Valaiyil viḻunta vaṇṇaṅkaḷ cila - I
பொது அறிவு
Backவலையில் விழுந்த வண்ணங்கள் சில - I
ஶ்ரீதர் நாராயணன்
Contents
அறிமுகம்
சினிமா
1. நீரும், நெருப்பும், நிலமும் மற்றும் சில பெண்களும்
2. செத்த மொழி பேசும் இரு சித்திரங்கள்
3. பியானோ கலைஞன்
4. சுவாசம்
5. கணிதக் கூடத்தின் ஆவி
6. அதிசய அந்நிய உலகம்
7. ராவணனும் ஜீவனும்
8. சுரையா
9. அமைதியான நதி
10. ஆறு கதைகள்
டோஸ்ட்மாஸ்டர்ஸ்
11. மாஸ்டர்
12. பேச்சோடு பேச்சாக
13. கேளிக்கைப் பேச்சு
14. அஞ்சு கதைகளை அஞ்சு மாசத்துல அஞ்சு அஞ்சு நிமிஷமா...
15. பேச்சும் அதன் மதிப்பும்
அமெரிக்காவின் குறுக்கே
16. மேற்கிலிருந்து கிழக்கே - 1
17. மேற்கிலிருந்து கிழக்கே - 2
18. மேற்கிலிருந்து கிழக்கே - 3
19. மேற்கிலிருந்து கிழக்கே - 4
அனுபவங்கள்
20. கலையும் கற்று மற
21. கடவுள்களின் கார்னிவெல்
22. படித்த படிப்பு
23. சுற்றிச் சுழலும் சதுரங்கள் - Rubix cube
24. அறிவியல் திருவிழா!
25. ஒரு கோப்பை காப்பி
26. வேனலை வழியனுப்புதல்
கணிதமும், கிரிக்கெட்டும், கடவுளும் இன்ன பிறவும்
27. தையல் சொல் கேளேல்
28. இந்த இடம் போதாது
29. லாஜிக் உலகின் மேஜிக் நாயகன்
30. கடவுள் மனிதர்கள்
31. சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்
32. WC 2011: எவ்வளவோ பாத்துட்டோம். இதைப் பாக்க மாட்டோமா?
அறிமுகம்
இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரும்பாலும் கடந்த ஆறு வருடங்களாக இணையத்தில் நான் பதிந்து வந்தவை. புத்தகங்கள் மற்றும் புனைவுகளுக்குள் திணித்துக்கொண்டு வாசிப்பதை மட்டும் முக்கிய பொழுதுபோக்காக கொண்டிருப்பவன். புனைவுகள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது போன்ற பொழுது போக்குகளை அதிதீவிரமாகச் செய்பவன் என்றாலும் அவ்வப்போது விடாமல் ஏதாவது எழுதி வைத்திருக்கிறேன். இணையத்தில் பலரும் செய்வது போலவே நேர விரயம், வம்பு பேச்சுகளில் ஆர்வம் காட்டினாலும் அதையும் தாண்டி கொஞ்சமாவது எனது வாசிப்பை கூர்மையாக்கி கொள்ள முடிந்திருப்பதில் இணையத்திற்கும் பங்கிருக்கிறது.
தினம் “ஒரு பக்கம்’ எழுதவேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கிய என்னுடைய இணையதளத்தில் அவ்வப்போது (சோம்பேறித்தனமாம்) பதிந்த சில பக்கங்களை தொகுத்துதான் இந்த ‘வலையில் விழுந்த வண்ணங்கள் சில’ உருவாகியிருக்கிறது.
பெரும்பாலும் இணையத்தில் எழுதுபவை அந்த தளத்தினோடேயே முடங்கிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஏதாவது புத்தகத்திருவிழா நடக்கும்போது ஏற்படும் ‘திடீர்’ peer pressureல் வாசகர்கள் வீறுகொண்டு எழுந்து போய் அச்சு புத்தகங்கள் வாங்கும் வைபவத்தால் சில எழுத்துகளுக்கு பதிப்பகங்கள் வாயிலாக விமோசனம் கிடைக்கலாம்.
இந்த சங்கிலிக்கு மாற்றாக, தமிழிணையத்தில் ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருக்கும் நண்பர்கள் குழுவிற்கு நன்றியுடன் இந்த தொகுப்பின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்
இணையம் அளிக்கும் சாதகங்களில் இம்மாதிரியான புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதும் முக்கியமாகிறது.
தொடர்ந்து தொய்வில்லாமல் பணியாற்றுங்கள்.
உங்களன்பன்
ஶ்ரீதர் நாராயணன்
மின்னஞ்சல்: orupakkam@gmail.com
அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com
அட்டைப்பட மூலம் - http://hdw.datawallpaper.com/abstract/color-twist-desktop-background-336073.jpg
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com
1
சினிமா
1
நீரும், நெருப்பும், நிலமும் மற்றும் சில பெண்களும்
குறிப்பு: ‘வார்த்தை’ இதழிற்காக திரைப்பட தொடர் ஒன்றிற்காக எழுதியது. இங்கேயும் பதிவு செய்கிறேன்.
ராதா, சீதா, சாந்தா, பப்பு, சூயியா, மதுமதி, கல்யாணி, சகுந்தலா என்று எத்தனை பெண்களை இந்த நெருப்பும், நிலமும், நீரும் சீரழித்திருக்கின்றன என்பதுதான் தீபா மேத்தாவின் திரைப்படங்கள் சொல்லும் செய்தி. இந்தியாவில் பிறந்து கனடாவில் குடியேறிய தீபா மேத்தாவின் மூன்று திரைப்படங்களான Fire, Earth மற்றும் Water முன்வைக்கும் பார்வைகள் பல்வேறு பரிமானங்களில், பல்வேறு காலகட்டங்களில் பாரதப் பெண்களை, அவர்கள் அனுபவித்த கொடுமைகளை, அடக்குமுறைகளை சித்தரிக்கின்றன. தேர்ந்த படைப்பாளிகள் அடுத்தடுத்த படைப்புகளில் வெவ்வேறு திசைகளில் நகர்கிறார்கள். குறைந்தபட்சம் மூன்று படைப்புகளில் அந்த படைப்பாளிகளின் பயணம் நம்மிடையே ஒரு முப்பரிமாண காட்சியை உண்டாக்குகிறது.
1996ல் Fire திரைப்படம் வெளிவந்தபோது மீடியாவே தீப்பிடித்துக் கொண்டது போல் பரபரப்பு. அதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஓரினச் சேர்க்கை காட்சிகள். அதுவும் ராதா மற்றும் சீதா என்ற இரு பெண்களிடையே ஏற்படும் உறவைப் பற்றிய கதை. அதுவும் ஒரு மதத்துக்கு நெருக்கமான காப்பிய, தொன்ம பெயர்கள் கொண்ட பெண்களின் பெயர்கள். 1998ல் Earth திரைப்படம் வெளிவந்தது. பாப்ஸி ஸித்வா (Bapsi Sidwa) எழுதிய Cracking India என்ற நாவலின் அடிப்படையில் அமைந்த பொலிடிக்கலி சரியான படமாக இருந்தாலும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. தொடர்ந்து மேத்தாவின் மூன்றாவது படமான Water தயாரிப்பில் இருக்கும்போதே கலாச்சார காவலர்களின் கலவரங்கள் கரைபுரண்டு பொங்கி எழுந்துவிட்டது. திட்டமிட்டப்படி படத்தை காசியில் எடுக்க முடியாமல் வெகு காலம் கழித்து கனடாவில் எடுத்து 2005ல்தான் வெளியிட்டார். இந்த எளித மூன்றியல் (Element Trilogy) வரிசையில் சிறப்பான படமாக இருந்ததும் Water தான்.
இந்த திரைப்படங்களில் தீபா மேத்தா இந்திய சமூகத்தின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை கச்சிதமாக காட்சியபடுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அடிச்சரடாக பெண்கள் மேல் தொடுக்கப்படும் அநீதிகள் பல்வேறு கோணங்களில் முன்வைக்கப்படுகிறது.
காதல், கல்யாணம், கைம்மை
எப்படிப்பட்ட பெண்கள் இவர்கள்? சாந்தா மிகவும் சுதந்திரமானவள். செல்வாக்கான, பணக்கார பார்ஸிகளின் வீட்டில் வேலை செய்யும் அவள் அக்கம்பக்கம் வேலை செய்யும் பல இளைஞர்களுடன் சகஜமாக பழகுகிறாள். அவளைச் சுற்றி பல ஆண்கள் – சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் அவள் அழகால் கவரப்பட்டு அவள் மேல் பிரியமாக இருக்கிறார்கள். தில் நவாஸ் அவளுடன் நெருங்கி பழகுகிறான். திருமணம் செய்து கொள் என்று வெளிப்படையாகக் கேட்கிறான். ஆனால் அவள் மனமோ ஹாசன்பாற் கனிந்து விடுகிறது. ஹாசனும் சாந்தாவும் காதலில் உருகி கரைந்து முயங்கும்போது தில் நவாஸ் பார்த்துவிட அவளுடைய காதல் வாழ்க்கை நிர்மூலமாகி விடுகிறது. நட்பில் தொடங்கி காதலில் கனிந்து திருமணத்திற்கு முன்னரே முடிந்து விடுகிறது 1948 Earth திரைப்படம்.
சீதாவிற்கு திருமணம் ஆகி தேனிலவிற்கு கணவனோடு தாஜ்மகால் வருகிறாள். கணவனோ தனது பழைய காதலியின் நினைவில் மனைவியிடம் மனதளவில் நெருங்காமல் விலகியே இருக்கிறான். சீதாவின் கணவனின் அண்ணி ராதாவிற்கும் அதே நிலை. ராதாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லையென்பதால் அவள் கணவன் தனது ஆன்மிக குருவின் வழிகாட்டுதலால் தீவிர பிரம்மசாரியாகி விடுகிறான். அந்த முடிவை ராதாவும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ராதாவும் சீதாவும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பற்றிக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தொடங்கும் கதை அந்த திருமணம் சிதைந்து இருமணம் ஒன்றாவதோடு முடிகிறது Fire திரைப்படம்.
எட்டு வயது சூயியாவின் கணவன் நோயில் இறந்துவிட தலை மழிக்கப்பட்டு கைம்பெண்ணாக மதுமிதாவின் விதவை இல்லத்திற்கு கொண்டு வரப்படுகிறாள். வாழ லாயகில்லாத பெண்களாக ஒதுக்கப்பட்டவர்களின் கதையாக துவங்கி சகுந்தலை சூயியாவோடு வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிச் செல்லும் பயணத்தோடு நிறைவடைகிறது Water திரைப்படம்.
விரகம், வேகம், வீழ்ச்சி
இந்தக் கதைகள் வெளிப்படுத்தும் உணர்சிகளும் மூன்று தளங்களில் இருக்கிறது. கணவனால் ஒதுக்கப்பட்ட ராதாவின் விரகதாபம் நெருப்பாக உருவகப்படுத்தப் படுகிறது. சீதாவின் முதலிரவில் காதலில்லாமல் கணவன் செய்த கலவியினால் அன்பிற்கு பதிலாக அதிர்ச்சியே ஏற்படுகிறது. சீதாவும் ராதாவும் ஒருவருக்கொருவர் அணைத்துக் கொள்ள அந்த விரகமும் அணைகிறது.
சூயியாவின் அறிமுகமே ஒரு நதியின் துள்ளலுடந்தான் ஆரம்பிக்கிறது. போகப் போக கரைபுரண்டு ஓடும் காட்டாறு போல் விதவைகள் விடுதியின் தலைவி மதுமதியையே எதிர்த்துப் போராடுகிறாள். கல்யாணியோடு உற்சாகமாக வலம் வருகிறாள். இறுதியில் சகுந்தலையோடு சங்கமித்து மகாத்மா காந்தியைத் தேடி பயணிக்கின்றாள். இன்னொரு விதவை கல்யாணியோ பல இரவுகள் விருப்பமில்லாமல் கங்கையை கடந்து அக்கரைக்கு சென்று திரும்புகிறாள். ஆனால் ஓரிரவு அவள் விருப்பப்பட்டு கடக்க விழையும்போது அவளால் முடியவில்லை.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பிளவுப்படும் நிலத்தினிடையே சிக்குண்டு சிதைந்து போன எண்ணற்றவர்களில் சாந்தாவும் ஒருத்தி. பொறுமைக்கும், பெண்மைக்கும் உருவகமாக சொல்லப்படும் பூமி தன் மேல் இரு நாடுகள் செலுத்தும் அதிகாரத்தை தாங்காமல் பிளவுபடுவது போல தில் நவாஸிற்கும், ஹாசனுக்குமிடையே சாந்தா சிக்கி சிதறிப் போகிறாள். லேனியின் சிறுவயது கதாநாயகனே ஐஸ்வண்டிக்கார தில் நவாஸ்தான். அவனை நம்பி சாந்தா தனது வீட்டினுள் மறைந்து இருப்பதை லேனி சொல்கிறாள். சொன்னபிறகுதான் தில் நவாஸின் நயவஞ்சகம் புரிகிறது நாம் நம்பியவர் துரோகம் செய்யும்போது பூமி இரண்டாக பிளந்து நம்மை விழுங்கிவிடக்கூடாதா என்று தோன்றுமே… ஆனால் லேனிக்கு பதில் அந்த பூமி சாந்தாவை விழுங்கிவிட்டது.
பிரிட்டிஷ் ஆட்சி, பிரிவினை, பிந்தைய இந்தியா
அடுத்த சரடாக இந்தியாவின் வரலாறு இம்மூன்று திரைப்படங்களிலும் பின்னணியில் காட்டப்படுகிறது. Water திரைப்படத்தில் பிரிட்டிஷ் அரசாங்கமும், அவற்றுக்கு எதிராக காந்தியின் விடுதலை புரட்சியும் காட்டப்படுகிறது. மதுமதியும் அவளது அல்லக்கை குலாபியும் மகாத்மா காந்தி விதவைத் திருமணத்தைப் ஆதரித்துப் பேசுவதை காழ்ப்புடன் விமர்சிக்கிறார்கள். இறுதியில் சீரழிக்கப்பட்ட சூயியாவை தூக்கிக் கொண்டு நிராதராவாக நிற்கும் சகுந்தலைக்கு காந்தியே கலங்கரை விளக்கமாக தெரிகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு வரும் இந்தியப் பிரிவினை பின்னணிதான் Earth திரைப்படம். இந்துக்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், இஸ்லாமியர்கள் என்று கலந்திருக்கும் சமுதாயம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் அதிர்ச்சிகுட்பட்டு மாறுகிறது. சீக்கியர்கள் அமிர்தசரஸுக்கு புலம் பெயர்கிறார்கள். செல்வந்தர்களான பார்ஸிக்கள் வெறும் Bum Lickers ஆக இருக்கும் நிலையும், பிழைப்பிற்காக இந்துக்கள் மதம் மாறுவதையும் காட்டுகிறது. ஹாசன் சாந்தாவின் மேலுள்ள காதலினால் இந்துவாக மதம் மாற முடிவெடுக்கிறான். இஸ்லாமியரால் கொல்லப்படுகிறான். தில் நவாஸின் சகோதரிகளோ இந்து தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள். தன் காதலை நிராகரித்த சாந்தாவை இறுதியில் பழி தீர்த்துக் கொள்கிறான்.
சுதந்திர இந்தியாவில் நடைபெறும் கதையாக Fire. இந்தக் காலகட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வியாபாரங்களில் ஈடுபடுகிறார்கள். கணவன் அடித்தால் திருப்பி அடிக்கும் அளவிற்கு தன்மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆண்களை சார்ந்தில்லாமல் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக தெரிகிறார்கள். ஆனாலும் ராதாவினால் பாரம்பர்ய குடும்ப சூழலை விட்டு சட்டென்று வெளியேற முடியவில்லை.
இராமாயண சீதை
Fire படத்தின் நாயகி மட்டுமல்ல… இம்மூன்று படங்களுக்கும் நாயகியாக இராமாயண சீதை இருக்கிறாள். இராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதை அசோகவனத்தில் உயிரோடு சிறை வைக்கப் படுகிறாள். ஆனால் இராவணனை வென்ற இராமனோ சீதையை மீட்ட பிறகு அவளைத் தீக்குள் இறங்கச் செய்கிறான். கணவன் இல்லாமல் பெண்கள் தனியே உயிர் வாழ்தல் புனிதத்தன்மையற்ற செயல் அல்லவா. Fire படத்திலும் இராதா தன்மேல் வைக்கப்பட்ட நெருப்பை கடந்துதான் சீதாவோடு ஒன்று சேர முடிகிறது.
ஒரு வண்ணானின் பேச்சினால் மீண்டும் சஞ்சலமுறுகிற இராமன் சீதையை காட்டில் கொண்டு விடச் செய்கிறான். சகுந்தலா, மதுமதி, சூயியா, கல்யாணி எல்லாரும் வாழத் தகுதியற்றவர்களாக அப்படி தனித்து விடப்பட்ட பெண்கள்தான். கைம்பெண்கள் களர்நிலம் என்று கைவிடப்பட்டவர்கள்தானே. இறுதியாக இராமனை அடையும் சீதா மீண்டும் புனிதத்தன்மையை நிரூபிக்க வேண்டி பூமி பிளந்து மறைந்து போகிறாள். இந்திய பூமி பிரிக்கப்பட்டபோது சாந்தாவும் அலைக்கழிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு அந்தப் பிளவினூடே மறைந்து போகிறாள்.
சீதாக்களின் பார்வையில் சொல்லப்பட்ட இந்த சித்திரங்களை எந்தவித சமரசமும் இல்லாமல் அழகுணர்ச்சியோடு பதிவு செய்திருப்பதுதான் தீபா மேத்தாவின் வெற்றி.
