்டமும், அங்கு வந்தடைய பிரமன் திருமாலுடன் இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கினான்.

பொறித்தபூஞ் சிறகர்த் தும்பி புரிமுறுக் குடைத்துத் தெள்யாழ்
குறித்திசை மிழற்றித் தாது கொழுதிவாய் மடுத்துண் டாடும்
வெறித்த பூவணையிற் புத்தேள் வேதநூன் மொழியால் கூற்றை
இறுத்துயிர் உண்ட நோன்றாள் இணைமலர் வழுத்தி னானால்         401
[பூவணையிற் புத்தேள்- தாமரை மலர்த்தவிசில் வீற்றிருக்கும் பிரமன். நோன்றாள்- வலிமை உடைய தாள்கள். புள்ளிகளை உடையதும் மெல்லிதுமான சிறகினை உடைய தும்பிகள் குடைந்து யாழிசை மிழற்றி மலர்த்தாதினைக் கோதி வாய்மடுத்துண்டு மகிழ்ந்தாடும் மணநாறும் தாமரைப்பூவணையில் வீற்றிருக்கும் பிரமன் வேதநூன் மொழியினால் இயமனின் உயிரை உதைத்து உண்ட வலிய தாளிணை மலரைத் துதித்தான்.]

வழுத்தலுங் கருணை கூர்ந்து வார்மதுப் பருகி வண்டு
கொழுத்தபூங் கடுக்கை மாலைக் குவவுத்தோ ளண்ண லார்தாஞ்
செழுத்தநல் வரங்கள் வேட்ட செப்புதி தருது மென்ன
முழுத்தபே ரன்பி னன்னோன் முகமலர்ந் திதனை விண்டான்.         402
[துதிக்கவே, கருணை கூர்ந்து, ஒழுகும் தேனினைப்பருகி வண்டு கொழுத்த கொன்றை மலையை அணிந்த திரண்ட தோள் அண்ணலாராய இறைவனார், நீ விரும்பிய வரம் யாது செப்புதி தருதும் என்று கூற முழுப்பத்தியினனான பிரமன் முகமலர்ச்சியுடன் இதனை விளம்பினான்.]

இத்திரு நகரின் வாழ்வா ரெவர்க்கு மித் திருத்த நன்னீர்
பத்திமீக் கிளைப்பத் தன்னம் பருகினோர் தமக்கு மாயைப்
பித்தனேன் பழிச்சு நின்சீர்ப் பெருந்துதி பேசி னோர்க்கும்
முத்தியீந் தருளா யென்ன முதல்வனா ரதனை நல்கி         403
[இத் தெய்வத் திருநகரில் வாழும் பேறு பெற்ற எவருக்கும், இந்தத் தீர்த்த நன்னீரினைப் பத்தி மிகச் சிறிதளவாயினும் பருகினோருக்கும், பித்தனேனாகிய அடியேன் போற்றும் நின் பெருமைமிக்க துதியைப் பேசினோருக்கும் முத்தி ஈந்தருள வேண்டும் என, முதல்வன் அவ்வரத்தை நல்கி]

நாமகள் திருத்தப் பாங்கர் நாவின்வீற் றிருக்குமாதும்
பூமகள் திருத்தப் பாங்கர்ப் பூவின் வீறிருக்கும் பொன்னும்
நாமகிழ் பூப்ப வெம்மைப் பூசனை நயந்தா ரன்னோர்
தாமகிழ் பூப்ப நீயுந் தண்டுழாய் மருமத் தானும்         404
[நாமகளும், பூமகளும் நாம் மகிழ்ச்சி யடைய எம்மைப் பூசனை விரும்பிச் செய்தனர். அவர்கள் மகிழ்ச்சி அடைய நீயும் த்ண் துழாய் மார்பினனாகிய திருமாலும்]

இருமையி னுலக முற்று மிசைபெற வரைமி னென்னாப்
பொருவறு வரங்க ளீந்து புலவரோ டவரைப் போக்கித்
திருவள ரொருமா நீழற் சிலம்புயிர் மடந்தை யோடுங்
கருணைபூத் துவகை யுள்ளக் கலப்பினி னிருக்கு மேல்வை         405
[இருமை- பெருமை. வரைமின் – ஆளுமின். பெருமையுடன் உலக முழுவதையும் புகழுடன் ஆளுமின் என்று நிகரற்ற பல வரங்கள் ஈந்து எனைய தேவர்களுடன் அவர்களைப் போக விடை கொடுத்துப் பின், ஞான நீழல் வளர் ஒப்பற்ற தனிமாமரத்தின் நீழலில் மலை உயிர்த்தமங்கையாகிய அம்மையுடன் உள்ளங்கலந்து மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் சமயத்தில்]

