Kucēla veṇpā


சைவ சிந்தாந்த நூல்கள்

Back

குசேல வெண்பா
நா. சேதுராமய்யர்



குசேல வெண்பா
ஆசிரியர் : நா. சேதுராமய்யர்

Source:
கடவுள் துணை
குசேல வெண்பா
ஆசிரியர் : நா. சேதுராமய்யர்
இஃது தஞ்சாவூர் ஜில்லா விஷ்ணம்பேட்டை பிரம்மஸ்ரீ நாராயணையர் புத்திரரும்,
திருநெல்வேலி ஜில்லா பெண்பாடசாலைகளின் இன்ஸ்பெக்ட்ரஸ் ஆபீஸ்
வெரட்கிளர்க்குமாகிய, நா. சேதுராமய்யரால் இயற்றப்பட்டு,
தச்சநல்லூர் ஸ்ரீமத் இலக்குமணப் போற்றிகள் எழுதிய நூன்முகத்துடன்
மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலையில் பதிப்பிக்கப்பெற்றது.
கீலக - ரூ ஆவணி மாதம். 1908.
இதன் விலை அணா 3. (Copyright, Registered)
-------------
ஸ்ரீ சமஸ்தத்திலும் சமதிருஷ்டியுடைய
ஸ்ரீ. பாகவதோத்தமாளின் ஸ்ரீ. பாதாரவிந்தங்களிலே
பக்திபூர்வமாய் இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டது.
------------

நூன் முகம்.

இந்நூலானது ஸ்ரீகுசேலமுனிவரது திவ்ய சரித்திரத்தை விளக்குகின்றது. இச்சரிதம், பதினெண் புராணங்களுள் ஒன்றாகிய ஸ்ரீமத் பாகவதம் பத்தாவது ஸ்கந்தம் எண்பது எண்பத்தொன்று அத்யாயங்களிலுள்ளது.

குறித்த ஸ்ரீகுசேல முனிவர், அவந்திநகரத்தில் அவதரித்து, இளமையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோடு , ஸ்ரீ சாந்தீப மகாமுனிவர்பால் கல்வி பயின்று, பரஸ்பரம் அத்யந்தம் அன்புற்று வாழ்ந்த பின்னர், ஸ்ரீ கிருஷ்ண பகவான், துவாரகா நகரத்தில் அரசு செலுத்துங் காலத்தில், ஸ்ரீகுசேல முனிவர் கொடிய வறுமை நோயுற்றும், இரவாப் பெருமையும், மறவா அன்பும் உடையராய் நிகழ்வுழி, அவரது அன்பின் மனைவியின் வேண்டுகோளுக்கிரங்கித், தமக்கு பால சினேகராகிய துவாரகாதிபதியாற் சென்று, தம் மனைவி அளித்த அவற்பொதியை யவிழ்த்து, அப்பகவானுக்கு அர்ப்பிக்க, அவர் பேரவாவுடன் அதில் ஓர் பிடியைத் தமது அருமைத் திருவாயிற் கொள்ளவே, அவந்தி நகரத்தில், ஸ்ரீகுசேல முனிவருக்குச் சகல போகபாக்கியங்களும் தக்ஷணமே உற்பவிக்க, அதளை அக்குசேல முனிவருக்கு அறிவிக்காமல், அவரை வந்த கோலத்தோடே திரும்பவிடுக்க, அம்முனிவர், அப்பகவானுடைய திருவடி தெரிசனம் பெற்ற பரமானந்தத்தில் மூழ்கி, அவந்தி நகரம் வந்து, அவண் விளைந்துள்ள சகல செல்வங்களையுங் கண்ணுற்று, ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய பக்தவாற்சல்யத்தை நினைந்துருகி, பன்னாள் வாழ்ந்து, பரம் பதம் பெற்றனர் என்பது இப்புண்ய கதையின் சுருக்கமாம்.

இக்கதையை விளக்கும் இந்நூலானது, அவந்தி காண்டம், துவரைகாண்டம், வைகுந்த காண்டம் என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவந்திகாண்டத்தில், ஸ்ரீகுசேல முனிவரது குணத்தின் பெருமையும், தரித்திரத்தின் கொடுமையும், செல்வநிலையாமை, யாக்கை நிலையாமை முதலிய விஷயங்களும், அம்முனிவர் துவாரகையை யடைந்ததும், துவரைகாண்டத்தில், முக்தரிலக்கணம், அன்பினிலக்கணம், பக்தவாற்சல்யம், சாதுசங்கபலன், பழமை முதலிய விஷயங்களுடன், அம்முனிவர் ஸ்ரீ கிருஷ்ண பகவானைத் தரிசித்து, அவருடன் சம்பாஷித்து உபசரிக்கப்பெற்று, அவலளித்து, அநுக்கிரகம் பெற்றுத் திரும்பியதும், வைகுந்த காண்டத்தில், அம்முனிவர் வறுமைநோய் நீங்கி, அளவிலாச் செல்வமுற்று ஸ்ரீ பகவானுடைய தசாவதார மகிமையை ஸ்துதித்துத் திருவடி நீழலடைந்ததும், விரிக்கப்பட்டுள்ளன.

இச்சரிதமானது விருத்தப்பாவால் தென்மொழியிற் செய்யப்பட்டிருப்பினும், அதனை யாவரும் எளிதிலுணர்த லருமையாயிருப்பது பற்றி, வெண்பாவால் விளக்கப் பட்டிருக்கின்றது. இவ்வெண்பாவானது சொல்லமைதி பொருளமைதி பெற்று, படிப்போர்க்கு இலகுபோதம் தருவதாகின்றது. சிற்சில செய்யுள்கள் ஸ்ரீமான் புகழேந்திப் புலவரின் அருமை வாக்கை யொப்ப விளங்குகின்றன. ஆனால் அந்நூல்களில், அக்காலங்களில், வியவஸ்தையின்றி பிரயோகமாகிய சில இடக்கர் மொழிகள், இந்நூலிற் காணப்படாமை ஓர் விசேடம். அன்றியும், இந்நூலாசிரியர், தமது கல்வித் திறன்மையைக் காட்டக் கருதாது, பக்தியின் வலிமையால் மட்டும், இந்நூலை இயற்றியதாகத் தெரிவதால், இதனை ஓர் அநுக்கிரக கிரந்தமாகவும் கொள்ள இடந்தருகின்றது.

இந்நூலினுக்கு மூலகிரந்தமாகிய ஸ்ரீபாகவதம் தசமஸ் கந்தத்தில் ''பத்ரம் புஷ்பம் பலந்தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி, தந்அஹபக்த்யுபஹருதம் அஸ்நாமி ப்ரயதாத் மந:'' என்ற சுலோகத்தின் கருத்தினுக்கேற்ப, யாவரேனும் அன்புடன் தங்கள் தகுதிக்கு மிஞ்சாது, இயன்றவளவு ஓர் புண்யகர்மத்தைப் புரிவரேல், அதுவே அனந்தங்-கோடியாக மதிக்கப்படுமாதலால், இந்நூலை ஆராய்பவர், வீண் தோற்ற மின்றி, அந்தரங்க உண்மையோடு, தமது ஆண்டவனை வழி படல் வேண்டுமென்பதும், அவ்வழிபாட்டிற்கு மிகுந்த செல்வம் வேண்டற்பாலதன்றென்பதும், அவ்வழிபாடுடை யாரை ஆண்டவன் அளவின்றி ஆதரிக்கின்றன னென்பதும் இந்நூலால் உணர்வது மட்டுமன்று, சுவாசித்தமான அநுபவத்தாலும், கண்டுணரக் கூடியதாகின்றது.

இந்நூலை இயற்றிய ஸ்ரீசேதுராமய்யர் அவர்களுக்கு, இந்நூலைத் தொடங்குவதற்கு முன்னிருந்த பற்பல கஷ்டங்கள், இந்நூலைப் பாடி முடியுமளவில், அருகி நீங்கிவிட்டன வென்பது, உண்மைப் பிரமாணமாக வேறுபடுகின்றது. ஆதலால், ஒவ்வொருவரும் இந்நூலைக் கற்றுணர்தல் அவசிய மெனத் தோற்றுகின்றது.

இந்நூல், அரசாங்கத்தின் கனம் டெக்ஸ்ட்புக் கமிட்டியார் அவர்கள், ஆங்கிலப் பாடசாலைகளில் கீழ்தரப் பரீகைகளுக்குக் குறிப்பிட்டால், மிகுதியும் நன்மை பயக்கும் என்பது உண்மை.

தச்சநல்லூர்.
கீலகீ வருடம் சித்திரை மாதம்       இலக்குமணப் போற்றிகள்.
-------------------

சிறப்புப் பாயிரம்.

1. திருநயம் வித்வான் பிரமஸ்ரீ மாதிரு பூதய்யர் அவர்கள் இயற்றியவை
அறுசீரடி யாசிரிய விருத்தம்.

திருமருவு மணிமார்பன் திருவடியைத் திறந்தோறுஞ் சிந்தை செய்யும்,
ஒரு மறையோ னான்மறையு முணர்ந்தகுசே லன்சரித முலகில் யாரும்,
மருமலரி னறுந்தேனை வண்டினம் போல் விரும்பவெண்பா வாகச் சொன்னான்,
தரும நிறை கிருஷ்ணககர்ச் சேதுரா மையனெனுந் தமிழ்வல் லோனே. (1)

நேரிசை வெண்பா
முக்கனியுஞ் சர்க்கரையு மூவா மருந்துமிதற்
கொக்கு மெனப்புலவ ருண்மகிழ -- இக்கவிஞன்
சொற்றா னுளங்கனிந்து தூய சுகுணனன்றி (2)
மற்றாரிவ் வாறியம்புவார்.
-----------

2. மசூலிப்பட்டணம் இந்து ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் பிரமஸ்ரீ
திருநயம். சா. முத்துவையர் அவர்கள் பி.ஏ. இயற்றியவை.

நேரிசை வெண்பா

விண்படுக்குஞ் சோலைத்தேன் வேரிப் பொகுட்டன்னத்
தண்படுக்கைப் பொய்கை ததும்பப்பாய் - பண்படுக்கும்
விண்டுபுர வேதியர்தம் மெய்க்குலத்தி லுற்பவித்த
தண்டமிழ்வா ழின் முகத்தான் சார்ந்து. (1)

தேசா ரருங்கலைஞன் சேதுரா மய்யன்வசை
பேசாத வாய்மையினான் பெட்பினொடு - மாசில்குசே
லன்கதையை வெண்பாவா னாடி நவின்றிட்டான்
என் கழறு வன்பெருமை யீங்கு. (2)

சொல்லழகு மொண்பொருளிற் றோன்றழகுந் தூயவணி
நல்லழகும் வேறு நவைதவிரும் - பல்லழகும் .
சேரப் புனைந்துரைத்தான செந்தமிழ் வெண் பாவிதனை
நேரொப்பி லாதபடி நேர்ந்து. (3)

ஓதக் கடலமுதா லொண் புலவர்க் கூண்விருந்தொன்
றேதமற வீந்து விறைவன் போல் - நாதமலி
நற்றமிழி னாலளித்தா னல்விருந்து நாவலர்க்குக்
கற்றபயன் தானுறுவான் கண்டு. (4)
-----------

3. பின் காளமேகமெனப் பெயர்பெற்ற அருட்கவி பிரமஸ்ரீ தென்திருப்பேரை
அனந்தகிருஷ்ணையங்காரவர்கள் இயற்றியது.

(கண்ணனுக்கும் இந்நூலிற்கும் சிலேடை.)

நேரிசை வெண்பா .
அங்கங் கருமையா லர்த்தமிகப் பார்ப்பார்க்கே
இங்கிடலாற் சங்க மெடுக்கையால் - நங்கணனை
மான வழகாய் வழுத்தினன்கு சேலவெண்பா
மானகர்வாழ் சேதுரா மன்.
------------

4. திருநெல்வேலி தெற்குப் புதுத்தெரு கவிராஜ் மகா -ள -ள - ஸ்ரீ
நெல்லையப்பப்பிள்ளை அவர்கள் இயற்றியவை.

அறுசீரடி யாசிரிய விருத்தம்
அருந்துவரை யம்பதியை யரசுபுரிந்தவரைப்பூ தனை தன் னாவி,
அருந்துவரை யம்பதின்ம ராமரமேழ் துளைத்த வரை யரிக்கா வாமை,
அருந்துவரை யம்பதிவேல் சுவற்வுய்த் தார் மாமடியை யவனி யீகை,
அருந்துவரை யம்பதின்மர் கொளாது பெறப்பதமருளு மன்பி னாரை. (1)

குன்றதனான் மழைதடுத்த குழகரைமுன்னாணட்புக் கொண்டு மூதூர்,
சென்றன்பிற் றெரிசித்துத் தீயவினை யொருவறு மை சேரச் செற்றுத்,
துன்றவருட் செல்வமொடு தொலை வில் பொருட் செல்வமுற்ற தூயோன் மார்பின்,
மின்றருமுப் புரிநூலன் வித்தகக்கு சேலனென விளங்கு மேலோன். (2)

மேதகுநர் சரிதையினை வெண்பாவாற் பத்திமையின் விளம்பித் திங்கள்,
ஆதவனு முளவரையும் புகழடைந்தான் விண்டுபுர மதுமுன் செய்த,
மாதவத்தங் கந்தணர்தம் மர புதித்தான் நாரணவேள் வரத்தில் வந்த,
நீதமாக வாஞ்சேது ராமய பாரதியின் நீணிலத்திற் றானே. (3)

நேரிசை வெண்பா.
விசேடப் பொருள் விளங்க வித்தகமு மேவக்
குசேலர் சரிதை வெண்பாக் கூறிச் - சுசீலக்கோ
விந்தனருள் பெற்றானிம் மேதினியில் விண்டுபுரம்
வந்தசேது ராமமன்னவன்.
-----------

5. திருவிடை மருதூர் வித்வான். மகா - ள - ள - ஸ்ரீ
கோவிந்தசாமி பிள்ளை அவர்கள் இயற்றியவை.

அறுசீரடியாசிரிய விருத்தம்.
திருவமிகு மில்லறத்திற் செறிந்தாலும் பெரியர்மனந் திறம்பா ரென்றோர்,
உருவமிகு மொழி தனக்கேயுரியதெனப் பலதிறத்தா னுலகிற் காட்டிக் ,
கருவமிகும் படி கடந்தகுசேல் முனி சரிதையைவெண் கவியா லிந்த,
பருவமிகு மவன்யா ரே யென்றிடிலிப் பாரீர்யாம் பகரு வேமால். (1)

முத்திருந்துங் கயமிருந்தும் பசி தவிர்க்க முடிகுவதோ முதியோர் வாழுஞ்,
சத்திருந்த நாடெனினு மன்னமுணீர் தா னில் வேற் சரிக்கு வாமோ,
சொத்திருந்து மில்லாரே போன் றிடுவ ரிவையிருந்துஞ் சோறு நீரும்,
வைத்திருந்தார் பெரு மைதனை யித்தகைய தெனவுரைக்க வல்லார் யாரே. (2)

நீர் நாடே யிவையிரண்டும் நெறிமுறையை வைத்திருக்கு நீணா டாகும்,
கார் நாடேர் கண்டனுமிந் நீர் நாட்டின் கவி னதனைக் கண்டே யன்றோ ,
பார் நாடு இந்நாடே நாம் பெரிதும் கோவில் கொளும் படிய தாமென்,
றார் நாட்டின் பெருமை தனை யவனன்றி மற்றவரா லறைய லாமோ . (3)

நலமணக்குங் காவிரிமா நதிமணக்கு மிந்நாட்டி னடுவ ணாரும்,
புலமணக்கும் விண்டூரில் மண்டூர்க ளெவ்வெவையும் போற்று மாறே,
தலமணக்கு மறையுடன்முத் தீ வளர்க்கும் வேதியர்கடலைவ னானான்,
பொலமணக்கு நாரணப்பேர்ப்யுங் கவனும் நாகம்மைப் புனிதை யாரும். (4)

மறைவழியே புரிதவத்தா லவதரித்தோன் மிருதியுரை வழிதப் பாதோன் ,
கறைவழியார் கண்டனடி கனவினுமே மறவாதோன் கலைசேர் ஞான,
நிறைவழியார் பாரத்வாகத் தவனார் கோத்திரமும் நெறியோர் தேற,
அறைவழியா ரா பஸ்தம் பப்பெயர்கொள் சூத்திரமு மமையப் பெற்றோன். (5)

தாரணியின் முன்னோனே யாயிடினு முடன் பிறந்தார் தமினு முன்னோன்,
சீரணியார் மழநாட்டுப் பெரிய சரண் மர புடைநான் மறைதேர் செல்வன்,
ஏரணியார் பெண்களுக் குங் கல்வியருள் செய்தொழில் சே ரெமின்மை யாளன்,
ஆரணியார் கண்டனருளருந்தமிழின் கடல் கடந்த வறிவனாமால். (6)

சிரந்தரித்த மால்ராமன் சேது புரிந் திடலாலே சேது ராமத்,
தரந்தரித்த பெயர் புனைந்தான் மன்பதைகள் பவக் கடலைத் தணப்பா னெண்ணி,
உரந்தரித்த நூற்கரையின் றுஞற்றுதலானும்பர்களுமுவக்கு மாற்றாற் ,
பரந்தரித்த மால் சேது ராமனெனப் பெயர் புனைந்த பாவ லோனே . (7)
------------

6. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸி. எம். எஸ். ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்
மகா - ள - ள - ஸ்ரீ. ம. பொ. ஈஸ்வா மூர்த்தியாயிபிள்ளை அவர்கள் இயற்றியவை.

நேரிசை வெண்பா
ஐயன் குசேல னருட்சரிதம் வெண்பாவால்
வையத்தார் கொள்ள வழங்கினன் காண் - செய்யாதிரு
மாதுரா மன்போல் மறைநூற் பொருளுணர்ந்த
சோதுரா மன்றான் சிறந்து. (1)

கலித்துறை.
சொல்லும் பொருளுஞ் சுவையோ டணிபெறவேதொ டுத்துக் ,
கல்லுங் கரையக் கவியிசைத் தான் கரு மாமுகிலாஞ்,
செல்வன் குசேலற் கருள்செய் தியைச்சேது ராமனென் போன்,
வெல்லும் பெரும் புகழேந்தி கொலோவின் விள்ளுமினே. (2)

ஸ்ரீவைகுண்டம் மகா -ள -ள - ஸ்ரீ . எஸ். ஞானசிகாமணி
முதலியார் அவர்கள் பி.ஏ. இயற்றியது.

எண்சீரடி விருத்தம்.
சீதமணங் கமழ் துளப மாலைச் செல்வன்
சேவடியின் செல்வமே வேண்டி நின்ற
நாதனருட் குசேலன்றன் காதை முன்னோர்
நவின்றவழி விருத்தமென நலிந்தே யன்பின்
சேதுரா மையனின்று செப்பும் வெண்பாத்
தீந்தமிழின் சுவைவடிக்கும் தேனையுண்டேம்
ஓதுபுக ழேந்துநள வெண்பாப் புகழேந்
தீயென்ன வுரைத்திடுவே முண்மை தானே.
---------------------

7. இந் நூலாசிரியரின் இன்னுயிர் நண்பர் பாளையங்கோட்டை
மகா - ள - ள -ஸ்ரீ. அ. வேணுவனலிங்கம்பிள்ளை அவர்கள் இயற்றியது.

நேரிசை வெண்பா
கண்ணனடி யேகருதுங் காசிற் குசேலமுனி
உண்மைச் சரிதமதை யோதினான் - வெண்பாக்
கவியாகச் செய்தான் கவின்சேது ராமன்
செவியாரத் தேக்கிட்வே தேர்ந்து.
----------

8. இந்நூலாசிரியரின் இன்னுயிர் நண்பரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்டு
கோர்டு பிளீடருமாகிய மகா - ள - ஸ்ரீ . சி.பி.சுப்பய்யாபிள்ளை அவர்கள் பி.ஏ., இயற்றியது.

நேரிசை வெண்பா
என்னதவஞ் செய்தனரோ விம்மகவைத் தான் பெறவே
மன்னுலகிற் றந்தையென மாண்புடையோர் - நன்னலமாய்
ஓதிடவுஞ் செய்ததுவே யுண்மையுயர் நூனவின்ற
சேதுரா மய்யன் செயல்.
---------

இந்நூல் அரங்கேற்றிய காலம் இடம் முதலியன.

நேரிசை வெண்பா
கீலகஞ்சேர் மேடங் கிளரிரு பத்தொன்றதனில்
வாலறிவர் முன் சேது ராமய்யன் - சீலமிகும்
[*]மங்கைநக ரப்பர் மடத்திலரங்கேற்றினால்
பங்கமில்கு சேலவெண் பா.
-------
[*] மங்கைநகர் என்றது பாளையங்கோட்டை.
----------

ஓம்.
கடவுள் துணை.

குசேல வெண்பா .


தெய்வ வணக்கம்.
நேரிசை வெண்பா .
விநாயகக் கடவுள்.

பார்புகழும் பத்தர் பரவுங் குசேலனது
சீர் புகழுங் காதையையான் செப்பவே - கார்புகழுங்
கைம்மா னமர்ந்த கடவு ளமர்ந்தபுழைக்
கைம்மா முகக்கடவுள் காப்பு. (0.1)

திருமால்.
அன்பர்க் கெளியவரா யண்டமெலா மேன்மையுற
வன்பர்க்கு மாற்றவராய் வந்துதித்தோன் - துன்பமிகும்
வேழந் தனைக்காத்தோன் மெல்லியலா டன்னோடு
மாழ மமர்ந்தோ னரண். (0.2)

தக்ஷிணாமூர்த்தி.
வேத சிகையின் விழுப்பொருளே நால்வர்க்காப்
போதுங் குருவடிகள் போற்றினே - னாதவனைப்
பார்த்த பனிபோற் பறந்ததே யென்னெஞ்சம்
போர்த்த பழுதார் புரை. (0.3)

சுகர்.
வேதந் தெளித்த வியாசமுனி முன்பொருநா
ளோதி யழைப்ப வுலகெல்லாம் - பேதமற
வொன்றாகி யேனென் றுரைக்கவெலா மாஞ்சு கரி
னன்றாகுந் தாண்மலரை நாடு. (0.4)

ஸ்ரீ சங்கராச்சாரியர்.
தத்துவங்க ணீங்குந் தனியிடத்தே தான்றோன்று
மத்துவித மார்க்க மறைவித்தென் - சித்தமதைத்
தான் கொண்டான் சங்கரா சாரியனா மெங்குரவன்
வான்கொண்ட பேறடைந்தேன் வாய்ந்து. (0.5)

அடியார்.
ஈசனடிபரவி யின் புடனே யன்னோன் சீர்
நேசமுடன் கேட்டு நெகிழ்ந்துருகிப் - பாசம்
தளையறுத்த சான்றோர் தமைப்பணியி னென்றும்
வினையறுத்து மேவிடலாம் வீடு. (0.6)

நூற்பயன்.
இம்மையிலே யெச்சுகமு மெய்தியபி னின்பமுட
னம்மையிலே விட்டு மடைந்திடுவர் --- செம்மையிலே
வாழுங் குசேலமுனி வான் சரிதை தான் கேட்டுத்
தாழும் புவி மனிதர் தாம். (0.7)

நூல்செய் காரணம்.
சும்மா விருந்தேனைத் தூயோன் குசேலமுனிப்
பெம்மான் சரிதமதைப் பேசென்றே - யெம்மான்போற்
சண்முகனே சொல்லச் சடலப் பயனென்றே
பண் முகமாப் பாடின்னிப் பா. (0.8)

அவையடக்கம்.
எப்பொருள் யார் தானே யியம்பிடினு மெஞ்ஞான்று
மப்பொருளின் மெய்ப்பொருளை யாய்ந்திடுதலிப்புவியில்
லான்றோர் குணமென் றருட்குசேலன்சரிதந்
தோன்றவுரைத் திட்டேன் அணிந்து. ( 0.9)

ஆகச் செய்யுள் - 9
------------

நூல்.
முதலாவது - அவந்தி காண்டம்.


