Kāñcip purāṇam VIII


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் VIII
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப முனிவர் அருளிய
காஞ்சிப் புராணம் - இரண்டாவது காண்டம்
5. தீர்த்தவிசேடப்படலம் (செய்யுள் 1067-1224)




திருவாவடுதுறைக் கச்சியப்ப முனிவர்
அருளிய காஞ்சிப்புராணம் - இரண்டாவது காண்டம்
5. தீர்த்தவிசேடப்படலம் - திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் உரையுடன்

திருச்சிற்றம்பலம்
Source:
காஞ்சிப்புராணம்
திருக்கைலாயபரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்துமஹாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி
சித்தாந்த சரபம்- அஷ்டாவதானம் பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்கள் மாணவரும்
மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரும்,மெய்கண்டசித்தாந்த ஞானசாத்திரப் பிரசாரக்ருமாகிய
வண்ணக்களஞ்சியம் சி.நாகலிங்க முதலியாரவர்களால்,
பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து
பெரியமெட்டு- வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் குமாரர் ஆதிமூலஞ்செட்டியாரால்
சென்னை: கலாரத்நாகரவச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
சாதரண வரூ- வைகாசி- 1910
----

5. தீர்த்தவிசேடப்படலம்


எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
உரைபயில் காஞ்சி நகர்வயிற் றரங்க மொண்மணி நித்திலக் குவையும்
வரிவளைத் திரளும் பவளநீள் கொடியு மாழையுந் திரைத்தய லொதுக்கும்
விரைகமழ் தீர்த்த மெண்ணில வவற்றுள் மேம்படச் சிறந்த மூன்றுளவாற்
புரைதபு மவற்றின் வளங்கெழு மேன்மை முறையுளிப் புகன்றிடப் படுமால் 1.

[உரை- புகழ். தரங்கம்- அலை. நித்திலம்- முத்து. குவை- குவியல். வளை- சங்கு. மாழை- பொன். புரை- குற்றம். புகழ் வாய்ந்த காஞ்சிமாநகரிடத்தில் மணிகள்,முத்துக் குவியல் முதலிய பொருள்களை வார்த் திரையால் கரையில் அள்ளிக் குவிக்கின்ற குற்றமற்ற தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றுள் மேம்படச் சிறந்த மூன்று உள அவற்றின் மேன்மை இப்படலத்தில் கூறப்படும்]

வண்டடை கிடந்து செவ்வழிபாடு மதுமலர்ப் பொகுட்டுவீற் றிருக்கும்
குண்டிகைக் கரத்தோன் மகவினை முடித்துக் குளிர்புன லாடுவான் விளிப்ப
வண்டரும் வியப்ப வளப்பருந் தீர்த்த மனைத்தும் வந்திறுத்த காரணத்தாற்
றெண்டிரை வரைப்பின் மேம்படு சிறப்பிற் றிகழ்ந்தது சருவ தீர்த்தம். 2

[வண்டு அடை கிடத்தல் – தாமரை மலரின் வளமையால் வண்டு வேறு மலர்களுக்குச் செல்லாமல் கிடத்தல். செவ்வழி- ஒருவகைப் பண். யதுகுலகாம்போதி இராகம் என்பர். வண்டு முரலும் ஓசை செவ்வழிப் பண்போன்றுளது என்பர். குண்டிகை- நீர்க்கரகம். மகம்- வேள்வி. வேள்வி முடித்த பின் நீராடுதல் மரபு. வெண்டாமரைத் தவிசில் வீற்றிருக்கும் பிரமதேவன் யாகத்தை முடித்து நீராடுவதற்கு அழைக்க, தேவர்கள் அனைவரும் வியக்குமாறு, அளவில்லாத தீர்த்தங்கள் அனைத்தும் வந்து தங்கியமையால் சருவ தீர்த்தம் எனக் காரணப் பெயர் பெற்றுப் புகழ் சிறந்தது, ஒரு தீர்த்தம்]

அத்தகு திருத்தத் தீம்புனன் மகஞ்செ யந் தத்தி னாடுறுந் தவத்தோர்
சத்திய வுலகிற் சார்ந்து தண்மலரோன் கற்பம்வாழ்ந் திருப்பர் கள்ளயின்றோர்
பத்திசெய் குரவன் மனைபிறர் மனையைப் பற்றினோர் தந்தையைக் குருவை
மெய்த்த நட்போரைப் பிழைத்தவ ரிவரு மாடுறின் வினைகடிந் துய்வார். 3

[அத்தகு இனிய புனலில் வேள்வியின் இறுதியில் ஆடும் தவத்தோர் பிரமனின் சத்தியலோகத்தை அடைந்து பிரம கற்ப காலம் வாழ்ந்திருப்பர். கள் குடித்தோர் முதலிய பெரிய பாவம்செய்தோரும் இப்புனித தீர்த்தத்தில் நீராடினால் தம்முடைய பாவத்தைக் கழித்து உய்வர்]

இறந்தவர்க் காங்குச் செழும்புன லிறைப்பிற் பிதிர்க்குல மின்பமீக் கொள்ளும்
அறந்திகழ் நியமம் நிகழ்த்தினின் றனந்த மாகுமிப் பெருந்தகு தடத்தின்
மறந்தபு முனிவர் கடவுளர் மனிதர் யாவரு மாசி மாமதியில்
விறந்துசென் றெறிநீர் குடைந்துதத் தமது மேதகு மிருக்கையிற் சேர்வார். 4

[இறந்தவர்கலுக்கு இத்தீர்த்தத்தில் நீர்க்கடன் செய்யின் பிதிரர்கள் மிக்க இன்பங்கொள்வர். இங்கு அறம் செய்தால் ஒன்று பலமடங்காகும். இந்தத் தீர்த்தத்தில் மாசிமகத்தில் தவமுனிவர்கள், தேவர்கள் மனிதர் யாவரும் திரளாகச் சென்று குடைந்து நீராடித் தம் இருக்கைக்குத் திரும்புவர்.]

கும்பமா மதியின் வைகறை யணைந்திக் குளிர்புனல் விதியுளி தோய்ந்து
பம்புநான் மறையோர்க் கேன்றன பசும்பொன் பத்தியி னளித்தொரு மாவிற்
கம்பரைத் தொழுவோர் புனல்படிந் ததனாற் கரிசெலா மிரிய மாதவராய்ச்
செம்பொ னன்கொடையாற் செல்வராய்க் கம்பர் தெரிசனத்தாற் கதியடைவார். 5

[கும்பம்- மாசிமாதம். மாசிமாதத்தில் மகநாளில் வைகறைப் பொழுதில் இத்தீர்த்தத்தை அடைந்து விதிப்படி நீராடி, நான்மறையவர்களுக்கு இயன்ற தானத்தைப் பத்தியுடன் அளித்து ஏகம்பரைத் தொழுவோர், தீர்த்தத்திற் படிந்ததனால் பாவங்களெல்லம் நீங்க மாதவர்களாய், தானம் அளித்ததனால் செல்வராய், ஏகம்பரைத் தரிசத்ததனால் நற்கதியும் அடைவார்.]

வீங்குநீர்ப் புவியின் நீண்டவான் பரப்பின் மேதகுந் துறக்கநாட் டகத்தின்
நீங்கிதற் கிணையாந் தீர்த்த மொன்றேனு மின்மையால் யாவரும் பழிச்ச
ஓங்கிய தீர்த்த ராசநற் பெயரான் விளங்குமிவ் வொண்புனல் படிந்தோர்
தீங்குதீர்ந் துயர்ந்த கதிபெறுங் கதையுஞ் சிலவெடுத் தறிந்தவா புகல்வாம்.6

[கடலால் சூழப்பட்ட இப்பூமியில், நீண்டவான் பரப்பில், துறக்க பூமியில் எங்கும் இதற்கு இணையான தீர்த்தம் இல்லை. அதனால் தீர்த்தராசன் எனும் பெயரால் புகழ்பெற்ற இத்தீர்த்தத்தில் படிந்தோர் தீங்கு, துயர் தீர்ந்து நற்கதி பெற்ற கதைகள் சிலவற்றை அறிந்தவாறு புகல்வாம்]

கலிநிலைத்துறை
உலகி னிற்கொடுங் கோலெலா மொருபுடை யொதுக்கி
நிலவு வெண்குடைக் குளிர்நிழ றிசைதொறு நிரப்பிக்
குலவி வீற்றிருந் தரசுசெய் மனுகுலத் துதித்த
தலைமை பூண்டுயர் பார்த்திவன் றான்மிக னென்பான் 7

[உலகினில் கொடுங்கோன்மை யெல்லாவற்றையும் ஒருங்கே நீக்கி, தன் வெண்கொற்றக் குடை நீழலைத் திசையெங்கும் பரப்பி மகிழ்ச்சியுடன் வீற்றிருந்து அரசுசெய் மனுக் குலத்தில் தலைமை பூண்டு உயர் தான்மிகன் எனும் அரசன் ஒருவன் இருந்தான்]

விளிந்த தன்னுடைத் தாதை வெம்பசியினீர் நசையி
னுளைந்து யாவுறுஞ் செயலறிந் ததுவிரைந் தொழிப்பான்
அளிந்த தீம்பழத் தேறல்வார்ந் தளியின முரலும்
குளிர்ந்த பூம்பொழில் உடுத்தசீர்க் காஞ்சியைக் குறுகி 8
[விளிந்த- இறந்துபோன. நீர்நசை- நீர்வேட்கை. உளைந்து – வருந்தி. உயா- களைப்பு. இறந்துபோன தன்னுடைய தந்தை கொடியபசியினாலும் நீர்வேட்கையாலும் வருந்திக் களைப்புற்றிருக்கும் செயல் அறிந்து அதனை நீக்கும்பொருட்டுக்குளிர்ந்த பூஞ்சோலைகளை உடுத்த காஞ்சியை அடைந்தான். ]

வள்ள வாய்ச்செழுங் கமலத்து வண்டுபாண் மிழற்றுந்
தெள்ளு தீம்புன லத்திரு சருவதீர்த் தத்தின்
உள்ளு மாதவர்க் கமிழ்தென வுளத்திருந் துணர்த்துந்
துள்ளு மான்மறிக் கையினார்த் தொழுது நீராடி. 9
[வள்ளம்- உண்ணும் வட்டில். பாண்- இசை. வள்ளம் போல இதழ்கள் விரிந்த தாமரை மலரில் தேன் உண்டு வண்டுகள் இசை மிழற்றும் தெளிந்த நீருடைய சருவ தீர்த்தத்தில் தன்னைத் தியானிக்கும் மாதவர்களின் உள்ளத்தில் அமிழ்தென இனிக்கும்படியாக இருந்து உணர்த்தும் மான்மறிக் கையினராகிய சிவபெருமானைத் தொழுது நீராடி]

சந்திமுற்றுறப் புரிந்துதன் றாதையைக் குறித்துக்
கந்துநீர்க் கடன்முதலிய பிதிர்க்குலங் களிப்ப
வந்திலாற்றி யந்தணர் தமக்கரு நிதியார்த்திக்
கொந்துலா மலர்மா வடிக்குழகனை வணங்கி 10

[சந்தியில் செய்யவேண்டிய கன்மானுட்டானங்களை முற்றுமாகச் செய்து தன்னுடைய தந்தையைக் குறித்து நீர்க்கடன் முதலிய கன்மங்களை பிதிரர்கள் மகிழ ஆற்றி, மறையவர்களுக்குப் பெருஞ்செல்வம் கொடுத்துப் பின் மாவடியிக் குழகன் இறைவனை வணங்கி]

தடாத பேரொளித் தாமரை நாயகன் றடந்தேர்
வடாது மாதிர மணுகிய காலை மாசொன்று
மடாத வோரையு நாளு முற்றமைந் தனநாளிற்
கெடாதமெய்த் தவமுனிவரர் கிளந்திடும் வழியான். 11

[தடாத – தடைப்படாத. தாமரை நாயகன் சூரியன். தடாத- குறையாத. தாமரை நாயகன் தடந்தேர் வடாது மாதிரம் அணுகிய காலை- உத்திராயண புண்ணிய காலம். சூரியன் உத்திராயணத்தை அடைந்த காலத்தில் குற்றமொன்றும் தாக்காத நல்ல ஓரையும் நட்சத்திரமும் முற்றுமாக அமைந்த நன்னாளில் தவமுனிவர் விதித்த விதியால்]

மருவினார் தமக்கிருண் மலக்குறும் பெலாமடித்துக்
கருணைகூர் மனுவீச்சரப் பெயரினாற் கடுக்கைக்
குருநிலா மலர்த்தொங்கலா னருட்குறி நிறுவித்
தெருளுமா கமமுறையுளிப் பூசைசெய் திருந்தான். 12

[தன் திருவடியை மருவினர்களுடைய மலவிருள் குறும்பையெல்லாம் ஒழித்துக் கருணை மிகும் மனுவீச்சுரர் பெயரால் சிவபெருமானின் அருட்குறியை நிறுவி, ஆகம முறைவழிப் பூசை செய்து இருந்தான்.]

தனைய னின்னணம் வழிபடுந் தவறிலாப் பயத்தா
லினையு நோயுழந் தாற்றருந் தாதையெத் துயருந்
துனைய நீத்துமும் மலத்தொடு தொல்லையே சூழ்ந்த
வினையு மாற்றினன் மெய்யரு ளினைத்தலைப் பட்டான். 13

[மகன் இவ்வாறு வழிபடும் பயனால், வருத்தும் நோயினால் துன்பப்படும் தந்தை எல்லாத் துயரையும்
விரைவில் நீத்து மும்மலத்தொடு முன்னமே பற்றியிருந்த இருவினையும் நீங்கி மெய்யருளினைக் கூடினான்.]

ஆய காலையந் தரத்தொரு மொழிநினை யளித்த
தூய தாதைநற் கதியினைத் துயரெலாந் துமித்து
மேயி னானென வெழுதலும் வெற்றிவே லரசன்
ஏயதன்பரி வொழிந்தன னின்பமீக் கூர்ந்தான். 14

[அப்பொழுது, ஆகாயத்தில், உன்னைப் பெற்ற தந்தை துயரெல்லாம் தீர்ந்து நற்கதியினை அடைந்தான் என்று ஒரு சொல் எழுந்தது. அதனைக் கேட்ட அரசன் தன்னுடைய கவலையெல்லாம் ஒழிந்தான்;மிகுந்த இன்பத்தை அடைந்தான். ]

மீட்டு மண்ணலார் பூசனை மேதக வாற்றி
மோட்டு நீர்ப்புவி முழுவதும் புரந்தபின் றானுங்
காட்டி னாடகம் நடித்தருள் கம்பர்பே ரருளால்
ஈட்ட ருஞ்சிவ வீட்டினை யிறுதியி லடைந்தான்.15

[மீண்டும் சிவபூசனையைச் சிறப்புறச் செய்து கடல்சூழ் உலகம் முழுவதையும் காத்து ஆண்டபின் தானும் காட்டில் நாடகம் நடித்தருள் ஏகம்பவாணருடைய பேரருளால் பெறுதற்கரிய சிவபதத்தினை இறுதியில் அடைந்தான். மோட்டு நீர்- கடல். சிவ வீடு- முத்திப்பேறு.]

அமரர் அச்சுற வயிற்படை விதிர்த்துமூ வுலகுங்
குமரி வெண்குடை நிழல்செயக் குலவி வீற்றிருந்த
தமனி யப்பெயர்த் தானவ னுயிர்த்திடுந் தனயன்
இமிர்பெ ரும்புகழ் மாண்டக நிகழ்பிர கலாதன். 16

[அயில் படை- கூரிய படைக்கலம். குமரி- அழிவின்மை. தமனியப் பெயர் தானவன் – இரணியன். தமனியம்> பொன்- இரணியம். தானவன் – அசுரன். மாண் தக> மாண்டக. தேவர்கள் அஞ்சும்படியாக அவர்களைப் போரில் வெற்றி கொண்டு தன் வெண்கொற்றக் குடைக்கு அழிவு வராமல் கோலோச்சிய இரணியன் என்னும் அசுரன் பெற்றெடுத்த மகன் பெரிய புகழுடன் மாட்சிமைமைப்படும் பிரகலாதன் என்பவன்]

நுந்தை யாருயிர் விரகினான் நொடியினிற் குடித்து
வந்து முற்றிய கொலைப்பழி மாற்றுகென் றுரைக்கும்
பைந்தண் மாலிகைத் துளவினான் றன்னொடும் படர்ந்து
நந்து முத்துயிர் நறும்பணைக் காஞ்சியை நண்ணி. 17

[உந்தையின் அரிய உயிரைச் சாமர்த்தியமாகக் குடித்ததனால் வந்து முற்றிய கொலைப்பழியைப் போக்குக என்று உரைக்கும் துளப மாலையை அணிந்த திருமாலுடன் சென்று சங்கு முத்துயிர்க்கும் நறும் பணைகள் உள்ள காஞ்சி நகரை அடைந்து. விரகு- சாமர்த்தியம். நொடி- விரைவில். குடித்து. கொன்று. இலக்கணை.
மாற்றுக – போக்குக. துளவு- துளசி. நத்து- சங்கு. பணை- வயல்.]

