Tēvpūmi - himāccal
யாத்திரை
Backதேவ்பூமி - ஹிமாச்சல்
வெங்கட் நாகராஜ்
பொருளடக்கம்
தேவ்பூமி - ஹிமாச்சல்
எனது மற்ற மின்னூல்கள்
பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது
பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை
பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்
பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்
பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...
பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்
பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்
பகுதி 8: இசையும் நடனமும்
பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்
பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி!
பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு!
பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்
பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி
பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்
பகுதி 15: கையேந்தி பவனில் காலை உணவு
பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்
பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்
பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்
பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட!
பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்
பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்
பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்
பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்
நன்றி!
தேவ்பூமி - ஹிமாச்சல்
ஏரிகள் நகரம் மற்றும் மத்தியப் பிரதேசம் அழைக்கிறது ஆகிய இரண்டு மின் நூல்களைத் தொடர்ந்து, சுற்றுலா சென்று வந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் மூன்றாவது மின் நூல் இது. முதல் இரண்டு மின் நூல்களை வெளியிட்டு சில மாதங்கள் ஆகிவிட்டது. மூன்றாவதாக வெளியிடும் இம்மின்னூலில், தேவ் பூமி என அழைக்கப்படும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேற்கொண்ட பயணம் பற்றிய குறிப்புகள், பார்க்க வேண்டிய இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
”ஹிமா” எனும் வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும் பனிபடர்ந்த மலைகள் கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர் சூட்டினார்களாம். இப்படி பனி படர்ந்திருக்கும் பிரதேசத்திற்கு செல்வது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இந்த பனிபடர்ந்த பிரதேசத்திற்கும், அங்கே இருக்கும் இடங்களைப் பார்ப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஹிமாச்சலில் நிறைய இடங்கள் பார்க்க உண்டு.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்த அனுபவங்கள் உண்டு. இந்தப் புத்தகத்தினை ஹிமாச்சல் பிரதேசம் பற்றிய முதல் தொகுப்பு எனவும் சொல்லலாம். வரும் தொகுதிகளில் குல்லூ-மணாலி, மணிக்கரன், தரம்ஷாலா, ஜ்யோத் என பல இடங்களைப் பற்றியும் பார்க்கப் போகிறோம். அந்த கட்டுரைகள் எனது வலைப்பூவில் கூட இன்னும் எழுதவில்லை. இங்கேயே முதலில் வந்தாலும் வரலாம்!
எனது வலைப்பூவில் தேவ் பூமி ஹிமாச்சல் என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்ட பதிவுகளைத் தொகுத்து, புகைப்படங்களோடு மின் நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி.
வாருங்கள் தேவ் பூமி ஹிமாச்சலத்திற்குச் செல்வோம்…..
நட்புடன்
வெங்கட் நாகராஜ்.
venkatnagaraj@gmail.com
புது தில்லி.
எனது மற்ற மின்னூல்கள்
முதல் மின்னூல்
21030536505_a4a017570d_b-212x300
இரண்டாம் மின்னூல்
24187141901_52dae93f1c_o-212x300
பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது
himachal sun-Part-1
ஹிமாச்சலத்துச் சூரியன்….
இந்த மின் நூலில் உங்களை “தேவ பூமி” என்று அழைக்கப்படும் ஹிமாச்சல பிரதேசத்தின் ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். நான் ரெடி நீங்க ரெடியா?
ஹிமாச்சலப் பிரதேசத்தினை தேவ பூமி என ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா? ஹிமாச்சலத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் – ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் நிச்சயம் உண்டு – இதைத் தவிர கிராம தேவதைகள், குலதெய்வங்கள் என நிறையவே. இதைத் தவிர நெடுஞ்சாலைகளில் கூட நிறைய சின்னஞ்சிறு கோவில்கள் – பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் ஆஞ்சனேயர் கோவில்கள் – அதனால் இந்த மாநிலத்தினை தேவ் பூமி என்று அழைக்கிறார்கள்.
Dhauladhar Hills-Part-1-2
பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர்…
”ஹிமா” எனும் சமஸ்க்ருத வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும் பனிபடர்ந்த மலைகள் கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர் சூட்டினார்களாம். அப்படி பெயர் சூட்டியவர் ஆச்சார்யர் திவாகர் தத் ஷர்மா என ஹிமாச்சலத்தின் வரலாறு பற்றிய குறிப்பொன்று கூறுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் எனக்கும் எங்கள் பகுதியில் இருக்கும் சில நண்பர்களுக்கும் இப்படி பனி படர்ந்த மலைப்பிரதேசத்திற்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்க, பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம்.
நவம்பர் மாதத்திலேயே பயணம் பற்றிய முடிவு எடுத்துவிட்டதால் ஒவ்வொருவராக கேட்டு பயணிக்க இருக்கும் நபர்களை முடிவு செய்தோம். 15 பேருக்கு மேல் வருவதாகச் சொல்ல, ஒரு Tempo Traveler அமர்த்திக்கொள்ளலாம் என முடிவாயிற்று. நடுவில் ஒரு சிலர் வர முடியாத சூழல், வேறு சிலர் வருவதாகச் சொல்ல, ஏற்கனவே முடிவெடுத்தபடி Tempo Traveler பயணம் தான்.
கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ஆம் தேதி காலையில் தில்லியிலிருந்து தொடங்கியது எங்கள் பயணம். அதிகாலையில் அப்படி ஒரு பனிமூட்டம் – தில்லியிலேயே இத்தனை பனியும் குளிரும் இருந்தால் ஹிமாச்சலத்தில் இன்னும் அதிக குளிரப் போகிறது என்று நண்பர்கள் சிலர் சொன்னாலும் எதையும் தாங்கும் இதயமும், பலமும் எங்களுக்கு உண்டு என்று திடமாகப் புறப்பட்டது எங்கள் குழு!
Baijnath Temple-Part-1-3
பைஜ்நாத் கோவில், ஹிமாச்சலப் பிரதேசம்
மார்கழி மாதம் என்பதால், எங்கள் பகுதியில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் காலையில் திருப்பாவை/திருவெம்பாவையோடு சேவை தொடங்கும். அதனால் பயணிக்கும் முன்னர் ஏழுமலையானிடமும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு பயணத்தினை நல்லபடியாக முடித்துத் தர வேண்டிக்கொள்வோம் எனச் சொன்னதற்கு இணங்க, அனைவரையும் சுமந்து கொண்டு புறப்பட்டது எங்கள் ரதம்.
ஏழுமலையானை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டோம். தலைநகரைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையைத் தொட முயற்சி செய்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! யாருப்பா அத திருடிட்டு போனது! என்ன ஆயிற்று? அடுத்த பகுதியில் சொல்லட்டா! இப்ப வர்ட்டா!
தொடர்ந்து பயணிப்போம்……
பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை
தில்லியின் எல்லையைத் தொட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! டிசம்பர் மாதத்தின் 25-ஆம் நாள். பொதுவாகவே இந்நாட்களில் குளிரும் பனிமூட்டமும் கொஞ்சம் அதிகம் தான். சூரிய உதயமே பல நாட்களில் எட்டு மணிக்கு மேல் தான் – அதுவும் அவருக்கு மனதிருந்தால், கொஞ்சம் வெளியே வந்துவிட்டு மீண்டும் போய், கண்ணாமூச்சி விளையாடுவார்!
winter roads-part-2-1
பனிபடர்ந்த நெடுஞ்சாலை….
எங்கெங்கும் பனிமூட்டம் – மேகக்கூட்டங்கள் தரையில் இறங்கிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு பனிமூட்டம் – Visibility மூன்று முதல் நான்கு மீட்டர் அளவு தான். சாலையெங்கும் மேகம் பரவிக்கிடக்க, மிதமான வேகத்தில் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இவ்வேகத்திலேயே தான் நாங்கள் முதலில் செல்ல வேண்டிய சிந்தபூர்ணி வரை செல்ல முடியும் என்று தோன்றியது. தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட 425 கிலோமீட்டர் தொலைவு! எப்படியும் மாலை ஆறு மணிக்குள் சென்றுவிடலாம் என நினைத்திருந்தோம் – பனிமூட்டத்தினால் கொஞ்சம் தாமதமாகலாம் எனத் தோன்றியது!
தொடர்ந்து ஒரு வித எச்சரிக்கையுடனேயே வாகனத்தினைச் செலுத்தினார் எங்கள் ஓட்டுனர் ஜோதி என்கிற நாகஜோதி! பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே – ஆமாம் அவர் ஒரு தமிழர் – நாங்கள் வண்டி எடுத்ததும் தில்லி வாழ் தமிழர் ஒருவரிடம் தான். அதனால் நான் முன் இருக்கையில் அவருடன் அமர்ந்து தமிழில் உரையாடியபடியே, சில புகைப்படங்களையும் எடுத்தபடியே பயணித்தேன். எச்சரிக்கையுடனேயே வாகனத்தினைச் செலுத்த வேண்டிய சூழலில் அவரையும் அதிகம் தொந்தரவு செய்வது நல்லதல்லவே!
தில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசம் செல்லும்போது ஹரியானா, பஞ்சாப் என்ற இரு மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் இரு மாநிலங்களுக்கான சாலை வரிகளையும் கட்ட வேண்டும். ஹிமாச்சலுக்கான கட்டணத்தினை இணையம் மூலமாக முன்னரே செலுத்தியதால், தில்லியைக் கடந்தவுடன் ஹரியானாவிற்கான கட்டணத்தினைச் செலுத்தி எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.
Transporting Milk-Part-2-2
குளிரிலும் பால் விற்பனைக்குச் செல்லும் ஹரியான்வி….
ஹரியானா மக்கள் குளிர் காலத்தில் ஒரு பெரிய கம்பளிப் போர்வை அல்லது லோஹி என அழைக்கப்படும் கம்பளி போர்வைகளால் தங்களைச் சுற்றிக் கொள்வது வழக்கம். சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் தலை முதல் கால் வரை மூடியபடிச் செல்லும் பலரை நெடுஞ்சாலைகளில் பார்க்க முடிந்தது! அத்தனை குளிரிலும் பால் வியாபாரிகள் நான்கு பால் பாத்திரங்களை வண்டியின் இரு புறங்களிலும் தொங்கவிட்டு பயணித்துக் கொண்டிருந்தார்கள். வேலை செய்வது முக்கியமாயிற்றே!
இப்படி பயணித்துக் கொண்டிருந்ததில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி. சிலருக்கு காலையில் எழுந்து இப்படி பயணம் செய்வது கஷ்டம். வண்டியில் ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், நாங்கள் அனைவரும் என்னதான் அதிகாலையில் எழுந்து விட்டாலும், குடும்பமாக பயணிப்பது போல அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டும், கதைகள் பேசிக்கொண்டும் இனிமையாக பயணத்தினை தொடங்கி இருந்தோம்.
காலையில் பெருமாள் கோவிலில் சுடச்சுட ஆளுக்கு ஒரு தொன்னை மட்டுமே பொங்கல் சாப்பிட்டதால் [ஒரு தொன்னை தொந்தி பெருத்த எனக்கு எம்மாத்திரம்!!] வயிறு, “ஹலோ, என்னைக் கொஞ்சம் கவனியேன்!” என்று சொல்ல ஆரம்பித்தது! நாங்களும் தில்லி எல்லையைத் தாண்டி சோனிபத், பானிபத் கடந்து கர்னால் எல்லையைத் தொட்டிருந்தோம். சுமார் 130 கிலோ மீட்டர் மூன்று மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கிறோம்.
பொதுவாகவே வட இந்திய நெடுஞ்சாலைகளில் சாலை உணவகங்கள் அத்தனை சுகமானதாக இருப்பதில்லை. வெகுசில இடங்களில் மட்டுமே நல்ல உணவகங்கள் இருக்கின்றன. அப்படி இந்தப் பயணத்தில் கர்னால் நகரத்தினை விட்டால், பெரும்தொலைவிற்கு நல்ல உணவகங்கள் இல்லை என்பதால், கர்னாலிலேயே சாப்பிட முடிவு செய்தோம். ஓட்டுனர் ஜோதியிடம் சொல்ல, அவரும் இங்கேயே சாப்பிடலாம், அப்புறம் பஞ்சாபில் தான் சாப்பிட முடியும் என்று ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தினார்.
அங்கே என்ன சாப்பிட்டோம், தொடர்ந்த பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா!
தொடர்ந்து பயணிப்போம்……
3
பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்
Roadside Dhaba-Part-3-1
சாலையோர உணவகம்…..
கர்னால் நகரின் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஓட்டுனர் ஜோதி வண்டியை நிறுத்திய பின் இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு உணவகத்திற்குள் சென்றோம். வண்டிக்குள் இருந்த வரை குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை. நெடுஞ்சாலையில் வெட்ட வெளியில் இருந்த உணவகத்தின் அருகே அப்படி ஒரு குளிர்ந்த காற்று. பார்க்கும் மக்கள் அனைவருமே ஒரு பெரிய மூட்டைக்குள் இருப்பது போல இருக்கிறார்கள் – எங்களையும் சேர்த்து தான்.
வெளியிலேயே நாற்காலிகளும் மேஜைகளும் போட்டு இருந்தாலும் கண்ணாடித் தடுப்புகள் அமைத்திருந்த உட்புறத்திற்குத் தான் அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். வெளியில் அடிக்கும் குளிர்காற்றிலிருந்து தப்புவது தான் அனைவரின் குறிக்கோளாக இருந்தது. நாங்கள் வந்திருந்த அதே சமயத்தில் பல வண்டிகள் வெளியே வந்திருந்தன.
அங்கே பல உணவகங்கள் வரிசையாக இருக்கும். அதில் நாங்கள் தேர்ந்தெடுத்தது ZHILMIL DHABA எனும் உணவகம். சில வருடங்களுக்கு முன்னரே ஒரு பயணத்தில் அங்கே சாப்பிட்ட அனுபவம் உண்டு. கூடவே ஜோதியும் இங்கே சாப்பிடலாம் என்று பரிந்துரைக்க அந்த உணவகத்தினைத் தேர்ந்தெடுத்தோம். பெரும்பாலும் வட இந்தியாவில் காலை உணவாக பராட்டா தான் கிடைக்கும். இங்கேயும் அதே.
”என்ன இருக்கு?” என்ற கேள்வியே தேவையில்லை – இருந்தாலும் கடமைக்குக் கேட்டு வைத்தோம். வரிசையாக “ஆலு பராட்டா, ப்யாஜ் பராட்டா, பனீர் பராட்டா, மூளி பராட்டா, கோபி பராட்டா, மேத்தி பராட்டா” என்று அவர் அடுக்கிக்கொண்டே போக, சிலர் ஆலு பராட்டா, சிலருக்கு ப்யாஜ் பராட்டா, சிலர் பனீர் பராட்டா எனச் சொல்லி பணியாளியைக் குழப்பி விட்டோம். எல்லோரும் சொல்லச் சொல்ல அவர் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளாத குறை!
சரி எத்தனை எத்தனை பராட்டாக்கள், என்ன வகை என்று சொல்லிய பின்னும் அவர் கைவிரல்களால் எண்ணிய படியே சென்று கொண்டிருந்தார். அதற்குள் வேறொரு பணியாள் எங்கள் அனைவருக்கும் தட்டு, டம்ளர் போன்றவற்றையும் சிறிய கண்ணாடி டம்ளரில் போட்டு வைத்திருந்த பச்சை மிளகாய்களையும் கொண்டு வைத்தார். கூடவே ஒவ்வொரு தட்டிலும் ஒரு ஊறுகாய் Blister Pack, Butter Paper-ல் மடித்த வெண்ணை வைத்தார். கூடவே எலுமிச்சை பிழிந்த முள்ளங்கி, வெங்காயம், மேலே தூவிக்கொள்ள உப்பு, மிளகுத் தூள் என வைத்து விட்டுச் சென்றார்.
உள்ளே இருந்து பராட்டா வருவதற்குள் வெங்காயம், முள்ளங்கி எல்லாம் காலி ஆனது! சுடச் சுட பராட்டா வர வேண்டுமே! பிறகு பராட்டா வர, ஒவ்வொருவராய் அவரவர் கேட்ட பராட்டாவினை கொடுத்திருந்த வெண்ணையை அதன் மேல் தடவி, தயிர் மற்றும் ஊறுகாய் தொட்டுக்கொண்டு ஒரு கட்டு கட்டினோம். ஒரு சிலர் ஒரு பராட்டாவிலேயே வயிறு நிரம்பியதாய்ச் சொல்ல, என்னைப் போல சிலர் மட்டும் இன்னும் ஒரு பராட்டா சாப்பிட்டோம் – முதலில் சாப்பிட்டது ப்யாஜ் பராட்டா, இரண்டாவதாக பாதி ஆலு பராட்டா, பாதி பனீர் பராட்டா! இரவு வரை தாங்க வேண்டுமே! ஏனெனில் பராட்டா சாப்பிடும்போதே மணி 11.45!
இப்படியாக அவரவர்களுக்குத் தேவையானதை சாப்பிட்டு முடித்தபின் அனைவரின் ஏகோபித்த வாக்களிப்பில் அந்த உணவகத்திற்கு நல்ல பெயர். உணவும் பிடித்திருந்தது எனச் சொல்லி விட அடுத்தது என்ன என்று கேட்க, குளிருக்கு இதமாய் ஒரு தேநீர் என்பதே அனைவரின் குரலாகவும் இருந்தது! பொதுவாகவே ஹரியானாவில் பால் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல Thick-ஆன எருமைப் பால்! தண்ணீர் கலப்பது இல்லை. அதனால் தேநீரும் நன்றாக இருக்கும். அனைவரும் தேநீர் அருந்தி அங்கிருந்து புறப்பட்டோம்.
இந்தப் பயணம் முழுவதும் என்னைக் கவர்ந்த விஷயம் பசுமையான வயல்வெளிகள் – பல இடங்களில் கடுகு, கரும்பு, கோதுமை எனப் பயிரிட்டு இருந்தார்கள். கூடவே பல வயல்களின் ஓரங்களில் தேக்கு மரங்கள். மரங்களை வைத்து விட்டு சில வருடங்கள் காத்திருந்தால் நல்ல சாகுபடி. பராமரிப்பு என பெரிதாய் ஒன்றுமில்லை. சாலையில் பயணித்தபடியே பல இடங்களில் இப்படி தேக்கு மரங்களைப் பார்க்க முடிந்தது.
பொதுவாகவே ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயம் தான் அவர்களுக்கு முக்கியத் தொழில். பச்சைப் பசேலெனெ இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்த பகுதியிலும் வழியில் சந்தித்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்! ஏனெனில் நாங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் போய்ச் சேர்ந்தது மாலை ஏழு மணி அளவில். கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஒரே பகுதியில் சொல்லி விட்டால் என்னாவது! 🙂
தொடர்ந்து பயணிப்போம்……
பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்
Jaggery preparation-Part-4-1
சுடச்சுடத் தயாராகும் வெல்லம்…..
