Kāñcip purāṇam XI


சைவ சமய நூல்கள்

Back

காஞ்சிப் புராணம் XI
கச்சியப்ப சிவாச்சாரியார்



கச்சியப்ப முனிவர் அருளிய
காஞ்சிப் புராணம் - மூன்றாவது காண்டம்
அந்தருவேதிப்படலம், நகரேற்றுப்படலம்



திருவாவடுதுறைக் கச்சியப்ப முனிவர்
அருளிய காஞ்சிப்புராணம் - மூன்றாவது காண்டம்
திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் உரையுடன்


    திருச்சிற்றம்பலம்
    Source:
    காஞ்சிப்புராணம்
    திருக்கைலாயபரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்துமஹாசந்நிதானம்
    ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி
    சித்தாந்த சரபம்- அஷ்டாவதானம்
    பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்கள் மாணவரும்
    மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரும்,மெய்கண்டசித்தாந்த ஞானசாத்திரப் பிரசாரக்ருமாகிய
    வண்ணக்களஞ்சியம் சி.நாகலிங்க முதலியாரவர்களால்,
    பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து
    பெரியமெட்டு- வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் குமாரர் ஆதிமூலஞ்செட்டியாரால்
    சென்னை: கலாரத்நாகரவச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
    சாதரண வரூ- வைகாசி- 1910
    ----

    காஞ்சிப்புராணம் - உள்ளடக்கம்
      படலம் செய்யுள்
      1. பாயிரம் 4
      2. திருக்கண்புதைத்தபடலம் 281
      3. கழுவாய்ப்படலம் 423
      4 அந்தருவேதிப்படலம் 80
      5. நகரேற்றுப்படலம் 279
      6. தீர்த்தவிசேடப்படலம் 158
      7. பன்னிருநாமப்படலம் 455
      8. இருபத்தெண்டளிப்படலம் 433
      ஆகமொத்தம் திருவிருத்தங்கள் 2110

    காஞ்சிப்புராணம் : மூன்றாவது காண்டம்
    அந்தருவேதிப்படலம் 80 (710 - 790)


    கலிநிலைத்துறை

    மேக முட்டி விழுப்புனல் சிந்தும்வி ரைப்பொழில்
    நாக முட்டி யுடன்றம ராற்றந கிற்றுணை
    ஆக முட்டர மாதர்கள் நோக்கினர் ஆட்டயர்
    மாக முட்டிவ ளர்ந்துயர் நந்திவ ரைக்கணே.         1

    [நகில் துணை மார்பில் முட்டி வளர் தேவ மாதர்கள் கண்ணுற்று விரும்பி விளையாடும் கொன்றை மரங்கள் நெருங்கிய சோலைகளையுடைய விண்ணுலகத்தை முட்டி உயர்ந்த நந்திமலையின் கண்ணே .
    நகிற்றுணைஆக முட்டர மாதர்கள் நோக்கினர் ஆட்டயர் மாக முட்டி வளர்ந்துயர் மேகமுட்டி விழுப்புனல் சிந்தும் விரைப்பொழிலை,நந்தி வரைக்கணே , மாகம்-ஆகாயம். முட்டி- தடவி நந்திவரை- நந்திமலை. கம்பையாறு (பாலாறு உற்பத்தியாகும் இடம்). நாகம்- கொன்றை. ]

    மாத வத்தி னுயர்ந்தவ சிட்டன்ம கத்தினுக்
    கேத மில்சுவைத் தீம்பய மீந்திடு தேனுவங்
    கோத நஞ்ச மிடற்றவ னூர்விடை யேற்றினைக்
    காத லாலொரு நாள்விழி முந்துறக் கண்டதால்         2

    [ பெரிய தவத்தில் உயர்ந்த வசிட்ட முனிவர் செய்யும் வேள்விகளுக்கு குறைவற்ற இனிய பால்தனைத் தந்திடும் காமதேனுப் பசு நஞ்சுண்ட கண்டனின் வாகனமாகிய விடையேற்றினைக் கண்டு காதல் கொண்டது. பயம்- பால். தேனு- பசு, காமதேனு. ஏறு- ஆண்பாலிற் சிறந்தவர். விழி முந்துறக் கண்டது- முன்னே வரக் கண்டது]

    கண்டுமீ மிசைமிக் குலவாதெழு காமநோய்
    கொண்டு நொந்துவிம் மாந்துமெ லிந்துகு ழைந்துபால்
    மண்டி யூறுசெ ருத்தலும் வற்றியு லர்ந்ததால்
    அண்டர் யாருமு றுப்பில டங்கிய தேனுவே         3

    [ தேவர்கள் யாவரையும் தன் உடம்பின் உறுப்பில் அடக்கிய காமதேனு, விடையேற்றினைக் கண்டு காமநோய் மிக்கூர்தலினால் உடல் வாடி பால் மிகுத்தூறும் மடியும் வற்றி உலர்ந்தது.
    மீமிசைக் குலவாதெழு காமநோய்- மேலும் மேலும் பெருகி வளர்கின்ற காமநோய். உலவாது- குறையாது. செருத்தல்- மடி. ]

    அன்ன தன்மைவ சிட்டன றிந்துத ருப்பையை
    மன்னு மாமனு வாலொரு கன்றின்வ ரச்செய்து
    முன்ன ருய்த்தலும் மோந்துட னக்கிமு கிழ்த்தெழு
    நன்ன ரன்பின்ந யந்தது காமந லிந்ததே         4

    [காமதேனுவின் காமநோய் வருத்தத்தை அறிந்த வசிட்ட முனிவர் தருப்பைப் புல்லை மந்திரித்துக் கன்று ஒன்றினை வருவித்துக் காமதேனுமுன் வரவிட்டார். காமதேனு அக்கன்றினை மோந்து நக்கி அன்பு செய்தது. காமநோய் மெலிந்து நீங்கியது]

    மழையெ லாங்குழு மிச்சொரி மாண்பென வோகையாற்
    கழிய நீண்முலை தாரைகள் கான்றன கான்றபால்
    முழுது மோர்நதி யாயவ ணின்றுமுந் நீர்ப்புகுந்து
    அழிவி லும்பரு மாட்டயர் தீர்த்தம தாயதே.         5

    [ மேகமெலாம் குழுமி மழையைப் பொழியும் தன்மையைப் போல காமதேனுவின் முலைகள் பாலினைச் சுரந்து தாரையாகப் பொழிந்தன. பொழிந்த பால் முவதும் ஒரு நதியாகப் பெருகி அங்கிருந்து கடலிற் புகுந்து மரணமிலாத் தேவரும் ஆடும் புனித தீர்த்தம் ஆயது. ஓகை- உவகை. ]

    பரவை நீளுல கேத்திய வத்தகு பாலியின்
    கரையின் மல்கிய கண்ணுதல் கச்சமில் வைப்பினுள்
    இருளை யீர்க்கும் வராக விரும்புர முண்டதில்
    அரவின் மேற்றுயின் மாலும் மலர்த்தலை யண்ணலும்         6

    [பரவை- கடல். கச்சம் இல் வைப்பு- அளவில்லாத தலம். வராக இரும் புரம்- தாமல் என்னும் நகரம்.
    உலகம் போற்றும் அத்தகைய பாலியாற்றின் கரையில் சிவபெருமான் எழுந்தருளியுள்ள அளவில்லாத தலங்களில் தாமல் என்றொரு தலம் உண்டு. அதில் அரவின்மேல் துயிலும் அண்ணலாகிய திருமாலும் தாமரை மலர்த்தவிசின்மேல் அண்ணலாகிய பிரமனும்]

    தருக்கி யானிறை யானிறை யென்றனர் தம்முளே
    யுரைத்து டன்றம ராற்றுழி யங்கணு ளச்செருக்
    கிரித்த டக்கிய வெம்பெரு மானெரி வண்ணமாய்ப்
    பொருக்கெ னப்புவ னங்கள டங்கநி மிர்ந்தனன்         7

    [தருக்கி- செருக்கி. அமர்- போர். இரித்து- கெடுத்து. அடக்கிய- செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அடக்கும் பொருட்டு. பொருக்கென- விசுக்கென.
    செருக்குக் கொண்டு ‘யானிறை, யானிறை’ என்று சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களுடைய செருக்கினைக் கெடுத்து அடக்கும் பொருட்டு எம்பெருமான் பொருக்கென நெருப்புவடிவமாக புவனங்கள் எல்லாம் தன்னுள் அடங்க நிமிர்ந்து எழுந்தான்]

    அண்ணல் வார்கழல் காணுவ லென்றரி வன்றியாய்
    மண்ண கழ்ந்துபு குந்தனன் வான்முடி நோக்குவா
    னெண்ணி யோதிம மாகியெழுந்தன னான்முகன்
    கண்ணு முள்ளமும் மாழ்கினர் காணலர் மீண்டனர்.         8

    [காணுவல்- காண்பேன், அல் ஈற்றுத் தன்மை ஒருமை வினைமுற்று. வன்றி- பன்றி. ஓதிமம்- அன்னம். மாழ்கினர்- அறிவிழந்தனர். காணலர்- காணாராகி.]

    அடுத்த வவ்வுருவோ டொருதீர்த்த மகழ்ந்துமண்
    ணெடுத்து நாட்டுமிருந் திறன்மால் வராகேசனைத்
    தொடுத்த வன்புதுளும் புறுபூசை தொடங்கினான்
    புடைத்தெழுஞ் சிறையோதிம மானபுத் தேளுமே.         9

    [பன்றி உருவுடனேயே திருமால் ஒரு தீர்த்தம் அகழ்ந்து வராகேசனை அன்பு துளும்பப் பூசனை செய்யத் தொடங்கினான். அவன் அமைத்த கோவில் வராகீச்சுரம். ஓதிம உருக் கொண்ட பிரமனும்]

    அன்னத் தீர்த்த மகழ்ந் தழகார் பிரமீசனை
    நன்னர்ப் பூசையி யற்றிந யந்தனன் நாதனும்
    முன்னர்த் தோன்றிமு குந்தனு வேதனு மின்புற
    இன்னற் றீவினை யீர்ந்தரு ளீத்தும றைந்தனன்.        10

    [அன்னதீர்த்தம் என ஒரு தீர்த்தம் அகழ்ந்து அருகில் பிரமீசனை நிறுவி நன்கு பூசனை செய்தனன். இது பிரமீச்சுரம். இறைவனும் அவர் முன்னர்த் தோன்றி அவர்கள் இன்புற இன்னல்படுக்கும் தீவினை நீக்கி அருளீந்து மறைந்தனன்.]

    அனைய சூழலி னன்னவர் பூசனை யாற்றிய
    கனையு நீள்கட னஞ்சுநு கர்ந்தக ளத்தனை
    நினைய வல்லவ ரேத்துநர் தாழ்பவர் நித்தலு
    மினையும் வல்வினை யின்றி இருங்கதி யெய்துவார்.         11

    [அத்தகைய சூழலில் திருமாலும் பிரமனும் பூசனை ஆற்றிய ஒலிக்கும் கடலில் எழுந்த நஞ்சினை நுகர்ந்த கண்டத்தினை யுடைய இறைவனை நினைய வல்லவர், (வராகேசனையும் பிரமீசனையும்) வழிபடுவோர், வணங்கியவர் ஆகியோர் நாளும் வருத்தும் வலிய வினைகள் ஒழிந்து நற்கதி பெறுவர்.]

    கொச்சகக்கலிப்பா

    செழுங்கிரண வமுதுறைக்குந் திங்கள்பல வண்டமெலாம்
    விழுங்கியபே ரொளிப்பிழம்பாம் வித்தகனை வழிபட்டுக்
    கொழுங்கடுக்கைச் சடைக்கணியாங் கோதறுசோ மீச்சரமென்
    றொழுங்கியவக் கரைத்தலையி னொருதலம்வீற் றிருக்குமால்.         12

    [பேரொளிப் பிழம்பாம் வித்தகன் – இறைவன். அவ்வொளி அவ்வொளி செழுங்கிரணமாகிய அமுதத்தினைத் துளிக்கும். சந்திரனின் அண்டங்கள் பலவற்றையும் விழுங்கி, மழுங்கச் செய்யும். அத்தகைய பேரொளி.
    அப்பேரொளியாகிய இறைவனை வழிபட்டு இறைவனின் வளமான கொன்றைமாலையை அணிந்த சடைக்கு அணியாகும் பேற்றினைச் சந்திரன் பெற்ற சோமீச்சரம் என்னும் தலம்கரையில் உள்ளது. ]

    சலந்தரனா ருயிர்பருகுஞ் சக்கரம்வேட் டுயர்திருமால்
    நலந்தவழ்பூ சனைக்கெடுத்த நாண்மலரொன் றெஞ்சுதலால்
    அலர்ந்தவிழி யிடந்தருச்சித் தஞ்சலித்து நேர்நிற்கும்
    பொலஞ்சடைவித் தகன்றிருமாற் பேறொன்றுபொலிவெய்தும்         13

    [சலந்தராசுரனது உயிரைப் பருகும் சக்கராயுதத்தை விரும்பித் திருமால் பூசனை செய்வதற்கு எடுத்த ஆயிரமலர்களில் ஒன்று குறைந்ததால், தாமரைமலர்போல் அலர்ந்த தன் விழியையே இடந்து அர்ச்சித்து அஞ்சலித்து வழிபட்ட திருத்தலம் திருமாற்பேறு அழகுடன் இருக்கும்.
    பொலன்சடை- பொன்னிறத்தசடை, அழகிய சடையுமாம். பொலஞ்சடை வித்தகன் - சிவபெருமான்.]

    திருமலியு மரசர்குலஞ் செகுத்திறுக்கும் பொருட்டறங்கூர்ந்
    தொருபரசி ராமனெயி லுருத்தவனை வழிபட்டுப்
    பெருகுமொளித் தழற்பரசு பெறுஞ்சீர்மைத் தாயுளது
    விருதுபுகல் பரசிராமேச் சரமென்றொரு தானம்.         14

    [அரசர்கள் குலத்தை அழிக்கும் பொருட்டுப் பரசுராமன் முப்புரம் எரித்த சிவபிரானை வழிபட்டு ஒளிபெருகும் பரசு என்னும் மழுவாயுதத்தைப் பெற்றது, புகழுடைய பரசிராமேச்சரம் என்னும் ஒருதலம் அங்குண்டு]

    இன்னுமரன் மகிழ்ந்தருளு மெண்ணரிய சிவாலயங்கள்
    தன்னுடைய நெடுங்கரையிற் றழீஇக் காஞ்சித் திருநகர்க்கு
    மன்னுமெழில் விளைத்தொழுகு மணிப்புனற்பூந் தடம்பாலி
    நன்னதியின் மேன்மையெலா நவிற்றுவா ரெவரம்மா         15

    [ இன்னும் இவைபோல அரன் மகிழ்ந்து எழுந்தருளும் சிவாலயங்கள் பலவற்றைத் தன்னுடைய நெடியகரையில் தழுவிக்கொண்டு, காஞ்சித் திருநகருக்கு அழகினை விளைவித்தொழுகும் நன்னீர்த் தடம் பாலியாற்றின் மேன்மை எல்லாவற்றையும் யாரால் சொல்லவியலும்? ]

    பொருதார காசுரனைப் பொன்றமலர்ப் பொகுட்டணையின்
    ஒருதேவும் பாப்பணையி னுத்தமனு வானவருங்
    கருதார்முப் புரங்கடந்த கண்ணுதல்சீ ரருள்வாய்ந்து
    பெருகார்வத் தொடுங்குழுமிப் பேணுசிவா கமமுறையின்         16

    காசறுசீர் வளக்காஞ்சி கடிநகருக் காயிரமாம்
    யோசனையிற் சுமேருவெனும் ஓங்கலிடை யுமையீன்ற
    மாசின்மணி வேற்கரத்து வள்ளலைச்சே னாபதியா
    வாசறுநீ ராட்டினா ரத்தீர்த்தஞ் சேயாறாய்         17

    [போருக் கெழுந்த தாரகாசுரனை அழிக்கப் பிரமனும் திருமாலும் தேவர்களும் சிவபெருமானின் அருள் வாய்ந்து மிக்க அன்புடன் சிவாகம முறையில் குற்றமற்ற பெரு வளமுடைய காஞ்சிமாநகருக்கு ஆயிரமாம் யோசனி தூரத்திலுள்ள சுமேரு என்னும் உயரிய மலையினிடை உமையம்மை ஈன்ற வேற்கரத்து வள்ளலாம் முருகப் பெருமானை தேவசேனாபதியாக அபிடேகம் செய்தனர். அத்தீர்த்தம் சேயாறாய்...
    மலர்ப் பொகுட்டு அணையின் ஒரு தேவு- தாமரையாகிய தவிசில் இருக்கும் பிரமன். பாப்பணை- பாம்பணை உத்தமன் -திருமால்.சேயாறு- இப்பொழுதுசெய்யாறுஎன வழங்குகிறது. ]

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

    பூதல மருங்கு போந்து பொலஞ்சடை முக்கண் மூர்த்தி
    சீதவா னிழலின் வைகித் தேவரை முனிவர் தம்மை
    யோதுவித் தருளு மோத்தூ ருழைச்சென்று கடம்பர்கோயிற்
    காதரத் தோடும் புக்கு வடமுக மாகிப் பின்னர்         18

    [பூதலம்- நிலவுலகு. பொலஞ்சடை- பொன்னிறமானசடை, அழகியசடை. சீதம்- குளிர்ச்சி. வானிழல்- பெருமைமிகு நிழல்(மாவடி). ஓத்தூர்- திருவோத்தூர். ஆதரம்- விருப்பம்.
    சேயாறு பூவுலகுக்கு வந்து சிவபெருமானின் குளிர்ந்த் திருவடி நீழலில் தங்கி, தேவர் முனிவர் முதலியோரை ஓதுவித்தருளும் திருவோத்துருழைச் சென்று கடம்பர்கோயிலில் விருப்பத்துடன் புகுந்து ]

    பிரளய முடிவின் மீளப் பிரமனெவ் வுலகுந் தோற்றத்
    துரிசறு வேதங் காணான் றுருவிப்போ யுரகம் பூண்ட
    பரசிவன் பூசை யாற்றிப் பழமறை யருளப் பெற்று
    வரமலி கின்றவேத நூபுர வைப்பி னெய்தி         19

    [பிரளய முடிவில் உலகம் எவற்றையும் பிரமன் மீளப் படைக்க முயல்கையில் குற்றமற்ற வேதத்தைக் காணாமல் தேடிப் போய், பாம்பணி பரமசிவனைப் பூசை செய்து பழமறகள் அருளப் பெற்று வரங்கள் எளிதில் கிட்டும் வேதநூபுரபுரம் (திருமாகறல்) தலத்தை எய்தி. தோற்ற- தோற்றுவிக்க. துரிசு- குற்றம், மயக்கம். துருவி- தேடி. உரகம்- பாம்பு. ]

    கிளந்தவப் பதியினின்றுங் கிழக்கினை நோக்கிச் சென்று
    வளம்பயில் புனித வேக வதிமணிக் கம்பை கூடி
    விளங்கிய கூட்டத் தெய்தி விராவிய ததுமுக் கூடல்
    களங்கறுத் தாடி னோர்க்குக் கண்ணிய வரங்க ணல்கும்         20

    [ சொன்ன அந்நூபுர புரத்திலிருந்து கிழக்காகப் பாய்ந்து புண்ணிய வேகவதி, கம்பை ஆறுகளுடன் கூடி, அம்மூன்றுநதிகளும் கூடும் முக்கூடலில் உள்மாசு நீங்க நீராடினோருக்குக் கருதிய வரங்களை அருளும்.]

    மருமலர்க் குவையல் கொட்கும் வளந்திரைப் பாலி யென்றா
    உருகெழு மணிக ளுந்தி ஒழுகுபூஞ் சேயாறென்றா
    விருவகை நதியுங் காஞ்சி யெழினகர் வடபாற் றென்பால்
    மருவிடு மெல்லையாகித் தீர்த்தமாய் வயங்கு மன்றே         21

    [மணமுள்ள மலர்கூட்டம் சுழலும் வளமுடைய பாலியாறும், நிறமுடைய மணிகளை உந்திவரும் அழகிய சேயாறும் ஆகிய இருவகை நதிகளும் அழகிய காஞ்சிமாநகருக்கு முறையே வடக்கு, தெற்கு எல்லையாகியும் தீர்த்தமாகியும் விளங்கும்.
    கொட்கும்- சுழலும். என்றா- எண்ணிடைச்சொல். நிரல் நிரையே பொருள் கொள்க. ]

    அச்செழு நதிக ணாப்ப ணந்தரு வேதி யாகி
    யெச்சமில் யமுனை கங்கை யிடைப்படு மந்தர் வேதிக்
    குச்சமாய் முதுவ தாயெவ் வூழியும் அழிவின் றோங்குங்
    கச்சிமா நகர மங்க ணிகழ்சில காதை சொல்வாம்         22

    [நாப்பண்- நடுவில். அந்தருவேதி.> அந்தர்+வேதி- உ:சாரியை. ஆற்றிடைக்குறை என்று பொருள். இதுவே இப்படலத்தின் பெயராயிற்று.
    அந்த இருநதிகளுக்கும் இடையே அந்தர்வேதியாக, குறைவற்ற யமுனை கங்கை ஆகிய இருநதிகளுகிடைப்பட்ட (அலகாபாத், பிரயாகை) அந்தர்வேதிக்கு உயர்வாக மேம்பட்ட எவ்வூழிக் காலத்தும் அழிவின்றி ஓங்குவதாகிய கச்சி மாநகரத்தில் நிகழ்ந்த சில கதைகளை இனிச் சொல்லுவாம்}

    எரிமணி மோலித் தேவ ரியக்கர்க ளுரக ரேனைக்
    கருடர்காந் தருவர் தங்கள் கன்னிய ரானோ ரெல்லாம்
    திருவளர் தத்தம் வைப்பிற் றீர்த்தநீர் மூழ்கி நாளு
    மருமலர்ப் பொழில்சூழ் கச்சி மாநகர் வரைப்பி னெய்தி         23

    [எரி- ஒளி. மோலி- முடி. உரகர்- நாகர். வைப்பு- தலம்.
    ஒளிமிக்க மணிகள் பதித்த மகுடங்கள் அணிந்த தேவர்கள் இயக்கர்கள் நாகர்கள் ஏனைக் கருடர் கந்தருவர் ஆகியவர்களின் மகளிர்கள் அனைவரும் மங்கலமிக்க தத்தம் இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடி நாளும் மணமிக்க சோலைகள் சூழ்ந்த கச்சிமாநகரினை அடைந்து.]

    பெருகொளிப் பரமா னந்தப் பிலத்தினி திருக்குந் தெய்வ
    வரையணங் குமையாள் பாதம் வலம்புரிந் திறைஞ்சி வாழ்த்தித்
    திருவருள் கிடைத்துச் செல்வார் செல்லுநா ளொருநாட் சாலப்
    பரிவொடு வணங்கிப் போற்றிப் பன்முறை பழிச்சி நின்றார்.         24

    [பெருகு ஒளிப் பரமானந்தப் பிலத்திலிருக்கும் தெய்வ அணங்காம் உமையாள் திருவடியை வலம் வந்து இறைஞ்சி வாழ்த்தி, இறைவியின் திருவருள் பெற்றுச் செல்பவர்கள், அவ்வாறு வணங்கிவரும் ஒருநாளில் இறைவியை மிகவும் பலமுறை அன்புடன் வணங்கிப் போற்றி வழிபட்டு நின்றார்.]

    அளியின முரன்று மூசும் அம்மல ரலங்கற் கூந்தற்
    களிமயி லனைய காமக் கண்ணிமற் றவரை நோக்கி
    யொளிநகை மடவீ ரென்னே நுங்கருத் துரைமி னென்னத்
    தளிர்புரை செங்கை கூப்பித் தாழ்ந்துவிண் ணப்பஞ் செய்வார்.         25

    [ அளி இனம்- வண்டுக் கூட்டம். முரன்று- ஒலித்து. மூசும்- மொய்க்கும். அலங்கல்- மலர்மாலை.
    வண்டுக்கூட்டம் மொய்க்கும் மலர்மாலையணிந்த கூந்தலை உடைய களிமயில் போன்ற சாயலளாகிய காமாட்சி அவர்களை நோக்கி, நீங்கள் விரும்பியது யாது உரைமின் என்ன, அவர்கள் சிவந்த கரங்களைக் கூப்பித் தாழ்ந்து வணங்கி விண்ணப்பம் செய்தனர்]

    அதிரிடைக் குவவுக் கொங்கை யன்னையிவ் வுலகத் துள்ள
    நதிநத முதலாந் தீர்த்த முழுவது நாளு நாளும்
    விதியுளிப் படிந்து போற்றும் விழைவினேம் விழைவு முற்ற
    முதிரருட் கடைக்க ணல்கென் றிரத்தலு முழுது மீன்றாள் .        26

    [ அதிர்- அச்சம். அதிரிடை – அச்சத்திற்கு ஏதுவாகிய இடை; முலைப்பாரத்தினால் சிற்றிடை இற்று ஒடிந்து விடுமோ என்ற அச்சம். நதி- மேற்கிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறு. நதம் – கிழக்கிருந்து மேற்கு நோக்கி ஓடும் ஆறு.
    அன்னை! இவ்வுலகத்தில் உள்ள நதி நதம் முதலாவுள்ள தீர்த்தம் முழுவதும் நாளும் நாளும் விதிமுறைப்படி படிந்து நின்னைப் போற்றும் விருப்பம் உடையவர்களாக வுள்ளோம். அந்த விருப்பம் நிறைவேறக் கடைக்கண் பாலித்தருளல் வேண்டும் என்று இரக்கவே, ]

    கருணைகூர்ந் தருளி யோர்பாற் கைகுவித் திறைஞ்சி நின்ற
    வருணன்மேற் கடைக்கண் சாத்தமற்றவ னாங்காங் கெய்தித்
    திருநுத லிறைவி யாணை செப்பலுங் கங்கை யாதிப்
    பொருபுனற் றீர்த்த மெல்லாம் பொருக்கெனத் திரண்டு வந்து.         27

    [ உலகம் முழுதும் ஈன்ற முதல்வி, ஒருபக்கத்தில் கைகளைக் கூப்பி இறைஞ்சி நின்று கொண்டிருந்த வருணதேவனை நோக்கினாள். அவன் குறிப்புணர்ந்து ஆங்காங்கு சென்று இறைவியின் ஆணையைக் கூறலும், கங்கை முதலாகிய தீர்த்தங்கல் எல்லாம் வேகமாகத் திரண்டு வந்து]

    வருவினைப் பிறவி மாற்றும் பிலமதன் வடமேல் பாங்கர்
    ஒருதடங் கடவுட் பொய்கை யுருவமாய்த் திகழ்த லோடுங்
    கருமுகிற் கூந்தன் மென்றோட் கன்னியர் தொழுது போற்றி
    யருளினா லந்நீர் மூழ்கி யளப்பருங் களிப்பு மிக்கார்.         28

    [வரும் பிறவிக்குக் காரணமான வினைகளைப் போக்கும் பிலமதன் வடபால் ஒரு பெரிய தெய்வீகத் தடாகமாகத் திகழவே, தேவகன்னியர் முதலியோர் தொழுது போற்றி இறைவியின் அருளினால் அந்நீரில் மூழ்கி அளவிலாத களிப்பு மிக அடைந்தனர்.]

    அங்கதிற் படிந்தே கம்பத் தடிகளைத் தொழுவோர் யார்க்கும்
    வெங்கொலைத் தீமை யாதி வீட்டிநாற் பயனு மெய்துந்
    துங்கநல் வரமு மீந்தாள் சுரிகுழற் பிராட்டி யந்தப்
    பொங்குநீர் சருவ தீர்த்தப் பெயரினாற் பொலிவுற் றோங்கும்         29

    [அத்தெய்வீகத் தடாகத்தில் படிந்து நீராடி, திருவேகம்பத்தடிகளைத் தொழுவோர், கொடிய கொலைப்பாவம் முதலியவற்றை ஒழித்து அறமுதலாகிய நாற்பயனும் அடையும் மேலான வரமும் ஈந்தாள், இறைவி. அந்த பொங்கு நீர்த் தீர்த்தம் சருவதீர்த்தம் என்ற பெயருடன் பொலிவு பெற்று ஓங்கும்.]

    முன்னொரு நாளிற் செவ்வேள் முருகனும் விண்ணா டாளு
    மன்னனு மூண்ட போரில் வலாரிதன் மீதி லோச்சும்
    மின்னவிர் குலிசத் தண்டின் வீறழித் துமையாள் ஈன்ற
    பின்னவன் புடைத்தான் றன்கைப் பிடித்தவெங் குலிசத்தண்டால்         30

    [முன்பொரு நாளில், முருகப்பெருமானும் தேவேந்திரனும் தம்முள் மூண்டபோரில், தேவேந்திரன் முருகன்மீது தன்னுடைய வச்சிரப் படையைச் செலுத்த, அப்படயின் வீறு அழியுமாறு உமையாள் ஈன்ற மைந்தர்களில் பின்னவன் தன்கைக் குலிசத்தண்டால் புடைத்தான்.
    வலாரி- வலன் என்ற அசுரனைக் கொன்றமையால் இந்திரனுக்கு வலாரி என்று பெயர். குலிசம்- வஜ்ராயுதாம் முருகன், இந்திரன் இருவரிடமும் குலிசப்படை உண்டு. பின்னவன் – இளையோன். உமை பெற்ற சிறுவர்களில் பின்னவன் முருகன்.]

    வானவர்க் கரச னோடு மறுகிமா ழாந்து மூர்ச்சித்
    தீனமுற் றிரங்கும் வெள்ளை யிபமொரு சிறுவன் கையால்
    யானுமென் னிறையும் பட்டேம் மின்னவ னூர்தி யாகில்
    ஊனமொன் றுறாதென் றெண்ணி யொப்பருங் காஞ்சியெய்தி         31

    [மாழாழ்ந்து- மயங்கி. வெள்ளை இபம்- வெள்ளையானை, ஐராவதம். மின்னவன் – திருமால்.
    வானவர்க்கு அரசனாகிய இந்திரனோடு வருந்தி மயக்கமெய்தி மூர்ச்சித்து இழிவுற்று இரங்கும் வெள்ளையானை, ஒருசிறுவனின் கையால் யானும் என்னுடைய இறைவனும் அழிந்தேம்; திருமாலின் வாகன மானோமெனில் இழிவொன்றும் வாராது என்று எண்ணி ஒப்பற்ற காஞ்சியை அடைந்து]

    வம்பலர்ந் துலவும் வேக வதிப்புனற் றிருத்த மாடி
    யம்பிகை பாகற் போற்றி யருள்பெறு நீலமேனி
    யும்பனை மலையிற் போற்றி யவ்வர முற்ற தற்றா
    னம்புமக் கிரியை யத்தி கிரியென நவிலு வாரால்         32

    [வம்பு- புதுமணம். அலர்-மலர். நீலமேனி உம்பன் -கரிய மேனியனான திருமால். புதுமணம் வீசும் மலர்களைத் தாங்கிப் பாயும் வேகவதி ஆற்றின் புனலில் தீர்த்தமாடி அம்பிகை பாகனாகிய ஏகம்பனைப் போற்றி வழிபட்டு அருள்பெற்ற நீலமேனியனாகிய திருமாலை அவனுடைய மலையில் போற்றி அவனுக்கு வாகனமாகும் வரத்தினைப் பெற்றது.
    வெள்ளையானை திருமாலுக்கு வாகனமாம் வரம் பெற்ற மலையை இக்காரணத்தினால் அத்திகிரி என அழைப்பர்]

    தானவர் கோடி யோரைத் தடிகுடர் சரியக் கொன்று
    மானவெங் குருதிச் சூல வார்நுதி யேற்றும் பாவம்
    ஈனமுற் றிரிக்கு மாறு சண்டிகை யெண்ணி வல்லே
    கானமர் கோடி தீர்த்தங் கண்டனள் காண்ட லோடும்         33

    [தானவர்- அசுரர். தடி- மாமிசத் துண்டம். கான் -மணம்.மணமலர்களைக் குறித்தது.
    கோடிக்கணக்கான அசுரர்களைத் துண்டாக்கிக் குடர்சரியக் கொன்று அவர்களுடைய குருதியைத் தன்னுடைய சூலத்தின் மீதேற்றும் பாவமாகிய இழிவை ஒழிக்குமாறு சண்டிகை எண்ணி விரைவில் மணமலர் மிக்க தீர்த்தம் எடுத்தனள். எடுத்தவுடன் ]

    தொட்டருள் குளிர்பூந் தீர்த்தச் சுடர்மணிக் கரையின் பாங்கர்
    எட்டுரு வுடைய மூர்த்தி யிலிங்கமாய்ச் சுயம்பு வாக
    வுட்டவழ் கருணையோடு முளைத்தனன் உதனால் யாரும்
    பெட்டல்செய் தான்றோன் றீசமெனப் பெரும்பெயர் பெற்றோங்கும்         34

    [தீர்த்தம் எடுத்து அக்குளிர்பூந் தீர்த்தக் கரையின் பக்கத்தில் எட்டுரு வுடைய மூர்த்தியாகிய பரமேசுவரன் இலிங்கவடிவாய்ச் சுயம்புவாக அகத்துள் தவழும் கருணையோடு முளைத்தனன். அதனால் யாரும் விரும்பத் தான்றீச்சுரம் எனப் பெரும்பெயர் பெற்று ஓங்கும்.
    எட்டுரு- அட்டமூர்த்தி; ஐந்துபூதங்கள் நிலவு பகலோன் உயிர் என எட்டுவடிவம். சுயம்பு- தானே தோன்றியது. உள்+ தவழ்= உட்டவழ். உதனால்- அதனால். பெட்டல் செய்தல்- விருப்பம் கொள்ளல். ]

    இருவினை சவட்டி யாளும் எம்பிரான் பயந்த செம்மல்
    பொருதிறற் சூர னாண்மை பொன்றிய முருகப் புத்தேள்
    அருள்விழிப் பார்வை தன்னால் அணிகொள்மேற் றளியிற் செந்தேன்
    முருகவிழ் துளபத் தண்டார் முகுந்தனோ ரிலிங்க மானான்         35

    [சவட்டி- அழித்து. பொன்றிய- கெடுத்த. மேற்றளி- திருமேற்றளி.

    நல்வினை தீவினை இரண்டினையும் அழித்து ஆளும் எம்பிரான் பெற்ற செம்மல், போர்த்திறமிக்க சூரனை அழித்தவனாகிய முருகப் பெருமான் அருள்விழிப் பார்வையுடன் அழகாக அமர்ந்துள்ள திருமேற்றளியில் குளிர்ந்த துளசிமாலை அணிந்த திருமால் ஓர் இலிங்கமானார். திருஞானசம்பந்தர் இத்தலத்தில் திருமாலுக்குச் சிவசாரூப்பியம் அளித்தார் எனக் காஞ்சிப்புரானம் முதற்காண்டம் கூறும். ]

    வருங்கடை நாளின் மாலும் மரைமலர்ப் பொகுட்டு ளானும்
    ஒருங்குவீட் டின்பந் துய்ப்பான் உன்னினர் சங்க தீர்த்தஞ்
    சுருங்குறா தழுந்து பட்ட குண்டிகை தீர்த்தந் தொட்டுப்
    பருங்கனி தூங்கும் வில்வம் பலாசிவற் றடியி னெய்தி         36

    [கடைநாள்- ஊழி இறுதிக்காலம். மரை- தாமரை- முதற்குறை. மரைமலர்ப் பொகுட்டுளான் -பிரமன். சுருங்குறாது- விரிந்து. அழுந்துபட்ட- ஆழம்கொண்ட.
    ஒரு ஊழியின் இறுதியில் திருமாலும் பிரமனும் ஒருங்கே கூடி வீட்டின்பம் நுகர விரும்பினர். சங்கதீர்த்தம், குண்டிகைதீர்த்தம் ஆகியவற்றை அகழ்ந்து வில்வம் பலாசமரம் இவற்றடியில் தங்கி.]

    வடம்புரள் குவவுக் கொங்கை மால்வரை யீன்ற நங்கை
    கடம்பணி காளையோடும் இறைவனைக் கருத்திற் பேணிப்
    படம்படும் ஆரம் பூண்ட பண்ணவ வெம்மை யின்னே
    யுடம்பட நினது காயத் துறுத்துகென் றிறைஞ்சி நோற்றார்         37

    [வடம்- கச்சு. குவவு- திரண்ட. படம்படும் ஆரம்- பாம்பு. காயம்- உடல். உடம்பட்- ஒருசேர. உறுத்துக- பொருத்துக. உமையம்மையோடும் கடம்பணி முருகனோடும், இறைவனை மனத்தில் வழிபட்டு, பாம்பணி பூண்ட இறைவனே எம்மை ஒருசேர உம்முடைய உடலில் பொருத்தியருளுக என்று இரந்து வழிபட்டனர். சோமாஸ்கந்தராக இறைவனை வழிபட்டனர்.]

    அடிகளு மவருக் கவ்வா றருளினன் அதனால் அந்தக்
    கடிபடு நகர்கா யாரோ கணமெனப் பெயர்பூண் டன்று
    மிடிகெட வங்க ணோற்போர் கயிலையை மெய்யோ டெய்திக்
    குடிகொளு மாற்றினா னுமப்பெயர் கொண்ட தாமால்.         38

    [சுவாமிகள் பிரமனுக்கும் மாலுக்கும் அவ்வாறே அருளினர். அவர்களுடைய உடலைத் தன்னுடலுடன் ஒருங்கு பொருத்திக் கொண்ட இடமாதலின் அந்நகர் காயாரோகணம் எனப் பெயர் பூண்டது. அங்கிருந்து நோற்போர் கயிலையை உடலுடன் எய்தி அங்குக் குடிகொளும் பேறும் எய்துவர் ஆதலினாலும் காயாரோகணம் எனப் பெயர் கொண்டதாம்.
    காயம்- உடல். ஆரோகணம்- ஏற்றுக்கொள்ளுதல். பூண்டன்று- உறுதியாகப் பூண்டது. மிடி- வறுமை. இங்குத் திருவருளாகிய செல்வம் இன்மையாகிய அஞ்ஞானம் குறித்தது.]

    குலவுசீர் மயான வைப்பிற் கொழுஞ்சுடர்க் கனலி நாவில்
    அலகில்பல் லுலகு மெஞ்சா தாகுதி யாக்கிப் போக்கி
    யிலகுமா விரத மென்னுஞ் சாத்திர மினிது தோற்றி
    நிலவிய யோக பீடத் திருந்தனன் நிமல மூர்த்தி         39

    [சீர் குலவு மயான வைப்பு- திருக்கச்சி மயானம். கொழுஞ்சுடர்க் கனலி- கொழுந்து விட்டு எரியும் வேள்வித் தீ. ஆகுதி- வேள்வித் தீயில் இடும் அவிசு. திருக்கச்சி மயானத் தலத்தில் அளவில்லாத பல்லுயிர் உலகுகளை வேள்வித்தீயினுக்கு ஆகுதியாக்கி ஒழித்து, மாவிரதம் என்னும் சாத்திரத்தைப் படைத்து நிமலமூர்த்தி யோக பீடத்தில் இருந்தனன்.]

    திரையெறி கம்பை யாற்றின் தென்புலத் தும்பர் மேவும்
    விரைகமழ் கடப்பஞ் சூழல் வேலவன் வைப்பி னந்தக்
    குரைகழற் குமர வேட்குக் கோதிலா ஞானந் தன்னை
    வரைகுழைத் தருளுமெங்கள் வள்ளல்மிக் கருளிச் செய்தான்        40

    [அலைவீசுகின்ற கம்பையாற்றின் தென்மேற்கில் மணங்கமழ் கடப்பமரச்சோலை சூழ்ந்த வேலவன் தலத்தில், ஒலிக்கின்ற கழல்களை யணிந்த குமரவேளுக்குக் குறைவிலாச் சிவஞானத்தை மலையை வில்லாக வளைத்த இறைவன் அருளிச் செய்தான்.]

    மையவிர்ந் தனைய தன்கேழ் மாசுடல் கழிப்பான் முக்கண்
    ஐயனை வரங்க ணல்கு மமலனைக் கமலப் போதாற்
    கையினாற் காலிற் றூவிக் கசிந்துள முருகி யேத்திச்
    செய்யவண் பவளவண்ணம் பெற்றனன் றிருமா லென்பான்         41

    [கருமை இருள் பிரகாசித்தது போன்ற நிறமுடைய தன் மாசுடைய உடலைக் கழிக்கும்பொருட்டு முக்கண் ஐயனாகிய சிவபிரானை, வேண்டும் வரங்கள் நல்கும் மலமற்றவனைத் தாமரைமலர் கொண்டு கையினால் அவனுடைய காலில் தூவிக்கசிந்து உளம் உருகி ஏத்திச் செய்ய வளமான பவள வண்ணம் பெற்றனன், திருமால் என்ப்வன்}

    கடல்கடைந் தெழுந்த நஞ்சாற் காலெனப் பெயர்ந்து மீண்டெம்
    அடிகளோ சரணமென் னாஅடைக்கலம் புக்க வொண்கேழ்
    நெடுமுடி யமரர்க் கெல்லா நின்மலன் விடவே கத்தின்
    கொடுமையை முழுதுங் காற்றிக் குளிர்வித்து மாலு மாலை.         42

    [காலென- காற்றென. காற்றி- நீக்கி. மாலும்- மயங்கும். மாலை- மாலை நேரத்தில்.
    பாற்கடல் கடைந்து எழுந்த நஞ்சால் காற்று எனச் சடுதியிற் பெயர்ந்து சிவபெருமானிடம் அடிகளோ சரணம் என்று அடைக்கலம் புகுந்த பிரகாசிக்கும் நெடுமுடி அமரரக் கெலாம் நிமலனாகிய இறைவன் விடவேகத்தின் கொடுமையை முழுதும் நீக்கிக் குளிர்வித்து மகிழ்ச்செய்த மாலை நேரத்தில்]

    சுந்தர முடியிற் றிங்கட் துணிபடும் அமிழ்தந் தன்னால்
    வெந்ததோர் இருந்தை போலும் மெய்யெலாங் குளிர்வித் தங்கு
    முந்துறத் தொழுது நிற்பப் பணித்தனன் அந்த மொய்ம்பாற்
    சந்திர கண்டமாய தப்பெருந் தானம் மாதோ         43

    [தன்னிடம் அடைக்கலம் புகுந்த தேவர்களைத் தன் அழகிய முடியில் உள்ள பிறைச் சந்திரனின் அமுதத்தினால் இறைவன் கரிந்த கரிக்கட்டைகள் போலிருந்த தேவர்களின் உடல்களை எல்லாம் குளிர்வித்து பண்டைபோல் மேனியராய் அங்கு தொழுது நிற்கப் பணித்தனன். அந்தச் சிறப்பால் அத்தானம் சந்திரகண்டம் என்ப் பெயர் பெறுவதாயிற்று.]

    கச்சணி முலையாள் பங்கன் கழலிணை பூசை யாற்றிக்
    கச்சப வடிவு நீங்கிக் கார்முகில் வண்ணன் மேனாட்
    கச்சமி லின்பந் துய்த்துக் களித்தன னாத லாலே
    கச்ச பாலயமென் றோர்பேர் பெற்றதக் கடவுட் டானம்         44

    [கச்சபம்- ஆமை. கச்சம் அளவு.
    உமைபங்கனின் கழலிணைகளைப் பூசித்துக் கச்சமப வடிவு நீங்கப் பெற்றுக் கார்முகில் வண்ணனாகிய திருமால், முன்னை நாளில் அளவற்ற இன்பந் துய்த்து மகிழ்ந்தனன். ஆதலாலே, அவன் கச்சபவடிவம் நீங்கிய தெய்வத்தானம் கச்சபேச்சுரம் அஎனப் பெயர் பெற்றது.]

    அத்திரு வரைப்பில் தீர்த்தம் அருள்தருங் கச்ச பேச
    வுத்தமன் பூசை யாற்று மோதிமக் கடவு ளாடிச்
    சித்திகள் பெறலா லிட்ட சித்தியென் றாய தின்று
    முத்தியோ டிட்டசித்தி முகிழ்த்திடு மாடு வோர்க்கே         45

    [ஓதிமக் கடவுள்- அன்ன வாகனனாகிய பிரமன்.
    அக்கச்சபேசத் தலத்திலுள்ள தீர்த்தத்தில் பிரமன் நீராடி கச்சபேசனைப் பூசித்து சித்திகள் பெற்றதனால் அத்தீர்த்தம் இட்டசித்தி எனப்படது. இன்றும் இட்டசித்தியில் முழுகிக் கச்சபேசனை வழிபடுவோருக்கு இட்டசித்திகள் முகிழ்த்திடும்.]

