Thēvaṉ nūṟu
பொது அறிவு
Backதேவன் நூறு
திவாகர்
Contents
தேவன் நூறு
1. தேவன் நூறு - 1
2. தேவன் நூறு - 2
3. தேவன் நூறு - 3
4. தேவன் நூறு - 4
5. தேவன் நூறு - 5
6. தேவன் நூறு - 6
7. தேவன் நூறு - 7
8. தேவன் நூறு - 8
9. தேவன் நூறு - 9
10. தேவன் நூறு - 10
11. தேவன் நூறு - 11
12. தேவன் நூறு - 12
13. தேவன் நூறு - 13
14. தேவன் நூறு - 14 - இறுதிப்பகுதி
திவாகர்
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
1
தேவன் நூறு
தேவன் பிறந்த நூறாண்டுகள் கழிந்த நிலையில் இவரைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது உண்மைதான், அதே சமயத்தில் தேவன் என்கிற தனிப்பட்ட மனிதரைப் பற்றி எழுதுவதை விட அந்த தேவன் என்கிற மாமனிதரை வெளிப்படுத்திய அந்த தேவ எழுத்துக்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல் இன்று நேற்றல்ல எத்தனையோ நாட்கள் என் உள்ளத்தின் அடியில் புதைந்திருந்ததுதான். அந்த புதைந்த எழுத்துகள்தான் அவரைப் பற்றி எழுத எழுத பெரும்புதையலாக வெளிப்பட் இந்த பதினான்கு அத்தியாயங்களிலும் அந்தப் புதையலில் கிடைத்த செல்வத்தை எல்லா வாசகருக்கும் சேர்த்துப் பகிர்ந்துள்ளேன்.
தேவன் எழுத்தாளர் மட்டுமாக அல்லது ஆனந்த விகடன் ஆசிரியராக மட்டுமாக பார்க்கமுடியுமா? எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கியவர், ஆனந்த விகடனை பரிபூரண வாராந்தரியாக வாரந்தோறும் இல்லங்களில் எதிர்பார்க்க வைத்தவர், எழுத்துலக ஜாம்பவான், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், தன் இருபத்திரண்டு ஆண்டுகால இலக்கிய வாழ்வில் எத்தனையோ புதினங்கள், கதைகள், கட்டுரைகள் எனச் ஒவ்வொரு நாளும் ரசிக்கத்தக்க வகையில் எழுதிக்கொண்டே சாதித்தவர், வாழ்க்கையின் அடிமட்ட வாழ்வையும், உயர்கட்ட வாழ்வையும் பற்றி மட்டுமே சொல்லாமல் நடுவில் வந்து தத்தளித்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பற்றிய எதார்த்தத்தையும் எடுத்துக் கூறி எத்தனையோ மனங்களை மகிழ்வித்தவர். தேவனின் பாத்திரங்களைப் பற்றிச் சொன்னாலே இன்றைய தினம் கூட மக்கள் முகம் ஒளிரப் பேசவைக்கும் திறன் கொண்ட அந்த மாமேதையைப் பற்றி என்னவென்று சொல்லிப் புகழ்வது..
தேவன் மட்டும் இத்தனை குவாலிஃபிகேஷனோடு (அவர் பாஷையில்) வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்கா அல்லது பிரிட்டனில் பிறந்திருந்தால் அவர் எப்போதோ நோபல் போன்ற உலகப் புகழ்பெற்ற பரிசுகளையும் விருதுகளையும் அள்ளிக் குவித்திருப்பார் என்றுதான் அவர் எழுத்துக்க்களை ஊன்றிப் படித்தவர்களுக்குத் தோன்றும். இது நிச்சயம் மிகை அல்ல.. அவர் எழுதிய ஒவ்வொரு புத்தகத்தையும் பல காலமாகப் படித்து வருகிறவன் என்கிற முறையிலும், நானும் ஏதோ சில புத்தகங்கள் எழுதிய எழுத்தாளன் என்கிற முறையிலும் எதார்த்தத்தைச் சொல்வதுதான் இது. ஆனாலும் பாரத சனாதனத்தை மனதில் கடைசி வரை ஊன்றி அதை எழுத்திலும் வெளிப்படுத்திய தேவன் தான் இந்த பாரதத்தில் பிறந்ததையே நிச்சயம் விரும்பியிருப்பார் என்றும் அதை அவர் எழுத்துகள் பறை சாற்றும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் அவரைப் பற்றிய. எனது எண்ணங்களையெல்லாம் அவரது எழுத்துகளின் ஊடே அள்ளித் தெளித்திருக்கிறேன். என் எழுத்துக்கு அடித்தளம் எடுத்துக் கொடுத்த எழுத்தல்லவா அவர் எழுத்துகள்…
அவர் பிறந்து நூறாண்டுகள் கழித்துப் பேசும் இந்தக் கட்டுரைகள் தேவன் என்கிற உயரிய ஆன்மாவுக்கு அடியேனால் சமர்ப்பிக்கப்படும் சாதாரண புஷ்பமாலைதான். ஆனால் மணம் வீசும் புஷ்பமாலையாக இதைப் படிக்கும் வாசகர்கள் கருதினால் அவர்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகத்தான் போடுவதாக இருந்தது. ஆனால் உலகமுழுவதுமுள்ள வாசகர்களை சென்றடையவேண்டும் என்ற உந்துதலும் காலம் வேகமாக மாறி வசதிகள் பெருகிய வேளையில் அந்த வசதியை ஒரு நல்ல நன்மைக்காக தத்தெடுக்கவேண்டுமென்று கருதியும் இந்தக் கட்டுரைகள் மின்னூலாக வடிவமெடுத்திருக்கிறது. கட்டுரைப் படித்து நன்றாக இருந்தது என்று நீங்கள் கருதினால் அந்த நல்லுணர்ச்சி முழுவதும் தேவன் எழுத்துக்களுக்கே சமர்ப்பணம் என்றும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
இந்தப் புத்தகத்தை மின்னூலாகக் கொண்டு வரவேண்டுமென்ற என் ஆவலைப் பூர்த்தி செய்த கிரியேடிவ் காமன்ஸ் திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவன் புகழ் ஓங்குக!!
அன்புடன்
திவாகர். (venkdhivakar@gmail.com)
மின்னூல் ஆக்கம் : ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
அட்டைப் பட மூலம் – http://fc02.deviantart.net/fs44/i/2009/141/2/b/Red_White_Mischief_Background_by_Darkgale.jpg
அட்டைப்பட வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த் vasanth1717@gmail.com
உரிமம்: Creative CommonsAttribution-NonCommercial-NoDerivatives 4.0 International
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
1
தேவன் நூறு - 1
தேவன் எனும் மகாதேவன் எனும் அரிய பெரிய எழுத்தாளரைப் பற்றி நம் காலத்துப் பெரியவர்கள் அனைவருமே நன்றாகவே அறிந்திருந்தாலும், இந்தக் கால இளைஞர்களுக்கும் வருங்காலத்துக்கும் நம்மால் இயன்ற அளவு அவர் பெருமை சொல்லலாமே என்றுதான் இக்கட்டுரைத் தொடரைத் தொடங்க முன்வந்துள்ளேன்.
2013. இந்த வருடம் தேவனின் நூற்றாண்டு வருடம்.. ஆம்.. சென்ற 1913 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 8ஆந்தேதிதான் தமிழுலகத்தின் இந்தச செல்லக் குழந்தை திருவிடைமருதூரில் அவதரித்தது. தான் பிறந்த இந்தத் திருவிடைமருதூரை முடிந்த போதெல்லாம் தம் கதைகளில் கொண்டுவந்து விடுவார். பிறந்த ஊரின் மீது அத்தனை பற்று வைத்திருக்கும் தேவனைப் பற்றி எழுதும்போது தேவன் படைப்புகளைக் கொண்டுதான் இக்கட்டுரை அமைய வேண்டுமென்பது என் விருப்பமாதலால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் குடும்பம் போன்றவைகளைப் பற்றியோ, அவர் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதைப் பற்றியோ இங்கு எழுதப்போவதில்லை என்பதை முன்னமேயே சொல்லி விடுகிறேன்.
தேவனைப் பற்றி எழுத எனக்குக் காரணம் இருக்கிறது. நான் பிறந்தவுடன் அவர் மறைந்தார் என்ற ஒரு காரணத்தை நகைச்சுவைக்காகச் சொன்னாலும், என் எழுத்துக்கு ஆத்திச்சூடி அவர் படைப்புகளிடமிருந்துதான் பெற்றேன் என்பதை மட்டும் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதை எப்படி எழுதப்படவேண்டுமென்பதோடு வாசகன் பார்வையில் அது எப்படிப் படவேண்டுமென்பதிலும் தேவன் மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். 1930 களின் ஆரம்பத்திலிருந்து 1957 வரை (ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள்) எழுதிக்கொண்டே இருந்த அந்த கை அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அந்த இடைக்கால மாற்றங்களையும் தனக்குத் தோதாக எடுத்துக் கொண்ட விதமும், அவைகளை தம் எழுத்தில் பிரதிபலித்த விதமும் மிகவும் பாராட்டத் தக்கது என்றே சொல்லவேண்டும். இந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரப்பட்டது. இந்த காலகட்டத்தின் மத்தியில்தான் உலகத்தின் மிகக் கொடிய அழிவுக்குக் காரணமான மோசமான உலகப்போர் நிகழ்த்தப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்தியா சுதந்திரமும் அடைந்து தன் மக்களின் பிரதிநிதிகளினால் தன் சுய ஆட்சியையும் ஆளப்பெறத் தொடங்கியதும்கூட.. இந்த காலகட்டத்தில்தான் அரசியலில் அவ்வளவாக மாசு படியாத சூழ்நிலை இருந்தாலும் சமூகம் மிகவும் மாசுபடிந்து முன்னேறமுடியாத நிலையில் அல்லலுற்று ஏழ்மை நிலையில் நோய்கள் மலிந்து கிடந்து, தேசத்தின் நாலா பகுதிகளும் ஒரு சோம்பலுற்ற நிலையில்தான் இருந்தது என்பதையும் மறக்கக் கூடாதுதான். பாரத மொழிகள் கூட முன்னேறமுடியாத, செழுமை அடைய முடியாத நிலையில் இருந்த காலகட்டம்கூட இதுதான். அதுவும் நம் மனதுக்கினிய தேனினும் இனிய தமிழ் மொழியைக் கட்டிக்காத்து வளர்த்து வந்தவர்கள் ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும், நன்னெஞ்சம் கொண்ட ஒரு சில செல்வந்தர்களே என்பதும் நாம் மறக்கக் கூடாது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யரும், மகாகவி பாரதியும் வீறு கொண்டு எழுந்து தமிழால் நாம் பெருமை பெறுகிறோம் என்று பல்வேறு காரணங்களை எடுத்துச் சொன்னதால் ஏனைய மொழிகளை விட தமிழ் இந்த அகண்ட பாரத தேசத்திலே பெருமையோடு இருந்தது என்று வேண்டுமானால் ஓரளவு சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.. ஏனெனில் படித்த பெருமக்களிடையே ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலம். ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில நாவல்கள், ஆங்கிலக் கவிதைகள், ஆங்கில நாடகங்கள் (ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவன் மட்டுமே அதிபுத்திசாலி) ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாமே தமிழோடும் மற்ற மொழிகளோடும் ஒப்பு நோக்குகையில் தரத்தில் எங்கோ உச்சாணிக்கொம்பில் இருந்ததாகப் பட்டதால் படித்தவர்கள், படிக்கவிரும்பும் மாணவர்கள் எல்லோருமே தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும் நாம் ஒப்பு நோக்கவேண்டும். தமிழுக்கு என்றல்ல எந்த மொழியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.
சரி, இந்த சரித்திரம் இப்போது எதற்கு எனக் கேட்டால், தேவன் கதைகளையும் கட்டுரைகளையும் வரிசைக் கிரமமாகப் படித்துக் கொண்டே வந்தால் இத்தனை சரித்திரங்களையும் ஆங்காங்கே நமக்கு அவரின் படைப்புகள் மூலம் விளக்கி வந்திருப்பதைக் காணலாம். ஆரம்பகால படைப்புகளில் அரசியல் நிகழ்வுகள் அதிகம் கலந்திருந்தாலும் போகப் போக சமூக நல்லமைப்பிலே நாட்டம் கொண்டு அந்த சமூகத்துக்குத் தம் எழுத்துகள் மூலம் நல்லவை செய்யவேண்டுமென்கிற தூய எண்ணத்தை அவரது தொடர்கதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் தெள்ளிய குளத்து நீரில் தெரியும் தரைமண் போல தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கும். இப்படி நிகழ்கால சரித்திர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கதை மூலமாகவோ கட்டுரை மூலமாகவோ எப்படியாவது பாங்காக நுழைத்துத் தெரிவிப்பது என்பது தேவனுக்கு கை வந்த கலை. ஆங்கில மோகத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் புதினங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர்களை, படித்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் பக்கம் தள்ளிக்கொண்டு வந்த பெருமை தேவனுக்கும் தேவனின் எழுத்துக்கும் நிச்சயமாக உண்டு.
தேவன் ஆனந்த விகடனுக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தது கல்கியால்தான் என்றாலும் ‘மாஸ்டர் ராஜாமணி’ தான் கல்கிக்கு தேவனை அறிமுகப்படுத்திய ’உயர்ந்த’ மனிதன். இந்த மாஸ்டர் ராஜாமணி சின்னப் பையன், வால் பையன், தேவனின் கட்டுரையின் ஒரு பாத்திரம்.. ஆனால் இந்த வால் பையனின் லூட்டியும், திறமையும்தான் கல்கியைக் கட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல், அப்போது ஒரு நாள் எதேச்சையாகவும் சாதாரணமாகவும் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் ‘இந்த கல்கி என்பவர் எப்படி இருப்பாரோ என்று (வேவு) பார்க்க வந்த தேவனை இசகு பிசகாக ஒரு கேள்வி கேட்க வைத்தது.. ’அது சரி, இந்தக் கட்டுரையை நீதான் எழுதினாயோ’ என கல்கி கேட்க இவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர, கல்கி தனக்கே உரிய பாணியில் சமாதானப்படுத்தி தேவனை விகடனிலேயே உதவி ஆசிரியராக நியமிக்க, அந்த 1930 ஆம் வருடங்கள் ஆனந்த விகடனுக்கே வசந்த காலமாகவும் பொற்காலமாகவும் ஆரம்பித்தன என்றே சொல்லலாம். கல்கியின் உயர்ந்த குணங்களில் ஒன்று எங்கே நல்லது தெரிந்தாலும் மனமாறப் பாராட்டுவதும், தன் சக எழுத்தாளர்களையும் கை தூக்கி விடுவதும். அந்த உயர்ந்த குணம் கொண்ட கல்கியின் வலது கரமாகவே ஆகிப்போனவர்தான் தேவன் (கல்கி ஆனந்தவிகடனில் இருக்கும் வரை).
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.
“ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். (நன்றி: திரு பசுபதி – தேவன் நினைவுகள்-2 (http://s-pasupathy.blogspot.ca/2010/08/2_30.html)
சரி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், தேவனின் வாழ்க்கை வரலாற்றுக்கு நான் போகப்போவதில்லை.. ஆனாலும் இதோ நம் தேவன் ஆனந்த விகடனில் எழுத்துப் பணியைத் தொடங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற இராமபிரானைப் போல அந்த ஒரே ஆனந்தவிகடனில் தான் சாகும் வரை இருந்து கொண்டு அவர் படைத்த படைப்புகளின் மூலமே அவரைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?
2
தேவன் நூறு - 2
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் அருகில் உள்ள முருகன் லெண்டிங் லைப்ரரியை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஆதியில் மிகச் சிறந்த தோழர்களை (புத்தகங்களைத்தான் சொல்கிறேன்) அறிமுகப்படுத்திய இடம் அதுதான். இர்விங் வாலஸ் இலிருந்து இதிகாசப் புத்தகங்கள் வரை வெறியாகப் படித்த நாட்கள் அவை. பள்ளி நாட்களிலிருந்து கிடைத்த அந்தக் கடைக்காரரின் நெருங்கிய சிநேகம் கைகொடுத்தது. அங்கேதான் நான் தேவன் கதைகள் மீது காதல் கொண்டேன். என் காதலுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல் தேவனின் பரம ரசிகரான அந்தக் கடைக்கார நண்பரும் அதிக நேரம் என்னோடு அவர் புதினங்கள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் பேசுவதிலேயே செலவிடுவார். இதனால் மேலும் இரண்டு சௌகரியங்கள் எனக்கு ஏற்பட்டன. அப்போதெல்லாம் ‘பைண்ட்’ செய்யப்பட்ட ஒரிஜினல் தேவன் தொடர்கதைப் புத்தகங்கள் எல்லாமே என் பார்வையில் தினம் பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டுக்கும் ‘இலவசமாகவே’ எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல அனுமதியும் உண்டு. (மற்றவர்களுக்கு எக்ஸ்ட்ரா லெண்டிங் ஸ்ட்ரிக்ட் ’நோ’ அத்துடன் ஃபைன் வேறு கட்டவேண்டும், அத்தோடு டி.வி.க்கள் இல்லாத காலம் என்பதையும் புத்தகங்கள் அதிகம் படிக்கமுடிந்த காலம் என்பதையும் கணக்கில் கொள்க)).
தேவன் கதைகளில் மிகப் பெரிய விசேஷம் என்பதே எந்த விஷயத்தையும் மிக எளிதாக விளங்கும்படியாகவும் நகைச்சுவையாகவும் வாசகர் முன் எடுத்து வைப்பதுதான். எளிய நகைச்சுவை என்பது அவர் எழுத்தின் மூலாதாரமோ என்று வியக்க வைக்கும். அட்டகாசமாக ஆஹா ஓஹோ என்று சிரித்து விட்டு அடுத்தகணமே மறக்கடிக்கவைக்கும் நகைச்சுவைகள் அவர் எழுத்தில் கிடையாது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண விஷயங்களே நகைச்சுவையாக எடுத்தாளப்படும்போது அதன் முக்கியத்துவம் தெரியும் வகையில் எழுதுவார். எதையும், எவரையும் ஆழ்ந்து நோக்கும் பார்வை அவருடையதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அந்தப் பார்வையில் பட்டவை எல்லாம் சர்வ சாதாரணமாக எழுத்தில் பிரதிபலிக்கும். சாதாரண மனிதர்கள் பார்வையில்தான் சாதாரண மனிதர்களின் கவனம்தான் அவருக்கு முக்கியம். அதிலும் அந்தக் காலத்து மத்தியதரவர்க்கத்தாரின் நாடியைப் பிடித்துப் பார்த்து எழுதும் கலையைக் கற்றவர். அவர் எழுதும் தமிழ் சாதாரணமாக பேசும் தமிழ் போல இருந்தாலும் நல்ல தமிழைத்தான் பயன்படுத்துவார். பின்னாட்களில் அளவுக்கு அதிகமாக தமிழ்ச் சொற்களில் ஆங்கில எழுத்துகளைக் கலந்து கொடுத்தவர் சுஜாதா அவர்கள் என்ற பெயர் உண்டு என்றாலும் அதன் மூலகர்த்தா தேவன் அவர்கள்தான். ஆங்கிலம் மட்டுமல்ல வடமொழியும் சர்வ சாதாரணமாக எழுத்தில் காணப்படும். ஆனாலும் யாருக்குமே, ஏன், ஒரு தனித்தமிழ் ஆர்வலருக்குமே கூட இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு வராத அளவில் அந்தக் கலவை இருக்கும். அதே போல கம்பன் கவிதைகளில் உவமைகள் ஏராளமாக இருக்கும். தேவன் எழுத்துக்களில் கூட உவமைகள் ஏராளமாக உண்டு. இவர் போல கதை கட்டுரைகளில் உவமைகள் இப்படி அள்ளித்தெளித்தவர் யாரேனும் உண்டா என்று தேட வேண்டும் கூட.
உவமைகள் எதற்காக எழுதப்படுகின்றது என்றால் சொல்லப்படும் கருத்தின் வீரியத்தை மிக அதிக அளவில் வலுப்படுத்தும் என்பதற்காகவே உவமைகள் உருவாயின. பெண்ணின் முகத்தை பூரண நிலவொளிக்கு உவமையாக்குகிறோம். அவள் கண்களை ஒளிரும் நட்சத்திரங்களுக்கு ஒப்பு நோக்கிப் பேசுகிறோம். அவள் நாசியை கூர்மையான வெள்ளைப்பறவைக்கு ஈடு காட்டுகிறோம். பட்டு’ போன்ற கன்னங்கள் எனும் போதே அதன் மென்மையைக் காட்டி விடுகிறோம். அவள் சிரிக்கும்போது தெரியும் பற்களைக் கூட விடுவதில்லை. முத்து வரிசை, முல்லைச் சரங்கள், வெள்ளி மணி என்கிறோம். இப்படி உவமைகள் சொல்லப்படும்போதெல்லாம் இந்தக் கருத்துகள் பலம் பெறுகின்றன. பலம் பெறும்போது எளிதில் வாசகர்கள் மூளையில் போய் தங்கிவிடுகின்றது. ஆனால் பொருத்தமான உவமைகள் தேட எல்லா எழுத்தாளர்களுமே கஷ்டப்படுவர். தேவன் அப்படிக் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை. சர்வ சாதாரணமாக அவர் எழுத்தில் ஒவ்வொரு முறையும் வந்து விழும் உவமைகளை மட்டும் எழுதத் தொடங்கினால் ஒரு பெரிய ‘பைண்ட்’ புத்தகமே கூட போட்டுவிடலாம்.
இப்படி உவமைகள் நிறைந்த கதை என்று சொல்லத் தொடங்கினால் தேவனின் ‘மிஸ் ஜானகி’ ஒன்றே போதும். எத்தனை எத்தனை உவமைகள் என்ற சான்றுக்குப் போகுமுன், மிஸ் ஜானகி கதையைப் பற்றிய ஒரு சுருக்கம் ஒன்றினைத் தெரிவித்து விடுகிறேன்.. ஏனெனில் இந்த உவமைகள் பற்றி எழுதும்போது அதன் சுவை கூடுமல்லவா.
மதுரை வக்கீல் பட்டாபி ராமய்யரின் இரண்டாவது மகளான மிஸ் ஜானகி சென்னையில் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது தன்னுடைய மூத்த மாணவனான கதாநாயகன் நடராஜனின் சிநேகிதம் கல்லூரியின் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைக்க அது காதலாக மலர்கிறது. காதலென்றால் அதுவும் அந்தக் காலக் காதல் எல்லாம் திரை மறைவில்தான், யாருமறியாமல்தான் நடக்கமுடியும். இப்படி இருக்கையில் ஆண்டுமுடிவில் வரும் விடுமுறையில் திருச்செந்தூர் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டுமென, மதுரையிலிருந்து இதற்காக இவள் அக்கா சென்னைக்கு வந்து மெனக்கெட்டு அழைத்துப்போக, சென்னையிலிருந்து ஜானகி ரயிலில் தன் அக்கையோடு பயணமாக, நம் கதாநாயகனும் தன் காதலியின் கண்பார்வையில் இருக்கவேண்டுமென விரும்பி அவளைத் தொடர்கிறான். அக்கையும் தங்கையும் மதுரை இறங்கி இல்லம் சென்ற பிறகு அடுத்த நாள் வண்டியில் திருச்செந்தூர் செல்வதாக ஏற்பாடு.
இந்தக் கதையில் வில்லங்கம் செய்பவர்கள் உண்டு. செய்பவர்கள் மூவர். ஒருவர் ஜானகியின் சொந்த அக்கா மங்களம், இன்னொருவர் திருச்செந்தூரின் ரிடையர்டு தாசிலதாரும் திமிராகப் பேசிப் பழகும் நாகநாதைய்யர். மூன்றாவது நடராஜனின் கல்லூரியில் படிக்கும் சக மாணவனாகக் குப்பை கொட்டும் ’அல்ட்டல்’ சந்துரு. இவன் நாகநாதைய்யரின் உறவு என்பதோடு வக்கிரபுத்தி படைத்தவன் கூட. இவனுக்கு ஜானகியை எப்படியும் ’செட்டில்’ செய்து விட வேண்டும் என்ற முனைப்போடுதான் நாகநாதய்யரே ஜானகி குடும்பத்தாரை, அவர்கள் தெரிந்தவர்கள் என்ற முறையில், வற்புறுத்தி திருச்செந்தூர் அழைத்து வருகிறார். இந்த மங்களமோ ஊர் உலகத்தை அடக்குவதோடு, கணவனையும் அடக்கி தன் முந்தானை முடிச்சில் வைத்திருப்பவள்தான் என்றாலும் நாகநாதய்யர் எப்படியோ மங்களத்தைப் புரிந்து கொண்டு அவளைத் தன் வழியில் வரவழைக்கவும் முயற்சி செய்கிறார். வில்லங்கம் என வரும்போது நல்லவைகள் செய்பவரும் வேண்டுமே.. அப்படிப்பட்ட நல்லவர்களில் முதன்மையாக திருச்செந்தூர் கடற்கரையில் தன் காகிதங்களைக் காற்றில் பறக்கவிட்டு மண்ணில் பரபரவென தேடும் ‘தலைதடவி’ சுந்தரமும் (பாவம் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, அந்த வேடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதைப் போல நம் கதாநாயகன் மட்டுமே உதவி புரிகிறான்), கல்லூரி அறை நண்பன் குடுமி மணியும் விசேஷமாக உண்டு. கூடவே சிறு சிறு உதவிகள் ஜானகியின் பயந்த சுபாவ அத்திம்பேர் ஜகதீசன் மூலமும், திருச்செந்தூர் அண்டை வீட்டுக் காரர்களாகக் குடியேறும் முன்னாள் நடிகை ஜகமும், நாட்டியமணி பங்காருவும் செய்து கொடுத்தாலும் இவர்களால் கிடைத்த உதவிகளை விட உபத்திரவமே நடராஜனுக்கு மிஞ்சுகிறது. கூடவே உபத்திரவமும் உதவியும் கொடுக்க திடீரென அவனைத் தேடி வந்த நடராஜனின் தந்தை டெல்லி ஹரனும் அதே போல கதாநாயகி ஜானகியின் தாய் தந்தையரும் அங்கு பின்னர் (திருச்செந்தூரில்) சேர்ந்து கொள்கிறார்கள ஜானகியின் அப்பா தினம் வாயால் ஆயிரம் முறை அஸ்வமேதம் செய்துவிடுவதாக பேசுவாரென்றால், அவள் அம்மாவோ தினத்துக்கு ஒரு வியாதியைச் சொல்லிக்கொண்டு, அந்த வியாதியின் பெயரால் அன்றைக்கு என்ன கிழமை என பிறர் கண்டுகொள்ளும் அளவுக்குப் பழகும் பெண்மணி. (இதே போல ஒரு பாத்திரத்தைப் பின்னாளில் ‘அனபே வா’ எனும் படத்தில் சரோஜாதேவியின் அம்மாவாக வரும் நடிகைக்குக் கொடுத்துக் காப்பியடித்தார்கள் என்பது வேறு விஷயம்)
இப்படிப்பட்ட சமயத்தில்தான் நடராஜன் தன் காதலி ஜானகியுடனும், இன்னமும் காதல் விஷயம் தெரியாத அவள் அக்கா மங்களத்துடனும் எதேச்சையாக சேர்ந்து கொண்ட முன்னாள் நடிகை ஜகத்துடனும், சென்னையிலிருந்து இவர்களோடு புகைவண்டியில் பயணம் செய்யும்போது, அடுத்த நாள் காலை வேளையில் திண்டுக்கல் ஸ்டேஷனில் கிடைக்கும் சுவையான சூடான இரண்டு இட்லிக்காக கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளுடன் போராடி வெற்றிகரமாக தனக்கொரு பொட்டலமும், ஜானகிக்கொரு பொட்டலமும் வாங்கி வெளியே வருவதற்குள் வண்டி இந்த அப்பாவிக் காதலனுக்குக் காத்திராமல் கிளம்பி விட, நடராஜனோ வண்டியைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் வண்டியில் செல்லும் தன் அழகான காதலியையும் அவள் பார்வையில் பட வைத்திருக்கும் தன் பெட்டியையும் பறிகொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான்.
அந்தப் பெட்டியில் சில விசேஷங்கள் உண்டு. ஜானகி தன் கைப்பட எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரமாக (காதலன் என்பான் அவ்வப்போது அதைப் படிக்கவேண்டும் அல்லவா) வைத்துள்ளான். (அந்தக் கால கட்டத்தில் காதல் கடிதம் எழுதுவது எல்லாம் மிகப் பெரிய கிரிமினல் குற்றமாக்கும் என்பதையும் நினைவில் கொள்க) இருந்தாலும் ஜானகியின் பார்வையில்தான் அந்தப்பெட்டி இருக்கிறது என்ற ஆறுதலும் என்னதான் மதுரையில் ஜானகி இறங்கினாலும் அடுத்த நாள் திருச்செந்தூரில் பார்த்து ரகசியமாக பெட்டியை வாங்கிவிடலாம் என்றும் தன்னை சமாதானம் செய்து கொண்ட நடராஜன் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறான். ஜானகி சென்ற ரயில் மதுரையை அடைந்ததும், எப்படி இந்தப் பெட்டியை தன் பெட்டிகளுடன் சேர்ப்பது என்று கவலைப்பட்ட ஜானகிக்கு, அதே வண்டியில் திருச்செந்தூர் பயணப்பட மதுரையில் ஏற வந்த நாகநாதய்யர் வந்ததால் அவளுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்தது. ‘மாமா.. இந்தப் பெட்டி என் சிநேகிதியின் பெட்டி, ஜாக்கிரதையாக எடுத்துச் செல்லுங்கள், நாளை திருச்செந்தூரில் வாங்கிக் கொள்கிறேன்” என ஒப்படைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்தைத் திருப்திகரமாக முடித்தோம் என்ற சந்தோஷத்துடன் அந்த நிம்மதி முகத்தில் தெரிய தன் இல்லத்துக்குச் செல்கிறாள்.