எங்கள் பயணம் தொடர்ந்தது….. சென்ற பகுதியில் சொன்ன மாதிரி வயல்வெளி எங்கும் பச்சைப்பசேல்…. ஆங்காங்கே சில வயல்களில் கரும்பு சாகுபடி முடிந்து அவ்விடத்திலேயே வெல்லம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று இடங்களில் இப்படிச் சுடச்சுடக் காய்ச்சிய புதிய வெல்லம் பார்த்த பிறகு சாப்பிடாவிட்டால் என்னாவது! ஓட்டுனர் ஜோதியிடம் வெல்லம் காய்ச்சும் அடுத்த இடம் கண்டவுடன் வண்டியை நிறுத்தச் சொன்னோம். அவருக்கும் வெல்லம் சாப்பிட ஆசை இருந்தது போலும் – நீங்கள் சொல்லத் தான் நானும் காத்திருந்தேன் என்று சொன்னபடி அடுத்த வெல்லம் காய்ச்சும் இடத்தில் வண்டியை நிறுத்தினார்.
அப்போது தான் சுடச்சுட வெல்லம் காய்ச்சி ஒரு பெரிய மரத் தாம்பாளத்தில் கொட்டி துண்டு போட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். அதற்கு முன்னர் காய்ச்சிய வெல்லமும் – அங்கே கூடையில் இருந்தது. கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்து அதற்குப் பின்னர் தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம். நாங்களோ பதினைந்து பேர் [ஓட்டுனர் ஜோதியையும் சேர்த்து!] – அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்தாலே ஒரு கிலோ அளவுக்கு வருமே!
கொஞ்சமாக எடுத்து அனைவரும் பகிர்ந்து ருசித்தோம். இப்போது தான் பயணம் தொடங்கி இருப்பதால், அப்போதைக்கு சாப்பிட மட்டும் ஒரு கிலோ வெல்லம் வாங்கிக் கொண்டோம். தில்லி திரும்பும் போதும் இதே வழி தான் என்பதால் வரும்போது எல்லோருடைய வீட்டிற்கும் தேவையான வெல்லம் வாங்க முடிவு செய்தோம். கிலோ 60 ரூபாய் சொல்ல, அங்கே ஒரு மூதாட்டி பேரம் பேசிக் கொண்டிருந்தார் – ”எல்லாம் அம்பது ரூபாய்க்கு தரலாம்! எத்தனை வருஷமா வெல்லம் வாங்கறேன், எனக்குத் தெரியாதா?” என்று கேள்வி 🙂
Kinnu juice-part-4-2
தயாராகிறது கின்னு ஜூஸ்…
வெல்லம் வாங்கி ருசித்தபடியே அங்கிருந்து பயணித்தோம். சற்று தொலைவு சென்ற பிறகு பார்த்தால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பல இடங்களில் கின்னு [ஆரஞ்சு போலவே இருக்கும்] பழங்களைக் கொட்டி வைத்து அங்கேயே அதன் சாறு பிழிந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். பதினோரு மணி அளவில் காலை உணவு சாப்பிட்டது – அதன் பிறகு வெல்லம் – இப்போது ஜூஸ். பார்த்தவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம். பழங்களை எடுத்து தோல் உரித்து ஜூஸ் போட்டு காலா நமக் [கருப்பு உப்பு] போட்டு கலந்து கொடுத்தார் ஒரு இளைஞர். பெரிய டம்ளரில் ஜூஸ் – விலை ரூபாய் 20 மட்டும்! அதையும் குடித்து விட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.
இப்படியே சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் என்னாவது! ஆனாலும் உணவு எங்களை விடுவதாய் இல்லை! நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது வரும் ஒரு ஊர் ஆனந்த்பூர் சாஹேப் – அங்கே சின்னச் சின்னதாய் நிறைய குருத்வாராக்கள் உண்டு. முக்கியமான குருத்வாரா ஆனந்த்பூர் சாஹேப் எனும் பெயரிலேயே இருக்கிறது. நாங்கள் சென்ற சமயத்தில் சீக்கிய குருக்களில் ஒருவரின் பிறந்த நாள் என்பதால் பஞ்சாபின் பல பகுதிகளிலிருந்தும் சீக்கியர்களும், மற்ற பஞ்சாபிகளும் ஆனந்த்பூர் சாஹேப் குருத்வாராவிற்கு தங்களது ட்ராக்டர்களில் சென்று கொண்டிருந்தார்கள்.
அப்படிச் செல்லும் அனைவருக்கும், மற்ற சாலைப் பயணிகளுக்கும் நெடுஞ்சாலை எங்கும் சீக்கியர்கள் சுத்தமான உணவு சமைத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கொஞ்சமாவது சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுப்பது அவர்கள் வழக்கம்.
அனைவரிடமும் பணிவாக மறுத்தாலும் சிலர் விடுவதில்லை – தேநீரும் பிரட் பக்கோடாவுமாவது எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் எனச் சொல்ல ஒரு இடத்தில் தேநீரும் பிரட் பக்கோடாவும் சாப்பிட்டோம். இப்படியாக பயணம் முழுவதிலும் விதம் விதமாய் சாப்பிட்டு, இனிமையான அனுபவங்கள் பலவற்றுடன் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தினைச் சென்றடைந்தோம்.
அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?
தொடர்ந்து பயணிப்போம்……
5
பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...
Walking on highway-part-5-1
கவலைகள் மறந்து நடக்கும் முதியவர்….
இப்படியாக வழியெங்கும் உணவு வகைகளை ருசித்தபடியும், பயணத்தினை சுகமான முறையில் தொடர்ந்தும் நாங்கள் தில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் சிந்த்பூர்ணி எனும் இடத்திற்கு மாலையில் வந்து சேர்ந்தோம். எங்கள் அலுவலக நண்பரின் உறவினர் ஹிமாச்சலத்தில் இருப்பதால் அவர் மூலமாகத் தான் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். அன்று மதியத்திலிருந்தே அவர் அலைபேசியில் அழைத்து எப்போது வருவீர்கள் என அக்கறையோடு விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.
எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் பற்றிய விவரங்களைத் தந்ததோடு சிந்த்பூர்ணியில் இருக்கும் ஒருவரிடம் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படியும் பணித்திருந்தார். நாங்கள் அனைவரும் சிந்த்பூர்ணி பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கும் தங்குமிடத்தில் உடைமைகளை வைத்துவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவிலுக்கு எங்கள் வாகனத்திலேயே பயணித்தோம்.
பொதுவாக பேருந்து நிலையத்திற்கு மேல் தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை. ஆனாலும் எங்களுக்கான உதவி செய்ய வந்திருந்த நபர் எங்கள் வாகனத்தினை கோவில் வரை கொண்டு செல்ல உதவினார். பாதை சற்றே குறுகலானது மட்டுமல்லாது இரண்டு புறமும் கடைகள் நிறைய இருப்பதால் மெதுவாகத்தான் செல்ல வேண்டும். சற்றே மேட்டுப்பாங்கான சாலையும் கூட. கோவிலின் அருகே இறங்கிக் கொண்டோம்.
இக்கோவில் இருக்கும் இடம் சற்றே வித்தியாசமானது. கீழ்ப்புறம் இருக்கும் சாலையில் நிறைய கடைகள் பூஜைக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்கிறார்கள். கோவிலுக்குச் செல்லும் பாதை மேலே உள்ள சாலையில் இருக்கிறது. என்றாலும் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிக்கட்டுகள் வழியே மேலே சென்றால் நீங்கள் மேலுள்ள சாலைக்கும்/கோவில் பாதைக்கும் சென்று விடலாம்! இப்படிப்பட்ட வசதியை நான் எங்கும் பார்த்த நினைவில்லை.
அப்படி ஒரு கடைக்குச் சென்று அங்கே காலணிகளை கழற்றி வைத்து விட்டு, பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டோம் – 10 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை வசதிக்குத் தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம் – விதம் விதமாய் தட்டுகளில் பூஜைப் பொருட்களை வைத்திருக்கிறார்கள். கட்டாயம் அதில் ஒரு இனிப்பு – ரவா ஹல்வா, பாயசம் [(kh)கீர்], லட்டு, பர்ஃபி என ஏதாவது ஒன்று உண்டு. இப்படி வைத்துக் கொடுப்பதை எடுத்துக் கொண்டு படிகளின் வழியே மேலே சென்றோம்.
பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலுக்கான பாதையில் முன்னேறினோம். சாதாரணமாக இக்கோவிலில் நவராத்திரி சமயங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் அப்படி திருவிழாக்கள் இல்லாத காரணத்தினால் அத்தனை கூட்டமில்லை. மிகச் சுலபமாக தேவியை தரிசிக்க முடிந்தது. நின்று நிதானித்து அன்னையின் சரண் பற்றினோம். இக்கோவிலில் இருக்கும் தேவியின் பெயர் சின்னமஸ்திகா தேவி.
சிந்த்பூர்ணி கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்று. சக்தி பீடங்கள் பற்றிய கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சதி தேவியின் உடல் 51 பகுதிகளாக துண்டிக்கப்பட்டு 51 இடங்களில் விழ, அவ்விடங்களில் சக்தி பீடங்களாக தேவிக்கு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மா சிந்த்பூர்ணி அப்படி ஒரு சக்தி பீடம் – தேவியின் நெற்றி/தலைப் பகுதி விழுந்த இடம் என்று சொல்கிறார்கள். அதனால் இங்கே இருக்கும் தேவிக்கு தலை கிடையாது. அலங்காரம் தான்.
தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் சிந்தையில் இருக்கும் அனைத்து கவலைகளையும் போக்க வல்லவள் என்றும், அவளைச் சரணடைந்தால் போதும் என்றும் நம்புகிறார்கள். உலகியல் கவலைகளை மறந்து விட இத்தலம் சிறப்பானது என்றும், எல்லாக் கவலைகளையும் அன்னையிடம் விட்டு கவலையில்லாத மனிதனாக வாழ இதை விட வேறு வாய்ப்பில்லை என்றும் நம்புகிறார்கள். இக்கோவில் பற்றிய வேறு சில வரலாறும் உண்டு. அதைப் பற்றியும் வேறு சில அனுபவங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாமா?
இப்பகுதியினை முடிக்குமுன்னர், கோவில் இருக்கும் இடம் பற்றியும் சொல்லி விடுகிறேன். ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஊனா [UNA] மாவட்டத்தில் இருக்கிறது இந்த சிந்த்பூர்ணி. சோலா சிங்கி மலைத் தொகுப்பில் இருக்கிறது இவ்விடம். கோவில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். பொதுவாகவே இங்கே மிதமான வெட்பநிலை தான். வருடம் முழுவதுமே இங்கே சென்று தரிசனம் செய்ய முடியும் என்பதும் ஒரு வசதி.
தொடர்ந்து பயணிப்போம்……
பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்
முதல் நாள் இரவு சின்னமஸ்திகா தேவியை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தோம். இரவு உணவினை முடித்துக் கொண்டு நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்பு தீர ஒரு குளியல். பிறகு உறக்கம். அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். மற்றவர்கள் அனைவரும் உறக்கத்தில் இருக்க, சரி யாரையும் தொந்தரவு செய்யாது நகர்வலம் வருவோம் என புறப்பட்டேன். அதிகாலையில் நடை – அதுவும் இதமான குளிரில் நடைப்பயணம் மிகவும் அலாதியான சுகம் தருவது. நடந்து பாருங்களேன் அதன் இனிமையும் புத்துணர்ச்சியும் புரியும்.
முதல் நாள் கோவில் வரை வாகனத்தில் பயணம் செய்த தொலைவினை நடையில் கடந்தேன். ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன. அவற்றில் ஒன்றில் தேநீர் அருந்தி, மேலும் நடந்தேன். காலையிலேயே சில பக்தர்கள் கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். கவலைகளை மறக்க, தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பவர்கள் போலும். நான் காலைக் காட்சிகளை ரசித்தபடியே திரும்பினேன். சில மணித்துளிகள் கடந்த பின்னும் தங்கும் விடுதி உறக்கத்திலேயே இருந்தது!
சரி இன்னும் கொஞ்சம் நடப்போம் என எதிர்புறத்தில் நடையைத் தொடங்கினேன். சிறிதளவு தொலைவு கடந்தபின் ஒரு பெண்மணி எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்தார். கையிலே ஒரு குச்சி. குளிருக்கான உடைகள் அணிந்திருந்தாலும் அனைத்தும் தோய்த்துப் பலகாலம் ஆனது தெரிந்தது. எனக்கருகே வந்ததும் குச்சியை வேகமாக ஆட்டியபடி “என்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா? நான் பைத்தியம் இல்லை – என்னைத் தவிர மற்ற அனைவரும் பைத்தியம் தான்” என்று சொல்லி திட்டிக் கொண்டே கடந்தார்.
நடந்து கொண்டிருந்தாலும் அவர் அருகே வந்து சொன்னதைக் கேட்டபோது ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த இடத்திலேயே நின்று விட்டேன். நடக்க முடியவில்லை. சூழ்நிலை அவரை இப்படித் தள்ளியிருக்க, அவர் என்ன செய்வார் பாவம். சுதாரித்துக் கொண்டு மேலும் நடந்தேன்.
முந்தைய தினம் வாகனத்தில் வரும்போது ஒரு இடத்தில் வானம் வண்ணமயமாய்க் காட்சி அளித்தது ஒரு இடத்தில் – அதே இடத்தில் நின்று காலை நேர வானத்தினை நோக்கியபடி நின்று சில புகைப்படங்களை எடுத்தேன். மீண்டும் தங்குமிடம் நோக்கி திரும்பினேன். வழியில் மீண்டும் அந்தப் பெண்மணி. வேறு யாரையோ திட்டியபடியே நடந்து கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ…. சிந்தபூர்ணியில் குடிகொண்டிருக்கும் சின்னமஸ்திகா தேவி அப்பெண்மணியின் கவலைகளை எப்போது தீர்ப்பாரோ?
காலையில் மேலும் சில கடைகள் திறந்து அன்றைய வியாபாரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தங்குமிடம் திரும்ப, ஒவ்வொருவரும் அன்றைய தினத்திற்கான அனுபவங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் சென்று தயாரானேன். காலை உணவினை முடித்துக் கொண்டு கோவில் செல்ல உத்தேசம். அதற்கு முன்னர், சென்ற பகுதியில் சொன்ன வரலாறு பற்றி பார்த்து விடுவோமா?
மார்க்கண்டேய புராணத்தில் வரும் ஒரு கதை இது. சண்டி தேவி உக்கிரமான போரில் பல அசுரர்களை அழித்தார். அதற்குப் பின்னரும் அவரது யோகினி வடிவங்களில் இரண்டான ஜெய, விஜய ஆகிய இருவருக்கும் தாகம் அடங்கவில்லை. இன்னும் இரத்தம் வேண்டித் துடிக்க, சண்டி தேவி தனது தலையைத் துண்டித்து, ஒரு பக்கத்தில் இரத்தம் குடிக்க, ஜெய, விஜய ஆகிய இருவரும் வேறு ஒரு பக்கத்தில் இரத்தம் குடித்து தங்களது தாகத்தினை போக்கிக் கொண்டதாக கதை.
சின்னமஸ்திகா தேவியை மனதாரத் துதிக்கும் பக்தர்கள் தங்கள் கட்டுகளிலிருந்து விடுபட்டு பூரண முக்தியடைவார்கள் என்று காட்டவே இப்படி ஒரு கதை இருக்கலாம். எது எப்படியோ, ஒவ்வொரு கோவிலுக்கும் சில வரலாறுகள் – நம்பக் கூடியவையா இல்லையா என்பதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுகிறேன்!
நீங்கள் படித்து முடிப்பதற்குள் நானும் தயாராகி விட்டேன். இந்தப் பயணத்திற்கான முக்கிய காரணமே சிந்தபூர்ணியில் நடக்க இருந்த ஒரு பூஜை தான் – தில்லியில் இருக்கும் ஒரு சபை சிந்த்பூர்ணியில் 108 பெண்கள் சேர்ந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு எங்கள் பகுதியிலிருந்து சிலரும் செல்ல, அதைச் சாக்கிட்டு நாங்கள் அனைவரும் பயணித்தோம். அதற்காக அனைவரும் புறப்பட்டு கோவிலை நோக்கி நடந்தோம்.
அன்று பகல் பொழுது முழுவதுமே கோவிலில் தான் எங்களுக்கு வாசம். அங்கே கிடைத்த அனுபவங்கள், வேறு சில விஷயங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?
தொடர்ந்து பயணிப்போம்……
பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்
கோவிலை நோக்கி நடக்கும் பாதையில் ஒரு கோவில். அங்கே சின்னத் திருவடியாம் அனுமனின் இரண்டு திருவுருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருக்க, அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு மேலே நகர்ந்தோம். இது போல ஒருவருக்குப் பின்னால் ஒருவராக அனுமனை வேறு எங்கும் பார்த்த நினைவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் விளங்கவில்லை.
காலை நேரத்திலேயே பிரசாதக் கடைகள் திறந்திருந்தார்கள். கூடவே பலவிதமான உடைகள், பொருட்கள் என கடைகளில் விற்பனைக் காத்திருந்தன. அவற்றையெல்லாம் நோட்டம் விட்டபடியே நடந்தோம். வழியில் Vishwamitra Hotel and Restaurant எனும் பதாகை பார்த்தவுடன் காலை உணவு சாப்பிடாத நினைவு வந்தது. கோவிலில் எத்தனை நேரமாகும் என்பது தெரியாததால் காலை உணவினை முடித்துவிடலாம் என உள்ளே நுழைந்தோம். அது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. மதிய உணவு சாப்பிட ரொம்பவே நேரமானது.
பதினான்கு பேர் என்பதால் இரண்டு மூன்று டேபிள்களைச் சேர்த்து போட்ட பிறகும் சிலருக்கு இடம் போதவில்லை. நானும் இன்னும் சிலரும் தனியாக வேறு இடத்தில் அமர்ந்தோம். சிலர் பூரி மசாலா, சிலர் ஆலு பராட்டா, ஒரு சிலர் பனீர் பராட்டா, சோலே பட்டூரா என்று சொல்ல, அனைத்தையும் தயார் செய்ய சிறிது நேரம் பிடித்தது. அதுவரை அனைவரும் அரட்டை அடித்தபடி இருக்க, நான் கேமராவிற்குத் தீனி போட்டேன். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது வழக்கமாகி விட்டது!
ஒருவழியாக கேட்டவை கிடைக்க, அனைவரும் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்தனர். சாப்பிட்டு முடித்து அதற்கான கட்டணத்தினைக் கொடுத்து அங்கிருந்து நகர்ந்தோம். செலவும் அப்படி ஒன்றும் அதிகமாக ஆகவில்லை. 14 பேருக்கு ஆயிரத்திற்கும் குறைவு தான். வெளியே வந்து கோவிலை நோக்கிய நடைப் பயணத்தினைத் தொடர்ந்தோம். உணவகத்தினை விட்டு வெளியே நடக்கும்போது பார்த்தால் காலையிலேயே பானி பூரி விற்பனை தொடங்கி இருந்தது. வட இந்தியர்களுக்கு இந்த பானி பூரி சாப்பிடாவிட்டால் ஜன்ம சாபல்யம் அடையாதோ என்னமோ!