    தாழ்ந்தவ ரெழுமுன் றாழ்ந்தோர் தங்களா லீட்டும் பாவம்
    வீழ்ந்து போ யணங்கச் செய்யும் வித்தகன் கச்ச பேசத்
    தாழ்ந்ததன் குற்றந் தீர்ப்பா னருட்குறி வேறுண் டாக்கி
    வாழ்ந்தமாந் தாதா வென்பான் வழிபட்டான் வகுத்துச் சொல்வாம்         46

    [பாவம் செய்த இழிந்தவர்கள் இழிவினின்றும் எழுவதற்கு முன் அவர்களால் ஈட்டப்பட்ட பாவங்களை அழியச் செய்யும் வித்தகனாகிய கச்சபேசனின் அருட்குறியைத் (இலிங்கம்) தான் தாழ்வடைவதற்குக் காரணமான குற்றத்தைத் தீர்க்க வேண்டி உண்டாக்கி வாழ்ந்த மாந்தாதா என்பான் வழிபட்டான். அவ்வரலாற்றை வகுத்துச் சொல்வாம்]

    இரவிதன் வழியின் வந்தா னிகல்கடிந் திலகும் வேலான்
    பரவிய புகழான் வையம் பாரித்த புயத்தின் வைத்தான்
    கரவினைக் கரக்கு நீரான் காமர் மாந்தாதா வென்னும்
    அரையனோர் தினத்திரா வினமளியிற் கனவி னானே.         47

    [சூரிய குலத்தில் வந்தவன்; பகையை ஓட்டி விளங்கும் வேலினை உடையவன்; பரவிய புகழை உடையவன்; உலகத்தைத் தன் பருத்த புயத்தில் வைத்துத் தாங்குபவன்; வஞ்சனை அற்றவன்.; அழகிய மாந்தாதா என்னும் அரசன் ஒருநாளிரவில் ஒரு கனாக்கண்டான். தோள்வலியால் நாட்டைக் காத்தலினால் தோளில் தாங்கினான் எனக் கூறுதல் கவி மரபு.]

    விடிந்தபின் நறுநீ ராடி விதியுளி கரும முற்றி
    மடந்தபு குரவ னான வசிட்டனைக் கூவி யைவர்க்
    கடந்தமா தவனே யான்மன் கனவிய கனவைக் கேளென்
    றடர்ந்தெழு மார்வம் பொங்க வன்னவற் குரைக்க லுற்றான்         48

    [விடிந்தபின் , விதிப்படி நறுநீராடி, விதிப்படி நித்திய கருமங்களை முடித்து, அறியாமையை அழிக்கும் குருவாகிய வசிட்டமாமுனியை அழைத்து,’புலனைந்தையும் வென்றவரே! யான் கண்ட கனவொன்றினைக் கூறுகின்றேன். கேட்டருள்க’ என்று ஆர்வம் பொங்க அவருக்கு உரைக்கலுற்றான்]

    கலிவிருத்தம்
    வையக மும்மையும் வந்து தாழ்தொறும்
    ஐயமோ லியின்மணி யழுத்தித் தேய்த்தலால்
    ஒய்யெனத் தழுவிய தழும்பினோடுபூஞ்
    செய்யதா மரையெனச் சிவந்த தாளினான்         49

    [மூவுலகத்தவரும் வந்து தாழ்ந்து வணங்குந்தொறும் அவர்கள் சிரசின்மேல் அணிந்திருக்கும் மகுடங்களில் பதித்திருக்கும் மணிகள் அழுந்தப் படிவதினால் ஏற்ற தழும்பினோடு அழகிய சிவந்த தாமரை மலரெனச் சிவந்த தாள்களையுடையவன்]

    அரியினம் எதிரினும் அதிர்ப்பத் தாக்குறுஞ்
    சொரிமதக் களிறுதேர் துரகந் தானையோ
    டிரியல்கண் டரையரை யிரங்கத் தாண்மிசை
    வரிகயிற் கழலொடு வயங்குஞ் செவ்வியான்         50

    [அரி- சிங்கம். எதிரினும்- போருக்கு வரினும். துரகம்- குதிரை. இரியல்- புறமுதுகிட்டு ஓடுதல். கழல்- வீரகண்டை. சிங்கக் கூட்டம் முரணிப் பகையுடன் வந்தாலும் அதனை நடுங்கத் தாக்கும் ஆற்றலுடைய மதம் சொரியும் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படையுடன் புறமுதுகு காட்டி ஓடியோர் கெஞ்ச, தன் தாளின் மீது வீரக்கண்டை விளங்கும் நிலைமையன்.]

    மெல்லிழைப் பட்டுடை விரித்து டுத்துமேல்
    வல்லுற வீக்கிய மணிக்கச் சூடுகோத்
    தெல்லுமிழ் சுரிகையா னேந்த கட்டினிற்
    கல்லணி யுதரபந் தனங்கொள் காட்சியான்         51

    [மெல்லிழையிலான பட்டாடையை விரித்து உடுத்து, அதன்மேல் இறுக்கக்கச்சினை வீக்கி, அக்கச்சின் ஊடே ஒளிம்வீசும் சுரிகையை உடையவன். அகட்டினில் மாணிக்கக் கற்கள் பதித்த உதரபந்தனக்கொள் காட்சியவன். சுரிகை- உடைவாள். அகடு- வயிறு. உதரபந்தனம்- அரைப்பட்டிகை.]

    சந்தனங் கலவைகள் ததைந்து தண்பனிக்
    கந்தநீ ரொழுக்கிமேற் கமழுந்தா துறீஇச்
    சுந்தர மணிவடந் துலங்கி வெற்பென
    மைந்த மைந்தகன்று போர்மலைந்த மார்பினன்         52

    [குளிர்ந்த நறுமணங்கமழும் பனிநீரிலாடி, சந்தனக் கலவைகள் பூசி , அதன்மேற் கமழும் பொடிகள் அப்பி, அழகிய மணிமாலைகள் விளங்க, மலையென அமைந்த அகன்று போர்மலைந்த மார்பினை உடையவன். போகமும் வீரமும் உடைமை கூறியது]

    பொன்னையுந் துகிலையும் பொருவில் பண்டமோ
    டென்னவு மிரப்பவர்க் கீந்து சேப்புறீஇத்
    தன்னுடைத் தாளினிற் றாழ்வ தல்லதோர்
    மன்னடி தாழ்கலா மலர்ந்த தகையினான்         53
    [ பொன்னையும் துகிலையும் மற்றும் ஒப்பில்லாத பிற பண்டங்களோடு எவற்றையும் இறப்பவர்க்கு ஈந்த சிவந்து மலர்ந்த கையினான்; தன்னுடைத் தாளினிற் பிறர் தாழ்வதல்லது தான் பிற மன்னர்களின் அடியை வணங்காதவன். கை முழந்தாளளவு தாழ்ந்த கையினன் எனவுமாம். இது அங்க லட்சணம். ]

    அளவறு வீரர்க ளெறிந்த ஆய்தமும்
    இளமயி லனையவ ரெண்ணி லாரெலாம்
    உளமகிழ் வுடனெறி யொண்க ணாய்தமுந்
    துளைபட வுருவிய தொங்கற் றோளினான்         54

    [அளவற்ற வீரர்கள் எய்த ஆய்தங்களும் இளமயிலனைய சாயலுடைய இளமகளிர் தம் கண்களாகிய ஆயுதமும் துளைபட உருவிய, மாலை அணிந்த மார்பினன். ஆற்றலும் அழகும் உடையவன் என்றவாறு. ]

    அடைந்தவர்க் கமிழ்து மாருயிரு மாயடி
    யிடைந்தவர்க் காலமு மெரியு மாகிய
    சுடர்ந்தசெந் தாமரை துணையுங் கண்ணினான்
    மடந்தைய ருயிருணும் வதனத் திங்களான்.         55

    [தன்னை அடைக்கலமாக அடைந்தவருக்கு அமிழ்துமாய் உயிருமாயவன்; பகைத்தவருக்கு நஞ்சும் எரியுமாகியவன். செந்தாமரை ஒக்கும் கண்ணினன். மடந்தையர்களின் உயிரினை உண்ணும் அழகிய முகச்சந்திரன். ]

    ஒளிர்கதிர் பிலிற்றுமொன் பதிற்றுக் கோள்களுந்
    தளையுறுத் தியதெனத் தயங்கு பன்மணி
    யளவறு விலையின வமைத்தி ழைத்ததோர்
    வளமலி யொருமுடி வயங்கு சென்னியான்         56
    [ஒளிக்கதிர்களை உமிழும் நவகோள்களும் பதித்ததென விளங்கும், விலைமதிப்பரிய பன்மணிகள் அழுத்தி இயற்றியதொரு வளமான மகுடம் விளங்கு சென்னியான்]

    அற்புத வுருவினா னலகில் சீர்த்தியான்
    றற்பணி யுலகெலாந் தவிர்ந்த தேசினான்
    பற்பல தீமையும் பரிந்த பண்பினான்
    பொற்பமர் திருவெலாம் பொலிந்த சீரினான்         57

    [உலகிலில்லா அழகிய உருவினான். அளவிலாத புகழுடையான். தன்னைப் பணியும் உலகெல்லம் தங்கிய ஒளி உடையான். தீமைகள் நீங்கிய பண்பினன். பொலிவுடைய எல்லச் செல்வங்களும் பொலியும் பெருமை உடையவன். அற்புதம்-உலகில் இல்லாக்காட்சி. சீர்த்தி- புகழ். தவிர்ந்த- தங்கிய. தேசு- ஒளி, ஆணை, கடவுட்டன்மை]

    இன்னவன் வரவிறும் பூது பூத்துளேன்
    அன்னவன் யாவனீ யறைதி யென்றலுங்
    கன்னலை யமிழ்தொடு கலந்திட் டாலென
    மன்னவன் மகிழ்வுற வசிட்டன் கூறுவான்         58

    [ இத்தகையவனை யான் கனவிற் கண்டேன்; அதிசயம் பூத்துளேன்; அன்னவன் யாவன்? நீ கூறி யருள்வாய்’ என்றலும், வசிட்டன், மன்னவன் மகிழ்வுற அமிழ்தமும் தேனும் கலந்ததெனக் கூறுவான்]
    கொச்சகக்கலிப்பா
    உரவுமணிக் கடலாடை யொருமகளைப் புணர்ந்தோய்கேள்
    பரவுபுகழ் நினைத்தரும்பூ பதியுவனா சுவனென்பான்
    விரவுமொரு குடைநிழற்கீழ் மேதினியெ லாங்குளிர
    இரவகற்றிக் குடியோம்பி யினிதிருக்கு மந்நாளின்         59
    [கடலை ஆடையாகத் தரித்த ஒருமகளாகிய பூமாதேவியைப் புணர்ந்தவனே ! கேள்! பரவிய புகழுடைய அரசன் யுவனாசுவன் என்பவன் தன்னுடைய ஒருகுடை நீழற்கீழ் உலகமெல்லாம் குளிர வறுமையை அகற்றிக் குடிகளைப் பாதுகாத்து இனிது வாழும் அந்தநாளில். பூமியை ஆளும் அரசனின் மணையாளாகக் கூறல் மரபு. புணர்தல்- அதனால் வரும் பயனைக் கொள்ளுதல். பூபதி- அரசன். குளிர- தங்க. இரவு- வறுமை.]

    நெடுநாள்புத் திரனுயிரா நிரப்பினால் வான்கதியில்
    விடுமேன்மைப் புத்திரகா மேட்டியெனுந் தனியாகம்
    வடுவீழ்த்த முனிவரரை வளர்த்தருள ஏயினான்
    அடுவேகப் புலனவித்த வந்தணரு மதுபுரிந்து         60

    [நீண்ட நாட்கள் புத்திரன் இல்லாத வறுமையினால் வருந்தி, தன்னை நல்லகதியில் விடுக்கும் மேன்மையுடைய புத்திரனைப் பெறும் பொருட்டுப் புத்திரகாமேட்டி எனும் சிறந்த யாகத்தைச் செய்ய குற்றம் களைந்த முனிவரர்களை யாகம் வளர்க்க ஏவினான். ஐம்புலனையும் வென்ற அந்தணர்கள் அது புரிந்து. நிரப்பு- வறுமை. வான்- -மேன்மை. வடு- குற்றம். ஏயினான் -ஏவினான். அடுவேகம்- மனபரபரப்பு. புரிந்து- விரும்பி.]

    நுந்தைமனை யாட்குதவ நோன்மைசால் மறைமனுவான்
    மந்திரித்த நறும்புனலை மணித்தவிசின் அமைத்திருத்திச்
    சந்திசெய்வா னவர்நீங்குஞ் செவ்வியினிற் றனிவேந்தன்
    முந்துறப்போய்த் தன்னியல்பின் முதுமரக்காட் டகம்புகுந்து         61

    [அந்தணர்கள் உன்னுடைய தந்தையின் மனையாளுக்கு உதவும் பொருட்டு ஆற்றல் வாய்ந்த வேதம்ந்திரங்களால் மந்திரித்த நறும் புனலை அழகிய தவிசின்மீது அமைத்து இருத்திவிட்டுச் சந்தி அனுஷ்டானம் செய்யும்பொருட்டு நீங்கினர். அப்பொழுது உன் தந்தையாகிய தனியரசன், முற்பட்டுப்போய் தன்னியல்பில் பழமையான மரங்கள் செறிந்த காட்டகம் புகுந்து.
    முந்திறப் போய்த் தன் இயல்பின் காட்டு விலங்குகள் நாட்டுமக்களுக்கு எத்தகைய தொல்லையும் தராது வாழும்போது, அரசன் தன்னிச்சையாக, எக்காரணமும் இன்றி. முதுமரக்காடு- பழைமையான வயதான மரங்களை உடைய காடு.]

    கரியுழுவை மரையுளியங் கவையமுயல் கவரியுழை
    அரிபரிசல் லியம்வருடை யவைமுதல பலபலவுஞ்
    சரிகுடரி னுடல்பதறித் தலைத்தலைவீழ்ந் துயிர்விளியப்
    புரிதருவேட் டையி னிளைத்துப் போந்தனன் அவ்வாச்சிரமம்         62

    [கரி- யானை. உழுவை- புலி. மரை-மான். உளியம்- கரடி. கவையம்-மாட்டுப்பசு கவரி-மானின் ஒருவகை. உழை- மானின் வகை. அரி- சிங்கம். பரி- குதிரை. சல்லியம்- முள்ளம்பன்றி. வருடை- மலையாடு.
    அவன் காட்டு விலங்குகளை அலைத்து வருத்திக் குடர் சரிய உயிர்பறித்துக் கொன்று , வேட்டைக் களைப்பினால் முனிவர்கள் வாழும் அச்சிரம்த்துக்கு வந்தான்.]

    கடுவனைய நீர்வேட்கை கவற்ற வறல் கிடையாமைப்
    புடைவருவான் றனைநோக்கிப் பூரித்து மந்திரித்த
    குடமெனவெய் யாததனைக் கொணர்மதியென் றவன்கொணர
    விடவிழியங் காடுவது மெண்ணாமற் கைக்கொண்டான்         63

    [கடு- விடம். விடத்தின் வேகம் நீர் வேட்கையின் கடுமையைக் குறித்தது. கவற்ற- வருத்த. அறல்- நீர். இடவிழி துடிப்பது ஆணுக்குக் கெட்ட சகுனம்.
    விடம்போன்று நீர்வேட்கை வருத்த நீர்கிடையாமையால் அருகில் வருவோனை விளித்து பூரித்து மந்திரித்த நீர் எனக் கருதாது அக்குடநீரைக் கொணர்தி என ப்பணித்தான். அவன் கொண்டுவர, இடவிழி துடிப்பதையும் கருதானாகி அக்குடத்தைக் கைக்கொண்டான்.]

    அதுதெரிந்து மந்திரித்த வறல்பருகல் பருகலெனக்
    கதுமெனயான் புகுமுன்னங் கருமவசத் தான்மடுத்தான்
    அதுமலர்த்தார் மனுவேந்தே மங்கைநலாள் தனக்கமைத்தது
    இதுமடுத்தாய் நின்வயிற்றிற் கருப்பமியைந் ததுவெனலும்         64

    [அரசன் செய்ய முனையும் தவறைத் தெரிந்து மந்திரித்த நீரை நீ பருகாதே எனச்சடுதியில் யான்(வசிட்டன்) புகுமுன்னம் பண்டை வினை வசத்தால் அவன் அதனைக் குடித்தான். ‘அரசனே!, அது மங்கைநல்லாளாகிய அரசி பருகுவதற்கு மந்திரித்து அமைத்தது. அதனை நீ மடுத்தாய். அதனால் நின் வயிற்றில் கருப்பம் இயைந்தது’ எனலும்.]

    படிதுளக்கா தெழுப்புயத்திற் பரித்தயுவ னாசுவனும்
    முடிதுளக்கி யான்முடிக முறையுளிசெங் கோலோச்சி
    மிடிதுளக்குங் கான்முளையே வேண்டுமெனக் களிகூர்ந்து
    கடிதுளிக்குந் தேங்கிளவி கட்டுரைக்கு மமையத்தில்         65

    [படி- பூமி. துளக்காது- நடுங்காது, கலங்காது. எழு- தூண். எழுப்புயம்- தூண்போன்ற திரண்ட வலிய திண்ணிய புயம்; கணைய மரமுமாம். . பரித்த- தாங்கிய. முடி துளக்கி- தலையை அசைத்து. சம்மதம் தெரிவிக்கும் குறிப்பு.கான்முளை- வாரிசு.

    உலகமக்கள் கலங்காது தாங்கும் தூண்போன்ற புயத்தை உடைய யுவனாசுவன் என்னும் அவ்வரசனும் முடியசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தான். ‘யான் இறக்க, முறையாகச் செங்கோல் செலுத்தி வறுமையை ஓட்டும் வாரிசே எனக்கு வேண்டும்’ எனக் களிகூர்ந்து இனிமை பயக்கும் சொல்லைக் கூறும் சமயத்தில் ]

    பருகாத புனலசும்பி முடைநாற்றம் பயின்றிருக்கும்
    மருவாருங் குழலியர்தம் யோனிவழி வாராது
    திருவாழு மணிமருமச் செல்வன்மல ருந்தியினால்
    உருவாகி வந்தனமென் றுள்ளுமயன் றருக்கவிய         66

    [பருகாத புனல்- இடக்கரடக்கலாகி மாதர் யோனி வழி வெளியேறும் நீரைக் குறித்தது. அசும்பி- ஊறி. முடைநாற்றம்- மலநாற்றம். திரு- இலக்குமி. உள்ளும்- நினைக்கும். தருக்கு- கர்வம்.
    முடைநாற்றம் வீசும் மகளிர்தம் யோனி வழி வாராமல் திருமகள் வாழும் மணிமார்புச் செல்வனாகிய திருமாலின் தாமரை மலர் உந்தியில் உருவாகி வந்தனம் என்னும் பிரமனின் கர்வம் கெட]

    வெண்புனலுஞ் செம்புனலும் விரவாம லொருதூணின்
    மண்புகழ வந்தனமென் றிறுமாக்கு மாயவனும்
    விண்புகழு நினைப்போல விளங்குமுயர் திணையிடத்தின்
    நண்புறுமத் திணைமுழுதாய் நண்ணிலமென் றழுக்கறுப்ப.        67

    [வெண்புனல்- சுக்கிலம். செம்புனல்- சுரோணிதம். நரசிங்கமூர்த்தி அஃறிணை உயர்திணை ஆகிய இருதிணையும் கலந்த மூர்த்தி. இருபால் கலந்த அலிப்பாலும் பேடும் குறையுடையனவாகக் கருதப்படுதல் போல இருதிணைக்கலப்பும் குறையுடையதாம்.
    சுக்கிலமும் சுரோணிதமும் கலவாமல் ஒருதூணில் மண்ணுலகம் புகழ வந்தனம் என்று கர்வம் கொள்ளும் திருமாலும் விண்ணுலகமும் புகழும் உன்னைப்போல உயர்திணையாகிய விருப்பமுறும் அவ்வுயர் திணை முழுதாய்ப் பொருந்திலம் என்று அழுக்காறு கொள்ளத் தூணாகிய அஃறிணையில் தொன்றியமையும் இருதிணைவடிவமாக இருப்பதும் இருகுறை. அவ்விரண்டும் அரசனின் மகனுக்கு இன்மை அவன்மேல் திருமாலுக்குப் பொறாமை தோறக் காரணம்}

    தரையளித்துப் புகழ்பெருக்கித் தரியலரைத் தெறுநுந்தை
    யரையர்குலந் தனைத்தோளி னளித்தருளு முதற்கடவுள்
    புரையமணி மார்பகழ்ந்து பூத்தனைநீ மன்னவனுந்
    திரையுமணிக் கடலுலகி னுயிர்வாழுஞ் செயலொழிந்தான்         68

    [தரை- பூவுலகம். நுந்தை- உன்னுடைய தந்தை. அரையர்- அரசர். அரசர் குலத்தைச் சிவபிரான் ஆணையின்படி இலலிதை தோளில் அளித்தல், காஞ்சிப்புராணம் முதற்காண்டம் திருவேகம்பப் படலம் செய்யுள்12ல் கூறப்பட்டது.
    பூவுலகத்தைக் காத்துப் புகழ் பெருக்கிப் பகைவரை ஒறுத்து உன்னுடைய தந்தை, அரசர் குலத்தைத் தன் தோளில் அளித்தருளும் முதற்கடவுளாம் பரமசிவனுடையது போன்ற உந்தையின் மணிமார்பு அகழ்ந்து பிறந்தனை நீ. நீ பிறந்தவுடன் உன் தந்தை உலகில் உயிர் வாழும் செயலொழிந்தான்.}

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    குலத்தி னாலன்றி நின்னைக் கொடுத்துயிர் விளித லானு
    நலத்தி னாலுயர்ந்த நுந்தை நகைவலம் புரியை யொத்தா
    னிலத்திடை யரசர் சென்னி நித்தலு மிதித்து நீயும்
    வலத்தி னினுயர் தலானும் வலம்புரி மணியை யொத்தாய்         69

    [‘வலம்புரிமுத்தின் நலம்புரி குலமும்’ என்றதனால் நற்குடிப்பிறப்புக்கு வலம்புரிச் சங்கு உவமையாகக் கூறப்படும். வலம்புரிச் சங்கு முத்தீன்று உயிர் விடும். அதனாலும் உவமையாயிற்று. உயர்ந்த குலத்தினால் அன்றியும் நின்னைப் பிறப்பிக்கச் செய்து உயிர் விடுத்தலானும் எல்லா நலத்தினாலும் உயர்ந்த உன் தந்தை ஒளியுடைய வலம்புரியை ஒத்தான். நிலத்திடை அரசர்களுடைய சென்னியை மிதித்து நீயும் வெற்றியில் உயர்தலான் வலம்புரி ஈன்ற மணியை ஒத்துள்ளாய். ( முத்தை முடிமேல் அணிவர். மன்னர். தம் முடி இவனின் காலில்பட வணங்குவர். முதுடை முடி நாளும் தன்னடியை வணங்குதலானும் வலத்தின் உயர்தலானும் இவன் வலம்புரி மணியினை ஒத்தான்).]

    அற்றைநா ளண்டம் விள்ள வழுதனை யதுகேட் டங்கண்
    உற்றயன் பதினா றாட்டைப் பருவ நிற்குதவிப் போகக்
    கொற்றமார் குலிசத் தோன்றல் குறுகிநிற் காப்பார் யாரே
    தெற்றென மொழிமோ வென்று செப்பலுந் தாதா வென்றாய்         70

    [நீ பிறந்த அந்தநாள் அண்டம் பிளக்கும்படியான பேரொலியுடன் அழுதனை. அது கேட்டு அங்கு பிரமன் வந்து பதினாறு வயது பிராயத்தை உனக்கு உதவினான். வெற்றியுடைய குலிசப்பdaiயனான இந்திரன் உன்னை அடைந்து உன்னைக் காப்பவர் யார்? தெளிவாகமொழிவாயாக? என்று கூறலும், நீ, ‘தாதா’ என்றாய்.]

    ஆதலின் மாந்தா தாவென் றறைதரப் பட்டு ஞாலந்
    தீதறு செங்கோ லோச்சிச் செல்வனாய் வாழுநின்னைத்
    தாதையுந் தாயுந் தானே யாகி நிற்றந்த வேந்தன்
    காதலிற் காணப் போந்தான் காண்டியென் றியம்பிப் பின்னும்.         71

    [ஆதலின் மாந்தாதா என்று அழைக்கப்பட்டு உலகத்தைக் குற்றமற செங்லோச்சிக் காத்துச் செல்வனாய் வாழ்கின்ற நின்னைத் தாயும் தந்தையும் தானேயாகி உன்னைத் தந்த வேந்தன் உன்னைக் காணப் போந்தான். அறிவாயாக என்று கூறிப் பின்னும்.]

    ஐயனே நுந்தை மார்ப மகழ்ந்து நீபிறந்த நீரா
    னெய்திய வெய்ய பாவ மிரித்திடுங் கழுவாய் வாய்ப்பப்
    பொய்யறு மேன்மை சான்ற புண்ணிய வரைப்பிற் போந்து
    செய்யபொற் சடையான் பூசை செய்திட வேண்டு மென்றான்         72

    [ஐயனே! உன்னுடைய தந்தையின் மார்பினைப் பிளந்து நீ பிறந்து வந்தமையான் எய்திய பாவம் நீங்கிடும் வகையில் பரிகாரம் வாய்ப்பப் புண்ணியதலமொறுக்குச் சென்று செய்யபொற்சடையானாகிய சிவபிரானைப் பூசனை செய்திட வேண்டும் என்றான்.}

    என்னுடைக் குரவ நன்றே யியம்பினை யெறிநீர்க் கங்கைப்
    பொன்னவிர் சடையான் பூசை போற்றுதற் குரியர் யாவர்
    அன்னவன் பூசை யெந்த வாற்றினாற் புரிவ தென்று
    மன்னவன் கடாவ வாசான் மயரற விறுக்கு மன்றே.         73

    [ என்னுடைய ஆசாரியனே! எனக்கு நன்றே கூறினை. சிவபிரான் வழிபாடு செய்தற்குரியர் யாவர்? அவ்விறைவனின் பூசை எந்த முறையினல் புரிவது? என்று அரசன் கேட்க ஆசான், சந்தேகம் அறக் கூறுவான்.]

    பரவுமான் மார்த்த மோடு பரார்த்த மென்றி ரண்டாம் பூசை
    மருவியெல் லாருஞ் செய்தற் குரிய தான்மார்த்த பூசை
    யிருமையு முரிய வாகுமெழிற்சிவ தீக்கை சேர்விப்
    பிரர்தமக் காக மங்கள் பேணுறும் வழியா லென்றான்        74

    [பூசை போற்றற்குரிய ஆன்மார்த்தம், பரார்த்தம் என இரண்டாம். பொருந்தி எல்லாரும் செய்தற்குரித்து ஆன்மார்த்த பூசை. எழிற் சிவதீக்கை உடைய சிவப்பிராமணருக்குஆன்மார்த்தம், பரார்த்தம் இரண்டும் ஆகமத்தைப் பேணும் முறையில் உரித்து. ஆன்மார்த்தம்- தன்பயன் கருதிச் செய்யப்படுவது. பரார்த்தம்- உலகநலன்கருதிச் செய்யப்படுவது. விப்பிரர்- அந்தணர்.]

    இன்னணம் விதந்து கூறுங் குரவனை யிறைஞ்சி யேத்தி
    யன்னணம் பூசை யாற்று மார்வஞ் சென்றீர்ப்ப வேகி
    மின்னணங் கெழில்சேர் மாட வியன்றிருக் காஞ்சி மூதூர்ப்
    பொன்னணங் கிவருந் தோளான் புகுந்தனன் மகிழ்ச்சி பூப்ப         75

    [ இவ்வாறு தெளிந்து கூறும் ஆசாரியனை வணங்கி ஏத்தி, அவர் கூறியவண்ணம் சிவனை வழிபட ஆர்வமீர்ப்ப அரசன் எழில்சேர் மாட காஞ்சிமூதூரினை மகிழ்ச்சியுடன் அடைந்தான். பொன் அணங்கு இவரும் தோளான் – செல்வத் திருமகளும் வெற்றித் திருமகளும் விரும்பும் தோளான்.]

    அந்தணர் பயின்று வாழ வம்பொன் மாளிகைக ளாக்கிக்
    கந்தமார் தடங்க தொட்டுக் கடிமலர்ப் பொதும்பர் வைத்துப்
    பந்தநோ யறுக்கு முக்கட் பரன்பணி பலவு மாற்றுஞ்
    சிந்தையி னுவகை பொங்கத் திருத்தக முடித்த பின்னர்.         76

    [அந்தணர்கள் நிலைத்து வாழ அழகிய மாளிகைகள் ஆக்கினான். நறுநீர்த்தடங்கள் தொட்டான். மணமலர்ச் சோலைகள் வைத்தான்.
    மலமறுக்கும் சிவபெருமானின் திருப்பணிகள் பலவும் ஆற்றும் விருப்பத்துடன் அனைத்தையும் திருத்தமாகச் செய்து முடித்தபின்]

    இட்டசித்தி யினீராடி யெம்பிரான் கச்ச பேசத்
    தெட்டுரு வுடைய பெம்மா னிலிங்க மொன்றிருவி யங்கண்
    உட்டவ ழார்வம் பொங்க வுறுமுறை வழாது பூசை
    பெட்டன னியற்றிக் கண்ணீர் பெருக்கினன் பழிச்சி நின்றான்        77

    [இட்டசித்தி தீர்த்தத்தில் நீராடினன். கச்சபேசத்தில் எட்டுருவம் உடைய பெம்மான் இலிங்கம் ஒன்று நிறுவினான். உள்ளத்தில் ஆர்வமுடன் விதிமுறை வழுவாமல் விருப்பத்துடன் கண்ணில் நீர் பெருக வழிபாடாற்றினன்.]

    ஆயிடை வானி லண்ன லருளி னோர்வாக்கு நுந்தை
    தூயவான் றுறக்கம்புக்கான் துகளறு பயனீ பெற்றாய்
    காயும்வே லரச வென்று காதுற வெழுத லோடும்
    நாயகன் கருணை போற்றி நயத்தகு வாழ்க்கை பெற்றான்         78

    [ அப்பொழுது, ஆகாயத்தில் இறைவன் எழுந்தருளி, உன்னுடைய தந்தை மேலான வீட்டுலகம் எய்தினான்; நீயும் குற்றம் நீங்கும் பயன்பெற்றாய். என்று ஓர் வாக்கு அரசன் காதுற எழுதலோடும் இறைவனின் கருணையைப் போற்றி நல்லதொரு வாழ்க்கை பெற்றான்]

    இவ்வகை யின்னு மாங்க ணெண்ணில வரங்கள் பெற்றோ
    ரவ்வெலா முற்றக் கூறலெம் மனோரளவைத் தேயோ
    வெவ்வநோய்ப் பிறவி நூறு மித்தகும் அந்தர் வேதித்
    தெய்வத வரைப்பின் வைகப் பெறுநரே சிவத்தைச் சேர்வார்         79

    [இப்படி இன்னும் அவ்விடத்தில் எண்ணீல வரங்கள் பெற்றோர் அனைவரையும் முற்றக் கூறல் எம்மனோரால் இயலுமோ? பிறவியாகிய கொடு நோயைப் பொடியாக்கும் இந்த அந்தர்வேதி எனும் தெய்வத் தலத்தில் தங்கும் பேறு பெற்றோரே சிவலோகத்தைச் சேர்வர்.]

    ஒளிவள ரந்தர் வேதிச் சிறப்பெடுத் துரைத்தல் செய்தாம்
    களியுறு தண்ட வேந்தாற் கானமாங் காஞ்சி தன்னைத்
    தெளிமதி யணிந்த வேணிச் சிவனருள் வாய்ந்த சீர்த்தி
    வளர்கலி காலன் முன்போல் வளநக ராக்கல் சொல்வாம்         80.

    [ பிரகாசமான அந்தர்வேதி நகரின் சிறப்பினை எடுத்துரைத்தலைச் செய்தாம். இனி தண்டன் என்னும் அரசனைக் கொண்டு கானகமாக இருந்த காஞ்சியை பிறைசூடிய பெருமானின் அருள் வாய்க்கப் பெற்ற கலிகாலன் முன்போல் வளநகராகியதைச் சொல்வாம்.]

    அந்தருவேதிப் படலம் முற்றிற்று.
    ஆகத் திருவிருத்தம் 790.
    -------

    திருவாவடுதுறைக் கச்சியப்ப முனிவர்
    அருளிச்செய்த காஞ்சிப்புராணம் (மூன்றாவது காண்டம்)
    நகரேற்றுபடலம் (791- 1069)

    அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

    ஆறுசூடிய வேணி நாத ரமர்ந்த கச்சி நகர்த்தலை
    வீறுதோற்ற வதிந்து காவல் விளைத்த வேந்தர்க ளெண்ணிலார்
    கூறுமன்னவர் தம்மு ளோர்குல மன்னவன் குறுகார்தமை
    ஈறுசெய்திடு தண்டனென் பவனேக வாணை செலுத்துநாள்         1.

    [ஆறு- கங்கையாறு. கச்சி நகர்த்தலை- நகரில். தலை- ஏழாம் வேற்றுமை இடப்பொருட்டு. வீறு- பிறவற்றுக்கில்லாத சிறப்பு. குறுகார்- பகைவர். ஈறு- அழிவு. ஏக ஆணை- உலகம் பலருக்கும் பொது என்ற நிலை நீக்கித் தனக்கே உரிமையாகக் கொள்ளுதல். கங்கையாற்றைச் சடையில் சூடிய சிவபெருமான் விரும்பி அமர்ந்துள்ள காஞ்சி நகரில் தம் பெருமையெல்லாம் தோன்ற வாழ்ந்து காவல் பூண்ட வேந்தர்கள் கணக்கிலாதவராவர். அன்னவர்தம்முள் ஓர் குல மன்னவன் பகைவர்களை வேரழிப்பவன், தண்டன் என்னும் பெயருடையவன் ஆட்சி செய்து வரும் நாளையில்]

    ஒருதினந்த னில்வேட்டை யாடியவுன்னி யில்வயின் முற்றுறுங்
    கருமநன்கு முடித்த பின்பு கமழ்ந்த வுண்டி நுகர்ந்துபூ
    மருநிலா வியகுஞ்சியம் பொன்மணிக் கயிற்றி னிறுக்கியாத்
    தரையின்வார் சுடர்க்கச்சு வீக்கி யடிக்கி ருங்கழல்சேர்த்தனன்         2

    [ஒருதினந்தனில், வேட்டையாடுதலை விரும்பி, தன் வீட்டில் செய்ய வேண்டிய நாட்கருமங்களை முடித்த பின்பு, மணங்கமழ் உணவினை உண்டு, மலரின் மணங்கமழ்கின்ற குஞ்சியைப் பொற்கயிற்றினால் இறுக்கக் கட்டி, இடுப்பில் பிரகாசமான கச்சினை இறுக்கி, காலில் கழல் சேர்த்தனன்.
    ஆடிய- ஆடும்பொருட்டு; செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கருமம்- நீராடல் முதலிய நாட்கடன்கள். குஞ்சி- ஆண்களின் தலைமயிர். கச்சு- இடுப்பில் கட்டும் பட்டை. காற்சட்டை என்றும் கூறுவர்.]

    வில்லுமம்பு மிலங்கு வேலு மிளிர்ந்த வாள்களு மாழியு
    மொல்லை யோடி யொறுக்கு நாயும் வலைக்குலங்களு மூர்தியும்
    பல்லியங்களு மெல்லை யில்லன பௌவமென்ன வளைந்துற
    வல்லியம்புரை மன்ன ராதியர் வந்து வாய்த னெரிந்தனர்.         3

    [வில்லும் அம்பும் வேலும் வாள்களும் சக்கரமும் வேகமாக ஓடி விலங்குகளை ஒருங்கு கூட்டும் நாய்களும், விலங்குகளைப் பிடிக்கும் வலைத் திரள்களும், வாகனங்களும் விலங்குகளை எழுப்பும் வாத்தியங்களும் கணக்கிலாதன மற்றும் கடலென விலங்குகளை வளைக்கப் புலிகள் போன்ற வீரமுடை மன்னர்கள் முதலியோரும் வந்து வாசலில் திரண்டனர்.]

    வேதவேதிய ரங்கை யாம்விரை சூழ்ந்த கஞ்சம் விரிந்திடச்
    சோதிநீண்முடி யேந்து வேந்தர் துணைக்கை மாமலர் கூம்பிட
    மாதரானன அம்பு யங்கள் மலர்ந்து நாணி வணங்கிடப்
    போதுவெங்கணை யாளி நெஞ்சு புழுங்கு பொற்பின னேகுவான்        4

    [மறையோதும் அந்தணர்கள் தங்களுடைய அகங்கையாகிய மணம் நிறைந்த தாமரைமலர் விரிந்திட(கையை விரித்து ஆசி வழங்கி மங்கலம் கூற), ஒளிநீண்ட முடியுடைய அரசர்களின் கைகளாகிய மலர்கள் கூம்பிட(வணங்கும்போது இருகை கூம்பும்), மகளிரின் முகமாகிய தாமரைகள் மலர்ந்து நாணத்தினால் (தலை கவிழ) வணங்க, மலர்ப்போதுகளாகிய கொடிய கணையாளி (மன்மதன்) நெஞ்சு புழுங்க, அழகினனாகிய தண்டன் வேட்டைக்கு ஏகினான். தன்னைக்காட்டிலும் அரசன் அழகினனாக இருத்தலின் மன்மதன் மனம் புழுங்கினான். மனப் புழுக்கம் பொறாமையினால் விளைவது. அந்தணர் ஆசி வழங்கல், அறம்; அரசர்கள் வணங்குவது, பொருள். மகளிர் நாணத்தினால் தலை தாழ்த்துவது, இன்பம். இம்மமூன்றும் நிரம்புதற்குரிய வழியில் தண்டன் நின்றான் என்பது குறிப்பு. சூரியன் முன் தாமரை அரும்புதலும் மலர்தலும் கூம்புதலும் வாடுதலும் இயல்பு.]

    ஒருதிசைக்கட லொருதிசைக்கட லோடு சேர்குவ தொப்புற
    கரிசறுத்திடு காஞ்சிமாநகர் கடிது நீங்கியோர் காவினை
    அரசர்சூழ்தரு தண்ட னேகிய தண்பு றத்தினி லெங்கணும்
    புரசைமால்கரி தேர்கண் மற்றுமிரீஇ புகுந்தன னுள்ளரோ         5

    [ஒருதிசையிலுள்ளகடல் மற்றொரு திசையிலுள்ளகடலுடன் கலத்தலைப் போன்று குற்றமற்ற காஞ்சி நகரினைக் விரைந்து நீங்கி ஒருகாட்டினை, அரசர் சூழ்த் தண்டன் ஏகியதன்பின், யானை, தேர்களுடன் யாவரும் புகுந்தனர் உள்ளே.]

    செற்றிமான்குலம் வைகுமெல்லை தெரிந்து வம்மி னெனச்சொலி
    யொற்றர் தம்மைவிடுப்ப வன்னவ ரோடி யெங்கணு நோக்கிவந்
    தற்றமின்றி யு றந்த சூழ லுரைப்ப வவ்வுழி யேகினான்
    வெற்றிவார் சிலைநாரி யேற்றினன் வெய்ய வாளிதெ ரிந்தனன்.         6

    [செற்றி- செறிந்து. மான்குலம்- மான் கூட்டம். உறந்த சூழல்- உறையும் இடம். நாரி- வில்நாண். வாளி- அம்பு.
    தண்டன், மான்கூட்டம் செறிந்து தங்கும் இடத்தை அறிந்து வர ஒற்றர்களை அனுப்ப அவர்கள் ஓடி எல்லா இடங்களிலும் பார்த்துவந்துப் பிழையின்றிக் கூற, வில்லில் நாணேற்றி, அம்புகளைத் தெரிந்து கொண்டு ஏகினான். }

    கலைகளாதி திரண்டு செற்றிய கான முற்றிய டுத்தனர்
    வலைவளாவின ரொடியெ றிந்தனர் வாரொ ழுக்கின ரொய்யெனக்
    குலைகுலாவு சுணங்க னேவினர் குரையி யங்களி யம்பினார்
    சிலைவலாருரு மென்னவார்த்தனர் சென்று மாக்க ளெழுப்பினார்.        7

    [கலை- கலைமான். செற்றிய- திரண்ட. வளாவினர்- வளைத்தனர். ஒடி எறிதல்- புதர்களை ஒடித்து வழி செய்தல். வார் ஒழுக்கல்- வலை விரித்தல். சுணங்கன் நாய். குலை குலாவு சுணங்கன் -குலையைக் கலக்கும் நாய். கலைமான் முதலிய விலங்குக் கூட்டம் செறிந்த கானகத்தினை முற்றுகையிட்டு நெருங்கினர். வலைகளை விரித்தனர். ஒடி எறிந்தனர். வார் ஒழுக்கினர். ஒய்யெனக் குலையை நடுங்கச்செய்யும் நாய்களை ஏவினர். கருவிகளை முழக்கினர். வில்வீரர்கள் இடியென முழங்கினர். விலங்குகளை அவற்றின் இருப்பிடங்களிலிருந்து எழுப்பினர்.}

    மானெழுந்தன வல்லியங் கண்மறங் கொ திப்ப வெழுந்தன
    யானை பாய்ந்தன வெண்கு பாய்ந்தன யாளி பாய்ந்தன ஆர்ப்பொடு
    கானமேதி பெயர்ந்த பல்கவயங் கனன்று பெயர்ந்தன
    ஏனை மாக்களுமெங்குமெங்கும் எழுந்தெ ழுந்து குதித்தன        8

    மான்கள் எழுந்தன. புலிகள் வீரம் கொதிப்ப எழுந்தன. யானைகள் பாய்ந்தன; கரடிகள் பாய்ந்தன; சிங்கங்கள் பாய்ந்தன. காட்டு எருமைகள் பேராரவாரத்துடன் பெயர்ந்தன. கவயங்கள் (அசுணமா) கோபத்துடன் அகன்றன. வேறுள விலங்குகளும் அங்கும் இங்கும் எங்குமாகக் குதித்து எழுந்தன.]