பாவம் அவள். ’கண்ணிய நடத்தையுடன் நாகநாதய்யர் எடுத்துச் செல்வார்.. அந்தப் பெட்டி அடுத்த நாள் வந்து சேரும், நடராஜனை எப்படியாவது பார்த்துத் திருப்பி விடலாம்’ என்று நம்பிய ஜானகிக்கு இந்த நாகநாதய்யர் ரயிலில் பொழுதைக் கழிக்க வசதியாக இவளின் காதல் கடிதங்கள்தான் கிடைத்தன என்பதையும் அதைப் படித்துவிட்டு அந்த மாமா வயற்றெரிச்சலுடன் வாயும் எரிய அனைவரையும் திட்டிக் கொண்டே பயணம் செய்கிறார் என்கிற அரிய விஷயத்தை நிச்சயம் அறிந்திருக்க மாட்டாள் இல்லையா? அதிலும் தனக்கு எப்படியாவது அந்த பாழாய்ப்போன ராஸ்கல் சந்துருவை மணமுடிக்க ஆவலாய் இருக்கும் ஒருவர் கையில் இந்தக் கடிதங்கள் கிடைத்து பின்னாட்களில் என்னென்ன தொந்தரவுகள் வருமோ என்றெல்லாம் அவள் அந்தச் சமயத்தில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
இனி திருச்செந்தூரில் பிரத்யட்ச தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் பெருமைகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டே நம் கதையும் விறு விறுப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.
கதை நகரட்டும்.. இனி ஓரளவுக்கு இந்தக் கதையின் தளமும், நடையும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இனி தேவன் இந்தக் கதையில் புகுத்திய இந்த உவமைப் பொருத்தங்களைப் பார்க்கலாம்.
3
தேவன் நூறு - 3
கதாநாயகன் முதன்முதலில் நூலகத்தில் கதாநாயகியைப் பார்க்கிறான் என்று சொன்னேன் இல்லையா.. இந்த லைப்ரேரியன் (நூலகர் என்றெல்லாம் தேவன் எழுதமாட்டார்) பற்றி முதல் பக்கத்திலேயே விமர்சிப்பார் பாருங்களேன்.. இவரைப் போல நிறைய ஆசாமிகளை நாம் வாழ்க்கையில் சந்தித்து வருகிறோம் என்றே நமக்குத் தோன்றும்.
“ கலாசாலை லைப்ரரியின் ஜன்னலைத் திறந்த லைப்ரேரியன் கோவிந்தராவின் பசிக்களை மிகுந்த முகத்தில் அனல்காற்று வீசியது. அதன் சிடுசிடுப்பு இன்னும் சற்று முதிர்ந்தது. எதிரே மலைப்பாம்பு போல் வளைந்து கிடந்த ரஸ்தாவில், ஜலம் அசைவது போன்ற பொய்த்தோற்றந்தான் தென்பட்டது.” ஒன்றரை மணிமுதல் இரண்டேகால் மணிவரை லைப்ரேரியன் சிற்றுண்டி வேளை.”
மேலும் அவரைப் பற்றி நமக்கு சுவை கூடச் சொல்கிறார். இந்தப் பசிவேளையில் லைப்ரரியில்
”எதைக் கேட்டாலும் இல்லைதான் அப்போது, யார் கேட்டாலும் கிடையாதுதான்.. பீரங்கி வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப் போகும்”
இப்படித்தான் கதையை ஆரம்பிக்கிறார் தேவன். இப்போதே இந்த லைப்ரேரியன் பற்றி சற்று தெரிந்திருக்கும்.. இப்படிப்பட்ட மகோன்னத வேளையில் நம் கதாநாயகி வரவு அங்கே நிகழ்கிறது.
”ஸார் ப்ளீஸ்! “ என்றது இனிமை ததும்பிய குரல். அவள்தான் பேசினாள்.
இருண்ட வானத்தில் பளிச்சிட்ட கொடி மின்னல் போல ஒரு புன்சிரிப்பை வருவித்துக் கொண்டு “என்ன?” என்றார் ராவ்ஜி. இந்த மகதாச்சரியத்தைக் காணும் பதம் பெற்ற ஆத்மா வேறொன்றும் இருந்தது.”
அந்த மாபெரும் ஆச்சரியத்தைக் கண்டவன் நம் கதாநாயகனே.. அதே போல நடராஜன் மணியை தேவன் வர்ணிக்கும்போது
குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும்,காதை அறுத்தாலும் அறுக்கும்’ என்கிறபடி மணி உதவி செய்கிறேன் என்றால் தாஸானுதாஸனாக இருப்பான். ஆளைக் கவிழ்ப்பதென்று சங்கல்பம் செய்துகொண்டால் மண்ணைப் போட்டு மூடிவிட்டுத்தான் உட்காருவான்.
அதே போல நடராஜன் ஜானகியோடு ரயில் பிரயாணம் செய்யும்போதும் தேவன் நமக்கு எப்படித் தெரிவிக்கிறார் பாருங்கள்.
(ரயில் பெட்டியில் நடராஜன்) ”உள்ளே நுழைந்ததும் ஆண் சிங்கம் பிடரியைச் சிலிர்த்துத் தலையைத் தூக்கிப் பார்ப்பது போல இருபக்கமும் பார்த்தான். பிறகு ஜானகி இருக்கும் திக்கை நோக்கி நடந்தான். ‘திக்திக்’ என்று அடித்துக் கொண்டது ஜானகியின் நெஞ்சம். மங்களம் அவனை வேல் விழிகள் கொண்டு கண்ணகி தேவியானவள் பாண்டியனை விழித்தது போல குரோதமாகப் பார்த்தாள்.”
இப்படி உவமையாகச் சொல்லிக் கொண்டு வருவதில் ஒரு சௌகரியம் வாசகர்களுக்குக் கிட்டி விடுகிறது. இந்தப் பாத்திரம் இப்படிப்பட்டது என்பதையும் வாசகர் மனம் உடனடியாக ஏற்றுக்கொண்டு விடுகிறது. வாசகர்களும் எங்கெல்லாம் அந்தப் பாத்திரம் வருகிறதோ அதற்கேற்றாற்போல தங்கள் மனநிலையை வைத்துக் கொண்டு படிக்கிற சௌகரியமும் ஏற்படுகிறது.
இன்னும் சில ‘தேவ’ உவமைகளை மட்டும் தருகிறேன்.
*****
கஷ்டப்படும் ஆத்மா கஷ்டப்பட்டே தீரவேண்டும் என்ற நியதியின்படி மங்களம் இல்லாதபோதும் கூட விச்ராந்தியாயிருக்க முடியாமல் இவர் பிடியில் திணறினான். (ஜகதீசன்)
******
வந்து சேர்ந்த நடராஜனுடைய ஆனந்தமும் திருப்தியும் முன்பு ராஜசூய யாகத்தை முடித்த யுதிர்ஷ்ட்ரனுக்கும் அச்வமேத யாதத்தை நடத்திய ராகவனுக்கும் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே
******
பொட்டை வெளியில் எரிக்கும் வெய்யிலில் நான்கு சொட்டு மழைத்துளிகள் போல் வந்த அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தான் (நடராஜன்).
******
துஷ்டனைக் கண்டால் தூர விலகுகிறதும், அது பயப்படுகிறது என்று துஷ்டன் எண்ணிக்கொண்டு கொக்கரிக்கிறதும் வழக்கமாக நடப்பதுதானே காலேஜில் நடராஜன் ஒரு காலத்திலும் சந்துருவை நெருங்கினவன் இல்லை.
******
பல்வரிசை காட்டிக் கைகொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது எழும்புவதும் குனிவதுமாக இருந்தன (திருச்செந்தூர்).
******
பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிருஹம்
இரவில் துஷ்ட மிருகத்தின் குகை போல காணப்பட்டது.(சந்துருவின் வீடு)
******
சூரியன் மாயவரம் வள்ளலார் கோயில் வீதியில் தினம் தினம் உதயமாகும்போது முதல்முதலாகப் பட்டுபுடவையை மடிசார் வைத்துக் கட்டிக்கொண்டு முன் வாசலில் அழகாக மாக்கோலம் போடும் ஒரு பெண்மணியைத்தான் பார்ப்பது வழக்கம். பார்த்தவுடன் உள்ளம் பூரித்துத் தன் கதிர்களைத் தெருவெல்லாம் வாரி இறைப்பான். அந்தப் பெண்ணும் அவனைப் பார்த்துப் பல்வரிசையைக் காட்டிவிட்டு, தன் வேலையில் முனைவாள் (இது மணியின் மனைவியைப் பற்றி உவமையோடு ஒரு அறிமுகம்)
*********
பெரிய சோம்பேறி; நாட்டுப்புறத்துப் பெருச்சாளி’ என்கிற நினைப்புடன் ஹரன் அவரைப் பார்த்தார். அவர் ஹரனை, ‘ஒன்றுக்கும் உதவாத உதியமரம், டெல்லியில் வளர்ந்ததனால் விறைக்கிறது’ என்ற பாவத்தில் பார்த்தார். (மணியின் தந்தை வீட்டில் நடராஜனின் தந்தை)
*******
தன் தலைக்கு மேல் முழங்கும் பேரிடிகளைப் பற்றிக் கலங்கியவாறு வரும்போது இடிகளுக்கிடையே தோன்றிய பாதை மீது ஒளி வீசி வழி காட்டும் மின்வெட்டுகளைப் போன்றதொரு சந்தர்ப்பமும் அவனுக்கு ஏற்பட்டது.
*******
சிவாக்ஞையின் பேரிலே ஆவிர்ப்பவித்த அக்கினி வீரபத்திரமூர்த்தியும், துஷ்டநிக்கிரகத்துக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட நரஸிம்ம ஸ்வாமியும் அப்போது அவருக்கு நிகராக முடியாது (ஹரனின் கோபம் பற்றி நடராஜன் நினைப்பது).
*******
சுக்குக் கஷாயத்தில் விடப்பட்ட விளக்கெண்ணையை விடியற்கால வேளையில் சிறுவர்கள் நோக்கும் அருவருப்புடன் ஜகம் கிழவரைப் பார்த்தாள்.
இந்த சுக்குக் கஷாய அனுபவம் சிறிய வயதில் எனக்கும் கூட ஏற்பட்டது உண்டு. ஊரிலே தாத்தாவின் இந்த சுகாதார ஏற்பாடு இப்போது நினைத்தாலும் ‘வயிற்றைக் கலக்கும்”.
’மிஸ் ஜானகியின்’ கதை எல்லோருக்கும் பிடிக்கும் கதை. மிகப் பெரிய திருப்பங்களோ, சோகமயமோ, அந்தக் கால படங்களில் வருவது போல வண்டி வண்டியாக வசனங்களோ இல்லாத கதை. இத்தனைக்கும் இது எட்டு/பத்து நாட்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்து விவரிக்கப் பட்டிருக்கும் கதைதான் என்பதால் விறுவிறுப்பாக போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இந்த எட்டு நாட்கள் கதையிலும் ஒரு சில பாத்திரங்களுக்கு ஆயுள் பூராவுமாக நடக்கிற சங்கதிகளை மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுவது என்பது தேவனுக்கு கை வந்த கலை. அதுவும் திருச்செந்தூரிலேயே கதை முக்கால்வாசி நடப்பதால், அங்கே அருளாட்சி புரியும் எந்தை முருகனைப் பற்றிய வர்ணனைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அள்ளி வழங்குவதில் தேவனுக்கு இணை தேவனேதான்.
தேவன் இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ என்று சொல்லப்படும் உத்திகளை மிக நயமாக இந்தக் கதையில் கையாண்டுள்ளார். சினிமாவில் இப்படி காண்பிப்பது மிகச் சுலபம். எழுத்தில் எப்படி காண்பிப்பது. தேவனின் கதைகளைப் படித்தால் அதன் லாவகம் தெரிந்து விடும்.
இந்த மிஸ் ஜானகியில் ஒரு நாயும் வரும். டைகர் என்ற பெயருடன் திருச்செந்தூர் கீழப்புதுத்தெருவில் ‘அநியாயமாக’ யாரையும் நுழையவிடாமல் அழிச்சாட்டியம் பண்ணும். நாயை மிக விசேஷமாக வர்ணனை செய்வார் தேவன். நாட்டிய மணி தெலுங்கு பங்காருவின் வீட்டில் பாதுகாப்புக்காக அவர் தந்தையால் வளர்க்கப்படும் டைகரின் பாவனைகளுக்கும் அதன் ‘உர்..உர்.. பாஷைகளுக்கு தேவன் விளக்கம் சொல்லும் அழகே அழகே.. (டைகர் என்ற பெயரை வைத்துக்கொண்டு பூனை போல இருக்கும் சுபாவம் அதனுடையதல்ல, கூடவே அன்று சிறிது விச்ராந்தியாக அவிழ்த்துவிடப்பட்டிருந்ததால் கீழப்புதுத்தெருவின் ஒரு கோடிமுதல் மற்றொரு கோடி வரை வாக்கிங் செய்துவிட்டு ஒரு முனையில் நின்று இந்த உலகத்தில் நாய் இனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது)
இப்படிப்பட்ட டைகரின் ஒரு ருசிகரமான விளையாட்டை மட்டும் தேவன் எழுத்துக்களால் படித்து விட்டு நாம் மிஸ் ஜானகியை விட்டு விலகி கல்யாணியை சந்திப்போமாக.
4
தேவன் நூறு - 4
ஆந்திர நாட்டியமணி பங்காரு முந்தைய நாளிரவு தன் காதலனுடன் ஓடிப்போவதாக திட்டமிட அதற்கு உதவுவதற்கு நடராஜனின் உதவியை நாடினாலும், அந்த உதவி கிடைக்காமல் போக, விஷயம் தெரியாத பங்காரு வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு ஓடி நடராஜனின் வீட்டில் வந்து ஒதுங்குகிறாள். நடராஜனும் அவன் நண்பன் மணியும் வீட்டுக்குள் வந்து அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயல்கின்றனர். அதே சமயம் டில்லியிலிருந்து கோபத்துடன் அப்பா ஹரன் மகனைத் தேடிக்கொண்டு நடராஜன் வீட்டுக்கு வர, பதட்டப்படும் நண்பர்கள் பங்காருவை சமாதானப்படுத்தி அவளை பீரோவுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வைத்து அப்பாவை கொல்லைப்பக்கம் உள்ள கிணற்றடிக்குக் குளிப்பதற்காக அனுப்புகிறான் நடராஜன். இந்த பங்காருவை அப்பா வருவதற்குள் எப்படியும் வெளியேற்றவேண்டுமே என்ற கவலையில் அவளை வெளியே வரச்சொல்லிப் பேச முயலும்போது மறுபடியும் அறைக் கதவு திறந்துகொள்ள இந்தமுறை அரக்கப்பரக்க உள்ளே வருவது வில்லங்கம் செய்யும் நாகநாத ஐயர்தான். இனி நடப்பதை தேவன் கை மூலம் பார்ப்போம்.
வாசலுக்கு வெளியே வள்வள் என்று நாய் குரைப்பது, உர்..உர்.. என்று உறுமுவதும், அதைத் தொடர்ந்து, சீ சீ, சட், பு..’ என்று யாரோ கத்துவதும் முன்னோக்கி ஓடிவருவதும் கேட்டது. சற்றும் எதிர்பாராத வகையில் நாகநாதய்யர் உளறி அடித்துக்கொண்டு பஞ்சகச்சம் ஐந்து பக்கங்களில் பறக்க உள்ளே ஓடி வந்தார்; அவர் கால்களை நோக்கி எழும்பிக் குதித்துக் கொண்டு ‘டைகர்’ பின் தொடர்ந்தது. இந்தக் காட்சி தென்படுவதற்கு முன்பே ‘பங்காரு’ மின்னற்கொடி போல, பீரோவுக்குப் பின்னால் தனது யதாஸ்தானத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டுவிட்டாள். அதைக் கவனித்த நடராஜனும் மணியும் தலைக்கொரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு, மேலே நடக்கவேண்டியது என்ன வென்று கவனிக்கத் தலைப்பட்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாகநாதய்யர் இங்கே எப்படி வந்து சேர்ந்தார் என்ற காரண காரியங்களைச் சாவகாசமாக ஆராய்ச்சிச் செய்வதற்கு வைத்துக்கொண்டு, அடுத்த ஐந்தாறு நிமிஷங்களில் நடந்ததோர் அகோரமான யுத்தத்தை நாம் வர்ணித்துதான் ஆக வேண்டும். டைகரின் உண்மைச் சொரூபத்தை நாகநாதய்யரும் நடராஜனும் அறிவார்கள். மணி அறியமாட்டான். அறிந்திருந்த நாகநாதய்யரே அதன் வாலையும் மிதித்து அலட்சிய பாவத்துடன் வந்து விட்டதாலேயே ’டைகரின்’ கடுங்கோபத்துக்கு ஆளாகி, இப்போது ஓடி வரும் நிலைக்கு வந்தார். எந்த வீட்டுக்குள் காலை வைக்கக்கூடாது என்று பிரதிக்ஞை செய்திருந்தாரோ அங்கேயே வரவும், யாருடன் முகாலோபனமே வைத்துக்கொள்வதில்லை என்று விரதம் கொண்டிருந்தாரோ, அவனிடமே அடைக்கலம் புகுந்து கொள்ளவேண்டிய அவசியமும் அவசரமும் நேர்ந்து விட்டன அவருக்கு!
‘டைகர்’ தன் வாயைத் திறந்து சிவந்த நாக்கையும் இரு வரிசைப் பற்களையும் காட்டி உ..ற்..ற்.. என்று வல்லின ‘ற’னா போட்டுத் தன் கோபத்தை வெளியிட்டது. பிறகு பாய்ந்தது. மனிதனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில் அசாத்தியமான காரியங்களையும் யத்தனிப்பான் என்பதற்கு அத்தாட்சியாக – இலங்கையை நோக்கி ஆஞ்சநேயப்பெருமான் கடல் தாண்டியதையும் லேசாக ஞாபகப்படுத்தியவாறு, நாகநாதய்யர் அங்கிருந்த மேஜை மீது தாவினார். அந்த அற்ப மேஜை கனமற்றதாகையால் இவ்வளவு கனத்த மனிதரைத் தாங்கமாட்டாது பின்னால் வந்த ‘டைகர்’ மீது சாய்ந்து வைத்தது.
“யாரப்பா இவர்கள்”? என்றான் மணி
“இரண்டு பேர்களுமே நம் விரோதிகள்தான்!” என்று நடராஜன் ஒதுங்கி, தற்காப்புக்காக ஒரு தலையணையைத் தூக்கிக்கொண்டான்.
முதுகில் அடி வாங்கிக்கொண்ட டைகர் கீழே விழுந்து விட்ட நாகநாதய்யரைப் பழி வாங்கியே தீருவதென்ற வைராக்கியத்துடன் அவர் பின்புறத்தை நோக்கிப் பாய்ந்தது. தக்ஷணமே நடராஜன் வீசிவிட்ட தலையணையால் ஓர் அடியும் வாங்கிக்கொண்டது.
நாகநாதய்யர் சுற்றி சுற்றி ஓடினார். ஒரு போது நடராஜன் பின்னாலும், மறுபோது மணியின் பின்னாலும் ஒண்டினார். சோழனைப் பற்றிய பிரம்மஹத்திபோல் டைகர் எங்கேயும் விடாமல் துரத்தியது. ’உற் உற்’ என்று தன் பாஷையில் பேசி அவர் வயிற்றைக் கலக்கியது. மணி ஒரு கட்டை மணையை எடுத்துக் குறிபார்த்து டைகரின் மீது வீசினான். அப்போதே யமலோகத்தில் யமஸதஸில் யமக் கணக்கணான சித்திரகுப்தன் வேகமாக நோட்டைப் புரட்டினான். யம ஜூரர்களான பன்னிரண்டு க்ஷபணாள்களும் ஆஜராகத்தான் இருந்தார்கள். எனினும் ‘டைகரின்’ ஆயுள் தீரவில்லை என்று சித்திரகுப்தன் தலையை ஆட்டிவிட்டான். கட்டைமணை குறி தவறி சுவரில் ‘படீரென்று’ இடித்து, டைகரின் கோபத்தையும் பயங்கரத்தையும் தூண்டிவிட்டது. மேலும் அதிவேகமாக அது துரத்த, நாகநாதய்யர் துரிதமாக ஓட, பழைய நாடகமே துரித காலத்தில் நடைபெறலாயிற்று. ஆனால் ஒரு பெருச்சாளியை ஓர் அறையில் பூட்டிச் சுற்றுச் சுற்றி விரட்டினால் எத்தனை நாழி அதன் பலம் தாங்கும். நாகநாதய்யருக்கு பெரும் சோர்வு பிறந்தது. முன்னொரு காலத்தில் தமக்கு இருப்பதாக் நினைத்த ‘பிளட்பிரஷர்’ இப்போதே வந்துவிட்டதாக எண்ணி, கஜேந்திரன் ‘ஏ ஆதிமூலமே!” என்று கத்தியது போல், ‘ஹே திரிபுரசுந்தரி! இனித் தாங்காது! என்னை நீ ஏற்றுக்கொள்ளடீ” என்று கதறிவிட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்துகொண்டு பெருமூச்சு விடலானார்.
நிராயுதபாணிகளான நடராஜனும் மணியும் இரு மூலைகளில் செயலற்று நின்றார்கள்.
‘டைகர்’ ஒருமுறை சுற்றிலும் பார்த்துக்கொண்டு தயங்கியது. தனது வெற்றி என்று கர்ஜனை செய்தது. மறுகணம் நாகநாதய்யர் குரல் வளையை நோக்கி அதி உத்ஸாகத்துடன் பாய்ந்தது. சித்திரகுப்தன் மறுபடி நோட்டைப் புரட்டினான். யம ஜூரர்களும் மறுபடி தொண்டையைக் கனைத்து விட்டுக்கொண்டார்கள். ஆனால் இப்போதும் முன் போலவே தலையை ஆட்டிவிட்டான் யமக்கணக்கன்.
“ஆச்சு! நாகநாதய்யர் காரியம் தீர்ந்தது!” என நான்கு ஆத்மாக்கள் நினைத்தபோது பீரோவின் மறைவிலிருந்து சாக்ஷாத் திரிபுரசுந்தரியே போல் வெளிப்பட்டாள் ‘பங்காரு’.
“ஏய்! டைகர்.. சீ.. போகிறாயா.. என்ன!” என்று அதட்டினாள். சினிமாக் காட்சிகளில் ஓங்கின கை ஓங்கினபடி நிற்பதை மணியும் நடராஜனும் பார்த்திருக்கிறார்கள். இங்கே பாய்ந்த நாய் பாய்ந்தபடியே நின்றுவிட்டதை தத்ரூபமாகக் கண்டார்கள். டைகருக்கு ஷாக் அடித்திருந்தது. காண்பது நிஜமா, கேட்பது உண்மையா என்று அது பிரமித்தது. “நீ போ! போய்விடு!” என்றாள் பங்காரு. சப்தநாடியும் அடங்கியதாக, டைகர் சடேலென்று திரும்பியது. வாசலை நோக்கி நகர்ந்தது.
அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நகைச்சுவையும் திகிலும் கலந்த இந்த ரசமயமான் நிகழ்ச்சியின் வர்ணனை இன்னமும் தேவனின் வாசக ரசிகர்களுக்கு விருந்துதான். இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பாகக் காண்பித்திருப்பார் தேவன். வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் எந்த ஆபத்திலும் யாரேனும் நினைவு வைத்துக்கொண்டு ஆண்டவனை நோக்கிக் கூவினால், அவன் கயவனாக இருந்தாலும் கூட ஆண்டவன் பேதம் இல்லாமல் வந்து ரட்சிப்பதாக ‘பங்காரு’ பாத்திரத்தின் மூலம் நம் அனைவருக்கும் உணர்த்துகிறார் பாருங்களேன். நாகாநாதய்யர் இதன் பின்னரும் கீழ்மையாகச் சென்று தன்னைக் காப்பாற்றிய பங்காருவையே அவள் தந்தையிடம் காட்டிக் கொடுப்பதோடு சபையிலும் கேவலமாக நிந்திப்பார் என்பது வேறு விஷயம். கேவலமான எண்ணம் கொண்ட மாநிடர் திருந்துவதில்லை என்பதற்கும் கடவுளின் கருணைக்கும் என்ன சம்பந்தம்.. ராவணனும் விபீஷணனும் கடவுளைப் பொறுத்தவரை ஒன்றுதானே..
தேவனுக்கு தெய்வ பக்தி அதிகம். முருகன் அவருக்கு ஆத்மார்த்த தெய்வம் என்றால் அம்பிகை அவர் என்றென்றும் கொண்டாடும் தெய்வம். அந்த அம்பிகை தன்னையே வணங்கிகொண்டு தன்னையே அண்டி வருபவர்களைக் கைவிடுவதில்லை என்பதை வெகு அழகாக தன் ‘கல்யாணி’ கதையில் காண்பிப்பார். கடைசியில் வேறு வழியில்லாமல் கல்யாணியை கைது செய்துதான் தீரவேண்டும் என்று வரும் போலீஸ்காரர்களை அப்படி செய்யவிடாமல் திரும்பிப் போக வைப்பதும் அம்பிகையின் அருளாகவே காட்டுவார் தேவன்..
மனது சரியாக நல்ல நகைச்சுவை கதை படிக்கவேண்டும் என்று விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு நான் சிபாரிசு செய்வது முதலில் ‘கல்யாணி’ கதையைத்தான். கல்யாணியின் கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பதாக பட்டிருந்தால் அதற்கு தேவனைத்தான் வெகுவாகப் பாராட்டவேண்டும். கல்யாணியின் பாத்திரங்கள் அனைவரும் காலாகாலத்துக்கும் எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான். இப்போதும் பல குடும்பங்களில் கல்யாணியைப் போன்றோர்களும், சுந்தரம் நரசிம்மன் போன்றோர்களும் இருப்பதை நானே கவனித்திருக்கிறேன். மனித மனங்களை மிகத் திறமையான முறையில் படித்திருந்த தேவனால் மட்டுமே இத்தகைய பாத்திரங்களை அமைக்கமுடியுமோ என்னவோ.. இருந்தும் கல்யாணியையும் சற்று கேட்போமே.. சொன்னது சரிதானா’ என?
5
தேவன் நூறு - 5
தற்சமயம் கனடாவில் வசிக்கும் பிரபல பதிவர், எழுத்தாளர் பேராசிரியர் திரு பசுபதி எல்லாவற்றிலும் எனக்கு சீனியர். நான் படித்த அதே ராமகிருஷ்ணா (வடக்கு) பள்ளியில் எனக்கு முன்னர் 17 வருட சீனியர். தேவன் எழுத்துக்களின் மீதுள்ள ரசிகத் தன்மையிலும் எனக்கு மிகப்பெரிய சீனியர். தேவன் பற்றிய பல விவரங்கள் தொகுத்தவர். அவர் தன் வலைப்பதிவில் தேவன் குறித்த பல செய்திகள், சில கட்டுரைகள், சில சிறு கதைகள் என அப்படியே பதிப்பித்திருக்கிறார். அவர் பதிவுகளிலிருந்து குறிப்பு எடுத்துக் கொள்ளவும் எனக்குத் தாராளமாக அனுமதி கொடுத்த தயாநிதி. அவருக்கு என் நன்றியை தக்கணமே செலுத்துகிறேன்.
புதினங்களைப் பொறுத்த மட்டில் தேவனின் முதல் நாவலான ‘மைதிலி’ 1939 ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வராமல், அதன் துணைப் பதிப்பான ‘நாரதர்’ இதழில் தொடராக வந்தது. அப்போது நாரதருக்கு ஆசிரியர் துமிலன். கல்கி ஆனந்த விகடனில் இருந்து வெளியேறியதும் கொஞ்சநாட்கள் துமிலனும் நாடோடியும் விகடனின் ஆசிரியர் பொறுப்பில் வந்ததாகவும், ஆனால் விரைவிலேயே தேவனுடைய பொறுப்பில் விகடன் வந்து விட்டதாகவும் சில விவரங்கள் மூலம் தெரியவருகிறது. 1942 இல் மாலதி எனும் வாரம் ஒரு பக்க நாவல் கதையை ஆனந்த விக்டனில் ஆரம்பித்தார். அப்போது யுத்த காலமாகையால் செய்தித்தாள்களுக்கு பஞ்சம் என்ற நிலையில் இந்த சிக்கனத்தையும் கடைப்பிடிக்கவேண்டிய நிலையில், தேவன் இந்த சீரியஸான விஷயத்திலும், தன் ஹாஸ்யத் தொனியை மறவாமல் 14 வாரங்களில் எழுதியது இந்த ‘மாலதி’ எனும் வாரம் ஒரு பக்க நாவலாகும். இதை முழுமையாகப் படிக்க பெரியவர் பசுபதி அவர்களின் வலைப்பூவில் ஒரிஜினல் கதையாகக் கொடுத்திருப்பதால் அப்படியே அக்கதையை இந்த இணைப்பில் http://s-pasupathy.blogspot.in/2012/06/blog-post.html படிக்கலாம். தேவன் தன் கதைகளுக்கு எப்போதுமே அந்தந்தக் கதைகளின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறார். இதனால் கதையைப் படிக்கும்போதே தலைப்பில் உள்ள கதாபாத்திரத்துக்கு வாசக மனம் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கும். தன் முதல் நாவலான ’மைதிலி’ யிலிருந்து இதே உத்தியைத் தான் பின்பற்றி வந்தார். அவர் நாவல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவையாக இருப்பதால் இது மிகச் சிறந்தது.. அல்லது இது சுமார் ரகம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. முக்கியமாக கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் விதமும், அவர்களின் நடவடிக்கைகளையும் கதைகளில் படிக்கையில் இந்தக் கதாபாத்திரத்தை விட சிறந்த கதாபாத்திரம் இன்னொன்று இல்லை என்றும் சொல்லநேரும்.
