Urainaṭaiyil kamparāmāyaṇam


சங்க கால நூல்கள்

Back

உரைநடையில் கம்பராமாயணம்
தஞ்சை வெ.கோபாலன்


உரைநடையில் கம்பராமாயணம்

தஞ்சை வெ.கோபாலன்

 

Contents


மின்னூல் ஆக்கம்

உரைநடையில் கம்பராமாயணம்

அறிமுகம்

உரிமை

1. பால காண்டம்

2. அயோத்யா காண்டம்

3. அயோத்யா காண்டம் - தொடர்ச்சி

4. ஆரணிய காண்டம்

5. கிஷ்கிந்தா காண்டம்

6. கிஷ்கிந்தா காண்டம் - தொடர்ச்சி

7. சுந்தர காணடம்

8. யுத்த காண்டம் - முதற் பாகம்

9. யுத்த காண்டம் - 2ஆம் பாகம்

10. யுத்த காண்டம் - 3ஆம் பாகம்

 

 

 

அறிமுகம்


உரைநடையில் கம்பராமாயணம்

இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

http://ta.wikipedia.org/s/1h

கம்பராமாயணத்தை தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் உரைநடையில் எழுதி கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டுள்ளார். அதை மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

உரிமை

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

You are free:


to Share — to copy, distribute and transmit the work

Under the following conditions:


Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work).

Noncommercial — You may not use this work for commercial purposes.

No Derivative Works — You may not alter, transform, or build upon this work.

1


பால காண்டம்

கம்பராமாயணம்

(இராமகாதை)

உரை நடை ஆக்கம்

தஞ்சை வெ.கோபாலன்

இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,

தஞ்சாவூர்.

கம்பன்

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இயற்றிய

இராம காதை

உரைநடை வடிவம்.

எழுதியது: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற

ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்

சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்

காரணி கொடையான் கம்பன் தமிழினால் கவி செய்தானே.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம்

வீடியல் வழியது ஆக்கும் வேரிஅம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை

சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இன்மையே ‘ராம’ என்ற இரண்டு எழுத்தினால்.

பால காண்டம்.

வடக்கே இமயமலையில் மானச சரஸிலிருந்து உற்பத்தியாகி இடைவிடாத நீரொழுக்கொடு கூடிய, சூரிய குலத்து அரசர்களின் நல் ஒழுக்கத்தைப் போல ஓடிவருகின்ற நதிதான் சரயு எனும் நதி. இது உயிரினங்களுக்கெல்லாம் தாய்ப்பால் போல உயிரளித்து காப்பாற்றி வளப்படுத்துகின்றது. மலையில் உற்பத்தியாகும் சரயு நதி, கடலில் கலக்கும் வரையிலும் பற்பல துறைகளையெல்லாம் கடந்து சென்று இறுதியில் சமயம் கூறும் கருத்துக் கேற்ப, எவர் எவ்வழி சார்ந்திருந்தாலும், இறுதியில் பரம்பொருளை அடைவது போல இந்த நதி ஓடிக் கடந்து இறுதியில் கடலில் கலக்கிறது.

இந்த சரயு நதி ஓடி வளப்படுத்தும் நாட்டிற்கு கோசல நாடு என்று பெயர். நீர்வளமும் நிலவளமும் நிரம்பிய நாடு கோசல நாடு. அங்கே இயற்கை அன்னை படைத்திருக்கும் அரிய காட்சிகளே கண்டும் கேட்டும் அனுபவிக்கத்தக்க அருமையான காட்சிகளாகும். இந்த இயற்கைக் காட்சிகள் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்துகிறதாம். எப்படி?

தாமரை மலர்கள் விளக்குகளைத் தாங்கி நிற்கின்றன; மேகங்கள் மத்தளம் கொட்டுகின்றன; கருங்குவளை மலர்கள் கண்விழித்து இந்த அரிய காட்சிகளைப் பார்த்துக் களிக்கின்றன; நீர்நிலைகளில் காற்றால் அலைவுறும் நீரலைகள் திரைச்சீலைகளாய் அமைந்திருக்க வண்டுகள் ரீங்காரமிட்டு இசை பாடுகின்றன; இக்காட்சியைக் கண்டும் இசையைக் கேட்டும் கான மயில்கள் ஆடுகின்றன. கம்பர் காட்டும் அரிய காட்சி இது.

கோசல நாட்டில் வணிகம் பெருகி நடப்பதால், செல்வமும் கணக்கின்றி குவிந்து கிடந்தன. அந்த நாட்டிலுள்ள நிலத்தடி சுரங்கங்களெல்லாம் பற்பல தாதுக்களையும், மணிகளையும் வாரி வாரி கொடுத்துக் கொண்டிருந்தன. விளை நிலங்களோ உற்பத்தியைக் கணக்கின்றி கொடுக்கின்றன; தானியங்கள் மலை மலையாய் குவிந்து கிடக்கின்றன. கோசல நாட்டு மக்கள் ஒருவர் போல அனைவரும் நல்லொழுக்கமும் நல்ல பண்பாடும் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள்.

கோசல நாட்டில் தீமை புரிபவர்களே இல்லை. தீயவர்கள் இல்லை என்பதால் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை. அங்கு சண்டைகளோ அல்லது தகறாறுகளோ இல்லை, ஏனென்றால் அங்குள்ளவர்கள் மத்தியில் கோப தாபங்கள் இல்லை; அங்கு அறவழி இல்லாத காரியங்களை எவரும் செய்வதில்லை, தவறுகள் நடைபெறுவதில்லை; அதனால் அங்கு அனைவரும் மிக உயர்ந்த மக்களாக இருந்தார்களேயன்றி தாழ்ந்தவர்கள் எவரும் இல்லை.

கோசல நாட்டில் வறுமையே இல்லை என்பதால் எவரும் கையேந்தி யாசகம் பெறுபவர் இல்லை; கேட்பவர்கள் எவரும் இல்லை என்பதால் வள்ளல் தன்மையோடு கொடுப்பவர்களும் இல்லை; தங்களுக்குள் பகை கொண்டு போர் புரிவோர் இல்லை என்பதால் போரில் காட்டும் வீரம் வெளிப்பட வாய்ப்பே இல்லை; பொய் பேசுபவர்களே கோசல நாட்டில் இல்லை என்பதால், வாய்மையின் சிறப்பு வெளிப்பட வாய்ப்பே இல்லை; மக்கள் கல்வி அறிவில் சிறந்தவர்களாக விளங்கியதால் அறிவின் பெருமையும் மேம்பாடும் வெளிப்பட வாய்ப்பே இல்லை.

இத்தகைய வளமிக்க, பெருமைமிக்க கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி. யுத்தம் இல்லாத இடம் என்பதால் இவ்வூர் அயோத்தி என அழைக்கப்பட்டது. பூமித்தாயின் திருமுகம் போல அமைந்தது அந்த நகரம். அந்த அழகிய பூமித்தாயின் முகத்தில் இந்த நகரம் அமைந்திருப்பதை, அவ்வழகிய முகத்தில் இடப்பட்ட திலகம் என்று சொல்லலாமோ? அல்லது அந்த முகத்தில் விளங்கும் தாமரை மலர் போன்ற கண்கள் எனலாமோ? அல்லது மார்பில் அணிந்துள்ள ஹாரம் எனலாமோ? மங்கல நாணோ? பூமி தேவியின் உயிர் இது எனலாமோ?

ஓ! இது திருமகள் வாசம் செய்யும் தாமரை மலர்தான். திருமாலின் மார்பில் தவழும் கவுஸ்துபம் முதலான மணிகள் கொண்ட பெட்டகம்தான். மேல் உலகினும் சிறந்ததான வைகுந்தமாக இருக்குமோ? ஊழிக் காலத்தில் திரு உந்தியில் அடங்கும் உயிர்களோ? என்னவென்று உரைப்பது? அத்தகைய சிறப்புக்களையுடைய அயோத்தி நகரத்தில் மங்கள ஒலிகள் மட்டுமே எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இத்தகைய பெருமைகொண்ட மாண் நகரை அரசாண்ட மன்னன் தசரதன் என்பான். அவன் என்ன சாதாரண அரசனா? இல்லை இல்லை, அரசர்களுக்கெல்லாம் அரசன், சக்கரவர்த்தி. ஏழு உலகங்களிலும் அவனது செங்கோல் சிறப்புற்று விளங்கியது. இந்த இராம காதையின் நாயகனான ஸ்ரீ இராமபிரானை, இப்பூவுலகுக்கு அளித்த தருமமூர்த்தி போன்றவன் தசரத மன்னன்.

அந்த தசரத சக்கரவர்த்தி அன்பு செலுத்துவதில் தாய் போன்றவன். தவங்களைச் செய்வதால் எப்படி நன்மைகள் எல்லாம் விளையுமோ அப்படி நன்மைகளை அளிப்பவன். மற்றவர்களுக்கு எப்படி வாழ வேண்டுமென்பதில் தானே வழிகாட்டியாக இருந்து, நன்னெறியில் வழி நடத்துவதில் நற்புதல்வன் போன்றவன்; நாட்டுக்கு ஏதேனும் நோய் போன்ற தீமை ஏற்படுமானால், இவன் அதற்கு மருந்து போல இருந்து குணமாக்குபவன்; மொத்தத்தில் கல்வி, கேள்வி, அறிவிலே சிறந்தவன்.

இத்தகைய பெருமைகளையெல்லாம் தனக்கே உரிமையாக்கிக் கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தி ஒருநாள் தன் அரண்மனையில் கொலு மண்டபத்தில் அமைச்சர் பரிவாரங்கள் புடைசூழ அமர்ந்திருந்தான். அவன் அந்த சபையில் வீற்றிருந்த காட்சியானது இந்திர லோகத்தில் இந்திரன் அரசு வீற்றிருந்ததைப் போல இருந்தது. அப்போது சினத்திற்குப் பெயர் போன விஸ்வாமித்திர மகரிஷி அந்த அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

தவ சிரேஷ்டரான விஸ்வாமித்திர மகரிஷியைக் கண்ட தசரத சக்கரவர்த்தி, தன் கழுத்தில் அணிந்திருந்த மணி ஹாரங்கள் ஒளிர வேகமாக எழுந்து வந்து, தன்னை நாடி வந்திருக்கும் முனிவரின் பாதங்களில் விழுந்து பணிந்து வணங்கினான். இந்திரனுடைய சபைக்கு பிரம்ம தேவன் வருகின்ற போது இந்திரன் எழுந்து வணங்குவதைப் போல இருந்தது அந்தக் காட்சி.

தசரதன் விஸ்வாமித்திர முனிவருக்கு முறைப்படியான பல சிறப்புக்களைச் செய்து, உபசார மொழிகளைக் கூறலானான். “நான் வந்து தங்களது அடிபணிந்து எனது அரண்மனைக்கு அழைப்பது போக, தாங்களாகவே என்னைத் தேடி வரும்படி நேர்ந்ததற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ? இது என் குலம் செய்த பேறு; நான் செய்த நல்வினையின் பயன்” என்றெல்லாம் மன்னன் உபசார வார்த்தைகளைக் கூறினான்.

மன்னன் மொழிகளைக் கேட்ட முனிவர் சொல்கிறார்: “தசரதா! கேள். என்னைப் போன்ற முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ஏதாவது இடையூறு வந்ததென்றால் அதை நீக்கிக் கொள்ள மலைகளில் சிறந்த கைலாயத்திலிருக்கும் சிவபெருமானையும், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலையும், பத்மபீடத்து நன்னகர் எனும் தாமரை ஆசனமுடைய பிரம்ம லோகமும், அதன் தலைநகரான அமராவதிப் பட்டணமும், மணிமாடங்களைக் கொண்ட அயோத்தி எனும் பொன்னகரத்தையுமன்றி வேறு புகலிடம் எங்களுக்கு ஏது?”

“தசரதா! நான் கைலாயத்துக்கோ அல்லது பாற்கடலுக்கோ, பிரம்ம லோகத்துக்கோ செல்வதைக் காட்டிலும் மிக எளிதாக உன்னை வந்தடைய முடியும் என்று கருதியே நான் உன்னை நாடி வந்துள்ளேன். ஒரு சமயம் இந்திரனுடைய பதவிக்கு சம்பராசுரனால் ஆபத்து நேர்ந்தபோது நீயல்லவா அந்த அசுரனோடு போரிட்டு, இந்திரனுக்கு அவனுடைய நகரை மீட்டுக் கொடுத்தாய்” என்றார்.

அது என்ன வரலாறு? சற்று பார்ப்போமா? ஒரு சமயம் திமித்துவன் எனும் பெயர் கொண்ட சம்பராசுரன், தன் அசுரர் கூட்டத்தோடு சென்று இந்திரன் உள்ளிட்ட தேவர்களோடு போரிட்டு அவர்களை வென்று, அமராவதி நகரைக் கைப்பற்றி, இந்திரனைப் பதவியிலிருந்தும் துரத்தி விடுகிறான்.(இந்திரன் என்பது ஒரு பதவி. இந்தப் பதவியில் மாறி மாறி பலர் இருந்திருக்கிறார்கள். நமது ஜனாதிபதி பதவி போன்றது இந்திரப் பதவி, நிரந்தரமாக ஒருவரே இந்திரனாக இருந்ததில்லை) உடனே இந்திரன் தசரத சக்கரவர்த்தியிடம் சென்று தன் நிலைமையைக் கூறி முறையிட்டு அவனது உதவியைக் கோரினான். தசரத மன்னன் இந்திரனுக்கு உதவி செய்யும் பொருட்டு தனது இளைய மனைவி கைகேயி தேரோட்ட, தான் சென்று சம்பராசுரனோடு கடும் போர் செய்து அசுரர்களைக் கொன்றுவிட்டு வானுலக ஆட்சியை மீட்டு மீண்டும் இந்திரனிடம் ஒப்படைத்தான்.

முனிவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட தசரத சக்கரவர்த்தி தன்னிரு கைகளைக் கூப்பிக்கொண்டு அவரை வணங்கி “முனிவர் பெருமானே! யான் அரசு எய்திய பயனை இன்றே அடைந்தேன். நான் தங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன என்பதைக் கூற வேண்டும்” என்றான். அதற்கு விஸ்வாமித்திர முனிவர் கூறுகிறார்:

“தருவனத்துள் யான் இயற்றும் தவவேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்

வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்

செருமுகத்துக் காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்

ஒருவனைத் தந்திடுதி! என உயிர் இரக்கும் கொடுங்கூற்றின் உளையச் சொன்னான்”

“தசரதா! நீ வேறொன்றும் பெரிய காரியம் எதுவும் எனக்காகச் செய்ய வேண்டாம். அடர்ந்த வனத்துக்குள் நான் ஒரு தவ வேள்வியை நடத்துகிறேன். அதை அரக்கர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; எப்படி காமம், கோபம் இவை தவம் புரிவோர்களுக்கு இடையூறு செய்யுமோ அப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி இடையூறு செய்யாவண்ணம் அவர்களை தடுத்து நிறுத்த நின் மக்கள் நால்வரில் கரிய செம்மலாகிய ராமனை என்னோடு அனுப்பி வை” என்றான். முனிவனுடைய இந்த வார்த்தைகள் அவனது உயிரையே பறிப்பது போல இருந்தது. என்ன இது? இந்த முனிவர் தனது உயிரையே அல்லவா யாசகம் கேட்கிறார்.

முனிவருடைய இந்த கோரிக்கை தசரத மன்னனின் காதில் விழுந்தது எப்படி இருந்தது தெரியுமா? ஏற்கனவே உடலில் வேல் பாய்ந்து பள்ளம் விழுந்த ஆழமான புண்ணில் தீ நுழைந்தது போல வேதனை அளித்தது. ஏப் அப்படி அந்த மன்னன் உணர்ந்தான் என்பதற்குக் காரணம் இருந்தது.

தசரத மன்னனுக்கு ஒரு சாபம் உண்டு. அவனது மகன் அவனை விட்டு பிரிவதனால் உண்டாகும் துயரத்தால் அவன் இறந்து போவான் என்று ஒரு சாபத்தை அவன் பெற்றிருந்தான். அது பலிக்கும் காலம் வந்துற்றதோ? இப்போது இந்த முனிவன் இராமனைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்கிறானே. அப்படி இராமன் தன்னைவிட்டுப் பிரிவதனால் தனது உயிர் நீங்கப் போகிறதோ? என்றெல்லாம் தசரதன் எண்ணமிட்டான்.

ஏற்கனவே அந்த சாபத்தினால் அவனது மனத்தில் ஓர் ஆழமான காயம் பட்டிருந்தது. அந்த காயம் பட்ட புண்ணில் இப்போது இந்த முனிவனது வேண்டுகோள் தீயை இட்டது போல உணர்ந்தான் மன்னன். தவமாய் தவமிருந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்து, வாராது போல வந்த பிள்ளையை இந்த விஸ்வாமித்திர முனிவர் யாசிப்பதால் அவன் உள்ளம் பட்ட பாட்டை விளக்குகிறார் கவிச்சக்கரவர்த்தி. அதாவது, ஒருவனுக்கு கண் பார்வை இல்லாமலிருந்து பார்வை வந்து மீண்டும் இழந்த போது அவன் எவ்வாறு வருந்துவானோ அப்படி வருந்தினான் தசரதன் என்பதை “கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்” என்று கூறுகிறார். அந்தப் பாடல் இதோ:

“எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த

புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும்

உண்ணிலா வியதுயரம் பிடித்து உந்த ஆருயிர் நின்று ஊசல் ஆடக்

கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான்”.

தசரத சக்கரவர்த்தி உடல் நடுங்க, குரல் தழுதழுக்க, கைகூப்பி முனிவரிடம் கூறுகிறான்: “முனிவர் பெருமானே! அரக்கர்களால் தங்கள் யாகம் தடையின்றி நடைபெற வேண்டும் அவ்வளவுதானே? என் மகன் ராமன் வயதில் இளையவன். போர் பயிற்சியும் இல்லாதவன். ஆகையால் அவன் வேண்டாம். உமது வேள்விக்கு இடையூறாக யார் வந்தாலும், ஏன்? அந்த சிவபெருமானோ, பிரம்மனோ அல்லது இந்திரனோ, எவர் வந்தாலும் நான் வந்து அவர்களை முறியடித்து உங்கள் யாகத்தை முடித்து வைப்பேன்” என்றான்.

இப்படி தசரத மன்னன் சொன்னதுதான் தாமதம், முனிவருக்கு வந்ததே பெரும் கோபம். உடனே இருக்கையை விட்டு எழுந்தார். அவரது புருவங்கள் நெறித்தன. கண்கள் சிவந்தன. கடும் கோபத்தின் காரணமாக சிரிப்பும் வந்தது. அவர் சினத்தீயால் எழுந்த புகை சூரியனைக் கூட மறைத்தது. இந்தக் காட்சியைக் கண்ணுற்ற தேவர்கள் இந்த பூவுலகுக்கு இறுதிக் காலம் வந்து விட்டதோ என்று அச்சப்பட்டார்கள்.

சூழ்நிலையின் இறுக்கத்தைப் புரிந்துகொண்ட தசரத மன்னனின் குல குருவான வசிஷ்ட முனிவர் பேசலானார். அவர் தசரத மன்னனைப் பார்த்துச் சொன்னார்: “மன்னா! கோசிக முனிவரது நோக்கத்தைப் புரிந்து கொள்!” என்று சொல்லிவிட்டு முனிவரிடம் “முனிவரே! நீர் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். அமைதியடையுங்கள்” என்றார். பிறகு மன்னனைப் பார்த்து “மன்னா! உன் மகனுக்கு அளவிலா நன்மைகள் வந்து சேர்வதை நீ விரும்பவில்லையா?” என்றார். “உன் மகன் ராமனுக்கு அளவற்ற அஸ்திர வித்தைகள் தெரிந்து கொள்ளும் நேரம் வந்திருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்” என்றார்.

குருவின் வார்த்தைகளைக் கேட்ட தசரதன், உடனே இராமனை அழைத்து வரக் கட்டளையிட்டான். காவலர்கள் ராமனிடம் சென்று மன்னர் அழைப்பதாகக் கூற, அக்கணமே ராமன் தன் தம்பி இலக்குவனோடு கிளம்பி அரசவை வந்து சேர்ந்தான். இராமனும் இலக்குவனும் இணைபிரியாமல் இருப்பவர்கள். அண்ணன் போகுமிடமெல்லாம் தம்பியும் வரும் வழக்கம் கொண்டவன். அவைக்கு வந்த ராமனை முனிவரிடம் காண்பித்து தசரதன் “ஐயனே! இந்தச் சிறுவர்க்கு இனி நல்ல தந்தையும் தாயும் நீயே! இவர்களை உம்மிடம் அடைக்கலமாக ஒப்புவித்தேன். இவர்களுக்கு தக்கன செய்வீராக!” என்றான்.

இராம லக்ஷ்மணர்களைக் கண்டதும் கோசிக முனிவனின் கோபம் தணிந்தது. மகிழ்ச்சியடைந்தார். இராம லக்ஷ்மணர்களை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டு, நாம் போய் வேள்வியை முடிப்போம் என்று கூறி தசரதனை வாழ்த்தி விடைபெற்றுச் சென்றார். இராமன் அம்புராத் தூணியைத் தோளில் தாங்கிக் கொண்டு, கையில் வில்லை ஏந்தி, இலக்குவனும் அதுபோலவே வில் அம்பு சகிதம் புறப்பட்டு, முனிவரின் நிழல் போல அவரைப் பிந்தொடர்ந்து நகரின் எல்லையைச் சென்றடைந்தனர்.

முனிவர் முன்னே செல்ல, அடுத்து இராமனும், அவன் பின்னே இலக்குவனுமாகச் சென்றதாக வான்மீகத்தில் கூறப்படுகிறது. மூவரும் நடந்து சென்று சரயு நதியை அடைகின்றனர். அப்போது இரவு நேரம் வந்துவிட்டது. அன்றைய இரவுப் பொழுதை அங்கே ஒரு சோலையில் கழித்தனர்.

பொழுது விடிந்ததும் ஒரு படகில் ஏறி, சரயு நதியைக் கடந்தனர். அங்கே ஒரு சோலை. அது என்ன சோலை என்று இராமன் வினவ, முனிவர் கூறுகிறார். “ஒரு சமயம் சிவபெருமான் யோக நிலையில் இருந்தார். அப்போது மன்மதன் தனது பாணங்களைக் கொண்டு காமக் கணைகளை ஏவ, சிவபெருமான் சினந்து, அவனைத் தன் நெற்றிக் கண் திறந்து எரித்து சாம்பலாக்கி விட்டார். அது நிகழ்ந்த இடம் இதுதான். இதனை காமன் ஆசிரமம் என்பார்கள். இந்த நாட்டுக்கு அங்க நாடு என்றும் பெயர்” என்று எடுத்துரைத்தார் முனிவர்.

அங்கு வந்து சேர்ந்த இம்மூவரையும், அந்த காமன் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த முனிவர்கள் அன்புடன் வரவேற்றனர். மூவரும் அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற இடம் கொடிய பாலைவனப் பிரதேசம். கொடிய அந்தப் பாலைவனத்தைக் கடக்கும் போது இராம லக்ஷ்மணர்கள் எவ்வளவு ஆற்றலுடையவராயினும், வெப்பம் பொறாமல் துன்பமடைவர் எனக் கருதி, விஸ்வாமித்திர முனிவர் அவர்களுக்கு பலா, அதிபலா எனும் இரண்டு மந்திரங்களை உபதேசித்தார். அவ்விரு மந்திரங்களின் மகிமையால் அந்தப் பாலைவனத்தின் கொடுமை தெரியாமல் குளிர்ந்து நடை வருத்தம் தெரியாமல் செய்தது.

இந்த நிலம் இவ்வளவு கொடுமையான பாலையாக மாற என்ன காரணம் என்று இராமன் முனிவரிடம் வினவ, அவர் கூறியதாவது: “ராமா! கேள். இந்தக் காட்டில் பல உயிர்களைக் கொன்று, தின்று வாழ்பவளும், ஆயிரம் மத யானைகளின் பலத்தைக் கொண்டவளுமான ஒருத்தி இருக்கிறாள். அவள் கதையைச் சொல்கிறேன் கேள்!”

“யட்ச குலத்தில் வந்த சுகேது என்பவன் தனக்குப் பிள்ளையில்லாத குறைக்கு மனம் வருந்தி, அக்குறை தீர பிரம்ம தேவனைக் குறித்து நெடுநாள் தவம் செய்து வந்தான். அவனது கடும் தவத்தை மெச்சி பிரம்ம தேவன் அவனிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்க, அவன் தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு பிரம்மன் ‘உனக்கு இந்தப் பிறவியில் மகன் பிறக்கும் பாக்கியம் இல்லை, ஆனால் உனக்கு ஒரு மகள் பிறப்பாள்’ என்று வரமருளினார். அந்தப் பெண் லக்ஷ்மி போன்ற அழகும், ஆயிரம் யானைகளின் பலமும் கொண்ட ஒரு பெண்ணாக இருப்பாள் என்றும் பிரம்மன் கூறியருளினார்.

அதன்படி சுகேதுவுக்கு தாடகை என்ற பெண் பிறந்து, வளர்ந்து மணப் பருவம் அடைந்தபோது, அவளது அழகிற்கும், வலிமைக்கும் ஏற்ற கணவன் யார் என்று ஆராய்ந்து, இயக்கர் தலைவனான சுந்தன் என்பவனுக்கு அவளை மணம் செய்து கொடுத்தான். மணமுடித்து அவ்விருவரும் ரதி மன்மதன் போல அன்புடையவராய் இன்பமாய் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மாரீசன், சுபாஹு என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். அவ்விருவரும் மாயை, வஞ்சனை இவற்றோடு நல்ல உடல் வலிமையும் பெற்றிருந்தனர்.

சுந்தன் மதம் கொண்டு தன்னை மறந்து, இன்னது செய்கிறோம் என்று அறியாது அகத்திய முனிவரின் ஆசிரமம் சென்று அங்குள்ள மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தான். இந்த அகத்திய முனிவர் பொதிகை மலையில் வாழ்பவர் எனவும், சிவபெருமானுடைய திருமணத்தின் போது கூடிய கூட்டத்தின் காரணமாக வடகோடு அழுந்த தென்கோடு உயர, அதனை சமன் செய்யும் பொருட்டு தெற்கே அனுப்பப்பட்டார் என்று புராணங்கள் கூறும். இவர் கடல் நீரை முழுதுமாக பருகக் கூடியவர். அந்த வரலாறு:-

விருத்திராசுரன் என்ற அசுரன் இந்திரனால் துரத்தப்படுகிறான். அவன் மேலும் பல அசுரர்களுடன் கூட கடலுக்குள் ஒளிந்து கொள்கிறான். அவனை வதைக்க முடியாமல் இந்திரன் வருந்திய போது அகத்திய முனிவர் தமது தவ வலிமையால் கடல்நீர் முழுவதையும் தம் கையில் அடங்கும்படி செய்து ஆசமனம் செய்வது போல அருந்தி விடுகிறார். கடலுக்கடியில் ஒளிந்து கொண்டிருந்த அசுரர்கள் வெளிப்பட்டனர். பின்பு இந்திரன் அசுரர்களைக் கொன்று உலகை அவர்களிடமிருந்து காப்பாற்றியதாகவும், இதன் பின்னர் அகத்திய முனிவர் கடல் பகுதியை முன்போலவே நீர் கொள்ளச் செய்தார் என்பதும் புராணம்.

சுந்தன் அகத்திய முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றியிருந்த மரங்களை வேரோடு பெயர்த்தது கண்டு முனிவர் வெகுண்டார். அவர் பார்த்த கோபப் பார்வையில் அந்த அசுரன் எரிந்து சாம்பராகிப் போனான். இந்த செய்தி கேட்ட தாடகை தன் கணவனைக் கொன்ற முனிவரைக் கொன்று ஒழிப்பேன் என தன் புதல்வர்கள் உடன்வர, அகத்திய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அவர்கள் மூவரும் அங்கு சென்று செய்த அடாவடித்தனங்களைக் கண்டு சினந்த முனிவர், நீங்கள் மூவரும் அடாதன செய்ததால், அரக்கர்களாகி தாழ்வடைவீர்கள் என்று சாபமிட்டார்.

வடமொழியும், தமிழும், அநாதிகாலம் தொட்டு இருப்பன. சிவபெருமான் பாணினிக்கு வடமொழியையும், அகத்தியருக்குத் தமிழ் மொழியையும் அளித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய முனிவரான அகத்தியர் இட்ட சாபம் பெற்ற மூவரும் அரக்கர்களாகத் திரிகின்றனர். மாரீசனும், சுபாஹுவும் பாதாலத்தில் இருந்த சுமாலி என்பவனிடம் போய் தங்களை அவனது அபிமான புத்திரர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, அவனும் அவ்வாறே இவர்களை ஏற்றுக் கொள்கிறான்.

இந்த சுமாலி என்பவன் இராவணனுடைய தாயாகிய கேகசிக்குத் தந்தை. அதாவது தாய் வழிப் பாட்டன். இவன் தன் சகோதரர்களான மாலி, மாலியவான் ஆகியோருடன் இலங்கையில் குடிபுகுந்து தேவர்களுக்குப் பல இன்னல்கள் புரிந்து வந்தனர். திருமால் வந்து போர் புரிந்து வென்று மாலி என்பவனைக் கொன்றுவிட, மற்றவர்கள் பாதாலத்தில் பதுங்கிக் கொண்டனர். பிறகு, குபேரன் இலங்கையை வென்று ஆட்சி புரியும் காலத்தில் இராவணன் பிறந்து, வளர்ந்து பற்பல வரங்களைப் பெற்று, குபேரனை விரட்டிவிட்டு இலங்கையைத் தனதாக ஆக்கிக் கொண்டான். அதனால் சுமாலி முதலியோர் மீண்டும் இலங்கையில் குடிபுகுந்தனர்.

சுமாலியோடு சேர்ந்து கொண்ட மாரீசன், சுபாஹு ஆகியோரும் இலங்கையில் குடியேறி அங்கு இராவணனின் மாமன்கள் என்ற முறையில், பற்பல கொடுஞ் செயல்களைச் செய்து வந்தனர். தன் மக்கள் தன்னை விட்டுப் பிரிந்து, தன்னை தனியாக விட்டுச் சென்றபின் தாடகை மனம் புழுங்கிய நிலையில் இந்த வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தாள். அந்த தாடகை என்பாள் பெண் உருக் கொண்டவள்தான் என்றாலும் பூமியையே பெயர்த்தெடுக்கவும், கடல் நீரை முழுதுமாக அள்ளிப் பருகவும், வானை முட்டி இடிக்கவும் வல்லமை படைத்தவள். மலைகளைப் போன்ற தனங்களும், நஞ்சு உமிழும் கண்களும், இடிபோன்ற ஆரவாரக் குரலும், ஊழித்தீ போன்ற செம்பட்டை மயிரும், இருபிறை போன்ற கோரைப் பற்களும், கடல் எழுந்து நடப்பது போன்ற உருவமும் கொண்டவள். அவளை வருணிக்கும் கம்பர் பாடல் இதோ:–

“சூடக வரவுறழ் சூலக் கையினள்

காடுறை வாழ்க்கையள் கண்ணிற் காண்பரேல்

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்

தாடகை என்பது அச்சழக்கி நாமமே”

விஸ்வாமித்திர முனிவர் இராமனிடம் தாடகையின் வரலாற்றைக் கூறி வருகிறார். மேற்கண்ட பாடலில் கம்பன் கூற்று: “உன்னை கண்களால் காண்கின்ற ஆண்கள் கூட, தாங்களும் பெண்ணாகப் பிறந்திருக்கலாமே என்று உன் அழகில் மயங்கும்வார்களே! இராமா, சூலத்தைக் கையில் ஏந்திக் கொண்டு இந்தக் காட்டில் திரியும் அந்தக் கொடியவள் பெயர்தான் தாடகை என்பதாகும் என்றார். வான்மீகத்தில் வரும் சொற்றொடர் “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்பது ஆடவரின் கண், மனம் ஆகியவற்றைக் கவரும்படியான எழில் படைத்தவன் என்று கூறுகிறது. இந்த அரக்கிதான் வளமிக்க இந்த பூமியை இப்படி பாலைவனமாக ஆக்கி விட்டாள். இவள் அங்க நாடு எங்கும் உள்ள உயிர்களை அழித்தலோடு எனது வேள்விகளையும் இராவணன் ஏவலால் கெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று முனிவர் கூறுகிறார். அவர் இராமனைப் பார்த்து கூறியதாவது:-

“மைந்தா! தசரத குமாரா! இந்த அரக்கியை நீ இப்போதே அழிக்காவிட்டால், இன்னும் சில காலத்தில் இவள் இந்த பூவுலகத்தையே அழித்துப் பாழாக்கி விடுவாள்” என்றார்.

இந்த வரலாற்றைக் கேட்ட இராமன் வியப்பும், அந்த அரக்கியைப் பார்க்க வேண்டுமென்ற அவாவும் கொண்டான். தன் தலையை அசைத்து முனிவர் சொன்ன வரலாற்றைக் கேட்ட அழகினை, அடடா! கம்பர் வாக்கால் பார்க்கலாம்.

“இங்கு உறுவன் இபரிசு உரைப்ப அது கேளா

கொங்கு உறை நறைகுலம் சென்னி துளக்கா

எங்கு உறைவது இத்தொழில் இயற்றுபவள் என்றான்

சங்கு உறை கரத்து ஒரு தனிச்சிலை தரித்தான்”

‘பாஞ்சஜைன்யம்’ எனும் சங்கைத் தன் கையில் தாங்கியவன், இப்போது ஒரு வில்லைத் தாங்கிக் கொண்டு, விஸ்வாமித்திர முனிவரின் வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் தலையை மெல்ல அசைத்து இக் கொடுந்தொழிலைச் செய்யும் அவ்வரக்கி எங்கே வசிக்கிறாள் என்று கேட்டான். அப்போது முனிவர் எதிரிலிருந்த மலையைக் காட்டி “இதோ இந்த மலையில்தான் அவள் வாசம் செய்கிறாள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு மலை பற்றி எரிவதைப் போல அந்த அரக்கி தாடகை அங்கே வந்து சேர்ந்தாள். அவள் தோற்றம் எப்படி இருந்தது?

“இறைக்கடை துடித்த புருவத்தள்; எயிறு என்னும்

பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயள்

மறக்கடை அரக்கி, வடவைக்கனல் இரண்டாய்

நிறைக்கடல் முளைத்தென நெருப்பு எழ விழித்தாள்.”

கோபத்தால் நெறித்த புருவமும், கோரைப் பற்கள் கடைவாயில் தெரிய உதட்டைக் கடித்துக் கொண்டும், இரு கண்களிலும் வடவாக்னி எனும் தீப்பிழம்பு கக்க இவர்களை அவள் உற்றுப் பார்த்தாள். இடிபோல ஏழுலகும் கேட்கும்படியாகக் கர்ச்சித்தாள். தன் கை சூலத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு “இந்தக் காட்டுப் பகுதியில் இருந்த அனைத்து உயிர்களையும் நான் தின்று தீர்த்த பிறகு, எனக்கு உணவாகும்படி நீங்களாகவே வந்திருக்கிறீர்களா? உங்கள் தீவினை உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறதா? சொல்லுங்கள்” என்றாள்.

“உங்களைக் கொல்லுகிறேன் பார்!” என்று தனது கை சூலத்தைக் குறிபார்த்து எறியத் தயாரானாள். இந்த அரக்கியைக் கொல்வதற்காகத்தான் நாம் வந்திருக்கிறோம். அதுதான் முனிவரின் ஆணை என்பது தெரிந்தும், இவள் ஒரு பெண்ணாயிற்றே, இவளைக் கொல்வது சரியா? என்று இராமன் சிந்தித்துக் கொண்டு தனது கொடிய அம்பினை அவள் மீது செலுத்தத் தயங்கினான். இராமனுடைய கருத்தை உணர்ந்த முனிவர் சொன்னார்: “இராமா! அவள் உருவத்தில்தான் பெண், ஆயினும் செயலால் ஆண்களையும் விஞ்சுபவள். அவளைக் கொல்லுதல் அறச் செயலேயன்றி குற்றம் அல்ல” என்றார்.

“தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்

கோது என்று உண்டிலள் இத்தனையே குறை;

யாது என்று எண்ணுவது இக் கொடியாளையும்

மாது என்று எண்ணுதியோ? மணிப்பூணினாய்.”

“இவள் எங்களைக் கொன்று தீர்க்காத குறைதான், அவ்வளவு தீமைகளைச் செய்து வருகிறாள். தவம் செய்து எலும்பும் தோலுமாக உள்ள எங்களை வெறும் சக்கை (கோது) என்று சாப்பிடாமல் விட்டு வைத்திருக்கிறாள், இவளைப் பெண் என்று கருதாதே. பற்பல உயிர்களையும் வாரி வாரித் தன் வாயில் இட்டுத் தின்கிறாளே,

இதனினும் தீமை வேறு உளதோ? நான் தருமத்தைக் கூறினேனே தவிர இவளிடம் உள்ள கோபத்தால் இவளைக் கொல்லும்படி சொல்லவில்லை, இனியும் தாமதியாமல் உடனே இவளைக் கொல்வாயாக! தீயவரை அழித்து நல்லோரைக் காப்பது அரச தர்மம். உன் தர்மத்தைச் செய்!” என்றார் முனிவர்.

“குருவாகிய நீர் பணிப்பது எதுவாயினும், அதனை செய்து முடிப்பது என் கடமை” என்று இராமன் கூறிக்கொண்டிருக்கும் போதே தாடகை தன் கையிலிருந்த வேலை இராமன் மீது வீசினாள். அந்த சூலம் தன்னை நெருங்காமுன்னர் வில்லை வளைத்து அம்பைச் செலுத்தி அந்த சூலத்தைப் பொடிபொடியாக்கினான் இராமன். உடனே சரமாரியாகக் கற்களை வீசி இராமனைத் தாக்கினாள் அரக்கி. அவ்வளவையும் தன் அம்பினால் தகர்த்து தூள் தூளாக்கினான் இராமன். இனியும் இவளை விட்டு வைக்கக் கூடாது என்று இராமன் ஓர் அம்பை எடுத்து, அந்தக் கருநிற அரக்கி மீது விட்டான். அந்த அம்பு கல் போன்ற அவளது நெஞ்சில் புகுந்து, தங்காமல் கழன்று, அற்பர்களுக்கு நல்லோர் சொன்ன அறிவுரை எப்படி ஒரு காதில் புகுந்து மறு காது வழியாகப் போகுமோ அப்படிப் போனது.

“சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல்

அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக்

கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப்

புல்லர்க்கு நல்லோர் சென்ன பொருள் எனப் போயிற்றன்றே!”

பிரளய காலத்தில் வீசுகின்ற சண்டமாருதக் காற்றில் மோதி சிதைந்து போகின்ற கரிய மேகம் போல அந்த அரக்கி இராமன் செலுத்திய அம்பால் அடிபட்டு கீழே விழுந்தாள். அவள் உயிர் நீங்கிய பிறகு அரக்க வடிவம் நீங்கி முந்தைய இயக்கி வடிவம் பெற்று, இராமனை வணங்கி அவன் அருளால் நல்லுலகம் அடைந்தாள். (அத்யாத்ம ராமாயணம்).

ஒரு போரில் மன்னனை வீழ்த்துவதற்கு முன்பு அவனது வெற்றிக் கொடியை வீழ்த்துவது போல இராவண சம்ஹாரத்துக்கு முன்னதாக அவனோடு தொடர்புடைய ஓர் அரக்கி வீழ்ந்தாள். காகுத்தனின் (இராமனின்) கன்னிப் போரில், அரக்கர்களை நெருங்க முடியாத நிலை மாறி, முதல் அரக்கியை அழித்து அவள் இரத்தச் சுவை கண்டது, பின்னர் நேரப் போகும் அரக்கர்களின் அழிவுக்கு அச்சாரமாக அமைந்தது எனலாம். தேவர்கள் பூமாரி பொழிந்து முனிவரிடம் “இனி நடக்கப் போகும் அசுரர்களுக்கு எதிரான போரில், இராமன் வெற்றி பெறுவதற்கு தெய்வப் படைக் கலன்களை மந்திர உபதேசத்துடன் அளிப்பீர்களாக!” என்று வேண்டி நின்றனர். தாடகை வதம் நடந்தது சூரியாஸ்தமன வேளையிலாகும். பின்னர் இராப் பொழுதை அங்கேயே கழித்து விட்டு, காலை பல அஸ்திர வித்தைகளை முனிவர் இராமனுக்கு அருளியதாக வான்மீகம் கூறும்.

பிறகு மூவரும் புறப்பட்டு இரண்டு காத தூரம் நடந்து போகும்போது, பெரிய ஓசையைக் கேட்டனர். அது என்ன ஓசை என்று இராமன் முனிவரிடம் கேட்டான். முனிவர் கூறுகிறார்: சரயு நதியில் கோமதி எனும் ஆறு கலப்பதால் ஏற்படும் ஓசை அது என்று கூறி மேலே செல்ல வழியில் ‘கோசிகை’ எனும் நதிக்கரையை அடைகின்றனர். விஸ்வாமித்திர முனிவர் தன்னுடன் பிறந்தவளான கெளசிகி என்பவளே இந்த நதியாக மாறினாள் என்று அந்த வரலாற்றையும் முனிவர் கூறினார்.

முன்பொரு காலத்தில் பிரம்ம தேவன் குசன் எனும் ஒரு அரசனை தோற்றுவித்தான். அந்த குசனுக்கு நான்கு புதல்வர்கள். அந்த நால்வரும் நான்கு வேதங்களுக்கு இணையானவர்கள். குசநாபன், ஆதூர்த்தன், வசு, குசாம்பன் என்பது அவர்கள் பெயர். இவர்களில் ஒருவன் கெளசாம்பி நகரிலும், அடுத்தவன் மகோதயம் எனும் நகரிலும், மூன்றாமவன் தன்மவனம் எனும் இடத்திலும், நான்காவது மகன் கிரிவிரச நகரிலும் வாழ்ந்து வந்தனர். இவர்களில் குசநாபனுக்கு அழகிய நூறு பெண்கள் பிறந்தனர். இவர்கள் வளர்ந்து பேரழகிகளாக வளர்ந்து இன்புற்று வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு நாள் அவர்கள் நீர்விளையாடி மகிழ்ந்து வரும் காலையில், வாயுதேவன் இவர்களைக் கண்டு மோகித்து, அவர்களை அணுகித் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். அவர்கள் முறை தவறாத உறுதி பூண்டவர்கள் என்பதால் “எங்கள் தந்தையிடம் சென்று பேசுங்கள்; அவரது முடிவன்றி நாங்களாக எந்த முடிவும் எடுக்க இயலாது” என்று கூறிவிட்டனர். கோபம் கொண்ட வாயு, அவர்களுடைய அழகைப் போக்கி, குரூபிகளாக விளங்குமாறு சபித்து விட்டான்.

வாயு போன பிறகு அந்தப் பெண்கள் குரூபிகளாக உருமாறி தந்தையிடம் சென்று முறையிட்டார்கள். அவர், அந்தப் பெண்களே சாபமிடும் வலிமை பெற்றவர்களாக இருந்தும், அப்படிச் செய்யாமல் தங்கள் நிறைகாத்து நின்ற பெருஞ்செயலுக்கு அவர்களைப் பாராட்டி, பிரம்மதத்தன் என்பவனுக்கு அவர்களை மணமுடித்து வைக்கிறான். இந்த பிரம்ம தத்தன், சூளி எனும் மாமுனிவருக்கும், ஸோமதை எனும் கந்தர்வக் கன்னிகைக்கும் பிறந்த சத்புத்திரன். இவன் க்ஷத்திரிய அம்சமுடையவனாதலின் காம்பிலிய நகரில் ஆட்சி புரிந்து வந்தான். இந்த பிரம்மதத்தன் குரூபிகளான குசநாபனின் பெண்களை அவர்கள் கரங்களைப் பிடித்து பாணிக்கிரகணம் செய்துகொள்ளும் வேளையில் அவர்கள் தங்கள் அவலட்சண உருவம் மாறி, கூன் நிமிர்ந்து, முன்போல பேரழகிகளாக மாறினார்கள். இந்தப் பெண்களின் தந்தையான குசநாபன் அந்தப் பெண்களை கணவனுடன் அனுப்பிய பிறகு, தனக்குப் பின் நாட்டை ஆள ஒரு மகன் இல்லையே என்று புத்திரகாம யாகம் செய்து காதி எனும் மகனைப் பெற்றான்.

காதி வளர்ந்து பெரியவன் ஆனதும், குசநாபன் அவனுக்குப் பட்டம் சூட்டினான். பின்பு சுவர்க்கம் புகுந்தான். அந்த காதிக்கு என் அக்காவான கெளசிகியும், நானும் மக்களாகப் பிறந்தோம். என் அக்கா கெளசிகையை “இருசிகன்” (ரீசிகன் என்பது சமஸ்கிருதப் பெயர்) எனும் முனிவருக்கு மணம் செய்விக்க அவன் நெடுநாள் தவம் செய்து பிரம்ம லோகம் அடைந்தான். பிரம்ம லோகத்துக்கு அந்த ரீசிகன் வான் வழியாகச் செல்வதைக் கண்ட கெளசிகி தானும் ஒரு நதியாக உருவெடுத்து அவனைப் பின் தொடர்ந்தாள். இதனைக் கண்ட ரீசிகன் இவளைப் பார்த்து “நீ இந்த நதி வடிவிலேயே நில உலகில் பாய்ந்து மக்களின் குறைகளைப் போக்கி இருப்பாயாக!” எனக் கூறினான். அவளும் அதுமுதல் இந்த ஆறு வடிவத்தில் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறாள் என்றார் கோசிக முனிவர்.

கெளசிகி நதியின் வரலாற்றைக் கேட்ட இராம லட்சுமணர்கள் அதிசயத்தில் ஆழ்ந்தார்கள். மூவரும் மேலும் சில தூரம் நடக்க அங்கே இருந்த ஒரு சோலையைக் கண்டு “அது யாது?” என இராமன் வினவினார். அதற்கு முனிவர் இதுதான் ‘சித்தாஸ்ரமம்’ எனப்படும் இடமாகும். இந்த இடம் தூய்மையானது. தங்கள் கணவரைவிட வேறு தெய்வம் இல்லை என எண்ணும் கற்புடைய பெண்டிரின் மனம்போல தூய்மையானது. வேத முதல்வனான திருமால், முன்பு தவம் செய்த இடம் இது என்றார் விஸ்வாமித்திர முனிவர். இந்த இடத்தில் கம்பர் கூறும் உவமை நமக்கு ஒரு திருக்குறளை நினைவு படுத்துகிறதல்லவா? அது

“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”.

வேறு தெய்வம் எதையும் தொழாதவளாய், தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும் என்பது இந்தக் குறளின் கருத்து.

இந்த வனத்தில் திருமால் இருந்து தவம் செய்த நாளில் மாவலி (மகாபலி) எனும் அசுர அரசன் இவ்வுலகை ஆண்டு வந்தான். இந்த மகாபலி விரோசனன் என்ற அரசனின் மகனாவான். மகாபலி உலகைத் தன் கொம்பால் தாங்கி கடலில் மூழ்கி உலகை வெளிக் கொணர்ந்தவன். வராகமூர்த்திக்கு இணையான பலம் கொண்டவன். முன்பொருமுறை இரணியாக்கன் என்பவன், தனது ஆற்றலால் பூமியைப் பாய்போல சுருட்டிக் கொண்டு கடலில் புகுந்து ஒளிந்து கொண்டான். தேவர்களும், முனிவர்களும் வேண்டிக் கொள்ள திருமால் வராக உருவம் எடுத்து கடலுக்குள் புகுந்து இரணியாக்கனைக் கொன்று, பூமியை மீட்டுத் தன் கொம்பிலே தாங்கி முன்போல இருக்கச் செய்தான். அந்த வராக மூர்த்திக்கு இணையான பலம் கொண்டவன் இந்த மகாபலி. இந்த மகாபலி தனது வலிமையை நம்பி, தான் செய்யும் யாகத்தில் எந்தப் பொருளை யார் கேட்டாலும் தானம் செய்ய மன உறுதி பூண்டிருந்தான். தேவர்களை வென்று, திரிலோகாதிபதியாக ஆனான்.

காசிபர் எனும் முனிவர் தன் பத்தினியான அதிதியோடு திருமாலைக் குறித்துத் தவம் செய்து, தேவரீர் எனக்கு அதிதி வயிற்றில் தாங்கள் தோன்றி அவதாரம் செய்து, அசுரர்களை அழித்து தேவர்களைக் காக்க வேண்டுமென்று வரம் கேட்டார். திருமால் அதிதி வயிற்றில் பிறந்து வாமனன் எனும் பெயர் பெற்றார். காசிப முனிவர் தவம் செய்து வரம் பெற்றது, இந்த சித்தாஸ்ரமத்தில்தான். மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு மிக சிறிய உருவம் கொண்ட வாமனன் சென்றான். இந்த சிறிய உருவத்தோடு வரும் வாமனனைக் கண்டு மகிழ்ந்த மகாபலி எழுந்து வந்து உபசரித்தான். அந்தணரில் உனக்கு ஒப்பானவர் எவரும் இல்லை; உன்னை தரிசித்த பாக்கியம் பெற்றேன் என்று அவனை வணங்கினான்.

“மகாபலி! உன்னை நாடி வந்தோர்க்கு வேண்டியதைத் தருவாயமே! நானும் ஒன்றை நாடி உன்னிடம் வந்திருக்கிறேன். எனக்கு மூன்றடி மண் வேண்டும்” என்றான் வாமனன்.

இதைக் கேட்ட மகாபலி உடனே “தந்தேன்” என்றான். நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்த மகாபலியின் (அசுர) குருவான சுக்கிரன் (வெள்ளி) கொடுக்காதே என்று தடுத்தான்.

“சிந்தை உவந்து எதிர் என் செய என்றான்

அந்தணன் ‘மூவடி மண் அருள் உண்டேல்

வெந்திறலாய் இது வேண்டும்’ எனாமுன்

‘தந்தனன்’ என்றனன்; வெள்ளி தடுத்தான்.”

சுக்கிராச்சாரியார் மகாபலியைப் பார்த்து கூறுகிறார்: “பிரளய காலத்தில் அண்ட சராசரங்களைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு சிறு குழந்தையாய் ஆலிலையில் துயிலுகின்ற ஆதிமூர்த்திதான்,

தேவர்களின் வேண்டுகோளின்படி இப்படி குறுமுனி வடிவம் தாங்கி வந்திருக்கிறான். இவன் கேட்டபடி தானத்தைக் கொடுக்க நீ சம்மதித்தால், பிறகு உனக்கு தீமைதான் நேரும்” என்று மகாபலியின் குலகுரு சொன்னார்.

“திருமாலை வேண்டிதான் யாகம் செய்கிறோம். அந்தத் திருமாலே என்னிடம் வந்து யாசித்துத் தானம் பெறுவானாகில், அதைவிட பெரும் பேறு எனக்கு என்ன இருக்கிறது. எனவே, என் வாக்குப்படி தானம் கொடுக்கத் தடை சொல்லாதீர்கள்” என்று பதிலிறுத்தான் மகாபலி. மகாபலி அசுரன் ஆதலின், இந்திரன் முதலானோருக்கு ஆஹூதி கொடுக்காமல் நேரடியாக ஸ்ரீமன் நாராயணனுக்கே யாகம் செய்ததால், அவனே நேரில் வந்து தானம் கேட்கும்போது இதைவிட நற்பேறு வேறு என்ன இருக்கிறது என்று கூறினான்.

உயர்ந்தவர்கள் கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டால், யார் தடுத்தாலும் நிறுத்த மாட்டார்கள். எனவே மகாபலி, வாமனன் கேட்டதைக் கொடுக்கத் தயாரானான். “ஒருவர் தானம் செய்யும்போது அதனைத் தடுப்பது உங்களுக்கு அழகா? சுக்கிராச்சாரியார் அவர்களே! தானம் கொடுப்பதைத் தடுப்பவர்கள் சுற்றமும், உடுப்பதும், உண்பதுமின்றி கெட்டொழிவர் என்பதைத் தாங்கள் உணரவில்லையோ?” என்றான் மகாபலி. பின்னர் வாமனனை நோக்கி “முனிவரே! நீங்கள் வேண்டியபடி மூன்று அடி நிலத்தை அளந்து எடுத்துக் கொள்க என்றான்” அவர் கையில் நீர் வார்த்தபடி.

அப்படி நீர் வார்க்கையில் சுக்கிரன் வண்டு உருக்கொண்டு நீரூற்றும் பாத்திரத்தின் வாயை அடைத்தான் எனவும், வாமனன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து நீர் வரும் வழியைக் குத்த, வண்டு உருக்கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் குருடானது எனவும் செய்தி உண்டு. மிக உயர்ந்தவர்களுக்குச் செய்த சிறிய உதவிகூட, மிகப் பெரியதாக மதிக்கப்படும். அதுபோல குறளன் வடிவு எடுத்த வாமனன் பெரிய வடிவு எடுத்து ஓரடியால் பூமியையும், மற்றோர் அடியால் வானத்தையும் அளந்தான். மூன்றாவது அடியை வைக்க இடமின்மையால் பெருமாள் மகாபலியின் தலையில் வைத்து பூமியில் அழுத்தி தீமைகளைப் போக்கினான். திருமாலின் இந்தப் பெருமையை என்னவென்பது. அப்படி காசிப முனிவர் தவம் செய்த இந்த சித்தாஸ்ரமம் நான் யாகம் செய்ய தேர்ந்தெடுத்த இடமாகும் என்றார் கோசிக முனிவர்.

“இராமா! நான் இந்த இடத்தில் இப்போது யாகத்தைத் தொடங்குகிறேன். நீங்கள் இருவரும் விழிப்போடிருந்து காவல் காத்துக் கொண்டிருங்கள்” என்று சொல்லி விஸ்வாமித்திர முனிவர் வேள்வியைத் தொடங்கினார். ஆறு நாட்கள் வேள்வி நடைபெற்றது. அதுவரை கண்களை இமை காப்பது போல இராம லக்ஷ்மணர்கள் வேள்வியைக் காத்து வந்தனர். காவல் தொடங்கியது முதல் அரக்கர்களைக் காணவில்லையே, அந்தக் கொடியவர்கள் எப்போது வருவார்கள் என்று இராமன் முனிவரைக் கேட்டான்.

யாகத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்த காரணத்தால் முனிவரால் பதில் கூறமுடியவில்லை. இராமன் திரும்பவும் வந்து மேலே அண்ணாந்து பார்த்தான். அங்கே ஆகாயத்தில் பலர் கூடி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரக்கர்கள் அங்கிருந்தபடியே அம்புகளை இவர்கள் மீது எய்தனர். ஈட்டிகளை எறிந்தனர். நீரையும், நெருப்பையும் பொழிந்தனர். பெரிய பாறைகளைப் பெயர்த்து வீசினர். வசைச் சொற்களால் திட்டினர். அதட்டினர். மழுவாயுதத்தை எறிந்தனர். இப்படிப் பல கொடிய மாயச் செயல்களைச் செய்தனர். அவர்கள் வீசிய ஆயுதங்கள் வான மண்டலத்தையே மூடி மறைத்தன. யாக மந்திரங்கள், அந்த அரக்கர்களை அருகில் வரமுடியாமல் தடுத்தன. எனவே தூரத்தில் வானத்தில் நின்றுகொண்டு இத்தகைய தீச்செயல்களைச் செய்தனர்.

இராமன் உடனே இலக்குவனை அழைத்து “தம்பி! அதோ பார்! முனிவர் சொன்ன தீயவர்கள் இவர்கள்தான்” என்றான்.

அரக்கர் கூட்டத்தைக் கண்ட இளைய பெருமாள் அவர்களைக் கொன்று வீழ்த்த இராமனது கட்டளையை எதிர்பார்க்கும் குறிப்போடு, தன் கைவில்லை எடுத்து “இப்போது இவர்கள் இற்று வீழ்வதைக் காண்பீர்கள்” என்றான்.

அரக்கர் சொரியும் எதுவும் யாக குண்டத்தில் விழாமல் அம்புகளால் இராமன் ஒரு சரக்கூடம் அமைத்தான். முனிவர்கள் இராமனிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களுக்கு அபயம் அளித்த இராமன் உடனே தன் வில்லை எடுத்துப் பாணங்களைத் தொடுக்கலானான். இராமன் விட்ட ஓர் அம்பு மாரீசனை கடலில் கொண்டுபோய் போட்டது. மற்றொரு அம்பு சுபாஹுவை எமனுலகுக்கு அனுப்பியது. எஞ்சிய அரக்கர்கள் அஞ்சி அலறி ஓடினர். எனினும் இராமனுடைய வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் அவர்களைத் துரத்திச் சென்று கொன்றுவிட்டுத் திரும்பின. தேவர்கள் பூமாரி பெய்ய, துந்துபி முழங்க, மேகங்கள் கர்ச்சனை செய்ய, அனைவரும் இராமனைத் தொழுது வணங்கினர்.

யாகத்துக்கு அரக்கர்களால் ஏற்பட்ட இடையூறு நீங்கியவுடனே, முனிவரும் தம் யாகத்தை நன்கு முடித்தார். ஸ்ரீராமனை விஸ்வாமித்திர முனிவர் புகழ்ந்து பாராட்டினார். இராமன் முனிவரிடம் “வேள்வி முடிந்துவிட்டது. இனி நான் என்ன செய்ய வேண்டும்” என வினவ, முனிவர் “ஸ்ரீ ராமா! நீ செய்வதற்கு அரியது என்று ஒன்றுமே இல்லை. எனினும் உன்னால் முடிய வேண்டிய காரியங்கள் சில உண்டு. அவற்றைப் பிறகு பார்க்கலாம், இப்போது முதலில் மிதிலைக்குச் செல்வோம். அங்கு ஜனக மகாராஜன் செய்யும் வேள்வியைக் காண்போம்” எனக் கூற மூவரும் புறப்பட்டனர்.

சித்தாஸ்ரமத்திலிருந்து புறப்பட்ட அம்மூவரும் சோனை நதிக்கரையை அடைந்தனர். இந்த நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் ஆறு. அங்கு சென்றடையும் போது மாலை நேரம் வந்தது. சோனை நதிக்கரையிலிருந்த ஒரு சோலையில் மூவரும் அன்றிரவைக் கழித்தனர். மறுநாள் மூவரும் நடந்து சென்று கங்கைக் கரையை அடைந்தனர். அப்போது இராமன் முனிவரிடம் “எந்தையே! இந்த மாபெரும் கங்கை நதியின் சிறப்பினை எனக்குச் சொல்லி அருள்வீராக!” எனக் கேட்க, முனிவரும் சொல்லலானார்.

“இராமா! ஒரு காலத்தில் சகரன் எனும் பேரரசன் இப்புவியை ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்தவள், அவள் பெயர் ‘விதர்ப்பை’. இவளது இயற்பெயர் ‘கேசினி’. இளையவள் ‘சுமதி’. இவள் காசிப முனிவருக்கும் விநதை என்பாளுக்கும் மகளாகப் பிறந்தவள். காசிபரின் தவத்தினால், முதல் மனைவிக்கு வம்ச விருத்திக்கு ஒரு மகனும், இளையவளிடம் வலிமை மிக்க அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறப்பார்கள் என வரம் அருளினார் பிருகு முனிவர். அதன்படி கேசினி அதாவது விதர்ப்பைக்கு அசமந்தன் பிறந்தான். சுமதியின் கருவில் சுரைக்காய் வடிவில் ஒரு மாமிசப் பிண்டம் தோன்றி வெடிக்க, அதினின்றும் அறுபதினாயிரம் புதல்வர்கள் தோன்றினார்கள்.

அசமஞ்சன் கொடுமனம் கொண்டவன். சிறு பிள்ளைகளை ஆற்றில் விட்டெறிந்து கொல்வான். அவனை தந்தை காட்டிற்குத் துரத்தி விட்டான். காட்டில் அவன் தவம் செய்து, இறந்த குழந்தைகளை மீட்டு விட்டான். ஒருவர் அஸ்வமேத யாகம் செய்து விட்டால், இந்திர பதவி அடைவர். எனவே இந்திரன் அஸ்வமேத யாகம் யார் செய்தாலும், அதைக் கலைத்து விடுவான். தேவர்கள், யார் இந்த யாகம் செய்தாலும் இந்திரனுக்குத் தகவல் கொடுத்து விடுவார்கள். சகரன் அஸ்வமேத யாகம் செய்ய முயலுகிறான். தேவர்கள் அந்தச் செய்தியை இந்திரனுக்குத் தெரிவிக்க, அவன் யாகக் குதிரையை பாதாளத்தில் கொண்டு போய் மறைத்து வைத்தான். அங்கே கபில முனிவர் என்பவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

கபில முனிவர் தவம் செய்யும் பாதாளத்தில் கொண்டு போய் யாகக் குதிரையை இந்திரன் மறைத்து வைக்கக் காரணம் என்ன தெரியுமா? கபில முனிவர் யோகம் கலைந்து கண் விழித்துப் பார்க்கும் போது எதிரில் உள்ளோர் எரிந்து சாம்பராகிவிடுவர். சகரனும் அவனது பிள்ளைகளும், முனிவரின் கண்களில் பட்டு எரிந்து போகட்டும் என்று இந்திரன் இந்தச் சதி செய்தான்.

சமரனது பேரன் அஞ்சுமான் என்பவன். இந்த அஞ்சுமானை யாகக் குதிரைக்குக் காவலாக அனுப்புகிறான். குதிரையைக் காணாமல் சமரனின் பிள்ளைகள் பாதாளத்திற்குச் சென்று தேடுகிறார்கள். அங்கே, கபில முனிவரின் அருகில் குதிரை இருக்கக் கண்டு அவர்தான் திருடினார் என்று எண்ணி அவரை வசை பாடுகின்றனர். கபில முனிவர் கண் விழித்துப் பார்த்தார். அந்த அறுபதினாயிரம் பிள்ளைகளும் எரிந்து சாம்பராகினர்.

சகரனுக்குச் செய்தி போகிறது. மன்னன் சோகத்தால் வருந்தி, தன் மகனுடைய மகனான அஞ்சுமானை அழைத்து அவர்கள் இறந்ததால், வேள்வி நின்று விட வேண்டுமா? என வினவ, அவன் புறப்பட்டு கபில முனிவர் இருக்குமிடம் செல்கிறான். கபில முனிவரின் ஆசிரமம் இருக்குமிடம் சென்ற அஞ்சுமான் சகரபுத்திரர்கள் எரிந்து போன சாம்பர் மேட்டைப் பார்க்கிறான். முனிவரிடம் சென்று வணங்கியதும், அவர் நடந்த விவரங்களைச் சொல்லி குதிரையை அழைத்துப் போகச் சொல்லுகிறார். குதிரை வந்ததும் சகரன் யாகத்தைச் செய்து முடித்தான். அஞ்சுமானிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு தவம் செய்வதற்காக வனம் சென்றான்.

அஞ்சுமானுடைய மகன் திலீபன். அவனது மகன் பகீரதன். இந்த பகீரதன் தன் முன்னோர்கள் சாம்பராகி விட்டார்கள் என்பதால், அவர்கள் நற்கதி அடைய வேண்டி அரும் தவமியற்றினான். பாதாளத்துக்குப் போவதற்காக சகரன் தோண்டிய பள்ளத்தில் நீர் சேர்ந்து தேங்கியதால், அது “சாகரம்” என ஆயிற்று. பகீரதன் நாட்டை ஆண்டு வரும்போது வசிஷ்ட முனிவர், அவன் முன்னோர்களின் வரலாற்றை எடுத்துரைத்து, அவர்கள் நற்கதியடைய ஓர் உபாயத்தை எடுத்துரைத்தார். அவர் அரசனை நோக்கி “அரசே! நீ நெடுங்காலம் பிரமனை நோக்கி தவம் செய்தால், உன் எண்ணம் கைகூடும்” என்றார்.

உடனே பகீரதன் ஆட்சியைத் தன் அமைச்சர்களிடம் ஒப்புவித்து விட்டுத் தவம் செய்யச் சென்றான். நல்ல ஆலோசனைகளை வழங்குபவனை “சுமந்திரன்” என்று அழைப்பார்கள். நல்லஆலோசனைகளைக் கூறுபவன் என்பது பொருள். எனவே அவனது அமைச்சனின் பெயர் சுமந்திரன். பகீரதன் இமய மலைச் சாரலுக்குச் சென்று, பதினாயிரம் வருஷம் தவம் செய்தான் பிரம்ம தேவன் அவன் முன்பு தோன்றி “நின் தவத்துக்கு மகிழ்ந்தனம். உனது முன்னோர்கள், கபில முனிவரின் கோபத்தால் இறந்தனர். ஆகாய கங்கை பூமியில் இறங்கி ஓடி, இறந்தவர்களின் அஸ்தியின் மீது படியுமானால், அவர்கள் நற்கதி அடைவார்கள்” என்று கூறினார்.

“அந்த ஆகாய கங்கை பூமியில் பாய்ந்தால், அதன் வேகத்துக்கு பூமி தாங்காது. அதனைத் தாங்கும் ஆற்றல் சிவபெருமானுக்கு உண்டு. எனவே, நீ அந்த சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்” என்றும் பிரம்மன் கூறினார். அதன் பிறகு பகீரதன், சிவபெருமானைக் குறித்து பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்ய, சிவன் அவன் முன் தோன்றி “உன் கருத்தை நிறைவேற்றுவோம்” என அருள் செய்தார். அதாவது, கங்கை பூமியில் பாயும் போது அதனைத் தான் தாங்கிக் கொள்வதாக உறுதியளித்தார்.

பிறகு பகீரதன் கங்கையை பூமிக்கு வரவழைப்பதற்காக ஐயாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். கங்கா தேவி ஒரு இளம் பெண் வடிவம் தாங்கி பகீரதன் முன் தோன்றி “பகீரதா! கங்கை பூமியில் வரும்போது அதன் வேகத்தைத் தாங்குவார் யார் இருக்கிறார்கள். சிவபெருமான் விளையாட்டாகச் சொல்லிவிட்டார் போலும். அது உண்மை இல்லை. உன் தவத்தில் ஏதோ கோளாறு இருந்திருக்கிறது. மறுபடியும் தவம் செய்” என்று செறுக்கோடு கூறிச் சென்றாள்.

பகீரதன் மனச் சோர்வு அடைந்தான். மீண்டும் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான். சிவன் அவன் முன் தோன்றி “பகீரதா! கவலைப் படாதே. கங்கையை சிதறாமல் நாம் அடக்குவோம்” என்று சொல்லி மறைந்து விட, மீண்டும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டான். சருகு, புழுதி, நீர், வாயு இவற்றை மட்டும் உட்கொண்டு மொத்தம் முப்பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து கங்கை நதியை பூமிக்குக் கொண்டு வந்தான்.

பெருத்த ஆரவாரத்துடன் கங்கை பொங்கி பாய்ந்து வந்தாள். அப்போது உலகம் அதிர பாய்ந்து வந்த நதியைச் சிவபெருமான் தனது சடாமுடியில் தாங்கி மறைத்து முடிந்து விட்டான். கங்கையின் செறுக்கும், சிவபெருமான் முடிக்குள் அடங்கிவிட்டது. இது என்ன இப்படி நேர்ந்தது, நமது மூதாதையர் நற்கதி பெற வேண்டி அவர்தம் சாம்பரைக் கரைக்க நினைத்தால், இவர் கங்கையைத் தன் சடாமுடியில் அடக்கிக் கொண்டாரே என்று திடுக்கிட்டு நின்றான். சிவபெருமான் அவனைப் பார்த்து “அஞ்சாதே, கங்கை நம் சடைக்குள்ளேதான் இருக்கிறாள்” என்று கூறி, ஒரு சிறிது மட்டும் கசிய விட்டார். கங்கை ஓடத் தொடங்கவும் அதற்கு முன்பாக பகீரதன் வழி காட்டிக் கொண்டு தன் முன்னோர்களின் சாம்பர் இருக்கும் இடத்தைக் காட்டிட ஓடினான்.

வழியில் சன்னு எனும் முனிவன் ஓடிவரும் கங்கையைத் தன் கையில் ஏந்தி ஆசமனம் செய்து விட்டான். பகீரதன் சன்னு முனிவனிடம் போய் தனது வரலாற்றையும், கங்கை பூமிக்கு வந்த கதையையும் கூறினான். அதைத் தாங்கள் ஆசமனம் செய்து விட்டீர்களே என் முன்னோர்கள் கதி என்ன ஆவது என்றான். அது கேட்ட முனிவன் கங்கையைத் தன் காது வழியாக ஓடவிட, அது அவன் முன்னோர்கள் சாம்பரில் பட்டுக்கொண்டு ஓடியது. அவர்கள் நற்கதி அடைந்தார்கள். பகீரதனும் அயோத்தி திரும்பினான்” என்று விஸ்வாமித்திர முனிவர் இராமனுக்குக் கங்கையின் வரலாற்றைக் கூறினார். பகீரதன் முயற்சியால் வந்ததால், பாகீரதி என்றும், கன்னு முனிவனின் காது வழியாக வெளியே வந்ததால் சானவி என்றும் கங்கையாறு பெயர் பெற்றது.

பிறகு மூவரும் கங்கையைக் கடந்து அங்கு விசாலை எனும் நகரை அடைந்தனர். பிறகு விதேக நாட்டின் எல்லையை அடைந்தனர். விதேக நாடு வளமிக்க நாடு. அந்த நாட்டின் தலைநகரம் மிதிலை. விஸ்வாமித்திர முனிவரும், இராம இலக்குவரும் அந்த மிதிலை நகரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த பாதையில் ஒரு கருங்கல் உருவைக் கண்டனர். அதனருகே இராமன் நடந்து சென்ற போது இராமனின் திருவடித் துகள் அதன் மீது பட்டதும், ஓர் பெண் உருக்கொண்டு எழுந்தது. எழுந்த அந்தப் பெண் இராமன் பாதங்களில் வணங்கி எழுந்தாள்.

தன் கால் துகள் பட்டு ஒரு பெண் எழுந்ததும், இராமன் ஆச்சரியப்பட்டு முனிவரைப் பார்த்தான். அவர் கூறினார்: “பகீரதன் வழித்தோன்றலாகிய இராமா! இவள் கெளதம முனிவரின் மனைவியான அகலிகையாவாள்” என்றார்.

தாய் போன்ற இவருக்கு இவ்வாறு நேர்ந்தது எப்படி என இராமன் வினவினான். அதற்கு முனிவர் “இராமா! கெளதம முனிவர் சிறந்த தவ சிரேஷ்டர். அவரது மனைவி இவள். இவளது பெயர் அகலிகை என்பதாகும். இந்திரனுக்கு அகலிகை மீது மோகம் ஏற்பட்டது. அதனால் எப்படியும் அந்த அகலிகையை அடையக் கருதி, ஒரு நாள் இரவில் முனிவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய சமயம், அவர் உருவத்தை எடுத்துக் கொண்டு அகலிகையை நெருங்கினான். முனிவரை வெளியேற்ற அவன் சேவல் போல கூவினான் என்றும், அது கேட்டு முனிவர் பொழுது விடிந்துவிட்டது போலிருக்கிறது என்று ஆற்றங்கரைக்கு ஸ்நானத்துக்குச் சென்று விட்டதாகவும், அந்த நேரம் பார்த்து இந்திரன் முனிவரின் வேஷத்தில் ஆசிரமத்துள் நுழைந்தான்.

ஆற்றுக்குச் சென்ற முனிவன், அது அகாலமென்று உணர்ந்து, ஆசிரமத்துக்கே திரும்பிவர, தன்னை இந்திரன் ஏமாற்றிவிட்டதை உணர்ந்தார். அவன் மீது அளவிலாத கோபத்துடன் முனிவர் ஆசிரமத்துக்கு வந்தார். இந்திரன் பயந்து போய் பூனை வடிவம் எடுத்துக் கொண்டு ஓட முனைந்தான். அகலிகை நடந்தவற்றை அறிந்து நாணத்தால் செயலற்று நின்றாள். முனிவர் இந்திரனைத் தீயெனப் பார்த்து, இந்த இழிச் செயலைச் செய்த உனக்கு உடலெங்கும் ஆயிரம் பெண் குறிகள் தோன்றட்டும் என சபித்தார். அகலிகையைப் பார்த்து, வேசிபோல இருந்த நீ கல்லாய் மாறிவிடுவாய் எனவும் சபித்தார். அகலிகை முனிவரிடம் கெஞ்சி முறையிட்டு பிழை பொருத்தருள்வீர் எனக்கு சாப விமோசனம் அருள்வீராக என வேண்டினாள். அதற்கு முனிவர் “என்று தசரத குமாரன் இராமனுடைய பாத துகள் உன்மீது படுகிறதோ அப்போது பெண் உருக் கொள்வாய்” என்று சாப விமோசனமளித்தார்.

தேவர்கள் பணிந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்திரன் உடலில் ஆயிரம் குறிகளுக்குப் பதிலாக, ஆயிரம் கண்களாக மாற்றி அருளினார். கோசிக முனிவர் இராமனை வெகுவாகப் பாராட்டினார்.

“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக் கெல்லாம்

உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?

மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே, உன்

கைவண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன்!”

இராமபிரான் தாடகையை வதம் செய்தபோது அவனது கைவண்ணமும், கால் துகள் பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்று எழுந்த போது அந்த அண்ணலின் கால் வண்ணமும் கண்டதாகக் கம்பன் கவிக்கூற்று. பிறகு இவர்கள் கெளதம முனிவரிம் அகலிகையை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைக்கிறான். அப்போது இராமபிரான் கெளதம முனிவரிடம், மனத்தாலும் தவறு செய்யாத இந்த மாதரசியைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, கெளதமரும் அவளை ஏற்றுக் கொண்டார். பின்னர் மூவரும் மிதிலை நகரைச் சென்றடைந்தனர்.

அவர்கள் மிதிலை நகரின் கோட்டையை நெருங்கி வந்த போது அந்த கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த அரசு கொடி இவர்களை “வா! வா!” என்று அழைப்பது போல இருந்ததாம். அன்று தாமரை மலரை விட்டு நீங்கிய மகாலக்ஷ்மி இந்த நகரத்தில்தான் இருக்கிறாள், சீக்கிரம் வா! என்று அந்தக் கொடிகள் கை அசைத்து அழைப்பதைப் போல இருந்தது. மிதிலை நகருக்குள் புகுந்த அந்த நகர வீதிகளில் மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் பல்வேறு இனிய காட்சிகளைக் கண்டுகொண்டே இவர்கள் நடக்கிறார்கள். அப்போது அந்த வீதியில் அமைந்திருந்த கன்னி மாடம் அவர்கள் கண்களில் படுகிறது.

அந்த மாடத்தின் மீது அழகே உருவாக ஒரு பெண் நிற்கிறாள். அவள்தான் ஜனக மகாராஜனின் புத்திரியான ஜானகி என்பாள். முனிவருக்குப் பின்னால் தன் தம்பியோடு நடந்து வரும் இராமன் அந்த அழகிய பெண்ணைப் பார்க்கிறான். அதே கணத்தில் அந்தப் பெண்ணும் அழகும் கம்பீரமுமாக வந்து கொண்டிருக்கும் இராமனைப் பார்க்கிறாள். பார்க்கின்ற அவர்களது கண்கள் ஒன்றோடொன்று சங்கமமாகின்றன. அவர்களது உணர்வுகளும் ஒன்றாகிவிடுகின்றன. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த பார்வையில் அவர்கள் உயிரும் உணர்வும் ஒன்றானது போல உணர்ந்தார்கள். இந்த இடத்தில் கம்பர் பெருமான் இயற்றியுள்ள பாடல் இதோ:

“எண்ணரும் நலத்தினாள் இனையன் நின்றுழி

கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது, உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!”

திருவள்ளுவர் பெருமான் இயற்றிய திருக்குறளில் காணப்படும் “கண்ணோடு கண் இணை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல” எனும் பாடலின் பொருளுக்கு விளக்கம் தருவது போல இராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்த மாத்திரத்தில் வாய்ச்சொற்கள் எதுவும் இல்லாமல் அவர்கள் உணர்வுகள் ஒன்றிப் போயின. ஓருயிரும் ஈருடலுமாகப் பாற்கடலில் இருந்த திருமாலும், இலக்குமியும் தங்கள் கலவி நீங்கிப் போய் பிரிந்திருந்து மீண்டும் கூடுகையில் பேசவும் முடியுமோ? இங்கு இவ்விருவரும் பார்த்த பார்வையினால், பேச்சு இல்லாமல் போய்விட்டது.

மூவரும் நடந்து சென்று கண்ணுக்கு மறையும் வரையிலும் பார்த்துக் கொண்டிருந்தாள் சீதாபிராட்டி. அவள் மெல்லியள். இராமன் பேரெழில் அவள் மனத்தை வாட்டத் தொடங்கியது. அவன் தன் கண் பார்வையிலிருந்து மறைந்து சென்ற பிறகும், அவன் நினைவாகவே இருந்தாள். இராமனுக்கும் மாடத்தில் பார்த்த அந்த பேரழகியான கன்னிகையின் உருவமும், அவள் கண்களும், அழகும் அவன் மனத்தை விட்டு நீங்க மறுத்தன.

சீதை அந்தப்புரம் சென்று தனது மலர் மஞ்சத்தில் படுத்தாள். மலர்கள் கருகிப் போயின. நெஞ்சில் தாபமும், ஏக்கமும் கொண்டு கண்ணீர் விட்டு அழுதாள். அவள் ஏன் இப்படி அழுகிறாள், வருத்தப்படுகிறாள் என்ற விவரம் அறியாத தோழியர்கள் அவளுக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆரத்தி சுற்றினர். மஞ்சத்தில் படுத்திருந்த சீதையின் மனதில் இராமன் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். அவன் நினைவு மட்டுமே அவள் மனதில் இருந்தது. யார் அவன்? தேவனோ? இருக்காது, ஏனென்றால் அவன் பார்க்கும் போது கண் இமைத்தானே. கையில் வில் ஏந்தியிருக்கிறான்; மார்பில் முப்புரி நூல் அணிந்திருக்கிறான், எனவே அவன் ஒர் மானிடன்தான். அதிலும் அரச குமாரன். மாதர் நலம் அனைத்தையும் என்னிடமிருந்து கவர்ந்து கொண்டு, என் கண்வழி புகுந்து நெஞ்சைத் திருடிச் செல்லும் கள்வனோ? ஐயோ! என்ன அவன் அழகு! இப்படியெல்லாம் இராமனின் அழகையும் அவன் உருவம் தன் மனத்துக்குள் புகுந்து செய்யும் மாற்றங்களையும் சீதை உணர்ந்து அவனிடம் காதல் வசப்பட்டாள்.

அடடா! என்ன தோற்றம் அவனது தோற்றம். அவளது எண்ணங்களை கம்பர் பெருமான் கவிதையில் வடிக்கிறார்.

“கடலோ! மழையோ! முழுநீலக் கல்லோ! காயா நறும் போதோ!

படர் பூங்குவளை நாண் மலரோ! நீலோற்பலமோ! பானலோ!

இடர்சேர் மடவார் உயிர் உண்பது ஏதோ? என்று தளர்வாள் முன்

மடல்சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே!”

இராமனின் வண்ணத்தோடு ஒத்துப் போகும் இந்த மலர்கள் எல்லாம் சீதையின் நினைவில் வருகிறது. அந்த எண்ணத்தில் ஆழ்ந்து கிடக்கும் போதே இருளும் வந்து சேர்கிறது.

முனிவரோடு இராமனும் இலக்குவனும் கன்னிமாடத்தில் அந்த அழகிய பெண்ணைப் பார்த்தபின் ஜனகன் அரண்மனைக்குச் சென்று மகாராஜாவைக் கண்டனர். ஜனகன் மனம் மிக மகிழ்ந்து இவர்களை வரவேற்று உபசரித்து, ஓர் மாளிகையில் தங்க வைத்தான். இவர்கள் வந்திருக்கும் செய்தி அறிந்து இவர்களைக் காண்பதற்காக கெளதம முனிவருக்கு அகலிகை மூலம் பிறந்த சதானந்த முனிவர் என்பவர் வந்தார். இவர் ஜனக மகாராஜா குடும்பத்து புரோகிதர் ஆவார். இராமனும் இலக்குவனும் அந்த சதானந்த முனிவரை வணங்கி ஆசிபெற்றனர். கோசிக முனிவரின் வருகை விதேய நாட்டின் நற்பயன் என்று விஸ்வாமித்திர முனிவருக்கு முகமன் கூறி வணங்கினார் சதானந்தர், அதற்கு விஸ்வாமித்திரர் பதிலளிக்கையில் “சதானந்தரே! இதோ இந்த இராமன் தாடகையை வதம் செய்து, என் வேள்வியை நிறைவேற்றினான். அங்கிருந்து வரும் வழியில் உன் அன்னைக்கு சாப விமோசனம் கொடுத்து உயிர்ப்பித்து நம் குறை தீர்த்த பெருந்தகை” என்று அவருக்கு இராமனைப் பற்றி எடுத்துரைக்கிறார்.

“உமது அருளுக்குப் பாத்திரமான இவர்களுக்கு செயற்கரியது எதுவுமில்லை” என்றார் சதானந்தர்.

சதானந்தர் இராமனைப் பார்த்து “குழந்தாய்! இந்த கோசிக முனிவர் இருக்கிறாரே, இவர் ஒரு காலத்தில் அரச குலத்திலே உதித்தவர். ராஜ நீதியிலும் போர்ப்பயிற்சியிலும் வல்லவர். பிறகு பெருந்தவம் செய்து பெரும் புகழ் பெற்றவர். இவர் ஒரு முறை காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்று தங்கினார். கோசிகன் அரசன் ஆனதால் அவரை வரவேற்று உபசரித்து தன்னிடமிருந்த காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவின் அருளினால் சிறந்த விருந்து அளித்தார். காமதேனு வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுக்கும் வல்லமை பெற்றது.

கெளசிகன் வசிஷ்ட முனிவரிடம் தான் பெரும் பொருள் கொடுப்பதாகவும், காமதேனுவைத் தனக்குத் தரும்படியும் கேட்டான். அவர் மறுத்து விட்டார். நான் தவசி. நான் பிறருக்கு கொடுப்பது தவறு. உன்னால் முடிந்தால் காமதேனுவை ஓட்டிச் செல் என்றார். உடனே ஓடிச் சென்று காமதேனுவை பிடிக்க முயன்றான் கோசிகன். பசு வசிஷ்டரிடம் கேட்டது “நீங்கள் என்னை இவனிடம் கொடுத்து விட்டிர்களா?” என்று.

வசிஷ்டர் “நான் கொடுக்கவில்லை. அவனே எடுத்துக் கொள்ள முற்பட்டான்” என்றார். இதனைக் கேட்ட காமதேனு பெரும் கோபம் கொண்டது. இந்த அரசனை நானே முடிப்பேன் என்று தன் மயிர்க்கால்களைச் சிலிர்த்தது. அதன் மயிர்க்கால்களிலிருந்து பற்பல நாட்டு வீரர்கள், பப்பரர், யவனர், சீனர், சோனகர் எனப்படுவோர் வந்து கெளசிகனின் படை வீரர்களை நீர்மூலம் செய்தனர். அப்போது கெளசிகனின் நூறு பிள்ளைகள், இது பசுவின் செயல் அல்ல, இந்த மாய முனிவன் வசிஷ்டனின் செயல் என்று கருதி அவரைக் கொல்ல பாய்ந்தனர். வசிஷ்டர் தன் பார்வையால் அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பராக்கினார்.

தன் மக்கள் எரிந்து சாம்பரானதால் கெளசிகன் அம்புகளை வசிஷ்டர் மீது தொடுத்தான். அவற்றை அவர் தன் கை தண்டத்தால் தடுத்தார். இப்படி தானும் தோற்று, பிள்ளைகளையும் இழந்த கோசிகன் மனம் தளர்ந்து, ஊக்கம் குன்றி பிள்ளைகளில் தப்பிப் பிழைத்த ஒருவனிடம் அரசுரிமையைக் கொடுத்துவிட்டு இமயமலைச் சாரலில் சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் புரிந்தான். இவனது கடும் தவத்தை மெச்சி சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, “தனுர் வேதம்” அனைத்தும் தான் உணர்ந்திட வேண்டும், எல்லா அஸ்திர சஸ்திர மந்திரங்களும் கிடைக்கச் செய்ய வேண்டும்; நான் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும், என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அங்ஙனமே அருளினார்.

இனி வசிஷ்டன் தொலைந்தான் என இறுமாப்பு கொண்டான் கெளசிகன். வசிஷ்டர் ஆசிரமம் சென்று அதை அழித்தான். வசிஷ்டர் வெகுண்டு தன் பிரம்ம தண்டத்துடன் வந்து நின்றார். அவர் மீது பற்பல அஸ்திரங்களை கெளசிகன் விட்டான். அவ்வளவையும் வசிஷ்டரின் பிரம்ம தண்டம் வீழ்த்தி விட்டது. இறுதியில் பிரம்மாஸ்திரத்தை ஏவ, தேவர்களும், முனிவர்களும் கலங்க, வசிஷ்டர் கலங்காமல் எதிர்கொள்ள அதுவும் வலுவிழந்தது. க்ஷத்திரிய பலத்திலும் பிரம்ம பலமே பெரிது என்று வசிஷ்டர் நிரூபித்துவிட்டார். கெளசிகனும் அதை உணர்ந்து கொண்டான்.

அரசர்களின் உடல்வலி, தோள்வலி, படைவலியினும் பிரம்ம தேஜஸே பெரிது என்று தானும் அவற்றைப் பெறுவதற்காகத் தவம் செய்யச் சென்றான் கெளசிகன். இந்திரன் இதைக் கண்டு பயந்தான். எப்படியாகிலும் அவனது தவத்தைக் கலைத்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில் அரம்பையரில் திலோத்தமை என்ற அழகியை அனுப்பி அவர் தவத்தைக் கலைக்கச் சொன்னான். இந்திரன் எண்ணியவாறே கெளசிகன் தவம் கலைந்து, திலோத்தமையின் அழகில் மனம் தடுமாறி, அவளோடு பலகாலம் கழித்தான். பிறகு தன் தவறுக்காக மனம் வருந்தி “தேவலோகத்துப் பெண்ணான நீ மண்ணுலகில் சென்று மானிட மங்கை ஆகுக” என்று திலோத்தமையை சபித்துப் பின் வேறு திசைக்குச் சென்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினான். பிறகு திரிசங்குவிற்காக புதிய சொர்க்கத்தைப் படைத்தான். அதனால் ஏற்பட்ட தவ இடையூறினால் தவ வலிமையெல்லாம் இழந்து, மீண்டும் தவம் செய்ய வேறு திசை நோக்கிச் சென்றான். அதன் பிறகு மேனகையிடம் மனத்தைச் செலுத்தி அவளுடன் சிலகாலம் இன்பமாய்க் கழித்தபின், தன் பிழை உணர்ந்து மறுபடியும் தவம் செய்தான்.

இப்போது கெளசிகன் முன்பாக பிரம்மதேவன் தோன்றி, “நீ மகரிஷி ஆயினை” என்றான். அதில் திருப்தி அடையாத கெளசிகன் நான் பிரம்மரிஷியாக வேண்டும், அதற்கு வரம் தரவேண்டும் என்றான். பிரம்மதேவன் நீ இன்னம் ஜிதேந்திரியனாகவில்லை. மீண்டும் தவம் செய் என்று சொல்ல, மீண்டும் தவம் செய்தான். அப்போதும் இந்திரன் அரம்பையை அனுப்பினான். கெளசிகன் கோபம் கொண்டு அவனை பதினாயிர வருஷம் கல்லாய் கிடப்பாய் என சபித்தான். மறுபடி தவவலிமை குறைய, இனி கோபமே படுவதில்லை என உறுதிபூண்டு “பிரம்ம ரிஷி” ஆனான். இப்படி சக்கரவர்த்தி குமாரர்களுக்கு கெளசிகனது வரலாற்றை சதானந்த முனிவர் கூறி முடித்தார்.

இராமனை, சீதையின் நினைவு மிகவும் வருத்தியது. இரவு தூக்கமின்றி சீதை நினைவில் கழித்து, மறுநாள் காலை வைகறையில் சிறிது கண்ணயர்ந்தான். காலையில் எழுந்து உற்சாகத்தோடு தன் தம்பியும் உடன்வர முனிவரோடு யாகசாலை சென்றடைந்தான். சபா மண்டபத்தில் ஜனக மகாராஜா அருகில் இம்மூவரும் அமர்ந்தனர். “பெரியீர்! இந்தக் குமாரர்கள் யார்?” என்று ஜனகன் கேட்க, முனிவர் சொன்னர்: “இவர்கள் தசரத குமாரர்கள். வேள்வி காண வந்தனர். அப்படியே உன் வில்லையும் பார்ப்பார்கள்” என்றார்.

“இவ்விருவரும் தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள்; கலைக்கோட்டு மாமுனிவரை அழைத்து வந்து தசரதன் செய்த புத்ர காமேஷ்டி எனும் யாகத்தின் பலனாய் கோசலைக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லக்ஷ்மண சத்ருகுனனும் பிறந்தனர். என் யாகத்தைக் காக்கும் பொருட்டு வில்லேந்தி மேருவரையும், வெள்ளிப் பருபதமும் போன்ற இராம லக்ஷ்மணர்கள் என்னுடன் வந்தார்கள். யாகத்துக்கு இடையூறு செய்த தாடகையை வதம் செய்தார்கள். சுபாஹுவை ஓர் அம்பினால் கொன்று, மற்றொன்றினால் மாரீசனை வெகுதூரம் கடலில் வீசினான். அப்படியே உன் யாகத்தையும், நீ வைத்திருக்கும் சிவதனுசையும் காண என்னுடன் வந்தார்கள்” என்றார் கெளசிக முனிவர்.

“இவர்களைப் பெற்றவர் தசரத சக்கரவர்த்தி என்றாலும், கலைகளையும், வேதங்களையும் போதித்து, பேருணர்வினனாக இவனை ஆக்கிய பெருமை வசிஷ்ட முனிவரையே சேரும். அவரே இவர்களது ஞான ஆசான்” என்றார் முனிவர். இதனை எதற்குச் சொல்ல வேண்டும்? ஒருக்கால் தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள் என்று சொல்லுகிறாரே, இவர்களும் தந்தையைப் போல பல மனவியர்களை மணந்துகொள்வார்களோ என்று ஜனகன் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக, வசிஷ்ட முனிவரின் சீடர்கள் என்று கூறியதின் மூலம், இவர்கள் ஏக பத்தினி விரதர்களாக இருப்பார்கள் என்று சொல்ல விரும்பினாரோ என்னவோ?

“மன்னா! இவர்கள் உருவில் சிறியவர்கள் என்று நினைத்து விடாதே! அவனது ஓர் அம்பின் ஆற்றலை நான் கண்ணாரக் கண்டேன். ஜனக மகாராஜனே! அதுமட்டுமல்ல, கெளதம முனிவரின் சாபத்தால் கல்லாய் சமைந்திருந்த அகலிகையின் சாபம் தீரத் தன் கால் துகள் பட்ட மாத்திரத்தில், அவள் உயிர் பெற்றெழுந்த அதிசயத்தை, என் கண்களால் கண்டேன்.” என்று முனிவர் கூறிக்கொண்டிருக்கும் போதே ஜனக ராஜன், இந்தச் சிறுவன் இராமனால் சிவதனுசை வளைக்க முடியுமோ என்று மனதால் சிந்தித்ததற்கு முனிவர் பதில் சொன்னது போல அமைந்தது.

ஜனகன் சிவதனுசை “கார்முகச் சாலை” எனும் இடத்திலிருந்து கொண்டு வரப் பணித்தான். உடனே பணியாளர்கள் சென்று எட்டுச் சக்கரமுடைய உறுதியான இரும்புப் பேழையில் வைக்கப்பட்டிருந்த தனுசை “அறுபதினாயிரவர்” (ஐயாயிரவர் என்றும் கூறுவர்) தாங்கி வந்தனர். இது சிவதனுசு. இதனை எடுத்து வளைத்தல் சிவபெருமானுக்கோ அல்லது திருமாலுக்கோ அன்றி பிறரால் இயலாது. திருமகள் போன்ற நம் சீதையை மணந்து கொள்ள அந்த திருமாலே முன்வந்து இந்த தனுசை வளைத்துவிட்டால், திருமணம் இனிது நிறைவேறும். அது நிகழுமோ? என அனைவரும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தனர்.

இப்படி ஒரு நிபந்தனை விதிக்க இந்த மன்னனுக்கு ஏன் இப்படி புத்தி கெட்டதோ! இவனுக்குத் தன் பெண் மீது ஆசை இல்லையோ! என கூட்டத்தினர் வருந்தினர். “திரயம்பகம்” என்ற பெயர் கொண்ட அந்த தனுசை கொண்டு வந்து வைத்தவுடன், இந்த தனுசை இதுகாறும் ஒருவரும் வளைக்க முடியாத நிலையில் இப்போது ஏன் கொண்டு வர வேண்டும். யார் வந்து இப்போது இவ்வில்லை வளைத்துவிடப் போகிறார்கள் என்றும் அவர்கள் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சதானந்த முனிவர் இந்த சிவதனுசின் வரலாற்றை இராம லக்ஷ்மணர்களிடம் கூறத் தொடங்கினார்:

“ஒரு சமயம் தக்கன் பார்வதியை இகழ்ந்ததைக் கருதி சிவபெருமான் வில்லைக் கையில் ஏந்தி கோபத்துடன் தட்சனுடைய வேள்விச் சாலையை அடைந்து, வேள்வியை அழிக்குமாறு வீரபத்திரரை ஏவினார். அவர் தேவர்களை சின்னாபின்னமாக்கி வேள்வியையும் அழித்தார். பின்னர் கோபம் தணிந்து அவர்களையெல்லாம் உயிர்ப்பித்தார். சினம் தணிந்த பின்னும் சிவன் கையில் வில் ஏந்தியிருப்பது கண்டு அஞ்சி தேவர்கள் நடுங்கினார்கள். சிவபெருமான் தன் கை வில்லை ஜனகன் குலத்து முன்னோன் ஒருவனிடம் கொடுத்துவிட்டதாக வரலாறு. ராமா! வில்லின் வரலாற்றை உனக்கு உரைத்தேன். இனி இந்த சீதையின் வரலாற்றைக் கூறுகிறேன் கேள்.” என சதானந்தார் கூறத் தொடங்கினார்.

“வேள்விச்சாலை அமைக்கும் பொருட்டு நிலத்தை ஏர் கொண்டு உழுதோம். உழுகின்ற கொழு முகத்தில் இப்பெண்ணரசி கிடைத்தாள். புவிமடந்தை என சீதை தோற்றமளித்தாள். மேன்மை குணங்கள் உள்ள பிராட்டி மேன்மையான இடத்தில் மேன்மையாகவே வளர்ந்தாள். இந்தத் திருமகளை அடையவேண்டி தேவர்களும் மன்னாதி மன்னர்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள், ஆயினும் சிவதனுசை வளைப்பவர்க்கே சீதையை மணமுடிப்பதாக ஜனகன் அறிவிப்பு செய்தமையால், எவராலும் இந்த தனுசை வளைக்க முடியாததால் தோற்றுத் திரும்பினார்கள். வந்த மன்னர்கள் இயலாமையால் சினம் பொங்க ஜனகனுடன் போர் தொடுக்கலாயினர். ஆனால், ஜனக மகாராஜாவின் படைகள் அவர்களை தோற்கடித்து விரட்டிவிட்டனர். இதனால் சீதையின் திருமணம் எங்கே தடைப்பட்டு விடுமோ என்று நாங்கள் ஐயப்பட்டுக் கொண்டிருந்த போது இராமன் வந்துவிட்டதால், அவன் எமது கவலையைத் தீர்ப்பான் என்று திடமாக நம்புகிறோம்” என்றார் சதானந்தர்.

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வாமித்திர முனிவர் ஜாடையாக இராமனைப் பார்க்க, அவரது பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு இராமன் அந்த சிவதனுசை நோக்கினான். உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். தேவர்கள் ஆரவாரம் செய்தனர். இராமன் நடந்து சென்று சிவதனுசு இருந்த பெட்டியை நெருங்கினான். அவன் எழுந்தது, நடந்தது, வில்லை எடுக்க முயன்றது, அடடா! என்ன காட்சி அது! கூடியிருந்த பெண்களும் இதரரும் பெருமகிழ்ச்சி எய்தி வாழ்த்தினர். இந்தக் காட்சியைக் காண அனைவரும் இமைக்கக்கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இராமன் நடந்து சென்ற காட்சியைச் சொல்ல வந்த கம்பர் கூறுகிறார்:

“மாகம் மடங்கலும்; மால் விடையும்; பொன்

நாகமும்; நாகமும் நாண நடந்தான்”.

மாகம் மடங்கலும் என்றால், சிறப்புப் பொருந்திய சிங்கம். மால் விடையும் என்றால் பெருமையுள்ள ரிஷபமும், பொன் நாகமும் என்றால் தங்க நிறமுள்ள மகாமேருமலை, நாகமும் என்றால் யானை, இவைகள் அனைத்துமே வெட்கமடையும்படியாக இராமன் நடந்தானாம். இராமன் எழுந்தான், நடந்தான், தனுசு இருக்கும் பெட்டியருகே சென்றான், சென்று அந்தத் தனுசை ஒரு கையால் எடுத்தான். ஒரு முனையைக் காலில் வைத்து அழுத்திக் கொண்டு, நாணை இழுத்து ஒரு கையால் பூட்டியதைக்கூட எவரும் பார்க்கும் முன்னர், ஒரு பெரும் ஓசை கேட்டது. அந்த சிவதனுசு இற்று வீழ்ந்ததைத்தான் அனைவரும் கண்டனர். இவ்வளவும் இமைக்கும் பொழுதில் நடந்து முடிந்து விட்டது.

“தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்

மடுத்ததும், காண்நுதி வைத்ததும் நோக்கார்

கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்

எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்”.

இது கம்பரது கவிச்சித்திரம். வில் முறிந்த ஓசை பூமியெங்கும் கேட்டது. மேலுலகிலும், பாதாளத்திலும் எதிரொலித்தது. விண்ணோர் பூமழை பொழிந்தனர். கடல்கள் எல்லாம் பல்வகை இரத்தினங்களை வாரி இறைத்தன; முனிவர்கள் ஆசி மொழிந்தனர்; ஜனக மன்னனோ என் நல்வினைப் பயனே இன்று இந்த இராமன் உருவில் வந்தது என்று மகிழ்ந்தார். மிதிலை நகரத்து மக்கள் மகிழ்ந்தனர். நகரெங்கும் இசைபாடி மகிழ்ந்தனர். தெய்வ கீதம் இசைத்தனர். நடந்த நிகழ்ச்சிகளைக் கண்டவர்கள் மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்குச் சொல்ல ஓடினர்.

“தசரதன் புதல்வர் என்பார்; தாமரைக் கண்ணன் என்பார்;

புயல் இவன் மேனி என்பார்; பூவையும் பொருவும் என்பார்;

மயல் உடைத்து உலகம் என்பார்; மானுடன் அல்லன் என்பார்;

கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்.”

“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்;

கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கு அன்னதேயால்;

தம்பியைக் காண்மின் என்பார்; தவம் உடைத்து உலகம் என்பார்;

இம்பர் இந்நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்”.

அங்கே அந்தப்புரத்தில் சீதாப்பிராட்டி இராமனைக் காணும் ஆசையால் உயிர் தரித்திருந்தாள். அவள் ஆருயிர் நின்று ஊசலாட உழன்றாள் கடும் துயரம். இராமனை எண்ணி எண்ணி அவள் உள்ளம் ஏங்குகிறது. அப்போது நீலமாலை எனும் தோழி ஓடி வந்து இராமன் வில்லை முறித்துவிட்ட செய்தியைக் கூறுகிறாள். அன்று முனிவனுடனும் தம்பியுடனும் மிதிலை வந்த இராமன் தான் வில்லை முறித்தான் என்கிறால். அன்று கன்னி மாடத்திலிருந்து தான் பார்த்த அந்தக் கார்வண்ணனே வில்லை முறித்தவன் என்ற செய்தியை அறிந்து அளவிலா உவகை கொண்டாள் சீதை.

ஜனகன் பேருவகை கொண்டான். சிவதனுசை வளைக்க யார் வருவார் என்று காத்திருந்து இப்போது இராமன் வில்லை முறித்தவுடன் அவனுக்கு சீதையின் திருமணத்தை உடனே முடித்துவிட வேண்டுமென்று அவசரம். கெளசிக முனிவரை நோக்கி “முனிவர் பெருமானே, இராமன் சீதை திருமணத்தை இன்றே முடித்து விடலாமா? அல்லது முறைப்படி தசரத சக்கரவர்த்தியை அழைத்து, நாடெங்கும் திருமணச் செய்தியை முரசு அறைந்து அறிவித்துவிட்டு உரியவாறு நடத்தலாமா, தங்கள் கருத்து யாது?” என்று கேட்டான்.

அதற்கு முனிவர் சொன்னார்: ” தசரத சக்கரவர்த்திக்கு செய்தி அனுப்பி, அவரை வரவழைத்துத் திருமணம் செய்வதே முறை, நீ அப்படியே செய்” என்று சொன்னதும், ஜனகன் தூதர்களை அயோத்திக்கு அனுப்பி, இங்கே நிகழ்ந்தவற்றை தசரத சக்கரவர்த்தியிடம் கூறி, அழைத்து வரும்படி ஓலை கொடுத்து அனுப்பினான். தூதுவர்கள் அயோத்தி சென்று மன்னனைக் கண்டு செய்தியைக் கூறினர். மன்னன் தூதர்களின் ஓலையை வாசிக்கச் செய்து கேட்டான்.

இராமனின் வீரச் செயல்களும், அகலிகை சாப விமோசனமும், சிவதனுசு முறிபட்டதும் கேட்டு மன்னன் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான். அவன் உடம்பு மகிழ்ச்சியால் பூரித்துப் போயிற்று. முரசறைந்து நாட்டு மக்களுக்கு தசரதன் செய்தி அறிவித்தான். நாட்டு மக்கள் செய்தி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். அரசன் ஆணைப்படி தேரும், யானையும், குடைகளும், கொடிகளோடும், சேனைகள் புறப்பட்டன. பேரிகைகள் முழங்கின. வீரர்களும் பெண்டிரும் பிரயாணம் புறப்பட்டு மிதிலை நகர் நோக்கிச் செல்லப் புறப்பட்டனர். வழியெங்கும் ஆடலும், பாடலும், ஊடலும், கூடலுமாக அவரவர் தத்தமக்கே திருமணம் போல உணர்ந்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் கன்னியர் மீது காமக்கணைகளை வீசினர்.

திருமணம் நடத்தி வைக்க அந்தணர் சென்றனர். வழியெங்கும் ஆரவாரமும், ஒலிகளும்நிறைந்து விளங்கின. மாதர் சிலம்பொலி, குதிரைகள் கனைப்பொலி, காதலர் சிரிப்பொலி, இப்படிப் போகப்போக மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. தசரத மன்னனோடு பட்டத்தரசிகளும் வாத்திய முழக்கங்களோடும், மக்களின் இரைச்சலோடும், படைகளின் பேரொலியோடும், இசைக் கருவிகளின் இசையோடும் வழிநடை சென்றனர். கோசலையும் கைகேய்யும், சுமத்திரையும் தோழிகள் புடைசூழ தேரிலேறிச் சென்றனர்.

சீர் சுமந்து செல்லும் பெண்டிர், உரிமை மகளிர் அறுபதினாயிரவர், வசிஷ்ட முனிவர், பரத சத்ருக்குனர், அதிகாரிகள், மண்டலாதிபர்கள் இவர்களோடு தசரதன் நவரத்தினங்கள் பதித்த தேரில் ஏறிச் சென்றான். வழியில் இராப் பொழுதை இந்து சைல அடிவாரத்தில் தங்கிக் கழித்தனர். மறுநாள் காலை அனைவரும் சந்திர சைலத்தை அடுத்துள்ள சோனையாற்றின் கரையை அடைந்தனர். அங்கே மகளிர் நீர்விளையாடி, பூக்கொய்து, இன்பமாய்த் தங்கிப் புறப்பட்டனர்.

அன்றைய அந்தி மாலைப் பொழுதில் இளைஞர்களும், கன்னியர்களும் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு, கள் உண்டு, பல்வகை போகங்களைத் துய்த்துத் தங்களுக்கே திருமணம் போல மகிழ்ச்சியோடு இருந்தனர். இப்படி தசரதன் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டு நான்கு நாட்கள் பயணம் செய்து, ஐந்தாம் நாள் மிதிலையை அடையும் போது, ஜனக மகாராஜன் அவர்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்றான். இராம லக்ஷ்மணரும் அவருடன் வந்து தாய் தந்தை சுற்றத்தார், மக்களையும், படைகளையும் அழைத்துச் சென்றனர்.

கம்ப சித்திரம் என்கிறோம். அது எப்படி இருக்கும் என்று பலர் நினைக்கலாமல்லவா. இப்போது சில கம்ப சித்திரங்களைப் பார்ப்போம். இராமன் மிதிலை நகரில் உலா வந்தபோது மக்கள் அடைந்த நிலையை கம்பர் வர்ணிக்கிறார். முதலில் பெண்கள் கூடி வந்து இந்தக் காட்சியைப் பார்க்கிறார்கள். எப்படி?

“மானினம் வருவ போன்றும், மயிலினம் திரிவ போன்றும்

மீனினம் மிளிர்வ போன்றும், மின்னினம் மிடைவ போன்றும்

தேனினம் பம்மி ஆர்ப்பச் சிலம்பினம் புலம்ப எங்கும்

பூநனை கூந்தல் மாந்தர் பொம்மென புகுந்து மொய்த்தார்”

“விரிந்து வீழ் கூந்தல் பாரார்; மேகலை அற்ற நோக்கார்

சரிந்த பூந்துகில்கள் தாங்கார், இடை தடுமாறத் தாழார்

நெருங்கினர்; நெருங்கப் புக்கு நீங்குமின் நீங்குமின் என்று

அருங்கலம் அனைய மாதர் தேனுகர் அளியின் மொய்த்தார்.”

“பள்ளத்து பாயும் நன்னீர் அனையவர், பானல் பூத்த

வெள்ளத்துப் பெரிய கண்ணார், மென் சிலம்பு அலம்ப மென்பூத்

தள்ளத்தம் இடைகள் நோவத் தமை வலித்து அவன்பாற் செல்லும்

உள்ளத்தைப் பிடித்தும் என்ன ஓடுகின்றாரும் ஒத்தார்”.

மிதிலை நகரின் வீதிகளில் தேரில் இராமன் பவனி வரும்போது முட்டிமோதிக் கொண்டு அவனைக் காண்பதற்காகக் கூடியிருக்கும் பெண்களின் கண்களின் ஊடே, அவன் உருவம் புகுந்த வந்ததால் இவனுக்குக் கண்ணன் என்று பெயர் வந்ததும் சரிதான் போலும். அவன்கூடவே அந்தப் பெண்களின் உள்ளங்களும் போகின்றனவாம், அந்த உள்ளங்களைப் பிடிப்பதற்காக ஓடுவதைப் போல அந்தப் பெண்கள் ஓடுகின்றனர். கூட்டத்தை விலக்கிக் கொண்டு விலகுங்கள் விலகுங்கள் என்று மற்றவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவனைப் பார்ப்பதற்காக அவனை சுற்றிலும் மொய்த்தனர். உலா வருகின்ற அந்தக் கார் நிறத்து வண்ணனின் தோளைக் கண்டவர்கள், தோளை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்று விட்டனர். தொடு கழற் கமலம் அன்ன தாள் கண்டார், அவனது தாளினையே பார்த்துக் கொண்டிருந்தனர்; அவனது இரு தடக்கைகளைக் கண்டவர்களும் அங்ஙனமே; அப்படி அந்த இராமனை முழுமையாகக் கண்டவர்கள்தான் பின் யார் இருக்கிறார்கள் இந்தக் கூட்டத்தில். அந்த அருமையான பாடல் இங்கே:

“தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார், தடக்கை கண்டாரும் அஃதே

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்

ஊழ் கொண்ட சமயத் தன்னான் உருவு கண்டாரை யொத்தார்.”

இப்படி அனைவரும் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். அங்கு பல தேசத்திலிருந்தும் மக்கள் வெள்ளம் வந்து குவிந்திருந்தனர். கங்கர், கொங்கர், கலிங்கர், தெலுங்கர்கள், சிங்களாதிபர், சேரலர், தென்னவர், அங்கராசர், குலிங்கர், அவந்திகர், வங்கர், மாளவர், சோளர், மராட்டர் என்று அனைவரும் இருந்தனர். ஜனகன் வந்திருந்த அனைவரையும் உயர்வு தாழு கருதாது மிகச் சிறப்பாக உபசரித்தான். திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண நிச்சயதார்த்தம் செய்யும் பொருட்டு சீதையை மண்டபத்துக்குத் தருவிக்குமாறு வசிஷ்டர் கேட்டுக் கொண்டார்.

வசிஷ்டர் கேட்டுக்கொண்டபடி ஜனகன் முறைப்படி ஏற்று அவரைத் தொழுது பின்னர் சீதையை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். உடனே சீதையின் செவிலித்தாயர்கள் அவளை அலங்கரித்து கூந்தலில் மலர் சூட்டி, சுட்டி முதல் தலயலங்கார அணிகலன்களைப் பூட்டி, குழைகள் அணிவித்து, கழுத்தணிகள் முத்துமாலை உள்ளிட்ட பற்பல மாலைகளை அணிவித்து தோளுக்கு அணியாக பதுமராகம் முதலான மணிகளை அணிவித்து, இடைக்கு அணிகள், மேகலை முதலானவற்றைப் பூட்டி, கண்களுக்கு மையிட்டு, நெற்றிக்குத் திலகமிட்டு, பூக்களும் பொற்கொடியும் அணிவித்து, பிறகு திருஷ்டி கழித்து, இரட்சையும், காப்பும் இட்டு, நெய்விளக்கு ஏற்றி, பலிதூவி, இறைவனைத் தொழுது, வேதம் கற்றோருக்குத் தானம் ஈந்து, ஆரத்தி எடுத்த நீரால் அவளுக்குப் பொட்டு இட்டு, செவிலித்தாயர் சீதையை தயார் படுத்தினர்.

சீதை மன்றம் நோக்கி நடந்து வர, அவளது அழகைக் கண்டு கூடியிருந்த மங்கையரும் மயங்கினர். மென்மையாக தனது பாதங்களைப் பூமியில் பதித்து, தரையெங்கும் பூக்களைப் பரப்பி அதில் ஒரு பூ தவழ்ந்து வருவதைப் போல நடந்து வந்தாள். சீதையின் அழகைக் கண்டு அவையோர் செயலிழந்தனர். அந்த தெய்வீக அழகு அவர்களைச் சிலைகளாக்கியது. பார்த்தவர் அனைவரும் கண்களை இமைக்க மறந்தனர். கண்கள் திறந்தது திறந்தபடி இருந்தன.

இராமனோ, நெடுநாள் பாற்கடலைக் கடைந்தபின் இறுதியில் அமுதம் வந்தபோது அடைந்த மகிழ்ச்சியை, பிராட்டியைப் பார்த்தவுடன் பெற்றான். வசிஷ்டர் மகிழ்ந்தார். தசரத சக்கரவர்த்தி மகிழ்ந்தார். அவையினர் தெய்வம் நடந்து வருவதாக உணர்ந்தனர். ஜானகி அவைக்கு வந்து குருமார்களை வணங்கி தசரதனை வணங்கி, கண்களில் நீர்சோர ஜனகன் அருகில் அமர்ந்தாள்.

சீதை உட்கார்ந்தபடியே சிறிது கண் இமைகளைத் தூக்கித் தன்னை மணந்து கொள்ளப் போவது அன்று மாடத்திலிருந்து பார்த்தோமே அந்த அஞ்சன வண்ணன்தானே என்று பார்த்து, ஆம்! அவனேதான் என்று ஐயம் நீங்கி மனம் தெளிவுற்று மகிழ்வு எய்தினாள். தசரதன் வசிஷ்டரை நோக்கி “திருமண நாள் எது?” என்றான். அப்போது விஸ்வாமித்திர முனிவர் ஜனகனிடம் கேட்க, அவன் தன் குலப் பெருமையெல்லாம் சொல்லி தன் புதலல்வியரை, ராம லக்ஷ்மணருக்கும், தன் தம்பியின் புதல்விகளை பரத, சத்ருக்குனருக்கும் கொடுக்க சம்மதித்து, அதற்கு அடுத்த இரண்டாம் நாளான பங்குனி உத்தரம் நாளில் நால்வருக்கும் திருமணம் செய்வது என நிச்சயம் செய்து கொண்டனர். சபா மண்டபத்திர்லிருந்து அனைவரும் தத்தம் இடம் சென்றனர். இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் திருமண ஆயத்தங்கள் விரைவாக நடைபெறத் தொடங்கின.

ஜனகன் அனைவரையும் இனிதாக உபசரித்தான். ஒருவருக்கும் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். நாளை திருமணம் என்ற நிலையில் சீதை வேட்கையால் இராமனை நினைத்து அவதியுற்றாள். கொடிய தாகத்தோடு குடிக்க நீர் நிலைகளைத் தேடி அலைந்தவன் ஓரிடத்தில் நீர் நிலையைக் கண்டும், அதனை நெருங்கமுடியாதபடி முட்புதர்கள் சூழ்ந்திருந்தால் எப்படி வேதனைப் படுவானோ அப்படி வருந்தினாள் சீதை. இராமனும் சீதையை நினைத்து ஏங்குகிறான். ஜனகன் முரசு அறிவித்து நகருக்கு திருமணம் பற்றி செய்தி அறிவிக்கிறான். நகர மக்கள் சீதா கல்யாணம் காண, தங்களை மணமக்களாய் எண்ணி, அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள்.

திருமண நாள். சூரியன் உதயமானான். நகர் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது. வாழையும், கமுகும் வழியெங்கும் கட்டியிருந்தனர். பல்லாயிர மணிகள் வண்ணமயமான வானவில் போல ஒளிருந்தன. விளக்கேற்றி, பாளை முளைவித்தனர். ஊரெங்கும் பந்தல். விருந்துக்கான பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. வாழை இலை, வெற்றிலை, பழங்கள், மலர்கள், இவை மலைபோல குவிந்தன. வீதிகளெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மிதிலா நகரம் தேவேந்திரன் பட்டாபிஷேக நாளில் விளங்கும் ஸ்வர்க்க லோகம் போல விளங்கியது.

திருமண மண்டபத்துக்கு தசரதன் வெண்கொற்றக் குடை விரித்து, முரசுகள், மங்கல வாத்தியங்கள் முழங்க, சுற்றிலும் ஏனைய அரசர்கள் புடைசூழ சம்பந்தயாக வந்து சேர்ந்தான். மயன் அமைத்த அந்த மண்டபம் கலகலவென பற்பல ஒலிகளோடு விழாக்கோலம் பூண்டு விளங்கியது.

அங்கே! இராமனுக்கு மங்கல நீராட்டி, கன்னிப் பெண்கள், வேதியர்கள் முதலானோருக்குத் தானங்கள் கொடுத்து, ஆதிஅம்ஜோதியாம் திருவரங்கப் பெருமானை வணங்கினார்கள். பிறகு இராமனுக்கு அலங்காரம் நடைபெற்றது. காதணிகள், வீரப்பட்டம், திலகம், முத்தாரம், முத்து வடம், தோள்வளை, கடகம், நவமணி மாலை இவற்றின் மேல் உத்தரீயம், முப்புரிநூல், அரை ஆடை நழுவாமல் கட்டும் உதரபந்தனம், பட்டாடை உடுத்தி, அரைக்கச்சும் உடைவாளும் அணிந்து, அரையைச் சுற்றி கட்டப்படும் அரைப்பட்டிகை, கிம்புரி எனும் தொடையணி, காலில் சிலம்பு, கழல், இவ்வளவும் அணிந்து அலங்காரத் தோற்றத்தில் தேர் ஏறி புறப்பட்டான்.

தேவர்கள் மகிழ்ந்தனர். சீதா கல்யாணம், இராவணன் அழிவின் தொடக்கம் என்பது அவர்களுக்குத் தெரியுமல்லவா? இராமனின் தேர், திருமண மண்டபம் வந்தடைந்தது. மூலகிலும் பெண்களின் அழகுக்குத் திருமகளை உவமை கூறுவர். அந்தத் திருமகளே மணமகளாக வந்திருக்கும் இந்தச் சீதையாதலின், இவள் அழகையும், திருமணச் சிறப்பையும் கூறவும் வேண்டுமோ?

மண்டபத்தில், அக்னி வளர்த்து, ஹோமம் தொடங்கி, வசிஷ்டர் தலைமையில் சடங்குகள் ஆரம்பமாயின. மறையவர்கள் வேதமந்திரங்களை கோஷிக்க, ஜனகன் சீதாபிராட்டியின் கையைப் பிடித்து இராமபிரான் கையில் கொடுத்து நீர் வார்த்து கன்னிகாதானம் செய்வித்தான். அந்தணர் ஆசி வழங்கினர். மங்கலப் பெண்டிர் பல்லாண்டு பாடினர். மன்னர்கள் வாழ்த்தும், மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் விண்ணை முட்டின. வானவர் கற்பக மலர்களைத் தூவினர். மன்னர்கள் பொன்மலர் தூவினர். சீதையின் கரத்தைப் பிடித்து இராமனுக்குப் பாணிக்கிரகணம் நடந்தது. அக்னியை வலம் வந்து இருவரும் வணங்கினர். லாஜ ஹோமம் (பொரி இடுவது எனும் முறை) அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இராமன் சீதையின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான்.

அதே மண்டபத்தில் இலக்குவன் ஊர்மிலையையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்குனன் ஸ்ருதகீர்த்தியையும் மணம் செய்து கொண்டனர். திருமணச் சடங்குகள் முடிந்து அவரவர் தத்தமது விடுதியை அடைந்தனர். இராமனும் சீதையுடன் தனது விடுதிக்குப் போய்ச் சேர்ந்தான்.

திருமணம் முடிந்த பின்னர் தசரதன் மிதிலையில் சில நாட்கள் தங்கி ஜனகன் முனிவர்கள் ஆகியோரருடன் அளவளாவி மகிழ்ந்தான். விஸ்வாமித்திர முனிவ்ர் இராமனுக்கு வேதங்களில் காணப்படும் பல ராஜ நீதிகளை உபதேசித்து, அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு தவம் செய்ய இமய மலைக்குச் சென்றுவிடுகிறார்.

பின்னர் தசரதன் தன் உறவினர் பரிவாரங்கள் புடைசூழ அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றான். மணமக்கள் அனைவரும் அவர்களுடன் புறப்பட்டனர். அப்போது சில தீய நிமித்தங்கள் தோன்றின. மயில்கள் இடமிருந்து வலமாகச் சென்றன. முதலில் இது நல்ல நிமித்தம். அடுத்து காகங்கள் வலமிருந்து இடமாகச் சென்றன. இது தீய சகுனமாக இருந்ததால் தசரதன் தயங்கி நின்றான்.

சில நல்ல, தீய நிமித்தங்கள் பற்றி கூறப்படும் செய்திகளாவன: வலியன், கருடன், காடை, கழுகு, ஆந்தை, உடும்பு, கீரி, குரங்கு இவை வலமிருந்து இடமாகப் போனால் நல்ல நிமித்தங்களாகக் கருதப்படும். நாரை, விச்சுளி, காக்கை, செம்போத்து, கிளி, கொக்கு, மயில், கோழி, ஓணான், புள்ளிமான், புனுகு பூனை, புலி, நரி, இவை இடமிருந்து வலம் போனால் நல்ல நிமித்தமாகக் கருதப்படுகிறது.

தசரதன் நிமித்திகனை அழைத்து இந்த நிமித்தங்களின் பலன்கள் என்ன என்று கேட்கிறான். அவன் ஆராய்து, இப்போது முதலில் ஒரு இடையூறு வரும், அஃது, எளிதின் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறினான். தசரதனும் பரிவாரங்களும் சிறிது தூரம் சென்றதும், எதிரே ஒருவன் பூமி அதிரும்படியாக கையில் மழு (கோடறி போன்றதோர் ஆயுதம்) ஏந்தியபடி வந்து நின்றான்.

அவன் தன் கை வில்லை வளைத்து நாணேற்றி அதைத் தெறித்தான். அதில் எழுந்த ஓசையில் உலகமே அதிர்ந்தது. உயிரினங்கள் நிலை தடுமாறின. கோர தாண்டவமாடும் உருத்திர மூர்த்தி போல அவன் வந்து தோன்றினான். அவன் பெயர் பரசுராமன். இவனது வரலாறு வருமாறு. கார்த்த வீரியார்ச்சுனன், சந்திர வம்சத்து அரசன். ஆயிரம் கைகள், வீர பராக்கிரமம், நற்குணங்கள் இவை அனைத்தும் வாய்த்தவன். இவன் தன் வீரத்தால் இராவணனைத் தோற்கடித்தவன். அத்தகையவன் பரசுராமனின் தந்தையான ஜமதக்னி முனிவர்பால் காமதேனுவைக் கவர்ந்து தவறு இழைத்தமையால், பரசுராமன் மிக்கச் சினம் கொண்டு அவனைத் தன் மழுவால் கொன்றான். பரசுராமனின் இந்தச் செயலுக்கு பழிவாங்கும் விதமாக, கார்த்தவீர்யாச்சுனனின் புதல்வர்கள் பரசுராமன் இல்லாத நேரம் பார்த்து அவன் தந்தை ஜமதக்னியைக் கொன்று விடுகின்றனர். ஜமதக்னியின் மனைவி ரேணுகா தேவி இருபத்தோரு முறை மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். அதனால் பரசுராமன் ஆவேசம் கொண்டு “க்ஷத்திரிய குலத்தையே நாசம் செய்வேன்” என்று இருபத்தோரு முறை அவர்களைக் கொன்று அவர்கள் உதிரத்தில் தந்தைக்கு பித்ரு கடன்களைச் செய்தான்.

இந்த பரசுராமன் திருமாலின் அம்சாவதாரமாய் பிருகு முனிவர் வம்சத்தில் தோன்றி ‘ராமன்’ என்ற பெயருடன் கடுந்தவம் செய்து சிரஞ்ஜீவி எனும் வரம் பெற்று பரசுப்படை பெற்றதால் பரசுராமன் எனும்

பெயரால் வழங்கப்பட்டான். இவன் எதிர்பட்டதும் தசரதன் கலங்கிப் போனான். க்ஷத்திரியர்களை வேரோடு களையும் இந்த பரசுராமன், தனது குமாரன் இராமனை ஏதாவது செய்துவிடுவானோ என்று பயம் அவனுக்கு.

எதிரே வரும் இவர் யாரோ என்று எண்ணி இராமனும், பரசுராமனைப் பணிந்து வணங்கினான். ஆனால் பரசுராமனோ கோபம் தீராமல், “இராமா! பழுதுபட்ட சிவதனுசை உடைத்ததனால், நீ வீரனாகிவிட மாட்டாய். நீ வீரன் என்றால் வா, என்னோடு போரிடு” என்றான். அதற்கு தசரதன் “பெருமையுடைய பரசுராமா! வீரம் மிகுந்த உனக்கு சாதாரண மானுடர்களாகிய நாங்கள் சமமா? இராமன் சிறுவன். அவன் உனது அடைக்கலம். இராமன் அறியாமையால் ஏதாவது பிழை செய்திருப்பானானால், சினம் தணிந்து சிறுவன் என்பதால் பொருத்தருளுவாய்” என்றான்.

இவ்வாறு பலவாறாக தசரதன் கெஞ்சி அழுது பின் மூர்ச்சித்தான். இதற்கெல்லாம் கவலைப் படாத பரசுராமன், இராமன் முறித்த சிவதனுசின் வரலாற்றைக் கூறி, அது பழுதுபட்டது என்றும், முடிந்தால் என் கையிலிருக்கும் விஷ்ணு தனுசை முறித்து இராமன் வீரனென்றால் நிரூபித்துக் காட்டட்டும் என்றான். இதனைக் கேட்டு இராமன் சிரித்தான். பரசுராமன் கையிலிருந்த விஷ்ணுதனுசை வாங்கி அதை வளைத்து, நாண் ஏற்றி, ஓர் அம்பை குறிபார்த்து, “பரசுராமரே! நீர் வேதம் உணர்ந்த பெரியோன். ஜமதக்னியின் புதல்வன். தவம் மேற்கொண்டவன். உம்மைக் கொல்லல் தகாது. ஆஅனால் நான் அம்பை வில்லில் பூட்டி விட்டால் அதற்கு ஓர் இலக்கு வேண்டும். சொல் இப்போதே! என் அம்புக்கு எது இலக்கு?” என்றான் இராமன்.

பரசுராமன் திகைத்தான். இராம பாணத்திற்கு இலக்காவது யார்? “இராமா! நீதி வடிவானவனே! என்மீது கோபப்படாதே. நீ யார் என்பதைப் புரிந்து கொண்டேன். நீயே திருமாலின் அம்சம். வேத முதல்வனே! உலகம் உன்னால் இனி இன்பமுறும். அடைக்கலமானவரைக் காக்கும் இராமா, நான் உன் அடைக்கலம்” என்று சொல்லி பல சொல்லி போற்றினான்.

“இராமா! உன் அம்புக்கு என் தவத்தின் பயனாய் அடந்த அனைத்து வரங்களையும் தருகிறேன்” என்று சொல்ல, இராமன் வில்லைத் தளர்த்தினான். பின்னர் பரசுராமன் இராமனை வாழ்த்தி வணங்கி விடைபெற்றுச் சென்றான். மயங்கி வீழ்ந்த தசரதனை இராமபிரான் தேற்றி எழுப்பினான். பரசுராமனால் இராமனுக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை என்பதறிந்து தசரதன் மகிழ்ச்சியடைந்து, மூவுலகுக்கும் நல்வினை யாற்றவும், இம்மைக்கும் மறுமைக்கும் வாழ்வளிப்பவன் இராமன் என்று ஆசி கூறினான்.

வழக்கம்போல தேவர்கள் வாழ்த்தினர். பின்னர் அயோத்தி நகர் சென்றடைந்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அப்போது கேகய மன்னன் தன் பேரன் பரதனைப் பார்க்க விரும்பியதால், பரதனை சத்ருக்னனுடன் கேகய நாடு அனுப்பி வைத்தான் தசரதன்.

பால காண்டம் முற்றும்.

2


அயோத்யா காண்டம்


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய

இராம காதை

2. அயோத்யா காண்டம்.

மிதிலையில் ஸ்ரீ இராமன் சீதாபிராட்டி திருமணம் நடைபெற்று முடிந்த பிறகு, தசரத மன்னனும் பரிவாரங்களும் அயோத்திக்குத் திரும்பினர். பரதனின் பாட்டனார் கேட்டுக் கொண்டபடி, தசரதன் பரதனை கேகய நாட்டுக்கு சத்ருக்னனுடன் அனுப்பி வைக்கிறான். இந்த நிலையில் தசரதன் ஒருநாள் முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, காதோரம் ஒரு நரைமுடி இருப்பதைக் கண்டு விடுகிறான். ஓ! தனக்கு முதுமை வரத் துவங்கி விட்டது. ராஜ்ய பாரத்தைத் தன் மகன் இராமனிடம் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, தனது மந்திராலோசனை சபையைக் கூட்டுகிறான்.

மந்திராலோசனை சபை கூடியது. குலகுருவான வசிஷ்டர் வந்து சேருகிறார். தொடர்ந்து அமைச்சர்கள் வந்து சேருகின்றனர். வந்த அமைச்சர்கள் முதலில் வசிஷ்ட முனிவரையும் பிறகு தசரத மன்னனையும் வணங்கித் தத்தம் ஆசனங்களில் அமர்கின்றனர். மந்திராலோசனை தொடங்குகிறது. முதலில் தசரதன் தனது உள்ளக்கிடக்கையை அமைச்சர்களுக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும் விதத்தில் பேசத் துவங்குகிறான்.

“சூரிய குலத் தோன்றல்களான என் மூதாதையர்கள் வழியில் அறுபதினாயிரம் ஆண்டுகள் ராஜ்ய பாரத்தை முறையாக என் தோளில் தாங்கி வந்தேன். இதுவரை அறவழியில், இந்த பூமியின் உயிர்களுக்காகப் பற்பல நன்மைகளைச் செய்து வந்தேன். இனி எனது உயிர்க்கு நன்மைதரும் செயல் குறித்து யோசித்து அதன்படி நடக்க விரும்புகிறேன். எனக்கு முதுமை வரத் துவங்கிவிட்டது என்பதை கவனித்தேன். இனியும் இந்த ராஜ்ய பாரத்தை என்னால் சுமக்க முடியாது. எனக்கு அந்த வலிமையும் குறைந்து வருகிறது. எனது முன்னோர்கள் ஆட்சிப் பொறுப்பைத் தங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைத்துத் தவம் இயற்றக் கானகம் சென்றது போலவே, நானும் செய்ய விரும்புகிறேன். நாட்டில் உள்ள பகைகளை வென்ற நான், இனி என் உள்ளத்தில் இருக்கும் பகைகளான காமம், வெகுளி முதலான எதிரிகளையும் தவம் எனும் ஆயுதம் கொண்டு வெல்ல விரும்புகிறேன்.”

“நெடுங்காலம் மகப்பேறு இல்லாமல் வருந்தியிருந்தேன். என் மனக் குறை நீங்கிட இராமன் வந்து அவதரித்தான். இனி இந்தப் புவி பாரத்தை இராமன் தாங்கி வருந்தவும், நான் இதனின்றும் தப்பி ஈடேறிப் போகவும் விரும்புகிறேன். மூப்படைந்த பிறகும், நானே ஆட்சி செய்தால், பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருக்கிறேன் என்ற அவப்பெயர் எனக்கு வரும். எனவே, நான் இராமனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, பிறவி நோய்க்கு மருந்தான தவ வேள்வியைத் தொடங்க விரும்புகிறேன். அமைச்சர்களே! உங்கள் கருத்து என்ன?” என்று அமைச்சர்களை நோக்கி வினவினான் தசரதன்.

இதனைக் கேட்ட மந்திரக் கிழவர்களுக்கு இராமனுக்கு ராஜ்யம் என்றதும் மகிழ்ச்சியும், தசரதன் பிரிவு எனும் துக்கத்தையும் அடைந்தனர். இரண்டு கன்றுகளையுடைய பசு, ஒரு கன்றினைப் பிரிய நேரும்போது எதையும் பிரிய மனமின்றி தவிப்பது போல தவித்தனர். தசரதன் பிரிவு வருத்தத்தைத் தருவது என்றாலும், அவன் மறுமைக்குத் தவம் செய்வது அவசியம் என்பதாலும், மன்னுயிர்க்கெல்லாம் இராமனைப் போன்ற ஓர் அரசன் கிடைப்பது என்பது அரிது என்பதாலும், விதியின் வழியே அனைத்தும் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பியதாலும், அமைச்சர்கள் தசரதன் விருப்பத்திற்கு சம்மதித்தார்கள்.

அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து வசிஷ்டர் பேசத் துவங்கினார்: “தசரதா! முன்பு உன் முன்னோர்கள் ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்தி பெருமை கொண்ட மன்னர்களில், இராமனை மகனாகப் பெற்ற உன் பெருமைக்கு ஈடாக யாருக்குக் கிடைத்தது? அறம் உணர்ந்தவர்கள் செய்ய வேண்டிய செயலையே நீ செய்யத் துணிந்திருக்கிறாய். இராமன் நெறி தவறாமல் உன்னைப் போலவே சிறப்பாக ஆட்சி புரிவான். மும்மூர்த்திகளில் ஒருவனே இராமனாக வந்து பிறந்திருப்பதால், அவனால் ஆகாதது ஒன்றுமில்லை. மக்களும் தாங்கள் பருகும் நீரைக் காட்டிலும், தம் உயிரைக் காட்டிலும் இராமனை மகிழ்வோடு ஏற்பார்கள். எனவே உன் எண்ணப்படியே, இராமனுக்கு முடி சூட்டலாம்” என்றார்.

வசிஷ்டரின் வார்த்தைகளைக் கேட்ட தசரதன், தான் இராமனை மகனாகப் பெற்றபோது மகிழ்ந்ததைக் காட்டிலும், மிதிலையில் இராமன் சிவதனுசை ஒடித்தபோது மகிழ்ந்ததைக் காட்டிலும், பரசுராமனின் கர்வத்தை ஒழித்த அந்த நாளைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். வசிஷ்டரின் மொழிகேட்டு தசரதன் கண்களில் நீர்மல்க, குருவின் பாதங்களில் நமஸ்கரித்து “ஐயனே! தாங்கள் காட்டிய நல்வழியிலே நான் ராஜ்ய பாரம் தாங்கியதைப் போலவே, இராமனுக்கும் தாங்களே வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.

அமைச்சர் சுமந்திரன் எழுந்து “இராமனுக்கு அரசுரிமை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி எனினும், உனது பிரிவு என்பது எங்கள் உள்ளங்களைச் சுட்டெரிக்கின்றது. ஆயினும் உங்கள் குலதர்மப்படி நீ செய்யும் இந்தச் செயல் அறவழிப்பட்டதே” என்றான்.

தசரதன் சுமந்திரனிடம் “நன்று சொல்லினை, இனி இராமனுக்கு முடிசூட்டுவது குறித்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிப்போம். நீயே போய் லக்ஷ்மி மணாளனான ஸ்ரீ இராமனை இவ்விடம் அழைத்து வா” என்றான். இவ்வுரை கேட்ட சுமந்திரன் மன்னனை வணங்கி விடைபெற்று, பொற்தேர் ஏறி, இராமனை அழைத்துவர, அவன் திருமாளிகைக்குச் சென்றான்.

அங்கே இராமன் தம்பி இலக்குவனோடும், சீதாபிராட்டியோடும் அமர்ந்திருக்கக் கண்டு, வணங்கி “இராமா! சக்கரவர்த்திக்கு உன்னிடம் ஒரு காரியம் இருக்கிறது, உடன் வருவாயாக!” என்று சொன்னவுடன் தாமரைக் கண்ணனான ஸ்ரீ இராமன் ஒரு மேகம் நடந்து செல்வது போல நடந்து சென்று தேரிலே ஏறிக்கொண்டான்.

இராமன் தேர் ஓட்டிச் சென்ற வீதிகளில், மகளிர் விரகத்தால் சிந்திய மலர்களும், உடல் வெப்பத்தால் காய்ந்த மலர்களும் கிடந்தன. இவை, இராமனுக்கு பின்னால் விளையப்போகும் காரியத்தை நினைவூட்டுவது போல அமைந்தது. இலக்குவனுடன் இராமன் வந்து தசரதனைத் தொழுதவுடன் அவனைத் தன் மார்புறத் தழுவினான் மன்னன். இது என்ன? தசரதன் தான் தாங்கி வந்த புவி பாரத்தைத் தாங்கக்கூடிய தோள்வலியும், புயவலியும் தன் மகன் இராமன் பெற்றிருக்கிறானா என்று தன் தோளோடு அவன் தோளை வைத்து அளந்து பார்க்கிறானோ? சுவையான காட்சி, அதை கம்பர் வாக்கால் பார்ப்போம்.

“நலங்கொள் மைந்தனைத் தழுவினன் என்பது என்? நளிநீர்

நிலங்கள் தாங்குறும் நிலையினை நிலையிட நினைத்தான்

விலங்கல் அன்ன திண்தோளையும் மெய்த்திரு இருக்கும்

அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான்”.

இராமனைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டு “இராமா! உன்னிடம் நான் கேட்டுப் பெற வேண்டியது ஒன்று உண்டு. எனக்கு முதுமை வந்துவிட்டது. ராஜ்ய பாரம் எனக்குச் சுமையாக இருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு தவநெறி மேற்கொள்ள நீதான் எனக்கு உதவி புரிய வேண்டும்” என்றான் தசரதன்.

“நமது முன்னோர்களும் உரிய காலத்தில் ராஜ்ய பாரத்தைத் தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டுத் தவம் செய்யச் சென்றிருக்கிறார்கள். இராமா! நான் செய்த தவப் பயனாய் நீ எனக்குப் பிள்ளையாய் வந்து பிறந்திருக்கிறாய். நீயே இந்த ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்! உன் மீது பாரத்தைச் சுமத்துவதாக எண்ணாதே! இதுதான் நல் அறம் என்பதைக் கருதி ஏற்றுக் கொள்வாயாக!” என்றான் தசரதன்.

தந்தை கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஸ்ரீ இராமன் அவன் கூறுவதே அறம் என்று உணர்ந்து அடக்கத்தோடு அவன் சம்மதத்தைக் குறிப்பால் உணர்த்தினான். தசரதன் மகனைத் தழுவி ஆசீர்வதித்து அனுப்பினான்.

உடனே முடிசூட்டுவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி உத்தரவுகளைப் பிறப்பித்தான். வசிஷ்ட முனிவர் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கப் புறப்பட்டுப் போனார். எல்லா நாட்டு அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அனைத்து அரசர்களும் வந்து கூடினார்கள். அவர்களிடம் தசரதன் “நான் துறவு உள்ளம் கொண்டமையால், இராமன் என் புதல்வன் என்று அவனிடம் நான் உரிமை கொண்டாடமுடியாது. அவனை உங்களிடம் ஒப்புவித்து விட்டேன். இனி அவன் உங்கள் புதல்வனாகக் கருதி உரியன செய்வீர்களாக! என்றான்.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி மக்களிடம் பரவியது. கேட்க வேண்டுமா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு. செய்தி கேட்டமாத்திரத்தில் ஆங்காங்கே மக்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக தாறுமாறாக தாளகதியின்றி ஆடுகிறார்கள். குரல் வளம் இல்லாதவர்கள்கூட உரத்த குரலெடுத்துப் பாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து கரம் கோர்த்து மகிழ்கின்றனர், இராமனைப் பெற்ற பாக்கியவதியான கோசலையிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல வேண்டுமாம், ஓடுகின்றனர் அவள் இருக்கும் மாளிகை நோக்கி.

அங்கே போய் கோசலையிடம் இந்தச் செய்தியைச் சொல்கின்றனர். இராமனுக்கு மகுடம் என்பது மகிழ்ச்சியான செய்திதான், ஆனால் தசரதன் தவம் செய்யப் போவது என்பது பிரிவு அல்லவா? அந்த எண்ணம் துன்பத்தையும் கொடுக்கிறது.

தனது குல தெய்வத்துக்கு பூஜை செய்துவிட்டு, மக்களுக்குத் தான தருமங்களைச் செய்கிறான் தசரதன். பசுக்களையும், பொன்னையும் சிறந்த இரத்தினங்களையும் தானமாகக் கொடுக்கிறான். வந்தவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டு, புதிய வஸ்திரங்களையும் தானமாகக் கொடுக்கிறான்.

“என் வயிற்றில் உதித்த ஸ்ரீ இராமன், இனி உன்னவன், அவனுக்கு எல்லா நலன்களும் அருளுதல் உன் கடனே” என்று குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறான். தனது அரண்மனை ஜோசியரை வரவழைத்து, அவரிடம் கலந்து ஆலோசித்து முடிசூட்டு விழாவிற்கு ஒரு நல்ல நாளைப் பார்க்கிறான். அந்த ஜோசியர் “நாளையே நல்ல நாள்” என்று கூற, மன்னன் மகிழ்ச்சியடைகிறான். வசிஷ்டரை அழைத்து உடனே முடிசூட்டுவிழாவிற்கான விரதம் முதலான காரியங்களைத் தொடங்கச் சொன்னான்.

இராமனிடம் செய்தி சொல்வதற்காக வசிஷ்டர் அவன் இருக்கும் மாளிகைக்குச் சென்று அவனிடம் விவரங்களைக் கூறினார். பிறகு அவனிடம் அரசு ஆளும் முறை பற்றியும், அவன் கடைப்பிடிக்க வேண்டிய பற்பல நீதிகளையும் உபதேசிக்கிறார். இனி அவன் குழந்தை அல்ல, இந்த நாட்டை ஆளப்போகும் மன்னன் அல்லவா? குலகுருவான வசிஷ்டர் செய்ய வேண்டிய கடமையல்லவா இது?

வசிஷ்டர் சொல்கிறார்: “இராமா! நான் சொல்லும் அறவழிகளை நன்கு கேட்டு அதன்படி நடந்துகொள். நீ வேத சாஸ்திர் விற்பன்னர்களைப் பேணி பாதுகாத்து அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்; ஏன் தெரியுமா? அவர்கள் முப்பெரும் தேவர்களைக் காட்டிலும், பஞ்ச பூதங்களைக் காட்டிலும், மெய்ப்பொருளைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். இந்த இடத்தில் “புறநானூற்று”ச் செய்யுள் ஒன்றில் குறிப்பிடப்படும் சோணாட்டுப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன் எனும் வேத விற்பன்னர் 24 வகையான யாகங்களைச் செய்து, செல்வங்கள் எல்லாம் பெற்று வாழ்ந்ததும், அவரைப் புலவர்கள் பாடிப் பரிசில்கள் பெற்ற வரலாற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.”

“கடும் சொற்களைப் பேசுவதை அறவே நீக்கிவிடு! நீதி நூல்கள் காட்டும் பாதையில் நீ நடக்க வேண்டும். எவருடனும் பகைமை கொள்ளாதே! பகைமையை நீக்கிவிட்டால் போர் செய்ய வாய்ப்பில்லை, அப்படி ஒரு நிலைமை வந்தாலும் போர் செய்யாதே! நடுநிலையோடும், மன உறுதியோடும் ஆட்சி செய்! நல்லோர் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நட! குடிமக்கள் உயிர் என்றால், அதனைத் தாங்கும் உடலாக நீ இரு!.”

“இன்சொல்லே பேசு! ஈகையுடன் இரு! உள்ளும் புறமும் தூயவனாக இரு! வினைத்திட்பம் உடையவனாக இரு! உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிரு! எப்போதும் வெற்றியோடு இரு! அரச நீதி தவறாமல் ஆட்சி செய்!. நல்லொழுக்க வழியில் நடப்பாயாக! நடுநிலையாளனாக இரு! ஆசைகளை விட்டொழி! குறிப்பாகப் பெண்ணாசை அழிவைத் தரும் என்பதால் அவ்வெண்ணத்தை அடியோடு விடு! இவ்வாறு பற்பல நீதிகளை வசிஷ்டர் இராமனுக்கு உபதேசித்தார்.

பிறகு இராம பிரானுக்குச் செய்ய வேண்டிய பூர்வாங்க சடங்குகளைச் செய்விக்கிறார். புண்ணிய தீர்த்தமாடி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து நோன்பு நோற்று, தியானத்தில் அமர்கிறான் இராமன்.

மன்னன் நகர் முழுவதும் முரசு அறைந்து நாளைக்கு இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அறிவிக்கிறார்.

“ஏவின வள்ளுவர் ‘இறைவன் நாளையே

பூமகள் கொழுநனாய்ப் புனையும் மெளலி! இக்

கோநகர் அணி’ கெனக் கொட்டும் பேரி அத்

தேவரும் களிகொளத் திரிந்து சாற்றினார்”

இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்டவுடன், அயோத்தி நகரத்து மாந்தர் அனைவரும் கிடைத்தற்கரிய தேவாமிர்தம் பெற்று உண்டவர்கள்போல் பெருமகிழ்ச்சி கொண்டனர். அதன் விளைவாக நடந்தது என்ன?

“ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;

வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்ம்மயிர்

போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்

தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க் கெலாம்”.

இராம பட்டாபிஷேகச் செய்தியைச் சொன்னவர்களுக்கெல்லாம் நிதியை வாரி வாரி வழங்கினராம் அயோத்தி மக்கள். நகரம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டது. பல நிறக் கொடிகள் கட்டப்பட்டன. நகர மாந்தர் தத்தம் வீட்டு நிகழ்ச்சியைப் போல எண்ணி பந்தல், தோரணம், வாழை, கமுகு கட்டி அலங்கரித்து மகிழ்ந்தனர். அயோத்தி நகர் தேவலோகம் போல காட்சி அளித்தது.

அப்போது நகரில் நடக்கும் ஆரவாரங்களைக் கேட்டு, கைகேயியின் தாதியும், உடலில் கூன் விழுந்த தோற்றமுடைய மந்தரை எனும் பெயர் கொண்ட ‘கூனி’, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியே வந்தாள்.

“அந்நகர் அணிவுறும் அமலை வானவர்

பொன்னகர் இயல்பென பொலியும் எல்வயில்

இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்

துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்”.

இந்தக் கூனியால் விளையப் போகும் தீமைகளைக் கருத்தில் கொண்டு, கொடுமனக் கூனி என்றும், இறுதியில் இராவணன் வதம் செய்யப் படுவதற்கு இவள் செய்யும் சூழ்ச்சியே காரணமாக இருக்கப் போகிறது என்பதைக் காட்டும் விதத்தில், இராவணன் இழைத்த தீமைபோல் இந்தக் கூனி தோன்றினாள் என அவளை கம்பர் பெருமான் நமக்கு அறிமுகம் செய்விக்கிறார்.

அங்கு வந்து சேர்ந்த கூனி இருக்கிறாளே, இவள் எப்படிப் பட்டவள்? மூவுலகங்களுக்கும் தனது செயலால் துன்பம் மூட்டுவாள். இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தியைக் கேட்டவுடன் நெஞ்சு துடித்து வருந்தினாள். தாங்கொணாக் கோபம் கொண்டாள்; மனம் சஞ்சலமடைந்தாள்; சினத்தால் கண்கள் தீயினை உமிழ்ந்தன.

“தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினள்

ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்

கான்று எரி நயனத்தாள்; கலிக்கும் சொல்லினாள்;

மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்”.

இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம்? ஆத்திரம்? இராமன் மீது ஏன் இவ்வளவு பொறாமை? காரண்ம் இருக்கிறது. முன்பொரு நாள் இராமன் சிறுவனாக இருந்த போது, தன் வில்லில் மண் உருண்டைகளை வைத்து இந்தக் கூனியின் கூன்விழுந்து வளைந்த முதுகில் அடித்ததைத் தன் ஆழ்மனத்தில் இருத்தி வருந்திக் கொண்டிருந்தாள். எனவே அவன் மீது கொண்டிருந்த ஆத்திரத்தால், அவனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தியைக் கேட்டவுடன் அவளுக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணுகிறது. தன் எஜமானியான கைகேயியிடம் விரைந்து செல்கிறாள்.

இராவண சம்ஹாரத்திற்காக, இந்தக் கூனி தேவர்களால் அனுப்பப்பட்டதாக ஆழ்வார் பாசுரங்கள் குறிப்பிடுகின்றன. கைகேயி தனது மாளிகையில் பட்டு மெத்தையில், கடைக்கண்கள் அருள் பொழிய திருப்பாற்கடலில் கிடக்கும் பவளக்கொடிபோல படுத்திருந்தாள். சில கோள்களின் ஆதிக்கம் தீமைகளை விளைவிக்கும். அதுபோன்ற ஒரு தீய கிரகமாக கூனி கைகேயியைத் தொட்டு எழுப்பினாள். கூனியின் கை பட்டதும் விழித்துக் கொண்ட கைகேயி, அரைத் தூக்கத்தில் எழுந்து “என்னடீ?” என்று கேட்கக் கூனி புலம்பத் தொடங்கினாள்.

“அடியே கைகேயி! ராகு தன்னைப் பிடிக்க வரும்போதும் தன் தண்ணொளியைப் பரப்பி நிற்கும் சந்திரன் போல, உன்னைத் தேடிவரும் தீமை தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு” என்றாள்.

“என்னடி துன்பம் எனக்கு? என்ன துன்பம் நேர்ந்தாலும் அவைகளைப் போக்க வல்ல என் மக்கள் நால்வரும் இருக்கும்போது எனக்கு என்னடி கவலை? உலகத்தில் நல்ல புதல்வர்களைப் பெற்றவர்கள் இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் நற்கதி பெறுவர். அதிலும் இராமனே மகனாகப் பெற்ற எனக்கு என்னடி தீமை வந்துவிடும்?” என்றாள் கைகேயி.

“போடி அறிவற்றவளே! உனக்கு வரும் நன்மைகள் அனைத்தும் தொலைந்து போயிற்று. உன் செல்வம் அனைத்தும் அழிந்து போயிற்று. புத்திசாலியான கோசலை, தன் புத்தியால் வாழ்கிறாள்” என்றாள் கூனி.

“தசரதனைக் கணவனாகவும், பரதனை மகனாகவும் பெற்ற மகராசி கெளசலைக்கு இதைவிட என்ன மேம்பட்ட வாழ்வு கிடைத்துவிடும்? என்று கூனி கூறவரும் செய்தி அறியாத நல்லமன கைகேயி பதிலளித்தாள்.

இராமனைத் தன் மகன் என்றும், பரதனைக் கோசலையின் மைந்தன் எனவும் எண்ணி வளர்த்து வந்த பாங்கும், பரந்த குணமும், நல்லெண்ணமும் இந்தக் கூற்றின் மூலம் விளங்குகிறது அல்லவா? சில பெண்கள் தன் கணவனுடைய தங்கையிடம் பேசும் போது, என் புருஷன் என்று சொல்லாமல் “உன் அண்ணன்” என்று குறிப்பிடுவார்கள், அதைப் போலவும் கைகேயி சொன்னாளோ என்னவோ?

“தாடகை என்ற பெண்ணைக் கொன்று ஆண்கள் எல்லாம் பரிகசிக்கும்படியாகவும், வீரம் மாசு படும்படியாகவும், தன் கையில் வில் ஏந்தி நிற்கும் இராமன் நாளை முடிசூட்டிக் கொள்ளப் போகிறானாம்” என்றாள் கூனி.

“இப்போது புரிகிறதா கோசலைக்கு வாழ்வு வந்திருக்கிறது என்று?”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கைகேயியின் மனம் ஆனந்தக் கூத்தாடியது. “இராமனுக்கு முடிசூட்டு விழாவா? என் கண்மணி இராமனுக்கா?” கண்களில் மகிழ்ச்சி பொங்க, உள்ளம் களிப்பில் கூத்தாட “நல்ல செய்தி கொண்டு வந்த உனக்கு இந்தா இந்த மணிமாலை” என்று ஒரு விலை மதிக்க முடியாத இரத்தின ஹாரத்தைப் பரிசாக அளித்தாள்.

கைகேயி வருந்துவாள் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, இப்படி ஆனந்தக் கூத்தாடியது கண்டு கூனிக்கு ஆத்திரம் வந்தது. கூச்சலிட்டாள்; கைகேயியை அதட்டினாள்; கோபமாய் பார்த்தாள்; வைதாள்; வெப்ப பெருமூச்சு விட்டாள்; தன் கோலத்தை அலங்கோலமாக ஆக்கிக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள்; கைகேயி பரிசளித்த இரத்தின மாலையைத் தூக்கி எறிந்தாள்.

அந்தக் கூனியின் உடல் மட்டும் கூனல் அல்ல; அவள் மனம், குணம், செயல் அனைத்துமே கோணல்தான். அவள் கைகேயியைப் பார்த்து சொல்கிறாள்: “அடியே! நீ பேதை; அறிவிலி; பைத்தியக்காரி; உன் மகனோடு நெடுநாள் வாழ்ந்து துன்பப்படப் போகிறாய். நீ உன் மூத்தாளான கெளசலைக்கு தாதியாகி சீரழியப் போகிறாய். அதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.”

“இராமனுக்கு முடிசூட்டினால், அவன் சீதையோடு ஆடம்பரமாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க, உன் மகன் பரதன் அவனுக்கு ஏவல் செய்யும் தொண்டனாக இருக்க வேண்டும். இந்த நிலையை உணர்ந்த பிறகும், நீ மகிழ்ச்சி அடைகிறாய் என்றால் நான் என்ன சொல்ல இருக்கிறது? கோசலை தன் சாமர்த்தியத்தால் அரசனைக் கைக்குள் போட்டுக் கொண்டு இராமனுக்கு அரசுரிமை வாங்கி விட்டாள். அவள் வாழ்வாள். நீயும் இருக்கிறாயே! பரதன் உன் மகனாய்ப் பிறந்ததால் செல்வமிழந்து தவிக்கிறான். அவன் இவ்வுலகில் பிறந்தும் பிறவாதவனாக இருக்கிறான்”.

“அந்த இராமனும் லக்ஷ்மணனும் இந்த பூமியை அளவற்ற காலம் செல்வச் செறுக்கோடு ஆள – உன் மகன் பரதனும் சத்ருக்குனனும் காடு போய் தவமியற்றி விரதம் மேற்கொள்ளுதல் நன்று. அரச குலத்தில் எல்லா சிறப்புகளோடும் பிறந்திருந்தும் பரதன் நாடாளும் பேறு பெறாதவன். இப்படி ஒரு சூழ்ச்சியை மனதில் கொண்டுதான் தசரதன், பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிவிட்டு, இராமனுக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்கிறான் என்று இப்போது எனக்குப் புரிகிறது”.

“ஐயோ! பரதா! என் அப்பனே! நீ என்ன செய்வாய்? தந்தையோ உனக்குத் துரோகம் செய்கிறான். தாயும் உன்னைப் பொருத்தவரை கொடியவளாக இருக்கிறாள், என்ன செய்வாய்?”

“கைகேயி! நீ அரசியாய்ப் பிறந்து, அரசியாக அரண்மனையில் வளர்ந்து, சக்கரவர்த்திக்கு வாழ்க்கைப்பட்டும் துயரக் கடலில் வீழ்கிறாயே! இராமனைவிட எந்த விதத்திலும் குறைவிலாத பரதன் சாக்கடையில் இழிந்த அமுதம்போல வீணாகிறானே!”

இப்படி கூனி பேசிய சொற்கள் கைகேயிக்கு மேலும் கோபத்தை மூட்டியது. கண்கள் சிவந்தன. கூனியைப் பார்த்து “கொடியவளே! சூரிய குலத்தில் உதித்த மன்னர்கள் உயிரும் செல்வமும் போனாலும் சத்தியம் தவறமாட்டார்கள். அப்படி மனு நீதிப்படி ராஜ்ய பரிபாலனம் நடைபெறும்போது, உன் இழிந்த புத்தியால் இப்படிப் பேசிவிட்டாய். நீ எனக்கும் நல்லவள் இல்லை; பரதனுக்கும் நல்லவள் இல்லை. தர்ம நியாயப்படி பார்த்தால், நீ உனக்கே நல்லவள் இல்லை. ஊழ்வினை உந்த இங்கே வந்து இப்படியெல்லாம் பேசுகிறாய்.”

“எனக்கு நல்லையும் அல்லை; நீ என் மகன் பரதன்

தனக்கு நல்லையும் அல்லை; அத்தருமமே நோக்கின்

உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட

மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்”.

“ஒருவர் வாழும்போதும் புகழுடன் வாழவேண்டும். இறந்த பிறகும் புகழுடன் வாழவேண்டும். அந்தப் புகழை நேர்மையோடும், தர்மத்தோடும் நடந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தர்மப்படி மூத்தவனே அரசாள வேண்டும். அதற்கு மாறானதைச் செய்தால் அது இழுக்கு. செய்யத் தக்கது அன்று. புரிந்துகொள்! மதிகெட்டவளே! நீ பேசிய பேச்சுக்கு உன் நாவை அறுத்தெறிந்திருக்க வேண்டும். பழகிய காரணத்துக்காக பொறுத்துக் கொள்கிறேன். நீ பேசியது வெளியே தெரிந்தால் ராஜ தண்டனைக்கு ஆளாவாய். இதோடு வாயை மூடிக்கொள். இனி என் முன் நிற்காதே! ஓடிவிடு!” என்றாள் கைகேயி.

“கைகேயி! நீ என்னிடம் கோபப்பட்டாலும், அடித்து விரட்டினாலும் உனக்கு உண்மையை உணர்த்தாமல் போகமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே கைகேயியின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து வணங்கி மேலும் பேசுகிறாள் மந்தரை.

“மூத்தவன் இருக்க இளையவனுக்குப் பட்டம் இல்லை என்கிறாய். சரி! அப்படியானால் வயதில் மூத்த தசரதன் இருக்கும் போதே இராமனுக்கு முடிசூட்டல் எங்ஙனம் பொருந்தும்? அப்படி இருக்க பரதனுக்கு முடிசூட்டுதல் எப்படி தவறாகும்? செல்வம் வந்துவிட்டால் உறவு ஏது? கோசலையும் இராமனும் இனி முன்போல இருப்பர் என்பது என்ன நிச்சயம்? மனத்தால் உனக்குத் தீங்கு செய்ய நினைப்பார்கள். இராமனுக்கு ராஜ்யம் என்று ஆகிவிட்டால் பொறாமை குணம் கொண்ட கோசலை உன்னையும், உன் மகனையும் எப்படி நடத்துவாள்? அவள் உவந்து போடும் பிச்சைதான் உங்களுக்குக் கிடைக்கும்.”

“இப்போது நீ விரும்பியவர்களுக்கெல்லாம் தான தர்மம் செய்கிறாயே, இனி முடியுமா? அந்த கோசலையிடம் போய் தானம் செய்ய பொருள் கொடு என்று கேட்பாயோ? அல்லது கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவாயோ? அல்லது கொடுக்க முடியவில்லையே என்று அவமானத்தால் மாண்டு போவாயோ? எப்படி இருக்கப் போகிறாய்? சொல்!”.

“நீ ஒரு பேரரசி என்று நினைத்துக் கொண்டிருக்கும் உன் தாய் தந்தையர் இங்கு வந்து நீ இருக்கும் நிலையைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள். ஜனகன் முன்னமே உன் தந்தையிடம் பகை கொண்டவன். உன் கணவனுக்கு அஞ்சி இதுவரை வாளாவிருக்கிறான். இனி இராமன் அரசன் என்று ஆகிவிட்டால், அவன் தன்னுடைய மாமனார் பக்கம் இருப்பான். அப்போது உன் தந்தையின் கதி என்ன?”

“கோசலையைப் போல முயன்றிருந்தால் நீயும் உன் மகன் பரதனை அரசனாக்கியிருக்கலாம். அதை நீ கெடுத்து விட்டாய். இனி வழிவழியாக இராமன் வழித் தோன்றல்களுக்கே அரசுரிமை போய்விடும். பரதனும், சத்ருக்குனனும் திண்டாடிக் கொண்டிருப்பார்கள்.” இவ்வாறு கூனி எனும் மந்தரை கைகேயியின் மனதைச் சிறுகச் சிறுக மாற்றினாள்.

கைகேயிக்கு திருமணமாகி கணவன் வீட்டுக்கு வந்தபோது, அவள் அன்னை இந்த மந்தரையெனும் கூனியைத் துணையாக அனுப்பினாள். “இப்போது உனக்குக் கேடு வந்துற்றபோது நான் காப்பாற்றவில்லை என்ற ஏச்சு எனக்கு வரும்” என்று சொல்லி கூனி கைகேயியைத் தூண்டுகிறாள்.

“தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி

தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின்; இமையோர்

மாயையும், அவர் பெற்றுள வரம் உண்மையாலும்,

ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும்”.

கைகேயி மனம் மாறி, தசரதனிடம் வரம் கேட்டு இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும், இராமன் காட்டில் அரக்கர்களை அழித்து இராவண சம்ஹாரமும் நிறைவேற வேண்டுமென்று தேவர்கள் மாயம் செய்திருந்தார்கள், அதன் பயனாகவும், ரிஷிகளும் வேதியர்களும் அரக்கர்களின் அழிவுக்காக செய்த அரும்பெரும் தவ வேள்விகளின் பலனாலும், மந்தரை கைகேயியின் மனதை மாற்றிவிட்டதறிந்து தேவர்கள் மகிழ்ந்தார்கள். மந்தரை செய்த மாயத்தின் விளைவாக கைகேயி மனம் மாறினாள். கூனியின் சொற்கள் மட்டுமா அதற்குக் காரணம், இல்லை இல்லை, தேவர்களின் மாயையும், ரிஷிகளின் வேண்டுதலும் கூட காரணமாயின.

அரக்கர்கள் செய்த பாபமும், அறவோர் செய்த தவமும்கூட நல்ல சிந்தனையுள்ள கைகேயியின் மனம் திரியக் காரணமாக இருந்தது. ஏனெனின் இராம அவதாரமே இராவண சம்ஹாரம்தான் நோக்கம். அதனால்தான் தூய சிந்தனையுள்ள கைகேயி மனம் மாறவும், கைகேயி காரணமாக இருந்து இராமன் வனம் புகவும், அரக்கர் அழியவும் காரணமாக இருந்தாள் எனும் கருத்தினைக் காணும்போது, கைகேயி மீது வரும் கோபம் நமக்கெல்லாம் மறைந்துவிடுமல்லவா? தன்னைக் காட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்த கைகேயியைத் தன் தாய் என்று இறுதியில் இராமபிரான் பெருமைகொண்டது மட்டுமல்ல, தன் தந்தை தசரதனையும் ‘அவள் இனி என் மனைவி இல்லை’ என்று கூறிய சபதத்தையும் மாற்றிக் கொள்ளச் செய்கிறானே!

மனம் மாறிய கைகேயி கூனியை அன்போடு பார்த்து “மந்தரை, நீ எனக்கும் நல்லவள், என் மகனுக்கும் நல்லவள். நீ கூறியபடி பரதன் அரசன் ஆவதற்கு ஓர் உபாயம் சொல்” என்றாள். சற்றுமுன்புதான் கைகேயி அந்தக் கூனியை “நீ எனக்கு நல்லையும் அல்லை; நீ என் மகன் பரதனுக்கும் நல்லையும் அல்லை, அத்தரும நோக்கில் உனக்கும் நல்லையும் அல்லை” என்று சொன்னதை மாற்றி, இப்போது கூனி தனக்கும் தன் மகனுக்கும் நல்லவள் என்கிறாள் கைகேயி.

இதுகாறும் கைகேயியை அறிவிலியென பழித்த கூனி அதை மாற்றிப் பேசுகிறாள். “அறிவாற்றல் மிக்க கைகேயி! என் சொல்லைத் தட்டாமல் நடந்தால் பரதன் முடிசூட்டிக் கொள்வது உறுதி” என்றாள். உடலைப் போலவே உள்ளமும் கோணலாகிப்போன கூனி மேலும் பேசுகிறாள்: “முன்பு சம்பராசுரனுடன் நந்த போரில் உன் கணவன் தசரதனுக்கு நீ செய்த உதவியைப் பாராட்டி அவன் உனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்தானல்லவா? அதனை நீ பிறகு பெற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தாயல்லவா?”

“ஆமாம்”

“அந்த இரண்டு வரங்களையும் நீ இப்போது கேட்டுப் பெற்றுக் கொள்”

“நீ பெறும் இரண்டு வரங்களில் ஒன்றினால், பரதனுக்கு அரசுரிமையையும், மற்றொரு வரத்தினால் இராமன் ஏழிரு பருவங்கள் பெரும் காட்டில் சுற்றித் திரியும்படியும் செய்வாயாக. இராஜ்யம் உன் மகன் பரதனுக்குக் கிடைக்க இது ஒன்றே வழி” என்றாள் கூனி.

இப்படிச் சொன்ன கூனியை, மனமகிழ்ந்து கைகேயி ஆரத் தழுவிக் கொண்டாள். நவரத்ன மாலையையும், பொருளையும் கொடுத்து, என் மகனுக்கு இவ்வுலகம் கிடைக்கும்படி செய்தாய். நீ இனி அவனுக்கு தாய் போன்றவள்” என்று பாராட்டினாள்.

“நீ கூறிய உபாயம் மிகவும் நன்று. அதன்படியே நான் செய்து முடிப்பேன். இல்லையெனில் என் ஆவி துறப்பேன்”.

மந்தரையை வெளியே போகச் சொல்லிவிட்டு கைகேயி, தன் மலர் மஞ்சத்திலிருந்து இறங்கிக் கீழே விழுந்து, தலையில் சூடியிருந்த மலர்களைப் பிய்த்து எறிந்தாள். இடையில் அணிந்திருந்த மேகலையை அறுத்து வீசினாள்; பாத கிண்கிணியையும், கை வளையல்களையும் கழற்றி எறிந்தாள்; நெற்றியில் அணிந்திருந்த குங்குமத் திலகத்தை அழித்தாள்; மேலே அணிந்திருந்த இரத்தின ஆபரணங்களை வீசி எறிந்தாள்; கூந்தலைப் பிரித்துத் தரையில் பரந்து விரிந்து கிடக்குமாறு செய்தாள்: கண்களில் பூசியிருந்த அஞ்சனம் கரைய அழுதாள்; இலைகளும் பூக்களும் நீங்கிய வெற்று மரம்போல நிலமிசை வீழ்ந்தாள்.

அழகும், மங்கலமும் தரும் பொருட்களையெல்லாம் நீக்கிவிட்டு, பின்னால் தனக்கு வரப்போகும் கைம்மை கோல நிலையை முன்னதாகவே மேற்கொண்டாள் கைகேயி.

“நவ்வி வீழ்ந்தன, நாடக மயில் துயின்றென்ன

கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்து

அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த

தன்வை ஆம் எனக் கிடந்தனள், கேகயன் தனயை”.

துள்ளி விளையாடுகின்ற மான் கீழே விழுந்து கிடப்பதைப் போல கிடந்தாள்; தோகை விரித்தாடும் மயில் துயில் கொள்வது போல தரையில் கிடந்தாள்; மணமிக்க செந்தாமரை மலரில் வாசம் செய்யும் திருமகளான ஜானகி அயோத்தி நகரை விட்டு நீங்கினாள் என்று கருதி அந்த இடத்திற்கு வந்துவிட்ட லக்ஷ்மியின் மூத்தவளான மூதேவி போலக் கிடந்தாள் கேகய மன்னனின் புத்திரியான கைகேயி.

அன்றைய பொழுது சாய்ந்தது. இரவு நேரம் வந்து சேர்ந்தது. இரவின் நடு ஜாம நேரம். மறுநாள் முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு தன் அன்பிற்கு அதிகமும் பாத்திரமான கைகேயியின் இல்லத்துக்கு மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தான் தசரதன். மாளிகையின் உள்ளே சென்று தரையில் அலங்கோலமாக விழுந்து கிடக்கும் கைகேயியைக் கண்டான். ஒரு யானைத் தன் துதிக்கையால் எடுப்பது போல அவளைத் தன் நீண்ட கரங்களால் தூக்கி எடுத்தான். அவனது கைகளை விலக்கிவிட்டு, அவள் மீண்டும் சரிந்து தரையில் வீழ்ந்தாள்.

“கைகேயி! என்ன நடந்தது? உனக்கு இழிவு செய்தவர் யாராயினும் என் கையால் மாண்டொழிவர். நடந்ததைச் சொல். அதன் பிறகு பார்!” என்றான் தசரதன்.

“என்பால் உமக்கு உண்மையான அன்பும், அருளும் உண்டு என்றால், முன்னே எனக்கு அளித்தவற்றை நீங்கள் மனமுவந்து இப்போது தரவேண்டும்” என்றாள் கைகேயி.

இதைக் கேட்டு தசரதன் சிரித்தான். “உன் உள்ளம் விரும்பியதைச் செய்வேன்; மறுக்கமாட்டேன்; உன் மகனும் வள்ளலும், என் கண்மணியுமான இராமன் மீது ஆணை” என்றான் தசரதன்.

தசரதன், இராமன் மேல் ஆணையிட்டுக் கூறியதால் வாக்குத் தவறமாட்டான் என்று உறுதி செய்து கொண்ட கைகேயி, “தேவர்கள் சாட்சியாக சம்பராசுர யுத்தத்தின் போது, நீங்கள் கொடுப்பதாகக் கூறிய இரண்டு வரங்களை இப்போது நீங்கள் எனக்குத் தருவீராக!” என்றாள்.

“நான் வாக்களித்த வரங்கள் வேண்டுமென்றால் நேரடியாகக் கேட்காமல், அதற்கு இத்தனை துன்பப் படுவானேன். தரவேண்டியதைத் தராமல் இருப்பது பாவம். உடனே கேள்; தருகிறேன்” என்றான். உடனே கைகேயி கேட்கிறாள்:

“ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என்

சேய் உலகாள்வது, சீதை கேள்வன் ஒன்றால்

போய் வனம் ஆள்வது எனப்புகன்று நின்றாள்

தீயவை யாவையினும் சிறந்த தீயாள்”.

“நீங்கள் கொடுத்த இரண்டு வரங்களில் ஒன்றினால் என் மகன் பரதன் முடிசூடிக்கொண்டு ராஜ்யத்தை ஆளவும், மற்றொரு வரத்தினால் சீதைமணாளன் இராமன் போய் வனம் புகுதலும் வேண்டுமெனக் கேட்டாள் தீமைகளுக்கெல்லாம் சிறந்த தீமையாக விளங்கும் கைகேயி. அவள் வாயிலிருந்து புறப்பட்ட விஷம் போன்ற சொற்களைக் கேட்ட தசரதன் கீழே விழுந்தான்.

அப்போது மன்னன் தசரதன் அடைந்த வேதனை சொல்லும் தரமாமோ? மனம் உளைந்து கொல்லன் உலைக்களம் போல வெப்பப் பெருமூச்சு விட்டான். கைகேயி மேல் கோபம் தலைக்கேற, ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்தான். மனமும் புலன்களும் மரண காலம்போல கலங்கின. செய்வதறியாது தவித்தான். எழுவான்; பின்பு மனம் கலங்கி விழுவான்; அமர்வான்; நிற்பான்; பின்னரும் வீழ்வான்; கைகேயியைப் பற்றி எற்ற எண்ணுவான்; பின் தளர்ந்து போவான்.

பெருமூச்செறிந்து உலாவியும், அயர்ந்து நின்றும் பலவாறு வருந்தினான். அவன் கொடுத்த வரத்தில் ஒன்று அவன் நெஞ்சில் பாய்ந்து புண்ணாக்க, மற்றொன்று அந்தப் புண்ணில் தீயெனப் பாய்ந்தது. இவ்வளவு துன்பங்களையும் தசரதன் அனுபவிக்கும் போதும் கைகேயி கண்களில் எந்த மாற்றமும் இல்லை. பெண்மைக்கே உரித்தான அச்சம், நாணம், இரக்கம் அனைத்தையும் நீக்கிவிட்டவளைப் போலத் தோன்றினாள். அவளது மனதிலிருந்த வஞ்சத்தின் ஆழம் புரியாமல் தசரதன் அவள் மீது உயிரையே வைத்திருந்தானே!

கைகேயியை தசரதன் நேருக்கு நேராகப் பார்த்து “உனக்கு என்ன புத்தி பேதலித்து விட்டதா? யாரேனும் வஞ்சனையால் உன் மனதில் கலக்கம் ஏற்படுத்தினாரோ? என் மேல் ஆணை, உண்மையைச் சொல்” என்றான் தசரதன்.

கைகேயி மனம் தளரவில்லை. தசரதனுக்கு மறுமொழி சொன்னாள்.

“திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்

இசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ்வரங்களை

குசைப்பரியோய்! தரின் இன்று கொள்வென்; அன்றேல்

வசைத்திறன் நின்வயின் நிற்க மாள்வென்” என்றாள்.

“நீ கொடுத்த இரண்டு வரங்களை, எனக்கு வேண்டும்போது பெற்றுக் கொள்வதாகச் சொன்னேன். இப்போது அவற்றைக் கேட்கிறேன். கொடுப்பதானால் சரி; இல்லையேல் நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்கிறாள் கைகேயி.

இராமன் வனம் புகவேண்டும் என்று வரம் கேட்டு, அதில் இவள் உறுதியாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த தசரதன் “ஆ! கொடியவளே!” என்கிறான். பின்பு உயிர் சோர்கிறான். ஐயோ! தர்மத்தைக் காப்பது மிக மிகக் கொடியது என்கிறான். ‘சத்தியம் என்ன வேண்டிக் கிடக்கிறது, சாகட்டும்’ என்று எண்ணி எழுவான், பின்பு தள்ளாடி கீழே விழுவான்.

இந்தப் பெண்களே வஞ்சகிகள். குல கேடர்கள். அவளோடு பெண் குலத்தையே பூண்டோடு அழித்து விடுகிறேன், அதனால் கிழ் மக்கள் வரிசையில் நானும் சேர்ந்து கொள்வதால் குற்றமில்லை என பொங்கி எழுகிறான்.

“கையோடு கையப் புடைக்கும், வாய் கடிக்கும்

மெய்யுரை குற்றமெனப் புழுங்கி விம்மும்

நெய்யெரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும்

வையக முற்று நடந்த வாய்மை மன்னன்”.

இப்படித் துன்பத்தால் பலபடியாகச் சிந்தித்து தசரதன் ஒன்றும் செய்யாது பொறுத்து, நான் படும் பெரும் துன்பம் கண்டும், சிறிதேனும் மனமிரங்கித் தன் நிலையினின்றும் மாறாத இவளை, இரந்து வேண்டுதல் ஒருக்கால் பலன் அளிக்கக்கூடும் என்று கருதி, அவ்வாறே செய்யத் துணிந்தான். தசரதன் கைகேயியின் கால்களில் வீழ்ந்து அவளிடம் கெஞ்சுகிறான்.

“கைகேயி! கைகேயி! உன் மகன் பரதன், இந்த அரசை ஏற்கமாட்டான். அப்படி அவன் ஏற்றுக் கொண்டாலும், இந்த நாடும் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பரதன் நாடு ஆள, இராமன் காடு புகுதலை தேவரும் ஒப்பமாட்டார்கள். இராமன் காடு சென்றால், மக்கள் உயிர் வாழ மாட்டார்கள். அப்புறம், நீ யாரோடு இருந்து இந்த அரசை ஆளப்போகிறாய்?”.

“இராமனை முடிசூட்டிக் கொள்ள முறைப்படி கேட்டதால், அவன் ஒப்புக்கொண்டான். நீ உன் மகன் பரதனுக்கு ஆட்சி வேண்டும் என்பதை இராமனிடம் கூறினால், அவனே மனம் விரும்பி ராஜ்யத்தைக் கொடுத்து விடுவான். கைகேயி! நீ என் கண்களை வேண்டுமானாலும் கேள்! கொடுத்து விடுகிறேன். என் உயிரை வேண்டுமானாலும் கேள்! கொடுத்து விடுகிறேன். வேண்டுமானால் உன் மகனுக்கு இந்த ராஜ்யத்தை எடுத்துக் கொள். மற்றொரு வரத்தை மட்டும் மறந்து விடு!”.

“கைகேயி! நான் சொன்ன சொல் தவறமாட்டேன். தவறினால், அது குற்றமாகும். நான் வேண்டுகின்ற வரத்தை நீ மனமிரங்கி தரவேண்டும். இரக்கமற்ற பேய்கூட வருந்தி ஒருவர் யாசித்தால் மனம் இரங்கித் தந்துவிடும். நீ தரலாகாதா?”

இப்படிப் பலப்பல சொல்லி இறைஞ்சியும் அந்தத் தீயவள் கைகேயி, மனம் இரங்கவில்லை.

“மன்னா! இந்த வரங்களை முன்னே தந்தாய். இப்போது தரமறுத்து கோபப்பட்டால், உன் வாய்மை என்னாவது? வாய்மைக்கு ஒரு தசரதன் என்று உலகத்தார் சொல்வார்களே! இனி யார் இருக்கிறார்கள் இந்த உலகில் வாய்மையைக் காக்க?”

இந்தச் சொற்களைக் கேட்டு வருந்திய தசரதன், இவள் பெண் அல்ல. உயிரைக் கொல்லும் விஷம் என்று மூர்ச்சித்துப் பின் எழுந்து மறுபடியும் கெஞ்சுகிறான்.

“நாடு முழுவதையும் கொடுத்து விடுகிறேன். பொய் கூறேன். உன் மகனே இந்த ராஜ்யத்தை ஆளட்டும். நீயே ஆண்டு கொள். உன் அதிகாரத்தைச் செலுத்து. ஆனால், என் மகன், என் கண்போன்ற இராமன் இந்த நாட்டைவிட்டுக் கானகம் போக மட்டும் சொல்லாதே! எனக்கு இந்த வரத்தைக் கொடு” என்றான்.

“இராமனைக் காணாமல் நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே என் உயிர், உன் அடைக்கலமாக உன் கையில் இருக்கிறது. அதை நீ காத்திட வேண்டும். தயவு செய்து மனம் இரங்குவாயாக!”

“நீ இரப்பது போல கேட்டாலும், வலிமையுள்ள நீ எனக்கு இடும் ஆணைதான் நீ கேட்பது. இது அறமல்ல, கொடுத்த வாக்கைத் தவறவிடுவதுதான் தர்மமா?” என்றாள் கைகேயி..

இவ்வளவு மன்றாடியும் மனம் இரங்காததைக் கண்டு மன்னன் ‘இனி இராமன் காடு போவதைக் தடுக்கவும் இயலாது; என் உயிர் பிரிவதையும் தடுக்க இயலாது’ என்று உணர்ந்து அயர்வுற்று கீழே வீழ்ந்தான்.

இதுவரை இனியவளாகப் பழகி வந்த இந்தக் கைகேயியிடம் இவ்வளவு கொடுமையும், அற்பத்தனமும் குடிகொண்டிருப்பதைக் கண்டு துயரம் கரைகாணாததாயிற்று; தரையிலே மனம் வெதும்பி புரள்கிறான்.

“கணவனோடு தானும் இறந்து போகும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கணவன் உயிரையே போக்கிடும் உன் போன்றவளை நான் பார்த்ததில்லை. பெண்மை குணங்கள் எதுவுமே இல்லாத நீ! கணவனையே கொல்லத் துணிந்து விட்டாய். உன்னை நான் கொல்லாவிடினும், உலகத்தார் உன்னைக் கொன்று ஒழிப்பர். பெண்களுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எதுவும் இல்லாத நீ பெண்ணே அல்ல! நாணமில்லார் நங்கையாகார். உருவத்தால் பெண்ணாயினும் ஆண்பாலரே!”

“உடல்வலி, படைவலி, மதிவன்மை ஆகிய எல்லா சிறப்பையும் பெற்ற அரசர் மற்றும் தேவர்களை வென்று, தசரதன் என்று பெயர் பெற்ற நான், ஒரு சாதாரணப் பெண்ணாலே, மனைவியாலே கேடுற்றான் எனும் பழிச் சொல்லுக்கு ஆளாகி விட்டேனே!” இப்படிப் பற்பலச் சொல்லி புலம்பினான் தசரதன்.

எதற்கும் இரங்காத கொடுமனக் கைகேயி “அரசே! பலபடியாகப் பேசவேண்டாம். நான் கேட்ட வரங்களைத் தவறாது கொடுத்ததாக மனதாரச் சொல். இல்லையேல் இப்போதே உயிர் விடுவேன்” என்றாள்.

இவளது கொடுஞ்சொல் கேட்ட மன்னன், இவள் இறந்து விடுவேன் என்கிறாளே என்று கருதி ‘இந்த வரங்களைத் தந்தேன்! தந்தேன்!’ என்றான். நான் இறந்து போய் விண்ணுலகை ஆள்வேன். ஆனால் நீ உன் மகனோடும் கூடி, வசை வெள்ளம் கூடி, பழியாகிய பெருவெள்ளத்தில் நீந்திக் கொண்டிரு!” என்று சொல்லி மயங்கி கீழே விழுந்தான். அரசன் வரங்களைக் கேட்டபடி கொடுத்துவிட்ட திருப்தியில் கைகேயி நிம்மதியாக உறங்கச் சென்றாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. முடிசூட்டுவிழா கொண்டாட்டத்துக்கு நகரம் தயாராகிக் கொண்டிருந்தது. பன்னாட்டு அரசர்களும் வந்து குவியத் துவங்கிவிட்டார்கள்.

பட்டாபிஷேக மண்டபத்துக்கு வந்த வசிஷ்டர், தேவையான பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்து, நிகழ்ச்சிகளைத் தொடங்கத் தயாரானார். மன்னனைக் கூட்டிக்கொண்டு வர சுமந்திரன் கிளம்பிச் சென்றான். சக்கரவர்த்தி கைகேயியின் அரண்மனையில் இருப்பது அறிந்து, அங்கே சென்று தான் வந்த விவரத்தைக் கூறுகிறான். அதற்கு முன்பாக கைகேயி எதிர்ப்பட்டு, இராமனை உடனே இங்கு அழைத்து வருமாறு சுமந்திரனிடம் பணித்தாள்.

சுமந்திரன் அவள் இட்ட கட்டளையை சிரமேல் ஏற்று, இராமன் இருக்கும் மாளிகைக்குச் சென்று, இராமனைக் கண்டு, பட்டாபிஷேகத்திற்கு வந்திருக்கிற அனைவரும் காத்திருக்கிறார்கள். அதற்குள், உன் சிறிய அன்னை கைகேயி உன்னை அழைத்து வரும்படி பணித்திருக்கிறார்கள். விரைவில் வருகவெனக் கூறினார்.

இந்த உத்தரவைக் கேட்டதும் இராமன் எழுந்து அரங்கப் பெருமானைச் சென்று வணங்கிவிட்டு, இன்னிசை கீதங்களும், வாழ்த்தொலிகளும் முழங்க சுமந்திரனோடு புறப்பட்டான். இராமபிரான் தேரில் செல்வதை நகர வீதிகளில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வாழ்த்தினார்கள். நேரே சபா மண்டபம் சென்று அங்கே மன்னன் காணப்படாமையினால், கைகேயியின் அரண்மனையைச் சென்றடைந்தான்.அரண்மனை யுள் சென்ற இராமன் அங்கே மகிழ்ச்சியான சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்தான். இவன் வரவை எதிர்நோக்கி தந்தையும் கைகேயியும் காத்திருக்கவில்லை. மனக் கலக்கத்தோடு அவர்கள் இருக்கும் இடம் நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

இராமன் வருவதைக் கண்ட கைகேயி, அவன் சென்று தசரதனைக் கண்டால் என்ன நேருமோ? அவன் வாயால் கட்டளைகளைச் சொல்வானோ? அதனால் நானே போய் முன்னதாக மன்னன் கட்டளைகளை அவனுக்குச் சொல்வேன் என்று சென்றாள்.

“மகனே! இராமா! உன் தந்தை என் மூலம் உனக்குத் தெரிவிக்கச் சொன்ன கட்டளையொன்று உண்டு. அதை நான் சொல்லலாமென்றால் சொல்லுகிறேன்” என்றாள் கைகேயி.

அதற்கு இராமன் “தந்தை ஒரு கட்டளையிட அதைத் தாங்களே எனக்கு அறிவிப்பதானால், இதனினும் நற்பேறு வேறு எனக்கு உண்டோ? என்னப் போல் மேம்பட்டவன் எவரும் உண்டோ? இது நான் செய்த தவப் பயனேயன்றி வேறென்ன? தந்தையும் தாயும் நீங்களே! அம்மா! கட்டளையிடுங்கள்” என்றான்.