2
செத்த மொழி பேசும் இரு சித்திரங்கள்
குறிப்பு:- கடந்த வருடம் ‘வார்த்தை’ இதழில் வெளியான இந்தக் கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களில் பேசப்படும் மொழி அதன் இலக்கு நேயர் (target audience) வட்டத்தை தீர்மானிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. நீளமான, நாக்கு தள்ளும் செவ்வியல் வசனங்களுக்காகவே நாடகங்களும், திரைப்படங்களும் வெற்றி பெற்ற காலம் மலையேறிப் போய் யதார்த்த சினிமாக்கள் கோலோச்சும் காலத்தில் ’இறந்த’ மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணுகின்றன. நமது தாய்மொழியல்லாத பிறமொழி படங்கள் என்றால் பெரும்பாலும் உதவி-வசன எழுத்துகள் (sub-titles) தேவைப்படுகின்றன. அதுவும் அராமைக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் கொஞ்சம் ’கிர்’ரடிக்கத்தான் செய்யும்.
கணபதி வெங்கட்ராம ஐயர் – சுருக்கமாக ஜிவி ஐயர். இவர் இயக்கத்தில் 1983-ல் ஆதி சங்கராச்சாரியாரின் வாழ்க்கையை திரைப்படமாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (NFDC) தயாரித்தது. ஆதி சங்கரர் வேத மரபை மீட்டெடுத்து நிறுவுவதை விவரிக்கும் இப்படத்தில் முழுவதும் சமஸ்கிருதத்திலேயே பேசுகிறார்கள்.
மெல் காம்-சிலி ஜெரார்டு கிப்ஸன் (Mel Com-Cille Gerard Gibson) 2004ல் எடுத்த ’கிறிஸ்துவின் துன்பம்’ (‘The Passion of the Christ’ ) திரைப்படம் பேசுவது செமிட்டிக் மொழியான அராமைக் (Aramaic) – வடமேற்கு பகுதி செமிட்டிக் மொழிக்குழுமத்தில் ஒரு மொழி. ஆங்காங்கே ரோமானிய கதாபாத்திரங்கள் இலத்தீன் மொழியையும் பேசுகிறார்கள்.
இந்த இரு திரைப்படங்களும் மதத் தலைவர்களை, போதகர்களை தனது பேசுபொருளாக கொண்டிருந்தாலும் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் தெரிகிறது. பேசுமொழி மட்டுமில்லாமல், திரைக்கதை அமைப்பு, அழகியல், குறியீட்டு காட்சிகள், மிகையில்லாத தேர்ந்த நடிப்பு, கச்சிதமான பின்னணி இசை என்று பலவகையில் இரு திரைப்படங்களும் வெவ்வேறு திசையில் உச்சத்தை தொடுகின்றன.
முதன்முதலாக பேச்சுவழக்கில் இல்லாத மொழியில் படம் எடுத்தவர் ஜீவி ஐயராகத்தான் இருக்கும். அவருமே இரண்டு பாத்திரங்களில் திரையில் தோன்றுகிறார். காளிதாசர் போன்ற சமஸ்கிருத கவிகள் செவ்வியல் மொழியில் இலக்கியங்கள் புனையும்போது, அதில் உள்ள சாதாரண பாத்திரங்கள் பேச்சு வழக்கு மொழியான பிராகிருதத்திலே உரையாடுவார்கள். அதை உத்தியை ஐயரும் செய்கிறார். இளநீர் திருடுபவர் மலையாளம் பேசுகிறார். வைசூரி வந்தவனை காட்டில் விட்டுவிட்டு குளத்தில் முங்கி குளித்துவிட்டு செல்லும் வழிபோக்கர்கள் ‘தாய் மூகாம்பிகையே சரணம்’ என்று தமிழில் பேசுகிறார்கள். சங்கரர் வடக்கு நோக்கி பயணிக்கும்போது ஆங்காங்கே பின்னணியில் இந்தியில், மராட்டியில் பாராட்டுகிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேர இளவல் இளங்கோ தீந்தமிழில் சிலப்பதிகாரம் இயற்றிருக்கும்போது ஏழாம் நூற்றாண்டில் சேர நாட்டில் சமஸ்கிருதம் புழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. மலையாளமும் முழுவதுமாக உருவாகியிருந்திருக்காது. சங்கரர் சமஸ்கிருதத்தில் நூல்கள் பல இயற்றியிருந்தாலும் கேரளத் தமிழில்தான் உரையாடியிருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஐயர் வேதாந்த வியாக்கியானங்களுக்கு சமஸ்கிருதம் ஏற்றது என்ற முடிவில் அந்த மொழியை தேர்வு செய்திருக்கிறார்.
மெல்கிப்ஸனின் ‘இயேசுவின் துன்பம்’ இயேசு கிறிஸ்துவின் சீடர்களான மார்க்கு, லூக்கா மற்றும் மத்தேயு இயற்றிய Synoptic Gospels என்றுச் சொல்லப்படும் ஒத்த சுவிஷேஷங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு வாழ்ந்த காலத்தில் செவ்வியல் மொழியாக கிரேக்கமும், ஹீப்ருவும் இருந்திருக்க ஏசுவும் அவரது சீடர்களும் அராமைக்கில் பேசியிருக்கிறார்கள் என்பதால் அந்த மொழியிலேயே படத்தை எடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு ஹீப்ருவை நவீனப்படுத்தி யூதர்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இயேசு என்று நமக்கு அறியப்பட்ட யேஷ்வா நசரேயனை கைது செய்ததிலிருந்து, அவருடைய வழக்கை விசாரித்து, அவரை சித்திரவதை செய்து, பின்னர் சிலுவையில் அறைந்து கொல்ல, அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழும் வரை உள்ள சம்பவங்களே இயேசுவின் துன்பமாக (Passion) கிறிஸ்துவ வழக்கில் சொல்லபடுகிறது. இயேசுவின் சீடர்களின் இறைசெய்திகளின் வழியாக இந்த துன்பச் சம்பவ தொகுப்பை அந்த காலகட்டத்தின் பேசுமொழியான அராமைக் மொழியில் உருவாக்கித் தரும்போது நாமே அந்தச் சூழலில் பயணிக்கிற உணர்வு ஏற்படுகிறது.
மெல்கிப்ஸன் தனது திரைப்படத்தின் வரையறையை தீர்மானமாக வைத்துக் கொள்கிறார். இயேசு ஆலிவ்ஸ் மலையடிவாரத்தில் கெத்செமனித் தோட்டத்தில் இறைவனைப் பிரார்த்தனை செய்வதிலிருந்து அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறக்கும் வரையிலான 12 மணிநேரத் துன்பம்தான் திரைப்படம். இயேசுவின் உயிர்த்தெழுதல் இறுதியில் ஒரு காட்சியாக வருகிறது.
போன்ஷியஸ் பைலட்டின் நீதி விசாரணை காட்சிகள் மிகவும் அருமையாக சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. யூத குருமார்கள் கோபாவேசமாக இயேசுவின் மேல் குற்றஞ்சாட்ட கூட இருக்கும் கூட்டம் இயேசுவிற்கு எதிராக ஆர்பரிக்கிறது. முதலில் சித்திரவதை தண்டனை மட்டும் விதிக்கும் பைலட் பிறகு குருமார்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி சிலுவையில் அறைய உத்தரவிட்டு கைகழுவி விடுகிறார். மொத்தம் பதினாலு நிலைகள் கொண்ட இயேசுவின் இறுதி பிரயாணத்தை துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்கள். ஐந்தாம் நிலையில் சைரீனில் இருந்து வந்த சைமன் என்கிற யூதர் இயேசுவிற்கு உதவியாக சிலுவையை சுமக்கிறார். ஆறாம் நிலையில் வெரோனிகா தனது முகத்துணியை இயேசு முகம் துடைக்கத் தருகிறார். இப்படி அந்த பண்ணிரெண்டு மணி நேரத்தில் நடந்ததாக இறைசெய்தியில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நுண்ணிய அழகியலோடு திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஜீவி ஐயரோ ஆதிசங்கரரின் முழு வாழ்க்கையையும் விவரிக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தியிரெண்டு ஆண்டுகள். தெற்கு பாரதத்தில் சேர நாட்டின் காலடி என்னும் ஊரில் கிபி 7-ம் நூற்றாண்டு பிறந்த சங்கரர் முப்பத்தியிரண்டு ஆண்டுகள் பாரதத்தின் பல இடங்களுக்கு பயணித்து இந்து சனாதன தர்மத்தை நிலைநிறுத்த பாடுபடுகிறார். தனக்குப் பின்னர் அத்வைத கொள்கையை தொடர்ந்து பரப்ப தனது சீடர்களின் தலைமையில் நான்கு திக்குகளிலும் மடம் நிறுவி பெரிய பாரம்பர்யத்தை தொடங்கி வைக்கின்றார். வைதீக மதம் நலிவுற்று பௌத்தமும், சமணமும் வலிமையுடன் இருந்த காலத்தில் உத்வேகத்துடன் சங்கரர் அத்வைதம் போதிக்கிறார்.
புனிதர்களின் சரித்திரம் எப்பொழுதும் பல அற்புதங்கள் உள்ளடக்கி படிப்பவர்களுக்கு ஒரு மாயத்தோற்றம் தரவல்லது. பல்வேறு தொன்மக் கதைகள் ஆங்காங்கே உருவாகி புனிதர்களின் பெயர்களை உள்வாங்கி பின்னர் ஒன்றாக இணைந்து ஒரு வரலாறாக மாறி நிற்கும். இன்று மிகவும் பிரபலமான சங்கர மடமாக வழங்கப்படும் காஞ்சி மடம் ஆதி சங்கரர் நிறுவியதாகச் சொல்லப்படும் நான்கு மடங்களில் இல்லை. காஞ்சி மட கணக்குப்படி சங்கரர் காலம் கிறிஸ்துவிற்கு முன்னதாக சென்றுவிடுகிறது. அது போல மண்டல மிஸ்ரரின் மனைவி உபயபாரதி சங்கரரை இல்லற சாஸ்திரத்தைப் பற்றி வாதிட அழைத்ததும் சங்கரர் ஒரு அரசன் உடலில் பரகாய பிரவேசம் செய்து ’மேற்படி’ சங்கதியெல்லாம் கற்றுக் கொண்டு வந்து வெற்றி பெற்றார் என்று ஒரு தொன்மக் கதை உண்டு. இப்படியாக பல தொன்மக் கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வரலாறாக மாறிவிடுகிறது. ஜீவி ஐயர் மிகக் கவனமாக இவ்வகை திசைதிருப்பல்கள் இல்லாமல் நேர்க்கோட்டிலேயே ஆதி சங்கரரின் திரைக்கதையை அமைத்திருக்கிறார். காலடியில் உஞ்சவிருத்தி செய்துவரும் சங்கரன் நம்பூதிரிக்கு அவன் ஆசான் மூலம் சந்நியாசம் பற்றிய ஆவல் ஏற்படுகிறது. வைதீக மதம் நசிந்து வருகிறது என்று கவலையுடன் சொல்லப்படுகின்றது. கோவிந்த பகவத்பாதர் பெயர் அறிமுகம் கிடைக்கிறது. தொடர்ந்து நர்மதைக் கரையில் கோவிந்த பகவத்பாதரை சந்தித்து சீடராகிறார். அங்கே வியாசர் எழுதிய பிரம்மசூத்திரம் சிதிலமடைந்து இருக்கிறதைப் பார்க்கிறார். அதற்கு உரையெழுதுகிறார். அதைக் கொண்டு போய் பிரயாகையில் குமரில பட்டரிடம் காண்பித்து கருத்துக் கேட்கிறார். இப்படி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த சரித்திர சம்பவங்களை படம் பார்க்கும் நேயர்கள் தடுமாறாதவாறு திறம்பட தொகுத்தளிக்கிறார் ஐயர். சங்கரர் பாரதம் முழுவதும் பிரயாணம் செய்யும்போது காஞ்சியில் ஒரு சிறுவனுக்கு சந்நியாச தீட்சை கொடுப்பது போல் ஒரு காட்சி வைத்து காஞ்சி மடம் நிறுவப்பட்டது யாரால் என்ற சர்ச்சையை சற்றே சமாளிக்கிறார். மண்டல மிஸ்ரரின் மனைவி உபயபாரதி ’என் கணவரை மட்டும் வென்றால் போதாது. என்னையும் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லும்போது சங்கரர் அவரைத் தனது தாய் ஆர்யாம்பாளாக உருவகித்துப் பார்ப்பது போல் காட்சி அமைக்கிறார். ‘அனுபவம் அறிவைவிட சிறந்தது தாயே’ என்று சொல்லி உபயபாரதியையும் தனது சீட கோஷ்டியில் இணைத்துக் கொண்டுவிடுகிறார்.
திரைப்படங்களில் அழகியல் என்பதை இயக்குநர்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. திரைப்பட நேயர்களிடையே அது எவ்வளவு அழுத்தமான பாதிப்பு தரவல்லது என்பதும் முக்கியம். மெல்கிப்ஸனை பொறுத்தவரை இயேசுவின் துன்பத்தையே அழகியலாக முன்னிறுத்துகிறார். அதைத் துல்லியமாக பதிவு செய்வதில் முழு வெற்றி பெறுகிறார். இயேசுவை சித்ரவதை செய்யும் காட்சிகளை இவ்வளவு தீவிரமாக திரைப்படங்களில் சித்தரித்து பார்த்ததில்லை. மாமிச மலைகள் போன்ற இரு ரோமானிய வீரர்கள் இயேசுவை கம்பை வைத்து கைவலிக்கும்வரை அடிக்கிறார்கள். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு அடுத்த கோட்டாவாக முட்கள் பதித்த சாட்டையை எடுத்து அவரை விளாசுகிறார்கள். அந்த முட்கள் அவர் உடலில் பதிந்து சாட்டை சிக்கிக் கொள்ள, அப்படியே சுண்டியிழுக்கிறார்கள். தசையை பிய்த்துக் கொண்டு இரத்தம் பீரிடுகிறது. அடித்து துவைத்து இரத்தம் ஆறாக ஓடியிருக்க இயேசு குப்புற விழுந்து கிடக்கிறார். சித்திரவதைக் கூடத் தலைவன் அடிப்பவர்களை நிறுத்தச் சொல்லிவிட்டு எழுந்து நிற்கிறான். குப்புற கிடப்பவரை நிமிர்த்தி படுக்க வைத்து தொடர்ந்து அடிக்குமாறு சைகையில் கட்டளையிட்டுவிட்டு அமர்கிறான். சித்திரவதை தொடர்கிறது. பார்ப்பவரின் முதுகு தண்டை சில்லிட வைக்கும் சம்பவங்கள். தேவகுமாரன் என்றும், யூதர்களின் அரசன் என்றும், மெஸ்ஸையா என்றும் பிரகடனப்படுத்திக் கொண்ட இயேசு எந்த அற்புதங்களும் செய்யாமல் அந்த பண்ணிரெண்டு மனி நேர துன்பத்தை உலக மக்களுக்காக தாங்கிக் கொள்கிறார் என்ற நம்பிக்கையை ஆழமாக படம் பார்ப்பவர்களிடம் கொண்டு செல்கிறது. இந்த துன்பியல் நிகழ்வுகளிடையே ஆங்காங்கே இயேசுவின் இனிமையான, அன்பான வாழ்க்கையின் சில சம்பவங்களை காட்டுவதால் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ள முடிகிறது. இயேசு அன்னை மரியமுடன் கலகலப்பாக பேசுகிறார். தண்ணீர் தெளித்து விளையாடுகிறார். சீடர்களுக்கு போதிக்கிறார். இறுதி விருந்து கொடுக்கிறார். இந்த உணர்ச்சி கலவை படத்தின் மிகப் பெரிய பலம்.
ஜீவி ஐயரின் படைப்பில் உணர்ச்சிக் குவியலான காட்சிகள் அதிகம் இல்லை. சங்கரரின் தந்தை சிவகுரு தான் மரணிக்கப் போகிறோம் என்று தெரிந்ததும் சிறுவனான சங்கரனுக்கு அதைக் குறிப்பால் உணர்த்திவிட்டு கால்நீட்டிப் படுத்தவாறே உயிர் விட்டுவிடுகிறார். சங்கரரின் தாயின் மரணமோ இன்னமும் சுருக்கமாக நடந்து சந்நியாசி ஈமகிரியை செய்யலாமா என்ற பிரச்சினையில் முடிகிறது. ஓரிடத்தில் சங்கரர் உறங்கும் சீடர்களை கண்டு உள்ளம் நெகிழ்கிறார். சந்நியாசியான சங்கரர் தனது சீடரான ஹஸ்தமலகரை உச்சி முகர்ந்து முத்தமிடும் காட்சியில் ஐயர் மின்னல் தீற்றலாக கவிதை ஒன்றைத் தீட்டுகிறார்.
இயேசு சிலுவையை தூக்கிக் கொண்டு பயணப்படும்போது தடுக்கி விழுகிறார். அவர் தாய் மேரிக்கு சிறுவயது பாலகனாக இயேசு கீழே விழுந்தது நினைவிற்கு வருகிறது. ஓடிச் சென்று தூக்க வேண்டும் என்ற பதைபதைப்போடுச் வருகிறாள். குழந்தை இயேசுவை அள்ளி அணைத்து தூக்கி நிற்கும் அன்னை மரியமைப் பார்க்கிறோம். அந்த பிம்பம்தான் இன்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில் காணும் அன்னை மரியம். தனது குழந்தையிடம் தாய் சொல்லும் நம்பிக்கையாக ‘நான் இருக்கிறேன்’. அதையே இயேசு உலக மக்களுக்கு செய்தியாகச் சொல்கிறார். இயேசுவின் ’எதிரிக்கும் அன்புசெய்’ போதனைகளை ஆங்காங்கே செருகியிருந்தாலும், மெல்கிப்சனின் படம் கிறித்துவ போதனைகளுக்கானப் படம் அல்ல.
மாறாக ஐயரின் திரைப்படத்திலோ இந்திய தத்துவ வரலாற்றை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் சண்டோக உபநிஷத்திற்கு அருமையான விவரணப் படம் அமைத்திருக்கிறார். குழந்தை பிரசவிக்கப்படும் காட்சியை முத்தாய்ப்பாக வைத்து உச்சத்தை தொட்டிருக்கிறார். பூர்வ மீமாம்சம் அதன் நீட்சியாக பிரும்ம சூத்திரம் எனப்படும் உத்தர மீமாசம் போன்றவற்றை பின்புலமாக வைத்துக் கொண்டு சங்கரரின் ஆளுமையை நன்றாகவே திரையில் தீட்டிவிடுகிறார். கனகதாரா தோத்திரம், பஜகோவிந்தம், நசிகேத புரானம், ரைகவ்ய வரலாறு, சத்யகாமர் ஜாபாலி கதைகள் என்று சாமர்த்தியமாக அதனதன் இடத்தில் பொருத்துகிறார். சமஸ்கிருத வசனங்கள் பல இடங்களில் திரைக்கதைக்கு பலமாக துணை நிற்கிறது.