தேவனின் ’கல்யாணி’ கதை 1944 இல் எழுதப்பட்டதாகும். இந்தக் கதைக்குப் பின்னர்தான் ‘மிஸ் ஜானகியை’ எழுதினார். கல்யாணியின் கதைச் சுருக்கத்தை எழுதினால் சர்வ சாதாரணமான கதை என்று யார் வேண்டுமானாலும் சொல்லி விடலாம். தாய் தந்தையை இழந்த கல்யாணி அழகான இளம்பெண். கும்பகோணம் சொந்த ஊர். சென்னையில் கல்லூரிப்படிப்புக்காக வந்திருக்கிறாள். கல்யாணியின் தோழி உமா, உமாவின் அண்ணன் நீலு, நீலுவின் தோழன் சுந்தரம். இந்த சுந்தரம்தான் கதையின், கல்யாணியின் நாயகன்.
கல்யாணியின் பாட்டனார் துரதிருஷ்டவசமாக தன் வீட்டில் வேலைசெய்யும் சமையல்காரக்குடும்பத்தின் வலையில் சிக்கி, அந்த சமையல்காரப் பெண்மணியின் மூத்த மகளையே கல்யாணம் செய்துகொண்டு சில நாட்களிலேயே இறந்தும் போகிறார். ஆனால் இந்த விஷயம் கல்யாணிக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்படுகிறது. பாட்டன் செத்த பதினைந்தாம் நாளில் ஒரு போஸ்ட் கார்ட் அவள் பெயருக்கு ஒரு துளி விவரத்தோடு கிடைக்க உடனே அடித்துப்பிடித்துக் கொண்டு கும்பகோணம் ஓடுகிறாள். அதற்கு முன் சென்னை எழும்பூரில் அகஸ்மாத்தாக ரயிலின் கடைசி டிக்கெட் சுந்தரத்துக்குக் கிடைக்க, அதைத் தவறவிட்ட கல்யாணிக்கு தியாகம் செய்ய, அங்கேயே கண்களும் கண்களும் கலந்து ஒரு அவசரக் காதல் அவர்கள் அறியாமல் பிறந்து விடுகிறது. கும்பகோணம் வந்தாலோ அங்கே வீட்டில் ஒரே ரகளை. தாத்தாவின் மிகப் பெரிய சொத்தான ரத்ன வைடூரியங்களை கெட்டியாக தம் கைக்குள் வைத்துக்கொண்டு சமையல்கார குடும்பம் கல்யாணியை ஏமாற்றுகிறது. இதற்கு ஒரு முடிவுகட்டவும் சோகமயமான கல்யாணிக்கு எவ்வகையாயினும் இந்த நகைகள் கிடைத்தே தீரவெண்டுமென்ற ஆவேசத்தில் சுந்தரம் உதவுவதும் தன் கில்லாடி நண்பன் (வெறும் கில்லாடி இல்லை ஜகத்ஜால கில்லாடி) நரசிம்மனோடு ஜோடி சேர்ந்து திருடுவதும், போலீஸ் கேஸில் மாட்டிக்கொண்டு சிரமப்படுவதும்தான் கதை.
ஒரு நகைச்சுவைக் கதைதான். எல்லா சம்பாஷணைகளும் இந்த நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டுதான் தேவன் எழுதியிருக்கிறார். கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும், அது அளவில் மிக சிறியதாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனி மதிப்பையும் கொடுத்திருப்பார் தேவன்.
சுந்தரத்தால் மூக்கிழுக்கப்பட்டு மூக்கால் முனகும் மதராஸ் மலையப்பராகட்டும், சுந்தரத்தின் அத்தையிடமிருந்து வைரக்கல் மறைக்கப்பட்ட கம்பளியை தானமாகப் பெற்ற மாயவரத்து சாஸ்திரிகளாகட்டும் ஒரு சிறிய அளவே கதையில் பேசப்பட்டாலும் தேவனின் எழுத்துக்களால் மிகவும் புகழப்படுபவர்கள்தான். அதே போல தெனாவெட்டு நரசிம்மன் இந்த அப்பாவி சுந்தரத்தைக் கையில் போட்டுக்கொண்டு அவன் சந்தேகங்களை அவன் பாஷையில் (யூ ப்ளடி ராட்டன் பொடோடோ என்ற முன் வார்த்தையுடன் ) தீர்த்துக்கொண்டு வரும்போதும் படிப்பவர்கள் மிகவும் ரசிக்கத்தான் செய்வார்கள். எந்த கதாபாத்திரமும் சோடை போக்வில்லை என்பது போலத்தான் ‘கல்யாணி’யின் அத்தனை கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். இதோ கதையில் சிறு பகுதியாக இடம் பிடித்து நம்மை நலம் விசாரிக்கும் கும்பகோணம் டாக்டர் பி.ஜி. கிருஷ்ணன பற்றி தேவன் எழுதுவதைப் படிப்போம்.
‘கும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் ‘டிஸ்பென்ஸரி’ என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது ‘நெட்டுருப்’ பாடம்.
மாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பர் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.
ஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக ‘டிஸ்பென்ஸரிக்குள்’ பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே ‘டக் டக்’ கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன்பின் அறைகதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் ‘விருதா’ கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் ‘லோட்டா ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.
‘சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார்! நாம் கை வெச்ச உடனே ஆளு ‘க்ளோஸ்’ ஆகும் – நமக்கு கெட்ட பேரு! இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா? போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ.. நம்ம ஆலந்தூர் ‘கோண்டு’! உங்களுக்குத் தெரியுமே ஸார்! சினிமாவெல்லாம் ‘ஆக்ட்’ பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம்…வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட்.. ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா! மெல்லக் ‘கோண்டு’ மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா ‘பீட்டிங்’ -அம்மாமார்களே! இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம்.. சித்தெ பொறுத்துக்குங்கோ! இன்னேன். ஒரு ‘கிளிஸரைன்’ இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டுபோகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் ‘கோண்டு’ வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமா?ன்னு கேழ்க்கிறான்’ என்பார்.
எதிரில் உட்கார்ந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.
ஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்யரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்’ என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்!
எல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. ‘ஒன்றுமில்லை! பயப்படாதே! நீ தெரிந்து கொண்டு என்ன லாபம்? நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு! சாப்பிடு..பார்க்கலாம்..போ’ என்பார். அந்த ஆசாமி போன உடனே, ‘ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே.. காலப்பிங் டி.பி..- நான் என்ன செய்யறது.. ஏன்? யார்தான் என்ன செய்யமுடியும்?” என்பார். அவர் பேச்சில் நிஜகலப்பு இருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன? சதா தமாஷாக இருக்கும்!
கதையில் தேவன் முன்கூட்டியே இந்த டாக்டரைப் பற்றி கதாநாயகன் கும்பகோணம் வந்தபின், அவன் நண்பன் அரட்டை அய்யாசாமி மூலமாக நமக்கு ஒரு வார்த்தையில் அறிமுகம் செய்கிறார் – எப்படி என்று படியுங்களேன்:
‘பி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ? ஆள் க்ளோஸ்! தம்பி.. பேஷண்ட் ஃபட்..ஆஸாமி ஃபினிஷ்! கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்’
சி.ஐ.டி சந்துரு எனும் ஒரு கதாபாத்திரம். இவர் மகாபெரிய கைகாரர். கிரிமினல் குற்றவாளிகளின் பெயர்களை மட்டுமல்ல, அவர்கள் முழு ஜாதகத்தையே நினைவில் வைத்து அவர்களை மடக்கிப் பிடிப்பதில் வல்லவர். (பின்னாட்களில் தேவனின் கடைசி கதை சி.ஐ.டி. சந்துரு’ தான். பெரிய அளவில் சந்துரு சம்பந்தப்பட்டது) இப்படிப்பட்டவர் இந்த கல்யாணி சம்பந்தப்பட்ட நகை திருட்டுக் கேஸை சாமர்த்தியமாக நடத்துவதையும், இன்ஸ்பெக்டர் கோபாலன் மேற்பார்வையில் இந்த வழக்கு நகர்வதையும் தேவன் எழுத்துக்களில் படிக்கவேண்டும். இன்ஸ்பெக்டர் கோபாலன் ஏற்கனவே தேவன் எழுதி வந்த துப்பறியும் சாம்பு மூலம் வாசகர்களுக்கு பிரபலமானவர். கும்பகோணத்தில் மாற்றலாகி வந்த வேளையில் இந்த கேஸ் அவரிடம் வருகிறது. சந்துரு’வின் ஆலோசனையின் பேரில் மாயவரம் சாஸ்திரிகளிடமிருந்து ஒரு கம்பளிப் போர்வையில் இருக்கும் வைரங்களைத் திருப்பிக்கொண்டு வரும் கெட்டிக்கார நரசிம்மன், அவன் பின்னே இன்னொரு காரில் ஏமாற்றமாக வரும் சுந்தரமும் அவன் நண்பன் அய்யாசாமியும், மூவரையும் கும்பகோணம் திரும்பியபின் போலீஸ் வளைத்துப் பிடிக்கிறது. முதலில் நரசிம்மனை விசாரித்த போலீஸ் அவனிடமிருந்து ஏதும் விஷயம் தேறவில்லை என்று தெரிந்ததும், போலீஸ் எனும் வார்த்தையைக் கேட்டே அச்சப்படும் நம் கதாநாயகன் சுந்தரத்தை விசாரிக்க அழைக்க, அவன் அவர்கள் முன்னே வந்து அந்த ‘பிரசித்த பெற்ற’ நாற்காலியில் அமர்கிறான். அந்த நாற்காலியில் அமர்ந்த எந்த அக்கூய்ஸ்டும், கோபாலன் கொக்கிப் பிடி போட்டு கேட்கும் கேள்விகளில் தம் குற்றத்தை எளிதில் ஒப்புக்கொள்வதால், அந்த நாற்காலி ‘பிரசித்தி’ பெற்றுவிட்டதாக தேவன் எழுதுவார்.
6
தேவன் நூறு - 6
கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில் சி.ஐ.டி. சந்துருவும் ஸர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோபாலனும் நாற்காலிக்கு ஒரு எமனாக இரண்டு எமன்கள் உட்கார்ந்திருப்பதாக சுந்தரத்துக்குப் படுவதாகவும், ஒரு எமனிடமிருந்து தப்பினால் இன்னொரு எமனிடம் மாட்டியே ஆகவேண்டும் என்றும் தேவன் எழுத, அந்த எழுத்துக்கள் மூலமாக ஒரு சுவாரஸியமான உரையாடல் தொகுப்பை நாம் இங்கே பார்க்கலாம். சுந்தரம் கால்கள் நிலையற்று தவிக்க தட்டுத் தடுமாறிச்சென்றுதான் அந்த பிரசித்தி பெற்ற நாற்காலியில் அமர்கிறான். சந்துரு ஆரம்பிக்கிறார்.
.
“உம்.. சுந்தரம் ஸார்! இதற்கு பதில் சொல்லுங்கள்!”
“ஆஹா.. இதோ சொல்லிவிடுகிறேன்.. எதற்கு?”
”இனிமேல் நான் கேட்கப்போகிற கேள்விக்கு!”
“ஓ! அதற்கென்ன? ஓ! கேளுங்கோ, கேளுங்கோ.. ரைட்!”
“நரஸிம்மனும் மாயவரத்துக்கு வந்தார்! நீங்களும் மாயவரம் போனீர்களே.. அது எப்படி?
“ஓ! அதுவா.. நரஸிம்மன்.. என்னை அங்கே வரும்படி சொன்னான்.”
“சரி, எதற்காக சொன்னார்?”
உம், அதை அவனையே நீங்கள் கேட்டுவிடலாமே?”
“கேட்பதற்கு பதில் சொல்லும்.. என்ன காரணத்தைச் சொல்லி உம்மை அவர் வரச் சொன்னார்?”
“காரணம் ஒண்ணுமில்லே.. நான் தான் என்னை வரச்சொல்லும்படி அவனைச் சொல்லச் சொன்னேன்!”
“உம்மை அவர் வரச் சொன்னார் என்றீரே.. சித்தே முந்தி?”
“ஆமாம்! அவனை விட்டு என்னைச் சொல்லச் சொன்னேன்.. அவன் சொன்னான்.. ஹிஹிஹி..”
“அட, அவரை ஏன் ஐயா நீர் அப்படிச் சொல்லச் சொன்னீர்?”
“அதைச் சொல்றேளா? தெரிஞ்சுண்டேன்! தெரிஞ்சுண்டேன்..அதுவா கேக்கறேள்? ஓஹோ!”
“ஓய்! நான் கேட்டதற்குப் பதறாமல் பதில் சொல்லும்!”
”என்ன கேள்வி அது?”
“நீர் ஏன் ஐயா அவர் கூட மாயவரம் போனீர்?”
“நான் போகவே இல்லையே.. அவன் தானே கூப்பிட்டான்?”.
“உஷ்! அதற்கு நீர்தானே அவரைக் கூப்பிடச் சொன்னதாகச் சொன்னீர்?”
“அதுவும் சரி! நான் சொன்னேன், “அடே நரஸிம்மா! நானும் வரேண்டா மாயவரத்துக்கு, என்னைக் கொஞ்சம் நீ கூப்பிடுடா” அப்படின்னேன். அவன் உடனே என்னைக் கூப்பிட்டுட்டான்.. நான் உடனே புறப்புட்டுட்டேன்.. ஹி ஹி ஹி..”
“இதென்னயா உளறல்.. நாங்கள் என்ன பயித்தியக்காரங்களா?”
“நோ நோ! யார் சொன்னது? நான் அப்படி எங்கே சொன்னேன்? கேட்டுப் பாருங்கோ!” சுந்தரம் திருதிருவென்று நாலுபுறமும் விழித்தான்.
ஸர்க்கிள் மேஜை மீது கையைத் தட்டினார்; “சுந்தரம், பல விஷயங்களை நீர் மறைக்கிறதாக உம்ம பேரில் எங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.. ஆகையால்..”
“எனக்கு அதைக் கேட்க ரொம்ப வருத்தமாக்யிருக்கிறது சார்!”
“உம்ம வருத்தம் இருக்கட்டும்! உமக்கு இது விஷயமாக தெரிந்ததை எங்களிடம் ஒளிக்காமல் சொல்லப்போகிறீரா.. இல்லையா?”
“கட்டாயமா சொல்றேன்.. நிமிஷத்திலே சொல்றேன்.. ஒரே வார்த்தையிலே கூடச் சொல்லிடறேன்.. உங்கள்கிட்ட சொல்லாம யார்கிட்டேச் சொல்லப்போறேன்? ஹிஹிஹி”
சந்துரு நெற்றிப்பொட்டுகளை அமுக்கி விட்டுக்கொண்டே, “ஏன் ஸார் சுந்தரம்! உம்மை நாங்கள் அழைத்துக் கொண்டு வந்த போது உங்களிடம் பரபரப்பே தென்படவில்லையே! இப்படி நடக்கப்போகிறது என்று நீர் எதிர்பார்த்தீரோ?”
“உம்.. ஆமா, ஆமா, ஓ யெஸ்!”
“எப்படி எதிர்பார்த்தீர்?”
“ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நீங்கள் கூப்பிடவேண்டியவர்தானே?”
“எதற்காகவோ?”
“எனக்குத் தெரியாது.. ஆனால் நான் மட்டும் எதிர்பார்த்தேன்”
“அதுதான் ஏன் என்கிறேன்?”
நரஸிம்மன் விறைத்துப் பார்த்தான்.. முட்டாள் சுந்தரம் மாட்டிக்கொண்டுவிட்டானே.. கடைசியில் சந்துரு எப்படியோ மடக்கிவிட்டானே.. சுந்தரமும் இயந்திரம் போல் பதில் சொல்லி வந்தவன் ஒருமுறை திடுக்கிட்டான். உள்ளங்கையை எடுத்து மேஜைமேல் வைத்தான். “மிஸ்டர் சந்துரு! இதைக் கவனித்துப் பாருங்கள்! என்ன தெரிகிறது? ஒரு மெல்லிய கோடு, இதோ இங்கே ஆயுள் ரேகையை வந்து வெட்டுகிறது, இல்லையா?” என்றான்.
”சரி?”
”இந்த இடம் இருபத்தி நாலு முதல் இருபத்தாறு வயது வரைக் குறிக்கிறது..’சீரியோ’ ஹஸ்தரேகை சாஸ்த்திரத்துலே போட்டுட்டான். இப்படி இருந்தால் கோர்ட்டு வழக்குகளில் சம்பந்தம் உண்டு என்று! அதுதான் நான் எதிர்பார்த்தேன்..”
சந்துரு சோர்வுடன் பெருமூச்சு விட்டு நாற்காலியில் சாய்ந்து விட்டார். அட பழி!
“கேளுங்கள் மேலே! இன்னும் என்ன? என்றான் சுந்தரம்.
“மாயவரத்துக்கு ஏன் சார் சுத்து வழியாய் போனீர்கள்?
“ஓ! நாங்கள் போனது சுத்து வழியோ? ஓஹ்ஹோ?”
“உமக்குத் தெரியாதாக்கும்?
“தெரியாது! நீங்கள் இப்போ சொன்னது நல்லதாப் போச்சு.”
“ஏன்?”
”நேர்வழியிலே போயிருந்தா, போகும்போதே பிடிச்சுருப்பேளே”
”அது சரி, பின்னால் நரஸிம்மன் வந்தாரே.. எங்கே அவரை முதலில் பார்த்தீர்கள்?”
“நான் பார்க்கவே இல்லை!”
“ஏன் பார்க்கவில்லை?”
”நாங்கள்தான் பார்த்ததும் வேகமாய்ப் போனோமே?”
“அப்படி வரும்படி சொல்லிவிட்டு அப்படி வேகமாய் போவானேன்?”
“நான் சாஸ்திரிகளை முன்னாலே போய்ப் பார்க்கத்தான்!”
“சாஸ்திரிகளை முன்னால் என்ன பார்வை? சொல்லலாமா?”
“சும்மாத்தான். எனக்கு ஸந்தியாவந்தனத்துலே ஒரு சந்தேகம்! போறதுதான் போறமே, நரஸிம்மன் வரதுக்கு முந்தியே அதைக் கேட்டுடலாம்னு போனேன்!”
“அதைக் கேட்டீரா?”
”கேட்கல்லே, அதுக்குள்ளே நரஸிம்மனே வந்துட்டான். அவனையே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னு விட்டுட்டேன்..”
“ஓஹோ! ஸந்தியாவந்தனத்துல சந்தேகம் கேழ்க்கிறதுக்கு மாயவரம் போனேள். இல்லையா?”
“இன்னொரு சின்னக் காரியம். ரொம்ப அல்பக் காரியம்.. அதையும்கூட பார்த்துக்கலாம்னு”
“கம்பளி சமாசாரமா அது?”
“ஓ! அதுதான், உங்களுக்கே தெரிந்திருக்கே! பேஷ்.. பேஷ்!”
“அதிலே என்ன இருந்தது?”
”கம்பளிதான் இருந்தது.. ஆஸ்திரேலியா ஆட்டுக் கம்பளி!”
“வேற ஒண்ணும் இல்லே? அப்படித்தான் நினைச்சேன்.. கொடுத்த போது!”
“அப்படிச் சொல்லுங்கள்!.. அதில் வேறே விஷயம் இருந்தது என்பது எப்போது தெரிந்தது?”
பாருங்கள்.. இதுவரை ஒரு அசடு போலவே இருந்து அச்சுபிச்சு போல பேசிக் குழப்பியவன் போகிற போக்கிலும் பேச்சு சுவாரஸியத்திலும் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே சர்வ சாதாரணமாக வாய் விட்டு உளறி தாங்கள் மாயவரம் சென்றது வைரம் ரத்தினம் வைத்த கம்பளிக்காக என்று சொல்லி மாட்டிக்கொண்டு விழிப்பதையும், ஒருவாறு மூச்சு முட்டி, விரல்கள் தாளமிடுவது போல நடுநடுங்கி பிறகு ஒருவழியாய் சமாளித்து அது எலி கிடைத்ததால் கம்பளியில் விழுந்த ரத்தின ஓட்டைகள் என்று சொல்லி மழுப்பி விடுவான். ‘கிறுக்குப் பிடித்தவன் மாதிரி பதில் சொல்கிறீரே’.. என்ற எரிச்சலான திட்டலும் வாங்கினாலும் அவன் அசட்டுத் தனமே அன்று எப்படியோ அவனைக் காப்பாற்றியதையும் தேவன் மிக அருமையான உரையாடல்கள் மூலம் நகைச்சுவை உணர்ச்சியோடு இங்கே அள்ளித் தெளித்திருப்பார்.
தேவன் காலத்திலேயே தேவனின் கதைகள் நாடகமாக்கப்பட்டன. நாடக வசனங்களை தேவனே எழுதினார். அந்த நாடகங்களில் கல்யாணியும் ஒன்று.இந்த அழகான கல்யாணியை எழுதுவதற்க்கு முன்னர் ‘கோமதியின் காதலன்’ என்றொரு நகைச்சுவைத் தொடர் விகடனில் எழுதினார். கோமதியின் காதலன் 1945 இல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களால் நாடகமாக மேடையேற்றப்பட்டது. பின்னர் 1955 இல் ப. நீலகண்டன் இயக்கத்தில் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. இதில் கோமதியாக சாவித்திரியும் காதலனாக நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனும் நடித்தனர். டி. ஆர். ராமச்சந்திரன் அந்த நாட்களில் பெரிய நகைச்சுவை நடிகராக இருந்திருக்கவேண்டும். அவர்தாம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கூட. இளமையான சாவித்திரிக்கு சற்று வயதான தோற்றத்தில் காணப்படும் ஜமீந்தார் மகனாக நடித்ததால்தான் என்னவோ, டி ஆர் ஆரின் படம் அவ்வளவாக எடுபடவில்லை. கிழக்குப்பதிப்பகம் சமீபத்தில் இந்தக் கதையை மறுபதிப்பு (படத்தில் உள்ளது) செய்த போது, ’இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி’ என்று முன்னுரை கொடுத்து விளம்பரம் செய்தது.
கோமதியின் காதலன் சினிமாவுக்கு ஏற்ற கதைதான். இரு ஜமீன்களிடையே கோர்ட் வரை சென்றுள்ள பகை. இதில் ஒரு ஜமீந்தார் மகள் கோமதி, அவள் சென்னையில் தங்கிக்கொண்டு படித்து வருகிறாள். எதேச்சையாக அவள் ஊரில் வந்த போது அவளைக் கண்டதும் காதல் கொள்கிறான் பகையாளியின் மகனான ராஜா. ஆனால் அவனுக்கும் முதலில் பகைவீட்டார் மகள் என்பது தெரியாமல் போகிறது. ஊரில் சகோதரனுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்னை வந்த கதாநாயகன் பட்டணத்துத் திருடர்களிடம் இருக்கும் பெட்டியையும் இழந்து, கடைசியில் கதாநாயகி தங்கிப் படிக்கும் வீட்டுக்காரரிட்மே வாகன் ஓட்டுனராகச் சேருகிறான் (இதற்கு மேல் கதை வேண்டுமோ.. இதைப் போல சினிமாக் கதைகள் பின்னர் நிறைய வந்துவிட்டன அல்லவா..).. ஆனால் தேவன் சாதாரணமாக ஒரு கதையை இஷ்டம் போல எழுதுவதில்லை. இந்தக் கதையில் மணி என்றொரு வில்லங்கப் பாத்திரம். (திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்தது நடிகர் தங்கவேலு). அவன் கதாநாயகன் பெட்டியைத் திருடும்போது, அதிலுள்ள டைரியைப் படித்துவிட்டு அவனைப் பற்றிய சகல விஷயங்களையும் அறிந்துகொண்டு, தானே உண்மையான ஜமீன் வாரிசு என்று இதுவரை பார்த்தறியாத கதாநாயகியைக் கவர வருவது ஒரு விசேஷம்தான். ஆனால் கதையில் உள்ள சுவாரசியம் திரைப்படத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கதையில் உள்ள காதலையும் நகைச்சுவையையுமே அப்படியே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சபாஷ் மீனா, காதலிக்க நேரமில்லை போன்ற திரைப் படங்கள் மிகப் பெரிய வெற்றியை ஈட்டுத் தந்தன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
கோமதியின் காதலன் கதை எழுதும்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபடியால். ஜப்பான்காரன் குண்டு போடுவதும், அடிக்கடி அபாயச்சங்கு அலறுவதையும் சுவையாக விவரிப்பார் தேவன். நகைச்சுவை தேவனது கோட்டைதான். இருந்தாலும் அவரது அடுத்த நாவல்களான மிஸ்டர் வேதாந்தம், லக்ஷ்மி கடாட்சம், ஸ்ரீமான் சுதர்ஸனம் போன்றவை நவரசங்களையும் பிரதானமாக கொண்டதாகத்தான் எழுதினார். மிஸ்டர் வேதாந்தம் ஒரு அருமையான பாத்திரம். கதாநாயகனான வேதாந்தமும் சரி, நாயகியான செல்லமும் சரி, வாழ்க்கையின் கஷ்டங்களை அனுபவிக்கவென்றே பிறந்தனர் போலும் என்று வாசகர்களுக்குத் தோன்றும். அதே சமயத்தில் சமுதாயத்தின் அத்தனை குறைகளையும் நிறைகளையும் ஒருங்கே கொண்டு வந்து விடுவார் தேவன். இந்தக் கதையைப் பற்றி ஒரு சில கருத்துகள் உண்டு.
(தொடர்ந்து வரும்)
7
தேவன் நூறு - 7
”ஏ பைத்தியக்கார மனிதனே1 நீ பிறரைப் பற்றி எவ்வளவு தவறாக நினைக்கிறாய்? நீ ஒருவன்தான் கவலையுள்ளவன் போலவும்,பொறுப்பு உள்ளவன் போலவும் எண்ணி, பிறர் நிச்சிந்தையாக இருப்பதாக முடிவு செய்கிறாய்.! என்ன ஏமாற்றம் அது.! சிலசமயம் நான்ஒருவனே மேதாவி என்று இறுமாப்புக் கொள்கிறாய்! என்ன முட்டாள்தனம். ஒரு சமயம் நம் சகதியே சக்தி என்று மெச்சிக் கொள்கிறாய்! என்ன அசட்டுத் தனம்’ ”
மிஸ்டர் வேதாந்தம் நடந்துகொண்டேயிருக்கும்போது இப்படித்தான் மனிதர்களைப் பற்றி வேதாந்தமாகப் பேசுவதாக தேவன் எழுதி வைப்பார். ’மிஸ்டர் வேதாந்தம்’ புத்தகத்தைப் படித்தவர்களைக் கேட்டால் இப்படி ஒரு அருமையான கதாபாத்திரத்தைத் தேவன் ஒருவரால்தான் படைத்திருக்கமுடியும் என்பார்கள். ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லாமல் எளிமையான வாழ்க்கைத் தத்துவத்தை மிஸ்டர் வேதாந்தம் என்கிற பாத்திரத்தின் மூலமாக தேவன் தந்திருப்பதே இதற்கு காரணம். வாழ்க்கையில் சுகமும் துக்கமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை முதலிலிருந்து கடைசி வரை வேதாந்தம் மூலம் நாம் பார்க்கலாம்.
சுகஜீவியாக கல்லூரி படிப்பு வரை வாழ்ந்தவன் வேதாந்தம். இவனைப் பற்றிய ஆரம்பகாலக் கட்டங்களை தேவனின் எழுத்துகள் மூலமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி தேசிகாச்சாரி எனபவர் ஏழைகளான பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தாலும்கூட,அவரது வலது உள்ளங்கையின் மத்திய பாகத்தில் செங்குத்தாக ஒரு நீண்ட கோடு ஓடியது. ரேகை சாஸ்திரப் புத்தகங்களில் இது தனப்ராப்தியைக் குறிப்பதாகும் என்று போட்டிருக்கும்.அதையொட்டித்தானோ என்னவோ, அதே ஊரில் மிராசுதாராக இருந்த சக்கரபாணி அய்யங்காருக்குப் புத்திர சந்தானம் ஏறபடவில்லை. தேசிகாச்சாரியின் களை மிகுந்த முகமும் அவரை வசீகரித்தது.. இரண்டாம் பேரைக்கலந்து கொள்ளாமலே அந்தப்பிள்ளையை ஸ்வீகாரம் செயதுகொண்டு விட்டார்.
நமது கதாநாயகனாகிய வேதாந்தத்தின் சாக்ஷாத் தகப்பனார்தான் இந்தத் தேசிகாச்சாரியார். தூத்துக்குடி கிராமத்தில் மாடிவீட்டில் உடகார்ந்துகொண்டு தம் ஏக புதல்வனாகிய வேதாந்தத்தை மாயவரம் ஹைஸ்கூலுக்கு அனுப்பி வைத்தார்.