விதம் விதமாய் மலைப் பிரதேசத்துப் பழங்கள், கடைகளில் இருந்த பொருட்கள் எனப் பார்த்துக் கொண்டே கோவிலை அடைந்தோம். முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே ஒரு கடையில் பிரசாதம் வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிகள் வழியே கோவில் பாதைக்குச் சென்றோம். சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலை அடைந்தோம். நேற்றைய இரவினை விட இன்று மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமிருந்தது. ஆனாலும் தள்ளுமுள்ளு இல்லாமல், “ஜருகண்டி, ஜருகண்டி” என்று தள்ளாததாலும் நிம்மதியாய் தேவியை தரிசித்தோம்.
நாங்கள் கோவிலுக்கு வந்துவிட்டாலும் நிகழ்ச்சி [லலிதா சஹஸ்ரநாம பாராயணம்] ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் வந்து சேரவில்லை. Indian Punctuality! அதனால் கோவிலிலேயே காத்திருந்தோம். கேமராவிற்குத் தீனி போட நிறைய குழந்தைகள் அங்கே இருக்க, ஒவ்வொருவராய் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். தவிர வேறு சில காட்சிகளும் காணக் கிடைத்தன.
பெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அங்கே இருக்கும் பல பெண்கள் அவரது காலடியில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வப்போது குங்குமப் பொட்டு பெண்மணி அப்பெண்களின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார். கீழே அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி திடீரென தனது கைகளையும் பின்னால் கொண்டு சென்று முடித்திருந்த கூந்தலை அவிழ்த்து அன்னியன் போல ஆனார். தனது கைகள் இரண்டையும் தரையில் தட்டி ஒரு சாமியாட்டம். சில நொடிகளில் மீண்டும் கூந்தலை அள்ளி முடிந்து ஒரு மந்தகாசப் புன்னகை. இது அடிக்கடி நடந்தது. சாமியாடிகள் எல்லா இடங்களிலும் உண்டு போலும்!
அங்கே நடந்த வேறொரு திருவிளையாடலும் படக்காட்சிகளாக வைத்திருந்தார்கள். அப்பகுதியின் ராஜா-ராணி. அவர்களுக்கு ஒரே ஒரு புதல்வன். ஒரு நாள் மந்திரி சபைக்கு இரு சாதுக்கள் வருகிறார்கள். அவர்களுடன் ஒரு புலியும் வருகிறது. புலிக்கு பயங்கர பசி – நர மாமிசம் வேண்டும் என்று சாதுக்கள் சொல்ல, தன்னையே தர விழைகிறார் ராஜா. இல்லை வேண்டாம் என சாதுக்கள் மறுக்க, ராணி தன்னைத் தர முன் வருகிறார்.
இரண்டு பேரையும் மறுத்துவிட, தனது ஒரே ஒரு மகனை புலிக்கு இரையாகத் தர சம்மதிக்கிறார்கள் ராஜாவும் ராணியும். சாதுக்களும் இதற்கு சம்மதிக்க, ராஜாவும் ராணியும் தன் மகனின் தலை மீது ஒரு பெரிய ரம்பம் வைத்து மகனை புலிக்குத் தர ஆயத்தமாகிறார்கள். மாதா சிந்த்பூர்ணி அங்கே அவர்கள் மூவரின் மீதும் பூக்களைப் பொழிந்து ”உம் பக்தியோடு விளையாடவே யாம் வந்தோம்” என்று திருவிளையாடல் சிவாஜி மாதிரி குரல் கொடுத்து அவர்களை ஆசிர்வதிக்கிறார்.
இப்படியாக கோவிலில் இருக்கும் பக்தர்களையும், நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களும் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்கள். அடுத்தது அவர்கள் பக்தியில் திளைத்திருக்க, நான் புகைப்படங்கள் எடுப்பதிலும், ஓய்வு எடுப்பதிலும் மும்மரமானேன். பிற்கு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா!
தொடர்ந்து பயணிப்போம்……
பகுதி 8: இசையும் நடனமும்
ஒரு வழியாக நிகழ்ச்சியை நடத்தும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட, நாங்களும் எங்களால் ஆன உதவிகளைச் செய்தோம். எல்லோரும் சேர்ந்து பணி புரிவது நல்லது தானே. அப்போது தானே நிகழ்ச்சியும் எவ்வித தடையும் இன்றி காலாகாலத்தில் முடிவடையும். ஒரு பெரியவரும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். மனைவி, தனது கணவரிடம் அலைபேசி மூலம் புகைப்படம் எடுக்கச் சொல்ல அவர் தடுமாறினார். பக்கத்தில் இருந்த என்னைப் பார்த்து, அந்த பெண்மணி, “மகனே, அவருக்கு ஒண்ணும் தெரிவதில்லை! நீ கொஞ்சம் கற்றுக்கொடு….” எனச் சொல்ல, அவருக்கு அலைபேசி மூலம் புகைப்படம் எடுக்கச் சொல்லிக் கொடுத்தேன். அப்படியே எனது கேமராவிலும் ஒரு படம் எடுத்தேன்.
முழுவதும் பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எங்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. ஆரம்பித்த பிறகு அங்கே சுற்றிக் கொண்டிருப்பது சரியல்ல என்பதால், வெளியே, குளிருக்கு இதமாய் வெயிலில் அமர்ந்து கொண்டோம். சில சிறுவர்களும் அங்கே அமர்ந்து கொள்ள, பொழுது போனது. அது தவிர பெரும்பாலான வட இந்தியக் கோவில்களில் ஷெஹனாய் இசையும் கூடவே தபலா போன்ற மேளமும் வாசிப்பார்கள்.
அவர்களுக்கு காசு கொடுக்க, நம் பெயரை உரக்கச் சொல்லி தேவியிடம் இன்னாருக்கு நல்லதையே கொடு என வேண்டிக் கொள்வார்கள். இசை, தாளம் என்றாலே வட இந்தியர்களுக்கு கொண்டாட்டம் தான். உடனே ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். இங்கேயும் இப்படித்தான். ஒரு வட இந்தியர் இசையைக் கேட்டவுடன், ஆட ஆரம்பித்து விட்டார். ஆடி முடித்து இசைக் கலைஞர்களுக்கு கொஞ்சம் காசும் கொடுத்து விட்டுத் தான் நகர்ந்தார்.
கோவில் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் பலவிதக் கயிறுகள் கட்டி இருந்தன. தங்களுக்குத் தேவையானவற்றை மனதில் வேண்டிக் கொண்டு இப்படி கயிறு கட்டி வைக்கிறார்கள். இது தவிர கோவிலுக்கு ஆடுகளையும் நேர்ந்து விடுகிறார்கள். அதை கோவிலில் பலியிடுவதில்லை என்றாலும் அது, எங்கே, எப்படி, சென்று சேரும் என்பது தேவிக்கே வெளிச்சம்.
தொடர்ந்து பூஜை நடந்து கொண்டிருக்க, நானும் இன்னும் சிலரும் தங்குமிடத்திற்கு வந்து அறைகளை காலி செய்து கொண்டு அடுத்த பயணத்தினைத் துவங்க ஏற்பாடுகள் செய்யலாம் என முடிவு செய்தோம். வரும் வழியில் மீண்டும் சாலைக் காட்சிகள். இப்போது மக்கள் வருகை இன்னமும் அதிகரித்து இருந்தது என்றாலும் நவராத்திரி சமயம் போல அத்தனை கூட்டம் இல்லை. கடைகளில் விற்பனையும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கடைகளில் வித்தியாசமான வகையில் இருந்த பொருட்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.
வழியில் ஒரு சிறுவன் – ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம் – தாடி மீசை போன்றவற்றை ஒட்டிக்கொண்டு ”ஒட்டு தாடி, மீசை” விற்பனை செய்து கொண்டிருந்தான். இரண்டும் சேர்த்து 20 ரூபாயோ 25 ரூபாயோ. அவனை தாடி மீசையோடு புகைப்படம் எடுக்க முயல, தனது முகத்தினை மறைத்துக் கொண்டான் – “முதல்ல ஒரு தாடி-மீசை வாங்குய்யா! அதை விட்டு புகைப்படம் எடுப்பதில் எனக்கென்ன லாபம்?” என்று சொல்வது போல இருந்தது! வேறு ஒரு சிறுவனும் இப்படி விற்றுக் கொண்டிருக்க, அச்சிறுவனின் புகைப்படம் எடுத்தேன்.
ஒரு பெரியவர் பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விற்றுக் கொண்டிருந்தார். இந்த மூத்த வயதிலும் உழைக்கும் அவருக்கு ஒரு சல்யூட். கொஞ்சம் வேர்க்கடலை வாங்கிக் கொண்டோம். எங்களுடன் வந்திருந்த பெண்களில் ஒருவர் பானி பூரி கேட்க, அதை அவருக்கு வாங்கிக் கொடுத்தோம். பக்கத்திலேயே ஒரு பழம் – பெயர் அமர்ஃபல் என்று சொன்னார். நன்றாகத் தான் இருந்தது. கூடவே கொஞ்சம் காலா நமக் போட்டு இலந்தைப் பழம். இப்படியே கொரித்துக் கொண்டே கடைவீதியில் வேடிக்கைப் பார்த்டபடியே தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.
காலையிலேயே உடமைகளை அவரவர் பைகளில் வைத்து விட்டபடியால், தங்குமிடத்திற்கான கட்டணத்தைக் கட்டி அங்கிருந்து காலி செய்தோம். பக்கத்திலேயே தான் தில்லியிலிருந்து நாங்கள் எடுத்துச் சென்ற வாகனம் நின்றிருக்க அதிலே எல்லாவற்றையும் வைத்தோம். பக்கத்திலே இருக்கும் உணவகத்தில் அமர்ந்து கொண்டு மதிய உணவு என்ன இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தோம். பூஜை முடிந்து மற்றவர்கள் வரட்டும். அதற்குள் நாம் சாப்பிடலாம் என பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த போது அலைபேசியில் அழைப்பு!
“சாப்பிட வேண்டாம். நாங்களும் வந்த பிறகு சாப்பிடப் போகலாம்!” என்று மிரட்டல்! சரி என்னவென்று வந்த பின் கேட்டுக் கொள்ளலாம் என அங்கிருந்து வெளியே வந்தோம். அந்த உணவகத்தின் பணியாளர்கள் நிச்சயம் எங்களை திட்டியிருக்கக் கூடும்! எத்தனை எத்தனை கேள்விகள் கேட்டு அவர்களை படுத்தி இருப்போம்!
அப்படி படுத்தியதற்கு எங்களுக்கு அன்றே பலன் கிடைத்தது! அது என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாமே!
தொடர்ந்து பயணிப்போம்……
பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்
எங்கள் குழுவினர் அனைவரும் கோவிலில் இருந்து வரக் காத்திருந்தோம். அனைவரும் வந்த பிறகு சொன்னது இது தான் – “நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கிருந்து 10-12 கிலோ மீட்டர் பயணித்தால் தில்லி போகும் சாலையில் இருக்கும் பாம்பே பிக்னிக் ஸ்பாட் வரும் – அங்கே தான் எல்லோருக்கும் மதிய உணவு என்று சொன்னார்கள். பாருங்க, மதிய உணவிற்காக, சிந்த்பூர்ணியிலேயே தில்லி, பாம்பே என ஓட வைத்துவிட்டார்கள்! இதுக்குத் தான் யாரையும் ரொம்ப படுத்தக் கூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்க! 🙂
பாம்பே பிக்னிக் ஸ்பாட் நோக்கி அனைவரும் பயணித்தோம். வழியெங்கும் நம் முன்னோர்களின் கூட்டம். அவர்களுக்கு சில பழங்களைப் போட ஜாண்டி ரோட்ஸ் மாதிரி தாவித் தாவி மிகச்சரியாக பிடித்தார்கள். வண்டியை கொஞ்சம் நிறுத்தி அவர்களைப் படம் பிடிக்கலாம் என்றால் உள்ளே வந்து விடுவார்கள் எனத் தோன்றியது. எதற்கு வம்பு என பழங்களை போட்டுக் கொண்டே பாம்பே சென்றடைந்தோம்…. அதாங்க பாம்பே பிக்னிக் ஸ்பாட் சென்றடைந்தோம்.
நாங்கள் சென்று சேர்ந்த பொழுதே நீண்ட வரிசை அங்கே. பஃபே முறையில் தான் உணவு வழங்குகிறார்கள். உணவு உண்ணுமிடம் சிறிய அளவிலிருந்ததால் பத்து பத்து பேராகத் தான் உள்ளே அனுமதி கொடுக்கிறார்கள். அதனால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் தான் எங்கள் முறை வந்தது. புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான், மூன்று நான்கு சப்ஜிகள் என மெனு. ஒவ்வொருவராக உள்ளே சென்று வேண்டிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டு நின்றபடியே உண்டோம்.
இந்த பஃபே முறையில் சாப்பிடுவது ஒரு பெரிய கலை! ஒரு கையில் தட்டை வைத்துக் கொண்டு மற்றொரு கையால் சுக்கா ரொட்டியை சிறு துண்டுகளாக்கி சப்ஜியோடு சேர்த்து சாப்பிட நிறைய வித்தைகள் செய்ய வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது இங்கும் பொருந்தும். கொஞ்சம் தவறினாலும் ரொட்டி கீழே விழும். இல்லையெனில் தட்டு சாய்ந்து சப்ஜி உங்கள் உடையிலோ, பக்கத்திலிருக்கும் நபரின் உடையிலோ படும். தட்டை வைத்துக் கொண்டு நீங்கள் திரும்பும் நேரம் பார்த்து தான் ஒருவர் அவசர அவசரமாக பாத்திரத்தினை நோக்கி அடுத்த Helping-க்காக வருவார்! தட்டு பறக்கும்!
அதிலும் சிலர் தட்டு முழுவதும் நிரப்பிக் கொள்வார்கள் – எல்லா சப்ஜியும், வேண்டுமோ வேண்டாமோ என யோசிக்காமல் அனைத்திலும் கொஞ்சம் எடுத்து அந்த சிறிய தட்டில் போட்டுக்கொள்ள அங்கே ஒரு சங்கமம் நடக்கும் – அலஹாபாத்தில் திரிவேணி சங்கமம் தான் – ஆனால் இங்கே நடக்கும் சங்கமத்தில் கலக்கும் சப்ஜிகள/உணவு வகைகள் பத்து பன்னிரெண்டு தாண்டும்! இப்படியாக கலந்து கட்டி சாப்பிட்டு, முழுவதும் சாப்பிட முடியாமல் அதை அப்படியே வீணாக்குவார்கள். பார்க்கும் போதே நமக்கு பதறும்…. எத்தனை எத்தனை பேருக்கு உணவு கிடைப்பதில்லை, கிடைக்கும் உணவினை இப்படி வீணாக்குகிறார்களே என நெஞ்சு துடிக்கும். பொதுவாகவே இப்படி இருக்கும் இடங்களில் மிகவும் குறைவாகத் தான், தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது என்பது மக்களுக்கு எப்போது தான் புரியுமோ…..
அந்த இடத்தில் நெடுஞ்சாலைப் பயணிகள் உணவு உண்பது மட்டுமன்றி சற்றே இளைப்பாறவும், சிறுவர்கள் விளையாட ஏதுவாய் சில ஏற்பாடுகளும் இருந்தது. ஒட்டக சவாரி செய்யும் வசதிகளும், செயற்கை குளங்களில் படகுக் சவாரி செய்யவும், கிரிக்கெட் விளையாடும் [Bowling Machine பந்து போட நீங்கள் விளையாடலாம்] வசதியும் [Net Practice] இருந்தது. அதையெல்லாம் சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு எங்கள் அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்தோம்.
அடுத்த இலக்கும் மலைப்பகுதியில் தான் அதுவும் சற்றே வளைவு நெளிவான பாதை. மாலை நேரமும் நெருங்கி வரவே குளிர் கொஞ்சம் அதிகமாக ஆரம்பித்திருந்தது. மலைப்பாதையில் சாலைகள் ஆங்காங்கே சரியில்லாதிருக்க, அதை சரி செய்ய பணியாளர்கள் இருந்தார்கள். வாகனத்திற்குள் கண்ணாடிக் கதவுகளை அடைத்து பயணிக்கும் எங்களுக்கே குளிர் தெரிந்த போது அவர்களுக்கு குளிர் அதிகமாகவே தெரியும். ஒரு சில பணியாளர்கள் காய்ந்த விறகுகளைப் போட்டு தீயிட்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள்.
எத்தனை கடினமான பணி என்றாலும் வேலை செய்யத் தானே வேண்டும். செய்வது எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத் தானே…. குளிராக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் வேலை செய்து தான் ஆக வேண்டும். அவர்களைத் தாண்டி எங்கள் வழியில் மேலே சென்றபோது, இலைகளில்லாது பார்த்த ஒரு மரம் இவர்களை நினைவு படுத்தியது. எத்தனை தொல்லைகள் வந்தாலும் வாழ்ந்தே தீருவோம் என்ற அந்த மரமும் அம்மனிதர்களும் சொல்வது போல எனக்குத் தோன்றியது.
இப்படியாக பயணம் செய்து நாங்கள் அடைந்த இடம் என்ன? அங்கே என்ன சிறப்பு என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாமா?
தொடர்ந்து பயணிப்போம்……
10
பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி!
தொடர்ந்து பயணித்து நாங்கள் சேர்ந்த இடம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா[டா] மாவட்டத்தில் இருக்கும் ஜ்வாலாஜி. சக்தி பீடங்களில் ஜ்வாலாஜியும் ஒன்று. சக்தி பீடங்கள் உருவான விதம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இத் தொடரின் முந்தைய பகுதி ஒன்றிலும் சக்தி பீடங்கள் பற்றிப் பார்த்தோம். சதி தேவியின் உடல் பகுதிகள் வீழ்ந்த 51 இடங்களில் கட்டப்பட்ட கோவில்கள் தான் சக்தி பீடங்கள். ஜ்வாலாஜி என அழைக்கப்படும் ஜ்வாலாமுகியும் ஒரு சக்தி பீடம் தான். இங்கே சதி தேவியின் நாக்கு விழுந்ததாக நம்புகிறார்கள்.
நாங்கள் பயணித்து ஜ்வாலாஜி கோவில் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தபோது மாலை நேரமாகி விட்டது. சற்றே மலைப்பாங்கான பகுதி – அடிவாரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு, நடந்து தான் செல்ல முடியும். அப்படி ஒன்றும் அதிக தொலைவில்லை – ஒரு கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும். எல்லா கோவில்களில் இருப்பதைப் போலவே இக்கோவிலுக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் நிறைய கடைகள். தேவிக்குச் சமர்பிக்கத் தேவையான பொருட்களை சிலர் விற்க, பலர் அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகள் வைத்திருந்தார்கள்.
கடைகளைப் பார்த்தபடியே கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். பிரசாதக் கடைகள் அனைத்திலும் வாசலில் ஒரு நபர் நின்று கொண்டு கோவிலுக்கு வருபவர்களை தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டிருந்தார்கள். காலணிகளை இங்கே வைத்து விட்டு தேவிக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என பலரும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். பக்தர்களின் வருகை குறைந்திருந்த காரணமோ என்னவோ, பலத்த போட்டி இருந்தது.