“எந்தையே ஏவ, நீரே உரைசெய, இயைந்தது உண்டேல்

உய்ந்தனன் அடியேன், என்னிற் பிறந்தவர் உளரோ வாழி

வந்தது என் தவத்தின் ஆய பயன், மற்றொன்று உண்டோ

தந்தையும் தாயும் நீரே! தலை நின்றேன், பணிமின் என்றான்”.

கைகேயி, தனது கட்டளைகளை இராமனுக்கு தெரிவிக்கிறாள். ‘கடல் சூழ்ந்த இவ்வுலகை பரதனே ஆள, நீ போய் சடாமுடி தரித்துக் கொண்டு, தவங்களைச் செய்து, கானகம் சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பதினான்கு ஆண்டுகள் சென்றபின் வா’ என்று அரசன் சொன்னான் என்றாள். அந்தப் பாடல் இதோ:

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய்

தாழிரு சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு

பூழிவெம் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி

ஏழிரெண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்”.

இதனை நான் கூறவில்லை; உன் தந்தை அரசன் சொன்னான் என்று இராமனிடம் சாமர்த்தியமாக உரைக்கிறாள். இந்த உரையைக் கேட்ட இராம பிரானின் மனநிலை எப்படி இருந்தது. அதனை நம் வாக்கால் விளக்கமுடியுமா? கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாக்கால் பார்ப்போம்:

“இப்பொழுது எம்மனோரால் இயம்புவது எளிதோ யாரும்

செப்பரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்

ஒப்பதே முன்பு, பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா”.

சக்கரவர்த்தி தசரதன் கட்டளை இட்ட காரணத்தினால் முடிசூட்டிக்கொள்ள இராமன் சம்மதித்தானேயன்றி, விரும்பி இந்த ராஜ்ய பாரம் ஏற்க சம்மதிக்கவில்லை. எனவே இப்போது ராஜ்யத்தை பரதனுக்குக் கொடுத்துவிட்டு, தான் வனம் சென்று தவம் மேற்கொண்டு, புண்ணிய நதிகளாடி பதினான்கு ஆண்டுகள் முடிந்தபின் வா என்று தந்தை ஆணையிட்டதாய், தாய் கூறியதும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து வண்டியில் பூட்டப்பட்ட மாடு கட்டவிழ்த்து விடப்பட்டது போல உணர்ந்தான் இராமன். முன்பு உனக்கு பட்டாபிஷேகம் என்றபோது அவன் முகம் எப்படியிருந்ததோ, அதுபோலவே ராஜ்யம் உனக்கு இல்லை, பரதனுக்குத்தான், நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து வரவேண்டும் என்று சொன்னபோதும் அதேபோல, அன்று மலர்ந்த செந்தாமரை மலர்போல ஒளியோடும், மலர்ச்சியோடும் இருந்தது.

“தாயே! மன்னனின் கட்டளை இல்லையென்றாலும், தங்கள் கட்டளையை நான் மறுப்பேனா? என் தம்பி பரதன் பெற்ற செல்வம் நான் பெற்றது போலவன்றோ? தங்கள் கட்டளையை சிரமேற்கொண்டேன். இப்பொழுதே கானகம் செல்கிறேன், தங்களிடம் விடைபெறுகிறேன்” என்றான் இராமன்.

“மன்னவன் பணி அன்றாகினும் நும் பணி மறுப்பனோ என்

பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ!

என் இனி உறுதி, அப்பால் இப்பணி தலைமேற்கொண்டேன்

மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்”

இந்தப் பாடலில் வரும் “பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?” எனும் அடியில் என் தம்பி பரதனுக்குக் கிடைத்திருக்கும் இந்த செல்வம் எனக்குக் கிடைத்த செல்வமன்றோ?” எனும் பொருளிலும் சிலர் சொல்வதுண்டு. ஆனால், இராமன் குறிப்பிட்டது, இந்தச் செல்வத்தை நான் பெற்றால் என்ன, என் தம்பி பரதன் பெற்றால் என்ன எனும் பொருளில்தான் கொள்ள வேண்டும்.

இராமன் இவ்வாறு கைகேயிடம் சொல்லிவிட்டு, அவளைத் தொழுது நமஸ்கரித்துவிட்டு, தன் தந்தை இருந்த திசை நோக்கி வணங்கி புறப்பட்டு நேரே தன்னைப் பெற்ற தாய் கோசலையின் மாளிகையைச் சென்றடைந்தான்.

அங்கே கோசலை இராமனை முடிசூடிய கோலத்தில், அதற்குரிய குடை முதலான சிறப்புக்களுடன் தன் மாளிகைக்கு வருவான் என்று மகிழ்ச்சியோடு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, இராமன் வெரும் கையனாய் போய் நின்றதும், கோசலை அதிர்ச்சியுற்றாள். “வீசுகின்ற கவரி இல்லை; அரசனுக்குரிய வெண்கொற்ற குடையின்றி; தனி மனிதனாக, விதி இராமனை வழிநடத்திச் செல்ல, தர்மம் அவன் பின் வருத்ததுடன் பின்தொடர, கோசலை முன் போய் நின்றான்.

“இராமா! என் கண்ணே! என்ன இது? உன் தலையில் மணிமுடி இல்லை; உன் உடல் மங்கல மஞ்சள் நீரால் நனைந்திருக்கவில்லை; என்று சொல்லிக்கொண்டே, தன் காலடியில் வீழ்ந்து வணங்கிய இராமனிடம் மனம் நெகிழ்ந்து, அவனை மனதார வாழ்த்திவிட்டு “ஏன் அப்பா! நீ முடிசூட்டிக் கொள்வதற்கு ஏதேனும் இடையூறு நேர்ந்துவிட்டதா?” என்கிறாள்.

நடந்தவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னால் அவள் மனம் உடைந்து போவாள் என்று கருதி இராமன் கைகளைக் கூப்பித் தன் தாயை கும்பிட்டு “அம்மா! உன் அன்பு மகன் குற்றமற்ற குணமுடைய பரதன் முடிசூடப் போகிறான் அம்மா!” என்றான்.

“அப்படியா? உன்னைக் காட்டிலும் நிறை குணங்கள் உடைய பரதன் நல்லவன்; முடிசூட பொருத்தமானவன். இருந்தாலும், மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடுவது நம் குலத்தில் இதுவரை இல்லையே, அதுதான் குறை” என்றாள் அந்த பெருந்தன்மையான தாய் கோசலை. “இராமா! மன்னர் கட்டளைப்படி பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, அவனோடு ஒன்றுபட்டு பல்லூழி காலம் நலமாய் வாழ்வாயாக!” என்று வாழ்த்தினாள்.

தாயின் உரைகேட்டு மகிழ்ந்த இராமன் “அம்மா! நான் நன்னெறியில் உய்யும் பொருட்டு அரசன் எனக்கு இட்ட கட்டளை ஒன்றும் இருக்கிறது!” என்றான்.

“அது என்ன கட்டளை இராமா?”

“நான் பதினான்கு ஆண்டுகள் வனம் சென்று அங்கு வாழும் பெரும் தவசிகளோடு தங்கியிருந்து வரவேண்டும் என்றும் மன்னன் கட்டளை அம்மா!”

இதனைக் கேட்ட மாத்திரத்தில் கோசலை பெரிதும் வருந்தினாள்; மயங்கினாள்; விம்மி அழுதாள்; விழுந்தாள்; சோகத்தின் எல்லைக்கே சென்றாள். பின் தெளிந்து எழுந்து “இராமா! இது என்ன வஞ்சகம்? நாடாளச் சொல்லி பின் அதை மாற்றி உன்னைக் காட்டுக்கு துரத்துவது கள்ளமன்றோ? நான் இனி உயிர் வாழ மாட்டேன்” என்றாள்.

“எல்லோரையும் காட்டிலும் உன்பால் பேரன்பு கொண்டு நீயே உயிர் எனக் கருதிய மன்னர் அதற்கு முற்றிலும் மாறாக உன்னைக் காட்டிற்கு அனுப்பும் வகையில் நீ ஏதேனும் தவறு செய்து விட்டாயோ இராமா?” என்றாள் கோசலை.

“நான் அறங்களேயன்றி தீவினை எதையும் செய்தவள் அல்லவே! எனக்கு ஏன் இந்தத் துயரம்? கன்றைப் பிரிந்த பசுபோல கதறுகின்றேனே!” என்று புலம்புகிறாள். பிறகு இராமன் கோசலையிடம் பலவாறு எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறுகிறான்.

“இராமா! நீ வனம் செல்கிறாய் என்றதுமே, என் உயிர் போயிருக்க வேண்டும். அப்படிப் போகவில்லை. ஆனால் நீ போனபிறகு நான் உயிரைத் தாங்கிக் கொண்டு இருப்பது இயலாத காரியம். எனவே என்னையும் உன்னுடன் காட்டுக்கு அழைத்துச் செல்” என்றாள்.

“தாயே! தந்தை என்னைப் பிரிந்த பிறகு மிகவும் துயரமடைவார் அல்லவா? அப்போது அவருக்கு ஆறுதல் கூறாமல் தாங்கள் என்னுடன் காட்டுக்கு வருவது என்பது முறையாகுமா?” என்றான் இராமன்.

இனி இராமனைத் தடுத்து நிறுத்த முடியாது என்று நன்கு உணர்ந்த பிறகு கோசலை, தசரதனை விட்டே சொல்லி தடுத்துவிடலாம் என்று எண்ணமிட்டாள். பிறகு இராமன் சுமத்திரையிடம் சென்று விடைபெறச் சென்றான். கோசலை தன் கணவன் தசரதனைக் காண்பதற்காக கைகேயியின் அரண்மனைக்குச் சென்று அங்கு மன்னன் கிடந்த காட்சியைக் கண்டு மூர்ச்சையடைகிறாள். மூர்ச்சை தெளிந்து எழுந்து கோசலை அழுது புலம்புகிறாள். அவளது அழுகுரல் அரண்மனையெங்கும் எதிரொலிக்கிறது.

அங்கே, ராஜ சபையில் இருந்த மக்கள் காதுகளிலெல்லாம் மங்கல ஒலிகள் கேட்க வேண்டிய நேரத்தில், இப்படியொரு அழுகுரல் அமங்கலமாய்க் கேட்கிறதே, அது என்னவென்று பார்த்து வர வசிஷ்டரை அனுப்புகின்றனர்.

கைகேயியின் அரண்மனைக்குச் சென்ற வசிஷ்ட முனிவர் நிலைமையைப் புரிந்து கொண்டார். கைகேயியிடம் நடந்தது என்னவென்று கேட்க, அவள் சிறிதும் கலக்கமின்றி குற்ற உணர்வு சிறிதுமின்றி நடந்ததைக் கூறி முடித்தாள்.

வசிஷ்டர் மன்னனை எழுப்பி தேற்றுகிறார். இனி கைகேயியிடம் சொல்லி மீண்டும் இராமனுக்கே அரசைத் தருமாறு கேட்கலாம் என்று ஆறுதலாகப் பேசுகிறார். தசரதன் சோகத்தில் இராமா! இராமா! என்று புலம்பிக்கொண்டிருக்கிறான். ஒருக்கால் கைகேயி மனம் மாறி இராமனுக்கே நாட்டைக் கொடுத்தாலும் இராமன் அதை ஏற்றுக்கொள்வானா என்ற ஐயம் ஏற்படுகிறது.

எனினும் முனிவர் வசிஷ்டரின் ஆலோசனையை கைகேயி ஏற்காமல் மன்னன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையானால் தான் உடனே உயிர்நீப்பேன் என்கிறாள். கோபம் கொண்ட வசிஷ்டர் கைகேயியை “நீ பெண் அல்ல, பேய்!” என்கிறார்.

தசரதன் குலகுருவான வசிஷ்டரிடம் “இராமன் கானகம் போய்விட்டானா?” என்று கேட்கிறான். கோபத்துடன் கைகேயியிடம் “இராமன் காட்டுக்குப் போய்விட்டால், நான் உயிர் தரியேன்” என்கிறான். இவ்வாறு பலவாறு கைகேயியிடம் சொன்ன பின்:

“இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கிச்

சொன்னேன் இன்றே, இவள் என் தாரமல்ல, துறந்தேன்

மன்னே ஆவான் வரும் அப்பரதன்தனையும் மகன் என்று

உன்னேன், முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்”.

“முனிவரே! இனி இந்தக் கைகேயி என் மனைவியும் அல்லள்; அந்தப் பரதனை என் மகனாகக் கருதமாட்டேன்; அவன் இனி மகன் என்ற உரிமையில் செய்யவேண்டிய காரியங்களுக்கும் உரியவன் இல்லை” என்றான் தசரதன். பிறகு கோசலையைக் கண்டு மனம் வருந்திப் புலம்புகிறான். கோசலை கணவனைத் தேற்றுகிறாள். தசரதன் பழைய நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறான்.

கோசலை கணவனிடம் “இராமனைப் பிரிந்து தவிக்கும் என்னை நீங்களும் கைவிட்டுச் சென்றால் என் நிலை என்னவாகும் யோசித்தீர்களா?” என்று கேட்கிறாள்.

“கோசலை! என் உயிர் நீங்குவதற்குக் காரணமாக இந்த இராமனின் பிரிவு இருக்கும் என்று எனக்கு ஒரு சாபம் உண்டு. அந்த சாபம் எனக்கு ஏற்பட்ட வரலாற்றைச் சொல்கிறேன் கேள்!” என்று சொல்லத் தொடங்குகிறான் தசரதன்.

“ஒரு முறை நான் காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்தேன். அங்கே யானைகளும், சிங்கங்களும் நடமாடும் பகுதிக்குச் சென்று வேட்டைக்குத் தயாராக மறைந்து நின்றிருந்தேன். அப்படி மறைந்து இருக்கும்போது, சலபோசனன் எனும் சிறந்த முனிவனும் அவன் மனைவியும் பார்வை இழந்தவர்களாகத் தன் மகனே துணையாக அவனுடன் இருந்தார்கள். கண் இழந்த பெற்றோருக்குத் தண்ணீர் கொண்டு வரும் பொருட்டு ஒரு குறுகிய பாத்திரத்தில் நீரோடையில் அந்த மகன் நீர் மொள்ளும்போது உண்டான ஓசை, யானை நீர் அருந்தும் ஓசை போல இருந்ததால், மறைந்திருந்த நான், யானை என்று எண்ணி, ஒலி வந்த திசை நோக்கி அம்பைச் செலுத்திவிட்டேன். அந்த அம்பு நீர் மொண்டுகொண்டிருந்த இளம் பிரம்மச்சாரியின் மீது பாய்ந்துவிட்டது. அந்த இளைஞன் தரைமீது விழுந்து புலம்பி மரணாவஸ்தைப் பட்டான். ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட்டேனே தவிர அங்கு இருந்தது யானையா மனிதனா என்று எனக்குத் தெரியாது. அவன் அலறி வீழ்ந்த பிறகுதான் ஓடிப் போய்ப் பார்த்தேன். அநியாயமாக இப்படி ஓர் இளைஞன் மீது அம்பு செலுத்திவிட்டோமே என்று மிகவும் வருந்தினேன்.”

“கையிலிருந்த குடம் நழுவி கீழே விழுந்து கிடக்க, தரையில் கிடந்து புரளும் அந்த இளைஞனைக் கண்டதும், என் வில்லும் மனமும் சோர்ந்து விழ, அவன் அருகில் சென்று “இளைஞனே! நீ யார்?” என்று கேட்டேன். அதற்கு அவன் “நான் காசிப முனிவரின் வழியில் வந்த சலபோசன் எனும் முனிவனின் மகன் சுரோசனன் என்றான்”.

“இரு கண்களிலும் பார்வை இழந்த எனது பெற்றோர்களுக்காக தண்ணீர் கொண்டு வரும் பொருட்டு இந்த ஓடைக்கு வந்தேன். நீ யானை என்று கருதி என்மீது அம்பு செலுத்திவிட்டாய். இது எனது விதிப்பயன்; அன்றி வேறு என்ன? நீ என்ன செய்வாய், வருந்தாதே என்று அந்த இளைஞன் சொன்னான்”.

“என் பெற்றோர் தண்ணீர் வேட்கையால் தவித்துக் கொண்டிருப்பார்கள். எனவே நீ உடனே அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்து, என் நிலைமையைக் கூறி, என் இறுதி நமஸ்காரங்களையும் அவர்களிடம் தெரிவித்துவிடு! என்றான் அவன். பிறகு உயிர் நீத்தான்”.

“மைந்தன் கேட்டுக் கொண்டபடி, அவன் பெற்றோருக்கு நீரையும், இறந்த மகனின் உடலையும் எடுத்துக் கொண்டு போய் அந்தப் பார்வை இழந்த பெற்றோர் இருக்குமிடம் சென்றேன். அவர்கள் என் காலடி ஓசை கேட்டுத் தனது மகன் என்று எண்ணி “குழந்தாய்! ஏன் இவ்வளவு தாமதம். உனக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்ததோ என்று நாங்கள் மிகவும் வருந்தினோம். வா! மகனே, என் அருகில் வா! என்றான் அந்த கண்ணிழந்த தந்தை.”

“உடனே நான் ஓர் அரசன் என்றும், நடந்த வரலாற்றைக் கூறி முடித்தேன். அதைக் கேட்டு புத்திர சோகத்தால் அந்த பெற்றோர் துன்புற்று அழுதனர். கண் பார்வை இழந்த எங்களுக்குக் கண்போல இருந்த எங்கள் கண்மணி போய் விட்டானே. மகனே! உன்னைப் பிரிந்து நாங்கள் எப்படி வாழ்வோம்? நாங்களும் உன்னுடன் வந்தோம், என்று அலறினர்”.

“உங்கள் மகனைப் போல இருந்து, நான் தங்களுக்கு வேண்டுவன செய்வேன் என வேண்டிக் கொண்டேன். இனி எங்களுக்கு வாழ்வு தேவையில்லை. மன்னா! இனி எங்களைப் போலவே நீயும் உன் மகனைப் பிரிந்து, அந்த புத்திர சோகத்தில் உயிர் இழக்க வேண்டும் என்று சாபம் கொடுத்து விட்டான் அந்த முனிவன். கோசலை! அந்த முனிவனின் சாபம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. இராமன் என்னை விட்டுப் பிரிதலும், அதனால் நான் உயிர் துறப்பதும் நிச்சயம்” என்றான் தசரதன்.

உடனே வசிஷ்டர் புறப்பட்டுப் போய் சபா மண்டபத்தில் கூடியிருந்தவர்களுக்கு, இராமன் முடிசூட்டு விழா நின்றுவிட்டதையும், இராமன் வனம் செல்லப் போவதையும் தெரிவித்தார். நாட்டு மாந்தர் அனைவரும் வேதனையால் துயருற்று தவித்தனர். இராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதன் செயலை குறை கூறினர். இராமபிரான் வனம் செல்வது அறிந்து மக்கள் மட்டுமா வருந்தினார்கள்? இல்லை இல்லை. வளர்ப்புப் பிராணிகளும் வருந்தினவாம். அவ்வளவு உயிர்களும் ஆழ்ந்த துயரத்தில் வருந்தின.

இந்த செய்திகள் அனைத்தையும் கேள்விப்பட்ட இலக்குவன் சினம் கொண்டான். போர்க்கோலம் பூண்டான். இராமன் முடிசூடுவதற்குத் தடையாக உள்ளவர் எவராயினும், அவர்களைக் கொன்றொழிப்பேன். கைகேயியின் நோக்கம் நிறைவேற விடமாட்டேன். என்று எழுந்தான். இலக்குவன் எழுப்பிய வில்லின் நாணொலி கேட்டு இராமன் அங்கே வருகிறான். “தம்பி! கோபப்படாதே, நீ ஏனப்பா இப்போது கோபப் படுகிறாய்” என்று அவனை அமைதிப் படுத்த முனைகிறான்.

இலக்குவனுக்கு இராமன் பல நல்லுரைகளைக் கூறி அவன் கோபம் தணிவிக்கிறான். பிறகு இராமன், இலக்குவனுடன் சுமத்திரை இருக்குமிடம் செல்கிறான். அதுவரை நடந்தவை அனைத்தையும் கேட்ட சுமத்திரை வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். நல்வார்த்தைகள் கூறி இராமன் அவளைத் தேற்றுகிறான்.

பின்னர் ஏவல் மகளிர், தவசிகள் அணியவேண்டிய மரவுரி கொண்டு வர, அதனை இராமன் பெற்றுக் கொள்கிறான். உடனே இலக்குவன் தானும் இராமனுடன் வனம் செல்ல வேண்டுமென்று தன் தாய் சுமத்திரையிடம் கேட்கிறான். அதற்கு அந்தத் தாய் சொல்கிறாள். “இலக்ஷ்மணா! நீ உடனே புறப்படு. இனி இராமன் இருக்கும் இடம்தான் உனக்கு அயோத்தி. நீ இராமன் மனம் கோணாமல் நடந்து கொள். அவன் வனவாசம் முடிந்து நாடு திரும்பி வந்தால் நீயும் வா! அப்படி அவனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அவனுக்கு முன்பாக நீ இறந்து விடு!” என்றாள் அந்தப் புனிதமான தாய்.

இராமனும் இலக்குவனும் பிறகு சுமத்திரையை நமஸ்கரித்து, கன்றுகளைப் பிரிய நேர்ந்த பசுவைப் போல சுமத்திரை அழுது கண்ணீர் சிந்த, தத்தம் ராஜரீக உடைகளைக் களைந்துவிட்டு தாதியர் கொண்டு வந்த மரவுரிகளைத் தரித்துக் கொண்டு வெளியே புறப்பட்டார்கள். இலக்குவனும் தன்னைப் போலவே, மரவுரி தரித்த காட்சி கண்டு, இராமன் சொல்கிறான். “லக்ஷ்மணா! நான் கானகம் செல்வதால், கைகேயி நீங்கிய தாய்மார் இருவரும், தந்தையும் ஆறாத் துயரில் ஆழ்ந்துள்ளார்கள். நீ அவர்களோடு தங்கி இருந்தால் அவர்களுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும். எனக்காக நீ, அவர்களோடு தங்கியிருக்கக் கூடாதா?” என்று கேட்டான்.

இராமன் அவ்வாறு சொல்லவும், அன்பே உருவான இலக்குவன் தோள்கள் குலுங்க விம்மி அழுது, இராமனை நோக்கிக் சொல்கிறான்: “அண்ணா! நான் உங்களுக்குச் செய்த தீமைதான் என்ன? நீர்நிலைகளில் நீர் இருந்தால் மீன்களும் அல்லியும் ஆம்பலும் இருக்கும்; பூமி இருந்தால்தான் அதன் மீதுள்ள ஜீவராசிகளும் இருக்கும். கோதண்டராமா! யார் இருந்தால் நானும் திருமகளாம் சீதாபிராட்டியும் உயிரோடு இருப்போம் என்பதை நீங்களே சொல்லி அருள வேண்டும்” என்றான்.

எது ஆதாரமோ, அது இன்றி அதன் சார்புப் பொருட்கள் இருப்பது எப்படி சாத்தியம்? என்பது இலக்குவன் கேள்வி.

“அண்ணா! வாய்மை காப்பவன் என்று உன்னை உலகோர் கூறிக்கொண்டிருக்க, உன்னைக் காட்டுக்கு அனுப்பி விட்டு இன்னும் நம் தந்தை தசரதச் சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறார் அல்லவா? அவரது மகன்தானே நானும்; உங்களைப் பிரிந்து உயிரோடு இருப்பேன் என்று நினைத்தீர்கள் போலும்”.

“முன்பு நான் சினம் கொண்டு எழுந்த போதெல்லாம், ‘உன் சினம் நல்லதல்ல, அதனை முற்றிலும் தவிர்த்து விடு என்று நீங்கள் கட்டளையிட்டதைவிட, இப்போது என்னைத் தங்கள் உடன்வராது இருக்கச் சொல்வது மிகவும் கொடுமையானது”

“ஐயனே! அரசச் செல்வமும் மற்ற பிற இன்பங்களும் ஒரு பொருட்டல்ல என்று கருதித் தாங்கள் அவற்றையெல்லாம் துறந்து சென்றாலும், என்னையும், சீதாபிராட்டியையும் ‘கைதுடைத்து’ விட்டுச் செல்வது பொருத்தமுடையதா?” என்கிறான் இலக்குவன்.

இலக்குவனுடைய உள்ளார்ந்த கனிந்த அன்பு மொழிகளைக் கேட்ட இராமபிரான் ஒன்றும் சொல்ல இயலாதவனாகிக் கண்களில் நீர் தாரை தாரையாகச் சொரியத் தம்பியின் முகத் தாமரையைப் பார்த்த வண்ணம் அமைதியாக நின்றான். அப்போது வசிஷ்டர் அங்கே வருகிறார். அவரை இருவரும் வணங்குகிறார்கள்.

மெய்ப்பொருளை உணரும் தன்மையுடைய வசிஷ்டர் அவ்விருவர் தோற்றத்தையும் கண்ட மாத்திரத்தில், அவர்களது நோக்கத்தை அறிந்து மனவேதனையடைந்து தன் வசம் இழந்தார். ஊழ்வினையை யாரே மாற்றவல்லார் என்று பெருமூச்செறிந்தார். சிந்தையும் செயலும் செப்பமுடைய இராமனுக்கு இந்த நிலை வர கைகேயி காரணம் என்பது புறத் தோற்றமேயன்றி, வேறு யாதோ காரணமும் இதில் இருக்க வேண்டும். அந்தக் காரணம் பின்னர் வெளிவரும் என்று வசிஷ்டர் நினைத்தார். எனினும் இராமனை நோக்கி “இராமா! நீ கானகம் சென்றுவிட்டால் தசரதன் உயிர் வாழ்தல் இயலாது” என்றார்.

“குருதேவா! மன்னவன் பணியை ஏற்று நடப்பது என் கடமை. அதனின்று நான் பிறழேன். மன்னனை ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றுதல் குருதேவராகிய உங்கள் கடமையாகும். இவ்விரண்டு கடமைகளையும் நிறைவேற்றுதல்தான் முறை” என்றான் இராமன்.

“இராமா! வரம் என்ற பெயரால் கைகேயி கேட்டதற்கு “தருகிறேன்” என்று ஆராயாமல் உடன்பட்டதையன்றி “நீ வனம் போ” என்று மன்னன் தன் வாயால் உன்னைப் பணித்தானா? இல்லையே! எனவே, இது அவனது ஆணையல்ல” என்றார் வசிஷ்ட முனிவர்.

“தந்தை இயைந்ததாலேதானே தாய் என்னை ஏவினாள். நானும் உடன்பட்டு அவளுக்கு உறுதி கூறிவிட்டேன்; இவ்வளவும் அறிந்த தாங்கள் தந்தை வாயால் “போ” என்று கூறவில்லை என்றொரு போக்குக் காட்டி என்னைத் தடுப்பது, சகல சாஸ்திரங்களும் அறிந்த தங்களுக்கு முறையானதன்று” என்றான் இராமன்.

வசிஷ்டரால் ஒன்றும் பதில் கூறமுடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் பெருகி நிலத்தில் விழ நின்றார். இராமனும் இலக்குவனும் அவரைத் தொழுது அரண்மனை வாயிலை நோக்கி நடந்தனர்.

குமரர் இருவரும் வீதியில் நடந்து செல்வதைக் கண்டு நகர மாந்தரும் பிறரும் பெரும் துயரமடைந்தனர். இராமன் வனம் புகுவதால் நன்மை அடையப்போகும் தேவர்களேகூட வருந்தி நின்றார்கள் என்றால் மற்றையோர் நிலை கேட்க வேண்டுமா?

இராமனின் தவக்கோலம் கண்டு நகர மகளிர் கைகளால் கண்களில் அடித்துக் கொண்டு அழுதனர். நகர மாந்தர் பலர் துயரம் தாங்காமல் உயிரை விட்டனர். சிலர் மயங்கினர்; சிலர் விம்மி அழுதனர்; சிலர் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்; கூந்தல் தீப்பிடித்ததுபோல அலறி அழுதனர் சிலர். இராமன் முடிசூட்டிக்கொண்டு பவனி வருவான் என்று ஆவலோடு காத்திருந்த மக்கள், மாறான காட்சியைக் கண்டு ‘ஐயோ! நம் கண்கள் குருடாகவில்லையே’ என்று வருந்தினர்.

அயோத்தி நகரத்து மக்கள் மட்டுமா? இல்லை, ஐயறிவு, நாலறிவு உள்ள உயிரினங்களும்கூட துயரத்தால் துவண்டு போயின. ஊரும் மக்களும், மற்ற உயிரினங்களும் வருந்தி வாட, இருவரும் சீதை இருக்குமிடம் சென்றடைந்தனர்.

முடிசூட்டிக் கொண்டு மன்னனாய் இராமன் வருவான் என்று காத்துக் கொண்டிருந்த சீதை இவர்களது கோலம் கண்டு துணுக்குற்றாள். உடல் நடுங்க “இந்தத் துயரம் வந்து சேர என்ன காரணம்?” என்று உடல் நடுங்க கேட்டாள்.

“சீதா! பரதன் நாட்டை ஆளவும், நான் காடு செல்லவும் பெற்றோர் பணித்தனர். அதனைச் சிரமேல்கொண்டு நான் இன்றே கானகம் புறப்படுகிறேன். மீண்டு வருவேன். நீ இங்கே வருத்தப்படாமல் இரு” என்றான் இராமன்.

இந்தச் சொற்கள் சீதாபிராட்டியைப் பெரிதும் வருத்தின. “தாய் தந்தை சொல்லை ஏற்றுத் தாங்கள் கானகம் செல்வது சரிதான். ஆனால் என்னை மட்டும் இங்கே இரு என்று சொல்வது என்ன நியாயம்? அதை நான் பொறேன்” என்றாள் சீதை.

“உன் நன்மை கருதியே நான் இப்படிச் சொன்னேன் சீதா! கானகத்தில் நடக்கும் போது வெம்மையும், சிறு கற்கள் பாதத்தில் குத்தும் துன்பத்தையும் உன்னால் தாங்க முடியாது” என்றான் இராமன்.

அதற்கு சீதாபிராட்டி சொல்கிறாள் “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?”. உன்னைப் பிரிவது என்பது எவ்வளவு கொடுமை, அதனினும் கொடுமையானதா கானகத்தில் வெப்பம் காலைச் சுடுவது என்கிறாள் சீதாபிராட்டி. இவளைக் கண்ணீர் கடலில் மிதக்க விட்டு எப்படிப் பிரிந்து செல்வது என்று இராமன் மனதில் குழப்பம் ஏற்படுகிறது. அப்போது சீதை உள்ளே சென்று தானும் மரவுரி தரித்து இராமன் முன்பாக வந்து நின்றாள். இராமனுடைய கையைத் தன் மெல்லிய கரத்தால் பற்றினாள். பிராட்டியின் இந்தச் செயலைக் கண்டோர் அனைவரும் மயங்கி விழுந்தனர்.

“நீ அவசரப்பட்டு துணிந்த செயல் உனக்கு மகிழ்ச்சி தருவதாயினும் எனக்குப் பெரும் துன்பம் தருகிறது” என்றான் இராமன்.

“காட்டு வாழ்க்கை துன்பம் தருவதுதான், நான் இல்லாவிட்டால் அஃது இன்பமாகி விடுமா?” என்றாள் சீதை.

இராமபிரானால் ஒன்றும் பேச முடியவில்லை. மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். அந்தக் காட்சியைக் கம்பர் வாக்கால் அறிந்து அனுபவிக்கலாம். அவர் சொல்கிறார்: “வரவுரியைத் தன் உடம்பில் சுற்றிக் கொண்டு திருமகள் பின்னே வர, வில் ஏந்திய கையனாய் இலக்குவன் முன்னால் செல்ல, கார்மேக வண்ணன் இராகவன் செல்லும் காட்சியைக் கண்ட அவ்வூராருக்கு உண்டான துன்பம் சொல்லும் தரமாமோ?” அந்தப் பாடல் இதோ:

“சீரை சுற்றித் திருமகள் பின் செல

மூரி விற்கை இளையவன் முன் செலக்

காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்

வூரை உற்றதும் உணர்த்தவும் ஒண்ணுமோ?”

இந்தக் கோலத்தோடு கானகம் செல்லும் இவர்களைக் கண்ட அயோத்தி மாந்தர், இனி இவர்கள் வனம் புகும் எண்ணம் மாறாது என உணர்ந்து, இனி அழுது பயனில்லை, இவர்களுக்கு முன்பாக நாம் வனம் செல்வதே நன்று என்று எழுந்தனர்.

இம்மூவருடன் கோசலையும், சுமத்திரையும் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினர். தன்னைத் தொடர்ந்து வந்த தாய்மார்களைத் தடுத்து நிறுத்தி “நீங்கள் என்னைப் பின் தொடர்வதை விட்டு, போய் அரசரைத் தேற்றுங்கள் என்றான் இராமன். பின்னர் இலக்குவன் முன்செல்ல, சீதை பின் தொடர நடந்து வந்த இராமபிரான், சுமந்திரன் கொண்டு வந்து நிறுத்திய தேரில் ஏறிக் கொண்டனர். தேர் புறப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்டு அயோத்தி நகரை நீங்கி இரண்டு யோஜனை தூரம் சென்றபிறகு ஒரு சோலையை அடைகின்றனர். அங்கு இருந்த முனிவர்களுடன் இவர்களும் தங்கினர். இராமனைத் தொடர்ந்து நகரத்து மாந்தர்கள் அனைவரும் வந்து சேர்ந்து, அந்தச் சோலையிலேயே தங்கினர். கூடியிருந்த மாந்தர் அனைவரும் ஊண் இன்றி, உறக்கம் துறந்து துயரத்தில் மூழ்கியிருந்தனர். அந்த நேரத்தில் இராமனும் சுமந்திரனும் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.

இராமன் சுமந்திரனிடம் “அமைச்சரே! உம்மால் ஒரு காரியம் ஆகவேண்டும். அன்பு மிகுதியினால் நம்மோடு வந்திருக்கும் இந்த மக்களைத் திரும்ப அனுப்புவது எளிதான காரியமன்று. அப்படி அவர்களைத் திரும்ப அனுப்பாமல் நாம் தொடர்ந்து வனம் புகுவதும் நன்றன்று. ஆகையால் நீங்கள் இப்போதே ரதத்தை ஓட்டிக் கொண்டு நகரத்துக்குத் திரும்பிச் சென்று விடுங்கள். நீங்கள் ரதம் ஓட்டிச் சென்ற தடத்தைப் பார்த்து அவர்களும், நான் நாடு திரும்பிவிட்டேன் என்று ஊர் திரும்பி விடுவார்கள்” என்றான்.

இந்த இடத்தில் வான்மீகி இராமாயணத்தில் வேறுவிதமாகக் கூறப்பட்டிருக்கிறது. அது வருமாறு: “தமசா நதிக்கரையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்ட இராமன், தொடர்ந்து வந்த மக்கள் அறியாவண்ணம், அவர்கள் உறங்கும் நேரம் பார்த்து, மூவரும் தேரில் ஏறி சிறிது தூரம் சென்று ஆற்றைக் கடந்து சென்ற பிறகு இறங்கிக் கொண்டு, சுமந்திரரை தேரைத் திரும்பச் செலுத்தி சிறிது தூரம் போய்விட்டு வருமாறு பணித்ததாகவும், பிறகு மூவரும் தேரில் ஏறிக் கொண்டு, தேவசுருதி, கோமதி என்னும் இரு நதிகளைக் கடந்து கங்கைக் கரையை அடைந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

இராமன் கூறிய ஆலோசனையை ஏற்று சுமந்திரர் புறப்படுமுன் இராமனிடம் “இராமா! தாங்கள் மூவரையும் காட்டில் கொண்டு விட்டு வந்ததாகப் போய் மற்றவர்களிடம் சொல்வேனோ, உடன் அழைத்துக் கொண்டு வந்தேன் என்று சொல்வேனோ, என்ன சொல்வேன். இராமா! தங்களை இந்தக் காட்டில் விட்டுவிட்டு நான் மட்டும் நாடு திரும்பிச் சென்றால், என் அன்புக்கும், நட்புக்கும் என்ன பொருள்? நகரத்து மாந்தர்களும் மற்றைய அரசர்களும் உங்கள் பின்னால் வருகிறார்கள். எப்படியும் உங்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள் என நம்பியிருக்கும் உங்கள் தந்தை, தாங்கள் வரவில்லை என்பது தெரிந்தால் உயிர் தரித்திருப்பாரா? அவருக்கு நானே எமன் ஆகவேண்டுமா?”

“கைகேயி உன்னை வனம் போகச் சொன்னதால், தசரதன் மரணாவஸ்தையில் இருக்கிறார். ஆயினும் உயிர் இன்னும் இருக்கிறது. நீங்கள் வனம் போய்விட்டதை நான் போய் சொன்னால், அவரது உயிர் பிரிந்துவிடும். அவரைக் கொன்ற பழி என்னைச் சேராதா?

எதற்கும் இராமன் இசைந்து வரவில்லை என்றதும் சுமந்திரன் அவன் அடியில் வீழ்ந்து புரண்டு மன்றாடுகிறான். பிறகு இராமன் சுமந்திரனைத் தூக்கி எடுத்து நிறுத்தி, ஆரத் தழுவிக் கொண்டு அழைத்துக் கொண்டு சென்று பேசுகிறான்.

“துன்பம் எத்தகையவருக்கும் வரும் என்பதனைச் சிறந்த அறிவாளியான நீங்கள் அறியீரோ. இப்போது காடு செல்லும் துன்பம் வருகிறதே என்று, தெய்வமாய்க் கருதற்குரிய தந்தையின் சொல்லைச் தட்டி நடந்தால், நான் எய்தும் பழி சாதாரணமானதன்று என்பதும் உமக்குத் தெரியாதா? நீங்கள் என்னைக் காடு செல்லாது தவிர்ப்பது முறையில்லை” என்றான் இராமன்.

இப்படிப் பற்பல சொல்லி, தான் வனம் புகுவதே அறம் என்றும், இல்லையேல் பெரும்பழி தனக்கு வந்து சேரும் என்றும் இராமன் கூறுகிறான். நாடு திரும்பியபின் கைகேயியிடம் கோபப்படக்கூடாது என்றும், தம்பி பரதனிடம் மாறாத அருள் பாலித்து வரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறான். செல்லும் சொல் வல்லானாகிய இராமபிரான் மீண்டும் ஏதும் சொல்வதற்கு இடமின்றித் தன் கட்டளையாகக் கூறியவற்றைக் கேட்ட சுமந்திரன், அதற்கு உடன்பட்டு அவர்களை வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.

சீதாபிராட்டி சுமந்திரனிடம் “சக்கரவர்த்தியிடமும், மாமியரிடமும் என் வணக்கங்களைக் கூறுங்கள். என் தங்கையர்களிடம் நான் வளர்த்து வரும் பூனை, கிளி முதலான பறவைகளையும் பாதுகாத்து வரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ள வேண்டும்” என்றாள். சீதை தான் கானகத்தில் படப்போகும் துயரங்களைப்பற்றி நினையாமல், அரண்மனையிலுள்ள புள் இனங்களுக்காக வருந்துகிறாரே என்று சுமந்திரன் வருந்தினான். இராமபிரான் தேற்றியும் துக்கம் தாங்காமால் சுமந்திரன் அழுதார்.

பின்னர் இலக்குவனிடம் சென்று தாங்கள் கூறவிரும்புவது ஏதேனும் உளதா எனக் கேட்டார்.

உடனே இலக்குவன் கோபத்துடன் “இராமனுக்கு வாக்களித்தபடி இராஜ்யம் இல்லையென்று கூறி, வேறொரு பெண்ணிடம் கொடுத்துவிட்ட வாய்மையாளனுக்கு நான் என்ன சொல்லவிருக்கிறது? என்றான்.

“இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னும் நீர் உயிரோடு இருக்கின்றீரே!” என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள். பரதனிடம் சென்று சொல்லுங்கள்; அவன் இராமனுடன் பிறந்தவனுமல்ல; நானும் பரதனுடன் பிறந்தவனல்ல. சத்ருக்குனன் பரதனுடன் சார்ந்தொழுகலால் அவன் என் தம்பியும் அல்ல. ஆயினும் இராமனுக்கு எவர் தீங்கு நினைப்பினும், அது பரதனே ஆயினும் அவர்களை அழித்து ஒழிக்கும் ஆற்றலுடையவன் நான். என் இராமனைத் தவிர வேறு யாரையும் நான் மன்னனாகக் கருதவில்லை” என்றான்.

அப்போது இராமபிரான் தம்பி இலக்குவனை நோக்கி “தம்பி! லக்ஷ்மணா! நீ நேர்மையற்ற வார்த்தைகளைப் பேசாதே!” என்று ஆணையிட்டான். இலக்குவன் கோபம் தணியவும், சுமந்திரன் இவர்களைப் பணிந்து, பின் தேர் நிறுத்தியிருந்த இடம் நோக்கிச் செல்கிறான்.

சுமந்திரன் சென்றபின், இராமன் மற்ற இருவரோடும் புறப்பட்டான். சூரிய உதயத்துக்கு முன்பாக இரவிலேயே இரண்டு யோஜனை தூரம் நடந்தார்கள்.

3


அயோத்யா காண்டம் - தொடர்ச்சி


இஃது இங்ஙனமிருக்க, அயோத்தி நோக்கிப் புறப்பட்ட சுமந்திரன், அயோத்தி நகரையடைந்து இராமபிரான் கூறியவாறு முதலில் வசிஷ்டரைக் கண்டு நடந்தவற்றைக் கூறுகிறார். எல்லாவற்றையும் கேட்ட வசிஷ்டர் மிகவும் மனம் வருந்தினார். இனியும் தசரதன் உயிர் வாழ மாட்டான், முடிந்தனன் மன்னன்” என்கிறார்.

வசிஷ்டர் “நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், தடுத்தும் கேளாமல் இராமன் வனம் போய் விட்டானே! விதியை யாரால் வெல்ல முடியும்! என்று வருந்திப் புலம்பினார். பின்னர் சுமந்திரனையும் அழைத்துக் கொண்டு தசரதன் அரண்மனைக்குச் சென்றார்.

தேர் வந்து நின்றதும் இராமன்தான் வந்து விட்டான் என்று எண்ணிய தசரதன், அங்கே இராமனைக் காணாமல் சோர்ந்து போனான். தசரதன் சுமந்திரனை நோக்கி “இராமன் எங்கே இருக்கிறான்” என்று வினவினான். அவர் இராமன் இலக்குவனோடும், சீதையோடும் காட்டில் நெடுந்தொலைவில் உள்ளான் என்று சொல்லவும், தசரதன் உயிர் அவன் உடலைவிட்டுப் பிரிந்து போயிற்று.

தசரத மன்னனின் உடலைவிட்டுப் பிரிந்து போன அவனது ஆவியை தேவர்கள் விமானத்தில் வைத்துத் தாங்கிச் சென்று மோட்ச லோகத்தில் சேர்த்தனர். மீண்டும் பிறப்பு இல்லாத உலகம் இந்த வீட்டுலகம்.

தசரதன் உடலை சோதித்துப் பார்த்து அவனது உயிர் பிரிந்துவிட்டது என உணர்ந்த கோசலை சோகத்தால் துடிதுடித்து அழுதாள்; கதறினாள்.

கதையின் இந்த இடத்தில் வான்மீகம் கூறுவது சற்று வித்தியாசமானது. இராமன் முதலானோர் வனம் புகுந்த செய்தி அறிந்து தசரதன் உயிர் பிரிகிறது. அதனை அறியாத அந்தப்புற மகளிரும் தேவியரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை மன்னன் துயில் எழாமை கண்டு அனைவரும் பதறி அழுகின்றனர். அவ்வழுகையொலி கேட்டு கோசலையும் சுமித்திரையும் விழித்து எழுந்து செய்தியறிந்து பதைபதைத்து அழுது புரண்டனர்.

தசரதன் ஆவி பிரிந்ததறிந்த கோசலை அடைந்த மனவேதனை சொல்லும் தரமாமோ? பிரம்மன் முதலான உலகிலுள்ள எல்லாவற்றையும் படைத்த ஆதிமுதல்வனை மகனாகப் பெற பாக்கியம் செய்த அந்த கோசலை, தன் கணவன் உயிர் நீத்த துயரம் தாங்காமல், அமிர்தம் கிடைத்து அதனை இழந்தவள்போலவும், தன்னிடம் உருவான மாணிக்கத்தை இழந்த நாகம் போலவும், அருமையான தனது துணையை இழந்த அன்றில் பறவை போலவும் துயரக் கடலில் ஆழ்ந்தாள்.

அங்குள்ள சூழ்நிலையைப் புரிந்து கொண்ட வசிஷ்டர் நன்கு சிந்தித்து இறுதிக் கடன் செய்ய வேண்டிய புதல்வர்கள் எவரும் அருகில் இல்லை. பரதன் வருமளவும் மன்னன் உடலை எண்ணெயில் இட்டு கெடாது காத்தல் வேண்டும் என்று சொல்லி அவ்வாறே செய்விக்க ஏற்பாடு செய்தான்.

தசரதனின் மற்ற மனைவிமார்கள் உடன்கட்டை ஏற எண்ணியும், இப்போது வேண்டாம் என்று அவர்களைத் தடுத்து அனுப்பினார். பிறகு பரதனை உடனே அழைத்து வர தூதர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். சிறந்த ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேகய மன்னனுக்கும் பரதனுக்கும் பரிசுப் பொருட்கள் பலவற்றை அவர்களிடம் கொடுத்து, இராமன் வனம் சென்றதும், மன்னன் இறந்ததும் அங்கே தெரிவிக்காமல், முக்கிய பணி காரணமாக என்று சொல்லி பரதனை உடனே அழைத்து வர ஏற்பாடு செய்தார். அறிவில் சிறந்த மதியூகி அமைச்சர் செய்ய வேண்டிய முறையில் இந்தக் காரியங்களை வசிஷ்டர் செய்ததை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இனி, வனத்தில் விட்டுவிட்டு வந்த இராமனது நிலைமையைச் சற்று பார்ப்போம். இராமனைப் பின்தொடர்ந்து சென்ற அயோத்தி நகர மாந்தரனைவரும் தூங்கி விழித்தெழுந்தவுடன் அங்கு இராமபிரானைக் காணாமல் துயருற்றனர். பின்னர் தேர்த்தடம் சென்ற பாதையோடு செல்லத் தொடங்கினார்கள். தேரின் தடம் அயோத்தி நோக்கிச் செல்கிறது என்றுணர்ந்து, இராமபிரான் நகரம் திரும்பிவிட்டான் எனக் கருதி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இராமன் ஊர் திரும்பிவிட்டான் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியோடு நகரத்திற்குள் புகுந்த மக்களுக்கு முதலில் மன்னன் இறந்துபோன செய்தியும், இராமன் வனம் போய்விட்ட செய்தியும் கிடைத்தன. அளவற்ற துயரமுற்றனர்.

அங்கே கானகத்தில் இராமன், இலக்குவன், சீதை மூவரும் கங்கையின் வடகரையை சென்றடைகின்றனர். அங்கு இருந்த முனிவர்களோடு தங்கி, அவர்களது உபசரிப்பை ஏற்றனர். அங்கே இவர்கள் கங்கை நதியில் நீராடி மகிழ்ந்தனர். இராமனின் திருவடி பட்ட மாத்திரத்தில் சகல பாவங்களும் நீங்குமெனின், அவன் மேனி முழுதும் கங்கையில் அமிழ்ந்து நீராடியதால், அந்த கங்கை நதியின் சிறப்பு அதிகமாயிற்று; கங்கை புனிதம் அடைந்தது.

கங்கைக் கரையில் முனிவர்களோடு விருந்துண்டு தங்கியிருந்த தருணத்தில், அந்தக் காட்டில் வசிப்பவனும், கங்கை நதியில் படகோட்டும் உரிமை பெற்றவனுமான குகன் எனும் வேட்டுவ அரசன், தன் உற்றார், பரிவாரங்கள் புடைசூழ இராமன் வந்திருப்பதறிந்து, அவனைக் காண வந்து சேர்ந்தான். குகன் சிருங்கிபேரம் எனும் இடத்திற்கு அரசனாவான்.

வாயிற்புறத்தில் பெரிய கூட்டம் எழுப்பும் ஓசை கேட்டு இலக்குவன் முனிவர்களோடு இராமன் பேசிக்கொண்டிருந்த ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்து என்னவென்று பார்க்கிறான். குகன் தன் பரிவாரங்கள் சூழ நிற்பது கண்டு நீங்கள் யார்? என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள் என்று வினவினான்.

அதற்கு குகன் “ஐயனே! நாவாய்களை இந்த கங்கை நதியில் ஓட்டும் வேட்டுவனான நான், இராமபிரான் கழல் சேவிக்க வந்தேன்” என்றான்.

இதனைக் கேட்ட இலக்குவன் “சற்று இருங்கள்’ என்று சொல்லி உள்ளே போய் இராமனிடம் “கொற்றவ! தாயினும் மிக நல்லவனான தூயவன் ஒருவன், இந்தக் கங்கை நதியில் படகு செலுத்துபவன், சிருங்கிபேரத்தின் மன்னன், குகன் என்பான் தங்கள் திருவடி சேவிக்க விரும்பி வந்திருக்கிறான்” என்று சொல்ல, இராகவன் “உடனே அவனை உள்ளே வரச் சொல்” என்கிறார். இலக்குவன் குகனிடம் வந்து உள்ளே வரச் சொல்லி அழைக்கிறான்.

உள்ளே நுழைந்த குகன் கண்கள் களிக்கும்படி இராமனை தரிசனம் செய்து, மேனி வளைத்து, கைகளால் வாய் பொத்தி பணிவோடு நின்றான். இராமன் அவனை அமரும்படி சொல்லியும் குகன் அமரவில்லை. “ஐயனே! தேவரீர் அமுது செய்தருளும்படி தங்களுக்காக தேர்ந்தெடுத்த தேனும், மீனும் இங்குக் கொண்டு வந்தேன், தாங்கள் தயைகூர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அமுது செய்தருள வேண்டும்” என்றான்.

புன்சிரிப்போடு இராமன் முனிவர்களை நோக்கினான். தவவொழுக்கம் பூண்ட நான் உண்ணுதற்கு முடியாதவற்றைக் கொணர்ந்த அவன் வெள்ளை உள்ளத்தையும் மிகுதியான அன்பையும் எண்ணி இராமன் நெகிழ்கிறான். “உள்ளார்ந்த அன்போடு நீ கொணர்ந்த இவற்றை நாம் உண்டதாகவே எண்ணிக்கொள்” என்றான்.

“நாங்கள் இன்றிரவு இங்கே தங்கி நாளை விடியற்காலை கங்கையைக் கடந்து அப்பால் செல்ல நினைக்கிறோம். நீ இப்போது உனது பரிவாரங்களோடு ஊருக்குத் திரும்பிச் சென்று நாளைக் காலையில் படகுடன் இங்கு வந்து சேர்வாயாக!” என்றான்.

தவக்கோலம் பூண்டிருந்த இராமனைப் பார்த்து குகன் துயரமடைந்து “ஐயனே! தங்களைப் பிரிந்து செல்ல என் மனம் இடம் தருவதில்லை. நான் தங்களுடனே இங்கேயே தங்கிவிடுகிறேன்” என்றான்.

அதுகேட்ட இராமன் “அப்படியாயின் நீயும் இன்று எங்களோடு இருக்கலாம்” என அனுமதித்தான்.

உடனே குகன் தன் சேனையை அழைத்து காட்டு மிருகங்கள் அங்கிருப்பவர்களைத் துன்புறுத்தாதவாறு காத்திட அந்தத் தவப் பள்ளியைச் சுற்றி காவல் இருக்குமாறு பணித்துவிட்டுத் தானும் காவலுக்கு நின்றான்.

“தாங்கள் திருநகர் நீங்கி அயோத்தியைவிட்டு வனம் புகுவதற்கு என்ன காரணம்” என குகன் வினவ இலக்குவன் நடந்த வரலாற்றை அவனுக்கு உரைக்கிறான். அதைக் கேட்டு குகன் மிகவும் வருந்தி இராமன்பால் மேலும் பக்தி கொண்டான்.

அன்றிரவு இராமனும் சீதாபிராட்டியும் நாணல்களை விரித்து அதில் படுத்தனர். இளையபெருமாள் இரவு முழுவதும் கண் துஞ்சாமல் வில் ஏந்திய கையனாய் காவல் இருந்தான். இதையெல்லாம் குகனும் கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தது. இராமன் எழுந்து கடமைகளையெல்லாம் முடித்து, அங்கிருந்து புறப்பட விரைந்து சென்று “படகினைக் கொண்டு வா” என்று குகனைப் பணித்தான்.

அப்போது இராமபிரானை பிரிய மனமில்லாத குகன், அவன் கங்கையைக் கடந்தபின் அங்கு தங்காது சென்றுவிடக் கூடுமென எண்ணி, அவன் தன்னோடு தம் ஊரிலேயே தங்கிவிட வேண்டுமென்று இறைஞ்சுகிறான்.

குகனது அன்பினை உணர்ந்த இராமன் அவனிடம் மிக்க கருணையோடு தான் மீண்டும் வரும்போது வந்து தங்கிச் செல்வதாகக் கூறுகிறான். குகன் கொண்டுவந்த படகில் மூவரும் ஏறி கங்கையைக் கடக்கின்றனர். அக்கரை சென்றபின் இராமனைப் பிரிய மனமின்றி குகன் மறுபடி தன் ஆசையைக் கூறுகிறான்.

அன்போடு அதனை மறுத்த இராமன் குகன்பால் கொண்ட அன்பால், “தம்பி! குகா! நாங்கள் சகோதரர்கள் நால்வர்தான் இருந்தோம். இப்போது உன்னோடும் கூட ஐவரானோம் என்று சொல்லி விடைபெற்றுச் செல்கிறான்.

பிறகு மூவரும் கங்கைக் கரையின் தென்பகுதியில் தெற்கு நோக்கிப் பயணம் செல்கின்றனர். வழிநடந்து செல்லுகையில் சூரிய அஸ்தமன காலத்தில் ஓர் ஆசிரமத்தைக் காண்கின்றனர். அந்த ஆசிரமத்தில் வசித்து வந்து பரத்வாஜ முனிவர் இவர்களை வரவேற்று உபசரித்தார். அவர் இராமனைத் தழுவிக்கொண்டு விம்மி, அவன் வனவாசம் செய்ய வந்த விவரத்தைக் கேட்கிறார். நடந்தவற்றை இராமன் சொல்ல, முனிவர் வருத்தமடைகிறார். பிறகு முனிவர் இராமனைத் தன்னுடனேயே தங்கிவிடுமாறு வேண்டுகிறார்.

இந்த இடம் அயோத்திக்கு மிக அருகில் உள்ளது. கோசல நாட்டு மக்கள் இந்த இடத்துக்கு வந்து கூடுவார்கள். அது உங்களைப் போன்ற முனிவர்களுக்கெல்லாம் இடையூறாக இருக்கும். எனவே, தான் தொடர்ந்து வனத்துக்குள் செல்வதே முறை என்றான்.

உடனே பரத்வாஜ முனிவர் சித்திரகூட மலையின் பெருமைகளையெல்லாம் கூறி அங்கேதான் அவர்கள் தங்க சிறந்த இடம் என்று கூறுகிறார். மூவரும் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு யமுனா நதிக் கரையை அடைகின்றனர். அங்கே கிடைத்த மூங்கிற்கழிகளை, ஒத்த அளவாகத் துண்டித்து மாணையெனும் காட்டுக் கொடியைக் கயிறாகக் கொண்டு தெப்பமொன்று கட்டி, அதில் ஏறி யமுனையாற்றைக் கடக்கின்றனர். இராமனையும், சீதையையும் படகில் இருத்தி இலக்குவன் அதைத் தள்ளிக் கொண்டு நீந்திக் கடக்கிறான். பிறகு நெடுந்தூரம் பயணம் செய்து ஒரு பாலைநிலத்தை அடைந்தனர். இராமன் வருகையால் அந்த பாலைநிலம் குளிர்ந்து நீர்வளம் உள்ள இடமாக ஆயிற்று. பிறகு அவர்கள் அவ்விடத்தைக் கடந்து சித்திரகூட மலையைக் கண்டனர்.

இயற்கை வளங்கள் நிரம்பிக் கிடக்கும் அந்த சித்திரகூடக் காட்சிகளையெல்லாம் இராமன் சீதாபிராட்டிக்குக் காட்டுகிறார். அங்கே மேகங்கள் யானைகளைப் போல வித்த்யாசமின்றி தோன்றும் காட்சிகளையும், மரகத பச்சையொளி சூரியன் தேரில் பூட்டிய குதிரைகள் போலவும், மூங்கில் புதரில் சிக்கிய பாம்பின் உரித்த தோல்கள் மாளிகைமீதில் பறக்கும் கொடிகள் போல ஆடியதும், மலைச் சிகரங்கள், அருவிகள், பசுமையான சோலைகள், களிறுகள் சூல்கொண்ட பிடிகளுக்குத் தேன் கொடுக்கும் காட்சிகள், கடுவன்களும் மந்திகளும் தாவி விளையாடும் காட்சிகள், கொடிச்சியர் கவண் வீசும் காட்சிகள், நீர் வற்றிய காட்டாறுகள், கற்பக மலர்கள், அசுணப் பறவைகள் பாடல் கேட்டுத் துயிலும் காட்சிகள், அருவி நீரின் நறுமணம் இப்படி மாறி மாறித் தோன்றும் காட்சிகளையெல்லாம் இராமன் சீதைக்குக் காட்டி மகிழ்கிறார்.

பின்னர் அவ்விருவரும் கண்மூடி தியானத்தில் அமர்ந்து பின் இலக்குவன் அமைத்த ஒரு பர்ணசாலையில் தங்குகின்றனர். இங்கே இலக்குவன் மூங்கில்களை அளவாக வெட்டி, அதனை நட்டு அதன்மேல் வரிச்சுக் கோல்களை பரப்பி, உலர்ந்த தேக்கு இலைகளால் கூரை அமைத்து, அதன் மேல் நாணற் புற்களைப் பரப்பி, நாற்புறமும் மூங்கில் கால்களை நெறுக்கமாக நாட்டி அதன் மேல் மண் பூசி சுவர் அமைத்த வகையினை விவரமாகக் கூறுகிறார் கம்பர்.

உலகெலாம் படைக்கும் பெருமையுடைய இராமன் ஒரு சிறு குடிலில் குடி புகுந்தான். இலக்குவனுக்கு, தான் துன்பம் தருவதாக இராமன் கூற, இலக்குவன் இது தனக்குத் துன்பமன்று என்றும், இராமன் இப்படி காட்டில் ஒரு குடிலில் இருக்கும்படி ஆயிற்றே என்பதுதான் தனது துயரம் என்றும் கூறினான்.

இராமனும் தம்பியை தேற்றக் கருதி அரசச் செல்வங்கள் அழியக் கூடியது, ஆனால் இந்தத் தவச் செல்வமோ மும்மைக்கும் பயன் தரும் என்கிறான். இராம, லக்ஷ்மண, சீதையை இப்படியே சித்திரகூட பர்வதத்தில் விட்டுவிட்டு, நாம் சற்று பின்னோக்கிப் போய் கேகய நாடு சென்றிருந்த பரதனைப் பற்றி இப்போது பார்ப்போம்…….

வசிஷ்ட முனிவர் பரதனை அழைத்து வரும்படி அனுப்பிய தூதர்கள் விரைந்து சென்று இரவு பகலாகப் பயணம் செய்து கேகய நாடு சென்றடைந்தனர். வந்த தூதர்களை வரவேற்ற பரதன், தன் தந்தை தீதின்றி நலமாக இருக்கிறாரா எனக் கேட்டான். அதற்கு அந்த தூதர்கள் தந்தை “வலியன்” (நன்றாக இருக்கிறான்) என பதில் சொல்லுகிறார்கள். என் அண்ணா இராமன் இளவல் இலக்குவனுடன் நலம்தானே? எனக் கேட்கிறான். ஆம் என அவர்கள் கூற தலைமேல் கரம் குவித்து அவர்களை மானசீகமாக வணங்குகிறான் பரதன். பிறகு அனைவரது நலனையும் கேட்டறிந்தபின் அவர்கள் கொணர்ந்த திருமுகத்தை வாங்கினான்.

தந்தையின் திருமுகமாதலால் அதனை மரியாதையோடு வாங்கி எழுந்து நின்று தலைமேற் கொண்டான். பின்னர் பரதன் தனது சேனை மற்றும் பரிவாரங்களுடன் அயோத்திக்குப் புறப்படுகிறான். நெடுந்தூரம் பயணம் செய்து கோசல நாட்டின் எல்லையை அடைகிறான். ஏழு நாட்கள் பயணம் செய்து இந்த தூரத்தைக் கடக்கிறான்.

எழுச்சியும், துள்ளலும், மகிழ்ச்சியும் தாண்டவமாடிய கோசல நாடு துயரத்தில் ஆழ்ந்திருந்தது. மக்கள் துன்பக்கடலில் ஆழ்ந்து இருப்பதைக் கண்டான். எங்கு நோக்கினும் துயரக் காட்சிகள். வயலில் நெற்கதிர்கள் தலைசாய்ந்து மணிகள் உத்ர்ந்து கிடந்தன, பெண்கள் தம் தொழிலில் நாட்டமின்றி ஊடலில் இருந்தனர், இப்படி நாடு களை இழந்து பிணம்போல காட்சிதந்தது.

நாட்டின் அவல நிலை கண்டு பரதன் இங்கு ஏதோ பெருந்தீங்கு நிகழ்ந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டான். அப்படி என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் தேரினை விரைந்து செலுத்தச் செய்தான். நகரின் பெருவாயிலை அடைகிறான். அங்கே மதிலிலும் மாளிகைகளிலும் வானளாவப் பறந்து கொண்டிருக்கும் கொடிகளைக் காணவில்லை. நகரத்தில் இரப்போர்க்கு வழங்கும் கொடைகள் நடைபெறவில்லை. மங்கலம் பாடுவோர் கூத்தர் முதலானோர் பரிசு பெற்றுச் செல்லும் காட்சிகளைக் காணவில்லை. அந்தணர்கள் பரிசு பெற்றுச் செல்லும் காட்சிகள் காணப்படவில்லை. யாழ் இசையும் மாந்தர் ஆடும் சிலம்பின் ஓசையும் கேட்கவில்லை. வீதிகள் அரவமின்றி வெரிச்சோடிக் கிடந்தன. பாழ்பட்ட பகைவர் ஊர் போலவும், திருமாலும் திருமகளும் நீங்கிய பொலிவிழந்த பாற்கடல் போலவும் அயோத்தி வறிதாகிப் போனது.

பரதனது தேர் வேகமாகச் சென்று அரசனது மாளிகையை அடந்தது. தந்தையை எங்கும் காணாமல், தந்தை இறந்திருக்கக்கூடுமோ என்று அச்சம் தோன்றியது. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென வேகமாகப் புறப்பட்ட பரதனிடம் கைகேயி அனுப்பிய தூதர்கள் வந்து “உன் தாயார் உன்னை உடனே பார்க்க விரும்புகிறார்கள்” என்ற செய்தியைக் கூறினார்கள்.

வந்து வணங்கிய பரதனைக் கைகேயி தழுவிக் கொண்டாள். பின் தன் பிறந்த வீட்டினரின் நலம் வினவ, சுருக்கமாக விடையளித்தான் “தீதிலர்” என்று. தந்தையை எங்கு தேடியும் காணவில்லையே, தந்தை எங்கே? என்றான் பரதன்.

தந்தை எங்கே என்றவுடன் மனம் கலங்க வேண்டிய கைகேயி சற்றும் வருத்தமின்றி அவர் இறந்த செய்தியைச் சொல்லி நீயும் வருந்தாதே என்றாள்.

தந்தையைக் காணாது ஏங்கித் தவித்த பரதனுக்கு, கைகேயியின் சொற்கள் பேரிடியென தாக்கி மயங்கி தரையில் சாய்ந்தான். துயரத்தால் தாக்குண்ட பரதன் தன் தாயிடம் “பிறர் சொல்ல அஞ்சும் செய்தியை நீ வாய் கூசாமல் சொல்கிறாயே! உன்னிலும் கொடியவள் உலகில் உண்டோ?” என்றான்.

தசரதன் பெருமையைச் சொல்லிச் சொல்லி புலம்புகிறான். கண்களில் நீர் கொட்ட பரதன் துயரக் கடலில் நீந்த கைகேயி அவனைத் தேற்றுகிறாள்.

தந்தை போய்விட்டான், இனி அவனை நினைந்து புலம்புவதில் பயனில்லை. இராமனைக் கண்டு தரிசித்து அதனால் மன ஆறுதல் பெறலாம் என்று எண்ணி “என் அண்ணா இராமனை தரிசிக்க வேண்டும். அவர் எங்கே?” என்றான்.

சிறிதுகூட வருத்தமின்றி கைகேயி சொன்னாள்: “இராமன் தம்பியோடும் தேவியோடும் கானகத்தில் உள்ளான்” என்று. இதனைக் கேட்ட பரதன் தீயை உண்டவன் போல ஆனான். இராமபிரான் வனம் போனான் என்றால் என்ன காரணமாக இருக்கும். குரு துரோகம், தெய்வக் குற்றம் இவற்றில் எது காரணமாக இருக்கும் என்றி மதி மயங்கினான்.

பிறர்க்குத் தீங்கு எண்ணாத மனத்தினன் இராமன். அப்படியிருக்க அவன் வனம் போக காரணமென்ன என்றான் பரதன். சக்கரவர்த்தி உயிருடன் இருக்கும் போதே இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்று பதில் கூறினாள் கைகேயி. ஏன் அப்படி நடந்தது? என்றான் பரதன்.

“நான் உன் தந்தையிடம் இரு வரங்களைக் கேட்டேன். அவற்றைப் பெற்றுக் கொண்டு, ஒரு வரத்தினால் இராமனை காட்டுக்குப் போகச் செய்தேன். மற்றொரு வரத்தினால் நாடு உனக்கு உரியது என்று ஆக்கினேன். அதை பொறுக்கமாட்டாமல், உன் தந்தை, தனது உயிரை நீக்கினான்” என்றாள்.

காதுகளில் தீ புகுந்தது போல இந்தச் சொற்களைக் கேட்ட பரதன் செவிகளைப் பொத்திக் கொண்டான். (கரங்கள் செவி கூடின). கைகேயி சொன்ன சொற்கள் பரதனின் செவி புகுந்ததும் — அவன் கன்னங்கள் சினத்தால் துடித்தன; மயிர்க்கால்கள் தீ உமிழ்ந்தன; புகை சூழ்ந்தது; வாய் மடித்துக் கரங்கள் ஒன்றோடொன்று மோதி அறைந்தன; சினத்தீ பரதனை முழுவதுமாய் ஆட்கொள்ள வானவரும், அவுணர்களும் அஞ்சினர்; துஞ்சினர்; திசை யானைகள் மருண்டன; சூரியனும் திசை மாறினான்; கடும் சின காலனும் கண்களை மூடிக் கொண்டான்.

அந்த கொடிய வார்த்தைகளைச் சொன்ன கைகேயியை தாயென்றும் பாராமல் கொல்ல என்ணிய பரதன், இராமன் கோபிப்பானே என்று எண்ணி சும்மாயிருந்தான்.

“உன் கொடிய சூழ்ச்சியால் என் தந்தை மாண்டு போனான்; அண்ணா இராமன் பெரும் தவம் மேற்கொண்டான். இதைக் கேட்ட பிறகும் உன் வாயை கிழிக்காமல் இருக்கிறேனே! பாவத்தால் நீ பெற்ற இந்த ராஜ்யத்தை நான் ஆண்டவனாகவே ஆகிவிட்டேனே!”

“முதலில் உணராது தவறு செய்திருந்தாலும், அதன் வினை தெரிந்த பிறகு நீ மாண்டுபோயிருக்க வேண்டும். அஃதின்றி இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே! உன்னைக் கொன்றுவிட நினைக்கிறேன். ஆனால் அந்த தாயினும் நல்ல இராமன் என் மீது கோபப்படுவானே என்று தயங்குகிறேன்”.

“சூரிய குலத்தில் தோன்றிய நான், தாயின் தகாத சூழ்ச்சியால் கிடைத்த அரசை பெற்றேன் என்று பிற்காலத்தில் பழி ஏற்கும்படி செய்து விட்டாயே! நீ செய்த கொடிய செயலால் ஒருவர் (தசரதன்) மாளவும், வனம் போய் மீண்டுவர ஒரு வீரன் (இராமன்) இருக்கவும், நீ விரும்பிய இந்த நாட்டை நான் (பரதன்) ஆளவும் செய்தாயென்றால் இது நல்ல தர்மம் தான்!” என்று இகழ்ச்சியாகக் கூறினான் பரதன்.

“கொண்ட கணவனையே கொன்று விட்டாயே! பாம்பு போன்ற பாவி! நீ இன்னும் என்னென்ன தீமைகள் புரிவாயோ? தன் மக்கள் நலனைக் கருதுபவள் தாய். கணவன் வழி நிற்பவள் பெண். நீ இவ்விரண்டு வகையிலும் இல்லாமல் மகனுக்குப் பழியையும், கணவனுக்கு மரணத்தையும் கொடுத்து விட்டாயே! நோய் உடலைத் தாக்கி அவ்வுடல் அழியும் போது தானும் அழிந்து விடும்; ஆனால் நீ இன்னும் இருக்கின்றாயே! நீ நோய் அல்ல; பேய்! நீ இவ்வுலகத்தில் வாழ அருகதை அற்றவள்”.

“உன் செயலால், உனக்கோ, எனக்கோ, நாட்டுக்கோ நல்லது ஒன்றும் இல்லை. தர்மம் கெட்டது, பழி சேர்ந்தது; நாட்டுக்குத் துன்பம் நேர்ந்தது. உனக்கு இந்த சூழ்ச்சியைச் சொன்னது யார்? எனக்கு இந்த அரசும் வேண்டாம், இந்தப் பழியும் வேண்டாம்.”

“நான் நேரடியாகச் செய்யாமல், உன் மூலமாக இத்தீச் செயல்களைச் செய்ததாகத்தான் உலகத்தார் சொல்லுவார்கள். “எய்தவன் இருக்க அம்பை நோவாவேன்” என்று நீ குற்றமும் பழியும் அற்றவளாகி விடுவாய்! ஆனால் எனக்கு நேர்ந்த பழியை மாற்ற முடியாது. உன்னைக்கூட நல்லவளாக்கி விட்டேன் நான்” என்று பரதன் நொந்து கொள்கிறான்.

“எனக்கு ஏற்பட்டுவிட்ட இந்தப் பழிக்கு அஞ்சி நான் உயிரை மாய்த்துக் கொள்வதைக் காட்டிலும், உயிரோடு இருந்து நான் குற்றமற்றவன் என்பதை இந்த உலகுக்குத் தெரியச் செய்வதே மேல் என்று எண்ணுகிறேன். அப்படி நான் பழியிலிருந்து விடுபடுவேனானால், நீதான் காரணம் என்று உலகம் அறிந்து கொண்டு உன்னை இகழும். நஞ்சு, உண்டவரைக் கொல்லும், நீ செய்த பழி உன்னைக் கொல்லத்தான் போகிறது”.

“பிறர் நினக்கக்கூட அஞ்சுகின்ற கொடுமையான செயலைக் கூசாமல் செய்துவிட்ட பெரும் பாவி நீ! உன் பாவ வயிற்றில் பிறந்து விட்டதால், அந்தப் பாவம் என்னையுமல்லவா தொடரும். அதனால் நான் செய்யாத பிழைக்கு நானே காரணம் போலவும், அதனால் மனம் வருந்தி துன்புறும் நிலைக்கு ஆளாகிவிட்டேன்! இந்தப் பழி நீங்கவேண்டுமானால் நீ இராமனுக்கு அளித்த தவ வாழ்க்கையை நானே மேற்கொள்ளுகிறேன். இது யாருக்காகவும் அல்ல, தர்மத்துக்காகச் செய்கிறேன்”.

“எனக்கு நன்மை தருவது தவம் என்று சொன்னேன். உனக்கு நன்மை தருவது எது தெரியுமா? நீ உயிர்துறத்தலே நன்று. அதுதான் நியாயம். நீ உயிர் துறந்தால் கைகேயி சுய உணர்வு இல்லாமல் தவறு செய்து விட்டாள், அது தவறு என்பது உணர்ந்ததும் உயிரை விட்டு விட்டாள்; அவள் குற்றமற்றவள் என்ற புகழையாவது நீ பெறுவாய். அதனால் உனது பாவங்களும் தீர்ந்து போகும்” என்றான் பரதன்.

எவ்வளவு எடுத்துக் கூறியும் கைகேயி மனம் மாறாதது கண்டு பரதன், இனி இங்கிருப்பதில் பயனில்லை. எல்லா துன்பங்களையும் நீக்கி இதமளிக்க வல்லவள் கெளசல்யா தேவிதான். அந்த அன்னையைச் சென்று காண்கிறேன் என்று புறப்பட்டான்.

(சுமந்திரன் முதலியோர் அருகில் இருப்பதையும் பாராது பரதன் கைகேயியை வைது கொண்டிருக்க அவன் பேச்சொலியால் அவன் வந்திருப்பதை அறிந்த கெளசல்யா தேவி அவனைக் கண்டு பேசக் கருதி சுமித்திரையுடன் கைகேயியின் அரண்மனைக்குப் புறப்பட, அப்போது பரதன் சென்று அவளைக் கண்டு வணங்கியதாக வான்மீகத்தில் சொல்லப் படுகிறது.)

கோசலையைக் கண்ட பரதன் அடியற்ற மரம்போல அவள் திருவடிகளில் வீழ்ந்து, அவற்றைப் பற்றிக் கொண்டு புலம்புகிறான். துயரம் மிகுந்து எழ சிறிது நேரம் பேசமுடியாமல் திணறியபின் பேசுகிறான்.

“அம்மா! எந்தை எவ்வுலகில் உள்ளார்? என் அண்ணா இராமன் எங்கிருக்கிறார். இந்த நிலையைக் காணவா நான் தனியனாய் இங்கு வந்து சேர்ந்தேன். என் மனத்துயருக்கு பதில் சொல்லுங்கள் அம்மா!” என்றான்.

கோசலையைக் கண்டதும் அவன் துயரம் அதிகரித்து தரையில் புரண்டு அழுகிறான். தந்தையைக் கண்டு அவர்தம் திருவடிகளைத் தொழும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டேனே! நாடு காக்க வேண்டிய இராமன், காட்டுக்கா செல்வது? நீங்கள் அதனைத் தடுத்திருக்க வேண்டாமா? நீங்கள் தவறிவிட்டீர்களே அம்மா!”

“இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் தம் குலத்தோடு அழிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அழியவில்லையே. இவற்றிற்குக் காரணமான கொடியவள் கைகேயியின் வயிற்றில் பிறந்தேனல்லவா? நான்தான் வஞ்சகன். எனவே அதைச் சொல்லவும் எனக்கு அருகதை இல்லை. இந்தத் துயரம் நீங்க வேண்டுமானால், நான் இறந்து ஒழிதல் ஒன்றே வழியாகும்”.

“இதுவரை பழிபாவம் செய்து கெட்ட பெயர் பெற்றவர் ஒருவரேனும் நம் குலத்தில் உதிக்கவில்லை. நான் வந்து பிறந்தேனே பழிகாரனாக! நாட்டை முன்பு காத்து வந்தவரும் இனிக் காக்கும் உரிமை பெற்றவரும் நாட்டில் இல்லாமல் போய்விட்டார்களே! நாடு கண்களை இழந்து தவிக்கிறதே; இந்த நாடு இந்த நிலையை அடையலாகுமோ?” என்று பரதன் புலம்புகிறான்.

இதனை கோசலை கேட்டாள். உயர்குடிப் பிறப்பும் அதற்கேற்ற பொறுமை, கற்பு நெறி முதலான சீரிய குணங்களைப் பெற்றவளல்லவா கோசலை. பரதனுடைய மனநிலையை நன்கு புரிந்து கொண்டாள். அவனது தாய் கைகேயியின் சூழ்ச்சியில் அவனுக்கும் பங்கு இருக்குமோ என முன்பு கருதியிருந்தமையால் ஏற்பட்ட கோபம் மாறி, மனம் நெகிழ்ந்து அவனைப் பார்த்துச் சொல்கிறாள்.

“பரதா! உன் தாய் செய்த இந்த சூழ்ச்சி பற்றி உனக்கு முன்பே தெரியவில்லை போலிருக்கிறதே!” என்றாள்.

இந்த சொற்களைக் கேட்டதுதான் தாமதம். கோசலைகூட தன்னை சந்தேகித்து விட்டாளே என்ற எண்ணம் அவனை வேதனைப் படுத்தியது. அடிபட்ட சிங்கம் போல தனது மனக் குமுறலை வெளிப்படுத்தலானான், அடுக்கடுக்கான சூளுரைகளின் மூலம்.

“தாயே! கைகேயி செய்த சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமானால் நான் நரகத்துக்குப் போவேன். எப்படி தெரியுமா? தர்மம் கெடும்படி தீய வழியில் செல்பவனும், இரக்கமற்ற கல்மனம் படைத்தவனும், மாற்றான் மனைவி மீது காமம் கொண்டு அவள் வாயிலில் காத்துக் கிடப்பவனும், காரணமின்றி பிறர் மீது கோபப்படுபவனும், கொடுமை செய்து உயிர்களைப் பறிப்பவனும், தவசிகளுக்குக் கடுந்துன்பம் விளைவித்தவனும் எந்த நரகத்துக்குப் போவார்களோ அந்த நரகத்துக்கு நான் போவேன்”.

“”என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் ஐம்பெரும் பாவங்களான அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தமையன் ஆகியோரையும் பெண்களையும் வாளால் கொன்றவன், அரசனுக்குச் சேரவேண்டிய பொருட்களை வஞ்சனையால் கவர்ந்தவன், போரில் எதிரியிடம் தோற்று புறம் காட்டி ஓடிவந்தவன், பிறரிடம் யாசகம் பெற்றுக் கொணர்ந்த பொருளை அவர்களைத் தாக்கி அபகரித்தவனும் எந்த நரகத்துக்குப் போவார்களோ அந்த நரகத்துக்கு நான் போவேன்”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் துளவ மாலை அணிந்த திருமாலை தலைவன் (பரம்பொருள்) அல்ல என்று சொன்னவன், அரிய ஒழுக்கம் அமைந்த அந்தணர்களுக்குப் பிழை புரிந்தவன், குற்றமற்ற வேத நெறியைப் பேணாமல், தவறுகளை இழைத்தவன், பொய் எனும் பேய் பிடித்த மனத்தினன், ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் தாய் பசியால் வருந்த, தான் மட்டும் வயிறு முட்ட சாப்பிடுபவன், போரில் தன் தலைவன் அழியுமாறு அவனை களத்தில் விட்டுவிட்டு தான் மட்டும் தப்பிப் பிழைத்து ஓடியவன், ஆகியோர் போய்ச்சேரும் அந்த கொடிய நரகத்துக்கு நான் போவேன்”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் பொய்சாட்சி சொன்னவனும், போருக்கு பயந்து ஓடினவனும், தன்னிடம் அடைக்கலமாகக் கொடுத்த பொருளை வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டவனும், ஒருவர் இளைத்த நேரத்தில் துன்பம் செய்தவனும் போகும் கொடிய நரகத்துக்கு நான் போவேன்”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் அந்தணர் வாழும் வீட்டை தீக்கிறையாக்கிய கொடியவனும், தன் சொந்த பிள்ளைகளையே கொன்றவனும், பொய் வழக்கு போட்டவனும், தேவர்களைப் பழித்தவன் ஆகிய தீயோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் கன்றுக்குட்டிக்குப் பால் விடாமல், தாய்ப்பசுவிடம் தான் மட்டும் பாலைக் கறந்து குடித்தவன், நீதி மன்றத்தில் பொய் சொல்லி பிறர் பொருளை தன்னதாக்கிக் கொண்டவன், செய்நன்றி கொன்ற தீய நாக்கையுடையவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் வழிப்பயணம் செல்கையில் தன்னுடன் பயணிக்கும் அபலைப் பெண்டிரை தீயோர் கவர்ந்து செல்ல, அவர்களை மீட்கமுயலாமல் தன் உயிரைக் காத்துக் கொள்ள தப்பி ஓடியவன், தன்னுடன் இருப்போர் பசித்திருக்க தான் மட்டும் வயிறு முட்ட உண்பவன் ஆகியோர் போகும் நரகத்துக்கு நான் போவேன்”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் போர்க்களத்தில் எதிரிக்கு பயந்து பணிந்து போனவனும், உயிர்களைக் கொன்று தின்னும் ஆசை உடையவனும், தர்ம மார்க்கத்தை கைவிட்டு அதர்ம வழியில் பொருள் குவிக்க விரும்பிய அரசனும் எந்த நரகத்துக்குப் போவார்களோ அந்த நரகத்துக்கு நான் போவேன்.”

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் கேடற்ற அரசாட்சி கிடைக்கப் பெற்றதும் தாம் எது செய்யினும் தகும் எனும் ஆணவத்தால் தகுதியற்ற காரியங்களைச் செய்து கொண்டு தர்ம மார்க்கத்திற்கு மாறாக, அரச தர்மம் மறந்து செயல்படுகின்ற பாவியாக நான் ஆவேனாக! கன்னிப் பெண்ணை கற்பழிக்கக் கருதியவனும், குரு பத்தினியை தீய நோக்கத்தோடு பார்த்தவனும், கள் குடித்தவனும், பொன் பொருளைத் திருடியவனும் செல்லும் நரகத்திற்கு நான் செல்வேனாக!”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் ஒரு நாட்டின் நிலையான குடிமக்களும், பல காரணங்களுக்காக வந்து தங்கியிருக்கும் பிற நாட்டவர்களும், வாணிபம் முதலான காரணங்களுக்காக வந்தவர்களும் அஞ்சி ஓடும்படி, எதிரி படையெடுப்பின் போது, ஓடி ஒளிந்து கொள்ளும் வீரமிலா கோழை எனும் கீழ் மகனாக நான் ஆகக் கடவேனாக!”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் களங்கமற்ற உயர் குடிப்பிறந்தாரை, இழித்து பழித்து களங்கம் கற்பித்துக் கூறியவனும், வரிய காலத்தில் ஏழைகளுக்குக் கிடைத்த சிறிய உணவையும் சிதற அடித்தவனும், எதிரில் உள்ளோர் பசித்திருந்து வாட, அவர்கள் நாவில் நீர் ஊறும்படி தான் மட்டும் ருசித்துச் சாப்பிட்டவனும் ஆக நான் ஆகக் கடவேன்!”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் உண்னத் தகாதவற்றை நாய் போலத் தின்பவனும், இவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல என பிறர் இகழவும், அதற்காக வெட்கப்படாதவனும், நரகம் என்று ஒன்று உண்டு எனும் வேதப் பிரமாணத்தைப் புறக்கணிப்பவனும், பிறருடைய குற்றங்களைக் கூறிக் கொண்டு திரிபவனுமாக நான் ஆகக் கடவேனாக!”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் தன்னிடம் ஆண்மை இருந்தும் அதனை வீணாக்கிவிட்டு, பகைவர் கையில் சிக்கிச் சிறைப்பட்டு உயிரினும் சிறந்த மானத்தை இழந்து, சிறைக் காவலர்கள் தாம் விரும்பியபோது தரும் தகுதியற்ற உணவை இரப்பவன் போலக் கையேந்தி உண்டு நிலையற்ற உடம்பைக் காக்கும் இழிநிலை உற்றவனாக நான் ஆகக் கடவேனாக!”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் தன்னிடம் உள்ள பொருளை யாசிப்பவருக்குக் கொடுப்பது புகழும் புண்ணியமும் தரும். அப்படிக் கொடுக்க மனமில்லையேல் “இல்லை” என்று தெளிவாகக் கூறி, இரப்பவன் நசை கொள்ளாதபடி செய்து விடலாம். அங்ஙனமின்றி, நாளை, பின்னை என்று அவனை ஆசைகாட்டி இழுக்கடித்து கடைசியில் இல்லை என்று சொல்வது பெரும் பாவமாகும். அவ்வாறு செய்யும் வீணர் அடையத் தக்க நரகம் எதுவோ அதற்கு நான் போவேனாக!”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் சிறந்த ஆயுதங்களைக் கைக் கொண்டிருந்தும் போர்க்களத்தில் தன்னினும் பலவீனமான எதிரியிடம் தோற்று அவன் அடிபணிந்த இழிவானவன் அடையும் நிலையை நான் அடைவேனாக!”.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் வளம் மிகுந்த தன் நாட்டை எதிரிகள் பிடித்துக் கொள்ள உயிரை பெரிதென மதித்து எதிரிகள் பூட்டிய விலங்கோடு நெடுநாள் உயிரோடு வாழும் கோழையாக நான் ஆவேனாக!”.

இப்படியாகப் பற்பல சூளுரைகளை பரதன் தாய் கோசலை “கேகயர் கோமகள் இழைத்த கைதவம் நீ அறிந்திலை போலும்!” என்று கேட்ட கேள்விக்கு பதிலாகக் கூறிமுடித்தான்.

“என் தாயின் சூழ்ச்சி எனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின் உள்ள அனைத்து நரகங்களுக்கும் நான் போவேனாக!” என்று கூறிக்கொண்டே கோசலையின் பாதங்களில் வீழ்ந்தான் பரதன்.

பரதன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட கோசலை, அவனது மனத் தூய்மையை உணர்ந்து, இராமனே திரும்பி வந்துவிட்டதைப் போல மகிழ்ந்து அன்பினால் கண்ணீர் பெருக்கி பரதனை எடுத்துத் தழுவிக் கொண்டாள். தாய் கைகேயியின் கடிய மனத்தையும், பரதனின் உயர்ந்த குணங்களையும் எண்ணி விம்மிப் பெருமிதமடைந்த கோசலையின் தனங்களில் பால் சுரந்தது. பரதனை அன்போடு அணைத்துக் கொண்டு அவள் பேசலுற்றாள்.

“குழந்தாய்! பரதா! பழமையும் புகழும் வாய்ந்த உன் குலத்துள் உதித்தவருள் உன்னைப் போன்ற சிறந்தவர் யார் உளர்?” என்று கோசலை கூறவும், பரதன் மறுபடி அவளது பாதங்களில் விழுந்த பணிய, அப்போது வசிஷ்டர் அங்கு வந்தார். பரதன் குலகுரு வசிஷ்டரின் பாதங்களிலும் விழுந்து வணங்கினான். குருவைக் கண்டதும் துக்கம் பீரிட பரதன் “எந்தை எங்கே போனான்?” என்று அழுதான்.

(தந்தை மாண்டுபோனான் என்பது தெரிந்தும், மிக நெருக்கமானவர்கள் வரும்போது இப்படிக் கேட்கும் வழக்கம் இருந்தது)

“மாசற்ற என் மைந்தா! பரதா! உன் தந்தை இறந்து ஏழு* நாட்கள் கடந்து விட்டன. புதல்வர் செய்ய வேண்டிய இறுதிக் கடனை நீ செய்து முடிப்பாயாக” என்று கோசலை பரதனிடம் கேட்டுக் கொண்டாள்.

*(வான்மீகத்தின்படி தசரதன் இறந்த மறுநாள் வசிஷ்டர் கேகய நாட்டிற்கு தூது அனுப்பினார். அவர்கள் மறுநாள் விடியுமுன் குதிரைகளில் விரைந்து சென்று கேகய நாடு சென்று பரதனிடம் வசிஷ்டர் சொன்ன செய்தியைச் சொல்ல, செய்தியறிந்த பரதன் உடனே புறப்பட்டு ஏழு நாட்கள் பயணம் செய்து எட்டாம் நாள் அயோத்தி அடைந்தான். அங்ஙனமாயின் மன்னன் இறந்து அன்று பத்தாவது நாளாகும்)

தந்தையின் இறுதிக் கடன்களைச் செய்யுமாறு பணித்த தாய் கோசலையின் பொற்பாதங்களை வணங்கி, வசிஷ்டருடன் சென்று தன்னுயிர் ஈந்து தர்மத்தைக் காத்த தசரதனின் உடலைக் கண்டான். தந்தையின் உடலைக் கண்ட மாத்திரத்தில், பரதன் மண்மீது விழுந்து அலறித் தீர்க்கிறான். உலகம் முழுவதும் நலமுறக் காத்த தசரதன் உடல் எண்ணெயில் இருந்தது. அதனைத் தன் கண்ணீரால் கழுவினான்.

நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள், மன்னனின் உடலை, தைலப்பேழையினின்றும் மெல்ல எடுத்து, அரச மரியாதைகளோடுகூடிய வாத்திய முழக்கங்களுடன் ஓர் பொன் விமானத்தில் ஏற்றினர். அப்போது தசரதனின் சாரதியான சுமந்திரனும், அமைச்சர்களும், படைத்தலைவர்களும், மற்றுமுள்ள ராஜாங்க அதிகாரிகளும் நட்பு சுற்றம் அனைத்தும் சூழ்ந்துகொண்டு அழுது தீர்த்தனர். மக்கள் அழுது புலம்பிக் கொண்டு கரங்களை உயரத் தூக்கி வணங்க, விமானத்தை ஓர் யானையின் மீது ஏற்றிக் கொண்டு போயினர்.

சங்கு, முரசங்கள் முழங்க, பெருந்துக்கத்தால் மக்கள் கண்ணீர் மல்க, யானை குதிரை, தேர்ப்படைகள் முன் செல்ல வேதம் ஓதிக் கொண்டு அந்தணர்கள் பின்செல்ல, தசரதனின் அறுபதினாயிரம் தேவியரும் அவர்களைத் தொடர, அலைகடல் போல அனைவரும் சரயு நதிக் கரையை அடைந்தனர்.

தர்ம சாஸ்திரங்களில் வல்ல புரோகிதர்கள் தகனத்திற்கு முன்பு செய்யும் கிரியைகளை முடித்துக் கொண்டு தீயிட பரதனை அழைத்தனர். தசரதன் சிதைக்குத் தீமூட்ட பரதன் எழுந்ததும், வசிஷ்டர் அவனை நோக்கி “பரதா! உன் அன்னை செய்த கொடுமையால், மனம் மிக நொந்துபோய் சக்கரவர்த்தி, உனக்குத் தன் சிதைக்குத் தீயிடும் உரிமை இல்லை என்று சொல்லிவிட்டு இறந்து போனான். எனவே, பரதா! தசரதனின் உடலுக்குத் தீ மூட்டும் உரிமை உனக்குக் கிடையாது” என்றார்.

“உன் தாய் மனைவி என்ற உரிமையையும், நீ மகன் எனும் உரிமையையும் இழப்பதாகக் கூறி சக்கரவர்த்தி இறந்து போனார்” என்றார் முனிவர். வசிஷ்டர் இம்மொழி உரைத்ததும், மனம் வருந்தி பெருமூச்செறிந்தான் பரதன். முதலில் நகைத்தான். பின் பெருந்துயரால் மனம் நொந்து கூறுகிறான். பெருந்துயரம் உண்டானபோது அதனை மனத்தில் அடக்கி வைக்க இயலாது. அதைப் பிறரிடம் சொல்லி அழுதால்தான் அடங்கும். எனவே பரதன் இப்படிப் பேசுகிறான்.

“தந்தைக்கு இறுதிக்கடன் ஆற்ற உரிமையில்லாத நான், அரசாளும் உரிமையை மட்டும் பெற்றேனோ? சூரிய குலத்தில் உதித்த யாருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது? சூரிய குலத்தில் பிரமன் புதல்வன் காசிபப் பிரஜாபதி, அவன் மகன் விவசுவான் என்ற சூரியன், அவன் மகன் வைவஸ்வத மனு என்று இவ்வாறு என் குல முன்னோர்கள் எல்லோரும் அறநெறிப்படி நீதிநெறி தவறாத ஆட்சி செய்து தேவ பதவி பெற்றுவிட்டனர். நான் மட்டுமன்றோ இப்படி வீணன் ஆனேன்! காய்த்துக் குலுங்கும் தென்னைக் குலையில் நல்ல காய்களுக்கு மத்தியில் பதடி (தேரையுண்ட காய்) போல நான் வந்தேன். என்னை அரசனாக்கக் கருதி என் தாய் செய்த செயல்தான் என்னே!” இவ்வாறு புலம்பித் தவிக்கும் பரதன் தன் தம்பி சத்ருக்குனனைக் கொண்டு ஈமக் கடன்களைச் செய்வித்தான். (இறுதிக் கடன்களை பரதனே செய்ததாக வான்மீகத்தில் வருகிறது).

தசரதனது தேவிமார்கள் அறுபதினாயிரவரும் அவன் இறந்தவுடனேயே தாங்களும் உயிர்விடத் துணிந்தனர். ஆனால் வசிஷ்ட முனிவர் ஆணையால் அப்போது, உயிர்த்தியாகம் செய்வதைத் தவிர்த்த அவர்கள் இப்போது பூஞ்சோலையில் புகும் மயில் கூட்டம் போல உடன்கட்டை ஏறினர். “சககமனம்” எனும் உடன்கட்டை ஏறுதல் பத்தினிப் பெண்டிர் அவ்வாறு செய்வதால் தமக்கு நற்கதி உண்டாகுமோ ஆகாதோ என்கிற ஐயமின்றி துணிந்து செய்ய வேண்டுமாம். அத்தகையவராய் பத்தினிப் பெண்டிர் அனைவரும் அவ்வாறே செய்து நல்லுலகம் அடைந்தனர்.

முதல்நாள் சடங்குகள் சத்ருக்குனனால் நடத்தி வைக்கப்பட்டபின், அனைவரும் அரண்மனை சென்றடைந்தனர். ஏனைய நாட்களின் சடங்குகளும் முடிந்தபின், அரசு கட்டில் ஏறவிரும்பாத பரதன் உட்பட அனைவரும் அரண்மனையில் கூடினர். இனி செய்ய வேண்டியதுபற்றி ஆலோசிக்க வசிஷ்டர், மறையவர்கள் புடைசூழ வந்திருந்து பரதனிடம் நாடு அரசன் இல்லாமல் இருத்தலால் ஏற்படும் தீங்குகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

வசிஷ்ட முனிவர் தவிர, அமைச்சர்கள், நகர மாந்தர், படைத்தலைவர்கள், முனிவர்கள் ஆகியோர் பரதனிடம் ஆலோசனை நடத்தினர். அனைவரும் பரதனை அரசனாக்க வேண்டுமென்று விரும்பி அதனை அவனிடம் உணர்த்தவல்ல திறனும் ஆற்றலும் தகுதியுமுள்ளவர் வசிஷ்டர்தான் என்று முடிவு செய்து, அதனை அவர் செய்ய வேண்டும் எனும் குறிப்பில் சுமந்திரன் முனிவரின் முகத்தைப் பார்த்தான். வசிஷ்டர் அந்தக் குறிப்பை உணர்ந்துகொண்டு பரதனிடம் பேசலானார்.

“பரதா! நாடு அரசனின்றி இருத்தல் தகாது. அரசாட்சி உன்னைத் தேடி வந்துள்ளது, எனவே நீ முடிதரித்து நாட்டைப் பாதுகாப்பது உன் கடன்” என்றார்.

பரதன் இச்சொற்களைக் கேட்டு வருந்தினான். தன்னை நஞ்சு உண்ணுமாறு வற்புறுத்துவது போல இருந்தது பரதனுக்கு. அரசாட்சி மற்றவர்க்கு அமுதம் போல இருக்கலாம், ஆனால் பரதனுக்கு அது நஞ்சுபோலத்தான் இருந்தது. துயரம் மிகுதியால் பரதன் மூர்ச்சையடைந்தான். பின்பு தெளிந்து எழுந்து, மெதுவாகத் தன் கருத்தை அனைவரும் அறியக் கூறலானான்.

“பெரியோர்களே! நீங்கள் கூறுவது தர்மமாகாது, குற்றமே! மூத்தவன் இருக்க நான் முடிசூடுதல் எவ்வகையிலும் தகாது. என் அன்னை செய்தது பெருங்குற்றம். இராமன் இவ்வுலகம் மட்டுமின்றி மூவுலகங்களையும் தாங்கும் தகுதியும் ஆற்றலும் உள்ளவன். மூத்தவன் என்பதே முடிசூடுவதற்கு உரிமையாயிற்று. நான் எவ்வகையிலும் அதற்குப் பொருத்தமானவன் அல்ல”.

“நீங்கள் கூறுவதுதான் சரியென்றால் அதர்மத்துக்கு இப்போது நடைபெறும் திரேதா யுகமோ, அடுத்து வரும் துவாபர யுகமோ ஏற்காது. கடைசியில் வரும் கலியுகம் மட்டுமே தர்மம் தடுமாற ஏற்ற காலம். இது என்ன கலியின் ஆட்சியோ? நான் அரசாட்சியை ஏற்க மாட்டேன். அண்ணன் இராமச்சந்திர மூர்த்தியை மீண்டும் அழைத்து வந்து முடிசூட்டுவதையே நான் விரும்புகிறேன். அப்படி இராமனை மீண்டும் அழைத்து வரமுடியவில்லையென்றால் நானும் காட்டிலேயே தங்கி அரிய தவத்தினை மேற்கொள்வேன். அப்படியும் முடியாவிட்டால் என் உயிரைத்துறப்பேன்” என்றான் பரதன்.

சபையோர் வியந்தனர். “தந்தை இருந்தபோதே, இராமன் முடிசூட இசைந்தான். நீயோ தாய் தந்தை இருவருமாக உனக்களித்த அரசை இராமன் இங்கு இல்லாத போதும் மறுக்கிறாய். உன்னைப் போல சிறந்த குணம் படைத்தோர் அரச குலத்தில் இதுவரை தோன்றினாரில்லை” என்று புகழ்ந்தனர்.

“நீ அரசு ஏற்று உன் தந்தையைப் போல சிறப்பாக ஆட்சி செய்து பெறக்கூடிய புகழினும், அரசை மறுத்து நீ பெற்ற புகழ் பெரிது. அஃது என்றும் வாழ்க!” என்று வாழ்த்தினர்.

பரதன் தன் தம்பி சத்ருக்குனனை அழைத்தான். “தம்பி! நாடு முழுவதும் முரசு அறைந்து இராமபிரானை அழைத்து வர சேனையை உடனே தயார் செய்” என்றான்.

இராமன் மீண்டும் வருவான், முடிசூடுவான் என்ற செய்தியைக் கேட்டவுடனேயே நாட்டு மக்கள் அனைவரும் உவகைமிக அடைந்தனர். சந்திரோதயம் கண்டு கடல் பொங்கி கொந்தளிப்பதுபோல மக்கள் கிளர்ந்தெழுந்தனர். யானைகள், குதிரைகள், தேர்கள், வண்டிகள் என கண்ணுக்கெட்டிய தூரம் தயாராகிவிட்டனர். பெருத்த ஆரவாரத்துடன் படைகள் நகரத் தொடங்கின.

படைகளை முன்னே செல்லவிட்டபின் பரதன் தானும் தன் தம்பியுமாக தவக்கோலம் பூண்டு மரவுரி தரித்து தேர்மீதேறி புறப்பட்டான். தாய்மார்கள் மூவரும், அமைச்சர்கள், தூய அந்தணர்கள் ஆகியோர் பரதனைத் தொடர்ந்து சூழ்ந்துகொண்டு சென்றனர். இப்படி நகர்ந்து செல்லும் கூட்டத்தில் இவ்வளவுக்கும் காரணமான கூனியும் உந்திக் கொண்டு நடந்து போவதைக் கவனித்த சத்ருக்குனன் அவளைக் கொன்றுவிட நினைத்துப் பாய்ந்து சென்றான். அவனை பரதன் தடுத்து நிறுத்தினான்.

“தம்பி! தாய் கைகேயி தவறு இழைத்தவள் என்று நான் அவளைக் கொன்றுவிட்டேனானால், அண்ணன் இராமன் என்னை மன்னிக்கமாட்டான். அதனால்தான் நான் அவைளைக் கொல்லவில்லை. இதனை நீயும் எண்ணிப்பார்” என்று சொல்லி தம்பியை சமாதானப் படுத்திக் கூட்டிச் சென்றான்.

இராமன் காட்டுக்குச் செல்கையில் தங்கிய சோலையிலேயே இப்போது இவர்களும் தங்கினார்கள். இராமன் முன்பு தங்கிய சோலையில் அண்ணன் இராமன் முன்பு சயனித்த இடத்தைக் கேட்டறிந்து, அதனை மிதிக்கவும் அஞ்சி, அதன் பக்கத்தில் புழுதி படிந்த வெறுந்தரையில் அன்றிரவைக் கழித்தான். அறுசுவை உண்டியை நீத்து கிழங்கையும் கனிகளையும்கூட உண்ணாமல் பட்டினியாகக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தான். இராமபிரான் அந்தச் சோலையிலிருந்து கால் நடையாகவே நடந்து சென்ற செய்தியறிந்து, தானும் நடந்தே செல்லலாயினான். இப்படி நடந்தே கங்கைக் கரையைச் சென்றடைந்தனர்.

கடல்போன்ற பரதனின் படை பரிவாரங்கள் அனைத்தும் கங்கையின் வடகரையை அடைந்தது, ஆற்றின் மறுகரையிலிருந்து கவனித்த வேட்டுவ அரசன் குகன், இராமபிரான் மீது போர் செய்து அழிப்பதற்காக இந்தப் படை வருகிறது போலும் என கோபமுற்றான். உடனே தனது இடையில் தொங்கிய ஊதுகொம்பை எடுத்து ஊதி, போர் வந்துவிட்டது என்று தோள்பூரிக்க வாயை மடித்து உதடுகளைக் கடித்து கண்கள் தீ உமிழ புறப்பட்டான்.

இதோ வரும் படை ஒரு எலிக்கூட்டம். நான் நாகம் போன்றவன் என்றான். தன் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி கங்கையின் தென்கரை வந்து அடைந்தான். அங்கு தன் படை வீரர்களை நோக்கி “வீரர்களே! நம் அன்பிற்குரிய இராமபிரான் பதினான்கு ஆண்டுகள் கழித்துத் திரும்பிவந்து அரசு கொள்ள இடமின்றி, இப்போதே அவரைத் தொலைத்துவிடும் சூழ்ச்சியோடு அந்தக் கரையில் இந்தப் படை வந்திருக்கிறது. அது மேலே செல்லாதவாறு நாம் தடுத்து அவர்களை இங்கேயே அழித்துவிடவேண்டும்” என்றான்.

“மேகவண்ண இராமபிரான் என் உயிர் நாயகன். அவனை நாடு ஆள விடாதபடி வஞ்சனையால் அரசைக் கைப்பற்றிய மன்னர்கள் வருகிறார்கள். என்னுடைய தீ கக்கும் அம்புகள் அவர்கள் மீது பாயாதா என்ன? அப்படி இவர்கள் என்னிடமிருந்து தப்பிப் போய்விட்டால் மக்கள் என்னை “நாய்க்குகன்” என்று ஏசமாட்டார்களா?”

“ஆழமான இந்த கங்கையாற்றைக் கடந்து இவர்கள் போய்விடுவார்களோ? பெரிய யானைப் படையைக் கண்டு அஞ்சி வழிவிடுபவனா நான்? என்னைப் பார்த்து அவர் “நீ எனக்குத் தோழன்” என்று சொன்னாரே. அதுவன்றோ நான் பெற்ற பேறு. இவர்களை உயிர் பிழைத்துப் போக நான் விட்டுவிட்டால், அறிவிலி இந்த குகன் இறக்கவில்லையே என்று மக்கள் என்னை ஏசமாட்டார்களா?”

“பரதன் தனக்கு அரசு வேண்டுமென்ற ஆசையால், தமையன் என்றும் கருதாது இராமபிரானை அழிக்கத் துணிந்தாலும் இலக்குவன் இருக்கும்போது அது நடக்குமா? அது கிடக்கட்டும், நான் ஒருவன் இருப்பதை இவன் மறந்து விட்டான் போலும். அன்றி என்னைப் பொருட்படுத்தவில்லையா? அரசர் உயர்ந்தோர், வேடர் தாழ்ந்தோர் என்பதனால், வேடர்விடும் அம்புகள் அரசர் மார்பில் தைக்காதோ? அதையும் நான் பார்த்துவிடுகிறேன். இவனை அழிக்காமல் விடமாட்டேன்”.

“மண்ணாசை பிடித்த மன்னர்கள், அவ்வாசையால் எத்தகைய தீங்கையும் செய்வார்கள் போலும். மற்றவர்கள் எப்படி இருந்தாலும் இராமபிரானின் தம்பியாகிய இவன் எப்படிச் செய்யத் துணிந்தான்? என்னிடமிருந்து தப்பிப்பிழைத்துப் போனால்தானே! பார்க்கலாம்.”

“அரசாளப் பிறந்த தலைவன் இராமன் தவம் மேற்கொள்ள, அரசுரிமை இல்லாத இவன் தவறான வழியில் அரசினைப் பெறுவதோ? அதற்கு நான் இடம் கொடேன். இவனைத் தடுத்து அழித்து புகழைப் பெறுவேன். இதில் என் உயிர் போனாலும் எனக்குக் கவலை இல்லை”.

“தனக்கு உரிய நாட்டை இராமபிரான் இவனுக்குக் கொடுத்துவிட்ட பின்பும் இந்த பரதன் நாம் ஆளுகின்ற இந்த காட்டையும் கொடுக்க மனமின்றி படையெடுத்து வந்துவிட்டான் பாரீர்! என்ன கொடுமையிது! ஆகையால் ஆடுகின்ற கொடிகளோடு கூடிய இந்தப் படையினை அழித்து, அதன்பின் இராமபிரானை நாட்டை ஆளும்படி மீட்டுக் கொடுத்து, உலகோர் சொல்லும் புகழை நீங்களெல்லாம் அடையவேண்டும்”.

குகன் இப்படியெல்லாம் பேசினானே தவிர உள்ளூர அவனுக்கு ஒரு பயம். இராமபிரானுக்குத் தன் தம்பியை நாம் அழித்து விட்டோம் என்று கோபம் வந்தால் என்ன செய்வது என்ற கவலை வந்துவிடுகிறது அவனுக்கு.

அப்போது குகனை முன்பே அறிந்தவனான சுமந்திரன் மறுகரையில் தன்னருகில் நின்றிருந்த பரதனிடம் குகனைப் பற்றி கூறுகிறான். “பரதா! அதோ பார். அந்தக் கரையில் தன் படைகளுடன் வந்து கையில் வில்லுடன் நிற்கிறானே, அவன்தான் குகன். இந்த கங்கையின் இரு கரைகளிலும் உள்ள நிலப்பகுதிக்குச் சொந்தக்காரன். உங்கள் குலநாதனாம் இராமனுக்கு உயிர்த் துணைவன். கணக்கற்ற படகுகளுக்குச் சொந்தக்காரன்; மகாவீரன். வீரத்தில் ஆண் யானையைப் போன்றவன்;. வில்லேந்திய வீரர்களையுடைய படையை உடையவன்” என்றான்.

“பரதா! அந்த குகன் வீரம் நிறைந்தவன் மட்டுமல்ல. நெஞ்சம் முழுவதும் அன்பை உடையவன். உன்னுடைய வரவை எதிர்பார்த்து அதோ அந்தக் கரையில் அவன் தன் படைகளுடன் நிற்கிறான் பார்!”

சுமந்திரன் குகனைப் பற்றி ‘உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன், கரைகாணா காதலான்’ என்று சொன்னவை பரதனுக்கு உடனே அவனைக் காணவேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. உடனே தன் தம்பியையும், உடன் அழைத்துக் கொண்டு எழுந்து சென்று கங்கைக் கரையை அடைந்தான். பரதன் அப்படி வந்து நிற்கும் காட்சியை மறுகரையில் நின்ற குகனும் காண்கிறான். பரதன் அணிந்திருந்த மரவுரிக் கோலத்தைப் பார்க்கிறான். பொலிவிழந்து வாடியிருக்கும் அவன் பரிதாப நிலை கண்டு குகனுக்கு பகீர் என்றது.

வான்மீகத்தில் இந்தப் பகுதி கூறுவதாவது:– “இறந்த தந்தைக்குத் தர்ப்பணம் செய்ய பரதன் கங்கைக் கரையை அடைகிறான். அப்போது குகன் இவனைப் பார்த்து சந்தேகப்பட்டு, தன் படைகளைத் திரட்டி எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லிவிட்டு அவன் கருத்தை உணரும் பொருட்டுத் தான் மட்டும் காணிக்கைப் பொருட்களோடு மறுகரை வந்தடைந்தான்”.

குகன் கண்ட காட்சி அவன் மனதைத் துணுக்குறச் செய்தது. மரவுரி உடுத்த உடல், மாசு அடைந்த மெய்; ஒளி இழந்த முகம், கல்லும் கனியும்படியான துயரம் தாங்கிய நெஞ்சம், இவற்றைக் கண்டான் பரதனிடம். குகன் கையில் பிடித்திருந்த வில் நழுவி கீழே விழுந்தது. நெஞ்சம் விம்மியது. செய்வதறியாது திகைத்து நின்று விட்டான்.

இராமன் மீது படையெடுத்து வருகிறான் என்றல்லவோ நினைத்தேன். ஆனால் இவனோ இப்படி வருகிறானே!

இதோ இந்த பரதன் என் நாயகன் இராமனைப் போலவே இருக்கின்றான். அருகில் நிற்கும் அவன் தம்பி, இலக்குவனைப் போலவே இருக்கிறான். தவ வேடம் மேற்கொண்டிருக்கிறான். மனத்தில் அளவற்ற துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். இராமபிரான் சென்ற திசை நோக்கித் தொழுது கொண்டிருக்கிறான். அடடா! எம்பெருமான் இராமனுக்குத் தம்பியராகப் பிறந்தவர்கள் தவறு செய்பவர்களாகவா இருப்பார்கள்? நிச்சயம் மாட்டார்கள்”.

இவன் மனதில் ஏதோவொரு இடுக்கண் துன்புறுத்துகிறது. இராமன் மீது ஆறாத காதல் கொண்டிருக்கிறான். இராமன் மேற்கொண்ட அதே தவக் கோலத்தையே இவனும் மேற்கொண்டிருக்கிறான். இவன் உளக் கருத்தை அறிந்து வருகிறேன்” என்று சொல்லி, தான் மட்டும் ஒரு படகில் ஏறி கங்கையைக் கடந்து வடகரையைச் சென்றடைகிறான்.

“வந்தெதிரே தொழுதானை வணங்கினான், மலர் இருந்த

அந்தணனும் தலை வணங்கும் அவனும் அவனடி வீழ்ந்தான்

தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுடையோர்

சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தியான்”.

படகைவிட்டு இறங்கி வந்து தொழுத குகனை பிரம்ம தேவனும் தலை வணங்கும் தகுதியுடைய பரதன் வணங்கினான். அந்த குகனும் பரதன் அடிகளில் விழுந்து வணங்கினான். தன் அடிகளில் விழுந்து வணங்கிய குகனை பரதன் தூக்கி நிறுத்தித் தந்தையினும் களிகூரத் தழுவினான். இந்த இடத்தில் தொழுதல் என்றால் தரையில் வீழ்ந்து வணங்குதல் என்றும், வணங்குதல் என்றால் தலை தாழ்த்தி வணங்குவது என்றும் கொள்ள வேண்டும்.

வந்து எதிரே தொழுதானை (குகனை) மலர் இருந்த அனதணனும் தலை வணங்கும் அவனும் (பரதனும்) வணங்கினான். அவன் (அந்த குகன்) அவன்அடி வீழ்ந்தான் (பரதன் கால்களில் வீழ்ந்தான்) அப்படி வீழ்ந்த குகனை தந்தையினும் களிகூர பரதன் தழுவினான், அந்த பரதன் தகவுடையோர் சிந்தையிலும் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தியான். இந்த பாடலுக்கு இருவிதமாகவும் பொருள்கூறி வருகின்றனர். யார் யார் அடியில் விழுந்து வணங்கினார் என்பதில் குழப்பத்தைத் தெரிவிக்கின்றனர். எனினும் மேலே கண்ட பொருளே சரியானது. ஏனெனில் அடுத்து வரும் பாடலில் “கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்தெழும் உயிரன் ஆகி, மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான், விம்மினன்” என்று குகன் அடைந்த நிலையை வர்ணிக்கும்போது, குகன் மீண்டும் மண்ணில் வீழ்ந்தான் என்று வருவதால், முன்பும் அவனே மண்ணில் வீழ்ந்து வணங்கினான் என்பது தெளிவாகிறது அல்லவா?

குகன் பரதனிடம் “நீ வந்த காரியம் என்ன?” என்று கேட்கிறான்.

“அயோத்தி அரசுக்கு உரிமையுள்ளவருக்கு அரசைக் கொடுக்காமல் முறைதவறிவிட்டனர், அந்த முறைகேட்டை நீக்கி அயோத்திக்கு உரிமையுள்ள அரசனை அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறேன்” என்கிறான் பரதன். இதைக் கேட்ட குகன் மகிழ்ச்சி பொங்க மீண்டுமொருமுறை, பரதன் காலில் வீழ்ந்தனன். கைகளைக் கூப்பிக்கொண்டு குகன் சொல்லுகிறான்:

“தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத்

தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்துத் தேக்கி

போயினை என்றபோது புகழினோய் தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியினம்மா”.

“பரதா! ராஜ்யத்தை நீ விரும்பவுமில்லை; கேட்கவுமில்லை. தாய் கேட்டு, தந்தை கொடுத்த ராஜ்யத்தை வேண்டாம், இது தவறு என்று சொல்லி மறுத்துவிட்டு, முகத்தில் கவலை படர இராமனைத் தேடி கானகம் வந்திருக்கிறாய் என்பதைக் காணும்போது, பரதா! ஆயிரம் இராமர் உனக்கு இணையாவாரோ?”

“பரதா! உன்னை என்ன சொல்லி புகழுவேன். நானோ கற்றறியா வேடன். சூரியனுடைய பிரகாசமான ஒளி எப்படி சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றின் ஒளியையெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் செய்து பிரகாசிப்பது போல, நீயும் உன் ரவிக்குலத் தொன்றல் அனைவரின் புகழையும் உன் புகழுக்கெதிரே ஒன்றுமில்லாமல் செய்து விட்டாய்”.

இராமபிரானின் குண விசேஷங்களைக் கண்டுதான் குகன் இராமனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தான். அது போலவே பரதனின் குண நலன்களைக் கண்டு இவன் மீதும் பக்தி கொண்டான். இங்கே இராமபிரான் எவ்விடத்தில் தங்கியிருந்தார் என்று குகனிடம் கேட்டான் பரதன். குகனும் அந்த இடத்தைக் காட்டுகிறான். இரு பாறைகளின் இடையில் புற்கள் பரப்பிய இடத்தைக் கண்டான். துடித்துத் தரையில் வீழ்ந்தான். கண்ணீர் விட்டுக் கதறி அழுதான்.

என்னால் அன்றோ அண்ணா உனக்கு இப்படிப்பட்டத் துன்பங்கள் நேர்ந்தன. புல்லில் படுத்தாய், கிழங்கையும், கனிகளையும் உண்டாய். நீ பட்ட துன்பங்களை அறிந்த பின்னரும், நான் உயிர் துறக்காமல் வாழ்கிறேனே.

இராமபிரான் பிராட்டியோடு துயின்றதால் இலக்குவன் அங்கு இருந்திருக்க முடியாது. எனினும் இவர்களைக் காக்கும் பணியைத் தலைமேல் கொண்டிருந்ததால் உறங்கியிருக்கவும் மாட்டான். எனவே குகனை நோக்கிக் கேட்கிறான் “குகனே! இலக்குவன் எங்கே தங்கி இரவுப் பொழுதைக் கழித்தான்?”.

இந்தக் கேள்வியை பரதன் கேட்கவும் குகன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச

வில்லை ஊன்றிய கையொடும் வெய்து உயிர்ப்போடும் வீரன்

கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய், கண்கள் நீர் சோரக் கங்குல்

எல்லை காண்பளவும் நின்றான், இமைப்பிலன் நயனம் என்றான்”.

“பரதா! அண்ணலும் பிராட்டியும் தூங்கும்போது, வில் ஊன்றிய கையனாய், பெருமூச்சுடனும், கண்களில் நீர் சோர விடிய விடியக் கண்விழித்துக் காவல் காத்தான் இலக்குவன்” என்றான் குகன்.

“நானும்தான் இருக்கிறேனே! ஸ்ரீ இராமனுக்கு சேவகம் செய்பவன் என்று சொல்லிக்கொண்டு செயலில் அப்படி நடக்கவில்லையே. மாறாக அவன் பெருந்துன்பம் அடைவதற்கு நானே காரணமாகி விட்டேனே! இலக்குவனோ, தான் அடியவன் என்பதத் தன் செயலால் உணர்த்துகிறான். என்னால் என்ன பயன்?” என்று பரதன் தன்னை நொந்து கொண்டான்.

அன்றிரவு இராமன் படுத்திருந்த இடத்தில் பரதன் படுத்திருந்து மறுநாட்காலை கங்கை ஆற்றைக் கடந்து செல்லும் விருப்பத்தைக் குகனிடம் சொல்ல, அவ்வண்ணமே அவனும் நாவாய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறான். பரதனும் அவனுடன் வந்தவர்களும் படகுகளில் ஏறி கங்கை ஆற்றைக் கடந்து தென் கரையை அடைகின்றனர். அங்கே பரதனுடன் அவனது தாய்மார்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் நிற்கின்றனர். அவர்களில் கோசலையைப் பார்த்து குகன், இவர்கள் யார்? என்கிறான்.

“இவர்தான் தசரத சக்கரவர்த்தியின் முதல் தேவி. மூன்று உலகங்களையும் படைத்த பிரம்மனைப் பெற்றெடுத்த திருமாலாகிய இராமபிரானைத் தன் வயிற்றில் சுமந்தவர், நான் பிறந்தமையால் அந்த மகனை காட்டுக்கு அனுப்பிவிட்டு பெருந்துன்பத்தை அடைந்தவர், இவர்தான் கோசலை” என்றான்.

உடனே குகன் கோசலையின் கால்களில் வீழ்ந்தான், அழுதான். இவனது அன்புகண்டு நெகிழ்ந்த கோசலை பரதனிடம் “இவன் யார்?” என்றாள்.

அதற்கு பரதன் “இந்த நின்ற குரிசில் (வீரன்) இராகவனின் இன்னுயிர் தோழன். இலக்குவனுக்கும், சத்ருக்குனனுக்கும் எனக்கும் மூத்த அண்ணன். பெயர் குகன்” என்றான்.

உடனே கோசலை “என் அருமைக் குமாரர்களே! இனி துன்பத்தால் வருந்தாதீர்கள். இராம இலக்குவர் காட்டுக்குப் போனதும் நல்லதாயிற்று. இல்லாவிட்டால் உங்களுக்கு இப்படியொரு சகோதரன் கிடைத்திருப்பானா? இனி நீங்கள் ஐவீரும் ஒருவர் போல பிரியாமல் ராஜ்யத்தை நெடுநாள் ஆளக்கடவீராக!” என்றாள்.

அடுத்ததாக சுமித்திரையைக் காட்டி, இவர் இலக்குவனையும், சத்ருக்குனனையும் பெற்றெடுத்த தேவியென அறிமுகப் படுத்துகிறான். அடுத்ததாக கைகேயைக் காட்டி, குகன் “இவர் யார்?” எனக் கேட்க, பரதன் சொல்லுகிறான்:

“படர் எலாம் வளர்த்தாளைப் பழிவளர்க்கும் செவிலியைத் தன் பாழ்த்த பாவிக்

குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும் உயிர்ப்பாரம் குறைந்து தேய

உடரெலாம் உயிர் இழந்தவெனத் தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே

இடரிலா முகத்தாளை உணர்ந்திலையோ, இந்நின்றாள் என்னை ஈன்றாள்”.

உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத கொடுமை மிக்க பாவி இவள். இவள் பெற்று வளர்த்தது துன்பங்களையும், பழிகளையுமே! இவள் வயிற்றில் கிடந்ததால் இவளைப்போல் கல் நெஞ்சு எனக்கு இல்லை. இவ்வளவு பேரும் துன்பக் கடலில் துவண்டு கிடக்கையில், இவள் ஒருத்தி மட்டும் துயர் இல்லாதவள் என்பது முகத்திலேயே தெரியுமே! எனவே இவள் யார் என்று உனக்குத் தெரிந்திருக்கலாம். இவள்தான் என்னைப் பெற்றவள்” என்றான் பரதன்.

பரதனின் தாய் என்று தெரிந்ததும் குகன் அவளையும் வணங்கினான். படகுகள் கரை அடைந்தபின் தாயர் சிவிகையில் ஏறிச் செல்ல, பரதனும் குகனும் நடந்து செல்கின்றனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த பரத்வாஜ முனிவ்ரது பெருமையை அறிந்து அவரைக் காண, அவர் ஆசிரமம் சென்றடைந்தனர். முனிவரும் பரதனின் வருகையறிந்து எதிர்கொண்டழைத்துச் சென்றார்.

முனிவர் பரத்வாஜரைத் தன் தந்தைபோல நினைத்து வணங்குகிறான் பரதன். முனிவர் அன்போடு ஆசி கூறுகிறார். முனிவர் பரதனை நோக்கி “ஐயனே! அயோத்தியின் அரச முடிசூடி ஆளும் உரிமை கிடைத்த பின்னும், நீ முனிவர்களுக்குரிய மரவுரி உடுத்து, கானகம் வந்த காரணம் என்னவோ?” என்றார்.

நீ முடிசூடி அரசாள்வதே முறை, அதைவிடுத்து ஏன் கானகம் வந்தாய் என்று முனிவர் கேட்டதால், பரதனுக்கு மனதில் சினம் உண்டாகியது. “அறிவார்ந்த பெரியோய்! தாங்கள் சொல்வது நியாயமல்ல. வேதநாயகனாம் இராமனுக்கு உரிமையுள்ள ராஜ்யத்தை, நான் எப்படி கொள்ள முடியும். அப்படி அவர் ராஜ்யம் ஏற்க மறுப்பாராகில் நானும் பதினான்காண்டுகள் அவருடனே உறைவேன்” என்றான்.

பரதன் கூறிய இம்மொழி கேட்டு பரத்வாஜ முனிவரும் அவருடன் இருந்த முனிவர்களும் மனம் மிக மகிழ்வெய்தினர். உடனே அவர் பரதன் முதலானவர்களைத் தன் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று, விருந்தினர்களுக்குத் தேவையான உணவு வகைகள், உபசரிப்பு முதலானவற்றிற்காக தேவர்களை வேண்டி அக்னியில் ஹோமம் செய்யத் தொடங்கினார்.

தேவலோக மாந்தர் வந்து பரதனுக்கும் அவனுடன் வந்த பரிவாரங்களுக்கும் சிறப்பான விருந்தினைப் படைத்தனர். யானை, குதிரை இவற்றுடன் படை வீரர்கள், அமைச்சர்கள், பிரதானிகள் ஆகியோரும் தாங்கள் நடந்து வந்த களைப்பு தீர பரத்துவாஜ முனிவர் அளித்த விருந்தையுண்டு மகிழ்ந்திருந்தனர்.

ஆயினும் பரதன், எவ்வளவு வற்புறுத்தியும் உயர்ந்த உணவு வகைகளை விலக்கிவிட்டு தவசியர்க்குரிய காய், கிழங்குகளை மட்டுமே உண்டான். இரவு நேரம் வந்தது. படைகள் நன்கு உறங்கி எழுந்தனர். கதிரவன் உதித்தான். அனைவரும் முந்தைய நாள் விருந்தின் மகிழ்வு மறந்து பழைய நிலை அடைந்தனர். பரதனும் சேனைகளும் அங்கிருந்து புறப்பட்டு ஒரு பாலைவனத்தை அடைந்தனர். அந்தப் பாலை நிலத்தையும் மருத நிலம் போலக் கருதி அதனைக் கடந்து சித்திரகூடம் சென்றடைந்தனர்.

பெரும் சேனையின் வரவால் ஏற்பட்ட பேரொலியும், புழுதிப் படலமும் தூரத்தே பார்த்துவிட்ட இலக்குவன் வேகமாய் எழுந்தான். ஒரு குன்றின் மீது ஏறினான். அங்கிருந்து அலைகடல் போல வரும் பரதன் சேனையக் கண்டான். அவனுக்கு கோபம் வருகிறது. தந்தை சொல் கேட்டு கானகம் வந்த இராமனைக் கொல்லவே, பரதன் படையொடு வருகிறான் என ஆத்திரப்பட்டுக் காலால் மலையின் முகட்டை ஓங்கி உதைக்கிறான். அது தூள்தூளாகிறது. அங்கிருந்து தரைக்குத் தாவிக் குதித்து இராமனிடம் ஓடிச் சென்று கூறுகிறான்.

“அண்ணா! பரதன் உன்னை மதிக்காமல் பெரும் படையுடன் உன்னைத் தாக்க வருகிறான்” என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் உடைவாளைக் கட்டிக் கொள்கிறான். காலில் வீரக்கழலை அணிந்து கொள்கிறான். அம்புறாத் தூணியைத் தோளில் எடுத்து மாட்டிக் கொள்கிறான். கவசத்தை அணிந்து கொண்டு தன் வரிவில்லைக் கையில் ஏந்தியபடி, இராமனின் திருவடிகளைத் தொட்டு வணங்கி எழுந்து கூறுகிறான்.

“அண்ணா! இம்மை, மறுமை, இரண்டையும் இழந்துவிட்ட இந்த பரதன் தோள்வலியையும், அவன் படை வலியையும், நீயே எல்லாம் என்று உன் பின்னே வந்துள்ள என் தோள்வலியையும் பராக்கிரமத்தையும் இப்போது பார்!” என்றான்.

பரதனுடைய சேனையைத் தான் எப்படிப் பொடிப்பொடியாக்குவேன் என்பதையும், அவன் படைகள் தன் கணைகளால் படப்போகும் பாட்டையும் எடுத்துக் கூறுகிறான். எல்லாவற்றையும் பொறுமையாகப் புன்னகையோடு கேட்டுக்கொண்ட இராமன் சொல்லுகிறான்.

.”தம்பி! இலக்குவா! நீ நினைத்தால் ஈரேழு பதினான்கு உலகத்தையும் கலக்குவாய் என்பது எனக்குத் தெரியும். உன்னை அப்படிச் செய்யாமல் தடுப்பதும், முடியாத காரியம்தான்; என்றாலும்கூட தம்பி! உனக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பொறுமையாகக் கேட்பாயா” என்றான் இராமன்.

“வலிய தோளுடைய லக்ஷ்மணா! நம் குலத்தில் தோன்றிய மன்னர்களுள் குலதர்மத்தைக் கைவிட்டவர்கள் எவருமில்லை. லக்ஷ்மணா! நீ என் மீது அளவு கடந்த அன்பை வைத்துவிட்டாய். அந்த அன்பின் மிகுதியால் நீ பரதனது இயல்பை அறியாமல் பேசுகிறாய். அவன் செயல்கள் அனைத்தும் வேத நெறிகளிலிருந்து பிறழாதவை. இதனை நீயே பின்பு உணர்ந்து கொள்வாய்”.

“பரதனும் உன்னைப் போலவே என்மீது அன்பு கொண்டவன். அரசுரிமையை ஏற்க அவன் விரும்பியிருக்க மாட்டான். அதனால் என்னை அழைத்து வரும்படி தந்தை சொல்லியிருக்கலாம், தன் இயல்பான அன்பினாலும், என்னை அழைத்துப் போகவுமே அவன் வருகிறான் என்பதைத் தவிர வேறுவிதமாக எண்ணுவது அறிவுடமை அல்ல” என்றான் இராமன்.

“அதுமட்டுமல்ல, பரதன் என்னோடு போர் புரிவான் என்று நினைப்பதேகூட அறிவுடமை ஆகாது லக்ஷ்மணா! தர்ம தேவதை போன்ற பரதனை, நல்ல குணத்திற்கெல்லாம் உரையாணி போன்றவனுமான பரதனை, நீ இவ்வாறு எண்ணுதல் தகுமா? அவன் இங்கு வருவது என்னைக் காணும்பொருட்டே. இதை நீயே பின்னர் நிச்சயம் காணப்போகிறாய்”. இவ்வாறு இராமன் தன் தம்பியிடம் கூறுகிறான்.

இப்படிக் கூறிவிட்டு இலக்குவனோடும் தன் தம்பி பரதனை எதிர்நோக்கி இராமன் நின்றபோது, பரதனும் தன் தம்பி சத்ருக்குனன் பின்வர இராமன் முன் வந்து சேர்ந்தான். இப்போது பரதன் எப்படி இருந்தான் என்பதை கம்பர் பெருமான் கூறுகிறார்.

“தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்

அழுது அழி கண்ணினன்; அவலம் ஈது என

எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை

முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான்”.

தலைமீது குவித்த கரங்கள்; வாடிய மேனி; அழுது அழுது நீர் சோரும் கண்கள்; துயரத்தின் முழு வடிவம் போல வந்து தன் எதிரே நிற்கும் பரதனை, அனைத்தையும் உணர்ந்த இராமன் கூர்ந்து நோக்கினான். பிறகு பேசுகிறான்: “பரதா! அயோத்தியில் தந்தை நன்கு நலமாக உள்ளாரா?”.

“ஐயனே! உன் பிரிவாலும், என்னைப் பெற்றவளின் வரம் எனும் எமனாலும், சத்தியத்தை இந்த பூமியில் நிலைநிறுத்திவிட்டு, அப்பா வானுலகம் போய்விட்டார்” என்கிறான் பரதன்.

மன்னன் தசரதன் சுவர்க்கம் அடைந்தான் என்ற செய்தி கேட்டு, புண்ணில் வேல் பாய்ந்தது போல் உணர்ந்து, கண்கள் சோர, மனமும் சுழல, இராமன் தரையில் வீழ்ந்தான். சிறிது நேரம் உணர்வு இல்லாமல் கிடந்தான். பிறகு நினைவு திரும்பி புலம்பினான், அழுதான், மனம் வருந்தி பெருமூச்செறிந்தான். தந்தையின் நற்குணங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதான். அருகிலிருந்த அனைவரும் இராமனைத் தேற்றுகின்றனர். அப்போது குலகுருவான வசிஷ்டர் இராமனிடம் கூறுகிறார்.

“இராமா! நீ உன் தந்தைக்காக வருந்துவதை விட்டு, அவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்?” அவரவர் செய்த வினைப் பயன்களுக்கு ஏற்ப உலகில் பிறந்து இன்ப துன்பங்களை நுகரும் உயிர்கள், அந்நுகர்ச்சிக்குரிய காலம் முடிந்தவுடன் அவ்வுயிர்களை எடுத்துச் செல்லும் யமன் நல்ல உயிர் கெட்ட உயிர் என்று பார்ப்பதில்லை. பிறந்த குழந்தைகளேகூட மாண்டுவிடுகிற காட்சியைக் காணுகின்ற நாம் அறுபதினாயிரம் ஆண்டுகள் சிறப்புற ஆண்ட சக்கரவர்த்தியின் இழப்பின் பொருட்டு வருந்துவது சரியில்லை”.

“இவ்வுலகமே பஞ்சபூதங்களின் சேர்க்கை. அவற்றுக்கே அழிவு உண்டு எனும்போது, அவற்றால் உருப்பெற்று ஆயுள் வரையறுக்கப்பட்ட ஜீவராசிகள் அழிவதில் என்ன வியப்பு இருக்கிறது?”.

“உயிர் வாழ்க்கை என்பது சில காலம் ஒளிவிடும் ஒரு விளக்கு. அவ்விளக்கு எரிவதற்கு வேண்டிய நெய், திரி, தீயுமாக வினை, காலம், ஊழ் என்பன அமைகின்றன. நெய்யும் திரியும் அற்றால் விளக்கு அணைவது போல, வினைப்பயனும், காலமும் ஊழும் முடிந்தால் வாழ்க்கையாகிய விளக்கு அணைவது திண்ணம்.”

“தீவினை செய்து, அதன் பயனாய், இம்மை, மறுமை இரண்டிலும் துன்பத்தையே நுகரும் உயிர்கள் அனேகம். உன் தந்தை முன்செய்த நற்பயனால் உன்னை ஈன்றான். அதனால் பரமபதம் அடைந்து நற்கதி அடைந்தான். ஆகவே அவனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைவிட வேறு என்ன இருக்கிறது?”.

“இராமா! கவலையை ஒழி. தந்தைக்குரிய கடன்களை செய்துமுடி. அதுவே உனது முதற் கடமை” என்றார் வசிஷ்டர்.

இராமன் கலக்கம் நீங்கினான். நீராட நதித்துறைக்குச் சென்றான். நீராடிவிட்டு வசிஷ்டர் வழிகாட்ட நீத்தார் கடன்களை நன்கு செய்து முடித்தான். பிறகு பரதன் முதலிய பரிவாரங்கள் புடைசூழ பர்ணசாலை சென்றடைந்தான்.

பெருஞ்சிறப்புகளுடன் அரண்மனையில் வாழவேண்டிய இராமன், இங்கே எளிய குடிலில் வாழ்வது கண்டும், பரிவாரங்கள் தோழியர்கள் புடைசூழ இருத்தற்குரிய பிராட்டி தனியளாய் இருப்பது குறித்தும் பரதன் மீண்டும் வருத்தமடைந்தான். சீதையின் கால்களில் விழுந்து புலம்புகிறான். மன்னனின் இறப்புச் செய்தியறிந்து சீதையும் வருந்தி கண்ணீர் சிந்தி அழுகிறாள்.

தாய் கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகியோரை அழைத்துக் கொண்டு சுமந்திரன் வருகிறான். இராமன் தாய்மாரை வணங்குகிறான். இராமனைக் கண்டதும் அனைவரும் மனம் நொந்து வருந்துகின்றனர். தாய்மார்கள் சீதையைத் தழுவிக்கொண்டு வருந்து கின்றனர். அன்றைய பொழுது சாய்ந்தது. சூரியனும் தசரதனுக்கு பித்ருக்கடன் செய்துவிட்டு மூழ்குவது போல கடலுள் மூழ்கினான்.

மறுநாட்காலை, அனைவரும் கூடியிருந்த அவையில் இராமபிரான், பரதன் வந்த காரியத்தை வினவினான். முடிசூடாமல் இங்கு ஏன் வந்தாய் என்றான் இராமன். இப்படிக் கேட்ட இராமனை பரதன் நெடுநேரம் பதில் கூறாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பெரியோர்கள் ஏற்றுக் கொள்ளமுடியாத வரங்களால் உன்னை தவநிலை ஏற்கச் செய்தவளும், சக்ரவர்த்தியின் உயிரைப் போக்கடித்தவளுமான பாவி கைகேயியின் வயிற்றில் பிறந்துவிட்ட எனக்கு என்ன தவம் வேண்டிக் கிடக்கிறது?. தவம் எனக்குப் பொருந்தாது. உயிர் விடுதலே எனக்குத் தகும். ஆனால் அப்படிச் செய்யாமல் இருக்கிறேனே! நீ முடிசூடாமல் தவ வேடங்கொண்டு இங்கே ஏன் வந்தாய் என்று கேட்கிறாயே! அப்படி நான் அரசு மேற்கொள்வது மரபுக்கு உகந்ததோ?”.

“கற்பு நெறி தவறிய மகளிரின் குணமும், பொறுமை நீங்கிய தவ ஒழுக்கமும், அருள்நெறி தவறிய தர்மமும், மரபுவழி தவறிய அரசாட்சியும் முன்னேறுமா?”

“அரசுக்கு உரிமையுள்ள நீ, அதனை நீத்து தவம் மேற்கொண்டதும் தவறு. மூத்தவன் நீ இருக்க, நீ முறையின்றி அரசை கைவிட்டுக் காட்டுக்கு வரவும், அதனால் உன் பிரிவினால் தந்தை இறக்கவும், அந்தத் தருணம் பார்த்து நான் அரசைக் கைக்கொண்டு ஆள்வேனானால், சோர்ந்த நேரத்தில் நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளும் பகைவனுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?”

“தந்தை உன்னைக் காட்டுக்கு அனுப்பி, தானும் இறந்து போய் மக்களையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டான்; எனவே தந்தையே தீமை செய்தவர் ஆகிறார்”.

பரதன் பேசுவதைக் கேட்டுக் கொண்ட பிறகு இராமன் சொல்கிறான், “வெற்றி வீரனே! பரதா! நன்னெறிகளும், சத்தியமும், நியாயங்களும், மேன்மையும், தர்மம் முதலானவைகளும், வேத சாஸ்திரங்களைக் கைவிடாத அரசர்களுடைய கட்டளையாலே உலகத்தில் நிலைத்து இருக்கின்றன. இவை போன்ற நன்னெறிகளுக்குக் காரணம், பெற்றோர்களே என்பதை நீ உணர்வாயாக!”.

“தாய் வரம் கேட்டாள். தந்தை கொடுத்தான். அந்த பிதுர்வாக்ய பரிபாலனம் செய்ய நானும் கானகம் வந்தேன். அப்படி நான் மேற்கொண்ட தர்மத்திலிருந்து மாறிவிடவேண்டுமென்பது உன் விருப்பமா? பெற்றோர் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதே பிள்ளைகளின் கடமை. நான் அவர் சொல்லை மீறியிருந்தால் பொல்லாத பாவத்துக்கு அல்லவா ஆளாவேன்”.

“கைகேயி பெற்ற வரத்தினாலும், தந்தை கொடுத்த வரத்தினாலும் நாடு ஆளும் உரிமை உன்னுடையதே. அதனை மறுக்காமல் ராஜ்யத்தை நீ ஆளவேண்டும்” என்கிறான் இராமன்.

“அண்ணா! உன் கூற்றுப்படியே, ராஜ்யம் என்னுடையது என்றால், இப்போது நான் அதை உங்களுக்கு உவந்து அளிக்கிறேன், ஏற்றுக்கொள்!. நாடு அரசன் இல்லாமல் தவிக்கிறது. நீ வந்து முடிசூட்டிக்கொண்டு நாட்டைக் காப்பது உன் கடமை”.

“பரதா! அப்படி நான் நாட்டுக்குத் திரும்பினால், நான் ஒப்புக்கொண்ட வனவாச காலமான பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டதாக ஆகிவிடுமா? வாய்மை காத்தலினும் சிறந்தது வேறில்லை என்பது உனக்குத் தெரியாதா? பரதா! நம் தந்தையார் என்னை பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழும்படி கட்டளையிட்டார். அந்தக் காலம்வரை நாட்டை ஆளும்படி உனக்குக் கட்டளையிட்டார். அந்த ஆட்சியைத் தந்தை ஆணைப்படி நீ ஆளுதலே முறையாகும். அதனை நீயாக வேண்டாவிட்டாலும் இப்போது நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அரசை ஏற்றுக் கொள்!”. என்றான் இராமன்.

இனியும் இந்த விவாதத்தைத் தொடரவிடக்கூடாது என்று எண்ணிய வசிஷ்ட முனிவர் பற்பல தர்மங்களை எடுத்துரைத்து இராமனையே நாட்டை ஆளும்படி கேட்டுக் கொள்கிறார். இதைக் கேட்ட இராமனுக்கு கோபம் உண்டாகிறது.

“நேர்மையான செயலைச் செய்வேன் என்று நான் உறுதி மேற்கொண்டபின் அதனை மீறுதல் எவர்க்கும் ஆகாது. எனவே, கொண்ட கொள்கையினின்றும் நான் நழுவுதல் நடக்காது” என்றான் இராமன்.

அப்படியானால் தானும் காட்டிலேயே தங்கிவிடுவதாக பரதன் கூறுகிறான். தாங்கள் தவம் புரிந்து வேண்டிய காரியம் நடைபெறாமல் போய்விடுமோ என்று அஞ்சி தேவர்கள் வானத்தில் கூடினார்கள். தேவர்கள் இராமனிடம், தான் கொண்ட பிரதிக்ஞைப்படி காட்டில் இருப்பதும், பரதன் நாட்டை ஆளுவதும்தான் முறை என்கிறார்கள்.

“பார்! தேவர்களே சொல்லிவிட்டார்கள், பரதா! நீதான் நாட்டை ஆளவேண்டும்” என்றான் இராமன். அப்போது பரதன் ஒரு பிரதிக்ஞை செய்கிறான். “அப்படியானால் அண்ணா! பதினான்கு ஆண்டுகள் முடிந்த அடுத்த கணம் நீ வந்து ராஜ்ய பாரத்தை ஏற்கவேண்டும். அப்படி இல்லையென்றால் நான் தீப்புகுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்கிறான் பரதன்.

இராமபிரான் இதற்கு ஒப்புக் கொள்கிறான். “அண்ணா! உனது பாதுகைகள் இரண்டையும் நீ எனக்குத் தர வேண்டுமென” பரதன் கேட்டுப் பெற்றுக் கொள்கிறான். பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன் அவற்றைத் தன் தலையிலே வைத்துக் கொண்டு தரையில் வீழ்ந்து இராமனை வணங்குகிறான்.

பின்னர் பரதன் மற்றும் பரிவாரங்கள் புடைசூழ திரும்பப் பயணப்பட்டு அயோத்தி நகருக்குள் செல்லாமல், நந்திக்கிராமம் எனும் இடத்தை அடைந்தான். அங்கே இராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்துத் தன் ஐம்பொறிகளை அடக்கி நீர் சோரும் கண்களோடு தவம் புரிந்து வாழ்ந்தான்.

இராமன் முதலியோர் பயணப்பட்டு மேலும் தென் திசை நோக்கிச் செல்லலாயினர்.

(அயோத்யா காண்டம் முற்றும்)

4


ஆரணிய காண்டம்


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய

இராம காதை

3. ஆரணிய காண்டம்.

பரதன் தன் சுற்றத்தார் பரிவாரங்களோடு காட்டுக்கு வந்து, இராமபிரானைச் சந்தித்து எவ்வளவோ வேண்டிக் கொண்டும் அவர் நாடு திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், வேறு வழியின்றி இராமனுடைய பாதுகைகளை வாங்கித் தன் தலைமேல் வைத்துக் கொண்டு அவரை நமஸ்கரித்துவிட்டு நந்திக்கிராமத்தை அடைவதற்காகச் சென்றுகொண்டிருந்தான். அதே நேரத்தில் ஆரண்யத்தில் இராமபிரன் தம்பி இலக்குவனோடும், சீதாபிராட்டியோடும் தெற்கு நோக்கிப் பயணப்பட்டார்கள்.

அப்படிப் பயணப்பட்டு வெகுதூரம் நடந்து அத்திரி மகரிஷி வாழும் ஆசிரமத்தை அடைகின்றனர். இந்த அத்திரி முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர். காம, வெகுளி மயக்கங்களை வென்றவர். தனது ஆசிரமத்தை நாடி வந்திருக்கும் இவர்கள் யார் என்று கேட்டறிந்த முனிவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அன்று இராம லக்ஷ்மணர், சீதை ஆகியோர் அந்த முனிவருடனும் அவரது மனைவியான கற்பிற் சிறந்த அனுசூயை என்பாரோடும் தங்கினர். அனுசூயை என்றால் பொறாமையற்றவள் என்று பொருள்.

இந்த அனுசூயை தக்ஷபிரஜாபதி என்பவரின் புதல்வியருள் ஒருத்தி என்றும் இவள் ஒருமுறை கங்கை நதியைப் பெருகச் செய்து நாட்டின் பஞ்சத்தைப் போக்கினாள் என்றும், பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து பெரும் பேறு பெற்றவள் என்றும், சீதையின் அருங்குணங்களைக் கண்டு புகழ்ந்து அவளுக்குக் கற்பின் சிறப்பை உபதேசித்து, என்றும் மாசுபடியாத பட்டாடைகளையும், நறுமணம் குன்றாக் கலவைச் சாந்தையும், என்றும் மாறா இளமைத் தோற்றத்தையும் வழங்கி ஆசீர்வதித்தாள் என்றும் வான்மீகத்தில் காணப்படுகிறது.

அனுசூயை சீதைக்கு விசுவகர்மாவினால் உருவாக்கப்பட்ட திவ்ய மங்களகரமான இரண்டு குண்டலங்கள், பொன்மயமான இரண்டு பட்டாடைகள், பரிமளக் கலவைப்பூச்சு முதலியனவற்றை, விரும்பி அளித்தாள் என்று அத்யாத்ம இராமாயணத்தில் வருகிறது.

அனுசூயையின் கற்பு நிலையைச் சோதிக்க வந்த திரிமூர்த்திகளையும் அம்மங்கை நல்லாள் குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டு ஆட்டி வளர்த்ததாக புராணங்கள் கூறும்.

அங்கிருந்து புறப்பட்டு, இராமன், இலக்குவன், சீதை ஆகியோர் தண்டகவனம் எனும் தண்டகாரண்யம் வந்து சேர்கிறார்கள். இந்த தண்டகாரண்ய வரலாறு வருமாறு:

இட்சுவாகு மன்னனின் மகன்களில் ஒருவன் தண்டன். இந்த தண்டன் தீய ஒழுக்கமுடையவன். எனவே மன்னன் இவனை நாட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறான். அவன் தென்னாடு வந்து ஆங்கே ஓர் பகுதியைப் பிடித்துக் கொண்டு ஆண்டு வருகையில், அங்கு அசுரகுருவான சுக்கராச்சாரியாரின் மகள் ஒருத்தியைத் தகாத முறையில் காதலிக்க, அதனை அறிந்த அம்முனிவர் தண்டன் அழியவும், நாடு மணல்மாரி பெய்து பாழாகவும்படியும் சபித்தார். அப்பிரதேசமே பெரும் காடாக மாறி தண்டகாரண்யம் எனப் பெயர் பெற்றது என்பது புராணம்.

இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராதன் எனும் கொடிய அரக்கன் எதிரே வருகிறான். இவ்வரக்கன் பல யானைகள், அதைவிட இருமடங்கு சிங்கங்கள், பதினாறு யாளிகள் இவற்றின் பலங்கொண்டவன். அவன் கையில் கொடிய மும்முனை சூலம் ஏந்தியிருந்தான். அவன் ஐம்பெரும் பூதங்களும் ஒன்று சேர்ந்ததைப் போன்ற உருவத்தையுடையவன். இடி போன்ற உரத்த குரலையுடையவன். பிரமதேவன் அளித்த வரத்தால் இருபத்தையாயிரம் யானை பலம் கொண்டவன். இத்தகைய விராதன், இராம லக்ஷ்மணரின் எதிரில் வந்து நிற்கிறான்.

வந்தவன் ஒரே கணத்தில் சீதா பிராட்டியைத் தன் ஒரு கையால் அள்ளிக்கொண்டு ஆகாய மார்க்கத்தில் செல்லத் தொடங்குகிறான். திடீரென்று வந்து ஓர் அரக்கன் தேவியை தூக்கிச் சென்றதும், இராமனும் இலக்குவனும் திகைத்தனர். கோபம் மேலிட தங்கள் வில்லை எடுத்து நாணைப் பூட்டி, விராதனைக் கூவி அழைத்து “அடே! அற்பனே! இப்படியொரு வஞ்சகம் செய்துவிட்டு எங்கே போகிறாய்? திரும்பு” என்றார்கள்.

விராதன் சொல்லுகிறான், “மனிதப் பதர்களே! பிரமதேவன் அளித்துள்ள வரத்தினால் எனக்கு மரணம் இல்லை. உலகத்தில் உள்ளோர் அனைவரையும் ஆயுதம் இல்லாமலே அழித்துவிடவல்ல ஆற்றல் படைத்தவன் நான். போனால் போகிறது, உங்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன். இந்த பெண்ணை என்னிடம் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடிவிடுங்கள்” என்கிறான்.

இராமன் சிறிய புன்னகை புரிந்தான். இவன் அறியாமையை எண்ணி, தன் வில்லின் நாணை இழுத்து ஒரு பேரொலியை எழுப்பினான். அவ்வொலி ஏழு உலகங்களும் அஞ்சும் வண்ணம் பேர்முழக்கமாகக் கேட்டது. ஒரு கொடிய பூனையின் வாயில் சிக்கித் தவிக்கும் கூண்டுக் கிளிபோல அன்னை அவ்வரக்கன் பிடியில் அஞ்சிக் கதறிக்கொண்டிருந்தாள். பிராட்டியைக் கீழே விட்டுவிட்டு, அவ்வரக்கன் மிகுந்த கோபத்துடன் தன் கையிலிருந்த கொடிய மும்முனை சூலத்தை இராமன் மீது வீசினான்.

அவன் வீசிய அந்தச் சூலாயுதம் அஷ்டதிக் கஜங்களும் நடுங்க, அனைத்துலகங்களும் அஞ்சி நடுங்க, மின்னலோடு விரைந்து இராமனுடைய மார்பை நோக்கி வருகிறது. இராமன் தன் கோதண்டத்தினின்றும் ஓர் அம்பைப் பூட்டி அந்த அரக்கன் வீசிய சூலத்தின் மேல் எய்தலும், அந்த சூலம் இரண்டாக உடைந்து வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழுவதைப் போல பூமியின் எல்லையில் போய் விழுந்தது. இதனால் அரக்கனின் கோபம் மேலும் அதிகமாகியது. மலைகளையெல்லாம் வேரோடு பிடுங்கி இராமன் மீது எறிகிறான். அப்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் மலைகளை இராமன் தன் வாளியால் அடித்து, அவை மீண்டும் அவ்வரக்கன் மீதே விழும்படி செய்கிறான்.

காயங்களால் புண்பட்ட உடலோடு விராதன் ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி இராமன் மீது வீசுகிறான். இராமன் நன்கு அம்புகளை ஏவி, அந்த மரத்தைத் துண்டு துண்டாக்கி கீழே தள்ளிவிட்டு, பன்னிரெண்டு அம்புகளை அவ்வரக்கனின் உடலின் பல பாகங்களிலும் உட்புகுமாறு செலுத்த, அவன் அலறி மேலும் கோபத்துடன் காட்டுப் பன்றிபோலத் தன் உடலை உதறுகிறான்.

அவன் உடலில் அம்பு துளைத்த பகுதிகளில் இரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது. உடல் சோர்வுறுகிறது. இவன் சாகா வரம் பெற்றவன் அதனால் எந்த ஆயுதத்திற்கும் இவன் சாகவில்லை. மலைபோல கிடக்கும் இவன் கரங்களை வெட்டிவிடுவோம் என்று இராமனும் இலக்குவனும் முடிவு செய்து கொண்டு தங்கள் உடைவாளை எடுத்துக் கொண்டு அவன் தோள்மீது ஏறிவிடுகிறார்கள்.

மகா கோபமடைந்த அவ்வரக்கன், அவர்களை அப்படியே அழுத்திப் பிடித்துக் கொண்டு வானத்தில் எழுந்து செல்ல முயல்கிறான். இராம லக்ஷ்மணர்களைத் தூக்கிக் கொண்டு அரக்கன் வானத்தில் பறப்பதைக் கண்டு தரையிலிருந்த சீதை மனம் பதைத்தாள். “அரக்கனே! அவர்களை விட்டுவிடு. என்னை உண்டு கொள்” என்றாள், வாய் குழறி அழுதாள்.

இதனைக் கண்ட இலக்குவன் இராமனிடம் “தேவி மனம் வருந்தி அழுதுகொண்டிருக்க, நீங்கள் இவனிடம் இப்படி விளையாடலாமா?” என்று கேட்டதும், இராமன் “லக்ஷ்மணா! இந்த கொடிய காட்டை இவன் மீது அமர்ந்து கடந்துவிட எண்ணினேன். இவனைக் கொல்வது ஒரு பொருட்டே அல்ல. இதோ பார்!” என்று சொல்லிக்கொண்டே தன் காலால் அந்த அரக்கனை எட்டி உதைக்க, அவன் கீழே விழுந்தான்.

தங்கள் வாளால் அவன் தோள்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தினர். பின் அவன் உடலினின்றும் கீழே குதித்தனர். அப்போதும் கோபம் வீறிட்டெழ, அந்த அரக்கன் தாக்குவதற்கு ஓடிவர, இராமன் “லக்ஷ்மணா! இவனை பூமிக்கடியில் புதைத்துவிடுவோம்” என்று சொல்லி காலால் உந்தித் தள்ளவும், அவன் போய் ஓர் ஆற்றின் கரையிலிருந்த பெரும்பள்ளத்தில் வீழ்ந்து புதைந்துபோனான்.

இந்த விராதன் ஒரு கந்தர்வனாக இருந்தவன். குபேரன் இட்ட சாபத்தால் கொடிய அரக்கப் பிறவி எடுத்தான். இராமன் காலால் உதைபட்டதும் அந்த சாபம் நீங்கி அவனுடைய பழைய கந்தர்வ உடல் கிடைக்கப்பெற்றான். மண்ணில் புதையுண்ட அந்த உடலினின்றும் ஹிரண்யகர்ப்பம் எனும் முட்டையிலிருந்து பிரம்மன் எழுந்ததைப் போல அந்த கந்தர்வன் எழுந்தான்.

அந்த கந்தர்வன் இராமபிரான் கால்களில் வீழ்ந்து பணிந்து போற்றுகிறான். “இராமா! உனது திருவடி என்மீது பட்டதால், என் இருவினைகளும் தீர்ந்து பிறவிக் கடல் கடந்தேன்” என்றான்.

“உனக்கு எப்படி இந்தக் கதி ஏற்பட்டு அரக்கனாக உருவெடுத்தாய்?” என இராமன் கேட்கவும், விராதன் சொல்லுகிறான் “பரம்பொருளே! இராமா! நான் வானுலகில் குபேரனது ஆட்சிக்கு உட்பட்டவன். தும்புரு எனும் கந்தர்வனாக வாழ்ந்து கொண்டிருந்தேன். தேவலோகத்தில் அரம்பை எனும் பெண்ணிடம் காதல் கொண்டு அவளோடு கூடினேன். இதைக் கண்டு என்னை அரக்கனாகப் பிறக்கும்படி குபேரன் சாபமிட்டான். அழுது புரண்டு என் தவறுக்காக வருந்தி, எனக்குச் சாப விமோசனம் வேண்டியபோது, குபேரன் “நீ இராமபிரான் காலடி பட்டு சாப விமோசனம் அடைவாய்” என்றான். ஆதிமூலமே! அன்று முதல் இன்று வரை அறிவற்ற நான் நன்மை தீமை தெரியாமல் தீய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். நின் பொற்பாதம் என்மேல் பட இன்று சாபம் நீங்கப் பெற்றேன்” என்றான் விராதன்.

“ஐயனே! இதுவரை நான் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருள்வாயாக!” என்று சொல்லி அந்த கந்தர்வன் வானுலகு சென்றான். அங்கிருந்து மூவரும் பயணப்பட்டு ஒரு சோலையை அடைகின்றனர்.

தண்டக வனத்திலே வாழ்ந்த முனிவர்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. வரண்ட பாலைவனத்தில் தண்ணீருக்கு ஏங்குபவனுக்கு குளிர்ந்த நீரோடை கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அப்படி மகிழ்ந்தனர் அந்த முனிவர்கள். ஏனென்றால் அரக்கர்களின் தொல்லைகளால் அவதியுறும் அவர்களுக்கு இராமனின் வரவு மகிழ்ச்சியை அளித்தது. கன்றைப் பிரிந்து காட்டில் மேய்வதற்குச் சென்ற தாய்ப்பசு வீடு திரும்பும்போது அதன் கன்றுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அவர்களுக்கு. கடலில் மூழ்கி இறக்கும் தருவாயில் ஒரு மரக்கலத்தைக் கண்ட மகிழ்ச்சி அவர்களுக்கு. அனைவரும் ஒன்று சேர்ந்து இராமனிடம் சென்றனர். அவனது தோற்றத்தைக் கண்டு மெய்மறந்து நின்றனர். இராமன் தொழும் ஒவ்வொரு முறையும் ஆசிகூறி மகிழ்ந்தனர்.

அந்த முனிவர்கள் அம்மூவரையும் அழகிய ஓர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். இராமா! இனி நீங்கள் இங்கேயே தங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அன்று இரவு முனிவர்கள் அவரவர் இடம் சென்று தங்கிவிட்டு, மறுநாள் கூட்டமாக வந்து இராமனை தரிசித்தனர்.

“முனிவர்களே! உங்களுக்கு என்ன குறை?” என்று இராமன் வினவ, முனிவர்கள் சொல்கிறார்கள்: “இராமா! தசரதகுமாரா! எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தைக் கேள்! இரக்கம் என்ற உணர்வு சிறிதும் இல்லாத அரக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். தர்மம் என்ற சொல்லுக்கே பொருள் தெரியாதவர்கள். அவர்கள் செய்கின்ற அநியாயங்கள் காரணமாக அறநெறி துறந்தோம்; தவச்செயல் நீத்தோம்; கடும் புலி வாழும் காட்டில் வாழ்கின்ற மான்களைப் போல ஆனோம். எங்களுக்கு நற்கதி கிடைக்குமா?”

“நாங்கள் தவவழி ஒழுகவில்லை; மறைகளை ஓதவில்லை; ஓதுவோர்க்கு உதவி செய்யவும் இல்லை; தீ வளர்த்து அக்னிஹோத்ரம் செய்யவில்லை; நெறிமுறைகளை நீத்தோம்; எனவே அந்தணர்களாக வாழ்வதையும் நீத்தோம்”

“இந்திரனிடம் சென்று முறையிடலாமென்றாலோ, அவனே அரக்கர்களுக்குப் பணிவிடை செய்பவனாக இருக்கிறான். பின்பு நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? நாங்கள் செய்த தவத்தின் பயன்தான் இப்போது நீ இங்கே வந்திருப்பது. நாங்கள் இருட்டில் வாழ்ந்து கொண்டிருந்தோம், அருளுடைய இராமா! சூரியன் உதித்தது போல நீ வந்திருக்கிறாய். சூரிய ஒளியில் விலகும் இருளைப் போல எங்கள் துயரங்களும் நீங்கவேண்டும்”.

உடனே ரவிக்குலத் தோன்றல் ஸ்ரீ இராமன் முனிவர்களைத் தேற்றி “கவலையை விடுங்கள். உங்களுக்கு இடர் புரிபவர் எவரே ஆயினும், அவர்களை வேறு அண்டத்திற்குச் சென்று ஒளிந்து கொண்டாலும் விடேன். அவர்கள் என் அம்புக்கு இரையாவது திண்ணம். அஞ்சவேண்டாம்” என்றான்.

“முனிவர்களே! என் தந்தை தசரத மகாராஜா மாண்டுபோனதும்; தாய்மார்கள் துயரம் அடைந்ததும்; அருமைத் தம்பி என்னுடன் கஷ்டப்படவும்; என் நகரத்து மாந்தர்கள் அளவற்ற துன்பமடைந்ததும்; நான் வனம் போந்ததும், நான் செய்த புண்ணியத்தின் பலன் என்று நினைக்கிறேன்.

இராமபிரான் இப்படிச் சொன்னதும் முனிவர்கள் “இராமா! இராமா! அப்படியானால் நீ வனத்தில் வாசம் செய்ய வேண்டிய காலம் முழுவதும் இங்கேயே தங்கி, எங்கள் துன்பங்களை நீக்கி வாழவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

“முனிவர்களே! அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி இராமன் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி வழி அனுப்பி வைக்கிறான். அந்த இடத்தில் அவர்கள் பத்து ஆண்டுகளைக் கழிக்கின்றனர். பின்னர் அகத்திய முனிவரை தரிசிக்கக் கருதி அவ்விடம் விட்டு நீங்கினர். அகத்திய முனிவரை தரிசிப்பதற்காக வந்து கொண்டிருந்த இராமபிரானை ‘நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்த முனிவர்’ அகத்தியரே எதிர்கொண்டு வரவேற்றார்.

தேவர்களின் பகைவரான விருத்திராசுரன் முதலிய அரக்கர்கள் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டார்கள்; இந்திரன் முதலான தேவர்கள் அகத்திய முனிவரிடம் சென்று வேண்டுகிறார்கள்; அவர் ஏழு கடல் நீரையும் ஒரே முறை ஆசமனம் செய்து நீர் முழுவதையும் உண்டு விட்டார். தண்ணீர் வற்றியதும், அங்கே அடியில் ஒளிந்துகொண்டிருந்த அசுரர்கள் அகப்பட்டனர். தேவர்கள் அவர்களை கொன்றொழித்தனர். பிறகு தேவர்கள் வேண்டிக்கொள்ள, முனிவர் மீண்டும் உண்ட நீரை உமிழ்ந்து கடலை நீர் நிறையச் செய்தார் என்பது புராணம்.

அப்பேற்பட்ட அகத்திய முனிவர் இராமன் தன்னைத் தேடி வருவது கண்டு மகிழ்ந்தார். அவர்களைத் தம் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த பூவுலகம் செழித்து வாழ்வதற்காகத் தன் கையிலிருந்த கமண்டலத்தில் பிரம்ம லோகத்திலிருந்து காவேரி எனும் புனித நீரைக் கொண்டு வந்த அகத்திய முனிவர், இராமனைக் கண்டு தன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய நின்று வரவேற்றார்.

“நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணான்

‘நன்று வரவு’ என்று பல நல்லுரை பகர்ந்தான்

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்”.

சுற்றிலும் நிற்கும் வேத விற்பன்னர்கள் வேத கோஷம் செய்கிறார்கள். முனிவர்கள் தங்கள் கமண்டல நீரைத் தெளித்து மலர்களைத் தூவி வரவேற்கிறார்கள். இப்படி அனைவரும் அகத்தியரின் தவச்சாலை சென்று அடைகின்றனர். அங்கு முனிவர் இராமனை நன்கு உபசரிக்கிறார். இங்கேயே தங்கிவிடும்படி இராமனை அகத்திய முனிவர் வேண்டுகிறார்.

அப்போது இராமன் “முனிவர் பெருமானே! இந்தக் காட்டில் தீங்கு செய்து வாழுகின்ற அரக்கர்களை அழிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. இதற்கு ஆசிகூறித் தாங்கள் என்னை அனுப்ப வேண்டும்” என்றான்.

“இராமா! நல்ல காரியம் செய்யத் துணிந்தாய். உனக்கு வெற்றி உண்டாகட்டும்” என்று கூறி முன்பு திருமால் கையில் வைத்திருந்த வில்லையும், எடுக்க எடுக்கக் குறையாத அம்புகளைக் கொண்ட அம்புறாத்தூணியையும் இராமனிடம் கொடுத்தார். இந்தப் புவனம் முழுவதும் ஒரு தட்டிலும் மற்றொரு தட்டில் ஒரு வாளையும் வைத்தால் எடையும் சக்தியும் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு வாளையும், சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து திரிபுரங்களைச் சுட்டெரித்த வலிய அம்பையும் இராமனிடம் கொடுத்தார்.

பிறகு அகத்திய முனிவர் பஞ்சவடி எனுமிடத்தின் பெருமைகளையெல்லாம் கூறி, அங்கு சென்று நீங்கள் வாழுங்கள் என்று சொல்லி வழியனுப்பி வைக்கிறார். பின்னர் மூவரும் பஞ்சவடி நோக்கி பலகாத தூரம் பயணம் செய்கின்றனர். வழியில் பல நதிகளைக் கடந்து சென்றனர். மலைகளைக் கடந்து சென்றனர். அப்படிச் செல்லும் பாதையில் ஓரிடத்தில் ஜடாயு எனும் கழுகின் வேந்தனைக் கண்டார்கள். ஓங்கி உயர்ந்த மலையொன்றின் உச்சியில் உட்கார்ந்திருந்த கழுகுகளுக்கரசனான ஜடாயுவை இராம லக்ஷ்மணர்கள் ஐயங்கொண்ட மனத்தினராய் பார்த்துக் கொண்டே அருகில் சென்றனர்.

ஜடாயுவும் இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். இவர்கள் தவ வேடத்தில் இருந்தாலும் தவசிகள் அல்லர்; வில்லேந்திய கையினராக இருப்பதால் தேவர்களாக இருப்பார்களோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான் ஜடாயு. அடடா! இவர்கள் தோற்றத்தைப் பார்த்தால் மூவுலகங்களையும் வெல்லக்கூடிய வலிமை படைத்தவர்களாகத் தோன்றுகிறார்கள். உடன் வரும் தேவியோ, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போலத் தோன்றுகிறாள். இந்த வீரர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கிறான் ஜடாயு.

ஒருவன் கருத்த மலைபோன்ற தோற்றமும், மற்றவன் சிவந்த மலைபோன்ற தோற்றமும் கொண்டிருக்கிறார்கள். மகாலட்சுமி வாசம் செய்யும் மார்பினர். இவர்களைக் காணும்போது எனது நண்பன் தசரத சக்கரவர்த்தியின் நினைவு வருகிறதே. இப்படி ஜடாயு எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் அருகில் வந்து விட்டனர்.

“வில்லேந்திய வீரர்களே! நீங்கள் யார் என்று எனக்குச் சொல்லலாமா?” என்றான் ஜடாயு அன்பு மேலிட.

“உண்மை தவிர வேறு எதுவும் பேசத் தெரியாத இராமன் “ஐயா! நாங்கள் அயோத்தி வேந்தன் தசரதனின் குமாரர்கள்” என்றான். இப்படிச் சொன்னதும் ஜடாயுவுக்கு உவகை மேலிட்டது. கீழே குதித்துத் தன் இறகுகளால் அவ்விருவரையும் ஆரத் தழுவிக் கொண்டான். “என் நண்பன் தசரதன் சுகமாக இருக்கிறானா?” என்றான் ஜடாயு.

“சத்தியத்தைக் காப்பதற்காக தசரதன் தன் ஊனுடம்பு நீங்கி புகழுடம்பு எய்தினான்” என்று இராமன் சொன்னதும் ஜடாயு மூர்ச்சித்து வீழ்ந்தான். உடனே இவர்கள் ஜடாயுவைத் தழுவி எடுத்தனர். கண்ணீர் விட்டுக் கதறினர். தன் உயிரினும் மேலான தசரதன் மாண்ட செய்தி கேட்டு ஜடாயுவும் வாய்விட்டு அரற்றினான்.

பின்னர் தசரதனுக்கும் தனக்கும் இருந்த ஆழ்ந்த நட்பு பற்றி கூறினான். அவன் சம்பராசுர யுத்தத்தின் போது, நீ உடல் நான் உயிர் என்று சொன்னானே! இன்று உடல் இங்கிருக்க உயிர் மட்டும் போய்விட்டதே என்று சொல்லி அழுதான். அவனோடு தானும் தீயில் வீழ்ந்து மாண்டுபோகாமல் வீணே புலம்புகிறேனே என்று வருந்தினான். பிறகு எழுந்து பேசுகிறான்:

“மைந்தர்களே! நான் அருணனின் புதல்வன். அவன் ஒளிபடும் இடமெலாம் நானும் செல்வேன். தசரதனின் உயிர் நண்பன். ஆதி காலத்திலேயே வந்து பிறந்து விட்டேன். கழுகு அரசன் சம்பாதியின் தம்பி நான். ஜடாயு என்பது என் பெயர்” என்றான்.

இப்படி ஜடாயு பேசிக்கொண்டிருந்தபோது இராம லக்ஷ்மணர்கள் கூப்பிய கரத்தோடு, கண்களில் நீர்சோர, அன்பின் மிகுதியால் இதயங்கள் கனக்க, நின்ற கோலத்தைக் கண்ட ஜடாயு, மாண்டுபோன தசரதன் மீண்டும் வந்து தன்னெதிரில் நிற்பது போல எண்ணினான். இருவரையும் தன் சிறகுகளால் மீண்டும் அணைத்துக் கொண்டான்.

“மைந்தர்களே! ஈருடல் ஓருயிராய் இருந்த தசரதன் உயிர்போன பின்பு நான் உயிர் வாழமாட்டேன். தீயில் பாய்ந்து உயிர்விடுவேன். உங்கள் தந்தைக்குச் செய்யும் ஈமக் கடன்களை நீங்களே எனக்கும் செய்வீர்களாக” என்றான்.

இதனைக் கேட்டு இராம லக்ஷ்மணர் கண்ணீர் சிந்தினர் “எங்கள் தந்தையும் இறந்து போனார். அவரது உயிருக்கு உயிரான தாங்களும் இறப்பேன் என்றால் எங்களுக்கு வேறு யார்தான் ஆதரவு?”

“நாட்டையும், தாய் தந்தையரையும் அரச பதவியையும் எல்லா நலன்களையும் நீங்கி வனம் வந்துவிட்ட எங்களை விட்டு நீயும் பிரிந்து போய்விட்டால் நாங்கள் என்ன செய்வோம்?”

“அப்படியானால் சரி! மைந்தர்களே! நான் இப்போது சாகமாட்டேன். நீங்கள் அயோத்தி நகருக்குத் திரும்பும்வரை உயிரோடு இருப்பேன், சரிதானே?” என்றான் ஜடாயு.

“அது சரி இராமா! தசரத சக்கரவர்த்தி இறந்து போனான் என்கிறாயே, அப்படியானால் நாட்டை ஆளவேண்டிய நீவிர் கானகம் வந்தது ஏன்? அதைச் சொல்” என்றான்.

“தேவர்கள், அசுரர்கள், நாகலோகத்தார் இவர்கள் எவரேனும் தீங்கிழத்ததனால் காட்டுக்கு வந்திருந்தால் சொல்லுங்கள், அவர்களைக் கொன்று குவித்து விடுகிறேன். நாட்டையும் மீட்டுக் கொடுக்கிறேன்”

இதைக் கேட்டதும் இராமன் இலக்குவனைப் பார்க்கிறான். குறிப்பறிந்து அவனும் நடந்த வரலாற்றை ஒன்று விடாமல் எடுத்துக் கூறுகிறான். தந்தையை சத்தியத்தைக் காக்கச் செய்து, தாய் கேட்ட ராஜ்யத்தை தம்பிக்குக் கொடுத்துவிட்டு கானகம் வந்த வள்ளலே என்று சொல்லி ஜடாயு இராமனை உச்சி முகர்ந்தான்.

“இராமா! உனது வாய்மையால் உன் தந்தையையும் என்னையும் பெருமைப் பட வைத்தாய்” என்று சொல்லி அகத்தியர் சொல்லியனுப்பிய இடத்திற்குச் சென்று அங்கு வாழுங்கள் என்று சொன்னான். பிறகு அவர்கள் மூவரும் நடந்து செல்ல அவர்களுக்குக் குடை விரித்தது போலத் தன் சிறகை விரித்து மேலே பறந்து வந்தான். பின்னர் அவர்கள் ஓர் அழகிய சோலையை வந்தடைந்தனர்.

அவர்கள் வந்து சேர்ந்த இடத்தில் இலக்குவன் ஓர் அருமையான குடில் அமைத்துத் தர, இராமனும் சீதையும் அந்தக் குடிலில் வாழ்ந்து வந்தனர். இங்கு இவர்கள் வாழ்க்கை இப்படி நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் …..

அரக்கர் குலத்தையே மூலநாசம் செய்யும் விரதம் பூண்டவளும், பிறக்கும் போதே உடன் பிறக்கும் நோயைப் போன்றவளுமான ஓர் அரக்கி அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்து இராமனை எட்டத்தில் இருந்து பார்த்தாள். ஆகா! என்ன தோற்றம், இவனது தோற்றம் என்று மயங்கி இராமன்பால் மோகம் கொண்டாள், மயங்கினாள். அவனிடம் உடனே சென்று பழகி உறவாட ஆசை கொண்டாள். இந்த அரக்க உருவில் சென்றால் அவன் வெறுத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி ஓர் அழகிய பெண்ணின் உருவத்தை எடுத்துக் கொண்டாள். தளிர் நடையோ, அன்ன நடையோ அப்படி நளினமாக நடந்து சென்று, மெல்ல அடி எடுத்து வைத்து இராமன் முன்பாக வந்து நின்றாள். அந்த அரக்கி அழகிய பெண் வடிவம் கொண்டு மென்மையாக அடியெடுத்து வைத்து நடக்கும் பாங்கை, கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் எவ்வளவு அரிய சொற்களை அடுக்கி கவிதை வடித்திருக்கிறார் பாருங்கள்.

“பஞ்சியொளி விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்சநிகர் சீறடி பெயர்ப்பாள்

அஞ்சொல் இள மஞ்சையென அன்னமென மின்னும்

வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”.

பஞ்சினால் ஒற்றி எடுப்பதுபோல அவ்வளவு மென்மையாக அவள் நடந்தது மட்டுமல்ல, கவிச்சக்கரவர்த்தி பாடிய பாடலின் சொற்களும் பஞ்சினால் ஒற்றி எடுப்பதுபோல அமைந்திருப்பதைப் படித்து இன்புற வேண்டும்.

“யாரம்மா நீ? எங்கு வந்தாய்? உன் வரவு தீமை தராத வரவாக இருக்கட்டும். உன் ஊர் எது? உன் பெயர் என்ன? உனது உறவினர்கள் யார்?” என்று வினவினான் வேதமுதல்வன்.

அதற்கு அவள் பதிலளித்தாள் “பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி” என்று. அதாவது பூவிலிருப்பவன் பிரம்மன், அவனுடைய மகனின் மகன் வழியில் மகள் நான் என்று. பிரம்மனுடைய புதல்வன் புலஸ்தியன், புலஸ்தியனின் மைந்தன் விஸ்ரவசு, விஸ்ரவசுவின் புதல்வி சூர்ப்பனகை. அவள்தான் இப்போது வந்திருக்கும் அரக்கி.

அடுத்ததாகச் சொல்கிறாள்: “முப்புரங்கள் செற்ற சே வலோன் துணைவனான செங்கையோன் தங்கை”. திரிபுரங்கள் அதாவது முப்புரங்களை எரித்த ரிஷப வாகனனான சிவபெருமானின் நண்பன் குபேரனின் தங்கை.

அடுத்து “திக்கின் மா எலாம் தொலைத்து வெள்ளி மலை எடுத்து உலக மூன்றும் காவலோன் பின்னை”. திக்கின் மா எனப்படும் அஷ்டதிக் கஜங்கள் எனும் திசை யானைகளை வென்று, வெள்ளி மலையாம் கைலாச மலையைப் பெயர்த்து, மூவுலகங்களையும் ஆளுகின்ற இராவணனுக்குப் பின் பிறந்தவள்.

இறுதியாகத் தன்னை விளக்குகிறாள் “காமவல்லியாம் கன்னி” என்று. காமவல்லி என்பது என் பெயர். நான் ஒரு கன்னிப் பெண் என்று தன்னுடைய வரலாற்றை மிக விஸ்தாரமாக எடுத்துரைக்கிறாள்.

இதனைக் கேட்ட இராமன் சொல்கிறான்: “அப்படியா? நீ இராவணனின் தங்கையா? அப்படியானால் அரக்க உருவம் நீங்கி இப்படி அழகிய தோற்றம் எங்ஙனம் பெற்றாய், முதலில் அதனைச் சொல்”.

இராமன் அப்படிக் கேட்டதும் சூர்ப்பனகை எனும் காமவல்லி சொல்கிறாள் “அந்த மாய அரக்கர்களோடு வாழப் பிடிக்காமல் தவம் செய்து அந்த தேவர்களிடம் வரம் பெற்று அழகிய உருவம் பெற்றேன்” என்று மனதார பொய் சொன்னாள்.

“இந்திரனும் ஏவல் புரியக்கூடிய இராவணனின் தங்கை என்றால், அவனுடைய செல்வச் சிறப்பின் ஆடம்பரம் உன்னிடம் இல்லையே! உனக்குத் துணையாகவும் எவரும் இல்லையே. ஏன் இப்படி?”

“விமலனே! அந்த அரக்கர்களோடு சேர விரும்பாமல், தேவர்களோடும், முனிவர்களோடும் பழகி வருகிறேன். இறைவா! உன்னிடம் நான் ஒரு காரியம் தனித்துப் பேச விரும்பியே தனியாக வந்திருக்கிறேன்” என்றாள்.

அவள் மேலும் பேசுகிறாள்: “உயர் குடியில் பிறந்த மகளிர் தம் காம விழைவைத் தாமே சொல்ல முடியுமா? எனக்குத் தூது செல்லவும் வேறு துணை இல்லை. உயிர் போவது போல வருந்துகிறேன். எனவே வேறு வழியின்றி நானே நேரில் உன்னிடம் உரைக்க வந்தேன். எனவே காமன் என்னிடம் செய்யும் கொடுமையைத் தவிர்த்து நீ என்னை ஆண்டு அருள்வாயாக”.

இவள் சரியான வெட்கங்கெட்டவளாக இருக்கிறாளே. அற்பமானவள் கூட. இப்படிப் பேசும் இவள் நல்லவள் இல்லை. இவளிடம் இனியும் பேசுவது ஒழுக்கமுள்ள தனக்கு ஏற்றதல்ல என்று இராமன் எண்ணமிட்டிருக்க, அந்த அரக்கி மேலும் பேசுகிறாள்.

“நீ இங்கு வந்திருப்பது எனக்குத் தெரியாது. நான் பணிவிடை செய்து வரும் முனிவர்கள்தான் சொன்னார்கள். அதனால் என் வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு உன்னைத் தேடி ஓடோடி வந்திருக்கிறேன்”

“நீயோ முனி வேடம் கொண்டிருக்கிறாய். தனிமையிலும் இருக்கிறாய். இராவணனோ முனிவர்களிடம் பகைமை கொண்டவன். நீ என்னை மணம் செய்து கொள்வாயானால், இராவணனுக்கு முனிவர்கள்பால் உள்ள பகை தீர்ந்து போகும். அரக்கர்களும் உனக்கு ஏவல் செய்வார்கள். உனக்கு விண்ணுலக ஆட்சியும்கூட கிட்டும். நீ என்னைத் திருமணம் செய்துகொள்” என்றாள்.

இராமனுக்குச் சிரிப்பு வந்தது. என்ன இவள் பிச்சி போல பேசுகிறாளே! “அடே பெண்ணே! நான் என்ன பாக்கியம் செய்தேன். பெரிய செல்வத்தோடு உன்னையும் கிடைக்கப் பெற்றேன். அரக்கரின் அன்பையும் பெற்றேன். நான் அயோத்தியை விட்டு வந்த பிறகு எவ்வளவு நன்மைகள் எனக்கு” என்று கேலியாகச் சொல்லி சிரித்தான்.

அந்த சமயத்தில் சீதை அங்கே வந்தாள். சுடரொளி போலும் உருவத்தோடு, அரக்கர்களின் காட்டை சுட்டெரிக்கும் எரிதணல் போல கற்பு எனும் தீயான பிராட்டி தோன்றினாள். அரக்கி அன்னையை உற்றுப் பார்த்தாள். அவள் பேரழகில் சற்று தன்னையும் மறந்து போய் நின்றாள். அடடா! இவளைக் கண்ட எனக்கே மயக்க நிலை அடைகிறதே. இவளைக் காணும் ஆடவர்க்கு என்ன நிலை ஆகுமோ? என்று எண்ணமிட்டாள். சீதைமேல் பொறாமைத் தீ மேலிடுகிறது. எதனைச் செய்தாவது இவளை இகழ்ந்து அகலும்படி செய்வேன் என்று தீர்மானித்தாள். இராமனிடம் சீதையைக் காட்டி சொல்கிறாள்:

“இதோ வருகிறாளே, இவள் ஒரு மாயக்காரி. வஞ்சனை செய்யும் அரக்கி. இவள் நினைப்பதை மறைப்பவள். இவளை நம்பாதே! இவள் அழகானவள் என்று எண்ணாதே! இது பொய்யான வேஷம். இவள் மாமிசம் உண்டு வாழும் தொழிலையுடையவள். எனக்கே இவளைப் பார்க்க பயமாக இருக்கிறது. இவளை உடனே இங்கிருந்து விரட்டிவிடு” என்றாள்.

இராமன் மறுபடியும் கேலியாக சூர்ப்பனகையைப் பார்த்து “பெண்ணே! நீ மிகவும் புத்திசாலி. உன்னை யாரால் ஏமாற்ற முடியும்? உன் அறிவினால் ஆராய்ந்து எப்பேர்ப்பட்ட உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறாய்” என்று சொல்லி சிரித்தான். அப்போது சீதை இராமனை நெருங்கி வருகிறாள். சூர்ப்பனகை ஆத்திரத்தோடு “அரக்கியே! நீ ஏன் எங்களுக்கு குறுக்கே வருகிறாய்?” என்று கத்திக்கொண்டு சீதையை நோக்கி பாய்ந்து வருகிறாள்.

இவள் பாய்ந்து வந்ததைக் கண்டு சீதை பதறிப்போய், தனது பஞ்சுபோன்ற மெல்லடி நோவ ஓடிச்சென்று இராமனைக் கட்டிக்கொண்டாள். அரக்கர்களோடு விளையாடுவது தீமையென்றுணர்ந்த இராமன், சூர்ப்பனகையை நோக்கி “பெண்ணே! கொடிய காரியங்களைச் செய்யாதே! என் தம்பிக்கு நீ இப்படி நடந்து கொள்ளும் விவரம் தெரிந்தால் உன்னை தண்டித்து விடுவான். அதனால் ஓடிவிடு இங்கிருந்து” என்றான்.

“பிரம்மனும், திருமாலும், சிவபெருமானும், தேவர்கள் அனைவரும் என்னை அடைய தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இந்த கள்ளத்தனமுடைய பெண்ணை விரும்பி நீ என்னை இகழ்கிறாய். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்” என்று அதட்டினாள் அரக்கி.

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மனம் தெளியாத இந்த அரக்கியிடம் இனிப் பேசிப் பலனில்லை என்று இராமன் சீதையின் பின்னால் போய் தன் பர்ணசாலைக்குள் சென்றுவிட்டான்.

இராமன் போனபிறகு சூர்ப்பனகை நினைக்கிறாள்: என்ன இவன், இவ்வளவு பேசியும் நம்மிடம் ஆசை வைக்க மறுக்கிறானே. கொஞ்சம்கூட மோகம் அடையவில்லை. இதில் என் மேல் கோபம் வேறு வருகிறது. அந்தப் பெண்ணிடம் ஆசை கொண்டிருக்கிறான், அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறான், என்று எண்ணிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள். இந்த அழகனுடைய மார்பினை இன்று நான் தழுவாவிட்டால் மாண்டுபோவேன் என்று ஒரு மலையடிவாரத்திலுள்ள சோலைக்குச் செல்கிறாள். அப்போது சூரியன் மலையடியில் மறைந்தான். அஸ்தமனமாகியது, செவ்வானம் படர்ந்தது.

அந்திமாலைப் பொழுது வந்ததும் சூர்ப்பனகை காம வசப்பட்டுப் போனாள். அந்த உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது. நரக வேதனைப் பட்டுத் தவித்தாள். மன்மத பாணம் அவள் நெஞ்சத்தைத் துளைத்தது. காமத்தீ அவள் உடலை சுட்டெரித்தது. சுடுகின்ற தனது தனங்களின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டு சூட்டைத் தணிக்க முயன்றாள். பனிக்கட்டிகளை எடுத்து மார்பில் போட்டுக் கொண்டாள். அவை சூடான பாறையில் வைத்த வெண்ணெய் போல உருகியது.