சிறுமதி பெருநி லாவைச் செய்தென வொளிரச் சற்றே
முறுவலித் தருள வேய்த்தோள் முகிழ்முலைப் பிராட்டி நோக்கி
யுறுசெய லிதுமற் றண்ணல் விளைத்திடு மிடையூ றென்று
மறுவறு காட்சி சான்ற மனமுறத் தெளிந்து கொண்டு         406
[சிறுமதி- இளம்பிறை. மறு அறு காட்சி- தெளிந்த அறிவு. பிறைநிலா பெருநிலவைச் செய்தது எனும்படியாக ஒளிர இறைவர் சிறிதே முறுவலித்தார். அதைக் கண்ணுற்ற இறைவி கம்பைநதி பெருகி பூசைக்கு இறையூறு விளைத்தது அண்ணலின் செயலேயென்று தெளிவாகத் தெரிந்துகொண்டு. ]

கீர்த்திமாமதியை நோக்க வவண்மதிக் கீற்றுப்போலும்
வார்த்திரு நுதலிற் காளி யெனுமட வரலை யீன்றா
ளார்த்தெழுங் காளிமுன்சென் றடுக்கலி னுயிர்த்தாள் செம்பொற்
சீர்த்தமெல் லடியிற் றாழ்ந்து செல்லின முழக்கிற் கூறும்.         407
[இறைவி இறைவனின் சடைமேலுள்ள மதியை நோக்க, மதிக்கீற்றுப் போன்ற அவளுடைய அழகிய நெற்றியிலிருந்து காளி என்னும் நங்கையை ஈன்றாள். அவள் மலையிற் பிறந்தவளாகிய இறைவியின் மெல்லிய செம்பொன் தாளிணையில் தாழ்ந்து வணங்கி இடி முழங்கியது போலச் சொல்லலுற்றாள். கீர்த்தி- புகழ்; இறைவன் சடைமேல் மேவிய புகழ். மதிக்கீற்று- இளம்பிறை. மடவரல்- பெண். அடுக்கல்- மலை, இமயம். செல்- மேகம், இடியைக் குறித்தது.]

அலைகடன் மடுக்கோ வெண்ணி லண்டமு நெரிக்கோ பற்பன்
மலைகளுந் தெறிக்கோ பாழிமண் ணெலாங் கரக்கோ பூத
நிலையெலா முறழச் செய்கோ நித்தில நான்று நீவு
முலைமுகிழ் பூத்த வன்னாய் மொழிந்தருள் என்னா நின்றாள்         408
[அலைகலையுடைய கடல்களைப் பருகவோ? எண்ணிலாத அண்டங்களையும் நெரித்துப் பொடிபடுக்கவோ? பற்பல மலைகளையும் பிடுங்கி எறியவோ? மண்ணுலகையெல்லாம் அழிக்கவோ? ஐம்பூத நிலைகளைக் கலைத்து மாறுபடச் செயவோ? முத்துமாலை தொங்கித் தடவும் முலையினை உடைய அன்னையே! யான் செய்ய வேண்டுவது யாது? மொழிந்தருள் என்றாள். ]

நின்றவள் குன்றமீன்ற நிருமலி யேவ லோடு
மன்றுபேரச்ச மெய்த வார்த்தெழுந் துலம்பிப்பொங்கி
யொன்றி மேலெதிர்ந்து வந்த வோரெழு நதியுங் கஞ்சம்
வென்றதன் கரக பாலத் தேற்றனள் வீறு காட்டி         409
[அங்ஙஅனம் நின்ற காளி, தன்னுடைய தாமரையை வென்ற கரத்தில் இருக்கும் கபாலத்தில், குன்றமீன்ற நிருமலியாகிய இறைவியின் ஏவலால், மிகுந்த பேரச்சமொடு பேரொலிசெய்து பொங்கி வந்த நதிகள் ஏழையும், தன் வீரத்தைக் காட்டி ஏற்றனள்}