அதிலும் நாங்கள் பதினான்கு பேர் என்பதால் நல்ல வியாபாரம் நடக்கும் என நினைத்தார்களோ என்னமோ? நடக்கும் அனைத்து விஷயங்களையும் பார்த்தபடியே மேலே நடந்தோம். கோவில் படிகளுக்குச் சற்று முன்னர் இருந்த கடையொன்றில் காலணிகளை வைத்து விட்டு அர்ச்சனைத் தட்டுகளை வாங்கிக் கொண்டு மேலே நடந்தோம். கோவில் வளாகத்திற்குச் சென்றபோது நடை சார்த்தி இருந்தது தெரிந்தது.
வட இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில் மாலை நேரத்தில் ”ஆரத்தி” என்று அழைக்கப்படும் நிகழ்வு ஒன்று நடக்கும். ஆறரை அல்லது ஏழு மணிக்கு கோவிலில் இருக்கும் அனைத்து இறைவன்/இறைவிகளுக்கும் கற்பூர ஆரத்தியும், பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். அதற்காக அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நடை சாற்றப்பட்டு தயார் செய்வது வழக்கம். நாங்களும் சென்றது அந்நேரத்தில் என்பதால், கோவில் திறக்கும் வரை அங்கே அமர்ந்திருந்தோம்.
அனைவரும் பேசிக் கொண்டிருக்க, எங்கள் குழுவில் இருந்த பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஆரம்பித்தார்கள். கோவிலில் இருந்த பலரும் லௌகீக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தினார்கள். இப்படி பேசிக் கொண்டிருப்பதால், கோவிலுக்கு வந்த பின்னும், பலரும் தேடும் அமைதி கிடைப்பதில்லை! பாராயணம் முடிப்பதற்கும் கோவில் கதவுகள் திறந்து ஆரத்தி தொடங்குவதற்கும் சரியாக இருந்தது.
இங்கே தேவி அக்னி ரூபத்தில் இருக்கிறார். பாறைகளுக்கு இடை இடையே ஒன்பது இடங்களில் ஜ்வாலையாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஜ்வாலையையும் மஹாகாளி, அன்னபூர்ணி, சண்டிதேவி, சரஸ்வதி, துர்க்கா தேவி, லக்ஷ்மி என வணங்குகிறார்கள். பாறைகளுக்கு வெளியே வெள்ளியில் கவசம் போட்டிருக்க உள்ளே நீல ரூபத்தில் எரிந்து கொண்டிருப்பது மஹாகாளியின் ரூபம். அதன் கீழே ஜோதிஸ்வரூபமாய் அன்னபூர்ணி. பக்கத்தில் இன்னொரு ஜ்வாலா, சண்டி தேவி. பக்கத்தில் மா ஹிங்க்லாஜ் தேவி [சர்வ வ்யாதிகளுக்கும் நிவாரணம் தருபவள்], விந்த்யாவாசினி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, நவதுர்க்கா என ஒவ்வொரு ஜ்வாலையிலும் தேவி ப்ரத்யக்ஷமாக குடியிருப்பதாக ஐதீகம்.
அனைத்து தேவிகளையும் இங்கே ஜோதி ரூபமாக வழிபடுகிறார்கள். பாறைகளுக்கு நடுவிலிருந்து வரும் ஜ்வாலை எங்கிருந்து வருகிறது, அதற்கு என்ன காரணம் என சிலர் சோதித்துப் பார்த்தாலும் அதற்கான காரணம் தெரியவில்லை. ONGC நிறுவனம் கூட சில சோதனைகளை மேற்கொண்டு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்.
அக்னி ரூபமாக தேவியை தரிசித்து விட்டு சில படிகள் மேலே சென்றால் அங்கே பாபா கோரக்நாத் கோவிலும் இருக்கிறது. இங்கேயும் பாறைகளில் அக்னி பிழம்புகள். ஒரு சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து அந்த அக்னிப் பிழம்புகளை மூட, சிறிது நேரத்தில் குடத்திலிருக்கும் தண்ணீரும் கொழுந்து விட்டு எரிகிறது. அதை அணைத்து விட்டு, அதே தண்ணீரை நம் மேல் தெளித்து, அதையே நமக்கு தீர்த்தமாகவும் அளிக்கிறார்கள்.
இன்னுமொரு சிறிய குகையில் பாறைகளுக்கு இடையே நீரோட்டம். ஒரு சிலரே அங்கே நின்று தரிசனம் செய்ய முடியும் என்பதால் நான்கு ஐந்து பேர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தபிறகு அடுத்த ஐந்து பேர். எங்களில் ஒருவர் ரொம்பவும் குனிந்து பார்க்க, அங்கே இருந்தவர் நகர்ந்து கொள்ள மறுபடி மறுபடி சொல்கிறார். ரொம்பவும் அருகில் சென்றால் முகத்தில் அக்னி பட்டு விடும் அபாயம் உண்டு என்று சொல்ல, அதை எங்களால் நம்ப முடியவில்லை. ஆனாலும், அந்த நீரோட்டத்தில் அக்னி ஜ்வாலையை காண்பிக்க, இரண்டு, இரண்டரை அடி உயரத்திற்கு அக்னி ஜ்வாலை எழுகிறது. அதன் பிறகு தான் அவர் சொன்னதன் காரணமும் புரிந்தது.
இப்படியாக ஜ்வாலா ரூபமாக இருக்கும் தேவியினைத் தரிசனம் செய்த பிறகு வெளியே வரும்போது நன்கு இருட்டி விட்டது. கோவிலுக்குள் புகைப்படங்கள் எடுக்கத் தடை என்பதால் படங்கள் எடுக்க இயலவில்லை. வெளியே வரும்போது சில படங்கள் எடுத்தேன். இக்கோவில் பற்றிய நிறைய செய்திகளும் கதைகளும் உண்டு. முகலாயப் பேரரசர் அக்பர் அவர்கள் இக்கோவிலுக்கு தங்கத்தில் Chattra [குடை] கொடுத்ததாகவும் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தில் தகடுகள் பொருத்தியதாகவும் செய்திகள் உண்டு.
நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் இடம் இது. அக்னி ரூபமாக தேவி இருப்பதாகச் சொன்னாலும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. கோவிலின் உள்ளே இருக்கும் போது கண்டிப்பாக Positive அதிர்வலைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு இடமும் கூட. சக்தி பீடங்களில் ஒன்றான ஜ்வாலா தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றான கழிப்பறை வசதிகள் இவ்விடத்திலும் உண்டு. அதுவும் குளிர் தேசத்தில் இப்படி வசதிகள் இல்லாதிருப்பது அங்கே வரும் அனைவருக்கும் கடினமான ஒரு சோதனை! கழிப்பறை என உள்ளே ஒரு இடத்தினைக் காண்பிக்க, நான் அங்கே சென்று “நான் இந்த விளையாட்டுக்கு வரலை” என்று திரும்பி ஓடி வர வேண்டியிருந்தது!
ஒரு உன்னதமான அனுபவத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்!
தொடர்ந்து பயணிப்போம்……
11
பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு!
சென்ற பகுதியில் பார்த்தது போல ஜ்வாலாஜி கோவிலில் ஒரு உன்னதமான அனுபவத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புறப்படும் போதே நேரம் இரவு 08 மணிக்கு மேலாகி விட்டது. ஜ்வாலாஜி இருக்கும் இடத்திலிருந்து அன்றைய இரவு நாங்கள் தங்க வேண்டிய இடமான காங்க்டா [Kangra] சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு. இரவு நேரம் என்பதால் சற்றே மெதுவாகத் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கூடவே மலைப் பிரதேசம் என்பதால் வேகமாக பயணிக்க இயலாது.
இரவு நாங்கள் அங்கே தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, அலுவலக நண்பரின் உறவினரிடம் சொல்லி இருந்தோம். இவர் தான் எங்களின் முதல் நாள் இரவு தங்கிய இடமான சிந்த்பூர்ணியிலும் தங்குமிடம் ஏற்பாடு செய்தவர். நாங்கள் காங்க்டா வரும்வரை தொடர்ந்து அலைபேசியில் அழைத்து எங்கே இருக்கிறோம் என்பதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். காங்க்டா நகரில் நுழைந்தவுடன் இருக்கும் ஒரு பிரதானமான இடத்தினைச் சொல்லி அங்கே காத்திருப்பதாகவும் சொன்னார். ஒரு வழியாக நாங்கள் அந்த இடத்தினை அடைந்தோம்.
அங்கே சேர்ந்தபிறகு அவரை அலைபேசியில் அழைக்க, சில நிமிடங்களுக்குள் தனது வாகனத்தில் வந்து சேர்ந்தார். அவருடைய வாகனத்தினைத் தொடர்ந்து நாங்களும் பயணித்து அவர் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். கீழே ஐந்து அறைகள், மேலேயும் தங்கும் அறைகள் என ஒரு இடம் – பெயர் Anmol Guest House. காங்க்டா தேவி கோவில் இருக்கும் கடை வீதியிலேயே இருக்கிறது. அங்கே சென்று எங்கள் உடைமைகளை வைத்து விட்டு சற்றே இளைப்பாறினோம்.
அதற்குள் அந்த நண்பர், அவர் பெயர் மனிஷ் – இரவு உணவு எங்கே சாப்பிடப் போகலாம் என்று கேட்க ஆரம்பித்தார். மதியம் சாப்பிட்டிருந்தாலும், முந்தைய பதிவில் சொன்னது போல, நாலு மணிக்கு சாப்பிட்டிருந்தாலும், பயணத்திற்குப் பிறகு சிலருக்கு பசி இருந்தது. சிலருக்கு பயணத்தின் அலுப்பில் ”படுத்தால் போதும் போல இருக்கிறது, அதனால் நாங்கள் பழங்கள் சாப்பிட்டுக் கொள்கிறோம்” எனச் சொல்ல, சிலர் மட்டும் சாப்பிடப் புறப்பட்டோம் – அப்போது மணி இரவு 09.45 மணிக்கு மேல்!
மனீஷ் உடனேயே அவரது நண்பரின் உணவகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, உணவு சாப்பிட எங்களை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டார். அப்பப்பா, அப்படி ஒரு கவனிப்பு, ஆட்டமும் ஓட்டமுமாக மனிஷ் எங்களை கவனிக்க, நாங்களும் அவரது அன்பில் திளைத்தோம். மனீஷையும் எங்களுடன் சாப்பிடச் சொல்ல, அவரோ, வீட்டில் மனைவி காத்திருப்பார் [சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனதாம்!] என்று சொல்ல, ”எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம், நீங்கள் புறப்படுங்கள், காலையில் சந்திக்கலாம்” என்று வலுக்கட்டாயமாக அனுப்பினோம்.
நாங்கள் உணவு சாப்பிட்டு முடித்தபிறகு உணவுக்கான தொகையைக் கொடுக்கலாம் எனக் கேட்டபோது, கடை உரிமையாளர், எங்களிடம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார் – மனீஷ் ஏற்கனவே அவரிடம் சொல்லி விட்டாராம் – வாங்கக் கூடாது என! நன்கு உண்ட பிறகு அதற்கான தொகையைக் கொடுக்கவில்லையே என நினைத்த போது மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கடை உரிமையாளருக்கும் நன்றி சொல்லி, நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு நடந்தே திரும்பினோம்.
காங்க்டாவில் நாங்கள் தங்கி இருந்த போதும், நாங்கள் பயணித்த போதும், மனீஷ் எங்களுக்குச் செய்த உதவிகள் என்றும் மறக்கமுடியாதவை. தொடர்ந்து அவர் ஓட்டமும் நடையுமாக பல ஏற்பாடுகளை எங்களுக்காக செய்து கொடுத்தார். இத்தனைக்கும் நாங்கள் அவரை முன்னரே பார்த்ததோ, அறிந்ததோ இல்லை. அவரின் உறவினர் எங்களுடன் அலுவலகத்தில் ஒன்றாக பணி புரிந்தவர் [அதுவும் சில வருடங்களுக்கு முன்னர்!]. அவர் சொல்லி விட்டார் என்பதற்காக, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.
அவரிடம் பேசியபோது ஒரு விஷயத்தினைத் தெரிந்து கொண்டோம். அவரது மனைவியின் ஊர் தலைநகர் தில்லி தானாம். அவ்வப்போது தில்லி வருவேன் என்று சொல்ல, எப்போது தில்லி வந்தாலும் சொல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டோம்! இந்த மாதிரி பயணங்களில் நமக்குக் கிடைக்கும் நட்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விடுகிறது.
இரவு உணவினை முடித்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பி, படுத்துக் கொண்டு, அன்றைய தினத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை நினைத்தபடியே கிடக்க, சிறிது நேரத்திலேயே நித்ரா தேவி என்னை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றாள்……. சரி நான் கொஞ்சம் தூங்கி எழுந்து கொள்கிறேன்! அடுத்த நாள் என்ன இடங்களுக்குச் சென்றோம், என்னென்ன அனுபவங்கள் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
தொடர்ந்து பயணிப்போம்……
12
பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்
முந்தைய நாள் முழுவதும் பயணம் செய்து சில சிறப்பான அனுபவங்களைப் பெற்று நித்ராதேவியின் மடியில் துயிலுறங்கியது பற்றி சென்ற பகுதிகளில் பார்த்தோம். இங்கே ஒரு விஷயத்தினை உங்களுக்கும் மீண்டும் நினைவு படுத்த நினைக்கிறேன் – நாங்கள் இப்பயணத்தினை மேற்கொண்டது நல்ல குளிர் நாட்களான டிசம்பர் மாத இறுதியில். அதுவும் குளிர் பிரதேசமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் குளிருக்குக் கேட்கவா வேண்டும்?
குளிர் இருந்தாலும், இங்கே கிடைக்கக்கூடிய ”ரஜாய்” எனும் பஞ்சு மெத்தையை உடலுக்கு மூடிக்கொண்டால் குளிர் அவ்வளவாக தெரியாது. உள்ளே நுழைந்து கொள்ளும் வரை தான் குளிர். கொஞ்சம் அதனுள் அடங்கிவிட்டால், வெளியே வர மனமிருக்காது! இருந்தாலும், நல்ல உறக்கத்திற்குப் பிறகு அதிகாலை 05.00 மணிக்கே நான் எழுந்து சுடு தண்ணீரில் குளித்துவிட்டேன். பிறகு மற்றவர்கள் தயாராவதற்குள் அப்படியே காலாற நடந்து வருவோம் என வெளியே வந்தேன்.
அந்தக் காலை நேரத்திலும் காங்க்டா நகரில் மக்கள் கொஞ்சம் வெளியே வந்து, கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். காலை நேர தரிசனத்திற்குச் செல்கிறார்கள். விடிகாலையிலேயே குளித்து பக்தியுடன் காங்க்டா நகரில் குடிகொண்டிருக்கும் தேவியை தரிசனம் செய்து பக்தியில் திளைக்கிறார்கள். அன்னையை தரிசிக்கும் முன்னர் அவர்களை தரிசித்து அவர்கள் புண்ணியத்தில் நானும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன்! சற்றே நடந்து தங்குமிடத்திற்குத் திரும்பினேன்.
அதற்குள் சிலர் தயாராகிக் கொண்டிருக்க, தங்குமிடத்தின் மொட்டை மாடியிலிருந்து காமிராவிற்கு நல்ல தீனி கிடைக்கும் – சில படங்களை எடுக்கலாம் என்ற எண்ணத்தோடு மேலே சென்றேன். ஆஹா என்ன அற்புதமான காட்சிகள் அங்கே காணக் கிடைத்தன! [dh]தௌலா[dh]தார் ரேஞ்ச் என அழைக்கப் படும் மலை ஒரு புறம், மலைகள் முழுவதும் ஆங்காங்கே பனிப்பொழிவு இருக்க, தூரத்திலிருந்து வெள்ளிப் பனிமலையோ இது என்று நினைக்க வைக்கும்படி இருக்க, மற்றொரு புறத்தில் சூரியன் தனது கிரணங்களை வெளிப்படுத்தி மனிதர்களுக்கு அன்றைய காலை வணக்கத்தினைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
பனி மூடிய மலைச் சிகரங்களை பார்க்கும்போதே மனதிற்குள் அப்படி ஒரு குளிர்ச்சி. அந்தக் குளிர்ச்சியை போக்கியபடி சூரியனின் கதிர்கள். ஆஹா அற்புதமான காட்சி தான். கேமராக் கண்களாலும், நேராகவும் பார்த்து சில காட்சிகளைப் படம் பிடித்தும் காலை நேரத்தினை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே ஒரு குரங்காரும் மாடியின் ஒரு சுவர் ஓரத்தில் உட்கார்ந்து இயற்கை அழகினை ரசித்துக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் இருக்கும் மரம் ஒன்றில் காக்கைகள் அமர்ந்து தங்கள் பங்கிற்கு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன. அமைதியான சூழலில் அப்படியே நின்று கொண்டிருந்தே இருக்கலாம் போல தோன்றியது. அங்கே அருகே இருந்த ஒரு வீட்டில் மாடியில் தாழ்வாரம் போல ஒரு அமைப்பு. [dh]தௌலா[dh]தார் மலையை நோக்கி சில இருக்கைகள். இரண்டு முதியவர்கள் அங்கே அமர்ந்து காலைப் பொழுதினை ரசித்துக் கொண்டிருந்தார்கள் – ஆஹா என்ன ஒரு சுகம்!
இன்னுமொரு பக்கத்தில் பார்த்தால் ஒரு முதியவர் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அவரது ஒரு கையில் சிறிய கிண்ணம். அவர் அருகிலேயே அவர் மனைவி நின்று கொண்டிருக்கிறார். அவர் கையில் வைத்திருப்பது ஒரு சிறிய பிரஷ். அதை வைத்து என்னதான் செய்கிறார் என்று பார்த்தால், பாசமாய் அவரது கணவருக்கு தலைச்சாயம் பூசி விடுகிறார்!
இப்படியாக இயற்கை/செயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தபடியே நானும் தயாரான சில நண்பர்களும் இருக்க, மற்றவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். நண்பர் மனீஷ் காலை சீக்கிரமாகவே வந்து விடுவதாகச் சொல்லி இருக்கிறார். அவருடன் கோவிலுக்குச் செல்வதாக ஒரு திட்டம். கோவிலுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களை அடுத்த பதிவில் சொல்கிறேனே!
தொடர்ந்து பயணிப்போம்……
13
பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி
ஒரு வழியாக அனைவரும் தயாராகி விட நண்பர் மனீஷ்-உம் வந்து சேர்ந்தார். கோவிலுக்குச் செல்ல அனைவரும் புறப்பட்டோம். நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் கோவில் வந்து விடும். அதுவும் ஒரு சிறிய சந்து தான் கோவிலுக்குச் செல்லும் பாதை. அதன் இரு மருங்கிலும் கடைகள் – பூஜைக்குத் தேவையான பொருட்கள் மட்டுமின்றி பல விதமான பொருட்களையும் விற்கும் கடைகள். அவற்றை எல்லாம் பார்த்தபடியே கோவிலை நோக்கி நடந்தோம்.
பாதி வழியிலேயே ஆனைமுகத்தோனுக்கு ஒரு சிறிய கோவில் – சிவப்பு வண்ணத்தில் ஆனைமுகத்தோன் – அவனைச் சிறை வைத்து ஒரு அடைப்பு – அவ்வளவு தான் – “என்னை ஏன் சிறை வைத்தாய்?” என்று அவன் யாரிடம் கேட்க முடியும் என்று புரியவில்லை. அவனைத் தொழுது நாங்கள் முன்னேறினோம்.