ஓடிச் சென்று ஒரு சுனையில் மூழ்கினாள். அந்தச் சுனையே சூடேறி கொதிக்கத் தொடங்கியது. தன் உடலை வருத்துகின்ற இந்த காமனை எங்கே கொண்டு சென்று ஒளிப்பது என்று தவித்தாள். வானத்தில் கருத்த மேகக் கூட்டம் தவழ்ந்து வருவதை, இராமன்தான் வருகிறானோ என்றெண்ணி

அந்த மேகத்தைத் தன் கொங்கைகளோடு அணைத்துக் கொள்கிறாள். அம்மேகங்கள் சிதைந்து அழிந்து போவதைக் காண்கிறாள். வாய்விட்டு அழுகிறாள், புலம்புகிறாள்.

விஷத்தை உண்டவள் போல உடல் நடுங்குகிறாள். ‘நீலமலைபோன்ற மேனியுடையவனே!’ என்று இராமனை விளிக்கிறாள். என்மீது கருணை வைத்து அருள் செய்யமாட்டாயா? என்கிறாள். தன் உயிரே பிரிந்து போனாலும், இராமன் மீது கொண்ட ஆசை அடங்காது என உணர்ந்த அந்த அரக்கி, அந்த அழகிய பெண்ணைப் பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனது கண்கள் என்னையும் பார்க்குமோ? இப்படி காமாக்னியில் அவள் வெந்து தவித்து இரவு முழுவதும் அரற்றியபின், பொழுதும் விடிந்தது. கதிரவன் உதயமானான்.

பொழுது விடிந்ததும் சிறிது மனம் தேறிய சூர்ப்பனகை, அந்தப் பேரழகி அவன் அருகில் இருக்கும்வரை அவன் என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். எனவே அவளைத் திருடிக் கொண்டுபோய் எங்காவது ஒளித்து வைத்துவிட்டுப் பின் அவள் உருவில் வந்து அவனோடு கூடி வாழ்வதே அறிவுடைமை என்று நினைத்தாள்.

பிறகு மெதுவாக இராமன் இருந்த இடம் வந்து பார்த்தாள். இராமன் தூரத்தில் ஓர் ஆற்றங்கரையில் சந்தி செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவன் தம்பி சீதைக்குக் காவல் இருந்தான் என்பதை அவள் அறியவில்லை. ‘இவள் தனியாகத்தான் இருக்கிறாள், இவளை இப்படியே பற்றித் தூக்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும்’ என்று எண்ணி மெதுவாக சீதை இருக்குமிடம் சென்றாள். இதனை அங்கு காவல் செய்து கொண்டிருந்த இலக்குவன் கவனித்து விட்டான்.

“அடீ! நில்!” என்று அதட்டிக்கொண்டே இலக்குவன் அரக்கியை நெருங்கினான். இவள் ஒரு பெண்ணாயிற்றே என்று தன் வில்லை எடுக்கவில்லை. அவள் கூந்தலைப் பற்றி இழுத்து நிறுத்தினான். தன் காலால் அவளை எட்டி உதைத்தான். தன் இடையில் இருந்த உடைவாளை உருவி எடுத்தான்.

இவனையும் அவளோடு சேர்த்து எடுத்துக் கொண்டு ஆகாய மார்க்கத்தில் செல்வேன் என்று அவர்களைத் தூக்கிக் கொண்டு மேலே கிளம்பியவளை, இலக்குவன் இலகுவாக கீழே தள்ளி “இப்படிக் கொடுந் தொழிலைச் செய்யாதே” என்று சொல்லிக் கொண்டே, அரக்கியின் மூக்கையும், செவிகளையும், முலைக்காம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாகத் தன் வாளால் அறுத்து எறிந்தான். பிறகு அவளது கூந்தலை விட்டான். அப்போது அந்த அரக்கி சூர்ப்பனகை அலறிய அலறல் இருக்கிறதே, அது எட்டு திக்கிலும் கேட்டு எதிரொலித்தது. தேவலோகத்திலும் சென்று கேட்டது. அவள் உறுப்புகளிலிருந்து வழிந்த இரத்தம் உலகம் முழுவதும் படர்ந்தது.

சூர்ப்பனகையின் மூக்கும், காதுகளும், முலைக்காம்புகளும் அறுபட்ட காட்சி, இராவணனின் மணி மகுடமும், பத்துத் தலைகளும் துண்டிப்பதற்குக் குறித்த முஹூர்த்தம் போலத் தோன்றியது.

தன் அங்கங்களைப் பறிகொடுத்து, பெருங்குரல் எழுப்பிக் கூக்குரலிட்டு எகிறி எகிறி குதிக்கிறாள் சூர்ப்பனகை. மேலே எழுந்து குதித்து மீண்டும் மண்மீது விழுகிறாள். தரையில் கிடந்து ஊளையிடுகிறாள். கைகளைப் பிசந்துகொண்டு செய்வதறியாமல் திகைத்து மூர்ச்சை அடைகிறாள். மூர்ச்சை தெளிந்து எழுந்து மீண்டும் பலமாக ஓலமிடுகிறாள். பெண்ணாய்ப் பிறந்த எனக்கு நேர்ந்த கொடுமை இது என கதறுகிறாள்.

இரத்தம் ஒழுகும் மூக்கை மேலாடை கொண்டு துடைக்கிறாள். கொல்லன் உலைக்களத்தில் எழும் தீ போல பெருமூச்சு விடுகிறாள். கையால் தரையை ஓங்கி அடிக்கிறாள். தன் இரு முலைகளையும் கைகளால் எடுத்துப் பார்த்துவிட்டு கதறி அழுது உடல் வேர்க்கிறாள். வலி தாங்கமுடியாமல் சற்று தூரம் ஓடுகிறாள், இரத்தப் பெருக்கினால் சோர்ந்து கீழே விழுகிறாள்.

அருவி போல இரத்தம் பெருகி ஓடிவருகிறது. இவள் அலறல் கேட்டு காடு, நாடு, தேவலோகம் அனைத்திலும் உள்ளவர்கள் பயந்து ஓடுகிறார்கள். தன் குலத்து அரக்கர்கள் பெயர்களையெல்லாம் கூவிக் கூவி அழைத்து பலவாறு புலம்பி அழுகிறாள்.

“நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்கத் தாபதர்கள்

சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர்

தலை எடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான்

மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ?”

தன் அண்ணன் இராவணனை எண்ணி கூக்குரலிடுகிறாள். சிவபெருமானின் மலையைப் பெயர்த்த நீ இருக்கும்போது, வில் எடுத்து கானகம் வந்த இந்த தவக்கோல மனிதர் செய்த அலங்கோலம் காணலையோ அண்ணாவே! என்கிறாள்.

அண்ணா! இராவணா! இந்திரனும், பிரம்மாவும் தேவர்களும் உனக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு ஏவல் புரிய, தேவ மாதர்கள் உனக்குப் பல்லாண்டு பாடி பணிபுரிய, ஏழு உலகங்களையும் தனிக்குடையில் ஆண்டுகொண்டு நீ சந்திரன் போல் வீற்றிருக்கும் சபைக்கு வந்து எப்படி நான் என் முகத்தைக் காட்டுவேன்.

“காற்றினையும் புனலினையும் கனலினையும் கடுங்காலக்

கூற்றினையும் விண் இயங்கு கோளினையும் பணி கோடற்

காற்றினை நீ ஈண்டு இருவர் மானிடவர்க்கு ஆற்றாது

மாற்றினையோ, உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய்!”

“சிவபெருமான் உனக்களித்த ‘சந்திரஹாசம்’ எனும் வாளைக் கைக்கொண்ட இராவணா! காற்றையும் (வாயு) புனலினையும் (வருணன்) கனலினையும் (அக்னி) கடுங்காலக் கூற்றினையும் (எமன்) விண் இயங்கு கோளினையும் (கிரஹங்கள்) இவையெல்லாம் உன் ஏவல் கேட்டுப் பணிசெய்ய வைத்த உனக்கு வில்லேந்திய இரண்டு மானிடர்களை எதிர்கொள்ள முடியாமல் போயிற்றோ?”

“என் அங்கங்களை அரிந்து என்னைக் கீழே தள்ளி உருட்டிவிட்டு ஒரு மனிதன் தன் வீரத்தை மெச்சிக் கொள்ளும்படி விட்டு, நான் மட்டும் இப்படி ஓர் ஆதரவும் இன்றி புலம்பிக் கொண்டு இருப்பதோ? கரன் இருக்கும் வனம் அல்லவா இது. நமக்கு உரிமை உள்ள இடத்திலேயே எனக்கு இப்படிப்பட்ட நிலையா?”.

“அஷ்டதிக் கஜங்களோடு போரிட்டு அவற்றின் தந்தங்களை ஒடித்துப் போரில் வென்ற இராவணா! இராவணா! ஆசையும், காமமும் கண்களை மறைக்க நான் மூக்கறுபட்டு இப்படிப் புலம்பித் தவிப்பது உனது வீரத்துக்கு இழுக்கு ஆகாதா?”

“அசுரர்களையெல்லாம் வென்றுவிட்டு, தேவேந்திரனையும் வென்று அவனைச் சிறைப்படுத்தி, தேவர்களை உனக்குக் குற்றேவல் செய்ய வைத்த மருமகனே! மருமகனே! (இந்திரஜித்) காட்டில் ஒரு மனிதன் என் காதும் மூக்கும் அரிய நான் கதறி அழுது சாக வேண்டியதுதானா?”.

“இராவணன் திக்விஜயம் சென்றபோது நீயும் (இந்திரஜித்தும்) கூடச் சென்று ஏழுலகும் உரு அழிய இந்திரனை வென்ற மருமகனே! மேகநாதா! இந்த மானிடரோடு போரிட்டு உன் வலிமை காட்ட வாராயோ?”

“வலிமை கொண்ட ஆயுதங்களைத் தாங்கிய கர தூஷணர்களே! நீங்கள் எல்லோரும் எனக்கு நேர்ந்த இந்த அவமானத்தைக் கவனியாமல் எங்கே போனீர்கள்? கும்பகருணனைப் போல தூங்குகிறீர்களா?”

சூர்ப்பனகை இப்படி அழுது புரண்டு அரற்றிக் கொண்டிருக்கும் வேளையில் நதிக்கரையில் சந்தி முடித்து, கையில் வில்லோடும் வந்த இராமன் இவளை கவனித்தான். வருகின்ற இராமனைப் பார்த்து அந்த அரக்கி, உடலில் குருதி ஆறாக ஓட, கண்கள் நீர் சொரிய, என் தலைவனே! ஐயோ! உன் திருமேனிக்கு ஆசைப்பட்டு அன்பு காட்டியதால் நான் படும் துன்பம் இது! பாராயோ, பாராயோ!”.

இந்தக் காட்சியைக் கண்ட இராமன் ஏதோ பெரிய தீங்கிழக்க இவள் முயன்றிருக்கிறாள். காதும், மூக்கும் அரியப்பட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். முன்பு எழில் நிறைந்த உருவில் இருந்தவள் இப்போது கோர அரக்கியாக இருப்பதறிந்து “நீ யார்?” என்றான்.

“என்னை உனக்குத் தெரியவில்லையா, நான்தான் இராவணனின் தங்கை” என்றாள்.

“அரக்கர்கள் வாழும் பகுதியை விட்டு நீங்கி, நாங்கள் தவம் செய்யும் இடத்திற்கு நீ ஏன் வந்தாய்?” என்றான் இராமன்.

“நேற்றும் நான் வந்தேனே!” என்றாள் அவள்.

உடனே இராமன் இலக்குவனை நோக்கி “வீரனே! இப்படி இவள் காதையும், மூக்கையும் இழக்கும்படியாக இவள் செய்த கொடிய தீங்கு என்ன?” என்றான்.

நடந்தவற்றை இளையவன் எடுத்துரைத்தான். சீதையைத் தின்ன இந்த அரக்கி ஓடிவந்தாள் என்றான். அரக்கி சொல்கிறாள்: “நீ என்னை மணந்து கொள். எனக்கு இழைத்த தீமைக்காக என் அண்ணன் இராவணன் உன்னைக் கொல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள். இராமன் கோபத்துடன் அவளை அங்கிருந்து போகும்படி கூறுகிறான். அவள் போக மறுக்கவும் இலக்குவன் இவளால் பெருந்தொல்லை, இவளைக் கொல்வதே சரி என்கிறான்.

இவ்வளவு பேசியும் அவள் போகவில்லையென்றால், அவளைக் கொல்வதே சரி என்கிறான் இராமனும். “இதோ போகிறேன். உங்களைக் கொன்று அழிக்க கரனை அழைத்து வருகிறேன்” என்று கோபமாய் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள் சூர்ப்பனகை.

இராமன் துரத்திவிட அங்கிருந்து ஓடிப்போன சூர்ப்பனகை, உடலிலிருந்து குருதி ஒழுக, அவிழ்ந்த கூந்தலோடு, மூக்கு இருந்த இடத்தில் இரத்தம் வழியும் இரண்டு துவாரங்கள் தெரிய, மதகு போன்ற வாயோடு, செவ்வானம் மேல் படர்ந்த மேகம்போல, அந்தக் காட்டில் அதிகாரம் செய்துவரும் கரன் எனும் அரக்கன் காலில் போய் விழுந்தாள், அழுதாள், அரற்றினாள். இந்த கரன், தூஷணன் ஆகியோர் அவளுடைய சகோதரர்கள்.

கரனுக்கு கோபம் வந்தது. காதிலும் மூக்கிலும் அவனடைந்த கோபத்தின் காரணமாக புகை வந்தது. “உனக்கு இந்த கேட்டை செய்தவர் யார்?” என்று கேட்டான்.

“இரண்டு மானுடர்கள்; தவசிகள்; கையில் வில் ஏந்தியவர்கள்; வாளேந்திய கரத்தினர்; மன்மதன் போன்ற மேனியர்; தர்மவழி நடப்பவர்கள்; தசரத குமாரர்கள்; அரக்கர்களை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருப்பவர்கள்” என்றாள்.

“அவர்களோடு ஒரு பெண். வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத பேரழகி அவள். அவளை இலங்கை வேந்தர்க்குக் கொண்டு செல்ல நான் முயன்றபோது இப்படிச் செய்து விட்டார்கள்” என்றாள்.

“அப்படியா? என்னுடன் வா. அவர்களை எனக்குக் காட்டு” என்றான் கரன்.

கரன் சூர்ப்பனகையுடன் கிளம்பி இராம லக்ஷ்மணருடன் போர்புரியச் செல்ல தயாராகும்போது, அவனுடைய படைத்தலைவர் வந்து, தானே சென்று அந்த மானுடர்களை வென்று வருவதாகக் கூறுகிறான். சூலம், வாள், மழு, தோமரம், சக்கரம், காலபாசம், கதை முதலான ஆயுதங்களோடு படை புறப்பட்டது.

கரனுடைய படை இராமன் தங்கியிருந்த பர்ணசாலை சென்றடைந்தது. அங்கு இருந்த இராமனை படைத்தலைவனுக்குச் சுட்டிக் காட்டினாள் சூர்ப்பனகை. உடனே அரக்கர்கள் “கொல்லுவோம்”, “வெட்டுவோம்” என்று கூச்சலிட்டுக் கொண்டு அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். இந்த சந்தடிகளையெல்லாம் கேட்டு இராமன் நிலைமையைப் புரிந்து கொண்டான். மூக்கறுபட்ட அரக்கி உதவிக்கு ஆட்களோடு வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான்.

இலக்குவனை அழைத்து “தம்பி! நீ இங்கே காவல் இரு. சீதையப் பார்த்துக் கொள். நான் போய் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்” என்று சொல்லி புறப்பட்டான்.

“போருக்கு வாருங்களடா!” என்று விளித்து தன் வில்லில் அம்பைப் பூட்டினான் இராமன். அரக்கர்களின் ஆயுதங்கள் இராமன் அம்பினால் துண்டிக்கப்பட்டுத் தூள்தூளாயின. அரக்கர் நெஞ்சங்களில் இராமபாணம் துளைத்துச் சென்றன. இது கண்டு சூர்ப்பனகை அஞ்சி ஓடினாள். ஓடிப்போய் கரனிடம் அவனுடைய படை அழிந்துபோன செய்தியைக் கூறினாள். கரனுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. தன் படைகளை ஒன்று திரட்டிக் கொண்டு தேரில் ஏறிக்கொண்டான். பெரும் படையோடு போருக்கு எழுந்தான்.

கடல்போன்ற கரனுடைய சேனை, இராமன் இருக்குமிடம் சென்றடைந்தது. இராமனும் போருக்கு ஆயத்தமானான். இலக்குவனும் போருக்கு ஆயத்தமாக வந்து நின்றதைக் கவனித்த இராமன், அவனிடம் தானே போரை கவனித்துக் கொள்வதாகவும், அவன் போய் சீதைக்குக் காவலாக இருக்கும்படி கூறிவிட்டு கரனுடைய படையுடன் போருக்குத் தயாரானான்.

கரனுக்கு இராமனை அடையாளம் காட்டுகிறாள் சூர்ப்பனகை. அரக்கர் சேனை நாலாபுறமும் சூழ்ந்து கொள்ள இராமன் தனியனாய் தன் வில்லினை ஏந்தி போர் புரிகிறான். இருளுக்கு இடையே ஒரு விளக்கினைப் போல காட்சி தந்தான் இராமன். கடுமையான யுத்தம் நடந்தது. இராமனின் அம்புகள் அரக்கர்களையும், அவர்களுடைய ஆயுதங்களையும் வீழ்த்தின. தலைகள் துண்டிக்கப்பட்டு அரக்கர் சேனை அழிந்தது. குருதிப் பெருங்கடலில் யானைகள், குதிரைகள் மிதந்தன. அரக்கர்களின் செத்த உடல்கள் மலை போல குவிந்து கிடந்தன. மழை பொழிவது போல இராமனின் அம்புகள் சிந்தின. அதனால் அரக்கர்களின் தலைகளும் சிந்தின. அவர்கள் விழிகள் தெறித்து வீழ்ந்தன; தழல் சிந்தின; எதிர்த்து வந்த யானைகள் தரையில் வீழ்ந்தன; தேர்கள் உடைந்து சிதறின; தொலைதூரம் தீப்பொறிகள் சிந்தின; அரக்கர்தம் உயிர்களும் சிந்தின.

படைத் தலைவர்கள் பதினான்கு பேர் எதிர்த்து வந்து இராமன் செலுத்திய அம்பிற்கு இரையாயினர். இராமனை சுற்றிலும் அரக்கர்கள் சூழ்ந்துகொண்டு போரிட்டனர். அனைவரையும் இராமனின் அம்புகள் துளைத்தன. திரிசிரன் என்பவன், மூன்று தலைகள் உள்ளவன் அளவற்ற வலிமையுடையவன், அவன் இராமனை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினான். கடுமையான போர் நிகழ்ந்தது. இராமன் அவனையும் கொன்று வீழ்த்தினான். போரில் இராமன் பாணங்களால் உயிர் துறந்த அரக்கர்கள் தேவர்களாயினர். கூட்டமாய் அரக்கர் போரிட இராமன் தனியனாய் உள்ளானே என்று தேவர்கள் வருந்தினர்.

திரிசிரன் வானத்தில் எழுந்து போரிட்டு இராமன் பாணத்திற்கு பலியானான். அவனது மூன்று தலைகளையும் இராமபாணம் அறுத்துத் தள்ளியது. அரக்கர்கள் பயந்து சிதறி ஓடினர். ஓடிய அரக்கர்களை தூஷணன் எனும் அரக்கன் தடுத்து நிறுத்தினான். ஒரு மனிதனை எதிர்த்துப் போரிட முடியாமல் ஓடலாமா என்று ஏளனம் செய்தான். பின் அவர்களைத் தேற்றி போருக்கு அழைத்துச் சென்று போரிடச் செய்கிறான். தூஷணனுக்கும் இராமனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது.

போர் நடந்துகொண்டிருந்த போது அரக்கர்களின் உயிர்களைப் பறித்து பறித்து எமன்கூட அயர்ந்து போனான். இராமனது வாளிக்கு தூஷணனும் அடிபட்டு மாண்டுபோனான். கரன் மட்டும் தனித்து நின்று போர் புரிந்தான். கடுமையான போர் கரன் இராமன் இடையே நடைபெறுகிறது. இறுதியில் கரனும் இராமன் கணையால் அடிபட்டு மாண்டு போகிறான்.

இதனைக் கண்டு தேவர்கள் ஆர்த்தனர். எழுந்து மகிழ்ச்சியில் ஆடினர். கற்பக மலர்களை இராமன் மீது தூவினர். அரக்கர் கூட்டத்தைக் கர, தூஷண, திரிசிரன் ஆகிய மூவரோடும் அழித்த பிறகு இராமனும் ஆசிரமம் திரும்பினான். வெற்றி வீரனாகத் திரும்பி வந்த இராமனை சீதையும், இலக்குவனும் கண்களில் நீர் சோர வரவேற்றுத் தங்கள் கண்ணீரால் அவனது பாதங்களைக் கழுவினர்.

அங்கே …..

போர்க்களத்தில் கரன், தூஷணன், திரிசிரன் ஆகியோர் மாண்டது கண்டு சூர்ப்பனகை கதறி அழுதாள்.

“ஆக்கினேன் மனத்து ஆசை, இவ்வாசை என்

மூக்கினோடு முடிய முடிந்திலேன்

வாக்கினால் உங்கள் வாழ்வையும், நாளையும்

போக்கினேன், கொடியேன் என்று போயினாள்”

இராமன் மீது நான் கொண்ட ஆசை, என் மூக்கோடு மட்டும் போகவில்லை, என் வாக்கினால் உங்கள் உயிர்களையும் பலி கொடுத்தேன் பாவி நான், என்று புலம்பினாள். பிறகு நான் போய் இராவணனிடம் சென்று முறையிடுகிறேன் என்று இலங்கைக்கு ஓடுகிறாள்.சூர்ப்பனகை தனது சகோதரர்கள் இறந்த துக்கத்தையும் மறந்து, இராமன் மீது வைத்த ஆசை மனத்தில் மேலோங்க, சீதையின் அழகையெல்லாம் இராவணனித்தில் கூறிவிட ஓடோடி வருகிறாள்.

இலங்கை அரண்மனையில் ஓர் ஒப்பற்ற மணிமண்டபத்தில் இராவணன் சிறப்புடன் அமர்ந்திருக்கிறான். அவனுடைய சிறப்புக்களைக் கண்டு மும்மூர்த்திகளும் தேவர்களும் மனம் வெதும்பும்படியாக ஆடம்பரமாக வீற்றிருக்கிறான். அந்த சபா மண்டபத்தில் கூடியிருந்த அரசர்கள் எல்லாம் எப்போது இராவணன் தங்கள் பக்கம் திரும்புவானோ என்று எதிர்பார்த்துத் தலைக்கு மேல் தங்கள் கரங்களைக் கூப்பிக்கொண்டு பணிவாக நின்று கொண்டிருந்தார்கள்.

தன்னருகில் நிற்கும் பணியாளனிடத்தில் ஏதாவது இராவணன் கூறினாலும், தங்களிடம் தான் கூறுகிறானோ என்று தலை ஆட்டிக் கொண்டு நிற்கிறது அந்தக் கூட்டம். அங்கு கின்னரர்கள் என்று ஒரு வகையினர். இவர்கள் யாழைக் கையில் கொண்டு இசை பாடுபவர்கள். ஒருவகை தேவ ஜாதியினர். இவர்களுக்கு மனித முகங்களும், ஒருவகை பறவையின் உடலும் அமைந்தவர்கள். இவர்கள் ஆண், பெண் இருபாலரும் இணைபிரியாமல் இருக்கக்கூடியவர்கள். இவர்கள் அந்த அவையில் இருக்கிறார்கள். இராவணன் எப்போது யாரிடம் என்ன சொன்னாலும் இவர்கள் உடல் நடுங்குகின்றன.

அவையில் தும்புரு என்னும் கந்தர்வன், இராவணனின் தோள் வலிமையை இசையில் பாடுகிறான். நாரத முனிவர் தனது வீணையில் தேவகானம் இசைக்கிறார். தேவ குருவான பிரஹஸ்பதியும், அசுர குருவான சுக்கிராச்சாரியும் அவன் அவையில் அடக்க ஒடுக்கமாய் அமர்ந்திருக்கின்றனர். காண்போர் நடுநடுங்கும் எமன்கூட இராவணன் சபையில் தன் ஆயுதங்களையெல்லாம் நீக்கிவிட்டு தன் ஆடையாலும், கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அடக்கத்தோடு, நாள், கிழமை, நாழிகை இவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

இப்படி தேவர்கள் எல்லாம் இராவணன் சபையில் கைகட்டிச் சேவகம் செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு ஆடம்பரத்தோடு அரசவையில் வீற்றிருக்கையில் அவனது தங்கை சூர்ப்பனகை அலங்கோலமாய், தலைமீது கைகளை வைத்துக் கொண்டு கதறி அழுது ஊளையிட்டுக் கொண்டு, அரண்மனையின் வடக்கு வாசலுக்கு வந்து சேர்ந்தாள்.

இப்படி வந்து நின்ற சூர்ப்பனகையைப் பார்த்து இலங்கை அரக்கர்கள் வருத்தப்படுகின்றனர். இராவணனது தங்கை இவள் என்பது தெரிந்திருந்தும் ‘அன்னையே!’ என்று இவளை வணங்காமல், இப்படிச் செய்திருக்கிறார்களே என்கிறார்கள். அதுநாள் வரை அந்த இலங்கை நகரத்தில் முழவின் ஒலி, வீணை இசை, நல்ல யாழின் ஒலி, குழல் ஒலி போன்ற மங்கல இசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது போக, இன்று புதுமையிலும் புதுமையாக ஓர் அழுகுரல் அமங்கலமாக கேட்கிறதே. அந்த அழுகுரலை எழுப்புபவள் இராவணனின் தங்கை சூர்ப்பனையாயிற்றே என்று அரக்கர்கள் பயந்தனர். சூர்ப்பனகை அழுதுகொண்டு ஓடிவந்து அரசவையில் வீற்றிருக்கும் இராவணனின் காலடியில் விழுந்து புரண்டு அழுகிறாள்.

“முழவினில் வீணையின் முரல் நல் யாழினில்

தழுவிய குழலினிற் சங்கிற் தாரையில்

எழுகுரல் அன்றியே என்றும் இல்லதோர்

அழுகுரல் பிறந்தது அவ்விலங்கைக்கு அன்றரோ!”

மூவுலகங்களும் இந்தக் காட்சியைக் கண்டு அஞ்சின. எங்கும் இருள் சூழ்கிறது. ஆதிசேடனும் தன் உடலை நெளிக்கிறான்; பூமி அதிர்ந்தது. மலைகள் ஆடின. சூரியனும் பயந்து இருண்டான். அஷ்டதிக் கஜங்கள் பயந்து ஓடின. தேவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

இராவணன் புருவத்தை நெறித்தான்; அவன் கண்கள் தீ உமிழ்கின்றன. இருபது தோள்களும் புடைத் தெழுந்தன. உலகங்கள் நிலைமாறி சுழன்றன. தேவர்கள் திகைத்தனர். அப்போது அவன் அடைந்த நிலையை கம்பர்பெருமான் வாக்கால் பார்க்கலாம்.

“மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்தத்

துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்பக்

கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து

இடித்தஉரும் ஒத்து உரறி, “யாவர் செயல்?” என்றான்”.

இராவணனின் குகை போன்ற வாய்களில் கோபத் தீயால் புகை எழுகிறது. மீசைகள் துடிக்கின்றன, அவை கருகிவிடுமோ என பெருமூச்சு கிளம்ப, இடிபோன்ற குரலில் தன் தங்கையைப் பார்த்து “உன்னை இப்படிச் செய்தது யார்?” என்கிறான்.

“புவி காவல் புரியும் அரசர்கள், மானுடர்கள், தங்கள் வாளை உருவி இந்தச் செயலைச் செய்தார்கள்” என்றாள்.

“என்ன? மனிதர்கள் செய்தார்களா?” இராவணன் வெடிச் சிரிப்புச் சிரித்தான். ஏளனமாகச் சிரித்தான். கண்களில் தீப்பிழம்புகள் தோன்றின. “பொய் சொல்லாதே! பயத்தை விடு. மனிதர்களாவது, இப்படிச் செய்வதாவது, உண்மையைச் சொல்” என்றான் இராவணன்.

அதற்கு சூர்ப்பனகை சொல்கிறாள். “அண்ணா! உண்மைதான். மானுடர்கள்தான் இப்படிச் செய்தார்கள். மன்மதனைப் போல உருவம் கொண்டவர்கள். தங்கள் தோள் வலியால் மேரு மலையையும் அழிக்கக்கூடிய ஆற்றலுடையவர்கள். தங்கள் வில் வலியால் ஏழு உலகங்களின் பலத்தையும் அழிப்பார்கள்” என்றாள்.

“அண்ணா! அவர்கள் மரவுரி தரித்தவர்கள். முனிவர்களை வணங்குகிறார்கள். வீரக்கழல் அணிந்திருக்கிறார்கள். வில்வித்தையில் நன்கு தேர்ந்தவர்கள். வேதத்தை ஓதுகிறார்கள். சத்திய வழி நடப்பவர்கள் கலைகள் அனைத்தையும் கற்றவர்கள். கையில் வில்லும், தோளில் அம்புராத் தூணிகளும் சுமக்கிறவர்கள். உன்னை துளியளவுகூட மதிக்காதவர்கள் அவர்கள்”

“அண்ணா! மன்மதன் என்பவன் ஒருவன் தானே? ஆனால் இவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஈடு இணை யாருமில்லை. முதற் தேவர் மூவருக்கும் இணையானவர்கள்”.

“இவர்கள் ஒரு சபதம் செய்திருக்கிறார்கள். அது என்ன சபதம் தெரியுமா? அரக்கர் குலத்தையே வேரோடு அழிக்கப் போகிறார்களாம்”.

“இவர்கள் தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள். இராமன், இலக்குவன் என்பது அவர்களது பெயர்கள்” என்றாள். தன் தங்கைக்கு இப்படியொரு தீங்கு செய்தவர்கள் மானுடர்கள்; அப்படித் தீங்கு செய்த பின்னும் அவர்கள் உயிரோடு இருப்பது அவமானம். என் கையில் சிவபெருமான் கொடுத்த வாள் இருக்கிறது. அவன் கொடுத்த முக்கோடி வாழ்நாள் இருக்கிறது. அந்த கைலாயத்தையே பெயர்த்தெடுத்த தோள்கள் உண்டு. நானும் உயிரோடு இருக்கிறேன், என்று சொல்லிக்கொண்டே நகைத்த இராவணன் காட்டில் காவல் இருக்கும் கரன் தூஷணனிடம் நீ முறையிடவில்லையா, அவர்கள் இந்த மானுடர்களைக் கொல்லவில்லையா? என்று கேட்டான்.

இப்படி இராவணன் கேட்டதும் சூர்ப்பனகை மீண்டும் ‘ஓ’ வென்று ஒப்பாரி வைத்து அழுதாள். கைகளால் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு அலறினாள். தரையில் விழுந்து புரண்டாள். பின்பு சிறிது மனம் தேறி சொல்லுகிறாள், “நான் போய் கரனிடம் நடந்ததைச் சொல்லி அழுதேன். அவன் பெரும் படையோடும் வீரர்களோடும் புறப்பட்டுச் சென்று அந்த இராமனுடன் போரிட்டான். மூன்றே நாழிகைப் பொழுதில் இராமனின் அம்புகளுக்கு கரனும் தூஷணனும் இரையாகி மேலே சென்று விட்டார்கள்” என்றாள்.

தனி ஒருவனாய்ப் போரிட்டுத் தன் தம்பியான கரன் தூஷணன் இருவரும் படையோடு அழிந்த செய்தி கேட்டு இராவணன் கண்களில் நீர் வழிய தீயைக் கக்கின. அவன் உள்ளத்தில் எழுந்த கோபத் தீயில் துன்பம் சேர்ந்து தீயிடை இட்ட நெய்போல கொழுந்து விட்டு எரிந்தது.

“அது போகட்டும், அந்த மானுடர்கள் உன் அங்கங்களை அரியும்படியாக நீ என்ன குற்றம் செய்தாய்? அதைச் சொல்”

“அதுவா? அது, அது … ஹூம்.. சித்திரத்தில் எழுத முடியாத பேரழகு படைத்த அந்த இராமனோடு, தாமரை மலரில் இருந்து நீங்கி வந்த மகாலக்ஷ்மி போன்ற பேரழகி ஒருத்தி வந்திருக்கிறாள் அண்ணா! அவள் பொருட்டு இப்படி நடந்து விட்டது” என்றாள்.

“யார் அவள்?” என்றான் இராவணன்.

“நீ வாழ்க! அண்ணா! அவள் இருக்கிறாளே, அவளை எங்ஙனம் வர்ணிப்பேன். அவள் அல்குல் ஒரு தேர். அவள் கொங்கைகள் செம்பொன்னால் ஆன சிவந்த செப்புகள். அவள் பாதம் படுவதற்கு பூமி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவள் பேர் சீதை”

“அவள் பேச்சு இனிய கனியின் சுவை; தேனூறும் மலர்களையுடைய கூந்தலை உடையவள்; தேவ மகளோ எனும்படியான அவளுக்கு திருமகள் சேடியாகக் கூட இருக்கமுடியாத உயர்ந்தவள்”

“ஐயா! அவள் சொற்கள் அமுதம் போன்றவை; அவளது நீண்ட அழகிய கூந்தல் நீருண்ட மேகம் போன்றது; பொழியும் மழையைப் போன்றது; அவள் பாதங்கள் செம்பஞ்சு போன்றது; விரல்களோ செம்பவழம் போன்றது, அவளது முகம் தாமரை மலர் போன்றது, கண்களோ பெரிய கடல் போன்றது”.

“சிவன் காமனை எரித்து அழித்துவிட்டதாகச் சொல்வது பொய். அவன் இந்தப் பெண்ணின் அழகைக் கண்டு காம நோய் பிடித்து மெல்லத் தன் உருவம் தேய்ந்து போனான். இவளைப் போல அங்க லக்ஷணங்கள் உடைய பெண்ணை நீ எந்த உலகத்திலும் காணமுடியாது. அவளது பேரழகை எப்படி எடுத்துரைப்பேன்”.

“தோளையே சொல்லுகேனோ, சுடர் முகத்து உலவுகின்ற

வாளையே சொல்லுகேனோ, வல் அவை வழுத்துகேனோ

மீளவும் திகப்பது அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்

நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னா”.

அவளது தோள் அழகை வர்ணிப்பேனா, முகத்தில் அங்கும் இங்குமாக அலையும் கருமையான கண்களை வர்ணிப்பேனா, எழில் கொஞ்சும் அவளது கொங்கைகளை வர்ணிப்பேனா, பார்த்துப் பார்த்துத் திகைத்துப் போனேன், எப்படி ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியாக வர்ணிப்பேன், நீதான் அவளை நாளையே பார்க்கப் போகிறாயே, பிறகு நான் அதைப்பற்றிச் சொல்லுவானேன்”.

“அவளது நெற்றியை வில் போன்றது என்று சொல்லலாமா, அவளது கருவிழிகள் வேல் போன்றது என்று சொல்லலாமா, அவளது பற்கள் இருக்கின்றனவே அவற்றை முத்துக்களுக்கு ஒப்பிடலாமா, அவளது சிவந்த இதழ்களை பவழம் போன்றது என்று சொல்லலாமா, என்றாலும் கூட சொற்கள் பொருந்துவது போல பொருள் சரியாகப் பொருந்தவில்லையே.”

இப்போது சூர்ப்பனகை சீதையின் அழகையும், அவளது அங்கங்களின் அளவற்ற அழகு சிறப்பு இவைகளையும் சொல்லி இராவணன் மனதில் மோகத்தீயை மூட்டுகிறாள். “ஐயா! தேவேந்திரனுக்கு சசி எனும் இந்திராணி கிடைத்து விட்டாள்; அறுமுகனாம் முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுக்கு உமாதேவியார் கிடைத்து விட்டார்; தாமரைச் செங்கணான் திருமால் திருமகளைப் பெற்றான்; அதுபோலவே இப்போது நீ சீதையைப் பெறப் போகிறாய். இதில் நான் கூறியவர்கள் எல்லோரையும் காட்டிலும் உனக்குத்தான் பெருமை அதிகம்” அந்தப் பாடல் இதோ:

“இந்திரன் சசியைப் பெற்றான், இருமூன்று வதனத்தோன் தன்

தந்தையும் உமையைப் பெற்றான், தாமரைச் செங்கண்மாலும்

செந்திரு மகளைப் பெற்றான், சீதையை நீயும் பெற்றால்

அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இல்லை உனக்கே ஐயா!”.

இந்த பாடலின் கடைசி வரியை வேறு விதமாகவும் பொருள் கொள்ளும்படி கவிச்சக்கரவர்த்தி ஆக்கியிருப்பதைப் படித்துப் படித்து இன்புறத்தக்கது. அதாவது “அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு, உனக்கு இல்லை ஐயா!” என்றும் பொருள் கொள்ளும்படி இருக்கிறது.

“உயர்ந்த தோள் வீர! மும்மூர்த்திகளில் ஒருவனான பரமேஸ்வரன் உமையம்மையைத் தன் உடலில் ஒரு பாதியாக வைத்துக் கொண்டான்; அந்தத் திருமால் இருக்கிறானே, அவன் தாமரை மலரிலுள்ள திருமகளைத் தன் மார்பில் வைத்துக் கொண்டான்; பிரம்மதேவன் கலைமகளைத் தன் நாவில் வைத்துப் பாதுகாக்கிறான்; பரந்த ஆகாயம் போன்ற விரிந்த தோளையுடைய இராவணா! மின்னல் போன்ற துடி இடையாளான சீதையை நீ அடைந்தால் எங்ஙனம் வைத்து வாழ்வாய்?”. சுவையான அந்த பாடலைப் பாருங்கள்.

“பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்

மேகத்தின் மின்னை முன்னே வென்ற நுண் இடையினாளை

மாகத் தோள் வீர! பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி?”

“ஐயனே! கொடை வள்ளலே நீ தவறு செய்ய மாட்டாய். கிளி போன்று பேசுகின்ற சீதைக்கு உன் அனைத்துச் செல்வங்களையும் கொடுத்து விடு. உனக்கு எப்பேர்ப்பட்ட நன்மை செய்திருக்கிறேன் பார்த்தாயா? ஆனால் பாவம், உன் அரண்மனையில் வாழும் அனைவருக்கும் தீமையல்லவா செய்கிறேன்”. அந்த சீதையைக் கவர்ந்து வருவதன் மூலம், அவன் தன் உயிரையே இழக்கப் போகிறானல்லவா, அதனை எண்ணியோ என்னவோ, சூர்ப்பனகை அவனை வள்ளலே என்று அழைக்கிறாள். “நீ பிழைக்கல் ஆற்றாய்” என்று நீ தவறு செய்ய மாட்டாய் என்று பொருள்பட இருந்தாலும், இனி நீ பிழைக்கப் போவதில்லை என்ற பொருளிலும் கொள்ளலாமே! அத்தகைய வஞ்சக எண்ணத்தோடுதானே அந்த சூர்ப்பனகை இராவணனிடம் வந்திருக்கிறாள். முதன் முதலாக இந்த சூர்ப்பனகையை அறிமுகம் செய்யும் இடத்திலேயே, கம்பர் ‘இவளை அரக்கர் குலத்தையே பூண்டோடு அழிக்கும் விரதம் கொண்டவள்’ என்று அறிமுகப் படுத்துகிறார். தன் கணவனுக்கு இராவணன் செய்த தீங்குக்குப் பழிவாங்கவே அவள் இப்படியொரு நாடகத்தை நடத்துகிறாள்.

“அண்ணா! இந்த சீதை எந்தப் பெண்ணின் வயிற்றிலும் பிறந்தவளல்ல. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும் போது, இந்த பூமிக்கு இவள் கிடைத்து பெருமை சேர்த்தாள். அப்பேற்பட்ட சீதையை நான் உனக்குத் தந்தேன். அதற்குப் பிரதியாக, நீ அந்த இராமனை எனக்குக் கொடுத்து விடு” என்று பேரம் பேசுகிறாள்.

“நன்மையோ, தீமையோ, ஒருவனுக்கு அவை ஊழ்வினை காரணமாகத்தான் கிட்டுகிறது. என்றாலும், அது எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போதுதான் கிடைக்குமே தவிர, வேறு காலங்களில் கிடைத்து விடுமா? பத்து முகங்களும், மார்பும், இருபது தோள்களும், இருபது கண்களும் படைத்த நீ, இந்த சீதையைப் பெற்ற பின்தான் முழு செல்வமும் பெற்றவனாக ஆகிறாய்” என்று அவனுக்கு சீதை மேல் ஏற்பட்டுள்ள மோகத்தைத் தூண்டுகிறாள். அவளது அடிமனத்தில் இதுவரை உன்னை அழிக்கும் காலம் வரவில்லை, ஊழ்வினை இப்போது இராமன் உருவத்தில் உன்னை அழிக்க வந்திருக்கிறது என்று நினைத்துத்தான் அப்படிப் பேசினாளோ என்னவோ!

“அத்தனை சிறப்புக்களைக் கொண்ட சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து உன்னிடம் சேர்க்க வேண்டுமென்றுதான், நான் அவள் அருகில் சென்றேன். அப்போது அந்த இராமனின் தம்பி இலக்குவன் இடையில் புகுந்து, நான் அவளைப் பிடிக்கும் முன்பாக, என் மூக்கையும் காதையும் அரிந்து விட்டான். அதனால் என் வாழ்வும் முடிந்து விட்டது. நடந்த விஷயங்களையெல்லாம் உன்னிடம் சொல்லிவிட்டு என் உயிரை விட்டுவிட தீர்மானித்து விட்டேன்” என்கிறாள். இப்போது இப்படிப் பேசுபவள் சற்று முன்பாக, சீதையை நான் உனக்குத் தந்தேன் அல்லவா, பதிலாக நீ அந்த இராமனை என்னிடம் தந்துவிடு என்கிறாளே, அப்படியென்றால், அவளது பேச்சு வஞ்சகமான பேச்சு அல்லவா?

நீ இழைத்த குற்றம் என்ன என்று இராவணன் கேட்டதற்கு, சாங்கோபாங்கமாக, அந்த அரக்கி இப்படி பதில் சொல்லி, அவன் மனத்தில் காமத் தீயை நன்றாக மூட்டிவிட்டாள். பெரும்பாலும் ஆண்கள் அழிவது இந்த காமப் பசிக்குத் தானே!

சூர்ப்பனகை ஏவிய அந்த மோகனாஸ்த்திரம் இராவணைனை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. காமனுடைய கணைகள் அவன் நெஞ்சிலே பாய்ந்து, சூர்ப்பனகை வர்ணித்த சீதையை மறக்க முடியாதவனாகி, தன் தம்பி முறையாகும் கரன் முதலானவர்கள் இறந்ததைக் கூட மறந்தான். அதைவிட தன் தங்கை காமவல்லியாம் சூர்ப்பனகையின் காது மூக்கை அரிந்த இராம லக்ஷ்மணர்களின் வலிமையையும் உணர மறந்தான். இந்த நிகழ்ச்சியால் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தையும் மறந்தான். முன்பு அவன் பெற்ற ஒரு சாபத்தால் மனைவி தவிர பிற பெண்களைத் தொட்டால் அவன் சிரசு வெடித்து இறப்பான் என்ற செய்தியையும் மறந்தான்; ஆனால், அவன் மனத்தில் காமத் தீயை உண்டாக்கிவிட்ட சீதையெனும் பெண்ணை மட்டும் மறக்க முடியாதவனாக ஆனான்.

மனம் உணர்ச்சி வசப்படும்போது அதனை மாற்றும் சக்தி ஞானத்துக்கு மட்டுமே உண்டு. அந்த ஞானம் இல்லையென்றால், உணர்ச்சி வசப்பட்டு தவறான காரியங்களைச் செய்து அழிவைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான். ஆயினும் உணர்ச்சி மனிதனை ஆட்கொள்ளூகின்ற சமயங்களில் ஞானம் வெளிப்படாமல் உள்ளே அழுத்தப்பட்டு விடுகிறது. அதனால்தான் உணர்ச்சிவசப் படுபவர் அனேகர் ஞானத்தால் தவறு செய்யாமல் காத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

சீதையை சிறையெடுத்துக் கொண்டு வந்து இலங்கையில் வைக்கும் முன்னரே, அவன் தன் மனச் சிறையில் அவளைப் பூட்டி வைத்தான். அவன் மனம் சீதையின் நினைவால் வெயிலில் வைத்த வெண்ணெய் போல உருகியது. இராவணன் தனது இருக்கையை விட்டு எழுந்தான். கூடியிருந்த அவையோர் அவனுக்கு ஆசி கூறினர். ராஜ சபை முடிந்ததற்கு அடையாளமாகச் சங்கம் முழங்கியது. இராவணன் மீது பூமாரி பொழிந்தனர். காமநோய் தாக்கிய மனத்தோடு இராவணன் தன் அரண்மனையைச் சென்றடைந்தான்.

அவன் மலர் மஞ்சத்தில் படுத்துக் கிடந்தான். விரக வேதனையால் அவன் உடல் சூடேறி, படுக்கையில் கிடந்த மலர்கள் கருகிப் போயின. அஷ்டதிக் கஜங்களையும் வென்ற அவன் வீரத் தோள்கள் துவண்டு நைந்து போயிருந்தன. சேடிப் பெண்கள் குளிர்ச்சியான சந்தனம் முதலான பொருட்களைக் கொண்டு உபசாரங்கள் செய்தும், அவை அவனுக்கு சூடேறி மிகுந்த துன்பத்தைக் கொடுத்தன.

படுக்கையை விட்டு எழுந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினான். இனிய குழலுடைய பெண்கள் தீபங்களை ஏற்றிக் கொண்டு வழிகாட்ட, யாழைப்பழிக்கும் குரலுடைய பெண்கள் இன்னிசை பாட, ஒரு சோலையைச் சென்றடைந்தான். அங்கு பசுமையான செடிகள் சூழ்ந்த ஒரு மணிமண்டபத்தில் வெண்மையான பளிங்குக்கல்லில் போய் அமர்ந்தான். அங்கும் விரகதாபம் அவனை வாட்டி எடுத்தது.

ஏவலர்களை அழைத்தான். “உடனே ஓடிப்போய் சூர்ப்பனகையை இங்கு அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். சீதையைப் பற்றி அவளை மீண்டுமொரு முறை வர்ணிக்கச் சொல்லி அதனைக் கேட்க விரும்பினான். அவன் கற்பனையில் உருவாகியிருந்த சீதை அவன் முன் நிற்பது போலவும், அவள் சீதைதானா என்று அறிந்துகொள்ள சூர்ப்பனகையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் விரும்பினான். ஏவலர் கூட்டிக்கொண்டு வந்த சூர்ப்பனகையிடம் அவன் “என் முன் நிற்கும் இவள்தான் நீ சொன்ன சீதையா?” என்று கேட்டான்.

சதாசர்வ காலமும் இராமனையே எண்ணிக் கொண்டிருக்கும் அவளோ, “இவன்தான் நான் சொன்ன கருமைநிறத்துச் செம்மல் இராமன்” என்றாள். காமவசப்பட்டவர் கற்பனையில்கூட, தான் காமவசப்பட்டவர் உருவமே எப்போதும் காட்சியளிக்கிறது. இராவணன் கேட்டான் “எனக்குப் பெண்ணாகத் தோன்றுகின்ற உருவவெளித் தோற்றம் உனக்கு எப்படி இராமனாகத் தோன்ற முடியும்?”.

“இராவணா! நீ உலகாளும் கோமான், இப்படி வருந்தலாமா? அந்த மலர்க் குழலாள் சீதையை உடனே போய், அபகரித்துக் கொண்டு வந்து உன்னோடு வைத்துக் கொள். போ! இப்போதே போய் கொண்டு வா” என்றாள்.

உடனே இராவணன் தன் ஏவலர்களைப் பார்த்து, தெய்வத் தச்சனை அழைத்து வந்து ஒரு சந்திரகாந்தக் கல்லால் ஆன ஒரு மணிமண்டபம் அமைக்கச் சொல்லுகிறான். அப்படியோர் மண்டபமும் தயாராகிறது. இராவணன் வந்து அந்த மண்டபத்தைப் பார்வையிடுகிறான். தான் மனதால் நினைத்த காரியத்தை நிறைவேற்ற ஆலோசனை வழங்கக்கூடிய அமைச்சர்களை உடனே வரும்படி ஆணையிட்டான். அதன்படி அமைச்சர்கள் வந்து கூடினார்கள்.

அப்படிக் கூடி ஆலோசித்தபின், தான் நினைத்த காரியத்தை முடித்துக் கொடுக்கும் ஆற்றல் படைத்த, தவநெறியில் விளங்கும் மாரீசன் இருக்குமிடத்துகுத் தன் புஷ்பக விமானத்தில் ஏறிச் செல்கிறான்.

யார் இந்த மாரீசன்? சுகேது என்ற யக்ஷனின் பெண் தாடகை. இந்த தாடகைக்கு சுந்தன் எனும் யக்ஷர் தலைவனுக்கும் பிறந்தவன் இந்த மாரீசன் என்பதை பாலகாண்டத்தில் பார்த்தோம். இவனது தம்பி சுபாஹு. அகத்திய முனிவர் இட்ட சாபத்தால் தாடகையும் அவள் மக்களும் அரக்கர்களாகி, இராவணனின் தாய்வழிப் பாட்டனார் சுமாலியிடம் தஞ்சம் புகுந்தனர். இவர்களை சுமாலி தன் மக்களாகவே பாவித்தான். இந்த உறவு முறையால் இந்த மாரீசன் இராவணனுக்கு மாமன் முறையாகிறான். தாடகை முன்பு விஸ்வாமித்திரரின் யாகத்தைக் கெடுக்க வந்தபோது இராமன் விட்ட கணையால் சுபாஹு உயிர் துறந்தான், மாரீசன் கடலில் விழுந்து தப்பிப் பிழைத்தான் என்பதை பால காண்டத்தில் பார்த்தோம்.

இராவணன் தன்னை நாடித் தன் வீட்டிற்கு வந்ததைக் கண்டு மாரீசனுக்கு அச்சம் ஏற்பட்டது. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை மிக மரியாதையோடு வரவேற்று உபசரித்தான். அவன் உள்மனதில் இவன் எதற்கு இப்போது இங்கே வந்திருக்கிறான் என்ற கேள்வி எழுந்தது. இவன் வந்ததால் தனக்கு என்னென்ன தீமைகள் உண்டாகுமோ என்ற அச்சம் அவன் மனதை வாட்டியது.

“மூவுலகங்களையும் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்துவரும் இராவணேஸ்வரனாகிய தாங்கள், ஏழையேன் இந்த எளிய இல்லம் நாடி வந்ததின் நோக்கம் என்னவோ” என்று வினவினான்.

எந்தக் காலத்திலும் வந்திருப்பவன் கெட்டவன், மோசமானவன், ஆனாலும் பலம் பொருந்தியவன் என்றால், மற்றவர்கள் எப்படி தங்கள் உள் மனது உணர்ச்சிகளை மறைத்து முகஸ்துதியாகப் பேசுவார்கள் என்பது அந்தக் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் வழக்கம்தான் போலிருக்கிறது.

“எனக்கு வரவேண்டிய துன்பங்கள் அனைத்தும் வந்து விட்டன. அனைத்தையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். எனது பொலிவும், சிறப்பும், புகழும் போய்விட்டன. எனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை என்ன சொல்லி உனக்கு விளக்குவேன். வீரவேலை கையில் ஏந்திய மாரீசா! மனிதர்கள் வலிமையுடையவர்கள் ஆகிவிட்டார்கள். தண்டகாரண்யத்தில் மானுடர் இருவர் உன் மருமகள் சூர்ப்பனகையின் மூக்கை வாளால் அரிந்து விட்டார்கள். இதைவிட நம் குலத்துக்கு வேறு ஓர் இழிவு நேரமுடியுமோ?”.

“என் தம்பியர்களான கரன், தூஷணன் இருவரையும் ஒரு மானுடன் தன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளால் கொன்று போட்டுவிட்டான். இது நம் வீரத்துக்கும், புகழுக்கும் ஏற்பட்டுவிட்ட மிகப் பெரிய இழுக்கு அல்லவா? கரனும், தூஷணனும் வில்லினால் அடிபட்டு உயிர் துறந்து கிடக்க, நீயோ இரு கரங்களையும் தலைமேல் குவித்துத் தவம் செய்து கொண்டிருக்கிறாயே!”.

“இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால், நான் மனம் குமைந்து போய் கிடக்கிறேன். அந்த மானுடர்கள் என் வீரத்துக்கு இணையானவர்கள் இல்லை என்பதால், அவர்களோடு நான் போர் புரியச் செல்லவில்லை. ஆனால் அவர்களோடு வந்திருக்கிற ஒரு பெண்ணைக் கவர்ந்து வர விரும்புகிறேன். அதற்கு உன் உதவி தேவை. அதை நாடியே நான் இங்கு வந்தேன்” என்றான் இராவணன்.

இராவணனது சொற்கள் இரும்பைக் காய்ச்சி காதில் ஊற்றியதுபோல இருந்தது மாரீசனுக்கு. சீச்சீ என்ன செயல் இது என்று வெறுப்புற்றான். செவிகளைத் தன் கைகளால் பொத்திக் கொண்டான். பயத்தை நீக்கிச் சற்று தெளிவடைந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசலானான்.

“மன்னா! இப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் உன் வாழ்நாள் முடிந்து போகும். உனக்கு புத்தி இல்லாமல் போய்விட்டதோ? இது நீயாகச் செய்யும் காரியமாகத் தெரியவில்லை. விதி உன்னை இப்படிச் செய்யத் தூண்டுகிறது. உனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் நான் உனக்குக் கூறவிரும்புவது சில உண்டு. சொல்கிறேன் கேள்!” என்று ஆரம்பித்தான் மாரீசன்.

“நீ எப்படிப்பட்ட தவங்களைச் செய்திருக்கிறாய் தெரியுமா? உன் கையாலேயே உன் தலைகளை வெட்டி நெருப்பில் ஆஹூதியாக இட்டாய். நெடுங்காலம் பசி தாகம் மறந்து, உணவு இன்றி உடல்வாட தவங்கள் செய்தாய். அதனால் அன்றோ மூவுலகும் ஆளும் பெரும் செல்வத்தைப் பெற்றாய். இவற்றை இழந்து விட்டால் மீண்டும் அவற்றை உன்னால் பெற முடியுமா?”

“நீ வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவன். நீ செய்துள்ள கடும் தவத்தால் இந்தப் பெரும் செல்வத்தைப் பெற்றாய். அறம் தவறுவாயானால் அனைத்தையும் நீ இழந்து நிற்பாய்! பிறருடைய நாட்டுக்கு உரிமையான நீரைத் தன் வலிமையால் எவனொருவன் அபகரித்துக் கொண்டு தர மறுக்கிறானோ; எவனொருவன் பிறருக்கு உரிமையான நாட்டை அதர்ம வழியில் கைப்பற்றி வைத்துக் கொள்கிறானோ; எவனொருவன் தர்மத்துக்குப் புறம்பான வழியில் குடிமக்களிடம் அநியாய வரிகளை வசூலிக்கிறானோ; எவனொருவன் மாற்றான் இல்லத்தில் வாழும் அடுத்தவன் மனைவிமீது ஆசை கொண்டு அவளை அபகரிக்கிறானோ; ஆகிய இத்தகையவர்களை தர்ம தேவதை தண்டித்து அழித்து விடுவது உறுதி”.

“தேவலோகத்துக்கு அதிபதி இந்திரன். அவன் அகலிகை மீது ஆசை கொண்டதால் சாபக் கேட்டை அடைந்தான். அவனைப் போலவே அழிந்துபோனவர் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். உனக்கு உரிமையுள்ள அழகியர் அனேகர் இருக்க, செய்யக்கூடாதவற்றை நீ என்னிடம் செய்யச் சொல்லுகிறாய்”.

“நீ நினைத்ததை முடித்தாலும்கூட நீ அடையப் போவது தீவினையும் பழியுமே. அதுமட்டுமல்ல சீதையை நீ அபகரித்தால் இராமன் உன்னையும், உன் சந்ததியினரையும் பூண்டோடு அழிப்பது உறுதி. உன் படைத்தலைவன் கரனையும் அவன் படைகளையும் ஒரு கணையால் இராமன் கொன்று போட்டதை நீ ஏன் அறியவில்லை. அதுமட்டுமா? உன் குலத்தையே பூண்டோடு ஒழித்துவிட அவன் உறுதி கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? அதைப் பற்றி நீ சிந்திக்காதது ஏன்?”

“விராடன் வீரத்தைப் பற்றி அறியாதார் யார்? அந்த விராடன் இராமனால் கொல்லப்பட்ட செய்தியை நீ அறியவில்லையா? மாண்டு போனவர்கள் போனவர்களே! இனி நீயாவது வாழ முயற்சி செய். என் தாய் தாடகைக்கும், தம்பி சுபாஹுவுக்கும் இந்த இராமன் எமனாக வந்ததும், நான் அடிபட்டுத் தப்பிப் பிழைத்ததும் இப்போது நினைத்தாலும் அச்சம் உண்டாகிறது. அப்பேற்பட்ட இராமன் உனக்கு எதிரியாக வந்து வாய்த்து விட்டானே என்று மனம் வருந்துகிறேன். நான் சொல்லும் அறிவுரைகளைக் கேள்!” என்றான் மாரீசன்.

இராவணனுக்கு அடங்காத கோபம் உண்டாயிற்று. கைலாய மலையையே பெயர்த்தெடுத்த என் வீரத் தோள்களை ஒரு மனிதனுக்குக் கீழ்பட்டது போல பேசிவிட்டாயே!” என்று புருவத்தை நெறித்து “நடந்தவற்றை மறந்து விட்டாயோ? என் அருமைத் தங்கை சூர்ப்பனகையின் முகத்தைத் தோண்டி எடுத்து விட்ட இராமனின் புகழை என்னிடமே பேசுகிறாயா? போனால் போகட்டும் என்று பொறுத்துக் கொண்டேன்”.

“இராவணா! நீ என் மீது கோபப்படுவதாக நான் நினைக்கவில்லை. உனது அரக்கர் குலத்தின் மீதே கோபப்படுகிறாய். இப்படிப்பட்ட காரியத்தை நீ செய்யலாமா? கைலாயம் எனும் இமய மலையின் ஒரு சிகரத்தைப் பெயர்த்ததையே பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறாயே, மனிதன் என்று இழிவாகப் பேசுகிறாயே அந்த இராமன், அவன் தன் பதினாறாம் வயதிலேயே சீதாபிராட்டியின் சுயம்வரத்தில் என்ன செய்தான் தெரியாதா? மேருமலை போன்ற அந்த பெரிய வில் எனும் மலையை வளைத்து ஒடித்ததை மறந்தாயா? இராமனது வலிமையை நீ உணரவில்லை. எனது அறிவுரைகளையும் கேட்பதாக இல்லை. இராமன் போருக்கு எழும்போதே நம் அரக்கர் குலம் முழுவதுமே அழிந்து போகும். சீதையை ஒரு சாதாரணப் பெண் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறாய். அல்ல! அவள் அரக்கர்களை யெல்லாம் வேரறுக்க வந்தவள் என்பதை நீ அறியவில்லை”.

“நீ இந்தத் தீச்செயலைப் புரிவதை நான் ஏற்றுக் கொண்டால், அஃது ஒருவன் விஷம் உண்கிறான் என்பது தெரிந்தும் அது நல்ல செயல் என்று அவனுக்குக் கூறுவது போலத்தான் இருக்கும். இராமனிடம் கோசிக முனிவர் கொடுத்த அஸ்திரங்கள் எதிரிகளை அழிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. கார்த்தவீரியனைக் கணப் பொழுதில் தன் மழுவால் கொன்றுபோட்ட பரசுராமனை கர்வபங்கம் செய்து அடக்கிய இராமனின் வலிமை சாதாரணமானதா? காம உணர்ச்சி மேலிட உடல் மெலிந்தாய்; அறிவு குன்றினாய்; அதனால் பேசக்கூடாத தீய சொற்களைப் பேசுகிறாய். உனது மாமன் என்ற முறையில் உன் நலனுக்காக இதுவரை பேசினேன். எனவே சீதையை அபகரிக்கும் எண்ணத்தைக் கைவிடு!” என்றான்.

மாரீசனை மறுபடியும் இராவணன் தகாத சொற்களால் வசை மாரி பொழிகிறான். “உன் அறிவுரைகள் எனக்குத் தேவை இல்லை. நான் இட்ட கட்டளைகளை மட்டும் செய்து முடி” என உத்தரவிடுகிறான். “மறுத்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்றும் எச்சரிக்கிறான்.

“சரி! சரி! சொல். நான் என்ன செய்ய வேண்டும்” என்றான் மாரீசன்.

உடனே கோபம் தணிந்து இராவணன் மாரீசனைத் தழுவிக்கொண்டு “அந்த சீதையை எப்படியாவது என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு” என்றான்.

இராவணன் கையால் சாவதைக்காட்டிலும் இராமனின் அம்புக்கு இரையாவதே நலம் எனக் கருதி மாரீசன் ஒப்புக் கொண்டான். “அதற்கு நான் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டான்.

“மாரீசா! உன் தாயைக் கொன்ற இராமனைக் கொல்வதாக நான் சங்கல்பம் செய்திருக்கிறேன். என்னிடம் வந்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயே. ஏதாவது மாயம் செய்து அந்த சீதையை என்னிடம் கொண்டுவந்து சேர்த்து விடு!”.

“நான் என்ன மாயம் செய்ய வேண்டும், சொல்”

அதற்கு இராவணன் “மாரீசா! நீ ஒரு பொன் மான் வடிவம் எடுத்துக் கொண்டு, அந்த சீதையின் முன்பாகப் போ. அவளுக்குப் பொன்மான் மீது ஆசை ஏற்படும்படி செய்” என்றான்.

மாரீசனுக்கு நெஞ்சு துணுக்குற்றது. உடல் நடுங்கினான். உயிருக்கு இறுதி வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான். கோசிக முனிவர் யாகம் செய்தபோது நலிவுறத் தொடங்கிய மாரீசன் உயிர் இப்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது.

இராவணன் கேட்டுக் கொண்டபடி மாரீசன் நல்மான் அனைய சீதாபிராட்டி விரும்பும்படியான ஒரு பொன்மான் வடிவம் எடுத்துக் கொண்டான். அங்கிருந்து இராமபிரான் இருந்த தண்டகாரண்யம் சென்றடைந்தான். நிலையா மனம் கொண்ட வேசிகளிடம் காமுகர்கள் மயங்கிப் பின் செல்வது போல காட்டு மான்கள் எல்லாம் இந்த மாய மானின் பின்னால் ஓடின. அப்போது மலர் கொய்யும் நிமித்தமாய் சீதை, வனத்தில் அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள். அவளுடைய கண்களில் இந்த மாயமான் பட்டுவிட்டது. அதன் பேரழகு அவள் மனதைச் சுண்டி இழுத்தது.

அந்த மாயமானும் அவள் முன்னே வந்து நின்று பார்த்தது. இந்த அற்புதமான மானைப் பிடித்துத் தருமாறு இராமனிடம் கேட்பதற்காக சீதை இராமனிடம் விரைந்து போனாள். இராமனைக் கைகூப்பி வணங்கியபின் சொல்லுகிறாள் “பொன்னால் செய்தது போன்ற ஒரு மான், உடல் ஒளி பிரகாசிக்க அதன் கால்களும் செவிகளும் மாணிக்கம் பதித்ததுபோல மின்ன இங்கே வந்திருக்கிறது” என்றாள்.

“சீதா! நீ சொல்லுவது போன்ற ஒரு மான் இந்த பூமியிலேயே கிடையாதே” என்று கூறிய இராமன், எனினும் இதை உணர்ந்தும் அவள் ஆசையைப் பூர்த்தி செய்ய எண்ணி அந்த மானைப் பிடிக்கக் கிளம்பினான். அப்போது இலக்குவன் அண்ணனின் கருத்தை அறிந்து “அண்ணா! வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய பொருள் இது அல்ல. வேண்டாம் இது. உடல் பொன் நிறமாக இருக்கிறது. காலும் செவியும் மாணிக்கம் போல் இருக்கிறது. இவை மானின் தன்மைக்கு ஏற்றதாக இல்லையே. ஆதலால் இது ஏதோவொரு மாயம். இது நிஜமான மான் அல்ல” என்றான்.

“லக்ஷ்மணா! நீ சிறுவன். உனக்குத் தெரியாது. நாம் கண்டும் கேட்டுமிராத எத்தனையோ வகைகள் இருக்கின்றன” என்றான் இராமன். இவர்கள் இருவரும் இப்படி விவாதம் செய்து கொண்டிருந்தால் அந்த மான் ஓடிப் போய்விடும் என்று அஞ்சினாள் சீதை.. உடனே இராமன் சீதையுடன் சென்று அந்த மானை எனக்குக் காட்டு என்றான்.

தன் கூரிய அறிவினால் ஆராய்ந்து பார்க்காத இராமனும் “இது அழகாகத்தான் இருக்கிறது” என்று தம்பியை அழைத்து “லக்ஷ்மணா! பார் இந்த மானுடைய அழகை” என்றான்.

இலக்குவன் இராமனைத் தடுக்க முயன்றான். “இது அரக்கர்கள் செய்யும் மாயம் அண்ணா! இதன் பின்னால் நீங்கள் போக வேண்டாம்” என்று தடுத்தான். “இந்த மானை நம் முன்பாக அனுப்பிவிட்டு இதற்குப் பின்னால் பலர் இருக்கிறார்கள்” என்றான்.

“அப்படியானால் அவர்களைத் துரத்திச் சென்று என் அம்புக்கு இரையாக்கிவிட்டு வருவேன்” என்றான் இராமன்.

இந்த நேரத்தில் சீதை இராமனிடம் ‘இந்த மானைப் பிடித்துத் தர மனம் இல்லையோ என்கிறாள்.

“லக்ஷ்மணா! நான் இந்த மானின் பின்னால் விரட்டிச் சென்று பிடித்து வருவேன். விரைவில் வந்து விடுகிறேன். அதுவரை நீ சீதைக்குக் காவலாக இங்கேயே இரு” என்று கூறிவிட்டு இராமன் விரைந்து சென்றான்.

உடனே இலக்குவன் இராமனை நோக்கி “ஐயா முன்பே தாடகையைக் கொன்றபோது வந்த மூன்று அரக்கர்களில் ஒருவன் தப்பி உயிர் பிழைத்து ஓடிவிட்டான். அந்த மாரீசன்தான் இப்போது மான் உருவில் வந்திருக்கிறான் என்று நினைக்கிறேன். நீங்களும் இதனை உணர்ந்து கொள்வீர்கள்” என்று சொல்லிவிட்டு சீதைக்குக் காவலாக நின்றான்.

இராமன் தன்னைத் துரத்தி வருவது கண்டு அந்த மாயமான் முதலில் மெல்ல நகர்ந்தது; பின்னர் வெறித்துப் பார்த்தது, அச்சம் கொண்டது போல மேலே துள்ளிக் குதித்தது; காதுகளை விரைத்துத் தூக்கிக் கொண்டு விரைந்து தாவிக் குதித்து ஓடியது. மான் ஓடவும், இராமனும் தொடர்ந்து ஓடினான். அன்று மாவலிக்கு மூவடி மண் அளந்தவன் இன்று மனித அடியால் அளந்திட ஓடினான், ஓடினான், எல்லை காணும் அளவுக்கு ஓடினான்.

ஒரு சமயம் அந்த மான் இராமனை நெருங்கி வரும். பின்னர் அவனை விட்டுத் தொலைதூரம் ஓடிவிடும். பின்னர் சற்று தாமதித்துத் தொடும் தூரம் வந்தவுடன் மீண்டும் ஓடும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பணம் கிடைக்கும் வழியில் மனத்தைச் செலுத்தும் விலைமாதர் மனம் போல அது தாவித் தாவிச் சென்றது.

மான் உருவில் வந்த மாரீசன், இராமன் தன்னைப் பிடிக்கமாட்டான், அம்பைச் செலுத்திக் கொல்லவே முயல்வான் என்று எண்ணி, தாவிக் குதித்து மேலெழுந்து பாய்ந்து செல்லலானான். அதே நேரம் இராமனும் ஒரு கொடிய அம்பை எடுத்து வில்லில் பூட்டி ‘இவன் சென்ற இடம் தொடர்ந்து சென்று அவன் உயிரை அழித்து விடு’ என்று சொல்லி செலுத்தினான். இராமன் செலுத்திய பாணம் மான் உருக் கொண்ட அரக்கனின் நெஞ்சில் பாயவும், அவன் எட்டு திசையும் கிடுகிடுக்கும்படியாக “ஹா! சீதே! லக்ஷ்மணா!’ என்று இராமனுடைய குரலில் கூவி அழைத்து, மான் உருவம் மறைந்து அரக்கன் உருவில் ஒரு குன்று போல கீழே விழுந்தான்.

மான் உருவம் மாறி, அரக்கனின் நிஜ உருவத்தோடு மாரீசன் விழவும், “அடடா! தம்பி லக்ஷ்மணன் இது வஞ்சக பொய்மான் என்று சொன்னது எவ்வளவு சரியானது. அவன் சமர்த்தன். என் உயிர் போன்ற தம்பி லக்ஷ்மணன் சமர்த்தன். நான் உய்ய வந்தவன் அல்லன்” என்று நடந்தவற்றுக்காக வருந்தினான்.

பின்னர் சொந்த உருவத்தில் வீழ்ந்து கிடந்த அவனது உடலை அருகில் சென்று பார்த்து, இவன் கெளசிக முனிவனின் வேள்வியில் உயிர் தப்பி ஓடிய மாரீசனே என்று புரிந்துகொண்டான். இந்த அரக்கன் என் குரலில் உரக்கக் கத்தினானே, அதைக் கேட்டு சீதையும் இலக்குவனும் கவலை அடைவார்களே என்று நினைத்தான்.

ஆனால், இலக்குவன் புத்திசாலி. இந்தக் குரலுக்குடையவன் அந்த அரக்கனே என்பதை புரிந்து கொண்டான். சீதையையும் தேற்றலாம் என்று ஆறுதல் அடைந்தான். என்றாலும் இதனால் ஏதேனும் தீங்கு விளைவதற்கு முன்பாகத் தான் பொய்விடுவது நல்லது என்று இராமனும் உடனே திரும்பிச் செல்வானாயினான்.

“ஹா! சீதே! லக்ஷ்மணா! என்று மாய அரக்கன் எழுப்பிய மரண ஓலத்தைக் கேட்ட சீதை துயரமடைந்தாள். தன் கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு தரையில் விழுந்தாள். “மானைப் பிடித்துத் தரச்சொல்லி, இப்போது என் வாழ்வுக்கு ஆதாரமான கணவனையே இழந்து நிற்கிறேன்” என்று புலம்பி அழுதாள்.

“அரக்கன் புரிந்த வஞ்சகத்தால் அண்ணன் உயிரற்று வீழ்ந்த பின்னும், உதவிக்கு ஓடாமல் இன்னமும் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாயே” என்று இலக்குவனை நோக்கிக் கடிந்து பேசினாள். இந்த இடத்தில் சீதை இலக்குவனைப் பார்த்து மிகக் கடுமையான வார்த்தைகளைப் பேசினாள் என்று வான்மீகத்தில்

குறிப்பிடப்பட்டிருந்தாலும், கம்பர் பெருமான் இந்த ஒரே வரியில் நிறுத்திக் கொண்டார். இவ்வளவு காலம் பார்த்துப் பழகிய இலக்குவனை அந்த அளவுக்கு சந்தேகித்து பேசியிருக்க மாட்டாள் என்பது கம்பரின் நம்பிக்கை.

“அன்னையே, அந்தக் குரல் அண்ணனுடையது அல்ல. அந்த மாய அரக்கன் செய்த சூழ்ச்சி. இந்த உலகில் அண்ணனையும் மிஞ்சிய வீரன் ஒருவன் இருக்கிறானா? நீங்கள் உண்மை உணராமல் வருந்துகிறீர்கள்” என்றான் இலக்குவன்.

“இல்லை எம்பெருமானுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகும் நீ கவலையின்றி இப்படிப் பேசுவது நெறியல்ல” என்று கடிந்து பேசினாள். “இராமபிரானிடத்து ஒரே ஒரு நாள் பழகியவர்கள்கூட இராமனுக்காகத் தன் உயிரையும் கொடுத்து உதவி புரிவர். ஆனால், லக்ஷ்மணா! இராமனின் குரலைக் காதால் கேட்டும் வருந்தாமல் என் எதிரில் நின்று கொண்டிருக்கிறாய். இனி எனக்கு வேறு வழி ஏது. இப்போதே தீ மூட்டி அதில் விழுந்து இறந்து போகிறேன்” என்றாள்.

இலக்குவன் மனக் கலக்கம் அடைந்தான். சீதையைத் தீயில் விழாமல் தடுத்தான். அவள் பாதங்களில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். “தாங்கள் கூறிய சொற்களுக்கு அஞ்சுகிறேன். தாங்கள் ஏன் இறக்க வேண்டும். உமது கட்டளையை சிரமேல் கொள்வேன். தங்கள் மனவருத்தம் நீங்கி இங்கே இருப்பீர்களாக! விதி நம்மை மிகவும் கோபத்தோடு சோதிக்கிறது. விதியை நம்மால் வெல்ல முடியுமா? அடியனேன் இப்போதே போகின்றேன். பெரிய கேடு ஒன்று நம்மைத் தேடி வருகிறது. என் ஐயன் என்னை இங்கே இரு என்று சொன்னதை அவர் கட்டளையை மீறி போகச் சொல்கிறீர்கள். தாங்கள் துணையின்றி தனித்து இருக்கின்றீர்கள். என் மனம் துயரத்தால் வெந்து போகிறது. அன்னையே விடைபெறுகிறேன்”.

இங்கே இருந்தால் அன்னை தீயில் விழுந்து விடுவாள், இராமனைத் தேடி நான் போவேனேயானால், இங்கு ஏதோ தீங்கு வந்து சேரும். நான் என்ன செய்வேன் என்று இலக்குவன் வருந்தினான். பிறகு ஜடாயு இந்தக் காட்டில் நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான், அப்படி ஏதேனும் தீங்கு வருமானால் அவன் பார்த்துக் கொள்வான் என்று தேறி இலக்குவன் இராமனைத் தேடிச் சென்றான்.

இலக்குவன் அவ்விடத்தை விட்டு நீங்கியதும், அங்கு மறைந்திருந்த இராவணன், ஒரு தவசி உருவம் தாங்கி சீதை இருக்குமிடம் வந்து சேர்ந்தான். அவன் தவசி வேடத்தோடு, கையில் ஒரு திரிதண்டகம் எனும் கோல் ஏந்தி வந்தான். (“முளைவரித் தண்டொரு மூன்றும் முப்பகைத் தளை அரி தவத்தவர் வடிவும் தாங்கினான்” என்று கம்பர் கூறுகிறார். இது மூன்று மூங்கிற் கம்புகளை ஒன்றாக இணைத்துக் கட்டப்பெற்ற தண்டு எனப்படும். இதனை “திரிதண்டகம்” என்பார்கள். காமம், வெகுளி, மயக்கம் எனும் முப்பகைகளை வென்றதற்கு அடையாளமாக இத்திரிதண்டம் துறவிகள் கைகளில் வைத்திருப்பர். பொதுவாக வைணவத் துறவிகள் ‘திரிதண்டிகள்’ ஆவர். மற்றொரு வகை துறவியர் “ஏகதண்டியர்”. இவர்கள் ஒரெ தண்டத்தை உடையவர்கள். இங்கே இராவணன் திரிதண்டம் ஏந்தி தவத்தவர் வடிவம் தாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இராவணன் காவி உடை, குடுமி, குடை, திரிதண்டம், கமண்டலம் முதலியன கொண்டு வந்ததாக வான்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது).

பசியால் வருபவன் போல சோற்றை யாசித்தபடி கையில் வீணையின் நாதத்தோடு வேதத்தைப் பாடிக்கொண்டு அங்கே வருகிறான். தோற்றத்தில் உடல் நடுக்கம் கொண்ட ஒரு முதியவனைப் போல தோன்றினான். அவன் பர்ணசாலையின் வாயிலை வந்தடைந்து “யாவர் இவ் இருக்கை உள் இருந்தீர்!” என்று குரல் கொடுக்கிறான்.

“யாரம்மா குடிசைக்குள்?” என்று அவன் கூவிய சொல் கேட்ட சீதை “யாரோ பாவம்! இந்த வனத்திடை வாழும் ஒரு பரதேசி இவன் என்று எண்ணிக்கொண்டு “வாருங்கள், இங்கு எழுந்தருள்க! என்று கனிவோடு வரவேற்றாள்.

பார்த்தான் தேவியை இராவணன் முதன்முதலாக. உடல் வியர்த்தது; உள்ளம் ஆசை எனும் வெள்ளம் கரை புரள, அழகுக் கெல்லாம் அழகு செய்யும் அழகை, புகழின் இருப்பிடத்தை, கற்பினுக்கு அரசியைத் தன் கண்ணால் நோக்கினான். தேவியின் திருவுருவைக் கண்டு அவன் தோள்கள் பூரித்தன. அவளை எப்படி அடைவது என்ற கவலையில் உடனே அவை மெலிந்தன. பிராட்டியைப் பார்த்ததும் இராவணனுக்கு இவள் திருமகளே என்ற எண்ணம் உண்டாயிற்று. சூர்ப்பனகைக்கும் முதன்முதலில் சீதையைப் பார்த்ததும் இதே உணர்வுதான் ஏற்பட்டது.

“இங்கே அமர்ந்து கொள்ளுங்கள்” என்று பிரம்பினால் செய்த ஆசனத்தை அந்த போலி சந்நியாசிக்கு இட்டாள் சீதை. தன் திரிதண்டத்தை ஓர் ஓரமாக சாத்திவிட்டு அமர்ந்தான் இராவணன். இந்தக் காட்சியைக் கண்டு காட்டில் மலைகளும், மரங்களும்கூட மருண்டன. பறவைகள் ஒலி எழுப்ப மறந்து மரங்களில் ஒளிந்துகொண்டன. விலங்குகள் இரை தேடாமல் அஞ்சி ஓடின; பாம்புகளும் படத்தைச் சுருக்கிக் கொண்டு புற்றில் ஒளிந்தன. பாதகத் தொழில் புரியும் விலங்குகளும் விஷ ஜந்துக்களும்கூட அஞ்சும்படியான மாபாதகச் செயலைச் செய்ய இராவணன் துணிந்தான்.

“இந்த இடம் யாருடையது? இங்கு வசிக்கும் தவசி யார்? நீங்கள் யார்?” என்று அந்த இராவண சந்நியாசி கேட்டான்.

“பெருமைக்கு உரியீர்! பழமையான இக்ஷுவாகு வம்சத்தில் வந்த தசரத சக்கரவர்த்தியின் குமாரர், தன் தம்பியோடு, தன் தாயின் கட்டளைப்படி, அவர் உத்தரவை சிரமேல் தாங்கி வனம் புகுந்து இவ்விடம் வந்து வசிக்கிறார். அவர் பெயர்கூட தங்களுக்கும் தெரிந்திருக்குமே!” என்கிறாள் சீதை.

“ஆம்! நீங்கள் சொன்ன செய்திகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆயினும் நேரில் கண்டதில்லை. அந்த கங்கை நதி வளப்படுத்தும் கோசல நாடு போயிருந்தேன். தாங்கள் யாருடைய மகள்? இந்தக் கொடிய காட்டில் வாழ்கிறீர்களே!” என்றான்.

அதற்கு பிராட்டி “அடிகளே! தங்களைப் போன்ற தவசிகளைத் தவிர வேறு தெய்வத்தை நினையாத ஜனக மகாராஜனின் மகள் நான். காகுத்தனின் மனைவி” என்றாள்.

அப்படித் தன் வரலாற்றை எடுத்துரைத்த அன்னை ஜானகி, சந்நியாசியை நோக்கி “பெரியோய்! இந்தக் கொடிய காட்டு வழியில் வந்து வருந்துகிறீர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றாள்.

அதற்கு அந்தப் போலி சந்நியாசி வேடத்திலிருந்த இராவணன் பதில் சொல்கிறான்.

“தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும், சித்திரத்தில் எழுத முடியாத அழகு உடையவனும், பிரமனின் வழித் தோன்றலுமான ஒரு சுந்தரன், வானுலகம் உள்ளிட்ட எல்லா உலகங்களையும் ஆண்டு கொண்டிருக்கிறான். அரிய வேதங்களை ஓதி கரை கண்டவன். கைலாய மலையையே வேரோடு பெயர்த்து எடுக்கும் வல்லமை பெற்றவன்; எண்திசை காவல் யானைகளோடும் போரிட்டு வென்றவன், தேவர்கள் அவன் அருள்நாடி நிற்கும் சிறப்புடையவன்; அழிவு இல்லாத வாழ்வை உடையவன்; சிவபெருமான் அருளிய ‘சந்திரஹாசம்’ எனும் வாளுக்கு உரியவன்; நவகிரஹங்களைச் சிறையில் அடைத்து வைத்தவன்; மேலான குணங்களையுடையவன்; நல்ல கல்விமான்; நடுநிலையாளன்; மன்மதனும் கண்டு பொறாமைப் படும் அழகன்; உலகத்தோர் தெய்வம் என்று வழிபடும் தன்மையன்; அகில உலகத்திலுமுள்ள பெண்கள் அவன் அருளுக்காக ஏங்கும் தன்மையன்; அப்பேற்பட்ட ஒருவன் தன் மனம் நாடிய பெண்ணுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான்” என்கிறான். இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதை முகம் சுளிக்கிறாள்.

“அப்பேற்பட்ட தலைவன் வாழுகின்ற ஊரான இலங்கையில் சில காலம் தங்கி இருந்தேன். அவனைப் பிரிய மனமில்லா விட்டாலும் அவன் மனக் குறை தீர்க்க மீண்டும் திரும்பினேன்” என்றான்.

“முற்றும் துறந்த தாங்கள், உடல்கூட பாரம் என்று எண்ணுகின்ற சந்நியாசி, வேதங்களைக் கற்ற அந்தணர்களை அணுகாமல், மனித உயிர்களைத் தின்னும் அரக்கர்களிடையே சென்று வாழக் காரணம் என்ன? தவசியர்களோடு தங்காமல், நீர்வளம் மிக்க நாடுகளில் தங்காமல், நல்ல குடும்பங்கள் வாழும் புகழ்மிக்க நாட்டில் போய் தங்காமல், தர்ம வாழ்வை நினையாத அரக்கர்களிடையே தங்கி வாழ்ந்தேன் என்று சொல்லுகிறீர்களே, என்ன தகாத காரியம் செய்தீர்!” என்றாள் சீதை.

“பெண்ணே! அரக்கர்கள் தேவர்களைப் போல கொடியவர்கள் அல்லர். எம்போன்ற தவசியற்கு இந்த அரக்கர்களே நல்லவர்கள்” என்றான் அந்த போலி சந்நியாசி. இவன் உண்மையான தவசியல்ல என்பதையோ, அரக்கர்கள் இப்படி உருவத்தை மாற்றிக் கொண்டு வரக்கூடியவர்கள் என்பதையோ அறியாத அன்னை, இவன் மேல் சந்தேகப் படாமல் மேலும் பேசுகிறாள். “என்னதான் இருந்தாலும் கெட்ட குணமுடையவர்களோடு பழகுபவர்கள், நல்லவர்களாக எப்படி இருக்க முடியும்?” என்றாள் சீதை.

சீதையின் ஐயத்தைப் போக்குபவன் போல இராவண சந்நியாசி நைச்சியமாகப் பேசலானான். இவர்களிடையே வாக்குவாதம் தொடர்ந்தது. சீதை சொன்னாள்: “பெரியவரே! சிங்கம் போன்ற இராமன் கையால் அரக்கர் குலமே அழியப் போகிறது. தர்மத்தை பாவம் எங்காவது வெல்ல முடியுமா? இதைத் தாங்கள் அறியீரோ? நீங்களும்தான் பார்க்கப் போகிறீர்கள், அரக்கர்கள் அழியப் போவதை” என்கிறாள்.

இதைக் கேட்டதும் இராவணனுக்குக் கோபம் எழுந்தது. சீற்றம் கொண்டு பேசலானான். “விராடன் போன்ற அரக்கர்களை இராமன் கொன்றான் என்று பெரிதாகச் சொல்ல வந்து விட்டாயே! நாளை நடக்கப் போவதைப் பார்! அந்த இராவணன் வீரத்தின் முன்பாக இந்த இராம லக்ஷ்மண மானுடர்கள் அழிந்து போவார்கள்”.

“இராவணனை சாமானியமாக நினைத்து விட்டாயா? மேருமலையை வேரோடு பெயர்க்க வேண்டுமா? வான மண்டலத்தை இடித்துத் தகர்க்க வேண்டுமா? கடல்களைக் கலக்க வேண்டுமா? கடலுக்கடியில் சுடரும் வடவாக்கினியை அவிக்க வேண்டுமா? பூமியைப் பெயர்த்து எடுக்க வேண்டுமா? இவை எதுவும் இராவணர்க்கு அரிய காரியமே அல்ல. இராவணனை என்னவென்று நினைத்தாய்? அந்த இராம லக்ஷ்மணர் எனும் மானுடர் இராவணன் தோள்வலி முன் பூளைப்பூ போல சிதைந்து பறந்து போவார்கள். பார்!” என்கிறான் சந்நியாசி வேடத்திலிருந்த இராவணன்.

“இருபது தோள்கள் உள்ளவன் என்பதனால், அவன் பெரிய வீரனாகி விடுவானோ? இலங்கைக்கு வேந்தனான அவனை சிறையில் அடைத்த மாவீரன் கார்த்த வீரியார்ச்சுனனைத் தன் இளவயதிலேயே இரண்டு தோளுடைய பரசுராமன், தன் மழுவினால் வெட்டி எறிந்த விவரம் உனக்குத் தெரியாதோ?” என்றாள் தேவி.

இப்படி அன்னை சொன்னவுடனே இராவணனது கண்கள் அக்னி ஜ்வாலையென எரிந்தன. கோபத்தில் கைகள் ஒன்றோடு ஒன்று மோதின. பற்களை நறநறவென கடித்தான்; இந்த கோப நாடகத்தின் உச்ச கட்டமாக அவனது போலி சந்நியாசி வேஷம் கலைந்து இராவணன் உருவம் கொண்டு நின்றான். என்னதான் நல்லவன் போல வேஷம் போட்டு நடித்தாலும், கோபம் தலைக்கேறும் போது, ஒருவனது உண்மையான குணம் வெளிப்பட்டு அவனை அடையாளம் காட்டிவிடும் என்பதற்குச் சரியான எடுத்துக் காட்டு இது.

இராவணன் துறவி வேடம் கலைந்து, பத்துத் தலைகளோடும், இருபது தோள்களோடும், தீ உமிழ்கின்ற கண்களோடும் எழுந்து நின்ற தோற்றமானது பல தலைகளையுடைய ஒரு நாகம் சீற்றம் கொண்டு தன் படத்தை விரித்து எழுந்தது போல இருந்தது.

இராமபிரானுக்கு என்ன நேர்ந்ததோ எனும் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கும் சீதா பிராட்டிக்கு, இப்படியொரு கொடிய ஆபத்து கபட சந்நியாசி உருவத்தில் வந்து சேர்ந்ததை எண்ணி, கூற்றுவன் வரும் நேரத்தில் உயிர் படுகின்ற பாட்டை அனுபவித்தாள்.

இராமனை எண்ணி கவலைப் படுவாளா? எதிரில் நின்று சீறுகின்ற இந்த அரக்கனைக் கண்டு அஞ்சுவாளா? அந்த அரக்கன் இராவணன் சீற்றத்தோடு மேலும் பேசுகிறான்.

“தேவர்கள் எல்லாம் எனக்கு ஏவல் செய்கிறார்கள். வாயு எனக்கு விசிறுகிறான். அக்னி எங்கள் அரண்மனையில் சமையல் செய்கிறான். அப்பேற்பட்ட என் வீரத்தை எண்ணிப் பார்க்காமல், கேவலம் அற்பப் புழுக்களைப் போன்ற மானுடர்களை நீ வலிமை மிகுந்தவர் என்று என் முன்னே புகழ்கிறாயே! நீ ஒரு பெண் என்பதால் பிழைத்திருக்கிறாய். இல்லையேல் உன்னைப் பிசைந்து தின்றிருப்பேன். அப்படிச் செய்த பிறகு உன்மீது ஆசை வைத்திருந்து, உன்னை அடையமுடியாமல் சாப்பிட்டுவிட்டதற்காக என் உயிரையும் விட்டுவிடுவேன்”.

“பெண்ணே! நடுங்காதே! இதுவரை என் தலைகள் எவரையும் வணங்கியது இல்லை. என் பத்துத் தலைகள் மீதும் வீற்றிருக்கும் கிரீடங்களைப் போல நான் உன்னை என் தலைமீது வைத்துப் போற்றுவேன். தேலோகப் பெண்டிரெல்லாம் உனக்கு ஏவல் செய்ய, நீ ஏழு உலகங்களையும் ஆளும் செல்வச் செழிப்பில் வாழும்படி பார்த்துக் கொள்வேன்” என்றான்.

இதைக் கேட்ட பிராட்டி, தன் செவிகளைக் கரங்களால் பொத்திக் கொண்டாள். பின்னர் சொல்லுகிறாள்:

“அரக்கனே! பூமியிலுள்ள நல்லொழுக்கம் எதுவுமே இல்லாத கடையனே! கவிகளாலும் கற்பனை செய்ய முடியாத வெற்றிப் பெருமிதமுடைய இராமபிரானின் மனைவியாகிய என்னை, முனிவர்கள் அக்னியில் இடுகின்ற புனிதமான ஆஹுதியை, கேவலம் ஒரு நாய் விரும்புவதைப் போல பேசுகிறாய். என்ன வார்த்தை சொன்னாய்?” என்று சொல்லி மேலும் பேசுகிறாள்.

“உன் கருத்துக்கு நான் இணங்காவிடில் நீ எனைக் கொன்று விடுவாய் என அஞ்சி என் குலப் பெருமையை இழக்க மாட்டேன். புல் நுனியில் நிற்கும் பனித்துளி ஆவியாவது போன்ற உயிருக்கு அஞ்சமாட்டேன். இராமனது பாணங்கள் உன்னைக் கொன்று அழித்துவிடும். அதற்கு முன் எங்கேனும் ஓடி ஒளிந்து உன் உயிரைக் காத்துக் கொள்” என்றாள்.

பிராட்டி இங்ஙனம் சொல்லவும் இராவணன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டு “உன் இராமனுடைய பாணங்கள் எண்திசை யானைகளுடன் பொருத என் மார்பில் பூச்செண்டுகள் போல வந்து விழும். உன்னைத் தேடி வந்திருக்கும் சிறப்பான பதவியை மறுக்காமல் நீ ஏற்றுக்கொள்” என்று சொல்லிக் கொண்டே, சீதாபிராட்டியை இராவணன் கீழே விழுந்து வணங்கினான்.

அரக்கன் இராவணன் தன் காலில் விழுந்து வணங்கியது கண்டு துணுக்குற்று கொலைவாள் தன்மீது பட்டுவிட்டதைப் போல ஆவி குலைந்து வருந்தினாள்.

“இறைவா! என் தலைவா! பெருமானே! இளையோய்!” என்றெல்லாம் வாய்விட்டுக் கூவிக் கதறினாள்.

உடனே இராவணன் சீதை இருந்த இடத்தில் பூமியைக் கீழாகவும், பக்கவாட்டிலும் ஒரு யோசனை அளவு பெயர்த்து எடுத்தான். (பிரமன் சாபப்படி இவன் வேறொரு பெண்ணைத் தீண்டினால் இறந்து போவான் என்பதனால், சீதையைக் கைகளால் தீண்டாமல் தரையைப் பெயர்த்து பூமியோடு எடுத்தான்). அப்படிப் பெயர்த்தெடுத்த நிலத்தோடு கூடிய சீதையைத் தன் தேரில் வைத்தான். சீதை மூர்ச்சையாகி வீழ்ந்து விட்டாள். அப்போது இராவணன் வான மார்க்கமாகச் செல்ல தன் தேரோடு மேலே எழும்பினான்.

மூர்ச்சை தெளிந்து எழுந்த சீதாபிராட்டி தன் நிலை அறிந்து அரற்றினாள். புரண்டாள்; அழுதாள். “ஏ! தர்மமே! இது என்ன சோதனை. இந்த துயரத்திலிருந்து காப்பாற்று!” என்று அலறினாள். “ஏ! மலைகளே! ஏ! மரங்களே! மயில்களே! குயில்களே! கலைமான்களே! யானைகளே! என் நிலையை அந்த இராமனிடம் சென்று சொல்லுவீர்களா?” என்று கதறினாள்.

“மலையே! மரனே! மயிலே! குயிலே!

கலையே! பிணையே! களிறே! பிடியே!

நிலையா உயிரேன் நிலை தேறினீர் போய்

உலையா வலியார் உழை நீர் உரையீர்!”

இங்ஙனம் மேகங்களை, சோலைகளை, காட்டில் உறையும் தெய்வங்களை எல்லாம் கூவி அழைத்துப் புலம்புகிறாள். கோதாவரி நதியைப் பார்த்து “நீ போய் இராமபிரானிடம் என் நிலைமையை எடுத்து உரைத்துக் காக்கமாட்டாயா?” என்கிறாள்.

பிராட்டியின் புலம்பலைக் கேட்ட இராவணன் கோபமடைந்தான். “அந்த இராமன் என்னோடு போரிட்டு முடிந்தால் என்னைக் கொன்றுவிட்டு உன்னை மீட்டுச் செல்லட்டும்” என்று சொல்லி சிரித்தான்.

“உன் மாயையால் மாயமானை உருவாக்கி அதன் மூலம் உன் உயிரை விடுவதறுகு இராமனை அதன் பின் போகச் செய்தாய். அவர் இல்லாத போது என்னை கவர்ந்து செல்கிறாய். அப்படி அவரோடு போரிட்டு வெல்லும் திறமை உனக்கு இருந்தால் இங்கேயே நில். ஓரடிகூட நகராதே!” என்று சொல்லி அன்னை தொடர்ந்து பேசுகிறாள்.

“நீயும் ஒரு வீரனா? பதினாலாயிரம் போர்ப்படை வீரர்களோடு கர தூஷணாதியர்கள் போரிட வந்தபோது அவர்களைக் கொன்று, சூர்ப்பனகையின் மூக்கையும், மார்பையும் அறுத்துத் துன்புறுத்திய மானுடர்கள் இந்த வனத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டும் இப்படியொரு மாயம் செய்வது அச்சத்தினாலன்றி வேறென்ன?” என்று பிராட்டி சொன்ன அளவில், இராவணன் அவளை நோக்கி “பெண்ணே! வலிமையற்ற அந்த மானுடர்களோடு போர் செய்வது, கைலாயத்தையே பெயர்த்து எடுத்த எனது வீரத் தோள்களுக்கு இழுக்கு. அதனினும் இத்தகைய மாயம் புரிவதே நல்லது” என்றான்.

“பகைவன் என்று அறிந்த பின்னரும் அவர்களோடு போரிடுவதற்கு நாணம் போலும்; கற்புடைய பெண்டிரைக் கள்ளத் தனமாய்க் கவர்ந்து செல்லுதல் வீரம் போலும்; இரக்கமற்ற அரக்கர்களுக்கு எதுதான் நியாயம் என்பது புரியவில்லையே” என்றாள் அன்னை. இப்படி பிராட்டி கூறிய தே கணத்தில் இடி இடிப்பது போன்ற குரல் ஒன்று “அடா! எங்கேயடா போவது நீ! அங்கேயே நில்!” என்று கேட்டது. அப்போது எதிரில் கழுகரசன் ஜடாயு தன் பெரிய சிறகுகளை விரித்து எதிர்த்து வந்தான்.

ஜடாயு பறந்து வந்த வேகத்தில், மலைகள் பெயர்ந்து ஒன்றோடொன்று மோதின. கடலும் உலகமும் அழிந்ததுபோன்ற காட்சி தோன்றியது.

“உத்தமன் இராமனின் தேவியை ஒரு தேரில் வைத்து எங்கே போகிறாய்? வானம் முதல் அத்துணை வழிகளையும் என் சிறகால் மறைப்பேன்” என்று முழக்கமிட்டான் ஜடாயு. அருகில் வந்து பிராட்டியைப் பார்த்து “நீ பயப்படாதே!” என்று தைரியம் கூறிவிட்டு இராவணன் சீதையைத் தொடவில்லை என்று தெரிந்துகொண்டு, கோபத்தை அடக்கிக் கொண்டு அவனிடம் பேசலானான்.

“நீ இப்படியொரு காரியம் செய்தொழிந்தாய். மரியாதையாக இவளை இங்கே விட்டால் பிழைத்தாய். இன்றேல் செத்தாய். அறிவில்லாதவனே! அன்னையை யாரென்று நினைத்தாய்? தாய் போன்ற இவளை என்ன நினைத்துத் தூக்கி வந்தாய்? இனி உனக்கு வாழ்வளிக்கப் போவது யார்?” என்றான் ஜடாயு.

அவன் பேசியவைகளைக் கேட்ட இராவணன் ஆத்திரமடைந்தான். “நிறுத்து! மேலே ஒரு வார்த்தையும் பேசாதே. கொண்டுவா அந்த மனிதர்களை என் முன்பாக. உயிர் பிழைத்து இருக்க வேண்டுமாலால் ஓடிப்போ இங்கிருந்து” என்றான் இராவணன்.

ஜடாயு சேதையைப் பார்த்து “தாயே! அஞ்சாதே! உன் கணவன் இராமன் வில் எடுத்து உன்னைக் காக்க வரவில்லையே என்று எண்ணாதே. நான் இருக்கிறேன். இப்போதே இவன் உடலை சின்னபின்னமாக்கி விடுகிறேன்” என்றான்.

பின்னர் ஜடாயு இராவணனுடன் போரிடுகிறான். அவன் தலை மீதிருந்த கிரீடங்களைத் தன் காலால் தட்டி விடுகிறான். அவன் தேரை அடித்து, கொடியை அறுத்து வீசுகிறான். இருவருக்கும் கடுமையான துவந்த யுத்தம் நடைபெறுகிறது. தேவர்கள் அஞ்சினார்கள். அச்சத்தின் காரணமாக அவர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

இராவணன் உடல் முழுவதும் ஜடாயு ஏற்படுத்திய காயங்களிலிருந்து குருதி கொட்டியது. இராவணனின் காது குண்டலங்களை அறுத்தெறிந்தான்; கவசத்தை உடைத்தான்; மூக்கால் குத்தினான்; கால்களால் பிராண்டினான்; அவனது கை வில்லைத் தன் அலகுகளால் பிடுங்கினான்; வானத்தில் பறந்து சென்று அந்த வில்லைத் தன் கால்களால் ஒடித்து எறிந்தான்.

இராவணன் ஒரு சூலாயுதத்தை எடுத்து ஜடாயு மீது வீசுகிறான். அதனை அவன் தன் மார்பில் தாங்குகிறான். செயலற்றுப் போய் அந்த சூலாயுதம் கீழே விழுகிறது. இராவணன் ஒரு பொன்னால் ஆன தண்டாயுதத்தை எடுத்து ஜடாயுமீது வீச, அவன் அடிபட்டுக் கீழே விழுகிறான். அந்த நேரம் பார்த்து இராவணன் தேரை வானத்தில் செலுத்தினான். சீதாபிராட்டி துன்பம் மிகுதியால் புரண்டு அழுதாள். இதைக் கண்ட ஜடாயு சீதைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே மேலெழுந்து தேரின் மீது விழுந்தான். தேரில் பூட்டியிருந்த குதிரைகளைத் தன் அலகால் கொத்திக் கொன்றான்.

இராவணனும் மூர்ச்சித்து விழுந்தான். பின் எழுந்தான். அடக்க முடியாத கோபம் அடைந்தான். தன்னிடமிருந்த ஆயுதங்களையெல்லாம் ஜடாயு அழித்து விட்டதை உணர்ந்தான். எஞ்சியிருந்த தன் உடைவாளை உறுவி எடுத்தான். அதனை ஜடாயு மீது வீசினான். அந்த வாள் சிவபெருமான் இராவணனுக்குக் கொடுத்த ‘சந்திரஹாசம்’ எனும் வாள். அந்த வாள் ஜடாயுவைத் தாக்கி கீழே சாய்த்தது. அந்த காட்சியைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் தாங்கொணா துயரமடைந்தனர்.

ஜடாயு வீழ்ந்தது கண்டு இராவணன் ஆரவாரம் செய்தான். சீதையோ, தன் உதவிக்கு வந்த ஒரே ஆதாரமும் வீழ்ந்துவிட்டது பற்றி நிலை குலைந்தாள். நான் இனி என்ன செய்வேன் என்று புலம்பினாள். எனக்குக் காவல் இருந்த இலக்குவனை கடும் மொழி பேசி துரத்தினேனே என்று வருந்தினாள். உதவிக்கு வந்த ஜடாயுவும் விழுந்து விட்டானே, இனி என்ன செய்வேன் என்று வருந்தினாள். அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்ற வேத மொழி பொய்யாகப் போய்விடுமோ? என்று ஏங்கினாள். பலபல சொல்லி விம்மினாள்; அழுதாள், இரங்கி ஏங்கினாள், உணர்விழந்தாள்.

இராவணன் சீதையோடு மேலெழும்பிச் செல்வது கண்டு செயலிழந்து கிடந்த ஜடாயு வருந்தினான். என் குமாரர்கள் இராம லக்ஷ்மணர் இன்னும் இங்கு வரவில்லையே. மருமகள் சீதைக்கு உண்டான கெடுதியை நீக்கிய புகழை அவர்கள் பெறவில்லையே. இனி என்னவாகுமோ என்று ஜடாயு வருந்தினான்.

எப்படியும் இராமன் வருவான். அரக்கர்களை மூலநாசம் செய்து பழிதீர்ப்பான். இராவணனுக்கு உள்ள சாபம் காரணமாக அவனால் பிராட்டியைத் தொடமுடியாது என்று மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

அரக்கனாகிய இராவணன் சீதையோடு வானவழியில் சென்று இலங்கை அடைந்து அங்கே சிஞ்சுவ (அசோக) மரத்தடியில் அரக்கியர் காவல் இருக்க சிறை வைத்தான். இனி அங்கே இலக்குவனைச் சற்றுப் பின் தொடர்ந்து சென்று அங்கே என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

இராமன் குரல் போல ஒலித்த கூக்குரலைக் கேட்டு சீதை ஏவ, இலக்குவன் இராமனுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய வந்தாலும், அவன் மனம் அன்னை சீதை, துனையின்றி தனிமையில் இருக்க நேர்ந்த நிலை குறித்து வருந்திய வண்ணம் இருந்தான். இராம பிரானை விட்டுப் பிரிந்திராத இலக்குவன், சிறிது நேர பிரிவுக்குப் பிறகு இராமன் அங்கு நலமாக இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தான். தன்னைப் போன்ற குரலில் அந்த அரக்கன் அபயக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சீதையும் இலக்குவனும் கலக்கமடைவார்களே என்று நினைத்த இராமனுக்கு, இலக்குவனைக் கண்டதும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

நீ சீதைக்குக் காவலாக அங்கே இரு என்று சொல்லியிருந்தும், இவன் ஏன் இங்கே வந்தான், என்று நினைத்த இராமன், இலக்குவன் தன்னருகில் வந்து நமஸ்கரித்ததும், அவனைத் தழுவி எடுத்து நீ இங்கே வந்த காரணம் என்ன என்று வினவினான். இலக்குவன் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைத்தான். அன்னை, தன்னை கடிந்து பேசி அனுப்பியதையும் குறிப்பிட்டான். நடந்தவற்றையெல்லாம் கேட்டறிந்த இராமன், இலக்குவன் சீதை இருவர் மீதும் கோபம் கொள்ளாமல், அனைத்துக்கும் தானே காரணம் என்று மனம் வருந்தினான்.

அங்கு பிராட்டி தனியாக இருப்பாளே என்று இருவரும் அவசரமாக பர்ணசாலைக்குத் திரும்பினார்கள். அங்கே சீதாபிராட்டி இல்லாதது கண்டு திகைத்துப் போய் நின்றார்கள். இராமனுக்கு –

“மண் சுழன்றது; மால்வரை சுழன்றது; மதியோர்

எண் சுழன்றது; சுழன்றது அவ்எறிகடல் ஏழும்

விண் சுழன்றது; வேதமும் சுழன்றது, விரிஞ்சன்

கண் சுழன்றது; சுழன்றது கதிரொடு மதியும்”.

என்ன செய்வது? யாரை கோபிப்பது?

“அறத்தைச் சீறும் கொல், அருளையே சீறும் கொல்

திறத்தைச் சீறும் கொல், முனிவரைச் சீறும் கொல், தீயோர்

மறத்தைச் சீறும் கொல், என்கொலோ முடிவென்று மறையின்

நிறத்தைச் சீறும் கொல், நெடுந்தகையோன் என நடுங்க”.

நடந்துவிட்ட காரியங்களுக்காக யாரிடம் கோபிக்க முடியும்? யார் இவைகளுக்குப் பொறுப்பு? அப்போது இலக்குவன் சொல்கிறான் “இங்கே தேரின் சுவடு சிறிது தூரம் தெரிகிறது. அன்னை இருந்த பர்ணசாலை மண்ணோடு பெயர்த்து எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி அன்னையத் தூக்கிக் கொண்டு போகிறவன் நெடுந்தூரம் போயிருக்க முடியாது. உடனே விரைந்து போய் தேடுவோம்” என்றான்.

“ஆம், நீ சொல்வதுதான் சரி, வா! உடனே பின் தொடருவோம்” என்று சொல்லி வில்லைக் கையில் தாங்கி, அம்புறாத்தூணியைத் தோளில் அணிந்துகொண்டு இருவரும் விரைந்து சென்றனர். தேரின் தடம் சிறிது தூரம் சென்றதும் மறைந்து விட்டது. “தம்பி! இனி என்ன செய்வது” என்று இராமன் திகைத்தான்.

“அண்ணா! நாம் திகைத்து நிற்பதில் என்ன பயன்? தேரின் தடம் மறைந்தால் என்ன? தேர் தென் திசை நோக்கிச் சென்றது தெரிகிறது. நாமும் தென் திசையில் தொடர்ந்து தேடிச் செல்வோம்” என்றான்.

அப்படி அவர்கள் தென் திசை நோக்கி இருகாத தூரம் சென்றிருப்பார்கள். அங்கே ஒரு போர் நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. வீணைக் கொடியொன்று அறுபட்டு விழுந்து கிடந்தது. சீதையை விடுவிக்கும் பொருட்டு, அவளைத் தூக்கிச் சென்ற கொடியவர்களோடு தேவர்கள் போரிட்டிருப்பார்களோ என்று எண்ணிய இராமனிடம் இலக்குவன் அன்னையைத் தூக்கிச் சென்றவன் இராவணனே என்றும், அவனுடன் சண்டையிட்டு தேரை உடைத்து கொடியை அறுத்தவர் ஜடாயுவே என்றும் திண்ணமாக உணர்ந்தான்.

அப்படியானால் ஜடாயு எங்கே என்று தேடிக்கொண்டு செல்கையில், அங்கே ஒரு கொடிய வில் முறிந்து கிடப்பதைக் கண்டனர். அருகே மும்முனைகள் கொண்ட சூலமொன்றும், அம்புறாத்தூணிகள் இரண்டும் கிடப்பதைக் கண்டனர். மேலும் சற்று தூரத்தில் ஒரு கவசமும் அறுந்து உடைந்து கிடப்பதைக் கண்டனர். அங்கே சதையும், இரத்தமும் சிதறிக் கிடப்பதையும் கண்டனர். அப்போது இராமன் சொல்லுகிறான் “தம்பி! இங்கு கிடக்கும் பொருட்களைக் கண்டால், ஜடாயுவோடு பலர் போர் செய்திருக்கிறார்கள் போலும்” என்றான்.

இலக்குவனோ, இராவணன் ஒருவன் மட்டும்தான் போர் புரிந்திருக்க வேண்டும் என்றான். இப்படி பேசிக் கொண்டு மேலும் சற்று தூரம் சென்றதும், அங்கே இரத்த வெள்ளத்தில் ஜடாயு வீழ்ந்து கிடப்பதை இருவரும் கண்டு துன்பம் மேலிட ஜடாயுவின் மீது விழுந்து கதறினர். இராமன் உணர்வு இழந்தான். ஒரு நாழிகைப் பொழுது அவன் மூச்சும் அடங்கியது. பின்னர் தேறி எழுந்து அரற்றினான்.

“என் பொருட்டு தந்தை தசரத சக்கரவர்த்தி மாண்டு போனார். என் தந்தைக்கு இணையான ஜடாயுவே, நீங்களும் என் பொருட்டு உயிரை இழந்தீரோ? என்ன துர்பாக்கியசாலி நான்” என்றான்.

ஜடாயுவைப் பற்றி பற்பல சொல்லி புகழ்ந்து, மனம் நொந்து வருந்தினான்.

“மாண்டேனே அன்றோ! மறையோர் குறை முடிப்பான்

பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன்

நீண்டேன் மரம்போல நின்று ஒழிந்த புன் தொழிலேன்

வேண்டேன் இம்மாயப் புன் பிறவி வேண்டேனே”.

“என் தாரம் பற்று உண்ண, என்றாயை சான்றோயைக்

கொன்றானும் நின்றான், கொலையுண்டு நீ கிடந்தாய்

உன்தாள் சிலை ஏந்தி வாளிக் கடல் சுமந்து

நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே”.

இப்படிப் பலப்பல சொல்லி இராமன் புலம்பினான். அப்போது சற்று உணர்வு திரும்பிய ஜடாயு கண் திறந்து இவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான்.

“குழந்தைகளே! என் உயிர் நீங்கும் தருணத்தில் உங்களைக் கண்டதில் மகிழ்கிறேன். வாருங்கள்!” என்று கூறி அவர்களை உச்சி மோந்தான்.

“நடந்த காரியம் வஞ்சனையால் நடந்தது என்பதை நான் ஊகித்தேன். பிராட்டியைத் தனியே விட்டு எங்கே போனீர்கள்?” என்றான் ஜடாயு.

இலக்குவன் நடந்த வரலாற்றை ஒன்று விடாமல் கூறினான். ஜடாயு இவர்களுக்கு தைரியம் சொல்லித் தேற்றினான். ஒருவருக்கு தீங்கு வருவதும், பின்னர் அது நீங்குவதும் தொன்று தொட்டு நடந்து வருவதுதான் என்றான். பிறகு இராவணன் சீதையை மண்ணோடு பெயர்த்துத் தேரில் வைத்துக் கொண்டு போனதையும், தான் தன் பலம் முழுவதும் கொண்டு அவனுடன் போரிட்டதையும், அவனோ சிவன் கொடுத்த வாளால் தன்னை வெட்டிவிட்டு ஓடிவிட்டதையும் தெரிவித்தான்.

இதைக் கேட்டதும் இராமன் கடும் கோபம் கொண்டான். தனியே இருந்த சீதையை அரக்கன் அபகரித்துக் செல்கையில் சும்மா பார்த்துக் கொண்டிருந்த அனைத்து உலகங்களையும், தேவர்களையும் இப்போதே அழித்து விடுகிறேன் என்று சூளுரைத்தான். இராமன் கொண்ட கோபத்தால் உலகம் அஞ்சி நடுங்கியது. ஜடாயு அன்போடு இராமனிடம் “செவ்வியோய்! இராமா! நீ கோபம் கொள்ளாதே. தேவர்களும், முனிவர்களும் நீ அரக்கர்களை வெல்வாய் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ அவர்கள் மீது கோபப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள். நீ முதலில் சீதையை மீட்டு தர்மத்தைக் காப்பாற்று. பிறகு அரக்கர்களை அழித்து உலகத்தைக் காப்பாற்று” என்றான்.

இராமன் அமைதியடைந்து சமாதானமானான். பின்னர் ஜடாயுவிடம் “ஐயனே! அந்த அரக்கன் ஜானகியைத் தூக்கிச் சென்ற இடம் எதுவோ?” என்று வினவினான்.

அப்போது ஓய்ந்து போன ஜடாயுவும், தன் ஆவி நீங்கினான். ஜடாயு இறந்தது கண்டு தேவர்கள் அழுதனர். இராம இலக்குவர் அழுதனர். பின்னர் கரங்களை சிரம் மேல் கூப்பி அவனைத் தொழுதனர். பிறகு தன் தந்தை தசரதனுக்கு ஈமக்கடன்களைச் செய்ய முடியாமல் போன இராம லக்ஷ்மணர், தன் தந்தையைப் போன்ற ஜடாயுவுக்கு ஈமக்கடன்களைச் செய்தனர்.

ஜடாயுவின் ஈமக் கடன்கள் அனைத்தையும் செய்து முடித்த பிறகு, இராம லக்ஷ்மணர் இருவரும் சிறிது தூரம் நடந்து சென்று ஓரிடத்தில் அன்றைய இரவைக் கழித்தனர். இரவெல்லாம் இராமனுக்குத் தூக்கம் வரவில்லை, தவிக்கிறான், பின் தாகம் எடுக்கிறது. உடனே தன் அண்ணனின் தாகம் தீர்க்கத் தண்ணீர் எடுத்து வர இலக்குவன் புறப்படுகிறான்.

அப்போது அயோமுகி எனும் ஓர் அரக்கி எதிர்ப்படுகிறாள். அயோமுகி என்றால் இரும்பு போன்ற வலிமையும், கருமையும் உடைய முகத்தையுடையவள் என்பது பொருள். அந்த அரக்கி இலக்குவனைக் கண்டு அவன் அழகில் மயங்கி அவனைத் தூக்கிச் சென்று விடுகிறாள். அவனிடம் தான் கொண்ட மோகத்தை வெளியிடுகிறாள். தன்னை யாரும் இதுவரை தீண்டியதில்லை, நீ என்னைத் தழுவிக் கொள் என்கிறாள் அந்த அரக்கி. இலக்குவன் கோபம் கொண்டு “நீ இப்படிப் பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்கிறான். அயோமுகி அவனைக் கெஞ்சுகிறாள்.

உன் அங்கங்களை அறுத்து நான் சிதைக்கும் முன்பாக இவ்விடம் விட்டு ஓடிவிடு என்கிறான் இலக்குவன். நீண்ட நேரம் ஆகியும் தண்ணீர் கொண்டு வரச் சென்ற தம்பியக் காணாதது கண்டு இராமன் கவலையடைகிறான். அயோமுகி இலக்குவனை விடாமல் துன்புறுத்தவே, இலக்குவன் அவள் மூக்கை அரிந்து விடுகிறான், பிறகு இராமன் இருக்குமிடம் வந்தடைகிறான். மறுநாள் வழி நடை நடந்து ஒரு மலையை அடைகிறார்கள். சீதையைப் பிரிந்த இராமன் துயரம் மிகுந்து மிகவும் வருந்துகிறான். இரவெலாம் தூக்கமின்றி சீதையின் நினைவால் வாட இறுதியில் பொழுது விடிகிறது. கதிரவன் தோன்றுகிறான்.

மறுநாள் எழுந்து இராமனும் இலக்குவனும் சீதையை இராவணன் எடுத்துச் சென்ற தென் திசை நோக்கிப் பயணமாகினர். ஐம்பது காத தூரம் காட்டில் தேடி அலைகின்றனர். நண்பகலும் வந்தது. அப்படி இவர்கள் வந்து சேர்ந்த இடம் கவந்தன் எனும் அரக்கன் உயிர் இனங்களைத் தன் வயிற்றில் அடக்கும் கொடிய இடமாகும். அவன் கைகளை நீட்டி அள்ளினால் யானை முதல் எறும்பு வரை அனைத்து உயிர்களையும் எடுத்துத் தின்றுவிடுவான். இந்த அரக்கன் கைபட்டு இயற்கையே அழிந்து மாறுபட்டுப் போயிருந்தது.

மலை போன்ற உருவமுடைய கவந்தன் இராம லக்ஷ்மணர் உள்ளிட்ட வனப்பகுதி முழுவதும் தன் கைகளால் அள்ளி எடுத்தான். அரக்கர் படைதான் தங்களைச் சூழ்ந்து கொண்டதோ என்று முதலில் இராமன் நினைத்தான். இருவரும் நடந்து சென்று மலைபோல உருவத்துடன் நிற்கும் கவந்தனைக் காண்கின்றனர்.

கவந்தன் உருவம் வர்ணனைக்கு அடங்காதது. அவனது கைப்பிடியில் அகப்படுமனைத்தையும் பெரிய குகை போன்ற வாயில் இட்டுத் தின்றுவிடுபவன். இப்போது நால் அவன் கைப்பிடிக்குள் அகப்பட்டு விட்டோம். என்ன செய்யப் போகிறோம் என்கிறான் இலக்குவன். இராமன் மிகுந்த விரக்தியில் இருந்தமையால் “தம்பி! லக்ஷ்மணா! சீதையும் காணாமல் போய்விட்டாள். தந்தையும் மாண்டுபோனான். தந்தை போல நம்மிடம் அன்பு செலுத்திய ஜடாயுவும் இறந்துவிட்டான். இனி நான் வாழ விரும்பவில்லை. இந்த பூதத்திற்கு நான் இறையாகி விடுகிறேன். நீ பத்திரமாக ஊருக்குப் போய்ச் சேர்” என்றான்.

அதற்கு இலக்குவன் சொல்கிறான், “நாம் வனம் புகுமுன்பு என் அன்னை சுமித்திரா தேவி என்ன சொன்னாள் தெரியுமா? இராமனுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அவனுக்கு முன்பாக நீ உயிர் துறந்துவிடு என்றாள். இப்போது நீங்கள் உயிர் துறக்கவும், நான் நாடு திரும்பவும் முடியுமா? சொல்லுங்கள்” என்றான்.

“துன்பம் வரும்போது அதனை எதிர்கொண்டு நிற்பதுதான் வீர லக்ஷணம். மூத்தோர் துன்பப்படும்போது இளையோர் அதனைத் தடுக்காமல் இருப்பது பழியாகும்” என்கிறான் இலக்குவன். சீதை காணாமல் போனதால் இராமன் மனம் தளர்ந்து போய் இப்படிப் பேசியதை இலக்குவன் அவனுக்கு எடுத்துச் சொல்கிறான்.

ஓர் பழி வந்துற்றபோது அதனை நீக்குவதற்குப் பாடுபடாமல், பழிக்கு அஞ்சி உயிர் துறப்பது அவமானம் என்று இலக்குவன் எடுத்துக் கூறுகிறான். இவ்வளவு எடுத்துக் கூறியும், இராமன் விடாப்பிடியாக கவந்தனுக்கு இரையாக விரும்பவே, இலக்குவன் சரி அப்படியானால் அவனுக்கு நானே இரையாகிறேன் என்று போகிறான்.

இப்படி இந்த இருவருக்குள் வாதம் செய்துகொண்டு கவந்தன் முன்னால் வந்து சேர்கிறார்கள். நீங்கள் யார் என்கிறான் கவந்தன். இவர்கள் கோபம் மேலிட கவந்தனைப் பார்த்தனர். தங்கள் வாட்களை உருவி மேலெழும்பி அவன் தோள்களை வெட்டி வீழ்த்தினர். இரத்த வெள்ளத்தில் விழுந்த கவந்தன், தன் அரக்க உருவம் நீங்கி ஒரு கந்தர்வன் உருவம் பெற்றான். இந்த கவந்தன் விசுவாவசு எனும் ஒரு கந்தர்வனாக இருந்தவன். ஸ்தூலசிரஸ் எனும் ஓர் முனிவர் இட்ட சாபத்தால் அரக்கனாக மாறியவன். அப்படி அவனை சபித்தவர் அஷ்டவக்ர முனிவர் என்பவர் என்று அத்யாத்ம இராமாயணத்தில் கூறப்படுகிறது.

சாபம் நீங்கி சுய உருவம் அடைந்த கவந்தன் இராமனை வணங்கித் தன் சாபம் நீங்கியமைக்காக நன்றி கூறினான். சாபம் நீங்கிய கவந்தனை இராமன் பார்த்தான். பிறகு இலக்குவனை நோக்கி “நம்மால் கொல்லப்பட்ட இவன் இப்படியொரு ஒளிமயமான தேஜசோடு நிற்கிறானே! இவன் யார் என்று கேள்!” என்கிறான். கவந்தன் தன் வரலாற்றைக் கூறுகிறான்.

“என் பெயர் தனு. நான் ஒரு கந்தர்வன். சாபத்தினால் இந்த கீழ்ப்பட்ட அரக்கப் பிறப்பினை அடைந்தேன். தங்கள் மலர் கரங்கள் என்மீது பட்டவுடனேயே, என் முந்தைய உருவினைப் பெற்றேன். என் தந்தைக்கும் தந்தையாகிய ஐயா! நான் கூறுவதைக் கேளுங்கள். “இராமா! பிறர் யாருடைய உதவியும் தங்களுக்குத் தேவை இல்லை எனினும் சீதையத் தேடிக் கண்டுபிடிக்கத் தக்க யோசனைகளை நான் சொல்வேன். கேளுங்கள். படகு இன்றி ஆற்றைக் கடப்பது அரிது அல்லவா? அதுபோல தங்களுக்கும் அரிய உதவி தேவை அல்லவா? அதற்கான உபாயத்தை நான் உரைக்கிறேன்.”

“அறநெறியில் நடந்து, தீயவர் பக்கம் சாராமல் நல்லோர்களைச் சார்ந்து, செயல்படுதலே நன்மை பயக்கும். காட்டில் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு செலுத்துகின்ற சபரி என்னும் தவமாது இருக்கிறாள், அவள் இருப்பிடம் சென்றடைந்து, அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றி நடந்து கலைமான் பெயரைக் கொண்ட ருசியமுக பர்வதத்தில் ஏறி (ருசியமுககிரி என்பது சிருங்கேரி) அங்கே வாசம் செய்கின்ற சூரியனுடைய குமாரனான சுக்ரீவன் என்பவனுடன் நட்பு கொண்டு, அவனது துணையோடு சீதாப் பிராட்டியைத் தேடி கண்டுபிடிப்பாயாக!” என்றான் கவந்தனாக இருந்து உருவம் மாறிய கந்தர்வன்.

இராமனிடம் பின்னால் வாலி பேசும்போது தன்னிடம் வந்திருந்தால் தான் இராவனனை வென்று சீதையை மீட்டுக் கொடுத்திருப்பேனே என்கிறான். அதற்கு பதிலளிக்கும் விதமாக, கவந்தன் இராமனிடம் சொல்லும்போது “அறநெறியில் நடந்து தீயவர் பக்கம் சாராமல் நல்லோர்களைச் சார்ந்து செயல்படுதலே நன்மை பயக்கும்” என்று சொல்லும்போதே, வாலியைத் தவிர்க்கவும், அவன் சொன்ன கோட்பாடுகளுக்கு உட்பட்ட சுக்ரீவனை அணுகவும் அவன் ஆலோசனை கொடுத்திருப்பதை நாம் கவனிக்கலாம்.

பிறகு இராம லக்ஷ்மணர்களை வணங்கி கவந்தன் வான் செல்கிறான். இருவரும் காடு மலைகளைக் கடந்து இரவு நேரம் வந்தபோது யானைகள் மிகுதியும் வாழ்வதான மதங்க மகரிஷி வாழ்கின்ற இடத்தைச் சென்றடைந்தனர்.

மதங்க மகரிஷி வாழும் ஆசிரமம் துன்பம் என்பதே இல்லாத நல்வினை புரிந்தோர் வாழும் சுவர்க்கம் போன்ற இடம். இந்த மதங்கருடைய ஆசிரமத்தில், அவருடைய சீடர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டு அங்கேயே தங்கியிருந்தாள் சபரி எனும் மூதாட்டி. காட்டில் வாழ்ந்த முனிவர்கள் சபரியிடம் நீ இந்த மதங்கரின் ஆசிரமத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரு. இராமபிரான் இவ்விடம் தேடி வந்து உனக்கு அருள் புரிவான் என்று சொல்லியிருந்தார்கள். அதற்கிணங்க சபரி எனும் அந்த அம்மையார் நெடுங்காலம் இராமன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தாள்.

சபரி வாழும் அந்த மதங்க முனிவரின் ஆசிரமத்துக்கு இராமனும் இலக்குவனும் வந்து சேர்ந்தார்கள். சபரிக்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி. அவர்களை அன்போடு வரவேற்றாள். இராமனைக் கண்டதும் சவரிக்கு கண்களில் அன்பினால் கண்ணீர் பொங்கியது. உன்னை இங்கு தரிசித்ததால் இராமா! எனது பொய்யான உலகப் பற்றும் பாசமும் அழிந்து போயிற்று. அளவற்ற காலம் நான் செய்த தவத்தின் பலன் இன்று நிறைவேறிவிட்டது. பிறவித் துன்பம் இன்றோடு எனக்கு நீங்கி விட்டது. இவ்வாறு இராமனுக்கு முகமன் கூறி, இவர்கள் வரவை எதிர்பார்த்துத் தான் நல்லதாகத் தேர்ந்தெடுத்துச் சேகரித்து வைத்திருந்த கனி கிழங்குகளைக் கொடுத்து விருந்து படைத்து அதிதிகளை உபசரித்தாள்.

வழி நடந்த களைப்பு தீர இருவரும் விருந்துண்டு இனிது இருந்தபோது, சபரி சொல்லுகிறாள்: “இராமா! சிவபெருமானும், பிரம தேவனும் மற்றுமுள்ள தேவர்களும், இந்திரனும் இங்கு வந்து என்னிடம் சபரியே! உனது குற்றமற்ற தவத்திற்கு சித்தி பெறும் காலம் வந்துவிட்டது. இராமபிரான் வரவுக்காக காந்திருந்து வழிபாடுகளைச் செய்து கொண்டிரு. பின்னர் இந்த மண்ணுலகத்தைத் துறந்து எம்மிடம் வந்து சேர்!” என்று சொன்னார்கள். “இங்கு நான் செய்த புண்ணியமே நீவிர் இங்கு வருகை புரிந்தது” என்று கூறுகிறாள்.

“அன்னையே! எங்கள் துயரம் தீர்த்தாய். வழி நடந்த களைப்பும் நீங்கியது, நீ வாழ்வாயாக!” என்று அந்த சபரியை வாழ்த்திவிட்டு அன்று அங்கேயே தங்குகிறார்கள். பின்னர் சபரி இராமபிரானின் துன்பங்களை அறிந்து, சுக்ரீவனை நாடிச் செல்லுமாறு கூறி, அவன் வாழும் மலைக்குப் போகும் வழியையும் கூறுகிறாள். வீடுபேறு அடையும் மார்க்கத்தை ஒரு ஆச்சாரியாரிடமிருந்து மாணாக்கர்கள் கேட்டுத் தெரிந்து கொள்வது போல, இராமன் சபரியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

பிறகு சபரி இவ்வுலக வாழ்வை நீக்கிவிட்டு வீடுபேறு அடைந்தாள். இராம இலக்குவர் சபரி குறிப்பிட்ட பாதையில் நடந்து சுக்ரீவன் இருக்குமிடம் தேடிச் செல்லலாயினர். வழியில் பல காடுகளையும், மலைகளையும், அவர்கள் கடந்து சென்றனர். ஆறுகள் குறுக்கிட அவற்றையும் கடந்து சென்றனர். இங்ஙனம் இவர்கள் கிஷ்கிந்தையை நெருங்கிச் சென்றனர்.

(ஆரணிய காண்டம் முற்றும்)

5


கிஷ்கிந்தா காண்டம்


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய

இராம காதை

4. கிஷ்கிந்தா காண்டம்.

இராம இலக்குவரிடம் கவந்தன் கூறியபடி, அவர்கள் காட்டில் நெடுந்தூரம் நடந்து சென்று சவரியைக் கண்டு அவளது உபசாரங்களை ஏற்றுக் கொண்டு, அந்த தவமாது பிறவிப்பிணி தீர்ந்து இப்புவியை நீத்து மேலோர் உலகம் சென்றபின், அவர் காட்டிய பாதையில் சென்று சுக்ரீவனைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். வழியில் பம்பை எனும் பொய்கையை அடைகின்றனர். அந்த பொய்கை தெளிந்த நீரினையுடையது, ஆழமானது. யானைகள் வந்து அங்கே நீராடிச் செல்லும்.

அந்த பம்பையின் அழகையும், நீர் வளம், நில வளம் மற்றும் இயற்கையின் அழகிய கோலங்களையும் கண்ட இராமனுக்கு, சீதாபிராட்டியின் நினைவு வந்து மிகவும் வாட்டியது. சீதையின் நினைவால் பலசொல்லிப் புலம்பித் தவித்தான். பின்பு அந்த பம்பையில் இறங்கி இராமன் நீராடினான். விரக தாபத்தால் சூடேறியிருந்த இராமனது உடல் நீரில் மூழ்கவும், கொல்லன் உலைக் களத்தில் இரும்பைச் சூடாக்கிப் பின் நீரில் அழுத்தும் போது சுறுசுறு வென்று அந்த நீரும் சூடாகுவது போல, அந்த பம்பையின் நீரும் சூடேறியது.

இராமன் பம்பையில் நீராடிவிட்டு இறைவனையும், முனிவர்களையும் தொழுது வழிபட்ட பிறகு, அந்தச் சோலையின் ஓர் புறத்தே தங்கினான். சூரியனும் அன்றைய பொழுது முடிந்து அஸ்தமனமானான். இரவு நேரம் நெருங்கவும், சீதையின் பிரிவு எனும் நெருப்பு இராமனைச் சுட்டது. சந்திரன் வானத்தில் தோன்றி வலம் வரத் தொடங்கினான். அவனது தண்ணென்ற ஒளிகூட இராமனுக்கு சூடாக இருந்தது. பறவைகள் கூண்டுகளில் அடைந்தன; மரங்களில் இலைகள் குவிந்தன; கிளிகள் நா ஒடுங்கின; மயில்கள் ஆட்டத்தை நிறுத்தின; குயில்கள் கூவுவதை நிறுத்தின; ஆண் யானைகள் பிளிறுவது நின்று போனது.

வாழும் உயிர்கள் அனைத்துமே துயில் கொண்டன. மலையிலுள்ள உயிர்களும் ஓசை அடங்கின. நீர்நிலைகளும் உயிர் வகைகளின் சலனமின்றி ஓசையின்றி அடங்கின. பனியும் உறைந்து போனது. ஆகாயமும் அடங்கியது. இரவில் ஆட்டமிடும் பேய், பிசாசுகளும் அடங்கின. இவ்வளவுக்கிடையேயும் பாற்கடலில் துயின்ற இராமபிரான் மட்டும் உறங்காமல் விழித்திருந்தான்.

மிக நீண்ட இரவாகத் தோன்றிய அந்த இரவு நேரம் மெல்ல விடிந்தது. கதிரவனின் கிரணங்கள் தன் மீது படவும் இராமன் விரகத் துயரம் நீங்கி மெல்ல எழுந்தான். இலக்குவன் அதற்கு முன்பாகவே தயாராக இருக்கவே, இருவரும் அந்தக் காலைப் பொழுதிலேயே சீதையைத் தேடிக் கொண்டு புறப்பட்டனர். நெடுந்தூரம் நடந்து சென்று, தூரத்தில் தெரிந்த ஒரு மலைப் பிரதேசத்தைக் கண்டனர். அந்த மலைப் பிரதேசம்தான் ருசியமுக பர்வதமாக இருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டு இருவரும், அந்த மலைப் பிரதேசத்தை நோக்கி விரைவாக நடந்தனர். சவரி கூறிய பாதையை விடாது தொடர்ந்து நடந்து வந்த அவர்கள், அந்த ருசியமுக பர்வதத்தின் அடிவாரத்திற்கு வந்து அந்த மலையின் மீது ஏறத் தொடங்கினர்.

அப்போது அந்த மலைப் பிரதேசத்தில், தன் அண்ணன் வாலிக்கு பயந்து கொண்டு ஒளிந்து வாழும் சுக்ரீவன், தூரத்தில் நடந்து வரும் இவர்களைக் கண்டு துணுக்குற்று, வில் ஏந்தி வருகின்ற இந்த வீரர்கள் வாலியால் ஏவப்பட்டு நம்மை கொல்ல வரும் பகைவர்களோ என்று பயந்தான். என்ன செய்வது என்று அறியாமல், இவர்களிடமிருந்து தப்பி உயிர் பிழைக்க வேண்டி ஓர் குகைக்குச் சென்று ஒளிந்து கொள்கிறான். அருகில் இருந்த தனது அமைச்சனான அனுமனிடம் “வாயு குமாரா! அதோ வருகிறார்களே, வில்லேந்திய வீரர் இருவர், அவர்களைப் பார்! நீல மலை போன்ற மேனி படைத்தவனும், அவனுடன் மற்றொரு வீரனும், வாலியின் ஏவலால் நம்மைத் தேடி வருபவர்களாகத்தான் இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே, ஓடிப் போய் அந்த குகைக்குள் பதுங்கிக் கொண்டான்.

பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால விஷத்தைக் கண்டு தேவாசுரர்கள் வருந்தியதைப் போல சுக்ரீவன் முதலானோர் அஞ்சி நிற்பது கண்டு, அன்று அச்சமுற்றிருந்த தேவாசுரருக்கு அபயம் அளித்துக் காப்பாற்றிய சிவபெருமானைப் போல அனுமன் அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! நீங்கள் இந்த மலையிடத்துத் தங்கி இருங்கள். நான் போய், வருவது யார் என்பதை அறிந்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

பாற்கடலைக் கடைந்த போது வெளியான ஆலகால விஷத்தைக் கண்டு அசுரர்களும் தேவர்களும் அஞ்சி நடுங்கியபோது அவர்களுக்கு அபயம் அளித்த சிவபெருமானைப் போல அனுமன் சுக்ரீவன் முதலானவர்களுக்கு அபயம் அளித்தான் என்று, கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் கூறியது, அனுமன் சிவபெருமானின் அம்சம் என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவே அமைந்திருப்பதைப் படித்து ஆனந்திக்கலாம். இதுபோன்றே பல இடங்களில் அனுமனைப் பற்றிய செய்திகளில், அவனை சிவபெருமானோடு ஒப்பிட்டே கம்பர்பெருமான் எழுதியிருப்பதையும் நாம் படித்து அனுபவிக்கலாம்.

அஞ்சனை புதல்வன், அனுமன், ஒரு நல்ல மாணவ பிரம்மச்சாரி வடிவத்தோடு, இராம லக்ஷ்மணர்கள் வரும் பாதையில் மறைந்து நின்று அவர்களை உற்று நோக்குகிறான். அனுமனிடம் ஒரு விசேஷ குணமொன்று உண்டு. அது அவன் எதனையும் தன் உணர்வினால் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்ததுதான். இந்த விசேஷ குணத்தை அனுமன் பல இடங்களில் தன் உணர்வினால் உணர்ந்து செயல்பட்டதை இந்த காப்பியம் முழுவதும் காணலாம்.

கைகளில் வில்லேந்தி, புழுதி படர்ந்த தோற்றத்தோடு, நடந்த களைப்பு முகத்தில் தென்பட, ஏதோ விலைமதிக்கமுடியாத பொருள் ஒன்றை தொலைத்து விட்டு அதனைத் தேடுவது போல நாலா புறமும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். தோற்றத்தில் மாபெரும் வீரர்கள் என்பதையும், கையில் வில் ஏந்தியிருந்தமையால், வில் வித்தையில் தேர்ந்தவர்கள் என்பதையும் முதலில் தன் உணர்வினால் உணர்ந்து கொண்டான். இதோ வருகின்ற இருவரும் தவ வேடம் தரித்திருக்கிறார்கள், ஆயினும் கையில் வில் ஏந்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அமைதியான உயர்ந்த குணத்தோராகக் காணப்பட்டாலும், ஏதோ ஒரு காரணம் பற்றி மிகக் கோபமடைந்திருக்கிறார்கள், இவ்வாறு அவர்களது தோற்றத்தைக் கண்டே, அனுமன் அவர்களை எடை போட்டு விடுகிறான். இவர்கள் தோற்றத்துக்கும், செயல்பாடுகளுக்கும் ஏன் இந்த வேற்றுமை என்பதையும் தன் தீர்க்கமான அறிவினால் ஆராய்கிறான். இவர்கள் தவமெய்யர், கைச்சிலையர், வெஞ்சினத் தொழிலர், எனின் இவர்கள் யார்?

ஒப்பற்ற முதல் தேவர் மூவர் என இவர்களைக் கருதலாமோ? ஆனால் அவர்கள் மூன்று பேர் ஆயிற்றே, இவர்களோ இரண்டு பேர்தானே இருக்கிறார்கள். எனவே இவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லர். இவர்களுக்கு ஒப்பாக யாருமே இல்லையே, ஆனால் இவர்கள் தேடி வருவது எதை? எப்படி அறிந்து கொள்வது? என்று சிந்திக்கிறான் அனுமன்.

இவர்களை உற்று நோக்கி ஆராய்ந்ததில் ஒன்று புரிகிறது. இவர்கள் மனம் சோர்வுற்று இருக்கிறார்கள். ஏதோ காரணத்தால் மனமும், உடலும் வருந்தி, துயரத்தால் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கவனிக்குமிடத்து மானுட வடிவில் வந்திருக்கிற தேவர்களே இவர்கள் என்பது புரிகிறது. இவர்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் ஏதோவொரு பொருளைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

“தருமமும் தகவும் தனம் எனும் தகையர் இவர்

கருமமும் பிறிதொர் பொருள் கருதி அன்று, அது கருதின்

அருமருந்து அனையது இடை அழிவு வந்து உளது, அதனை

இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்”

இவர்கள் அறத்தையும், நன்னடத்தையும் கொண்டவர்கள். இவர்கள் தேடி வருவது எந்தவொரு ஆதாயம் கருதியும் இல்லை. தனக்கு முழு உரிமையுள்ள ஒரு பொருளை இழந்து விட்டதால் பெருந்துயரம் உற்று அதனை மீட்பதற்காக, இரு மருங்கிலும் தேடிப் பார்த்துக் கொண்டே வருகிறார்கள்.

இவர்கள் வீரர்க்குள்ள கோபத் தன்மை உடையவர்கள் இல்லை. கருணையில் கடல் போன்றவர்கள். நன்மை செய்வது தவிர வேறு ஒரு செயல் அறியாதவர்கள். இந்திரனும் கண்டு அஞ்சுகின்ற தோற்றப் பொலிவை உடையவர்கள். தர்மதேவனும் கண்டு அஞ்சக்கூடிய ஒழுக்க மேம்பாடு உடையவர்கள். மன்மதனும் கூட வெட்கப்படக்கூடிய மேனி அழகு வாய்த்தவர்கள். எமனும் அஞ்சத் தக்க வீரப் பெருமிதம் உடையவர்கள்.

“என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி

அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை

முன் பிரிந்தனையர் தம்மை முன்னினான் என்ன நின்றான்

தன் பெரும் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பிலாதான்”.

தனக்கு ஒப்புவமை இல்லாத பெருமை குணங்கள் நிறைந்த அனுமன் இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு வருகின்ற அந்த இருவரையும் எதிர் கொண்டு சென்று அடையக் கருதி உருகும் உள்ளத்தவனாகி, மிகவும் அன்புடையவர்களை முன்பு பிரிந்து மீண்டும் இப்போது காண்பதைப் போன்ற உணர்வினைப் பெற்றான்.

காட்டில் வாழுகின்ற கொடிய மிருகங்களான சிங்கங்களும், வேங்கைகளும் கூடத் தத்தமது கன்றுகளைக் கண்டது போல இவ்விருவரையும் நெகிழ்ந்து நோக்குவது ஏன் என்று சித்தித்தான் அனுமன். மணி நிறத்து இந்த இருவர் மீதும் வெயில் பட்டு வருத்துமே என்று எண்ணி மயில்கள் தம் தோகைகளை விரித்து இவர்கள் மீது வெயில் படாதவாறு குடை பிடித்தது போல அவர்களுக்கு மேலாக பறந்து வருகின்றன. கருத்த மேகக் கூட்டங்கள், சிறு மழைத் துளிகளை இவர்கள் மீது மெல்லத் தெளித்த வண்ணம் தாழ்ந்து தவழ்ந்து வருகின்றன. காட்டில் நிறைந்து கிடக்கும் சிறு கற்கள் எல்லாம் இவர்களது பாதங்களைக் குத்தாமல் மலர்களைப் போல மிருதுவாக அழுந்துகின்றன. செல்லுகின்ற பாதைகளில் எல்லாம் மரங்களும், செடிகளும் தங்கள் தலை சாய்த்து வணங்கி இவர்களை வரவேற்பது போல காட்சியளிக்கின்றன. எனவே, இவர்கள் தர்மமே மனித உருக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அனுமன் நினைக்கிறான்.

பண்டைய பாவங்களையெல்லாம் போக்கி, வினைகளை அறுத்து, தென் திசையிலுள்ள எமலோகம் செல்லாமல் மோட்ச உலகத்திற்குச் செலுத்துகின்ற தேவர்கள் இவர்கள். இவர்களைக் கண்டதும் என் எலும்புகள் ஏன் உருகுகின்றன? மனதில் ஏன் அன்பு இப்படி மேலிடுகிறது? எதனால் இப்படியெல்லாம் நடக்கிறது என்று மனத்தில் எண்ணினான் அனுமன்.

நன்னெறிப்படியே நடக்கின்ற அஞ்சனை புதல்வன் இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு நின்ற இடத்திற்கு, இராமனும் இலக்குவனும் வந்து சேர்கிறார்கள். அனுமன் அவர்களுக்கு எதிராகப் போய் நின்று கொண்டு வணங்கி, அவர்களிடம் “தங்கள் வரவு துன்பம் இல்லாத வரவாக இருக்கட்டும்! வாருங்கள்” என்று இன்மொழி பகர்ந்தான்.

தன் எதிரே வந்து நின்று மிகவும் பணிவாக இன்சொல் பேசித் தன்னை வரவேற்கும் இவனை இராமபிரான் “நீ எங்கிருந்து வருகிறாய்? நீ யார்?” என்று கேட்கிறார். அதற்கு அனுமன் கூறுகிறான்:

“மஞ்செனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க் கெல்லாம்

நஞ்செனத் தகையவாகி நளிரிரும் பனிக்குத் தேம்பாக்

கஞ்சமொத்த அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன்”

இராமபிரானைப் புகழ்ந்து அழைத்து, “ஐயனே நான் வாயு குமாரன். அஞ்சனா தேவியின் மகனாகப் பிறந்தேன். என் பெயர் அனுமன் என்பதாகும்” என்றான்.

“இந்த ருசியமுக பர்வதத்தின்கண் மறைந்து வாழுகின்ற செங்கதிர் பரிதிச் செல்வன் செம்மல் சுக்ரீவனிடம் பணிபுரிந்து வாழ்பவன். தேவ! நும் வரவைக் கண்டு எம் மன்னன் சுக்ரீவன் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறான். நீங்கள் யாவர் என அறிந்து வரும்படி எனக்குக் கட்டளையிட்டான், ஆதலால் நான் இங்கு வந்தேன்” என்று சொன்னான் பணிவாக.

இப்படிப் பணிவாகவும், பண்போடும், அடக்கமாகவும் பேசுகின்ற அனுமனைப் பார்த்த இராமன்:

“மாற்றம் அஃது உரைத்தலோடும் வரிசிலைக் குரிசில் மைந்தன்

தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி

ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும்

வேற்றுமை இவனோடு இல்லை, ஆம்! என விளம்பலுற்றான்!”

அனுமனின் தோற்றம், பண்பு, பேசும் முறை இவற்றால் கவரப்பட்ட இராமன் கல்வி, கேள்வி, ஞானம் இவற்றில் இவனுக்கு இணையானவர் உலகில் எவரும் இல்லை என்று மனதில் எண்ணிக் கொண்டு, தன் தம்பி இலக்குவனை அழைத்துச் சொல்லுகிறான்.

“இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள்கூற

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே! ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’

வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவல்லானோ?”

“தம்பி! இவன் வேதக் கடல் எனும்படியாக ஒளி நிறைந்து காணப்படுகிறான். இவன் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் பேசும் சிற்சில சொற்களிலேயே இவன் மேன்மை வெளிப்படுகிறதே. யாரப்பா இந்த ‘சொல்லின் செல்வன்’? பிரம்ம தேவனோ அல்லது சிவபெருமானோ? இங்கு தேவர்கள் மூவரில் பிரம்மனையும், சிவனையும் மட்டும் சொல்லிக் கேட்பது, காத்தல் கடவுளாம் திருமால், தான் என்பதால் இராமன் இவ்வாறு கேட்கிறானோ?

“லக்ஷ்மணா! இவன் ஒரு பிரம்மச்சாரி வடிவத்தில் மாணாக்கனாகத் தோன்றுகிறான் அல்லவா? இது இவனது உண்மைத் தோற்றம் இல்லை. இவன் இந்த உலகுக்கே ஓர் அச்சாணி போன்றவன். இவன் பெருமைகளை எல்லாம் நான் உணர்ந்து கொண்டேன். நீயும் அவைகளைப் புரிந்து கொள்வாய்” என்றான் இராமன்.

பிறகு இராமன், அனுமனை நோக்கி “நீ சொன்ன கவிக்குலத்து அரசன் சுக்ரீவன் எந்த இடத்தில் இருக்கிறான். அவனைப் பார்ப்பதற்காகத்தான், நாங்கள் வந்திருக்கிறோம். அவன் இருக்குமிடத்திற்கு எங்களை அழைத்துச் செல்!” என்றான்.

அதற்கு அனுமன் “உயர்ந்த தோள்வீர! நுமக்கு நிகரான புனிதர் யாரே இவ்வுலகில் உளர்! எம் அரசன் சுக்ரீவனைக் காண விரும்புகிறீர்கள் என்றால், அது அவனது தவப் பயனன்றோ! வீரர்களே! சூரியனுடைய குமாரனான சுக்ரீவனை இந்திரனின் குமாரனான வாலி பகைகொண்டு துன்புறுத்தி துரத்தி விட்டான். சுக்ரீவன் உயிருக்கு பயந்து கொண்டு இந்த ருசியமுகப் பர்வதத்தில் எங்களோடு ஒளிந்து வாழ்கிறான். அவனுக்கு பெருஞ்செல்வம் கிடைத்தது போலத் தாங்கள் அவனிடம் வந்திருக்கிறீர்கள். உலகத்தில் செய்கின்ற அறங்கள் யாவினும் துயரத்தால் அஞ்சி நடுக்கமுற்றவர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றுவது போன்ற சிறந்த அறம் வேறு ஏதும் உளதோ?. மும்மை உலகங்களையும் படைத்துக் காக்கும் முதல்வராகிய தாங்கள்தான், எங்களை உய்விக்க வந்த தலைவராவீர்! உங்களை சரண் என்று நாங்கள் அடைந்தோம். உங்கள் அருளன்றி வேறு எதுவும் எங்களுக்கு நன்மை பயக்கக்கூடியது இல்லை. ஐயா! என் அரசன் சுக்ரீவனிடம் சென்று வந்திருக்கும் நீவீர் யாவர் என்று சொல்லுவது என்று எனக்குக் கட்டளையிடுங்கள்” என்றான், உண்மைக்கும் சத்தியத்துக்கும் வேலி போன்றவனான அனுமன்.

“யார் என விளம்புகேன், எங்குலத்து இறைவர்க்கு உம்மை

வீரர் நீர் பணித்திர் என்றான், மெய்மையின் வேலி போல்வான்

வார்கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாவும்

சோர்விலன் நிலைமை யெல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்.

தங்களை யார் வந்திருப்பது என்று எம் மன்னனிடம் சொல்லுவது என்று அனுமன் கேட்கவும், இளைய வீரன் இலக்குவன் தங்களைப் பற்றி நடந்த வரலாறுகளை எடுத்துக் கூற ஆரம்பித்தான். இந்தப் பாடலில் ‘மெய்மையின் வேலி போல்வான்’ என்ற அடைமொழியை அனுமனுக்கும், இலக்குவனுக்கும், இருவருக்குமே பொருந்துமாறு கம்பர் பெருமான் அமைத்திருப்பது படித்து மகிழக்கூடிய பகுதி.

“சூரிய குலத்தில் தோன்றி மிகப் பெருமையோடு இந்த உலகத்தை ஆண்டு வந்த பெருமையுடையவனும், தேவர்களின் பொருட்டு சம்பரன் எனும் அசுரனோடு போரிட்டு போரில் அவனைக் கொன்ற புகழையுடையவனும், க்ஷத்திரியர்களுக்கே உரிய பற்பல யாகங்களைச் செய்து முடித்தவனும், கார்மேகம் போல உயிர்களின்பால் கருணையுள்ளவனுமான அயோத்தி மன்னன் தசரத சக்கரவர்த்தியின் கட்டளையின்படி, தசரத குமாரனாகிய இந்த ஆண்தகை இராமன் தனக்கு உரிமையுள்ள ராஜ்ஜியத்தைத் தன் தம்பியான பரதனுக்கு பெருந்தன்மையோடு கொடுத்து விட்டு கானகம் வந்துள்ளான். இந்த வில்வீரனான இராமனுக்கு ஏவல் செய்யும் அடியவன் நான்” என்று தங்களை அறிமுகம் செய்துகொள்கிறான் இலக்குவன்.

இவ்வண்ணம் இராமன் திருஅவதாரம் தொடங்கி, இராவணன் இழைத்த புன்தொழில் ஈறாக அனைத்தையும் ஒன்று விடாமல் அனுமனிடம் சொல்லுகிறான் இலக்குவன். அந்த வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அனுமன், மனம் மகிழ்ந்து, கண்களில் நீர் சோர, அன்பின் மிகுதியால் நெடுஞ்சாண் கிடையாக அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறான். இப்படி ஒரு மாணவ பிரம்மச்சாரி வடிவம் தாங்கிய அனுமன் தன் பாதங்களில் விழுந்து பணிந்ததும், இராமன் சொல்கிறான்:

“கேள்வி நூல் மறை வலாளா! நீ தகாதன செய்கிறாய். இது தர்மம் ஆகாது. உன் பிரம்மச்சரிய ஆசிரமத்துக்கு ஏற்புடைய செயல் அல்ல இது” என்றான்.

இராமன் இங்ஙனம் சொல்லக் கேட்ட தடந்தோள் வெற்றிவீரனான மாருதி சொல்லுகிறான்: “செந்தாமரைக் கண்ணாய்! நான் அரிக்குலமாம் வானர குலத்தவன் ஆவேன். எனவே நான் செய்த செயல் பிழையன்று”. இப்படிக் கூறிவிட்டு நான் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிற இந்த பிரம்மச்சாரி உருவம் எனக்கு உரியதல்ல, என் உண்மை உருவத்தை இப்போது தங்களுக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே:

“மின் உரு கொண்ட வில்லோர், வியப்புற வேத நன்னூல்

பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் நாணப்

பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கு உவமை போதாத்

தன் உரு கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்”.

இந்தப் பூவுலகில் தர்மம் தனியாக இருக்கக்கூடாது அதற்கு துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக வந்தவன் இந்த அனுமன் எனும்படி, வேதங்கள் எல்லாம் ஓர் உருக்கொண்டு, பொன் மயமான தேஜசுடன், பெரிய தோள்கள் பூரிக்க தன் சுய உருவைக் காட்டி வானுயர நின்றான். . உலகம் மூன்றையும் தன் காலடிகளால் அளந்த புண்டரீக ஆழிப் புரவலனான, தாமரை இதழ் போன்ற கண்களும், சக்கராயுதத்தையும் கொண்ட திருமாலான இராமபிரானால்கூட அப்படி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அனுமனின் குண்டலங்கள் ஒளிவீசும் முகத்தைக் காண முடியவில்லை என்றால், சூரிய பகவானிடம் கல்வி கற்ற அந்த அனுமனின் பெருமையை ஒருவரால் எடுத்துக் கூறல் ஆகுமோ?

இராமபிரான் தம்பி இலக்குவனை அழைத்து, “தம்பி! இந்த அனுமன் சாதாரணமானவன் அல்ல அப்பா! பிரளய காலத்திலும் அழிவுறாத வேதங்களும், பிரபோத ஞான நிலையுமே இப்படியொரு குரங்கு வடிவம் எடுத்து நம்முன் வந்து நிற்கிறது. தம்பி! இவன் வரவால் நமக்கு நல்ல நிமித்தம் உண்டாகியிருக்கிறது. இனி நமக்குத் துன்பங்கள் இல்லை இன்பமே நிலைபெற்றிருக்கும். இப்பேற்பட்ட அனுமன் சுக்ரீவனிடம் ஏவல் செய்பவன் என்றால், அந்த சுக்ரீவனது பெருமை எப்படி இருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ?”

அப்போது தனக்கு எதிரே மனமகிழ்வோடு நிற்கும் இராமபிரானிடம் அனுமன் “நான் விரைந்து சென்று சுக்ரீவனை அழைத்து வருகிறேன். சற்று இங்கே காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவன் இருக்குமிடம் நோக்கி விரைந்து சென்றான்.

இராமனிடம் விடைபெற்றுக் கொண்டு சுக்ரீவனிடம் செய்தி சொல்லுவதற்காக விரைந்த அனுமன், சுக்ரீவன் இருக்குமிடம் சென்று வணங்கி “அடியேனும், வானர குலமும், இந்த உலகமும் ஈடேறினோம்” என்று சொல்லிக் கொண்டே, அவன் முன் போய் நின்றான். மகிழ்ச்சி மேலீட்டால் அனுமன், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடியது போல ஆடினான். (இங்கும் அனுமனை சிவபெருமானுக்கு உவமையாகக் கூறுகிறார் கம்பர்). “வாலியின் உயிரை போக்கிட ஓர் காலன் வந்து விட்டான். நாமெல்லாம் துன்பம் எனும் கடலைத் தாண்டிவிட்டோம்” என்றான். பிறகு வந்திருக்கும் இராம, இலக்குவர் பற்றிய முழு விவரங்களையும் சுக்ரீவனிடம் உணர்ச்சி வயப்பட்டு உரைத்தான்.

“அவர்கள் புவி, வான், பாதலம், அவற்றின் வேறான பிற இடங்கள், திசைகள், இங்கெல்லாம் உறைபவர்களுக்கு உயிரளிக்கும் அமுதம் போல உதவுபவர்கள் என்று புகழ்ந்துரைத்தபின், அவர்களது குலச் சிறப்பு, உள்ளழகு, புறவழகு, இவற்றை விளக்கிச் சொல்லி அவர்களால் சுக்ரீவன் அடையப் போகும் நன்மைகளையும் எடுத்துக் கூறினான். இராமன் தாடகையை வதம் செய்ததையும், அவனது கால் துகள் பட்டு அகலிகை சாபம் நீங்கி உயிர்பெற்று எழுந்ததையும் எடுத்துரைத்தான். மிதிலைக்குச் சென்று சிவபிரானின் திரியம்பகம் எனும் வில்லை ஒடித்ததையும், மிதிலைச் செல்வி ஜனக குமாரி ஜானகியைத் திருமணம் செய்து கொண்டதையும் எடுத்துரைத்தான். தாய் கைகேயி வரம் கேட்க, தந்தை அதனைக் கொடுக்க, அதன்படி தனக்கு உரிமையான் ராஜ்ஜியத்தைத் தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு, கானகம் வந்த செய்தியையும் எடுத்துச் சொன்னான்.

பரசுராமனை கர்வ பங்கம் செய்ததையும், விராடன் எனும் அரக்கனை வீழ்த்தியதையும் விவரமாகச் சொன்னான். காட்டில் கரன் முதலான பதினான்காயிரம் அரக்கர்களைக் கொன்றதையும் எடுத்துச் சொன்னான்.

“ஆய மாநகர் தாழ் ஆழியானே அலால்

காயம் மான் ஆயினான் யாவனே! காவலா

நீ அ மான் நேர்தி, நிருத மாரீசனார்

மாய மான் ஆயினான், மா எமன் ஆயினான்”.

“மாய மானாக வேடமிட்டு வந்த அரக்கன் மாரீசனது உயிருக்கு பெரிய எமனாக வந்த இராமபிரானை நீ வந்து பார்த்து, நட்பு செய்து கொள்வாயாக!” என்றான்.

சவரி என்ற தவத்தி வீடு பேறு அடைந்ததும், கவந்தன் எனும் அரக்கன் உயர் பதம் புக்கதும் என்னால் இயம்பக் கூடியவையோ?” முனிவர்களும், பிறரும், இராமன் வந்து தங்களுக்கு அருள் புரிந்து மோட்சம் தருவார் என்று காத்திருந்து, அவ்வண்ணமே கிடைக்கப் பெற்றார்கள். அதனை எங்ஙனம் எடுத்துரைப்பது?”

“ஐயா! அறிவற்ற அரக்கர் கோன் இராவணன், மாயையால் இராமபிரானின் மனைவி சீதாதேவியைக் கவர்ந்து சென்று விட்டான். அவனைத் தேடிவருகையில் நீ செய்த தவப்பயனாலும், தூய்மையானவன் என்பதாலும் உன்னோடு நட்பு கொள்ளும் பொருட்டு இங்கே வந்துள்ளார்”.

மரபுப்படி அரசனுக்கு மந்திராலோசனை சொல்லும் திறமையுள்ள அனுமன் சுக்ரீவனை நோக்கி, “அறிவார்ந்த மன்னா! உன் மீது அருள் கொண்டு இராமன் இங்கு வந்துள்ளான். இந்திரகுமாரன் வாலிக்கு இறுதிக்காலம் இவர்களால் வந்துற்றது. எனவே வா! வந்து இவர்களோடு நட்பு செய்து கொள்!” என்றான்.

அனுமன் கூறியவற்றைத் தன் அறிவாற்றலால் அறிந்து உண்ர்ந்த சுக்ரீவன், அனுமனை நோக்கி, “பொன்னை நிகர்த்த அனுமனே! உன்னைத் துணைவனாகக் கொண்ட எனக்கு என்ன குறை?” என்று சொல்லி, அனைவரும் புறப்பட்டு இராமன் இருக்குமிடம் வந்து சேருகிறார்கள். சுக்ரீவன் இராமபிரானை தரிசிக்கிறான். அந்தக் காட்சியை கம்பர் வாக்கால் கேட்பதுதான் சிறப்பு.

“கண்டனன் என்ப மன்னோ, கதிரவன் சிறுவன் காமர்

குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும்

புண்டரீகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள்

மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அன்னானை”.

இராமனையும் இலக்குவனையும் நேரில் தரிசித்த சுக்ரீவன், அவர்களது செளந்தர்யத்தில் ஈடுபட்டு நெடுநேரம் வியப்புற்று நின்றான். பிரம தேவன் இவ்வுலகினைப் படைத்த காலம் தொட்டு இன்று வரை செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம் ஒன்று திரண்டு இரு மனித உருவில் இங்கு வந்து தோன்றியது போல காட்சியளித்தனர். இவர்கள் தோற்றத்தில்தான் மனிதர்கள் போல இருக்கிறார்களே தவிர, தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த தேவர் ஆவார். சிவன், பிரமன், முதலானவர்களை ஆதியாகக் கொண்ட தேவர்களையெல்லாம் இந்த மனித குலம் வென்று விட்டது! கம்பர் பெருமான் மானுடத்தின் பெருமையைக் கூறிய இந்தப் பகுதி அனைவர் நெஞ்சத்திலும் குடிகொண்டிருக்க வேண்டிய பாடல் இது.

“தேறினன் அமரர்க்கெல்லாம் தேவராம் தேவரென்றே

மாறி இப் பிறப்பில் வந்தார் மானுடராகி மன்னோ

ஆறு கொள் சடிலத் தானும் மயனும் என்று இவர்கள் ஆதி

வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதென்றே!”.

சுக்ரீவன் இராமனிடம் “உம்முடைய மங்கள குண விசேஷங்களை மாருதி சொல்லக் கேட்டேன். என்னோடு நட்பு செய்து கொள்ளத் தாங்கள் விரும்புவது எனக்கு மேன்மையும், பெரும் சிறப்பும் ஆகும். என்னுடைய நட்பை உறுதி செய்ய, என் கரங்களை உமது கையால் பற்றி உறுதி செய்யுங்கள்” என்று சொல்ல, இராம பிரானும் மிகவும் உற்சாகமடைந்து தம் கையால் சுக்ரீவன் கையைப் பற்றி, அவனைத் தழுவிக் கொண்டார்.

இராமபிரானும் சுக்ரீவனும் கூடியிருந்த காட்சி, குறித்த செயலை முடிப்பதற்கு முன் செய்த தவமும் இப்போது செய்யும் முயற்சியும் ஒன்று கூடி பயன் தருவது போலவும், அஞ்ஞான இருளை ஓட்ட நூல் அறிவும் சுய அறிவும் கூடி அமைந்தது போலவும் இருந்தது. முற்பிறவியின் தவப் பயனால்தான் இராமனிடம் வந்து சேர்ந்ததாக சுக்ரீவன் மகிழ்ச்சியடைந்தான்.

சுக்ரீவனை நோக்கி இராமன் சொல்கிறார், “ஐய! குற்றமற்ற தவசியான சவரி எனும் மாது, நீ இந்த ருசியமுக பர்வதத்தில் இருப்பதையும், எங்களுக்கு நேர்ந்த துன்பம் உன்னால் தீரும் என்றும் கூறி எங்களை இங்கு அனுப்பி வைத்தாள்” என்றான்.

“அண்ணலே! என் தமையனான வாலி என்னிடம் பகைமை கொண்டு என்னைத் துரத்த, அவன் வரமுடியாத, வந்தால் அவன் தலை வெடித்து இறப்பான் என்று மதங்க முனிவர் சாபமுள்ள, இந்த ருசியமுக பர்வதத்தில் நான் ஒளிந்து வாழ்கிறேன். இப்போது உம்மையே அடைக்கலமாக வந்து தங்களிடம் சேர்ந்தேன். என்னை ஏற்றுக் கொண்டு காப்பாற்றுதல் தர்மம் ஆகும்” என்றான் சுக்ரீவன்.

ஒரு முறை வாலி துந்துபி எனும் அசுரனோடு போர் புரிந்து அவனைக் கொன்று, அவன் உடலைத் தன் காலால் உந்தி எறிய, அஃது இந்த ருசியமுக பர்வதத்தில் தவம் செய்துகொண்டிருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் போய் விழுந்தது. அங்கு ஒரே இரத்த வெள்ளமாகிப் போய் அசுசிப் படுத்தியது. அது கண்ட முனிவர் வெகுண்டு, “இதைச் செய்தவன் இவ்விடம் அடியெடுத்து வைத்தால், அவன் தலை பல துகள்களாக வெடித்துச் சிதறி அழிவான்” என்று சபித்தார். அந்த சாபத்தை அறிந்த வாலி அம்மலைப் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்தான். அதன் காரணமாகவே வாலியிடமிருந்து உயிருக்கு பயந்து ஓடிய சுக்ரீவன் இந்த மலையில் வந்து தஞ்சம் புகுந்தான்.

உடனே இராமன் “உனக்கு வந்து சேர்ந்த துன்பங்களை நான் தீர்ப்பேன். இனி உனது இன்ப துன்பங்கள் என்னுடையவை. இனி இப்புவியில், வானத்தில், எல்லா இடங்களிலும் உன்னைப் பகைத்தவர் எனக்கும் பகைவர். உனது நட்புக்கு உரியவர் எனக்கும் நண்பராவர். உன் உறவினர் எனக்கும் உறவினர். என் அன்புக்கு உரிய நட்பும், சுற்றமும் உனக்கும் அவ்வண்ணமே ஆகும். நீ என் உயிர்த் துணைவன்” என்றான்.

இராமனின் வாக்கு வேத வாக்கல்லவா? அவன் வாயால் கூறிய இந்த உறுதிமொழியைக் கேட்டதும் வானரக் கூட்டம் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியடைந்தது. அனுமனின் உடலில் மயிர்க்கூச்சம் உண்டாயிற்று. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மேகங்கள் பொன் மழை பெய்தன. இவ்வளவும் இராமனின் சொற்களைக் கேட்டபின் விளைந்த நிகழ்வுகள் என்றால், இராமனின் வாக்குக்குத்தான் எவ்வளவு பெருமை?

இராமனையும், இலக்குவனையும் அனுமன் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டான். இராமனும் மகிழ்ச்சியுடன் அங்கு வருவதற்கு ஒப்புக்கொண்டு புறப்பட்டுச் சென்றான். அவர்கள் சுக்ரீவனின் இருப்பிடம் வந்து சேர்ந்ததும், அவனுடன் அளவளாவிய பிறகு நீராடிவிட்டு, அவர்கள் கொடுத்த விருந்தை உண்டு மகிழ்ந்து இருந்தான்.

வீட்டுக்கு வந்த அதிதியை இல்லறத்தான், தன் மனைவியோடு இருந்து உபசரிப்பதுதான் முறை. இங்கு அப்படியில்லாமல் சுக்ரீவன் தனியனாய் இருந்த விருந்தினரை உபசரிப்பதை இராமபிரான் கண்டு அவனிடமே அதற்கான காரணத்தைக் கேட்கிறான் “சுக்ரீவா! நீயும் உன் மனைவியைப் பிரிந்து இருக்கிறாயோ?” என்று. தானும் சீதையைப் பிரிந்து இருப்பதைக் குறிப்பால் உணர்த்தினான் இராமன். அப்போது மாருதி எழுந்து நின்று இராமனை வணங்கி “ஐயனே! தங்களிடம் நான் சொல்லவேண்டிய வரலாறு ஒன்று உளது” என்று, வாலி-சுக்ரீவன் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கலானான்.

“இந்த சுக்ரீவனின் அண்ணன் வாலி, கைலாய மலையில் இருக்கும் சிவபெருமானின் பூரணமான அருளைப் பெற்றவன். தேவர்களும், அசுரர்களும் இருபுறமுமாய்ப் பிரிந்து நின்று வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலில் அமுதம் எடுப்பதற்காகப் பல காலம் வலிந்து கடைந்து கொண்டிருந்தார்கள். அப்படி நெடுங்காலம் கடைந்தும் அமுதம் வெளிவராமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த வாலி, அந்த தேவர்களையும், அவுணர்களையும் விலகிப் போகச் சொல்லிவிட்டுத் தான் ஒருவனாகவே தன் வாலை மந்தரகிரியில் சுற்றி கயிறாகக் கொண்டு கடைந்து, அமுதத்தை எழச் செய்து, அவ்வமுதத்தை தேவர்களுக்கு அளித்தான் என்பது வரலாறு”.

“இந்த வாலி பஞ்ச பூதங்களின் ஆற்றலை ஒருங்கே பெற்றவன். வாலி தினமும் எட்டு திக்குகளின் எல்லைகளுக்குச் சென்று ஆங்காங்கே உள்ள சிவத் தலங்களில் வழிபட்டு வரும் கடமை உடையவன்.

“கால்* செலாது அவன் முன்னர்க், கந்தவேள் கால் = காற்று

வேல் செலாது அவன் மார்பின், வென்றியால்

வால் செலாது வாய் அலது ராவணன்

கோல் செலாது அவன் குடை செலாது அரோ!”.

அவ்வளவு வலிமையுடைய வாலியின் முன்பாக காற்றுகூட புகமுடியாது; அவனுடைய மார்பில் கந்தவேளின் வேலும் செல்லாது; அவனுடைய வால் செலாத இடங்களில் அல்லாமல் இராவணனின் ஆட்சி அதிகாரம் செல்லமுடியாது, அதுமட்டுமா, இராவணனின் குடையும் செலாது. வாலி தன்னுடைய இடத்தை விட்டுப் பெயர்ந்து எழும்பிச் செல்லுவானானால் அவனுடன் மலைகள் எல்லாமும் உடன் எழும்; அவன் தோள் மோதினால் அண்டங்கள் மோதிக் கொள்ளும். அன்று, வராக அவதாரமும், கூர்மாவதாரமும் எடுத்த திருமாலோடு ஒப்பிடத்தக்க வலிமையுடையவன் வாலி. அன்று இரண்யனின் மார்பைப் பிளந்த நரசிம்ஹத்தாலும்கூட பிளக்கமுடியாத வலிமை படைத்தவன் வாலி.

இரண்யாக்ஷன் எனும் அசுரன் பூமியைச் சுருட்டிக் கொண்டு பாதாளத்துக்குள் சென்று விடுகிறான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட, அவர் ஓர் வராகம் (பன்றி) உருவம் எடுத்துக் கொண்டு அந்த அசுரனைப் பின்பற்றி பாதாளத்துக்குள் சென்று, அந்த அசுரனைக் கொன்று, பூமியைத் தன் கொம்பில் ஏந்திக் கொண்டு வந்து முன்போல் நிலை நிறுத்தினார். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்த போது, மத்தாக நடப்பட்டிருந்த மந்தர மலை கீழே ஆழ்ந்து போய்விடாமல் இருக்கத் திருமால் ஒரு பெரிய ஆமை உருவம் எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் இருந்த அந்த மலையைத் தாங்கிக் கொள்கிறார். இந்த இரு அவதார புருஷர்களாக திருமால் வந்தார், அந்த வராகமும், கூர்மமும் கூட இவன் வலிமையோடு ஒப்பிட முடியாது என்று அனுமன் கூறுகிறான்.

ஆதிசேஷன் இந்த பூமியை ஓரிடத்தில் இருந்து கொண்டுதான் தாங்குவான். ஆனால், இந்த வாலியோ நடந்து கொண்டே தாங்குகிறான். கடல் ஓசையிடுவதும், காற்று வீசுவதும், சூரியன் தேரில் சுற்றுவதும் கூட வாலிக்கு இடையூறு இன்றி பயந்துகொண்டுதான் இயங்குகின்றன என்றால், வாலியின் வலிமையைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது?

இப்படி வாலியிடம் கொண்ட அச்சத்தினால், உலகில் உள்ள மற்ற உயிரினங்கள் யாவும், அவனது கருத்துக்கு மாறுபாடின்றி அவனுடன் ஒன்றுபட்டு உயிர்பிழைத்து வருகின்றன. இந்த வாலியின் வால் இருக்கிறதே, அதன் மகிமையைக் கூறுகிறேன், கேளுங்கள்! ஒரு சமயம் வாலி மாலை நேரத்தில் கடற்கரையருகே சாயங்கால சந்தி முதலான நியமங்களைச் செய்துகொண்டு இருந்தபோது, இராவணன் அவன் அறியாவண்ணம் பின்புறமாகச் சென்று தன்னுடைய இருபது வலிய தோள்களாலும் அந்த வாலியைக் கட்டிப் பிடித்தான். வாலி அதை உணர்ந்ததும் தனது சந்தி நியமத்துக்குக் குறைவு ஏற்படாமல் அந்த இராவணனைத் தன் வாலால் இறுகப் பிணித்து வைத்து சந்தியாவந்தனம் முடிந்தபிறகு தன் வாலில் அவனைத் தொங்கவிட்டபடி, அந்த அரக்கன் தன் பத்து வாய்களிலும் இரத்தம் சிந்தி வருந்தும்படி, உலகின் பல பாகங்களிலும் சுற்றித் திரிந்தான். துன்பம் தாங்காமல் அந்த இராவணன் வாலியிடம் வருந்தி வேண்ட, இனித் தன்னிடம் வம்புக்கு வரக்கூடாது என்று விரட்டியடித்துவிட்ட கதையையும் அனுமன் சொன்னான்.

இருக்ஷரஜசு என்ற வானர வீரன் பார்வதி தேவியின் சாபத்தால், பெண் வானரமாக உருவெடுத்தான். அவளை இந்திரனும் சூரியனும் விரும்பி அடைய முறயே இந்திரனுக்கு வாலியும், சூரியனுக்கு சுக்ரீவனும் பிறந்ததாகக் கூறுவர். எனவே இவர் இருவருக்கும் தாய் ஒருத்தியே ஆயினும், தந்தை வெவ்வேறானவர்.

அத்தகைய வாலி எங்கள் வானர குலத்துக்கு அரசனாகவும், சுக்ரீவன் இளவரசாகவும் இருந்து வந்தனர். இப்படி இருந்த காலத்தில், வாலியின் பழைய பகைவன் மாயாவி எனும் அசுரன் ஒருவன் வந்து வாலியைத் தாக்கினான். வாலிக்கும் மாயாவிக்கும் கடும் யுத்தம் நடந்தது. நீண்ட நெடிய அந்த துவந்த யுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இருவரும் போரிட்டுக் கொண்டே இருக்கையில் அந்த மாயாவி ஒரு குகைக்குள் சென்று விட்டான். கோபமடைந்த வாலி, சுக்ரீவனை அழைத்து ‘நான் இந்தக் குகைக்குள் நுழைந்து அந்த மாயாவியைக் கொன்றுவிட்டு மீள்வேன், அதுவரை நீ இந்த பிலத்தின் வாயிலில் காவல் காத்துக் கொண்டிரு’ என்று சொல்லிவிட்டு குகைக்குள் அவனும் நுழைந்தான்.

வாலி அப்படி குகைக்குள் நுழைந்து பதினான்கு பருவங்கள் (ஒரு பருவம் என்பது இரண்டு மாதம் – பருவங்கள் முறையே இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பருவங்கள்) ஆகியும் பிலத்துக்குள்ளிருந்து வாலி வெளியே வரவில்லை. சுக்ரீவன் காவல் காத்துக் கொண்டு நின்றான். அண்ணன் குகைக்குள்ளிருந்து வெளியே வராமையால் வருந்தி அழுதான் சுக்ரீவன். அங்கு அருகிலிருந்த வானரர்கள் அனைவரும் அவனைத் தேற்றி, தொழுது, வாலி இறந்திருக்கலாம். நாட்டுக்கு அரசன் தேவை. நீயே அரசனாக முடிசூட்டிக் கொள் என்றார்கள். சுக்ரீவன் அது தவறு, அவ்வாறு என்னால் செய்ய முடியாது என்று அண்ணன் மீதுள்ள அன்பின் காரணமாக மறுத்தான்.

நானே பிலத்துக்குள் நுழைந்து, என் அண்ணனுக்கு ஏற்பட்ட கதியைக் கண்டு அறிந்து வருவேன். அந்த மாயாவியைக் கொல்வேன், முடியாவிட்டால் அவனோடு போர் செய்து மாள்வேன் என்று அந்த குகைக்குள் நுழைய முயன்றான். ஆனால் வானர குல பெரியோர்கள், இதற்கு சம்மதிக்கவில்லை. சுக்ரீவனைக் கட்டாயப் படுத்தி அழைத்துச் சென்று முடிசூட்டிவிட்டனர். இப்படி அரசுரிமை, இவன் மீது திணிக்கப்பட்டதேயன்றி, இவன் விரும்பி அதனை ஏற்றுக் கொள்லவில்லை. சுக்ரீவன் மட்டும் வாலி இறக்கவில்லை என்றே நம்பி தனக்கு அரசுரிமை தேவையில்லை என்ற நிலையிலேயே இருந்த போது, அந்த குகையினின்றும் வாலி அந்த மாயாவியைக் கொன்றுவிட்டு வெளியே வந்தான். வானரங்கள் நாடு திரும்புகையில் குகை வாயிலை ஒரு பெரிய பாறையைக் கொண்டு அடைத்துவிட்டுத் திரும்பினர். அதை வாலி தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தான்.

பிலத்தின் வாயை மூடிவிட்டு, நாட்டைத் தம்பி சுக்ரீவன் அபகரித்துக் கொண்டான் என்று வாலி கடும் கோபம் கொண்டான். வாலி வெளியே வந்துவிட்ட செய்தியறிந்து, சுக்ரீவன் ஓடிவந்து அவனது அடிபணிந்து வணங்கினான். சுக்ரீவன் மாறுபாடற்ற தூயமனம் உடையவன். தான் வேறு வாலி வேறு என்று நினைக்காத ஒருமித்த மனமுடையவன். நடந்த வரலாற்றையெல்லாம் வாலியிடம் சொல்லி, அவனையே நாட்டை ஆளும்படி கேட்டுக் கொண்டான். ஆனால் கடும் கோபமுற்றிருந்த வாலி, சுக்ரீவன் கூறிய சமாதானங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், அவனை அடித்துப் புரட்டி எடுத்தான். உயிர் போய்விடும் என்கிற நிலையில் தப்பி ஓடிவிட்டான். வாலி வரமுடியாத இந்த ருசியமுக பர்வத்துக்கு வந்து இங்கேயே தங்கிவிட்டான்.

ஐயனே! இன்னொன்றும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. சுக்ரீவனுக்கு உரிமையான ருமை எனும் பெயர் கொண்ட அவனது மனைவியையும், வாலி விரும்பி அபகரித்துக் கொண்டான். இவன் நாட்டையும் இழந்தான்; மனைவியையும் இழந்து உயிர் பிழைத்து இந்த மலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான், என்று இந்த வரலாற்றை அனுமன் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த இராமனுக்கு உதடுகள் துடித்தன. கோபத்தில் அவன் தாமரை முகம்கூட செவ்வல்லி போல சிவந்து போனது.

தனது சிற்றன்னை கேட்ட வரத்துக்காக தம்பி பரதனுக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு, கானகம் வந்த இராமனுக்கு, தம்பியின் மனைவியை வாலி அபகரித்துக் கொண்டான் என்ற செய்தி கடும் கோபத்தை உண்டாக்கியது. இப்படிப்பட்ட கொடும் தொழில் புரிந்த வாலி உயிர் வாழக் கூடாது. எங்கே அவன்? இப்போதே அவன் உயிரை என் அம்பினால் குடித்து, உனது நாட்டையும், உன் மனைவியையும் மீட்டுத் தருகிறேன் என்று சூளுரைத்தான்.

“உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி

விலகும் எனினும் வில் இடை வாளியின் விட்டு இத்

தலைமையொடு, நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்

புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு எனப் புகன்றான்”.

சுக்ரீவனுக்கு, இனி வாலியின் வலி ஒழிந்தது என்ற உறுதி ஏற்பட்டது. தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து, இராமனிடம் ‘இதுபற்றி நாம் ஆலோசிக்க வேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது’ என்றான். வாலியை வெல்லும் ஆற்றல் இராமனுக்கு உண்டா என்பதில் அவனுக்கு ஐயம் ஏற்பட்டதால், தன் அமைச்சர்களிடம் அதுகுறித்து ஆலோசனை பெற எண்ணினான். அவ்வாறு அவன் தன் அமைச்சர்களுடன் இதுகுறித்து தனிமையில் ஆலோசித்தான்.

அப்போது அனுமன் சொல்லுகிறான், “சுக்ரீவா! உன் மனதில் ஓடும் எண்ணங்களை நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். வாலியைக் கொல்லும் ஆற்றல் இவர்க்கு உண்டோ என்று நீ சந்தேகிக்கிறாய். இதுபற்றி இனி நான் சொல்வதை மட்டும் கேட்டு நடப்பாயாக” என்றான்.

“இராமனுடைய கைகளிலும், கால்களிலும் சங்கு சக்கர ரேகைகள் உள்ளன. இந்த உத்தம லட்சணங்கள் திருமாலைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இந்த இராமபிரான் அந்த திருமாலின் அவதாரமேயன்றி வேறில்லை. பூமியில் அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டவே அவதரித்துள்ளார்”.

“என்னை ஈன்ற எனது தந்தை வாயுபகவான் எனக்கு என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? இவ்வுலகங்கள் அனைத்தையும் படைத்தவனான பிரமதேவனை ஈன்றவரான திருமாலுக்கு அடிமை செய்து வாழ்வதே உனது வாழ்வின் குறிக்கோளாகக் கொள்க. நான் கடைத்தேற எனக்கு நீ செய்ய வேண்டிய கடன் அதுவே என்று சொல்லியிருக்கிறான். அந்த திருமால் அவதாரத்தை, அவர்தான் திருமால் என்று நான் எப்படி அறிந்து கொள்வது என்று என் தந்தையிடம் கேட்டேன். உலகில் எவர்க்கும் துன்பம் நேரிடுகின்ற போது அதனைத் துடைத்து நீக்கும் பொருட்டு தோன்றி அருளுவான். அவனைக் கண்டவுடன் உன் உள்ளத்தில் பேரன்பு உண்டாகி இதயம் நெகிழ்வடையும். அதுவே நீ திருமாலை உணர்ந்து கொண்டதற்கு அறிகுறி என்றான். நான் இராமனை முதன்முதலாகக் கண்டபோது அத்தகைய அனுபவம் கிடைக்கப் பெற்றேன். எனவே இவர்தான் திருமாலின் அவதாரம் என்பதில் வேறு ஐயப்பாடு எதுவும் உண்டோ?” என்றான் அனுமன்.

“ஐயனே! அந்த இராமனின் வலிமையை நீ தெரிந்து கொள்ள இன்னொரு உபாயமும் இருக்கிறது. நாம் போகும் வழியில் ஏழு மராமரங்கள் இருக்கின்றன. அதனை இராமன் ஒரே அம்பினால் துளைத்தால் அதுவே அவனது திறமைக்குச் சான்றாகும்” என்றான் அனுமன் சுக்ரீவனிடம்.

அது கேட்ட சுக்ரீவன் “நன்று! நன்று!, நீ கூறிய உபாயம் மிகவும் நல்லது” என்று சொல்லி அனுமனைத் தழுவிக் கொண்டான். பிறகு அனைவரும் அவ்விடம் விட்டு அகன்று இராமபிரான் இருக்குமிடத்தை அடைகின்றனர். இராமபிரானிடம் சென்று சுக்ரீவன் “ஐயனே! நான் தங்களிடம் செய்து கொள்ளும் விண்ணப்பம் ஒன்று உளது” என்றான்.

“கேள்!” என்றான் இராமன்.

உடனே சுக்ரீவன் சொல்கிறான், “வாருங்கள், நாம் இந்த வழியாகப் போகவேண்டும்” என்று தொலைவில் ஓரிடத்திற்குக் கூட்டிச் செல்கிறான். அங்கு ஐந்தோடு இரண்டு, ஏழு மராமரங்கள் வரிசையில் இருந்தன. இவற்றைத் தாங்கள் ஒரே அம்பினால் துளைத்து, என் நெஞ்சின் துன்பம் தீர்ப்பீராக!” என்றான். வாலி அந்த மரங்களை அசைத்து அவற்றின் இலைகள் யாவும் உதிருமாறு செய்திருந்தான். அதன் பொருட்டு இராமனை அவற்றை ஓர் அம்பினால் துளைக்கும்படி கேட்டுக் கொண்டான்.