பாருலகம் போற்றப் பரிட்சித்து வேந்தனுமே
சீருல்வச் செங்கோல் செலுத்து நாள் - வேருடனே
பந்தந் தனைக் களைந்து பற்றறவே நின்றசுகன்
வந்தணைந்தான் மன்னன் மருங்கு. (1.1)

வந்தமுனி பாதம் வணங்கித் தகுமுகமன்
சிந்தை மகிழ் தூங்கச் செப்பியுயர் - புந்திமிகும்
பேரார் குசேலன் பெரும் புகழைத் தான் வினவச்
சீரார் முனியுரைப்பான் றேர்ந்து. (1.2)

காயமளாம் மாடக் கடிநகர மார்கலிசூழ்
தேயத் திலக மெனச்சிறந்தே - துயதோர்
பொன்னா டெனப்பொலியும் பொற்பார் வடமதுரை
நன்னா வலர் வாழ் நகர். (1.3)

அந்நீ ணகர்ப்பாங்க ரந்நலா ரூடியேறி
தந்நீண் மணிக்கலங்க டாமின்னித் - துன்னீ
ளிருண்மாயப் பொன்னுலக மேய்ப்ப விலங்கும்
அருண்மா நகரவந்தி யால். (1.4)

வாசக் கருங்கூந்தன் மாதரார் நீர்குடைய
வீசுங் களப விரைநீர்தான் - தேசமெலாங்
கானாறாப் போந்து கடலி னிடை வீழ்ந்தே
மீனாற்றம் போக்கும் விரைந்து . (1.5)

கோதை மடமாதர் கொண்டணியும் பொற்சிலம்பே
யேத மென்நின் றிரப்பனவாங் --- காதையளாம்
நேத்திரமே காதுவன நீணுதலே கோடுவன
காத்திரமே காந்துவன் காண். (1.6)

காய்வழி செல்லுங் கதிரவனுந் திங்களுமே
போயகல மாட்டாமற் போந்து புறம் - நேயமுடன்
றங்குந் திகழ் பொறிகள் சார்ந்த மதிற்கதவ
மங்கு திறக்கமய மாய்ந்து . (1.7)

கண்ணன் கருமேனி காண்பான் குசேலனது
தண்ணன் கமலமலர்த் தாள்பரவத் - திண்டலேழ்
வந்தணைந்தாற் போன்றதே மாக முகடுரிஞ்சு
மந்த மதில்சூ ழகழ். (1.8)

தோமனைத்துங் காயுந் துறவிகளை யுங்காயுங்
காமனையுங் காயுமொரு கண்ணுதலுங் - காமமுறப்
போகந் தனைவிற்கும் பொன்னனையார் பன்மறுகு
மாக முயர்ந்தோங்கு மால். (1.9)

வந்தவிருந் தூட்டி வருவிருந்துந் தானோம்பி
நந்தலினன் னாவலர்க்கு நல்கியே - சிந்தைகளி
தூங்கநூ லாய்பின்னோர் தொன்மறுகு பொன்னவிர
வாங்காங் கொளிர்வனவே யாம். (1.10)

மூவுலகு மேவெஃகு மும்மைப் படுபொருளும்
நாவுலவு மின்சொ னயப் பொருளுந் - தேவுலகும்
நாணத் திகழுமே நல்வா ணிபர்வாழும்
மாணமதிப் போங்கு மறுகு. (1.11)

மருமத் தயில் பாய மாறேற்கும் வன் போர்க்
கருமக் கருங்கழலார் காலின் - பெருமொலிபோய்
மாந்தர்வாழ் மண்ணுலகோ வானுலகுந் தான்மண்டும்
வேந்தர் வாழ் வீதிபல வே. (1.12)

ஒருமூன்று தீவளர்க்கு முய்த்துணர்வே தத்தோ
டிரு மூன்று நூலோது மென்றும் - வருமூன்று
காலந் தெரிந்துணர்த்துங் காசகன்மா வேதியர்வாழ்
சீலமறு கோங்குஞ் சிறந்து (1.13)

வேத முழக்கொலியும் வின்னாண் முரசொலியும்
நாதமிகு மாவணத்தி னண்ணொலியுங் - சாதமளித்
தூட்டு மவரொலியு மொண்கணிகை யாட்டொலியு
மோட்டுமே யோத வொலி. (1.14)

இம்மா நகரொருசா ரேலங் கமழ்சாரற்
கைம்மாக் கரடக் கலுழியுமிழ் - வெம்மாவி
தேய்க்குமுயர் ஞாழலகிற் றேவதா ரம்மலிவா
னேய்க்குமுயர் கானமுள தே. (1.15)

கானத் தொருசிறையே கானக் குறமகளிர்
மானக் கரியோடு மாறுசெய - வேனக்
குருளை யுரப்பு நெடுங் கோளரிமாக் குன்றம்
வெருளக் கிடந்ததே விண் (1.16)

மழைபடியு மம்மா மலைமீதி லென்றுங்
குழைபடியும் மாமுனிவர் கூட்டந் - தழைபடியுந்
தாருவினோ டும்பொலியத் தங்கு முயர்சேரி
மேருவினின் றோங்கும் வியந்து. (1.17)

நிலனாறி வானி வந்து நீண்டதரு மேவிக்
குலனாறும் பொறசிகரங் கொண்டு - நலனாறத்
தேமதியந் தோய்ந்தமரர் சிந்திக்க நின்றதே
தூமதியோர் குன்றத் தொடர். (1.18)

சரியை முதல் ஞானச் சதுர்விதமும் வேதம்
விரிதருமெய்ந் நூலின் விளக்கும் - பெரியதோர்
போத விருத்தியுமே பொற்பிற் பொலியுமாற்
சீத முனிவரரின் சோர்வு. (1.19)

தழலோம்பி யைந்தவித்துத் தத்துவந்தேர் ஞான
நிழலோம்பு நீணெறியோர் நித்தங் - கழலோம்ப
நின்ற வரைப்புறத்தோர் நீலமணி வண்ணனருட்
குன்றமென வோங்குங் குணன். (1.20)

குணமேறித் தான் தவக் குன்றேறிக் கண்ணன்
மணமேறும் பாதமலர் வாக்கிற் - கணமேற
வேறமனத் தேயிருத்தி யேதப் புரையாறு
மாற மகிழ்ந்தான் வதிந்து. (1.21)

சீடர் திறனோக்கிச் செப்பு சாந் தீபனிடம்
பீட மருந் தெய்வப் பெருமறைக ளேடவிழ்த்து
முக்குற்ற மோட முழுமுதலாங் கண்ணனுடன்
பக்குவமாய்க் கற்றான் பரிந்து. (1.22)

வேதமே தானாய் விளங்கும் பொருடானாய்ப்
போதமே தானாய்ப் பொலியுமொரு - நாதமே
தானாய்த் திகழ்கண்ணன் றன்னுடனே தான் பயில
வானா வருள் பெற்றா னால். (1.23)

அழுந்துபசித் தீயாற்றி யாக்கைநனி வாடச்
செழுந்தசையும் வற்றித் திகழ்ந்தான் - தொழுந்தகையர்
செய்யா விரதமெலாஞ் செய்து மறைக்குலத்தார்
பொய்யா வொழுக்கம் புகுந்து. (1.24)

சந்திசெபம் வந்தனைசள் சாற்றுமுக் கால்வழாப்
புந்தியுடன் செய்தொளிரும் புண்ணியவா - னைந்தவியத்
தற்போதந் தானழுவத் தானே பிரம்மதா
யற்போத நீக்கு மவன். (1.25)

மெத்தியபல் கந்தைதுணி மெல்லிழையி னாற்பொல்லம்
பொத்தியதை நல்லுடையாப் பூணுதலா - லெத்திசையுங்
கோதிற் குசேலனெனக் கூறு முயர்நாமந்
தீதறவே பெற்றான் சிறந்து. (1.26)

மந்திரமா வேதம் மதித்தறியா மாலடியைச்
சிந்தையினி லெஞ்ஞான்றுஞ் சேவித்து - நந்தலிலாப்
பூசனைக ளாற்றிடுவான் புண்ணியனா மிம்மறையோன்
வாசனை கொள் பூவான் மகிழ்ந்து. (1.27 )

இன்னதவத் திற்கிணங்க வேற்றதுணை யாமறையோன்
வன்னெடுவேன் மீளி வரகுணனே - முன்னஞ்
சலியாத் தவப்பயனாற் சாருமோர் மாதைத்
கலியாணஞ் செய்தான் கனிந்து. (1.28)

காந்த னுடல்காப்பாள் காதன் மனையென்றே
சாந்த குண்மேலோர் சாற்றுமொழி - யேந்தெழிலா
ரிம்மான் செயனோக்கிப் போலு மியைந்தகுண
மம்மா வுடைய ளவள். (1.29)

நாண முதனான்கும் நன்கமைய நானிலத்தின்
மாண மறைக்குலத்தே வந்துதித்தாள் - காணக்கண்
காட்சியெனக் கண்டோர் கனிந்துருகக் கற்பமையும்
மாட்சிதனைப் பூண்டாண் மகிழ்ந்து.( 1.30)

வருவிருந் தூட்ட மனங்கொள்ளுங் காந்த
னருகிருந் தன்னா னகத்திற் - கருதியதை
யோர்ந்தாற்று முண்மையையே செப்பு மொருவரையு
நேர்ந்தலர்சொற் றூற்றிடா ணின்று. (1.31)

கோதின் மகவடையார் கடுகதி நாததியெனத்
தீதின் மறையெடுத்துச் செப்புதலாற் - கோதையுடன்
பொன்குலவு மார்பனையே போற்று குசேலன் சேர்ந்தான்
றன் குலமே யோங்கத் தழைத்து. (1.32)

சேர வுடல்பொருமச் சேனயன முட்குழியப்
பார முலை வீங்கிப் பால் சுரப்ப - வேரவிருந்
தோன்றா விடைதோன்றத் தோகைசில வாண்டிற்கு
ளின்றாண் மகவிருபத் தேழு. (1.33)

செல்வமகள் வாழ்வுற்றோர் சிந்திக்க வோர்மகவுங்
கல்விமகள் காந்தன் கருணைசெயான் - செல்வமகார்
பத்தும் பதினேழும் பார்புகழப் பாலித்தான்
கத்துங் கழல்வேந்தே காண். (1.34)

காதலினொ டுள்ளக் கருத்தின் பயன் வாய்ப்ப
வேதமிலா நன்மைந்த ரீன்றாரை - மாதவன்றா
ளோதார் ருறுவினைபோ லுற்றுப் பிடித்ததே
தீதார் மிடியென்னுந் தீ. (1.35)

பல்லனைத்துங் காட்டிப் பலர்நகைக்கக் கைநீட்டிச்
சொல்லனைத்துஞ் சூட்டி முகச் சோர்வூட்டி - மல்லனைத்தும்
மானமுட னோட மனைகடொறு மெஞ்ஞான்று
மீனமுட னேற்பதிழி வே. (1.36)

ஏற்ப திகழ்ச்சியெனு மின்சொற் கடைப்பிடித்து
நோற்ப தனை நோற்கும் நுண்ணறிஞன் - தோற்குழுவாழ்
கானவாய் நீவாரங் கண்டுறக்கிக் கொண்டுவப்பான்
தேனவா மின்மொழிபாற் சேர்த்து. (1.37)

சேர்த்தநீ வாரமதைத் தீஞ்சுவையிற் றான்சமைத்துக்
பார்த்ததிதிக் கோர்பாகம் பங்கிட்டுச் - சீர்த்தமனை
தானளிக்கத் தானயின்று தாமோ தரன்பாதந்
தேனளிக்கத் தேக்கிடுவான் றேர்ந்து. (1.38 )

இங்ங னிவனிருப்ப வின்புடையம் மைந்தர்க்கு
மங்ங னடிசில்வாய்க் காற்றாமை - யெங்ஙன்கொல்
கண்டு மனமுடையாள் காந்த னிடமொன்றும்
விண்டு மொழியாள் வெறுத்து . (1.39)

ஒரு மகவுக் கீயுங்கா லோர் மகவெற் கென்னு
மிரும்பவும் மும்மகவு மேற்கு - மருமகவு
ளொவ்வொன் றழுப்புரளு மூடுமுகம் வாடிடுமே
லெவ்வரறா தென் செய்வாளே. (1.40)

அம்மா வுணவின்றி யாற்றாம லெம்வயிறு
சும்மா கிடந்து துடிக்குதெனத் - தம்மாவி
போகநிற் கின்றாரைப் பூங்கையாற் றானணைத்துச்
சோகமுறச் சோர்வா வேண்டு. (1.41)

பக்கத்துப் பாலரின்கைப் பக்கணங்கண் டோடிப்போய்
நெக்குருகிக் கண்ணின்றும் நீர் ததும்ப - மிக்கழுதே
யின்னா னிது வயின்றா னென் வாயு மூறுதலா
லன்னாயிப் போதே யருள். (1.42)

வேறு மனைச் சிறுவன் விட்டின்க ணட்டகறிக்
கூறுமுத லானவெலாங் கூறென்றான் - கூறுவகை
யின்னனவென் றன்னவையு மெச் சுவைகொ லீயென்றே
யன்னையுடை யீர்த்தே யழும். (1.43)

சுட்டிமுதற் பல்கலனுந் தோன்ற வயன்மாத
ரிட்டமுடன் றம்மகவுக் கிட்டாரான் - மட்டகல
வீழ்தாயே யெங்கட்கும் வேண்டுமவை யீயெனக்கண்
வீழ்நீர் பெருக்கு நிலம் வீழ்ந்து. (1.44)

இவ்வண்ண மொவவோ ரிளமகவு மேந்திழைபான்
மைவண்ணக் கண்ணீர் வடிக்குதலுஞ் - செவ்வண்ணக்
கைத்தலத்தாற் றானணைத்துக் காதலரை யோர்விதத்திற்
சித்தநொந் தாற்றிடுவா டேர்ந்து. (1.45)

பூணூலே பொற்பூணாம் பொற்கலையே வற்கலையா
மாண் பரிகலமே மாவிலையாம் - வாணோக்கி
யன்பி னளிக்கு மனப்பாலே யாப்பாலா
மின் புதல்வர்க் கெஞ்ஞான்று மே. (1.46)

கோடிபொன் னுள்ளார்க்குங் கோதி லொருமதலை
நாடியவா றோம்ப னனியரிதா - னீடுதுயர்
வெவ்விடமாய் வாட்டு மிடியிற்பன் மக்கடமை
யெவ்விதமாய்க் காப்பா ளிவள். (1.47)

வெம்மை மிடிக்கடலில் வீழ்ந்துமனம் புண்ணாயுஞ்
செம்மைமனக் காந்தனிடஞ் செப்பிடா - ளிம்மைதனின்
முன்செய் தவமுடிக்க முன்னிட்டு நிற்குமிவ
ளின்செய் சுகுணமென் னே. (1.48)

நேர்ந்த மிடிச் சாகரத்தை நீந்துவதெவ் வாறெனவே
யோர்ந்தொருநா ளுன்னி யுளந்துணிந்து - கூர்ந்தமதிக்
காந்தனடி போற்றிக் கழறிடுவா டன்கருத்தைத்
தீந்தண் மொழியா டெளிந்து. (1.49)

பொற்பின் மிடியிலுமே போயேற்ற றாழ்வென்றே
கற்பித்த மூதுரையைக் கைக்கொண்டாய் - நற்புனித
நானதையே யோர்ந்து நவிலுமென்றன் புல்லுரைக
ளானவையே கேட்டருள்க வாய்ந்து. (1.50)

மைந்த ரனமின்றி வாடி மிகவருந்திச்
செந்தளிர் மேனி தியங்கினரே - யைந்தவித்தோ
யின்னடிசி லாற்புவியி லின்னுயிர்தா னிற்குமென
நன்னெறியோர் சொல்வார் நயந்து. (1.51)

மன்னு முயிரனைத்தும் வாழ்கநன் கென்றென்றும்
பன்னுமறை தேர்ந்து பகர்ந்திடலான் -- மன்னவனே
மைந்தர் நனிவாழ்தன் மாண்பன்றோ வென்றுரைத்தா
ளிந்து முகத்தா ளெடுத்து. (1.52)

ஆக்கம் படைத்தோ ரருந்தவ ரஃதிலா
ரேக்கமுறு பாவியரா மிவ்வுலகி - னோக்குங்கால்
காந்தனே யென்றாள்சீர்க் கற்புடைய மாதரார்
போந்தேத்த நின்றாள் புலர்ந்து. (1.53)

வனப்பழிக்கும் வாய்மை நலனழிக்கும் மான
நினைப்பழிக்கும் நெஞ்சஞ் சிதைக்கும் - வினைப்புகுத்துங்
காதலிகாந் தர்க்குட் கலாம்விளக்குங் காசினியில்
வேதனைகள் செய்யு மிடி. (1.54)

அல்லல் புரிந்தே யழித்தாலுந் தீமிடியில்
னல்லவனாங் கூற்றுவனே நானிலத்திற் - சொல்லுங்கால்
கூற்றோ வுயிரொன்றே கொல்லுங் கொடுடியோ
போற்றுகுண முங்கொல்லும் போது. (1.55)

இன்ன வறுமையினை யென்று மொழித்திடுதல்
சொன்னகலை நன்றென்றே சொல்லிடுமே - மன்னவனே
வேதசிகை யோர்ந்தவனே வித்தகனே யென்றுரைத்தாள்
சீதமொழி வாயா டெளிந்து. (1.56)

பொன்னவிரும் மார்பனுடன் போற்று மறைமுழுதும்
நன்னலமாய்க் கற்றதனா னற்றவத்தோ - யன்னவன்பாற்
செல்வங் கொடுவந்தெஞ் சேய்கணோய் தீர்த்தியென
வில்வத்தனத் தாளுரைத்தாள் வீழ்ந்து. (1.57)

துட்ட ரகழலத் தூயோ ரகங் குளிர
விட்ட முடன்றோன்று மெந்தைபா – னட்டர்நீ
தாவிற் பெருஞ்செல்வந் தாவெனுமுன் றந்தருள்வா
னாவலுடன் செல்வி ரவண். (1.58)

மற்றவன் றான்மறுக்கில் வானவர்க்கா நல்லமுதீந்
துற்றவன் தொண்சேவை யுண்டாகும் - பற்றற்றோய்
பொய்யாப் புகழின்பும் போது மெனவுரைத்தாண்
மையார் விழியாண் மதித்து. (1.59)

கண்ணனை யன்பர் கருத்துள்வாழ் நீலமணி
வண்ணனை யெய்திநம் மக்களுய - வெண்ணினிதி
நண்ணிவா வென்றிடலும் நங்கை முகநோக்கித்
தெண்ணிலையான் செப்பிடுவான் றேர்ந்து. (1.60)

மைந்தர் தமக்கிரங்கி வாடும் மடமயிலே
முந்தை யருந்தவங்கண் முற்றுவித்தோர் - நந்தலிலா
வின்பந் தனையடைவ ரேனையோர் வெந்துமனத்
துன்பந் தனையடைவர் சூழ். (1.61)

மக்க டமைப் போற்ற மாநிதியம் வேண்டினா
யிக்கனைய சொல்லா யிருஞ்சிறையார் - பக்கிமாப்
பல்லுயிர்க்குச் செல்வம் பணமுண்டோ சொல்லென்றான்
சொல்லுணர்வி னின்றோன் றுணிந்து. (1.62)

சொல்லிய வவ்வுயிர்கள் சோர்ந்தேற்ற றானுண்டோ
புல்லியசோ றின்றியுயிர் போயிற்றோ - மெல்லியலாய்
நாளையுண விற்கா நலியுபோ வின்றென்றான்
வேளை வெகுண்டோன் விரைந்து . (1.63)

கருப்பையண் டத்துயிர்க்குங் கல்லமர்தே ரைக்கும்
விருப்புண வூட்டும் விமலன் - மருக்குழலாய்
நின்மைந்தர்க் காவாது நீங்குவனோ வென்றுரைத்தான்
சென்மக் கடல்கடந்தோன் றேர்ந்து. (1.64 )

அலரவன் றீட்டிவைத்த வாயுண் முழுது
மலரவிர் கூந்தலெழின் மாதே - நலமுறுநின்
மைந்தர்க் கனமுண்டாம் மாழ்க லெனவுரைத்தான்
பந்தங் களைந்தோன் பரிந்து. (1.65)

கொலைகளவு பொய்யாசை குய்யம் முதலாம்
பலதீ வினைப்பாற் படுத்துஞ் - சலதியுறை
யெம்மா னடிக்கமல மேத்து மிசையுடையார்
தம்மால் வெறுக்குந் தனம். (1.66)

வாக்கிருந்தும் மூங்கையராய் வாய்ந்தமரை போலிலங்கும்
நோக்கிருந்து மந்தகராய் நுண்செவியின் போக்கிருந்து
மில்லாரா யென்று முயிர்ப்பிணமா யாக்குமே
பொல்லாரே போற்றும் பொருள். (1.67 )

பிறந்திடும் போது பிறவாது மாந்த
ரிறந்திடும் போது மிறவா - துறைந்திடும்
மத்தியிலே தோன்றி மறைந்தின்னல் செய்நிதியை
நத்திடார் நல்லோர் நயந்து. (1.68)

பாசந் தனையறுத்துப் பங்கமிலா மெய்ஞ்ஞான
நேசந் தனையுடையார் நெஞ்சமதிற் - காசகல
வாழ்குழலான் வான்பதமே வாய்க்க மகிழ்வதுவே
தாழ்குழலாய் மூரித் தனம். (1.69 )