பெரும்பாலான வட இந்தியக் கோவில்களில் காலணிகளை கழற்றி வைக்கவென்று தனியாக இடம் ஏதும் இருப்பதில்லை. கோவில் பாதையில் இருக்கும் அர்ச்சனை தட்டுகள் விற்கும் கடைகளில் விட்டு விடுவார்கள். இங்கே தனியாக ஒரு இடம் இருந்தது. பக்கத்திலேயே கைகளை சுத்தம் செய்து கொள்ள தண்ணீரும். இப்படி ஒரு இடத்தில் காலணிகளை வைத்து விட்டு கோவிலை நோக்கி முன்னெறினோம். தேவியை தரிசனம் செய்வதற்கு முன்னர் கோவில் பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம்.
இந்தப் பயணத்தில் ஏற்கனவே மா சிந்த்பூர்ணி, ஜ்வாலாஜி ஆகிய இரண்டு சக்தி பீடங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று பார்க்கப் போகும் கோவில், பயணத்தில் பார்க்கும் மூன்றாவது சக்தி பீடம். இந்த கோவிலில் சதி தேவியின் இடது மார்பகம் விழுந்ததாக நம்பப் படுகிறது. இங்கே குடிகொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஷ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியை பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள்.
காங்க்டா தேவி என்று சொல்லப்படும் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலுக்கு நாகர்கோட் [dh]தாம் என்றும் கோட் காங்க்டா என்றும் பெயர்கள் உண்டு. சதி தேவியின் இடது மார்பகம் இந்த இடத்தில் தான் விழுந்தது என்று சொல்வது போலவே வேறு சில கதைகளும் உண்டு. மஹிஷாசுரனை வதைத்த போது வஜ்ரேஷ்வரி தேவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அப்புண்களை குணப்படுத்த அதன் மேலே வெண்ணை தடவிக் கொண்ட்தாகவும் கதை உண்டு. இப்போதும் மகர சங்கராந்தி தினத்தன்று வஜ்ரேஷ்வரி தேவிக்கு வெண்ணைக் காப்பு செய்கிறார்கள்.
மிகவும் பழமையான கோவில் என்றாலும் அன்னிய ஆக்கிரமிப்புகளில் பல முறை அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயற்கையின் சீற்றத்தால் விளைந்த அழிவு தான் மிகப் பெரியது. 4 ஏப்ரல் 1905-ஆம் வருடம் காங்க்டா முழுவதும் அப்படி ஒரு குலுக்கல் – ரிக்டர் ஸ்கேலில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட மிகப் பெரிய அழிவு – 20000 பேருக்கு மேல் உயிரிழக்க, பலத்த காயங்கள் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில். இடிபாடுகளில் விழுந்த வீடுகள் எண்ணிலடங்கா. அழிவில் சிக்கியதில் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலும் ஒன்று.
கோவிலை புதுப்பித்து, இப்போது இருக்கும் கோவில் கட்ட கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகியிருக்கின்றது. கோவிலின் கட்டமைப்பு இந்து, இஸ்லாம், சீக்கிய முறைகள் மூன்றையும் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. தேவியின் கோவிலில் படைக்கப்படும் பிரசாதங்கள் எப்போதும் மூன்று பகுதிகளாகப் பிரித்து – மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹா காளி – ஆகிய மூவருக்கும் படைக்கிறார்கள்.
கோவிலில் நுழைவாயிலேயே இரண்டு பாதங்கள் – அவற்றிற்கு பூஜை செய்து, பூக்களையும் தூவி வைத்திருக்கிறார்கள். வாயிலில் அழகிய ஓவியங்களும் வரைந்திருப்பதைக் கண்டு ரசித்தபடியே உள்ளே நுழைந்தோம். சில ஓவியங்கள் ஆங்காங்கே சிதிலப்பட்டிருப்பதும் காண முடிந்தது. ஒரு சிவன் சிலையும் அங்கே இருந்தது. அவற்றை எல்லாம் பார்த்தபடியே கோவிலுக்குள் நுழைந்தோம். தேவியின் கருவறைக்கு முன்னர் சிங்கங்களின் உருவங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
கோவிலில் தேவியின் முன்னர் இருக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு – அது ”தரம் சீலா” என்று அழைக்கப்படும் ஒரு செவ்வகக் கல் – அக்கல்லில் பக்தர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்கிறார்கள். அந்தக் கல்லில் கை வைத்துக் கொண்டு யாரும் பொய் சொல்ல முடியாது என்றும் நம்பிக்கை. விழுப்புரம் அருகே இருக்கும் திருவாமாத்தூர் கோவிலிலும் இப்படி ஒரு வட்டப்பாறை உண்டு. அது பற்றி முன்னரே எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் – திருவாமாத்தூர் கொம்பு பெற்ற ஆவினங்கள்.
தரம் சீலாவினைப் பார்த்து விட்டு வஜ்ரேஷ்வரி தேவியினை தரிசிக்க முன்னேறினோம். தேவியை மனதாரப் பிரார்த்திக்கொண்டு அங்கேயே நின்றிருந்தேன். காலை நேரம் என்பதாலும், கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் இன்னும் வராத காரணத்தாலும் சற்று நேரம் நிம்மதியாக தரிசிக்க முடிந்தது. வஜ்ரேஷ்வரி தேவியிடம் அனைவருக்கும் நல்லதே கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன்.
கோவிலின் உள்ளே பிரகாரத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் பார்ப்பதற்கு உண்டு. அவை பற்றியும், அங்கே நமது முன்னோர்கள் செய்த வேலை பற்றியும் அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
தொடர்ந்து பயணிப்போம்……
14
பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்
சென்ற பகுதியில் காங்க்டா நகரில் குடிகொண்டிருக்கும் வஜ்ரேஷ்வரி தேவி பற்றியும் அக்கோவில் பற்றியும் பார்த்துக் கொண்டிருந்தோம். தொடர்ந்து இந்த வாரமும் கோவில் பற்றிய இன்னும் சில தகவல்களும் அனுபவங்களும் பார்க்கலாம். வஜ்ரேஷ்வரி அன்னையை தரிசித்து கையில் பிரசாதத் தட்டுகளுடன் வெளியே வந்தோம்! அது தவறென வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது! கோவில் பிரகாரம் முழுவதும் முன்னோர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எங்கள் குழுவில் இருந்தவர்களில் ஒருவரிடமிருந்து பிரசாதம் பறிபோனது!
கோவிலின் பிரகாரத்தில் இன்னும் சில சன்னதிகளும் உண்டு. மகா காளிக்கு என ஒரு மூலையில் சன்னதி. சன்னதியின் வெளியில் அட்ட்ரா புஜி தேவி – பதினெட்டு கைகளுடன் தேவியின் உருவம் இருக்கிறது. முன் நாட்களில் அங்கே ஆடு, கோழி போன்ற விலங்குகளை பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. சில வருடங்களாக பலி இடுவது முற்றிலும் தடை செய்யப்பட, இப்போது காளியின் பலி பீடத்தில் இரத்தம் சிந்துவதில்லை! காளியை மனதில் நிறுத்தி வேண்டிக்கொண்டு அங்கிருந்து குரங்குகளை வேடிக்கை பார்த்தபடியே முன்னேறினோம்.
இக்கோவிலிலும் உங்கள் பெயரைச் சொல்லி, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுத்தால், மேளத்தினை தட்டி, ”இன்னாருக்கு நல்லதையே கொடு” என்று தேவியிடம் அவர்களும் பிரார்த்திக்கிறார்கள். பெரும்பாலான ஹிமாச்சலப் பிரதேசக் கோவில்களில் இந்த வழக்கம் இருக்கிறது – நமது கோவில்களில் இப்படி ஒரு வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை – நம் சார்பாக வேண்டிக் கொண்டு, அவர்களும் தங்களது பிழைப்பைக் கவனித்துக் கொள்கிறார்கள்!
தொடர்ந்து பிரகாரத்தைச் சுற்றி வருவோம். அடுத்து நாம் பார்க்கப் போவது மிகப் பழமையான ஒரு சிகப்பு பைரவர் சிலை. கிட்டத்தட்ட 5000 வருடம் பழமையான சிலை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். முக்கியச் சன்னதி மட்டும் திறந்திருக்க, பிரகாரத்தில் இருக்கும் சன்னதிகள் வெளியே கம்பிக் கதவுகள் போட்டு மூடி இருக்கிறது. கம்பிக் கதவுகள் வழியே இந்த சிகப்பு பைரவரை வேண்டிக்கொண்டோம். இந்த சிகப்பு பைரவர் சிலைக்கு ஒரு கதை உண்டு. அது என்ன கதை? பார்க்கலாமா?
ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு இயற்கைச் சீற்றத்தின் காரணமாகவோ, அல்லது அன்னிய நாடுகளின் தாக்கத்தினாலோ ஆபத்து வருவதற்கு முன்னதாகவே சிகப்பு பைரவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதோடு, மேனியும் வியர்த்து விட ஆரம்பித்து விடுமாம். 1905-ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தினை தாக்கிய நில நடுக்கத்திற்கு முன்னரும் இப்படி நடந்ததாக குறிப்பிடுகிறார்கள். சிகப்பு பைரவரிடம் அப்படி ஒரு அழிவு வந்து விடாது காப்பாற்ற பிரார்த்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம்.
அடுத்ததாக ஒரு சிறிய அறை – அதிலும் வெளியே கம்பிக் கதவுகள். உள்லே ஒரு சிறிய செடி. பக்கத்திலேயே தரையிலே ஒரு கொப்பரை பதிக்கப் பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு கதை உண்டு. தேவிக்குப் பூஜை செய்ய நினைப்பவர்கள் இங்கே பூஜை செய்யலாம். நல்ல மனதோடு சிறிய பாத்திரத்தினால் தான்யங்களை போட்டால் கூட அந்தக் கொப்பரை நிறைந்து விடுமாம். போதும் என்ற மனதில்லாது மூட்டை மூட்டையாக தானியங்களை அந்தக் கொப்பரையில் கொட்டினாலும் நிறையவே நிறையாது என்று சொல்கிறார்கள்.
[dh]த்யானு பக்த் என்பவரின் கதையும் உண்டு. அவரது சிலையை தேவியின் சிலைக்கு நேர் எதிரே வைத்திருக்கிறார்கள். தேவியின் பிரத்யக்ஷமான தரிசனம் வேண்டி தவமிருக்க, அவர் வராது போகவே தனது தலையை வெட்டி தேவிக்கு பலியாக கொடுத்தாராம் த்யானு பக்த். அதன் பின்னர் அவருக்குக் காட்சி தந்த வஜ்ரேஷ்வரி தேவி, த்யானு பக்த் அவர்களை உயிர்பித்து அவருக்கு ஒரு வரமும் கொடுத்தாராம் – த்யானு பக்த் என்ன வரம் கேட்டாராம் தெரியுமா?
எனக்கு தரிசனம் தர இத்தனை காலம் தாழ்த்தி என் தலையை கொய்து பலி தந்த பிறகு வந்த மாதிரி காலம் தாழ்த்தாது, உனது பக்தர்கள் அனைவருக்கும் நல்ல தரிசனம் தர வேண்டும் எனச் சொல்ல, அன்னையும் அங்கே எழுந்தருளி வரும் பக்தர்கள் அனைவருக்கும் காட்சி தருவதாக ஒரு கதை.
இப்படி விதம் விதமான கதைகளைச் சொல்லியபடியே எங்களுடன் நண்பர் மனீஷ் வந்து கொண்டிருந்தார். அவர் எங்களுடன் வந்ததால் இந்தக் கதைகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சாதாரணமாக கோவில்களில் இப்படி இருக்கும் கதைகளை தெரிந்துகொள்ள அங்கே இருப்பவர்களின் உதவி தேவையாக இருக்கிறது. பல கோவில்களில் சிறப்பம்சங்களைச் சொல்ல யாருமே இருப்பதில்லை! நம் ஊர் கோவில்களில் இருக்கும் ஒவ்வொரு தூண்களுக்குள்ளும் ஒரு கதை ஒளிந்திருக்குமே!
கோவிலில் இருக்கும் அனைத்து தேவதைகளையும் பார்த்து பிரகாரத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து அனைத்து கதைகளையும் கேட்டு மனதில் ஒரு நிம்மதியோடு வெளியே வந்தோம். ஒவ்வொரு கோவிலிலும் அனுபவங்கள், சில கதைகள், பழக்க வழக்கங்கள் என்று எத்தனை எத்தனை விஷயங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இதையெல்லாம் யோசித்தபடியே வெளியே வந்தோம். கோவிலின் வாயிலிலும் இரண்டு பொம்மைச் சிங்கங்கள் – பக்கத்திற்கு ஒன்றாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவற்றையும் பார்த்தபடியே வெளியே கடை வீதிக்கு வந்தோம்.
மாலையில் கடை வீதிக்கு வர வேண்டும் என பேசியபடியே அனைவரும் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்து காலை உணவை முடித்துக் கொண்டு அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்களுக்குப் பயணிக்க வேண்டும். என்ன இடங்கள் பார்த்தோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்னென்ன என்பதை வரும் பகுதிகளில் பார்க்கலாம்!
தொடர்ந்து பயணிப்போம்….
15
பகுதி 15: கையேந்தி பவனில் காலை உணவு
சென்ற பகுதியில் சொன்னது போல, வஜ்ரேஷ்வரி தேவியின் திவ்யமான தரிசனம் முடித்துக் கொண்டு வெளியே வந்தோம். காலை வேளையில் கோவில் சென்று வருவதில் மனதிற்கு ஒரு அமைதி கிடைப்பது நிஜம். மனதில் ஒரு வித திருப்தியுடன் தங்குமிடத்திற்கு திரும்பி அன்றைய தினத்திற்கான பயணத்தினை துவங்கினோம். பயணம் தொடங்குவதற்கு முன்னரே காலை உணவினை முடித்துக் கொண்டு விடலாம் என மனீஷ் சொல்ல, பசித்திருந்த எங்களுக்கும் அது சரியென பட்டது.
ஹிமாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாது வட இந்தியாவில் பெரும்பாலான கடைகள்/உணவகங்கள் காலை நேரத்தில் திறப்பதில்லை. மதிய வேளையில் தான் திறப்பார்கள். ஒன்றிரண்டு இடங்களே திறக்கிறார்கள். அங்கேயும் பராட்டாவோ, அல்லது Bread-ஓ தான் கிடைக்கும். காங்க்ராவும் விதிவிலக்கல்ல. நமது ஊரில் மாலை நேரங்களில் முளைக்கும் சாலை ஓர உணவகங்கள் போலவே அங்கேயும் சில உண்டு. அவற்றில் காலை நேரங்களில் “நான்” அல்லது பராட்டாக்கள் கிடைக்கும்.
அது மாதிரி ஒரு கையேந்தி பவனில் காலை உணவு சாப்பிடுவதில் ஆட்சேபனை இருக்கிறதா எனக் கேட்க, அங்கே சென்று பார்க்கலாம் என முடிவு செய்தோம். தங்குமிடத்திலிருந்து சற்றே தொலைவில், நடக்கும் தூரத்தில் தான் நண்பர் மனீஷுக்குத் தெரிந்தவரின் கையேந்தி பவன் இருக்கிறது என அங்கே எங்களை அழைத்துச் சென்றார். காலை நேரத்திலேயே காய்கறிக் கடைகள் திறந்திருக்க, அவற்றில் குளிர்கால காய்கறிகள் குடைமிளகாய், கேரட், முள்ளங்கி, காலிஃப்ளவர் என நிறைந்திருந்தன. அவற்றையெல்லாம் பார்த்தபடியே நடந்து கையேந்தி பவனை அடைந்தோம்.
காலை நேரத்திலேயே கடை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தள்ளு வண்டியின் ஒரு பக்கத்தில் “தந்தூர்” என அழைக்கப்படும் அடுப்பு – பெரும்பாலும் மண்ணிலே செய்திருப்பார்கள். இந்த மாதிரி தள்ளு வண்டிகளில் தந்தூரில் சற்றே சில மாற்றங்கள் இருக்கும். ஒரு பெரிய இரும்பு Drum-ல் உட்புறங்களில் மண் குழைத்துப் பூசி தந்தூர்-ஆக மாற்றம் செய்திருப்பார்கள்.
அந்த மாதிரி தந்தூர் அடுப்பில் சுடச் சுட தந்தூரி பராட்டா – சாதாரணமாக தவாவில் [தோசைக்கல்] பராட்டா செய்தாலே கொஞ்சம் தடிமனாக இருக்கும். இந்த தந்தூரில் செய்யும் பராட்டாக்கள் இன்னும் அதிக தடிமனாக இருக்கும். இரண்டு தந்தூரி பராட்டாக்கள் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். அதிலும் பராட்டாவில் வெண்ணையைத் தடவித் தரும்போது நல்ல நிறைவான உணவாக இருக்கும்.
பெரும்பாலான வட இந்திய கையேந்தி பவன்களில் சுத்தம் இருக்காது – “சுத்தமா? அது கிலோ எவ்வளவு?” என்ற வகையில் தான் இருக்கும். ஆனால் இந்த கையேந்தி பவன் கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. மனீஷ் விறுவிறுவென தட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாகத் துடைத்து புதினா-கொத்தமல்லி சட்னி, வெங்காயம், ஊறுகாய், கொஞ்சம் அமுல் வெண்ணை என தட்டின் ஒவ்வொரு குழிகளிலும் வகைக்கு ஒன்றாக போட்டு தயார் செய்ய, சுடச் சுட பராட்டாக்களை தயார் செய்தார் அந்த கையேந்தி பவன் உரிமையாளர்.
அவரது கைகளில் என்னவொரு வேகம் – பொதுவாக வட இந்தியர்கள் சப்பாத்தி, பராட்டா ஆகியவற்றை குழவி கொண்டு செய்வதில்லை. கைகளால் தட்டித் தட்டியே பெரிதாக்கி விடுவார்கள். முதன் முதலில் இப்படிப் பார்த்தபோது அதிசயமாகத் தான் இருந்தது. இப்போதெல்லாம் அதிசயம் இல்லை. நானே கூட அப்படி முயற்சித்து செய்ததுண்டு! கிடுகிடுவென பராட்டாக்களை அவர் தயார் செய்ய, ஒவ்வொன்றாக தட்டுகளில் போட்டுக் கொடுத்தபடியே இருந்தார் மனீஷ்.
கையேந்தி பவனில் சாப்பிட வேண்டுமா எனக் கொஞ்சம் தயக்கத்துடன் இருந்தவர்களும் முதல் தந்தூரி பராட்டாவினை உண்ட பிறகு இன்னும் ஒரு பராட்டா கூடச் சாப்பிடலாம் என சாப்பிட்டோம். சுடச் சுட அந்த கடை உரிமையாளர் தயார் செய்து கொடுக்க, சுவையான தொட்டுக்கைகள் இருக்க, மளமளவென பராட்டாக்களை கபளீகரம் செய்தோம். எல்லோரும் சாப்பிட்ட பிறகு உணவிற்கான தொகையைக் கேட்க, கடை உரிமையாளர் வாங்கிக் கொள்ள மறுத்தார் – மனீஷ் அழைத்து வந்ததால் எங்களிடம் வாங்கிக் கொள்ள மாட்டாராம்…. அட தேவுடா!
