Nālāyirat tivviyap pirapantam IX


வைணவ சமய நூல்கள்

Back

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் IX



நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
ஆழ்வார் பாசுரங்கள் இரண்டாம் ஆயிரம் (948-2081)

உள்ளடக்கம்
    10. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி (948--2031)
    11. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குருந்தாண்டகம் (2032-2051)
    12. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திரு நெடுந்தாண்டகம் (2052-2081)
    ------------------

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - இரண்டாம் ஆயிரம்
12. திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948 - 2031


1. பெரிய திருமந்திரத்தின் மகிமை

948 வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (1)


949 ஆவியே அமுதே என நினைந்து உருகி
அவர் அவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (2)


950 சேமமே வேண்டி தீவினை பெருக்கி
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (3)


951 வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (4)


952 கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
- நாராயணா என்னும் நாமம் (5)


953 எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (6)


954 இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
- நாராயணா என்னும் நாமம் (7)


955 கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்
- நாராயணா என்னும் நாமம் (8)


956 குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (9)


957 மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு
- நாராயணா என்னும் நாமம் (10)
-------------

2. திருப்பிரிதி

958 வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே (1)


959 கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய
அரு வரை அணை கட்டி
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்-தாம்
இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன
வேழங்கள் துயர்கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு
பிரிதி சென்று அடை நெஞ்சே (2)


960 துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று
இளங்கொடிதிறத்து ஆயர்
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்
இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்
மணி அறைமிசை வேழம்
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்
பிரிதி சென்று அடை நெஞ்சே (3)


961 மறம் கொள் ஆள்-அரி உரு என வெருவர
ஒருவனது அகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணிதர
இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்
கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு
பிரிதி சென்று அடை நெஞ்சே (4)


962 கரை செய் மாக் கடல் கிடந்தவன் கனை கழல்
அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை அலர்மகள்-அவளொடும்
அமர்ந்த நல் இமயத்து
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை
அளை மிகு தேன் தோய்த்துப்
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்
பிரிதி சென்று அடை நெஞ்சே (5)


963 பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப்
பள்ளிகொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணிதர
இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற
நிமிர்ந்து அவை முகில் பற்றிப்
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்
பிரிதி சென்று அடை நெஞ்சே (6)


964 கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய
கறி வளர் கொடி துன்னிப்
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய
பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து இன மலர்
எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்
பிரிதி சென்று அடை நெஞ்சே (7)


965 இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை
இரும் பசி-அது கூர
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய
அருவரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று
எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே (8)


966 ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு
உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை
இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு
பிரிதி சென்று அடை நெஞ்சே (9)


968 கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை
முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு
பிரிதி எம் பெருமானை
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்
கலியனது ஒலி மாலை
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு
அரு வினை அடையாவே (10)
--------

3. திருவதரி

968 முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே (1)


969 முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே (2)


970 உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்காமுன்
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே (3)


971 பீளை சோரக் கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி
தாள்கள் நோவத் தம்மில் முட்டி தள்ளி நடவாமுன்
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே (4)


972 பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றி தள்ளி நடவாமுன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே (5)


973 எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயராமுன்
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே (6)


974 பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே (7)


975 ஈசி போமின் ஈங்கு இரேல்மின் இருமி இளைத்தீர் உள்ளம்
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்பால்
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கல் உறில்
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே (8)


976 புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி
கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றாமுன்
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு ஆயிரம் நாமம் சொலி
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே (9)


977 வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடு மாலைக்
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே (10)
---------

4. திருவதரி ஆச்சிரமம்

978 ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று
இணை-அடி இமையவர் வணங்க
தானவன் ஆகம் தரணியில் புரளத்
தடஞ் சிலை குனித்த என் தலைவன்-
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த
தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (1)


979 கானிடை உருவை சுடு சரம் துரந்து
கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப
உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்-
தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்
சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (2)


980 இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்
இரு நிதிக்கு இறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த
கொற்றவன்-கொழுஞ் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்
வெண் துகில் கொடி என விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (3)


981 துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே
தொழுது எழு தொண்டர்கள்- தமக்குப்
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்
பேர் அருளாளன் எம் பெருமான்-
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்
ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (4)


982 பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள்-தன்
பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று
தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்-
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த
செம்பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (5)


983 தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி
திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த
பனி முகில் வண்ணன் எம் பெருமான்-
காரணம்- தன்னால் கடும் புனல் கயத்த
கரு வரை பிளவு எழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (6)


984 வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்
விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்
எந்தை எம் அடிகள் எம் பெருமான்-
அந்தரத்து அமரர் அடி-இணை வணங்க
ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (7)


985 மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த
மன்னவன் பொன் நிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா
உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம்
தவிர்த்தவன்-தவம்புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (8)


986 கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்
குரை கடல் உலகு உடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த
உம்பரும் ஊழியும் ஆனான்-
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு
அவனியாள் அலமரப் பெருகும்
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (9)


987 வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானை
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி
கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்
வானவர் உலகு உடன் மருவி
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்
இமையவர் ஆகுவர் தாமே (10)
--------

5. திருச்சாளக்கிராமம்

988 கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்துபோய்
சிலையும் கணையும் துணையாகச்
சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி
மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான்
சாளக்கிராமம் அடை நெஞ்சே (1)


989 கடம் சூழ் கரியும் பரிமாவும்
ஒலி மாத் தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை
பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்-
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்
இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய
சாளக்கிராமம் அடை நெஞ்சே (2)


990 உலவு திரையும் குல வரையும்
ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளும் ஆய்
நின்றான் வென்றி விறல் ஆழி
வலவன் வானோர்-தம் பெருமான்
மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய
சாளக்கிராமம் அடை நெஞ்சே (3)


991 ஊரான் குடந்தை உத்தமன்
ஒரு கால் இரு கால் சிலை வளையத்
தேரா அரக்கர் தேர்-வெள்ளம்
செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான்-தாரா வயல் சூழ்ந்த
சாளக்கிராமம் அடை நெஞ்சே (4)


992 அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு
அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி
விண்ணோர் பெருமான் நண்ணார்முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்
கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத்
தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய
சாளக்கிராமம் அடை நெஞ்சே (5)


993 தாய் ஆய் வந்த பேய் உயிரும்
தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவின்
குறளாய்ச் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண்
இன்றே தா என்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன்-
சாளக்கிராமம் அடை நெஞ்சே (6)


994 ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்
அரி ஆய் பரிய இரணியனை
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த
ஒருவன் தானே இரு சுடர் ஆய்
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்
மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்
தான் ஆய் தானும் ஆனான்-தன்
சாளக்கிராமம் அடை நெஞ்சே (7)


995 வெந்தார் என்பும் சுடு நீறும்
மெய்யில் பூசி கையகத்து ஓர்
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும்
திரியும் பெரியோன்-தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன
இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த
சாளக்கிராமம் அடை நெஞ்சே (8)


996 தொண்டு ஆம் இனமும் இமையோரும்
துணை நூல் மார்வின் அந்தணரும்
அண்டா எமக்கே அருளாய் என்று
அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து
வயலின் அயலே கயல் பாயத்
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்
சாளக்கிராமம் அடை நெஞ்சே (9)


997 தாரா ஆரும் வயல் சூழ்ந்த
சாளக்கிராமத்து அடிகளை
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்
கலியன் ஒலிசெய் தமிழ்மாலை
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்
அமரர் நல் நாட்டு அரசு ஆளப்
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்
அன்றி இவையே பிதற்றுமினே (10)
--------

6. நைமிசாரணியம்

998 வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்
மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி
பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி
இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (1)


999 சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி
போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா
வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (2)


1000 சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து
சுரி குழல் மடந்தையர்திறத்துக்
காதலே மிகுத்து கண்டவா திரிந்த
தொண்டனேன் நமன்-தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை
வெண் திரை அலமரக் கடைந்த
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (3)


1001 வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (4)


1002 இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று
இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ
நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்
படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (5)


1003 கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து
திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்
உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்
பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்
-நைமிசாரணியத்துள் எந்தாய் (6)


1004 நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
நீதி அல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே
துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா
வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (7)


1005 ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்-
எங்ஙனே வாழும் ஆறு?-ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
குறுங்குடி நெடுங் கடல் வண்ணா
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன்
பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்
-நைமிசாரணியத்துள் எந்தாய் (8)


1006 ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்-
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்-தன்
சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே
திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (9)


1007 ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி
எழுமினோ தொழுதும் என்று இமையோர்-
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து
எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்
மாலை-தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்
உம்பரும் ஆகுவர் தாமே (10)
----------

7. சிங்கவேழ்குன்றம்

1008 அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேழ்குன்றமே (1)


1009 அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்-
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேழ்குன்றமே (2)


1010 ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் -
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேழ்குன்றமே (3)


1011 எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன் ஏதலன் இன் உயிரை
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்-
கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே (4)


1012 மென்ற பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய
சென்று காண்டற்கு-அரிய கோயில் சிங்கவேழ்குன்றமே (5)


1013 எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எவ் உரு என்று
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்-
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுழை
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ்குன்றமே (6)


1014 முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே (7)


1015 நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய்ங்கழை போய்த்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே (8)


1016 நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் இடம்-
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய்
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே (9)


1017 செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிஙக்வேழ்குன்று உடைய
எங்கள் ஈசன் எம் பிரானை இருந் தமிழ் நூல்-புலவன்
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார்க் கலியன்
செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீது இலரே (10)
------

8. திருவேங்கடம் - 1

1018 கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம்
ஒசித்த கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல் துயில்
கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த
புராணர்-தம் இடம்-பொங்கு நீர்
செங் கயல் திளைக்கும் சுனைத் திரு-
வேங்கடம் அடை நெஞ்சமே (1)


1019 பள்ளி ஆவது பாற்கடல் அரங்
கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை
பிரான்-அவன் பெருகும் இடம்-
வெள்ளியான் கரியான் மணி நிற
வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (2)


1020 நின்ற மா மருது இற்று வீழ
நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத்
தாமரை அடி எம் பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிது
ஆ-நிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (3)


1021 பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்
திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர்-தம் பாடியில் குரவை
பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார்-தம் மனத்து உள்ளான் இட-
வெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (4)


1022 வண் கையான் அவுணர்க்கு நாயகன்
வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம்
ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான்
இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (5)


1023 எண் திசைகளும் ஏழ் உலகமும்
வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்
பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர்
வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (6)


1024 பாரும் நீர் எரி காற்றினோடு
ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற
பிறப்பிலி பெருகும் இடம்-
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்
சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (7)


1025 அம்பரம் அனல் கால் நிலம் சலம்
ஆகி நின்ற அமரர்-கோன்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட
மங்கை-தன் கொழுநன்-அவன்
கொம்பின் அன்ன இடை மடக் குற
மாதர் நீள் இதணம்தொறும்
செம் புனம்-அவை காவல் கொள் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே 8


1026 பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
சொலி நின்று பின்னரும்
பேசுவார்-தமை உய்ய வாங்கி
பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-
வாச மா மலர் நாறு வார் பொழில்
சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய்த் திகழும் மலைத் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (9)


1027 செங் கயல் திளைக்கும் சுனைத் திரு
வேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி
வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்
லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலர்
ஆகி வான்-உலகு ஆள்வரே (10)
-----

9. திருவேங்கடம்-2

1028 தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!-
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே (1)


1029 மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
ஆனாய்!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (2)


1030 கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்-
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (3)


1031 குலம்-தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலம்-தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்-
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா!-
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (4)


1032 எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்-
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (5)


1033 மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண் ஆர் ஆக்கை-தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்-
விண் ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்கடவா!-
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (6)


1034 தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்-
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!-
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (7)


1035 நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்-எம் பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (8)


1036 பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன்-மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!-
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (9)


1037 கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை
விண்ணோர்-தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்-கோன் கலியன்
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே (10)
-------

9. திருவேங்கடம்- 3

1038 கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1)


1039 இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே (2)


1040 நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே (3)


1041 உண்டாய்-உறிமேல் நறு நெய் அமுது ஆக
கொண்டாய்-குறள் ஆய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே (4)


1042 தூண் ஆய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய
கோள் நாகணையாய் குறிக்கொள் எனை நீயே (5)


1043 மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன் ஆக்கி தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே (6)


1044 மான் ஏய் மட நோக்கிதிறத்து எதிர் வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே (7)


1045 சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே (8)


1046 வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்-
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்!-இனி யான் உனை என்றும் விடேனே (9)


1047 வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல் ஆர் திரள் தோள் மணி வண்ணன் அம்மானைக்
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார்-அவர் வானவர் ஆகுவர் தாமே (10)
-------

11. திருவேங்கடம்-4

1048 வானவர்-தங்கள் சிந்தை போல என்
நெஞ்சமே இனிது உவந்து மா தவ
மானவர்-தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில்-புகை
ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள்
ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (1)


1049 உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன்
உகந்தவர்-தம்மை மண்மிசைப்
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு
குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவன் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (2)


1050 இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள்
ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கட மலை
கோயில் கொண்டு அதனோடும் மீமிசை-
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (3)


1051 பாவியாது செய்தாய் என் நெஞ்சமே
பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்
வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (4)


1052 பொங்கு போதியும் பிண்டியும் உடைப்
புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து
ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
அம் கண் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (5)


1053 துவரி ஆடையர் மட்டையர் சமண்
தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம்
கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (6)


1054 தருக்கினால் சமண் செய்து சோறு தண்
தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
கோயில் கொண்டு அதனோடும் வானிடை
அருக்கன் மேவிநிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (7)


1055 சேயன் அணியன் சிறியன் பெரியன்
என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்-
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி
வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (8)


1056 கூடி ஆடி உரைத்ததே உரைத்
தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலார்
ஆடு தாமரையோனும் ஈசனும்
அமரர்-கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (9)


1057 மின்னு மா முகில் மேவு தண் திரு
வேங்கட மலை கோயில் மேவிய
அன்னம் ஆய் நிகழ்ந்த அமரர் பெருமானைக்
கன்னி மா மதிள் மங்கையர் கலி
கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே (10)
----

12. திரு எவ்வுளூர்

1058 காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய் தானவன் ஊர்
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
ஏச நின்ற எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (1)


1059 தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (2)


1060 முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர்-தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி-மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான்-எவ்வுள் கிடந்தானே (3)


1061 பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால்
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (4)


1062 பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின்-எவ்வுள் கிடந்தானே (5)


1063 சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (6)


1064 திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூடநின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (7)


1065 முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்-கோன்
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
இனியன் எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (8)


1066 பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர்-நாயகன் ஆய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (9)


1067 இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர்-கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர்-அமர் உலகே (10)
----------

13. திருவல்லிக்கேணி

1068 வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த
சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
-திருவல்லிக்கேணிக் கண்டேனே (1)


1069 வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
அப்பனை-ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே (2)


1070 வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே (3)


1071 இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல்
எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே (4)


1072 இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும்
இன்பன் நல் புவி-தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே (5)


1073 அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் என தரியாது
எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே (6)


1074 பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
இராவணாந்தகனை எம்மானை-
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே (7)


1075 பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
-திருவல்லிக்கேணிக் கண்டேனே (8)


1076 மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற
கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழிதொட்டானை-
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே (9)


1077 மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார்
சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே (10)
------

14. திருநீர்மலை

1078 அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா
மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
உறையும் இடம் ஆவது-இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி
குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (1)


1079 காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு
அரையன்னது கண்டு அவன் நிற்க முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும்
அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணன்-அவன் மார்வு-அகலம்
உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (2)


1080 அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து
அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்
பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்
பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (3)


1081 தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்-
தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து
அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி
பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (4)


1082 மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு
அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட
படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால்
கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (5)


1083 பார் ஆர் உலகும் பனி மால் வரையும்
கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான்
அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன்
பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (6)


1084 புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து
அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிப்
பணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான்-அவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (7)


1085 பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில்
பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்
அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்
நச்சி நமனார் அடையாமை நமக்கு
அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும்- அவற்கு
இடம் மா மலை ஆவது- நீர்மலையே (8)


1086 பேசும் அளவு அன்று இது வம்மின் நமர்
பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்
அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்-
மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல்
நீசர்-அவர் சென்று அடையாதவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (9)


1087 நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல்
நிலவும் புகழ் மங்கையர்-கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன்
ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும்
எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்
குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே (10)
--------

15. திருக்கடல்மல்லை -1

1088 பார்-ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை
படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட
சீரானை எம்மானை தொண்டர்-தங்கள்
சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே (1)


1089 பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு
பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை
என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை
நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக்
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே (2)


1090 உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்
உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்-
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (3)


1091 பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை- தன்னை
பிணை மருப்பின் கருங் களிற்றை பிணை மான் நோக்கின்
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர்-தம் அமுதத்தை குரவை முன்னே
கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை
கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக்
காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்-
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (4)


1092 பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ
பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன
ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று அப்
பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்
-கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (5)


1093 கிடந்தானை தடங் கடலுள் பணங்கள் மேவி
கிளர் பொறிய மறி திரிய அதனின்பின்னே
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு
பறித்தானை பார் இடத்தை எயிறு கீற
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்-
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (6)


1094 பேணாத வலி அரக்கர் மெலிய அன்று
பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர்-கோனைப்
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை
பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை
ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான்-தன்னை
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்-
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (7)


1095 பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை
பிரை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தட வரைமேல் கிடந்தானை பணங்கள் மேவி
எண்ணானை எண் இறந்த புகழினானை
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானைக் கண் ஆரக் கண்டுகொண்டேன்
-கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (8)


1096 தொண்டு ஆயார்-தாம் பரவும் அடியினானை
படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய் உய்தல்
விண்டானை-தென் இலங்கை அரக்கர் வேந்தை
-விலங்கு உண்ண வலங் கைவாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து
வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்
கண்டானைத் தொண்டனேன் கண்டுகொண்டேன்
-கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (9)


1097 பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர்-கோனைப்
பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலித்
தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னைக்
கடம் ஆரும் கருங் களிறு வல்லான் வெல் போர்க்
கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதல் அரிய வல்லார் தாமே (10)
------------

16. திருக்கடல்மல்லை - 2

1098 நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரை
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே (1)


1099 பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்-அவர் எம்மை ஆள்வாரே (2)


1100 ஏனத்தின் உருவு ஆகி நில-மங்கை எழில் கொண்டான்
வானத்தில்-அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே (3)


1101 விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்துக்
கண்டாரை கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரைக்
கொண்டாடும் நெஞ்சு உடையார்-அவர் எங்கள் குலதெய்வமே (4)


1102 பிச்சச் சிறு பீலிச் சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக்கு இறை என்னும் அவ் இறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நச்சித் தொழுவாரை நச்சு என் தன் நல் நெஞ்சே (5)


1103 புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தார்-அவரை வலங்கொள் என் மட நெஞ்சே (6)


1104 பஞ்சிச் சிறு கூழை உரு ஆகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா
கஞ்சைக் கடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே (7)


1105 செழு நீர் மலர்க் கமலம் திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல்மல்லைத் தலசயனம்
தொழும் நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே (8)


1106 பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வணங்கும் மனத்தார்-அவரை வணங்கு என்-தன் மட நெஞ்சே (9)


1107 கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லைத் தலசயனத்து
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர்-தம் முதல்வர் ஆவாரே (10)
--------

17. திருவிடவெந்தை - தலைவனைப் பிரிந்த தலைவியின்
ஆற்றாமை கண்ட தாய் இரங்கல்


1108 திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை
செழுங் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்
ஆகிலும் ஆசை விடாளால்
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை
-சொல்லு நின் தாள் நயந்திருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்?
-இடவெந்தை எந்தை பிரானே (1)