இரண்டு காட்சிகளில் சாத்தான் வந்து இயேசுவோடு உரையாடிவிட்டுச் செல்கிற மாதிரி அமைத்திருக்கிறார் மெல் கிப்ஸன். முதல் காட்சியில் தன்னைச் சுற்றி நிகழும் சதிவலையை உணர்ந்து மனம் உடைந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார் இயேசு. சாத்தான் தொடர்ந்து இயெசுவை அதைரியபடுத்த வருகிறது. இரண்டாம் ஆதாமான இயேசுவின் மனசைக் கலைக்க பாம்பை அவர் நோக்கி அனுப்புகிறது சாத்தான். இயேசு அந்தப் பாம்பை மிதித்துக் கொன்றுவிடுகிறார். பரலோகத்தில் இருக்கும் பிதாவின் மேல் தனக்கு இருக்கும் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தும் குறியீடு காட்சியாக இருக்கிறது. தொடர்ந்து இயேசுவை சித்திரவதை செய்யும்போது உச்சக்கட்டமாக அவரை புரட்டிப் போட்டு அடி பின்னுகிறார்கள். அப்பொழுது சாத்தான் ஒரு குழந்தையோடு அங்கே மக்கள் கூட்டத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கிறது. இயேசுவின் வீழ்ச்சியில் சாத்தானின் அடுத்த தலைமுறை உருவாகப் போவதை குறிப்பால் உணர்த்துகிறது. வயதான தோற்றத்தில் இருக்கும் அவலட்சண குழந்தை இன்னொரு குறியீடு.
ஜீவி ஐயர் இந்தக் குறியீட்டு முறையை பலமாகவே பின்பற்றுகிறார். சங்கரரின் தந்தை இறக்கும்போதே அவருக்கு மரணத்துடன் பரிச்சியம் ஏற்பட்டு விடுகிறது என்று காண்பிக்க மரணம் ஒரு தோழனாக அவரருகே வந்து அமர்கிறது. பிறகு பிரக்ஞானமும் அவருக்கு தோழனாக வருகிறது. காவியுடை சந்நியாசிகளுக்கு மத்தியில் மரணமும், ஞானமும் நம்பூதிரி தோற்றத்தில் சங்கரரின் ஆன்மாவாக (Alter EGO) கூடவே பயணிக்கின்றன. அவருடன் தர்க்கம் புரிகின்றன. அவருக்கு ஆறுதல் சொல்கின்றன. கோபித்து சண்டை போடுகின்றன. ஒரு சமயத்தில் சுகவீனமான சங்கரரை கவனித்துக் கொள்கின்றன. இறுதியில் சங்கராச்சாரியார் தனது நண்பர்களான ஞானத்தையும் மரணத்தையும் ஆலிங்கனம் செய்து மோட்சம் அடைகிறார்.
இந்த இரு பிரம்மச்சாரிகளின் வாழ்க்கையிலும் அவர்களின் அன்னையைத் தவிர இன்னொரு பெண் இடம் பெற்றிருக்கிறாள். ஜெருசலேம் மக்களால் கல்லடிபடும் மேரி மக்தனீலை காக்க இயேசு அபயக்கரம் நீட்டுகிறார். தொடர்ந்து இயேசுவின் இறுதிப் பயணம் வரை அவள் இயேசுவைத் தொடர்ந்து வருகிறாள்.
பிரயாகையில் மீமாம்ச தரிசனத்தில் சிறந்தவரான மண்டல மிஸ்ரரை வாதத்திற்கு அழைக்கிறார் சங்கரர். அப்பொழுது சங்கரரின் ஆல்டர் ஈகோவான பிரக்ஞானம் மிஸ்ரரின் மனைவியான உபயபாரதியிடம் உரையாடுகிறது. கூண்டுகிளிக்கு மிளகாய்க்கு பதில் திராட்சை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறது. வாதில் ஜெயித்து மண்டல மிஸ்ரரை சீடராக ஏற்றுக் கொள்ளும்போது உபயபாரதியும் சங்கரரின் கூட்டத்தில் இணைகிறார். ‘நான் மூவுலகையும் சுற்றி வருவேன்’ என்று சங்கரர் சொல்லும்போது, ‘நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை நான் பிந்தொடர்வேன்’ என்கிறார் உபயபாரதி.
பின்னர் சிருங்கேரியில் சங்கர மடம் நிறுவும்போது அதை சாரதா பீடம் என்றுச் அமைத்து உபயபாரதி சரஸ்வதி அவதாரம் என்று கதைகள் உருவாகின்றன.
இரு திரைப்படங்களிலும் புனிதர்களின் அற்புதங்கள் இடம்பெறுவதில்லை. மெல் கிப்ஸனின் படத்தில் ஒருக் காட்சியில் மட்டுமே ரோமானிய வீரர்களுடன் சண்டை இடும் பேதுருவால் காயமடைந்த ஒரு வீரனின் காதில் இருக்கும் காயத்தை சொஸ்தபடுத்துகிறார். அவ்வளவே. ஆதி சங்கரர் படத்தில் அதுவும் இருப்பதில்லை.
அன்றைய இஸ்ரேல், நாசரேத், ஜெருசலேம் பகுதிகளின் வாழ்க்கை முறையை பதிவு செய்ய மெல் கிப்ஸனுக்கு வாய்ப்பு குறைவு. ஜீவி ஐயர் ஓரளவிற்கு சனாதன மரபின் ஏற்றத்தாழ்வையும், மூட பழக்கவழக்கங்களையும் கோடிட்டு காண்பிக்கிறார். வைசூரி வந்த நோயாளியை காட்டில் கொண்டு விட்டுவிடுகிறார்கள். மரம் முறிந்து ஒருவன் தலைமேல் விழுகிறது. அது துர்சகுணம் என்று நம்பி அவனைக் கல்லால் அடித்துக் கொன்று போடுகிறார்கள். தீண்டத்தகாதவர் என்றுச் சொல்லப்படும் ஒருவர் வழியில் எதிரில் வர சங்கரர் அவரை ’விலகிப் போ’ என்கிறார். ‘எதை விலகச் சொல்கிறாய்? இந்த உடலையா? இந்த ஆன்மாவையா?’ என்று அவர் எதிர்க்கேள்வி கேட்க சங்கரர் தெளிவடைகிறார். சடங்கு சாஙியங்களிலிருந்து விடுபட்டு சங்கரர் ஞான மார்க்கத்தை தேடுவதை இயல்பாக சொல்கிறது.
மெல்கிப்ஸன் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பத்தின் உச்சகட்டத்தை மிக பிரும்மாண்டமாகவும் துல்லியமாகவும் பதிவு செய்கிறார். ஜீவி ஐயரோ பிரும்மாண்டமான ஞானத்தேடலை எளிமையாகவும், செறிவாகவும் சித்திரபடுத்துகிறார்.
3
பியானோ கலைஞன்
ரோமன் பொலான்ஸ்கியின் படங்கள் இதுவரை பார்த்ததில்லை. சொக்கநாதரை துரத்தும் பிரும்மஹத்தி போல இருபத்தைந்து வருடங்களாக அமெரிக்க போலிஸ் அவருக்காக ஏர்போர்டிலேயே காத்திருக்க, ஸ்விஸ் நாட்டு அரசாங்கம் அமெரிக்காவின் extradition கோரிக்கையை மறுதளித்தபோதுதான் அவரைப் பற்றி அதிகம் படிக்க நேர்ந்தது. அதில் ஒன்று சமந்தாவின் வாக்குமூலம். சமந்தா கெய்மர் வழக்கின் உள்ளடுக்குகளில் புகுந்து புறப்பட்டு வந்ததில் பொலான்ஸ்கியை அணுகுவதில் சற்று தயக்கம் இருந்தது உண்மைதான். Pianist படம் Netflixல் கிடைத்தபோது வாசகர் தரவரிசையில் நல்ல அந்தஸ்து இருந்ததைப் பார்த்ததும் உடனே பார்க்க தொடங்கிவிட்டேன். எப்போதும் ஒரு படத்தை பார்க்கும் முன் அதனைப் பற்றி முழுமையாக Wikipediaவில் படித்துவிட்டே ஆரம்பிப்பது வழக்கம். படம் பார்த்ததும் தகவல்கள் சரிபார்க்க மீண்டும் Wikipedia. ஆனால் இந்தப் படத்தைப் பற்றி உடனே பதிவிடத் தோன்றியதற்கு காரணங்கள் இரண்டு.
இந்தப் படத்தின் ஹோலோகாஸ் (Holocaust) பின்னணி.
மனிதனின் வாழ்வாதார உணர்வுகளான பசியையும், காமத்தையும் தாண்டி இசையை ஆன்மாவின் உணர்வாக உயர்த்தி சொல்கிறது. இதைச் சொல்வது சுலபம். ஆனால் பொலான்ஸ்கி சாதித்து காட்டியிருக்கிறார்.
எனக்கு பியானோ அதிகம் பரிச்சயமானதில்லை. தமிழ் திரைப்படங்களில் பார்ட்டிகளுக்கு மத்தியில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாக பியானோ காட்டப்பட, நடிகர்கள் அதன் மேல் விரல்களால் வருடிக்கொண்டு நாயகிகளை பார்வையால் வருடி கரெக்ட் செய்வார்கள். சென்ற வருடம் ஸ்டீவன் தேவசி போன்ற பியானோ கலைஞர்களை டிவி நிகழ்ச்சிகளில் பார்க்க முடிந்தது. இந்தப் படம் பார்த்தபிறகு பியானோ மீது அபரிதமான காதல் பிறந்துவிட்டது. Władysław Szpilman போலந்தில் 1940களில் நிகழ்ந்த யூத இன அழிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த பியானோ கலைஞர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘பியானோ கலைஞன்’ (The Pianist). 2002ல் வெளிவந்த இந்தப் படம் சிறந்த இயக்குநர் (Roman Polanski), திரைக்கதை (Ronald Harwood), நடிகர் (Andrew Brody) என மூன்று அகாதமி விருதுகளையும், பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை ஸ்பில்மென் பார்க்க முடியாமல் 2000த்திலேயே மறைந்துவிட்டார் எனத் தெரிகிறது.
1939ல் ஜெர்மனி போலந்தை கைப்பற்றி நாஜிக்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறது. இரண்டாம் உலகப்போரின் தொடக்க காலம் அது. ஸ்பில்மெனின் குடும்பம் தப்பி ஓடுவதைப் பற்றி பேசுகிறது. ரேடியோ செய்திகளின் மூலம் இங்கிலாந்தும், ஃப்ரான்ஸும் நாஜிக்கள் மேல் போர் தொடுத்திருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டு தப்பியோடும் முயற்சியை கைவிடுகின்றனர். ஆனால் Schutzstaffel என்று அழைக்கப்படும் ஜெர்மனியின் மிலிட்டரி அரசாங்கம் (SS) வார்சாவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. யூதர்கள் மேல் அடக்குமுறைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. குறிப்பிட்ட அளவுதான் பணம் வைத்திருக்கலாம். தாவூது நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தோள்பட்டை அணிந்துதான் அவர்கள் நடமாடலாம். அவர்களுக்கு என்று கட்டப்பட்ட Ghetto எனச் சொல்லபப்டும் தனி குடியிருப்புகளில் அவர்களை குடியேற்றுகிறது. அதிரடியாக அவர்களிடையே படுகொலைகள் நிகழ்த்தி அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்குகிறது. அவர்கள் எதிர்பாராதவிதமாக அள்ளிக் கொண்டு போய் கொட்டடிகளில் அடைக்கிறார்கள். அங்கிருந்து கால்நடைகள் மந்தைகள் போல கூட்டம் கூட்டமாக விஷவாயு கிடங்குகளுக்கு கொண்டு சென்று அழிக்கிறார்கள். வார்சாவின் யூதர்கள் படிப்படியாக தேய்ந்து ஹோலோகாஸ்டில் கொத்து கொத்தாக மடியும்போது ஸ்பில்மென் மட்டும், ஓர் யூத ஜெர்மானிய சிப்பாயின் கருணையால் தப்புகிறார்.
ஸ்பில்மென் போலந்து ரேடியோவில் பியானோ கலைஞர். அவருடைய நீள, நளின விரல்கள் பியானோவில் நடனமாட இசை பொங்கி வழிகிறது. Brody மிக அருமையாக ஸ்பில்மென் பாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார். அவருடைய சகோதரன் ரோஷக்கார இளைஞனாக உத்வேகத்துடன் பேசும்போது ஸ்பில்மென் அதை மறுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறார். Ghetto குடியிருப்புகளின் உணவகத்தில் பியானோ வாசித்து குடும்பத்தை காப்பாற்றுகிறார். தன் தந்தைக்கு வேலைவாய்ப்பு சானிதழ் வாங்க முயற்சிக்கிறார். வேலை செய்ய முடியாதவர்களை ‘லாயக்கறறவர்கள்’ என்று சொல்லி SS சுட்டுவிடும். டுமீல்.
கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கும்போது ‘என்னால் இயன்றதை எல்லாம் செய்துவிட்டேன்’ என்று முணுமுணுக்கிறார். இந்த களேபர கொடுமைகளை அந்த காலகட்டத்தின் பின்னணியோடு வரலாற்று புரிதலோடு சரியாக காட்சியமைத்திருக்கிறார்கள். பயத்தில் உறைந்த யூத முகங்களை, இறைஞ்சும் மனிதர்களை பார்க்கும்போது இவ்வளவு ‘கட்டுபாடுடனா’ அவர்கள் இத்தகைய கொடுமைகளை ஏற்றுக் கொண்டார்கள் என்று கேள்வி எழுகிறது. இறக்கும் தருவாயில் கூட தள்ளுமுள்ளு, அழுகை, ஆர்பாட்டம் என்று எதுவும் இல்லாமல் அதி-நாகரீக கூட்டமாக மட்டுமேவா யூத சமுதாயம் இருந்திருக்கிறது?
கட்டிட வேலை செய்பவராகவும், ஸ்டோர் கீப்பராகவும் பணிபுரியும் ஸ்பில்மென், ஒரு சமயத்தில், துப்பாக்கி, வெடிமருந்து போன்றவற்றை Ghettoக்களுக்கு உள்ளே கடத்தி வந்து வ்நியோகிக்கும் சதி வேலைகளில் பங்காற்றுகிறார். பிறகு ஒரு பின்மாலைப் பொழுதில் தாவூது நட்சத்திர பட்டியைக் கழட்டி வைத்துவிட்டு வெகு எளிதாக Ghettoவை விட்டு தப்பித்து சென்றுவிடுகிறார். ஆனால் வெளி உலகில் இருக்கும் ஜெர்மானியர்கள் அவ்வளவு சுலபமாக யூதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. தன்னுடைய பழைய நட்புகளின் மூலமாக சில அப்பார்ட்மெண்டில் மறைந்து உறைகிறார் ஸ்பில்மென். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு ஈரல் ஊதிப் போய் இறப்பை எட்டிப் பார்த்து மீள்கிறார். ஜெர்மானியப் படைக்கும் போலந்து புரட்சி படைக்கும் நடக்கும் யுத்தத்தின் நடுவே தப்பி பிழைக்கிறார். ரஷியாவின் சிவப்பு படை வார்சாவிற்கருகில் வரும்வரை தாக்குபிடித்துவிடுகிறார். கிட்டட்த்தட்ட ஆதி காட்டுவாசி போல் கிடைத்ததை உண்டு, கட்டிட இடிபாடுகளில் இடையே உழன்று கொண்டிருக்கும்போது ஜெர்மானிய கேப்டனால் கண்டுபிடிக்கப்படுகிறார். அவர் ஓர் பியானோ கலைஞர் என்று சொல்ல பக்கத்து அறையிலிருக்கும் பியானோவை இசைக்க சொல்லிக் கேட்கிறார் அந்த ஜெர்மானிய கேப்டன்.
ஹோலோகாஸ்ட் கொடுமைகளை ஒரு டாக்குமெண்ட்ரி பாவத்திலேயே காட்சிபடுத்தும் பொலான்ஸ்கி, பசியோடு, உணர்வுகள் செத்துப் போன, சாவிடமிருந்து அஞ்சி, வாழ்வது மட்டுமே குறியாக இருக்கும் ஸ்பில்மென் பியானோ இசைப்பதை அதியற்புதமான உணர்வோடு காட்சிபடுத்துகிறார். அங்கு இசைப்பது ஸ்பில்மென் இல்லை. அவனுடைய ஆன்மா. அது நேரடியாக அந்த ஜெர்மானிய கேப்டனை தொட்டு புரட்டி போடுகிறது. ரஷியப் படைகள் சுட்டுக் கொண்டு முன்னேறி வரும் அரவம் கேட்க தொடங்கிவிட்டது. அந்த ஜெர்மானிய கேப்டன் ஸ்பில்மெனைப் பார்த்து சொல்கிறான் ”இன்னும் ஓரிரு வாரங்கள்தான் நீ மறைந்திருக்க வேண்டும்”. இறுதியாக ரஷியர்களின் உதவியோடு போலந்து மீண்டு வர ஸ்பில்மென் போலந்து வானொலியில் மீண்டும் பியானோ வாசிக்க ஆரம்பிக்கிறார். அவரைக் காப்பாற்றிய ஜெர்மானிய கேப்டன் ரஷியபடையிடம் கைதியாக இருக்கும்போது ஸ்பில்மென்னின் நண்பரிடம் தான் ஒரு காலத்தில் ஸ்பின்மேனை காப்பாற்றியதைப் பற்றி சொல்லி தான் இப்போது போர்கைதியாக இருப்பதை ஸ்பில்மேனிடம் சொல்லி தனக்கு உதவுமாறு இறைஞ்சுகிறார். சரித்திரம்தான் எத்தனை புதிர்தன்மை கொண்டது. ஸ்பில்மேனுக்கு தகவல் கிடைத்து போர்கைதிகள் முகாமுக்கு போவதற்குள் காலம் கடந்து விடுகிறது. அந்த ஜெர்மானிய கேப்டன் கேஜிபி வசம் சென்று 1952ல் போர் கைதியாகவே மரணித்து விடுகிறார். பின்னார் ஸ்பில்மேனின் முயற்சியால் அவருக்கு விருது வழங்கப்படுகிறது.