இந்தக் கையேந்தி பவன்களில் விதம் விதமான பராட்டாக்களும், அம்ருத்ஸரி நான் வகைகளும், தந்தூரி ரொட்டிகளும் வகை வகையாக செய்து தருகிறார்கள். பலரும் அந்தக் கடைகளில் சாப்பிடுகிறார்கள். சுத்தமாக இருப்பதால் நல்ல விற்பனை ஆகிறது. காலை நேரத்திலேயே இப்படிச் சுடச் சுட பராட்டாக்களை சாப்பிட்டு விட்டதால் தொடர்ந்து பயணிப்பதில் கஷ்டமில்லை.
ஓட்டுனர் ஜோதியும் அதற்குள் காலை உணவினை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு அங்கேயே வந்து விட அனைவரும் புறப்பட்டோம். எதிரே தௌலாதர் மலைத்தொடர் இருக்க, பனியில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் பட்டுப் பளபளக்க, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணித்தோம். நாங்கள் பயணித்துச் சென்ற இடம் என்ன, அங்கே பார்த்தவை என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!
தொடர்ந்து பயணிப்போம்….
16
பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்
சென்ற பகுதியில் சொன்னது போல, காலை உணவினை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு அனைவரும் புறப்பட்டோம். எதிரே தௌலாதர் மலைத்தொடர் இருக்க, பனியில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் பட்டுப் பளபளக்க, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணித்தோம். நாங்கள் பயணித்துச் சென்ற இடம் என்ன தெரியுமா, காங்க்ரா நகரிலிருந்து ஒரு மணி நேரத்தில் இருக்கும் சாமுண்டாஜி என அழைக்கப்படும் சாமுண்டா தேவி கோவில் தான். இக்கோவிலும் சக்தி பீடங்களில் ஒன்று.
சாலையின் ஒரு பக்கத்தில் தொடர்ந்து பனிச்சிகரங்கள் இருக்க, அவற்றை ரசித்தபடியே பயணித்தால் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சாமுண்டா தேவியின் கோவில். சில நிமிடங்கள் பயணித்து கோவிலை வந்தடைந்தோம். கோவிலின் உள்ளே நுழைவதற்குள் கோவில் பற்றிய சில கதைகளைப் பார்க்கலாம்.
சாமுண்டா தேவி, பராசக்தியின் பல அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சக்திகளில் ஒன்று. சண்டா, முண்டா என இரண்டு அரக்கர்கள் அனைவருக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க அவர்களை அழிக்க உருவமெடுத்தவர் தான் சாமுண்டா தேவி. சண்டா, முண்டா ஆகிய அரக்கர்களை அழித்தமையால் இவர் சாமுண்டா தேவி என அழைக்கப்பட்டார் என்று ஒரு கதை. இன்னொரு கதையும் உண்டு.
அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் பலத்த யுத்தம் நடக்க, அப்போது கௌஷிகி தேவி எனும் தேவியின் புருவத்தில் இருந்து உருவான சண்டிகா, சண்டா, முண்டா ஆகிய இருவருடனும் பலத்த யுத்தம் நடத்திய பிறகு யுத்தத்தில் வெற்றி பெற்றாராம். பிறகு அந்த இரண்டு அரக்கர்களின் தலையைக் கொய்து கௌஷிகி தேவியின் காலடியில் சமர்ப்பிக்க, மனம் மகிழ்ந்த கௌஷிகி தேவி சண்டிகாவிற்கு சாமுண்டா தேவி என்ற பட்டம் சூட்டியதாகவும் ஒரு கதை.
காங்க்ரா மாவட்டத்தின் பாலம்பூர் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இக்கோவில் [B]பானேர் நதிக்கரையில் அமைந்திருக்கிறது. தற்போதைய கோவில் அமைந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இருந்த ராஜா ஒருவர் தேவியின் கோவிலை பக்தர்கள் சுலபமாகச் சென்று வழிபடும் இடத்தில் அமைக்க முடிவு செய்து சாமுண்டா தேவியை பிரார்த்திக்க, அவரும் கோவிலில் பூஜை செய்பவரின் கனவில் தோன்றி அதற்கு அனுமதி அளித்து, இந்த இடத்தில் பூமியில் புதைந்து இருக்கிறேன். என்னை எடுத்து அங்கே கோவில் கட்டலாம் என்று சொல்லிவிட்டார்.
ராஜா தனது பரிவாரங்களில் சில வீரர்களை அவ்விடத்திற்கு அனுப்பி வைக்க, தேவியின் சிலையைக் கண்டெடுத்த அவர்களால் அச்சிலையை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. எத்தனை முயன்றும் முடியாமல் போக, ராஜாவும் என்ன செய்வது என்று கவலையில் ஆழ்ந்து விட, சாமுண்டா தேவி மீண்டும் கோவில் பூஜை செய்பவரின் கனவில் தோன்றி, “அவ்வீரர்கள் என்னை சாதாரணக் கல்லாக நினைத்துக் கொண்டு அப்புறப்படுத்த நினைத்தார்கள். அதனால் தான் அவர்களால் என்னை தூக்க முடியவில்லை” என்று கூறி, காலையில் நதியில் நீராடி தகுந்த மரியாதையோடு என்னை அணுகு!” என்று சொல்லி விட்டார்.
அன்னை சொன்னபடியே அனைவரும் செல்ல, ஒரு மனிதராகவே தேவியின் சிலையை எடுத்து வந்து பானேர் நதிக்கரையில் கோவில் அமைத்தார்கள் என்று ஒரு கதை! எத்தனை எத்தனை கதைகள். ஒவ்வொரு கோவிலுக்கும் இப்படி கதைகளும், உப கதைகளும் நிறையவே இருக்கின்றன. என்ன நண்பர்களே கதைகளைப் படித்து ரசித்தீர்களா? வாருங்கள் கோவிலின் உள்ளே பயணிப்போம்.
கோவிலின் வாயிலில் இருக்கும் கடைகளில் ஒன்றில் அர்ச்சனைக்கான பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கேயே காலணிகளையும் கழற்றி வைத்தோம். சென்ற பகுதியில் சொன்னது போலவே இங்கும் கைகளை சுத்தம் செய்து கொள்ள தண்ணீர் கொடுக்க, கைகளை சுத்தம் செய்து கொண்டு கோவிலின் நுழைவாயில் வழியே உள்ளே சென்றோம். சாமுண்டா தேவி பல அரக்கர்களை வென்று அவர்களின் தலைகளைக் கொய்து மாலையாக அணிந்து கொண்டிருந்த மாதிரி இருந்த சிற்பம் பயங்கரமாக இருந்தது!
கோவிலின் வாசலில் இருந்த சிற்பங்களைப் புகைப்படம் எடுத்தபடியே உள்ளே நுழைந்தால் தேவியின் கோவிலுக்குள் வந்த பிறகு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. சாமுண்டா தேவி பொதுவாக சிகப்பு வண்ண வஸ்திரத்தில் அலங்கரிக்கப் பட்டு இருப்பது வழக்கம். சாமுண்டா தேவியை மனதார தரிசித்து அனைவருக்கும் நல்லதையே தரட்டும் என வேண்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தோம். பிரகாரத்தில் வலம் வரும்போது அங்கும் வானரங்கள் நிறையவே அமர்ந்திருக்க, அவற்றிடமிருந்து தேவியின் கோவிலில் தந்த பிரசாதங்களைக் காப்பது பெரும் கலையாக இருந்தது! சற்றே மறைவிடத்தில் அமர்ந்து அங்கே தந்த சர்க்கரை உருண்டைகளை சாப்பிட்டு விட்டு, அடுத்த சன்னதியை நோக்கி நகர்ந்தோம்.
அது என்ன சன்னதி, அங்கே கிடைத்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமே!
தொடர்ந்து பயணிப்போம்….
17
பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்
சாமுண்டா தேவியின் தரிசனத்திற்குப் பிறகு வெளியே வர அங்கே இருந்த பக்தர்கள் பலரும் வேறொரு சன்னதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அங்கே என்ன சன்னதி இருக்கிறது என்று தெரியாமலே நாங்களும் சென்றோம். அங்கு சென்ற பிறகு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. ஒரு சிறிய குகை – வாயில் மூன்று அல்லது மூன்றரை அடி தான் இருக்கும். சிறுவர்கள் உள்ளே நுழைவதென்றால் கூட சற்றே குனிந்து தான் செல்ல வேண்டியிருக்கும்.
இப்படி இருக்கையில் ஆறு அடிக்கு மேல் இருக்கும் என்னைப் போன்றவர்கள் உள்ளே செல்ல வேண்டுமானால்? உள்ளே சில படிகள் இருக்க, அதில் ஒவ்வொரு படிகளாக உட்கார்ந்து தான் செல்ல வேண்டும். உள்ளே ஒருவர் செல்ல, இருக்கும் இடைவெளியில் உள்ளிருப்பவர் வெளியே வர வேண்டும். ஒவ்வொருவராகத் தான் உள்ளே செல்ல முடியும். படிகளில் உட்கார்ந்து உட்கார்ந்து உள்ளே நுழைந்தால், கோவிலில் இரண்டு பூஜாரி அங்கே தரையில், பக்கத்துக்கு ஒருவராக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடைசிப் படிக்கட்டின் அருகில் நானும் அமர்ந்து கொண்டு, லிங்க ஸ்வரூபமாக இருக்கும் சிவபெருமானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். பெரும்பாலான வட இந்திய கோவில்களில் கடவுள் சிலைகளை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. நாமே கடவுள் சிலைக்கும் பூக்களைப் போட்டு தொட்டு வணங்கலாம். இங்கேயும் அப்படியே. சில நிமிடங்கள் இன்னும் அங்கே இருக்கலாம் என்றால் படியில் அமர்ந்திருக்கும் அடுத்தவருக்கு தரிசனம் கிடைப்பது கடினம். அதனால் வெளியே வர ஆயத்தமானேன்.
உள்ளே நுழையும்போது படிக்கட்டுகளில் உட்கார்ந்து உட்கார்ந்து செல்ல முடிந்தாலும் வெளியேறும் போது கிட்டத்தட்ட தவழ்ந்து தான் வர வேண்டியிருந்தது. பொதுவாக அடங்காத உடம்பு கூட இங்கே வேறு வழியின்றி கூனிக் குறுகி தான் வெளியேற வேண்டியிருக்கிறது! வெளியே வந்து நேராக நின்றபிறகு தான் உயரமாக இருப்பது எவ்வளவு கடினம் என்று உணர்ந்தேன்! குகைக்குள் அமர்ந்து கொண்டே இருக்கும் அந்த பூஜாரிகளுக்கு எப்படி இருக்கும்! தினம் தினம் அப்படி அமர்ந்து சென்று தவழ்ந்து வருவது பழகி இருக்கும் என்பதால் சுலபமாக இருக்கும் போல!
இப்படி சாமுண்டா தேவி மற்றும் குகைக்குள் இருந்த சிவன் ஆகிய இருவரையும் தரிசித்து, குழுவில் உள்ள அனைவரும் மெதுவாக கோவில் வளாகத்தில் இருக்கும் சிலைகளையும் காட்சிகளையும் பார்த்தபடியே வெளியே வந்தோம். பானேர் [பான் கங்கா என்றும் சொல்வதுண்டு!] ஆற்றில் அத்தனை தண்ணீர் இல்லை. குளிர் காலம் என்பதால் மலைகளில் பனியாக இருக்கிறது போலும்! பனி உருகி தான் இங்கே தண்ணீர் வர வேண்டும் போல.
இந்த கோவில் அருகிலேயே ஒரு மயானமும் இருக்கிறது என்பதை ஹிமாச்சலப் பிரதேச நண்பர் ஒருவர் சொன்னார். சுற்று வட்டாரத்தில் இருக்கும் 22 கிராமங்களுக்கும் இங்கே தான் மயானம் என்றும் சிவபெருமான் தான் இங்கே முக்கியமான கடவுள் என்றும் சொன்னார். சிவ பெருமானை இங்கே வழிபடுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. சுற்றி இருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் இங்கே சிவராத்திரி சமயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்வார்கள் என்றும் மேளாக்கள் நடைபெறும் என்றும் கூடுதல் தகவல்கள் தந்தார்.
கோவில் சற்றே பெரிய கோவில் என்பதாலும், நவராத்திரி சமயங்களிலும், விழாக் காலங்களிலும் நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் தடுப்புக் கம்பிகள் வைத்து நிறைய தூரத்திற்கு பாதை அமைத்திருக்கிறார்கள். அவற்றின் வழியே வெளியே வந்தோம். கோவில் வளாகத்திற்குள்ளாகவே ஒருவர் ஒரு நீண்ட குழாய் போன்ற அமைப்பில் ஏதோ வைத்து விற்றுக் கொண்டிருக்க என்னவென்று கேட்டேன்.
இயற்கை முறையில் தயாரிக்கும் ஐஸ்க்ரீம் என்று சொல்ல, சரி சாப்பிட்டுப் பார்க்கலாம் என தரச் சொன்னேன். ஒரு சிறிய இலையில் கொஞ்சம் எடுத்து வைத்து அதைத் துண்டுகளாகப் போட்டு எடுத்து சாப்பிட இன்னுமொரு இலையையே ஸ்பூனாகச் செய்து கொடுத்தார். பத்து ரூபாய்க்கு சில துண்டுகள். இரண்டு மூன்று இலைகளில் வாங்கி அனைவரும் சுவைத்துப் பார்த்தோம். நன்றாகவே இருந்தது.
இப்படி ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்டிருந்தபோதே அங்கு இன்னுமொரு காட்சியும், சில புகைப்படங்கள் எடுக்க ஒரு வாய்ப்பும் காணக்கிடைத்தது! அப்படி என்ன அனுபவம்? அந்த காட்சியைப் புகைப்படம் எடுக்க என்ன கஷ்டப் பட வேண்டியிருந்தது என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாமா!
தொடர்ந்து பயணிப்போம்….
18
பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்
தேவி மற்றும் லிங்க ஸ்வரூப சிவனின் தரிசனமும் கண்டு அங்கிருந்து வெளியே வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டது பற்றி சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு மூதாட்டி மிகவும் ஸ்வாரசியமாக, அனுபவித்து பீடியை வாயில் வைத்து இழுத்து, புகை விட்டுக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்களும், பற்கள் இல்லாது புகை இழுப்பதில் அவரது கன்னங்களில் ஏற்பட்ட பள்ளங்களும் அவரை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.
சரி அவரை புகைப்படம் எடுக்கலாம் என்றால் தெரியாத ஒருவரை, அதுவும் வேறொரு ஊரில் சுற்றுலா சென்றிருக்கும் போது அந்த ஊரில் இருப்பவரை புகைப்படம் எடுப்பதில் சில தொந்தரவுகள் வரலாம் என்பதால், ஒன்று அவரைக் கேட்ட பிறகு அவரது புகைப்படம் எடுக்க வேண்டும், அல்லது அவருக்குத் தெரியாமல் அவரது புகைப்படம் எடுக்க வேண்டும். அவரைக் கேட்டு அவரிடமிருந்து அனுமதி பெற்று புகைப்படம் எடுப்பது சாத்தியமல்ல என்று தோன்றியது.
பீடி பிடிக்கும் விதமும், அவர் இருந்த ஒரு மயக்க நிலையும், அவர் அவரது சுய நினைவில் இருப்பது போலத் தோன்றவில்லை. மேலும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, ஏதோ பேசவும் செய்தார். நடுநடுவே, பீடியை வாயில் வைத்து, “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என சார்மினார் சிகரெட் விளம்பரம் போல ஒரு நீண்ட இழுப்பு – அதன் பின்னர் புகையை சில வினாடிகள் உள்ளிருத்தி, நன்கு அனுபவித்த பிறகு, மேலே பார்த்தபடி, அபரீதமான ஒரு திருப்தியோடு புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.
கேமராவில் பொருத்தியிருந்த 18-55 லென்ஸை மாற்றி 55-250 லென்ஸ் பொருத்தி, சற்று தொலைவிலிருந்து, அவருக்குத் தெரியாமல் அவரைப் புகைப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தேன். அவரது பக்கத்திலேயே எங்கள் குழுவினர் சிலரும் நின்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்க்க, குழுவினரை படம் எடுப்பது போல அந்த மூதாட்டியை படம் எடுக்கலாம் என முயற்சித்தேன். சில படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, திடீரென, எங்கள் குழுவினரில் ஒருவர் அவர் அருகே வரும்போது ஒரு புகைப்படம் எடுத்தேன்!
அந்தப் புகைப்படத்தை பார்த்தபோது பீடியை பாட்டி குடித்துக் கொண்டிருக்க, புகையோ குழுவில் இருந்தவரின் வாயிலிருந்து வருவது போல அமைந்து விட்டது! அந்தப் புகைப்படத்தைப் பார்த்து குழுவில் உள்ள அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.
இது போன்று பயணங்களில் சிலரை புகைப்படம் எடுக்கத் தோன்றினாலும், அவரது முகவெட்டு புகைப்படத்தில் நன்றாக இருக்கும் என நினைத்தாலும் புகைப்படம் எடுக்க முடிவதில்லை. குழந்தைகளை படம் எடுக்க அவர்களது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு எடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இது போன்ற மூதாட்டி/பெரியவர்களை படம் எடுத்துக் கொள்ள சற்றே பிரயத்தனப் பட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் அனுமதி பெற்றே படம் எடுக்கிறேன் என்றாலும், இப்படி மறைமுகமாக சில படங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.
கோவிலிலிருந்து வெளியே வந்து காலணிகளை அணிந்து கொண்டு அங்கே இருந்த கடைகளை நோட்டமிட்டபடி வந்து கொண்டிருந்தோம். தேநீர் அருந்தலாமென ஒரு கடையில் நிற்க, அவர் தேநீர் தயாரிக்கும் வரை பக்கத்துக் கடைகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். ஒரு கடைக்காரர் மூங்கில்களைச் சீவி ஏதோ செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். மூங்கில்களில் ஹூக்கா செய்து வைத்திருந்தார். அதைக் கொண்டு புகை பிடிக்க முடியாது – ஷோவிற்காக வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
பக்கத்திலேயே ஒரு சிறுமி ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நாய்க்குட்டியையும் அவரையும் புகைப்படம் எடுத்தபடியே அவருடன் பேசத் தொடங்கினோம். நாய்க்குட்டியின் பெயரைக் கேட்க, அந்தப் பெண் சொன்ன பெயர் யாருக்கும் புரியவில்லை. மீண்டுமொரு முறை கேட்க, அச் சிறுமி சொன்ன பெயர் – [B]பரவ்னி!வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்தபடியே நாய்க்குட்டியைப் பார்க்க, வெள்ளை நிற நாய்க்குட்டியின் மேல் ஆங்காங்கே Brownதிட்டுகள்! அட, இந்த நாய்க்குட்டியின் பெயர் Brownie!
[B]பரவ்னியையும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, அதற்குள் தேநீரும் தயாரானது. தேநீர் அருந்திய பின் எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தோம். அங்கே எனது காமெராவினைப் பார்த்த இரு இளைஞர்கள் தங்களை புகைப்படம் எடுத்துக் காண்பிக்கச் சொல்ல அவர்களையும் புகைப்படம் எடுத்தேன். எத்தனை தூரம் வரை இக் கேமரா மூலம் படம் எடுக்க முடியும் என்ற கேள்வியும் கூடவே அவர்களிடமிருந்து.