புன்புலால் யாக்கை பொருளாப் பொருளிலதா
லன்பிலார் மைந்தர்க் கசமழிந்தா - யென்புலா
மூனடுத்த நாண்முதலா யுற்றகன்ற தோர்ந்திலையே
தேனடுத்த சொல்லாய் தெளி. (1.70)

முன்பெத் தனைமைந்தர் முதுலகிற் பெற்றனையோ
பின்பெத் தனைபேர் பெறுவையோ --- கொன்பெற்றா
யிம்மைந்தர் மைந்தரென வெங்ங னிசைகுவதே
மைம்மைந்தை நீக்காய் மதி. (1.71)

தாயார் மனையார் தனையரார் சாற்றிடுநா
னீயாரென் றெண்ணலையே நேரிழையே – வேயாருந்
தோளாய் மதித்துணராய் சொன்மயக்க மென்றவர்சொற்
கேளாயிம் மாயங் கெடு. (1.72)

கேடென் றிவைவிடுத்துக் கேடில்லா ரின்பத்தும்
நீடு துயரிடத்தும் நேர்நின்றார் - தோடவிழ் பூங்
கோதாயவ் வாறே நீ கோபாலன் கொங்கலரும்
பாதார விந்தம் பணி. (1.73)

அந்தணன் மாற்ற மனைத்துமே யஞ்செவியிற்
சிந்தையுடன் கேட்டுத் தெளிவுற்றும் மைந்தர்பால்
வைத்தமயன் மாறாது மன்னளிடை மாறாடும்
பொய்த்த நுசுப்பாள் புலர்ந்து. (1.74)

தீதிலருமுயற்சி செய்யா துறுங்கொல்லோ
வோதி லுயர்செல்வ மொண்புவியிற் - போதி
லவனனையா யென்றுரைத்தாள் யார்க்கு மெஞ் ஞான்றும்
பவநினையாப் பாவை பரிந்து. (1.75)

நன்னிலமே யானாலும் நாடி நனியுழுது
தன்னிலையே தானுணருஞ் சான்றவனே - மன்னியால்
வித்திடாற் குற்றிடுமோ மேவு பய னென்றாள்சொல்
தத்திடா நின்றகிளை தான். (1.76)

எம்மான் றருமெனவே யென்றும் முயல்வின்றிச்
சும்மா விருந்தாற் சுகமென்ன - வம்மா
வடைகுவதோ செல்வ மறைந்திடுவா யென்றாள்
படை குவளைக் கண்ணாள் பரிந்து. (1.77)

தீதிற் றிரெளபதையுந் தேர்பிரக லாதனுமே
யோதி யழைத்தலினா லும்பர்கோன் - கோதிலாய்
வந்தாண்டா னன்றேல் வருவானோ மன்னவனே
செந்தா மரைக்கண்ணன் றேர்ந்து. (1.78)

என்றுமுலை யாமுயற்சி யெண்ணியவை முற்றுவிக்கும்
வென்ற புலனாதா வியனுலகின் - மன்ற
முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும். (1.79)

கண்ணன் கழலிணையே கண்டாய் களைகணாத்
தெண்ணன் மனம்வாய்ந்தாய் தேசிகனே - விண்ணவர்கோன்
போற்று மவன்பாற் பொருளிரக்கி லென்னென்றாள்
சாற்றுமயிற் சாயலா டாழ்ந்து. (1.80)

அணைந்தோ ரெவரேனு மாதரித்தன் மாயந்
தணந்தோர் தமக்குத் தகவே - யுணர்ந்தோயுன்
மக்களையு மென்றனையும் மாளா வறுமையினில்
வைக்கக் கடனோ வழுத்து. (1.81)

மைந்தர் தமக்கிரங்கி வாடும் மனைவியவள்
சிந்தை நனிநொந்து செப்பியதைப் - புந்தியிலே
தானினையாத் தண்டுவரை போகத் தலைப்பட்டா
னானினியல் புள்ளா னவன். (1.82)

பைந்துளவ மாயவனைப் பார்த்தாற் பவநீங்கும்
நைந்தவிவ ளெண்ணம் நனிநிரம்புஞ் - சிந்தைதனி
லென்றுன்னிச் செப்பிடுவா னேந்திழைபால் யாவருமே
முன்றுன்னிப் போற்றும் முனி. (1.83)

தெய்வங் குருவிறைமுன் செல்வோ ரருள் வேண்டிக்
கைவந்த கொண்டுவந்து காண்குவரான் - மைவந்த
கண்ணாய் கழறிடுவாய் கையுறையா தென்றான் சீர்ப்
பண்ணார் மறையோன் பரிந்து. (1.84)

காந்தனுரை கேட்ட கணமே யுபவாசங்
கூந்த விளங்குயிலுங் கொண்டேற்றா – ளேந்தலரு
ணெல்லினிற்றன் பாகம் நெடுநாள் வரைசேர்த்தா
ளல்லலறச் செய்தா ளவல். (1.85)

செய்த வவறன்னைச் சீர்மறையோன் கந்தையினிற்
பெய்து முடிந்த பிதிராம-- லெய்த துயர்
நீங்கள் கணவன்கை நீட்டினாண் மற்றதனைத்
தாங்கினான் றண்ணளியான் றான். (1.86)

முன்பு நடந்தறியான் மூவா முதலருளும்
தன்புயந் தாந்துணையாத் தண்டுவரை - யன்புடனே
மார்க்கமதைக் கேட்டு வழிநடந்தான் சென்மமகன்
மார்க்கமதைக் கண்டோன் மகிழ்ந்து. (1.87)

பஞ்சு மருங்கமர மையற் பிடி யென்றே
கொஞ்சி யணைத்த கொடுங்களிற்றை - நெஞ்சுருகிக்
கண்டு பிடியூடக் காத லுடன்ணையும்
பண்டைமலை நீத்தான் பல. (1.88)

கந்தமலருந்தளிருங் காயுங் கனியுமவிர்
மந்திகளுந் தேரா மரவகைகள் - சந்ததமுந்
துன்னிடவே பானுகரந் தோன்றிடாப் பல்வனங்கள்
பின்னிடவே போந்தான் பெயர்ந்து. (1.89)

வாச மலர்சூடி வாய்ந்த மணிபூண்டு
வீசு கமழ்சாந்தம் மேலணிந்து - நேசமுடன்
காந்த னிடஞ் செல்லுங் காதலியின் மேவுபல
சாந்த நதிகடந்தான் றான். (1.90)

அருவத்தார் சிற்றிடையா ரங்கட் படையைப்
புருவத்தார் வில்லினிடைப் பூட்டி - யுருவத்தார்
காளையர்க ளோடு கடும் போர் புரிநகரம்
மீளி பலவகன்றான் மீண்டு. (1.91)

ஏனை வழியெல்லா மெங்ஙன் கடப்பதெனத்
தானே நினைந்து தயங்குங்கால் - வேனி
லெழுநா வெனவெழுந்து வந்ததே யெங்குந்
தொழுநாமத் தூயோனைச் சூழ்ந்து. (1.92)

மண்ணு மறலும் வளியுங் கதிரவன்றன்
கண்ணு மவன்கரமுங் கற்பகஞ்சார் - விண்ணுங்
கொதித்திட்டவே மேவியதக் கொல்வேனிற் கூமேற்
பதித்திடவு மாமோ பதம். (1.93)

நம் பகையை நீர்கொண்டே நான்மறையோர் வென்றிடுவ
ரம்புனலைக் கொண்டிருப்பி னையமற - வெம்பகையு
மேவா தெனத்தெளிந்து வெள்ளமெலாங் கொண்டனனாற்
பாவார் கதிர்க்கரத்தாற் பானு. (1.94)

வாங்கு கடலினிடை வாய்ந்த வடவைதனை
யோங்கு கடல்சுவற்ற வுற்றதென - லாங்கதுபொய்
நெஞ்சம் பதைத்து நெடுவேனிற் காற்றாம
லஞ்சி யொளித்ததே யாம். (1.95)

இத்தகைய வெப்பி லிரும்பசியால் வாடியுமீப்
பைத்ததரு நீழற் பதிந்திருந்துந் - தத்துபுன
னாடியுமே காணாது நாவுலர்ந்தும் நத்தனையே
பாடியுமே செல்வான் பரிந்து. (1.96)

பார்ப்பான் படுந்துயரம் பார்க்கப் படாதென்றே
தேர்ப்பரிமீ தூருந் திகழ்கதிரோன் - போர்ப்பவிருள்
பூமுழுதும் பூங்கமலப் போதடங்கப் போயினனால்
வேய்முழுது மோங்கு குட வெற்பு. (1.97)

வெய்யோ னகல விழுமியோன் கங்குலிடைப்
பையவே சென்றுவழி பார்க்குங்கா - லையகோ
கானவேன் முட்டைத்துக் காலூன்ற வேலாது
மோனமே வீழ்ந்தான் முனி. (1.98 )

மெல்ல வெழுந்தும் மெதுவா யடிவைத்து
மல்லி னடந்து மலமருங்கால் - வல்லை யொரு
கோயி லெதிர்கண்டான் கோபாலற் கே நெஞ்சங்
கோயிலா வீந்ததவக் குன்று. (1.99)

இன்றிரா விங்ங னிருந்து கழிப்பதென
முன்றி றனிற்படுத்தான மூதறிவோன் - பொன்றாலிலா
நெஞ்சம் புழுங்க நினைப்பா னிவையெல்லாந்
துஞ்சலுமே கண்ணிற் றொலைந்து. (1.100)

தனியே நனியுணர்ந்துஞ் சற்குருவின் சொல்லை
முனிவின்றிக் கேட்டு முயல - லினிமையே
யென்று மயலார்சொல் லேற்றொன் றுஞற்றிடுதல்
வன்னியே யாகுமா மற்று. (1.101)

இதுவறிந்து மில்லா ளியம்பியசொற் கேட்டுக்
கதுமெனப்பஃ றாரங் கடந்தேன் - முதுவெயிலில்
வாடி யுடன்மெலிந்தேன் வண்டுவரை கேட்கிலினும்
நீடு வழியென்பார் நேர்ந்து. (1.102)

மற்றை வழிகடக்க மாட்டா தொருவிதத்தி
லுற்றிடினும் நீப்பதெவ னோங்குகடல் - பொற்றவது
வாய்ந்திடினும் மானகரின் மற்றென்னை யார்மதிப்பா
ராய்ந்திடலு மில்லையிவை யான். (1.103)

மன்னர் முடியிடறும் மாயோன் றிருக்கோயி
லென்னவித மாயடைவே னெய்துறினுந் - தன்னனார்
சூழ விருந்தொளிருந் தூயோன் மலரடியைத்
தாழப் பெறுவனோ தான். (1.104)

கற்பகத்தைச் சார்ந்திருந்துங் காஞ்சிரத்தை வேட்டிடல்போற்
பொற்பகத்தானெம்மான்பாற் போந்தடைந்து -- மற்பமுறுஞ்
செல்வந் தனைவிரும்பல் சீர்மையோ வென்றுணர்ந்து
பல்வருத்த முற்றான் பதைத்து. (1.105)

என்ன துயருறினு மிவ்வளவு வந்தமையான்
முன்ன முரைத்தபடி முன்றுவரை - நன்னகர்க்குப்
போய்மீள வன்னிவழி போகத் தலைப்பட்டான்
றாய் மீளச் சாரா தவன். (1.106)

தண்டுவரை மார்க்கமது தானறியா தேங்குமவற்
கொண்டுவரை மார்க்கங் குறிப்பான்போன் --- மண்டுமரி
போதலரப் புண்ணியர்கள் போற்றிசைப்பப் பொற்கரத்தைக்
காதலுட னீட்டினனக் கால். (1.107)

வெய்யோன் வழிவழியே மெய்யுணர்ந்தோன் றானேகிப்
பையவே சென்றடைந்தான் பன்னாளின் - மெய்யமர்ந்தோர்
சீர்பயின்மாப் பூமுழுதுந் தேக்கிடுவா னன்னலங்கள்
கார்பயின்மே லாழிக் கரை. (1.108)

சங்கந் தனைவாய்ந்து சால வுயிரேம்பித்
துங்கமீ னானமயுருத் தோனறிலங்கிப் - பங்கமிலா
மாலி னிறங்காட்டி பானிகர்க்கும் வாங்குகடன்
மாலி னெழிற்பொன்னும் வாய்ந்து. (1.109)

வாங்கு கடன்மீன மற்றும் மருவிடலால்
வீங்கு புல்வகற்றி வீசுமணந் - தாங்குங்
களைகணான் குற்றங் கரப்பார்போ லன்றுந்
தழைகணேர் பூத்த நெய் தல். (1.110)

கட்பகையர் மென்றே கருதியுயிர் கொல்வார்போற்
பட்பகையா ரில்லாப் பாத்தியர்கள் - ளுட்பகையால்
வாரிமீன் போழ்ந்து மறுகு தொறும் விற்பார்
நேரினமீ தோகைகொள நெஞ்சு. (1.111)

மீனம் விலைகொள்வான் மேவு மிளமைந்தர்
வானவி னெற்றி வலைச்சியர்கண் --- மீனம்பாய்ந்
தன்னா ருரை கடவா தாங்கரும்பொன் னீந்தேகுங்
கொன்னார் கொடுத்தவையே கொண்டு. (1.112)

மருங்கில் வலைச்சியர்கண் மாமறுகு தோறும்
நெருங்கிவிலை விற்கும் நெடுநா - ளொருங்குலர்ந்த
மீனாற்றம் போக்குமவர் விண்முகிலேய கூந்தலணி
பூநாற்றத் தேன்றாழம் பூ . (1.113)

இவ்வகைய சீரை யிருகண்ணாற் கண்டுநனி
செவ்விய நெஞ்சுவகை சேர்ந்திருந்தா -- னெளவியஞ்
செற்றோ னிருந்தான் சிறிதே யிவை நினைந்தான்
பொற்றேன் மலர்ப்புன்னை போந்து. (1.114 )

வங்கமுகைப் பார்க்கீய மாகாணிப் பொன்னுமிலே
னங்கவர்கே ளாதுய்ப்ப வந்தமிலேன் - செங்கமலக்
கண்ணன் கழலிணையே காணவந்தே னென்றாலு
மெண்ணங் கொளாருண்மை யென்று. (1.115)

என் செய்வே னின்சொல் லியம்பி யிரப்பலெனப்
பொன்செய்த பூப்புன்னை போந்தகன்று - வன்செய்த
மாலுமிக்குக் கூறி மனமகிழ்ந்தங் கேறினான்
காலுமிக் வாலுங் கலம். (1.116)

பாம்பணைசேர் பெம்மான்றன் பாத மலர்போற்றி
கூம்பணையுஞ் சோங்கதுவுங் கூவடைய - மேம்படுதண்
சாகரமே தாண்டித் தரையடைந்தான் றுன்றுபவ
சாகரமே தாண்டினான் றான். (1.117)

முதலாவது அவந்திகாண்ட முற்றிற்று.
ஆகச் செய்யுள் (126)
-------------

இரண்டாவது - துவரை காண்டம்.


தெய்வ வணக்கம்.

செங்கரமே கூப்பிநனி தேர்வார் வினையிருட்குச்
செங்கதிரோ னென்பர் சிறப்புற்றோர் - தங்குபுக
ழன்ப ரழைப்பமுன மாதாவிற் சென்றருண்மா
லின்பத் திருத்தா ளிணை .

நூல்.

பாசத் தளை நீத்துப் பாவக் கடல் கடந்து
நேசக் கலனேறி நீண்முத்தித் - தேசினர்போற்
கானும் மலையுங் கடலுங் கடந்தமுனி
மானகரைக் கண்டான் மகிழ்ந்து. (2.1)

வேத முதித்தவிடம் மேலோ ருறையுமிடம்
நாதங் கதித்தவிடம் நல்லோர்க்கே – போதாந்
தெருளுமிட மன்பரகத் தேவா லயஞ் சூழ்ந்
தருளுமிட மத்துவரை யாம். (2.2)

அறன்முதலா நான்கினையு மாங்காங் கருளி
மறன்முதலா வேனையவும் மாற்றுத் - திறனுறவே
நம்பினா ருள்ளத்தே ஞானவடி வாய் மிளிரும்
தம்பிரான் வாழ்துவரை தான். (2.3)

இருவினையொப் பாக விருந்தவர்பால் ஞான
வுருவினனி யோங்கு முயர்மா - றிருவடிகள்
தோய்வான் றவஞ்செய்த தொல்பதியாந் தண்டுவரைக்
கேய்வான் பதியுளதோ விங்கு. (2.4)

முத்திக்கு வித்தென்கோ மூவா முழுஞான
சித்திக்கு வாய்ந்த திறனென்கோ - பத்திக்குச்
சான்ற பயனென்கோ சாரு மெவரையுமே
தான்றானாய்ச் செய்துவரை தான். (2.5)

தற்போதந் தோன்றாத் தலந்தனிலே தோன்றுகின்ற
சிற்போத மாயொளிருஞ் சீர்க்கண்ணன் - அற்போதம்
நீக்கி யருள்ளிப்பா னேர்ந்த துவரைதனைத்
தூக்கி னதற்கதுவே சொல். (2.6)

இன்னநகர்க் காண்டலுமே யேர்முகிலேய் வண்ணனைநேர்
துன்னலுறக் கண்டவன்போற் சூழ்சுகத்தாற் - பொன்னகரும்
புன்மையென வேபுளகம் போர்ப்ப நடந்தனனா
நன்மை நினைக்கும் நலன். (2.7)

செந்தமிழ்தேர் நாவலர்செய் தீங்கவியின் சீரணியு
மந்தமிலாப் பல்பொருளு மாந்தெளிவுஞ் - சந்ததமும்
வேழங்கண் டஞ்ச விளங்கியதே யுன்னுதொறு
மாழங்கொண் டோங்கு மகழ். (2.8)

அன்று திருமா லகில மளந்தநா
ணின்று வளர்ந்ததுபோ னீணிலத்தின் - மன்றக்
கிளர்ந்தனவே மாமதில்கள் கேட்டவுட னுள்ளந்
தளர்ந்திடுமா றொன்னலருந் தாம். (2.9)

இருந்தனந்தாம் பெற்று மெளியவரா யென்று
மருந்தனந்தான் கொள்வா னறிந்து - பெருந்தினமு
மாவிமுதன் மூன்று மழிக்குங் கணிகையர்தா
மேவிவாழ் வீதி பல வே. (2.10)

மூன்று வருணத்தார் முன்னும் பணிக்கெல்லா
மூன்றுமொரு கோலா யுரைப்பதன்மு- னேன்றுடனே
யன்னார் கருத்தையறிந் தாற்றிடுபின் னோர்வாழுந்
தென்னார் தெருவிளங்கு தே. (2.11)

மாணிக்கக் கானிறுவி வைர வடம்பூட்டி
யாணிப்பொற் றொட்டிலிலே யாட்டு வித்துப் - பேணித்தம்
பொற்பதுமை கண்வளரப் போற்றிடுநல் வைசியர்தம்
விற் பெரிய வீதிபல வே. (2.12)

அஞ்சாத நெஞ்சு மழியாத செல்வமும்
னெஞ்சாத கீர்த்தியு மெவ்வுலகு - மிஞ்சாத
வீரமுடன் வெற்றிமகண் மேவ விளங்கிடுமே
தீரமுமார் வேந்தர் தெரு. (2.13)

முத்தீ வகுக்கு முதுமறையின் மேம்பொருளை
யெத்தே வருமுணர வேத்திசைத்து - முத்தீனுங்
கன்னன் மொழியுரைக்குங் காசவித்தோர் தம்மறுகு
பொன்னவிர வோங்கும் பொலிந்து. (2.14)

அகழும் மதிலு மளவிற் றெருவுந்
திகழுந் துவரைநகர்ச் சீரைப் - புகழு
மிமையவர்தாங் காண்பா னிருந்தவத்தா லென்று
மிமையாக்கண் பெற்றா ரிசைந்து. (2.15)

தெருவி னெழில் கண்டு சிந்திப்பான் சற்றே
குருவி னுதித்தகுணக் கோமான் – மருவுந்
திருக்கோயிற் சேர்ந்திடுவான் சென்றனனா லென்று
மிருக்கோது நாவா னிசைந்து. (2.16)

மின்னார் மதிவதன மீதுநனி பூத்தொளிரும்
பொன்னார் குவளையிடைப் போயினான் - சொன்னாறுங்
கண்ணன் திருக்கோயிற் கண்டான் கரமுகிழ்த்தான்
பண்ணின்ற வாயான் பரிந்து. (2.17)

ஏந்தெழிற்சீர் தண்டுவரை யேன்ற மதாணியதாம்
வாய்ந்தபல வீதிவனமணியாங் - காந்துமொளி
விட்டிலகு நாப்பண் விளங்குந் தனிமணியா
மிட்டமெலா மீந்தருள்வோனில். (2.18)

மாமதிலே நற்றாணாம் வானகமே பந்தராந்
தூமதிய மீனே சுடர்விளக்காந் - தோமிற்
சதிபதியார் பீடம்போற் சாலப் பொலியு
மதியதியோ னோங்கு மகம். (2.19)

கோயில் முனங்குறுகக் கூசினான் மீண்டும்பொன்
வாயினிடை வந்தடைந்தான் மாமறையோன் -- சேயின்
குணமெல்லாங் கொண்ட குசேலமுனி வேந்தர்
கணமெல்லாங் காத்திருத்தல் கண்டு. (2.20)

கைதலைமே லேறக் கழியுடல மேநைந்தும்
நைதலிலா நன்மனத்தோ னண்ணினான் - பொய்தலிலா
சீர்துவார பாலர் சிறந்தோங்கும் பொன்வாயி
றேர்துவாரக் கந்தையோன் றேர்ந்து. (2.21)

வாயில்காப் பாரை மகிழ்தூங்க வேண்டிக்
கோயிறனைக் காக்குங் குணமுடையீர் - தாயின்
மனமுடையீர் கேட்டிரென வாய்மலர்ந்தான் கண்ணன்
றனமுடையீ ரென்றிசைத்துத் தான். (2.22)

கண்ணனை நேர் கண்ட களிப்படைந்தேன் காசினியோர்
நண்ணரிய வின்பம் நனியடைந்தேன் - கண்ணனைக்கும்
பைந்துவத் தோனைப் பரவிசா ரூபமதை
யந்தமுற நீரடைந்த தால். (2.23)

எளியேன் மறையோ ரினத்துதித்தே னென்பேர்
விளிவார் குசேலனென மேலோ- ரளியே
சுரக்குமுங் கோடைனே தொன்மறைகள் கற்றேன்
பரக்குபுகழ்ச் சாந்தீபன் பால். (2.24)

நெடுநா ணனியலைந்து நீளுவரி நீந்திப்
படமாகச் சேக்கைப் பரமன் - றொடுகழலைக்
காண நினைந்தேன் கருத்தறிவீ ரென்றுரைத்தான்
மாணக் குலமறையோர் மன். (2.25)