1109 துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள்
துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம் படு குவளைக் கண்-இணை எழுதாள்
கோல நல் மலர் குழற்கு அணியாள்
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த
மால் என்னும் மால் இன மொழியாள்
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (2)


1110 சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்
தட முலைக்கு அணியிலும் தழல் ஆம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்
பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்
வளைகளும் இறை நில்லா என்-தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (3)


1111 ஊழியின் பெரிதால் நாழிகை என்னும்
ஒண் சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா
தென்றலும் தீயினில் கொடிது ஆம்
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும்
சொல்லுமின் என் செய்கேன்? என்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்?
-இடவெந்தை எந்தை பிரானே (4)


1112 ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள்
உருகும் நின் திரு உரு நினைந்து
காதன்மை பெரிது கையறவு உடையள்
கயல் நெடுங் கண் துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (5)


1113 தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்
தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த
வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
மென் முலை பொன் பயந்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (6)


1114 உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும்
உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால்
வளங் கனிப் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
மாயனே என்று வாய்வெருவும்
களங் கனி முறுவல் காரிகை பெரிது
கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (7)


1115 அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு
அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்
போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லிக் கோமள வல்லி
கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்?
-இடவெந்தை எந்தை பிரானே (8)


1116 பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்
பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது இவ்
அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
வீங்கிய வன முலையாளுக்கு
என்கொல் ஆம்? குறிப்பில் என் நினைந்து இருந்தாய்?
-இடவெந்தை எந்தை பிரானே 9


1117 அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும்
இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்று அறுப்பாரே (10)
---------

18. திருவட்டபுயகரம் - தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி
தோழி-தாயர்க்குக் கூறுதல்


1118 திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை
மலர்மிசைமேல் அயனும் வியப்ப
முரி திரை மா கடல் போல் முழங்கி
மூவுலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு
இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (1)


1119 வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார்
வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார்-தாம் வணங்கும்
தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து
மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (2)


1120 செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு
கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (3)


1121 மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி
மா மழை காத்து ஒரு மாய ஆனை
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும்
ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (4)


1122 கலைகளும் வேதமும் நீதி நூலும்
கற்பமும் சொல் பொருள்-தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால் அருள்செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர்மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (5)


1123 எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்
ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்
தம்மன ஆகப் புகுந்து தாமும்
பொங்கு கருங் கடல் பூவை காயா
போது அவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (6)


1124 முழுசி வண்டு ஆடிய தண் துழாயின்
மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி அம் சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார்
எழுதிய தாமரை அன்ன கண்ணும்
ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (7)


1125 மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க
வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால்
சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார்
கண்ணும் வடிவும் நெடியர் ஆய் என்
ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தே என்றாரே (8)


1126 தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி
வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம்
நான் இவர்-தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (9)


1127 மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும்
நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி
அட்டபுயகரத்து ஆதி-தன்னை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே (10)
----------

19. திருப்பரமேச்சுரவிண்ணகரம்

11287 சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்
சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில்
பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (1)


1129 கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்-
தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில்
செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (2)


1130 உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்
ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்
வரம் தரு மா மணிவண்ணன் இடம்
-மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
நெடு வாயில் உக செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (3)


1131 அண்டமும் எண் திசையும் நிலனும்
அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
-ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (4)


1132 தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்
துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (5)


1133 திண் படைக் கோளரியின் உரு ஆய்
திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம்-
பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (6)


1134 இலகிய நீள் முடி மாவலி-தன்
பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனைக்
கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (7)


1135 குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால்
குரங்கைப் படையா மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்-
அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்
வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த
படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (8)


1136 பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெட
கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்
பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (9)


1137 பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
திரு மா மகள்-தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே (10)
---------

20. திருக்கோவலூர்

1138 மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்
இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை-
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்
தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (1)


1139 கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்
சந்து அணி மென் முலை மலராள் தரணி-மங்கை
தாம் இருவர் அடி வருடும் தன்மையானை-
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து
வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (2)


1140 கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக்
கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி
அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை-
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட
இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (3)


1141 தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை-
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்
குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (4)


1142 கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி
கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்
பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்-தன்னை-
மறை வளர புகழ் வளர மாடம்தோறும்
மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (5)


1143 உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு
உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று
தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை-
வெறி ஆர்ந்த மலர்-மகள் நா-மங்கையோடு
வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (6)


1144 இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி
இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை-
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று
காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (7)


1145 பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு
பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை-
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (8)


1146 தூ வடிவின் பார்-மகள் பூ-மங்கையோடு
சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை
செம் பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை-
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (9)


1147 வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல
மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னைச்
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்
வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த
கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர்-தாமே (10)
---------

21. திருவயிந்திரபுரம்

1148 இருந் தண் மா நிலம் ஏனம்-அது ஆய் வளை
மருப்பினில் அகத்து ஒடுக்கி
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்-
கமல நல் மலர்த் தேறல்
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம்
பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு
திருவயிந்திரபுரமே (1)


1149 மின்னும் ஆழி அங்கையவன் செய்யவள்
உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய
பரன் இடம்-வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர
பிணி அவிழ் கமலத்துத்
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு
திருவயிந்திரபுரமே (2)


1150 வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய
மாயவன் அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்-
மெய்தகு வரைச் சாரல்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய
முல்லை அம் கொடி ஆட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு
திருவயிந்திரபுரமே (3)


1151 மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்-தன்
மார்பு-அகம் இரு பிளவாக்
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள்
கொடுத்தவன் இடம்-மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை
விசும்பு உற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்
திருவயிந்திரபுரமே (4)


1152 ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
அகல் இடம் அளந்து ஆயர்
பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்
-பொன் மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு
குரக்கினம் இரைத்து ஓடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு
திருவயிந்திரபுரமே (5)


1153 கூன் உலாவிய மடந்தை-தன் கொடுஞ் சொலின்
திறத்து இளங் கொடியோடும்
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன்
இடம்-கவின் ஆரும்
வான் உலாவிய மதி தவழ் மால் வரை
மா மதிள் புடை சூழ
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய
திருவயிந்திரபுரமே (6)


1154 மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்
விலங்கலின்மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது
இடம்-மணி வரை நீழல்
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்
பெடையொடும் இனிது அமர
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு தண்
திருவயிந்திரபுரமே (7)


1155 விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்
வில் இறுத்து அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்
நிலவிய இடம்-தடம் ஆர்
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு
மலை வளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு
திருவயிந்திரபுரமே (8)


1156 வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்
விசயனுக்கு ஆய் மணித் தேர்
கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்-
குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம்
பாளைகள் கமழ் சாரல்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு
திருவயிந்திரபுரமே (9)


1157 மூவர் ஆகிய ஒருவனை மூவுலகு
உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச தண்
திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி
கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்
பாவங்கள் பயிலாவே (10)
---------

22. தில்லைத் திருச்சித்திரகூடம்-1

1158 ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா-
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்
தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (1)


1159 காயோடு நீடு கனி உண்டு வீசு
கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
-திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (2)


1160 வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்
விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்
அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (3)


1161 அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம்
பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து
கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல்
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (4)


1162 கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய
குல மன்னர் அங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்
தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்
பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி
புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5)


1163 நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர்
துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு
மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம்
மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்
அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான்
அரு மா மறை அந்தணர் சிந்தை புக
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (6)


1164 மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து
மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்
கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (7)


1165 மா வாயின் அங்கம் மதியாது கீறி
மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்
கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (8)


1166 செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகல புகழ் சேர்
அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும்
வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (9)


1167 சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்
திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப
அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா
ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்
பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே (10)
---------

23. தில்லைத் திருச்சித்திரகூடம் 2

1168 வாட மருது இடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆ-நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்-
சேடு உயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே (1)


1169 பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால்
மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண்
பூ-மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடித்
தே மலர் தூவ வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (2)


1170 பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு
திண் திறல் பாட வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (3)


1171 வளைக் கை நெடுங்கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாடத்
திளைத்து அமர் செய்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (4)


1172 பருவக் கரு முகில் ஒத்து முத்து உடை மா கடல் ஒத்து
அருவித் திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன்மலை ஒத்து
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து இன மால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (5)


1173 எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல
தெய்வப் புள் ஏறி வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (6)


1174 ஆவர் இவை செய்து அறிவார்? அஞ்சன மா மலை போல
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகு ஆய
காவி மலர் நெடுங் கண்ணார் கை தொழ வீதி வருவான்-
தேவர் வணங்கு தண் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே (7)


1175 பொங்கி அமரில் ஒருகால் பொன்பெயரோனை வெருவ
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட
பைங் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்
சிங்க உருவின் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (8)


1176 கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழ் உலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (9)


1177 தேன் அமர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடம் அமர்ந்த
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்-கோன்மருவார்
ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தான் இவை கற்று வல்லார்மேல் சாரா தீவினை-தானே (10)
--------

24. திருக்காழிச் சீராமவிண்ணகரம்

1178 ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள்-அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (1)


1179 நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை
நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை
ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்
தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (2)


1180 வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்
மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்
நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்
மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய் அணைந்து களை களையாது ஏறும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (3)


1181 பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள்
பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட
நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே
தண் மதியின் நிலாக் காட்ட பவளம்-தன்னால்
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (4)


1182 தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு
திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட
விண்ணவர்-கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட
அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (5)


1183 பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள
படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த
விண்ணவர்-கோன் தாள் அணைவீர் வெற்புப்பாலும
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்
துடி இடையார் முகக் கமலச் சோதி-தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (6)


1184 பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்
புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்
திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி
வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (7)


1185 பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்
பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல்
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்
மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (8)


1186 பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில்
கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத்
தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (9)


1187 செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்
சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன்
அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ்-மாலை பத்தும் வல்லார்
தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே (10)
---------

25. திருவாலி:1

1188 வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்
தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே (1)


1189 நீலத் தட வரை மா மணி நிகழக்
கிடந்ததுபோல் அரவு அணை
வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்-
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட
மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி ஆலி அம்மானே (2)


1190 நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி
இராமை என் மனத்தே புகுந்தது
இம்மைக்கு என்று இருந்தேன்-எறி நீர் வளஞ் செறுவில்
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார்
முகத்து எழு வாளை போய் கரும்பு
அந் நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே (3)


1191 மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார்-தம்
சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்-
புன்னை மன்னு செருந்தி வண் பொழில்
வாய்-அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே (4)


1192 நீடு பல் மலர் மாலை இட்டு நின்
இணை-அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல்-மரம் எய்த மா முனிவா
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை
பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே (5)


1193 கந்த மா மலர் எட்டும் இட்டு நின்
காமர் சேவடி கைதொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்-
சந்தி வேள்வி சடங்கு நான்மறை
ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே (6)


1194 உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து
உன் அடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகலொட்டேன்-
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண்
தாமரை மலரின்மிசை மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே (7)


1195 சங்கு தங்கு தடங் கடல் கடல்
மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ!-
கொங்கு செண்பகம் மல்லிகை மலர்
புல்கி இன் இள வண்டு போய் இளந்
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே (8)


1196 ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து
ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம்-எந்தாய்
நீதி ஆகிய வேத மா முனி
யாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதி ஆய் இருந்தாய் அணி ஆலி அம்மானே (9)


1197 புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்
தென் ஆலி இருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர்
ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன்
வல்லர் ஆய் உரைப்பார்க்கு இடம் ஆகும்-வான் உலகே (10)
----------

26. திருவாலி - 2

1198 தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே (1)


1199 பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும்
அணி மலர்மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன்
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே (2)


1200 நீர் வானம் மண் எரி கால் ஆய்நின்ற நெடுமால்-தன்
தார் ஆய நறுந் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே (3)


1201 தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீன் ஆய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ?
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும்
ஆன்-ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே (4)


1202 வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த
தோளாளா என்-தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே (5)


1203 தார் ஆய தன் துளவம் வண்டு உழுதவரை மார்பன்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதித் திருவாலி நகர் ஆளும்
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ? (6)


1204 கொண்டு அரவத் திரை உலவு குரை கடல்மேல் குலவரைபோல்
பண்டு அரவின் அணைக் கிடந்து பார் அளந்த பண்பாளா
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ? (7)


1205 குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடம் ஆடி
துயிலாத கண்_இணையேன் நின் நினைந்து துயர்வேனோ?
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே? (8)


1206 நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே (9)


1207 மை இலங்கு கருங் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை நெடுமாலை
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ்-மாலை
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அரு வினைகள் அடையாவே (10)
----------

27. திருவாலி – 3

1208 கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ? (1)


1209 பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிர கிளிபோல் மிழற்றி நடந்து
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ? (2)


1210 அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? (3)


1211 ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்கொலோ? (4)


1212 தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர்கொலோ? (5)


1213 என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ? (6)


1214 அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை-தன் காதலன்-தன் பெருந் தோள் நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ? (7)


1215 முற்றிலும் பைங் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழுங் கோதை-தன்னைப்
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்று எல்லாம் கைதொழப் போய் வயல் ஆலி புகுவர்கொலோ? (8)


1216 காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? (9)


1217 தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பத்தும்
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே (10)
--------

28. திருநாங்கூர் மணிமாடக்கோயில்

1218 நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
இமையோர் பரவும் இடம்-எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே
களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (1)


1219 முதலைத் தனி மா முரண் தீர அன்று
முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
வினை தீர்த்த அம்மான் இடம்-விண் அணவும்
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்
பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (2)


1220 கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று
கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு
அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்
அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (3)


1221 சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய
கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (4)


1222 இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு
இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து
தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்-தான்-
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே
குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (5)


1223 பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்
பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்
உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி
கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (6)


1224 தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்
தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல்
அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (7)


1225 துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம்
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்
விளைவித்த அம்மான் இடம்-வேல் நெடுங் கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று
மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (8)


1226 விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த
விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று
இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப்
பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (9)


1227 வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்
மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களி யானை மீதே
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்
விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே (10)
----------

29. திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

1228 சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1)1


1229 திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க
தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே (2)


1230 அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும்
முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி
இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3)


1231 கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி
தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம்
செழுங் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4)


1232 மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5)


1233 பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும்
தேவன்-அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள்
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லாப் பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6)


1234 விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து
வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை
உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்-
இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடி செந்நெல்
ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால்
வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே <7>


1235 ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த
அடல் ஆழித் தடக் கையன் அலர்-மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர்
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8)


1236 வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும்
ஈசன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்ப
சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9)


1237 சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
தாமரைக் கண் நெடிய பிரான்-தான் அமரும் கோயில்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ்
மங்கையர்-தம் தலைவன் மருவலர்-தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்கம் மலி தமிழ்-மாலை பத்து-இவை வல்லார்கள்
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே (10)
----------

30. திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

1238 திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்
தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்-
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1)


1239 வென்றி மிகு நரகன் உரம்-அது அழிய விசிறும்
விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்-
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (2)


1240 உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்தக்
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன்
குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்-மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட
பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3)


1241 ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று
உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு
அருள்செய்தான் வாழும் இடம்-மல்லிகை செங்கழுநீர்
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4)


1242 கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக்
களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
அளந்த பிரான் அமரும் இடம்-வளங் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5)


1243 வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரத்
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்-தன்
தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம்-தடம் ஆர்
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை
செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6)


1244 தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனை-தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்
கருதும் இடம்-பொருது புனல் துறை துறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (7)


1245 கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன்
குலவும் இடம்-கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8)


1246 வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க
கஞ்சன் உயிர்-அது உண்டு இவ் உலகு உண்ட காளை
கருதும் இடம்-காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9)


1247 சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம் கோமான்
கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே (10)
------------

31. திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை

1248 போது அலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணித் தென் கரைமேல்
மாதவன்-தான் உறையும் இடம் வயல் நாங்கை-வரி வண்டு
தேதென என்று இசை பாடும்-திருத்தேவனார்தொகையே (1)


1249 யாவரும் ஆய் யாவையும் ஆய் எழில் வேதப் பொருள்களும் ஆய்
மூவரும் ஆய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை-
தேவரும் சென்று இறைஞ்சு பொழில்-திருத்தேவனார்தொகையே (2)


1250 வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும்
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெருஞ் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள்__
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே 3


1251 இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை-
சுந்தர நல் பொழில் புடை சூழ்-திருத்தேவனார்தொகையே (4)


1252 அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் குல வரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே (5)


1253 ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத
பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம்
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரைமேல்
சேல் உகளும் வயல்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே (6)


1254 ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம்
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
சேடு ஏறு பொழில் தழுவு-திருத்தேவனார்தொகையே (7)


1255 வார் ஆரும் இளங் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
கார் ஆர் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே (8)


1256 கும்பம் மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ
கொம்பு-அதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம்
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள்-
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்-திருத்தேவனார்தொகையே (9)


1257 கார் ஆர்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத் திருத்தேவனார்தொகைமேல்
கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே (10)
--------

32. திருநாங்கூர் வண்புருடோத்தமம்

1258 கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன்
கதிர் முடி-அவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு
அளித்தவன் உறை கோயில்-
செம் பலா நிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள் சூழ்
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர
்-வண்புருடோத்தமமே (1)


1259 பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக்
காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த
உம்பர்-கோன் உறை கோயில்-
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ
வேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்
-வண்புருடோத்தமமே (2)


1260 அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று
அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன்
உகந்து இனிது உறை கோயில்-
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்
குல மயில் நடம் ஆட
வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர்
-வண்புருடோத்தமமே (3)


1261 பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து அதன்
பாகனைச் சாடிப் புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை
உதைத்தவன் உறை கோயில்-
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு
கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்
-வண்புருடோத்தமமே (4)


1262 சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன்
படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும்
துணித்தவன் உறை கோயில்-
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்
பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்-
வண்புருடோத்தமமே (5)


1263 அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன்
அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய
கண்ணன் வந்து உறை கோயில்-
கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள்
காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்-
வண்புருடோத்தமமே (6)


1264 உளைய ஒண் திறல் பொன்பெயரோன்-தனது
உரம் பிளந்து உதிரத்தை
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய
அப்பன் வந்து உறை கோயில்-
இளைய மங்கையர் இணை-அடிச் சிலம்பினோடு
எழில் கொள் பந்து அடிப்போர் கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்-
வண்புருடோத்தமமே (7)


1265 வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் வன்
சாபம் மற்று அது நீங்க
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம்
முகில் வண்ணன் உறை கோயில்-
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண்
பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்-
வண்புருடோத்தமமே (8)


1266 இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான்
முகனைத் தன் எழில் ஆரும்
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்
உகந்து இனிது உறை கோயில்-
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன்
குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்-
வண்புருடோத்தமமே (9)


1267 மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்
வண்புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்
ஆலி மன் அருள் மாரி
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப்
பத்தும் வல்லார் உலகில்
எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ
ரோடும் கூடுவரே (10)
------------

33. திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

1268 பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்
பேர் அருளாளன் எம் பிரானை
வார் அணி முலையாள் மலர்-மகளோடு
மண்-மகளும் உடன் நிற்ப
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை-
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (1)


1269 பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன்-தன்னை
பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை
ஏழ் இசையின் சுவை-தன்னை
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர்-கோனை-
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே (2)


1270 திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்
செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களும் ஆய் நின்றவன்-தன்னை
பங்கயத்து அயன்-அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
கடல் நிற வண்ணன்-தன்னை-நான் அடியேன்
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (3)