    வில்வளைத்தனர் வாளி தொட்டனர் வேலெ றிந்தனர் கூற்றெனப்
    பல்வகுப்புறு சூலம் ஓக்கினர் பாசம் வீசினர் பற்பல
    மல்வளைக்குலம் வாங்கி விட்டனர் வச்சி ரத்தடி யோச்சினார்
    சொல்விளைத்திடு வாள்கள்கொண்டு துணிக்க லுற்றனர் மீளிகள்        9

    [மீளிகள்- வீரர்கள். விற்களை வளைத்து அம்பு தொடுத்தனர். வேல்களை எறிந்தனர். எமன்களைப் போல உயிரை வவ்வும் பல்வகைச் சூலங்களை ஓச்சினர். பற்றும் கயிறுகளை வீசினர். வலிமையான சக்கரங்களை வாங்கி விட்டனர். வலிமையான குறுந்தடிகளால் அடித்தனர். புகழுடைய வாள்களால் துண்டித்தனர். ஆயுதங்களுக்கு ஏற்ற மரபு வினைச் சொற்களைக் குறிக்கொள்க]
    கால்கு றைப்பன சென்னி யீர்வன காதிறுப்பன நீண்டுதாழ்
    வால்குறைப்பன கண்கள் சூழ்வன மார்பு கீழ்வன வன்மைசால்
    தோல்கிழிப்பன துண்டம் வீழ்ப்பன சோரி வீழ்ப்பன துண்ணென
    மேலெழுந்து குதிக்கு மாக்களின் மீளியோர் விடு மாய்தமே.        10

    [வேட்டை வீரர்கள் விடும் ஆயுதங்கள் திடீரென மேலே எழுந்து குதிக்கும் விலங்குகளின் கால்களைக் குறைப்பன; தலைகளை அரிவன; காதுகளை அறுப்பன;; கண்களைக் குத்துவன; மார்புகளைத் தைப்பன; வலிய தோல்களைக் கிழிப்பன; துதிக்கைகளை வீழ்ப்பன; குருதியை ஒழுகச் செய்வன. துண்டம்- மூக்கு; இங்கு முக்கும் கையும் ஒருசேர இருக்கும் துதிக்கையைக் குறித்தது. ]

    இரிந்து வீழ்வன சீறிமுன்ன ரெழுந்து வீழ்வன வோவெனப்
    பரிந்து வீழ்வன வாடிவீழ்வன பாய்ந்து வீழ்வன கண்ணினீர்
    சொரிந்து வீழ்வன ஏங்கி வீழ்வன சுற்றி வீழ்வன நீள்குடர்
    சரிந்து வீழ்வன மீளியாய் தமடர்ந்து சாடிய மானினம்        11

    [இரிந்து- சிதறி. மானினம்- விலங்குகள். வேட்டை வீரர்கள் ஆய்ந்து அடர்ந்து சாடிய விலங்குகள் சில சிதறி ஓடி வீழ்ந்தன; கோபத்துடன் சீறி எழுந்து, எழுந்த வேகத்திலேயே வீழ்ந்தன. ‘ஓ’வென வருந்தி வீழ்ந்தன; சோர்ந்து வீழ்ந்தன; பாய்ந்து வீழ்ந்தன; கண்ணில் நீர் பாய வீழ்ந்தன; ஏங்கி வீழ்ந்தன. சுழன்று வீழ்ந்தன; நீண்ட குடர் சரிந்து வீழ்ந்தன];

    வாலடித்து மயங்கி மாய்வன வாய்பி ளந்துயிர் மாய்வன
    காலுதைந்து கறங்கி மாய்வன கண்சு ழன்றுயிர் மாய்வன
    சாலநாக்கள் கடித்து மாய்வன தலைதிரித் துயிர்மாய்வன
    கோலமெய்கள் பதைத்து மாய்வன குன்றி மண்விழு மாக்களே.        12

    [வலி குன்றி மண்ணின்மேல் விழும் விலங்குகளில் சிலதரைமேல் வாலடித்து மாய்வன; சில வாய் பிளந்து உயிர் மாய்வன; சில காலுதைந்து மாய்வன; சில கண்சுழன்று உயிர்மாய்வன; சில நாவினைக் கடித்து மாய்வன; சில தலை திருகி உயிர்மாய்வன; சில அழகிய உடல்கள் பதைத்து உயிர்மாய்வன]

    வேறு
    பல்லிய மெங்கும்ஒ லித்திடப் பற்பல நாய்கள் வளைத்திட
    வில்லிடை மீளிக ளெய்தகோல் மெய்யுரு வுஞ்சில மாக்குலம்
    ஒல்லையெ திர்ப்படு தம்மினத் தொன்றனை யொன்றிது வேகொலாம்
    அல்லல்வி ளைத்ததெ னச்சின அடலொடு பற்றி யடர்ப்பன.         13

    [இசைக் கருவிகள் எங்கும் ஒலித்திட, பலப்பல நாய்கள் விலங்குகளை சுற்றி வலைத்திட, வீரர்கள் வில்லினின்றும் எய்த அம்புகள் உடலை உருவ சிலவிலங்குகள் தம்மெதிர் தோன்றும் தம்மினத்தொரு விலங்காகிய இதுவே தனக்குத் துன்பம் விளைத்ததென்று சினத்துடன் அதைப் பிடித்துத் தாக்கின.]

    மருண்டெழு கின்றவ யப்புலி வந்தெதிர் மான்கலை வெளவில
    வெருண்டெழு சிங்கம தக்கயம் வீத்தில ஏனவும் இன்னவே
    தெருண்டொரு மும்மை மலங்களுஞ் சீறிய மாதவ ரொத்தன
    இருண்டுவ ளம்படு கானிடை யிரிதரும் அத்தகு மாக்குலம்.        14

    [மருட்சி- மயக்கம். வெருட்சி- திகைப்பு. இருளால் வளம் பெற்ற அக்காடதனில், சிதறி ஓடும் விலங்குகளில், மருண்டு எழுகின்ற வலிய புலி எதிர்ப்படும் கலைமானினைப் பற்றிலது; வெருண்ட சிங்கம் எதிர்ப்படும் மதயானையை வீழ்த்திலது. பிற விலங்குகளும் மருட்சியினாலும் வெருட்சியினாலும் எதிர்ப்படும் தமக்குப் பகை விலங்கைக் கொல்லாமல் மும்மலங்களையும் ஒழித் மாதவரை ஒத்தன. மாதவருக்குப் பகையோ நட்போ இல்லை. விலங்குகளும் அத்தகைய மனநிலையில் இருந்ததாகக் கூறுவது நயம்.]

    அம்புதை வெம்புலி தம்மெதிர் ஆர்ந்தகி லுத்தநெ டுந்தருத்
    தம்பழ மானிட நேர்வது தன்னைமுன் னோக்கி யலைத்திடும்
    வெம்பகை மானிடர் போன்மென வெருண்டு புடைத்து நிலத்தினிற்
    பம்பவு குத்துயி ரொய்யெனப் பாறுவ வெங்கணும் எங்கணும்.        15

    [ அம்பு தை வெம்புலி- அம்பினால் தைக்கப்பட்ட கொடிய புலி. கிலுத்தம்- கிலுத்தம் என்பது ஒருவகை மரம். இதன் பழத்தின் வடிவம் மனிதரைப் போல இருக்கும் என்பர். அம்பு தைக்கப் பட்ட வெம்புலி எதிரில் கிலுத்த நெடிய மரத்தையும் அதிலுள்ள கனிகளையும் கண்டு அவை தன்னை வருத்திடும் வெம்பகையாகிய மானிடர் போலும் எனச் சினந்து , மரத்தைப் பலமாகத் தாக்கிக் குதித்து ஒய்யென உயிர்விடுவன எங்கணும்.]

    கைம்மலி வேடு வளர்த்திடுங் காளையர் வாளி துளைத்தலு
    மொய்ம்மகண் மாக்குலம் ஐயென மூர்ச்சனை யாயின சேணிடை
    மெய்ம்மலி சோரி யலைத்தெழ வீழ்வன கண்டுவ னத்துவாழ்
    மைம்மலி கண்ணியரோ வெனமாழ்கி யிரங்குகின் றார்சிலர்        16

    வேடு- வேட்டைத் திறன். கைம்மலி வேடுவேட்டையாடும் கைவந்த திறன். கை – கற்பொழுக்கம். வேடு- வேட்டுவர் மகளிர் எனலுமாம் .மகண்மா- ஒருவகை விலங்கு. மக்கட் குழந்தையைப் போல இருக்கும் என்பர்.வேட்டையாடும் திறனுடன் வளர்ந்திடும் காளையர் விட்ட அம்புகள் துளைக்கவே மகண்மாக்குலம் மூர்ச்சித்து வீழ்ந்தன. உடலிலிருந்து குருதி வழிய வீழும் அந்தமகண்மாக்களைக் கண்ட கருங்கண்ணியராகிய வேட்டுவமகளிர் ‘ஓ’ வென மயங்கி இரங்குகின்றார் சிலர். ]

    உளிய முமேதியும் யானையு முருமொலிசெய் கருமான்களும்
    நெளிய நெடுங்கணை கீழ்ந்தபுண் ணெருப்புறழ் சோரிநி லத்துக
    வளியி னிரிந்துகு ழாங்கொடு மண்டி யதிர்ப்பன கோன்றிரு
    விளிவ துகாட்டுநெய்த் தோர்மழை வீசுமு கிற்குல மொத்தன.        17

    [இடியொலி செய்யும் புலிகளும் எருமைகளும் யானையும் கருமான்களும் (Black bug கிருஷ்ணமான்) நெளிந்து துடிக்கக் கிழித்த புண்ணிலிருந்து நெருப்புப் போலச் செந்நிறமான இரத்தம் நிலத்தில் வழிய, காற்றினைப் போல கடுகி ஓடிக் குழாம் ஆக நெருங்கி அதிர்ப்பன, இவை அரசனது செல்வம் கெடும் குறி காட்டும் இரத்த மழைபோன்று இருந்தன. கரிய விலங்குகள் கார் மேகம். அவற்றினின்றும் இழியும் இரத்தம் மழை. கோன் - அரசன். திரு- செல்வம். விளிவது- கெடுவது. கெட்டசகுனம்.}

    வலையற நூறி விரைந்துசெல் வன்றிகண் மன்னவ னேவிய
    கொலைகெழு வாளிது ளைத்துவீழ் கொள்கைத மாதுகு லத்தவர்க்
    குலைவுறு பேரிட றுற்றுழித் தம்முயி ருய்திறம் நாடுவோர்
    அலைகடல் வைப்பினி லொய்யென வழிவுறு பெற்றிதெ ளிக்குமால்.       18

    [வலைகளை அறுத்துக்கொண்டு விரைந்து செல்லும் பன்றிகள், மன்னவன் செலுத்திய அம்புகள் துளைத்து இறந்து வீழ்ந்த காட்சி, தமது குலத்தவர்க்குப் பேரிடர் வந்தபோது தாம்மட்டுமுயிர் பிழைக்க வழி தேடுவோர், இந்த உலகில் விரைவில் அழிவர் என்ற உண்மையைத் தெளிவுறுத்தியது]

    அரசென வோர்பெயர் பெற்றத னரியசெ யற்கியை யுந்தொழிற்
    புரவுசெ யாதுவி லங்கெலாம் பொன்ற விளித்துநு கர்ந்திடும்
    பரிசுநி னைந்துவெ குண்டெனப் பாழியி ரும்புய மன்னவன்
    விரவும டங்கல னைத்தையும் வெங்கணை தூண்டி யிறுத்தனன்        19

    [காட்டுக்கு அரசன் சிங்கம் என்னும் அரிய பெற்றும் தன் பெயருக்கு இயைய விலங்குகளைக் காத்தல் செய்யாது விலங்குகள் அழியக் கொன்று தின்னும் இயல்பு நினைந்து கோபம் கொண்டதுபோல் வலிய பெரிய புயங்களை உடைய மன்னவன் சிங்கங்கள் அனைத்தையும் வெங்கணை தூண்டி அழித்தான். புரவு செயல்- புரத்தலைச் செயல்,காப்பாற்றுதல். நுகர்ந்திடும்- தின்றிடும். பாழி- வலிமை. இரும்- பெரிய. மடங்கல்- சிங்கம்.]

    கவளம ளித்துயிர் போற்றமைக் காத்தருள் பாகனை யுங்கொலுந்
    தவறின வென்றுமு னிந்தெனத் தந்திய னைத்தும டித்தனன்
    இவறிம றைந்துவ திந்துபாய்ந் தெவ்வெவவை யுங்கொலை செய்துணும்
    அவமுறு வீரம்வெ றுத்தென வடல்கெழு வேங்கை செகுத்தனன்        20

    [உணவுக் கவளம் அளித்து, உயிர்போல் தம்மைக் காத்தருளுகின்ற பாகனையும் கொல்லும் பிழையை உடையன என்று சினந்தான் என யானைகள் அனைத்தையும் மடியச் செய்தான். மறைந்திருந்து எவ்வெவெவ் வகையான விலங்குகளையும் தாக்கி விரும்பிக் கொன்று தின்னும் பழியுடைய வீரத்தை வெறுத்ததுபோல் வேஙகைப் புலியை அழித்தான். கவளம்- சோற்றுத் திரள். தந்தி- தந்தத்தை உடையது, யானை. இவறி- விரும்பி. அவமுறு வீரம்- பழிபடும் வீரம், அடல்- வெற்றி.]

    இன்பம ளிப்பன போலுட லெங்கணு நக்கி யிறும்படி
    துன்ப மளிப்பன வாமெனச் சூழ்கவ யங்கள்கு மைத்தனன்
    வன்பினி றுங்கொலை யேபுரி மறலியி னூர்தியி னங்களென்
    றம்பறு வன்கரு மேதிக ளாவிய ழுங்கவி ளித்தனன்        21

    [கவயம்- ஒருவகை காட்டுவிலங்கு. பசுபோன்று இருக்கும் பிற விலங்கினை, நக்கி பரிச இன்பளிப்பதுபோலக் கொல்லும். இன்பம் அளிப்பன போல் உடலெங்கணும் நக்கி ஊற்றின்பம் அளித்தலைப்போலத் துன்பளிப்பனவாம் என்று கவயங்களைக் குமைத்தனன்.(அழித்தான்). வன்மையாகக் கொலையே புரிகின்ற எமனுடைய ஊர்தியின் இனங்கள் என்று வலிய கருமேதிகளின் உயிர்கள் வருந்தக் கொன்றான். குமைந்தனன், விளித்தனன் – கொன்றான். மறலி- எமன். மேதி- எருமை]

    மேலும ருந்திறல் வேட்டையின் மேயினனாட விலங்குகள்
    சால வுயிர்க்கும் வித்தாகெனத் தப்ப விடுப்பது போற்கமஞ்
    சூலுடைப் பன்மிரு கங்களுஞ் சூழுமி ளம்பரு வத்தவும்
    மாலுறு நோயுடை மாக்களும் வன்கொலை செய்திலன் விட்டனன்.        22

    [ மேலும் அரிய வேட்டையாட விரும்பிய அரசன், வித்துக்கு எனப் பயிர்களை விட்டு வைப்பதைப் போன்று, நிறை சூலினவும், இளம்பருவத்தினவும், மயக்கும் நோயுடையனவும் ஆகிய விலங்குகளைக் கொல்லாது உயிருடன் வாழ விட்டனன். கமஞ்சூல்- நிறை சூல்.

    கலிநிலைத்துறை
    இன்னவாறு வளர்ந்தெழு வேட்டை முடித்தபின்
    மன்னர்மன்னன் வளம்பதிக் கெய்திய வெண்ணினா
    னன்ன வேட்டையி னாடியிளைத்த வயர்ப்பினாற்
    றுன்னி நீர்நசை மிக்கு வருத்தந் துவன்றினான்.        23

    [ இவ்வாறு மேலும் மேலும் வளர்ந்தெழும் வேட்டையை முடித்தபின், அரசன் தன்னுடைய நகருக்குத் திரும்ப எண்ணினன். வேட்டை ஆடி இளைத்த களைப்பினால் மிக்க நீர் வேட்கையினால் வருந்தி வாடினான்.]

    வேட்டை மீதிலெழுந்த மறக்கனல் வெய்தெனக்
    கூட்டுண் டாலென நாவினிலூறு குளிர்ச்சியும்
    வாட்ட முற்றதுவாயும் வறன்றது வாலொளி
    யீட்டுமூரல் கரிந்த குழிந்தன வேர்விழி        24

    [வேட்டை மீது எழுந்த வீரக் கனல் கொடுமையாக மூண்டு உண்டது எனக்கூரும்படியாக நாவினில் ஊறும் குளிர்ச்சியும் வாடி வற்றியது. வாயும் வறண்டது; ஒளியுடைய மூரல் செய் வாய் கரிந்தது.; அழகிய கண்களும் குழிந்தன. மறம்- தறுகண்மை, வீரம். கூட்டுணல்- கொள்ளைகொளல். வாலொளி- வெண்மையான ஒளி. மூரை- பற்கள். ஏர்- அழகு.]
    திருந்து நீர்நசை கண்டவர் சிற்சிலர் திக்கெலாம்
    இரிந்து நேடினர் ஈர்ம்புனல் காணலர் மீண்டனர்
    வருந்து வேந்தனு மென்மெல வேகுழி மாதவம்
    பொருந்து பார்க்கவ நன்முனி வைகிடம் புக்கனன்        25

    [அரசனின் மிக்க நீர்வேட்கைக் கண்ட சிற்சிலர் திக்கெங்கிலும் ஓடிப்போய் நீர் தேடினர். புனல் எங்கும் காணாதவராகித் திரும்பி வந்தனர். நீர்வேட்கையால் வருந்திய வேந்தனும் மென்மெல நடந்து மாதவம் பொருந்திய பார்க்கவ முனிவர் என்னும் நன்முனி வாழிடம் வந்து சேர்ந்தான். திருந்து நீர்நசை- முழுமையான வேட்கை. நசை- வேட்கை. இரிந்து- பிரிந்து. நேடினர்- தேடினர். ]

    ஆய காலை யருங்குசை யாதிகொ ணர்ந்துறப்
    போய மாதவன் மீண்டில னாகப் பொலங்கொடித்
    தூய பன்னிவி ருந்துது னைந்து தொகுத்தனள்
    மேய மன்ன னுயங்கு வருத்தம் விளிந்ததே.        26

    [அச்சமயத்தில் பார்க்கவமுனிவர் தருப்பை முதலியன கொண்டுவர போயவன் இன்னம் திரும்பி வாராததனால், அவன் மனைவி விருந்து விரைவாக அமைத்து உபசரித்தனள்; அரசனின் வருத்தமும் நீங்கியது.]

    தேமொ ழிக்குயி லன்னவள் செய்த விருந்தினா
    னாம நீர்நசை நீங்கிப் பின்புவி நாயகன்
    றாம நீள்குழல் கட்டெழில் கண்மலர் சாத்தினான்
    காம நீர்நசை யுள்ளங் கவற்ற வெதும்புவான்,         27

    [முனி பத்தினி செய்த விருந்தினால் அச்சம் விளைக்கும் நீர் வேட்கை நீங்கிய அரசன் அவளுடைய கட்டெழில் மீது கண் சாத்தினான்; காமவேட்கை வருத்த வெதும்பினான்.]

    அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    பற்பல வைகல் தோறும் பருகிடப் பட்டு விம்மித்
    தற்பெரு வயிறு வாட்டத் தரிக்கில தாகிச் சீதப்
    பொற்பமர் வதனத் திங்கள் பொருக்கென வெளிக்கான் றிட்ட
    விற்பொலி யிருளே யென்ன விளங்கிய குழலின் சீரும்        28

    [பலநாள்கள் உண்டு தன்வயிறு தாங்காமல் விம்மிப் பருத்த குளிர்ந்த அழகிய முகமாகிய சந்திரன், பொருக்கென வெளியில் உமிழ்ந்திட்ட ஒளிரும் இருளே என்ன விளங்கிய கூந்தலின் பெருமையும். முகமும் முகத்தைன் மேலிருண்ட கூந்தலும் உருவகிக்கப்பட்டன.]

    வெருள்படத் தன்னை நாளும் விளித்திடும் பகைமை நோக்கி
    யிருளினந் தொடர்ந்து தாக்க விளம்பிறை குழவி யோடிப்
    பொருள்படு தனக்குத் தாயாம் புணரியிற் சேற லேய்ப்பச்
    சுருள்படு குழல்க ணாப்பட் சுடர்ந்த வா ணுதலின் சீரும்         29

    [வெருள்- அச்சம். விளித்திடும்- அழித்திடும். புணரி- கடல். நாப்பண்- நடு. நுதல்- நெற்றி. பிறை நெற்றிக்கு உவமை. அஞ்சும்படியாகத் தன்னை நாளும் அழித்திடும் விரோதத்தால் இருட்கூட்டம் தொடர்ந்து தன்னைத் தாக்க, இளம் பிறையாகிய குழவி ஓடிப்போய் தனக்குச் சார்பாகிய தாயாகிய கடலில் சேறப் பொருந்தியதுபோல், சுருள்கள் பொருந்திய குழல்கள் நடுவில் சுடர்விடும் நெற்றியின் சீரும். பிறை பாற்கடலில் பிறந்தது எனல் புராணமரபு. அதனையொட்டி இங்கு நெற்றி கருங்கடலான கூந்தலாகிய தாயைச் சார்ந்தது எனப்பட்டது. கூந்தலில் அழகாக அமைந்த சுருள்கள் அலைகள் போன்றன]

    போக்குறு புரிசை மூன்றும்பொடிபடுத் தருளும் பெம்மான்
    தீக்கொடும் பகழிகோப்ப வாசுகித் திருநாண் வீக்கும்
    மேக்குயர் இமைய வில்லும் நாணுற விழிக ளென்னும்
    ஏக்குல நாணின் றெய்யும் புருவவி லிலங்கு சீரும்         30

    [போக்கு – இயங்குதல், குற்றம்.(போக்கறு பனுவல். தொல்.பாயிரம்). பகழி – அம்பு. கோப்ப- செலுத்த. எ- அம்பு. நாண்- சிலேடையாக வில்லின் நாணையும் நாணமாகிய பெண்குணத்தையும் உணர்த்திற்று. குலநாண் -நாணம் நற்குலப்பெண்டிரின் குணம். இயங்குமியல்பும் குற்றமும் உடைய முப்புரங்களையும் பொடிசெய்தருளும் பெருமான் தீயை உமிழும் கொடிய அம்பினைக் கோக்கும் பொருட்டு வாசுகி என்னும் பாம்பாகிய அழகிய நாணினை இறுக்கிக் கட்டும் பொருட்டு மிக உயர்ந்த இமயமலையாகிய வில்லும் நாணம் அடைய, விழிகள் என்னும் அம்புகளைக் குலஞ்சிறந்த நாணில் நிறுத்தி எய்யும் புருவவில் விளங்குகின்ற சிறப்பும். இமைய வில் நாண் பூட்டப் பெற்றும் திருபுரத்தை அழிக்கும் வெற்றியை பெற இயலவில்லை.அதனால் நாணம் கொண்டது. புருவம் வில்லாகவும் விழி அம்பாகவும் நாணம் நாணாகவும் உருவகிக்கப்பட்டது. நாணத்துடன் பார்க்கும் பார்வை ஆடவர் மனத்தைத் தைக்கும்]

    பொருந்துபோர்க் களத்திற் போந்தும் பொருவலார் விலக்கித் தப்பும்
    பெருந்தவ றுடைய வாளி பீடற ஆவந் தூங்க
    இருந்துழி யிருந்த வாறே யிளைஞர்தம் முயிரைத் தப்பா
    தருந்தி மீட்டு மிழாவாகும் அயில்விழிக் கணையின் சீரும்         31

    [பொருந்து- எதிரிட்டு. பொருவலார்- பகைவர். பொருதலில் வல்லவர். விலக்கித் தப்பும்- பிழைபடும் குறி .ஆவம்- அம்பறாத் தூணி. தூங்க- தங்க, இருக்க. பீடுஅற- பெருமை இழக்க. அயில் விழி- கூரிய விழி. போர்க்களத்தில் எதிரிகளை எதிரிட்டுக் கண்டு எய்த குறிக்குத் தப்பிய தவறுடைய அம்பின் பெருமை அழிய, அம்பறத்தூணியில் இருந்தவாறே இளைஞர்களுடைய உயிரைத் தப்பவிடாது உண்டு உமிழாத கூரிய விழியாகிய அம்பின் சிறப்பும். கண் இருந்த இடத்திலிருந்தே பார்வைக் கணையால் இளைஞர் உயிரை வருத்துதல் அம்பறத்துணியில் இருந்தவாறே கொலைத் தொழிலைச் செய்யும் அம்பின் செயலாகக் கூறப்பட்டது. ]

    தொழில்நனி திருந்தும் வண்ணஞ் சுடர்ந்துவில் உமிழ்பொன் மாமைக்
    கழிநிறக் குமிழ்ம்பூ முன்னர்ப் படைத்துக்கை பழகிப்பின்னர்
    வழிமதுப் பிலிற்றிச் சீர்க்கும் வட்டவாய்க் கமலப்புத்தேள்
    இழிவற வருந்திச் செய்த வெழில்குலா மூக்கின் சீரும்.        32

    [தேன் பிலிற்றும் அழகியவட்டமான தாமரைத் தவிசின் மீது இருக்கும் பிரமதேவன், தன் படைப்பு திருத்தமாக அமையுமாறு ஒளி உமிழும் பொன்போன்ற மாமை நிறத்தில் குமிழம்பூக்களைப் பலமுறை படைத்துப் பழகிய பின்னர் குறைவற முயன்று செய்த எழில் குலவுகின்ற மூக்கின் அழகும். பிரமன் குமிழம்பூவைப் பலமுறை படைத்துக் கைவந்த பின்னரும் வருந்தியே மூக்கைப் படைத்தான் என மூக்கின் சிறப்பைக் கூறினார்.]

    சேயிதழ்த் துவரு மூரல் தெள்ளொளி மணியுஞ் செவ்வாய்ப்
    பாயித ழாம்பற் போதும் படர்விழிக் குவளைப் பூவும்
    மாயிருங் குழைசேர் காது வள்ளையுங் கவினப் பூத்த
    தோயுநீர் நிலையே யென்னச் சுடர்கவுட் டுணையின் சீரும்        33

    [துவர்- பவளம். மூரல்- பற்கள். தெள்ளோளி மணி- முத்து. கவுள்- கன்னம். கவுளை நீர் நிலை என்றதற்கேற்ப நீர்நிலையில் தோன்றும் பொருள்களாகிய பவளம் எனச் செவ்விதழும் பற்கள் மணியெனவும் வாய் ஆம்பற்போதெனவும், விழி குவளைமலரெனவும் காது வள்ளைக் கொடியெனவும் கூறப்பட்டது செவ்விதழாகிய பவளமும், மூரலாகிய மணியும் செவ்வாயாகிய செவ்வாம்பல் மலரும், , விழியாகிய குவளைமலரும், காதாகிய வள்ளையும் அழகுறப் பூத்த நீர்நிலை எனச் சுடர் விடுகின்ற இரு கன்னங்களின் சிறப்பும்]

    எண்ணிலா ருயிரு முண்ணப் பட்டுறை விடமாம் ஆற்றாற்
    கண்ணென ஒருபேர் வாய்ந்த கடுங்கொலை விழிவே லோடி
    விண்ணமு மழியா வண்ணம் வெய்யகூர் முகத்தி லிட்ட
    திண்ணிய தடையாய் வைகுந் தேசிகச் செவியின் சீரும்.         34

    [(மண்ணின்மீது) எண்ணில்லாத அரிய உயிர்களை உண்டு, விடம் உறைந்து கண் என ஒரு பெயர் வாய்த்த கடுங்கொலை விழியாகிய கூர்வேல் விரைந்து சென்று விண்ணவரையும் அழித்திடாத வண்ணம் ஆசையைத் தோற்றுவிக்கின்ற முகத்தில் இட்ட வலிமையான தடையாகத் தங்கி இருக்கும் ஒளியுடைய காதின் சிறப்பும். காதளவோடிய விழி என்பர். விழி பாய்வதைத் தடுத்து நிற்கும் தடையாகக் காது உள்ளது என்றார்.]

    வளங்கெழு கூந்த லென்னும் வார்மணிக் கலாபம் மின்ன
    உளங்கவர் பன்னி யென்ன வொளிர்ந்தபூம் பசிய மஞ்ஞை
    துளங்குறு குலிகப் பட்டின் துணிநிகர் கோபம் வவ்வி
    விளங்கியாங் கழகு பூத்து வில்லிடும் அதரச் சீரும்.         35

    [கலாபம்- தோகை. பன்னி- பத்தினி மஞ்ஞை- மயில். கூந்தல் என்னும் தோகை பத்தினியென்னும் மஞ்ஞை. குலிகம்- இங்குலிகம்; முதற்குறை. கோபம்- இந்திரகோபப் பூச்சி. இங்குலிக நிறத்தைக் கொண்டது. இங்குலிகத்தின் நிறமான செந்நிறம் கொண்ட இந்திர கோபப் பூச்சி செவ்விதழுக்கு உவமை. வளமான கூந்தல் என்னும் நீண்ட நீலமணி நிறத் தோகை ஒளிவிட, உளங்கவர் பத்தினி என விளங்கும் பச்சைமயில் இங்குலிகப் பட்டின் துண்டினை நிகர்த்த இந்திரகோபப் பூச்சியைப் அலகால் வவ்வியதைப் போன்று அழகு பூத்து ஒளிவிடும் அதரத்தின் அழகும்]

    ஒள்ளிய வதனத் திங்க ளுடனமர் கலவி யாற்றுங்
    கள்ளிவர் குமுத மென்னக் கதிர்த்தவா யழகுந் திங்கள்
    தெள்ளிய அமிழ்தந் துள்ளித் தெறித்துவீழ் திவலை யாம்பல்
    நள்ளிடை விறந்தா லன்ன நகைமணி யொளிருஞ் சீரும்        36

    [தாமரை மலருக்குக் கணவன் சூரியன் என்பதைப் போலக் குமுதமலருக்குத் தலைவன் சந்திரன் என்பது மரபு. அதனால் திங்களுடன் கலவியாற்றும் குமுதம் என்றார். முகத்தில் வாய் கூடி இருப்பதைக் ‘கலவியாற்றி’ என்றார். கள்- தேன். குமுதமாகிய வாயில் ஊறும் தேன் எச்சில். திங்களில் ஊறும் அமிழ்தம் தெரித்து வீழும் திவலை (துளிகள்) ஆம்பலின் நடுவில் செறிந்தது போன்ற பற்களாகிய முத்தின் அழகும். வாய்- ஆம்பல் எனவும் வாயில் உள்ள பற்கள் ஆம்பல் மலரிடைச் செறிந்த வெண்டிங்கள் அமுதத் திவலைகள் எனவும் உருவகிக்கப்பட்டது.]

    பெற்றவர் குணங்கள் தத்தம் பிள்ளைபால் விரவு மென்னும்
    அற்றமில் உரைவா யாக அமிழ்தொடு நஞ்சு காலும்
    எற்றுநீர்த் தரங்க வேலை யீன்றெழு வதனத் திங்கள்
    சொற்றனி யமிழ்தோ டுண்கட் சுடுவிடங் கொழிக்குஞ் சீரும்.        37

    [பெற்றவர்களின் குணங்கள் மக்களிடத்தும் காணப்படும் என்ற சொல் குற்றமிலாத உண்மையே. பாற்கடலில் திங்கள் தோன்றிய போது அதனுடன் அமுதமும் ஆலகால நஞ்சும் தோன்றின. அமுதொடு நஞ்சினையும் உமிழும் அலைகலையுடைய கடல் ஈன்று எடுத்த திங்களாகிய முகத்தில் சொற்களாகிய ஒப்பற்ற அமுதமும் மையுண்ட கண்ணாகிய சுடு விடமும் கொழிக்கும் பெருமையும். காமுகர்களைப் பெண்களின் ஓரப்பார்வை நஞ்சினைப்போல வருத்தும் என்பர். அதனை நோய் நோக்கு என்பார் திருவள்ளுவர்]

    இளிவரு யோனி யாக்கை இறையிடத் திருப்ப நாணி
    தெளிநிதிக் கஞ்ச மீண்டுத் திருமுக மென்ன மாறி
    ஒளிதர வளையு மவ்வா றுணர்ந்தத னருகு போந்து
    களிவரு சிறப்பின் வைகி யனையவொண் கழுத்தின் சீரும்         38

    [பிறப்பிறப்புக்களுடைய இழிவான யோனியில் பிறந்த தேவர்களிடத்தில் இருப்பதற்கு நாணி தாமரை (குபேரனின் பதுமநிதி) மீண்டும் அழகிய முகமாக மாறி ஒளிவீச, அவனிடத்திலிருக்கும் சங்கும், (சங்கநிதி) தாமரை, முகமாக மாறிச் சென்றதை உணர்ந்து அதனுடைய அருகில் போந்து மகிழ்ச்சியுடன் தங்கியது போன்ற ஒள்ளிய கழுத்தின் சிறப்பும். இளிவரு யோனியாக்கை இறைவன் இந்திரன்]

    முக்கணா னெரித்த ஞான்று முனைத்தவேள் கொடியி லேற்றும்
    மிக்கசீர் மகர மீனும் வெஞ்சிலைக் கரும்புந் தப்பித்
    தொக்கசீ ரிவள்பாற் சேமத் துணையொடுஞ் சரண மாகப்
    புக்கினி தமர்ந்தா லென்னக் கூர்ப்பரம் புயத்தின் சீரும்         39

    [சிவபெருமான் மன்மதனை எரித்த அன்று அவரைப் பகைத்த மன்மதன் கொடியிலேற்றும் மகரமீனும் கொடிய வில்லாகிய கரும்பும் எரிக்குத் தப்பி இவளிடத்தில் சேமத்துணையுடன் சேர்ந்து அடைக்கலமாகி அமர்ந்ததுபோன்ற முழங்கைகள் அழகும் தோள்களின் அழகும். காமவேளின் கொடி மகரக் கொடி. சேமத்துணை- ஏற்கெனவே ஒன்று பயன்பாட்டில் இருக்க, வேண்டும்போது பயன் படுத்திக்கொள்ள அதிகமாக வைத்திருப்பது}

    ஆதன மாகி நாளு மயன்றனைப் பரித்துந் திங்கட்
    கேதமுற் றஃகா வண்ண மீந்தில னென்று நீத்துப்
    பேதைதன் கரமாய்க் கஞ்சம் பெருந்தவப் பணிக ளாற்றி
    மாதர்வெண் மதிக்குக் கூம்பா வளமைபெற் றிலகுஞ் சீரும்.        40

    [ மகளிர் கைக்குத் தாமரை உவமை. பிரமன் வெண்டாமரை மலரில் இருந்து உலகைப் படைக்கின்றான். அவன் படைப்புக் கருத்தாவாக இருந்தும் நாளும் அவனை தாங்கிவரும் தன்னைச் சந்திரனால் கேடுற்றுச் சுருங்கா வண்ணம் காத்திலன் என்று அவனை விட்டு நீங்கி, பெருந்தவங்களாற்றிப் பேதையாகிய இப்பெண்ணின் கரமாய்ப் பொருந்தி அழகிய வெண்மதிக்குக் கூம்பாத வளமை பெற்று விளங்கும் சிறப்பும்]

    கயத்தினு ளெழுந்து பூத்த கடிமலர்க் கமலந் தாமே
    வியத்தகு கரங்க ளென்று விழைதக விளக்க அந்தப்
    பயத்துறு களிற்று மீன்கள் பத்தியிற் செறிந்து நின்று
    நயத்தக விளங்கி யாங்கு நலங்கெழு விரலின் சீரும்         41

    [குளத்தினுள் எழுந்து பூத்த மணமலராகிய தாமரையே வியக்கத் தக்க கரங்கல் என்ன விளங்க அந்த நீரில் வாழும் களிற்று மீன்கள் வரிசையாச் செறிந்து அழகாக நின்றதுபோல் விளங்கும் அழகிய விரல்களின் சிறப்பும்]

    அதிர்த்துவண் டுளருங் கூந்த லரக்கெறி யரிக்கட் பன்னி
    யெதிர்த்துவந் திசைவா தாடு மிருங்கிளி வாயைப் பற்றி
    விதிர்த்திட வொடித்து வென்ற வெற்றியைத் தெரிப்பான் கையிற்
    கதிர்த்தநீள் விரல்வைத் தென்னக் கவினிய வுகிரின் சீரும்         42

    [அதிர்த்து- ஆரவாரித்து. உளரும்- கோதும். அரக்கு எறி- இங்குலிகம் ஊட்டிய; இது நகச்சாயம்.. பன்னி- பத்தினி. உகிர்- நகம்.கை நகத்திற்குக் கிளியின் செவ்வலகு உவமை. ஒலித்து வந்து வண்டு கோதும் கூந்தலையும் சிவந்த வரிகளையுடைய கண்ணினையும் உடைய முனி பத்தினி தன்னுடைய மொழிக்கு எதிர்த்து வந்து வாதாடும் பெரிய கிளியைப் பற்றி, அது நடுங்கிட வாயைப் பற்றி ஒடித்து, அதன் அலகினை, வென்ற வெற்றியைத் தெரிவிக்கும் பொருட்டுத் தன் கையின் நீண்ட விரலில் வைத்தது போன்ற நகத்தின் சிறப்பும்.]

    வண்சிறைச் சகோரப் புட்போன் மதியமிழ் துண்ண வேட்டுத்
    தண்செறி வதன நோக்கிச் சந்திர னெனக்கீ ழெய்தி
    ஒண்சிறை நேமிப் புள்ளுத் துணையொடு முறைவ தேய்ப்பக்
    கண்செறி தலைமே னோக்கிக் கதிர்த்த பூண்முலையின் சீரும்         43

    [முலைக்குச் சக்ரவாளப் பறவை உவமை. சக்ரவாளம்- நேமி சகோரம் இரட்டையாகவே வாழும்.. சகோரம். சகோரம் மதியின் ஒளியில் உள்ள அமிழ்தத்தை உண்டு வாழும் என்பர். சகோரப் புள்ளினைப்போல் சந்திரனின் அமிழ்தத்தை உண்ண விரும்பிகுளிர்ந்த முகத்தைச் சந்திரனெனக் கருதி அதன் கீழ் சக்கரவாளப் பறவை தன் துணையொடும் உறைவது ஒப்ப, (முலைக்)கண் மேல் நோக்கி இறுமாந்த பூண்முலையின் சிறப்பும்]

    மாலினைச் சுமக்க லாற்றா துடைந்ததென வடமுந் தீம்பால்
    வேலைவார் திரையு மின்னாள் மடிவரை வயிறாய் மேவி
    யாலிய வனப்பு மன்னோ னஃதறிந் தணைந்த வற்றின்
    மேல்விழி வளர்ந்த காட்சி வீழ்மயி ரொழுங்கின் சீரும்         44

    [திருமாலினைச் சுமக்கல் ஆற்றாது தோற்றது என ஆலிலையும் பாற்கடல் அலையும்(திரை) முனி பத்தினியின் வயிறும் வயிற்றின் மடிப்புமாய்ப் பொருந்தி, அது ஆலிலைபோலத் தழைத்த வனப்புடையதாக இருத்தலைக் கண்டு திருமால் அவற்றின்மீது அணைந்தது போன்ற காட்சியுடன் கூடிய மயிர் ஒழுங்கின் சிறப்பும்]

    கவினதி நீத்தம் வீசுங் கதிர்த்திரை மடிக ளாகக்
    குவிமுலை மொக்கு ளாகக் கொட்புறு சுழியிற் றோன்றிப்
    புவிநிறை யுயிரை யெல்லாம் புகுத்தினுந் தூர்த்தல் செல்லா
    திவறிவிண் ணுயிரும் வாங்க இடங்கொளு முந்திச் சீரும்         45

    [கவின் நதி- அழகிய நதி. நீத்தம்- வெள்ளம் திரை- அலை மடிகளாக- வயிற்றின் மடிப்புகள். கொட்புறு- சுழலுகின்ற வயிற்றிலுள்ள மடிப்புகளே நீரலைகள். முலை- நீர் மொக்கு. நீர்ச்சுழி- உந்தி, கொப்பூழ். நீர்ச்சுழியினை ஒத்த கொப்பூழ் மண்ணவர் உயிரையெல்லாம் விழுங்கினும் நிரம்பாமல் விண்ணோர் உயிரையும் கொள்ளூம் இடமுடைய சிறப்பும்]

    முடிமுலை முரச மல்குன் முழுக்குடை முகம்வில் வார்த்தை
    வடிகணை மேனி கைகான் மதர்விழி நகைமால் யானை
    நெடியபூங் கூந்த லாக்கி நெடுந்தகைப் பெருமாற் கஞ்சிக்
    கொடியவே ளுருவு மாறுங் கொள்கைநேர் மருங்குற் சீரும்         46

    [ மன்மதனுக்குக் கடல் முரசம், சந்திரன் குடை, கரும்பு வில், மலர்கள் அம்பு, இருள் யானையுமாம்.
    சிவபெருமானுக்கு அஞ்சிய மன்மதன் பெண்ணுருக் கொண்டு முனி பத்தினியாக மாறினான். அவனுடைய மகுடம் முலையாகவும், முரசம் அல்குலாகவும், சந்திரனாகிய குடை முகமாகவும், கரும்பு வில் சொல்லாகவும், அம்பாகிய தாமரைமலர் மேனி, கை காலாகவும், முல்லை அரும்பு பற்களாகவும் குவளைமலர் கண்ணாகவும் யானையாகிய இருள் கூந்தலாகவும் மாறியதை ஒத்தன. மன்மதன் இறைவனுடைய சினத்தால் வடிவிலாத அநங்கன் ஆயினான். அவன் அநங்கன் ஆயினமையால் இவள் இடையும் அநங்கமான சிறப்பும்]

    அடர்சிறைப் பசிய மஞ்ஞை யச்சமுற் றணுகல் செல்லா
    விடமிதென் றியலு நாசி யெனப்படுங் காம ரூபி
    வடிவமு நோக்கி யங்கண் வாளராக் கவற்சி யின்றிப்
    படம்விரித் தமர்ந்த காட்சி படைத்தக லல்குற் சீரும்.         47

    [பாம்பு மயிலுக்கு அஞ்சும். மயில் காமரூபியைஅஞ்சும். காமரூபி- பச்சோந்தி. பச்சோந்தி மகளிரின் மூக்குக்கு உவமையாகக் கூறப்பெறும். மயில் அச்சமுற்று அணுகாத இடம் இதென்று இயலும் மூக்கு எனப்படும் காமரூபி வடிவத்தை நோக்கித் தனக்குப் பாதுகாப்பு இஃதென்று அச்சமின்றி படம் விரித்துத் தங்கியது போன்ற காட்சியைப் படைக்கும் அல்குலின் சிறப்பும். அல்குலாகிய பாம்பு, மயில் அஞ்சி அணுகாத மூக்கு எனப்படும் பச்சோந்தியை அடுத்து படம் விரித்திருந்தது ]

    கொழுமடன் மலர்க ளார்ந்த கொடியகம் புரையு மல்குல்
    வழிமதக் களிநல் யானை மத்தகத் தியற்றும் வேதன்
    செழுவுமத் தகத்துக் கேய்ந்த திரண்மணிக் கரமு மாங்குப்
    பழுதற வகுத்தா லன்ன படரொளிக் குறங்கின் சீரும்.        48

    [மதயானையின் மத்தகத்தினைப் போல அல்குலை இயற்றும் வேதன், அம்மதகத்துக்குப் பொருத்தமான துதிக்கைகளைப் போல அமைத்த தொடைகளின் சீரும். மணிக்கரம்- துதிக்கை]

    கலம்படு பாவை யல்குல் கதிர்மணிப் பணியை யஞ்சி
    நலம்படு தன்பால் தஞ்சம் நண்ணிய கணைக்கா லென்னுங்
    குலம்படு வரான்மேற் பாந்தள் குறுகிடின் துணிப்ப வுன்னி
    வலம்படும் அலவன் முன்னாய் வதிந்தென முழந்தாள் சீரும்        49

    [கலம்- நகைகள். பணி- பாம்பின் படம். வரால் மீன் கணைக்காலுக்கு உவமை. பாந்தள்- பாம்பு. துணிப்ப- துண்டிக்க. உன்னி- நினைந்து. அலவன் -நண்டு. நண்டு முழங்காலுக்கு உவமை. பாவை போன்றவளின் அணிகலன்கள் அணிந்த அல்குலாகிய பாம்புக்கு அஞ்சித் தன்பால் தஞ்சம்புகுந்த கணைக்கால் என்னும் வரால் மீனின் மேல் பாம்பு நெருங்கிடின், துண்டுபடுத்தல் நினைந்து வெற்றியுடைய நண்டு கணைக்காலுக்கு முன்பாய்த் தங்கியது எனும் முழந்தாள் சீரும்]

    வேட்டவர் முடியி லேறு மேன்மையான் நிகர்க்கு மேனும்
    பாட்டளி மூசி யூறு படுத்திட வாட லானு
    நாட்டங்கள் புதைக்குங் கங்குல் நகைமுகங் கூம்ப லானுந்
    தோட்டலர்க் கமலந் தாழ்க்குந் துணையடிக் கமலச் சீரும்        50

    [வேட்டவர்- காதலர். ஊடலைத் தணிக்கக் காதலர் காதலியின் கால்கள் தம் தலைமேற்படுமாறு வணங்குவர். தாமரை முனிபத்தினியின் பாதத்திற்கு நிகர் என்று சொல்லப்படுவது இங்கு மறுக்கப்படுகின்றது. காதலித்தவரின் தலை முடியின் மேல் ஏறுதல் பற்றிப் பாதத்தினைத் தாமரை மலர் நிகர்க்கும் என்றாலும், இசைக்கும் வண்டுக்கூட்டம் மொய்த்தலால் வாடுதலானும், கண்களைப் பொத்தும் இருள் வர ஒளி இழந்து கூம்புதலானும் நிகராகாது தாழும்.
    இதழ்கள் விரிந்த தாமரை மலர் தாழும் இருபாதங்களின் சீரும். வேட்டவர்- விருப்பம் கொண்டவர், காதலர். மூசி- மொய்த்து, மிதித்து. நாட்டம்- கண். வேட்டவர் முடிமேல் ஏறல் இரண்டுக்கும் பொதுப் பண்பு. அளிகள் மொய்ப்ப வாடலும், இருளில் கூம்பலும் தாமரைக்குத் தாழ்வு. அவ்விரண்டும் இல்லாதது முனிபத்தினியின் துணையடிகளுக்குச் சிறப்பு.}

    மாந்தளிர்க் குல மீதென்ன மதிப்பவர்க் கஃதே யாயுங்
    தேந்தளிர்ச் செயலை யென்னச் சிந்திப்பார்க் கஃதே யாயுங்
    காந்திகொள் கனக மென்னக் கருதுவார்க் கஃதேயாயுங்
    பூந்தழைக் கடுக்கை ஞானப் பொருள்நிகர் மேனிச் சீரும்         51

    [யார் யார் எத்தன்மைத்தாகக் கருதுகிறார்களோ அத்தன்மைத்தாகவே இருக்கும் கொன்றைப் பூமலையணிந்த சிவபரம்பொருளைப்போல, மாந்தளிரினை ஒத்தது என நினைப்பவருக்கு அதுவேயாகவும், அசோகந்தளிர் நிகரென நினைப்பவர்க்கு அதுவேயாகவும், ஒளியுடைய பொன் நிகர்த்தது என நினைப்போருக்கு அதுவேயாகவும் ஒளிரும் உடலழகும். அடியவர் நினைந்தவடிவிலே அவர்களுக்கு அருளுவது இறைவனின் பண்பு.]