குன்றெடுத்துக் காத்தருளுங் கோமா னிடங்குறுகிச்
சென்றடுத் தென்னையவண் சேர்த்திடுத - னன்றெடுத்த
காயப் பெருமையினீர் கைதவமில் புண்ணியமாம்
நேயத் துடனென்றா னின்று. (2.26)

இன்னசொற் கேட்ட வெழில் வாயில் காப்பவரு
ணன்னர்நெஞ் சில்லா நவையுடையோர் - பன்னருஞ்சொற்
றூற்றினார் நால்வேதத் தூமுனியி னற்செவியி
லேற்றினா ரந்தோ வெடுத்து. (2.27)

பல்லுலகம் போற்றுகின்ற பைந்துளவ மாலெங்கே
யல்லலுறும் நீயெங்கே யாய்ந்திலைகொல் - சொல்லுங்காற்
கொல்லுங் களிறுங் கொசுவும் நனிபொருந்து
மெல்லுமொரு மின்மினியு மே . (2.28)

வில்லேந்து பூணும் விதவிதமா வூர்திகளு
மல்லேந்து காவலரு மாநிதியுஞ் - சொல்லேந்து
கோதிலாக் கையுறையுங் கோலமுமே வேண்டுமா
லாதியான் பால்போ மவர்க்கு. (2.29)

சீருடனே சென்றாற் றிசைபரவு நன்முகம
னேருடனே யேத்துமே யெவ்வுலகுந் - தேருடனே
மற்றின்றேல் வாராத வன்றுயரம் வாய்ந்திடுமே
சற்றேனு மாய்ந்திலையே தான். (2.30)

நென்னலுண்ட பாகம் நிகழ்த்தவின்றி யாமறந்தா
லின்னலுண்ட வுன்னட்பை யெவ்விதந்தான் - மன்னனவன்
நன்னினைவி லோர்ந்திடுவான் றையலமர் கந்தையோ
யுன்னிலையே யிப்போ துணர். (2.31)

செல்வ ரது நட்பே செல்வ ரிடத்தமையும்
மல்லவர்தந் நட்போ வமையாது - தொல்லுலகின்
மன்னர் பலர் போற்றும் மாமகள் சேர் கண்ணனிடத்
துன்னட்போ சொல்லு முரை. (2.32)

தந்தை தாய் மக்க டமரிவரென் றுன்னாமல்
வந்து சமரில் வதைக்கின்ற - சந்தமனர்
நட்பென்னாம் நல்லறிவை நன்குணரா மூப்படைந்தாய்
திட்பமுட னிவ்வுண்மே தேர். (2.33)

கல்விபயி லூரதனைக் கண்டறியா ரேனுமிகச்
செல்வமுடை யாரே சிறந்திடுவார் --- கல்விமிகத்
தேர்ந்தாரே யானாலுந் தீமிடிய ராமாகிற்
சார்ந்திடார் வேந்தன் சபை. (2.34)

ஓதியநா ணட்பென் றுரைத்தனையே யந்நட்பு
யாதிருந்தாற் சென்றபல வாண்டிற்குட் - போதியென
புன்னை யழைத்திடலா மும்பர்கோன் மோனந்தா
னென்னையோ தேரே மியம்பு. (2.35)

அந்நாடனுக்கேற்ப வாய்ந்தனன்போ லுன்னட்பை
யிந்நாடே வேந்திரனு மெய்தரிதான் - முன்னாளு
னன்பதனைக் கொண்டேகே லாயிலென்றும் மன்னரெலா
மன்பரலர் யார்க்கு மறி. (2.36 )

அன்று மிக நட்பென்றே யற்றமது நோக்காம
லின்றுநீ சென்றா லிமைப்பொழுதில் -வன்றுயா
மார்ந்திடுவாய் நெய்யா ரவிர்சுடரை முத்தமிடிற்
சார்ந்திடுமோ தண்ணீர்மை தான். (2.37)
.
கோதிலா வுன்குலத்தோர் கொள்ளும் தொழிலின்றித்
தீதிலாப் பேர் நினைவு தேர்ந்து வந்து -- சூதிலாய்
காதம் நடந்திளைத்தாய் காயமதி கண்டேங்கும்
போதமிலாப் பைங்குழவி போன்று. (2.38)

நிதியா ரளகை நிருபனும் நீள்வான்
பதியா ராசனும் பல்லோர் துதியார்ந்த
கண்ணனையே காணவிவண் காத்திருத்தல் காணாயே
மண்ணமர்பன் மன்னருமே வந்து. (2.39)

மேதி குளங் குழப்ப வெள்வாளை வான்றெங்கின்
மோதிக் கனியுதிர்த்த மொய்நீராற் - றீதி
லருளீர நெல்வளர்க்கு மஞ்சோழ நாட
னிருளீரும் பூணா னிவன். (2.40)

சாரன் முகம் படியத் தண்ணீ ருடல்படியத்
தோற் றமிழுஞ் செவிபடியக் - காரவிருங்
கண்டனமர்ந்தருளுங் காசினன் னாடனிவன்
வண்டமிழ்தேர் பாண்டியன் மன். (2.41))

ஏதிலா ராவிதனை யேற்றொளிரும் வாளேந்திப்
பேதிலா நிற்குமிப் பேர்வள்ளல் - கோதிலாய்
மேக மலையமர வேகளிறென் றேங்குபிடி
தேகந் தளர்சேரன் சேய். (2.42)

வாங்குசிலை தாங்கும் வரைமருளில் வன்றோளான்
மாங்குயில்கள் பாட மயிலினங்கள் - பாங்காய்
நடன மது செய்ய நன்மந்தி யார்க்குங்
குடகு நாடாளுகின்ற கோ. (2.43)

காளையர்கள் சூழுங் களிறேறு போன்றவிவன்
வாளையது பாய வலம்புரிதான் - பாளையமர்
வான்கமுகே யீன்றதென வாய்த்திடவே தான்மிளிருந்
தேன்கமழ்தார் சீர்க்கலிங்கன் சேய். (2.44)

தீங்குயிலேய் மென்மொழியார் செண்டாட நோக்கியிரு
மாங்கனியைத் தாம்பறித்து மந்தியின - மோங்குவகை
கொண்டாடும் பாஞ்சாலக் கோனிவனாந் தேன்சொரிய
வண்டாடுந் தாரணிந்த மன். (2.45)

சேனை புடைசூழச் சேர்ந்தொளிர்வே ளிவ்வழகன்
யானைமருப்பீன்ற வர்முத்த மீனைப்போ
லெங்கும் பரந்திடலா லோவானென் றையுறுத்தும்
வங்ககா டாளுகின்ற மன். (2.46)

செந்தா மரையன்னஞ் செய்நடனந் தான்கண்டே
யிந்தாவென் றம்பொன்னை யீவார்போற் - பைந்தாதைப்
புன்னை மலர்சொரியும் பூம்பொழின்ம ராடமனன்
மின்னையுமிழ் வேலமரிவ் வேந்து. (2.47)

மென்காற் சிறையன்ன மென்னடையு மெல்லிழையின்
றன்காற் றனிநடையுந் தான்கண்டு -- பொன்காவிற்
பூந்தா மரைசிரிப்பப் பூங்குவளை கண்காட்டுந்
தேந்தா ரிவன்மச்சன் சேய். (2.48)

ஆலை யமர்கருப் பஞ்சாறு தான்பாயுஞ்
சோலையிலே மேதி சுகித்துண்டு - பாலைக்
கடைவார் தமக்களிக்கும் காந்தார வேந்த
னிடைவா யிலங்கு மிவன். (2.49)

இவ்வேந்தர் தம்மு ளெவர்க்கு நீ யொத்திடுவாய்
தெவ்வேந்த ருந்தாழுந் தேவனையே - யிவ்வளவிற்
காண்பா னினைத்திடுதல் கான்முடவன் கோற்றேனை
வீண்பார்த் திடன்மானு மே. (2.50)

இத்தலைவாய் நிற்கு மிவர்க்கெலா மேவலர்கண்
மெத்தவுளர் மாநிதியு மேயுண்டா - லெத்தனைநாட்
காத்தாலுங் குற்றமிலை காசில்லா வுன்றனுக்கோ
வேத்தவையில் வேலையெனோ விள். (2.51)

ஆதலினா லைய வறிந்துநின் னூர்திரும்பிப்
போதலே நன்மையெனப் புல்லறிவோ - ரோதலுமே
யென்று மொழிற்குணங்க ளேந்துங் குசேலமுனி
கன்றியிவை யாய்வான் கலுழ்ந்து. (2.52)

மின்னவிரும் பூணும் விளங்குகின்ற மாநிதியும்
பொன்னவிரு மூர்த்தியுமிப் போதெங்கே- யின்னலுறும்
நாமடைவோ மூதாதை நாளினுமே கண்டதிலை
யாமிதற்கென் செய்வா மினி . (2.53)

கந்தையிலார் கையுறையைக் காண்பாரேல் கைகொட்டிச்
சிந்தை மகிழச் சிரிப்பரென - வந்தவத்தோ
பெண்ணி யிருப்பவவ்வில் காப்பார் பாலுரைப்பார்
திண்ணியமெய்ஞ் ஞானச் சிலர். (2.54)

யாரென் றறிந்தீ ரருந்தவமா ராரியனைப்
பேரென் றெனக்கருதிப் பேணாமை - நேரன்று
வாய்மை பொறையொழுக்க மாதவமெய்ஞ் ஞானமுடன்
றாய்மையெலாம் வாய்ந்த சுகன். (2.55)

மாந்தர் பிறப்பெய்த மாதவமே வேண்டுமெனச்
சாந்த மறை தேர்ந்து சாற்றிடலான் - மாந்தருக்குண்
மேன்மறையோ ராய்த் தோன்ற மெய்த்தவந்தா னெவ்வள வோ
தான் முறையே செய்திருப்பர் தாம். (2.56)

அந்தணரே மூவருக்கு மாசிரிய ராந்தெய்வ
மந்தணரே யைந்தொழிலு மாற்றவலா - ரந்தணரே
தெய்வமெனக் கென்றுகணன் செப்பிடவும் யாமயிர்த்தா
லுய்வதெவ னம்மா வுரை. (2.57)

இம்மையிலே யந்தணருக்கேன்ற வகை தான் புரிந்தாற்
செம்மையிலே தானடைவர் சீரெல்லா - மம்மையிலே
வானுலகப் போகமதும் வாய்ந்ததற்பி னுண்டிடுவார்
தேனுலவு மீசனடித் தேன். (2.58)

இத்தகைய வந்தணரை யேழையரென் றுன்னலெவ
னத்தகையர் போற்று மமுதனிவன் - சித்தமதைத்
தானடக்கித் தத்துவத்தின் சான்ற பொரு டேர்ஞானம்
மேடைக்க வாய்வான் விரைந்து . (2.59)

முத்த ரிலக்கணந்தான் முற்று முணராது
சித்த மிசைந்தபடி செப்பிடுத - றத்தம்
மடமை தனைவிளக்கும் மாதவமா ரன்னோர்
திடமதனைக் கேண்மின் றெளிந்து. (2.60)

உலகந் தனைவெறுத்தே யோங்கிடுமெய்ஞ் ஞானம்
விலகா நெறியே விளங்குங் - கலகமற்றோர்க்
கெம்மாலு மும்மாலும் யாராலு மெவ்வேந்தர்
தம்மாலு மாம்பயனென் றான். (2.61)

வேதமது பொய்த்தாலும் வேலை கரையிழந்து
பூதலமே குன்றநிலை போந்தாலும் - போதமுறு
மந்நிலைதா னீங்கா தவைகண்டு புன்சிரிப்பார்
தந்நிலையே யோம்புபவர் தாம். (2.62)

இன்பமதைச் செய்தாலு மேழையரென் றெண்ணில்லாத்
துன்பமதைச் செய்தாலும் தூய்மையோ- ரின்பதுன்ப
மின்றிச் சுகநிலையி லெஞ்ஞான்று முற்றிடுவா
ரன்றியவை யாயா ரகம். (2.63)

கற்பகத்தை யிங்கழைத்தற் காயமதிற் றாஞ் செல்லன்
முற்பகலைப் பிற்பகலா முற்றுவித்த - லற்பமெனச்
சித்திகளைத் தாம்வேண்டார் செப்பு முயர்சீவன்
முத்தினைப் பெற்றமுதல் வோர். (2.64)

ஆடுவா ரங்கைகொட்டி யார்த்திடுவா ரன்போடு
பாடுவா ருள்ளம் பாதித்திடுவா - ரோடுவா
நன்மத்தர் போற்றிரிவா ரோங்கி நகைத்திடுவார்
சென்மத்தைச் செற்றோர் தெளிந்து. (2.65)

கந்தை யுடுப்பார் கருதரிய மோனநிலை
சிந்தை யடங்கவே சேர்ந்திடுவார் - முந்தை
மறைமொழியுந் தன்மயமே வாய்ந்திடுவா ரென்றுங்
குறைமொழியா நல்லோர் குறித்து. (2.66)

தன்னை யறியுந் தனிஞானத் தாலென்றுந்
தன்னைத்தா னோக்குந் தவமுடையோர் - பொன்னுலகிற்
பூமரைதண் ணீரின் புளியம் பழத்தோடின்
றோமறவே தோன்றிடுவர் தோய்ந்து. (2.67)

இன்னோர் பெருமை யெளிதி லிசைக்குவதோ
முன்னோருந் தேர்ந்து மொழிவரிதா - லென்னனையா
ரெங்கன் மொழிகுவதே யெம்மா னருடூண்ட
விங்ங னுரைத்தே மிசைந்து. (2.68)

இம்மா மறையோ னெழில் ஞானி யாயினுமே
யம்மா கரும் மகன்றிலனால் - சும்மா
விருக்குஞ் சுகம்பெற்றா னெஞ்ஞான்றும் ஞானத்
திருக்குமிக வோங்கத் தெளிந்து. (2.69 )

ஆதிநா ணட்பென் றறைந்தானம் மால்காண்பா
னோதினா னன்றி யொருபொருளும் - நீதியான்
பால்விரும்பிப் போந்திலனாற் பற்றெல்லா மற்றிடவே
மேல்விரும்பித் தேர்மறையோர் வேந்து. (2.70)

ஆவாவில் வந்தணனை யன்புடனே காண்டொறுமே
நாவாரப் பாட நசைகொள்ளு - மோவாது
மெய்யிற் புளகமெழும் மேவிப்போய்க் கண்ணன்பான்
மையிலிவன் சீர்வழுத்து வாம். (2.71)

வன்றிணிய நெஞ்சுடையார் வாயடங்க முத்தரது
குன்றனைய சீரதனைக் கூறியபி - னன்றுடைய
மாதவமே பூண்டொழுகு மாமறையோன் பாலுரைப்பார்
யாதவனில் காப்பாரிசைந்து. (2.72 )

மறை யெல்லா மோர்ந்துநனி வன்பிணிவெம் பாசச்
சிறையெல்லாஞ் சொற்றொளிருந் தேவே - குறையெல்லாந்
தீர்ந்தேங் களிக்கடலைத் தேக்கினே மின்பமெலா
மார்ந்தே முனதுவர வால். (2.73)

கங்கைமுத னீராடிக் காசினிநற் கோத்திரத்திற்
பொங்குமா தானம் புரிபயன்றான் --- சங்கைத்
துரிசறவே தான் கிடைக்குந் தூமறையோ யுன்றன்
றரிசனமே காண்போர் தமக்கு. (2.74)

சிறியோர் மடமையாற் செய்தபிழை தன்னைக்
குறியேல் திருவுளத்திற் கொண்டே - யறிவோ
யகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை. (2.75)

சற்றே யிவணிருக்கிற் சார்ந்தியாங் கண்ணனிடம்
நற்றே மறைதேருன் னல்வரவைச் - சொற்றே
கடிதின் வருவமெனக் காசில்லாற் போற்றிச்
சடிதியிது புகன்றார் தாழ்ந்து. (2.76)

இதுவரையுந் தாழ்த்த வெமதுபிழை கொள்ளேன்
முதுமறைபோ யென்றே மொழிந்து - கதுமெனவே
சென்றார் திருமால் செவிமடுப்பான் செய்தவத்தின்
குன்றான் விடைபெற்றுக் கொண்டு. (2.77)

செம்பொ னெழுயத் திரண்டுவா யில்தாண்டி
யம்பொன் முடிமன்ன ராரவைபோய் - தம்பிராற்
காணா ரவணமருங் காவலரைத் தாங்கேட்டார்
சேணா டளித்திடுமால் சோர்வு. (2.78)

பொன்னா ருவளகத்தே போயினா ரெம்பெருமான்
மின்னார் பலர்சூழ வேயென்றா - ரன்னோர்சொற்
கேட்ட வுடனே கிளைமொழியார் காக்குமிட
மோட்டம் பிடித்தா ருவந்து. (2.79)

திங்களொடு மேன்மை திகழ்சங்கத் தான்வாய்ந்து
பொங்கு மமுதம் பொலிவுற்று - மங்கலிலாப்
பொன்னும் விளங்கப் பொருந்திடுமே பாற்கடல்போன்
மன்னு முவளகத்தின் மாண்பு. (2.80)

சாலவுமே மெய்முழுதுஞ் சார்ந்த பழியுடையோன்
பாலமர்தல் பாவமெனப் பாவித்துக் - கோலஞ்சேர்
சீருவள கஞ்சூழச் சேர்ந்தனபோற் றோன்றியவே
காருவக்கும் பஞ்சதருக் கள். (2.81)

இன்ன வெழில்வாய்ந்த வேறுவள கத்திலொரு
சொன்ன மலர்மஞ்சத்தே தோன்றினான் - பொன்னவிரும்
பொன்னா டலையமரப் பூஞ்சத் தியபாமை
மின்னாள் பதமமர வே. (2.82)

அந்தப் புரங்காக்கு மாயிழையார் தம்மிடத்தே
நந்தவிலா வெம்வரவை நாதன்பாற் - சிந்தையுடன்
சொற்றிடுவீ ரென்றுரைத்தார் தொல்லுலகிற் கீர்த்தியெலா
முற்றிடுவா யில்காப்பா ரோர்ந்து. (2.83)

காக்குங் கிளைமொழியார் கண்ண னிடங்குறுகி
வாக்கு மலர்த்தேனின் வாய் மலர்ந்தார் - தேக்குறுமால்
கோயிலா நெஞ்சங் கொடுத்துக் குறை தவிர்க்கும்
வாயில் காப் பார்தம் வரவு. (2.84)

கேட்டார் திருமால் கிளர்வாயில் காப்பாரை
வாட்டா மரைவாய் வரவுரைத்தார் - தேட்டாத
மென்மொழியார் சொல்லவது மேவினரால் காவலர்கள்
பொன்மொழியா ரந்தப் புரம். (2.85)

மின்னுகின்ற மீன்களிடை மேவுகின்ற தண்மதிபோற்
றுன்னுகின்ற மாதரிடைத் தோன்றிநனி - மன்னுகின்ற
தோன்றலையே கண்டார் தொழுதா ரெழுந்தாரகை
வான்றலையே நோக்க மலர்ந்து. (2.86)

சிந்தை களிதூங்கச் சீர்மறையாற் றாமேத்தி
முந்துதா னையொடுக்கி முன்னின்றார் - வந்ததி
ணென்னென்றா னெல்லாந்தே ரெம்மான்றா னேனையரு
மன்னனிடஞ் சொல்வார் மகிழ்ந்து. (2.87)

ஆதிநா ளையநின்னோ டார்ந்தகலை கற்றவனாங்
கோதிலா நன்னட்பே கொண்டவனாந் - தீதிலாப்
பண்புடையான் கந்தைகொளும் பார்ப்பான் குசேலனென
மண்பரவு வான்வந்தான் மற்று. (2.88)

வற்றியெலும் பார்யாக்கை மாதவனின் மேல்வைத்த
பற்றதனை யாமோ பகுத்தறிவோ - மற்றைநாள்
வந்து திருவாய் வதிகின்றான் மற்றிதுவே
பைந்துளவோ யெம் விண்ணப்பம். (2.89)

கேட்ட பொழுதே கிளரு முகமலர
வாட்டமிலா நெஞ்ச மகிழ்பூப்பக் - கோட்டமிலா
நற்றவமா ராரியனை நாடி யிவணழைப்பீர்
சற்றேனுந் தாழாமற் றான். (2.90)

கண்ண னனுமதியைக் காவலர்க டாமேற்றுத்
திண்ணெனவே சேர்ந்தார் திருவாயி - னண்ணுமவண்
கோதிற் குசேலனடி கும்பிட்டுக் கூறிடுவார்
தீதின் மொழியாற் றெரிந்து. (2.91)

பிடியினங்கள் சூழப் பிறங்குகளி றேற்றின்
றுடியிடையார் சூழத் துலங்குங் - கடிகமழும்
பைந்துளவத் தோன்பாற் பகர்ந்தே மருமறையோய்
சிந்தையுட னீவந்த சீர். (2.92)

மன்வரவு பார்க்கு மறைமுதலோய் சான்றகுண
நின்வரவு கேட்ட நெடியனவன் - பொன்வரவி
னோகைநனி பூப்ப வுனதுவர வேமதித்தான்
றோகை மொழி யின்பந் துறந்து. (2.93)

இன்னே யழைத்திடுமி னின்னே யழைத்திடுமி
னின்னே யழைத்திடுமி னென்றுரைத்தான் - முன்னேதன்
றாய்வருகை கேட்ட தனிக்குழவி தான் போன்று
நேயமலர் பூத்திடவே நெஞ்சு. (2.94)

இலக்கண மேயுள்ளா னிவ்வகையே சொற்றான்
மலக்குறும் பில்லா மறையோய் - தலக்கணி
வாரா விடின்கடிதே வள்ள லிவமைப்பிற்
சாரா விருந்திடுவன் றான். (2.95)

ஆதலினா லாரியனே யண்ண லகமகிழ
வேதமின்றிப் போந்தருள்க வென்றங்கைப் - போதகமே
கூப்பினா ரையன் குதூகலித்துச் சென்றனனால்
காப்பினா ரோடுங் கனிந்து. (2.96)

அன்னதுதான் கண்ட வறிவிலா ரென்செய்தேஞ்
சொன்னவுரை நெஞ்சஞ் சுடுகிறதே - மன்னவன்றான்
றேர்ந்தானே யாமாகிற் சேராத தீங்குண்டோ
வோர்ந்தாரே தங்க ளுளம். (2.97)

அருள் சேரு மந்தணனே யாதலினா லான்ற
தெருள்சேருந் தேவனிடஞ் செப்பா - னிருள் சேரு
நெஞ்ச ரிது நினைந்து நின்றே திடம்பொருந்தி
யஞ்சுதலை விட்டா ரறிந்து. (2.98)