தேசிகாச்சாரி படித்தவர் இல்லை.தாமாகச் சம்பாதித்தவரும் இல்லை.’’ பூர்வ ஜன்ம க்ருதம்’’ என்று சொலவார்களே, அந்த நியாயத்தின்படி அவரிடம் தனம் வந்து சேர்ந்தது. அதைத் தன் பிள்ளைக்கு தாராளமாகச் செலவழித்தார்.
பையன் பள்ளிக்கூடம் போகிறான் என்றால் , அது சாமான்யமான விஷயமாக கருதப்படவில்லை. மாயவரத்தில் தேசிகாச்சாரியின் பிள்ளையைத் தெரியாதபேர் கிடையாது. அவன் ஹோட்டலில் ஹல்வா தின்றால், அவன்கூட இருபது சகாக்களாவது ஹல்வா தின்பார்கள். பிள்ளையாண்டானுக்கு வெற்றிலைபாக்கு ஒரு ரூபாயக்குக் குறைந்து வாங்கத் தெரியாது.வாங்கினால், அதை ஒரேநொடியில் மாயமாக மென்று துப்ப நணபர்கள் காத்திருந்தார்கள். மாயவரத்தில் புதிதாக நாடகம், சர்க்கஸ், கண்காட்சி என்று எது வந்தாலும் வேதாந்தம் முதல்வரிசையில் இருந்து கொண்டு ஒரு டஜன் பரிவாரங்களுடன் பார்ப்பான்.
வேதாந்தத்தின் தகப்பனார் தேசிகாச்சாரி,பிள்ளை சம்பந்தப்பட்ட வரையில் கடுமையான பேர்வழியே இல்லை.அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்.
ஒருசில ஆப்தர்கள் தேசிகாச்சாரியிடம் , வேதாந்தம் இப்படி இருக்கிறானே, கவனியேன்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘இருக்கட்டுமே..நம்ம பையன்தானே, அவன் பாஸ் செயது முன்னுக்கு வந்து தங்கமும் வெள்ளியுமாக வேண்டியது சம்பாதித்துக் கொள்கிறான்!’’ என்று பதில் சொல்லி அனுப்புவார். அவர் எங்கிருந்து வாரி வீசுகிறார், அவர் வரும்படி என்ன என்பது ஒரு பெரிய மர்மம் .வேதாந்தம் அதைப்பற்றிக் கேட்டதும் இல்லை. மனத்தை வருத்திக் கொண்டதும் இல்லை.
டென்னிஸ் மட்டைகளில் நாலு வைத்திருந்தான். உயர்ந்த துணிகளில் தயாரிக்கப்பட்ட உடுப்புகள் மூன்று பெட்டிகள் இருந்தன. புரொபஸர் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்ல வேண்டியதுதான்.மறுநாள், என்ன விலையானாலும் லடசியம் செய்யாமல் வாங்கிவிடுவான்..
இப்படிப்பட்ட பணக்கார வேதாந்தந்துக்கு விதி ரூபமாக வாழ்க்கை தடம் புரண்டது. அப்பா இஷ்டத்துக்கு வகை வழி இல்லாமல் செல்வத்தைச் செலவு செய்ததும் அல்லாமல் கடனும் நிறைய வாங்க ஆரம்பித்து செல்வந்தனாகவே மறைவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செத்துப்போனதும்தான் வேதாந்தத்துக்குத் தன் உண்மை நிலை புரிய ஆரம்பித்தது. பணம் இருக்கும் வரை, இனிப்பைச் சுற்றி பறக்கும் ஈக்கள் போல இருந்த உற்றார் உறவினர் கல்லூரிப் படிப்பின் கடைசி கால கட்டத்தில் அவனை விட்டு நீங்கியதோடு மட்டுமல்லாமல் மீதி இருந்த செல்வத்தையும் சூறையாடினர். அவனின் அந்தக் கஷ்டகாலத்தில் காப்பாற்றியது அவன் அத்தையும் அத்தை பெண்ணான செல்லமும் தான். அவர்கள் ஏழைதானென்றாலும் வேதாந்தத்தின் செல்லக் காதலியாக வளர்ந்தவள் செல்லம்.
இனி அவன் பரிட்சையில் பெயில் ஆகி, சென்னை மாநகரம் வந்து அவதிப்பட்டு எழுத்துலகத்தில் போராடி தோல்வியுற்று பிறகு மெல்ல மெல்ல எப்படி வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை எட்டிப் பார்க்கிறான் என்பதுதான் கதை.
தேவன் இந்தக் கதையில் சொந்த அனுபவங்களை ஆங்காங்கே தூவினாரோ என்னவோ, பத்திரிக்கையுலகையும், எழுத்தாளர்கள் நிலையையும் துல்லியமாக வெளிப்படுத்துவார் தன் கதையில். வேதாந்தத்துக்கு உதவி புரியும் ஸ்வாமியும் சிங்கமும், அதே போல அவனுக்கு எதிரியாக அவனை வதம் செய்யும் வைரம் போன்ற பாத்திரங்களும் இன்னமும் இந்தக் கால கட்டத்திலும் எங்காவது இருந்துகொண்டே இருக்கின்றனர் என்றுதான் நினைக்கத் தோன்றும். கள்ளமும், சூதும், கபடமும் நிறைந்த வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலுமே அதன் பிரதிபாவம் இருக்கின்றதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.
மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதுகையில், தேவனின் கதாபாத்திரங்கள் உருவாகியவுடன் அனுபவங்களின் ஊடே படிப்படியாக மெருகு பெற்று நேர்த்தியான முறையில் நம் உள்ளத்தில் பதிகிறார்கள், அப்படிப்பட்ட வகையில் வேதாந்தத்தின் பாத்திரப்படைப்பு என்பது தேவனின் ‘மாஸ்டர்பீஸ்’ என்பார். இது உண்மைதானே. செல்வம் மறைந்தாலும் நற்குணம் மறையக் கூடாது. ஏழ்மை சூழ்ந்தாலும் சோம்பல் கூடாது, என்பதோடு முயற்சிகள் முதலில் ஏமாற்றத்தைத் தந்தாலும் வெற்றியின் படிக்கட்டை நம்மால் அடையமுடியும் என்ற நம்பிக்கை எப்போதும் வேண்டும் என்பதே வேதாந்தம் நமக்குத் தரும் பாடம்.
தேவன் இந்தக் கதையில் இன்னொன்றையும் வாசகருக்குத் தெரிவிப்பார். வேதாந்தந்துக்கு யார் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, யார் யாரெல்லாம் தீங்கிழைத்தார்களோ அவர்கள் எல்லோருமே வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் ஏதாவது ஒருவிதத்தில் கஷ்டப்பட்டு யாருக்கு தீங்கிழைத்தாரோ அந்த வேதாந்தத்திடமே உதவி கேட்டு வருவது. இது நிச்சயமாக ஒரு எழுத்தாளரின் சமூகப் பணியாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். தீங்கிழைத்தவனாகட்டும், மோசம் செய்தவனாகட்டும் வருந்தியோ, தண்டனைப்பட்டோ ஆகவேண்டும் என்பதை சமூகத்துக்கு தெளியவைப்பதும் வாழ்க்கையில் அது ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதை வாசகர் மனதில் பதிப்பதும் சீரிய சமூகச் சேவைதானே.
வேதாந்தத்தை போலத்தான் ஸ்ரீமான் சுதர்சனம் பாத்திரமும் நம் மனதில் பலமாக நிற்கக்கூடியதுதான். நிதர்சனங்களையும், தன்னை அழுத்தும் கட்டாயச் செலவினங்களையும் தாங்கமுடியாமல் ஒரு ஏழை குமாஸ்தா, அதுவும் தனியார் கம்பெனியில் பணிபுரியும் ஒரு சம்சாரி, நல்லவன், ஒவ்வொரு கட்டத்தில் திசை மாறுவதும், ஆனாலும் தகுந்த சமயத்தில் உண்மை உணர்ந்து திருந்துவதோடு மட்டுமல்லாமல் தான் செய்த குற்றங்களையும் தயக்கமில்லாமல் தன் முதலாளியிடமும் கடைசியில் தன் மனைவியிடமும் ஒப்புக் கொண்டு வருந்துவதும் ஒரு யதார்த்தமான முறையில் தேவன் நமக்குக் காண்பித்திருப்பார். சுதர்ஸனமும் அவன் மனைவி கோமளமும் தங்கள் தாய் தந்தையர்களை பட்டணத்துக்கு வரவழைத்து அவர்கள் மருத்துவத்துக்கு ஏற்பாடு செய்கையில் அவர்கள் படும் துன்பம், வலி எல்லாமே நகைச்சுவை போர்வையில் கொடுக்கப்பட்டிருந்ததால் சிரித்துக் கொண்டே வாசகனும் அவர்கள் வலியை உணரும் வாய்ப்பை அளிப்பார் தேவன்.
அதே சமயத்தில் தேவன் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த சமுதாயத்தில் முழுச் சூழலையும் இங்கே தெரிவித்திருப்பார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலகட்டங்கள் மிக மிக ஏழ்மையானவை. பிரிட்டிஷ் அரசு அப்படித்தான் நம்மை விட்டுச் சென்றது என்பதுதான் உண்மை. சமூகம் நலிந்து கிடந்ததென்றால் அந்த சமூகத்தில் இருக்கும் மக்களின் சுயநலங்கள், பகை, மோசம் செய்தல், ஒருவனை ஒருவர் காட்டிக்கொடுத்து வாழுதல் போன்ற நீச குணங்கள் சமூகத்தில் ஏராளமாகவே வேரூன்றிக் கிடந்தாலும், நல்லவர் என நால்வர் இருப்பதால் மட்டுமே இந்த சமூகம் வாழ்கின்றது என்ற எளிமையான தத்துவங்களையும் தேவன் கதை மூலம் அறியலாம்.
சென்னையில் வசிக்கும் மத்திய தர வர்க்கத்தினரைப் பற்றி மகாகவி பாரதியார் ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் சிறுகதையில் “ஸ்ரீமான் நாயுடுவுக்கு மூன்று வருஷத்துக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும் வீட்டில் ஒரு குழந்தையும் பிரமோஷன்’ என்று நகைச்சுவை பொங்க மக்கள் பெருக்கத்தையும் பொதுஜனக் கஷ்டத்தையும் விவரிப்பார். பாரதியார் காலத்திய கஷ்ட நிலை நாம் சுதந்திரம் பெற்ற பின்னும் வெகு காலம் நீடித்தது என்றே சொல்லவேண்டும். அடிமைகள் போல கஷ்டப்பட்டு அரையணா கூலிக்காக வேலைசெய்து பிழைப்பவர்கள் அந்தக் கால கட்டத்தில் உண்டு.
ஸ்ரீமான் சுதர்ஸனமும் சரி, லக்ஷ்மி கடாட்சம் கதையானாலும் சரி, சற்று துன்பமயமாக சாதாரணமாகத் தோன்றினாலும் உண்மையில் எளிய நகைச்சுவையின் அடிப்படையிலேயே துன்பத்தைக் காண்பித்திருப்பார் தேவன். இது தேவன் டெக்னிக் என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக துன்பத்தை அனுபவிப்பதும், அதைப் பற்றி எழுத பேச நிறைய வாசகர்களுக்குப் பிடிக்காது. ஆனால் சொல்லும் பாணி நகைச்சுவையில்தான் இருப்பதால் கடகடவென படித்துவிடத்தான் தோன்றும். முதலில் சிரிப்பாக இருந்தாலும் அந்தப் பாத்திரம் எத்தனை துன்பப்படுகிறது என்பது புரியும். ஆனால் ஏற்கனவே சொன்னது போலவே அந்தந்த கால கட்டத்தின் பிரதிபலிப்பு அந்தக் கதைச் சம்பவங்களில் ஏராளமாகக் கிடைக்கும்.
மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும் மிகவும் பிடித்ததாக ‘ஸ்ரீமான் சுதர்ஸனத்தை’ சுட்டிக்காட்டுகிறார். ”பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்” (நன்றி – சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், பாகம் 1).
நகர வாழ்க்கை இன்னமும் பலம் பெறாத கால கட்டத்தில் கிராமத்தில் உள்ள குடும்பங்களும், நகர வாழ்க்கைக்காக இடம் பெயர்ந்த குடும்பங்களும் (முக்கியமாக ஏழைகள்) எப்படியெல்லாம் அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற நிதர்சனம் இந்தக் கால வாசகர்களுக்குக் கிடைக்கும்.
இப்படி சமூகங்களைப் பற்றிய நிலவரங்களை நகைச்சுவையோடு தன் பாணியில் பிற்கால சமூகத்துக்குத் தந்த தேவன் ஒரு புதுமை நிறைந்த புதினத்தை தமிழுலகத்துக்குப் பரிசாகத் தந்தார். அதுதான் ஜஸ்டிஸ் ஜகன்னாதன்.
படம்: கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.
8
தேவன் நூறு - 8
நீதிபதியின் வலது புறத்தில் நகர ஷெரீஃப் அமர்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த அலங்காரமான அணி எல்லோர் கவனத்தையும் கவர்ந்திருந்தது. நீதிபதியின் இடதுபுறத்தில் போடப்பட்டிருந்த இரண்டு பெஞ்சுகளில் ஒருவர் பின் ஒருவராக ஒன்பது பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த ஒன்பது பேரும் ஸ்பெஷல் ஜூரர்கள். பொதுமக்களிடமிருந்து நீதி வழங்குவதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வெவ்வேறு வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டவர்களாகையால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தனர்.
இவர்களுக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நீதிபதிக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தவர் மிஸ்டர் ஸஹஸ்ரநாமம்.. அவர் பிரபலமோட்டார் கம்பெனியில் மேனேஜர். இதற்கு முன்பு இவர் ஜூரராக இருந்து கோர்ட் அனுபவமுள்ளவராகையால் இவரை ’ஃபோர்மென்’ ஆக தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக முன்புறம் வழுக்கை விழுந்திருந்தது போல தலை. முகம் மிகவும் பருத்திருந்ததால் கழுத்து இருக்கும் இடம் தேடவேண்டியிருந்தது. ’என்னடா இப்படிப் பிடித்துப் போட்டுவிட்டார்களே, மூன்று நாளோ நான்கு நாளோ தெரியவில்லையே, ஆபீஸில் உட்கார்ந்தபடி அலுங்காமல் நலுங்காமல் போவதை விட்டு இது எதற்கு? என ஆயாசப்படுபவர் போல காணப்பட்டார்.
அடுத்தபடி உட்கார்ந்தவர் ஒற்றைநாடி ரங்கநாத முதலியார் ஆவார். உள்ளூர் பேங்க் ஒன்றில் அக்கௌண்டண்ட் வேலை.. ஜட்ஜைப் பார்ப்பதும், ஷெரீஃபைப் பார்ப்பதும் மறுபடி ஜட்ஜைப் பார்ப்பதுமாகப் பொழுதைப் போக்கினார். வீட்டுக்கு மாப்பிள்ளை ஒருவார கால லீவில் வந்திருக்கும்போது அவனுடன் பேசமுடியாமல் இப்படி செய்துவிட்டார்களே என்ற தாபம் ஒருபக்கம்; மாப்பிள்ளை எதிரில் தனக்கு இப்படி ஒரு பெரிய பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று கௌரவமாக சொல்லிக்கொள்ளலாம் என்ற சபலம் ஒருபுறம், இதில் எது விசேஷம் என்று காணமுடியாத தத்தளிப்பு அடிக்கடி ஏற்பட்டது.
மூன்றாவது ஆசாமி கொக்கு போல நாசியுடன் அடிக்கடி கனைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். புரபசர் சிவசாம்பனை நகரக் கல்லூரியில் கணித புரபசர் என்பதாக பலர் அறிவார்கள். இந்த கேஸ் என்ன் பிரமாதம்? எக்ஸ் ப்ளஸ் ஒய் இண்ட்டு எக்ஸ் மைனஸ் ஒய் இஸிகோல்டு என்கிற மாதிரி ஊதியெறிந்துவிட வேண்டியதுதானே..என்கிற பாவத்தில் அவர் காத்துக் கொண்டிருந்ததாகப் பட்டது.
அவருக்கு அடுத்தாற்போல் சுமார் ஆறடி உயர நிஜார் அணிந்த ஓர் ஆசாமி உட்கார்ந்திருந்தார். அவர் கோர்ட் பூராவையுமே கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். முன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த இளம் வக்கீல்களை பார்ப்பதும், வாயின் இடதுபக்கத்தால் புன்னகை செய்து அவர்களைத் தாம் தெரிந்துகொண்டதாக மட்டுமே பாவனை செய்தார். இன்சூரன்ஸ் கம்பெனி செல்வரங்கத்தின் பிணைப்பில் அவர்களில் அநேகர் அகப்பட்டுக்கொண்ட பேர்., மிகுதியுள்ளவர் இனி தப்பமுடியாது என கவலை கொண்டால் ஆச்சரியமில்லை பேச்சிலே அவ்வளவு வாசாகலகமாக இருப்பவர் ஒரு புள்ளியை குறி வைத்தார் என்றால் மடக்குவதில் தவறியது என்பது இவர் அகராதியில் இல்லை. இப்போது இவர் இந்த புதிய சூழ்நிலையை ரசித்தார், விரும்பினார், இதன் மூலம் தம் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள இடம் செய்து கொண்டார் என்று முடிவு செய்வதும் தவறாகாது.
பின் பெஞ்சியில் முதலில் அமர்ந்தவர் ஒரு ஆடிட்டர். பெயர் ஜோசப் ஞானமுத்து, பிரபலமானவர்,’ ஜூரர் என்று அழைத்துவிட்டார்கள், எதிர்த்துப் பேச வாயில்லை, உட்கார்ந்து விட்டுப்போவோம்’ என்ற ஒரு விரக்தியுடன் உட்கார்ந்து விட்டார். அடுத்தாற்போல ஆறாவது பேர்வழி ஹோட்டல் முதலாளி. அவருக்கு அங்கே இருந்தாலும் இங்கே இருந்தாலும் லட்சியமில்லை. மச்சினன் பயல் பெட்டியடியில் உட்கார்ந்து கொள்வான், கவலையில்லை. அதுவும் வியாபாரம் பத்து மணிக்கு ஓய்ந்து மறுபடி ஐந்து மணிக்குதான் ஆரம்பிக்கிறது. இங்கே தமாஷாக பொழுதைப் போக்கலாம். அவருக்கு ஒரே ஒரு குறை காலடியில் ஒரு திண்டு, தலையணை போட்டிருக்கப்படாதா என்பதுதான்.
ஏழாவதாக உட்கார்ந்திருப்பவர் ராமநாத சாஸ்திரி. பி.ஏ படித்து ஊரில் நிலபுலன்களைப் பார்ப்பதோடு இங்கே ஆயில்மேன் பிஸிநஸ் வைத்திருக்கிறார். மதாசாரங்களில் ஊறி காலை மாலையில் பூஜை புனஸ்காரங்களை ஒரு காரியமாகச் செய்பவர் நெற்றியில் சந்தனமும் குங்குமமும் இவர் பக்தியின் சின்னங்கள். கோயிலைப் பார்த்தால் கை கூப்பாமல் போகிறவர்களை தூக்கில் கொண்டு போய் போடவேண்டும் என்பது இவர் அபிப்ராயம்.
எட்டாவதாக உட்கார்ந்திருந்த முத்தையா பிள்ளை வாழ்க்கையில் பல துறைகளில் வேலை பார்த்தவர். அவர் பேசாத விஷ்யம் இல்லை. கமிஷன் ஏஜெண்டாக வேலை பார்ப்பவர். வீடு கட்டும் காண்ட்ராக்டுகளை எடுத்துக் கொண்டு கொள்ளை கொள்ளையாகக் குவித்தவர். அரசியல் விஷயங்களைத் தெரிந்ததோடு பிரபலங்களோடு பழகியவர்.
கடைசியாக ஒரு பெஞ்ச் ஓரமாக உட்கார்ந்து கொண்டு எல்லாரையும் விழுங்கிவிடுவதாக பார்த்துக் கொண்டிருப்பவர் ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் பெயர் கௌரிசங்கர். அதைவிட அவருடைய புனைப் பெயர் ‘மண்டலி’ என்பது அதிக பிரபலம். தினம் ஒரு துப்பறியும் கதை படித்துக்கொண்டிருப்பவர். அவர் எழுத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து கொலையும் கொள்ளையும் மர்மமும்தான். அநேகப் புத்தகங்கள் படித்து இதுவரை மானசலோகத்தில் சஞ்சரித்தவர் இன்று கண்ணெதிரேயே ஒரு கேஸ் விசாரணையை பார்க்க நேர்ந்ததில் அவர் சொர்க்கப்பிராப்தியே அடைந்துவிட்டது போல ஆனந்தம் கொண்டிருந்தார். இந்த அனுபவத்தை வைத்து ஒரு இருபைத்தைந்து வாரம் போகும் ஒரு அபூர்வமான கதை எழுதிவிடுவேனே என்று மனைவியிடம் மார் தட்டி வந்திருந்தார்.
இதற்கு முன்பு கிரிமினல் கோர்ட்டின் உட்புறத்தை அவர் பார்த்ததே இல்லை. ‘எத்தனை அழகு, என்ன பந்தா, எத்தனை கருக்கு’ என்று வியந்தே போனார். நியாயப்படி, சட்டப்படி நடப்பதென்பார்களே அது இங்கேயல்லவா இருக்கின்றன. புத்திசாலிகள் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சிங்கங்கள், மனதில் குரோதம் இல்லாதவர்கள் ஒன்று கூடி ஒரு ஆள் தண்டனை அடையலாமா கூடாதா என்பதைக் கண்டுபிடித்து முடிவு சொல்வது எவ்வளவு அற்புதம்! எப்பேர்ப்பட்ட தர்மம்’ என்று திறந்த வாய் மூடாமல் இருந்தார்.
ஜஸ்டிஸ் ஜகன்னாதன் கதை ஆரம்பம்தான் மேலே கொடுத்திருப்பது. தேவன் கதைகளிலிருந்து இது முதலில் வித்தியாசப்படுவது பெயர்த் தலைப்பிலே. ஏனென்றால் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற புதினத்தில் தலைப்பிட்ட பாத்திரம் இந்தக் கதையின் நாயகன் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.. இதனால் வேறு யார்தான் நாயகன் என்றால் இக் கதையைப் படித்தவர் எந்த ஒரு பாத்திரத்தையும் நாயகனாகவே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கதைப்படி பேருக்கு நாயகன் வரதராஜபிள்ளை என்றாலும் அந்த பாத்திரம் கூட கதை முழுக்க வரும் கதாநாயகப்பாத்திரம் இல்லைதான். அதே போல வரதராஜபிள்ளையின் மனைவி ஜெயலக்ஷ்மியைக் கூட கதாநாயகியாக அவ்வளவாகக் காண முடியாது என்றுதான் படுகிறது. என்னைக் கேட்டால் இந்தக் கதைக்கு நாயகன்-நாயகி இந்தக் கதையைப் படைத்த தேவன் மட்டுமே என்றுதான் சொல்வேன். இத்தனைக்கும் கதை என்ன?
பெரிய செல்வந்தரானவரும் மூன்று மனைவிக்காரருமான (முதல் மனைவிக்கு சந்தானம் கிடையாது என்பதால் இரண்டாவது மனைவி வர, அவள் மூன்று மக்கள் செல்வங்களைக் கொடுத்து விட்டு இறந்து போனதால் துக்கம் தாளாமல் போக மூன்றாவது மனைவி தேவைப்பட்டதாம்) தியாகராயப் பிள்ளை, நோய்வாய்ப்பட்டாலும் சீரடைந்து தன்னுடைய பெரிய பெண்ணின் கணவனான வரதராஜ பிள்ளையின் வீட்டில் அவன் மேற்பார்வையில் ஹாயாக இருந்து வரும் ஓர் இரவில் அகஸ்மாத்தாக மடிந்து போகிறார். அந்த இரவு வேளையில் அவரை விஷம் வைத்து மாப்பிள்ளை வரதராஜபிள்ளையே தன் மாமனாரை சொத்துக்காக ஆசைப்பட்டு கொன்றுவிட்டதாக போலீஸ், அவர்களுக்குக் கிடைத்த சாட்சியங்களின் பேரில் கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வரதராஜபிள்ளை தான் அந்த இரவில் அங்கு இல்லவே இல்லை என்று சாதித்தாலும், வேறு பல பலமான சாட்சியங்கள் அவனைக் குற்றவாளியாக கூண்டில் நிற்கவைத்து விடுகின்றன. அவன் மனைவி ஜயலக்ஷ்மியும், அவனுடைய வக்கீல் ஈஸ்வரன் மட்டுமே அவன் பக்கம் நிற்க, கோர்ட்டில் இந்த வழக்கு ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்கிற நீதிபதியின் முன்பும் ஒன்பது ஜூரர்களின் முன்பும் விசாரணைக்கு வருகிறது. மிகவும் பிராபல்யமான ’கிரவுன்’ பிராஸிகியூஷன் கருணாகரன் இந்த கேஸை போலீஸ் சார்பாக நடத்த, அவரை எதிர்த்து எல்லோரும் மதிக்கும் வக்கீலான ஈஸ்வரன் டிபன்ஸ் தரப்பு வக்கீலாக ஆஜராகிறார். கிரவுன் என்றால் ராஜாங்கத்து சார்பாக என்பதாக பொருள் கொள்ளவேண்டும். பிரிட்டிஷ் சட்டம் இல்லையா, எல்லாமே ராஜாவின் ஆணைப்படிதான்.
இந்தக் கதை ஆனந்த விகடனில் 1953-54 இல் தொடராக வந்தது. அந்தக் கால கட்டத்தில் நீதிபதிக்கு உதவி செய்யவும் முடிவுகள் தீர ஆராய்ந்து சரியான தீர்ப்பு சொல்லவும் ஒன்பது பேர் கொண்ட ஜூரர் ஸிஸ்டம் ஒன்று இருந்தது. இங்கு ஜூரர்களின் மெஜாரிடி முடிவின் படி நீதிபதியின் தீர்ப்பு இருக்கும். கிட்டதட்ட இப்போது இருக்கும் பெஞ்ச் அல்லது மல்டி-ஜட்ஜ் சிஸ்டத்தைப் போல என்று வைத்துக் கொள்ளலாம். இந்த ஜூரர் சிஸ்டம் இன்னமும் வெளிநாடுகளில், அதுவும் அமெரிக்க நாடுகளில் வலுவாக உள்ளது. நகர ஷெரிஃப் இப்படிப்பட்ட கிரிமினல் குற்ற கேஸ்களில் ஏறத்தாழ நடுநாயகமாக அமர்ந்திருப்பது ஒரு அலங்காரத்துக்கு மட்டுமே தவிர அவருக்கு நீதி அளிப்பதில் எந்தவித உரிமையும் கிடையாது. அவர் ஒரு அதிகாரம் இல்லாத சூபர்வைஸர் என்று கொள்ளலாமோ என்னவோ. (சென்னை மாநகருக்கு ஷெரீப் என்றொரு பதவி இருந்தது . அப்போது மாநகர மேயருக்கு அடுத்த முக்கியத்துவம் கொண்ட பதவி இது. அரசாங்கத்தால் வழங்கப்படும் நியமனப் பதவி. அரசியல் சார்பற்ற இந்தப் பதவியில் இருப்பவர்கள் நகரின் பல நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிப்பார்கள். நகருக்கு வரும் முக்கியப் பிரமுகர்களை வரவேற்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள். பெரிய வழக்குகளை அவர்கள் முன்னிலையில் நடத்துவது கோர்ட்டுகளில் ஒரு வழக்கம்)
ஜூரர்கள் என்பவர்களை சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவில் நல்ல அந்தஸ்து மரியாதை உள்ளவராக இருப்பவர்களாகப் பார்த்து அமர்த்துவது வழக்கம். அத்தகைய ஜூரர்களைப் பற்றிதான் தேவன் முதன் முதலில் நகைச்சுவையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இது கொலைக் குற்றம் எனப்தால், எப்போதுமே இதைப் போன்ற கதைகளில் ஒரு த்ரில் அல்லது சஸ்பென்ஸ் இருக்கும். சாதாரணமாக துப்பறியும் புதினங்கள் எழுதுபவர்கள் ஒரு கொலை எப்படி நடந்தது என்பதை போலீஸ் மூலமோ அல்லது ஒரு துப்பறியும் சிங்கம் மூலமாகவோ மிகவும் தீர ஆராய்ந்து, கஷ்டப்பட்டு, ஒவ்வொரு இடமாக நாய் போல அலைந்து திரிந்து, அடிபட்டு, உதைபட்டு, கடைசியில் இவர்தான் கொலை செய்தார் என்று முடிவு செய்து கதைக்கு ஒரு முடிவையும், வாசகருக்கு அப்பாடி என்கிற திருப்தியையும் கொடுத்து விடுவார்கள். கடைசியில் குற்றவாளி பிடிபட்டான் என்று தெரியுமே தவிர அவன் கோர்ட்டில் மிக எளிதாக பெயிலில் வெளியே வரமுடியும், வந்து பின்னர் தான் பிடிபட்ட காரணங்களை எல்லாம் தவிர்க்கப் பாடுபடமுடியும், சாட்சியங்கள் வீணாகிப்போனால் ஜாலியாக பழையபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியும் என்றெல்லாம் நமக்குக் காண்பிக்கமாட்டார்கள்.