சாலையின் எதிர் புறத்தில் ஹிமாச்சலப் பிரதேச அரசுப் பேருந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஓட்டுனரும் நடத்துனரும் வந்து நிற்க, ”அவர்களை இங்கிருந்தே புகைப்படம் எடுக்க முடியுமா?” என்று கேட்க, அவர்களையும் ஒரு புகைப்படம் எடுத்துக் காண்பித்தேன். இப்படி சில புகைப்படங்களை எடுத்தும், கூடவே பயணத்தினைத் தொடர்வதும் தொடர்ந்தது. கோவிலின் வெளியே உள்ள தகவல் பலகையில் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு சுற்றுலாத் தலம் இருப்பதாக எழுதி வைத்திருக்க, அவ்விடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று போக்குவரத்துக் காவலரிடம் விசாரித்துக் கொண்டு பயணித்தோம்.
அப்படி பயணித்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பது பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன். ஓகே!
தொடர்ந்து பயணிப்போம்….
19
பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட!
வெளியே இருந்த தகவல் பலகை பார்த்ததும் எங்களுடன் வந்திருந்த குழுவில் இருந்த சிறுவர்களுக்கு ஒரு குதூகலம். “தொடர்ந்து கோவிலாக பார்த்து கொஞ்சம் அலுப்பாக இருந்த அவர்களுக்கு அந்த இடம் கொஞ்சம் மாற்றமாக இருக்குமே என்று நினைத்து, எங்களுடைய பயணத்தில் அந்த இடம் பற்றி யோசிக்கவில்லை என்றாலும், அங்கே போக முடிவு செய்தோம்.
கோவிலின் வெளியே இருந்த தகவல் பலகையில் கோபால்பூர் Zoo 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று தெரிந்தவுடன், விசாரித்துக் கொண்டு அங்கே வாகனத்தில் பயணித்தோம். செல்லும் வழியெங்கும் பாலம்பூர் நகருக்கே உரித்தான தேயிலைத் தோட்டங்கள் இருக்க, அவற்றை பார்த்தபடியே பயணித்து மிருகக்காட்சி சாலையின் வாயிலை சென்றடைந்தோம்.
Dhauladhar National Park என்றும் Gopalpur Zoo என்றும் அழைக்கப்படும் இந்த மிருகக்காட்சி சாலை, சுற்றுலா வருபவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று. இவ்விடத்தில் பல வகையான விலங்குகளை முடிந்த அளவிற்கு சுதந்திரமாக விட்டிருக்கிறார்கள். ”சித்தன் போக்கு சிவன் போக்கு” என்பது போல, தன்னிச்சையாக சுற்றித் திரிந்த விலங்குகளை அவற்றின் இயற்கைச் சூழலிலிருந்து அகற்றி இப்படி மிருகக்காட்சி சாலைகளுக்குள் அடைத்து வைப்பது கொடுமையான விஷயம். என்றாலும் சற்றே பெரிய பரப்பளவு கொண்ட இடத்தில் இந்த மிருகக்காட்சி சாலையில் இருப்பதால் கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்து கொள்ள முடியுமோ என்னமோ?
உள்ளே நுழையவும், வாகனம் நிறுத்தவும், புகைப்பட கருவிகளை உள்ளே எடுத்துச் செல்லவும் என விதம் விதமாக கட்டணங்களை வசூலித்த பிறகே நம்மை உள்ளே அனுமதிக்கிறார்கள். எல்லா கட்டணங்களையும் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தோம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 12.5 ஹெக்டேர் அளவு பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் பலகை தெரிவிக்கிறது.
பக்கத்திலேயே இன்னுமொரு தகவல் பலகையில் இங்கே இருக்கும் பல்வேறு விலங்குகள், பறவைகள், மரங்கள் என பல தகவல்களை வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுத்தை, சிங்கம், குரங்குகள், பல வித மான்கள், பறவைகள் என நிறையவே இருக்கின்றது இவ்விடத்தில். மிருகக்காட்சி சாலையின் நுழைவுப் பகுதியிலேயே கரடிகள் இருக்க, அவற்றைப் பார்த்த பின் உள்ளே நுழைந்தோம்.
மலைப்பகுதி என்பதால் நிறைய பறவைகளும் இங்கே வந்து செல்வதுண்டு. இங்கே இருக்கும் சில தனியார் தங்குமிடங்கள் பறவைகளை பார்ப்பதற்கென்றே சில சுற்றுலாக்களை ஏற்படுத்துவதும் உண்டு எனத் தெரிகிறது. Bird Watching என்று அழைக்கப்படும் விஷயம் மிகவும் சந்தோஷமான விஷயம். ஒவ்வொரு பறவைகளையும் பார்த்துக் கொண்டும், அவைகளின் பரிபாஷைகளை உற்றுக் கேட்டுக் கொண்டும் இருப்பது அலாதியான விஷயம்.
இம்மாதிரி ஒரு இடத்திற்கு, சில கவிதைப் புத்தகங்களைக் கொண்டு சென்று பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே படித்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. நேரம் கிடைக்க வேண்டுமே! ஒரே ஓட்டமாக அல்லவா இருக்கிறது வாழ்க்கை!
நாய் குரைக்கும் என்று நமக்கு எல்லாருக்கும் தெரியும். மான்கள் கூட குரைக்கும் என்று தெரியுமா உங்களுக்கு! மான் வகைகளில் ஒரு குறிப்பிட்ட மான்கள் குரைக்கும். தில்லி zoo-விலும் இப்படி Barking Deer பார்த்திருக்கிறேன். அதே வகை மான்கள் இங்கும் காண முடிந்தது. ஒரு வகை மான்களை ”சாம்பார்” என்றும் அழைப்பதுண்டு! இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்!
இப்படியாக விலங்குகளையும், பறவைகளையும் பார்த்துக் கொண்டே வரும்போது, அங்கே இருந்த பூக்களையும், மரங்களையும் பார்க்கத் தவறவில்லை. ஒவ்வொரு ராசிக்கான மரங்களையும் அதன் பெயர்களையும் எழுதி வைத்ததோடு அம்மரங்களையும் அங்கே காண முடிந்தது. எல்லாவற்றையும் ரசித்தபடியே சிறுத்தைப் புலி இருக்கும் இடத்திற்கு வந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தும் சிறுத்தை இருப்பதாகத் தெரியவில்லை! ”அண்ணாத்தே எங்கே இருக்காரோ?” என்று நினைத்தபடியே அனைவரும் நகர்ந்து விட, நானும் ஒரு சிலரும் மட்டும், பார்த்தால் கொஞ்சம் புகைப்படம் எடுக்கலாமே என நின்று கொண்டிருந்தோம்!
நாங்கள் நினைத்தது, சிறுத்தைக்கு டெலிபதி மூலம் சென்றடைந்தது போலும். புதர்களுக்கு நடுவே தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை கொட்டாவி விட்டு, சோம்பல் முறித்தபடியே எழுந்து நடக்கத் துவங்கியது. ஒன்று தான் இருக்கிறதென நினைத்தால் இரண்டு மூன்று என தொடர்ந்து காட்சி தந்தன. ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். என்னவொரு கம்பீரம்! ஆனாலும், சுதந்திரமாகத் திரிய வேண்டிய என்னை இப்படி சிறு பரப்பளவில் அடைத்து வைத்துவிட்டீர்களே என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது எனக்கு!
அடுத்ததாக சிங்கங்களைப் பார்க்கலாம் என நகர்ந்தோம். அவற்றுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. மறைவான இடத்திலிருந்து வெளியே வரவே இல்லை! அவ்வப்போது கர்ஜனை மட்டும் செய்து தன் இருப்பைச் சொல்லியபடி இருந்தது. விலங்குகளுக்கு எல்லாம் சாப்பாட்டு நேரம் போல! ஒரு ஜீப்பின் பின் பக்கத்தில் மாமிசங்களை போட்டு எடுத்துக் கொண்டு வந்தார் ஒரு பணியாளர்.
வேட்டையாடி உண்டு பழகிய விலங்குகளுக்கு, இப்படி Ready to Eat வகையில் உணவு தந்தால் பிடிப்பதில்லை போலும். சில கூண்டுகளில் சீண்டப்படாது கிடந்தன மாமிசத் துண்டுகள்!
நிறைய விலங்குகள், பறவைகள் என பார்த்தபடியே வந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அனைத்தையும் பார்த்து வெளியே வந்தால் மலைகளிலிருந்து வரும் தண்ணீரை குழாய்களின் வழியே வரவைத்து இருந்தார்கள். தண்ணீர் இயற்கையாகவே அப்படி ஒரு சில்லிப்பு! சுவையும் அலாதி! தண்ணீரின் இந்த இயற்கையான சுவைக்கு முன் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் எம்மாத்திரம்!
அனைத்தையும் ரசித்து அங்கிருந்து வெளியே வந்தோம். என்னதான் அங்கே வரும் மக்களுக்கு இவ்விலங்குகளையும், பறவைகளையும் பார்ப்பதில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றாலும், தன் சூழலிலிருந்து மாறுபட்டு, கூண்டுகளுக்குள் அடைந்து கிடக்கும் விலங்குகளைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாப உணர்வும் வருவது நிஜம்!
தொடர்ந்து பயணிப்போம்….
20
பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்
சென்ற பகுதியில் சொன்னது போல Dhauladhar Zoo பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்திற்குச் சென்றோம். அந்த இடம் ஒரு புராதனமான சிவன் கோவில். [B]பைஜ்னாத் மந்திர் என அழைக்கப்படும் அக்கோவில் Dhauladhar Zoo-விலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மிருகக் காட்சி சாலையில் இருந்த மிருகங்களைப் பார்த்து விட்டு, அவை சிறையில் அடைபட்டிருக்கும் நிலை பற்றிய எண்ணங்களுடனே பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் கண்ட அருமையான காட்சிகள் சிலவற்றை கண் பார்த்தாலும் மனம் இன்னும் அந்த மிருகங்களையே நினைத்துக் கொண்டிருந்தது.
அவற்றுக்கு ஏன் இந்நிலை என்ற எண்ணத்துடனேயே கோவிலை சென்றடைந்தோம். கோவில் வாசலிலேயே ஒரு பெரியவர் தள்ளாத வயதிலும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நமது ஊர் போல, வடக்கில் இருக்கும் கோவில்களில் பிரசாதங்கள் இருப்பதில்லை. சர்க்கரை மிட்டாய்கள், உலர் பழங்கள் போன்றவை தான் பெரும்பாலும் ஆண்டவனுக்கு படைப்பார்கள். எந்த இடத்தில் என்ன கிடைக்கிறதோ அதையே ஆண்டவனுக்குப் படைப்பது தானே நல்லது. அந்த பெரியவரும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை மிட்டாய் பிரசாதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
பெரும்பாலும் நான் கோவிலுக்குச் செல்லும் போது எந்த விதமான பிரசாதமோ, அர்ச்சனை தட்டுகளோ வாங்குவதில்லை. என்னுடன் வருபவர்கள் வாங்கி அர்ச்சனை செய்வது மட்டும் தான். ஏனோ இந்தப் பெரியவரிடம் வாங்க வேண்டும் எனத் தோன்றவே ஒரு சர்க்கரை மிட்டாய் பை ஒன்றை பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டேன். அவருக்கு விற்பனை ஆன மகிழ்ச்சி, எனக்கு ஏதோ ஒரு பெரியவருக்கு உதவி செய்த திருப்தி.
மேலே நடந்து கோவிலின் அருகே சென்றோம். பக்தர்கள் அதிக அளவில் இல்லை என்றாலும் அப்போது தான் வந்திருந்த பேருந்து ஒன்றிலிருந்து சில பள்ளிச் சிறுவர்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அனைவரையும் அழைத்து வந்த ஆசிரியர்கள் ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்க நாங்கள் முன்னேறினோம்.
உள்ளே நுழையுமுன்னர் அக்கோவில் பற்றிய தகவல்களை பார்க்கலாம். பிந்துகா எனும் நதிக்கரையில் அமைந்திருக்கிறது இக்கோவில். ராஜா ஜெயச்சந்திரா என்பவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்றாலும் 1783-ஆம் ஆண்டு கோவிலில் சில புனரமைப்பு வேலைகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்ததாக தெரிகிறது.
மலைகளின் அழகு ஒரு பக்கத்தில் இருக்க, கோவிலின் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களின் அழகு உங்களை நிச்சயம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு இருக்கும். சிவபெருமான் தான் இங்கே முக்கிய தெய்வம் என்றாலும் சுற்றுச் சுவர்களில் மற்ற தெய்வங்களுக்கும் இங்கே சிற்பங்கள் உண்டு. இக்கோவிலில் வீற்றிருக்கும் லிங்க வடிவமான சிவபெருமானுக்கும் ஒரு கதை சொல்கிறார்கள்.
சிவபெருமானின் மிகச் சிறந்த பக்தனான ராவணன் கைலாச பர்வதத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தது மட்டுமன்றி, ஒரு பெரிய யாகமும் செய்தாராம். சிவ பெருமானின் அருளைப் பெற தனது பத்து தலைகளையும் கொய்து யாகக் குண்டத்தில் போட்டு விட்டாராம். அவரது தவத்திலும், அவர் செய்த யாகத்திலும் மகிழ்ந்த சிவபெருமான் ராவணுனுக்கு தலைகளை மீண்டும் வரச் செய்தது மட்டுமின்றி, யாராலும் அழிக்க முடியாத வரங்களையும் கொடுத்தாராம்.
அது மட்டும் போதாது என்று சொல்லி, சிவபெருமானையும் தன்னுடனேயே இலங்கைக்கு அழைத்துச் செல்ல விரும்பினாராம் ராவணன். அவனது வேண்டுகோளுக்கு இணங்கிய சிவபெருமான் லிங்க ரூபம் கொள்ள, ராவணன் அதனை எடுத்துக் கொண்டுச் சென்று கொண்டிருந்தாராம். வழியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டியிருந்ததால் இப்போதைய பைஜ்னாத் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் கீழே வைத்து விடாதே என்று சொல்லிக் கொடுத்துச் செல்ல, சிவலிங்கத்தின் பாரம் தாங்காது அங்கேயே வைத்துவிட்டாராம் அந்த இளைஞர்.
அந்த சிவலிங்கத்தினை எடுத்துச் செல்ல முடியாததால் அங்கேயே கோவில் அமைத்ததாகவும் ஒரு கதை உண்டு. பின்னர் வந்த மன்னர்களால் புனரமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். மிகவும் பழமையான கோவில் என்பதை நீங்கள் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடியும். பிரம்மாண்டமான இக்கோவில் தற்போது தொல்பொருள் இலாக்காவின் வசம் இருக்கிறது.
பொதுவாகவே வடக்கில் தசரா திருவிழா சமயத்தில் “ராம் லீலா” கொண்டாடுவார்கள். அப்போது ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேக்நாத் ஆகிய மூவரின் உருவ பொம்மைகளை எரித்து ராவண தகனம் என்று கொண்டாடுவார்கள். ராவணனின் சிவபக்தியை மெச்சும் இந்த ஊரில் ராவண தகனம் கொண்டாடப்படுவதில்லையாம்.
கோவிலில் இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. சில சிற்பங்களை பார்க்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், காலத்தின் பிடியில் சிக்கி அழிந்த நிலையில் இருக்கும் பல சிற்பங்களைப் பார்க்கும் போது அவற்றை பாதுகாத்து வைக்க தவறிவிட்டார்களே என்றும் தோன்றியது. சில சிற்பங்களின் பகுதிகள் உடைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கவே மனதை ஏதோ செய்தது.
சிவபெருமானை தரிசனம் செய்து பிரகாரத்தில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து ரசிக்கலாம் என்று பிரகாரத்தில் வலம் வந்தோம். அப்பப்பா எத்தனை சிற்பங்கள், பிள்ளையார், முருகர், ஹரிஹரன், பிரம்மா என நிறைய சிற்பங்கள். ஒவ்வொரு சிற்பங்களும் நுணுக்கமான முறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அக்கால சிற்பிகளின் திறமை நம்மை வியக்கச் செய்யும் வகையில் இருக்கிறது.
அங்கே இருக்கும் சிற்பங்கள், அவை பற்றிய தகவல்கள் மட்டுமே ஒரு பகுதியில் எழுத வேண்டிய அளவிற்கு இருக்கின்றன. எடுத்த புகைப்படங்களும் உண்டு. ஆகையால் அடுத்த பகுதியில் அச்சிற்பங்களைப் பற்றிய தகவல்களைச் சொல்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்…
21
பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்
சென்ற பகுதியில் பைஜ்னாத் கோவில் பற்றிய சில தகவல்களைச் சொல்லி இருந்தேன். இப்பகுதியில் அக்கோவிலின் சுற்றுச் சுவர்களில்/பிரகாரத்தில் இருந்த சில சிறப்பான சிற்பங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு சிற்பமும் என்ன அழகு! அதிலும் சில சிற்பங்கள் நம் தமிழகத்தில் பார்க்கும் சிற்பங்களைப் போலவே இருந்தன. பொதுவாகவே வடக்கில் பார்க்கும் சிலைகள் எல்லாமே பளிங்குக் கற்களில் தான் அமைந்திருக்கும். ஆனால் இச்சிலைகள் நமது ஊர் போலவே வடித்திருக்கிறார்கள்!
இக்கோவிலில் இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?
முதலில் ஆனைமுகத்தான் – அவன் தானே முழு முதற்கடவுள்! இக்கோவிலில் இருக்கும் கணபதி – நர்த்தன கணபதி. வித்தியாசமாக சிங்கம், மூஷிகம் என இரண்டு வாகனங்கள் – இடப்புறத்தில் சிங்கமும் வலப் புறத்தில் மூஷிக வாகனம். ஆறு கரங்கள். நர்த்தன விநாயகர் என்பதாலோ என்னமோ, மேடையின் அடி பாகத்தில் மூன்று பேர் மத்தளம் வாசிக்கும்படி வடித்திருக்கிறார் அந்த சிற்பி!
ஹரியும் சிவனும் ஒண்ணு! அதை அறியாதவன் வாயில் மண்ணு! என்று சொல்வதுண்டு. இங்கே இருக்கும் ஒரு சிலை – ஹரி ஹர் – மூன்று தலைகளோடு காட்சியளிக்கும் இச்சிலையில் வலப்பக்கம் சிவனையும் இடப்பக்கம் விஷ்ணுவையும் குறிக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரி வலப்பக்க கை ஒன்றில் திரிசூலம் இருக்க, இடப்பக்க கை ஒன்றில் சக்கரம் இருக்கிறது. கீழ்ப்பக்கத்தில் இடப்பக்கம் லக்ஷ்மியும், வலப்பக்கத்தில் பார்வதியும் அமைத்திருக்கிறார் சிற்பி. நுணுக்கமான வேலைப்பாடுகள் இச் சிற்பத்திலும்.