காட்டினுள் மதத்த வேழக் கணங்களு மிரியத் தாக்குங்
கோட்டிற லுழுவை வந்து கூட்டினுட் பட்டா லென்ன
வீட்டுபல் புவனமஞ்ச வெழுந்தன வுந்தியெல்லாஞ்
சேட்டிருங் கபாலத் துள்ளாற் பட்டுளந் திகைத்துக் கூறும்         410
[உழுவை- புலி. கோள் திறல்- கொல்லும் ஆற்றல். உந்தி- ஆறு. சேடு- பெருமை, உயர்ச்சி. சேட்டிரும்- மிகப் பெரிய. காட்டில் வாழும் தமவேழக் கூட்டம் சிதையத் தாக்கும் கொல்லும் ஆற்றலுடைய புலி வந்து கூட்டினுள் சிக்கியதைப் போன்று, புவனங்கள் பலவும் அஞ்சும்படிப் பொங்கி வந்த நதிகள் எல்லாம் காளியின் கையிலிருந்த கபாலத்துட் பட்டு உளந்திகைத்துக் கூறும். கூறுவது தொடர்கின்றது.]

அடியரேஞ் செய்த குற்ற மனைத்தையும் பொறுப்பா யோலங்
கடியவி ழிமய மீன்ற கவுரியே யோலம் வேத
முடியினி னிருத்தஞ் செய்யு முருகவிழ் குழலா யோலம்
மிடிதுரந் துயிரைக் காக்கும் வித்தகி யோல மோலம்         411
[ஓலம்- அபயம் வேண்டும் குறிப்புமொழி. அடியவர்களாகிய யாங்கள் செய்த குற்றங்களைப் பொறுத்தல் வேண்டும். கடி அவிழ் இமயம்- கடி- மணம்., புதுமை, ஒளி எனப்பலபொருள் உரிச்சொல். இமயம் ஈன்ற கவுரியே உன் அடைக்கலம். வேத முடியில் நடமிடுபவளே உன் அபயம். மிடி(வறுமை)யை ஓட்டி உயிர்க் காக்கும் வித்தகியே உன் அபயம். இருநாழி நெல் கொண்டு அறம் யாவௌம் செய்து உயிர்களைக் காத்தலினால், ‘வித்தகி’ எனப்பட்டாள். செயற்கரிய செய்தவள்.]

எனப்பல முறையு மோலிட் டிறைஞ்சலும் வருத்தக் கன்றின்
கனைப்பொலி கேட்ட வாவிற் கவுரியுங் கருணை கூர்ந்து
மனப்படுந் துயரத் தாழ்ந்து மறுகன்மின் மறுகன் மின்னென்
றனைப்பெரு நதிக ளேழுக் காத்தவாய் மலர்ந்து கூறும்.         412
[ மறுகன்மின் -மனத்தில் கலக்கம் அடையற்க. அடுக்கு விரைவின்கண் வந்தது. ஆத்த- அன்புடைய சொற்கள். என நதிகள் பலமுறை ஓலிட்டு இறைஞ்சலும், வருந்தும் கன்றின் கனைப்பொலியைக் கேட்ட தாய்ப்பசுவினைப் போலக் கவுரியும் கருணை மிகக் கொண்டு, ‘மறுகன்மின், மறுகன்மின்’ என்று அத்தகைய வருத்தங்கூரும் நதிகளுக்கு அன்புடைய சொற்களைக் கூறி]

அளப்பருஞ் சீர்த்தி சான்ற வழகியகச்சி மூதூர்
உளப்படு மெண்ணில் தீர்த்த முளவெலா நிறைத்துப் பின்னர்
வளப்பெருங் கம்பை யோடு மகரநீர்ப்பெளவத் தின்பந்
திளைப்புறச் செல்க வென்று தனித்தனி செப்பி விட்டாள்         413
[அளப்பரும்- அளக்கமுடியாத. சீர்த்தி- புகழ். மகரநீர்ப் பெளவம்- கடல், மகரம்- சுறா. சுறாமீன் கடல்வாழ் பிராணி. ஆதலின் மகரநீர் கடலாயிற்று. மகரநீர்ப்பெளவம்- மீமிசைச்சொல். அளப்பரிய அழகால் பெருமையுடைய கச்சி மூதூரில் உள்ள தீர்ந்த்தங்களையெல்லாம் நிறைத்துப் பின்னர் கம்பை நதியுடன் கடலில் இன்பந்திளைக்க நீவிர் செல்க என்று இறைவி செப்பி விட்டாள். கடல், நதிகளுக்கு நாயகனாதலின், ‘இன்பந்திளைக்கச் செல்க’ என்றாள்.]