    இருளெலாங் குழுமி நீண்ட தெனமருள் அளக மாகக்
    கருமுகிற் குழாத்தைப் பற்றிக் கண்டநாள் துவற்றுந் தீங்கள்
    திருமலர்ப் புத்தே ளந்தச் செல்லிடைத் தடித்தை வாங்கி
    உருவெனச் செய்தா லென்ன வுருவளர் நுடக்கச் சீரும்         52

    [அளகம்- கூந்தல். கண்டநாள்- படைத்த நாள். செல்- மேகம். தடித்து- மின்னல். நுடங்க- துவள. துவற்றும் – துளிக்கும்.
    இருளெல்லம் திரண்டு ஒருங்கு சேர்ந்தது என மருளும் எனக் கார்மேகத்தைக் கைபற்றிக் கூந்தலாகப் படைந்த அந்த நாளில், தேன் துளிக்கும் தாமரைமலத் தேவாகிய பிரமன், அந்தக் கார்மேகத்தின் இடையில் இருந்த மின்னலைக் கைப்பற்றி ஓர் உருவாகச் செய்த சீர்மையுடைய இடை நுடங்கும் அழகும்]

    ஓங்கிய விருள்கால் சீக்கும் ஒளியுமிழ் கனகக் குன்றம்
    ஈங்கிவை யென்று கொம்மை யிளமுலைப் பார நோக்கி
    வேங்கையம் போது போர்த்து விராவிநின் றொளிர்வ தேய்ப்பக்
    கோங்கன முலையிற் பூத்த கோமளத் திதலைச் சீரும்         53

    [இருள் கால் சீக்கும்- இருளை அவ்விடத்திலிருந்து போக்கும். கனகம்- பொன். வேங்கை குறிஞ்சி நிலத்து மரம் அதன்பூ மஞ்சல் நிறம். கோங்கு அன- கோங்கு அனைய. கோமளம்- அழகு திதலை- தேமல். இருளினை ஓட்டும் ஒளியை உமிழும் பொன்மலைகள் இவை என்று பெருத்த முலைகளைப் பார்த்து வேங்கைப் மலர்கள் விரவி நின்று ஒளிர்வது ஒப்ப, கோங்கு அனைய முலைமேல் அழகிய தேமல் படர்ந்துள்ள சிறப்பும்]

    தனித்தனி கண்க ளென்னுந் தடங்கையான் மொண்டு கொண்டு
    மனத்திடை யமையாக் காதல் வளர்தலாற் றண்ட னென்பான்
    கனைத்துவண் டிமிருங் கூந்தற் கற்புடைப் பன்னி யுள்ளம்
    பனித்துற வலிந்து செங்கை பற்றின னீர்த்தல் செய்தான் .         54

    [தன்னுடைய கண்கள் என்னும் கைகளால் முனிபத்தினியின் அழகைத் தனித்தனியே மொண்டு மோண்டு அருந்தியும் மனத்தில் அமையாத காமம் வளர்தலினால் தண்டன் கற்புடைப் பத்தினியின் உள்ளம் நடுங்க அவளுடைய கரத்தை வலிதில் பற்றி ஈர்த்தான்.]

    துன்றிய வருத்த மோம்பித் தொலையுயிர் நிறுவிக் காத்த
    நன்றியு நோக்கான் கற்பு நலிவிக்கும் பழிபா வங்க
    ளொன்றையு நோக்கா னோற்கு முத்தமத் தவத்தார் மேன்மை
    வென்றியு நோக்கா னந்தோ விதியினை யெவரே வெல்வார்        55

    [ பசி நீர்வேட்கையாகிவற்றால் பெரிதும் வருந்திய வருத்தம் தீரத் தன் உயிரைக் காப்பாற்றியதையும் அவன் நன்றியுடன் நினைக்கவில்லை. கற்பினை நலிவிப்பதால் வழிம் பழிபாவங்கள் ஒன்றையும் நினைந்து அஞ்சவில்லை. உத்தம தவத்தினரின் மேன்மையான ஆற்றலையும் நோக்கான். விதியினை யார்தான் வெல்லமுடியும்?]

    அடங்கருஞ் சீற்றத் துப்பின் அரியினத் துயர்ந்த ஏற்று
    மடங்கலொன் றண்மிப் பற்று மடப்பிடி யென்ன நெஞ்சின்
    இடங்கொளா வெருட்சி யீண்டி யிருசரண் கரந்தள் ளாடித்
    தடங்கணீர் சொரிந்து பன்னி தளர்ந்துடல் பதறு மேல்வை         56

    [அடங்காத சீற்றமும் வலிமையும் உடைய சிங்க இனத்து உயர்ந்த ஏறு ஒன்று நெருங்கி மடப்பிணையொன்றைப் பற்றியது போல நெஞ்சில் தாங்க வியலா அச்சம் மிக, இருர்கால்களும் கைகளும் தள்ளாடித் தடங்கண்ணீல் நீர் சொரிந்து முனிபத்தினி உடல் தளர்ந்து பதறுகின்ற அச்சமயத்தில். துப்பு- வலிமை. அரி இனம்- சிங்அ இனம். ஏறு- ஆன்பாலில் உயர்த்ததன் மரபுப் பெயர். மடங்கல் சிங்கம். வெருட்சி- அச்சம். ஏல்வை- சமயத்தில்]

    தருப்பைக ளாதி கொண்டு சார்தரு முனிவன் கண்டா
    னெருப்பென வெகுளி துள்ள நீண்டுவார் புருவங் கோட
    வுருப்பொலி விழிகள் சேப்ப வுலகெலாம் வெருவ வேதத்
    திருப்பொலி பவளச் செவ்வாய் துடிப்பமற் றிதனைச் சொன்னான்.        57

    [ தருப்பைகள் முதலியன கொண்டு மீண்டுவரும் முனிவன் தண்டகன் செயலைக் கண்டான். நெருப்பென வெகுளி துள்ள, நீண்டு வார்ந்த புருவங்கள் வளைய, அழகிய விசிகள் சிவப்ப, உலகெலாம் அச்சம் கொள்ள, வேதமந்திரங்கள் பொலியும் திருவாய் துடிப்பச் சினங்கொண்டு இவ்வாறு கூறினான்.]

    நலிவறு கற்பினாளை நச்சிய தண்டா வின்னே
    அலியுரு வாகநீமற் றவாவிமேற் செல்லு நின்னை
    மெலிவற விலக்கா விட்ட வமைச்சனும் வேடனாக
    வொலிகெழு செல்வ மெல்லா மொழிகவென் றுறுத்தான் சாபம்.        58

    [குறைவற்ற கற்பினாளை விரும்பிய தண்டனே! நீ இப்பொழுதே அலியுரு அடைவாய்! அவள் மீது தவறான ஆசைகொண்டு செல்லும் உன்னை உறுதியாக விலக்காது விட்ட உன் அமைச்சனும் வேடன் ஆகுக.! உன் வளமான செல்வமெல்லம் ஒழிக! என்று சாபம் இட்டான்.}

    கொந்தெரி வளைக்கப் பட்ட குஞ்சரக் குழாநைந் தென்னச்
    சிந்தையிற் றுயரம் நீடித் திருத்தகு முனிவன் றாளில்
    வந்தனை புரிந்து சிந்து மேதனு மன்னன் றானு
    மெந்தைநீ பொறுத்தல் வேண்டு மென்றன ரிரத்த லோடும்         59

    [கொழுந்து விட்டு எரியும் நெருப்பினால் சூழப்பட்ட யானைக் கூட்டம் வருந்திய தென்னச் சிந்தையில் துயரம் கொண்டு, தவமுனிவன் தாளில் வீழ்ந்து வணக்கம் செய்து, அமைச்சனும் மன்னனும் ‘ எந்தையே! நீ பொறுத்தல் வேண்டும்’ என்று இரந்தனர். அவர்கள் இரக்கவே]

    விழைந்தவிப் பிழையா னீயிர் விழைந்துறை காஞ்சி வைப்பும்
    அளந்தறி வருஞ்சீர்த் தீர்த்தஞ் சிவாலய மன்றி யெல்லாம்
    வளந்தப நெடுநாள் காடாய் மன்னிமற் றதனைக் காப்பான்
    இளந்தனித் திங்கள் சூடு மெம்பிரா னருளினாலே        60

    விறற்கலி காலன் சோணாட் டவதரித் தீண்டு மேவுந்
    திறற்படை யவனைக் காணிற் றீருமிச் சாப மென்றவ்
    வறப்பெரு முனிவ னில்லா ளெரியுட னங்க ணீங்கி
    யுறற்கரும் பனிசூழ் பொற்கோட் டோங்கலை யடைந்தா னன்றே.        61

    [ நீவிர் விரும்பிச் செய்த இந்த பிழையினால், நீங்கள் விரும்பி வாழும் காஞ்சி நகரமும் அங்குள்ள அளத்தலரிய தீர்த்தங்களும் சிவாலயங்களும் அன்றி மற்றவெல்லாம் வளமை கெட்டு காடாய் நிற்கும். அவற்றைக் காக்கும்பொருட்டு, இளம்பிறை சூடும் எம்பிரானுடைய அருளினாலே, வெற்றியுடைய கலிகாலன் சோணாட்டில் அவதரித்து இங்கு வருவான். அவனைக் காணில் இச்சாபம் எல்லாம் தீரும் என்று உரைத்துவிட்டுத் தன் சிவாக்கினியுடனும் பத்தினியுடனும் யாரும் அடைய முடியாத பனிசூழ் கயிலாயமலையை அடைந்தான்.]

    வலியினாற் பிறர்தா ரத்தை வவ்வின ரும்மை யிம்மை
    யலியுரு வாவ ரென்னும் பழமொழி யவலங் கூரப்
    பொலிவரு மற்றை நாளேயலியுருப் பூண்டான் மன்ன
    னலிவுசெய் வேட யாக்கை நண்ணினா னமைச்சன் மன்னோ        62

    [வலாத்காரமாகப் பிறர் மனைவியைக் கைப்பற்றினர் வரும் பிறப்பிலும் இப்பிறப்பிலும் அலியுருவாவர் என்னும் பழமொழிக்கு ஏற்ப அவலம் மிக மன்னன் அந்த நாளே அலியுருப் பூண்டான்; உயிர்களை நலிவுசெய்யும் வேட உடம்புகொண்டு அடைந்தனன் அமைச்சனும்]

    வேள்வியுந் தவமுந் தூய விருந்து மீகையு மேதக்க
    கேள்வியுந் திருவும் வாய்மைக் கிளர்ச்சியு நன்மை சான்ற
    தாள்வினைத் திறமு மென்றுந் தணப்புறாக் காஞ்சி தானு
    நீள்விரைப் பொதும்பர் மல்கு நெடுவன மாயிற் றம்மா         63

    [ வேள்விகளும் தவமும் தூய விருந்தும் கொடையும் உயர்ந்த கல்விகேள்விகளும் செல்வ்மும் சத்தியத்தில் இன்பமும் நல்ல முயற்சிகளும் ஆகியன என்றும் பிரியாத காஞ்சிமாநகர்தானும் நீள்வனக் காடாயிற்று]
    வேறு

    கடியி ணங்கிய காவுங் கமல வாவிகள் முற்றும்
    படரு மொண்புனல் யாறும் பரவை வெண்மணற் குன்றுங்
    கொடியி ணங்கிய மாடக் குமரி மேனில வைப்பும்
    மடமடந் தைய ராடும் வளமொ டுங்கின மாதோ.         64

    [காஞ்சியின் வளத்துடன் பிறவும் ஓடுங்கினமை கூறியது. கடி- மணம், புதுமையுமாம். பரவை- கடல். குமரி வைப்பு- அழியாமையுடைய நிலம். மணமிக்க சோலைகளும், தாமரைத் தடாகங்களும் இறுதி வரை பாயும் ஒள்ளீய புனல் உடைய ஆறும், கடற்கரை வெண்மணற் குன்றும், கொடியுடன் கூடிய என்றும் அழியாத மதிலுடைய நகரமும் இளமகளிர் ஆடும் பண்ணைகளும் ஆகியன வளமொடும் ஒடுங்கின. மகிழ்ச்சியே இல்லை யெனப்படுவதாயிற்று]

    பந்தம் ஈர்கலை தேரும் பட்டி மண்டப மோடு
    முந்தி வானவர் வைகு மூரி மண்டப மன்னர்
    அந்தி நண்பகல் காலை யமரு மண்டப மெங்கும்
    மைந்த ரண்மி நெருங்கும் வனப்பி றந்தன மன்னோ         65

    [அறியாமையாகிய விலங்கை அரியும் கல்வி தேரும் பட்டி மண்டபமொடு, வானவர்கள் வந்து தங்கும் பெரிய மண்டபம், மன்னர்கள் முப்போதும் அமரும் மண்டபங்கள் எவையும் மைந்தர் வந்து கூடும் வனப்பினை இழந்தன.மன்னோ- அசைச்சொல். இரக்கக் குறிப்பு.]

    பாட லோம்பின மாதர் பண்பி னாடவர் தம்மோ
    டூடலோம்பின வவரு முருகி வந்தடி தாழ்ந்து
    கூட லோம்பின கூடுங் கோதி லின்பப் பெருக்கி
    னீட லோம்பின வெங்கு நிரந்தர பள்ளி யிடங்கள்         66

    [ஓம்பின- பரிகரித்தன, ஒழித்தன.
    இசைபாடுதல் மகளிரை விட்டு நீங்கின. நற்பண்பு ஆடவரைப் பரிகரித்தது. ஊடலும் ஊடல் நீக்குதலும் பின் கூடலும் நீங்கின. பள்ளீ இடங்கள் எங்கும் நிரந்தரமாக இன்பப் பெருக்கு நீங்கியது.]

    அட்டில் வாய்ப்புகை வீந்த வரிவை மார்குழ லேற்று
    மட்டுலாம் புகை வீந்த மாட மாளிகை யூட்டி
    முட்டி வார்புகை வீந்த முறையி னாகுதிச் செந்தீப்
    பட்ட பூம்புகை வீந்த பைம்பொன் மாமனை யெங்கும்         67`

    [வீந்த- ஒழிந்த.சமையற்கட்டிலிருந்து வரும் புகை இல்லாது ஒழிந்தது. மகளிர் குழலுக்கு ஏற்றும் மணமுள்ள புகை ஒழிந்தது. மாடமாளிகைகளில் தூபமூட்டும் புகை இல்லாது ஒழிந்தது. வேள்வி ஆகுதிப் புகை இல்லாது போயிற்று. மாமனை யெங்கும்.]
    புரவு பூணுநர் மாண்பும் புகழ் விளைக்குநர் மாண்பும்
    இரவு தீர்ப்பவர் மாண்பும் இயலு மாதவர் மாண்பும்
    பரவு பத்திமை மாண்பும் பலவு மாறின மன்னோ         68

    [விருந்தினை வரவேற்பவர் பெருமையும், திருமணம் செய்பவர் பெருமையும், ஆதரிப்பவர் பெருமையும், புகழ் விளைப்பவர் பெருமையும், இரத்தலைத் தீர்ப்பவர் பெருமையும், பத்திசெய்தலின் பெருமையும் இத்தகைய பலவும் ஒழிந்தன. மாறின- இல்லாது போயின.]

    விழாவி ழந்தன தக்கை வெம்பு தண்ணுமை பம்பை
    முழாவி ழந்தன தேவர் முனிவர் மானுடர் கூடுங்
    குழாமி ழந்தன சின்னங் கோடு தீங்குழல் வீணை
    யெழாலி ழந்தன வென்ப மறுகு வீதிக ளெல்லாம்         69

    [தெரு வீதிகள் எல்லாம் விழக்களை இழந்தன; தக்கை முதலிய மங்கலக் கருவி ஒசையை இழந்தன; தேவர்கள் மனிதர்கள் முனிவர்கள் கூடும் கூட்டம் இழந்தன; சின்னம், சங்கு கோடு முதலிய மங்கல ஒலிகள் எழால் இழந்தன]

    வேத மோது நயப்பும் வேள்வி நல்வினை யாற்றி
    யேத மீரு நயப்பு மிறைவ னின்னருள் கூருங்
    காதை கேட்கு நயப்புங் கண்ணுதற் பெருமான்பொற்
    பாத மேத்து நயப்பும் பரிந்த வேதியர் வீதி.         70

    [நயப்பு- பயன். பரிந்த- அற்றுப்போயின. மறையோதுதலின் பயனும், வேள்வியாகிய புண்ணியத்தைச் செய்து தீங்கினை நீக்கும் பயனும் இறைவனின் இன்னருள் கூறும் புராணக் கதைகளைக் கேட்கும் பயனும் சிவபெருமானின் திருப்பாதத்தை ஏத்தும் வழிபாட்டின் பயனும் இல்லாதொழிந்தன, வேதியர் வீதிகள். பிறவிடங்களில் இல்லாதபோதிலும் இவற்றைக் காப்பற்றிப் பேணும் கடப்பாடுடைய வேதியர்களே இவற்றை இழந்தனர் என்று வறட்சியின் கொடுமை கூறப்பட்டது.]

    வெற்றி யானைகள் போரின் வெகுள மூட்டும் வனப்பும்
    பொற்ற நீண்மணித் தேர்கள் பொருத வுந்து வனப்புங்
    கற்ற வைங்கதி மாக்கள் கலாம் விளைக்கு வனப்பு
    மற்று மற்றன வீர மன்னர் வாழ்மணி வீதி         71

    [அரசவீதிகள் போரில் வெற்றியைத் தரும் யானைகளுக்கு வெகுளியூட்டிப் போர்ப்பயிற்சி தரும் வனப்பும், தேர்கள் ஒன்றையொன்று போட்டியில் முந்தப் பயிலும் வனப்பும், ஐந்துகதிகளிலும் வல்ல குதிரைகள் தம்முள் வெல்ல விளைக்கும் கலகமும், இன்னபிற அரசர்களுக்குரிய வீர வனப்புகளை இழந்தன]

    மதலை யிற்பொருள் வந்த வாங்கு மோதை வியப்பும்
    எதிரி ரும்பொருள் வங்கம் ஏற்றி யுய்க்கும் வியப்பும்
    பதியி னுள்ளவர் கொள்ளப் பாத்து விற்கும் வியப்புங்
    கதுவு மற்றை வியப்புங் கழன்ற நாய்கர் தெருக்கள்.        72

    [ வணிகர் தெருக்கள் கப்பலில் வந்த பொருள்களை வாங்கும் ஓசை வியப்பும் , தம்மிடம் உள்ள பொருள்களை வங்கத்தில் ஏற்றிச் செலுத்தும் ஓசைவியப்பும் நகரில் உள்ளவர் வாங்கப் பொருள்களைப் பகுத்து விற்கும் வியப்பும் பொருந்தும் இவைபோன்ற பிற வியப்புகளும் இல்லாது நீங்கின. வியப்பு- மேன்மை, சிறப்பு.]

    பகடு போற்றும் இசைப்பும் பண்ணையிற் பொலிபைங்கூழ்
    அகடு வாய்ந்த மகத்தி னாக்கும் அன்பும் விருந்தின்
    இகலில் காட்சியர் தம்மை யினிது பேணுஞ் சிறப்பும்
    அகல நீங்கின பின்னோ ரமர்ந்து வாழ்திரு வீதி         73

    [பின்னோர்- வணிகரின் பின்னோராகிய வேளாளர். பகடு- எருதுகள். அகடு- வயிறு. மகம்- வேள்வி. இகலில் காட்சியர்- ஞானியர். கால்நடைகளைப் போற்றி வளர்க்கும் ஓசையும், களத்தில் பொலியும் நெல்லினை விருந்தினரின் வயிற்றில் உணவாகிய அவிசாக இடும் வேள்வியினை ஆற்றும் அன்பும், ஞானியரை இனிது பேணும் சிறப்பும் விட்டு நீங்கின வேளாளர் தெருக்களும் வீதிகளும்.]

    வேறு
    வெண்ணி லாவிளம் பசும்பிறைக் குழவியின் விரிசுடர்ச் சடைக்கற்றை .
    யண்ண லாருமை யுடனமர் கச்சி மாநகர் வயினமர் கின்றோ
    ருண்ணி லாஞ்சிவ முறுவ தோர்ந்தா யிடைத் தானுமோர் தவமாற்ற
    நண்ணி னாலென வெழுந்தது விரைகுலாய் நறைபொழி முதுகானம்         74

    [வெண்ணில ஒளி வீசும் இளம்பிறைச் சடைக்கற்றை அண்ணலார் உமையம்மையுட னமர்ந்துள்ள கச்சி மாநகரில் வதிவோர் உயிருக்குயிராம் சிவத்தை அடைவார் என்பது அறிந்து அவ்விடத்துத் தானும் ஒரு தவம் ஆற்ற நண்ணீயது போல எழுந்தது, மணம்வீசி தேன்பொழியும் அடர்ந்த கானம். முதுகானம்- நெருங்கிய அடர்ந்த காடு]

    கடுத்து ழாவிய கருமிடற் றிறைவர்தங் கழறொழு பெருங்காதல்
    தொடுத்த கொள்கையின் நித்தலுங் காஞ்சியந் தொல்லை மாநகர் வாழ்க்கை
    விடுத்தி டாதமால் செயலறிந் தவன்தனித் தெய்வத மெனமேவி
    யடுத்த தானும்அங் கணைந்ததே போலுமிக் கடர்ந்தெழு பெருங்கானம்        75

    [துழாவிய- கலந்த. தனித் தெய்வம்- ஒப்பற்ற தெய்வம்.
    நஞ்சு கலந்த கரியகண்டத்து இறைவனின் கழல் தொழுபத்தியுடன் நாளும் காஞ்சியாகிய பழம்பெரு மாநகரின் நீங்காது வாழும் திருமாலின் செயல் அறிந்து சிவனே தனித் தெய்வம் என அங்குப் பொருந்தி அடுத்துத் தானும் அங்கு அணைந்ததே போல மிக்கு அடர்ந்தது, பெருங்கானம்.]

    எழுந்த தம்வலி காளியா லழுங்குவித் திடுதலி னிகல்கொண்டு
    கொழுந்து வெண்மதி மிலைச்சினார் திருநகர் குலைப்பமீட் டுடன்றோங்கி
    யழுந்து பட்டபல் கடல்களும் வளைந்ததும் ஆகும்பன் னிறப்போதும்
    விழுந்து வண்டின முழக்க வாய்விள்ளமே னிமிர்ந்தெழு கருங் கானம்        76

    [கிளர்ந்து எழுந்த தம்முடைய வலியைக் காளியினால் ஒழித்ததனால் பகை கொண்டு பிறையணிந்த பெருமானின் நகரை அழிக்க மீண்டும் மாறுபட்டு ஓங்கிப் பலகடல்களும் வளைந்து முற்றுகை இட்டதாகும், பலநிற மலர்களும் விரும்பி வண்டுகளின் கூட்டம் ஒலிக்க வாய்திறந்து மேலே நிமிர்ந்து எழும் பெருங்கானம்.]
    < கரிதி ளைத்துவா ழிடந்தொறுங் கரிகளே கருதலர் சிரங்கோட்டும்
    பரிதி ளைத்துவா ழிடந்தொறும் பரிகளே பயிலிய கவைக் கோட்டுப்
    பெரிய மேதிவா ழிடந்தொறும் மேதியே பிறங்கி வாழ்ந்தன வம்மா
    வுரிய தத்தம தினம் பயி லிடமென வுறவு கொண்டிடு மாபோல்        77.

    [ தத்தமது இனம் வாழ்ந்த இடம் என்னும் உரிமையால், வளர்ப்பு மிருகங்கள் வாழ்ந்த இடங்களில் காட்டு விலங்குகள் குடி புகுந்தன. யானைகள் மகிழ்ந்து வாழ் இடந்தொறும் காட்டு யானைகள் காணப்பட்டன. பகைவர்கள் தோல்வியால் தலையைத் தொங்கச் செய்யும் பரிகள் வாழ்ந்த இடங்களில் காட்டுக் குதிரைகளே வாழ்ந்தன. வீட்டில் பயின்ற எருமைகள் வாழிடங்களில் காட்டெருமைகள் தங்கின. ]

    அரசு வீற்றிருந் தாண்ட மாளிகை தொறு மரசு வீற்றிருந் தருளுங்
    கரிசில் காட்சி யிற்கணிகள் வாழிடந் தொறுங்கணிக ளெண்ணில வாழுந்
    தரைப ராவுசீர்த் தளிதொறுஞ் சம்புவைச் சம்புவே தொழுதேத்தும்
    விரிது ழாயணி யரிபயி லிடந்தொறு மரியினம் விராய்ப் போற்றும்.        78

    [அரசு- அரசர்களுக்கும் அரச மரத்துக்கும் சிலேடை. கணி- அறிவர்கள், வேங்கை மரம், வேங்கைப் புலி. சம்பு- சிவன், நரி. அரி- திருமால், சிங்கம். அரசர்கள் வீற்றிருந்த இடங்கள்தோறும் அரசமரங்கள் வீற்றிருக்கும். முக்கால நிகழ்ச்சிகளையும் தெளிவுபட அறியும் கணியர்கள் வாழ் இடந்தொறும் கணிகளாகிய வேங்கை மரங்கள் வேங்கைப் புலிகள் எண்ணில வாழும். சம்புவாகிய சிவன் கோயில்கள் பாழ்பட்டு அங்கு சம்புவாகிய நரிகள் சம்புவைத் தொழும். துழாய் அணி அரி வாழ்திருக்கோவில்கள் தொறும் அரி(சிங்கங்கள்) தங்கி அரியைப் போற்றும்.]

    கொடிநி லாயெழுந் தாடுகோ புரந்தொறுங் கொடிநி லாயசைந் தாடுந்
    தொடரு மன்பர் மெய்ப்பணி வளரிடந் தொறுஞ்சுடர் மணிப்பணி வாழும்
    விடுக திர்ப்பொலங் காஞ்சிவைப் பிடந்தொறும் விரைத்தகாஞ் சிகணீடும்
    படரு மம்புலி தவழுமே டைகடொறும் பாயுமம் புலிமல்கும்        79

    [கொடி- துணிக்கொடி, காகம். பணி- தொண்டு, பாம்பு. காஞ்சி- இளமகளிர் இடையில் கட்டும் அணிகலன், காஞ்சி மரம். அம்புலி- திங்கள், அழகிய புலி என்னும் விலங்கு. கொடிகள் நிலவி எழுந்தாடும் கோபுரங்கள் தோறும் காகங்கள் நிலவி அசைந்தாடும். அன்பர்கள் உடலால் செய்யும் இறைபணி வள்ரும் இடந்தொறும் சுடர்மணி கொண்ட நாகங்கள் வாழும். ஒளிவிடும் காஞ்சிகள் இருந்த மாடங்கள்தொறும் இப்பொழுது காஞ்சி மரங்கள் எழுந்தன. அழகிய அம்புலியாகிய நிலா படரும் மாடங்கள் இருந்த இடங்களில் இப்பொழுது பாயும் புலிகள் மலிந்து இருந்தன. ]

    இருண்ட கார்விட மயின்றவர்க் கலரெடுத் துதவயா வருமின்மை
    தெருண்டு தாங்களே யுதவுவா னணைந்தெனச் சிவபிரான் றளிச்சுற்றின்
    உருண்ட காய்பசுங் கூவிளம் முல்லையொண் குமிழ்மகிழ் வழைகூந்தன்
    மருண்ட தீங்கனி கொன்றையா திகளெலா மன்னிநின் றலரூழ்க்கும்        80

    [விடமுண்ட கண்டருக்கு மலர் எடுத்து உதவ யாரும் இல்லாமை தெரிந்து தாங்களே உதவுவப் பொருந்தியது என்னும்படியாக சிவபிரான் திருக்கோவிலின் திருச்சுற்றில், உருண்ட காய்களை உடைய பசிய வில்வம், முல்லை, குமிழ் போன்ற மகிழம், சுரபுன்னை, , கூந்தல் என மருட்டும் கனிகளையுடைய கொன்றை முதலியன நின்று மலர்களைச் சொரியும். ]

    தங்கண் மெய்ப்படு முறுப்பினை மேதகத் தழீஇயது தனைநோக்கிப்
    பொங்கு நட்புமேல் கொண்டணைந் தாலெனப் பொருவிலா வணந் தோறுங்
    கொங்கு விம்முபூங் குங்குமஞ் சந்தனங் கோழரை யகில்வாசம்
    எங்கும் மொய்த்தெழுங் கப்புர மிலவங்க மேலமா திகள் சூழும் 81        

    [ஆவணம்- கடைத்தெரு. முன்பு தங்கள் உடம்பின் உறுப்புகளை விரும்பித் தழுவியதுதனைக் கருதி, மிக்க நட்புக் கொண்டு பொருந்தியது போல், ஒப்ப்ல்லாத கடைத் தெருக்கள் தோறும் மணமிக்க குங்குமம், சந்தனம், வாழை, அகில், முதலிய மரங்களும், வாசம் எங்கும் மொய்த்து எழும் கர்ப்பூரம், இலவங்கம், ஏலாதிகளும் சூழும். தம்முடைய உறுப்புக்கள் (இலை,காய், கனி, சாறு முதலியன்) விற்கப்பட்ட இடத்தில் முதல்களே தோன்றின.]

    காடெ லாமர சாட்சி செய்தாமரைக் கண்ணனப் புதுக்கானும்
    நீடு தோரணம் வைத்தென நிரைபட நிலைஇய பன்மரந் தோறும்
    மூடு போந்திணர்ப் பசுங்கொடி படருமவ் வும்பனாங் கரசெய்தும்
    பீடு போன்மலர்ப் பூவைகள் நிலவிடும் பெட்புற விடந்தோறும்         82

    [காடு, முல்லை நிலம். அதற்குத் தெய்வம் செந்தாமரக் கண்ணனாகிய திருமால். புதுக் கான் -புதிய கானகம். நிரைபட- வரிசையாக. நிலைஇய- நிற்கின்ற. இணர்- கொத்து. உம்பன் -தலைவன். பூவை- காயாம்பூ. இது கருநிறமானது. திருமால் காயாம்பூ நிறத்தவன். காடெலாம் அரசாட்சி செய்கின்ற கண்ணன் அப்புதுக் கானகத்தில் நீண்ட தோரணம் வைத்ததுபோன்று வரிசையாக நிற்கும் பல்வகைய மரங்கள்தோறும் மலர்க்கொத்துக்களையுடைய கொடிகள் படரும். அத்தலைவன் அங்கு அரசாட்சி செய்கின்ற பெருமைபோல காயாம்பூக்கள் இடந்தோறும் விருப்பமுண்டாக மலர்ந்திடும்.]

    எழில்செய் தம்முடை யுறுப்புநேர் உறுப்புடை ஏழையர்தமைக் காண
    விழையுங் காதலிற் புரைகிளைத் தாலென வியன்மனைத் தலைதோறும்
    வழியும் மும்மதக் களிற்றொடு பிடிகளும் வயந்திகழ் அரிமாவும்
    உழையும் வைகலும் நுழைவன பயில்வன வுழிதருவன மன்னோ.         83

    [மகளிரின் நடைக்குப் பிடி நடையும் நகிலுக்குக் களிற்றின் மத்தகமும், இடைக்குச் சிங்கத்தின் இடையும் பார்வைக்கு உழையும் உவமையாகக் கூறப்படும். அழகிய தம்முடைய உறுப்புகளுக்கு நிகரான உறுப்புடைய மகளிரைக் காண விருப்பத்துடன் வீடுகள் இருந்த இடந்தொறும் மும்மதம் வழியும் களிற்றுடன் பிடிகளும், வலிமையுடை சிங்கங்களும்,உழையும் நாள் தொறும் நுழைவன, தங்கியிருப்பன, அலைவன. மன்னோ- அசை. அங்கு மகளிர் இல்லமையால் அவை அடையும் ஏமாற்றத்திற்கு இரங்கிய குறிப்பும் ஆம்.]

    துளிவி ராவிய தேனைமா ரியிற்பொலஞ் சுடர்விடு திருமேனி
    அளியின் ஆட்டுபு குரங்குசா கையினிலை யறுவையா மேலொற்றி
    நளிம லர்த்திரள் தூஉய்நறும் பழவுணா நல்கிநீண் மரக்கானுந்
    தளிதொ றுஞ்சிவ லிங்கபூ சனைதினந் தகைபெறப் புரிகிற்கும்.         84

    [கோயில்கள் இருந்த இடங்களில் இப்பொழுது மரக்கானங்களே இருந்தன. மரக்கானகங்களும் தளிகளில் சிவபூசை புரிந்தன. எப்படியெனில், மழைத்துளியுடன் கலந்த தேனை, மழைநீர் போல, ஒளிவிடும் இலிங்கத் திருமேனியை அளியினால் ஆட்டி, வளைந்த கிளைகளில் உள்ள இலைகளாகிய துணியால் மேனியை ஒற்றி, குளிர்ந்த மலர்த்திரள்களைத் தூவி, நறும் பழமாகிய நைவேத்தியத்தை நல்கி, மரக்கானகமும் தளிதோறும் சிவலிங்கபூசனையைத் தினம் தகைபெறப் புரியும். அளி- அன்பு, வண்டுகள். குரங்கு- வளைந்த. சாகை – கிளை. அறுவை- ஒற்றாடை. பழவுணா, பழமாகிய உணவு, நைவேத்தியம். தளி- கோயில்.]

    படியின் மேதகும் ஆயிடை முன்குலாம் பல்லியத் தொகைபோல
    நெடிய யானைக ளுலம்பிய சும்மையு நிரைபடு மரியேற்றின்
    இடியி னார்த்தெழு முழக்கமும் வேங்கைக ளிரங்குமோ தையுமல்கி
    விடிய னண்பகன் மாலையெக் காலமு விராயெழு மிடந்தோறும்         85

    [உலகில் மேம்பட இருந்த அந்தக் காலத்தில் முன்பு பலவாச்சியங்கள் ஒலித்ததைப் போல, இப்பொழுது, உயர்ந்த யானைகள் பிளிறும் பேரொலியும், கூட்டமான ஆண்சிங்கங்களின் இடிபோல ஆர்த்தெழும் முழக்கமும், வேங்கைப்புலிகளின் உறுமலும் நிறைந்து விடியற்காலை, நண்பகல், மாலையென எக்காலமும் கலந்து எல்லா இடங்களிலும் எழும். படி- பூமி. மேதகும்- சிறப்புடன் விளங்கும். பல்லியம்- வாத்தியங்கள். உலம்பிய- ஒலித்த. இரங்கும்- உறுமும்.]

    கொம்பி னூழ்த்தலர் மலர்களி னிழிந்துவார் குலநதியென வோடும்
    வம்ப றாதபூந் தேறலைப் புனலென மடுத்துளர் மகண்மாக்கள்
    அம்பொன் ஆலயத் தூணின்ஆண் பாவையை யாடவ ரெனச்சால
    நம்பி நோக்கிய நோக்குமா றாவதன் நலந்தெரித் திடுமாபோல்        86

    [ஊழ்த்து அலர்- பூத்து மலர்ந்த. வார்- ஒழுகும். வம்பு- மணம். தேறல்- தேன். உளர்- அலைக்கும். .மகண்மா- பெண்வடிவங்கொண்ட ஒருவகை விலங்கு. (லெக்சிகன்).மக்கட் குழந்தையைப் போல இருக்கும் என்பர் நம்பி- விரும்பி. நோக்கிய நோக்கு- பார்த்த பார்வை. மரக்கொம்புகளில் பூத்து மலர்ந்த மலர்களிலிருந்து வற்றாத நதியென ஒழுகும் பூந்தேனைப் புனலெனப் பருகி அலைத்து மகிழும் மகண்மாக்கள் ஆலயத்துள் தூணில் இருக்கும் ஆண் சிற்பத்தை விரும்பி நோக்கும் நோக்கு அதன் சிறப்பை ஆராய்வது போலிருக்கும்]

    நீண்ட வேய்நரன் றுக்கபன் முத்தமும் நெடும்பகை யரிதாக்க
    மாண்ட யானையின் மத்தகங் கீழ்ந்துகு மணிகளுந் தெருத்தோறுங்
    காண்டகக் கிடந்தி மைப்பன கலவியிற் கன்னியர் முலைக்கோட்டுப்
    பூண்ட நித்திலம் பரிந்து வீழ்ந்த விரொளி பொங்குமத் திறங் காட்டும்         87

    [உயர்ந்த மூங்கில்கள் உராய்ந்து உகுத்த முத்துக்களும், நீண்ட பகையால் சிங்கம் தாக்க மாண்ட யானையின் மத்தகத்திலிருந்து உகுத்த மணிகளும் தெருத்தோறும் காட்சிகொளக் கிடந்து, கலவியின் போது மகளிரின் முலைமேல் பூண்ட முத்துமாலைகள் அறுந்து வீழ்ந்து ஒளிரும் அத்தன்மையக் காட்டும். சிறப்பாக இருந்த அக்கால நிகழ்ச்சி இப்பொழுதும் காணக் கிடைப்பதாகக் கூறும் நயம். நரன்று- ஒலித்து. உராய்கின்றபோது எழும் ஓசை. பரிந்து- அற்று. அரி- சிங்கம். சிங்கத்துக்குப் பகை யானை. சிங்கம் யானையை மத்தகத்தில் அறைந்து கொல்லும் என்பர்.}

    எம்பி ரான்றிரு நகரெழில் றபவடர்ந் திடுவதென் னெனநம்பன்
    அம்பொன் வார்கரத் தழலும் வெங்கனல் படர்ந்தழித் திடவெழுந் தன்னப்
    பம்புநீள் பசுங்கழைக் குலமுரிஞ்ச வுற்பவித்த வொள்லழ லோடி
    யும்ப ரோங்கு கானழித் துறப் புகுந் தஃதொழுக்கு தேறலிற் சாம்பும்.         88

    [எங்கள் தலைவனின் அழகிய நகரின் எழிலை அழிக்கப் படர்வது ஏன் என இறைவனின் திருக்கரத்தில் உள்ள எரியும் நெருப்பு கானகத்தைப் பற்றிப் படர்ந்து அழித்திட எழுந்தது என்ன மூங்கிற் புதர் உராய்ந்து தோற்றிய நெருப்பு ஓடி வானளவு உயர்ந்த கானகத்தை அழிக்க முற்பட்டபோது, அக்கானகம் ஒழுக்கும் தேனால் அந்நெருப்பு அழியும். பம்பு நீள்பசுங்கழைக் குலம்- பம்பு கழை- கல்மூங்கில். உள்தொளை சிறிதாக இருக்கும் ஒருவகை மூங்கில்.]

    இன்ன வாறெலாந் தூறெழு வனம்பட இருநகர்த் தனித்தெய்வக்
    கன்னி நோக்கினள் அருந்துயர் உழந்தனள் கம்பை வைப்பினில் வேணிச்
    சென்னி யாருமை யுடன்றனித் துறைதலிற் செவ்விபெற் றிலளாகி
    நன்னர் வெள்ளியங் கயிலைமால் வரைத்தலை நண்ணினாள் இடர்தீர்வாள்.        89

    [இவ்வாறெலாம் புதராக வனம் தோன்ற, இப்பெரியநகரின் காவல் தெய்வமான கொற்றவை நோக்கினள். மிகவும் துயர் எய்தினள். கம்பை நதிக்கரையில் கங்காதரராகிய பெருமான் உமையம்மையுடன் தனித்துறைதலினால், அவரைக் காணச் செவ்வி பெறாமல் கயிலைமலையை அடைந்தாள். ]

    அங்கண் வள்ளலா ரடியிணை தொழுதெழுந் தணுகி நின்றுரை செய்யுந்
    திங்கள் வேய்ந்தபொற் புரிசடைக் கடவுளோ திருமலிநகர்க் காஞ்சி
    பொங்கு மாதவத் தொருமுனி சபித்தலாற் பொருக்கென வளங்குன்றி
    யெங்கு நீடிய நெடிபடு கான்பொதிந் திடும்பை யுற்றது மன்னோ.        90

    [கடவுளோ- ‘ஓ’ அவலக்குறிப்பு. பொருக்கென- விரைவுக் குறிப்பு. அவ்விடத்தில் இறைவனின் அடியிணையை தொழுது எழுந்து அருகில் நின்று உரை செய்வாள்.” சந்திர சேகரரே! அழகுமலிந்த காஞ்சிமாநகர் மாதவத்தொரு முனிவர் சபித்தலால் வளங்குன்றி எங்கும் நீண்டு சிள்வண்டுகள் ஒலிக்கும் காடாகிப் பெருந் துன்பமுற்றது. ]

    வெள்ளை யோதிமக் குழாங்களு மின்னென மிளிர்ந்த மெய்மட வாரு
    முள்ள மீக்கொளுங் களிப்பினி லாட்டயரு ருகெழு தடந் தோறுங்
    கள்ளு லாஞ்சினைக் கான்வளர் கோழியுங் கலுழி மும்மத வெள்ளங்
    கொள்ளை வண்டினங் கூட்டுணுங் குஞ்சரக் குழாங்களுந் துளைந்தாடும்        91

    [வெள்ளை அன்னப்பறவைக் குழாங்களும் மின்னல் என மிளிர்ந்த ஒளி நிறம் வாய்ந்த இளமகளிரும் மிக்க களிப்புடன் ஆட்டமரும் அழகிய நீர்த்தடங்கள்தோறும், தேன்கூடுகள் உள்ள கிளைகளில் வளர்கின்ற காட்டுக் கோழிகளும் ஒழுகும் மும்மதவெள்ளத்தை வண்டுகள் கூட்டுணும் காட்டு யானைக் குழாங்களும் முழுகி ஆடும்]
    தேறல் வார்ந்தென மதுரமிக் கசும்பிய திவவியா ழிசைப்பாட்டு
    நாறு பூங்குழன் மகளிர்க ளிசையுட னடவிய குரற்பாட்டும்
    வேறு வேறுசூ ழிடந்தொறுஞ் சுவாகதம் விரிசிறை மணிப்பூவை
    யூறு தீஞ்சுவைக் குயிலின மிழற்றிய வோங்கு பாட்டிசை மல்கும்         92

    [சுவாகதம்- கிளி. தேன் வார்ந்த்து என இனிமை மிக்கு வழியும் திவவுயாழ்ப் பாட்டும் மகளிர் இனிய இசையுடன் மிழற்றும் குரலிசைபாட்டும் நிகழ்ந்த வேறு வேறு இடந்தொறும் கிளிகள், மணிப்பூவைகள் குயிலினம் மிழற்றும் ஓங்கு பாடல் நிறையும்.]