ஆனால் ஜஸ்டிஸ் ஜகன்னாதனில் இப்படிப்பட்ட கதையாக இது ஆரம்பிக்கப்படவில்லை.. துப்பறியும் கதைகளின் இரண்டாம் பாகம் போல, குற்றவாளி பிடிபட்டு அவன் வழக்கில் எப்படி குற்றம் செய்திருக்கலாம் என்பதாக நிரூபிக்கிறார்கள் என்று காண்பிக்கப்படுவதால், இந்தக் கதையில் நவரசங்களும் கலந்தே இருக்கின்றன. ஒருநாள் வரதராஜபிள்ளை குற்றம் செய்துவிட்டார் என்பதை சந்தேகமுற கருணாகரன் (பிராஸிக்யூஷன் வக்கீல்) நிரூபித்து விட, அதுதான் நிஜம் என்றே ஜூரர்களும் அசைபோட ஆரம்பித்தாரென்றால் அடுத்தநாள் டிஃபென்ஸ் தரப்பு வக்கீல் ஈஸ்வரன் அரசாங்கத் தரப்பில் காண்பிக்கப்பட்ட சாட்சியங்களில் ஏகப்பட்ட ஓட்டைகளைக் காண்பிக்க, ‘ச்சே’ இந்த வரதராஜ பிள்ளையாவது, குற்றம் செய்வதாவது..” என்று ஜூரர்களோடு சேர்ந்து நாமும் பரிதாபப்படும் நிலைக்கு கொண்டுசெல்வார் தேவன்.
1954 இல் எழுதப்பட்ட இந்தக் கதையின் ஆங்கிலப் பதிப்பு 2004 இல் அதாவது ஐம்பது ஆண்டுகள் கழித்து லக்ஷ்மி வெங்கட்ரமணன் அவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது (2004 ஆம் ஆண்டில் ஹிந்து நாளிதழில் வந்த அதற்கான படம் இங்கே இருக்கிறது). ஆங்கிலத்தில் இதைப் போன்ற கதைகள் ஏராளம்தான். ஒப்புக் கொள்ளவேண்டும்தான். அதே சமயத்தில் ஆங்கிலம் என்பதை உலகம் பரவிய, அதிகமாகப் பேசப்படுகின்ற, படிக்கப்படுகின்ற மொழியாகவே கடந்த நூறு ஆண்டுகளில் செய்துவிட்ட பிறகு ஆங்கிலத்தில் இதைப் போன்ற கதைகள் எத்தனை வந்தாலும் ரசிப்பதற்கு வாசகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் தமிழ் என்று வரும்போது இருக்கும் ஆறு கோடிப் பேரில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு கூட (ஒரு கோடி) கூட வாசிப்பதில் விருப்பம் காண்பிப்பது கிடையாது என்பதை தமிழ் அறிஞர்கள் சமீபத்திய செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்தார்கள். படிப்பு முன்னேறிய இப்போதைய காலகட்டத்திலேயே நிலைமை இப்படி என்றால் படிப்பில் வீழ்ந்திருந்த அந்த 1950 களில் இப்படி ஒரு கதைக்களம் வைத்து எழுதி வெற்றி பெற்றால் அது படைப்பாளியின் மிகப் பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்.
இதைப் படித்தவர் பலபேர் தேவன் அந்த நாட்களில் கோர்ட் நிகழ்ச்சிகளை அடிக்கடிப் பார்த்திருக்க வேண்டும் என்றே எழுதினர். மேடையில் பேசவும் செய்தனர். அத்தனை துல்லியமாக கோர்ட் நடவடிக்கைகளை எழுதியதோடு வாசகர்களுக்கு அங்கே இடையிடையே நடக்கும் ஹாஸ்யபூர்வ நிகழ்ச்சிகளை தம் பாணியில் கொடுத்திருப்பார் தேவன்.
இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சியை ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு கிரவுன் ப்ராஸிக்யூட்டர் கருணாகரன் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமே உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.
அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் பேசுகிறார்.
“பிடிச்சுகிச்சு”
அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.
“என்ன பிடிச்சுகிச்சு?”
மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தையா பதில் சொல்லுவார்.
“நேத்து ராத்திரி… மொட்டை மாடில படுத்தேனா?… ஒரே பனியா?… அதான் பிடிச்சுகிச்சு..” என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.
சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு மனதில் தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி…
இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
கோர்ட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட ஜஸ்டிஸ் ஜகன்னாதனைப் போன்ற இன்னொரு கதைதான் ராஜத்தின் மனோரதம். ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்’ என்று சொல்வார்கள் இல்லையா.. இந்த வீடு கட்டும் படலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலுள்ள கஷ்டங்களை நகைச்சுவை எள்ளளவும் குறையாமல் தேவன் எழுதிய புத்தகம்தான் ராஜத்தின் மனோரதம். கதாநாயகியான மனைவி ராஜம் எப்படியாவது ஒரு சொந்த வீடு வேண்டாமோ என நச்சரித்துக் கொண்டே இருக்க, அவள் கனவை நனவாக்குவதற்காக சொந்த வீடு கட்டினால்தான் என்ன என்று இறங்கிவிடும் நாயகன். அடித்தளம் போடுவதிலிருந்து முழு வீடு கட்டும் வரை ஏற்படும் சிரமங்கள், அதிலும் மேஸ்திரி முதற்கொண்டு ஒவ்வொரு வேலையாட்களிடமும் இந்த வீடு கட்டுபவர் படும் கஷ்டமும் இந்த சிமெண்ட் போன்ற வஸ்துக்களை வாங்குவதில் உள்ள சிரமங்களும் முக்கியமாக இன்றைய அடுக்கு மாடி குடியிருப்போர் படிக்கவேண்டும். படிக்கப் படிக்க சுவையான ஒரு புத்தகம்தான் ’ராஜத்தின் மனோரதம்’.
ஆனால் இவைகள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் தேவனின் ‘சாம்பு’ ஒரு மிகப் பெரிய புகழை தேவனுக்கு அள்ளித் தந்தது. தேவன் புத்தகங்கள் என்றால் சாம்புதானே என இன்றைய தலைமுறையினரும் வெகுவாக அறியக்கூடிய அளவுக்கு புகழ் பெற்ற அந்த துப்பறியும் சாம்புவை நாம் துப்பு துலக்குவோம்.
9
தேவன் நூறு - 9
தமிழிலே பல நகைச்சுவை கதைகள் ஆதியிலிருந்தே உண்டு. மகாகவி பாரதி நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பது அவர் கவிதைகளிலே மிகச் சிறந்த இடத்தைப் பெற்ற குயில் பாட்டு ஒன்றினைப் படித்தாலே போதும். மனிதன் ஒருவனே நகைச்சுவையை ரசிக்கத் தெரிந்தவன், அதை உணர்ந்து வெளிக்காட்டி சிரிக்கத் தெரிந்தவன். காந்தியடிகள் வாழ்க்கையில் நகைச்சுவைக்கு மிகப் பிரதானம் உள்ளது. கடுமையான எண்ணம் கொண்ட எதிரிகளைக் கூட உண்மையான புன்னகையோடு எதிர்கொண்டால் அவனை இம்சிக்காமலே வெற்றி கொள்ளமுடியும் என்பார்.. அஹிம்சாவாதியல்லவா.. அதே போல பக்தியால் நாம் மனமுருகிப்பாடும் தேவாரத்தில் கூட அப்பர் பெருமான் ”வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே (உள்ளத்திலேயே நீ இருக்க வெளியே எல்லாம் உன்னைத் தேடுவது கண்டு எனக்குள்ளே வெட்கப்பட்டு விலா எலும்பு விரிய சிரித்தேன்) என்று கூட சிரிப்பதில் உள்ள சுகத்தைப் பாடுவார். எத்தனை சீரியஸான ஆசாமியையும் நல்லதொரு நகைச்சுவை கொண்டு சிரிக்க வைக்கமுடியும் அப்படி சிரிக்கவில்லையென்றால் அவன் மனிதப் பிறவியே அல்ல. சிரிப்பினால் ஆயுள் பெருகும். மனம் விட்டு சிரிக்க சிரிக்க உடலிலிருந்து கெட்ட வாயுக்கள் வெளியே வருகின்றன.
எல்லா எழுத்தாளர்களுமே முடிந்தவரை நகைச்சுவையை தம் எழுத்தில் காண்பிக்கதான் வேண்டும். அப்படிக் காண்பிக்கத்தான் செய்கிறார்கள். எளிய நகைச்சுவையின் ருசியே ஒரு தனி விருந்து. அதை அனுபவித்துப் படிப்பதே ஒரு சுகம்.
கல்கியின் கதைகளில் மிகப் பெரிய புகழ் பெற்ற பொன்னியின் செல்வனில் கூட அந்தக் கதாநாயகனான அருள்மொழிவர்மனை விட வந்தியத் தேவனும், ஆழ்வார்க்கடியானும் அதிகம் பேசப்படுகிறார்கள். காரணம் நகைச்சுவையோடு அந்தப் பாத்திரங்களை வாசகர் நெஞ்சங்களை நிரப்பியதுதான். அப்படித்தான் சுஜாதாவின் புகழ்பெற்ற ‘கணேஷ்-வசந்தில்’ வசந்த் மூலம் படைக்கபபட்டிருக்கும் நகைச்சுவை மட்டும் இல்லாவிட்டால் இரு பாத்திரங்களுக்குமே ஒரு மிகப் பெரிய ரசனை கிடைத்திருக்காதுதான். ஆனால் சென்ற நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை நாயகன் யாரென்றால் அது நிச்சயமாக தேவனின் ‘சாம்பு’தான்.
சாம்பு பாத்திரம் படைக்கப்பட்ட காலத்தைப் பற்றி முதலில் சொல்லவேண்டும். இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடைபெற்ற 1942 ஆம் ஆண்டில் தேவன் ‘துப்பறியும் சாம்பு’ எழுதினார். அந்தக் கால கட்டத்தில் தேசத்தில் உலக மகா யுத்த பயமும், பிரிட்டிஷாரின் மீதான கோபமும், யுத்தகாலமாதலால் அத்தியாவசியப் பொருட்கள் பஞ்சமும், இந்த யுத்தத்தைக் காரணம் காட்டி அரசாங்கத்தின் அச்சுறுத்தலும் இதற்கும் மேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டமான ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் விதேசப் பொருட்களையும் பகிஷ்கரித்த நாட்கள் அவை. நிச்சயமாக சாதாரண பொதுமக்கள் நிம்மதியில்லாமல் வாழ்ந்த நாட்களாக அந்தக் கால கட்டத்தை நாம் காட்டலாம். இரண்டாம் உலக யுத்தத்தில் இங்கிலாந்து பல தோல்விகளை சந்தித்த காலமாதலாலும், உலகத்தின் தலைநகரமாகக் கருதப்பட்ட லண்டன் மாநகரமே அபாயக் கட்டத்தில் இருந்ததாலும் பிரிட்டிஷார் பாரதமக்கள் மீது எவ்வித தயாதாட்சண்ணியமும் காண்பிக்காத சிரமமான நாட்கள் என்றே சொல்லவேண்டும். யுத்தத்தில் பாரதம் நேரடியாக அவ்வளவாக பாதிக்கப் படவில்லையே தவிர, யுத்தகால கஷ்டங்கள் என்னென்ன உண்டோ அனைத்திலும் தேசம் முழுவதும் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தது என்றுதான் தெரியவருகிறது. இப்படிப்பட்ட விசித்திரமான சூழ்நிலையில்தான் தேவனின் மூளையில் சாம்பு தோன்றினான். துப்பறியும் சாம்பு எனும் பெயரில் ஆனந்த விகடனில் தொடராக எழுதவும் ஆரம்பித்தார். பின்னாளில் அந்த கதை பெரும் புகழ் அடையப் போகிறது. அந்த சாம்பு தமிழர்களின் ஹாஸ்ய உணர்ச்சியில் திக்கு முக்காடி மிகப் பெரிய நாயகனாய் வலம் வரப் போகிறான் என்பதை தேவன் அன்று உணர்ந்திருப்பாரோ என்னவோ..
இதில் விசேஷம் என்னவென்றால் தேவனால் தோற்றுவிக்கப்பட்ட தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான ‘துப்பறியும் சாம்புவுக்கு’ தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது ‘துப்பறிவதுதான்’. தேவன் துப்பறியும் சாம்புவை எப்படி அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.
‘நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.
‘விளாம்பழம்’ பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்..”
தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.. பின்னாளில் இதே தொடரில் போகப் போக மிகப் பிரபலமாகி தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும். ஏனெனில் சாம்புவின் முட்டாள்தனம்தான் அவன் பலம். அவன் புத்திசாலியாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு அவன் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் அவனுக்கு மாபெரும் தோல்வியை – அவன் ஒருவன் மட்டுமே அறியும் விதத்தில் – அடைவதையும் ஆனால் அதிர்ஷ்ட தேவதை அவனை அணைத்துக் கொண்டு வெற்றியின் உச்சியை அடைவதையும் மிக அழகாக விவரித்திருப்பார் தேவன்.
துப்பறியும் சாம்பு வின் சித்திரமே விசித்திரம். தேவனின் பல கதை, கட்டுரைத் தொடர்களுக்குச் சித்திரங்கள் வரைந்தவர் ராஜு. ‘துப்பறியும் சாம்பு’வின் சித்திரத்துக்கு உயிரூட்டியவர் அவரே. பிறகு, விகடனில், தேவனின் மறைவுக்குப் பின், 1958 ஆம் ஆண்டில்‘சாம்பு’ ஒரு சித்திரத் தொடராக வந்தபோது ‘கோபுலு’ படங்கள் வரைந்தார் (நன்றி, பேராசிரியர் பசுபதியின் வலைப்பூ).மேலும் திரு பசுபதி எழுதுகையில் இப்படிச் சொல்கிறார்.
தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறுகதைத் தொடர். ஆகஸ்ட், 30, 1942 -இல் “ஆனந்த விகடனில்” தொடங்கிய அந்தத் தொடரைப் பற்றிய சில சுவையான தகவல்களைத் ‘தம்பி’ ஸ்ரீநிவாசன் தருகிறார்:
“ சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு “கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்” (https://groups.google.com/forum/?fromgroups=#!topic/yappulagam/Dqqb2UWCkag)
பின்னாட்களில் எஸ்.எஸ். வாசனின் ஜெமினி நிறுவனம் எடுத்த ’மோட்டார் சுந்தரம் பிள்ளை’ எனும் திரைப்படத்தில் சாம்புவின் ஆக்கம் பயன்படுத்தப்பட்டது. சாம்பு கதைகளில் வந்த நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தாமல் சாம்புவின் டெக்னிக் மட்டும், (அதாவது சாம்புவின் முட்டாள்தனம், அப்பாவித்தனம், அதிர்ஷ்டம் இந்த மூன்றும் கலந்த கலவை) பயன்படுத்தப்பட்டது. படத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜியின் மருமானாக வரும் நாகேஷ் அந்தப் பாத்திரத்தில் மிக இயற்கையாக நடித்தார். அதற்கு அவர் உடல் வாகு கூட பயன்பட்டது என்றே நினைக்கிறேன். தேவன் தன் கடைமூச்சு வரை விகடனில் பணியாற்றியதால் அவருடன் அவர் பாத்திரப்படைப்புகளும் சேர்ந்து ஜெமினி நிறுவனத்தாருக்கு சொந்தமாகப் பட்டதோ என்னவோ தேவன் கதையோ சாம்புவோ இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டதாக டைட்டிலில் காண்பிக்கவில்லை. (கோமதியின் காதலன்’ படத்தில் மிக அழகாக ‘கதை – தேவன் – ஆனந்தவிகடன்’ என்று பிராண்ட் கொடுத்து டி.ஆர். ராமச்சந்திரன் டைட்டில் போட்டிருந்தார் என்பதையும் நினைவில் கொள்க.) ஆனால் மோட்டார் சுந்தரம் பிள்ளையில் தேவன் பெயர் இல்லாவிட்டால் என்ன, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளிவந்த அத்தனை பேரும் நாகேஷ் வடிவில் மறுபடியும் தேவனின் ‘சாம்பு’ வைப் பார்த்த திருப்தியை அடைந்தார்கள் என்றே பேசப்பட்டதும் உண்டு.
தேவன் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவரே சாம்பு நாடகத்துக்கான வசனத்தையும் எழுதி இருக்கிறார். அவர் காலத்திலேயே சாம்பு நாடகமும் பலமுறை மேடையேற்றப்பட்டது. என்.எஸ் நடராஜன் என்கிற தேவனின் நண்பர் சாம்பு வேஷம் போட்டதாலேயே சாம்பு என்.எஸ். நடராஜன் என்று அறியப்பட்டதாக பேராசிரியர் பசுபதி எழுதியிருக்கிறார். (இவருடைய நாடக போஸ்டர் ஒன்று 1962 இல் வெளியானது, படமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது). தேவன் கைப்பட எழுதிய நாடகமாக்கப்பட்ட ஆக்கத்தைக் கூட பேராசிரியர் பசுபதி தன் வலைப்பூவில் பதிப்பித்துள்ளார். சாம்பு பின்னாளில் தூரதர்ஷனில் தொடராக வந்தது. காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நடித்தார். மேலும் பல நாடகக்குழுக்கள் சாம்புவைப் பயன்படுத்திக் கொண்டன.
துப்பறியும் சாம்புவில் சென்னையின் முக்கியமான இடமான மாம்பலம் வெகுவாகப் பேசப்பட்டது. திருநீர்மலை, பாரீஸ்கார்னர், (டவுன்) எழும்பூர், செண்ட்ரல் போன்ற இடங்களைப் பற்றிய வர்ணனை அவ்வப்போது வரும். கும்பகோணம் சற்று பிராபல்யம் பெற்றது என்றும் சொல்லலாம். சாம்புவின் கீர்த்தி மேலும் பெருக பெருக பெங்களூர், பம்பாய், லண்டன் போன்ற நகரங்களுக்கும் சாம்புவை அனுப்பி அந்தந்த நகரங்களின் அப்போதைய நிலையையும் நமக்கு அறிமுகம் செய்தார். 1940 களில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என்பதும் நாம் அறிய உதவுகின்றன.
சாம்புவின் கதைகள் மூலம் மிக வேகமாக மக்கள் மனதில் பதிந்த இன்னொரு பாத்திரம் இன்ஸ்பெக்டர் கோபாலன். பாவம்! இவரைப் பொருத்தமட்டில், பார்வைக்கு முட்டாள் போல தெரிந்தாலும் சாம்புவைப் போல ஒரு உயர்ந்த, திறமை மிக்க துப்பறிபவர் இந்த உலகத்துலேயே கிடையாது என்ற எண்ணம் உண்டு என்பதால் அதிகாரபூர்வ மற்றும் அதிகாரபூர்வமில்லாத ரகசிய வழக்குகளிலெல்லாம் சாம்புவை சிக்க வைத்து சாம்பு ஒன்றும் புரியாமல் வேடிக்கைப் பார்த்து ஏதோ செய்து தொலைக்க அதுவே கடைசியில் வெற்றியில் கொண்டுவிட, ஒவ்வொரு நிகழ்ச்சியும் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லும் தேவனின் எழுத்துத் திறமையை எவ்வளவுதான் மெச்சினாலும் தகும்.
தேவன் எப்படி சாம்பு பாத்திரத்தைப் படைத்தாரோ அதற்கு நேர் மாறாக கும்பகோணத்து வேம்புவை சிருஷ்டி செய்து, அவளை சாம்புவின் மனைவியாக்கி, அந்த மனைவிக்கு உண்மையான முட்டாள் சாம்புவை புரிய வைத்து அவள் மூலம் ஏகப்பட்ட கிண்டல்களும் அதே சமயம் சிருங்காரக் கொஞ்சல்களுக்கும் குறையில்லாமல், பஞ்சமில்லாமல் வாசகர்களுக்கு விருந்து படைத்தார். பின்னர் சாம்புவுடன் அவனுக்குப் பிறந்த சுந்துவும் சேர்ந்துகொண்டு அவனறியாமல் அவன் வழக்குக்கு உதவுவதையும் தேவன் விவரிப்பார். அதே சமயம் சமூகத்தின் பல அங்கங்களில் கதையை நகர்த்தி, சமூகங்களில் பரவலாகத் தெரிகின்ற அந்தக் கால நிக்ழ்வுகளை ஒவ்வொரு கதையிலும் வாசகருக்கு தன் பாணியில் தேவன் அறிமுகப்படுத்துவார். ஒவ்வொருவரின் உண்மை சுபாவம் அல்லது இயல்பினை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டும்போது நகைச்சுவையை அவர் எந்த அளவுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளார் என்கிற விவரம் புரியும்.
இந்த சாம்பு-வேம்பு கலாட்டா இருக்கும் ஒரு கதையைத்தான் பார்ப்போமே
‘படங்களுக்கு நன்றி: பேராசிரியர் பசுபதி”, கனடா.
10
தேவன் நூறு - 10
தேவனின் ’துப்பறியும் சாம்பு’ கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று . ‘முந்திரிப் பருப்பு – பருப்புத் தேங்காய்’ . இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ’ராவ்சாகிப்’ நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.
ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண். எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என நாக்கில் எச்சில் ஊற துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிற்து.
‘விடு அதை’ தர்மாம்பாள் அதட்டுகிறாள்.
‘நீதான் விடு’ இது சாம்பு.
இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ‘ ஆஹா! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடுத்துவிட்டார்.. இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்’ என்றும் கூவுகிறார்.
அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள்.
‘நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார்.. அவர் மந்திரவாதியோ..இட்சிணியோ.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்’ ….
அதிர்ஷ்டம் அதிர்ஷம் அதிர்ஷடம்தான் எப்போதும் சாம்புவுக்கு கைகொடுக்கும். தகுந்த சமயத்தில் சாம்புவின் முட்டாள்தனத்தையே பலமான ஆயுதமாகக் காண்பிப்பதும் இந்த அதிர்ஷ்டம்தான் அது யார் மூலம் வேண்டுமானாலும் வரலாம். ‘காணாமல் போன கணவன்’ எனும் கதையில் ஒரு அல்ப சபலத்தால் எங்கேயோ போய் சரியாக மாட்டிக்கொள்ள வேண்டியவனுக்கு அவன் மனைவி வேம்புவால் கூட அதிர்ஷ்டம் அடிக்கிறது. இதோ சாம்பு வேம்பு வேடிக்கையை தேவன் எழுத்தால் படியுங்களேன்.
நம் இரண்டு பேரில் யாருக்கு யாரிடம் பிரியம் ஜாஸ்தி? என்று கேட்டான் சாம்பு ஒரு நாள் மாலை.
எட்டுமாத கர்ப்பிணியான வேம்பு ஒரு கம்பளியைத் தரையில் விரித்துக் கொண்டு, ரவிவர்மாவின் படத்தில் கன்வ ரிஷியின் புதல்வி துஷ்யந்தனுக்குக் கடிதம் எழுதும் நிலையில் காணப்படுவது போல், படுத்துக் கொண்டிருந்தாள்.
“இதென்ன அசட்டுக்கேள்வி, போங்கோ, யாராவது ஒரு பொம்மனாட்டி வந்து இளித்தால் உடனே பதிலுக்கு இளிக்காமல் இருந்து விடுவேளாக்கும் நீங்கள்? புருஷா எல்லாம் ஒரே மாதிரிதான்” என்றாள் அவள்
“அப்படி நான் இளித்தால் நீ பொறாமைப்பட்டு மாய்ந்து போகாமல் இருந்து விடுவாயோ? ஹி..ஹி..” என்றான் சாம்பு.
“நான் ஒண்ணும் மாட்டேன்! எனக்குக் கோபமே வராது. புருஷன் சந்தோஷமாய் இருக்க வேண்டியதுதான் உத்தம பத்தினியின் தர்மம் என்பார் எங்கப்பா”
“அப்படியானால் உனக்கு பிள்ளை பிறக்கப் போகிறதா, பெண் பிறக்கப் போகிறதா?
“உங்களுக்கு எது வேண்டும்?”
“எனக்குப் பெண் தான் வேண்டும்” என்று வேம்புவின் பக்கம் சிறிது நகர்ந்தான் சாம்பு.
“வெட்கமாயில்லை? யாரேனும் வந்து நிக்கப்போறா! போங்கோ உங்க ரூமுக்கு” என்றாள் அவள்.
சாம்பு தன் அறைக்குப் போனபோது பட்டுப்புடவையை உடுத்தி முகத்தைப் பாதிக்கு மேல் மூடிக்கொண்டு ஒரு ஸ்திரீ அவன் மேஜையின் முன்னால் நாணமே உருவமாக நின்று கொண்டிருந்தாள்.
“உட்காருங்கள்.. நீங்கள் யார்?” என்றான் சாம்பு
மெல்ல, காது கேட்டதும் கேட்காதுமாக அவள் பதில் சொன்னாள். “உங்களை எப்படிப் பார்ப்பது என்று பயமாக உள்ளது, சங்கோஜமாகவும் இருந்தது. நான் செங்கல்பட்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருப்பவள். மேலே சொல்லட்டுமா?” என்றாள். சொல்கிறபோதே இருமுறை நாஸூக்காக மேலாக்குப் புடவையை வீசிப் போர்த்திக் கொண்டாள்.
“சொல்லுங்கள்! கேட்கிறேன்!”
“என் தங்கையும் நானும்தான் எங்கள் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் காலமாகி எட்டு வருஷமாகிவிட்டன. நான் கல்யாணமே செய்துகொள்ளாமல் பள்ளிக்கூடத்தில் உத்தியோகம் ஏற்றுக்கொண்டேன். என் தங்கை, ஷண்முகசுந்தரம் என்பவரை மணந்து கொண்டு இரண்டு வருஷம் முன்புவரையில் பம்பாயில் இருந்தாள். புருஷன்மனைவி அந்நியோந்யத்தைப்பற்றி
சொல்லவேண்டியதில்லை. நான்கு நாளைக்கு முன்பு அவர் வெளியே புறப்பட்டுப் போனவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை எனக்கு சொல்லி அனுப்பினாள் என் தங்கை. ஓடி வந்தேன். மேலும் மூன்று நாளாகிவிட்டது. இன்னும் அவர் திரும்பவில்லை.”
“அவருக்கு என்ன உத்தியோகம்?”
“உத்தியோகம் என்று ஒன்றுமில்லை. பம்பாயில் ‘பிஸினஸ்’ செய்து கொண்டிருந்தார். நல்ல லாபம் கிடைத்தது. இப்போ இங்கே வந்து சௌகரியமாக இருக்கிறார்”
“போகிறபோது எங்கே போகிறேன் என்று சொல்லவில்லையோ?”
“இல்லையே! வழக்கம்தான் வெளியே போவதும் வருவதும். ஆனால் ஒரு தினமாவது திரும்பாமல் இருந்ததில்லை. என் தங்கை கவலையிலேயே குன்றிவிட்டாள்” அவள் கண்ணில் அப்போது நீர் நிரம்பியது.
சாம்புவுக்கு அனுதாபம் பிறந்து விட்டது. “உஸ்.. வருத்தப்படாதீங்கோ.. வந்து விடுவார்!”
“நீங்கள் கவனித்து எங்களுக்குச் சொன்னால் தேவலை. நீங்கள் பார்க்க ஆரம்பித்தாலே அவர் அகப்பட்டு விடுவார் என்று எங்களுக்கு திடமான நம்பிக்கை”
“போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதோ?”
“ஐயோ, வேண்டாம்.. பத்திரிகையில் வந்து சிரித்துப்போயிடும். தவிர அவர் வந்துவிட்டால், ஏன் அமர்க்களம் செய்து விட்டீர்கள் என்று கோபிப்பார் என்றும் என் தங்கை பயப்படுகிறாள். நீங்கள் கொஞ்சம் பார்க்கிறீர்களா?”
“பார்க்கிறேன்”
“அப்போ காலையில் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா?”
“ஆகட்டும்”
அவள் எழுந்திருந்தாள். வெளியே ஹாலுக்கு வரும்போது சாம்புவும் பின் தொடர்ந்தான். “நான் வரட்டுமா? கோட்ஸ் ரோடு, 345ஆம் நம்பர், என் பேர் சகுந்தலா” என்று திரும்பின அந்த ஸ்திரீ, சாம்புவின் கையைப் பிடித்து, ஹிதமாக அதை ஒரு அழுத்து அழுத்தி அவன் கண்களை பிரேமையுடன் நோக்கினாள்.
பகீரென்றது சாம்புவுக்கு. ‘இதென்ன சங்கடம், இப்படி ஏன் பார்க்கிறாள் இவள்!’
ஒரு க்ஷணகாலம் தயங்கினாள் அவள். பிறகு விசுக்கென்று வாசலில் போய்விட்டாள்.
ஏதோ பேச்சுக்குரல் கேட்கிறதே, யாராக இருக்கும் என்று வெகு நேரம் யோசனை செய்தவாறு படுத்திருந்த வேம்பு மெல்ல எழுந்து வந்ததும், சகுந்தலா சாம்புவின் கையைப் பிடித்து வீட்டு விலாசத்தைச் சொல்வதும் சரியாக இருந்தன. பளிச்சென்று அவள் கண்களில் ஒரு பொறி பறந்தது. மறு க்ஷணம் ‘சரி, இருக்கட்டும்!’ என்று உள்ளே போய்விட்டாள்.
சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு இன்னும் இரண்டு பேர் சாம்புவைத் தேடிக்கொண்டு வந்தார்கள். இரண்டுபேரும் வந்து உட்கார்ந்ததும், “ஓர் உதவி செய்ய வேண்டும்” என்றார்கள்.
“சௌகரியப்படாது எனக்கு!” என்றான் சாம்பு.