கத்திகைப் பிணைய லோதிக் கெளரியுட் கருணை பூத்துத்
தத்தமக் கருளிச் செய்த தடம்புனற் றீர்த்த மெல்லாம்
பத்தியி னிறைத்தே யன்னாள் பதமலர் சிரமேற் சூடி
முத்தலை நதிக ளேழு முடுகிய கடலின் மாதோ         414
[ கத்திகை- குருக்கத்தி. பிணையல்- மாலை. ஓதி- கூந்தல். முடுகிய- விரைந்தன. குருக்கத்தி மாலை சூடிய கூந்தலை உடைய கவுரி கருணை பூத்து தத்தமக்கு அருளிச் செய்த பெரிய தீர்த்தங்களில் பத்தியுடன் கலந்து அவளுடைய திருவடிகளைத் தலைமேற் சூடி முத்துக்களை அலைக்கும் நதிகள் கடலில் கலக்க விரைந்தன]

பொற்றமென் சுணங்கு பூத்த புணர்முலை நதிக டம்மை
மற்றொரு புலத்திற் போக்காள் வளைமணிக் கடலிற் கூட்டும்
பெற்றிமை கணவர் கூட்டங் கதுமெனப் பேணு மப்பே
றுற்றிடத் தனக்குச் செய்த வுதவிநே ருதவி போலும்.         415

[பொற்றமென் சுணங்கு பூத்த புணர்முலை- உமை. இறைவி நதிகளை வேறொரு இடத்திற் செலுத்தாது, சங்குகள் மணியீனும் கடலோடு கூட்டிய சிறப்பு, தன்னைத் தன் கணவரோடு கதுமெனக் கூடச் செய்த அப்பேருதவிக்கு நிகராகச் செய்த கைம்மாறு போலும்]

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
இன்னவகைத் திருவிளையாட் டாடி யெங்கோன்
      இணரூழ்த்து மதுத்திவலை யிறைக்குங் கொக்கின்
நன்னிழலின் அரியணைமே லிமய மீன்ற
      நங்கையொடும் வீற்றிருந்து நாளும் நாளும்
பொன்னகரிற் கடவுளருங் குலிசச் செங்கைப்
      புத்தேளு மலர்த்தேவுங் கருவி மேக
மன்னவனும் பழிச்சவருள் கொழித்து வாழ்ந்தா
      ரந்நிலையி னெடுங்காலங் கழிந்த பின்னர்.         416
[இணர்- கொத்து. ஊழ்த்து- மலர்ந்து. திவலை- துளி. கொக்கு- மா. பொன்னகர்- அமராவதி. குலிசம்- வச்சிராயுதம். இப்படியான திருவிளையாடலாடி எங்கோனாகிய இறைவன், கொத்தாக மலர்ந்து தேந்துளிகள் இறைக்கும் மாமரத்தின் நல்ல நிழலில் சிங்காதநத்தின் மேல் இமயமீன்ற நங்கையோடும் வீற்றிருந்து நாளும் நாளும் பொன்னுலகத்துத் தேவர்களும் குலிசப் புத்தேளாகிய இந்திரனும் தாமரையில் இருப்பவனாகிய பிரமனும் கருமேகம் அன்னவனாகிய திருமாலும் போற்றி வணங்க அருள் சுரந்து அங்கு வாழ்ந்தார். அவ்வாறு நெடுங்காலம் வாழ்ந்த பின்னர்.]

மேதகுதன் கிழத்தியராம் நதிக ளெல்லாம்
      வெருவ வொருகபா லத்தினேற்று வாட்டுந்
தீதுதனை நினைந்துபகைச் செற்றங் கொண்டு
      செம்பொன்மலை வல்லியுடன் செருவாற் றற்கும்
ஏதமற அவள்படைத்த வுலகமெல் லாம்இ
      மைப்பளவி னழிப்பதற்கு மெண்ணி யாங்குப்
போதமரு மயனரியை யுள்ளிட் டோரும்
      பொன்றவரு கடைவெள்ளம் பொங்கிற் றம்மா         417
[மேன்மையுடைய தன்னுடைய மனைவியராம் நதிகள் எல்லாம் அஞ்ச ஒரு கபாலத்தில் அவற்றை ஏற்று வருத்தும் துன்பத்தை நினைந்து பகயும் கோபமும் கொண்டு இமயவல்லியுடன் போர் செய்தற்கும் குற்றமற அவள் படைத்த உலகமெல்லாவற்றையும் இமைப்பளவில் அழிப்பதற்கு எண்ணி, அங்குப் போந்த பிரமன் திருமால் உள்ளிட்ட அனைவரும் அழிய வரும் ஊழிக்கடை வெள்ளம் பொங்கிற்று.]