இராமன் ஒரு புன்முருவல் பூத்தான். இவன் நம் வலிமையைச் சோதிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு, தன் வில்லில் நாண் ஏற்றி அந்த மரங்களின் அருகில் சென்றான். தன் வில்லின் நாணை இழுத்து பெருத்த ஓசையை எழுப்பினான். பின்னர் ஓர் அம்பை எடுத்து வில்லில் பூட்டி நாணை நன்கு இழுத்து அம்பை விரைந்து செலுத்தினான். இராமபிரான் செலுத்திய அந்த அம்பு, ஏழு மராமரங்களையும் துளைத்து, கீழ் மேலாக அமைந்துள்ள ஏழு உலகங்களையும் உட்புகுந்து, பின்னர் ஏழு என்னும் தொகையில் பொருள் எதுவும் இலாமையால் இராமனிடமே அந்த அம்பு திரும்ப வந்து சேர்ந்தது.

6


கிஷ்கிந்தா காண்டம் - தொடர்ச்சி


இதனைக் கண்டு உலகில் ஏழு ஏழாய் இருக்கும் பொருள்கள் அனைத்தும் அஞ்சினவாம். ஏழு கடல்கள்; ஏழு உலகம்; ஏழு குன்றங்கள், ரிஷிகள் எழுவர், புரவிகள் ஏழு, மங்கையர் எழுவர்; இப்படி ஏழு ஏழாய் இருப்பவை அனைத்தும் அஞ்சின. அவை முறையே:–

ஏழு கடல்கள்: உவர் நீர், கருப்பஞ்சாறு, மது; நெய், தயிர், பால், நன்னீர் கடல்கள்.

ஏழு உலகம்: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜநலோகம், மஹாலோகம், தபோலோகம், சத்யலோகம்.

ஏழு குன்றம்: கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஹேமகூடம், கந்தமாதனம்.

ஏழு ரிஷிகள்: அத்திரி, பிருகு, குத்ஸவர், வசிஷ்டர், கெளதமர், காசியபர், ஆங்கீரஸர்.

ஏழு புரவிகள்: சூரியன் இரதத்தில் பூட்டப்பட்ட வேத சந்தங்களாகக் கருதப் படுபவை. அவை:

காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், பிருஹதீ, அங்க்தீ, திரிஷ்டுப், ஜகதி.

ஏழு மங்கைகள்: (சப்த கன்னிகைகள்) பிராஹ்மி, மாஹேஸ்வரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, சாமுண்டி.

இராமபிரானது ஒரே அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்துச் சென்ற காட்சியைக் கண்ட சுக்ரீவன், அவனது பாதங்களில் வீழ்ந்து வணங்கிக் கூறுகிறான்: “வையமும் நீயே! வானும் நீயே! மற்றும் நீயே! பஞ்ச பூதங்களும் நீயே! அனைத்தும் நீயே! நான் நற்கதி அடைய என்னை நாடி வந்து திருவருள் புரிந்தனை என்றான். வாலியின் கொடுமைகளுக்கெல்லாம் ஆட்பட்டு வாடிக் கொண்டிருந்த வானரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் ஆடின, பாடின, அங்கும் இங்கும் ஓடின.

ருசியமுக பர்வதத்தில் முன்பு வாலியோடு போரிட்டு மடிந்த மாயாவியின் தம்பியும், எருமை வடிவத்தினான துந்துபி என்பவனின் எலும்புக் கூடு கிடந்தது. அதுவே ஒரு பெரிய மலைபோலக் காணப்பட்டது. அதனைக் கண்ட இராமன், இது என்ன என்று கேட்டான். அதற்கு சுக்ரீவன் சொல்கிறான்: “துந்துபி என்பவன் மலை போன்ற கருத்த உடலும் இரண்டு கொம்புகளும் உள்ள அரக்கன். அவன் திருமாலுடன் போரிட வேண்டுமென்று அவரைத் தேடிக்கொண்டிருந்தான். அப்போது திருமால் அவன் முன் தோன்றி என்னை ஏன் தேடுகிறாய் என்று கேட்டார். அதற்கு அந்த துந்துபி நீ என்னோடு போர் செய்யவேண்டுமென்பதற்காக உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன், வா! வந்து என்னுடன் போரிடு என்றான். அதற்குத் திருமால் உன்னோடு போர் புரியத் தக்கவன் அந்த சிவபெருமாந்தான், நீ போய் அவரோடு போரிடு என்றார்.

உடனே அந்த அரக்கன் சிவபெருமான் இருக்கும் கைலை மலையை அடைந்து, அந்த மலையைப் பெயர்க்கத் தொடங்கினான். இப்படி ஓர் அரக்கன் வந்து கைலை மலையை பெயர்ப்பதைக் கண்ட சிவபெருமான், அவனிடம் உனக்கு என்ன வேண்டும், ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டார். நீ என்னுடன் போர் செய்ய வேண்டும், வா! இப்போதே போரிடலாம் என்றான். அதற்கு சிவன், அவனைத் தேவர்களிடம் போய் அவர்களோடு போரிடு என்கிறார். துந்துபியும் தேவர்களிடம் போகிறான். அவர்கள் உன்னோடு போரிடக் கூடியவன் அந்த வாலிதான், போய் அவனோடு போரிடு என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

அதன்படியே துந்துபி கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைப் போருக்கு அழைக்கிறான். உடனே வாலியும் அவனோடு பொருத வந்து சேர்கிறான். இருவருக்குமிடையே பெரும் போர் நடக்கிறது. உலகமே அஞ்சத்தக்க பெரும் போர் அது. இறுதியில் துந்துபியின் கொம்புகளை முறித்து அவனைத் தூக்கித் தலைக்குமேல் பல முறை சுழற்றி வீசி எறிய, அண்டசராசரங்களிலும் அவன் உடல் சுழன்று இந்த மலையில் வந்து விழுந்தது. அவனுடைய எலும்புக்கூடுதான் இது என்றான் சுக்ரீவன்.

துந்துபியின் வரலாற்றைக் கேட்ட இராமன் இலக்குவனை நோக்கி, “மைந்த! நீ இந்த துந்துபியின் உடலைத் தூக்கி எறி” என்று கூறவும், அவனும் தன் கால் விரலால் அவ்வுடலை உந்தி எறிய அவ்வுடல் மீண்டும் ஏழு உலகங்களிலும் சுழன்று வந்து கீழே விழுந்தது. வானரர்கள் வியந்து போய் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள். பின்னர் அனைவரும் ஓர் சோலையில் போய் தங்கினர். அப்போது சுக்ரீவன் இராமனிடம், “ஐயனே! நான் தங்களிடம் மற்றொரு செய்தியையும் கூற வேண்டும்” என்றான்.

“சில தினங்களுக்கு முன்பு நாங்கள் இந்த மலையில் கூடியிருந்த நேரத்தில், அப்போது வான வழியாக ஒருவன் தன் ஊர்தியில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்றான். அவள் அழுது அரற்றிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். இப்போது நினைத்துப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, அந்தப் பெண் தங்களது தேவியாகத்தான் இருக்க வேண்டுமென்று” என்று கூறினான் சுக்ரீவன்.

அவன் மேலும் சொல்கிறான், “இராவணன் அந்தப் பெண்ணோடு இந்த மலையைக் கடக்கும் போது, அந்தப் பெண், தன் அணிகலன்களை ஓர் துணியில் சுற்றி நாங்கள் இருந்த இடம் நோக்கி வீசி எறிந்தாள். அதனை எடுத்து வைத்திருக்கிறோம். தாங்கள் அவைகளைப் பார்த்து, அவை தேவியினுடையதுதானா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்றான்.

இராமனும் அவற்றை நன்றாகப் பார்த்தான். அவற்றைக் கண்டதும் மனம் துன்பமுற்று வருந்தினான், கதறினான், நெருப்பிலிட்ட மெழுகாய் உருகினான். உணர்ச்சிக் கொந்தளிப்பால் சீதையின் நினைவு வாட்ட மிகவும் துன்புற்று நின்றான். கண்களில் கண்ணீர் பெருகி உடலை நனைத்தன. இராமன் நினைவிழந்து மூர்ச்சித்து விழுந்தான். கீழே விழுந்து விடாமல் இலக்குவன் அவனைத் தாங்கிக் கொண்டான்.

பிறகு நினைவு திரும்பியதும் பலப்பல சொல்லி இராமன் புலம்பினான். தான் இந்த அணிகலன்களை இராமனிடம் காட்டியதால் அனொறோ இவனுக்கு இப்படி நேர்ந்தது என்று சுக்ரீவன் வருந்தியபடி இராமனிடம், “நூல்வலாய்! தூயரமடைய வேண்டாம். உலகில் எந்த மூலையில் கொண்டு போய் சிறை வைத்திருந்தாலும், அன்னையைக் கண்டு மீட்டுக்கொண்டு வந்து தங்களிடம் சேர்ப்பேன். மனம் தளரவேண்டாம்” என்றான் சுக்ரீவன்.

“தெய்வத் திருமகளனைய கற்பினாள் சீதாப்பிராட்டி அஞ்சும்படியாக, கொடியவன் இராவணன் செய்த கொடுமைக்காக, அவனது புயங்கள் பத்தும், இருபது தோள்களும், ஈரைந்து தலைகளும் மட்டுமல்ல, உன் ஒரு அம்புக்கு அந்த ஈரேழு உலகங்களும் ஈடு கொடுக்க முடியுமா என்ன? தாங்கள் இங்கே தங்கி இருங்கள். பதினான்கு உலகங்களிலும் தேவி எங்கே இருந்தாலும் நான் தேடிக் கண்டுபிடித்துத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன். அனுமன் முதலான நாங்கள் அனைவருமே, தாங்கள் ஏவிய பணியைச் செய்து முடிக்கக் காத்திருக்கிறோம். பெருவலியமைந்த இந்த இலக்குவரும் உமக்குத் துணையிருக்கத் தாங்கள் வருந்துவது ஏன்? பெருமைக்கு உரியவர்கள் தாங்கள் செய்து முடிக்க வேண்டியவற்றை உறுதியுடன் செய்து முடிப்பார்களேயன்றி வீணில் வருந்தி இருப்பார்களோ?” என்றான் சுக்ரீவன்.

“நீ அந்த மும்மூர்த்திகளுக்கும் இணையானவன். இங்கு எனக்கு ஏற்பட்ட இன்னலை நீக்குவதைப் பிறகுகூட கவனித்துக் கொள்ளலாம். இப்போதே இராவணனால் துன்புற்று வருந்தும் சீதாபிராட்டியை மீட்டு வருவோம். அதுவே நாம் செய்ய வேண்டிய முதல் கடமையாகும்” என்றான்.

இராமன் சற்றுத் தெளிந்து அன்போடு சுக்ரீவனை நோக்கினான். இராமபிரானின் குறையைத் தீர்ப்பதையே பெரிதாகக் கருதியதைப் போன்றே இராமனும் சுக்ரீவனின் குறையை நிவர்த்திப்பதே தன் முதல் கடமை என்றான். இவ்வாறு இராகவன் சொன்னதும் அனுமன் இராமனை வணங்கிக் கூறுகிறான், “குன்றுநிகர் தோளினாய்! தங்களிடம் நான் தெரிவித்துக் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உளது. எதிரியான வாலியைக் கொன்று சுக்ரீவனை கிஷ்கிந்தைக்கு அரசனாக்கி, அதன் பிறகு நாலா திசைகளிலிருந்தும் வானர வீரர்களை வரவழைத்து ஒன்றுதிரட்டி, அதன் பிறகு அரக்கர்களுடன் போரிட அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்தல் எளிதாக இருக்கும். அப்படி நாம் எழுபது வெள்ளம் வானரப் படையைச் சேர்ந்துவிட்டால், அந்த அரக்கர்கள் அண்டத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து அழித்துவிட முடியும்” என்றான்.

இராமனும், “ஆம்! அதுவே நன்று. அப்படியே செய்வோம்” என்று சொல்லி “நாம் அனைவரும் இப்போது வாலி இருக்குமிடம் செல்வோம்” என்று அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

சுக்ரீவனும், அவனது வானரப் படைகளும் இராம லக்ஷ்மணர்களோடு கிஷ்கிந்தைக்கு நடந்து செல்லத் தொடங்கினர். இவர்கள் சென்ற காட்சி ஆண் யாளியும், வீரம் செறிந்த புலியும், விரைந்து செல்லும் யானையும் இரண்டு ஆண் சிங்கங்களோடு செல்வது போல இருந்ததாக கம்பர்பெருமான் வர்ணிக்கிறார்.

இராமன் சுக்ரீவனிடம், “நீ போய் வாலியை யுத்தத்துக்கு அழைத்து, அவன் வந்தபின் அவனோடு போர் செய். அப்படி நீ போரிடும்போது நான் ஓர் மறைவிடத்தில் நின்று அவன் மீது அம்பு செலுத்திக் கொல்வேன்” என்றான்.

எப்படியாவது வாலியிடமிருந்து தனக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்திருந்த சுக்ரீவன், இதற்கு சம்மதித்தான். மகிழ்ச்சியோடு பெருத்த ஓசை எழுப்பினான். பிறகு சுக்ரீவன் வாலியின் அரண்மனையருகில் சென்று அவனை கூவி அழைக்கிறான். “ஏ! வாலி! என்னுடன் போர் செய்ய வா! நான் உன்னைக் கொல்லுவேன்!” என்று இடிபோன்ற குரலில் முழக்கமிட்டுத் தன் தோளையும், தொடையையும் தட்டினான்.

அங்கு அரண்மனையில் படுக்கையில் படுத்திருந்த வாலிக்கு, யானையின் பிளிறல் கேட்ட சிங்கம் போல சிலிர்த்தது. படுக்கையை விட்டு எழுந்தான். தன்னிடம் அடிபட்டு உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்ட தம்பி சுக்ரீவன், தன்னைப் போருக்கு அழைத்தது கண்டு வெகுண்டு ஒரு ஏளனச் சிரிப்புச் சிரித்தான். அவ்வொலி கிஷ்கிந்தை முழுவதும் எதிரொலித்தது.

படுக்கையிலிருந்து அவன் எழுந்து குதித்த வேகத்தில் மலைகள் ஆடின. தன் தோள்களைத் தட்டி போருக்குத் தயார் என்றதும், மலைகள் பெயர்ந்து விழுந்தன. கோபத்தில் கொடிய அனற் பொறிகள் எழுந்தன. கண்களில் வடவைக்கனல் எழுந்தது. மூச்சுக் காற்றில் புகை மண்டின. வந்த கோபத்தில் தேவலோகத்தையும் அழித்துவிடலாமா என்று எண்ணினான். கையோடு கையைக் குத்தினான்; அந்த ஓசையில் திக்கு யானைகள் மதங்கொண்டோடின; இடி இடித்தன, தேவலோகம் நிலை குலைந்தது. மலைகளும் பிளவுபட்டுத் தூள்தூளாயின.

“வந்தேன்! இதோ வந்துவிட்டேன்!” என்று வாலி கூறிய சொற்கள் எட்டுத் திசைகளிலும் எதிரொலித்தது. இவ்வொலியின் வேகத்தால் வானத்திலிருந்து நட்சத்திரங்கள் உதிர்ந்தன. அப்படி கோபத்தோடு எழுந்த வாலியை அவன் மனைவியான தாரை போருக்குப் போகவேண்டாம் என்று தடுத்தாள். பொதுவாக நிமித்தக் குறிகளின்படி, ஒருவன் ஒரு காரியமாய் எழுந்து செல்லும் போது, அவன் மனைவி தடுத்தால், அந்த காரியம் நிறைவேறாததோடு அவனுக்கும் கேட்டை விளைவிக்கும் என்பது நம்பிக்கை.

“என்னைத் தடுக்காதே! விடு! அன்று பாற்கடலைக் கலக்கி அமுதம் வரவழைத்தது போல இந்த சுக்ரீவனையும் அழித்து அவன் உயிரைக் குடித்துவிட்டு மீள்வேன்” என்றான் வாலி.

“மன்னா! இந்த சுக்ரீவன் ஏற்கனவே உன்னிடம் தோற்று உயிர் பிழைக்கத் தப்பி ஓடிப்போனவன். அப்படிப் பட்டவனுக்கு இப்போது புதிதாக என்ன பலம் வந்திருக்க முடியும். அப்படி அவன் திரும்ப வந்து உன்னைப் போருக்கு அழைக்கிறான் என்றால், ஏதோவொரு புதிய துணை அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா?” என்றாள் தாரை.

“பெண்ணே! அனைத்து உலகங்களிலும் இருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றாக வந்தாலும் அவர்கள் என்னால் அழிக்கப்படுவார்கள் என்பது உனக்குத் தெரியாதா? என் பெயரைக் கேட்டதும் அந்த எமனும்கூட ஓடி ஒளிந்து கொள்வான். ஆகையால் என்னை எவர் எதிர்த்து வரமுடியும். அப்படி அறிவு இல்லாமல் எவரேனும் எதிர்த்தால்கூட அவர்கள் வசம் உள்ள வரங்களும், வலிமையும் பாதி என்னிடம் வந்து சேரும்படியான வரத்தைப் பெற்றவன் நான். பிறகு அவர்கள் வெல்வது எவ்வாறு? நீ பயத்தை ஒழி. துன்பத்தை விடு” என்றான்.

“அரசே! இராமன் என்று ஒருவன் அந்த சுக்ரீவனுக்கு உயிர்த் துணைவனாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறான் என்று நம்மிடம் மிகவும் அன்பு கொண்டவர்கள் வந்து சொன்னார்கள்” என்றாள் தாரை.

“அடப்பாவி! உலகில் தீவினைகளை அழித்து அறத்தின் வழியில் வாழும் இராமபிரானுடைய இயல்புக்கு ஒவ்வாதவற்றைச் சொல்லுகிறாயே. அபசாரம் செய்து விட்டாய். தவறு இழைத்து விட்டாய். நீ ஒரு பெண் என்பதால் உன்னைக் கொல்லவில்லை. பிழைத்தாய்” என்றான் வாலி.

“இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தரும் இராமபிரானின் குண நலன்களுக்கு நீ கூறியவை பெருமை தர வல்லதோ? இவன் வந்து சுக்ரீவனிடம் நட்பு கொள்வதால் பெறப்போகும் நன்மைதான் என்ன? உலகத்தையே தருமத்தால் காக்கின்ற தர்மம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமோ? தந்தை தாங்கி வந்த உலக பாரத்தை முறைப்படி பெற்று, சிற்றன்னையின் விருப்பத்திற்கேற்ப, அவலது மைந்தன் பரதனுக்கு ஆட்சியை உவகையோடு அளித்த பெரியோனாகிய இராமனை பாராட்டாமல், இத்தகைய புன்மொழிகளைக் கூறுகிறாயே. உலகங்களெல்லாம் சேர்ந்து எதிர்த்து நின்றாலும், வெற்றி பெறும் அவனது வில்லான கோதண்டம் இருக்கும்போது வேறொரு துணையும் அவனுக்கு வேண்டுமோ? அவனுக்கு அப்படியொரு துணை வேண்டுமென்றாலும், கேவலம் ஒரு குரங்குடன் நட்பு கொள்வதை நினைத்துப் பார்க்க முடியுமா? தன் தம்பிகளே தனக்கு உயிர் போன்றவர்கள் என்று அன்பு செலுத்தி வாழ்கின்ற இராமன், அருட்கடலாக இருப்பவன். அப்பேற்பட்டவன் அண்ணன் தம்பியான எங்களுக்கிடையேயான போரில் இடையில் நின்று அம்பு செலுத்துவானோ? நீ இங்கேயே இரு. கண் இமைக்கும் பொழுதில் அந்த சுக்ரீவனுடைய உயிரைக் குடித்து அவனுக்குத் துணையாக யார் வந்திருந்தாலும் அவர்களையும், அழித்துவிட்டுத் திரும்பி வருவேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் வாலி.

இதற்கு மேலும் அவனிடம் பேசிப் பயனில்லை என்று தாரை அடங்கி விட்டாள். அங்கிருந்து புறப்பட்ட வாலி, தன் தம்பியுடன் போரிடுவதற்காக, மலைக்கு மேலே தம்பியைத் தேடிக் கொண்டு வந்தான். இரணியன் சுட்டிக் காட்டிய தூணைப் பிளந்து கொண்டு வந்த நரசிம்ஹத்தைப் போல வாலி அந்த மலைமீது வந்து தோன்றினான். அங்கே போருக்கு அழைத்துக் கர்ச்சிக்கின்ற தம்பி சுக்ரீவனைப் பார்த்தான். தானும் கர்ச்சனை செய்தான். இருவரின் போர் ஒலி வான்முகட்டை எட்டி இந்த அண்டமெல்லாம் எதிரொலித்தது.

அப்போது அண்ணன் தம்பியான வாலியையும், சுக்ரீவனையும் ஒருசேர பார்த்த இராமன் தம்பி இலக்குவனை அழைத்து “தம்பி! இவர் இருவரையும் நன்றாகப் பார்! இவ்வுலகிலுள்ல அரக்கர்கள், தேவர்கள், எந்தக் கடலும், மேரு மலையும், காற்று, தீ, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால்கூட இவ்விருவரின் உடல் வடிவுக்கு ஒப்பாவார்களா? என்று வியந்தான்.

தனது அண்ணன் இராமனுக்கு வனத்தில் தீங்கு ஏற்படாமல் காத்து அவனுக்குத் தொண்டு புரிவதே, தனது கடமை எனக் கொண்டு தன் சுக துக்கங்களை மறந்து இரவு பகல் உறக்கமின்றி பணி புரிந்து வரும் இலக்குவன், பிறிதொருவன் தன் அண்னன் உயிருக்குத் தீங்கு இழைக்க முற்படுகையில் அதற்குத் துணைபுரியும் நிலை ஏற்பட்டதால், மனம் வருந்தி இருந்தான். தன் சொந்த அண்னனையே கொல்ல விரும்பும் இந்த சுக்ரீவன் மற்றவர் பால் எப்படி நடந்து கொள்வான் என்ற ஐயமும் ஏற்பட்டது. இப்படி இலக்குவனின் மனவோட்டம் போவதைக் கவனித்த இராமபிரான் சொல்லுகிறான்: “அப்பனே! இதைக் கேள்! மிருகங்களாகிய இவர்களது ஒழுக்க முறைகளை, மனித இனத்தின் ஒழுக்க முறைகளைப் போல எண்ணக் கூடாது. எந்தவொரு தாயின் வயிற்றில் உதித்த தம்பிகளில் பரதனைப் போல் உத்தமனாக இருப்பது சாத்தியமா? என்றான் இராமன்.

தன் பொருட்டு எல்லா சுகங்களையும் தியாகம் செய்துவிட்டுத் தன்னுடன் சார்ந்து நிற்கும் இலக்குவனிடமே, அவனைச் சொல்லாமல் பரதனைப் புகழ்ந்து பேசியது ஏன்? என்ற ஐயம் நமக்கெல்லாம் ஏற்படுவது இயற்கையே. இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும் என்று யோசித்தால் ஒரு காரணம் நமக்குப் புலப்படும். இலக்குவன் உணர்ச்சி மேலீட்டால் சில இடங்களில் உண்மையை உணராமல் பிழை செய்த நேரங்கள் உண்டு. தந்தை சொல் காக்க இராமனும் இலக்குவனும் கானகம் புறப்பட்ட போதும் சரி, பரதன் இராமனைத் தேடிக் கொண்டு சித்ரகூடம் வரும்போதும் சரி, அவன் இராமன்பால் கொண்ட அன்பின் காரணமாக மதி மயங்கிய நிலையில் பரதனை வெகுண்டு பேசியதுண்டு. இந்த இடத்திலும் சரணாகதி என்று தன் காலடியில் விழுந்து கெஞ்சிய சுக்ரீவனைக் கொல்ல வருபவனும், தனது சொந்த தம்பியின் மனைவியையே அபகரித்தவனுமான வாலியைக் கொல்வது அறத்தின்பாற்பட்ட செயல் என்று துணிந்த இராமனுக்கு, இலக்குவனின் எண்ணங்கள் ஒப்பவில்லையாதலின், தம்பிக்கு பரதனை உவமை சொல்லியிருக்கலாம் என்பது ஆன்றோர்கள் கருத்து. தம்பிகளில் சிறந்தவன் யார் என்ற இராம இலக்குவருக்கிடையே நடந்ததாக வரும் உரையாடல், கம்பன் தவிர வான்மீகத்திலோ, அத்யாத்ம இராமாயணதிலோ இருப்பதாகத் தெரியவில்லை. அண்ணன் தம்பிகளில் சிறந்தவர்கள் யார் என்பதற்கு விடை காணும் வகையில் அமைந்த ஓர் பழந்தமிழ் பாடலொன்றை இங்கே காணலாம். அது:-

“செஞ்சுடரோன் மைந்தனையும், தென் இலங்கை வேந்தனையும்

பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே! – துஞ்சா

விரதம் தனைக் கொண்டு மெய்யன்பு பூண்ட

பரதனையும் இராமனையும் பார்!”.

இராமன் மேலும் சொல்லுகிறான், “உலகில் நல்லொழுக்கம் உடைய மேலோர் சிலராகவும், ஒழுக்க மேம்பாடு இல்லாதவர் பலராகவும் இருக்கிறபடியால், நாம் நட்பு கொள்பவரிடமுள்ள நற்குணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, குற்றம் நாடுதல் தக்கதன்று”.

“குணநாடிக் குற்றமும் நாடி அவற்றின்

மிகை நாடி மிக்க கொளல்” (திருக்குறள் 504)

இந்த திருக்குறளின் கருத்தைத்தான் இராமன் கூறுவதாக கம்பர் பெருமான் அமைத்திருக்கிறார். அதுபோலவே நெல்லுக்கு உமி உண்டு, நீர்க்கு நுரை உண்டு, புல்லிதழ் பூவிற்கும் உண்டு என்று நாலடியாரில் வரும் ஒரு செய்யுளையும் கவனத்தில் கொள்ளலாம்.

அங்கே! இரு பெரும் யானைகள் மோதிக் கொள்வது போல வாலியும் சுக்ரீவனும் மோதிக் கொண்டார்கள். இரு குன்றுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது போல மோதினார்கள். வலிமை பொருந்திய இரு ஆண் சிங்கங்கள் மோதுவது போல மோதிக் கொண்டார்கள். இடம் வலமாக மாறி மாறி சுழன்று போரிட்டார்கள். குயவனது சக்கரத்தில் சுழலும் மண்பானை போல இருந்தது அவர்கள் சுழன்று மோதிக்கொள்ளும் காட்சி. வாலியும் சுக்ரீவனும் விண்மீதும், மலைகள் மீதும், தரை மீதும் எல்லைப் புறங்களிலும் சென்று தொடர்ந்து போரிட்டனர். ஓரிடத்தில் நின்று போரிடாததால், பார்க்கும் இடமெல்லாம், இவர்கள் போரிடுவது போன்றே தோற்றமளித்தது.

போர் செய்யும் போது அவர்கள் எழுப்பிய ஓசையும், ஒருவரை ஒருவர் பலமாகக் குத்திக் கொள்ளும் ஓசையும், யுக முடிவில் ஏற்படும் பிரளய கால இடிமுழக்கம் போல எங்கும் எதிரொலித்தன. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதின் விளைவாக இருவர் உடலினின்றும் இரத்தம் ஆறுபோல ஓடின. ஒருவர் மார்பில் மற்றவன் குத்துகிறான். இருவரும் காலால் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொள்கின்றனர்; வாயினால் கடிக்கிறார்கள்; எதிர் நின்று இடித்துக் கொள்கிறார்கள்; மரங்களைப் பிடுங்கி அடிக்கிறார்கள்; மலைகளை உடைத்து மேலே எறிகிறார்கள்; தீ உமிழ்வது போல கண்களை விரித்துப் பார்க்கிறார்கள். இப்படி இவர்கள் இருவருக்குமிடையே கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

“எடுப்பர்; பற்றி ஒருவரை யொருவர் விட்டு எறிவர்; எதிர்வந்து மார்பை காட்டுவர்; கை முட்டி உள்ளே போகும்படி குத்துவர்; பறப்பர்; போரிடுவர்; கீழே விழுவர்;” ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து போரிட்டார்கள். நேரம் ஆக ஆக, வாலியின் வலிமையால் சுக்ரீவன் உடல் வருந்தும்படியாகவும், நிலைகுலைந்து போகும்படியாகவும், தளர்ந்து போனான். சுக்ரீவன் உயிர் போகும் நிலைமைக்குத் தாக்கப் பட்டான். கண், காது, மூக்குகள் வழியாக இரத்தம் கொட்டியது. என்ன செய்வதென்று அறியாமல் திணறிக்கொண்டு நாலாபுறமும் பார்க்கிறான்.

இவனைப் பிடித்துத் தூக்கி பூமியில் அடித்துக் கொல்வேன் என்று சுக்ரீவனை வாலி தன் இரு கைகளாலும் இடுப்பிலும், கழுத்திலும் கொடுத்துத் தூக்கி மேலே கொண்டு போன சமயம் பார்த்து, இராமபிரான் தன் வில்லில் அம்பு ஒன்றைப் பூட்டி, நாணை இழுத்துச் செலுத்தினான். அந்த இராம பாணம் வாலியினுடைய வலிய மார்பை வாழைப் பழத்தினுள் செலுத்தப்பட்ட ஊசியைப் போல, இலகுவாக ஊடுறுவியது. அடடா! இந்தக் காட்சியை என்னவென்று சொல்ல! எப்படி வர்ணிப்பது?. தன் தம்பியைத் தரையில் மோதிக் கொல்வதற்காக தலைக்கு மேலே தூக்கியிருந்த நேரத்தில் இராமனின் அம்பு வாலியின் நெஞ்சிலே பாய்ந்து நிற்க, நெடிது வீழ்ந்தான் வாலி.

தன் மார்பில் அம்பு பாய்ந்துவிட்டதை அறிந்த வாலி, கடும் கோபம் கொண்டு, “வான முகட்டை இடித்தெறிவேன், நான்கு திசைகளையும் முறித்தழிப்பேன்; இந்த பூமியை வேரோடும் பறிப்பேன்; யார் அவன்? என் மார்பில் அம்பை எய்தவன்?” என்கிறான் வாலி. கீழே விழுந்து கிடந்தபடி தன் கைகளால் தரையில் ஓங்கி அடிக்கிறான். கண்கள் தீயினைக் கக்குகின்றன. நாற்புறமும் விழித்துப் பார்க்கிறான். தன் மார்பில் பாய்ந்த அந்த அம்பைத் தன் கைகளாலும், வாலாலும் பற்றி இழுக்கிறான். அம்பு உடலைவிட்டு வெளியே வராமல் மார்பில் புதைந்து கிடப்பதால் மனம் வருந்துகிறான். ஒரு மலை கிடந்து கீழே புரள்வது போல தரையில் புரள்கிறான்.

“யார் செய்திருப்பர் இந்தக் காரியத்தை? தேவர்களோ? ஆ! அந்த தேவர்களுக்கு இதனைச் செய்ய இயலுமோ? வேறு அயலார் எவரேனும் செய்திருப்பாரோ? இப்படி நினைத்ததும் அவனுக்குக் கோபம் வருகிறது. கோபத்தில் சிரிக்கிறான். அந்த மும்மூர்த்திக்கு ஒப்பான ஒருவனே இந்தக் காரியத்தைச் செய்திருப்பான் என்று நினைத்து வெகுள்கிறான்.

“தேவரோ? என அயிர்க்கும், தேவர் இச்செயலுக்கு

ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ? எனும் அயலார்

யாவரோ? என நகை செயும், ‘ஒருவனே, இறைவர்

மூவரோடும் ஒப்பான் செயல் ஆம்! என மொழியும்”.

“எனது மார்பில் பாய்ந்துள்ள இந்த படைக்கலம் திருமாலின் சுதர்சன சக்கரமாக இருக்குமோ? அல்லது சிவபெருமானின் திரிசூலமாக இருக்குமோ? கிரெளஞ்சம் எனும் குன்றை ஊடுருவிச் சென்ற குமரக் கடவுளின் வேலாயுதமாக இருக்குமோ? அல்லது இந்திரனின் வஜ்ராயுதமோ? அந்த வஜ்ராயுதத்துக்கு என் மார்பைப் பிளக்கும் வலிமையும் உண்டோ? இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு மனம் புழுங்குகிறான்.

தன் மார்பில் ஆழப் புதைந்திருக்கும் அம்பைக் குனிந்து பார்க்கிறான் வாலி. ஒரு வில் இந்த அம்பை ஏவியிருக்க முடியுமா? முனிவர்கள் தங்கள் தவவலிமையால் மந்திரம் சொல்லி ஏவியிருப்பார்களோ? இப்படி எண்ணமிட்டுக் கொண்டே, தன் பலம் கொண்டமட்டும் அந்த அம்பைத் தன் பற்களால் கடித்துப் பறிக்க முயல்கிறான். இது ஓர் அம்புதான். என் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் அம்பை மார்பிலிருந்து உருவி அதில் பொறித்திருக்கும் பெயரைப் பார்க்கலாம் என்று தனது இரு கைகளாலும், வாலாலும், கால்களாலும் அந்த அம்பைப் பிணித்து பிடுங்க முயல்கிறான். அவன் தாங்கமுடியாத வலியோடும், எப்படியும் அந்த அம்பை வெளியே உருவிவிடவேண்டுமென்று செய்யும் இந்த விடாமுயற்சியைக் கண்ட அமரர்களும், அவுணர்களும், பிறரும் ‘என்னே இவனது வலிமை, என்னே இவனது வீரம்’ என்று வியக்கின்றனர்.

மார்பினுள் அம்பு பாய்ந்து, இரத்தம் அருவியென கொட்ட, குருதி வெள்ளத்தில் விழுந்து, மார்பில் பதிந்த அம்பைப் பிடுங்க அவன் படும் பாட்டை அவன் உடன்பிறந்த தம்பியான சுக்ரீவனும் பார்க்கிறான். அவனுக்கு நெஞ்சு பதறுகிறது. இரத்த பாசம் காரணமாக கண்கள் ஆறுபோல கண்ணீர் பெருக்க, மயங்கி நெடுமரம்போல் தரையில் விழுகிறான். மேரு மலையைக்கூட இரண்டாய் முறித்துவிடக் கூடிய ஆற்றலுள்ள என்னால் இந்த அம்பை முறிக்க இயலவில்லையே என்று அதனைத் தன் பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பறித்தான். இரத்தம் வெள்ளம் போல் பெருக்கெடுக்கிறது. அப்படிப் பறித்த அந்த வாளியில் பொறித்திருந்த பெயரைப் பார்க்கிறான். அதில் —

“மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்

தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே

இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை “ராம” எனும்

செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்”.

பிறவி ஒவ்வொன்றுக்கும், முற்பிறவி, இப்பிறவி, இனி வரும் பிறவி எனும் மூவகை உண்டு. இந்த மும்மைப் பிறவிகளுக்கும் இடமாக இருக்கின்ற இந்தப் பூவுலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் மூலமந்திரமாய் இருப்பது எதுவோ; தன்னை ‘நான் யார்?’ என்ற கேள்வி கேட்டு அதற்கான உண்மையான பொருளை அறிந்து கொள்ளும் “அஹம் பிரம்மாஸ்மி” எனும் ஞானப் பொருளை; இனி பிறவியில்லை எனும் நிலையை இந்தப் பிறவியிலேயே தரக்கூடிய அருமருந்தனைய மந்திரச்சொல்லாகிய, “ராம” எனும் பெருமை மிக்க இரண்டு எழுத்தைத் தன் கண்களால் தெரியக் கண்டான்.

“ராம” என்ற அந்த இரண்டெழுத்து மந்திரத்தின் பெருமையை விளக்கக்கூடிய பல சான்றுகளைச் சொல்லலாம். எல்லா மந்திரங்களிலும் மூலாதாரமான மந்திரம் ‘ராம’ என்பது என்பதற்கு, சம்பாதி தான் இழந்து போன சிறகுகள் திரும்ப முளைக்க, கூடியிருந்த அனுமன் முதலான அனைவரையும் ‘ராம’ மந்திரத்தைச் சொல்லுங்கள் என்று சொல்ல வைத்து அதனால் தான் முன்பு இழந்த சிறகுகளை திரும்ப அடையப் பெற்றதாக இதே இராம காதையில் பின்னால் வருகிறது.

தன் மீது அம்பு செலுத்தியது இராமன் என்பதைத் தெரிந்து கொண்ட வாலிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இராமனா இந்தக் காரியத்தைச் செய்தான். அறத்தின் நாயகன், உலகில் தீவினைகளை அழித்து அறவழியில் வாழ்பவன் என்றெல்லாம், தாரையிடம் சொல்லி, அத்தகைய இராமனா சுக்ரீவனுக்குத் துணையாக வந்திருப்பான் என்று அவளைக் கடிந்து கோண்டேனே!

“இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்

வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நன்னூல்

சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை

நல்லறம் துறந்தது என்னா நகை வர நாணுக் கொண்டான்”.

தன் தந்தை கொடுத்த வரத்தைப் பயன்படுத்திச் சிற்றன்னை காட்டுக்குப் போகச் சொன்ன காரணத்தால், தனது இல்லற தர்மத்தைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட புருஷோத்தமனான இராமன், கேவலம் குரங்கு இனத்தவராகிய எமக்காக, விற்போருக்கு என்று அமைந்துள்ள தர்மத்தை கைவிட்டு மறைந்து நின்று எம்மீது அம்பு எய்த இந்த இராமன் வந்து பிறந்த காரணத்தால், பெருமைக்குரிய சூரிய குலமும் தனது நல்லறத்தைத் துறந்து விட்டதே என்று வாலி எண்ணிக் கொண்டிருந்த போது, எப்பேற்பட்ட இராமன் தனது குலப் பெருமையையும், தனது விற்போர் தர்மத்தையும் குரங்கினத்தானாகிய தனக்காக கைவிட்டான் என்பதை நினைத்து வெட்கப்பட்டான்.

இராமன் செய்த காரியத்தினால் வாலிக்கு வெட்கம் ஏற்பட்டுத் தலை குனிகிறான்; அவன் செய்த காரியத்தை எண்ணி ஏளனமாகச் சிரிக்கிறான்; மறுபடி ஆழ்ந்த சிந்தனை வயப் படுகிறான்; இவன் இப்படிச் செய்யலாமா? இது தர்மமா? என்கிறான். பெரிய குழி ஒன்றில் விழுந்துவிட்ட யானை அந்த குழியை விட்டு வெளியேற வழிதெரியாமல் எப்படித் தவிக்குமோ அங்ஙனம் துன்பம் கொண்டு தவிக்கிறான் வாலி. இராமன் அரசன் அல்லவா? அவனே இப்படி நடுநிலை தவறலாமா? அதிலும் எம்மைப் போன்ற குரங்கு இனத்துக்காக இப்படி தவறு செய்யலாமா? என்று இப்படி வாலி சிந்தித்துக் கொண்டிருந்த போது இராமபிரான் அவன் முன்பாக வந்து தோன்றினான்.

வாலி முன்பாக வந்து நின்ற இராமனது தோற்றத்தை, கார் காலத்து மேகம் போன்ற மேனியும், தாமரை மலர் போன்ற ஒளிவீசும் முகத்தோடும், கையில் வில் ஏந்தி, தரைமேல் வருகின்ற காட்சியைக் கண்களால் கண்ட வாலி, மார்பில் இரத்தம் பொங்கி எழ, இராமனைக் கேட்கிறான், “என்ன நினைத்து இந்த காரியம் செய்தாய்? ஏன் செய்தாய்?”

“தாய் போன்ற அன்பும், வேதங்களைக் கற்று அதன் சாரங்களைப் புரிந்து கொண்டு, பிறரிடம் அன்பு பாராட்டி, தர்மத்தைக் கடைபிடித்து வந்த இராமா! சத்தியத்தையும், குல ஒழுக்கத்தையும் பழுதுபடாமல் காத்து அவற்றை நிலைநிறுத்துவதற்காகவே தனது உயிரையும் ஈந்த வள்ளல் தசரத சக்கரவர்த்தியின் மைந்தா! நீ எப்படி பரதனுக்கு அண்ணனாக வந்து பிறந்தாய்? பிறருக்கு வரக்கூடிய தீமைகளையெல்லாம் விலக்கிவிட்டு, தானே அந்தத் தீமையை செய்தால், அது தீமை இல்லாமல் போய்விடுமா? உன் குலம் சூரிய குலம், இக்ஷுவாகு வம்சம், ரகுகுலம் என்றெல்லாம் உலகமே பெருமைப் படக்கூடிய குலம். நீ கல்வி கற்றதோ மகாமுனிவர் வசிஷ்டரிடமும், கோசிக முனிவரிடமும். அவர்களிடம் கற்ற கல்வியின் மேன்மையை நீ காக்க மறந்து போனாயோ? ஓவியத்தில் கூட எழுத முடியாத பேரழகு வாய்த்த இராமா! உனது உயிருக்கு உயிரான உன் மனைவி ஜானகியை, ஜனக மகாராஜன் பெற்ற அன்னம் போன்றவளை, அமிழ்தத்தில் பிறந்த அன்னையைப் பிரிந்த பிறகு உன் அறிவு பிசகிப் போய் என்ன செய்கிறோம் என்பதை அறியவில்லை போலும்!”

“ஓர் அரக்கன் உனக்குப் பெரும் தீங்கிழைத்து விட்டான் என்பதற்காக, ஒரு குரங்கினத்து அரசனைக் கொல்லலாம் என்று நீ கற்ற அந்த மனுநீதி கூறுகிறதோ? அன்புக்கும் இரக்கத்துக்கும் பெயர் பெற்ற இராமா! உன் மனதிலுள்ள இரக்கத்தை எப்போது நீத்தாய்? நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன், என்மீது என்ன பிழை கண்டாய்? இத்தகைய பாவச் செயலை நீ செய்தாயானால், புகழை வேறு யார்தான் பெறுவார்கள்.”

அரக்கனாகிய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்று இராமனுக்குப் பெரும் தீங்கு செய்துவிட்டான் என்பதை வாலி தெரிந்து வைத்திருந்தான் என்பது அவனது கூற்றின் மூலம் தெரியவருகிறது. அப்படியானால் அந்த தீங்கைத் தடுக்காமல் போனதுகூட, இராவணனுடைய செயலை வாலியும் சம்மதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் என்றும் கொள்ளலாமல்லவா?

வாலி மேலும் பேசுகிறான். “மலைகளிலும், மரங்களிலும் ஊர்ந்து திரிகின்ற வானரங்களுக்கு, கலிகாலத்துக்கு உரிய கேடுகள் வந்து சேர்ந்தன போலிருக்கிறது. மேன்மையான குணங்களும், நல்ல நடத்தைகளும் உயர்ந்தோர்களுக்குத் தேவையில்லை, வலிமை குன்றியவர்களுக்குத்தான் அவைகள் என்று மாறிப் போயிற்றோ? வலியவர்கள் இழிதொழிலைச் செய்வாராகில் அவர்களுக்கு நிந்தனை இன்றி புகழைத் தரக்கூடியதோ?”

“துணை எதுவும் இல்லாமல் தனியனாக நீயே எதையும் சாதிக்க வல்ல திறனுடைய வேந்தனே! உன் தந்தையிடமிருந்து உனக்குக் கிடைத்த அரிய செல்வத்தை உனது தம்பிக்குக் கொடுத்து விட்டு காட்டுக்கு வந்தபோது நாட்டிலே மரபுக்கு மாறான ஒரு காரியத்தைச் செய்தாய்; இங்கே காட்டுக்கு வந்த இடத்தில் என்னை வீழ்த்திவிட்டு என் தம்பிக்கு நாட்டைக் கொடுத்து இங்கே காட்டிலும் மரபுக்கு மாறான ஒரு காரியத்தைச் செய்தாய். இதனினும் சிறந்த செயல் வேறு யாதேனும் இருக்கிறதா என்ன?”

“வீரக்கழலணிந்த இராமா! ஆண்மைக்குரிய செயலைச் செய்வதுதான் வீரர்களுக்கு அழகு அல்லவா? கற்றறிந்த மேலோனான நீ! எனக்கு இத்தகைய தீங்கைச் செய்தாய் என்றால், தீங்கு புரிவதையே தொழிலாகக் கொண்ட இலங்கை அரசன் இராவணன் முறையற்ற செயலைச் செய்தான் என்று கோபப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது? அவன் மீது குற்றம் காணும் உரிமை உனக்கு இல்லாமல் போய்விட்டதே!”

“இரண்டு பேர் ஒருவரோடொருவர் எதிர் எதிரே போரிடுகின்றபோது, அவ்விருவரில் ஒருவன் மீது கருணை கொண்டு மற்றொருவன் மீது மறைந்து நின்று வில் எடுத்து அம்பைச் செலுத்தி, அவன் உயிரைக் கொல்வதற்குப் பெயர்தான் தர்மமா? அல்லது அதர்மமா? நீ செய்த காரியத்தை என்னவென்று சொல்வது?”

“நீ செய்த காரியம் வீரம் உடையதல்ல! யுத்த தர்மத்தின் நெறிகளுக்கு உட்பட்டதும் அல்ல! உண்மையின் எல்லைக்குள் இருப்பதும் அன்று! இந்த பூமிக்கு என் உடல் பாரமாய் இருக்கிறதா? இல்லையே! நான் என்ன உனக்கு விரோதியா? இல்லையே! உனது மேன்மை குணம் நீங்கி, இதயத்தில் இரக்கமும் இல்லாமல் இப்படியொரு காரியத்தை எதற்காகச் செய்தாய்?”

“இருவருக்குள் ஒரு பிரச்சினை என்றால், அவ்விருவருக்கும் பொதுவாக இருந்து நடுநிலை தவறாமல், எது நியாயமோ, அதன்படி நீதி வழங்குதல்தான் பெருமை தரக்கூடியது. அப்படியில்லாமல் ஒருதலைச் சார்பாக தான் விரும்பும் ஒருவனுக்குச் சாதகமாக நீர்ப்பு வழங்குதல் முறையான செயலா?”.

“உன் சொந்த வாழ்வில் புகுந்து, தீமையான செயலைச் செய்த ஒருவனை அழிக்க வேண்டும் என்பதற்காக, வேறொருவன் துணையை நாடி உதவி பெறவேண்டுமென்றால், யானை இருக்க ஒரு முயலின் துணையை யாராவது நாடுவார்களா?”

“வானத்தில் ஒளி வீசும் சந்திரனுக்குத் தான் கருமையான ஒரு களங்கம் உண்டு. நீயோ, உன்னுடைய குலத்துக்கு முதல்வனான சூரியகுலத்தாருக்கோ, ஒரு களங்கமும் இல்லாமல் இருந்தது. இன்று நீ அதற்கொரு களங்கத்தை உண்டாக்கி விட்டாய்!”

“என் தம்பி சுக்ரீவன் என்னை போருக்குக் கூவி அழைத்தான். அவனோடு போரிடுவதற்கு நான் வெளிyஏ வந்து, அவனோடு போரிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து, நீ ஒளிந்திருந்து என் மீது அம்பு விட்டுக் கொன்று என்னை இப்படி பூமியில் விழுந்து கிடக்குமாறு செய்துவிட்டு, போரில் வென்றுவிட்ட சிங்கத்தைப் போல பெருமையோடு நிமிருந்து நிற்கிறாயே! வெட்கமாக இல்லை?”.

“நீ கற்ற அற நூல்களில் கூறப்படும் நெறிகளின்படியும் நடக்கவில்லை. உங்கள் குல முன்னோர்கள் போற்றிக் காப்பாற்றிய சீலம், ஒழுக்கத்தின்படியும் நடந்து கொள்ளவில்லை. நீ வாலியைக் கொல்ல வில்லை, அரச தர்மத்தின் வேலியைக் கொன்று விட்டாய்! உனது மனைவியை வேறொருவன் கவர்ந்து சென்று விட, நீ கையில் வில்லை ஏந்திருப்பதே, உன் வீரத்துக்கு இழுக்கு. மேலும் நேருக்கு நேர் நின்று என்னோடு போர் செய்யாமல் மறைந்து நின்று என் மீது அம்பு விட்ட வீரத்துக்காகவா உன்னை எல்லோரும் வில்வித்தையில் வல்லவன் என்று பெருமையாகப் பேசுகிறார்கள்?”

இப்படியாகத் தான் சுக்ரீவனுடன் போரிடும்போது எதிர்பாராத விதமாக மறைந்து நின்று தன் மார்பில் பாணத்தை விட்டு வீழ்த்திய இராமன் மீது கடுங்கோபம் கொண்டு, பற்களைப் பொடியாகும்படி கடித்துக் கொண்டு, கண்களில் தீச்சுடர் எழ, இப்படி இராமனைக் கேள்விக் கணைகளால் தொளைத்தெடுத்ததும், இராமன் அவனுக்கு பதில் சொல்லத் தொடங்கினான்.

இராமன் சொல்கிறான், “வாலி! முன்பு மாயாவியோடு போரிட்டபடி பிலத்துக்குள் நுழைந்தாயல்லவா? நீண்ட நாட்களாகியும் நீ வெளிவரவில்லை என்பதனால் வருத்தமடைந்து, தானும் பிலத்தினுள் வந்து உன்னைத் தேட விரும்பினான் சுக்ரீவன். ஆனால் உங்கள் குலப் பெரியவர்கள் அவனைத் தடுத்து, நீயும் போய்விட்டால் வானரர்களை யார் காப்பாற்றுவது, நீ அரசனாக முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்று கட்டாயப் படுத்தினார்கள். ஆனால் சுக்ரீவன் என்ன சொன்னான் தெரியுமா? என் அண்ணன் வாலியை அந்த மாயாவி கொன்றிருந்தால், அவனையும், அவன் குலத்தையும் பூண்டோடு அழித்தொழித்து விட்டு, நானும் உயிரை மாய்த்துக் கொள்வேன். இந்த அரச பதவியை ஏற்க மாட்டேன், நீங்கள் கூறும் ஆலோசனை ஏற்கக்கூடியதல்ல என்றான்.”

“அப்படியும் கேளாமல் வானர வீரர்களும் படைத் தலைவர்களும், முற்றுமுணர்ந்த பெரியோர்களும் அவனைப் பிலத்துக்குள் செல்லாமல் தடுத்து ‘நீ இல்லையேல் வானர குலம் அழிந்து விடும்’ என்று வற்புறுத்தியும்கூட, அவன் முடிசூட்டிக் கொள்ள சம்மதிக்கவில்லை. பிறகு மாயாவியைக் கொன்று விட்டு நீ திரும்ப வந்ததும், அவன் வந்து உன்னை வணங்கி, எந்தையே, நம் இனத்தவர் வற்புறுத்தி எனக்களித்த அரசுரிமையை நான் ஏற்கவில்லை. இந்த அரசு உன் அரசு. நீதான் ஆட்சி செய்ய வேண்டுமென்று உன்னிடமே தந்து விட்டான். ஆனாலும் அவன் சொற்களை நீ ஏற்காமல் அவன் மீது ஆத்திரம் கொண்டு, அவனைக் கொல்லத் துணிந்தாய். அவன் மீது எந்தத் தவறும் இல்லை என்று தெரிந்தும் அவன் மீது நீ கருணை காட்டவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்னை துன்புறுத்தாதே, என்னைத் தண்டிக்காதே என்று அவன் எவ்வளவு வேண்டியும் நீ ஏற்றுக் கொள்ளவுமில்லை, கருணை காட்டவுமில்லை”.

“உன் வலிமைக்கு எதிராகப் போரிட வலிமை இல்லாதவன் நான் தோற்றவனாகவே ஆவேன் என்று அவன் உன்னிடம் கெஞ்சியபோதும் நீ அவனை விடவில்லை. கையெடுத்து உன்னைக் கும்பிட்டு சரணாகதி அடைந்தவனை நீ கொல்லத் துணிந்தாய். அதனால் அவன் ஓடி உயிர் பிழைத்து ஒளிந்து கொண்டான்.”

“அவன் தவறு செய்யாதவன் என்று அறிந்து கொண்டு அவனிடம் நீ இரக்கம் காட்டவில்லை. அவன் உன் சொந்த தம்பி என்பதையும் கருதவில்லை. மதங்க முனிவரின் சாபத்தால் உன்னால் போகமுடியாத அந்த மலையில் போய் இவன் ஓளிந்து கொண்டதால் நீ அங்கு போகவில்லை. பிறன் ஒருவனது மனைவி என்பது தெரிந்து அவன் மனைவியை வலிமையால் கவர்ந்து கொள்வதென்பது எத்தகைய ஈனச் செயல்? மனதில் ஈரம் உள்லவன் இந்தக் காரியத்தைச் செய்வானா? அன்பும் இரக்கமும் உள்லவன் இப்படிச் செய்வானா? வீரம் உள்ளவன் செய்யக் கூடிய காரியமா? கல்வி கற்று நன்னெறி உணர்ந்தவன் செய்யக்கூடிய காரியமா இது? பிறன் மனை கவர்தல் என்பது யாவர் செயல்?”.

“புனிதமான இல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பெண்களிடம், நாம் வலிமையுடையவன் என்பதால் முறைதவறி நடந்து கொள்ளுதலும், மனசாட்சிக்கு மாறாகத் தவறு செய்தலும், நம்மைவிட வலிமை குறைந்தவன் என்பது தெரிந்திருந்தும் அவர்களை வம்புக்கு இழுத்து துன்புறுத்துவதும் தருமத்துக்கு மாறுபட்ட செயல்களாகும். தர்மம் இன்னது என்று அறியும் ஆற்றலும், இம்மைக்கும் மறுமைக்கும் எது நல்வழி என உணரும் ஆற்றலும் இருந்திருந்தால், உன் தம்பியின் மனைவியை அபகரித்து அதர்ம வழியில் சென்று ஆற்றாத பழியை ஏற்றிருப்பாயோ?”.

“தவறு செய்யாத தம்பியைத் தண்டித்தது, உன்னையே அடைக்கலம் என்று அடைந்தவனைக் கொல்ல முயன்றது, அறத்துக்குப் புறபாக உன் தம்பியின் மனைவியைக் கவர்ந்தது ஆகிய காரணங்களாலும், சுக்ரீவன் எனது உயிருக்கு உயிரான நண்பன் என்பதாலும், நான் உன்னை பயிருக்கு இடையே வளரும் களையை எடுப்பது போல எடுத்தொழித்தேன். அதுமட்டுமல்ல, குற்றமற்றவர்களையும் எளியோரையும் அவர்களுக்குத் துன்பம் நேரும் போது காப்பதும் என் கடமையும் கோட்பாடுமாகும்.” இப்படி வாலி செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டி இராமன் பேசுகிறான்.

இராமனது குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்ட வாலி சொல்கிறான், “இராமா! நீ இதுவரை சொல்லிவந்த தர்மங்களும், வாழ்க்கை நெறிமுறைகளும் மனிதர்களாகிய உங்களுக்குப் பொருந்துவன. ஆனால் நாங்கள் வானரங்கள். உங்களது தர்மங்கள் எப்படி எங்களுக்கும் பொருந்துவனவாகும்? நாங்கள் விரும்பியபடி வாழ்வதே எங்களது தர்மம் என்பதை நீ தெரிந்துகொள்ள வில்லையா? ஐயா! உங்கள் மனித ஜாதியாருக்குத் திருமணம், கணவன், மனைவி என்ற புனிதமான நெறிமுறைகளை ஆன்றோர்கள் வகுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட நெறிமுறைகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. வானரங்கள் நேர்ந்தபோது சேர்வது என்பதை பிரமன் எங்களுக்கென்று ஆக்கிவைத்தான்”.

“எங்களுக்கு மனம் போனபடி வாழ்கின்ற முறையும், குணமும் அமைந்தன. வேத நெறியும், கற்பு நிலையும் வானரர்களுக்குக் கிடையாது. வானரர்களின் குண விசேஷங்களும், மனிதர்களின் குணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனவே எங்கள் பிறப்புக்குரிய தன்மைகளின்படி, நான் யாதொரு குற்றமும் செய்தவனல்லேன். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்” என்று வாலி கூறினான்.

வாலியின் இந்த பதிலைக் கேட்டு இராமன் கூறுகிறான், “வாலி! நீ தேவர்களைப் போல பிறந்து, அறங்களையும், சாத்திரங்களையும் நன்கு கற்று, நீதிகளை உணர்ந்தவன். ஆதலின் உன்னை மிருக இனமாகக் கருத முடியாது. மனிதரிலும் மேம்பட்ட சிந்தனைகளும், செயலும் உடைய நீ கூறுகின்ற சமாதானம் ஏற்கக்கூடியவை அல்ல. எல்லா உயிர்களுக்கும் ஐம்பொறிகள் உண்டு. அவை பொதுவானவை. புலன் அறிவு என்பது அந்தந்த உயிர்களின் உயர்வுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. நீ அறிவில் சிறந்து விளங்குபவன். அறநெறிகளின் சிறப்பையும், தன்மைகளையும் நன்கு உணர்ந்தவன், அப்படிப்பட்ட நீ செய்த குற்றத்தை, உன்னை வானரம் என்று கூறிக் கொண்டு தவறிழைத்தல் தகுடியுடையது அல்ல”.

“தன் காலை ஓர் முதலை பற்றியிழுக்க, உயிர் பிழைக்க வேண்டி அந்தத் திருமாலை வேண்டி கூவி அழைத்து, வீடுபேறு பெற்ற கஜேந்திரனை சாமானியமான மிருகம் என்று நினைத்துவிடலாமோ? சீதாபிராட்டியை இராவணன் கவர்ந்து செல்லும்போது, அதனைக் கண்டு எதிர்த்து அவனுடன் போரிட்டு மாண்டுபோன கழுகரசன் ஜடாயு, நல்லறத்தில் சிந்தையுடையவன் ஆதலால் அநீதியைக் கண்டு பொறுக்காமல் அந்த இராவணனை எதிர்த்துப் போரிட்டு மாளவில்லையா? அவனை பறவை இனம் என்று எண்ணிவிடலாமோ?”.

“நல்லது எது, தீயது எது என்று பகுத்து உணர்கிற நல்லறிவு இல்லாமல் வாழ்வதல்லவோ மிருக இயல்பு. நீ உலகிலுள்ள நன் மார்க்கங்கள் அனைத்தையும் கசடற கற்றுணர்ந்தவன் என்பதும் உனக்குத் தெரியாத நீதிநெறிமுறைகள் எதுவும் இல்லை என்பதும், உன் பேச்சில் தெளிவாகத் தெரிகிறதே!. நீ உருவத்தில் வேண்டுமானால் விலங்காக இருக்கலாம், ஆனால் அறிவினாலும், செயல்களாலும் மானுடன் ஆவாய்”. விலங்குகளாய் பிறந்திருந்தாலும், அறிவும், ஒழுக்கமும் உடையவராயிருந்தால் அவர்கள் தேவர்களுக்குச் சமமாகக் கருதப்படுவார்கள். அதுபோலவே, மானுடர்களாகப் பிறந்து, மேற்சொன்ன குணாதிசயங்கள் இல்லாமல் போகுமானால் அவர்கள் மிருகங்களாக எண்ணத் தக்கவர்களே!. எமனுடைய ஆற்றலைக் கடிந்து, மார்க்கண்டேயனுக்கு வாழ்வளித்த சிவபெருமானை நீ பக்தியோடு வழிபாடு செய்து வேண்டிக்கொண்டதின் பயனாக, அவன் அருளால் நான்கு பூதங்களான காற்று, தீ, நீர், பூமி என்பனவற்றின் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்.”

“பிறப்பால் உயர்ந்தவர்கள் தீமை புரிவதும், இழிந்த பிறப்பாளர்கள் அறநெறியில் நிற்றலும் உலகில் சாதாரணமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள்தான். அது உலகத்தின் இயற்கை. ஆகவேதான் பிறப்பால் விலங்கு என்று உன் தவறுகளை நியாயப் படுத்துவது சரியல்ல”.

“ஒருவரது மேன்மையும், கீழ்மையும் அவரவர் செய்த வினைப் பயன்களால் அமைவது. இந்த உண்மைகளை நீ நன்கு அறிந்திருந்தும் பாவங்களில் எல்லாம் கொடிய பாவமான பிறன்மனை நயத்தல் எனும் கொடும் பாவத்தைச் செய்திருக்கிறாய். அதனால், நான் உன்னை அம்பு எய்து கொன்றது அறத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்பதை உணர்ந்து கொள்” என்று இராமன் கூறினான்.

இராமனுடைய சொற்களைக் கேட்ட வாலி சொல்கிறான், “ஆன்ற செவ்வியோய்! நீ கூறிய அனைத்தும் உண்மையே ஆகட்டும். ஆனால் போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று போரிட வராமல், காட்டில் விலங்குகளை மறைந்து நின்று கொல்லும் வேடனைப் போல என்மேல் ஒளிந்து நின்று அம்பு எய்தது என்ன நியாயம்? சொல்!” என்றான்.

இதற்கு இராமன் பதில் சொல்லவில்லை, இளவல் இலக்குவன் இடையில் புகுந்து பதில் கூறுகிறான்: “முதலில் உன் தம்பி சுக்ரீவன் வந்து இராமனிடம் சரணாகதி என்று அடைக்கலம் புகுந்தான். முறைதவறி நடந்து கொண்ட உன்னைக் கொல்வேன் என்று சுக்ரீவனிடம் இராமபிரான் வாக்குக் கொடுத்தார். தீமைகளை அழித்து அறத்தை நிலைநாட்டவே இராமன் உறுதி பூண்டவர் என்பதும், அறத்துக்குப் புறம்பான எதையும் அவர் செய்யமாட்டார் என்பதையும் அடைக்கலம் என்று வந்தவரைக் காப்பதே தனது தலையாய கடனாகக் கொண்டவர் என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும். உன்னோடு நேருக்கு நேர் நின்று போர் செய்ய இராமன் வந்தால், நீயும் இராமனிடம் சரணடைந்து விட்டால், தனது வாக்குறுதியிலிருந்து மாறுபட நேருமென்பதால், சுக்ரீவனுக்களித்த வாக்குறுதிப்படி உன்னை மறைந்திருந்து கொன்றார்” என்றான்.

கவிக்குல அரசான வாலியும் இலக்குவனின் இந்த மொழிகளைக் கேட்டான். கோபம் தணிந்து அமைதியடைந்தான். இராமபிரான் அறத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்ய மாட்டான். அதர்மத்தை அழித்து அறத்தை நிலைநாட்ட வந்த பெருமான் என்று உணர்ந்து, தான் வீழ்ந்து கிடந்த நிலையிலும், தன் தலை நாய்த்து இராமனை வணங்கினான். இலக்குவன் கூறிய மொழிகளால் இராமனைப் பரம்பொருள் என்று வாலி உணர்ந்து கொண்டான். வாலி “சிறியன சிந்தியாதான்”. உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன். அற்பத்தனமில்லாத பெருந்தகையாளன். இராமன் பரம்பொருள் என்பதையும், தான் தகவில்லா காரியங்களைச் செய்தமையால் தண்டித்தான் என்பதையும் தெரிந்து கொண்டு இராமனிடம் வேண்டுகிறான்.

“தாயென உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சார்வும்

நீயென நின்ற நம்ப நெறியினில் நோக்கும் நேர்மை

நாயென நின்ற எம்பால் நவை உறல் உணரலாமே

தீயன பொறுத்தி என்றான் “சிறியன சிந்தியாதான்”.

“இராமா! அனைத்து உயிர்களிடத்தும் தாய்போன்ற கருணையும், தருமமும், நடுநிலைமையும் பற்றுக்கோடாய் கொண்ட பெரியோய்! எல்லா செயல்களையும் உயர்ந்த நெறிகளின்படி நின்று பார்க்கின்ற நின் சிறப்பை என் மனதில் கொண்டேன். நாய் போன்ற இழிநிலையில் இருக்கும் என் போன்றோரிடத்துள்ள குற்றங்களை பொருத்தருள்வாயாக!” என்று இரந்து கேட்டுக் கொண்டான் வாலி.

“எந்தையே! பிறவிப் பிணிக்கு மருந்தாக வந்த ஐயா! விரும்பிய வரம் தரும் வள்ளலே! எதையும் ஆராய்ந்தறியாமல் குரங்காகிய நான், உன்னை நிந்தித்துப் பேசியவற்றை மனதில் கொள்ள வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசுகிறான். “அண்ணலே! உனது கூரிய அம்பை என் நெஞ்சிலே பாய்ச்சி, நாயேனாகிய எனது உயிர் போகும் தருவாயில் நல்லறிவு தந்து அருளினாய். ஐயனே! முதல் மூவரும் நீ! ஆதி காரணமான முதல்வனும் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீயே!”.

மாயை எனும் திரை அவன் மனதி விட்டு நீங்கிய பின்னர், வாலி பரம்பொருள் இராமன் என்பதை உணர்ந்தவனாகி இறக்கும் தருவாயில் பூரண ஞானம் பெற்றுத் திகழ்ந்தான். வாலி மீண்டும் பேசுகிறான். “ஓவிய உருவத்தோனே! இராமா! எளியேனாகிய நான் உன்னிடம் கேட்கும் வரம் ஒன்று உண்டு. இராமா! என் தம்பிக்கு ஒரு பழக்கம் உண்டு. அந்தப் பழக்கத்தின் காரணமாக கள்ளை உண்டு புத்தி மாறுபாடு அடைந்து ஏதேனும் உன்னிடம் தவறு செய்வானானால், அவனைக் கோபித்து என்மீது ஏவிய இந்த கொடிய அம்பை அவன் மீது ஏவிவிடாதே!” என்று கேட்டுக் கொண்டான்.

“தக்கோய்! இராமா! நான் தங்களிடம் வேண்டும் மற்றொரு வரமும் உண்டு. கேட்பாயாக! உன்னுடைய தம்பிமார்கள் உன்னிடம் எத்துணை அன்பும், பாசமும் கொண்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் ஒருக்கால் என் தம்பி சுக்ரீவனை இவன் தன் சொந்த அண்ணனையே கொல்லுவித்தவன் என்று இகழாமல் பார்த்துக் கொள். ஏன் தெரியுமா? நீ இவனோடு நட்பு கொள்ளும்போது, இவன் குறையை முடித்த பின்பு, உனது வேலைகளை செய்து முடிக்க இவன் இருக்க வேண்டுமல்லவா?”.

“கொற்றவ! தீச்செயலை செய்த அந்த இராவணனை என் வாலினால் சுற்றிப் பிணைத்து உன் வசம் கொண்டு வந்து நிறுத்தி குரங்கின் வலிமை இத்தகையது என்று காட்டத் தவறிவிட்டேன். இனி பேசி என்ன பயன்?. இதோ இருக்கிறானே அனுமன். இவனை சாதாரணமாக எண்ணிவிடாதே. இந்த வேலையை செய்து முடி என்று நீ கட்டளையிட்டால் போதும், செய்து முடிக்கும் வல்லமை படைத்தவன் இவன். ஆழி ஐய! இந்த அனுமனை நின் கையிலுள்ள கோதண்டமாகிய வில் என்றே கருதிக் கொள். என் தம்பி சுக்ரீவனை இனி உன் தம்பியாக நினைத்துக் கொள். இவர்களிலும் உயர்ந்த துணை உனக்குக் கிடைத்தல் அரிது. இவர்களது உதவி கொண்டு சீதையைக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வா” என்றான் வாலி.

பிறகு பின்னால் நின்றுகொண்டிருந்த சுக்ரீவனை அருகில் அழைத்து அன்போடு அவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, “மைந்தா! குன்றினும் உயர்ந்த தோளாய்! உனக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். அதனை நன்கு உணர்ந்து ஏற்றுக் கொள். வருந்தாதே!. வேதங்களும் முனிவர்களும், பிரமனும் தேர்ந்த முடிவாயுள்லதான, பரம்பொருள் இன்று மனித உருவம் தாங்கி கையில் வில்லினை ஏந்திக் கொண்டு பூமியில் அறநெறியை நிலைநிறுத்த வந்திருக்கிறது, இந்த இராமன் உருவில் என்பதைப் புரிந்து கொள்.”

“அப்படிப்பட்ட இராமனுக்கு துணை புரியும் பாக்கியத்தை நீ பெற்றிருப்பதே பெரும் பாக்கியம். இம்மைக்கும், மறுமைக்கும் நற்பயன்களைப் பெற்றிருக்கிறாய். இனி சொல்ல என்ன இருக்கிறது. திருமகளைத் தன் மார்பில் கொண்ட இராமனது ஏவல்களை, மனதை ஒருமுகப்படுத்தி செய்து முடி! மூவுலகத்திலும் நீ நல்ல கதியடைவாய்!” என்று தம்பிக்குப் பல புத்திமதிகளை வாலி வழங்கினான்.

பிறகு வாலி தன் தம்பியையும் மற்றவர்களையும் அருகில் அழைத்து வைத்துக் கொண்டு, இராமனிடம், “சக்கரவர்த்தித் திருமகனே! இதோ என் தம்பி சுக்ரீவனும் இவனது சுற்றமும் இனி உனது அடைக்கலம்” என்று சொல்லிவிட்டுத் தன் இரு கரங்களையும் தலைக்கு மேலே தூக்கிக் கூப்பி இராமனை வணங்கினான்.

தனது மகன் அங்கதனை உடனே அழைத்து வருமாறு பணித்து ஆட்களை அனுப்பினான். அவ்வண்ணமே அங்கதனை அந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். வந்த இடத்தில் தனது தந்தை வாலி, இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டு அவன் மீது விழுந்து புரண்டு அழுதான். துக்கம் மேலிட்டு சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் வாலியின் மீது விழுந்து அழுது கொண்டிருந்தான். பிறகு எழுந்து கதறுகிறான்.

“எந்தையே, எந்தையே இவ்வெழுதிரை உலகத்து, யார்க்கும்

சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய்!

நொந்தனை! அதுதான் நிற்க நின் முகம் நோக்கிக் கூற்றம்

வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர் அதன் வலியைத் தீர்ப்பார்?”

“எந்தையே! ஒருவருக்கும் ஒரு தீங்கும் நினைக்காத உனக்கா இந்த கதி? அந்தக் கூற்றுவன் எப்படி உன் எதிரில் அஞ்சாமல் வந்தான். அப்படி வந்த எமனின் வலிமையை யார் அடக்குவது? என்ன தைரியம் அவனுக்கு, உன் உயிரைப் பறிக்க வருவதற்கு. அன்று தேவரும், நிருதரும் பாற்கடலைக் கடைந்து அமுதம் கிடைக்காதபோது நீ போய் மந்தர மலையை மத்தாகி, வாசுகிப் பாம்பை நாணாக்கிக் கடைந்து அமுதம் கொணர்ந்தனையே! இனி தேவைப்பட்டால் அவர்களுக்கு யார் இந்தச் செயலை செய்ய வல்லார்?”

“உமையொரு பாகனான அந்த பரமேஸ்வரனைத் தவிர வேறு யாரையும் வணங்கி அறியாத கைகளையுடைய தந்தையே! நீ அன்று பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை உண்ட தேவர்கள் வாழ்ந்திருக்க, அதனை அருந்தாமல் பிறர்க்குக் கொடுத்த நீ இப்படிக் கீழே வீழ்ந்து கிடக்கிறாயே”.

இப்படி பலவாறாகப் புலம்பியபடி அங்கதன் அழுது கொண்டிருந்தான். அழும் தன் மகனைத் தேற்றியபடி வாலி கலங்கிய கண்களோடு சொல்கிறான், “மகனே! இனி நீ வருந்தாதே!” என்று அவனை ஆதரவோடு அணைத்துக் கொள்கிறான். “நாம் முன்பு செய்த நல்வினைப் பயனால் இராமன் இதனைச் செய்திருக்கிறான்” என்றான்.

“பிறப்பதும், இறப்பதும் எல்லோர்க்கும் நிச்சயித்த ஒன்று. ஆனால், இராமபிரான் என்னைத் தேடி வந்து மோட்ச பதவி கொடுத்தது நான் செய்த முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்த புண்ணியத்தின் விளைவு. மகனே! இனியும் நீ சிறு பிள்லை இல்லை. நான் சொல்லும் இந்தக் கருத்தை மனதில் நன்றாக வாங்கிக் கொள். தன்னிகரில்லா மெய்ப்பொருளாம் நிலையான பரம்பொருள் கையில் ஓர் வில் ஏந்தி தன் பாதங்கள் தரையில் பட மானுட வடிவம் தாங்கி, நம் கண்களால் தரிசிக்கும் வண்ணம், நம் எதிரே பிறவி நோய்க்கு மருந்தாக வந்திருக்கிறான்.”

“என் உயிருக்கு இறுதி செய்தவன் என்று இராமனைப் பற்றி எண்ணாமல், அவனது மலரடி தொழுது வணங்கித் தொண்டு செய்து வாழ்வாயாக!” என்று வாலி சொல்லி, மகனை ஆரத் தழுவிக்கொண்டு, இராமனிடம் சொல்லுகிறான் “இராமா! என் மகன் சுத்த வீரன். அரக்கர்கள் என்னும் பஞ்சுப் பொதிக்கு நெருப்புப் போன்றவன். பரிசுத்தமானவன். இவனை உன்னிடம் அடைக்கலமாகக் கொடுக்கிறேன்” என்றான்.

தாமரைச் செங்கணான் இராமபிரானும் தன் அடிபணிந்த அங்கதனைத் தூக்கி நிறுத்தி, அவனிடம் தன் உடைவாளை எடுத்துக் கொடுத்து “நீ இது பொறுத்தி!” என்றான். இராமனின் கருணையையும், அங்கதன் அடைந்த பெருமையையும் அனைவரும் வாழ்த்தி ஒலி எழுப்ப வாலியின் ஆவி பிரிந்து தேவருலகம் சென்றது.

(உடைவாளைக் கொடுத்ததன் மூலம், இராமன் அங்கதனை இளவரசாக ஏற்றுக் கொண்டான் என்பது மரபு வழி தன் வாரிசாக இளவரசாக ஏற்றுக்கொள்ளும்போது அவனிடம் உடைவாளைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அதனால்தான் ஸ்ரீ இராம பட்டாபிஷேக காட்சியின் போது, “அரியணை அனுமன் தாங்க” .. எனும் பாட்டில் “அங்கதன் உடைவாள் ஏந்த” என்றும் கம்பர் பெருமான் அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.)

வாலியின் கை, தன் மார்பில் பாய்ந்திருந்த அம்பை இறுகப் பிடிந்திருந்தது. அவனுடைய உயிர் பிரிந்ததும் அவன் கை தளர்ந்தது; அதுவரை அவன் மார்பில் தங்கியிருந்த அம்பு மார்பினின்றும் கழன்று அவன் உடலை ஊடுறுவிச் சென்று தூய கடல் நீரில் தோய்ந்து, தூய மலர்கள் தூவ, ஐயன் இராமபிரானுடைய அம்புப்புட்டிலை வந்தடைந்தது. வாலி வானுலகம் சென்றான். அதன் பின் இராமன் சுக்ரீவனோடும், அங்கதனோடும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

வாலி இறந்த செய்தி கேட்டு தாரை ஓடி வந்து அவன் இறந்த உடல்மீது விழுந்து கதறி அழுகிறாள். செவ்வானத்தில் மின்னிக் கொண்டு கிளம்பும் மின்னலைப் போல தாரை, வாலியின் உடல்மீது விழுந்து அழுதாள். அவள் அப்படி நீண்ட நேரம் அழுது புரண்டபின் மாருதி வந்து அவளைத் தேற்றி, அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். அங்கதனைக் கொண்டு வாலிக்குச் செய்யவேண்டிய அந்ந்திமக் கடன்களையெல்லாம் செய்வித்துப் பிறகு இராமனிடம் நடந்த விவரங்களைச் சொல்லுவதற்கு விரைந்து சென்றான் அனுமன்.

இதுவரை மேல் நாம் கண்டது கம்பர் பெருமான் தனது இராம காதையில் கூறியுள்ளபடி கதையோட்டத்தைப் பார்த்தோம். இனி இதே பகுதி பற்றி வான்மீகத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் ஓரளவு பார்க்கலாம்.

‘வாலி மூர்ச்சையுற்றுக் கிடந்தானேயன்றி இறக்கவில்லை. வானரர்கள் வாலி இறந்தான் என்று அஞ்சி ஓட, அவர்களிடமிருந்து வாலி இராமபிரானால் கொல்லப்பட்டான் என்று தாரை கேள்விப் படுகிறாள். உடனே அவள் வாலி கிடக்குமிடம் சென்று வாலி இறந்து போய்விட்டான் என்று எண்ணி அழுது புலம்பி, அங்கதனை நினைத்து வருந்தி, சுக்ரீவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டுத் தானும் இறக்கத் துணிகிறாள். அப்போது அனுமன் அவள் அருகில் வந்து அவளைத் தேற்றி அங்கதனுக்காக அவள் உயிர் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். ஆனால் அவளோ சுக்ரீவனே அரசனாகட்டும், அவனே அங்கதனைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறி உயிரை விடத் துணிகிறாள்.

அப்போது வாலி மூர்ச்சை தெளிந்து, சுக்ரீவனிடம், அவனே தனக்குப் பிறகு அரசை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், அங்கதனையும், தாரையையும் காப்பாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறான். அங்கதனுக்குச் சில அறிவுரைகளையும் கூறிய பிறகு இறந்து போகிறான். தாரை மறுபடியும் கதறி அழுகிறாள். அவள் வாலியின் மார்பில் இருந்த அம்பைப் பிடுங்க முடியாமல் தவிக்க, நீலன் அதனைப் பிடுங்கி எடுக்கிறான். பிறகு அனைவரையும் இராமன் தேற்றிய பிறகு இறுதிக் கடன் நடைபெறுகிறது.’

வாலியின் அந்திமக் கிரியைகள் அனைத்தும் முடிந்த பிறகு இராமபிரான் தம்பி இலக்குவனிடம் “ஐய! கதிரோன் மைந்தனுக்கு உன் கைகளால் முறைப்படி முடி சூட்டுவாய்!” எனப் பணிக்கிறான்.

உடனே இலக்குவன் அனுமனிடம் அதற்கான எல்லா பொருட்களையும் கொண்டு வரும்படியாகப் பணித்தான். அவ்வண்ணமே அனுமனும் நீராட்டுக்கு வேண்டிய புண்ணிய தீர்த்தம், மங்கலப் பொருட்கள், பொன்னாலான மணிமுடி அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்தான். மறையவர்கள் ஆசிகூற, தேவர்கள் நன்மலர்களைத் தூவ, நன்னெறி ஒழுகும் இராமனின் இளவல் முறைப்படி சுக்ரீவர்க்கு முடியினைச் சூட்டினான்.

கிஷ்கிந்தை அரசுக்கு மன்னனாக முடிசூட்டிக் கொண்ட சுக்ரீவன் இராமனின் பாதங்களில் விழுந்து பணிந்தான். அவனைத் தூக்கி நிறுத்தித் தன் மார்போடு தழுவிக் கொண்டு, அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினான். “வீர! நீ இங்கிருந்து சென்று உன் இருப்பிடமான கிஷ்கிந்தையில் நீ புரிய வேண்டிய காரியங்களை முறைப்படி ஆராய்ந்து, நெறிப்படி செய்து முடித்து, உன் ஆட்சிக்குப் பெருமை சேர்க்கும்படி நடந்து கொண்டு, போரில் மாண்டு போன வாலியின் மைந்தன் அங்கதனோடும் சேர்ந்து நலமாக வாழ்வாயாக” என்று வாழ்த்தினான்.

“உன் அமைச்சர் முதலானோர் உன்னுடன் பழகுமிடத்து, உன்னை அகன்று நெடுந்தொலைவுக்குச் சென்று விடாமலும், அல்லது உன்னை மிகவும் ஒட்டிக் கொண்டு விடாமலும், நிற்பாயாக. மன்னன் எனும் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வாயாக. பகைவரிடத்தும் இனிமையான பேச்சும், இன்முகமும் கொண்டவனாக இரு. அரசன் நேர்மையின்றி, நட்பு, பகைமை, நொதுமல் (உதாசீனம் செய்வது) என்ற வேற்றுமையால் அளவு மிஞ்சிய ஈகை, இவறல் (பேரவா, ஈயாமை, பொருள் கொடாமை), இகழ்ச்சி முதலியன கொள்ளலாகாது. எவரையும் சிறியர் என்று கருதி சிறுமை செய்யாதே. மங்கையர் பொருட்டே மாந்தர்க்கு மரணம் கிட்டும் எனும் உண்மையை வாலியின் மரணத்தால் தெரிந்து கொள். மேலும் துன்பமும் வசையும்கூட பெண்களாலே வந்து சேரும் என்பதினை எங்களிடமிருந்து தெரிந்து கொள்.”

“கீழ்குடிகள் மாட்டு அன்பு காட்டி ஒழுகுதல் நன்று! அங்ஙனம் ஒழுகுமிடம் குற்றம் புரிந்தாரைத் தண்டித்தல் அரசுமுறை என்பதை உணர்ந்துகொள்! ஆக்கத்திற்குக் காரணம் அறம்; அதன் அழிவுக்குக் காரணம் பாவம்! ஆகவே ஆக்கம் தரும் அறத்தைக் கடைப்பிடித்தலே நலம் பயக்கும். வறுமையைத் தரும் பாவத்தைக் கைக்கொள்ளுதல் தகாது! அறிஞர்கள் கூறிய இயல்பின்படி நீ சென்று ஆட்சி செய்து, மழைக்காலம் கழிந்த பிறகு உன் பெரும் சேனையைத் திரட்டிக் கொண்டு, இங்கு வந்து சேர்வாயாக! இப்போது நீ செல்லலாம்” என்று சொன்னான் இராமன்.

(ஆவணியும் புரட்டாசியும் கார்காலம், முன்னாலுள்ள ஆடியும் பிறகு ஐப்பசியும் சேர்த்து நான்கு மாதங்களையும் மாரிக்காலம் என்பதால், அது முடிந்து படையுடன் வா என்று பணித்தான்).

நகரத்துக்குள் வந்து தங்கும்படி சுக்ரீவன் இராமனை வேண்டிக் கொள்கிறான். தாம் தவ விரதம் பூண்டமையால் அரசர்க்குரிய அரண்மனை வாழ்வு கூடாது என்று இராமன் நகரத்துக்குள் வர மறுத்துவிடுகிறான். அதோடு சீதையைப் பிரிந்து துன்புறும் தனக்கு சுக வாழ்க்கை தேவையில்லை என்றும் சொன்னான்.

இராமன் இப்படிக் கூறியதற்கு சுக்ரீவன் மறுத்து எதுவும் கூறாமல், இராமனது மிக உயர்ந்த தவ வடிவைக் கருதி, அன்னானது விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்ய விரும்பாதவனாய், கண்களில் நீர் பொங்கி வர, நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து வணங்கி, அளவற்ற துன்பத்தைத் தன் மனத்தகத்தே வைத்துக் கொண்டு கிஷ்கிந்தை நகரை நோக்கிச் சென்றான்.

இங்கே கம்பர் பெருமான் ‘நெடிது தாழ்ந்து’ எனும் பதத்தை உபயோகப்படுத்துகிறார். நெடிது தாழ்தல் என்றால் உடலின் எட்டு உறுப்புகள் பூமியில் படும்படி வீழ்ந்து வனங்குதல். இதனைத் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் அல்லது நெடுஞ்சாண் கிடை என்பர்.

அப்போது அங்கதன் இராமபிரானின் காலில் விழுந்து வணங்குகிறான். தன் காலில் வீழ்ந்து வணங்கிய அங்கதனை இராமன் கருணையோடு நோக்கி, “அங்கதா! அருமை மைந்தா! நீ சீரிய ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும். சுக்ரீவனை உன் சிறிய தந்தை என்று எண்ணாமல், அவனை உன் தந்தையாகவே மதித்து நடக்க வேண்டும்” என்றான்.

சுக்ரீவனைத் தொடர்ந்து அங்கதனும் கிஷ்கிந்தை நோக்கிச் செல்லத் தொடங்கினான். அப்போது இராமன் அனுமனை அழைத்து, “பேரெழில் வீர! நீ போய் அவர்களுடைய அரசுக்குத் துணையாக இரு” என்றான். பொய் என்பதே அறியாத அனுமன் “அடியேன் இங்கேயே தங்கி தங்களுக்கு என்னால் இயன்ற அளவு குற்றேவல் செய்கிறேன்” என்று இராமன் பாதங்களில் விழுந்து வணங்கி வேண்டிக் கொண்டான். அதற்கு இராமன், “அரசுக்கு இன்றியமையாத குணங்கள் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடமை முதலிய நற்பண்புகளாகும். இவை நிறையப் பெற்ற வாலி இந்த ராஜ்ஜியத்தை ஆண்டான். இப்போது அவன் இல்லாத நிலையில் புதியவன் சுக்ரீவன் ஆளுகின்றபோது எதிரிகள் எவரேனும் நாட்டைக் கைப்பற்ற வரலாம். எனவே, நீ போய் அவனுடன் இருந்து நல்லாட்சி செய்து எனக்கு உதவ படைகளையும் திரட்டிக் கொண்டு வந்து சேர்வாயாக” என்றான்.

“ஆழியான் அனைய கூற, ஆணை ஈதாகின், அஃதே

வாழியாய்! புரிவன் என்று வணங்கி மாருதியும் போனான்

சூழிமால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை

ஊழி நாயகனும் வேறோர் உயர் தடம் கின்றம் உற்றான்”.

இராமபிரான் அப்படிக் கூறவும், தங்கள் ஆணை அதுவாகின் நான் அதன்படியே நடக்கிறேன் என்று சொல்லி அவர்களை வணங்கிய பிறகு மாருதி அங்கிருந்து போனான். அவன் போன பிறகு இலக்குவனுடன் வேறொர் மலையைச் சென்றடைந்தான். நகரத்துக்குத் திரும்பிய சுக்ரீவன், தனது அமைச்சர், பரிவாரங்கள் சுற்றியிருக்க, தாயைப் போன்ற, அண்ணன் வாலியின் மனைவியான தாரையை வணங்கி, அவள் கூறு அறவுரைகளின்படியும், சான்றோர் மொழிகளுக்கு ஏற்பவும் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்யத் தொடங்கினான். அங்கதனை இளவரசாக இருந்து ஆட்சிபுரியுமாறு கட்டளையிட்டு இனிமையாக தனது நகரத்தின் கண் வீற்றிருந்தான். இந்த நிலையில் கார் காலமும் வந்து சேர்ந்தது.

சுக்ரீவனை கிஷ்கிந்தைக்கு அனுப்பிவிட்டு இராமனும் இலக்குவனும் சென்று தங்கிய மலைக்கு பிரஸ்ரவண மலையென்று பெயர். அவர்கள் அங்கு சென்று தங்கிய காலம் தக்ஷிணாயண காலம், சூரியன் தெற்கு நோக்கி நகருகின்ற காலம். ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள ஆறு மாதங்கள் தக்ஷிணாயண புண்ணிய காலம் ஆகும். இராமன் தெந்திசை நோக்கி ஏவிய தூதனைப் போல சூரியனும் தெந்திசை நோக்கிப் பயணமானான். பின்னால் அனுமன் தெந்திசைக்குத் தூதனாகப் போகப் போகிறான் என்பதை இப்போது சூரியன் தெந்திசை நோக்கிப் பயணமாவதற்கு ஒப்பிட்டு கம்பர்பெருமான் வர்ணிக்கிறார்.

அந்த மலைப் பகுதியில் காணப்பட்ட கார்கால மேகம் எப்படி இருக்கிறது? கவிச்சக்கரவர்த்தியின் வர்ணனையை நாம் படித்து ரசிக்க வேண்டிய பகுதி. பூமியாகிய அகள் விளக்கில், கடல் நீராகிய நெய்யை ஊற்றி, மேருமலையை திரியாக அதிலே இட்டு, சூரியனாகிய ஒளிக்கற்றையில், வானமாகிய கலயத்தில் மைகூட்டியது போல இருந்ததாம். நீர் கொண்ட கருத்த மேகம் வான் பரப்பை மூடியிருந்த காட்சி கலயத்தில் மைகூட்டியது போல இருந்தது என்பது நல்ல கற்பனை. இந்த இடத்தில் பொய்கை ஆழ்வாரின் “வையம் தகளியா, வார்கடலே நெய்யாக” எனும் ‘முதல் திருவந்தாதி’ பாடலையும் இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமே!

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினென் சொன்மாலை

இடராழி நீங்குகவே என்று”.

நீல நிறம் கொண்ட அந்த வான்பரப்பு, கரிய மழை மேகங்கள் கவிந்த வண்ணம் விளங்கிய காட்சியானது, நஞ்சுபோல நீலமாகவும், நெடுங்கடல் போன்றும், பெண்களின் மைதீட்டிய கரிய நெடுங்கண்கள் போன்றும், அவர்களுடைய அவிழ்ந்து பரந்த கூந்தலைப் போலவும், அரக்கர்களுடைய நெஞ்சம், செயல் போன்றும் இருண்டு காணப்பட்டது.

கருத்த மேகங்கள் திட்டுத் திட்டாக பெரிய யானைகளைப் போலவும், இடையே வெட்டி வீசுகின்ற மின்னல்கள், அவற்றை போரிடை வீசும் வாட்கள் போலவும் காட்சியளித்தன. அந்த யானைகளின் பேரொலியாக இடியோசை நாலா திசைகளிலும் கேட்கின்றன. தேவர்களின் அணிகலன்கள் மின்னுவது போலவும், காட்டுத் தீ பற்றி எரிவது போலவும், திசைகள் ஒன்றையொன்று பார்த்து சிரிப்பது பொலவும் மின்னல்கள் வெட்டியடித்து ஒளிவீசின.

சீதாபிராட்டியைப் பிரிந்த இராமன் மேல் மன்மதன் மலர்கணைகளைத் தூவினாற்போல மழைத்துளிகள், அந்த மலைகளின் மீது சொரிய ஆரம்பித்தன. மேகங்களின் முழக்கமானது, இராமபிரானும் வானரப் படைகளும் ஒன்று சேர்ந்தமையால், தம் பகைவர்கள் அழிவர் என்று தேவர்கள் செய்கின்ற ஆரவாரம் போல இருந்தது. இராவணன் சீதாபிராட்டியை வான வழியாக எடுத்துச் செல்கையில் அன்னை சிந்திய கண்ணீரே மழைத் துளிகளாக வந்து வீழ்ந்தது போல காட்சியளித்தது. அடிக்கடி திசைமாறி வீசும் காற்றின் வேகத்தால் மழைத் துளிகள் எதிர் எதிரே வீசுவது திசைகள் சண்டையிடுவது போல இருந்தது. இராமனுக்கு தனிமையும், சீதையின் பிரிவும் விரக தாபத்தை உண்டாக்கி மிகவும் வருந்துகிறான். இலக்குவன் இராமனைத் தேற்றுவதனால், இராமன் ஒருவாறு ஆறுதல் அடைகிறான். இப்படியே மாரிக்கால இறுதியைக் குறிக்கும் விதமாகப் பின்மாரி பொழிகிறது.

குறைவிலா பெருநிதியம் கொடுத்துக் கொடுத்து, அது தீர்ந்துபோன பின்னர், கொடுக்க ஏதும் இல்லையே என்று வருந்தி முகம் வெளுக்கும் கொடை வள்ளல் முகம் போல வானம் வெளுத்துக் காணப்பட்டது. பெருமழைக்குப் பிறகு நீர்நிலைகள் நன்கு தெளிந்திருந்தன, காமக் குரோதத்தால் கலங்கிய மனம் கல்வி கேள்வியினாலும், சத்சங்கங்களாலும் தெளிவடைவது போல அவைகள் இப்போது தெளிந்து காணப்பட்டன. கார்காலமும் முடிந்தது. மழை நின்று வானம் வெளுத்தது. வாக்களித்தபடி சுக்ரீவன் படைதிரட்டி வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் சொன்னபடி படைகொண்டு வரவில்லையே என்று இராமன் சினம் கொண்டான். இலக்குவனை அழைத்து, சுக்ரீவன் முன்பு வாக்களித்தபடி வராதது குறித்துத் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

“லக்ஷ்மணா! நமது உதவியால், பெறற்கரிய அரசாட்சியைப் பெற்றதை அவன் எண்ணிப் பார்க்கவில்லையே. அறத்தை மறந்தான், சொன்ன சொல்லை மறந்தான்; செய்நன்றி மறந்தான். அதுமட்டுமல்ல, நம் வீரத்தையும் அல்லவா மறந்து விட்டான். சுகபோகத்தில் அமிழ்ந்து கிடக்கிறான் போலும்! நன்றி மறந்தவனைக் கொன்று விடுவது தவறல்ல. ஆயினும், நீ போய் அவன் மனநிலையை அறிந்து வா!”.

“தீயவர்களை அழித்து அறவோரைக் காக்க நாம் கொண்ட நோக்கத்தை அவனுக்கு எடுத்துச் சொல். அதற்கான வில்லும் வீரமும் நம்மிடம் உண்டு. உயிரைக் கொண்டு செல்ல எமனும் இருக்கிறான் என்பதை அவனுக்கு நினைவுபடுத்து. வாலி சென்ற பாதையும் அப்படியே இருக்கிறது என்பதை அவனுக்குச் சொல்லிவிட்டு வா!. தம்பி! நீ போய் அந்த சுக்ரீவனிடம் சென்று அவன் கடமையை உணர்த்தி, நீதிகளைக் கூறி, நீ கோபப் படாமல் அவனது மறுமொழியை மட்டும் கேட்டு வா!” என்றான் இராமன்.

இராமனது ஆணைப்படி சுக்ரீவனை நாடி, இலக்குவன் கிஷ்கிந்தை நகருக்குச் சென்றான். மராமரத்தைத் தொளைத்த இராமன் அம்பு போல அவன் விரைந்து சென்றான். கிஷ்கிந்தை மலையைச் சென்று அடைந்து, அங்கு ஓர் குன்றின் உச்சியில் ஏறி ஒரு ஆண்சிங்கம் போல நின்று பார்த்தான். இந்தக் காட்சியைக் கண்ட வானரங்கள், ஓடிச் சென்று அங்கதனிடம், இலக்குவன் மிகுந்த கோபத்துடன் வந்திருக்கிற செய்தியைச் சொன்னதும், அவன் இலக்குவனின் குறிப்பறிந்து, தனது சித்தப்பன் சுக்ரீவனிடம் சென்றான்.

அங்கு அரண்மனையில், மெத்தென்று மலர்கள் பரப்பிய மஞ்சத்தில், இள மகளிர் பாதங்களை வருட, நித்திரை செய்து கொண்டிருந்தான் சுக்ரீவன். தெளிந்த அறிவு இன்றி, கள் குடித்த போதைக்கு ஆளாகி, இளம் மகளிரின் உறவு கொண்டு மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனிடம் சென்று அங்கதன் அவனை மெல்ல எழுப்புகிறான். சூழ்நிலையின் இறுக்கத்தினைப் புரிந்து கொண்ட அங்கதன், இலக்குவனால் எந்த விபரீதமும் நிகழ்வதற்கு முன்பாக சித்தப்பனை எழுப்ப முயல்கிறான், “எந்தையே! இராமனின் இளவல், மிகுந்த கோபத்துடன் உன்னைத் தேடி வந்திருக்கிறான்” என்று.

“எந்தை! கேள்! அவ்விராமற்கு இளையவன்

சிந்தையுள் நெடும் சீற்றம் திருமுகம்

தந்தளிப்பத், தடுப்பரும் வேகத்தன்

வந்தனன்; உன் மனக் கருத்து யாது? என்றான்”.

நிலைமை விபரீதமாகச் சென்று கொண்டிருப்பதை உணராமல் சுக்ரீவன் படுத்துக் கிடந்தான். இவனிடம் இந்த நிலையில் பேசிப் பயனில்லை என்று அங்கதன் அனுமனிடம் சென்று நிலைமை விளக்கி அங்கு இலக்குவன் கோபத்துடன் நிற்கிறான், இங்கோ இந்த சுக்ரீவன் கள் போதையிலும் இளமங்கையரின் உபசரணையிலும் மதிமயங்கி உறங்கிக் கிடப்பதையும் சொல்லி, இதற்கு என்ன உபாயம் என்று யோசனை செய்கிறான். பிறகு இருவரும் அங்கதனின் தாயான தாரையிடம் செல்கிறார்கள். தாரை இவர்களைப் பழிக்கிறாள். “நன்றி மறந்து விட்டிர்கள் போலும்!” என்கிறாள். இதற்கிடையே வானரங்கள் ஒன்று சேர்ந்து கோட்டைக் கதவைச் சாத்தி, பாறைகளைக் கொண்டு வழியை அடைத்து வைத்து விடுகின்றன.

வானரங்கள் கோட்டை வாயிலை அடைந்து மூடிவிட்டதைக் கண்ட இலக்குவன் சினத்தால் எழுந்த முறுவல் முகத்தில் மலர, ஓகோ, என்னிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கதவை அடைத்து மூடினீர்களோ? என்று எண்ணிக் கொண்டு தனது தாமரைப் பாதங்களால் அந்தக் கதவை ஓங்கி ஒரு உதை விட்டான். தெய்வத் தன்மை வாய்ந்த இலக்குவனின் பாதம் பட்டு அந்தக் கதவும், கோட்டை மதிற்சுவரும், வாயிலையொட்டிய மலைகளும் நொறுங்கி வீழ்ந்தன. இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த வானரக் கூட்டம் அச்சம் தலைக்கேற மனம் கொதித்து விதிர்விதிர்த்துப் போனார்கள். மதிற்சுவர்களும், வாயிற்கதவும் நொறுங்கி வீழ்ந்த வேகத்தில், அச்சம் கொண்ட வானரக் கூட்டம் தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தறிகெட்டு நாலா திசைகளிலும் ஓடத் துவங்கின. இப்படி வானரங்கள் அனைத்துமே கிஷ்கிந்தையை விட்டு ஓடிவிட்டமையால் அந்த இடம் நட்சத்திரங்கள் நீங்கிய வானத்தைப் போல வெறுமையாகக் காட்சியளித்தது.

கிஷ்கிந்தைக்குள் நுழைந்த இலக்குவன் நகரத்தின் வீதிகள் வழியாக கையில் வில் ஏந்தி வருகிறான். அங்கே மாளிகையில் அங்கதன் முதலானோர் தாரையிடம் ‘இதோ இலக்குவன் வந்துவிட்டான்” என்று அச்சத்துடன் சொல்லி நடுங்கினார்கள். தாரை யோசித்தாள் என்ன செய்வது என்று. பெண்ணாகிய நான் அவன் முன் சென்றால் அந்தப் பெருந்தகை தலை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனுடைய கோபத்தையும் காட்ட மாட்டான் என்று எண்ணிக் கொண்டு அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து “நீங்களெல்லாம் இங்கிருந்து போய்விடுங்கள். நான் போய் அந்த வீரன் இலக்குவனிடம் நிலைமையை விளக்கிச் சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டு, மற்றவர்களை அவ்விடம் விட்டு நீங்கிப் போகச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் தனியளாய்ச் சென்றாள் தாரை.

அரச வீதிகளைக் கடந்து இலக்குவன், சுக்ரீவனுடைய அரண்மனை வாயிலை அடைந்தான். அப்போது எதிரே பெண்கள் கூட்டம் புடைசூழ ‘மலைக்குல மயில்’ தாரை சென்று இலக்குவன் முன் தோன்றினாள். பெண்கள் குழாத்தோடு தனக்கு முன்பாக தாரை வந்து தோன்றிய காட்சியை இலக்குவன் பார்க்கிறான். அவனது தாமரை வதனம், பெண்களைக் கண்டதும் ஏற்பட்ட நாணத்தால் சற்று தலை குனிந்தபடி, வில்லைத் தரையில் ஊன்றி நின்ற காட்சி ‘மாமியர் கூட்டத்தின் நடுவில் நிற்பவன் போல கூசிக்கொண்டு நின்றான்’ இலக்குவன். அப்போது இலக்குவனைப் பார்த்துத் தாரை சொல்கிறாள்:

“மைந்த! நாங்கள் எல்லையற்ற காலம் செய்த தவத்தின் பயனாக நீ எம் இல்லம் தேடி வந்திருக்கிறாய். நாங்கள் புனிதம் அடைந்தோம். யானை சேனை பரிவாரங்களுடன் வரவேண்டிய இளவரசனாகிய நீ, தனித்து எம் இல்லம் வந்தது, யாம் செய்த புண்ணியமே!”.

இப்படிப் பேசியவளது முகத்தை இலக்குவன் பார்க்கவில்லை. குரல் இனிமை கொண்டு, பேசியவள் பெண் எனப் புரிந்து கொண்டான். அவன் சினம் குறைந்து அவளது ஒளி இழந்த முகத்தைத் தன் தலை நிமிர்ந்து பார்த்தான். அங்கே அவன் எதிரில், கைம்மைக் கோலத்தில் தாரை நிற்பதைக் கண்டதும், அவனது தாய்மார்கள் நினைவு வந்து விடுகிறது. ஆகா! என் தாய்மார்களும் இப்படித்தானே முகம் களையிழந்து கைம்மைக் கோலத்தில் இருப்பார்கள்? என்று நினைக்கிறான்.

அங்கே எதிரே தாரை நின்ற கோலம் அவனைச் சிந்திக்க வைத்துவிட்டது. தாரை மங்கல அணிகள் எதையும் அணியவில்லை, நறுமணம் வீசும் தேன் சொட்டும் மலர் மாலைகள் எதையும் அவள் அணிந்திருக்கவில்லை, குங்குமமும், சந்தனக் குழம்பும் அவள் பூசியிருக்கவில்லை, மேலாடையால் உடலைப் பூரணமாகப் போர்த்தி மூடியபடி அடக்கத்தோடு வந்து நின்ற அந்தத் தாயைக் கண்ட இலக்குவன் கண்கள் பனித்தன. என் அன்னை இருவரும் (இங்கே தன் தாய் கைகேயியை விட்டுவிட்டான்) இப்படித்தானே கைம்மைக் கோலத்தில், மங்கல தோற்றம் எதுவுமின்றி, களையிழந்து காட்சியளிப்பார்கள் என்று வருந்திய பிறகு தாரைக்குப் பதில் கூறலானான்.

“கார்காலம் முடிந்தவுடன் தன் சேனைகளையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை நாலா திசைகளிலும் அனுப்பி சீதாதேவியைத் தேடித் தருவேன் என்று இராமபிரானுக்கு அளித்த வாக்கை அருக்கன் மைந்தன் மறந்தனன் போலும். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற சுக்ரீவன் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொண்டு வா என்று இராமபிரான் அனுப்ப நான் வந்திருக்கிறேன்” என்றான்.

அதற்குத் தாரை சொல்லுகிறாள், “ஐயனே! சிறியவன் தீமை செய்தால் சீற்றம் கொள்ள வேண்டாம். நற்குணங்கள் மிக்க நீ பொறுத்தருள்வாயாக! சுக்ரீவன் நீங்கள் செய்த உதவியையும் மறக்கவில்லை; தான் கொடுத்த வாக்கையும் மறக்கவில்லை. பல இடங்களுக்கும் தூதரை அனுப்பி படைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் செய்திருக்கிற உதவிக்குப் பிரதி உபகாரம்கூட செய்யமுடியுமா என்ன?” என்றாள்.

“செம்மை சேர் உள்ளத்துக்கு உரியவர்களே! நீங்கள் செய்திருக்கக் கூடிய உதவி மறக்கக்கூடிய ஒன்றா? சுக்ரீவன் உங்களைப் புறக்கணிப்பானானால் இம்மையிலும், மறுமையிலும் அவன் வறுமை எய்தி அனைத்தையும் இழப்பான்” இப்படித் தாரை உரை செய்யவும், அது கேட்டு இலக்குவன் கருணை கொண்டு, தன் கோபத்துக்காக வெட்கப்பட்டுக் கொண்டு நின்றான். இந்த நேரத்துக்காகக் காத்திருந்தவனைப் போல அனுமன் அங்கே வந்து சேர்ந்தான்.

அனுமனைக் கண்டதும், கோபம் எழுந்த போதும், இலக்குவன் கோபத்தைக் காட்டாமல் கேட்கிறான், “கற்றுணர்ந்த மகா பண்டிதனாகிய நீயும் கூடவா சொன்ன உறுதி மொழிகளை மறந்தாய்?”. அது கேட்ட சொல்லில் வல்லானான அனுமன் கூறுகிறான் “எந்தை போன்றவரே! நான் சொல்வதைச் சற்று கேளுங்கள்”.

“ஐயனே! அழியாத அன்பையுடைய தாய் தந்தையரையும், குருவையும், தெய்வ அந்தணரையும், பசுக்களையும், பாலரையும், பெண்களையும் கொலை செய்தவர்களுக்குக் கூட பாவங்களை நீக்கிக் கொள்ள மார்க்கம் உண்டு. ஆனால் மறக்க முடியாத நன்றியறிதலை மறந்தவர்க்கு மார்க்கம் உண்டோ?”.

“ஐய! உமக்கும் எம் அரசர்க்கும் நட்பு ஏற்பட வகை செய்தவனாகிய நானே அதனை சிதைக்குமாறு காரியங்களைச் செய்வேனா? எங்கள் தவத்தின் நற்பயன்களாகவும், தேவர்களும் மற்ற எல்லா வகை நன்மைகளும் தாங்களே என்ற எண்ணம்தான் எங்களிடம் குடிகொண்டிருக்கிறது. மூவுலகங்களையும் காக்கும் தங்கள் கருணை எங்களுக்கு இல்லையானால் எமக்கு ஏது வாழ்வு? கவிக்குல வேந்தன் சுக்ரீவன் தங்களுக்கு அளித்த வாக்கை மறக்கவில்லை. நாலாபுறமும் தூதர்களை ஏவி படைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான்” என்றான் மாருதி. மாருதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட இலக்குவன் சினம் தணிந்தான். அனுமனிடம் “உனக்கு ஒரு செய்தி சொல்கிறேன், கேள்! இராமபிரான் தேவியைப் பிரிந்ததனால் வருத்தமுற்று மனம் சோர்ந்து, கோபம் கொண்டிருக்கிறான். அதனால்தான் பழி நேரினும் அதற்காகக் கவலைப் படாமல் கோபம் கொண்டு இங்கே வந்தேன்” என்கிறான் இலக்குவன்.

பின்னர் அனுமன் இலக்குவனை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறான். இலக்குவன் வரவை அங்கதன் போய் சுக்ரீவனிடம் சொல்லி அவனைத் தயார் செய்து வைத்திருக்கிறான். அதற்கு சுக்ரீவன் “நாம் எந்தத் தவறும் செய்யவில்லையே, பின் ஏன் இலக்குவர்க்குக் கோபம்?” என்று கேட்கிறான் சுக்ரீவன்.

அதற்கு அங்கதன் கூறுகிறான்:

“இயைந்த நாள் எந்தை நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி

வியந்தனை; உதவி கொன்றாய்; மெய்யிலை என்ன வீங்கி

உயர்ந்தது சீற்றம்; மற்று இது உற்றது செய்கை முற்றும்

நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை, இன்னும்”.

“நீ சொன்ன வார்த்தைப் படி சொன்ன நாளில் அவர்களிடம் போகவில்லை; உனக்குக் கிடைத்த செல்வச் செறுக்கில் உன்னை மறந்து கிடந்துவிட்டாய். செய்நன்றி மறந்து போனாய் என்று அவர்கள் உன் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை, சமயம் தெரிந்து நயம்பட பேசி அனுமன் அவர்கள் கோபத்தைத் தணித்திருக்கிறான்”.

“இதை நீங்கள் ஏன் முன்பே என்னிடம் சொல்லவில்லை?” என்று கேட்கிறான் சுக்ரீவன்.

“நான் முன்பே இலக்குவனுடைய வருகையை உன்னிடம் தெரிவித்தேன். ஆனால் நீ அப்போது அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. மயங்கியிருந்தாய். எனக்கு வேறு என்ன செய்வதென்று புரியவில்லை, ஆகையால் மாருதியிடம் போய் சொன்னேன். அதன் பிறகுதான் தாய் தாரைக்குத் தெரிவித்து அவர் போய் இலக்குவனின் கோபத்தைத் தணித்தார். ஆகையால் நீ போய் உடனே இலக்குவனைப் பார்ப்பதுதான் நீ ஆற்ற வேண்டிய செயல்” என்றான் அங்கதன்.

“நான் நன்றி கொன்றவனைப் போல வாளாவிருந்து விட்டேனே. இராமனைப் பார்க்க வெட்கமடைகிறேன் என்றான்” சுக்ரீவன். பின்னர் அங்கதனை அனுப்பி இலக்குவனை அணுகி அழைத்து வர அனுப்பினான். இலக்குவனைத் தன் படை, பரிவாரங்கள் புடைசூழ நின்று வரவேற்றான் சுக்ரீவன். வானரப் பெண்கள் மலர்களைத் தூவியும், நறுமணப் பொடிகளைத் தூவியும், சாமரங்களைக் கொண்டு வீசியும் இலக்குவனை வரவேற்கின்றனர். சுக்ரீவன் இலக்குவனை வணங்கி அரண்மனைக்குள் அழைத்துச் செல்கிறான். அங்கே ஓர் அரியணையில் அமருமாறு இலக்குவனை சுக்ரீவன் வேண்ட, அவன் மறுத்துவிடுகிறான்.

“கல்மனம் படைத்த கைகேயி இராமனுக்கு ராஜ்யம் இல்லை என்றதும், மணிமுடி துறந்து எம்பிரான் புல் அணை வைக, நான் மட்டும் பூப்போன்ற மெல்லணை மேல் அமர்வதோ?” என்றான் இலக்குவன்.

இதைக் கேட்ட சுக்ரீவன் திகைத்துப் போய் நின்றான்; விம்மினான்; கண்களில் நீர் ஆறாய் பெருக நின்றான். இலக்குவன் கல் தரையில் அமர்ந்தான். சுக்ரீவன் இலக்குவனை நீராடி உணவு உண்ண அழைத்த போதும் இளவல் மறுத்தான்.

“பச்சிலை, கிழங்கு, காய் பரமன் நுங்கிய

மிச்சிலே நுகர்வது வேறு தான் ஒன்று

நச்சிலேன்; நச்சினேனாயின், நாய் உண்ட

எச்சிலே அது, இதற்கு ஐயம் இல்லையால்”

“இராமன் உண்ட பச்சிலை, கிழங்கு, காய் இவற்றில் மிச்சம் இருப்பதைத் தவிர தான் வேறு ஒன்றையும் உண்கிலேன். அப்படி நான் விரும்பினேனானால், அது நாய் உண்ட எச்சிலாகத்தான் இருக்கும்” என்று உறுதிபட கூறினான் இலக்குவன்.

இலக்குவனின் இந்த பதிலைக் கேட்ட சுக்ரீவன் விரைந்து எழுந்தான். கண்களில் நீர் பொங்கிக் கொண்டு வந்தது. செல்வமும், வாழ்க்கையும் அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது, மனம் மிகவும் வருத்தம் கொண்டு, உடனே இராமபிரானிடம் செல்லக் கருதி அனுமனை அழைத்துக் கூறுகிறான், “நெறிவலோய்! முன்பு நாம் இட்ட கட்டளையின்படி வானர சேனையைத் திரட்ட சென்றிருக்கிற தூதர்களோடு இனி வரும் வானர சேனையையும், நீ உன்னோடு அழைத்துக் கொண்டு வந்து, இந்த இடத்திலேயே இரு!” என்று சொல்லிவிட்டு இராமன் இருக்குமிடம் சென்றான்.

அவனோடு அங்கதனும் உடன் செல்கிறான், வானரப் படைகள் பின்தங்கிப் போயின; சுக்ரீவன் மனதில் இராமனைக் காண வேண்டுமென்ற ஆவல், அவனை முன்னே இழுத்துக் கொண்டு செல்கிறது, இராமன் இருக்கும் மலை நோக்கி மிக விரைவாகச் செல்கிறான். காட்டிலிருந்த இராமனைக் காண வந்த பரதனைப் போல இப்போது சுக்ரீவன் மிக வேகமாக, ஆர்வத்தோடு வந்தான். அங்கு இராமனிடம் சென்று அவனை சுக்ரீவன் வணங்குகிறான். சுக்ரீவனுடைய க்ஷேமலாபங்களை இராமன் விசாரிக்கிறான். குணம் எனும் குன்றேறி நின்றார் வெகுளி என்பதால், அவர் உள்ளத்தில் கருணை பொங்கி வந்தது. இராமன் சுக்ரீவனைத் தன் அருகில் உட்கார வைத்து, நலம் விசாரித்தார். நின் அருள் பெற்ற எனக்கு என்ன குறை என்று சுக்ரீவன் பதில் சொல்லுகிறான்.

“அனுமன் எங்கே?” என்று இராமன் வினவினான். “படை திரட்டச் சென்ற தூதுவர்களை விரைவுபடுத்தி, படைகளோடு அவன் வந்து சேருவான்” என்கிறான் சுக்ரீவன். “நீயும் போய் உடன் இருந்து பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வா” என்று இராமன் அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிறான். அங்கதனையும் அவனுடன் சென்றுவருமாறு அனுப்பி வைக்கிறான்.

வானரப் படைகள் ஒன்று சேரத் தொடங்கின. பல்வேறு திசைகளிலிருந்தும் வானர வீரர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே வானரங்களாக இருந்த அந்த பெரும் படையை இலக்குவன் பார்வையிடுகிறான். அப்படி வந்து சேர்ந்த படைகளில் இருந்த பொறுக்கி எடுத்த தளபதிகளைப் பற்றிய விவரங்களைச் சற்று பார்க்கலாம்.

சதவலி எனும் வீரன் ஆயிரம் வலிமை கொண்ட படைத் தளபதிகளோடும், பதினாயிரம் கோடி வானரப் படைகளுடன் வந்து சேர்ந்தான். (ஐயிரண்டு ஆயிரம் கோடி என்றால் = 5x2x1000=10,000 கோடி படைவீரர்கள்) சுசேடணன், என்பவன் மேரு மலையைப் பிடுங்கி எடுக்கக்கூடிய வலிமையுள்ள பத்து லட்சம் கோடி குரங்குப் படையுடனும், சுக்ரீவனுடைய மாமனாராகிய தாரன் அதாவது ருமையின் தந்தை ஆறு எண்ணாயிர கோடி வானர படையுடனும் (தாரன் என்பவன் வியாழ பகவானின் மகன்) அனுமனின் தந்தையும், அஞ்சனையின் கணவனுமான கேசரி என்பான் ஐம்பது ஆய நூறாயிரம் கோடி பெரிய படையுடனும் (50 x 100,000 = 50 லட்சம் கோடி படை), சுவாட்சன் (கண்ணன்) என்பவன் ஈர் இரண்டு ஆயிரம் கோடி படையுடனும் (2 x 2000 = 4,000 கோடி படை), வராகம் போன்ற கரடி இனத் தலைவனான தூமிரன் இரண்டாயிரம் கோடி கரடிப்படையுடனும் (ஆயிரம் கோடியின் இரட்டியில் அதாவது 1000 x 2 = 2000 கோடி), பெரிய மலையைப் போன்ற உருவம் கொண்ட பனசன் என்பவன் பன்னிரெண்டாயிரம் கோடி படையுடனும், கொடிய கூற்றை ஒப்பும் வானர வீரனான நீலன் பதினைந்து கோடி நெடிய வானரப் படையுடனும், கவயன் எனும் வீரன் முப்பதினாயிரம் கோடி குரக்குச் சேனையுடனும், ஆறைந்து (30) கோடி குரங்குச் சேனையுடன் தரிமுகன் என்பவனும், ஆயிரத்து அறுநூறு கோடி பெரிய படையுடன் சாம்பன் என்பவனும், பகுத்த பத்து நூறாயிரம் பத்தியின் இரண்டு கோடி வெம்படையுடன் துன்முகன் என்பவனும், கோடி கோடி நூறாயிரம் எண்ணுள்ள படை கொண்டு துமிந்தன் என்பவனும், நூறு லட்சம் கோடி படைகளுடன் மைந்தன் கஜகோமுகன் எனும் வீரனும், ஒன்பது கோடி படை வீரர்களுடன் குமுதன் என்ற படைத் தலைவனும், ஐந்தாயிரம் கோடி சேனையுடன் அனுமனும், நூறாயிரம் கோடி சேனையுடன் நளன் என்பானும், கணக்கற்ற சேனை வெள்ளத்தோடு கும்பசங்கர் எனும் படைத்தளபதியும், இப்படிப் பற்பல வீரர்கள் தத்தம் படைகளுடனும் வந்து சுக்ரீவனை வணங்குகின்றனர். (இவர்களைப் பற்றி யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக இராவணனுக்கு ஒற்றனொருவன் தூரத்திலிருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியையும் யுத்த காண்டத்தில் காணலாம்).

இப்படி நாலா திசைகளிலிருந்தும் வந்து குவிந்த சேனை வெள்ளத்தைக் காண வருமாறு இராமனை சுக்ரீவன் வேண்டுகிறான்.

“ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்து அருளித்

தையலாள் வரக் கண்டனனாம் எனத் தளிர்ப்பான்

எய்தினான் அங்கோர் நெடுவரச் சிகரத்தில் இருக்கை

வெய்யவன் மகன் பெயர்த்தும் அத்தானையின் மீண்டான்”.

சுக்ரீவனின் அழைப்பைக் கேட்டு இராமபிரானின் முகம், அவனது உள்ளத்தைப் போலவே மலர்ந்தது. சீதாதேவியே நேரில் வந்துவிட்டது போல மனக்கிளர்ச்சியடைந்து, அங்கு ஒரு நெடிய மலையின் உச்சியை அடைந்து அந்தச் சேனையைப் பார்வையிட்டான். படையைப் பார்த்து இராமன் சுக்ரீவனிடம் வியந்து பேசுகிறான். இந்தப் படை எழுபது வெள்ளம் எனும் அளவுடையது என்று சுக்ரீவன் இராமனிடம் கூறுகிறான். உடனே, இராமன் இனியும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. உடனே ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கலாம் என்றான், அனைவரும் அடுத்துச் செய்யப் போவது பற்றி ஆலோசிக்கக் கூடினார்கள்.

மதிராலோசனை நடக்கிறது. அங்கே முக்கியமானவர்கள் அனைவரும் கூடியிருக்கிறார்கள். சுக்ரீவன் சீதையைத் தேடுவதற்காக நாலா திசைகளுக்கும் வீரர்களை அனுப்புகிறான். மேற்கு திசைக்குச் சென்று எல்லா இடங்களிலும் சீதையைத் தேடும்படி இடபன் எனும் வீரனையும், சதவலி எனும் தளபதியை குபேரன் வாழும் வடதிசைக்கும், விந்தன் என்பவனை இந்திரனுக்குரிய கீழ்திசைக்கும் இரண்டு வெள்ளம் படைகளுடன் செல்லும்படி ஆணையிடுகிறான். பிறகு சுக்ரீவன் அனுமனை நோக்கி, “ஐய! நீ புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் தவன வேகத்தை ஓர்கிலை, தாழ்த்தனை கவன மாக் குரங்கின் செயல் காட்டியோ?” என்கிறான். “அனுமனே! நீ உன் தந்தையாகிய வாயுபகவானைப் போல மூவுலகிலும் சஞ்சரிக்க வல்லவன். உன் ஆற்றலை வெளிக் காட்டுகின்ற சந்தர்ப்பம் இதோ வந்துவிட்டது. நீ போய் சீதாபிராட்டியை எங்கிருந்தாலும் தேடுக. பாதாளத்திலோ, பூமியிலோ, சுவர்க்க லோகத்திலோ எங்கிருந்தாலும் தேடிக் கொணர்க” என்றான்.

“இராவணன் தென் திசையில் இருக்கிறான். நீ அந்த தென் திசைக்குச் சென்று அரக்கர்களை வென்று, புகழ் பெற வேண்டும். உன்னையன்றி, வேறு யாரால், இந்தக் காரியத்தைச் செய்யமுடியும்? உனக்குத் துணையாக அங்கதனையும், ஜாம்பவானையும் அழைத்துச் செல். இரண்டு வெள்ளம் வானரப் படைகளையும் உன்னுடன் அழைத்துச் செல்.”

“வள்ளல் இராமனின் தேவியை, அன்று இராவணன் கவர்ந்து சென்றது தென் திசை நோக்கித்தான். எனவே நீங்கள் இங்கிருந்து புறப்பட்டு தெற்கே செல்லுங்கள். அங்கே ஆயிரம் கொடுமுடிகளோடு திருமால் போன்று தோற்றமளிக்கும் விந்திய மலையை அடைவீர்கள். (திருமாலுக்கு ஸஹஸ்ர ஸீரிஷ புருஷ: என்று புருஷ ஸூக்தத்தில் வருகிறது). அந்த மலையில் தேடிய பிறகு, தேவர்களும் வந்து நீராடுகின்ற நர்மதா நதி தீரத்தை அடைவீர்கள். பிறகு அங்கிருந்து சென்று ஹேமகூட பர்வதத்தைச் சென்றடைவீர்கள். அந்தப் பிரதேசத்தை விரைவாகக் கடந்து பெண்ணை நதிக் கரையை அடைந்து அங்கும் நன்கு தேடிப் பார்த்தபின், தொடர்ந்து தெற்கு நோக்கிச் செல்லுங்கள்.”

“பிறகு ஆத்தி, அகில், சந்தன மரங்கள் நிறந்த விதர்ப்ப தேசத்தையடைந்து, அங்கிருந்து தண்டகவனத்தைச் சென்றடைவீர்கள். அதன் பிறகு அகத்திய முனிவர் வாழ்ந்த முண்டகத் துறையை அடைவீர்கள். தண்டகாரண்யத்தில் இருக்கிறது இந்த இடம். அங்கு செல்லுங்கள். அந்த முண்டகத்துறை மரங்கள் எல்லாம் இனிய கனிகளை எக்காலத்திலும் தரவல்லவை. அவ்விடத்தையும் கடந்து சென்றால், தொடுவானத்தருகே செவ்வானத்தில் பயணிக்கும் கதிரவனும் தங்கிச் செல்ல விரும்புகின்ற பருப்பதம் எனப்படும் பாண்டு மலையை அடைவீர்கள்”.

“அங்கிருந்து மேலும் தெற்கே சென்றால் ஓர் புனிதமான ஆறு, அதன் பெயர் கோதாவரி என்பது, அந்த நதி தீரத்தைச் சென்றடைவீர்கள். பிரம்மாண்டமான அந்த ஆற்றைக் கடந்து அப்புறம் சென்றால் சுவணை எனும் நதி (சோனை) வரும். அதற்கும் அப்பால் சந்திரகாந்த மலையும், பின் பற்பல நாடுகளும் குறுக்கிடும். அவற்றையெல்லாம் கடந்து சென்றால் ஆதிசேஷன் பறவைகளுக்கு அஞ்சி மறைந்து வாழும் கொங்கணமும், குலிந்த தேசத்தையும் அடைவீர்கள்.”

“இவற்றையெல்லாம் தாண்டி வரண்ட மலைப் பிரதேசங்களையெல்லாம் கடந்து சென்றால், திருவேங்கடமலை வந்து சேரும். அங்கு இருவினைகளையும் தீர்க்கும் மகாத்மாக்கள் வாழ்கின்றனர். அவர்களை எங்கிருந்தும் தொழுதுகொள்ளலாம். அந்த மலையை அடைந்தவுடனே உங்கள் பாவமெல்லாம் நீங்கி முக்தியடைவீர்கள்.”

“இந்த இடங்களையெல்லாம் கடந்து சென்ற பிறகு தொண்டை நாடு வரும். அங்கிருந்து தொடர்ந்து பயணித்தால், பொன்னி நதி பாயும் காவிரி வளநாட்டைச் சென்று அடைவீர்கள். அங்கிருந்து மேலும் பயணம் செய்து மலைநாட்டை அடையுங்கள். அங்கெல்லாம் பிராட்டியைத் தேடிய பிறகு தென் தமிழ் நாடாம் பாண்டிய நாட்டை அடையுங்கள்”.

“பாண்டிய நாட்டின்கண் உள்ள பொதிய மலையைச் சென்றடைவீராயின், அங்கே அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கத்தைக் காண்பீர்கள்! அந்த மலையை வலங்கொண்டு சென்றால், பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதியைக் காண்பீர்கள். அங்கு யானைகள் நிறைந்த மயேந்திரம் எனும் பெரிய மலையையும், அதன் அண்மையில் கடலும் காண்பீர்கள்”.

“இப்படி எல்லா இடங்களிலும் தேடிய பிறகு ஒரு மாத காலத்துக்குள் இங்கு வந்து சேர வேண்டும். தாமதமின்றி விடைபெற்றுக் கொண்டு புறப்படுங்கள்” எனக் கூறினான் சுக்ரீவன்.

அப்போது இராமபிரான் அனுமனை அன்போடு நோக்கி “நீதி வல்லவனே! நீ சீதையைக் காண்பாயானால், அவள்தான் சீதை எனத் தெளிவதற்காக அவளது அங்க அடையாளங்கள் சிலவற்றை உனக்குச் சொல்லுகிறேன். கேட்பாயாக! என்று அனுமனைத் தனியே அழைத்துச் சென்று கூறலானான்.

இராமபிரான் அனுமனிடம் கூறுகிறார், “ஐய! சீதையின் மெல்லிய கால்களின் விரல்கள், பாற்கடலிற் பிறந்த சிறந்த பவளங்கள் போன்றவை. செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து, அவற்றின் மேற்புறத்தில் சந்திரர்களைப் பதித்தது போல அமைந்திருக்கும். தாமரை மலரோ, பிற பொருட்களோ அவள் பாதங்களுக்கு இணையாகமாட்டா!” இப்படி பாதாதி கேசம் சீதையின் அங்கங்களை வர்ணித்து அனுமனிடம் சொல்லுகிறான். இராமன் அனுமனிடம் மேலும் முன்பு நடந்த சில நிகழ்ச்சிகளை நினைவூட்டி சீதையிடம் கூறும்படி சொல்லி அனுப்புகிறான்.

முன்பு இராமன் மிதிலைக்குச் சென்ற போது மாடத்தில் நின்று கொண்டிருந்த சீதையைக் கண்டதும் அப்போது ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் நோக்கிய செய்தியைக் கூறுகிறான். அரசவையில் இராமன் சிவதனுசை முறித்துவிட்டான் என்ற செய்தி அறிந்ததும், தான் கன்னி மாடத்தில் நின்று கொண்டு கைவில் ஏந்தி முனிவரோடு வந்தவன்தான் முறித்திருக்க வேண்டும், இல்லையேல், என் உயிரை விடுவேன் என்று சீதை நினைத்த செய்தியை அவளுக்கு உரைப்பாயாக என்றும் கூறுகிறான். ஜனகன் சபா மண்டபத்தில் சீதை வந்தபோது மின்னல் கொடி போன்றவளைப் பார்த்ததை சீதையிடம் உரைப்பாயாக என்றான்.

நான் காட்டுக்குப் புறப்பட்டபோது, தானும் உடன் வருவதாகக் கூறியபோது, இதுகாறும் என் சுகங்களில் பங்கு கொண்ட நீ, இனி துன்பம் தருபவளாக ஆக நினைத்தாயோ என்று நான் கூறியதை அவளிடம் நினைவு படுத்து என்கிறான். அதற்கு சீதாபிராட்டி என்னைத் தவிர மற்ற யாவும் இன்பம் தருபவையோ என்று சினந்து கூறியதையும் நினைவு படுத்துவாயாக. சீதையோடும் தான் கானகம் புறப்பட்டபோது, அயோத்தி நகரக் கோட்டையைத் தாண்டும்போதே, கானகம் வந்து விட்டதோ எனக் கேட்ட அவளது பேதமையைச் சுட்டிக் காட்டுவாயாக.

(இதே போன்று சிலப்பதிகாரத்திலும், கோவலன் கண்ணகி இருவரும் மதுரை செல்வதற்காக பூம்புகாரை விட்டுப் புறப்பட்டவுடனே, மதுரை வந்துவிட்டதா என்று கண்ணகி கேட்ட பேதமையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்).

இராமன் இவ்விதமாக பல நிகழ்ச்சிகளைக் கூறி இவற்றை சீதையிடம் கூறும்படி சொல்லி, தன் கணையாழியை சீதையிடம் அடையாளமாகக் காட்டும்படியும் கேட்டுக் கொண்டான். பிறகு அனுமன் அங்கதன், ஜாம்பவான் மற்றும் பெரிய படைகளுடன் தென்திசை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.

நாற்திசைகளுக்கும் சீதையைத் தேடிச் சென்ற வீரர்கள் ஒரு மாத காலத்துக்குள் திரும்ப வேண்டுமென்று ஆணையிட்டு அனுப்பி வைக்கிறான். இனி தெந்திசை நோக்கிச் சென்ற அனுமன் முதலான வீரர்களைத் தொடர்ந்து நாமும் நடப்பதைக் காண்போம்.

அனுமனோடு, அங்கதன் முதலான வீரர்கள் தென் திசைக்குச் சென்றார்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் விந்திய மலையை அடிகிறார்கள். அங்கெல்லாம் தேவியைத் தேடி அலைந்தார்கள். அங்கிருந்து நர்மதை ஆற்றைக் கடந்து அங்கெல்லாம் பிராட்டியைத் தேடி அலைகிறார்கள். பின்னர் நர்மதை ஆற்றைக் கடந்து ஹேமகூட மலையைச் சென்றடைகின்றனர். இந்த மலையின் அமைப்பையும் சூழலையும் கண்டு வானரர்கள் இது இராவணனின் இருப்பிடமாக இருக்கலாமென்று எண்ணுகிறார்கள். அவர்கள் அந்த மலையின் மீதேறி பிராட்டியைத் தேடுகையில் அங்கிருந்த யானைகளும், யாளிகளும் அகன்று ஓடின. சிங்கங்கள் அஞ்சி ஓடத் தொடன்கின. மலை முழுவதும் வானரர்கள் சுற்றித் திரிந்து தேடினார்கள். அங்கும் சீதையைக் காணாமல் அனுமன் முதலானோர் ஒரு கொடிய பாலைவனப் பகுதியை அடைகின்றனர். அங்கு எந்தப் பிராணிகளோ, தாவரங்களோ காணப்படவில்லை. கற்களும் பொடியாகி மண்ணோடு கலந்திருந்தன.

வெயிலின் கடுமை தாங்காது வானரர்கள் புழுப்போலத் துடித்தனர். நீர் வேட்கை மிகுந்து நாவரண்டு போய் தவித்தனர். கால்கள் கொப்பளித்தன. அனல் கல்லில் பொரித்தெழும் பொரி போலத் துள்ளினர். அந்தப் பாலை நிலத்தினின்றும் தப்பி வெளியேற முடியுமோ எனத் தவித்த போது அங்கே ஒரு பிலத்தைக் கண்டனர். அனைவரும் அந்த பிலத்துக்குள் சென்று தேடினர். அந்த பிலத்துக்குள் ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் தவம் புரிந்துகொண்டிருந்த சுயம்பிரபை மோட்சமடைந்து வானுலகம் செல்ல அனுமன் உதவி புரிந்துவிட்டு அனைவரும் அந்தக் குகைக்குள்ளிருந்து வெளியேறினர்.

பிறகு வானர வீரர்கள் வழியில் ஒரு பொய்கையைக் கண்டனர். அதிலிருந்த நல்ல நீரை அருந்தினர். சோலையிலிருந்த தேனையும், காய், கனிகளையும் பசியாற உண்டனர். பொய்கைக் கரையில் படுத்து இனிய நித்திரை கொண்டனர். அப்போது அங்கு நற்குணம் அற்றதோர் அசுரன் வந்து சேர்ந்தான். அவன் பெயர் துமிரன். தோற்றத்தில் மலை போன்று காட்சியளித்தான். அவன் பொய்கைக் கரையில் உறங்கும் வானரங்களைப் பார்த்தான். தனக்கே உரிய இந்த பொய்கையிடத்து உறங்கும் இந்த வானரங்கள் யார் என்று தூங்கிக் கொண்டிருந்த அங்கதன் மார்பில் அடித்துத் தூக்கினான்.

தூக்கம் கலைந்து எழுந்த அங்கதன் தன்னைப் பிடித்துத் தூக்கிய அவுணனைப் பார்த்தான். இவந்தான் இராவணனோ என்று எண்ணி அவனை ஓங்கி அறைந்தான். அந்த அரக்கன் அடி தாங்காமல் பிணமாகி கீழே விழுந்தான். மற்ற வானரங்கள் சந்தடி கேட்டு விழித்து எழுந்தனர். அனுமன் கேட்கிறான், அங்கதனைப் பார்த்து, “யாரப்பா இவன்?” என்று, அதற்கு அங்கதன் “தெரியவில்லை” என்கிறான். அப்போது ஜாம்பவான் அந்த அசுரனின் வரலாற்றைக் கூறுகிறான். “இவனை எனக்குத் தெரியும். இவன் பெயர் துமிரன் என்பது. இந்த பொய்கை தனக்கு உடைமை என்று எண்ணியிருந்தான்” என்றான்.

“இவனைப் போல வேறு யாரும் இருக்கிறார்களா?” என்று வானர வீரர்கள் கேட்டனர். பிறகு அனைவரும் பிராட்டியைத் தேடிக் கொண்டு பெண்னை நதிக் கரையை அடைந்தனர். அந்த நதி போக்குவதற்கரிய கொடிய பிறவிப் பிணியை நீக்கி நற்கதி அளிக்க வல்லது. உத்தரபிநாகினி என்னும் பெயரையும் உடையது. அந்த நதிக் கரையில் தங்கி இளைப்பாறிய பிறகு, ஆற்றைக் கடந்து சென்று, ஒரு பெரும் காட்டை அடைகின்றனர். தொடர்ந்து பற்பல மலைகள், காடுகள் இவற்றைக் கடந்து சென்றனர்.

அடுத்து இவர்கள் சென்றடைந்த இடம் விதர்ப்ப நாடு. அந்த நாட்டிற்குள் அந்தண சிறுவர்கள் வடிவம் தாங்கி சீதையைத் தேடி அலைந்தனர். பிறகு அங்கிருந்து நீங்கி தண்டகம் எனுமிடத்தை அடைந்தனர். பிறகு முண்டகம் எனும் பிரதேசத்திலும் தேடினர். அங்கிருந்து பாண்டுமலை எனும் வெண்ணிறம் கொண்ட மலைப் பகுதியை அடைகின்றனர். எங்கு தேடியும் தேவியைக் காண முடியவில்லை என்று வருந்தினர். பிறகு நெடுந்தூரம் பயணம் செய்து இராவணன் அபகரித்துச் செல்லும்போது விரிந்து கிடந்த சீதாபிராட்டியின் கூந்தலினின்றும் நழுவி வந்து பூமியை அடைந்தது போன்று கிடந்த கோதாவரி எனும் நதியை அடைந்தனர்.

இந்த சிறப்பு மிக்க ஆற்றைக் கடந்து பிறகு சோனை நதியையும் அடைகின்றனர். அங்கிருந்து குலிந்த நாடு எனப்படும் மேலைக் கடற்கரை நாட்டைக் கடந்து, கொங்கணப் பிரதேசத்தின் அருந்ததி மலையை அடைந்தனர். அந்த மலையைக் கடந்த பிறகு திருவேங்கட மலையை வலம் வந்து அதனைக் கடந்தபின் தொண்டை வளநாட்டை அடைகின்றனர். இங்கிருந்து பயணப்பட்டு பொன்னி நதி பாயும் சோழ நாட்டையும் தாண்டி, பாண்டிய நாட்டைச் சென்றடைகின்றனர். அங்கும் சீதையைக் காணாமையால், இனி கடல் அன்றி வேறு நாடு எதுவும் இலாமையால் ஊக்கம் தளர்ந்து இறுதி நிலையை அடைந்தாற்போல ஆயினர்.

இனி வேறு எந்த வழியும் தெரியவில்லை, தென் கடலையொட்டியிருந்த மயேந்திர மலை என சுக்ரீவன் குறிப்பிட்டிருந்த மலைப் பகுதியை வந்தடைந்தனர். அங்கு சென்றடைந்ததும் எதிரே பரந்து விரிந்து கிடந்த கடற்பகுதியைக் கண்டனர். ஹேமகூடத்தில், இவர்களிடமிருந்து பிரிந்து சென்ற வானர வீரர்களும் அங்கு வந்து சேர்ந்து கொண்டனர். வானர வீரர்கள் சீதையைக் கண்டு பிடிக்க முடியாமல் வருந்திச் சோர்ந்தனர். மன்னன் விதித்த கெடு நாளும் நெருங்கிவர, பிராட்டியைக் காணாமல் இராமனும் உயிர் வாழ்வாரா, மன்னனும் நம்மைத் தண்டிப்பான் என்று வருந்தினர். சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் நாடு திரும்ப முடியுமா? இங்கேயே தங்கி தவம் செய்வதா? உயிரைப் பறிக்கும் கொடும் நஞ்சினை அருந்தி உயிரை விடுவோமா? என்ன செய்யப் போகிறோம்? என்று கவலையுற்றனர்.

அப்போது வருத்தத்துடன் இருந்த கூட்டத்திடையே அங்கதன் எழுந்து பேசுகிறான், “உங்களுக்கு நான் ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். இந்த பூவுலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் சீதையைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வருவோம் என்று இராமபிரானிடம் ஆணையிட்டுக் கிளம்பினோம். இன்று நாம் நிந்தனைக்கு உரியவர்களாகி நிற்கிறோம். நாம் ஏற்றுக் கொண்ட காரியத்தை முடிக்கவில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட காலமும் கடந்து போயிற்று. இனி நாம் மேற்கொண்ட காரியம் கைகூடும் என்பதற்கு ஒரு சிறிது இடமும் தெரியவில்லை. ஆதலின், நாம் இனி உயிரைத் தாங்கிக் கொண்டு வாழ்வது தகுதியன்று” என்றான். ஏவிய காரியத்தை முடிக்கவில்லை என்று எந்தையும் நம்மைத் தண்டிப்பான். எம் இறைவன் இராமபிரானும் மனம் வருந்துவான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு உயிர் வாழ என்னால் முடியாது. எனவே, நான் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன், நீங்கள் உங்கள் அறிவுக்குப் பட்டதைக் கூறுங்கள்” என்கிறான் அங்கதன்.

அங்கதன் சொன்னதைக் கேட்ட ஜாம்பவான் எனும் கரடிகளின் அரசன் சொல்லுகிறான், “உருவிலும், வலிமையிலும் மலை போன்ற தோள்வலி கொண்டவனே! சிறப்பான வார்த்தைகளைக் கூறினாய். நீ இறந்து போன பின்பு நாங்கள் மட்டும் அழுதுகொண்டு இருப்போமா? எங்கள் அன்பு பாழ்படுமாறு கிஷ்கிந்தைக்குத் திரும்பச் சென்று சுக்ரீவனையும் இராமபிரானையும் தொழுது உயிர் வாழ்வோமா?

ஆண்தகையே! அரசகுமாரா! இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? உயிர் வாழ்ந்து என்ன பயன்? ஆனால் எங்களுக்கு ஓர் உறுதி மொழி வேண்டும். நாங்கள் இறந்த பிறகும் நீ உயிர் வாழ வேண்டும் என்பது எங்கள் விருப்பம்” என்றான் ஜாம்பவான்.

ஜாம்பவான் சொன்னதைக் கேட்ட அங்கதன் சொல்லுகிறான், “நீங்கள் அனைவரும் மாண்டுபோனபின், நான் மட்டும் உயிருடன் திரும்புவதோ? நன்று! நன்று!” என்று நகைத்துவிட்டு மேலும் சொல்லுகிறான், “நாம் அனைவரும் இங்கே இறந்து போவோமானால் அந்த செய்தி என் தாய் தாரைக்கும், சுக்ரீவனுக்கும் போய்ச் சேரும். அதனைக் கேட்டு அவர்களும் உயிர் துறப்பர். இதன் விளைவாக இராம லக்ஷ்மணரும் உயிரை விட்டுவிடுவார்கள். இந்த செய்தி அயோத்திக்கு சென்றடையும், அங்கு பரதன் முதலானோரும் உயிரை விடக்கூடும். இதன் விளைவாய் அவன் தம்பியும், தாய்மார்களும், ஏன்? அயோத்தி மக்களும் மடிந்து போவர். ஜானகி எனும் ஓர் மாதவத்தியால் இவ்வளவு அழிவும் நேருமே!” என்று அங்கதன் வருந்தினான்.

வயிரம் பாய்ந்த தோளையுடையவனும், போரில் அரிமா போன்றவனுமான அங்கதன் இப்படி உரை செய்தது கேட்டு வருந்தி, கரடிகளின் வேந்தன் ஜாம்பவான் சொல்கிறான், “நீயும், நின் தந்தையும் தவிர அரச பதவிக்கு உரியவர் எவரும் இல்லை என்பதால் உன்னை உயிர் பிழைத்திருக்கச் சொன்னேன். அனைவரும் உயிர் விடுதல் பற்றி பேசலாகுமோ? ஆகையால் நீ விரைந்து போய் இராமனைப் பார்த்து சீதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே நாங்கள் அனைவரும் உயிரை விட்டுவிட்டோம் என்ற செய்தியை நீ போய் அவர்களிடம் தெரிவிப்பாயாக!” என்றான்.

இவர்களது உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த அனுமன் சொல்லுவான், “நாம் மூவுலகங்களிலும் பிராட்டியைத் தேடி முடிக்கவில்லை. நமக்கு வலிமை இருந்தும் தேடமுடியவில்லை. தேடும் எண்ணம் இல்லை என்றால் உங்கள் வீரத்துக்கும், நேர்மைக்கும் இழுக்கு அல்லவா? பிராட்டியை எவ்வகையிலும் தேடிக் கண்டு பிடித்து வரவேண்டுமென்பதே சுக்ரீவனின் விருப்பம். அவன் குறித்த காலத்திற்குள், வேலை முடியவில்லை என்பதைப் பொருட்படுத்த மாட்டான். ஆகையால் நாம் பிராட்டியைத் தொடர்ந்து தேடுவதுதான் தக்கது. அதுதான் சரி. அப்படித் தேடும்போது அந்த பணியின் காரணமாக நாம் ஜடாயுவைப் போல உயிர் துறக்க நேரிட்டால் அதுவன்றோ சிறப்பு. வீணில் பழி சுமந்து மாள்வதா சிறப்பு?” என்றான்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ‘ஜடாயு’ என்ற பெயரை அனுமன் சொல்லவும், சற்றுத் தொலைவில் ஓர் மலையில் அமர்ந்திருந்த சம்பாதி எனும் கழுகின் வேந்தன், தன் தம்பியாகிய ஜடாயு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டு துணுக்குற்று, சோகத்தால் அழுது புலம்பியவாறு, ஓர் குன்று நகர்ந்து வருவது போல வானர வீரர்களை நோக்கி வந்தான்.

“என் தம்பியாகிய ஜடாயுவா இறந்து போனான்? எப்படி இறந்தான்?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

முன்பு மலைகளுக்கெல்லாம் சிறகுகள் இருந்தனவாம். அவை பல இடங்களுக்கும் பறந்து சென்று உலகில் பல கேடுகளை விளைவித்தனவாம். இதனைக் கண்ட இந்திரன் அதன் சிறகுகளைத் தன் வஜ்ராயுதத்தால் அறுத்து கீழே விழச் செய்துவிட்டான். அப்படிப்பட்ட ஒரு மலை சிறகை இழந்து நகர்ந்து வருவது போல சம்பாதி நகர்ந்து வந்தான் என்பதிலிருந்து, அவன் சிறகுகளை இழந்தவன் எனத் தெரிகிறது. சம்பாதியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓட, “என் தம்பியைக் கொல்லும் ஆற்றலுடையவரும் உண்டோ? யார் அந்தச் செயலைச் செய்தது? என்றான் கோபத்தோடு.

சம்பாதி வயது முதிர்ந்தவர். சிறகுகளை இழந்து, கண்கள் சுருங்கி அவற்றில் கண்ணீர் பொங்கி வர இவர்களை நோக்கி வந்ததும், வானரர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இவன் யாரோ? என்று அச்சத்துடன் மற்றவர்கள் ஓட, அனுமன் சம்பாதியை நோக்கி, “வஞ்சக அரக்கனே! கள்ள வேடம் பூண்டவனே! யார் நீ? இனி உயிர் பிழைத்துப் போவாயோ?” என்று வினவினான்.

இப்படி அனுமன் சொன்னானே தவிர, எதிரே வந்த கழுகு கோபம் இல்லாதவனாய், பொங்கும் துக்கத்தால் கண்ணீர் சோர கதறிக் கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டு, சரி இவன் சந்தேகத்திற்கு இடமான ஆள் இல்லை என்று உணர்ந்து கொள்ளுகிறான். அப்போது சம்பாதி மறுபடியும் “ஜடாயுவின் உயிரைப் பறித்தவர் யார்? சொல்ல மாட்டீர்களா?” என்று மறுபடியும் கேட்டான். அது கேட்ட மாருதி, “முதலில் நீ யார் என்பதைக் கூறினால், பிறகு நான் நடந்த வரலாற்றைக் கூறுகிறேன்” என்று சொன்னதும், சம்பாதி தன் வரலாற்றைச் சொல்லுகிறான்.

ஜடாயு தனது தம்பி என்பதையும், அவன் பிரிவினால் துயர் மிகுந்து வாடுவதையும் கூறினான். அதைக் கேட்ட அனுமன், ஜட்டயு இராவணனை எதிர்த்ததையும், அந்தப் போரில் சிவன் கொடுத்த வாளால் வெட்டப்பட்டு இறந்த வரலாற்றையும் கூறினான். அனுமன் கூறிய சொற்களைக் கேட்ட சம்பாதி பேரிடியால் நிலைதவறிய மலை போல மயங்கி வீழ்ந்தான். பிறகு மனம் தேறியவாறு உரை செய்கிறான். “எதற்கும் சளைக்காத எனது சிறகுகள் வெயிலால் எரிந்து சிந்தி உதிர்ந்து போனது. உயிர் போகாமல் நின்ற எனக்கு, உயிர் போயிருக்கலாமே என்று வேதனைப் பட்டான். என்ன மாயம் இது? அருமைத் தம்பி! எப்படி நீ மாண்டாய்? என்று புலம்புகிறான்.

“பிரமனும், மண்ணும், விண்ணும், அறமும், கற்ப காலமும் அழியுமேல் நீயும் அழிவது என்பது நியாயமாகும். அவையெல்லாம் அழியாதிருக்க நீ மட்டும் அழிவுற்றது நியாயமன்று! அருணனுக்கு அரம்யென்னும் தேவமாதிடம் இரு முட்டைகளாய் பிறந்து, அடுத்தடுத்து, சம்பாதியும், ஜடாயுவும் பிறந்தார்கள். “இராவணனா உன்னைக் கொன்றான். இது என்ன விபரீதம்?” என்று வருந்தினான் சம்பாதி.

“என்ன காரணம் கருதி இராவணனுடன் ஜடாயு போர் புரிந்தான்?” என்று அனுமனைக் கேட்டான்.

“எம் கோமான் இராமபிரானுடைய மனைவி சீதாபிராட்டியைக் கொடும் வஞ்சனையாளன் மாயையால் கவர்ந்து செல்லும்போது, நீதிமானான ஜடாயு, இராவணனின் தேரையும் அழித்து, தோளையும் கிழித்து அவனைத் தோற்கடிக்க, கோபம் கொண்ட இராவணன், சிவன் கொடுத்த வாளால், அவன் சிறகுகளை வெட்டினான், அதனால் ஜடாயு இறந்து போனான்” என்றான் அனுமன்.

இராவணனுக்கும் ஜடாயுவுக்கும் யுத்தம் நடைபெற்ற போது, இராவணன் ஜடாயுவிடம் உனது உயிர்நிலை எங்கிருக்கிறது என்று வினவ அதற்கு பொய் சொல்லத் தெரியாத மெய்மையோன் ஜடாயு, தனது சிறகில் உயிர்நிலை இருப்பதாக உண்மையைக் கூறினான். ஆனால் அதே கேள்வியை ஜடாயு இராவணனிடம் கேட்டதற்கு, அவன் தன் உயிர்நிலை தன் கால் கட்டைவிரலில் இருப்பதாக பொய்யுரைத்தான் என்றும் ஒரு கதை உண்டு. மேலும் திருஞானசம்பந்தரின் புள்ளிருக்கும் வேளூர் தேவாரத்தில் (வைத்தீஸ்வரன்கோயில்) இராவணனைப் பற்றி குறிப்பிடும்போது “மெய்சொல்லா இராவணனை” என்று குறிப்பிடுவதையும் நாம் கவனிக்க வேண்டும். அந்த தேவாரப் பாடல் இதோ:

“கள்ளார்ந்த பூங்கொன்ற மதமத்தங் கதிர்மதியம்

உள்ளார்ந்த சடைமுடிஎம் பெருமானார் உறையுமிடம்

தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்

புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே!

“தையலாள் ஒரு பாகஞ் சடைமேலான் அவளோடும்

ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்

மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்

பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே!.” (திருஞானசம்பந்தர் தேவாரம்)

ஆகா! ஜடாயு சீதாப்பிராட்டியைக் காக்கும் பணியில் உயிர் துறந்து என்றும் அழியாத புகழுடம்பு எந்தினான் என்றான். பிறகு சம்பாதி, வானர வீரர்களை பாராட்டுகிறான். அவர்களனைவரையும் ‘ராம’ எனும் நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கச் சொல்லுகிறான். அதன்படியே அவர்கள் அனைவரும் ஒன்றாக இராம நாமத்தை உச்சரிக்கவும், சம்பாதியின் சிறகுகள் முளத்து வளரத் தொடங்குகிறது. சிறகுகள் வரப்பெற்ற சம்பாதி வலிமை படைத்தவனாக எழுந்து நிற்கிறான்.

அனைவரும் இராமபிரானின் திருவருளைப் போற்றிக் கொண்டாடினார்கள். வானர வீரர்கள் சம்பாதியின் முந்தைய வரலாற்றைக் கேட்க, அவனும் சொல்லலானான்.

சம்பாதி சொல்லுகிறான், “நண்பர்களே! சம்பாதி, ஜடாயு எனும் சகோதரர்களாகிய நாங்கள் கழுகுகளின் அரசர்கள். வேகமும் வலிமையுமுள்ள சிறகுகளைக் கொண்டவர்கள். அருணன் எனும் கதிரவனின் பிள்ளைகள் நாங்கள். நாங்கள் பறந்து சென்று தேவருலகமும் சென்று வரும் ஆற்றல் படைத்தவர்கள். அப்படி நாங்கள் ஆகாய வழியாகப் பறந்து சென்றபோது, எரிக்கும் கிரணங்களையுடைய சூரியனைக் கண்டோம். அப்போது அவனது கிரணங்கள் என் தம்பியைத் தாக்கும் வேளையில் அவன் ‘காப்பாற்று’ என்று என்னிடம் வேண்டினான். உடனே நான் எனது சிறகுகளை விரித்து சூரிய கிரணங்கள் அவன் மீது படாவண்ணம் காத்தேன். ஆனால் என் சிறகுகள் எரிந்து கருகி, உயிர் மட்டும் பிழைத்து கீழே விழுந்தேன். இதைக் கண்ட கதிரவன் என்னிடம் ‘வருந்தாதே, ஜனக குமாரி சீதா தேவியைத் தேடி வானர வீரர்கள் வருவர்கள். அவர்களை இராமபிரான் திருப்பெயரை உச்சரிக்கச் செய்து சிறகு முளைத்து மீண்டும் எழுவாயாக என்று அருளினான். சிறந்த வீரர்களே! இதுதான் எனது வரலாறு” என்றான்.

சம்பாதி இப்படிக் கூறியதும், அனைவரும் இராமபிரானைத் துதித்து, சம்பாதியிடம், “தந்தையே அந்தப் புன் தொழில் அரக்கன் சீதா பிராட்டியைத் தென் திசை நோக்கிக் கொண்டு சென்றான் என்று அறிந்து இவ்வழியாகத் தேடி வந்துள்ளோம்” என்றனர்.

“நன்று. நீவிர் வருந்த வேண்டாம்! இது விஷயமாக நான் அறிந்த செய்தியை உங்களுக்குக் கூறுகிறேன். அந்தப் பாதக அரக்கன் சீதாபிராட்டியைக் கவர்ந்து செல்வதை நான் பார்த்தேன். அவன் அவளைத் தூக்கிக் கொண்டு இலங்கை சென்று அடைந்தான். மனம் வருந்தி துன்பத்தில் ஆழ்ந்த அன்னையை அங்கே சிறை வைத்து விட்டான். அன்னை இப்பொழுது அங்கேதான் இருக்கிறார்கள், நீங்கள் உடனே அங்கு சென்று காண்பீராக!” என்றான்.

“யோசனை எழுநூறு உண்டால், ஒலிகடல் இலங்கை; அவ்வூர்

பாசவெம் கரத்துக் கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்;

நீசன் அவ்வரக்கன் சீற்றம் நெருப்புக்கு நெருப்பு; நீங்கள்

ஏசறும் குணத்தீர் சேறல் எப்பரிசு இயைவது? என்றான்”.

நீங்கள் எல்லோரும் அங்கே போவது என்பது எளியதன்று. அப்படி உங்களில் எவரேனும் ஒருவர் அங்கே செல்ல முடியுமானால் சென்று, தேவியைக் கண்டு, இராமபிரான் கூறியவைகளை அவரிடம் சொல்லி அவர் துயரை நீக்கி தெளிவுறச் செய்து மீண்டு வருவீராக என்றான் சம்பாதி. அப்படி உங்களில் ஒருவன் அங்கே போகமுடியாவிட்டால், திரும்பிப் போய் இராமபிரானிடம் பிராட்டி இலங்கையில் இருக்கும் செய்தியைச் சொல்லுங்கள் என்றான்.

இப்படிச் சொல்லிவிட்டு சம்பாதி, வானத்தில் எழும்பி பறந்து சென்றான். அவன் சென்ற பிறகு வானரர்கள், கழுகரசன் பொய் சொல்ல மாட்டான் என்றார்கள். கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்று அன்னையைத் தேடிக் கண்டுபிடித்தால் மட்டுமே, நாம் உயிர் பிழைக்க முடியும் என்றும் கூறினர்.

இங்கே கடல்கடந்து இலங்கை செல்லும் வலிமையுடையார் நம்மிடையே யாவர் உளர் என்று கேட்டு ஒவ்வொருவரும் தத்தம் நிலைமையைக் கூறுகின்றனர். நீலன் முதலான பல வீரர்கள் தங்களால் கடலினைக் கடந்து செல்வது இயலாது என்று கூறினர். வாலியின் மகனான அங்கதன், தன்னால் இந்தக் கடலினைக் கடந்து செல்ல முடியும், ஆனால் மீண்டு வந்து சேரும் வலிமை தனக்கு இல்லையென்று உரைத்தான். சாம்பன் எனும் ஜாம்பவான் தனது இயலாமை குறித்து வருந்திச் சொன்னான். பிறகு ஜாம்பவான் அங்கதனை நோக்கி, “அரச குமாரா! நம்மில் யார் கடல் கடந்து செல்வது என்று ஆலோசனை செய்து கொண்டிருப்பது நமக்கு இழிவு அல்லவா? எனவே எல்லா விதங்களிலும் தகுதியுடைய அனுமனே அதற்கு ஏற்ற ஆள்” என்றான்.

ஜாம்பவான் அனுமனை நோக்கி, “மாருதி! பிரமதேவனே மாண்டால்கூட சிரஞ்ஜீவியாக வாழக்கூடிய வாழ்நாள் உடையவரே! நுண்ணிய சாத்திரங்கள் பல கற்ற மகா பண்டிதன் நீர்! ஒன்றை எடுத்துச் சொல்வதிலும் வல்லவர் நீர். காலனும் அஞ்சும் வலிமையுடையீர் நீர். கடமை தவறாத கர்ம வீரர் நீர்! ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டனைப் போல போரிட்டு எதிரிகளை வதம் செய்யும் ஆற்றல் பெற்றவர் நீர்! (இந்த இடத்திலும் அனுமனை சிவபெருமானுக்கு உவமையாகக் கூறியிருப்பதை கவனிக்கலாம்).

“பஞ்ச பூதங்களால் அழிவுறாதவர் நீர்! பல்வகைப்பட்ட தெய்வத்தன்மை பொருந்திய படைக்கலன்களாலும் அழிக்க முடியாதவர் நீர்! ஆராய்ந்து பார்க்கும்போது உமக்கு நிகர் நீரன்றி, வேறொருவர் இலர். இந்தக் கடல் என்ன? இந்த அண்டங்களையே தாண்ட வல்ல ஆற்றல் படைத்தவர் நீர். நல்லவை மட்டுமல்ல, தீயவையும் ஆராய்ந்து பார்த்து குற்றம் நீக்கி உண்மையைச் சொல்ல வல்லவர் நீர். எது செய்யத்தக்கக் காரியம், எனத் துணிவுறும் ஆற்றல் படைத்தவர் நீர்! அப்படித் துணிந்த பின் வெல்லவும் வல்லவர் நீர்! சென்று, வென்று, மீளும் வல்லமை படைத்தவர் நீர்! புயவலி என்றும் குறைவடையாதவர் நீர்!”.

“மேரு மலையும் தோற்கும் வண்ணம், பேர் உருக் கொண்டவர் நீர். மழையின் துளிகளுக்கிடையேயும் புகுந்து செல்லும் ஆற்றல் படைத்தவர் நீர்! பெரு உருவைச் சின்னஞ்சிறு உருவமாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர் நீர்! இந்த பூமியையே பெயர்த்து எடுக்கும் ஆற்றல் படைத்தவர் நீர்! இவ்வளவு ஆற்றல் இருந்தும் குற்றம் புரியாதவர் நீர்! மேலே சென்று அந்த சூரியனையே தொடவும் வல்லவர் நீர்! புகை புகா வாயிலிலும் புகவல்லீர் நீர்! தர்மம் கெடாமல் வாலியைப் போரில் வீழ்த்தி அருளிய அறிவில் சிறந்தவர் நீர். இந்திரன் தன் வஞ்ராயுதத்தை உம் மீது ஏவியும் அது உமது உடல் உரோமத்தைக் கூட இழக்கச் செய்யாமல் மீண்டு வந்தவர் நீர்!”.

“மூவுலகங்களிலும் உள்ளவர்கள் உம்மை எதிர்த்து நின்ற போதிலும், வீழ்த்த முடியாத தோள் வலிமை கொண்டவர் நீர்! உலகுக்கு இருளை நீக்கும் கதிரவனின் தேருக்கு முன்பாகவே சென்று வடமொழி நூல்கள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து உணர்ந்தவர் நீர்!”. (கதிரவன் எப்போதும் வானவீதி வழியாக உலகங்களைச் சுற்றி சஞ்சரிப்பவன், ஆதலால் ஓரிடத்தில் இருந்து அனுமனுக்குப் பாடம் சொல்ல இயலாது என, அனுமன் அந்தக் கதிரவனின் தேருக்கு முன்பாகவே பயணம் செய்து கொண்டே பாடம் கேட்டு நவவியாகரண பண்டிதன் ஆயினன் என்பது புராணம்).”

“நீதியில் நிலைப்பவர் நீர்! வாய்மை உடையவர் நீர்! பெண்ணாசை என்பதே என்னவென்றறியாத பிரம்மச்சாரி நீர்! வேதங்கள் அனைத்தையும் ஓதி உணர்ந்தவர் நீர்! ஊழிக் காலத்தையும் கடந்தவர் நீர்! பிரம தேவனே நீர்தான் என சொல்லத்தக்கவர் நீர்! இராமனிடத்தில் அன்பு மிக்கவர் நீர்! அதனால் செய்ய வேண்டிய செயலை நன்கு அறிந்தவர் நீர்! அதன்படி காரியத்தை செய்து முடிக்க வல்லவர் நீர்! மனம் சோர்வடையாதவர் நீர்! என்றும் நிலையான செயல் புண்ணியம் ஒன்றுதான் என்பதை நன்கு உணர்ந்தவர் நீர்!”.

“காலம் பொருந்திவராமல் போனால் அடங்கவும், நேர்ந்தால் போரிட்டு வெல்லவும் வல்லீர் நீர்! புத்தியால் ஆராய்ந்து செய்யத் தொடங்கிவிட்டால், முடிதே தீருபவர் நீர்! கொடிய இடையூறு ஏற்படினும் அஞ்சி பின் வாங்காதவர் நீர்! இந்திரன் முதலானோர் தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லொழுக்கமும், பொறுமையும் கைவரப் பெற்றவர் நீர்! எந்தச் செயலையும் ஆராய்ந்து ஊகித்துச் செய்யும் ஆற்ரல் பெற்றவர் நீர்! வேண்டியபோது வேண்டிய உருவத்தை அடையும் வல்லமை படைத்தவர் நீர்! நீரே இந்தக் கடலைத் தாண்டிச் செல்லும் வேகம் அமையப் பெற்றுள்ளீர். ஆதலின் நீரே கடல் கடந்து சென்று சீதாபிரட்டி பற்றிய நல்ல செய்தியினை கொண்டு வந்து கீர்த்தி பெறுவீர். அன்னையும் துன்பக் கடலினைத் தாண்ட ஏதுவாகும்” என்று ஜாம்பவான் கூறிமுடித்தான்.

(அனுமன் இந்தச் சிறிய கடலினைத் தாண்டிச் சென்றால், சீதாதேவியும் துயரக் கடலினைத் தாண்டிச் செல்வாள் எனும் கருத்தில் இப்படிக் கூறுகிறான் ஜாம்பவான்).

இவ்வாறு ஜாம்பவான் அனுமனது பெருமைகளையெல்லாம் சொல்லி முடிக்க, அறிவிற் சிறந்த அனுமன் தலை குனிந்து அல்லிப் பூ மலர்ந்தது போல ஒரு புன்னகை பூத்தான். சூழ்ந்து நின்ற வானரர்கள் மனம் மகிழும்படி அனுமன் பேசலுற்றான். “”தாங்களே இந்தக் கடலினைத் தாண்டிச் சென்று அன்னையைக் கண்டு வரும் ஆற்றல் உள்ளவராயிருந்தும், சிறியவனான என்னை இந்தக் காரியத்திற்கு ஏவினீர் எனும் போது நான் பெற்ற பெரும் பேறு இது என்றே கருதுகிறேன். உங்கள் ஆசியும், இராமபிரான் கட்டளையும் என் இருபுறமும் துணைவர யான் இப்போதே இந்தக் கடலை கருடனைப் போல கடந்து செல்வேன், காண்பீராக!”

“நான் இலங்கை சென்று மீண்டும் இங்கு வந்து சேரும் வரை, ஈண்டு இனிது தங்கியிருங்கள்; எனக்கு விடை கொடுங்கள்” என்று அனுமன் கூற, வானரர்கள் வாழ்த்துக் கூற, தேவர்கள் பூமாரி பொழிந்திட, அனுமன் மகேந்திர மலையின் உச்சியைச் சென்றடைந்தான். மூவுலகையும் ஈறடியால் அளந்த அந்த மாதவனின் பேருருவை எடுத்து, உலகோர் வியக்க நின்றான்.

(கிஷ்கிந்தா காண்டம் நிறைவு பெற்றது)

7


சுந்தர காணடம்


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய

இராம காதை

5. சுந்தர காணடம்.

“அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப் பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்

கலங்குவது எவரைக் கண்டால்? அவர் என்பர், கைவில் ஏந்தி

இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!”

“மாலை நேரத்தில் வானத்தில் தோன்றும் அற்புதமான காட்சியில் பாம்பு போல தோன்றும் பிரமையைப் போல, பஞ்ச பூதங்களும் ஒலி, உணர்வு, உருவம், குணம், மணம் என்று மாறுபாடு அடைந்து பரம்பொருளை உணர்ந்து கொள்ளாமல், உலகியல் வாழ்க்கையில் ஏற்பட்ட பந்தம் எவரைக் கண்டால் அழிந்து போகுமோ, எந்த மூர்த்தியானவர் கையிலே வில்லை ஏந்தி இலங்கையில் போரிட்டு தீமையை அழித்தாரோ, அவரே வேதங்களுக்கெல்லாம் ஆதிமூர்த்தியாவார், அவரை வணங்குகிறேன்”. (கவிச்சக்கரவர்த்தி கம்பர்)

ஜாம்பவானிடமும், அங்கதன், நீலன் உள்ளிட்ட வானர வீரர்களிடத்தும் விடைபெற்றுக் கொண்டு மகேந்திர மலையின் மீது ஏறிய அனுமன் அந்த மலையின் உச்சியில் தனது விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றபோது அவன் கண்களுக்கு தேவலோகம் தென்பட்டது. இங்குதான் இலங்கை இருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு, பின்னர் இது தேவலோகமல்லவா என்று உணர்ந்து கொண்டு, தான் போகவேண்டிய இடம் இலங்கை அல்லவா, அது இங்கு இல்லையே என்று தெளிந்தான்.

அனுமன் விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்ட போது, அவன் கண்களுக்கு இலங்கை மூதூரும் தெரிந்தது. அங்குள்ள சோலைகள், பொன் வேய்ந்த மதிற்சுவர்கள், வட்டமான கோட்டைச் சுவர்கள், கோபுர வாயில், வெண்மையான மாடங்கள், வீதிகள் அனைத்தையும் கண்டான். அண்டங்கள், திசைகள் எட்டும் அதிர தோள்கொட்டி ஆர்ப்பரித்தான். மலையின் உச்சியிலிருந்து, காற்றையே பற்றுக் கோடாகக் கொண்டு, தாவி வான்வெளியில் எழுவதற்காகத் தன் கால்களை மலைமீது அழுத்த, அந்த மகேந்திர மலையானது பூமிக்குள் அழுந்தியது. அந்த மலை பூமிக்குள் அழுந்திய வேகத்தில் மலையின் வயிறு பிதுங்கியது. அதனால் அங்கு வாழ்ந்த நச்சுப் பாம்புகள் எல்லாம் நசுங்கி நஞ்சைக் கக்கின. வெளியே புரண்டு வந்து வீழ்ந்தன.

இப்படி அனுமன் வானில் புறப்பட்ட காட்சியை தேவர்களும், முனிவர்களும், மூவுலகத்தோரும் வரிசை வரிசையாக வான வெளியில் நின்று மலர்களையும், சந்தனம் முதலான வாசனைப் பொருட்களையும், இரத்தினங்களையும் அனுமன் மீது தூவி, “வீரனே! சென்று வா!” என்று வாழ்த்தி அனுப்பினார்கள்.

அனுமன் வானத்தில் எழும்பியபோது வாலை வேகமாக வீசி, கால்களை மடக்கி, மார்பு ஒடுங்கி, தோள்கள் பூரிக்க கழுத்தை உள்ளுக்கிழுத்துப் பின் முன்னே தள்ளி காலால் விசை உண்டாக்கி, தேவர்கள் கண்களுக்கும் படாவண்ணம் மேல் நோக்கி விரைந்து, பிரம்ம லோகத்தில் உராயும்படியாக எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் குன்றுகளும், மரங்களும் மற்றும் பற்பல உயிரினங்களும் விசையால் மேலெழுந்து பின் கடலில் வீழ்ந்தன. கடல் நீர் பிளவுண்டது. கடல் அலைகள் வேகமாக வீசி இலங்கையின் கடற்கரையில் சென்று மோதின. வானத்தில் அனுமன் விரைந்து செல்லும் காட்சியைக் கண்டு அஷ்டதிக் கஜங்களும் நடுக்கமடைந்தன. கடலைக் கிழித்துச் செல்லும் படகு போல காற்றைக் கிழித்துக் கொண்டு வான வெளியில் அனுமன் சென்றான்.

“விண்ணவர் ஏத்த, வேத முனிவர்கள் வியந்து வாழ்த்த

மண்னவர் இறைஞ்சச் செல்லு மாருதி மறம்முன் கூர

அண்ணல் வாளரக்கன் தன்னை அமுக்குவென் என்னக்

கண்ணுதல் ஒழியச் செல்லும் கையிலையங்கிரியும் ஒத்தான்”.

தேவர்கள் துதி செய்கிறார்கள்; வேதம் உணர்ந்த முனிவர்கள் வியந்து வாழ்த்துகிறார்கள்; பூமியில் உள்ளவர்கள் வணங்குகிறார்கள்; வான வீதிவழியே பறந்து செல்லுகின்ற அனுமன், சந்திரஹாசம் எனும் சிவன் தந்த வாளையுடைய இராவணனை கிழே போட்டு அழுத்துவேன் என்று விரையும் கயிலைமலையைப் போல காட்சியளித்தான்.

சிறிய பிரம்மச்சாரி வடிவம் தாங்கி, அறிவில் பிரமதேவனுக்கு இணையான, உலகுக்கே அறத்தின் அச்சாணி போன்ற அனுமன், தன்னைவிட்டு நெடு நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்ற திரிகூடமலையைக் காண விரைந்து செல்லும் மேரு மலையைப் போல காட்சியளித்தான். அவன் வான வீதியில் விரைந்து செல்லும் வேகத்தில் வானத்து விண்மீன்கள் மேகத்தைக் கிழித்துக் கொண்டு கீழே உதிர்கின்றன. கடல்நீர் கரையைக் கடந்து பாய்ந்து ஓடுகின்றன. வானம் நிலை குலைந்து தளர்ந்து விழ, திசைகள் பிளவுபட, மேருமலை குலுங்க, பிரளய காலத்துக் காற்றைப் போல வானத்தில் விரைந்து செல்லுகிறான்.

இருபது கரங்களும், பத்துத் தலைகளும் உள்ள இராவணன் தன் ஐம்பொறிகளை அடக்கித் தவம் இருந்து பெற்ற அரிய பெரிய வரங்களின் பயன்களெல்லாம் அவன் செய்த கொடிய பிழையால் அறுந்து விழ, இயற்கையின் செய்கைகள் மாறி, கிழக்கே உதிக்கும் சூரியன் வடக்கில் உதித்து இலங்கை நோக்கித் தாவுகிறதோ என்பது போல அனுமன் விரைந்து வந்தான். ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்த தேவர்கள் வாழும் ஏழு உலகங்களையும், வானத்தையும், தன் காலினால் அளந்த வாமனாவதார மகாவிஷ்ணு போல, அனுமன் அவற்றைத் தன் வாலினால் அளந்தான்.

அகன்ற கடலைத் தாண்டும் போது, வேதங்களுக்கு நிகரான அனுமனது வால், தங்கள் உயிரைக் குடிக்க வருகின்ற நாகபாசமல்லவா இது என்று அரக்கர்கள் பார்த்து விடுவார்கள் என்று அனுமன் எனும் தலைவன் இருக்கும் தைரியத்தில் அவனுக்குப் பின்புறமாக ஒளிந்து கொண்டு வந்ததாம். அனுமனது வாலை கம்பர் பெருமான் வர்ணிக்கும் இந்த இடத்தில் நகைச்சுவையும் மிளிர்வதைப் பார்க்கலாம்.

தேவர்கள் வான்வெளியில் தங்கள் விமானங்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சிங்கம் போன்ற அனுமன் காற்றைக் கிழித்துக் கொண்டு வான்வெளியை ஊடுறுவிக் கொண்டு செல்லுகையில் ஏற்பட்ட காற்றின் வேகம் காரணமாக, அந்தத் தேவர்கள் பயணம் செய்த விமாங்களெல்லாம் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து போய் கடலில் விழுந்தனவாம்.

“குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சீயம்

சென்றுறு வேகத்திண்கால் எறிதரத் தேவர் வைகும்

மின்தொடர் வானத்தான விமானங்கள் விசையில் தம்மில்

ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி மாக்கடல் உற்றமாதோ!”

வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திய இந்திரனின் தேவலோகமும் கலக்கம் அடையும்படியாக விரைந்து செல்லும் இந்த அனுமனின் கருத்துதான் என்ன? போகிற வேகத்தைப் பார்த்தால் இலங்கைக்கும் அதற்கு அப்பாலும் போவான் போலிருக்கிறதே என்று இந்த உலகம் வியந்து பார்த்துக் கொண்டிருந்தது.

அனுமன் சென்ற வேகத்தில் கடலில் திமிங்கிலங்களைக் கூட விழுங்கும் வல்லமை பெற்ற “திமிங்கிலகிலங்கள்”, திமிங்கிலம் உள்ளிட்ட பெரிய பெரிய மீன்களெல்லாம் இறந்து மிதந்தன. ஒப்புவமை இல்லாத பேருருவம் (விஸ்வரூபம்) கொண்ட அனுமன் கடலைக் கடந்து செல்லுங்கால், வேகத்தை உண்டாக்குவதற்காக முன்னும் பின்னுமாக அசைக்கின்ற அவனது இரு தடக்கைகளும், இராமனும், இலக்குவனும் இவனுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது போல இருந்தது.

இப்படி வானவெளியைக் கிழித்துக் கொண்டு அனுமன் விரைந்து சென்று கொண்டிருந்த போது மைந்நாகமலை எனும் பெயருடைய ஓர் பர்வதம் கடலினின்றும் மேலே எழுந்து வந்து வானளாவ நின்றது.

“இ நாகம் அனான் எறி கால் என ஏகும் வேலைத்

திக் நாக மாவில் செறி கீழ்த்திசை காவல் செய்யும்

கை நாகம் அந்நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற

மைந் நாகம் எனும் மலை வானுற வந்தது அன்றே!”.

எண் திசைகளையும் காவல் புரிகின்ற யானைகளில் கீழ்த்திசையைக் காப்பது ஐராவதும் எனும் யானை. அற்றை நாள் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முயன்ற போது கடலில் தோன்றியது ஐராவதம். அதுபோல அனுமன் செல்லும் பாதையில் அன்று பாற்கடலில் தோன்றிய ஐராவதம் போன்று, இன்று மைந்நாகமலை வந்து தோன்றியது.

திருமாலுக்கு நாராயணன் எனும் பெயர், அவன் நீரிடை இருந்தமையால் வந்தது. ஊழிக்காலத்திற்குப் பிறகு நெடுநாள் அவன் கடலில் அறிதுயில் கொண்டு இருந்தமையால், அருள் தோன்றி சுவண அண்டம் (தேவலோகம்) உண்டாயிற்று. அதனின்று பிரமன் தோன்றி உலகங்களைப் படைத்தான். பிரமனுக்கு இரண்யகர்பன் என்று பெயர். நீரிலிருந்து சுவண அண்டம் எழுந்தது போல மைந்நாகமலை மேலே எழுந்தது. பிரளயகாலத்துக்குப் பிறகு முதன்முதலாக உருவான தேவருலகம் போல மைந்நாகமலை தோன்றியதாக உவமை கூறுகிறார்.

பிரளய கால வெள்ளத்தில் முதலில் தோன்றியவன் பிரமன். அவன் தன்னைத் தோற்றுவித்த தந்தையாகிய திருமாலைக் கண்டு மரியாதை செய்யாமல், வேறு எந்த செயலும் செய்ய மாட்டேன் என்று கடலில் மூழ்கி எழுந்தான். அதுபோல கடலில் இருந்து மைந்நாக மலையும் மேலே எழுந்தது.

திருமகளின் பூமாலையை இந்திரனுக்குக் கொடுக்க அவன் அதை இகழ்ந்ததால் துர்வாச முனிவர் சாபமிட்டார். அந்த சாபத்தின் பலனாய் இந்திரனின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கிவிட, தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்து வந்த போது எழுந்தவற்றுள் சந்திரனும் ஒருவன், அதுபோல கடலில் இருந்து மைந்நாகமலை எழுந்தது.

நீரினுள் அழுந்திக் கிடந்த வரையிலும் நீர் ஓட்டமின்றிக் கிடந்த மைந்நாக மலையின் அருவிகள், மலை மேலே எழவும், நீர் ஓட்டம் மிகுந்து அருவியாய் கீழே விழ, அந்த அதிர்ச்சியில் மீன்களும் நீரோடு துள்ள மலை மேலே எழுந்தது.

குலப் பகை என்று கூறப்படும் பகைகள் ஆறு வகைப்படும். அவை, காமம், வெகுளி, கடுமையான பற்றுள்ளம், மானம், உவகை, மதம் ஆகியவையாகும். அதுபோல குற்றங்கள் மூவகைப் படும். அவை, ஐயம், திரிபு, அறியாமையால் விளையும் குற்றங்கள். இவற்றிலிருந்து விடுபட்டு கடைத்தேறிய பெரியோன் போல மைந்நாக மலை கடலில் இருந்து மேலே எழுந்தது.

அப்படி தனது வழியில் கடலில் இருந்து மேலே எழும் மலையைப் பார்த்த அனுமன் “இது என்ன?” என்று திகைத்தான். நீருக்குள் கிடந்த மலை இப்படித் தன் பாதையில் குறுக்கிட்டு மேலெழுந்தது கண்டு அதைத் தன் காலால் ஓர் உந்து உந்தி, அந்த மலை தலைகீழாக கடலுக்குள் மூழ்கும்படிச் செய்தான். அப்படி நீரினுள் அனுமனால் தலைகீழாய் அழுத்தப்பட்ட மைந்நாக மலை மனத்துயரம் அடைந்தது. மீண்டும் மனத்தில் அன்பு மேலிட, சிறு மானுட வேடம் எடுத்துக் கொண்டு, அனுமனை நெருங்கி வந்து “என் தந்தையே, நான் சொல்வதைச் சற்றுக் கேட்பாயாக!” என்றது.

“ஐயனே! நான் பகைவனும் அல்ல. பகைவனால் அனுப்பப்பட்டவனும் அல்ல. முன்பொரு நாள் இந்திரன் மலைகள் தங்கள் சிறகுகளை விரித்து பற்பல இடத்துக்கும் தாவிச்சென்று இன்னல் புரிகிறது என்ற காரணத்தால், தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் சிறகுகளை வெட்டிய போது, தங்கள் தந்தை வாயுபகவான் என் மீதுள்ள அன்பின் காரணமாக என்னை கடலுக்குள் ஒளித்து வைத்து என்னைக் காப்பாற்றினான். உயர்ந்தவற்றுள் எல்லாம் உயர்ந்தவனாகிய ஆஞ்சநேயா! நீ அந்த வாயுவின் குமாரன் என்பதால் உன்பால் அன்பு கொண்டு, நடுக்கடலாகிய இங்கு உனக்கு உதவி செய்யும் பொருட்டு, தங்கி இளைப்பாற வேண்டுமென்பதற்காக நான் கடலுக்கு மேலே வந்தேன்” என்றது மனித உருவில் வந்த மைந்நாகமலை.

“அதுவன்றியும், நீதி வழி நிற்கும் பெரியோய்! கரிய செம்மல் இராமபிரானின் கட்டளையை சிரமேல் ஏந்தி சீதையைக் காணும் பொருட்டு வருகிறாய். அவனுக்கு உதவி செய்வதைக் காட்டிலும் பெரும் பேறு வேறு இல்லை என்பதால் நான் வந்தேன்” என்றது மைந்நாகம். தாயினும் நல்ல மாருதி! தாங்கள் என்மீது சற்று தங்கி இளைப்பாறிவிட்டு, நான் அளிக்கும் உணவினை உண்டு மகிழ்ந்து செல்ல வேண்டும்” என்றும் உரைத்தது.

இந்த மலை குற்றமற்றது என்பதை உணர்ந்த அனுமன், முகம் மலர்ந்து முறுவல் பூத்தான். அந்த மைந்நாக மலை மீதுள்ள ஓர் சிகரத்தில் சிறுகொண்டு, “வருந்தாதே! என் தலைவன் இராமபிரான் கருணையினால் எனக்குப் பயணத்தில் களைப்பு ஏற்படாது. மேலும் நான் மேற்கொண்ட செயல் முடியும் வரை எதனையும் உண்ணுவதில்லை என்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அன்போடு நீ எனக்கு அளிக்க முன்வந்த உணவை, நான் உண்டதாகவே எண்ணிக் கொள். உன் அன்பை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கும் மேல் என்ன இருக்கிறது? அன்புதான் பூஜைக்கு அடிப்படி. அவ்வன்பு அளவற்று இருக்கும்போது, உணவு உண்ணுதல் போன்ற புறத் தொழில்கள் அவசியமானதோ?”.

சத்தியத்தையே விரதமாகப் பூண்ட அனுமன் அந்த மைந்நாகத்தை நோக்கி, “நான் இப்போது விரைந்து சென்று அத திரிகூடமலை மீதுள்ள இலங்கை நகரை அடைந்து, இராமபிரானின் கட்டளைப்படி பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். அதுதான் இப்போது எனது தலையாய கடமை. அப்படி அந்தக் காரியத்தை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி வரும்போது உன்னிடம் வருகிறேன். உன் உபசரிப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வானத்தில் எழும்பி விரைந்து சென்றான். மைந்நாக மலையும் அவன் கண்ணுக்கு மறையும் வரை அன்போடு பார்த்துக் கொண்டு இருந்தது.

வானம் செக்கச்செவேலென்று சிவந்த வண்ணமாய்த் திகழ்ந்தது. ஊழிக்காற்று போல அனுமன் சென்ற வேகத்தில், வான மண்டலம் அனைத்திலும் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாலைக் கதிரவன், இது என்ன? இளம் வயதில் நடக்கப் பழகிய அந்தத் தளிர் பருவத்தில் வானத்தில் தாவி, என் தேர்மீது குதித்த இவன் யார் மீது பாய்வதற்காக இவ்வண்ணம் விரைந்து செல்கிறான் என்று வியந்தான். வானத்தில் பறந்த போது அவனுக்கும் மேலே வான்பகுதி ஒளி வீசியும், அவன் உடல் மறைத்ததால், கீழ் பகுதி இருண்டு காட்சி தந்தது. சூரிய கிரணங்களை ராகு, கேது கிரஹங்கள் மறைத்து இருளை உண்டாக்குவது போல, அனுமன் உடல் ஒளியை மறைத்து இருளைத் தந்தது.

இதற்கிடையே தேவர்களுக்கு ஓர் ஐயப்பாடு. இந்த அனுமன் இராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு செயல்படவும், சாதிக்கவும் வல்லமை படைத்தவந்தானா? இவனது வலிமை என்ன என்பதை சோதிக்கும் பொருட்டு, சுரசை எனும் தூயவளை அனுப்பி, அவனைச் சோதிக்கும்படி கூறி அனுப்பினார்கள். அந்த சுரசையும் ஓர் அரக்கி வடிவம் தாங்கி, அனுமன் வரும் பாதையில் எதிரில் வந்தாள்.

இந்த சுரசை தக்கனின் மகளும் காசிப முனிவரின் மனைவியுமாவாள். இவளை நாகமாதா என்று வான்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த சுரசை அரக்கி வடிவம் தாங்கி, பெரிய குகை போன்ற வாயை உடையவளாக அனுமன் வரும் பாதையில் வந்து தோன்றி, “வலிமையுள்ள குரக்கினத் தோன்றலே! கொடிய எமனும் அஞ்சுகின்ற வாயை உடைய எனக்கு உணவாக வருகிறாய் போலும் நீ” என்று சொல்லிக் கொண்டு, தன் பெரிய வாயை அகலத் திறந்தாள்.