கண்ட காலையே காழ்படும் வல்வினைத் தொடக்கு
விண்டு போதரும் விரைகுலாஞ் சருவ தீர்த்தத்
தெண்டி ரைப்புன லாடினான் றென்புலத் தவர்க்கு
மண்டு மன்பினாற் செய்கடன் மரபுளி வகுத்தான். 18

[தன்னைக் கண்டபோதே முற்றிய வலிய வினைத்தொடக்கு விண்டு போகச் செய்யும் மணமுடை சருவதீர்த்தத்தில் நீராடினான்; தென்புலத்தவருக்குச் செய்கடன் அன்பினால் மறைவிதிப்படி செய்தான். காழ்- முதிர்தல். வல்வினை- நீக்குதற்கு அரிய வினை. தொடக்கு- பந்தம். ]

மருட்சி மிழ்ப்பற வரமரு ளிரணியேச் சரப்பேர்
அருட்சி வக்குறி யிருவினன் ஆற்றினன் பூசை
தெருட்சி வக்கதி தந்தையைச் செலுத்தினன் றானும்
வெருட்சி தந்தவன் கொலைப்பழி வீட்டி மேதக்கான். 19

[மருள்- மயக்கம். சிமிழ்ப்பு- பந்தம். மே தக்கான்- மேன்மையுடையவன் மேம்பாடுய பிரகலாதன், மயக்க பந்தம் அற்றுப்போக வரம் அருளுகின்ற இரணியேச்சரம் எனப் பெயரிய அருள் சிவலிங்கம் பிரதிட்டை செய்து, பூசை செய்தனன்; அப்பூசையினால் தந்தையைச் சிவகதிக்குச் செலுத்தினன்; தானும் தந்தை கொலையுண்ணக்
காரணமாக இருந்த பழி நீங்கினான்]

கலிவிருத்தம்
கழுதொடு காட்டிடை நடிக்குங் கண்ணுதற்
றொழுதெரி வளர்த்துளத் தூய்மை மேம்படும்
விழுமறைக் குலத்தினிற் பிறந்தொர் வேதியன்
பழுதுறு பாதகக் குழிசி யாயினான். 20

[கழுது- பேய். காடு- சுடுகாடு. குழிசி- பானை. பேய்க்கணங்களுடன் இடுகாட்டில் ஆடும் நெற்றிக் கண்ணுடைய இறைவனைத் தொழுது மூவெரி வளர்க்கும் தூய்மையான புனித மறைக்குலத்தில் பிறந்ததொரு வேதியன்
பாவங்களுக்கு இருப்பிடமாயினன்]
முத்தவிர் முறுவலு முலையுங் காண்டொறும்
பித்தின னாய்மதுப் பிலிற்றித் தாதுகுந்
தொத்தலர் மலர்தொறுந் துன்னும் வண்டுபோன்
மெய்த்தசீர்ப் பிறர்மனை விழைந்து மேவுநாள் 21

[மகளிரின் முத்துப்போன்ற முறுவலையும் முலையையும் காண்தொறும் தேன் பிலிற்றும் மலர்தொறும் வண்டு மொய்ப்பதுபோல் பிற பெண்டிரை விரும்பி வாழ்ந்தான். அப்படி வாழும் நாளில்]

தகவுறும் பிறர்க்குரித் தையன் மாரிணை
முகிழ்முலைத் தடத்திடை முயங்கிச் செல்லுறும்
இகவருந் தவற்றினை யேங்கு நீருடை
யகலிடம் புரக்கும் வேலரசன் கேட்டனன் 22

[ பிறர்க்குரிய பெண்டிரை முயங்கும் இவனுடைய நீக்கரிய பாதகத்தை நாடு காக்கும் அரசன் கேட்டனன்]

கேட்டலும் வெள்ளொளி கிளர நக்குமென்
றோட்டலர்த் தாமரை சுடர்ந்து சேந்தென
நாட்டமிக் கெரியுக நயந்து தன்னிரு
மாட்டம ருழையரை வல்லை யேவியே. 23
[கேட்டவுடன் சினத்தால் நகைத்தான்; செந்தாமரை போலும் விழிகள் மேலும் சிவந்தான். தன் இருபக்கத்திலும்
உள்ள ஏவலர்களை ஏவி]

வளமருள் வயல்களு மணிபெய் பேழையுங்
களமருங் கனகமுங் காமர் பொன்மனை
யுளமரு வியவெலா வுறுப்பும் வவ்விக்கொண்
டளமரு மாறுறுத் தகற்றி னானரோ 24

[அவ்வேதியனுக்கு அளித்திருந்த வளமான வயல்கள் இரத்தினங்கள் சேமித்து வைத்திருந்த பேழைகள், ஒளிமிகுந்த் பொன், அழகிய மனை, மற்றும் ஆங்குள செல்வங்கள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டு, வறுமையிற் சுழலுமாறு அகற்றினன்.]

நலம்படு வாழ்க்கைநல் லறிவு தன்மனத்
திலம்படு மாறுபோ லிலம்பட் டேங்கினான்
புலம்படு மாயிடைத் தணந்து புன்புலைக்
குலம்படு மொருத்திதன் கொங்கை தோய்ந்தனன். 25

[நல்ல வாழ்க்கையும் நல்லறிவும் தன மனத்தில் இல்லாததுபோன்ற வறுமையில் சிக்கி அவ்வேதியன் ஏங்கினான். ஆயினும் புலைக்குலம் வாய்ந்த ஒருத்தியுடன் கூடினன்]

சுந்தர மகளிர்தோ டோயு முந்தைநாட்
புந்திதீண் டவும்பொறாப் புலையைப் புல்கலா
லுந்துமூழ் வினைமறைத் தருத்து மூர்விடை
யந்தணன் விரகை யாரளக்க வல்லரே. 26

[அழகிய மகளிர்தோள் தோயும் அந்த நாளில் மனத்தாலும் தீண்ட அருவருக்கும் புலைச்சியைக் கூடியதால், செலுத்தும் ஊழ்வினையை மானுடர் அறிய முடியாமல் மறைத்து ஊட்டும் இறைவனின் விரகை யார் அளக்க வல்லார்?]

நவையழுக் குடைநனி நாற மெய்யெலாங்
குவைநிணப் புலான்முடை கொழிக்கு மாதினைச்
சுவையமிழ் தினுமிகத் துய்த்துச் சான்றவ
ரவைநக மைந்தரை யளித்து வாழுநாள் 27

[நவை- குற்றம். நனி- மிக. குவை-குவியல். முடை- முடை நாற்றம். வியர்வைநாற்றம். அழுக்கு மிக்க உடை மிகவும் நாற, உடம்பெலாம் புலால் நாற்றமும் முடை நாற்றமும் கொழிக்கும் புலைச்சியின் உடலை சுவையான் அமிழ்தைக் காட்டிலும் இனிதாக மிகத் துய்த்துச் சான்றோர் வெறுத்துச் சிரிக்க மைந்தர்களைப் பெற்று வாழும் நாளில்]

பாவமிக் குயர்தலாற் பஞ்சிற் றீநிகர்
வீவரு நோயினான் மெலிய மைந்தருங்
காவியங் கண்ணியுங் கருத்து வேறுபட்
டோவிய வன்பினா லோம்ப லோம்பினார். 28

[வீவரும்- நீங்குதற்கு அரிய. காவியங்கண்ணி- அவன் மயங்கியதால் எள்ளிக் கூறியது. ஓவிய அன்பு- ஓவுதல்- சுருங்குதல் ஓம்பல் ஓம்பினர்- ஓம்புதலைப் பரிகர்த்தனர்.. பாவம் மிகுந்து உயர்ந்ததனால், தீப்பட்ட பஞ்சு போல நோய் வாய்ப்பட்டனன். மனைவியும் மைந்தரும் அன்பு சுருங்கினர். அவன்மேல் அன்பில்லாமல் கைவிட்டனர்]

அருளியும் வெகுண்டுநோ யறுத்து டங்குநின்
றொருவருந் துணைவராய் உய்த்த ளிப்பவர்
இருவரு மறிகலா விறைவ ரேயலான்
மருவிய மைந்தரு மனையு மல்லரே. 29

[அறக்கருணை கொண்டு அருளியும் மறக்கருணையால் வெகுண்டும் நோய் அறுத்துத் துணைவராய் உடன் நின்று காப்பவர் இறைவரே அல்லாமல் மனைவியும் மைந்தரும் அல்லரே.]

செல்லல்நோய் உழந்தினிச் செய்வ தென்னெனும்
அல்லலிற் கவலைகொண் டங்கண் நீங்கினான்
கொல்லருங் கொடும்பிணிப் பசியைக் கொல்லிய
வெல்லையில் பதிதொறு மிரந்து செல்லுவான். 30

[செல்லல்- வறுமை. வறுமை நோய் உழந்து இனிச் செய்வது யாது என்னும் அல்லலிற் கவலைகொண்டு அவ்விடத்திலிருந்து நீங்கினான். ஒழிக்கமுடையாத கொடிய பசிப் பிணியைக் கொல்லும் பொருட்டு (ஒழிப்பதற்கு) ஊர்தொறும் பிச்சை இரந்து செல்லுவான்]

மறிபுனற் றடந்தொறு மெழுந்த வாளைமீன்
செறிமலர்ப் பொழிற்சினை யலைப்பச் சிந்திய
நறைகமழ் காஞ்சியை நெறியி னண்ணினா
னிறுதியு மாங்கவற் கிறுத்த தாகலும் 31

[அவ்வாறு செல்லும் வழியில், நீர்வளம் மிக்க காஞ்சிப்பதியை நண்ணினான். அங்கு அவனுக்கு வாழ்நாள் இறுதியும் வந்தது.]

தொன்றுதான் செய்வினைத் தொடர்பி னாற்கொலோ
அன்றியே தன்குலத் தந்த ணாளர்கள்
நன்றுசெ யறவினை நலத்தி னாற்கொலோ
சென்றனன் சாருவ தீர்த்தப் பாங்கரின். 32

[பண்டு தான் செய்த நல்வினைத் தொடர்பினாலோ, அன்றி, தன் குலத்து அந்தணாளர்கள் செய்த புண்ணியப் பயனாலோ. அவ்வேதியன் சருவ தீர்த்தத்தின் பக்கத்தில் சென்றனன்.]

முறுகிய நீர்நசை முருக்க நாவெலாம்
வறலவத் திருத்தடத் திறங்கி வார்புனல்
நிறையவாய் மடுத்துநீள் கரையிற் போந்தவட்
பொறையுடற் பாதகப் புக்கி னீங்கினான். 33

[மூண்டெழுந்த நீர் வேட்கை முருகி எழ , நாவெலாம் வண்டு போகத் திருத்தடத்தில் இறங்கி, தீர்த்த நீரை வாய் நிறைய அள்ளிக் குடித்தான். அவ்வளவில் தீர்த்தக் கரையில் அவன் உடற்பாரத்தை நீங்கினான்.]

இழித்தகு கரியவு மிலங்கு மேருவின்
உழித்தலைப் படினொளி விளங்கும் பொன்னிறங்
கொழித்திடு மாறுபோற் குலவும் அத்தடஞ்
செழித்தநீர் மேன்மையாற் தேவ னாயினான். 34

[மிகக் கரியனவும் பொன்மேருவின் பக்கத்தில்படின் மின்னொளி கொழிக்கும் என்பர். அதுபோல, பாவியாகிய வேதியனும் தீர்த்த நீரின் மேன்மையால் தேவனாயினான்]

பண்ணவர் நயமொழி பகரத் தெய்வத
விண்ணிழி விமான மேல்கொண்டு விண்மிசை
யண்ணல முலகெலா மழகு நோக்குபு
கண்ணுத லுலகினைக் கைக்கொண் டானரோ. 35

[பண்ணவர்- தேவர்கள். நயமொழி- ஸ்வஸ்தி வாசகம். தேவர்கள் நல்வரவு கூற விண்ணிலிருந்து வந்த விமானத்தின் மேற்கொண்டு தேவலோகத்தின் அழகெலாம் நோக்கிக் கொண்டு சிவலோகத்தினைச் சென்றடைந்தான்]

கலிநிலைத்துறை
தக்கதொல் புகழயோத்தியிற் றனிக்குடை நிழற்று
மிக்குவாகு வின்மரபுளா னிரணிய நாபன்
றொக்க தானவர் செருக்கடந் திந்திரன் றுணையாத்
திக்கெ லாந்தொழத் திண்புவி புரந்து வாழ்நாளில் 36

[தொன்று தொட்டுப் புகழ்படைத்த அயோத்தியில், தனிக்குடை நிழற்றும் இச்சுவாகு மரபில் இரணிய நாபன் என்னும் அரசன், அசுரர்களின் செருக்கடக்கி வென்று, தேவேந்திரனைத் துணையாகக் கொண்டு எல்லோரும் தொழ உலகை ஆண்டு வந்தனன்]

அன்ன வன்மனைக் கிழத்திய ரிருவரு ளன்னக்
கன்னி மென்னடைக் கலாவதி கலாதரற் பயந்தா
ணன்மகப் பெறாநவிலப் பதுமாவதி மாழ்கிப்
பன்னு மாற்றவள் பழிப்புரை யழுததழு துரைத்தாள். 37.

[அவனுக்கு மனைக் கிழத்தியர் இருவர்.அவருள் கலாவதி என்பாள் கலாதரன் என்னும் நன்மகவைப் பெற்றாள். மகப் பெறாத பதுமாவதி என்பாள் மாற்றவள் மீது பொறாமை கொண்டு அவள்மீது பழிச்சொல் பல அழுது அழுது உரைத்தாள்]

கேட்ட மன்னவ னின்மொழி கிளந்துநன் கருளிக்
கோட்ட மின்றிவாழ் காலையிற் கற்பகக் கொழும்பூந்
தோட்ட லங்கலந்தோ ளிறைவிளிப்ப வண்கனக
நாட்டடைந்தன னவுணரை நாமறச் செகுத்தான் 38

[அதனைக் கேட்ட மன்னவன், பதுமாவதிக்கு இன்மொழிகள் பல சொல்லியருளி நடுநிலையாக் வாழ்ந்து வந்தபொழுது, தேவேந்திரன் அழைக்க பொன்னாடு அடைந்து அசுரர்களை இந்திரனுக்கு அச்சம் நீங்க அழித்தான். நாம்- அச்சம்]

வாகை நல்கிய கோன்றனை மார்புறத் தழுவி
யோகை யால்வரங் கொள்கென வினவி யொண்சிறைய
தோகை நேர்பது மாவதி மகப்பெறு தோற்ற
நாகர் கோன்றரப் பெற்றனன் விடைகொடு நடந்தான். 39

[அவுணர்களுக்கு எதிரான போரில் தனக்குவெற்றியை நல்கிய அரசனை மார்புறத் தழுவி, உவகையால் வேண்டும் வரங் கொள்க என இந்திரன் வினவி, மயிலனைய பதுமாவதி மகப்பேறு பெறும் வரம் தேவர்கள் தலைவன் தரப் பெற்று விடைகொண்டு தன் நாடு மீண்டான். வாகை- வெற்றி. ஓகை- உவகை-மகிழ்ச்சி. ஒண்சிறைய தோகை- தோகை எனும் சினைப்பெயர் முதலாகிய மயிலுக்கு ஆகி, உவமையாகு பெயராகப் பதுமாவதியைக் குறித்தது. நாகர்- தேவர். தோற்றம்- சிறப்பு.]