பொங்கியெழும் கடற்பெருக்கம் நோக்கி விண்ணிற்
      புத்தேளிர் முதலெவரும் பொருக்கென் றோடிச்
சங்கரசங் கரபோற்றி போற்றி யெம்மைத்
      தாழாது கடைவெள்ளக் கடலி னீக்கி
யிங்கணருள் புரிகவென விறைஞ்சி யேத்த
      வெம்பெருமா னஞ்சாதி ரென்று கூறி
யங்கணெதிர் நின்றருளுங் காளி தன்மே
      லருட்கடைக்க ணோக்களிப்ப வவளுந் தாழ்ந்து.         418
[பொங்கி எழும் கடல் வெள்ளத்தை நோக்கி ஹேவர்கள் முதல் எவரும் விரைந்தோடிச் ‘சங்கர சங்கர போற்றி எம்மைத் தாழாது கடல் வெள்ளக் கடலின் நீக்கி இங்கண் அருள்புரிக’ என இறைஞ்சி ஏத்தினர். எம்பெருமான் ‘அஞ்சாதிர்’ என்று கூறி அங்கு எதிர் நின்றிருந்தருளும் காளியின்மேல் கடைக்கண் நோக்கத்தைச் செலுத்தினார். அவளுந் தாழ்ந்து]

விடைகொண்டு வல்விரைந்து போத லோடும்
      வேறொருவ ரில்லையெனக் களவு செய்யுங்
கடைகொண்ட மனத்தினராங் கொருவர் தம்மைக்
      கண்டபொழு தெனவெருவிக் கலங்கி யஞ்சி
மடல்கொண்ட பூங்குழலாண் மலர்த்தாள் போற்றி
      மழவிடையா ரருளாறே வையம் பொன்றத்
தடையின்றி யெழுகின்றே னென்னை யன்னை
      சாடுதற்கு முயல்கின்றாய் சாற்று கென்ன         419
{காளி இறைவரிடம் விடைகொண்டு விரைந்து போதலும், வேறொருவர் காண்கிலர் என்று களவு செய்யும் இழிந்த மனத்தினர், களவு செய்யும்போது பிறர் ஒருவர் தம்மைக் கண்டபொழுது அஞ்சி வெருவுதல் போலக் கடலும் அஞ்சி, காளியின் மலர்த்தாள்களைப் போற்ரி வணங்கி, ‘ மழவிடயராகிய எம்பெருமான் அருளியவாறே யான் வையகம் பொன்றத் தடையின்றி எழுகின்றேன். ஏன் என்னைத் தண்டிக்க முயல்கின்றாய் கூறுக’ என்ன,]

சொற்றமொழி வாயாகுந் தரளஞ் சிந்துஞ்
      சும்மைநெடுந் திரைக்கடலே சொல்லக் கேண்மோ
பெற்றமுயர்த் தவனருளா லன்றி யானும்
      பெயர்ந்தீண்டுப் போந்திலன்காண் பெரியகோலப்
பொற்றமணி யெழுப்புயத்துக் கடுக்கைப் புத்தேள்
      பொலங்கொடி யன்னவளோடும் பொருந்தி வாழு
மற்றமறு முவளகமாங் காஞ்சி மூதூ
      ரணுகலைமற் றெவ்விடத்து மணுக லென்றாள்         420
[காளி,’நீ சொன்ன மொழி உண்மையாகும். முத்துக்களைச் சிந்தி ஆரவாரிக்கின்ற கடலே! விடைக்கொடி உயர்த்த அவன் அருளாலன்றி யானும் இங்கு வரவில்லை என்பதை அறிவாய். மேருமலை போன்ற புயத்தில் கொன்றை மலை ய்ணிந்த இறைவர் அம்மையுடன் கூடி வாழும் உவளகமாம் (அந்தப்புரம்) காஞ்சிமூதூரிடத்து அணுகலை; மற்று எவ்விடத்தும் நீ அணுகலாம்’ என்றாள். ]

