Nālāyirat tivviyap pirapantam XI


வைணவ சமய நூல்கள்

Back

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் XI



நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
ஆழ்வார் பாசுரங்கள் நான்காம் ஆயிரம் (2971- 4000)

உள்ளடக்கம்
    23. நம்மாழ்வார் - திருவாய் மொழி (2791 - 3892)
    24. திருவரங்கத்து அமுதனார் - இராமாநுச நூற்றந்தாதி (3893 - 4000)
    ------------------

23. நம்மாழ்வார் திருவாய் மொழி (2791 – 3892)


ஆத்ம உபதேசம்

2791 உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே (1)


2792 மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும்
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே (2)


2793 இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே (3)


2794 நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே (4)


2795 அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே (5)


2796 நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே (6)


2788 திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே (7)


2789 சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே (8)


2790 உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே (9)


2791 பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே (10)


2792 கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே (11)
----------

உலகிற்கு உபதேசம்

2793 வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய்ம்மினே (1)


2794 மின்னின் நிலை இல
மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை
உன்னுமின் நீரே (2)


2795 நீர் நுமது என்று இவை
வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன்
நேர் நிறை இல்லே (3)


2796 இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு
எல்லை இல் அந் நலம்
புல்கு பற்று அற்றே (4)


2797 அற்றது பற்று எனில்
உற்றது வீடு உயிர்
செற்ற அது மன் உறில்
அற்று இறை பற்றே (5)


2798 பற்று இலன் ஈசனும்
முற்றவும் நின்றனன்
பற்று இலையாய் அவன்
முற்றில் அடங்கே (6)


2799 அடங்கு எழில் சம்பத்து
அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று
அடங்குக உள்ளே (7)


2800 உள்ளம் உரை செயல்
உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே (8)


2801 ஒடுங்க அவன்கண்
ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை
விடும்பொழுது எண்ணே (9)


2802 எண் பெருக்கு அந் நலத்து
ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன்
திண் கழல் சேரே (10)


2803 சேர்த்தடத் தென் குரு
கூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து
ஓர்த்த இப் பத்தே (11)
----------

அடியவர்க்கு எளியவன்

2804 பத்து உடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
ஏங்கிய எளியவே (1)


2805 எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு
இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல
கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்
முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன்
புறத்தனன் அமைந்தே (2)


2806 அமைவு உடை அறநெறி முழுவதும்
உயர்வு அற உயர்ந்து
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை
அற நிலம் அது ஆம்
அமைவு உடை அமரரும் யாவையும்
யாவரும் தான் ஆம்
அமைவு உடை நாரணன் மாயையை
அறிபவர் யாரே? (3)


2807 யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல
உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை
இலது இல்லை பிணக்கே (4)


2808 பிணக்கு அற அறு வகைச் சமயமும்
நெறி உள்ளி உரைத்த
கணக்கு அறு நலத்தனன் அந்தம் இல்
ஆதி அம் பகவன்
வணக்கு உடைத் தவநெறி வழிநின்று
புறநெறி களைகட்டு
உணக்குமின் பசை அற அவனுடை
உணர்வுகொண்டு உணர்ந்தே (5)


2809 உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன்
அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்டது ஒன்றே (6)


2810 ஒன்று எனப் பல என அறிவு அரும்
வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன்
அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும்
இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை
நம்முடை நாளே (7)


2811 நாளும் நின்று அடு நம பழமை அம்
கொடுவினை உடனே
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம்
மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம்
நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு
மாள்வது வலமே (8)


2812 வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்
உலகமும் தானும்
புலப்பட பின்னும் தன் உலகத்தில்
அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள
இவை அவன் துயக்கே (9)


2813 துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
அமரரைத் துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும்
பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலங்
கடந்த நல் அடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன்
வணங்குவன் அமர்ந்தே (10)


2814 அமரர்கள் தொழுது எழ அலை கடல்
கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச்
சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்
இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்
பிறவி அம் சிறையே (11)
----------

தலைமகள் தூதுவிடல்

2815 அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ? (1)


2816 என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே?
முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே (2)


2817 விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல் வினையே மாளாதோ? என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே (3)


2818 என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (4)


2819 நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே (5)


2820 அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்
அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே? (6)


2821 என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்
என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே? (7)


2822 நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே (8)


2823 நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ?
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே (9)


2824 உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே (10)


2825 அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே (11)
------------

மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

2826 வள ஏழ் உலகின் முதலாய
வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட
கள்வா என்பன் பின்னையும்
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்
வல் ஆன் ஆயர் தலைவனாய்
இள ஏறு ஏழும் தழுவிய
எந்தாய் என்பன் நினைந்து நைந்தே (1)


2827 நினைந்து நைந்து உள் கரைந்து உருகி
இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம்
புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
மாசூணாதோ? மாயோனே (2)


2828 மா யோனிகளாய் நடை கற்ற
வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று
நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும்
திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ் உயிர்க்கும்
தாயோன் தான் ஓர் உருவனே (3)


2829 தான் ஓர் உருவே தனி வித்து ஆய்
தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றும் ஆய்
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன்
வைகுந்தன் எம் பெருமானே (4)


2830 மான் ஏய் நோக்கி மடவாளை
மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில்
நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணிவண்ணா
மதுசூதா நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம்
சேருமாறு வினையேனே (5)


2831 வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்
விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள்
ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய்
என்று நைவன் அடியேனே (6)


2832 அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய்க் கண்ணி
புனைந்தான் தன்னை கண்ணனை
செடி ஆர் ஆக்கை அடியாரைச்
சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? (7)


2833 உண்டாய் உலகு ஏழ் முன்னமே
உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்
உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும்
மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டாவண்ணம் மண் கரைய
நெய் ஊண் மருந்தோ? மாயோனே (8)


2834 மாயோம் தீய அலவலைப்
பெரு மா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப் பால்
அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன்
மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான்
அம்மா மூர்த்தியைச் சார்ந்தே (9)


2835 சார்ந்த இரு வல் வினைகளும்
சரித்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்
திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி
அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும்
இவற்றின் உயிராம் நெடுமாலே (10)


2836 மாலே மாயப் பெருமானே
மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால்
மன்னு குருகூர்ச் சடகோபன்
பால் ஏய் தமிழர் இசைகாரர்
பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும்
வல்லார்க்கு இல்லை பரிவதே (11)
-------

ஆராதனைக்கு எளியவன்

2837 பரிவது இல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்
பிரிவகை இன்றி நல் நீர் தூய்
புரிவதுவும் புகை பூவே (1)


2838 மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதலவனுக்கு
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆள் செய்யும் ஈடே (2)


2839 ஈடும் எடுப்பும் இல் ஈசன்
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல்
ஆடும் என் அங்கம் அணங்கே (3)


2840 அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே (4)


2841 கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்
விள்கை விள்ளாமை விரும்பி
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே (5)


2842 அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர் திரை நீள் கடலானே (6)


2843 நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்கழிமின்னே (7)


2844 கழிமின் தொண்டீர்கள் கழித்துத்
தொழுமின் அவனை தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி ஆக்கம் தருமே (8)


2845 தரும அரும் பயன் ஆய
திருமகளார் தனிக் கேள்வன்
பெருமை உடைய பிரானார்
இருமை வினை கடிவாரே (9)


2846 கடிவார் தீய வினைகள்
நொடியாரும் அளவைக்கண்
கொடியா அடு புள் உயர்த்த
வடிவு ஆர் மாதவனாரே (10)


2847 மாதவன்பால் சடகோபன்
தீது அவம் இன்றி உரைத்த
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து
ஓத வல்லார் பிறவாரே (11)
------------

ஆராதிப்பார்க்கு மிக இனியன்

2848 பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார்
அறவனை ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே (1)


2849 வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத்
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே (2)


2850 ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே (3)


2851 மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ? (4)


2852 விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே? (5)


2853 பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ? (6)


2854 யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே? (7)


2855 என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை
முன்னை அமரர் முழுமுதல் தானே (8)


2856 அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலும்மோ? (9)


2857 அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே (10)


2858 குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே (11)
-------------

ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

2859 ஓடும் புள் ஏறி
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே (1)


2860 அம்மானாய்ப் பின்னும்
எம் மாண்பும் ஆனான்
வெம் மா வாய் கீண்ட
செம் மா கண்ணனே (2)


2861 கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண் ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே (3)


2862 வெற்பை ஒன்று எடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர்
கற்பன் வைகலே (4)


2863 வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே (5)


2864 கலந்து என் ஆவி
நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய்
நிலம் கொண்டானே (6)


2865 கொண்டான் ஏழ் விடை
உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே (7)


2866 ஆனான் ஆன் ஆயன்
மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில்
தான் ஆய சங்கே (8)


2867 சங்கு சக்கரம்
அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே (9)


2868 நாதன் ஞாலம் கொள்
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர்
வேத நீரனே (10)


2869 நீர்புரை வண்ணன்
சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து
ஓர்தல் இவையே (11)
---------------

ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

2870 இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழல் உளானே (1)


2871 சூழல் பலபல வல்லான்
தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்று ஆகி இடந்த
கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்
அவன் என் அருகவிலானே (2)


2872 அருகல் இலாய பெரும் சீர்
அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன் மேனி
வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்
பூமகளார் தனிக் கேள்வன்
ஒருகதியின் சுவை தந்திட்டு
ஒழிவு இலன் என்னோடு உடனே (3)


2873 உடன் அமர் காதல் மகளிர்
திருமகள் மண்மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர்
ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி
ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான்
கண்ணன் என் ஒக்கலையானே (4)


2874 ஒக்கலை வைத்து முலைப் பால்
உண் என்று தந்திட வாங்கிச்
செக்கம் செக அன்று அவள்பால்
உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும்
இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோற்றிய ஈசன்
மாயன் என் நெஞ்சின் உளானே (5)


2875 மாயன் என் நெஞ்சின் உள்ளான்
மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே
காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும்
சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன்
என்னுடைத் தோளிணையானே (6)


2876 தோள் இணை மேலும் நன் மார்பின்
மேலும் சுடர் முடி மேலும்
தாள் இணை மேலும் புனைந்த
தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான்
கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான்
என்னுடை நாவின் உளானே (7)


2877 நாவினுள் நின்று மலரும்
ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
அழிப்போடு அளிப்பவன் தானே
பூ இயல் நால் தடம் தோளன்
பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக்
கண்ணன் என் கண்ணின் உளானே (8)


2878 கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்
ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக்
கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தொடு உலகம்
ஆக்கி என் நெற்றி உளானே (9)


2879 நெற்றியுள் நின்று என்னை ஆளும்
நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக்
கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும்
நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்
வந்து எனது உச்சியுளானே (10)


2880 உச்சியுள்ளே நிற்கும் தேவ
தேவற்குக் கண்ண பிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி
வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன ஆயிரத்துள்ளே
இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய
நீள் கழல் சென்னி பொருமே (11)
-------------

ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

2881 பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே (1)


2882 கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே? (2)


2883 எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே (3)


2884 நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம்? இனி என்ன குறைவினம்?
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் (4)


2885 கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே (5)


2886 நீயும் நானும் இந் நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையும் ஆய் இவ் உலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே (6)


2887 எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம் பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே (7)


2888 செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே (8)


2889 நம்பியை தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ? (9)


2890 மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணொடு
மறப்பு அற என் உள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே? (10)


2891 மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே (11)
---------

பிரிவாற்றாமைக்கு வருந்தல்

2892 வாயும் திரை உகளும் கானல் மட நாராய்
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீது ஊர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே? (1)


2893 கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான்
தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே? (2)


2894 காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே (3)


2895 கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே? (4)


2896 ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே? (5)


2897 நைவாய எம்மேபோல் நாள் மதியே நீ இந் நாள்
மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாய் அரவு அணைமேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே? (6)


2898 தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே (7)


2899 இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே? (8)


2900 நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம் பெருமான்
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே? (9)


2901 வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே (10)


2902 சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே (11)
------------

திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்

2903 திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
எண்ணின் மீதியன் எம் பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே (1)


2904 ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரிஏறு அன்றியே? (2)


2905 ஏறனை பூவனை பூமகள் தன்னை
வேறுஇன்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே? (3)


2906 தேவும் எப் பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே? (4)


2907 தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப் பொருளும் படைக்கத்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே? (5)


2908 எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வு இன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே (6)


2909 பள்ளி ஆல் இலை ஏழ் உலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள் உள் ஆர் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக்கருத்தே? (7)


2910 கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் பிரான் அன்றி யாரே
திருத்தித் திண் நிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே? (8)


2911 காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே (9)


2912 கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ என்று
வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே (10)


2913 ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே (11)
--------

அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

2914 ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே (1)


2915 ஒத்தார் மிக்காரை இலையாய மா மாய
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய் என்னைப் பெற்ற
அத் தாய் ஆய் தந்தை ஆய் அறியாதன அறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே (2)


2916 அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறள் ஆய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே (3)


2917 எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
எனது ஆவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய்
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே (4)


2918 இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே (5)


2919 சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே (6)


2920 முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின் அலால் இலேன்காண் என்னை நீ குறிக்கொள்ளே (7)


2921 குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக்கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே (8)


2922 கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே (9)


2923 களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே? (10)


2924 குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் அடியீர் உடன்கூடிநின்று ஆடுமினே (11)
-----------

தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்

2925 ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே (1)


2926 வாள் நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கம் இலீரே (2)


2927 இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே? (3)


2928 இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கைதொழும் நின்று இவளே (4)


2929 இவள் இராப்பகல் வாய்வெரீ இத் தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே? (5)


2930 தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகிநின்று உள் உளே (6)


2931 உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே (7)


2932 வஞ்சனே என்னும் கைதொழும் தன
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே (8)


2933 பட்ட போது எழு போது அறியாள் விரை
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே? (9)


2934 ஏழை பேதை இராப்பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே (10)


2935 வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி
சூட்டலாகும் அம் தாமமே (11)
------------

இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

2936 அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரைத்தடம் கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே (1)


2937 திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ்
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (2)


2938 என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள
தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே (3)


2939 எப் பொருளும் தான் ஆய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே (4)


2940 ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த
கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே (5)


2941 பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்
பலபலவே ஞானமும் பாம்பு அணை மேலாற்கேயோ (6)


2942 பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே (7)


2943 பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே (8)


2944 சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவிதனை
எல்லை இல் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய்
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே (9)


2945 ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே (10)


2946 கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே (11)
-----------

ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

2947 வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத்
திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள்
செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. (1)


2948 சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத்
தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் துளக்கு
அற்று அமுதம் ஆய் எங்கும்
பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே (2)


2949 தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
துழாய் விரைப்
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம்
மகிழ்ந்து ஆட நாவு அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே (3)


2950 வள்ளலே மதுசூதனா என் மரகத மலையே
உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்
பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே? (4)


2951 உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை
நாசம் செய்து உனது
அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் பாற்கடல்
யோக நித்திரை
சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே? (5)


2952 உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை
பாடி ஆடி என்
முன்னைத் தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்
மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே? (6)


2953 முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும்
உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்
மேல் எழு பிறப்பும்
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே (7)


2954 மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
உள்ளம் தேறி
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறு எழ
பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் (8)


2955 எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை
செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா <
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை
என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே? (9)


2956 போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்
தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே
பரமா தண் வேங்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே (10)


2957 கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே (11)
--------------

பன்னிரு நாமப் பாட்டு

2958 கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே (1)


2959 நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே (2)


2960 மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே (3)


2961 கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே (4)


2962 விட்டு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள
் விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே (5)


2963 மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே (6)


2964 திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லைகாண் என் வாமனனே (7)


2965 வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே (8)


2966 சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே (9)


2967 இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே (10)


2968 பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே (11)


2969 தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி வண்ணனையே? (12)


2970 வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே (13)
-------

எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

2971 அணைவது அரவு அணைமேல் பூம்பாவை ஆகம்
புணர்வது இருவர் அவர் முதலும் தானே
இணைவன் ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (1)


2972 நீந்தும் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம்
பூந் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த
பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே (2)


2973 புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம்
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி
புணர்த்த திருஆகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே (3)


2974 புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே (4)


2975 ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மா ஆகி ஆமை ஆய் மீன் ஆகி மானிடம் ஆம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே (5)


2976 தீர்த்தன் உலகு அளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே? (6)


2977 கிடந்து இருந்து நின்று அளந்து கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே? (7)


2978 காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்று எப் பொருட்கும்
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே (8)


2979 எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே? (9)


2980 சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப் பொருட்கும்
வேர் முதல் ஆய் வித்து ஆய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே (10)


2981 கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே (11)
------------

புருஷார்த்த நிர்ணயம்

2982 எம் மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம் மா பாட பற்புத் தலை சேர்த்து ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே (1)


2983 ஈதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மை தோய் சோதி மணிவண்ண எந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கை தா காலக் கழிவு செய்யேலே (2)


2984 செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என்
கை ஆர் சக்கரக் கண்ண பிரானே
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே (3)


2985 எனக்கே ஆட்செய் எக் காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (4)


2986 சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே (5)


2987 மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே (6)


2988 வாராய் உன் திருப் பாத மலர்க்கீழ்ப்
பேராதே யான் வந்து அடையும்படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே (7)


2989 எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே (8)


2990 யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே (9)


2991 ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ் சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே (10)


2992 விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல்
விடல் இல் வண் குருகூர்ச் சடகோபன்
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே (11)
-------------

திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

2993 கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே (1)


2994 சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே (2)


2995 பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல்மலை அடைவது அது கருமமே (3)


2996 கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்
திருமலை அதுவே அடைவது திறமே (4)


2997 திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலைப்
புறமலை சாரப் போவது கிறியே (5)


2998 கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே (6)


2999 நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே (7)


3000 வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (8)


3001 வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே (9)


3002 சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலைப்
போது அவிழ் மலையே புகுவது பொருளே (10)


3003 பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே (11)
----------

திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்

3004 முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச் சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே (1)


3005 கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ (2)


3006 பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே (3)


3007 மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே? (4)


3008 வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாத ஞானம் ஆய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலம் ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே? (5)


3009 ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் உலகத்து எவ் எவையும்
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே? (6)


3010 வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே? (7)


3011 மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது
மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே? (8)


3012 மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே? (9)


3013 மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ் உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே? (10)


3014 வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே (11)
---------------

அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்

3015 முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந் நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே? (1)


3016 வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பல் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ? (2)


3017 கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே (3)


3018 சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே (4)


3019 வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே? (5)


3020 கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே? (6)


3021 எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ் ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே (7)


3022 மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே? (8)


3023 கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப்பெய்வனே? (9)


3024 தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே (10)


3025 உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே (11)
----------------

திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்

3026 ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்யவேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே (1)


3027 எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே (2)


3028 அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெள் நிறை சுனை நீர்த் திருவேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே (3)


3029 ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்கண்
பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே (4)


3030 சோதி ஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீது இல் சீர்த் திருவேங்கடத்தானையே? (5)


3031 வேம் கடங்கள் மெய்மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே (6)


3032 சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே (7)


3033 குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே (8)


3034 ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு:பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள் மலர் ஆம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே (9)


3035 வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (10)


3036 தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே (11)
------------

ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

3037 புகழும் நல் ஒருவன் என்கோ?
பொரு இல் சீர்ப் பூமி என்கோ?
திகழும் தண் பரவை என்கோ?
தீ என்கோ? வாயு என்கோ?
நிகழும் ஆகாசம் என்கோ?
நீள் சுடர் இரண்டும் என்கோ?
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ?
கண்ணனைக் கூவும் ஆறே (1)


3038 கூவும் ஆறு அறியமாட்டேன்
குன்றங்கள் அனைத்தும் என்கோ?
மேவு சீர் மாரி என்கோ?
விளங்கு தாரகைகள் என்கோ?
நா இயல் கலைகள் என்கோ?
ஞான நல் ஆவி என்கோ?
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ணனையே (2)


3039 பங்கயக் கண்ணன் என்கோ?
பவளச் செவ்வாயன் என்கோ?
அம் கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ?
செங்கதிர் முடியன் என்கோ?
திரு மறு மார்பன் என்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
சாதி மாணிக்கத்தையே (3)


3040 சாதி மாணிக்கம் என்கோ?
சவி கொள் பொன் முத்தம் என்கோ?
சாதி நல் வயிரம் என்கோ?
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?
ஆதி அம் சோதி என்கோ?
ஆதி அம் புருடன் என்கோ?
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே (4)


3041 அச்சுதன் அமலன் என்கோ?
அடியவர் வினை கெடுக்கும்
நச்சும் மா மருந்தம் என்கோ?
நலங் கடல் அமுதம் என்கோ?
அச் சுவைக் கட்டி என்கோ?
அறுசுவை அடிசில் என்கோ?
நெய்ச் சுவைத் தேறல் என்கோ?
கனி என்கோ? பால் என்கேனோ? (5)


3042 பால் என்கோ? நான்கு வேதப்
பயன் என்கோ? சமய நீதி
நூல் என்கோ? நுடங்கு கேள்வி
இசை என்கோ? இவற்றுள் நல்ல
மேல் என்கோ? வினையின் மிக்க
பயன் என்கோ? கண்ணன் என்கோ?
மால் என்கோ? மாயன் என்கோ?
வானவர் ஆதியையே (6)


3043 வானவர் ஆதி என்கோ?
வானவர் தெய்வம் என்கோ?
வானவர் போகம் என்கோ?
வானவர் முற்றும் என்கோ?
ஊனம் இல் செல்வம் என்கோ?
ஊனம் இல் சுவர்க்கம் என்கோ?
ஊனம் இல் மோக்கம் என்கோ?
ஒளி மணி வண்ணனையே (7)


3044 ஒளி மணி வண்ணன் என்கோ?
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ?
நான்முகக் கடவுள் என்கோ?
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே (8)


3045 கண்ணனை மாயன் தன்னை
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை
அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும் ஆறு அறியமாட்டேன்
யாவையும் எவரும் தானே (9)


3046 யாவையும் எவரும் தானாய்
அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்
சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூடலாமே (10)


3047 கூடி வண்டு அறையும் தண் தார்க்
கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர்
வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே (11)
-----------------

திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்

3048 மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மாம் கருமம் என்? சொல்லீர்
தண் கடல் வட்டத்து உள்ளீரே (1)


3049 தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழல் கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடி
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே (2)


3050 மலையை எடுத்து கல் மாரி
காத்து பசுநிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினோடு ஆதனம் தட்டத்
தடுகுட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழைக்கின்ற வம்பரே (3)


3051 வம்பு அவிழ் கோதைபொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம்பவளத் திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி
கோகு உகட்டுண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்களிடையே? (4)


3052 சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே? (5)


3053 மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னை
தடங் கடல் சேர்ந்த பிரானை
கனியை கரும்பின் இன் சாற்றை
கட்டியை தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே (6)


3054 நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய்வாரே? (7)


3055 வார் புனல் அம் தண் அருவி
வட திருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றி
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே (8)


3056 அமரர் தொழப்படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து
அவன் தன்னோடு ஒன்று ஆக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே (9)


3057 கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னை
திரு மணி வண்ணனை செங்கண்
மாலினை தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே (10)


3058 தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை
அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண்
வளங் குருகூர்ச் சடகோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்து
அருவினை நீறு செய்யுமே (11)
-----------

அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

3059 செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்
செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே (1)


3060 மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானை
தடங் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனை தென் இலங்கை
எரி எழச் செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ (2)


3061 பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனை பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனை குடக் கூத்தனை
அரவம் ஏறி அலை கடல்
அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ (3)


3062 வைம்மின் நும் மனத்து என்று யான்
உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க
நாள்தொறும் வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும்
சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே (4)


3063 திரியும் காற்றோடு அகல் விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றும் ஆய்
கரிய மேனியன் செய்ய தாமரைக்
கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங் குஞ்சி எங்கள்
சுடர் முடி அண்ணல் தோற்றமே (5)


3064 தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்
அவன் ஒரு மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்
கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்
ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை
யான் இலேன் எழுமைக்குமே (6)


3065 எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்
அமுதத்தினை எனது ஆர் உயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனை குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினை
தொழுமின் தூய மனத்தர் ஆய்
இறையும் நில்லா துயரங்களே (7)


3066 துயரமே தரு துன்ப இன்ப
வினைகள் ஆய் அவை அல்லன் ஆய்
உயர நின்றது ஓர் சோதி ஆய் உலகு
ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு
நஞ்சினை அச்சுதன் தன்னை
தயரதற்கு மகன் தன்னை அன்றி
மற்று இலேன் தஞ்சமாகவே (8)


3067 தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
தானும் ஆய் அவை அல்லன் ஆய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல்
மூவர் தம்முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்
அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன்
ஆகும் நீள் கடல் வண்ணனே (9)


3068 கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்
கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக்கிடந்த
பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு
ஆகி வெம் சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல்
காண்பது என்றுகொல் கண்களே (10)


3069 கண்கள் காண்டற்கு அரியன்
ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
அருள் செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன்
குருகைக்கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால்
பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே (11)
-------------

அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

3070 பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கயக் கண்ணனை
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே (1)


3071 ஆளும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
தோளும் ஓர் நான்கு உடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
தாளும் தடக் கையும் கூப்பிப் பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை நாதரே (2)


3072 நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடையார்களே (3)


3073 உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திருநாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடை ஆர் பிறப்பிடைதோறு எமக்கு எம் பெருமக்களே (4)


3074 பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே (5)


3075 அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
துளிக்கும் நறும் கண்ணித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே (6)


3076 சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே (7)


3077 நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்களே (8)


3078 குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே (9)


3079 அடி ஆர்ந்த வையம் உண்டு ஆல் இலை அன்னவசம் செய்யும
்படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே (10)


3080 அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே (11)
------------

கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

3081 முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானே ஆழ் கடலைக் கடைந்தாய் புள் ஊர்
கொடியானே கொண்டல் வண்ணா அண்டத்து உம்பரில்
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே (1)


3082 நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என்
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே (2)


3083 வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம்
நாயகனே நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர்
தாயவனே என்று தடவும் என் கைகளே (3)


3084 கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றி
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை
மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே (4)


3085 கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே (5)


3086 செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்று
புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே (6)


3087 ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடைத்
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே (7)


3088 கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம்
காலமே உன்னை எந் நாள் கண்டுகொள்வனே? (8)


3089 கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? (9)


3090 பொருந்திய மா மருதின் இடை போய எம்
பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசகமாலை கொண்டு உன்னையே
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே? (10)


3091 புலம்பு சீர்ப் பூமி அளந்த பெருமானை
நலம் கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன்சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே (11)
-------------

மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்

3092 சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே (1)


3093 உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே? (2)


3094 ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்
கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள்
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே? (3)


3095 என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்?
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே (4)


3096 கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ளக் குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (5)


3097 வம்மின் புலவீர் நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ
இம் மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேருமே (6)


3098 சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன்
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே (7)


3099 வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய்
காயம் கழித்து அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? (8)


3100 வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே (9)


3101 நின்றுநின்று பல நாள் உய்க்கும் இவ் உடல் நீங்கிப்போய்
சென்று சென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே? (10)


3102 ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே (11)
----------

திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்

3103 சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு
சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள்
தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை
மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற
நான் ஓர் குறைவு இலனே (1)


3104 குறைவு இல் தடங் கடல் கோள் அரவு ஏறி தன்
கோலச் செந்தாமரைக்கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி
வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி அசுரரைக்
காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
யான் ஒரு முட்டு இலனே (2)