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
விண்ணினின் றிழியும் வேந்தன் மேவரு நெறிக்கண் மாந்தர்
கண்ணிணைக் கடங்காச் செங்கேழ்க் கதிரொளிப் பரிதித் திண்டேர்ப்
பண்ணமை புரவி தூண்டும் பாகனை நோக்கி யேயே
திண்ணிய குறங்கிலா னென்றவ மதிசெய்து நக்கான். 40

[விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு இழிந்து வரும் வழியில், மக்களின் கண் இமைப்பிற்கு அடங்காச் செக்கரொளி பரப்பும் சூரியனின் திண்ணிய தேரைச் செலுத்தும் பாகனை நோக்கி, ‘ஏஏ வலிய தொடை யிலாய்! என்று அவமதித்துச் சிரித்தான். அருணன் சூரியனது தேர்ப்பாகன்; காசியப முனிவரின் மகன். இடைக்குக் கீழ்ப்பட்ட உறுப்பொன்றும் இலாதவன். ஆகலின், ‘அநூரு’ என்று ஒரு வடமொழிப்பெயர் இவனுக்கு உண்டு. ஏஏ- இகழ்ச்சிக் குறிப்பு. குறங்கு- தொடை.]

அறங்கிள ரருணப் பாக னஃதறிந் தழலிற் சீறிக்
குறங்கில னென்ன வெள்ளிக் குறுநகை விளைத்தாய் வைத்த
மறங்கிளர் வேலினாய் நின்மைந்தனு மூரு வின்றிப்
பிறங்குக வென்னச் சாபம் பேதுற நல்கி னானே. 41

[அருணனாகிய பாகன் அஃதை அறிந்து, நெருப்பெனச் சீறி, தொடையிலாதவன் என எள்ளி நகை செய்தாய்; நின்னுடைய மைந்தனும் தொடையிலாதவனாகப் பிறப்பன் காண் என அரசன் மனம் பேதுறச் சாபம்
நல்கினான்.]

வீடருஞ் சாபத் தீர்வு வேண்டுமு னெழுமா னீர்க்கு
மாடுபொன் மணித்தேர் சேய்த்தி னகறலும் வாளா சென்று
நீடிய கழற்கால் வேந்த னெடுநக ரயோத்தி சார்ந்தான்
கோடிய நுதலி னாளுங் குறங்கிலா மகனைப் பெற்றாள் 42

[நீக்க வியலாத சாபத் தீர்வு வேண்டுமும் ஏழுகுதிரைகள் பூட்டப் பெற்ற சூரியனது திண்தேர், மிக்ச் சேய்மை சென்றுவிட்டது. ஆதலால், வாளா அரசன் அயோத்தி மீண்டான். பதுமாவதியும் தொடையிலாத மகனைப் பெற்றாள். ]

முரணிய வயவர் ஞாட்பின் மொய்யமர் கடந்த வேந்த
னிரணிய பாதஞ் சேர்த்தி யிரணிய பாத னென்னத்
தரணியோர் வியப்ப நாமஞ் சாத்தினான் காதன் மைந்தன்
சரணிலா னென்னு முள்ளக் கவலையிற் றங்கு நாளில் 43

[தன்னொடு மாறுபட்ட பகைவர்களைப் போர்க்களத்தில் எதிர்நின்று வென்ற வேந்தன், தன்னுடைய மகனுக்குப் பொன்னால் பாதம் செய்து பொருத்தி, இரணிய பாதன் எனப் பெயர் சூட்டினான். அன்பு மைந்தன் காலிலான் என்னும் மனக்கவலையில் தங்கினான். அந்நாளில், ]

மடந்தபும் வாம தேவ மாமுனி மொழியுட் கொண்டு
குடம்புரை குவவுக் கொங்கைக் கோற்றொடி மனையு மற்றைக்
கடும்புமங் கொருங்கு போதக் கான்முளை யோடு நண்ணி
விடம்பயின் மிடற்றுப் புத்தேள் மேவருங் காஞ்சி சேர்ந்தான் 44.

[அறியாமையை அழிக்கும் வாமதேவ மாமுனிவர் கூறிய மொழிகளை மனத்தில் கொண்டு மனைவி, மற்றைச் சுற்றத்தார் சூழ மகனோடு நஞ்சுண்ட பெருமான் விரும்பி இருக்கும் காஞ்சிநகரை அடைந்தான். மடம்- அறியாமை. தபும்- அழிக்கும். மனை- மனைவி. கடும்பு- சுற்றம். கான்முளை- சந்ததி, மகனைக் குறித்தது. ]

அத்தலை மாவின் மூலத் தனிமுத லடிகள் போற்றித்
தத்துநீர்ச் சருவ தீர்த்தத் தடம்புனல் விதியி னாடிப்
பத்திரா ரேச மேய பகவனை வழிபா டாற்றி
யித்திறத்தை யொன்பா னாளியல்புளி யொழுகி னானே. 45

[தலைமா- இணையற்ற மாமரம். மூலம்- அடி தனிமுதல் அடிகள்- ஏகாம்பரேசுவரர். ஒப்பற்ற மாமரத்தின் அடியில் இருந்தருளும் இறைவனின் அடியை வணங்கி சருவதீர்த்தத்தில் விதிப்படிப் புனலாடி, பத்திராரேசம் மேய இறைவனை வழிபட்டு , இப்படி நாற்பத்தைந்து நாட்கள் அங்கு முறைப்படி வழிபட்டு வாழ்ந்தான்.]

வருவழி நாளும் போந்து வார்திரைச் சருவ தீர்த்தப்
பெருகுநீர் குடையு மேல்வைப் பிறைமுடிச் சடையார் முஞ்சித்
திருவரை மறைச்சிறான் போற்சென்றுநீ ராடு மைந்தன்
கரைமிசை வைத்த பொற்கால் கவர்ந்துகொண் டோட லுற்றார். 46

[நாளும் இவ்வாறு சருவதீர்த்தத்தில் நீராடிவரும் பொழுது ஒருநாள், பிறைமுடிச் சடையார், அந்தணச் சிறுவன் போல வந்து, நீராடும் அரசகுமரன் கழற்றிக் கரைமேல் வைத்திருந்த பொற்காலைக் கவர்ந்து கொண்டு
ஓடலுற்றார். முஞ்சி- தருப்பை. அதனைத் திரித்து அரைஞாணாக அந்தண பிரமசாரி அணிவர்.]

அனைவருங் கள்வன் கள்வனெனத் தொடர்ந் தணுக லோடுங்
கனைகுரற் றிருநீர் தோயும் புதல்வனுங் கால்கள் பெற்றுத்
துனைவொடு கரைக்க ணேறித் தொடர்ந்து டனோடிச் சென்றான்
முனைவரும் பத்தி ராரக் கோயிலுண் முடுகிப் புக்கார். 47

[அனைவரும் கள்வன் கள்வன் எனக் கூவிக் கொண்டு தொடர்ந்தோடினர். சருவதீர்த்த்தத்தில் நீர் தோயும் புதல்வனும் கால்கள் பெற்று விரைந்து கரைக்கண் ஏறி அவர்களுடன் தொடர்ந்து ஓடினன். இறைவரும் பத்திராரக் கோயிலுள் விரைந்து புகுந்தார்.]

யாவருந் தொடர்ந்து சென்றார் யாங்கணும் துருவிக் காணார்
ஓவறு மொளிப்பொற் கால்களொரு புடைதிகழக் கண்டார்
ஆவயின் மைந்தன் றானும் அடியிணை பெற்ற தோர்ந்தான்
காவல னோக்கி நோக்கிக் கழியவு மகிழ்ச்சி பூத்தான் 48

[அந்தணச் சிறுவனைத் தொடர்ந்து அனைவரும் ஓடினர். துருவித் தேடியும் அவனை எங்கும் காணவில்லை. பொற்கால்கள் ஒளிவிசிக் கொண்டு அங்கோரிடத்தில் கிடத்தலைக் கண்டனர். அரசனின் மைந்தனும் தான் கால் பெற்றிருத்தலைக் கண்டான். அரசன் இதனைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியில் மலர்ந்தான்.]

வெருட்சியும் வியப்பும் எய்தி விமலனார் விளையாட் டென்னும்
தெருட்சி யனாகி யையர் திருவருட் பெருமை நோக்கி
மருட்சிதீர் வரங்கள் பெற்று வளநக ரணைந்து வாழ்ந்தா
னருட்செழுஞ் சறுவதீர்த்தப் பெருமையா ரளக்க வல்லார். 49

[அச்சமும் வியப்பும் எய்தி. இது இறைவனது திருவிளையாட்டு எனத் தெளிந்து,. இறைவனது திருவருட் பெருமையைப் போற்றி மயக்கமொழிக்கும் வரங்கள் பல பெற்று அரசன் வளநகர் அடைந்தான். சருவதீர்த்தப் பெருமையை யாரே அளக்க வல்லார்.? சறுவ தீர்த்தம்= சருவதீர்த்தம்]

நித்திலத் திரளும் பூவும் நிரந்தரம் வரன்றி வார்ந்து
தத்துநீர்த் தரங்கக் கையாற் றடங்கரைக் கச்ச பேச
வத்தனை வழிபா டாற்றுந் தடமுள ததனை யிட்ட
சித்தியென் றுரைப்ப ரிட்ட சித்தி மிக்குதவு நீரால். 50

[முத்துக் குவியலும் பூவும் நிரந்தரம் வரம்பின்றி சொரிந்து தன் அலையாகிய கையினால் கச்சபேச அப்பனை வழிபாடாற்றும் தடம் ஒன்று உளது. அது விரும்பியதனைத்தும் தருதலால், இட்டசித்தி தீர்த்தம் என்று உரைப்பர். உதவும் நீரால்- உதவும் தன்மையினல்]

விருத்துவண் டுளருந் தோட்டு விரிமலர்க் கமலம் பூத்து
மருத்தகு மனைய தீர்த்தம் விருச்சிக மதியிற் சேர்ந்த
வுருத்திகழ் பரிதிச் செங்கே ழும்பனுக் குரிய வாரத்
தருத்தியிற் படியுநற்பே றனைத்தினு மிக்க தாமால் 51

[விருத்து வண்டு- விருந்தாக வந்த வண்டு. உளரும்- கோதும். தோட்டு- தோடு- இதழ், இதழ்களை உடைய. மரு- மணம். விருச்சிக மதி- கார்த்திகைத் திங்கள். பரிதிச் செங்கேழ் உம்பனுக் குரிய வாரம்- ஞாயிற்றுக் கிழமை. அருத்தி- அன்பு. விருந்தாக வந்த வண்டுகள் கோதும் இதழ்கள் உள்ள தாமரை மலர்கள் பூத்து மணங்கமழ்கின்ற அத்தகைய தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஒளிமிக்க செங்கதிர்ச் செல்வனாகிய சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமையில் பக்தியோடு நீராடும் பேறு நற்பேறுகள் அனைத்தினும் மிக்கதாகும்.]

பண்டைய வுகங்க டம்மிற் பாருளோர் கண்ணிற் காண
அண்டரந் நாளினெய்தி யரும்புன லாடிச் செல்வார்
மிண்டிய கலியிற் காணா மரபினான் மேவி யந்நீர்
மண்டிய வன்பிற்றோய்ந்து மகிழ்ச்சிமீக் கூர்ந்து செல்வார். 52

[முந்திய யுகங்களில் மண்ணுலகத்தவர் கண்ணாற் காண தேவர்கள் அந்நாளில் இங்கு வந்து அரும்புனல் ஆடிச் செல்வார். இக்கலியுகத்தில் அவ்வாறு காணாதபடி மூண்ட அன்பினில் தோய்ந்து மகிழ்ச்சி மிக அடைந்து செல்வார்.]

இன்னண மிமைக்கு மோலி யந்தரத் திமையா ராடி
மன்னிய தத்தம் வாழ்க்கை வைப்பினைச் செலுமோர் காலத்
தன்ன மேக்குயர்த்த புத்தே ளமர்ந்து வாழுலகின் வைகுந்
தன்னைநே ரொருவன் விச்சா தரனவ ணின்றும் போந்தான். 53

[இவ்வாறு, ஒளிவீசும் மகுடமணிந்த விண்ணுலகத் தேவர்கள் அரும்புனலாடித் தத்தம் உலகுக்குச் செல்லும் ஓர் காலத்தில், அன்னத்தின் மேலூரும் பிரமதேவனின் சத்திய லோகத்தில் வாழும் அவனுக்கு நிகரான ஒருவன் விச்சாதரன் எனும் பெயருடையவன் அங்கிருந்து இப்பதிக்குப் போந்தான். அன்னம் மேக்குயர்த்த புத்தேள்- அன்னவாகனனாகிய பிரமதேவன்.]

திரைதவ ழிட்ட சித்தித் தீர்த்தநீ ராடித் தெய்வ
விரைகமழ் கொன்றை மாலை விகிர்தனைக் கச்ச பேசத்
தரியயன் பரசு முக்க ணமலனை வணங்கிப் போற்றி
யுரியதன் னிருக்கை நண்ண வும்பரி னெழுந்து சென்றான். 54

[அலைவீசும் இட்டசித்தித் தீர்த்தத்தில் நீராடி, மணங்கமழ் கொன்றைமாலை அணிந்த விகிர்தன் கச்சபேசத்தில் அரியும் அயனும் வணங்கும் முக்கண் அமலனை வணங்கிப் போற்றி, தன்னுடைய இருப்பிடத்தை அடைய ஆகாயவழியே எழுந்து சென்றான்]

புரிமணி யிமைக்கு மோலி பொழிகதிர்ப் பரிதி வட்டஞ்
சொரிகதிர் மழுங்கிச் சாம்பச் சுடர்ந்துபே ரொளியைக் கால
விருவிசும் பறுத்துப் போது மிடைவழி நனைந்த தூசி
னுருகெழு முத்தம் போலும் உறைகழன் றுக்க தன்றே. 55

[புரி- வலம்புரி. மோலி- மவுலி, மகுடம். பரிதி- சூரியன். உறை நீர்த்துளி. நனைந்த தூசு- ஈரமான ஆடை. வலம்புரிச் சங்குபோலும் வடிவுடைய இரத்தினங்கள் பிரகாசிக்கும் மகுடம் வீசும் கதிரொளி சூரிய வட்டத்தின் ஒளியை மழுங்கச் செய்ய, ஆகாயத்தை ஊடறுத்துச் செல்லும்போது, அவனுடைய நனைந்த ஈரமான ஆடையிலிருந்து ஒரு நீர்த்துளி முத்துப் போலக் கழன்று கீழ் வீழ்ந்தது.]

கழன்றுகு திவலை பன்னாட் காரினம் வழங்கல் செல்லா
தழன்றவெஞ் சுரத்து நீண்ட வரசினைப் பற்றி வாடி
யுழன்றநெஞ் சரக்க னுச்சி விழுந்ததா லுலவை தீந்து
நிழன்றிடா வரசுஞ் சீர்ப்ப நிகழ்த்துமுற் றவத்தின் பேற்றால். 56

[காரினம்- கார்மேகக் கூட்டம். உலவை- வற்றிக் காய்ந்துபோன மரம். தீந்து- தீய்ந்து., கருகி. நிழன்றிடா- நிழல் தந்திடா. சீர்ப்ப- சீர்ப்பட, வளம் அடைய. கீழ் உகுந்த நீர்த்துளி, நெடுங்காலம் கார்மேகமே வழங்குதல் இல்லாத நெருப்புப் போல் அழலுகின்ற வெஞ்சுரத்தில், அரசனைப் பற்றி வருத்திய வன்னெஞ்ச அரக்கனுடைய உச்சியில் விழுந்தது. அதனால் காய்தல் தீர்ந்து குளிர் நிழல் தந்திடா அரசும் முன்னைத் தவத்தின் பேற்றால் வளமடையச் செய்தது.]