“தகுந்த மரியாதை செய்வோம் ஸார், நாங்கள். எங்கள் சிநேகிதர் ஒருவர் – ஷண்முகசுந்தரம் என்பது அவர் பெயர். திடீரென்று நான்கு நாட்களாகக் காணப்படவில்லை. வீட்டைவிட்டுக் கிளம்பி எலெக்ட்ரிக் ரயிலில் ஏறினவர்தான். அப்புறம் திரும்பவில்லை. அவர் குடும்பத்தார்கள் அவரைக் கண்டுபிடிக்க என்ன ஏற்பாடு செய்கிறார்களோ, எங்களுக்குத் தெரியாது. அவர் ஜாக்கிரதையாக திரும்பவேண்டும் என்பது ஒன்றே எங்கள் கவலை. என்ன செலவானாலும் பரவாயில்லை. நாங்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தெரியவேண்டியதில்லை.. நீங்கள் மட்டும் தயவு செய்யவேண்டும்”
“போலீஸில் சொல்லுங்கள்”
“அதுதான் வேண்டாம் சார்.. உங்களிடம் காதில் போட்டுவைத்தால் காதும் காதும் வைத்தாற்போல் காரியம் நடக்கும்”
சாம்புவின் முன்னால் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் நகர்ந்தன.
சரி, கதை உங்களுக்குப் பாதிதான் சொல்லி இருக்கிறேன். இரண்டும் ஒரே கேஸ்தானே என்று ஒப்புக்கொன்டு அந்த இருவரையும் அப்புறமாக வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறான் சாம்பு. அன்று ராத்திரி இன்ஸ்பெக்டர் கோபாலன் இவன் வீட்டுக்கு வந்து அப்போதுதான் அசந்து தூங்க ஆரம்பித்தவனை எழுப்புகிறார். ஜார்ஜ் டவுன் அம்பாள் கோயிலில் நகைகளும் வைரக்கற்களும் திருடுபோய்விட்டன என்றும், குருக்கள் வீட்டில் சோதனை போட்டதில் ஒரு சின்ன நகை மட்டும் கிடைத்தாலும் அவர் தனக்குத் தெரியாது என்று சாதிக்கிறார், அழுகிறார் என்றும் சொல்லிய இன்ஸ்பெக்டர் எப்படியாவது சாம்பு உடனடியாக இந்த கேஸில் தலையிட்டு நகைகளையும் கண்டுபிடித்து இந்த அபவாதத்தில் ஒரு நல்ல குருக்களை விடுவிக்கவேண்டுமென்றும் சொல்கிறார். ஆனால் சாம்பு மறுக்கிறான். எப்படியாவது நாளைக்காவது வந்து பாருமேன்’ என்கிறார். ‘நாளைக்கு தான் பிஸி’ என்று பிகுவுடன் உள்ளே ஓடிவிடுகிறான்.
அடுத்தநாள் காலை சகுந்தலா வீட்டில் அந்த ஒய்யார ஸ்திரீயைக் கண்டு மயங்கிக்கொண்டே அசடு வழிந்து கொண்டே ஏதோ பரிசோதிப்பது போல வீடெல்லாம் பார்க்கிறான். தங்கையுடன் இருக்கும் அவளும் அவனுடன் ‘ஈஷி’க்கொண்டே இவனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டே இருக்கிறாள். மறுபடியும் அன்று இரவு வருமாறு அவள் சாம்புவை ‘அன்போடு’ அழைக்கிறாள். அப்படியே எனச் சொல்லி வீடு திரும்புகிறான். வேம்புவுக்கு ஏதோ சந்தேகம் உள்ளுக்குள் இருந்தாலும் அவளும் காண்பித்துக் கொள்ளவில்லை. இதன் மத்தியில் மத்தியில் இவன் வீட்டுக்கு முதல்நாள் வந்து இருநூறு ரூபாய் கொடுத்த அந்த இருவரும் அவனிடம் ஏதாவது துப்பு துலங்கியதா என்று கேட்கிறார்கள். ஆனால் என்ன சொல்வது அவர்களிடம். இன்ஸ்பெக்டர் இரவு கூறிய ஜார்ஜ் டவுன் அம்பாள் கோயில் கொள்ளை கேஸ் ஞாபகம் வருகிறது. தான் அந்தக் கேஸ்’ இல் பிஸியாக நடத்துவதாகவும், இவர்கள் விஷயத்தையும் கவனிப்பதாகவும் பொய் சொல்லி கழட்டி விடுகிறான். மத்தியானம் ஒரு தூக்கம் போடும்போது போன் வருகிறது. வேம்பு எடுக்கிறாள். எதிர் போனில் அந்த சகுந்தலா எப்படியாவது இரவு வரவேண்டுமென்று அழைப்பு விடுப்பதைக் கேட்டு வேம்புவுக்கு ஏதோ புரிகிறது. குறட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்த கணவன் பேசுவது போன்ற குரலில் ‘அப்படியே’ என்று சொல்லி போனை வைத்து விடுகிறாள். மாலை ஷோக்காக டிரஸ் செய்து கொண்டு ஒரு தலைப்பாகையும் வைத்துக்கொண்டு, வேம்புவிடம் ஒரு நாடகம் போகிறேன், நடிக்கப்போகிறேன் என்று பொய் சொல்லி ஜாலியாக சகுந்தலா வீட்டுக்கு நடையைக் கட்டுகிறான். கணவன் புளுகுகிறானே என்று பயப்பட்ட வேம்பு உடனே போனில் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ‘கம்ப்ளைண்ட்’ அவனைப் பற்றிப் போட்டு வைக்கிறாள். மனைவி கணவனிடம் சொல்ல இன்ஸ்பெக்டர் கோபாலனும் அவளுக்கு உதவுவதாகவும், சாம்பு அப்படிப்பட்டவன் இல்லையென்றும் ஆறுதல் சொல்கிறார். இனி தேவன் எழுத்தால் தொடரலாமா..
சூர்யா பவன் ஹோட்டலைத் தாண்டும்போது சாம்பு தயங்கி நின்றான். அதனுள்ளிருந்து இரண்டு பேர்வழிகள் இறங்கி வெளியே வந்தார்கள். பெரிய விளக்கொளியில் அவர்கள் முகத்தைச் சாம்பு நிமிஷத்தில் கண்டுகொண்டான் (200 ரூபாய் கொடுத்த பழைய ஆசாமிகள்தான்). டவாலி உடையிலிருந்த சாம்புவைக் கவனிக்காமலே அவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள்.
“கிடக்கிறான் சாம்பு! அவன் எதையும் கண்டுபிடிப்பான் என்று தோன்றவில்லை. என்னைக் கேட்டால் ஏதானும் தொந்தரைதான் வருமென்று இருக்கிறது”
“பின் என்னதான் செய்யலாம்?”
“இனிமேல் உழப்புவதில் பிரயோசனம் இல்லை. இன்றைக்கு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு அந்த ஷண்முகசுந்தரம் வீட்டிலே புகுந்து இரண்டு பெண்பிள்ளைகளையும் கட்டிப்போடுகிறேன். விரலில் பந்தம் கட்டிக்கொண்டு கேட்டேனானால் கதறிக்கொண்டு விஷயத்தைக் கக்கி விட மாட்டார்களா?”
சாம்பு அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. கோட்ஸ் ரோடுக்குப் பறந்தான். போனதுமே விஷயத்தை சகுந்தலாவிடம் சொன்னான். “சாமான்கள் கிடக்கிறபடிம் கிடக்கட்டும்! நீங்கள் நம்ம வீட்டுக்கு வாருங்கள். முக்கியமானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றும் யோசனை வேண்டாம்!” என்றான்.
தங்கை ஸ்டவ்வை மூட்டி கொஞ்சம் ஓவல்டின் போடுவதாகச் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.
சகுந்தலா சாம்புவை நெருங்கினாள். “உங்கள் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்றாள் உணர்ச்சியுடன்.
சாம்பு அவளை அணைத்தாற்போல் நின்றான். ஒருபுறம் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருபுறம் விவரிக்க முடியாத ஆனந்தம். “சகுந்தலா! அவசியமானால் உனக்கு ஆண் வேஷம் போட்டுக்கூட உன்னைக் கொண்டு போவேன்! பயப்படாதே!” என்றான் சாம்பு.
சகுந்தலா சாம்புவை விறைக்கப் பார்த்தாள். அவன் முகத்தில் வழிந்த அசட்டைப் பார்த்து, கபகபவென்று சிரித்து விட்டாள். தங்கை ஓவல்டினைக் கொண்டு வைத்துவிட்டு கதவைச் சார்த்திக்கொண்டு மாடிக்குப் போனாள்.
சகுந்தலாவுடன் நெருக்கமாக ஹாலிலிருந்த ஸோபாவில் உட்கார்ந்துகொண்டான் சாம்பு. வேம்புவின் நினைவு மாறி மாறி வந்தது. பரமசாதுவாச்சே அவள்! அவளுக்கு துரோகம் செய்வதா? ஆனால் சகுந்தலாவின் கண்களோ அவன் மூளையை மயக்கின. ஒரு கையை அவள் கழுத்தில் அணையவிட்டு, பவுடர் பூசின கன்னத்தை இச்சையுடன் வருடினான். இதென்ன கூத்து. சொரசொர என்கிறது கன்னம்! வேம்புவின் கன்னம் இப்படி இராதே!
வெடுக்கென்று அவன் கையை உதறி எறிந்துவிட்டு எழுந்தாள் சகுந்தலா. “போக்கிரி கழுதை! உன் அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறாயா?” என்று கர்ஜித்தாள். குரல் முற்றும் மாறி இருந்தது. சாம்பு நடுநடுங்கிப் போனான. ‘ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது.. ஓடிவிடு! என்று அந்தராத்மா கூறிற்று. ஒரே பாய்ச்சலில் ஓடி வாசற்கதவைத் திறந்துவிட்டான்.
மின்சார விளக்கு வெளிச்சத்தில் பளபளவென்று மின்னல் வேகத்தில் ஒரு சூர்க்கத்தி அவனைத் தாண்டி வாசலில் விழுந்தது. அப்போதுதான் நுழைந்த இன்ஸ்பெக்டர் கோபாலன் குனிந்து அதை எடுத்தார். “என்ன ஓய்! கத்தி விளையாட்டு நடக்கிறதோ இங்கே! ஹூம்..” என்றார்.
சாம்புவின் நா குழறிற்று. “அவள் கன்னம் சொர சொரவென்றிருக்கிறது என்று தொட்டேன்.. கோவிச்சுண்டுட்டாள்” என்று உளறினான்.
கோபாலன் புருவத்தை நெரித்துக்கொண்டு பார்த்தார். சகுந்தலா ஸ்தம்பித்துப் போய் நின்றாள். அந்தச் சமயத்தில் தங்கை, ஷண்முகசுந்தரத்தின் படத்துடன் வந்தவள் கல்லாகச் சமைந்து போய் விட்டாள்.
“ஏன் சாம்பு! யாரையோ காணோமென்று வந்தீராமே.. எனக்கானால் வைரத்தைப் பார்த்துத் தருகிறேன் என்கிறீர். ஹூம்..” என்று கேட்டார்.
“அதோ! அந்தப் படத்தை முதலில் கையில் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான் சாம்பு.
“அடப் பாவி மனுஷா! என்றாள் சகுந்தலா. அவள் குரல் இப்போது புருஷக் குரலாக இருந்தது.
“ஓஹோ! அப்படியா?” என்று இன்ஸ்பெக்டர் சகுந்தலாவின் ஜடையைப் பிடித்து இழுத்தார். பின்னல் கையோடு வந்துவிட்டது. சாம்பு மூக்கைத் தடவிக்கொண்டு அசட்டு விழி விழித்தான். போட்டோவிலிருந்த ஷண்முகசுந்தரம்தான் அது. அவனைக் காதலித்த’ சகுந்தலா ஆண்பிள்ளையா?’
“ஓய் சாம்பு! இது பெண்பிள்ளை அல்ல என்பதை ஊர்ஜிதம் பண்ணிக்கொள்ளத்தான் மெல்ல மோவாய்க்கட்டையைத் தடவிக்கொடுத்தீரோ? அதில் கோபம் வந்துவிட்டதாக்கும் இவருக்கு!” என்று சிரித்தார் கோபாலன்.
போட்டோவின் ஃபிரேமை பிரித்தபோது, மெழுகை உள்ளே சமமாக ஊற்றி அதில் எல்லா வைரக் கற்களையும் பதித்திருந்தது. சாம்புவுக்கு ஓவல்டினில் மயக்க மருந்தைக் கொடுத்திருப்பாள் என்றே தைரியமாக தங்கை படத்தைக் கொண்டு வந்திருக்கிறாள். ஆனால் நடந்திருந்தது வேறு.
(கோயில்) திருட்டுக்குக் காரணமாய் இருந்தவர்கள் இரண்டு பக்தர்கள்தான். பக்கத்து பிரகாரத்தில் ‘பஜனை’ பண்ணி ஜனங்கள் கவனத்தை ஒருபுறமாக இழுத்துவிட்டு அந்தச் சமயத்தில் ஷண்முக சுந்தரத்தைக் கொண்டு எல்லா கற்களையும் திருடவைத்திருக்கிறார்கள். தங்கள் மீது சந்தேகமே வராமல் இருப்பதற்காக குருக்கள் வீட்டில் ஒரே ஒரு நகையை மட்டும் வீசியிருக்கிறார்கள். ஆனால் ஷண்முகசுந்தரத்துக்கு எல்லாக் கற்களையும் சேர்ந்தாற்போல பார்த்த போது தானே அவற்றை வைத்துக் கொள்ளவேணுமென்ற ஆசை வந்துவிட்டது. தான் ஓடி விட்டதைப் போல பாசாங்கு செய்து பெண் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்து மனைவியுடன் ஓடிவிட யத்தனம் செய்திருக்கிறான். சாம்புவிடம் கேஸ் வந்துவிடுமென்று பயந்து, அவனை முதலில் மடக்கிப் போடவே இந்தக் காதல் நாடகம் நடத்தி இருக்கிறான்.
“அந்த பக்தர்களுக்கு என்ன ஏற்பாடு? என்றார் கோபாலன்.
“அவர்களையும் இங்கே பன்னிரெண்டு மணிக்கு வரவழைக்க இந்த மனுஷன் சூழ்ச்சி செய்திருக்கிறான்” என்றான் ஷண்முகசுந்தரம் குரோதமாக.
”ஏன் காணும்! சாம்பு! என்னை இப்போ இங்கே வரவழைக்கக்கூட சூழ்ச்சிதான் செய்தீரோ வேம்புவிடம் சொல்லி!” என்றார் கோபாலன்.
அன்றிரவு சாம்பு வேம்புவிடம் தான் ஏகபத்தினி விரதத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்கு நிகர் என்று மன்றாடிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“எனக்குத் தெரியாதா.. நீங்கள் சொல்லவேண்டுமா? எனக்கு சந்தேகமே கிடையாதே” என்றாள் வேம்பு.
ஒவ்வொரு சாம்பு கதையும் ஒவ்வொரு மாதிரிதான். இந்த சாம்புவை முதல் முதல் சித்திரமாக வரைந்தவர் ராஜு என்றும் பின்னால் வந்த சித்திரக் கதைக்கு ‘கோபுலு’வும் என்று முன்பேயே குறிப்பிட்டிருந்தேன் இல்லையா. ஆனால் சாம்புவுக்கு எத்தனை அதிர்ஷ்டமோ.. நிறைய சித்திரக் காரர்கள் மிகவும் இஷ்டப்பட்டு வரையப்பட்டவன் என்று தெரிகிறது. பின்னால் (1991 ஆம் ஆண்டில்) சாம்பு வை முழுநீளப் புத்தகமாகக் கொண்டு வந்த அல்லையன்ஸ் கம்பெனி, துப்பறியும் சாம்பு அட்டைப்படத்தில் பிரபல ஓவியர் நடனம் அவர்களின் கைவண்ணத்தில் சாம்புவைக் காட்டினர். சாம்புவின் ஒவ்வொரு கதைக்கும் ஓவியர் ‘கலா’ மூலம் கருப்பு வெள்ளைப் படத்தில் சாம்புவைக் காட்டி மகிழ்வித்தனர். தேவன் கல்கி காலங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இன்னொரு முக்கியமான ஓவியர் சில்பி. இத்தனைக்கும் இவரும் தேவனும் நண்பர்கள் என்பதால் இவர் சாம்புவை ஓவியமாக வரைந்திருக்கிறாரா என்று பார்க்கவேண்டும். ஆனால் சில்பியுடன் தேவன் இணைந்து ஆனந்த விகடனில் தொடராக வழங்கிய அந்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரைகளை எத்தனை போற்றினாலும் கலைத்தாயானவள் திருப்தி அடையமாட்டாள்தான்.. இதைப் பற்றியும் ஒரு சுற்று வருவோம்.
படங்கள்: சாம்பு வண்ணப்படம் : நடனம்
சாம்பு கருப்பு வெள்ளை படங்கள் : கலா
நன்றி : அலையன்ஸ் கம்பெனி.
11
தேவன் நூறு - 11
ஒரு நல்ல திரைப்படம் எனும்போது, நல்ல கதையமைப்பு, அளவான திரைக்கதை, மனதில் பதியும்படியான வசனம், திறமையான டைரக்ஷன், ஒலி, ஒளி, இசை, கருத்தாழம் மிக்க பாடல்கள், அதற்கும் மேலாக திறமையான நடிக நடிகையர்கள் இவைகள் எல்லாம் அழகுற சேர்ந்தால்தான் அந்தத் திரைப்படம் வெற்றிகரமாக அமையும். பல நாட்கள் மக்களால் பார்க்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் புகழின் உச்சியை அடையும். ஆனந்த விகடனில் வெளிவந்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கூட ஒரு நல்ல திரைப்படம் போலத்தான். ஆனால் இந்தத் தொடரில் இரண்டு பேர், ஒருவர் தேவன் இன்னொருபேர் சில்பி, இருவர் மட்டுமே சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தை வாசகர்களிடையே இத்தொடர் மூலம் ஏற்படுத்தினர் என்று சொல்லலாம்.
1948 ஆம் ஆண்டில் ஓவியர் சீனிவாசன் என்னும் ’சில்பி’யைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில் கடவுளர் மற்றும் சிற்பச் செல்வங்களை அப்படியே சித்திரத்தில் கொண்டுவந்து பதிப்பித்தால் என்ன என்ற ஒரு திட்டம் தேவன் மூளையில் உதித்திட, அதை உடனடியாக செயலில் காட்டினார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ சிறப் எழில் கூட்டிய எல்லாக் கோயில்களையுமே தென்னாட்டுச் செல்வங்களில் காணலாம். முக்கியமாக தஞ்சை, தாராசுரம், திரிபுவனம், ஸ்ரீரங்கம், பேரூர் போன்ற கோயில்களில் உள்ள தெய்வங்களோடு அங்கு கொஞ்சும் எழிலுடன் காணக்கிடைக்கும் சிறப்ங்களையும் கோட்டோவியமாகக் காண்பிக்கப்பட்டது. தென்னாட்டுச் செல்வங்களில் தலையானதாக சில்பியின் வரைவுகள் போற்றப்பட்டன. மேலே குறிப்பிட்டது போல திரைக்கதை வசன டைரக்ஷனை தேவன் பார்த்துக் கொள்ள ஏனைய முக்கிய வேலைகளை சில்பி பார்த்துக் கொள்ள, இந்தத் தொடர் வெளிவர வெளிவர ஆனந்த விகடன் பத்திரிக்கையின் தரம் எங்கோ மேல்வானத்து உச்சியில் ஏற்றப்பட்ட காலங்கள் கூட அவைதான் என்றே சொல்லலாம். அந்தச் சமயத்தில் ஆனந்த விகடன் நிறுவனமான ஜெமினியின் ’சந்திரலேகா’ திரைப்படம் வேறு திரையுலகத்தை கலக்கிக்கொண்டிருந்தது என்பதையும் வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் என்னதான் திறமையான டைரக்டர், நல்ல திரைக்கதை போன்றவை பெரும்பங்கு பெற்றாலும், அதை மக்களுக்கு வெளிப்படுத்தும், மக்கள் பார்த்தவுடன் ரசிக்கும் வகையில் நடித்திட்ட நடிகர் மட்டுமே பேரும் புகழும் அதிகமாகப் பெறுவார்கள். கூடவே இசையும் பாட்டும் கனஜோராக இருக்கும் பட்சத்தில் பாடகர்களும், இசையமைப்பாளரும் பெரும் புகழ் பெறுவார்கள். ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில் நடிப்பது, இசை, ஒளியாக்கம், பாடல் எல்லாம் ஓவியர் சில்பியுடையதாகும். திரைக்கதை வசனம் டைரக்ஷன் என்பது தேவன் அவர்களுடையதாகும். ஓவியர் சில்பியின் முழுப் பரிமாணத்தை வெளிப்படுத்தியதாகும். ஆனாலும் தேவன் இந்தக் கட்டுரைகளில் எந்தவொரு இடத்திலும் தன் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை என்பது ஒரு சிறப்பு.
தென்னாட்டுச் செல்வங்கள் ஏறத்தாழ 13 வருடங்கள் (சிற்சில இடைவெளிகளுடன்) ஆனந்த விகடனில் தொடராகச் சென்றதாக பேராசிரியர் பசுபதி அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஓவியர் கோபுலு இந்தத் தொடரைப் பற்றித் தெரிவிக்கையில் தேவன் இருந்தவரை தேவனே தன் கைப்பட கட்டுரை எழுதியதாகத் தெரிவிக்கிறார். (எங்களை வழி நடத்தியவர் எழுத்தாளர் தேவன். சில்பியின் தெய்வீக ஓவியங்களுக்கு அவர் பரமரசிகர். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்கும் விக்கிரங்களின் நேர்த்தியை, சிற்பங்களின் அழகை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1948-இல் ஆனந்த விகடனில் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரைத் தொடங்கத் திட்டமிட்டார் ‘தேவன்’. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பிரபல கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைவதற்கு சில்பியைத் தயார்படுத்தினார். சில்பியும் மிக ஆர்வத்தோடு, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனே காஞ்சிபுரம் சென்று, காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார். “ ) (http://s-pasupathy.blogspot.in/2012/11/1_30.html) “ (சில்பி) தான் வரைந்த சிலைகளைப் பற்றிய குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் கொண்டுவந்து , அந்தப் படங்களைப் பற்றி தேவனிடம் விளக்கிச் சொல்வார். தேவன்தான் அதை நயமாக எழுதுவார்” (http://s-pasupathy.blogspot.in/2013/03/8.html)
அதே போல தேவன் மறைந்த பின்னரும் பிற்காலத்தில் இந்த தொடர்க் கட்டுரை வரத்தான் செய்தது. இந்தக் கட்டுரைகள் தேவனுக்குப் பிறகு பி.ஸ்ரீ. ஆச்சார்யா தொடர்ந்திருக்கிறார் என்பது பேராசிரியர் பசுபதியின் கருத்து. எழுத்தாளரான பி.ஸ்ரீ. ஆச்சார்யாவும் மிகச் சிறந்த புலனாய்வு எழுத்தாளர் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது ஆழ்வார்கள் புத்தகம் இன்னமும் எனக்கு ஒரு வேதப்புத்தகம் போல.
தேவன் தன் காலத்தில் எழுதினாலும் ஏன் தன் பெயர் போட்டுக்கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. ஏற்கனவே அவரது புதினங்கள் அவர் பெயர் போட்டு தொடராக விகடனில் வந்துகொண்டிருந்ததால் இப்படி இன்னொரு தொடருக்கும் வேண்டாமே என்று போடாமல் இருக்கலாம். தேவனின் முழுப்பரிமாணம் தெரியும் எழுத்துகளுக்கே தேவன் தன் பெயரைப் போடுவதும் உண்டு என்ற காரணமாகவும் இருக்கலாம். இந்தத் தொடர் ’தேவன்’ என்கிற தனிப்பட்ட எழுத்தாளரின் சொந்தம் அல்ல என்று அவர் நினைத்திருக்கலாம். அதே சமயம் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பவர் தன் புத்தகத்தில் எத்தனையோ பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். தேவன் பத்திரிக்கை ஆசிரியர் என்பதால் அவருக்குள்ள ஏகபோக உரிமையில் இந்தக் கட்டுரைத் தொடருக்கு தன் பெயர் போட்டுக்கொள்ளவில்லை என்று கூட சொல்லலாமோ என்னவோ. இருந்தாலும் இது தேவன் எழுத்துதான் என்பதற்கு ஒரு சான்று தருகிறேனே..
திரிபுவனக் கோயில் கட்டுரையில் ’கஷ்டப்படும் இஷ்ட தெய்வங்கள்’ என்ற தலைப்புப் பெயர் கொடுத்தவர் சில ஒதுக்கப்பட்ட சிலைகளைப் பற்றி வர்ணிக்கையில் இப்படி எழுதுகிறார்.
செல்லும் காலமெல்லாம் அதிகாரம் செலுத்திய தெய்வங்கெளெல்லாம் ‘இன்று கல்லானோம், செம்பானோம், எல்லாம் உங்கள் தயவினால்தான், உங்கள் நாஸ்திகத்தால்; அதற்கும் மேலாக உங்கள் ஆஸ்திக டம்பாச்சாரி விலாஸங்களால்தான்’ என்று சொல்லாமல் சொல்கின்றன.
ஒரு உடைந்த பிள்ளையார் சிற்பத்தில் மேலும் உடைக்கப்பட்ட ஒற்றைத் தந்தத்தைப் பற்றி எழுதுகிறார்.
“ஒரு காலத்தில் பூஜைக்கு உபயோகமாயிருந்து பின்பு கை கால்கள் பின்னமடைந்து, இப்போது இம்மண்டபத்தில் சிற்பக்காட்சிகளுக்கிடையேதான் இந்தப் பிள்ளையாரும் காட்சி தருகிறார்.
“வேதவியாஸர் மகாபாரதம் பாட விநாயகர் மேரு மலையை ஏடாகக் கொண்டு எழுதத் தொடங்கினாரே, அப்போது எழுத்தாணி இல்லையே என்று ஒரு கொம்பை (தந்தம்) முறித்துக் கொண்டு, ஒற்றைக் கொம்பராக இருந்தாரல்லவா? அந்த மிஞ்சிய தந்தத்தையும் உடைத்துவிட்டான் ஒரு புண்ணியவான்’.
இன்னொரு இடத்தில் இதே கோயிலில் நாயர் மண்டபத்தில் ஒரு இடிந்த சிலையைப் பற்றி வர்ணிக்கிறார்.
‘நாயர் மண்டபத்து மூலைத் தூணின் கீழ், பிரம்மாவுக்கு இடது பக்கத்தில், வெண்சாமரம் வைத்துக் கொண்டு, சொகுசாக நிற்கும் சேடியின் சிற்பமொன்று காணப்படுகிறது. இது உருவில் சிறிதாக இருந்தாலும் நுட்ப வேலைப்பாடுகளிலும், ஜடையழகிலும் வெண்சாமரத்தின் ;கூந்தல்; வேலைப்பாட்டிலும், ரஸிகருள்ளத்தைப் பெரிதும் கவர்கின்றது.
மண்டபத்தின் கீழ்ப்பாகம் புதைந்து கிடக்கிறது. நம்மவர்களின் சிற்பக் கலைச் சுவை எவ்வளவு தூரம் க்ஷீணித்துக் கீழ்ப்பட்டிருகிறது என்பதற்கு ஒரு அறிகுறி போலே”
ஆனாலும் மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் பரவிக்கிடந்த இந்த கோயில் சிற்பங்களை ஒரு சமூகத் தொண்டாகக் கருதி இப்படி ஒரு அழகிய விதத்தில் தொடராக பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வந்ததில் பெரும்பங்கு தேவனுக்கு உரியது. இந்தத் தொடரைப் படித்ததினால் சிற்பத் தெளிவு மக்களிடையே பெருகியது என்பதை விட நம் பழைய பண்பாட்டுக் கருவூலம் எச்சரிக்கையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வாவது படிக்கும் ஒவ்வொரு வாசகனிடத்தேயும் ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். சமூகம் சார்ந்ததாகவும் தெய்வீகம் மிக்கதாகவும், நம் கலாச்சாரத்தின் பெருமையை மிகப் பெரிய அளவில் ஒரு வாராந்தரி மூலம் கொண்டு சென்ற தேவன் அவர்களை நம் தமிழுலகம் என்றும் மனதில் நினைத்திருக்கவேண்டும். பத்திரிக்கையுலகில் இது பெரும் மாற்றத்தையும் உண்டுபண்ணியது என்றே சொல்லலாம். வாசகர்கள் எந்த நல்ல கருத்து கொண்ட எழுத்துக்களையும் எந்த நிலையிலும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையையும் பத்திரிகைகளிடையே இந்த சமுதாயத் தொடர் தோற்றுவித்தது. இல்லையானால் பதின்மூன்று வருடங்கள் இந்தத் தொடர்தான் தொடர முடியுமா?
ஆனால் தற்சமயத்தில் இன்றைய வாராந்தர பத்திரிகைகளின் நிலை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இன்று , பரபரப்பு செய்திகளையும் திரைப்படத்து நடிக நடிகைகளின் செய்திகளையும் அரசியல் ஆதாயச் செய்திகளுமே தங்கள் தலையாயப் பணியாகக் கொண்டு செயல்படும் வாராந்தரிகள், சமுதாயப் பணிகளிலும், தரத்திலும் – தேவன் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் – க்ஷீணித்துக் கிடக்கின்ற நிலையில் உள்ளன.. இப்படி ஒரு பொதுஜனத் தொண்டாக ஒரு உன்னதத் தொடராக வாராந்தரிகளில் எதுவும் வருவதில்லை என்ற ஏக்கம் எல்லோருக்குமே வருவதுண்டு.