    கோதை வார்குழற் கூட்டிய நறும்புகை குலாவிய விடந்தோறுஞ்
    சீத நித்திலம் உகும்பணை யுரிஞ்சிய செழுங்கனல் வளைந்தேறிப்
    போத ளாமகில் சந்தன மெரித்தெழு பூம்புகைக் கொழுந்தூரும்
    மாத ரார்நடங் குயின்றமேல ரங்கெலாம் மயிலினம் நடமாடும்.         93

    [ நீண்ட கூந்தலுக்கு ஊட்டிய நறும்புகை கலந்திருந்த இடங்கள்தோறும் குளிர்ந்த முத்துக்கள் உகுக்கும் மூங்கில்கள் உராய்ந்ததால் எழும் செந்தீ போந்து அளாவி அகில், சந்தனம் மரங்களை எரித்து எழும் புகைக் கொழுந்து ஊரும். மகளிர் மகிழ்ச்சியுடன் நடனமாடிய இடங்களிலெல்லாம் மயிற்கூட்டம் நடமாடும்.]

    மருந்து போல்வரும் விருந்தினை யெதிர்கொளும் வயின்றொறு மதவேழம்
    பொருந்து வாலுளை மடங்கல் வெங்குடா வடிபுலி மரையுழை யாதி
    திருந்து வேறிருங் கானக நின்றொரீஇச் செற்றி வந்தவை தம்மைப்
    பரிந்து தத்தம தினமென வெதிர்கொளும் பகட்டின முதலாய         94

    [மருந்து- அமிழ்தம். அமிழ்தம் போல வரும் விருந்தினை எதிர்கொள்ளும் இடந்தோறும் இப்பொழுது மதவேழம் வெண்மையான பிடரியை உடைய சிங்கமும் கொடிய கரடியும் புலியும் மான், உழை முதலியன வேறு கானகங்களினின்றும் நீங்கி வந்தனவற்றைத் தத்தம் இனமென எதிர்கொள்ளும் விலங்குகளை உடையனவாயின. பகடு- யானை. பகட்டின முதலாய- யானைக் கூட்டம் முதலாய விலங்குகளாயின.]

    பரத்தை மாரொடுங் கிழத்தியர் தம்மொடும் பாழியம் புயமைந்தர்
    கருத்து மேதக ஆட்டயர்ந் தின்புறு கடிமலர்ப் பொழில்தோறும்
    பெருத்து நீள்கரப் பிடியுடன் வேழமும் பெட்டைக ளுடன்மானை
    வருத்தும் வாலுளை மடங்கலு மளவளாய் மதன்கலை முறைதேற்றும்.        95

    [பரத்தையருடனும் இற்கிழத்தியருடனும் வலிய அழகிய புயங்களை உடைய மைந்தர்கள் விருப்புடன் கேளிக்கை விளையாட்டுக்கள் ஆடி இன்புற்ற மணமிக்கபொழில்கள் தோறும் பெரிய நீண்ட துதிக்கை பிடிகளுடன் வேழமும் பெட்டைகளுடன் மானை வருத்தும் வெண்பிடரியுடைய ஆண்சிங்கங்களும் கலந்து மன்மதக் கலைகளைப் பயிற்ருவிக்கும்.]

    இளம கார்விளை யாடிய தெருத்தொறும் இழிமதக் களிறீன்ற
    களப நின்றுலா யாட்டயர் தருமுளக் கனிவொடு நற்றாயர்
    வளநி லாவிய வுணாச்செழுஞ் சிறார்களை வாய்புகுத் தகந்தோறும்
    அளவின் மாக்குலந் தத்தம் மழவினை யயிற்றுவ குளகாதி.         96

    [ இளமகார்கள் விளையாடிய தெருத்தொறும் மதநீர் இழிகின்ற களிறு ஈன்ற கன்றுகள் நின்று விளையாட்டு அயரும். உளக்கனிவோடு நற்றாயர்கள் செழுமையான உணவுகளை சிறார்களை ஊட்டும் அகந்தோறும் அளவிலாத பிடிக்குலம் தத்தம் குழவிகளுக்கு இலையுணவினை ஊட்டுவன. குளகம்- இலைதழை உணவு]

    பந்தர் போகிமென் னிழல்செயும் வீதியும் பண்ணவர் பலர்வாழ்க்கை
    நந்து மன்றமும் பொதியிலுஞ் சதுக்கமு நனிமரனிழல் செய்வ
    வந்தி லோங்கிவிண் ணாடிய கொடிநிரை யமன்ற மாளிகை யாரஞ்
    சிந்து வேயினங் கிளைத்துவா னளந்துநின் றாடுவ திரண்மல்கி         97

    [பந்தர்- பந்தல். போகி- வேய்ந்து. பண்ணவர்- தேவர். நந்து- பொருந்து. மன்றம்- ஊரவர் கூடும் பொது இடம். பொதியில் – அம்பலம். கவலை- நாற்சந்தி. அந்தில்- அசை. மரந் மரம். மகரத்திர்கு னகரம் போலி. அமன்ற- நெருங்கின. ஆரம்- முத்து.
    பந்தல் வேய்ந்து மென்னிழல் செய்த வீதியும் தேவர்கள் பலர் வாழ்க்கை பொருந்தும் பொது மன்றமும். பொதியிலும், சதுக்கமும் இப்பொழுது மரங்கள் மிகவும் நிழல் செய்வதாயின. விண்ணளாவிய கொடி நெருங்கிய மாளிகைகள் இப்பொழுது முத்துச் சிந்தும் மூங்கிலினம் செழித்து வளர்ந்து திரண்டு நிறைந்து வான் அளந்து ஆடுவனவாயின.]

    பொன்னும் வெள்ளியு நவமணித் திரள்களும் புயலெனக் கொடுப்போர்கள்
    நன்ன ரங்கைநீ ரொழுக்கிய பெருவெள்ள நிறைந்தநல் லிடமுற்று
    மின்னும் வாளெயிற் றடல்வலி யரியினம் வேட்டஞ் செய்துயிர் சாய்க்குங்
    கொன்னும் வாரணத் தொகுதிநெய்த் தோருராய்க் குளமென நிறை நிற்கும்.        98

    [பொன்னும் வெள்ளீயும் நவமணித் திரள்களும் கைம்மாறு கருதா மாரியெனக் கொடுக்கும் வள்ளல்கள் ஏற்போர் அகங்கையில் ஒழுக்கிய நீராகிய பெருவெள்ளம் நிறைந்த இடமுற்றும் இப்பொழுது, மின்னும் கூரிய எயிறுடைய வலிமை வாய்ந்த சிங்கக் கூட்டம் வேட்டையாடி உயிர்சாய்த்த யானைக் கூட்டத்தின் குருதி ஊர்ந்து குளமென நிறைந்து நிற்கும். அங்கை- அகங்கை, உள்ளங்கை. எயிறு- பல். கொன்னும்- மிகுதியான. வாரணம்- யானை.]

    காட்டி னாடகங் குயிற்றுமப் பொழுதுநின் கழறொழு துடன்கூடி
    ஆட்டம் மேவுவெம் பேய்க்கண நீயமர் அணிநகரென வாங்குக்
    கூட்டம் வாய்ந்துநின் கோயில்காப் புறுவபோற் குழிவிழிச் சுருட்குஞ்சி
    மோட்டி ரும்பெரு மூக்குடை யலகைகண் முழங்கியாட் டயர்கிற்கும்        99

    [சங்காரகாலத்தில் சுடுகாட்டில் நாடகம் ஆடும்போது நின் கழல் தொழுது உன்னுடன் ஆட்டம் செய்யும் பேய்க்கணம்,நீவிரும்புகின்ற அழகிய நகரென அங்கு கூட்டமாக நின்னுடைய கோயிலைக் காப்பனபோல போல குழிந்த விழியும் சுருண்ட தலைமயிரும் பெருவயிரும் பெரிய மூக்கும் உடைய பேய்கள் பேரொலியுடன் கூத்தாடி மகிழும்.]

    குருகு தாக்கலாற் பதைபதைத் துயிர்தபுங் கோளரிச் செழுந்தோலும்
    பெருகு வீரிய மடங்க றாக்குற வுயிர்பிரி நடைமலைத் தோலும்
    பொருது வார்மதக் களிற்றினந் தாக்கிடப் பொன்றுபுன் புலித் தோலு
    மொருவ வெங்கணு நின்னுடைப் போர்வைக ளுணங்கினா லெனமல்கும்        100

    [குருகு- சரபம். நடை மலை- யானை. சரபப் பறவை தாக்கியதால் உயிரிழந்த நரசிங்கத்தின் தோலும், பெருகும் வீரமுடைய சிங்கம் தாக்கியதால் உயிர் பிரிந்த யானையின் தோலும், போரில் மதமொழுகும் யானைக் கூட்டம் தாக்கிட இறந்த புலித்தோலும் எங்கும் நின்னுடைய போர்வைகள் வெயிலில் உலர்த்துவனபோலக் கிடக்கும்.]

    மாந்த ரென்பவ ரொருவரு மின்றிமை யாந்தவந் நகர்நோக்கி
    ஏந்து மார்பகத் தணியென வணிந்தபை யெழிலரா வினமெல்லாம்
    போந்து நின்னுடை வரைப்பெனு முரிமையாற் பொற்பவெங் கணுமல்கிக்
    காந்து பன்மணிப் பஃறலை விரித்தொளிக் கதிர்விளக் கிடுநாளும்.        101

    [மையாந்த – மயங்குதற்கு ஏதுவாகிய) மனிதர் என்பவர் ஒருவரும் இன்றித் தனிமைப்பட்ட அந்த நகர் நோக்கி உன்னுடைய மார்பகத்து அணியென அணிந்த நச்சுப்பை உடைய பாம்பின் இனமெல்லாம் வந்து உன்னுடைய இடம் என்னும் உரிமையால் எங்கும் நிறைந்து, அவற்றின் பலமணிகளும் பலஇடங்களிலும் ஒளி வீசும்]

    மிளிரும் அங்கியுந் தருப்பையுஞ் சமிதையும் வேதியர் தெருக்காட்டுங்
    களிறுங் கானலந் தேர்களும் புரவியுங் காவலர் தெருக்காட்டும்
    வளருந் தேன்களும் புழுகுங் கத்தூரியும் வணிகர்தந் தெருக்காட்டும்
    பிளிருங் கான்கரு மேதியும் பெற்றமும் பின்னவர் தெருக்காட்டும்.        102

    [மிளிரும் அங்கி- பாம்புச்சட்டை. தருப்பை- புல். சமிதை- சிறு கப்பிகள். கானல் அம் தேர்- கானல் நீர்.,பேய்த்தேர். கான் கருமேதி- காட்டெருமை. பிரகாசிக்கும் பாம்புச் சட்டைகளாகிய அங்கியும் தருப்பைப்புல்லும் சமித்துக் குச்சிகளும் வேதியர் தெருக்காட்டும். களிறும் கானல் அம் தேரும் குதிரைகளும் அரசர் தெருக் காட்டும். வளரும் தேன்கூடுகளும் புனுகு(பூனை) கத்தூரியும் (மான் புனுகு ஒருவகைக் காட்டுப்பூனையிடமும் கத்தூரி கத்துரிமானிடமும் பெறுவது) வணிகர்களின் தெருவினைக் காட்டும். காட்டெருமையும் காட்டுப் பசுக்களும் வேளாளர் தெருவினைக் காட்டும்.}

    உடுத்திடாத பல்கலை தினஞ்சூழ் தருங்கற் றவருயர் நாவிற்
    படுத்திடாத பல்கவிக்குலம் பயிற்றுறும் பண்புடைப் பெரியோராற்
    றொடுத்திடாத பல்கடா விடைதொடுத் திடுந்தோகை யன்னவர் நெஞ்சி
    னடுத்தி டாத வன்கற்பு மிக்கணைத் திடுமனைய நீள்வன மன்னோ.        103

    [அத்தகைய நீள் வனத்திடை உடுத்திடாத பல்கலை சூழும்.( உடுத்திடும் கலை, துணி. உடுத்திடாதகலை, கலைமான்.). கற்றவர் உயர் நாவில் படுத்திடாத பல் கவி-(நாவில் படுத்திடும் கவி- செய்யுள்கள். படுத்திடாத பல்கவி- குரங்குக் கூட்டம்) பயிலும். பெரியோரால் தொடுத்திடா கடா விடை (கடா விடை- கேள்வியும் விடையும்) எருமைக்கடாவும் ஏறும். அங்கு மேவும். தோகையர்- மங்கையர். தோகையர் நெஞ்சில் அடுத்திடாத கற்பு முல்லைக்கொடி ஆகியன அவ்வனம் அணைத்திடும்.]

    பாயும் வேங்கைகள் பாய்ந்திடா வேங்கையிற் பயிலும்வார் மதநீரிற்
    றோயும் வேழங்க டோய்ந்திடா வேழமுன் றுவன்று மாருயிர் மாழ்கக்
    காயு நாகங்கள் காய்ந்திடா நாகத்திற் கஞலு மெங்கணுங் சென்று
    மேயுஞ் சேவின மேய்ந்திடாச் சேவுழை மேவுமா லவணெந்தாய்         104

    [பாயும் வேங்கைகள்- புலிகள். பாய்ந்திடா வேங்கை- வேங்கைமரம். பாயும் வேங்கைகளான புலிகள் பாயா வேங்கைகளான மரங்களடியில் வசிக்கும். மதநீரில் தோயும் வேழங்கள்- யானைகள். தோய்ந்திடா வேழம்- மூங்கில். மதநீரில் தோயும் வேழமாகிய யானை, தோயாத வேழமாகிய மூங்கிற்புதரைச் சூழும். உயிர் காயும் நாகம்- நாகப் பாம்புகள். உயிர் காயாநாகம்- சுரபுன்னை. நாகப்பாம்புகள் சுரபுன்னை மரத்திற் சுழலும். மேயும் சேவினம்- காளைகள். மேய்ந்திடாச் சேவினம்- சே என்னும் மரவகை செம்மரம் எனப்படும். மேயும் சேவினம் மேயாத சே இனமாகிய மரங்களினடியில் தங்கும்.]

    திருகு கோட்டவன் கலைமுழக் கல்லது செழுங்கலை முழக்கில்லை
    பெருகு பூப்புறு மாண்குல மல்லது பெருமை யாண்குல மில்லை
    யிருவும் வல்லியாற் சிறைபடு மெகினலா லெழுஞ்சிறை யெகினில்லை
    குருகு மாப்பயிலில் லமல்லா லவட்குடிகள்வா ழிலமில்லை.        105

    [திருகு கோட்ட வன் கலை- முறுக்கிய கொம்பினை உடைய கலைமான். செழுங்கலை- வளமான அறிவுக்கலை. அங்கு கலைமானின் முழக்கம் அல்லது அறிவுக்கலை முழக்கமில்லை. ஆண் என்பது ஒருவகை மரம். பூக்கும் ஆண்களின் கூட்டம் அல்லது பெருமையுடைய ஆண்குலம் இல்லை. எகினம்- புளிய மரம்., அன்னம். கொடிகளால் சுற்றப்பட்டுச் சிறைப்படும் எகின மரமல்லால், அன்னமாகிய எகினப்பறவைகள் இல்லை. பறவைகள் வாழ் இல்லமரமல்லாமல் அங்கு மக்கட்குடிகள் வாழிடமில்லை இல்லம்- தேற்றான் மரம்]

    மணங்கு லாவிய கிலுத்தமா னுடமலான் மற்றைமா னுடமில்லை
    அணங்கு பூங்குர வுயிர்த்தபெண் மகவலா லருமக வினமில்லை
    பிணங்க ளார்பெரு வாய்க்கண மல்லது பெரியவர் கணமில்லை
    இணங்கு வண்டின்வாய்ச் செவ்வழி யல்லதங் கெய்து செவ்வழி யில்லை.       106

    கலுழி வார்மதக் கமழ்புனல் களிற்றின மாட்டிடக் கருப்பூர
    நிலவு சாந்து குங்கும முதல்விரை யெலாநெடு மரம்எடுத் தேந்த
    விலகு சாமரை மானமா வீசவே யினமணித் திறைநல்க
    வொலிகு லாவிய நெடுவன மாயிடை யரசு செய்துறை கிற்கும்.        107

    [கலுழி- கலங்கிய நீர்.கலுழி, காட்டாற்று நீர். கலுழி நீரையொத்த மதநீரால் களிற்றினம் திருமஞ்சனமாட்டிடக், கர்ப்பூரம், சந்தனம், குங்குமம் முதலிய நறுமணப்பொருள்களை உயர்ந்த மரங்கள் எடுத்து வழங்கி நிற்க,. விசாலமான சாமரையை கவரிமான் எடுத்து வீச , மூங்கில் புதர் மணிகளாகிய திறைகளை நல்க நெடுவனம் அவ்விடத்தில் அரசு செய்து நிற்கும் மானமா- கவரிமான். வேய்- மூங்கில்]

    தீய தீர்க்கும் வெண்பூதியுத் தூளனஞ் செய்துவற் கலைசூழ்ந்து
    பாய வொள்ளழல் நாப்பண்வீற் றிருந்துபல் வளமெலாந் துறந்தங்கண்
    மேய பன்மர முகுத்த மென்சருகுகள் விரவுகாற் றினையுண்டு
    தூய காஞ்சியு மருந்தவ முயல்வது சூழ்ந்த கானிடை மாதோ.         108

    [வெண்பூதி- திருநீறு, சாம்பல். உத்தூளனம். திருநீற்றினை நீரினிற் குழையாது உடம்பெலாம் பூசுதல். சந்நியாசிகள், துறவிகள் செய்வது. வற்கலை- மரவுரி. வெண்புழுதியை மேனிமுழுதும் உத்தூளனமாகப் பூசி, மரவுரி உடுத்து செல்வங்களைத் துறந்து, பலமரங்களும் உகுத்த சருகுகள், மற்றும் காற்றினை உணவாக உண்டு தூய காஞ்சியும் அருந்தவம் அக்கானிடைச் செய்யும்.]

    இன்ன வாயபல் பெருந்துய ருற்றுளே னிறைவநீ யறியாய்போன்
    மன்னு கிற்றியான் களைகணில் லவரென மாழ்குவ தழகேயோ
    கன்னி பாகவென் றிரந்துநின் றியம்பிய காஞ்சிமா நகர்த்தெய்வந்தன்னை
    நோக்கினன் குறுநகை முகிழ்த்தனன் தம்பிரா னிதுசாற்றும்        109

    [ இத்தகைய பலபெரிய துயரங்களை அடைந்துள்ளேன். இறைவனே! நீ இதனைச் சற்றும் அறியாய்போல் இருக்கின்றாய். யான் பற்றுக்கோடு ஒன்றும் இல்லாதவரைப் போல மருகுவது உனக்கு அழகோ? கன்னி பாகனே! என்று இரந்து கெஞ்சிய காஞ்சிமாநர்க் காவல் தெய்வத்தை நோக்கி இறைவன் குறுநகை முகிழ்த்தனன். பின் இவ்வாறு சொல்வான்]

    கொண்ட வெந்துய ரொழியினி வனம்படு குலநகர்த் திருக்காஞ்சி.
    பண்டு போல்வளம் படுத்தநம் மாணையிற் பனிமலர்த் தொடைமோலி
    யண்டர் கோனவண் வருவனீ செல்கென வருள்விடை கொடுத்தேவித்
    திண்டிறற் படைவ லாரியைத் திருவுளஞ் செய்தனன் செயலோடும்        110

    [ நீ கொண்ட வெந்துயரை ஒழிநீ. வனமாக மாறிய காஞ்சித் திருநகரை முன்புபோல் வளநகராகச் செய்ய நம்முடைய ஆணையில் தேவேந்திரன் வருவன். நீ செல்க எனவிடையருளி, வச்சிரப்படையாளியாகிய வலாரியை மனத்தில் நினைத்தான். நினைத்தலும். வலாரி- இந்திரன்.]

    கலிவிருத்தம்
    மங்கையர் சாமரை வீச மணிக்கேழ்
    பொங்கிய மெல்லணை மேற்பொலி புத்தேள்
    திங்கணி லாவிய செஞ்சடை யோன்முன்
    அங்கை தலைக்கண் முகிழ்த்தடை வுற்றான்.        111

    [அரம்பையர் கவரி வீச மணியொளி வீசும் மெல்லணை மேல் வீற்றிருக்கும் தேவன் இந்திரன் சந்திரசேகரனாகிய இறைவன் முன் அழகிய கரங்களைச் சிரமேல் கூப்பி அடைந்தான்.]

    ஐந்தினு மார மெட்டினு வணங்கிச்
    சிந்தையி னன்பு திளைப்ப வெழுந்து
    முந்துற நிற்றலு முக்கணன் நோக்கி
    மைந்த புவிக்கண் வயங்கு மனுப்பால்.        112

    [ அட்டாங்க பஞ்சாங்க எனும் முறைப்படி வணங்கினான். சிந்தையில் அன்பு திளைப்ப எழுந்து இறைவன் முன்னுற நிற்றலும் முக்கண்ணுடை இறைவன் இந்திரனை நோக்கி, “ மைந்தனே! நீ பூமியின்மேல் விளங்கு மக்கள் இனத்தில்.
    இந்திரனை இறைவன் அன்பால் மைந்த என்று அழைத்தான் மனு- மக்கட் குலம்]

    உதித்து வளர்ந்துயர் காஞ்சியை முன்போற்
    புதிக்கி வழாவகை போற்றென லோடு
    மதிக்க ணயர்ந்து பின்மாநகர் மேலாக்
    கதிப்பது தேர்ந்து கவற்சியி னீங்கி        113

    [பிறந்து வளர்ந்து உயர் காஞ்சி மாநகரை முன்போல் புதுக்கி, அது நீங்கா வகை போற்றுவாயாக எனலும் மண்ணில் மேற் பிறக்க வேண்டுமே என முதலிற் கலங்கிப் பின், காஞ்சி மாநகரை மேல்நிலைக்குக் கொண்டு வருவது குறித்துக் கவலையை விட்டு நீங்கி. கதிப்ப- உயர்த்த. கவற்சி- கவலை.]

    உண்ணிறை காத லுளத்தினை யீர்ப்ப
    வண்ணலை யேத்தி யருள்விடை பெற்று
    மண்ணர சாள்மனு மங்கை வயிற்றில்
    விண்ணர சாள்பவன் மேவின னன்றே.        114

    [ உள்ளத்தில் நிறைந்த பத்தி உள்ளத்தை ஈர்ப்ப சிவபரம்பொருளை ஏத்தி, அருள்விடை பெற்று, மண்ணுலகத்தை ஆள்கிகின்ற அரசகுல மங்கை வயிற்றில் விண்ணரசாள்பவன் பொருந்தினான்.]

    அறுசீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்
    பொருந்துசீர்க் கருப்பம்நீடிப் பொலிதலும் புனவேய் வென்ற
    அருந்திறற் றோளுமாலி னழகிய வயிறுந் தம்முட்
    பெருந்தனிப் பருப்புஞ் சாய்ந்த பெற்றியு மாற்றிக் கொண்டாங்
    கிருந்தன மெலிந்து வீங்கி யிளமயிற் சாய லாட்கே.        115

    [நீடி- தங்கி. பருப்பு- பருத்தல். சாய்ந்த பெற்றி- மெலிந்த நிலைமை. மாற்றிக் கொள்ளல்- பரிவர்த்தனை செய்து கொள்ளல்
    அழகிய கர்ப்பம் தங்கவே, பொலிவில் மூங்கிலை வென்ற தோளும் ஆலிலையின் அழகிய வயிறும் தம்முள் பருமையையும் மெலிவையும் பரிமாறிக் கொண்டாற்போல பருத்த தோள் மெலிய மெலிந்த வயிறு பருத்தது, மயிலன்ன சாயல் உடையவளுக்கு.]

    செழுங்கலி கால னென்னுஞ் செங்கதிர் மண்மேற் றீய
    அழுங்க வந்துயிர்க்குங் கால மடுத்தலா லினைய கஞ்சக்
    கொழுங்கதிர் முகையும் விள்ளுமெனக் குழீஇச் சுரும்பர் பொய்த்தாங்
    கெழுங்குடக் கொங்கை யுச்சி கறுத்தெழில் படைத்த மாதோ.        116

    [கலிகாலன் என்னுன் சூரியன் மண்மேல் தீயனவெல்லாம் ஒழிய வந்து பிறக்கும் காலம் வந்துற்றதால் தாமரை முகையும் விரியும் எனக் குழுமிக் கருவண்டுகள் மொய்த்ததைப்போல் குடம்போலும் கொங்கை உச்சி(கண்) கறுத்து அழகு படைத்தது.
    கலிகாலன் -கரிகாலன். அழுங்க- அழிய. உயிர்க்கும்- பிறக்கும். இனைய-இத்தகைய, ஒத்த. கஞ்சம்- தாமரை. ]

    கறங்குவெண் டிரைசூழ் வேலைக் கடல்வளை மண்ணை யெல்லாம்
    அறங்கொள்நூன் முறையிற் றாங்க வரும்பெறற் கருவிற் றானே
    பிறங்குதோள் பழகு மாறு பெய்வபோற் புகையே றுண்ட
    நிறங்கிளர் மண்ணை யுண்ணும் வயாநிறைந் திட்ட தன்றே.         117

    [ ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட மண்ணுலகையெல்லாம் செங்கோல் முறைமையினால் தாங்க அரும்பெறல் கருவில் அவனுடைய தோள் மண்ணோடு பழகப் பெய்வது போல் ஒளிமிகு மண்ணை உண்ணும் வயாநோய் பிறந்தது. வயா- மசக்கை. கருவுற்ற மகளிர் மசக்கையின்போது மண் உண்பர் என்பர். வயா- கருவுற்ற மகளிர்க்கு நுகரப்படும்பொருள்மேல் செல்லும் வேட்கை.]

    கலிவிருத்தம்
    சீர்த்தசூல் பெண்மக ளேகொல் தீதுதீர்
    ஏர்த்தவாண் மகன்கொலென் றீண்டும் ஆர்வத்தாற்
    பார்த்திட வுள்ளுறப் படர்கின் றாலெனக்
    கூர்த்தவேற் குலவிழி குழிந்த வென்பவே.         118

    [பெருமையுடைய கருவில் இருப்பது பெண்குழந்தையோ அல்லது தீமையை ஒழிக்கும் பெருமையுடைய ஆண்மகன்கொலோ என்று அறியத் தோன்றிய ஆசையால் பார்த்திட உள் நோக்கிச் செல்வதைபோல் கூர்த்த வேல்போன்ற விழிகள் குழைந்தன]

    தடங்கொளும் வயிற்றினிற் றவிர்ந்த கான்முளை
    யிடங்கொள வளர்தரு மியல்பு போன்மணி
    வடங்கிளர் முலைகளின் வாசத் தீம்பயம்
    அடங்கருங் கருவிருந் தரும்பி மிக்கதே.        119

    [பரவிய வயிற்றினில் தங்கிய பிள்ளை வளரும் இயல்புபோல் கச்சணிந்த முலைகளில் வாசமிகு தீம்பாலும் கருவிருந்து அரும்பி மிக்கது. தடம்- பரப்பு. தவிர்ந்த- தங்கிய. கான்முளை- குழந்தை. பயம்- பால். ]

    அணியினும் அணியரு மகவொன் றேயெனத்
    திணிநிலந் தெளிவுறத் தெரிப்ப தேய்ப்பவுள்
    தணிவற வளர்மகத் தளர்வி னாலணி
    பிணிமலர் களுமொரூஉம் பெற்றி வாய்ந்ததே.        120

    [அணிகளில் எல்லாம் சிறந்த அணி மகவு ஒன்றே என மண்திணிந்த உலகம் தெளிவாக அறியத் தெரிவிப்பது போல, வயிற்றினுள் மகவு வளர்கின்ற தளர்வினால் அணிகளும் மலர்களும் நீங்கும் தன்மை பெற்றன.]

    இன்னணங் கருக்குறி யிலங்கத் தீதுதீர்
    நன்னர் நாடலைவர நவையில் கோள்களுந்
    துன்னிய வோரையுந் துலங்கு யோகமு
    மென்னவு நலம்பெற வியைந்து நோக்குற.         121

    [இவ்வாறு அரசியின் கருக் குறி விளங்க, நல்ல நாளும் குற்றமில்லாத கோள்களும் ஓரையும் யோகமும் இவைபோன்றவும் எத்தன்மையவும் நல்லனவே அளிக்குமாறு நோக்க,]

            மறப்பெருந் தீயன மாழ்கிச் சாம்புற
    அறப்பெருந் தூயன அலங்கி மேலிடத்
    திறப்பெரும் பகையெலாந் தெருமந் தாழ்தர
    உறப்பருங் கிளையெலா முவகை பொங்கிட.         122

    [கொடுமையே செய்யும் தீயன கெட்டு ஒடுங்கவும், மிகவும் தூயன ஒளிவீசி மேற்படவும் வலிமையுடைய பகையெலாம் சுழன்று தாழ்ந்து போகவும், திரண்ட சுற்றமெலாமுவகை பொங்கிடவும்.
    மாழ்கிகெட்டு. சாம்ப- ஒடுங்க. அலங்கிக- ஒளிவீசி. தெருமந்து- சுழன்று. உறப்பு- செறிந்த, திரண்ட, மிகுதியைக் குறித்தது]

    சிறைபடும் அரசர்தந் திகைப்பு நீங்குறக்
    கறைகொடா துலகஞ்சில் வருடங் காமுற
    மறையவர் கவிமுதன் மாந்தர் வான்பொருள்
    நிறைய நொண்டனர் கொடுநிரப்பு நீவுற.        123

    [ சிறைப்பட்ட அரசர்களுடைய கலக்கம் நீங்குறவும், திறைகொடாது உலகம் சிலவருடம் மகிழ, மறையவர் கவிஞர் முதல் மக்கள் பலரும் மிக்க செல்வம் நிறைய முகந்து கொண்டு வறுமை தீரவும்.
    திகைப்பு- கலக்கம். கறை- திறை. காமுற- மகிழ. வான்பொருள்- சிறந்தபொருள். நொண்டு- முகந்து. நிரப்பு- வறுமை.]

    பிறந்தன னிறைமகன் பிழைத்த வேந்தர்மேன்
    மறந்திகழ் வேலுடை மன்னர் மன்னெனச்
    சிறந்தநற் றாதையுஞ் செய்வ செய்தனன்
    அறந்திகழ் விழாதெருத் தோறு மார்ந்தவே.         124

    [அரசன் பிறந்தனன். தவறிய அரசர்கள் மேல் வெற்றிகொளும் வேலுடைய மன்னர் மன்னனும் நெய்யணிவிழா, சாதக கன்மாதி முதலிய செய்யவேண்டிய கன்மங்கள் எல்லாவற்றையும் முறையாகச் செய்தனன். தெருத்தோறும் அரசகுமாரன் பிறந்த விழா நிறைந்தது.]
    கொச்சகக்கலிப்பா
    திருந்துமவ யவந்திருத்திச் சிலதியர்வாய் புகுத்துவன
    அருத்தியொடும் வாய்புகுத்தி யரிசனத்தண் விழுதாதி
    யுருத்ததையத் திமிர்ந்தாட்டி யொளிர்நீற்றுக் காப்பணியக்
    குருத்ததையு மிளமதியின் கொழுந்துபோல் வளர்கின்றான்.        125

    [திருந்தும் அவயவம் திருத்தி- தட்டியும் உருவியும் பிடித்தும் அவயவங்களை வடிவு பெறச் செய்தல். சிலதியர்- சேடியர். அருத்தியொடு- அன்புடன். அரிசனத் தண் விழுது- மஞ்சள் கலந்த வெண்ணெய். திமிர்ந்து- அப்பி.
    அவயவங்களைத் திருத்திச் சேடியர் அன்புடன் வாயில் ஊட்டிவிடத்தக்கவற்றைப் புகுத்தியும் அரிசன விழுதினை உடல் முழுதும் அப்பி நீராட்டியும் திருநீற்றுக் காப்பணிந்தும் பேண, ஒலியுடைய இளமதியின் கொழுந்துபோல அரசகுமாரன் வளர்கின்றான்.,

    கொழுங்கனக விசும்பாளக் கொற்றவவம் மெனுமமரர்க்
    கழுங்குமணிப் புனற்காஞ்சி யணிதிருத்தி யல்லாலங்
    கெழுங்கருத்தின் றெனவவரை யெதிர்நோக்கி மறுப்பதுபோற்
    செழுங்கமல முகநிமிர்த்துச் செங்கீரை யாடினான்.         126

    [பொன்னுலகாகிய தேவலோகத்தை ஆள ‘வம்’ என அழைக்கும் அமரர்க்கு வளமிக்க காஞ்சி மாநகர் பண்டை அழகு பெறத் திருத்துவதல்லால் பொன்னுலகுக்கு எழுவது நம் கருத்தன்று எனச் செந்தாமரை முகத்தை மேல் நிமிர்த்துச் செங்கீரை ஆடினான். குழந்தை முகத்தை இருபுறமும் அசைத்தாடுதல் செங்கீரையாடுதல் எனப்படும். ‘ஒருதாளுந்தி எழுந்திருகையும் ஒருங்கு பதித்து நிமிர்ந்து திருமுகம் அசைந்து அசைந்து ஆடுவது’செங்கீரை]

    எம்முடைய வலைப்பட்டோ ரிவ்வாறே யலைவரென
    மம்மருலகினைத் தெளிக்கு மாண்புபோன் மழக்கூந்தற்
    கொம்மைமுலை மடவார்கள் கொழுங்கனக வடமூழ்கிச்
    செம்மைமணித் தொட்டிலினிற் றாலாட்டக் களிசிறந்தான்.        127

    [அங்கு அலைவர் இங்கும் இவ்வாறே உலகினோரைத் எங்களுடைய என களி சங்கிலி சிக்குண்டோர் சிறந்தான். சிவந்த தாலாட்டக் தெளிவிப்பது பூட்டப்பட்ட பொன் போன்று மகளிர் மணித்தொட்டிலில் மயக்கமுடைய வலையில்]
    உயங்குநிரப் பினர்தமக்கும் உயர்ந்தவர்க்குங் கவிகளுக்கும்
    வயங்கிளருங் கொடைகொடுப்ப மெலியாமை வலிபடைக்கும்
    பயங்கதுவப் புடைத்தாற்றல் பயிற்றுவபோ லொளிதுளும்பித்
    தயங்குமிரு கரமலராற் சப்பாணி கொட்டினான்.         128

    [உயங்கு நிரப்பு- வாடுவதற்குக் காரணமான வறுமை. வயம்- வலிமை பயம் – பயன். கதுவ- பொருந்த. வாடுவதற்குக் காரணமான வறுமை உடையவருக்கும் கல்வி கலைஞானத்தில் உயர்ந்தவர்களுக்கும் கவிகளுக்கும் வலிமை தரும் செல்வமாகிய கொடையைக் கொடுப்பதற்குரிய வலிமை படைக்கும் பயன் பொருந்தப் புடைத்து ஆற்றல் பயிலுவது போல ஒளிதுளும்பும் இருகைமலரால் சப்பாணி கொட்டினான். பொருளுடைமை வலியுடைமை ஆதலால் வயங்கிளரும் கொடை என்றார். கொடுப்பச் சலியாமல் கரம் வலிமை பெறும் பொருட்டுப் புடைத்து ஆற்றல் பயிற்றினான்]

    எல்லுமிழுந் தனது முகமெனுஞ் சோம நாயகனு
    மெல்லிய லார்வாய்க் குமுத விளங்கிழைப் பூட்கிழத்தியரும்
    புல்லி யிறுமாப் பனபோற்ற முலைக்கிடைந் தொசியும்
    வல்லி யிடைமாதர் வாய்முத் தங்கொள வளித்தான்         129

    [எல்- ஒளி. சோம நாயகன் - சந்திரன். வாய்க் குமுதன்= வாயாகிய செவ்வல்லி மலரிதழ். பூட்கிழத்தியர்- பூண் அணிந்த மகளிர். புல்லி- தழுவி. இறுமாப்பு- மகிழ்ச்சி.மகளிர் குழந்தையை வாய் முத்தமிட்டனர். அது எப்படி யிருந்ததெனில் சந்திரனாகிய நாயகனும் அவன் மனைவியாகிய மகளிரின் வாய் இதழாகிய செவ்வல்லி இதழும் புல்லி இறுமாப்பனபோல் இருந்தது. இது முத்தப்பருவம். ]

    பெருநிலத்தி லெவரெதனைப் பெட்பினுமற் றஃதுதவுந்
    தருநிகர்த்த தனதியல்பைத் தண்டாது தெரிப்பதுபோல்
    வருகவரு கெனவிளிக்கு மங்கைய ரானன மலர்த்தித்
    திருவளர்கிண் கிணியொலிப்பத் திரிந்துவிளை யாடினான்        130

    [இப்பரந்த வுலகத்தில் எவர் எதை விரும்பினாலும் அதனை அளித்து உதவும் கற்பகதரு நிகர்த்த தனது இயல்பைக் குறையாமல் தெரிவிப்பதுபோல ‘வருகவருக’ என அழைக்கும் மங்கையர் முகத்தை மகிழ்ச்சியால் மலர்த்திக் கிண்கிணியொலிப்பத் திரிந்து விளையாடினான். இதுவருகைப்பருவம்.]

    பைங்கிரண முகுத்துலகிற் பயிர்வளர்ப்போய் வருகவிவன்
    பொங்கொளியா னினக்குயர்ந்தா னுனக்குமொளி புணர்த்தருளுஞ்
    செங்கதிரோன் மரபுடையான் றெவ்வடுகோக் காண்டியென
    மங்கையரொக் கலையிருவி மதிவிளிப்ப மகிழ்கூர்ந்தான்.        131

    [பசிய ஒளிக்கதிர் உகுத்து உலகில் பயிரினை வளர்ப்போய்! வருக! இவன் பொங்கும் ஒளியால் உன்னைக் காட்டிலும் உயர்ந்தவன்; உனக்கும் ஒளியைக் கூட்டும் சூரிய மரபினன். பகையை அடும் அரசன் என்பதை அறிவாயாக என மங்கையர் இடையில் இருத்திச் அம்புலியை அழைப்ப மகிழ்ச்சி மிகுந்தான். இது அம்புலிப் பருவம். இப்பாடலில் சாம தான பேத தண்டம் ஆகிய நான்கு உத்திகளும் உள்ளன.]

    அற்றமில்யான் அரசாள்போ தனைவரும் பொன்னவிர்மணிசூழ்
    பொற்றமனை வயினன்றிப் புணரும்விளை யாட்டானு
    மற்றைமனை வயினிருத்தல் வழுவென்று சிதைப்பதுபோற்
    சிற்றிலெலாஞ் சிறுமடவார் சினந்தலறச் சிதைத்திட்டான்.         132

    [அற்றம்- கேடு. இரகசியம்., வஞ்சனை. பொற்றமனை- பொன்னாலான வீடு. வழு- பிழை. வஞ்சனையற்ற நான் அரசாளும்போது அனைவரும் பொன் நிகர் மாளிகையில் வசித்தலல்லது விளையாட்டிற்குங் கூட பிற மனையில் இருத்தல் குற்றம் என்று சிதைப்பதுபோல் சிற்றிலெல்லாம் சிறுமியர் கோபித்துக் கூக்குரலெழுப்பச் சிதைத்திட்டான். இது சிற்றிற்பருவம்]

    அலகில்புகழ்த் தன்புயத்தை யணைசெவ்வி பார்த்திருநீர்
    நிலவரைப்பின் வந்தொருசார் நிற்குமொரு கலைமகளை
    மலர்மகளைச் சயமகளை வருகவென வறைவதுபோற்
    றிலகமென வுயர்சிறுவன் சிறுபறைகண் முழக்கினான்.         133

    [ அளவிடமுடியாத புகழை உடைய தன்னுடைய தோளை அணைவதற்குக் கடலால் சூழ்ப்பட்ட பெரிய நிலவரைப்பின் ஒரு பக்கத்திலே வந்து நிற்கும் கலைமகள், மலர்மகள் ஜெயமகள் மூவரையும் வருக என அழைப்பதுபோல உயர் சிறுவன் சிறுபறையை முழக்கினான்.அரசனுக்குக் கல்வி, செல்வம், வெற்றி ஆகியன மனைவியர் என்று கூறுவது மரபு. ]

    பருத்தமணிப் பொலஞ்சகட்டுப் பாழியந்தேர் பற்பலவுங்
    கருத்திசையுந் திசையுருவக் கடவியம ருழந்துபகை
    வருத்துவதற் கிதுவுமொரு வலியென்ன மறுகுதொறுந்
    திருத்தகுபொற் கூவிரத்த சிறுமணித்தே ருருட்டினான்.        134

    [பருத்த- பெரிய. பொலம்- பொன். சகடு- சக்கரம். பாழி- வலிமை. அந்தேர்- அழகிய தேர். கடவி- செலுத்தி. மறுகு- தெரு. கூவிரத்தம்- கொடிஞ்சி, தேரின் ஒரு உறுப்பு.
    பெரிய மணிகளையும் சக்கரத்தையும் உடைய பொன்னாலான பல்வகையான தேர்களை விரும்பும் திசைகள் அனைத்திலும் செலுத்திப் பகைவர்களை வருத்துவதற்கு இதுவும் ஒரு பயிற்சி, வலிமை என்னும் படியாக அழகிய பொன்னாலான கொடிஞ்சியும் சிறுமணியும் உடைய சிறுதேரினை உருட்டினான். இது சிறுதேர்ப்பருவம்]

    இவ்வண்ணம் விளையாடுமிளம் பருவத்தியல் பொழிந்த
    வவ்வெல்லை யுலகமெலா மதிசயிப்ப விழாவெடுத்துச்
    செவ்வண்ணக் குருமுன்னர்ச் செழுங்கலைகள் பயில்விப்பார்
    பெளவங்கொண் முரசதிரப் பள்ளியினில் வைத்தார்கள்.         135

    [இவ்வாறு விளையாடும் இளம்பருவத்து இயல்பொழிந்த அந்த கால எல்லையில் உலகம் எல்லாம் அதிசயிப்ப விழாவெடுத்துச் செம்மையான குருவின் முன்னிலையில் கலைகள் பயிலப் பள்ளியில்வைத்தார்கள்.]

    அடல்வலித்திண் மழுப்படையா னயன்றலையொன் றுகிரினிற்கொய்
    திடறியநாண் முதற்றனக்கோ ரிடமிறந்த தெனும்பரிவு
    கடலனைய படைத்தானைக் கலிகாலனா வகத்தைத்
    தடமனையாக் கொண்டொழிந்தா டவளமலர்ச் சேக்கையினாள்        136

    [இறைவனின் ஆணையால் வயிரவர் அயன் தலை ஐந்தில் ஒன்றைக் கை நகத்தினால் கொய்து தள்ளீய நாள் முதல் தனக்கு என ஓரிடம் இல்லை எனும் கவலையை, கடல்போற் பரந்த இரக்கம் படைத்தவனாகிய கலிகாலனின் நாவகத்தைத் தன்னிடமாகக் கொண்டு ஒழிந்தாள், தவளமலர்ச் சேக்கையினாள்- வெண்டாமரைத் தவிசினாளாகிய கலைமகள்.

    நிழலுயிர்க்கு மணிக்கச்சு நிரம்பவிடைத் தலம்வீக்கிக்
    கழலுயிர்க்கு நோன்றாளான் கதிர்ப்பலகை நாந்தகம்வெவ்.
    வழலுயிர்க்கும் வேலாதிப்படைத் தொழிலு மடையார்நெஞ்
    சுழலுயிர்க்குங் களிறாதியூர் தொழிலுந் தொடங்கினான்.        137

    [நிழல்- ஒளி. மணிக்கச்சு- இடையில் கட்டும் பட்டி. கழல் உயிர்க்கும்- கழல் ஒலிக்கும். நோன்றாள்- வலிமை உடைய தோள். கதிர்ப்பலகை- கேடயம். நாந்தகம்- வாள். அடையார்- பகைவர். கலிகாலன் போர்க்கலை கற்றலைக் கூறியது. ஒளிஉயிர்க்கும் மணிக்கச்சினை இடையில் கட்டி காலில் கழல் ஒலிக்கும் வளிய தாளான், கேடயம், வாள் மற்றும் கொதிக்கும் கூரிய வேல்முதலிய போர்க்கலன்களின் படைத் தொழிலும் பகைவர்களின் நெஞ்சு அச்சத்தால் சுழலும் வகை களிறு முதலியனவற்றை ஊரும் தொழிலும் கற்கத் தொடங்கினான்.]