விழுத்துளி விழுத லோடும் வீட்டினன் றொக்க செல்லல்
கழித்தனன் கவலை வேலை கடந்தனன் பாவக் குப்பை
பழித்தனன் கொடிய பாலை பழிச்சினன் றவத்தின் பேற்றைத்
தெழித்தனன் மகிழ்ச்சி பொங்கிச் சிரித்தனன் றுயரை நோக்கி. 57

[விழு- விழுமிய, சிறந்த. வீட்டினன் - ஒழித்தனன். செல்லல்- வறுமை. கொடியபாலை- தீவினை, தீயூழ். பால் = ஊழ். சிறந்த தீர்த்தத்துளி விழுந்தவுடன் வறுமை அனைத்தையும் ஒழித்தனன்; கவலையை ஒழித்தான்; பாவத் திரளைக் கடந்தான்;தீயூழினைப் பழித்தனன். தவத்தினால் வந்த நல்ல பேற்றைப் போற்றினான்; தெளிந்தான். மகிழ்ச்சியில் பொங்கி முன்பு தன்னை வருத்திய துயரை நோக்கி இகழ்ந்து சிரித்தான்];

வருந்துளி மழைய தென்னில் வாய்மடுத் திடினு மின்ன
பெருந்துய ரிரித்திட் டின்பம் பெருக்கிடா தமரர் நாட்டு
மருந்தெனி னுகரி னல்லால் வளந்தரா திதனுக் கென்னே
திருந்திய வேது வென்று செல்லுலாம் விசும்பைப் பார்த்தான் 58

[மேலிருந்து வரும் துளி மழைநீர்த்துளி என்றால், வாய் மடுத்துப் பருகினாலும் இப்பெருந்துயரினை ஓட்டி இன்பம் பெருக்கிடாது. தேவலோகத்து அமிழ்தம் எனின் உண்டால் அல்லது வளம் தராது. இதனுக்கு என்ன காரணம் என்று மேகம் உலவும் ஆகாயத்தை நோக்கினான். இரித்திட்டு- ஓட்டி. மருந்து – தேவாமுதம். ஏது- காரணம். செல்- மேகம்]

ஆயிடை முன்னு கின்ற வமரனைக் கண்டு நீரிற்
றோயிடை துளிப்ப நோக்கி யிதுவெனத் துணிந்து நெஞ்சிற்
பாயபே ருவகை பொங்கப் படர்தரும் விஞ்சை வல்ல
தூயவன் றன்னை யன்பு தோன்றுற விளித்திட் டானே 59

[அந்த சமயத்தில் முன்னே விண்ணில் செல்கின்ற அமரனைக் கண்டு அவனுடைய ஈரத்தில் நனைந்த ஆடையிலிருந்து வந்த துளி இது எனத் துணிந்து, நெஞ்சிற் பரவிய பேருவகை பொங்க, ஆகாயத்தில் படரும் ஆற்றல் வல்ல வித்தியாதரனை அன்பு புலப்பட அழைத்தான்.]

அழைத்தலும் அருளின் நோக்கி யெதிர்முக மாகி நின்ற
தழைத்தபே ரொளியி னானைத் தாண்மலரி றைஞ்சித் தாழ்ந்து
முழுத்தசீர்க் காதல் விம்ம முறைமுறை பழிச்சி யுச்சி
செழுத்ததடங் கைகள் கூப்பித் திளைத்திது செப்பு கின்றான் 60

[அரக்கன் அழைத்தவுடனே அருளோடு நோக்கி,எதிர்வந்து, நின்ற பேரொளியனாகிய வித்தியாதரனை , தாள் பணிந்து மலரிட்டு இறைஞ்சித் தாழ்ந்து பக்தியுடன் கைகள் கூப்பித் தொழுது பின்வருமாறு கூறுகின்றான்.]

வருத்திய பசியி னானும் வார்புனல் வேட்கை யானுங்
கருத்துநொந் தழுங்கிச் சாலக் கவலுவேன் றுயரை யெல்லாம்
உருத்திடு மருந்தாய் நின்னையுங் கணுய்த்த ளித்ததி யான்முன்
அருத்தியின் வருந்தி யீட்டு மருந்தவப் பேறு மாதோ 61

[ வருத்திய பசியினாலும் நீர் வேட்கையானும் அறிவு மயங்கி மிகவும் கவலையுற்ற என் துயரையெல்லாம் ஓட்டிடும் மருந்தாய் நின்னை இங்கு உய்த்தளித்து அருள்செய்தது, யான் முயன்று வருந்தி முன்செய்த தவப்பேறு]

களைகணா யென்னைக் காத்த கருணையங் கடலே செல்லல்
விளையுநோ யரக்க யாக்கை விண்டுநின் கூறை கான்ற
துளியினாற் றூயே னாகித் தொல்லையிற் பாவந் தீர்ந்தேன்
தளிமழைக் குலக மாறாத் தருவது முண்டு கொல்லோ 62

[ என் பற்றுக்கோடாய், என்னைக் காத்தருளிய கருணைக்கடலே! துன்பம் விளைக்கும் அரக்க உடலை நீத்து நின்னுடைய ஆடை சொட்டிய துளியினால் யான் தூயேனாயினேன்; நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் பாவம் தீர்ந்தேன். மழைத் துளிக்கு உலகு செய்யத் தக்க கைம்மாறும் உண்டோ?]

பாட்டளி முரலாக் கற்புப் பனிமல ரலங்க லோதிச்
சூட்டுமின் னனையார்த் தோயுஞ் சுரருள்நீ யாரை நீதோய்
தோட்டலர்த் தீர்த்தம் யாதுதுரிசி னேன ரக்கனாக
வீட்டிய பாவம் யாதிங் கியம்பென வியம்பு வானால். 63

[பண்ணிசைக்கும் வண்டுகள் தோயா மலர்மாலை அணியும் கூந்தல் மின் அனைய தேவ மகளிர்த் தோயும் சுரருள் நீ யார்? நீ தோய்ந்த மலர் வாவி யாது? குற்றமுடைய அரக்கனாக என்னை வீழ்த்திய பாவம் யாது? எனக்கு இயம்புக என,விச்சாதரன் இயம்புவான்]

எரிபடு பஞ்சி என்ன இனையுநோய் அரக்க யாக்கை
பரியும் வல்வினை யினோடும் பாற்றிய பண்பி னோய்கேள்
புரிமுறுக் கவிழ்ந்த கஞ்சப் பொகுட்டி னோனினிது வைகும்
விரிபுக ழுலகின்வாழ் விச்சாதரப் புலவன் யானே. 64

[ நெருப்பில் பட்ட பஞ்சுபோல துயருறும் அரக்க உடலை வருத்தும் வலிய வினையுடன் நீக்கிய பண்பினை உடையவனே கேள். தாமரைப் பொகுட்டில் இனிது வாழும் பிரமனின் சத்தியலோகத்தில் வாழும் வித்தியாதரன் யான்]

உள்ளலர் உவகை விம்ம வுற்றியான் படிந்த தீர்த்தந்
தொள்ளைமிக் கலர்ந்த நெஞ்சிற் றுரிசினோர்க் கெய்தொ ணாத
தெள்ளுசீர்க் காஞ்சி மூதூர்த் திருத்தகு வரைப்பி னோங்கும்
வெள்ளநீ ரிட்ட சித்தி விரைகமழ் திருத்த மாமால். 65

[ உள்ளமாகிய தாமரை உவகையால் விம்ம யான் உற்றுப் படிந்த தீர்த்தம் அறியாமையாகிய தொள்ளை மிக்கு அலர்ந்த நெஞ்சின் அழுக்குடையோருக்கு அடைதற்கு இயலாத பெருமையுடைய காஞ்சி மூதூத் திருத்தலத்திலிருக்கும் வெள்ளநீர்மிக்க இட்டசித்தித் தீர்த்தமாகும்.]

முதுதுயர்ப் படுத்துச் சால முனிதரும் அரக்க யாக்கை
கதுவியல் லாந்து நெஞ்சங் கனன்று மிக்கழுங்கு நீதான்
பொதுளிய மலர்ப்பூங் காவும் பொய்கையு மருங்கு சூழ்ந்த
மதுரையென் றுலக மெல்லாம் வழங்குமா நகரி லுள்ளாய். 66

[முற்றும் துயரப்படச் செய்து, எவரும் வெறுக்கும் அரக்க உடலைப் பற்றி அலமந்து நெஞ்சங் கொதிக்க மிகவும் வருந்தும் நீதான் மலர்ச்சோலைகளும் வாவிகளும் எப்பக்கமும் சூழ்ந்த மதுரையென்று உலகமெல்லாம் வழங்கும் மாநகரில் இருந்தவன்]

துறந்தவர் தமையுங் கையாற் றொட்டிடி னார்வம் பூட்டி
நிறைந்தவெந் துயரிற் றட்குநீள் பொருள் கவர்ந்து கொள்வா
னறந்திகழ் மறைநூல் வல்ல வந்தணர்ச் செகுத்தா யந்த
மறந்திகழ் பாவந் தன்னால் வல்வினை யரக்க னானாய். 67

[முற்றும் பற்றறத் துறந்த துறவிகளையும், அவர்கள் கையால் தீண்டினால், அவர்களுக்கு ஆசை எனும் விலங்கினைப் பூட்டி, நிறைந்த கொடுந்துயரில் சிறைப்படுத்தும் இயல்பினதாகிய பொருளைக் கவர்ந்து கொள்ளும் பொருட்டு அறம் விளங்குகின்ற மறைகளை வல்ல அந்தணர்களை அழித்தாய். அந்த கொடும் பாவத்தினால் கொடிய வினைகளைச் செய்யும் அரக்கனானாய்]

இருபதி னுறழுமைஞ் ஞூற்றாண்டு களெண்ணில் காலங்
கருமுகி றிவலை காலாக் கடுஞ்சுரத் தவலங் கூர்ந்தா
யொருவரும் நெடிய பாவம் உஞற்றிய கொடியை யேனும்
பெருகுநீ ரிட்டசித்தி மேன்மையாற் பிழைத்தா யன்றே. 68

[20x500= பதினாயிரவருடம்.. திவலை- துளி. காலா- துளித்தல் இல்லா. சுரம்- பாலைநிலம். ஒருவ அரும்- நீக்க முடியாத. பதினாயிரம் எண்ணில்காலம் கருமுகில் நீர்துளியைத் துளித்தல் இலாக் கொடிய பாலையில் கடுந்துன்பம் மிக அடைந்தாய். நீ அரிய நெடிய பாவத்தைச் செய்தனையேனும் இட்டசித்தி தீர்த்த நீரின் மேன்மையால் பிழைத்தாய். அன்றே- தேற்றப் பொருளில் வந்தது.]

அந்திடந் தனக்கு நேரே யானெழ வெனையு மன்றிக்
கந்தமென் றிவலை தூசிற் கழன்றுகத் தவங்கள் சால
முந்தைநீ செய்தா யன்றி முயன்றுமீ தெய்தற் பாற்றோ
அந்தமெய்த் தீர்த்த மெல்லாப் பாவமு மறுக்கு மாலோ. 69

[அந்த இடம் தனக்கு நேரே யான் மேல் எழுந்து செல்ல, மணமிக்க நீர்த்திவலை என் ஆடையினின்றும் கழன்று வீழ, நீ முன்பு தவங்கள் செய்துள்ளாய். அஃதல்லாமல் முயன்றாலும் இதனைப் பெற வியலுமோ? அந்த மெய்த்தீர்த்தம் பாவம் எல்லாவற்றையும் அறுக்கும் ஆற்றல் உடையதாகும்.]

ஆதலாற் பண்டை யீட்டும் அறன்கடை முழுதுந் தேய்த்து
வேதனை யரக்க மெய்யும் விளித்ததோர் துளியே யம்மா
ஓதுமத் திருத்த மேன்மை யுரைப்பதற் கெளிதோ வென்னக்
காதர மகன்ற விச்சைக் கடவுளா தரத்திற் கூறி. 70

[அறன்கடை- பாவம்.காதரம்- தீவினைத் தொடர்பு. ஆதரம்- அன்பு. ஆதலால், முன்பு ஈட்டி வைத்த பாவம் முழுவதையும் தேய்த்து வேதனை செய்யும் அரக்க உடலையும் ஒழித்தது ஒரு நீர்த்துளியே. கூறும் அந்தத் தீர்த்தத்தின் மேன்மையை உரைப்பதற்கு எளிதோ என்று தீவினைத் தொடர்பு அற்ற வித்தியாதரன் அன்புடன் கூறி.]

திருத்தகு சிரகத் தேந்திச் செழித்ததன் பதியி னுய்ப்பான்
அருத்தியிற் கொணர்ந்த விட்ட சித்திநீ ரருளி யுண்மோ
மருத்தக் கற்பகமென் றோட்டு மாலிகக் குவவுக் கோட்டுப்
பெருத்ததோ ளமரனாகப் பெறுவையென் றியம்பிப் போனான். 71

[சிரகம்- குடம். தன் நகருக்குக் குடத்தில் எடுத்துச்சென்றஇட்டசித்தி நீரினை அருளி இத்தீர்த்தத்தினை உண்க. அப்படி உண்டால், மணமிக்க கற்பக மலர் மாலை அணிந்த குன்றுபோல் வலிய தோளை உடைய அமரனாகப் பெறுவை என்று கூறிச் சென்றான்.]

பண்டைவல் வினையுந் துன்பும் பாற்றிய விழுமி யோனும்
உண்டன னிட்ட சித்தி யொண்புன றெய்வ மேனி
கொண்டனன் விமான மூர்ந்து குறுகினான் நாக நாட்டைத்
தொண்டையங் கனிவா யாரிற் றுளைந்தனன் போக வெள்ளம். 72

[ முன்பு செய்த பாவமும் அதனால் விளையும் துன்பமும் ஒழித்த தூயோனும் இட்டசித்தி ஒண்புனலை உண்டனன்; தேவ வடிவம் கொண்டனன்; ஆகாய விமானம் ஊர்ந்து தேவலோகத்தை அடைந்தனன்; அரமகளிருடன் போக வெள்ளம் துய்த்தனன்.]

கொங்கவிழ் மலர்மென் கோட்டுக் குளிர்நிழற் கற்பகப்பூம்
பொங்கரி னாடிச் சேர்ந்தும் புதுமணப் போது பூத்த
கங்கையி னறுநீர் தோய்ந்துங் கடலமிழ் தினிது துய்த்தும்
அங்குள நுகர்ச்சி யெல்லா மடைவினி னுகர்ந்த பின்னர். 73

[கொங்கு- தேன். பொங்கர்- மலர்ச்சோலை. தேன் அவிழும் மலர்களையுடைய கற்பகமரச்சோலைகளின் நிழலில் விளையாடியும் புதுமணம் வீசும் ஆகாயகங்கையின் நறுநீரில் தோய்ந்தும், பாற்கடலில் விளைந்த அமிழ்தத்தை இனிது துய்த்தும், தேவலோகத்தில் உள்ள போகங்களையெல்லாம் முறையா நுகர்ந்து அனுபவித்த பின்னர்,]

விடுசுடர் முத்தந் தத்தும் விரைத்தரங்க வேலைத்
தொடுகடல் வரைப்பிற் றோன்றிச் சுந்தரம் பழுத்த காஞ்சி
நெடுநகர்க் கரச னாகி நீதியி னுயிர்க ளோம்பிக்
கடுநுகர் களத்தே கம்பர் கழலிணை நீழல் சேர்ந்தான். 74

[சுடர் விடும் முத்துக்கள் தத்தும் கடல் சூழ்ந்த நிலவுலகில் பிறந்து, அழகு முதிர்ந்த காஞ்சி நெடு நகருக்கு அரசனாகி நீதியினால் உயிர்களைப் பாதுகாத்து, நீலகண்டமுடைய ஏகம்பர் கழலிணை அடி சேர்ந்தான்.]

அரிமதர் மழைக்கண் மாத ராடலின் முரசு கேட்டுச்
சொரிமுகில் முழக்கென் றார்த்துத் தோகைகள் நடனஞ் செய்யும்
விரிமலர்க் காவு சூழ்ந்து மேதகு வளம்விண் ணாடும்
பரவுமுச் சயினி யென்னும் பட்டினத் தொருவன் மாதோ. 75

[செவ்வரி படர்ந்த மதர்த்த கண்களையுடைய மகளிர் நாட்டியமாடலின்போது ஒலிக்கும் மத்தளவோசையைக் கேட்டு மழை மேகத்தின் இடிமுழக்கம் என்று ஆர்த்து மயில்கள் நடனஞ்செய்யும் மலர்கள் விரிந்த சோலைகள் சூழ்ந்து விண்ணுலகரும் விரும்பும் மேலான வளங்கள் பரவும் உச்சயினி என்னும் பட்டினத்து ஒருவன்.]