இன்றும் கூட தென்னாட்டுச் செல்வங்கள் ஒவ்வொரு தொடரிலும் வெளிவந்த ஓவியர் சில்பியின் தெய்வீக ஓவியங்கள் மக்கள் இதயங்களைக் கவர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஓவியர் சில்பிக்கு இவைகளை ரசித்து ஆராதித்த மக்கள் ‘தெய்வீக ஓவியர்’ என்றே விருது கொடுத்து மகிழ்ந்தனர். ஓவியங்களின் உன்னத தரத்தை தமிழ்நாட்டில் வானுயர உயர்த்திய ஓவியர் சில்பி இன்றைக்கும் பல ஓவியர்களின் குருவாகத் தெரியப்படுகின்றார். இன்றைக்கு ஆனந்த விகடன் பதிப்பகம் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரை ஒரு புத்தகமாகக் கொண்டு வந்து – படைப்பு ஓவியர் சில்பி என்று பெரும்பெயர் கொடுத்து வெளியிட்டிருக்கிறது. நம் கட்டுரையிலும் தெய்வீக சில்பியின் ஒரு சில தெய்வீக ஓவியங்கள் உங்கள் பார்வைக்குக் கொடுத்திருக்கிறேன்.
இந்த ஓவியங்களில் புத்தக வண்ணத்தில் உள்ளது பேராசிரியர் பசுபதி அவர்களின் வலைப்பகுதியிலிருந்து அவர் அனுமதியோடு கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டோவியங்களுக்கு நன்றி : ஆனந்த விகடன்.
இனி தேவனின் கட்டுரைகளுக்கும், சிறுகதைகளுக்கும் வருவோம். தேவன் கட்டுரைகளும் சிறுகதைகளும் மட்டுமே ஆனந்தவிகடன் பத்திரிகையில் கல்கி ஆசிரியாக இருந்தவரை எழுதிக் கொண்டிருந்தார். 1939 இல் ஆரம்பித்த மைதிலி தொடர்கதை ‘நாரதர்’ பத்திரிகையில்தான் வெளிவந்தது. ஆனந்தவிகடனில் அவர் உதவி ஆசிரியராக இருந்தபட்சத்தில் ஏறத்தாழ முதல் எட்டாண்டு காலத்துக்கு தேவனின் கட்டுரைகளும் சிறுகதைகளும் வந்து வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. கட்டுரைகளில் அந்தக் காலப் போக்கும், அரசியலும், முக்கியமாக உலகநாடுகளின் அரசியலும், இந்திய பிரிட்டிஷ் அரசியலும் பேசப்படுவதைப் பார்த்தால் நமக்கு 1934 இலிருந்து அடுத்து வரும் ஆண்டுகளின் நிலை கண்கூடாகத் தெரியும். உலகப் போரைப் பற்றிய கிண்டலும் நக்கலும் கலந்த கட்டுரைகள் கூட தேவன் எழுதியுள்ளார். முதலில் சிறுகதைகளின் கதைக்கு வருவோம். பின் கட்டுரையையும் ஒரு கை பார்ப்போம்.
12
தேவன் நூறு - 12
”தேவன் தம் எழுத்து, சொல் எதனாலும் பிறர் மனதிற்குத் துன்பம் புரிந்தவரன்று. அவர் ஹாஸ்யம் என்றும் பிறர் மனதை நோகக்கூடாது என்று மற்ற ஹாஸ்ய எழுத்தாளர்களுக்கு அவர் முன்மாதிரி” என்று தேவன் மறைந்த வேளையில் திரு மீ.பா.சோமசுந்தரம் உரையாற்றினார். அவர் சிறுகதைகளில் பொழியும் ஹாஸ்ய ரசம் அப்படிப்பட்டதாகும். ஒரு பத்திரிக்கை துணை ஆசிரியர் என்கிற முறையில் அவர் எழுதிய சிறுகதைகளாகட்டும், பத்திரிக்கை ஆசிரியர் என்ற வகையில் விகடனில் எழுதிய சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ரசிக்கக் கூடியவையாகவே இருந்தன. அவர் எழுதிய சிறுகதைகள் விச்சுவுக்குக் கடிதங்கள், ஜாங்கிரி சுந்தரம், சீனுப்பயல், ராஜாமணி போன்ற தலைப்புகளில் தொகுப்புகளாக பின்னாட்களில் வெளியிடப்பட்டன. நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியதாக அல்லையன்ஸ் பதிப்பகத்தினர் தங்கள் தேவன் புத்தகமொன்றில் எழுதியுள்ளனர்.
ஜாங்கிரி சுந்தரம் எனும் நகைச்சுவை கதையில் கோபால்சாமி என்பவன் தன் ஆப்த நண்பன் விரும்பும் யுவதியை பட்டணத்தைச் சேர்ந்த 54 வயதான ஹோட்டல்காரர் ஜாங்கிரி சுந்தரம் (ஜாங்கிரியில் பிரபலமானதால் அந்தப் பெயர்) கலியாண்ம் செய்துகொள்வதாகத் தெரிந்ததும், தன் ஆத்மநண்பனுக்காக பல் வைத்தியர் போல வேடமிட்டு, பல்வலியால் துடிக்கும் ஜாங்கிரி சுந்தரத்தின் கீதம் இருக்கும் பற்களையெல்லாம் கழட்டி விட்டுப் பழி வாங்கும் ஒரு நகைச்சுவைக் கதை. கடைசியில் அந்த ஆப்தநண்பனானவன் தன் பழைய காதலியை மறந்து புதியவளை ஏற்கனவே தெரிந்தெடுத்துவிட்டது என்ற விஷயம் இந்த கோபால்சாமிக்குத் தெரிந்ததும், பழிக்குப் பழியாக அந்த ஜாங்கிரி சுந்தரத்துக்குச் செய்ததை தன் நண்பனுக்குச் செய்யப் போவதாக பல்லைக் கடித்துக் கொண்டுப் போவதாக கதையை முடிப்பார் தேவன்.
நவரசங்களும் கலந்த சிறு கதைகளைப் படைத்திருக்கிறார் தேவன். முசாபரி பங்களா, பேயடைந்தவீடு, ஜவந்திக்கோட்டை மர்மம் எனும் பேய்க்கதைகளும் இவைகளில் அடங்கும். மல்லாரிராவ் கதைகள் அந்தக் கால கட்டத்தில் வாசகர்களின் உள்ளங்களை வெகுவாகக் கவர்ந்தவை என்று சொல்வர். என்னை மிகவும் கவர்ந்த தேவனின் ஒரு சிறுகதையை கீழே தருகிறேன். ‘அறியாமல் பிடித்த மோகம்’ எனும் ஒரு கதை.. ஒரு பஸ்ஸில் உட்கார்ந்தவனின் மனநிலையை அப்படியே நகைச்சுவையாகக் கொண்டு வரும் தேவனின் எழுத்துக் கலையை எவ்வளவுதான் புகழ்வது.. இதோ அவர் எழுத்தில்..
செவத்த பையன், பிடிவாதக்காரன் தான் என்பது அவன் முகரக் கட்டையைப் பார்த்தவுடனேயே நன்றாய்த் தெரிந்தது.
அவன் வந்து, எனக்கு முன்பு இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்ட உடனேயே வாயோடு பாட ஆரம்பித்து விட்டான். பஸ்ஸும் கிளம்பிற்று. அப்படி இரைச்சல் போட்டும் பாடவில்லை. ஏதோ தன்னுடைய ஆத்ம திருப்திக்காகப் பாடிக்கொள்வது போலவே தோன்றிற்று.. பாடிக்கொண்டே முகத்தை அங்கும் இங்கும் நீட்டி, சுற்றி நடக்கும் காரியங்களைக் கவனித்தான்.
பாட்டு ஒரே மாதிரியாக இருந்தது. திருப்பித் திருப்பி ‘மாயப் பிரபஞ்சத்திலே ஆனந்தம் வேறில்லை’ என்று சொல்லிக்கொண்டு இருந்தானேயொழிய, மேலே அடுத்துப் போகவே இல்லை.சில சமயம் தடித்த ஊமைக் குரல்; ஒரு சமயம் கீச்சென்ற குரல், ஒரு சமயம் வாயில் டிக்கட்டைக் கௌவ்விக் கொண்டே….. இப்படியாக அந்த ஒரே அடியைப் பாடினான்.
கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தேன். தாங்கமுடியவில்லை. பாட்டு என்றால் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் என்னமோ இந்தப் பாட்டை இந்தவிதமாக கேட்கப் பிடிக்கவில்லை. ஆகவே அவன் பக்கம் திரும்பி கோபமாக விறைத்துப் பார்த்தேன். அவன் பதிலுக்கு, உனக்கும் அப்படித்தான் என்று சொன்னது போல விறைத்துவிட்டு மறுபடி விடாமல் பாடினான்.
இரண்டு நிமிஷம் பொறுத்தேன். பிறகு ”ஏனப்பா? உனக்கு வேறு ஒரு பாட்டும் ஏதும் தெரியாதா இதைத் தவிர?” என்று கேட்டேன்.
“தெரியும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் “மாயப்பிரபஞ்சத்தில்” பாடினான்.
“இதைப் பாடித்தான் ஆகவேண்டுமோ இப்போது?’
”சும்மா பாடறேன்”
”சற்றுப் பேசாமல் பாடாமல்தான் இருந்து பாரேன்!”
”சரிதான்,” என்றான்.
ஆனால் மேலே பாடிக்கொண்டே போனான்.
“என்ன சத்தம் ஐயா?” என்று சள்ளென்று விழுந்தேன்.
“நான் டிக்கெட் வாங்கியிருக்கிறேன்.. என் இஷ்டப்படி இருக்கிறேன்..”
”நானும்தான் வாங்கியிருக்கிறேன்.. ஆனால் உன் மாதிரி இப்படிப் பாடுகிறேனா?”
“சரிதான் ஸார்!”: என்றான். என் வார்த்தையை ஒப்புக்கொண்டு, ஆனால் விடாமல் மேலே பாட்டு மாத்திரம் ஊமைக் குரலில் கேட்டது. “அடப் பழிகாரா!” என்று நினைத்துக் கொண்டேன்.
எனக்கு அடுத்தாற்போல் ஒரு ஆசாமியும் அவன் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த ஆசாமி என் வாக்குவாதத்தைக் கவனித்து, ’நீங்கள் சொன்னது சரிதான்’ என்றான். பாடுபவன் திரும்பி ஒரு புன்னகை செய்துவிட்டு, ’சரிதான்’ என்றான். பிறகு “மாயப்பிரபஞ்சத்திலே” என்று ஆரம்பித்தேன்.
“உன்னைப் பாட்டை நிறுத்தப் பண்ணுகிறேன் பார்!” என்றேன் ஆத்திரத்துடன். “அப்படித்தான் செய்யணும்” என்றாள் அந்த ஸ்திரீயும்.
“சரி, எங்கே அப்படி செய்யுங்கள் பார்ப்போம்?” என்றான் பாடுபவன்.
“ஆமாம், நிறுத்து பாட்டை” என்றார் கோடியிலிருந்த இன்னொரு பேர்வழி.
“நான் பாட்டுக்குப் பாடினால் உனக்கு என்ன ஐயா? என்று கேட்டான் குற்றவாளி.
“பிறத்தியாருக்கு உபத்திரவம் செய்யும்படியாகப் பாடக்கூடாதுதான்”
“யாரையா சொன்னது அப்படி?”
“அப்படி சட்டம் இருக்கு”
“எங்கே அந்த சட்டம்?”
“உன்னை மென்னியைப் பிடித்து கோர்ட்டுக்குத் தள்ளிக்கொண்டு போனால் தெரியும் இருக்கற இடம்!”
“எனக்கு லக்ஷயமில்லை”.. மறுபடி ‘மாயப் பிரபஞ்சத்தில்’ என்று பாட்டு ஆரம்பித்தான்.
“ஏண்டா, உனக்கு சொரணை கிடையாதா?” என்று கேட்டேன்.
“அதெல்லாம் செத்துடுத்து ஸார்!” என்றார் பக்கத்து ஆசாமி.
“அப்படியே மண்டையில் ஒரு தட்டு தட்டுங்களேன்!” என்று சிபாரிசு செய்தார் கோடி ஆசாமி.
“ஓஹோ”! என்றான் பாடகன். ஆனால் மறுபடியும் பாட்டுச்சத்தம் கேட்டது.
“நீ நிறுத்த முடியாதா?” என்று சற்று அடக்கமாக கடைசிமுறையாகக் கேட்டேன்.
“உனக்கு நான் என்னய்யா கெடுதல் செய்தேன்.. நான் பாட்டுக்கு..”
“பார், எங்களுக்கெல்லாம் எவ்வளவு அசௌகரியமாக இருக்கிறது. இதற்கு நியூசென்ஸ் என்று பெயர். ‘நியூசென்ஸ் செய்கிற பேர்களையெல்லாம் என்ன செய்வார்கள் தெரியுமா? நன்னடத்தை ஜாமீன் வாங்கிக்கொள்வார்கள். அப்படிக் கொடுக்கமுடியாத பேர் ஜெயிலுக்கும் போகவேண்டியதுதான்!” என்றேன்.
“கொயிட் ரைட்” என்றான் பக்கத்திலிருந்த மனிதன்.
“நாலு நாள் அங்கே போய்க் கல் உடைத்தால் இந்தப் பாட்டெல்லாம் பறக்காதோ” என்றார் கோடியிலிருந்த பேர்வழி.
பாடிக்கொண்டிருந்தவன் உண்மையிலேயே அரண்டுவிட்டான். சற்று நேரம் முகத்தைக் கோட்டான் மாதிரி வைத்துக்கொண்டிருந்தவன் பஸ் நிற்குமிடம் ஒன்று வந்தவுடன் எழுந்து பஸ்ஸை விட்டு கீழே இறங்கினான்.
வெற்றி அடைந்துவிட்டேன் என்பதில் எங்களுக்கு அசாத்திய சந்தோஷம். முக்கியமாக நானே ஊக்கமாய் சிரத்தை எடுத்துக் கொண்ட செயல் இல்லையா.. பத்து நிமிஷம் ஆயிற்று. என் தோள் பட்டையைப் பின்னால் இருந்த ஆசாமி மெதுவாகத் தொட்டார். திரும்பிப் பார்த்தால் என்னையே அவ்வளவு பேரும் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது.
“என்ன?” என்றேன்.
“நீங்களும் கொஞ்சம் ‘மாயப் பிரபஞ்சத்திலே’ பாடுவதை நிறுத்துகிறீர்களா, சார்?” என்று கேட்டார் அந்த ஆசாமி.
“ஓஹோ! எனக்குத் தெரியவே தெரியாதே!” என்று நானும் அடுத்த இடத்தில் இறங்கினேன்.
விச்சுவுக்குக் கடிதங்கள் என்பது ஒரு தாய்மாமா, தன் சகோதரி மகன் இண்டர் (12ஆம் வகுப்பு) படித்துமுடித்த வுடன் அவன் என்னென்ன துறைகள் தேர்ந்தெடுக்கலாம் என்பதை கடிதம் மூலமாக, அவனுக்கு எழுதி அனுப்பும் அறிவுரைக் கதைகள் அவை. தேவனின் அறிவுரைகளாக மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவே நினைக்கத் தோன்றும். குறிப்பாக ஆசிரியர் படிப்பு, பொறியியல், மருத்துவத்துறைகள் தேர்ந்தெடுப்பது பற்றியும் அந்தத் துறைகள் அன்றைய நிலையில் எப்படி இருந்தன என்பதையும் எழுதும்போது, அவர் எழுதியவை அனைத்தும் அறுபது வருடங்கள் ஆகியும் தற்போதுள்ள நிலைக்கு ஏராளமாகப் பொருந்துவதையும் நினைத்து ஆச்சரியத்தில் மூழ்குவோம். முக்கியமாக ஆசிரியர் என்பவர் புத்திசாலித்தனமான முறையில் ட்யூஷன் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கமுடியும் என்பதை வெகு இயல்பாக விளக்குவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.
விச்சு ஒருவேளை மேல்படிப்பை விட்டு வியாபாரத்தில் இறங்கலாம் என்றும் யோசனை தெரிவித்து தாய்மாமன் கடிதம் எழுதும்போது, அந்த வியாபாரத்தின் கஷ்டநஷ்டங்களை விவரிப்பதுடன் அவர்கள் விளம்பரத் துறையையும் ஏகத்துக்கு நக்கல் செய்து எழுதுவார் தேவன். ஒரு வியாபாரி ஒரு பெரிய கடையை ஒரு கடைவீதியிலே திறந்துவிட்டு இந்தக் கடைதான் நகரத்திலேயே பெரிய கடை என்று விளம்பரம் செய்வதாகவும், அதே வீதியில் இன்னொருவன் இன்னொரு கடை போட்டியாகத் திறந்து இந்த நாட்டிலேயே இந்தக் கடைதான் பெரிய கடை என்று விளம்பரம் செய்து திருப்தி அடைவதாகவும், சிலநாட்கள் கழித்து அதே வீதியில் இன்னொரு பெரிய கடை இவர்களுக்குப் போட்டியாக எழுந்தது. அவன் என்ன விளம்பரம் செய்தான் தெரியுமா – இந்தக் கடைவீதியிலேயே எங்கள் கடைதான் பெரிய கடை!! தேவன் இப்படி எழுதிவிட்டு சாமர்த்தியாமான வியாபாரத்தொழிலைப் பற்ரி மென்மேலும் நகைச்சுவையாக விளக்கும் கதை அது. கடைசியில் விச்சு கல்யாணமும் செய்துகொண்டால் நல்லதுதான் என்று எழுதும்போது மனைவியின் அருமை பெருமைகளை கவிமணி எப்படி கவிதையில் எழுதியிருப்பார் என்பதை விச்சுவுக்கு விவரிப்பார். மனைவி என்பவளை எப்படிப்பட்ட தேவதையாக நினைத்து கவிமணியின் கவிதைகளைத் தேடிப்பிடித்து எழுதுகிறார், படியுங்களேன்..
“காரியம் பார்ப்பாள் கணக்கும் எழுதுபவள்
காய்கறியாக்கவும் கெட்டி அவள் கை பட்டால்
வேம்பும் கரும்பல்லவோ ருசி..
ஆபத்து வேளையில் அறிவு சொல் மந்திரி
அரும் பிணிக்கு அவளே சஞ்சீவி.
துன்பம் வரும்போது ஆறுதல்
தரித்திரகாலத்தில் அருநிதியாம் அந்தத் தேவி.
அங்குமிருப்பாள், பின்னிங்குமிருப்பாள் உம் அண்டையிலும்
கட்டிக் காப்பாள் உமக்கு கற்பவருத்தமில்லாமல்
கவலைகள் அத்தனையும் தலையேற்பாள்..”
13
தேவன் நூறு - 13
எத்தனைதான் கல்கி அவர்களால் தேவன் பத்திரிக்கை உலகுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், தேவனை சற்று உயர்த்தியே பார்க்கிறார் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன். ‘அந்தக் காலகட்டத்திலேயே ‘அடுத்த தலைமுறை’ எழுத்தாளராக வாசகர்களால் பார்க்கப்பட்டு தன் எழுத்தால் அத்தனை பேரையும் கவர்ந்திருக்கிறார்’ என்று புகழ் பாடுகிறார்.. தமிழின் சார்லஸ் டிக்கின்ஸாக புகழ் பெற்றவர் தேவன் என்று எழுத்தாளர் அசோகமித்திரன் அவரை வர்ணித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு எழுத்தாளனும் தன்னுடைய தனித் திறமையாலும் சிந்தனையாலும் மாறுபட்டே இருக்கிறான் என்றே சொல்வேன். ஆகையினால் ’இந்த எழுத்தாளர் அந்த சிறந்த எழுத்தாளரைப் போன்றவர்’ என்ற ஒப்புநோக்குதலுக்கு அப்பாற்பட்டு இருப்பவர்தான் நல்ல எழுத்தாளர். அந்த நல்ல எழுத்தாளர் வரிசையைச் சேர்ந்தவர்தான் தேவன்.
தேவன் எழுத்தில் மிளிர்ந்த ஒரு முக்கியமான தொடர் ‘அப்பளக்கச்சேரி’. இதைப் படித்தவர்கள் இதை எழுதியது தேவன் எனும் ஆண் எழுத்தாளர்தானா அல்லது யாரேனும் பெண் எழுத்தாளர் தேவன் பெயரில் எழுதி வருகிறாரா என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். காரணம், இந்த அப்பளக் கச்சேரியில் அலசப்படும் சம்பவங்களும், பெண்களின் மனநிலையையும் அப்படியே வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் நேர்த்திதான். இப்போதெல்லாம் அப்பளம் இடுவதென்பது குடும்பங்களில் மிகவும் குறைந்து போயிற்றோ என்னவோ.. ஆனால் அந்தக் காலக் கூட்டுக் குடும்பங்களில் அல்லது குழுமக் குடும்பங்களில் இந்த அப்பளமிடுதல் என்பது ஏறத்தாழ வீட்டுப் பெண்டிருக்கு ஒரு பண்டிகை போல இருக்கும். (என் சின்ன வயதில் எங்கள் கிராமத்தில் எனக்கும் பிடித்த நிகழ்ச்சி இது – காரணம் இந்த அம்மாக்கள் பாராத சமயத்தில் ருசிகரமான அந்தப் பச்சை அப்பள உருண்டைகள் ஓரிரண்டு அப்படியே ‘அபேஸ்’ செய்து சாப்பிடும் தருணங்கள் விசேஷமானவைதான்).
தேவனின் ’அப்பளக் கச்சேரியும்’ இந்த பெண்டிர்களின் கலாட்டா கச்சேரிதான். வயதான பாட்டிகளிலிருந்து இளம் வயது கன்னிப் பெண்கள் வரை கலந்து கொண்டு உலக அரசியல் விஷயங்களோடு அத்தனை வீட்டு வம்புகளுடன், குடும்பம், நோய்நொடி, ஆன்மீகம், பண்டிகை, லேடிஸ் கிளப் கிண்டல்களோடு அத்தனையும் ஒரு விளாவல் விளாவி கடைசியில் ‘ஒரு ரெஸிபி’ யுடன் செய்முறையும் கலந்துரையாடல்களாக நகைச்சுவையாக விளக்கப்பட்டு ஒவ்வொரு தொடர் கட்டுரையும் முடியும். அப்பளக் கச்சேரியில் தேவனின் எழுத்துகள் அந்தக் கால வாசகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதாக இன்னமும் தேவனின் ரசிகர்கள் சொல்லிப் பெருமைப் படுகின்றனர். பெண்கள் உள்மனதில் ஓடும் எண்ணங்கள், அவர்கள் ஏக்கம், அன்பு, பாசம், குமைச்சல், அக்கறை என அவர்கள் உள்ளத்தில் புகுந்து கொண்டு அத்தனை எண்ணங்களையும் வெளிக்கொணர்ந்தது என்பது ஒரு சாதனைதான். ஆழ்கடலில் ஆழத்தை அளந்தாலும் அளக்கலாம், ஆனால் பெண்களின் உள் மன ஆழத்தை யாராலும் அளக்கமுடியாது என சினிமா வசனங்கள் உண்டு. நாமும் நிறைய கேட்டிருக்கிறோம், இதையெல்லாம் பொய்யாக்கியவர் தேவன்.
அதே போல கடித இலக்கியம் தேவனால் பெருமைப் படுத்தப்பட்டது. அவர் காலத்தில் தமிழ் எழுத்துலகுக்கு சீரங்கத்து சீதனமாகக் கிடைத்த எழுத்தாளர் ‘குமுதினி’ இராமாயணத்தில் சீதா பிராட்டி தனக்கு ஒரு பட்டுச் சேலை வேண்டி தன் அம்மாவுக்குக் கடிதங்கள் நகைச் சுவையாக எழுதுவதாக ஆனந்த விகடனில் ஒரு கற்பனைக்கதை வந்தது. குமுதினியும் தேவனும் ஒரே வகை ரத்தம் போல. தேவன் கடிதம் வாயிலாக பல கதை கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஒரு நகைச்சுவை கடிதம் ஒன்று ‘செக்கு சமாசாரம் என்ற தலைப்பில் ’பணமில்லாத’ வங்கிக் காசோலைப் பற்றியது. இந்த காசோலை கொடுத்த அந்த கடன்காரர் தம் வங்கியில் அதற்கு தேவையான பணமில்லாமையால் முதலில் வேண்டுமென்றே தவறுகள் வைத்து எழுதிய ‘செக்’ ஒன்றை (ரூ 37 அணா 8 காசு 7 மதிப்பில்) கடன் கொடுத்தவருக்கு அனுப்புகிறார்.. இதற்கான சம்பந்தப்பட்ட அந்த இருவரிடையே கடிதப் போக்குவரத்து போராட்டம்தான் இந்தக் கதை. ஒவ்வொரு கடிதத்திலும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்வதும் குடும்ப நலன்கள் தெரிவிக்கப்படுவதுமல்லாமல் மறக்காமல் தவறான முறையில் எழுதப்பட்ட செக்கை மறுபடியாக சரியாக எழுதி கையொப்பமிட்டு அனுப்புக என்றும் இவர் கேட்பதும், அந்த கொடாக்கண்டர் அவர் பாணியிலேயே கடிதத்தில் உபயக்குசலோபரிகள் செய்து கொள்வதும் அதே சமயத்தில் ஏதோ சின்னத்தவறால் அந்தக் காசோலை அனுப்பிவிட்டதாகவும் எழுதிக் கடைசியில் அந்தக் கொடாக்கண்டர் இந்த இடைப்பட்டக் கடிதப் போக்குவரத்துக்கிடையே அவர் சௌகரியத்துக்கு வேண்டிய காலம் எடுத்துக் கொண்டு ஒழுங்கான காசோலையை ஒழுங்காக அனுப்பி வைப்பதாக முடியும். இதோ அந்தக் கடைசிக் கடிதம்
ஸ்ரீமான கில்லாடி சர்மாவிடமிருந்து சீமான் கிட்டி சுட்டி ஐயருக்கு!
தங்கள் கடிதம் கிடைத்தது. தங்களுக்கு இதுவரை நம்பிக்கை இல்லாமல் இருந்தது ஒருபுறமிருக்க, என்னுடைய ‘செக்’ நான் முதலில் கொடுத்தவுடன் பாங்கிக்குப் போயிருந்தால், அதில் கண்ட தொகையில் ரூ 37-8-7 குறையத்தான் தங்களுக்குக் கிடைத்திருக்கும். அதனால்தான் இவ்வளவு காலதாமதம் செய்யவேண்டி வந்தது… தங்கள் சம்சாரம் குழந்தைகள் சௌக்கியமா?”
தங்கள் அன்பார்ந்த
கில்லாடி சர்மா.
சரசுவுக்குக் கடிதங்கள், போடாத தபால் போன்றவை கடித இலக்கியங்களில் நிரந்தரமாக இருக்கவேண்டியவை. போடாத தபால் என்பதன் பெயரில் இருந்தே புரியும் அவை எப்படிப்பட்டதாக இருக்குமென்பது. இவை அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் நாட்டு நடப்புகளைக் கவனித்து எழுதப்படும் கடிதக் கட்டுரைகள்தானென்றாலும், ஒவ்வொரு நிகழ்ச்சியின் பேரில் தேவனின் அபிப்ராயங்கள் கூட நமக்கு விளங்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறிய கட்டுரை ஒன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டோரிக் கட்சி தாம்தான் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பூர்வகாரணம் என்று தங்களை பெருமையோடு பேசிக்கொண்டதை தேவன் தன் பாணியில் கிண்டல் செய்கிறார் ஒரு கடிதம் மூலமாக, இதோ உங்களுக்காக தேவன் எழுத்தில் (நன்றி – பேராசிரியர் பசுபதி அவர்கள்)
டோரிக்கட்சி அங்கத்தினர் திரு ரிச்சர்ட் பட்லர் அவர்களுக்கு
ஒரு இந்தியன் எழுதிக் கொண்டது:
பார்லிமெண்ட் சபையில் நீங்கள் எங்கள் தலைவர் நேருஜியைப் புகழ்ந்து பேசியதற்காக தொழிற்கட்சி அங்கத்தினர் மைக்கேல்புட் உங்களை பரிகாசம் பண்ணியதாக பத்திரிகையில் படித்தேன்.”இந்த டோரிக் கட்சி பதவியில் நீடித்திருந்தால் பிரிட்டிஷ் சர்க்கார் நேருஜியிடம் பேச சந்தர்ப்பமே ஏற்பட்டிராது. ஏனெனில் அந்தக் கட்சி அவரை சிறையில்தான் வைத்திருக்கும்” என்று மைக்கேல்புட் உங்களை ஏளனம் செய்தாராம். அதற்கு நீங்கள் மைக்கேல்புட் இந்தியாவைப் பற்றி நினைப்பதற்கு முன்பிருந்தே அதன் சுயாட்சிக்காக நீங்கள் பாடுபட்டு வந்ததாகவும், இந்திய அரசியல் சட்டம் 1935 இலேயே நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டீர்கள் என்று அறிந்து கொண்டேன். இந்தியாவிடம் உள்ள உங்கள் நல்லெண்ணத்தை மதித்திருக்கமுடியுமென்றும், இப்படியெல்லாம் வாக்குவாதம் நடந்தது என்றும் படித்தேன்.