கல்யாண சுந்தரர்: சிவபெருமானும் பார்வதி தேவியும் கல்யாண கோலத்தில். நடுவே விஷ்ணு கன்யா தானம் செய்து கொடுக்கிறார்! இச்சிற்பம் வெகுவாக சிதிலம் அடைந்திருக்கிறது. ஆகையால் இதன் அழகு அவ்வளவாக தெரியவில்லை.
4. கார்த்திகேயன்: பொதுவாக முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் வரிசையாக இருப்பது பார்த்திருக்கிறோம். மூன்று முகங்கள் – அதன் மேலே மூன்று முகங்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? இங்கே இருக்கும் சிற்பம் அப்படி இருக்கிறது. முதன் முறையாக ஆறுமுகனின் இப்படியான சிற்பத்தினை இங்கே தான் பார்த்தேன். மயில்வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் அந்த சிற்பத்தினை நீங்களும் பார்க்க உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…….
அந்தகாசுரன் வதம்: விஷ்ணுவின் விராட ரூபம் பல ஓவியங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிவனின் விராட ரூபம் பார்த்ததுண்டா? அந்தகாசுரன் எனும் அசுரனுக்கு பயங்கர பலம். பார்வையற்றவனாக இருந்தும், தனது தவ வலிமையால், ஆகாயம் பூமி ஆகிய இரண்டு இடங்களிலும் வதம் செய்ய முடியாது என்ற வரம் பெற்றிருந்தவன். தனது திரிசூலம் கொண்டு அந்தரத்தில் அந்தகாசுரனின் சிரம் கொய்து வதம் செய்த கோலம். நான்கு சிரங்களும், பதினாறு கைகளும் கொண்ட இந்த சிற்பம் இதோ உங்கள் பார்வைக்கு! எத்தனை வேலைப்பாடு இச்சிற்பத்தில்.
சாமுண்டா தேவி: பத்து கைகளுடன் காட்சி தருகிறார் சாமுண்டா தேவி. ஒரு அசுரனை வதைத்து தனது காலடியில் வைத்து, மற்றொரு அசுரனை தனது குறுவாளினால் வதைக்கும் வடிவில் இருக்கும் இச்சிலையில் கபாலங்களினால் ஆன மாலை! கன்னத்தில் ஒற்றை விரல் வைத்து அழகாய் இருக்கும் சிலை. என்னவொரு கலைநயம்…..
அர்த்தலக்ஷ்மிநாராயணன்: அர்த்தநாரீஸ்வரர் – சிவனும் பார்வதியும் பாதிப்பாதியாக இருக்கும் சிற்பம் நமது கோவில்கள் பலதிலும் பார்த்திருக்க முடியும். அர்த்தலக்ஷ்மி நாராயணன் பார்த்ததுண்டா? கருட வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் இச்சிற்பத்தில் பத்து கைகளுடன் காட்சி தருகிறார். வலப்புறத்தில் விஷ்ணு, இடப்புறத்தில் லக்ஷ்மி. பார்த்துப் பார்த்து ஒவ்வொரு விஷயத்தினையும் சிறப்பாக செய்திருக்கிறார் இந்தச் சிற்பி!
இந்த சிற்பமும் சிவபெருமானின் ரூபமாகத் தான் தெரிகிறது. இது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
சூரியதேவன்: ஏழு குதிரைகள் கொண்ட தேரில் அமர்ந்து இருப்பது போல வடிவமைத்திருக்கிறார்கள்.
இப்படி கோவில் முழுவதும் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து ரசித்த பிறகு இயற்கைச் சூழலில் குழுவினரினையும் சில புகைப்படங்களும் எடுத்து முடித்தேன்! அதன் பிறகு அனைவரும் வெளியே சின்னதாய் ஒரு Shopping செய்ய, நான் அங்கே கண்ட காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். மெதுவாக அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் அனைவரும் காங்க்ரா நகர் நோக்கி பயணத்தினைத் துவங்கினோம். அன்றைக்கு இரவும் காங்க்ரா நகரில் தான் தங்க வேண்டும்……
அப்பயணமும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் அடுத்த பகுதியாக!
தொடர்ந்து பயணிப்போம்….
22
பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்
சென்ற பகுதியில் சொன்னது போல பைஜ்நாத் சிவன் கோவில் பார்த்து விட்டு காங்க்டா திரும்பினோம். எங்களது வருகையை மனிஷுக்கு தெரிவிக்க, அவர் எங்களது தங்குமிடத்திற்கு வந்தார். மூன்று நாள் பயணத்தில் பைஜ்நாத் கோவில் வாசலில் சின்னதாய் ஒரு Purchase மட்டுமே செய்திருந்ததால், காங்க்டாவில் Shopping செய்ய ஒரு வாய்ப்பு வேண்டும் என்பது எங்களுடன் வந்திருந்தவர்களின் ஏகோபித்த குரல்!
காங்க்டா தேவி கோவிலுக்கும் இன்னுமொரு முறை செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. கோவிலுக்கு மீண்டும் ஒரு முறை சென்று நின்று நிதானித்து மாலை நேர ஆரத்தி பார்த்து விட்டு கடைத் தெருவிற்கு வந்தோம். குளிர் பிரதேசம் என்பதால் இங்கே குளிர் கால உடைகள் விற்கும் கடைகள் நிறையவே உண்டு. “ஜவஹர் கோட்” என்று அழைக்கப்படும் கோட் எனக்கு ஒன்று வாங்கிக் கொண்டேன். மற்றவர்களும் சில குளிர் கால உடைகளை வாங்கிக் கொண்டார்கள்.
வாங்கிய பொருட்கள் அனைத்தையும் தங்குமிடத்தில் வைத்து விட்டு இரவு உணவு உண்பதற்காக முந்தைய நாள் சாப்பிட்ட அதே இடத்திற்குச் சென்றோம். கூடவே மனிஷும் வந்திருந்தார். அறுசுவை உணவு சாப்பிடும் போதே மனிஷின் அலைபேசியில் தொடர்ந்து அழைப்பு – வீட்டிலிருந்து! வீட்டில் உறவினர்கள் இவரது வருகைக்காக காத்திருப்பதாகவும் அனைவரும் சேர்ந்து உண்ணவேண்டும் எனவும் சொல்லவே, இவர் தொடர்ந்து சில நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி எங்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்க, அவரை கட்டாயப்படுத்தி காலையில் சந்திக்கலாம் என அனுப்பி வைத்தோம்.
இரவு உணவு திருப்தியாக உண்டு முடித்து தங்குமிடம் வரை காலாற நடந்து வருவது ஒரு அலாதியான அனுபவம். அன்றைய பொழுதில் பார்த்த விஷயங்களைப் பேசியபடியே திரும்பி வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு தில்லி நோக்கி திரும்ப வேண்டும் என்பதால், உடைமைகளை சரி பார்த்து Packing செய்ய வேண்டும். அனைவரும் விரைவாகப் புறப்பட்டால் தான் இரவுக்குள் தில்லி திரும்ப முடியும்.
இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த அனைத்து விஷயங்களையும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஹிமாச்சல் பிரதேசத்தில் பார்க்க வேண்டியவை நிறையவே உண்டு. தேவ் பூமி என்று சொல்லப்படும் இம்மாநிலத்தில் கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், குளிர் பிரதேசங்கள் என நிறையவே உண்டு. நாங்கள் பார்த்த இடங்களுக்கு அருகிலேயே இருக்கும் இன்னும் சில இடங்களைப் பற்றிய சில குறிப்புகளை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாலம்பூர் அருகிலேயே “[Dh]தரம்ஷாலா” எனும் இடம் இருக்கிறது. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த “[Dh]தரம்ஷாலா”வில் இருக்கும் விளையாட்டு அரங்கில் நடக்கும்போது கிரிக்கெட் ப்ரேமிகள் பார்த்திருக்கக் கூடும். மிகவும் அருமையான குளிர் வாசஸ்தலம். திபெத்திய புத்த மத குருவான [Dh]தலாய் லாமா இருக்கும் இடம் இது தான். புத்தர்களின் வழிபாட்டுத் தலங்களும் இங்கே அதிக அளவில் உண்டு. அனைத்துமே அருமையான வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும்.
இயற்கைக் காட்சிகளுக்கும் இங்கே குறைவில்லை. கண்கவர் காட்சிகள் நிறைந்த இவ்விடத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுக்கும் படிச் செல்வது நல்லது. வெறும் சுற்றுலாவாக அல்லாது இப்படி ஓய்வாக இருப்பதில் நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். பயணங்களில் நிறைய இடங்களைப் பார்த்து ரசிப்பது ஒரு வகை ஆனந்தம் எனில், எந்த வித வேலையும் செய்யாது, இயற்கைக் காட்சிகளை பார்த்தபடி அந்த எழிலில் மூழ்கிப் போவது மற்றொரு வகை!
கடல் மட்டத்திலிருந்து 1380 மீட்டர் உயரத்தில் இருக்கும் தரம்ஷாலா நகரிலிருந்து இன்னும் மேலே 1830 மீட்டர் அளவில் சென்றால் Upper Dharmshala என அழைக்கப்படும் பகுதியில் Mcleodganj, Forsytheganj எனும் இடங்கள் உண்டு. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இடங்கள் என்பதால் கலோனியல் வகைக் கட்டிடங்கள் இங்கே நிறையவே உண்டு.
Trekking செய்ய விருப்பமுள்ளவர்களுக்கும் இங்கே சில இடங்கள் உண்டு. Triund எனும் இடத்தில் வருடம் முழுவதும் [பனி அதிகம் விழும் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்கள் தவிர] Trekking செய்ய முடியும். அனைத்து வயதினரும் இங்கே Trekking செய்வதை பார்க்க முடியும். முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை சற்றே சுலபமாகத் தெரிந்தாலும், கடைசி ஒரு கிலோ மீட்டர் தொலைவு கொஞ்சம் கடினமானது தான். நண்பர்களோடு பல வருடங்களுக்கு முன்பு இங்கே முதன் முதலாய் சென்றதுண்டு. கடைசி ஒரு கிலோ மீட்டரில் பல கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. அங்கே நடப்பது ஒரு சவாலான விஷயம் தான்!
இப்படி நிறைய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் ஹிமாச்சல் மாநிலம் முழுவதுமே உண்டு. பொதுவாக ஷிம்லா, குலு, மணாலி போன்ற இடங்கள் தான் நிறைய பேருக்குத் தெரியும் என்றாலும், மணிகரன், டல்ஹவுசி, குஃப்ரி, [Ch]சைல், சோலன், பாலம்பூர், கசௌலி போன்ற நிறைய இடங்களும் இம்மாநிலத்தில் உண்டு. ஒவ்வொரு இடமும் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் தான். எத்தனை தான் பயணித்தாலும் அலுக்காத ஒரே விஷயம் பயணம் தானே!
இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா? முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு! உங்களுக்கு?
தொடர்ந்து பயணிப்போம்….
23
பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்
இப்பயணத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து படித்து வந்த உங்களுக்கும் புதியதாய் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருந்தால் இன்னமும் அதிக மகிழ்ச்சி. இப்பயணத்தின் கடைசி பகுதிக்கு நாம் வந்து விட்டோம்.
அதிக குளிர் என்றாலும் நான்கு மணிக்கே எழுந்து குளித்து தயாராகிவிட்டேன். தங்குமிடத்தில் Geyser மட்டும் இல்லாவிட்டால் சுடு நீர் இல்லாமல் குளிக்க யோசிக்க வேண்டியிருந்திருக்கும்! சில தங்குமிடங்களில் சுடு நீர் வசதிகள் சரியாக இருப்பதில்லை. நாங்கள் தங்கிய இடம் பரவாயில்லை. இவ்வசதிகள் இருந்தன! காலையிலே குளித்து விட்டதால், மற்றவர்கள் தயாராவதற்குள் கொஞ்சம் தொலைவு நடந்து சென்று வந்தேன். இப்படி நடந்து செல்வதால் அதிகாலையில் நல்ல காற்று சுவாசிக்க முடிந்தது!
நடை முடித்து திரும்பவும் தங்குமிடம் வந்தபோது பெரும்பாலானவர்கள் தயாராகி இருந்தார்கள். இப்பயணத்தில் எங்களுக்கு நிறையவே உதவி செய்த நண்பர் மனீஷ்-ஐ அலைபேசியில் அழைத்து நாங்கள் புறப்படத் தயார் என்று சொல்லவே அவரும் இதோ வருகிறேன் எனச் சொல்லி வந்தார். வரும்போது காங்க்ரா தேவி [வஜ்ரேஷ்வரி தேவி] கோவிலுக்குச் சென்று அன்னையின் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து தில்லி வந்தால் கட்டாயம் தெரிவிக்கச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.
வழி நெடுகிலும் பனிமூட்டம் தொடர்ந்து இருக்க, மிதமான வேகத்திலேயே பயணிக்க முடிந்தது. திரும்பி வரும் வழியில் பக்ரா-நங்கல் அணைக்கட்டு பார்க்க நினைத்திருந்தோம். நாங்கள் பயணித்த பாதையிலிருந்து விலகி சில கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியிருக்கும் என்பதாலும், பனி மூட்டத்தில் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியாது என்பதாலும் அத்திட்டத்தினை கைவிட்டு, நாங்கள் சென்ற பாதையிலே இருந்த ஒரு சிறிய அணைக்கட்டினைப் பயணித்தபடியே பார்த்து, சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.
நாங்கள் செல்லும்போது பார்த்த மாதிரியே இப்போதும் வழியெங்கும் சீக்கியர்கள் சில கொட்டகைகளை அமைத்து சாலையில் செல்லும் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருந்தார்கள். தங்களது ஒவ்வொரு குருமார்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று இப்படி அனைவருக்கும் உணவு அளிப்பதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அதுவும் தானம் தானே என்ற எண்ணமில்லாது நல்ல உணவு அளிப்பார்கள். வழி நெடுகிலும் இப்படி பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகள் அனைவருக்கும் நாள் முழுவதும் உணவளிப்பது சுலபமான விஷயமல்ல. அதனையும் களைப்பே இல்லாது மகிழ்வுடன் செய்வது எத்தனை நல்ல விஷயம்.
மக்காச்சோள மாவில் செய்த ரொட்டியும், அதற்கு பக்க துணையாக கடுகுக் கீரையில் செய்த சப்ஜியும், வெண்ணைத் துண்டும் வைத்து ஒரு இடத்தில் கொடுக்க, மற்றொரு இடத்தில் தந்தூரி ரொட்டி, வெண்ணை, இரண்டு சப்ஜிகள் என கொடுத்தார்கள். சில இடங்களில் தேநீரும் ப்ரெட் பகோடாவும் கொடுத்தார்கள். அனைத்தையும் வாங்கிச் சாப்பிட்ட படியே பயணிப்பது நமக்கு நல்லதல்ல! என்றாலும் ஒரு சில இடங்களில் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு தட்டில் வாங்கி, அனைவரும் சிறிது பங்கிட்டு உண்டோம். அவர்களுக்கும் கொடுத்த மகிழ்ச்சி, நமக்கும் சாப்பிட்ட திருப்தி!
தொடர்ந்து பயணித்து வரும் வேளையில் வயலில் வெல்லம் காய்ச்சுவதைப் பார்த்தவுடன் திரும்பி வரும்போது வெல்லம் வாங்கிக் கொள்ள வேண்டும் எனச் சொன்னது நினைவுக்கு வர, அப்படி ஒரு இடத்தில் வாகனத்தினை நிறுத்தினோம். அனைவரும் தேவையான வெல்லத்தினை வாங்கிக் கொள்ள, நானும், ஓட்டுனர் ஜோதியும் அங்கே அடுக்கி வைத்திருந்த கரும்புகளில் இரண்டினை எடுத்து சுவைக்க ஆரம்பித்தோம். இப்படி கரும்பினைச் சுவைத்து எத்தனை வருடங்களாகி விட்டன! நெய்வேலியில் இருந்தவரை பொங்கல் சமயத்தில் கரும்பு நிறையவே சாப்பிட்டிருக்கிறேன். தில்லி சென்ற பிறகு கரும்பு இப்படிச் சாப்பிட வாய்ப்பு இருந்ததில்லை.
பத்து பதினைந்து நாட்களிலேயே பொங்கல் வருவதால், அனைவரும் வெல்லம் வாங்கிக் கொண்டு தயாராக எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். வழியில் இன்னும் ஒரு இடத்தில் ஆரஞ்சு போலவே இருக்கும் ‘கின்னு’ விற்க அதனையும் வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டு தொடர்ந்து பயணித்தோம். நான்கு நாட்கள் பயணம் முடிவடைவதில் அனைவருக்கும் வருத்தம். இப்படித் தொடர்ந்து பயணித்தபடியே, பல இடங்களைப் பார்த்தபடியே, பல்வேறு அனுபவங்களை பெற்றபடியே இருந்தால் நன்றாக இருக்கும் என்றாலும், வேலைக்குச் சென்று தானே ஆகவேண்டும்!
குழுவினர் அனைவரும் இப்பயணித்தினைப் பற்றியும், அனைத்து விஷயங்களையும் சிலாகித்துப் பேசியபடி பயணிக்க, தில்லி வந்து சேர்ந்தோம். ஓட்டுனருக்கும், வாகனத்திற்குமான கட்டணங்களைக் கொடுத்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தோம். டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி புறப்பட்டு 29-ஆம் தேதி திரும்பி வந்தோம். மொத்தம் நான்கு நாட்கள். கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்களை கணக்கில் கொண்டால் பயணத்திற்கான மொத்த செலவு மிகக் குறைவே. ஆளொன்றுக்கு ரூபாய் 4000/- அளவில் தான் ஆனது.
ஹிமாச்சல் மாநிலத்தில் பார்த்த சில இடங்களைப் பற்றி, அங்கே கிடைத்த அனுபவங்களை முதலில் வலைப்பூவிலும், இப்போது மின் புத்தகமாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. படித்த உங்களுக்கும் இந்த இடங்களைப் பார்க்கும் ஆசை வந்தால் அதுவே இந்தப் புத்தக முயற்சிக்கு ஒரு வெற்றி என நான் நினைக்கிறேன். விரைவில் அடுத்த பயணம் பற்றிய மின்நூல் உடன் சந்திக்கிறேன்.
பயணம் செய்வது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம்….
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
நன்றி!
எனது மூன்றாவது மின்னூலைப் படித்து ரசித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. மின்னூலின் வழியாக நீங்களும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சில இடங்களுக்குச் சென்று வந்த அனுபவம் பெற்று இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்தப் பயணத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த தில்லி நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். நன்றி நண்பர்களே!
எடுத்த அனைத்து படங்களோடு இந்த மின்னூலின் கட்டுரைகளைப் பார்க்க விரும்புபவர்கள் எனது வலைப்பூவிலும் படிக்கலாம். “தேவ்பூமி – ஹிமாச்சல் என்ற தலைப்பில் எனது வலைப்பூவில் எல்லாப் பகுதிகளுக்குமான Drop Down Menu உண்டு! இங்கே அதிக படங்களை இணைக்க முடிவதில்லை – படங்களுக்கு மொத்த அளவு 3 MB மட்டுமே!
தொடர்ந்து அடுத்த மின்னூல்கள் வழியாக நட்பில் இணைந்திருப்போம். புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் venkatnagaraj@gmail.com எனு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம்…..
மீண்டும் நன்றியுடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
கருத்துகள்
கருத்துரையிடுக