ஒருவருந் தொல்லைப் பாலா லொறுத்திடுங் குட்ட வெந்நோய்
விரவிய மெய்யன் காணா விழியின னுடல மெங்கும்
அருவருப் புடைய புண்ணன் அவைதொறும் புழுக்க டோன்றித்
தருமல ருகுவ தென்னச் சரிந்துக வருந்தி வாடி. 76

[நீக்க அரிய தீயூழால் வருத்திடும் குட்டம் எனுங் கொடிய நோய் விரவிய உடலினன், கண் பார்வையிலாதவன்; உடலமெங்கு அருவருக்கத் தக்க புண் உடையவன்; அப்புண்களிலிருந்து மலர் உகுவடுபோலப் புழுக்கள் தோன்றிச் சரிந்து உக மிகவும் வாடி]

தருக்கிவாழ் தனது தேயந் தணந்தனன் பெயர்ந்தூழ்த் தெய்வம்
பெருக்கிய நோயினோடும் பிறருடைத் தேயத் தோர்பால்
மருக்கிலர் மரத்தின் பாங்கர் வதிந்துசெந் நெருப்பிற் சீறி
நெருக்கிய பசியான் மாழ்கி நெட்டுயிர்த் தரற்றா நின்றன். 77

[மக்கள் களிப்புற்று வாழும் தன்னுடைய தேசத்தை விட்டுப் பிரிந்து , ஊழ்த் தெய்வம் பெருக்கிய குட்டநோயுடன் பிறருடைய தேசத்தில் ஒருபக்கம், ஒரு மரத்தின் அடியில் நெருப்பெனத் தகிக்கும் பசியில் மயங்கி பெருமூச்சு உயிர்த்து அரற்றிக் கொண்டிருந்தான்.]

விழியிணை யுறைக்கும் புண்ணீர் மெய்யெலா மண்ணுச் செய்யக்
கழியவு நெஞ்சு புண்ணாய்க் கரைதரக் கண்டம் விம்ம
அழுதிடும் வேலை கம்ப ரணிவிழாச் சேவை செய்வான்
செழுவிய கச்சி மூதூர் செல்லுவார் நெறியிற் கண்டார் 78

[இரு விழிகள் பெருக்கும் கண்ணீரும் புண்ணிலிருந்து வழியும் நீரும் உடல் முழுதும் வழிந்து ஓட, நெஞ்சு புண்ணாய்க் கரைய, குரல் தழுதழுக்க, அழுதிடும் வேளையில், ஏகம்பர் திருவிழாவைக் காணும் பொருட்டுக் கச்சிமூதூர் செல்லுவார் செல்லும் வழியில் அவனைக் கண்டனர்.]

காண்டலு மிரங்கி யண்மிக் கரைந்தினி யழாதி யென்று
வேண்டிய வுணவு நல்கி விழுப்பசி முழுது மோப்பி
யீண்டிய குளிர்ச்சி யுள்ளத் தேய்ந்தயர் வுயிர்த்த பின்னர்
மாண்டதோர் தண்டு பற்றி வம்மெனக் கொண்டு சென்றார். 79

[கண்டவுடனே, மனம் இரங்கி அவனை அடைந்து,’கரைந்து இனி அழாதே, என்று வேண்டிய உணவு அளித்து பசிமுழுவதையும் போக்கினர். உள்ளம் குளிர்ந்து களைப்பு நீங்கியபின், ஓர் தடியை பற்றி ஊன்றி எம்மோடு வருக எனக் கொண்டு சென்றார்.}

நவ்விபோல் விழியி னார்கள் நாடகங் குயிற்று மாடம்
பௌவநீர் படிந்து மேகம் பரந்துகண் படுத்துச் செல்லுஞ்
செவ்விசால் கன்னி காப்பைச் சென்றன ரிறைவற் போற்ற
ஔவிய மிரிக்குங் கச்ச பாலயத் தணையும் போது. 80

[மான் விழி போன்ற விழியுடைய மகளிர் நாட்டியம் செய்யும் மாடங்களில், கடலிற் படிந்துண்ட கார்மேகம் கண்ணுறங்கிச் செல்லும் அழகுடைய கன்னிகாப்பைச் (காஞ்சி) சென்றடைந்தனர், இறைவனை வழிபட. வஞ்சகத்தை அழிக்கும் கச்சபாலயத்தை அணையும்போது.]

எழுந்த நீர்நசை நாவாட்ட இரந்தனன் மெல்ல வுய்ப்ப
அழுந்துபட் டலர்கள் பூத்து வெள்ளனத் தார்ப்பு மல்கித்
தொழுந்தகை யவர்க்குப் பாவத் தொகுதிகள் துவர நீவுஞ்
செழும்புக ழிட்டசித்தித் தீர்த்தநீர் பருகி னானே. 81

[எழுந்த நீர் வேட்கை நாவினை வாட்ட, நீர் இரந்து செல்லுகையில், மலர்கள் பூத்து, வெள்ளை அன்னப்பறவைகள் ஆர்த்து மல்க, தொழுமவர்களுடைய பாவத் திரளை முற்றிலும் கழுவும் புகழுடைய இட்டசித்திதீர்த்தத்தைக் கண்டு நீர் பருகினான்.]

பருகிய பின்னர் நீராற் பையத்தன் முகத்தை நீவ
இருளற விழிகள் வில்லிட் டிலங்கின வந்நீர் தோய்ந்த
கரமெலாங் குட்ட மாறிக் கவின்றன நோக்கி வல்லே
வரமலி யிட்ட சித்தி வார்புனன் முழுதுந் தோய்ந்தான். 82

[பருகிய பின்னர் நீரால் மெதுவாகத் தன் முகத்தை நீவினான். நீவவே, கண்கள் இருள் நீங்கி ஒளி பெற்றன. நீர்பட்ட கைகள் குட்டம் நீங்கி அழகு பெற்றன. இதனை நோக்கியவுடனே வரமலி இட்டசித்தி தீர்த்தத்தில் உடல் முழுதும் தோய்ந்தான்.]

குட்டமுஞ் சீயும் புண்ணுங் குருதியும் புழுவுந் துன்னப்
பட்டபுல் லுருவ மெல்லாம் படரொளிப் பிழம்பு கால
வட்டொளி முறுவற் செவ்வா யந்நலார் மனமை யாப்பக்
கட்டழ கெறிக்கு மேனிக் காமற்குங் காம னானான். 83

[குட்டமும் சீயும் புண்ணும் குருதியும் புழுவும் நெருங்கப் பெற்ற இழிந்த உருவமெல்லாம் நீங்கி, ஒளி வீச, அழகிய மகளிர் மயல்கொள்ளும் கட்டழகு வாய்ப்பக் காமனுக்கும் காமன் ஆனான்.]

கண்டவர் வியந்து மொய்ப்பக் கரைத்தலை யிவர்ந்து சால
அண்டர் நாயக னாராண்ட வருளினை நோக்கிக் கண்கள்
வெண்டர ளங்கள் கால மெய்யெலாம் புளகம் போர்ப்ப
மண்டிய வன்பு பொங்க மனங்கரைந் தவச னானான். 84

[வெண்டரளங்கள்- வெண்முத்துக்கள் , கண்ணீர்த்துளிகள். இந்த அற்புதத்தைக் கண்டவர்கள் வியந்து அவனைச் சூழ, அவன் தீர்த்தத்தின் கரைமேலேறி தேவதேவனாகிய ஏகம்பரின் அருளினை நினைந்து கண்ணீர் சொரிய , உடலெலாம் புளகம் போர்ப்ப மனத்தில் நிறைந்த அன்பு பொங்க மனக்கரைந்து பரவசனானான்.]

எண்ணிய வரங்க ணல்கு மிட்டசித் தீசர் முன்பு
நண்ணிவீழ்ந் தெழுந்து நின்று நாத்தழும் பேற வாழ்த்திக்
கண்ணனை முதலோர் பூசை கண்டசீர்க் கச்ச பேசத்
தண்ணலை வணங்கி யின்ப வார்கலித் திளைத்து வாழ்ந்தான். 85

[நினைத்த வரங்களை நல்கும் இட்டசித்தீசர் முன்பு வீழ்ந்தெழுந்து நின்று நாத்தழும்பேறத் துதித்து கண்ணன் முதலியோர் பூசை செய்து வழிபட்டபெருமையுடைய கச்சபேசத்தண்ணலை வணங்கி இன்பக் கடலில் திளைத்து வாழ்ந்தான். கண்ணனை- ஐகாரம் அசை. ஆர்கலி- கடல்.]

அன்றுபோ லாறு திங்க ளத்தட நியதி பூண்டு
சென்றுநீ ராடிப் பெம்மான் சேவடிக் கமலம் போற்றித்
துன்றுபே ரன்பின் ஏன்ற திருத்தொண்டு புரிய மேருக்
குன்றவார் சிலையி னானுங் குளிர்பெருங் கருணை கூர்ந்து 86

[அன்று போலவே ஆறு மாதங்கள் அவ்விட்டசித்தித் தடத்தில் முறைப்படி நியமமக்கச் சென்று நீராடி, இறைவனின் சேவடிக் கமலங்களைத் துதித்து, நெருங்கிய பேரன்பினொடு இயன்ற தொண்டு புரியவே, மேருமலையை வில்லாக உடைய பெருமானும் கருணை கூர்ந்து]

நலத்தகும் உணவு நாளு நல்குபு சிலநாட் செல்ல
நிலத்தினைப் புரக்குஞ் செங்கோல் நெறியளித் தருள லோடும்
அலர்த்தலைக் கற்பக நாட்டி னமரர்கள் பெருமா னென்ன
மலைத்திடு சிறப்பு வாய்ப்ப மனுநெறி வேந்த னாகி 87

[உடலுக்கு நலத்தைத் தரும் உணவினை நாள்தோறும் நல்க, இவ்வாறு சில நாட்கள் செல்ல, நாட்டினைக் காத்தாளும் செங்கோலாட்சியை அளித்தருளலோடும் மலர்விரி கற்பகக் கா நாடாகிய தேவலோகத்தில் அமர்கோவாகிய இந்திரன் என்ன, மயங்குதற்கு ஏதுவாகிய மனுநெறி வேந்தனாகி]

ஒளியுமிழ் கவிகை வேய்ந்த வொள்ளிய தரளஞ் சிந்தக்
களிஞெமி ருடல மெல்லாம் வெள்ளோளி கஞற்றத் தேனோ
டளிமுரன் மாலை மன்ன ரருங்கறை குவவி யண்மி
நளிமணி முடியிற் றேய்த்து நறுமலர்ப் பாதஞ் சேப்ப 88

[கவிகை- குடை. தரளம்- முத்து. களி- மகிழ்ச்சி. ஞெமிர்- பாவிய. கஞற்ற- விளங்க. கறை- திறை, கப்பம். குவவி- குவித்து. செல்வவளமிக்க அரசர்கள் பெருஞ்செல்வத்தைத் திறையாகக் குவித்து நெருங்கி, தம் மணிமுடி தோயும்படியாக வணங்கி, செந்தாமரை நறுமலர் போன்ற பாதத்தை மேலும் சிவப்பாக்க. ‘ஒளியுமிழ் கவிகை வேய்ந்த ஒள்ளிய தரளஞ் சிந்தக் களி ஞெமிர் உடலமெல்லாம் வெள்ளொளி கஞற்ற’ என்றது திறை செலுத்தும் அரசர்களின் செல்வவளத்தையும் அவர்களது களிப்பையும் விளக்கியது. திறை செலுத்தியதுவும் பணிந்ததுவும் அச்சத்தாலன்று உவப்புடன் செய்தனவாம் ]

கதிர்மணிக் குழையுந் தோடுங் காதொடு சுவலிற் றாழ
முதிர்மணிப் பூண்க ளெல்லா முரஞ்சொளி கான்று மின்ன
வெதிரிய மன்னருட்கி யிறப்பவெக் கழுத்தந் தோற்றி
யதிர்கயிற் கழன்மற் றம்ம வண்மினார்க் காவி நல்க. 89

[ஒளிவீசும் மணி பதித்த குழையும் தோடும் தோளில் படும்படியாகத் தாழ, அணிகலன்கள் எல்லாம் முதிர்ந்து ஒளி உமிழ்ந்து மின்ன, பகைமன்னர்கள் அஞ்சி இறப்ப ஏக்கழுத்தம் (தலையெடுப்பு) தோன்ற, தன் கழலடை அடைந்தவர்களுக்கு அவருடைய உயிரை அளிக்க,]

மண்கணை முழவம் பேரிவார் விசிமுரசு தக்கை
பண்கனி வீணை யாதி படர்முகின் முழக்கங் காட்டப்
பெண்கனி மடவா ராட்டம் பிறங்கொளி மின்னுக் காட்டத்
தண்கனி குழலிற் சிந்துந் தளிமது மழையைக் காட்ட 90

[மண்கணை முழவம்- மார்ச்சனை அமைந்த திரண்ட முழவம். பேரி- பேரிகை. வார் விசி முரசு- வரால் விசிக்கப்பட்ட முரசு. பண் கனி வீணை- பண்கள் இனிமையாகக் கனிவிக்கும் வீணை. இவ்வாத்தியங்கள் எல்லாம் மேகமுழக்கத்தைக் காட்ட. இனிய நாட்டிய மகளிர் மின்னலைக் காட்ட. அவர்கள் கூந்தலிற் சூடிய மலர்கள் துளிக்கும் தேன் துளிகள் மழையைக் காட்ட]

வெளிறுவேல் நயன மாதர் வெள்ளொளிக் கவரி வீசக்
குளிறுவார் முரச மன்னர் குடந்தமுற் றிருபா னிற்ப
ஒளிறுவேற் றானைக் கூட்ட மொண்கழ லிறைஞ்சிப் போதக்
களிறுமான் குலத்தி னோடு கடலெனப் புறத்தி லார்ப்ப. 91

[வெளிறு- வெண்மை. குளிறு- ஒலிக்கும். குடந்தம்- கைகுவித்து வணங்கல்.வெண்மை நிறமுடைய வேல்போன்ற கண்களை உடைய மகளிர் வெள்ளோளி உடைய கவரியை வீச, வார் முரசம் ஒலிக்க ,மன்னர்கள் கைகுவித்து வணங்கி இருபுறமும் நிற்க, ஒளியுடைய படைக்கலம் ஏந்திய சேனைக் கூட்டம் கழலிணையை வணங்கிப் போக,(அணிவகுப்பு மரியாதை) யானை, குதிரைப் படைகள் கடலென புறத்தில் ஆரவாரம் செய்ய]

விரசிநா னிலத்தி னுள்ளோர் யாருமித்தகைய வெள்வேற்
புரசைமால் களிநல் யானைப் புரவலன் மன்னு கென்னாப்
பரசிமெய்த் தெய்வம் போற்றப் பாரெலாம் மகிழ்ச்சி துள்ள
அரசவேற் றரிமான் றாங்கு மணையிருந் தரசு செய்தான். 92

[விரசி- அணுகி. நானிலத்தில் உள்ளோர் யாவரும் அணுகி இத்தகைய சிறப்புடைக் காவலன் நீடு வாழ்க என்று மெய்த்தெய்வத்தை வணங்க, பாரெல்லாம் மகிழ்ச்சியில் துள்ள அரச ஆண்சிங்கம் தாங்கும் அரியணை மெல்ல் வீற்றிருந்து அரசு செய்தான்.]

அன்னமென் னடையை வென்ற வணிநடை மனைவி மார்தம்
பொன்னவிர் சுணங்கு பூத்த புணர்முலைத் தடத்தின் மூழ்கிக்
கன்னலு மமிழ்துங் கைப்பக் கலவியிற் றேறன் மாந்தி
நன்னெறி மைந்த ரீன்று நயத்தக நெடுநாள் வாழ்ந்தான் 93

[அன்னத்தின் நடையை வென்ற அழகிய நடையுடை மனைவிமார்களுடைய பொன் போன்ற தேமல் படர்ந்த இணைமுலைகளாகிய தடத்தில் தோய்ந்து, கரும்பும் அமிழ்தும் கசக்கும் படியான கலவியில் வாயூறலாகிய தேனினை மாந்தி நல்லொழுக்கமுடைய மைந்தர்களைப் பெற்ரு நீண்டகாலம் வாழ்ந்தான்.]