இந்த விவாதத்திலிருந்து எனக்குப் புரிந்ததெல்லாம் இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் அளித்ததில் நீங்கள் பங்கு உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பது. இதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் இந்திய சுதந்திரத்துக்கான பங்கு உரிமையை நீங்கள் கோரினால் அது உங்களோடு மட்டும் நின்றுவிடமுடியாது. உங்கள் மூதாதையர்கள் பலருக்கும் அதில் பங்குண்டு. உண்மையில் பிரிட்டிஷ் இந்தியாவை ஸ்தாபித்த ராப்ர்ட் கிளைவ், வாரன் ஹாஸ்டிங்ஸ் போன்றவர்களுக்கே முதல் பங்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்தியாவின் சுதந்திரத்துக்கு மூலகாரணம்.
இந்தியாவை அடக்கி ஒரே அன்னிய தேசக் கொடியின் கீழ் (அவர்கள்) :வைக்கவில்லை என்றால் இந்த நாட்டில் சுதந்திர இயக்கம் நடந்தே இருக்காது. இந்தியா சிறு சிறு ராஜ்யங்களாக அந்தந்த சமஸ்தான மன்னர்களின் கையில் ஒவ்வொரு பகுதியாக இருந்திருக்கும். அவர்களும் தங்கள் சொந்த தேசத்தினரை இந்த அளவு சுரண்டவோ அடக்குமுறையைக் கையாளவோ செய்திருக்கமாட்டார்களாதலால் விடுதலைக் கிளர்ச்சியும் பெரிய அளவில் நடந்திராது. தேசமும் இப்போதுபோல் ஒன்றுபட்டு குடியரசாகி இருக்காது.
ஆகையால் இந்தியா சுதந்திரம் பெற நீங்களும் உங்கள் தலைமுறையினர் மட்டுமல்ல காரணஸ்தர்கள். முதன் முதலில் இந்தியாவில் உங்கள் ஆட்சியை ஸ்தாபிக்க முயன்றவர்கள் தொட்டு சர்ச்சில் துரை கூட்டத்தார் அனைவருமே காரணஸ்தர்கள்தான். இந்தத் தொழிற்கட்சிக்கு ஒரு சிறு பங்கு கூட கிடையாது என்று நானே ஒப்புக் கொள்ளத் தயார். மறுபடியும் உங்கள் கட்சி பதவிக்கு வந்தால் ஒருவேளை இந்தியா ஒருபடி மேலும் சுதந்திரம் அடையலாம். அதாவது காமன்வெல்த் தொடர்பிலிருந்து கூட அது விலகவிடக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.
ஒரு இந்தியன்.
மேலே எழுதப்பட்ட கடிதத்தை ஊன்றிப்படித்தால் தேவனின் நகைச்சுவை உணர்வுடன் இன்னொன்றும் புரியும். ஏராளமான சிறு சிறு நாடுகளாகப் பிரிந்து தங்களோடு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த நம் இந்திய நாட்டு ராஜாக்களை, அவர்கள் நாடுகளையெல்லாம் ஒன்று சேர்த்த பெருமை இங்கிலாந்துக்குதான் உண்டு என்கிறார். அது உண்மைதானே. பிரிட்டிஷார் வருமுன்னே நம் பாரதத்தில்தான் எத்தனையெத்தனை நாடுகள் இருந்தன. 1911 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் இந்தியத் தலைநகரில் ’ஏகாதிபத்திய சக்கரவர்த்தி’ என முடிசூட்டிக் கொண்ட போது அவருக்குப் பரிசுகள் கொடுக்க போட்டிப் போட்டுக்கொண்டு வரிசை கட்டிய மன்னர்கள் படத்தை திரு ஏ.கே செட்டியார் திரைப்படமாக எடுத்திருக்கிறார். (இதுதான் இந்தியாவிலேயே இந்தியர் அதுவும் தமிழர் எடுத்த முதல் திரைப்படமாகும்)
தேவன் இந்தக் கடிதக் கட்டுரையில் இந்தியா எனும் தேசத்தை ஒருமித்த குடியரசாக ஒன்று சேர்த்தது பிரிட்டிஷ்தான் என்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கூடவே பிரிட்டிஷாரின் இந்திய வளச் சுரண்டலையும் அடக்குமுறையும் தேவன் கண்டிக்கத் தவறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
’போடாத தபாலி’ல் எல்லா அரசியல் நாட்டு நடப்புகளையும் அவர் பாணியில் அலசுவதைத் தவறாமல் ஆனந்த விகடனில் பிரசுரித்து வந்தார் தேவன். இப்போதெல்லாம கடித இலக்கியம் என்ற பகுதியே தமிழில் இல்லை என்பது ஒரு வருத்தத்துக்குரிய செய்திதானே.
அதே போல பயணக் கட்டுரைகள் முக்கியமாக வெளிநாட்டு பயண அனுபவங்களை சுவையாக எழுத்தில் வடிப்பது என்பது சுவாரசியமான கலைதான். ஒரு வெளிநாட்டைப் பற்றி தெரிந்துகொள்வது இயல்பாகவே நமக்குப் பிடித்த விஷயமாகும். ஆனால் சில எழுத்துகள் நமக்கு மறவாத நினைவுகளைத் தருபவை. இந்த நிறைவைத் தரும் வகையில் தேவனின் ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள் தொடர் ஆனந்தவிகடனில் ஐம்பதுகளில் வந்தது. தெற்காசிய நாடுகளில் இரண்டு மாதம் பயணம் செய்து அந்த அனுபவங்களைத் தொடராக சுவாரசியமாக எழுதினார் அவ்ர். பயணக் கட்டுரைகள் தமிழில் முதல் முதலாக எழுதியது தமிழகத்தின் அன்றைய சாதனையாளராக திகழ்ந்த ஏ.கே. செட்டியார் என்பார்கள். அடுத்து 1930 களின் கடைசியில் கல்கி இலங்கைக்குப் பயணம் செய்து ஆனந்த விகடனில் ஒரு சிறு தொடராக தன் பயண அனுபவங்களை வெளியிட்டார். தேவனின் பயண எழுத்துகள் இயற்கையாகவே நகைச்சுவை கலந்து எழுதப்பட்டதால் தேன் கலந்த பலாச் சுளை போல வாசகர்களுக்கு இனித்தன என்று சொல்லவும் வேண்டுமோ.
இத்தனை எழுதிய தேவன் ஏன் சரித்திர நாவல்கள் எழுதவில்லை என்று காரணம் கேட்டால் அவர் அல்பாயுசில் மறைந்து போனது மட்டும்தான் காரணம் என்பேன். தென்னாட்டுச் செல்வங்களில் பல கட்டுரைகளை எழுதியவர், அத்தனையும் சரித்திர சம்பந்தப்பட்டவை, புராணக்கதைகளின் அடிப்படையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என நூற்றுக்கணக்கான விஷயதானங்கள் செய்தவர். இப்படிப்பட்ட கலைஞருக்கு, நல்ல கதையாளருக்கு ஒரு சரித்திர புதினம் எழுதுவது கடினமா என்று கேட்டால் யாருமே இல்லை என்றுதானே சொல்வார்கள். சரித்திர ஆராய்ச்சியும், பாரதத்தின் பண்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டவருமான தேவன் மட்டும் 44 வயதில் மரணிக்காமல் இருந்திருந்தால் வாசகர்களுக்கு இருந்த இந்தக் குறையையும் நிவர்த்தித்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஒரு சரித்திர சிறுகதை ஒன்று இமயமலையில் ஒரு சிறு படையொன்று பனிக்காலத்தில் சென்று மாட்டிக்கொண்டதைப் பற்றிய கதை எழுதி இருக்கிறார். ஒருவேளை தேவன் தன் வாழ்நாள் குறைவாகவே இருந்தாலும் ’இவர் பழைய சரித்திரமே தொட்டதில்லை’ என்று எதிர்காலம் சொல்லிவிடக்கூடாதே என்பதற்காக அவசரம் அவசரமாக ஒரு கதை எழுதினாரோ என்னவோ.. அது அவரது சிறுவயதில் வாழ்நாள் முடிந்த சோகக்கதையைப் போலவே இந்த சிறுகதையும் அவரின் இயற்கையான ஹாஸ்யநடை இல்லாமல் சோகத்தில் முடிந்தது.
14
தேவன் நூறு - 14 - இறுதிப்பகுதி
தேவன் முதல் முதலாக எழுதியது ஆங்கிலத்தில்தான் என்று எழுதுகிறார் ‘மெட்ராஸ் ம்யூசிங்ஸ்’ முத்தையா அவர்கள். அப்போதைய ஆங்கில அறிஞரான பி.ஆர். ராம் ஐயங்காரை ஆசிரியராகக் கொண்ட ‘மை மெகஸின் ஆஃப் இண்டியா’ என்ற இதழில் தேவனின் எழுத்துக்க்கள் சுடர் விட ஆரம்பித்தன என்றும், திரு கல்கி அவர்கள் பார்வையில் பட்டு ஆங்கிலத்துக்கு சமமாக தமிழிலும் தேவன் அதே நகைச்சுவையுடனும் எழுதமுடியும் என்ற முடிவுடன் தேவனை எழுத வைத்தார் என்றும் திரு முத்தையா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இன்னொரு விஷயம், மை மெகஸினுக்கு போட்டியாக எஸ் எஸ் வாஸன் ‘தி மெர்ரி மெகஸின்; எனும் இதழ் கூட அந்தச் சமயத்தில் ஆரம்பித்தார் என்றும் முத்தையா குறிப்பிட்டுள்ளார். தேவன் ஒருவேளை தமிழில் எழுதாவிட்டால் கூட ஆங்கிலத்தில் தொடர்ந்திருப்பார்.. ஆங்கிலத்தில் எழுதுவதால் உலகம் பரந்த புகழ் கூட கிடைத்திருக்கலாம். ஆனால் தமிழ்த்தாயின் கருணை அவரை தமிழிலேயே இருத்தி வைத்து விட்டது எனலாம்.
தேவன் தன்னுடைய எழுத்துத் தொழிலில் இன்னொரு இடைஞ்சலை கூட சந்தித்திருப்பதாக மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வதாக அந்தக் கட்டுரை சொல்கிறது. தேவனுக்கு 1940 முதலாண்டு சமயங்களில் விகடனில் சரியான ஸ்தானம் கிடைக்காததால் கல்கி அவர்களின் ஆலோசனைப்படி சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் உத்தியோகம் கிடைத்து அங்கு சேர இருந்ததாகவும், ஆனால் சரியான சமயத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டமும், கல்கி அவர்களின் சிறைவாசமும், அதன் பின் கல்கியும் சதாசிவமும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டதாலும் அதற்கு எஸ்.எஸ் வாஸனின் எதிர்ப்பு மிகக் கடுமையானதாக இருந்ததாகவும், அதனால் ஏற்பட்டஆனந்த விகடனில் ஆசிரியர் ஸ்தானத்துக்கான வாய்ப்பும், இவ்வாறு எதிர்பாரா நிகழ்ச்சிகள் துரிதகதியில் ஒன்றன் பின்னால் ஒன்றாக ஏற்பட்டதால், தேவன் ஆல் இந்தியா ரேடியோவில் சேரவில்லை.
மேலும் தேவனுக்கு ஏற்கனவே இருந்த துணை ஆசிரியர் வேலையின் காரணமாக செய்திகள் எழுதுவதும், செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கிண்டலுடன் செய்திக் கட்டுரைகளையும் நிறைய எழுதுவார். காங்கிரஸ் கட்சியின் குழப்பங்கள், ஆங்கிலேயரின் அதிரடி திட்டங்கள், போர்க் காலத்தில் நடந்த நிகழ்வுகள், சமுதாயத்தில் அக்காலத்தே இருந்த சீரழிவுகள் எதுவும் தேவன் எழுத்துக்குத் தப்பியதில்லை. குறிப்பாக யுத்தத்தில் பங்குகொண்ட நாடுகள் பற்றிய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வாரம் ஒருமுறை யுத்தகால நிகழ்ச்சிகளைக் கட்டுரையாக ஆனந்த விகடனில் எழுதினார். உலகத் தலைவர்களின் அன்றையப் போக்கை உன்னிப்பாக கவனித்து எழுதிய கட்டுரைகளும் உண்டு. எனவே ஆல் இந்தியா ரேடியோ’ வில் சேருவதற்கு தேவனுக்கு நிறையவே தகுதிகள் இருந்திருக்கிறது. ஆனாலும் இங்கும் தமிழ்த்தாய்தான் வெற்றி பெற்றிருக்கிறாள். ஒருவேளை ஆல் இந்தியா ரேடியோவில் சேர்ந்திருந்தால் வெளியே, வெளிப்பத்திரிகைகளுக்கு தேவன் எழுதும் வாய்ப்புகள் இராது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தேவனின் முக்கியக் கதைகள் சாம்புவிலிருந்து சி ஐ டி சந்துரு வரை, கல்யாணியிலிருந்து ஜஸ்டிஸ் ஜகன்னாதன், தென்னாட்டு செல்வங்கள் எல்லாமே அந்த பிற்காலத்தில், அதுவும் அவர் விகடன் ஆசிரியர் ஸ்தானத்தில் அமர்ந்தவுடன் எழுதப்பட்டவை என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும். பிற்காலத்தில் ஆசிரியராக, தேவன் விகடனில் எழுதிய நகைச்சுவை கட்டுரைகளின் கணக்கு எண்ணிக்கையில் அடங்காததாகும். சாதாரண கட்டுரை ஒன்று எழுதுவதைக்கூட ஒரு நகைச்சுவை பாணியில் விளக்குகிறார் பாருங்களேன்..
ஆசிரியர் கேட்டுக்கொண்ட படியினாலே இந்தக் கட்டுரை எழுதுகிறேன்.” என்று சொல்லிக்கொண்டே ஆரம்பிக்க முடியவில்லை. ஏனென்றால் ஆசிரியர் என்னைக் கேட்கவே இல்லை.இரண்டாவது, ஆசிரியர் கேட்டுக்கொண்ட வியாஜ்யத்தை வைத்து சர்வ மோசமான விஷயங்களால் இரண்டு பக்கத்தை நிரப்பவும் இஷ்டமில்லை.ஆகையினால் கொஞ்சம் நல்ல விஷயமாய் யோசனை செய்து எழுதலாமென்று ஆரம்பித்தேன். இப்படி வெகு நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, எங்கள் வீடு கூட்டும் செல்லம்மாள் வந்து சேர்ந்தாள். “காலை தூக்கி நாற்காலி மேலே வெச்சுக்குங்க.. உள்ளைக் கூட்டணும்” என்றாள்.
“செல்லம்மா! ரொம்ப விந்தையான விஷயமாய் உனக்குஏதாவது தெரிந்தால் சொல்லேன். பத்திரிகைக்கு எழுதலாமென்று பார்க்கிறேன்.” என்றேன்.
நான் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாள். நான் சொன்னதில் என்ன ஹாஸ்யம் இருக்கிறது என்று தெரியவில்லை. சிலசமயம் நான் ஹாஸ்யமாக பேசவேண்டுமென்று ஆரம்பித்துப் பேசினால் எவரும் சிரிப்பது கிடையாது.ஒரு சமயம் நாலு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ‘ஒரு ஹாஸ்ய சம்பவம் ஏற்பட்டது. நான் சொன்னால் நீங்கள் குபீரென்று சிரித்து விடுவீர்கள்” என்று சொன்னேன். அப்படியா! எங்கே அதைச் சொல்லேன்..என்றார்கள் அவர்கள். “ஆஹா! சிரிக்கும் சிரிப்பில் வயிறு புண்ணாகிவிடும்” என்று எச்சரிக்கையும் செய்து விட்டு அந்த ஹாஸ்ய அனுபவத்தைச் சொன்னேன். அவர்கள் முழுவதையும் கேட்டுவிட்டு, “அவ்வளவுதானா, இதில் வேடிக்கை என்ன இருக்கிறது?” என்றார்கள்.
இதற்கு நேர் எதிரிடையான இன்னொரு விதமான ஆசாமிகளும் இருக்கிறார்கள். இவர்களிடம் எதைச் சொன்னாலும் அவர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த ஆசாமிகளிடம் நிஜ விகட துணுக்காகயாரும் ஒன்றைச் சொல்லக்கூடாது, சொன்னால் அந்த இடச்த்திலேயே அவர்கள் சிரித்து உயிரை விட்டு விட்டாலும் விடலாம்!”
இதற்குப் பிறகு இந்த செல்லம்மாவே ‘ரொம்ப நேரம் ரோசனை செய்து’ ஒரு ஐடியா கொடுத்து மழையைப் பற்றி எழுதச் சொன்ன கட்டுரை அது..மழைக்காக வேண்டி ஒரு குடையை வாங்க அது அவருக்கு வேண்டிய சமயத்தில் மக்கர் செய்யும் நகைச்சுவை கட்டுரை.தேவனது மோட்டார் அகராதி என்றொரு கட்டுரை, (தற்போதைய கார்கள்) அவர் எப்போது எழுதினாரோ (அவர் காலத்தில் மோட்டார் கார்கள் எண்ணிக்கையில் மிகவும் ,குறைவுதானே) ஆனாலும் இன்றும் கூட அந்த அகராதி காலத்துக்குத் தகுந்தாற்போலத்தான் இருக்கிறது. அந்த அகராதியிலிருந்து ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தேவனின் நகைச்சுவை எழுத்தில் கொடுத்துள்ளேன்.:
இதன் முன்னுரையே கல கல.
(ஏற்கனவே மோட்டார் வைத்திருப்பவர்களும், மோட்டார் புதிதாய் வாங்க உத்தேசித்திருப்பவர்களும், மோட்டாரே வாங்குவதில்லை என்று விரதம் செய்திருப்பவரும், மோட்டார் வாங்கப் பணமில்லையே என்று பரிதவிப்பவர்களும், மோட்டாரை வாங்கிவிட்டு ஏனப்பா வாங்கினோம் என்று ’சிந்தாக்கிராந்தரா’யிருப்பவர்களும், மோட்டாரைக் காயப்படுத்தினவர்களும், மோட்டாரால் காயப்படுத்தப்பட்டவர்களும், இன்னும் இதரரும் படித்துத் தெளிந்து கொள்ளலாம். ஏற்கனவே மூளை தெளிந்திருந்தால், இப்போது கலக்கிக் கொள்ளலாம்)
பிரேக்: மோட்டாரை ஓடும்போது, இப்படி ஒரு சாமான் இருப்பதையே மறந்துவிடலாம்.
பெட்ரோல்: இது மட்டும் தண்ணீராக இருந்தால் நானும் நீரும் தலைக்கு ஒரு மோட்டார் வைத்துக் கொள்ளலாம்.
போலீஸ்காரர்: மோட்டார் ஓட்டிகளின் தெய்வம், கையைக் காட்டி, பத்தாயிருந்தாலும் சரி, பதினாயிரமாகவும் இருந்தாலும் சரி, நமஸ்காரம் செய்யாவிட்டாலும் பிரதட்சணமாவது செய்தே தீரவேண்டும்.
மனிதர்கள்: இவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். 1) மோட்டாரால் கொல்லுபவர் 2) மோட்டாரால் கொல்லப்படுபவர்.
முட்டாள்கள்: இதர மோட்டார் ஓட்டிகள், பாதசாரிகள், சைக்கிள்காரர்கள்
முழுச்செவிடர்கள்: பாதசாரிகள்.
மோட்டார்: இது இல்லாதவர்கள் அவசியம் வாங்கிப்பார்க்கவேண்டிய பண்டம், இருப்பவர்கள் அவசியம் விற்றுத் தொலைக்கவேண்டிய பண்டம்
இப்படியே மோட்டாரால் அனுபவிக்கும் அவஸ்தையை நகைச்சுவை சற்றும் குறையாமல் சொல்லுவார் தேவன். அவரும் ‘மோரீஸ் மைனர்’ ’மோட்டாரை’ வாங்கி சென்னை மாநகரத்தில் பவனி வந்தவர்தாம்.
’கோபம் வருகிறது’ என்றொரு கட்டுரையை கதையாக எழுதியிருந்தார் தேவன். இந்தக் கோபம் என்கிற உணர்ச்சியை எத்தனை ஆழமாக சீண்டிப் பார்த்திருக்கிறாரோ.. நீங்களும் அதைச் சற்று அனுபவியுங்களேன்..
மனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்றிருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. ‘முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்’ என்பது பிரசித்தமான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. “ஸார்! நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது போல் இருக்கிறதே!” என்று ஞாபகமூட்டினால் போதும்: “பிடி சாபம்! இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்?” என்று கோபித்துக் கொண்டு விடுவார்.
எனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக்கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, ‘நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன்.. இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை” என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. “சரி.. சரி.. சீக்கிரம் இலையைப் போடு..நான் ஆபீசுக்குப் போகிறேன்!” என்பேன்.
ராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.
‘இவ்வளவு நன்றாக சிசுருட்சைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்’ என்று கூட நான் அவளைக் கேட்டுக்கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.
நானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் ‘சவரம் செய்து கொண்ட தினங்களில்’ அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.
கோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் – அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா?
பெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.
நான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான்.
கோபம்தான் அந்தக் கத்தி.
இந்தக் கட்டுரைக் கதையில் ஒன்று கவனித்தீர்களா.. ‘சிறுவர்களாக இருந்தபோது தகப்பனார் சவரம் செய்தபின்னர் அதிக கோபத்தால் காணப்படுவாராம். அது பிரமை என்று சொன்னாலும் ஒருவிதத்தில் உண்மைதான். அந்தக் காலகட்டத்தில் ஒருவாரம் பத்து நாள் என முகத்தில் முடி வளரவிட்டு விட்டு முகச்சவரம் மழித்துக் கொள்ளும்போது தற்போதைய கூரான பிளேடுகள் போல இல்லாமல் ஏதோ சுமாராக கூர் செய்யப்பட்டு இருக்கும் கத்தியால் மழித்து விடுவார்கள். நிச்சயமாக அந்த எரிச்சல் ஒருநாளாவது இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ..தேவனின் கூர்ந்து நோக்கும் தன்மை எங்கெல்லாம் பாய்கிறது என்பதற்கு இதுவே சான்று. யாருக்காவது கோபம் வந்தால் இந்தக் கட்டுரையைப் படியுங்கள், அப்படியும் அந்தக் கோபம் போகவில்லையென்றால் அவர் எழுதிய கதைகளைப் படியுங்கள். அதிலும் சாம்புவின் கதைகளைப் படித்தால் காலா காலத்துக்கும் கோபம் வரவே வராது..
அதே போல தொடர்கதைகளில் ஒவ்வொரு அத்தியாயத்துக்கு வித்தியாஸமான முறையில் ஒரு முன்விவரணை (கொடேஷன்) கொடுத்து அதன் அடிப்படையில் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பது அவர் வழக்கம். இந்த ‘கொடேஷன்களில்’ பல செய்திகள் புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும், தமிழ்ப் பாடல்களிலிருந்தும் சில சமயம் கோர்ட் ரிகார்டுகளிலிருந்தும் கொடுப்பது உண்டு. இவையாவும் மிகவும் சுவாரஸியமானவை மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு புதிய செய்தியை நமக்குத் தெரிவிக்கும்.
இத்தனை விஷயங்கள் எழுதியவருக்கு நாற்பத்து நான்கே ஆண்டுகள்தான் இவ்வுலக வாசம் என்பது வேதனையான விஷயம்தான். அவர் சுகவீனப்பட்டு மறைந்தவுடன் வருத்தப்படாத நண்பர்கள், எழுத்தாளர்கள் இல்லை. தேவன் மறைந்தவுடன் அந்த மரணத்தை ஒப்புக்கொள்ளாத வாசகர்கள் பல்லாயிரக்க்கணக்கில் உண்டு. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து இவர் திரும்பி வந்துவிடமாட்டாரா’ என்று அவரது நினைவஞ்சலி’ கூட்டத்தில் பலர் பேசினார்கள். ’அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்’ என்று ஒரு பெண் எழுத்தாளர் அழுதுகொண்டே சொன்னதாக ஒரு கட்டுரையில் படித்தது நினைவுக்கு வருகிறது..இருபத்தொன்பது வயதிலேயே ஒரு பிரபல வாரப்பத்திரிகைக்கு ஆசிரியராகி பதினைந்து வருடங்கள் அந்த ஆசிரியர் ஆளுமையுடன் படைத்த எழுத்தோவியங்கள் அவரைப் போலவே என்றும் இளமையாகவே இருக்கின்றன. இன்றைக்கும் கூட ஒரு மிஸ் ஜானகி, கல்யாணி போன்ற கதைகள் முதல் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தால் ஏதோ இப்போது எழுதி வெளிவந்ததைப் போல ஒரு பிரமையைக் கொடுக்கும். அதுதான் தேவன்.
இந்த வருடம் (2013) அவருக்கு ‘சதாப்தி’ வருடம். இது அவரது பூத உடலுக்குதான் கணக்கு. ஆனால் தேவன் எழுத்துக்கு வயதே கிடையாது. ஒரு கதாசிரியனின் படைப்புகளை தேவன் ‘மிஸ் ஜானகியில்’ எழுதும்போது பிரும்மாவின் சிருஷ்டிகளுக்கு ஈடாக ஒப்பிடுகிறார். இதனால் எழுத்தாளரும் பிரம்மதேவனே என்று தேவன் எழுதுவார். பிரம்மதேவனின் சிருஷ்டிகளுக்கு சிரஞ்சீவித்துவம் உண்டோ இல்லையோ என்பதை யாம் அறியோம், ஆனால் தேவன் படைத்த கதாபாத்திரங்கள் அமரத்துவம் படைத்தவைதான். அந்த கதாபாத்திரங்கள் என்றென்றும் தேவன் பெயரை தமிழுலகமெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கும்தான். தேவனின் எழுத்துக்கள் அத்தனையும் படித்தவர்கள் என்னோடு இந்தக் கருத்தில் நூற்றுக்கு நூறு ஒத்துப் போவார்கள் என்ற பெரு நம்பிக்கையில் பெருமிதத்தோடு இந்த நூறாவது ஆண்டில் இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் தேவனின் ஆன்மாவுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்..
(முடிந்தது)
பின் குறிப்பு: இந்தக் கட்டுரைகளைப் படித்து அவ்வப்போது எனக்கு திருத்தங்களும், நல்வார்த்தையும் எழுதி அனுப்பிய அத்தனை பெரிய மனிதர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தக் கட்டுரைகள் நம் இளைய சமுதாயம் இப்படி ஒரு எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை. “எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும்’ என்ற தேவனது அரிய அறிவுரையை மனதில் கொண்டு தற்கால இளைஞர்கள் பலர் தமிழில் எழுத முன்வரவேண்டும் நலல நல்ல எழுத்துகளைப் படைக்கவேண்டும். தமிழ்த்தாயின் சிந்தையைக் குளிர்விக்கவேண்டும் என்பதே நம் வேண்டுகோள் கூட. நன்றி!!
அன்புடன்
திவாகர்
1
திவாகர்
எழுத்தாளர். தமிழில் நான்கு சரித்திரப் புதினங்கள் எழுதியுள்ளார். ஆந்திரக் கடைக் கோடியில் தமிழருக்கும் கலிங்கருக்கும் நடந்த போரை மையமாக வைத்து இவர் எழுதிய ‘வம்சதாரா’ இவரது முதல் புதினம். அடுத்து எழுதப்பட்ட திருமலைத் திருடன், விசித்திரசித்தன் போன்ற சரித்திரநாவல்கள் திவாகருக்கு தமிழ்வாசகரிடையே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
சமீபத்தில் ‘எஸ்.எம்.எஸ். எம்டன்’ எனும் தமிழ் நாவலை எழுதி சென்னை பழனியப்பா பிரதர்ஸ் மூலம் பதிப்பிக்கப்பட்டு வெளியிட்டுள்ளார். இது 1914ஆம் வருடம் சென்னை மீது ஜெர்மனிக் கப்பலான ‘எம்டன்’ குண்டு போட்டதன் பின்னணியில் எழுதப்பட்டதாகும். இந்தப் புதினமும் வாசகரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
’நம்ம ஆழ்வார் நம்மாழ்வார்’ என்கிற கட்டுரைப் புத்தகமும், ’நான் என்றால் நானல்ல’ என்கிற சிறுகதைத் தொகுப்புப் புத்தகமும், ’ஆனந்த விநாயகர்’ எனும் மொழிபெயர்ப்பு புத்தகமும் எழுதியுள்ளார். தன் வலைப்பூக்களான வம்சதாரா, அடுத்தவீடு தளங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதிப் பதிவுசெய்துள்ளார். இவைகளில் குறிப்பாக தேவாரம், மாணிக்கவாசகர் மற்றும் திருப்பதி சம்பந்தப்பட்ட தொடர்கட்டுரைகள் உலகின் பல்வேறுபகுதிகளிலும் பரவலாகப் படிக்கப்பட்டது. கோவையில் முத்தமிழ் அரங்கம்- இந்துஸ்தான் கலைக் கல்லூரியால் இவருக்கு ‘புதின இலக்கிய புலமையாளர்’ என்ற விருதும், சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளையால் ‘மரபுச் செல்வர்’ விருதும் வழங்கப்பட்டுள்ளன.
இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திர மாநிலத்தில் வசித்து வருகிறார். விசாகப்பட்டினம் தமிழ் சங்கத்தின் செயலாளராக கடந்த 16 வருடங்களாக செயல்பட்டவர். கோவை செம்மொழி, சிஙகப்பூர், சென்னை நகரங்களில் நடந்த இலக்கிய மகாநாடுகளில் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார்.
திவாகரின் சிறுகதைகள், கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தொழில்முறையில் திவாகர் ஒரு பத்திரிகையாளர்.
தொடர்புக்கு,
திவாகர்
venkdhivakar@gmail.com
Cell No. 919949998752.
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
கருத்துகள்
கருத்துரையிடுக