அதுபுரிவே னதுபுரிவே னம்ம வென்றங்
      கருள்தலைமேற் கொண்டுபதமி றைஞ்சிப் போற்றி
யுதிர்மலர்ப்பூம் பொழிற்காஞ்சிக் கப்பா லைந்தி
      யோசனையெல் லையினகன்ற துததி வெள்ளம்
விதுநுதற் காளியுமகன்று திருவேகம்ப
      மேவியடி பணிந்திறைஞ்ச விமல னாரு
மதிமுகமிக் கலர்ந்து பிரளயசித் தென்ன
      வழங்குபெய ரவட்கந்நா ளருளிச் செய்தார்         421
[‘அது புரிவேன் அதுபுரிவேன் அம்மே’ என்று கடலும் காளியின் அருளைத் தலைமேற் கொண்டு அவளின் திருவடிகளை வணங்கிப் போற்றி காஞ்சி மாநகரத்துக்கு அப்பால் ஐந்து யோசனை தூரத்து எல்லையில் அகன்றது. பிறைநுதற் காளியும் அங்கிருந்து அகன்று திருவேகம்பர் திருவடி பணிந்து இறைஞ்ச, விமலனார் முகமலர்ந்து காளிக்குப் ‘பிரளய சித்து’ என்னும் பெயரை அந்நாள் வழங்கி அருள் செய்தார். விது- பிறை. உததி- கடல்.]

அப்பொழுது புத்தேளிர் முனிவர் யாருங்
      கடைநாளி னிடும்பைவினை யறியாராகி
யொப்பரிய காஞ்சிவயிற் றிருவே கம்ப
      முடையபிரா னருட்கடலின் முழுகி வாழ்ந்தார்
இப்பரிசி னிறைவரருட் பெருமை நோக்கி
      யேழுநா ளோவாதங் களகை வேந்தன்
செப்பரும்பொன் மழையுநவ மணியு மேழு
      செல்லினமும் புறங்கொடுப்பச் சிதறி யுய்ந்தான்         422
[அப்பொழுது, தேவர்கள் முனிவர்கள் யாரும் ஊழிக் கடைநாளின் துன்பத்தை அறியாராகி ஒப்பில்லாத காஞ்சிமாநகரில் திருவேகம்பமுடைய பிரானின் அருட்கடலில் முழுகி வாழ்ந்தார். இத்தகைய இறைவரின் அருளின் தன்மையின் பெருமையை நோக்கி ஏழுநாளும் குபேரன் கார்மேகமும் நாணிப் புறங்கொடுக்குமாறு செம்பொன்னும் நவமணியும் பொழிந்தான்.]

அளவுபடாச் சிவபெருமா னருளி னாற்றா
      லளவுபடாப் பெருங்கருணைப் பிராட்டி யாற்று
மளவுபடாச் செயலனைத்துந் தெளிவொன் றில்லே
      னறிவளவி னொருவாறிங் கறைந்தே னிப்பா
லளவுபடாக் கடவுளர்கண் முனிவர் போற்று
      மளவுபடாச் சிவாலயங்க ளிடந்தோ றுள்ள
வளவுபடாப் பெருவளஞ்சூழ் புரிசைக் காஞ்சி
      யகநகரந் தருவேதி மேன்மை சொல்வேன்.         423

[அளவுக்குட்படா சிவ்பெருமானின் அருளின் ஆற்றலால், அளவுபடாப் பெருங்கருணைப் பிராட்டியாராகிய இறைவி அருளாற் செய்யும் செயலனைத்தும் தெளிய அறிந்து அறிவிக்க இயலாதேன் ஒருவாறு இங்கு அறைந்தேன். இனி, அளவிலாத தேவர்கள் முனிவர்கள் போற்றும் அளவுபடாச் சிவாலயங்கள் இடந்தோறும் உள்ள அளவுபடாப் பெருவளத்துடன் புரிசை சூழ் காஞ்சி அகநகர வேதியின் சிறப்பைச் சொல்லுவேன். இப்பால்- இனி. கடவுளர்- தேவர்கள். புரிசை- மதில்]

கழுவாய்ப் படலம் முற்றிற்று
ஆகத்திருவிருத்தம் 707

---------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III