மாயிரு ஞாலம் போற்று மதிமுடி வள்ள லார்தங்
கோயில்கண் முதிய எல்லாங் கோமளந் தழைய வாக்கி
மீயுய ரமரர் பெட்ப விழமுத லெவையும் ஆற்றிச்
சேயரை யரவி னார்தந் திருவடிநீழல் சேர்ந்தான். 94

[ மா இரு ஞாலம்- மிகப் பெரிய உலகம். கோமளம்- அழகு. மீ உயர்- மிக உயர்ந்த. பெட்ப- விழைய. சே அரை- சிவந்த இடை. உலகம் போற்ரி வனங்கும் சந்திரசேகர் திருக்கோவில்கள் பழையனவெல்லாம் புதுக்கி அழகுடையனவாக்கி தேவர்களும் விரும்பும் திருவிழா முதலிய எவையும் ஆற்றி இடையில் அரவுக் கச்சினையுடைய இறைவனாரின் திருவடிநீழல் சேர்ந்தான்.]

ஓசனை யெல்லைக் கப்பா லுறினுமெய்ம் முடையால் யாரு
நாசியைப் புதைக்குந் தீயோன் நால்வகைப் பயனு மிவ்வா
றாசில னாகித் துய்ப்ப அருளிய இட்ட சித்தித்
தேசுசால் பெருமை வேறுஞ் செப்புதல் வேண்டு மேயோ. 95

[ ஒரு யோசனைத் தூரத்துக்கப்பால் வரினும் உடல் நாற்றத்தினால் யாரும் மூக்கினைப் புதைக்கும் பாவம் உடையவன், அறம் பொருள் இன்பம் வீடு எனும் நால்வகைப் பயனும் இவ்வாறு குற்றமிலனாகி அனுபவிக்க அருளிய இட்டசித்தித் தீர்த்தத்தின் பெருமையைச் சுட்ட வேறு சொல்லுதலும் வேண்டுமோ?

வேறு
தள்ளா மகிழ்ச்சி தலைசிறப்பப் பெடையோ டாடித் தண்கமலக்
கள்ளார் மலர்ப்பூம் பொகுட்டணையிற் கணங்கேழ் சுரும்ப ரிசைமிழற்றப்
புள்ளார்ந் துறங்கும் தடமுடுத்துப் பொலிகாம்பீலி யெனுந்தேயத்
துள்ளான் சோமயாசியென வோங்கும் பெயரா னொருமறையோன். 96

[தள்ளா- நீங்கா, குன்றாத. மகிழ்ச்சி என்றும் நீங்காமல் மேலும் மேலும் சிறக்கப் பெடையோடு மகிழ்ந்து தேன் மிகுந்த தாமரைமலர்ப் பொகுட்டு அணைமேல் கூட்டமாக வண்டுகள் இசை மிழற்றப் அன்னப் பறவை உறங்கும் தடங்கள் அழகுசெய்யும் காம்பீலி எனும் தேயத்தில் சோமயாசி எனப் பெயரோங்கும் மறையோன் ஒருவன் இருந்தான்.]

சிந்தை முழுது மிடங்கொண்டு செருக்கு விளைத்துத் துயர்பெருக்கும்
முந்தை மலநோய்க் கிழங்ககழ்ந்து முடியா வின்பப் பெருவீட்டின்
உந்து மறைநூன் முதற்பலவும் உறழா தோதித் தவத்தெளிந்தான்
அந்தண் மறையோர் குழுநாப்ப ணலங்குந் திலத மெனச்சிறந்தான். 97

[சிந்தை முழுதும் இடங்கொண்டு அகந்தையை விளைத்துத் துயர் பெருக்கும் ஆணவமெனும் மூல நோயின் கிழங்கினை அகழ்ந்தெடுத்து, எல்லையில்லா இன்பப் பெருவீட்டினுக்கு உந்திச் செலுத்துகின்ற மறைநூல் பலவும் மாறுபடாது ஓதி வேதங்கற்ற மறையோர் நடுவில் திலகமெனச் சிறந்திருந்தான்.]

தொல்லை யியற்றுந் தீவினையின் றொடர்பா லறியா மையின் வேதம்
வல்லமறை யோர்குலத் தொருவன் வாழ்நா ளழுங்க வுயிர்செகுத்தான்
கொல்லும் பெரிய கொடும்பாவங் கொம்மென் றுருக்கொண் டுள்ளகமிக்
கல்ல னெடுநீர்க் கடலழுந்த வாவியழுங்கத் தொடர்ந் ததுவே. 98

[முன்னைப் பிறவியிற் செய்த தீவினையின் தொடர்பினால் அறியாமல் வேதம் வல்ல மறையவர் குலத்தொருவன் வாழ்நாள் குறைய அவனைக் கொன்றான். மறையவனைக் கொன்ற கொடும்பாவம் பிரம்மகத்தி என்னும் உருவங்கொண்டு சோமயாசியினுடைய உள்ளகம் துன்பக் கடலில் உயிர் வருந்தி அழியத் தொடர்ந்தது.]

வஞ்சி விருத்தம்
பெட்கு மாந்தரிற் பின்செலு
முட்கும் வண்ண முருத்திடுந்
தட்கும் எற்றுந் தணந்தெதிர்
கொட்கு மண்மிக் குனித்தெழும் 99

[தான் விரும்பும் மாந்தரின் பின் செலும்; பயமுறுத்தும் வண்ணம் கோபிக்கும்; மேலே செல்லா வண்ணம் தடுக்கும்; தாக்கும்; பிரிந்து எதிரே சுழன்று திரியும்; கிட்டே நெருங்கி உற்று நோக்கி எழும். குனி- உற்று நோக்கு.]

போர்க்கு வம்மெனப் போந்துநின்
றார்க்குந் தோள்புடைத் தையென
வீர்க்கு மெங்ஙன முய்தியென்
றோர்க்கும் நெஞ்ச முகத்தெறும் 100

[சண்டைக்கு வம்மின் என நின்று கூவும்; தோளினைப் புடைத்து ‘ஐ’ என்ற ஒலியுடன் இழுக்கும்; எப்படித் தப்புவாய் என நெஞ்சம் கழலும்படித் தாக்கும்.]

அன்ன பல்பிணி யாக்கலான்
மன்னு மாமலை மடுத்திங்
கன்ன லென்னக் கருத்துடைந்
தின்ன ணமல்கி யிரங்கினான் 101

[அத்தகைய பலதுன்பங்களை அது ஆக்கலான்,இயந்திரத்திடை சிக்கிய கரும்பென உள்ளம் உடைந்து கலங்கினான்.]

பெரிய தானங்கள் பேணியு
மரிய நோன்புக ளாற்றியும்
பரியும் வல்வினைப் பாவநோ
யிரியல் கண்டில னேங்கினான். 102

[பெரிய தானங்கள் பல செய்தும் அரிய விரதங்கள் மேற்கொண்டும் வருத்தும் வல்வினைப் பாவநோய் ஒழியவில்லை. ஆதலால், மனம் கலங்கினான்.]

ஏர்த்த வெண்மதி யீர்ஞ்சடை
மூர்த்தி யாரருள் முற்றுறுந்
தீர்த்த யாத்திரை செய்வலென்
றோர்த்து ளந்தனி லுன்னினான் 103

[ஏர்- அழகு. ஈர்ஞ்சடை- நனைந்தசடை. சிவபெருமான் அருளை முற்றும் பெறுவிக்கும் தீர்த்த யாத்திரை செய்வல் என்று மனத்தில் கருதினான்.]

ஓசை திக்கி னுலாவுறுங்
காசி யாதிய காமர்சீர்
மாசி லாத்தலம் வல்விரைந்
தேசி லன்பொடு மெய்தினான். 104

[ஓசை- புகழ். எத்திக்கிலும் புகழுடைய காசி முதலாகிய அழகிய குற்றமில் தலங்களுக்கு விரைந்து பழிப்பில் அன்பொடும் எய்தினான்.]

அங்கங் குள்ள வரும்புனற்
பொங்கு தீர்த்தம் புகுந்துதோய்ந்
துங்குங் காடரிக் கண்ணியோர்
பங்கி னாரைப் பணிந்தனன் 105

[அங்கங்குள்ள புனித தீர்த்தங்களில் படிந்து உமையோர் பாகனைப் பணிந்தனன்.]

அறமு மங்கங் கியற்றினான்
மறலும் வல்வினைப் பாவநோய்
பிறிவி லாமையிற் பேதுறீஇ
யுறையுந் தன்பதி யுற்றனன். 106

[ அங்கங்கு தானதருமங்களும் செய்தனன். இருப்பினும் தன்னைப் பீடித்த பிரம்மகத்தி நீங்காமையின் கலக்க
முற்றுத் தன் ஊர் எய்தினான்.]

எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
சிலபகல் வதிந்து கழிந்தபின் னறுகாற் சிறகர் வண்டிவர்ந்து மேன்மிதிப்ப
அலர்முகம் நெகிழ்ந்து கட்புனல் சொரியும் அம்புயத் தடம்புடை யுடுத்து
மலர்தலை யுலகின் நகர்க்கெலா முதற்றாய் நால்வகைப் பயன்களும் பயக்கும்
ஒலிபுகழ்க் காஞ்சி வளநகர்க் கேக வுளத்திடை யாய்ந்துமுன் னினனால்.. 107

[சிலநாட்கள் அங்கு தங்கிப் பின், ஆறுகால்களையும் சிறகுகளையும் உடைய வண்டினம் மொய்த்து மிதிப்ப மலர்ந்த முகம் தேனாகிய புனலைச் ( கட்புனல்= கள்+ புனல்- தேனாகிய புனல். கண் புனல்- கண்ணீர்) சொரியும் தாமரைத் தடங்களை உடையதாய், உலக புண்ணியதலங்களுக்கெல்லாம் முதன்மையுடையதாய், அறமுதலாகிய நால்வகைப் பயன்களையும் அளிக்கும் மிக்க புகழுடைய காஞ்சி வளநகர்க்குச் செல்ல உளத்தில்
கருதினான்.]

கன்னலுங் கமுகுங் கதலியுந் தெங்குங் கஞலிய கழனிசூழ் காஞ்சிப்
பொன்னகர் தனிற்போய்த் தீர்த்த நீராடப் புந்தியின் முன்னுத லோடும்
வன்னியும் விடமு மறலியு மொருங்கோர் வடிவுகொண் டெதிர்ந்தன வுருக்கொண்
டின்னலிற் றொடக்குங் கொடியவல் வினைநோ யிமைக்கு முனஞ்சி நீங்கியதே.108

[கரும்பு, கமுகு, வாழை, தெங்கஞ்சோலைகள் நெருங்கிய வயல்கள் சூழ்ந்த காஞ்சிப் பொன்னகரில் போய்த் தீர்த்த நீராட உறுதியாக எண்ணியவுடன், நெருப்பும் விஷமும் எமனும் ஒருங்கே ஒருவடிவுகொண்டு எதிர்ந்தன போல துன்பமுறுக்கும் கொடிய பாவம் கண் இமைக்கும் முன் அஞ்சி நீங்கியது.]

பார்த்தனன் அகன்ற பாவவல் வினையைப் பருவருங் கவற்சிமுற் றொழிந்தான்
வார்த்தடங் கொங்கை மடந்தையர் நடிக்கு மாட மாளிகைதொறு மணிநீர்க்
கார்த்திரள் தழுவுங் காஞ்சி மாநகரைக் கருதமுற் பிறப்பினி லீட்டுஞ்
சீர்த்தநல் வினைவந் தடுத்த தென்றுளத்திற் றிளைத்தெழு மகிழ்ச்சிமீக் கூர்ந்தான். 109

[தன்னைவிட்டு நீங்கிய கொடிய பாவந்தன்னைப் பார்த்தான். கவலையை முற்றும் ஒழிந்தான். புனிதக் காஞ்சி மாநகரை மனதில் நினைக்க முற்பிறப்பினில் ஈட்டிய புண்ணியம் வந்து அடுத்தது என்று உளத்தில் திளைத்தெழு மகிழ்ச்சி மிக அடைந்தான்.]

மேதகு மணியுங் கனகமுந் துகிலும் வேண்டுவ தழீஇக்கொடு மற்றை
யேதமி லுறையுள் பொருணில மாதி யாவையு மைந்தர்பா லிருவி
மாதர்வான் முகத்துத் தன்மனைக் குரிய மடவரலொடு மங்ககன்று
சீதநீர்ப் பொதும்பர் முகிலினம் பிணிக்குஞ் சிவபுரத் தெல்லையைச் சார்ந்தான்.110

[மேம்பாடுடைய மணி, பொன், ஆடைகள் வேண்டியனவற்றை எடுத்துக் கொண்டு, பிற குறைவிலா அரண்மனை, பொருள், நிலம் முதலியனவ யாவற்றையும் மைந்தர்களிடம் ஒப்புவித்துவிட்டுத் தன் மனைவியருடன் அங்கிருந்து அகன்று குளிர்ந்த நீர்நிலைகளை யுடைய மரச்சோலைகள் மேகக்கூட்டத்தை பிணித்து நிறுத்தும் சிவபுரத்து எல்லையை அடைந்தான். சிவபுரம்- காஞ்சீபுரம்]

கச்சிமா நகரின் வளமெலா நோக்கிக் கரையறு காதன்மீக் கூர
வச்சிவபுரத்தின் வயங்குறு மெண்ணி லலைபுனற் றிருத்த முமாடி
நச்செயிற் றரவப்பூட் பொலந்தடந் தோணம்பனா ரினிதுவீற் றிருக்கு
மெச்சிவா லயமும் புகுந்தினி தேத்தி யிறைஞ்சி மெய்யன்பினிற் றிளைத்தான்.111

[காஞ்சி மாநகரின் வளமெலாம் கண்ணுற்றுக் கரையற்ற அன்பு மீக் கொள்ள, அந்தச் சிவபுரத்தில் உள்ள அளவற்ற தீர்த்தங்களில் ஆடி, சிவபெருமான் இங்கு வீற்றிருக்கும் எல்லாச்சிவாலயங்களிலும் தொழுது வழிபட்டு உண்மை அன்பினில் திளைத்தான்]

வீங்கிருட் பிழம்பு முழுதும் வாய்மடுத்து விரிகதிர்க் கற்றைகள் பரப்பி
யோங்கொளி கஞற்று முருகெழு பரிதி யும்பனுக் குரிய வாரத்தி
லாங்கணாற் பயனுமாடுந ரெவர்க்கு மைதுற வென்றுமுய்த் தளிக்குந்
தேங்கு வெண்டரங்கத் தெளிபுனலிட்ட சித்தியின் விதியுளிப் படிந்தான். 112

[பரிதி- சூரியன். உம்பன் -உயர்ந்தோன். வாய் மடுத்து- உண்டு. கனற்று- மிகுதியாக்கல், நிரப்புதல்.உரு- நிறம். பரிதி உம்பனுக்கு உரிய வாரம் – ஞாயிற்றுக் கிழமை. ஐது- அழகு சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமையில் தன்னிடத்து நீராடுவார் எவருக்கும் அழகு உய்த்தளிக்கும் இட்டசித்தி தீர்த்தத்தின் தெளி புனலில் முறைப்படி நீராடினான்.]