1271 வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி
மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு அறும் அமரர் அடி-இணை வணங்க
அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானை-
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (4)


1272 தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே
என்று சென்று அடைந்தவர்-தமக்குத்
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்
தயரதன் மதலையை சயமே
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான்-தன்னை-நான் அடியேன்
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (5)


1273 மல்லை மா முந்நீர் அதர்பட மலையால்
அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை
கலங்க ஓர் வாளி தொட்டானை-
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
அல்லி மா மலராள்-தன்னொடும் அடியேன்
கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (6)


1274 வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்
வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை
கரு முகில் திரு நிறத்தவனை
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை-
கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (7)


1275 அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்
மேவிய வேத நல் விளக்கை
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
மன்று-அது பொலிய மகிழ்ந்து நின்றானை-
வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (8)


1276 களங்கனி வண்ணா கண்ணனே என்-தன்
கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்திருக்கும் அடியவர்-தங்கள்
உள்ளத்துள் ஊறிய தேனை
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை-
வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (9)


1277 தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
வானவர்-கோனைக் கண்டமை சொல்லும்
மங்கையார் வாள் கலிகன்றி
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்
ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு
வானவர் ஆகுவர் மகிழ்ந்தே (10)
---------

34. திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

1278 மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி
கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்-
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து
இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1)


1279 பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட
பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்-
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்
இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம்
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (2)


1280 படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு
பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்-
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ
மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (3)


1281 வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி
வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட
கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்-
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்
எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (4)


1282 கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை
கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப
மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்-
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி
ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (5)


1283 தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்
அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன
இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்-
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்
மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (6)


1284 பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்
பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு
மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (7)


1285 சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு
திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக்
கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்-
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்
ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (8)


1286 ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி
எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்-
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (9)


1287 சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்
கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி
சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே (10)
---------

35. திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

1288 தூம்பு உடைப் பனைக் கை வேழம்
துயர் கெடுத்தருளி மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்
கடு மழை காத்த எந்தை-
பூம் புனல் பொன்னி முற்றும்
புகுந்து பொன் வரன்ற எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (1)


1289 கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்
கதிர் முலை சுவைத்து இலங்கை
வவ்விய இடும்பை தீரக்
கடுங் கணை துரந்த எந்தை-
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்
குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (2)


1290 மாத் தொழில் மடங்கச் செற்று
மருது இற நடந்து வன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை
செவ்வித் தோள் புணர்ந்த எந்தை-
நாத் தொழில் மறை வல்லார்கள்
நயந்து அறம் பயந்த வண் கைத்
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (3)


1291 தாங்கு-அரும் சினத்து வன் தாள்
தடக் கை மா மருப்பு வாங்கி
பூங் குருந்து ஒசித்து புள் வாய்
பிளந்து எருது அடர்த்த எந்தை-
மாங்கனி நுகர்ந்த மந்தி
வந்து வண்டு இரிய வாழைத்
தீங் கனி நுகரும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (4)


1292 கரு மகள் இலங்கையாட்டி
பிலங் கொள் வாய் திறந்து தன்மேல்
வரும்-அவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை-
பெரு மகள் பேதை மங்கை
தன்னொடும் பிரிவு இலாத
திருமகள் மருவும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (5)


1293 கெண்டையும் குறளும் புள்ளும்
கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா
ஆற்றலும் ஆய எந்தை-
ஒண் திறல் தென்னன் ஓட
வட அரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (6)


1294 குன்றமும் வானும் மண்ணும்
குளிர் புனல் திங்களோடு
நின்ற வெம் சுடரும் அல்லா
நிலைகளும் ஆய எந்தை-
மன்றமும் வயலும் காவும்
மாடமும் மணங் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (7)


1295 சங்கையும் துணிவும் பொய்யும்
மெய்யும் இத் தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப்
பொருள்களும் ஆய எந்தை-
பங்கயம் உகுத்த தேறல்
பருகிய வாளை பாய
செங் கயல் உகளும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (8)


1296 பாவமும் அறமும் வீடும்
இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லாக்
குணங்களும் ஆய எந்தை-
மூவரில் எங்கள் மூர்த்தி
இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (9)


1297 திங்கள் தோய் மாட நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானை
மங்கையர் தலைவன் வண் தார்க்
கலியன் வாய் ஒலிகள் வல்லார்
பொங்கு நீர் உலகம் ஆண்டு
பொன்-உலகு ஆண்டு பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
ஊடு போய் விளங்குவாரே (10)
----------

36. திருநாங்கூர்க் காவளம்பாடி

1298 தா அளந்து உலகம் முற்றும்
தட மலர்ப் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும்
மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனே களைகண் நீயே (1)


1299 மண் இடந்து ஏனம் ஆகி
மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று
வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார்-தம்மைத்
தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (2)


1300 உருத்து எழு வாலி மார்வில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்து உடைத் தம்பிக்கு இன்பக்
கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும்
பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்
கருத்தனே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (3)


1301 முனைமுகத்து அரக்கன் மாள
முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே
அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்
சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்
கனை கழல் காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (4)


1302 பட அரவு உச்சி-தன்மேல்
பாய்ந்து பல் நடங்கள்செய்து
மடவரல் மங்கை-தன்னை
மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாடத்
தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (5)


1303 மல்லரை அட்டு மாள
கஞ்சனை மலைந்து கொன்று
பல் அரசு அவிந்து வீழப்
பாரதப் போர் முடித்தாய்
நல் அரண் காவின் நீழல்
நறை கமழ் நாங்கை மேய
கல் அரண் காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (6)


1304 மூத்தவற்கு அரசு வேண்டி
முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ
மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்து அமர் சோலை ஓங்கி
புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்
காத்தனே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (7)


1305 ஏவு இளங் கன்னிக்கு ஆகி
இமையவர்-கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக்
கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனே களைகண் நீயே (8)


1306 சந்தம் ஆய் சமயம் ஆகி
சமய ஐம் பூதம் ஆகி
அந்தம் ஆய் ஆதி ஆகி
அரு மறை-அவையும் ஆனாய்
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்
மட மயில் ஆலும் நாங்கைக்
கந்தம் ஆர் காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (9)


1307 மா வளம் பெருகி மன்னும்
மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனைக் கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார்
பார்மிசை அரசர் ஆகிக்
கோ இள மன்னர் தாழக்
குடை நிழல் பொலிவர்-தாமே (10)
---------

37. திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

1308 கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1)


1309 கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே (2)


1310 குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே (3)


1311 கான் ஆர் கரிக் கொம்பு-அது ஒசித்த களிறே
நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர்த்
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே (4)


1312 வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடாவருவேன் வினை ஆயின பாற்றே (5)


1313 கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே (6)


1314 கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்-கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர்ச்
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே என வல் வினை தீர்த்தருளாயே (7)


1315 வாராகம்-அது ஆகி இம் மண்ணை இடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே (8)


1316 பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே
ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே (9)


1317 நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் என வல்லவர் வானவர்-தாமே (10)
-----------

38. திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

1318 கவள யானைக் கொம்பு ஒசித்த
கண்ணன் என்றும் காமரு சீர்
குவளை மேகம் அன்ன மேனி
கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாடம் நீடு நாங்கைத்
தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (1)


1319 கஞ்சன் விட்ட வெம் சினத்த
களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின்
உயிரை உண்ட மாயன் என்றும்
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பஞ்சி அன்ன மெல் அடியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (2)


1320 அண்டர்-கோன் என் ஆனை என்றும்
ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள்
தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை
மன்னும் மாயன் என்று என்று ஓதி-
பண்டுபோல் அன்று-என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (3)


1321 கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்-
கோல் வளையார்-தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டு இலங்கை
கட்டு அழித்த மாயன் என்றும்
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பல் வளையாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (4)


1322 அரக்கர் ஆவி மாள அன்று
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல
வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை
நின்மலன்-தான் என்று என்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (5)


1323 ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி
வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென்-மொழியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (6)


1324 நாடி என்-தன் உள்ளம் கொண்ட
நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச்
செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (7)


1325 உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையன் என்றும்
நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பலரும் ஏச என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (8)


1326 கண்ணன் என்றும் வானவர்கள்
காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும்
ஏழ் உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பண்ணின் அன்ன மென்-மொழியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (9)


1327 பாருள் நல்ல மறையோர் நாங்கைப்
பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள்
பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன்
கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்
இன்பம் நாளும் எய்துவாரே (10)
------------

39. திருவிந்தளூர்

1328 நும்மைத் தொழுதோம் நும்-தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆ ஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே? (1)


1329 சிந்தை-தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே (2)


1330 பேசுகின்றது இதுவே-வையம் ஈர் அடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்!-உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே (3)


1331 ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர்!-வாழ்ந்தே போம் நீரே (4)


1332 தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும்
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம் பெருமான் தந்தை தந்தை ஆவீர் அடியோமுக்-
கே எம் பெருமான் அல்லீரோ நீர்?-இந்தளூரீரே (5)


1333 சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு-இவ் உலகத்தில்
எல்லாம் அறிவீர்-ஈதே அறியீர் இந்தளூரீரே (6)


1334 மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நும்-தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே? (7)


1335 முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்-
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே (8)


1336 எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே (9)


1337 ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய்த
சீர் ஆர் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (10)
----------

40. திருவெள்ளியங்குடி

1338 ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து
பெரு நிலம் அளந்தவன் கோயில்-
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்கும் ஆம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்-
திருவெள்ளியங்குடி-அதுவே (1)


1339 ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு
அரக்கர்-தம் சிரங்களை உருட்டி
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்
கண்ணனார் கருதிய கோயில்-
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி
பொதும்பிடை வரி வண்டு மிண்டி
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்-
திருவெள்ளியங்குடி-அதுவே (2)


1340 கடு விடம் உடைய காளியன் தடத்தைக்
கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன்
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
பல் நடம் பயின்றவன் கோயில்-
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்
பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்-
திருவெள்ளியங்குடி-அதுவே (3)


1341 கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த
காளமேகத் திரு உருவன்
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற
பரமனார் பள்ளிகொள் கோயில்-
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்
தொகு திரை மண்ணியின் தென்பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்-
திருவெள்ளியங்குடி-அதுவே (4)


1342 பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து
பாரதம் கையெறிந்து ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த
செங் கண் மால் சென்று உறை கோயில்-
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி
எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற-
திருவெள்ளியங்குடி-அதுவே (5)


1343 காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை
உற கடல் அரக்கர்-தம் சேனை
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த
கோல வில் இராமன்-தன் கோயில்-
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்
ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்-
திருவெள்ளியங்குடி-அதுவே (6)


1344 ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த
மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு
திக்கு உற வளர்ந்தவன் கோயில்-
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்
அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்-
திருவெள்ளியங்குடி-அதுவே (7)


1345 முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-
தம் பெருமானை அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட
மாயனார் மன்னிய கோயில்-
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்
பதித்த பல் மணிகளின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவு-அரிது ஆய-
திருவெள்ளியங்குடி-அதுவே (8)


1346 குடி குடி ஆகக் கூடி நின்று அமரர்
குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற
ஆழியான் அமர்ந்து உறை கோயில்-
கடி உடைக் கமலம் அடியிடை மலர
கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும்
வயல்-வெள்ளியங்குடி-அதுவே (9)


1347 பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற
திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
ஆள்வர்-இக் குரை கடல் உலகே (10)
----------

41. திருப்புள்ளம்பூதங்குடி

1348 அறிவது அறியான் அனைத்து உலகும்
உடையான் என்னை ஆள் உடையான்
குறிய மாணி உரு ஆய
கூத்தன் மன்னி அமரும் இடம்-
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்-
புள்ளம்பூதங்குடி-தானே (1)


1349 கள்ளக் குறள் ஆய் மாவலியை
வஞ்சித்து உலகம் கைப்படுத்து
பொள்ளைக் கரத்த போதகத்தின்
துன்பம் தவிர்த்த புனிதன் இடம்-
பள்ளச் செறுவில் கயல் உகள
பழனக் கழனி-அதனுள் போய
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்-
புள்ளம்பூதங்குடி-தானே (2)


1350 மேவா அரக்கர் தென் இலங்கை
வேந்தன் வீயச் சரம் துரந்து
மா வாய் பிளந்து மல் அடர்த்து
மருதம் சாய்த்த மாலது இடம்-
கா ஆர் தெங்கின் பழம் வீழ
கயல்கள் பாய குருகு இரியும்
பூ ஆர் கழனி எழில் ஆரும்-
புள்ளம்பூதங்குடி-தானே (3)


1351 வெற்பால் மாரி பழுது ஆக்கி
விறல் வாள் அரக்கர் தலைவன்-தன்
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்
துணித்த வல் வில் இராமன் இடம்-
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்
கவின் ஆர் கூடம் மாளிகைகள்
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்-
புள்ளம்பூதங்குடி-தானே (4)


1352 மை ஆர் தடங் கண் கருங் கூந்தல்
ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய் ஆர் பாலோடு அமுது செய்த
நேமி அங் கை மாயன் இடம்-
செய் ஆர் ஆரல் இரை கருதிச்
செங் கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவின் மறையாளர்-
புள்ளம்பூதங்குடி-தானே (5)


1353 மின்னின் அன்ன நுண் மருங்குல்
வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா
மன்னு சினத்த மழ விடைகள்
ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்-
மன்னும் முது நீர் அரவிந்த
மலர்மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்-
புள்ளம்பூதங்குடி-தானே (6)


1354 குடையா விலங்கல் கொண்டு ஏந்தி
மாரி பழுதா நிரை காத்து
சடையான் ஓட அடல் வாணன்
தடந் தோள் துணித்த தலைவன் இடம்-
குடியா வண்டு கள் உண்ண
கோல நீலம் மட்டு உகுக்கும
புடை ஆர் கழனி எழில் ஆரும்-
புள்ளம்பூதங்குடி-தானே (7)


1355 கறை ஆர் நெடு வேல் மற மன்னர்
வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத
முண்டம் நிறைத்த எந்தை இடம்-
மறையால் முத்தீ-அவை வளர்க்கும்
மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க அந்தணர் வாழ்-
புள்ளம்பூதங்குடி-தானே (8)


1356 துன்னி மண்ணும் விண் நாடும்
தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்
அன்னம் ஆகி அரு மறைகள்
அருளிச்செய்த அமலன் இடம்-
மின்னு சோதி நவமணியும்
வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்-
புள்ளம்பூதங்குடி-தானே (9)


1357 கற்றா மறித்து காளியன்-தன்
சென்னி நடுங்க நடம்பயின்ற
பொன் தாமரையாள்-தன் கேள்வன்
புள்ளம்பூதங்குடி-தன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்-கோன்
கார் ஆர் புயல்கைக் கலிகன்றி
சொல்- தான் ஈர் ஐந்து இவை பாட
சோர நில்லா-துயர்-தாமே (10)
---------

42. திருக்கூடலூர்

1357 தாம் தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர்போல்-
காந்தள் விரல் மென் கலை நல் மடவார்
கூந்தல் கமழும்-கூடலூரே (1)


1358 செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றார் ஊர்போல்-
நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு
குறிஞ்சி பாடும்-கூடலூரே (2)


1359 பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர்போல்-
கள்ள நாரை வயலுள் கயல்மீன்
கொள்ளை கொள்ளும்-கூடலூரே (3)


1360 கூற்று ஏர் உருவின் குறள் ஆய் நிலம் நீர்
ஏற்றான் எந்தை பெருமான் ஊர்போல்-
சேற்று ஏர் உழவர் கோதைப் போது ஊண்
கோல் தேன் முரலும்-கூடலூரே (4)


1361 தொண்டர் பரவ சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகள் ஊர்போல்-
வண்டல் அலையுள் கெண்டை மிளிர
கொண்டல் அதிரும்-கூடலூரே (5)


1362 தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
துக்கம் துடைத்த துணைவர் ஊர்போல்-
எக்கல் இடு நுண் மணல்மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ்-கூடலூரே (6)


1363 கருந் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமரும் ஊர்போல-்
பெருந் தண் முல்லைப்பிள்ளை ஓடிக்
குருந்தம் தழுவும்-கூடலூரே (7)


1364 கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்-
மலை வாழ் எந்தை மருவும் ஊர்போல்-
இலை தாழ் தெங்கின் மேல்நின்று இளநீர்க்
குலை தாழ் கிடங்கின்-கூடலூரே (8)


1365 பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருகப் புகுந்த ஒருவர் ஊர் போல்-
அருகு கைதை மலர கெண்டை
குருகு என்று அஞ்சும்-கூடலூரே (9)


1366 காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர்மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாட பாவம் போமே (10)
----------

43. திருவெள்ளறை

1368 வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை
மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ!-நின் குரை கழல் தொழுவது ஓர்
வகை எனக்கு அருள்புரியே-
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை
மௌவலின் போது அலர்த்தி
தென்றல் மா மணம் கமழ்தர வரு திரு
வெள்ளறை நின்றானே (1)


1369 வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு
அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத-நூல் என்று இவை பயந்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய
மாருதம் வீதியின்வாய
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திரு
வெள்ளறை நின்றானே (2)


1370 வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்
உடலகம் இரு பிளவாக்
கையில் நீள் உகிர்ப் படை-அது வாய்த்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண்
தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு
வெள்ளறை நின்றானே (3)


1371 வாம் பரி உக மன்னர்-தம் உயிர் செக
ஐவர்கட்கு அரசு அளித்த
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!-நின்
காதலை அருள் எனக்கு-
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்
வாய்-அது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனித் தேன்-அது நுகர் திரு
வெள்ளறை நின்றானே (4)


1372 மான வேல் ஒண் கண் மடவரல் மண்-மகள்
அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண்
முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திரு
வெள்ளறை நின்றானே (5)


1373 பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ
அமுதினைக் கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை-அது ஆகிய ஆதி!-நின்
அடிமையை அருள் எனக்கு-
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்
தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திரு
வெள்ளறை நின்றானே (6)


1374 ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி
அரக்கன்-தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்-அது வளைத்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்
தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திரு
வெள்ளறை நின்றானே (7)


1375 முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக
உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
மன்னு கேதகை சூதகம் என்று இவை
வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திரு
வெள்ளறை நின்றானே (8)


1376 ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
அகல்-இடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம!-நின் பணிந்து எழு
வேன் எனக்கு அருள்புரியே-
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு
உழிதர மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத் திரு
வெள்ளறை நின்றானே (9)


1377 மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திரு
வெள்ளறை-அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு உருவனை
ஆதியை அமுதத்தை
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி
கன்றி சொல் ஐஇரண்டும்
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமை
யோர்க்கு அரசு ஆவர்களே (10)
---------

44. திருவரங்கம்: 1

1378 உந்திமேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்-
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே (1)


1379 வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் மணி நீள் முடி
பை கொள் நாகத்து அணையான் பயிலும் இடம் என்பரால்-
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே (2)


1380 பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர
கொண்ட ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்-
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (3)


1381 விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால்-
துளைக் கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன
்திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே (4)


1382 வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு-தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்-
உம்பர்-கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல
்செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (5)


1383 கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய் மகள் தாய் என
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால்-
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்து உந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே (6)


1384 கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால்-
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென் அரங்கமே (7)


1385 ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய்
தானும்ஆய தரணித் தலைவன் இடம் என்பரால்-
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்தேனும்
பாலும் கலந்தன்னவர் சேர் தென் அரங்கமே (8)


1386 சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையன் ஆய இம்
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால்-
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிர
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (9)


1387 அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர்-கோன் கலிகன்றி சொல்நல்
இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன்
வல்லவர்-தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே (10)
----

45. திருவரங்கம்: 2

1388 வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே
வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங் கண்
துயில் மறந்தாள்-வண்டு ஆர் கொண்டல்
உருவாளன் வானவர்-தம் உயிராளன்
ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (1)