    கயிற்கழலா னெவர்யாது கண்ணினுந்தா ழாதளிக்குஞ்
    செயற்புதுமை தனைநோக்கிச் செயிர்த்துடலு மமர்க்களத்தி
    லுயிர்ப்பலிவேட் டொருமலையு மொவ்வாத புயமலையிற்
    சயப்பெருஞ்சூர் மடக்கொடியுந் தறுகணொடும் வீற்றிருந்தாள்.        138

    [கயில்- ஆபரணத்தின் கடைப் புணர்வு,clasp pf necklace. கண்ணினும்- நினைந்தாலும். தாழாது- தாமதியாது. செயிர்த்து- சினந்து. உடலும்- போரிடும். சயப் பெருஞ்சூர் மடக்கொடி-அச்சத்தைத்தரும் வெற்றித்திரு, கொற்றவை, ஜெயலட்சுமி. வீரக்கழலணிந்த கலிகாலன், எவர் எதை விரும்பினாலும் காலம் தாழ்க்காது அளிக்கும் செய்ல் வீரத்தை நோக்கி, கோபித்துச் சண்டை செயும் போர்க்களத்தில் உயிர்ப்பலி விரும்பி, உலகில் எந்தமலையும் ஒவ்வாத அவனுடைய புயமலையில் பகைவருக்கு அச்சத்தைவிளைக்கும் வெற்றித் திருமகள் வீரத்துடன் வீற்றிருந்தாள்]
    உரியதிருப் பருவத்தினுப நயனச் சடங்கியற்றி
    யரிலறுக்கு மறைபயிலக் குசனாப நாச்சிரமத்
    தெரிதவழு மிலங்கிலைவே லிருந்தாதை யுய்ப்பவவண்
    வரிகழற்காற் கலிகாலன் மறையோதி வளர்நாளில்        139

    [உரிய பருவத்தில் உபநயனச் சங்கு செய்து குற்றம் அறுக்கும் மறை பயிலக் குசநாபன் ஆச்சிரமத்திது தந்தை செலுத்த அங்கு கலிகாலன் வேதமோதி வளரும் நாளில்.]

    விண்ணுலகந் தடந்தோளின் மேதகவைத் தருள்வேந்தன்
    மண்ணுலகி னுயிர்த்தமையான் மறுவேந்தா யவ்வுலகி
    னண்ணியர சாளுதற்கே நடப்பான்போ லுலகமெலாங்
    கண்ணிறைநீர் சொரியவுடல் கழித்துமனு விண்புகுந்தான்.         140

    [விண்ணுலகத்தைத் தன் வலிய தோளில் வைத்துத் தாங்கியருளும் வேந்தன் மண்ணுலகில் கலிகாலனாகப் பிறந்தமையால் மாற்று வேந்தாய் அவ்வுலகில் சென்று அரசாளுதற்குச் செல்லுவானைப் போல உலகமெலாம் கண் நிறைந்த நீர் சொரிய உடலினைக் கழித்து அரசன் விண்ணுலகம் புகுந்தான்]

    நம்முடைய மகற்றழுவு நகைமணிப்பூ ணயிராணி
    விம்முமுலைப் புணர்வதுநும் மேதகைக்கொண் ணாதென்னக்
    கொம்மெனப்போ மிறைவனைப்பின் குறுகிவிலக் குறுவாள்போ
    லம்மலர்ப்பூங் குழன்மாது மழன்மூழ்கி யுடன்போந்தாள்.         141

    [நம்முடைய மகனைத் தழுவும் நகையணி மார்பு, இந்திராணியின் விம்மும் முலையைப் புணர்வது உம்முடைய பெருமைக்கு ஒவ்வாது என விரைந்து சென்று அரசனை விலக்குபவள் போல அரசியும் நெருப்பில் மூழ்கி உடன்போந்தாள் இந்திர பதவி வகிப்பவருக்கு இந்திராணிஉரியள். இந்திரன் கரிகாலனாய்த் தோன்றியமையினால் மனு என்னும் அரசனுக்கு இந்திராணி மருமகள் ஆயினாள். மருமகளாம் அவளைத் தழுவுதல் ஆகாது என விலக்குவாள் போல அரசியும் உடன் சென்றாள்.]

    தந்தைதா யிருவர்களுந் தாரணியின் வாழ்வொழிந்து
    கந்தரஞ்சேர் விண்புகுதத் துவன்றியெழுந் தரியலர்கள்
    சிந்துமணிப் புனர்பொன்னிச் சோணாடு தெவ்வுதலு
    மந்திரிக ளரசின்றி மனந்தளரு மவ்வேலை        142

    [கந்தரம்- உச்சி. துவன்றி – நிறைந்து. தரியலர்- பகைவர்கள். தெவ்வுதல்- கைப்பற்றிக் கொள்ளுதல்.
    தந்தை தாய் இருவர்களும் உலகவாழ்வினை யொழித்து விண்ணுலகம் புக பகைவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, காவிரிபாய் சோழநாட்டைக் கைப்பற்றிக் கொள்ள, அமைச்சர்கள் தம்மைத் தலைமை ஏற்று வழிநடத்தும் அரசரின்றி மனந்தளரும் அச்சமயத்தில்]

    கவலாதிர் மனுப்பயந்த கான்முளைதா னுளன்கண்டீர்
    அவமாறுங் களிற்றரசைத் தளையவிழ்த்து விடுமினஃ
    துவராழிப் புவிவியப்பக் கொணருமென வுயர்விசும்பிற்
    சிவவாய்மை மொழியொன்று திகழ்ந்தெழுந் ததுகேளா.         143

    [கவலாதிர்- கவலை கொள்ளாதிர். மனுப்பயந்த கான்முளை- மனு என்னும் அரசன் பெற்ற மகன். அவம் மாறும். கேட்டினைப் போக்கும். களிற்று அரசு- பட்டத்து யானை. கவலை கொள்ளாதிர்! மனு என்னும் அரசன் பெற்ற மகன் உளன். கேட்டினை நீக்கும். பட்டத்து யானையை தளை நீக்கி விடுமின் அது கடலால் சூழ்ப்பட்ட இவ்வுலகம் வியப்ப அவனைக் கண்டு கொணரும் எனச் சிவவாய்மை மொழி ஒன்று அசரீரியாகத் திகழ்ந்தது அதனைக் கேட்டு]

    விம்மாந்து பகைபுலம்ப வேரோடு மிரித்துலகிற்
    றம்மாவித் துணைவேந்தன் சக்கரஞ்சென் றிடுநாளிற்
    செம்மாந்து களிதூங்கிச் சிவபெருமா னருள்வழுத்தி
    யம்மார்ந்த கடக்களிற்றை யலங்கரித்து விடுத்தார்கள்.         144

    [ விம்மாந்து பகை புலம்ப- பகைவர்கள் பொருமி அழ. இரித்து- அழித்து. தம்- ஆவித் துணை வேந்தந் தம்முடைய உயிர்த் துணையாகிய வேந்தன். சக்கரம்- ஆணைச் சக்கரம். பகைவர்கல் பொருமி அழ அவர்களை வேருடன் அழித்து உலகில் உயிர்த்துணையாகிய மனுவேந்தனின் ஆணைச் சக்கரம் நிலவிய நாளில் செம்மாந்து களி தூங்கியதைப் போல மகிழ்ந்து சிவபெருமானின் அருளை வழுத்தி அழகு நிறைந்த கடகளிற்றை அலங்கரித்து விடுத்தார்கள்.]

    மணியிருப்பாற் கலகலப்ப மதசலங்கள் சலசலப்ப
    அணிபலவுங் கதிர்கதிர்ப்ப அடையலர்கள் விதிர்விதிர்ப்பத்
    திணியுலகம் விதுவிதுப்பத் தேவர்களுங் குதுகுதுப்பப்
    பணிலமுத லியமியம்பப் படர்ந்ததுவெங் கதக்களிறு.         145

    [வெங்கதம்- கொடிய சினம். மணி இருப்பு- இரும்புச் சங்கிலியில் கட்டபட்ட மணி. மதசலம்- மதநீர். அணி-நெற்றியோடை முதலிய அணிகளன்கள். அடையலர்கள் விதிர்விதிர்ப்ப- பகைவர்கள் நடுநடுங்க. விதுவிதுப்ப- ஆச்சரியப்பட. குதுகுதுப்ப- குதூகலம் கொள்ள. பணிலம்- சங்கு. இயம்- மங்கலவாத்தியங்கள். இயம்ப- ஒலிக்க. படர்தது- சென்றது]

    வீடணுகும் பெருங்காதன் மீக்கொண்ட வினையொப்புக்
    கூடினவர் குருத்தேடிக் கொட்புறல்போற் றிசைதிசைபோய்
    நாடுமவர் குருப்போல நடிப்பவரை விலக்குதல்போ
    லீடிலெதிர்ப் படுமரசர் யாவரையும் விடுத்தேகும்         146

    [வீடு பேற்றினை அடையப் பெருவேட்கை மேற்கொண்ட இருவினை ஒப்பினை அடைந்தவர் நற்குருவை நாடித் தேடுச்சுழலுவது போலவும் அவ்வாறு நாடுமவர் குருவினைப்போல நடிப்பவரை விலக்குதல் போலவும் அப்பட்டத்து யானை எதிர்ப்படும் அரசர்கள் யாவரையும் விடுத்துச் செல்லும். இருவினையொப்பு- இன்பம் துன்பம் இரண்டின்மீதும் பற்றோ வெறுப்போ இல்லாத மனநிலை..கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா மனநிலை.]

    விரைவிலிலைப் புரைகிளைத்து விறல்வேழங் குசநாபன்
    புரையறுசீ ராச்சிரமம் புகுந்தாங்கு வீற்றிருந்த
    அரையர்குலத் திருமகனை யண்முதலு முடன்பயிலுங்
    கரையுமறை முனிவர்சிறார் கையகன்றஞ் சினரிரிந்தார்.        147

    [வேகமாக அப்பட்டத்துயானை குசநாபனின் குற்றமிலாப் பெருமையுடைய ஆச்சிரம புகுந்து அங்கு வீற்றிருந்த அரசர்குலத் திருமகனை நெருங்கியவுடன், உடன் பயிலும் அந்தணச் சிறார்கள் அச்சமுடன் சிதறி ஓடினர்]

    வெண்ணிறக்குஞ் சரங்கடவுங் வீறமையங் குசந்தனது
    தண்மலர்க்கைத் தலையொன்றித் தயங்குதல்போற் கிடந்தொளிரு
    மொண்ணிறவங் குசவரியா லோச்சியிவர் வான்முயலுந்
    திண்ணியமன் னனைவணங்கித் தெறுகரிமேற் பரிந்ததே.         148 .

    [வெண்ணிறக் குஞ்சரம்- அயிராவதம். வீறு- சிறப்பு. அங்குசம் – யானையைச் செலுத்தும் தோட்டி. அங்குசம் அரி- அழகிய தருப்பை முடிச்சு ஆகிய படை.. தெறு- அழிக்கின்ற.
    வெள்ளையானையாகிய அயிராவதத்தினைக் கடாவுகின்ற சிறப்புடைய அங்குசம் தனது மலர்க்கையில் விளங்குதல் போலக் கிடந்து ஒளிரும் தருப்பை புல் ஆகிய படையால் ஓச்சி மேல் இவர முயலும் மன்னனைப் பகைவரைத் தெறும் கரிதன்மேல் ஏற்றிக் கொண்டது]
    அண்ணல்மதக் களியானை யார்ங்கண்ணி முடிவேந்தைப்
    புண்ணியஞ் செய்தன்னெருத்த மிசைத்தாங்கும் பொறையாற்றி
    யெண்வகைமா திரந்தாங்கு மினக்கரிகள் பொறைநீவி
    யுண்ணிலவுங் களிதூங்க வுதவிவழங் கியதன்றே.         149


    [ஆர்ங்கண்ணி- ஆத்திமாலை, சோழர்களின் அடையாள மாலை.எருத்தம்-பிடர். பொறை- பாரம். மாதிரம்- திசை. கரிகள்- யானைகள். நீவி- விலக்கி. பட்டத்து யானை, ஆத்திமாலை அணிந்த முடிவேந்தனைப் புண்ணியஞ் செய்த தன் பிடரிமிசைத் தாங்கி, எட்டுத் திக்கிலும் தாங்கும் யானைகளின் பாரத்தை நீக்கி, உள்ளத்தினுள் நிலவும் மகிழ்ச்சி நிலைக்க உதவி வழங்கியது. அன்றே- அசை ]

    கருமேக மிசைவிடியற் காலையெழுஞ் செங்கதிர்போல்
    ஒருவேழ மிசைத்தோன்று மொன்னலர்சூ ளாமணிதன்
    இருபாதந் தொழுதிபத்தின் பின்னணைந்த வெல்லோருங்
    குருநாட்பங் கயமலர்க்கை கூப்பிமுடி கோட்டினார்.         150

    [கரிய மேகத்தின் மேல் விடியற்காலையில் எழும் செஞ்ஞாயிறுபோல் ஒப்பற்ற அண்ணல் யானையின் மேல் தோன்றும் பகைவர் தலைமேல் சூடும் சூளாமணியின் இருபாதங்களையும் யானையின் பின் வந்த அனைவரும் சூரியனைக் கண்ட அன்றலர்ந்த தாமரைமலர்ட் போன்ற கைகள் கூப்பித் தலை வணங்கினர். குரு – நிறம். நாட்பங்கயமலர்- அன்றலர்ந்த தாமரைமலர். கோட்டினர்- வணங்கினர்.]

    நுந்தைபணி கேட்டேங்கள் நுன்பணியுங் கேட்பவிவண்
    வந்தனமென் றேத்துதல்போல் வயிர்வளைவேய்ங் குழல்வீணை
    துந்துபிதண் ணுமைமுழவந் தொகுமுருடு தகுணிச்ச
    மெந்தவகை யியங்களுமுன் னியம்பியவேழ் கடலழுங்க         151

    [ உன்னுடைய தந்தையின் ஆணைவழி நடந்தேம். இனி உன்னுடைய ஆணை கேட்டு அதன்வழி உன்னுடைய பணியும் கேட்டு அதன்வழி நடக்க இங்கு வந்தனம் என்று ஏத்துதல் போல் சங்கு வேய்ங்குழல், வீணை துந்துபி தண்ணுமை முழவம் தொகு முருடு, தகுணிச்சம் முதலிய எந்த வகை இசைக்கருவிகளும் ஏழ்கடலொலியும் அமுங்குமாறு ஒலித்தன.]

    மைவண்ணக் கரடமத மலைவணங்கிப் பிடரேற்றுஞ்
    செவ்வண்ண மலர்முகத்தோன் செம்மாந்து களிப்புறலும்
    பெளவங்கொள் புவியகத்தோர் பயின்மகிழ்ச்சித் தலைநின்றார்
    எவ்வண்ண மிறையானா னவ்வண்ண முலகாமால்.         152

    [மைவண்ணம்-கரியநிறம். கரடம்- மத தாரை, மதம்பொழிந்த சுவடு. மதமலை-யானை. செவ்வண்ண மலர்முகத்தோன் மனுவின் அரசிளங்குமரன். பெளவம்- கடல். அரசயானை வணங்கித் தன் பிடரில் ஏற்றும் அரசிளங்குமரன் அகமலர்ந்து மகிழ்ச்சியுறலும் கடல்சூழ் உலகத்தவரும் மகிழ்ச்சியின் எல்லையில் நின்றார். அரசன் எவ்வழிஅவ்வழி மக்களும் என்பதற்கேற்ப.]

    கண்டவர்கண் முகவனசக் கடிமலரு மகமலரும்
    விண்டலர்ந்து களிதூங்கி விளங்கியது மொருபுகழோ
    தண்டரளப் பூண்மார்பிற் றார்வேந்த னிருள்சீத்து
    மண்டலமெ லாம்விளக்கு மிரவிமரு மானென்னில்         153

    [ குளிர்ந்த முத்துமாலை அணிந்த தார்வேந்தன் இருளினை ஓட்டி உலகமெலாம் ஒளிபரவச்செய்யும் இரவிகுலத்து வந்தோன் எனில், கண்டவர்களின் முகத்தாமரையும் மகிழ்ச்சிகொண்டு அகம் மலரும் அகத்தாமரையும் இதழ் விண்டு மகிழ்ச்சி பொங்கியது ஒரு வியப்போ? வியப்பன்று என்றவாறு]

    தொழுந்தகைமைப் பேரமைச்சர் தொல்லுலகம் புரிதவத்தின்
    கொழுந்தனைய செம்பியர்தங் குலவிளக்கைப் பகைவெருவ
    வெழுந்தசினக் களிற்றெருத்த மிசைநின்று மிழிச்சினார்
    செழுந்தரள மணித்தொங்கன் முடிகவிக்குந் திறம்புரிவார்.         154

    [தொழுந் தகைமை- தொழத்தக்க பெருமை தொழத்தக்க பெருமை உடைய பேரமைச்சர் பழமையான உலகம் செய்த தவத்தின் கொழுந்து போன்ற சோழர்தம் குலவிளக்கைப் பகைவர்கள் அஞ்ச எழுந்த சினக்களிற்றின் மேலிருந்து இறக்கி மணிமுடி கவிப்பதற்கு ஆவன செய்யத் தொடங்கினர்.].

    பாயினவிண் ணவர்தத்தம் பதியிருந்தாங் கிருந்தரசன்
    மாயிருமண் மகட்புணரும் வளநோக்க வமைப்பார்போற்
    சேயிரவி முதலான தேவர்பதி மேனிழற்ற
    வாயிடையே விதியுளிப்பொன் னலங்கொளிமண் டபஞ்செய்தார்.        155

    [விண்ணவர்கள் தங்களுடைய பதியிலேயே இருந்து அரசன் நிலமகளை மணம் கொள்ளும் சிறப்பை நோக்க அமைப்பவர்களைப் போல செஞ்சூரியன் முதலான தேவர்களின் நகரங்கள் மேல் ஒளிசெய்ய அவ்விடங்களில் பொன்னாலான மண்டபமமைத்து அலங்கரித்தார்.]

    மின்னசும்பும் இழைமடவார் வெகுண்டுறுப்பாற் றமைத்தெறுதன்
    மன்னவன்முன் முறையிடுவான் வந்தனபோற் கனிவாழை
    துன்னுபசுங் கரும்பிளநீர் தொகுங்கமுகு முதலாய
    பொன்னவிர்தூண் டொறுநிறைத்துப் பொற்பநனி யலங்கரித்தார்.        156

    [ ஒளி துளும்பும் அணிகளை அணிந்த இளம் பெண்டிர் வெகுண்டு தம் உறுப்புக்களால் தம்மை அழித்தலை அரசன் முன் முறையிடுவதைப்போல் வாழை, கரும்பு, இளநீர், கமுகு முதலாயனவற்றை பொன்னொளிவீசும் தூண்கள்தொறு நிறைத்துப் பொலிவாக அலங்கரித்தார். மகளிர் உறுப்புக்களுக்கு உவமை: துடை- வாழை. மொழி- கரும்பு. கொங்கை- இளநீர். கழுத்து- கமுகு]

    புண்தவழ்வேற் படைத்தங்க ளிறைவன்பொற் பினைனோக்க
    அண்டர்குலம் அண்மையினில் அண்மிநெருங் கியதேய்ப்பக்
    கண்தவழச் சித்திரித்த காமருபட் டாதிகளான்
    மண்டபமெங் கணும்அலங்கி வளங்கொழிப்ப விதானித்தார்.         157

    [புண் தவழ் வேல்- பகைவர்களைக் குத்துவதால் அவர்களுடைய தசை தங்கும் வேல்.
    தங்கள் அரசனின் பொலிவினைக் காண்பதற்குத் தேவர்கள் கூட்டம் அருகில் நெருங்கியதைப் போல இடமெங்கும் பட்டுத்துணிகளால் மண்டபமெங்கும் விதானம் எனும் மேற்கட்டியால் அலங்கரித்தார்]

    நறும்பூவு மலர்த்தாது நகையொளிர்பொற் சுண்ணமொடு
    புறம்போதச் சிந்தியகிற் புகைபுகைத்து விண்ணவரு
    மிறும்பூது கொளவுள்ளா லெழிலியகம்பலம் விரித்திட்
    டுறும்போக நிலமுமதற் கொவ்வாமைக் கவின்செய்தார்.         158

    [நறுமணமுள்ள மலர்களையும் மலர்களின் தாதுக்களையும் ஒளிவீசும் சுண்ணப்பொடியுடன் கலந்து புறத்தே சிந்தி, அகில்புகை புகைத்து, தேவர்களும் அதிசயம் கொள்ள அழகிய கம்பலம் விரித்திட்டு, போகபூமியும் தனக்கு ஒவ்வாதவாறு அலங்கரித்தார்.]

    ஊற்றிருந்து கவின்றுளும்பு முருகெழுமண் டபமென்னு
    மேற்றமலி மகன்மார்பி லிலங்குமணிப் பணியென்ன
    நாற்றிசையு மதிசயிப்ப நாப்பணவ மணித்திரளால்
    வீற்றிருக்குஞ் செழுந்தவிசு விற்பயிலக் குயிற்றினார்.         159

    [அழகு ஊற்றிருந்து துளும்பும் மண்டபம் என்னும் அகன்ற மார்பினிடத்து விளங்கும் மணிப்பூண் என்ன நாற்றிசையிலுள்ளோரும் அதிசயிப்ப் மண்டபத்தின் நடுவண் நவமணித்திரளால் அரசன் வீற்றிருக்கும் ஆசனம் ஒளி தவழச் செய்தமைத்தார்]

    கடக்களிற்றைக் கண்கட்டிக் காவலனைக் கொணர்பாக்கு
    விடுத்தனர்க ளமைச்சரெனு மிகுமொழியே விறல்வேந்தற்
    கடுத்தமணி முடிசூட்ட விடுமுடங்க லாக்கொண்டு
    தொடுத்தவிழா வணிகாண யாவருந்தொக் காரன்றே.         160

    [ பட்டத்து யானையின் கண்ணைக் கட்டி நாடாளும் அரசனைக் கொணர்வதற்கு அமைச்சர்கள் விடுத்தனர் எனும் மிகு மொழியே அரசனின் முடிசூட்டு விழாவிற்கு விடுத்த அழைப்பெனக் கொண்டு விழாவினைக் காண மக்கள் யாவரும் வந்து கூடினர். முடங்கல்- ஓலைச்சுருள். திருமுகம். மிகுமொழி- மக்கள் தம்மிடையே பரிமாறும் சொல்.தொடுத்த- தொடங்கிய ]

    காட்டகத்தும் இறைமகற்குக் கறைவாங்குந் திறமேய்ப்பப்
    பாட்டளிசூழ் மலர்ச்சூதப் பசுந்தழையுந் தருப்பைகளு
    மீட்டமுறு சமிதைகளு மேனையவுங் கைக்கொண்டு
    நாட்டுமறை யந்தணர்க ணலங்கிளரத் திரண்டணைந்தார்.        161

    [காட்டிலிருந்தும் அரசனுக்குத் திறை வாங்கும் செயல் போல, வண்டுகள் மொய்த்து ஒலிக்கும் மாம்பசுந்தழைகளும் தருப்பைகளும் சமிதைகளும் ஏனைய பிறவுங்கொண்டு மறையை நிலைக்கச் செய்யும் அந்தணர்கள் நன்மை விளையத் திரண்டு வந்தனர். சூதம்- மா.]

    ஐயனிருதோண் மணந்தவ ரரமகளிர் பிரிவாற்றார்
    தொய்யின்முலை வேற்றுருவாய்த் தொக்கருகி லிறுத்தனபோன்
    மொய்யிழைசூழ் பொற்கரக மூரிமணிக் கும்பங்கள்
    பையவிதி யுளிநிறுவும் பாங்கரெலா நிறுவினார்.         162

    [இந்திரனின் இருதோள்களையும் தழுவிய அரமகளிர் அவனுடைய பிரிவினை ஆற்றாமல் அவர்களுடைய தொய்யில் எழுதப்பெற்ற இளமுலை வேற்றுருக்கொண்டு ஒன்று கூடித் தங்கின போல மாவிலை சூழ் பொற்கலசங்கள் வேள்விச்சாலையில் விதிப்பட்டு எங்கெங்கு அமைக்க வேண்டுமோ அங்கெல்லாம் நிறுவினர்.
    ஐயன் -தலைவன், இந்திரன். தொய்யில்- இளம் பெண்களின் முலைமேல் காதலர்கள் சாந்தினால் எழுதும் ஓவியம். இன்றைய tatoo போன்றது. தொக்கு- கூடி. இறுத்தன- தங்கின. மூரி- பெரிய, வலிய. விதியுளி- விதிப்படி பாங்கர்- இடம். ]
    மன்னனெனு முரிமையினான் மழைமேகம் வான்கங்கை
    துன்னியதீர்த் தங்கொணர்ந்தாற் றுணையமதக் கரியெருத்தின்
    மின்னுமணிக் குடத்துவரு விரைப்புனல்பெய் தருச்சித்தார்        163

    [தன்னுடைய அரசனாகிப் பொன்னுலகை ஆண்ட மன்னன் என்னும் உரிமையினால் மழைமேகம் ஆகாயகங்கைநதியின் தீர்த்தத்தைக் கொண்டுவந்த்தென யானையின் பிடரியின்மேல் ஒளிவீசும் அழகியபொற்குடத்தில் வந்த நறுமணப் புனல் பெய்து அருச்சனை செய்தனர்.]

    மடங்கலெறுழ்ப் பிடர்பிதிர மன்னுமணித் திரள்குயின்ற
    விடங்கொளுமா தனம்பூசை யியற்றியதற் கெழில்செய்தாங்
    கடங்கருந்துப் பயிலிலைவே லண்ணலைமே லிவர்வித்துத்
    தடங்கெழு தெய்வக்கலசத் தண்விரைநீ ராட்டினார்.         164

    [சிங்கத்தின் பிடரியின் மேல் நிறுத்திய நவமணிகள் பதித்து இயற்றிய பரந்த ஆதனத்திற்குப் பூசனை செய்து , அழகுறுத்தி, அதன்மீது, பகைவர்களின் உயிரை அருந்தும் கூரிய இலைபோன்ற வேல் ஏந்தும் அண்ணலை ஏற்றி, பெரிய, தெய்வக்கலச குளிர் நன்னீர் ஆட்டினார்.
    கலசங்கள் மந்திரங்களால் அருச்சிக்கப்பட்டமையினால் தெய்வக் கலசங்கள் ஆயின. அடங்கு- பகை]

    மெல்லியநுண் னிழைத்துகிலான் மெய்யீரம் புலர்த்தியபி
    னல்லுமிழுங் கறைக்கண்டத் தடிகடிரு நீறன்றி
    யெல்லுமிழு மணிசிறவாதென்பார் போன்முன் னுதலின்
    வில்லுமிழ்நீ றணிந்தணிகள் மெய்முழுது மலங்கரித்தார்.         165

    [மெல்லிய நுண் இழையால் ஆன ஒற்றாடையால் உடலின் ஈரத்தைப் புலர்த்தியபின், நீலகண்டத்து அடிகள் திருநீறுபோல பிற அணிகள் சிறவா என்று கூறுவார் போல முதலில் ஒளியுடைய நீறணிவித்துப் பின் பிற அணிகள் உடல் முழுதும் அணிவித்தார்]

    கோள்பலவு மிறைமகற்குக் கோளுறுமா றொருகாலைத்
    தாள்பிறழத் தங்கிடினுந் தங்குமெனநினைந் தவற்றை
    வாள்பயில முறைபிணித்து வைத்தனபோன் மணிகுயின்ற
    நீள்பசும்பொற் கதிர்மோலி நிலம்வியப்ப முடிகவித்தார்.         166

    [மணிமகுடம் நவமணிகள் பதித்துச் செய்யப்பட்டது அது நவகோள்களையும் சிறைப்படுத்திக் கட்டுபடுத்தியது போன்றிருந்தது. கிரகங்கள் பலவும் அரசனுக்கு ஒருகாலத்தில் அவனுடைய முயற்சிகளுக்கு இடையூறாகத் தங்கவும் கூடும் என்று கருதி அவற்றை மகுடத்தில் ஒளி வீசி இங்கே இருங்கள் எனப் பிணித்தது போல் நவமணிகளும் குயின்ற பிரகாசிக்கும் மணிமகுடத்தை உலகினோர் வியப்ப முடி கவித்தார்.]

    அனையசெழுங் கோள்பிணிப்பி னகன்றுவிசும் படையாமற்
    புனைகழற்கால் வளவர்பிரான் புகழ்வளைந்து காப்பதென
    நினைவரிய பெருங்காட்சி நீடுமொளி மணிக்காம்பின்
    கனைகதிர்முத் தவிர்கவிகை கவின்றுளும்ப மேற்கவித்தார்.        167

    [ கோள்கள் பிணிப்பு அகன்று விசும்பினை அடையாமல் சோழமன்னனின் புகழைச் சூழ்ந்து காப்பதுபோல் எண்ணிப்பார்ப்பதற்கு அரிய கண்கொள்ளா ஒளி தங்கும் காம்பின்மேல் முத்துக்கள் பதித்த முத்துக் குடை அழகு ததும்ப மேல் கவித்தனர்.]

    திருமுகமுந் தடங்கரமுஞ் செழுங்கழலு மெனுங்கமல
    மருமலருள் உயர்ந்ததனில் வாழ்க்கையுற வுயர்ச்சிதெரிந்
    திருபுறமுந் துணையன்னம் இடைதெரியா தலைவதுபோற்
    குருநிலவி யொளியுகுக்குங் கோமளச்சா மரையசைத்தார்.         168

    [அன்னம் தாமரை மலரின் மீது வீற்றிருத்தலை விரும்பும். அரசனின் திருமுகத் தாமரை, தடங்கரத் தாமரை, செழுங்கழலணிந்த திருவடித் தாமரை இவற்றில் உயர்ந்ததனில் வீற்றிருக்க விரும்பி,இவற்றில் எது உயர்ந்தது எனத் தெளிவடையாமல் இருஅன்னங்கள் அலைவதுபோல் , இருபுறமும் அழகிய வெள்ளோளி வீசும் கவரியை அசைத்தார்.]

    கண்டவர்க ளதிசயிப்பக் கதிர்த்தெழுந்த இறைபுயத்து
    விண்டலரு மலர்த்தொடையல் விரைகமழு மதுநசையால்
    மண்டிவருந் தேனினமும் வரிச்சுரும்பு மகற்றுவபோற்
    றண்டரள வடஞ்சூழ்ந்த சாந்தாற்றி மருங்கலைத்தார்.         169

    [ பார்த்தவர்கள் அதிசயிக்குமாறு புடைத்து எழுந்த அரசனின் தோள்களின் மீது கிடந்த மணமலர்மாலைகளில் உள்ள மதுவினை உண்ணும்பொருட்டு மொய்க்கவரும் வண்டுக்கூட்டத்தையும் தேனிக்கூட்டத்தையும் அகற்றுவதைப்போல் இருபுறமும் முத்துமாலைகள் சூழ்ந்த சாந்தாற்றிகளை அசைத்தார், சாந்தாற்றி- பெரிய விசிறி]

    பழுதில்கர கங்கள்தொறும் பாவித்த தெய்வதத்தின்
    செழுவளமை தன்னிடத்திற் செறிந்ததிறன் தெரிப்பதுபோல்
    ஒழுகிமையா டாதுயிர்மே லோங்கும்அருள் நோக்குதவி
    எழுதரிய திருவடிவி னிறைமகனும் வீற்றிருந்தான்         170

    [மந்திரங்களால் தெய்வசக்தியை ஏற்றிய கரகநீரால் திருமஞ்சனமாடிய அரசன், அத்தெய்வத்தின் செழுவளமை தன்னிடத்தில் செறிந்திருக்கும் திறத்தைத் தெரிவிப்பதுபோல் ஒழுகி இமை ஆடாது உயிர்களின்மேல் அருட்பார்வை செலுத்தி ஒவியத்தாலும் எழுதவியலாத அழகிய வடிவுடன் வீற்றிருந்தான். ]

    மனுவேந்த னுயிர்நீங்கி வானணையும் அன்றுமுதல்
    முனிவாய துயர்கூர்ந்த முண்டகப்பூந் தனிச்சேக்கைக்
    கனிவாய்ச் செந்திருமாதுங் கலிகாலப் பெருவளவன்
    தனிமார்பம் புணர்ந்தின்ப சாகரத்தி னழுந்தினாள்        171

    [மனுவேந்தன் உயிர் நீங்கி வானுலகம் அடைந்த அன்றுமுதல் தன்னை வெறுத்த துயரம் மிகுந்த திருமகளும் இப்பொழுது கரிகாற் பெருவளவனின் ஒப்பற்ற திருமார்பைப் புணர்ந்து இன்பக்கடலில் அழுந்தினாள்.
    முனிவு- வெறுப்பு. இந்த வெறுப்பு தான் மகிழ்வுடனிருக்க இடமில்லாமையால் நிகழ்வது]

    பணிவேந்தன் பொறையொழிந்து பஃறலையு மயர்வுயிர்த்தான்
    றணியாத பசியொழிந்தா மெனவமரர் தளர்வகன்றார்
    மணிமோலிப் பகையரசர் மனத்தருக்கு முழுதவிந்த
    பிணியாவு மொழிந்துலகம் பேருவகை யெய்தியதால்         172

    [கரிகாலன் பூமியத் தாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால், ஆதிசேடன் தான் நிலப்பொறை ஒழிந்தாம் எனப் பெருமூச்சு விட்டான். இதுவரை வேள்விகள் நடைபெறாமையால் பசித்திருந்த தேவர்கள், கரிகாலம் அரசனானபின் வேதவேள்விகள் நடைபெறத் தொடங்கியமையினால், நாம் இனிப் பசி ஒழிந்தோம் எனத் தளர்ச்சி நீங்கினர். பகையரசர்களின் மனத்தருக்கு ஒழிந்து கரிகாலனால் காக்கப்பட்ட உலகம் பேருவகை எய்தியது.]

    கலிநிலைத்துறை
    புரசை மால்களிற் றுடல்நெளி தரப்பொதி கொணரா
    அரசர் முன்சொரி கையுறை யனைத்துமந் தணரும்
    பரசு நால்வகைக் கவிகளும் பாணரும் கவர்ந்தார்
    முரசம் ஆர்த்ததன் னவர்கலி முடிபறை நிகர.         173

    [ புரசை – யானையின் கழுத்திற் கட்டும் கயிறு. உடல் நெளிதர – முதுகு குழியும்படி. கொணரா – கொண்டுவர. கையுறை - காணிக்கை. கலி – வறுமை. முடிபறை- சாப்பறை.
    சிற்றரசர்கள் யானைகளின் முதுகு குழியும்படிப் பாரப்பொதிகளாகக் கொண்டுவந்து அரசன் முன்னிலையில் சொரிந்த காணிக்கைகளை, அரசனைப் போற்றும் ஆசு, மதுரம், வித்தாரம், சித்திரம் எனும் நாற்கவிகளும், பாணர்களும் கொண்டு சென்றனர். அவர்களுடைய வறுமை இன்றோடு ஒழிந்தது என வறுமைக்குச் சாப்பறை ஓயாது ஒலித்தது.]

    பூண்டொ றுந்தம தலர்விழி பூத்தமை தெரியார்
    ஈண்டி மெய்யெலாம் விழிகளா யிருந்தவென் றெண்ணிக்
    காண்டொ றும்பிரான் வலாரியென் றியாவருங் கரைந்தார்
    ஆண்ட மன்னனு மறிந்தன ரோவென வயிர்த்தான்.         174

    [அரசன் அணிந்துள்ள அணிகலன்களிலெல்லாம் தங்களுடைய விரித்த விழிகள் பிரதிபலிப்பதை அறியாராகி, உடலெல்லாம் கண்ணாய் இருத்தலை நோக்கி, அரசனைக் காண்தொறும் இந்திரன் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட அரசனும் அவர்கள் உண்மையை அறிந்தனரோ என ஐயுற்றான். வலாரி- இந்திரன். கரைந்தார்- கூறினார். இந்திரனே இறைவன் ஆணையால் கரிகாலனாய் வந்திருத்தலின் , அறிந்தனரோ என ஐயமுற்றான். ஓகாரம், ஐயப்பொருளது.]

    உலகி லீண்டிய கலியினைத் துரந்துசென் றோப்பி
    விலகு காவலாய்த் திசையினும் விண்ணினும் பரந்து
    நிலவ லுற்றது நெறிமுறை யரசுபூண் டிறைவன்
    குலவு மற்றைநா ளவனுழைக் கொழித்தெழும் புகழே.       175

    [நெறிமுறை அரசு பூண்டு அரசனிடத்துக் கொழித்தெழும் புகழ் உலகில் திரண்டிருந்த வறுமையினை ஓட்டிச் சென்று துரத்தி விலக்கும் காவலாய் எத்திசையிலும் விண்ணிலும் பரந்து நிலவலுற்றது. காரணமாகிய நெறி முறை அரசியல் உள்ளவழிக் காரியமாகிய புகழ் நிகழும்மாதலின், அப்புகழ் நிலவலுற்றது எனவும், அந்நெறிமுறைக்குப் பகையாகிய பசி, பிணி, பகை(கலி) முதலிய தலை காட்டா ஆகலின் அவற்றை விலக்கித் துரத்தி ஓட்டிக் காவலாக நிலவியது எனவும் ஆசிரியர் கூறினர். ஈண்டிய- திரண்ட. துரந்து- ஓட்டி. ஓப்பி- விலக்கி. கலி- வறுமை]

    இன்ன வாறுமண் மகளினை மணந்தபின் னிறைஞ்சி
    மன்னர் மன்னநின் மரபுளோ ரரசுவீற் றிருந்த
    பொன்ன ளாவிய விருக்கையிற் புகுதுக வென்னா
    நன்னர் மந்திரக் கிழவர்க ணவின்றனர் கேளா         176

    [இவ்வாறு அரசன் மண்மகளினை மணந்தபின், ( நாடுகாவல் பூண்டபின்] அமைச்சுச் சுற்றத்தார், ‘ மன்னர் மன்னனே! நின் முன்னோர் அரசுவீற்றிருந்த அரசுகட்டிலில் வீற்றருள்க” என நவின்றனர். அதனைக் கேட்டு. ]
    புரவி தேர்கரி பண்ணுக புரவலர் யாரும்
    உரவு வாய்ந்ததம் ஊர்தியிற் சூழ்ந்துடன் உறுக
    இரவ லாளர்க ளிருநிதி பெறுகவென் றேவிக்
    குரவன் சேவடி பணிந்தருள் கூர்விடைகொண்டான்.        177
    .
    [குதிரை, தேர், யானை முதலியவற்றை ஊர்வதற்கு ஆயத்தம் செய்க. புரவலர்கள் யாவரும் தத்தம் ஊர்தியில் சூழ்ந்து உடன் வருக. இரவலாளர்கள் பெருஞ்செல்வம் பெறுக என்று பணித்துவிட்டு, ஆசிரியன் சேவடியைப் பணிந்து ஊர்வலத்திற்கு அனுமதி பெற்றான். ஊர் வலத்திற்கு முன்னர் செய்யும் தானத்தை யாத்திராதானம் என்பர்.]

    சங்கம் ஆதிகள் முழங்கவார் கொடிநிரை ததையப்
    பொங்கு தானைகள் புவிநெளி தரப்புடை சூழத்
    திங்கள் வாணுதல் மங்கையர் திருநடம் புரியத்
    வெண்க ளிற்றணி யெருத்தமேல் கொண்டுசென் றணைந்தான்        178

    [சங்கு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, நீண்ட கொடிகள் நெருங்க, திரண்ட நால்வகைச் சேனைகள் நிலம் நெளிய பக்கங்களில் சூழ்ந்துவர, சந்திரனைப் போன்று ஒளிவீசும் முகமுடைய மகளிர் திருநடம் புரிய ஐராவதம் போன்ற களிற்றின் பிடரியின் மேல் அமர்ந்துசென்றடைந்தான்.}

    அரும்பு விண்டலர் கயங்களும் மலர்சொரி பொழிலுங்
    கரும்புஞ் செந்நெலுங் கதலியுங் கஞலிய பணையு
    மருங்கு பம்பிய வளம்புனற் பொன்னிநா டெய்தி
    நெருங்கு மாளிகைத் தன்னுடை நெடுநகர் புகுந்தான்.        179

    [ அரும்புகள் விரிந்து அலர்கின்ற தடாகங்களும், மலர்களைச் சொரிகின்ற சோலைகளும் கரும்பும் செந்நெல்லும் வாழையும் நெருங்கிய வயல்களும் எப்பக்ககங்களிலும் செறிந்த நீர்வளம் மிக்க பொன்னி நாடெய்தி மாளிகைகள் நெருங்கிய தன்னுடைய நீண்ட நகரினை அடைந்தான்]

    பந்தர் தோரணம் பூரண குடம்பல கொடிகள்
    எந்த வெண்ணில வளங்களும் நிரம்பி யேர்வயங்கும்
    அந்தண் மாநகர் வீதிகள ளவில்கடந்து
    முந்தை யோர்பயில் கோயிலின் அடைந்தனன் முறையால்        180

    [பந்தல், தோரணம், பூரணகும்பம், கொடிகள் மற்றும் எண்ணிலாத வளங்கலும் நிரம்பி எழிலுடன் விளங்கும் அழகிய குளிர்ந்த நீண்ட தெருக்கள் அளவில்லாதனவற்றைக் கடந்து, தன் மூதாதையர்கள் வாழ்ந்த அரண்மனையினை முறையாக அடைந்தான்.]

    அரசு வீற்றிருந் தாலயத் தெம்பிராற் கான
    வரிசை யாவையும் ஊர்தொறும் வழாவகை நடத்திப்
    புரிசை சூழ்ந்த பொன்னகர் செலுத் தரசினும் பொலியக்
    கரிசெலா மறுத்தாண்டனன் களைகணா யுலகம்.        181

    [இவ்வாறு அரசு வீற்றிருந்து, திருக்கோயில்களில் இறைவனுக்கான வழிபாட்டு முறைகள் யாவையும் முட்டின்றி நடக்குமாறு செய்து, மதில்கள் சூழ்ந்த அமராவதியிலாட்சி செய்யும் இந்திரனைக் காட்டிலும் சிறந்து விள்ங்கக் குற்றங்களைந்து, உயிர்களுக்குச் பற்றுக்கோடாக இருந்து அரசாண்டனன்]

    வணங்கு மன்னவர் தமக்கெலாந் தனதுவண் குடைக்கீ
    ழிணங்கு மண்டலம்பாத் தளித்தருளின னிறைஞ்சா
    தணங்கு போர்க்களத் தேற்றவர் தமக்குமுன் னாண்ட
    கணங்கொள் கற்பக நாட்டினைக் கைக்கொள விடுத்தான்        182

    [ தன்னை வணங்கிய மன்னவர்களுக்கெலாம் தனது ஆளுகையின் கீழ் உள்ள நாட்டினைப் பகுத்து அளித்து ஆட்சி செய்துவரும்படி அருளினான். பகைத்துப் போரேற்று வந்த மன்னர்களுக்கு முன் தான் ஆண்ட கற்பகநாடாகிய தேவலோக ஆட்சியினைக் கைக்கொள விடுத்தான். போரிலே வீரமரணம் அடைந்தவர்கள் தேவலோகம் செல்வர் எனக்கூறுதல் மரபு.]

    காழிலா வறுபத்துநான் கெனுங் கலையானும்
    வாழிவென்று வென்றலை கடல்வரைப் பெலாநாட்டுங்
    கேழில்வாகைய மதலையுங் கிளர்மறை முறையான்
    வேழ்வி யாற்றிய யூபமும் விறந்தன அநேகம்.        183

    [காழ்- குற்றம். வாழி- அசை. கேழில்- ஒப்பில். வாகை- வெற்றி,. மதலை- தூண். வேழ்வி- வேள்வி- எதுகைநோக்கி விகாரப்பட்டது. யூபம்- வேள்விப்பசு கட்டும்யாகத்தூண். விறந்தன- செறிந்தன. குற்றமற்ற அறுபத்து நான்கு கலைகளாலும் வென்று கடலால் சூழ்ப்பட்ட நிலவரைப்பெங்கும் நாட்டிய வெற்றித் தூண்களும், வேதவிதிப்படி வேள்வியாற்றியதற்கு அடையாளமாக நாட்டிய யூபங்களிம் எண்ணிக்கையற்றன செறிந்தன.]