இதற்கு முன்னால் ஹோலோகாஸ்டை மையமாக வைத்து ஸ்பீல்பெர்கின் Schindlers List பார்த்திருக்கிறேன். ஆனால் பொலான்ஸ்கி அதன் சாயல் சற்றும் வராதபடி ஸ்பில்மென் பார்வையில் மிக அழுத்தமாக ஹோலோகாஸ்ட்டைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். அவரும் அவர் தந்தையும் ஹோலோகாஸ்ட்டில் தப்பிப் பிழைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பொலான்ஸ்கி யூத படுகொலைகளை மிக நடுநிலையான தொனியிலேயே பதிந்திருக்கிறார். வரிசையாக நடந்து வரும் யூத வேலையாட்களை நடுவில் நிறுத்தும் ஜெர்மானிய சிப்பாய்கள், வயதானவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து முன்னே வரச் சொல்கிறார்கள். கீழே படுக்கச் சொல்லி ஒவ்வொருவர் பின்னந்தலையிலும் ‘டுமீல்’. கடைசியாக Ghetto உணவுவிடுதியின் முன்னாள் உரிமையாளரிடம் வரும்போது குண்டு தீர்ந்துவிடுகிறது. நாஜி வீரன் துப்பாக்கியின் காலி மேகஜினை எடுத்துவிட்டு புதியதை உள்ளே போட்டு ‘டுமீல்’. பிறகு எல்லோரும் நடந்து தங்கள் குடியிருப்பை நோக்கி செல்கிறார்கள். ஒரு அலறல், கதறல், எக்களிப்பு, கேலி இல்லை. இராணுவத்தினரின் கட்டுகோப்பான அராஜகமும் அதற்கு அடங்கிப் போன யூதர்களின் அடிமை மனோபாவமும் மட்டுமே பிரதானமாக காட்டப்படுகிறது.
வரலாற்றை ஆவணபடுத்துவதில் யூதர்கள் சமர்த்தர்கள். ஸ்பில்மென்னின் புத்தகமும், அதை ஒட்டி எடுக்கப்பட்ட பியானிஸ்டும் அதில் ஓர் அங்கம். ஹிட்லரின் மெய்ன் கெம்ப் தவிர நாஜிக்கள்தரப்பில் இப்படி வரலாறு எதுவும் பதியப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
4
சுவாசம்
Shwaas என்ற மராத்தி படத்தை (தமிழ் சப்-டைட்டிலோடு) பற்றி நண்பர் அய்யனார் கூகுள் Buzzல் குறிப்பிட்டிருந்தார். அங்கே பல நண்பர்களும் பார்த்துவிட்டு ‘மனம் கனக்கிறது’ என்ற ரீதியில் கமெண்ட் எழுதியிருந்ததால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. பார்ப்பவனை அழவைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எடுக்கப்படும் நாடகத்தனம் கொண்ட படங்கள் எனக்கு அவ்வளவு உவப்பானதில்லை. அதனால்தான் அந்த தயக்கம். பிறகு விக்கிபிடியாவில் மேய்ந்தபோது இந்தப் படம் 2004ம் வருடம் இந்திய சிறந்த படத்திற்கான விருதையும், தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தையும் படித்தேன். வாரயிறுதியில் கிடைத்த அவகாசத்தில் ஒரேமூச்சில் பார்த்து முடித்தேன். இந்த திரைப்படத்தின் பல அம்சங்கள் பிடித்திருந்தாலும் இதன் ‘நேர்த்தி’யான பிரசண்டேஷன் என்னை மிகவும் ஈர்த்தது. இத்தனைக்கும் படத்தில் பாடல்கள் கிடையாது. காதல் கிடையாது. பெரிய நட்சத்திரங்களும் திரை ஆளுமைகளும் கிடையாது.
ஒரு அரைமணிநேர டிவி ஸ்லாட்டில் சொல்லிவிடக்கூடிய சிறுகதைதான். ஒன்றரை மணிநேர சினிமாவாக அகலத்திரைக்கு ஏற்றவாறு அருமையான காட்சியமைப்புகளும், லொக்கேஷன்களும்… நடிகர்கள் தேர்வும், இசையும், விறுவிறுப்பான எடிட்டிங் என்று ஃபீச்சர் படத்திற்கான சகல லட்சணங்களுடனும் எடுக்கப்பட்ட திரைப்படம். முப்பது நாட்களில் படப்பிடிப்பை முடித்தவர்கள், ஒன்றரை வருடங்களுக்கு போஸ்ட் புரடக்ஷன் செய்திருக்கிறார்கள். மராட்டிய தியேட்டரின் வலிமையை புரிந்து கொள்ள முடிந்தது.
மெலோடிராமெடிக்கான கதைதான். விசாரே (Vichare) என்னும் கிராமத்து பெரியவர் தன்னுடைய பேரன் பரசுராமின் கண் மருத்துவத்திற்காக நகரத்திற்கு வருகிறார். அவருடைய எதிர்பார்ப்பு மிகவும் சாதாரணமானது. கிராமத்து டாக்டர் பட்டினத்து டாக்டரை பார்க்க சொல்லி கடிதம் கொடுத்திருக்கிறார். இவர் பெரிய டாக்டர். பேரனைப் பார்த்தவுடன் மருந்து கொடுத்து குணமாக்கி விடுவார். நிம்மதியாக ஊர் திரும்பிவிடலாம். இவ்வளவுதான் அவர் எதிர்பார்ப்பு. ஆனால் என்ன நடக்கிறது?
எதிர்பாராத விபத்து காரணமாக ஆஸ்பத்திரிக்கு தாமதமாக வரும் பெரியவருக்கு டாக்டரை பார்ப்பதற்கே முட்டி மோத வேண்டியிருக்கிறது. டாக்டர் மிலிந்த் ஷானே அன்றைய அலுவலை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பத் தயாராக இருக்கிறார். ரிசப்ஷனிஸ்டிற்கு டாக்டரை தொந்தரவு செய்ய முடியாத நிலைமை. பெரியவரையும் சமாதானபடுத்த முடியவில்லை. முன்னறையில் பெரியவர் ரிசப்ஷனிஸ்டோடு விடாமல் மல்லுகட்டுவதை கவனித்த டாக்டர் அவரை உள்ளே அனுப்ப சொல்கிறார். டாக்டரின் அறைக்குள்ளே வரும் பெரியவரின் வெகுளி தோற்றத்தை அப்பொழுதுதான் திரையில் பார்க்கிறோம். ‘இந்த கிராமத்து பெருசு எப்படி இந்த பட்டனத்தில தாக்குபிடிக்கப் போகுது’ என்ற உணர்வு எழும்புகிறது. தொடங்கிய 10 நிமிடத்தில் நமக்குள் அந்த பாத்திரம் முழுவதுமாக இறங்கிவிடுகிறது. தொடர்ந்து அந்த கிராமத்து பெரியவர், சிடி ஸ்கான், MRI, என்றெல்லாம் அலையும்போது சுஜாதாவின் ‘நகரம்’ கதை மனதில் நிழலாடுகிறது. கிட்டத்தட்ட அதே சூழல்தான் இந்தக் கதையிலும் இடம்பெறுகிறது.
பெரியவரின் பேரன் பரசுராமிற்கு இரண்டு கண்ணிலும் புற்று நோய் (retinoblastoma) தாக்கியிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்தால்தான் புற்றுநோயை குணப்படுத்த முடியும். இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு கண்ணிலும் பார்வை கிடைக்காது. வேறு எந்த தீர்வும் கிடையாது. பரசுவின் விதி அவ்வளவுதான். இந்தப் பேரிடி துக்கத்தை பெரியவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் சொச்சக் கதை.
படம் தொடங்கிய பத்து விநாடிக்குள் பரசுராம் பற்றி ஆடியன்ஸுக்கு சொல்லப்பட்டு விடுகிறது. அரைமணியில் டாக்டரும் பையனுக்கு விழி புற்றுநோய் பற்றியும் கண்பார்வை போய்விடும் என்பதையும் பற்றியும் தீர்மானமாக சொல்லிவிடுகிறார். மீதிப் படம் முழுவதும் நாமும் விசாரேவுடனும், பரசுராமுடனும் அந்த அறுவை சிகிச்சைக்காக தயாராகிறோம். ஒரு த்ரில்லர் படத்தின் லாகவத்தோடு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை, பிழியப் பிழிய அழ வைக்காமல் இயல்பாக நகர்கிறது.
விசாரேவாக அருண் நலவடே (Arun Nalavade). இந்த திரைப்படத்தின் எட்டு தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். பட்டை கண்ணாடி, காந்தி குல்லாய், அடர்த்தியான மீசைக்கு பின்னால் வெகு ஆழமான உணர்ச்சிகளை காட்டுகிறார். ஓர் சின்ன கையசைப்பில் பணிவு, சின்ன தலையசைவில் கோபம் என்று படு பாந்தம். சிறுவன் பரசுராமாக நடித்தது அஸ்வின் சிடாலே (Ashwin Chitale). அந்தக் கடைசி காட்சியில், கண் ஆப்பரேஷன் முடிந்து கறுப்பு கண்ணாடியுடன் இருட்டு உலகில் இருக்கும் பரசுராம், நண்பர்கள் தண்ணீரில் குதிக்கும் சத்தம் கேட்டு உற்சாகமாக கைதட்டும்போது நமக்கு ஓர் விடுதலையான உணர்வு ஏற்படுகிறது.
டாக்டராக சந்தீப் குல்கர்னி. மிக இயல்பான பாத்திரம். லௌகீக வேலைகள், மனைவியின் தொலைபேசி அழைப்புகள், குடும்ப அலுவல்களுக்கு இடையே பரசுராமின் பார்வை பறிபோகும் விஷயத்தை விசாரேக்கு சொல்லும் புரஃபஷனல் தேர்ச்சி. கூடவே சமூக சேவகராக வரும் அஸாவரி பாத்திரம் மூலமாக நோயாளிகளுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கும் இடையே தேவைப்படும் உறவுப்பாலத்தை அருமையாக உணர்த்தியிருக்கிறார்கள். CT Scan எடுக்க வேண்டிய இடத்தில் விண்ணப்ப படிவத்தில் ’இதன் பாதக அம்சங்களை டாக்டர் எனக்கு விளக்கியிருக்கிறார்’ என்று ஒரு வரி இருக்கும். விசாரே அதைப் படித்துவிட்டு ‘அப்படி யாரும் எனக்கு சொல்லவேயில்லையே, நான் எப்படி ஒப்புதல் கையெழுத்து போடுவது’ என்பார். அந்த லாப் நிர்வாகத்தினருக்கோ பெரியவரின் கேள்வி ஒரு பொருட்டே இல்லை. அடுத்தடுத்த் காத்திருக்கும் நோயாளிகளுக்கு ‘சேவை’ செய்ய வேண்டும். இங்கேதான் சமூகசேவகர் அஸாவரி பாத்திரம் நுழைகிறது.
”டாக்டர்களுக்கு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்க நேரம் கிடையாது பெரியவரே. ஆனால் விளக்கியதாக ஒத்துக் கொண்டு நீங்கள் கையெழுத்துப் போட்டால்தான் ஸ்கேன் செய்ய முடியும்” போன்ற நடைமுறை நிதர்சனங்களை புரியவைப்பது அஸாவரிதான். எக்ஸெலண்ட்.
டாக்டர் மிலிந்த் இந்த ஆப்பரேஷனின் சிக்கலை விசாரே குடும்பத்தினருக்கு விவரிக்கும் பொறுப்பை அஸாவரிக்கு கொடுக்கிறார். பெரியவர் பல்வேறு யோசனைகளுக்குப் பின்னர் ஒத்துக் கொண்டாலும், பேரனிடம் “இந்த சிகிச்சைக்குப் பின்னர் உனக்கு கண் தெரியாது” என்று உண்மையை சொல்லும் மனதிடம் இல்லை. அஸாவரி டாக்டரிடமே பையனைக் கூட்டி வந்து அவரையே அதை விளக்கி சொல்லச் சொல்லும் இடம் அருமை. இங்கே எல்லோரும் ஒருமுகமாக பரசுவை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முனைவதும், அதன் விளைவாக அவன் கண்பார்வை பறிபோவதினால் துக்கப்படுவதுமாக, அந்த சூழலை பார்ப்பவர்களிடம் முழுமையாக கடத்தியது இந்தப் படத்தின் பெரிய வெற்றி எனலாம்.
இந்த திரைப்படம் மஹாராஷ்டிராவில் பெரிய புரட்சி செய்திருக்கிறது என்று சொல்லலாம். எட்டு திரைப்பட ஆர்வலர்களின் ஒரு மாற்றுதிரைப்பட முயற்சி என்று தொடங்கி, பிறகு தேசிய விருது பெற்று ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. ஆஸ்கருக்கு செல்வது என்றால் அதற்கான முனைப்பும் உழைப்பும் பல மடஙகு தேவையாயிற்றே. பணத் தேவைக்காக கிராமம் கிராமமாக கொண்டு சென்று திரையிட்டு வசூல் செய்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், கோவா மாநில அரசாங்கம் என்று பலரும் கொடுத்த கொடையினால் அமெரிக்காவில் பல இடங்களில் திரையிட்டு இந்தப் படத்தினைப் பற்றிய சாதகமான பார்வையை நடுவர் குழுவில் ஏற்படுத்த மெனகெட்டு இருக்கிறார்கள். ஆனாலும் படம் இறுதிச் சுற்றில் இடம்பெற முடியவில்லை.
ஆஸ்கரில் வெற்றி பெறத்தான் நமக்கு ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற மசாலாக்கள் இருக்கின்றனவே.
முழுத் திரைப்படத்தையும் யூட்யூபில் காணலாம். Shwaas என்று தேடிப்பாருங்கள்.
5
கணிதக் கூடத்தின் ஆவி
‘Phantom of the Fine Hall’ என்று ப்ரின்ஸ்டன் பல்கலைகழகத்தின் கணிதக் கூடத்தில் அகால வேளையில் உலவும் நிழலுருவத்தை சொல்வார்களாம். அமெரிக்க கணிதவியலாளர் ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ்தான் அது. 1928ல் மேற்கு வர்ஜினியாவில் பிறந்த ஒரு புத்திசாலி பிள்ளை, பின்னர் 1994ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசை வெல்கிறார். மேற்கண்ட வாக்கியத்தில் புதிய செய்தி என்ன இருக்கிறது? சில்வியா நாசர் எழுதிய A beautiful mind புத்தைகத்தையோ அல்லது ரான் ஹோவர்டு இயக்கத்தில் வெளியான A beautiful mind திரைப்படத்தையோ பார்த்திருந்தால் அந்த நோபல் பரிசின் மகத்துவம் நமக்குப் புரியும்.
அப்படி என்ன பிரச்னை நாஷுக்கு? தந்தையோ பெரிய எலக்ட்ரிகல் எஞ்சினியர். தாயார் பள்ளி ஆசிரியை. பள்ளியில் படிக்கும்போதே கணிதத்தில் அதிகப்படியாக நாட்டம் கொண்டு அட்வான்ஸ்ட் மாத்தமாடிக்ஸ் எல்லாம் கற்றுக் கொண்டு அப்பாடக்கராகி விடுகிறார். ஸ்கால்ர்ஷிப் துணையோடு மூன்றே வருடங்களில் உயர்படிப்பை முடிக்கிறார். ‘இவன் ஒரு மேதை’ என்ற கார்னிகி கல்லூரி பேராசிரியர் சிபாரிசு கடிதம் தருகிறார். ஹார்வேர்டு, ப்ரின்ஸ்டன் என்று பல கல்லூரிகளில் அனுமதி கிடைக்க தனக்கு உகந்த வாய்ப்பினை தேர்வு செய்யும் உயர்ந்த நிலையில் இருக்கிறார். இருபத்தியிரெண்டு வயதில் கணிதத்தில் முனைவர் பட்டமும் கிடைக்கிறது. வெறும் இருபத்தியெட்டு பக்க ஆய்வு அறிக்கை பிறகு பொருளாதார உலகில் Nash Equilibrium என்று ஒரு பெரிய மைல்கல்லாக திகழ்கிறது. இன்றளவும். ஆனால் அதற்கான ஆகப் பெரிய அங்கீகாரமான நோபல் பரிசு அவருக்கு 66ம் வயதில்தான் கிடைக்கிறது. இருபத்தியிரண்டு வயதில் இத்தனை சாதித்தவருக்கு அறுபத்தியாறாம் வயதுவரை என்னதான் ஆயிற்று?
பிற்காலத்தில் தான் கடந்து வந்த சோதனைக் கட்டத்தைப் பற்றி அவர் விவரித்ததில் இருந்து…
மனைவி கர்ப்பமாக இருந்த காலந்தொட்டு மனசிதைவுகள் ஏற்பட ஆரம்பித்தன… கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல்பூர்வ தர்க்க சிந்தனையில் இருந்து விலகி கற்பனாவாத சிந்தனையில் புதிய பாத்திரங்களை உருவாக்கிக் கொள்கிறார். தெய்வீக அருளினால் சாதாரண காட்சிகளிலிருந்து புதிய குறியீடுகளை உருவகிக்க முடியும் என்று நம்பி, அந்த சிறப்பு சக்திக்கு ஆதரவாக சில கற்பனை பாத்திரங்களை தனது உலகில் காண ஆரம்பிக்கிறார். அவர்களோடு உரையாடுவது அவர்களுக்காக பணிபுரிவது என்று இந்த உலகை கொஞ்சம் கொஞ்சமாக துறக்கிறார்.
ஆம். பாரனாய்ட் ஷிஸோப்ரீனியா வியாதியினால் பீடிக்கப்பட்டு தனது பெரும்பகுதி இளமைக் காலத்தை கற்பனையிலேயே வாழ்ந்தவர்தான் ஜான் நாஷ்.