1389 கலை ஆளா அகல் அல்குல் கன வளையும்
கை ஆளா-என் செய்கேன் நான்?
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ?
வேண்டாயோ? என்னும்-மெய்ய
மலையாளன் வானவர்-தம் தலையாளன்
மராமரம் ஏழ் எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (2)


1390 மான் ஆய மென் நோக்கி வாள் நெடுங் கண்
நீர் மல்கும் வளையும் சோரும்
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்
திறம் பேசி உறங்காள் காண்மின்-
கான்-ஆயன் கடி மனையில் தயிர் உண்டு
நெய் பருக நந்தன் பெற்ற
ஆன்-ஆயன் என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீர் அறிகிலேனே (3)


1391 தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்
தோடு அணையாள் தட மென் கொங்கை-
யே ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும்-
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட
பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள்
மங்கைமீர் மதிக்கிலேனே (4)


1392 பூண் முலைமேல் சாந்து அணியாள் பொரு கயல் கண்
மை எழுதாள் பூவை பேணாள் ஏண்
அறியாள் எத்தனையும் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும்-
நாள் மலராள் நாயகன் ஆய் நாம் அறிய
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீர் (5)


1393 தாது ஆடு வன மாலை தாரானோ?
என்று என்றே தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான்
திருவரங்கம் என்னும்-பூமேல்
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்
மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் சொல்லுகேனே? (6)


1394 வார் ஆளும் இளங் கொங்கை வண்ணம் வேறு
ஆயினவாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் இப்
பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்
ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த
தேர் ஆளன் என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் செப்புகேனே? (7)


1395 உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது
பலர் ஏசும் அலர் ஆயிற்றால்
மறவாதே எப்பொழுதும் மாயவனே
மாதவனே என்கின்றாளால்-
பிறவாத பேராளன் பெண் ஆளன்
மண் ஆளன் விண்ணோர்-தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீர் அறிகிலேனே (8)


1396 பந்தோடு கழல் மருவாள் பைங் கிளியும்
பால் ஊட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன்? வாரானோ?
என்று என்றே வளையும் சோரும்-
சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு
தைத்திரியன் சாமவேதி
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீர் அறிகிலேனே (9)


1397 சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து
அம்மானைச் சிந்தைசெய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்
தாய் மொழிந்த-அதனை நேரார்
கால வேல் பரகாலன் கலிகன்றி
ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்
பொன்-உலகில் வாழ்வர்-தாமே (10)
----------

46. திருவரங்கம்: 3

1398 கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கருமணியை
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த
அம்மானை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (1)


1399 பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால்
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது-தென் அரங்கத்ே்\"த (2)


1400 ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும்தான்
ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும்
தேன் ஆகி அமுது ஆகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்
ஆன்-ஆயன் ஆனானைக் கண்டது-தென் அரங்கத்தே (3)


1401 வளர்ந்தவனைத் தடங் கடலுள் வலி உருவில் திரி சகடம்
தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனைப்
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் பண்டு ஒருநாள்
அளந்தவனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (4)


1402 நீர் அழல் ஆய் நெடு நிலன் ஆய் நின்றானை அன்று அரக்கன்-
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய் பின் மறையோர் மந்திரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது-தென் அரங்கத்தே (5)


1403 தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெம் சினத்த கொடுந் தொழிலோன் விசை உருவை அசைவித்த
அம் சிறைப் புள் பாகனை யான் கண்டது-தென் அரங்கத்தே (6)


1404 சிந்தனையை தவநெறியை திருமாலை பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (7)


1405 துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லாச் சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது-தென் அரங்கத்தே (8)


1406 பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில்போல் திகழ் வண்ணம் மரகதத்தின்
அவ் வண்ண வண்ணனை யான் கண்டது-தென் அரங்கத்தே (9)


1407 ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ்-மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாம் மருவி வல்லார்மேல் சாரா தீவினை தாமே (10)
--------

47. திருவரங்கம்: 4

1408 பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்
பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்
ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (1)


1409 இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்
எண் இல் பல் குணங்களே இயற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (2)


1410 மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவர் உலகும்
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி
தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
பிறங்கு இருள் நிறம் கெட ஒருநாள்
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்
-அரங்க மா நகர் அமர்ந்தானே (3)


1411 மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக
மாசுணம் அதனொடும் அளவி
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற
படு திரை விசும்பிடைப் படர
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்
தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (4)


1412 எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?
-இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து
பொழிதரும் அருவி ஒத்து இழிய
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்
விண் உறக் கனல் விழித்து எழுந்தது
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (5)


1413 ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய
அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி
மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
அறிதுயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவு-அணைத் துயின்றான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (6)


1414 சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த
கொடுமையின் கடு விசை அரக்கன்
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து
இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய அடு சரம் துரந்து
மறி கடல் நெறிபட மலையால்
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (7)


1415 ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் ஒருகால்
உடைய தேர் ஒருவன் ஆய் உலகில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை
மலங்க அன்று அடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி
பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (8)


1416 பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் ஒருகால்
பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
வாயன் ஆய் மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
மணி முடி வானவர்-தமக்குச
சேயன் ஆய் அடியோர்க்கு அணியன் ஆய் வந்து என்
சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்
-அரங்க மா நகர் அமர்ந்தானே (9)


1417 பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து
பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த
அரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்று அறுப்பாரே (10)
-----------

48. திருவரங்கம்: 5

1418 ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது
இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி உன் தோழி
உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற
சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (1)


1419 வாத மா மகன் மர்க்கடம் விலங்கு
மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோது இல் வாய்மையினாயொடும் உடனே
உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும
ஆதல் வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (2)


1420 கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை
வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை
பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்
கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன
அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (3)


1421 நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்
வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன்-தமர் கடியர்
கொடிய செய்வன உள அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி-இணை அடைந்தேன்
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (4)


1422 மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்
மலர் அடி கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம்
துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே
போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும
ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (5)


1423 மன்னு நான்மறை மா முனி பெற்ற
மைந்தனை மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்
தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா
பின்னை என்றும் நின் திருவடி பிரியா
வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும்
அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (6)


1424 ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகல் இடம் காணேன்
கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்-
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (7)


1425 வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்
செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (8)


1426 துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில்
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு
ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்
செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (9)


1427 மாட மாளிகை சூழ் திருமங்கை
-மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும்
ஆடல்மா வலவன் கலிகன்றி
அணி பொழில் திருவரங்கத்து அம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
பாட நும்மிடைப் பாவம் நில்லாவே (10)
-------

49. திருப்பேர் நகர்

1428 கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன்
பொய் இலன் மெய்யன்-தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பை அரவு-அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே (1)


1429 வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே (2)


1430 ஒருவனை உந்திப் பூமேல் ஓங்குவித்து ஆகம்-தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு-அணைமேல்கரு
வரை வண்ணன்-தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே (3)


1431 ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன்
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான்
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர்
வானவர்-தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்த ஆறே (4)


1432 வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே (5)


1433 விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான்
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே (6)


1434 வெண்ணெய்-தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி
கண்ணி ஆர் குறுங் கயிற்றால் கட்ட வெட்டொன்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே (7)


1435 அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே (8)


1436 நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம்
சேல் உகள் வயல் திருப்பேர்ச் செங் கண் மாலோடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே (9)


1437 வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கைத்
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்-நீள் விசும்பே (10)
----------

50. திருநந்திபுரவிண்ணகரம்

1438 தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு
விசும்பும் அவை ஆய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை
ஆய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட
மார்வர் தகைசேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (1)


1439 உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி
யாமை முன நாள்
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன்-அவன்
மேவும் நகர்-தான்-
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர்
கிண்டி அதன்மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (2)


1440 உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி
யாமை முன நாள்
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட
மார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி
கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (3)


1441 பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என
வந்த அசுரர்
இறைகள்-அவை-நெறு-நெறு என வெறிய-அவர் வயிறு அழல
நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல
அடிகொள் நெடு மா
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (4)


1442 மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என
வந்த அசுரர்
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி
ஆம் அளவு எய்தான்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை
அம்கை உடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (5)


1443 தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை
ஆக முன நாள்
வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது
மேவும் நகர்-தான்-
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில்
ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (6)


1444 தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்
நந்தன் மதலை
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ
நின்ற நகர்-தான்-
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள்
ஆடு பொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (7)


1445 எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
யாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு
கூட எழில் ஆர்
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள்
தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (8)


1446 வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக
மிக்க பெருநீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார்
அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி
எங்கும் உளதால்
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (9)


1447 நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்
நண்ணி உறையும்
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை
யானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை
ஐந்தும் ஐந்தும்
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்
முழுது அகலுமே (10)
----------

51. திருவிண்ணகர்:1

1448 வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (1)


1449 அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (2)


1450 குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
அழல் நிற அம்பு-அதுஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (3)


1451 நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்
கலை தரு குழவியின் உருவினை ஆய்
அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (4)


1452 பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்
சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (5)


1453 கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்
ஏர் கெழும் உலகமும் ஆகி முத
லார்களும் அறிவு-அரும் நிலையினை ஆய்
சீர் கெழு நான்மறை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (6)


1454 உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
இருக்கினில் இன் இசை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (7)


1455 காதல் செய்து இளையவர் கலவி தரும்
வேதனை வினை அது வெருவுதல் ஆம்
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (8)


1456 சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (9)


1457 பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பா மரு தமிழ்-இவை பாட வல்லார்
வாமனன் அடி-இணை மருவுவரே (10)
---------

52. திருவிண்ணகர்:2

1458 பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி
அறுத்தேன் ஆர்வச் செற்றம் அவை-தம்மை மனத்து அகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (1)


1459 மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே (2


1460 மான் ஏய் நோக்கியர்-தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊன் ஏய் ஆக்கை-தன்னை உதவாமை உணர்ந்து உணர்ந்து-
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே!-நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (3)


1461 பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து
செறிந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே (4)


1462 பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை-தன்னை
வேண்டேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (5)


1463 கல்லா ஐம்புலன்கள்-அவை கண்டவாறு செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (6)


1464 வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வெம் நரகத்து அடியேனை இடக் கருதி
கூற ஐவர் வந்து குமைக்கக் குடிவிட்டவரைத்
தேறாது உன் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (7)


1465 தீ வாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர்போல்
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்-தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (8)


1466 போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்
கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த
வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (9)


1467 தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்-கோன் மருவார்
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கோன் ஆய் வானவர்-தம் கொடி மா நகர் கூடுவரே (10)
----------

53. திருவிண்ணகர்:3

1468 துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆதன்மையால்-திருவிண்ணகரானே (1)


1469 துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே
அறம்-தான் ஆய்த் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே
திறம்பாமல் கொண்டேன்-திருவிண்ணகரானே (2)


1470 மான் ஏய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும்
ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்-
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே (3)


1471 சாந்து ஏந்து மென் முலையார் தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகரானே (4)


1472 மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை-எம் பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே (5)


1473 மை ஒண் கருங் கடலும் நிலனும் மணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன்-திருவிண்ணகரானே (6)


1474 வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்-திருவிண்ணகரானே (7)


1475 முளிந்தீந்த வெம் கடத்து மூரிப் பெருங் களிற்றால்
விளிந்தீந்த மா மரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்பால் அடியேற்கு வான்-உலகம்
தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே (8)


1476 சொல்லாய் திரு மார்வா உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு-நம்பீ
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில்
செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே (9)


1477 தார் ஆர் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானைக்
கார் ஆர் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆர் ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே (10)
-------------

54. திருநறையூர்:1

1478 கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண் இன் மொழியார் பைய நடமின் என்னாதமுன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (1)


1479 கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன்
திங்கள் எரி கால் செஞ் சுடர் ஆயவன் தேசு உடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (2)


1480 கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது? என்னாதமுன்
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்-
நம் கோன் நறையூர்-நாம் தொழுதும் எழு நெஞ்சமே (3)


1481 கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாதமுன்
செம் பொன் கமுகு-இனம்-தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (4)


1482 விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார்-தாங்கள் சிரித்து இகழாத முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (5)


1483 மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து
என் நீர் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன்
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான்
நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (6)


1484 வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறன் -உரை கேட்பதன்முன்
சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (7)


1485 வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மைக்
கேள்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாதமுன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (8)


1486 கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாதமுன்
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (9)


1487 பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாதமுன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறை ஆர் நெடு வேல் மங்கையர்-கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே (10)
---------

55. திருநறையூர்:2

1488 கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்-
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும்-நறையூரே (1)


1489 முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்-
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக் குயில் கூவும்
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய-நறையூரே (2)


1490 ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் ஊர்-
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நானப் புதலில் ஆமை ஒளிக்கும்-நறையூரே (3)


1491 உறி ஆர் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறி ஆர் கூந்தல் பின்னை-பொருட்டு ஆன் வென்றான் ஊர்-
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்தோறும் நடம் ஆட
நறு நாள்மலர்மேல் வண்டு இசை பாடும்-நறையூரே (4)


1492 விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்-
பெடையோடு அன்னம் பெய்வளையார்-தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி ஒளிக்கும்-நறையூரே (5)


1493 பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகு வாய் நின்ற போதகம் வீழப் பொருதான் ஊர்-
நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின்
நகு வாய் மலர்மேல் அன்னம் உறங்கும்-நறையூரே (6)


1494 முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர்-
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி
நந்து வாரும் பைம் புனல் வாவி-நறையூரே (7)


1495 வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய் விறல் வியூகம்
விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர்-
கொள்ளைக் கொழு மீன் உண் குருகு ஓடி பெடையோடும்
நள்ளக் கமலத் தேறல் உகுக்கும்-நறையூரே (8)


1496 பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன்-தன்
தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர்-
தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த-நறையூரே (9)


1497 தாமத் துளப நீள் முடி மாயன்-தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை-
சேமத் துணை ஆம் செப்பும்-அவர்க்கு திருமாலே (10)
-----------

56. திருநறையூர்:3

1498 அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்
அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடகிற்பீர்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு
மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (1)


1499 கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்
குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை
இணை-அடிக்கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி
உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (2)


1500 பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி
பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம்
திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற
கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (3)


1501 பைங் கண் ஆள்-அரி உரு ஆய் வெருவ நோக்கி
பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்
அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற
விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (4)


1502 அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர்
அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு
விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்
புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (5)


1503 தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்
தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்
தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை
விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6)


1504 முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி
முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்
இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (7)


1505 முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்
மன் எல்லாம் முன் அவியச் சென்று வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்
சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு
எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (8)


1506 தார் ஆளன் தண் அரங்க ஆளன் பூமேல்
தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன் ஆயிரம் பேர் உடைய ஆளன்
பின்னைக்கு மணவாளன்-பெருமை கேட்பீர்
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (9)


1507 செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்
புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்
பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே (10)
---------

57. திருநறையூர்: 4

1508 ஆளும் பணியும் அடியேனைக்
கொண்டான் விண்ட நிசாசரரைத்
தோளும் தலையும் துணிவு எய்தச்
சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்-
வேளும் சேயும் அனையாரும்
வேல்-கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி ஓவா
நறையூர் நின்ற நம்பியே (1)


1509 முனி ஆய் வந்து மூவெழுகால்
முடி சேர் மன்னர் உடல் துணிய
தனி வாய் மழுவின் படை ஆண்ட
தார் ஆர் தோளான்-வார் புறவில்
பனி சேர் முல்லை பல் அரும்ப
பானல் ஒருபால் கண் காட்ட
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும்
நறையூர் நின்ற நம்பியே (2)


1510 தெள் ஆர் கடல்வாய் விட வாயச்
சின வாள் அரவில் துயில் அமர்ந்து
துள்ளா வரு மான் விழ வாளி
துரந்தான் இரந்தான் மாவலி மண்-
புள் ஆர் புறவில் பூங் காவி
பொலன் கொள் மாதர் கண் காட்ட
நள் ஆர் கமலம் முகம் காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (3)


1511 ஒளியா வெண்ணெய் உண்டான் என்று
உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி அழுதான்-மென் மலர்மேல்
களியா வண்டு கள் உண்ண
காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே (4)


1512 வில் ஆர் விழவில் வட மதுரை
விரும்பி விரும்பா மல் அடர்த்து
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்-
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
நறையூர் நின்ற நம்பியே (5)


1513 வள்ளி கொழுநன் முதலாய
மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட விறல் வாணன்
வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்-
பள்ளி கமலத்திடைப் பட்ட
பகு வாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த
நறையூர் நின்ற நம்பியே (6)


1514 மிடையா வந்த வேல் மன்னர்
வீய விசயன் தேர் கடவி
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர்
-கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான்-வேதம் நான்கு ஐந்து
வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (7)


1515 பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி
கூந்தல் முடிக்க பாரதத்து
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர்
கலங்க சங்கம் வாய் வைத்தான்-
செந்தாமரைமேல் அயனோடு
சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண் கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (8)


1516 ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்
இறையோன் சென்று குறை இரப்ப
மாறு ஒன்று இல்லா வாச நீர்
வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்-
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய
நறையூர் நின்ற நம்பியே (9)


1517 நன்மை உடைய மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியைக்
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்
கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
பன்னி உலகில் பாடுவார்
பாடு சாரா பழ வினைகள்
மன்னி உலகம் ஆண்டு போய்
வானோர் வணங்க வாழ்வாரே (10)
-----------

58. திருநறையூர்: 5

1518 மான் கொண்ட தோல் மார்வின் மாணி ஆய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (1)


1519 முந்நீரை முன் நாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந் நீரை மீன் ஆய் அமைத்த பெருமானை
தென் ஆலி மேய திருமாலை எம்மானை
நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே (2)


1520 தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனை செங் கமலக் கண்ணானை
நாவாய் உளானை நறையூரில் கண்டேனே (3)


1521 ஓடா அரி ஆய் இரணியனை ஊன் இடந்த
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாள்தோறும் நாடி நறையூரில் கண்டேனே (4)


1522 கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கைக் கார் அரக்கன்
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த
வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே (5)


1523 உம்பர்-உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பு அன்ன கண்ணாள் அசோதை-தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6)


1524 கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (7)


1525 மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின்மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே (8)


1526 பொங்கு ஏறு நீள் சோதிப் பொன் ஆழி-தன்னோடும்
சங்கு ஏறு கோலத் தடக் கைப் பெருமானை
கொங்கு ஏறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே (9)


1527 மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே (10)
---------

59. திருநறையூர்: 6

1528 பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர்-
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை-அடியே அடை நெஞ்சே (1)


1529 கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர்-
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள்-அவை சிதற
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி-இணையே அடை நெஞ்சே (2)


1530 சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமித் திகழ் சோலைத் திருநறையூர்-
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான்-தன்-அடி-இணையே அடை நெஞ்சே (3)


1531 துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகைமேல்
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்-
மன்று ஆரக் குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே (4)


1532 அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் இவ் உலகு ஏழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்-அடியே அடை நெஞ்சே (5)


1533 பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கை மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்-இயலைத் திரு மார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே (6)


1534 சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங் கமலத்து இடை இடையில்
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் பயன் விளைக்கும் திருநறையூர்-
கார் தழைத்த திரு உருவன் கண்ண-பிரான் விண்ணவர்-கோன்
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே (7)


1535 குலை ஆர்ந்த பழுக் காயும் பசுங் காயும் பாளை முத்தும்
தலை ஆர்ந்த இளங் கமுகின் தடஞ் சோலைத் திருநறையூர்-
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே (8)


1536 மறை ஆரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்-
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறை ஆகி நின்றான் தன் இணை-அடியே அடை நெஞ்சே (9)


1537 திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண்கள் அகம் பயின்ற சீர்ப் பாடல்-இவை பத்தும் வல்லார்
விண்கள் அகத்து இமையவர் ஆய் வீற்றிருந்து வாழ்வாரே (10)
----------