மன்னனையே காணு மகிழ்ச்சிமுன் னீர்த்திடவே
நன்னயமாய்த் தான்பின் னடந்திடலும் - பன்னரிய
பல்வளமும் பார்த்தான் பரவியிடப் பாருலகிற்
சொல்வளமு மில்லையென்றான் சூழ்ந்து. (2.99)

பன்மணிவாய் பின்படவே பார்ப்பான்முன் றான் போந்து
பொன்மணிவாயந்தப் புரத்தினுக்கு - நன்பணிபோ
லண்மையனாய்ச் சென்றடைந்தா னாங்கமர்பல் லோவியங்க
ளுண்மையிலே கண்ணனென வோர்ந்து. (2.100)

ஈங்கிவனிவ் வாறெய்த வின்னும்வந் தில்லையெனப்
பூங்கதிர் தான் பார்க்கும் பொலன்பூவி - னோங்குமுகிற்
பார்க்கு மயிலின் பசுப் பார்க்கும் பைங்கன்றின்
சேர்க்கைமீ தார்ந்தானத் தே. (2.101)

இங்ஙன் றிருமா லின்வரவு பார்த்திருப்ப
வங்ங னவனு மகமகிழ்ந்தே - யெங்ஙனுமே
சும்மா விருக்காமற் சூழ்ந்தெவையுங் கண்டுவந்தா
னெம்மா னிருக்கு மிடம். (2.102)

மிடியோ ருணவிழந்தோர் வெப்புழல்வோர் மூவர்
கடிதினிலே பொன்னமுதங் காவும் - படிபெறுவார்
போன்று குசேலமுனி பொன்னார் திருமார்பன்
சான்றவுருக் கண்டான் றனித்து. (2.103)

வேத முடிவில் விளங்கும் விழுப்பொருளை
யேதமிலா நன்மணியை யெம்மானை - போத
வுருவானை யுண்மையனை யொப்பில்லா மாலை
யருவானைக் கண்டா னறிந்து. (2.104)

காண்டலுமே பூத்துவகை கால் விசையாத் தானடந்தா
னீண்டவனுங் கண்ணுற்றே நேயமுடன் - மாண்டபூம்
பள்ளி கடிதகன்று பார்ப்பா னடிபணிந்தான்
கள்ளமிலாக் கண்ணன் கனிந்து. (2.105)

திலகமண் டோயத் திருவடிதான் போற்றிக்
குலமறையோ னைத்தழுவிக் கொண்டா - னுலகமெலா
மெய்யன்பன் மாமறையோர் வேந்தனெனச் சொல்வாய்மை
பொய்யாமற் காக்கும் பொருட்டு. (2.106)

இன்றே சுபதினமா மின்றே சுபதினமா
மின்றே சுபதினமா மென்றனுக்கு - நன்றே
யறம் பலித்த வில்லு மடைந்ததுவே வாழ்வும்
மறம்பறந்த நின்வரவான் மற்றும் (2.107)

இன்னவிதந் தான்புகழ்ந்தே யெம்மான் மறையோனைச்
சொன்னபீ டத்தேற்றித் தூநீராற் - பொன்னவிர
நீராட்டிப் பட்டாடை நேர்பெறவே தானுடுத்திப்
பாராட்டி நின்றான் பரிந்து. (2.108)

ஐய னடிவிளக்கி யந்நீர் சிரமேந்தி
மைய லிருணீங்க மாமாயோன் - செய்யபொன்
னாசனமே யேற்றி யருச்சனைதான் செய்துவந்தான்
போசனமே யூட்டப் புக. (2.109)

தும்பை மலரனமே தூவெள்ளி மால்வரையாச்
செம்பொற் பருப்பே சிகரமா - வம்புனலா
நெய்யே கருனை நெடுங்குன்றாத் தான்படைத்தான்
செய்யசிற் றுண்டி பல சேர்த்து. (2.110)

சொல்லமுத மூடே சுவைபெருக்க மால்வண்ண
னல்லமுத மூட்ட நலமுடையோன் --- பல்லமுது
முண்டு பசிதீர்ந்தா னும்பருமே நாவூர்ந்தார்
பண்டையமு துண்டும் பரிந்து. (2.111)

விரைசேரு நற்சாந்த மெய்யெல்லாம் பூசி
யுரைசேரு மின்சொல் லுரைத்தே- புரைசேரா
மஞ்சத்தே யேற்றி மகிழ்ந்தளித்தான் பாகடையுங்
குஞ்சத்தாற் கால்வீசிக் கொண்டு. (2.112)

வழிவந் திளைத்தோன் மலரடி நோய்தீரக்
கழிமகிழ வேபிடித்தான் கண்ண --- னழிவிலதாம்
பன்முகமன் பண்ணவுமே பாரா தவனாகி
நன்மோனத் தேயிருந்தா னன்கு. (2.113)

பித்தருன் மத்தர் பிசாசர் குணத்தவரா
நத்தவ ரென்றே நவின்றிடுவர் - சித்தமது
விட்டகலா தையன் விழுவுருவைச் சிந்தித்து
நிட்டையிலே தானிருந்தா னேர். (2.114)

நீருற்ற வுப்பி னெருப்புற்ற மின்னொளியில்
னேருற்ற வெமமா னிடங்கலந்து - பேருற்ற
தற்போதந் தானழுவித் தன்னையுமே தான்மறந்தா
னற்போது வந்நிலையி னன்கு. (2.115)

நாதாந்த வாழ்வே நாடி யிவனிருப்ப
வேதாந்தத் தேயிலகு மெய்க்கண்ணன் - பேதாந்த
மில்லான் வரவறிந்தே யின்புடனே தான்சொல்வான்
சொல்லார் மறையோற் றுதித்து. (2.116 )

குன்றனைய சீராயுன் கோதில் தரிசனத்தா
லென்றனுடல் பூரித்தே னின்புற்றேன் - மன்றலந்தார்
சீர்பெற்ற வேந்தருளுந் தேவருளு மென்பேறு
யார் பெற்றார் யார்பெறுவா ரே. (2.117)

பூண்டதயை யென்பானீ பூரணமாய் வைத்தருள்வா
யாண்டவனே யென்ற னகமறிவாய் - சேண்டலமே
தான் பெறினு முன்னட்பிற்சான்றதுவோ வென்றுரைத்தான்
வான்பெற்றோர் போற்றுகின்ற மால். (2.118)

முத்தி தனையளிக்கு மோன நிலைசேர்க்கும்
பத்தி மிகப்பெருக்கும் பன்னரிய - சித்தியெலாங்
கூட்டுவிக்கு நீர்சூழ்குவலயத்தே நன்னெறியி
னாட்டுவிக்கு நல்லோர்தம் நட்பு. (2.119)

நட்பே திரவியமா நட்பே பெரும்பேறா
நட்பே யிருள்சீய்க்கு நற்கதிரா - நட்பே
பவமறுக்குங் கூர்வாளாம் பண்புடையார் நட்பே
தவமளிக்கும் தன்மையதாந் தான். (2.120)

நல்லார் குணமுரைப்போர் நாமணக்க வைம்புலன்வாய்ச்
செல்லார்சொற் கேட்போர் செவிமணக்கு - நல்லாரைக்
காண்போர் தங் கணமணக்கக் காதமண வாதோதன்
மாண்போரைப் போற்று மனம். (2.121)

அன்னோர்தம் நட்பே யருந்தவத்தா லெய்துமென
நன்னூல்கள் டேர்ந்தே நவின்றிடுமான் - முன்னாளி
லென்னதவஞ் செய்தேனோ வெம்மானே நின்னட்பைப்
பொன்னவிர வெய்தற் பொருட்டு. (2.122 )

முன்பு படித்த முதலுன்னை யான்கண்டே
யன்ப நெடுநாட்க ளாயிற்றால் - பின்பு
கலியாணஞ் செய்தனையோ கான்முளைதா னுண்டோ
சலியாமற் றானெனக்குச் சாற்று. (2.123)

எத்தனைபேர் மைந்த ரிசையுடனே தான்பிறந்தா
ரத்தனைபே ருஞ்சுகமோ வாரியனே - முத்தனைய
வன்னவர்க்கு வேதவிதி யாய்ந்தே யுபநயனம்
பின்னமின்றிச் செய்தனையோ பேசு. (2.124)

கனமதிலே தேர்ந்தாரோ காதலர்க ணல்ல
தினமதிலே சற்குருவைத் தேடி - மனமதிலே
செம்மை பதிந்தனவோ தேமரையி னுண்மையெலா
மெம்மையாள் கோனே யியம்பு. (2.125)

மைந்தர் வருந்தாமன் மற்றவர்க ளெண்ணியவை
சிந்தை களிதூங்கச் செய்கிறயோ - முந்தை
யருந்தவத்தா லன்றி யடைவரோ மக்க
ளிருந்தவத்தா யுண்மை யிது. (2.126)

மாதவமே செய்தாலு மாமறையே தேர்ந்தாலு
மேதமிலா நல்லறமே யேன்றாலும் - பூதலத்தோர்
மைந்தரடை யாராகில் வானுலகந் தான்சேரார்
முந்தைமறை சொல்லு மொழி. (2.127)

நாக சுரவோசை நல்வீணை யின் னோசை
பாகின் மொழியனையார் பண்ணோசை - யாகவிவை
யாவு மினிதென்பாரம் புதல்வ ரின்மழலை
யாவலுடன் கேளாத வர். (2.128)

நானமுதற் சந்திசெப நன்கு நடக் கின்றனவோ
மோனமுறச் சிந்தை முயல்கிறதோ - வானவிவை
செய்வா னுடம்பு திடமோ வருண்மழையைப்
பெய்வோய் தெளிந்திடவே பேசு. (2.129)

சீரார்நின் னூர் நின்று சேர்ந்திடுவா யிங்ஙனென
நீரார்நின் றன்மையெலா நேற்றுவரை - யாராய்ந்து
கொண்டிருந்தே னன்புடனே கூடினாய் நற்குணங்கண்
மண்டிருந்த மாதவனே வந்து. (2.130)

காத மிருந்தாலுங் காசினியி லன்புடையோர்
பேத மறநினைந்து பேசிடுவா - ரேதமுளோ
ரண்மைக்க ணேர்ந்தாலு மன்பரையே தானினையா
ருண்மைக்க ணுற்றவுயர் வோய். (2.131)

ஆவி யனையாய்நீ யாருந் திருநாட்டிற்
சோவெனவே மாரி சொரிகிறதோ-- சாவியின்றிச்
செந்நெ றழைத்துச் செழிக்கிறதோ மற்றறமுந்
தந்நிலையி னிற்கிறதோ தான். (2.132)

முன்னா ளிருவருமே முந்தை மறையெல்லாம்
பொன்னார்சாந் தீபனிடம் போய்ப் படித்த - பன்னாளுங்
கூச்செல்லாம் போட்டுக் குளிர்சிந்தை யாலுரைத்த
பேச்செல்லாம் ஞாபகமோ பேசு. (2.133)

நங்குரவ னில்லா ண்மைப் பார்த்தோர் நாளதனிற்
பொங்க விற்குகொடு போதுமென - மங்குறவழ்
கானில் விறகொடித்துக் கானோவப் போந்தனமே
யானி னியல்பா யமர்ந்து. (2.134)

அப்பொழுது நீறா ரரன் மேனி யேய்க்குமுகி
லப்பு தனைமேய்ந்தே யம்பிகையின் - செப்பரிய
பைம்மேனி வாய்ந்து பரந்ததே வான்முழுதுங்
கம்மென்றிருண்டதே கான். (2.135)

இடித்தொளிவில் லேந்தி யிசையார்ந்த வம்பு
தொடுத்தொளிரு மின்னேந்தித் துன்னுங் - கடுத்தமரை
யேற்றிடுவான் போல வெழுந்தனவே வெங்கோடை
தோற்றிடுவான் மாமுகில்கள் சூழ்ந்து. (2.136)

இடியே முழவமா வேன்றரங்கே கானா
வடியெடுத் தாடு மவரே --- வடிவமைந்த
நன்மயிலாக் கண்டுவப்போர் நாமாப் பொலிந்தனமே
தன்மையுளோய் ஞாபகமோ சாற்று. (2.137)

முற்று முணர்ந்த முதியோர்க ணற்கவி தான்
சற்றுந் தடையின்றிச் சாற்றிடல் போல் - கற்றுணர்ந்தோய்
மேன்மேலும் பெய்தனவே வெள்ளம் பெருக்கெடுப்ப
வான்மேனின் றூற்று மழை. (2.138)

கைநனையக் கானனையக கானகமே தானனைய
மெய்நனைய விந்தனமு மேநனையச் - செய்நனையக்
கான்றதே தாரைக் கன மழைதான் பூவிறுதி
போன்றதே யந்தப் பொழுது. (2.139)

ஊற்றுகின்ற மாரி யொழிவின்றிப் பெய்திடவே
யாற்றலினி யென்னென்றே யாய்ந்திடுங்கால் - கூற்றெனவே
வந்து சுழன்றதே மாமரங்கள் வீழ்த்திடவே
கந்தரு மாவசைக்குங் காற்று. (2.140)

மோதுகின்ற காற்றின் முதுமரங்க டாமசைந்தே
யோதுகின்ற சாகை யொலித்திடு தன் மீது
கரமமைத்துப் போதுங் கனமழையே நில்லென்
றுரமுரைத்தல் போன்றனவே யுற்று. (2.141)

சாற்றும் பலமாவுந் தம்மிற் புகப்பறவை
போற்று குடம்பைப் புகுந்தொளிப்பக் - காற்றுமழைக்
காற்றான்போற் கைக ளவித்துக் கதிரவனுந்
தோற்றான்போற் சென்றான் றுனிந்து. (2.142)

கலையுணர்ச்சி கேள்வி கழித்தோ ருடனே
புலையுணர்ச்சி யோருளமே போன்று- நிலையுணரும்
வானமகள் கூந்தல் வளர்ந்தது போற் றோன்றியதே
யீனமிகு மான விருள். (2.143)

குருந்தையடி சேர்ந்து குறுகியுமே கொன்றை
யிருந்தருவிற் றங்கியுமே யெய்த்துப் பெருந்துயர்தான்
கொண்டு திரிந்தனமே கோதிலா யப்பொழுது
கண்டதெலாம் நெஞ்சுளதோ காண். (2.144)

மாட்டும் விறகான் மயங்கு நமக்கிரங்கிக்
காட்டு மரமுங் கணீர்விடுமால் - வாட்டமுற
விரப் பதமே யினித்த சுவைப்பதமாச்
சாரவுறல் ஞாபகமோ சாற்று. (2.145)

இந்தவித நாமயங்கி யேங்குங்காற் றன்குலத்து
மைந்தனவ னண்பனொடு மாவனத்தி - னந்திடவே
செய்யு மிருளைச் சிதைப்பான்போற் றோன்றினனால்
வையமகிழ் தண்கதிரோன் வந்து. (2.146)

காற்று மழைக் காட்பாட்டுக் கானகத்தே காரிருளி
லாற்றலின்றி யெய்த்த வருமைந்தர் – நேற்றைநா
ளென்னுற்றா ரென்றே யெதிர்காண்பான் போலுதித்தான்
மன்னற்ற செங்கதிரோன் வந்து . (2.147)

வெய்யோ னுதிப்ப விமலமறைச் சாந்தீப
மெய்யோ னமைத்தேடி வெங்கானில் - பையன்மா
ரெங்கடைந்தா ரென்னுற்றா ரென்றிரங்கி வந்திடுங்கா
லங்கவனைக் கண்டிலமோ யாம். (2.148)

கண்டு நனிவணங்குங் காலைக் கருணையனாய்த்
தொண்டு புரிவோரிற் றாய்மையரே --- பண்டுமறை
கற்ற கடன்கொடுத்தீர் காசறுத்தீ ரென்றன்னே
யுற்ற புகழ்படைத்தோ னோர்ந்து. (2.149)

கல்வி தனைப்போலக் காதலியுங் காதலருஞ்
செல்லப் பொருளுந் திகழவெனப் - பல்விதமா
மாசி யதுகூறி யன்பாய் நமையழைத்துப்
பேசியகம் போயினனே போந்து. (2.150)

இன்னவெலாம் ஞாபகமோ வென்னன்ப வென்றுரைத்தே
யுன்னரிய கைதவனா யோர்மனிதன் - றன்னைப்போ
னன்னர் வினவி நலமறையோ னன்புண்பா
னின்னுமொழிந் திட்டா னிசைந்து. (2.151)

பந்தனைதா னீத்தவனே பற்பலநா ளின்பின்பு
வந்தனையா லென்னகொடு வந்தனைநீ - தந்தனையே
னன்றென்றான் பக்கணத்தி னற்சுவையிற் சிந்தனைதான்
சென்றபெருங் கள்வன் றெரிந்து. (2.152)

இனியவுண வேதேனு மின்றிவரு வாயோ
மனியாவுன துள்ளமதை வள்ளால் - நனியறவேன்
வேண்டு மதனி வெறுமை யனுப்புவளோ
பூண்ட்புக ழன்பா புகல். (2.153)

இங்ங னளித்தியென் வெம்மா னிருகரங்க
ளங்ஙனமே நீட்ட வருமறையோ- னெங்ஙன்
கொடுத்திடுவா னின்பாலே கொள்வோர்க்குக் காடி
மடுத்திடுவான் போலுமவன் மற்று. (2.154 )

பலநாட்கள் கண்ட பழங்கத்தை வாங்கிக்
குலநாரி போற்றுகுணக் குன்றா - ணலநாற்
வாய்ந்து முடிந்த வவற் பொதியைக் கண்டுகொண்டான்
வாய்ந்த புகழ்க் கண்ணன் மகிழ்ந்து. (2.155)

அன்பிற் கிடைத்த வவற்பொதியைத் தானவிழ்த்தே
யின்பினிரு கண்ணோக்கி யெம்பெருமான் - முன்புதவஞ்
செய்த பயனென்றே சிந்தையுடன் றன்வாயிற்
பெய்தா வைலோர் பிடி. (2.156)

தேட்டாச் சுவையமருஞ் சிந்தை யுடன் சிறிது
போட்டா லுடம்புநனி பூரிக்குங் - கேட்டாலும்
யாவர்க்கு நாவூறு மென்றயின்றா னப்பிடிதான்
றேவாக்கன் றூட்டினோன் ரோந்து. (2.157)

முன்னுமவ லொன்று முனைமுறிந்த தில்லையே
தின்னுதற்குச் சர்க்கரையுந் தேவையில்லை - யுன்னு
முலகெல்லா முண்டோனவ் வோர்பிடித்தான் கொண்டு
நலமுடனே தின்றா னயந்து. (2.158)

அவலி லெனக்கு மிக வாவலென வுன்றன்
செவிதனிலே கேட்டாயோ செப்பாய் - புவியதனின்
முன்பு மொழிந்திலனே முன்னவவென் றப்பிடிதா
னன்புடனே தின்றா னணல். (2.159)

பாங்காய்க் கொடிற்றொதுக்கிப் பக்குவமாய்ச் சற்றிருத்தித்
தேங்கமழ் மென்று சிரமசைத்தே - யோங்குவகை
கொண்டப் பிடியவலுங் கோபாலன் றானயின்றான்
பண்டைவினை யாவும் பறித்து. (2.160)

பின்போர் பிடியெடுத்துப் பெய்திடுங்கால் வாயினிட
முன்போடி வந்து முளரிமக - ளன்போடு
காந்தன் கரம்பிடித்தாள் கைம்மாவின் கையதனைப்
போந்து பிடிபிடித்தாற் போன்று. (2.161)

இந்தவிதஞ் சொற்ற விருடி தனை நோக்கி
விந்தையிது நன்குரைத்தாய் மேலவனே - சிந்தையுடன்
காந்த னுணாத்தடுத்தல் கற்பழகோ வென்றான் சீ
ரோந்து பரிட்சித் திறை. (2.162)

அன்று விடத்தை யானயின்ற காலையிலுஞ்
சென்று தடுத்ததிலை தேவியுமை -- நன்று
கணவ னுணாத்தடுப்போர் கற்புடைய ரோநற்
குணவளலே நீயெனக்குக் கூறு. (2.163)

காந்தன் குறிப்பறிந்து காலமது தாழ்க்காம
லீந்துபச ரித்தே யினிமையுடன் - போந்தெவையு
முற்சாகத் தோடியற்ற லுத்தமிதன் செய்கையன்றோ
நற்சாந்தங் கொண்டோய் நவில். (2.164)

பசியறிந்து பக்குவமாய்ப் பர்த்தாவுக் கேற்ற
சுசியறிந் தூட்டிடலாற் றாயோய் - பசுவனைய
தாய்க்குப்பின் றாரமெனத் தாரணியிற் பேர்பெற்றார்
வாய்க்குங் குலமனையார் மற்று. (2.165)

கற்புருவாய்ப் போந்த கருங்குழலாள் காசினியிற்
பொற்புருவாய்ச் சாரும் பொலிவமைந்தாள் - சொற்பிறங்கு
நற்குணத்தா ணற்குலத்தா ணானிலமே நண்ணரிய
சற்குணத்தாள் பூமகளே தான். (2.166)

சும்மா விருக்குஞ் சுகனேயத் தோகையவ
ளெம்மா னுணாத்தடுக்க விவ்வுலகி - லம்மா
விசைகுவளோ வென்றுரைத்தா னெவ்வுலக வேந்துந்
திசைகுவியப் போற்றுகின்ற சேய். (2.167)

கலையெல்லா மோர்ந்து கரிசறுத்த தூபோற்
குலகெல்லாங் கொண்டாட வோங்கும் - விலையில்லாச்
செல்வஞ் செழிக்கவெனத் தின்றனனென் றோர் பிடித்தான்
செல்வியவ டானறிந்தா டேர்ந்து. (2.168)

பிடியவற்கே செல்வம் பிறக்கும் பினுமோர்
பிடியவலுந் தின்றானேற் பேணு - மடியவராய்த்
தாமமர வேண்டுமெனத் தையலவ டான்றடுத்தாள்
காமராமர் கண்ண ன் கரம். (2.169)

அன்றியுமே யன்ப னணிமனைக்கு வேண்டுவது
துன்றியசீர்ச் செல்வமதோ தூயபுகழ் - பொன்றிகழு
மார்பன் பணிசெயலோ மாண்புறுநூல் கேட்டு மிக
வோர்பவனே யுண்மை யுரை. (2.170)

ஆதலினாற் காந்தற் கமைந்தவித மாகவுன்னிக்
காதமரும் பொற்குழையாள் காதலுடன் - மாதரது
தன்செயலே தான்செய்தாள் தாரணிதா னேத்திடவே
நன்செயலே தான் புரிவோய் நன்கு. (2.171)

அன்பருக்கே யென்று மடிமைத் தொழில்செய்மா
லென்புருகப் பத்திசெயு மிம்மறையோற் - கின்பமுட
னீதளித்த லாகுமிதுவாகா தென்குவனோ
தாளித்த பூந்தாராய் சாற்று. (2.172)