ஆம்பலங் கிழத்தி வாயிதழ்த் தேறலவிர் கதிர்க்கை யினான் முகந்து
தேம்படு மலர்வாய் மடுத்துளங் களிக்குந் தெளிமதிப் பண்ணவ னாளிற்
காம்புறழ் நெடுந்தோ ளுமைமுலைச் சுவடு நம்பனா ரணியமூ வுலகு
நாம்படப் பரந்த தெய்வவான் கம்பை நறுஞ்சிவ கங்கைநீர் தோய்ந்தான். 113

[ஆம்பலங் கிழத்தி- ஆம்பற் பூவாகிய தலைவி. ஆம்பல்- அல்லி. இதழ் வாய்- இதழாகிய வாய். இதழ்- மலரிதழுக்கும் வாய் இதழுக்கும் சிலேடை. தேறல்- ஆம்பற்பூவின் தேன்; கிழத்தியின் வாயூறல். இரண்டற்கும் சிலேடை. கதிர்க்கை- கதிராகிய கை. மதிப்பண்ணவன் -சந்திரன். மலர்வாய்- மலரைப் போன்ற வாய், மலர்ந்தவாய். மதிப்பண்ணவன் நாள்- திங்கட்கிழமை. காம்பு- மூங்கில். காம்புறழ்தோள்- மூங்கில் போன்ற
தோள். நாம்-அச்சம். திங்கட்கிழமையன்று மூவுலகும் அச்சங்கொள்ளும்படிப் பரந்த தெய்வ வான்
கம்பையாகிய சிவகங்கையில் தோய்ந்தான்]

கோட்டுமா மலைகள் குங்குமக் களபக் குவிமுலை யாகவே படைத்த
மோட்டுநீ ருடுக்கைப் பூதல மடந்தை யகட்டினின் முகிழ்த்தவ னாளிற்
பாட்டறாச் சுரும்பர்த் தொடலையங் கூந்தற் பார்ப்பதி தோழிதொட் டருளுந்
தோட்டதா மரையின் மங்களை தீர்த்தச் சுவைப்புனல் கரிசறத் துளைந்தான். 114

[கோடு- சிகரம். மாலைகள்- பெரிய மலைகள். மோட்டு நீர்- கடல். உடுக்கை- ஆடை. மலையாகிய முலைகளையும் கடலாகிய ஆடையையும் உடைய பூதல மடந்தை. அகடு- வயிறு. முகிழ்த்தவன் -தோன்றியவன் நாள்-, செவ்வாய்க்கிழமை.பார்ப்பதி தோழி தோண்டிய தீர்த்தம் மங்களை தீர்த்தம். அதில்
குற்றமற நீராடினான்.]

வரிவளை யுகுத்த மணிவடந் துயலும் உரோணிதன் வனமுலை திளைத்து
விரிகதிர்க் கிரண விதுவுயிர்த் தெடுத்த மேதகைக் கடவுள் வாரத்திற்
பெரியதிண் கரைகொன் றழுங்குவார் தரங்கம் பிணைந்துலா மிந்திர தீர்த்தம்
எரியசைந் தனையமலர்க் குலாஞ் சங்கதீர்த்த நீரிடத்துமாட் டயர்ந்தான். 115

[வரி வளை- வரிகளை உடைய சங்கு. மணிவடம்- முத்து வடம். உரோணி- உரோகிணி; விகாரம். விது – சந்திரன். சந்திரன் உரோகிணியுடன் திளைத்து உயிர்த்த மைந்தன் புதன். புதன் கிழமை இந்திரதீர்த்தத்திலும் சங்கதீர்த்தத்திலும் ஆடினான்.]

துடியிடைக் கருங்கட்டு வரிதழ்ச் செவ்வாய்த் தோகையர் மணிமுலைத் தடத்துப்
படிதருந் துறக்கப் பண்ணவர்க் கறிவு பயிற்றுறுங் குரவன் வாரத்திற்
கடிகமழ் கமலக் காடலர் காயா ரோகணக் கதிர்மணிக் கயத்திற்
செடியுடற் பிறவி துமித்தருள் சூல தீர்த்தநீர்த் தடத்தினுங் குளித்தான். 116

[துடி இடையும் கரிய கண்ணும் இதழாகிய சிவந்த வாயும் உடைய மயில் போன்ற மங்கையரின் முலையாகிய தடம் (வாவி). அதில் தோயும் துறக்கப் பண்ணவர்- தேவர்கள் அவர்களுக்குப் பயிற்றும் குரவன், வியாழன். அவனுக்குரிய நாள், வியாழக் கிழமை. செடி-அழுக்கு, மலம், பாவம். துமி- சிதை. வியாழக்கிழமை
காயாரோகணத்தில் உள்ள கதிர்மணி தீர்த்தத்திலும், பிறவித் துயர் தீர்க்கும் சூலதீர்த்தத்திலும் குளித்தான்.]

இருள்திரண் டனைய எறுழுடற் பணைத்தோ ளிளமதி நிகர்பிறழ் எயிற்று
மருள்திரண் டனைய மனத்துவா ளவுணர் மந்திரக் கடவுள்நன் னாளிற்
தெருள்திரண் டனைய தேர்ந்த மெய்யடியார் தேனென அமிழ்தெனப் பழிச்சும்
அருள்திரண் டனைய தீஞ்சுவைப் பஞ்ச தீர்த்தநீ ரன்பினாற் றுளைந்தான். 117

[அவுணர்களின் தோற்றம் வருணிக்கப்பட்டது. இருள் திரண்டது போன்ற வலிய கரிய உடல்; பெருத்த தோள்கள்; பிறைமதிபோன்ற கோரைப் பற்கள்; வரிசையாக அன்றிப் பிறழ்ந்த பற்கள்; அறியாமை திரண்டது போன்ற மனத்தில்; வாள்போல் கொடிய குணம் கொண்ட அவுணர்கள். அவுணர் மந்திரக் கடவுள்- அசுரர்களின் குரு, சுக்கிரன். அவனுடைய நாள், வெள்ளி. ஞானம் திரண்டு உருக்கொண்டாற்போன்ற மெய்யடியார்கள்; , அருள் திரண்டது எனும்படியான தேன் என அமிழ்தெனப் போற்றத்தக்க தீஞ்சுவை பஞ்சதீர்த்த நீர். அதில் பத்தியுடன் துளைந்தான்.]

மகத்தினை யடுக்கின் மணித்திரை யுததி மருங்குடுத் தகன்ற நானிலத்தின்
மிகத்தழை வளங்கண் முழுவதுஞ் சிதைக்கும் வெந்திறற் சனிக்குரிய நாளின்
அகத்திடை நினைக்கிற் கண்ணுறின் தீண்டின் ஆடுறின், தோத்திரம் புரியிற்
பகைத்தமும் மலமும் பாழ்படச் சினக்குந் தீர்த்த ராசத்தினிற் படிந்தான். 118

[உததி- கடல். கடலால் சூழப்பட்ட நிலத்தின் வளங்கள் அனைத்தையும் சிதைக்கும் வலியுடைய சனிக் குரிய சனிக்கிழமையில் மகநாளில் மனதில் நினைக்கின், கண்ணால் நோக்குறின், தீண்டின், ஆடுறின், தோத்திரம் புரியின் பகைகொண்ட மும்மலமும் பாழ்பட அழிக்கும் தீர்த்த ராசத்தினிற் படிந்தான்.]

இன்னண மேழு நாளினு முறையா லிரும்புனற் றடங்களிற் படிந்து
கன்னிமா வடியின் முளைத்தெழுந் தருளுங் கம்பனார் சேவடிப் போது
மன்னுபே ரன்பின் வணங்கின னெடுநாள்வதிவுழி மனைவி தன்னோடு
மன்னவன் றனக்குப் புவிமிசை வாழ்நா ளுலப்புறு மிறுதி வந்தடுப்ப 119

[இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களிலும் முறையால் தீர்த்தங்களிர் படிந்து, ஒற்றை மாவடியின் கீழ் இருந்தருளும் ஏகம்பனார் சேவடிப் போதினை நிலையான பத்தியின் வணங்கி நீண்டநாள்கள் வாழ்ந்தான். பின் தன் மனைவியுடன் அவனுக்கு வாழும் நாள் முற்றுப் பெறும் இறுதிநாள் வந்து சேர]

கீற்றிளம் பிறையுந் தெள்ளுதீம் புனலுங் கேழ்த்த பொன்னிதழியு மரவு
நாற்றுசெஞ் சடைமே லேற்றிய பெருமா னங்கையோ டங்கெழுந் தருளிப்
போற்றுமவ் விருவர் செவியினுஞ் சிவவென் றுயர்மனுப் புகறலு மன்னோர்
நீற்றுவல் வினைய ராகி யானந்த நிருமல முத்தியை அடைந்தார் 120

[இளம் கீற்றுப் பிறையையும், கங்கையாகிய தீம்புனலையும், பொன் நிறமுடைய கொன்றையையும், பாம்பையும் தொங்கும் செஞ்சடைமேல் ஏற்றிய சிவபெருமான் அம்பிகையுடன் எழுந்தருளி, வழிபடும் அரசன் அரசி இருவர் செவியினும் ‘சிவ’ எனும் மகாமந்திரத்தை உபதேசிக்கவே, அவர்கள் பழ்வினையை ஒழித்தவர்களாய் ஆனந்த நிருமல முத்தியை அடைந்தனர். பரமுத்தி அடைந்தனர் என்றவாறு]

கலிவிருத்தம்
விற்பி றங்கிய வேணியி னார்முனங்
கற்ப வாதியில் வையகங் காழறச்
சொற்பி றங்கிய சூலத்த கழ்ந்ததோர்
பொற்பி றங்கிய பூநதி யுண்டரோ 121

[வில்- ஒளி. வேணி- சடை. முனங் கற்ப ஆதியில்- முன்னொரு கற்பத்தின் தொடக்கத்தில். சொல்- புகழ். வேணியினார் சூலத்தால் அகழ்ந்ததோர் பூ நதி உண்டு.]

நம்பியுன் னுநர்நாம்படு பாவநோய்
கம்பமுற்றுக் கழன்றிடச் செய்தலால்
வம்பு லாவுமவ் வார்புனற் பூநதி
கம்பை யென்றொரு காரணப் பேர்பெறும். 122

[உன்னுநர்- நினைப்பவர். நாம்- அச்சம். கம்பம்- நடுக்கம். தன்னை நினைப்பவர்களின் பாவநோய் நடுக்கமுற்று நீங்கச் செய்தலின் மணமுள்ள அப்பூநதி நடுக்கம் என்னும் பொருளுடைய ‘கம்பை’ என்றொரு காரணப் பேர்
பெறும்.]

தேன்த தும்பிய செந்தளிர் மாவடித்
தோன்று மைம்முகச் சுந்தரர்க் கல்லது
கான்த தைதந்தவக் கம்பையின் மேன்மைதான்
ஆன்ற வர்க்கு மளப்பரி தாகுமே 123

[கான் -மணம். ததைத்த- பொங்கிய. ஆன்றவர்- சான்றோர். தேன் ததும்பிய செந்தளிர்களை உடைய மாவடியில் தோன்றியிருக்கும் ஐம்முகச் சுந்தரராகிய ஏகாமபரேசுவரருக் கன்றி, அக்கம்பைமா நதியின் புகழைக் கூறக் கற்றறிந்த சான்றவருக்கும் கூடுமோ? கூடாதென்க.]

கச்சி மாநகரே யன்று கம்பனார்
வைச்ச தீம்புனல் வார்நதிக் கம்பையா
லச்ச முய்க்கு மரும்பவ நோய்தப
முச்ச கங்களு மொய்யணை வாய்ந்தவே 124

[கச்சி மாநகரே அன்று ஏகம்பர் வைத்த தீம்புனல் கம்பைமாநதியால் அச்சம் தரும் ஒழித்தற்கு அரிய பிறவி நோய் அழிக்கும் என மூவுலக மக்களும் மொய்த்து அணைவதாயிற்று.]

தாம ரைத்தடங் கண்ணனுந் தாதளாம்
பூம கிழ்ந்தமர் பூவையும் ஆதியோர்
காமர் நீரொரு காற்படி பேற்றினாற்
றோம றத்தம்ப தங்களிற் றுன்னினார் 125

[செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலும் மகரந்தத் தூள் அளாம் வெண்டாமரைப் பூவில் விரும்பியமர் பூவையாகிய கலைமகளும் முதலியோர் இப்புனித நீரில் ஒருகால் தோய்ந்த புண்ணியத்தினால் குற்றமறத் தத்தம் பதிகளில் தங்கினர். தோம்- குற்றம்]

ஓத நீர்முழு துண்ட பெருந்தவன்
ஆதி மாதவர் யாவரும் ஆட்டயர்ந்
தேதம் வீழ்த்த பெருந்தக வெய்தினார்
தீதி லாதவச் செய்தவத் தாருளும். 126

[ஒதம்- கடல். ஓதநீர் முழுதுண்டவன் -அகத்திய முனிவர். ஆட்டயர்ந்து- நீராடித் தவம் செய்து. ஏதம்- குற்றம்,மலக்குற்றம். தகவு- தகுதி. பெருந்தகவு- பெருமை. அகத்தியர் முதலிய முனிவர்கள் இங்கு நீராடித் தவம்செய்து மலக் குற்றம் நீங்கினர். அவர்களுள்ளே]

வேறு
காசிபர் கவுதமர் கவுசிகர் பரத்து
வாச ரருந்தமிழ் மாதவ ரென்னும் .
ஆசிலர் ஐவரும் ஐந்து முகத்தினும்
ஈச ரிடத்திற் செவியறி வுற்றார். 127

[ காசிபர், கவுதமர், கவுசிகர், பரத்துவாசர், அகத்தியர் எனும் ஐவரும் சிவபெருமானின் ஐந்து முகத்தினும் செவியறிவு பெற்றனர். செவியறிவு- உபதேசம் இவ்வைவரின் வழித்தோன்றல்களே ஆதிசைவப் பிராமணர்கள்.]

மன்றல்த தும்பும ணிப்புனல் தோய்ந்தொளிர்
கொன்றைபு னைந்தபி ரானடி கும்பிட்
டன்றிய டற்கெழு கூற்றுவ னச்சுற
வென்றன னான்மிரு கண்டுவின் மைந்தன் 128

[மணம் ததும்பும் இந்த புனலில் தோய்ந்து கொன்றை அணிந்த வேணிப்பிரானாகிய சிவனடியைக் கும்பிட்டுத் தன்னை வருத்திய கூற்றுவன் அச்சம் அடைய வென்றான் மிருகண்டுவின் மைந்தன், மார்க்கண்டேயன்.]

சீதம ளாவிய தீம்புன லாடி
நாதரை யேத்துந யந்துசு வேத
கேதுவெ னும்பெய ரானுமு ருக்கிளர்
மேதியை யூர்விற லான்றனை வென்றான். 129.

[ குளிர்ந்த இத் தீம்புனலில் ஆடி மெய் இறைவனை ஏத்தி வழிபட்டு, சுவேதகேது என்னும் பெயருடையவனும் பெரிய வடிவுடைய எருமையை வாகனமாகக் கொண்டவனுமாகிய எமனை வென்றான். மேதி- எருமை.
மேதியை ஊர்தியாகக் கொண்டவன் எமன். உரு- வடிவம்]

வேறு
விரிபூ மெல்லணை வேதன் நாரணன்
எரிவே லிந்திர னாதி விண்ணவர்
மருவார் கொன்றை மலைந்த வேணியார்
அருளா னன்றி யணைந்து முற்றுபு. 130

நிரையான் மேகமு றங்கு நீண்முடி
வரையால் வேலைக டைந்த வைகலிற்
றிரைமேல் வந்துசி னந்து தீவிடம்
விரையா ஆவி விளிப்ப முன்னலும் 131

[விரிபூ – இதழ்விரிந்த தாமரை மலர். மெல்லணை- மென்மையான தவிசு. வேதன் – பிரமன். அருளான் அன்றி- சிவபிரானுடைய அருளினால் அன்றித் தன் முனைப்பால். முற்றுபு- கூடி. பிரமன் திருமால் இந்தியன் முதலாய தேவர்கள் கொன்றைமாலை சூடிய சிவபிரான் அருளை முன்னிட்டு அன்றித் தம்முடைய முனைப்பால் ஒன்று சேர்ந்து, நிரை- வரிசை, கூட்டம். வர- மலை, மந்தரமலை. வேலை- கடல் வைகல்- நாள். திரை- அலை. விரையா-விரைந்து. ஆவி விளிப்ப- உயிரை வருத்த. முன்னலும்- முற்படவே,தொடங்கவே. மலையால் பாற்கடலைக் கடந்தபொழுது எழுந்த தீவிடம் உயிரை வருத்தத் தொடங்கவே]

கண்டார் நெஞ்சுக லங்கி மாழ்கினர்
விண்டார் செய்யுமு யற்சி வேதனை
கொண்டா ருய்திகு றித்தி லாரஞர்
தண்டா ராயுயிர் சாம்பு மவ்வுழி 132

[நஞ்சினைக் கண்டார்; நெஞ்சு கலங்கி மயங்கினர்; அமிழ்து வேண்டிப் பாற்கடலைக் கடையும் தம்முடைய முயற்சியினைக் விட்டனர்; மனவேதனை கொண்டனர்; நஞ்சின் வேகத்திலிருந்து உய்யும் வழி யாது எனும் கலக்கம் குறையாராய் உயிர் மங்கும் அச்சமயத்தில்]

ஊனோ டாவியொ றுக்கு மிவ்விடர்
தானீர் நீவுவிர் தாவில் கச்சியிற்
போனீ ராயிடி னென்று பொள்ளென
வானூ டோர்மொழி வந்தெ ழுந்ததால் 133

[உயிரையும் உடலையும் வருத்தும் இத்துன்பம் நீயிர் காஞ்சி சென்று நீராடினைராயின் தீரும் என்று ஆகாயத்தில் ஒரு மொழிவந்து தோன்றியது. ஒறுக்கும்- வருத்தும். நீவுவிர்- நீங்குவிர். ]

கேட்டார் நெஞ்சுகி ளர்க்கு மோகையர்
ஓட்டோ டேகின ருற்று நண்ணினர்
சூட்டார் சென்னிய தோகை தோடுகொண்
டாட்டார் பூம்பொழி லார்ந்த காஞ்சியின் 134

[வானிலிருந்து எழுந்த மொழியினக் கேட்டவர்கள் மகிழ்ச்சி கொண்டு ஓட்டமாக ஓடிக் காஞ்சியை அடைந்தனர். நண்ணினர்- அடைந்தனர். சூடு-உச்சிக் கொண்டை. தோகை- சினையாகுபெயர், மயிலைக் குறித்தது. தோடு- கூட்டம். மயில்கள் கூட்டமாக மகிழ்ந்துநடமாடும் சோலைகள் நிறைந்த காஞ்சி]

பிணிநோய் பேய்கள் பெயர்ப்ப ஆர்த்தெனத்
தணியா தோசை தழங்கு கம்பையின்
மணிநீ ராடினர் மாவ டித்தலைப்
பணிவாழ் வேணியர் பாத மேத்தினர். 135.