60. திருநறையூர்: 7

1538 கிடந்த நம்பி குடந்தை மேவி கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (1)


1539 விடம்-தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால்
நடந்தானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (2)


1540 பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பைப்
பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (3)


1541 கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (4)


1542 குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை-தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம்
நடையா உண்ணக் கண்டான் நாமம்-நமோ நாராயணமே (5)


1543 கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்-
நானும் சொன்னேன் நமரும் உரைமின்-நமோ நாராயணமே (6)


1544 நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம்-
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்-நமோ நாராயணமே (7)


1545 கடுங் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்-நமோ நாராயணமே (8)


1546 பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம்-
நங்கள் வினைகள் தவிர உரைமின்-நமோ நாராயணமே (9)


1547 வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை
காவித் தடங் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே (10)
----------

61. திருநறையூர்: 8

1548 கறவா மட நாகு தன் கன்று உள்ளினால்போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்-
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை எனைப் பணி-எந்தை பிரானே (1)


1549 வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும்
துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடு-என் எந்தை பிரானே (2)


1550 தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்-
கார் ஏய் கடலே மலையே திருக்கோட்டி
ஊரே உகந்தாயை உகந்து அடியேனே (3)


1551 புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல்மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே? (4)


1552 வில் ஏர் நுதல் நெடுங் கண்ணியும் நீயும்
கல் ஆர் கடுங் கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய்-உன்னை யான் வணங்கித் தொழும் ஆறே (5)


1553 பனி ஏய் பரங் குன்றின் பவளத் திரளே
முனியே திருமூழிக்களத்து விளக்கே
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய
கனியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (6)


1554 கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக்
கதியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (7)


1555 அத்தா அரியே என்று உன்னை அழைக்க
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே (8)


1556 தூயாய் சுடர் மா மதிபோல் உயிர்க்கு எல்லாம்
தாய் ஆய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட
வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே (9)


1557 வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டு ஆய் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்று ஆட
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே (10)
----------

62. திருநறையூர்: 9

1558 புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ (1)


1559 ஓடா ஆள் அரியின் உரு ஆய் மருவி என்-தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர்-தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ (2)


1560 எம்மானும் எம் அனையும் என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே (3)


1561 சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது-தான்
அறியாது இருந்தறியேன் அடியேன்-அணி வண்டு கிண்டும்
நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ (4)


1562 நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நான்-தான் உனக்கு ஒழிந்தேன்-நறையூர் நின்ற நம்பீயோ (5)


1563 எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ!-என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ (6)


1564 மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்-
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ (7)


1565 எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல்மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ (8)


1566 ஊன் நேர் ஆக்கை-தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யான் ஆய் என்-தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால்
நானே எய்தப் பெற்றேன்-நறையூர் நின்ற நம்பீயோ (9)


1567 நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கல் நீர மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர்-கோன்
சொல் நீர சொல்-மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நல் நீர்மையால் மகிழ்ந்து நெடுங் காலம் வாழ்வாரே (10)
----------

63. திருநறையூர்: 10

1568 சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்
செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும்
மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை
நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்
கண்-இணைகள் களிப்பக் களித்தேனே (1)


1569 தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும்
தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழைக் காதனை
மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என்
அன்பனை அன்றி ஆதரியேனே (2)


1570 வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்
மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து தென்புலர்க்கு என்னைச்
சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்
கோவினை குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை
எம்பிரானை-எத்தால் மறக்கேனே? (3)


1571 உரங்களால் இயன்ற மன்னர் மாள
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்
எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்கு
அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே (4)


1572 ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது
அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி
எம்பிரானை உம்பர்க்கு அணி ஆய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை
வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை தேனை நன் பாலினை
அன்றி என் மனம் சிந்தை செய்யாதே (5)


1573 எள் தனைப்பொழுது ஆகிலும் என்றும்
என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்
தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை
காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை பரவைத் துயில் ஏற்றை என்
பண்பனை அன்றி பாடல் செய்யேனே (6)


1574 பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற
பாலை ஆகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்
கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்
விண் உளார் பெருமானை எம்மானை
வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல்
வண்ணமே அன்றி வாய் உரையாதே (7)


1575 இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு-
இம்மையே அருள்பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்
தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும்
முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர்
கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட
கள்வனை-இன்று கண்டுகொண்டேனே (8)


1576 என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு
என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்த்
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்
அன்று இடந்தவனை தழலே புரை
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை
அன்றி என் மனம் போற்றி என்னாதே (9)


1577 தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்
தோன்றல் வாள் கலியன் திரு ஆலி
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி-தன்
நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்-மாலைப்
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
பாட நும்மிடைப் பாவம் நில்லாவே (10)
-------

64. திருச்சேறை

1578 கண் சோர வெம் குருதி வந்து இழிய
வெம் தழல்போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய்
வானவர்-தம் கோவே என்று
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு
மணி மாடம் மல்கு செல்வத்
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்
காண்மின்-என் தலைமேலாரே (1)


1579 அம் புருவ வரி நெடுங் கண் அலர்-மகளை
வரை அகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனிமேல் இளங் கன்று
கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை
வான் உந்து கோயில் மேய
எம் பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும்
என் மனத்தே இருக்கின்றாரே (2)


1580 மீது ஓடி வாள் எயிறு மின் இலக
முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த
கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை
எம் பெருமான் தாளை ஏத்தி
போதோடு புனல் தூவும் புண்ணியரே
விண்ணவரின் பொலிகின்றாரே (3)


1581 தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை
வெம் சமத்துப் பொன்றி வீழ
போர் ஆளும் சிலை-அதனால் பொரு கணைகள்
போக்குவித்தாய் என்று நாளும்
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை
எம் பெருமான் உம்பர் ஆளும்
பேராளன் பேர் ஓதும் பெரியோரை
ஒருகாலும் பிரிகிலேனே (4)


1582 வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின்
வல் அமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உரு ஆய் இரணியனை
முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்-
சந்தப் பூ மலர்ச் சோலைத் தண் சேறை
எம் பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி
எப்பொழுதும் தித்திக்குமே (5)


1583 பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த
பண்பாளா என்று நின்று
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்
துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின் வண் சேறை
எம் பெருமான் அடியார்-தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர்-என் நெஞ்சும்
கண் இணையும் களிக்கும் ஆறே (6)


1584 பை விரியும் வரி அரவில் படு கடலுள்
துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரைபோல் மாயவனே
என்று என்றும் வண்டு ஆர் நீலம்
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்
திரு வடிவைச் சிந்தித்தேற்கு என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு
ஆள் ஆம்-என் அன்பு-தானே (7)


1585 உண்ணாது வெம் கூற்றம் ஓவாத
பாவங்கள் சேரா-மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்
மென் தளிர்போல் அடியினானை
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ்
தண் சேறை அம்மான்-தன்னை
கண் ஆரக் கண்டு உருகி கை ஆரத்
தொழுவாரைக் கருதுங்காலே (8)


1586 கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்
போது ஒருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என்கொலோ?-விளை வயலுள்
கரு நீலம் களைஞர் தாளால்
தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை
எம் பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்-
என் உள்ளம் உருகும் ஆறே (9)


1587 பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து
வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்
தண் சேறை அம்மான்-தன்னை
வா மான் தேர்ப் பரகாலன் கலிகன்றி
ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்-நும்
துணைக் கையால் தொழுது நின்றே (10)
----------

65. திருவழுந்தூர்: 1

1588 தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்போலும்-
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே (1)


1589 பாரித்து எழுந்த படை மன்னர்-தம்மை மாள பாரதத்து
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த தேவ-தேவன் ஊர்போலும்-
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (2)


1590 செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக உதிர்த்த உரவோன் ஊர்போலும்-
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள்
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே (3)


1591 வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி அடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர்போலும்-
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (4)


1592 பகலும் இரவும் தானே ஆய் பாரும் விண்ணும் தானே ஆய்
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர்போலும்-
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே (5)


1593 ஏடு இலங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர்போலும்-
நீடு மாடத் தனிச் சூலம் போழக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே (6)


1594 மாலைப் புகுந்து மலர்-அணைமேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர்போலும்-
வேலைக் கடல்போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே (7)


1595 வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற ஊர்போலும்-
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின்
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே (8)


1596 என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்-
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (9)


1597 நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே 10
--------

66. திருவழுந்தூர்: 2

1598 நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே (10)


1599 சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை
செங் கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அம் கமலக் கண்ணனை-அடியேன் கண்டுகொண்டேனே (1)


1600 கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக் கொண்டருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை அடியார்க்கு
ஆஆ என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதிதேவனை-யான் கண்டுகொண்டு திளைத்தேனே (2)


1601 உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர்
உடையானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே (3)


1602 குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
நின்றானை-அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே (4)


1603 கஞ்சனைக் காய்ந்தானை கண்ணமங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை
செஞ்சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றம்-தன்னை-அடியேன் கண்டுகொண்டேனே (5)


1604 பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரி யானை உகந்தான்-அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும்
கரியானை-அடியேன் கண்டுகொண்டு களித்தேனே (6)


1605 திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா
உரு ஆய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
அரு ஆய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கரு ஆர் கற்பகத்தை-கண்டுகொண்டு களித்தேனே (7)


1606 நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில மகள்-தன்
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதிதொறும்
அலை ஆர் கடல்போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற
கலை ஆர் சொற்பொருளை-கண்டுகொண்டு களித்தேனே (8)


1607 பேரானை குடந்தைப் பெருமானை இலங்கு ஒளி சேர்
வார் ஆர் வனமுலையாள் மலர்-மங்கை நாயகனை
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கார் ஆர் கரு முகிலை-கண்டுகொண்டு களித்தேனே (9)
----------

67. திருவழுந்தூர்: 3

1608 திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அற முதல்வன்-அவனை அணி ஆலியர்-கோன் மருவார்
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர்-வான்-உலகே (10)


1609 திருவுக்கும் திரு ஆகிய செல்வா
தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே
உலகு உண்ட ஒருவா திரு மார்பா
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால்
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (1)


1610 பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி
பாவை பூ-மகள்-தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்
மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்திரியா
சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்-
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (2)


1611 நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும்
நீண்ட தோள் உடையாய் அடியேனைச்
செய்யாத உலகத்திடைச் செய்தாய்
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப்
போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்-
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (3)


1612 பரனே பஞ்சவன் பூழியன் சோழன்
பார் மன்னர் மன்னர்-தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா
மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்
நரனே நாரணனே திருநறையூர்
நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும்
அரனே ஆதிவராகம் முன் ஆனாய்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (4)


1613 விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய்
பரியோன் மார்வு-அகம் பற்றிப் பிளந்து
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும்
பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை
கருமம் ஆவதும் என்-தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன்
-அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (5)


1614 தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண
சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும்
தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர
கலியுகம்-இவை நான்கும் முன் ஆனாய்
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன்
-அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (6)


1615 கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்
கார் வண்ணா கடல்போல் ஒளி வண்ணா
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்
எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய்
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே
நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
-அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (7)


1616 நெடியானே கடி ஆர்கலி நம்பீ
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து
காவல் செய்த அக் காவலைப் பிழைத்து
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி ஆண்டுகொள்-எந்தாய்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (8)


1617 கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி
கூறை சோறு இவை தா என்று குமைத்து
போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன்
புனிதா புள் கொடியாய் நெடுமாலே
தீ வாய் நாகணையில் துயில்வானே
திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய்
-அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (9)
------------

68. திருவழுந்தூர்: 4

1618 அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி
ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை
தூய மாலை இவை-பத்தும் வல்லார்
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு
மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே (10)


1619 செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன்
திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும்
வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்-
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (1)


1620 முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண
முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம்
பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்-
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம்
-அவை முரல செங் கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (2)


1621 குலத் தலைய மத வேழம் பொய்கை புக்கு
கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன
நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்-
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு
வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (3)


1622 சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம்
திகழ்ந்தது என திரு உருவம் பன்றி ஆகி
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி
எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்-
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க
பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (4)


1623 சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்-
இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை
ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல்
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (5)


1624 வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி
மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி
தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித்
தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்-
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி
செழு மாட மாளிகைகள் கூடம்தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (6)


1625 பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி
பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ
அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்-
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (7)


1626 கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு
பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து
வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த
தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்-
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்
திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (8)


1627 ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்
ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி
நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்-
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி
திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும்
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (9)
----------

69. சிறுபுலியூர்ச் சலசயனம்

1628 பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய் பாரைப்
படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும்
அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன்
கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார்
ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர்-தாமே (10)


1629 கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரிய கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே (1)


1630 தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ் சோற்றொடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர்-
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின்-உணர்வீரே (2)


1631 பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்-பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒருபால் வயல் ஒருபால் பொழில் ஒருபால்
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே (3)


1632 வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால்
தான் ஆகிய தலைவன்-அவன் அமரர்க்கு அதிபதி ஆம்
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே (4)


1633 நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்ச்
செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே (5)


1634 முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவார்-அவர் கண் வாய் முகம் மலரும்
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழும் நீர்மை-அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே (6)


1635 சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்கு உரையாய் இது-மறை நான்கின் உளாயோ?
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ? உனது அடியார் மனத்தாயோ? அறியேனே (7)


1636 மை ஆர் வரி நீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஐ வாய் அரவு-அணைமேல் உறை அமலா அருளாயே (8)


1637 கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே (9)
-------

70. திருக்கண்ணமங்கை

1638 சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஏர் ஆர் முகில் வண்ணன்-தனை இமையோர் பெருமானை
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே (10)


1639 பெரும் புறக் கடலை அடல் ஏற்றினை
பெண்ணை ஆணை எண் இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை அலரை அடியேன் மனத்து
ஆசையை அமுதம் பொதி இன் சுவைக்
கரும்பினை கனியை-சென்று நாடி
-கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (1)


1640 மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்
மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை
மாலை ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலை பகலை இற்றை நாளினை
நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை
கன்னலை கரும்பினிடைத் தேறலை-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (2)


1641 எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
வாச வார் குழலாள் மலை-மங்கை-தன்
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான்-தன்னை
பான்மையை பனி மா மதியம் தவழ்
மங்குலை சுடரை வட மா மலை
உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை பகலை-சென்று நாடி
-கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (3)


1642 பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையை
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை
மாயனை மதிள் கோவல் இடைகழி
மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை
எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியை-சென்று நாடி-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (4)


1643 ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய
கூற்றினை குரு மா மணிக் குன்றினை
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினை புனலை-சென்று நாடி-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (5)


1644 துப்பனை துரங்கம் படச் சீறிய
தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை திருமங்கை மணாளனை
தேவனை திகழும் பவளத்து ஒளி
ஒப்பனை உலகு ஏழினை ஊழியை
ஆழி ஏந்திய கையனை அந்தணர்
கற்பினை-கழுநீர் மலரும் வயல்
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (6)


1645 திருத்தனை திசை நான்முகன் தந்தையை
தேவ-தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை
விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
அருத்தனை அரியை பரி கீறிய
அப்பனை அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற
கருத்தனை-களி வண்டு அறையும் பொழில்-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (7)


1646 வெம் சினக் களிற்றை விளங்காய் விழக்
கன்று வீசிய ஈசனை பேய் மகள்
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை
தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை
நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (8)


1647 பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை
பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை
மாலை மா மதியை மறையோர்-தங்கள்
கண்ணினை-கண்கள் ஆரளவும் நின்று-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (9)
----------

71. திருக்கண்ணபுரம்: 1

1648 கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று
காதலால் கலிகன்றி உரைசெய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை
வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ்
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர்
மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய
கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில்
கற்கலாம் கவியின் பொருள்-தானே (10)


1649 சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம்
என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண்
என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி
இருக்கின்றாளால்-
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (1)


1650 செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது?
என்கின்றாளால்
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை
என்கின்றாளால்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா
என்கின்றாளால்-
கரு வரைபோல் நின்றானை கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (2)


1651 துன்னு மா மணி முடிமேல் துழாய் அலங்கல் தோன்றுமால்
என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும்
என்கின்றாளால்
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால்
என்கின்றாளால்-
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (3)


1652 தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன்
என்கின்றாளால்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான்
என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு
என்கின்றாளால்-
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (4)


1653 அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே
என்கின்றாளால்
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா
என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள்?
என்கின்றாளால்-
கடிக் கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (5)


1654 பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன்
என்கின்றாளால்
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன்
என்கின்றாளால்
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால்
என்கின்றாளால்-
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (6)


1655 செவ் அரத்த உடை ஆடை-அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு
என்கின்றாளால்
அவ் அரத்த அடி-இணையும் அம் கைகளும் பங்கயமே
என்கின்றாளால்
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ? மழை முகிலோ?
என்கின்றாளால்-
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (7)


1656 கொற்றப் புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான்
என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால்
என்கின்றாளால்
பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ?
என்கின்றாளால்-
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (8)


1657 வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்
என்கின்றாளால்
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன்
என்கின்றாளால்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே
பயில்கின்றாளால்-
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (9)
-----------

72.திருக்கண்ணபுரம்: 2

1658 மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக்
கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
கலியன் சொன்ன
பா வளரும் தமிழ்-மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்
ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
புகழ் தக்கோரே (10)


1659 தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ
துள்ளு நீர்க் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ? கை வளை கொள்வது தக்கதே? (1)


1660 நீள் நிலாமுற்றத்து நின்று இவள் நோக்கினாள்
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள்
நாணுமோ? நன்று நன்று நறையூரர்க்கே (2)


1661 அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்-
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ? (3)


1662 உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை-தான்
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல்
வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ? (4)


1663 கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என்? தன்னுடை உண்மை உரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே (5)


1664 வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என்-கண் துயில் இன்று இவர் கொள்ளவே? (6)


1665 தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
இரங்குமோ? எத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர்
அரங்கமே என்பது இவள்-தனக்கு ஆசையே (7)


1666 தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ணபுரம் தொழப் போயினாள்
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே? (8)


1667 முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன்
கள் அவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? (9)
----------

73. திருக்கண்ணபுரம்: 3

1668 கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளைப்
பார் மலி மங்கையர்-கோன் பரகாலன் சொல்
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே (10)


1669 கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடைபெயர
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் வரி வளையே (1)


1670 அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்து உறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன்-என் கன வளையே (2)


1671 துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
பைங் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த
செங் கண் மால் அம்மானுக்கு இழந்தேன்-என் செறி வளையே (3)


1672 கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின்
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன்-என் பொன் வளையே (4)


1673 வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன்-என் வரி வளையே (5)


1674 மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (6)


1675 வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும்
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (7)


1676 கொங்கு மலி கருங் குவளை கண் ஆகத் தெண் கயங்கள்
செங் கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும்
வங்கம் மலி தடங் கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமலநாபனுக்கு இழந்தேன்-என் செறி வளையே (8)


1677 வார் ஆளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப் பாவை
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு-அணைமேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன்-என் பெய் வளையே (9)


1678 தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ்-மாலை
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே (10)
---------

74. திருக்கண்ணபுரம்: 4

1679 விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன்
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
வண்ண நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (1)


1680 வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்து ஏத்தி
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம் பெருமான்
தாது நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (2)


1681 விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம் பெருமான்
வண்டு நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (3)


1682 நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம் பெருமான்
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (4)


1683 ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
பார் ஆர் உலகம் பரவ பெருங் கடலுள்
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்
தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (5)


1684 மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (6)


1685 வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தடமார்வன்
காமன்-தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான்
தாம நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (7)


1686 நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
கோல நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (8)


1687 நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன்
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான்
கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (9)
--------