ஆனால் மனைவி, மற்றும் நண்பர்கள் அவரை மனநல காப்பகத்திற்கு வலுக்கட்டாயமாக கொண்டு சேர்த்து விடுகிறார்கள். மாத்திரை மருந்துகள் உட்கொண்டு இன்னமும் க்ஷீணித்து போகிறார்.
தனக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னுடைய மேதைமையை உலகம் உணரவில்லை என்பதாலேயே கற்பனை உலகில் சஞ்சரிக்கும் தனக்கு இந்த மருந்துகளும் மருத்துவ முறைகளும் இன்னுமும் சிதைவைத்தான் தருகிறது என்று அவர் உணர்ந்து கொள்கிறார். மருந்துகளை உட்கொள்வதை நிறுத்த முயற்சிக்கிறார். அந்த கற்பனாவாத சஞ்சாரத்தினால்தான் அறிவியலில் புதிய சிந்தனைகளை தோற்றுவிக்க முடிந்தது என்று தீவிரமாக நம்புகிறார். மருத்துவர், ஆஸ்பத்திரி, சுற்றத்தார் போன்ற புறச்சூழலின் கட்டாயத்தால் தனது டெலூஷனல் உலகை புறக்கணித்து சாதாரண மனிதனாக வாழ முடிவெடுத்தாலும் அவரது மனது அதை மறுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த ஊசலாட்டம் அவருடைய மண வாழ்க்கையை பாதித்து விவாகரத்து வரைக்கும் கொண்டு போகிறது.
அவரே சுயமாக உணர்ந்து தனது தர்க்கபூர்வ சிந்தனையால் கற்பனாவாத சூழலை நிராகரிக்கும் புள்ளிதான் அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான, மிகக் கடுமையான கட்டம். பின்னாளில் முற்றிலும் சராசரி அறிவியலான் போல் சிந்திக்க அவர் முற்பட்டாலும், தனது கற்பனாவாத உலகின் இழப்பினால் தான் குறைபட்டது போலவே உணர்கிறார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தனது மனசிதைவு நோயோடு போராடியபடியே ப்ரின்ஸ்டன் கணிதத் துறைக்கு அவர் ஆற்றிய பங்குதான், 1994ல் அவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசிற்கான காரணம். இந்த இடத்தில் A Beautiful Mind படம் முடிவடைகிறது.
பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தத் திரைப்படத்தை முதன்முதலாக பார்த்தபோது அது ஒரு ஆஸ்கர் விருது வென்ற படம் என்ற மரியாதை மட்டும்தான் மனதில் இருந்தது. பெரியதாக எதிர்பார்ப்பு ஏதுமில்லை. பிறகு ஜான் நாஷின் கூற்றாக ‘I feel limited’ என்று படித்தபோது ‘திடுக்’ என்று இருந்தது. மனசிதைவு நோயால் அவதிப்பட்டு பிறகு மீண்டு வந்தவர் கதையாக நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ மிகவும் உயரமான நிலையில் இருந்து சராசரி உலகிற்கு இறங்கி வந்து சமரசம் செய்துகொண்டு இருப்பதாகவே நினைக்கிறார். I feel limited. இந்த வாக்கியம் என்னை மிகவும் அலைக்கழிக்க வைத்தது உண்மைதான்.
இந்தப் படத்தை முதலில் பார்த்த போது ஜான் நாஷின் வாழ்க்கை வரலாறு எனக்குத் தெரியாது. Shizoprenia என்ற பதமே தெரியாது. தனது திறமை மீது அதீத கர்வம் உள்ள ஒரு இளைஞன் மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பின் தனது மனைவி நண்பர்கள் துணையோடு மீண்டு வந்து நோபல் பரிசை வெல்வதாகத்தான் நான் பார்த்தேன். நாஷின் அறைத் தோழனும், சீக்ரெட் ஏஜென்ட்டும் நிஜமாக நம்மிடையே உலவ கொஞ்சம் கொஞ்சமாக நாமும் நாஷோடு சேர்ந்து அவர்கள் உண்மையானவர்கள் அல்ல என்று நிராகரிக்கிறோம். அதுதான் இந்த திரைக்கதையின் பெரும் வெற்றி.
இருபத்தியிரண்டிலிருந்து அறுபத்தி ஆறுக்கு மாற்றிக் காட்டும் ரஸ்ஸல் க்ரோவ்வின் நடிப்பும் மிகவும் கவர்ந்தது. உண்மை பாத்திரத்தை திரையில் செய்வது கடினமான வேலைதான். ரஸ்ஸலின் பாத்திரம் உண்மையான ஜான் நாஷிற்கு மிக அருகாமையில் வந்திருப்பதை உணர முடிகிறது. இளமைக்காலத்து நாஷின் Eccentricityகளை படத்தில் அதிகம் காட்டவில்லை. ஆனால் புத்தகத்தில் சில்வியா அவருடைய ஓரினசேர்க்கை ஆர்வமும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டதையும் தொட்டுக் காட்டி செல்கிறார்.
சென்ற வாரம் பார்த்தபோது ஜான் நாஷின் ஒரிஜினல் கதையை ஒட்டி எப்படி நுணுக்கமாக, புத்திசாலித்தனமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள் என்பதை அவதானிக்க முடிந்தது.
இறுதிக்காட்சியில் நோபல் பரிசிற்கான ஏற்புரை ஆற்றிவிட்டு, தன் கற்பனை பாத்திரங்களை புறக்கணித்து விட்டு மனைவி மகனுடன் செல்லும் ஜான் நாஷின் மனது என்ன நினைத்திருக்கும் என்ற கேள்வி பிறக்கிறது. எது அழகான மனது?
6
அதிசய அந்நிய உலகம்
இந்த வாரயிறுதியில் வாகாக மூன்று திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. எல்லாமே பிரமாதமான படங்களாக இருந்தது அரிய நிகழ்வுதான்.
Harry Potter and the Deathly Hallows Part 2
A Beautiful Mind
தெய்வத் திருமகள்
ப்யூட்டிஃபுல் மைண்ட் மட்டும் மூன்றாவது முறையாக பார்த்த படம். மற்ற இரண்டும் புத்தம் புதிய படங்கள். தனித்தனியாக ஒவ்வொரு படத்தைப் பற்றியும் எழுதுகிறேன்.
‘ஏசி கார்ல போயிருக்கீங்களா… சும்மா குளுகுளுன்னு இருக்கும்’ என்று மைமகாமராஜனில் கமல் வெ.ஆ. மூர்த்தியை கவர் பண்ணுவது போல, நான் என் மாமனாரையும், ஜூனியரையும் ‘ஐமேக்ஸ்ல படம் பாத்திருக்கீங்களா’ என்று உசுப்பேத்தி ஹாரி போர்ட்டர் சீரிஸின் இறுதிப் படமான Deathly Hallows – 2க்கு சனிக்கிழமை காலை காட்சிக்கு ஆஜராகிவிட்டேன்.
ஐமேக்ஸில் படம் பார்ப்பதற்கு என்று சில சாங்கியங்கள் உண்டு. அதற்கேற்ப அரை டிரவுசர் ஒன்றை மாட்டிக் கொண்டு ஒரு பக்கெட் பாப்கார்னும் (பாக்கெட் பாப்கார்ன் இல்லை. பக்கெட். வாளிபோல பெரியதாக இருக்கும்) உயர கோப்பை கோகோ கோலாவுமாக அரை மணிக்கு முன்னமேயே தியேட்டருக்குள் போய் உட்கார்ந்து கொண்டோம். முப்பரிமாண காட்சிகளை பார்க்க தோதாக நடுவில் உட்கார்ந்துவிட, பாவம் ஜூனியருடைய அற்பசங்கைகளை தீர்த்துக் கொள்ள எழுந்து போக முடியாமல் அவஸ்தையாகி விட்டது. ஐமேக்ஸ் சாங்கியங்களில் முக்கியமானது குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது என்பதாம். ஜூனியர் அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை என்றாலும், புரியாமல் எதையுமே பார்க்கக் கூடாது என்ற கொள்கை உடையவர். ஊசி விழுந்தாலும் உலக்கை விழுந்தது போல் கேட்கும் அமையிதில் ‘அவன் ஏன் ஈரத்தை துடைக்காம சட்டை போட்டுக்கறான்… ஜுரம் வராதா’ என்று சத்தமாக கேள்விக் கேட்டு அக்கம்பக்க அமெரிக்கர்களின் காதில் செந்தமிழ் தேன் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
Deathly Hallows என்பதின் சரியான தமிழாக்கமாக ‘மரண புனிதங்கள்’ என்றுக் கொள்ளலாம். Holy என்ற வேர்ச்சொல்லிற்கு நெருக்கமாக Hallow இருந்தாலும் இது கொஞ்சம் கறுப்புதன்மை கொண்டது. ஹாலோவீன், ஹாலோமஸ் போன்ற பண்டிகைகளில் நீத்தார் கடன், ஆவிகள் உலகம் என்றெல்லாம் சம்பந்பட்டிருக்கிறது. ஏன்… நமது தீபாவளியோ, ஓணம் பண்டிகையோ நரக / ஆவி உலகுக்கு நெருக்கமான பண்டிகைதானே. தீபாவளியின் எண்ணெய் குளியலுக்கும் நீத்தார் கடனுக்கும் சம்பந்தம் உண்டு என்றும் சொல்கிறார்கள்.
Harry Potter and The Deathly Hallows கதை படித்திருந்தீர்கள் என்றால் படம் ஓரளவுக்கு புரியும். ஹாரி போட்டரின் முழு சீரிஸ்களும் படித்திருந்தீர்கள் என்றால் படம் மிக நன்றாகப் புரியும். அதை விட, ஜே கே ரௌலிங் உருவாக்கியிருக்கும் அந்த அந்நிய உலகத்தை, மாந்த்ரீகர்களின் உலகத்தை, அவர்களின் பாடசாலை, அமைச்சகம், விளையாட்டு போட்டிகள், சீமான்கள் நாட்டியம், அடிமைகள் உலகம், விற்பனைக் கூடங்கள், வங்கி அமைப்புகள், பத்திரிகைகள் என்று ஏகபட்ட விஷயங்களை உள்ளடக்கிய அந்த அந்நிய உலகத்தை உணர்ந்தவராக இருந்தால் இந்த படம் ஒரு சிறப்பான அனுபவம்.
எட்டுப் புள்ளி பத்து வரிசை என்று ஒரு சின்னக் கோலம் போட்டுவிட்டு… ‘அடடே அழகா இருக்கே’ என்று ஆசைப்பட்டு அக்கம்பக்கம் 2 வரிசை சேர்த்து, ஒரு கோபுரம் வரைந்து, கலர் பொடியெல்லாம் தூவிவிட்டு பார்த்தால் கோலம் அலங்கோலமாக மாறியிருக்கும். ஆனால் ஜேகே ரௌலிங் தனது முப்பதாவது வயதில் முதல் ஹாரி போட்டர் நாவலை எழுதுகிறார். இந்த பதினாறு வருடங்களில் ஹாரி போட்டர் உலகம் மிக பிரும்மாண்டமாக வளர்ந்து விட்டாலும் அந்த முதல் ‘எட்டுப் புள்ளி பத்து வரிசை கோலத்தின்’ அழகு அப்படியே எஞசியிருக்கிறது. இன்றைய ஹாரி போட்டர் ப்ராண்டின் மதிப்பு வெறும் ரூபாய் முப்பதாயிரம் கோடிகள்தானாம். ஒரு தனி மனிதராக இவ்வளவு பெரிய சாதனையை இலக்கிய உலகில் நிகழ்த்தியிருப்பது பெரும் அதிசயம்தான்.
அவரது ஆறாவது புத்தகத்தின் தொடக்கத்தில் மாய உலகின் மந்திரியும், ஹோக்வேர்ட்ஸ் ஹெட்மாஸ்டரும் பேசுவது போல ஒரு உரையாடல் இருக்கும். இந்தப் பகுதியைத்தான் அவரது முதல் புத்தகத்தின் தொடக்க பத்தியாக எழுதியிருந்தாராம். இரண்டு புத்தகங்களுக்கும் நடுவில் பத்து வருடங்கள் மற்றும் பதினோரு மில்லியன் வாசகர்கள். இந்த விஸ்தீரணம்தான் ஜேகே ரௌலிங்கின் அளப்பரிய சாதனை.
இந்த அந்நிய உலகின் பெரும்பாலான விஷயங்கள் நமக்கு ஏற்கெனவே பரிச்சயமானவையே. துடைப்பகட்டையில் ஏறிப் பாயும் ஒற்றைப்பல் வஞ்சக சூணியக்கிழவிகள் ஐரோப்பிய தொன்மக் கதைகளில் பார்க்கிறோம். அந்த துடைப்பக் கட்டையை வைத்து மாந்திரீக உலகின் க்விட்டிச் விளையாட்டை வடிவமைக்கிறார். அதே போல Elfகள் எனப்படும் குட்டி பிசாசுகளை மாந்த்ரீகர்களின் அடிமைகளாக காட்டுகிறார். அந்த அடிமை உலகிற்கு குரல் கொடுக்க ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. டெத்லி ஹாலோஸ்-2 துவக்கத்தில் டால்பியின் கல்லறையைக் காட்டும்போது ‘சுதந்திர எல்ஃப்’ என்று காட்டுகிறார்கள். எல்ஃப்கள் போல காப்லின்களும் ஒருவகை அடிமைச் சமூகம்தான். க்ரிங்கோட்ஸ் வங்கியை பராமரிக்கிறார்கள். மாந்த்ரீகர்களுக்குத் தேவையான பல உன்னத சாதனங்களை செய்து கொடுக்கிறார்கள். ஆனாலும் அவற்றின் மீதான தங்கள் உரிமையை விட்டுக் கொடுப்பதில்லை. ஒருசமயம் மனிதனான ஹாரி பாட்டர் காப்லினை சுமந்து செல்ல அது அவனை எள்ளலாக பார்க்கும். ஒரே காட்சியில் அந்த வரலாற்றுப் பின்னணியை படத்தில் காட்டி விடுகிறார்கள். தீக்கங்கு கக்கும் டிராகன் சிறிய மணி ஓசைக்கு பயந்து நடுங்குகிறது. சீனர்கள் கதைகளில் தேடிப் பார்த்தால் அதற்கான நுனி கிடைக்கக் கூடும். இது போன்ற அடிச்சரடு வரலாறுகள் இந்தப் படத்தினைப் பார்க்கும் அனுபவத்தை உயர்த்துகிறது.
அம்மாதிரியான ஒரு டிராகன் மேல் ஏறி ஹாரி போட்டரும் நண்பர்களும் க்ரிங்கோட்ஸ் வங்கியிலிருந்து தப்பிச் செல்கிறார்கள். பல நாட்கள் கட்டிப் போடப்பட்ட டிராகன் க்ரிங்கோட்ஸ் வங்கியிலிருந்து தப்பிக்கும்போது, தடுமாறி தடுமாறி பறப்பது. நல்ல யதார்த்தமான கிராஃபிக்ஸ் (நகைமுரண்).
அது போல உயிர் உறிஞ்சிகள், அரை அரக்கர்கள், ராட்சத சிலந்திகள், கொலைகார மரங்கள், மணி சத்தத்திற்கு பயப்படும் டிராகன்கள் என்று பல விசித்திரங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு பின்னணியும், பொருளும் இருக்கிறது.
இந்த சீரிஸ்க்கு பொருத்தமான Grand Finaleஆக அமைந்ததுதான் மரண தேவனோடு மூன்று சகோதரர்களின் கதை. முதல் நாவலில் வரும் ‘கண்ணுக்குத் தெரியாததாக’ ஆக்கும் மாந்த்ரீக போர்வை, வேதாந்தியின் ரத்தினக்கல் போன்றவைகளோடு ஒரு ஆகப்பெரிய மந்திரக்கோலை (Elderly Wand) சேர்த்து மரண தேவனின் மூன்று புனிதப் பரிசுகள் ஆகிறது. இவற்றை பரிசுகளாகப் பெறும் மூன்று சகோதரர்களும் அவர்களின் சந்ததிகளும் என்று ஹாரி போட்டருக்கு ஒரு தொன்ம வரலாற்றை சேர்க்கிறார். இந்தத் தொடருக்கு இதை விட பிரமாதமான முடிவு அமையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
டிவிடி, ப்ளூ-ரே, ஸ்ட்ரீமிங், திருட்டு டோரண்ட் எல்லாவற்றையும் தாண்டி தியேட்டருக்கு மக்களை இழுக்க பயன்படுத்தப்படும் உத்தியாக 3D அமைந்து விட்டது. மற்றபடி ஹாரி போட்டரை முப்பரிமாணத்தில் பார்ப்பதில் பெரிய உவப்பேதும் இல்லை. அடுத்து பேட்மேன் (நோலனின் இயக்கத்தில்) வேறு 3Dயில் வருகிராராம்.
பத்து வருடங்களாக ஹாரி போட்டர் படங்களில் நடிக்கும் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் க்ரிண்ட், எம்மா வாட்ஸன், மூக்கே இல்லாத ரால்ஃப் ஃபீன்ஸ் போன்றோர் இனி வேறு புதிய பாத்திரங்களில் வரும்போது எப்படி இருக்கப் போகிறதோ… கிட்டத்தட்ட மொத்த காஸ்டிங்கையுமே 8 படங்களாக எந்த மாற்றமுமின்றி பாதுகாத்து வந்தது வியப்புதான். டம்பிள்டோராக நடித்த ஹாரிஸ் மட்டும் 2 படங்களுக்கு அப்புறமாக இயற்கை எய்திவிட, மைக்கேல் கேம்பான் பிந்திய 6 படங்களிலும் நடித்து கொடுத்திருக்கிறார். ரௌலிங் சொல்வது போல டம்பிள்டோர் பாத்திரம் கிட்டத்தட்ட கதாசிரியரின் பதிப்பாக கதையில் உலவுகிறது. கதை வளர வளர டம்பிள்டோர் பாத்திரமும் படிப்படியாக புதிய பரினாமங்கள் காட்டி இறுதியில் கிங்க்ஸ் கிராஸ் சந்திப்பில் ஹாரியின் ஆவியை தடுத்தாட்க் கொண்டு அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.