அறஞ் சிறிதோர் மாந்த ரறியாது செய்தாற்
றிறஞ்சிறப்ப மேலுலகஞ் சேர்வார் -- மறஞ்சிறிது
மின்றியரு மாதவமா ரிம்மறையோற் கிஃதரிதோ
வென்றியமர் வேந்தே விளம்பு. (2.173)

பூமகட னோக்கமதைப் பூரணமாய்த் தானறியக்
கோமகற்கு நற்சுகன்றான் கூறியபி - னாமகடான்
வாய்ந்திருக்கு நன்னா வலர்போற்றுஞ் சீர்க்கதையை
பாய்ந்துபினுஞ் சொல்வா னமர்ந்து. (2.174)

அன்றிரவோர் மென்படுக்கை யண்ணறர வாரியனுந்
துன்றியபே ரானந்தத் தூக்கமுற்று - மன்றிகழுஞ்
சீருவள கத்தையெலாஞ் சிந்தித்துக் கண்வளர்ந்தா
னாரவுள மங்ங னமர்ந்து. (2.175)

கதிருதிக்குங் காலைக் கடனெல்லா முற்றி
மதிகுலத்து மன்னன்பால் வந்து - நிதியமிகப்
பெற்றவன் போல் யாதொன்றும் பேசாது ஞான நிலை
யுற்றவன்றான் செல்வான்றன் னூர்க்கு. (2.176)

அக்காலைக் கண்ணனுமே யன்புடனே தான்வந்து
மிக்கார்வத் தோட்டியில் வீழ்ந்திடவே -- தொக்காசி
கூறி மகிழ்ந்து குசேலமுனி யேகினனால்
தேறிமுனம் வந்தவழி சேர்ந்து. (2.177)

மலர்வதனம் பேர்த்து மணியதரங் காட்டிச்
சிலதியரைத் தான்சினந்து சீறிக் - குலமறையோற்
கொன்றும் கொடுத்திலனே யூரனுப்பி வந்தான்மா
னன்றிதென்றார் மாதர் நகைத்து. (2.178)

தாயெதிரே கண்டது போற் றாங்கினான் கால்வீழ்ந்தான்
போயெதிரே கொண்டான் புனை வித்தா - னேயமுளா
னென்றே யறிவித்தா னேகென்றான் மாதரிது
நன்றேகன் றேயென்றார் நட்பு. (2.179)

கட்டி யணைத்தான் கரமுகிழ்த்தான் காதலுடன்
றட்டிக் கொடுத்தான்பின் றைவந்தா - னிட்டமுடன்
பொன்னா ரமளி புகவளித்தான் போவென்றான்
மின்னார் நன்றென்றார் வியந்து . (2.180)

மன்னர் பலரிருக்க மற்றிவனை யேமதித்தா
னன்னருளத் தானெனவே நாடினான் --- பன்னரிய
வின்மொழிகள் சொற்றா னிசைந்துமன மேகென்றான்
மென்மொழியார் நன்றிதென்றார் வேட்டு. (2.181)

குன்றாத நண்பன் கொடுவந் ததைவாரித்
தின்றான் மகிழ்ந்து சிரமசைத்து - நன்றாக
வொன்றேனு மீயோம லோட்டிவிட்டா னின்னவன் சீர்
நன்றேயென் றார்மாதர் நட்டு. (2.182)

மாயோன் செயலை மதித்தறிவார் யார்கொல்லோ
வேயோ வெனப்பொலிதோண் மென்மயில்கா - ளோயாம
லின்னவிதம் பேச லிழுக்குடைத்தென் றார்சில்லோ
ரன்னவர்தம் வாயடங்க வன்று. (2.183)

இந்தவித மாத ரியம்ப வெழின்மறையோன்
சந்தமுறுந் தண்டுவரை தானீங்கிக் - கொந்தளிக்கும்
வற்றாப் பெருங்கடலும் வன்பிறவி மாகடலுஞ்
செற்றானுற் றானூர்த் திசை. (2.184)

இரண்டாவது தவரைகாண்ட முற்றிற்று.
ஆகச் செய்யுள். (311)
-----------------
மூன்றாவது : வைகுந்த காண்டம்.


தெய்வ வணக்கம்.
சிந்தையது தான் றெளியத் தேர்வார் வினையரவுக்
கந்தமுன் பேருவண மாமென்பர் - சந்ததமுந்
தூமேவுந் தொண்டருளந் தோன்றித் துலங்குகின்ற
பாமேக வண்ணன் பதம்.

நூல்.
எம்மா னருளா விளைத்த வுடம்புநனி
யம்மாபூ ரித்த தவன்கந்தை - பெம்மான்பொன்
வத்திரமா வாரு மணித்துளவ மாமணியாச்
சித்திரித்தாற் போன்ற சிறந்து. (3.1)

காதிற் பொலிபொருள்கள் காலொளிபொற் குண்டலமா
தீதிற் பவித்திரந்தான் செம்பொனவிர் - மோதிரமா
மாறியதே மாதவனு மன்மதனா வாய்ந்தனனே
யூறியதே தேக வுரம். (3.2)

மாதவமே செய்து மனக்குவிய வேதன்னை
யோதியமர் முத்த ருறுவினை போன் - மாதவனை
நீங்கிப் பறந்ததே நீளுலகை மாய்க்கவெழு
வீரிருளை யேய்க்கு மிடி. (3.3)

ஜயன் வரவறிந்தே யாதித்த னுங்குளிர
மெய்யின் மிசைவீச மென்காற்று - பையவே
பாலை வனமெல்லாம் பைந்தருக்க ளார்ந்திடு பூஞ்
சோலையெனத் தோன்றிற்றே சூழ்ந்து. (3.4)

இவையனைத்துங் கண்டா னிறும்பூது கொண்டா
னவையனைத்தும் வென்றவுயர் நல்லோன் - புவியனைத்தும்
போற்றுங் குசேலனையே போம்வழியிற் றாங்கண்டார்
வேற்றுபவ மன்னர் விரைந்து. (3.5)

மணிவார் முடிதோய மாதவன்றன் றாளிற்
பணிவார் சிலர்துதிப்பார் பார்ப்பா- ரணிவா
ரடிதலைமே லார்ப்பா ரகம்பூப்பா ரென்றும்
படிதலைமேற் காப்போர் பரிந்து. (3.6)

பொன்னார் வரை மேற் பொலிந்திடுபுத் தேளெனவே
மின்னார் மணிசேர் வியன்றோர்மேல் - தென்னார்
மறையோனைத் தாமேத்தி மாண்புறாவே வாழ்த்தி
யிறையோருஞ் சென்றா ரிசைந்து. (3.7)

மண்டெரியா மல்வகையே வானத் திடையமரர்
கண்டெரியா மன்மயங்கக் கான்மலரை - யெண்டெரியா
தேங்க விறைத்தனரே யேத்தினரெ யெல்லோருந்
தூங்கக் களிக்கடலைத் துய்த்து. (3.8)

பல்லியமே தான்முழங்கப் பன்மின்னார் பண்ணுடனே
நல்வியலிற் றாநடிக்க நான்மறையோர் சொல்லியலார்
வேத முரைக்க வெகு முனிவ ரெத்தினா
ரேதத் தவிர்த்தோனை யே. (3.9)

இன்னபல வெல்லா மெதிர்கண்டுங் கண்ணனடி
தன்னமரு நெஞ்சிற் றவர்ந்திலனே - மன்னுலகி
லென்று முறுவனவை யெம்மா னருளென்றே
சென்றிடுவான் மாமுனிவன் றேர்ந்து. (3.10)

மன்னர் பலரு மறையோரு மாதவருந்
துன்னுபடை யோருந் தொடர்ந்து வர - முன்னந்
தரைசெய் தவப்பேறாத் தன்னூரைச் சார்ந்தான்
புரை செய்யாப் புண்ணியன்றான் போந்து. (3.11)

பழங்கந்தைப் பார்ப்பான் பரிட்சித்தே வேத
முழங்கபல மன்னர் முதலோர் - செழுங்கரங்கள்
கூப்பச் சிறப்புற்றாற் கோதிற் றவம் போலப்
பூப்பதொன் றுண்டோ புகல். (3.12)

தன்னூர்ப் புறஞ்சார்ந்த தக்கணமே தண்மறையோன்
மின்னூரும் பொன்னின் வியனகராய்ப் - பொன்னூரு
மார்பன் றிருவருளான் மாறியதே மாதவர்க்குச்
சார்பாகுந் தன்சிற்றூர் தான். (3.13)

மற்படுகா னெல்லாமே மாட நிலைவாய்ந்து
சொற்படுநா வல்லோர் சொலற்கரிதாய் - விற்படுபொன்
னாடே விழுந்து நயந்ததுபோற் றோன்றியதே
பீடேரச் சிற்றூர்தான் பின். (3.14)

அயனுலகுஞ் சொல்லா ரரியுலகு மீசன்
வியனுலகும் பொன்னுலகும் வேற்று - நயனுலகு
மொத்திடுமோ மாயோ னுயரருளால் யாவருமே
காத்திடுவான் வாய்ந்த நகர்க்கு. (3.15)

நடுநிலைமை நீங்கானை நல்லறமே சூழ்ந்து
கொடுநிலையி னின்றது போற் கூமேல் -- வடுவற்றோர்க்
கீந்த வுதவிபோ லென்றுமுயர்ந் தோங்கியதே
வாய்ந்தமதிக் கெட்டா மதில். (3.16)

அமிர்தங் கவர்ந்தோ ரணிநகர்மோ தென்று
திமிதமிடும் பாற்கடறான் செப்ப - வுமிழ்திரைசேர்
வாரிதியே சூழ்ந்து வளைந்தது போற் றோன்றியதே
சீரியல் கொண் டோங்குமகழ்ச் சேர்வு. (3.17)

இந்திரன்நீன் மேடை யெழுங்கதிரால் வெண்களிறு
கந்தடுகார்க் கைம்மாவாக் காண்படுதன் - முந்தைமுனி
சாப நினைந்து தளர்ந்துபின் றீருமனத்
தாபம் பிறவிடம்போய்த் தான். (3.18)

வெள்ளியமா டந்தோறு மேவுமணிப் பூணல்லார்
நள்ளொளிதான் வீச நடுவிருத்த - றெள்ளுதிருப்
பாற்கடலி னாப்பண் பதுமையார் தானமர்த
லேற்குமே யென்று மிசைந்து. (3.19)

கொல்லுகின்ற யானைக் குழாம்பொழியுந் தானமது
பல்லிடமுஞ் சென்று பரந்திடலான் - சொல்லுகின்ற
தேவர் வழுக்குமெனச் சிந்தித்து மண்மேற்கான்
மேவி நடக்கார் விழைந்து. (3.20)

மங்கலத்தின் மாண்பும் வகைவகையா மாளிகையுந்
தொங்கலங் கூந்தனற் றோகையரும் - பங்கமிலா
மக்கட் பெருமையு மாதனமு மாவளமு
மிக்க நகரிதுவா மே. (3.21)

நல்லோரு ஞானிகளு நாலிரண்டு யோகமதில்
வல்லோரு மாதவரு மற்றுமுள - வெல்லோரு
மீதே சுவர்க்கமென வேத்தி லிதன்பெருமை
யேதே யெனவுரைப்பல் யான். (3.22)

இன்னவெலாங் கண்டே யெழின்மா லருள்வலியாற்
பின்னுமுள வென்று பெருமறையோன் - பொன்னவிரு
மாமதில் வாய்ச் சென்றடைந்தான் மன்னர் பலருடனே
பூமதியோர் காணும் புரம். (3.23)

அப்போ தகங்குளிர வாவலுடன் கையுறைகள்
கைப்போதி லேந்திக் களிசிறப்ப - மெய்ப்பாதத்
தானை யெதிர்கொள்வான் சார்ந்தா ரனைவருமே
யானபல மங்கலமே யார்ந்து. (3.24)

வாழ்ந்தனமே யென்று மலர்முகங்கண் மண்டோயத்
தாழ்ந்தனராய்த் தேரூருஞ் சாந்தனிட - மாழ்ந்துமிகு
மன்புடைய ராகி யமைதரவே தாஞ்செல்வா
ரென்புருக மெய்சிலிர்க்க வே. (3.25)

பல்லியமே யார்ப்பப் பலபடையுஞ் சூழ்ந்துவர
மெல்லியலார் மங்கலமே மேம்படவே -- சொல்லியலார்
வேத மதுமுழங்க வீதி தனைச்சார்ந்தா
னேதந் தவிர்த்தோ னிசைந்து. (3.26)

இருபுறமார் மாடத் தெழிற்சாள ரத்தின்
மருவுறவே மாவதனம் வைத்துப் - பொருவில்லா
வாரியனை நோக்கி யறைந்திடுவா ராயிழையார்
சீரியனுஞ் செல்வமதைத் தேர்ந்து. (3.27)

கிள்ளத் தசையற்றுக்கீற லுடையுடுத்துக்
கொள்ளச்சோ றற்ற குசேலன்றான் --- விள்ளரிய
மாதனமே வாய்ந்து வருகின்றான் மன்மதனாய்
சோதரியே காணென்றார் சூழ்ந்து. (3.28)

கந்தமூ லம்புசித்துக் கானகத்தே தான்வதிந்து
பந்தமறச் செய்தவமே பண்ணிடுவோ-ரிந்தமறை
யோனைப் போல் யாரே யுயர்வடைந்தார் யாரடைவார்
மானைப் போற் கண்ணாய் மதி. (3.29)

யாவ ரிடத்து மருட்கருணை தாங்கிடுவோர்
தேவரிலு மேலென்றே செப்புமறை - மூவருமே
தாம்புகழும் வேதியற்குத் தாரணியி லோபெருமை
மேம்படுவிண் பேறுபல வே. (3.30)

கற்பார் மனைவேண்டக் கண்ண னிடஞ் சென்றே
யற்பா ரவலளித்தே யன்னவனாற் - பொற்பாரும்
பேரதனைப் பெற்றுப் பெரும்பாக் கியனாகுஞ்
சீரதனைப் பெற்றான் றெளி. (3.31)

காயந் தனை வெறுத்துக் கானிற் றவஞ்செய்து
நேயமுட னொன்றே நினைந்திடுவோர் - தேயமெலா
மாளக் கொடுத்தாலு மாயிழையே வேண்டாரே
மாளுமென வெல்லா மதித்து . (3.32)

பற்றற்றா ரேனும் பரம னளித்ததுதான்
பெற்றுக்கே யாயிடினு மிவ்வுலகின் - முற்றிழையே
தள்ளுவரோ நல்லோர் தகுதியல வென்றுரைத்தே
யெள்ளுவரோ வென்னோ வியம்பு. (3.33)

செந்திருவந் துற்றாலுந் தீமிடிதா னாற்றாலுஞ்
சிந்தைநிலை குன்றார் சிவமுணர்வோர் - முந்தைச்
சனகன்போற் றோய்ந்திடுவார் தாரணியி லென்றுங்
கனகமணிப் பூண்மார்பாய் காண். (3.34)

பற்றற்றா னுக்கிப் படர்திருவும் பாக்கியமு
முற்றிழையு நன்றென்பார் முன்னாளி - னற்றவமார்
மெய்ச்செவன ரென்பான் விரும்பு மிளமையுற்றுத்
துய்ச்சிலனோ போகமதிற் றோய்ந்து. (3.35)

என்ற சுகனடிதா னேத்திச் செவனரெனு
மின்றவத்தோன் யாரிளமை யேற்றதெவன் - மன்றலுற்ற
தெவ்வா றருளெனவே யேந்துபுகழ் வேந்தனுக்கே
யவ்வா றருள்வா னவன். (3.36)

பேருலகம் போற்றும் பிருகு வெனுந்தவத்தோன்
சீருறுநன் மைந்தன் செவனமுனி - மேருநிகர்
கோலமது தான் கொள்ளுங் கோதிற் பனிவரையிற்
சாலவே செய்தான் றவம். (3.37)

தவம் புரியுஞ் சாந்தன் சரீரமெலாந் தானே
புவனமென மூடியதே புற்று - நவமான
கற்பு நனிபடர்ந்து காமரு பூ வின்றிடுமே
சொற்பெறுமப் புற்றதனைச் சூழ்ந்து . (3.38)

அக்கா லகிலமதை யாளுஞ்சை யாதிமனன்
றொக்கபுகழ்ச் செல்வி சுகனியென்பாண் - மிக்கநறும்
பைந்தா துகுக்கும் படர்மலர்தான் கொய்வான்கான்
வந்தாளே மாதருடன் மற்று. (3.39)

பூக்கொய்வான் போந்த புனிதையவள் செந்தேனை
வாக்குகின்ற மாமலர்சேர் வன்மீக - நோக்கினாள்
வந்தடைந்தா டான்றனியே மற்றதனை யாய்ந்திடுவான்
சந்தடிதான் செய்யாமற் றான். (3.40)

புற்றின்கண் ணோக்குதலும் புண்ணியன்றன் செய்யவிழி
முற்றுறவே தான் கண்டான மொய்குழலாண் - மற்றதனைப்
பொன்வண் டெனவயிர்த்தோர் பூங்கொம்3பாற் குத்திடலு மு
ன் கொண் டெழுந்தான் முனி. (3.41)

யோகமது குன்ற வுயர்புற்றில் வந்தடைந்தென்
னாகமது நோகவிது யார்செய்தார் - வேகமுட
னுற்றுணர வாய்வா னுறுங்கா லுயர்கயலைச்
செற்றவிழி மான்கண்டான் றேர்ந்து. (3.42)

பூமகளோ பொன்மகளோ பொன்னாட் டிறைமகளோ
நாமகளோ நல்லிரதி நன்மகளோ - கோமகளோ
வென்றயிர்த்தான் காமனுமே யின்பமல ரம்பவன்மேல்
வென்றிகொள விட்டான் விரைந்து . (3.43)

பொங்கியெழுங் காமப் புலிங்கத்தீப் பற்றிகனி
மங்குதலி லாதமுற்ற மாதவத்தோன் - கொங்கலர் மென்
கூந்தன் மடவாள் குளிர்கையைப் பற்றினனால்
போந்ததுயர் போகும் பொருட்டு. (3.44)

வெருக்கொண்டு மெய்விதிர்த்து வேர்த்துப் பதைத்துப்
பொருக்கெனவே கைப்பறித்துப் போந்து - குருக்கொண்ட
வஞ்சிலம்பே யார்ப்ப வாங்கமரும் பாங்கியர்பாற்
றஞ்சமென வீழ்ந்தா டவித்து. (3.45)

பாயவனத் தென்னவோ பார்த்துப் பயந்தாளென்
றாயிழையின் செய்கை யறியாம- னேயமுடன்
பரங்கியர்கள் பற்பலவாம் பக்குவத்தைப் பண்ணியுமே
தீங்ககலு மார்க்கமிலை தேர்ந்து. (3.46)

அப்பொழுது சையாதி யண்ண லகங்குளிரத்
துப்பிதழ்வாய்ப் பன்மனைவி சூழ்ந்துவர - வொப்பொருவும்
பூவனத்தின் காட்சிப் பொலிவுதனைக் கண்டிடுவா
னாவலுடன் போந்தா னவண். (3.47)

மன்புற்றி னின்று வருமா தவற்கண்டே
யன்புற் றடிபணிந் தன்னோன்ற - னின்புற்ற
கண்ணிற் குருதிநீர் காலுமிது யார் செயலென்
றெண்ணிமிக வாய்வா னிசைந்து. (3.48)

பாங்கியர்தம் பாலிருந்த பான்மொழியாம் தன் மகளை
யோங்குவகை யோடுற் றுயர்முனிக்கித் - தீங்கதனை
யார்செய்தா ரென்றிடவே யந்நிகழ்வு முற்றுரைத்தாள்
தார்செய்த வேந்தன் றனக்கு. (3.49)

என்செய்தாய் பேதா யெனவிரங்கி யாங்கெய்தி
மன் செய்த மெய்யோய் மடமகளின் - புன்செய்கை
மன்னித் தருள்புரிவாய் மாதவனே யென்றிரந்தான்
சென்னியவன் பொன்னடியிற் சேர்த்து. (3.50)

இப்பொழுதே யுன்மகளை யென்றனக்குச் சீர்மனையாத்
தப்பறநீ யீந்திடுவாய் தாராயேல் - வெப்புறமென்
சாபத்தீ பற்றுமெனச் சாற்றிடலுஞ் சம்மதித்தான்
கோபத்தீக் காற்றாத கோ. (3.51)

மன்னர் பலரை வரவழைத்து வேதமதிற்
சொன்ன படியே துடியிடையை - முன்னரழன்
மன்றல் வினைசெய்து மாமுனியின் கைக்கொடுத்தான்
வென்றிதரு வில்லமர்கை வேந்து. (3.52)

சீலமிகு மாமுனியுஞ் செல்வச் சுகனியுமே
கோலமுடன் கூடிக் குலாவுநாள் - ஞாலமகிழ்
சீரா ரசுவினியாந் தேவருமே மோகித்தார்
காரார் குழலாளைக் கண்டு. (3.53)

அமரர்நோய் தீர்க்கு மசுவினியாந் தேவர்
சமரமிகும் வேளாற் றவித்துத் - திமிரமிகும்
பூங்குழலாய் மாரன் பொரவிசைந்தான் காவென்றா
ராங்குழலு மன்னா ரறிந்து. (3.54)

சிந்தை சிவமாஞ் செவனமுனி யென்கணவ
னெந்தைசை யாதிமன னென்றறிவீர் - நந்து
நரகத் திடைப்படுத னாடாம லென்றன்
விரகத்தி னின்றுய்வீர் விட்டு. (3.55)

எந்தெழிலே மிக்க விளமை தனைவாய்ந்து
போந்தவெம் போகப்போற் பொன்னழிந்து - தேய்ந்த
துறவிதரும் போகஞ் சுகப்படுமோ நல்ல
நறவுதருஞ் சொல்லாய் நவில். (3.56)

காந்தனுடன் யாமுங் கடிமலரித் தீர்த்தத்திற்
போந்து படிந்தாற் பொலனவிர- வாய்ந்திளமை
கொண்டிடுவோ மாதே குறிப்பா யிசைந்தவரை
மண்டிடுபே ரோகையுடன் வந்து . (3.57)

இன்ன வுரைதன்னை யின்னுயிர்த்தன் னாயகற்குச்
சொன்ன வுடனேநற் றூமுனியு - மன்னதற்குச்
சம்மதித்தான் றைய றனிக்கற்பின் மொய்ம் பெருவருந்
தம்மதியிற் கொண்டிடவே தான் . (3.58)