“பெரும் கொடையாளனே! இனி கடந்து செல்ல உனக்கு வழியில்லை. வானத்துக்கும் பூமிக்குமாக நான் வாய் பிளந்து நிற்கிறேன். நீயாகவே வந்து என் வாயில் புகுந்து எனக்கு இரையாகிவிடு!” என்றாள்.

இந்தச் சொற்களைக் கேட்ட அறிஞனான அனுமன், “நீ ஒரு பெண். பசி அதிகமாகி நீ வருந்துகிறாய். நான் இப்போது இராம காரியமாக அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறேன். போகிற காரியத்தை வெற்றிகரமாக முடித்து விட்டேனானால், திரும்பி வருகையில் நானே என் உடலை உனக்கு உண்ணுவதற்கு அளித்து விடுகிறேன்” என்றான்.

இதைக் கேட்ட சுரசை சிரித்தாள். கோபமாக கர்ஜித்தாள். “ஏழு உலகங்களிலும் வாழ்வோர் அனைவரும் காணும் வகையில் நான் உன்னைத் தின்றே தீருவேன், இது சத்தியம்” என்றாள்.

அனுமன் ஒரு விஷமப் புன்னகையோடு “சரி, சரி, நான் உன் பெரிய வாய்க்குள் புகுந்து போகிறேன், உன்னால் முடியுமானால் என்னைத் தின்று விடு” என்று சொல்லிவிட்டு, குகை போன்ற தன் வாயை அந்த சுரசை முடிந்த மட்டும் பெரிதாக்கிக் கொண்டு நிற்க, அனுமன் தன் உருவத்தைப் பெரிய உருவமாக ஆக்கினான், அந்த அரக்கியின் வாயும் அதற்கேற்றவாறு பெரிதாகிக் கொண்டே வந்தது. அப்போது அனுமன் திடீரென்று தன் பெரிய உருவத்தை மிகச் சிறிய உருவமாக மாற்றிக் கொண்டு (வான்மீகத்தின்படி கட்டை விரல் அளவுக்கு) அவள் வாய்க்குள் புகுந்து, அவள் மூச்சுவிடும் முன்பாகக் கண் இமைக்கும் நேரத்தில் வெளியில் வந்தான். இந்தக் காட்சியைக் கண்ட தேவர்கள், நாம் இவனால் பிழைத்தோம் என்று அனுமன் மீது மலர்மாரி பொழிந்தனர், வாழ்த்தினார்கள்.

நினைத்தபடி உருவத்தைப் பெரிதாக்கும் வல்லமை பெற்ற சுரசை தனது சுய வடிவை எடுத்துக் கொண்டு தாயினும் அன்பு மேலோங்க, அனுமனைப் பார்த்து, அவன் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிபெற வாழ்த்துக் கூறினாள். அனுமனும் அவளை வாழ்த்தி விடைபெற்றுச் சென்றான்.

தென்றல் காற்று, இனிமையாக வீசியது. கின்னரர்கள் எனப்படுவோர், கீதங்கள் இசைத்தனர். பெண்கள் வகைவகையான பாடல்களைப் பாடினர். ஆடலில் வல்ல பூதங்கள் புகழுரைகளைக் கூறின. அந்தணர்கள் வேதங்களை ஓதி வாழ்த்தினர். அனுமன் வானவெளியில் தட்டுத் தடங்கலின்றி விரைந்து இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அவன் கடலைத் தாண்டி செல்கையில் ஏற்பட்ட முதல் இரு தடைகளும் அன்பினால் நிகழ்ந்தது. இப்போது வேறொரு தடை பகையினால் ஏற்படுகிறது.

அனுமன் விரைந்து வரும் பாதையில் கடலிலிருந்து எழுகின்ற மற்றொரு கடல் போல, தணலின் கொழுந்து போல, அங்காரதாரை எனும் அரக்கியொருத்தி எழுகிறாள். “அடேய்! இங்கு என்னைத் தாண்டிக் கொண்டு செல்வது யார்?” என்று கர்ஜித்துக் கொண்டு எழுகிறாள். அவன் பறந்து செல்லும்போது கடலில் பட்ட அவனது நிழலைப் பிடித்து கீழே இழுத்து விடுகிறாள்.

அந்த அங்காரதாரை எனும் அரக்கி ஒரு காததூரம் வரை இருக்கும் பொருளைக் காண வல்லவள். மது கைடவர் என்ற அரக்கர்களை ஒத்திருந்தாள் இவள். இந்த மது, கைடவர் எனும் பெயர் கொண்ட இரு அரக்கர்கள், ஒரே மாதிரியான செயல்களைச் செய்யக் கூடியவர்கள். இவர்கள் இருவரும் ஒரு முறை வேதங்களைப் பிரம்ம தேவனிடமிருந்து பறித்துக் கொண்டு கடலுக்குள் சென்று மறைந்து கொண்டனர். பிரமதேவன், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர் ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அவர்களை அழித்தார். இந்த இரு அரக்கர்களில் மது என்பவன் கும்பகர்ணனாகவும், கைடவன் அதிகாயனாகவும் பிறந்து இராம இலக்குவர்களால் பின்னால் வதைக்கப்பட இருக்கின்றனர்.

அங்காரதாரை கொடிய கடைவாய் கோரைப்பற்களைக் கொண்டவள். நிழலைப் பிடித்து இழுத்தே உருவங்களை இழுக்கும் ஆற்றல் பெற்றவள். வானத்துக்கும் பூமிக்குமாக நின்ற அரக்கியைப் பார்த்த மாத்திரத்தில் இவள் மிகக் கொடியவள் என்று அனுமன் உணர்வால் உணர்ந்தான். இவள் கருணையையும், தர்மத்தையும் ஒருங்கே கைவிட்டவள் என்பதையும் புரிந்து கொண்டான். இவளைக் கடந்து செல்லுதல் அரிது, எனவே இவள் வாயில் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவது ஒன்றே வழி என்று நினைத்து அவளிடம் கூறுகிறான்: “நிழலைப் பிடித்து என்னை இழுத்துவிட்ட பெண்ணே! என் பெரிய உருவத்தையும் செயலையும் பார்த்தும், எனது வலிமையை உணராமல் இருக்கிறாய். வானுக்கும், பூமிக்குமாக உன் பாதாள வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறாய். நீ யார்? இந்தக் கடலிடையே இருப்பது ஏன்?” என்றான்.

“நீ என்னை ஒரு பெண் என்று கருதிவிடாதே. என்னை எதிர்த்தவர்கள் தேவரே ஆயினும் உயிர் விடுதல் நிச்சயம். எமனேகூட என்னை எதிர்த்து வருவானானால், அவனையும் பிடித்து நான் தின்னுவது உறுதி” என்றாள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே அங்காரதாரை எனும் அந்த அரக்கித் தன் வாயை அகலத் திறந்தாள். பெரியோன் அனுமன், அவள் வாய்வழியே வயிற்றினுள் புகுந்தான். அதைக் கண்ட தர்ம தேவதை வாய்விட்டுக் கதறி அழுதது. அனுமன் இறந்தான் என்று தேவர்கள் சோர்ந்து போனார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அரக்கியின் வயிற்றைப் பிளந்து கிழித்துக் கொண்டு அன்று தூணைப் பிளந்து கொண்டு புறப்பட்ட நரசிம்ஹம்போல அனுமன் வெளியே வந்தான்.

கள் உண்ட வாயையுடைய அந்த அரக்கி அலறினாள். அவள் குடலைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு வெளிப்பட்ட அனுமன் வானவெளியில் ஏறினான். ஓர் குகைக்குள் புகுந்து, அங்கு வாழும் பாம்புகளைக் கவ்விக் கொண்டு எழும் கருடனைப் போல அனுமன் தோன்றினான். சாகா வரம் பெற்ற சிரஞ்ஜீவியான அனுமன் கயிறு அறுந்து கீழே விழ மேலே ஏறும் காத்தாடிபோல பறந்தான். வானவர் ஆர்த்தனர். அசுரர்கள் மனம் புழுங்கி வெந்தனர். பிரமனும் வியந்து மலர்களைத் தூவினான். கயிலையில் சிவபெருமானும் இக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தான். முனிவர்கள் ஆசி மொழிந்தனர்.

அரக்கி அங்காரதாரை மாண்டு போக, அவள் வாய் முதல் வயிறு வரை கிழித்த அனுமன் வானத்தில் பறந்து தன் விஸ்வரூபம் கொண்டான். வான்வழியில் விரைந்து சென்றான். வழியில் நேரிடும் துன்பங்கள் தீர, அனுமன் ‘ராம’ நாமத்தை உச்சரிப்பதே நலம் என்று இராமநாம ஜபம் செய்யத் தொடங்கினான். இராமநாமத்தைச் சொல்லிக் கொண்டே வந்த அனுமன் இலங்கையில் ஓர் புறத்தில் பசுமையான சோலைகள் அடர்ந்த பவழ மலையில் சென்று இறங்கினான். இம்மலை ‘இலம்பகம்’ எனும் பெயர் கொண்டது.

அவன் பாய்ந்து இறங்கிய வேகத்தில் அந்தப் பவழ மலை அங்கும் இங்குமாக ஆடியது. புயலில் சிக்கிய மரக்கலம் போல அந்த மலை ஆடியது. இலங்கை நகரைப் பார்க்கிறான் அனுமன். அடடா! எப்பேர்ப்பட்ட நகரம். தேவர்களின் அமராவதி நகரம்கூட இந்த நகருக்கு ஒப்பாகுமா? அதனால்தான் இராவணன் இங்கு ஆட்சி புரிகிறான். சொர்க்கபுரிகூட இந்த இலங்கைக்கும் தாழ்ந்ததுதான். இந்த நகரம் எழுநூறு யோசனை பரப்பு உள்ளது. மூவுலகப் பொருட்களும் இங்கே உண்டு. அத்தகைய நகரத்துக்கு அனுமன் வந்து சேர்ந்தான்.

இலங்கை மாநகரத்தை அனுமன் பார்க்கிறான். இலங்கை நகர வீதிகளில் காணும் மாடங்கள் யாவும் பொன்னால் வேயப்பட்டவையோ, இரத்தினங்கள் பதிக்கப் பெற்றவையோ, மின்னலைக் கொண்டு அமைக்கப் பெற்றவையோ, வெயிலைக் கொண்டு ஆக்கப் பெற்றவையோ என்றெல்லாம் மயங்கும் அளவில் ஒளிவீசின. மாடமாளிகைகள், வான்முகட்டை முட்டுவதாக உள்ளன. தேவலோக வாசிகள் இலங்கையில் பணிசெய்யும் வேலைக்காரர்களாக இருப்பதால், அவர்களுடைய பாத ஒளி அருகில் கிடந்த மேகங்களை ஒளிவீசச் செய்கிறது, அரக்கியரின் செம்மை நிற தலை மயிரைப் போன்று தோற்றமளித்தது அந்த மேகங்கள். தேவலோகத்துக் கற்பக மலரில் ஊறுகின்ற சிறந்த தேனை உண்டு வெறுப்புற்ற வண்டுகள், இலங்கை நகரின் உப்பரிகையிலிருக்கும் ஆகாய கங்கையில் இருந்த செங்கழுநீர்ப் பூவின் தேனை உண்டு அதில் மயங்கித் துயில் கொண்டன.

குழல், வீணை, யாழ் எனும் இசைக் கருவிகளையும் பழிக்கும் இனிமையான குரலையுடைய பெண்கள், கிளிகளைப் பேசப் பழக்குகிறார்கள். இவர்கள் வசிக்கும் மாளிகையின் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கிற மணிகள் அவர்களது பிம்பத்தைப் பலவாக பிரதிபலிப்பதால், தாம் இதில் யார் என்பது தெரியாத கட்டடங்கள் உள்ளன. திருமாலின் திருமார்பை அலங்கரிக்கும் “கவுஸ்த்துவம்” எனும் மணிக்கு ஈடானது ஏதேனும் உண்டா? அதுபோல தேவதச்சன் உறுதியாய் அமைத்த இலங்கை மாநகரிலும் சிறந்த நகரம் ஏதேனும் உண்டா?

அந்த சிறப்பு மிக்க இலங்கை மாநகரில் உள்ள மரங்கள் அனைத்துமே கற்பக மரங்கள்தான். வீடுகள் அனைத்தும் பொன்னால் ஆனவை. அங்குள்ள அரக்கியர்க்கு தேவ மாதர்கள் பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். தேவர்கள் தங்கள் வலிமை இழந்து, இங்கு வந்து அரக்கர்களுக்குக் குற்றேவல் புரிகின்றனர். இவர்கள் செய்த தவத்தின் பயனாக விளைந்தவை இவை. தேவர்கள் அனைவரும் இராவணர்க்கு ஏவல் செய்ய, மூவரில் சிவபெருமானும், விஷ்ணுவும் மட்டும் அப்படிக் குற்றேவல் செய்யாமல் இருக்கிறார்கள் என்றால், அரக்கர்களின் தவத்தை என்னவென்று சொல்ல? போரில் இராவணனிடம் தோற்றுப் போய் அஷ்டதிக் கஜங்களும் ஓர் ஓரமாய் வருந்தி நிற்கின்றன. ஒப்பற்ற ஐயனார் எனப்படும் சாஸ்தாவின் வாகனமான யானையும், சூரியனின் ஒற்றைச் சக்கர தேரையும் தவிர மற்ற அனைத்தும் இந்த நகருக்கு வந்து சேர்ந்து விட்டன.

ஊழிக்காலத்தில் திருமாலின் திருவயிற்றை வந்தடையும் உயிர்க்கூட்டங்கள் போல இலங்கையில் மக்கட் கூட்டம் நிரம்பி வழிந்தது. சூரியனின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் தவிர மற்ற குதிரைகள் அனைத்தும், இந்த நகரத்தில்தான் இருக்கின்றன போலும். அந்த நகரத்தில் நாலாபுறத்திலும் கேட்பது முரசு அறையும் ஒலி, யானைகளின் பிளிறல், நாற்புறமும் சூழ்ந்துள்ள கடல் அலைகளின் முழக்கம், இது தவிர இனிய இசை போன்ற பெண்களின் குரல்களும், அவர்களது சிலம்பின் ஒலியும் எங்கெங்கும் கேட்டுக் கொண்டிருக்கும்.

மரகதங்களும், மற்ற பல ரத்தினங்களும் பதிக்கப்பட்ட தேர்கள் தங்கும் தேர்ச்சாலைகள் கதிரவனைக் காட்டிலும் ஒளிவீசிக் காட்சி அளிப்பதாவது, ஸ்வர்க்கத்தைக்கூட இதோடு ஒப்பிட்டால் நரகம் என்று சொல்லத் தோன்றும். எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒளி வெள்ளம் வீசுகின்ற இந்த நகரத்தில், வெளிச்சம் பரவி நிற்பதால் கரிய நிறம் கொண்ட அரக்கர்களும்கூட தம் கரிய நிறத்தில் தோன்றாமல், வெண்மை நிறம் கொண்டவர்களைப் போன்று தோற்றமளித்தனர். மறு உள்ள சந்திரன்கூட மறு நீங்கி வெண்மையாகக் காணப்பட்டது.

சூரியன் இலங்கை மாநகரின் உயர்ந்த மதில்களைக் கடந்து செல்லுதல் அரிதான காரியம் என்பதால் அதனின்றும் விலகிப் போவதைக் கண்டவர்கள், இந்த நகரின் மீது போனால் இராவணன் கோபிப்பான் என்று ஒதுங்கிப் போவதாக முன்பு அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்த நகருக்குள் சுழன்று வீசும் காற்றுகூட நுழைய முடியாது. சூரியனுடைய கதிர்கள் புகமுடியாது. தீயின் சுடர் புகாது; எனவே தேவர்கள் புகமாட்டார்கள். உலகம் அழிகின்ற ஊழிக் காலத்தில் இந்த நகரத்துள் தர்மம் புகவில்லையாதலால், இந்த நகரம் நிச்சயம் அழிந்து போகும்.

மேகங்கள் தவழ்கின்ற பெரிய அலைகள் ஒலிக்கின்ற கடலின் இடையே, வானளாவிய மாளிகைகள் ஒளிவீசுவதால், இந்த அணிநகர் திருமால் தன் உந்தியில் பெற்ற அண்டமான இரண்ய கர்ப்பத்தை ஒத்திருந்தது. இலங்கை மாநகர் வாழ் மக்களின் வாழவு எப்படி இருந்தது? பாடுபவர்கள் இங்கே பலர் என்றால், ஆடுபவர்கள் அவர்களிலும் அதிகம். இவர்களைக் காட்டிலும் பக்க வாத்தியங்கள் வாசிப்போர் இன்னும் அதிகம். இப்படி வீட்டுக்கு வீடு ஆட்டமும் பாட்டும் நிறைந்திருந்தது. இங்கு வீடுகள், கற்பகத் தோட்டம், சோலைகள் அனைத்திலும் கள் அருந்தி ஆடிப் பாடி மகிழ்பவர்கள்தான் அதிகமே தவிர, கவலையால் வருந்துபவர் என்று எவருமே இல்லை. அரக்கர்களுக்கு அரக்கியர் கொடுத்த மதுவைப் பருகி, அவர்கள் பாடிய பாடலை ரசித்துக் கேட்டனர். மகளிர் உதடுகளில் ஊறிவரும் அதரபானம் அருந்தி மகிழ்ந்தனர்; அவர்களது இனிய பேச்சைக் கேட்டு ரசித்தனர், ஊடல் கொண்டு பிணங்கிட பின்கூடலும் கொண்டனர். அரக்கியரின் இளம் மார்பில் பூசிய குங்குமக் குழம்பு அரக்கர்களின் கரிய உடல்களில் படிந்து கிடந்தன. ஊடலில் கண் சிவந்த அரக்கியரின் பாதங்களில் பூசப்பட்ட செங்குழம்பு, அரக்கர் தலை மயிரில் தெரியவில்லை. (ஊடலின் போது தலைவிகளின் காலில் தலைவைத்து தலைவன் வணங்குவான், ஆகையால் அவன் தலைமயிரில் அவள் பாதச் செங்குழம்பு பட்டு சிவப்பாக இருக்கும். இங்கு அரக்கனின் தலைமயிர் நிறமே சிவப்புதான், ஆகையால் அவன் தலைவியின் காலில் தலைவைத்தாலும் நிறவேறுபாடு தெரியவில்லை) அந்த நகரத்தில் ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவுக்குச் செல்லுதல் ஒரு நாடு விட்டு மற்றொரு நாடு செல்வது போல இருந்தது.

இங்கே உள்ள படைகளில் எது பெரியது என்று இராமனிடம் போய் சொல்லுவேன். விற்படை பெரியதா, வேல்படை பெரியதா, மல்யுத்த வீரர்கள் படை பெரியதா, வாட்போர் செய்யும் வீரர்களின் படை பெரியதா, பற்பல ஆயுதங்களைக் கொண்டு போரிடும் வீரர்படை பெரியதா, எந்தப் படை பெரிது என்று சொல்லுவேன். அவர்கள் பயன்படுத்திய பல ஆயுதங்களில் கப்பணம் என்று ஒன்று. இது முள்முள்ளாக அமைந்த இரும்புத் தடி. பிண்டிபாலம் என்பது எதிரி மீது வீசித் தாக்கும் ஓர் ஆயுதம்; தண்டு, தடி போன்றவை நேரடியாகத் தாக்கக் கூடிய ஆயுதங்கள்.

இலங்கையில் பகல் நேரம் முடிந்து இரவு நேரம் கவியத்தொடங்கியது. முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனால், எல்லையற்ற செல்வம் பெற்றும் நன்கு ஆராய்ந்து செயல் புரியும் ஆற்றல் இல்லாதவனும், அறிஞர்களுடைய சொற்களைக் கேட்டு நடக்காதவனும், தான் பெற்ற அறிவுக்கேற்ப செயல் படாதவனும், உண்மை பேசாதவனுமான ஒருவன் செய்த பாவம் எனும்படியாக எல்லா புறங்களிலும் இருள் கவியத் தொடங்கியது. கொடிய போர்த்தொழிலை மேற்கொண்ட இராவணனின் ஏவலால் அரக்கர்கள் இந்திர லோகம் சென்றனர். அழகிய சந்திர மண்டலத்தையும் சென்றடைந்தனர். கோபமுள்ள கூற்றுவன் இருக்கும் இடத்துக்கும் சென்றனர். தேவலோகத்துப் பெண்கள், வித்யாதர மகளிர், நாக கன்னியர்கள், யக்ஷ பெண்கள், இலங்கையில் பணி மகளிராகத் தத்தம் பணிகளை முடித்துவிட்டு ஒருவரை யொருவர் முண்டியடித்துக் கொண்டு மின்னலைப் போல வான மார்க்கத்தில் செல்வார்கள்.

தேவர்களும், அவுணர்களும், நாகர்களும், யக்ஷர்களும், வேந்தர்களும் தத்தமது பணிமுடிந்து இருள் பிரியும்படி வான்வெளியில் செல்கின்றனர். இரவு நேரம் முழுமையாகக் கவிந்தது, நிலவும் தோன்றியது. “அதோ, இராம தூதன் வந்து விட்டான்; எந்தை இந்திரன் பிழைத்துக் கொள்வான் என்று மகிழ்ச்சியடைந்து கீழ்வானத்தில் நிலவு உதயமாகியது”.

இந்திரனின் மகிழ்ச்சி வெளிப்படுவது போல சந்திரன் அவனது வெண்கொற்றக் குடை போலவும், கடலில் மெல்ல வீசும் அலைகள் கவரி வீசுவது போலவும் தோன்றியது. வானவர்கள் அனுமனை வாழ்த்தித் தூவிய பூமழையானது, இராவணனுக்கு பயந்து மண்மீது விழாமலும், திரும்பவும் மேலே செல்ல முடியாமலும் விண்ணிடை நிற்பது போல நட்சத்திரங்கள் ஒளிர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

“அவ்வழி அனுமனும் அணுகலாம் வழி

எவ்வழி என்பதை உணர்வில் எண்ணினான்

செவ்வழி ஒதுங்கினன் தேவர் ஏத்தப் போய்

வெவ்வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான்”.

இலங்கை நகரம் அவனுக்குப் புதிய இடம். எந்த வழியில் போகலாம் என்பதையெல்லாம், அவனது உணர்வு வழிகாட்ட அவன் அந்த நகரத்துக்குள் நுழைந்து போகலானான். ஊழிக் காலத்தில் கடல் பொங்கி உலகெலாம் அழியும் நேரத்திலும் அழியாத இலங்கை மாநகரின் கோட்டை மதிற்சுவரைச் சென்றடைந்தான் அனுமன். இராவணனுக்குப் பயந்து கதிரவன் இலங்கை நகரைத் தாண்டிச் செல்வதில்லை என்பதுகூட சரியில்லை. இந்த மதிலைத் தாண்டுவது அரிது என்பதால்தான் கதிரவன் இலங்கையைத் தாண்டிச் செல்வதில்லை என்பதுதான் சரி. வலிய சிங்கத்தையும், ஆண் யானையையும் ஒத்த வலியனான அனுமன் தன்னந்தனியனாக அந்த கொடியவன் இராவணனின் கோட்டை வாயிலுக்கு வந்து சேர்ந்தான்.

அந்தக் கோட்டையை முன்னூறு வெள்ளம் படைவீரர்கள் இருபுறங்களிலும் நின்று காவல் புரிகின்றனர். கூரிய கோரைப் பற்களும், கையில் வாளும் ஏந்திக் கொண்டு அரக்கர்கள் காவல் நிற்கும் காட்சியை அனுமன் கண்டான். இந்த அரக்கர்களோடு போரிடுவதால், தாம் மேற்கொண்ட கருத்தும், நேரமும் பாழ்பட்டு போகும் என்று எண்ணியவனாய் அனுமன், இவ்வளவு காவலைக் கடந்து நேர்வழியில் உள்ளே நுழைவது இயலாது என்பது கருதி, வானரங்களுக்கே உரிய முறையில் மதில்மீதும் மரங்கள் மீதும் ஏறி உள்ளே நுழைவதென்று தீர்மானித்தான். அப்படி அனுமன் செல்லும் பாதையில் இலங்கையைக் காவல் செய்யும் இலங்காதேவி என்பவள் வந்து அவன் எதிரே நின்றாள். நான்கு முகங்களும்,எட்டுக் கரங்களும், சிவந்த கண்களும், வானை முட்டும் நெடிய உருவமும் கொண்டவள் அவல். நாலா திசைகளையும் திரும்பப் பார்த்துக் கொண்டு காவல் இருப்பவள். அவள் தோற்றமே அச்சம் தருவதாக இருந்தது. வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கு, வில், அம்பு ஆகிய ஆயுதங்களைத் தன் எட்டு கரங்களிலும் ஏந்திக் கொண்டு நின்றாள். அனுமன் மதில் மீது வருவதைக் கண்டு அவள் “நில்! நில்!” என்று கத்திக் கொண்டு அவனிடம் ஓடிவந்தாள். மாருதியும் அவளை “வா! வா!” என்று கூறி வரவேற்றான். என்ன இருந்தாலும் வானர வடிவமல்லவா, அதன்படி அனுமன் அவளை வம்புக்கிழுத்தான்.

“யாரடா நீ! கேவலம் நீ ஒரு குரங்கு. உன்னிடம் கோபம் கொள்ளுதல் கூடாது, என்றாலும் என்ன தைரியம் உனக்கு? எவரும் செய்ய அஞ்சும் காரியத்தை நீ செய்யத் துணிந்தாய். இத்தனை பேர் காவல் இருப்பதைக் கண்டு, நீ அஞ்சவில்லையா? மதிலைத் தாண்டி உள்ளே வராதே, ஓடிப்போ!” என்றாள்.

அனுமனுக்குக் கோபம் வந்துவிட்டது. என்றாலும் அறிவாளியான அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு, “எனக்கு இந்த ஊரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை. அதனால் பார்க்கலாம் என்று வந்தேன். எளியவனான நான் இங்கு வருவதால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது?” என்றான்.

“ஓடிப்போ என்று நான் சொன்ன பிறகும் போகாமல் எதிர்வாதம் செய்து கொண்டா நிற்கிறாய். அடேய்! நீ யார்? முப்புரமும் எரித்த சிவபெருமானே இங்கே வர அஞ்சுவாரே, நீ எப்படி வரத் துணிந்தாய்? இதெல்லாம் உன்போன்றோர் வரக்கூடிய இடம் இல்லை. பதில் பேசாமல் ஓடிப் போய்விடு” என்று சொல்லிவிட்டு எகத்தாளமாகச் சிரித்தாள். சிரிக்கும் அரக்கியைப் பார்த்து அனுமன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டான். அவள் மறுபடி கேட்டாள், “யார் சொல்லி நீ இங்கு வந்தாய்? உன்னை அடித்துக் கொன்றாலொழிய நீ இங்கிருந்து போகமாட்டாய் போல இருக்கிறதே” என்றாள்.

“நான் இந்த ஊருக்குள் போகாமல் திரும்பிப் போகமாட்டேன்” என்றான் அனுமன்.

அந்த இலங்காதேவி சிந்திக்கிறாள். அந்த யமன்கூட என்னைக் கண்டு அஞ்சுவானே, இவன் என்னடாவென்றால், ஆலகால நஞ்சினை உண்ட சிவபெருமான் போல சிரிக்கிறானே. சரியான வஞ்சகனாயிருப்பான் போலத் தோன்றுகிறதே. இவன் சாதாரண குரங்கு இல்லை. சரியான ஆள் இவன் என்று நினைக்கிறாள். (இங்கும் அனுமனை சிவபெருமானுக்கு ஒப்பிடுவதைக் காண்க). இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது, கொன்றுவிட வேண்டும், இல்லாவிட்டால் இந்த இலங்காபுரிக்கு இவனால் தீங்கு ஏற்படும் என்று மனதில் எண்ணிக் கொண்டு இப்போதே இவனைக் கொன்று தீர்ப்போம் என்று “ஏய்! குரங்கே, முடிந்தால் சாவைத் தடுத்துக் கொள். இந்தா!” என்று ஓர் மும்முனை வேல் ஒன்றை அனுமன் மீது வேகமாக எறிந்தாள்.

சீறிக்கொண்டு வந்த சூலாயுதத்தைத் தன் பற்களால் கடித்துத் தன் கரங்களால் ஒடித்து வானத்தில் தூக்கி எறிந்தான்” அவன் அந்த சூலாயுதத்தை முறித்து எறிந்தது கருடன் ஓர் பாம்பை முறிப்பது போல இருந்தது. தான் வீசிய சூலம் ஒடிந்து தூள்தூளானது கண்டு அந்த அரக்கி வெகுண்டு எழுந்து, சக்தி மிக்கப் பற்பல ஆயுதங்களை அவன் மீது ஏவத் தன் கைகளில் எடுத்தாள். குற்றமற்ற அனுமனோ அவள் மீது பாய்ந்து அவற்றைப் பிடுங்கி வானத்தில் வீசி எறிந்தான். சக்தி மிக்கத் தன் ஆயுதங்கள் அனைத்தும் வானவெளியில் தூக்கி எறியப்பட்டது கண்டு கடும் கோபம் கொண்ட இலங்காதேவி, பல குன்றுகளைப் பெயர்த்து, பாறைகளை அம்மானை ஆடுவது போல அவன் மீது வரிசையாக வீசி எறிந்தாள். அவனைத் தன் கரங்களால் அடிக்க ஓடினாள். அவள் அப்படி ஓடிவந்து தன்னை அடிப்பதற்கு முன்பு, அனுமன் தனது ஒரு கையால் அவளது எட்டு கைகளையும் ஒன்றாய் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, ஒரு நொடி, ஒரே ஒரு நொடி, இவள் பெண்ணாயிற்றே, இவளை எப்படிக் கொல்வது என்று சிந்தித்துவிட்டு, அவள் நெஞ்சில் ஓங்கி விட்டான் ஒரு குத்து. அனுமன் விட்ட குத்து இடி தாக்கியதைப் போல அந்த அரக்கி மார்பில் விழுந்து, அவள் ஒரு மலை வீழ்ந்ததைப் போல சுய நினைவு இழந்து கீழே விழுந்தாள்.

கீழே மயங்கி விழுந்த இலங்காதேவி, நினைவு திரும்பியபின் வருந்தினாள். தான் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டாள். முன்பு பிரமதேவன் தனக்கு இட்ட கட்டளையை நினைவு கூர்ந்தாள். உலகின் அனைத்து உயிர்களும் வணங்கும் இராமனது தூதனான அனுமன் முன் தட்டுத் தடுமாறி எழுந்து நின்று பேசுகிறாள், “ஐயனே! கேள்! தன்னை வந்தடைந்தோர்க்கெல்லாம் அடைக்கலம் தந்து அருள் தரும் பிரமதேவனின் இந்த இலங்கை நகரை நான் காவல் புரிகிறேன். என் பெயர் இலங்காதேவி. நான் செய்து வந்த தொழில் காரணமாக உன்னைத் தடுக்கும் தவறான காரியத்தைச் செய்து விட்டேன். உன்னிடம் குத்துப்பட்டு சிறுமை அடைந்தேன். எனக்கு உயிர் பிச்சை அளிப்பாயாக! நான் யார் என்கிற வரலாற்றை உனக்குச் சொல்கிறேன்” என்றாள்.

இந்த இலங்கை மூதூரைக் காவல் புரியும் தொழிலை நான் எத்துணை காலம் செய்ய வேண்டும் என்று பிரமனிடம் கேட்டேன். அதற்கு அவர் வலிமை மிக்க குரங்கு ஒன்று உன்னைத் தன் கையால் என்று பலமாகக் குத்து விடுகிறதோ, அன்றோடு முடிந்தது உன் பணி, உடனே என்னை வந்து பார், அதன் பிறகு அந்த இலங்கை நகரம் அழிந்து போகும் என்று எனக்குச் சொன்னார். ஐயனே! பிரமன் சொன்ன படியே நடந்துவிட்டது. அறம்தான் வெல்லும், பாவம் தோற்கும் என்பதுதான் சத்திய வாக்கு அல்லவா? இனி நீ கருதிய காரியம் எல்லாம் இனிதே நடக்கும். சர்வ வல்லமையுடைய உன்னால், முடியாத காரியமும் உண்டோ? இனி நீ தாராளமாக இலங்கை நகருள் செல்லலாம். என் பணி முடிந்துவிட்டது. நான் சென்று வருகிறேன்” என்று சொல்லி அந்த இலங்காதேவி அங்கிருந்து சென்றாள்.

அவள் மீது இரக்கம் கொண்டு அனுமன் அவளை அன்போடு நோக்கினான். அவள் கூறுவது உண்மைதான். அதுதானே நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டு இராமபிரானின் தாமரைப் பொற்பாதங்களை வணங்கி, இலங்கை நகருக்குள் நுழைந்தான். அது கடல் போல பாலில் ஒரு துளி உறைமோர் சேர்ந்தது போல இருந்தது.

ஒளிமயமான அந்த ஊரின் சிறப்புக்களைக் கண்டு வியந்து போனான் அனுமன். இந்த நகரத்தில் தன்னுடைய சுய உருவத்தில் செல்லுதல் இயலாது என்று எண்ணி தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு, சிறிய உருவமாக, மாளிகைகளின் ஓரமாகவே சென்றான். அவ்வூரில் பல இடங்களிலும் புகுந்து பார்த்து ஆராய்ந்து கொண்டு, எங்கும் தங்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். மாட்டுக் கொட்டில்களும், யானைகள் தங்கும் கொட்டடிகளும், பல்வகை விலங்குகள் வாழுமிடங்களிலும், குதிரை லாயங்கள், சோலைகள், பூன்சோலைகள் ஆகிய இடங்களிலெல்லாம் வண்டு புகுந்து செல்வது போல சீதாதேவி இருக்குமிடத்தைத் தேடிக் கொண்டே சென்றான்.

பற்பல மணிகளாலும், இரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட மாளிகைகள், மாடங்கள் வழியாக அனுமன் செல்கையில் அவற்றின் ஒளியானது அவன் மீது பட்டு, ஒரு சமயம் இராமபிரானின் நிறம்போல கருமையாகவும், மற்றொரு சமயம் வெண்மையாகவும், மறுபடி ருத்ரன் போல சிவப்பாகவும் தோற்றமளித்தான். வழியில் அரக்கப் பெண்கள் நீராடும் காட்சிகளையும், அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விதானங்களின்கீழ் நாடக சாலைகளில் சிந்தாமணி எனும் இரத்தினக்கல் வீசும் ஒளியில் கந்தர்வப் பெண்கள் ஆடவும், அரக்கியர் கூட்டம் கண்டு ரசிக்கும் காட்சிகளை அனுமன் கண்டான்.

வழி நெடுக அனுமன் கண்ட காட்சிகள் அனேகம். ஊடல் கொண்ட அரக்கியர் ஊடலைத் தீர்க்கவும், காமம் வளரவும், போதைதரும் நறவினை அருந்தும் காட்சிகளையும், வழிநெடுக மாளிகைகளில் பணிபுரியும் தேவமாதர்கள் இனிய கீதங்களைப் பாடி பூஜை செய்யும் காட்சிகளையும், திருமணங்கள் நடக்கும் காட்சிகள், புதுமனை புகும் காட்சிகள், காதலர்களின் ஊடலையும், பின் கூடலையும் வழியில் அனுமன் கண்டான். வழியில் யக்ஷப் பெண்கள், அரக்கியர், நாகமாதர்கள், வித்யாதரர்கள் முதலான பெண்களைப் பார்த்துக் கொண்டே வந்து அனுமன் ஓரிடத்தில் மலை போல ஒரு அரக்கன் படுத்துக் கிடப்பதைக் காண்கிறான். அந்த அரக்கன் படுத்துக் கிடந்த மண்டபம், ஏழு யோசனை நீளமும், ஏழு யோசனை அகலமும், உயரமும் அமைந்ததாக இருந்தது.

அந்த மண்டபத்தின் நடுவில் ஓர் உயரிய படுக்கையில் மலைபோன்ற அரக்கன் படுத்திருந்தான். இந்தக் காட்சியானது ஆதிசேஷன் படுத்திருப்பது போலவும், இருள் எல்லாம் ஓர் வடிவு எடுத்தது போலவும், தீவினைகள் எல்லாம் ஓர் வடிவம் எடுத்தது போலவும் இருந்தது. தூங்குகின்ற அந்த அரக்கன்தான் கும்பகர்ணன். கற்பக மரங்களிலிருந்து வீசும் காற்று இனிமையாக அவன் மீது வீசியது. அந்த காற்று கற்பகமரக் காட்டில் தோன்றி, கடல் நீரில் ஈரப்பதம் ஏற்றிக் கொண்டு, மூவகை கதிகளாக (மந்த, மத்ய, துரித) வந்து அவன் மீது வீசித் தாலாட்டிக் கொண்டிருந்தது.

உறங்கிக் கிடக்கும் கும்பகர்ணனுக்கு தேவலோக மாதர்கள் கால் வருடிக் கொண்டிருக்கிறார்கள். உறக்கத்தில் அவன் விடும் மூச்சுக் காற்று அண்டத்தின் எல்லைவரை போய் பின் அவன் நாசிக்குத் திரும்புகிறது. இதனைக் கண்ட அனுமனுக்கு உடல் கூசுகிறது. அந்தக் காற்று தன் மீது படாமல் ஒதுங்கிக் கொண்டான். மலை போல கிடந்த கும்பன் மீது அனுமனுக்குக் கோபம் வந்தது. காரணம் அங்கு உறங்குபவன் இராவணனோ என்று அனுமன் நினைத்தான். அதனால் அவனை நெருங்கிப் போய்ப் பார்த்தான். இவனுக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள்களும், இருபது கரங்களும் இல்லையே. இவன் இராவணன் இல்லை என்று தெரிந்ததும் அவன் கோபம் சிறிது தணிந்தது. அவன் இராவணன் இல்லை என்று ஆனபிறகு, வேறு யாராக இருந்தால் என்ன? நன்றாகக் கிடந்து தூங்கட்டும். இப்படியே சில காலம் தூங்கிக் கொண்டிருக்கட்டும் என்று தன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தான். அப்படி அவன் பல இடங்களிலும் சீதையைத் தேடினான்.

இராமபிரானின் தூதனான அனுமன் சீதையைத் தேடி அலையாத இடம் இல்லை. மாடகூடங்கள், மாளிகைகள், மகளிர் ஆடரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள், பாடல் வேதிகை (மேடை), பட்டி மண்டபங்கள் முதல் பல இடங்களிலும் தேடினான். அந்த நகரில் பெண்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் சீதை அங்கு இருக்கலாமோ என்று எண்ணித் தேடினான். இப்படிப் பார்த்துக் கொண்டு வருகையில் அரசர்கள், வேதியர்கள், மேலோர், கீழோர் இப்படி அனைவரும் விரும்புகின்ற புண்ணியனான விபீஷணனின் இல்லம் வந்து சேருகிறான்.

பளிங்கினால் ஆன மேடை மீது, பவழ மண்டபத்துக்குள், தேன் சிந்தும் கற்பக மலர்களையுடைய விதானத்தின் கீழ், சுற்றிலும் கருப்பு நிறத்தவர் இருக்க, தான் மட்டும் வெண்மை நிறத்தினனாக இருத்தல் அரிது என்றெண்ணி அந்த அரக்கர் கூட்டத்திற்கிடையே, தன்னை மறைத்துக் கொண்டு வாழும் தர்ம தேவதை போல விபீஷணன் இருந்தான். அங்கு படுத்திருந்த விபீஷணனை அனுமன் அருகில் நெருங்கிப் பார்த்தான். உறங்குகின்ற விபீஷணனை அனுமன் தன் உணர்வினால் எடை போட்டான். குற்றம் இல்லாத உயர்ந்த குணவான் இவன் என்று மனத்தால் அறிந்து கொண்டான். தூய்மையான சிந்தையான் இவன் என்று அவன்பால் பகைமை இன்றி, அவ்விடம் விட்டு நீங்கி வேறு பற்பல மாளிகைகளிலும் சென்று தேடினான்.

வழியில் முழு மதியோ எனும்படி முகம் படைத்த அரம்பையர் பலரையும் கண்டு, பல மாளிகைகளைக் கடந்து, தன் மனோ வேகத்திலும் கடிய வேகத்தில் அனுமன் செல்கிறான். அப்படி வருகையில் முன்பு இந்திரஜித்தால் பிடிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இந்திரன் இருந்த சிறை வாயிலை அடைந்தான். பின் அதனையும் கடந்து போனான்.

காவலுக்கு இருந்த அரக்கர்கள் கதை பேசிக்கொண்டு நிற்கையில் அனுமன் அவர்களைக் கடந்து சாமர்த்தியமாக உள்ளே புகுந்து சென்றான். புகை நுழைய முடியாத இடத்திலும் புகவல்ல அனுமன் அங்கே பெண்களுக்கிடையே முருகக் கடவுள் போல எழிலுள்ல இந்திரஜித் படுத்திருப்பதைப் பார்த்தான். அடடா! மலைக் குகையில் வாழும் சிங்கம் போல தோற்றமளிக்கிறானே இவன். அரக்கனா அல்லது முருகப் பெருமானா? வேறு யாரோ? தெரியவில்லையே. நிச்சயம் இளைய பெருமாளும் இவனும் நெடுநாள் போரிட வேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டான். இவனுக்கு நிகராகப் போரிடக் கூடியவர்கள், பிரம்ம, சிவன், விஷ்ணு இவர்களைத் தவிர வேறு யாரால் முடியும்? இவனைத் துணைக்கு வைத்திருக்கும் இராவணன் மூவுலகங்களையும் வெல்வது என்பது அரிய காரியமே அல்ல.

இங்கேயே நின்றிருந்தால் நேரம் ஆகிவிடும் என்று அங்கிருந்து புறப்பட்டு இந்திரஜித்தின் தம்பியான அக்ஷ்யகுமாரன் மாளிகையைக் கடந்தான். அதிகாயன் மற்றும் தம்பியர் இருந்த மாளிகைகளையும் கடந்தான். இராமனின் அம்பு புகுவது போல அனுமன் எல்லா இடங்களிலும் புகுந்து தேடினான். இந்திரஜித், அக்ஷயகுமாரன், அதிகாயன் மற்ற தம்பிகள் இராவணனின் புத்திரர்கள். அதாவது இராவனனின் பட்டத்து ராணி மண்டோதரியின் புதல்வர்கள் இந்திரஜித் மற்றும், அக்ஷயகுமாரன். இராவணனின் வேறொரு மனைவி தான்யமாலினி என்பாளுக்குப் பிறந்தவன் அதிகாயன். பிற மனைவியருக்குப் பிறந்த மற்ற தம்பிகளும் உண்டு.

இலங்கை நகரின் நாலாபுறங்களிலும் கடல் சூழ்ந்து அகழியைப் போல பாதுகாப்பளித்தது. நகரத்தின் இடையில் ஓர் அகழியும், இராவணனது மாளிகையைச் சுற்றி ஓர் அகழியும் இருக்க, இவற்றுள் நடுவண் அகழியைச் சென்றடைந்தான் அனுமன். அந்த கடல் போன்ற நடுவண் அகழியைக் கடந்து இடை நகருக்குள் புகுந்தான். காலனும் பயந்து ஓடும் அந்தப் பெரு நகரத்தில் நட்ட நடுநிசியில், கருமை படர்ந்த இருளில், பன்னிரெண்டு யோசனை பரப்பளவுள்ள மூன்று லட்சம் தெருக்களிலும், தான் ஒருவனாகவே சீதாப்பிராட்டியைத் தேடினான் அனுமன். அந்த நள்ளிரவில் ‘நித்த நியமத்தொழில் ம்டித்து நெடுவானத்து உத்தமர்களும்’ உறங்கிக் கொண்டிருந்தார்கள். யோகியரும் துயின்றார்கள்; மதங்கொண்ட யானைகளும் உறங்கின; பித்தர்களும் உறங்கினார்கள்; ஆனால் உறங்காத அனுமன் மட்டும் தேவியைத் தேடிக் கொண்டிருந்தான்.

இப்படி நகரமே உறங்கிக் கிடந்த நேரத்தில், அந்த நகரத்தினுள் புகுந்த அனுமன், வழியில் இருந்த வீடுகளில் இருந்த அரக்கியரைக் கண்டான். வித்யாதர மாதர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டான். அங்கெல்லாம் பெண்கள் இருந்த நிலை கண்டு இங்கெல்லாம் சீதாபிராட்டி இல்லை என்று தேறி, மேலும் தேடிக் கொண்டிருந்தான். இப்படிப் பல இடங்களிலும் தேடிக் கொண்டே இராவணனின் பெரிய அரண்மனையைச் சென்றடைந்தான். அங்கு பூரண சந்திரனைப் போன்று ஒளிவீசிக் கொண்டிருந்த மண்டோதரியின் மாளிகையைக் கண்டான். அந்த மாளிகையைத் தன் கண்களாலும், கருத்தாலும் துருவி ஆராய்ந்தான். மற்ற மாளிகைகள் போல் இல்லாமல் இந்த மாளிகை தனித்திருந்ததை கவனித்தான். மற்ற இடங்கள் எல்லாம் சாதாரண மணிகளோடு ஒப்பிடுவதென்றால், இந்த மாளிகையை, திருமாலின் திருமார்பை அலங்கரிக்கும் கவுஸ்துபத்துக்கு ஒப்பிடலாம்.

நிச்சயமாக நான் தேடி வந்த பணி முடியப் போகிறது என்று நினைக்கிறேன். சீதாப்பிராட்டியை இராவணன் நிச்சயம் இந்த மாளிகையில்தான் வைத்திருக்க வேண்டும். உள்ளே இருப்பது யார் என்று மெல்ல எட்டிப் பார்த்தான். அங்கே, அரம்பையோ! திலோத்தமையோ! என ஐயப்படும்படி அழகியப் பெண்கள் மலரடி வருட, சாமரம் வீச, மெல்லிய காற்றும், இன்னிசை பொழியவும், கற்பக மலர்கள் மணம் பரப்ப ஓர் அழகிய மாது துயின்று கொண்டிருந்தாள்.

இப்படி ஆடம்பரமாகவும் சகல சுகபோக வசதிகளுடன் உறங்குவது யார்? இவள்தான் தான் நாடிவந்த ஜானகியோ? என்று தன் மனத்துள் எழுந்த ஐயத்தோடு, கொடிய தீ தன் உடலைத் தீண்டியது போல வருந்தினான். தான் தேடி வந்த பிராட்டியா இந்த மாது? உத்தம லட்சணங்கள் அமைந்தவளாகக் காணப்படுகிறாள். நம் பிராட்டிதான் மனம் மயங்கி தவறு இழைத்து விட்டார்களோ? இந்தத் துயரைத் தாங்க முடியவில்லையே என்று வருந்துகிறான். மீண்டும் அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறான். அவள் அங்க லட்சணங்களைப் பார்க்கிறபோது இவள் மானுடப் பெண்ணாகத் தோன்றவில்லையே. அவள் முகத்தில் தன் தலைவனாம் இராமபிரானைப் பிரிந்த துயரம் காணப்படவில்லையே. அப்படியானால் இவள் சீதாபிராட்டியாக இருக்க முடியாது என்று அனுமன் உணர்ந்தான்.

ஒருவரது தோற்றத்தை வைத்து அவரைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளக் கூடிய சாமுத்ரிகா லட்சனத்தை அனுமன் அறிந்திருந்தான் என்பது இந்தக் கூற்றால் தெரிய வருகிறது.

இந்தப் பெண்ணிடம் உத்தமப் பெண்களுக்குரிய சில இலக்கணங்கள் உள்ளன. ஆனால் எல்லையற்ற துன்பத்தை இவள் விரைவில் அனுபவிக்கப் போவதும் தெரிகிறது. இவள் உறக்கத்தில் வாய் குழறி ஏதோ பேசுகிறாள். இவளது கருங்குழல் கலைந்திருக்கிறது. குழலில் சூடிய மலர் வாடி உதிர்ந்திருக்கிறது. இவள் கணவன் விரைவில் இறந்து போவான். இந்த எழில் நகரும் அழிந்து போகும் என மனதுக்குள் சொல்லிக் கொண்டான். இவ்வளவு நேரம் அனுமன் பார்த்ததும், அவளைப் பற்றி அனுமானித்ததும் இராவணனுடைய பத்தினியும், இந்திரஜித், அக்ஷயகுமாரன் ஆகியோரின் தாயாருமான மண்டோதரியாகும்.

இவள் எப்படியோ போகட்டும்! நாம் சென்று பிராட்டியைத் தேடுவோம் என்று அங்கிருந்து அனுமன் புறப்பட்டு, இராவணனுடைய உயர்ந்த அரண்மனையை அடைந்தான். இராவணனுடைய மாளிகைக்குள் அனுமன் அடியெடுத்து வைத்த போது, பூமி அதிர்ந்தது; இலங்கை முழுவதும் பூமி அசைந்தது; நீண்ட மலைகள் நிலை குலைந்து அசைந்தன; அரக்கர் குலப் பெண்களுக்கெல்லாம் வலப்புறம் துடித்தன; திக்குகள் எட்டும் ஆடின; வானத்தில் மேகங்கள் சிதறி ஓடி மோதி இடித்தன; மங்களச் சின்னங்களாக வைக்கப்பட்டிருந்த நீர் நிறைந்த பூர்ண கும்பங்கள் வெடித்துச் சிதறின.

இராவணனுடைய அரண்மனைக்குள் புகுந்து அனுமன் உற்று நோக்கினான். அவனைத் தன் அறிவுக் கண்களால் பார்த்துவிட்டு “அந்தோ! ஒப்பற்ற சிறப்பு வாய்ந்த இந்த நெடுநகரின் செல்வங்கள் யாவும் அழிந்து, நகரமும், இவன் பொருட்டு அழியுமே!” என்று இரங்கினான். எந்தக் குலத்தவராயினும், நல்வினை, தீவினை இவற்றின் பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். விதி வலிமை மிக்கது என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். கும்பகர்ணனைக் கண்டதும் சினங்கொண்ட அனுமன் இராவணனைக் கண்டதும், இவனால் இந்த நகரம் அழிந்து போகப்போகிறதே என்று வருந்தினான். இராவணன் துயில் கொள்ளும் காட்சியைக் கண்ணுற்றான் அனுமன்:

“கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் காலச் செந்தீ

விண்டன கண்கள் சிந்தி வெடித்தன கீழும் மேலும்

கொண்டதோர் உருவம் மாயோன் குறளினும் குறுகி நின்றான்

திண்தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி”.

இராவணனைப் பார்க்கும் போது, அனுமன் வாமனனைக் காட்டிலும் மிகச் சிறிய உருவம் எடுத்துக் கொண்டு நிற்கிறான். அந்த இராவணனுடைய வலிய தலைகள் பத்தையும், இருபது தோள்களையும் பார்த்து இவன்தான் இராவணன் என்பதைத் தெரிந்து கொண்டான். அப்படி அவனைப் கண்டதும் அனுமனுக்குக் கண்கள் சிவந்து ஊழிக்கால நெருப்பைப் போல கண்கள் தீ உமிழப் பார்த்தான். இவனை இப்படியே கொன்றுவிட்டால் என்ன என்று நினைத்தான்.

சீதாபிராட்டியை வஞ்சனையால் கவர்ந்து வந்த இவனை என் தோள்வலியால் நையப் புடைத்து, அவனது கிரீடங்களை எனது கால்களால் அடித்துச் சிதறச் செய்து, தலைகள் பத்தையும் பந்தாடி தலையில் உருட்டி என் ஆண்மையைக் காட்டாவிட்டால், நான் இராம பிரானுக்கு அடியவன் என்ற பெருமை இல்லாமல் போய்விடுமே! என் தோள் ஆற்றலுக்குத்தான் என்ன பெருமை? எதிர்காலம் என்னை என்ன சொல்லும்? இப்படி நினைத்துக் கொண்டு பற்களைக் கடித்து, கைகளைப் பிசைந்து கொண்டு, கோபத்தில் எழுந்து நின்று, பிறகு ஆராய்ந்து பார்த்து, ஒரு காரியத்தைச் செய்ய வந்த இடத்தில் அதை விடுத்து வேறொரு காரியத்தைச் செய்வது கூடாது. இராமபிரானும் அதனை ஒப்புக் கொள்ள மாட்டார், நான் குற்றம் புரிந்தவன் ஆகிவிடுவேன் என்று தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டான் அனுமன்.

கோபம் தணிந்த நிலையில் அனுமன் யோசிக்கிறான். இவனோடு மாதர்கள் யாரும் உடன் இல்லை. தனித்தே இருக்கிறான். காமத்தினால் வேறு நினைவு இன்றி தனித்திருக்கிறான். எனவே, பிராட்டி எங்கேயோ நல்ல நிலையில் இருக்கிறாள் என்று என் மனதுக்குத் தோன்றுகிறது என்று நினைத்துக் கொண்டான். தேவியை எங்கும் காணமுடியாமல், இன்னமும் இங்கே தாமதிப்பதால் எந்த பயனும் இல்லை, என்று இராவணன் இருப்பிடத்தைவிட்டு நீங்க முற்படும்போது, அந்தோ இந்த பெரிய நகரத்தில் சீதா பிராட்டியைக் காணவில்லையே, என்ன செய்வேன் என்று வருந்தினான். பிராட்டியை அந்த கொடியவன் இராவணன் என்ன செய்திருப்பான்? எங்கு சிறை வைத்திருப்பான்? என்று எண்ணமிடலானான்.

“கொன்றானோ? கற்பு அழியாக் குலமகளைக் கொடுந்தொழிலால்

தின்றானோ? அப்புறத்தே செறிந்தானோ சிறை, அறியேன்

ஒன்றானும் உணரகிலேன்; மீண்டு இனிப் போய் என் உரைக்கேன்

பொன்றாத பொழுது எனக்கு இக்கொடுந்துயரம் போகாதால்”.

அன்னையைக் கொன்று விட்டானோ? அல்லது தின்றுவிட்டானோ? அல்லது வெகு தூரத்தில் எங்கேனும் சிறை வைத்து விட்டானோ? ஒன்றும் தெரியவில்லையே. இனி திரும்பிப் போய் என்னவென்று இராமனிடம் சொல்லுவேன். இந்த கொடிய வருத்தம் என்னை விட்டுப் போகாது போலிருக்கிறதே என்று வருந்துகிறான்.

நான் அன்னையைத் தேடி தென் திசைக்கு வந்திருப்பதால், நான் சீதாபிராட்டியைப் பார்த்துவிட்டு வருவேனென்றல்லவா இராமபிரான் எண்ணிக் கொண்டிருப்பார். என் மன்னன் சுக்ரீவனோ, நான் சீதாபிராட்டியைக் கொண்டு வந்துவிடுவேன் என்றல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். என்னால் இரண்டையும் செய்ய முடியவில்லையே. எந்த முகத்தோடு நான் மீண்டும் இராமபிரான் முகத்தில் விழிப்பேன். அங்கதன் முதலானோருடன் நானும் சாகாமல் இப்படி வந்து தவிக்கிறேனே என்ன செய்வேன் என்று வருந்துகிறான்.

சுக்ரீவன் விதித்த தவணை நாளும் முடிவடைந்துவிட்டது. பிராட்டியை இன்னமும் காணமுடியவில்லையே. பிராட்டியைக் கண்டுபிடிக்க முடியாததால் இறந்து போகலாம் என்று சொன்னவர்களை யெல்லாம் மகேந்திர மலையில் இருக்கச் சொல்லிவிட்டு, நான் வந்த காரியத்தையும் முடிக்க முடியவில்லயே. இதன் பிறகும் நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? நல்வினை என்னைவிட்டு நீங்கிப்போய்விட்டது போலும், என்று வருந்தினான் அனுமன்.

எழுநூறு யோசனை தூரம் கடற்பரப்புள்ள, மதில்களால் சூழப்பட்ட இலங்கை முழுவதிலும் எல்லா உயிரினங்கள் இடையேயும் தேடிவிட்டேன். பிராட்டியை எங்கும் காணவில்லையே. ஆழமுள்ள கடலைத் தாண்டி வந்து துயரமாம் கடலில் வீழ்ந்து அழிய வேண்டி நேர்ந்ததே என்று வருந்தினான். அந்த கொடிய அரக்கன் இராவணனை என் கையால் பற்றி இழுத்து வாயிலிருந்து உதிரம் கொட்டும்படி என் வலிய கரங்களால் அடித்து, பிராட்டி இருக்குமிடத்தைக் காட்டு என்று சொல்ல மாட்டேனா? இந்த நகரமும் இதனை ஆளுகின்ற இராவணனும் தீயில் கருகி மாயும்படி நெருப்பை வைத்து கொளுத்த மாட்டேனா? உயிரை இன்னமும் விடாமல் தாங்கிக் கொண்டிருக்கிற நான், தேவர்களிடம் சென்று பிராட்டி இருக்குமிடத்தைக் காட்டுங்கள் என்று கேட்கலாமென்றால், இராவணன் இருக்கும் போது, பதில் சொல்லும் வல்லமை இல்லாதவர்களாகி விட்டார்களே அவர்கள், பின்பு அன்னை இருக்குமிடத்தை எப்படி அறிந்து கொள்வேன்.

சம்பாதி அன்னையை இலங்கையில் கண்டதாகச் சொன்னானே, அவன் சொன்ன செய்தியும் தவறாகிப் போயிற்றே. இந்த இலங்கை நகரைக் கடலில் அழுத்தி மூழ்கச் செய்யாமல் இன்னம் இந்த உடலைத் தாங்கிக்கொண்டு இருக்கிறேனே. சீதாதேவியை பூலோக வாசிகளும் தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கிக் கொண்டு வந்துவிட்ட அரக்கனை, நான் அழிக்கவில்லை யென்றால் என்ன பயன்? இந்த நகரத்தையும் கடலில் அழுத்தி நானும் இறந்து போவதே சரி என்று எண்ணினான்.

எள்ளளவு இடம்கூட மிச்சம் வைக்காமல் எங்கும் நிறைந்திருக்கும் இராமபிரான் போல எங்கும் சுற்றித் திரிந்த பின்பு, அடர்ந்த மலர் சோலையொன்றை அனுமன் அருகில் பார்த்தான். அது என்ன இடம்? நான் இதுவரை அந்த இடத்திற்குப் போய் பார்க்கவில்லையே, இப்போது பார்க்கலாம் என்று அங்கு போனான். இந்த வனத்திலாவது நான் அன்னையைக் கண்டுபிடித்துவிட வேண்டும். அப்படியில்லை யென்றால், இந்த இலங்கை நகரை அழித்து நானும் மாண்டு போவேன் என்று உறுதி பூண்டான்.

இப்படி உறுதி எடுத்துக் கொண்டு, அசோக வனம் எனும் பெயருள்ள அந்த சோலையுள் அனுமன் புகவும், தேவர்கள் ஒன்று திரண்டு வந்து பூமழை பொழிந்தனர். அந்த நேரத்தில் அந்த அசோகவனத்தின் ஓரிடத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாபிராட்டியின் நிலைமையைச் சற்று காண்போம் இப்போது.

அசோகவனம் எனப்படும் அந்த சோலையில், ஓர் மரத்தினடியில் வல்லரக்கியர்கள் சுற்றிலும் அமர்ந்து காவல் இருக்க, அன்னை ஜானகி, உடல் இளைத்து, அவளது எழில் வாடித் துயரம் வாட்ட வீற்றிருந்தாள். தூக்கம் என்பதே மறந்துபோன நிலையில், கண்களை இமைத்தலுமின்றி, அசதியினால் இமைகள் மூடுதலுமின்றி, நல்ல வெயில் நேரத்தில் ஏற்றப்பட்ட விளக்குபோல ஒளியிழந்த உடலோடு, மயில் போன்ற சாயலும், குயில் போன்ற இனிய குரலையுமுடைய சீதை, புலிக்கூட்டத்தில் அகப்பட்ட மான்குட்டி போல வருந்தியிருந்தாள்.

சதா இராமபிரானுடைய நினைவினால் சோர்ந்து போய் கீழே விழுவதும், விம்மி அழுவதும், உடல் சோர்வுற்று வருந்தலும், பயந்து மீண்டும் எழுவதும், ஏங்கி வருந்துவதும், பின்னர் அழுவதும், இராமனை மனத்தால் எண்ணி அவனைத் தொழுவதும், உடல் நடுங்குவதும், துயரம் மிகுந்து பெருமூச்சு விடுதலும், இவையன்றி வேறு எதுவும் தோன்றாமல் வாடியிருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டு இருந்தது. இராமபிரானின் நினைவு பொழுதெலாம் அவளை வாட்டிக் கொண்டே இருந்தது.

வானத்தில் நீருண்ட கரிய மேகத்தைக் கண்டால், உடனே இராமனது வண்ணத்தை நினைத்துப் பார்த்துக் கண்ணீர் சிந்துவாள். கண்களில் தீட்டுகின்ற மையைக் கண்டாலும் இராமனது நினவு வந்து அவளைத் துன்புறுத்தும். விதியின் வலிமையை யாராலும் வெல்ல முடியாது என்று அறிந்திருந்த போதிலும் இராமபிரான் தன் மீது கொண்ட அன்பின் காரணமாக வந்து தன்னை மீட்காவிட்டாலும்கூட, தன் குலப் பெருமையைக் காப்பாற்றும் பொருட்டாகவாவது, தன் மனைவியைப் பிறனொருவன் கவர்ந்து சென்றதற்கு பழிதீர்க்க நிச்சயமாக வருவான் என்ற நம்பிக்கையில் நாலாபுறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். உடலுக்கு உயிர் போன்ற ஆடை அணிவதைத் தவிர வேறு மாற்று உடை இல்லாமலிருந்தாள். குளிக்காமலும், மாற்று உடை அணியாமலும் புகை படிந்த சித்திரம் போல தோற்றமளித்தாள்.

மானைப் பிடிக்கச் சென்ற இராமன் குரல் கொடுக்க, அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பார்க்கச் சென்ற இலக்குவன் அவரைப் பார்க்கவில்லை போலிருக்கிறது. அப்படி கண்டுபிடித்திருந்தாலும் இப்படி கடல் தாண்டி இலங்கை இருப்பதை அறியமாட்டார் போலும். இந்த அரக்கன் இராவணன் என்னைக் கவர்ந்து வந்ததை அவர்கள் அறியமாட்டார்களோ என்னவோ? என இவ்வாறு பலவாறு சிந்தித்து ஏற்கனவே புண்ணாகியிருந்த தன் நெஞ்சத்தை தீயால் சுட்டதுபோல மேலும் புண்ணாக்கி வருந்தியிருந்தாள்.

இராவணன் என்னைக் கவர்ந்து வரும் வழியில் அவனைத் தடுத்து போர் புரிந்தானே கழுகினத்து அரசன் ஜடாயு, அவன் இறந்து போய்விட்டான் போலும். அதனால் இராமனிடம் என் நிலைமையை எடுத்துரைக்க ஆள் இல்லாமல் போய்விட்டது போலும். இனி இப் பிறவியில் இராம லக்ஷ்மணர்களைப் பார்ப்பது என்பது முடியாத காரியம் என்ற எண்ணம் அவளை மீண்டும் மீண்டும் வருத்தியது.

இராமனது குரலைப் போல அந்த மாயமான் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு இலக்குவனைப் போய் பார்க்கச் சொல்லி, அவனை நிந்தித்துப் பேசிய செய்தி கேட்டு, ‘இவள் அறிவில்லாதவள்’ என்று என்னை வெறுத்து நீக்கி விட்டாரோ? அல்லது முற்பிறப்பில் செய்த ஊழ்வினையோ? என்று வாய் உலர்ந்து போக, உணர்வு தேய்ந்து போக வருந்தி துயர் உறுவாள்.

தான் உட்கார்ந்த இடத்தைவிட்டு சற்றும் அகலாத சீதை, இனி இராமனுக்கு இலை போட்டு யார் உணவு பரிமாறுவார்கள்? விருந்தினர் யாரேனும் முனிவர்கள் வந்து விட்டால், அவர்களை இராமன் எப்படி உபசரிப்பார் என்றெண்ணி வருந்துவாள். இரவானாலும் சரி, பகலானாலும் சரி, எப்போதும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள் சீதாபிராட்டி. தன்னைக் கவர்ந்து கொண்டு வந்து கொடுமையும், வஞ்சனையும் உடைய அரக்கர்கள் என்னை இவ்வளவு நாட்கள் உயிரோடு வைத்திருக்க மாட்டார்கள், தின்றிருப்பார்கள் என்று தீர்மானித்திருப்பாரோ? அல்லது தன் குலப் பெருமைக்கு ஏற்ப பொறுமையைக் கடைப்பிடித்து, கோபத்தைத் தணித்துக் கொண்டாரோ? என்னவென்று எண்ணுவது என்று வருந்தினாள்.

ஒருவேளை, பெற்ற தாய்மார்களும், தம்பி பரதனும் காட்டிற்கு வந்து மறுபடியும் வருந்தி அழைத்துக் கொண்டு நாட்டிற்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்களோ? ஆனால் வாக்களித்தபடி பதினான்கு ஆண்டுகள், காட்டில் வாழாமல் நிச்சயம் நாடு திரும்ப மாட்டார், அதனால் அவ்விருவருக்கும் ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்க வேண்டுமென்று எண்ணி மனம் நொந்தாள். முன்பு முரன் என்ற அசுரனைத் திருமால் வதம் செய்தாரே, அவனைப் போன்ற அசுரர்கள் எவரோடும் போர் ஏற்பட்டு விட்டதோ?

முன்பு கைகேயி கோசல நாடு இனி உன் தம்பி பரதனுக்கு என்றபோது, முன்னிலும் மும்மடங்கு முகப் பொலிவுடன் ஏற்றுக் கொண்ட இராமபிரானுடைய முகத்தை இனி என்று நான் காண்பேன்? உண்மையான ராஜ்ஜியம் என்கிற செல்வம் இனி உனக்கு என்று தந்தை தசரதன் கூறிய போதும், இந்தச் செல்வங்களைத் துறந்து காட்டுக்குப் போ என்று கைகேயி சொன்ன போதும், அன்றலர்ந்த செந்தாமரை என முகம் மலர்ந்து ஏற்றுக் கொண்ட இராமபிரான் திருமுகத்தை என்று நான் காண்பேனோ?

“ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய

ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின்தம்பி, நீ

தோழன், மங்கை கொழுந்தி ‘ எனச் சொன்ன

வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்”.

கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள்.

காட்டில் கரன், தூஷணன் முதலியவர்களோடு பெரும் அரக்கர் படையைக் கணப் பொழுதில் வென்று அழித்த இராமபிரான் என்னை மீட்க வராமல் இருக்கிறாரே. தன் மணநாளில், திருமண வைபவத்தின் போது நிகழ்ந்த பாணிக்ரஹணம் ஸப்தபதியின் போது தந்தை ஜனகன் என் கரங்களைப் பற்றி அவர் கரங்களில் ஒப்படைக்க, அவர் என் பாதத்தைத் தன் ஒளிக்கையால் பற்றி ஒன்பது அடிகள் எடுத்து வைத்ததை நினைவுகூர்ந்து வருந்துகிறாள்.

தன் தாய் வாங்கிக் கொடுத்த ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொண்டு பொன்முடி தரிக்க வேண்டிய பரதன், திரித்து விட்ட சடைமுடியோடு மரவுரி தரித்து கானகம் வந்த அவன் அன்பை எண்ணி இராமபிரான் வருந்தியதை எண்ணிப் பார்க்கிறாள். தந்தை சொற்படி கானகம் செல்ல புறப்படும் முன்பாக கோதானம் செய்ய வேண்டி திரிசடன் எனும் அந்தணனுக்கு ஓர் பசுக் கூட்டத்தைத் தானமாகக் கொடுத்தபோது, தன் ஆசையை வெளிக் காட்டிக் கொண்டு நின்ற அந்த பிராமணனைப் பார்த்து சிரித்த இராமனை எண்ணி மருகுகிறாள். விராடன் எனும் அரக்கனின் பாவ வினைகளைப் போக்கி, சாபத்தைப் போக்கிய இராமனின் செயலை எண்ணிப் பார்க்கிறாள்.

இந்திர குமாரனாகிய சயந்தன் என்பவன், காகம் உருவில் வந்து தனக்கு தொல்லை கொடுக்க, அவன் மீது ஒரு புல்லை எடுத்து மந்திரம் சொல்லி அக்னி அஸ்திரமாக ஏவ, அது சயந்தன் கண்ணை மட்டுமல்ல, காக்கைக் கூட்டம் முழுதுக்குமே ஒரு கண் போன செயலை எண்ணிப் பார்க்கிறாள். இது குறித்து பெரியாழ்வார் பாசுரம் “நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்” எனத் தொடங்கும் “சீதைக்கு அனுமன் தெரிவித்த அடையாளம்” என்ற தலைப்பில் வரும் பாடல் நினைவு கூரத்தக்கது:

“சித்திரக் கூடத் திருப்பச் சிறு காக்கை முலை தீண்ட

அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி

‘வித்தகனே! இராமாவோ! நின் அபயம்! என்றழைப்ப

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்”.

அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாபிராட்டிக்குக் காவலாக கொடிய அரக்கியர் பலர் சுற்றி இருந்தனர். அவர்களுள் திரிசடை என்பாள் மட்டும் சீதையிடம் அன்பு பாராடுபவளாகவும் இன்சொல் பேசுபவளாகவும் இருந்தாள். அனுமன் அந்த அசோகவனத்தை அடைந்த நேரம் இரவு நடுச்சாமத்தை அடைந்துவிட்ட படியால், திரிசடை தவிர மற்றவர்கள் தூக்கமாகிய போதை மயக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். மற்ற அரக்கியர் தூங்கிவிட்ட படியால் சீதை அந்தத் திரிசடையிடம், நீ என்னிடம் அன்பு கொண்டவளாக இருக்கிறாய், உன்னிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் என்று பேசத் தொடங்கினாள்.

“அன்பு கொண்ட திரிசடை! எனக்கு இடப்பக்கக் கண் துடிக்கிறது. இதனால் விளையப் போவது என்ன? என் துயரங்கள் நீங்கி நன்மை விளையப் போகிறதா? அன்றி மேலும் தணியாத தீமைகள் விளையுமா? என்று புரியவில்லை” என்கிறாள் சீதை.

“முன்பு இராமன் விஸ்வாமித்ர முனிவருடன் மிதிலையில் வந்து சேர்ந்த அன்றும், என் இடக் கண் துடித்தது. இன்றும் அதுபோல துடிக்கிறதே. இதன் காரணத்தை எனக்குச் சொல்” என்றாள். “இன்னொன்றும் சொல்ல மறந்து விட்டேனே, அதையும் கேள். அறம் தரும் சிந்தையனாகிய ஆதிநாயகன் இராமபிரான் தனக்கு உரிமையுள்ள நாட்டைத் தன் தம்பிக்குக் கொடுத்து விட்டு, நாங்கள் கானகம் புகுந்தபோது, எனது வலம் துடித்தது. கானகத்தில் இராவணன் என்னைக் கவர்ந்து செல்ல வந்த நேரத்திலும் எனது வலப்புறம் துடித்தது. இப்போது இடப்புறம் துடிக்கிறது. இதனால் விளையப் போவது என்ன என்பதை எனக்குச் சொல்லேன்” என்கிறாள்.

இப்படி பிராட்டி திரிசடையிடம் கேட்டதும், அவள் சொல்கிறாள், “மங்களம்! சுப சோபனம்! நன்மையே உண்டாகும். இவ்வாறு உனக்கு இடக்கண் துடிப்பதால், நீ உன் கணவனை அடைவது நிச்சயம். அதுமட்டுமல்ல, நான் கூறப்போவதையும் கேள்” என்று அவள் மேலும் பேசுகிறாள்.

“ஒளி மிகுந்த சீதே! உன் உடலின் பசப்பு நிறம் நீங்க, உன் உயிர் உயிர்ப்புற, இனிய இயல்பும், நல்லிசையும் கொண்ட பொன் நிற வண்டு ஒன்று உன் காதருகே வந்து பாடிச் சென்றதை நான் கண்டேன். இப்படியொரு பொன்வண்டு வந்து உன் காதருகே பாடினால், உன் கணவனால் அனுப்பப்பட்ட தூதன் ஒருவன் இங்கு உன்னைக் காண வரப்போவது உறுதி. கொடியவர்களுக்கு தீமை ஏற்படப் போவதும் திண்ணம். நான் சொல்லப்போகும் செய்திகளையும் கேள்!”.

“வேல்விழியாளே! நீ தூங்குவதே இல்லையாதலால் உனக்குக் கனவுகள் வருவது இல்லை. நான் ஒரு கனவு கண்டேன். என் கனவு பழுதின்றி எப்போதும் பலிக்கும். என் கனவைச் சொல்கிறேன் கேள்! சீதே! பெருமை பொருந்திய இராவணன், சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு, தன் பத்துத் தலைகளிலும் வழிய வழிய எண்ணெய் தடவிக் கொண்டு, கழுதைகளும், பேய்களும் பூட்டப் பெற்ற வலிய பெரிய தேரின் மீது ஏறிக்கொண்டு, தென் திசை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். இராவணனைச் சேர்ந்த மற்றவர்களும், உறவினர்களும் அதே தென் திசை நோக்கிப் போகின்றனர். போனவர் ஒருவரும் திரும்பி வரவில்லை. இக்கனவை தடையின்றி கண்டேன். இது தீமை விளையப் போவதின் அறிகுறி. இதைவிட அதிகமான செய்திகளும் என் கனவில் வந்தன, அவற்றையும் சொல்கிறேன், கேள்!”

“இராவணன் நித்ய அக்னிஹோத்ரம் செய்வதற்காக வீட்டில் அக்னி வளர்த்து பாதுகாத்து வருகிறான். அந்த புனித அக்னி அணையாமல் இறுதிவரை பாதுகாக்க வேண்டிய ஒன்று. ஆனால், அது அணைந்து போனது. அந்த அக்னி இருந்த இடத்தில் செம்மை நிறத்தில் கரையான்கள் கூட்டம் கூட்டமாகத் தோன்றி வளர்ந்தன. இல்லத்தில் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் மணி விளக்குகள் நெடுங்காலமாக இருந்து வந்தன. வானத்தில் தோன்றிய பேரிடி ஒன்று விடியற்காலையில் அவற்றைத் தாக்கி அனைத்தும் அணைந்து போயின. பெண் யானைகள் மதநீர் சொரிந்தன. அரண்மனை முரசங்கள் ஒருவரும் முழங்காமலே தானாக இடிபோல் முழங்கின. வானத்தில் மேகமே இல்லாமல், மின்னலும், இடியும் தாக்கி நட்சத்திரங்கள் உதிர்ந்தன.”

“பொழுது விடியும் முன்பே கதிரவன் உதித்து பகல் தோன்றியது. அரக்கர்களின் பிள்ளைகள் சூடியிருந்த கற்பக மலர்கள் நறுமணம் வீசாமல், புலால் நாற்றம் வீசின. இந்த இலங்கை நகரமும், எட்டுத் திக்குகளும் தீப்பிடித்து எரிகின்றன. மங்கல சின்ஙங்கள் அழிந்து சிதறிப் போயின. நகரத்தின் விளக்கின் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்தது. தோரணக் கம்பங்கள் முறிந்து விழுகின்றன. யானைகளின் தந்தங்கள் முறிந்து விழுகின்றன. அந்தணர்கள் ஸ்தாபித்த பூரணகும்பத்தின் புனித நீர் கள்ளைப் போல பொங்கி மேலே எழுகின்றன. வானத்தில் நட்சத்திரங்கள் சந்திர மண்டலத்தைப் பிளந்துகொண்டு மேலே செல்கின்றன.”

“வானத்திலிருந்து சொரியும் மழை குருதிப் புனலாக ஊற்றுகிறது. போர்க்கருவிகள் இயக்குவார் இன்றி தானாகவே ஒன்றுக் கொன்று பகைத்துப் போர் புரிகின்றன. அரக்க மாதர்கள் கழுத்திலிருந்த மங்கல நாண்கள் தானாகவே அறுந்து விழுகின்றன. இதுமட்டுமல்ல, இது போன்ற தீய சகுனங்கள் மேலும் பல உண்டு கேள்!” என்று திரிசடை சொல்லிக்கொண்டே செல்கிறாள்.

“இராவணனுடைய மனைவியும், மயன்மகளுமான மண்டோதரி தலைவிரி கோலமாகத் தோன்றுகிறாள். அவள் தலை மயிரில் தீப்பிடித்து, மயிர் தீய்ந்து போகும் நாற்றம் பரவுகிறது. இந்தக் கனவினால், அரக்கர்களுக்குத் தீமையும், அழிவும் ஏற்படப்போவது திண்ணம். இதுவரை நான் சொன்ன கனவுகள் ஒருபுறம் இருக்கட்டும், இப்போது சிறிது நேரம் முன்பாக, நான் உறங்கி எழும் முன்பு நான் கண்ட ஓர் கனவைக் கேள்! வலிமை வாய்ந்த இரண்டு ஆண் சிங்கங்கள், பெரிய புலிக்கூட்டத்தை அழைத்துக் கொண்டு, ஒரு மலையின் வழியில் வருவதாகக் கனவு கண்டேன். வலிமை கொண்டு தாக்கிப் போர் புரியும், மதம் கொண்ட யானைகள் நிறைந்த காட்டை, அந்த இரு ஆண் சிங்கங்களும், புலிக் கூட்டமும் எதிர்த்துத் தாக்கின. எண்ணற்ற யானைகளை அவை கொன்று வீழ்த்தி, இறுதியில் ஓர் மயிலைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போகின்றன.”

“சிவந்த நிறமுடைய ஒரு பெண், ஆயிரம் திரிகளைக் கொண்ட விளக்கு ஒன்றைக் கையில் ஏந்தி, இராவணன் மாளிகையிலிருந்து கிளம்பி, விபீஷணன் மாளிகையைச் சென்றடைகிறாள். பொன் மயமான விபீஷணன் மாளிகையில் அந்த மாதரசி நுழைந்த நேரத்தில், நீ என்னை உறக்கத்தினின்று எழுப்பி விட்டாய். என் கனவு முடிவு பெறவில்லை” என்று திரிசடை சொன்னாள்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு சீதாபிராட்டி, “தாயே! உன் கனவின் எஞ்சிய பகுதியையும் கண்டுவிட்டு எனக்குக் கூறு, இப்போது கனவு காண்பதற்கு உறக்கம் கொள்!” என்றாள்.

இந்த சமயம் பார்த்து, இராமதூதனான அனுமன், அந்த இடத்திற்கு வந்து சேருகிறான். சீதாபிராட்டி இருக்கும் நிலைமையைப் பார்க்கிறான். அதுவரை தூங்கிக் கொண்டிருந்த காவல் அரக்கியர் தூக்கம் கலைந்து எழுந்தனர். அவர்கள் தத்தமது கைகளில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சீதையைச் சூழ்ந்து கொண்டனர். அந்த அரக்கியரின் தோற்றத்தைச் சிறிது பார்ப்போமா?

இந்த அரக்கிகளுக்கு வயிற்றின் இடையே வாய் அமைந்திருந்தது. முன் நெற்றியில் பதிக்கப்பட்டது போன்ற கண்கள். கொடிய பார்வையுடையவர்கள். ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையே, யானை, யாளி, பேய் முதலியன தூங்கும். வாய் பெரிய குகை போன்றது. இவர்களுக்குப் பத்து கரங்கள். ஒற்றைத் தலை மட்டும் உண்டு. சிலர் இருபது தலைகளும் இரண்டு கைகளும் உடையவர்கள். இவர்கள் பயங்கரமான தோற்றமுடையவர்கள். மாறுபட்ட வடிவம் எடுப்பவர்கள். பருத்த மலைபோன்ற பல முலைகளை உடையவர்கள். பற்பல ஆயுதங்களைத் தாங்கியவர்கள். விஷத்துக்கு ஒரு உருவம் கிடைத்தாற்போன்ற உடல் அமைந்தவர்கள்; மண்டை ஓட்டைக் கையில் வைத்துள்ள வைரவ மூர்த்தியே பயங்கொள்ளும் அளவுக்குக் கொடூரத் தோற்றமுடையவர்கள்.

இவர்களது முகங்கள், யானை, குதிரை, வேங்கை, பெரிய கரடி, யாளி, பேய், சிங்கம், நரி, நாய் என மிருகங்களைப் போல அமைந்திருந்தன. முகம் முதுகில் இருக்கும்; சிலர் மூன்று விழிகளையுடையவர்கள்; கொடுந்தொழில் புரிபவர்கள்; கொண்ட சீற்றத்தினால் எப்போதும் புகைக்கும் வாயினர். இந்த அரக்கிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டு நின்றவுடன், சீதாபிராட்டி பேச்சு அடங்கி, அந்த கொடிய முகங்களைக் கண்டு அழத் தொடங்கினாள். இதைக் கவனித்துக் கொண்டிருந்தான் அனுமன். உடனே விரைந்து வந்து பிறர் அறியா வண்னம் அருகிலிருந்த ஓர் உயர்ந்த மரத்தின் கிளையில் வந்து அமர்ந்து கொண்டு கீழே நடப்பனவற்றைக் கவனிக்கத் தொடங்கினான். கூட்டமாக வந்து நின்ற அரக்கியருக்கிடையே கருநிறத்துச் செம்மல், இராமபிரானின் தேவியை, மேகக் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு தோன்றும் மின்னலைப் போல கருமை நிற அரக்கியர் கூட்டத்தில் கண்டான். சுற்றிலும் அரக்கியர் கூட்டம். நடுவில் கண்ணீர் வெள்ளத்தில் வருந்துகின்ற தேவி, இவள் நிச்சயம் சீதாபிராட்டிதான் என்று மனதில் நிச்சயித்துக் கொண்டான்.

“ஆகா! இவள் சீதாபிராட்டியே தான். இதுவரை நான் பட்ட பாடு வீண் போகவில்லை. தர்மம் அழியவில்லை. நானும் இனி இறக்க மாட்டேன். இதுவரை தேடிய தேவியை நான் இங்கே கண்டு கொண்டேன். ஆகா! ஆகா! சீதா தேவியைக் கண்டு பிடித்து விட்டேன்” என்று ஆனந்த மிகுதியால் ஆடினான், பாடினான், அங்கும் இங்கும் தாவிப் பாய்ந்து ஓடினான், உலவினான். என்னதான் மகா பண்டிதன் ஆனாலும், என்னதான் வலிமை மிக்க வீரன் என்றாலும், என்னதான் விவேகி என்றாலும், தான் கொண்ட கோலம் வானரக் கோலமன்றோ! அதற்கேற்ப அவன் தனது மனதின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்.

விலை மதிப்பற்ற இரத்தினக் கல் தூசு படிந்து கிடப்பது போல, சூரிய ஒளியினால் மங்கித் தெரியும் சந்திரன் போல, நெய் தடவி வாரி முடிக்காமல் கலைந்த கேசத்தோடு விளங்கும் பிராட்டியின் கற்பும், காவலும் மாசுபடாமல் நெருப்பாய் விளங்குகின்றதே. அறத்திற்கும் அழிவு உண்டோ? என்ன சொல்வேன். எதைச் சொல்லி புகழ்வேன். இராமபிரானின் வீரக் கழலணிந்த புயங்களைப் புகழுவேனோ? மங்கையர் திலகமாம் பிராட்டியின் மனத்தின் மாண்பைப் புகழுவேனோ? மன்னர்களில் சிறந்தோன் ஜனகனின் குலத்துப் பெருமையைப் புகழுவேனோ? எதனைப் புகழுவேன், எப்படிச் சொல்லுவேன்?

தேவரும் கெடமாட்டார்கள்; தெய்வ அந்தணரும் பிழை செய்ய மாட்டார்கள்; தர்மத்துக்கும் அழிவு கிடையாது; என் தலைவனான இராமபிரானுக்கு நான் செய்யும் பணியிலும் தவறு ஏற்படாது. இனி என்னால், செய்ய முடியாதது எது உண்டு? இராமபிரான் அருள் இருக்கும்போது.

குற்றமற்ற பிராட்டிக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டிருக்குமானால், இராமபிரானின் கோபம் எனும் கடல் பொங்கி இந்த உலகையே அழித்திருக்கும். பிராட்டிக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை, எனி என்ன? எல்லையற்ற காலம் இவ்வுலகம் அழியாமல் நிலைத்திருக்கும். நல்ல குலத்திலே உதித்து, உயர்ந்த குணங்களும், நற்பண்புகளும் சிறந்து விளங்க, இல்லற தர்மத்தில் சிறப்புற்று கற்பின் நெறியில் வாழும் பெண்களின் தவச் சிறப்புக்கு முன்பாக, தீயின் நடுவில் நின்றும், ஐம்புலன்களை அடக்கியும், உண்பதும், பருகுவதுமான உணவுகளை நீக்கித் தவம் செய்பவர்களின் சிறப்பும்கூட எதிர்நிற்கமுடியுமா?

பிராட்டியின் தவச் சிறப்பால், இராவணன் முதலான கொடிய அரக்கர்கள் அழிவார்கள். இனி முனிவர்கள், அருந்தவர் முறையின் ஒழுகுவர். பெண்களின் அறத்தின் மாண்பினால்தான் சமூகம் நெறியில் வாழ்கிறது. அன்னையை தருமம்தான் காத்ததோ? ஜனகன் செய்த நல்வினை காத்ததோ? இவர் மேற்கொண்ட கற்பு நெறியே இவரைக் காத்ததோ? அருமை! அருமை! யாரால் இப்படிப்பட்ட தவ ஒழுக்கத்தை மேற்கொள்ள முடியும். இவர்தம் பெருமை என்னால் உரைக்க முடியுமோ?

அரக்கர்கள் செல்வத்தில் சிறந்து விளங்குகின்றனர். கொடுந்தொழிலை மேற்கொண்டனர். அவர்கள் இட்ட பணியைச் சடுதியில் முடித்திட தேவர்களும் காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அரக்கர்களுடைய செல்வத்தை விரும்பியோ, அல்லது அவர்களது கொடுமைக்கு அஞ்சியோ, உதவிக்கு வர ஒருவரும் இல்லை என்ற அச்ச உணர்வாலோ, பிற மகளிர் அரக்கரின் ஆசைக்கு அடிபணிந்து விடலாம். ஆனால், பிராட்டியின் கற்புத் தீ உயர்ந்த தர்மத்தையும், நற்பண்பையும், நிலை நிறுத்தி விட்டது. இவ்வாறு எண்ணியபடி அனுமன் ஓர் பெரிய மரத்தில் மறைந்து கொண்டு என்ன நடக்கிறது என்று கவனித்தான், அப்போது இராவணன் அங்கு வந்து சேருகிறான்.

மலைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது போன்ற தோற்றமும், இருபது தோள்களும் பளிச்சிட தலையில் அணிந்த மகுடங்கள் ஒளிவீச இராவணன் வந்து சேர்ந்தான். இராவணன் வந்ததும், அவன் பின்னே, பரிவாரங்கள் உபசரித்த வண்ணம் வந்த காட்சியும் பார்க்க சுவாரசியமாக இருந்தது. இன்றைய அரசியல் தாதாக்களை ஒத்திருக்கும் இந்தக் காட்சி எந்தக் காலத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறது.

தேவலோகத்தார் எல்லாம் இராவணனிடம் ஏவல் புரிபவர்களாக இருக்கிறார்களல்லவா, அந்த வகையில் தேவலோக அழகி ஊர்வசி, இராவணனுடைய உடைவாளை ஏந்திக் கொண்டு அவன் பின்னால் வருகிறாள். மேனகை அவனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்கிறாள். திலோத்தமை அவன் காலணிகளைச் சுமந்து வர, மற்ற தேவலோகத்து மாதர்கள் அவனைச் சூழ்ந்துவர, உடலில் பூசிய நறுமணச் சாந்தும் அணிந்துள்ள மலர் மாலைகளும் மணம் வீச, இராவணன் ஆடம்பரமாக நடந்து வந்தான்.

தூங்கிக் கொண்டிருந்த இராவணனுக்கு சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை என்கிற கோபம், தன் மோகத்துக்கு இடையூறு ஏற்பட்டுவிட்டது கண்டு தூக்கத்தைத் தொடர முடியாமல் எழுந்து வந்து விட்டான். இந்தக் காட்சியை மறைந்து இருந்த அனுமன் என்னதான் நடக்கிறதென்று பார்க்கலாமென்று “ராம” நாமத்தைச் ஜெபித்துக் கொண்டு இருந்தான். கூட வந்த தேவ மகளிர் ஒதுங்கி நிற்க, இராவணன் மட்டும் சீதையை நெருங்கி வந்து நின்றான். அவனைக் கண்டதும் அன்னைக்கு உடல் கூசியது, உயிர் நடுங்கியது. காமவசப்பட்டு இராவணன் பதற்றத்துடன் நிற்கிறான். இதைக் கண்ட அனுமன் சீதையின் மேன்மையை எண்ணிக் கொண்டு ‘வாழ்க சீதாபிராட்டி, வாழ்க இராமபிரான், வாழ்க வேதங்கள், வாழ்க அந்தணர், வாழ்க நல்லறம்’ என்று மனதுக்குள் வாழ்த்துகிறான். ஒவ்வொரு யுகத்திலும் புகழை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளும் மாருதி.

உலகமே கண்டு அஞ்சும் இராவனன் சீதையிடம் சென்று, “நீ என்னிடம் இரக்கம் கொள்ளப் போவது எப்போது?” என்கிறான். சிவபெருமானிடத்தும் தன் வலிமையும், பெருமிதமும் குறையாத இராவணன், காமவசப்பட்டதனால், சீதையிடம் மண்டியிட்டுக் கெஞ்சுகிறான்.

“இதுநாள் வரை வீணாகிவிட்டது. இனி வரும் நாட்களும் வீணாகாமல், அருள் செய்ய மாட்டாயா? உன்மீது மோகம் கொண்ட என்னைக் கொன்ற பின்னர்தான் மனம் மாறுவாயோ? என் செல்வத்தைத் துச்சமென் இகழ்ந்து விட்டாய். நீ இராமனோடு கானக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அயோத்தி சென்று வாழ்வது என்பது அற்ப வாழ்க்கை அல்லவா? வாழ்நாள் ஒவ்வொன்றும் கழிந்து போனபின் இளமை திரும்ப வரப்போவதில்லை. இன்பம் பெற வேண்டிய இளவயதை வீணடித்து விட்டால், அதனைப் பெறுவது எப்போது?. உன் மனம் வாழுமானால், என் உயிர் நீங்கிவிடும். உன் அழகுக்கும் ஏற்றவர் இவ்வுலகில் என்னத் தவிர வேறு யார் உளர்? பெண்மையும், பேரழகும் பிறழாத மனத் திட்பமும் உன்னிடம் உள்ளன. கருணையும், கொடையும் மறந்தது ஏன்?”

“அன்று இராமன் ஓ சீதா! ஓ இலக்ஷ்மணா! என்று அலறியதைக் கேட்ட பின்னும் அவன் உயிருடன் இருப்பதாகவா நினைக்கிறாய். உனக்கு நல்வாழ்வு காத்திருக்க, நீ அதை வேண்டாமென்று ஒதுக்குதல் நன்றோ? நான் உயிர் துறந்தால் என் செல்வம் எல்லாம் அழிந்து விடும். நீ என்னிடம் வந்து விட்டால், என் செல்வம் மேலும் செழித்து வளரும். மாறாக நீ என்னிடம் வந்ததால், செல்வம் அழிந்தது எனும் பெரும் பழியை ஏற்கப் போகிறாயா? நீ என்னிடம் சேர்ந்துவிட்டால், மூவுலகங்களுக்கும் தலைமை உனக்கு வந்து விடும். அதை வேண்டாம் என்கிறாயே, உனக்கு அறிவு இல்லையா?”

“மூவுலகங்களையும் வெற்றி கொண்ட நான், உனக்கு அடிமை என்னை அருளோடு ஏற்றுக் கொள்” என்று கரங்களைக் கூப்பிக் கொண்டு, மண்ணில் வீழ்ந்து சீதையை வணங்கினான்.

இராவணனுடைய தீய சொற்கள், அன்னையின் செவிகளைத் தீய்த்தன. அவள் மனம் கொதித்தது. கள்களில் குருதி கொட்டியது. தன் உயிர் போவதையும் பொருட்டாக எண்ணவில்லை. அந்த இராவணனை நோக்கி கடுமையான சொற்களில் பேசலானாள்.

“நீ ஒரு துரும்புக்குச் சமானமானவன். நீ பேசுகின்ற சொற்கள் இல்லறம் மேற்கொண்ட நல்லறப் பெண்களுக்கு ஏற்றதல்லை. என் மனம் கல் போன்று உறுதியானது. உலகில் கற்பெனும் திண்மையைக் காட்டிலும் உயர்ந்தது உண்டோ? நான் சொல்வதைக் கேள்! அறிவற்றவனே! இராமன் விடும் அம்பின் வலிமை உனக்குத் தெரியுமா? இராமனது அம்பு மேரு மலையைத் துளைக்க வல்லது. வானைக் கிழிக்க வல்லது. அதனைக் கடந்து அப்புறம் சென்று பதினான்கு உலகங்களையும் அழிக்க வல்லது. இதனை அறிந்திருந்தும், பழிபடும் சொற்களைப் பேசி உன் பத்துத் தலைகளையும் சிதற வழி வகுக்கிறாய்”.

“இராமனது அம்பின் வலிமைக்கு அஞ்சித்தானே நீ, ஓர் மாயமானை ஏவிவிட்டு அதன் பின்னால் இராமன் சென்ற நேரம் பார்த்து, வஞ்சகத்தால் மாறுவேடம் பூண்டு ஓர் துறவியைப் போல வந்தாய். உனது அரக்கர் குலத்தையே வேரறுக்க வந்த என் நாயகனை, அவர் போரிட வரும் போது நேருக்கு நேராக உன்னால் பார்க்க முடியுமா? உனக்கு உன் உயிர் பிழைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், இப்போதே என்னை என் இராமனிடம் கொண்டு போய் சேர்த்து விடு!”.

“ஜடாயுவால் தாக்கப்பட்டு தரையில் விழுந்தவன் தானே நீ! உன் பத்துத் தலைகளும் இருபது தோளும் போர்க்களத்தில் இராமனுக்குத் திருவிளையாடல் புரியத் தக்க இடமாகத்தான் இருக்கும். ஜடாயுவிடம் தோற்றாய். அதனால் அவனை சிவன் தந்த வாளால் வெட்டிக் கொன்றாய். அந்த வாள் மட்டும் உன்னிடம் இல்லையென்றால், அன்றே நீ மாண்டு போயிருப்பாய். எமனிடமிருந்து வப்பிக்க வரங்களைத் தவம் செய்து பெற்றய். இராமனின் அம்புகளிடமிருந்தும் நீ தப்பிக்க விரும்பினால், தவறுகளைத் திருத்திக் கொள்.”

“நீ சிவனிடம் பெற்ற சந்திரஹாசம் எனும் வாளும், பிரம்மதேவன் முதலானோர் கொடுத்த அரிய பெரிய வரங்களும், இராமன் வில்லில் அம்பைத் தொடுத்த அடுத்த கணம் உன்னைவிட்டு விலகிச் சென்று அழிந்து போகும். இது சத்தியம். விளக்கின் முன்பாக இருள் நிலைத்திருக்க முடியுமா? கயிலை மலையை நீ பெயர்த்து எடுத்த போது, கால் விரலால் மலையை அழுத்தி உன்னை வாட்டியெடுத்து வென்ற சிவபெருமான், திரிபுரங்களை எரிப்பதற்காக மேருமலையை வில்லாக வளைத்துத்தான் அம்பைச் செலுத்தினார். அந்த வில்லை இராமன் தூக்கி முறித்து வலுவிழக்கச் செய்த ஒலியை நீ கேட்கவில்லையோ? என்ன அதிசயம்!”.

“கயிலை மலையைப் பெயர்த்தவன், திசக் களிறுகளை வென்றவன் என்றெல்லாம் தற்பெருமை பேசிக் கொள்ளுகின்ற நீ, வில்லேந்திய கையனாக இலக்குவன் எனக்குக் காவல் இருந்தபோது, அவன் முன்பு வரத் துணிவில்லாத நீ, அந்த அவமானம் போதாதென்று, பெண்களின் காலில் வந்து விழுகிறாயே, சீ! அறிவற்றவனே! நீ வாழும் இடத்தைக் க்ண்டு பிடித்து என் தலைவன் இராமன் இங்கே வருகின்ற நாளில், இந்த இலங்கையும், இதைச் சூழ்ந்த கடலும் அழிந்து போகும். அதோடு மட்டும் இராமபிரான் கோபம் அடங்கி விடுமோ? உன் உயிரப் போக்கிய பின் அடங்குமோ? அவரது கோபத்தால் இந்த உலகமே நிலைகுலையப் போகிறது”.

“மூவுலகமும் நடுங்கக் கொடுஞ் செயல் புரிந்து வாழும் கொடியவனே! நீ புரியும் இந்தக் கொடுந்தொழிலை நீக்கும் எண்ணமே உனக்கு இல்லை. பிரமனையும், சிவபெருமானையும் போல என் இராமனை எண்ணிவிட்டாயோ? இராம லக்ஷ்மனர் சாதாரண மனிதர்கள் இல்லை. காட்டில் உயர்ந்து நின்ற கார்த்தவீரியார்சுனனை, பரசுராமன் என்றொரு மனிதன் வென்று ஒடுக்கினான். அந்த பரசுராமனை வலி அடங்கச் செய்தவன் இராமன் என்பதையும் தெரிந்து கொள்!.”

“”ஒப்பற்ற உனது செல்வங்களை மட்டுமல்ல, உனது உயிரையும் நீ இழக்கப் போகிறாய். இராம லக்ஷ்மணர் இருவர் மட்டும் என்று அலட்சியமாய் எண்ணாதே. யுகத்தின் முடிவில் பிரளயத்தை உண்டு பண்ணுபவர் ஸ்ரீமன் நாராயணன் என்பதை உணர்ந்து கொள். இராம லக்ஷ்மணரோடு, நீ போர் புரியும் போது, இந்த உண்மைகளைப் புரிந்து கொள்வாய்”.

“இரண்யாட்சனும் அவன் தம்பி இரண்யகசிபுவும், இவர்களைப் போன்ற மற்ற அரக்கர்களும் பற்பல அக்கிரமங்களும் கொடுந்தொழிலும் புரிந்தார்களேனும், பிறன் மனைவியை விரும்பி அவர்கள் தவறு இழைத்தது இல்லை. புலன்கள் விரும்பியபடி வாழுகின்ற அரக்கனாயிருந்தும், புலன்களை வென்று அற வழியில் நடந்து கொண்டதால், நீ இவ்வளவு செல்வத்தையும் பெற்றய். இப்போது புலன்களின் இச்சைப்படி நடந்து கொண்டு தவறு செய்து அழிவைத் தேடிக் கொள்ளாதே!”.

“சிவபெருமான் உனக்கு அரிய செல்வத்தைக் கொடுத்தது, நீ தவநெறியில் தப்பாது ஒழுகி, செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அறிவில்லாத நீ, செல்வத்தையும் இழந்து உற்றார் உறவினரையும் இழந்து அழிந்து போகும் நிலைக்கு மாறாக அறவழியில் போக மாட்டாயா? அறமும், அருளுமற்றோர் வலியராயினும் அழிந்து போவர். தவம் செய்து, பற்றுகளை நீக்கி காமம், வெகுளி, மயக்கம், எனும் உட்பகைகளை வென்றவர்கள், பிறப்பு, இறப்பு நீங்கி நற்கதி அடைகின்றனர்”.

“தண்டக வனத்துள் இராமன் புகுந்த போது, இனிய தமிழ்மொழி வளர்த்த குறுமுனி அகத்தியர் முதலான முனிவர்கள் அரக்கர்களின் கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டதை நானும் கேட்டேன். உன்னைப் பற்றியும் இராமன் கேள்விப்பட்டார். உன் வலிமை, வரத்தால் நீ பெற்ற நீண்ட ஆயுள், உனது அரக்கர் படையின் வலிமை ஆகியவற்றை முனிவர்கள் சொல்லக் கேள்விப்பட்டார். அவற்றைத் தெரிந்த பிறகுதான் சூர்ப்பனகையின் உறுப்புகளை அறுத்து, உன் தம்பியர் கரன் தூஷணன், திரிசிரன் ஆகியோரையும் கொன்று போட்டார் என்பதையும் சிந்தித்துப் பார்!”

“கண்டவர்களையெல்லாம் கடித்துக் கொல்லும் பாம்புகள்கூட மந்திரத்துக்குக் கட்டுப் பட்டு அடங்கும். செருக்குற்று நிற்கும் உனக்கு தக்கதி இது, தகாதது இது என்று இடித்துரைக்கும் நல் அமைச்சர்கள் இல்லை போலும். நீ நினப்பது போலவே தீமைகளை எண்ணும் அமைச்சர்கள்தான் உனக்கு அமிந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது உனக்கு அழிவு நிச்சயம் என்பதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்?”.

சீதாபிராட்டி இவ்வாறு கூறிய அறிவுரைகளைக் கேட்ட இராவனனின் கண்களில் தீப்பொறி எழுந்தன. வாய் பிளந்து, பெருத்த குரல் எடுத்து, ஆரவாரம் செய்தான். என்னவென்று சொல்வது? சீதை மீது அவன் கொண்ட காமத்தையும், அவனது கோபம் வென்று வீரிட்டு எழுந்து ஒலி எழுப்பியது. ஒரு பெண் தனக்கு தர்ம உபதேசம் செய்ய நேர்ந்ததே என்று வருந்துகிறான். கோபம் அவன் தலைக்கேறியது. இவளை இப்போதே கொன்று தின்பேன் என்கிறான். இப்படி இராவணன் சீதை மீதுள்ள மோகத்தால், முன் செல்வதும், கோபத்தால் பின்னுக்கு வருவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்தான்.

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த அனுமன் “அருந்ததிக் கற்புடைய, என்னை ஆட்கொள்ளும் இராமனின் தேவி, சீதாபிராட்டியை என் முன்பாக தாறுமாறாகப் பேசிய இந்த நீசன் தன் கையால் தேவியைத் தொடுவதற்கு முன்பாக, இவனை மிதித்து வருத்தி, சீதையை சிறை மீட்பேன்” என்று மனதுக்குள் உறுதி பூண்டான்.

“தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உகத் தாக்கி

பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சி

புனித மாதவத்து அணங்கினைச் சுமந்தனென் போவேன்

இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான்”.

இப்போது இவன் தனியனாகத்தான் இருக்கிறான். இவனது பத்துத் தலைகளையும் சிதைவுறத் தாக்கி, இலங்கையை கடலுக்குள் அழுத்தி அழித்துவிட்டு, தவமிருந்த செல்வி ஜானகியைச் சுமந்து சென்று இராமனிடம் சேர்ப்பேன், என்று கைகளைப் பிசைந்தபடி எண்ணினான் அனுமன்.

சீதாபிராட்டி செய்த உபதேசங்களைக் கேட்டதும், இராவணனது கோபம் பிரளய காலத்துத் தீயினைப் போல வளர்ந்தது. ஆனால், அவன் மனதில் எழுகின்ற காமம் அத்தீயை நீர் ஊற்றி அணைத்தது. பிறகு காம வயப்பட்டு மனம் அடங்கி சிந்திக்கிறான். பிறகு எழுந்து சீதையை நோக்கிப் பேசலுற்றான்.

“உன்னைக் கொல்வதற்கு எழுந்தேன். ஆனால் கொல்லவில்லை. என்னைப் பற்றி நீ கூறியவை அனைத்தும் உண்மை. அதற்குக் காரணங்களைக் கூறுகிறேன் கேள். என்னால் எதுவும் முடியும், முடியாது என்பது இல்லை. எல்லாம் விளையாட்டாகச் செய்தவை. உன்னிடம் ஒரு இரகசியத்தைச் சொல்லுகிறேன். கேள்! நீ உயிர் என மதிக்கும் இராமனைக் கொன்று உன்னைக் கவர்ந்து வந்திருந்தால், நீ உயிரை விட்டுவிடக் கூடும். அப்படி நீ இறப்பாயானால், நானும் இறந்து போவேன். அதை நன்கு உணர்ந்த பிறகுதான் வஞ்சனையால், உன்னைக் கவர்ந்தேனே தவிர, போருக்கு பயந்து அல்ல. நான் போர் செய்வதானால் என்னை எதிர்த்து யார் நிற்க முடியும்?”

“தேன்மொழியாளே! மாயமானை நிஜ மான் என்று எண்ணி அதன் பின்னால் போன மானுடர்கள் திரும்ப வரமாட்டார்கள். அப்படித் திரும்பி வந்தாலும் உன்னைக் கவர்ந்து சென்றது நான் என்றறிந்தபின் உன்னை மீட்க வரமாட்டார்கள். அவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது உன் அறியாமை. சீதையைக் கவர்ந்தது இராவணன் என்பதை அறிந்தால், தேவர்களும் அஞ்சிப் பின் வாங்குவார்கள். கேவலம் மானுடர்களால் என்ன செய்துவிட முடியும்?”

“என்னை வென்றதாகச் சொன்னாயே கார்த்தவீரியார்சுனன், அவன் உயிருடன் இருக்கும் போதே, மும்மூர்த்திகளுக்கு எதிரிலேயே, இந்திரன் முதலான தேவர்கள் எனக்குப் பணி செய்யுமாறு மூவுலகங்களையும் ஆண்டவன் நான் என்பதைத் தெரிந்து கொள். இராம லக்ஷ்மணர்கள் பசுபோன்ற சாதுவான மனிதர்கள்; வலிமையற்றவர்கள். வீணான நோன்புகளை உடையவர்களான அவர்களை, நான் கொல்ல மாட்டேன். அப்படிச் செய்வது என் வீரத்துக்கு இழுக்கு. அவர்களை எனக்குப் பணி செய்யுமாறு இங்கே அழைத்து வரச் செய்வேன்.”

“அழகியே! குற்றமற்ற அழகு வாய்ந்தவளே! அற்பமான இயல்பும், அற்பமான ஆற்றலும் உள்ள அற்பமான மனிதர்களிடம், எனக்குக் கோபம் தோன்றாது, என்றாலும் இன்றே போய் அவ்விருவரையும் என் ஒரு கையால் பற்றி இங்கே கொண்டு வந்து சேர்க்கிறேன் பார். இராம லக்ஷ்மணர்கள் கேவலம் மனிதர்கள் என்றாலும், உன்னை எனக்குக் கொடுத்தவர்கள் அவர்கள் செய்திருக்கிற இந்த உதவிக்காக அவர்களை நான் கொல்ல மாட்டேன். மாறாக அவர்களைக் கொல்வது உனக்கு விருப்பமானது என்றால் சொல், அதனையும் ஆராய்ந்து செய்து முடிக்கிறேன்.”

“அற்ப ஆயுள் கொண்டவளே! நான் அயோத்திக்குச் சென்று பரதன் முதலானவர்களைக் கொன்று, பிறகு மிதிலைக்குச் சென்று அனைவரையும் கொன்ற பிறகு இங்கே வந்து உன்னையும் கொல்வேன். என்னைப் பற்றி நீ தெரிந்து கொள்ளவில்லை.” இவ்வாறு இராவணன் கோபம் கொண்டு இவ்வளவையும் பேசிவிட்டுத் தன் உடைவாளைப் பார்த்தான். “நீ என் விருப்பத்துக்கு இணங்காததால், உன்னைக் கொல்ல வேண்டிய காலம் பன்னிரண்டு மாதத்திலிருந்து இரண்டு மாதங்களாகக் குறைந்தது. ஆகவே, உனக்கு நேரப் போகும் முடிவை நன்றாக எண்ணிப் பார். உன் அறிவுக்குத் தோன்றிய முறையில் என்ன செய்ய வேண்டுமென்பதை எண்ணிப் பார்” என்று இராவணன் சொல்லிவிட்டு அருகே காவல் இருந்த அரக்கியர்களிடம் “இதோ பாருங்கள்! சீதையை பயமுறுத்தியோ, அறிவுரைகள் கூறியோ, ஆறுதலான வார்த்தைகள் சொல்லியோ, வேறு எந்த உபாயத்தைக் கடைப்பிடித்தாவது அவளை வசப்படுத்தி, என்னிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யாவிட்டால், நான் உங்களுக்குக் கடுமையான தண்டனை தரவேண்டியிருக்கும்” என்று எச்சரித்து விட்டுப் போனான்.

இவ்வாறு அசோக வனத்துக்கு இரவில் வந்து சீதையை பயமுறுத்திவிட்டு அரக்கியர்களையும் எச்சரித்துவிட்டு, இராவணன் அரண்மனை திரும்பினான்.

இராவனன் திரும்பிச் சென்ற பிறகு சீதாபிராட்டியை அரக்கிகள் சூழ்ந்து கொண்டனர். பிராட்டியை கடுமையான குரலில் அதட்டினார்கள். மனம் போனபடி பேசினார்கள். ஒருத்தியை விட மற்றவள் அதிகமாக மிரட்ட முயன்றனர். கண்களால் விழித்துத் தீப்பொறி பறக்க ஓடி வந்தனர். கையில் தாங்கிய சூலத்தையும், வேலையும் அன்னையை நோக்கி வீசியபடி “இவளைக் கொல்லுங்கள், கொல்லுங்கள், கொன்று தின்னுங்கள்’ என்று கூச்சலிட்டனர்.

அவர்களில் ஒரு அரக்கி கேட்டாள், “இராவணன் யார் தெரியுமா? இந்த உலகங்களைப் படைத்த பிரம்மாவின் பிள்லையான புலஸ்தியனின் மகன் விஸ்ரவசுக்குப் பிறந்தவன். மூவுலகுக்கும் தலைவன். ஆயிரம் சாகைகள் (பிரிவுகள்) கொண்ட சாம வேதத்தில் கரை கண்டவன். ஆன்ற பரந்த அறிவுள்ளவன். தீவினைகளை வென்றவன். உன்னிடம் உண்மையான ஆசை வைத்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்தான்” என்றாள்.

மற்றொரு அரக்கி சொல்கிறாள், “கொடியவளே! எம் அரசன் இராவனேஸ்வரனிடம், புண்ணில் கோலிட்டுக் குத்தியது போல கொடுஞ்சொற்களைப் பேசி, இவ்வுலகத்தில் வாழ்வோர் அழிந்து போகுமாறு செய்து விட்டாயே!” என்று. மற்றும் சில அரக்கிகள் சீதையிடம் “அறிவற்றவளே! நீ புகுந்த குலத்துக்கும், பிறந்த குலத்துக்கும் ஒரு சேர தீங்கிழத்து விட்டாய். நீ இராவணேஸ்வரனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உன் இனமே முற்றாக அழிந்து போகும். நீ இனி பிழைக்க முடியாது. சொல்ல வேண்டியவற்றை சொல்லி விட்டோம்” என்றனர். அத்தனை அரக்கிகளும் தன்னைக் கொல்ல வருவது போல வந்த போதிலும், மனம் தளராத சீதை, கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். அழுகையினூடே, தனது அவல நிலையை எண்ணி சிரிப்பும் வந்தது.

இந்த நேரத்தில் சீதையிடம் அன்பு கொண்டவளான திரிசடை “தாயே! நான் கண்ட கனவின் பலனை முன்பே நான் உனக்குச் சொன்னேன் அல்லவா? அதற்குப் பிறகும் நீ ஏன் வீணாகக் கவலைப் படுகிறாய்?” என்றாள்.

அதற்குச் சீதாபிராட்டி, “என் தாய் போன்றவளே! நீ சொன்னது நல்லது. இனி நான் வருந்த மாட்டேன்” என்றாள். பிறகு அரக்கியர் ஓரளவு அடங்கி விட்டார்கள். நல்ல அறிஞனும், இராவணனின் தம்பியுமான விபீஷணனின் மகளும், நல்ல அறிவாளியுமான அந்த திரிசடை என்பாள் சுற்றியிருந்த அரக்கியரிடம் சொன்னாள்: “இராவணனுக்கு பயந்து, நீங்கள் இந்தப் பெண்ணுக்குக் கொடுமை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வில்லை” என்றாள். பிறகு அவர்களும் சீதையை மிரட்டுவதை நிறுத்திவிட்டனர்.

இதுவரை அந்த அசோகவனத்தில் சீதை இருந்த மரத்தடியில் நடந்த அவ்வளவையும், அதாவது, இராவணன் நள்ளிரவில் கண்விழித்துக் கொண்டு வந்து சீதையிடம் மன்றாடியது, காலில் விழுந்து கெஞ்சியது, மிரட்டியது, பின்னர் காவல் நின்ற அரக்கியர்க்கு உத்தரவிட்டுச் சென்றது, அரக்கியர் சீதையை அச்சுறுத்தியது, திரிசடை சீதையிடம் பேசியதும் பின்னர் அரக்கியர்களை அடக்கியதும் கவனித்துக் கொண்டு ஒரு மரக்கிளையில் மறைவிடத்தில் அமர்ந்திருந்த அஞ்சனாபுத்திரன், சரி, இதுவே சரியான தருணம் அன்னையின் முன் போய் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, என்றெண்ணி, ஓர் மந்திரத்தை உச்சரித்துச் சுற்றியிருந்த அரக்கியரைத் தூங்குமாறு செய்தான். அவர்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து போயினர்.

என்றுமில்லாத் திருநாளாக உறங்காத அரக்கியர் அனைவரும் ஒருசேற தூங்குவதை சீதை கண்டாள். தனக்குத் தாங்க முடியாத துன்பம் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தாள். இதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லை என்று தீர்மானித்தாள். அவள் உள்ளத்தில் பயம் கவ்விக் கொண்டது. இராமன் மீதுள்ள அன்பால், தனக்குள் புலம்பத் தொடங்கினாள்.

“வலிமை மிக்க விதியே! கருங்கடலை ஒத்த என் இராமன், என்ன இந்தத் துயரத்திலிருந்து மீட்பானா? இராமனுடைய வில்லின் ஒலி இங்கே கேட்குமா? ஏ! சந்திரனே! விரைவில் விடியாத இரவே! அடர்ந்து அச்சுறுத்தும் இருளே! நீங்கள் பெண்ணாய்ப் பிறந்த என்னை மட்டுமே வருத்துகிறீர்களே, என்னைப் பற்றியும், நான் படும் துயரங்கள் பற்றியும் நினையாமல் இருக்கிற இராமபிரானை வருத்த மாட்டீர்களோ?”

“பூங்கொடிகளே! அனல் வீசி உலாவி வரும் வாடைக் காற்றைத் துணையாகக் கொண்டு என்னைத் துன்புறுத்துகிறீர்கள். என் உயிர் படும்பாடு உங்களுக்குத் தெரியவில்லையா? காட்டிலே இராமனிடம் சென்று இங்கு நான் படும் பாட்டைச் சொல்ல மாட்டீர்களா? ஆயிரம் கோடி துன்பங்கள் நேர்ந்த போதும், என் இராமன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்க மாட்டார், என்ற துணிவில்தான் நான் உயிரை விடாமல் இருக்கிறேன்.”

“நானும் இராமனுடன் காட்டிற்கு புறப்பட்டபோது, நீ மரங்கள் அடர்ந்த காட்டிற்கு வரவேண்டாம். நான் சில நாளில் திரும்பி வருவேன், அதுவரை அயோத்தியில் இரு என்று கூறினாரே. அவர் கருணை இவ்வளவுதானா? அவரைப் பிரிந்து அரக்கர்களுக்கிடையே நான் தவிக்க வேண்டியதுதானா?” இப்படியாகப் பலவாறு வருந்தி பெருமூச்சுவிட்டு, ‘என் உடம்பில் உயிர் இருக்கும் வரை துன்பமும் என்னுடன் இருக்கும். உயிர் பிரிந்த பின்னர் தான் துன்பங்கள் விலகும்போலிருக்கிற்து என்று எண்ணினாள். எப்படியும் இராமன் வந்து என்னை மீட்பான் என்றுதான் நான் உயிர் வாழ்கிறேன். இவ்வளவு காலம் அரக்கியர் இடையில் நான் சிறை இருந்த பிறகு இராமன் என்னை ஏற்றுக் கொள்வானோ, மாட்டானோ? நான் இவ்வளவு பெரிய பழியை என்று அடைந்தேனோ, அன்றே நான் உயிரை விட்டிருக்க வேண்டும். நான் இன்னமும் உயிர் வாழ்தல் சுவர்க்கம் அடைவதற்காகவா?”

“மாய மானின் பின்னால், என் நாயகனைப் போக வைத்தேன். இலக்குவனை மனம் நோகும்படி ஏசி அனுப்பினேன். அதன் பயன் இராவணன் வீட்டிலே வந்து தங்கும்படி ஆகிவிட்டதே. இப்படிப்பட்ட நான் இனி உயிர் பிழைத்து வாழ்வதை உலகத்தார் ஏற்றுக் கொள்வார்களா? இராமபிரான் அரக்கர் கூட்டத்தை அழித்து என்னை சிறை மீட்கும் நாளில், “நீ இனி என் இல்லம் வரத் தக்கவள் அல்லள்” என்று தடுக்கும்போது நான் என் கற்பு நிலையை எங்ஙனம் நிரூபிப்பேன்? நான் இறந்து போவதே அறவழிக்கு ஒத்தது. இந்த அரக்கியரும் நன்றாகத் தூங்குவதால், என்னைத் தடுக்க இவர்களால் இயலாது. இதைவிட உயிரைவிட நல்ல நேரம் அமையாது” இப்படி நினத்த சீதை மலர்கள் நிறைந்த கிளைகள் அடர்ந்த ஒரு குருக்கத்தி மரத்திடை சென்றாள்.

அப்படிச் செல்லும் சீதாபிராட்டியின் உள்ளக் கருத்தை உணர்ந்த அனுமன் அச்சமடைந்தான். சீதையைத் தீண்டி தடுக்க அஞ்சி, “ராம், ராம்” என்று இராமபிரானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே, அண்ட நாயகனின் அருள் தூதன் நான் என்று சொல்லிக் கொண்டே, அன்னை சீதாதேவியின் முன் சென்று குதித்துத் தொழுது வணங்கினான்.

“அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால்,

குடைந்து உலக அனைத்தையும் நாடும் கொட்பினால்

மிடைந்தவர் உலப்பிலர் தவத்தை மேவலால்

மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன்”.

“தாயே! இராமபிரானது ஆணையால் அடியனேன் இங்கு வந்தடைந்தேன். உலகத்தின் எல்லா பகுதிகளிலும் சென்று தங்களைத் தேடும்படி அனுப்பிய அளவற்ற பலரில், முற்பிறப்பின் தவப்பயனாய் அடியேன் தங்கள் சேவடியைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன். அன்னையே! தாங்கள் இங்கே இருப்பதை இராமன் அறியவில்லை. உன்னைப் பிரிந்த துக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறான். நான் யார் என்று என் மீது சந்தேகம் வேண்டாம். அதற்கு சரியான அடையாளம் என்னிடம் இருக்கிறது. உன்னிடம் சொல்லி, இராமன் சொல்லி அனுப்பிய சில உரைகளும் உண்டு, அவற்றையும் சொல்லுகிறேன்” இப்படிச் சொல்லிக் கொண்டே சீதையைத் தொழுதான் அனுமன்.

திடீரென்று வந்து குதித்து ஏதோ பேசுகின்ற இவனைப் பார்த்து சீதைக்குக் கடும் கோபம் ஒருபுறம். ஏனோ மனதில் தோன்றும் கருணை ஒருபுறம். இவன் அரக்கனாக இருக்கமுடியாது. ஐம்பொறிகளை அடக்கிய முனிவன் போலத் தோன்றுகிறான். ஒருக்கால் இவன் தேவனோ? இவன் இனிய சொற்களைப் பேசுகிறான், தூய்மையானவனாகத் தோன்றுகிறான்.

இவன் அரக்கனோ, தேவனோ, அல்லது குரக்கினத் தலைவனோ, யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும். இவனால் ஏற்படப்போவது நன்மையோ, தீமையோ, எதுவானாலும் ஆகட்டும், என் எதிரில் வந்து இராமன் பெயரைச் சொல்லி, என்னை உருகச் செய்து விட்டானே. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? இப்படி நினைத்துக் கொண்டு சீதை அனுமனை உற்று நோக்குகிறாள்.

“வீரனே! நீ யார்?” என்று வினவினாள்.

சீதையின் சொற்களைத் தன் தலைமேல் கொண்ட அனுமன், தன் இரு கரங்களையும் தலைக்குமேலாகக் குவித்துக் கொண்டு பேசலானான்: “தாயே! உன்னைப் பிரிந்த பிறகு இராமனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் சூரிய குமாரன், பெயர் சுக்ரீவன். குரக்கினத் தலைவன் அவன். அவனுடைய அண்ணனான வாலி முன்னர் இராவணனைத் தன் வாலில் பிணைத்து எட்டுத் திசைகளிலும் தாவி வெற்றி கொண்டவன். அவனை இராமன் ஒரே அம்பினால் கொன்றான். வாலியின் அரசை சுக்ரீவனுக்குக் கொடுத்தான் இராமன். நான் அந்த சுக்ரீவனுடைய அமைச்சன், என் பெயர் அனுமான்” என்றான்.

“சுக்ரீவனுடைய எழுபது வெள்ளம் அளவுள்ள சேனை, இராமபிரான் இடும் கட்டளைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன. அவற்றில் பல தாங்களைத் தேடி நாலாபுறத்திற்கும் விரைந்து சென்றுள்ளன. இழிதொழில் புரியும் இராவணன் தங்களைக் கவர்ந்து சென்ற போது, தாங்கள் அணிகலன்களை ஓர் துணியில் கட்டி நாங்கள் இருந்த ருசியமுக பர்வதத்தில் போட்டீர்கள். இந்தச் செய்தியை நான் இராமனிடம் சொன்னேன். அவர் என்னைத் தனியே அழைத்துத் தென் திசைக்குச் செல் என்று என்னைப் பணித்தார்.”

“உன் அணிகலன்களைக் கண்டதும், இராமபிரான் பட்ட பாட்டைச் சொற்களால் சொல்ல முடியாது. நீங்கள் அன்று எறிந்து விட்டுச் சென்ற அணிகலன்களே இன்று உங்கள் மங்கல அணியைக் காப்பாற்றின. தெற்குப் புறமாகத் தங்களைத் தேடிவந்த இரண்டு வெள்ளம் வானர சேனைக்கு வாலியின் புதல்வன் அங்கதன் தலைவன். அவனே என்னை இலங்கைக்கு அனுப்பியவன். அவர்கள் என்னுடைய வரவை எதிர்நோக்கிக் கடலுக்கு அப்பால் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் அனுமன்.

இதைக் கேட்டதும் சீதை மகிழ்ச்சியடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

“பெரியோனே! இராமர் எப்படி இருக்கிறார்?” என்றாள்.

“அன்னையே! இராமனின் திருவுருவை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள்” என்று இராமனது திருவடி முதல் திருமுடி வரை வர்ணிக்கலானான். ஒவ்வோர் அங்கத்தையும், அதன் பெருமை அழகு முதலியவற்றைச் சொல்லி விளக்கினான். இவ்வாறு அனுமன் சொன்ன சொற்களைக் கேட்ட சீதை தீயிலிட்ட மெழுகு போல உருகினாள். அவளை அனுமன் தரையில் விழுந்து வணங்கினான்.

“அன்னையே! இராமபிரான் என்னிடம் சொல்லி அனுப்பிய வேறு சில குறிப்புகளும் உண்டு. சில அடையாளச் சொற்களும் உண்டு. அவற்றைக் கேட்பீர்களாக!” என்று சொல்லத் தொடங்குகிறான்.

“காட்டில் வசிப்பது என்பது சிரமம், ஆகையால் நான் திரும்பி வரும்வரை என் அன்னையர்க்கு பணிவிடை செய்து கொண்டிரு என நான் சொல்லி முடிக்கும் முன்பாக, மரவுரி தரித்து தவ வேடத்தோடு சீதை எனக்கு முன்பாக நின்றாள், என்று இராமபிரான் கூறி தங்களிடம் நினைவு படுத்தச் சொன்னார்”.

“மணிமுடி சூட நாள் குறித்து ஆட்சியைத் தந்து, பிறகு கானகம் செல்ல தந்தையின் உரை கேட்டு, நான் புறப்பட்டு கோட்டையைத் தாண்டுமுன்பாக கானகம் எங்கே இருக்கிறது, என்று தாங்கள் கேட்டதையும் தங்களிடம் நினைவு படுத்தச் சொன்னார்”.

“தேரைச் செலுத்தி வந்த அமைச்சர் சுமந்திரனிடம் தாங்கள் வளர்த்து வந்த கிளிகளையும், நாகணவாய்ப் பறவைகளையும், ஊர்மிளை முதலானோரைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி அனுப்பியதை தங்களிடம் நினைவூட்டச் சொன்னார்”.

“வேறு எந்த அடையாளச் சொல்லும் தேவையில்லை, என் பெயர் பொறித்த இந்த மோதிரத்தை அவளிடம் காட்டு என்று இந்த கணையாழியைக் கொடுத்தார்” என்று சொல்லித் தன் மடியில் கட்டிவைத்திருந்த கணையாழியை எடுத்து மாருதி பிராட்டியின் கையில் கொடுத்தான். அந்த கணையாழியைக் கண்டதும், சீதை பெற்ற உணர்வுகளை என்னவென்று சொல்வது, எங்ஙனம் வர்ணிப்பது?

வாழ்நாளையெல்லாம் வீணாக்கியவர்கள், மறுமைப் பயனைத் தற்செயலாய் பெற்றது போல என்பேனா? விலைமதிப்பற்ற ஓர் பொருளை தொலைத்துவிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு அது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கும்போது கொள்ளும் மகிழ்ச்சி என்பேனா? உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிர் மீண்டும், அந்த உடலை அடைந்தால் மற்றவர் படும் ஆனந்தம் என்பேனா? கணையாழியைக் கண்ட சீதை, புற்றிலிருந்த பாம்பு, தான் இழந்த மாணிக்கத்தை மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தாள். பிள்ளைப் பேறு இல்லாமல் நீண்ட காலம் மலடியாக இருந்தவளுக்குப் பிள்ளைப் பேறு கிட்டிய காலத்து அடையும் மகிழ்ச்சியை அடைந்தாள். கண்ணற்ற குருடனாக இருந்தவனுக்குக் கண் பார்வை கிட்டிய போது அடையும் மகிழ்ச்சியை சீதை அடைந்தாள்.

சீதை, தன் கையில் வாங்கிக் கொண்ட அந்த கணையாழியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். தலைமேல் வைத்துக் கொண்டாள். கண்ணிலே ஒற்றிக் கொண்டாள்; மகிழ்ந்தாள், உருகினாள், உடல் பூரித்தாள், பெருமூச்சு விட்டாள். அடடா! இந்த காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லையே! கணையாழியை முகர்ந்தாள்; மார்பின் மீது வைத்துத் தழுவிக் கொண்டாள்; கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்; மீண்டும் கண்களில் கண்ணீர் பொங்கி வர, நீண்ட நேரம் அந்த கணையாழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கணையாழியிடம் ஏதோ பேச விரும்பினாள்; ஆனால் வாயைத் திறக்கவில்லை. மேலே கிளர்ந்து எழுகின்ற விம்மலை அடக்கிக் கொண்டாள். கணையாழியைக் கண்டதும் சீதையின் முக ஒளி பொன்னிறம் பெற்று ஒளிர்ந்தது. ஆம்! இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் பொருட்களைப் பொன்னாக மாற்றும், ‘ஸ்பரிசவேதி’ எனும் ரசவாதப் பொருளே!

சீதைக்கு அந்த கணையாழி, பசியால் துன்புற்றவனுக்குக் கிடைத்த அமுதம் போன்றது. இல்லறத்தாரைத் தேடி வந்த விருந்தினரைப் போன்றது. உயிர் போகும் தறுவாயில் ஒருவனுக்குக் கிடைத்த சஞ்சீவி மருந்து போன்றது. கணையாழியை வணங்கிப் போற்றுவோம்.

அனுமனைப் பார்த்து சீதாபிராட்டி சொல்கிறாள், “உத்தமனே! எனக்கு நீ உயிரைக் கொடுத்திருக்கிறாய். நான் உனக்கு எவ்வகையில் கைமாறு செய்யப் போகிறேன். நீ எனக்கு உயிர் கொடுத்த வகையில் தாயாகவும், தந்தையாகவும், தெய்வமாகவும் ஆனாய். அருளுக்கு இருப்பிடமானவனே! நீ எனக்கு இம்மைக்கும் மறுமைக்குமான இன்பத்தை அளித்தாய். வலிமைமிக்க மாருதி! துணையற்ற எனக்குத் துன்பம் நீக்கிய வள்ளலே! நீ நீடூழி வாழ்வாயாக! நான் கற்பு நெறியில் களங்கமற்றவள் என்பது உண்மையானால், யுகயுகாந்திரத்திலும், ஈரேழு பதினான்கு உலகங்கள் அழிகின்ற காலத்தும், நீ இன்று போல என்றும் சிரஞ்ஜீவியாக வாழ்வாய்!” என்று வாழ்த்தினாள்.

“ஆஞ்சநேயா! இராமனும், இலக்குவரும், எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் உன்னை எங்கே சந்தித்தார்கள். இராவணன் என்னைக் கவர்ந்து சென்ற செய்தியை அவர்கள் எப்படி அறிந்தார்கள்” என்று வினவினாள். உடனே அனுமன் நடந்த வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான்.

“அன்னையே! மாயமுள்ள மாரீசன் எனும் அரக்கன் இராவணனின் தூண்டுதலால், மாயமான் உருவில் உன் எதிரில் தோன்றினானல்லவா? உன் ஏவலின்படி இராமன் அதைப் பிடிக்கச் சென்றார். அது மாயமான் என்பது தெரிந்து அதன் மீது தனது அம்பை செலுத்தினார். அம்பு அடித்து அந்த அரக்கன் மாரீசன் ஓ! சீதா!, ஓ! லக்ஷ்மணா! என்று குரல் எழுப்பிவிட்டு, தனது சுயரூபம் வரப்பெற்று இறந்து வீழ்ந்தான். அது தங்களை ஏமாற்றுவதற்காக எழுப்பப்பட்ட குரல்”.

“இந்தக் குரலைத் தன் குரல் என்று இலக்குவன் நம்பாமல் இருக்கட்டும் என்று இராமன் தன் கோதண்டத்தில் ஓர் ஓசை எழுப்பினார், என்றாலும் ஊழ்வினை பலித்தது. திரும்பி வந்துகொண்டிருந்த இராமன், எதிரில் இலக்குவன் வருவதைக் கண்டு, ஏதோ ஒரு தீமை நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டார். அபயக் குரல் கேட்டதும், சீதாபிராட்டி தன்னை உடனே சென்று இராமனுக்கு என்ன நேர்ந்தது என்று பார்த்து வருமாறு பணித்தச் செய்தியை இலக்குவன் சொன்னான். இருவரும் பர்ணசாலையை அடைந்ததும், அங்கே தங்களைக் காணாமல் இராமன் மயங்கி சோர்ந்து விழுந்து விட்டார்.”

“இராமன் துன்பத்தில் வாட இதனினும் வேறு காரணங்கள் வேண்டுமோ? தங்களைத் தேடி தென் திசைக்கு வந்த அடியேன் தங்களை நேரில் கண்டுவிட்டேன். தாயே! நீ வாழ்க! அன்னையே! தங்களைக் காணாமல் இராமன் பஞ்சவடியில் புறப்பட்டு, காடு, மலை, ஆறுகளைக் கடந்து தேடி உயிரற்ற உடலாக ஆனார். வழியில் “உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட” ஜடாயுவைக் கண்டார். அவரிடமிருந்து நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அளவற்ற கோபம் கொண்டார். தன் கை வில்லினை எடுத்து ‘மூவுலகங்களும் எரிந்து சாம்பலாகும்படி, என் ஒரு அம்பினால் அழிப்பேன்’ என்று சபதமிட்டார். ஆனால் ஜடாயு, ஓர் அற்பன் ஒரு தீமை செய்து விட்டதற்காக, மூவுலகங்களையும் அழிப்பது தவறு. கோபத்தைத் தணித்துக் கொள் என்று ஆறுதல் கூறினார். இராமனும் கோபம் தணிந்தார்.”

“இராவணன் எங்கு சென்றான், எங்கு இருப்பான் சொல் என்று இராமன் கேட்டதற்கு, ஜடாயு பதில் சொல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. இராமனும், இலக்குவனும் ஜடாயுவுக்குத் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைச் செய்து முடித்தனர். பிறகு பல மலைகளைத் தாண்டி தங்களைத் தேடிக்கொண்டு வந்தனர். வழியில் எமது அரசன் சுக்ரீவனிடம் நட்பு பூண்டனர். சுக்ரீவனிடம் வன்மம் கொண்டு அவனைக் கொல்லத் துணிந்த வலிமையுள்ள வாலியை இராமன் ஓர் அம்பினால் கொன்றார். அவனது இராஜ்யத்தை அவனது தம்பி, எமது அரசன் சுக்ரீவனுக்குத் தந்தார். மழைக்காலம் முடியும் வரை கிஷ்கிந்தையில் தங்கியிருந்து, அது முடிந்தவுடன் நாலாபுறமும் தங்களைத் தேடி படைகளை அனுப்பி வைத்தார். அதன்படி அடியேன் தங்களைத் தேடி தென் திசை நோக்கி வந்தேன். இதுவே எனது வரலாறு” என்றான் அஞ்சனை புத்திரன்.

இதைக் கேட்டதும் சீதை இராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை எண்ணி எலும்பும் உருகும்படி இரங்கி ஏங்கினாள். “மாருதி! அதுசரி நீ இந்த அலைகடலைத் தாண்டி வந்தது எவ்வாறு? அதைச் சொல்” என்றாள்.

“அன்னையே! உம் தலைவன் இராமபிரானின் திருவடிகளைத் தியானிக்கும் அறிவுடைய ஞானிகள் மாயை எனும் பெருங்கடலையே தாண்டிச் செல்லும் தன்மை போல, நானும் காற்றையே பற்றுக் கோடாகக் கொண்டு வான வழியில் அலைகடலைத் தாண்டி வந்தேன்” என்று அடக்கத்தோடு சொன்னான்.

வெண்முத்துப் பற்களையுடைய சீதாபிராட்டி அனுமனிடம், “இவ்வளவு சிறிய உடலோடு, நீ எப்படி கடலைத் தாண்டி வந்தாய்? உன் தவத்தின் பலனா? அல்லது அட்டமா சித்தியாலா? எனக்குச் சொல்” என்றாள்.

பிராட்டி இப்படிக் கேட்டதும், அனுமன் தனது விஸ்வரூபத்தை சீதைக்குக் காட்ட நினைத்தான். அப்படி நினைத்த மாத்திரத்தில் அவன் உடல் வளர்ந்தது. வானத்தின் மீது உயர உயர விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து நின்றான். தலை வானத்தில் முட்டுமோ என்று தலையை மட்டும் குனிந்து தேவியை வணங்கினான்.

நன்னெறி மூலம் அடையும் பெருமை இந்த அனுமனின் விஸ்வரூபத்தைப் போல நெடிதானதோ? எதிரே வானத்துக்கும் பூமிக்குமாக பேருரு கொண்டு நிற்கும் அனுமனைக் கண்டாள் சீதாபிராட்டி. அவன் பாதங்களைக் கூட முழுமையாகக் காண முடியாத பெரிய உரு. இனி அரக்கர்கள் அழிந்தனர் என்று அன்னை மகிழ்ந்தாள்.

“மாருதி! போதும்! போதும்! உன் உருவத்தை ஒடுக்கிக் கொள். எனக்கு பயமாக இருக்கிறது” என்றாள் சீதை. “உன் விஸ்வரூபத்தை முழுமையாகப் பார்க்கக் கூடியவர்கள் இவ்வுலகத்தில் யாரும் இல்லை. அதனால் அனுமனே, ஒடுங்குக” என்றாள்.

“தாங்கள் அருளியபடி அங்ஙனமே நடப்பேன்” என்று கூறி அனுமன் தன் பெரிய உருவத்தை ஒடுக்கிக் கொண்டு, அனைவரும் காணத் தக்க சிறிய உருவத்தை மேற்கொண்டான். அப்போது சீதை கூறுகிறாள்:

“காற்றினும் கடுகிய வேகம் கொண்ட மாருதி! உன் ஆற்றலை முழுவதுமாக அறிந்து கொண்ட எனக்கு நீ கடலைக் கடந்து வந்த செய்தி ஆச்சரியம் அளிக்கவில்லை. வீரனே! இராமபிரானின் அருளும், புகழும் பல யுகங்கள் நிலைபெறச் செய்ய வல்லவன் நீ ஒருவன் போதும். உன் ஆற்றலுக்கு இந்த ஒரு கடல் என்ன, ஏழு கடல்களைத் தாண்டும் வல்லமை படைத்தவன் நீ”.

“மாருதி! எவ்வளவு பெருமையுடையது நின் தோற்றம். அறிவு, ஆற்றல், பொறிகளின் மீது நீ செலுத்தும் தனி அரசாணை, மனத் தெளிவு, தெளிவின் பயன், நீதி ஆகியவற்றிலும் நீ பிரம்மாண்டமாக வளர்ந்து இருப்பவன். கொடிய அரக்கர்களோடு போரிட இலக்குவனைத் தவிர வேறு துணை இராமனுக்கு இல்லையே என்று வருந்தியிருந்தேன். உன்னைக் கண்டபின் எனது அந்த வருத்தம் நீங்கிவிட்டது. அதனால் உயிர் பெற்றேன். என் இராமனுக்கு நீ துணை என்றதும், வெற்றி நிச்சயம் என்றாகிவிட்டது”.

“இனி நான் இறந்தாலும் கவலை இல்லை. என்னை வருத்திய அரக்கர்களை அழித்தவள் ஆனேன். அரக்கர்களின் வஞ்சகச் சிறையிலிருந்து விடுதலை பெற்றவளும் ஆனேன். என் தலைவன் இராமனின் திருவடிகளை அடைந்தவளும் ஆனேன். இனி புகழ் பெறுவேனே தவிர பழியை அடைய மாட்டேன்” என்று மகிழ்ந்து பேசினாள் சீதை.

அதற்கு அனுமன், “அன்னையே! வானரர்களின் படை எழுபது வெள்ளம் அளவினை உடையது என்பதைக் கூறினேன். இந்த கடலானது அவர்களுக்கு ஒரு சிறு குட்டை போன்றது. இந்த இடம் எங்கிருக்கிறது என்பது தெரியாததால், இலங்கை இன்னமும் அழியாமல் இருக்கிறது. வானரப் படையில் வாலியின் தம்பி சுக்ரீவன், வாலியின் மகன் அங்கதன், வசந்தன், துமிந்தன், வெற்றியை உடைய குமுந்தன், நீலன், இடபன், குமுதாக்கன், பனசன், சரபன், வயதான ஜாம்பவான், எமனை நிகர்த்த துன்மருடன், காம்பன், கவயன், கவயாக்கன், உலகம் அறிந்த உத்தமசங்கன், வினதன், துவிந்தன், நளன், தம்பன், தூமன் என்னும் ஒப்பற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வானர சைன்யத்துக்கு முன்பாக இந்த அரக்கர் படை எம்மாத்திரம்” என்றான்.

தனக்கு நிகரில்லாத வலிமையுடைய ஆஞ்சநேயன், அன்னை சீதாபிராட்டியை எடுத்துக் கொண்டு, இராமனிடம் கொண்டு சேர்ப்பதே தன் கடமை என்று நினைத்து, சீதையிடம், “அன்னையே! அடியவனாகிய என் கருத்தைக் கேட்டருள் புரிவீராக! நான் சொல்வதைக் கேட்டு என்மீது கோபம் கொள்ள வேண்டாம். கொடியவன் இராவணன் தங்களைக் கொன்று விடுவானாயின், பிறகு அவனை வெல்வதில் பயன் இல்லை. இப்போதே தங்களைத் தூக்கிக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடுகிறேன். தாங்கள் என் தோள்மீது ஏறிக் கொள்ளுங்கள். நொடிப் பொழுதில் வழியில் எங்கும் தங்காது, இராமன் இருக்குமிடம் சென்று குதிப்பேன். அரக்கர்கள் வழி மறித்தால், அவர்களைக் கொன்று குவிப்பேன். தங்களைக் கொண்டு செல்லாமல், வெறுங்கையுடன் திரும்பிச் செல்ல மாட்டேன்” என்றான்.

“தங்களை இப்பொழுதே எடுத்துச் சென்று இராமபிரானிடம் ஒப்படைக்காமல், நான் அங்கு சென்று இராமனிடம், தேவி அரக்கர் சிறையில் பெரும் துயரத்தோடு இருக்கிறார் என்று சொல்வதால் என்ன பயன் உண்டு?” என்கிறான் மாருதி. இதைக் கேட்டு சீதை, இந்த அனுமன் சொல்வதை செய்து முடிக்கும் வல்லமை படைத்தவன் என்பதை உணர்ந்தாள்.

“ஆஞ்சநேயா! நீ சொன்ன செயல் உனக்கு அரியதன்று. உன் ஆற்றலுக்கும் ஏற்புடையதே. ஆனால், அப்படிச் செய்வது ஏற்கத் தக்கது அன்று என்று பெண்ணாகிய நான் கருதுகிறேன். என்னை எடுத்துச் செல்லும்போது கடலுக்கு நடுவில் அரக்கர் வந்து தடுத்து போரிட்டால், அவர்களோடு போரிடவும் என்னைக் காப்பாற்றவும் முடியாமல் நீ தவிக்க நேரிடும். நான் வர மறுப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நீ சொல்வது போல் செய்தால், அது இராமனது வில்லுக்கும், அவன் வீரத்துக்கும் இழுக்கு, வீண் பழி உண்டாகும். அதுமட்டுமல்ல, மருதி! இராவணன் என்னைக் கவர்ந்து வந்தது போல, நீயும் என்னை பிறர் அறியாவண்ணம் எடுத்துச் செல்வதை, பிறர் நியாயம் என்று ஏற்றுக் கொள்வார்களா?”

“இன்னொன்றையும் கேள்! போரில் இராமன் அம்புக்கு பலியாகி இராவணன் வீழ்ந்து கிடக்க, அவன் கண்களை காக்கைகள் குத்தித் தின்கிற காட்சியை, நான் காணாமல் மன நிறைவு பெற முடியுமா? நான் உனக்குச் சொல்ல விரும்புகின்ற மற்றொன்றையும் கேள்! நீ ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் நைஷ்டிக பிரம்மச்சாரி என்றாலும்கூட, உன்னை ஆண்பிள்ளை என்றுதான் உலகம் அறியும். இராமபிரான் திருமேனியல்லாது வேறு எந்த ஆண்மகனையும் நான் தீண்டுவது தகுமோ? இராவணனாலும் என்னைத் தீண்ட முடியாது, அதனால்தான் அவன் மண்ணோடு பெயர்த்து என்னை எடுத்து வந்தான். என்னைத் தீண்டினால் இராவணன் உயிர் போய்விடும், என்பது அவனுக்குத் தெரியும்.”

“பிரமதேவன் இராவணனுக்கு இட்ட சாபம் ஒன்று உண்டு. உன்மீது விருப்பமில்லாத பெண்களை தீண்டுவாயானால், உன் பத்து தலைகளும் சிதறி இறந்து போவாய் என்பது அந்த சாபம்.

இராவணனுக்கு வாய்த்த அந்த சாபமே என் உயிரைக் காத்தது. இராவணன் மண்ணோடு பெயர்த்து எடுத்து வத பர்ணசாலை இங்குதான் இருக்கிறது. அதை உன் கண்களால் பார்”

“அஞ்சனா புத்திரா! நான் சொன்ன காரணங்களால் எல்லாம், என்னை நீ கொண்டு செல்லுதல் இயலாது. நீ இராமனிடம் சென்று நான் சொல்லும் சில விவரங்களையும் தெரிவிப்பாயாக! அதுதான் நீ இப்போது செய்யக்கூடியது” என்றாள்.

சீதாபிராட்டியாரின் கற்புத் திறனையும், தவ வலிமையையும் கண்டு, அனுமன் வியந்து பாராட்டினான். “அன்னையே! இராமன் வந்து தங்களை மீட்பார். அதற்குள் தாங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இராமனுக்குத் தாங்கள் சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லியருள வேண்டும்” என்றான்.

“ஆஞ்சநேயா! நான் இன்னும் ஒரு மாத காலம் இலங்கையில் உயிரோடு இருப்பேன். அதற்குள் இராமன் வந்து என்னை மீட்காவிட்டால், பின்பு நான் இறந்து போவேன். இது இராமன் கழல்மேல் ஆணை. இதை உன் மனதில் பதித்துக் கொள். இராமபிரானிடமும் சொல்லிவிடு! அவருக்கு ஏற்ற மனைவியாக நான் இல்லாவிட்டாலும், ஓர் அபலைப் பெண்ணைக் காக்க வேண்டும் என்னும் கருணை இல்லாவிட்டாலும், தன் வீரத்தைக் காத்துக் கொள்ளவாவது இராவணனுடன் போரிட்டு என்னை மீட்க வேண்டும் என்பதை நான் சொன்னதாக அவரிடம் சொல்.”

“இலக்குவரிடம் நான் சொன்னதாகச் சொல், பஞ்சவடியில் எனக்குக் காவலாக இருந்த அவருக்கு, இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கிற இந்த கொடிய சிறையிலிருந்து என்னைக் காக்கும் கடமை உண்டு என்று சொல். இலங்கையில் சீதை இறக்கும்போது, தன் மாமியர் மூவரையும் வணங்கினாள் என்று அவர்களிடம் இராமனைச் சொல்லச் சொல்; அப்படி அவர் சொல்ல மறந்தாலும் நீ மறக்காமல் அவர்களிடம் இதனைச் சொல்.”

“மிதிலை நகருக்கு வந்து எனது கரம் பற்றிய அந்த நாளில், ‘இவ்வுலகில் எடுத்துள்ள இப்பிறவியில் உன்னையன்றி வேறு ஒரு பெண்ணை என் மனதாலும் தொடமாட்டேன்’ என்று எனக்கு அவர் சொன்ன உறுதிமொழியை அவரது செவியில் இரகசியமாகச் சொல். என் தாய் தந்தையருக்கு என் வணக்கங்களைச் சொல்.உன் மன்னன் சுக்ரீவனிடம் இராமனைக் காப்பாற்றி அவரை அயோத்திக்கு அரசராக்கும்படி சொல்”

இப்படியெல்லாம் சீதை பேசுவதைக் கேட்ட அனுமன் “அம்மையே! தாங்கள் இன்னம் துன்பப் படுவதை விட்டபாடில்லை. தாங்கள் பேசுவது சரியா? தாங்கள் இங்கேயே இறப்பதும், நீங்கள் இறந்தபின்னும் இராமன் உயிர் வாழ்வதும், அயோத்தியில் முடிசூடுவதும் நடக்கக் கூடிய காரியங்களா?” என்று சீதைக்கு பலவாறாக ஆறுதலும் ஊக்கமும் அளிக்கிறான் அனுமன்.

அதற்கு சீதாபிராட்டி அனுமனை நோக்கி, “மேன்மையானவனே! நீ உடனே விரைந்து இராமனிடம் செல். வழியில் இடையூறு ஏற்பட்டால் அனைவரையும் வெல்வாயாக! அதுமட்டுமல்ல அனுமான், நான் சொல்லும் சில நிகழ்ச்சிகளையும் இராமனிடம் சொல்லி, அவருக்கு நினைவு படுத்து”.

“வனவாச காலத்தில் சித்ரகூட மலையில் என் அருகில் வந்து என் மார்பைத் தன் அலகினால் கொத்திய காக்கையை கோபித்து, ஓர் புல்லை எடுத்து மந்திரம் சொல்லி பிரம்மாஸ்திரமாக இராமன் செலுத்திய செய்தியை அவரிடம் நான் சொன்னதாகச் சொல்லு. அப்போது அந்த காகம் தன்னைக் கொல்ல பிரம்மாஸ்திரம் வருவது கண்டு, நடுங்கி பிரம்மலோகம் செல்ல, அங்கு பிரமன் இங்கு ஏன் வந்தாய் என்று கேட்க, அங்கிருந்து சிவபெருமான் இருக்கும் கைலாயம் மற்றும் எண் திசைகளுக்கும் செல்ல, அனைவரும் அதை விரட்டிவிட, அஸ்திரத்தால் தானும் தன் காக்கை இனமும் ஓர் கண் இழந்ததை அவருக்கு நினைவு படுத்து.”

“இன்னொரு செய்தியையும் கேள். என் இனிய கிளிக்கு என்ன பெயர் வைப்பது என்று நான் கேட்டதற்கு, என் அன்பு அன்னை கைகேயி பெயரை வைக்கச் சொல்லி இராமன் சொன்னதையும் அவரிடம் நினைவு படுத்து.” இப்படி சொல்லி முடித்தபின் சீதை, தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த, ஒளி பொருந்திய சூரியனைவிட ஓளிவீசும் சூளாமணியைத் தன் மலர்க்கையால் எடுத்தாள்.

“இது என்ன?” என்றான் அனுமன்.

“என்னைத் தேடி வந்து, என் உயிரைக் காத்த நம்பி! நான் கொடுத்த அடையாளமாக இந்த சூளாமணியைப் பெற்றுக் கொள்” என்று அதை அனுமனிடம் தந்தாள் சீதை.

சீதாபிராட்டியைத் தொழுதுவிட்டு அந்த சூளாமணியைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டான் அனுமன். அதைத் தன் ஆடையில் பத்திரப்படுத்திக் கொண்டான். சீதையை மறுபடி தொழுது, அவளைப் பிரிய வேண்டுமே என்று கண்ணீர் சிந்தினான். அவளை மூன்று முறை வலம் வந்து கீழே விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். சீதாபிராட்டியும் அவனை அன்போடு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாள்.

அனுமன் எந்த நோக்கத்தோடு, தென் திசை நோக்கி வந்தானோ, ஜாம்பவான் முதலானோர் ஊக்குவித்தபடி மாபெரும் கடலைத் தாண்டி இலங்கைக்கு வந்தானோ, வந்த இடத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் எல்லாவிடங்களிலும் யாரைத் தேடினானோ, அந்த தேவியைத் தரிசித்தாகிவிட்டது, அன்னையாரிடம் உரையாடி அவரது மனநிலையையும், இராமனுக்கு அவர் சொல்லி அனுப்பிய செய்திகளைப் பெற்றுக் கொண்டாகிவிட்டது, இனி திரும்பிவிடலாம் என்று வடதிசை நோக்கிப் புறப்பட்ட வேளையில், அனுமனுக்கு ஒரு சிந்தனை.

ஏதோ வந்தோம், சீதையைக் கண்டோம் என்று திரும்பிவிட்டால், நம் வீரத்துக்கு ஏற்றதாக இருக்குமா? நம் வீரத்தை நிலைநாட்டி அரக்கர்கள் புரிந்து கொள்ளும்படி ஏதாவது செய்து விட்டுப் போக வேண்டுமே, என்ன செய்யலாம் என்று யோசித்தான். இந்த அரக்கர்களை அடித்துக் கொன்று, இலங்கையை கடலில் அழுத்தி, சீதையை மீட்டு இராமனிடம் சேர்க்காவிட்டால், நான் எப்படி இராமதாசன் ஆவேன். இராவணனுடைய தலைகளை அறுத்துப் போடவுமில்லை; அவனைக் கட்டி சிறையில் வைக்கவும் இல்லை; போரிட்டு அவனை வீழ்த்தவும் இல்லை; இப்படியே ஊர் திரும்புவது சரியில்லை. இந்த அரக்கர்களை வருத்தி ஓடச் செய்து, என் முழு வலிமையையும் வெளிப்படுத்த வேண்டும், அதற்கு என்ன செய்யலாம், என்று சிந்தித்தான் அனுமன்.

இந்த சோலையை அழித்துவிட வேண்டும். இதைக் கண்டு அரக்கர்கள் கோபம் கொண்டு என்னோடு போரிட வருவார்கள். அவர்களை அழித்து உயிர்களைக் குடிப்போம். இப்படி எண்ணமிட்டபடி, அனுமன் தன் பேருருவை எடுத்துக் கொண்டான். அசோக வனத்தை அழிக்கத் தொடங்கினான். அனுமனுடைய தாக்குதலுக்கு உள்ளான மரங்கள் அழிந்தன. வனமே சின்னாபின்னம் அடைந்தது. பெரிய கட்டடங்களைத் தகர்த்தான். மண்டபங்களைச் சிதைத்தான். குளங்களைத் தூர்த்தான். சுவர்களை இடித்தான்; அரிய கலைப் பொக்கிஷங்களை அழித்தான்; குன்றுகளைத் தாக்கி உடைத்தான்.

வேங்கை மரங்கள், ஆச்சா மரங்கள், உயர்ந்த கற்பக மரங்கள் இவைகளை வேரோடு பிடுங்கி எறிந்தான். செண்பக மரங்களும், மாமரங்களும்கூட பிடுங்கி எறியப்பட்டன. இப்படி இவன் அசோக வனத்தை அழித்துக் கொண்டிருந்த போது, உறங்கிக் கொண்டிருந்த அரக்கியர் கூட்டம் விழித்து எழுந்து கொண்டது. அசோக வனத்தை அழித்து விட்டு, பொன் மயமான மேரு மலை போல எதிரில் நின்ற அனுமனை உற்றுப் பார்த்தனர் அரக்கியர்.

“அம்மம்மா!!! இது என்ன வடிவம்? இவன் யார்?” என்று சொல்லிக் கொண்டு அச்சம் அடைந்தனர். அவன் யார் எனபது அங்கு ஒருவருக்கும் விளங்கவில்லை. அந்த அரக்கியர் சீதையைப் பார்த்து “பெண்ணே! இவன் யார்? உனக்குத் தெரியுமா?” என்றனர்.

“கொடிய அரக்கர் செய்யும் மாயங்கள் அரக்கர்களுக்குத்தான் தெரியும். மாரீசன் மாயமானாக என் முன் மாயையால் வந்தபோது, அது மாயை என்று இலக்குவன் கூறியும் கேட்காமல் இராமனை அனுப்பினேன்” என்றாள். இப்படிச் சீதை கூறவும், அந்த அரக்கியர் கூட்டம் வயிற்றில் அடித்துக் கொண்டு, நிலை குலைந்து ஓடத்தொடங்கினர். அருகில் செயற்கையாக அமைந்த செய்குன்று ஒன்று இருந்தது. அதைத் தன் கையால் பெயர்த்து எடுத்து இலங்கை நகர் மீது வீசி எறிந்தான் அனுமன். இலங்கை நகரத்தில் போய் அந்த செய்குன்று விழுந்து பல மாட மாளிகைகள் இடிந்து விழுந்தன. நகரத்தில் வாழ்ந்த அரக்கர்கள் அலறி அடித்துக் கொண்டு இராவனனிடம் சென்று முறையிட்டனர்.

“இராவணேஸ்வரா! மலைபோல் திரண்ட தோள்களையுடைய ஒரு குரங்கு அசோக வனத்தை அழித்து விட்டது. மரங்களைப் பிடுங்கி எறிந்து விட்டது. மாளிகைகளை அடித்து உடைத்து விட்டது” என்றனர் இராவணனிடம்.

“என்ன வியப்பான செய்தி! நன்று நம் அரக்கர்கள் வீரம். மூடர்கள்கூட இப்படி பேசமாட்டார்கள்” என்றான் இராவணன்.

அந்த நேரம் அனுமன் அண்டமே அதிரும்படியாக ஓர் பெரிய கூக்குரல் எழுப்பினான். அந்த இடிக்குரல் இராவணனது காதிலும் விழுந்தது. இராவணன் முகத்தில் ஓர் புன்னகை மலர்ந்தது. பொறாமையும் அவன் உள்ளத்தில் ஏற்பட்டது. அரக்கர்களுக்குள் பலம் பொருந்திய கிங்கரர் எனும் ஒரு வகை இனத்து வீரர்களை அழைத்து “அந்தக் குரங்கை ஆகாய வழியில்கூட தப்ப விடாமல் பிடித்து, கொன்று விடாமல் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று ஆணையிட்டான்.

சூலம், வாள், உலக்கை, கூரான வேல், தோமரம், தண்டு, பிண்டிபாலம் முதலான ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம் அந்த கிங்கரர்கள் பிரளய கால கடலைப் போல விரைந்து சென்றனர். போர் என்றால் பூரித்துப் போகக்கூடியவர்கள் இந்த கிங்கரர்கள். கேவலம் இந்த குரங்கைப் பிடிப்பது அவமானம் என்று நினைத்தனர். நடந்தும், வான வெளியில் பறந்தும், கிங்கரர்கள் அனுமனைத் தேடிச் சென்றனர். அப்படித் தேடிக் கொண்டு வந்த கிங்கர அரக்கர்கள் அனுமனைக் கண்டதும், கூச்சல் போட்டுக் கொண்டு ஓடிவந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

எதிரே நின்றிருந்த அனுமனைப் பார்த்து, “இவன்தான்! இவன்தான்! இவன்தான்!” என்று அலறினர். உடனே அனுமனைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். ஆயுதங்களை அனுமன் மீது எறிந்தனர்.

வந்து தன்னைச் சூழ்ந்து கொண்ட கிங்கரர்களை எதிர்கொள்ள அனுமன் ஒரு பெரிய மரத்தின் கீழ் சென்று நின்று கொண்டான். தனியாளாக இருக்கும் தனக்கு உதவி புரியும் ஒப்பற்ற துணை என்று எண்ணி அந்த மரத்தை வேரோடு பிடுங்கித் தன் கையில் வைத்துக்கொண்டான். நகர்ந்து சென்று அரக்கர்களுக்கு நடுவே நின்றான். அப்படி நின்ற அனுமன் மீது அரக்கர்கள் தாக்குவதற்காக ஆயுதங்களுடன் பாயவும், அனுமன் தன் கையிலிருந்த மரத்தால், அவர்கள் அனைவரையும் தாக்கி, நசுக்கி அழித்தான். இரத்த வெள்ளத்தில் பிணமாகிப் போயினர் வந்த அரக்கர்கள்.

வேதங்களுக்கு நிகரான அனுமன், கண நேரத்தில் கைகளாலும், வாலாலும் அரக்கர்களை துவம்சம் செய்தான். கோபம் கொண்டு புற்றீசல் போல வந்து போரிட்ட அரக்கர்கள் அனைவரும் அனுமனால் எமனுலகம் அனுப்பப்பட்டனர். இராவணன் இட்ட கட்டளையால் சாரி சாரியாக வந்த அரக்கர்கள் அனுமனால் அடித்துக் கொல்லப்பட்டனர். ஆனால் ஒருவர் கூட புறமுதுகு காட்டி ஓடிவிடவில்லை, என்னே அரக்கர்களது வீரம்!

போரிடுவதற்காக வந்த கிங்கரர்கள் அனைவரும் மாண்டுபோன செய்தி இராவணனுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே இராவணன், “அந்த குரங்கு என்னவாயிற்று?” என்று கேட்டான்.

“அந்த குரங்கு இருந்த இடத்தைவிட்டு சிறிதுகூட அசையவில்லை” என்று உரைத்தனர் காவலாளிகள்.

இதைக் கேட்ட இராவணனின் முகம் கோபத்தால் சிவந்தது. உடனே சம்புமாலி எனும் ஒப்பற்ற வீரனை அழைத்தான்.

“சம்புமாலி! நீ உன் குதிரைப் படையுடன் சென்று அந்தக் குரங்கை வென்று கயிற்றால் பிணைத்து என் முன் கொண்டு வந்து நிறுத்து. அப்போதுதான் என் சினம் தணியும்” என்றான் இராவணன்.

சம்புமாலியும் இராவணனை வணங்கிவிட்டு அனுமனுடன் போரிடுவதற்காகத் தன் படைகளுடன் சென்றான். சம்புமாலியின் தந்தை பிரகஸ்தன் கொடுத்த வாளும், இராவணன் அனுப்பிய பெரும் படை இவற்றொடும் அவன் போருக்குச் சென்றான். கிங்கரப் படையைக் கொன்று குவித்து விட்டு நின்ற அனுமன் தன்னுடன் போரிட படைகள் எதுவும் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டு, அங்கிருந்த தோரண வாயிலின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்கு உட்கார்ந்தபடி தன் தோள்களைத் தட்டி ஆர்ப்பரித்தான்.

அப்போது அனுமனுடன் போரிட வந்த சம்புமாலியின் படை அங்கு வந்து சேர்ந்தது. படைகளைப் பல பிரிவுகளாகப் பிரித்து சம்புமாலி அனுமனைத் தாக்கச் சொன்னான். இராமபிரானது ஆசியையுடைய அனுமன், தானே ஒரு படையாக, இரு கரங்களும், பக்கச் சேனைகளாகவும், அவனது வால் பின்புறச் சேனையாகவும் பாவித்துப் போருக்குத் தயாராக நின்றான்.

வந்து எதிரே நின்று போர்புரியும் அரக்கர் படை வீசிய ஆயுதங்களைப் பற்றி கடலில் தூக்கி எறிந்தான் அனுமன். கண்களில் தீப்பொறி பறக்க அருகில் இருந்த ஓர் இரும்புத் தடியை எடுத்துக் கொண்டான்.

“இருந்தனன், எழுந்தனன், இழிந்தனன், உயர்ந்தான்

திரிந்தனன், புரிந்தனன், என நனி தெரியார்

விரிந்தவர் குவிந்தவர் விலங்கினர் கலந்தார்

பொருந்தினர், நெருங்கினர் களம்படப் புடைத்தான்”.

மின்னலைப் போல விரைவாக எழுந்தான் அனுமன், நிமிர்ந்து பார்த்தான், போர்க்களம் முழுதும் கணப்பொழுதில் திரிந்தான், எதிரிகளை அடித்தான், அரக்கர் அனைவரையும் களத்தில் ஒன்றாக அழியும்படி இரும்புத் தடியால் அடித்துக் கொன்றான். அனுமனைப் பிடிக்க வந்த அரக்கர் படை அடியோடு அழிந்து போயிற்று. சம்புமாலி மட்டும் தனியனாக நின்றான். தனித்து நிற்கும் நீ உயிர் பிழைத்து ஓடிப்போ என்றான் அனுமன் சம்புமாலியிடம்.

சம்புமாலியும் மகா வீரனல்லவா? அப்படி கோழை போல ஓடவில்லை. கோபத்துடன் சரமாரியாக அனுமன் மீது அம்புகளைச் செலுத்தினான். அவற்றை அனுமன் இரும்புத் தடியால் அடித்து நொறுக்கினான். இரும்புத் தடியின் கூரான பகுதியைப் பார்த்து ஓர் அம்பினை எய்து சம்புமாலி அதன் ஒடித்தான். தன் ஆயுதம் அறுபட்டது கண்டு அனுமன் மனம் சலித்தான். சம்புமாலி விட்ட அம்புகளைத் தன் கையால் தடுத்தான். பின்னர் தாவிச் சென்று சம்புமாலியின் தேர்மீது குதித்து அவன் கையில் இருந்த வில்லைப் பிடுங்கி அவன் கழுத்தில் மாட்டி கீழே தள்ளினான். சம்புமாலி இறந்து கீழே விழுந்தான். அனுமன் தேரிலிருந்து கீழே குதித்து அந்தத் தேரை, தேரோட்டி குதிரைகளோடு தன் காலால் மிதித்து நொறுக்கி நசுக்கினான்.

கண்டவர்கள் ஓடிச் சென்று இராவணனிடம் “ஐயனே! நம்மவர்கள் அனைவரும் போர்க்களத்தில் இறந்து போனார்கள். சம்புமாலியும் இறந்து போனான். இவை அனைத்தையும் செய்தது அந்த குரங்கு மட்டுமே” என்றனர். இராவணனுக்குக் கோபம் தலைக்கேறியது. தானே சென்று அந்தக் குரங்கைப் பிடிப்பதாகச் சொல்லி கிளம்பினான். இதைக் கண்ட சேனைத் தலைவர் ஐவர், இராவணனிடம் சென்று, “இராவணேஸ்வரா! கேவலம் ஒரு குரங்கோடு நீங்கள் சென்று போர் புரிவது நமக்கு அவமானம் அல்லவா? வலிமையுள்ள ஒரு கருடன் கொசுவோடு மோதுவது போல இருக்காதா? நீங்கலே போருக்குப் போவதானால், உங்களுக்குத் துணைபுரிய வீரர்கள் இல்லை என்றல்லவா ஆகிவிடும். எனவே எங்களை அனுப்புங்கள், நாங்கள் போய் அந்தக் குரங்கைப் பிடித்து வருகிறோம்” என்று அந்த ஐந்து சேனாதிபதிகளும் கேட்டுக் கொண்டனர். அந்த ஐந்து பேரின் பெயர்களாவன: விரூபாட்சன், யூபாசன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்பதாகும்.

சேனாதிபதிகளின் வேண்டுகோளை இராவணனும் ஏற்றுக்கொண்டு, அவர்கள் போருக்குப் போவதற்கு சம்மதித்தான். அந்த படைத்தலைவர்கள் முரசு அறைந்து அரக்க வீரர்களைத் திரட்டிக் கொண்டு ஐம்பெரும் பூதங்களைப் போல, சேனைகளோடு அணிவகுத்துச் சென்றனர்.

முன்பொருகாலத்தில் பெரும் செல்வத்துக்கு அதிபதியான குபேரனைத் தாக்கி, அவனது நகரமான அளகாப்ரியோடு அவன் செல்வத்தையும் இராவணன் கவர்ந்து கொண்டு, குபேரனை அங்கிருந்து துரத்தி விடுகிறான். அப்படி குபேரனிடமிருந்து கவர்ந்த பொன் நகைகளையெல்லாம், இந்த ஐந்து படைத்தலைவர்களும் மேலே அணிந்திருந்தனர்.

அரக்கப்படை அனுமனை எதிர் கொண்டது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பதைத்தனர். அனுமன் இந்த அரக்கர் படையை இன்றே அழிப்பேன் என்று அலைகடல் போன்ற அவர்களைப் பார்த்துப் பின் தனது தோள்களையும் பார்த்துக் கொண்டான். இந்தச் சின்ன குரங்கா இவ்வளவு அரக்கர்களைக் கொன்றது என்று அதிசயித்தது அரக்கர் படை. இதே நேரத்தில் அனுமனும் இந்திரனின் தலைநகரிலிருந்து கொண்டு வந்து அசோக வனத்தில் வைக்கப்பட்டிருந்த தோரண வாயிலின் மீது ஏறி நின்று கொண்டு தன் விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டான். அனுமனுடைய இந்த பெரிய உருவத்தைப் பார்த்ததும் அரக்கர்கள் கோபம் கொண்டனர். அவன் மீது சரமாரியாக அம்புகளை எய்தனர். சங்குகள் முழங்கின. முரசுகள் ஒலித்தன, போர்ப்படை வாத்தியங்கள் அதிர்ந்தன.

அரக்கர்கள் ஏராளமான ஆயுதங்களை அனுமன் மீது ஏவினர். அவைகளெல்லாம், அவனது உடலைத் தடவிக் கொடுப்பது போல இருந்தன அனுமனுக்கு. அவனும் ஆனந்தமாக அந்த சுகத்தை அனுபவித்தான். அரக்கர்கள் ஒருமித்துத் தாக்க வேண்டும், அப்போது தான் அவர்களை ஒரேயடியாக அழிக்க முடியுமென்று எண்ணி, ஒரு பெரிய இரும்புத் தூணைக் கையில் எடுத்துக் கொண்டான் அனுமன். அதால் அடித்து அலை அலையாய் வந்த அரக்கர்களைக் கொன்று குவித்தான்.

அரக்கர் படை வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, ஐந்து படைத் தலைவர்களும் அனுமனைச் சூழ்ந்து கொண்டனர். அனுமன்மீது அம்பு மழையைப் பொழிந்தனர். அவற்றை அவன் தன் கைகளால் தடுத்து விலக்கினான். படைத் தலைவன் ஒருவனது தேருக்குள் புகுந்து அதை வேகமாக இயக்கச் செய்யும் எந்திரம் ஒன்றை உடைத்தெறிந்தான். கடுமையான போர் நடந்தது. அனுமன் அந்த ஐவரையும் ஒருவர் பின் ஒருவராக எமனுலகம் அனுப்பி வைத்தான். அரக்கர் படையில் உயிர் பிழைத்தவர் எவரும் மிஞ்சவில்லை.

இப்படி ஐந்து படைத்தலைவர்களும், அவர்கள் அரக்கர் படையும் அனுமனால் அழித்து ஒழிக்கப்பட்ட செய்தி இராவணனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அசோக வனத்தை பருவத் தேவர்கள் காவல் புரிந்து வந்தனர். அவர்கள் போய் இராவணனிடம் படைத்தலைவர்களும், படைகளும் அழிந்த செய்தியைச் சொன்னார்கள். இராவணன் கோபப் பெருமூச்சு விட்டான். நானே போருக்குப் போகிறேன் என்று முடிவு செய்து கிளம்பினான். ஆனால் இராவணனுடைய மகனான அட்சயகுமாரன் தந்தையைத் தடுத்துத் தானே போருக்குப் போவதாகக் கூறினான்.

அட்சயகுமாரனோடு பன்னிரெண்டாயிரம் இளைஞர்கள் மற்றும் நான்கு இலட்சம் வீரர்கள் புடைசூழ எந்திரப் பொறி அமைந்த தேர்களில் போருக்குக் கிளம்பினார்கள். தனக்கு எதிரில் பெருத்த ஆரவாரத்துடன் கூச்சலிட்டுக் கொண்டு வந்து நிற்கும் கடல் போன்ற சேனையை அனுமன் பார்த்தான். போருக்கு வந்திருப்பவன் யார்? இந்திரசித்தனோ அல்லது அந்த இராவணனோ? என்று ஐயுற்றான். அதனால் அவனுக்கு உற்சாகம் ஏற்பட்டது.

இராமபிரானை மனத்தால் நினைத்து வணங்கினான். சுக்ரீவனுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினான். இதோ எதிரில் வந்து நிற்கும் அரக்கர்களின் உயிரைக் கொண்டு போக எமனும் வந்துவிட்டானே என்று எதிரே நின்றவனை உற்றுப் பார்த்தான். அடடா! இவன் இராவணனும் இல்லை, இந்திரனை வென்ற இந்திரஜித்தனும் இல்லை, இவனோ குற்றமற்ற இளைஞன். போர்த்தொழிலில் வல்ல முருகனும் அல்லன், இவன் யாரோ? என்று எண்ணினான்.

அனுமனைப் பார்த்துவிட்ட அட்சயகுமாரன், “அரக்கர் கூட்டத்தைக் கொன்றது இந்தக் குரங்குதானா?” என்று அலட்சியமாகக் கேட்டான். அப்போது அட்சயகுமாரனுடைய தேர்ப்பாகன் அவனிடம், “ஐயனே! எவரையும் உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாட வேண்டாம். நம் மன்னன் இராவணனை வென்ற வாலியும் ஓர் குரங்குதான் என்பதை உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. இதை மனதில் கொண்டு போர் செய்” என்றான்.

“இலங்கைக்கு இந்த குரங்கு செய்துவிட்ட அழிவின் காரணமாக, இவனை மட்டும் அல்ல, உலகின் மூலைமுடுக்குகளுக் கெல்லாம் சென்று ஆங்காங்குள்ள குரங்குக் கூட்டம் அனைத்தையும் அழிப்பேன்” என்றான் அட்சயகுமாரன்.

அரக்கர் கூட்டம் அஞ்சனை குமாரனைச் சூழ்ந்து கொண்டது. அவன் மேல் ஆயுதங்களையும், அம்புகளையும் ஏவியது. இந்த உக்கிரமான போரால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. அனுமன் தனியனாக அந்தப் படையுடன் போர் புரிந்தான். அட்சயகுமாரனும் அனுமனும் நேருக்கு நேராகப் போர் புரிந்தனர். கையில் வில் ஏந்தி அட்சயகுமாரன் அனுமன் எதிரில் வந்து நிற்க, அந்த வில்லைத் தன் கையால் பற்றிக் கொண்டான் அனுமன். இருவரும் இழுத்த இழுப்பில் வில் முறிந்துவிட்டது. உடனே அட்சயகுமாரன் தன் வாளை எடுத்து அனுமனைக் குத்தினான். அதைப் பிடுங்கி உடைத்து எறிந்தான் அனுமன்.

இரு கரங்களாலும் அந்த அரக்ககுமாரனைப் பிடித்து தரையோடு தரையாக அம்மியில் அரைப்பது போல அறைத்தான் அனுமன். அட்சயகுமாரன் தேய்ந்து நசுங்கி மாண்டுபோனான். அரக்கியர் அலறினர். அட்சயகுமாரனின் தாய் மண்டோதரி இராவணன் காலடியில் விழுந்து அழுதாள். தன் தம்பி அனுமனால் கொல்லப்பட்ட செய்தியை இந்திரஜித் கேட்டான். உலகம் நடுங்கும்படியாக கடும் கோபம் கொண்டான். தம்பியை நினைத்து தாரைதாரையாகக் கண்ணீர் சிந்தினான்.

தன் வில்லைப் பார்த்து இந்திரஜித் கேட்டான் “மரத்தில் வாழும் ஒரு குரங்கு என் தம்பியைக் கொன்றதா? இல்லை. என் தந்தை இராவணனின் புகழை அல்லவா கொன்றது! என்றான். தம்பியை நினைத்து அழுது புலம்பிய இந்திரஜித் இராவணனின் காலடியில் போய் விழுந்து வணங்கினான். அஞ்சாத இராவணனும் அவன் தோள்களைப் பிடித்துத் தூக்கி நிறுத்தித் தழுவிக் கொண்டான்.

“”அரசே! நீ நன்மை தரக்கூடிய ஒரு விஷயத்தை உணரவில்லை. துன்பம் வந்த பிறகு வருந்துகிறாய். கொடிய குரங்கின் வலிமையை அறிந்த பிறகும், மேலும் மேலும் நம் வீரர்களை அனுப்பி எமனுலகம் அனுப்பி வைக்கிறாய். அப்படி கிங்கரர்கள், சம்புமாலி, ஐந்து படைத் தலைவர்கள் என்று ஒருவர் பின் ஒருவராக இறந்து போனார்கள். இப்போது அருமைத் தம்பி அட்சயகுமாரனும் அந்தக் குரங்குக்கு பலியாகி விட்டான். இவ்வளவு பேர் போனபிறகும் அதை வெல்வோம் என்று சொன்னால் அறிவுடைமை ஆகுமா?”.

“ஆனாலும் ஐயனே! அந்தக் குரங்கை நான் பிடித்து வருகிறேன். கண நேரத்தில் அந்தக் காரியத்தை செய்து முடிக்கிறேன். கவலையை விடு” என்றான். பிறகு இராவணனிடம் ஆசிபெற்று போருக்குக் கிளம்பினான் இந்திரஜித்தன். அங்கிருந்து கிளம்பி போர்க்களம் நோக்கிப் போகின்ற போது அனுமன் செய்த போர் ஆற்றலை எண்ணிப் பார்க்கிறான் இந்திரஜித். இவனது பேராற்றல்தான் என்னே என்று சிந்தனை வயப்பட்டுப் போகிறான்.

காட்டிலே மூக்கறுபட்டு அத்தை சூர்ப்பனகை அவமானப்பட்டதையும், கரன் முதலானோர் இறந்து போனதையும், தம்பி அட்சயகுமாரன் இறந்து போன கொடுமையான காட்சியையும் எண்ணிப் பார்க்கிறான் இந்திரஜித். இவை அனைத்தையும் செய்தது ஒரு வானரம். அந்த வானரத்தை அனுப்பியது இரண்டு மானுடர்கள் என்ற நினைவு அவனது கோபத்தை அதிகரித்தது. இந்திரஜித், தன் தம்பி அனுமனுடன் போரிட்டு தரையோடு தரையாகத் தேய்க்கப்பட்டு இறந்துபோன இடத்தைப் போய் பார்த்தான். நெருப்பில் காய்ச்சிய செம்பு போல அவன் முகம் பழுக்க, சோகம் அவனைக் கப்பிக் கொண்டது.

இப்படிக் கோபமும், ஆத்திரமும், சோகமுமாகப் போர்க்களம் வந்த இந்திரஜித்தை அனுமன் பார்க்கிறான். இதற்கு முன்பாக வந்து போரிட்டவர்களை, நான் கொன்று விட்டேன் என்று மகா கோபத்தோடு இவன் வருகிறான். இந்த இந்திரஜித்தை நான் கொல்வதால் பல நன்மைகள் ஏற்படும். தேவர்கள் துன்பத்திலிருந்து மீள்வர். இவனைக் கொல்வது இராவணனைக் கொல்வதற்குச் சமம் என்று நினைத்துக் கொள்கிறான். அப்போது அரக்கர்களின் படைகள் பெருத்த ஆரவாரத்துடன் அனுமனை சூழ்ந்து கொள்ள, அவன் ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கிக் கொண்டான். தனது பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு போரிடத் தயார் ஆனான்.

பெரிய புயல் வீசுவது போல அனுமன் தாக்கியதில் அரக்கர் படையில் தேர்கள் முறிந்து விழுந்தன. யானைகள் கும்பல் கும்பலாக அழிந்தன; குதிரைகள் கால்கள் முறிந்து கீழே விழுந்தன; மார்பு ஒடிந்தன, குளம்புகள் நொறுங்கின; கழுத்துகள் ஒடிந்து மாண்டன. அரக்கர்களைப் பிடித்து அனுமன் அக்கு அக்காக தலை வேறு கால் வேறாக பிய்த்து எறிந்தான். உடல் பிளந்து முண்டங்களாக இறந்து விழுந்தனர் அரக்கர்கள். அவன் மீது எறியப்பட்ட அம்புகள் அனைத்தும் கருகி உதிர்ந்தன.

“போருக்கு வாருங்கள்! வாருங்கள்!” என்று அனுமன் அவனை அழைத்தான். தன் மலை போன்ற தோள்களைத் தட்டி இடிமுழக்கம் செய்தான் அனுமன். “கொடியவர்களே! உங்கள் வாழ்நாளுக்கு முடிவு வந்துவிட்டது. இவ்வுலகை ஆளும் உரிமைக்கு முடிவு வந்துவிட்டது; உமது கொடிய செயல்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது; எங்கள் இராமனின் வலிமைக்கு முடிவு என்பது என்றுமே இல்லை என்பதைப் புரிந்து கொள்.”

அனுமனுக்கு இந்திரஜித் பதில் சொல்லுகிறான், “உன் எண்ணத்தை அழிக்கிறேன் பார்!” என்று அம்புகளை விட்டான். அனுமனது தலையிலும் மார்பிலும் அம்புகள் பட்டு இரத்தம் வழிந்தது. தேவர்கள் திகைத்தனர். அனுமனது உடல் மேலும் மேலும் பெரிதாகிக் கொண்டே போயிற்று. நன்னெறியில் நிற்கும் இராமனது புகழைப் போல!.

அனுமனை முழுமையாக இந்திரஜித்தால் பார்க்க முடியவில்லை. அரக்கன் விட்ட அம்புகளைப் பிடித்துத் திரும்பவும் அவன் மீதே அனுமன் வீசினான். அப்போது புதிய தேரொன்று போர்க்களத்துக்கு வந்து இந்திரஜித்தை அதில் ஏற்றிக் கொண்டது. அனுமன் தனது உடலை அசைத்துத் தன் மீது பாய்ந்திருந்த அம்புகளைக் கீழே உதிர்த்தான். இந்திரஜித்தினுடைய தேர் மீது பாய்ந்து ஏறி, அவன் கை வில்லைப் பிடுங்கி ஒடித்தான் அனுமன். உடனே இந்திரஜித் தனது வஜ்ராயுதத்தை கையில் எடுத்தான். இந்த வஜ்ராயுதத்தால்தான் இந்திரஜித் இந்திரனை வென்றான். இப்போது அந்த ஆயுதத்தை அனுமன் மீது பிரயோகிக்க எண்ணி கையில் எடுத்தான். அதிலிருந்து ஒன்றை நூறாக்கி அம்புகளை மழைபோல அனுமன் மேல் பொழிந்தான். அனுமனும் சற்று அயர்ந்தான்.

போரில் அனுமன் தளர்ந்து போனது கண்ட தேவர்கள் துன்பம் அடைந்தார்கள். அனுமன் ஓர் மரத்தைப் பிடுங்கி வீசி அடித்து தன் மீது பாய்ந்து வரும் அம்புகலைச் சிதற அடித்தான். அந்த மரத்தால் இந்திரஜித்தின் தலைமீது இருந்த மணி முடியில் ஓங்கி அடித்தான். மணிமுடி உடைந்து கீழே விழ, இந்திரஜித் நடுங்கி நின்றான். இதனால் உச்சகட்ட கோபத்தை அடைந்த இந்திரஜித் ஓர் ஆயிரம் அம்புகளை அனுமன் மீது செலுத்த, அவை அனுமன் உடல் முழுவதும் பாய்ந்தன. இதனால் வெறுப்புற்ற அனுமன் இந்திரஜித்தை அவன் தேரோடு தூக்கி வானத்தில் வீசி எறிந்துவிட்டுக் கூச்சலிட்டான்.

இந்திரஜித் தேரோடு தரையில் விழுந்தான். பின் எழுந்து வானில் சென்றான். வேறு வழி எதுவும் தெரியாததால் அவன் பிரம்மாஸ்திரத்தை அனுமன் மீது ஏவ முடிவு செய்தான். மானசீகமாக பிரம்மாஸ்திரத்திற்கு பூஜைகளும், அர்ச்சனை வழிபாடுகளும், சகல கோடி தெய்வங்களையும் வணங்கி, அந்த அஸ்திரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டான்.

பெரிய வில் ஒன்றினை எடுத்து பிரம்மஸ்திரத்தை அதில் பொருத்தி அனுமன் மீது ஏவினான். பூமி நடுங்கியது; திசைகள் நடுங்கின; சந்திர சூரியர்கள் நடுங்கினர்; வானமும் மேரு மலையும் நடுங்கின. எவராலும் அடக்க முடியாத வலிமை கொண்ட பிரம்மாஸ்திரம் நெருப்பை உமிழ்ந்து அச்சம் தரும் நாகப் பாம்புகளின் தலவன் உருக்கொண்டு, அனுமனின் தோள்களைச் சுற்றிக் கொண்டு கட்டிப் போட்டது. அஸ்திரத்தால் கட்டுண்ட அனுமன் கீழேவிழ, அறக் கடவுளும் அவனுடன் கீழே விழுந்தான். தன்னைக் கட்டிக் கீழே சாய்த்தது பிரம்மாஸ்திரம் என்பதை அனுமன் உணர்ந்து கொண்டான். அந்த அஸ்திரத்தை மதித்துக் கட்டுப்படுவதுதான் முறை என்று அதற்குக் கட்டுப்பட்டான். கண்மூடி இருந்தான் அனுமன். இதைக் கண்ட இந்திரஜித் ‘ஒழிந்தது இவன் வலிமை’ என்று நினைத்துக் கொண்டு, அவன் அருகில் வந்தான்.