3105 முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்
மூவுலகுக்கு உரிய
கட்டியை தேனை அமுதை நன்பாலை
கனியை கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை
வணங்கி அவன் திறத்துப்
பட்ட பின்னை இறையாகிலும் யான் என்
மனத்துப் பரிவு இலனே (3)


3106 பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று
படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
அங்கியும் போர் தொலைய
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
ஆயனை பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான்
இறையேனும் இடர் இலனே (4)


3107 இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
ஒன்றும் துயர் இலனே (5)


3108 துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்
புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற
யான் ஓர் துன்பம் இலனே (6)


3109 துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
ஆய் உலகங்களும் ஆய்
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான்
சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி பலபல
மாய மயக்குக்களால்
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று
ஏதும் அல்லல் இலனே (7)


3110 அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்
அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்
ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு
எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி
யான் ஓர் துக்கம் இலனே (8)


3111 துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி
துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து
வேண்டும் உருவு கொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும்
எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று
ஒன்றும் தளர்வு இலனே (9)


3112 தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த
தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்
அருவு ஆகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்
ஐந்தை இரு சுடரை
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள் பற்றி
யான் என்றும் கேடு இலனே (10)


3113 கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை
குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும்
பயிற்ற வல்லார்கட்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும்
தரும் ஒரு நாயகமே (11)
-----------

செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

3114 ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ (1)


3115 உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம் மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ (2)


3116 அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ (3)


3117 நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத் தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ (4)


3118 பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ (5)


3119 வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில்
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ (6)


3120 ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே (7)


3121 குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமினோ (8)


3122 படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ (9)


3123 குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடு அஃதே (10)


3124 அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே (11)
------------

காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்

3125 பாலன் ஆய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி
ஆல் இலை அன்னவசம் செய்யும் அண்ணலார்
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல்வினையேன் மட வல்லியே (1)


3126 வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல் அடிமேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே (2)


3127 பா இயல் வேத நல் மாலை பல கொண்டு
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடிமேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே (3)


3128 கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே (4)


3129 தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே (5)


3130 மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய்
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்
பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே (6)


3131 மடந்தையை வண் கமலத் திருமாதினை
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் வாள் நுதலீர்! என் மடக்கொம்பே (7)


3132 கொம்பு போல் சீதைபொருட்டு இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணைமேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்? (8)


3133 நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்
இங்ஙனே சொல்லும் இராப் பகல் என்செய்கேன்? (9)


3134 என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம்
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே (10)


3135 மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே (11)
-----------

எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

3136 கோவை வாயாள்பொருட்டு ஏற்றின்
எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்
குல நல் யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப்
போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்குப்
பூசும் சாந்து என் நெஞ்சமே (1)


3137 பூசும் சாந்து என் நெஞ்சமே
புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே
வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும்
என் கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த
எந்தை ஏக மூர்த்திக்கே (2)


3138 ஏக மூர்த்தி இரு மூர்த்தி
மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதம் ஆய்
இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி
நாகம் ஏறி நடுக் கடலுள்
துயின்ற நாராயணனே உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி
ஆவி அல்லல் மாய்த்ததே (3)


3139 மாய்த்தல் எண்ணி வாய் முலை
தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூத் தண் மாலை கொண்டு உன்னைப்
போதால் வணங்கேனேலும் நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப்
புனையும் கண்ணி எனது உயிரே (4)


3140 கண்ணி எனது உயிர் காதல்
கனகச் சோதி முடி முதலா
எண் இல் பல் கலன்களும்
ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூவுலகும்
நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான்
கால சக்கரத்தானுக்கே (5)


3141 கால சக்கரத்தொடு வெண்
சங்கம் கை ஏந்தினாய்
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
நாராயணனே என்று என்று
ஓலம் இட்டு நான் அழைத்தால்
ஒன்றும் வாராயாகிலும்
கோலம் ஆம் என் சென்னிக்கு உன்
கமலம் அன்ன குரைகழலே (6)


3142 குரை கழல்கள் நீட்டி மண்
கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள்
கூட நின்ற மாயனே
விரை கொள் பூவும் நீரும் கொண்டு
ஏத்தமாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திரு உருவம்
என்னது ஆவி மேலதே (7)


3143 என்னது ஆவி மேலையாய்
ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகி நின்ற
சோதி ஞான மூர்த்தியாய்
உன்னது என்னது ஆவியும்
என்னது உன்னது ஆவியும்
இன்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லேனே? (8)


3144 உரைக்க வல்லேன் அல்லேன் உன்
உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
காதல் மையல் ஏறினேன்
புரைப்பு இலாத பரம்பரனே
பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன் (9)


3145 யானும் ஏத்தி ஏழ் உலகும்
முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்திலும் தன்னை
ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்திப்ப
யானும் எம் பிரானையே
ஏத்தினேன் யான் உய்வானே (10)


3146 உய்வு உபாயம் மற்று இன்மை தேறி
கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரைப் பழனத்
தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய் இல் பாடல் ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து
விண்ணும் ஆள்வர் மண்ணூடே (11)
----------

பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்

3147 மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இது என்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை உள்நீர் மல்க நின்று
கடல்வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
என் செய்கேன் பெய் வளையீரே? (1)


3148 பெய்வளைக் கைகளைக் கூப்பி
பிரான் கிடக்கும் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி
சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்
நையும் கண்ணீர் மல்க நின்று
நாரணன் என்னும் அன்னே என்
தெய்வ உருவில் சிறுமான்
செய்கின்றது ஒன்று அறியேனே (2)


3149 அறியும் செந்தீயைத் தழுவி
அச்சுதன் என்னும் மெய் வேவாள்
எறியும் தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும்
வினையுடையாட்டியேன் பெற்ற
செறி வளை முன் கைச் சிறுமான்
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? (3)


3150 ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளி மணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி
நெடுமாலே வா என்று கூவும்
நன்று பெய்யும் மழை காணில்
நாரணன் வந்தான் என்று ஆலும்
என்று இன மையல்கள் செய்தான்
என்னுடைக் கோமளத்தையே? (4)


3151 கோமள வான் கன்றைப் புல்கி
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய்
அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன்
அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால் செய்து செய்கின்ற கூத்தே (5)


3152 கூத்தர் குடம் எடுத்து ஆடில்
கோவிந்தன் ஆம் எனா ஓடும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில்
மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு
என் பெண்கொடி ஏறிய பித்தே (6)


3153 ஏறிய பித்தினோடு எல்லா
உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இடக் காணில்
நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில்
நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன்
திறத்தனளே இத் திருவே (7)


3154 திரு உடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும்
உரு உடை வண்ணங்கள் காணில்
உலகு அளந்தான் என்று துள்ளும்
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்
கடல் வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்
கண்ணன் கழல்கள் விரும்புமே (8)


3155 விரும்பிப் பகவரைக் காணில்
வியல் இடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில்
கண்ணன் என்று ஏறப் பறக்கும்
பெரும் புல ஆ நிரை காணில்
பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின்றானே (9)


3156 அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி
அகலவே நீள் நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா என்று பேசும்
பெருமானே வா என்று கூவும்
மயல் பெருங் காதல் என் பேதைக்கு
என்செய்கேன் வல்வினையேனே? (10)


3157 வல்வினை தீர்க்கும் கண்ணனை
வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையால் சொன்ன பாடல்
ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள்
நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீர எல்லாரும்
தொழுது எழ வீற்றிருப்பாரே (11)
-------------

எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்

3158 வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே? (1)


3159 மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்
செய்ய கோலத் தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே (2)


3160 வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே (3)


3161 மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே (4)


3162 ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே (5)


3163 கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே (6)


3164 என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தன்னை
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே? (7)


3165 நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே? (8)


3166 வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை
கூனல் சங்கத் தடக்கையவனை குடம் ஆடியை
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டே? (9)


3167 உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே (10)


3168 மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே 11
------------

வெறி விலக்கு

3169 தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே? (1)


3170 திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெருந் தெய்வம்
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்மினே (2)


3171 இது காண்மின் அன்னைமீர் இக் கட்டுவிச்சி சொல் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின்
மது வார் துழாய் முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே (3)


3172 மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ் சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளைப் பெறுதிரே (4)


3173 இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே (5)


3174 தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே (6)


3175 அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே (7)


3176 வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய்த் தூய்
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே (8)


3177 கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே (9)


3178 உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே (10)


3179 தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே (11)
--------------

திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்

3180 சீலம் இல்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்று என்று
காலந்தோறும் யான் இருந்து கைதலைபூசல் இட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே (1)


3181 கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே (2)


3182 ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்று என்று
கூவிக் கூவி நெஞ்சு உருகி கண்பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே (3)


3183 காண வந்து என் கண்முகப்பே தாமரைக்கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டாப் பீடு உடை அப்பனையே? (4)


3184 அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங்கொல்? என்று
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே (5)


3185 நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே (6)


3186 அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்
நறுந் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னைக் கண்டுகொண்டே (7)


3187 கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி உகந்து உகந்து
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே (8)


3188 இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன்
கடவன் ஆகி காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே? (9)


3189 சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
மிக்க ஞான மூர்த்தி ஆய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே (10)


3190 தழுவிநின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை
குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே (11)
-------------

எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று
தலைவி கூற்றாகப் பேசுதல்

3191 ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறு ஆளும் தனி உடம்பன் குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே (1)


3192 மணி மாமை குறைவு இல்லா மலர்மாதர் உறை மார்பன்
அணி மானத் தட வரைத்தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே (2)


3193 மட நெஞ்சால் குறைவு இல்லா மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே (3)


3194 நிறையினால் குறைவு இல்லா நெடும் பணைத் தோள் மடப் பின்னை
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கைச்
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே (4)


3195 தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் தனிச் சிறையில் விளப்பு உற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே (5)


3196 அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒருமூர்த்தி
குறிய மாண் உரு ஆகி கொடுங் கோளால் நிலம் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே (6)


3197 கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியன் மணி நீல
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே (7)


3198 வரி வளையால் குறைவு இல்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே (8)


3199 மேகலையால் குறைவு இல்லா மெலிவு உற்ற அகல் அல்குல்
போகமகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைவு இலமே (9)


3200 உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடைமுடியன் தனி ஒருகூறு அமர்ந்து உறையும்
உடம்பு உடையான் கவராத உயிரினால் குறைவு இலமே (10)


3201 உயிரினால் குறைவு இல்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடம் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசைமாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே (11)
-------------

உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு
எம்பெருமானைப் பிரார்த்தித்தல்

3202 நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே (1)


3203 சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு அணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே (2)


3204 கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! கடல்வண்ணா அடியேனைப்
பண்டேபோல் கருதாது உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே (3)


3205 கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை
வள்ளலே மணிவண்ணா உன கழற்கே வரும்பரிசு
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே (4)


3206 வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கு இதன்மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை
வாங்கு எனை நீ மணிவண்ணா அடியேனை மறுக்கேலே (5)


3207 மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர்
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே (6)


3208 ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய
கூயேகொள் அடியேனை கொடு உலகம் காட்டேலே (7)


3209 காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்துக்
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே? (8)


3210 கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து
ஆட்டுதி நீ அரவு அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே (9)


3211 கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே (10)


3212 திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
திருவடி சேர்வது கருதி செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப் பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே (11)
----------

எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (திருக்குருகூர்)

3213 ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர்
உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு
திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே? (1)


3214 நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும்
முன் படைத்தான்
வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன்
மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய
திருக்குருகூர் அதனைப்
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்
பல் உலகீர் பரந்தே (2)


3215 பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று
உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது
கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும்
திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம்
மற்று இல்லை பேசுமினே (3)


3216 பேச நின்ற சிவனுக்கும் பிரமன்
தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக்
கண்டுகொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய
திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது
இலிங்கியர்க்கே? (4)


3217 இலிங்கத்து இட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும்
தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும்
திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
பொய் இல்லை போற்றுமினே (5)


3218 போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப்
புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால்
உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு
திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது
அறிந்து அறிந்து ஓடுமினே (6)


3219 ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து
மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படிகால்
வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற
திருக்குருகூர் அதனுள்
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு
அடிமைபுகுவதுவே (7)


3220 புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது
நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலித்
திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
தெய்வம் விளம்புதிரே (8)


3221 விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும்
மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய
ஆதிப்பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய
திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை
உய்யக்கொண்டு போகுறிலே (9)


3222 உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும்
மற்றும் தன்பால்
மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
திருக்குருகூர் அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்
கூத்தனுக்கு ஆள் செய்வதே (10)


3223 ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்
வண் குருகூர்நகரான்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்
மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள்
இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்
மற்றது கையதுவே (11)
----------------

உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும்
எம்பெருமானது கருணைத்திறம்

3224 கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே (1)


3225 போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான்
வானே மா நிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே (2)


3226 உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்
வெள்ளத்து அணைக்கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே? (3)


3227 என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து
நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன்
என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே (4)


3228 கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே (5)


3229 புறம் அறக் கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டொழிந்தேன்
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக்கண்
அறம் முயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே (6)


3230 அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலைபூசல் இட்டே
மெய்ம் மால் ஆயொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே (7)


3231 மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே (8)


3232 ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க
தேவு ஆர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே (9)


3233 ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து
தானே இன் அருள் செய்து என்னை முற்றவும் தான் ஆனான்
மீன் ஆய் ஆமையும் ஆய் நரசிங்கமும் ஆய் குறள் ஆய்
கான் ஆர் ஏனமும் ஆய் கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே (10)


3234 கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை
ஏர் வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே (11)
-------------

அடியார் திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்

3235 பொலிக பொலிக பொலிக
போயிற்று வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி
ஆடி உழிதரக் கண்டோம் (1)


3236 கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டு ஆர் தண் அம் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண் தான் பாடி நின்று ஆடி
பரந்து திரிகின்றனவே (2)


3237 திரியும் கலியுகம் நீங்கி
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றி
பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில்வண்ணன் எம்மான்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து இசை பாடி
எங்கும் இடம் கொண்டனவே (3)


3238 இடம் கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்களே ஆய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின்றனவே (4)