    வாழு நாளொரு காலத்துக் காவிரி மலிநீர்
    ஆழி யாமென நாடெலாம் பரத்தலும் அலகில்
    சூழி யானைவேன் மன்னவர் யாரையுந் தொகுத்துப்
    பாழி நீள்கரை படுத்துநீ ரொழுங்குறப் பணித்தான்.        184

    [இங்ஙனம் வாழும் நாளில் ஒரு காலத்தில் காவிரியாற்றில் வெள்ளம் பெருகிக் கடலே எனும்படி நாடெலாம் நீர் பரந்தது. அவ்வாறு பரக்கவே, அளவில்லாத, முகபடாம் அணிந்த யானைப்படைகளை உடைய அரசர்களையெல்லாம் திரட்டிக் காவிரிக்கு வலிமை மிக்க கரை அமைத்து நீர் ஒழுங்காகப் பாயுமாறு பணித்தான். சூழ்- முகபடாம். பாழ்- வலிமை. ]

    கயிலை நாயக னருளிய ஆணையைக் கருதிப்
    பயிலுங் காஞ்சியைக் காடுகொன் றிருநகர் படுப்ப
    இயலும் வாஞ்சையிற் போதுவா னுழையரை யேவிச்
    சயநி லாவிய தானையைத் தருகெனக் கிளந்தான்.        185

    [கயிலை நாயகன் அருளிய ஆணையை நினைந்து தான் வாழும் காஞ்சியில் காடழித்துத் திருநகர் அமைக்கும் விருப்பத்தில் எழுந்தருளுவானாகிய அரசன், உழையரை ஏவிச் சேனையைத் தருக எனக் கூறினான். உழையர்- அமைச்சர். உழை- பக்கம். உழையர்- அரசனின் அருகில் என்றும் இருப்பவர். சயம் நிலாவிய தானை- வெற்றியையே தருகின்ற படை.]

    ஒருகை மார்பகம் பிணித்துமற் றொருகைவாய் புதையா
    அருளும் வாய்மொழி யஞ்செவி நிறைத்த அவ்வியவர்
    விரைவி னேகினர் விறற்கழல் வேந்தனு மெழுந்து
    திருவ னார்பயில் தமனியக் கோயிலிற் சென்றான்         186

    [ இடதுகையை மார்பகத்தோடு சேர்த்து வலது கையால் வாயினைப் பொத்தி அரசன் அருளும் வாய்மொழியைத் தம் செவியில் நிறைத்த அவ்வேவலர், விரைந்து சென்றனர். அரசனும் தன்னுடைய திருமகள் அனைய உரிமைமகளிர் தங்கியிருக்கும் பொற்கோயிலுக்குச் சென்றான்.]

    விசும்பின் நின்றிழி வேந்தனைத் தாதியர் விழைவாற்
    பசும்பொற் பீடிகை யிருவினர் பனிகுலாம் விரைநீர்
    தசும்பின் ஏந்தினர் ஆட்டினர் தணத்தனர் ஈரம்
    அசும்பு சந்தனக் கலவைமெய் யழகுற வணிந்தார்.        187

    [விண்ணிலிருந்து இறங்கிவந்த வேந்தனைத் தாதியர் விருப்பத்துடன் பொற்பீடிகையில் இருத்தி, குளிர்ந்த மணமுள்ள நீரினைக் குடத்தில் மொண்டு கொண்டு ஆட்டினர். ஈரத்தை உலர்த்தினர். சந்தனக் குழம்புக் கலவையை உடலில் அழகுற அணிந்தார். பீடிகை- ஆசனம். தசும்பு- குடம். தணத்தனர்- புலர்த்தினர். அசும்பு- சேறு.]

    சூடு மூவிரு சுவையுமார் நால்வகை யுண்டி
    ஓடுவாளரித் தடங்கணின் உயிரனார் ஒண்கேழ்
    பாடு தங்குபொற் கலத்தினிற் பண்பொடு ஊட்ட
    ஆடு நீள்கொடிக் கொற்றவன் நுகர்ந்தணி யணிவான்        188

    [அறுவகைச்சுவை பொருந்திய நால்வகை உண்டியினை வளர்த் தடங்கண்ணினராகிய உயிரனைய அன்புகொண்ட மகளிர் பொற்கலத்தினில் பண்புடன் ஊட்ட கொற்றவன் உண்டு அணிகள் அணிவான்]
    கலிவிருத்தம்
    கருமுகிற் குலமெனக் கருதி வந்துமின்
    மருவிநின் றிமைப்பன மானப் பொங்குநெய்
    முருகவிழ் சிகையினை முடித்து வில்விடும்
    பொருவறு காஞ்சனப் புரியின் யாத்தனன்.        189

    [கரிய முகிற்கூட்டமெனக் கருதி மின்னல் வந்து பொருந்திநின்று இமைப்பன போல தைலம்பூசி மணங்கமழ் சிகையினை முடித்து ஒளிவிடும் ஒப்பற்ற பொற்புரியினால் கட்டினான். இமைப்பன- ஒளிவிடுவன. நெய்- தைலம். முருகு- மணம். சிகை- குடுமி. வில்- ஒளி. காஞ்சனம்- பொன் புரி- கயிறு]

    பந்தியிற் செறித்தபன் மணியின் கோவையைக்
    கந்தரம் வாக்கிய காமர் வில்லென
    மந்தர மனையதோள் மன்னர் மன்னனச்
    சுந்தரச் சிகழிகை சூழ்ந்திட் டானரோ        190

    [கந்தரம்- வானம். வாங்கிய – வளைந்த. காமர்வில்- இந்திரவில். சிகழிகை- மயிர்முடி. வரிசையாகக் கோத்த பலமணிகளின் கோவையை, வானத்தில் உண்டாகிய இந்திரவில் என மந்தரமலை போன்ற தோளினனாகிய மன்னர்மன்னன் அவ்வழகிய சிகழிகையை வளைத்து இட்டான்.]

    திருமகள் தனதெனச் சினந்து வெற்றிகொள்
    ஒருமகள் தனதெனும் உலங்கொள் தோளினான்
    பெருமழை துவற்றிய பெற்றி போலவண்
    குருமலர் அலங்கற் றேன்கொழிப்ப வேய்ந்தனன்.         191

    [இலக்குமி தனது என்றும் வெற்றித் திருமகள் தனது என்றும் உரிமை கொண்டாடும் கல்போல் திரண்ட தோளினான், மலையைப்பெருமழை நனைத்ததைப் போல நிறமுடைய மலர்மாலைகள் தேன் செழிப்ப அணிந்தனன். உலம்- திரண்டகல். கொள்- போல எனும் பொருளில் வரும் உவம உருபு. அவண்- அவ்விவிடத்தில். தோளாகிய மலையில். குரு- நிறம். அலங்கல்- மாலை. கொழிப்ப- செழிப்ப.]

    மாதரார் உயிரினை வாங்கும் வல்லையின்
    ஈதுதான் எனமனத் தெண்ணி னான்பொரப்
    போதளாஞ் சிகழிகை மறையப் பொன்குலாஞ்
    சீதவான் மணிமுடி சென்னி யேற்றினான்.        192

    [வல்லையில்- விரைவில். மகளிரின் உயிரை விரைவில் வாங்குவது இதுதான் என மனத்தில் எண்ணினான் போல, மலர்கள் சூடிய சிகழிகி மறையப் பொன்னால் ஆன மணிமகுடத்தைச் சூடினான்..]

    ஈட்டிய செழும்பிர தாப எல்லினால்
    வாட்டமுற் றடைந்த விண்மணியைத் தன்குலச்
    சேட்டொளிக் கதிரெனத் தாங்குஞ் செய்கைபோல்
    ஓட்டொளிப் பட்டம் ஒண்குளத்தில் வீக்கினான்.        193

    [பிரதாபம்- பகைவரை வென்றதால் வரும் புகழ். எல்- ஒளி. விண்மணி- சூரியன். சேடு- பெருமை. தான் ஈட்டிய பிரதாபத்தின் ஒளியினால் வாட்டமடைந்த சூரியனைத், தன்குலத்தின் பெருமையை ஒளிவீசும் கதிரெனத் தன் முன்னோனின் வாட்டத்தைப் போக்கத் தாங்குதலைப் போல அரசன் நெற்றியில் ஒளிவீசும் பட்டத்தைக் கட்டினான். சோழர்கள் சூரிய வம்சத்தினர்.]

    அழகெனுந் தேன்வழிந் தொழுகும் ஆனனச்
    செழுமணித் தாமரைச் செய்ய பூவின்மேல்
    விழுமிய திருமகள் வீற்றி ருந்தென
    ஒழுகொளித் திலதமு மாங்கு றுத்தினான்        194

    [அழகு என்னும் தேன் வழிந்து ஒழுகு முகமாகிய செந்தாமரைப் பூவின்மேல் புகழுடைய திருமகள் வீற்றிருந்ததைப் போல ஒளியுடைய திலகமும் அங்கு இருத்தினான்]

    சுந்தர வுருவினால் தோற்ற வேள்விட
    வந்திடும் அவன்கொடி மருங்கு நண்ணுபு
    மந்தண மிசைப்பது மானக் காதினில்
    கொந்தொளி மகரகுண் டலங்கொ ளுத்தினான்.        195

    [மன்மதனின் கொடி மகரக் கொடி. ஆடவர் காதில் இடும் குண்டலம் மகரவடிவினது. மகரகுண்டலம் எனப்படும். கரிகாலனிடத்தில் மன்மதன் அழகில் தோற்றனன். தோற்றவர் கொடியை வென்றவர் கைப்பற்றுவர். அழகில் தோற்ற மன்மதனின் கொடியில் உள்ள மகரம் அருகில் வந்து இரகசியம் பேசுவதைப் போலக் காதில் மகரகுண்டலம் இட்டான்]

    காரிகை மடந்தையர் கருங்கட் கூர்ங்கணை
    போரியன் றெய்வன பொறுப்ப வச்சிரச்
    சீரிய கவயமேற் சேர்த்திட் டாலென
    வேரிய லங்கதந் தோளி லேற்றினான்.         196

    [அழகிய மகளிர் தங்களுடைய கூரிய கண்களாகிய கணைகளை காமப்போர் தொடுக்க வந்து எய்தால் அதனைத் தாங்க வச்சிரகவசம் தரித்ததைப் போல அழகுமிக்க வாகுவலயம் தரித்தான் கவயம்- கவசம். ஏரியை- அழகிய. அங்கதம்-வாகுவலயம். தோளணி]

    இருந்திறல் தன்பிர தாப மெங்கணும்
    பரந்து வளைத்தமை தெரிக்கும் பான்மையின்
    உரந்தழை தோளினான் ஒளிர்ந்த செம்மணி
    நிரந்தபொற் கடகக்கை நிலவ வேற்றினான்.        197

    [பிரதாபம் பகைவர்களை வெல்வதால் வரும் புகழ். அது செம்மை நிறத்தது என்பர். இருந்திறல்- மிக்க ஆற்றல், வீரம். உரம்- திண்மை. கடகம் – கங்கணம். தன்னுடைய பிரதாபம் திசை எங்கணும் சென்று வளைதமையைத் தெரிவிக்கும் பாங்கினில் திண்ணிய தோளினனாகிய அரசன் செம்மணி பதித்த பொற் கடகத்தைக் கைகளில் நிலவ விட்டான். வாகுவலயம் தோளோடு பொருந்திநிற்பது. கடகம் கையில் உலவ இடுவது.]

    உருவினிற் சிறியராய் உற்று நோக்குழிப்
    பெரியராந் தவத்தினிற் பெரிய மாந்தர்போல்
    உருவினிற் சிறியவா யுலகெலாம் பெறாப்
    பெருவிலை மோதிரம் பிறங்க விட்டனன்.         198

    [உருவினில் சிறியராக, கூர்த்து நோக்கும்போது தவத்தினில் பெரியோர்களாக இருக்கும் மாந்தர்களைப் போல உருவினிற் சிறிதாக இருந்தும் விலைமதிப்பிற் பெரிதாகிய மோதிரம் விரலில் விளங்க இட்டனன்.]

    மின்னுறழ் வேணியாற் கடிமை தோற்றுவான்
    தன்னுடைக் குலத்தவர் தரித்த வார்ந்தொடைப்
    பொன்னரி மாலையும் பூவின் மாலையும்
    பின்னிய மார்பினிற் பிணையச் சாத்தினான்.        199

    [மின்னல்போல் பிரகாசிக்கும் சடையுடையோனாகிய சிவபிரானுக்குத் தன்னுடைய அடிமைத்தன்மை தோன்றுமாறு தன்னுடைய சோழகுலத்தவர் தரித்த பொன்னாலான ஆத்திமாலையும் மலர்மாலையும் ஒன்றோடொன்று பிணைய மார்பில் சாத்தினான். ஆத்திமாலை சோழகுலத்தவர்களுக்கு அடையாள மாலை. சிவனுக்கும் உகந்தது. சிவனை ஆத்திசூடி என்பர்]

    துளிக்கும்நெய்க் கருங்குழற் றோகை மாருயிர்
    விளிக்குமென் றல்குலை மறைத்த மேதகு
    பளிக்குவெள் ளுடையின்மேற் பசும்பொ னம்பரங்
    களிக்கும்வேன் மன்னவன் கவினச் சுற்றினான்.        200

    [மயில் போன்ற சாயலுடைய மகளிரின் ஆருயிரை வாட்டும் என்று அல்குலை மறைத்த பளிங்கு வெள்ளுடையின்மேல் பீதாம்பரம் அழகுறச் சுற்றினான். பசும்பொன் அம்பரம்= பசுமை- மென்மை. அம்பரம் – ஆடை. பொன் அம்பரம்- பீதாம்பரம்]

    மறக்கொடுந் தானைகள் மலிந்து முற்றினும்
    புறக்கொடை கண்டலாற் போரின் நீங்கலாத்
    திறற்குரித் தொழின்மையைச் செப்பி நின்றென
    நிறக்கருங் கழலொலி நிகழ்த்தக் கட்டினான்.        201

    [வீரக் கொடுந்தொழில் மிக்க தானைகளின் புறமுதுகு கண்டலால் போரிலிருந்து நீங்குவதில்லை என போருக்குரிமையுடைய தொழின்மையைச் செப்பி நிற்றல்போலக் காலில் கழல் ஒலிக்கக் கட்டினான். செப்பி நிற்றல்- ஓயாது கூறுதல். கருமை- பெருமை.]

    மற்றைய அணிகளும் வயங்க மெய்ப்படுத்
    துற்றவச் சூழலை யொருவி மற்றொரு
    பொற்றபூஞ் சூழலிற் புக்கு வேதியர்க்
    கற்றுநல் கூர்ந்தவர்க் கம்பொன் வீசினான்.        202

    [பிற அணிகலன்கலையும் விளங்க உடலில் அணிந்த அச்சூழலை நீங்கி, வேறொரு சூழலிற் சென்று, வேதியர்களுக்கும் வறுமையுற்றவர்களுக்கும் பொன் அள்ளிக் கொடுத்தான். வீசினான் – மிகுதியாகக் கொடுத்தான் என்றவாறு.]

    இழைகளு மணிகளு மெண்ணில் பொன்களும்
    மழைநிகர் களத்தவர் மகிழுங் கோயிலுக்
    குழையரைக் கூய்க்கொடுத் துற்றுச் சங்கொலி
    தழைவுறக் கோயின்முன் வாயில் சார்ந்தனன்        203

    [அணிகலன்களும் இரத்தினமணிகளும் அளவிலாத பொன்களும் நீலகண்டராகிய இறைவர் மகிழ்ந்துறையும் திருக்கோயிலுக்கு ஏவலரைக் கூவி அழைத்துக் கொடுத்து, சங்கொலி முழங்க அத் திருக்கோவிலின் வாயிலை அடைந்தனன்.]

    ஏவல ருரைத்தலா லேற்று வல்லையிற்
    காவலர் தொகுதியுங் களிறுந் தேர்களும்
    வாவுமாத் திரள்களு மள்ள ரீட்டமுந்
    தாவரு மமைச்சருந் ததைந்த பாங்கரும்.        204

    [ அரசனின் ஏவலர் உரைத்ததை ஏற்று விரைவில் காலாட்படையும் யானை தேர் குதிரைப்படையினரும் மள்ளர்களின் கூட்டமும் பிரியாத அமைச்சர்களும் நெருங்கிய தோழர்களும்]

    இளையரும் பாணரும் ஏனை யோர்களும்
    அளவிலர் துவன்றின ராங்கு நோக்கினான்
    ஒளியுமிழ் பருமவல் லொருத்தல் யானைமேற்
    களிமயின் முருகனிற் காண வேறினான்.        205

    [இளையர்- பணியாட்கள். பணியாட்களும் பாணரும் ஏனையவர்களும் கணக்கற்றவர் நெருங்கிக் கூடியவர்களை அங்கு அரசன் நோக்கினான். ஒளிவீசும் மத்தகமுடைய வலிய களிற்றின் மேல் முருகனைப் போலக் காட்சியளிப்ப ஏறினான். முருகனுக்கு யானை வாகனம் உண்டு. முருகனின் யானைக்குப் பிணிமுகம் என்று பெயர்.]

    கலிநிலைத்துறை
    சழங்க நின்புகழ் மதியெனைச் சமர்விளைத் தலைக்கும்
    பழங்கண் தீர்மதி யெனப்படர்ந் தொளிர்பணிக் கிரணம்
    வழங்கு வெண்மதி விடாதுடன் தொடர்வது மானக்
    குழங்கன் மாலைசூழ் முடிமிசைக் குரூஉக் குடைநிழற்ற        206

    [கொடை முதலியவற்றால் வரும்புகழ் கீர்த்தி எனப்படும் என்றும் அது வெண்மை நிறம் என்றும் கூறுவர். பிரதாபம் சூரியனைப்போலச் செந்நிறம்; கீர்த்தி சந்திரனைப்போல வெண்ணிறம். வெண்மதியாகிய என்னை நின்புகழ் சழங்க அலைக்கும். சழங்க அலைக்கும்- தளர்வுர வருத்தும் அந்தத் துன்பத்தைத் தீர்ப்பாயாக என வெண்மதி விடாது தொடர்தல் வருதல்போல வெண்கொற்றக் குடை முடிமேல் நிழலைச் செய்ய]

    பருப்பு வாய்ந்துசேர்ந் தொழுகிய பனைக்கையை நெருக்கு
    மருப்பு வாய்ந்தெழும் அரசுவா வெனுமணி தயங்கும்
    பொருப்பு வாய்ந்திரு புறத்தும்வெள் ளருவிதுள் ளியபோல்
    விருப்பு வாய்ந்துநின் றிரட்டுசா மரைபுடை விளங்க.        207

    [பருப்பு- பருமை. அரசு உவா- அரசர்கள் ஏறுவதற்கு உரிய யானை. பொருப்பு- மலை. பருத்து பனைமரம் போன்று நீண்ட துதிக்கையினை நெருக்கி தந்தம் வாய்ந்த அரசுவா எனும் மணிவிளங்கும் மலையின் இருபுறமு வெள்ளிய அருவிகள் துள்ளிப் பாய்வது போல் வெண்சாமரைகள் இருபுறமும் இரட்ட]

    அசும்பு பூங்கதிர்ப் பொலங்கல னொளியினால் யாக்கை
    பசும்பொன் மாநிறம் படைத்தகை மாவி னும்பர்கள்சூழ்
    இசும்பின் மேருவி னிலங்கு மத்திறம் பொரவெழுந்து
    விசும்பு தைவரும் புலிக்கொடி வயங்கி முன்மேவ.        208

    [அசும்பு- திவலைபோலச் சிதறுதல். கைம்மா- யானை. இசும்பு-வழுக்கு. ஏறவியலாமை எனவும் கூறுவர். தைவரும்- தடவும்.பொன் அணிகலன்கள் சிதறுகின்ற ஒளித் திவலையால் உடல் பசும்பொன்நிறம் படைத்த யானை, தெவர்கள் சூழ்ந்த, ஏறி இழிதற்கரிய வழுக்கலுடைய மேருமலையினைப் போலப் பொலியும். மேருமலையின்மேல் பொறிக்கப் பட்ட புலி இலச்சினைபோல விண்ணைத் தடவி புலிக்கொடி முன்னே விளங்க. சோழர்கள் மேருமலையின்மேல் புலிப்பொறி பொறித்தனர் என்பது வரலாறு]

    கிடுகு சூழ்மணித் தேர்களெண் ணிலகிள ரொளியிற்
    புடையெ லாநெரி தரக்களி றவற்றுடைப் புறத்தின்
    அடைய வாம்பரி யவற்றுடை மருங்கெலா மடரப்
    படைகள் யாவையு மவற்றுடைப் பாங்கரிற் பரவ.        209

    [கிடுகு- தோற்கேடயம். வாம் பரி- வாவும் பரி, வாவுதல் குதிரையின் நடை வகைகளில் ஒன்று. முதலில் தேர்ப்படை, அதன்பின் யானைப்படை, அதன்பின் குதிரைப்படை அதன்பின் பிற படைகள் யாவையும் பரந்து செல்ல]

    இயங்க ளாதிய தழங்கொலி யிடிக்குரல் காட்டக்
    கயங்க ளூற்றிய கடமழைத் தாரையைக் காட்ட
    வயங்கி யாடுநன் மாதரார் மின்னினைக் காட்டத்
    தயங்கு பன்னிறமுகில் பொருங்குழாத் தொடுஞ்சார்ந்தான்.       210

    [இயம்- இசைக்கருவிகள். தழங்கொலி- பேரொலி.கயம்- கஜம், யானை. கடம்- மதநீர். பொரும்- ஒக்கும். பல்வகை இசைக்கருவிகளின் பேரொலி இடியின் குரலைக் காட்ட, யானைகள் ஊற்றெடுத்த மதநீர் மழைத் தாரையைக் காட்ட, ஆடுகின்ற மகளிர் மின்னலைக் காட்ட இவ்வாறு விளங்குகின்ற பலநிற மேகத்தினை ஒக்கும் குழாமுடன் சார்ந்தான்.]

    முத்தி னூர்தியுங் கவிகையு மூரியங் கொடியும்
    பத்தியாய் மிடைந்தெங்கணும் பகலுருக் கரந்த
    மத்த யானையின் மன்னனா மிரவி மற்றொன்றே
    தத்து நீர்ப்புவிக் கமையுமென் றொழிப்பது தகைய.        211

    [முத்துச்சிவிகையும் முத்துக் குடையும் பெரிய கொடியும் ஆகியன வர்சை வரிசையாகச் செறிந்து எங்கும் சூரிய ஒளியை மறைத்தன; மத்த யானையின்மேல் வரும் ஞாயிறு ஒன்றே இவ்வுலகுக்கு அமையும் வேறொன்று ஒளி கொடுக்கத் தேவையில்லை என்று ஒழிப்பது போன்றதாம். மற்று- அசைநிலை.]

    மகர தோரணம் பூரண கும்பங்கண் மலிந்து
    சிகர மாளிகை செற்றிய திருமக ளுறைதன்
    நகர வீதியிற் புகுந்தனன் நடத்தலுங் காணுந்
    தகர வார்குழற் றையலா ரிவையிவை செய்வார்.        212

    [மகர தோரணம்- மகரமீனின் வடிவில் அமைந்த தோரணம். சிகரம்- உச்சி. தகரம்- மகளிர் கூந்தலுக்குப் பூசும் வாசனைக் குழம்பு. மகரதோரணங்கள், பூரணகும்பங்கள் நிறைந்து, உயர்ந்த மாளிகைகள் செறிந்த, திருமகள் வாழும் நகரத்தின் வீதியில் அரசன் புகுந்தனன். தகரம் பூசப் பெற்ற கூந்தலையுடைய மகளிர் இவையிவை செய்வார்.]

    தாள்வ ரிந்தபொற் கழலினான் றன்னொளிக் கஞ்சி
    வாளு லாங்கணார் வாழ்மனை யுட்புகுந் தொளிக்குங்
    கேள லார்பிர தாபத்தைக் கெழீஇக்கொணர்ந் திறுத்தாங்
    காளும் வேந்தன்முன் னரக்குநீர் சூழ்த்திமண் கவிழ்ப்பார்.        213

    [தாளில் பொற்கழல் கட்டிய அரசனின் ஒளிக்கு அஞ்சி மகளிர் வாழும் கட்டிலுள் புகுந்து ஒளிந்துகொள்ளும் பகையரசர்களின் பிரதாபத்தைப் பற்றிக் ஒண்டு வந்து கவிழ்ப்பது போல உலகாளும் வேந்தன்முன் அரக்கு நீர் சுற்றி நிலத்தில் ஊற்றுவார். அரக்கு நீர்- குங்குலிய நீர். செந்நிறம். பிரதாபம் செந்நிறம் என்பது பலவிடங்களிலும் வந்துள்ளது. அயினி நீர் என்றும் கூறப்படும். இது கண்ணேறு கழித்தல் அல்லது திருஷ்டி கழிஹ்தல் எனப்படும்.]

    பரந்த மன்னவன் புகழினைப் பயந்திலந் தோறுங்
    கரந்த வேற்றவர் புகழையுங் கவர்ந்தனர் கொணர்ந்தாங்
    குரந்த வாக்களிற்றடியின் கீழ்ப்படுத் தொழிப்பார்போல்
    நிரந்து மண்ணெலா மறைதர வெண்பொரி நிறைப்பார்        214

    [கரிகாலனின் பரந்த புகழினுக்குப் பயந்து வீடுகளில் மறைந்து வாழும் பகைவர்களின் புகழையும் கவர்ந்து கொண்டுவந்து வலிமை நீங்காத களிறுகளின் காலில் நசுக்கி ஒழிப்பார்களைப் போல் நிலமெலாம் மறையும் படி வெண்பொரி சிதறுவார். வெண்பொரி தூவி வாழ்த்துதல் மரபு. அட்சதை இடுதல் என்பர். கீர்த்தி வெண்மை நிறம். உரம்- வலிமை. தவா- நீங்கா.]

    வண்டு சூழ்பசுந் துழாய்த்தொடை இன்றுமார் பகத்திற்
    கொண்ட தீர்ஞ்செழுஞ் சாந்தணி யாதலாற் குனிகோ
    தண்ட வார்சிலை யானல னிவன்றடக் கையிவேல்
    கண்ட லாலுமை கான்முளை போலுமென் றறைவார்.        215

    [இவனுடைய மார்பகத்தில் வண்டு மொய்க்கும் துழாய் மாலை இல்லை; குளிர்ந்த சந்தனமே உள்ளது. இவனுடைய வலிய கரத்தில் கோதண்டம் இல்லை; கையில் வேல் காணப்படுதலால் இவன் உமையின் மகனே போலும் என்று கூறுவார்]

    கோழி யான்குறு காருயிர் குழைதரச் செலுத்தும்
    ஆழி யானென விருதெழுந் தார்த்தலா லிவனை
    வாழி வேளென மதித்துமோ காஞ்சியிற் றவத்தாற்
    காழி னீங்குமா லென்றுமோ வென்றனர் கரைவார்.        216

    [கோழியான், ஆழியான் என்பன சிலேடை. கோழி என்பது உறையூர், உறையூருக்கு உரிமையுடைய சோழன். இது ஒரு பொருள். கோழிக்கொடியை உடைய முருகன். ஆழி கடல், சக்கரம். கோழிக் கொடியன், அன்பினால் அணுகாதவர் உயிரைக் குழைவிக்கும் கருணகிக்கடல்.(முருகன்) பகைவர்களின் ஆருயிரை வருத்தும் ஆணைச்சக்கரத்தை உடையவன் ( சோழன்) என விருது எழுந்து ஒலித்தலால், இவனை முருகன் என மதிப்போமோ? அல்லது முன்னைத் தவத்தால் காஞ்சியில் குற்றத்தின் நீங்கி (கருமை நீங்கி வெண்ணிறம் பெற்றமை) சிவசாரூப்ம் பெற்ற திருமாலென்போமோ? (இந்த வரலாறுகள் முதற் காண்டத்தில் உள்ளன]

    வேட்ட யாவையு மிரக்குமுன் வீசிடுந் திறத்தாற்
    கோட்டந் தீர்மனப் பெருந்தகை தவத்தினாற் குழைந்து
    வாட்ட முற்றலால் வரங்கொடா வானவர் தம்மால்
    ஈட்ட ரும்புகழ் படைத்தவேற் றமரனே யென்பார்.        217

    [வேட்ட- விரும்பிய. வீசிடும்- வாரிக்கொடுக்கும். கோட்டம்- குற்றம். விரும்பின யாவற்றையும் கேட்கும் முன்னர் அள்ளி வழங்கிடும் பெருமையுடையோன், மனக்கோட்டம் நீங்கிய தவத்தினால் வருந்தினால் அல்லாமல் வரங்கொடாத தேவர்கள் தம்மால் இட்ட முடியாத புகழுடைய வேல் வீரன் முருகனே. வேல்+து+ அமரன்= வேற்றமரன்.குறிப்பு வினையாலணையும் பெயர்.]

    முருக வேள்களி றூரவம் முருகனைத் தணவாத்
    திருவில் வீசிய கலாவமா மஞ்ஞைபின் சேறல்
    பொருவ வேலவன் குஞ்சரத் திம்பரோர் பொலங்கொம்
    புருவ னாள்குழ லலைய மால்கொண்டுடன் படர்வாள்.        218
    [தணவா- நீங்காத. திருவில்- இந்திரவில். கலாவம்- தோகை. முருகவேள் களிற்றினை ஊர, அவரை என்றும் பிரியாத இந்திரவில் போன்ற கலாபத்தை உடைய மாமயிலேறு பின்தொடரல் போல, வேலவன் ( அரசன்) உலாவரும் யானையின் பின் பொற்கொம்பினைப் போன்ற உருவ அழகினள் ஒருத்தி தன் கூந்தல் அலைய அரசன்மேல் மயக்கம் கொண்டு உடன் தொடர்வாள்]

    கொழுது தேனிமிர் தொடையலங் கோனவ னழகு
    முழுதுங் காணிய தம்மெதிர் முன்னவெங் களிற்றுக்
    கெழுது தொய்யிலைக் கரும்பிதோ வென்றுகாட் டுநர்போற்
    பழுதி லாமணிக் கச்சுக நிற்பர்கள் பல்லார்        219

    [தொய்யில், கரும்பு- இளமகளிர் பண்டைநாளில் மார்பில் குங்குமக் குழம்பால் எழுதும் ஓவியம். இது பண்டைய மகளிரின் ஒப்பனை வகைளில் ஒன்று. வண்டுகள் மூசும் தேன்சொட்டும் மாலையணிந்த அரசனின் அழகை முழுதும் காணும்பொருட்டு தம்மெதிர் வரும் களிறுக்கு தம் தொய்யிலைக் கரும்பு இதோ என்று காட்டுவார்போல் தம்மார்புக் கச்சு கழன்று கீழ் விழ நிற்பார், பல்லோர். யானை கரும்பினை விரும்பி உண்ணும். கச்சு உகுதல் காமத்தைக் காட்டும்.]

    இரும்பு பாய்ந்துபுண் ணிணங்கிய மத்தகந் தமது
    பெரும்பொன் மேகலை யல்குன் மத்தகத்தெழில் பெறாமை
    சுரும்பு மூசிய கடகரிக் குணர்த்துவார் துணைய
    விரும்பு நீவி யுமிழ்ந்தனர் வெறியராய் நிற்பார்.        220

    [இரும்பு- அங்குசம். யானையக் கடாவச் செலுத்தும் ஆயுதம். நீவி- கொய்சகமாக உடுத்த ஆடை. வெறியர்- வெற்றுடம்பர். அங்குசத்தால் குத்தப்பட்டுப் புண்வாய்ந்த மத்தகம் தமது பொன்மேகலை அணிந்த அல்குலின் மத்தகத்தின் அழகினைப் பெறாமல் இருப்பதை அரசன் ஏறிவரும் யானைக்கு உணர்த்துவார்போல் விரும்பியணிந்த ஆடையும் நழுவ வெற்றுடம்பினராய் நிற்பார்]

    களிறுதேர் பரிமுதலிய வேண்டினர் கவரக்
    குளிறுவார் முரசிறைக்கு நங்குரு மணிக்கச்சோ
    டொளிறுவாள் வளைகலை கவர்ந்துத விடாதேகும்
    வெளிறு மாத்திரை யிருந்த தெம்விதிப் பயனென்பார்.        221

    [யானை, தேர், பரி முதலிய பரிசில்கள் விரும்பியவர்கள் கைக்கொள முழங்குகின்ற கொடைமுரசுடைய அரசனுக்கு நம்முடைய நிறமுடைய மணி(முலை)க் கச்சோடு சங்குவளை, ஆடை கவர்ந்துகொண்டு நமக்கு உதவிடாது செல்லும் அறியாமை இருந்தது எம்முடைய விதிப்பயன் என்பார். பிறருக்கெல்லாம் ஈபவன் நம்முடையதைக் கவர்ந்து கொண்டு உதவாமல் செல்வது தம்விதியின் பயனென்று நொந்துகொள்வார். குளிறு முரசு- ஒலிக்கின்ற முரசு. வால்- வெண்மை. வளை-சங்கு. வெளிறு- அறியாமை.]

    வள்ளல் காமருக் குருவுடன் மதனிருந் தானே
    லுள்ள மாழ்குவ னெனனினைப் புகழ்ந்தன முதற்கே
    புள்ள வாந்தொடைப் புயத்தவப் போர்மதன் வெகுண்டு
    கள்ள வார்கணை தொடுத்தனன் காண்மதி யென்பார்.         222

    [வள்ளல்- கரிகாலன். காமர்- அழகிய. மாழ்குவன் -வருந்துவன். உதற்கே- அதற்கே. புள் அவாம் தொடை- வண்டுகள் விரும்பும் மலர் மாலை. கள்ள வார் கணை- சிலேடை. வஞ்சகமான கணை, தேனுடைய மலர்க்கணை. தொடுத்தனன் -எய்தனன்.
    வள்ளலாகிய கரிகாலனே! மன்மதன் உருவுடையனாக இருந்தால், உன்னுடைய அழகினைக் கண்டு இவ்வழகு தனக்கு இல்லையே என வருந்தியிருப்பான் என உன்னைப் புகழ்ந்தோம். அதற்கே, மன்மதன் எங்கள்மேல் மதுமலர்க்கணைகளை எய்தனன். காணுவாயாக]

    தீய மன்னவன் உறினும் ஆடவர்க்கலாற் றீங்கு
    பாய மேகலை மாதருக் கியற்றிடான் பழிதீர்
    தூய னாகியும் எங்களைத் துயர்செய லழகோ
    காயும் வேலவ கடைக்கணித் தருளெனக் கசிவார்.         223

    [ தீயமன்னவன் வந்து எதிர்ப்பினும் ஆடவவர்க்கு அல்லாமல் மகளிருக்குத் தீங்கு செய்யான் என்று நீ(கரிகாலன்) பழியற்ற தூயவனாக இருந்தும் எங்களை வருத்துதல் அழகோ? எம்மீது கடைக்கண்ணருள் செய்தருள்க’ என உருகுவார்.]

    நடையி னானினை நகைத்திடு நங்கள்பான் மறலிக்
    கொடையி னாலுயர் குமரனைக் கொணர்ந்தெம துளங்கள்
    உடையு மாறுகண் டாய்தகுந் தகுமுனக் கென்னாப்
    புடையு லாவிய குஞ்சர நோக்கினர் புகல்வார்.         224

    [மாதர் நடைக்குக் களிற்றின் நடை உவமமாகக் கூறப்படும். தங்களின் நடை யானையின் நடையைக் காட்டிலும் அழகாக இருத்தலினால் யானையின் நடையினை இம்மகளிர் இழித்து நகைத்தனர். அதனால் விரோதங்கொண்டு, யானை இக்குமரனக் கொண்டுவந்து தங்கள் உள்ளம் உடையுமாறு செய்தது என்றும் தங்கள் இழிசெயலுக்குத் தண்டனையாக அது தகும் தகும் என்று யானையை நோக்கிப் புகல்வர். மறலி- மாறுபட்டு, பகைகொண்டு. தகும் தகும் என்றது தக்கது என்னும் குறிப்பினை உடையது.]

    மறலி யாடிய மன்னரை மறலிகை யாடுந்
    திறல்செய் வானெழி னோக்குமுன் ஒழிதியேற் சினவி
    யறலின் வார்மதக் கவுளினா யலர்முலைக் கோட்டால்
    விறலி லாவகை வேறுநின் கோட்டினை யென்பார்.         225

    [மறலி- பகை, முரண்பாடு. மறலி- எமன். கையாடும்- பாராட்டும். ஒழிதியே- நீங்குவாயெனில். அறல்- நீர் ஒழுக்கு. விறல்- வெற்றி. ‘விறலிலாவகை நின் கோட்டினை வேறும்’ என முடிக்க. வேறும்- வெல்லுதும். பகை கொண்ட அரசரை, எமனும் பாராட்டும் வண்ணம் அழிக்கும் திறத்தைச் செய்வானுடைய எழிலை முழுதும் நோக்கும் முன்னம் எங்கள் பார்வையிலிருந்து அகலுவையேல், சினந்து, நீரொழுக்குபோல் ஒழுகும் மதநீருடைய கவுளினாய் (களிறே), எம்முடைய முலைக் கொம்பினால், (முலைக்கு யானைத் தந்தத்தை உவமையாகக் கூறுவர்.) உன்னுடைய தந்தங்களின் வீறு அழியும்படியாக வெல்லுவோம்.]

    பிடிக ளாமெனத் தம்மையே பெட்டரு கணைந்த
    கொடிய போர்சவட் டரசுவாக் கொழுந்துளைக் கரத்தாற்
    றொடிகுலாவிய தோளினைக் கரும்பெனச் சுழிப்ப
    வடிகள் பாலிட வெடுப்பதா மெனவகங் களிப்பார்.         226

    [(நடை ஒப்புமையால்) பிடிகளாம் என்று நினைந்து விரும்பித் தம் அருகில் அணைந்த அரசு உவா(அரசன் ஊரும் களிறு) தன்னுடைய நீண்ட தொளையுடைய துதிக்கையால், தொடிகள் அசையும் தோளினைக் கரும்பு என வளைக்க ( தோளில் எழுதுவது கரும்பு. முலையில் எழுதுவது தொய்யில்) களிறு தம்மை அரசனிடத்தில் சேர்ப்பதற்கு அவ்வாறு செய்கின்றது என உள்ளம் மகிழ்வர். சவட்டுதல் – காலால் தேய்த்து அழித்தல். சுழிப்ப- வளைக்க. அடிகள்- தலைவன். அரசுவா- அரரசன் ஏறும் யானை.]

    அலகி லாதபல் லுயிர்களும் விம்மித மடைய
    வுலகெ லாங்குளிர் செய்யுமிக் காவலர்க் குவமை
    விலகு தன்னுடை வனப்பினால் வினையினே முளத்தில்
    இலகு காமவெந் நெருப்பிட லிசைவதோ வென்பார்.         227

    [அளவிலாத பல்லுயிர்களும் இன்பம் அடையுமாறு உலகுக்கெல்லம் குளிர்ச்சியைச் செய்யும் இவ்வரசர் பெருமான், உவமையிலாதன் அழகினால், பாவியேங்கள் உளத்தில் காமத்தீயினை இடுதல் அவனுடைய கருணை உள்ளத்துக்கு இசைவதோ என்பார்.]

    கனைக திர்ப்பொலந் தாரினான் காமவே ளுடற்ற
    இனையு நம்முகம் நோக்கலன் இவன்றிருக் காஞ்சி
    வனம ழித்தெழில் புரிந்தலான் மடந்தையர்ப் பாரா
    நினைவு பூண்டுயர் விரத நேர்ந் தான்கொலோ வென்பார்.         228

    [ஒளிவீசும் பொன்மாலத் தாரினானாகிய கரிகாளன், காமவேள் வருத்தத் துன்புறும் நம்முடைய முகத்தைப் பார்க்கான். காட்டினை அழித்து அழகிய நகரம் அமைத்தலான் மகளிரைரைப் பாராத விரதம் பூண்டுளானோ என்பார்]

    வட்ட வெண்குடை மதிக்குடை யாகுமன் னவனும்
    பட்ட வேளுருப் படைத்தவ னாமெனப் படர்ந்து
    மொட்டு லாமுலைக் கணைப்புயக் கருப்புவின் முறையாம்
    பெட்டு நின்கரத் தணைப்பது பெருமவென் றணைவார்.         229

    [மன்னவன் , இறைவனின் நெற்றிக் கண்ணால் எரிந்து அழிந்த வெண்மதிக் குடையன் மன்மதனின் உருவினைப் படைத்துள்ளான். ஆகையால் எங்கள் முலையாகிய தாமரை மொட்டம் அம்பினையும் கரும்பு வில்லாம் தோளினையும் அணைப்பது பொருத்தம் என்பார். மன்மதனுக்குச் சந்திரன் குடை. ]

    இருளு லாங்குழன் மாதர்கள் பலருமிவ் வாறு
    மருளு லாமதன் கணைக்கிலக் காயினர் வழுத்தத்
    தெருளு லாந்திறன் மன்னவன் றிண்களி றுகைத்துப்
    பொருளு லாந்தன தணிநகர்க் கடந்தனன் போந்தான்         230

    [ மாதர்கள் பலரும் இவ்வாறு மயக்கஞ்செய்யும் மன்மதனுடைய கணைக்கு இலக்காயினராகித் துதிக்க, மன்னவன் களிற்றின் மீதூர்ந்து வளம் நிறைந்த தன் அணிநகர் கடந்து போந்தான்.]

    கதிகொள் சேனையின் முழக்கினைக் காரெனக் கருதி
    வதியின் பாங்கம ரிலஞ்சியோ திமங்கள்வான் புகுவ
    துதிகொள் இந்திரன் புவியினி லரசுசெய் தோற்றம்
    நிதிகொள் வானவர்க் குரைத்திடப் போவது நிகர்ப்ப         231

    { கதி- காலாட்படையின் நடை வகை. இலஞ்சி- வாவி.
    வாவியில் இருக்கும் தாமரைமலர்களின் மேல் வதியும் அன்னங்கள், படையின் நடை ஒலி முழக்கைக் கேட்டு இடியென அஞ்சி வானிற் பறந்தன. அது வணக்கத்திற்கு உரிய இந்திரன் மண்ணரசாள்கின்ற தோற்றத்தை விண்ணவர்களுக்கு உரைத்திடப் போவது போலிருந்தது.]