போந்துமல ரத்தடத்தே போய்ப்படிய மூவருமே
யேந்தெழில்வான் சோதி யெனவெழுந்தார் - காந்தையவள்
கற்பின் வலியாற்றன் காந்தனையே கண்டுமிகு
பொற்பின் விளங்கினள் பொன் போன்று. (3.59)

தேசா ரசுவினியாந் தேவர் திறம்போற்றிப்
பேசாநின் றோங்கும் பெருமையோ - னேசமுட
னில்லா ளுடன்கூடி இன்புற்றிருந்தனனே
சொல்லாரும் போகமதைத் துய்த்து. (3.60)

மாதரவர் சேர்ந்து வகுத்துரைக்க விவ்வாறு
மாதவனுஞ் சேர்ந்தான் மனைவாயி - லாதரவிற்
பல்லோரு மானந்த பாட்பமதிற் றாம்படிய
நல்லோரும் போற்றிடவே நன்கு (3.61)

தேரி னிழிந்து சிறுமனையை நோக்குதலும்
பேரின் பொலன்மனையாப் பெட்புறலுஞ் - சீரின்
பொலிவளனைப் பார்த்துத்தான் புன்சிரித்தான் ஞான
மலிவளனைக் கண்டோன் மகிழ்ந்து. ( 3.62)

அந்தணன்ற னில்லாளு மன்ற வெழில்வாய்ந்து
வந்தணைந்தாண் மின்போலு மாதருடன் - சிந்தை மகிழ்
தூங்கிடுமா றொப்பிற் றுணைக்கணவன் றன்வரவைத்
தாங்கிடுமா றன்புடனே தான். (3.63)

மின்னற் கொடியார்பான் மேவு மரகதமா
நன்ன ரிலைபடர்ந்து நல்வைரப் - பொன்னவிர்பூ
வாய்ந்துதிகழ் மற்றை மணிகளுமே காய்கனியா
வேய்ந்து விளங் கிற்றே யிசைந்து. (3.64)

வந்தனை தான் செய்து மகிழ்நனைப்பொன் னாதனத்திற்
சிந்தையுற வேற்றிச் சிரகநீர் - தந்துதவப்
பொற்றா மரைவிளக்கிப் பூம்பட்டா லந்நீரை
யொற்றாநின் றிட்டா ளுவந்து. (3.65)

சந்தனமே பூசித் தகைசான்ற பூமாலை
புந்தியுடன் சாத்திப் பொலன்றூமங் - கந்தமெழ
நீட்டியு பசரித்து நீராஞ் சனம்வளைத்துக்
காட்டி வணங் கிட்டாள் கனிந்து. (3.66)

இன்னவித மேந்திழையா ளேத்தி மகிழ்ந்திருப்ப
வன்னவனு மன்புடனே யம்பொனவிர் - சொன்னவரை
யேய்க்குந் திருமா ளிகைக்கெழுந்தா னெங்ஙனுமே
வாய்க்குமிசை யுள்ளான் மகிழ்ந்து. (3.67)

பொற்குவையு முத்தின் பொலன்குவையுஞ் சீர்பவள
நற்குவையும் போற்றரிய நல்வைரக் - கற்குவையு
மற்றை மணிக்குவையும் வாய்ந்த வறைதோறு
முற்றுறவே கண்டான் முனி. (3.68)

சுட்டி நுதன்மீது தோன்ற விடையினிடம்
பட்டுடைதா னோங்கிப் பகட்டவே - விட்டொளிதான்
வீசுங் கலன்வகைகண் மெய்யோங்க வேமைந்தர்
பேசுமுரை கேட்டான் பெரிது. (3.69)

பைம்பொற் கலத்தினிடைப் பல்வகையாம் பக்கணமுஞ்
செம்பொற் பருப்பன்முந் தேர்ந்தூட்ட - வம்புதல்வர்
மற்றதனைப் பாராது வாய்ந்தவிளை யாட்டினிட
முற்றதனைக் கண்டா னுவந்து. (3.70)

வீட்டின்க ணொவ்வோர் வியனறையிற் சேர்வளமெந்
நாட்டின்கண் சென்றாலு நண்ணரிதா - லேட்டின்கண்
டீட்டி முடியாதாற் றெய்வத் தருள்வலியைக்
கூட்டிப் புகல்வதெவன் கூறு. (3.71)

அருளாற் கிடைத்த வருநிதிய மெல்லா
மருள்வழியே யாகுகவென் றாய்ந்து - பொருளனைத்து
மன்பர்க்குந் தேவா லயப்பணிக்கு மான்றறிவா
ரின்பர்க்கு மீந்தா னிவன். (3.72)

வேசையே போலும் வியன்மக்கள் செல்வமெனப்
பாச மறுத்தோர் பகருரையை - யாசையுடன்
கொண்டு தனமெல்லாங் கூமுழுது மேயளித்தான்
மண்டு பேரோகையுடன் மற்று. (3.73)

இவ்விதமா யில்லறத்தி வீரேழ் புவிபுகழச்
செவ்விதய மோடு திகழ்நாளி- லெளவியமே
செற்றமுனி யிச்செல்வஞ் சேர்ந்ததெவ னென்றொருகா
ளுற்றுணர வாய்வா னுளம். (3.74)

கேசவன்பா லொன்றையுமே கேளா திருந்திடவும்
பாசமிகும் பாழ்ஞ்செல்வம் பற்றியதென் - மோசமது
செய்திடுமே யிந்நிதிதான் சேர்ந்தோர்க்கு ஞானநிலை
பெய்திடுமோ வம்மா வினி. (3.75)

எல்லா வுயிர்க்கு மிழிவா யிருக்குமெனைப்
பொல்லாப் பெருஞ்செல்வம் பூதலத்தில் - வல்லார்க்கு
மேலா யிருத்திடுமே மேலவனே யிக்கொடுமை
யேலா தெனக்கே யினி. (3.76)

பள்ளமதிற் றண்ணீர்தான் பாய்ந்திடல்போற் கண்ணனருள்
வெள்ளமது தாழ்ந்தோர்பான் மேவிடுமே - கள்ளமிலார்
சங்கந் துறத்தித் தலையுயர்த்துஞ் செல்வத்தாற்
பங்க முளவாம் பல. (3.77)

மெய்ப்பொருளை யேவிலக்கி மீளா விருள்கொடுக்கும்
பொய்ப்பொருளைப் போக்கப் புயல்வண்ண - னைப்புகழப்
பாடித் துதிப்பான் பரவசமா யன்புடனே
யாடி யழுவா னவன். (3.78)

மேனாண் மறைகவர்ந்து வேலையிடஞ் சென்றோனை
மீனா யுயிர்முடித்து மீட்டுமறை - யானா
வருளை யுவந்தளித்த வப்பனே போற்றி
பொருளை மறைத்திடுவாய் போந்து. (3.79)

பண்டு கடல்கடையப் பர்வதமே தானழுந்தக்
கண்டு கமடக் கவினுருவங் - கொண்டு
பரித்த மணிவண்ணா பாதமலர் போற்றி
யெரித்திடுவா யிப்பொருளை யின்று. (3.80)

பாவியவன் றான்சுருட்டிப் பாரதனை யாதலத்தின்
மேவியிட வேன விழுவுருவா - யாவிதனை
வாங்கிப் புவிவிரித்த மாலே யடிபோற்றி
தீங்கதனைத் தீர்ப்பாய் தெரித்து. (3.81)

எங்கு முளனென் றியம்பியசொற் காத்தற்கே
யங்குபெருந் தூணி லடலரியாய்ப் - பொங்கியெழுந்
தார்த்துக் கனக னகம்பிளந்தோய் சீர்போற்றி
காத்திடுவா யுள்ளங் கனிந்து. (3.82)

மாவலிபான் மூவடிமண் வாங்கி மூன் றாமடியிற்
சேவடியை யன்னோன் சிரமதனி - லாவலுடன்
வைத்து மகிழ்ந்தருளும் வாமனா போற்றியுன்பாற்
கந்து மடியேனைக் கா. (3.83)

அந்தணரைப் பேணா தகங் கொண்டு தத்தமது
சிந்தையினிற் கோடைத்துஞ் சீரில்லார் - சந்ததமும்
பாரதனின் மாளப் பரசெடுத்த பண்ணவவுன்
பேராதனைப் போற்றுமெனைப் பேண் . (3.84)

மாந்தரெலா நன்னெறியில் வந்தொழுகத் தண்ணருளாற்
சாந்தமிகு மன்னன் றயரதன்பா - லேந்தெழிலார்
செல்வத் திருமகனாய்ச் சேர்ந்தருளுஞ் சீராமா
நல்வழியிற் சேர்த்தருள்வாய் நன்கு. (3.85)

போரதனைச் செய்யாது போயிருப்ப வேவிசயன்
பேரதனை நாட்டப் பிறங்குமறைச் - சீரதனை
யூட்டி யமர்முடித்த வுத்தமனே நின்னருளைப்
பொட்டிடுவா யுள்ளம் புகுந்து. (3.86)

கந்தை யவறின்று காதலுட னென்றனையே
சிந்தை குளிரச் சிறப்பித்தா - யெந்தையே
நெஞ்சுருகப் போற்றி நினைந்திடுமெற் குன்பதமே
தஞ்சமலான் மற்றுளவோ தான். (3.87)

கண்ணாரு நீரரும்பக் கைதலைமேற் றான்மலரப்
பண்ணாருந் தோத்திரங்கள் பண்ணுங்காற்- றண்ணாரு
மன்புருவா மண்ண லருமறையோன் றான் மகிழ
வின்புருவாய்ப் போந்தா னிசைந்து. (3.88)

தனக்கோ ருருவமிலாத் தண்ணீருங் காணத்
தனக்கோ ருருவெடுத்தல் சாலுந் - தனக்கோ
ருருவமிலா வெம்மா னுறுகுளிர்நெஞ் சன்பர்க்
குருவமொடு போந்தா னுவந்து. (3.89)

செங்கதிரும் வெண்கதிருஞ் சேர்ந்த செவியேய்ப்பப்
பொங்குகதிர்ச் சக்கரமும் போற்றுகின்ற - சங்கமுமே
யெம்மான் வலமிடமே யேந்தொளிதான் வீசிடவே
யம்மான்பாற் போந்தா னணல். (3.90)

பூமா துடல்சிலிர்க்கப் புண்ணியர்க டாமேத்தத்
தேமா மலர்சொரியத் தேவுலகோர் – பாமா
மறைமுழங்க வந்தடைந்தான் மால்வண்ண னன்பன்
குறைவிழுங்கத் தன்னுளத்தே கொண்டு. (3.91)

இங்கேநீர் வம்மி னின்றே தொழுமின்காள்
பங்கே ருகக்கண்ணற் பாடுமின்கள் - சங்கேந்துங்
கண்ணனடி சேர்மினெனக் கானூ புரங்கலிப்பப்
புண்ணியன்பாற் போந்தானப் போது. (3.92)

கண்டான் விரைந்தெழுந்தான் கால்வீழ்ந்தான் மெய்யன்பு
கொண்டா னவனொளியிற் கூடினா - னுண்டா
னருளமுத மெய்சிலிர்ப்ப வாடினா னென்றுந்
தெருளமுத மூட்டுமுனி தேர்ந்து. (3.93)

வேதமுடி தேராவவ் விண்டுவினைச் சிந்தித்துப்
போதமுடி வாய்நிறையும் பூரணமாய் - நாதமுடி
தானாய்ப் பரபோதத் தன்மயமாய்த் தானமர்ந்தா
னானா வருள்சே ரவன். (3.94)

கானத் திடையமர்ந்துங் காய்கனியே தானுகர்ந்து
மான வரைவதிந்து மாதவமே - மோனமுறச்
செய்திடுவோர்க் கன்றிச் சிறந்திடுநின் மெய்க்காட்சி
யெய்தியதே நாயேற்கு மின்று. (3.95)

வெஞ்சகடந் தானுதைத்தும் வெங்கானிற் றானடந்து
நஞ்சரவ மீது நடித்துமே - மஞ்சுதவழ்
கன்னிகரென் னெஞ்சிற் கழலிணையைத் தானிருத்த
வன்னிப் பழகினை கொல் லோது. (3.96)

என்றுபல பேசி யிருந்தழல் வெண் ணெய்யெனவே
யொன்றியதன் னுள்ள முடைந்துருக - நின்றமறை
யன்பனைக்கண் ணோக்கி யருட்டிருமா றானுரைத்தா
னின்பனே வேட்டதெவ னென்று. (3.97)

பண்ணார் மறைமுடியும் பங்கயத்தோ னுங்காணா
வண்ணானின் பாத மடைந்தேற்குத் தண்ணாருங்
கற்பகத்தே வின்பதமுங் காசினியி லெப்பதமு
மற்பமெனத் தோன்றிடுமே யாம். (3.98)

எப்பிறப்பே யுற்றாலு மெம்மானின் பொன்னடியை
யப்பிறப்புத் தோறு மகத்திருத்தி - யிப்பிறப்பி
லெய்தியது போல விசைந்திடுவா யார்க்குமருள்
செய்திடுவா யென்றான் றெளிந்து. (3.99)

முன்பும் வெறுத்தேன் முழுமுதலே நின்பால்யான்
பின்பும் விழையேன் பெருஞ்செல்வர் - துன்புறவே
தாளிக்க லாமோநீ சான்றவநின் பாதமலர்
தேனளிக்கத் தேக்குவது தேர்ந்து. (3.100)

ஆதலா லைய வநித்தியவிச் செல்வத்தின்
மேதகமுன் னேர்ந்தமிடி வேண்டுகிறேன் - காதலுட
னன்பர் மனவிருப்ப மாற்றுவிக்கு நீயெனக்கு
மின்பமுடன் செய்வா யிது. (3.101)

மருவி நினைச் சார்ந்தார் வன்றுயரத் தாழ்த
றருமயோ மாதவனே சாற்றாய் - திருவளித்த
துன்பா லணைந்தோர்க்கா முத்தமனே மற்றதற்குத்
துன்பால் வருந்துவதென் சொல். (3.102)

மெய்ப்பொருடா னோர்ந்தோர்கண் மேவியெவ ணுற்றிடினும்
பொய்ப்பொருடான் பற்றுவரோ புண்ணியனே - யிப்புவியி
லந்தா மரைநீர்போ லாருமுனை யிச்செல்வஞ்
சிந்தா குலஞ்செயுமோ செப்பு. (3.103)

மீண்டுந் தனமே விழைவதிலை யென்றால்யாம்
வேண்டும் பொனையே வெறுத்திட்டாய் - யாண்டுமஃ
தென்னை விழையா திழிந்ததொக்கு மாய்ந்திலைகொ
லுன்னியதை யிப்போ துணர். (3.104)

ஆதலாலன்ப வருநிதியப் பற்றின்றிக்
காதன் மனையோடு காசினியிற் - பேதமறப்
பன்னாட்கள் வாழ்ந்தெம் பதியெய்த மாமுனிவோர்
மன்னாரிற் கீந்தேன் வரம். (3.105)

மாமறையோன் றான்மறுக்கா வண்ண மகிழ்ந்துரைத்து
மாமறைக ளுந்தேரா மான்மறைந்தான் - றோமறுத்த
வந்தனு மண்ண லருள்வியந்து பன்னாட்கள்
சிந்தையும் வாழ்ந்தான் சிறந்து. (3.106)

கண்ணனடி யேகருதிக் காசில் குசேலமுனி
யுண்ணெகிழப் போற்று மொருதினத்தில் - விண்ணவர்கள்
கற்பகப்பூத் தாஞ்சொரியக் கண்ணனுல கஞ்சேர்ந்தான்
விற்பனர்கள் போற்ற வியந்து. (3.107)

வாரிதனில் வந்தடையு மாநதியின் றோற்றமெனக்
காரியலுங் கண்ணன் கழற்போதிற் - பேரியலு
மாதவனும் வந்தடைந்து மாறா மகிழ்ச்சியுட
னாதவனிற் றான்பொலிந்தா னாங்கு. (3.108)

என்ற சுகமுனிவ னேர் திகழும் பொன்னடிக்கே
யொன்றுங் கருத்தினனா யுத்தமனே - துன்றியசீர்க்
காதையாற் சன்மக் கடல்கடந்தே னென்றான்ம
னேதையான் சொல்வேனினி. (3.109)

மூன்றாவது வைகுந்த காண்ட முற்றிற்று.
ஆகச் செய்யுள் 421.
------------------------------

வாழி.
வேதமது வாழி வியனுலகோர் தாம்வாழி
பூதலமன் வாழி புண்ணியரும் - போதமம
ரன்பன் குசேல னரும் புகழு மாலருளு
மின்புடனே வாழி யிசைந்து.

குசேலர் வெண்பா முற்றிற்று
ஆகச்செய்யுள் 422.
குசேல ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
-----------------


குசேலர் வெண்பா - அரும்பதவுரை
செய்யுள் எண் - அரும்பதவுரை.

---------
தெய்வ வணக்கம்.
1. கடவுளமர்ந்த - கடவுள் விரும்பிய; புழைக்கைம்மா - உள் துளையுடைய; துதிக்கை யார்ந்த யானை.
2. மாற்றவர் – பகைவர்; வேழம் - யானை. ஈங்கு கஜேந்திரனையுணர்த்துகின்றது.
மெல்லியலாள் – இலக்குமி; ஆழம் - கடல். ஈங்கு திருப்பாற்கடலை யுணர்த்துகின் றது. 3. பழுதார்புரை - பொய் நிரம்பியகுற்றம்.
8. சடலம் - சரீரம்.
----------

அவந்திகாண்டம்.
2. முகமன் - உபசாரம்.
3. காயம் – ஆகாயம்; ஆர்கலி - கடல்.
5. விரைநீர் - வாசனை பொருந்திய நீர்.
6. காதுவன - கொலைத் தோழில் புரிவன; காத்திரம் – உடல்; காந்துவன - சுடுவன்.
8. பரவ - துதிக்க.
9. தோம் – குற்றம்; மறுகு தெரு. ; மாகம் - ஆகாயம்.
10. நந்தலில் கெடுதலில்லாத; பின்னோர் - சூத்திரர்.
11. மும்மைப்படு பொருள் - வரைப்படுபொருள், திரைப்படு பொருள், தரைப்படு பொருள் ஆகிய மூன்றுவகைப் படுபொருள்கள்.
12. மருமம் – மார்பு; மாறு - பகை.
13. மூன்று தீ - ஆகவனீயம், காரு நாகபத்தியம், தக்கணாக்கினியம் எனும் மூவகையங்கி; காசகல் - குற்றம் நீங்கிய.
14. ஆவணம் - கடைவீதி.
15. கருகரடம் – யானைமதம்; வெம்மாவி. கடுமையுள்ளவாசனை; ஞாழல் - குங்குமமரம்.
16. எனக்குருளை - பன்றிக்குட்டி
18. நாறி - தோன்றி .
20. தத்துவம் – உண்மை.
22. பீடு – பெருமை; முக்குற்றம் - ஐயம், திரிபு, அறியாமை எனும் மூன்று குற்றங்கள்.
25. தற்போதம் - ஜீவபோதம்.; அற்போதம் - அஞ்ஞானம்.
26. பொல்லம் – துண்டு, தைத்தல்
28. மீளி – தலைவன், அரசன்
31. அலர் சொல் - பழிச்சொல்.
35. ஏதமிலா - குற்றமில்லாத.
37. தோற்குழு – யானைக் கூட்டம்; நீவாரம் – வன நெல்.
40. எவ்வம் - துக்கம்.
44. வீழ்தாயே - ஆசையுள்ள அன்னையே.
49. வற்கலை -மரவுரி.
50. புல்லுரை - அற்பமான சொல்
51. அடிசில் - சோறு.
52. இந்து - சந்திரன்.
53. ஆக்கம் - செல்வம்,
54. கலாம் - கலகம்.
55. அல்லல் - துன்பம். கூற்றுவன் - யமன்.
57. சேய் – குழந்தை; வில்வதனத்தாள் - பிரகாசம் பொருந்திய முகத்தை யுடையவள்
58. நட்ட – சிநேகித்த; தாவில் - அழிதலில்லாத.
60. தெண்ணிலையான் – தெளிந்த நிலையையுடையவன்.
62. இக்கனைய - கரும்பு போன்ற.
63. வேளை - மன்மதனை.
65. அலரவன் - பிரமன்.
66. குய்யம் – வஞ்சனை; சலதி - சமுத்திரம். ஈங்கு திருப்பாற்கடல்.
67. மூங்கையர் - ஊமையர்.
67. இன்னல் – துன்பம்; நத்திடார் - விரும்பார் .
68. குழலான் வேய்ங்குழலுடை யவன்; மூரித்தனம் - பெரியதனம்.
71. கொன் – அச்சம்; மைம்மைந்தை - மிகுந்த அஞ்ஞானத்தை, இருண்ட மயக்கத்தை .
74. மயல் - மயக்கம்.
76. உலையா - கெடுதலில்லாத.
80. களைகண் – ஆதரவு; தெண்ணன் - தெள்ளியதும் நன்மையுமான.
81. தணந்தோர் - நீங்கினார்.
83. முன்றுன்னி - முன்பு நெருங்கி.
84. கையுறை - கையில் கொண்டு போகும் பொருள்.
85. கணமே – உடனே; அல்லல் - துன்பம்.
86.பிதிராமல் - உதிராமல்,
88. மஞ்சு - மேகம்.
89. பானு - சூரியன்.
91. மீளி - தலைவன். ஈங்கு குசேலமுனி.
92. எழுநா - அக்கினி.
93. அறல் – நீர்; வளி – காற்று; கூ - பூமி,
95. வாங்கு - வளைந்த.
96. நத்தன் - சங்கேந்திய கடவுள்
98. விழுமியோன - மேலோன்.
101. துனி - துன்பம்.
105. காஞ்சிரம் - எட்டி மரம். எச
106. 1- வது மால் - மேகம். 2- வது மால் - திருமால். 3-வதுமால் பெருமை.
111. வாரி- கடல்.
112. கொன் - இளமை அல்லது பெருமை.
115. அந்தம் - அழகு.
116. கால் - காற்று. ; ஆலும் - சேரும் அல்லது ஒலிக்கும்.
117. கூம்பு – பாய்மரம்; சோங்கு - மரக்கலம்.
-------------