3239 செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
ஒக்கின்றது இவ் உலகத்து
வைகுந்தன் பூதங்களே ஆய்
மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்
அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர்
ஊழி பெயர்த்திடும் கொன்றே (5)


3240 கொன்று உயிர் உண்ணும் விசாதி
பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் உலகில் கடிவான்
நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!
சிந்தையைச் செந்நிறுத்தியே (6)


3241 நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்
மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி
யாயவர்க்கே இறுமினே (7)


3242 இறுக்கும் இறை இறுத்து உண்ண
எவ் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக
அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன்
பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்
மேவித் தொழுது உய்ம்மின் நீரே (8)


3243 மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்
வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை
ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும்
சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும்
பகவரும் மிக்கது உலகே (9)


3244 மிக்க உலகுகள் தோறும்
மேவி கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும்
இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள்
எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்கத் தொழ கிற்றிராகில்
கலியுகம் ஒன்றும் இல்லையே (10)


3245 கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்
அடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி
மாயப் பிரான் கண்ணன் தன்னை
கலி வயல் தென் நன் குருகூர்க்
காரிமாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து
உள்ளத்தை மாசு அறுக்குமே (11)
----------

பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்

3246 மாசு அறு சோதி என் செய்ய வாய் மணிக்குன்றத்தை
ஆசு அறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம்?
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே? (1)


3247 என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை?
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கருங் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே (2)


3248 ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே? (3)


3249 ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே (4)


3250 கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொள் இடை மடத் தோழீ அன்னை என் செய்யுமே? (5)


3251 அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே (6)


3252 வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே? (7)


3253 பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந் நாள்கொலோ
யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே? (8)


3254 நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ உலகுதோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே (9)


3255 யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரான் உடை
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
ஆம் மடம் இன்றி தெருவுதோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே (10)


3256 இரைக்கும் கருங் கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் (11)
----------

தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்

3257 ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருள் ஆய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே? (1)


3258 ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரம் ஆய் ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே. (2)


3259 நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழி ஆய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே (3)


3260 பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இம் மண் அளந்த
கண் பெரிய செவ்வாய் எம் கார் ஏறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே? (4)


3261 ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே (5)


3262 பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
முன்நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் இடத்தே? (6)


3263 காப்பார் ஆர் இவ் இடத்து? கங்கு இருளின் நுண் துளி ஆய்
சேண் பாலது ஊழி ஆய் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப் பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ? (7)


3264 தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே (8)


3265 வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளி ஆய்
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செஞ் சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே (9)


3266 நின்று உருகுகின்றேனே போல நெடு வானம்
சென்று உருகி நுண் துளி ஆய் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே (10)


3267 உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ? (11)
----------

உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)

3268 எங்ஙனேயோ அன்னைமீர்காள்
என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
செல்கின்றது என் நெஞ்சமே (1)


3269 என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும்
மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும்
வந்து எங்கும் நின்றிடுமே (2)


3270 நின்றிடும் திசைக்கும் நையும் என்று
அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும்
சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
நெஞ்சுள்ளும் நீங்காவே (3)


3271 நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று
அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
பூந் தண் மாலைத் தண் துழாயும்
பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்
பாவியேன் பக்கத்தவே (4)


3272 பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று
அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும்
நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன்
ஆவியின் மேலனவே (5)


3273 மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று
அன்னை காணக்கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக்
கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும்
என் நெஞ்சம் நிறைந்தனவே (6)


3274 நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று
அன்னை காணக்கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்
நேமி அங்கை உளதே (7)


3275 கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று
அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன் நிற்குமே (8)


3276 முன் நின்றாய் என்று தோழிமார்களும்
அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
சென்னி நீள் முடி ஆதி ஆய
உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல் பால் அமுது ஆகி வந்து என்
நெஞ்சம் கழியானே (9)


3277 கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று
அன்னை காணக்கொடாள்
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச்
சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
ஆர்க்கும் அறிவு அரிதே (10)


3278 அறிவு அரிய பிரானை
ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி
நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும்
திருக்குறுங்குடி அதன்மேல்
அறியக் கற்று வல்லார்
வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே (11)
-------------

தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்
நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்

3279 கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே? (1)


3280 கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே? (2)


3281 காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே? (3)


3282 செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
செய்ய கனி வாய் இள மான் திறத்தே? (4)


3283 திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
திறம்பாது என் திருமகள் எய்தினவே? (5)


3284 இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்
இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்
இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே? (6)


3285 உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே? (7)


3286 உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே? (8)


3287 கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே? (9)


3288 கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலம் இல் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்
கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே? (10)


3289 கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே (11)
-----------

வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)

3290 நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும்
இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்
சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே (1)


3291 அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்
காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாடம் நீடு
சிரீவரமங்கலநகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே (2)


3292 கருளப் புள் கொடி சக்கரப் படை வான நாட என்
கார்முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ்
சிரீவரமங்கலநகர்க்கு
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே (3)


3293 மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் அன்று
மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்
சிரீவரமங்கலநகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்தக் கூவுவனே? (4)


3294 எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ
தெவ்வத்துள் ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்
சிரீவரமங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே (5)


3295 ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும்
என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச்சுடரே
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்
கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே (6)


3296 வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்
கொழுந்தே உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்
சிரீவரமங்கலநகர்
அந்தம் இல் புகழாய் அடியேனை அகற்றேலே (7)


3297 அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை
நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை
வாணனே என்றும்
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே (8)


3298 புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய்
எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி
தண் சிரீவரமங்கை
யுள் இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே (9)


3299 ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய்
உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி
தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே (10)


3300 தெய்வ நாயகன் நாரணன்
திரிவிக்கிரமன் அடி இணைமிசை
கொய் கொள் பூம் பொழில்
சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண்
சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார்
வானோர்க்கு ஆரா அமுதே (11)
------------

ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமைபேசி அலமருதல் (திருக்குடந்தை)

3301 ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே (1)


3302 எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும் திருக்குடந்தை
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே (2)


3303 என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள்
செல் நாள் எந் நாள்? அந் நாள் உன தாள் பிடித்தே செலக்காணே (3)


3304 செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பு ஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே (4)


3305 அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும்வகையே சூழ்கண்டாய் (5)


3306 சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக்குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்?
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரிஏறே (6)


3307 அரிஏறே என் அம் பொன் சுடரே செங்கண் கரு முகிலே
எரி ஏய் பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே (7)


3308 களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே (8)


3309 இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே (9)


3310 வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? (10)


3311 உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே (11)
------------

திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல் (திருவல்லவாழ்)

3312 மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ? (1)


3313 என்று கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே? (2)


3314 சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலிய
பாடும் நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே? (3)


3315 நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே (4)


3316 நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே? (5)


3317 காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே? (6)


3318 பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர்
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ் ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்தொறுமே? (7)


3319 நாள்தொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்
ஆடு உறு தீங் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே? (8)


3320 கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல் அருளே? (9)


3321 தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே? (10)


3322 நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடிமேல்
சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே (11)
------------

ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்

3323 பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம்
கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று
உருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)


3324 வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை
வாய் பிளந்ததும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன்
செய்கை நைவிக்கும்
முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே? (2)


3325 பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட பிள்ளைத் தேற்றமும்
பேர்ந்து ஓர் சாடு இறச்
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன்
தாமரைக் கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே (3)


3326 கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்க ஆறும்
கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை
விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே (4)


3327 உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த
அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து
மணந்த மாயங்கள்
எண்ணும்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே (5)


3328 நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்
நினைப்பு அரியன
ஒன்று அலா உருவு ஆய் அருவு ஆய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம்
நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே (6)


3329 ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு
இன்மையாய் வந்து என்
கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய
மாணிக்கமே என் கண்கட்குத்
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே (7)


3330 திரு உருவு கிடந்த ஆறும் கொப்பூழ்ச்
செந்தாமரைமேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்
என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே? (8)


3331 அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும்
மண்ணும் விண்ணும்
முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம்
நின் தனக்கே கரைந்து உகும்
கொடிய வல்வினையேன் உன்னை என்றுகொல் கூடுவதே? (9)


3332 கூடி நீரைக் கடைந்த ஆறும் அமுதம் தேவர்
உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி
உண்டிடுகின்ற நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு அணையானே (10)


3333 நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண்
நமக்கு என்று நாள்தொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச்
சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து
மகிழ்வு எய்துவர் வைகலுமே (11)
------------

திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்
(திருவண்வண்டூர்)

3334 வைகல் பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்
கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே (1)


3335 காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய்
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே (2)


3336 திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்
கறங்கு சக்கரக் கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே (3)


3337 இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே (4)


3338 உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்
திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே (5)


3339 போற்றி யான் இரந்தேன் புன்னைமேல் உறை பூங் குயில்காள்
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வது ஒருவண்ணமே (6)


3340 ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே (7)


3341 திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய்
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்
பெரும் தண் தாமரைக்கண் பெரு நீள் முடி நால் தடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே (8)


3342 அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும்
கடிய மாயன் தன்னை கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே (9)


3343 வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள்
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே (10)


3344 மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடை யவர்க்கே (11)
-------------

தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்

3345 மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு
நான் அது அஞ்சுவன்
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி
அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ (1)


3346 போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்
செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார்
செவி ஓசை வைத்து எழ
ஆகள் போகவிட்டு குழல் ஊது போயிருந்தே (2)


3347 போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை
நம்பீ நின் செய்ய
வாய் இருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்
வேய் இரும் தடம் தோளினார் இத் திருவருள்
பெறுவார் எவர்கொல்
மா இரும் கடலைக் கடைந்த பெருமானாலே? (3)


3348 ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று நீ
கிடந்தாய் உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே?
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு
சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே (4)


3349 கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும்
நன்கு அறியும் திண் சக்கர
நிழறு தொல் படையாய் உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார்
மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே (5)


3350 குழகி எங்கள் குழமணன்கொண்டு கோயின்மை செய்து
கன்மம் ஒன்று இல்லை
பழகி யாம் இருப்போம் பரமே இத் திரு அருள்கள்?
அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும் தேவிமை
ஈதகுவார் பலர் உளர்
கழகம் ஏறேல் நம்பீ உனக்கும் இளைதே கன்மமே (6)


3351 கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது
கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது
கேட்கில் என் ஐம்மார்
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே (7)


3352 பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும்
பேதியாதது ஓர்
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின்
என்னப் போந்தோமை
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதவரே? (8)


3353 உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரைத்
தடம் கண் விழிகளின்
அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு
சிறு சோறும் கண்டு நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே (9)


3354 நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால்
அரசு களைகட்ட
வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய
கருமாணிக்கச் சுடர்
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே (10)


3355 ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய்
வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
கூத்த அப்பன் தன்னை குருகூர்ச் சடகோபன்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இசை யொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே (11)
------------

தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)

3356 நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே (1)


3357 கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே (2)


3358 நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே (3)


3359 புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்
எண்ணம் ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்மின்கள் கைதவமே? (4)


3360 கைதவம் செம்மை கருமை வெளுமையும் ஆய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையும் ஆய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே (5)


3361 மூவுலகங்களும் ஆய் அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்
பூவில் வாழ் மகள் ஆய் தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே (6)


3362 பரம் சுடர் உடம்பு ஆய் அழுக்குப் பதித்த உடம்பு ஆய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே (7)


3363 வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே (8)


3364 என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே (9)


3365 நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே (10)


3366 காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே (11)
------------

கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்

3367 குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய
வினைகளையே அலற்றி
இரவும் நன் பகலும் தவிர்கிலன்
என்ன குறை எனக்கே? (1)


3368 கேயத் தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும்
கெண்டை ஒண் கண்
வாசப் பூங் குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான் தன் செய்கை
நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு
எவ் உலகம் நிகரே? (2)


3369 நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்
நீள் நெடும் கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை
போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை
நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு
என் இனி நோவதுவே? (3)


3370 நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்
வஞ்சப் பெண்ணைச்
சாவப் பால் உண்டதும் ஊர் சகடம்
இறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை
நினைந்து மனம் குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு
என் இனி வேண்டுவதே? (4)


3371 வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்
வீங்கு இருள்வாய்
பூண்டு அன்று அன்னைப் புலம்ப போய் அங்கு ஓர்
ஆய்க்குலம் புக்கதும்
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச
வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு
என்ன இகல் உளதே? (5)


3372 இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமில்
ஏறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்
உட்பட மற்றும் பல
அகல் கொள் வையம் அளந்த மாயன் என்
அப்பன் தன் மாயங்களே
பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு
என்ன மனப் பரிப்பே? (6)


3373 மனப் பரிப்போடு அழுக்கு மானிட
சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தன
சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்
அப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு
இனி யார் நிகர் நீள் நிலத்தே? (7)


3374 நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும்
போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்
உட்பட மற்றும் பல
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என்
அப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு
இனி என்ன கலக்கம் உண்டே? (8)


3375 கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும்
கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்
உட்பட மற்றும் பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்
இவை உடை மால்வண்ணனை
மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ
இம் மண்ணின் மிசையே? (9)


3376 மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர்
பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட
நூற்றிட்டுப் போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய
சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு
ஆர் பிறர் நாயகரே? (10)


3377 நாயகன் முழு ஏழ் உலகுக்கும்
ஆய் முழு ஏழ் உலகும் தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து
அவை ஆய் அவை அல்லனும் ஆம்
கேசவன் அடி இணைமிசைக்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இப் பத்தால்
பத்தர் ஆவர் துவள் இன்றியே (11)
--------------

தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)

3378 துவள் இல் மா மணி மாடம் ஓங்கு
தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு
ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்
தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
நின்று நின்று குமுறுமே (1)


3379 குமுறும் ஓசை விழவு ஒலித்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள்
தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க
நெக்கு ஒசிந்து கரையுமே (2)