75. திருக்கண்ணபுரம்: 5

1688 வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ணபுரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய்-கோல் தும்பீ (10)


1689 தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய
தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப்
பெறும் அளவு இருந்தேனை
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்
அவை சுட அதனோடும்
மந்தமாருதம் வன முலை தடவந்து
வலிசெய்வது ஒழியாதே (1)


1690 மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்
வரை புரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்
தாழ்ந்தது ஓர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது
ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன
செய்வது ஒன்று அறியேனே (2)


1691 ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்
வளைகளும் இறை நில்லா
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம்
பெண் உயிர்க்கு இரங்குமோ?
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை
இணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்
அஞ்சேல் என்பார் இலையே (3)


1692 கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல்
கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்
வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும்
தழல் முகந்து இள முலைமேல்
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை
எனக்கு எனப் பெறலாமே (4)


1693 ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து
இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும்
பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை
சுடர் படு முதுநீரில்
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர்
அந்தி வந்து அடைகின்றதே (5)


1694 முரியும் வெண் திரை முது கயம் தீப்பட
முழங்கு அழல் எரி அம்பின்
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்
வந்திலன் என் செய்கேன்?
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன்
இணை நெடுங் கண் துயிலா
கரிய நாழிகை ஊழியின் பெரியன
கழியும் ஆறு அறியேனே (6)


1695 கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர்
கோனது வரை ஆகம்
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம்
அடிகளும் வாரானால்
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும்
விடை மணி அடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையும் ஆய் இனி
விளைவது ஒன்று அறியேனே (7)


1696 முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும்
முனிவனும் முனிவு எய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய
மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை
அடங்க அம் சிறை கோலித்
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர்
கொடு வினை அறியேனே (8)


1697 கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும்
கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என்
வளை நெக இருந்தேனை
சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை என்
சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன்
ஆவியை அடுகின்றதே (9)
------------

76. திருக்கண்ணபுரம்: 6

1698 தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன்
வண்டு ஆர் கூந்தல் மலர்-மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே. (1)


1699 பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் பொன்ற அன்று புள் ஊர்ந்து
பெருந் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை
இருந்தார்-தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப
கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே 2


1700 வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார்-கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட முனி-தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (3)


1701 மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகல் உற்று
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (4)


1702 ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம்
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (5)


1703 வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென் இலங்கை செந் தீ உண்ண சிவந்து ஒருநாள்
பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன்
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (6)


1704 இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் முதலை-தன்னால் அடர்ப்புண்டு
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (7)


1705 மால் ஆய் மனமே அருந் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும்
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (8)


1706 குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய் திரி கால் சகடம் சினம் அழித்து
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (9)


1707 கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ணபுரத்து எம் அடிகளை
திரு மா மகளால் அருள்மாரி செழுநீர் ஆலி வள நாடன்
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே (10)
---------

77. திருக்கண்ணபுரம்: 7

1708 வியம் உடை விடை இனம் உடைதர மட மகள்
குயம் மிடை தட வரை அகலம்-அது உடையவர்-
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில்
கயம் மிடை கணபுரம்-அடிகள்-தம் இடமே (1)


1709 இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள்-
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய
கணம் மலி கணபுரம்-அடிகள்-தம் இடமே (2)


1710 புயல் உறு வரை-மழை பொழிதர மணி நிரை
மயல் உற வரை குடை எடுவிய நெடியவர்-
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல்
கயல் துளு கணபுரம்-அடிகள்-தம் இடமே (3)


1711 ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய்
போது செய்து அமரிய புனிதர்-நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்-மகள்
காதல்செய் கணபுரம்-அடிகள்-தம் இடமே (4)


1712 தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ
அண்டமொடு அகல்-இடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழக்
கண்டவர் கணபுரம்-அடிகள்-தம் இடமே (5)


1713 மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில்
தழுவிய உருவினர்-திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம்-அடிகள்-தம் இடமே (6)


1714 பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம்
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர்-
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர்
கருதிய கணபுரம்-அடிகள்-தம் இடமே (7)


1715 படி புல்கும் அடி-இணை பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை அகலம்-அது உடையவர்-
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர்
கடி புல்கு கணபுரம்-அடிகள்-தம் இடமே (8)


1716 புலம் மனும் மலர்மிசை மலர்-மகள் புணரிய
நிலமகள் என இன மகளிர்கள் இவரொடும்
வலம் மனு படையுடை மணி வணர்-நிதி குவைக்
கலம் மனு கணபுரம்-அடிகள்-தம் இடமே (9)


1717 மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர்
கலியன தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே (10)
---------

78. திருக்கண்ணபுரம்: 8

1718 வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின்
மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா உருவில் ஆன் ஆயன்-அவனை-அம் மா விளை வயலுள்
கான் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (1)


1719 மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்
விலங்கல் திரியத் தடங் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை-
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (2)


1720 பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின்
ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய் எடுத்த ஆற்றல் அம்மானை-
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும்
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (3)


1721 உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்துப்
பிளந்து வளைந்த உகிரானை-பெருந் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (4)


1722 தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய் வந்து தோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை-
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (5)


1723 வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால்
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை-
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும்
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (6)


1724 வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்துச்
செய்த வெம்போர் நம்பரனை-செழுந் தண் கானல் மணம் நாறும்
கைதை வேலிக் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (7)


1725 ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்ற தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண்பால் செல்ல வெம் சமத்துச்
செற்ற கொற்றத் தொழிலானை-செந்தீ மூன்றும் இல் இருப்ப
கற்ற மறையோர் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (8)


1726 துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை-
உவரி ஓதம் முத்து உந்த ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (9)


1727 மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய் முன்னும் இராமன் ஆய்
தான் ஆய் பின்னும் இராமன் ஆய் தாமோதரன் ஆய் கற்கியும்
ஆனான்-தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த
தேன் ஆர் இன் சொல் தமிழ்-மாலை செப்ப பாவம் நில்லாவே (10)
-----

79. திருக்கண்ணபுரம்: 9

1728 கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே (1)


1729 தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின்
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை-அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே (2)


1730 விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உறப்
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? (3)


1731 மிக்கானை மறை ஆய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங் குன்றின்மிசை இருந்த
அக்காரக் கனியை-அடைந்து உய்ந்துபோனேனே (4)


1732 வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ?-
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே (5)


1733 எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை-
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய்-
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே (6)


1734 பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை-
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே (7)


1735 கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெருங் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே (8)


1736 கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள்
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை-
கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ? (9)


1737 செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர்-கோன்
கரு நீர் முகில் வண்ணன் கண்ணபுரத்தானை
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே (10)
--------

80. திருக்கண்ணபுரம்: 10

1738 வண்டு ஆர் பூ மா மலர்-மங்கை மண நோக்கம்
உண்டானே!-உன்னை உகந்து-உகந்து உன்-தனக்கே
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய்? சொல்லு-நால்வேதம்
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே (1)


1739 பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும்
கருதேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (2)


1740 மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (3)


1741 பெண் ஆனாள் பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல்
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை உகந்தேன் நான்-
மண் ஆளா வாள் நெடுங் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே (4)


1742 பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்-
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே (5)


1743 ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரைப்
பார்த்திருந்து அங்கு நமன்-தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ
காத்திபோல்-கண்ணபுரத்து உறை அம்மானே (6)


1744 வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு-அணைமேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன்தமர்
கள்ளர்போல்-கண்ணபுரத்து உறை அம்மானே (7)


1745 மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (8)


1746 நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய்-கண்ணபுரத்து உறை அம்மானே (9)


1747 கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே (10)
------------

81. திருக்கண்ணங்குடி

1748 வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய
வாள் அரவின் அணை மேவி
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி
சாம மா மேனி என் தலைவன்-
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்
அருங் கலை பயின்று எரி மூன்றும்
செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (1)


1749 கவள மா கதத்த கரி உய்ய-பொய்கைக்
கராம் கொளக் கலங்கி உள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை
துணிபட-சுடு படை துரந்தோன்-
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர்
கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (2)


1750 வாதை வந்து அடர வானமும் நிலனும்
மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி
விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்-
போது அலர் புன்னை மல்லிகை மௌவல்
புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (3)


1751 வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி
வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றி ஆய் அன்று பார்-மகள் பயலை
தீர்த்தவன் பஞ்சவர் பாகன்-
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து
உயர் கொடி ஒளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (4)


1752 மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்
மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து
அலை புனல் இலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (5)


1753 மழுவினால் அவனி அரசை மூவெழுகால்
மணி முடி பொடிபடுத்து உதிரக்
குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம்
தவிர்ந்தவன்-குலை மலி கதலிக்
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும்
குளிர் தரு சூதம் மாதவியும்
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (6)


1754 வான் உளார்-அவரை வலிமையால் நலியும்
மறி கடல் இலங்கையார்-கோனை
பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப்
பரு முடி உதிர வில் வளைத்தோன்-
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட
கண முகில் முரசம் நின்று அதிர
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (7)


1755 அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை
அஞ்சிடாதே இட அதற்கு
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
வரையின் மா மணியும் மரகதத் திரளும்
வயிரமும் வெதிர் உதிர் முத்தும்
திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (8)


1756 பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய
பாரத மா பெரும் போரில்
மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்
மைத்துனற்கு உய்த்த மா மாயன்-
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்
சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (9)


1757 கலை உலா அல்குல் காரிகைதிறத்து
கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற
திருக்கண்ணங்குடியுள் நின்றானை
மலை குலாம் மாட மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல்-மாலை ஒன்பதோடு ஒன்றும்
வல்லவர்க்கு இல்லை-நல்குரவே (10)
-------

82. திருநாகை: அச்சோப்பதிகம்

1758 பொன் இவர் மேனி மரகதத்தின்
பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்
வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி
ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-
அச்சோ ஒருவர் அழகியவா (1)


1759 தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்
சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல் அடியார் வணங்க
பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-
அச்சோ ஒருவர் அழகியவா (2)


1760 வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்
செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்-
அச்சோ ஒருவர் அழகியவா (3)


1761 வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்
கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்
நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்
தேவர் இவரது உருவம் சொலலில்
அம் பவளத் திரளேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (4)


1762 கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-
அச்சோ ஒருவர் அழகியவா (5)


1763 வெம் சின வேழ மருப்பு ஒசித்த
வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத்
தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த
காளையர் ஆவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (6)


1764 பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்
பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை அன்ன கண்ணும்
அம் கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (7)


1765 மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-
அச்சோ ஒருவர் அழகியவா (8)


1766 எண் திசையும் எறி நீர்க் கடலும்
ஏழ் உலகும் உடனே விழுங்கி
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்
மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்
கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்
அண்டத்து அமரர் பணிய நின்றார்-
அச்சோ ஒருவர் அழகியவா (9)


1767 அன்னமும் கேழலும் மீனும் ஆய
ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்
வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே (10)
-------

83. திருப்புல்லாணி: 1

1768 தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு-
பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே (1)


1769 உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு-
முருகு வண்டு உன் மலர்க் கைதையின் நீழலில் முன் ஒருநாள்
பெருகு காதன்மை என் உள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே (2)


1770 ஏது செய்தால் மறக்கேன்? மனமே தொழுதும் எழு-
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே (3)


1771 கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு-போய் அவன் மன்னும் ஊர்
பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே (4)


1772 உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு-
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம்
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே (5)


1773 எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு-
வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம்
கள் அவிழும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே (6)


1774 பரவி நெஞ்சே தொழுதும் எழு-போய் அவன் பாலம் ஆய்
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன்?
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம்செய்து வந்து உந்து புல்லாணியே (7)


1775 அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய்
சலம்-அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு-
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே (8)


1776 ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர்ப்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்ப்
போதும் மாதே தொழுதும்-அவன் மன்னு புல்லாணியே (9)


1777 இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணிமேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலிமாலைகள்
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது-பாடு இல் வைகுந்தமே (10)
-------------

84. திருப்புல்லாணி: 2

1778 கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே? (1)


1779 முன்னம் குறள் உரு ஆய் மூவடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன்
பொன்னம் கழிக் கானல் புள் இனங்காள் புல்லாணி
அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனைச் செப்புமினே (2)


1780 வவ்வி துழாய்-அதன்மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வி அறியாது நிற்கும்கொல்? நித்திலங்கள்
பவ்வத் திரை உலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கு என் சிந்தை-நோய் செப்புமினே (3)


1781 பரிய இரணியனது ஆகம் அணி உகிரால்
அரி உரு ஆய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்கு
பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன்
அரி மலர்க் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே (4)


1782 வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்-தன்னை ஏசிலும் பேசிடினும்
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே (5)


1783 சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால்
செழுந் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தேன்-என்-தன் எழில் நிறமும் சங்குமே (6)


1784 கனை ஆர் இடி-குரலின் கார் மணியின் நா ஆடல்
தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனை ஆர் மணி மாடப் புல்லாணி கைதொழுதேன்
வினையேன்மேல் வேலையும் வெம் தழலே வீசுமே (7)


1785 தூம்பு உடைக் கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த
பாம்பின் அணையான் அருள்தந்தவா நமக்கு
பூஞ் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்-தனக்கு ஓர் வெம் தழலே (8)


1786 வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன்
ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே (9)


1787 பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை
கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார்
மன்னவர் ஆய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே (10)
-------------

85. திருக்குறுங்குடி: 1

1788 தவள இளம் பிறை துள்ளும் முந்நீர்
தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி
துவள என் நெஞ்சகம் சோர ஈரும்
சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன்
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்
என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மலர் நிற வண்ணர் மன்னு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (1)


1789 தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த
தண் மதியின் இள வாடை இன்னே
ஊதை திரிதந்து உழறி உண்ண
ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதைமையால் இருந்து
பேசிலும் பேசுக பெய்வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்வன்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)


1790 காலையும் மாலை ஒத்துண்டு கங்குல்
நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும்
பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம்
மற்றும் உள அவை வந்திடாமுன்
கோல மயில் பயிலும் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (3)


1791 கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து
கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள
ஓர் இரவும் உறங்காதிருப்பேன்-
பெரு மணி வானவர் உச்சி வைத்த
பேர் அருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (4)


1792 திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன்
தீம் குழல் ஒசையும் தென்றலோடு
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற
கோல இளம்பிறையோடு கூடி
பண்டைய அல்ல இவை நமக்கு
பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (5)


1793 எல்லியும் நன் பகலும் இருந்தே
ஏசிலும் ஏசுக ஏந்திழையார்
நல்லர் அவர் திறம் நாம் அறியோம்
நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும்
மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளர் இள முல்லை புல்கு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (6)


1794 செங் கண் நெடிய கரிய மேனித்
தேவர் ஒருவர் இங்கே புகுந்து என்
அங்கம் மெலிய வளை கழல
ஆதுகொலோ? என்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு
ஆடும்-அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (7)


1795 கேவலம் அன்று கடலின் ஓசை
கேள்மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என்
ஆவி அளவும் அணைந்து நிற்கும்
அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு
ஏ வலம் காட்டி இவன் ஒருவன்
இப்படியே புகுந்து எய்திடாமுன்
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (8)


1796 சோத்து என நின்று தொழ இரங்கான்
தொல் நலம் கொண்டு எனக்கு இன்றுதாறும்
போர்ப்பது ஓர் பொன்-படம் தந்து போனான்
போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்று அவன்-தன்
மொய் அகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர்-கோன் விரும்பும்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (9)


1797 செற்றவன் தென் இலங்கை மலங்க
தேவர் பிரான் திரு மா மகளைப்
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர்-அருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன்
கண் அகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (10)
--------------

86. திருக்குறுங்குடி: 2

1798 அக்கும் புலியின் அதளும் உடையார்-அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்-
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே 1


1799 துங்க ஆர் அரவத் திரை வந்து உலவ தொடு கடலுள்
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்-
செங் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே 2


1800 வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்!-
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவும் ஊர்-
ஏழைச் செங்கால் இன் துணை நாரைக்கு இரை தேடி
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே 3


1801 சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர்போலும்-
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே-தான் மணம் நாறும் குறுங்குடியே 4


1802 கவ்வைக் களிற்று மன்னர் மாள கலி மாத் தேர்
ஐவர்க்கு ஆய் அன்று அமரில் உய்த்தான் ஊர்போலும்-
மை வைத்து இலங்கு கண்ணார்-தங்கள் மொழி ஒப்பான்
கொவ்வைக் கனி வாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே 5


1803 தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!-
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில்
கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே 6


1804 வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்!-
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே 7


1805 நார் ஆர் இண்டை நாள் மலர் கொண்டு நம் தமர்காள்
ஆரா அன்போடு எம்பெருமான் ஊர்-அடைமின்கள்-
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர் வாய் நாரை பேடையொடு ஆடும் குறுங்குடியே 8


1806 நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே 9


1807 சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம்
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலை ஆர் பாடல் பாடப் பாவம் நில்லாவே 10
--------------

87. திருவல்லவாழ்

1808 தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தம் ஆய் ஆதி ஆய் ஆதிக்கும் ஆதி ஆய் ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 1


1809 மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும்
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 2


1810 பூண் உலாம் மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய் இது என்று
பேணுவார் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீள் நிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 3


1811 பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம்-அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல்
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 4


1812 மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கைமேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 5


1813 உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய் செய்து நின்று ஐவர்-தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 6


1814 நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் எனக் கொண்டு வாளா
பேயர்-தாம் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீ உலாம் வெம் கதிர் திங்கள் ஆய் மங்குல் வான் ஆகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 7


1815 மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உயக் கருதினாயேல்
சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 8


1816 வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உயக் கருதினாயேல்
தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 9


1817 மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள்-தம்மைச்
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன்
கறை உலாம் வேல்வல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார்
இறைவர் ஆய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே 10
-----------------

88. திருமாலிருஞ்சோலை: 1

1818 முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார்
கலவியை விடு தடுமாறல்
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
ஆய எம் அடிகள்-தம் கோயில்-
சந்தொடு மணியும் அணி மயில் தழையும்
தழுவி வந்து அருவிகள் நிரந்து
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (1)


1819 இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி
எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர் முடிக் கடவுள்-தம் கோயில்-
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில்
விரை மலர் குறிஞ்சியின் நறுந் தேன்
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (2)


1820 பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த
பெரு நிலம் அருளின் முன் அருளி
அணி வளர் குறள் ஆய் அகல்-இடம் முழுதும்
அளந்த எம் அடிகள்-தம் கோயில்-
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில்
குறவர்-தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (3)


1821 சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து
சுடு சரம் அடு சிலைத் துரந்து
நீர்மை இலாத தாடகை மாள
நினைந்தவர் மனம் கொண்ட கோயில்-
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில்
கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (4)


1822 வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய
மணி முடி ஒருபதும் புரள
அணங்கு எழுந்து அவன்-தன் கவந்தம் நின்று ஆட
அமர்செய்த அடிகள்-தம் கோயில்-
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப
பிரசம் வந்து இழிதர பெருந் தேன்
மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (5)


1823 விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று
விளங்கனிக்கு இளங் கன்று விசிறி
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த
கூத்த எம் அடிகள்-தம் கோயில்-
தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிற
தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (6)


1824 தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர்
செழுந் திரள் பனங்கனி உதிர
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர்
எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
வானகச் சோலை மரகதச் சாயல்
மா மணிக் கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (7)


1825 புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ
பொரு கடல் அரவணைத் துயின்று
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த
பனி முகில் வண்ணர்-தம் கோயில்-
கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின்
கவுள் வழி களி வண்டு பருக
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (8)


1826 புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள்
ஒத்தன பேசவும் உவந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
தாழ்வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (9)


1827 வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல்
சூழ் வயல் ஆலி நல் நாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன்
கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
ஆள்வர்-இக் குரை கடல் உலகே (10)
-------------