இதுவரை அனுமனுக்குப் பயந்து கொண்டு ஓடிப்போய் ஒளிந்து கொண்டிருந்த அரக்கர்கள், ஓடி வந்து விழுந்து கிடக்கும் அனுமனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவனைச் சுற்றிக் கொண்டு இறுகப் பிணைத்திருக்கும் பாம்பை சீண்டினார்கள். அனுமனை அதட்டினார்கள்; ஆனந்தத்தால் ஆரவாரித்தார்கள். அரக்கர் கூட்டம் ஆண்களும் பெண்களுமாக எங்கிருந்தெல்லாமோ வந்து, விழுந்து கிடக்கும் அனுமனைச் சுற்றி நின்று ஆர்ப்பரித்துக் கூச்சலிட்டனர். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“இந்தக் குரங்கை அம்பினால் குத்துங்கள்! வாளால் வெட்டுங்கள்! ஈட்டியால் குத்துங்கள்! கோடர்ியால் பிளவுங்கள்! குடலை உறுவுங்கள்! தரையோடு அவனைத் தேயுங்கள்! இவன் சதையைக் கடித்துத் தின்னுங்கள்!” என்று கூச்சலிட்டுக் கொண்டு, “இவன் உயிர் பிழைத்தால், நமக்கு உயிர் இருக்காது” என்று ஓடினார்கள். “இந்தக் குரங்குப் பயலை இன்னமும் விட்டு வைப்பதோ?” என்று வெகுண்டனர். “இவனைக் கடலில் கொண்டு போய் தள்ளி மூழ்கடியுங்கள், இல்லையேல் தீ வைத்து கொளுத்தி விடுங்கள்” என்றனர். “நீ கொன்று போட்ட எங்களவர்களை எங்களுக்குத் திரும்பத் தா!” என அடம்பிடித்தனர் சிலர். “அந்த தேவர்களே இவனை இங்கே அனுப்பியது. அவர்களைத் தொலைத்து விடுவோம்” என முழக்கமிட்டனர் சிலர்.

அனுமனைக் கயிற்றலும் கொடிகளாலும் கட்டி தெருவோடு இழுத்துச் சென்றனர். இந்தக் காட்சியை ஊரே வேடிக்கை பார்த்தது. கூடிநின்று கூத்தாடிய கூட்டத்தையும் இடிந்து விழுந்த மாளிகைகளையும் பார்த்தவாறு அரக்கர்கள் இழுத்த இழுப்புக்கு ஏற்ப அனுமன் போய்க்கொண்டிருந்தான். பலர் அவனைப் பார்க்க அஞ்சி ஓடினர். சிலர் மறைந்து கொண்டனர். சிலர் அவனை இரங்கி ‘எங்களை கோபிக்காதே’ என்று வேண்டிக் கொண்டனர்.

கட்டிப் பிணைக்கப்பட்ட அவன் உடலை ஐம்பதினாயிரம் கிங்கரர் இழுத்துச் சென்றனர். இப்படியே இவர்கள் இழுத்த பக்கம் போனால், இராவனனைப் பார்க்கலாம் என்ற நினைப்பில், அனுமனும் வாளவிருந்தான். என் தந்தை வாயுபகவான். அருளாலும், இராமன் திருவடிகளின் பலத்தாலும், சீதையும் தேவர்களும் அளித்துள்ள பலத்தாலும், இந்த பிரம்மாஸ்திரத்தை இப்போதே அறுத்தெறிய முடியும். எனினும் அப்படிச் செய்யாமல் இருப்பதே இப்போது நல்லது என்று நினைத்தபடி அரக்கர்களின் விருப்பப்படி இழுத்துச் செல்லும்படி விட்டுவிட்டான்.

அனுமனை இழுத்துக் கொண்டு அரக்கர்கள் இந்திரஜித் தலைமையில் இராவணன் அரண்மனையை அடைந்தனர். இராவணனுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி அனுப்பப்பட்டது. இதனைக் கேட்டதும் அவன் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டான். அந்தக் குரங்கை என்முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என்று ஆணையிட்டான்.

இந்த நிலையில் அசோகவனத்தில் இருந்த அன்னை சீதாதேவியின் நிலைமையைச் சற்று பார்ப்போம். அனுமன் அசோகவனத்தை அழித்துவிட்டான், எண்ணற்ற அரக்கர்களைக் கொன்று விட்டான் என்ற செய்தி சீதைக்குத் தெரிய வந்தபோது அன்னை மகிழ்ந்தாள். இந்திரஜித் நாகபாசத்தால் அனுமனைக் கட்டி இராவணன் சபைக்கு அழைத்துச் சென்ற செய்தி கேட்டு வருந்தினான். சீதை அனுமனைப் பற்றி சிந்திக்கலானாள். வான்முகட்டைத் தொடும்படியான பேருருவை எடுத்தானே, கடலை நொடிப் பொழுதில் கடந்து வந்தானே, அரக்கர்களைக் கொன்று குவித்தானே, இன்று வஞ்சக அரக்கன் உன்னை நாகபாசத்தால் கட்டிவிட்டான் என்கிற துயரச் செய்தி எனக்குத் துன்பமளிக்கிறதே என்று வருந்தினாள்.

இராமபிரானுடைய கணையாழியை எனக்குக் காட்டி, நான் உயிரை விட்டுவிடாமல் என்னைக் காத்தானே. அவனுக்குச் சிரஞ்ஜீவித் தன்மை வழங்கி வாழ்த்தினேனே, என் வாக்கு பலிக்குமே, அப்படியிருக்க, வஞ்சக அரக்கனிடம் எப்படி கட்டுண்டான்? ஏ! மாருதி! உன்னால், உன் உதவியால் இராமன் இங்கு வந்து என்னை மீட்டுச் செல்வான் என்று நம்பினேனே, இப்போது அந்த நம்பிக்கை வீண்போகி விடும் போல் இருக்கிறதே. இவ்வாறெல்லாம் எண்ணி சீதாபிராட்டி மனம் தளர்ச்சியுற்றாள்.

அங்கு! அனுமன் இராவணனது சபைக்குக் கட்டி இழுத்துவரப்பட்டான். சபையில் இராவணன் ஆடம்பரமாகக் கொலு வீற்றிருந்தான். அவைக்குள் இழுத்துவரப்பட்ட அனுமன், இராவணனை நேருக்கு நேராகப் பார்க்கிறான். கரு நாகத்தைக் கண்ட கருடன் போல கோபம் கொண்டான். இந்த நாகபாசத்தை அறுத்தெறிந்து இப்போதே இந்த அரக்கனைக் கொல்வேன் என்று ஆவேசம் கொண்டான். முன்பு நான் இவனைப் பார்த்த போது இவன் தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் அவனைக் கொல்லவில்லை. இப்போது அவையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இவனை நேருக்கு நேர் போரிட்டுக் கொல்வது தவறாகாது, என்று நாகபாசத்தை அறுக்க எண்ணியபோது, அது தவறு என்று தோன்றியது அவனுக்கு.

இவனால் என்ன வெல்லமும் முடியாது. நான் இவனை இங்கு வெல்வதும் முடியாத காரியம். இவனை வெல்வது இராமனுக்கு மட்டுமே முடியக்கூடிய காரியம். இவனைக் கொல்வதாக இராமபிரான் சபதம் செய்திருக்கிறார் அல்லவா? இவனை அவர்தான் கொல்ல வேண்டும். இவனோடு போரிட்டு நான் நாட்களைப் போக்கிக் கொண்டிருந்தால், எப்போது இராமனிடம் போவது, அன்னை இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிரோடு இருப்பேன் என்று வேறு கூறியிருக்கிறார்கலே! எனவே, இந்த இராவனனுடன் இப்போது போர் செய்யாமல் தூதனாகச் சந்திப்பதுதான் முறை என்று முடிவு செய்தான்.

இராவணன் சபைக்குக் கொண்டுவரப்பட்ட அனுமனை இந்திரஜித் அறிமுகப்படுத்துகிறான். “குரங்கு உருவில் இருக்கும் இந்த ஆண்மை மிக்க வீரன், சிவபெருமானையும், திருமாலையும் போல வீரமிக்கவன்” என்கிறான்.

இராவனன் அனுமனை நோக்கி, “நீ யார்? இலங்கைக்கு ஏன் வந்தாய்?” என்கிறான்.

“நீ யார்? சொல்! திருமாலா? சிவபெருமானா? அல்லது பிரமனா? அல்லது ஆதிசேடனா? யார் நீ?” உயிர்களைக் கவர்ந்து செல்லும் யமனா? வீரத்தில் வல்ல முருகப் பெருமானா? அல்லது முனிவர்கள் ஏவிவிட்ட பூதமா? இலங்கை நகரை அழிக்க இந்திரன் அனுப்பிய தெய்வமா? யார் நீ? சொல்லி விடு!” என்றான் இராவணன்.

அனுமன் சொன்னான், “நான், நீ கூறிய எவரும் அல்ல. ஒப்பற்ற வில் வீரனான இராமபிரானின் தூதன் நான். இராமபிரான் யார் தெரியுமா? தேவன் அல்லன்; அசுரன் அல்லன்; திசை யானைகள் அல்லன்; திசைத் தெய்வமும் அல்லன்; கயிலை மலைவாழ் சிவபெருமானும் அல்லன்; மும்மூர்த்திகளும் அல்லன்; முனிவனும் அல்லன்; அவன் பூமண்டலத்தை ஆளும் ஓர் அரசனின் புதல்வன்.”

“அவன், வேதங்களும், அறமும் போற்றுகின்ற உண்மை அறத்தின் வடிவாய் நிற்கும் பரம்பொருள். தர்மமே ஒரு இராஜகுமாரனாகப் பிறந்த காரணம் என்ன தெரியுமா? வேதங்களும், உபநிடதங்களும் இன்னது எனக் குறிப்பிட்டுக் கூறமுடியாத — அறிவுக்கு அறிவாக இருப்பவன். அன்று முதலை, காலைக் கவ்விய போது ‘ஆதிமூலமே!’ என்று கதறிய யானைக்கு உதவ ஓடிவந்தவன். தேவர்களைக் காப்பாற்ற இன்று வந்திருக்கிறான்”

“மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய

காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி

சூலமும் திகிரிச் சங்கும் கரகமும் துறந்து தொல்லை

ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்”

“இவனுக்கு ஒரு தொடக்கமோ, நடுவோ அல்லது முடிவோ இல்லை. இறப்பு, நடப்பு, பிறப்பு எனும் முக்காலத்தையும், அதன் கணக்குகளையும் கடந்தவன் இவன். அந்தப் பரம்பொருள் சூலம், சக்கரம், சங்கு, கமண்டலம் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, வில் ஏந்திய கையனாக, ஆலிலையும், தாமரை மலரையும், கயிலை மலையையும் விட்டு நீங்கி அயோத்தியில் இராமனாக வந்து பிறந்திருக்கிறான்”.

“அவன் பிறப்பை அறுப்பவன்; அறத்தை வளர்ப்பவன். வேத நெறிகளின்படி வாழ்பவன். நல்லோர் வாழவும், தீயோர் அழியவும் திறன்படைத்து, தர்மத்தை நிலைநாட்டிய பின் தன் சொந்த இடம் திரும்பும்படியாக அவதாரம் செய்திருப்பவன். அந்த அருளாளனாகிய இராமபிரானுக்கு அடிமை செய்பவன் நான். அவன் மனைவி சீதா தேவியைத் தேடி நாலாபுறமும் வந்தவர்களில் வாலியின் புதல்வன் தலைமையில் வந்திருப்பவன் நான். அவனுடைய தூதனாக இங்கே வந்தேன். தனியாகத்தான் வந்திருக்கிறேன்” என்றான் அனுமன்.

அனுமன் வாலியின் பெயரைக் குறிப்பிட்டதாலோ என்னவோ, தன் பற்கள் தெரிய சிரித்துவிட்டு, “வாலியின் மகன் அனுப்பிய தூதனா நீ? வன் திறல் வாலி வலியன் கொல்! அரசின் வாழ்க்கை நன்று கொல்” என்றான் இராவணன்.

வாலியின் பெயரைச் சொன்னதுமே இராவணன் ஆட்டம் காண்பதைக் கண்டு அனுமன் கேலியாகச் சிரித்துக்கொண்டு, “அரக்கனே! அஞ்சாதே! வாலி இந்த உலகத்தை நீங்கி வானுலகம் சென்று விட்டான். இனி திரும்பி வர மாட்டான். அவன் மட்டுமல்ல. அவனோடு அவன் வாலும் போய்ச் சேர்ந்துவிட்டது. கருநிறத்து இராமன் விடுத்த ஓர் அம்பினால், அவன் உயிரை விட்டான். இப்போது வாலியின் தம்பி சுக்ரீவனே எமது அரசன்” என்றான்.

இது ஏதடா வம்பாய் போயிற்று. இராமன் மனைவியைக் காணவில்லை என்று சுக்ரீவன் தேடுவானேன்? தன்னை முன்பு வாலால் கட்டி மூவுலகத்துக்கும் அலைக்கழித்த வாலியின் புதல்வன் தேடி வருவானேன்? அவனது தூதனாய் இந்த பொல்லாத குரங்கு இவ்வளவு அழிவைச் செய்வானேன்? பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்ததே!

“வாலியை இராமன் ஏன் கொன்றான்? அந்த இராமன் இப்போது எங்கே இருக்கிறான்? இராமன் மனைவியைத் தேடி வாலியின் மைந்தன் அங்கதன் வருவானேன். எனக்கு விளக்கமாகச் சொல்” என்றான் இராவணன்.

“காட்டில் தேவியைப் பறிகொடுத்த இராமபிரான், எம் அரசன் சுக்ரீவனோடு நட்பு கொண்டான். அவரது துன்பம் தீர அன்னையைத் தேடிக் கண்டுபிடிக்க ஒப்புக் கொள்ள, இராமனும் ராஜ்ஜியத்தை சுக்ரீவனுக்குக் கொடுத்துவிட்டு, வாலியைக் கொன்றான்.

சீதையைத் தேடி நாலாபுறமும் வானர வீரர்கள் சென்றார்கள். தென்புலம் நோக்கி வந்த படையில் அங்கதன் தலைமையில் நானும் வந்தேன்” என்றான் அனுமன்.

“உங்கள் குலத்தலைவன் வாலியைக் கொன்ற இராமனிடம் அடிமையாக வேலை செய்கிறீர்களே! அவமானமாக இல்லையா? உங்கள் புகழ் இன்னும் உங்களோடு இருக்குமா? தன் சொந்த அண்ணன் வாலியை, இராமனை விட்டுக் கொன்று விட்டு, அவனிடம் அன்பு கொண்ட சுக்ரீவன் எனக்கு என்ன தூது விட்டான்? தூது வந்த நீ, போரிட்டு உயிர்களைக் கொன்றது ஏன்? தூதனாக வந்திருக்கிறாய், அதனால் உன்னைக் கொல்ல மாட்டேன், உண்மையைச் சொல்” என்றான் இராவணன்.

இந்த அரக்கன் இராவணனுக்கு உலக நீதிகளை எடுத்துச் சொல்ல இதுவே நல்ல தருணம், சொல்லுவோம் என்று அனுமனும் சொல்லத் தொடங்கினான். “இராவணா! எம் அரசன் சூரியகுமாரன் சுக்ரீவன் சொன்னவற்றை உன்னிடம் சொல்லவே நான் வந்திருக்கிறேன். அவை இந்த சமயத்தில் பொருத்தமாக இருக்குமென்பதால் சொல்லுகிறேன். எம் மன்னன் கூறி அனுப்பியவை அனைத்தும் நீதி நிறைந்தவை; குற்றம் அற்றவை. அவற்றை நன்று என்று ஏற்றுக் கொள்வதானால், இப்போது நான் சொல்கிறேன். கேட்டுக் கொள்!”

“உன் வாழ்வை நீயே கெடுத்துக் கொண்டாய். அரச நீதியை அறவே மறந்து போனாய். தீய செயல்களையே செய்து அவற்றால் அழிவைத் தேடிக் கொண்டாய். என்றாலும் உனக்கு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு தருகிறேன். என் பேச்சைக் கேள்!. கற்பினுக்குத் தீ போன்ற சீதாபிராட்டியை நீ துன்புறுத்தியதாலேயே, உன் தவ வலிமை உன்னை விட்டு நீங்கிவிட்டது. சீதை மீது கொண்ட தகாத ஆசையால் உன் தூய்மை அழிந்து போயிற்று. முறையற்ற பிறன் மனை நயத்தலால், உன் காமச் செருக்கினால், அறத்தை மறந்தாய். அறம் மறந்து, அழியாமல் வாழ்தல் இயலுமோ? உன் அழிவும் நிச்சயம் என்று ஆகிவிட்டது”.

“பெண்ணாசையும், பொருளாசையும் அழிவில் கொண்டு விடும் என்பதால், உன் முறையற்ற செயலுக்கு வருந்தி உடனே சீதையைக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடு என்று சுக்ரீவன் சொல்லி அனுப்பினான்” என்றான் அனுமன்.

இப்படி அனுமன் கூறியதும், வெற்றியைத் தவிர வேறு எதையும் கண்டறியாத இராவணன் கோபத்தில் பெரும் சிரிப்பு சிரித்து, “எனக்கு இவற்றைச் சொல்லி அனுப்பியது ஒரு குன்றில் வாழும் அற்பக் குரங்கு! நன்று! நன்று!” என்றான்.

“சுக்ரீவன் எனும் குரங்கு சொன்னதும், இராமன், இலக்குவன் எனும் மானுடர் பெருமையும் ஒருபுறம் கிடக்கட்டும். தூதனாக வந்த நீ, எம் அரக்கர்கலைக் கொன்றது ஏன்? அதற்கு பதில் சொல்!” என்றான் இராவணன்.

“உன்னை எனக்கு அடையாளம் காட்ட ஒருவரும் இல்லை. அதனால் அசோகவனத்தை அழித்தேன். என் நோக்கம் புரியாமல் என்னைக் கொல்ல வந்த அரக்கர்களைக் கொன்றேன். உன்னிடம் கட்டி இழுத்து வந்தார்கள். சரிதான் உன்னைப் பார்க்கவேண்டும் என்பது தானே என் நோக்கம் அது இப்படி நிறைவேறுமானால் சரிதான் என்று அடக்கத்தோடு கட்டுப்பட்டு வருவது போல வந்தேன்” என்றான் அனுமன். இந்தக் கேலிப் பேச்சு இராவணனுடைய கோபத்தை அதிகப்படுத்தியது.

“இந்தக் குரங்கைக் கொல்லுங்கள்!” என்று ஆணையிட, கொலையாளிகள் வந்து அனுமனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்போது இராவணனுடைய தம்பி விபீஷணன் எழுந்து, “நில்லுங்கள்!” என்று தடுத்தான்.

அந்த அரக்கர் அவையில் அறம் அறிந்தவன் விபீஷணன். அவன் எழுந்து இராவணனை வணங்கி “அண்ணா! உனது கோபம் நீதி முறைக்கு உகுந்தது அல்ல. தகுதிசால் மன்னா! வேதங்களில் வல்லவனே! முன்பு அறநெறியில் உலகங்களைப் படைத்த பிரமனின் மரபிலே தோன்றினாய்! உன் தவ வலிமையால், இந்திரன் முதலான தேவர்களும் உனக்குப் பணி செய்யும் அளவுக்கு உயர்ந்து விட்டாய். தூதனாக வந்தேன் என்று ஒருவன் சொன்ன பின்பு, அவனைக் கொல்லத் துணிவாயோ?”.

“இந்தப் பூவுலகில் பெருமை வாய்ந்த மன்னர்களில் மாதர்களைக் கொன்றவர்கள்கூட இருக்கிறார்கள், ஆனால் தூதர்களைக் கொன்றதாக வரலாறு இல்லை. எதிரியின் நாட்டிற்குச் சென்று, தன் பக்க செய்திகளைக் கூறி, எதிரிக்குக் கோபம் வந்தால் அதைத் தணித்து உண்மையை நிலைநாட்டும் அறிவுத் தொழிலை மேற்கொண்ட தூதர்களைக் கொன்றால், தீராத பழியை ஏற்பாய். ஏனையோர் சிரிப்பார்கள்” என்று விபீஷணன் உரைத்தான்.

உடனே இராவணன் விபீஷணனைப் பார்த்து, “தம்பி! நல்ல நீதியைக் கூறினாய். இந்த வானரம் குற்றம் புரிந்தவனே. ஆனாலும் இவனைக் கொல்வது குற்றமே” என்று சொல்லி விட்டு அனுமனைப் பார்த்து, “நீ உடனே இராம லக்ஷ்மனர்களிடம் சென்று இங்கு நடந்தவற்றைக் கூறி அவர்களை இங்கே அழைத்து வா!” என்றான்.

பிறகு தன் வீரர்களை நோக்கி, “இந்த குரங்கின் வாலை தீயிட்டுக் கொளுத்தி, இலங்கை நகரைச் சுற்றி வரச் செய்து, பிறகு நம் நாட்டு எல்லையைத் தாண்டி விரட்டி விடுங்கள்” என்றான். அரக்கர்களும் ஆர்வத்தோடு எழுந்தார்கள்.

அப்போது இந்திரஜித் எழுந்து, “பிரம்மாஸ்திரம் இவனைப் பிணைத்திருக்கும்போது இவன் மீது தீயிடக்கூடாது. வலுவான கயிற்றைக் கொண்டு இவனை இறுகக் கட்டுங்கள்” என்று கூறி பிரம்மாஸ்திரத்தை விடுவித்தான். அரக்கர்கள் கயிறு கொண்டு அவனைப் பிணித்தார்கள். அனுமன் பிரம்மாஸ்திரத்தை அவமதிக்கக்கூடாது என்று இதுவரை அதற்குக் கட்டுப்பட்டு சும்மா இருந்தான். இப்போது அதை நீக்கிவிட்டார்கள். என் வாலை எரிப்பது என்பது ‘இந்த இலங்கைக்கு எரியூட்டுவது போலாகும்’ என்று நினைத்துக் கொண்டான்.

அனுமனுடைய உடலைப் பிணித்திருந்த கயிறுகள் மிக எளிதாக அறுத்தெறியக்கூடியவை, எனினும் அவன் உடல் வாடியது போல பாவனை செய்யவும், அரக்கர்கள் அவனை அங்கும் இங்குமாக இழுத்து அலைக்கழித்தார்கள். அவனால் சுலபமாக அவர்களிடமிருந்து விடுபட்டிருக்க முடியும் என்றாலும், கட்டுப்பட்டவன் போல பொறுமையாக இருந்தான். அரக்கர்கள் அனுமனைக் கட்டி இழுத்துக் கொண்டு இராவணன் அரண்மனைக்கு வெளியே கொண்டு வந்தார்கள். அவன் வாலில் பிரி பிரியாகத் துணிகளைச் சுற்றி, வாலை நெய்யிலும், எண்ணெயிலும் தோய்த்து எடுத்தனர். பிறகு துணி சுற்றிய அனுமனது வாலில் தீயைப் பற்ற வைத்துவிட்டு ஆரவாரம் செய்து சிரித்தனர்.

அனுமனைக் கயிற்றால் பிணைத்து இருபுறமும் ஆயிரக் கணக்கானோர் இழுத்துப் பிடித்துக் கொண்டனர். காவலுக்கு பல இலட்சம் அரக்கர்கள் நின்றனர். ‘நம் இலங்கை நகரையும், அசோக வனத்தையும் அழித்து, அட்சயகுமாரனை சிதைத்துக் கொன்று, சீதையைச் சென்று பார்த்துவிட்டு மானுடர் வலிமை மிக்கவர் என்ரு நம் மன்னரிடமே நீதி சொல்ல வந்த இந்த குரங்கின் கதியைப் பாருங்கள்” என்று கூக்குரலிட்டு அறிவித்தனர்.

ஆடியும், பாடியும் ஆர்ப்பாட்டம் செய்த அரக்கர்கள் அனுமனை அதட்டினார்கள்; துன்புறுத்தினார்கள். இப்போது என்னவாயிற்று உன் வீரம் என்று கேலி செய்தனர். சிலர் ஓடிப்போய் சீதையிடம் நடந்த விவரங்களைக் கூறினார்கள். சீதாபிராட்டி துடித்துப் போனாள். உடல் வியர்த்தாள்; விம்மினாள்; நிலத்தில் வீழ்ந்தாள்; பெருமூச்சு விட்டாள்.

“அக்னி தேவனே! தாய் போல் கருணை உள்ளவனே! வாயுவின் நண்பனே! நாய்க்குணமுள்ள அரக்கர்கள் அனுமனுக்கு இழைக்கும் தீங்கினைப் பார்! நான் ஒரு கற்புடைப் பெண் என்பது உண்மையானால், அக்னியே! நீ அனுமனைச் சுடாதே! என்றாள் சீதை.

சீதை படும் துயரத்தைப் பார்த்து அக்னி தேவன் அச்சம் கொண்டான். அக்னியின் தீ ஜ்வாலை அனுமனுக்குச் சுடவில்லை. ஜில்லென்று இருந்தது. இது ஜனககுமாரி ஜானகியின் செயல் என்பதை உணர்ந்து கொண்டான். மகிழ்ச்சியோடு அன்னையை மனத்தால் வணங்கினான். முன்னர் இரவு நேரத்தில் இலங்கை நகரம் முழுவதும் சீதையைத் தேடியதால், அந்த நகரத்திலுள்ள இடங்களை இவன் நன்கு அறிந்திருந்தான். போதாதற்கு அறிவற்ற அரக்கர்கள் அவனைக் கயிற்றால் கட்டி ஊர் முழுவதும் சுற்றியதால், தெரியாத இடங்களையும் தெரிந்து கொண்டான். அப்படி அவர்கள் அவனைக் கட்டி இழுத்துக் கொண்டு ஊர் எல்லையை அடையவும், இதுவே தக்க தருணம் என்று நினைத்து, தன்னை இழுத்துச் சென்ற அரக்கர் கூட்டம் கயிற்றில் இரு புறமும் தொங்கும்படியாக விட்டு அப்படியே வான் வெளியில் எழுந்தான்.

வானத்தில் பறக்கும் அனுமன் உடலிலிருந்தும், கயிற்றிலிருந்தும் அரக்கர்கள் தொங்கமுடியாமல் கீழே விழுந்தனர். விழுந்த அதிர்ச்சியில் இறந்தும் போனார்கள். உடல் முழுதும் கயிறு பிணைத்திருக்க, அறுந்த கயிறுகள் தொங்க அனுமன் வானத்தில் போன காட்சியானது, பாம்புகளை இழுத்துக் கொண்டு வானத்தில் பறக்கும் கருடனைப் போல இருந்தது. இந்த பாதக அரக்கர்களின் நகரம் தீக்கு இரையாகட்டும் என்று எண்ணி, இராமனை வாழ்த்திக் கொண்டே, எரியும் தன் வாலை ஆங்காங்கே தொட்டு எரியவிட்டான். வீடுகள், மாளிகைகள், தெருக்கள் என இலங்கை நகரம் முழுவதும் புகைவிட்டுக்கொண்டு எரியத் தொடங்கியது.

அனுமன் இட்ட தீ இலங்கை நகரத்தில் எல்ல இடங்களிலும் ஜெகஜோதியாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. நகரமே தீயின் ஒளியில் பிரகாசமாகவும், வானமண்டலம் முழுவதும் புகையால் இருண்டும் காணப்பட்டது. சோலைகள் எரிந்தன; குதிரை லாயங்கள் எரிந்தன; பச்சைக் கிளிகள் தாம் இருந்த கூடுகளுடன் எரிந்தன; ஊழிக்காலம் வந்துவிட்டதோ என்று எண்ணும்படியாக தீயின் கங்குகள் எங்கும் சூழ்ந்து கொண்டன.

நெருப்புக்கு அஞ்சி அரக்கர்கள் கடலில் குதித்தனர். ஆயுத சாலையில் படைக் கலன்கள் அழிந்தன. யானை கொட்டில்கள் தீப்பற்றிட, யானைகள் பிளிறிக் கொண்டு நாலா திசைகளிலும் தறிகெட்டு ஓடின. இறகுகள் தீப்பற்றி பறவைகள் கடலில் விழுந்து இறந்தன. இராவணன் அரண்மனையை தீ எரித்துச் சாம்பலாக்கத் தொடங்கியது. அங்கிருந்த தேவமாதரும், கந்தர்வ மகளிரும் கலங்கி நிலை குலைந்து திக்கு திசை புரியாமல் ஓடினர். எங்கும் அரக்கர்தம் மயிர் எரிந்த தீய்ந்த வாடை பரவியது. இலங்கை நகரம் முழுவதும் தீயினால் அழிந்தது. இவற்றையெல்லாம் கண்ட இராவணன் “இலங்கை தீப்பற்றி எரியும் காரணம் என்ன?” என்று கேட்டான்.

உயிர் பிழைத்து ஓடிவந்த அரக்கர்கள் சொன்னார்கள், “அரசே! கடலைவிட பெரிய வாலைக் கொண்ட அந்த குரங்கு வைத்த தீ இலங்கையை சுட்டது” என்று.

ஓர் அற்பக் குரங்கு இட்ட நெருப்பால் இலங்கை எரிந்து சாம்பலாயிற்றா? நன்று! நன்று! இதைக் கேட்டால் தேவர்கள் பரிகசித்துச் சிரிக்க மாட்டார்களா? நன்று நம் வீரம்! என்று கோபம் கொண்டு சிரித்தான்.

“கொண்டு வா அந்த அக்னி தேவனை. அவன் தானே இலங்கையை எரித்தவன்”.

“இப்படி அழிவு செய்த குரங்கை, அது தப்பிச் செல்வதற்கு முன்பாகப் பிடித்து வாருங்கள்” என்றான்.

அரக்கர்கள், “அப்படியே செய்கிறோம்” என்று ஓடினார்கள், ஓடி அனுமனைச் சூழ்ந்து கொண்டார்கள். “இவனைப் பிடியுங்கள், இவனை அடியுங்கள்” என்று கூச்சலிட்டனர்.

இவ்வளவையும் கற்றுணர்ந்த அறிஞனான அனுமன் கவனித்தான். பற்றி எரியும் தன் வாலால் அவர்களை உள்லடக்கி வளைத்துக் கொண்டான். கைக்கெட்டிய ஓர் பெரிய மரத்தைப் பிடுங்கி அதால் அவர்களை நையப் புடைத்தான். அரக்கர்கள் மடிந்தார்கள். சிலர் ஓடினார்கள், சிலர் ஒளிந்து கொண்டார்கள். அனுமன் பற்றி எரியும் தன் வாலைக் கொண்டு போய் கடலில் தோய்த்து அணைத்தான். உடனே கடல் நீர் காய்ச்சிய நீர் போல கொதிப்படைய, கடலில் வீழ்ந்த அரக்கர்களும் மாண்டார்கள்.

அப்போது அனுமன் இருந்த இடத்தைக் கடந்து சென்ற வித்யாதரர்கள், ‘இலங்கையில் அனுமன் இட்ட தீ, சீதை இருந்த பகுதியை மட்டும் எரிக்கவில்லை’ என்று சொல்லிக்கொண்டே சென்றார்கள். இதைக் கேட்ட அனுமன் மகிழ்ந்து ‘நான் தீவினையிலிருந்து தப்பினேன்” என்று எண்ணிக்கொண்டு மேலெழுந்து சென்று அசோகவனத்தில் குதித்தான்.

தன் முன் வந்து நின்ற அனுமனை சீதை பார்த்தாள். அவள் உடல் முழுவதும் குளிர்ந்தது. அவளிடம் அனுமன் “அன்னையே நடந்தது அனைத்தும் தாங்கள் அறிவீர்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது. தங்களை வணங்குகிறேன்” என்று சீதையை வணங்கிவிட்டு அவ்விடம் விட்டுப் புறப்பட்டான்.

போதும்! போதும்! இந்த இலங்கை விஜயம். விரைவில் இந்த இடத்தைவிட்டு நீங்குவோம் என்று அனுமன் ஓர் மலைச் சிகரத்தைச் சென்றடைந்தான். அங்கு அவன் திரிவிக்கிரமனைப் போல நெடிது வளர்ந்தான். இராமன் திருவடிகளைச் சிந்தித்தபடியே வான் வெளியில் பறந்து செல்லலானான். துதிக்கை உடைய ஒரு பெரிய யானை பறந்து செல்வது போல அனுமன் பறந்து சென்றான். முன்பு அனுமனை வழி மறித்து தன்மீது அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்லும்படி வேண்டிக்கொண்ட மைந்நாக மலையின் மீது சிறிது நேரம் அமர்ந்து, இலங்கையில் நடந்தவற்றை அதற்குக் கூறினான். அங்கிருந்து விரைந்து புறப்பட்டு தனது வரவை எதிர்பார்த்து நிற்கும் அங்கதன் உள்ளிட்ட வானர வீரர்கள் காத்திருக்கும் மகேந்திர மலையைச் சென்றடைந்தான்.

இரை கொண்டு வரச் சென்ற தாய்ப் பறவை பாய்ந்து வந்து காட்டிற்குள் புகும்போது, கூட்டிலே இருக்கும் குஞ்சுகள் தாய்ப் பறவையின் வரவு கண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்வது போல அங்கதன் முதலான வானர வீரர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். சிலர் உணர்ச்சிப் பெருக்கால் அனுமனைக் கண்டதும் அழுதனர். சிலர் ஆரவாரம் செய்தனர். சிலர் அவனை வனங்கினர். சிலர் அவனைத் தழுவிக் கொண்டனர். சிலர் அவனைத் தலைமுடிமேல் தூக்கிக் கொண்டு ஆடினர்.

சில வானரர், “அனுமானே! உன் முகப் பொலிவு, நீ சீதையைக் கண்டுவிட்ட செய்தியைச் சொல்லுகிறது. உனக்காக காய்களும், கனிகளும் தயாராகச் சேகரித்து வைத்திருக்கிறோம். உண்பாயாக! உண்டு நன்கு இளைப்பாறு!” என்றனர். அனுமனின் உடல் முழுவதும் போரில் பட்ட புண்கள். அதைக் கண்டு

வானரர்கள் வருந்தி பெருமூச்சு விட்டனர். அனுமன் முடிவில் வாலியின் புத்திரன் அங்கதனை வணங்கினான். பிறகு கரடிகளின் அரசனான ஜாம்பவான் பாதங்களைத் தொட்டு வணங்கி எழுந்தான். பிறகு மற்றவர்களை உரிய முறையில் வணங்கி எழுந்தான். பிறகு ஓரிடத்தில் சாவகாசமாக அமர்ந்து “இங்குள்ள அனைவருக்கும், உலக நாயகன் இராமனின் தேவி சீதாபிராட்டி நன்மை தரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்” என்றான்.

உடனே அனைவரும் எழுந்து சின்று, கைகளைக் குவித்து உவகை மேலிட சீதையைப் போற்றினார்கள். அனைவரும் ஒருமுகமாக அனுமனிடம் “பெருமையுடைய அனுமான்! நீ இங்கிருந்து சென்றது முதல் நடந்தவற்றை எங்களுக்குச் சொல்” என்றனர், அனுமனும் சொல்லத் தொடங்கினான்.

அனுமன் சீதையின் கற்புத் திறத்தையும் தவத்தின் மேன்மையையும், அவளிடமிருந்து அடையாளமாக சூளாமணியைப் பெற்றுக் கொண்டதையும் சொன்னான். தற்பெருமை என்பது அறவே இல்லாத அனுமன் இலங்கையில் அரக்கரோடு தான் போர் புரிந்ததையும், தன் சாகசங்களையும் தன்னடக்கத்தோடு சொல்லாமல் விட்டான்.

“நீ சொல்லாவிட்டால் என்ன. நீ அங்கு போரிட்டதை உன் உடலில் உள்ள புண்கலே சொல்கின்றன. அந்தப் போரில் நீ வெற்றி பெற்றய். அதனால்தான் நீ திரும்பி வந்தாய். நகரை தீயிட்டு கொளுத்தி விட்டாய். உன் மேல் வீசும் புகை நெடியே அதைச் சொல்லுகிறது. சீதை உன்னுடன் வராததே, பகைவனின் சிறப்பைத் தெரிவிக்கிறது. நீ சொல்லாமலே இவற்றை நாங்கள் உன்னைப் பார்த்து புரிந்து கொண்டோம்” என்றனர் வானரர்கள்.

“இனி தாமதிக்கக்கூடாது. உடனே சென்று, இராமனிடம் தேவியைக் கண்ட செய்தியைச் சொல்ல வேண்டும்” என்று அனைவரும் எழுந்தனர்.

“நாங்கள் உயிரை விட்டிருக்க வேண்டியவர்கள். நீ சீதையைக் கண்டதால் உயிர் பிழைத்தோம். காலம் கடந்து விட்டது.நீ முதலில் சென்று இராமனிடம் செய்தியைச் சொல்” என்று அனைவரும் அனுமனை விரைந்து செல்லும்படி அனுப்பி வைத்தனர்.

“அதுதான் சரி” என்று ஒப்புக்கொண்டு அனுமன் முன்னதாக விரைந்து சென்றான். இதுவரை அனுமன் சென்றது, செய்தது, திரும்ப வந்தது பற்றியெல்லாம் பார்த்தோமல்லவா? இனி, சற்று, இராமன் இருந்த நிலைமையைப் பார்ப்போம்.

சிவந்த கண்களையுடைய இராமன், சீதையின் பிரிவால் கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தான். சுக்ரீவன் ஆறுதல் சொல்ல தேற்றிக் கொண்டு இருந்தான். வடக்கு, கிழக்கு, மேற்கு திசைகளுக்கு சீதையைத் தேடிச் சென்ற வீரர்கள், வழியில் தடை எதுவும் இல்லாத காரணத்தால், விரைவில் திரும்ப வந்து சீதையக் காணவில்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும் தென் திசைக்குச் சென்ற அனுமன் நிச்சயம் நல்ல செய்தியோடு வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான்.

இராமன் சுக்ரீவனிடம் “நாம் கொண்ட முயற்சியில் வெல்வோமா? தீர்க்க முடியாத பழி நம்மை வந்து அடைந்து விடுமோ?” என்றெல்லாம் அஞ்சினான். நாம் விதித்திருந்த கெடு முடிந்து விட்டது. தென் திசைக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை, இறந்து விட்டார்களோ? அல்லது வேறு என்ன ஆயிற்றோ? சீதை இறந்து போயிருப்பாள், அவள் இறந்த செய்தியை வந்து எப்படிச் சொல்வது என்று இவர்களும் இறந்து போயிருப்பார்கள்; அல்லது இன்னமும் சீதையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்களோ? இராவணன் முதலான அரக்கர்கைளைக் கண்டு கோபம் கொண்டு போரிட்டு அவர்களது மாயையினால் இறந்து போனார்களோ? அல்லது தப்ப முடியாமல் வெஞ்சிறையில் அடைக்கப் பட்டிருப்பார்களோ? நமக்கு விதித்த கெடு முடிந்து விட்டது, காரியம் ஆகவில்லை என்ற விரக்தியில் தவத்தினை மேற்கொண்டு போய் விட்டார்களோ? வேறு என்னதான் நேர்ந்திருக்கும் அவர்களுக்கு, சொல்! சுக்ரீவா சொல்!” என்றான் இராமன்.

இவ்வாறு இராமன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தென் திசையில் வான வெளியில் அனுமன் தோன்றினான். இருக்கையிலிருந்து எழுந்து மனமெல்லாம் அன்பு நிறைந்திருக்க அருட் கரங்களைக் கொண்ட இராமன் அனுமனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். விரைந்து வந்த அனுமன் இராமன் இருக்குமிடத்தை அடைந்ததும், இராமனின் திருவடிகளை வணங்கவில்லை; மாறாகத் தான் வந்த சீதை இருக்கும் தென் திசை நோக்கி இரு கரங்களைக் கூப்பி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். இவ்வளவும் சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டன எதுவும் பேசாமலே.

இந்தக் காட்சியின் குறிப்புகள் மூலம் இராமபிரான் வைதேகி நன்றாக இருக்கிறாள்; கற்பு நிலையும் களங்கமற்று உள்லது; இந்த அனுமன் அவளையும், அவள் நிலைமையையும் கண்டுணர்ந்து வந்துள்ளான் என்று ஊகித்துத் தெரிந்து கொண்டான். இராமனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அதுவரை வாய்திறவாத அனுமன் வாய் திறந்து இராமனிடம் பேசுகிறான். அவன் சொன்ன முதல் செய்தி:

“கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்

தென் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்

அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்

பண்டு உள துயரும், என்று அனுமன் பன்னுவான்”.

“கண்டேன் சீதையை!” அண்டர் நாயகா! இராமா! கவலையை விடு!” என்று அனுமன் சொன்னதும், இராமனது முகம் தெளிவடைந்தது.

“ஐயனே! உன் பெருமைக்குரிய மனைவியாகவும், தசரத சக்கரவர்த்தியின் மருமகள் என்ற பெருமைக்கும், மிதிலையின் ஜனகனின் மகள் என்ற தகுதிக்கும் ஏற்றவாறு தெய்வமெனத் திகழ்கிறாள் சீதாபிராட்டி” என்றான் அனுமன்.

“தங்கத்துக்கு நிகராக வேறு எது இருக்க முடியும், தங்கத்தைத் தவிர? பொறுமையின் சிகரமாக உள்ளார் சீதாபிராட்டி. என் அன்னை சீதை உன் குலத்துக்குப் பெருமை சேர்த்தாள். தன்னை வருத்திய இராவணன் குலத்தை எமனுக்குக் கொடுத்தாள். அதன் மூலம் தேவர் குலம் வாழச் செய்தாள். அன்னையின் சிந்தையில் எப்போதும் நீ இருக்கிறாய். அவள் வாய் உதிர்க்கும் சொற்களிலும் நீயே இருக்கிறாய். ஐயனே! தவத்தின் பயனாய் விளங்கும் அன்னை கடலுக்கு நடுவே விளங்கும் இலங்கை என்னும் விரிந்த நகரத்தின் ஓர் புறத்தஏ, ஓர் பிரகாசமான கற்பகச் சோலையில், இலக்குவன் வடித்துத் தந்த பர்ணசாலையில் வீற்றிருந்தாள். முன்பு பிரமதேவன் இட்ட சாபம் ஒன்று இராவணனுக்கு உண்டு. உன்னை விரும்பாத ஒரு பெண்ணை நீ வலிந்து தீண்டுவாயானால், உன் தலை வெடித்துச் சிதறி நீ மாண்டு போவாய் என்று. அந்த சாபத்துக்கு அஞ்சி அவன் அன்னையைத் தீண்டாமல் தரையோடு பர்ணசாலையைத் தூக்கிச் சென்றிருக்கிறான்.”

“இராவணன் அன்னையைத் தீண்டவில்லை என்பதற்குச் சான்று, பிரமன் படைத்த அண்ட கோளம் சிதறவில்லை; ஆதிசேடனின் படம் கிழியவில்லை; கடல்கள் கரையினைத் தாண்டவில்லை; உலகம் கடலுள் மூழ்கவில்லை; சந்திர சூரியர் கீழே விழவில்லை; வேதங்கள் கூறும் நெறிகள் அழியவில்லை; எவற்றால் நீ உணர்ந்து கொள்வாய்”.

“நான் இலங்கை நகரம் முழுவதும் தேடினேன். மாட மாளிகைகளில் தேடினேன். இராவனன் அரண்மனையில் தேடினேன். குளிருந்த அசோகவனத்துக்குள் சென்றேன். அங்கே தேவமகள் சீதையைக் கண்ணீர் கடலில் மிதக்கக் கண்டேன். பேய்களின் கூட்டம் போல அரக்கியர் சூழ்ந்திருக்க, இரக்கம் என்னும் பண்பு, ஓர் பெண்ணாக வடிவெடுத்து கொடுமை எனும் சிறைக்குள் இருக்கும் தன்மை கண்டேன். தகுந்த நேரம் பார்த்து சீதையை வனங்க எண்ணியிருந்தேன். அப்போது இராவணன் அங்கே வந்தான். சீதையிடம் இறைஞ்சி நின்றான். கடுஞ்சொற்களை வீசிய சீதாபிராட்டியைக் கொல்ல முயன்றான். பிறகு சீதைக்கு புத்தி சொல்லுங்கள் என்று அரக்கியரிடம் சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.”

“சீதை அப்போது தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்கள். ஓர் கொடியை எடுத்து மரத்தில் கட்டித் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டார்கள். அந்த நேரம் நான் போய்த் தடுத்து, திருவடிகளை வணங்கி, உன் திருப்பெயரைச் சொன்னேன். அப்படி நான் உன் பெயரைச் சொன்னதும் அருவி போல கண்ணீர் சிந்தினார். என்பால் நீ அருளுடையவன் நான் இறக்கப்போகும் நேரத்தில் இராமனின் பெயரைச் சொல்லி நீ என்னை மரணத்திலிருந்து மீட்டாய் என்று கூறினார்”.

“என் தந்தை போன்றவனே! நான் சொன்ன அடையாளங்களைக் கேட்டுக் கொண்டார். நான் வஞ்சக எண்ணம் உள்லவன் அல்ல என்பதை புரிந்து கொண்டார். உன் கணையாழியைக் கொடுத்தேன். அதனை உற்றுப் பார்த்து கண்ணீர் வடித்தார். அது உயிர் காத்த சஞ்ஜீவினி அன்றோ? ஒரு கணப் பொழுதில் இரண்டு அதிசயங்களைக் கண்டேன். நான் கொடுத்த உனது கணையாழியைத் தன் மார்பு மீது வைத்ததும் உன்னைப் பிரிந்ததால் உண்டான வெப்பத்தால் கணையாழி உருகியது. உன் மோதிரத்தைத் தீண்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் உடல் குளிர்ந்து உருகிய கணையாழி மீண்டும் இறுகி விட்டது.”

“கணையாழியைக் கண்ணீரால் அபிஷேகம் செய்தார். வாய் திறந்து பேசவில்லை. இளைத்த உடல் பூரித்தார். வியப்புற்றார். ஆனாலும் இமையாமல் கணையாழியைப் பார்த்த வண்ணம் இருந்தார். மன்னவா! அடியேன் சீதைக்கு உன்னை அவர் பிரிந்த பிறகு நடந்த செய்தியனைத்தையும் சொன்னேன். நீ இருக்குமிடம் தெரியாததால் கால தாமதம் ஆகிவிட்டது என்றும் கூறினேன். தான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிரோடு இருப்பேன், அதன் பின் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார். ஐயனே! அன்னை தன் உடையில் முடிந்து வைத்திருந்த தன் சூளாமணியை என்னிடம் அடையாளமாகக் கொடுத்தார். இதோ, சூடாமணியைக் காண்பாயாக!” என்று அனுமன் கொடுத்தான்.

தன் திருமணத்தின் போது சீதையின் கையைப் பற்றிய அதே உணர்வோடு அந்தக் கணையாழியைத் தன் கைகளால் வாங்கினான் இராமபிரான். இராமனது மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கண்ணீர் பெருக்கெடுத்தது. மார்பும், தோள்களும் பூரித்து விம்மின. வியர்வைத் துளிகள் துளிர்த்தன; உதடுகள் மடிந்தன; உயிர் போவதும் வருவதுமாக இருந்தது. உடல் பூரிப்பு அடைந்தது. இது என்ன வியப்பு!

“இனியும் கால தாமதம் வேண்டாம். சேனைகள் போரிடப் புறப்படட்டும்” என்று சுக்ரீவன் ஆணையிட்டான். எழுபது வெள்ளம் சேனை புறப்பட்டது. கடல் போல எழுந்த அந்த வானரப் படையினர் அனுமன் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டே உற்சாகமாக வழிநடைப் பயணம் செய்தார்கள். இராம லக்ஷ்மண சுக்ரீவாதியர் முன் செல்ல வானரப் படை பதினோரு நாட்கள் பயணம் செய்து பன்னிரெண்டாம் நாள் தெற்குக் கடற்கரையைச் சென்றடைந்தனர்.

(அனுமனின் புகழ் பாடும் சுந்தர காண்டம் நிறைவு பெற்றது)

8


யுத்த காண்டம் - முதற் பாகம்


கவிச்சக்கரவர்த்தி கம்பன் இயற்றிய

இராம காதை

6. யுத்த காண்டம்.

முதற் பாகம்.

கடவுள் வாழ்த்து.

ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்

இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்

நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!

பிரளய காலத்திலும் கடலுள் மூழ்காத மேரு மலையும், வற்றாத கடலும், நிலப் பகுதியும் வடபுறம் முழுவதும் வியாபித்திருக்க, நிலமே தாழ்ந்து போகுமாறு தென் திசைக் கோடியில் எழுபது வெள்ள வானரப் படைகள் வந்து கூடின.

சீதையைப் பிரிந்த பிறகு இராமன் உறங்கவேயில்லை. தென் கடல் பகுதியை வந்தடைந்தபோது அங்கே பரந்து விரிந்து கிடந்த பெருங்கடலைக் கண்டான். அதோ! அந்தக் கடலின் அப்புறத்தில்தான் சீதை இருக்கிறாள். மிகமிக அருகில் இருக்கிறாள். நம்மை இந்த கடல் மட்டுமா பிரித்து வைத்திருக்கிறது? அல்ல. எதிரியைக் கொன்ற பிறகு அல்லவா நான் உன்னை மீட்க வேண்டும். அதுவரை காத்திரு என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.

அந்த கடலின் மீது எழுந்து தவழ்ந்து கரையில் மோதுகின்ற அலைகளைப் போலவே எண்ண அலைகள் இராமன் மனதில் தோன்றி, எழுந்து மோத, இனி என்ன செய்ய வேண்டுமென்று எண்ணமிடலானான். இராமனை, சிந்தனை வயப்பட்ட நிலையில் தென் கடலின் கரையிலே நிறுத்திவிட்டு, இலங்கையில் அசோக வனத்தில் சீதையை அனுமன் பார்த்தபின், இலங்கைக்குத் தீயிட்டுவிட்டு திரும்பிய பிறகு இலங்கையில் நடந்தவற்றை சற்று பார்ப்போம்.

தெய்வத் தச்சன் மயன், பிரம்மனோடு இலங்கைக்கு வந்து மூவுலகங்களிலும் சிறந்ததொரு நகரத்தை இராவணன் விருப்பப்படி கட்டியிருந்தான். அந்த நகரம்தான் இலங்கை. அப்படிப்பட்ட அழகிய நகரம் அனுமனால் தீயிடப்பட்டு அழிந்த பிறகும்கூட தேவர்களின் நகரத்தைவிட அந்த நகரம் மிகவும் அழகாக இருந்தது. அந்த அழகிய இலங்கை நகரத்தில் அரண்மனை கொலுமண்டபத்தில் இராவணன் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். அனுமன் வந்து சென்ற பிறகு இலங்கைக்கு ஏற்பட்ட அழிவு பற்றிய ஆலோசனைக் கூட்டம் அது.

தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தவிர முனிவர், தேவர், வித்யாதரர், இயக்கர் அனைவரையும் அவையை விட்டு நீங்கச் சொன்னான் இராவணன். பெண்களையும், இளைஞர்களையும்கூட கூட்டத்திலிருந்து விலகி இருக்கச் சொன்னான். அறிஞர்களையும், நீண்ட நாட்களாகப் பழகியவர்கள், சுற்றத்தார், நற்பண்புகளையுடையோர், நல்ல அமைச்சர்கள் ஆகியோரைத் தன்னுடன் இருக்கச் செய்தான். உறவினர்களில்கூட பிள்ளைகளையும், தம்பியர்களையும் தவிர மற்றவர்களை வெளியேற்றி விட்டான்.

மண்டபத்திற்கு வெளியே பலத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வலிமை மிக்க வீரர்கள் காவலுக்கு நின்றார்கள். காக்கை குருவிகள்கூட அந்தப் பக்கம் வருவதற்கு அஞ்சி வேறு திசைகளில் பறந்துவிட்டன.

இராவணன் மனத்துக்குள் புழுங்கினான். கேவலம் ஒரு குரங்கு! என் வீரத்தையும், பெருமையையும் அந்தக் குரங்கு அழித்து விட்டதே. இதைவிட என்ன அவமானம் எனக்கு வேண்டும்? இவ்வளவு ஆனபிறகும் நானும், நாடும் நன்றாகத்தானே இருக்கிறோம் என்று இகழ்ச்சி தோன்ற மனத்துக்குள் வருந்தினான்.

“ஒரு குரங்கு வந்து இலங்கையைச் சுட்டு எரித்துவிட்டுச் சென்று விட்டதே. வெற்றியை மட்டுமே கண்டு வந்த இலங்கை முதன்முதலாக ஓர் அழிவைக் கண்டுவிட்டதே. நண்பர்கள், உறவினர்கள் என்று எங்கு திரும்பினாலும் அனைவரும் இறந்து விட்டார்களே. அவமானம் மட்டுமே எனக்கு

மிச்சமாகப் போனது. நான் மட்டும் இன்னமும் சிங்காதனத்தில் ஆடம்பரமாக அரசன் என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேனே”.

“சுட்டது குரங்கு எரி சூறையாடிடக்

கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும்

பட்டனர், பரிபவம் பரந்தது எங்கணும்

இட்டது, இவ் அரியணை இருந்தது என் உடல்”.

நகரத்தில் எல்லா கிணறுகளிலும் தண்ணீர் ஊறவில்லை, உதிரம்தான் ஊறுகிறது. அந்த குரங்கு வைத்த நெருப்பு இன்னும் நகரம் முழுவதும் அடங்கவில்லை, அகிலும் சந்தனமும் மணந்து கொண்டிருந்த நகரத்தில் இப்போது மங்கையர்களின் கூந்தல் கருகிய நாற்றம் மட்டும் தான் பரவியிருக்கிறது. அகில், சந்தனம் வாசனையை அனுபவித்துக் கொண்டிருந்த நாம் இப்போது இந்த துர்நாற்றத்தைத்தான் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வளவுக்குப் பிறகும் நாம் உண்டு உடுத்து சுகமாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“ஊறுகின்றன கிணறு உதிரம், ஒண்ணகர்

ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும்

கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு

நாறுகின்றது, நுகர்ந்திருந்தம் நாம் எலாம்”.

இப்படி ஆலோசனை சபையில் இராவணன் பேசத் தொடங்குகிறான். அனுமன் இழைத்த அழிவு, அவனை வெகுவாகப் பாதித்துவிட்டது, அவனது வீரத்துக்கு இழுக்கு நேர்ந்துவிட்டது என்ற தாபம் மிகுந்திருந்தது, மனதில் ஒரு விரக்தி தோன்ற பேசுகிறான்.

“நாம் சிறப்பாகப் போர் புரிய வேண்டுமென்பதுகூட இல்லை. இவ்வளவு அழிவைச் செய்த குரங்கு இறந்தது என்ற செய்தியைக்கூட நம்மால் கேட்கமுடியவில்லையே. நாம் பழியிலே மூழ்கிக் கிடக்கிறோம். பிறந்தும் பிறவாதவர் ஆகிவிட்டோம்” இப்படி இராவணன் பேசிக் கொண்டே போனான்.

இராவணன் பேச்சினால் மனம் வருந்திய படைத்தலைவன் எழுந்து “மன்னா! நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சீதையைக் கவர்ந்து வருதல் ஒரு வீரனுக்குரிய செயல் அல்ல என்று நான் முன்பே சொன்னேன். நீங்கள் அதைக் கேட்கவில்லை.. கரனைக் கொன்று, சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இராம லக்ஷ்மணரை இதுவரை கொல்லாமல் விட்டுவிட்டு, நம் அரசு அழிந்தது என்று வருந்தி என்ன பயன்?”

“பகைவரை எதிர்த்துக் கொல்லாமல் இலங்கையில் இன்பம் அனுபவித்துக் கொண்டு இருக்கலாமா? நாம் இப்படி இருந்தால் நம்மை குரங்கு மட்டுமா எதிர்க்கும், கொசுவும் (உலங்கு) கூட நம்மை எதிர்க்கும்” என்றான்.

படைத்தலைவன் பேசியதைத் தொடர்ந்து மகோதரன் எழுந்து படைத்தலைவன் சொன்னதையே அவனும் சொன்னான். அரசே! இப்போதே என்னை அனுப்புங்கள். நான் சென்று எதிரிகளின் உயிரைக் குடித்துவிட்டு வருகிறேன் என்றான். அவனைத் தொடர்ந்து வஜ்ரதத்தன் எழுந்து பேசினான். பிறகு தொடர்ந்து துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்ரு, வேள்வியின் பகைஞன், தூமிராட்சன் முதலான அரக்க வீரர்களும் எழுந்து பேசினார்கள்.

அப்போது இராவணனது தம்பியும், உத்தம குணங்கள் உள்ளவனுமான கும்பகர்ணன் எழுந்து பேசுகிறான். “என்ன செய்ய வேண்டு மென்பதை அறியாத சிறுவர்கள் பேசாமல் இருங்கள்” என்று சொல்லி மற்றவர்களை விலக்கிவிட்டு இராவணனை நெருங்கி “என்னை உன் உடன் பிறந்தவன் என்று அன்பு காட்டுவதானால் நான் உனக்கு நல்லதைச் சொல்வேன்” என்றான்.

“பிரமன் முதலாக தொடங்கி தொடர்ந்து வரும் நம் குலத்தில், நீ ஒருவனே ஒப்பிலாதவனாகச் சிறந்து விளங்குகிறாய். ஆயிரம் ஷாகாக்களைக் (பிரிவுகளை) கொண்ட சாம வேதத்தை ஆராய்ந்து படித்துத் தேர்ந்தவன் நீ! தீ நம்மைச் சுட்டு எரித்துவிடும் என்பது தெரிந்து அந்தத் தீயை எப்படிப் பயன் படுத்துவது என்பதைத் தெரிந்தவன் நீ! ஓவியத்தில் எழுதியது போன்ற அழகிய இலங்கை நகரம் தீயினால் அழிந்து போயிற்றே என்று மனம் வருந்துகிறாய். அப்படியென்றால் அரச குல தர்மம் அழியும்படி வேறொருவன் மனைவியைப் பிடித்து கொண்டு வந்து சிறை வைத்திருப்பது மட்டும் நல்ல செயலோ? பாவம் செய்வோருக்கு ஏற்படக்கூடிய பழி இதனினும் வேறு ஏதேனும் இருக்கிறதா?”

“ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்

கோவியல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்

தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?

பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டா?”

“இலங்கை நகரம் தீயினால் அழிந்தமைக்காக வெட்கப் படுகிறாய். உன்மீது ஆசையும் பரிவும் கொண்ட உனது மனைவிமார்கள் அரண்மனை அந்தப்புரத்தில் உன்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்க, பிறனொருவன் மனைவியின் காலில் விழுந்து வணங்கி, அவள் மறுத்து ‘சீ’ என்று விலக்கியது உனக்கு அவமானமாகப் படவில்லையோ? இந்தச் செயல் உனக்குப் புகழையா கொடுக்கும்?”.

“இல்லறம் எனும் தர்மத்தை மேற்கொண்டு ஒருவனுடன் இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு பத்தினிப் பெண்ணை, உள்ளத்தில் இரக்கம் சிறிதுகூட இன்றி, அரச தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டு, என்றைக்குக் கடத்திக் கொண்டு வந்து சிறை வைத்தாயோ அன்றைக்கே, அரக்கர்களின் புகழ் அழிந்து போயிற்று! நல்ல செயல்களைச் செய்தால் புகழ் பெறலாம். தீய செவல்களைச் செய்துவிட்டு புகழ் கிடைக்கவில்லையே என்று வருந்தினால், புகழா கிடைக்கும், பழிதான் கிடைக்கும்.”

“ஆசில் பரதாரம் அவை அம்சிறை அடைப்பேம்

மாசில் புகழ் காதலுறுவேம் வளமை கூரப்

பேசுவது மானம், இடை பேணுவது காமம்

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்.”

“குற்றமில்லாத பிறன் இல்லாளைப் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் வைப்போம். இப்படிப்பட்ட காரியத்தைச் செய்தால் புகழையா பெறுவோம்? பலே! நாம் பேசுவதோ வீரம்; ஆனால் பேணுவதோ காமம். நாம் அஞ்சி நிற்பதோ வலிமையற்ற மனிதர்களைப் பார்த்து, நன்று! நன்று! நம் ஆற்றலும் வீரமும் மிகவும் நன்று!”

“மாசற்றப் பெரியோர்கள் செய்யும் நல்ல காரியத்தை நீ செய்யவில்லை. நம் குலத்துக்கே இழிவைத் தேடித் தரும் காரியத்தைச் செய்திருக்கிறாய். மன்னா! இனியாவது அந்த சீதையைக் கொண்டுபோய் விட்டுவிடுவாயானால் நல்லது.”

“சிட்டர்செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்,

மட்டவிழ்க் குழலினாளை, இனி, மன்னா!

விட்டிடுது மேல் இனியம் ஆதும், அவர் வெல்லப்

பட்டிடுது மேல் அதுவம் நன்று, பழி அன்றால்”

“தன் ஒரு அம்பினால் இராமன் காட்டில் கரனின் பதினான்காயிரம் வீரர்களின் உயிர்களைக் குடித்து, கரனையும் கொன்று விட்டான். முனிவர்களுக்கிடையே, அரக்கர்களை களை எடுப்பது போல அவன் காட்டில் அரக்கர்களைக் கொன்று குவித்து விட்டான். தர்மம் அந்த இராமன் பக்கத்திலும், அதர்மம் நம் பக்கத்தில் இருப்பதால், தர்மமே இறுதியில் வெல்லும், இராமனே வெல்வான்! இந்த அறிவுரைகளும் கண்டனங்களும் அண்ணன் இராவணனுக்குப் பிடிக்கவில்லையோ, அதனால் கோபம் கொண்டு நம்மீது ஆத்திரமடைவானோ என்று நினைத்தான் போலிருக்கிறது. ஏனேன்றால் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் சாபமுள்ள தனக்கு பாதுகாப்பும், உறக்கம் நீங்கி எழும்போது உணவும், கள்ளும் கொடுத்துப் பாதுகாத்து வருவது அவன்தானே! என்ன செய்வது அவனுக்கு ஒரு உபாயம் சொல்லலாம் என்று கருதி ஒரு ஆலோசனை சொல்லுகிறான்.

“நாம் ஒன்று செய்யலாம். நம் பகைவர்கள் தங்கள் படைபலத்தைப் பெறுக்கிக் கொள்வதற்கு முன்பாக, அவர்களை முந்திக் கொண்டு நாம் கடலைக் கடந்து அவர்களைத் தாக்கி அந்த மானுடர்களையும், அவர்களோடு சேர்ந்துள்ள வானரங்களையும் பூண்டோடு அழித்துவிடவேண்டும். அதுதான் சரியான வழி. அப்படி நாம் செய்யாவிட்டால், அந்த மனிதர்களோடு தேவர்களும் சேர்ந்து கொள்வார்கள். ஏழு உலகங்களும் அவர்களோடு சேர்ந்து கொள்ளும்” என்றான் கும்பகர்ணன்.

“ஊறுபடை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே

ஏறுகடல் ஏறி நரர் வானரரை எல்லாம்

வேறு பெயராதவகை வேரொடும் அடங்க

நூறுவதுவே கருமம்! என்பது நுவன்றான்”.

இப்படிப் பேசிய தம்பி கும்பகர்ணனை நோக்கி இராவணன், மிகவும் செளகரியமாக அவன் கூறிய அறிவுரைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கோபம் இருந்தாலும் அதனை மறைத்துக் கொண்டு, அவன் இறுதியாகக் கூறிய ஆலோசனையை மட்டும் ஏற்றுக் கொண்டான். “குமரா! நல்லது கூறினாய். நானும் நீ கூறியவாறேதான் எண்ணினேன். இனி தாமதம் கூடாது. உடனே புறப்படுவோம். நீ சொன்னபடி பகைவரை அழித்துத் திரும்புவோம்” என்று சொல்லித் தன் படைத்தலைவர்களிடம் “நம் படை முழுவதும் இப்போதே புறப்படட்டும். பறை அறைந்து அறிவித்து விடு!” என்றான்.

அப்போது இராவணன் மகனான இந்திரஜித் குறுக்கிட்டு “அரசே! நீயே படைகளுடன் சென்று அந்த மனிதர்களைப் போரில் வென்று வருவாயோ? நீ அப்படிப் போவாயானால் என் வீரம் மிகவும் சிறப்படையும், அப்படித்தானே!” என்று கோபமாய் சிரித்தான்.

“அரசே! நான் போருக்குப் போகிறேன். நீரும், நெருப்பும், நிலமும், காற்றும், வானமும், பெரிய உலகமும் யாவும் ஒரே நாளில் நிலை பெயர்ந்து மனிதர்களும் வானரர்களும் ஒருவர்கூட மிஞ்சாதபடி கொன்றுவிட்டுத் திரும்புகிறேன், விடை கொடுங்கள்” என்கிறான் இந்திரஜித்.

அப்போது இராவணனின் மற்றொரு தம்பியும், நற்பண்புகளும், மெய்ஞானமும் நிரம்பப் பெற்ற வீடணன் (விபீஷணன்) குறுக்கிட்டுக் கோபத்துடன் பேசுகிறான்.

“இந்திரஜித்! நீ சிறுவன். ஆராய்ந்து பார்த்து அறிவு பூர்வமாகப் பேசுபவன் போலப் பேசுகிறாய். நடக்கப் போவதையும், அதைத் தடுக்க எது சிறந்த வழி என்பதையும் அறியாத சிறு பிள்ளையாகிய நீ இப்படிப் பேசலாமா?”

“நீ இளைஞன். அரச நீதிகளை நன்கு உணர்ந்திருக்கவில்லை. விவேகம் இல்லாதவனும், கண் இல்லாதவனுமாகிய இருவன் ஓவியம் தீட்டப் புகுந்தது போல பேசுகிறாய். வயதும் அனுபவமும் உடையவர்கள் முடிவு செய்ய வேண்டியவற்றை நீ செய்ய முயலுவது முறையல்ல”.

வீடணன் இராவணனை நோக்கி “என் பேச்சை இகழாமல் ஏற்பதானால், உனக்கு நன்மை பயக்கக்கூடிய நல்ல தெளிந்த பொருளை ஆராய்ந்து கூறுவேன்” என்றான்.

“எனக்குத் தந்தையும் நீதான், தாயும் நீதான், தமையனும் நீயே! தினமும் நான் வணங்குகின்ற தெய்வமும் நீயே! எனக்கு மேம்பட்ட அனைத்தும் நீயே! இந்திரனுக்குரிய பெருமையுடைய மூவுலகமும் ஆள்கின்ற அரச பதவியை இழக்கின்றாயே என்றுதான் எனக்கு வருத்தம். ஆகையால் நான் உனக்கு இந்த நல்லுரைகளைச் சொல்லலானேன்”.

“உனக்கு யோசனை சொல்லக்கூடிய ஆற்றல் இல்லாதவன் நான் என்றாலும், இதுவரை உனக்குச் சொல்லப்பட்ட யோசனைகள் அனைத்துமே தீமை பயக்கக்கூடியது என்பதால் கூறுகிறேன். ஆகையால் என்மீது கோபப்படாமல் கேட்பாயாக!.

“இலங்கையை ஒரு குரங்கு எரித்தது என்று நீ நினைத்தால் அது தவறு. ஜானகி எனும் உலகத் தாயின் கற்பு இந்த நகரத்தை எரித்தது என்பதுதான் உண்மை, அதனை உணர்ந்துகொள். நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஒருவனது பெருமை நீங்குவதற்குப் பெண்ணே காரணமாக இருப்பதை நீ உணர்ந்து கொள்ளலாம். அல்லது மண் காரணமாகவும் அந்த நிலை ஏற்படலாம். இது தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது”.

“ஒரு மானுடப் பெண்ணால் இலங்கை அரசன் தவப் பெருமை நீங்கிக் கெடுவான் எனும் பழைய சாபம் உனக்கு நினைவில் இல்லையா? முன்பு தவம் செய்து பிரமனிடம் வரம் பெற்றபோது மனிதர்களை ஒரு பொருட்டாக நீ கருதவில்லை, அவர்களை வெற்றி பெறுதல் எனும் வரத்தை நீ கேட்கவில்லை. நீ கைலாய மலையைப் பெயர்த்து எடுத்த காலத்தில், நந்தி பகவான் உனக்கு ஒரு சாபம் கொடுத்தார். நினைவு இருக்கிறதா? வால் உள்ள பெரிய குரங்குகளால் உனக்குக் கேடு உண்டாகும் என்று. அதனால்தான் வாலியிடமும் நீ தோற்றாய்”.

“தெய்வத் தன்மை வாய்ந்த வேதவதி என்னும் பெண் தீயில் பாய்ந்து உயிர் விட்டபோது, சொன்ன சொல்லின் விளைவை நாம் தடுக்க வல்லவர்களா? உன் மரணத்துக்குக் காரணமான நோயாக ஆவேன் என்று அந்தப் பெண் சொன்னாளே. அவளே முன்பு பாற்கடலில் இருந்த திருமகளின் மறுபிறவி என்பதை உணர்ந்து கொள்வாயாக”.

(வீடணன் குறிப்பிடும் இந்த வேதவதி என்பவள் யார்? அவள் ஏன் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள்? அவள் இட்ட சாபம் என்ன? என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். வேதவதி என்பவள் குசத்துவ முனிவரின் புதல்வி. முனிவர் வேதம் ஓதிக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்ததால் அவளுக்கு ‘வேதவதி’ என்று பெயரிட்டு வளர்த்தார். அவள் வளர்ந்து பருவமடைந்தபோது, அவளது அழகில் மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்து கொள்ள விரும்பினர். முனிவரோ, தம் மகளுக்குத் தகுந்த வரன் திருமால்தான் என்று எண்ணினார். அவளை மணந்து கொள்ள விரும்பி சம்பு எனும் அரக்கன் முன்வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தான். முனிவர் அவனுக்குப் பெண் தர மறுத்ததால் அந்த அரக்கன் அவரைக் கொன்று விட்டான். அவரோடு முனிவரின் பத்தினியும் உயிர் நீத்தாள். வேதவதி தந்தையின் விருப்பதிற்கிணங்க திருமாலை மனந்து கொள்ள வேண்டி காட்டில் தவம் இருந்தாள்.

அப்போது திக்விஜயம் மேற்கொண்ட இராவணன் வேதவதியைக் கண்டு அவள் அழகில் மயங்கி, அவளை மணந்து கொள்ள ஆசைப்பட்டான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இராவணன், அவளை வலியத் தீண்டினான். அதனால் சினமடைந்த வேதவதி, ‘பிரமன் அளித்த வரத்தின் பலத்தால் ஆணவத்தோடு என்னை நீ தீண்டியதால், உன்னைக் குலத்தோடு அழிக்க நான் மீண்டும் பிறந்து வருவேன். உன் மரணத்துக்குக் காரணமான நோயாக நானே ஆவேன் என்று சொல்லிவிட்டுத் தீயில் பாய்ந்து இறந்து போனாள். அவளே சீதையாக மறுபிறவி எடுத்து வந்திருக்கிறாள் என்பது வீடணனின் வாதம்.)

“தசரத மன்னன் இந்தப் புவிமீது அறமுறை தவறாத ஆட்சி செய்துவந்தான். அப்போது சம்பரன் எனும் அசுர வேந்தன் தேவலோகத்தில் இந்திரனை எதிர்த்துப் போரிட்டு அவனை விரட்டி விட்டான். இந்திரன் தசரத மன்னனிடம் வந்து முறையிட, தசரதன் அந்த சம்பராசுரன் மீது படையெடுத்துப் போர் செய்தான். அந்தப் போரில் தசரதன் சம்பராசுரனைக் கொன்று, இந்திரனுக்கு அவனது தேவலோக ஆட்சியை மீட்டுக் கொடுத்தான்.”

“அந்த தசரத மன்னன் இந்திரனையே ரிஷப வாகனமாக்கி அவன்மீது அமர்ந்து போர்புரிந்து அரக்கர் அனைவரையும் அழித்தான். அவனது ரவி வம்சத்தில் பிருதுவும், சகரனும், கங்கையை பூமிக்குக் கொணர்ந்த பகீரதனும் ஆகிய புகழ் வாய்ந்த மன்னர்கள் வரிசையில் இந்த தசரதனும் ஆட்சி புரிந்தான். அவன் தன் மனைவிக்குக் கொடுத்த இரண்டு வரங்களினால், தன் மூத்த மகன் இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பிரிவின் சோகம் தாங்காமல் தன் உயிர் கொடுத்துப் புகழ் பெற்றான்.”

“அந்த தசரத குமாரர்களான இராமனும் இலக்குவனும்தான் இப்போது உனக்குப் பகைவர்களாக ஆகியிருக்கிறார்கள். அந்த ராஜகுமாரர்களை நீ சாமானியமாக நினைத்து விடவேண்டாம். எவரோடும் ஒப்பிட முடியாத பெருமைக்கு உரியவர்கள் அவர்கள். முனிவர்களும் தேவர்களும் போற்றி வணங்குகின்ற பெருமையும் தகுதியும் உடையவர்கள். வினைப் பயனால் மானுட உருக்கொண்ட மகோன்னதமானவர்கள்.”

“கெளசிக முனிவர் அன்போடு ஆசி வழங்கி, அவர்களிடம் கொடுத்துள்ள படைக்கலன்கள் இமைப்பொழுதில் சகல உலகங்களையும், அவற்றிலுள்ள ஜீவராசிகளையும் அழிக்கவல்ல ஆற்றல் படைத்தவை. வாலியின் உயிரை ஓர் கணையால் எடுத்தவர்கள். அரசே! சொல்ல முடியாத சில தீய நிமித்தங்கள் எங்கும் தோன்றுகின்றன. அந்த இரு வீரர்களுக்கும் துணையாக வந்திருக்கும் வானரப் படை வேறு யாருமல்ல, தேவர்களே! எனவே பகையை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல”.

“உன் சுற்றமும், உன் புகழும், நம் குலத்தோரின் நல்லியல்புகளும் அழிந்து போவதற்கு முன்னதாக, நீ சீதையை இராமனிடம் கொண்டு போய் விட்டுவிடு. அப்படிச் செய்வதுதான் உனக்கு உண்மையான வெற்றி!”.

வீடணன் பேசியவற்றைக் கேட்டான் இராவணன். அவன் சொன்னவற்றால் அளவற்ற கோபம் கொண்டான். தன் கையோடு கையை அறைந்து, பற்களைக் கடித்து, உடல் குலுங்க சிரித்தான்.

“உனக்கு உறுதிப் பொருளைக் கூறுவேன் என்று சொல்லிவிட்டு, பித்தர் கூறுவனவற்றைக் கூறினாய். எனது அளவற்ற ஆற்றலை உணர்ந்திருந்தும், என்னை அந்த மனிதர்கள் வெல்வார்கள் என்று பேசுகிறாய். ஏன் அப்படிக் கூறினாய்? அவர்கள்பால் உனக்கு உள்ள அச்சம் காரணமா? அல்லது அவர்கள் மீது உனக்குள்ள அன்பின் காரணமா? வேறு ஏதேனும் காரணம் உண்டா?”.

“இந்த மனிதப் பசுக்களைக் கொல்ல வரம் பெறவில்லை என்கிறாய். அஷ்டதிக் கஜங்களை வென்றதும், சிவபெருமானை கைலையங்கிரியோடு பெயர்த்தெடுத்ததும் உண்டா இல்லையா? ஆற்றலுடையவர்களை வெல்லும் வலிமை இருக்கும்போது, ஆற்றல் அற்றவர்களை வெல்லுதல் அரிதான செயலோ?”.

“சிந்திக்காமல் பொருளற்ற விஷயங்களைப் பேசிவிட்டாய். என்ன பேசவேண்டும் என்பதையும் நீ அறிந்திருக்கவில்லை. நந்தி இட்ட சாபத்தின்* பயனாய், குரங்குகள் நம்மை அழிக்கும் என்கிறாய். நாம் பெற்ற சாபங்கள் எத்தனையோ உண்டு. அவைகள் எல்லாம் நம்மை என்ன செய்ய முடிந்தன. நம் அழிவை எல்லோரும்தான் விரும்புகின்றனர். முனிவரும், தேவரும் நம் அழிவைக் காண காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைவுகள் நம்மை என்ன செய்ய முடிந்தன?”.

(விபீஷணன் நந்தி இட்ட சாபப்படி வாலுள்ள பெரிய குரங்குகளால் இராவணனுக்குப் பெரிய கேடு உண்டாகும் என்று கூறியதன் வரலாறு: இராவணன் குபேரனுடன் போரிட்டு வென்று, அவனுடைய புஷ்பக விமானத்தைக் கைப்பற்றி அதன் மீது அமர்ந்து இலங்கையை நோக்கி போய்க்கொண்டிருக்கையில் கைலை மலை மீதாகச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி புஷ்பக விமானம் கைலை மலைமீது செல்லும்போது அதன் இயக்கம் நின்று தடைப்பட்டு நின்றது. ஏன் இப்படி நேர்ந்தது என்று இராவணன் சிந்தித்த போது, சிவகணங்களின் தலைவன் நந்திபகவான் தோன்றி, கைலாய மலையின் பெருமையைக் கூறி, அதன்மீது பறப்பது கூடாது என்று சொன்னான். அதற்கு இராவணன் செவிசாய்க்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான். அது போதாதென்று நந்திபகவானைப் பார்த்து இராவணன், ‘குரங்குமுகமுடையவன்’ என்று பரிகசித்தான். இதனால் நந்தி கோபம் கொண்டு ‘நீ என்னை குரங்கு முகமுடையவன் என்று இகழ்ந்ததால், குரங்குகளே இலங்கை நகருக்குள் புகுந்து உன்னையும் உன் குலத்தோரையும் பூண்டோடு அழிக்கும்” என்று சாபமிட்டார். அந்த நந்தியின் சாபத்தைத்தான் விபீஷணன் இப்போது இராவணனுக்கு நினைவு படுத்தினான்).

இராவணன் தொடர்ந்து பேசுகிறான். “வாலியிடம் நான் தோற்றதை எடுத்துக் காட்டுகிறாய். எதிரியின் வலிமையில் பாதியை வாலி பெற்றுவிடும் வரம் பெற்றிருந்தான். அதனால் அவனோடு போரிடும்போது என் வலிமையில் பாதி அவனுக்குப் போனதோடு, அவனது சொந்த வலியும் சேர்ந்து என்னை தோற்கடித்து விட்டான். அந்த வாலியிடம் தோற்றுவிட்டேன் என்பதால் ஊரிலுள்ள எல்லா குரங்குகளிடமும் தோற்றுவிடுவேன் என்று சொல்லுகிறாயா?”.

“சிவனும், விஷ்ணுவும்கூட வாலியிடம் நேருக்கு நேர் நின்று போரிடுவார்களானால், அவர்களுடைய பாதி வலிமை வாலிக்குப் போய் அவன் ஜெயிக்க, இவர்கள் தோற்றுப்போவார்கள். நீ சொல்லும் அந்த மனிதனும் அந்த வரத்தை எண்ணிய்;ஏ, வாலியை மறைந்திருந்து கொன்றான்.”

“மிகப் பழமையானதும், பழுதுபட்டதுமான ஜனகனின் சிவ தனுசை ஒடித்து, ஏற்கனவே ஓட்டையாக இருந்த கிஷ்கந்தையில் மராமரங்களில் அம்பை செலுத்தி, கூனியின் ஆலோசனையால் அரசை இழந்து, நான் செய்த சூழ்ச்சியால் தன் மனைவியையும் இழந்து விட்டு இப்போது உயிரைச் சுமந்து கொண்டு அலையும் நீ சொல்லும் அந்த மனிதனை, உன்னையன்றி வேறு யார் போற்றுவார்கள்?”.

“நீ அறிவற்றவன்!” என்று சொல்லிவிட்டு இராவணன், தன் அவையோரிடம் “நல்லது! நாம் போருக்குப் புறப்படுவோம். எல்லோரும் புறப்படுங்கள்” என்று அறிவித்தான்.

அப்போதும் விபீஷணன் விடாப்பிடியாக இராவனனை நோக்கி “ஐயா! நான் சொல்வதைக் கேள்!” என்று மன்றாடத் தொடங்கினான்.

“தன்னிலும் மேலாக ஒருவரும் இல்லை எனும் ஒப்பற்ற புகழ்கொண்ட திருமால், தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, தீயவர்கள் எனக் கருதப்படும் அரக்கர்களாகிய நம்மை அழிக்கவே மனிதனாய் அவதாரம் எடுத்திருக்கிறார். இதனை அறிந்த பிறகும் அவனுடன் போருக்குப் போவது நல்ல செயலா? அவனோடு போருக்குப் போவதை தவிர்த்து விடு” என்று கெஞ்சி அவன் கால்களில் விழுந்தான்.

விபீஷணன் சொன்னதைக் கேட்டு இராவனன் வெகுண்டான். “அந்த இராமனைத் திருமால் என்று சொல்லுகிறாய். அந்தத் திருமாலே என்னை எதிர்த்துப் போரிட்டு எத்தனை முறை தோற்றிருக்கிறான். இவ்வளவு நாளும் அந்த திருமால் மூச்சற்று விழுந்து கிடந்தானா, இப்பொழுதுதான் அரக்கர்களை அழிக்கப் பிறந்து வந்திருக்கிறானா?”

“நான் இந்திரனை சிறையில் அடைத்தேன். அவனுடைய பட்டத்து யானையான ஐராவதத்தின் தந்தங்களை முறித்தேன். அந்தத் திருமாலைப் போரிலே புறமுதுகிட வைத்தேன்; தேவர்களை அஞ்சி ஓடஓட விரட்டினேன். அப்போதெல்லாம் நீ சொல்லும் அந்த தேவபுருஷன் சிறுவனாக இருந்தானோ? மும்மூர்த்திகளும் என் ஆட்சிக்கு உள்ளே இருந்தார்களே, அப்போதெல்லாம் திருமால் வலிமை குன்றிப்போய் கிடந்தானோ?”

“மிகப் பெரிய விஸ்வரூபத்தை எடுக்க வல்ல திருமால், அது தீயது, சிறுமையுடையது என்று எண்ணி, விஸ்வரூபம் எடுத்து வராமல் மனித உருவம் எடுத்து வந்தானோ?”

“பித்தனாம் சிவனும், திருமாலும் என் பெயரைக் கேட்டாலே ஓடுவார்களே! அவர்களது வாகனங்களான காளை மீதிலும், கருடன் மீதும் நான் விட்ட அம்புகளின் தடங்கள் இன்னும் இருக்கின்றனவே!”

கோபம் கொண்ட இராவணன், விபீஷணனிடம் “கோபமாய் நாங்கள் செய்யும் போருக்கு என்னுடன் நீ வரவேண்டாம். இலங்கையிலேயே பாதுகாப்பாக இரு! பயம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு இடி இடிப்பது போல சிரித்தான்.

“வேண்டாம்! உன்னைவிட வலிமையுள்ள பலர் திருமாலுடன் போரிட்டு அழிந்து போய்விட்டார்கள். அப்படி அழிந்து போனவர்களுள் இரண்யன் என்பவனின் வரலாற்றை உனக்குச் சொல்கிறேன் கேள்!” என்று சொல்லி, விபீஷணன் இரண்யனின் வரலாற்றை எடுத்தியம்பத் தொடங்கினான்.

இந்த வரலாற்றின் இந்தப் பகுதியில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான், விபீஷணன் இராவணனுக்குச் சொல்லுவதாக இந்த பிரஹலாதன் – இரண்யன் வரலாற்றைக் கூறி, இறுதியில் இரண்யன் எப்படி நரசிம்ஹத்தால் வதம் செய்யப்படுகிறான் என்பதையும் சொல்கிறார். இந்த இரண்யன் வரலாறு மூலநூலான வான்மீகத்தில் இல்லை. இந்த வரலாற்றை கம்பர் பெருமான் ஏன் தன் இராம காவியத்தில் சேர்த்தார் என்பதற்கு, கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரிலுள்ள ஆமருவியப்பர் எனும் வைணவத் திருக்கோயிலில் உள்ள பெரியவர்கள் கூறும் காரணம் சாலப் பொருத்தமுள்ளதாகத் தெரிகிறது.

தேரழுந்தூரிலுள்ள ஆமருவியப்பர் ஆலய மூலத்தானத்தில் நடுவில் பெருமாளும், ஒரு புறம் கருடாழ்வாரும், மறுபுறம் பிரஹலாதனும் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதை நாம் பார்க்கலாம். தன் பிறந்த ஊரின் தலபுராணத்தில் பிரஹலாதனுக்கும், கருடாழ்வாருக்கும் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கருதியே, பிரஹலாதனின் சரித்திரத்தை விபீஷணன் வாயிலாக இராவணனுக்குச் சொல்லும் விதத்தில் இராம காதையில் சேர்த்துள்ளார். இறுதியில் போர்க்களத்தில் இலக்குவன் உள்ளிட்ட அனைவரும் நாகபாசத்தால் கட்டுண்டு கிடக்கையில், கருடன் பறந்து வந்து இவர்களை எழுப்பிய வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இது குறித்து மற்றொரு செவிவழிச் செய்தியும் பக்தர்களால் பரவலாகச் பேசப்படுகிறது. அது, கம்பர் பெருமான் தனது இராம காதையை திருவரங்கத்திலுள்ள ஆலய மண்டபத்தில் (தற்போதைய இராமாயண மண்டபம்) அரங்கேற்றிய போது, பண்டிதர்கள், இந்த இரணியன் வதைப் படலத்துக்கு மூலநூலில் இல்லாதது என்று இதனைச் சேர்க்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதற்கு ஏனையோர், கம்பர் இந்தப் பகுதியைப் பாடி அரங்கேற்ற வேண்டுமானால், அவர் பாடியது சரிதான் என்பதற்கு ஏதேனும் நல்ல தெய்வ அனுமதி கிடைத்தால் சம்மதிப்போம், இல்லையேல் நிராகரிப்போம் என்று சொல்ல கம்பர் அரங்கேற்றினாராம். அப்போது அவர் ஒவ்வொரு பாடலையும் பாடி முடித்தவுடன் அங்கிருந்த நரசிம்ஹருடைய விக்ரகம் தன் தலையை ஆட்டியும், திருக்கரங்களை நீட்டியும், சிம்ஹ கர்ஜனை புரிந்தும் ஆமோதித்ததாகவும் கூறுவார்கள். அவையோர் இவற்றைக் கண்டு வியந்து கம்பர் பெருமானின் இராமகாதையை தெய்வத் தன்மை வாய்ந்தது என்று ஏற்றுக் கொண்டதாகவும் கூறுவார்கள். இங்ஙனம் இந்தப் பகுதி இராம காதையில் இடம் பெற்றிருப்பதை நாமும் படித்து அருள் பெருவோமாக!

விபீஷணன் தன் தமையனான இராவணனுக்கு பற்பல அறிவுரைகளைக் கூறியபோதும், அவன் லட்சியம் செய்யாததால், அவன் எவ்வளவு வலிமை உடையவனாயினும், உலகிறகு முதல்வனான திருமாலையும் அவன் பேராற்றலையும் விளக்கி, திருமாலைப் பகைத்தோர் அழிந்தொழிவது நிச்சயம் என்பதனையும் அறிவுறுத்தும் வகையில் நரசிம்ஹாவதாரத்தை எடுத்து இயம்பலுற்றான்.

பிரமனுடைய பேரனும் மரீசியின் புதல்வனுமானவர் காசிப முனிவர். இவருக்கும் திதி என்பாளுக்கும் பிறந்தவன் இரணியன். இரண்யம் என்றால் பொன் என்று பொருள். இவன் பொன் நிறத்தவனாதலின் இவனை இரண்யன் என்று அழைத்தார்கள்.

இவனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் இரண்யாட்சன். திருமாலின் துவார பாலர்களாக இருந்த ஜயன், விஜயன் என்பவர்களே ஒரு சாபத்தால் அரக்கர்களாகப் பிறந்தனர். இரண்யாட்சனைத் திருமால் தன் வராக அவதாரத்தின் போது கொன்றுவிட்டார்.

இரண்யன் கடுமையான தவத்தினைச் செய்து பிரமனிடம் ஒரு வரம் வாங்கினான். அந்த வரம் “தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஐம்பெரும் பூதங்களாலோ, வேறு எந்த படைக்கலன்களாலோ, பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ, வீட்டுக்கு உள்ளிலோ, அல்லது வீட்டுக்கு வெளியிலோ தனக்கு இறப்பு வரக்கூடாது” என்பதாகும். மிகவும் ஜாக்கிரதையாக எவற்றால் எல்லாம் இறப்பு நேரிடக்கூடுமா, எங்கெல்லாம் இறப்பு நேரிடக்கூடுமோ அங்கெல்லாமும், அவற்றால் எல்லாமும் இறப்பு வரக்கூடாது என்று முன் எச்சரிக்கையோடு இந்த இரண்யன் வரம் வாங்கினான்.

அசுரர் வேந்தனான இரண்யன் தேவர்கள் முதலான அனைவர்க்கும் எல்லையற்ற துன்பத்தைக் கொடுத்து வந்தான். உலகத்தார் தன்னையே முழுமுதல் கடவுளாக வழிபடவேண்டும், கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டான். இவனது கொடுங்கோன்மைக்கு அஞ்சி நடுங்கி, உலகத்தார் அவன் சொற்படி கேட்டு நடந்து வாழ்ந்து வந்தனர்.

இரண்யனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் பிரஹலாதன். குருகுலம் சென்று படிக்கும் வயதை அடைந்தான். அவனை ஓர் ஆசிரியரிடம் கல்வி கற்பிப்பதற்காக குருகுலவாசத்துக்கு அனுப்பி வைத்தான். அந்த குருகுலத்தில் ஆசிரியர் வேதத்தைப் பயிற்றுவிப்பதற்கு முன்பாக “ஓம் நமோ நாராயணாய நம:” என்று சொல்லுவது வழக்கமாக இருந்தது. இதை இரண்யன் மாற்றி, இனி அனைவரும் “இரண்யாய நம:” என்றுதான் சொல்ல வேண்டுமென்று ஆணையிட்டான். பிரஹலாதனுக்குப் பாடம் எடுத்த குருவும், அந்த ஆணைப்படியே “இரண்யாய நம:” என்று சொல்லிக் கொடுத்தார். ஆனால் அப்படிச் சொல்ல மறுத்து பிரஹலாதன் “ஓம் நமோ நாராயணாய நம:” என்ற மந்திரத்தையே திரும்பத் திரும்பச் சொன்னான்.

ஆசிரியர் இரண்யனிடம் சென்று அவனுடைய மகன் பிரஹலாதன் தான் சொல்லிக்கொடுத்தபடி “இரண்யாய நம:” என்று சொல்ல மறுப்பதையும், அவன் நாராயண மந்திரத்தையே உச்சரிப்பதாகவும் முறையிட்டான். இரண்யன் தன் மகனிடம் இதமாகவும் அன்பாகவும் தன் ஆற்றலையும், தேவர்கள் தனக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்பதையும், தன் பெயரைத்தான் முதலில் சொல்லி வணங்கி பாடத்தைத் தொடங்க வேண்டுமென்றும் எடுத்துரைத்தான். ஆனால், பிரஹலாதனோ திருமாலே பரம்பொருள் என்றும், அவரை இகழ்வதால் அனைவருக்கும் அழிவு நேரிடும் என்றும் எடுத்துரைத்தான். இரண்யன் கேட்பதாக இல்லை. மகனைத் துன்புறுத்தியாவது தன் பெயரைச் சொல்லி வணங்கச் செய்யும்படி ஆணையிட்டான்.

அரசனின் ஆணைப்படி ஏவலர்கள் பிரஹலாதனுக்கு தண்டனைகள் என்ற பெயரில் துன்பங்களை இழைத்தனர். வாள் கொண்டும், மழு எனும் ஆயுதத்தாலும் அந்தச் சிறுவனைத் தாக்கினர். என்ன நேர்ந்த போதும் நாராயண மந்திரத்தை உச்சரிப்பதை மட்டும் பிரஹலாதன் நிறுத்தவேயில்லை. கோபமடைந்த இரண்யன் ஆணைப்படி, காவலர்கள் பிரஹலாதனைத் தீக்குழிக்குள் தள்ளினார்கள். தீ அவனைச் சுடவில்லை. அனந்தன் முதலான பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தான். அவற்றின் விஷப் பற்கள்தான் முறிந்துபோனவே தவிர பிரஹலாதனை விஷம் தாக்கவில்லை. பிரஹலாதனின் தலையை பட்டத்து யானையை விட்டு இடற ஆனையிட்டான். அந்த யானை பிரஹலாதனை வணங்கிக் கும்பிட்டுவிட்டுப் பின் வாங்கிப் போய்விட்டது. அந்த யானையைக் கொன்றுவிடும்படி அரசன் ஆணையிட்டான். ஆனால் அந்த யானை தன்னைத் தாக்க வந்தவர்களையே இடறிவிட்டது.

எதற்கும் பிரஹலாதன் சாகாதது கண்டு, இரண்யன் அவனைப் பாறையோடு கட்டி கடலில் தூக்கி எறியச் சொன்னான். ஆனால், அந்தப் பாறை தெப்பம் போல கடலில் மிதந்து அவனைக் கரை சேர்த்ததே தவிர மூழ்கவில்லை. கடுமையான நஞ்சை அவனுக்கு ஊட்டுமாறு மன்னன் கட்டளையிட்டான். அந்த நஞ்சும் அவனை ஒன்றும் செய்யவில்லை.

இவ்வளவு செய்தும் சாகாத பிரஹலாதனைத் தானே கொல்வேன் என்று கிளம்பினான் இரண்யன். அதற்கு பிரஹலாதன் “என் உயிர் இறைவன் கொடுத்தது. அதைப் போக்கும் உரிமை உனக்கு இல்லை” என்றான். “யார் அந்த இறைவன் என்றான்” இரண்யன்.

“உலகையும் உயிர்களையும் படைத்தவன் திருமால்” என்றான் பிரஹலாதன்.

“யார் அந்தத் திருமால்?” என்று இரண்யன் கேட்டான். அதற்கு பிரஹலாதன் “அவன்தான் உலகையும், உயிர்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் முத்தொழிலைச் செய்பவன். உலகுக்கு உயிர்களையும், மலருக்கு மணத்தையும், எள்ளில் எண்ணெயையும் கொடுத்தவன்” என்றான்.

“அவன் எங்கே இருக்கிறான்?’ என்றான் இரண்யன்.

“அவன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் அவன்” என்று பதில் சொன்னான்.

“சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினை சதகூறு இட்ட

கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை

காணுதி விரைவின்’ என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான்.”

“அவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்றால், இந்தத் தூணிடத்தே அவனைக் காட்டு, இல்லையேல், உன்னைக் கொல்வேன்” என்றான் இரண்யன்.

அதற்குப் பிரஹலாதன் “என் உயிர் உன்னால் பறிக்கத்தக்க அளவு எளிதானதல்ல. நான் சொல்லும் இறைவன் தொட்ட இடத்திலெல்லாம் தோன்றானாயின் நான் அவனது உண்மையான அடியவன் அல்ல” என்று சூளுரைத்தான்.

உடனே இரண்யன் அங்கிருந்த தூண் ஒன்றத் தன் கையால் அறைந்தான். அந்தத் தூணுக்குள்ளிருந்து நரசிம்ஹத்தின் பெரும் சிரிப்பொலி எழுந்தது. தூணின் உள்ளே நரசிம்ஹன் வந்துவிட்டதை அறிந்த பிரஹலாதன் மகிழ்ந்தான். பாடினான்; ஆடினான்; இறைவனை வாயார வாழ்த்தித் துதித்தான்.

தூணின் உள்ளேயிருந்து சிரிப்பொலி கேட்டதும், இரண்யன் “யாரடா அவன் சிரித்தது?” என்று கேட்டுவிட்டு, “புறப்படு! புறப்படு! என்னுடன் போருக்கு வா!” என்று அழைத்தான்.

“ஆர் அடா சிரித்தாய்? சொன்ன அரி கொலோ? அஞ்சிப் புக்க

நீர் அடா, போதாது என்று நெடுந்தறி நாடினாயோ?

போர் அடா பொருதி ஆயின் புறப்படு! புறப்படு! என்றான்

பேர் அடா நின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் பேர்வான்”

இரண்யன் இப்படிச் சொன்ன அந்த நொடியே அந்தத் தூண் பிளந்து, வெடித்துச் சிதற, உள்ளேயிருந்து பெரும் கோபத்துடன் கண்கள் சிவந்து தீ உமிழ, பெரும் கர்ஜனையோடு, நரசிம்ஹம் வெளிப்பட்டது. வானுக்கும் பூமிக்குமாக நின்று உலகே அதிரும்படி கர்ஜித்து நின்ற நரசிம்ஹத்தின் தோற்றம் அச்சம் தருவதாக இருந்தது.

“பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது சீயம்; பின்னை

வளர்ந்தது, திசைகள் எட்டும், பகிரண்டம் முதல் மற்றும்

அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?

கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும்”.

அண்டம் அதிர, உலகம் கிழிய பெரும் கர்ஜனையோடு வான் முட்டும் தோற்றத்தோடு வந்து தோன்றிய நரசிம்ஹத்தைக் கண்டதும் இரண்யன் கையில் வாளும், கேடயமும் ஏந்தி அவரை எதிர்க்கப் புறப்பட்டான். அப்போது பிரஹலாதன், அவனைத் தடுத்து “நீ உய்ய வேண்டுமானால் சங்கும் சக்கரமும் ஏந்திய திருமாலை வணங்கி நற்கதி அடைவாயாக!” என்று அன்புடன் வேண்டிக் கொண்டான்.

தன்னிலும் மேம்பட்டவராக எவரையும் மனதாலும் கருதாத இரண்யன், பிரஹலாதனை இகழ்ந்து சிரித்து, நரசிம்ஹமூர்த்தியை எதிர்த்தான். அந்நிலையில் நரசிம்ஹம் இரணியனுடைய இரண்டு கால்களையும் தன் ஒரு கையால் பற்றிச் சுழற்றி, அந்தி நேரமாகிவிட்ட அந்த நேரத்தில், அரண்மனை வாயிற்படியில், அவனைத் தொடைமேல் தாங்கிக் கொண்டு, தன் கைகளின் நகங்களால் அவன் மார்பைப் பிளந்து, உயிரைக் குடித்தார். இரண்யனின் கொடுமையால் வாடிய தேவர் முதலானோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

“ஆயவன் தன்னை, மாயன் அந்தியின், அவன் பொன் கோயில்

வாயிலில், மணிக் கவான் மேல், வயிரவாள் உகிரின், வானின்

மீஎழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு

தீஎழப் பிளந்து நீக்கி தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்”.

இரண்யனுக்கு அஞ்சி முன்பு ஓடி ஒளிந்த பிரமன், ருத்ரன் முதலானோர் பயம் நீங்கித் திரும்பி வந்தனர். கூடிய அனைவரும் நரசிம்ஹத்தின் பேருருவையும், இரத்தம் படிந்த பயங்கரத் தோற்றத்தையும் கண்டு அஞ்சி நடுங்கினர். பிரமன் நரசிம்ஹத்தைத் துதித்துப் போற்ற, நரசிம்ஹன் பொங்கி மேலெழுந்து நின்ற கோபத்தை உள்ளடக்கிக் கொண்டு “அஞ்சாதீர்கள்” என்று அபயம் அளித்தான்.

நரசிம்ஹன் இரண்யனை பகலும் இல்லாத இரவும் இல்லாத அந்தி நேரத்தில், வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியேயோ இல்லாமல் அரண்மனை வாயிற்படியில், தரையிலோ அல்லது ஆகாயத்திலோ இல்லாமல் தனது தொடைமீது வைத்து, ஈரமுள்ல உடல் உறுப்புகளாலோ அல்லது ஆயுதங்களாலோ அன்றி தனது விரல் நகங்களால் கிழித்து நெஞ்சைப் பிளந்து குருதி பொங்கக் கொன்றதற்கு, முன்பு இரண்யன் பெற்ற வரமே காரணம். அந்த வரம் என்ன என்பதைப் பார்ப்போம்.

இரண்யன் நீண்ட நாட்கள் கடுமையாக தவம் செய்து பிரமதேவனிடம் வரம் கேட்டான். அவன் கேட்ட வரம் தனக்கு மனிதர்கள் உருவிலோ அல்லது விலங்குகள் உருவிலோ, இரவு நேரத்திலோ அல்லது பகல் நேரத்திலோ, பூமியிலோ அல்லது ஆகாயத்திலோ, ஈரமான உறுப்புகளாலோ அல்லது ஈரமற்றதான ஆயுதங்களாலோ, வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ யாரும் கொல்ல முடியாத வரம் வேண்டுமென்று கேட்டு அப்படியே பெற்றான். அவன் பெற்ற இந்த வரத்தினால்தான் நரசிம்ஹமூர்த்தி மேலே குறிப்பிட்ட எந்த வகையாலும் இல்லாமல் அவனை சம்ஹாரம் செய்தார். அது இரவுமற்ற, பகலுமற்ற அந்திப் பொழுதில், பூமியும் இல்லாமல் ஆகாயமும் இல்லாமல் தனது தொடையின் மீது வைத்து, ஈர உறுப்புகளாலோ அல்லது உலர்ந்த ஆயுதத்தாலோ இல்லாமல் தன் விரலின் நகங்களால் கிழித்து, மனித உருவமும் இல்லாமல், மிருக உருவமும் இல்லாத நரசிம்ஹ உருவம் எடுத்து, வீட்டின் உள்ளோ அல்லது வெளியோ இல்லாமல் வாயிற்படியில் வைத்து அவனை சம்ஹாரம் செய்தார்.

இரண்ய வதம் முடிந்து நரசிம்ஹ மூர்த்தியும் கோபம் தணிய, தேவர்கள் அனைவரும் பிராட்டியாகிய திருமகளை வேண்டிப் போற்றி நரசிம்ஹ மூர்த்தியின் அருகே சென்று அவரை அமைதிப்படுத்த வேண்டினர். நரசிம்ஹரும் சினம் தணிந்து திருமகளை அன்போடு நோக்கினார். கூடியிருந்தோர் அனைவரும் நரசிம்ஹத்தைப் போற்றி வணங்கினர்.

தனது தந்தையின் மரணத்துக்குத் தானே காரணமாக இருந்து, அவன் தன் கண் முன்னேயே மாண்டபோதும், தன்னிடம் பேரன்பும் பக்தியும் பூண்டு நிற்கும் பிரஹலாதனைப் பாராட்டிய நரசிம்ஹம் உனக்கு நான் செய்ய வேண்டியது எதுவாயினும் கேள் என்று கேட்டார். அதற்கு பிரஹலாதன் சொன்னான்:

“புழுவாய்ப் பிறக்கினும் நின் திருவடிகளைப் பணிந்து, நின் அருளைப் பெற அருள் புரிவாய்!” என்றான். பிரஹலாதனின் மொழிகளைக் கேட்ட நரசிம்ஹம் ஐம்பெரும் பூதங்கள் அழியினும் நீ என்றும் என்னைப் போல அழிவற்று சிரஞ்ஜீவியாய் நிலைத்திருப்பாய். உலக உயிர்கள் அனைத்தும் என்னைப் பணிந்து பெறும் நற்பயன்களை, நின்னைப் பணிந்தும் பெறட்டும். அசுரர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும் நீயே அரசன்” என்று வரம் அளித்தார்.

“நல் அறமும், மெய்ம்மையும், நான் மறையும், நல் அருளும்

எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப்பொருளும்

தொல்லை சால் எண்குணனும், நின் சொல் தொழில் செய்க;

நல்ல உரு ஒளியாய் நாளும் வளர்க நீ”

மேலே கண்டபடி நரசிம்ஹப் பெருமாள் பிரஹலாதனுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதித்தார். பிறகு பிரமதேவன் வேள்விச் சடங்குகளைச் செய்து பிரஹலாதனை மூவுலகங்களுக்கும் அரசனாக்கினான்.

இந்த வரலாற்றைக் கூறி முடித்த விபீஷணன் இராவணனிடம் “எம் வேந்தனே! இது முன்னர் நடந்த வரலாறு. யான் உரைத்த இவ்வறிவுரையில் ஏதேனும் பொருள் இருக்குமானால் அதனை ஏற்று அதன்படி நட. இல்லையேல், இதனை இகழ்வாய் ஆயின் அதனால் உனக்குத் தீங்கு விளைதல் உறுதி” என்று கூறினான்.

தன் தம்பி கூறிய அறிவுரைகளை இராவணன் செவிகள் கேட்டனவே தவிர, அவன் மனம் சீதையைப் பற்றிய கனவுகளிலேயே இருந்ததால், அந்த அறிவுரைகள் எதுவும் அவன் மனதில் ஏறவில்லை. விபீஷணன் மீது அளவற்ற கோபம் கொண்டான்.

“இரண்யன் எம்மை விட வலிமையுடையவனா? அவனைக் கொன்றதால் திருமால் வலிமையுடையவனோ? அவன் மீது உனக்கு ஏன் இவ்வளவு பக்தி?”

“தந்தையான இரண்யனைத் தன் கண் எதிரிலேயே கொன்ற போதும் வருந்தாத பிரஹலாதனும் நீயும் ஒன்றுதான். இரண்யனைக் கொன்று பிரஹலாதன் செல்வத்தையும் ராஜ்யத்தையும் அடைந்ததைப் போல, உனக்கும் ஆசை ஏற்பட்டுவிட்டது போல இருக்கிறது. அதனால்தான் இராம லக்ஷ்மணரிடத்து உனக்கு இவ்வளவு பரிவும் பாசமும் ஏற்பட்டிருக்கிறது. போ! நீ போய் அவர்களிடமே அடைக்கலம் கொள்!”.

“பகைவனிடம் அச்சம் கொண்ட நீ போர் செய்ய மாட்டாய். உன்னை உடன் வைத்துக் கொள்வது எனக்கு நல்லதும் அல்ல. உன்னைக் கொன்றால் தம்பியைக் கொன்ற பழி எனக்கு வரும் என்பதால், நான் உன்னைக் கொல்லவில்லை. எனக்கு உபதேசம் செய்வதை உடனே நிறுத்திக் கொள்! இனியும் நீ என் கண்முன் நிற்காதே! இங்கிருந்து உடனே ஓடிப்போய்விடு! மேலும் இங்கு தாமதித்தால் என் கையாலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்” என்றான் இராவணன்.

விதி வழியில் மதி செல்கிறது. அழிவை நோக்கிச் செல்லும் அவனுக்கு அறிவு வேலை செய்யவில்லை.

“பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன் உனை

ஒழி சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;

விழி எதிர் நிற்றியேல், விளிதி என்றனன்

அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்”.

இங்ஙனம் இராவணன் வெகுண்டு உரைத்ததும், விபீஷணன் தன் துணைவர்கள் சிலருடன் அவ்விடத்திலிருந்து மேலே எழும்பி வானத்தில் சென்று, அங்கு அந்தத் துணைவர்களுடன் ஆலோசனை நடத்தியபின், தன் அண்ணன் அழிந்துவிடுவானே என்ற கவலையினால் மீண்டும் அவனுக்குச் சில நீதிகளை எடுத்துரைத்தான்.

“இராவணா! நான் சொல்வதைக் கேள்! ஊழிக்காலம் வரை செல்வச் செருக்கோடு வாழ வேண்டிய நீ கீழோர் சொல் கேட்டு அழிய நினைக்கிறாய். தர்மம் தவறினால் நல்வாழ்வு கிட்டுமா? உன் மக்கள், குரு முதலானவர்களையும், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் களபலி கொடுத்துவிட்டு நீ அந்தப் பேரழிவைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா?”

“உனக்கு எத்தனை நீதிகளைச் சொன்னேன். அவற்றையெல்லாம் நீ உணரவில்லை. என் தந்தைக்கு ஒப்பானவனே! என் பிழையைப் பொறுத்துக் கொள்!” என்று சொல்லிவிட்டு, வானவழியாக அந்த இலங்கையை விட்ட் நீங்கிச் சென்றான், அந்த உத்தமமான விபீஷணன். விபீஷணனுடன் நான்கு அமைச்சர்களும் சேர்ந்து கொண்டு அவனுடன் சென்றனர். அவர்கள் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகியோராவர்.

அண்ணன் இராவணன் நீ போய்விடு இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்துகிறான். அவனுக்கு எடுத்துரைத்த நீதிகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது. இனி என்ன செய்வது? தன் துணைவர்களாக வந்து சேர்ந்து கொண்ட அந்த நான்கு அமைச்சர்களோடும் இலங்கையை விட்டு நீங்கி, கடலின் அந்தக் கரையில் பெரிய கடல் போன்ற வானர சேனையோடு வந்து தங்கியிருக்கிற இராமபிரானிடம் சென்று தஞ்சமடைவோம் என்று புறப்பட்டார்கள்.

தன் துணைவர்களோடு பெருங்கடலைக் கடந்து வானவழியாக அக்கரையில் தங்கியிருந்த கடல் போன்ற வானரப் படையைக் கண்டான் விபீஷணன். இப்போது நாம் என்ன செய்யலாம் என்று அமைச்சர்களோடு விபீஷணன் கலந்து ஆலோசித்தான். அவர்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் தாழ்வு இல்லாத ஞானப் பொருளாகவும், தர்மத்தின் வடிவாகவும் விளங்குகின்ற இராமபிரானைச் சென்று காண்பதே இப்போது நமது கடன் என்று முடிவு செய்தார்கள்.

விபீஷணன் சொல்கிறான்: “இராமனை நான் முன்பு பார்த்ததும் இல்லை. அவனைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதும் இல்லை. எனினும் அவனைப் பற்றி எண்ணுகின்ற போது எனது என்புகள் உருகுகின்றனவே. உள்ளத்தில் அன்பு மேலிடுகிறது. அந்த இராமன், நமது பிறவி நோய்க்கு மருந்தாக வந்திருக்கிற இறைவன்தானோ?”

அவர்கள், இராமனும் வானரப் படைகளும் தங்கியிருக்கிற பகுதிக்கு வந்து சேர்ந்தபோது இரவு நேரம் வந்துவிட்டது. இந்த இரவு நேரத்தில் புதியவர்களான நாம் சென்று இராமனைக் காண்பது இயல்பானதாக இருக்காது. ஆகையால் நாம் இன்று இரவை ஒரு மரச் சோலையில் கழித்து காலையில் சென்று இராமனைக் காணலாம் என்று முடிவு செய்து, அங்ஙனமே சோலையில் போய்த் தங்கினர்.

இராமபிரான் தங்கியிருந்த இடத்தில், இந்தக் கடலை எப்படித் தாண்டிச் செல்வது என்ற கவலையில் இராமன் ஆழ்ந்திருந்தான். சீதையின் நினைவு வேறு அடிக்கடி இராமனை வாட்டிக் கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த இயற்கை வனப்புகள் அனைத்துமே சீதையை நினைவூட்டுவனவாக இருந்தன. உணர்ச்சிக் கொந்தளிப்பால் இராமன் சிந்தை கலங்கிப் போயிருந்தது, அப்போது அனுமன் முதலானவர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் அமர்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், இராமனைக் காண வேண்டி இலங்கையிலிருந்து வந்து சோலையில் தங்கியிருந்த விபீஷணனும் அவன் அமைச்சர்களும் அந்தப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

விபீஷணனையும் அவன் அமைச்சர்களையும் கண்டதும், கூட்டம் கூட்டமாய் நின்று கொண்டிருந்த வானர வீரர்கள் அனைவரும், இதோ பாருங்கள், நம்மிடையே அரக்கர்கள் வந்துவிட்டார்கள். அவர்களைப் பிடியுங்கள், அடியுங்கள், கொல்லுங்கள் என்று ஓடிவரத் தொடங்கினார்கள்.

“இவன் இராவணனாகத்தான் இருக்க வேண்டும். தர்மமே இவன் மனதை மாற்றி, தவறை உணர்ந்து சரணடைய இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது” என்று சில வானர வீரர்கள் சொன்னார்கள்.

“இராவணனுக்கு இருபது கரங்கள், பத்து தலைகள், ஆனால் இவனுக்கு ஒரு தலை, இரண்டு கைகள்தானே இருக்கிறது. மற்றவை எங்கே? சிதைந்து போயினவோ?” என்று ஐயத்தைக் கிளப்பினார்கள் சில வானரர்கள்.

சில வானரர்களோ, “வாருங்கள்! வாருங்கள்!! வந்து எங்களோடு போர் செய்யுங்கள்” என்று அறைகூவல் விட்டார்கள். வேறு சிலரோ “இவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள், பிறகு இராமனிடம் சென்று சொல்வோம்” என்றார்கள்.

“எச்சரிக்கையாக இருங்கள், இவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணில் எழுந்து போய்விடுவார்கள். அதற்கு முன் இவர்களைக் கொல்லுங்கள்” என்று ஓடிவந்தனர் சிலர்.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அனுமன், அங்கே அருகே இருந்த மயிந்தன், துமிந்தன் எனும் நீதி நெறி அறிந்த இருவரை அழைத்து, அங்கே யார் வந்திருக்கிறார்கள், வானர வீரர்கள் ஏன் கூச்சலிடுகிறார்கள் என்ற விவரங்களைத் தெரிந்து வருமாறு அனுப்பி வைத்தான். மயிந்தனும், துமிந்தனும் உடனே புறப்பட்டுப் போய் கூட்டமாய் நின்று கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்த வானர வீரர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்திருப்பது விபீஷணனும் அவன் அமைச்சர்களும் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்கள் அருகில் வந்தனர். இவர்களை நன்றாக கவனித்தபின் மயிந்தனும் துமிந்தனும் இவர்களைப் பார்த்தால் வஞ்சனை எண்ணம் எதுவும் இல்லாதவர்களாகத் தோன்றுகிறார்கள், அறநெறியும், ஞானமும் உள்ளவர்கள் என்று அறிந்து கொண்டார்கள்.

விபீஷணனை நோக்கி இவர்கள் “நீங்கள் யார்? இங்கு வந்ததின் நோக்கம் என்ன? போர் புரிவதற்காக வந்தீர்களா, அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா?” என்று கேட்டார்கள்.

அதற்கு விபீஷணன் கூறுகிறான்: “சூரிய வம்சத்தில் உதித்த அறத்தின் நாயகன் இராமனுடைய கழலடிகளில் புகலிடமாக அடைவதற்காக நடு நிலையும், நேர்மையுமுடையவனும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பவனுமான பிரமனின் பேரனுடைய மகன் விபீஷணன் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றான்.

“எனது அண்ணனான இராவணனுக்கு அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ள எவ்வளவோ சொல்லியும், பற்பல நீதிகளை எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. தர்மத்துக்குப் புறம்பான செயலைச் செய்துவிட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அவன் எனது அறிவுரைகளைக் கேட்டு கோபம் கொண்டு, உயிர் பிழைக்க வேண்டுமானால் இங்கே நிற்காதே ஓடிவிடு என்று எங்களைத் துரத்திவிட்டான், ஆகையால் இராமன் கழலடியில் சரணாகதியடைய வந்திருக்கிறோம்” என்றான் விபீஷணன்.

மயிந்தனும் அனலனும் தாங்கள் கேட்டுத் தெரிந்துகொண்ட விவரங்கள் அனைத்தையும் இராமனிடம் சொல்லி, இராவணனின் தம்பி விபீஷணன் அடைக்கலம் தேடி தங்களை நாடி வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கூறினர். அவர்களைக் கொல்லுங்கள், வெட்டுங்கள் என்று விரைந்து ஓடிய வானர சேனையை ஒழுங்குபடுத்தி சும்மாயிருக்கச் சொல்லிவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார்கள்.

அறத்தைப் பின்பற்றி ஒழுகும் விபீஷணன் சொற்களை இராவணன் நிராகரித்து விரட்டியடித்து விட்ட செய்தியையும் அவன் உயிர் பிழைத்து இராமனிடம் புகலிடம் தேடும் செய்தியையும் அவர்கள் இராமனிடம் கூறினார்கள்.

உடனே இராமன் தன் அருகில் இருந்த சுக்ரீவன் முதலானவர்களிடம் “இவ்வளவு செய்திகளையும் கேட்டுக் கொண்டிருந்தீர்களே! விபீஷணனுக்கு நாம் அடைக்கலம் கொடுக்கலாமா? என்பதை சொல்லுங்கள்” என்றான்.

சுக்ரீவன் இராமனை வணங்கிவிட்டு சொல்கிறான்: “விபீஷணன் இங்கே அடைக்கலம் தேடி வந்திருக்கக்கூடிய நேரம் சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு என்னுடைய கருத்தைச் சொல்லுகிறேன். இராமா! முற்றும் உணர்ந்த நீ என்னிடம் கருத்துக் கேட்பது நட்பு கருதியே என்பதை நான் உணர்வேன். ஆயினும் சொல்கிறேன். விபீஷணன் தன் அண்ணனோடு போர் செய்தாலோ, அல்லது இவன் உயிரைப் பறிக்க முயன்றாலோ அன்றி, அவன் இங்கே நம்மை நாடி வந்தது முறையல்ல. இது போன்ற நேரத்தில் அண்ணனைப் பிரிந்து வருதல் தர்மமும் அல்ல. மேலும் அரக்கர்களில் உயர்ந்த பண்புடையவர்கள் எவரும் உளரோ?”

“பகைவர் நெருங்கி வரும்போது, தாய் தந்தையரையும், அண்ணனையும், குருவையும், வேந்தனையும் விட்டு நீங்கி வருதல் விரும்பத்தக்க செயலோ? நகைப்புக்கு இடமல்லவா? தேவைப்பட்டபோது அண்ணனோடு இணங்கி இருந்து விட்டு, அவன் போர் என்று கிளம்பும்போது அவனை விட்டுப் பிரிந்து சென்று பகைவரோடு சேருதல் ஆண்மைக்கு அழகோ?”

“அரக்கர்களையே பூண்டோடு அழிக்க நாம் விரதம் மேற்கொண்டிருக்க, அரக்கரில் சிலரையே நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் நன்றோ? மேலும் அரக்கர்கள் நிலையான குணம் உள்ளவர்கள் அல்ல. நம் கையில் பொருள் உள்ள போது ஒன்றும், பொருள் இல்லாத போது மாறுபட்டும் இருப்பார்கள்”.

“இராவணனிடத்து மாறாத அன்பு பூண்ட விபீஷணன் நம்மிடம் ஏதோ வஞ்சனை செய்யக் கருதிதான் வந்திருக்கிறானே தவிர உண்மையில் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவன் அல்ல!.” சுக்ரீவன் இப்படித் தன் கருத்தைக் கூறிய பிறகு, இராமபிரான் அளவற்ற ஞானமுடைய ஜாம்பவானிடம் உன் கருத்து என்ன என்றான்.

ஜாம்பவான் கூறுகிறான்: “சிறந்த அறிஞர் என்பதற்காக ஒரு பகைவரை நம்முடன் சேர்த்துக் கொள்வது அழிவுக்கு ஏதுவாகும். அரக்கர்களுக்கு அறவழி என்பது நம்மிடமிருந்து மாறுபட்டதாகும். நாம் இராவணனோடு போரிடுங்கால், இவர்கள் நல்ல உபாயங்களைச் சொல்வார்கள் என்பது உண்மைதான். நமக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கும் காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்திப்பார்கள். எல்லாம் சரிதான், ஆனால் அவர்கள் நமது பரம்பரை எதிரிகள் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் சிற்றினத்தாராகிய இவர்களோடு நாம் சேரலாமா?’.

“வேதங்களையும், வேத முறைப்படி செய்யும் வேள்விகளையும் அழித்து, அந்தணர்களுக்குத் தீமை செய்து, தேவர்களுக்குத் துன்பம் இழைக்கும் மகா பாதகர்களாகிய இவர்கள் நம்மிடம் மட்டும் அன்பு செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? நம்மிடம் அடைக்கலம் அடைய விரும்பும் இவர்கள், பிறகு மாறுபட்டு நமக்குத் தீமை இழைக்க முயலும் போது, உன்னால் இவர்களைத் துரத்த முடியாது. ஏனென்றால் அடைக்கலம் என்று வந்தவர்களை இராமன் கைவிட்டான் என்கிற பழி வந்து சேரும்”.

“இவனை நம்மோடு சேர்த்துக் கொள்வதால் நமக்குத் தீமைகளே வந்து சேரும் என்பதை நான் அதிகம் கூற வேண்டுமோ? சுருங்கச் சொன்னால், இந்த விபீஷணன் வரவு, முன்பு பொன் மானாக வந்த மாரீசனின் வரவைப் போன்றே தீமை பயக்கக்கூடியதே” என்று சொல்லி முடித்தான் ஜாம்பவான்.

பிறகு இராமபிரான் படைத்தலைவன் நீலனைப் பார்த்து “நீ உன் கருத்தைக் கூறு” என்றான். அதற்கு அந்த நீலன் சொல்லுகிறான்: “எல்லையற்ற நூல் கேள்வியுடைய இராமா! பகைவர்களையும் துணையாகக் கொள்ள வகைகள் பல உண்டு, கூறுகிறேன். ஆனால் குரங்கின் சொல்தானே என்று அலட்சியமாக ஒதுக்கிவிடாமல் கேள்! என்று சொல்லிவிட்டு எத்தகையவர்களை அடைக்கலம் என்று வரும்போது ஏற்றுக் கொள்ளலாம், எவர்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்று ஒரு பட்டியலிட்டுவிட்டு, இந்த விபீஷணனுடைய வரவு எத்தகையது என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வோம்” என்கிறான்.

நீலனைத் தொடர்ந்து, அங்கிருந்த கற்றோரும், இராமன்பால் அன்புடையோரும், மற்ற அமைச்சர் பெருமக்களும் பகைவருடைய தம்பியை நம்மோடு சேர்த்துக் கொள்ளுதல் குற்றம் என்று கூறினார்கள். அப்போது இராமன் அனுமனை நோக்கி “மாருதி! நீ உன் கருத்தைக் கூறு” என்றான்.

“உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்;

செறிபெருங் கேள்வியாய்! ‘கருத்து என் செப்பு’ என

நெறிதெரி மாருதி எனும் நேரிலா

அறிவனை நோக்கினான், அறிவின் மேலுளான்”.

இராமனைப் பணிந்து மாருதி பேசலானான். “ஒன்றைப் பற்றி ஆராயுமிடத்து எளியவனாகவும், சாதாரணமானவனையும் கூட கருத்துக் கேட்பது, நும் போன்ற பெரியோர்கள் கடைப்பிடிக்கும் நெறியாகும். அந்த வகையில் என் கருத்தைக் கேட்டதனால் கூறுகிறேன். ஆராய்ந்து பார்த்து ஆலோசனை கூறவல்ல உத்தமர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டார்கள். நான் என் கருத்தையும் கூறத்தான் வேண்டுமோ?”

“அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் தூய்மையானவையே. என்றாலும் நான் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். இந்த விபீஷணன் தீயவன் என்று நான் கருதவில்லை. அதற்கான காரணங்களை நான் சொல்லுகிறேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நெஞ்சில் வஞ்சகம் இருந்தால் முகத்தில் தெரியாதபடி, இவனால் மறைக்க முடியுமோ? பகைவன் என்பவன் நம்மிடம் புகலிடம் நாடுவார்களோ?”

“வாலியை விண்ணுலகம் அனுப்பி, அவன் இளவலான சுக்ரீவனுக்கு அரச பதவியைத் தாங்கள் அளித்த செய்தியைக் கேள்விப்பட்டு, இராவணன் அரசைத் தான் பெறும் பொருட்டு விபீஷணன் இங்கு வந்து சேர்ந்துள்ளான். அரக்கர்களின் அரசு கொடுங்கோல் அரசு, நன்னெறி அற்ற அரசு என்பதை அறிந்து, உனது அரசை தம்பி பரதனுக்கு அளித்த கருணையை உணர்ந்து விபீஷணன் இங்கே வந்துள்ளான்”.

“விபீஷணன் தன் அண்ணனைப் பிரிந்து வந்த காலம் தவறு என்று பெரியோர்கள் கூறினார்கள். ஆனால் இராவணன் வலியிலும் நின் வலி சிறந்தது என்றும், இராவணன் முதலானோர் இனி அழிந்து போவது திண்ணம் என்பதை உணர்ந்தும், சரியான தருணத்திலேயே விபீஷணன் இராவணனைப் பிரிந்து வந்திருக்கிறான். அரக்கர்கள் மாயத் தொழிலில் வல்லவர்கள். அவர்களது மாயங்களை அறிந்து நமக்குச் சொல்வதற்கு ஏற்ற வகையில் விபீஷணன் நம் பக்கம் வருவது நமக்கு நன்மைதானே!”

“அடைக்கலம் என்று வந்து நம்மோடு சேர்ந்த பிறகு, நமக்கே தீமை செய்வார்கள் என்ற கருத்தையும் சொன்னார்கள். நம்மிடம் அடைக்கலம் என்று வந்த எளியவர்கள் அத்தகைய தீமையைத் துணிந்து செய்ய முடியுமோ? இலங்கையில் இராவணன் அவையில் நான் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது ‘கொல்லுங்கள் இவனை’ என்று இராவணன் கட்டளையிட்ட போது, தூதரைக் கொல்லுதல் இழிவான செயல், பழியொடு பொருந்தியது; அப்படிச் செய்தால் போர்த் தொழிலில் வெல்லமாட்டாதவர் ஆகும் என்று அறவுரை கூறியவன் இந்த விபீஷணன் என்பதையும் நான் சொல்லியிருக்கிறேன்”.

“மாதரைக் கோறலும், மறத்து நீங்கிய

ஆதரைக் கோறலும், அழிவு செய்யினும்

தூதரைக் கோறலும் தூயது அன்றாம் என

ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்”.

“இலங்கையில் யான் இவனது பொன் மயமான மாளிகைக்கு இரவு நேரத்தில் சென்ற போதும், அங்கு தேவியைத் தேடித் திரிந்தபோதும், நல்ல நிமித்தங்களே தொன்றின. அவையன்றி வேறொரு செய்தியும் உண்டு.”

“மாமிச உணவுகளும், கள் முதலான மயக்கம் தரும் வஸ்துக்களும் இவனது அரண்மனையில் எங்கும் காணப்படவில்லை. அறவழிப்பட்ட தான் தருமங்களும், இறை வழிபாடும் நடக்கும் அந்தணரின் இல்லத்தை ஒத்திருந்தது இவனது மாளிகை. அதுமட்டுமல்ல! இந்த விபீஷணனின் மகள் திரிசடை என்பாள் சீதாதேவிக்குக் காவல் இருக்கும் அரக்கியரில் ஒருத்தி. அவள் தேவியிடம் இந்தக் கெடுமதி இராவணன் உன்னைத் தீண்டுவானாயின் அவனது தலை சிதறி மாண்டுபோவான்; அப்படியொரு சாபம் அவனுக்கு உண்டு என்றும் அதனால் நீ அஞ்சாதே என்று ஆறுதல் கூறிவந்தாள்”.

“இராவணன் பெற்றுள்ள வரங்களும், அவனது மாயச் செயல்களும் உன் கை வில் அம்பினால் அழியும் என்பதைத் தெரிந்து கொண்டே விபீஷணன் அடைக்கலம் தேடிவந்துள்ளான். இவன் பெற்றிருக்கிற பெரிய வரங்களையும், அவனது அருட் குணத்தையும், ஞான உணர்வுகளையும் நோக்கும்போது இவனினும் தவத்திலும் ஒழுக்கத்திலும் மிக்கார் எவருமில்லை”.

“தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவதேவர்

மூவர்க்கும், முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றோம்

ஆவத்தின் வந்து “அபயம்” என்றானை அயிர்த்து அகல விடுதும் என்றால்

கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? – கொற்ற வேந்தே!”

“ஐயனே! தேவர், அசுரர், பிரமன் ஆகியோருக்கு அரிதான காரியத்தை முடிக்க முனைந்திருக்கிறோம். அப்படிப்பட்ட காரியத்தில் முனைந்திருக்கும் நம்மிடம் அபயம் கேட்டு வந்திருக்கும் இவனை விலக்கி விடுவோமானால், கடலானது, கிணற்றிலிருக்கும் நீர் வந்து தம்மிடம் இருக்கும் நீரை அடித்துக் கொண்டு போய்விடுமோ என்று அச்சப்படுவது போன்றது”.

“பகைவனிடமிருந்து பிரிந்து வந்திருக்கும் இவன் நமக்குத் துணவனாக இருக்க முடியாது என்று விபீஷணனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விடுவோமானால், அரசியல் அறிந்த அறிஞர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கமாட்டார்களா? ஆகையால் தன் அண்ணனோடு மாறுபட்டு வந்துள்ள இந்த விபீஷனனின் வரவு நமக்கு நன்மை தரத்தக்கதே. அனைத்தையும் அறிந்த, வேதப் பொருளான தங்கள் மனக் கருத்து எதுவோ?” என்றான் மாருதி.

அனுமன் சொற்களைக் கேட்ட இராமன், அமிழ்தம் உண்டவன் போல மனத்தால் பருகி மகிழ்ந்து, அனுமனை நோக்கி “பேரரிவாளா! நன்று! நன்று! நீ கூறியது அனைத்தும் நன்று! என்று பாராட்டிவிட்டு மற்றவர்களைப் பார்த்து, “அனுமன் சொல்வதே சிறப்புடையது. இதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றான்.

“விபீஷணன் நன்கு ஆராய்ந்து இங்கு வந்த காலம் ஏற்ற காலமே. அவன் பெரு விருப்பமும் இலங்கை அரசை அடைவதுதான். அவன் நன்கு கற்ற பேரறிவாளன். உயர்ந்த தவவலிமை உடையவன். நம்மை வந்து சேர்ந்ததாலேயே அவனது உயர்ந்த குணநலன் விளங்கவில்லையா? அனுமன் ஆராய்ந்து சொன்னவைகளே, நாம் செய்யத் தக்கதாகும். அப்படியின்றி இனி நாம் வென்றாலும் தோற்றாலும், நம்மிடம் அடைக்கலம் என்று வந்தவனை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.”

“அடைக்கலம் தேடி வருகின்ற ஒருவனை, இவன் நமக்கு முன்பே தெரியாதவன் என்று விலக்கிவிடுவது நன்றோ? அல்லது தாய் தந்தையரை, அண்ணனைக் கொன்றவன் என்று விலக்குவதும் உண்டோ? அவனை நன்மை நெய்யும் நண்பனாக ஏற்பதே முறை. பிறகு அவன் நமக்குத் தீமை விளைவித்தாலும், பழி அவனுக்கேயன்றி, நமக்கில்லை”.

“இது போன்ற தருணத்தில் நாம் செய்யக்கூடியது என்ன என்பதை அறிந்துகொள்ள மேலும் சில வரலாறுகளைச் சொல்லுகிறேன், கேளுங்கள்.

“பருந்து ஒன்றினால் துரத்திவரப்பட்ட புறா ஒன்று தன் உயிருக்கு அஞ்சி சிபிச் சக்கரவர்த்தியின் முன்பாக வந்து விழுகிறது. அந்தப் புறாவைத் துரத்திக்கொண்டு பருந்தும் தொடர்ந்து வருகிறது. சிபிச்சக்கரவர்த்தி புறாவிடம் இரக்கம் கொண்டு அதற்கு அடைக்கலம் தருகிறார். ஆனால் அந்தப் பருந்தோ புறாவை என்னிடம் கொடு அல்லது அந்தப் புறாவின் எடையளவுக்கு உன் சதையைக் கொடு என்கிறது. உடனே சிபி தராசைக் கொண்டு வந்து ஒரு தட்டில் புறாவை வைத்து, மற்றொன்றில் தன் தசையை அரிந்து வைக்க வைக்க, புறாவின் தட்டே கிழே இருக்கிறது. இதைக் கண்டு மன வருத்தம் கொண்டு மன்னன் தானே ஏறி அந்தத் தட்டில் அமர்ந்து கொள்கிறான். உடனே தட்டுகள் சமமாகி விடுகின்றன. தன்னிடம் அடைக்கலம் என்று வந்த புறாவுக்காகத் தன்னையே இரையாகக் கொடுக்க முன்வந்த சிபிச் சக்கரவர்த்தியின் முன்பாக அப்போது புறாவாகவும் பருந்தாகவும் வந்த எமனும் இந்திரனும் தத்தமது உண்மை உருவத்தைக் காட்டி, அவனது தியாகச் செயலுக்காகப் பாராட்டிவிட்டு அவனது இழந்த சதையை மீண்டும் சரிசெய்தனர்”.

“மற்றொரு வரலாற்றையும் சொல்கிறேன் கேளுங்கள். தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறுவதற்காக, பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது பொங்கி வந்த ஆலகால விஷத்தைக் கண்டு அனைவரும் அஞ்சி ஓடி, சிவபெருமானிடம் அடைக்கலம் அடைய, சிவபெருமானும் அந்த நஞ்சை எடுத்துத் தன் கண்டத்தில் வாங்கிக் கொண்ட வரலாற்றை அறியீர்களா? வலிமை குறைந்தோர்க்கும் அபயம் என்று வந்தோர்க்கும் உதவவில்லையானால், ஆண்பிள்ளை ஆவரோ?”

“இந்த வரலாற்றையும் கேளுங்கள். ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் செல்கிறான். அப்போது ஒரு மரக் கிளையில் ஆண் புறா ஒன்றும் பெண் புறா ஒன்றும் ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்தன. வேடனைக் கண்டு பறக்கத் தொடங்கிய அந்த ஜோடிப் புறாக்களில் பெண் புறா அந்த வேடனின் வலையில் சிக்கிவிடுகிறது. அந்த புறாவைப் பிடித்து தன் கூண்டில் அடைத்துக் கொண்டு, மேலும் சில புறாக்களைப் பிடிக்க வேடன் காட்டிற்குள் அலைந்தான். அன்றைய இரவுப் பொழுதும் வந்தது. அதோடு மழையும் பெய்யத் தொடங்கியது. வேடன் மழையில் நனைந்து குளிரில் நடுங்கினான். தனது பேடையைப் பிரிந்த ஆண்புறா அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு வேடனின் கூண்டில் அடைபட்டிருந்த பெண் புறாவைக் கண்டு ஒலி எழுப்பியது. அதற்குப் பெண் புறா சொன்னது “நான்தான் முன்வினைப் பயனால் இங்கு சிறைப்பட்டு விட்டேன். நம் வீடு நோக்கி வந்து விட்ட இந்த வேடன் குளிரால் நடுங்குகிறான். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாயாக என்றது. உடனே அந்த ஆண்புறா உலர்ந்த சுள்ளிகளைப் போட்டு தீமூட்டி அந்த வேடனின் குளிரைப் போக்கியது. பின் அவன் பசியால் தவிக்க, என்னையே உண்டுகொள், பசி தணிக என்று தீயில் விழுந்து மாண்டுபோனது. தங்கள் இருப்பிடம் வந்தடைந்த வேடனுக்காகத் தன் உடலையே கொடுத்த அந்த புறா வீடு பேறு அடைந்தது”.

“நீயே அடைக்கலம் என்று “ஆதிமூலமே” என்று அலறிய கஜேந்திரனுக்கு திருமால் அபயம் அளித்த வரலாற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள். தாமரை மடுவொன்றில் தன் காலை ஒரு முதலைப் பிடித்துக் கொண்டு இழுக்க, கஜேந்திரன் எனும் யானை அந்த முதலையின் வாயிலிருந்து தப்பிக்க வழியின்றி “ஆதிமூலமே” என்று திருமாலை எண்ணி விளித்தது. நான் உனது அடைக்கலம் என்றதும் திருமால் வந்து கஜேந்திரனை முதலையின் வாயிலிருந்து மீட்டு வீடு பேறு அளித்த வரலாற்றை அறியீரோ?”.

எனவே சார்ந்தாரைக் காத்தல் என்பது நமது கடன் என்றான் இராமபிரான். மேலும் மார்கண்டேயன் சிவனிடம் அடைக்கலம் அடைந்ததும், அந்த மார்க்கண்டனைக் காப்பாற்ற சிவபெருமான் எமசம்ஹாரம் புரிந்ததையும், இராவணன் சீதாதேவியைக் கவர்ந்து செல்லும்போது ஜடாயு அடைக்கலம் தந்து தனது உயிரை விட்டது ஆகிய கதைகளையும் எடுத்துக் கூறினான்.

நான் உன்னைச் சரண் அடைகிறேன் என்று அடைக்கலம் புகுவோனது உயிரைப் பாதுகாக்காதவன் கீழ்மகன். ஒருவன் தனக்குச் செய்த உதவியில் கருத்தில்லாது மறுத்தவனும், கடவுளை இகழ்கின்ற நாத்திகனும் மீளாத நரகத்தில் வீழ்வர். தண்டகாரண்யத்தில் முனிவர்கள் தன்னிடம் சரணடைந்ததாலேயே இராவணனைக் கொல்வதாகத் தான் சபதம் எடுத்துக் கொண்டதாக இராமன் கூறினான். விபீஷணனை ஏற்றுக் கொள்வதால் நன்மையோ, தீமையோ எது வேண்டுமானாலும் நடக்கட்டும். அடைக்கலம் என்று வந்தவரை ஏற்றுக் கொண்டு காப்பது நம் கடமை என்றான் இராமன்.

இராமன் சுக்ரீவனை அழைத்து “நீ போய் விபீஷணனை என்னிடத்தில் அழைத்துக் கொண்டு வா!” என்றான்.

சுக்ரீவன் விபீஷணன் இருக்குமிடம் செல்லுகிறான். மயிந்தனின் தம்பி துவிந்தன் விபீஷணனுக்கு சுக்ரீவனை அறிமுகம் செய்து வைக்கிறான். இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்கிறார்கள்.

“தழுவினர் நின்ற காலை, தாமரைக் கண்ணன் தங்கள்

முழுமுதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள

வழுவல் இல் அபயம் உன்பால், வழங்கினன் அவன் பொற்பாதம்

தொழுதியால், விரைவின் என்று, கதிரவன் சிறுவன் சொல்வான்.

இருவரும் தழுவிக் கொண்டதும், சுக்ரீவன் விபீஷணனிடம் இராமபிரான் மகிழ்ச்சியோடு உனக்கு அடைக்கலம் கொடுக்க விரும்புகிறான், நீ உடனே என்னுடன் வா, அந்த வள்ளலின் பொற்பாதம் பணிவோம் என்றான். சுக்ரீவன் சொன்ன சொல் கேட்ட விபீஷணனும் கண்களில் மழைபோல கண்ணீர் சிந்த, உடலும் மனமும் குளிர சொல்லுகிறான்:

“பஞ்சு எனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி

வஞ்சனுக்கு இளைய என்னை ‘வருக’ என்று அருள் செய்தானோ?

தஞ்சு எனக் கருதினானோ? தாழ் சடைக் கடவுள் உண்ட

நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன்”.

சீதாதேவியைத் தன்னிடமிருந்து பிரித்த பாவியான இராவணனின் தம்பி நான் என்பது தெரிந்தும் எனக்கும் கனிவோடு அருள் செய்தானா? எனக்கு அடைக்கலம் தர சம்மதித்தானா? என்னே நான் பெற்ற பேறு. நஞ்சு விரும்பத்தகாததொன்றுதான் எனினும், சிவபெருமான் எடுத்து உண்ட நஞ்சு அவனை நீலகண்டனாக பெருமை பெறச் செய்தது போல நானும் பெருமை பெற்றேன். நாயேனுக்கும் அந்த நாயகன் காட்டிய கருணையை என்னவென்று சொல்வேன்.

விபீஷணனை அழைத்துக் கொண்டு சுக்ரீவன் இராமனிடம் சென்றான். அங்கே இராம பிரானைக் கண்டதும் விபீஷணன் மிக்க பரவசமடைந்து அவன் காலில் வீழ்ந்து வணங்குகிறான். வந்து வணங்கிய விபீஷணனுக்கு இராமபிரன் ஓர் ஆசனத்தைக் கொடுத்து அமரச்செய்த பின் அவனிடம் பேசுகிறான்:

“ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து உவகைகூர

ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்

வாழும் நாள் அன்று காறும், வளை எயிற்று அரக்கர் வைகும்

தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்”.

இராமபிரான் விபீஷணனை கருணையோடு நோக்கி, விபீஷணா! இந்த ஈரேழு உலகங்களும், எனது பெயரும் வாழுகின்ற நாள் வரையிலும், அரக்கர்கள் வாழும் கடல் சூழ்ந்த இலங்கைச் செல்வத்தை உனக்கே தந்தேன், என்று திருவாய்மலர்ந்தருளினான்.

இராமனது சொற்களைக் கேட்ட உலகத்து உயிர்கள் எல்லாம் “வாழ்ந்தோம்” என்று ஆரவாரம் செய்தன. அது இராமனது அருளுக்காகவா? அன்றி அவனால் விபீஷணன் பெறப்போகும் அறத்தோடு கூடிய நல்வாழ்க்கைக்காகவா?

“அடியேன் உய்ந்தேன்” என்று விபீஷணன் இராமனை வணங்கினான். உடனே இராமன் இலக்குவனை நோக்கி “தம்பி! தூய்மையான இந்த விபீஷணனுக்கு, இலங்கை வேந்தனாக முடிசூட்டுவாயாக!” எனப் பணித்தான்.

விபீஷணன் இராமபிரானிடம் “ஐயனே! அளவற்ற பெருமையுடைய இலங்கைச் செல்வத்தை எனக்கு அளித்தாய். ஆனால் நீ எனக்கு பொன்னால் ஆன கிரீடத்துக்குப் பதிலாக, இராவணனுக்குத் தம்பியாகப் பிறந்த என்னுடைய பாவம் தீரும்படி, பரதனுக்குச் சூட்டிய உனது பாதுகையாகிய திருவடியையே சூட்டுவாயாக!” என்றான்.

விபீஷணனுடைய அன்பையும் பக்தியையும் பாராட்டி இராமபிரான் சொல்லுகிறார்:

“குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த

அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;

புகலரும் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை”.

இராமனுடைய கருணையால் தம்பி இலக்குவனை தனக்கு முடிசூட்ட பணித்தமைக்கும், தன்னையும் தன் தம்பியருள் ஒருவன் என்று சொல்லியதைக் கேட்டு விபீஷணன் என்புருக உள்ளம் கசிய, அவனிடம் சொல்லுகிறான்.

“நடு இனிப் பகர்வது என்னே? நாயக! நாயினேனை

உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையா நின்றாய்

அடிமையில் சிறந்தேன்! என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்

தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான்”.

இப்படிச் சொல்லிக் கொண்டு, இராமபிரானின் பாதுகைகளைத் தன் தலையில் வைத்துக் கொண்டான். கூடியிருந்தோர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். விபீஷணனை வாழ்த்தினார்கள். விபீஷணன் முடிசூட்டிக் கொண்ட காட்சி கண்டு ஏழு கடல்களும் மண்ணும், விண்ணும், முரசங்களும், சங்குகளும் ஆரவாரம் செய்து வாழ்த்தொலி எழுப்பின.

இப்படி விபீஷண பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இலக்குவன் அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் படைகள் தங்கியிருந்த இடங்களைக் காண்பிக்க அழைத்துச் சென்றான். விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு அவனை இலக்குவன் நகர்வலம் வந்து, படைகளை சந்தித்துவிட்டுத் திரும்பிய பின் அவனுக்கு ஒரு தனி வீடு ஒதுக்கப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டான். அன்றைய இரவு நேரம் வந்தது. மல்லிகை மலர்ந்து மணம் பரப்பியது. நிலவு தன் குளிர்ந்த ஒளியை வீசிக் கொண்டிருந்தது. கடல் ஈரப் பசையோடு காற்று வீசி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. பால் நிலவு உலகை நனைத்துக் கொண்டிருந்தது. தென்றல் காற்று இராமனைத் தீண்டி அவனது மனக் கவலையை அதிகரித்தது.

இராமனுக்கு சீதையின் நினைவு வந்து மிகவும் துன்புறுத்தியது. காமனின் மலர்க் கணைகளும், நிலவின் கதிர்களும், இராமன் உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டு பண்ணி விரக தாபத்தால் தவித்தான். சீதையின் நினைவு இராமன் சிந்தையை கலங்கச் செய்தது. இதைக் கண்ட சுக்ரீவன் இராமனது சிந்தையை வேறு திசையில் திருப்ப எண்ணி நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்க, இப்படி உட்கார்ந்து கொண்டு வருந்துவது ஏன் என்கிறான்.

இராமனும் சிந்தை தெளிவுற்று அயர்வு நீங்கி விபீஷணனை அழைத்து வரச் செய்தான். அவன் வந்த பிறகு இராமன் அவனிடம் இலங்கை நகரத்தின் அமைப்பு, பாதுகாப்பு, இராவணனின் படை வலிமை, அளவு இவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணினான். இராமன் விபீஷணனை உட்காரச் சொல்லி, விவரங்களைக் கேட்க, அவனும் அதற்கான பதில்களைக் கூறத் தொடங்குகிறான்.

“ஒரு சமயம் வாயு பகவான் மேரு மலையைச் சிதறடித்து மூன்று சிகரங்களைத் தன்னோடு சுமந்து சென்று கொண்டு போய் கடலில் தூக்கி எறிந்து விடுகிறான். அந்த சிகரங்கள் கடலுக்குள் மூழ்காமல் மேலாகத் தெரிந்தது. அதன் மீது இலங்கை நகரம் அமைக்கப்பட்டது. அந்த இலங்கையின் மதில் சுவர் இருக்கிறதே அது எழு நூறு யோசனை அகலமும், நூறு யோசனை ஆழமுமாகக் கட்டப்பட்டது. இந்தப் பெரிய மதிற்சுவர் இலங்கை நகரைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மதிற்சுவரில் அமைக்கப்பட்டிருக்கிற எந்திர அமைப்புக்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு ஆயுள் போதாது. இந்த நகருக்கு, மதிற்சுவரைச் சுற்றி எல்லா திசைகளிலும் கடலே அகழியாக இருப்பதை நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இலங்கை நகரத்தின் வடக்கு வாசலில் பதினாறு கோடி, எதற்கும் அஞ்சாத, பின் வாங்காத வீரர்கள் காவல் புரிகின்றனர். ஒவ்வொரு வீரனும் பிரளய காலத்து ருத்ரன் போன்றவர்கள். நகரத்தின் மேற்கு வாசலில் பதினெட்டு கோடி கொடிய காவலர்கள் கூர்மையான கண்களோடு காவல் புரிந்து வருகின்றனர். இதன் தென் திசையில் பதினாறு கோடி கொடிய அரக்கர்கள் காவலுக்கு இருக்கிறார்கள். கிழக்கு வாசலுக்கு பதினாறு கோடி கயமை குணமுள்ள அரக்கர்கள் காவல் இருக்கிறார்கள். விண்ணிலும், மண்ணிலும் முப்பத்திரெண்டு கோடி பேர், தேவர்கள் வான வழியாக வந்து விடாமல் காவல் இருக்கின்றனர். மதிலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் ஆயிரம் கோடி பேர் ஊண் உறக்கமின்றி காவல் புரிந்து வருகின்றனர்.

நகரக் காவலுக்கு உள்மதில், இடைமதில், புறமதில் என்று மூன்று அடுக்கு மதிற்சுவர்கள் இருக்கின்றன. இராவனனிடம் விருதுகளும், பரிசுகளும் பெற்ற பதினாறு கோடி பேர் சேமப் படையாக தயார் நிலையில் எப்போதும் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரண்மனையின் வாயிற்புறத்தைக் கண் இமைக்காத, தீ உமிழும் கண்களோடு, வாயிலின் முன் இடம் வலமாக காவல் புரிவோர் எண்ணிக்கை அறுபத்திநான்கு கோடியாகும்.

அரண்மனையின் முற்றங்களைக் காக்க கோடிக்கணக்கான, உலகத்தையே பெயர்த்தெடுக்கும் ஆற்றல் பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மலையினும் திண்மையுடையவர்கள். இராவணனிடம் உள்ள தேர்களின் எண்ணிக்கை பதினாயிரம் பதுமம். (பதுமம் என்பது கோடிக்கும் மேற்பட்டதான ஒரு எண்ணிக்கை). யானைப் படை இருபதினாயிரமும், குதிரைப்படையில் நாற்பதினாயிரமும், ஒட்டகப் படையில் எண்பதினாயிரமும் இருக்கின்றன.

பல சொல்லி என்ன பயன். இராவணனின் படையின் எண்ணிக்கை ஆயிரம் வெள்ளம். (வெள்ளம் என்பது பதுமத்திற்கும் மேற்பட்டதான ஒரு எண்ணிக்கை). இராவணனுக்குத் துணையாக இருப்பவர்கள் எல்லையற்ற வலிமை உடையவர்கள், வரங்களைப் பெற்றவர்கள். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வீரர்களைப் பற்றி சொல்லுகிறேன்.

முதலில் கும்பன். பல கோடி யானை, குதிரை, தேர் ஆகியவற்றுக்கு இணையான வீரன். சூரியனைவிட வெம்மையான கொடிய வீரன். அகம்பன் என்பவன், யுக யுகமாய்த் தவமிருந்து போர்த்தொழில் புரிகிறவன். நகம், பல், இவை இல்லாத நரசிங்க மூர்த்தியைப் போன்றவன். இவன் கடலையே குடித்துவிடக்கூடிய ஆற்றலுள்ளவன். நிகும்பன் என்பவன் மலைகளைக் கூடத் தாண்டக்கூடிய யானை, குதிரைப் படைகளை உடையவன். ஒன்பது கோடி படைகளுக்குத் தலைவன். மகோதரன் என்பான் யாளி, கோவேறு கழுதை பூட்டிய தேர்ப்படை இவற்றையுடையவன். வஞ்சனையும், மாயையும் கடைப்படித்துப் போர்த்தொழில் செய்பவன். வேள்வியின் பகைஞன் என்பவன் மலைவாழ் வீரன். பெரும்படைக்குத் தலைவன் இவன். தேவர்களை முன்பு பலமுறை போரில் தோற்கடித்தவன். சூரியன் பகைஞன் என்றொருவன், இவன் ஒரு நாள் போரில் மண்ணுலக வாசிகளோடு விண்ணுலக வாசிகளையும் வெல்லக்கூடிய வலிமையுடையவன். தீ உமிழும் கண்களையுடைய இவனிடம் எட்டு கோடி வீரர்களைக் கொண்ட படை இருக்கிறது. பெரும்பக்கன் என்பவன், பதினாறு கோடி படைக்கு அதிபன், தேவரும் முனிவரும் நேருக்கு நேராக இவனைப் பார்க்க அஞ்சுவார்கள்.

வச்சிரதந்தன் என்ற வீரன், இவன் உச்சி வெயில் போல சுட்டு எரிக்கும் முகத்தையுடையவன். எட்டு கோடி சேனைக்கு இவன் அதிபன். சிவனும் இவனிடம் போரிட அஞ்சுவான்; கூற்றுவன் போன்றவன். பிசாசன் என்ற வீரன் பகைவரக் கண்டு அஞ்சாதவன். பத்து கோடி சேனையை உடையவன். தன்னையன்றி மற்ற அனைவரையும் வென்றவன். இயக்கர் (தேவர்களில் ஒரு பிரிவு) கூட்டத்தைத் தன் கையால் கொன்று பிசைந்து முகர்ந்து பார்த்த போர் வெறியன் இவன். (நாற்றமுள்ள பொருட்களை முகர்ந்து பார்த்தல் கீழோர் இயல்பு).

துன்முகன் என்பவன் பெரும் தேர்படை, குதிரைப் படைகளுக்கு அதிபன். பதினான்கு கோடி காலாட்படைக்குத் தளபதி. பூமியையும் குடையவல்ல தீகக்கும் முகமுடைய இவன் தர்மத்தைக் கைவிட்டவன். விரூபாட்கன் என்பவன் இலங்கை அருகே உள்ள வேறொரு தீவில் பத்து கோடி சேனைகளை வைத்துக் கொண்டு அதன் தலைவனாக இருப்பவன். வாட்போரில் இவன் வல்லவன். தூமாட்சன் என்பவன் போர்க்களத்தில் மாண்ட வீரர்களின் உடலைத் தின்பவன். பதுமம் அளவுள்ள சேனைக்குத் தலைவன். தேவர்களைத் தோற்றோடச் செய்தவன். இவனைப் புகைக்கண்ணன் என்றும் அழைப்பர்.

போர்மத்தன், வயமத்தன் ஆகிய இவ்விருவரும் மந்தர மலை போன்ற வலிமையுடையவர்கள். கடல் போன்ற படைக்கு இவர்கள் அதிபர்கள். உலகங்களை நிலைகெடச் செய்யும் வல்லமையுடையவர்கள். பிரகஸ்தன் என்பவன் போர்த்தொழிலில், இராவணனுக்குத் துணை புரிபவன். இதுவரை சொல்லப்பட்ட படைகளைப்போல் இரு மடங்கு படைகளையுடையவன். இந்த பிரகஸ்தன் இராவணனின் படைத் தளபதி. இந்திரனின் ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட அனைத்துப் படைகளையும், தேவர்களையும் அஞ்சி ஓடச் செய்யும் வல்லமை படைத்தவன்.

இராவணனுடைய அருமைத் தம்பி கும்பகர்ணன். இவன் தேவர்களை ஓட ஓட விரட்டிய மாபெரும் வீரன். வேறு ஆயுதம் எதுவுமின்றி, ஐராவதத்தின் கொம்புகளையே ஆயுதமாகக் கொண்டு தேவர்களை அழித்தவன். வாழ்நாளில் பெரும்பகுதி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவன், மிகுந்த நாட்களில் மலைமலையாக உணவும் கள்ளும் குடித்து இராவனனின் பராமரிப்பில் இருப்பவன். அடுத்ததாக இந்திரஜித், இவன் சூரிய சந்திரரை சிறையில் இட்டவன்; இராவணனின் மூத்த மகன். இந்திரனைப் போரில் வென்றவன் இந்த இந்திரஜித். அதிகாயன் என்பவன் அறக்கடவுளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாவங்களையே செய்து வருபவன். பிரமன் கொடுத்த வில்லை உடையவன். இவன் இராவணனின் இரண்டாவது மகன், இந்திரஜித்துக்குத் தம்பி. தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன், இவர்கள் மும்மூர்த்திகளையும் போரில் தலை குனியச் செய்தவர்கள். இராவணனுடைய பெருமை மிக்கப் புதல்வர்கள்.

இறுதியாக இராவணன். இவன் துணைவர்களின் வலிமையைப் பற்றி இதுவரை கூறினேன். இராவணன் வலிமையைச் சொல்லக் கூடுமோ? பிரமனின் மகன் புலஸ்தியன், இந்த புலஸ்தியனின் மகன் விஸ்ரவசு, இந்த விஸ்ரவசுவின் புதல்வன்தான் இராவணன். பிரமனும் பரமேஸ்வரனும் இவனுக்கு அரிய பெரிய வரங்களை அளித்திருக்கின்றனர். சிவன் இருக்கும் வெள்ளி மலையைப் பெயர்த்தெடுத்த பெருமைக்குரியவன். அஷ்டதிக் கஜங்கள் எனும் திசை யானைகளோடு போரிட்டு அவற்றின் தந்தங்களை முறித்தவன். குபேரபுரி எனப்படும் அளகாபுரிக்குத் திக்விஜயம் செய்து குபேரனை தோற்கடித்து அவனுடைய நகரத்தைக் கைப்பற்றியவன். அந்த குபேரன் இராவணனிடம் தோற்று சங்கநிதி, பதுமநிதி இவற்றை இழந்து, தன் மானம், விமானம், இலங்கை நகரம் இவற்றை இழந்து ஓடுமாறு வெற்றி கண்டவன்.

தென் திசைக்கு அதிபனான எமனை, இராவணனால் தனக்கு அழிவு வந்து சேரும் என்று தினம் தினம் செத்துப் பிழைக்க வைத்தவன் இவன். எமனுக்கும் எமனாக ஆனவன். மேற்திசையில் வருணனை வென்றவன். மலைகள் அழியினும் அழியாத தோள் வலிமையை உடையவன். உன்னாலன்றி வேறு எவராலும் அழிக்கமுடியாதவன் இராவணன்.

இப்படி விபீஷணன் இலங்கை நகரத்தைப் பற்றியும், இலங்கையில் இராவணன் உட்பட அங்கே இருந்த மகா வீரர்களைப் பற்றியும், அவனது படைபலம் பற்றியும், கோட்டை அமைப்பு பற்றியும் விவரமாகக் கூறிமுடித்தான். தொடர்ந்து, இராமா! அனுமன் இலங்கைக்கு வந்த போது ஆற்றிய வீர தீரச் செயல்களை இங்கு எவரும் பார்த்திருக்கமுடியாது. ஆகையால் அவற்றை நான் சிறிது சொல்கிறேன் கேட்பாயாக! என்று தொடங்கினான்.

அசோகவனத்தில் அனுமன் கையால் மாண்ட அரக்கர்கள் ஏராளமானோர். புலியால் துரத்தப்பட்ட ஆடுகள் பட்ட பாட்டை அன்று அந்த அரக்கர்கள் பட்டனர். இலங்கை மாநகர் அவன் இட்ட தீயால் எரிந்து சாம்பரானது. எம் குலத்துப் பிறந்த எண்பதினாயிர கிங்கரர் எனும் போர் வீரர்களை கைகளாலும், கால்களாலும் தன் வாலினாலும் அனுமன் அடித்துக் கொன்று குவித்துவிட்டான்.

சம்புமாலி எனும் பெரும் வீரனையும் அவனுடைய படைகளையும் துடிக்கத் துடிக்கக் கொன்றான் அனுமன். சம்புமாலியின் வில்லையே அவன் கழுத்தில் மாட்டி அவனைக் கொன்றான். அவனை அடுத்து மாபெரும் வீரர்களான பஞ்ச சேனாதிபதிகளைக் கொன்றான். இராவணனின் இளைய மகனான அக்ஷயகுமாரனை தரையோடு தரையாகத் தேய்த்துக் கொன்று விட்டான். இராவணனை நிலை குலைய வைத்தது இந்த அக்ஷயகுமாரனின் மரணம்தான். இலங்கையில் அனுமனால் தாக்கப்பட்டு இறந்த அரக்கர்கள் எண்ணிக்கை அளவில் அடங்காதவை. அதுபோலவே அவன் இட்ட தீயினால் எரிந்த பகுதி கணக்கிட முடியாதது.

இலங்கை மாநகர் தீயின் நாக்குகளுக்கு இரையாகிப் போனபோது ஊருக்குள் இருக்க முடியாமல் இராவணன் ஏழு நாட்கள் வான வெளியிலேயே தங்கியிருந்தான் என்றால், இலங்கைக்கு அனுமன் இழைத்த அழிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எரிந்து போன இலங்கையை தெய்வத் தச்சனைக் கொண்டு இராவணன் புதுப்பித்து விட்டான். அனுமனின் வீரச் செயல்களைக் கண்டதாலும், அரக்கர்களை அவன் கொன்ற தன்மையாலும் நான் அடைக்கலம் புகவேண்டியது தங்களிடம்தான் என்று உணர்ந்து இங்கு வந்தேன். இதற்கு முன்பாக காட்டில் தங்கள் கையால் கரன் மாண்டதையும், தங்கள் வாளியால் வாலி வானுலகம் புகுந்ததையும் அறிந்து வைத்திருந்தேன், அதனால் தங்களிடம் அடைக்கலம் புக வந்தேன்.

இப்படி அனுமனின் வீரதீர பராக்கிரமங்களை வீபீஷணன் சொல்லச் சொல்ல இராமபிரானின் தோள்கள் பூரித்தன. அனுமன் தன் சுயபுராணத்தையோ, அல்லது அவனது வீரதீர பராக்கிரமங்களையோ தன் வாயால் சொல்லிக் கொண்டு திரியாத அடக்கமானவன் என்பதாலும், தான் இலங்கையில் நிகழ்த்திய இந்த வீரச் செயல்களை நிச்சயம் இராமபிரானிடம் சொல்லிக் கொண்டு புகழ், பாராட்டு தேடியிருக்கமாட்டான் என்பதை நன்கு உணர்ந்து கொண்டுதான் விபீஷணன், மேற்படி செயல்களையெல்லாம் இராமபிரானிடம் பட்டியலிட்டுச் சொன்னான். மேலும் அனுமனின் ஆற்றலை மற்றவர்கள் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, இதன் மூலம் தெரிந்து கொள்ளட்டுமே என்றுதான் அவற்றை இராமபிரானிடம் விளக்கிச் சொன்னான்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட இராமன் கருணையோடும் நன்றிப்பெருக்கோடும் அனுமனைப் பார்த்து கூறுகிறான்: “வீரனே! விபீஷணன் சொல்லிய செய்திகளிலிருந்து இராவணன் படைகளில் பாதியை நீயே துவம்சம் செய்திருக்கிறாய். இலங்கை முழுவதையும் எரியூட்டி தீக்கு இரையாக்கியிருக்கிறாய். எனக்கு இனி அங்கே என்ன வேலை பாக்கி வைத்திருக்கிறாய்? என் வில்லின் வலிமைக்கு இழுக்கு என்றுதான் நீ சீதையை மீட்டுவரவில்லை போலும். மாருதி! இதற்கெல்லாம் பிரதியாக நான் உனக்கு என்ன செய்ய முடியும்? உனக்கு பிரம்மபதத்தை வழங்குகிறேன் என்றான் இராமன்.

இராமபிரான் சொன்னதைக் கேட்டு அனுமன் கீழே விழுந்து அவனை வணங்கிவிட்டு, நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான். கூடியிருந்த சுக்ரீவன் முதலானவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் இலங்கைக்குச் செல்ல என்ன வழி என்பதை ஆராய்வதற்காக கடற்கரைக்குச் சென்றனர். அங்கு இராமன் விபீஷணனைப் பார்த்து “நாமும் நமது படைகளும், இந்தக் கடலை கடக்கும் உபாயம் ஒன்று சொல்” என்றான்.

விபீஷணன் ஆழ்ந்து சிந்தித்து இராமனிடம் “இராமா! இந்தக் கடல் உமது குலத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஆகையால் நீ கேட்டால் இந்தக் கடல் நிச்சயமாக உனக்கு வழி செய்து கொடுக்கும்” என்றான்.

இராமன் உடனே கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும், வருணன் வந்து தோன்றவில்லை. இவ்வளவு செய்தும் வருணன் வராதது கண்டு இராமனுக்குக் கோபம் வந்தது. தன் கோதண்டத்தை எடுத்து வளைத்து, நாணை இழுத்து ஒலி எழுப்பினான். அம்புகளை கடலின் மீது செலுத்தினான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இலக்குவன் முதலான அனைவரும் இனி என்ன நடக்குமோ என்று அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

இராமன் விட்ட அம்புகள் ஏழு கடல்களையும் துளைத்துச் சென்று, கடல் வாழ் உயிரினங்களை வாட்டின. கடல் பற்றி எரிய அந்தத் தீ விண்ணுலகத்தையும் எட்டுகிறது. அப்போதும் வருணன் அங்கே வந்து தோன்றவில்லை. இராமனுடைய கோபம் மேலும் அதிகரித்தது. பிரம்மாஸ்திரத்தை மதிரம் சொல்லி கையில் வாங்கி அதை வில்லில் பூட்டி கடலின் மீது செலுத்த முயல்கிறான். இதனைக் கண்டு உலகமே நடுங்குகிறது. மேகக்கூட்டம் நடுங்கி சிதறி ஓடுகிறது. திருமாலின் அம்சமான இராமபிரான் வேண்டி அழைத்தும் வராத வருணனுக்காக தேவர்களும் வருந்துகிறார்கள். வருணன் செய்தது பிழை என்கிறார்கள்.

பஞ்ச பூதங்களில் மற்ற நான்கு பூதங்களும் கடல் செய்த தவறால், தங்களுக்கும் ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறார்கள். வருண பகவான் மீது அவர்கள் கோபம் கொண்டு அவனை ஏசுகிறார்கள். அப்போது புகை படர்ந்த கடல் வழியே வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டு, இராம பாணத்தால் உடல் வெந்துபோன நிலையில், கண்களில் கண்ணீரோடு, தொழுத கையனாய் வருணன் வந்து இராமனின் பாதங்களில் வந்து விழுந்து ‘அடைக்கலம் இராமா’ என்கிறான். தான் வருவதற்கு தாமதமானதற்காக வருந்தி மன்னிப்பை வேண்டுகிறான்.

இராமன் அவனிடம் இரக்கம் கொண்டு, சீற்றம் தணிந்து “யாம் இரந்து வேண்டியும், நெடு நேரம் வராமல் இருந்து, தாமதம் செய்துவிட்டு, சினந்து தண்டிக்கத் துணிந்த போது ஓடிவரக் காரணம் என்ன?” என்று வினவினான்.

“ஏழாவது கடலில் நிகழ்ந்த மீன்களுக்கிடையே நடந்த போரை விலக்கி சமாதானம் செய்துவிட்டு வந்தேன். இங்கு நிகழ்ந்தவை எவையும் நான் அறியவில்லை” என்றான்.

“அதைக் கேட்டு இராமன் மனம் இரங்கினான். “அது போகட்டும், பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் பூட்டிவிட்டல் அதை ஏதாவது இலக்கைத் தாக்கச் செலுத்த வேண்டும். உன்னைத் தாக்க எடுத்த இந்த அஸ்திரம் வில்லில் பூட்டப்பட்டுவிட்டது. இதற்கு ஓர் இலக்கு வேண்டும், எதன் மீது இதனை செலுத்தலாம் சொல்” என்கிறான்.

வருணன் சொல்கிறான். “மருகாந்தாரம் எனும் தீவில் வாழும் நூறு கோடி அவுணர்களும் உலகுக்கு அழிவு செய்து வருகிறார்கள். என் மீதும் வன்மம் கொண்டு பகைத்திருக்கிறார்கள். அவர்கள் உயிரினங்களுக்கே எதிரிகள்; அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீது இந்தக் கணையை ஏவிவிடுக!” என்றான். அங்ஙனமே இராமனும் தனது பிரம்மாஸ்திரத்தை அவர்கள் மீது ஏவினான். அந்த அஸ்திரம் கணப் பொழுதில் அந்தத் தீவையே அழித்து விட்டு இராமனிடமே மீள்கிறது. பிறகு இராமன் வருணனிடம் “நீ அபயம் என்று கூறினாய். அதனால் சினம் தீர்ந்தேன். எனக்குப் பழியை உண்டாக்கிய அரக்கர்களது செருக்கை அடக்கக் கடலில் வழி உண்டாக்கித் தரவேண்டும்” என்றான்.

அதற்கு வருணன் “கடலை வற்றச் செய்ய நெடுங்காலம் ஆகும். கடல் நீரை திடமானதாக ஆக்குவோமென்றால், கடல் வாழ் உயிரினங்களுக்குத் துன்பம் நேரும். ஆகையால் இவ்விரு வழியும் வேண்டாம். என் மீது (கடல்) அணை கட்டிச் செல்வதே நல்லது. என் மீது அணை கட்டுவதற்காக இடும் கற்கைளை நான் கடலில் மூழ்கிவிடாமல் வரம்பிலா காலமும் தாங்குகிறேன்” என்றான். (இப்போதும் இராமேஸ்வரத்தில் கடலிலிருந்து மீனவர்களால் எடுத்து வரப்படும் இராமர் கட்டிய அணையின் கற்கள் நீரில் மிதக்கக்கூடியவைகளாக இருப்பதை அவ்வூரில் ஒரு கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்)

“சரி! அதுவே நன்று” என்று இராமபிரான் வருணனைப் பாராட்டிவிட்டு, தன் வானர சேனையை அழைத்து “குன்றுகளைக் கொண்டு வந்து கடலில் இட்டு சேதுவைக் கட்டுக” என்று பணித்தான். இராமன் வருணனை வாழ்த்தி அனுப்பி வைத்தான்.. (வான்மீகத்தில் இந்தப் பகுதி பெரிதும் மாறுபடும்).

கடலில் சேதுபந்தனம் செய்ய (அணை கட்ட) மேலே ஆகவேண்டிய காரியங்கள் குறித்து சுக்ரீவன் விபீஷணனுடன் ஆலோசிக்கிறான். நளன் எனும் விஸ்வகர்மாவின் மகனை அணை கட்டத் தகுதியானவன் என்று இருவரும் தீர்மானிக்கிறார்கள். அந்த நளனை உடனே அழைத்து வரச் செய்கிறார்கள்.

அந்த வானரத் தச்சன் நளன் வந்து சுக்ரீவனிடம் “மன்னா! என்னை அழைத்த பணி என்ன என்று கேட்க கடலில் இலங்கைக்கு ஓர் அணை கட்ட வேண்டும்” என்று இருவரும் கூறவே, அவன் சம்மதிக்கிறான். “அணையைத் திறம்பட கட்டி முடிக்கிறேன், நீங்கள் அதற்கான மலைகளைக் கொண்டு வந்து சேருங்கள்” என்றான் நளன். இதைக் கேட்டு ஜாம்பவான் பறை சாற்றி வானரப் படையை அணைகட்ட அழைத்தான்.

பல காத தூரம் பரவியிருந்த கரிய மலைகளை வானரங்கள் கைகளிலும், தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வந்து போட்டனர். ஒரு கடலில் அணை கட்டித் தடுப்பதற்கு மற்ற ஆறு கடல்களும் வந்தது போல வானரர்கள் கூட்டம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியிருந்தது. சிலர் மலைகளைப் பெயர்த்தனர். அவர்கள் பெயர்க்க பெயர்க்க மற்றும் சிலர் அவற்றைக் கட்டி இழுத்துக் கீழே தள்ளினர். அப்படித் தள்ளப்பட்டப் பாறைகளைச் சிலர் தலையில் சுமந்து கொண்டு வந்து கடலில் இட்டனர். அப்படி பாறைகளால் கடல் தூர்ந்து போவதைப் பார்த்து வானரக் கூட்டம் ஆரவாரம் செய்தது. மற்ற பல வானரங்கள் ஆடவும், பாடவும் செய்தன.

“பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க, நின்று

ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;

தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று

ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின”.

சில வானரங்கள் காலால் ஒரு மலையை உருட்டிக் கொண்டும், சில கைகளில் இரு மலைகளைத் தாங்கிக் கொண்டும், மிக உயர்ந்த மேகங்களால் சூழப்பட்ட பெரிய மலை ஒன்றை வாலினால் இழுத்துக் கொண்டும் வந்தன. கோடிக்கணக்கான வானரங்கள் கொண்டு வந்து வீசும் மலைகளை, நளன் மிக அனாயசமாகக் கையில் தாங்கிக் கொண்டு “உம்! இன்னும் இன்னும் வேகமாகக் கொண்டு வாருங்கள்” என்று வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தான்.

வானரங்கள் கொண்டு வந்து வீசும் மலைகளை நளன் தாங்கிக் கொண்டது எப்படி இருக்கிறது தெரியுமா? ‘தஞ்சம்’ என்று வரும் வரியவர்களை சடையப்ப வள்ளல் தாங்கி ஆதரிப்பது போல இருக்கிறது என்று கம்பர் பெருமான், இந்த காப்பியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய பெருமையையும் பேசுகிறார்.

பெரிய மலைகளைப் பெயர்த்தெடுக்கும்போது அதன் மீது தவழ்கின்ற மேகங்கள் பயந்து சிதறி ஓடின. அங்கு தங்கி வாழ்கின்ற இயக்கர்களும் தங்கள் மனைவிமார்களோடு பயந்து ஓடினார்கள். வானரர் வீசிய இரு பெரும் மலைகள் கடலில் விழும்போது ஒன்றோடொன்று உரசி தீ பரவி மேலே எழுகிறது. இதைக் கண்ட வருணன் அஞ்சினான். பெரிய பெரிய மலைகள் வானரங்களால் கடலில் வீசப்பட்டதால், வெளிப்பட்ட நீர் திவலைகள் விண்ணுலகம் வரை சென்று அங்கே மழை போலப் பொழிந்தனவாம்.

விண்ணுலகில் சென்றடைந்த நீர்த்துளிகள் மேகலையோடு சிவந்த சேலை அணிந்த தேவ மாதர்கள் மீது விழுந்ததால் அவர்களது உடைகள் நனைந்து உடலோடு ஒட்டிக்கொள்ள, நாணமுற்று ஓடி ஒளிந்தனர். கடலில் விழுந்த மலைகளோடு அவற்றில் இருந்த யானைகளும், நீரில் வீழ்ந்து மூழ்கின. மகர மீன்கள் அவற்றைக் கவ்வ, அந்த யானைகள் முன்பு முதலை காலைக் கவ்வும்போது ‘ஆதிமூலமே’ என்று அழைத்த கஜேந்திரனைப் போலப் பிளிறின. மலைத் தேனும், அகிலும், சந்தனமும் மலைகளோடு வந்து விழுவதால் எல்லா திசைகளிலும் நறுமணம் வீசிக் கொண்டிருந்தது.

அனுமன் ஒரு பெரிய மலையைக் கொணர்ந்து கடலில் போட்டான். கடல்வாழ் உயிரினங்களோடு கடல் நீரும் விண்ணுலகம் சென்று வீடுபேறு பெற்றது. இவ்வாறு கொண்டு வந்து போடப்பட்ட மலைகளைச் சமமாக உடைத்து, அவற்றை ஒன்றொடொன்று பொருத்தி, ஏற்றத் தாழ்வின்றி ஒரே அளவில் ஒத்திருக்குமாறு அடுக்கி, மணலை எடுத்துத் தன் கையால் மட்டம் செய்தான் நளன்.

மூன்றே நாட்களில் திரிகூடமலை (திரிகோணமலை) வரையில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டும் வேலை முடிந்ததும் வானரர்கள் எழுப்பிய மகிழ்ச்சியொலி வான்முகட்டைச் சென்று தாக்கியது.

“நாடுகின்றது என்? வேறு ஒன்று? நாயகன்

தோடு சேர் குழலாள் துயர் நீங்குவான்

‘ஓடும் என் முதுகிட்டு’ என ஓங்கிய

சேடன் என்னப் பொலிந்தது, சேதுவே!”

பாற்கடலில் திருமால் பள்ளி கொள்ளும் ஆதிசேஷன், தேவியை மீட்பதற்காக இராமபிரானும் வானர சேனையும் கடலைக் கடந்து செல்வதற்கு மற்றொருவர் உதவி எதற்கு? என் முதுகின்மீது கடந்து போகட்டுமே என்று படுத்துக் கிடந்தது போல அமைந்திருந்தது சேது. அணைகட்டி முடித்த செய்தியை சுக்ரீவனும், விபீஷணனும் இராமனிடம் சென்று அறிவித்தார்கள்.

அணை கட்டி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் இராமன் அவர்களை தழுவிக் கொண்டு பாராட்டினான். அவர்களோடு விரைந்து சென்று சேதுவைப் பார்த்தான். சீதையையே கண்டுவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியை அடைந்தான். இவ்வளவு விரைவில் அணை கட்டி முடிக்கப்பட்டதையும் வியந்து பாராட்டினான்.

வானரப் படை அணிவகுத்துப் புறப்பட்டது. அணைமீது நடந்து கடலைக் கடக்கத் தொடங்கினர். படையின் முகப்பில் விபீஷணன் சென்று கொண்டிருந்தான். அனுமன் பின்னால் கடைசியில் வந்து கொண்டிருந்தான். இலக்குவன் பின் தொடர இராமபிரான் அணைமீது நடந்து சென்றான்.

வானர சேனை மிகுந்த உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு சென்றன. இராமனுடைய திருமேனியில் வெயில் படாவண்ணம், பெரிய மரங்களைக் குடைபோலப் பிடித்துக் கொண்டு நிழல் அவன் மீது பட வானரங்கள் அழைத்துச் சென்றன. பூங்கொத்துக்களைக் கொண்டு சாமரம் வீசிக் கொண்டிருந்தன.

சிறைப்பட்டிருக்கும் சீதாபிராட்டியின் மன நிலையையும், பகைவரை ஒரு சேர அழித்து அவளை விடுக்கும் நினைவுகளோடு இராமன் தன் படைகளுடன் அந்த அணையைக் கடந்து சென்று அடுத்த கரையை அடைந்தான். இலங்கைக் கரையை அடைந்து அங்கே ஒரு குன்றின் அடிவாரத்தில் தங்கினான். அங்கே நீலனை அழைத்து, நம் படைகள் தங்குவதற்கு ஓர் பாடிவீடு அமைத்துக் கொடுக்கச் சொன்னான். நளனும் நீலனின் சொற்படி ஒரு பாடிவீட்டை அமைத்துக் கொடுத்தான்.

இராமனுக்கு மூங்கில்களாலும், புல்லாலும் ஒரு பர்ணசாலை அமைத்துத் தரப்பட்டது. இரவும் படரத் தொடங்கியது. இரவு நேரம் வந்ததும் இராமனுக்கு பிராட்டியின் நினைவு வந்து மிகவும் துன்புறுத்தியது. அப்படிப்பட்ட இரவு நேரத்தில் இராவணனால் ஏவப்பட்ட சில ஒற்றர்கள், குரங்குகளைப் போல உருவம் தாங்கிக் கொண்டு வானரப் படைகளின் அளவு, வலிமை இவற்றை அறியும் பொருட்டு அந்த பாடிவீட்டைச் சுற்றி வந்தனர். அவர்களை விபீஷணன் அடையாளம் கண்டு கொண்டு பிடித்துக் கயிற்றால் பிணைத்து இராமனிடம் கொண்டு போய் நிறுத்தினான்.

இராமன் முதலில் இவர்களை ஒற்றர்கள் என்று அறியாமல், இந்த வானரங்கள் ஏதேனும் பிழை புரிந்தனவோ? போகட்டும், இவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என்றான். அதற்கு விபீஷணன், இவர்கள் வானரங்கள் அல்ல. வானர உருவத்தில் நம்மை வேவு பார்க்க வந்த அரக்கர்கள். இராவணனால் அனுப்பப்பட்டு இங்கே வந்து நம் படைகளையும், அதன் பலத்தையும் நேரில் பார்த்து அவனுக்குச் சொல்லுவதற்காக வந்திருக்கிறார்கள் என்று சொன்னான். சுகன், சாரன் எனும் பெயரையுடைய வானர உருவம் தாங்கிய அந்த இரு அரக்கர்கள் இராமபிரானிடம், இந்த விபீஷணன் நம் வானர வீரர்களைக் கபடமாகக் கொன்று நம்மைப் போரில் வீழ்த்த திட்டமிட்டிருக்கிறான், நாங்கள் ஒற்றர்களும் அல்ல, அரக்கரகளும் அல்ல, நாங்கள் வானர வீரர்களே என்றார்கள்.

விபீஷணன் அந்த அரக்கர்களின் கபட நாடகத்தை முறியடிக்கக் கருதி மாயத்தை நீக்கும் மந்திரத்தை உச்சரித்து அந்த ஒற்றர்களின் வானர உருவம் நீங்கும்படி செய்து, அவர்களுடைய அரக்க உருவத்தைப் பெறச் செய்தான். இதோ இவர்கள் கள்வர்களே! தாங்களே பாருங்கள் என்றான் விபீஷணன்.

இராமன் முகத்தில் புன்னகை தவழ அந்த ஒற்றர்களிடம் “அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கு வந்த காரணம் என்ன” சொல்லுங்கள்!” என்று கேட்டான்.

அவர்கள் இராமனை நோக்கி “வீர! எல்லா உயிர்க்கும் தாயாய் விளங்கும் சீதாதேவியைத் தன்னைக் கொல்ல வந்த நோய் என்பதை உணராத இராவணன், எங்கள் தீவினையால், வஞ்சனையால் ஒற்று அறிந்து தெரிவிக்க பணித்ததனால் வந்தோம்” என்றனர்.

“ஒற்றர்களே! உங்கள் இராவணனிடம் சென்று சொல்லுங்கள். இலங்கையின் அரசுரிமையும், அளவற்ற செல்வத்தையும், அவன் தம்பியாகிய விபீஷணனுக்கு யான் வழங்கிவிட்டதாகச் சொல்லுங்கள். வானர வீரர்கள் மலைகளைப் பெயர்த்துக் கடலில் இட்டு பாலம் அமைத்து கடலின் இந்தப் புறத்துக்கு வந்து விட்ட செய்தியையும், வில் வீரர்கள் வந்து விட்டார்கள் என்பதையும் போய் சொல்லுங்கள்” என்றான் இராமன்.

“படைகளைச் சுற்றிப் பார்த்தீர்கள். இனி தீங்கு ஒன்றும் நீங்கள் செய்யப் போவதில்லையாயின் அஞ்சற்க!” என்று சொல்லி விபீஷணன் முதலியோரிடம் “இவர்களைத் தீதின்றி போகவிடுக!” என்றான்.

அங்கே இலங்கை அரண்மனையில், இராவணனின் தாயைப் பெற்ற பாட்டன் மாலியவான் இராவணனுக்கு அறிவுரைகளைக் கூறுகிறான். இராமனின் வீரம், அவனுக்குத் துணைஇருக்கும் வானரப் படையின் திறம், கடலில் அணைகட்டித் தாண்டி வந்த பாங்கு இவற்றையெல்லாம் சொல்லி, இராமனோடு போர் புரிதல் சரியானதல்ல” என்றெல்லாம் அவனுக்கு விளக்கிக் கூறினான்.

அதற்கு இராவணன் “பாட்டா! நீ கொடுத்த ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. நீ போய் அந்த விபீஷணனுடன் சேர்ந்து கொள். என்றும் வாழ்வாய்” என்றான்.

“நல்லது சொன்னால் உனக்குக் கசக்கத்தான் செய்யும், என்ன செய்வது?” என்று மாலியவான் மெளனமானான். அப்போது இராவணனுடன் அங்கிருந்த படைத் தலைவன் மாலியவானை ஏசுகிறான். அந்த நேரத்தில் இராமனால் உயிருடன் விடுவிக்கப்பட்ட இரண்டு ஒற்றர்களும் அவ்விடம் வந்து சேருகிறார்கள்.

வந்து வணங்கிய ஒற்றர்களிடம் இராவணன் “வானரப் படைகளின் பலம், விபீஷணனின் நிலைமை, இராம லக்ஷ்மணர்களின் திறமை இவை பற்றியெல்லாம் கண்டு வந்தபடி கூறுங்கள்” என்றான்.

அதற்கு அந்த ஒற்றர்கள் “வானரப் படையின் அளவை முழுமையாகக் காணமுடியவில்லை. இராமன் அழைத்ததும் வருணன் வந்து சேராததால், இராமன் அம்பு எய்து வருணனை வருத்தினான். குரங்குகள் மலைகளைக் கொண்டு வந்து போட்டு கடலின் மீது ஒரு அணையைக் கட்டி, கடலைத் தாண்டி வந்து விட்டன. இராமன் விபீஷணனுக்கு இலங்கை அரசின் முடிசூட்டி அளவற்ற செல்வத்துக்கு அதிபதியாக்கி விட்டான்” என்ற செய்தியைக் கூறினர்.

“அதுமட்டுமல்ல, நாங்கள் வானர உருவில் சென்று பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து, நாங்கள் ஒற்றர்கள் என்ற விஷயத்தையும் விபீஷணனே சொல்லி எங்களைப் பிடித்துக் கொடுத்தான் எனினும் இராமன் எங்களைப் போகச் சொல்லி விடுவித்து விட்டான்” என்றனர்.

ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தியைக் கேட்ட இராவணன், தனது ஆலோசனை சபையைக் கூட்டினான். இராம லக்ஷ்மணர்கள் வானரப் படையுடன் கடல் கடந்து இலங்கைக்குள் வந்து விட்டனர், இனி நாம் செய்ய வேண்டியவை பற்றி ஆலோசிப்போம் என்று சபையோருக்குக் கூறினான்.

அப்போது சேனைத் தலைவன் எழுந்து “சீதையை இப்போது விடுவித்தால், நாம் அவர்களுக்குப் பயந்து செய்ததாகத் தேவர்கள் நினைப்பார்கள். போரைத் தவிர்க்க சமாதானம் செய்து கொள்ளலாமென்றால், உமது தம்பி விபீஷணன் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டான். பகைவர் படை நம்மை நெருங்கிட்ட இந்த நேரத்தில் நாம் செய்யத் தக்கது எது என்பதைச் சொல்லி அருள வேண்டும்”. ஆயிரம் வெள்லம் எனும் அளவுடைய நம் படை அழிந்தே போவதாயினும் அதற்குப் பல யுகங்கள் ஆகும். நீ உடனே படையெடுத்து அவர்களைத் தாக்கினால் குரங்குக் கூட்டம், சிங்கங்களைக் கண்ட நாய்க் கூட்டம் போல ஓடிவிடும்” என்றும் சொன்னான் படைத்தலைவன்.

நன்மதியும், கூர்ந்த அறிவும் உள்ல மாலியவான் எழுந்து பேசத் தொடங்கினான். நன்னெறிகளை இராவணன் உணறுமாறு எடுத்துச் சொல்லலானான். “வெற்றி நம் பக்கம் என்று இங்கே வீரம் பேசிக்கொண்டிருக்கும் அனைவருமே சிதைந்து அழியும் நிலையில் இருப்பவர்களே. திருமாலே தசரத குமாரனாக அவதரித்து இந்த இராமனாக இங்கே வந்திருக்கிறான். இந்தக் கடலைத் தாண்டி, யாரும் செய்ய முடியாத சாதனையைச் செய்து, நம்மை அழிக்க வந்திருப்பதாகவே அனைவரும் சொல்லுகிறார்கள்.”

“அந்த இராமனுடன் வந்திருக்கும் அவன் தம்பி இலக்குவன், அந்த திருமால் பாற்கடலில் பள்ளி கொள்ளும் அரவணையான ஆதிசேடனே என்றும் சொல்லுகிறார்கள். அவர்களது வில்லும் அம்பும் காலச் சக்கரத்தின் ஆற்றலைப் பெற்றவை, யாராலும் வெல்ல முடியாதவை”. மேலும் கேள்:-

“வாலி மாமகன் வந்தானை ‘வானவர்க்கு இறைவன்’ என்றார்,

நீலனை ‘உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன்’ என்றார்,

காலனே ஒக்கும் தூதன் ‘காற்று எனும் கடவுள்’ என்றார்

மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல்!”

“வாலியின் பெருமைக்குரிய மைந்தனாம் அங்கதன் வானவர்களின் தலைவன் இந்திரன் என்கிறார்கள்; வானரப் படைகளின் தலைவனான நீலன் இருக்கிறானே அவனை அக்னி தேவன் என்கிறார்கள்; கூற்றுவனின் ஆற்றலைப் பெற்றவனும், இலங்கைக்குத் தூதனாக வந்தவனுமான அனுமனை காற்றுக் கடவுள் என்கிறார்கள்; அதுமட்டுமல்ல இனி வரக்கூடிய பிறவியில் அவனே பிரமதேவனாக ஆகப் போகிறான் என்றும் சொல்லுகிறார்கள்”.

“அப்பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக

இப்பதி எய்தினான் அவ் இராமன் என்று எவரும் சொன்னார்

ஒப்பினால் உரைக்கின்றாரோ? உண்மையே உணர்த்தினாரோ?

செப்பி என்? குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார்”.

அனுமனுக்குப் பிரம பதவியை அளிக்கப் போகிறவனான இராமன், அரக்கர்களை வேரோடும் ஒழிக்கப்போவதாக விரதம் ஏற்று இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் பேசிக்கொள்ளுகிறார்கள். ஒருக்கால் இந்த மானுடர்களும், வானரங்களும் மேற்சொன்ன தேவர்களையும் கடவுளர்களையும் போல ஒத்த தன்மையுடையவர்களாக இருப்பதால் அப்படிக் கூறுகிறார்களோ, அல்லது உண்மையிலேயே அவர்கள் அந்த தேவர்களாகவும், கடவுளாகவுமே வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துதான் சொல்லுகிறார்களா தெரியவில்லை. எப்படி இருந்தால் என்ன, இதைப் பற்றி சொல்லி ஆகப் போவது என்ன?

தீப்போன்ற கற்புடைய சீதையை ஏதோ எளியவள் என்று எண்ணிவிடாதே. அவள் தூய்மையே உருவானவள். திருப்பாற் கடலில் அமிழ்தோடு பிறந்தவள் இந்தத் திருமகள் ஆவாள். உலக மாந்தர்க்கெல்லாம் கண்ணுக்குப் புலப்படாத தாயாய் நின்று அருள் புரிபவள் அவளே என்றும் எல்லோரும் கூறுகிறார்கள். அறத்தின் மூர்த்தியான திருமாலை தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவரும் இராவணனின் தவத்தின் வலிமையை உணர்ந்து, மனித உருவம் தாங்கி இங்கே உன்னை அழிப்பதற்காக வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

எண்ணற்ற தீய நிமித்தங்கள் இலங்கையில் தோன்றுகின்றன. தாயினும் நல்லாள் சீதாப் பிராட்டியைத் தேடி இராம தூதனாக வந்த அனுமனால் தாக்கப்பட்ட இலங்கையின் காவல் தெய்வம், இலங்கிணி இந்த நகரத்தை விட்டு நீங்கி ஓடிப் போய்விட்டாள். இந்த நகருக்குள் போர் நுழைந்துவிட்டது.

ஒழுக்க சீலனும், தவத்தில் சிறந்தவனுமான விபீஷணன் கூட, அரக்கர்களும், இராவணனும் இராம லக்ஷ்மணர்களின் அம்புக்கு இரையாகிவிடுவர் என்று சொல்லிவிட்டாராம். பகைவர்களைப் பற்றி நான் கேட்டு அறிந்த அனைத்தையும் நான் உனக்கு உரைத்து விட்டேன். முன்பு நம் அரக்கர் குலம் இந்தத் திருமாலால் கெட்டழிந்தது எனும் வருத்தத்தாலும், என் குலத்தோன்றலாகிய உன் மீது நான் கொண்ட அன்பு காரணமாகவும், மனம் வருந்தி கூறுகின்றேன். “சீதையை இப்போதாவது கொண்டு போய் இராமனிடம் விட்டுவிடு!”. உனக்கு வந்த தீமைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்றான் மாலியவான்.

“நீ சொன்ன மற்ற செய்திகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்த தேவர்களும் மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய அறிவு, திரு ஆற்றல்களோடு வானுலகில் இந்நாள் வரை இறவாமல் வாழ்ந்திருந்தும், எனக்கு அஞ்சி வாழ்ந்தார்கள். இன்று, கேவலம் இவர்கள் குரங்குகளாகவும், மனிதர்களாகவும் வந்தா என்னை எதிர்த்துப் போரிட்டு வென்றுவிடுவார்கள்? இவர்களிடம் போய் நான் தோற்றுவிடுவேன் என்று சொல்கிறாயே! நன்றாய் படித்தாய் அறிவு நூல்களை!” என்று இராவணன் மாலியவானை இகழத் தொடங்கினான்.

“சீதையின் காரணமாக இவர்கள் என்னுடன் போரிட வருகிறார்கள் என்றால், அதற்காக சிறிதும் பின்வாங்க மாட்டேன். என் கையிலுள்ள அம்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல, உலகம் அனைத்தையும் வென்ற புகழுடையவை அவை. ஊழ்வினையைக் காட்டிலும் முந்திச் சென்று பழி தீர்க்க வல்லவை. போர் என்றதும் எதிரியின் மார்பில் புகுந்து முதுகு வழி செல்லும் வலிமையுடையது. கேவலம் இந்த குரங்குகள் எம்மாத்திரம்? அந்த சிவபெருமானே ஒரு குரங்காக உருவெடுத்து என் முன் வந்து நின்றாலும், தோற்று ஓடுவான். என் ஆற்றலை உணராமல் பேசுகிறாய்” என்றான் இராவணன்.

அன்றைய இரவுப் பொழுது நீங்கி பகல் தோன்ற கதிரவன் வந்து உதித்தான். இராமபிரான் தன் பரிவாரங்கள் புடைசூழ சுவேல மலைமீது ஏறுகிறான். அப்படி வில்லினை கையில் ஏந்திக் கொண்டு அவன் வரும் தோற்றம், ஓர் இராஜ சிங்கத்தினை ஒத்திருந்தது. மலைமீது ஏறி நின்று, இலங்கை நகரத்தின் எழில் மிகு காட்சிகளைக் காண்கிறான். அந்த அழகைத் தன் தம்பி இலக்குவனிடம் காட்டி அதன் அழகைப் போற்றுகிறான்.

இவ்வாறு இலங்கை நகரத்தின் அழகு, அமைப்பு இவற்றை இலக்குவனுக்குச் சொல்லி வியந்து நிற்கும் அதே நேரத்தில், அங்கே அந்த இலங்கை நகரத்தில், அதன் மன்னனான இராவணன், இராமனின் வானர சேனையின் மிகுதியைக் காண எண்ணி செம்பொன்னால் ஆன ஓர் மாளிகையின் கோபுரத்தின் மீது ஏறி அதன் உச்சியை அடைந்தான்.

(யுத்த காண்டம் முதற் பாகம் நிறைவு பெறுகிறது)

9


யுத்த காண்டம் - 2ஆம் பாகம்


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய

இராம காதை

யுத்த காண்டம் – 2ஆம் பாகம்.

“அன்ன மாநகரின் வேந்தன் அரிக்குலப் பெருமை காண்பான்

சென்னி வான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான்”.

இராவணன் வடக்கு வாயிலில் உள்ள செம்பொன்னாலான ஒரு மாளிகையின் உச்சிமீது ஏறி, வானரப் படையின் அளவைக் கண்டான். பொன் வேய்ந்த அந்த கோபுர உச்சியில் ஒரு மலை போல நெடிது நின்றான். போர் நெருங்கிவிட்டது என்று உணர்ந்தான். வானர சேனையைக் கண்டதும் அளவற்ற கோபம் கொண்டான். அவனது இடக்கண்ணும் இடது தோளும் துடித்தன.

இப்படியொரு தீய நிமித்தம் தோன்றவும், இராமபிரான் தூரத்தில் ஓர் மலை உச்சியில் நிற்பதையும் கண்டு மனம் புழுங்கினான். உடனே முன்பு ஒற்றனாகச் சென்று வானரப் படைகளை வேவு பார்த்துவிட்டு வந்தவனும், இப்போது தன் அருகிலிருந்தவனுமான சாரன் என்பவனை நோக்கி “அதோ அந்த மலை மீது கரிய நிறத்தில் நிற்பவன்தான் இராமன் என்பது தெரிகிறது. சரி அருகில் நிற்கும் மற்றவர்கள் எல்லாம் யார் சொல்?” என்றான்.

உடனே சாரன் “இராமனுக்கு அருகில் நிற்கிறானே அவன் தான் தங்கள் தங்கை சூர்ப்பனகையின் கொங்கை, நாசி, செவி இவற்றைக் கொய்த இலக்குவன்” என்றான். “இந்த இலக்குவன் கண் துயிலுதல் கூட செய்யாமல் அல்லும் பகலும் இராமனுக்குக் காவல் செய்கிறான். அதோ! அவன் கையைப் பிடித்துக் கொண்டு வாலோடு ஒருவன் நிற்கிறானே! அவன் தான் வாலியோடு போர் புரிந்த சூரியகுமாரன் சுக்ரீவன். யாவரினும் கொடுமையுடையவன் அவன்”.

“அவன் அருகில் நிற்பவன் தான் வாலியின் புதல்வன் அங்கதன் என்பான். இவன் தந்தையாகிய வாலிதான் ஒருவனாகவே மந்தர கிரியைச் சுற்றி பாற்கடலைக் கடைந்து அமுதமெடுத்தான். அருகே ஒருவன் நடந்து கொண்டிருக்கிறானே, அவன் தான் சூரியனோடு தொடர்ந்து போய், அவன் தேருக்கு முன்பு சென்று அனைத்துக் கலைகளையும் கற்று, கடலைக் கடந்து இங்கே வந்து, நம் நகரத்துக்குத் தீமூட்டிவிட்டுச் சென்ற அனுமன்”.

“அருகே நிற்பவன் பெயர் நீலன். அக்னியின் புத்திரன். இவன் கையில் சூலமும், பாசக் கயிறும் இல்லாவிட்டாலும், சிவபெருமானோ அல்லது எமதர்மனோ என்று பிறர் வியக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்கவன். இவர்களை விட்டுச் சற்று மாறுபட்டு நிற்பவன் பெயர் நளன். இராமனுக்கு மூன்றே நாளில் கடலுக்குள் சேது அமைத்துக் கொடுத்து, படைகள் கடலைக் கடந்து வர வழி செய்து கொடுத்தவன்”.

“அதோ! கரடி போல ஒருவன் நிற்கிறானே, அவன் தான் ஜாம்பவான் எனும் பெயர் கொண்டவன். கரடிகளின் அரசன். முக்கால நிகழ்ச்சிகளையும் தன் அறிவால் உணரக்கூடிய ஆற்றலைப் பெற்ரவன். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடந்த காலத்திலிருந்து வாழ்கின்றவன். ஏழு உலகங்களையும் இன்று கூட தன் வலிமையால் பெயர்த்து எடுக்கக் கூடியவன்”.

“சேனாதிபதியாகிய நீலனுக்கு இரு புறத்திலும் பொன் குன்று போல நிற்பவர்கள் அசுவினி தேவரின் புதல்வர்கள். வலிமை படைத்தவர்கள். கூட்டத்தின் நடுவில் நிற்பவன் பெயர் குமுதன். அருகில் குமுதாக்கன், மற்றொருவன் கவயன், அடுத்தவன் கவயாக்கன், அவனை அடுத்தவன் அனுமனைப் பெற்ற கேசரி என்பவன், மிக்க ஆற்றலுடையவன்”.

“கூரிய நகங்களும் பற்களும் உடையவன் நரசிங்கம் போன்ற முரபன், அருகில் சரபன், இவன் மலைகளை வேரோடு பெயர்த்தெடுக்க வல்லவன். சதவலி எனும் மாவீரன் அதோ நின்று கொண்டிருக்கிறான். மூன்று கண்கள் இல்லையே தவிர பனசன் என்பவன் முப்புரங்களையும் எரிக்கும் ஆற்றல் மிக்கவன். இந்த போருக்கு உரிய அனைத்தையும் செய்பவன் இடபன் என்பவன், எதிரே இருப்பவன் சுசேடணன் என்பவன். அவனுக்கு அயல் நிற்பவன் ததிமுகன், அருகிலே சிங்கமென நிற்கும் சங்கன்” இப்படி வானர வீரர்களைப் பற்றிய அறிமுகம் கொடுத்த சாரன் இராவணனிடம் “இந்தச் சேனைக்கு எல்லையோ, அளவோ இருப்பதாகத் தெரியவில்லை. வானத்து மீன்களைக்கூட எண்ணிவிடலாம், கடலில் உள்ள மீன்களைக்கூட எண்ணிவிடலாம், கடற்கரை மணலையும் எண்ணிவிடலாம், இந்தச் சேனையை எண்ணுவது என்பது இயலாத காரியம்” என்றான் சாரன்.

சாரன் கூறிய செய்தி கேட்டு இராவணன் கோபத்துடன் புன்னகை செய்து “கொல்லையில் வாழும் இழி பிறவிகளான குரங்குகளை புகழ்கிறாய் போலும்! காடுகளிலும், மலைகளிலும் திரிகின்ற மான்கள் கூட்டம் சிங்கத்தினை என்ன செய்து விட முடியும்?” என்றான்.

இப்படி இராவணன் பொன்னால் கூரை வேயப்பட்ட கோபுரத்தின் மீது நின்றுகொண்டு சாரனிடம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் இராமபிரான், விபீஷணனிடம் “அதோ நம் எதிர் புறத்தில் வானத்தை மூடி மறைக்கும்படியான கோபுரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கும் அரக்க வீரர்களைப் பற்றிய விவரங்களைக் கூறு” என்றான்.

“ஸ்ரீ இராமா! அதோ பாருங்கள், அங்கே தேவலோகப் பெண்ணான திலோத்தமை முதலான தெய்வப் பெண்கள் கூட்டத்துக்கிடையில் நிற்கிறானே! தம் குலத்து உறவினர்கள் எனும் நாற்றைப் பிடுங்கி நரகத்தில் நடும் பொருட்டு அங்கு சேறு தயாரித்து வைத்திருக்கிறானே, அவன் தான் இழிதொழில் செய்த இராவணன்”. அடுத்ததாக விபீஷணன் பேசுவதற்கு முன்பாக “அவன் தான் இராவணன்” என்ற சொற்களைக் கேட்டு அவனையும் பார்த்த மாத்திரத்தில் சுக்ரீவன் கண்கள் தீ உமிழ, அன்று சூரியனைப் பழம் என்று கருதிப் பாய்ந்த அனுமனைப் போல இராவணன் மீது இங்கிருந்தே பாய்ந்தான்.

சுவேல மலை மீதிருந்து இராவணனைக் கண்ட ஆவேசத்தில் வானத்தில் பாய்ந்து சென்று இலங்கை கோபுர உச்சியில் நின்று பார்வையிடும் இராவணன் மீது மேட்டிலிருந்து பாயும் நீர் போல விரைந்து பாய்ந்தான் சுக்ரீவன். சீதையைக் கடத்தி வந்த இராவணன் மீது பாய்ந்த ஜடாயுவைப் போல பாய்ந்து சாடினான் சுக்ரீவன். எதிர்பாராமல் இடி விழுந்ததைப் போல சுக்ரீவன் இராவணன் மேல் பாய்ந்து விழவும் சுற்றி நின்ற தேவலோகப் பெண்கள் எல்லாம் அஞ்சி ஓட்டமெடுத்தனர்.

எதிர்பாராத விதமாக வானத்தில் தாவி வந்து தன்மீது பாய்ந்து நின்ற சுக்ரீவனைப் பார்த்து இராவணன் “நீ இங்கு எதற்காக வந்தாய்?” என்றான்.

உடனே சுக்ரீவன் தன் வலிய கரங்களை மடக்கி அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து விட்டான். “நான் வந்த காரியம் தீயவனாகிய உன்னை ஒழிப்பதற்கே!” என்றான் சுக்ரீவன்.

நெஞ்சில் சுக்ரீவன் விட்ட குத்தினால் நிலைகுலைந்த இராவணன் பேரொலி எழுப்பி கத்தினான். சுக்ரீவனைத் தன் இருபது கரங்களைக் கொண்டு பிடித்து அடித்தான். சுக்ரீவன் இராவணன் கொடுத்த அடிகளால் உடல் முழுவதும் உதிரம் கசிய, அவன் எதிரில் சென்று மேலெழும்பி தன் கால்களால் இராவனனின் பொற்கிரீடங்கள் அணிந்த தலைகளில் பலங்கொண்ட மட்டும் உதைத்தான். தன் தலைகளிலும் முகங்களிலும் சுக்ரீவனின் உதை விழுந்ததும், அவனைத் திரும்பத் தாக்கினான் இராவணன். மதம் கொண்ட யானையொன்றும், சிங்கமொன்றும் மோதியது போல கடுமையான போர் நிகழ்ந்தது.

இருவருக்குமிடையே கடுமையான யுத்தம் நடந்தது. கட்டிப் புரண்டார்கள். கோபுரத்தின் கோட்டைச் சுவற்றில், அகழியில் என்று பற்பல இடங்களிலும் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்டார்கள். தொடர்ந்து இருவருக்குமிடையே மற்போர் நடந்தது. இவ்வாறு இவ்விருவருக்குமிடையே நடந்த கடுமையான போரின்போது, இராமபிரான், தன் அன்பிற்குரிய சுக்ரீவன், போனவன் திரும்பாதது கண்டு வருந்தி புலம்பித் தவித்தான்.

இந்த நேரத்தில் இராவணனோடு பொருதிய சுக்ரீவன் இராவணனின் மணிமுடிகளில் பதித்திருந்த விலை உயர்ந்த வைர மணிகளைப் பறித்துக் கொண்டு இராமனிடம் வந்து சேர்ந்தான். அங்கே இராவணன் ஒரு குரங்கு நம்மை இந்தப் பாடு படுத்தி விட்டதே என்று நாணமுற்று வருந்தி நின்றான். சுக்ரீவனுக்கு என்ன ஆயிற்றோ என்று வருந்திக் கொண்டிருந்த இராமன் முன்னால், அவன் இராவணன் முடியில் அணிந்திருந்த கிரீடத்திலிருந்து பறித்த மணிகளோடு வந்து நின்றதும், இராமன் நிம்மதியடைந்தான்.

இராமன் சுக்ரீவனை அன்புடன் தழுவி, உடலில் வழிந்த ரத்தத்தையும், இராவணனைத் தொட்டதால் ஏற்பட்ட தீட்டையும் தன் கண்ணீரால் கழுவினான். இராமன் சுக்ரீவனிடம் “நீ என் பொருட்டு பகைவன் இருக்குமிடம் சென்று தனி ஆளாகப் போய் போர் புரிய நேர்ந்ததே! இப்படியோர் முடிவை நீ ஏன் எடுத்தாய்? உனக்கு ஏதேனும் ஆகியிருக்குமானால் நான் எங்ஙனம் பொறுப்பேன்” என்றான்.

“ஒருக்கால் அவன் உன்னைக் கொன்றிருப்பானாகில், நான் அவர்களைப் பூண்டோடு அழிப்பேன் ஆயினும், உன் உயிரைக் காக்கத் தவறியவனாக ஆகிவிட மாட்டேனா?” இப்படி இராமன் கூறி வருந்தவும், சுக்ரீவன் சொல்லுகிறான்:

“காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்,

நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்;

கேட்டிலே நின்று கண்டு கிளிமொழி மாதராளை

மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங்கை வந்தேன்”

“காட்டிலே கழுகின் வேந்தன் ஜடாயு, இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது அவனுடன் போரிட்டு தன் உயிரை விட்டானே, அதுபோல என்னால் செய்ய முடியவில்லையே! நாட்டிலே குகனார் காட்டிய அன்பினைக் காட்ட வல்லேன் நான்! கிளிபோன்ற மொழிபேசும் சீதாபிராட்டி துன்பத்தில் வீழ்ந்திருந்தும், அவரை மீட்டுக் கொண்டு வரவில்லையே நான், இராவணனுடைய பத்துத் தலைகளையுமாவது கிள்ளிக் கொணர்ந்திருக்க வேண்டும், அப்படியும் செய்யவில்லையே! வெறும் கையோடு வந்து நிற்கிறேனே” என்றான்.

இப்படி சுக்ரீவன் வருந்தி, வெட்கி நிற்கும் நேரத்தில், விபீஷணன் அங்கு வந்து இராமனிடமும் சுக்ரீவனிடமும் பேசுகிறான். “வானர மன்னா! நீ இராவணனது கிரீடங்களில் இருந்த மணிகளை அழித்து அவற்றில் உயர்ந்த மணிகளைக் கொண்டு வந்தாயே, இதனினும் பெருமைதரத் தக்கச் செயல் எதுவும் இல்லை. நீ வெறும் மணிகளையா கொண்டுவந்தாய்! இல்லை! இல்லை! இராவணனின் உயிருக்கும் மேலான பெருமையை அல்லவா கொண்டு வந்தாய்!. இதைக் காட்டிலும் வீரச் செயல் வேறு எதுவும் இல்லை” என்று சுக்ரீவனைப் பாராட்டினான். இராமபிரானும் சுக்ரீவனது செயலை மிகவும் பாராட்டிப் பேசுகிறான்.

சூரியன் மலைக்கு அப்பால் சென்று மறைந்த காட்சி, தன் மைந்தனான சுக்ரீவனால் அவமானம் அடைந்த இராவணன் தன்னைக் காண நேர்ந்தால் சினம் கொள்வான் என்று மறைந்தது போல இருந்ததாம். இலங்கையில் இராவணன், தான் பெற்ற அவமானத்தால் மனம் புழுங்கி, வருத்தத்தோடு அரண்மனை திரும்பினான். அவன் மனதில் சுக்ரீவன் இழைத்த அவமானம் திரும்பத் திரும்ப வந்து அவன் மனதை வருத்தியது. ஒரு குரங்கு தன்னைத் தாக்கி அலைக்கழித்து உடல் வருந்தச் செய்துவிட்டு, தலை முடிமீதிருந்த மணிகளைப் பறித்துக்கொண்டு சென்றுவிட்ட அவமானத்தால் தலை குனிந்தபடி தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.

மகிழ்ச்சி தரும் போதை பானங்களைப் பருகவில்லை. மனதிற்கு இன்பமளிக்கும் இசைப் பாடல்களைக் கேட்கவில்லை. நாடக மகளிரின் ஆடல்களைப் பார்க்கவில்லை. எவரோடும் பேச அவனுக்குப் பிடிக்கவில்லை. பேசாமல் தன் படுக்கையில் போய் படுத்துக் கொண்டான். உஷ்ணமான பெருமூச்சு விட்டான். மனதுக்குள் துன்பம் அவனை வாட்டுகிறது. அப்போது ஒரு காவலன் வந்து சார்த்தூலன் எனும் ஒற்றன் வந்திருப்பதாகச் சொல்ல, அவனை உள்ளே வரச் சொல்லுகிறான்.

உள்ளே வந்து இராவணனை வணங்கி நின்ற சார்த்தூலனிடம் இராவணன் “நீ எதிரியின் படைகளைக் கண்காணித்த வகையில் தெரிந்து கொண்ட விவரங்களைச் சொல்வாயாக!” என்றான். அந்த ஒற்றன் உடனே பேசத் தொடங்குகிறான்.

“மன்னா! வானரப் படைகள் நகரின் எல்லா வாயிலிலும் அணிவகுத்து நிற்கின்றன. இலங்கையின் மேற்குப் புற வாயிலில் அனுமன் தலைமையில் எழுபது வெள்ளம் சேனையில், பதினேழு வெள்ளம் தயார் நிலையில் நிற்கின்றன. இராமன் சுக்ரீவனையும் இந்தப் படைகளைப் பிரியாது இருக்கும்படி ஆணையிட்டிருக்கிறான்.”

“வாலியின் மைந்தன் அங்கதன் பதினேழு வெள்ளம் வானரப் படையுடன் இலங்கையின் தெற்கு வாயிலில் போருக்குத் தயாராக படைகளை அணிவகுத்து நிற்கிறான். நீலன் எனும் படைத் தலைவன் அதே பதினேழு வெள்ளம் படையோடு கிழக்கு வாயிலில் நகருக்குல் புகுவதற்கு தயார் நிலையில் நிற்கிறான். வானரப் படைகளுக்குத் தேவைப்படும் உணவு, காய், கனி, கிழங்கு முதலியன கொண்டு வந்து தொடர்ந்து கொடுப்பதற்கு இரண்டு வெள்ளம் சேனையை பல திசைகளுக்கும் அனுப்பியுள்ளான்”.

“உனது தம்பி விபீஷணனை அடிக்கடி இலங்கை நகரின் எல்லா வாயில்களுக்கும் சென்று, போரின் தன்மையைக் கண்காணிக்கும்படி நியமித்துள்ளான் இராமன். இராமனும் தம்பி இலக்குவனும் இலங்கை நகரின் வடக்கு வாயிலில் போரைத் தொடங்க ஆயத்தமாக நிற்கிறார்கள். இவைதான் இராமனின் போர்முனை ஏற்பாடுகள்” என்று அந்த ஒற்றன் கூறினான்.

ஒற்றன் இப்படிக் கூறியதைக் கேட்ட இராவணன் பற்களை ‘நறநற’ வென கடித்தான். “நாளையே மூண்டு வந்த பகையை போரில் அழிப்பேன்” என்றான்.

படுக்கையில் அவனுக்கு இருப்புக் கொள்ளாமல் எழுந்து மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தான். அமைச்சர்களை ஆலோசனைக்கு அழைத்துவரப் பணித்தான். பிறகு அமைச்சர்களிடம் “வானர சேனை நம் நகரத்தின் நாலா புறத்திலும் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது. பெரும் போர் சூழ்ந்து விட்டது. மனம் உளையச் செய்து விட்டார்கள். இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?” என்றான். அப்போது நிகும்பன் எனும் அரக்கன் சொல்கிறான்.

“கேவலம் எழுபது வெள்ளம் வானரப் படை நம் நகரைச் சூழ்ந்து கொண்டதற்காகக் கவலைப் படலாமா? அவற்றை அழித்துக் கொல்ல ஆயிர வெள்ளம் அரக்கர்சேனை நொச்சி மாலை அணிந்து போருக்குத் தயாராக இருப்பதைத் தாங்கள் அறியமாட்டீர்களோ? எழு, மழு, தண்டம், வேல், வாள், சூலம் என போர்க்கருவிகளைத் தாங்கிய நமது படைக்கு முன்பு, ஒரு ஆயுதமும் இல்லாமல் வெறும் கையோடு இந்த குரங்குகள் என்ன செய்து விட முடியும்? என்றான்.

அப்போது இராவணனின் மாமன்மார்களில் மூத்தவனான மாலி என்பான் எழுந்து சொல்கிறான். “காம உணர்வு துன்பத்தைத்தான் தரும். அந்த காம உணர்வுதான் இப்போது நம் குலத்தையே வேருடன் கெடுத்துவிட்டது. இலங்கைக்குள் புகுந்து வனங்களை அழித்து, நகருக்கு எரியூட்டி சாம்பலாக்கிய அனுமன் கையில் என்ன ஆயுதம் வைத்திருந்தான். அல்லது மன்னன் மணிமுடியில் இருந்த மணிகளைப் பறித்துச் சென்றானே சுக்ரீவன், அவன் கையில் இருந்த ஆயுதம்தான் என்ன?”

“இராமபிரான் தன் வில்லில் அம்புகளைப் பூட்டி, அவை நம் உயிரைக் குடிக்க வருவதற்கு முன்பாக சீதாதேவியைத் திரும்பக் கொண்டு போய் விட்டுவிட்டு, அரக்கர்களாகிய நாம் ஆயுதம் அற்ற வானரப் படையிடம் சரண் அடைவது ஒன்றே சரியான வழி” என்றான்.

கடுங்கோபம் கொண்ட இராவணன் மாலியிடம் “என் வலிமை எப்படிப்பட்டதென்று உணராமல் பேசுகிறாய். நீயே எனக்குப் பெரும் பழியைத் தேடித் தருவாய் போலிருக்கிறதே. என் மீது அன்பற்ற நீ, இனி இதுபோல பேசுவதை நிறுத்திக்கொள்!” என்று கூறவும், மாலியும் பேசாமலிருந்து விட்டான்.

உடனே இராவணன் தனது ஆயிரம் வெள்ளம் எனும் படைபலம் கொண்ட தனது சேனைக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தான். இருநூறு வெள்ளம் ஆயுதம் தாங்கிய அரக்கர் படையை இலங்கையின் கீழ்த்திசை வாயிலுக்கு அனுப்பி அங்கு போருக்குத் தயார் நிலையில் நிற்கும் வானரப் படை தளபதி நீலனோடு போரிடுவதற்கு அனுப்பி வைத்தான். தனது மைந்தன் மகோதரனை அழைத்து அவனை இருநூறு வெள்ளம் படையுடன் சென்று, தென் திசை வாயிலுக்குப் போய் அங்கே ஏற்கனவே படைகளை அணிவகுத்துத் தயாராக இருக்கும் அங்கதனுடன் போரிடத் தயாராகுமாறு அனுப்பி வைத்தான்.

இந்திரஜித்தை அழைத்து “மகனே! அன்று இலங்கைக்குள் நுழைந்து பேரழிவினைச் செய்துவிட்டுப் போந்த அந்த அனுமனை நீ நன்கு அறிவாய். பொழுது விடியுமுன் இருநூறு வெள்ளம் சேனையுடன் மேற்கு வாயிலுக்குச் சென்று அங்கே படைகளுடன் போருக்குத் தயார் நிலையில் நிற்கும் அனுமனோடு பொரிடத் தயாராக இரு!” என்றான்.

“விரூபாட்சா! நீ முன்னர் தேவர்களுடன் போர் புரிந்து வெற்றி பெற்றவன். இந்த வானரப் படையுடன் யுத்தம் செய்வது உனக்குப் பெருமை சேர்க்காது. எனவே நீ, நெடிய மூலபல சேனையோடு, அமைச்சர்களோடும், இலங்கை நகரத்தின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொள்!” என்றான். “மதங்கொண்ட யானைப் படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என இருநூறு வெள்ளம் படைகளுடன், நானே வடக்கு வாயிலுக்குச் சென்று, அங்கு இருக்கும் அந்த இராமனோடும், இலக்குவனோடும் போரிடத் தயாராக இருப்பேன்” என்று தனது படைகளின் அணிவகுப்பையும், நகரின் பாதுகாப்பையும் நிர்ணயித்து அவரவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.

இலங்கை நகரின் முற்றுகையையும், அதன் பாதுகாப்புக்காக இராவணன் வகுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும், எந்தெந்த வாயிலில் யார் யார் எவருக்கு எதிராகப் போரிடத் தயாராக இருந்தனர் என்பதை இந்த வரைபடத்தில் பார்க்கலாம்.

இராம இலக்குவன் (17 வெள்ளம் படை)

{ வடக்கு வாயில் }

(இராவணன் (200 வெள்ளம்)

அனுமன் (17 வெள்ளம் நீலன் ( 17 வெள்ளம்)

{மேற்கு வாயில்} {கிழக்கு வாயில்}

இந்திரஜித் (200 வெள்ளம்) படைத் தலைவன் (200 வெள்ளம்)

அங்கதன் (17 வெள்ளம்)

{தெற்கு வாயில்}

மகோதரன் (200 வெள்ளம்)

* விரூபாட்சன் {நகரக் காவல், மூலபல சேனை)

இரவு நேரம் கழிந்து, பொழுதும் புலரத் தொடங்கியது. கதிரவன் கீழ்த்திசையில் தன் கிரணங்களை வீசிக்கொண்டு தோன்றினான். இராமபிரான் தன் பாசறையை விட்டு வெளியே வந்து தன் வானரப் படைகளைப் பார்த்துவிட்டுப் போருக்குத் தயாராகப் புறப்பட்டான். இலங்கை நகரத்தின் நான்கு வாயில்களிலும் வானர சேனைகள் கடல்போல் சூழ்ந்திருக்கப் போர் முழக்கங்கள் எங்கும் கேட்டன. போர் தொடங்கியது.

இராமன் வடக்கு வாயிலுக்கு வெளியே தனது பதினேழு வெள்ளம் படையுடன் போருக்கு ஆயத்தமாக வந்து நின்றான். கையில் இராமனது கோதண்டம் போருக்குத் தயாராக இருந்தது. வடக்கு வாயில் திறக்கப்பட்டு இராவணன் போருக்கு வருவான் என்று எதிர்பார்த்து இராமன் காத்திருந்தான். நேரம் போய்க்கொண்டே இருந்ததே தவிர இராவணன் வரும் வழியாகத் தெரியவில்லை.

உடனே இராமபிரான் அருகில் நின்றுகொண்டிருந்த விபீஷணனை அழைத்து, தான் அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் பற்றி விவாதிக்கத் தொடங்கினான்.

“தூதன் ஒருவனை நாம் இப்போதே இராவணனிடம் அனுப்பி, நீ இப்போதாவது சீதையை சிறையினின்றும் விடுவித்து எங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பாயானால் உயிர் பிழைப்பாய் என்று தெரிவிப்போம், அவன் உடன்பட மறுத்தால் அவனைக் கொன்றொழித்து சீதையை மீட்பது நமது கடமை என்று நான் நினைக்கிறேன். தர்மமும் அஃதே. அரசியல் நீதி முறையும் அதுவே!” என்றான் இராமன்.

அதைக் கேட்ட விபீஷணன் “ஆம்! அதுதான் நல்லது” என்றான். அருகிலிருந்த சுக்ரீவனும் “ஆம்! வெற்றித் திறம் வாய்ந்த வேந்தர்க்கு ஏற்படைய செயலிது” என்றான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த இலக்குவனோ “அண்ணா! கொடியவனான இராவணனுக்கு இரக்கம் காட்டுவதென்பது நமக்கு இழிவு பயப்பதாகும். இந்தக் கட்டத்தில் போர் செய்து அவர்களை அழிப்பதன்றி, சமாதானத்துக்குத் தூது அனுப்புவது நன்மை பயப்பது அன்று. வஞ்சகன் இராவணன் அன்னையைச் சிறையில் வைத்தான்; தேவர்களைத் துன்புறுத்தினான்; அந்தணர்களை அலற வைத்தான்; உயிர்களைக் கொன்று தின்றான்; எல்லா திசைகளின் எல்லையளவில் தானே ஆளவேண்டுமென எண்ணினான்; இந்திரனைத் துரத்திச் சென்று அவனைத் தோற்கடித்து அவனது செல்வங்களைக் கவர்ந்தான். மன்னுயிர்க்கெல்லாம் நல்லவராகிய நும் தேவியைக் கவர்ந்தான்; நம் தந்தை போன்ற ஜடாயுவின் உயிரைப் பறித்தான்.”

“அப்படிப்பட்ட கொடியோனாகிய இராவணனுக்கு அருள்செய்து, சீதாதேவியை விட்டுவிட்டால் உயிரைப் பறிக்காமல் விட்டுவிடுகிறேன் என்று சொல்வாயானால், நின்னைச் சரண் என்றடைந்த விபீஷணனுக்கு ‘என் பெயர் உலகில் உள்ளவரை இலங்கை உனக்கே என்று பட்டம் சூட்டினாயே, உன் வாக்கு என்னாகும்? தண்டக வனத்து முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கு என்னாகும்?” என்றான் இலக்குவன்.

இதனைக் கேட்ட இராமன் “லக்ஷ்மணா! நீ கூறிய அனைத்தையும் நான் மறுக்கவில்லை. இறுதியாக நடக்கப்போவதும் நீ கூறும் அந்தப் போர்தான். ஆனால், அரச தர்மத்தை வகுத்துக் கொடுத்த நீதிமான்கள் காட்டிய பாதையிலிருந்து நாமே விலகிச் செல்லலாமா? போர் ஆற்றல் மிகுதியும் உடையவரேனும், பொறுமை குணத்தையும் ஏற்று நடப்பது பெருமை தரும் செயல் அல்லவா?” என்றான். அறவழியும் அதுவே என்பதை இராமன் இலக்குவனுக்கு எடுத்துரைத்தான்.

இராவணனிடம் தூதுவனாக யாரை அனுப்பலாம் என்று விபீஷணனுடன் ஆராய்ந்தான். சுக்ரீவன் முதலானவர்களும் அங்கு இருந்தனர். வாயு குமாரனாகிய அனுமனை மீண்டும் தூதாக அனுப்புவோம் என்றால், இவர்களுக்கு தூதுசெல்ல இவனை விட்டால் வேறு ஆட்களே இல்லை போலும் என்று இழிவாக அரக்கர்கள் நினைக்கக்கூடும்.

அனுமனைத் தவிர வேறு தகுதியானவர் யார் இருக்கிறார்கள்? எதிரிகள் அவனுக்குத் தீங்குகள் இழைத்தாரேனும் அவற்றையெல்லாம் எதிர்த்து நின்று மீண்டு வரும் வல்லமை பெற்றவர் அனுமனைப் போல வேறு யார்? என்று சிந்தித்தபோது வாலியின் மைந்தன் அங்கதன் நினைவுக்கு வந்தான். அங்கதனை தூது அனுப்பலாம் என்று இராமன் சொன்னதுமே அனைவரும் அதை ஒப்புக் கொண்டனர்.

அங்கதனை உடனே அழைத்து வரும்படி செய்தி அனுப்பினார்கள். அங்கதனும் உடனே கிளம்பி இராமன் இருக்குமிடம் வந்து பணிந்து, அவன் ஆணையை எதிர்பார்த்து நின்றான். இராமன் அங்கதனிடம் “பெருங்குணமுடைய அங்கதா! நீ இராவணனிடம் தூதனாகச் சென்று நான் கூறும் இரண்டு விஷயங்களை அவனிடம் சொல்லி, அவன் மறுமொழியை எனக்கு வந்து சொல்லுவாயாக!” என்றான்.

அங்கதன் அடைந்த பெருமைக்கு அளவேயில்லை. அவன் தோள்கள் பூரித்தன. அவன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அவன் மகிழ்ச்சிக்கும் எல்லை உண்டோ? அங்கதன் இராமனிடம் “ஐயனே! இராவணனிடம் நான் சொல்ல வேண்டிய செய்தி என்ன?” என்று கேட்கவும், இராமன் சொல்லுகிறான்.

“அங்கதா! நீ இராவணன் இருக்குமிடம் சென்று, அவனிடம், சீதையை இராமனிடம் திரும்ப ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்திருத்தல் நல்லதா அல்லது உன் பத்துத் தலைகளையும் சிதைத்து அழிக்கும்படி போர்க்களத்தில் எம்மை சந்திப்பது நல்லதா, இவை இரண்டில் ஒன்றை தேர்ந்து சொல் என்று இராவணனிடம் சொல்வாயாக!” என்றான் இராமன்.

“இவ்விரண்டையும் செய்யாமல் ஊருக்குள் பதுங்கி இருப்பது என்பது அறவழிப்பட்ட செயல் அல்ல! வீரனுடைய இலக்கணமும் ஆகாது. ஆகையால் போருக்கு ஆயத்தமாக கோட்டைக்கு வெளியே வந்து என்னோடு போர் செய்யும்படி அவனுக்கு எடுத்துரைப்பாயாக!” என்றான் இராமன்.

அனுமன் அன்றி வேறொருவன் தூது செல்ல வேண்டும் என்ற நிலையில் இராமபிரான் என்னை தூதனாக தேர்ந்தெடுத்தது போன்ற பெருமை வேறு என்ன இருக்கிறது என்ற இன்ப மகிழ்வில் அங்கதன் சிங்கம் ஒன்று வான வெளியில் நடந்து செல்வது போலவும், இராமனது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போலவும் விரைந்து சென்றான்.

அங்கதன் இலங்கை கோட்டை மதில்களை அனாயசமாகத் தாண்டி உள்ளே சென்று இராவணன் இருக்குமிடத்தைச் சென்றடைந்தான். அப்படி அவன் அங்கு போய்ச் சேர்ந்த போது, முன்பு இலங்கையைக் கொளுத்திவிட்டுச் சென்றவன் மறுபடி வந்து விட்டானோ என்று அஞ்சி அரக்கர்கள் ஓட ஆரம்பித்தனர். அங்கதன் இராவணனைப் பார்த்து வியந்து போனான். இவனை வெல்லவும் முடியுமோ? அப்படி ஒருவன் இருக்கிறானா? நம் இராமன் கையில் வில் உண்டு, அந்த வில்லின் முன்பு இவன் எம்மாத்திரம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டான்.

இராமனையன்றி வேறு எவராலும் இவனை வெல்லுதல் அரிது. இவனது முடிமேல் இருந்த மணிகளையா என் சிறிய தந்தை தன்னந்தனியனாக வந்து இவனை அடித்துத் துவைத்து மணிகளையும் பறித்துக் கொண்டு வந்தான்? என் சிறிய தந்தை எல்லோரிலும் பெரும் வலிமை படைத்தவன் அல்லவா? அதனால்தான் இப்படிப்பட்ட வேலையை அவனால் செய்ய முடிந்தது. இப்படியெல்லாம் எண்ணியபடியே, அங்கதன் இராவணன் முன்பு போய் நின்றான். கண்கள் தீ உமிழ இவனை நிமிர்ந்து பார்த்த இராவணன் “யார் நீ?” “இங்கு எதற்காக வந்தாய்?” “உன்னைக் கொன்று இவர்கள் தின்பதற்கு முன்பு உண்மையைச் சொல்” என்றான்.

இதைக் கேட்டு அங்கதன் பெரிதாகச் சிரித்துவிட்டுச் சொல்கிறான்.

“பூதநாயகன், நீர்சூழ்ந்த புவிக்கு நாயகன், அப்பூமேல்

சீதைநாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்

வேதநாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன், தான் விட்ட

தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான்”.

“பஞ்ச பூதங்களுக்கெல்லாம் தலைவனும், கடல் சூழ்ந்த நில மடந்தைக்குத் தலைவனும், தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாம் சீதாதேவியின் கொழுநனும், நீ தினம் ஓதும் வேதங்களுக்கு நாயகனும், அனைத்தையும் வழி நடத்தும் விதிக்கு நாயகனுமான ஸ்ரீ இராமபிரான் அனுப்பிய தூதன் நான். அவர் கூறிய சில வார்த்தைகளை உமக்குச் செல்ல வந்தேன்” என்றான்.

“அடேய்! யாரடா அவன்? சிவபெருமானா? அல்லது பாற்கடல் திருமாலோ? நான்முகனோ? மக்கள் வியந்து போற்றும் இந்த மூவரையன்றி, கேவலம் குரங்குகளைக் கூட்டிக் கொண்டு குட்டை போன்ற சமுத்திரத்தில் ஒரு அணையைக் கட்டிக் கடந்து வந்து நிற்கும் இந்த மானுடனா உன் தலைவன்? என்னிடம் வந்து தூது சொல்லச் சொன்ன அந்த மானுடனா உலக நாயகன்?” என்று இராவணன் கேலியாகச் சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தான்.

“அரன் கொலாம், அரிகொலாம்? மற்று அயன் கொலாம்? என்பார் அன்றி

குரங்கு எலாம் கூட்டி, வேலைக் குட்டத்தைச் சேது கட்டி

இரங்குவான் ஆகின் ‘இன்னம் அறிதி’ என்று உன்னை ஏவும்

நரன் கொலாம் உலக நாதன்? என்று கொண்டு அரக்கன் நக்கான்”.

“அடேய்! வானரமே! அந்த சிவனோ அல்லது திருமாலோகூட இலங்கைக்குள் தைரியமாக நுழைய முடியாதபோது, கேவலம் ஒரு மனிதனுக்காக தூது வந்திருக்கிற நீ யார்?” என்று ஆணவத்தோடு கேட்டான் இராவணன்.

அங்கதன் சொல்லுகிறான்:

“இந்திரன் செம்மல், பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னைச்

சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி

சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன், தேவர் உண்ண

மந்தரக் கிரியால் வேலை கலக்கினான், மைந்தன் என்றான்”.

“என்னையா யாரென்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள்!. முன்பொருநாள், உன்னைத் தன் வாலில் கட்டி, மலைகள் தோறும் தாவிப் பாய்ந்து திரிந்தவனும், தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்தபோது அவர்களால் முடியாமல் சோர்ந்துவிட்ட நிலையில், அவர்களுக்காகத் தான் ஒருவனாகவே கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்த இந்திரன் மைந்தன் வாலியின் புதல்வன் நான். என் பெயர் அங்கதன்” என்றான்.

அதுவரை ஆணவமும், அடங்காத் திமிரோடும் இருந்த இராவணன் வாலி என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில், “அடடே! வாலி என் உற்ற நண்பன் அல்லவா? நாங்கள் உயிருக்குயிரான நண்பர்கள் அல்லவா? அப்பேற்பட்ட வாலியின் மகன், ஒரு மனிதனுக்காக தூது வருவது கேவலமல்லவா? என் மைந்தனே! வானர குலத்தின் தலைமைப் பதவியை நான் உனக்குத் தருகிறேன். நல்ல காலம், நீ என்னிடம் வந்து சேர்ந்தாய்” என்றான் இராவணன்.

“என்னப்பா இது! உன் தந்தையைக் கொன்றவனாகிய பகைவனுக்கு ஏவல் செய்து, அவன் பின்னே தலையையும் சுமந்து கொண்டு, இரு கரங்களையும் தோங்கவிட்டுக் கொண்டு போகும் பேதை இவன் என்று உலகத்தார் உன்னைப் பார்த்துப் பரிகசிக்க மாட்டார்களா? நல்ல காலம் நீ என்னிடம் வந்து சேர்ந்தாய். சீதையை எனக்கு உரியவளாகப் பெற்றேன்; உன்னை என் புதல்வனாகவும் பெற்றேன். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?”

“அந்நரர் இன்று, நாளை அழிவதற்கு ஐயம் இல்லை

உன் அரசு உனக்குத் தந்தேன், ஆளுதி, ஊழி காலம்

பொன் அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி செய்ய

மன்னவன் ஆக, யானே சூட்டுவென் மகுடம் என்றான்”.

“நீ எந்த மானுடனுக்காக ஏவல் செய்பவனாக இங்கு வந்திருக்கிறாயோ அவன் இன்றோ அல்லது நாளையோ இறந்து போவது உறுதி, உனக்கு உன் தந்தை வாலியின் கிஷ்கிந்தை அரசை நானே உனக்குத் தந்தேன். சிங்கங்கள் சுமந்த அரசுக் கட்டிலில் நீ ஊழிக்காலம் அந்த தேவர்களும் போற்றி வணங்கும்படியாக ஆட்சி செய்து வருவாய், உனக்கு நான் கிஷ்கிந்தை அரசின் முடிசூட்டுகிறேன்” என்றான்.

இராவணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கைகொட்டி சிரித்தான் அங்கதன். “எனக்கு, நீ அரசு தருகிறாயா? நல்லதுதான். இங்கு உள்ள நீங்கள் எல்லோருமே பூண்டோடு அழியப் போவது நிச்சயம் என்று உணர்ந்து, உன் தம்பி விபீஷணன் எங்களிடம் வந்து சரணடைந்து விட்டான் என்பதை நீ

அறியமாட்டாயோ? வஞ்சனையான சொற்களைப் பேசி என்னை உன் பக்கம் இழுக்க நினைத்தால் உனக்கு ஏமாற்றமே மிஞ்சும். தூதனாக வந்தவன் எதிரி கொடுக்கும் பதவியை ஏற்றுக் கொள்வது எப்படிப்பட்ட துரோகம். அறமற்ற தூர்த்தனாகிய நீ கொடுப்பதை நான் பெற்றுக் கொள்வதோ, வலிமையற்ற நாய் கொடுப்பதை சிங்கம் ஏற்றுக் கொள்ளுமோ?” என்று அங்கதன் நகைத்தான்.

அங்கதன் கூறிய பதிலைக் கேட்ட இராவணன் கடுமையான கோபம் கொண்டான். என்னை மதிக்காத இந்த அங்கதனை ஒழிப்பேன் என்று சினம் பொங்கி எழுந்த இராவணன், பிறகு போயும் போயும் இந்த குரங்கைக் கொல்வதற்கு என் கையைப் பயன்படுத்தலாமோ? என்று கோபத்தை அடக்கிக் கொண்டு ‘நான் தர விரும்பிய அரச பதவியை வேண்டாம் என்கிறாய், நீ வந்த காரியத்தைச் சொல்’ என்றான். அங்கதன் சொல்கிறான்:

“கூவி இன்று என்னை, நீ போய் ‘தன் குலம் முழுதும் கொல்லும்

பாவியை, அமருக்கு அஞ்சி அரண்புக்குப் பதுங்கினானை,

தேவியை விடுக! அன்றேல், செருக்களத்து எதிர்ந்து தன்கண்

ஆவியை விடுக! என்றான், அருள் இனம் விடுகிலாதான்”.

இராமபிரான் என்னைக் கூவி அழைத்து, நீ போய், தனது அரக்கர் குலம் முழுவதும் அழிவதற்குக் காரணமாக இருக்கப் போகும் அந்த பாவி இராவணனைக் கண்டு, போருக்கு பயந்து அரண்மனைக்குள் பதுங்கிக்கொண்டிருப்பவனைப் பார்த்து, சீதாபிராட்டியை உடனே விடுவித்து இராமனிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு, இன்றேல் உடனே போர்க்களத்துக்கு வந்து இராமனை எதிர்த்துப் போரிட்டு உன் ஆவியை விடு, என்று சொல்லச் சொன்னான் இந்த நேரத்திலும் கூட அருளோடு அன்பு காட்டும் இராமபிரான் என்றான்.

இராமன் சொன்ன செய்தியை மேலும் தொடர்ந்து சொல்லுகிறான் அங்கதன். “உனது பாட்டியாகிய தாடகையைக் கொன்று பருந்துகளுக்கு உணவாக்கிய நேரத்திலும், மாமன் சுபாஹுவையும் அவனது படை வீரர்களையும் கொன்று குவித்த போதும், நாங்கள் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது, காமம் கொண்டு எம்மிடம் வந்த உனது தங்கை சூர்ப்பனகையின் செவி, மார்பு, மூக்கு இவற்றை என் தம்பி இலக்குவன் அரிந்து தண்டித்த போதும், எம் மீது போர் செய்ய வரவேண்டிய கடமை உனக்கு இருந்தும், எமக்கு அஞ்சி, போரிட வராமல் இருந்த உனக்கு எம்மை எதிர்க்கும் துணிவுகூட இருக்கிறதா என்ன?”

“காட்டில் கரன் முதலிய உன் தம்பிமார்களை நான் கொன்றது கண்டும், இலக்குவனை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சி, சீதைக்குக் காவல் இருந்த அவனை மாயையால் அங்கிருந்து நீங்கும்படி செய்துவிட்டு, சீதையைக் கோழைத்தனமாகக் கவர்ந்து சென்ற நீ போர் செய்ய வருபவனா என்ன?” என்று சொல்லும்படி சொன்னார் இராமபிரான்.

“கடல் கடந்து வந்து உனது இலங்கை நகரை அடைந்து, அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த சீதா பிராட்டியைப் பார்த்து விட்டு, எதிர்த்து வந்த அரக்கர்களையெல்லாம் கொன்று, உனது புதல்வனை தரையோடு தரையாகத் தேய்த்துக் கொன்றுவிட்டு, நகரையும் தீ வைத்துக் கொளுத்திவிட்டு மீண்டும் கடல் தாண்டி அனுமன் வந்த போது, போர் செய்ய முடியாதவன் இனிமேல்தான் போர் புரிய வரப்போகிறானா?” என்றும் கேட்டார் இராமபிரான்.

“உன் தம்பி விபீஷணனுக்கு இலங்கைக்கு அரசன் என்று முடிசூட்டிய போதும், அதை நிறைவேற்ற வானர சேனையுடன் கடலுக்குக் குறுக்கே அணைகட்ட முயன்ற நிலையில் வருணன் வந்து வணங்கிய போதும், உனது ஒற்றர்கள் பிடிபட்டபோதும், அவர்களைக் கொல்லாமல் விடுவித்து அனுப்பியபோதும், எமது ஆற்றலை உணர்ந்து போர்புரிய வெளியே வராத நீ, இனிமேல்தான் போர்புரிய வரப்போகிறாயா என்ன?” என்றும் கேட்கிறார் இராமபிரான்.

“முன்பு உன்னால் தோற்கடிக்கப்பட்டு ஆற்றல் அழிந்து போன தேவர்களும், உனது காதல் மகளிர் அருகேயிருந்து பார்த்திருக்க நேற்று சுக்ரீவன் உன் முடியில் இருந்த மணிகளைப் பறித்துக்கொண்டு வந்த போது போரிட முடியாத நீ இனிமேல்தான் போர் செய்யப் போகிறாயா? என்று கேட்கிறார் இராமபிரான்.

“இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்லிவிட்டு, நீ உன் சுற்றத்தாரோடு வாழ விரும்பினால் சீதா தேவியை உடனே கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விட்டு சரணாகதி அடைந்துவிடு. இல்லையேல் இப்போதே என்னுடன் புறப்படு. போருக்குத் தயாராக இருக்கும் எம் தலைவன் இராமபிரானோடு போரிட்டு உன் சுற்றத்தாரோடு அழியலாம்” என்றான் அங்கதன்.

“உலகின் எட்டு திசைகளையும் போரில் வென்ற பெரு வீரன் என்ற பெயர் பெற்ற நீ, உன் நகரத்தை மாற்றார் சேனை; வந்து வளைத்துக் கொண்டபோது போருக்குச் செல்லாமல், பயந்துகொண்டு உன் அரண்மனைக்குள் புகுந்து கொண்டால் உனக்கு பழியைத் தவிர வேறு என்ன கிடைக்கும்”. என்று இராவணனின் மனம் வேதனையடையும்படியாக எடுத்துச் சொன்னான் அங்கதன்.

அங்கதன் இப்படிக் கூறியவுடன், மிகக் கோபம் கொண்ட இராவணன் “காவலர்களே! உடனே இவனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்! இவனை தரையில் அடித்துக் கொல்லுங்கள்! என்று கட்டளையிட்டான். இராவணனின் கட்டளையைக் கேட்ட நான்கு வீரர்கள் அங்கதனைப் பிடிக்கப் பாய்ந்து வந்தனர். அப்படி வந்த அந்த நான்கு வீரர்களையும் ஒரே பிடியாக ஒருசேரப் பிடித்துத் தூக்கிக் கொண்டு வானத்தின் மீது பறந்தான் அங்கதன். அப்படி வானத்தில் பறந்து செல்லுங்கால் அந்த நான்கு வீரர்களைப் பிய்த்து அவர்கள் தலைகள் கோட்டை வாயிலில் விழும்படி தூவிவிட்டு, அதனைக் காலால் நன்கு தேய்த்துவிட்டு, போருக்கு அறைகூவல் விடுக்கிறான்.

“ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத்

தாவினான், அவர் தம் தலை போய் அறக்

கூவினான், அவன், கோபுர வாயிலில்

தூவினான், துகைத்தான், இவை சொல்லினான்.”

“இலங்கை நகரத்து மக்களே! இராமபிரான் போருக்கு வந்து விட்டார். அவரது அம்புகள் இந்த நகரத்தைச் சுட்டெரிப்பதற்கு முன்பாக, எல்லோரும் பிழைத்துப் பாதுகாப்பாக ஓடிப் போய்விடுங்கள்.” என்று அறிவித்துவிட்டு வான வெளியில் ஏறிச் சென்று இராமபிரான் இருக்குமிடம் சென்று அவன் பாதங்களை வணங்கினான்.

அங்கதனைப் பார்த்து இராமபிரான், இராவணனைப் பார்த்துப் பேசினாயா? அவன் என்ன சொன்னான் என்று கேட்டார். அதற்கு அங்கு நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் அங்கதன் எடுத்துரைத்தான். அவன் சொன்ன அனைத்தையும் சொல்லி என்ன பயன்? அவன் தலைகள் அறுபட்டு விழப் போகிறதேயன்றி, அவன் கொண்ட ஆசையை விட்டபாடில்லை. வேறு என்ன சொல்வது” என்றான் அங்கதன்.

அங்கதன் இராவணனிடம் தூது சென்றதையும், அங்கு நடந்தவை அனைத்தையும் அவன் இராமனிடம் சொன்னதையும், இனி நடக்கப் போவது பெரும் போரேயன்றி சமாதானம் அல்ல என்று அனைவரும் அறிந்து கொண்டனர். இந்த உணர்வை எதிரொலிப்பதுபோல நாலாபுறத்திலுமுள்ள பாசறைகளிலிருந்து முரசுகள் முழங்கத் தொடங்கின. அவை ‘போர் போர்’ என்பது போல ஓசை எழுப்பின. முதல் நாள் போர் தொடங்கியது.

இலங்கை நகரைச் சுற்றியுள்ள அகழிகளை, முன்பு கடலைத் தூர்த்து சேதுவைக் கட்டியது போல, மரங்களையும், பாறைகளையும் கொண்டு வந்து போட்டு மூடிவிடுங்கள் என்று வானரப் படைக்கு இராமபிரான் ஆணையிட்டார். அவரது உத்தரவுப்படி வானர வீரர்கள் இலங்கை நகரத்தின் நாலா புறத்திலுமுள்ள அகழிகளைத் தூர்த்தனர். வலிமை மிக்க இராவணன் அகழியை எளிய வானரர்கள் தூர்த்தது, வலிமையும், செல்வமும் ஓர் இடத்துக்கு நிரந்தரம் அல்ல, மாறக் கூடியதே என்பதை விளக்கும்படியாக இருந்தது.

அகழியைத் தூர்த்தபின் வானரப் படை, கோட்டை மதிலின் உச்சிக்கு ஏறிச்சென்று ஆரவாரம் செய்யத் தொடங்கின. இவர்கள் அங்கு செய்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கோட்டை மதிற்சுவர்கள் தரையில் அழுந்தின.

அதே நேரத்தில் இலங்கை நகரத்துக்குள் அரக்கர் படையும் போருக்கு எழுந்தன. முரசுகள் முழங்கின. ஊது கொம்புகள் ஒலித்தன. யானை குதிரைகள் இவற்றின் கழுத்திலிருந்த மணிகள் ஒலி எழுப்பின. இரு புறத்துப் படைகளும் ஒன்றுக்கொன்று நேரெதிராக நின்று மோதத் தொடங்கின. வானரப் படைவீரர்கள் மரங்களையும், கற்களையும், தத்தம் பற்களையும் ஆயுதமாகக் கொண்டு போர் புரிந்தனர். அரக்கர்கள் வில், அம்பு, வேல், மற்ற பல கொடிய படைக் கலன்களைக் கொண்டு போர் செய்தனர். இரண்டு புறத்திலும் மிகக் கடுமையாகப் போர் நடந்தது.

வானர வீரர்கள் வீசிய கற்களையும், மரங்களையும் அரக்கர்களது அம்புகள் பொடித்தன. மலை மேல் நின்று கொண்டு வானரர்கள் வீசிய மலைகளும் பாறைகளும் அரக்கர்களை நசுக்கிக் கொன்றன. காணுமிடங்களில் எல்லாம் பிணங்களும், இரத்த வெள்ளமுமாகக் காட்சி அளித்தது. தாங்கள் வீசிய மரங்கள் செயலிழந்த நிலையில் வானர வீரர்கள் பற்களாலும், கைகளாலும் அடித்து அரக்கர்களைக் கொன்றனர். அரக்கர்கள் வீசிய தண்டங்களாலும், செலுத்திய அம்புகளாலும் பல்லாயிரக் கணக்கில் வானர வீரர்கள் மாண்டு போயினர்.

இலங்கை நகரத்தின் மதில்கள் இரத்தக் கறை பட்டு சிவந்த நிறமாக மாறின. பெருக்கெடுத்தோடும் குருதி வெள்ளம் கடலில் போய் சங்கமமாகியது. பிரளய காலத்தில் கடல் வெள்ளம் மேரு மலையின் உச்சிக்குச் சென்று பிறகு வடிவது போல வானரப் படை பெரிய மதிலில் ஏறிப் பின் தரையில் இறங்கி போரிட்டன. அரக்கர் படை தாங்கள் அம்பும், வேலும் வீசுவதற்கு ஏற்ற இண்டு இடுக்குகளில் எல்லாம் நின்று கொண்டு போரிட்டனர்.

பெருக்கெடுத்து ஓடும் இரத்த வெள்ளத்தில் அரக்கர்களும், வானரர்களும் நீந்திச் சென்றனர். சிலர் பிழைத்துக் கரை ஏறினர். சிலர் அடித்துச் செல்லப்பட்டு மாண்டு போயினர். கடலில் அலைகள் எழுப்பும் ஒலிக்கும் மேலாக போர்க்களத்தில் எழும் முரசங்களின் ஒலியும், மத்தள ஒலியும், முரலுகின்ற சங்கின் ஒலியும், எக்காள ஒலியும், ஆகுளி எனும் சிறு பறையொலியும் மேலெழுந்து ஒலித்தன. இலங்கையின் நான்கு கோபுர வாயில் வழியாகவும் வெள்ளம் போல அரக்கர் படை புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.

யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை இவை ஒருமிக்க எழுந்தபோது புழுதிப் படலம் வானுயர எழுந்தது. அரக்கர் சேனையின் பெரும் பலத்துக்கு முன்பாக தாக்குப் பிடிக்க முடியாமல் வானர சேனை சிதறி ஓடியது. இதனைக் கண்டு கடும் கோபமடைந்த சுக்ரீவன் ஓர் பெரிய கடம்ப மரத்தை வேரோடு பிடுங்கிக் கொண்டு போர் செய்யலானான். அரக்கர்களின் நானாவிதப் படைகளையும் தன் கை மரத்தால் தாக்கி அதாஹதம் செய்தான்.

போர்க்களத்தில் பேய்க்கணங்கள் ஆடியும், பாடியும் களித்துக் கொண்டாடின. தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்று ஆடுகின்றன. கற்புடை மாதர்கள் களத்தில் மாண்ட தத்தமது கொழுனனைத் தேடி அலைந்தனர். அரக்கர்கள் தோல்வி முகத்தில் இருப்பதைக் கண்ட கொடிய அரக்கன் வச்சிரமுட்டி என்பான், கண்களில் தீப்பொறி பறக்க, பருந்துக் கூட்டம் பின் தொடரத் தன் தேரில் ஏறி, கடலைக் கிழித்துக் கொண்டு வரும் கப்பல் போல வந்து சேர்ந்தான்.

வச்சிரமுட்டி செய்த கடுமையான போரில் வானரங்கள் அழிந்து போயின. இந்திராதி தேவர்கள் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர். தன் படை வீரர்கள் மடிந்து போவதை சுக்ரீவனும் மனம் நொந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான். இதனால் கடும் கோபம் கொண்ட சுக்ரீவன் அந்த வச்சிரமுட்டியின் தேர் மீது பாய்ந்தான். பாய்ந்து அவனது வில்லையும், அம்புறாத் தூணியையும் அறுத்து எறிந்து விட்டு வச்சிரமுட்டியையும் கொன்று போட்டான். வச்சிரமுட்டி இறந்ததும், அரக்கர் படை நிலை குலைந்து ஓடத் தொடங்கியது. வானரர்கள் இதனைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.

இது இங்ஙனமிருக்க, இலங்கையில் கிழக்கு வாயிலில் அரக்கர் படை வந்து குவிந்தது. சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம், வாலம், வாளி முதலான ஆயுதங்களால் தாக்கி வானர வீரர்களைக் கொன்றனர். பதிலுக்கு வானர வீரர்கள் வீசிய குன்றுகளாலும் பெரிய மரங்களாலும் அரக்கர்கள் மாண்டு வீழ்ந்தனர். அப்போது நெருப்பின் மகனான வானரப் படை தளபதி நீலன் பெரிய கடம்ப மரத்தைப் பிடுங்கிக் கொண்டு அரக்கர் படை மீது வீசினான். அரக்கர்கள் பக்கம் தேர்களும், குதிரைகளும், அரக்க வீரர்களும் அடிபட்டு மாண்டு வீழ்ந்தனர். வெறி கொண்டு தாக்கும் நீலனை எதிர்க்க கும்பானு எனும் அரக்க வீரன் வந்து சேர்ந்தான். அப்போது இடும்பன் எனும் கரடிப்படை வீரன் கும்பானுவை எதிர்த்துத் தாக்கத் தொடங்கினான். இருவருக்கும் கடும் யுத்தம் நடந்தது. நீண்ட நேர யுத்தத்துக்குப் பின், கும்பானு எனும் அரக்கனை இடும்பன் தன் கைகளால் பிடித்து, அவன் தலையைத் தன் வாயால் கடித்து துண்டாக்கி அவனைக் கொன்றான்.

அரக்கர் படை தோற்பதைக் கண்ட சுமாலியின் மகன் பிரஹஸ்தன், போர் புரியத் தொடங்கினான். இதைக் கண்டு வானரப் படைத் தலைவன் நீலன் ஒரு பெரிய மலையை எடுத்து வீச, அது பிரஹஸ்தன் விட்ட அம்புகளால் பொடிப்பொடி ஆகிக் கீழே விழுந்தது. நீலன் சளைக்காமல் மீண்டும் மரங்களைப் பிடுங்கி பிரஹஸ்தனின் தேர், வில், கொடி முதலியனவற்றை அறுத்தெறிகிறான். நீலனும், பிரஹஸ்தனும் தரையில் இறங்கி நேருக்கு நேர் போர் புரியத் தொடங்கினர். நீலன் பிரஹஸ்தனை வானத்தில் தூக்கி எறிந்தான். கீழே விழும் முன்பாக பிரஹஸ்தன் நீலனைத் தன் கதையால் தாக்க, நீலன் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான், அவன் முகத்திலிருந்து குருதி கொட்டியது. அதோடு அவன் நீலன் மார்பில் குத்த வரவும், நீலன் திரும்ப குத்தினான். அடடா! இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த போரை எங்ஙனம் வர்ணிப்பது?

பிறகு நீலன் பிரஹஸ்தனை இரு புறமும் வாலினால் சுற்றி தோளிலும், மார்பிலும் நெற்றியிலும் மாறி மாறி குத்தினான். பிரஹஸ்தன் உயிர் இழந்து பெரிய மலை விழுந்தது போல விழுந்து இறந்தான். இந்த போரைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், பிரஹஸ்தன் மாண்டு விழுந்ததும் “இறந்து விழுந்தனனே பிரஹஸ்தன்” என்று ஆவலம்* கொட்டினர். (ஆவலம் = வியந்து ஆரவாரம் செய்தல்). அரக்கர்கள் வெருண்டு ஓடித் தத்தமது ஊருக்குள் ஓடி ஒளிந்தனர். இங்ஙனம் கிழக்கு வாயிலில் போர் நடந்து கொண்டிருக்க, தெற்கு வாயிலில் அங்கதன் நடத்திக் கொண்டிருந்த போரைச் சிறிது பார்ப்போம்.

கோட்டையின் தெற்கு வாயிலில் அங்கதனை எதிர்த்து சுபாரிசன் எனும் அரக்கன் போரிட்டான். அங்கதனுடைய தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், அந்த சுபாரிசன் போர்க்களத்தில் இறந்து வீழ்ந்தான். தங்கள் படைத்தலைவன் சுபாரிசன் இறந்த செய்தி கேட்டு அனைத்து அரக்கர் படை வீரர்களும் ஓட்டம் பிடித்தனர்.

அதே நேரம், நகரத்தின் மேற்கு வாயிலில் மேலோன் அனுமன், துன்முகன் எனும் அரக்கனையும் அவனது நூற்றிரண்டு வெள்ளச் சேனைகளையும் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். அனுமன் தன் கைகளால் விட்ட குத்தில் ஏராளமான அரக்கர்கள் மேல் உலகம் விரைந்தனர். நான்கு வாயில்களிலும் நடந்த போரைப் பற்றி தூதுவர்கள், இராவணனிடம் போய்ச் சொல்லுகிறார்கள்.

கிழக்கு வாயிலில் பிரஹஸ்தன் மாண்டுபோனதையும், தென் திசையில் சுபாரிசன் இறந்த செய்தியையும், வடக்கு வாயிலில் வச்சிரமுட்டியும், மேற்கு வாயிலில் துன்முகனும் மாண்ட செய்திகளைத் தூதுவர்கள் வந்து சொல்ல, இராவணன் சினத் தீ மூள, கண்களில் தீப்பொறி பறக்க, ஒன்றும் பேசாமல் பெருமூச்சு விட்டான்.

“பிரஹஸ்தனைக் கொன்றவன் யார்?” என்று இடி இடிப்பதைப் போலக் கேட்டான் இராவணன்.

“பிரஹஸ்தனின் நெற்றியில் அடித்து அவனைத் துடிதுடிக்கக் கொன்றவன், வானரப்படைத் தலைவன் நீலன்” என்றனர் தூதர்கள். பிரஹஸ்தனோடு சென்றவர்களில் மீண்டவர் நாங்கள் மட்டுமே என்றனர்.

“ஆஹா! எப்பேர்ப்பட்ட ஆயுதங்களை உடையவன் பிரஹஸ்தன். அவனை வெறும் மரங்களைக் கொண்டு போர் புரியும் குரங்குகள் கொன்றனவா?” என்று மனம் புழுங்கினான் இராவணன். “இந்திரனை வென்று வீழ்த்திய பிரஹஸ்தனை ஒரு சிறிய குரங்கா கொன்றது? இந்தச் செய்தியே என் செவிகளைச் சுட்டது. அது மேலும் என் நெஞ்சையும் சுட்டதே” என்று வருந்தினான் இராவணன்.

கோபம் தலைக்கேறிய இராவணன் தானே போர்க்கோலம் பூண்டு ஒரு தேரின் மீது ஏறினான். அந்தத் தேர் ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேர். கடல் ஒலி போல அதிரும்படி ஓசை எழுப்பும் தேர் அது. தேவர்தம் விண்ணுலகுக்கும் சென்று வரும் வலிமை பெற்றது. இந்திரன், முன்பு போரில் தோற்றபோது இராவணனுக்குக் கொடுத்த தேர் அது. தான் வழிபடுகின்ற ருத்ரனை மனதால் எண்ணி, உடம்பால் வணங்கி, தன் வில்லை கையிலே எடுத்து, நாணின் ஒலியை எழுப்பினான். சிறந்த படைக்கலன்களைத் தேடி எடுத்துக் கொண்டான். மார்பில் கவசம் அணிந்தான். தும்பைப்பூ மாலையை கழுத்தில் அணிந்து கொண்டான்.

அவன் தலைக்கு மேல் வெண்கொற்றக் குடையைப் பிடித்துக் கொண்டனர். இருபுறமும் கவரி வீசினர்; முரசுகள் முழங்கின; கடல் சிதற தேவர்கள் உடல் நடுங்க, அண்ட முகடு வெடிக்க, சங்குகள் முழங்க இராவணன் முதல் நாள் போருக்குப் புறப்பட்டான். அவனது தேரின் மீது வீணைக் கொடி பறந்து கொண்டிருந்தது. தேவர்கள் மனம் கலங்கினர். இராவணனது கண்கள் சினத்தால் சிவந்து புகை கக்கின. இந்தக் கோலத்தில் இராவணன் போர்க்களம் புகுந்தான்.

பெரும்படையோடும், கடும் சினத்தோடும் இராவணன் போருக்குப் புறப்படும் செய்தியை ஒற்றர்கள் இராமனிடம் சென்று தெரிவித்தனர். இராமன் போர் என்றதும் தோள் பூரித்து எழுகிறான். போர்க்கோலம் பூண்டு, வில்லையும், அம்புறாத் தூணியையும் கட்டிக் கொண்டு, தும்பை மாலை சூடிக் கொண்டு புறப்பட்டான். இலக்குவனும் இராமனோடு எழுந்து போர்க்கோலம் பூண்டு இராவணனைப் போர்க்களத்தில் சந்திக்கத் தயாராகிறான். இரு புறத்திலும் அரக்கர் சேனையும், வானர சேனையுமாக எதிரும் புதிருமாக போருக்குத் தயாராக நின்றனர். போர் தொடங்கியது. இரு புறத்திலும் மிகக் கடுமையான போரில் வீரர்கள் ஈடுபட்டனர், காரணம் ஒரு புறம் இராமனே படைகளுக்குத் தலைமை வகித்துப் போரிடுவதும், எதிர்ப்புறம் இராவணன் தன் அரக்கப் படைகளோடு மிக உக்கிரமாக வந்து போரில் ஈடுபட்டிருப்பதுமே.

இந்தப் போரில் வானர சைன்யம் மிகக் கடுமையாகப் போர் புரிந்தது. வடக்கு எது, தெற்கு எது என்று திக்கு திசை புரியாத அளவில் போர் மிகக் கடுமையாக நடைபெற்றது. ஒரு புறம் பொற்குவியல் போல வானர சைன்யம், மறுபுறம் கருங்கல் குவியல் போல அரக்கர் சைன்யம், இரண்டும் மோதிய மோதலில் கொத்துக் கொத்தாக மாண்ட வீரர்களின் பிணக் குவியல் ஆங்காங்கே காணப்பட்டது. இராவணன் தனது வில்லில் நாணேற்றி எதிரிகள் மீது அம்பு மழை பொழியத் தொடங்கினான். அப்போது சுக்ரீவன் அங்கே வந்து இராவணனுடன் போர் புரியத் தொடங்குகிறான். இருவருக்கும் மிகக் கடுமையான யுத்தம் நடக்கிறது. இராவணனுடைய கடுமையான தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சுக்ரீவன் சற்று தளர்ச்சி அடைகிறான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த மாருதி உடனே அங்கு வந்து சேருகிறான்.

மேற்கு வாயிலில் இருந்த மாருதி, வடக்கு வாயிலுக்கு நொடிப் பொழுதில் வந்து சேர்ந்தான். எம் மன்னன் தெளிந்து எழுவதற்கு முன் இராவணா! வா! என்னோடு போரிடு! என்று அறைகூவல் விடுத்தான். அப்படிச் சொல்லிக் கொண்டே ஒரு பெரிய மலையைப் பெயர்த்து எடுத்து இராவணன் மீது வீசினான். அதை இராவணன் ஓர் அம்பால் அடித்துத் தூள்தூளாக்கினான்.

அனுமன் மீண்டும் ஒரு மலையைப் பெயர்த்து எடுத்து வலிமையோடு இராவணன் மீது வீசவும், அது மேலும் வேகம் எடுத்து இராவணன் அதைத் தடுக்கும் முன்பாகவே அவனது தோளைத் தாக்கி அவன் அணிந்திருந்த ‘வாகுவலயம்’ என்ற கவசத்தைப் பொடிப்பொடியாக்கியது. இதனால் கடும் கோபம் கொண்ட இராவணன், மறுபடியும் ஒரு மலையைப் பெயர்த்துக் கொண்டிருந்த அனுமன் மீது தொடர்ந்து பத்து அம்புகளைச் செலுத்தினான். அது அவன் கைகள், தோள், மார்பு இவற்றில் புகுந்தது, எனினும் அனுமன் அவற்றைப் பொருட்படுத்தாது போர்புரிந்தான்.

இராவணன் விட்ட அம்புகள் அனுமன் உடலில் பாய்ந்து நிற்க, சற்றும் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்ததைக் கண்டு தேவர்கள் “யார் இதனை நிகழ்த்த வல்லார்?” என்று மகிழ்ந்து நோக்கினார்கள். அனுமன் ஒரு வெண் கடம்பு மரத்தைப் பிடுங்கி எடுத்து சுழற்றி இராவணன் மீது எறிந்தான். அந்த மரம் இராவணனது தேர்ப்பாகனை வீழ்த்தி, பல அரக்கர்களையும் கொன்று போட்டது. இறந்த பாகனுக்குப் பதிலாக வேறொரு தேரோட்டி உடனே தேரில் ஏறி அமர்ந்து தேரை ஓட்டத் தொடங்க, இராவனன் நூறு அம்புகளை அனுமன் மீது விட்டான். அவை உடலைத் துளைத்ததால், அனுமன் வேதனை அடைந்தான்.

“கற்களாலும், மரங்களைக் கொண்டும், வெறும் கையாலும் போரிடுகிறீர்களே என்று பொறுத்தேன், இனி என் கையில் வில் எடுத்தால் நீங்கள் தாங்குவீர்களோ?” என்றான் இராவணன்.

இப்படிச் சொல்லிவிட்டு ஆயிரம் கோடி அம்புகளை ஒன்றையொன்று விஞ்சுமாறு இடிபோல தாக்கத் தொடங்கினான். வானரப் படை காற்றால் அடித்த கடல் போல சிதறியோடியது. இராவணனது வில்வித்தையைக் கண்ட இலக்குவன், இவனை என் அம்புக்கு இலக்கு ஆக்குவேன், தடுக்கிறேன் இப்போதே என விரைந்து வந்தான். தன் வில்லின் நாணை இழுத்து ஒலி எழுப்பினான். ஊழிக் கால மழையின் இடி என உலகம் அஞ்சியது. அரக்கர்கள் நிலையைக் கேட்கவும் வேண்டுமோ?. இராவணன் இந்த ஒலியைக் கேட்டதும் “இது என்ன?” மனிதன் எழுப்பும் ஓசையா இது? என்று வியந்து போனான்.

இலக்குவன் வில்லின் நாணை இழுத்து அம்புகளை மழை போல செலுத்தினான். அவை சரமாரியாக அரக்கர்கள் மீது விழுந்து பேரழிவை ஏற்படுத்தின. எங்கு பார்த்தாலும் குருதியாறு பெருக்கெடுத்து ஓடியது. அரக்கர் சேனையும் இலக்குவனைச் சூழ்ந்து கொண்டு திருப்பித் தாக்கத் தொடங்கியது. இவன் நம் அரசன் இராவணனை நெருங்கி விடக்கூடாது என்று உறுதிகொண்டு போராடினர். அரக்கர்கள் பெய்த அம்பு மழையை எதிர்த்துத் தன் அம்பு மழையால் அவற்றை அறுத்துத் தள்ளினான் இலக்குவன். அதையும் மீறி வந்து தாக்கிய அம்புகளைத் தன் உடலில் தாங்கிக் கொண்டான். சண்டமாருதம் போல இலக்குவன் வில்லினின்றும் புறப்பட்ட அம்புகள் அரக்கர்களை அழித்து ஒழிக்கவும், இராவணன் கடும் கோபத்துடன் தன் தேரை விரைந்து செலுத்தி இலக்குவன் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான். எமனைப் போல வெறி கொண்டு அரக்கர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த இலக்குவன் இடம் பெயறாது கடும் சினத்துடன் நின்றான். இராவணன் தனக்கு முன்னால் கொண்டு வந்து தேரை நிறுத்தியதைக் கண்டதும் இலக்குவன் கோபம் அதிகமாகியது.

“சீதையைக் காவல் புரிந்த என்னை வஞ்சனையால் நீக்கி அன்னையைச் சிறை எடுத்த கள்வனே! இன்று நீ என்னிடமிருந்து தப்பிப் போக முடியாது” என்று சொல்லிக்கொண்டே போர் செய்தான்.

இலக்குவன் விட்ட அம்புகளை இராவணன் செயலிழக்கும்படி செய்தான். இலக்குவனின் அம்புறாத் தூணியையும் இராவணன் அறுத்துத் தள்ளினான். அப்போது அருகில் இளைப்பாறிக் கொண்டிருந்த அனுமன் “தீ எழ விழித்து” “இராவணா! இனி பொய்யான போர்களைச் செய்யாதே” என்று சொல்லிக் கொண்டே தேருக்கு எதிரே வந்து நின்று “நீ பின்னே செய்ய வேண்டிய போர் நிறைய இருக்கிறது. இப்போது நான் சொல்வதைக் கேள்!” என்றான்.

இப்படிச் சொல்லிக் கொண்டு இராவணனுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும்போதே அனுமன் தனது விஸ்வரூபத்தை எடுத்து, வானுக்கும் பூமிக்குமாக நின்றான். அவன் இராவணனைப் பார்த்து “வா! இராவணா! வா! வந்து என் முன்னால் என்னை எதிர்த்து நில்!” என்றான். இராவணனும் அங்ஙனமே துணிவோடு அவன் எதிரில் நின்றான்.

“இராவணா! உன் வீரத்தையும், புகழையும், ஆண்மையையும் ஒரே குத்தினால் இப்போதே ஒழித்து விடுகிறேன். குரங்கு ஒரு கையால் விடும் குத்தினை வலிமை குன்றாமல் தாங்குவாயோ?” என்றான்.

“இராவணா! என் தோள் வலிமையால், நான் உன்னை ஓங்கி ஒரு குத்து விடுகிறேன். அதன் பின்பும் நீ இறக்காமல் இருப்பாயானால், நீ உன் வலிய கரங்களால் என் மீது குத்துவாயாக! அவ்வாறு நீ குத்தினாலும் நான் இறவேன். ஆனால், அதன் பிறகு உன்னுடன் நான் எதிர்த்துப் போர் புரிய மாட்டேன்” என்றான் அனுமன்.

இப்படி அனுமன் சொன்னதும் மகிழ்ந்து இராவணன் “வெற்றியுடைய அனுமனே! ஒரு வீரனுக்கு ஏற்ற சொல்லினைச் சொன்னாய். தனி ஒருவனாக எனக்கு எதிராக நிற்க உன்னைத் தவிர வேறு யாரால் முடியும்? உன் புகழ் உலகத்தையே சிறியதாக ஆக்கி விட்டதப்பா!” என்று அனுமனைப் புகழ்ந்தான்.

“அஞ்சநேயா! உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லை. தன்னந்தனியனாய் உள்ள நீ என் உறவினர்களைக் கொன்று ஒழித்தாய். தேரில் ஏறி கொடிய ஆயுதங்களோடு வந்திருக்கிற எனக்கு எதிராக வந்து நின்றுகொண்டு, என்னைப் போருக்கு அழைக்கிறாய். உன் வீரத்துக்கு யாரும் நிகர் ஆகமாட்டாரப்பா!” என்றான் இராவணன்.

“நின்ற இடத்தில் அசையாமல் நின்று, என் மார்பில் குத்து என்கிறாயே. என்னப்பா உன் துணிவு. சொல்லும் தரமன்று!. இவ்வளவு துணிச்சலோடு நீ வந்து நின்ற பின்னும் உனக்குக் கிடைக்க வேண்டிய வெற்றி வேறு என்ன இருக்கிறது. இனி போர் செய்வதும் தேவையில்லை. சூளுரைத்து எனக்கு இவற்றைச் சொன்னாய். காலம் ஓடுகிறது. பேசி என்ன பயன்? இதனால் எனக்குப் பழி ஏற்படினும் அதற்காக நான் வெட்கப்படப் போவதில்லை. ஏனெனில் நீ ஒரு மாபெரும் வீரன். ஆண்மையாளன். வா! உலகமே காணும்படி என் மார்பில் கடுமையாகக் குத்து” என்றான் தீவினைகளை விட்டு நீங்காத இராவணன்.

அனுமன் இராவணனிடம் “உன் வீரத் திறம் சிறப்புடையது” என்று வியந்து பெரிய ஆரவாரம் செய்து கொண்டே, கண்களை அகல விரித்து, தீப்பொறி எழ இராவணனின் கவசமணிந்த உடல் சிதறிப்போகும்படி, வைரம் போன்ற தன் கையால் இராவணனின் விரிந்த மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

அந்தக் குத்தின் விளைவாக, பெரிய பெரிய மலைகள் எல்லாம் சிதறி உடைந்து விழுந்தன. இராவணன் கண்கள் நெருப்பைச் சிந்தின. அவன் பத்துத் தலைகளின் மூளைகள் தயிர் போல கீழே சிந்தின. அரக்கர்கள் அதிர்ச்சியால் உயிரை விட்டர்கள். வானர வீரர்கள் அதிர்ந்து போய் மயிரையும், பற்களையும் உதிர்த்தனர். மேகங்கள் நிலை குலைந்து மழையைப் பொழிந்தன. அந்த அதிர்ச்சியால் வில்லில் பூட்டப்பட்ட நாண்கள் உதிர்ந்தன. கடல் நீர் கரை தாண்டி உட்புகுந்தது. மலைகள் கற்களை உதிர்த்தன. திசையானைகளின் பற்கள் சிதறி விழுந்தன. வீரர்கள் கையில் பிடித்த ஆயுதங்கள் நழுவி விழுந்தன. இராவணன் மார்பில் நெருப்பு எழுந்தது”.

“கைக்குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறை நீர்

மைக்குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிரத் தடமார்பில்

திக்கில் சின மதயானைகள் வய வெம்பணை செருவில்

புக்கு இற்றன, போகாதன புறம் உக்கன புகழின்”.

அனுமன் தனது கை முஷ்டியை மடக்கி இராவணன் மார்பில் விட்ட குத்தானது, அவன் மார்பில் விழுந்த மாத்திரத்தில், முன்பு திசை யானைகளோடு (அஷ்ட திக் கஜங்கள்) மோதி அவற்றின் தந்தங்கள் ஒடிந்து அவன் மார்பில் தங்கிவிட, அவை இப்போது அனுவன் விட்ட குத்து விழுந்த வேகத்தில், பின் புறமாக முதுகைத் துளைத்துக் கொண்டு பொலபொலவென கீழே விழுந்தன. இராவணன் தலை சுற்றித் தள்ளாடினான். இதனைக் கண்டு வானர வீரர்கள் ஆர்த்தனர். உயிர் அவன் உடலைவிட்டுப் பிரிந்து சென்று மீண்டும் அவனுள் சேர்ந்தாற் போன்ற உணர்வினைப் பெற்றான் இராவணன்.

பிறகு சுய உணர்வு திரும்பப் பெற்ற இராவணன் “உனக்கு ஒப்பானவர் எவரும் இல்லாதவனே! இதுவரை நான் அடைந்திராத துன்பத்தை நான் இன்று அடையச் செய்து விட்டாய். இப்போது என் முறை, ஆகையால் வா! என் குத்தை வாங்கிக் கொள்” என்றான்.

“உலகில் எனக்கு நிகரான வலிமை யாரிடமாவது இருக்கிறதெ என்றால், ஆம்! அது உன்னிடம் இருக்கிறது. உலகில் உனக்குப் புறம்பாய் இருப்பவர் ஆண்மையற்றவர் எனும்படியான திறன் படைத்தவன் நீ. பிரம்மனே சாபமிட்டு என் வலிமையைக் குறைத்தாலும் குறைவடையாத என் வலிமை இப்போது உன்னால் தளர்ச்சி அடைந்து விட்டது. நீ வேற்றி உடையவன்” என்று இராவணன் அனுமனைப் பாராட்டினான்.

இராவனன் மேலும் தொடர்ந்து சொல்கிறான் “இப்போது நான் உன் மார்பில் குத்தவும், நீ மாளாது இருப்பாயானல், நினக்கு ஒப்பானவர் உலகில் எவரும் இல்லை. நினக்கு பகை ஒருவரும் இல்லை. இன்றும், என்றும் நீ நிலைத்து இருப்பவன் ஆவாய்!”.

இப்படிச் சொல்லிக் கொண்டே இராவணன் அனுமன் முன் சென்று நின்றான். “என் குத்தில் உயிர் பிழைத்தாய் என்பதே நீ வென்றாய் என்று பொருள்” என்று சொல்லிக்கொண்டே அனுமன் “இந்தா! உன் கடனைக் கொள்க!” என்று தன் மார்பைக் காட்டினான்.

இராவணன் தன் பிலம் போன்ற வாயை மடித்துக் கொண்டு, ஒளி வீசும் பற்களால் இதழைக் கடித்துக் கொண்டு, கண்களில் தீப்பொறி பறக்க, தன் விரல்களை பலமாக மடித்துக் கொண்டு, கையைப் பின்னே தள்ளி குறுக்கி, தோள்புறத்தை நிமிர்த்திக் கொண்டு, விட்டான் ஒரு குத்து அனுமன் நெஞ்சில்.

அப்போது பூமியே பிளந்து பெயர்ந்தாலும் நடுங்காதவனும், வலியவர்களுக்கெல்லாம் வலியவனான அனுமன், வெள்ளிப் பனி மலை தளர்ந்தது போலத் தளர்ந்தான். எதற்கும் தளராத அனுமன் இராவணன் விட்ட குத்தில் தளர்ந்ததைக் கண்ட தேவர்கள் நடுங்கினர். தர்மம் தளர்ந்தது; வாய்மை தளர்ந்தது; மேன்மை குணங்கள் தளர்ச்சியுற்றன; புகழும் சுருதிகளும் சோர்வுற்றன; நீதிகளும் தளர்ந்தன; கருணையும் தவமும் சோர்வுற்றன. போர் மட்டும் தொடர்ந்து நடந்தது.

வானர வீரர்கள் பாறைகளையும், கற்களையும் எடுத்து அரக்கர்கள் மீது பொழிய அவற்றை இராவணன் தன் அம்பினால் பொடியாக்கினான். இராவணன் போர் புரிதலைக் கண்டு இமையவரும் வியந்து போனார்கள். இக்கணமே இவ்வானரக் கூட்டத்தை அழிப்பேன், இரு மானிடரையும் கொல்வேன் என்று இராவணன் கோபம் கொப்பளிக்க, பத்து வலிமையுள்ள நீண்ட விற்களைத் தன் கரங்களில் ஏந்தி வில்லை ஒருசேர வளைத்துச் சுடுசரங்களை எய்தான். பத்து விற்களிலும் ஆயிரம் அம்புகளைப் பத்து கைகளாலும் விரைவுடன் தொடுத்து எய்ததனால் எங்கும் அம்புகளாகவே சீறிக்கொண்டு சென்றன. வானர வீரர்கள் வரிசை வரிசையாக மடிந்து வீழ்ந்தனர். அவர்களுடைய பிணங்கள் போர்க்களம் முழுவதும் மலையாகக் குவிந்தன.

இராவணன் எய்த அம்பு தாக்கியதால் வானர படைத்தலைவன் நீலன் மயங்கி வீழ்ந்தான். அனிலன் என்ற வீரன் நிற்க முடியாமல் சாய்ந்தான். கவயன் என்ற வானர வீரன் இறக்கும் தருவாயில் மயங்கிக் கிடந்தான். நஞ்சனைய அம்புகள் தாக்கி அங்கதனும் சோர்ந்து போனான். ஜாம்பவான் சூலம் போன்ற ஒரு ஆயுதம் தாக்கி கீழே விழுந்து கிடந்தான். இந்த காட்சிகளையெல்லாம் கண்ட இலக்குவன் வெகுண்டு எழுந்தான். தன் கை வில்லை எடுத்தான், அம்புகளை அதில் தொடுத்து இராவனன் விட்ட அம்புகளைத் தகர்த்து எறிந்தான். ஓர் அம்பினால் இராவணன் கை வில்லை அறுத்தெறிந்தான்.

இலக்குவனின் வீரம் செறிந்த போரைப் பார்த்து இராவணன் அவனைப் புகழ்ந்து “நினது போர் வலிமை நன்று! போரைக் கையாளும் வலிமையும் நன்று! நின் வீரமும் நன்று! நின் வீரப் பார்வையும் நன்று! அம்பு தொடுக்கும் உன் கையின் விரைவும் நன்று! நின் வில்லின் கல்வியும் நன்று! நினது ஆண்மையும், அழகும் நன்று!” என்று இராவணன் இலக்குவனைப் புகழ்ந்துவிட்டு “நீ ஒப்பற்றவன்” என்று புகழ்ந்தான். “லக்ஷ்மணா! காட்டில் கரனை அழித்த இராமனும், இந்திரனை வில்லின் வலிமையால் வென்றுவிட்ட இந்திரஜித்தனும், கட்டமைந்த வில்வீரனான நானும் தவிர உனக்கு நிகர் வேறு யாரும் கிடையாது” என்றான்.

வில் கொண்டு இவனை வெல்லுதல் முடியாது என்று பிரம்மன் கொடுத்த ஒளிமிக்க வேல் ஒன்றைக் கையில் எடுத்து இலக்குவன் மீது வீசினான் இராவணன். அந்த வேல், இலக்குவன் விட்ட அம்புகளையெல்லாம் பொடிப்பொடியாக்கி விட்டு இலக்குவன் மேல் பாய்ந்தது, இலக்குவன் மயங்கி கீழே விழுந்தான். இலக்குவன் விழுந்து விட்டான் என்பதைக் கண்ட வானரப் படை களத்தை விட்டுச் சிதறி ஓடினர். போரைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வருந்தினர்; முனிவர்கள் துடிதுடித்தனர்; அரக்கர்கள் ஆரவாரம் செய்தனர்.

எவர்க்கும் அஞ்சாத இலக்குவன், பிரமன் தந்த வேல் தாக்கிய போதும்கூட உயிர் நீங்கினான் இல்லை. சிறிதளவு சோர்வடைந்தான், அவ்வளவே! இதைத் தெரிந்து கொண்ட இராவணன், இலக்குவனைத் தூக்கிக் கொண்டு போகக் கருதி விழுந்து கிடந்த இலக்குவன் அருகில் வந்தான். தன் கைகளால் அவனை அள்ளி எடுக்க முனைந்தான். அவனால் இலக்குவனைத் தூக்க முடியவில்லை. தன் இருபது கரங்களாலும் பலங்கொண்ட மட்டும் முயற்சி செய்தும் இலக்குவனை அசைக்கக் கூட முடியவில்லை. தோல்வியுற்று இராவணன் பெருமூச்செறிந்தான்.

அப்போது ஒரு மூலையில் இளைப்பாறிக் கொண்டிருந்த அனுமன் ஓடிவந்து இடையில் புகுந்து இலக்குவனைத் தன் இரு கரங்களாலும் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைந்து நீங்கினான். இராம லக்ஷ்மணர் மீது அவன் கொண்ட அன்பினால், அனுமனுக்கு இலக்குவனைத் தூக்குவது மிக எளிதாக இருந்தது, ஒரு குழந்தையைச் சுமந்து செல்வது போல தூக்கிக் கொண்டு சென்றான். அப்போது அவனைப் பார்த்தால், தன் மகவை மடியில் கவ்விக் கொண்டு மரத்தின் மீது செல்லும் பெண் குரங்கைப் போல தோன்றினான்.

சிறிது நேரத்தில் இலக்குவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். உடனே அனுமனையும் அழைத்துக் கொண்டு இருவரும் இராமன் இருக்குமிடம் சென்றனர். இராமன் இராவணனுடன் போரிடுவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். இராவணனும் தன் தேரை இராமனுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தினான். போர் புரிய இராவணன் தேர்மீது வந்து நிற்க, இராமன் மட்டும் தரையில் நடந்து சென்று போரிடுவதா என்று அனுமன் வருந்தி, இருவரும் ஒத்த நிலையில் போரிடவேண்டுமெனக் கருதி, இராமனைத் தன் தோள்மீது ஏறிக்கொண்டு போரிடுமாறு வேண்டிக் கொண்டான். இராமனும் ‘நன்று’ என்று சொல்லி அனுமனின் தோள் மீது ஏறிக் கொண்டு போர் புரியச் சென்றான்.

இராமபிரானை அனுமன் தாங்கிக்கொண்டு செல்லும் காட்சியை, முன்னாளில் திருமாலைத் தாங்கிச் சென்ற கருடனும், அந்தப் பெருமாளுக்கு படுக்கையாக இருந்துவரும் ஆதிசேடனும் (அனந்தன்) கண்டார்கள். இந்த இராம இராவண யுத்தத்தைக் காண ருத்ரன், பிரமன், முதலான தேவர்கள் வானத்தில் வந்து கூடினர். முனிவர்கள் இராமனை வெற்றி பெற வாழ்த்தினார்கள். தருமம் தன் நெடிய கைகளால், இராமனை ஆசீர்வதித்தது. அஞ்சன வண்ணன் இராமன் இராவணனுடன் போர் புரிய ஆயத்தமாகி, தனது ஒப்பற்ற வலிமையான கோதண்டத்தின் நாணை இழுத்து ஓர் பேரொலி எழுப்பினான். அவ்வொலி விண்ணிலும், மண்ணிலும் சென்று மோதி எதிரொலித்தது.

அந்த பேரொலி கேட்டு அரக்கர்களும், இயக்கர்களும் நா வரண்டு, மனம் கலங்கி, உடல் நடுங்கி ஓடத் தொடங்கினர். அண்ட சராசர்ங்களும் நடுங்கின. எதற்கும் அஞ்சாத ருத்ரனும், பிரமனும்கூட நிலை குலைந்தனர். இராவணன் ஒரே நேரத்தில் வில்லை வளைத்து கணக்கற்ற அம்புகளைத் தொடுத்தான். ஊழிக்காலத்துத் தீயைப் போல வெம்மையுடைய, கடல் நீரை வற்றச் செய்வது போன்ற, திசைகளையெல்லாம் அளக்கவல்ல, விண்ணையும் மண்ணையும் துளைக்கவல்ல ஏழு கொடிய கணைகளை விடுத்தான்.

இராவனன் எய்த ஏழு கணைகளையும், தனது ஏழு அம்புகளால் பதினான்கு துண்டுகளாக்கி, அனல் கக்கி அகிலத்தையே அழிக்கவல்ல ஐந்து கொடிய கணைகளை இராமன் விடுத்தான். இவ்வைந்து அம்புகளையும் இராவணன் அந்தரத்தில் அறுத்தெறிந்து மேலும் பல கணைகளை ஏவ, அவற்றையும் இராமன் அழித்து ஒழித்தான். இவ்வண்ணம் இராம இராவணருக்கிடையே உக்ரமான போர் நடந்தது.

போர்க்களக் காட்சிகளை என்னவென்று வர்ணிப்பது?

போர்க்களத்தில் தலையற்ற முண்டங்கள் எழுந்து ஆடுகின்றன; அந்த முண்டங்களோடு பேய்களும் ஆடுகின்றன; அவைகள் பாடுகின்றன; துதிக்கை துண்டிக்கப்பட்ட யானைகளும், குதிரைகளும் இரத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.

“ஆடுகின்றன கவந்தமும்; அவற்றொடு ஆடிப்

பாடுகின்றன அலகையும்; நீங்கிய பனைக்கை

கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக் கொண்டு

ஓடுகின்றன, உலப்பு இல, உதிர் ஆறு உவரி”.

இராமபிரான் போர்க்களத்தில் தன் கோதண்டத்திலிருந்து விடுத்த அம்புகள், இராவணன் ஒருவன் மட்டும் உயிருடன் நிற்க, ஒரு இலட்சம் அரக்கர்களின் தலைகளை அறுத்தும், பல கோடி சேனைகளைச் சிதைத்தும் அழித்து வீழ்த்தின. எந்தத் திசை நோக்கினாலும், பிணக் குவியல்கள் குவிந்து கிடந்தன. யானைகளும், குதிரைகளும், அரக்கர்களும் உடல்கள் பின்னி மலை போல குவிந்து கிடந்தன. இவற்றைக் கண்டு இராவணன் பாம்பு போலச் சீறினான்.

கோபம் கொண்ட இராவணன் தன் வில்லை எடுத்து இரு வலிய அம்புகளை இராமன் மீது செலுத்தினான். அதனை விலக்கிவிட்டு இராமன் ஓர் அம்பை எடுத்துச் செலுத்தி இராவணனின் வில்லை அறுத்தான். மேலும் பல அம்புகளைச் செலுத்தி அவனது தேரில் பூட்டப் பட்டிருந்த குதிரகளின் தலைகளையும் அறுத்துத் தள்ளினான்.

இராவனனுக்கு புதிது புதிதாக தேர்கள் அறுந்த தேர்களுக்கு மாற்றாக வந்து கொண்டிருந்தன. அப்படி வரிசை வரிசையாக வந்த தேர்களையெல்லாம் இராமன் அறுத்து ஒடித்தான். ஓர் அம்பினால் இராவணனின் தலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த மகுடங்களை அடித்துக் கீழே விழ்த்தினான். அந்த மகுடங்கள் கடலில் போய் விழுந்தன.

காலம் காலமாய் இராவணன் தலைகளை அலங்கரித்த மகுடங்களை இழந்தான். அப்போது அவன் சந்திரன் இல்லாத இரவு போலவும், சூரியனை இழந்த பகலைப் போலவும் காட்சியளித்தான். நல்ல கவிஞனொருவன் வசைபாடிய பின் செல்வம் முழுவதையும் இழந்த செல்வந்தனை ஒத்திருந்தான் இராவணன்.

போர்க்கருவிகள் எதுவும் இல்லாமல், ஏறிக்கொண்டு போரிட தேர் இல்லாமல், தலையில் மகுடங்கள் இல்லாமல் வெறும் கையனாய், உலகத்தோர் பார்த்து “தர்மத்தைக் கடந்த பாவிகளின் நிலை இதுதான்” என்று சொல்லிக் கொண்டு ஆரவாரம் செய்ய, அவனது கருமை நிறம் மேலும் கருகிடவும், கால் விரல்களால் தரையில் கீறிக் கொண்டும், நாணி தலை குனிந்து நின்றான் இராவணன்.

தன் எதிரில் நாணித் தலை குனிந்து நிற்கும் இராவணனைப் பார்த்து மனமிரங்கி, தனித்து வெறுங்கையனாய் நிற்கும் இவனைக் கொல்வது நன்றன்று என்று ‘உன் தீமை இப்போது அடங்கிவிட்டதா?’ என்று இராமன் கேட்டு விட்டு, மேலும் சொல்கிறான் “தர்மத்தால் மட்டுமே பெரிய போர்களில் வெல்ல முடியுமே தவிர, வலிமையினால் மட்டும் அல்ல என்பதை மனதில் கொள்க! பாவி! இறந்த நின் சுற்றத்தாரோடு உன்னையும் கொன்றிருப்பேன். ஆனால் உனது இந்த தனித்த அவல நிலை கண்டு நான் உன்னைக் கொல்லவில்லை. எனவே ஓடிப் போ! உன் நகரத்துக்குச் சென்று ஒளிந்து கொள்!” என்றான் இராமன்.

“அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல்

மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;

பறத்தி, நின் நெடும் பதிபுக, கிளையொடும், பாவி!

இறத்தி; யான் அது நினைகிலென், தனிமை கண்டு இரங்கி”.

‘சிறு தொழில் கீழோய்!’ “போர் செய்யும் வலிமை உனக்கு இருந்தால், உன் நகருக்குள் சென்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, படைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் போருக்கு வா! போர் புரியும் ஆற்றல் இல்லையாயின் கோட்டைக்குள் ஒளிந்து கொள், போ!” என்றான் இராமன்.

“இப்போதும் உனக்கு ஓர் வாய்ப்புத் தருகிறேன். சீதையை விடுவித்து என்னிடம் கொண்டு வந்து விட்டுவிட்டு, அந்தணர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க உன் தம்பி விபீஷணனுக்கு உன் ராஜ்யத்தின் முடிசூட்டிவிட்டு, நீ அவனுக்கு ஏவல் செய்து இருப்பாயானால் உன் தலையை நான் அறுக்க மாட்டேன். அப்படி இல்லையானால், போர் செய்யும் ஆற்றல் உனக்கு இருக்குமானால், உன் படைகளை எல்லாம் திரட்டிக் கொண்டு என் முன் வந்து ‘நில் ஐயா!’ என என்னை எதிர்த்துப் போரிட்டு இறப்பாயாக! அவ்வாறு இறந்து போனாலும் நீ நல்லவனாக ஆவாய், அதை விடுத்து இனி உயிர் பிழைக்கலாம் என்று மட்டும் எண்ணாதே!” என்று இராமன் உரைத்தான்.

இந்த இடத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் இயற்றியுள்ள ஒரு பாடல், பலமுறை படித்துப் படித்து இன்புறத் தக்க பாட்டு. அது இதோ:

“ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா! என நல்கினன் – நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்”.

இங்கு இராமன் இராவணனை நோக்கிச் சொன்ன சொற்கள் இவை. இங்கு ஆள் ஐயா! என்றமைக்கு பற்பல வகைகளில் பொருள் கொள்ளும்படி கவிச்சக்கரவர்த்தி எழுதியிருப்பது இன்புறத்தக்கது. மூவுலகங்களையும், ஆளுகின்ற வல்லமை பொருந்திய ஐயா! எனவும், வேதங்களைக் கற்று சிவபெருமானையே வசப்படுத்தியவனாகிய நீ, கேவலம் பெண்ணாசையால் தகுதிழந்து நிற்கிறாயே, நீ என்ன ஆளய்யா என்றும், திசையானைகளை வென்று, கைலயங்கிரியைப் பெயர்த்து, நாரத முனிவருக்கு நிகராக சாம கானம் பாடி, தலையில் மணிகளமைந்த முடிகளை அணிந்து, சங்கரன் கொடுத்த சந்திரஹாசம் எனும் வாளைக் கொண்ட, வீரனான நீ இன்று அடைந்திருக்கும் நிலைமையைப் பார் ஐயா! என்றும் பலவிதங்களில் பொருள் கொள்ளும் இந்தப் பாடல் மிக அருமையான பாடலாகும்.

கமுக மரத்தில் வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் வளமிகுந்த கோசல நாட்டின் வள்ளலான இராமபிரான், வெறும் கையனாய்ப் போர்க்களத்தில் நிற்கும் இராவணனைப் பார்த்து “என்ன ஆள் ஐயா நீ! உனது படைகள் எல்லாம் சண்டமாருதத்தில் சிதைந்த பூளைப் பூக்கள் போல சிதறுண்டு அழிந்து போனதைக் கண்டாயல்லவா? போ! இன்றைக்கு உன் அரண்மனைக்குத் திரும்பிப் போய், போருக்கு வேண்டிய ஆயுதங்களோடு நாளைக்கு வா! என்று கருணை மேலிடச் சொன்னான் வள்ளல் இராமபிரான்.

தோல்வி என்பதையே அறியாத இராவணனால் பேச முடியவில்லை. என் வீரத்திற்கு இழுக்கு நேர்ந்துவிட்டது. இன்று ஒரு மானிடன் என்னைப் பார்த்து ‘இன்று போய் நாளை வா போர்க்கு’ என்று சொல்லும் அளவிற்கு நான் தாழ்ந்து போனேன். அந்த மானிடன் நன்றாகத்தான் சொன்னான், என்று வருத்தத்துடன் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டு, நிலமகள் முகம் நோக்கி, அயல் நின்றார் எவரையும் காணாமல் தன் ஊருக்குத் திரும்பி அரண்மனையைச் சென்றடைந்தான். முதல் நாள் போர் முடிவுக்கு வந்தது.

இராமபிரான் கருணையோடு முதல் நாள் யுத்தத்தில் தோற்று வெறுங்கையனாய் நின்ற இராவணனுக்கு உயிர் பிச்சை அளித்து அரண்மனைக்குத் திரும்பப் போகும்படி பணித்த பின் இராவணன் ஊருக்குத் திரும்பிய காட்சி பரிதாபமானது. தலை குனிந்த வண்ணம், தலையில் மகுடங்களின்றி, கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி, உடலெங்கும் காயங்களுடன் மன வருத்தத்தோடு இராவனன் நடக்கும் காட்சியை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் கவிச்சக்கரவர்த்தி, இந்த இடத்தில் இராவணனின் பெருமைகள் அனைத்தையும் நமக்குப் பட்டியலிட்டுவிட்டு, அத்தகைய இராவணன் இதோ போகிறான் வெறும் கையோடு என்கிறார்.

“வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்

தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போட்டு, வெறுங்கையோடு இலங்கை புக்கான்”.

இந்த இராவணனுக்கு இருந்த பெருமைகள் எவை தெரியுமா? வாரணம் பொருத மார்பன் இவன். அஷ்டதிக் கஜங்கள் எனும் திசையானைகளோடு பொருதி அதனால் அவற்றின் தந்தங்கள் தனது மார்பில் புகுந்து நிற்க, அவற்றை ஒடித்து, மார்பில் தந்தங்கள் பதியப் பெற்றதான பெருமையை உடையவன். வரையினை எடுத்த தோளையுடையவன். கைலாய மலையை வேரோடு பெயர்த்துக் கொண்டு போவதற்காக அதனைப் பெயர்த்த தோள் வலிமையுடையவன். நாரத முனிவரும் ஏற்றுக் கொள்ளும்படியாக சாம கானத்தைப் பாடி சிவபெருமானைக் கவர்ந்தவன், மாலைகள் சூடிய பத்து மணிமுடிகளைத் தாங்கியவன், சிவபெருமான் இவனது தவத்தை மெச்சி இவணுக்கு அளித்த ‘சந்திரஹாசம்’ எனும் அறவழியில் போரிடும்போது எவரையும் வெல்லும் ஆற்றல் மிக்க வாளுக்கு உரியவன் எனும் பெருமையுடையவன். வீரம் என்பது இவனது சிறப்பான குணம், இவ்வளவு பெருமைகளையும் போர்க்களத்தில் போட்டுவிட்டு வெறும் கையனாய் இலங்கை நகருக்குத் திரும்பினான் இராவனன்.

இவ்வளவு பெருமைகளையுடைய இராவணன் எங்ஙனம் அந்த பெருமைகளை இழந்தான் என்பதையும் பார்க்க வேண்டுமல்லவா? வாரணம் பொருத மார்பன் எனும் பெருமை, முதல் நாள் யுத்தத்தில் அனுமனோடு நேருக்கு நேர் நின்று போரிட்டு, அந்த அனுமன் விட்ட குத்தில் தன் மார்பில் பொருந்தியிருந்த அஷ்டதிக் கஜங்களின் தந்தங்கள் முதுகின் வழியாகப் பொலபொல வென்று கொட்டிவிட்ட அந்தக் கணமே அந்தப் பெருமை போய் ஒழிந்தது. கைலாய மலையைப் பெயர்த்தெடுத்த பெருமை அவன் தோள் வலிக்கு பெருமை சேர்ப்பதாகும். அந்தப் பெருமை முதல் நாள் போரில் அடிபட்டு கீழே விழுந்த இலக்குவனை தூக்க எவ்வளவோ முயன்றும் இராவணனால் முடியவில்லை, ஆனால் அந்த அனுமனோ இலக்குவனை குரங்கு தன் குட்டியை அணைத்துத் தூக்கிச் செல்வது போல தூக்கிக் கொண்டு போனானே, அப்போதே இவனது தோள் வலி போய்விட்டது. நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவு, இராமன் போருக்கு இன்று போய் நாளை வா என்றதும் வாயடைத்து சொற்களின்றி போனபோது அந்தப் பெருமையும் போய்விட்டதே. தாரணி மவுலி பத்தையும் இராமன் ஓர் அம்பினால் அடித்து வீழ்த்திய போது அந்தப் பெருமையும் போயிற்று. சங்கரன் கொடுத்த சந்திரஹாசம் எனும் வாள், அதர்மமாக, ஜடாயு எனும் கழுகின் வேந்தனை வெட்டிய போது அதன் வலிமையும் இழந்து அந்தப் பெருமையும் போய்விட்டதே. இறுதியாக அவனிடம் இருந்தது வீரம் ஒன்றே. அந்த வீரமும் போர் களத்தில் போரிட்டு உயிரை விடாமல், இராமன் உயிர் பிச்சை அளித்த போது ஊருக்குத் திரும்பிய போது அந்தப் பெருமையும் போய்விட்டதே. இப்போது எந்த பெருமையும் இல்லாத வெறும் இராவணன் மட்டும் ஊர் திரும்புகிறான்.

தேவர்களையெல்லாம் வென்ற பெருமையுடைய இராவணன், மூவுலகங்களையும் காக்கும் தொழிலைக் கொண்டவன், போரில் தோற்று வெறுங்கையனாக இலங்கையுள் புகுந்தபோது, சூரியனும் மலை வாயில் விழுந்து மறைந்தான்.

‘வெற்றி என்பது எவர் ஒருவரிடத்தும் நிரந்தரமாக இருந்ததில்லை’. அது மாறி மாறித்தான் வந்து சேரும்.

“மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த

காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ்சேனை நோக்கான்

தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க, தன் அப்

பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கிப் புக்கான்”.

தோற்று ஊர் திரும்பும் இராவணன் எந்தத் திசையிலும் பார்க்கவில்லை. தரையை மட்டும் பார்த்துக் கொண்டு நடந்தான். வளம்பொருந்திய நகரத்தைப் பார்க்கவில்லை. தன் அன்புப் பிள்ளைகளைப் பார்க்கவில்லை. கடல் போன்ற படை வீரர்களைப் பார்க்கவில்லை. மலர் அணிந்த கூந்தலையுடைய மகளிர் எல்லாம் இவனைப் பார்க்க, இவன் எவரையும் பார்க்காமல் நில மடந்தையின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டு அரண்மனை புகுந்தான்.

போரில் தோற்று அவமானப்பட்டுத் திரும்பி வருகின்றபடியால், அவனது அன்பு மனைவிமார்கள் காதலோடு பார்க்கும் பார்வைகூட வாட்படையால் பிளப்பது போலத் தோன்றுகிறது. மக்கள் அன்போடு கூறுகின்ற சொற்கள்கூட இராமபிரான் அம்புகள் போல அவன் உடலைப் பிளக்கும் துன்பத்தைத் தருகின்றன. வழக்கமாக இராவணன் அரண்மனைக்குள் வரும்போது ஏற்படும் பரபரப்பு ஒன்றையும் அங்கே காணவில்லை. ஆங்காங்கே அமைச்சர்களும், சேனைத் தலைவர்களும், மனைவிமார்களும், உறவினர்களும் எந்தச் சலனமுமின்றி நின்று கொண்டிருக்க, யானை ஒன்று தன் கொட்டடிக்குச் செல்வது போல இராவணன் சென்றான்.

அரண்மனைக்குத் திரும்பிய இராவணன், போரில் எங்ஙனம் வெல்லுவது என்ற ஆழ்ந்த சிந்தனையில், தன் மெய்க்காப்பாளனை விட்டு, தூதர்களை அழைத்துக் கொண்டு வரும்படி சொன்னான். அவனும் அவ்வண்ணமே சென்று தூதர் நால்வரை அழைத்து வந்தான். அந்த தூதர்கள் மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் எனும் பெயர் கொண்டவர்கள். இவர்களை அழைத்து இராவணன் “நீங்கள் வாயுவேகம் மனோவேகமாகச் சென்று நாலா திசைகளிலுமுள்ள, அரக்கர்களை ஒன்றுதிரட்டிக் கொண்டு வாருங்கள்” என்றான். பிறகு ஒருவரையும் பார்க்க விருப்பமின்றி தன் மலர் மஞ்சத்தில் சென்று படுத்தான்.

சீதை மட்டுமே நிறைந்திருந்த அவனது மனத்தில் இப்போது தோல்வியால் ஏற்பட்ட நாணம் மட்டுமே நிறைந்திருந்தது. அந்த நாணத்தோடு இப்போது கவலையும் சேர்ந்து கொண்டது. கண்துயில முடியவில்லை. கொல்லன் உலைக்களத்து ஊதுலை போல பெருமூச்சு விட்டான்.

நான் பெற்ற தோல்வி கண்டு தேவர்கள் சிரிப்பார்கள்; மண்ணுலகத்தோர் சிரிப்பார்கள்; என் பகைவர்கள் எல்லாம் சிரிப்பார்கள்; இவர்கள் எல்லாம் சிரிப்பதற்காக நான் வெட்கப்படவில்லை, அந்த வேல் போன்ற நெடிய கண்களையுடையவளும், சிவந்த வாயும், மென்மையான இயல்புகளுடைய மிதிலைச் செல்வி ஜானகி சிர்ப்பாளே! என்ன செய்வேன் என்று நாணத்தால் சாம்புகிறான்.

“வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்; நெடு வயிரத் தோளான்

நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்,

வேல் நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த

சானகி நகுவாள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்”.

அப்போது அவனது தாய் வழிப் பாட்டன் மாலியவான் அங்கே வந்து ஓர் ஆசனத்தில் அமர்கிறான். பிறகு இராவணன் இருந்த நிலை கண்டு, இவன் போரில் தோற்றுவிட்டான் போலும் என்றெண்ணி, “இராவணா! மனம் சோர்ந்திருக்கிறாய். உடலும் வாடியிருக்கிறது. என்ன நடந்தது?” என்றான்.

“பல வெற்றிகளைப் பெற்று இங்கே வந்திருக்கிற மானுடர்க்கும், எமக்கும் போர் மூண்டது. தேவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள். கொடும் போர் நிகழ்ந்த போர்க்களத்தில் நம் குலம் கண்டிராத தோல்வியை, அதிலும், மானுடர்களிடம் தோற்றோம் என்ற அவமானம் நேர்ந்துவிட்டது” என்றான் இராவணன்.

“கொடும் அம்புகளை விட்டு எண்ணற்ற அரக்கர்களைக் கொன்ற இராமன், முன்னர் கூனி என்பவளின் முதுகில் அம்பு விட்டதைப் போல விளையாட்டாகப் போர் புரிந்தானே தவிர, சினத்தோடு போரிட்டதாகத் தெரியவில்லை.”

காகுத்தன் மரபில் தோன்றிய இராமனுடைய அம்புகளின் இயல்பு, நல்ல புலவர்கள் கவிதையில் கையாண்ட தேர்ந்த சொற்களைப் போலவும், அச்செய்யுளில் அமைந்த தொடை, ஓசை, பொருள், அணி போன்ற பண்புகள் அனைத்தும் உடையது. இராமனின் அம்புகளுக்கு, நல்ல புலவர்கள் இயற்றும் செய்யுளுக்கு உவமை கூறியது சிறப்பு.

“இந்திரன், சிவன், திருமால் ஆகிய மூவரையும் வென்ற பேராற்றல் உடைய யானே, இராமனின் அம்புகளால் நொந்தேன் என்றால், அவற்றின் ஆற்றலை என்னவென்று சொல்வேன். நான் திக் விஜயம் செய்தபோது இந்திரன், திருமால், பிரமன், ஈசன் என அனைவரையும் வென்று விட்டேன். இவர்களால் எனக்குத் தோல்வி வராமல் இவர்களினும் ஆண்மை மிகுந்த இராமனால் அழிவு வந்ததே என்பதற்கு மகிழ்கிறேன்”.

“வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழுவான் அங்கை

ஈசன், என்று இனைய தன்மை இனிவரும் இவரால் அன்றி,

நாசம் வந்து உற்றபோதும் நல்லதோர் பகையப் பெற்றேன்;

பூசல் உண்டு உறையும் தாராய், இது இங்குப் புகுந்தது என்றான்”.

இதுதான் நடந்தது என்று இராவணன் மாலியவானிடம் கூறினான்.

“இராவணா! நீ போருக்குப் போவதற்கு முன்பு, நான் இராமனுடைய ஆற்றலை உனக்கு எடுத்துக் கூறி எச்சரித்த போது என் மீது கோபம் கொண்டாய். என்றும் நல்லதையே சொல்லும் விபீஷணன் சொல்லையும் நீ கேட்கவில்லை. இப்படி நாங்கள் கூறுவதற்குக் காரணங்கள் உண்டு என்பதையும் நீ ஏற்கவில்லை. உன்னை எதிர்த்துப் பேச இங்கு யாரும் இல்லை”.

இப்படி மாலியவான் சொன்னவுடன், அப்புறத்தில் இருந்த மகோதரன் விரைந்து வந்து, தீப்பொறி பறக்க “நீ சிறுமை தரும் சொற்களைப் பேசுகிறாய். போதும் நிறுத்து” என்று அடக்கிவிட்டு இராவணனுக்கு நடைபெறமுடியாத உறுதிமொழிகளைக் கூறுகிறான்.

ஒரு கொள்கையை மேற்கொண்டு விட்டால், அதனால் வெற்றியோ, தோல்வியோ எது நேரினும், அதில் உறுதியாக நிற்றல் உத்தமனுக்கு உரிய செயல். இராவணன் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பதே நன்று என்று மகோதரன் கூறுகிறான். இராவணனை ஊக்கப் படுத்துவதற்காக, அவன் முன்பு பெற்ற வெற்றிகளையெல்லாம் நினைவு படுத்துகிறான்.

“வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்

நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே,

என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?

புன்தவர் இருவர் போரைப் புகழ்தியோ? – புகழ்க்கு மேலோய்!”

“மன்னா! மாலியவான் கூறியபடி சீதையை விடுதியாயின், வலிமை நீங்கியவனாய். ஆதலால், சீதையின் பொருட்டு போர் செய்து ஆவியை விடுவது சிறப்பு” என்கிறான் மகோதரன்.

“இப்படி நீ வருந்தி இருப்பாயாயின், குரங்குக் கூட்டம் பழ மரங்களை அழிப்பது போல இலங்கை நகரையும் அழித்து விடும். மூவரை வென்று தேவர்களை ஏவல் கொண்டு, மூவுலகங்களையும் அடிமைப் படுத்திய நீ இராம இலக்குவர்களை ஒரு பொருட்டாக மதிக்கலாகாது” இவ்வாறு மகோதரன் இராவணனை ஊக்கப் படுத்தி ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.

தனக்கு ஆறுதல் கூறிய மகோதரனிடம் இராவணன் “பேரறிவாளனே! எனக்கு உறுதிப் பொருளைக் கூறினாய்” என்று சொல்லி மனம் தேறினான். பிறகு தம்பி கும்பகர்ணனை எழுப்பி அவனைப் போருக்கு அனுப்பலாம் என்று எண்ணி, தூதர்களை அழைத்து ‘விரைந்து சென்று கும்பகர்ணனை இவ்விடம் வருமாறு அழைத்து வாருங்கள்’ என்று கட்டளையிட்டான்.

தூதர்கள் நால்வர் கும்பகர்ணன் மாளிகையைச் சென்றடைந்தனர். அங்கு ஆழ்ந்து துயின்றுகொண்டிருந்த கும்பகர்ணனை, எழுப்ப முயன்றனர். அது முடியாமல் போகவே, தம் கையிலிருந்த இரும்புத் தூணால் அவன் தலையிலும் செவியிலும் மோதினார்கள். அதற்கும் அவன் துயில் நீங்கி எழவில்லை. எழுப்பச் சென்ற கிங்கரர்கள் கும்பனைத் தம் இரும்பு உலக்கையினால் இடித்து எழுப்ப முயல்கிறார்கள். அவர்கள் தூங்கும் அவன் மேனியில் இரும்பு உலக்கையால் குத்தி துயில் எழுப்பும் காட்சியில் கம்பர் பெருமான் இயற்றியுள்ள ஓசைநயமுள்ள பாடல் இங்கே:

“உறங்குகின்ற கும்பகன்ன! உன்கள் மாய வாழ்வெலாம்

இறங்குகின்றது இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே

உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்”.

“என்றும் ஈறு இலா அரக்கர் இன்பமாய வாழ்வு எலாம்

சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்

இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே

அன்று அலைத்த செங்கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார்”.

இப்படிக் கிங்கிரர்கள் கும்பகர்ணனை அடித்து அடித்து எழுப்ப முயன்றும், அவன் எழுந்திருக்கும் வழியாக இல்லை. அந்த கிங்கரர்கள் இராவணனிடம் சென்று என்ன முயன்றும் கும்பகர்ணனை உறக்கத்தினின்றும் எழுப்ப முடியவில்லை என்று சொல்ல, ஒன்றன் மேல் ஒன்றாக யானைகளையும், யாளிகளையும் விட்டு மிதிக்கச் செய்து எழுப்புங்கள் என்று ஆணையிட்டான்.

அப்படி யானைகளும், யாளிகளும் மிதித்த போதும் உறக்கத்திலிருந்து கும்பகர்ணனை எழுப்ப முடியவில்லை. உன்னால் அனுப்பப்பட்ட படைகளும் திரும்பிவிட்டனர் என்ன செய்வது என்று கிங்கரர்கள் வந்து சொன்னார்கள். ஆயிரம் மல்லர்களை அழைத்துச் சென்று கும்பகர்ணனை எழுப்பச் செய்யுங்கள் என்று மறுபடியும் உத்தரவிட்டான்.

உறங்கும் கும்பகர்ணனை அருகில் சென்று பார்த்த மல்லர்கள், அவன் வாயையும், மூக்கையும் கண்டு மெய் நடுங்கினார்கள். அவனை அடித்து எழுப்ப அஞ்சி, அவன் காதருகில் சென்று சங்கு, தாரை, சின்னம் முதலான ஊது கருவிகளைக் கொண்டு பெருத்த ஓசை எழுப்பினார்கள். ஊகூம். அவன் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

கொம்பு, வலிமையுடைய தண்டு, சம்மட்டி, ஈட்டி ஆகிய படைக்கலன்களில் தேர்ச்சி பெற்ற வல்லவர்களைக் கொண்டு தாடைகளிலும், மூட்டுகளிலும், மார்பிலும், தலையிலும் அடித்துப் பார்த்தும், அவன் எழுந்திருக்காதது கண்டு சோர்ந்து போனார்கள். இராவணனுக்குச் செய்தி போயிற்று. அவன் பெரிய குதிரைப் படைகளை மேலே ஓடவிட்டு எழுப்பும்படி சொன்னான். அதுவும் பயனற்றுப் போயிற்று. குதிரைகள் ஓடியது அவனைத் தாலாட்டித் தட்டிக் கொடுப்பது போல இருந்தது போல, அவன் மீண்டும் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்டான். எல்லா உபாயங்களும் செய்து பார்த்தாகி விட்டது. அனைத்திலும் தோல்விதான். என்ன முயன்றும் கும்பகர்ணனை எழுப்ப முடியவில்லை. இனி என்ன செய்யலாம் என்று இராவணனிடம் சென்று ஆலோசனை கேட்டனர்.

சூலம், மழு, வாள் இவற்றைக் கொண்டு அவன் உடலில் தாக்கியாவது எழுப்புங்கள் என்றான் இராவணன். ஆயிரம் வீரர்கள் கும்பகர்ணனின் இரு கன்னங்களிலும் உலக்கையால் அடிக்க, இறந்தவன் எழுந்ததைப் போல கும்பகர்ணன் புரண்டு படுத்து துயில் நீங்கி எழுந்து அமர்ந்தான். உறக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்த கும்பகர்ணன் உறக்கத்தில் மட்டுமல்ல, எண்ணத்தாலும் மிக உயர்ந்தவன். இராவணனின் தம்பியாகிய இவன், திருமாலின் விஸ்வரூபம் போலத் தோற்றமளித்தான். அவன் முடி வானத்தை முட்டியது, உடலானது அண்ட வெளியை மறைத்தது, கண்கள் இரண்டும் இரு பெரும் கடல் போல இருந்தன.

உறக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்ததினால் கும்பகர்ணனுக்குப் பசி தாங்கமுடியவில்லை. உடனே அவனுக்கு வேந்திய உணவு வகைகள் கொண்டு வரப்பட்டுத் தரப்பட்டது.

“ஆறு நூறு சகடத்து அடிசிலும்

நூறு நூறு குடம் கள்ளும் நுங்கினான்!

ஏறுகின்ற பசியை எழுப்பினான்

சீறுகின்ற முகத்து இரு செங்கணான்”.

வண்டி வண்டியாக சமைக்கப்பட்ட சோறு, அறுநூறு வண்டிகள் நிறைய வந்தன, அவற்றை எடுத்து உண்டான், பின் நூற்றுக்கணக்கான குடங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட கள்ளையும் குடித்தான், இவ்வளவுக்கும் பிறகு அவன் பசி அதிகமாகியது. இது வரை சாப்பிட்டது அனைத்தும் பசியை எழுப்புவதற்காக அருந்தியவை போல இருந்தது. பசி தீராததால் ஆயிரத்து இருநூறு எருமைக் கடாக்களையும் தின்று சிறிது பசியாறினான். கும்பகர்ணன் உட்கார்ந்தால், இராவணன் நிற்கும் உயரத்திற்கு சமமாக இருப்பான். இவன் வாயில் எப்போதும் இறைச்சியும், நிணமும், இரத்தமும் ஒழுகியபடி இருக்கும். எலும்பும், தோலும், இறைச்சியும், ரத்தமுமாக உண்ணும் இயல்புடையவன். நெற்கதிர் போன்ற வாள் ஒன்றைத் தன் உறுதியான கையில் ஏந்தியபடி இருப்பான். மற்றொரு கையில் ஒரு சூலம். சூல் கொண்ட மேகம் போன்ற கருத்த நிறத்தையுடையவன். எமனுடன் கூட போர் புரியும் ஆற்றல் படைத்தவன். செம்மயிர் தொகுதியுள்ள தலையை உடையவன். கும்பம் என்றால் குடம், கர்ணம் என்றால் காது, குடங்களைப் போன்ற காதுகளையுடையவன் இவன்.

இந்த கும்பகர்ணனை துயிர் எழுப்பியவர்கள், அவன் முன்னால் பயந்து வந்து நின்று “உன் தமையன் உன்னைத் துயிர் எழுப்பி அழைத்து வரச் சொன்னான்” என்றனர்.

உடனே கும்பகர்ணன் இராவணனது அரண்மனையைச் சென்றடைந்து, அண்ணன் இராவணனை நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். வணங்கிய தம்பியைத் தோளோடு தழுவினான் இராவணன். நிறைய மாமிசங்களை அளித்து, குடம் குடமாகக் கள்ளையும் குடிக்கக் கொடுத்து, நல்ல உடையகளையும், விசேஷமான ஆபரணங்களையும் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தான். சந்தனக் குழம்பைக் கொண்டு வரச் செய்து,

அதை அவன் உடலெங்கும் பூசிக்கொள்ளச் செய்தான். மார்பில் கவசத்தை அணிவித்துக் கும்பகர்ணனை போருக்குத் தயார் செய்தான் இராவணன்.

“இவ்வாறு எனக்குச் சிறப்பு செய்வதெல்லாம் எதற்காக” என்றான் கும்பகர்ணன்.

அதற்கு இராவணன், “மானுடர் இருவர், பெரிய குரங்குப் படையோடு, இலங்கையைச் சூழ்ந்து கொண்டு என்னையும் வெற்றி கொண்டார்கள். நீ போய் அவர்களது உயிரைக் குடித்து விட்டு வரவேண்டும்” என்றான். உடனே கும்பகர்ணன் சொல்கிறான்:-

“ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச்

சானகி துயர் இனம் தவிர்த்தது இல்லையோ?

வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்

போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே?”

போர் வந்து விட்டதோ? எல்லையற்ற கற்புடைய சீதாதேவியின் துயர் இன்னமும் தீரவில்லையோ? தேவலோகத்திலும், மண்ணுலகத்திலும் வளர்ந்த நமது புகழ் அழிந்து போனதோ? நாம் அனைவருமே அழியப் போகும் காலம் வந்து விட்டதோ?

“கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்

சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்

திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை

விட்டிலையோ? இது விதியின் வண்ணமே”.

திருமகளாம் சீதையின் காரணமாக போர் வந்து விட்டதோ? திட்டி விஷம் போன்ற சீதாதேவியைக் கொண்டு போய் இராமனிடம் ஒப்படைத்து விடு என்று நான் மந்திராலோசனையின் போது சொன்னேனே, கேட்கவில்லையோ? எல்லாம் விதியின் செயல் என்ன செய்வது?

“கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்

சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை

வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்

புல்லலாம் என்பது போலுமால் – ஐயா!”

“ஐயா! பூமியைக் கூட தோண்டி எடுத்து விடலாம். அதனைச் சுற்றி வேலி கூட கட்டிவிடலாம், ஆனால் மிக்க வலிமையுடைய இராமனுடைய தோள்களை வென்று விடலாமென்று நீ நினைக்கிறது இருக்கிறதே, அது நீ சீதையைத் தழுவலாம் என்று நினைப்பது போன்றே முற்றும் இயலாத காரியமாகும்”.

“புலஸ்தியன் முதலான குற்றமற்ற உனது குலத்தின் பெருமை உன்னால் அழிந்தது. வெற்றி பெறுதல் நம்மால் இயலுமோ? நம் வலிமை இழப்பதற்கு என்ன காரணம் என்று உனக்குத் தெரிகிறதா? வானிழிந்து வரும் நீரின் தன்மை நிலத்தின் தன்மையை ஒக்குமல்லவா? அதுபோலத்தான். நீ சீதையைக் கொண்டு வந்த புன்மைத் தன்மை காரணமாக, இழந்த நாட்டை இந்திரன் மீண்டும் பெறப் போகிறான். உன் பரந்த உறவினர்களையும், நண்பர்களையும் அழிக்கப் போகிறாய். நீயும் அழியப் போகிறாய். சிறையில் அடைபட்ட தேவர்களை விடுவிக்கப் போகிறாய். தீவினையிலிருந்து விடுபட உனக்கு இனி ஒரு மார்க்கமும் இல்லை”.

“தர்மதேவதை உனக்கு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டு விட்டது. முன்பு நீ தர்மத்தைக் கடைப் பிடித்ததால் வலிமையும், செல்வமும் உனக்குப் புகழைத் தந்தன. எப்போது நீ தர்மத்தைவிட்டு நீங்கி விட்டாயோ, அப்போதே உனது அழிவைத் தேடிக் கொண்டு விட்டாய். இனி உன்னைக் காப்பாற்ற எவராலும் ஆகாது”.

“நீ கூறும் அந்த மானுடர்களின் எண்ணமும், சொல்லும், செயலும், சரண் அடைந்தோரைக் காக்கும் குணமும், அறவழியில் நிற்றலுமே ஆகும். நடுவுநிலையும், உண்மையும் அவர்களது இயல்பு. மாறாக வஞ்சனையும், பாவமும், பொய்யும் மேற்கொண்ட நாம் பிழைத்தல் என்பது முடியுமா? அவர்களது அறநிலைக்கு அழிவு ஏது? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். தலைவனே! உனக்கு நான் இறுதியாகச் சொல்ல வேண்டுவது ஒன்று உண்டு. அதை நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்வாயேல் நல்லது. இல்லையேல் நீ இறப்பதைத் தவிர வேறு வழியே இல்லை”.

“கரிய கடலைத் தன் காலாலே கடந்து வந்த குரங்கு நம் பகைவர்க்குத் துணையாக இருக்கிறது. சீதையும், சிறையிலேயே சிந்தை துவண்டு கிடக்கிறாள். வாலியின் மார்பைத் துளைத்த அம்பும் இராமனின் அம்புறாத் தூணியில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நமக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் சொல்!”.

“நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, தையலாளைக் கொண்டு போய் விட்டுவிட்டு இராமனின் சரணம் தாழ்ந்து, உன் தம்பி விபீஷணனை அன்பு செலுத்தி அழைத்துக் கொண்டு வந்து வாழ்வாயேல் நன்று. அப்படி இல்லையென்றால், நீ பிழைக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. அதைச் சொல்கிறேன் கேள்! படைகளைச் சிறிது சிறிதாக போருக்கு அனுப்பாமல், அனைத்துப் படைகளையும் ஒன்று திரட்டி, போருக்கு அனுப்புதலே நல்லது. அதையாவது செய்து உயிர் வாழ முயற்சி செய்!” என்றான் கும்பகர்ணன்.

இராவணனுக்குச் சினம் பொங்கி எழுந்தது. “அற்பராகிய மானுடர்கள் நம்மைக் கொன்று விடுவார்கள் என்று சொல்வதற்காகவா உன்னை எழுப்பி அழைத்து வந்தேன். இனி என்ன நிகழப்போகிறது என்றா உன்னிடம் கேட்டேன். எனக்கு அறிவுரை கூற நீ எனக்கு அமைச்சனும் அல்ல. பகைவர்களிடம் உனக்கு பயம். உனது வீரம் பயனற்றுப் போய்விட்டது. நீ போருக்குப் போகும் தகுதி இல்லாதவனாக ஆகிவிட்டாய். நிறைய மாமிசமும், கள்ளும் உண்டுவிட்டு, போய்க் கிடந்து உறங்கு!” என்றான் இராவணன்.

“மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்

கூனிடைக் குரங்கையும் கும்பிட்டு, உய்தொழில்

ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;

யான் அது புரிகிலேன்; எழுக போக! என்றான்”.

“நீ போகலாம்!” என்று கும்பகர்ணனை அனுப்பிவிட்டு இராவணன் ஏவலாளர்களை அழைத்து “என் தேரையும், ஆயுதங்களையும் கொணர்க! போருக்கு நானே வருகிறேன் என்று அந்த இரு மானுடச் சிறுவர்களுக்கும் சொல்லி என் முன் வரச் சொல்க!” என்றான்.

கும்பகர்ணன் அண்ணனைப் பணிந்து “நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்!” என்று சொல்லித் தன் பெரிய சூலத்தைத் தனது வலக் கரத்தில் ஏந்திக் கொண்டு “இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது, கேட்பாயாக!” என்று பின்வருவனவற்றைச் சொன்னான்.

“தலைவனே! நானே போருக்குப் போகிறேன். போய் அவர்களோடு போரிட்டு வென்று திரும்பி வருவேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஊழ்வினை என் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது. ஆகையால், போரில் நான் இறப்பேன். அங்ஙனம் நான் இறப்பேனானால், சீதையை உன் நன்மை கருதி விட்டுவிடுதல் நன்று. இன்னொன்றும் புரிந்து கொள்! உன் மகன் இந்திரஜித்தும், இலக்குவன் கை வில்லினால் இறக்கப்போவது நிச்சயம். உன் படைகள் காற்றில் பட்ட சாம்பல் போல சிதறப்போவதும் நிச்சயம். பிறகு உனக்கு ஏற்படப் போகும் முடிவை அறிந்துகொண்டு, நன்மை பயப்பனவற்றைச் செய்ய முயற்சி செய்!” என்றான்.

“என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!

உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்

பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப்பெய்வளை

தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்றரோ”.

“அவர்கள் என்னை வெல்வார்களானால், உன்னை வெல்வதும் நிச்சயம். பிறகு யோசித்துப் பயன் ஒன்றுமில்லை. சீதையை விட்டுவிடுவதே சிறந்த தவம்”.

“அரசே! இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். முன்னை நாள் முதல் இந்நாள் வரைக்கும் யான் செய்த குற்றங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்வாயாக! இனி உன்னைக் காணும் பேறு எனக்கு இல்லை. தலைவனே! உன்னிடம் விடை பெற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்றான்.

இராவணன் கண்களில் கண்ணீரும், இரத்தமும் கலந்து வந்தன. கூடியிருந்தவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். கும்பகர்ணன் சென்று இலங்கை நகரத்தின் வாயிலை அடைந்தான். கும்பகர்ணனுக்குத் துணையாக ஏராளமான படைகளை இராவணன் அனுப்பி வைத்தான். தன்னுடன் வரத் தயாராக இருந்த படைகளைத் தம்பியுடன் செல்லுமாறு பணித்தான்.

கும்பகர்ணன் ஒரு தேரில் ஏறினான். ஆயிரம் சிங்கங்கள், யாளிகள், யானைகள், பூதங்கள் இவைகள் இழுக்கக்கூடிய அந்தத் தேரில் ஏறி பெரும் ஆயுதங்களை ஏந்திய படைகள் புடைசூழ கும்பகர்ணன் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டான். போகிற வழியில் மக்கள் அவனுக்குக் கொடுக்கும் இறைச்சியையும், கள்ளையும் வாங்கி உண்ட வண்ணம் செல்கிறான். இப்படி பெரிய மலை ஒன்று தேரில் வருவது போல போர்க்களத்துக்குள் நுழைந்த கும்பகர்ணனை இராமபிரான் பார்க்கிறார். இவனது தோற்றத்தையும், வீரத்தையும் பார்த்து வியந்த இராமன், அருகிலிருந்த விபீஷணனிடம் “இதோ வருபவன் யார்?” என்கிறான். அதற்கு விபீஷணன் சொல்லுகிறான்:

“ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ‘ஐய!’

பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்,

கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்

கூரிய சூலத்தான்’ என்று அவன் நிலை கூறலுற்றான்.”

அண்ணலே! இவன் இலங்கை வேந்தன் இராவணனுக்குப் பின் பிறந்தவன், அடியேனுக்கு மூத்தவன். காலனையொத்த, சூலத்தைக் கையிலேந்திய இந்த வீரனின் பெயர் கும்பகர்ணன், என்று சொல்லி அவனைப் பற்றிய விவரங்களை இராமனுக்கு எடுத்துரைக்கிறான் விபீஷணன்.

“ஐயனே! இவன் எமனுக்கே எமன் போன்றவன். காற்றைவிட விரைந்து செல்லும் கால்களையுடையவன். திருமாலைத் தன் சூலாயுதத்தால் வென்று வெற்றிமாலை சூடியவன். இவனுக்கு ஒரு குறை. தான் தவறாகக் கேட்டுவிட்ட ஒரு வரத்தினால் எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பவன். சிவபெருமான் இவனுக்கு அளித்த சூலப்படை இவனிடம் இருக்கிறது. அந்தச் சூலாயுதத்தைக் கொண்டு இவன் போரில் தேவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்தவன்”.

“இவன் தனது அண்ணன் இராவணனிடம் சீதையைச் சிறை எடுத்து வந்தது தவறு, இந்தச் செய்கையால் நமக்கு அழிவு உண்டாகும் என்று ஒருமுறைக்கு இரண்டு முறையாக எடுத்துச் சொன்னான். அதை ஏற்காத அண்ணனைக் கடிந்தும் பேசினான். இவனது அறிவுரைகளை இராவணன் கேட்காததோடு, நீ போர் செய்ய பயப்படுகிறாய். போய் மாமிசத்தையும் குடம் குடமாகக் கள்ளையும் அருந்திவிட்டுக் கிடந்து தூங்கு என்று இழிவாகப் பேசிய பிறகு, தான் இறப்பது உறுதி என்று சொல்லிவிட்டு உன் முன்பாக போருக்கு வந்திருக்கிறான்” என்றான் விபீஷணன்.

இப்படி விபீஷணன் சொல்லவும், அருகிலிருந்த சுக்ரீவன், இராமனை நோக்கி, “இவனைக் கொல்வதால் என்ன பயன்? இவனை நம்மோடு சேர்த்துக் கொண்டால், விபீஷணனும் தன் தமையனை இழக்க மாட்டான். நமக்கும் இது நன்மை பயக்கும்” என்றான்.

“அப்படியானால், இதை அவனிடம் சென்று யார் உரைப்பது?” என்று இராமன் கேட்க, விபீஷணன் “தாங்கள் அனுமதி அளித்தால் அடியேன் சென்று கும்பகர்ணனிடம் எடுத்துச் சொல்லி அவனை நம்முடன் சேரும்படி அழைத்து வருகிறேன்” என்றான்.

“நல்லது போய் வா!” என்று விபீஷணனை அனுப்பி வைத்தான் இராமன்.

உடனே அங்கிருந்து புறப்பட்ட விபீஷணன், வழியில் கடல் போல நிறைந்திருந்த வானர சேனைகளையெல்லாம் கடந்து கும்பகர்ணன் இருக்கும் இடம் சென்றான். அங்கு சென்று அண்ணன் கும்பகர்ணனை வணங்கினான்.

கண்களில் நீர் வழியத் தன் எதிரே வந்து வணங்கிய தம்பியைத் தாங்கி அணைத்து ஆரத் தழுவி “நம்முள் நீ ஒருவனாவது பிழைத்துக் கொண்டாய் என்றல்லவா மகிழ்ந்திருந்தேன். அம் மகிழ்ச்சி கெடுமாறு பின்னும் நீ திரும்ப இங்கே வந்தது எதற்காக? தம்பி! விபீஷணா! நீ இராமனிடம் அடைக்கலம் என்று சென்றதையும், இராமனால் அபயம் கொடுத்து ஏற்றுக் கொள்ளப் பட்டதையும் கேள்விப்பட்டேன். இம்மைக்கும், மறுமைக்கும் சிறப்பு அடைந்தாய் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். அப்படியிருக்க எமன் வாயில் நின்று களிக்கும் எம்மிடம் நீ திரும்பவும் வந்தது ஏன்? அமுதத்தை உண்ணும் நீ, நஞ்சை விரும்புவானேன்?” என்றான்.

“தம்பி! சீதையைக் கவர்ந்து வந்ததால், நம் குலப் பெருமை அழிந்ததாயினும், புலஸ்தியன் முதல் வந்த நம் குலம் கெடாமல் உன்னால் நன்மை அடைந்தது. உன்னை அடைக்கலமாக ஏற்றுக் கொண்ட இராமபிரான், உன்னைக் கைவிட மாட்டான். நீ அவர்களிடம் போய்ச் சேர்ந்தமையால் இறப்பு எனும் பயம் நீங்கப் பெற்றாய். இராமன் எனும் பெயர் இருக்கும் வரை இறப்பும், பிறப்பும் இனி உனக்கு இல்லை. அப்படியிருக்க நீ ஏன் அவர்களை நீங்கி இங்கே வந்தாய்?’.

“தர்மமே வடிவாய் வந்த இந்த இராமனுக்கு அடிமையாக ஆனாய். அதனால், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றும் உன்னிடம் இல்லாமல் போனது. தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெற்று, மெய்ஞான செல்வத்தைப் பெற்ற அருமை விபீஷணா! மாற்றான் மனைவியைக் கவர்ந்து வந்த எங்களை உனக்கு உறவினர்களாகவா நினைக்கிறாய்? தவங்களைச் செய்து, ஒழுக்கம், தர்மம், இவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறாய். பிரம தேவன் உனக்கு அழிவு இல்லாத ஆயுளைக் கொடுத்திருக்கிறான். அப்படியிருந்தும் நீ பிறந்த குலத்தின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்!”

“எங்களைக் கொல்ல இராமன் நாண் ஏற்றிய வில்லோடு நிற்கிறான். இலக்குவன் அவனுக்குத் துணையாக நிற்கிறான். படை வீரர்கள் காத்துக் கொண்டு தயாராக இருக்கிறார்கள். எமனும் எங்கள் உயிரைக் கொண்டு போக தயாராக வந்திருக்கிறான். விதியும் காத்துக் கொண்டு நிற்கிறது. அழியப் போகும் எங்களிடம் உன் ஆற்றல் எல்லாம் தொலையும்படி ஏனப்பா இங்கு வந்து சேர்ந்தாய்?”

“தம்பி! விபீஷணா! நீ அயோத்தி அரசன் இராமனிடம் அடைக்கலம் என்று போனதாலேதான், இராமனின் கணைக்கு பலியாகப் போகும் அரக்கர் கூட்டத்துக்கு, உன் கையால் எள்ளும் நீரும் சொரிந்து பிதுர் கடன்களைச் செய்ய முடியும். அதற்கு உன்னை அன்றி வேறு யார் இருக்கிறார்கள்? நீ இலங்கைக்கு வரும் காலம் இப்போது அல்ல. நாங்கள் இழிதொழிலையுடைய அனைவரும் போர்க்களத்தில் இராமன் கணைகளால் மாண்ட பிறகு, திருமகள் குடிகொண்டிருக்கும் இராமபிரானோடு, இலங்கைக்கு வந்து ஒப்பற்ற அரச செல்வத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது நீ திரும்ப இராமனிடமே போய்விடு!” என்றான் கும்பகர்ணன்.

அதற்கு விபீஷணன் தயங்கியபடியே “அண்ணா! தங்களிடம் நான் சொல்ல வந்த செய்தியே வேறு. அதை நான் தங்களிடம் சொல்லலாமா?” என்றான்.

“அப்படியா? சரி. அந்தச் செய்தியைக் கூறு” என்றான் கும்பகர்ணன்.

“இருண்டு கிடந்த மனமுள்ள எனக்கும் கருணையைப் பொழிந்த இராமன், தாங்களும் அவனுடன் சேர்ந்து கொண்டால் உங்களுக்கும் அருள் புரிவான். உங்களை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டு இறப்பு, பிறப்பு எனும் மாயையிலிருந்து மீட்டுவிடுவான். இராமன் எனக்களித்த இலங்கை அரசு முதலான செல்வங்களையெல்லாம் உங்களிடமே அளித்து விடுகிறேன். உங்களுக்கு ஏவல் செய்யும் பணியையும் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் தம்பியாகிய என் மன வருத்தத்தையும் போக்கி, நம் குலத்தையும் சிறப்புறச் செய்ய தங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். இராமனுடைய வில்லுக்கு யாரும் தப்ப முடியாது. அப்படித் தப்பிப் போனாலும், வேறு புகலிடம் கிடையாது. இறக்கப் போவது சத்தியம். நீங்களும் அறவழியில் நிற்பீர்களானால் வீணில் ஆவியைத் துறக்க வேண்டியிருக்காது. வேத நாயகனான இராமன் உங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும், என்பால் உள்ள அன்பாலும், உங்களை அழைத்துக் கொண்டு வரும்படி என்னை அனுப்பியிருக்கிறார். இதுதான் நான் தங்களிடம் சொல்ல வந்த காரியம். ஐயனே! அறவழியில் மாறுபடாமல் நீங்கள் என்னுடன் வரவேண்டும்” என்றான் விபீஷணன்.

விபீஷணன் பேசுவதைக் கண்களில் நீர் சோர கேட்டுக் கொண்டிருந்தான் கும்பகர்ணன். தான் பேச வேண்டியவற்றைப் பேசி முடித்தவுடன் விபீஷணன் கும்பகர்ணனின் காலில் வீழ்ந்து வணங்கினான். வீழ்ந்து வணங்கிய விபீஷணனை தோள்களைப் பிடித்துத் தூக்கித் தழுவிக் கொண்டு பேசுகிறான் கும்பகர்ணன். “மைந்தனே! நீரின் மேல் எழுதிய எழுத்துப் போல் அழியக்கூடிய செல்வ வாழ்க்கையை விரும்பி இதுவரை எனக்கு ஊனும் கள்ளும் ஊட்டி வளர்த்து, பிறகு போர்க்குரிய ஒப்பனைகளைச் செய்து என்னை போருக்கு அனுப்பிய அண்ணன் இராவணனுக்காக என் உயிரை விடாமல் இராமனிடம் நான் வரமாட்டேன். என் துன்பத்தை நீ நீக்க விரும்பினால், விரைந்து இராமனிடம் போய்விடு. பிரமன் அளித்த வரத்தினால், நீ சிரஞ்ஜீவியாக வாழப் போகிறவன். நீ அறவழியில் இராமன் பக்கம் இருப்பதே நியாயம். எனக்கு இழிவு பொருந்திய மரணமே புகழுக்குரியதாகும்” இவ்வாறு கும்பகர்ணன் கூறினான்.

போர்க்களத்தில் கும்பகர்ணனைப் பார்த்து விபீடணன் அவனைத் தன்னுடன் வந்து இராமனுடன் சேர்ந்து கொள் என்று வேண்டிய போது கும்பன் மறுத்துச் சொன்ன பாடல்களை கீழே காணலாம்.

செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி

வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர்கொண்ட பகையை வாழ்த்தி

அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு ஐய

கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்.

அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்தன்னை அம்பொன்

தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன் தன்னை

கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும் கடந்து மூடும்

பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி.

ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர்போல் அரிகள் ஓட

சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற

நீலம்கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட

காலம் கொண்டு உலகும் ஓட கறங்கு எனத் திரிவென் காண்டி.

செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர் ஆகின்

கருவரை கனகக் குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த

இருவரும் நிற்க மற்று அங்க்கு யார் உளர் அவரை எல்லாம்

ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான்.

தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொளத் தக்கது என்று

கேட்கிற்பாய் ஆகின் எய்தி அவரொடும் கெழீ இய நட்பை

வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று

சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்னஸ் சொன்னான்.

போதி நீ ஐய பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற

வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை

ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி

மாதுயர் நரகம் நண்ணா வண்ணமும் காத்தி மன்னோ.

ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப்

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது

ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்.

என்று அவன் தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுகப் புல்லி

நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி

இன்றொடும் தளிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான்

வென்றி வெந்திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான்.

அனுமனையும், வாலியின் சேயையும், அருக்கன் சேய் சுக்ரீவனையும், இராம இலக்குவரையும், நீலனை, சாம்பன் முதலான வானர சேனையையும் வெற்றி கொண்டு பனி மூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வரும் கதிரவன் போல நான் வருவேன், நீ பார்ப்பாய். நீ தாமதியாமல் உடனே இராம இலக்குவரிடம் சென்றடைவாயாக! என்னுடன் இனி ஒரு பேச்சும் பேச வேண்டாம். நீ, இராமனின் அனுமதியோடு நாங்கள் இறந்த பிறகு, ஆற்ற வேண்டிய பிதுர் கடன்களையெல்லாம் செய்து, நாங்கள் நரகத்துக்குச் செல்லாமல் காப்பாயாக!” என்று சொல்லி கும்பகர்ணன், விபீஷணனை மீண்டும் மார்போடு தழுவிக் கொண்டு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து பார்வையை மறைக்க “நாம் இருவரும் கூடிப் பிறந்த உறவு இன்றோடு முடிந்து விட்டது. திரும்ப சந்திக்க முடியாத பிரிவு நமக்குள் ஏற்பட்டு விட்டது. இங்கிருந்து போ!” என்றான் கும்பகர்ணன். விபீஷணனும் அழுதபடியே, அவன் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.

கண்களும், முகமும், மனமும் வாடிய நிலையில் விபீஷணன் உயிரும் உடம்பும் ஒடுங்கினான். இவனோடு இனி வாதாடிப் பயன் இல்லை, திரும்பச் செல்வதே நல்லது என்று மற்றவர் கைகூப்பி வணங்கிட அங்கிருந்து புறப்பட்டான். திரும்பச் செல்லும் விபீஷணன், இவனை இனி என்னால் பார்க்க முடியுமா? இறுதியாக ஒரு முறை இவனை பார்த்து விடுகிறேனே என்று போகும் வழியில் அண்ணனைத் திரும்பிப் பார்க்கிறான். போகிற தம்பியைப் பாசத்தோடு கும்பகர்ணனும் பார்க்கிறான். இருவர் கண்களிலும் கண்ணிர் பெருக்கெடுத்துப் பார்வையை மறைக்கிறது. துக்கத்தை மனதில் தாங்கி அவரவர் தத்தம் வழியில் சென்றனர்.

கும்பகர்ணனைப் பிரிந்து சென்ற விபீஷணன், இராமபிரான் இருக்குமிடம் சென்றடைந்தான். அங்கு நடந்தவற்றை இராமனிடம் எடுத்துச் சொன்னான். இராமனும் அது கேட்டு இலேசாகத் தலையசைத்து “ஐயனே! உன் எதிரில் உன் அண்ணனை அம்பு எய்தி கொல்லுதல் நல்லதல்ல என்றுதான் நான் அவனை அழைத்து வரச் சொன்னேன். இதன் பிறகும், நாம் என்ன செய்ய முடியும்? விதியை யாரால் வெல்ல முடியும்?” என்றான்.

இப்படி இராமன் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரக்கர் சேனை குரங்குச் சேனையைச் சுற்றி வளைத்துக் கொண்டது. போர்க்களத்தில் ஒரே அமளி ஏற்பட்டது.

“ஓடின புரவி, வேழம் ஓடின, உருளைத் திண்தேர்

ஓடின; மலைகள் ஓட, ஓடின உதிரப் பேர் ஆறு

ஆடின கவந்த பந்தம்; ஆடின அலகை மேல் மேல்

ஆடின பதாகை; ஓங்கி ஆடின, பறவை அம்மா!”.

போர் தொடங்கியது. போர்க்களத்தில் குதிரைகளும், யானைகளும், தேர்களும் ஓடின. இரத்த ஆறு ஓடியது. தலையை இழந்த முண்டங்கள் எழுந்து ஆடின. இறைச்சியை உண்ட பேய்களும் ஆடின. தேர்களின் மீதும், யானைகளின் மீதும் கட்டியிருந்த கொடிகள் ஆடின, அவற்றைச் சுற்றி போர்க்களத்தில் இறந்து விழுந்த மாமிசங்களைத் தின்ன கழுகுகளும் பறந்து ஆடின.

போர்க்களத்தில் வானர வீரர்கள் வீசிய கற்களாலும், மரங்களாலும் அர்க்கர்கள் உருக்குலைந்து அழிந்தனர். அரக்கர்கள் வீசிய சூலமும், வேலும் குரங்குகளை உருக்குலையாமல் கொன்று போட்டன. அரக்கர்களின் வில்லிலிருந்து அம்புகள் புறப்பட்டு மழையென குரங்குகள் மீது பாய்ந்தன. பதிலுக்கு வானரர்கள் கல்லால் அடிக்க, அரக்கர்கள் அந்தக் கற்களைப் பிடித்து திரும்பவும் அவர்கள் மீதே எறிகின்றனர். இப்படி கடுமையான யுத்தம் நடைபெற்றது. தேவர்கள் பார்த்துத் திகைத்தனர். அந்த நேரத்தில் கும்பகர்ணன் யுத்த களத்துக்குள் புகுந்தான். அப்போது வானர வீரர்கள் அவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாடு! அம்மம்மா!

ஊழிக் காலத்தில் உலகங்கள் அழிதல் போல வானரங்கள் எல்லாம் அரக்கர் படையாலும், யானைகளாலும், கும்பகர்ணனின் தேராலும் நசுங்கி இறந்தனர். வானரர்கள் மலைகளைப் பெயர்த்து கும்பகர்ணன் மீது வீசுகின்றன. அவற்றையெல்லாம் அவன் தன் கையால் பற்றி மீண்டும் வானரர் மீதே வீசினான். ஒரு வானர வீரனை கையால் பற்றி, அதனால் மற்றொரு வானரனை அடிப்பான். சிலரை காலால் எத்துவான். துகைப்பான்; சிலரை வாயிலிட்டு மென்று உமிழ்வான்; சிலரை தலைகளைப் பற்றி திருகுவான்; வானத்தில் எடுத்து வீசுவான். இரு கைகளாலும் பற்றித் தேய்த்து உடலில் பூசிக் கொள்வான்.

கும்பகர்ணன் செய்யும் அழிவைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடினர். பிணக் குவியல்களுக்குப் பருந்துகள் வந்து சுற்றின. கும்பகர்ணன் கொன்ற வானர வீரர்களின் உயிர்களை அள்ளிச் சென்று எமனும் அயர்வடைந்து போனான். கும்பகர்ணனை என்ன செய்வதென்று அறியாமல் வானரர்கள் திகைத்தார்கள். அப்போது வானர சேனைத் தலைவன் நீலன், ஒரு பெரும் மலையை வேரொடும் எடுத்து அவன் மீது வீசினான். அதனைத் தன் சூலாயுதத்தால் பொடிப்பொடியாக்கினான் கும்பகர்ணன். வேறொரு மலையைத் தேட நேரமின்றி நீலன், அவன் தேர் மீது தாவி, அதனுள் இருந்த முரசம் முதலானவற்றைக் கடலில் தூக்கி எறிந்து காலாலும் கையாலும் பலமுறை உதைத்தான்.

கையும் காலும் ஓய்ந்துவிட்ட நிலையிலும், கும்பகர்ணனை ஒன்றும் செய்யமுடியாமல் நீலன் சலித்தான். இவன் வெரும் கையோடு போர் புரிந்தமையால் கும்பகர்ணனும் இவன் மீது தனது சூலாயுதத்தைப் பாய்ச்சவில்லை. இடக் கையால் அவனைத் தட்டிவிட்டான். கும்பகர்ணன் நீலனை அடிப்பதைக் கண்ட அங்கதன் ஒரு மலையைப் பிடுங்கி அவன் மீது வீசினான். அதைத் தன் ஒரு தோளால் தாங்கி உடைத்தான் கும்பகர்ணன். ஒன்றும் செய்ய முடியாமல் அங்கதனும் தவித்து நின்றான்.

ஏழு முனைகளைக் கொண்ட வைரத்தாலான ஒரு தண்டத்தை எடுத்து ‘போய் இவன் உயிரைக் குடி’ என்று சொல்லி, அதனை அங்கதன் மீது வீசினான் கும்பகர்ணன். அதனைத் தன் பெரிய கைகளால் பிடித்துக் கொண்டான் அங்கதன். அதையே ஓங்கிக் கொண்டு கும்பகர்ணனைத் தாக்க ஓடினான். தன் எதிரே ஓடிவந்த அங்கதனைக் கும்பகர்ணன் கண்களில் தீ எழப் பார்த்து, “நீ இறப்பதற்காகவே இங்கு வந்த வானர அரசன் சுக்ரீவனா? அல்லது அவனது மகன் முறையாகும் அங்கதனா? அல்லது எம் ஊரை எரித்து அரக்கர்களை வென்ற அனுமனா? யார் நீ?” என்றான் கும்பகர்ணன்.

“உன் அண்ணன் இராவணனைத் தன் வாலில் கட்டி நான்கு திசைகளிலும் தாவி சிவபெருமான் காலடியில் சென்று வணங்கினானே வாலி, அவனது மகன் நான். அங்கதன் என்பது என் பெயர். உன்னை நானும் என் வாலில் கட்டி பகைவரது போர் முனையில் பொருகின்ற இராமபிரானின் பாதங்களில் கொண்டு போய் போடுவேன்” என்றான் அங்கதன்.

“உன் தந்தையை ஓர் கணையால் கொன்ற இராமனுக்கு நீ செய்யும் தொண்டு பாராட்டப்பட வேண்டியதுதான். உனது நற்செயலை உலகமே பாராட்டும்” என்று கேலி செய்தான் கும்பகர்ணன். “மேலோர் உன்னை வணங்கிப் போற்றுவார்கள்” என்கிறான்.

“நீ இங்கு வந்தது என்னை உன் வாலால் கட்டி இராமன் முன்பு கொண்டு செல்ல அல்ல! என் சூலத்தால் உன் முதிகில் குத்தப்பட்டு உன் கால்களும், வாலும் தொங்கும்படி கீழே தரையில் கிடக்கத்தான்” என்றான்.

முன்பு கும்பகர்ணன் வீசிய தண்டத்தைத் தன் கையில் வைத்திருந்த அங்கதன், அந்தத் தண்டினால் கும்பகர்ணனை அடிக்க, அது சிதறுண்டு துண்டு துண்டாய் உடைந்தது. தண்டு சேதமடைந்தது கண்டு, அவனைப் பற்றி எடுக்க எண்ணி அவன் மீது தாவினான் அங்கதன், அப்போது கும்பகர்ணன் அவனை ஓங்கி குத்த, அங்கதன் மயங்கி நிலம் பிளக்கும்படியாக கீழே விழுந்தான். அப்போது இடைமறித்து அனுமன் அங்கே வந்து சேர்ந்தான். அவன் மீது கூறிய வேல் ஒன்றை கும்பகர்ணன் வீச, அனுமன் ஓர் பெரிய மலையை எடுத்து கும்பகர்ணன் நெற்றியில் அடித்து, பெரிதாக ஆரவாரம் செய்தான். கும்பகர்ணன் தலையில் மற்றொரு தலை போல பதிந்துவிட்ட அந்த மலையைப் பிடுங்கி அனுமன் மீதே திரும்ப வீசிவிட்டு தோள்தட்டி ஆர்ப்பரித்தான் கும்பகர்ணன்.

அப்போது அங்கதனை வானர வீரர்கள் தூக்கிக் கொண்டு சென்றனர். அனுமன் மற்றொரு பெரிய மலையை எடுத்துக் கொண்டு கும்பகர்ணனிடம், “இந்த மலையை உன் மேல் எறிவேன். உன்னால் இதைத் தவிர்க்க முடியுமானால் உன் வலிமையை எல்லோரும் போற்றுவார்கள். பிறகு உன்னோடு நான் போர் செய்ய மாட்டேன், போய்விடுவேன். வல்லவனே! இவ்வுலகில் நீ பெரும் புகழைப் பெருவாய்!” என்றான்.

“நீ வீசிய மலையால் நான் தளர்ச்சி அடைவேனாயின், உனக்குத் தோற்றவனாவேன். என் வலிமை உனக்குக் குறைந்தது என்று ஒப்புக் கொள்வேன்” என்றான் கும்பகர்ணன்.

அனுமன் கும்பகர்ணன் மீது அந்த மலையை எறிகிறான். அந்த மலையைத் தன் தோளால் முட்டி, தூள்தூளாகச் செய்தான் கும்பகர்ணன். இதைக் கண்ட அனுமன் இவன் மிக்க வலிமை உடையவன். இவன் நெஞ்சை இராமன் அம்புதான் பிளக்கும் என்று எண்ணி அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்.

எழுபது வெள்ளம் வானர சேனையில் இதுவரை இறந்துபோன வானர வீரர்கள் தவிர, மற்றவர்களை இந்த கும்பகர்ணனே அழித்து ஒழித்துவிடுவான் போலிருக்கிறதே என்று தேவர்கள் மனம் கலங்கினர். குரங்குகள் குன்றுகளைப் பெயர்த்து கும்பகர்ணனைத் தாக்குகின்றனர். இலக்குவன் அவனோடு போர் புரிய வந்து சேருகிறான். தன் வில்லின் நாணை இழுத்து ஓசை எழுப்பினான். இவ்வொலியைக் கேட்ட அரக்கியர்கள் தத்தம் கணவர்கள் இனி மாண்டார்கள் என மங்கல நாண்களை எடுத்தெறிந்தனர்.

இலக்குவன் கும்பகர்ணன் போர் உக்கிரமாக நடந்தது. இலக்குவனின் போர்த் திறமையைக் கும்பகர்ணான் பாராட்டுகிறான். அனுமன் இலக்குவனைத் தன் தோள் மேல் தாங்கிக் கொள்கிறான். கும்பகர்ணன் அம்புறாத் தூணியைக் கட்டிக் கொள்கிறான்.

“நீ இராமனின் தம்பி. நான் இராவணனின் தம்பி. நாம் இருவரும் செய்யும் இந்த யுத்தத்தைக் காண தேவர்கள் வந்துள்ளனர். எங்கள் குலத்துப் பெண்கொடி சூர்ப்பனகையின் மூக்கினை அரிந்தாய். உன் கையை தரையிடைக் கிடத்துவேன்” என்றான் கும்பகர்ணன்.

“உன்னைப் போல சொல்லினால் பேச நான் விரும்பவில்லை. என் வில்லினால் பேசுவேன் “என்றான் இலக்குவன்.

இருவருக்குமிடையே கடும் யுத்தம் நடந்தது. கும்பகர்ணனின் தேரில் பூட்டியிருந்த சிங்கம் முதலான கூட்டங்களை அம்பு எய்து கொன்றானோ அன்றி மந்திரத்தால் கொன்றானோ என்று ஏனையோர் திகைத்து நிற்க, அவைகளைக் கொன்றதோடு, தேரையும் வில்லையும் இழந்த கும்பகர்ணனையும் தாக்கினான். கும்பகர்ணன் கடும் கோபம் கொண்டான்.

‘இப்போதே இவன் உயிரைக் குடிப்பேன்’ என்று மூன்று முனைகள் உள்ல சூலாயுதத்தை இலக்குவன் மீது செலுத்த கையில் எடுத்தான் கும்பகர்ணன். அவன் தேர் இழந்து தரையில் நிற்பதைக் கண்ட இலக்குவன், தானும் அனுமனின் தோளிலிருந்து இறங்கி போர் செய்தான். அப்போது இராவணன் புதிதாக அனுப்பிய சேனையொன்று கும்பகர்ணனுக்குத் துணையாக வந்து சேர்ந்தது. இந்த புதிய சேனையக் கண்டு வானரர்கள் சிதறி ஓடினர்.

அரக்கர் படையுடன் வானரப் படை மோதி பெரும் அழிவு ஏற்பட்டு எங்கும் பிணக் குவியல்களாக இருக்க, கும்பகர்ணன் வேறொரு திசையில் போரிட்டுக் கொண்டிருந்த சுக்ரீவன் இருக்குமிடம் சென்று அவனோடு போர் செய்யத் தொடங்கினான். சுக்ரீவன் மீது கூர்மையான ஒரு சூலாயுதத்தை வீசுகிறான் கும்பகர்ணன். அந்த சூலம் வந்த வேகத்தைப் பார்த்தவர்கள் ‘ஐயோ! இறந்தான் இறந்தான்’ என்று வாய்விட்டு அலறினார்கள். அது ஆகாயத்தில் விரைந்து செல்லுகையில், அனுமன் மின்னல் போல பாய்ந்து அதனைப் பிடித்து ஒடித்துப் போட்டான். இதனைக் கண்ட கும்பகர்ணன் அனுமனது வலிமையைப் புகழ்கிறான். “நீ என்னுடன் போர் செய்ய வா! போர் நூலில் சொன்ன வகையெல்லாம் நாமிருவரும் போர் செய்யலாம்” என்றான்.

அனுமன் “இனி உன்னை எதிர்த்துப் போர் செய்யேன்” என முடிவு செய்த பிறகு, உன்னோடு போர் செய்தல் பழுதாகும்” என்று மறுத்து விட்டான். அங்கிருந்து நீங்கி வேறிடம் சென்றான்.

அப்போது கும்பகர்ணன் வேறொரு ஆயுதத்தை எடுக்கவுமில்லை; இடம் விட்டு நகரவுமில்லை. இந்த நேரம் பார்த்து சுக்ரீவன் அவன் எதிரில் பாய்ந்து சென்று அவனைக் கையால் பற்றிக் கொண்டு, தன் வலிய கைகளால் தாக்கினான்; தன் பலம் கொண்ட மட்டும் அவனைக் கைகளால் குத்தினான். கும்பகர்ணன் அவனைப் பார்த்து “உன் ஆண்மை நன்று; ஆயினும் உன் செருக்கு இன்றோடு அழிந்து விடும்” என்று சொல்லிக் கொண்டே சுக்ரீவனைப் பற்றி நெருக்குகிறான். இருவரும் எதிர் எதிராக அடியிட்டு வட்டமாகச் சுற்றி வந்து சாரிகை செய்து போரிட்டதை தேவர்களும் காணமுடியவில்லை; அவ்வளவு வேகம். வானத்தில் இடி இடிப்பது போல போர் நிகழ்ந்தது. இருவன் வாயிலும் இரத்தம் கொட்டின. ஆனால் இருவரும் சோர்வடையாமல் போர் செய்தனர்.

கும்பகர்ணன் சுக்ரீவன் தொள்களை வளைத்துக் கட்டி அவன் பொறுக்க முடியாதபடி இருக்கினான். அதனால் சுக்ரீவன் சிறிது உணர்வு மயங்கினான். மயங்கிய சுக்ரீவனைத் தூக்கிக் கொண்டு இலங்கை நகருக்குள் போனான் கும்பகர்ணன். பார்த்துக் கொண்டிருந்த வானரர்கள் அலறினர். தாய்ப் பறவையை வல்லூறு தூக்கிக் கொண்டு போகும்போது அதன் குஞ்சுகள் கதறுவது போல வானரர்கள் கதறினர். அது கண்டு அரக்கர்கள் இன்ப ஆரவாரம் செய்தனர்.

சந்திரனை கருநிற பாம்பு விழுங்குவதைப் போல வெண்மைநிறமான சுக்ரீவனை கருமைநிறமான கும்பகர்ணன் தூக்கிச் சென்றான். இதைக் கண்டு அனுமன், இந்த கும்பகர்ணனோடு போர் செய்வதில்லை என்று சத்தியம் செய்து விட்டேனே, இவன் சுக்ரீவனைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறானே, என்ன செய்வேன் என்று கைகளைப் பிசைந்து கொண்டு அவன் பின்னாலே போகிறான். வானரர்கள் அலறிக் கொண்டு “எங்கள் அரசன் சுக்ரீவனை அரக்கன் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான், இனி எங்களுக்கு யார் துணை” என்று இராமனிடம் போய் முறையிட்டு அழுதார்கள்.

இராமபிரான் நெருப்பு போல கண்கள் சிவக்க, வில் அம்புகளோடு, இரண்டு மாத்திரைப் பொழுதில் இலங்கை நகர வாயிலை அடைந்தான். என் நண்பன் சுக்ரீவனை இந்த அரக்கன் இலங்கை நகருக்குள் கொண்டு சென்று விட்டால், கேடு நேரும் என்று கோட்டையின் வாயிலை தன் அம்புகளைச் செலுத்தி முழுமையாக அடைத்து விட்டான். இராமன் வில்லிலிருந்து இப்படிச் சரங்கள் சென்ற வேகத்தில், திசைகள் திகைத்தன. சூரிய கதிர்கள் பூமிக்கு வருவது தடைப்பட்டது. கோட்டை வாயில் முழுவதுமாக அம்புகளால் அடைபட்டுப் போயிற்று. அந்த அம்புச் சுவற்றைக் கடந்து போக கும்பகர்ணனால் முடியவில்லை. மதிலைத் தாண்டிப் போக நினைத்தவனுக்கு அங்கும் அம்புகள் அணைகட்டியது போல மறைத்துக் கொண்டிருந்தது. இதைச் செய்தவன் யார் என்று திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தான். அங்கே தாமரைச் செங்கணான் இராமபிரானைக் கண்டான்.

இராமபிரானை நேரில் கண்டதும், கும்பகர்ணன் பெரிதும் வெகுண்டான். அவனுக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணமாக அவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம்.

“மடித்த வாய் கொழும்புகை வழங்க, மாறிதழ்

துடித்தன; புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட

பொடித்ததீ, நயனங்கள்; பொறுக்கலாமையால்

இடித்தவன் தெழிப்பினால், இடிந்த, குன்று எலாம்”.

அவனுடைய வாயிலிருந்து புகை எழுகிறது; உதடுகள் துடிக்கின்றன; புருவங்கள் வளைந்து ஏறுகின்றன; கண்கள் தீப்பொறி கக்குகின்றன, அவன் அதட்டிய ஒலியால் குன்றுகள் அந்த ஓசையை எதிரொலித்தன. “வலிமை இழந்த கவந்தனைப் போலவும், பூவும், காயும், கனியும் உண்ணும் வாலி போலவும், என்னை எண்ணிவிட்டாயோ? இந்த சுக்ரீவனைக் காக்கும் பொருட்டு என்னைத் தாக்க வந்தாயோ?”

“வில்லேந்திய இராமா! ஒத்த வலிமையுடையோர் செய்கின்ற போரில் யான், நின் தம்பி இலக்குவனுடன் வெகுண்டு போர் செய்யவில்லை, அவனுக்கு வாகனமாக வந்த யானை போன்ற அனுமனோடு வெகுண்டு போர் செய்யவில்லை, உன்னிடம் தோற்ற வாலியின் தம்பி சுக்ரீவனுடனும் வெகுண்டு போரிடவில்லை, ஏன் தெரியுமா? அவர்கள் எனக்கு நிகரானவர்கள் இல்லை. எனக்கு நிகரானவனாக உன்னைத்தான் தேடினேன். நீ கிடைக்கவில்லை. நான் விளையாட்டாகச் செய்த போரில் உன் வானரப் படைகள் சிதறுண்டு போயின. உன் தம்பி வலி இழந்து ஒதுங்கிப் போனான். அனுமன் தன் பலம் சிதைந்தான். எனக்கு ஈடு கொடுத்துப் போர் செய்ய வந்த இந்த சுக்ரீவனை தடுப்பார் இன்றி எளிதாகத் தூக்கி வந்தேன். இவனைக் காப்பாற்றுவதற்காக நீயே வந்தாய். இதுவே என் பாக்கியம். உன்னோடு போர் செய்து என் அண்ணன் அடைந்துள்ள துன்ப நோயைப் போக்குவேன். இதோ! என் பிடியிலுள்ள சுக்ரீவனை உன் வில் வீரத்தால் விடுவிப்பாய் என்றால், சீதையும் சிறை மீண்டாள் என்று கொள்!” என்றான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் இப்படி பேசியதும், இராமன் ஒரு புன்னகை செய்து “என் இனிய நண்பன் சுக்ரீவனைத் தூக்கிய உனது தோள் எனும் மலையை நான் வெட்டி சாய்க்கவில்லையாயின் உனக்குத் தோற்றவன் ஆவேன். அதன் பின், இந்த வில்லையும் நான் தொடமாட்டேன்” என்று சபதம் செய்தான்.

வில்லால் செலுத்தப்பட்டு சுவர்போல கோட்டை வாயிலை மறைத்திருக்கும் அடைப்பைத் திறக்க எவ்வளவு முயன்றும் கும்பகர்ணனால் முடியவில்லை. அப்போது இராமபிரன் அவனது நெற்றியைக் குறி வைத்து கூரிய முனையுள்ள இரண்டு அம்புகளைச் செலுத்தினான். அந்த அம்புகள் கும்பகர்ணன் நெற்றியில் பாய்ந்து புகுந்தது, அந்த இடத்திலிருந்து குருதி கொப்பளித்துக் கொட்டியது. அந்த குருதி வெள்ளம் சுக்ரீவன் முகத்தில் பட்டு அவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். இதுவரை வீரப்போர் புரிந்த கும்பகர்ணன் இராமனின் கணையால் அடிபட்டு மயங்கி கீழே விழுந்தான்.

கும்பகர்ணன் நெற்றியில் இராமனது அம்புகள் பாய்ந்திருந்ததை சுக்ரீவன் பார்த்தான். இராமன் எங்கே என்று சுற்றிலும் பார்த்தான், அங்கே இராமனைக் கண்டு கைகளைக் கூப்பித் தொழுது வணங்கினான். இராமனைக் கண்டதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அங்கே மயங்கி கீழே விழுந்து கிடந்த கும்பகர்ணன் மீது தாவிப் பாய்ந்து, அவனது மூக்கையும், காதையும் அடியோடு கடித்துக் கவர்ந்து கொண்டு எழுந்து சென்று தன் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டான். என்ன இருந்தாலும் பிறப்பால் வானரந்தானே! அவன் இயல்பான முறையில், முன்பு பாய்ந்து சென்று இராவணன் மணிமகுடத்திலிருந்த விலைமதிப்பற்ற மணிகளைப் பிடுங்கிச் சென்றான், இப்போது மயங்கி கீழே கிடக்கும் கும்பகர்ணன் மீது பாய்ந்து அவன் காதையும் மூக்கையும் அடியோடு கடித்து எடுத்துச் சென்றான்.

கும்பகர்ணனது மூக்கையும், காதையும் சுக்ரீவன் கடித்துத் துண்டித்து விட்டதைக் கண்டதும் அங்கே ஒரே ஆரவாரம்.

“வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன

தானமும் ஆர்த்தன; தவமும் ஆர்த்தன

மீன் நால் வேலையும் வெற்பும் ஆர்த்தன

வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே”.

வானரக் கூட்டத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. நம் அரசன் சுக்ரீவன் அந்த அரக்கனுடைய காதையும் மூக்கையும் கடித்து எடுத்து விட்டான் என்று ஆரவாரம் செய்தன. மேகமும்கூட மகிழ்ந்து ஆரவாரம் செய்து மழையைப் பொழிந்தது. தானமும், தவமும் கூட இந்த காட்சியைக் கண்டு ஆர்ப்பரித்தன; நான்கு கடல்களும் மலைகளும்கூட அரவாரம் செய்தன. தேவர்களோடு நின்ற தர்மதேவனும் ஆர்ப்பரித்தான்.

சிறிது நேரமானதும், சுக்ரீவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். அவன் மயக்கம் தெளிந்ததைக் கண்டு இராமனும் மகிழ்ந்தார். மயக்கம் தெளிந்து எழுந்த கும்பகர்ணன், தன் பிடியில் மாட்டிக்கொண்டிருந்த சுக்ரீவன் தப்பி ஓடிவிட்டதையும், அவன் போகும் போதே தன் மூக்கையும், காதையும் கடித்துத் துண்டித்துக் கொண்டு போய்விட்டதையும் உணர்ந்து தாங்கமுடியாத வருத்தம் அடைந்தான். அவனுக்கு அவன் மீதே இரக்கம் வந்தது.

“ஏசியுற்று எழும், விசும்பினரைப் பார்க்கும்; தன்

நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை

வாசியைப் பார்க்கும்; இம்மண்ணைப் பார்க்குமால்

சீசீ உற்றது! எனத் தீயும் நெஞ்சினன்.”

சீ சீ என்ன இது இப்படி நேர்ந்துவிட்டதே என்று வெறுப்புற்று நெஞ்சு தீய்கிறான். இப்படிச் செய்த பகைவனை வாய் நிறைய ஏசிக் கொண்டு எழுகிறான்; விண்ணிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் தேவர்களைக் காண்பான்; பின் தோண்டி எடுக்கப்பட்ட தன் மூக்கும் காதும் இருந்த இடத்தைப் பார்ப்பான்; முன்பு தான் இருந்த மகோன்னதமான வாழ்வையும், இன்றைய இழிநிலையையும் ஒப்பிட்டுப் பார்ப்பான்; இதனால் ஏற்பட்ட அவமானத்தால் தலை குனிந்து மண்ணைப் பார்ப்பான்.