3380 கரை கொள் பைம் பொழில் தண் பணைத்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்
திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி
நெடும் கண் நீர் மல்க நிற்குமே (3)


3381 நிற்கும் நால்மறைவாணர் வாழ்
தொலைவில்லிமங்கலம் கண்டபின்
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள்
கண்டீர் இவள் அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கருங் கடல்
வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து
உள் மகிழ்ந்து குழையுமே (4)


3382 குழையும் வாள் முகத்து ஏழையைத்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்
பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு
அன்று தொட்டும் மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும்
அத் திசை உற்று நோக்கியே (5)


3383 நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு
செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை
வண் தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அத் திசை அல்லால் மறு
நோக்கு இலள் வைகல் நாள்தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன்
நாமமே இவள் அன்னைமீர்! (6)


3384 அன்னைமீர் அணி மா மயில் சிறுமான்
இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்
வண்ணன் மாயம் கொலோ? அவன்
சின்னமும் திருநாமமும் இவள்
வாயனகள் திருந்தவே (7)


3385 திருந்து வேதமும் வேள்வியும்
திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை
வண் தொலைவில்லிமங்கலம்
கருந் தடம் கண்ணி கைதொழுத அந் நாள்
தொடங்கி இந் நாள்தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன
என்று என்றே நைந்து இரங்குமே (8)


3386 இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள்
கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை
மணிவண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தான் உறை
தொலைவில்லிமங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
திருநாமம் கற்றதன் பின்னையே (9)


3387 பின்னைகொல் நில மா மகள்கொல்
திருமகள்கொல் பிறந்திட்டாள்?
என்ன மாயம்கொலோ இவள் நெடுமால்
என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து
உறையும் தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த்
திருநாமம் கேட்பது சிந்தையே. (10)


3388 சிந்தையாலும் சொல்லாலும்
செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்று அடைந்த
வண் குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை
வில்லிமங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
அடிமைசெய்வார் திருமாலுக்கே (11)
-------------

தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்

3389 மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே (1)


3390 சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே (2)


3391 நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட
திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் அவற்கு
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே (3)


3392 பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு
நாடு உடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே (4)


3393 பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண்புனை கோதை இழந்தது கற்பே (5)


3394 கற்பகக் கா அன நல் பல தோளற்கு
பொன் சுடர்க் குன்று அன்ன பூந் தண் முடியற்கு
நல் பல தாமரை நாள் மலர்க் கையற்கு என்
வில் புருவக்கொடி தோற்றது மெய்யே (6)


3395 மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு
பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு
கையொடு கால் செய்ய கண்ண பிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே (7)


3396 சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே (8)


3397 மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே (9)


3398 பொற்பு அமை நீள் முடிப் பூந் தண் துழாயற்கு
மல் பொரு தோள் உடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்பு உடையாட்டி இழந்தது கட்டே (10)


3399 கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனைக்
கட்டு எழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே (11)
----------

தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல்
(திருக்கோளூர்)

3400 உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே (1)


3401 ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே
போரும் கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே? (2)


3402 பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ? (3)


3403 கொல்லை என்பர்கொலோ குணம் மிக்கனள் என்பர்கொலோ
சில்லை வாய்ப் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும்? எல்லே
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மேல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே (4)


3404 மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே? (5)


3405 இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்
தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே (6)


3406 மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனிப் போய்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே? (7)


3407 ஒசிந்த நுண் இடைமேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே? (8)


3408 காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப் போய்
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே (9)


3409 நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப் போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனைத்
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே (10)


3410 வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே (11)
-----------

திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்

3411 பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ
நல் நலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன்
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே. (1)


3412 மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ
கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே (2)


3413 ஓடிவந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ
கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்
ஆடிய மா நெடும் தேர்ப்படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே (3)


3414 தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள்மேல் தும்பிகாள்
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்து அகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே? (4)


3415 நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கண் கருமுகிலை செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு? என்மினே (5)


3416 என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்
கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி
செல்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே (6)


3417 பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவரும் ஆய் நின்ற மாயன் என் ஆழிப் பிரான்
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி
பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே? (7)


3418 பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே அருள்செய்து ஒருநாள்
மாசு அறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே (8)


3419 பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்
நீர்த் திரைமேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே (9)


3420 வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே (10)


3421 மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
ஊற்றின்கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே (11)
----------

கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்

3422 நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய் சிவன் ஆய் அயன் ஆனாய்
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன்பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே (1)


3423 மண்ணும் விண்ணும் மகிழ குறள் ஆய் வலம் காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத்தூடே நடவாயே (2)


3424 ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்
சாலப் பல நாள் உகம்தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ? (3)


3425 தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே (4)


3426 விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
மண்மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண்மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவி
யுள் மீது ஆடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ? (5)


3427 பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? (6)


3428 உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே (7)


3429 அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே? (8)


3430 ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? (9)


3431 குறுகா நீளா இறுதிகூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்
மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே? (10)


3432 தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே (11)
-------------

திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திருவேங்கடம்)

3433 உலகம் உண்ட பெருவாயா
உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
கூடும் ஆறு கூறாயே (1)


3434 கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி
கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திரு நேமி
வலவா தெய்வக் கோமானே
சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ
மலரும் திருவேங்கடத்தானே
ஆறா அன்பில் அடியேன் உன்
அடிசேர் வண்ணம் அருளாயே (2)


3435 வண்ணம் மருள் கொள் அணி மேக
வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து
அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர
அடியேற்கு ஆஆ என்னாயே (3)


3436 ஆஆ என்னாது உலகத்தை
அலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த
சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
பூ ஆர் கழல்கள் அருவினையேன்
பொருந்துமாறு புணராயே (4)


3437 புணரா நின்ற மரம் ஏழ் அன்று
எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்
நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் எனக் களிறு
சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்
சேர்வது அடியேன் எந்நாளே? (5)


3438 எந்நாளே நாம் மண் அளந்த
இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள்
ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு
செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ந் நான் எய்தி எந் நாள் உன்
அடிக்கண் அடியேன் மேவுவதே? (6)


3439 அடியேன் மேவி அமர்கின்ற
அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே
கோலக் கனிவாய்ப் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே
திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம்
காண நோலாது ஆற்றேனே (7)


3440 நோலாது ஆற்றேன் உன பாதம்
காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும்
நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால்
வந்தாய் போலே வாராயே (8)


3441 வந்தாய் போலே வாராதாய்
வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய்
நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம்
அகலகில்லேன் இறையுமே (9)


3442 அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. (10)


3443 அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்
வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்
பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
பெரிய வானுள் நிலாவுவரே. (11)
------------

இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்

3444 உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை
உன் பாதபங்கயம்
நண்ணிலாவகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்
எண் இலாப் பெறு மாயனே இமையோர்கள்
ஏத்தும் உலகம் மூன்று உடை
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே (1)


3445 என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து
இராப்பகல் மோதுவித்திட்டு
உன்னை நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
கன்னலே அமுதே கார் முகில் வண்ணனே
கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே (2)


3446 வேதியாநிற்கும் ஐவரால் வினையேனை
மோதுவித்து உன் திருவடிச்
சாதியாவகை நீ தடுத்து என் பெறுதி? அந்தோ!
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு
உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே (3)


3447 சூது நான் அறியாவகை சுழற்றி ஓர் ஐவரைக்
காட்டி உன் அடிப்
போது நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி
ஓர் ஆலின் நீள் இலை
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே (4)


3448 தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டுத்
திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி
அசுரர் வன் குலம்
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே? ஓ (5)


3449 விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்
செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய்
பரமீசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே (6)


3450 ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல்
அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே (7)


3451 இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும்
மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக்
கைதொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே (8)


3452 குலம் முதல் அடும் தீவினைக் கொடு வன் குழியினில்
வீழ்க்கும் ஐவரை
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்தருள்கண்டாய்
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் நிற்பன
செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே (9)


3453 என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி
உன் இணைத் தாமரைகட்கு
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை
வலித்து எற்றுகின்றனர்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ (10)


3454 கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து
அளித்து கெடுக்கும் அப்
புண்டரீகக் கொப்பூழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
சடகோபன் சொல் ஆயிரத்துள் இப் பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே (11)
----------

திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்பதைக் கண்ட தாய்
அரங்கரைப் பார்த்து வினாவுதல் (திருவரங்கம்)

3455 கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
இரு நிலம் கை துழா இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத்து என் செய்கின்றாயே? (1)


3456 என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா?
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்?
என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ? என்னும்
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே? (2)


3457 வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும்
வானமே நோக்கும் மையாக்கும்
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட
ஒருவனே என்னும் உள் உருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா கண்ணனே என்னும்
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்திட்டாயே? (3)


3458 இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்
எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
கடல்வண்ணா கடியைகாண் என்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும்
வந்திடாய் என்று என்றே மயங்கும்
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் சிந்தித்தாயே? (4)


3459 சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக்கண் நீர் மல்க
வந்திடாய் என்று என்றே மயங்கும்
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே
அலை கடல் கடைந்த ஆர் அமுதே
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய்தானே (5)


3460 மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே
என்னும் மா மாயனே என்னும்
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்
ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்;
பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய்
பாவியேன் செயற்பாலதுவே (6)


3461 பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
பற்றிலார் பற்ற நின்றானே
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட
கடல்வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என்னும் என் தீர்த்தனே என்னும்
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே (7)


3462 கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி
கோ நிரை காத்தவன் என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்
எங்ஙனே நோக்குகேன்? என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என் செய்கேன் என் திருமகட்கே? (8)


3463 என் திருமகள் சேர் மார்வனே என்னும்
என்னுடை ஆவியே என்னும்
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே என்னும்
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே (9)


3464 முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்
மூவுலகு ஆளியே என்னும்
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும்
நான்முகக் கடவுளே என்னும்
வடிவு உடை வானோர் தலைவனே என்னும்
வண் திருவரங்கனே என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே (10)


3465 முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குருகூர்ச் சடகோபன்
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே (11)
----------

தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில்
சேரத் துணிதல் (திருப்பேரெயில்)

3466 வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்?
வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழா ஒலியும்
பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும்
அறா திருப்பேரெயில் சேர்வன் நானே (1)


3467 நானக் கருங் குழல் தோழிமீர்காள்
அன்னையர்காள் அயல் சேரியீர்காள்
நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே (2)


3468 செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ
நாணும் நிறையும் இழந்ததுவே (3)


3469 இழந்த எம் மாமைத்திறத்துப் போன
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ?
ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள் என்னை என் முனிந்தே? (4)


3470 முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருது இடை போய்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்?
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே
காலம்பெற என்னைக் காட்டுமினே (5)


3471 காலம்பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம் பெருமான்
நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான்
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த
நான்மறையாளரும் வேள்வி ஓவா
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப்பேரெயிற்கே. (6)


3472 பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி
பேர்த்து வர எங்கும் காணமாட்டேன்
ஆரை இனி இங்கு உடையம் தோழீ?
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே (7)


3473 கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி
கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் விசும்பும் கழியப் பெரிதால்
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த
தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே (8)


3474 சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்
அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை
கார்வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனிப் பழன
தென் திருப்பேரெயில் மாநகரே. (9)


3475 நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்
சிகர மணி நெடு மாடம் நீடு
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்றுவரை அன்று மங்க நூற்ற
நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் என்
நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே? (10)


3476 ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப்பேரெயில் மேய பத்தும்
ஆழி அங்கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத்திறத்து ஆழியாரே. (11)
----------

எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்

3477 ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே (1)


3478 ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2)


3479 நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3)


3480 நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4)


3481 ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5)


3482 போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6)


3483 மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே (7)


3484 நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8)


3485 அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே (9)


3486 மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10)


3487 குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே (11)
--------------

எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத
உலகத்தாரை நோக்கி இரங்குதல்

3488 கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (1)


3489 நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? (2)


3490 கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ
கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும்
சேண்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே? (3)


3491 தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ
பன்மைப் படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? (4)


3492 சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு உரு ஆயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? (5)


3493 கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ
வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டம்கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய
கோட்டு அங்கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டுமே? (6)


3494 கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ
வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே? (7)


3495 செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை
மல்லல் அரி உரு ஆய் செய்த மாயம் அறிந்துமே? (8)


3496 மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே? (9)


3497 வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின்கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே? (10)


3498 தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூவுலகத்துள்ளே (11)
------------

எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு
அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்

3499 பா மரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ
பா மரு மூவுலகும் அளந்த பற்ப பாதா ஓ
தாமரைக் கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓ
தாமரைக் கையா ஓ உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)


3500 என்றுகொல் சேர்வது அந்தோ! அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப்பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண் உயிர்
என்று இவை தாம் முதலா முற்றும் ஆய் நின்ற எந்தாய் ஓ
குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ! (2)


3501 காத்த எம் கூத்தா ஓ! மலை ஏந்திக் கல் மாரி தன்னை
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆர் உயிர் நீ ஆனால்
ஏத்து அரும் கீர்த்தியினாய்! உன்னை எங்குத் தலைப்பெய்வனே? (3)


3502 எங்குத் தலைப்பெய்வன் நான் எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெம் கதிர் வச்சிரக் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ;
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே? (4)


3503 என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கருமாணிக்கமே
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனேகொல் வந்து எய்துவரே? (5)


3504 வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்ப
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திருமார்பனையே (6)


3505 என் திருமார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ? (7)


3506 ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப
மீளி அம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும்
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்கொலோ? (8)


3507 காண்டும்கொலோ நெஞ்சமே! கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரியேற்றினையே? (9)


3508 ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி
கூற்று இயல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்கு ஆய் கொடும் சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே (10)


3509 புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே (11)
----------

எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி
வருந்தி உரைத்தல்

3510 ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ? அறியேன்
ஆழி அம் கண்ண பிரான் திருக்கண்கள்கொலோ? அறியேன்
சூழவும் தாமரை நாள் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே? (1)


3511 ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்?
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ? கொழுந்தோ? அறியேன்?
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே (2)


3512 வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன் வல்வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழும் துண்டம்கொலோ? அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே (3)