[தம்மைப் பிணித்த நோய்கள், பேய்கள் முதலியன தம்மை விட்டு நீங்கும்போது எழுப்புகிற ஆரவாரம் எனக் கருதும்படியாக குறையாத சத்தம் ஒலிக்கின்ற கம்பை நீரில் ஆடினர். ஏகம்பர் பாதம் பணிந்தனர்.].

தாழா தோங்கி யெழுந்து தாவிமண்
பாழா நீறு படுப்ப முற்றிய
காழார் நஞ்சு கனற்று வெந்துயர்
போழா வாழ்க்கை பொருந்தி யுய்ந்தனர் 136

[குறையாது மேலெழுந்து ஓங்கி படர்ந்து, மண்ணுலகம் பாழாக எரிந்து சாம்பலாக்க முற்பட்ட குற்றமுடைய நஞ்சு அழற்றுகின்ற கொடுந்துயரால் பாழ்படாத வாழ்க்கை பொருந்தி அத் தேவர்கள் உய்ந்தனர். போழா- பாழ்படுத்தாத]

வேறு
ஏதமி லறத்துறை யெவையும் பார்த்தருள்
வேதமா கமங்கலை விதங்கண் மற்றவும்
போதமே லானவர் வழியிற் பூதல
மீதெலாம் பரப்பிய நந்தி மேலவன் 137
[137.குற்றமற்ற அறத்துறைகள் எல்லாவற்றையும் கூறுகின்ற வேதம், ஆகமம்,மற்றும் பிற கலைகளையெல்லாம்
கற்று ஞானமிக்க வழியில் ஒழுக, அக்கலையைப் பூதலமெல் மீதெலாம் பரப்பிய நந்தியாகிய குரவன், ]

ஆயுளோ ரெட்டுறு மளவின் மற்றிவற்
கேயவாழ் நாளினி யிறக்கு மேயெனத்
தாயொடு தந்தையுந் தளர்ந்து கட்புனல்
பாயநின் றழுங்கிய பரிவு நோக்கினான். 138

[138. எட்டு வயது ஆன அளவில், இவனுக்குப் பொருந்திய வாழ் நாள் முடிந்ததே, இனி இறப்பனே என்று தாயும் தந்தையும் கண்ணீர் விட்டுக்கலங்கும் வருத்தத்தை நோக்கினான்]

இருமுது குரவர்களி னைந்து நெஞ்சகங்
கரையநின் றரற்றலாற் கண்ணில் கூற்றுவன்
சுரியெரிக் குஞ்சியன் சுழலுங் கண்ணனாய்
வெருவர வருந்திறம் விலக்க லாகுமோ 139

[தாயும் தந்தையுமாகிய இருமுது குரவர்களும் நெஞ்சம் நைந்து கரந்து உருக அரற்றுவதால், இரக்கமற்ற கூற்றுவன் வருவதை விலக்க முடியுமோ/]

வெந்துளம் புழுங்கிவிம் மாந்து மிக்கழுஞ்
சிந்தைவெங் கவற்சியைச் சிதைமி னீயிர்பூம்
பைந்துணர்க் கடுக்கையம் பகவற் போற்றியான்
அந்தமில் வாழ்க்கை பெற்றமைவல் காண்பிரால் 140

[இவ்வாறு உளம் வெந்து புழுங்கி விம்மி அழும் கவலையை ஒழிமின். யான் சென்று கொன்றைமாலை அணிந்த பகவனைத் தொழுது போற்றி அழிவிலாத வாழ்க்கை பெறக் காண்பீர்கள்]

கரந்தையஞ் சடைமுடிக் கடவு ளாரெதிர்
சிரந்தனை வணக்கியுட் டிளைக்கும் அன்பொடும்
இரந்திடி லாயுளுங் கதியும் யாவையும்
அரந்தை தீர்த்தொய்யென வருள்வ துண்மையே. 141

[கரந்தைப்பூ அணிந்த சடைமுடிக் கடவுளாரின் முன்னே தலையை வணக்கி, உள்ளம் மிக்க அன்புடன் இரந்தால் நீண்ட ஆயுளும் நற்கதியும் யாவையும் கவலை தீர்த்து விரைவில் அவன் அருள்வது உண்மையே. (சத்தியம்).]

சுடர்மதிப் பிளவொளிர் சடிலத் தோன்றலார்
அடியிணைப் பூசனை யாற்றி யுய்ந்திட
விடைகொடுத் தருளிய ரென்று மென்பத
முடியுற வணங்கினன் அருளின் முன்னினான். 142

[மதிப்பிளவு- பிறை. சடிலம்- சடை. தோன்றலார்- தலைவர். அருளியர்- அருளுக. சிவபெருமானின் திருவடிகளைப் பூசனை ஆற்றி உய்தி அடைந்திட விடைகொடுத்தருளுக என்று இருமுதுகுரவரின் திருவடிகளை முடியுற வணங்கினன், திருவருளை முற்படும் நந்தி.]

பங்கய வாவியும் பனிவி ராவிய
பொங்கரு மலர்ப்புது மணங்கள் விம்மிய
மங்கல சிவபுர வரைப்பிற் போந்தவன்
அங்குள வளமெலாம் அன்பின் நோக்கினான் 143

[தாமரைத் தடாகங்களும் குளிர்ந்த சோலைகளும் புதுமணங்கள் கமழும் மங்கலமுடைய சிவபுரத்திற்குச் (காஞ்சிபுரம்) சென்ற நந்திஅங்குள்ள வளமெலாவற்றையும் அன்புடன் நோக்கினான்.]

கரையறு காதலிற் கரைகொன் றார்த்திடுந்
திரைகுலாங் கம்பைநீர்த் தீர்த்தம் தோய்ந்தெழீஇ
வரையொரு சிலையென வாங்குங் கம்பனார்
புரையறு சேவடிப் போது போற்றினான். 144

[கரையைத் தாக்கி ஆரவாரம் செய்யும் அலை உலாவும் கம்பை நீர்த் தீர்த்தத்தில் எல்லையற்ற பத்தியுடன் தோய்ந்து எழுந்து மலையை வில்லென வளைக்கும் ஏகம்பனார் திருவடிப் போதினைப் போற்றி வணங்கினான்.]

நித்தலுங் கம்பைநீர் தோய்ந்து நீறணிந்
தத்தனார் கண்மணி யாரப் பூண்டுபூங்
கொத்தவிழ் மாவடிக் குழகர் பூசனை
பத்தியின் விதிப்படி பயின்று வைகுநாள். 145

[நாள்தோறும் கம்பை நதியில் நீராடி திருநீறணிந்து இறைவனின் அக்கமணிமாலைகளை நிறைய அணிந்து பூங்கொத்தவிழ்ந்த மாவடிக் குழகராகிய ஏகம்பரை பூசனை பத்ததி விதிப்படி செய்து வாழும் நாளில்]

பெருகிய வுழுவலாற் பெட்டுச் செய்திடுந்
திருமலி பூசனை மகிழ்ந்து தெய்வத
மருமலர் மாவடி முளைத்த வள்ளலார்
முருகவிழ் குழலொடு முன்னர்த் தோன்றினார் 146

[உழுவல்- பிறவிதோறும் தொடரும் அன்பு. பெட்பு- விருப்பம். முருகு-மணம் முருகு அவிழ் குழலார்- உமையம்மை. நந்திசெய்த பூசனைக்கு மகிழ்ந்து மாவடிக் குழகனார் அம்மையுடன் முன்னர்த் தோன்றினார்.]

அஞ்சலை நீயென வருளி யேற்றெதிர்
வெஞ்சம மறலியை விலக்கி மற்றவற்
கெஞ்சலில் கருணையால் இகலி னார்க்கெலாம்
நஞ்சுறழ் படைக்கொரு முதன்மை நல்குவான். 147

[நீ அஞ்சற்க என்று அருளி எதிர் நின்ற எமனை விலக்கி, அவனுக்குக் குறையாத கருணையால் மாறுபட்டுவந்தோருக் கெல்லாம் நஞ்சு போன்ற தன் படைக்கு முதன்மை அளிக்கும் பொருட்டு.]

அருங்கண நாதர் விண்ணவர்க ளாதியோர்
ஒருங்கி வண்வருகென வுன்னு முன்னவர்
பெருங்கடல் வளைந்தெனப் பிறங்கு காஞ்சியின்
மருங்குற முற்றினார் மனைவி மாரொடும். 148

[கணநாதர்கள் தேவர்கள் முதலியோர் யாவரும் இங்கு வருக என நினைக்கும் முன்னர் அவர் அனைவரும் பெருங்கடல் சூழ்ந்தது எனக் காஞ்சியின் மருங்கில் மனை மக்களுடன் வந்து அடைந்தனர்.]

ஏவிய வியவரு மேகித் தேங்கமழ்
பூவியல் கற்பகத் திழையும் போக்கறும்
ஆவினில் வரும்பொரு ளைந்தும் மற்றவுங்
காவின ரவ்வுழிக் கடுகி மீண்டபின். 149

[வியவர்- ஏவலர். போக்கு- குற்றம் ஆவினில் வரும் பொருள் ஐந்து- பஞ்சகவ்வியம். காவினர்- சுமந்தனர். ஏவலர்கள் ஏகித் தேன்கமழ் கற்பகப் பூ, இழையும் ஆவினிலைந்தும் மற்றும் இறைவழிபாட்டுக்கு வேண்டிய அனைத்தையும் சுமந்து விரைந்து வந்தனர். ]

விரைகமழ் மாவடி முளைத்த வேதியர்
உரைகெழு நந்தி யெம்பிரானை யொள்ளிய
கரகநீர் விதியுளி யாட்டிக் காமருந்
திருமலி முதன்மையிற் றிருந்த வைத்தனர். 150

[மணங்கமழ் மாவடி முளைத்த ஏகம்பர், புகழுடைய நந்தியெம்பிரானை முறைப்படித் திருமஞ்சனமாட்டி தலைமை பெற வைத்தார்.]

மருத்தெனும் விண்ணவ னுயிர்த்த மாணிழைப்
பெருத்ததோட் சுயசையென் றுரைக்கும் பெண்டகைத்
திருத்தகு மணிநகைக் கருங்கட் செல்வியை
யருத்திசெய் மன்றல்நீர் ஆற்றின் நல்கியே. 151

[மருத்து- வாயு. வாயுதேவன் பெற்றெடுத்த மகளாகிய சுயசை என்னும் பெந்தகையாளை திருமணம் செய்தளித்து]

வரியளி யிமிழ்மத முகத்து வள்ளல்செவ்
வெரியிவர் கூரயி லேந்த லென்னுமவ்
வருண்மலி மைந்தரோ டொருவ னாம்படி
யுரியதம் மகன்மையு முதவி னாரரோ. 152

[ மதமுகத்து வள்ளல்- விநாயகர். கூர் அயில் ஏந்தல்- முருகன். விநாயகர், முருகன் ஆகிய இருவரொடு நந்தியும் ஒருவன் எனும்படி உரிய தம் மகன்மையும் உதவினார்]

கண்ணன் வெண்டாமரைக் கடவு ளேமுதல்
விண்ணவர் கணங்கண நாதர் வெவ்வினை
மண்ணிய முனிவரர் மற்று ளோரெலா
மண்ணலா ரருளினா லடியிற் றாழ்ந்தனர் 153

[திருமால், பிரமன் முதலிய தேவர்கள் முதல் விண்ணவர், கணநாதர் மற்றும் வெவ்வினையை ஞானநீரால் கழுவிய முனிவரர் மற்றுளோர் அனைவரும் அண்ணலார் அருளினால் நந்தி திருவடியில் வணங்கினர்.]

கொந்தொளி மணித்திரை கொழிக்குங் கம்பையின்
அந்தின்நீ ராடியிவ் வரிய பேறுறு
நந்தியங் கடவுளு நம்ப னாரடி
சிந்தையின் இருவிமெய் திளைத்து வாழ்ந்தனன். 154

[அந்தில் – அசை. கம்பையாற்றில் நீராடி இந்த அரிய பேற்றினை அடைந்த நந்தியம்பெருமானும் இறைவனின் திருவடியை மனத்தி லிருத்தி மகிழ்ச்சியில் திளைத்து வாழ்ந்தனன்.]

வளநிதி வேண்டியும் வாழ்க்கை வேண்டியுங்
களைகணா யுலகெலாங் காக்க வேண்டியும்
அளமரு பிறவியை அறுக்க வேண்டியும்
அளவில ரப்புன லாடி யுய்ந்தவர் 155

[பெருஞ்செல்வம் வேண்டியும் வளமான நீண்ட ஆயுள் வேண்டியும் உலகெலாங்க் காக்கும் அரசவாழ்க்கை வேண்டியும் பிறவியாகிய சேற்றினை அறுக்க வேண்டியும் எண்ணிலாதவர் இங்கு நீராடி உய்ந்தனர். அளறு-
சேறு]

இத்தகு கம்பையு மிட்ட சித்தியுந்
தத்துவெண் டிரைப்புனற் சருவ தீர்த்தமுந்
தொத்தலர் மாநிழற் சூழல் வைகிய
வுத்தமன் விழிகண் மூன்றென்ன வோங்குமால் 156

[இத்தகைய கம்பையாறும் இட்டசித்தி தீர்த்தமும் சருவதீர்த்தமும் மாநிழல் வைகிய கம்பரின் மூன்று கண் எனச் சிறந்து ஓங்கின.]

மற்றுமங் குள்ளன வரம்பில் தீர்த்தங்கள்
பற்றமை சேய்நதி பாலி யாதிய
அற்றம்நீத் தருள்வன அவற்றின் மேன்மையை
இற்றென யாவரே யெண்ணு நீர்மையார். 157

[மற்றும் அங்குள்ளன எண்ணிலாத தீர்த்தங்கள். சேயாறு, பாலியாறு முதலியன குற்றம் அறுத்து அருள்வன. அவற்றின் மேன்மையை இத்தகையது என வரையறுத்து எண்ண வல்லவர் யார்? ஒருவருமிலர்.]

ஆடுநர் தீவினை யனுக்கிப் பேரின்ப
வீடருள் தீர்த்தநீர் விசேடம் விண்டனம்
பாடமை திருநகர் படைத்த பன்னிரு
பீடுறு பெரும்பெயர்ப் பெருமை பேசுவாம். 158

[இத் தீர்த்தங்களில் ஆடுநர்களின் தீவினை கெடுத்துப் பேரின்ப வீடளிக்கும் தீர்த்தநீரின் சிறப்புக்களை இதுவரை கூறினோம். இனி பெருமை மிகு இத் திருநகருக்கு அமைந்த பன்னிருபெயர்களின் பெருமையைக் கூறுவோம்.}

ஆகத் திருவிருத்தம் 1224
----------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III