89. திருமாலிருஞ்சோலை: 2

1828 மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்கொலோ? (1)


1829 புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி-தன்னை
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும்கொலோ-கயல் கண்ணி எம் காரிகையே? (2)


1830 உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆல் இலைமேல்
கண்துயில் கொண்டு உகந்த கரு மாணிக்க மா மலையை
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
அண்டர்-தம் கோவினை இன்று அணுகும்கொல்-என் ஆய்-இழையே? (3)


1831 சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரம் சுடரை
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை இன்று நணுகும்கொல்-என் நல் நுதலே? (4)


1832 தானவன் வேள்வி-தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
வானவர்-கோனை இன்று வணங்கித் தொழ வல்லள்கொலோ? (5)


1833 நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி-தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ? (6)


1834 புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து
கள்ளச் சகடு உதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாள் நுதலாள் வணங்கித் தொழ வல்லள்கொலோ? (7)


1835 பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று
காத்தவன்-தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கைதொழவும் முடியும் கொல்-என் மொய் குழற்கே? (8)


1836 வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நணுகும் கொல்-என் நல் நுதலே? (9)


1837 தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற
ஆடல் பறவையனை அணி ஆய்-இழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை-பாவங்களே (10)
--------------

90. திருக்கோட்டியூர்

1838 எங்கள் எம் இறை எம் பிரான்
இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்-
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்-
பொங்கு தண் அருவி புதம் செய்ய
பொன்களே சிதற இலங்கு ஒளி
செங்கமலம் மலரும்-திருக்கோட்டியூரானே (1)


1839 எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை
இன் நகைத் துவர் வாய் நில-மகள்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்-
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை
மாலையொடும் அணைந்த மாருதம்
தெய்வம் நாற வரும்-திருக்கோட்டியூரானே (2)


1840 வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
விண்ணவர்-தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை
சந்தனம் உந்தி வந்து அசை
தெள்ளு நீர்ப் புறவில்-திருக்கோட்டியூரானே (3)


1841 ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு
இசைந்து உடம்பில் ஓர்
கூறு-தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்-
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி
இன் இள வண்டு நல் நறும்
தேறல் வாய்மடுக்கும்-திருக்கோட்டியூரானே (4)


1842 வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன்
விண்ணவர்-கோன் மதுமலர்த்
தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான்-
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி
மாகம்மீது உயர்ந்து ஏறி வான் உயர்
திங்கள்-தான் அணவும்-திருக்கோட்டியூரானே (5)


1843 காவலன் இலங்கைக்கு இறை கலங்க
சரம் செல உய்த்து மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்-
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால்
உறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும்-திருக்கோட்டியூரானே (6)


1844 கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ-நிரைக்கு
அழிவு என்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்
மல்லிகை மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும்-திருக்கோட்டியூரானே (7)


1845 பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச்
செகுத்து அடியேனை ஆள் உகந்து
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள்-தம் பெருமான்-
தூங்கு தண் பலவின் கனி தொகு
வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்-திருக்கோட்டியூரானே (8)


1846 கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார்
தட மா மலர்மிசை
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர்
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி
ஆறு அங்கம் வல்லவர் தொழும்
தேவ-தேவபிரான்-திருக்கோட்டியூரானே (9)


1847 ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்
தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக்கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை
இன் தமிழால் நினைந்த இந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும்-வான் உலகே (10)
------------

91. பதினென் திருப்பதிகள்

1848 ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே (1)


1848 பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-
தன்னை யாம் சென்று காண்டும்-தண்காவிலே (2)


1850 வேலை ஆல் இலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆர் அமுதத்தினை பைந் துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும்-நாங்கூரிலே (3)


1851 துளக்கம் இல் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பு இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறைக் காண்டுமே (4)


1852 சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண்
விடலையைச் சென்று காண்டும்-மெய்யத்துள்ளே (5)


1853 வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம்
கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே (6)


1854 கூந்தலார் மகிழ் கோவலன் ஆய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள்-பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும்-வெஃகாவுளே (7)


1855 பத்தர் ஆவியை பால் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர்க் காண்டுமே (8)


1856 கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை
கொம்பு உலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும்-நாவாயுளே (9)


1857 பெற்ற மாளிகைப் பேரில் மணாளனை
கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த
சொல் திறம்-இவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே (10)
----------

92. பொங்கத்தம் பொங்கோ

1858 இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை
இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்
பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன்
பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்?
குரக்கு-நாயகர்காள் இளங்கோவே
கோல வல் வில் இராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள்
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (1)


1859 பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப்
பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான்
செய்வது ஒன்று அறியா அடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்
ஒருவர்-தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த எம் பெருமான் எம்மைக் கொல்லேல்
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (2)


1860 தண்டகாரணியம் புகுந்து அன்று
தையலை தகவிலி எம் கோமான்
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர்
குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இக் குடி-தன்னைப்
பேசுகின்றது என்? தாசரதீ உன்
அண்டவாணர் உகப்பதே செய்தாய்
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (3)


1861 எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன்
தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே
நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று
நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்
வேரி வார் பொழில் மா மயில் அன்ன
அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின்
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (4)


1862 செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன்
சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து
வம்பு உலாம் கடி காவில் சிறையா
வைத்ததே குற்றம் ஆயிற்றுக் காணீர்
கும்பனோடு நிகும்பனும் பட்டான்
கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (5)


1863 ஓத மா கடலைக் கடந்து ஏறி
உயர்கொள் மாக் கடி காவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
தூது வந்த குரங்குக்கே உங்கள்
தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (6)


1864 தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று
தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு
வாழகில்லா மதி இல் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை
எங்களை ஒழியக் கொலையவனை
சூழுமா நினை மா மணி வண்ணா
சொல்லினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (7)


1865 மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா
அம் கயல் கண்ணினார்கள் இருப்ப
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து
தஞ்சமே சில தாபதர் என்று
புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த
புன்மையாளன் நெஞ்சில் புக எய்த
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (8)


1866 புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில்
பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின்
சரங்களே கொடிது ஆய் அடுகின்ற
சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே
இலங்கு வெம் கதிரோன்-தன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல்
கூறினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (9)


1867 அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர
அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி
புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ் உலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்
இம்மையே இடர் இல்லை இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின்
சாற்றினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (10)
--------------

93. குழமணிதூரம்

1868 ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே (1)


1869 எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான்
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப்போனான்_-குழமணிதூரமே (2)


1870 ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்குக்
காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில்போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று
கோலம் ஆக ஆடுகின்றோம்-குழமணிதூரமே (3)


1871 மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரி சிலையால்
கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே (4)


1872 வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான்-தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே (5)


1873 கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்லகில்லாது அஞ்சினோம்காண் வெம் கதிரோன் சிறுவா
கொல்லவேண்டா ஆடுகின்றோம்-குழமணிதூரமே (6)


1874 மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண ஆடீர்-குழமணிதூரமே (7)


1875 கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே (8)


1876 ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்மின்
கூடிக் கூடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே (9)


1877 வென்ற தொல் சீர்த் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர்
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தைக்
கன்றி நெய்ந் நீர் நின்ற வேல் கைக் கலியன் ஒலிமாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடிநின்று ஆடுமினே (10)
-----------

94. கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

1878 சந்த மலர்க் குழல் தாழ தான் உகந்து ஓடி தனியே
வந்து என் முலைத்தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே (1)


1879 வங்க மறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட உன்னைக் கூவியும் காணாதிருந்தேன்
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே? (2)


1880 திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் (3)


1881 மக்கள் பெறு தவம் போலும்-வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு-ஒக்கும் முதல்வா மதக் களிறு அன்னாய்
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலைமேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் (4)


1882 மைத்த கருங் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போது அன்றி என்-தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் (5)


1883 பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் (6)


1884 தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க
வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ
நன் மகள் ஆய்மகளோடு நானில-மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே (7)


1885 உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள்-தம் ஆ-நிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் (8)


1886 பெற்றத் தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங் கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்று இனம் தோறும் மறித்து கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே (9)


1887 இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல்கொண்டு செங்கண் நெடியவன்-தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே (10)
--------------

95. சப்பாணி கொட்ட வேண்டுதல்

1888 பூங் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்க புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி
ஒளி மணி வண்ணனே சப்பாணி (1)


1889 தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி
மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 2


1890 தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால் ஆர்க்க தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி
தாமரைக் கண்ணனே சப்பாணி (3)


1891 பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சு உண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி
கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி (4)


1892 சோத்து என நின்னைத் தொழுவன் வரம் தர
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி
தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி (5)


1893 கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நான் அவல் அப்பம் தருவன் கருவிளைப்
பூ அலர் நீள் முடி நந்தன்-தன் போர் ஏறே
கோவலனே கொட்டாய் சப்பாணி
குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி (6)


1894 புள்ளினை வாய் பிளந்து பூங் குருந்தம் சாய்த்து
துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி
பேய் முலை உண்டானே சப்பாணி (7)


1895 யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாய வலவைப் பெண் வந்து முலை தர
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி
மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி (8)


1896 கள்ளக் குழவி ஆய் காலால் சகடத்தைத்
தள்ளி உதைத்திட்டு தாய் ஆய் வருவாளை
மெள்ளத் தொடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி
மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி (9)


1897 கார் ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கையர்-கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தார் ஆளா கொட்டாய் சப்பாணி
தட மார்வா கொட்டாய் சப்பாணி (10)
------------

96. மற்றை அவதாரங்களின் மேன்மையோடு
கிருஷ்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்


1898 எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே?
-நர நாரணன் ஆய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம் பெருமான்
அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும்
நெருக்கிப் புக பொன் மிடறு அத்தனைபோது
அங்காந்தவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (1)


1899 குன்று ஒன்று மத்தா அரவம் அளவி
குரை மா கடலைக் கடைந்திட்டு ஒருகால்
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர
நினைந்த பெருமான் அது அன்றியும் முன்
நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ்
உலகு ஏழ் ஒழியாமை நம்பி
அன்று உண்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (2)


1900 உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள்
உலப்பு இல் வலியார்-அவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ
அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று
மலை போல் அவுணன் உடல் வள் உகிரால்
அளைந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (3)


1901 தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான்
சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த
பெருமான் திருமால் விரி நீர் உலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை
மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய்
அளந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (4)


1902 நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும்
அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்
செல வைத்த பிரான் அது அன்றியும் முன்
வேண்டாமை நமன்-தமர் என் தமரை
வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ்
ஆண்டான்-அவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (5)


1903 பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப்
பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்கவல்ல
பெருமான் திருமால் அது அன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன்
சினத்தோள்-அவை ஆயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (6)


1904 படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள்
பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத்
தெளியா அரக்கர் திறல் போய் அவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (7)


1905 நெறித்திட்ட மென் கூழை நல் நேர்-இழையோடு
உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு
இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர்
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்
செழு நீள் முடி தோளொடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (8)


1906 சுரிந்திட்ட செங் கேழ் உளைப் பொங்கு அரிமா
தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய்
இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து
மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (9)


1907 நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்
வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு
ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
கலியன் ஒலிசெய்த தமிழ்-மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி
இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே (10)
----------

97. கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும்
ஆய்ச்சியர் முறையிடுதலும்


1908 மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம்
அதனால் பிறர் மக்கள்-தம்மை
ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று
இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்
நங்கைகாள் நான் என் செய்கேன்?
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்துத்
தயிர் கடைகின்றான் போலும் (1)


1909 காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப்
போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங் குஞ்சி நந்தன் மகன் அல்லால்
மற்று வந்தாரும் இல்லை
மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள்
வெண்ணெயே அன்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன்
என் செய்கேன்? என் செய்கேனோ? (2)


1910 தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள்
உறிமேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை
வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்
கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும்
பேதையேன் என் செய்கேனோ? (3)


1911 மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற
வளை வண்ண நல் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது
அவன் இவை செய்தறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை
போகின்றவா தவழ்ந்திட்டு
இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை
என் செய்கேன்? என் செய்கேனோ? (4)


1912 தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்
தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே
விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்து துகில் பற்றிக் கீறி
படிறன் படிறுசெய்யும்
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்? நங்காய்
என் செய்கேன்? என் செய்கேனோ? (5)


1913 மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே
அல்லில்-தான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி
கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய்
என் செய்கேன்? என் செய்கேனோ? (6)


1914 ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு
அன்று ஆயர் விழவு எடுப்ப
பாசனம் நல்லன பண்டிகளால் புகப்
பெய்த அதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு
உன் மகன் இன்று நங்காய்
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி
வளைத்து உண்டு இருந்தான் போலும் (7)


1915 தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும்
ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு
எள்கி இவனை நங்காய்
சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என்று
இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை உண்ட பின்னை இப்
பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே (8)


1916 ஈடும் வலியும் உடைய இந் நம்பி
பிறந்த எழு திங்களில்
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி
யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்வன் கிடந்து
திருவடியால் மலைபோல்
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
உரப்புவது அஞ்சுவனே (9)


1917 அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்
ஆயிரம் நாழி நெய்யை
பஞ்சிய மெல் அடிப் பிள்ளைகள் உண்கின்று
பாகம்-தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என்
கைவலத்து ஆதும் இல்லை
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ
என் செய்கேன்? என் செய்கேனோ? (10)


1918 அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ-
நம்பீ ஆயர் மட மக்களை?
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு
அரவு ஏர் இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்று
மரம் ஏறி இருந்தாய் போலும் (11)

1919 அச்சம் தினைத்தனை இல்லை இப் பிள்ளைக்கு
ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு
உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங் கடம்பு ஏறி விசைகொண்டு
பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு
பிணங்கி நீ வந்தாய் போலும் (12)


1920 தம்பரம் அல்லன ஆண்மைகளைத்
தனியே நின்று தாம் செய்வரோ?
எம் பெருமான் உன்னைப் பெற்ற வயிறு உடையேன்
இனி யான் என் செய்கேன்?
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல்
அங்கு அனல் செங் கண் உடை
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு
பிணங்கி நீ வந்தாய் போலும் (13)


1921 அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து
அஞ்ச அரு வரைபோல்
மன்னு கருங் களிற்று ஆர் உயிர் வவ்விய
மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன்
காமரு சீர்க் கலிகன்றி
இன் இசை மாலைகள் ஈர் ஏழும் வல்லவர்க்கு
ஏதும் இடர் இல்லையே (14)
-------------

98. ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்

1922 காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து
தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து
போது மறுத்து புறமே வந்து நின்றீர்-
ஏதுக்கு? இது என்? இது என்? இது என்னோ? (1)


1923 துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவர் ஆக முடித்து கலிக் கச்சுக் கட்டி
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர்-
இவர் ஆர்? இது என்? இது என்? இது என்னோ? (2)


1924 கருளக் கொடி ஒன்று உடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடம்-அது உறுக்கி நிமிர்த்தீர்
மருளைக்கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என்? இது என்? இது என்னோ? (3)


1925 நாமம் பலவும் உடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப் பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து-இது என்? இது என்? இது என்னோ? (4)


1926 சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்-
எற்றுக்கு? இது என்? இது என்? இது என்னோ? (5)


1927 ஆன்-ஆயரும் ஆ-நிரையும் அங்கு ஒழிய
கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்-
ஏனோர்கள் முன் என்? இது என்? இது என்னோ? 6


1928 மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
சொல்லாது ஒழியீர் சொன்னபோதினால் வாரீர்-
எல்லே இது என்? இது என்? இது என்னோ? (7)


1929 புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக் காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர்-
எக்கே இது என்? இது என்? இது என்னோ? (8)


1930 ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடி திரு மா மகள் மண்மகள் நிற்ப-
ஏடி இது என்? இது என்? இது என்னோ? (9)


1931 அல்லிக் கமலக் கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி
எல்லிப் பொழுது ஊடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார்-அவர் துக்கம் இலரே (10)
----------

99. பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு

1932 புள் உரு ஆகி நள் இருள் வந்த
பூதனை மாள இலங்கை
ஒள் எரி மண்டி உண்ணப் பணித்த
ஊக்கம்-அதனை நினைந்தோ-
கள் அவிழ் கோதை காதலும் எங்கள்
காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை-தன் கையில் கிண்ணமே ஒக்கப்
பேசுவது? எந்தை பிரானே (1)


1933 மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி
மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆ-நிரை காத்த
ஆண்மை கொலோ? அறியேன் நான்-
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா
நீ இவள்-தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
முன் கை வளை கவர்ந்தாயே (2)


1934 ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி
ஆற்றலை ஆற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம்
கடந்த நின் கடுந் திறல் தானோ-
நேர் இழை மாதை நித்திலத் தொத்தை
நெடுங் கடல் அமுது அனையாளை
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம்
இவள் எனக் கருதுகின்றாயே? (3)


1935 மல்கிய தோளும் மான் உரி அதளும்
உடையவர்-தமக்கும் ஓர் பாகம்
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த
கரதலத்து அமைதியின் கருத்தோ?
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு
வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி என்-நம்பி இவளை நீ உங்கள்
தொண்டர் கைத் தண்டு என்ற ஆறே? (4)


1936 செரு அழியாத மன்னர்கள் மாள
தேர் வலம் கொண்டு அவர் செல்லும்
அரு வழி வானம் அதர்படக் கண்ட
ஆண்மை கொலோ? அறியேன் நான்-
திருமொழி எங்கள் தே மலர்க் கோதை
சீர்மையை நினைந்திலை அந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள்
இவள் எனப் பேசுகின்றாயே (5)


1937 அரக்கியர் ஆகம் புல் என வில்லால்
அணி மதிள் இலங்கையார்-கோனைச்
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற
சேவகமோ செய்தது இன்று?-
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம்
கொண்டு முன்னே நின்று போகாய்
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல்
என் செய்வது? எந்தை பிரானே (6)


1938 ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச
அலை கடல் உலகம் முன் ஆண்ட
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ
படை மழுப் பற்றிய வலியோ-
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு
வந்து முன்னே நின்று போகாய்?
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது-எந்தாய்!-
குறுந்தடி? நெடுங் கடல் வண்ணா (7)


1939 பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற
வள் உகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த
பெருமைகொலோ செய்தது இன்று?-
பெருந் தடங் கண்ணி சுரும்பு உறு கோதை
பெருமையை நினைந்திலை பேசில்
கருங் கடல் வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம்
இவள் எனக் கருதுகின்றாயே (8)


1940 நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய்
நின்ற நின் நீர்மையை நினைந்தோ-
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று
அன்னது ஓர் தேற்றன்மை தானோ-
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய
பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்
ஆக நின் மனத்து வைத்தாயே? (9)


1941 வேட்டத்தைக் கருதாது அடி-இணை வணங்கி
மெய்ம்மையே நின்று எம் பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
தோட்டு அலர் பைந்தார்ச் சுடர் முடியானைப்
பழமொழியால் பணிந்து உரைத்த
பாட்டு இவை பாட பத்திமை பெருகிச்
சித்தமும் திருவொடு மிகுமே (10)
----------------

100. தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்

1942 திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள்-தன் கணவன்
மருத் தார் தொல் புகழ் மாதவனை வர-
திருத்தாய் செம்போத்தே (1)


1943 கரையாய் காக்கைப் பிள்ளாய்
கரு மா முகில் போல் நிறத்தன்
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர-
கரையாய் காக்கைப் பிள்ளாய் (2)


1944 கூவாய் பூங் குயிலே
குளிர் மாரி தடுத்து உகந்த
மா வாய் கீண்ட மணி வண்ணனை வர-
கூவாய் பூங் குயிலே (3)


1945 கொட்டாய் பல்லிக் குட்டி
குடம் ஆடி உலகு அளந்த
மட்டு ஆர் பூங் குழல் மாதவனை வர-
கொட்டாய் பல்லிக் குட்டி (4)