3513 இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் மதனன்
தன் உயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம்? அவையே
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே (4)


3514 என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்! எனக்கு உய்வு இடமே (5)


3515 உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்
பை விடப் பாம்பு அணையான் திருக் குண்டலக் காதுகளே?
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே (6)


3516 காண்மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன்
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலைகொல்
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே (7)


3517 கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோள் இழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே? (8)


3518 கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்? அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்! கழறா நிற்றிரே (9)


3519 நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையர் ஆய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறம் ஆய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே? (10)


3520 கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே (11)
---------

எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்

3521 மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் கால் ஆய்
தாய் ஆய் தந்தை ஆய் மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய்
நீ ஆய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே (1)

3522 அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
திங்களும் ஞாயிறும் ஆய் செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்
பொங்கு பொழி மழை ஆய் புகழ் ஆய் பழி ஆய் பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே (2)

3523 சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே (3)

3524 கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வெள்ளத் தடம் கடலுள் விட நாகு அணைமேல் மருவி
உள்ளப் பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே (4)

3525 பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
காயமும் சீவனும் ஆய் கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே (5)

3526 மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய் அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்
வியப்பு ஆய் வென்றிகள் ஆய் வினை ஆய் பயன் ஆய் பின்னும் நீ
துயக்கு ஆய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே (6)

3527 துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
துயரம் செய் மானங்கள் ஆய் மதன் ஆகி உகவைகள் ஆய்
துயரம் செய் காமங்கள் ஆய் துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே (7)

3528 என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா?
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை
முன்னிய மூவுலகும் அவை ஆய் அவற்றைப் படைத்து
பின்னும் உள்ளாய் புறத்தாய்! இவை என்ன இயற்கைகளே (8)

3529 என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?
துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே (9)

3530 இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம்
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே (10)

3531 ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே (11)
--------

இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக்
கைம்மாறு இல்லை எனல்

3532 என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ? (1)

3533 என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே? (2)

3534 ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ? (3)

3535 அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றி தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீவினையேனை உய்யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? (4)

3536 சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன்கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே (5)

3537 இன் கவி பாடும் பரம் கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே (6)

3538 வைகுந்த நாதன் என வல்வினை மாய்ந்து அறச்
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை
வைகுந்தன் ஆகப் புகழ வண் தீம் கவி
செய் குந்தன் தன்னை எந் நாள் சிந்தித்து ஆர்வனோ? (7)

3539 ஆர்வனோ ஆழி அங்கை எம் பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைச்
சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கே? (8)

3540 திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர்
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ
மறப்பு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே? (9)

3541 உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே (10)

3542 இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும்
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே (11)
------------

திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார்
அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)

3543 இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும்
இவ் ஏழ் உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து
ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில்
சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும்
நாள்களும் ஆகும்கொலோ? (1)

3544 ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்
முற்றவும் ஈர் அடியே
ஆகும்பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன்
அமர்ந்து உறையும்
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு
மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து
கைதொழக் கூடும்கொலோ? (2)

3545 கூடும் கொல் வைகலும்? கோவிந்தனை
மதுசூதனை கோளரியை
ஆடும் பறவைமிசைக் கண்டு கைதொழுது
அன்றி அவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து
ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ
வாய்க்கும்கொல் நிச்சலுமே? (3)

3546 வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்
வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்
வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்
மலர் அடிப்போதுகளே? (4)

3547 மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்
இருத்தி வணங்க
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு அணை அப்பன்
அமர்ந்து உறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு
மதிள் திருவாறன்விளை
உலகம் மலி புகழ் பாட நம்மேல் வினை
ஒன்றும் நில்லா கெடுமே. (5)

3548 ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித்
தொழுமின் தொண்டீர்!
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை
அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப
உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திருவாறன்விளை என்னும்
நீள் நகரம் அதுவே (6)

3549 நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள்
சூழ் திருவாறன்விளை
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால்
கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய
வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண்
அன்றி மற்று ஒன்று இலமே (7)

3550 அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று
அகல் இரும் பொய்கையின்வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின்
நெஞ்சு இடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில்
சூழ் திருவாறன்விளை
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை
உள்ளத்தின் சார்வு அல்லவே (8)

3551 தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி
தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த
தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில்
திருவாறன்விளை அதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்?
என்னும் என் சிந்தனையே (9)

3552 சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை
தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன
மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர்
குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை
தீர்த்தனுக்கு அற்ற பின்னே (10)

3553 தீர்த்தனுக்கு அற்றபின் மற்று ஓர் சரண்
இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி செழுங்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி
உரைப்பர் தம் தேவியர்க்கே (11)
-----------

எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும்
நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தௌதல்

3554 தேவிமார் ஆவார் திருமகள் பூமி
ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி
வேண்டு வேண்டு உருவம் நின் உருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்
கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த
அப்பனே காணுமாறு அருளாய் (1)

3555 காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே
பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா
தொண்டனேன் கற்பகக் கனியே
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ்
பெரு நிலம் எடுத்த பேராளா (2)

3556 எடுத்த பேராளன் நந்தகோபன் தன்
இன் உயிர்ச் சிறுவனே அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல இளம் களிறே
அடியனேன் பெரிய அம்மானே
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக்
கைஉகிர் ஆண்ட எம் கடலே
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய்
எங்ஙனம் தேறுவர் உமரே? (3)

3557 உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
ஆகி உன் தனக்கு அன்பர் ஆனார்
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ்
அடு படை அவித்த அம்மானே
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே
என்னுடை ஆர் உயிரேயோ (4)

3558 ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும்
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு
உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த
சீர் உயிரேயோ மனிசர்க்குத் தேவர்
போலத் தேவர்க்கும் தேவாவோ
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்!
உன்னை நான் எங்கு வந்து உறுகோ? (5)

3559 எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே?
ஏழ் உலகங்களும் நீயே
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே
அவற்று அவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும்
அவையுமோ நீ இன்னே ஆனால்
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே
வான் புலன் இறந்ததும் நீயே (6)

3560 இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோ நீ இன்னே ஆனால்
சிறந்த நின் தன்மை அது இது உது என்று
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னை தோள் மணந்த பேர் ஆயா (7)

3561 மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும்
வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர்
கூற்றமே கொடிய புள் உயர்த்தாய்
பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப்
பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும்
செய்கையும் யானும் நீ தானே (8)

3562 யானும் நீ தானே ஆவதோ மெய்யே
அரு நரகு அவையும் நீ ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என்? மற்றை
நரகமே எய்தில் என்? எனினும்
யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்!
அருளு நின் தாள்களை எனக்கே (9)

3563 தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
தந்த பேர் உதவிக் கைம்மாறாத்
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை
அற விலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய்
துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
தமியனேன் பெரிய அப்பனே (10)

3564 பெரிய அப்பனை பிரமன் அப்பனை
உருத்திரன் அப்பனை முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை
உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை
பெரிய வண் குருகூர் வண் சடகோபன்
பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால்
உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (11)
----------

3565 நங்கள் வரிவளை ஆயங்காளோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தட முலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கடவாணனை வேண்டிச் சென்றே (1)

3566 வேண்டிச் சென்று ஒன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே (2)

3567 காலம் இளைக்கில் அல்லால் வினையேன்
நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன்
நல் நுதலீர் இனி நாணித் தான் என்
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளையொடும் மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே? (3)

3568 கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார்முன் பரிசு அழிந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல் போர்
ஆழிவலவனை ஆதரித்தே (4)

3569 ஆழிவலவனை ஆதரிப்பும்
ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்
தோழியர்காள் நம் உடையமேதான்?
சொல்லுவதோ இங்கு அரியதுதான்
ஊழிதோறு ஊழி ஒருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகாச்
சூழல் உடைய சுடர் கொள் ஆதித்
தொல்லை அம் சோதி நினைக்குங்காலே? (5)

3570 தொல்லை அம் சோதி நினைக்குங்கால் என்
சொல் அளவு அன்று இமையோர் தமக்கும்
எல்லை இலாதன கூழ்ப்புச் செய்யும்
அத் திறம் நிற்க எம் மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல்? சொல்லீர்!
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே (6)

3571 மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன்
கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள்
என்னுடைத் தோழியர்காள் என் செய்கேன்?
காலம் பல சென்றும் காண்பது ஆணை
உங்களோடு எங்கள் இடை இல்லையே (7)

3572 இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்
பூவைகள்காள் குயில்காள் மயில்காள்!
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்
அஞ்சன வெற்பும் அவை நணிய
கடையறப் பாசங்கள் விட்டபின்னை
அன்றி அவன் அவை காண்கொடானே (8)

3573 காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை
கைசெய் அப்பாலது ஓர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்? (9)

3574 என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்
யான் இனிச் செய்வது என் என் நெஞ்சு என்னை
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி ஓர் கோல நீல
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான்
நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே (10)

3575 பாதம் அடைவதன் பாசத்தாலே
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு
கோது இல் புகழ்க் கண்ணன் தன் அடிமேல்
வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும்
அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (11)
-----------

எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால்
உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்

3576 அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்
சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே (1)

3577 சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி
அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே (2)

3578 ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே (3)

3579 ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன்
கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே (4)

3580 கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளியங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே (5)

3581 பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்
தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே (6)

3582 வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே? (7)

3583 என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்?
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே (8)

3584 திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்?
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடைக்
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே (9)

3585 கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கம் எய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது? உரையீரே? (10)

3586 உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை
வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்
உரை ஏய் சொல்தொடை ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே (11)
--------

எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி
முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)

3587 வார் கடா அருவி யானை மா மலையின்
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல்
போர் கடா அரசர் புறக்கிட மாடம்
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (1)

3588 எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம்
இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம் அருவன்
செங்கயல் உகளும் தேம் பணை புடை சூழ்
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்று என் அமர் துணையே? (2)

3589 என் அமர் பெருமான் இமையவர் பெருமான்
இரு நிலம் இடந்த எம் பெருமான்
முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள
என்னை ஆள்கின்ற எம் பெருமான்
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரை மீபால்
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண்
நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே (3)

3590 பிறிது இல்லை எனக்கு பெரிய மூவுலகும்
நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என் அம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ்
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான்
அடிஇணை அல்லது ஓர் அரணே (4)

3591 அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை
அது பொருள் ஆகிலும் அவனை
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது
ஆதலால் அவன் உறைகின்ற
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே (5)

3592 எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை
தடம் கடல் பள்ளி அம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும்
அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே (6)

3593 திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல உந்தியும் செய்ய
கமலை மார்பும் செய்ய உடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ என் சிந்தையுளானே (7)

3594 திகழ என் சிந்தையுள் இருந்தானை
செழு நிலத்தேவர் நான்மறையோர்
திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங் கரையானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன் கையர் வெம் கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே (8)

3595 படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
பரம்பரன் சிவப்பிரான் அவனே
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே
புகழ்வு இல்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன் ஆனார்
கூரிய விச்சையோடு ஒழுக்கம்
நடைப் பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே (9)

3596 அமர்ந்த நாதனை அவர் அவர் ஆகி
அவர்க்கு அருள் அருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங் கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள்
தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை அமர்ந்தேனே (10)

3597 தேனை நன் பாலை கன்னலை அமுதை
திருந்து உலகு உண்ட அம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் வண் சடகோபன்
சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும்
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே (11)
-----------

எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்

3598 மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதிச் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம்போல் வருவானே
ஒருநாள் காண வாராயே (1)

3599 காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நல் நாட்டு அலமந்தால்
இரங்கி ஒருநாள் நீ அந்தோ
காண வாராய்! கரு நாயிறு
உதிக்கும் கரு மா மாணிக்க
நாள் நல் மலைபோல் சுடர்ச் சோதி
முடி சேர் சென்னி அம்மானே! (2)

3600 முடிசேர் சென்னி அம்மா நின்
மொய் பூம் தாமத் தண் துழாய்க்
கடிசேர் கண்ணிப் பெருமானே
என்று என்று ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால் தோளும்
துடி சேர் இடையும் அமைந்தது ஓர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே. (3)

3601 தூ நீர் முகில் போல் தோன்றும் நின்
சுடர் கொள் வடிவும் கனிவாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்து என் சிந்தை நிறைந்தவா
மா நீர் வெள்ளி மலைதன்மேல்
வண் கார் நீல முகில் போல
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய்! சொல்லமாட்டேனே (4)

3602 சொல்ல மாட்டேன் அடியேன் உன்
துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு
இரண்டுபோல் என் உள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுது உண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே? (5)

3603 கொண்டல் வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா என்
அண்ட வாணா என்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண்மேல் தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல்காண
ஒருநாள் வந்து தோன்றாயே (6)

3604 வந்து தோன்றாய் அன்றேல் உன்
வையம் தாய மலர் அடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாய் ஓர் கரு நாயிறு
அந்தம் இல்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே (7)

3605 ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாள் நாளும்
தொக்க மேகப் பல் குழாங்கள்
காணும்தோறும் தொலைவன் நான்
தக்க ஐவர் தமக்காய் அன்று
ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்
புக்க நல்தேர்த் தனிப்பாகா
வாராய் இதுவோ பொருத்தமே? (8)

3606 இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்
படையாய் ஏறும் இரும் சிறைப்புள்
அதுவே கொடியா உயர்த்தானே
என்று என்று ஏங்கி அழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மது வார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே? (9)

3607 பிறந்த மாயா பாரதம்
பொருத மாயா நீ இன்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண்
பிறவும் ஆய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெரு மாயா
உன்னை எங்கே காண்கேனே? (10)

3608 எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான்? என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே (11)
--------

ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில்
இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)

3609 எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே (1)

3610 திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும்
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக் கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உருக் கெட வாளி பொழிந்த ஒருவனே (2)

3611 ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்தோறும் தித்திப்பான்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாயப் பிரானே (3)

3612 மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே (4)

3613 கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்;
கோயில்கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே (5)

3614 கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை
ஏத்த நில்லா குறிக்கொள்மின் இடரே (6)