இந்தக் கதைத் தொடரின் சிறப்பு என்னவென்றால் ஹாரி போட்டரும், பின்னாளில் லார்ட் வோல்டிமோர்டாக அறியப்பட்ட டாம் ரிட்டிலும் ஏதோவொரு இழையினால் பிணைக்கப்பட்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த உத்தி கதையை வளர்த்துவதில் கதாசிரியருக்கு நிறைய உதவி செய்கிறது. இந்தப் படத்திலும் ஸ்நேப் கொல்லப்படும்போது ஹாரி போட்டர் கேப்டன் விஜய்காந்த் போல சரியான சமயத்தில் ஆஜராகி ஸ்நேப்பின் கண்ணீர் துளியை சேகரித்துக் கொள்கிறார்.
பத்தொன்பது வருடங்களுக்கு பிறகான ஹாரி போட்டர், ஹெர்மியோனி டிராகோவெல்லாம் ஸ்கூல் டிராமாக்களில் ஓல்டு கெட்டப் போட்ட சிறுவர்கள் போலவே இருக்கிறார்கள். இங்கே கொஞ்சம் கிராஃபிக்ஸ் செய்திருக்கலாம். அல்லது பத்தொன்பதை பத்து வருடமாகவாவது குறைத்திருக்கலாம்.
அப்பொழுதிலிருந்து அந்த அதிசய அந்நிய உலகம் அமைதியாக இருக்கிறதாம். அதுதான் சோகமாக இருக்கிறது. அந்த உடைந்த மந்திரக்கோலைப் பற்றியோ, காட்டிலே தொலைந்த இரத்தினக் கல்லைப் பற்றியோ யாராவது தெரிந்து வந்து சொல்லக் கூடாதா?
7
ராவணனும் ஜீவனும்
அதிநாயக படங்கள் என்றால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது கிறிஸ்டஃபர் ரீவ் ( Christopher Reeve) நடித்த ‘சூப்பர் மேன்’தான். பேட்மேன், அயர்ன் மேன், ஃபன்டாஸ்டிக் ஃபோர் போன்ற பல அதிநாயகர்களும் இந்த பிரபஞ்சத்தை தீய சக்திகளிடமிருந்து அயராது பாதுகாத்துக் கொண்டிருக்க, இந்திய அதிநாயகனாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறது G.One. ‘ஜீவனை’ சற்றே ஸ்டைலிஷாக சுருக்கி பெயரிட்டிருக்கிறார்கள். Good One என்றும் சொல்லலாமாம்.
நம்ம சிட்டி ரோபோ போல ரெண்டு யூனிட் எலக்ட்ரிசிட்டி உண்டு, நொடிகளில் புத்தகங்களை உள்வாங்கி, கழுத்தை முழு வட்டமாக சுற்றிக்காட்டும் எளிமையான ரோபோ இல்லை. நீல மின்சாரத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ கேம் சூப்பர் ஹீரோ. நீலக் கண்களோடு, ரேடியேஷன் ப்ரொஜெக்டர், பவர் பெல்ட், ரிசனன்ஸ் ட்ரான்ஸ்மிட்டர் என்று ஏகத்துக்கு டெக்னிகல் ஆழத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள். என்ன செய்வார் இந்த G.One? பவர் ஷூக்களினால் அப்படியே பறக்க முடியும்… அந்தரத்தில் நிற்க முடியும்… ஆக்டிவ் மேட்ரிக் ஃபோர்ஸினால் அதிரடியாக சண்டை போட முடியும்… உலகின் எந்த மூலைக்கும் வழி கண்டுபிடிக்க முடியும்… கண்ணிமைப்பதற்குள் பறந்து விடுவார்… அதாவது அந்தர்தியானமாகி விடுவார்… எதிர்காலத்தை உணர்ந்து சொல்ல முடியும்… இப்படி எத்தனையோ சக்திகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இதயம் உண்டு (HART Hertz Advanced Resonance Transmitter). அதனால்தான் அது Good One (G.One) ஆக அறியப்படுகிறது.
ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல எதிரியாக ராவணன் உருவெடுக்கிறான், Ra.One (Random Access One) என்பதின் சுருக்கமாம். இன்னொரு கோணமாக ‘ராவண்’னின் உச்சரிப்பையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஜீவனை விட ராவண் எந்த வகையில் மாறுபட்டிருக்கிறான் என்ற விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
ராவண்ணும், ஜீவன்னும் வீடியோ கேம்களிலிருந்து Cyber Punk ஸ்டைலில் நிகழ் உலகிற்கு வந்துவிடுகிறார்கள் போல. இந்த வீடியோ கேம்கள் உருவாக்கும் நிபுணர், ஷேகர் சுப்ரமணியனாக (ஆம். தமிழ் பாத்திரம்தான்) ஷாருக் கான் நடிக்க, (அவரேதான் ஜீவனும்) அவருடைய திறமையை தவறான பாதையில் உபயோகிக்க திட்டம் போடும் ராவணனாக அர்ஜுன் ராம்பால். தமிழ் சுப்ரமணியத்திற்கு பஞ்சாபி மனைவியாக சோனியா பாத்திரத்தில் கரீனா கபூர்.
ஒரு nerdy geeky dorky-ஆக இருக்கும் ஷேகருக்கு தன் மகனை கவர முடியவில்லை. சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறி அவனை கவர திட்டம் போடுகிறார். அதன் விளைவாக என்னவெல்லாம் நடக்கிறது என்பதே கதை என்று இணையத்தில் பல தளங்களின் மூலம் அறிய முடிகிறது.
ஷாருக்கானை துடிப்பான இளைஞனாக Fauji, சர்க்கஸ் போன்ற டிவித் தொடர்களில் பார்த்த போது மிகவும் பிடித்திருந்தது. ஆனால் சினிமாவில் அவரிடமிருந்த நடிகர் மறைந்து போய் பெரிய ஸ்டாராக மட்டுமே எஞ்சியிருக்கிறார். இன்றும் ஆமீர்கானை புதுசாக திரையில் பார்க்க முடிகிறது. ஷாருக் சற்று சலிப்படையத்தான் வைக்கிறார். அவருடைய டிவி பேட்டிகளில், விழாக்களில், கேம் ஷோக்களில் தெறிக்கும் புத்திசாலித்தனமான நகைச்சுவை மிகவும் பிடிக்கும்.
கிட்டத்தட்ட 4 வருடங்களாக ரா.ஒன்னை திரைக்கு கொண்டு வர அயராது பாடுபடுகிறார். மெலிந்து போய், வயது கூடிப் போன உருவத்தோடு அவர் டீவியில் வரும்போது ‘இந்த தோற்றத்தை சரிசெய்ய எவ்வளவு நாள் கிராஃபிக்ஸ் செய்யனுமோ’ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. கூடவே வீடியோ கேம்கள், ப்ரமோக்கள் என்று பல முனைகளிலிருந்தும் இந்தப் படத்தை பிரும்மாண்டமாக கட்டி எழுப்புகிறார்கள். ஹீரோவின் தமிழ் பின்புலம், தமிழ் டப்பிங், ரஜினியின் தோற்றம் என்று தமிழ் ஆடியன்ஸுக்கு நெருக்கமானதாக இருக்கும் என நினைக்கிறேன். படத்தைப் பற்றி பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்த தமிழ் / பஞ்சாபி திருமணக் தம்பதி இந்தி சினிமாவின் எவர்க்ரீன் காமெடிகளில் ஒன்று. அதிலும் தமிழ் என்றால் ‘அய்யோ…’ (நன்றி: மெஹ்மூத்) எனக் கூவிக் கொண்டு ஒரு ஐயர் பையன் / பொண்ணைக் காட்டுவார்கள். அபர்ணாசென் படங்களில் தவறாது ஒரு தமிழ் பாத்திரம் வந்து விடும். இந்தப் படத்திலாவது விதிவிலக்காக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி இருக்காது என்று உள்ளுணர்வு சொல்கிறது.
போஸ்டர், மற்றும் ட்ரெய்லர்களின் இன்ஸ்பிரேஷன் பற்றி இப்பொழுதே ஆங்காங்கே துப்பறிந்து எழுதிவிட்டார்கள்.
அதிலும் ‘தில்தாரா’ பாடலில் வரும் ஒரு சீக்வென்ஸ் அப்படியே ஒரு ஜெர்மானிய விளம்பரத்திலிருந்து (அர்ஜெண்டைன் ஃபவுண்டேஷன் ஆஃப் த ஹியரிங் இம்பேர்ட்) சுட்டதாம்.
படம் வெளிவருதற்குள் இன்னும் என்னவெல்லாம் ‘உருவல்’களை கண்டுபிடிக்கப் போகிறார்களோ.
நோலனுக்கு சவால் விடும் அளவுக்கு அதிநாயகப் படமாக வராவிட்டாலும், சராசரிக்கு மேலான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று குறித்து வைத்திருக்கிறேன்
8
சுரையா
‘The Stoning of Soraya‘ படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இனி பார்ப்பதாக இருந்தால் இந்த கட்டுரையை தவிர்த்துவிடவும். வெகு காலம் முன்பு பார்த்த படம். எங்கோ அடி ஆழத்திலிருந்து முகிழ்த்துக் கொண்டு வரும் நினைவுகள் இன்று வார்த்தை வடிவில் வந்து விழுகின்றன. முக்காலும் நினைவிலிருந்து எழுதுகிறேன். மீதி கால் விக்கிபீடியா உதவியுடன்.
‘சுரையாவை கல்லால் அடித்தல்’ போன்ற படங்கள் ஒருவகை டாக்குமெண்ட்ரித்தனம் கொண்டது. ஆனால் இது டாக்குமெண்ட்ரி அல்ல. கொஞ்சம் தரவுகள், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் மிகைபடுத்துதல் எல்லாம் கலந்துதான் இப்படிப்பட்ட படங்கள் உருவாகின்றன. இதன் அழகியல் சற்றே மாறுபட்டது. இராணிய கிராமத்தை, அதன் மக்களை, அவர்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினாலும், அதன் உள்ளுறையாக பெண்ணடிமைத்தனத்தை வெளிப்படையாக அதன் குரூரத்துடன் முன் வைக்கிறது.
‘குஹ்ப்பாயே’ (Kuhpayeh) என்பது இராணில், சுமார் ஐயாயிரம் பேர்கள் குடியிருக்கும் சின்னதொரு கிராமம். வழியோடு போகும் பத்திரிகையாளர் ஒருவரின் கார் மக்கர் பண்ண அந்த ஊரிலிருக்கும் மெக்கானிக்கிடம் உதவி வேண்டுகிறார். கார் ரிப்பேர் ஆகும் கால இடவெளியில் அந்த பத்திரிகையாளரை ‘சாரா’ (Zahra) என்னும் பெண்மணி சந்திக்கிறார். அவரது உத்தியோகம் பற்றி தெரிந்ததும், சில காலம் முன் தங்கள் ஊரில் நிகழ்ந்த ஒரு கொடுங்கொலையைப் பற்றி சொல்கிறார். பத்திரிகையாளரும் சாரா சொன்ன கதையை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்கிறார். அதுதான் ‘சுரையாவை கல்லால் அடித்தல்’.
சாராவின் மருமகளான சுரையா ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக, கணவன், நான்கு குழந்தைகள் என்று பெரும்பாலான தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இளம் தாய். கணவனின் ஆதிக்க போக்கும், ஆண் பிள்ளைகள் மேல் பிரத்யேக பாசம் காட்டுவதும், அவளைச் சீண்டினாலும் அதை தன் வாழ்க்கையின் பகுதியாக எண்ணி ஏற்றுக் கொள்கிறாள்.
சுரையாவின் கணவனான அலிக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிக்கிறது. பதினாலு வயதேயான ஒரு இளம் பெண்ணை மணக்கும் வாய்ப்பு. அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால், சுரையாவின் விவாகரத்து இருந்தால்தான் அலியால் அந்த அதிர்ஷ்டத்தை அடைய முடியும். அதுவும் தனது பையன்களை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்புகிறான். போயும் போயும் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய?
சுரையாவிற்கு இது வாழ்க்கை பிரச்னையாகிறது. விவாகரத்து செய்துவிட்டு அந்த கிராமத்தில் என்ன பிழைப்பது? அதுவும் பெண் பிள்ளைகளை மட்டும் வைத்துக் கொண்டு? பாசம், சுதந்திரம், விசுவாசம் எல்லாம் தாண்டி அவளுக்கு அவளுடைய வாழ்க்கையின் பாதுகாப்பு பெரிய பிரச்னையாகிறது. அவள் நினைத்தபடியே ஊர் தலைவரான முல்லாவும் அலியின் சார்பாக அவளிடம் பேரம் பேசுகிறார். விவாகரத்திற்கு ஒத்துக் கொண்டால் நல்ல எதிர்காலமும் தன்னுடைய ‘பிரத்யேக’ பாதுகாப்பும் உத்தரவாதம் என்று சுரையாவிற்கு வலை விரிக்கிறார்.
சுரையா ஒரே முடிவாக இருக்கிறாள். வேண்டாத கணவனே என்றாலும், எக்காரணம் கொண்டு ‘குடும்பம்’ அளிக்கும் பாதுகாப்பை அவள் விட்டுத்தர முடியாது என்கிறாள். மனைவியை இழந்த வயதான மெக்கானிக்கின் மகனை பராமரித்தும், அவருக்கான சமையல் செய்து கொடுத்தும், சிற்சில சேவைகளின் மூலம் சிறிது பணம் ஈட்டி தன் காலில் நிற்க முயற்சிக்கிறாள். தனக்கு விடுதலையும் தராது, தன்னை முழுவதும் சார்ந்திருக்காமல் அடம் பிடிக்கும் மனைவியை பழிவாங்க அலிக்கு நல்ல வாய்ப்பு வாய்க்கிறது.
ஒருமுறை வேலை செய்த களைப்பில் மெக்கானிக்கின் வீட்டில் கட்டிலில் சற்றே கண்ணயர்கிறாள் சுரையா. பின்னர் அதையே அவர்களுக்கிடையான உரையாடலில் குறிப்பிடுகிறாள். அந்த உரையாடலை கேட்க நேரிடும் அலி, அதை அப்படியே திரித்து தனது மனைவியின் நடத்தை மேல் சந்தேகம் இருப்பதாக முல்லாவிடம் புகார் செய்கிறான்.
இராணிய சட்டப்படி ஒரு பெண்ணின் நடத்தை மேல் சந்தேகம் என்பது மிகப் பெரும் குற்றசாட்டு. முதலில் உடன்பட மறுக்கும் முல்லா, அலியின் குற்றசாட்டிற்கு சாட்சி தேவை என்கிறார். கணவனை இழந்த சாராவை ‘பாதுகாப்பாக’ வைத்திருக்கும் ஊர்த் தலைவருக்கு அலியின் போக்கு பிடிக்கவில்லை. சாரா அவரிடம் சுரையாவிற்காக மன்றாடுகிறாள். ஆனால் முல்லா மற்றும் அலியின் திட்டப்படி யாரும் சுரையாவிற்கு எதிராக சாட்சி சொல்லிவிட்டால் அவரால் ஒன்றும் செய்ய முடியஅது. மனைவி இல்லாமல் தனியாக குழந்தையை வளர்க்கும் மெக்கானிக்கிடம் பேரம் பேசுகிறார்கள். ‘என் கட்டிலில் சுரையா உறங்கினாள்’ என்று அவர் பொதுவில் ஒத்துக் கொண்டால், சுரையாவின் மேல் நடத்தை தவறியவள் குற்றத்தை ருசுபடுத்திவிடலாம்.
அலி மற்றும் முல்லாவின் ஏற்பாட்டின்படி எலலம் நடக்க சுரையாவின் தகப்பனாருக்கும் செய்தி சொல்லி விடப்படுகிறது. எல்லாருக்கும் முன்பாக சுரையாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவளுக்கு ‘அந்த’ தண்டனையும் வழஙகப் படுகின்றது. கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று.
இதற்கப்புறம் ஒரு இருபது நிமிடத்திற்கு சுரையாவை ‘அந்த’ தண்டனைக்கு எப்படி தயார்படுத்துகிறார்கள், மற்றும் எப்படி அந்த தண்டனையை நிறவேற்றுகிறார்கள் என்று விலாவாரியாக காட்சிபடுத்துகிறார்கள்.
அரசாஙக் பாதுகாவலர்களாக இருவர் வந்து சேர ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி சுரையாவை கட்டி இழுத்துக் கொண்டு ஊர் நடுவே தண்டனை நிறவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு வருகிறார்கள். இடுப்பு ஆழத்திற்கு குழி வெட்டப்படு அதில் அவள் இறக்கி விடப்பட்டு குழி மூடப்படுகிறது. சுற்றிலும் அரை வட்டத்திற்கு மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் எல்லாரும் ஒன்று கூடி நிற்கிறார்கள்.
அப்பொழுது ஊர் ஊராக சென்று வித்தைக் காட்டி பிழைக்கும் குழு ஒன்றும் அந்த ஊரிற்கு வருகிறது. வித்தைக் காட்டுபவர் உரக்க விளமபரத்தை கூவியவாறே வருகிறவர் இந்த தண்டனை நிறைவேற்றும் காட்சியைக் கண்டு அமைதியாகிவிடுகிறார். அந்த வித்தையை விட இந்த வித்தை இன்னும் சுவாரசியம் என்று நினைத்தாரோ என்னவோ…
முதல் அடியாக சுரையாவின் தகப்பனார் ஒரு கல்லெடுத்து வீசுகிறார். அது சுரையா மேல் படாமல் குறி தப்பிவிடுகிறது. உடனே சாரா முல்லாவிடமும், ஊர்த் தலைவரிடமும் முறையிடுகிறாள். குறி தப்பியது தெய்வ சமிக்ஞையாகவே பார்க்க வேண்டும். சுரையாவை தண்டிப்பதை கடவுள் விரும்பவில்லை என்று சொல்கிறாள். ஆனால் அடுத்த வாய்ப்பில் அப்பா சரியாக சுரையாவின் மேல் கல்லெறிந்து விடுகிறார். தொடர்ந்து தனக்கு வசப்படாதவளை முல்லாவும், தன்னை புறக்கணித்து சிறுமைபடுத்தியவளை அலியும் கல்லால் அடிக்கிறார்கள். சுரையாவின் பையன்கள் கையிலும் கற்களைக் கொடுத்து எறியச் செய்கிறார்கள். அப்பாவின் அடுத்த பதிப்பாக இருக்கும் மூத்த மகன் உற்சாகமாக அம்மாவை கல்லால் அடிக்கிறான். பிறகு குழந்தை மனம் உறுத்த மனம் கலங்கி அழுகிறான்.