1946 சொல்லாய் பைங் கிளியே
சுடர் ஆழி வலன் உயர்த்த
மல் ஆர் தோள் வட வேங்கடவனை வர-
சொல்லாய் பைங் கிளியே (5)


1947 கோழி கூ என்னுமால்
தோழி நான் என் செய்கேன்?
ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று-
கோழி கூ என்னுமால் (6)


1948 காமற்கு என் கடவேன்?
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்ய-
காமற்கு என் கடவேன்? (7)


1949 இங்கே போதும்கொலோ-
இன வேல் நெடுங் கண் களிப்ப?
கொங்கு ஆர் சோலைக் குடந்தைக் கிடந்த மால்
இங்கே போதும்கொலோ? (8)


1950 இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை-
இன்னார் என்று அறியேன் (9)


1951 தொண்டீர் பாடுமினோ
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்-கோன்
ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ (10)
---------------

101. பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்

1952 குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ-
தென்றல் வந்து தீ வீசும்? என் செய்கேன் 1


1953 காரும் வார் பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ-
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈர வாடை-தான் ஈரும் என்னையே? 2


1954 சங்கும் மாமையும் தளரும் மேனிமேல்
திங்கள் வெம் கதிர் சீறும்-என் செய்கேன்?-
பொங்கு வெண் திரைப் புணரி வண்ணனார்
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே 3


1955 அங்கு ஓர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள்
கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை கொலோ-
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே? 4


1956 அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணனை
பங்கமா இரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே கொலோ-
பொங்கு மா கடல் புலம்புகின்றதே? 5


1957 சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ-
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே? 6


1958 பூவை வண்ணனார் புள்ளின்மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ-
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து
ஆவியே இலக்கு ஆக எய்வதே? 7


1959 மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம்
மாலின் அம் துழாய் வந்து என் உள்புக
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர்
ஆலி வந்ததால்-அரிது காவலே 8


1960 கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும்-மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூந் துளவின் வாசமே
வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே 9


1961 அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனை செங் கண் மாலினை
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி-
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே 10
------------

102. தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்

1962 குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணைமேல் கிடந்து ஈர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ? 1


1963 பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி உண்ட அவ் வாயன் நிற்க இவ் ஆயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளமையே 2


1964 மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்
அல்லி மலர்த் தண் துழாய் நினைந்திருந்தேனையே
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும்
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே 3


1965 பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கருந் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும்
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்? 4


1966 அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்-
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூங் குழல்-
பின்னை மணாளர்திறத்தம் ஆயின பின்னையே 5


1967 ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள்-தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே 6


1968 காமன்-தனக்கு முறை அல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தானும் மகன் சொல்லில்
யாமங்கள் தோறு எரி வீசும் என் இளங் கொங்கைகள்
மா மணி வண்ணர்திறத்தவாய் வளர்கின்றவே 7


1969 மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர்
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ?
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே 8


1970 காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் நலத்தின் மிகு
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணல் ஆம்கொலோ? 9


1971 வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர்-தங்கள்மேல்
என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே 10
---------

103. தலைவி இரங்கிக் கூறல்

1972 மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப்
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ்
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு-இது காணீர்-
என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே 1


1973 இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர்
பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங் கண்
பெருந் தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே 2


1974 அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே-இவர் எண்ணும் எண்ணம்? அறியோமே 3


1975 அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு-
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி
சிறியான் ஓர் பிள்ளை ஆய் மெள்ள நடந்திட்டு
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தார்-தம்மையே? 4


1976 தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே 5


1977 வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார்-ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும்
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே 6


1978 கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்?
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே? 7


1979 பாடோமே-எந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே-ஆயிரம் பேரானை? பேர் நினைந்து
சூடோமே-சூடும் துழாய் அலங்கல்? சூடி நாம்
கூடோமே-கூடக் குறிப்பு ஆகில்? நல் நெஞ்சே 8


1980 நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும்
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
பொன்னம் சேர் சேவடிமேல் போது அணியப்பெற்றோமே 9


1981 பெற்று ஆரார்-ஆயிரம் பேரானைப் பேர் பாட
பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் இவை கேட்கல்
உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே 10
------------

104. திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்

1982 நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர்
வள நாடு மூட இமையோர்
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன
அரண் ஆவன் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி
அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை
மறவாது இறைஞ்சு என் மனனே 1


1983 செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி
திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப
இமையோர்கள் நின்று கடைய
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து
சுழலக் கிடந்து துயிலும்
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன
திருமால் நமக்கு ஓர் அரணே 2


1984 தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர்
உம்பர்-உலகு ஏழினோடும் உடனே
மாதிரம் மண் சுமந்த வட குன்றும் நின்ற
மலை ஆறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின்
ஒருபால் ஒடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி
அது நம்மை ஆளும் அரசே 3


1985 தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க
எரி கான்று இரண்டு தறு கண்
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று
பரியோன் சினங்கள் அவிழ
வளை உகிர்-ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம்
மதியாது சென்று ஓர் உகிரால்
பிளவு எழ விட்ட குட்டம்-அது வையம் மூடு
பெரு நீரில் மும்மை பெரிதே 4


1986 வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு
ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர
செந் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம்
அடி மூன்று இரந்து பெறினும்
மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச
மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம்-
அது நம்மை ஆளும் அரசே 5


1987 இரு நில மன்னர்-தம்மை இரு நாலும் எட்டும்
ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க
மழுவாளில் வென்ற திறலோன்
பெரு நில-மங்கை மன்னர் மலர்-மங்கை நாதர்
புலமங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகி
யவர் நம்மை ஆள்வர் பெரிதே 6


1988 இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன
இனம் ஆய மான் பின் எழில் சேர்
அலை மலி வேல்கணாளை அகல்விப்பதற்கு
ஓர் உரு ஆய மானை அமையா
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை
பொடி ஆக வென்றி அமருள்
சிலை மலி செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள்
திருமால் நமக்கு ஓர் அரணே 7


1989 முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண
முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ
அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த
அது நம்மை ஆளும் அரசே 8


1990 துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது
தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி
உக உண்டு வெண்ணெய் மருவி
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட
அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல்
வினைப் பற்று அறுக்கும் விதியே 9


1991 கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று
கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள்
திருமாலை வேலை புடை சூழ்
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு
கலிகன்றி சொன்ன பனுவல்
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்
அவர் ஆள்வர் உம்பர் உலகே 10
------------

105. திருச்சாழல்

1992 மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ!-
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள்
வானவர்-தம் சென்னி மலர் கண்டாய் சாழலே 1


1993 தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ!-
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே 2


1994 ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காண் ஏடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ்
ஏழ் உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே 3


1995 அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகிப் போய் ஆய்ப்பாடி
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காண் ஏடீ!-
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே 4


1996 வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ-
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே (5)


1997 கன்றப் பறை கறங்க கண்டவர்-தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ!-
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே (6)


1998 கோதை வேல் ஐவர்க்கு ஆய் மண் அகலம் கூறு இடுவான்
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ!-
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே (7)


1999 பார் மன்னர் மங்கப் படைதொட்டு வெம் சமத்துத்
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ!-
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர்-தங்கள் தலைமேலான் சாழலே (8)


2000 கண்டார் இரங்க கழியக் குறள் உரு ஆய்
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே (9)


2001 கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ!-
வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி
உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே (10)
-----------

106. உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான்
உய்வித்தமை கூறி உலகிற்கு உபதேசித்தல்


2002 மைந் நின்ற கருங் கடல்வாய் உலகு இன்றி
வானவரும் யாமும் எல்லாம்
நெய்ந் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்
நெடுங் காலம் கிடந்தது ஓரீர்
எந் நன்றி செய்தாரா ஏதிலோர்
தெய்வத்தை ஏத்துகின்றீர்?
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள்
அண்டனைய ஏத்தீர்களே (1)


2003 நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது
ஓடி நிமிர்ந்த காலம்
மல் ஆண்ட தடக் கையால் பகிரண்டம்
அகப்படுத்த காலத்து அன்று
எல்லாரும் அறியாரோ? எம் பெருமான்
உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே? அவன் அருளே
உலகு ஆவது அறியீர்களே? (2)


2004 நெற்றிமேல் கண்ணானும் நிறை மொழி வாய்
நான்முகனும் நீண்ட நால் வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டின் ஒருவனையும்
உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர்க் கடல் அரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக்கொண்ட
கொற்றப்போர் ஆழியான் குணம் பரவாச்
சிறுதொண்டர் கொடிய ஆறே (3)


2005 பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம்
நெடுங் கடலே ஆன காலம்
இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம்
ஏழினையும் ஊழில் வாங்கி
முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் திரு வயிற்றில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட
கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே
கழல் தொழுமா கல்லீர்களே (4)


2006 பார் ஆரும் காணாமே பரவை மா
நெடுங் கடலே ஆன காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில்
நெடுங்காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல்
உலகு அளந்த உம்பர் கோமான்
பேராளன் பேரான பேர்கள்
ஆயிரங்களுமே பேசீர்களே (5)


2007 பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது
ஓடிப் பெருகு காலம்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன்
வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போய் இருக்க மற்று இங்கு ஓர் புதுத் தெய்வம்
கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ-
மாட்டாத தகவு அற்றீரே? 6


2008 மண் நாடும் விண் நாடும் வானவரும்
தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல்
தான் விழுங்கி உய்யக்கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத
போது எல்லாம் இனிய ஆறே 7


2009 மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் உரம் துரந்து
பரந்து ஏறி அண்டத்து அப்பால்
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம்
ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளந்த திரு வயிற்றின் அகம்படியில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ் சோதி நெடுந்தகையை
நினையாதார் நீசர்-தாமே 8


2010 அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த்
திரை ததும்ப ஆஆ என்று
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்
தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட
கொண்டல் கை மணி வண்ணன் தண்
குடந்தை நகர் பாடி ஆடீர்களே 9


2011 தேவரையும் அசுரரையும் திசைகளையும்
கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம் பெருமான்
உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கைக் கலிகன்றி
ஒலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திருமகளால் அருள்பெற்றுப்
பொன்-உலகில் பொலிவர்-தாமே 10
-------------

107. எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்

2012 நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை-
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே 1


2013 நீள்வான் குறள் உரு ஆய் நின்று இரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை-
கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே 2


2014 தூயானை தூய மறையானை தென் ஆலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை-வணங்கி அவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே 3


2015 கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்வு இடந்த
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை
தோடு ஆர் நறுந் துழாய் மார்வனை-ஆர்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே 4


2016 மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும்
கையானை-கை தொழா கை அல்ல கண்டாமே 5


2017 கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள் ஆய் ஓர் ஏனம் ஆய்ப் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று-
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே 6


2018 கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை-அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே 7


2019 வெறி ஆர் கருங் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறி ஆர் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானை செங் கண் நெடியானை-சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே 8


2020 தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை
தான் இடமாக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு-ஆள் ஆனார் அல்லாதார்
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே 9


2021 மெய்ந் நின்ற பாவம் அகல திருமாலைக்
கைந் நின்ற ஆழியான் சூழும் கழல் சூடிக்
கைந் நின்ற வேல் கைக் கலியன் ஒலி மாலை
ஐயொன்றும் ஐந்தும் இவை-பாடி ஆடுமினே 10
----------

108. பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார்
எம்பெருமானைப் பிரார்த்தித்தல்


2022 மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம்-
ஆற்றங்கரை வாழ் மரம்போல்-அஞ்சுகின்றேன்
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ (1)


2023 சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று அஞ்சி-
காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல்-
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா (2)


2024 தூங்கு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி-
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால்போல்-
தாங்காது உள்ளம் தள்ளும் என் தமரைக்கண்ணா (3)


2025 உரு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி-
இரு பாடு எரி கொள்ளியினுள்-எறும்பேபோல்-
உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா (4)


2026 கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்
தள்ளிப் புகப் பெய்திகொல் என்று அதற்கு அஞ்சி-
வெள்ளத்திடைப்பட்ட நரி இனம்போலே-
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா (5)


2027 படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே-
அடைய அருளாய் எனக்கு உன்-தன் அருளே (6)


2028 வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது-அடியேன்
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன்
தேம்பல் இளந் திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப்
பாம்பின் அணைப் பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ (7)


2029 அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!-
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ (8)


2030 நந்தா நரகத்து அழுந்தாவகை நாளும்-
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா!-
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே (9)


2031 குன்றம் எடுத்து ஆ-நிரை காத்தவன்-தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர்-தம்மேல்
என்றும் வினை ஆயின சாரகில்லாவே (10)
---------

திருமங்கை ஆழ்வார் - திருக்குறுந் தாண்டகம் (2032 – 2051)


2032 நிதியினை பவளத் தூணை
நெறிமையால் நினைய வல்லார்
கதியினை கஞ்சன் மாளக்
கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன்-விடுகிலேனே (1)


2033 காற்றினை புனலை தீயை
கடிமதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயம் ஏய
எழில் மணித் திரளை இன்ப
ஆற்றினை அமுதம்-தன்னை
அவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம்
கூறு-நீ கூறுமாறே (2)


2034 பா இரும் பரவை-தன்னுள்
பரு வரை திரித்து வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட
அப்பனை எம் பிரானை
வேய் இருஞ் சோலை சூழ்ந்து
விரி கதிர் இரிய நின்ற
மா இருஞ் சோலை மேய
மைந்தனை-வணங்கினேனே (3)


2035 கேட்க யான் உற்றது உண்டு
கேழல் ஆய் உலகம் கொண்ட
பூக் கெழு வண்ணனாரைப்
போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம்-தன்னால்
மனத்தினால் சிரத்தை-தன்னால்
வேட்கை மீதூர வாங்கி
விழுங்கினேற்கு இனியவாறே (4)


2036 இரும்பு அனன்று உண்ட நீர்போல்
எம் பெருமானுக்கு என்-தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமைபூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை
மருவி என் மனத்து வைத்து
கரும்பின் இன் சாறு போலப்
பருகினேற்கு இனியவாறே (5)


2037 மூவரில் முதல்வன் ஆய
ஒருவனை உலகம் கொண்ட
கோவினை குடந்தை மேய
குரு மணித் திரளை இன்பப்
பாவினை பச்சைத் தேனை
பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர்
என் சொல்லிப் புகழ்வர் தாமே? (6)


2038 இம்மையை மறுமை-தன்னை
எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை
திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என்-தன்
தலைமிசை மன்னுவாரே (7)


2039 வானிடைப் புயலை மாலை
வரையிடைப் பிரசம் ஈன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றை
திருவினை மருவி வாழார்-
மானிடப் பிறவி அந்தோ
மதிக்கிலர் கொள்க-தம் தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு
உறுதியே வேண்டினாரே (8)


2040 உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளிமேல் எறும்புபோலக்
குழையுமால் என்-தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம்
தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை அல்லால்
எழுமையும் துணை இலோமே (9)


2041 சித்தமும் செவ்வை நில்லாது
என் செய்கேன் தீவினையேன்?
பத்திமைக்கு அன்பு உடையேன்
ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே
முழங்கு ஒளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால்
யாதும் ஒன்று அறிகிலேனே (10)


2042 தொண்டு எல்லாம் பரவி நின்னைத்
தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான்
ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும்
ஆதி ஆய் நீதி ஆன
பண்டம் ஆம் பரம சோதி
நின்னையே பரவுவேனே (11)


2043 ஆவியை அரங்க மாலை
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மை இல் தொண்டனேன் நான்
சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறு என்று
அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவிபோல் வண்ணர் வந்து என்
கண்ணுளே தோன்றினாரே (12)


2044 இரும்பு அனன்று உண்ட நீரும்
போதரும் கொள்க என்-தன்
அரும் பிணி பாவம் எல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டுகொண்டு என்
கண்-இணை களிக்குமாறே (13)


2045 காவியை வென்ற கண்ணார்
கலவியே கருதி நாளும்
பாவியேன் ஆக எண்ணி
அதனுள்ளே பழுத்தொழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும்
சூழ் புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது
பாவியேன் ஆயினேனே (14)


2046 முன் பொலா இராவணன்-தன்
முது மதிள் இலங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
அடி-இணை பணிய நின்றார்க்கு
என்பு எலாம் உருகி உக்கிட்டு
என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு
ஆட்டுவன் அடியனேனே (15)


2047 மாய மான் மாயச் செற்று
மருது இற நடந்து வையம்
தாய் அமா பரவை பொங்கத்
தட வரை திரித்து வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு
என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு
சூட்டுவன் தொண்டனேனே (16)


2048 பேசினார் பிறவி நீத்தார்-
பேர் உளான் பெருமை பேசி
ஏசினார் உய்ந்து போனார்
என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன்
பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிது கொள்க-
அலை கடல் வண்ணர்பாலே (17)


2049 இளைப்பினை இயக்கம் நீக்கி
இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி
அன்பு அவர்கண்ணே வைத்து
துளக்கம் இல் சிந்தைசெய்து
தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார்
மெய்ம்மையைக் காண்கிற்பாரே? (18)


2050 பிண்டி ஆர் மண்டை ஏந்தி
பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த
ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம்
கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால்
மற்றையார்க்கு உய்யல் ஆமே? (19)


2051 வானவர்-தங்கள்-கோனும்
மலர்மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும்
சேவடிச் செங் கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன
வண் தமிழ்-மாலை நாலைந்து
ஊனம்-அது இன்றி வல்லார்
ஒளி விசும்பு ஆள்வர் தாமே (20)
----------------

திருமங்கை ஆழ்வார் - திரு நெடுந்தாண்டகம் (2052 – 2081)


2052 மின் உரு ஆய் முன் உருவில் வேதம் நான்கு ஆய்
விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள்-தான் ஆய்
பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப்
பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்
புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி
தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை
தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே (1)


2053 பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி
பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற
இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ
ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி
முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே (2)


2054 திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது
ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை-
கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே? (3)


2055 இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி
திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே (4)


2056 ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டம்மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி
தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே (5)


2057 அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர்-வேந்தன்
அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூங் கோவலூர் தொழுதும்-போது நெஞ்சே (6)


2058 வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள
வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த
வேள் முதலா வென்றான் ஊர்-விந்தம் மேய
கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட
கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்பு உடைய மலை-அரையன் பணிய நின்ற
பூங் கோவலூர்-தொழுதும்-போது நெஞ்சே (7)


2059 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)


2060 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே (9)


2061 பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால்
என் அறிவன்-ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய்
குணபால மத யானாய் இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி
திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே (10)


2062 பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள்
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மட மானை இது செய்தார்-தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!-
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? (11)


2063 நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே (12)


2064 கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும்
காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே (13)


2065 முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே (14)


2066 கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே (15)


2067 கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே (16)


2068 பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப
பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்
தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே (17)


2069 கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே (18)


2070 முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன்
மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே? (19)


2072 தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள
தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள
பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பார் ஆளன் பார் இடந்து பாரை உண்டு
பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேர் ஆளன் பேர் ஓதும் பெண்ணை மண்மேல்
பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே? (20)


2072 மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே (21)


2073 நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு
இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே (22)


2074 உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்
சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன
கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்
என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே (23)


2075 இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!-
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே (24)


2076 மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே
தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே (25)


2077 தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்
அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே (26)


2078 செங் கால மட நாராய் இன்றே சென்று
திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்
இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (27)


2079 தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்
சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால்
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
வரை உருவின் மா களிற்றை தோழீ என்-தன்
பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே (28)


2080 அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை
அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை
குன்றாத வலி அரக்கர் கோனை மாள
கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து
வென்றானை குன்று எடுத்த தோளினானை
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண் குடந்தைக் கிடந்த மாலை
நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (29)


2081 மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று
அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார் தொல்லைப்
பழவினையை முதல் அரிய வல்லார் தாமே (30)
-----------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்