3615 கொள்மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக்கடித்தான நகரே (7)

3616 தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும்
வான் இந் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும் தன தாயப் பதியே (8)

3617 தாயப் பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும்
மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே (9)

3618 அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம்
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே (10)

3619 சோலைத் திருக்கடித்தானத்து உறை திரு
மாலை மதிள் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே (11)
---------

தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்

3620 இருத்தும் வியந்து என்னைத் தன் பொன் அடிக்கீழ் என்று
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே (1)

3621 இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்து அற மன்னி
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே (2)

3622 அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள்
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால்
பொருள் தான் எனில் மூவுலகும் பொருள் அல்ல
மருள் தான் ஈதோ? மாய மயக்கு மயக்கே? (3)

3623 மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரர்க்கு அரிஏறு எனது அம்மான்
தூய சுடர்ச்சோதி தனது என் உள் வைத்தான்
தேசம் திகழும் தன் திருவருள் செய்தே (4)

3624 திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தான் அது காட்டித் தந்து என் உள்
திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே? (5)

3625 பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்
திரு மார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே? (6)

3626 செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே (7)

3627 அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார்
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரே (8)

3628 வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் எவரும்
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்றவண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே (9)

3629 வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால்
பைத்து ஏய் சுடர்ப் பாம்பு அணை நம் பரனையே (10)

3630 சுடர்ப் பாம்பு அணை நம் பரனை திருமாலை
அடிச் சேர்வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப் பத்தும் சன்மம்
விடத் தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே (11)
-----------

ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்

3631 கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்(கு) கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே. (1)

3632 அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கலாம்
படியன் அல்லன் பரம்பரன்
கடிசேர் நாற்றத்துள் ஆலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்
உணர்வில் உம்பர் ஒருவனே (2)

3633 உணர்வில் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறற்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்
அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி
யானும் தானாய் ஒழிந்தானே. (3)

3634 யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே (4)

3635 நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே (5)

3636 நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்பத் துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே (6)

3637 அதுவே வீடு வீடுபேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு வீடுபேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு? ஏது இன்பம்? என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே (7)

3638 எய்த்தார் எய்த்தார் எய்த்தார்
என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம்
போகும்போது உன்மத்தர்போல்
பித்தே ஏறி அநுராகம்
பொழியும்போது எம் பெம்மானோடு
ஒத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல் உறைப்பே (8)

3639 கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை உயர் கொடி எம்
மாயன் ஆவது அது அதுவே
வீடைப் பண்ணி ஒரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே (9)

3640 உளரும் இல்லை அல்லராய்
உளராய் இல்லை ஆகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என்
உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறையும் தேய் பிறையும்
போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே (10)

3641 தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடிக்கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப் பத்தால்
அருளி அடிக்கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே (11)
----------

தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து
அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)

3642 கரு மாணிக்க மலைமேல் மணித் தடம்
தாமரைக் காடுகள் போல்
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை
ஆடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட
நாட்டுத் திருப்புலியூர்
அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் அன்னைமீர்!
இதற்கு என் செய்கேனோ? (1)

3643 அன்னைமீர் இதற்கு என் செய்கேன்? அணி
மேருவின் மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும்
பல் சுடர்களும் போல்
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான்
உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர்
புகழும் இவளே (2)

3644 புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப்புலியூர் வளமே (3)

3645 ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப்புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே (4)

3646 புனை இழைகள் அணிவும் ஆடை உடையும்
புதுக்கணிப்பும்
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று
நினைக்கப்புக்கால்
சுனையினுள் தடம் தாமரை மலரும்
தண் திருப்புலியூர்
முனைவன் மூவுலகு ஆளி அப்பன்
திரு அருள் மூழ்கினளே. (5)

3647 திரு அருள் மூழ்கி வைகலும் செழு நீர்
நிறக் கண்ண பிரான்
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திரு அருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப்புலியூர்
திரு அருள் கமுகு ஒண் பழத்தது
மெல்லியல் செவ்விதழே (6)

3648 மெல் இலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கு இளம் தாள் கமுகின்
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து
மணம் கமழ்ந்து
புல் இலைத் தெங்கினூடு கால் உலவும்
தண் திருப்புலியூர்
மல்லல் அம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே (7)

3649 மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்?
மல்லைச் செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல்
வான் புகை போய்த்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப்புலியூர்
பட அரவு அணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே (8)

3650 பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர்
நிறக் கண்ண பிரான்
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின்
நின்று ஒலிப்ப
கரவு ஆர் தடம்தொறும் தாமரைக் கயம்
தீவிகை நின்று அலரும்
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர்ப்
புகழ் அன்றி மற்றே (9)

3651 அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்
தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக்
குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட
நாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர்பட்டதே? (10)

3652 நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே (11)
-----------

பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ்வார் பேசுதல்

3653 நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும்
தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார்
அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என் அந்தோ!
வியன் மூவுலகு பெறினுமே? (1)

3654 வியன் மூவுலகு பெறினும் போய்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம்போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக்கீழ்ச்
சயமே அடிமை தலைநின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே? (2)

3655 உறுமோ பாவியேனுக்கு இவ்
உலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என்
செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை
ஆண்டார் இங்கே திரியவே? (3)

3656 இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோலத்த பவளவாய்ச்
செந்தாமரைக்கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன்கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழிபட்டு ஓட அருளிலே? (4)

3657 வழிபட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்ச்
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிபட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டு ஓடும் கவிஅமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே? (5)

3658 நுகர்ச்சி உறுமோ மூவுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே? (6)

3659 தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே (7)

3660 நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங் கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலைபோல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே. (8)

3661 தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள்
தாதை கோது இல் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே (9)

3662 வாய்க்க தமியேற்கு ஊழிதோறு
ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள்
பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம்
அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் நல்ல கோட்பாடே (10)

3663 நல்ல கோட்பாட்டு உலகங்கள்
மூன்றினுள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அம் தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டீர் மக்களே 11
-------------

கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும்
உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)

3664 கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே (1)

3665 துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள்போல் சுவைப்பர்
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலைப்
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே (2)

3666 பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்று எழுவர்
இருள்கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை
மருள்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே (3)

3667 அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே (4)

3668 சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே (5)

3669 இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்யப் போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே (6)

3670 மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே (7)

3671 வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவிப்
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே (8)

3672 யாதும் இல்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம்
மா துகிலின் கொடிக்கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே (9)

3673 கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே (10)

3674 ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே (11)
-----------

எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு
ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)

3675 பண்டை நாளாலே நின் திரு அருளும்
பங்கயத்தாள் திரு அருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால்
குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப்புளிங்குடிக் கிடந்தானே (1)

3676 குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த
அடிமைக் குற்றேவல்செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ ஒருநாள்
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத
பங்கயமே தலைக்கு அணியாய்
கொடிக்கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை
திருப்புளிங்குடிக் கிடந்தானே (2)

3677 கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திருஉடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன்
தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்
திருப்புளிங்குடிக் கிடந்தானே (3)

3678 புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்ப நீ காண வாராயே (4)

3679 பவளம்போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண்
தாமரை தயங்க நின்றருளாய்
பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய் சினப் பறவை ஊர்ந்தானே (5)

3680 காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின்
மீமிசைக் கார் முகில் போல
மா சின மாலி மாலிமான் என்று அங்கு
அவர் படக் கனன்று முன் நின்ற
காய் சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு
ஏந்தி எம் இடர் கடிவானே (6)

3681 எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கு அனையாய்
செம் மடல் மலருந் தாமரைப் பழனத்
தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து
நாம் களித்து உளம் நலம் கூர
இம் மட உலகர் காண நீ ஒருநாள்
இருந்திடாய் எங்கள் கண்முகப்பே (7)

3682 எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
இணை அடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால்
தலைத்தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்
திரு வைகுந்தத்துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே (8)

3683 வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி ஓவாதே கண் இணை குளிர
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும்
செழும் பனைத் திருப்புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
கொடுவினைப் படைகள் வல்லானே (9)

3684 கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு
இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே
கலி வயல் திருப்புளிங்குடியாய்
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும் மெல் அடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே (10)

3685 கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான்
அடி இணை உள்ளத்து ஓர்வாரே (11)
--------------

எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார்
அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்

3686 ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாரயணன் நங்கள் பிரான் அவனே (1)

3687 அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே (2)

3688 அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே (3)

3689 மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே (4)

3690 மனமே உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்!
புனம் மேவிய பூந் தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே (5)

3691 அடைவதும் அணி ஆர் மலர் மங்கைதோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே (6)

3692 ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே (7)

3693 இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே (8)

3694 தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுதும் என்னும் இது மிகை ஆதலின்
பழுது இல் தொல் புகழ்ப் பாம்பு அணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே (9)

3695 தாள தாமரையான் உனது உந்தியான்
வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன சீலமே? (10)

3696 சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோலம் நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே (11)
-----------

எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே
கண்டு மகிழ்ந்தமை கூறல்

3697 மை ஆர் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே (1)

3698 கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாதொழியேன் என்று நான் அழைப்பனே (2)

3699 அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே (3)

3700 உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்கண்
பெறுவது எதுகொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே (4)

3701 அரியாய அம்மானை அமரர் பிரானை
பெரியானை பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளிகொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே (5)

3702 கருத்தே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே (6)

3703 உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்பால்
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே (7)

3704 உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம்
கரு ஆகிய கண்ணனை கண்டுகொண்டேனே (8)

3705 கண்டுகொண்டு என் கண் இணை ஆரக் களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே (9)

3706 அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே (10)

3707 ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை
சேறு ஆர் வயல் தென் குருகூர்ச் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே (11)
----------

தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும்
பொருள்களால் தளர்ந்தமை கூறல்

3708 இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள்
என் உயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ? (1)

3709 இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்?
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே (2)

3710 அவன் கையதே எனது ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே?
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே? (3)

3711 கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேல் கிளை கொள்ளேல்மின் நீரும் சேவலும் கோழிகாள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே (4)

3712 அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் (5)

3713 நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் (6)

3714 கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டம் இல் என் கருமாணிக்கம் கண்ணன் மாயன்போல்
கோட்டிய வில்லொடு மின்னும் மேகக் குழாங்கள்காள்
காட்டேல்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே (7)

3715 உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர்ப் பழஞ் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்! பண்பு உடையீரே (8)

3716 பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான் (9)

3717 எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள்காள் பயின்று என் இனி?
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே (10)

3718 இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே (11)
-----------

ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)

3719 உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே? (1)

3720 நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே (2)

3721 நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மைசெய்து என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் (3)

3722 அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு அருளே (4)

3723 திரு அருள் செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
திரு வளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே (5)


3724 என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க் கோது இது
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே (6)


3725 காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோள் குறைபட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே (7)


3726 கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
காள நீர் மேகத் தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது? என் ஆர் உயிர் பட்டதே (8)


3727 ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனி வாயது ஓர்
கார் எழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வவாரிக்கே? (9)


3728 வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே (10)


3729 கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப் பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே (11)
-----------

எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே
பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)

3730 எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும்
கொங்கு ஆர் பூந் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே (1)


3731 நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு?
தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே (2)


3732 தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும்
கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும்
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக் கமலத்து இலைப் போலும் திருமேனி அடிகளுக்கே (3)


3733 திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள்
திருமேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன்
திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே? (4)


3734 தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்து உறையும்
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே (5)


3735 தூது உரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள்
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும்
மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே (6)


3736 சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒருநாள் ஓர் தூய் மாற்றம்
படர் பொழில்வாய்க் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே. (7)


3737 எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும்
புனக்கொள் காயா மேனிப் பூந் துழாய் முடியார்க்கே (8)


3738 பூந் துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையாருக்கு
ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக் களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே (9)


3739 தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே (10)


3740 ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடரை
ஒழிவு இல்லா அணி மழலைக் கிளிமொழியாள் அலற்றிய சொல்
வழு இல்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே (11)
-----------

தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான
திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)

3741 அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
குறுக்கும் வகை உண்டுகொலோ கொடியேற்கே? (1)


3742 கொடி ஏர் இடைக் கோகனகத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப் பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப்பெறும் நாள் எவைகொலோ? (2)


3743 எவைகொல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே (3)


3744 நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப்பணி செய்யப் புகுந்தேன்
நீள் ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
வாள் ஏய் தடம் கண் மடப் பின்னை மணாளா (4)


3745 மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண் ஆரக் களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்டே? (5)


3746 கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே? (6)


3747 கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய்
தேவாசுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே (7)


3748 அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே (8)


3749 தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திருநாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி? அந்தோ (9)


3750 அந்தோ அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்
கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணி வண்ணா. (10)


3751 வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே (11)
---------------

தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்

3752 மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ (1)


3753 புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்? (2)


3754 இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்?
இணை முலை நமுக நுண் இடை நுடங்க
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ (3)


3755 பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி ஆலோ
தூவி அம் புள் உடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ (4)


3756 யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ
ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ
அவனுடைத் தீம் குழல் ஈரும் ஆலோ
யாமுடைத் துணை என்னும் தோழிமாரும்
எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ
யாமுடை ஆர் உயிர் காக்குமாறு என்?
அவனுடை அருள்பெறும் போது அரிதே (5)


3757 அவனுடை அருள்பெறும் போது அரிதால்
அவ் அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை
சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும்
எவன் இனிப் புகும் இடம்? எவன் செய்கேனோ?
ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள் (6)


3758 ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்
ஆர் உயிர் அளவு அன்று இக் கூர் தண் வாடை
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூப்
புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ (7)


3759 புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ
பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் (8)


3760 ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடை தன் செய் கோலத்
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி
தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி
பேதுறு முகம்செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்று அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான் (9)


3761 மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ
கொடியன குழல்களும் குழறும் ஆலோ
வால் ஒளி வளர் முல்லை கருமுகைகள்
மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே? (10)


3762 அவனைவிட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி உண்டு உமிழ்ந்தவன்மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே (11)
------------

திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்
(திருக்கண்ணபுரம்)

3763 மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே (1)


3764 கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே (2)


3765 தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே (3)


3766 மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே (4)


3767 சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே (5)


3768 அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே (6)


3769 மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே (7)


3770 அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே (8)


3771 பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே (9)


3772 இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே (10)


3773 பாடு சாராவினை பற்று அற வேண்டுவீர்
மாடம் நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே (11)
-------------

திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம்
அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல் (திருமோகூர்)

3774 தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்கு உடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்க்
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே (1)


3775 இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே (2)


3776 அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே (3)


3777 இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பு அணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே (4)


3778 தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்டம் மூவுலகு அளந்தவன் அணி திருமோகூர்
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளையக்
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே (5)


3779 கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே (6)


3780 மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலாச்
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகுசெய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கெடும் கடிதே (7)


3781 துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே (8)


3782 மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே (9)


3783 நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள் (10)


3784 ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே (11)
-----------

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு
செய்யலாம் என்று கூறுதல் (திருவனந்தபுரம்)

3785 கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே (1)


3786 இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே (2)


3787 ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே (3)


3788 பேசுமின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே (4)


3789 புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் (5)


3790 அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேள்மின் நாமும் போய் நணுகவேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே (6)


3791 துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு அணைப் பள்ளி கொண்டான்
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே (7)


3792 கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம். (8)


3793 நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணிய ஆன
சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே. (9)


3794 மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம் இல் புகழினாரே (10)


3795 அந்தம் இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி தன்னைக்
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே (11)
------------

ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத்
தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்

3796 வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா (1)


3797 தகவிலை தகவிலையே நீ கண்ணா
தட முலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம்தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே (2)


3798 வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே (3)


3799 தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் (4)


3800 பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ
பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ
மணி மிகு மார்பினில் முல்லைப்போது என்
வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை அந்தோ!
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் (5)


3801 அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே (6)


3802 வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க் கண் இணை முத்தம் சோர
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல
வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? (7)


3803 அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று
ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்கலந்து
கலவியும் நலியும் என் கைகழியேல்
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ
உகக்கும் நல்லவரொடும் உழிதராயே (8)


3804 உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன் தன்
திருவுள்ளம் இடர் கெடும்தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ (9)


3805 அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்
தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற என்னுடை ஆவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே (10)


3806 செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத்
திருவடி திருவடிமேல் பொருநல்
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர்
வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை
அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே (11)
-------------

ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்

3807 சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி கால் ஆய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே (1)


3808 பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும்
திரு மெய் உறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே (2)


3809 ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்?
மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண்கண் மடப் பின்னை தன் கேள்வன்
தாள் கண்டுகொண்டு என் தலைமேல் புனைந்தேனே (3)


3810 தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே (4)


3811 நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்
மெச்சப்படான் பிறர்க்கு மெய்போலும் பொய் வல்லன்
நச்சப்படும் நமக்கு நாகத்து அணையானே (5)


3812 நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத்து இள மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே (6)


3813 பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே (7)


3814 ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய் (8)


3815 கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே (9)


3816 வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசைதோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே (10)


3817 பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வளநாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே (11)
----------------

பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்

3818 கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே (1)


3819 நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே (2)


3820 தானே உலகு எல்லாம்
தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து
தானே ஆள்வானே (3)


3821 ஆள்வான் ஆழி நீர்க்
கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே (4)


3822 நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன் நாமம்
வீடே பெறலாமே (5)


3823 மேயான் வேங்கடம்
காயாமலர் வண்ணன்
பேயார் முலை உண்ட
வாயான் மாதவனே (6)


3824 மாதவன் என்று என்று
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா
ஏதம் சாராவே (7)


3825 சாரா ஏதங்கள்
நீர் ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே (8)


3826 அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே (9)


3827 வினை வல் இருள் என்னும்
முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு
நினைமின் நெடியானே (10)


3828 நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப் பத்து
அடியார்க்கு அருள்பேறே (11)
----------------

தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு)

3829 அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே (1)


3830 வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே! கேசவன் எம் பெருமானைப்
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே (2)


3831 நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே (3)


3832 என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே (4)


3833 வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே!
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாள் இணை என் தலைமேலே (5)


3834 தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என் அம்மான்
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான்
மலை மாடத்து அரவு அணைமேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே (6)


3835 குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே (7)


3836 மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே? (8)


3837 திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே (9)


3838 பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான்
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாய் அரவு அணைமேல் வாட்டாற்றான் காட்டினனே (10)


3839 காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளங் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே (11)
----------------

ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள
வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)

3840 செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியாவண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே (1)


3841 தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக்
கோனே ஆகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே (2)


3842 என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர்
தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே? (3)


3843 என்கொல் அம்மான் திரு அருள்கள் உலகும் உயிரும் தானே ஆய்
நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே? (4)


3844 நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே (5)


3845 திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூவுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலையளிக்கும்
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே (6)


3846 அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலை மலையே (7)


3847 திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே (8)


3848 ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும்
ஆழிவண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே (9)


3849 மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே. (10)


3850 மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்காரமாய்ப் புக்கு தானே தானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே. (11)
----------

காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது
திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)

3851 திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே (1)


3852 பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே (2)


3853 பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே (3)


3854 எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே (4)


3855 வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே (5)


3856 திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே (6)


3857 உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே? (7)


3858 கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே (8)


3859 இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்?
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே (9)


3860 உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே (10)


3861 நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே (11)
------------

திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே அனுபவித்துப் பேசுதல்

3862 சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின:
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே (1)


3863 நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே (2)


3864 தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே (3)


3865 எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே (4)


3866 மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே (5)


3867 வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே (6)


3868 மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே (7)


3869 குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே (8)


3870 வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே (9)


3871 விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே (10)


3872 வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே (11)
-------------

ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம்
அடைந்தமையை அருளிச்செய்தல்

3873 முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே (1)


3874 மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங் குழலாள் திரு ஆணை நின் ஆணைகண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! (2)


3875 கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே (3)


3876 உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள்மிசை நீயே ஓ
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே (4)


3877 போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை? அந்தோ எனது என்பது என்? யான் என்பது என்?
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே (5)


3878 எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு அன்பா என் அன்பேயோ (6)


3879 கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனிப் போக்குவனோ? (7)


3880 பெற்று இனிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை?
உற்ற இருவினை ஆய் உயிர் ஆய் பயன் ஆயவை ஆய்
முற்ற இம் மூவுலகும் பெரும் தூறு ஆய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ (8)


3881 முதல் தனி வித்தேயோ முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ! (9)


3882 சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே (10)


3883 அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே (11)
-------

திருமழிசை ஆழ்வார் - இராமானுச நூற்றந்தாதி (3893 -4000)


3893 பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (1)


3894 கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே (2)


3895 பேர் இயல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே (3)


3896 என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே (4)


3897 எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மனக் குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா
இனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே (5)


3898 இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே (6)


3899 மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே (7)


3900 வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுளத்தே
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே (8)


3901 இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே (9)


3902 மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள்
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே (10)


3903 சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழப் பாண்பெருமாள் சரண் ஆம் பதுமத்
தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே (11)


3904 இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே (12)


3905 செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே (13)


3906 கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னைச் சோர்விலனே (14)


3907 சோராத காதல் பெருஞ் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே? (15)


3908 தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே (16)


3909 முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும்
தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே (17)


3910 எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே (18)


3911 உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே (19)


3912 ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமாநுசன் என் தன் மா நிதியே (20)


3913 நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னைக் காத்தனனே (21)


3914 கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என் தன் சேம வைப்பே (22)


3915 வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே? (23)


3916 மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்தொறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவியக்
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே (24)


3917 கார் ஏய் கருணை இராமாநுச இக் கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே (25)


3918 திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே (26)


3919 கொள்ளக் குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே (27)


3920 நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே (28)


3921 கூட்டும் விதி என்று கூடுங்கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசுந்தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே? (29)


3922 இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்? எண் இறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என்? தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே (30)


3923 ஆண்டுகள் நாள் திங்கள் ஆய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணைக்கீழ்ப்
பூண்ட அன்பாளன் இராமாநுசனைப் பொருந்தினமே (31)


3924 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அருந் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே (32)


3925 அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும்
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடை ஆர் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமாநுசமுனி ஆயின இந் நிலத்தே (33)


3926 நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பு அரிய
பெலத்தைச் செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென்
புலத்தில் பொறித்த அப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமாநுசன் தன் நயப் புகழே (34)


3927 நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே? (35)


3928 அடல் கொண்ட நேமியன் ஆர் உயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ் ஒண்பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே (36)


3929 படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர்
கடி கொண்ட மா மலர்த் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே (37)


3930 ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே
போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு? புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே (38)


3931 பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே? (39)


3932 சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நல்
காமமும் என்று இவை நான்கு என்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே (40)


3933 மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண் உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப் பொழுதே
நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே (41)


3934 ஆயிழையார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே (42)


3935 சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாய் அமுதம்
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமினே (43)


3936 சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண் அரும் சீர்
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே (44)


3937 பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி என்று இப் பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே (45)


3938 கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே (46)


3939 இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ் உலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே (47)


3940 நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின்கண் அன்றி
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே? (48)


3941 ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெம் கலி பூங் கமலத்
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத்
தான் அதில் மன்னும் இராமாநுசன் இத் தலத்து உதித்தே (49)


3942 உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த என் புன் கவிப் பா இனம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே (50)


3943 அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப்
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே (51)


3944 பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே (52)


3945 அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும்
நற்பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே (53)


3946 நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே (54)


3947 கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித்தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே (55)


3948 கோக் குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே (56)


3949 மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள்
உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நல் தவர் போற்றும் இராமாநுசனை இந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதைமையே (57)


3950 பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு
ஆதிப் பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய்ம் மதிக்கடலே (58)


3951 கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே
மிடைதரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே (59)


3952 உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்தொறும் திருவாய்மொழியின்
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குலக் கொழுந்தே (60)


3953 கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே (61)


3954 இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர்த் தாள்
பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப்பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே (62)


3955 பிடியைத் தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இப்
படியைத் தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே. (63)


3956 பண் தரு மாறன் பசுந் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமாநுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்டம் ஏந்தி குவலயத்தே
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே (64)


3957 வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே (65)


3958 ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அத்
தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே (66)


3959 சரணம் அடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ் ஆர் உயிர்க்கே? (67)


3960 ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில்? மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய
பாரினில் சொன்ன இராமாநுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே (68)


3961 சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன் நாள்
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே (69)


3962 என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னைச் சார்ந்தவரே? (70)


3963 சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்தது அத் தாமரைத் தாள்களுக்கு உன் தன் குணங்களுக்கே
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால்
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே (71)


3964 கைத்தனன் தீய சமயக் கலகரை காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே (72)


3965 வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
தண்மையினாலும் இத் தாரணியோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை உன்னும்
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே (73)


3966 தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே (74)


3967 செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திரு அரங்கர்
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண்முகப்பே
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே (75)


3968 நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொன்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணைமலர்த் தாள்
என் தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே (76)


3969 ஈய்ந்தனன் ஈயாத இன்னருள் எண் இல் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே? (77)


3970 கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில்
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே (78)


3971 பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே (79)


3972 நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே (80)


3973 சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ்த் தொண்டுபட்டவர்பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே (81)


3974 தெரிவு உற்ற ஞானம் செறியப் பெறாது வெம் தீவினையால்
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில்
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ
தெரிவு உற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே? 82


3975 சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே (83)


3976 கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய்
விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டுகொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே (84)


3977 ஓதிய வேதத்தின் உட்பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும் பெரியோர்
பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே (85)


3978 பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமாநுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே (86)


3979 பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்கு
உரியசொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில்
புரியும் நல் ஞானம் பொருந்தாதவரை பொரும் கலியே (87)


3980 கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம்
புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே (88)


3981 போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர் தனக்கு ஓர்
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே (89)


3982 நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீள் நிலத்தே
எனை ஆள வந்த இராமாநுசனை இருங் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே (90)


3983 மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப் பொருள் ஆம்
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்கத் தன் ஈண்டிய சீர்
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே (91)


3984 புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும்
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு
எண் அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக் காரணம் கட்டுரையே (92)


3985 கட்டப் பொருளை மறைப் பொருள் என்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி
வெட்டிக் களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே? (93)


3986 தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியாப் பிறவிப்
பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரந் தாமம் என்னும்
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே (94)


3987 உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும்
விண்ணின்தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன்
மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே (95)


3988 வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை ஊன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே (96)


3989 தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால்
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே (97)


3990 இடுமே இனிய சுவர்க்கத்தில்? இன்னும் நரகில் இட்டுச்
சுடுமே? அவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே
விடுமே? சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே (98)


3991 தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே (99)


3992 போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில்
ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் அதுவே
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும்
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே (100)


3993 மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே (101)


3994 நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம்
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ்
வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே? (102)


3995 வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்று ஆய் அன்று வாள் அவுணன்
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என் தன் மெய்வினை நோய்
களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே (103)


3996 கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் அருள் நீ
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழுங் கொண்டலே (104)


3997 செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே (105)


3998 இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே (106)


3999 இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும்
என்பு உற்ற நோய் உடல்தோறும் பிறந்து இறந்து எண் அரிய
துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே (107)


4000 அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கியது என்னத் தழைத்து நெஞ்சே நம் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடிப் பூ மன்னவே (108)

திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
நாலாயிர திவ்வியப் பிரபந்த பாசுரங்கள் முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்