துவரைகாண்டம்.
2. உதித்த - எழுந்த.
3. மறன் - பாவம்.
6. தற்போதம் – ஜீவபோதம்; சிற்போதம் – ஞானபோதம்; அற்போதம் - அஞ்ஞானம்.
7. முகிலேய் - மேகத்தையொத்த.
8. வேழம் - அகழைச் சொல்லுமிடத்து யானை ; கவியைச் சொல்லுமிடத்து கரும்பு.
11. முன்னும் – நினைக்கும்; பின்னோர் - சூத்திரர்.
12. வில் - பிரகாசம்.
14. கன்னல் - கரும்பு.
16. இருக்கு - வேதம்.
18. நாப்பண் - நடு.
19. சதிபதி - ஸ்திரி புருஷாள்; பீடம் - மணமேடை
25. உவரி - கடல்.
26. கைதவம் - வஞ்சனை.
27. நவையுடையோர் - பழி பாவமுடையோர்.
28. எல்லும் - சூரியனும்.
29. ஊர்திகள் – வாகனங்கள்; சொல்லேந்து – புகழேந்து; கோலம் - அழகு.
30. நன்முகமன் - நல்உபசாரம்.
31. கென்னல் - நேற்று.
33. தமர் – பந்து; சமர் - யுத்தம்.
35. யாதிருந்தால் - நினைவிருந்தால்
37. அற்றம் - சமயம்,
40. மேதி - எருமை.
41. சாரல் - தூறல், மழை பெய்தல்; தேரல் - தேன்.
42. ஏதிலார் – பகைவர்; பேதிலா - மதி மயக்கமின்றி.
43. வரை - மலை.
47. தாது - மகரந்தப் பொடி.
48. காவில் - தோட்டத்தில்.
50. தெவ்வேந்தர் - பகையரசர்.
51. காசு - குற்றம்.
52. கன்றி- நைந்து; கலுழ்ந்து - கலங்கி.
55. பேரென்று பேர் + என்று - பெரிய சூரியன் அதாவது ஞான சூரியன்.
58. அம்மை - மறுபிறப்பு,
62. வேலை - கடல்.
64. திருக்கு - கண்.
71. நசை - ஆசை.
74. கேத்திரம் - க்ஷேத்திரம்.
74. துரிசு - குற்றம்.
78. சேணாடு – சுவர்க்கம்; சேர்வு - இருப்பிடம்.
79. உவளகம் - அந்தப்புரம்.
81. கார் - மேகம்.
82. ஏறு - உயர்ச்சி.
84. மீன் - நட்சத்திரம்.
87. தானை - வஸ்திரம்.
93. ஒகை – சந்தோஷம்
95. மலக்குறும்பு - அழுக்கு நிறைந்த பொல்லாப்பு.
99. காப்பினார் - காவலாளிகள், துவாரபாலகர்.
100. அண்மை – சமீபம்; ஓவியம் – சித்திரம்; பூங்கதிர் - அழகிய கிரணம் வாய்ந்த சூரியன்; சேர்க்கை – சேருமிடம்
103. படி – பூமி
104. திலகம் - பொட்டு.
110. கருனை - பொரிக்கறி.
112. விரை – வாசனை; பாகடை - பாக்கு, வெற்றிலை; குஞ்சம் - ஓர்வகைவிசிறி.
114. நத்தவர் – ஈண்டு நகரஞ்சிறப்பு புப்பொருண்மேற்று; ”நக்கீரன்'' என்றதில் நகரம் சிறப்புப் பொருடருதல் உச்சிமேற் புலவர் கொள். நச்சினார்க்கினியர் உரைத்தவாற்றுனு முணர்க.
116. நாதாந்தம் - ஞானநிலைகளில் ஒன்று.
118. சேண்டலம் - சுவர்க்கம்.
123. கான்முளை - குழந்தை.
125. கனம் – வேதசுவரத்தின் ஒன்று
127. ஏதம் - குற்றம்.
129. நானம் - ஸ்நானம்.
132. சாவி - சப்பட்டை அல்லது பதர்.
134. மங்குல் - மேகம்,
135. அப்பு - ஜலம்.
137. முழவம் - முரசு
139. செய் – வயல்; கனமழை - பெருமழை.
140. கந்து -யானை கட்டுத்தறி; அடரும் - போக்கும்.
141. சாகை – மாக்கொப்பு; உரம் - திட்டம், ஊக்கம்.
142. குடம்பை – சுட்டு; துனைந்து - விரைந்து
145. 1-வது பதம் – குழைவு; 2- வது பதம் - சோறு.
146. நந்திடவே – வருந்திடவே; தண்கதிரோன் - சந்திரன்.
147. செங்கதிரோன் - சூரியன்.
148. விமலம் - அழகு, அழுக்கின்மை.
151. கைதவன் – வஞ்சகன்.
155. நாரி – ஸ்திரீ.
161. முளரிமகள் - ருக்மணி.
168. கரிசு - குற்றம்.
174. காமர் - அழகு.
177. ஆர்வம் - சந்தோஷம்.
178. சி லதியர் - தோழியர்.
179. புனை வித்தான் - அலங்கரித்தான்.
180. தைவந்தான் – தடவினான்; அமளி - படுக்கை
183. வேய் – மூக்கில்; இழுக்கு - குற்றம்.

வைகுந்த காண்டம்.
1. உவணம் – கருடன்; பா – பரவிய; இறும்பூது - ஆச்சரியம்.
7. புத்தேள் - தெய்வம். இங்கு பரமசிவம்.
9. பல்லியம் - வாத்தியம்.
14. பீடு - பெருமை.
15. நத்திடுவான் - விரும்பும்படி
16. வடு - குற்றம்.
17. திரை - அலை.
21. தொங்கல் - பூமாலை.
28. கீறல் கிழித்தல்,
31. அற்பார் - அன்பு நிறைந்த; பொற்பு - அழகு.
34. மன்றல் - விவாகம்.
38. கற்பு - முல்லைக்கொடி.
40. வன்மீகம் - புற்று.
41. முன் - கருதல்.
44. புலிங்கம் – தீப்பொறி; கொங்கு - வாசனை.
45. குரு - நிறம், பெருமை.
47. துப்பிதழ் – பவளபோன்ற வுதடு; பொலிவு - அழகு.
48. காலும் - வடியும்.
54. சமரம் – போர்; வேள் – மன்மதன்; திமிரம் - இருள்.
55. என்றன் - என் பேரிலுள்ள ; விரகம் - காமநோய்.
56. பொன் – அழகு; நறவு - தேன்.
57. கடி - வாசனை.
61. பாட்பம் – கண்ணீர்.
64. நீராஞ்சனம் – கண்ணூறுகழிக்கு மோர்வகை யாலாத்தி.
66. கலன் – ஆபரணம்
77. பங்கம் - குற்றம்.
79. ஆனா - அழியாத.
82. அடலரி - வலிமிகுந்த சிங்கம். இங்கு நரசிம்மக் கடவுள்.
90. செவி - அழகு. செவ்வியென்னும் சொல்லின் சிதைவு.; அம்மான் - அழகிய மஹான். மான் என்பது மஹான் என்னும் வடசொல்லின் சிதைவு.
102. திரு - செல்வம்.
103. சிந்தாகுலம் - மனக்கவலை.
106. பொனையே - இலக்குமியையே,
107. விற்பனர் - கற்றோர்.

குசேல வெண்பா அரும்பதவுரை முற்றிற்று.
----------------------

செய்யுள் முதற்குறிப்பகராதி .

முதற்குறிப்பு. – செய்யுள் எண்

அகழும் மதிலு 2.15 அமிர்தங் கவர்ந்தோ 3.17
அக்கா லகிலமதை 3.39 அம்மா வுணவின்றி 1.41
அஞ்சாத நெஞ்சு 2.13 அயறுலகுஞ் 3.15
அணைந்தோ ரெவரேனு 1.81 அருவத்தார் சிற்றிடையா 1.91
அந்தணரே மூவருக்கு 2.57 அருளாற் கிடைத்த 3.72
அந்தணரைப் பேணு 3.84 அருள்சேரு மந்தணனே 2.98
அந்தணன் மாற்ற 1.74 அலரவன் றீட்டிவைத்த 1.65
அந்தணன்ற 3.63 அல்லல் புரிந்தே 1.55
அந்தப் புரங்காக்கு 2.83 அழுந்து பசித் 1.24
அந்நா டனுக்கேற்ப 2.36 அறன்முதலா 2.3
அந்நீ ணகர்ப்பாங் 1.4 அன்று திருமா லகில 2.9
அப்பொழுது சையாதியண்ண 3.47 அன்றுமிக நட்பென்றே 2.37
அப்பொழுது நீறா 2.135 அன்னதுதான் கண்ட 2.97
அப்போ தகங்குளிர 3.24 அன்னோர்தம் நட்பே 2.122
அமார்நோய் தீர்க்கு 3.54

ஆக்கம் படைத்தோ 1.53 இடியே முழவமா 2.137
ஆடுவா ரங்கைகொட்டி 2.65 இதுவரையுந் 2.77
ஆதலா லன்ப வரு 3.105 இதுவறிந்து மில்லா 1.102
ஆதலா லைய 3.101 இத்தகைய வந்தணரை 2.59
ஆதலினா லைய 2.52 இத்தகைய வெப்பி 1.96
ஆதவினா லாரியனே 2.96 இத்தலைவாய் 2.51
ஆதிநா ணட்பென் 2.70 இந்திரரீன் 3.18
ஆதிநா ளையநின்னோ 2.88 இப்பொழுதே யுன்மகன் 3.51
ஆலை யமர்கருப் 2.49 இம்மா நகரொருசா 1.15
ஆவாவிவ் வந்தணனை 2.71 இம்மா மறையோ 2.69
ஆவி யனையாய்நீ 2.132 இம்மையிலே 2.58
இங்கேரீர் வம்மி 3.92 இருந்தனந்தாம் 2.10
இங்ங னிவனிருப்ப 1.39 இருபுறமார் 3.27
இங்ஙன் றிருமா 2.102 இருவினயொப் பாக 2.4
இடித்தொளிவில் 2.136 இலக்கண மேயுள்ளா 2.95

இவையனைத்துக் 3.5 இன்னவித மேந்திழையா 3.67
இவ்வகைய சீரை 1.113 இன்னவிதந் தான் 2.108
இவ்வண்ண மொவ்வோ 1.45 இன்னவொகை கண்டே 3.23
இவ்விதமா பில்லறத்தி 3.74 இன்னே யழைத்திடுமி 2.94
இவ்வேந்தர் தம்மு 2.50 இன்னோர் பெருமை 2.68
இன்பமதைச் 2.63 ஈங்கிவனிவ் 2.101
இன்றிரா விங்ங 1.100 உலகங் தனைவெறுத்தே 2.61
இன்றே சுபதினமா 2.107 எங்கு முளனென் 3.82
இன்ன நகர்க் 2.7 எத்தனைபேர் மைந்த 2.124
இன்ன வறுமையினை 1.56 எந்தெழிலே மிக்க 3.56
இன்ன வுாைதன்னே 3.58 எப்பிறப்பே 3.99
இன்ன வெழில்வாய்ந்த 2.82 எம்மா னருளா 3.1
இன்னசொற் கேட்ட 2.27 எம்மான் றருமெனவே 1.77
இன்னதவத் 1.28 எல்லா வுயிர்க்கு 3.76
இன்னபல வெல்லா 3.10 எளியேன் மறையோ 2.24

என்செய்தாய் 3.50 ஒருமூன்று தீவளர்க்கு 1.13
என்செய்வே னின் 1.115 கங்கைமுத னீராடிக் 2.74
என்ற சுகமுனிவ 3.109 கட்பகையர் மென்றே 1.111
என்ற சுகனடிதா 3.36 கண்டான் விரைந்தெழுந்தான் 3.93
என்று பல பேசி 3.97 கண்ண னனுமதியைக் 2.91
என்றுமுலை யாமுயற்சி 1.79 கண்ணனடி யேகருதிக் 3.107
என்ன துயருறினு 1.106 கண்ணனை யன்பர் 1.60
ஏதிலா ராவிதனை 2.42 கண்ணனைநேர் 2.23
ஏந்தெழிற்சீர் 2.18 கண்ணன் கருமேனி 1.8
ஏற்ப திகழ்ச்சி 1.37 கண்ணன் கழலினையே 1.80
ஏனை வழியெல்லா 1.92 கண்ணுரு சேரும்பக் 3.88
ஐய னடிவிளக்கி 2.109 கந்தமல ருந்தளிருங் 1.89
ஐயன் வரவறிக்தே 3.4 கந்தை யவறின்று 3.87
ஒதியநா ணட்பென் 2.35 கந்தை யுடுப்பார் 2.66
ஒருமகவுக் கீயுங்கா 1.40 கந்தையிலார் 2.54

கருப்பையண் 1.64 காயவழி செல்லுங் 1.7
கல்விபயி லூரதனைக் 2.34 காளையர்கள் சூழுங் 2.44
கற்பகத்தை 2.64 கானத் திடையமர்ந்துங் 3.95
கற்பார் மண்வேண்டக் 3.31 கானத் தொருசிறையே 1.16
கனமதிலே தேர்ந்தாரோ 2.125 கிள்ளத் தசையற்றுக் 3.28
காக்குங் கிளைமொழியார் 2.84 குணமேறித் தான 1.21
காண்டலுமே பூத்துவகை 2.105 குன்றனைய சீராயுன் 2.117
காத மிருந்தாலுங் 2.131 குன்றெடுத்துக் 2.26
காதலினொ டுள்ளக் 1.35 கேசவன்பா லொன்றையுமே 3.75
காதிற் பொலிபொருள்கள் 3.2 கேடென் றிவைவிடுத்துக் 1.73
காந்த னுடல் 1.29 கேட்ட பொழுதே 2.90
காந்தனுடன் யாமுங் 3.57 கேட்டார் திருமால் 2.85
காந்தனுரை கேட்ட 1.85 கைதலைமே லேறக் 2.21
காயங் தனவெறுத்துக் 3.32 கொலைகளவு 1.66
காயமளாம் 1.3. கொல்லுகின்ற 3.20

கோடிபொன் 1.47 சீடர் திறனோக்கிச் 1.22
கோதிலா வுன் 2.38 சீரார்கின் னூர்நின்று 2.130
கோதை மடமாதர் 1.6 சீருடனே சென்றாற் 2.30
கோயின் முனங்குறுகக் 2.20 சீலமிகு மாமுனியுஞ் 3.53
சங்கந் தனைவாய்ந்து 1.109 சுட்டி நூதன்மீது 3.69
சந்தமூ லம்புசித்துக் 3.29 சுட்டிமுதற் 1.44
சந்தனமே பூசித் 3.66 சுற்பகத்தைச் 1.105
சந்திசெபம் 1.25 செங்கதிரும் 3.90
சரியைமுதல் 1.19 செந்தமிழ்தேர் 2.8
சற்றே யிவணிருக்கிற் 2.76 செந்தா மரையன்னஞ் 2.47
சாரன் முகம்படியத் 2.41 செந்திருவக் தூற்ருலுங் 3.34
சாலவுமே மெய்முழுதுஞ் 2.81 செம்பொ னெழுபத் 2.78
சிங்தை சிவமாஞ் 3.55 செய்த வவறன்னைச் 1.86
சிந்தை களிதூங்கச் 2.87 செல்வ ரதுநட்பே 2.32
சிறியோர் மடமையாற் 2.75 செல்வமகள் 1.34

சேர வுடல்பொருமச் 1.33 தாயார் மனையா 1.72
சேர்த்தநீ 1.38 திங்களொடு மேன்மை 2.80
சேனை புடைசூழச் 2.46 திலகமண் டோயத் 2.106
சொல்லமுத மூடே 2.111 தீங்குயிலேய் மென்மொழியார் 2.45
சொல்லிய வவ்வுயிர்கள் 1.63 தீதி லருமுயற்சி 1.75
சோதின் மகவடையார் 1.32 தீதிற்றி ரெளபதையுந் 1.78
தண்டுவரை மார்க்கமது 1.107 துட்ட ரகபழலத் 1.58
தந்தை தாய் மக்க 2.33 தும்பை மலரனமே 2.110
தவம்புரியுஞ் சாந்தன் 3.38 தெய்வங் குருவிறைமுன் 1.84
தழலோம்பி 1.20 தெருவி னெழில்கண்டு 2.16
தற்போதங் தோன்றாத் 2.6 தேசா ரசுவினியார் 3.60
தனக்கோ ருருவமிலாத் 3.89 தேரினிழிந்து சிறுமனேயை 3.62
தனியே நனியுணர்ந்துஞ் 1.101 தோமனைத்துங் 1.9
தன்னூர்ப் புறஞ்சார்ந்த 3.13 நங்குரவ னில்லா 2.134
தன்னை யறியுந் 2.67 நடுநிலமை நீங்கானே 3.16

நட்பே திரவியமா 2.120 பக்கத்துப் பாலரின் 1.42
நம்பகையை 1.94 பண்டு கடல் 3.80
நல்லார் குணமுரைப்போர் 2.121 பண்ணுர் மறைமுடியும் 3.98
நல்லோரு ஞானிகளு 3.22 பல்லனத்துங் 1.36
நன்னிலமே யானாலும் 1.76 பல்லியமே 3.26
நாக சுரவோசை 2.128 பல்லுலகம் போற்று 2.28
நாண முதனான்கும் 1.30 பல்வியமே தான்முழக்கப் 3.9
நாதாந்த வாழ்வே 2.116 பழங்கக்தைப் 3.12
நானமுதற் சந்திசெப 2.129 பள்ளமதிற் 3.77
நிதியா ரளகை 2.39 பற்றற்ற னுக்கிப் 3.35
நிலனாறி வானிவந்து 1.18 பற்றற்றோலும் 3.33
நீருற்ற வுப்பி 2.115 பன்மணிவாய் 2.100
நெடுநா ணனிய 2.25 பாங்கியர்தம் 3.49
நென்னலுண்ட பாகம் 2.31 பாசத் தளை 2.1
நேர்ந்தமிடிச் 1.49 பாசந் தனையறுத்துப் 1.69

பாம்பணைசேர் 1.116 பெய்ப்பொருடா 3.103
பாயவனச் சென்னவோ 3.46 பேருலகம் போற்றும் 3.37
பாருலகம் 1.1 பைந்துளவ மாயவனைப் 1.83
பார்ப்பான் படுந்துயரம் 1.97 பைம்பொற் கலத்தினிடைப் 3.70
பாவியவன் 3.81 பொங்கியெழுங் 3.44
பிடியினங்கள் சூழப் 2.92 பொற்குவையு 3.68
பித்தருன் மத்தர் 2.114 பொற்பின் மிடியிலுமே 1.50
பிறந்திடும் போது 1.68 பொன்குச் வரைமேற் 3.7
புற்றின் கண் குேக்குதலும் 3.41 பொன்னவிரும் 1.57
புன்புலால் யாக்கை 1.70 பொன்னா ருவளகத்தே 2.79
பூக்கொய்வான் போர்த 3.40 போக்துமலரத்தடத்தே 3.59
பூணூலே பொற்பூணாம் 1.46 போரதனைச் செய்யாது 3.86
பூண்டதயை 2.118 மக்க டமைப்போற்ற 1.62
பூமகளோ பொன்மகளோ 3.43 மக்கலத்தின் 3.21
பூமா துடல்சிலிர்க்கப் 3.91 மஞ்சு மருங்கமர 1.88

மணிவார் முடிதோப 3.6 மன்னர் பலரை 3.52
மண்டெரியா 3.8 மன்னர் முடியிடறும் 1.104
மண்ணு மறலும் 1.93 மன்னனையே காணு 2.99
மந்திரமா 1.27 மன்னு முயிரனைத்தும் 1.52
மரந்தரெலா நன்னெறியில் 3.85 மாணிக்கக் கானிறுவி 2.12
மருமத் தயில்பாய 1.12 மாதசவர் சேர்ந்து 3.61
மருவி கினேச்சார்ந்தார் 3.102 மாதவமே செய்தாலு 2.127
மழைபடியு மம்மா 1.17 மாதவமேசெய்து 3.3
மறையெல்லா 2.73 மாந்தர் பிறப்பெய்த 2.56
மற்படுகா னெல்லாமே 3.14 மாமதிலே நற்றாணாம் 2.19
மற்றவன் றான் 1.59 மாமறையோன் 3.106
மற்றை வழிகடக்க 1.103 மாவலிபான் மூவடிமண் 3.83
மன்புற்றி னின்று 3.48 மிடியோ ருணவிழந்தோர் 2.103
மன்வாவு பார்க்கு 2.93 மின்னவிரும் பூணும் 2.53
மன்னர் பலரு 3.11 மின்னற் கொடியார் 3.64

மின்னார் மதிவதன 2.17 மூன்று வருணத்தார் 2.11
மின்னுகின்ற 2.86 மெத்தியபல் 1.26
மீண்டுந் தனமே 3.104 மெய்ப்பொருளை 3.78
மீனம் விலைகொள் 1.112 மெல்ல வெழுந்தும் 1.99
முத்த ரிலக்கணந்தான் 2.60 மென்காற் சிறையன்ன 2.48
முத்தி தனையளிக்கு 2.119 மேஞண் மறைகவர்ந்து 3.79
முத்திக்கு வித்தென்கோ 2.5 மேதி குளங்குழப்ப 2.40
முத்தீ வகுக்கு 2.14 மைந்த ரனமின்றி 1.51
முறறு முணர்ந்த 2.138 மைந்தர் தமக்கிரங்கி 1.61
முன்பு நடந்தறியான் 1.87 மைந்தர் தமக்கிரங்கி 1.82
முன்பு படித்த 2.123 மைந்தர் வருந்தாமன் 2.126
முன்பும் வெறுத்தேன் 3.100 யாரென் றறிந்தீ 2.55
முன்பெத் தனைமைந்தர் 1.71 யாவ ரிடத்து 3.30
முன்னளிருவருமே 2.133 யோகமது குன்ற 3.42
மூவுலகு மேவெஃகு 1.11

வங்கமுகைப் பார்க்கீய 1.114 விட்டின்சு குவ்வோர் 3.71
வந்தண்தான் செய்து 3.65 விரைசேரு நற்சாந்த 2.112
வந்தமுனி 1.2 வில்லேந்து பூணும் 2.29
வந்தவிருந் தூட்டி 1.10 வெஞ்சகடங் 3.96
வருவிருந் தூட்ட 1.31 வெம்மை மிடிக்கடலில் 1.48
வழிவந் திளைத்தோன் 2.113 வெய்யோ னகல 1.98
வற்றியெலும் 2.89 வெய்யோன் வழிவழியே 1.108
வனப்பழிக்கும் 1.54 வெருககொண்டு 3.45
வன்றிணிய நெஞ்சுடையார் 2.72 வெள்ளியமா 3.19
வாக்கிருந்தும் மூங்கையராய் 1.67 வேசையே போலும் 3.73
வாங்கு கடலினி 1.95 வேத முடிவில் 2.104
வாங்கு கடன் 1.110 வேத முதித்தவிடம் 2.2
வாங்குசிலை தாங்கும் 2.43 வேத முழக்கொலியும் 1.14
வாச மலர்சூடி 1.90 வேதமது பொய்த்தாலும் 2.62
வாசக் கருங்கூந்தன் 1.5 வேதமுடி தோவவ் 3.94
வாயில்காப் பாரை 2.22 வேதமே தானாய் 1.23
வாரிதனில் வந்தடையு 3.108 வேறு மனைச்சிறுவன் 1.43
வாழ்கதனமே 3.25
---------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்