ஒவ்வொரு கல்லும் நம் மேல் விழுகிறது. கொஞ்ச நேரத்தில் சடசடவென பல கற்கள் நம்மேல் வந்து விழுந்தவண்ணம் இருக்கின்றன. அவள் இறக்கும்வரை. சுரையாவோடு நாமும் சிறுகச் சிறுக வலியால் துடித்தபடிக்கு இறக்கிறோம்.
இப்பொழுது கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. அந்த பத்திரிகையாளரை சாரா சந்தித்துப் பேசுவது தெரியவரும் முல்லாவும் ஊர்க்காரர்களும் மெக்கானிக்கின் கடைக்கு வருகிறார்கள். பத்திரிகையாளர் தப்பித்தாரா? சுரையாவின் கதை எப்படி வெளி உலகிற்கு தெரிய வந்தது? திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இக்கேள்விகளுக்கு பதில் இருக்கின்றது.
சுரையாவின் நடு நெற்றியில் விழும் முதல் கல் பல காலத்திற்கு என் தலையில் விழுந்த வண்ணம் இருந்தது. இந்தப் படத்தைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. ஆனால் இந்தப் படம் வெளிப்படுத்தும் தாக்கத்தை வார்த்தைகளால் மட்டும் சொல்லிவிட முடியுமா என்ன?
9
அமைதியான நதி
நான் எதிர்கொண்ட நதிகள் மிக சொற்பம். ஆனால் பல நதிகளை அவை உருவாக்கிச் சென்ற வரலாற்றுக்காக தெரிந்து வைத்திருக்கிறேன். தெற்கு பக்கமாக வளைந்து ஓடும் ‘செயின்ட் ஜோசஃப்’ நதியையோ, லிங்கன் மெமோரியலுக்கு எதிரில், கரையோரமாக விச்ராந்தியாக இருந்த வெள்ளைக்கார தம்பதியர் ரசித்த பொடோமோக் நதியையோ, அவற்றைப் பார்க்கும்போதெல்லாம், இது எந்த குண்டோதரனின் தாகத்தை தீர்க்க ஓடிவந்திருக்கும் என்றுத் தோன்றும். எந்த குளோவி(Clovis) தன் மூத்தோரைக் கடைத்தேற்ற விண்ணிலிருந்து பிரயாசைப்பட்டு பெற்று தந்த நதியோ.
நிலத்தை கைக்கொள்ள முடிந்த் அளவுக்கு மனிதனால் நதி மேல் ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை. நிலத்தை இரண்டாக வெட்டி கூறு போடும்போதும் சரி, அதை மீண்டும் இணைக்க முற்படும்போதும் சரி, அதற்கு மௌன சாட்சியாக நதி ஓடிக் கொண்டே இருக்கிறது. அத்தனை வேதனைகளும், நினைவுகளும், ஆற்றாமைகளும் நதியின் போக்கில் அடித்து செல்லப்பட்டாலும், மீண்டும் வேறு வழியில் அவற்றை கொண்டு வந்த் கொட்டிவிட்டுப் போகிறது இந்த ந்தி.
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாபில் நதியோரமாக ஒரு சின்னஞ்சிறு கிராமம் ‘சர்க்கி’. 1947ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது சர்க்கி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டது. அங்கிருந்த பெரும்பான்மையான சீக்கிய குடும்பங்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்கின்றனர். தேவையான சொத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு புலம்பெயரும் சீக்கிய குடும்பங்கள், தங்கள் வீடுகளை, நிலங்களை, விவசாயத்தை, ஆடு மாடுகளை இவற்றோடு தங்கள் வீட்டுப் பெண்களையும் அங்கேயே ஒழித்துக்கட்டி விட்டு இந்தியாவிற்கு புலம்பெயர்கிறார்கள்.
துப்பாக்கியால் தனது வீட்டுப் பெண்களில் 22 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பித்து செல்கிறார் ஒரு சீக்கியர். இன்னொருவர் தன் வீட்டுப் பெண்களை வரிசையாக அந்த ஊர் கிணற்றில் குதிக்க வைத்து அவர்களை ‘காப்பாற்றும்’ பொறுப்பை நிவர்த்தி செய்து கொள்கிறார். எல்லோராலும் தப்பித்து இந்தியாவிற்கு போக முடியாத சூழல். ஆனால் எக்காரணம் கொண்டும் தங்கள் பெண்களை அந்த ஊரில் உயிரோடு விட்டுவிடக் கூடாது என்பது அவர்கள் நோக்கம். அப்படி அவர்கள் உயிரோடு அந்தப் பெண்களை விட்டுவிட்டால் என்னாகும்? அவர்களை காஃபீர்கள் என்று குற்றஞ்சாட்டி கொலை செய்ய அதே ஊரில் மற்றொரு கூட்டம் இருக்கிறது. நேரடியாக கிணற்றில் குதித்து சாகிறாயா இல்லை முரட்டு கும்பலால் பலாத்காரபடுத்தப்பட்டு, சித்ரவதைக்குள்ளாகி சாகிறாயா என்பதுதான் அந்தப் பெண்கள் முன்னால் வைக்கப்பட்ட கேள்வி.
அந்த கலவரத்துக்கு அப்புறம் நதி பலகாலத்திற்கு ஓடிக் கொண்டேயிருக்கிறது. எப்போதும் சிரித்தபடி வளைய வரும் ஆயிஷாவிற்கோ, அல்லது அந்தக் கடைதெருவில் சவரக்கடை வைத்திருப்பவ்ருக்கோ, அவருடைய நித்திய வாடிக்கையாளர்களுக்கோ, ஆயிஷாவின் அண்டைவீட்டுக்காரிக்கோ சர்க்கி கிராமவாழ்க்கை சுபிட்சமாகத்தான் இருக்கிறது. ஆயிஷாவிற்கு அவளுடைய இறந்தக் கணவனின் பென்ஷனும், கனவுக்கண்களோடு ஊரைச் சுற்றிவரும் அவளுடைய மகன் சையதும், அவன் மனதுக்கு உகந்த சுபைதாவை அவனோடு சேர்த்து வைப்பதும், அவளுடைய தையல் தொழிலும், குழந்தைகளுக்கு குர்-ஆன் சொல்லிக் கொடுப்பதும்தான் அவள் உலகம். அவள் பார்த்து பயப்படுவது அந்த ஊர் கிணற்றை மட்டும்தான். அவள் தந்தையின் உத்தரவை மீறித்தான் அவள் அந்த கிணற்றிலிருந்து உயிரோடு தப்பி முஸ்லீம் கூட்டத்தினரிடம் அடைக்கலம் புகுந்தாள். அங்கேதான் அவள் கணவனையும், மாற்று மார்க்கத்தையும், அமைதியான வாழ்க்கையையும், அன்பு மகனையும் பெற்றாள். அதுதான் நதி அவ்வளவு காலம் ஓடிவிட்டதே. இனி அவளுக்கு என்ன பிரச்னை?
1979ல் பூட்டோ தூக்கிலிடப்பட, ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக அறிவிக்கும் காலகட்டம். இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்படுகிறது. நதியின் போக்கு திசை மாறுகிறது இப்பொழுது.
இந்தியாவின் லாகூரிலிருந்து புலம்பெயர்ந்த இரு ஆக்ரோஷ இளைஞர்கள் சர்க்கி கிராமத்திற்கு வருகின்றார்கள். ‘எதற்காக பாகிஸ்தான் பெற்றோம்? அதனால் என்ன சாதித்தோம்’ என்று பொங்கி எழும் அவர்கள் அந்த கிராமத்தின் இளைஞர்களின் கவன்த்தை கவர்கிறார்கள். இந்திய-பாகிஸ்தான் போர்கள், கிழக்கு பாகிஸ்தான் சுதந்திர போராட்டம் என்று பல புண்களை சுமந்துகொண்டிருந்த பாகிஸ்தானுக்கு ஜியாவின் இராணுவப் பிரகடனம் புதிய வெளிச்சத்தை கொடுக்கிறது.
ஆயிஷாவின் மகனான சையதிற்கு அந்த சின்ன கிராமம் பெரும் சிறையாக இருக்கிறது. அவனுடைய கனவுலகத்தில் புல்லாங்குழல் இசையும், பள்ளி மாணவி சுபைதாவின் காதலும், ஆயிஷாவின் கதகதப்பும் இருந்தாலும் அவனுடைய தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய தோழர்களின் சித்தாந்தங்கள் அவனுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. அவர்கள் எல்லாம் கூட்டமாக சென்று சுபைதா படிக்கும் பெண்கள் பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டுகிறார்கள். ‘நம் வீட்டுப் பெண்களை நாம்தானே பாதுகாக்க வேண்டும்?’ காதலோடு அவனை தனிமையில் சந்திக்க வரும் சுபைதாவைப் பார்க்கும்போது எரிச்சல் வருகிறது அவனுக்கு. ‘உனக்கு வெட்கமாக இல்லை? இதுதான் ஒரு பெண் நடந்து கொள்ளும் முறையா?’ என்று ஏசுகிறான்.
இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு நடுவே இணக்கமான உறவை ஏற்படுத்தும் வண்ணம், சீக்கியர்கள் தங்கள் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்ல பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. சர்க்கி கிராமத்தில் பெரும் சீக்கியர் கூட்டம் வந்திறங்குகிறது. சொந்த மண்ணும், அதன் மணமும் இத்தனை பிடிப்பானதா? ‘அதுதான் நான் வணங்கிய குருத்வாரா… இதுதான் நான் விளையாடிய மைதானம்’ என்று அவர்கள் தங்கள் பூர்வாசிரமத்தை தேடிப் பார்க்கிறார்கள். 47ல் வெளியேறிய சீக்கியர்களும், அதற்கு பிறகு அங்கே குடியேறிய இஸ்லாமியர்களும் கடைத்தெருவில் சந்திக்கும்போது நதி சுழித்து சுழலோடு ஓடுகிறது. ‘அந்தக் கலவரத்தில் எஞ்சிய பெண்கள் யாரும் இருக்கிறார்களா இன்னமும்’ என்ற கேள்வியோடு ஜஸ்வந்த் கடைத்தெருவிற்கு வருகிறார். ஜஸ்வந்த்தின் நண்பர்கள் தீர்மானமாக சொல்கிறார்கள் ‘நம் பெண்கள் யாரும் அப்படி உயிருடன் இருக்க மாட்டார்கள். அவர்கள் மானஸ்தர்கள்’. இஸ்லாமியர்கள் ஆக்ரோஷமாக சொல்கிறார்கள் ‘எங்கள் பெண்கள் எல்லாரும் முசல்மான்கள். இப்படிக் கேட்பது அவர்களுடைய இறை நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவது’.
தபால் ஊழியர் ஆமீனுக்கு பொறுப்பதில்லை. அவர் தன் பூர்வாசிரம சகோதரி ‘மீனா’வை அந்தக் கலவரத்தில் தொலைத்தவர். வீரு அந்தக் கலவரத்தில் தப்பித்து ஆயிஷாவாக அந்த ஊரில் இருப்பது அவருக்கு ஒருவகையில் பிடிப்பாகவும், இன்னொரு வகையில் உறுத்தலாகவும் இருக்கிறது. ஜஸ்வந்த்தை தனியாக சந்திக்கும் ஆமீன், ‘எவள் கிணற்றில் தண்ணீர் எடுக்க வருவதில்லையோ அவள்தான் வீரு… அவளுக்காக அண்டை வீட்டார்கள்தான் தண்ணீர் சேந்திக் கொடுக்கிறார்கள்’ என்று ரகசியமாக ரகசியத்தை போட்டுடைக்கிறார்.
ஜஸ்வந்த் ஆயிஷாவை அவள் வீட்டில் சந்தித்து ‘என் சகோதரி வீரு எங்கே? அப்பா இறக்கும் தருவாயில் இருக்கிறார்… அவளை ஒருமுறைப் பார்த்தால் நிம்மதியாக கண்ணை மூடுவார்’ என்கிறார். சீக்கியரை தன் வீட்டில் பார்க்க நேரிடும் சையதுவிற்கு அதிர்ச்சி. அப்பொழுதுதான் அம்மாவின் ரிஷிமூலம் அவனுக்கு தெரிய வருகிறது. தன் நண்பர்களிடம் உண்மையச் சொல்கிறான். என் அம்மா மாற்று மதத்தவளாக இருந்தாலும் அவள் முஸ்லீம்தான் என்கிறான். அவனை ஏற்றுக் கொள்ள எந்த தயக்கமும் இல்லாத நண்பர்களுக்கு அவன் அம்மாவை ஏற்றுக் கொள்ள அத்தாட்சி தேவைப்படுகிறது. என்ன் அத்தாட்சி?
ஆயிஷாவின் நம்பிக்கைகளில் ஒன்று… மாற்று மதத்தவருக்கும் சொர்க்கத்தில் இடம் உண்டு என்பது. இதை அவள் குர்-ஆன் வகுப்புகளில் குழந்தைகளுக்கு சொல்ல, அதைக் கேட்க்க நேரிடும் சையதின் நண்பர்களுக்கு உவப்பாக இல்லை. இதனால்தான் அவள் இனிப்புகள் செய்து குருதுவாராவிற்கு அனுப்புகிறாளா? அவளைத் தேடி சீக்கிய சகோதரர் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், அதுவரை அமைதியாக இருந்த ஆயிஷாவின் உலகம் சட்டென மாறிவிடுகிறது. குழந்தைகள் குர்-ஆன் வகுப்புக்கு வருவதில்லை. அண்டை அயலார் அவளுடன் உரையாடுவதில்லை. கிணற்றிலிருந்து யாரும் நீர் சேந்திக் கொண்டு வருவதில்லை. அவளைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த நதி வறண்டு போகிறது.
சையது அவளுக்கு ஒரு உபாயம் சொல்கிறான். ‘ஊரறிய இஸ்லாம்தான் என் மதம் என்று ஒரு முறை பிரகடனபடுத்து அம்மா… அது போதும்’ ஆயிஷா பதில் சொல்வதில்லை. மறுநாள் தண்ணீர் சேந்த கிணற்றுக்கு போகும் ஆயிஷாவை ஜஸ்வந்த் எதிர்கொள்கிறார். ‘அப்பாவை பார்க்க வா’ என்கிறார்.
‘அப்பா எப்படி என்னைப் பார்ப்பார்? என்னத்தான் சாக சொல்லிவிட்டாரே… அப்பொழுது செத்திருந்தால் எனக்கு சீக்கிய சொர்க்கம் கிடைத்திருக்குமோ என்னவோ… இப்பொழுது ஒரு முஸ்லீமாக செத்துப் போவேன். எனக்கு எந்த சொர்க்கம் விதிக்கப்பட்டிருக்கிறதோ… ‘ அவள் அடக்கி வைத்திருந்த கேள்வியை ஜஸ்வந்த்திடம் கேட்க, நதியின் சுருங்கிய வடிவமாக அந்தக் கிணறு அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
சர்க்கி கிராமத்து தலைவர் சௌத்ரி, கடைத்தெருவாசிகள், தபால்காரர் ஆமீன், அவருடைய மனைவி, சர்க்கிக்கு புதியதாக வரும் இரு இளைஞர்கள், ஆயிஷாவின் மகன் சையது, சையதுவின் காதலி சுபைதா, ஜஸ்வந்த், ஒரே ஒரு காட்சியில் தோன்றும் ஜஸ்வந்தின் அப்பா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கிறது கதையில். எல்லோருடைய நியாயமும் ஆயிஷாவின் முடிவை பிரதிபலிக்கிறது. அந்த நியாயத்திற்காகத்தான் அவள் முப்பது வருடங்கள் காத்திருந்தாளோ. முடிவில் நதியோடு ஆயிஷாவின் நினைவுகள் எல்லாம் போகிறது.
2002ல் ராவல்பிண்டியில் சுபைதா தன்னுடைய கழுத்தில் ஆயிஷாவின் சங்கிலியை அணிந்து, அவளை நினைவுகூர்கிறாள். சையது பெரும் முஸ்லீம் தலைவராகி ‘பாகிஸ்தான் ஒரு இஸ்லாம நாடாக எப்படி உருவானது’ என்று டிவியில் உரைநிகழ்த்துகிறான்.
நதி இப்பொழுதும் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நான் பார்த்த transworld திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த படமாக காமோஷி பாணியைச் சொல்லலாம். இதன் வரலாறு எனக்கு பரிச்சயம் என்பதால் என்னால் இயக்குநர் சபீதா சுமரோடு சேர்ந்து பயணிக்க முடிந்தது. லெமன் ட்ரீ போன்ற படங்களுக்கு இணையான படம் எனச் சொல்லலாம்.
திரைப்படம்:- காமோஷி பாணி
மொழி:- பஞ்சாபி, உருது
தயாரிப்பு:- ஃப்ரெஞ்சு ஜெர்மன் கூட்டுத் தயாரிப்பு
இயக்கம்:- சபீதா சுமர்
10
ஆறு கதைகள்
1. டெல் அவிவ் பல்கலையில் Humanitarian Studiesல் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் ‘சசா’(zaza)-விற்கு ஒரு சின்ன ப்ரச்னை. அவனுடைய பழமைவாத யூத குடும்ப சொந்தங்கள் அவனை திருமணம் செய்துகொள்ள நிர்பந்த்திக்கிறார்கள். அம்மா, அப்பா, அத்தை, மாமா என்று அத்தனை பேருக்கும் ‘முப்பது வயதிற்கு மேலாகியும் ஏன் இவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான்’ என்று நமைச்சலாக இருக்கிறது. The Late marriage படத்தின் தொடக்கத்தில், சசாவை பெண் பார்க்க ஒரு வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள். அந்தப் பெண்ணிற்கோ பதினேழு வயதுதான். தனி அறையில் பேசும்போது அவளுடைய இளமைக் கனவுகளும் கற்பனைகளும் சசாவிற்கு புரிந்தாலும் அவள் ஏனோ அவனை ஈர்க்கவில்லை. வீட்டிற்க்கு திரும்பியவுடன் சொல்லாமல் கொள்ளாமல் தன்னுடைய பெண் தோழியைப் பார்க்க இரவோடு இரவாக ஓடுகிறான். போகிறபோக்கில் பெற்றோரின் வீட்டு சாவியையும் கொண்டு போய்விடுவதால் அவர்களுக்கு சசா இரவு வெளியில் தங்கியிருக்கிறான் என்று தெரிந்துவிடுகிறது.