    பொன்னி மாமனை யாடனைப் புணர்ந்திடா திகந்த
    தென்னை யோமனக் குறிப்பினை யறிதுமென் றெண்ணிக்
    கொன்னும் வார்கடல் குறுகினா லெனப்படைக் குழாத்தோ
    டன்ன மாடுபூங் காவிரி குறுகியங் ககன்றான்.         232

    [பொன்னி- காவிரி. காவிரி யாகிய மனையாள் தன்னைப் புணர்ந்திடாமல் தவிர்ந்தமைக்குக் காரணம் என்னவோ, அவள் மனக் குறிப்பை அறிவோம் என்று எண்ணி, ஒலிக்கின்ற கடல், படைக் குழாத்தோடு செல்வதுபோல், அன்னம் ஆடும் பூஞ்சோலையாகிய காவிரி அணுகி அகன்றான்.. ஆறுகளுக்குக் கணவன் கடல் என்பது மரபு. சோழநாடு பகைமன்னர்கள் ஆட்சிக் குட்பட்டிருந்தமையால் புணரவில்லை என்பது குறிப்பு. கா- சோலை. ]

    நாடும் பற்பல கானமு நகரமுங் கடவா
    வோடை யானையி னொருகுடை மன்னவ னடைந்தா
    னீடு மன்பர்க ளுளத்தினுஞ் சிரத்தினு நிருத்த
    மாடு மண்ணலார் காஞ்சிமா நகரணித் தாக         233

    [அன்பர்களுடைய உள்ளத்திலும் சிரத்திலும் என்றும் கூத்தாடும் இறைவரின் காஞ்சிமா நகருக்கு அணித்தாக, நாடும் பற்பல கானகங்களும் நகரங்களும் கடந்து யானையின் மேல் ஒப்பற்ற வெண்கொற்றக் குடைக்கீழ் மன்னவன் அடைந்தான். ]

    கொச்சகக்கலிப்பா
    பொன்னாடர் கோன்வருவா னெனப்பெருமான் புகன்றமொழி
    முன்னேபெற் றுறுங்காஞ்சி மொய்குழற்றெய் வதமின்னு
    மென்னேவந் திலனென்று தனைவானத் திடைதுருவத்
    தன்னார்கைத் தலநிமிர்த்தாற் போன்றதளிர் வனங்கண்டான்.         234

    [வானநாட்டரசன் இந்திரன் காஞ்சி நகரை அமைக்க வருவான் என இறைவன் புகன்ற மொழி. காஞ்சியின் அதிதேவதை இன்னும் ஏன் பொன்னாடர்கோன் வந்திலர் என்று ஆகாயத்தைத் துருவக் கைத்தலத்தை நிமிர்த்தியதைப் போலத் தளிர்த்த மலர்ச்சோலைகளைக் கண்டான்]

    பரவுபெரு மானருளால் காஞ்சிவளம் பயிற்றவரும்
    வரமுணர்ந்தவ் வயின்முன்னே தனைக்காண வந்திருக்கும்
    அரமகளிர் காண்டலுநின் றாட்டயர்வ தெனவளிபாய்
    குரவமலர்க் கொடிபலவுங் குழைந்துநுடங் குவகண்டான்.        235

    [பரமேசுவரன் அருளால் காஞ்சியை வளம் பெறச் செய்யும் வரம் பெற்றுள்ள தன்னைக் காண வந்திருக்கும் தேவமகளிர் கண்டவுடன் மகிழ்ந்து ஆடுவதைப்போல காற்று அலைக்க குரவமலர்க் கொடிகள் பலவும் குழைந்து அசைவதைக் கண்டான்.]

    தமதுருவ மொருகாலைத் தழீஇக்கொண்ட நெடுவிசும்பின்
    அமரர்கள் நாயகன் வந்தானெனத் தனைக்கண் டார்வமொடு
    குமரிமயிற் குலமுமிருள் கூர்நிறத்த குயிற்குலமும்
    இமிழிசையு நாடகமு மெங்கணு மீட்டுவ கண்டான்.         236

    [இந்திரன் மயிலாகிப் போர்க்களத்தில் முருகப் பெருமானைத் தாங்கினான்; தக்கயாகத்தில் வீரபத்திரருக்கஞ்சிக் குயிலாயினன். இவ்வாறு தமதுருவத்தை முன்னொரு சமயத்தில் தழுவிக் கொண்ட அமரர் நாயகன் வந்தான் என அவனைக் கண்டு ஆர்வமுடன் இளமயிற்கூட்டமும் இருள்நிறம் கூர்ந்த குயில் கூட்டமும் இனிய இசைபாடுவதையும் நாட்டியம் ஆடுவதையும் கண்டான்]

    இந்திரன்வந் தடவியெலா மிறுக்குமென இறைமாற்றந்
    தந்ததுணர்ந் தெனக்காடு சினஞ்செய்து தானூருஞ்
    சுந்தரவா கனமாகிச் சுலவுகரு முகிலினத்தை
    அந்தரத்தி னியங்குதொறு மடர்ந்துநெருக் குவகண்டான்         237

    [இறுக்கும்- இறுதிசெய்யும், அழிக்கும். இந்திரன் வந்து காட்டினை அழிக்கும் என்று இறைவன் வாக்குத் தந்தமையைக் காடு உணர்ந்து, தான் வாகனமாகத் தன்மேல் ஏற்றி வரும் கரிய மேகம் அடர்ந்து நெருங்குவதைக் கண்டான். வனம் அடர்ந்து உயர்ந்து இருப்பதால் அதன்மேல் கார்மேகம் தங்கியிருப்பதால், வனத்தை மேகத்தைத் தாங்கும் வாகனமாகக் கூறினார்.]

    விடமுகுக்கும் பணப்பாந்தள் விமலர்திரு மார்பகத்து
    படவரவத் தொடுமுறவு பாராட்டிப் பிலவழியே
    யிடமுடைத்தம் பாதலத்துக் கேகுவபோற் றனைநோக்கித்
    தடநெடும்புற் றளைகடொறுஞ் சார்ந்துகரப் பனகண்டான்.         238

    [ விடத்தை உமிழும் படமுடைய பாம்புகள் இறைவரின் அகன்ற மார்பகத்தில் அணிகளாகத் தவழும் பாம்புகளுடன் உறவு பாராட்டிப் பிலத்தின் வழியே தம்முடைய பாதலத்துக்குச் செல்லுவதைப்போல், தன்னை நோக்கிய பாம்புகள் நெடும் புற்றில் அமைந்துள்ள வளைகள் தோறும் சென்று மறைவதைக் கண்டான்.}

    ஆளவருந் தனைநோக்கி யழிவுதமக் குற்றதென
    வூளையிடு கின்றனபோ லொளியுமிழ்மண் டிலமறைய
    நீளுமிருட் கானகத்து நிரந்தர மலர்த்தரு முழுதுங்
    காளகமென் சுருப்போதை காட்டியசை வனகண்டான்         239

    [ஆளவரும் தன்னைப் பார்த்து தமக்கு அழிவு வந்துற்றது என ஊளையிட்டு அழுவது போல் சூரிய மண்டலமெலாம் மறைய நீண்டு இருள் பரந்த கானகத்தில் நிரந்தரமாக மலர்ந்த மரங்கள் தொறும் கார்மேகம் எனக் கருவண்டுகள் ஓசைகாட்டி அசைவதைக் கண்டான்.]

    இலகுமரக் கொளிபடைத்த பின்னருமீர்ந் துளவணிந்த
    தலைவனவன் றமைநிகர்ப்பத் தாங்களுமங் குயர்தவத்தா
    னிலவுமரக் குருவாய்ந்து நிற்பனபோற் பூவையெலாங்
    குலவியகோங் குமிழ்தாதிற் குளித்தொளிருங் கவின்கண்டான்.         240

    [திருமால் தன்னுடைய உயர் தவத்தால் கரிய நிறம் நீங்கிப் பவளவண்ணம் பெற்றான். இந்தவரலாறு முதற்காண்டத்தில் கூறப்பட்டது. திருமால் தன் தவத்தால் கரிய நிறம் நீங்கிப் பவள நிறம் பெற்றதைப் போல, பூவைகள் எல்லாம் அரக்கு உருவம் வாய்த்திருந்து, கோங்கம்பூக்கள் பூக்கள் உதிர்த்த தாதில் குளித்துப் பொன்னிறம் பெற்ற கவினைக் கண்டான்]

    ஓங்குபுளி னத்தரிக ளுருத்தழித்த கரிக்கோடு
    தங்குபொலம் பூங்கடுக்கை பிறைதவழுஞ் சடைத்தேவை
    வீங்கியவன் பாற்றொழுது மேவரிய தவமுஞற்றி
    யாங்கணுயர் சாரூப மடைந்தவர்போல் வனகண்டான்.        241

    [புளினம் –மணல்மேடு, ஆற்றிடைத்திட்டு. அரி- அரித்தல், வரிகள். செம்மணற் குன்றுகளின் மேல் கரிக் கோடுகள் தங்கிய கொன்றைக் காய்கள், பிறைதவழும் சடைத் தேவை அன்பால் தொழுது அரிய தவம் செய்து சிவசாரூபம் பெற்றவர்களைப் போல இருத்தலைக் கண்டான். கொன்றையின் காய்கள் சிவனின் சடைமுடியைப் போன்று இருத்தலைப் பெரிய புராணம் ஆனாய நாயனார் வரலாற்றில் காண்க.]

    வனமழிப்ப அடைந்திடுந்தன் வரவறிந்து முன்னாகச்
    சினமொடுதம் முடல்தாமே சிதைத்திறப்ப தெனவிலங்கின்
    இனமுழுது மொன்றோடொன் றிகலியிருஞ் சமர்விளையா
    அனலுறுநெய்த் தோர்கான் றாவிவிளி வனகண்டான்.         242

    [காட்டை அழிக்கும்பொருட்டு அடைந்திடுந் தன் வரவினை அறிந்து, முன்னதாக, சினத்துடன் தம்முடலைத் தாமே சிதைத்து இறப்பது என, விலங்கினங்கள் முழுதும் ஒன்றோடொன்று போரிட்டு நெருப்புப் போன்ற செந்நீர் சொரிந்து இறக்கும் காட்சியைக் கண்டான். சமர்- சண்டை. நெய்த்தோர்- இரத்தம்.]

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    இவ்வகை வளங்க ணோக்கி வனம்புகு மெல்லை யேழு
    பவ்வமென் றயிர்க்குந் தானைப் படரொலி கேட்ட லோடும்
    அவ்விய வேடராகி யணங்கிய சிந்து மேதன்
    றெவ்வடு திறன்மா மேதன் இருவருஞ் சீற்றங் கொண்டார்.         243

    [ இத்தகைய காட்சிகளைக் கண்டு கொண்டே காட்டினுள் புகும்போது, ஏழுகடல்களின் ஒலியென படையெழுச்சியின் பேரொலியைக் கேட்டு, கான வேடுவர்களின் தலைவர்களாகிய சிந்துமேதன். மாமேதன் என்பார் இருவரும் கடுங் கோபம் கொண்டனர். பவ்வம்- கடல். அயிர்க்கும்- ஐயுறும். அவ்விய வேடர்- வஞ்சக வேடர். அவ்வியம்- மனக்கோட்டம். அணங்கிய- வருத்திய. தெவ்- பகை.}

    நம்முடை வனத்தஞ் சாது நண்ணிய படைக ளெல்லாம்
    இம்மெனு முன்னர்க் கோறும் எனத்தெழித் தெழுந்து வல்லே
    தம்மினத் தவரைக் கூவத் தலைத்தலை நின்ற வாண்மைத்
    தெம்முனை யடுவோர் வேடர் திரண்டனர் ஒல்லை மாதோ         244

    [தெழித்து- ஒலித்து.அதட்டி வல்லே, ஒல்லே- விரைவில். நம்முடைய வனத்தில் அஞ்சாது வந்து பொருந்திய படைகலையெல்லாம் இம்மெனும் முன்னம் கொல்லுவோம் எனக் கூவி எழுந்து விரைவைல், தம்முடைய இனத்தவர்களையெல்லாம் அழைக்கவே, ஆங்காங்கே நின்ற பகைவரை வெல்லும் ஆண்மையுடைய வேடுவர்கள் விரைவில் திரண்டனர்.]

    காட்டினிற் சரிக்கும் வேழக் கணங்கள் கண்டனையர் தோற்றத்
    தீட்டுவன் புலியேறன்ன பாய்த்துள ரெதிரொன் றின்றி
    மாட்டுதற் றிறத்திற் சிங்க வலியின ரெவர்க்கு முட்கு
    மூட்டுறும் வெகுளித் தீயான் மூரியஞ் சரப மன்னார்.         245

    {காட்டில் சஞ்சரிக்கும் யானைக் கூட்டங்களைக் கண்டதைப் போன்ற தோற்றத்தை உடையவர்கள்; வலிய புலி ஏற்றினைப்போல பாய்ச்சலையுடையவர்கள்; தனக்கு எதிரானதொரு விலங்கும் இல்லையென வெல்லும் திறத்தில் சிங்கம்போன்ற வலிமையை உடையவர்கள்; எவர்களுக்கும் அச்சத்தை மூட்டுவதிலும் வெகுளியாகிய தீயாலும் பெரிய சரபத்தை அனையவர்கள்]

    விளைத்திடும் வேட்டை தண்டா வினையினால் மடங்க லூனுங்
    களிற்றுடற் புலாலும் வேங்கைக் காழ்படு நிணமு நீருங்
    குளித்தொளிர் வேலும் வாளுங் கோல்களும் வளையுந் தண்டுந்
    திளைத்த கையினராய் முன்னர்ச் சென்றனர் செருவின் மூண்டார்.         246

    [செய்கின்ற வேட்டைத் தொழிலினால் சிங்கத்தின் ஊனும் களிறுகளின் புலாலும் வேங்கையின் நிணமும் குருதியும் தோய்ந்து ஒளிர்கின்ற வேலும் வாளும் அம்புகளும் வளையும் தண்டுகளும் கொண்ட கையினராய் முன் சென்று சண்டை செய்ய முற்பட்டனர்.]

    சிலையினை நோக்கி னார்கள் தெரிகணை நோக்கி னார்கள்
    மலையெனத் திரண்ட தோள்புடைத்து வாய்மடித்துத் தின்றார்
    அலர்முக வுரோமங் கையிற் றிருக்கினா ரழற்கண் சேந்தார்
    கொலைமுகக் கூற்ற மென்னக் கொம்மெனத் துள்ளிப் பாய்ந்தார்.         247

    [வாய் மடித்துத் தின்றார்கள்- வாயிதழைக் கடித்தார்கள். முகவுரோமம்- மீசை. வேடர்கள் தங்களுடைய வில்லை நோக்கினார்கள்; அம்பினை நோக்கினார்கள். மலையெனத் திரண்ட தங்களுடைய தோளைப் புடைத்து வாயிதழைக் கடித்தார்கள். மீசையை முறுக்கினார்கள். நெருப்புப் போன்ற கண்கள் மேலும் சிவந்தார்கள். போர்க்களத்தில் கூற்றத்தைப் போலத் துள்ளிப் பாய்ந்தார்கள். இவையெல்லாம் சினத்தினால் வரும் மெய்ப்பாடுகள். வில்லினையும் அம்பினையும் காணுதல், அவற்றின் வலிமையை மெச்சி ஆராய்தலாம்.]

    துடியின மார்ப்பக் காலிற் றொடுகழ லார்ப்ப வானின்
    இடியென வுலம்பி யார்த்தா ரெழுமொலி கேட்ட லோடுங்
    கடலென முழக்கம் யாது காண்கென மன்னன் கூற
    வடுவறு மொற்றரோடி வந்தனர் புளிஞ ரென்றார்.         248

    [உலம்பி- பேரொலி செய்து. துடிகள் ஆர்ப்ப, காலிற் கட்டிய கழல் ஆர்ப்ப, வானில் இடியென பேரொலி ஆர்த்தார் எழுப்பும் ஒலியினைக் கேட்டவுடனே கடலொலி போன்ற முழக்கம் யாது காண்க என மன்னன் கூற ஒற்றர்கள் ஒட்டிச்சென்று கண்டுவந்து கான வேடர்களின் போராரவாரம் என்றனர்.]

    படையொடு தலைவர் தம்மைப் பற்றினிர் தம்மி னென்னா
    விடுதலும் அவரும் விட்டார்த் தேகினார் விளைந்த பூசல்
    இடைபடு மரமுந் தூறு மெறிந்தெறிந் திரண்டு காதம்
    கடிகையி னகற்றினார்கள் கணிச்சியிற் காலாண் மாக்கள்.        249

    [படையொடு அவ்வேடர் தலைவர்களைப் பற்றிக் கொண்டு வருக என்று மன்னன் கூற, வீரர்களும், விளைத்தது, சண்டை. இடைப்பட்ட மரங்களையும் புதர்களையும் கோடரியால் விரைவில் பொழுதில் அகற்றினர்] .

    எழுசீராசிரிய விருத்தம்
    திரிந்ததாடி யரிறுக்கு கச்சினர் வரிந்த திண்கழ லினார்மறஞ்
    சொரிந்தவாய் தவகையாவு மேந்து மிருதோளர் சாலிகைகொள்
    மெய்யினார்
    புரிந்துபோரி லிடையாதவாற் றலினர் பொள்ளெனக் கடவு ளேத்தினார்
    இரிந்துகூற்று முளமஞ்ச நாணொலி யெழுப்பி னார்கணை தெரிந்தனர்.         250

    [முறுக்கிய தாடியை உடையவர்கள், இடையில் இறுக்கிக் கட்டிய கச்சினை உடையவர்கள், காலில் வரிந்த கழலினை உடையவர்கள், கொலையைச் சொரியும் படைக்கலன்கள் பலவும் ஏந்திய இரு தோளினை உடையவர்கள், கவசமணிந்த உடம்பினர், விரும்பிச் செய்யும் போரின் இடையே சலிக்காதவர்கள், சட்டெனக் கடவுளை ஏத்தினர், எமனும் மனம் அஞ்சியோடும்படி வில்லினை ஒலித்து நாணேற்றி அம்புகளைப் பொழிந்தார்கள்}

    கங்கர்கொல் லர்கருநாடர் மாகதர் கடாரர் குச்சரர் கலிங்கர்கள்
    கொங்கர்சீனர் குருநாட ரொட்டியர் குலிங்கர் கொங்கணர் விதேகர்கள்
    வங்கர்மாளவர் தெலுங்கர் பல்லவர் மராடர் பப்பரவர் கன்னடர்
    அங்கர்சிங்களர் களாதி யோரு முடனார்த் தெழுந்தன ரொருங்கரோ.         251
    [கங்கர் முதலிய பிற நாட்டு வீரர்களும் சோழமன்னனுடன் ஒருங்கு சேர்ந்து ஆர்த்து எழுந்தனர்.]

    தேர்களூர்ந்தனர் மதத்த யானைகள் செலுத்தினார் பரிக ளுந்தினார்
    காரெனப்படைவ ழங்கினார் படைக னன்று வேடரும் வழங்கினார்
    ஆர்களற்ற மலிதூசு மற்றகலி னங்க ளற்றவிசி கச்சுடன்
    வார்களற்றவின நாடொ ணாவகை மலைந்து ளாரிரு திறத்தரும்.        252

    [தேர்கள் ஊர்ந்தனர், மதயானகளைச் செலுத்தினர், குதிரைகமேல் ஏறி வந்தனர். கார்கால மழையைப் போலப் படைகளைச் செலுத்தினர். கனல் போலச் சினந்து வேடர்களும் படை வழங்கினர். தேர்களின் ஆரைக் கால்கள் அற்றன. தூசுப்படைகள் அற்றன. இறுக்கிய கச்சுகளுடன் விசித்த வார்களும் அறுந்து போயின. இனம் அடையாளம் காணமுடியாதபடி இருதிறத்தவர்களும் போரிட்டனர்.]

    கூம்பு டைப்பெரிய தேரு டைந்தனகு ழாங்கொள் குஞ்சர மவிந்தன
    வாம்ப ரித்திரள்வி ழுந்த மள்ளர்கள் மலங்கி வீழ்ந்துசிலர் மாய்ந்தனர்
    தோம்ப டைத்தமற வேட ருஞ்சிலர்து டித்து வீழ்ந்தனர்பெ ரும்பிண
    மாம்ப றந்தலையி னோரி கங்கமல கைகுலம் பிறவு மார்ந்தன         253

    [கூம்பு- தேரின் கொடிஞ்சி எனும் உறுப்பு Cone-shaped pinnacle of a chariot. அவிந்தன- அழிந்தன. வாம்- வாவும், தாவிச் செல்லும். மள்ளர்கள்- வீரர்கள். தோம்- குற்றம். பறந்தலை- போர்க்களம். ஓரி- நரி. கங்கம்- கழுகு. அலகை- பேய், கொடிஞ்சியுடைய தேர்கள் உடைந்தன. கூடங்கூட்டமாக யானைகள் இறந்தன. தாவி ஓடுகின்ற குதிரைகள் விழுந்தன. வீரர்கள் மயங்கி வீழ்ந்து சிலர் மாண்டனர். குற்றமுடைய வேடர்கள் சிலரும் துடித்து வீழ்ந்து இறந்தனர். பிணங்கள் நிறைந்த அந்தப் போர்க்களத்தில் நரிகளும் கழுகுகளும் பேய்க்கூட்டங்களும் ஆரவாரித்தன]

    கரமி ழந்துரமி ழந்து காறொடையி ழந்து கண்சிரமி ழந்துசெங்
    குருதி பொங்கவய மள்ள ரெண்ணில ருடைந்து கொட்குமமை யந்தனிற்
    பெரிது வெஞ்சமர் விளைந்த தோர்ந்து பிறைமா மருப்புடை
    யொருத்தன் மால்
    கரியை யூர்ந்துகரி காலனுங் கடிதினேகி னானவர்கள் கண்டனர்.         254

    [கையிழந்து, மார்பிழந்து கால் , தொடை இழந்து கண், தலை இழந்து செவ்விரத்தம் பொங்க வலியவீரர்கள் கணக்கிலாதவர்கள் தோற்று சுழலும் அந்த வேளையில் பெரியதொரு போர் நிகழ்ந்ததை அறிந்து பிறை போன்ற கொம்பினை யுடைய பெரிய களிற்றினை ஊர்ந்து கரிகாலனும் அங்கு வந்தான். அவன் வந்ததை அவர்கள் கண்டனர். உரம்- மார்பு. வயமள்ளர்கள்- வலிமையுடைய வீரர்கள். ஒருத்தல்- களிறு.]

    அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    அறங்கிடந் திமைக்கும் வேந்தைக் காண்டலு மளவா வீரத்
    திறங்கிடந் திமைக்குஞ் சீற்றந் தீர்ந்து நின்வரவு நோக்கி
    நிறங்கிடந் திமைக்கும் பூணாய் நெடிதிவ ணுறைந்தேஞ் சாப
    மறங்கிடந் திமைக்குங் காஞ்சி வளம்படப் புரத்தி யென்றார்.         255

    [அறமே வடிவாக விளங்கும் வேந்தனைக் கண்டவுடன், வீரமே வடிவான வேடர்கள், சீற்றம் தணிந்து மார்பில் ஒளிரும் பூணினை உடையாய்! நின்னுடைய வரவினை எதிர்நோக்கி இங்கு வாழ்ந்தேம். சாபத்தின் கொடுமை தங்கிவிளங்கும் காஞ்சிப்பதியினை வளம்படுத்திக் காப்பாயாக என்றனர். இமைக்கும்-விளங்கும். உரம்- மார்பு. அளவா- அறியப்படாத.]

    கச்சிமா நகரை முன்போற் கவின்பெறத் திருத்து கின்றாம்
    அச்சிவ புரத்துக் காறு காட்டுமின் ஆங்கண் உள்ள
    எச்செழு வளமுஞ் சொன்மின் என்றிறை யியம்ப லோடும்
    நச்சிய வுளத்தாற் போற்றி நவிற்றுவான் சிந்து மேதன்.         256

    [காஞ்சி மாநகரை முன்போல அழகுபெற அமைக்கின்றோம்; சிவனுறைகின்ற அந்நகரத்துக்கு வழி காட்டுமின்; அங்குள்ள சிறப்புக்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள் என அரசன் கூற விரும்பிய உளத்துடன், சிந்துமேதன் கூறத் தொடங்கினான்.]

    அண்ணலங் கருணைத் தோற்றத் தருந்தவ ரிருவர் நாளும்
    நண்ணிவாழ்ந் திருக்கின் றார்கள் நாசியி னுயிர்க்குங் காலால்
    எண்ணுமூன் றியோசனைக்கு ளிடைப்படு முயிரை யெல்லாந்
    துண்ணென வீர்த்துத் தின்று துளக்குமோர் பூத முண்டால்         257

    [இறைவனின் கருணையே போன்ற வடிவத்துடன் அரிய தவத்தைப் புரியும் இருவர் இங்குத் தங்கி வாழ்ந்திருக்கின்றார்கள். மூச்சுக் காற்றால் மூன்று யோசனை தூரத்துக்குள் இடைப்படும் உயிரையெல்லாம் ஈர்த்துத் தின்னும் பூதமும் ஒன்று உண்டு.]

    வனப்பினிற் சிறந்த பெண்மை வடிவுளன் ஒருவன் உள்ளான்
    எனப்பிற பலவுஞ் சொல்லு மேல்வையில் அலியாந் தண்டன்
    அனப்பொலி நடையோ சிங்கத் தணிநடை யோவென் றுள்ளக்
    கனற்படை மன்னன் முன்னர்க் கடிதுவந் தடைந்தான் மன்னோ.         258

    [ அழகில் சிறந்த பெண்மை வடிவுடையமும் ஒருவனுளன் எனப் பிற பலவும் சொல்லும் வேளையில் அலியாகிய தண்டன், அன்னத்தின் நடையோ, அல்லது சிங்கத்தின் அழகு நடையோ என்று நினைக்கும்படியாக மன்னன் முன்னர் விரைந்து வந்தடைந்தான்]

    மன்னனைக் காண்டலோடும் வன்னியிற் பஞ்சிட் டென்னக்
    கொன்னும்வாய் முனிவன் சாபந் தீர்ந்து முன்னுருவங் கொண்டான்
    தன்னிகர் சிந்து மேதன் றானுந்தொல் லுருவம் பெற்றான்
    பொன்னவில் தோளி னானும் புந்தியின் மகிழ்ச்சி பூத்தான்         259

    [மன்னனைக் கண்ணுற்றவுடனேயே நெருப்பில் இட்ட பஞ்சுபோல முனிவன் இட்ட சாபந் தீர்ந்து முன்னைய உருவம் பெற்றான். தனக்குத் தானே நிகரான சிந்துமேதனும் பண்டைய உருவம் பெற்றான். அழகிய தோளினனாகிய அரசனும் உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டான்.]

    அவரொடும் அளவ ளாவி யணிநகர்க் காஞ்சி புக்குக்
    கவலைதீர் கருப்பத் தான வதியெனுங் காளி தன்னைத்
    தவலரு விதியிற் பூசித் தவள்தருந் தனிவாள் கைக்கொண்
    டிவறிநின் றுயிர்ப்பினீர்க்கும் பூதமுன் னெதிர்த் தலோடும்.         260

    [அவர்களோடு உரையாடிக் கொண்டு காஞ்சி நகர் புகுந்து, கவலையி ஒழிக்கும் கருப்பத்தானவதி என்னும் காளியை விதிப்படிப் பூசித்து அவள் தந்த ஒப்பற்ற தனிவாளைக் கைக்கொண்டு, விருப்பத்தோடு மூச்சுக் காற்றினில் ஈர்க்கும் பூதத்தை முன்னின்று எதிர்க்கவே. தவலரும்- குற்றமற்ற. தனி வாள்- நிகர் அற்ற வாள். இவறி- விரும்பி. ]

    அஞ்சியப் பூதம் யான்வாழ் வரைப்பினி லடைந்திட் டென்னை
    நஞ்சென வழன்று கோற னன்றுகொ னினக்கென் றோத
    வெஞ்சலில் வைய மெல்லாம் யானர சளிக்குங் காலை
    வஞ்ச நின்னனை யோர்க்கெங்கண் வாழ்விட மெனவப் பூதம்.         261

    [ அஞ்சி அப்பூதம், யான் வாழ்கின்ற இடத்தில் வந்து என்னை நஞ்சென வெறுத்துக் கொல்லுதல் உனக்கு அழகோ என்று கேட்க, அரசன், உலகமுழுவதையும் யான் அரசளித்துக் காக்கும் வேளையில் உன்னைப் போன்ற வஞ்சகர்க்கு இங்கு எங்கனம் வாழ்விடம் அமையும் என்று கூர், அப்பூதம்.]

    மாயிருந் திறலோ யன்ன தாக மானுடமாண் டொன்றற்
    காயிரம் பலிதா வென்னப் பத்துநூ றவரை யீவே
    னீயவை கோடி மற்று நீடுயி ரலைத்தி யாயிற்
    காயெரி வாளி னீர்வல் காண்டி யென்று றுத்து நீக்கி         262

    [மிக்க பெருந்திறலுடையவனே! அங்ஙனமாயின் மானுட ஆண்டு ஒன்றற்கு ஆயிரம் பலிதா என்று அப்பூதம் வேஎண்டிற்று. அரசன் ஆயிரம் பேரை ஈவேன், நீ அப்பலியினைக் கொள்ளுதி!, அதன் பின்னும் இங்கு நிலைத்தியாயின் சினமிக்க இவ்வாளால் நின்னைப் பிளப்பேன்’ என்று அச்சுறுத்தி அப்பூதத்தை விலக்கினான்.]

      முரிதிரை சுருட்டுந் தெண்ணீர் முருகவிழ் கம்பை மூழ்கி
      யெரியவிர்ந் தனைய செங்கே ழிணர்விரி மாவின் மூலத்
      தரியயன் பரசிக் காணா அண்ணலைப் பூசை யாற்றி
      யுரிய பேரின்ப வெள்ள மூற்றெழத் தொழுது போந்து .         263

    [முரிதிரை- சுருண்டு வீழும் அலை. முரு- நறுமணம். செங்கேழ்- செந்நிறம். மணம் கமழ் கம்பையாற்றின் தெளிந்த நீரில் மூழ்கி நெருப்புப் போன்ற செந்தளிர்க் கொத்துக்கள் விரியும் மாவின் அடியில் திருமாலும் பிரமனும் காணவியலாத அண்ணலைப் பூசித்து பேரின்பவெள்ளம் உள்ளத்தில் ஊற்றெழத் தொழுது மீண்டான்.]

      செவ்விசேர் காமக் கோட்டத் திருத்தலம் புகுந்து கண்டோர்
      ஔவியம் இரிக்கும் பஞ்ச தீர்த்தநீ ராடி ஆங்குக்
      கொவ்வைவாய் உமையைப் போற்றிக் கோமளை அருளால் யாரும்
      இவ்வென அறியா மேன்மை எழிலறச் சாலைகள் கண்டான்.         264

    [செவ்வி- அழகு. ஔவியம்- மனக்கோட்டம். அழகுமிக்க காமக்கோட்டமாகிய திருத்தலத்திற்குச் சென்று அங்கு மனக்கோட்டத்திப் போக்கும் பஞ்ச தீர்த்தத்தில் நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் உமையம்மையைப் போற்றி வழிபட்டு, அவளருளால் இத்தகையவென அறிய முடியாத மேன்மைகளையுடைய அழகிய அறச்சாலைகளை அமைத்தான்]

    மங்கலநகர் முன்போல வளம்பெறக் காண்பான் முன்னச்
    சங்கரி வளர்த்த நாலெண் தருமசாலைகளும் பொன்னாற்
    பொங்கொளி மணியாற் செய்து புதுக்குபு பின்னர் மாசித்
    திங்கள்சேர் மகத்திற் கம்பந் திருநகர் நாப்ப ணட்டான்         265

    [மங்கலம் மிக்க காஞ்சிமாநகரை முன்போல வளம்பெறப் புதுப்பிப்பதற்கு முன்னர், இறைவி வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள் தருமசாலைகளும் ஒளிபெறச் சமைத்துப் புதுக்கிப் பின்னர் மாசி மாதம் மகநாளில் வெற்றிக்கம்பம் திருநகரின் நடுவில் நட்டான்.]

    நூல்வழி வீதி போக்கி நொச்சிவிண் ணுரிஞ்சக் கண்டு
    மேல்வள ருலகம் நாண மேதகு நகர மாக்கி
    நால்வகை வருணந்தோறும் நான்குமூ வாயிரத்த
    சால்புறு குடிக ளேற்றித் தாபித்தான் பிறவு மன்னோ.         266

    [நூல்- மயன் நூல். வாஸ்து. நொச்சி- மதில். மயன் நூல் விதித்தபடித் தெருக்கள் அமைத்தான். ஆகாயத்தைத் தடவும்படி மதிலமைத்தான். இந்திரலோகம் நாணும்படியான அழகிய நகரம் ஆக்கினான். நால்வகை வருணத்தார், வருணந்தோறும் நாற்பத்து மூவாயிரம் மேன்மையுடைய குடிகளைக் குடியேற்றினான். பிறகுடிகளையும் இவ்வாறேஏ குடுபுகச் செய்தான்.]

    திருவ நீணகரி னாட்டுந் தேசிகக் கொடிக ளோங்கித்
    துருவனார் பிணித்துச் சுற்றுஞ் சூத்திரந் தட்பக் கொட்கு
    முருவவான் கோளு நாளும் அசைவற வும்பர் நிற்பப்
    பெருநகர்ப் புதுமை நோக்கும் பெட்பொடு நின்றான் மான.         267

    [திருவம்- செல்வம், அம்சாரியை. துருவனார்- தூய்மையானவர்கள். அந்தணர். தட்ப- தடுக்க. கொட்கும்- சுழலும். தேசிகம்- ஒளி, தேஜஸ் என்பதன் தமிழாக்கம். நாள்- விண்மீன்கள்.நட்சத்திரங்கள். செல்வ வளத்தை காஞ்சி மாநகரில் நாட்டிய ஒளிவிடும் கொடிகள் ஓங்கி, அந்தணாளர்கள் பிணித்துச் சுற்றும் நூல் தடுக்க, விண்ணில் சுழன்று திரியும் கோள்களும் நட்சத்திரங்களும் ஆகாயத்தில் பெருநகரின் புதுமையை விருப்பத்துடன் காண நின்றாற்போல அசைவற நிற்ப,]

    பாங்கரி னுலவுந் தோறும் பதாகையின் நுதியை மேல்கொண்
    டோங்கிய கிரணம் பற்றக் கீழுறு கிரண மூலந்
    தாங்கவிண் சுடர்கள் நாப்பண் தயங்குவ கழையிற் கோத்துத்
    தூங்கிய கயிற்றி னேறும் பொருநர்கள் துணையு மாதோ.         268

    [பதாகை- பெரிய கொடி. விண்சுடர்கள்- சூரிய சந்திரர்கள். நாப்பண்- நடுவில். கழை- மூங்கில். பொருநர்கள்- கூத்தாடிகள்.
    கொடியின் மேல் நுனியை மேல் கொண்டோங்கிய ஒளிக்கதிர் பற்ற, கீழ்நுனியைக் கீழுறு கிரண மூலம் தாங்க, மூங்கிலிற் கோத்துத் தொங்கிய கழைக் கூத்தாடிகளைப் போல விண்ணில் கொடிக்கம்பத்தின் கொடி அசையுந் தொறும் விண்சுடர்கள் இரு பக்கங்களில் விளங்கும்.]

    கொடியலைந் தெறியுங் காற்றாற் கொட்புறு வளியா தாரக்
    கடிபடு நாக நாடு கம்பியா நிற்குந் தோற்றம்
    வடிவினிற் சிறந்த காஞ்சி கீழுற வதிய நாமெப்
    படிமிசை வதிவ தென்னும் பயத்தின் மெய்விதிர்ப்ப தேய்க்கும்.         269

    [ எறியும் – வீசும். கொட்புறு- சுழலும். வளி- பெருங்காற்று. கம்பியா நிற்கும்- நடுக்கமெய்தி நிற்கும். படி- பூமி.
    கொடி அலைந்து எறியும் காற்றினால் சுழன்று எழும் காற்று அசைப்பதால், கொடிக்கம்பத்தின் ஆதாரமாகும் காவல் மிக்க நாகலோகம் நடுங்கும். அத்தோற்றம், வடிவழகிற் சிறந்த காஞ்சி கீழுற வசிக்கும் நாம் எப்படி பூமியின் மேல் வசிப்பது என்னும் பயத்தில் உடல் நடுங்குவதொக்கும்]

    கங்கைநீர்த் திவலை தூவக் கற்பகம் வாசம் வீசத்
    திங்களுங் கதிருங் கீழாச் சென்றுற வுயர்ந்தசெம்பொன்
    பொங்குமே னிலையின் மைந்தர் பூவைய ரோடும் புல்லி
    யங்கண்வா னமர ரென்ன வரும்பெறற் போகந் துய்ப்பார்.         270

    [காஞ்சி மாநகரில் மாளிகைகளின் உயர்வைக் கூறுவது இப்பாடல். மிக உயர்ந்த மாளிகையின் மாடங்களைல் ஆகாசகங்கை நீர்த் திவலைகளைத் தூவும்; தேவலோகக் கற்பகமரத்தின் மலர்கள் வாசம் வீசும்; சந்திரனும் சூரியனும் மாடங்களுக்குத் தாழ உலவ உயர்ந்த செம்பொன்னொளி வீசும் மேனிலைமாடங்களில் வானத்தமரர்களென்ன மைந்தர்கள் மகளிரை அணைந்து போகந்துய்ப்பர்.]

    கரிசறு கம்பை யாடிக் கற்பகக் காவு ளாடி
    வருபெருந் தேவர் மாந்தர் வேற்றுமை யறிய மாட்டார்
    சுரர்க டம்மிருக்கை யென்று மாந்தர் சூழ்மாடஞ் சேர்வார்
    நரர்க டம்மிடமென் றும்பர் நயந்துறை மாடஞ் சேர்வார்.         271

    [குற்றமற்ற கம்பை நதியில் நீராடி, கற்பகச் சோலையில் விளையாடி வரும் தேவர்கள், மாந்தர்கள் வேற்றுமை அறிய மாட்டார்கள். தேவர்கள் தம்முடைய இருக்கையென்று மாந்தர்களுடைய மாடம் சேர்வார். மாந்தர்கள் தம்முடைய இருக்கையென்று தேவர்களின் மாடஞ் சேர்வார். இவ்வாறு தேவரும் மாந்தரும் வேற்றுமை அறியாது வாழ்வர்.]

    நகருடை வனப்பு நோக்க நாடியோ நயந்து வேட்ட
    தகவுற வளிக்கு மாவின் றனிமுத லிறைவன் பாத
    மகனுறு மன்பிற் போற்ற முன்னியோ வறியோம் நாளும்
    புகழ்பெறு முகுந்த னாதிப் புலவராங் கணையுந் தோற்றம்.         272

    [காஞ்சி மாநகருடைய வனப்பினைக் கண்டு களிக்கவோ, தாம் விரும்பியதைப் பெருமையுடன் அளிக்கும் மாவடித் தனிமுதல்வனாகிய இறைவனின் பாதத்தை அகமுறும் அன்பினால் வணங்க எண்ணியோ அறியோம், நாள்தோறும் திருமால் முதலாய தேவர்கள் அங்கு கூடும் தோற்றம்]

    கணங்கொளும் கற்ப நாட்டுக் கன்னியர் குழலிற் காஞ்சி
    யணங்கனார் கூந்தலூட்டு மகிற்புகை நிவந்து சூழ்ந்து
    மணங்கமழ் கின்ற நீற்மை மதித்திடா ரியற்கை வாச
    மிணங்கிய தென்றன் னோரை யேத்துவ ரறிய வல்லார்.         273

    [கற்பக நாடான தேவலோகத்தில் தேவமகளிர் கூந்தலில், காஞ்சியில் வாழும் தெய்வமகளிர் போன்ற பெண்கள் ஊட்டும் அகிற்புகை மேனோக்கிச் சென்று சூழ்ந்து மணக்க, அதன் உண்மையான காரணத்தை அறிய மாட்டாதவர்கள், அந்த மணம், தேவமகளிர் கூந்தலின் இயற்கை மணம் என்பர். வல்லார்- வல்லமை இல்லாதவர்கள். எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது.]

    வேள்வியி லுண்ணப் புக்க வேந்துதன் மீட்சி நோக்கி
    வாழ்வதோ கொடுப்போர் கையின் வண்மையைக் கவர நன்கு
    சூழ்வதோ வறித றேற்றேஞ் சுடர்மணிச் சிகரம் விண்ணப்
    போழ்வளம் படைத்த மாடப் பொருப்பினிற் றவழும் மேகம்.         274

    [வேந்தன் - இந்திரன். சுடர்மணி- ஞாயிறு. ஞாயிறு ஊடுருவிச் செல்லும் செல்வமிக்க மாடங்களாகிய குன்றுகளின் மீது தவழும் மேகக் கூட்டம் சூழ்ந்து நிற்பது, வேள்வியில் அவிசை உண்ணப் போன வேந்தனின் மீண்டு வருதலை எதிர் நோக்கி வாழ்வதோ, அல்லது மாடங்களில் வதிவோர் கொடுக்கும் கைவண்மையக் கவரவோ அறியோம் ஓகாரம் ஐயப் பொருளன.]

    முலையெலாங் கிள்ளுக் கொள்ளா மொய்குழன் மடவா ரில்லை
    தலையெலம் புலவி மாதர் தாள்படாக் கொழுந ரில்லை
    கலையெலாங் கற்று வல்லாக் கவிபடு புலவ ரில்லை
    சிலையெலாந் துவள வெய்யாத் திறல்படு வீர ரில்லை.         275

    [திருமணமாகாத மங்கையர் இல்லை. இல்லறவாழ்வில் ஊடல் இன்பம் துய்க்காத ஆடவரில்லை.கலையெல்லாம் கற்றுக் கவிபாடா புலவரில்லை.( அனைவரும் எல்லாக் கலைகளும் கற்ற புலவர்களே) படைக்கலம் எய்யாத வீரர்கள் இல்லை. (அனைவரும் வீரர்களே) மின்னுகு கனக மேரு மீமிசைக் கொடியை நாட்டி

    மன்னனா யுலக மெல்லா மலரடி படுத்து நீடும்
    பொன்னுல கிறைவன் றானே புதுக்கினா னென்னி லந்தக்
    கொன்னுடை நகரின் காமர் கூறலாம் படிய தேயோ. 276

    [மின்னொளி அடிக்கிழ்ப் அந்த அரசனே அழகினை ஆளும் இந்நகரைப் உமிழும் உலகனைத்தையும் என்றால் ஒருவனே கூறலாகுமோ? கொடியை தன் தான் தேவலோகத்து நகரின் நாட்டி படுத்து புதுக்கினான் பொன் மன்னனாய் மேருவின் மேலான மேல் வார்த்தையினால்]
    இமையவர் துயின்றா ரேனு மெழின்மணி முரசந் துஞ்சா
    வமைவுடைக் காஞ்சி வைப்பி னரும்பெறற் காம நோக்கி
    னுமையொடுங் கம்பவாணர்க் கொலிவிழா நடாத்திப் பாரின்
    சுமைபொறுத் தினிது வாழ்ந்தான் றொடுகழற் கரிகாற் சோழன்.         277

    [இமையாத கண்ணை இமையவர்கள் இமைத்துத் துயின்றார்கள் எனினும் காஞ்சிமாநகரின் முரசந் துஞ்சாது. அத்தகைய அமைவுடைய காஞ்சிமாநகரில் காமக்கண்ணி உமையம்மையொடு ஏகம்பவாணருக்கு ஒளிமிக்க விழ்ழக்கள் நடாத்திப் பூபாரம் சுமந்து கரிகாற்சோழன் நெடுநாள் இனிதாக வாழ்ந்தான். இமையவர்கள்- தேவர்கள். அவர்களுடைய கண் இமைத்தல் இல்லை. அதனால் துயில்வதுமில்லை. முரசொலிப்பது காவல் மிகுதியைக் காட்டும்.]

    அன்றினா ராவி வல்லே யழிதக முறுவல் கோட்டி
    வென்றிகொண் டுலகங் காக்கும் விறற்கரி கால னந்நாள்
    மன்றலங் காஞ்சி மூதூர் மத்தியி னாட்டுந் தூணை
    யின்றுமெவ் வுலகுங் கச்சிக்கல் லெனவிசைக்கு மாலோ.         278

    [அன்றினார்- பகைவர். பகைவர்களின் ஆவியை சிரித்தே விரைவில் அழித்து உலகங்காக்கும் வெற்றியுடைய கரிகாற்சோழன் காஞ்சிமா நகரின் மத்தியில் நாட்டும் தூணை இன்றும் எவ்வுலகும் கச்சிக்கல் எனப் போற்றும். முறுவல் எள்ளலால் தோன்றியது.]

    இருவினைப் பிறவி முற்றும் இரித்தருள் கொழித்து முத்திப்
    பெருநலம் இனிது நல்கும் பிரமாண்ட புராணந் தன்னின்
    மருமலர்ப் பொகுட்டு வாழ்க்கை வானவன் சனற்குமாரற்
    கருளிய காதை மற்றிங் கறைந்தனம் பிறவுஞ் சொல்வாம்.        279

    [இருவினைகளால் தோன்றுகின்ற பிறவியை முற்றும் ஒட்டி அருள் தழைத்து முத்திப் பேற்றினை இனிதாக நல்கும் பிரமாண்ட புராணத்தில் வெண்டாமரைப் பொகுட்டாகிய தவிசில் வீற்றிருக்கும் பிரமதேவன் சனற்குமார முனிக்கு அருளிய காதையை இங்குச் சொன்னோம். மேலும் சொல்லுவாம்.]

    நகரேற்றுப் படலம் முற்றிற்று.

    ஆகத் திருவிருத்தம் 1066

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III