என் மூக்கை அறுத்த அவனுக்கு இதே தீங்கை நான் செய்து காட்டுவேன் என்று சொல்லி, தன் வாளையும் கேடயத்தையும் கையில் எடுத்தான் கும்பகர்ணன். மிகுந்த கோபத்தினால் அறுபட்ட அவன் காதிலும், மூக்கிலும் உதிரம் கொட்டியது. முதலில் எடுத்த கேடயம் தன் ஆற்றலுக்கு ஏற்றதல்ல என்று அதனைத் தூக்கி எறிந்து விட்டு புதியதாக ஒன்றை எடுத்துக் கொண்டான்.

“விதிர்த்தனன், வீசினன், விசும்பின் மீன் எலாம்

உதிர்த்தனன், உலகினை அனந்தன் உச்சியோடு

அதிர்த்தனன், ஆர்த்தனன் ஆயிரம் பெருங்

கதிர்த்தலம் சூழ் வடவரையின் காட்சியான்”

கையில் பிடித்திருந்த வாளால் வீசினான், விண்ணில் உள்ள மீன்கள் எல்லாம் மண்ணில் விழும்படி உதிர்த்தனன்; இம்மண்ணுலகத்தைத் தாங்குகின்ற ஆதிசேடன் உட்பட அனைத்தையும் அதிரச் செய்தான்; பெருத்த ஆரவாரம் செய்து கொண்டே கும்பகர்ணன் ஆயிரம் கதிர்களையுடைய சூரியன் வலம் வரும் மேருமலையினைப் போல காட்சியளித்தான். தன் கையிலிருந்த கேடகத்தை வீசி கடும் போர் புரிந்தான். குரங்குப் படை திசைதோறும் சென்று விழுந்தன. ஆயிரம் நாமங்களையுடைய இராமபிரான் அந்த கேடகத்தைத் தன் வில்லினின்றும் புறப்பட்ட ஓர் அம்பினால் உடைத்தெறிந்தான்.

கேடகம் உடைந்ததும், தன் வாளை எடுத்துப் போரிட்டான் கும்பகர்ணன். சரஞ்சரமாய் வானரங்கள் செத்து மடிந்து வீழ்ந்தன. அப்போது ஜாம்பவான் இராமனிடம் இப்போது நீ இவனைக் கொல்லாவிட்டால் வானர சேனை முற்றிலும் அழிந்துவிடும் என்றான். உடனே இராமன் ‘எமனை இன்று இவன் முன் நிறுத்துவேன்’ என்ற உறுதியோடு அவனுக்கு முன்பாகச் சென்றான். பதிமூன்று இடி போன்ற அம்புகளைக் கும்பகர்ணன் மீது செலுத்தினான். போரில் வல்ல கும்பகர்ணன் அவற்றைத் தடுத்துச் சிதைத்தான். இராமன் வேறொரு அம்பை செலுத்தி கும்பகர்ணன் கை வாளை முறித்தெறிந்தான்.

கையிலிருந்த வாள் முறிந்ததும், வேறொரு வாளை எடுத்துக் கொண்டு, “முடித்தேன்! முடித்தேன்!” என்று வெறியோடு கும்பகர்ணன் இராமன் மீது தாக்கத் தொடங்கினான். இராமன் தனது தொடர்ந்த அம்புகளால் அவனுடைய வாள், கேடகம், கவசம் அனைத்தையும் அறுத்தெறிந்தான். அப்போது இராவணன் அனுப்பிய மற்றொரு படை அவனுக்கு உதவிக்கு வந்து சேர்ந்தது. கும்பகர்ணனும் ஒரு சூலப் படையை எடுத்துக் கொண்டு போரிடுகிறான். இராமன் எய்த அம்புகள், அரக்கர் படையை முற்றிலுமாக அழித்து விடுகின்றன.

கும்பகர்ணன் தனித்து விடப்பட்ட நிலையில், அவன் நின்ற கோலம் கண்டு இரக்கத்துடன் இராமன் ஐயோ! பாவம். இவன் தனியனாக நிற்கிறானே என்ற கனிவுடன் “கும்பகர்ணா! உன் தீவினை இன்னம் முடியவில்லை. அதனால்தான், நான் அழைத்த போது நீ என் பக்கம் வரவில்லை. சாவதற்கே தயாராக இருக்கிறாய். நீ விபீஷணனுடன் பிறந்தவன் என்பதால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். ஊருக்குத் திரும்பி போய் நாளை வருகிறாயா, அல்லது இப்பொழுதே போரிட்டுச் சாகிறாயா? எது உசிதமோ அப்படியே செய்” என்றான்.

“ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை, எதிர் ஒரு தனி நின்றாய்

நீதியோனுடன் பிறந்தனை, ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவன்

போதியோ? பின்றை வருந்தியோ? அன்று எனின் போர் புரிந்து இப்போதே

சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்து அம்மா!”

“இராமா! நீ கொல்வது இருக்கட்டும். உங்களால் உறுப்பு அறுபட்டு பிரிந்து சென்ற சூர்ப்பனகை போல என்னால் மூக்கு அறுபட்ட இந்த முகத்தோடு உயிரோடு இருக்க முடியாது. இராவனன் செய்த அடாத தவறைத் தடுக்க முயன்றேன். அவன் கேட்கவில்லை. அதன் விளைவாக இன்று மூக்கறுபட்டு, தலை குனிந்து உன்முன் நிற்கிறேன். உங்களையெல்லாம் கொன்றுவிட்டு வெற்றி வீரனாகத் திரும்ப வேண்டிய நான், சூர்ப்பனகை போல மூக்கறுபட்டுப் போய் நிற்கிறேனே!” என்றான் கும்பகர்ணன்.

பிறகு கும்பகர்ணனுக்கும், இராமனுக்கும் கடுமையான போர் நிகழ்கிறது. இராமன் விடுகின்ற அம்புகள் எல்லாம், கும்பகர்ணன் அணிந்திருந்த சிவபெருமான் கொடுத்த கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் சிவபெருமான் அருளிய பாசுபதாஸ்திரத்தை எடுத்து, அவன் மேல் ஏவி, அவனது கவசத்தை உடைத்தான் இராமன். மற்றொரு அம்பினால் அவனுடைய ஒரு கரத்தை அறுத்து எறிந்தான். அறுந்து கீழே விழுந்த கையை மற்றொரு கையால் எடுத்துக் கொண்டு அதனால் வானர சேனையைத் தாக்கி கணக்கற்ற வானரர்களைக் கொன்றான் கும்பகர்ணன்.

தேவர்களெல்லாம் கூடி நின்று “இராமா, அவனுடைய இன்னொரு கையையும் அறுப்பாயாக!” என்றனர். அவ்வாறே இராமன் இன்னொரு அம்பைச் செலுத்தி அவனுடைய இன்னொரு கையையும் துண்டித்து விடுகிறான். இரண்டு கைகளும் இழந்த பின்னரும், தன் கால்களால் எதிரிகளை உதைத்துப் போரிடுகிறான். முதலில் ஒரு காலைத் துண்டித்த பிறகும், அவன் மற்றொரு காலால் போரிடத் தொடங்கவும், அந்தக் காலையும் துண்டித்தார் இராமன். முண்டமாக கீழே விழுந்த கும்பகர்ணன் தனது வாயினால் மலைகளைக் கவ்வி எறிந்து அழிவைச் செய்தான். இவன் தீரமான போரைக் கண்டு இராமன் அதிசயித்தான்..

கை, கால்களை இழந்த நிலையில் கும்பகர்ணன் இராமனைப் புகழ்கிறான். காலவரம்பின்றி வாழ வேண்டிய இராவனன் காம நோயினால் வீழ நேரிட்டதே! இந்த இராமனது ஆற்றலுக்கு முன் ஆயிரம் இராவணர்களும் ஈடு ஆவார்களோ? என்று எண்ணுகிறான்.

“இராமா! சிபிச் சக்கரவர்த்தியின் மரபிலே வந்த நீ, அடைக்கலம் அடைந்தவரை காக்கும் பண்புடையவன். அரக்கர் குலத்தில் பிறந்தவனாயினும் என் தம்பி விபீஷணன் உன்னை அடைக்கலமென்று அடைந்தான். முழுமுதற் கடவுளே! அரச உருவம் தாங்கி வந்த வேத நெறி பூண்ட அந்தணனே! என் தம்பி விபீஷணனைக் காப்பாயாக!”.

“விபீஷணன் மீது கொண்ட கோபத்தால், என் அண்ணன் இராவணன் அவனைக் கொல்ல முயல்வான். நீ அவனை இராவணனிடமிருந்து காப்பாற்று. உன் தம்பி இலக்குவனும், அனுமனும், நீயும் விபீஷணனைப் பிரிந்து இல்லாமல் உங்களுடனேயே இருக்கும்படி பார்த்துக் கொள். தம்பி என்றும் பாராமல் தகவிலியான இராவணன் அவனைக் கொல்ல முயல்வான். இராமா! அருட்கடலே! பரம்பொருளே! இறுதியாக உன்னிடம் நான் ஓர் வரம் கேட்கிறேன். மறுக்காமல் நீ அதனைத் தந்திடல் வேண்டும். அருள் புரிவாயா?” என்றான் கும்பகர்ணன்.

“கேள்! கும்பகர்ணா” என்றான் இராமன்.

இந்த யுத்தத்தை தேவர்களும், முனிவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை மூக்கில்லாத முண்டம் என்று ஏள்னம் செய்யாவண்ணம் என் கழுத்தைத் துண்டித்து, அதை மிக எட்டத்தில் கண்காணாமல் சமுத்திரத்துக்குள் போடச் செய்து விடு. என் முண்டம் ஒருவர் கண்ணிலும் படவேண்டாம். இந்த வரத்தை மட்டும் நீ அருள வேண்டும்!” என்றான் கும்பகர்ணன்.

உடனே இராமன், ஒரு அம்பை எடுத்து, அவன் தலையைத் துண்டித்து, மிக தூரத்தில் கடலில் கொண்டு போய் போடச் செய்தான். அறுபட்ட கும்பகர்ணன் தலை கடலில் ஆழ்ந்தது. அது கண்டு:

“ஆடினர் வானவர்கள்; அரமகளிர் அமுத இசை

பாடினர்; மாதவரும் வேதியரும் பயம் நீத்தார்

கூடினார் படைத்தலைவர் கொற்றவனை; குடர் கலங்கி

ஓடினார், அடல் அரக்கர், இராவணர்க்கு உணர்த்துவான்”.

(யுத்த காண்டம் இரண்டாம் பகுதி நிறைவுற்றது.)

10


யுத்த காண்டம் - 3ஆம் பாகம்


வடிவம்:

கம்பர் இயற்றிய இராம காதை

யுத்த காண்டம் – 3ஆம் பாகம்.

யுத்த காண்டத்தின் முந்தைய பகுதியின் இறுதியில் கும்பகர்ணனுடைய வீர சாகசச் செயல்களையும், இராகவனது வாளி அவன் தலையைக் கொண்டு போய் கடலில் போட்ட வரலாற்றையும் பார்த்தோம். இனி இலங்கை மன்னன் இராவணன் சீதைபால் வைத்த பொருந்தாக் காமத்தால், தனது சிறுமைகளிலிருந்து விடுபடாதவனாக, மேலும் மேலும் தவறான வழிகளையே மேற்கொள்கிறான் எனும் வரலாற்றைப் பார்க்கலாம்.

இராவணன் தனது அமைச்சனான மகோதரனிடம் சீதையை நான் எப்படியும் அடைவதற்கு ஒரு நல்ல உபாயம் சொல் என்று கேட்கிறான். “சொல்கிறேன்” என்று மகோதரன் ஓர் சூழ்ச்சியைக் கூறுகிறான். “மருத்தன் என்றொரு அரக்கன், மாயையும், வஞ்சனையும் உடையவன். அவனை ஜனக மன்னன் போல உருவத்தை எடுத்துக் கொண்டு, சீதையிடம் கொண்டு செல்வோம். தன் தந்தை துன்பப் படுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள்” என்றான் மாயையில் வல்ல மகோதரன். இப்படியொரு ஆலோசனை வழங்கிய மகோதரனை, இராவணன் மார்போடு தழுவிக் கொண்டு, “அவனை இங்கே கொணர்ந்து அவ்விதமே செய்” என்றான்.

தீய எண்ணங்களோடு இராவணன் அசோகவனத்தை அடைகிறான். அங்கே சீதையிடம் தான் காமவசப்பட்டு தளர்வுறும் நிலையை எடுத்துரைத்துத் தன்னை ஆதரித்து அருளும்படி நிலத்தில் விழுந்து மன்றாடிக் கேட்கிறான். இந்த அரக்கனது செயலைக் கண்டு ஜானகி அச்சமுற்றாள். தூர்த்தனாகிய இராவணனை ஏறிட்டும் பார்க்கவில்லை. கீழே கிடந்ததொரு துரும்பை எடுத்தாள், அதை கீழே போட்டு அதனை இராவணனாக எண்ணிக்கொண்டு, தன் ஆருயிர் நாயகனாகிய இராமனையன்றி வேறு எவரையும் எண்ணாத தன் உள்ளத்து உறுதியை அறிவுறுத்துகிறாள். தீயோன் இராவணனைப் பார்க்கவும் விரும்பாமல் வேறு புறம் திரும்பிக் கொள்கிறாள். இராவணனுக்குத் தாங்க முடியாத அவமானம், கோபம். சீதையிடம் “நின் கணவனாகிய இராமனைக் கொல்வேன். அவனது சுற்றத்தார் அனைவரையும் அயோத்தியிலும், மிதிலையிலும் கொல்வேன். அவர்களைக் கொண்டு வர ஆற்றல் மிக்க அரக்கர்கள் சென்றிருக்கிறார்கள்” என்றான்.

வஞ்சனை மிக்க அவன் சொற்கேட்டு பெரும் துயரமடைந்தாள் சீதை. அந்த நேரம் மகோதரன் ஜனகன் வேடமிட்ட அரக்கனை, அவள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். தனது தந்தை அரக்கர்களிடம் சிறைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஜானகி பலவும் சொல்லி அரற்றுகிறாள். மாயா ஜனகன் இராவணனை வணங்குவதைக் கண்டு பறவைக் குஞ்சைப் போல பதறுகிறாள். ஜனகனாக வேடமிட்டவன் பொய்யானவன் என்பதை ஜானகி உணரவில்லை. தன் தந்தையின் துன்பத்தைப் போக்க வழி தெரியாதவளாய்த் தவிக்கிறாள்.

வலிமையற்ற பெண்ணான எனக்குத்தான் துயரம் என்றால், வேந்தனாகிய உனக்கும் இப்படி பகைவனை வணங்கிடும் இழிநிலை வந்ததே என்று வருந்தினாள். என் தந்தையையே பற்றிக் கொணர்ந்த இவர்களுக்கு, தவ நிலையில் இருக்கும் பரதனைப் பிடித்துக் கொண்டு வருதல் எளிதானதுதானே, அரியது அல்லவே! இப்படி வருந்தித் துயரத்தில் உழன்ற சீதையிடம் இராவணன் அவைளைத் தன் விருப்பத்திற்கு இசையுமாறு வேண்டுகிறான். வெகுண்டெழுந்த சீதை, “தூர்த்தனே! என் நாயகன் அம்பிற்கு நீயும் உன் சுற்றமும் அழியப்போவது திண்ணம்” என்றாள்.

“நீ இராமனின் அம்பு பாய்ந்து போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பாய். காக்கைகள் உன் கண்களைத் தன் அலகினால் கொத்தித் தின்னும். புலால் தின்ற பேய் வாய்கள் உன்னைச் சுற்றி ஆடும். போரிலே உன் மகனை இலக்குவன் கொல்வான்; அவன் உடம்பை பிணம் உண்ணும் நாய்கள் தின்னும்; நீ இறந்த மகனை எண்ணி வாய்விட்டு அலறப் போகிறாய்!” இப்படி பிராட்டி சொன்னதும், வெகுண்டெழுந்த இராவணன், கைகளைப் பிசைந்து கொண்டு, பற்களைக் கடித்து, வாயை மடித்து, சீதையை நோக்கி விரைவாக வந்தான்; அப்படி வந்தவனை மகோதரன் தடுத்தான்.

“இவளை நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இவள் தந்தை ஜனகன் சொன்னால், இவள் கேட்பாள்” என்றான். கோபம் தணிந்து இராவணன் திரும்பி வந்தான். அப்போது ஜனகன் வேடமிட்ட மாய அரக்கன் சீதையிடம், “தந்தை உன் முன்னால் இறக்கும்படி நீ பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயோ? உன்னால், பிற உயிர்கள் அழிவது நல்ல செயலோ? நீ இலங்கை வேந்தர்க்கு உடன்பட்டு அவனை ஏற்றுக் கொள்வது உனக்கு ஒரு தீங்காகுமோ?” என்றான்.

மாயா ஜனகனின் சொற்களைக் கேட்ட சீதை அடைந்த நிலையை என்னவென்று சொல்வது?

“அவ்வுரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி

வெவ்வுயிர்த்து, ஆவிதள்ளி, வீங்கினள் வெகுளி பொங்க

‘இவ்வுரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி

செவ்வுரை அன்று இது’ என்னாச் சீறினாள், உளையச் செப்பும்”.

என் தந்தை இப்படிப்பட்ட பேச்சை பேசவே மாட்டார். பழியை ஏற்றுக் கொண்டு எப்படியாவது உயிர் வாழ வேண்டுமென்று என் தந்தை எண்ணவே மாட்டார். இவ்வார்த்தைகள் அறமும் அன்று, நேர்மையும் அன்று, என்று மனம் நைந்து வருந்தினாள்.

“அறம் உணர்ந்தவர் சொல்லும் சொல்லா இது? நற்குடிப் பிறந்தார் கூறும் செயலா இது? வேத நூல் கற்றவர் கூறும் நெறியா இது? உயிரினும் மேலாக பண்பு பாராட்டுவோர் நினைக்கக் கூடிய செயலா இது? நீ நற்குடி பிறந்த ஜனகன் அல்ல! நீ என் தந்தையே அல்ல!” என்று அலறினாள் சீதை.

“என் ஆருயிர் நாயகன் இராமபிரான் அன்றி வேறு ஆடவர் எவரேனும் என்னை அணையும் கருத்துடன் என்னருகில் நெருங்க முயல்வானாயின், அவர்கள் தீச்சுடரை அணுகிய விட்டிற் பூச்சியைப் போல அழிவார்கள். நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல, ஒருவரது குலத்தின் இயல்பை, அவர் கூறும் வாய்ச் சொற்கள் புலப்படுத்தும்.” என்கிறாள் சீதை.

அப்போது அந்த மாயா ஜனகனைக் கொன்று விடுவதாகக் கூறிக்கொண்டு இராவணன் தனது வாளை உறுவுகிறான்.

“உன்னால் ஒருவரையும் கொல்லுதல் இயலாது. நீ இராமபிரான் அம்பினால் இறந்தொழிவாய்!” என்றாள் சீதை.

மகோதரன் இராவணனை சமாதானம் செய்வது போல பாசாங்கு செய்து, அந்த மாயா ஜனகனைக் கொல்லாமல் தடுத்து அழைத்துச் செல்கிறான். அப்போது போர்க்களத்திலிருந்து பெருத்த ஆரவாரம் கேட்கிறது. இராவணன் காதிலும் அந்த ஆரவாரம் வந்து விழுகிறது.

தூதர்கள் வந்து இராவணன் காதோடு, “உம்பி இறந்தனன், இராமன் கொன்றனன்” என்றனர். போர்க்களத்தில் தம்பி கும்பகர்ணன் இறந்த செய்தி கேட்ட இராவணன் பெரும் துயரத்தில் ஆழ்ந்தான். தாங்க முடியாத துயரத்தால் உணர்வு இழந்தான். உணர்வு திரும்பியபின் விழித்தெழுந்து, வாய்விட்டு கதறி அழுதான், மாண்டுபோன தன் அருமைத் தம்பி கும்பகர்ணனுக்காக.

“தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்

தும்பியோ! நான்முகத்தோன் சேய் மதலை தோன்றாலோ!

தம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த

எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ!”

தேவர்களுடைய தாமரைத் தடாகத்தைத் துவைத்து துவம்சம் செய்த யானை போன்ற தம்பியே! பிரமனின் மகன் வயிற்றுப் பேரனே! ஆண்களில் சிறந்தவனே! இந்திரனை வென்ற என் அருமைத் தம்பியே! நான் இருந்து, உன் இறந்த செய்தியைக் கேட்கும்படியாக நேர்ந்ததே!”.

“தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான்

மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்தான்

பின்னைக் கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய்

என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே”.

என் பொருட்டுப் போர்க்களத்தில் ஆவி துறந்த என் அருமைத் தம்பி! அந்த வில்வீரன் இராமனையோ, அல்லது அவன் தம்பியாகிய இலக்குவனையோ, அல்லது படைத்தலைவன் நீலனையோ, அல்லது வானர மன்னன் சுக்ரீவனையோ, அல்லது வாலி மைந்தன் அங்கதனையோ, அல்லது வாயுபுத்திரன் அனுமனையோ, அல்லது கரடிகளுக்கு அரசன் ஜாம்பவானையோ, கொன்று ஒழித்தாய் என்று உலகத்தார் சொல்லக் கேட்டு மகிழவேண்டிய நான் இன்று உனக்கே மரணம் வந்தது என்று கேட்கும்படி நேர்ந்து விட்டதே!.

“காதல் மகளிர் உன் கால்களைத் தடவிவிட, தென்றல் வீசும் மாளிகையில் மலர்ப்படுக்கையில் துயிலுகின்ற நீ! போர்க்களத்தில், பேய்க் கணங்கள் கூத்தாட, பறை முழக்கம் கேட்கும்படி மண் தரையில் விழுந்து துயின்றாயோ?” இப்படி இராவனன் வாய்விட்டு அரற்றி அழுதான். தம்பி கும்பகர்ணன் மாண்டுபோன செய்தி அவனை பெரிதும் உலுக்கிவிட்டது. முன்பு இராவணன் எனும் பெயர் இவனுக்குக் கிடைக்கவும் இப்படியொரு முறை அழுததால்தான் கிடைத்தது. அது கைலை மலையை பெயர்க்கும் போது மலைக்கடியில் மாட்டிக் கொண்டு அழுத இராவணனுக்கு இரங்கி சிவபெருமான் கொடுத்த காரணப் பெயர். இராவணம் என்ற சொல்லுக்கு அழுகை என்று பொருள் உண்டு. அதோடு முக்கோடி வாழ்நாளையும், மாற்றாரை வெற்றி கொள்ளக்கூடிய ‘சந்திரஹாசம்’ எனும் வாளையும் சிவபெருமான் இராவணனுக்குக் கொடுத்தார் என்பது வரலாறு.

கும்பகர்ணன் போரில் மாண்டான் என்ற செய்தியும், அந்தச் செய்தியைக் கேட்ட இராவணன் அழுது புலம்புவதையும் கேட்ட சீதை மகிழ்ச்சியடைந்தாள். இராவனனுக்குத் தன் தம்பியைக் கொன்ற மானுட வர்க்கத்தையே பூண்டோடு ஒழிக்க வேண்டுமென்ற வெறி ஏற்பட்டது. அமைச்சர்கள் அவனைத் தேற்றி அழைத்துச் சென்றார்கள். போகிற போக்கில், இந்த (மாயா) ஜனகனைச் சிறையில் அடையுங்கள் என்றும் சொல்லிவிட்டுப் போனான்.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த திரிசடை சீதையிடம் உன் தந்தை என்று ஒருவனை அழைத்து வந்து இராவணன் நாடகம் ஆடினானே, அவன் உன் தந்தை அல்ல. கொடும் தொழில் பூண்ட மாயத்தில் வல்ல அரக்கன். அவன் பெயர் மருத்தன் என்றாள். சீதை நிம்மதி அடைந்தாள்.

அசோகவனத்திலிருந்த இராவணனுக்கு அவன் தம்பி கும்பகர்ணனின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும், அவன் தாங்க முடியாத கோபம் கொண்டான் என்பதைப் பார்த்தோம். அவன் அரண்மனை திரும்பும் வழியில் இரு புறங்களிலும் நின்று வணங்குகின்ற அமைச்சர்கள் மீது கடும் கோபத்துடன் காணப்பட்டான்.

“பகைவர்களை அழித்து வெற்றியுடன் திரும்புவோம் என்று வீண் வீரம் பேசிவிட்டுப் போர்க்களம் போனீர்களே! தம்பிக்குத் துணையாக இருந்து அவன் உயிரைக் காக்கவும் இல்லை, போரில் வெல்லவுமில்லை. என் தம்பியைக் களபலி கொடுத்துவிட்டு வந்துள்ள நீங்கள் என் கண்முன் நிற்காதீர்கள், போய்விடுங்கள்!. போரில் வெற்றி பெற முடிந்தால் போருக்குச் செல்லுங்கள், இல்லை, பகைவனிடம் அடிபட்டு சாவோம் என்றால், போருக்கே போக வேண்டாம். இரண்டில் ஒன்றை மேற்கொள்ளுங்கள்!” என்று எரிந்து விழுந்தான் இராவணன்.

அதனைக் கேட்ட இராவணனது மகன் அதிகாயன், தன் உள்ளத்தில் பொங்கி வந்த கோபத்தில் இராவணனிடம், “தந்தையே! உன் தம்பியைக் கொன்றவனது தம்பியை, நான் கொன்று வருவேன். நீ பெற்ற துயரத்தை, அவனையும் அடைய வைப்பேன். நான் அப்படிச் செய்யத் தவறினால், உன் மகன் எனச் சொல்லத்தக்கவன் அல்லேன்” என்று சூளுரைத்தான்.

“தந்தையே! சேனையை அழைத்துக் கொண்டு போ என்று சொன்னாலும், அன்றி தனியாகவே போருக்குப் போ என்று சொல்லிப் பணித்தாலும், உன் எண்ணப்படி செய்வேன், விடை தருக!” என்றான்.

மகன் அதிகாயன் சொன்னதைக் கேட்டு இராவணன் பெருஞ்சேனையுடன், அவனை போருக்கு அனுப்பி வைத்தான். மேலும் சிறந்த வீரர்களான, கும்பன் எனும் கொடுந்தன்மையானும், நிகும்பன், அகம்பன் ஆகியோரையும் மகனுடைய தேருக்கு முன்பாகவும், பின்பாகவும் செல்லும்படி ஆணையிட்டு அனுப்புகிறான். ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அதிகாயன் போருக்குச் செல்கிறான். அவனோடு கோடி யானைப் படையும், அதே அளவு குதிரைப் படையும் சென்றன. அதிகாயன் கவசத்தை அணிந்து கொண்டு, கையில் வில்லையும், உடை வாளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

போர்க்களம் சென்ற அதிகாயன் அங்கு இராமனால் அரக்கர் சேனைக்கு ஏற்பட்ட அழிவுகளைப் பார்த்தான். சித்தப்பா கும்பகர்ணனின் தலையற்ற முண்டம் கிடப்பதையும் கண்டு மனம் பதைத்தான். இந்த அவலத்தைக் காணவோ, நான் இங்கு வந்தேன் என்று அழுது புலம்புகிறான், கும்பகர்ணனின் தலையற்ற உடலைக் கண்டதும் கடும் கோபமடைகிறான். இதனைச் செய்த இலக்குவனைப் போரில் கொன்று, அவன் மறைவால் இராமன் படும் துயரைக் கண்ட பிறகுதான் என் துயரம் ஆறும் என்றான்.

இலக்குவனைத் தன்னுடன் போர் புரிய வருமாறு மயிடன் எனும் அரக்கன் மூலம் சொல்லி அனுப்புகிறான். மயிடன் இராமனைப் பார்க்கப் போன இடத்தைல், வானரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்க, இராமன் அவர்களைத் தடுத்து, தூது வந்தவனைத் தாக்காதீர்கள் என்று அவனைக் காத்தான். மயிடனிடம் அவன் வந்த காரணம் யாது என்று இராமன் கேட்டதற்கு, அவன் அதை இலக்குவனிடம் மட்டும்தான் சொல்வேன் என்றான்.

“சரி! சொல்! சொல்!” என்று இலக்குவன் வேகமாகக் கேட்டான். மயிடன் இலக்குவனிடம் “பொன் மேனியனே, அதிகாயனுக்கு உன்மீது தான் ஆத்திரம். உன் மீது வெகுண்டவனாகி உன்னிடன் தனித்து நேருக்கு நேர் போரிட அழைக்கிறான். ஆற்றல் உண்டு என்றால், இப்போதே என்னுடன் புறப்படு” என்றான்.

இதனைக் கேட்ட இராமபிரான், “இலக்குவன் ஒருவனே அதிகாயனைத் தனித்து நின்று போரிட்டு அழிப்பான்” என்று அனைவரிடமும் கூறி, இலக்குவனை அனுப்பி வைக்கிறான். உடனிருந்த விபீஷணன், இராமனைப் பணிந்து, “முற்காலத்தில் திருமாலுடன் பொறாது இறந்த மது, கைடபன் எனும் அவுணர் இருவருமே முறையே கும்பகர்ணனாகவும், அதிகாயனாகவும் பிறந்துள்ளனர். அவர்களுள் மதுவாகிய கும்பகர்ணனை கொன்றாகிவிட்டது. கைடபனாகிய அதிகாயன் பிரமதேவனிடம் தவம் செய்து, அமரர்கள் முதலான எவராலும் அழிக்கமுடியாத பெரு வரத்தைப் பெற்றவன். அறவழிப்பட்டு போர் செய்வான். ஆகையால், இலக்குவரோடு நாம் அனைவருமே உடன் செல்வது நல்லது” என்றான்.

இராமன், இலக்குவனது ஆற்றலை விபீஷணனுக்கு எடுத்துரைத்தார். இலக்குவன் அதிகாயனின் தலையைக் கொய்து எடுப்பதை நீ பார்க்கப் போகிறாய். நீயும் அவனுடன் போ என்று அனுப்பிவைத்தான். இலக்குவன் இராமனைத் தொழுது, விபீஷணன் பின் தொடர அதிகாயன் இருக்குமிடம் சென்றான். அரக்கர் சேனையும் வானர சேனையும் கோபாவேசத்தோடு மோதிக் கொண்டன. அரக்கர்களுடைய தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாத வானரப் படை தளர்ச்சியடைந்தது.

இலக்குவன் அவர்களை “அஞ்சாதீர்கள்!” என்று தேற்றி, தன் வில்லின் நாணை இழுத்து அம்புகளைச் செலுத்தலானான். அரக்கர்கள் அழிந்து வீழ்ந்தனர். இதனைக் கண்ட தாருகன் எனும் அரக்கன் தேர் மீது அமர்ந்து இலக்குவன் மீது அம்புகளை எய்தான். இலக்குவன் அந்தத் தாருகனின் தலையைத் துண்டித்து வீழ்த்தினான். தாருகன் இறந்தது அறிந்து காலன், குலிசன், காலசங்கன், மாலி, மருத்தன் எனும் அரக்கர் ஐவரும் சூலம், கணிச்சி, பிண்டிபாலம், பாசம், அயில் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு இலக்குவனைத் தாக்கத் தொடங்கினார்கள். அவற்றையெல்லாம் தன் அம்பினால் அழித்தான் இலக்குவன். அந்த ஐவரின் தலைகளையும் கொய்து அவர்களது படைகளையும் கொன்று குவித்தான்.

அப்போது அதிகாயனுடைய யானைப்படை வானர சேனையை த்வம்சம் செய்து கொண்டு வந்தது. இதைக் கண்ட இலக்குவன் சரங்களைத் தொடுத்து அந்த யானைகளைக் கொன்று, அரக்கர்களையும் அழித்தான். அந்த நிலையில் இராவணன் அனுப்பிய ஒரு கோடி யானைகள் இலக்குவனைத் தாக்க முயன்றன. இளம் சிங்கம் போன்ற இலக்குவன் எய்த அம்புகள் அந்த யானைகள் அனைத்தையும் கொன்று போட்டன. போர்க்களம் முழுவதும், மலைகளைப் போல யானைகள் இறந்து கிடந்தன. குருதி வெள்ளம் ஆற்று வெள்ளம் போல ஓடியது.

யானைகள் மிகுதியாக வருவதைக் கண்ட அனுமன் கையில் தண்டு எடுத்து, யானைகளை நையப் புடைத்தும், காலால் மிதித்தும், வாளால் வளைத்து இறுக்கியும், கரத்தால் பறித்தும், கடலில் எறிந்தும், தரையில் தேய்த்தும் நூறாயிரம் யானைகளைக் கொன்றான். அனுமன் கொன்றவை போக மிகுதியை இலக்குவன் தனது அம்புகளால் நொடியில் கொன்று தீர்த்தான்.

இதனைக் கண்டு கடும் சினமடைந்து தேவாந்தகன் எனும் அரக்கன் அனுமனைத் தாக்க ஓடி வந்தான். அனுமன் விட்ட ஓர் அறையில் அந்த அரக்கன் சிவலோகப் பிராப்தியடைந்தான். அதிகாயன் அதிகமான கோபத்துடன் ‘உன்னைக் கொல்லாமல் விடேன்’ என்று அனுமனிடம் சொல்ல, அதற்கு அனுமன், ‘உன்னுடன் திரிசிரனையும் அழைத்து வா என்றான். அருகில் நின்று கொண்டிருந்த அந்த அரக்கன் அனுமனை எதிர்த்துப் போரிட வந்தான். அப்போது அனுமன் அவனது தேர்மீது குதித்து அவனைக் கையால் பற்றி, தரையில் தள்ளி, அரைத்துக் கொன்றான். அப்போது மேற்கு வாயிலில் போர் மும்முரமாகவே, அந்த இடத்திற்கு அனுமன் விரைந்தான்.

அனுமனது போர் வன்மையைக் கண்டு அதிகாயன் அதிசயித்தான். இலக்குவனுடன் போர் செய்யக் கருதி அல்லவா போர்க்களம் வந்தேன் என்று எண்ணிக்கொண்டு, இலக்குவன் உள்ள பகுதிக்குத் தன் தேரைச் செலுத்தினான். இலக்குவனும் அதிகாயனுடன் போர் செய்யத் தயாரானான். அப்போது அங்கதன் இலக்குவனை அணுகி, அதிகாயன் தேர்மீது இருந்து போரிடுவதால், இலக்குவன் தன் தோள்மீது ஏறிக்கொண்டு போரிடும்படி கேட்டுக் கொள்கிறான். இலக்குவனும் அவ்வண்ணமே அவன் தோள் மீது ஏறி அதிகாயனுடன் போர் புரிந்தான்.

இலக்குவனுக்கும் அதிகாயனுக்கும் நேருக்கு நேராக நின்று கடும் போர் நடந்தது. அப்போது வாயுதேவன் இலக்குவன் அருகில் வந்து, ‘இந்த அதிகாயன் பிரம்மாஸ்திரம் ஒன்றினால்தான் மரணம் அடைவான்’, வேறு எந்த ஆயுதத்தாலும் அவனை அழிக்கமுடியாது என்று கூற, இலக்குவனும் அதிகாயன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அந்த அஸ்திரம் அதிகாயனது தலையைத் துண்டித்து எடுத்துக் கொண்டு வானவெளி வழியாகச் சென்றது. தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அச்சம் நீங்கியவராய் மலர் மழை பொழிகின்றனர். வெற்றி வீரனான இலக்குவன் அங்கதனுடைய தோளில் இருந்து கீழே குதித்தான்.

இலக்குவனது ஆற்றலைக் கண்ட விபீஷணன், ‘இவனால் இந்திரஜித் அழிவது உறுதி’ என்று உணர்ந்து கொண்டான். தன் அண்ணன் அதிகாயன் இறந்த செய்தி கேட்டு நராந்தகன் வெகுண்டு, இலக்குவனோடு போர் செய்தான். அதைக் கண்ட அங்கதன், அவன் கையில் இருந்த வாளைப் பிடுங்கி அதனாலெயே நராந்தகனை வெட்டிக் கொன்றான். பிறகு போர்மத்தன் எனும் அரக்கன் நீலனோடு போரிட்டு இறந்து போகிறான். வயமந்தன் எனும் அரக்கனை இடபன் எனும் வானர வீரன் கொல்கிறான். கும்பன் எனும் அரக்கனோடு சுக்ரீவன் போரிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி இழுத்துக் கொன்றான். நிகும்பன் எனும் அரக்கன் அங்கதன் மீது சூலப்படையை ஏவியபோது, அனுமன் அங்கே வந்து நிகும்பனைத் தன் கையால் அறைந்து கொன்றான். மற்ற அரக்கர்கள் தோற்றுப்போய் பயந்து கொண்டு ஓடினர். இந்தச் செய்திகளையெல்லாம் கேட்டு இராவணன் எல்லையில்லாத கோபமும் வருத்தமும் அடைந்தான்.

தன் மகன் அதிகாயன் மாண்ட செய்தி கேட்டு தான்யமாலினி, தன் கணவன் இராவணன் கால்கிஅளில் விழுந்து அலறி அழுதாள். அரக்கப் பெண்கள் மட்டுமல்லாமல், ஊர்வசி, மேனகை போன்ற தேவலோகப் பெண்களும் வாய்விட்டு அழுது வருந்தினார்கள். தான்யமாலினியைத் தேற்றி அழைத்துச் சென்றனர்.

இராமன் நகர்விட்டு நீங்கிய போது சோகமயமாகக் காட்சியளித்த அயோத்தியைப் போல இலங்கை காட்சியளித்தது. எங்கும் அழுகுரல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. இலங்கை நகரத்தில் அரக்கியர் தலைவிரி கோலமாக ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு பெரும் குரல் எழுப்பி அழுது கொண்டிருந்தனர். இவ்வழுகையொலி கேட்டு இந்திரஜித் எழுந்தான். இந்த அழுகுரலுக்குக் காரணம் என்ன, இராவணன் என்று போருக்குப் போய் இராமனிடம் தோற்றானோ? அல்லது இறந்து போய்விட்டானோ? அல்லது அனுமன் இந்த இலங்கையை கடலோடும் பெயர்த்து எடுத்துவிட்டானோ? இந்த அழுகுரலுக்கு என்ன காரணம்? என்ன நடந்தது? ஏன் இந்த அழுகை என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டான். பதில் கூறாமல் அனைவரும் நடுங்கினர். தன் தேரை எடுத்துக் கொண்டு நேரே இராவணனிடம் சென்றான் இந்திரஜித்.

தந்தையிடம் கைகூப்பிக் கொண்டு சென்ற இந்திரஜித், “இங்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் நகரெங்கும் ஒரே அழுகுரல்?” என்று கேட்டான். அதற்கு இராவணன், “இந்திரஜித்! உன் தம்பிமார்களை எமன் உயிர் கவர்ந்தான். கும்பன், நிகும்பன் இவர்களோடு அதிகாயனும் விண்ணுலகுக்குச் சென்றான்” என்றான். இந்திரஜித் பற்களால் அதரத்தைக் கடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்தான். எல்லோரும் இறந்தார்களோ? என ஏங்கி நைந்தான். “கொன்றவர் யார்?” என்றான்.

“அதிகாயனைக் கொன்றவன் இலக்குவன். அடுத்து, கும்ப, நிகும்பர்களைக் கொன்றவன் அனுமன்.” என்று சொல்லி, அதுவரை நிகழ்ந்தது அனைத்தையும் சொன்னான்.

இராவணன் அப்படிச் சொன்னதும் இந்திரஜித் சொல்கிறான், “அவர்களா கொன்றார்கள்? அவர்களைக் கொல்லும்படி நீயே அல்லவா அனுப்பி வைத்தாய்? (கொன்றார் அவரோ? கொலை சூழ்க என நீ கொடுத்தாய்) வந்த மானுடரின் வலிமையை அறிந்திருந்தும், என்றைக்கேனும் என்னைப் போருக்கு அனுப்பினாயோ? நம் படை அழிந்தது” என்று சொல்லி தீப்போல பெருமூச்சு விட்டான்.

“அட்சயகுமாரனைத் தரையோடு தரையாகத் தேய்த்துக் கொன்ற அனுமனை தூதன் என்று கொல்லாமல் உயிரோடு விட்டு விட்டாய். அவனைத் தொடர்ந்து சென்று பகைவர் இருக்குமிடம் அறிந்து அவர்களை அழித்தாயில்லை. புத்தி இல்லாதவனே, உன் மக்களையும் இழந்து விட்டாய். உன் வாழ்க்கை அழிந்தது” என்றான் ஆத்திரத்துடன். “நடந்தது நடந்து போயிற்று. இனி நினைந்து என்ன பயன். என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலக்குவனைக் கொல்லாமல் இலங்கை நகருக்குள் திரும்ப மாட்டேன், எனக்கு வாழ்வும் வேண்டாம். இலக்குவனைக் கொல்லாவிட்டால் நான் இராவணன் மகன் அல்லன்” என்று சபதம் செய்தான்.

அதற்கு இராவணன், “இந்திரஜித்! நீ கூறிய இந்த வீரச் செயல்களைச் செய்வாயாக! புத்திர சோகத்தால் தவிக்கும் எனக்கு உனது சொற்கள் ஆதரவாக இருக்கிறது” என்றான்.

தந்தையை வணங்கி, வில்லைக் கையில் ஏந்தி போருக்குப் புறப்பட்டான் இந்திரஜித். இந்திரனோடு நடந்த போரில், அவனிடமிருந்து அபகரித்த வில்லை எடுத்துக் கொண்டு, பேய்க்கொடி ஏற்றிய தேரில் ஏறி இந்திரஜித் போருக்குச் சென்றான். அவனோடு சென்ற படையின் அளவை கணக்கிட வல்லார் யார்? எனினும் வேதங்களைக் கற்றுணர்ந்த வான்மீகி, நாற்பது வெள்ளம் என்பதை அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி. இவனோடு துமிராட்சசன் (புகைக்கண்ணன்) எனும் வீரனும், மகாபாரிசுவனும் (மாபக்கன்) பெரிய தேரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றனர். போர்க்களத்தில் அதிகாயனைக் கொன்று விட்டுக் காத்திருக்கும் இலக்குவன் எதிரே வரும் படையோடு இராவணன் வரவேண்டும் அல்லது இந்திரஜித் வருவான் என்று தயாராக நின்றான்.

“யார், இவன் வருபவன்? இயம்புவாய்?” என்று விபீஷணனிடம் கேட்டான்.

“வீரனே! இவன் இகல் அமரர் வேந்தனைப் போரில் வென்றவன். இன்று போர் வலிது” என்றான்.

வீடணன் இலக்குவனிடம் சொல்கிறான், “எம்பெருமானே! யான் எண்ணியது ஒன்று உனக்கு உணர்த்த வேண்டியுள்ளது. இவனோடு நீ தனியனாய்ப் போரிட வேண்டாம். பலர் உடனிருந்து காவல் செய்ய, போர் புரிவாய். இவன் மாயையில் வல்லவன்” என்றான்.

“மாருதி, ஜாம்பவான், சுக்ரீவன், அங்கதன், நீலன் ஆகியோர் உன் உடன் இருக்கட்டும்” இவ்வாறு விபீஷணன் கிலக்குவனை வணங்கிக் கூறவும், “நீ கூறியது நன்று” என்று அவன் சொன்னபடி போருக்குத் தயாரானான். இந்திரஜித்தோடு நடைபெறப் போகும் போரில் இலக்குவர்க்குத் துணை நிற்க விரும்பி மேல வாசலில் இருந்த அனுமனும் வந்து சேர்ந்தான். அங்கதன் ஏற்கனவே அங்கு இருந்தான். சுக்ரீவன் தன் பெரிய சேனையுடன் இலக்குவனுக்கு முன்பாக நின்றான். இரு படைகளும் ஒன்றையொன்று நெருங்கி வந்தன. இந்தப் போரைக் காண தேவர்கள் வானத்தில் வந்து குவிந்தனர்.

இரண்டு படைகளும் ஒன்றோடொன்று மோதின. எங்கும் ஆரவாரம். சங்கின் ஒலி, முரசின் முழக்கம், இப்படி எங்கு பார்த்தாலும் பேரொலியும் கூச்சலும் எழுந்தது. மரங்களைப் பிடுங்கி வானரர் தாக்க, தங்கள் தலை மட்டும் சிதறிவிழ, தலையற்ற அரக்கர் முண்டங்கள் போர்க்களத்தில் ஆடுகின்றன. அரக்கர்கள் வானரங்களின் தலைகளை வெட்டியதால், அதன் முண்டங்களில் இரத்தம் மேல் நோக்கிப் பாய, காட்டில் மரங்கள் எரிவதைப் போல காட்சியளித்தன. வானரர் அரக்கரைப் பிடித்துத் தோள்களை ஒடித்தனர். கால்களால் உதைத்தனர். கழுத்தைக் கடித்தனர், கைகளால் ஓங்கி அடித்தனர், தரையில் வைத்துத் தேய்த்தனர். ஆரவாரம் செய்தனர்.

ஊழிக்காலத்தில் சிவன் ருத்ரனாக உலகை அழிக்கும்போது சூலமும் மழுவும் கைக்கொண்டு எட்டு தொள்களுடன் உலகை அழிப்பது போல நீலன் நின்ற இடத்திலிருந்து கொண்டே அரக்கர்களை அழித்தான். ஊழிக்காற்றைப் போல குமுதனும், மலைகளையும் மரங்களையும் பிடுங்கி இடபனும், சாம்பவனும், மயிந்தனும் இந்திரஜித்தை எதிர்த்து வீரப்போர் புரிகின்றனர். இந்திரஜித் தனியனாகப் போர்க்களத்தில் நின்று போரிடுகிறான். சுக்ரீவனும் வந்து மற்ற வானரவீரர்களோடு சேர்ந்து கொண்டு இந்திரஜித்துக்கு எதிராகப் போர் புரிகிறான். அப்போது இந்திரஜித் அனுமனைப் பார்த்து சொல்கிறான்:-

“நில்லடா! சிறிது நில்லடா! உனை நினைத்து வந்தனென் போர் முனைக்கு நான், வில் எடாமை, நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய்,

கல் அடா! நெடு மரங்களோ இரு கரத்தினேன் வலி கடப்ப? நீ

சொல்லடா! என இயம்பினான் இகல் அரக்கன், ஐயன் இவை சொல்லினான்”.

“அடேய்! நில்லடா! என் தம்பியரைக் கொன்ற உன்னை நினைத்துத்தான் நான் போருக்கு வந்தேன். நான் இதுவரை போருக்கு வரவில்லை என்பதால், நீ உன் ஆண்மையைப் பேசிக்கொண்டும் பலரைக் கொன்று உயிரோடு நின்று கொண்டிருக்கிறாய். நீ எறிந்த மலை என்னைக் கொல்லவில்லை. இனி நீ எறியும் நெடிய மரங்களோ என்னைத் தோற்கடிக்கும்? நான் இப்போது வில்லெடுத்து போருக்கு வந்துவிட்டேன். இனி நீ உன் விளையாட்டைக் காண்பிக்க முடியாது”.

அதற்கு அனுமன் அளித்த பதில்:-

“வில் எடுக்க உரியார்கள் வெய்யசில வீரர், இங்கும் உளர்; மெல்லியோய்!

கல் எடுக்க உரியானும் நின்றனன்; அது இன்று நாளையிடை காணலாம்

எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவோர்;

புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறு சில போர் எடுத்து, எதிர் புகுந்துளோம்”.

“வீரத்தில் மெலிந்த இந்திரஜித்! வில்லெடுத்துப் போர் செய்யும் வீரம் உனக்கு மட்டுமே உண்டு என்று நினைத்து பெருமை கொள்ளாதே. எம் பக்கத்திலும் சிறந்த வில் வீரர்கள் உண்டு. அவர்களோடு ஒப்பிட்டால் நீ மெலிந்தவன். நாங்கள் பாறைகளை எடுத்து போர் புரிவதை இழிவாகச் சொல்லுகிறாய். வில்லெடுத்துப் போர் புரியும் எம்மவர் உன்னைக் கொன்றவுடன், உனக்குக் கல் எடுக்க உரியவனும் இங்கே இருக்கிறான். உனக்குக் கல்லெடுப்பது இன்றோ அல்லது நாளையோ நடக்கும் பார்! இந்திரன் உன்னிடம் தோற்றிருக்கலாம், நாங்கள் அப்படிப் புல்லைக் கவ்வுபவர்கள் அல்ல, உன்னை வெற்றி கொள்ளவே வந்திருக்கிறோம்.”

“நீ யாருடன் போரிட விரும்புகிறாய்? என்னோடா? அல்லது இலக்குவரோடா? அல்லது உன் தந்தையின் தலைகளைப் பனங்காய் போல வெட்ட வந்திருக்கும் இராமபிரானோடா? சொல்!” என்றான் அனுமன்.

“என் தம்பி அதிகாயன் உயிரைக் குடித்து விட்டு, என் கையால் உயிர் விடப்போகும் இலக்குவன் எனப் பெயர் கொண்ட அறிவிலி எங்கே இருக்கிறான்? அவன் உயிரைக் குடித்து கோபம் அறவே வந்தேன்” என்றான் இந்திரஜித். அவன் மேலும் சொல்கிறான், “யாருடனும் கூட்டு சேராமல் நான் ஒருவனே நின்று விண்ணுளோரையும், மண்ணுளோரையும் ஒருசேர வெல்லும் ஆற்றலுடையவன் நான்”. இப்படிச் சொல்லிக் கொண்டே கொடிய தொள்ளாயிரம் அம்புகளைத் தொடுத்து எய்தான். அவை அனுமனைத் தாக்க, அவன் கோபம் கொண்டு ஒரு குன்றை எடுத்துக் கொண்டு இந்திரஜித்திடம் போய் சொல்கிறான். “நீ இலக்குவனோடு போர் செய்வேன் என்று சொன்னதால் வாளாவிருந்தேன். அன்றி போர் செய்ய இயலாமையால் அல்ல. அந்த சமயத்தில் அம்பு எய்தல்தான் முறையா? உன் அம்புகளுக்கு முன்னால் இந்த மலை உன்னைக் கொன்று விடும், முடிதால் காப்பாற்றிக் கொள்” என்றான்.

அனுமன் எறிந்த மலை இந்திரஜித் மீது பட்டு தூள்தூளாகிறது. இருவரிடையே கடுமையான போர் நடக்க, அனுமன் தளர்ந்து போனான். அப்போது நீலன் வந்து இடையே புகுந்து இந்திரஜித்தோடு மோதினான். இந்திரஜித் விட்ட அம்புகள் நீலனின் உடலைத் துளைத்தன. அவன் நடுங்கினான். அங்கதன் வந்து போரில் கலந்து கொண்டான். அவனும் இந்திரஜித் விட்ட பாணங்களால் அடிபட்டு விழுகிறான். வானர சேனையும், வீரர்களும் அடிபட்டு சோர்வடைந்தது கண்டு இலக்குவன் சினந்து சொல்கிறான்.

“விபீஷணா! நாம் நினைத்தது தவறாகிவிட்டது. நம் படை அழிகிறது. வீரர்கள் அடிபடுகிறார்கள். இவனோடு நானே போர் செய்திருக்க வேண்டும். மற்றவர்களை அனுப்பியது தவறு” என்கிறான்.

அதற்கு விபீஷணன் “ஐயா! நீ சொல்வது உண்மை. முன்பும் தேவர்கள் இவனிடம் இப்படித்தான் தோற்றார்கள். நீ இவனுக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் இவ்வுலகம் மீள வேறு வழியே இல்லை” என்றான்.

இந்திரஜித் சாரன் என்ற ஒற்றனை அழைத்து ‘இவன் தான் இராமனின் தம்பி இலக்குவனா?’ என்கிறான். அவன், ‘ஆம்’ என்று சொன்னான். இலக்குவனோடு இந்திரஜித் போர் செய்வதற்கு முன்பாக, அரக்கத் தலைவர்கள் அதிகாயனைக் கொன்றவன் இவன் தானே, இவனைக் கொல்வோம் என்று பாய்ந்து வந்தார்கள். அவர்களை இலக்குவன் அம்பு விட்டுக் கொன்று போடுகிறான். இலக்குவனின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் அரக்கர்கள் அழிந்து போகிறார்கள். அரக்கர் சேனை அழிவது கண்டு இந்திரஜித் தன் தேரில் ஏறி இலக்குவனை எதிர்க்க வந்தான். அனுமன் இலக்குவனுக்குத் துணையாக அருகில் வந்து நின்று கொண்டான்.

அனுமன் இலக்குவனிடம் ‘அவன் தேர்மீது நின்று போரிட, நீ தரையில் நின்று போரிட வேண்டாம். என் தோள்மீது ஏறிக் கொண்டு போரிடு” என்றான்.

இருவர் வில்லின் நாண் ஒலி முழங்க, எதிர் எதிராய் அம்புகள் பறந்தன. இருவரும் சாரி செய்து போர் செய்ததால், இலங்கையே சுழல்வது போல இருந்தது. இந்த கொடிய போரை தேவரும் கண்ணால் காண முடியாமல் அம்புகள் கூட்டம் மறைத்தது. இருவரும் செய்த கடுமையான போரில் இந்திரஜித் இலக்குவனின் விற்போரைப் பார்த்து வியந்து பாராட்டுகிறான். இலக்குவன் விட்ட ஓர் பாணம் இந்திரஜித்தின் கவசத்தை உடைக்கிறது. இந்திரஜித்துக்கு உதவிட வந்த துமிராட்சசனும், மகாபாரிசுவனும் இலக்குவனின் அம்புகளுக்குப் பலியாகிவிடுகின்றனர்.

பகல் பொழுது மறைந்து, இரவு படிகிறது. இரவு வந்துவிட்டால் இந்திரஜித் வானத்தில் எழுந்து மறைந்து நின்று தாக்குவான் என்று விபீஷணன் எச்சரிக்கிறான். உடனே இலக்குவன் அவன் தேரை உடைக்கிறான். தன் தேர் மண்ணில் விழுமுன்பாக தான் விண்ணில் பாய்ந்து நாகபாசத்தை இவர்கள் மீது ஏவ வேண்டுமென்று வில்லோடு ஆகாயத்தில் பாய்கிறான். மாயையில் வல்ல இவன் என்ன செய்வானோ என்று தேவர்கள் அஞ்சினர். இவன் மேக மண்டலத்துக்கு மேலே போய் நின்று கொண்டான். அங்கு, தான் பெற்ற தவபலத்தால், அணு அளவில் மிகச் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டான். அங்கு போய் எவரையும் கட்டிவிடக்கூடிய நாகபாசம் எனும் ஒப்பற்றதோர் அஸ்திரத்தை மந்திரம் சொல்லி எடுத்தான்.

போருக்கு அஞ்சி இந்திரஜித் ஓடி ஒளிந்து கொண்டதாக எண்ணி வானரங்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தன. இலக்குவனும் அங்ஙனமே நினைத்து சிரித்தான். அவனது மாயையை உணராமல் இவர்கள் போர்த் தொழிலைச் செய்யவில்லை. அனுமன் தோளிலிருந்து இலக்குவன் இறங்கி இளைப்பாறினான். அப்படி அவன் இளைப்பாறிக் கொண்டிருந்த நேரத்தில், இந்திரஜித் தனது நாகபாசத்தை இவர்கள் மீது ஏவிவிடுகிறான். அது உலகமே அஞ்சும் வண்ணம் பரவி வந்து இலக்குவன் மீது படிந்து, தோள்களை இறுகக் கட்டிவிட்டது.

உலகமே எதிர்த்தாலும் கலங்காதவனும், எதற்கும் துன்பப்படாதவனுமான இலக்குவன் நாகபாசம் தன்னைக் கட்டியதும், இது இந்திரஜித் செய்த வேலை என்று அறியாதவனாய், இன்னது செய்வது என்று அறியாமல் ஒடுங்கினான். மறைந்திருந்து இந்த மாயத்தைச் செய்தவனைப் பிடிப்பேன் என்று எழுந்த அனுமனும், நாகபாசத்தால் கட்டப்பட்டான். அவன் மட்டுமின்றி வானரப் படை அனைவரையுமே, நாகபாசம் கட்டிப் போட்டுவிட்டது.

கட்டுண்ட வானரர் எழ முயல்வர்; பின்னர் கீழே விழுவர். கண் விழித்து மேலே பார்ப்பார்கள், வாலால் தரையில் அடிப்பார்கள், இலக்குவன் கட்டுண்ட நிலைமை கண்டு வருந்துவார்கள். வானரர்கள் விபீஷணனை நோக்கி இதிலிருந்து விடுபட என்ன பரிகாரம் என்று கேட்டார்கள். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆயிரம் அம்புகள் தன் மார்பைத் துளைத்தபோதும் அஞ்சாத அஞ்சனைபுத்ரன், இலக்குவனுக்கு நேர்ந்த துயரம் கண்டு வருந்துகிறான். அளவற்ற அம்புகள் துளைத்ததால் அங்கதன் சோர்வடைந்திருந்தான். சுக்ரீவன் நிலையும் அஃதே. நாகபாசத்தை அழிக்கும் வகை இலக்குவர்க்குத் தெரியும், இருந்தாலும், அதனை செயலாற்ற முடியாமல் கட்டுண்டானே என்ன செய்வது?

அதே நேரத்தில் இலக்குவனை நாகபாசத்தால் கட்டிய இந்திரஜித்தும், தன் உடலில் பாய்ந்த அம்புகளால் துன்புற்றிருந்தான். சொன்னதைச் செய்து முடித்து விட்டேன். என் உடல் சோர்வை நீக்கிக் கொண்டு நாளை மற்றதைச் செய்வேன் என்று அரண்மனைக்குச் சென்றான். இராவணனிடம் சென்று, உன் இடர் தீர்ந்தது என்று தான் நாகபாசம் விட்ட செய்தியைச் சொல்லி எதிரிகள் அழிந்தனர், நான் சோர்வாக இருக்கிறேன், என்று தன் இருப்பிடம் சென்றான் இந்திரஜித்.

நாகபாசத்தால் கட்டுண்டவர்களைக் கண்டு விபீஷணன் வருந்துகிறான். அனலன் அவனைத் தேற்றுகிறான். அனலன் சென்று இராமபிரானிடம் நடந்த செய்திகளைக் கூறுகிறான். இராமனும் மனம் வருந்தி ஆழ்ந்த துயரத்தில் ஆழ்கிறான். இலக்குவர்க்கு ஏற்பட்ட துன்பத்தை எண்ணி இராமபிரான் தேம்புகிறான். உடனே எழுந்து போர்க்களம் செல்கிறான். அங்கு இருள் சூழ்ந்து கிடக்கிறது. உடனே ஒரு அக்னிக் கணையை எடுத்து ஒளி பரவுமாறு விடுத்த அளவில், இருள் அகன்று சூரிய ஒளி போல வெளிச்சம் பரவியது. அங்கு விழுந்து கிடக்கும் இலக்குவனை இராமன் பார்க்கிறான். அவனை வாரி எடுத்து மார்புறத் தழுவிக் கொள்கிறான். இவன் இனி உயிர் பிழைக்கமாட்டான் என்று எண்ணி கண்ணீர் உகுக்குகிறான்.

இராமன் விபீஷணனை அழைத்து இதை ஏன் முன்பே சொல்லி எச்சரிக்கவில்லை என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “இலக்குவன் இந்திரஜித்தைக் கொல்லுவான் என்றுதான் எண்ணியிருந்தேன், அதனால் சொல்லத் தோன்றவில்லை” என்றான். அதுமட்டுமல்ல, இங்கு எவரும் உயிர் இழக்கவில்லை, அனைவருமே நாகபாசத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள், அவ்வளவே என்றான் விபீஷணன்.

மறுபடி இராமன் விபீஷணனிடம், இந்த நாகபாசத்தைக் கொடுத்தது யார்? இந்த அஸ்திரம் எத்தன்மையது? இதிலிருந்து விடுபட என்ன வழி, அவற்றைக் கூறு என்று வினவினான். அதற்கு விபீஷணன் சொல்கிறான், “இந்த உலகத்தைப் படைத்த பிரம்மன் வேள்வியில் இந்த நாகபாசத்தை உண்டாக்கினான். இதை சிவன் வேண்டிப் பெற்றுக் கொண்டான். இந்திரஜித் செய்த தவத்தை மெச்சி, சிவபெருமான் இந்த அஸ்திரத்தை அவனுக்குக் கொடுத்தான். ஊழிக்கால இறுதியில் உலகம் அழியும்படி இடிக்கும் தன்மையுள்ளது இது” என்றான் விபீஷணன். இந்திரன் தோள்களைக் கட்டியதும் இந்த நாகபாசம்தான். சீதையைத் தேடப் போன அனுமனைக் கட்டியதும் இதே நாகபாசம்தான். இதை ஏவியவனே விடுவித்தாலன்றி இந்த நாகபாசம் விடாது. உயிருள்ளவரை இது பிணைத்திருக்கும் என்றான்.

இதனைக் கேட்ட இராமன் இந்த இலங்கையையும், மூவுலகங்களையும் ஓர் கணையால் அழிப்பேன் என்று எழுந்தான். “ஏ! விபீஷணா! என் தம்பி இலக்குவனே இறப்பானானால் எனக்கு இனி புகழ் என்ன? பழி என்ன? பாவம் என்ன? தருமம்தான் என்ன? அவனுக்கு முன் எனக்கு எதுவுமே நல்லன அல்ல. ஒருவன் செய்த தீமைக்காக உலகத்தை அழிப்பது முறையன்று என்ற அறநெறி அவன் மனதில் தோன்றவே, கோபம் தணிந்தான். இப்படி இராமன் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் வைகுண்டத்தில் திருமாலை எப்போதும் தாங்கும், கருட பகவான் வானுலகத்திலிருந்து அங்கு வந்து சேருகிறான். அவன் களத்தைச் சுற்றித் தன் சிறகை விரித்தபடி பறந்து வருகிறான்.

இலக்குவனும் மற்றவர்களும் நாகபாசத்தால் கட்டுண்டு துன்பப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அதனால் மனம் தளர்ந்து சோர்ந்து போய்விட்ட ஸ்ரீ இராமனின் திருமேனியைத் தரிசிக்க விரும்பி, கருடன் கோடிகாதம் வரை பறந்து வந்து, அவனது கூரிய கண்கள் கண்ணீர் சிந்த, துன்பம் மிகுந்தவனாய், கடல் அலைகள் சிதறும்படி, உலகத்தின் இருள் நீங்கும்படி, வேதங்களின் கோஷம் கேட்கவும், உலகத்தின் உயிர்கள் உய்யும் பொருட்டும், நாகபாசம் கட்டிய பாம்புகள் வலி கெட்டு அழியும்படியாக அங்கு வந்து சேர்ந்தான். வானத்தில் பறந்தபடியே வந்த கருட பகவான், ஸ்ரீ இராமனின் திருமேனியைக் கண்டவுடன் அங்கிருந்தே கைதொழுதான்.

மனித வடிவில் வந்து தோன்றிய முழுமுதற் கடவுளே! மானுட வடிவில் வந்து இலக்குவரின் துன்பத்தைக் கண்டு வருந்துகின்ற ஸ்ரீ இராமா! மற்றவர்களின் மனத் துன்பத்தைப் போக்கும் நீயே, மனம் தளர்ந்து வருந்தலாமா? என் தந்தையே வருந்தாதே. இப்படி கருடன் ஸ்ரீ இராமபிரானைத் தொழுது வேண்டுகிறான். இப்படியாக பற்பல தோத்திரங்களைச் சொல்லி, வேத வேதாந்தக் கருத்துக்களைச் சொல்லி, பரம்பொருளின் பெருமையெல்லாம் சொல்லி துதிக்கிறான் கருடபகவான். இந்தப் பகுதியில் வேத வேதாந்தக் கருத்துக்களை கருடன் வாக்காகக் கம்பர் பெருமான் கூறியிருக்கும் சிறப்பு அந்தப் பாடல்களைப் படித்து இன்புறத் தக்கவகையில் அமைந்திருக்கிறது.

வானத்தில் வட்டமிட்டுச் சுற்றிப் பறந்து வந்து, தன் விரித்த சிறகு எல்லா திசைகளையும் காணும்படியும் பின் மெல்லத் தாழ்ந்து பறந்து ஸ்ரீ இராமன் அயல் வந்து இறங்கினான் கருடன். கருடனுடைய நிழல் பட்ட மாத்திரத்தில் இலக்குவன் முதலானோரைக் கட்டியிருந்த நாகபாசம் விடுபட்டு விட்டது. மகா உத்தமனாகவும், நேர்மையானவனாகவும், பிறர் நன்மைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக மனப்பான்மையுடையவனும், அறிவு வழியில் அறத்தைப் பின்பற்றி நடப்பவனுமான ஒருவன் மீது புனைந்துரைத்த பொய்ப்பழி விலகியது போல நாகபாசம் விலகியது.

நாகபாசம் விடுபட்டு, தூங்கி எழுந்தவர் போல உயிர் பெற்று எழுந்த இலக்குவனை இராமன் தன் மார்போடு தழுவிக் கொள்கிறான். பிறகு மூன்றாம் பிறை போன்ற நகத்தையுடைய கருடன் முன்பாக வந்து கருணையோடு சொல்கிறான்:-

“ஐய! நீ யாரோ? எங்கள் அருந்தவப் பயத்தின் வந்து, இங்கு

எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்

கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி

செய்திறம் இல்லையால்’ என்றான் தேவர்க்கும் தெரிகிலாதான்.”

இராமன் மானுடப் பிறவியாக வந்துவிட்டதாலோ என்னவோ, அந்தக் கருடனைப் பார்த்துக் கேட்கிறான்: “ஐயா, தாங்கள் யாரோ? நாங்கள் செய்த தவப் பயனாய் இங்கு வந்து சேர்ந்தாய். நீ வந்ததால், நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் உயிர் பெற்றனர். நாங்கள் செய்யும் கைமாறை ஏற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் தங்களைப் பார்த்தால் தெரியவில்லை. உனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்!” என்றான் இராமபிரான். “இதற்கு முன்பு நாம் பார்த்ததும் இல்லை. எங்களைப் பற்றி உன்னிடமோ, உன்னைப் பற்றி எங்களிடமோ யாரும் சொல்லிக் கேட்டதும் இல்லை. நீ எங்களிடம் நன்றிக் கடன் படவும் இல்லை, கொடுப்பது மட்டுமே கடமையாகக் கொண்டாய். உயிர் இருக்கிறதா இல்லையா என்று சந்தேகமாக இருந்த இவர்களுக்கு உயிர் கொடுத்த உத்தமனே, நாம் முன்பு பழகிய நண்பர்களும் இல்லை, உனக்கு எப்படியப்பா நாங்கள் கைமாறு செய்ய முடியும், சொல்” என்றான்.

அப்போது அனுமன் அங்கே வந்து “இலக்குவன் இறந்தான் என்று அன்னை சீதை துயரத்தில் இருப்பாள். அரக்கர்கள் மகிழ்ந்து களிப்பர். நாம் பிழைத்து விட்டோம் என்று அனைவரும் தெரிந்து கொள்ள பெருத்த ஆரவாரம் செய்வோம்” என்றான்.

இதற்கு இராமன் உடன்படவே, வானரர் அண்டமே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவார ஒலியை இராவணன் கேட்கிறான்.. இலங்கையில் இருவர் மட்டுமே தூங்கவில்லை. சதாகாலம் இராமனையே எண்ணி வாடும் சீதை ஒன்று. அந்த சீதையையே எண்ணி வேறு சிந்தனை இல்லாத இராவணன் மற்றொன்று. வானரர்களையும், மானுடர்களையும் அழித்து விட்டேன் என்று இந்திரஜித் சொன்ன சொல் உண்மை அல்லவே. இதோ! வானரங்களின் ஆரவாரம் கேட்கிறதே, என்று கோபமாகச் சிரித்தான் இராவணன்.

“ஆகா! இது என்ன? இலக்குவனின் வில்லின் நாணொலி கேட்கிறதே. அனுமனது ஆரவாரம் என் செவியைப் பிளக்கிறதே. சூரியன் மகனின் ஆரவாரம் திக்கெட்டும் ஒலிக்கிறதே! ஓகோ! இவர்கள் நாகபாசப் பிணிப்பிலிருந்து விடுபட்டு விட்டார்கள்” என்று உணர்ந்தான் இராவணன். உடனே எழுந்து இந்திரஜித்தின் மாளிகைக்கு விரைகிறான். உடல் புண்களால் அவதிப்பட்டு இந்திரஜித் படுக்கையில் புரள்கிறான். இப்படி அவதியுற என்ன காரணம் என்று இராவணன் கேட்க, இலக்குவனின் அம்பு பட்ட காயம் என்கிறான் இந்திரஜித்.

“அதோ! கேள். பகைவரின் ஆரவார ஒலி. உனக்குக் கேட்கவில்லையா? என்கிறான் இராவணன்.

இந்திரஜித் வியந்து போகிறான். எப்படி நடக்க முடியும் இது? நாகபாசத்தால் கட்டுண்டவர் மீள்வது எங்ஙனம்?” என்றான்.

அப்போது தூதுவர் வந்து போர்க்களத்தில் நடந்ததைக் கூறுகிறார்கள். “நாகபாசத்தால் கட்டுண்டிருந்தவர்களையும், அம்புகள் பாய்ந்து உயிர் துறந்து விழுந்து கிடந்தவர்களையும், தசரதகுமாரன் இராமன் அங்கு வந்து இவர்களுக்கு இந்தச் செயலைச் செய்ததால், இந்த உலகத்தையே அழிப்பேன் என்று சபதம் ஏற்ற நேரத்தில், வானுலகத்திலிருந்து கருடபகவான் (வானுறை கலுழன்) பறந்து வந்து அனைவரையும் உயிர்ப்பித்து விட்டான்” என்றார்கள்.

இராவணன் இந்திரஜித்தை உடனே போருக்குப் புறப்படும்படி சொன்னான், அவன் தன் உடல் காயங்களுக்கு மருந்திட்டு ஓய்வு கொடுத்த பின் மறுநாள் போவதாகச் சொல்லவும், இராவணனும் அதற்கு ‘நன்று’ என்று சம்மதம் தருகிறான்.

வானரர்கள் மூர்ச்சை தெளிந்து எழுந்து செய்த ஆரவாரத்தைக் கேட்டு அரக்கர் படைத்தலைவர்கள் தாங்கள் போருக்குச் செல்ல இராவணனிடம் அனுமதி கேட்டனர். அப்போது தூதர்கள், அந்த அரக்கர் படைத்தலைவர்கள் இந்திரஜித்தைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள் என்ற தகவலைச் சொல்ல, இராவணன் பெரும் கோபம் கொண்டான். கிங்கரர்களிடம் அவர்களது மூக்கை அரியுமாறு கட்டளையிடுகிறான். அப்போது அங்கிருந்த மாலி என்பான் இராவணனிடம், போரில் தோற்று ஓடி வந்ததற்காக மூக்கை அரிதல் நீதியல்ல என்கிறான். இராவணன் அவர்களை மன்னித்து பத்து வெள்ளம் சேனையோடு போருக்கு அனுப்புகிறான். படைத் தலைவர்கள் சேனைகளுடன் போர்க்களம் போகின்றனர். இவர்கள் போருக்கு வந்த போது, இவர்களைப் பற்றிய விவரங்களை விபீஷணன் இராமனுக்குச் சொல்கிறான்.

வானரப் படைகளுக்கும், அரக்கர் சேனைக்குமிடையே பெரும் போர் நடக்கிறது. அரக்கன் புகைக்கண்ணன் அனுமனுடனும், மாபெரும் பக்கன் என்பவன் அங்கதனுடனும், மாலி நீலனுடனும், வேள்வியின் பகைவன் இலக்குவனிடமும், சூரியன் பகைவன் சுக்ரீவனிடமும், வச்சிரத்தெயிற்றன் இடபனுடனும், பிசாசன் பனசனுடனும் போரிடுகின்றனர். போருக்கு வந்த அரக்கர்களின் பத்து வெள்ளம் சேனையில், இராமன் ஆறு வெள்ளம் சேனையையும், இலக்குவன் நான்கு வெள்ளம் சேனையையும் அழித்து விடுகின்றனர்.

இரவு நேரம் நெருங்கி வந்தது. அன்றைய போரில் அனுமன் புகைக்கண்ணனைக் கொன்றான். அங்கதன் மாபெரும் பக்கனை இரண்டாய் பிளந்து கொன்றான். மாலியும் நீலனும் போரிட்டபோது, இலக்குவன் அவன் கையை வாளோடு வெட்டி வீழ்த்தினான், வேள்விப் பகைவனை சுக்ரீவன் மாய்த்தான். வச்சிரத்தெற்றனோடு இடபன் போர் செய்ய, அனுமன் அவன் உடலைக் கிழித்துக் கொன்றான். பிசாசன் தலையை இலக்குவன் கொய்தான், தூதர்கள் செய்தி சொல்ல இராவணன் இருக்குமிடம் ஓடினர்.

படைத் தலைவர்கள் மாண்ட செய்தியை தூதர்கள் மூலம் இராவணன் அறிகிறான். அப்போது கரன் என்பவனுடைய மகன் மகரக்கண்ணன், காட்டில் தன் தந்தையைக் கொன்ற இராமனைத் தான் கொல்வதாகக் கூறி போருக்குப் புறப்படுகிறான். மகரக்கண்ணன் ஐந்து வெள்ளம் சேனையோடு, இராவணன் அனுப்பிய மற்றொரு ஐந்து வெள்ளம் சேனையோடும், போர்க்களம் சென்றான். மகரக்கண்ணன் தவச் சிறப்பாலும், மாயையாலும் இடி, காற்று, தீ இவற்றை உண்டாக்கி, தன்னைப் போல் பல உருவங்களைத் தோற்றுவித்துப் போர் செய்தான். இராமன் பல உருவங்களில் ஒன்றில் மட்டும் இரத்தம் வழிவது கண்டு, அவனே உண்மையான மகரக்கண்ணன் என்று அறிந்து அவன் மீது அம்பு செலுத்தி அவனைக் கொல்கிறான். இந்த செய்தியைக் கேட்டபின் இந்திரஜித் போருக்குப் புறப்படுகிறான்.

போர்க்களத்தில் அனுமன் தோளில் இராமனும், அங்கதன் தோளில் இலக்குவனும் அமர்ந்து போர் புரிகின்றனர். அரக்கர் சேனை பயந்து ஓட, இந்திரஜித், தன் ஒருவனே இராம லக்ஷ்மணரை எதிர்த்துப் போர் புரிந்தான். இலக்குவன் இராமனைத் தொழுது இந்திரஜித்துடன் போர் செய்தான். இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இந்திரஜித் மாயையால் வானம் சென்று, பின் மறைந்தான். அவன் மீது அயன் படை (பிரம்மாஸ்திரம்) தொடுப்பேன் என்று இலக்குவன் சொல்ல, அது அவனை மட்டுமல்ல மூவுலகங்களையும் அழிக்கும் வேண்டாம் என்று இராமன் தடுத்தான். தோற்றுப் போன இந்திரஜித் மறைந்து ஒருவரும் அறியாமல் இலங்கைக்குச் சென்றான். இவனைக் காணாததால் இராம லக்ஷ்மணர் உள்ளிட்ட அனைவரும் போர் உடையைக் களைந்தனர்.

இராமனுடைய வானர வீரர்களுக்கு உணவுப் பொருட்களைத் திரட்டிக் கொண்டு வருமாறு விபீஷணனை இராமபிரான் அனுப்பி வைக்கிறார். தனது படைக்கலன்களுக்கு பூஜை செய்ய வேண்டி இராமனும் தனியே சென்று விடுகிறார். இலக்குவன் மட்டும் போர்க்களத்தில் இருந்தான். தோற்றோடிய இந்திரஜித் இலங்கை சென்று இராவணனுடன் கலந்து பேசி, தான் மறைந்து நின்று பிரம்மாஸ்திரத்தை விடுவது என முடிவு செய்தான். மகோதரனை அனுப்பி, மாயப் போர் ஒன்றை நீ செய்து கொண்டிரு, நான் பிரம்மாஸ்திரத்தை செலுத்திவிடுகிறேன் என்று சொல்ல, மகோதரன் செல்கிறான்.

மாயப்போர் என்பது போர்க்களத்தில் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் ஆங்காங்கே பிரிந்து நின்று போர் செய்கிறார்கள். அப்படி தனித்து நிற்கும் இலக்குவனிடம் அனுமன் நிலைமையை விளக்குகிறான். இதனைக் கேட்ட இலக்குவன் பாசுபதாஸ்திரம் ஏவுகிறான். அரக்கரின் சேனையும், அவர்களது மாயமும் எரிந்து அழிந்து போகிறது. இருள் மறைந்து ஒளி வெளிப்படுகிறது. மகோதரன் தன் மாயை விலகியதும் ஓடிவிடுகிறான். பிரம்மாஸ்திரத்தை ஏவ இதுவே தக்க தருனம் என்று இந்திரஜித், ஆலமரம் ஒன்றை அடைந்து, அதற்கான வேள்வியைச் செய்தான். உடனே தேவர் முதலானோர் அறியாதபடி பிரம்மாஸ்திரத்துடன் விசும்பில் சென்று மறைந்தான். அப்போது மகோதரன் இந்திரனைப் போல மாறுவேடம் தரித்து ஐராவதத்தின் மீது ஏறிக்கொண்டு வானரர்களுக்கு எதிராகப் போர் செய்தான்.

இலக்குவன் மகோதரனின் மாயையால் அவன் இந்திரன் போல் வந்திருக்கிறான் என்பது தெரியாமல், அனுமனிடம் சொல்கிறான் “முனிவர்களும், இந்திரன் முதலானவர்களும் ஏன் நம்மீது போர் செய்கிறார்கள்” என்று. இந்த நேரம் பார்த்து இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை இலக்குவன் மீது ஏவிவிட்டான். அவன் செயலற்று தளர்ந்து வீழ்ந்தான். இந்திரனாய் வந்தவனைக் கொல்வேன் என்று எழுந்த அனுமனும் பிரம்மாஸ்திரம் தாக்கி கீழே விழுந்தான். சுக்ரீவன் முதலான மற்ற வானர வீரர்கள் அனைவருமே வீழ்ந்தனர். வானரங்கள் யாவரும் சாய்ந்து வீழ்ந்தனர். வானர வீரர்களொடு இலக்குவன் இறந்து வீழ்ந்தான். இந்திரஜித் வெற்றி சங்கை ஊதுகிறான். இராவணனிடம் சென்று நடந்ததைக் கூற, இராமன் சாகவில்லையா என்று கவலையோடு கேட்கிறான்.

இராமன் போர்க்களத்தைவிட்டு வெகுதூரம் சென்று விட்டதால் அவனை பிரம்மாஸ்திரம் தாக்கவில்லை என்று இராவணனிடம் சொல்லிவிட்டு, தன் மாளிகைக்குச் சென்று விடுகிறான் இந்திரஜித். இராமன் படைக்கலப் பூஜையை முடித்துவிட்டு, அக்னி அஸ்திரத்தால் வெளிச்சம் உண்டாக்கி போர்க்களம் வந்தான். அங்கே பிரம்மாஸ்திரத்தால் தாக்குண்டு கிடக்கும் ஒவ்வொருவராய்ப் பார்க்கிறான். அதிர்ந்து போனான் இராமன். தன் படை சர்வ நாசம் ஆகிவிட்டதை அறிந்து அழுகிறான். தம்பி இலக்குவனைக் கண்டு உணர்வு ஒடுங்கினான். தாங்க முடியாத துக்கத்தால் அழும் இராமனைத் தேற்றுவார் எவருமில்லை. துணை வந்தோர் அனைவரும் இறந்து போயினர். இராமபிரானின் நிலை கண்டு தேவர்கள் மிகவும் வருந்தினர்.

உணர்வு திரும்பிய இராமன் கண்விழித்துப் பார்த்தான். இலக்குவன் உயிரோடு இல்லை என்பதைக் குறிப்பினால் காண்கிறான். இலக்குவனைப் பிரிந்த துக்கத்தால் தாங்கமுடியாத சோகத்தினால் அழுதான் அரற்றினான். பொறிகளும், புலன்களும் ஆற்றல் குன்றிப் போயின.தானும் மாண்டுபோவதே நன்று என்று தம்பியைத் தழுவிய நிலையில் மயங்கிக் கிடந்தான். தேவர்கள் தவித்தனர். அரக்கரக்ள் ஓடிச் சென்று வானரப் படையோடு இலக்குவனும் இறந்தொழிந்தான், தம்பியின் மறைவால், இராமனும் இறந்தான், உன் பகை முடிந்தது என்று சொன்னார்கள்.

பிரம்மாஸ்திரத்தால் இராம லக்ஷ்மணர் உட்பட வானர சேனை முழுவதும் மாண்டார்கள் என்ற செய்தி கேட்டு, மிக்க மகிழ்ச்சியடைந்த இராவணன் வெற்றிவிழா கொண்டாட ஏற்பாடு செய்கிறான். அவன் மருத்தன் என்பானை அழைத்து, “நீ முன்னே சென்று போர்க்களத்தில் இறந்து கிடக்கும் அரக்கர்களின் உடல்களையெல்லாம், ஒன்றுகூட விடாமல் அனைத்தையும் எடுத்துக் கடலில் வீசிவிடு” என்று சொல்லி, இதை உன்னையன்றி வேறு எவரிடமும் சொல்லக்கூடாது, சொன்னால் உன் தலையைச் சீவி விடுவேன் என்று கூறி அனுப்புகிறான். அரக்கர்களின் பிணங்கள் போர்க்களத்தில் இருந்தால் பார்ப்பவர்களுக்கு இராவணன் பக்கமும் அதிக அரக்கர்கள் இறந்து போனார்கள் என்று நினைப்பார்களாம், அதனால் அவற்றை எடுத்துக் கடலில் வீசும்படி சொல்கிறான். அவன் கூறியபடியே அந்த மருத்தனும், அத்தனை அரக்கர் உடல்களையும் கடலில் தூக்கிப் போட்டுவிட்டான்.

“முந்த நீ போய், அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு; நின்

சிந்தை ஒழியப் பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவன்”.

பிறகு இராம இலக்குவர்க்கு நேர்ந்த கதியை சீதைக்குக் காட்டுங்கள் என்று சொல்ல, அரக்கியர் சீதையை ஓர் புஷ்பக விமானத்தில் ஏற்றி யுத்த களத்திற்கு மேல் கொண்டு வந்து காட்டினார்கள். அங்கே சீதாதேவி, “கண்டாள் கண்ணால் கணவன் உரு; அன்றி ஒன்றும் காணாதாள்” விஷம் உண்டவள் போல சீதை உடல் ஓய்ந்தாள். உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள். தாமரைப்பூ தீயில் விழுந்தது போல ஆனாள்.

“மங்கை அழலும் – வான் நாட்டு மயில்கள் அழுதார்; மழவிடையோன்

பங்கின் உறையும் குயில் அழுதாள்; பதுமத்து இருந்த மாது அழுதாள்

கங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள்; கமலத் தடங்கண்ணன்

தங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்”.

சீதை அழுவது கண்டு, தேவமாதர்கள் அழுதார்கள்; உமையம்மை அழுதாள்; மகாலட்சுமி அழுதாள்; கங்கை அழுதாள்; சரஸ்வதி அழுதாள்; கொற்றவை அழுதாள், இரக்கமென்பதே இல்லாத அரக்கியர்களும் அழுதார்கள்.

சீதை மூர்ச்சையுற்றாள், நீர் தெளித்து தெளியச் செய்து, அமரச் செய்தார்கள். கயல்மீனை தாமரை மலரால் அடிப்பது போல் தன் கைகளால் கண்களில் அறைந்து கொண்டு அழுதாள் சீதை. கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சொற்திறனை இதோ பார்ப்போம்.

“அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள் அழுதாள்; தொழுதாள், அனல் வீழ்ந்த

கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள், கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;

துடித்தாள்; மின்போல்; உயிர் காப்பச் சோர்ந்தாள், சுழன்றாள்; துள்ளினாள்;

குடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள், குயில் அன்னாள்”.

கணவனை இழந்த பெண்களிடத்து இயல்பாக நிகழும் செயல்களை இங்கே கவிஞர் பெருமான் முறைப்படுத்துகிறார்.

“விழுந்தாள்; புரண்டாள்: உடல் முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள், எழுந்தாள்; இருந்தாள்; தளிர் கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்; ‘கொழுந்தா! என்றாள், ‘அயோத்தியர் தம் கோவே! என்றாள்; எவ்வுலகும் தொழும் தாள் அரசேயோ! என்றாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள்”.

“ஓ! அறக்கடவுளே! உன்னையே பற்றி நின்று பாவமே செய்யாதவரை நீ நீத்தனையோ? பாவத்தையே செய்யும் அரக்கர் பக்கம் சேர்ந்தனையோ? கொடியவனே, இதுதான் உன் அருளோ? வாய்மையற்ற விதியே! வேதநெறியன்றி வேறு நெறி அறியாதவர் படும் துயரை பார்த்தனையோ? அன்றி எனை சோதிக்கத் துணிந்தனையோ? உன்னை மதிக்க மாட்டேன்! ஏ! எமனே! உயிரான இராமனை கவர்ந்து உடலான என்னை முடிவற்ற துன்பத்தில் ஆழ்த்தினையே! ஏ! இராமா!

“எண்ணா மயிலோடும் இந்தது நின்

புண்ணாகிய மேனி பொருந்திடவோ

மண்ணார் உயிரே! இமையோர் வலியே

கண்ணே! அமிழ்தே! கருணாகரனே!”

“நீ மிதிலைக்கு வந்து என் கைப்பிடித்தது உன் உயிரை விடத்தானோ? கோசலை உயிர் வாழாள்! உத்தமத் தம்பிகள் உயிர் துறப்பர். கொடுங் கைகேயி கருத்தும் இதுதானோ? அயோத்தியில் தங்கியிரு என்று நீ சொன்ன போது கேட்காமல், கானகம் வந்து பொன் மான் பின் உன்னை ஏவி, உன் உயிரை பலி கொண்டேனே!” என்று கதறுகிறாள்.

இலக்குவனைப் பார்த்து, “மேதையே! இளையவனே! காட்டுக்கு வரும்போது ‘இராமனுக்கு முன்னம் மடிந்திடு’ என்று அன்னை சுமத்திரை சொன்னபடியே செய்து விட்டாயோ? பூவையும், தளிரையும் இட்டு இராமனைத் தூங்கச் செய்து, கண்விழித்துக் காத்திருந்த நீ இன்று அரக்கர் விட்ட கணைகளின் மேல் உறக்கம் கொண்டாயோ? இப்படிப் புலம்பிக் கொண்டே இராமன் உடலின் மீது விழுவதற்கு எழுந்த சீதையை திரிசடை தடுத்தாள். சீதையை அன்புடன் தழுவிக் கொண்டு அவள் காதோடு சொன்னாள், “அம்மா! அன்னமே! முன்பு மாயமானை அனுப்பவில்லையா? உன் தந்தை ஜனகன் என்று போலியாக ஒருவனைக் காட்டவில்லையா? முன்பு நாகபாசம் கட்டியதை விட்டு அவர்கள் மீண்டு வரவில்லையா? அதையெல்லாம் நினைத்துப் பார்! இவையெல்லாம் அரக்கர் செய்யும் மாயங்கள். இதைக் கண்டு இறந்து போக நினைக்கலாமா? என்று ஆறுதலாய் கூறினாள்.

“அன்னையே! நீ முன்பு கண்ட கனவுகளை எண்ணிப் பார்! நல்ல நிமித்தங்களை நினைத்துப் பார்! உனது கற்பு நெறியும், அரக்கர்தம் பாவச் செயல்களும், தர்மம் தாங்கும் அண்டர்நாயகரின் வீரத்தையும் எண்ணிப் பார்! புண்டரீகற்கும் உண்டோ இந்த நிலை? இந்தப் புலையர்க்கு இல்லாமல்! அங்கே பார்! ஆழியான் ஆக்கை தன்னில் அம்பு ஒன்றும் பாயவில்லை. இளையவன் வதனம் இன்னும் ஊழிநாள் கதிரவன் போல் ஒளிபெற்று காண்கிறது. இவர்களது உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. வீணாக வருந்தாதே தாயே!” என்றாள்.

“இராமபிரான் இறந்திருந்தால் ஏழேழ் உலகங்களும் தீய்ந்து போயிருக்கும். இரவியும் வானத்தில் திரிவானா? பிரமன் முதலான உயிர்களெல்லாம் இறந்திருக்காதா? இவைகள் உள்ளன என்றால் இராமன் உயிரும் உண்டு. தர்மம் இருக்கிறது, கவலையை விடு. மங்கையே! பார் அங்கே மாருதியை. நீ அளித்த வரத்தின் பின்னும் அவனுக்கும் உண்டோ மரணம். உன் கற்புக்கு அழிவுமில்லை. மாருதிக்கு மரணமும் இல்லை.

இங்குள்ள நிலை பிரம்மாஸ்திரத்தால் வந்த நிலை. இது மாறிவிடும். கவலையை விடு. தேவர்களின் எண்ணமும் மாறிவிடுமோ?”.

“அன்னையே! நான் தேவர்களைக் கண்டேன். அவர்கள் தங்கள் பொற்கரங்களைச் சிரமேல் கூப்பி முதல் தேவர் மூவரைக் கண்டால் அந்த முறையில் வணங்கிச் சென்றார். துன்பம் சிறிதும் கொள்ளவில்லை. அன்னையே அஞ்ச வேண்டாம். கிணற்று நீர், கடல் நீரை விழுங்க வல்லதோ? கற்புடைச் செல்வியே! நீ இப்போது நின்று கொண்டிருக்கிறாயே புஷ்பக விமானம், இது உயிர் நீங்கிய பிணத்தையோ, கைம்பெண்டிரையோ தாங்கிக்கொள்ளாத இயல்புடையது. இப்போதாவது புரிகிறதா இராமன் இறக்கவில்லை என்று?” இவ்வாறு திரிசடை சீதையிடம் சொல்லவும், மனம் தேறி ஆறுதல் பெற்றாள்.

சீதை திரிசடையிடம், ” அன்னையே! இதுவரை நீ சொன்ன எதுவும் பொய்க்கவில்லை. எனவே உன்னை தெய்வமாக நினைத்து, நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றாள். அரக்கியர்கள் சீதை இருந்த புஷ்பக விமானத்தை மீண்டும் அசோக வனத்திற்கே கொண்டு சென்று அங்கே சீதையைக் காவலில் வைத்தனர்.

வானர சேனைக்கு உணவுப் பொருட்களைச் சேகரிக்கச் சென்றிருந்த விபீஷணன், யுத்த களத்துக்குத் திரும்பி வருகிறான். பிரம்மாஸ்திரத்தால் மாண்டு கிடக்கும் வானர சேனையைக் காண்கிறான். எல்லோரும் இறந்து கிடப்பது கண்டு மயங்கி விழுந்தான். நினைவு திரும்பியதும் இராம இலக்குவரைத் தேடுகிறான். பிணங்களுக்கிடையே இலக்குவனைத் தழுவியபடி இராமன் விழுந்து கிடப்பதைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறுகிறான். அவன் விட்ட கண்ணீரால் அவன் இராமன் மீது வைத்த அன்பு புலனாகிறது. இராமனது உடலை ஆராய்ந்து பார்த்த விபீஷணன், அவன் உடலில் அம்பு துளைத்த வடு எதுவும் இல்லை, எனவே இறக்கவில்லை என்று ஆறுதல் அடைகிறான். நடந்தது அனைத்தையும் ஊகித்து அறிந்து கொண்டான். இதிலிருந்து விடுபட என்ன வழி என்று ஆராய்ந்தான். குவிந்து கிடக்கும் இந்த பிணக் குவியலுக்கிடையே இறவாமல் எவரேனும் இருக்கிறார்களா என்று தேடினான். ‘வாய் மடித்து, இரண்டு கைகளும் குறுக்கிய நிலையில், கண்கள் தீ உக, திரண்ட தோள் அனுமன் யானைகளுக்கு மேலாகக் கிடப்பதைக் காண்கிறான். அவன் அருகில் சென்று விபீஷணன் உடலில் பாய்ந்திருந்த அம்புகளை நீக்கி, முகத்தில் நீர் தெளிக்க அவன் விழித்து எழுந்தான். எழுந்ததும் இராகவன் பெயரைச் சொல்லி வாழ்த்தினான்.

‘அழுகையோடு உவகையுற்ற விபீஷணன், ஆர்வம்கூர, தழுவினன் அவனை; அனுமனும் ‘இராமன் நலமா?’ என்றான். ‘நன்கு உளன்’ என்று விபீஷணன் உரைத்ததும் தொழுதான். இராமனுக்கும், இலக்குவர்க்கும் வானர சேனைக்கும் ஏற்பட்ட இடரை நீக்க என்ன வழி என்று சிந்தித்தான். ஆம்! ஜாம்பவான் எங்கே? அவனுக்கு இறப்பே கிடையாது. அவன் நமக்கு ஓர் நல்ல வழிகாட்டுவான் என்று அவனைத் தேடினான். ஜாம்பவானை இப்போதே சென்று காண்போம் என்று விபீஷணனும் அனுமனும், இருட்டில் தேடிச் சென்றார்கள்.

வயதானாலும், உடல் எல்லாம் அம்பு தைத்த நோவினாலும், எல்லாம் போயிற்றே என்ற நெஞ்சைப் பிளக்கும் துன்ப உணர்வினாலும், உயிர்ப்பு அடங்கி, கண் பார்வை மங்கி, மயக்க சிந்தையில் இருந்த ஜாம்பவானை இருவரும் கண்டார்கள். யாரோ தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த ஜாம்பவான், வருவது யார்? விபீஷணனா? என்னை ஆட்கொள்ளும் இராமனா? அல்லது அனுமனா? என் துன்பம் நீக்கி அருள வந்த தேவரோ? என்று எண்ணினான். வீழ்ந்து கிடக்கும் ஜாம்பவானைக் கண்டதும் விபீஷணன் “உய்ந்தனம்! உய்ந்தனம்!” என்று உற்சாகமாகக் கத்தினான்.

குரல் கேட்டு வந்தவன் விபீஷணன் என்பதை ஜாம்பவான் உணர்ந்தான். அவன் அருகே வந்திருப்பவன் யார்? என்று ஜாம்பவான் வினவ, ‘வாழிய கொற்றவ! அனுமன் நின்றேன், தொழுதனன்!” என்றான் அனுமன். அனுமனுடைய குரலைக் கேட்ட ஜாம்பவான் எழுந்து, “ஐய! நாம் இறக்கவில்லை, எழுந்தோம், எழுந்தோம்” என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். அனைவரையும் பிழைக்க வைக்கும் ஆற்றல் அனுமனுக்குத்தான் உண்டு. அவன் இதோ இருக்கிறான். இனி அனைவரும் பிழைத்தோம் என்றான்.

இராமனது நிலையை ஜாம்பவான் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். இராமனும் இலக்குவனும் தெய்வநிலையில் ஒருவரே. இலக்குவன் இல்லாமல் இராமன் இருப்பானா? இந்தத் துன்பநிலை மாறுவதற்கு நீ இப்போதே போய் மருந்து கொணர்வாயாக!” என்றான் ஜாம்பவான்.

“அனுமனே! நீ சென்று அந்த மருந்தைக் கொண்டு வந்தால் எழுபது வெள்ள வானர சேனையும், இராமனும், இளைய கோவும் உன்னால் வாழ்வார்கள், மைந்த! கடிது போதி! என்றான். அந்த மலைக்குப் போகும் வழியைச் சொல்கிறேன் கேள்! இவ்வாறு சொல்லி போகும் வழியை விவரித்துச் சொல்லுகிறான். இந்த மருந்துகள் நான்கு விதமாகப் பயன்படுவன. அவை, மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்று; உடல் வேறு வகிர்கள் ஆகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் மருந்து ஒன்று; உடலில் பதிந்த படைக்கலன்களை வெளிக் கொணரும் மருந்து ஒன்று; மீண்டும் தன் முந்தைய உருவையே கொடுக்கும் மருந்து ஒன்று. இப்படி இந்த மருந்துகளைக் காவல் செய்யும் தெய்வங்கள் பல உண்டு. அவர்கள் யாரிடமும் இரக்கம் கொள்ளார். இவற்றை நீ எப்படியேனும் இங்கு கொணர்வாயாக! என்கிறான் ஜாம்பவான்.

“இங்கு இதுதான் என் பணி என்றால், இறந்தோரும் பிறந்தாரே! என்று சொல்லித் தனது பேருருவை எடுத்துக் கொண்டு, பூமியில் உந்தி எழுந்து வான் முகட்டை அடைந்தான். முன்பு இலங்கைக்குக் கடலைக் கடந்தத் போல அனுமன் வானத்தில் விரைந்து சென்றான். இமயப் பெருமலையை அடைந்தான். அதனைக் கடந்து உமை அம்மையுடன் சிவன் வாழும் கயிலை, அதனை கரம் குவித்து வணங்கி, பிறகு ஏமகூட மலையையும் நிடத மலையையும் கடந்து செல்கிறான். இவற்றையெல்லாம் கடந்து மேரு மலையை அடைகிறான். அங்கிருந்து வழியில் தேவர்கள் பலரைக் கண்டு வணங்கி வழிபட்டு, ஆசிபெற்று உத்தரகுரு நாட்டை அடைகிறான். அங்கு நீலமலையைக் கண்டு அதையடுத்து உள்ள சஞ்ஜீவி மலையைச் சென்றடைந்தான். அங்கு மருந்துகளைக் காக்கும் தெய்வங்கள் “யார் நீ?” இங்கு வந்த காரணம் என்ன? என்று கேட்க, அனுமன் தான் வந்த காரணத்தைக் கூறுகிறான்.

அதற்கு அந்த தெய்வங்கள் அனுமனை “ஐய! வேண்டியதை எடுத்துக் கொண்டு விரும்பியதை செய்து முடித்தபின், இம்மருந்து கெடாதபடி திரும்பக் கொண்டு வந்து எம்மிடம் தருக!” எனச் சொன்னார்கள். அனுமனும் இங்கு நின்று இன்ன மருந்து யோசித்துக் கொண்டிருந்தால் காலம் விரைந்து ஓடிவிடும் என்று அந்த சஞ்ஜீவி மலையை வேரோடும் பெயர்த்து எடுத்துத் தன் அங்கையில் தாங்கிக்கொண்டான். பின்னர் விண்ணிடை கடிந்து போனான்.

ஆயிரம் யோசனை அகன்று உயர்ந்து, ஆயிரம் யோசனை சுற்றுச் சூழ்ந்த அம்மலையை ‘ஏ’ எனும் மாத்திரத்தில் ஒரு கையில் ஏந்திக் கொண்டான். தாய்போன்றவனும், உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியானுமான அனுமன். இப்படி அனுமன் மருந்துகள் கொண்ட சஞ்ஜீவி மலையை எடுத்துக் கொண்டு வரும் வேளையில், இலங்கை போர்க்களத்தில் விபீஷணனும், ஜாம்பவானும், நினைவிழந்த இராமனின் காலை வருடிக்கொண்டிருக்கின்றனர். இராமபிரானின் தாமரை மலர்கள் போன்ற கண்கள் மலர்கின்றன. ஜாம்பவானும், விபீஷணனும் அருகில் அமர்ந்து, தன் காலை வருடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, “விபீஷணா! யான் ஏவியபடி உணவு கொண்டு வரும் காரியத்துக்காக போயிருந்தாயல்லவா? அதனால் நீ பிரம்மாஸ்திரத்திலிருந்து தப்பித்தாய்” என்றான். ஜாம்பவானைப் பார்த்து, “நீ உயிர் வரப் பெற்றாயோ?” என்று கேட்டான்.

“ஐயன்மீர்! இது நமக்கு நேர்ந்த அழிவேயாதலின், இதில் நாம் செய்யக்கூடியது எதுவும் இல்லை. உயிர் நீங்கியவர்கள் மீண்டும் பிழைக்க வழியில்லை. அறிவுமிக்க பெரியோர்களே! இனி நாம் என்ன செய்யலாம் என்பதைச் சொல்லுங்கள்” என்கிறான் இராமன். “சீதை பொன் மான் வேண்டும் என்று கேட்கப் போய் எல்லோர்க்கும் எவ்வளவு தீங்கு செய்து விட்டேன். பெண் சொல் கேட்ட பேதையாய் ஆனேனே!. அந்த இராவணனைக் கொல்லாமல் விட்டு போருக்கு மறுநாள் வரச்சொன்னேனே, இந்த தீவினையை அனுபவிக்கவோ அப்படிச் செய்தேன். பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று இலக்குவனைத் தடுத்தேனே. இப்போது அவனை அந்த அஸ்திரத்தாலேயே வீழ்த்தி விட்டானே. இந்த நேரத்தில் நான் இலக்குவன்கூட இல்லாமல் போனேனே. இலக்குவன் போய் நான் மட்டும் இருந்து என்ன பயன், நானும் மாண்டு போவேன். எம்பியை இழந்தபின் நான் வேறு எதுவும் வேண்டேன்” என்றான் இராமன்.

“இளையவன் இறந்த பின், எவரும் என் எனக்கு

அளவு அறு சீர்த்தி என்? அறம் என்? ஆண்மை என்?

கிளை உறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்?

விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்?”

நானும் இறப்பேன் என்று இராமன் சொன்னதும், ஜாம்பவான், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், என்று ஆரம்பித்தான். “இராமா! உன்னை நீ உணராமல் இருக்கிறாய். அடியேன் உன்னை முன்னமே அறிவேன். அதைச் சொல்லுதல் சரியல்ல. தேவர்களின் எண்ணத்துக்கு மாறானதாகும். பின்னர் அதை நீயே தெரிந்து கொள்வாய்! அனுமனை சஞ்ஜீவி மருந்து கொணர அனுப்பியுள்ளேன், அவன் வந்தால் நம் துயர் யாவும் தீரும். அவன் மருந்து கொண்டு வருவது திண்ணம்.” என்றான்.

ஜாம்பவான் சொன்னதை இராமன் ஏற்றுக் கொண்ட அதே நேரம் வடக்கு திசையில் ஒலியொன்று கேட்கிறது. சண்டமாருதக் காற்று வீசுகிறது. விண்மீன்கள் நிலைகுலைகின்றன. அனுமன் ஆர்த்து எழுப்புகின்ற குரல் எல்லா திசைகளிலும் கேட்டு எதிரொலிக்கிறது. கடல் குமுறுகிறது. வடகோடியில் வானத்தில் கருடன் பறந்து வருவது போல அனுமன் விரைந்து வந்து கொண்டிருந்தான்.

“வந்து தோன்றினான்” என்று சொல்லும் முன்னதாக தாழப் பறந்து வந்து மெல்ல நிலத்தில் காலடி வைத்தான். சஞ்ஜீவி மலை அரக்கர்களின் ஊருக்குள் வர அஞ்சியதால், அதை வானத்தில் தனியே நிற்கவைத்து விட்டு அவன் மட்டும் கீழே வந்து இறங்கினான். சஞ்ஜீவி மலையின் காற்று அசைந்து வந்து படவும், போர்க் களத்தில் மாண்டு கிடந்தவர் அனைவரும் உயிர் பெற்று, நல்ல உடல் பெற்று, பெருவலிமையோடு தூங்கியவர் எழுந்தது போல எழுந்தனர். முன்னதாக அரக்கர் உடல்கள் அனைத்தையும் இராவணனது ஆணைப்படி கடலில் வீசப்பட்டுவிட்டதால், அரக்கர் பிணங்கள் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

என்ன அதிசயம்! சஞ்ஜீவி மலையின் காற்று பட்டதும் பட்ட மரங்கள் துளிர்த்தன; குரங்கினம் முழுவதும் உயிர் பெற்று எழுந்தது. இலக்குவன் உணர்வு பெற்று எழுந்தான். இராமபிரான் இலக்குவனைத் தழுவிக் கொண்டு அன்பு மிக ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். எங்கெங்கும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டது. என்ன அதிசயக் காட்சி, உலகமே வியந்தது.

“அரம்பையர் ஆடினர்; அமிழ்ந்த ஏழிசை

நரம்பியல் கின்னரம் முதல நன்மையே

நிரம்பின; உலகு எலாம் உவகை நெய்விழாப்

பரம்பின; முனிவரும் வேதம் பாடினார்”.

“வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்

போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன; போதம் = அறிவு.

ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின் ஓதம் = கடல்.

சீதம் நின்று ஆர்த்தன; தேவர் சிந்தனை”. சீதம் = குளிர்

இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் இராமன் முன்பு வந்து நின்று, “என்னை வில்லில் பூட்டி செலுத்திய பின் யான் கொல்லுதல் உறுதி” என்ற உண்மையை நீ நிலை நிறுத்திவிட்டாய்!” அதாவது, பிரம்மாஸ்திரத்தை மாற்ற நாராயணாஸ்திரத்தை இராமன் (மகாவிஷ்ணு) பயன் படுத்தியிருந்தால், பிரம்மாஸ்திரம் சக்தி இழந்து போயிருக்கும். அப்படியில்லாமல் இலக்குவனை இறக்கவிட்டு, பிரம்மாஸ்திரத்தின் புனிதத்தை இராமன் காப்பாற்றிவிட்டான் என்கிறது அது.

சஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து அனைவரையும் உயிர்பெற்று எழச் செய்து நம்பிக்கையூட்டிய அனுமனை இராமன் தழுவிக் கொண்டு, கண்களில் நீர் ததும்ப அவனை வாழ்த்தினான். அனுமன் ஒன்றும் பேசாமல் அடக்கத்தோடு இராமனை வணங்கினான். அனவரும் அனுமனைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துகிறார்கள். ஜாம்பவான் அனுமனைப் பார்த்த், சஞ்ஜீவி மலையை சிறிதும் தாமதிக்காமல் அதை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துவிட்டு வா என்று சொல்கிறான். அனுமனும் ‘இதோ’ என்று ஓர் நாழிகையில் மீள்வேன் என்று சொல்லி மீண்டும் பறந்து சென்று, சஞ்ஜீவி மலையை அதன் உரிய இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு, அதனைக் காக்கும் தெய்வங்களிடமும் சொல்லிவிட்டு திரும்ப வந்தான்.

இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரத்தால் இராம லக்ஷ்மணர் தன் சேனையுடன் மாண்டார்கள் என்ற செய்தி கேட்டு, இராவணன் வெற்றி விழா கொண்டாடினான். அரக்கர்களும், அரக்கப் பெண்டிரும் கள் உண்டு ஆடுகிறார்கள். அரம்பையர், வித்யாதரர், நாகர், இயக்கர், சித்தர் என அனைவரும் வந்து மகிழ்ந்து ஆடிப்பாடி இன்புறுகிறார்கள். அப்போது ஒற்றர்கள் வந்து பகைவர்கள் உயிர் பெற்று எழுந்து விட்டார்கள் என்ற செய்தியை கொண்டு வந்தார்கள். இராவணன் கொதிக்கின்ற மனத்தினனாய் ஆலோசனை மண்டபம் அடைகிறான்.

இராவணன் மந்திராலோசனை மண்டபம் சென்ற செய்தி கேட்டு இந்திரஜித்தும், மகோதரன், மாலியவான் மற்றும் அமைச்சர்கள் வந்து கூடினர். இராவணன் தமக்கு நேர்ந்துள்ள துன்ப நிலையை எடுத்துரைத்தான். அதுகேட்டு மாலியவான் சொல்கிறான், “அவசரப்பட்டு அரக்கர்களுடைய பிணங்களையெல்லாம் எடுத்துக் கடலில் போடாமல் இருந்திருந்தால், அரக்கர்களும் பிழைத்து எழுந்திருப்பர்கள். அவசரப்பட்டு விட்டோம். பிரம்மாஸ்திரமே வீணான பிறகு நாம் அழிவது நிச்சயமாகி விட்டது. அந்த இராமன் பரம்பொருளே! அவனை வெல்லும் ஆற்றல் அரக்கருக்கு உண்டோ? சீதையை அவர்களிடம் கொண்டுவிட்ட பின் சரண் அடைந்தால், பிழைப்போம்” என்றான்.

“நன்று! நன்று!” என்று இராவணன் வெகுண்டு சொன்னான். “அரக்கர் அனைவரும் அழிந்து பட்டாலும், நான் ஒருவன் மட்டும் வாள் எடுத்துப் போர் புரிவேன்” என்கிறான் இராவணன். “மகனாகட்டும்! மற்றவர்களாகட்டும், பயம் கொண்டவர்கள் ஓடிவிடுங்கள். எதிரிகளை நானே அழிப்பேன்” என்றான்.

இந்திரஜித் எழுந்து தான் நிகும்பலை யாகம் செய்தால் வெற்றி பெறலாம். அதை விபீஷணன் இராமனிடம் சொல்லிக் கெடுக்காமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன உபாயம் என்று சிந்திக்கிறான். இந்திரஜித் சொல்லுகிறான், “சீதை போன்ற உருவம் செய்து அவலை அனுமன் முன்பு கொண்டு போய் கொன்றுவிட்டு, அயோத்திக்குச் சென்று அங்குள்லவர்களைக் கொல்வேன்” என்று வடக்கே போகிறேன். இராம லக்ஷ்மணரும் படையுடன் ஊருக்குத் திரும்புவார்கள். நான் சென்று நிகும்பலை யாகம் செய்து முடிக்கிறேன்” என்றான். இந்திரஜித்தின் யோசனையை இராவணனும் ஏற்றுக் கொண்டான்.

இந்திரஜித் சொன்னபடி, சஞ்ஜீவி மலையைக் கொண்டு போய் அதன் உரிய இடத்தில் சேர்த்துவிட்டு வான்வெளி மார்க்கமாக வந்து கொண்டிருக்கும் அனுமன் முன்பாக சீதையைப் போன்ற ஓரு மாயவடிவம் எடுத்த உருவத்தைக் கொல்கிறான். அனுமன் அது கண்டு அழுது புரண்டு, இராமனிடம் ஓடிப்போய் சொல்ல, அவர்கள் அயோத்தி சென்று அங்குள்ளவர்களையாவது காப்பேன் என்று புறப்படுகிறான். அப்போது விபீஷணன் “இது அரக்கர்களின் மாயையாகத்தான் இருக்க வேண்டும். இப்படி உங்களை திசை திருப்பிவிட்டு, இந்திரஜித் நிகும்பலை யாகம் செய்யப் போயிருக்கலாம். அப்படி அவன் அந்த யாகத்தைச் செய்து முடித்து விட்டால், அவனை வெல்வது என்பது இயலாது” என்றான்.

“நான் போய் ஒரு சிறு வண்டு உருவம் எடுத்துக் கொண்டு அசோக வனம் சென்று அன்னை நலமாக இருக்கிறார்களா என்று பார்த்து வருகிறேன்” என்று சொல்லி, அதன்படியே போய்ப் பார்த்துவிட்டு அங்கு அன்னை நலமாக இருப்பதை வந்து தெரிவிக்கிறான். அனைவருக்கும் மன நிம்மதி ஏற்படுகிறது. சீதை நலமாக இருக்கிறாள், அவளைக் கொல்வது போல மாயையால் நம்மை இந்திரஜித் ஏமாற்றிவிட்டு நிகும்பலையில் யாகம் செய்யப் போய்விட்டான் என்று இராமன் தெரிந்து கொண்டு, இந்திரஜித் செய்யப் போகிற நிகும்பலை யாகத்தை உடனே தடுக்க வேண்டும், அதற்கு வேண்டியதைச் செய்வோம் என்று அனைவரும் முடிவு செய்தார்கள்.

நிகும்பலை என்பது இலங்கையின் மேற்குப் பகுதியிலுள்ல ஒரு குகை. அங்கு பத்ரகாளி கோயில் ஒன்று உண்டு. அங்கு சென்று காளிக்கு யாகம் செய்தால் நினைத்ததைப் பெறலாம். இந்த நிகும்பலை பற்றிய தகவல் “வாசஸ்பதிய நிகண்டு” எனும் நூலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இராமன் விபீஷணனை நோக்கி, “ஐயனே! நீ துணை இருக்கிறாய். தெய்வம் உளது. அனுமன் இருக்கிறான். நான் துன்பம் தீர்வது பெரிய காரியமோ? என்றான்.

அதற்கு விபீஷணன், “இந்திரஜித் யாகத்தை முடித்துவிட்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது. நான் இலக்குவனோடு நிகும்பலை சென்று யாகத்தை அழித்து, அவனையும் கொன்று வருகிறேன். விடை தருக!” என்றான்.

உடனே இராமன் இலக்குவனை அழைத்து, விபீஷணனோடு சென்று அந்த யாகத்தை அழித்து இந்திரஜித்தையும் கொன்று வருக. அறவழியில் போர் செய்து அவனைக் கொல்க, என்று சொல்லி அவனைத் தழுவிக் கொண்டான்.

விபீஷணனுடன் இலக்குவன் நிகும்பலை சென்றடைகிறான். அங்கு ஆரவாரம் எதுவுமின்றி யாகம் நடப்பதையும், அந்த யாகத்துக்குக் காவலாக அரக்கர்கள் சக்கர வியூகமாக நின்று கொண்டிருப்பதையும் காண்கிறார்கள். விபீஷணன் இலக்குவனிடம், நாம் இப்போதே சென்று யாகத்தைச் சிதைப்போம் என்கிறான். இலக்குவன் உடனே தாக்குதலைத் தொடங்கி அரக்கர்களைக் கொன்று யாகத்தைச் சிதைத்துக் கெடுக்கிறான். இலக்குவனால் கொலையுண்ட அரக்கர் படையை இந்திரஜித் பார்க்கிறான். அங்கு கடுமையான போர் மூள்கிறது. அனுமன் போரிட்டு சோர்ந்து போகிறான். அங்கதன் பொருத வந்தான், அவனை விலக்கிவிட்டு இலக்குவனைத் தேடிப் போனான். வானர வீரர்களை வழி நெடுக துவம்சம் செய்து கொண்டே போகிறான்.

அப்போது விபீஷணன் இலக்குவனிடம், ” அவன் அப்படியே தப்பி ஓடிவிடுவான், அவனை விடாதே!” என்றான்.

இலக்குவன் அனுமனுடைய தோள் மீது ஏறிக்கொண்டு போருக்கு வந்தான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. அப்போது விபீஷணன் இலக்குவனிடம், “இந்திரஜித் சோர்ந்து போய்விட்டான், இனி இவன் பிழைக்கமாட்டான்” என்றான். தான் சோர்ந்து போவது அறிந்தும், இலக்குவனோடு தொடர்ந்து போரிடுவது சாத்தியமில்லை என்பதும் அறிந்து இந்திரஜித், “இந்தா, ஒழிந்து போ!” என்று சொல்லி மறுபடியும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அதே சமயம் இலக்குவனும் பிரம்மாஸ்திரத்தை எடுத்து, இதனால் உலகுக்கு ஒரு கேடும் நேராமல் போகட்டும், இந்திரஜித்தை விட்டுவிட்டு அவன் அஸ்திரத்தை மட்டும் அழிக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு செலுத்தினான்.

பகைமையிலும் பண்பு பாராட்டிய இலக்குவனை தேவர்கள் வாயாறப் புகழ்ந்தார்கள். இந்திரஜித் விட்ட பிரம்மாஸ்திரம் இலக்குவனுடைய அஸ்திர பலத்தால் அழிந்து வீழ்ந்தது. அதனால் ஏற்பட்ட வெப்பத்தை வேறொரு பாணத்தால் இலக்குவன் தணித்தான். கோபமடைந்த இந்திரஜித் இலக்குவன் மீது பாசுபதாஸ்திரத்தை ஏவி விடுகிறான். வானரக்கூட்டம் செய்வதறியாது இலக்குவனை பயத்தோடு பார்க்கின்றனர். அவன் சிரித்துக் கொண்டே, ஓர் கணையை ஏவி அந்த பாசுபதாஸ்திரத்தை விழுங்கச் செய்து விட்டான்.

இதற்கெல்லாம் இந்த விபீஷணனே காரணம் என்று இந்திரஜித்துக்குக் கோபம் வந்தது. உடனே அவன் கழுத்துக்கு குறி வைத்து ஒரு வலிய அம்பைச் செலுத்தினான் இந்திரஜித். அந்த அம்பு சீறிக்கொண்டு வரும்போது, இலக்குவன் ஓர் வலிய அம்பால் அதனை உடைத்தெறிந்தான். இனி தொடர்ந்து இங்கு இருந்து போரிட்டால் ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு இந்திரஜித் அங்கிருந்து மறைந்து போனான். விண்ணில் எழுந்து மறைந்து போன இந்திரஜித் நேரே இராவணன் முன்பாகப் போய் நின்றான்.

“உன் தம்பி, விபீஷணன் உளவு சொல்லி இலக்குவன் நிகும்பலை யாகத்தை அழித்து விட்டான்” என்று நடந்த வரலாற்றைத் தந்தையிடம் சொல்லி கோபப்பட்டான் இந்திரஜித். இலக்குவனின் வீரத்தையும், தெய்வப் பண்பினையும் சொல்லிவிட்டு, “நீ சீதை மேல் வைத்த காதலை மறந்து விடு. அவர்கள் போர் செய்வதை விட்டுவிடுவார்கள்” என்று அறிவுரை கூறுகிறான்.

அதற்கு மான உணர்ச்சி பொங்க இராவணன் சொல்கிறான், “நான் ஒருவரையும் நம்பி இந்தச் செயலைச் செய்யவில்லை. என்னையே நோக்கி, யான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்” என்கிறான். இறப்பது யார்க்கும் உறுதி. ஆனால் புகழுக்கு அழிவு இல்லை. சீதையை நான் விட்டுவிட்டு மற்றவர்க்கு எளியனாய் ஆவதைக் காட்டிலும் நான் இறந்தாலும் உறுதியாய் இறப்பேன். நீ போ! நானே போருக்குப் போகிறேன்” என்றான் இராவணன்.

தந்தையின் கோபத்தைத் தணிக்க விரும்பிய இந்திரஜித், இராவணனிடம், “சீற்றம் தணிக! நான் சொன்ன சொல்லை பொருத்தருள்க! நானே போருக்குப் போகிறேன்” என்று கிளம்பிப் போனான். அங்கிருந்து நேரே இலக்குவன் இருக்குமிடம் சென்றான். அங்கு இவ்விருவருக்கும் கடுமையான போர் நடக்கிறது. சிவபெருமான் கொடுத்த வில்லும், தேரும் இருக்கும் வரை இராவணனை எவராலும் வெல்ல முடியாது என்று விபீஷணன் இலக்குவனிடம் கூறி, அவற்றை எப்படியாவது அழித்துவிடக் கோருகிறான்.

உடனே இலக்குவன், இந்திரஜித்துடைய தேரை அடித்து வீழ்த்துகிறான். வாளைக் கையில் ஏந்தி வானத்தில் ஏறி மறைகிறான் இந்திரஜித். இலக்குவன் ஒரு அம்பை எடுத்து எய்தி, அவனுடைய ஒரு கையோடு வாளையும் துண்டித்து வீழ்த்துகிறான். வலது கரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தனது இடக்கையால் ஒரு சூலத்தை எடுத்து இலக்குவன் மீது வீசுகிறான் இந்திரஜித். அப்போது இலக்குவன் வேதங்களைத் தெளிந்து கூறும் கடவுளும், அந்தணர்கள் வணங்கும் கடவுளும் இராமனே என்பது உண்மையானால், இந்திரஜித்தைக் கொல் என்று ஓர் கடிய கணையை ஏவினான்.

அந்தக் கணை இந்திரஜித்தின் கழுத்தைச் சீவிக்கொண்டு, தலை மேற்புறமாகவும், உடல் கீழேயும் விழுகின்றன. அறுந்த தலையை அங்கதன் தனது கைகளில் ஏந்த, அனுமன் தோள்மீது அமர்ந்தபடி இலக்குவன், இராமனிடம் செய்தியைச் சொல்ல விரைகிறான். தேவர்கள் இலக்குவனை பூமாரிப் பொழிந்து வாழ்த்த, இராமன் இலக்குவனை ஆரத் தழுவி அவன் காயங்களை ஆற்றுகிறார். இவ்வாறு மகா வீரனும், மாயத்தில் வல்லவனும், இராவணனுடைய கடைசி பலமுமாக இருந்தவனான இந்திரஜித் இறந்து போனான்.

போர்க்களத்தில் இந்திரஜித் மாண்டுபோன செய்தியை ஒற்றர்கள், இராவணனிடம் சென்று சொல்லுகிறார்கள். இதனைக் கேட்டு கோபமும் ஆத்திரமும் கொண்டு ஒற்றர்களைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான் இராவணன். போர்க்களம் சென்று மகனுடைய வெட்டுண்ட இந்திரஜித்தின் கையையும், உடலையும் கண்டு கதறி அழுகிறான். அவற்றைக் கொண்டு வந்து தைலத்தில் இட்டு வைக்க உத்தரவிடுகிறான். மகன் இறந்த செய்தி கேட்டு மண்டோதரி அழுது புலம்புகிறாள். மகன் உடல் மீது விழுந்து கதறுகிறாள். இலங்கையின் அரக்கர்கள் அத்தனை பேரும் இந்திரஜித்தின் மரணச் செய்திக்கு வருந்துகிறார்கள்.

இவ்வளவு துயரமும் சீதையினால் அன்றோ வந்தது; அவளைக் கொன்று விடுகிறேன் என்று வாள் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் இராவணன். அமைச்சன் மகோதரன் அவனைத் தடுத்துப் பெண்ணைக் கொல்லுதல் வீரர்க்கு அழகல்ல என்று தடுத்து விடுகிறான். அமைச்சனின் அறிவுரை கேட்டு சினம் தணிகிறான் இராவணன். பகைவர்களின் சிரங்களை கொண்டன்றி மீளேன் என்று வஞ்சினம் கூறிவிட்டு இராவணன் போர்க்களம் போகிறான்.

உலகின் பல பகுதிகளிலும் உள்ள அரக்கர் படைகளை இலங்கைக்கு வரவழைக்கிறான் இராவணன். அந்தப் படைகளைப் பார்வையிட ஒரு கோபுரத்தின் மீது ஏறி பார்க்கிறான். படையின் அளவு ஓராயிரம் வெள்ளம் என்று தெரிந்து கொள்கிறான். அந்தப் படைத் தலைவர்களை அழைத்துப் பேசுகிறான். தம்மை அழைத்ததின் காரணம் என்ன என்று அந்தப் படைத் தலைவர்கள் கேட்கிறார்கள். இராவனன் சீதை மீதுற்ற காதல் விவரங்களைக் கூறுகிறான். சிறு மனிதர் மீதும் குரங்குகள் மீதும் போரிடவா எங்களை அழைத்தீர்கள் என்று அந்த வீரர்கள் சிரிக்கிறார்கள்.

புஷ்கரத் தீவின் தலைவன் வன்னி என்பவன், “யார் அந்த மானுடர்?” என்கிறான். அவர்களுடைய வலிமை எத்தகையது? உடனே மாலியவான் எழுந்து, இராம லக்ஷ்மணர்களுடைய பெருமைகளையும், வானர வீரர்களின் வலிமையையும், விரித்துக் கூறி, சீதையை விட்டுவிடுதலே நல்லது என்று மறுபடியும் அறிவுரை நல்குகிறான்.

அதற்கு வன்னி, “சீதையை விடுவதென்றால் முன்னமே செய்திருக்க வேண்டும். இந்திரஜித் மாண்டுபோன பிறகு செய்வது தக்கதன்று” என்கிறான். இனி பகைவரை வெல்வது ஒன்றே வழி, எழுக! என்று சொல்லி அனைவரும் போருக்குப் புறப்பட்டனர்.

ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை (மூலபலம்), கூலிப்படை, நாட்டுப் படை, காட்டுப் படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர். இவற்றில் மூலப்படையே, தொன்மையானது என்பதால் சிறப்புடையது. மூலப்படையினர் தாங்களே போர் புரியச் செல்வதாகக் கூறினார்கள். எனினும் இராவணன் தானே வானரப் படையை அழிப்பதாகவும், மூலப்படை இராமனையும் இலக்குவனையும் குறிவைத்துப் போரிட்டுக் கொல்லும்படியும் கேட்டுக் கொள்கிறான். படைகள் போருக்குப் புறப்பட்டன. நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட மூலப்படையைக் கண்டு வானரப்படை பயங்கொண்டு ஓடத்தொடங்கியது. நீலன் போய் அவர்களைத் தேற்றி அழைத்து வருகிறான். பயந்து ஓடியதற்கு ஜாம்பவான் அவமானப்படுகிறான்.

மூலப்படையைப் பற்றியும் அதன் வலிமை பற்றியும் விபீஷணன் இராமனுக்கு எடுத்துச் சொல்லுகிறான். அந்த மூலப்படையுடன் போரைத் தொடங்கிய இராமபிரான் தான் ஒருவனாகவே நின்று, அந்த மூலப்படையை நிர்மூலமாக்கி அழிக்கிறான். மற்ற வீரர்கள் வானரப் படைக்குக் காவலாகப் போயின. தேவர்களும், சிபெருமானும், பிரமனும் இந்த அதிசயப் போரைப் பார்க்கிறார்கள்.

இராமன் ஒருவனே பல்லாயிர இராமனாக பொருவது போன்ற தோற்றம் ஏற்பட்டது. போர்க்களம் முழுவதும் ஒவ்வொரு அரக்க வீரனுடனும் இராமன் போரிடுவது போன்ற தோற்றம் எதிரிகளை தள்ளாட வைத்தது. இராமனின் கைவில்லின் மணி ஒலிக்கும் போதெல்லாம் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக இறந்து வீழ்ந்தனர். அப்படி அந்த மூலபல சேனை அனைத்தையும் அவன் ஒருவனே அழித்த காட்சியை உலகமே கண்டு வியந்தது.

நால்வகைப் படைகள் தன்னைச் சூழ்ந்து வர இராவணன் வானரப் படையுடன் போரிடுவதற்காக போர்க்களம் வருகிறான். தனது அரக்கர் படை அழிந்து வருவது பற்றி அவனுடைய மனம் பதறி, ஆத்திரம் கொள்ளுகிறான். இவனை இலக்குவன் எதிர்கொண்டு போரிடுகிறான். கடுமையாகப் போர் புரிந்து இலக்குவன் அரக்கர் படையை அழிக்கிறான். இவனை அம்பினால் வெல்லுதல் முடியாது என்று கருதி, இராவணன் வடிவம் இல்லாத மோகனக் கணையொன்றை இலக்குவன் மீது ஏவுகிறான். இதை கவனித்த விபீஷணன், அதை முறியடிக்க நாராயணன் கணையை விடும்படி இலக்குவனிடம் தூண்டுகிறான். அவ்வண்ணமே இலக்குவன் நாராயணக் கணையை ஏவி, மோகனக் கணையை செயலிழக்கச் செய்கிறான்.

எதிரிக்கு உளவு சொல்லும் தனது தம்பி விபீஷணன் மீது இராவணனுக்கு ஆத்த்ரம் வருகிறது. எதிரே இலக்குவனுக்கு அருகில் நிற்கும் விபீஷணன் மீது, மயன் தனக்கு அளித்த வேல் ஒன்றை எடுத்து வீசுகிறான். அந்த வேல் தன் உயிரை மாய்க்கப் போகிறது என்று விபீஷணன் சொல்ல, இலக்குவன் பல கணைகளை விட்டும், அவை பயனற்றுப் போயின. இலக்குவன் அந்த வேலைத் தன் மார்பில் வாங்க எண்ணியபோது அவனைத் தடுத்து, அனுமனும் சுக்ரீவனும் அங்கதனும், தங்கள் மார்பில் வாங்க முந்துகின்றனர்.

அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு இலக்குவன் தானே அந்த வேலைத் தன் மார்பில் வாங்கி கீழே விழுகிறான். விபீஷணன் அழுது புரள்கிறான், கதறுகிறான். தன் பொருட்டு இலக்குவன் இந்தச் செயலைச் செய்ததால், தானும் மாண்டு போக முனைகிறான். அப்போது ஜாம்பவான் தடுத்து, அனுமனை அனுப்பி முன்போலவே அந்த மருத்துமலை (சஞ்ஜீவி மலையை) கொணர்ந்து இலக்குவனை உயிர்ப்பிக்க வேண்டுகிறான். அனுமனும் இரண்டாவது முறை வடக்கே சென்று அந்த மருத்து மலையைக் கொணர்ந்து இலக்குவனை உயிர்ப்பிக்கிறான்.

பிறகு அனைவரும் இராமனிடம் சென்று நடந்த விவரங்களைக் கூறி இராவணனை உடனே கொல்ல வேண்டும் என்கின்றனர். இலக்குவன் வீழ்ந்ததும் வெற்றி பெற்றென் என்று சொல்லிக்கொண்டு இலங்கைக்குப் போய்விட்டான் இராவணன். அப்போது எதிரே வந்து இராவனனைத் தடுக்கிறான் விபீஷணன். அவனை, இந்தப் பசு என்ன செய்யும், என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டு இராவணன் இலங்கைக்குப் போய்விட்டான்.

இராவனனின் மூலபலப் படையை இராமபிரான் தான் ஒருவனாகவே நின்று ஒழித்த பிறகு, சுக்ரீவன் இராமனிடம் சென்று வணங்கி, “அரக்கர்களுடைய இவ்வளவு பெரிய படையை வென்றது எவ்வாறு?” என்று கேட்கிறான். அதற்கு இராமன், போர்க்களத்திற்குப் போய் பார், எப்படி என்பது புரியும் என்றான். உடனே சுக்ரீவன், விபீஷணன் முதலியவர்களுடன் களம் சென்று பார்க்க, அங்கு வீழ்ந்து கிடக்கும் சேனைகளின் பெருக்கைக் கண்டு அஞ்சுகின்றனர். ‘ஆயிரம் பருவம் கண்டாலும் இந்தக் களக்காட்சிக்கு ஓர் எல்லை கான்பது அரிது’ இந்த சமுத்திரம் போன்ற படையை இராமன் வென்றது எவ்வாறு என்பதைப் புரிந்து கொள்வதும் அரிது என்று அனைவரும் திரும்பி இராமனிடம் வந்து சேர்கின்றனர்.

இதற்கிடையே, இலங்கை அரண்மனையில் …..

இராவனன் சீற்றத்துடன் தனது இருக்கையில் வீற்றிருக்கிறான். இலங்கையில் எஞ்சியுள்ள சேனைகளையும் போருக்குப் புறப்படுமாறு உத்தரவு பிறப்பிக்கிறான். நகரத்தில் முரசு அறைந்து அறிவிப்பு செய்யப்படுகிறது. பெரிய படையொன்று சேருகிறது. இராவணன் முறைப்படி சிவபூஜை செய்யப் போகிறான். வேத முறைப்படி சிறந்த தானங்களைக் கொடுக்கிறான். தும்பைபூ மாலையைச் சூடிக் கொள்கிறான். அம்புறாத் தூணியை எடுத்து மாட்டிக் கொள்கிறான்.

அரண்மனை வாயிலுக்கு வந்து, “கொண்டு வாருங்கள் தேரை” என்கிறான். தெய்வத் தன்மை வாய்ந்த தேர் ஒன்று அவன் அருகில் வந்து நிற்கிறது. தேருக்கு அர்ச்சனை முதலான வழிபாடுகளை நடத்தியபின், மறையவர்களுக்குப் பெரும் பொருளைத் தானமாக வழங்குகிறான். தேரின் மீது ஏறி போருக்குப் புறப்பட்டான். இன்றைய போரின் முடிவைக் கண்டு அழகிய கூந்தலையுடைய ஜானகி வருந்த வேண்டும்; இல்லையேல் மயன் மகளான மண்டோதரி வருந்த வேண்டும். இவ்விரண்டில் ஒன்று நிச்சயம் நடந்தே தீரும் என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். வானரர்கள், இராமனிடம் சென்று இராவணன் போருக்குப் புறப்பட்டுவிட்ட செய்தியைச் சொல்லுகிறார்கள்.

இராவணன் தேர் ஏறி வெறியோடு போருக்கு வரும் செய்தியை விபீஷணன் தெரிவிக்க, வானர சேனை பயத்தால் நடுங்குகிறது. இராமபிரான் விரைந்து போர்க்கோலம் பூண்டான். சிவபெருமான் தேவர்களை அழைத்து, இந்த கொடிய போர் இன்று முடிவடைந்து விடும். வெற்றி பொருந்திய தேவலோகத் தேர் ஒன்றை இராமபிரானுக்கு அனுப்புக என்று கூறினார். இந்திரன் உடனே ஒரு தேரைத் தயார் செது மாதலி எனும் இந்திரனின் தேர்ப்பாகனிடம் கொடுத்து இராமனுக்குப் போர் செய்யப் பயன்படுபடி அனுப்பி வைக்கிறான்.

தேவர்கள் தேரை வணங்கி, ‘எங்களுக்கு வெற்றியைக் கொணர்வாயாக!’ என வனங்கி வழியனுப்பினர். மாதலியால் செலுத்தப்பட்ட அந்தத் தேர் இராமபிரான் முன்பாக வந்து நின்றதும், இராமன் திகைத்துப் போய் பார்த்தான்.

“இந்தத் தேரை யார் அனுப்பியது?” என்கிறான். மாதலி விவரங்களைக் கூறி தேரின் பெருமையையும் சிறப்பையும் விளக்கிக் கூறுகிறான். “முதல்வனே, தேவர்களும், சிவபெருமானும், பிரம்மதேவனும் முன்னின்று ஏவ, இந்திரனால் அனுப்பப்பட்ட தேர் இது” என்கிறான். இது அரக்கர்களின் மாயையோ என்று சந்தேகிக்கிறான் இராமபிரான். அப்போது அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள், ‘மாதலி கூறியவை மெய்ம்மை மொழிகளே!’ என்று வேத மொழிகளால் உறுதி செய்தன.

இராமன் மாதலியிடம், “உன் பெயர் என்ன?” எனக் கேட்கிறான். “ஐயனே! இந்த வலிய தேரினை செலுத்தும் மாதலி” என்றான் அந்தத் தேர்ப்பாகன். அப்போது இராமன், அனுமனையும், இலக்குவனையும் நோக்கி உங்கள் கருத்து என்ன என்றான். அதற்கு அவர்கள், “ஐயனே! இதில் சந்தேகிக்க எதுவுமில்லை. இந்தத் தேர் இந்திரனுடையதே” என்றனர்.

உலகம் நற்கதி அடையவும், தீவினைகள் சிதைந்து அழியவும், நல்வினைகள் களிப்புற்று ஓங்கவும், துன்பத்துள் ஆழ்ந்துள்ள தேவரும், முனிவரும், இன்புற்று வாழவும், இராமபிரான் அந்தத் தேரின் மீது ஏறினார். தேவர்கள் “ஜெய விஜயீ பவ!” என வாழ்த்த, இராமபிரான் தேரேறி போருக்குப் புறப்பட, இராவணனும் தேரேறி இராமனை நோக்கி வருகிறான்.

இராமனது தேர், தேவர்கள் கொடுத்தது என்று அறிந்து சினத்தால் வாய்மடித்துப் பற்களைக் கடிக்கிறான் இராவணன். தனது தேரை இராமனை நோக்கி விரைந்து செலுத்தும்படி உத்தரவிட்டான். இருவரும் எதிர் எதிரே போர் செய்யக் காத்திருக்க, மகோதரன் இலக்குவனுடன் போர் புரிய போய்விடுகிறான். இடையில் இராமனுடன் பொருதி, இராம பாணத்திற்கு இரையாகிவிடுகிரான் மகோதரன். இராவணனுக்குப் பல தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. எனினும் உள்ளத்து உறுதி குலையாமல் போர் செய்கிறான்.

போர் கடுமையடைகிறது. இராவணன் தனது தேரை வானத்தில் ஏற்றுகிறான். இராமனுடைய தேரும் விண்ணில் செல்கிறது. இருவரும் அங்கு போர் செய்கிறார்கள். தெய்வப் படைகளை ஒருவர் மேல் ஒருவர் ஏவி பயங்கரமாகப் போர் புரிகின்றனர். இராவணன் ஒரு கொடிய சூலத்தை இராமன் மீது வீசுகிறான், அதன் மீது கணை எதையும் தொடுக்காமல், தன் ஊங்காரத்தால் அதைப் பொடியாக்குகிறான் இராமன். இவன் நிச்சயம் மனிதனல்ல, பரம்பொருளே என்று இராவணன் உணர்ந்து கொண்டபோதும், வீம்பின் காரணமாக உறுதியோடு போர் செய்கிறான். அவ்வாறு போர் செய்கையில் இராமன் இராவணனுடைய தலையை அறுக்கிறான். அறுந்த தலை மீண்டும் முளைத்து வருகிறது. அறுக்க அறுக்க மீண்டும் மீண்டும் முளைக்கிறது.

இராமன் அவன் உடல் முழுவதையும் அம்புகளால் துளைத்தெடுக்கிறான். இராவணன் மூர்ச்சையடைந்து வீழ்கிறான். இராவணனது தேர்ப்பாகன், தனது தேரை அங்கிருந்து ஓட்டிக்கொண்டு விலகிச் சென்று விடுகிறான். மாதலி இப்போது அவனைக் கொன்று விடு என்கிறான் இராமபிரானிடம். உணர்வு இழந்தவனைக் கொல்வது அறச்செயலல்ல என்கிறான் இராமன். நினைவு திரும்பிய இராவணன், தான் போர்க்களத்தில் இல்லாதது கண்டு பாகனைக் கொல்லப் போனான். நிகழ்ந்ததைச் சொல்லி, தான் செய்தது போர் நெறிப்படி சரியே என்று விளக்குகிறான் தேரோட்டி. மறுபடி தேர் இராமனை நோக்கிப் போகிறது. அப்போது இராம இராவண யுத்தம் கடுமையாக நடக்கிறது.

அந்தப் போரின் உச்ச கட்டமாக, இராமபிரான் தனது வில்லில் பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்து, மந்திரம் சொல்லி இராவணன் மீது ஏவுகிறார், ‘அக்கணத்தில் அயன்படை (பிரம்மாஸ்திரம்) ஆண்தகை சக்கரப்படையோடும் தழீஇச் என்று புக்கது, அக்கொடியோன் உரம்; பூமியும், திக்கு அனைத்தும், விசும்பும் திரியவே.’ இராகவனின் புனித அம்பு இராவணன் நெஞ்சில் புகுந்து உயிரைக் குடித்துப் புறம் போயிற்று.

“முக்கோடி வாழ் நாளும், முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள்

எக்கோடி யாராலும் வெலப்படாய், எனக் கொடுத்த வரமும், ஏனைத்

திக்கொடும் உலகனைத்தும் செருக்கடைந்து புயவலியும் நின்று, மார்பில்

புக்கோடி உயிர் பருகிப் புறம் போயிற்று, இராகவன் தன் புனித வாளி.”

இராகவன் விட்ட அந்த அம்பு, இராவணனுடைய முக்கோடி வாழ்நாளையும், அவன் முயன்று செய்த தவ வலிமையையும், பிரமன் முன்பு அவனுக்குக் கொடுத்த எந்தத் திக்கிலும், எவராலும் வெலப்படாய் என்ற வரமும், எட்டுத் திக்கிலும் புகழ் பரந்த புய வலியையும் அழித்துவிட்டு, அவன் மார்பில் புகுந்து குடைந்து கொண்டு உயிரை உண்டு வெளிப்புறம் போய்விட்டது.

வானவர்கள் ஆர்ப்பரித்தார்கள். அந்தணரும், முனிவர்களும் ஆசி கூறினார்கள். இராமனுடைய அம்பு, பாற்கடல் சென்று மூழ்கி திரும்ப வந்து இராமபிரானின் அம்புப் புட்டிலில் வந்து சேர்ந்தது.

உயிரிழந்த இராவணன் உடல் தேரிலிருந்து தலைகீழாய் தரையில் விழுகிறது. உயிர் போன இராவணனது முகம் பொலிவுடன் விளங்கியது. ஏன் தெரியுமா? எப்போதும் கனன்றெழுந்த கோபம் அவன் உடலிலிருந்து போய்விட்டது. வஞ்சக நினைவுகளும், காம இச்சைகளும் மனத்திலிருந்து போய்விட்டன. வலிமை ஒடுங்கியது, அதனால் அவன் முகவும் பொலிவுடன் காணப்பட்டது.

இராமனுடைய தேர் வானத்தில் இருந்தது. சாரதியைத் தேரை கீழே இறக்கு என்று சொல்லும்போதே, கீழே கிடந்த இராவணனின் மேனியை முழுமையாகப் பார்த்தான். கிழே இறங்கி வந்து அருகில் நெருங்கி, இராவணன் உடலைப் பார்த்தான் இராமன். வானரங்களோ இறந்துபோன இராவணனின் உடலின் மீது ஏறி விளையாடுகின்றன. இராவணனது முதுகில் திசையானைகளின் கொம்புகள் குத்தித் தெரிந்த வடுக்களைப் பார்த்தான் இராமன். இது போரில் புறமுதுகிட்டதால் பட்ட வடுக்களோ என்று ஐயமுற்றான். இவன் முன்பு கார்த்தவீரியனால், கட்டுண்டு கிடந்தவன். இவனோடு போர் செய்கிறோமே என்று நினைத்தது உண்டு. அது தவிர இங்கு புறமுதுகிட்ட தழும்புகளும் அல்லவா இருக்கின்றன, என்று எண்ணி இராமன் விபீஷணனை அழைத்து, ‘இந்த வெற்றி சிறப்புடையது அன்று’ என்றான்.

விபீஷணன் மனம் வருந்திச் சொல்கிறான், “செல்வனே! நீ சொல்லும் சொற்கள் பொறுத்தமற்றவை. ஐயனே! கார்த்தவீரியனும், வாலியும் அரிதாகப் பெற்ற வெற்றி, தேவர்களின் சாபத்தால் விளைந்தவை. இராவணன் போர் செய்யும் விருப்பத்தால் உலகத்தில் எங்கெங்கோ போய் தேடியும் பகைவர் இல்லாமையால், பெரிய திசை யானைகளோடு பொருதினான். அவற்றின் கொம்புகள் மார்பில் குத்தி ஆழப் பதிந்து ஒடிந்தன. அந்த வடுக்களையே நீ முதுகில் பார்த்தாய். அன்றி, அது போர்க்கள வடுக்கள் அல்ல, பகைவரின் படைக்கலங்கள் அவனை என்ன செய்யும்? அந்தத் திசை யானைகளின் கொம்புகள் மார்புக்கு அணிகலன்களாக அங்கே பதிந்து கிடந்தன. முதல் நாள் போரில் அனுமன் அவன் மார்பில் விட்ட குத்தினால் அவை முதுகு வழியே வெளியேறின” என்றான்.

“தேவர்கள் எல்லாம் இவனுக்குப் பயந்து கிடந்தவர்கள். இவன் இன்று இறந்துவிட்டான் என்று சொன்னாலும், அவர்கள் நம்பாமல் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்” என்றான் விபீஷணன்.

அதற்கு இராமன், “அப்படியா?” என்று கேட்டுவிட்டு, இராமனும் தன் மனதில் தோன்றிய ஐயங்களும், வெட்கமும் நீக்கி, விபீஷணனை நோக்கி, “விபீஷணா! நீ இவனுக்கு ஈண்டு ஈமக்கடன்களைச் செய்வாயாக!” என்று பணித்தான்.

இறந்து கிடந்த அண்ணனின் உடலைக் கண்டு விபீஷணன், அதன் மேல் விழுந்து கதறுகிறான்.

“உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு, சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்

கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்!; நீயும் களப்பட்டாயே!

எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித்தான் எண்ணுதியோ? எண் இல் ஆற்றல்

அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே!”

சீதையை விட்டுவிடு, இவள்தான், முன்பு தீப்பாய்ந்த வேதவதி என்று சொன்னேனே, இவளால் உனக்கு மரணம் நேரும் என்று எச்சரித்தேனே, அதைக் கேட்காமல் உன் குலம் முழுவதும் இறந்துபடப் போனாயே! ஜானகி எனும் நஞ்சு உன்னைத் தன் கண்ணால் பார்த்த மாத்திரத்தில் உன் உயிர் போய்விட்டதே! அண்ணா! அண்ணா! நீ எங்கு போனாய்? பாட்டனாம் பிரமனுடைய நாட்டை அடைந்தாயோ? பிறைசூடிய சிவபிரான் தன் சிவலோகம் அடைந்தாயோ? எமனும் அஞ்சும் உன் உயிரைக் கவர்ந்து போனவர் எவரோ? கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று தங்கை சூர்ப்பனகை உன்னை பழி தீர்த்தாளோ? சொர்க்கத்திலும், நரகத்திலும் அனைவருமே நம்மோடு பகைமை கொண்டார்; நீ போன இடத்தில் யார் முகத்தில் விழிப்பாய் நீ?”

“போர் மகளை, கலைமகளை, புகழ்மகளை தழுவிய கை, பொறாமை கூர

சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவரிய தெய்வக் கற்பின்

பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! உன்னைப்

பார்மகளைத் தழுவினையோ, திசையானை பணை இறுத்த பணைத்த மார்பால்”.

வீரத்திருமகள், கலைமகள், புகழ்மகள் போன்ற உனக்குரியவராக இருக்கும் மூன்று பெண்டிரைத் தழுவிய உன் கை, தெய்வக் கற்புடைய திருமகளின் அம்சமான புகழ்மிக்க சீதையைத் தழுவ ஆசைப்பட்டு உன் உயிரைக் கொடுத்து பழி கொண்ட பித்தனே! அஷ்ட திக் கஜங்களின் கொம்புகளை முறித்த உன் பருத்த மார்பினால் பூமிதேவியை தழுவிக் கொண்டாயோ? இவ்வாறு விபீஷணன் புலம்பி அழுகிறான். அவனை ஜாம்பவான் தேற்றி அழைத்துச் செல்கிறான்.

இராவணன் இறந்த செய்தியை மனைவி மண்டோதரியிடம் தெரிவிக்கிறார்கள். போர்க்களத்துக்கு ஓடி வருகிறாள். வந்து களத்தில் கணவன் உடல் கிடக்கும் இடம் வந்து அவ்வுடல் மீது விழுந்து அலறுகிறாள். அவளோடு கூட வந்த அரக்கர்குலப் பெண்கள் அழுது அரற்றுகிறார்கள். மண்டோதரி இறந்த கணவனின் உடலைப் பார்க்கிறாள். என்ன இது? இவன் உடம்பு முழுவதும் அம்பு துளைத்திருக்கிறதே.

“வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த திருமேனி மேலும் கீழும்

எள் இருக்கும் இடமின்றி, உயிர் இருக்கும் இடன் நாடி, இழைத்தவாறோ?

கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்

உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாள்?

வெள்ளெருக்கம்பூ மாலையை அணிந்த சிவபெருமானுடைய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த உனது அழகிய உடம்பின் மேலும் கீழுமாக எள் இருப்பதற்குரிய சிறிய இடம்கூட இல்லாதபடி, உன் உயிர் இருக்கும் இடத்தைத் தேடித் துளைத்ததோ அன்றி, தேன் இருக்கும் மலரணிந்த சானகி மீதான காதலை உன் மனச் சிறையில் எங்காவது மறைத்து வைத்திருக்கிறாயோ என்று கருதி உன் உடல் முழுவதும் புகுந்து துளைத்ததோ இராமனுடைய வாளி? என்று இராவணன் உடல் மீது விழுந்து மண்டோதரி கதறுகிறாள்.

பெண்களுக்கு அணிபோன்ற ஜானகியின் அழகு, அவளுடைய கற்பு, அவள் மீது இராவணன் கொண்ட காதல், சூர்ப்பனகை இழந்த மூக்கு, தசரதன் ஏவலால் இராமன் காட்டிற்கு வந்தது, இவையெல்லாம் இந்திரனின் தவத்தால் வந்ததோ? இப்படிப் புலம்பி அழுது, ஏங்கிப் பின் எழுந்து, இராவணனது மார்பினைத் தன் தளிர் கரத்தால் தழுவிக் கொண்டு, ‘ஓ’வென அழைத்துப் பெருமூச்சு விட்டாள். அவள் உயிர் மூச்சும் அதோடு அடங்கியது. கணவன் மறைந்தவுடன் தானும் உயிர் விட்ட மண்டோதரி எனும் கற்பரசியை மாதர் எல்லாம் போற்றி வாழ்த்தினர்.

இராவணனுடைய ஈமக் கடன்களை விபீஷணன் செய்து முடிக்கிறான். அனைத்துக் காரியங்களும் முடிந்த பிறகு, அனைவரும் இராமனிடம் வந்து சேருகின்றனர். இராமன் தன் தம்பி இலக்குவனை

அழைத்து, “நீ போய், சுக்ரீவன், அனுமன் மற்றும் வானர வீரர்களை அழைத்துக் கொண்டு, விபீஷணனுக்கு வேதமுறைப்படி இலங்கை அரசின் முடிசூட்டி பட்டாபிஷேகம் செய்து வருவாயாக” என்று பணித்தான். இதனைக் கேட்டு தேவர்கள் விபீஷணனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர். இலக்குவன் அனைவர் முன்பாகவும், விபீஷணனுக்கு வேத கோஷங்கள் முழங்க, மங்கள ஸ்னானம் செய்வித்து, புத்தாடைகள் அணிந்து, முடிசூட்டி இலங்கைக்கு அரசனாக்கினான்.

இலங்கையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட விபீஷணன், இலக்குவனை வணங்குகிறான். பிறகு இராமபிரான் இருக்குமிடம் சென்று அவரை வணங்கி ஆசி பெறுகிறான். இராமன் விபீஷணனைத் தழுவிக் கொண்டு ராஜ நீதிகள் பலவற்றை எடுத்துச் சொல்கிறார். பிறகு இராமன் அனுமனை அழைத்து சீதையைக் கண்டு செய்தி சொல்லி வருமாறு அனுப்புகிறான். மாருதியும் அங்ஙனமே சென்று சீதையை வணங்கி, ஆடியும், பாடியும் செய்தியைச் சொல்கிறான்

“ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்,

வாழி சோபனம்! மங்கள சோபனம்,

ஆழி ஆன அரக்கனை ஆரியச்

சூழி யானை துகைத்தது, சோபனம்”.

அனுமன் கொண்டு வந்த மங்களகரமான செய்தி கேட்டு சீதை உடல் பூரித்தாள். செய்தி கேட்ட களிப்பின் மிகுதியால், பிராட்டி ஒன்றும் பேசமுடியாமல் இருந்தாள்.

“அன்னையே! தாங்கள் ஒன்றும் பேசாதது ஏன்?” என்கிறான்.

“மாருதி! மகிழ்ச்சிப் பெருக்கினால், உனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை” என்கிறாள் சீதை. ஆஞ்சநேயா! நீ முன்பு வந்தபோது நீக்குவென் மொய்சிறை என்றாய். பின்னை நீக்கி உவகையும் பேசினை, என்ன பேற்றினை உனக்கு ஈவது. உன்னி உன்னி உரை மறந்து நின்றேன்” என்றாள்.

அனுமன் சீதையிடம், “அன்னையே! தங்களை வருத்திய இந்த அரக்கிகளைக் கொல்ல எனக்கு அனுமதி தருக!” என்று கேட்டான். உடனே அரக்கிகள் சீதையிடம், “அன்னையே! நீயே சரண்” என்று சரணடைந்து விட்டனர். சீதாதேவி அரக்கியர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றி அனுமனிடம், “இவ்வரக்கியர் இராவணன் சொன்ன வண்ணம் செய்தார்கள். அவ்வளவே! வேறு என்ன தீங்கு செய்தார்கள்? இவர்களை ஒன்றும் செய்துவிடாதே! விட்டுவிடு!” என்றாள்.

பிராட்டியின் கருணை மனத்தை நினைத்து அனுமன் கண்கள் பனிக்க, அவளைப் பணிகிறான். இராமன் விபீஷணனை அனுப்பி சீதையை அணிகலன்களோடும் சீரோடும் அழைத்து வா என்று அனுப்பினான். விபீஷணன் உடனே வந்து சீதையை வணங்கி, “தாயே! தங்களை நல்ல ஆடை, அணிமணிகள், ஆபரணங்கள் அணிந்து அழைத்து வரப் பணித்தார் அண்ணல்” என்று கூறுகிறான். சீதாதேவி, “புதிய ஆடைகளும், அணிகலன்களும் இல்லாமல் நான் இங்கிருந்த கோலத்தில் வருவதே எனக்குத் தகுதி” என்று அவன் வேண்டுகோளை மறுத்து, தான் இருக்கும் விதமாகவே புறப்படத் தயாரானாள். அதற்கு விபீஷணன்,”அன்னையே, இது இராமபிரான் கட்டளையாயிற்றே” என்று சொல்லவும், சரியென்று சீதையும் சம்மதித்தாள். மேனகை, அரம்பை, ஊர்வசி, ஆகியோர் வந்து மஞ்சனமாட்டி, ஆபரணம் பூட்டி அன்னையை அலங்கரித்தார்கள்.

பிராட்டியை ஓர் விமானத்தில் ஏற்றி இராமபிரானிடம் அழைத்து வந்தனர். தேவியைப் பார்க்க தேவர்களும், முனிவர்களும், தேவலோக மகளிரும் முணியடித்து வந்து குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடக்கிறது. கூச்சல் கேட்டு இராமன் விபீஷணனை கடிந்து கொள்கிறான். சாதுவான மக்களை ஏன் இப்படி அடித்து விரட்டுகிறாய்? அப்படிச் செய்யக்கூடாது என்கிறான்.

பிராட்டி இராமபிரானது திருமேனியைக் கண்டு தரிசிக்கிறாள். விமானத்திலிருந்து இறங்கி இராமனைத் தொழுதுவிட்டு, தன் ஏக்கம் நீங்கினாள். இராமபிரானும், கற்புக்கரசியும், பெண்மை குணங்களுக்கு இருப்பிடமானவளும், அழகுக்கு அழகானவளும், தன்னைப் பிரிந்த நிலையிலும் அருள் செய்யும் அறத்தை உடையவளுமான பிராட்டியை அன்பினால் உளம் பொருந்த நோக்கினான்.

“கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,

பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,

தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை,

அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்”.

கண்கள் கண்ணீர் சோர, தன் காலடியில் விழுந்து வணங்கிய சீதையை அடுத்த கணம் அவளைப் பார்த்த பார்வையில், கருணை மறைந்து சீற்றம் தென்பட்டது. அந்தச் சீற்றம் கண்களில் மின்ன, இராமன் பேசுகிறான், “சீதா! நீ இராவணனது சிறையில் நெடுநாள் இருந்தாய். அங்கு உணவினை விரும்பி உண்டாய். ஒழுக்கம் பாழ்படவும், நீ மாண்டிலை. அச்சம் தீர்ந்து இவண் மீண்டது ஏன்? இராமன் விரும்புவான் என்று கருதியா?”

“உன்னை மீட்கவென்று நான் கடலில் அணை கட்டினேன். அரக்கர்களுடன் போராடினேன். இராவனனைக் கொன்றேன். மனைவியைக் கவர்ந்தவனோடு போரிட்டு அழிக்கவில்லை எனும் கெட்ட பெயர் எனக்குக் கிட்டிவிடாதவாறு இலங்கை வந்தேன். அங்கு, நீ இருந்த இடத்தில் மாமிசங்களை உண்டாயோ? மதுவினை அருந்தினாயோ? கணவனைப் பிரிந்த கவலை சிறிதுமின்றி இனிதாகக் காலம் கழித்தாயோ?”

“பெண்மையும், பிறப்பும், பெருமையும் கற்பு எனும்

திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,

உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்

வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்”.

“நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது? உன் நடத்தை என் உணர்வைச் சிதைக்கிறதே. நீ இறந்து போவாயாக! அங்ஙனமன்றாயின் என் எதிரே நில்லாமல் உனக்குத் தகுதியான இடத்துக்குச் செல்வாயாக!” என்று வெகுண்டு கூறினான், மெய் உணர்ந்தோர் உள்லத்தில் வீற்றிருக்கும் இறைவனாகிய இராமன்.

இராமனின் இந்தச் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் கதறி அழுதார்கள். தன் தன்மைக்கு ஒவ்வாத கடும் பழிச்சொற்களைக் கேட்கப் பொறாத உள்ளத்தினளாய், இரு கண்களிலிருதும் குருதியும் கண்ணீரும் கொட்ட, அவமானத்தால் தலை குனிது, நிலத்தினை நோக்கி நிற்கும் சீதை, புண்ணை அம்பினால் குத்திக் கிளறியது போல கடும் துன்பத்தால் பெருமூச்செறிந்தாள்.

இதுநாள் வரை பொறுமையோடு, எதிர்ப்பட்டத் துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு காத்திருந்து, தவமியற்றி உயிர் வாழ்ந்தது இத்தகைய கடும் சொற்களைக் கேட்கத்தானா?

“மாருதி வந்து, எனக் கண்டு, “வள்லல் நீ

சாருதி ஈண்டு” எனச் சமையச் சொல்லினான்

யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ?

சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லானோ?”

“முன்பு அனுமன் அசோகவனம் வந்து நின்னுடைய தூதன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, என்னைப் பிரிந்த உன் நிலையையும், பகைவனை வென்று என்னை மீட்பதற்காக நீ விரைவில் இங்கு வருவாய் என்பதனையும் கூறிச் சென்றதனால், நான் இதுகாறும் உயிர் தரித்திருந்தேன். நினது பேரன்பினை எனக்கு எடுத்துரைத்த அனுமன், அதுபோலவே, நின்னைப் பிரிந்து வருந்தும் என் நிலைமையையும் நினக்கு உள்ளவாறு சொல்லியிருக்க வேண்டுமே? அனுமன் வாயிலாக நீ உண்மையை உணரவில்லை என்றால், அந்த அனுமன் நீ அனுப்பிய தூதனே இல்லை போலும்” என்று பிராட்டி இராமனை வினவுகிறாள்.

“இவ்வளவு நாளும் நான் காத்த தவம், நற்குண நற்செய்கைகள், எத்துணைச் சிறந்த கற்பினையும் நீ உணரப் பெறாமையால், பித்தர் செயல் எனும்படி அவை யாவும் பயனின்றி கழிந்து போயின”.

“ஆதலின், புறத்து இனி யாருக்காக என்

கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்,

சாதலின் சிறந்தது ஒன்றிலை; தக்கதே’

வேத! நின் பணி; அது விதியும்’ என்றனள்.”

சீதாபிராட்டி இலக்குவனை அழைத்து, இராமன் இப்படிக் கூறிவிட்ட நிலையில் தான் உயிர் வாழ விரும்பவில்லை, தீமூட்டி அதில் இறங்கி உயிரை விடுவேன் என்று தீ மூட்டச் சொல்கிறாள். இலக்குவன் மூட்டிய தீ பற்றி எரிகிறது. சீதாதேவி, அதன் அருகில் செல்கிறாள். உலகில் எல்லா உயிர்களும் அஞ்சி நடுநடுங்குகின்றன. இந்திராணி உள்ளிட்ட தேவ மாதர்கள் கதறுகிறார்கள். நான்முகன் முதலான நாயகர் நடுங்கினர். ஆதிசேடன் படம் சுருங்கி ஒடுங்கினான்; அவன் வாயிலிருந்து நஞ்சு ஏங்கும் பரவியது, கடல்கள் பொங்கின.

தீயின் முன்பாக நின்ற பிராட்டி, தீயினை நோக்கி, “அக்னி தேவா! யான் மனத்தாலும், மொழியாலும், உடலாலும், குற்றமுடையேன் என்றால், என்னை நீ உன் கொடிய நாவால் சுட்டெரிப்பாயாக!” என்று கூறிக் கொண்டே இராமபிரானையும் வணங்கி, கூப்பிய கரங்களோடு, அன்னை, அந்த அக்னியுள் விரைந்து பாய்ந்தாள். அன்னை அப்படிப் பாயவும், பாலின் நுரை போல தீய்ந்தது அந்த நெருப்பு. அவள் கற்பு எனும் தீயின் வெப்பம் தாங்காமல்!.

தீக்குழிக்குள் அழுந்திய சீதாபிராட்டியை ஏந்திய கையனாய் வெளியே வந்தான் அக்னி தேவன். இராமபிரனை நோக்கிக் கதறி அழுத வண்ணம் வந்து இராமனைப் பணிந்து சீதையைக் கொண்டு சேர்க்கிறான்.

கற்பின் செல்வியாம் சீதாபிராட்டியை இராமன் வெகுண்டு கூறிய சொற்கள், அவளது கற்பின் சிறப்பினை உலகத்தார் உணர வேண்டி பேசிய சொற்கள் என்ற கருத்தில் கவிச்சக்கரவர்த்தி இராமனை வர்ணிக்கும்போது “ஊடின சீற்றத்தால்” எனும் சொற்றொடரால் குறிக்கிறான்.

“ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்

வாடின இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ

பாடிய வண்டொடும்; பணித்த தேனொடும்

சூடின மலர்கள் நீர் தோய்ந்த போன்றவால்”.

கற்பின் தெய்வமான சீதாபிராட்டியை நோக்கி இராமன் வெகுண்டு கூறிய சொற்கள், அவளது கற்பின் சிறப்பினை இந்த உலகத்தார் உள்ளவாறு அறிதல் வேண்டும் எனும் கருத்துடன் அன்பினால் கூறியவையே. அதனால்தான் அன்னை தீயில் பாய்ந்தபோதும், அவள் உடலில் உண்டான வியர்வைத் துளிகள்கூட தீயின் வெப்பத்தால் உலரவில்லை; அவள் கூந்தலில் சூடின மலர்களும்கூட துளிக்கின்ற தேனோடும் நீரில் படிந்தவை போல குளிர்ந்தே கணப்பட்டது.

சூழ்ந்து நின்றவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். “சீதையின் கற்பு எனும் வலிய தீ என் வலிமையை எரித்து அழித்து விட்டது, உனக்கு எந்தத் தீங்கும் நினையாத என்னை ஏன் வெகுண்டாய்” என்று அக்னிதேவன் இராமனிடம் முறையிடுகிறான்.

அதற்கு இராமன் அக்னி தேவனை “நீ யார்?” என்கிறான். “இவளை தீ சுடாதபடி யார் சொல்லி நீ காப்பாற்றினாய்?” என்கிறான் இராமபிரான்.

“ஐயனே! இராமா! நாந்தான் அக்னிதேவன். இந்த தேவியின் கற்புத்தீ என்னைச் சுட்டெரித்து விட்டது. எனவே உன்னைச் சரணடைந்தேன். உலகத்தின் நாயகனே! இங்கே என் நிலையை நேரில் கண்ட பிறகும், இந்தத் தெய்வத்தின் கற்பில் ஐயம் கொண்டனையோ? இவள் மட்டும் சீற்றம் கொள்வாராயின், மேகம் மழை பொழியுமோ? பூமி பிளந்து சிதறாமல் போகுமோ? அறமும் செவ்விய நெறியில் நடக்க முடியுமோ? உலகம் அழியாமல் இருக்குமோ? இவள் வெகுண்டு சபித்தால், பிரமனும்கூட இறந்தொழிவான்” இவ்வாறு சொல்லிக் கொண்டு அக்னிதேவன் பிராட்டியை இராமன் முன்பாகக் கொண்டுவர, இராமன் அன்னையை ஏற்றுக் கொள்கிறான்.

இராமபிரான் அக்னிதேவனிடம், “அழிவு இல்லாதவன் நீ! சீதையை இகழ்ந்து ஒதுக்குவதற்கு யாதொரு குற்றமும் இல்லாதவள் என்று மெய்ம்மையான மொழியைக் கூறினாய். அதனால் உலகம் இகழ்ந்து ஒதுக்க யாதொரு பழியும் இல்லை. இனி இவள் நீக்கத்தக்கவள் அல்ல என்று ஏற்றுக் கொண்டேன்” என்றான்.

தேவர்கள் வேண்டிக் கொள்ள, பிரம்ம தேவன், இராமபிரானிடம், அவன் யார் என்பதைக் கூறுகிறான். இராமபிரானே திருமாலின் அவதாரம் என்றும், அவதார காரனங்களையும், விளைவுகளையும் பிரமதேவனும், பரமேஸ்வரனும் விளக்கிக் கூறுகிறார்கள். பிறகு சிவபெருமான் வைகுந்தப் பதவி பெற்றுவிட்ட தசரதன் இருக்குமிடம் சென்று, அங்கு போய், அவனுடைய மகன் இராமன் பிரிவினால் தசரதன் அடைந்த துயரத்தை, இராமனைச் சந்தித்துப் போக்கிக் கொள்ளுமாறு கூறுகிறார். சிவபெருமான் கட்டளைப்படி, தசரதன், தன் மகனைக் காண நிலமிசை வந்து சேர, இராமன் அவன் திருவடிகளில் வணங்கி ஆசி பெற்றான். தசரதன் காலில் வீழ்ந்து வணங்கிய சீதையையும் தசரதன் வாழ்த்தி ஆசி கூறினான். இலக்குவனை அருகில் அழைத்து, அவனைத் தழுவிக் கொண்டு அவனைப் பாராட்டுகிறான். அப்போது, இராமன் தசரதனிடம் ஒரு வரம் கேட்கிறான், அது:-

“ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை என, அழகன்

தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும்

தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்

வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி!”.

“இராமா! நீ கேட்டுக் கொண்டபடியே, பரதன் என் மகனாக ஆகட்டும், அவனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பாவி கைகேயி மீது நான் கொண்ட கோபம் தீராது” என்றான்.

அது கேட்ட இராமன், “நான் சுமக்கவிருந்த பெருஞ்சுமையான அரச பதவியை நீக்கிப் புண்ணியத் துறைகள் ஆடி, தீயோரை ஒறுத்து, நல்லோரைக் காக்கும் இவ்வாய்ப்பினை அருளிய எம் அன்னையின் செயல் எங்ஙனம் குற்றமுடையது? குற்றமுடையது அல்ல!” என்றான். மெய்ம்மையை உணர்ந்த தசரதன், தான் கைகேயியின் பால் கொண்ட வெகுளியை விட்டு ஒழித்தான்.

இப்படி இராமனுக்கு வரம் அளித்துவிட்டு, தசரதன் விமான்மேறி வைகுந்தம் போய்ச்சேர்கிறான். தேவர்கள் வந்து இராமனைச் சூழ்ந்து கொண்டு, “இராமா! நீ வேண்டுகின்ற வரத்தைக் கேள்!” என்றனர்.

இராமன் உடனே தேவர்களிடம், “போரில் மாண்டுபோன வானரர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுமாறும், இவர்கள் செல்லுகின்ற காடு, வனம் முதலான இடங்களில், இவர்களுக்குக் கணக்கற்ற வகைகளில் காய்களும், கனிகளும் கிடைக்குமாறும், அருள் புரிக!” என்று வேண்டினான். அங்ஙனமே தேவர்கள் அருள் புரிந்தனர்.

அப்போது தேவர்கள் இராமனிடம், “இன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிந்து போய்விட்டன. நீ பரதனிடம் வாக்களித்தபடி இன்றே போய்ச் சேருவாயாக. அப்படி இல்லையேல், அவன் செய்திருக்கும் சபதப்படி, தீயினுள் பாய்ந்து விடுவான்” என்றனர்.

“இன்றே நான் அயோத்தி செல்ல யாதேனும் மார்க்கம் உண்டோ?” என்று வினவினான். அதற்கு விபீஷணன் இராமனை வணங்கி, “ஐயனே! இன்றே விரைந்து சென்று சேரும்படியான விமானம் இங்கே இருக்கிறது. வள்ளலே! இந்த விமானத்தை குபேரனிடமிருந்து இராவணன் கவர்ந்து கொண்டான். இந்த விமானம் எழுபது வெள்ளம் பெரும் சேனை ஏறி அமர்ந்தாலும் தளராது பறந்து செல்லக் கூடியது, நீ இதில் ஏறி உட்கார்ந்து இன்றே அயோத்தி போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றான்.

விபீஷணன் குறிப்பிட்ட அந்த குபேரனுடைய புஷ்பக விமானம் வந்து சேர்ந்தது. விமானத்தில் இராமனுடன், சீதையும், இலக்குவனும் அமர்ந்து கொள்கிறார்கள். இராமன் விபீஷணனிடம், “விபீஷணா! உன்னைச் சார்ந்தவர்களுக்கு இனிய செயல்களனைத்தையும் செய்துவிட்டு, யாவரும் பாராட்டி புகழும்படி நல்லாட்சி புரிவாயாக!” என்று ஆசி வழங்கினான்.

அடுத்து சுக்ரீவனை நோக்கி, “சுக்ரீவா! உன் தோள் வலிமையால் இராவணனைக் கொன்றேன். நீயும் உன் படைகளும், கிஷ்கிந்தை சென்று ஓய்வு கொண்டு, எல்லா நலன்களையும் பெற்று சுகமாக வாழ்வீர்களாக!” என்று வாழ்த்தினான்.

பிறகு அங்கதன், ஜாம்பவான், பனசன், நீலன் ஆகியவர்களை அழைத்து, அனுமனையும் தன் பக்கம் வரச் சொல்லி “நீங்கள் அனைவரும் சுகமாக வாழ்வீர்களாக!” என்று கூறுகிறான். அவர்கள் இராமனைப் பிரிய மனமின்றி இராமபிரானுடைய முடிசூட்டு விழாவைக் காண உடன் வருவதாகக் கூறினார்கள். உடனே இராமன் அதற்கு இசைவு தெரிவிக்க அனைவரும் மகிழ்ந்து அவனோடு புறப்படத் தயாராகினர். அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொள்கிறார்கள். இராமன் கட்டளைப்படி அனைவரும் மானுட வடிவம் எடுத்துக் கொள்கின்றனர்.

விமானம் வடக்கு திசை நோக்கி பறக்கிறது. வழியில் தென்படும் காட்சிகளை, இராமன் சீதைக்குக் காட்டிக் கொண்டு வருகிறான். அதோ பார்! கடலை அடைத்துக் கட்டிய சேது. இது மகா புண்ணிய க்ஷேத்திரம். இங்கு வந்து தீர்த்தங்களில் மூழ்கிச் செல்பவர்கள் அனைத்துப் பாவங்களும் நீங்கி நற்கதி அடைவர்.

“கங்கையொடு, யமுனை, கோதாவரியொடு களிந்தை சூழ்ந்த

பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;

சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்

இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே!”

இந்த சேதுவில் நீராடியவர்கள், அவர்கள் எத்தகைய பாவங்களைச் செய்தவரேனும், பசுக்களை, ஐம்பெரும் குரவர் எனப்படும், ஆசிரியர், அரசன், தாய், தந்தை, தமையன், முனிவர்கள், பெண்டிர், குழந்தைகள், அடைக்கலமாக வந்தவர்கள் ஆகியோரைக் கொன்ற கொடிய பாவமும் கூட இந்த சேதுவின் பாந்த கடலிடை மூழ்கினால் தேவர் தொழும் பெருமை பெற்றவர் ஆவார்.

கடலின் குறுக்கே அடைத்து சேது அணையைக் கட்டியதால் மரக்கலங்கள் நீரில் தடையின்றி செல்வமுடியாமல் போய்விடும் என்பதால், அந்த வழியாக மரக்கலங்கள் தடையின்றி செல்ல வேண்டித் தனது வில்லின் நுனியினால் சேது அணையைக் கீறி உடைத்து வழி செய்தார். அந்த இடமே துனுஷ்கோடி எனப்படும்.

வருணன் தன்னிடம் சரண் அடைந்த இடத்தை அனைவருக்கும் காட்டுகிறான் இராமன். பொதிகை மலை, திருமாலிருஞ்சோலைமலை, திருவேங்கடமலை ஆகிய இடங்களையும் புஷ்பக விமானத்திலிருந்து பார்க்கும்படி மற்ரவர்களுக்குக் காட்டுகிறார். சுக்ரீவனது நகரத்தைக் காட்டுகிறார். வானர மகளிரையும் நம்முடன் அழைத்துச் செல்லலாம் என்று சொல்லுகிறாள் சீதை. அவர்களும் அங்கு விமானத்தில் ஏறி மற்ரவர்களுடன் சேர்ந்து கொள்ளுகிறார்கள்.

வழியில் கோதாவரி நதியையும், சீதையைப் பிரிந்த இடத்தையும், தண்டகவனம், சித்ரகூட பர்வதம், பரத்துவாஜர் ஆசிரமம் இவற்றையெல்லாம் பார்க்கிறார்கள். பரத்வாஜ முனிவர் இருக்குமிடம் சென்று அவரை வணங்குகின்றனர். முனிவர் இராமனைத் தழுவிக் கொண்டு ஆசீர்வதிக்கிறார். எல்லோருக்கும் இராமனது பெருமையை எடுத்துரைக்கிறார். பரத்துவாஜர் இராமனிடம், உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்று சொல்லவும், இராமன் வானரங்கள் செல்லும் இடங்களெல்லாம் வளம் பெற்று செழிப்பாக இருக்கும்படியான வரத்தினைக் கேட்டுப் பெற்றான்.

இராமன் அனுமனை அழைத்து, நீ முன்னால் போய் நந்திகிராமம் சென்று பரதனிடம் நான் வரும் செய்தியை முன்னதாகச் சொல், இல்லையேல் அவன் நான் வாக்கு தவறிவிட்டதாக நினைத்து தீயில் இறங்கிவிடுவான் என்கிறான். அனுமனும் உடனே நந்திகிராமம் விரைகிறான்.

அங்கே, நந்தியம்பதியில் பரதன், இராமனை நினைத்துத் தவ வாழ்க்கை வாழ்கிறான். இராமன் என்று வருவான் என்று காத்திருக்க, சோதிடர்கள் இராமன் வரவேண்டிய நாள் இன்றுதான் என்கிறார்கள். குறித்த நாளில் இராமன் ஏன் வரவில்லை என்று பரதன் வருந்துகிறான். இராமன் வரானாயின், நான் தீப்புகுந்து உயிர் துறப்பேன் என்று சத்ருக்குனனை அழைத்து, தீயை மூட்டும்படி கேட்டுக் கொள்கிறான். சத்ருக்குனன் வருந்தி அண்ணனுக்கு ஆறுதல் கூறுகிறான். இந்த செய்தியறிந்து கோசலை, பரதனை தடுக்க முயல்கிறாள். பரதன் மறுத்து, சொன்ன வாக்குப்படி அண்ணன் இன்று வரானாயின் நான் தீப்புகுந்து இறப்பது உறுதி என்கிறான்.

தீ மூட்டப்படுகிறது. பரதன் தீயை வலம் வந்து, பூசனைகள் செய்து முடிக்கும் சமயத்தில், குன்று போல நெடும் மாருதி வந்து சேர்ந்தான்.

“ஐயன் வந்தனன், ஆரியன் வந்தனன்

மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்

உய்யுமோ அவன்? என்று உரைத்து உள்புகா

கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்”.

அனுமன் அங்கே பரதன் வளர்த்த தீயைத் தன் கையினால் அவித்தான். பரதனிடம் இராமனின் மோதிரத்தை அடையாளமாகக் காட்டிட, அதனைக் கண்டு பரதன் மகிழ்ச்சியடைகிறான். பரதன் அனுமனைப் பார்த்து, “நீ யார்?” என்கிறான். அனுமன் தன் வரலாற்றைக் கூறுகிறான். பரதனுக்குத் தன் விஸ்வரூபத்தைக் காட்ட அனைவரும் அதைக் கண்டு அச்சமடைந்தனர். அவன் தன் பெருவடிவைச் சுருக்கிக் கொண்டு அவர்களுடைய பயத்தைப் போக்கினான். அனுமனுக்கு பரதன் பல பரிசுகளைக் கொடுக்கிறான்.

இராமபிரான் திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அயோத்தி நகரை அழகு படுத்தி வையுங்கள் என்று மக்களுக்கு சத்ருக்குனன் மூலம் பரதன் சொல்லி அனுப்புகிறான். சத்ருக்குனன் சுமந்திரனிடம் சொல்ல, சுமந்திரன் வள்ளுவர்க்குச் சொல்லி முரசறைவிக்கிறான். முரசொலி கேட்ட நகர மாந்தர் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

அறுபதினாயிரம் அக்ரோணி சேனைகளும், மக்களும் மகிழ்வோடு அயோத்தி நோக்கிச் செல்கிறார்கள். தாய்மார் மூவரும் சிவிகையிலும் பரதன், அனுமன் கையைப் பிடித்துக் கொண்டும் செல்கிறான். பரதன் இராமனது பாதுகையைத் தன் தலைமீது தாங்கிக் கொண்டு செல்கிறான். காட்டில் இராமனுக்கு நேர்ந்தவற்றையெல்லாம், பரதன் அனுமனிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

இராமன் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கும் மார்க்கத்தில் பரத்துவாஜ முனிவரை சந்தித்து வணங்கி ஆசிபெற்று, தன் பயனத்தைத் தொடர்ந்து வரும் வழியில், கங்கைக் கரையில் வேட்டுவர் குல மன்னன் குகனைக் கண்டு அவனது நலனை விசாரிக்கிறான். பிறகு விமானம் அயோத்தியைச் சென்றடைகிறது. அனுமன் பரதனிடம் சொல்லுகிறான்:-

“அண்ணலே! காண்டியால் அலர்ந்த தாமரைக்

கண்ணனும், வானரக் கடலும், கற்புடைப்

பெண் அருங்கலமும், நின் பின்பு தோன்றிய

வண்ணவில் குமரனும், வருகின்றார்களை”

பதினான்கு வருஷங்களுக்கு முன்பு பிரிந்து போனவர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர். வசிஷ்டரை இராமன் வணங்குகிறான். பரதனை இராமன் தழுவிக்கொண்டு கண்ணீர் விடுகிறான். முதலில் நந்தியம்பதியை அடைந்து இராமன் தன் தவக்கோலத்தை நீக்கிக் கொண்டு, நீரில் மூழ்கிய பின் ஒப்பனைகள் செய்து, மக்கள் ஆரவாரம் செய்ய, அயோத்தி நகர் சென்றடைந்தான். சீதாதேவியும் வானரப் பெண்கள் புடைசூழ விமானத்தில் வந்து சேருகிறாள். அயோத்தி நகரமே ஆரவாரம் செய்து மகிழ்கிறது.

சுக்ரீவன் பரதனை நோக்கி, “முடிசூட்டு விழா ஏற்பாடுகள் ஏன் தாமதமாகிறது?” என்கிறான். அதற்கு பரதன் முடிசூட்டு விழாவிற்காக நாடு முழுவதிலிருந்தும் புனித தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது, அதனால் தாமதம் ஆகிறது என்கிறான். உடனே சுக்ரீவன் அனுமனை குறிப்பால் நோக்க, அவன் உடனே புறப்பட்டுப் போய் புனித தீர்த்தங்களைக் கொண்டு வர புறப்பட்டான்.

வசிஷ்டர் முடிசூட்டு விழாவிற்கு நாள் குறிக்க, யாவர்க்கும் செய்தி அனுப்பப்படுகிறது. முடிசூட்டு விழாவுக்காக மயன் ஓர் அருமையான மண்டபம் ஒன்றை அமைக்கிறான். அனுமனும் விரைவாக புனித தீர்த்தங்களுடன் வந்து சேருகிறான். பொற்குடங்களில் சரயு நதி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

“மாணிக்க பலகை தைத்து வயிரத்தின் கால்கள் சேர்த்தி

ஆணிப் பொன் சுற்றும் முற்றி, அழகுறச் சமைத்த பீடம்

ஏணுற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது

சேணுற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ!”.

அப்படி அந்த மாணிக்கப் பலகையில் வந்து உட்கார்ந்த இராமனுக்கும், சீதாபிராட்டிக்கும் புனித தீர்த்தங்களால் நீராட்டு முடிந்தபின், அரசவை கூடியிருக்க, அமைச்சர் பிரதானிகள் அரசர்கள் பொது மக்கள் விருந்தினர்கள் அனைவரும் காத்திருக்க, குறித்த முகூர்த்த நேரம் நெருங்கிய சமயம் ஸ்ரீ இராம பட்டாபிஷேகம் நடைபெற்றது.

“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி வீச

விரை செறி குழலி ஓங்க, வெண்ணையூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி.”

அரியணையை அனுமன் ஏன் தாங்க வேண்டும்? ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய ஆற்றல் பற்றி திருக்குறள் இறைமாட்சி அதிகாரத்தில் குறிப்பிடப்படும், அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடமை இத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற அனுமன், இராமபிரானுடைய “இராம ராஜ்ய” ஆட்சிக்கு அச்சாணியாக இருக்கப் போகிறான் என்பதையே, அனுமன் அரியணையைத் தாங்குவதின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

வாலி இறக்கும் தருவாயில் அங்கதனை இராமபிரான் கையில் ஒப்படைத்து விட்டு, இவன் இனி உன் அடைக்கலம் என்கிறான் அப்போது இராமன் தன் உடைவாளை அந்த அங்கதனிடம் கொடுக்கிறான்; இராமன் முடி சூட்டும்போதும், பரதனோடு அங்கதனையும் இளவரசாக ஏற்றுக் கொண்ட அறிகுறியே அவன் உடைவாளை தாங்கும் காட்சி.

இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் இருந்தபோது, நாட்டை இராமனின் பெயரால் “ராமராஜ்யமாக” நடத்தி வந்தவன் பரதன். இப்போது அந்த ராமராஜ்யத்தின் வெண்கொற்ற குடை தரப்போகும் நல்லாட்சியை பரதனைவிட வேறு யாரால் தர முடியும், ஆகையால் அவன் இராமனுக்கு வெண்கொற்ற குடை பிடிக்கிறான்.

இலக்குவனும், சத்ருக்குனனும், தன் அண்ணன்மார்களுக்குச் சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் கவரி வீசுகிறார்கள்.

திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் போன்ற உணவளிக்கும் வள்ளல் பரம்பரையினரின் கையால் எடுத்துக் கொடுத்த மணிமுடியை குலகுருவான வசிஷ்டர் இராமன் முடியில் வைத்து ஆசீர்வதிக்க, இராம பட்டாபிஷேகம் இனிதே நடக்கிறது.

“வாழி ஜானகி, வாழி இராகவன்

வாழி நான்மறை, வாழிய அந்தணர்,

வாழி மாமறை யென்றென்று வாழ்த்தினான்

வாழி தோறும் உயர்ந்துயர் கீர்த்தியான்”

-சுபம்-

கம்பர் பெருமான்

(கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் இயற்றிய “இராம காதை” நிறைவு பெற்றது)

உரைநடை வடிவம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,

ஆசிரியர் பற்றி

தஞ்சை வெ.கோபாலன்

privarsh@gmail.com

வலைத்தளம் : http://kambaramayanam-thanjavooraan.blogspot.com

38 ஆண்டுகளாய் பொதுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகாகவி பாரதி பற்றி பயிலரங்குகள் நடத்தி வருகிறார்.

பாரதி பயிலகம், இலக்கிய பயிலகம் நடத்துகிறார். தமிழ் நாடு சுதந்திரப் போர் தியாகிகள் பற்றி எழுதுகிறார்.

—-

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III