சசாவின் காதலி ஜூடித் பற்றி அவர்களுக்கும் ஓரளவுக்கு தெரிந்திருக்கிறது. அவள் விவாகரத்தானவள். ஒரு பெண் குழந்தைக்கு தாய். வேறொரு யூத சமூகத்தை சேர்ந்தவள். முக்கியமாக சசாவை விட நான்கு வயது மூத்தவள். அப்பாவின் தங்கை, அம்மாவின் அண்ணன் என்று மொத்தமாக படைதிரட்டிக் கொண்டு இரண்டு கார்களில் கிளம்பிப் போகிறார்கள். சசா ஜூடித் வீட்டினுள் இருக்கும்போது மொத்தமாக அவள் வீட்டினுள் நுழைந்து அதகளப்படுத்துகிறார்கள். சசாவின் அம்மா கறாராக ‘நீ இங்கிருந்தால், அவளைத்தான் முதலில் கொல்வோம்’ என்று சொல்லிவிடுகிறார். அந்த களேபரத்தில் ஜூடித்திற்கு, சசா தன்னைவிட அவன் அம்மா மேல்தான் அதிக அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறான் என்று புரிகிறது. சசாவை ஜூடித்திடமிருந்து மீட்கும் கடைசி தருணங்களில் சசாவின் அம்மாவிற்கு ஜூடித் மேல் பரிதாபமே ஏற்படுகிறது. அதைக் கிண்டல் அடிக்கும் சசாவின் தந்தையிடம் ‘என் அப்பா மட்டும் உங்களை கொலை செய்வேன் என்று பயமுறுத்தாமல் இருந்தால், நீங்கள் இன்னும் <ஒரு பெண் பெயரைச் சொல்லி> அவள் வீட்டிலேயே பழியாய் கிடந்திருப்பீர்களே’ என்று பதிலடி கொடுக்கிறார்.
சசாவின் திருமண விருந்தோடு படம் நிறைவடைகிறது. விருந்தில், முழுபோதையுடன், தன்னுடைய புதிய மனைவியைப் பற்றி புகழ்ந்து பேசும் சசா, ‘இவளுக்கு முன்னால் இவளை விட அழகான பெண்ணொருத்தி என் வாழ்க்கையில் இருக்கிறாள்’ என்று பூடகமாக சொல்லி தன்னுடைய முரட்டு மாமாவிடம் அவளைப்பற்றி சொல்லு என்கிறான். அவரும் ‘சசாவின் அம்மாதான் அது’ என்று சொல்லி அவரை அறிமுகபடுத்த, எல்லோரும் நடனமாடத் தொடங்குகிறார்கள்.
பாரம்பரிய யூத குடும்பங்களும், அவர்களின் உறவு பிணைப்புகளும், பழக்கவழக்கங்களும் (பெண்பார்க்கச் சென்ற வீட்டில் கை நனைக்க மாட்டோம் போன்ற) வெகு யதார்த்தமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்குமான வேறுபாட்டைக் காட்சிபடுத்தி, முடிவில் இரு தலைமுறையும் ஒரே புள்ளியில் சங்கமிப்பதாக காட்டி முடிக்கிறார்கள். ஜூடித் வீட்டின் வாசலில் மறைவாக கார்களை பார்க் செய்துகொண்டு தன் குடும்பத்தினர் எல்லோரும் இருப்பதை கவனிக்கும் சசா, அவள் வீட்டு கதவின் லாக்கை திறந்து வைத்துவிட்டு உள்ளே போகிறான். அந்த நுட்பமான காட்சி வேறு ஒரு கதையை நமக்கு சொல்கிறது.
2. மெலினா (Malena) படத்தில் கடைசிக் காட்சியில் காமிராவைப் பார்த்து ‘வணக்கம்’ என்று ஒரு வசனம் பேசுகிறாள். அதுதான் அவள் ஊர்க்காரர்களைப் பார்த்து பேசும் முதல் வசனமாக இருக்கும். அதுவரை அவளைப் பற்றி அவள் பின்னால் பொரணி ‘மட்டும்’ பேசிக்கொண்டு இருக்கிறது மொத்த ஊரும். மோனிகா பெலுச்சிக்கென்றே இழைத்து உருவாக்கப்பட்ட பாத்திரம் போன்றதொரு பொருத்தம். கதை முழுவதும் ரெனேதோ என்னும் விடலைச் சிறுவன் (டவுசரிலிருந்து பேண்ட்டுக்கு மாறும் வயது) பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இத்தாலியில் சிசிலி-யில் நடக்கும் கதை. செவிட்டு புரஃபஸரின் பெண்ணான மெலீனாவின் கணவன் மிலிட்டரியில் பணிபுரிகிறான். போர் நிமித்தம் வெளியூர் சென்றுவிட ஊரே மெலீனாவின்பால் இரண்டுபட்டு நிற்கிறது. பல்வைத்தியரிலிருந்து, பலசரக்கு கடைக்காரன்வரை அத்தனை ஆண்களும் அவளை வளைக்க திட்டம்போட, அத்தனை பெண்களும் அவள் மேல் அசூயையுடன் இருக்கிறார்கள். இடையே அவளுடைய கணவன் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. மெலீனாவின் நடத்தை மேல் புகார்சொல்லி மொட்டைக்கடுதாசி வர அவளுடைய தந்தையும் அவளை நிராகரித்துவிடுகிறார்.
அவனையொத்த நண்பர்களைப் போல ரெனேதோவிற்கும் அவள்தான் கனவுக்கன்னி. என்ன, அவர்கள் போல அவனால் அவளை இளப்பமாக பேச முடியவில்லை. அவள் தனிமையில் கேட்கும் பாடல் கொண்ட ரெக்கார்டை தேடிப்பிடித்து அவனும் கேட்கிறான். அவளுடைய உள்ளாடையை திருடிக் கொண்டு வருகிறான். ஊர்க்காரர்களால் அவள் படும்பாட்டை நமக்கு (மிகை யதார்த்தவகையில்) சொல்வதும் அவனேதான். ஜெர்மானியர்கள் சிசிலியை ஆட்கொள்ள ஊரெல்லாம் ஆர்மி வீரர்கள். மெலீனாவும், தன் தலைமுடியை கத்திரித்துக் கொண்டு, கவர்ச்சியாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வலம்வர, பல ஆர்மிவீரர்கள் அவளுக்காக போட்டிப் போடுகின்றனர்.
அடுத்த திருப்பமாக, போர் முடிவடைந்துவிட்ட ஜெர்மானியர்கள் ஊரைவிட்டு போகிறார்கள். உடனே அத்தனை பெண்களும் கூட்டாக் மெலீனாவை ஊர் நடுவே இழுத்துப் போட்டு, மொட்டை அடித்து, இழிவுப்படுட்த்தி ஊரைவிட்டே அவளை விரட்டுகிறார்கள். சிறிது நாட்களில், இறந்தததாக நம்பப்படும் மெலீனாவின் கணவன் ‘ஒற்றைக்கயோடு’ சிசிலிக்கு மீண்டும் வருகிறான். ஊரார் அவனையும் லட்சியப்படுத்தவில்லை. அவன் தன் மனைவியைத் தேடி துன்புறுவதையும் லட்சியபடுத்தவில்லை.
மெலீனாவின் மீதான அபரிமிதமான் காதலோடு ரெனேதோ மெலீனாவின் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதிகிறான். மெலீனா மீது எந்தத் தவறும் இல்லை என்றும், ஊராரின் வஞ்சகத்திற்கு அவள் பலியானாள் என்றும் எழுதி, கடைசியாக அவள் சென்ற ஊர்ப் பெயரையும் குறிப்பிட்டு கடிதம் எழுதுகிறான்.
அடுத்து, அத்தனை ஊர்க்காரரும் அதிசயமாகப் பார்க்க தன் கணவனோடு மெலீனா ஊரினுள் மீண்டும் வருகிறாள். வழக்கம் போல காய்கறி சந்தையில் அவளும் சுற்றி வர, ஊர்ப்பெண்கள் அவளைப் பார்த்து ‘வணக்கம்’ சொல்கிறார்கள். முதல்முறையாக அவர்களை நிமிர்ந்து பார்த்து அவளும் வணக்கம் சொல்கிறாள். படம் முழுவதும், எப்போதும் சலசலப்பும், இரைச்சலுமாய் ஊரினூடே மெலீனாவும் அவளைப் பின்தொடரும் ரெனேதோவின் சைக்கிளுமாய் அப்படியே நாற்பதுகளின் சிசிலி நம் கண்முன்னே விரிகிறது.
3. இந்திய மாற்று திரைப்படங்களில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் ரஜத் கபூர். மீரா நாயர், ஃப்ரான் அக்தர் படங்களில் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். பேஜா ஃப்ரையில் சரிகா-வின் கணவராக நடித்திருந்தார். மும்பையில் வசிக்கும் சுனில் அரோரா, மாலதி தம்பதிக்கு ஆறுவயதில் ஒரு பையன். பத்து வருட தாம்பத்திய வாழ்க்கை சுனிலுக்கு மிகவும் சோர்வை உண்டாக்கிவிட்டது. படுக்கையறைக்கு போவதை தவிர்க்க புத்தகம் படிப்பது போல, வேலை இருப்பது போல எல்லாம் செய்து தப்பிக்கப் பார்க்கிறான். உச்சக்கட்டமாக பைஜாமா நாடா படிமுடிச்சாய் விழுந்துவிட்டது என்று (கத்திரிக்கோலை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு) மனைவியிடம் வாய்தா வாங்குகிறான். மாலதிக்கோ தன்னை கணவன் விரும்பவில்லையே என்று சந்தேகம். வாக்குவாதம் வளர்கிறது.
சுனிலின் நண்பன் (அமெரிக்கவாசி) அலப்பறைக்கு ‘எங்கள் ஊரில் Swing பார்ட்டிகள் எல்லாம் சகஜம். துணைகளை மாற்றிக் கொள்வது ஒரு கல்ச்சர்’ என்றெல்லாம் அடித்துவிட சுனிலுக்கு அந்த பித்து பிடித்துவிடுகிறது. இந்த Swing பார்ட்டிகளைப் பற்றி அவன் தன் நண்பர் குழாமிடம், தன் மனைவியுடன், விளம்பரம் செய்தவர்களோடு என்று பலரோடு விவாதிப்பதை நகைச்சுவை இழையோட காட்சிபடுத்தியிருக்கிறார்கள். ரன்வீர் ஷோரேயும், கொங்கணா சென்னும் (நிஜவாழ்க்கையிலும் இவர்கள் திருமணம் புரிந்துகொண்டார்கள்) பிரமாதமாக செய்திருப்பார்கள். சுனிலின் தேடலில் மாட்டும் மற்றொரு ஜோடியாக ரஜத் கபூரும், கோயல் பூரியும் கலக்கியிருப்பார்கள். இம்மாதிரியானதொரு கதையை இவ்வளவு ரசிக்கும்படி எடுத்ததே ஆச்சரியம்தான். கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டில் ஒரு சிறிய புன்னகையும் உத்தரவாதம்.
4. பிராட்வே டிராமாக்கள் பார்க்கும் ஆசை எப்போதும் உண்டு. பொழுதும், மனமும் ஒத்து வரவேண்டும். மேலும், பார்த்து ரசிக்க சரியான துணையும் அவசியம். ஃபேண்டம் இன் த ஆப்பரா போன்ற படங்களைப் பார்த்தபோது இதை எப்படி நாடகமாக நடத்தினார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொருமுறையும் அந்த சாண்ட்லியர் உடையும் காட்சியை செய்து காட்டுவார்களா? டேவிட் மாமேட்டின் (David Mamet) ஒலீயனா (Oleana) படத்தைப் பார்த்தபோது அந்த வியப்பு பன்மடங்காகியது. ஒன்றரை மணிநேரப் படத்தில் மொத்தம் நான்கே சீன்கள். இரண்டே கதாபாத்திரங்கள். மொத்த நேரமும் வசனத்திலே ஓடும் படம். இந்த ஸ்க்ரிப்டை ஒரு பாடமாக வைக்கலாம். அஃப்கோர்ஸ் இது முழுவதுமே ஒரு பாடத்தைப் பற்றிய படம்தான். வில்லியம் மேசி தான் பிராட்வேயில் நடித்த அதே பாத்திரத்தை திரைப்படத்திலும் செய்திருந்தார். அப்பழுக்கு சொல்ல முடியாத அத்தனை கச்சிதமான பெர்ஃபார்மென்ஸ்.
ஜான் ஒரு புரஃபஸர். அவர் நடத்தும் கோர்ஸின் மாணவியான கரோல் அவரிடம் உதவிக் கேட்டு வருகிறாள். முதல் காட்சி முழுவதும் கரோலின் சந்தேகங்களும், தனக்கு ஒன்றுமே புரியாமல் இப்படி முட்டாளாக இருக்கிறோமே என்ற தன்னிரக்கமும், அதற்கு ஜான் விளக்குவதும், நடுவில் அவருடைய மனைவி ஃபோனில் அவரைத் தொடர்புகொள்வதுமாக நகர்கிறது. கரோலுக்கு ஜான் எழுதிய புத்தகத்தில் பல சந்தேகங்கள். பல குழப்பங்கள். அதை ஜான், தனக்கே உரித்தான பேராசிரியர் தோரணையில் விளக்க, அந்தக் காட்சி முடிவடையும்போது எனக்கு ஜான் மீது பரிதாபமே எழுந்தது.
அடுத்தக் காட்சியில் (நடுவில் ஒரு இண்டர்லூட் காட்சி உண்டு), மீண்டும் கரோலும் ஜானும் உரையாடுகிறார்கள். கரோல் ஜான் மீது ‘செக்ஸிஸ்ட் அப்யூஸ்’ புகார் கொடுத்திருக்க அதைப் பற்றியான உரையாடல். இப்பொழுது கரோலின் பக்கத்திலான வாதங்கள் அதிக முக்கியத்துவம் கொள்ள, ஜான் தான் சுதந்திரச் சிந்தனையில் நம்பிக்கையுள்ளவன் என்று தெளிவுபடுத்த முயல்கிறார். ஆனால் ஜானால் கரோலின் பார்வையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. முந்தைய காட்சியில் நடுநடுவே ஜான் சொன்ன ‘உனக்குப் புரியவில்லை என்றால் அது என் தவறு… உனக்கான உறுதியைத் தருகிறேன்’ போன்ற வசனங்கள் எல்லாம் ஜானுக்கு எதிராக இப்பொழுது திரும்புகின்றன. ஜான் கரோலை நிராகரிக்கவுமில்லை, அதே சமயம் அவளை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியாமல் திகைக்கிறார். ஸ்கோர் சமமாக போகிறது.
மூன்றாவது காட்சியில், கரோலின் புகாரால் ஜான் தன்னுடைய வேலைப் போய்விடும் நிலையில் அவளை சந்திக்கிறார். அதே அலுவலக அறை. இப்பொழுது கரோலின் தன் பார்வையில் ஜானின் அதிகார மமதையை சுட்டிக் காட்டி, அவரால் தனக்கு எதையும் படிப்பிக்க முடியாது என்று வாதிடுகிறாள். முடிவாக ‘நட்பின் அடிப்படையில்’ தான் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், அதற்கு பிரதிபலனாக ஜான் தன்னுடைய கோர்ஸில் சில புத்தகங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை போடுகிறாள். அந்த பட்டியலில் ஜான் எழுதிய புத்தகமும் அடக்கம். பிறகுதான் தெரியவருகிறது, கரோல் இப்பொழுது ஜான் மீது ‘கற்பழிக்க முயற்சி’ என்று கிரிமினல் புகார் கொடுத்திருக்கிறார் என்று. அதுவரை Freedom of thought பற்றிப் பேசிக்கொண்டிருந்த ஜான் தன் வசம் இழந்து கரோலை முற்றிலுமாய் நிராகரிக்கிறார். தொடர்ந்து ஜான் தன் மனைவியுடன் ஃபோனில் பேச, அதைப்பற்றி கமெண்ட் அடிக்கும் கரோல் ‘உங்கள் மனைவியை பேபி என்றெல்லாம் அழைக்காதீர்கள்’ என்று சொல்ல, ஜானின் அத்தனை படிப்பு வேஷமும் கலைந்துபோய் கரோலை அடிப்பின்னி எடுக்கிறார். தன் கையில் ஏற்பட்ட காயமும் அதன் இரத்தமும் இன்னமும் உன்மத்தம் ஏற்படுத்த, சேரைத் தூக்கி அடிக்கப் பாய்கிறார். கடைசி நொடியில் தன் நிலை உணர்ந்து என்னவாயிற்று என்று திகைத்துப் போய் நிற்கிறார்.
வில்லியம் மேசி நடித்த பிராட்வே பதிப்பும் கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கவும். நாடக இயக்கத்திற்கான சிறந்த பாடமாக இருக்கும்.
5. அமெரிக்க பொருளாதாரத்தின் பெரிய பின்னடைவாக நிகழ்ந்த Lehman Brothers பிரச்னையை முன்வைத்து எடுக்கப்பட்ட படம் The Margin call. பொருளாதார ஜார்கன்கள் எதையும் போட்டுப் படுத்தாமல் மிக எளிமையாக சொல்லியிருக்கிறார்கள். கெவின் ஸ்பேசி, ஜெரோமி அயர்ன்ஸ், டெமி மூர் என்று எனக்கு மிகவும் பிடித்த பல நடிகர்களை ஒன்று கூட்டியதே பெரும் வெற்றிதான். வால் ஸ்ட்ரீட்டின் ஒரு வங்கியின் 3 நாட்கள் சம்பவங்கள்தான் கதையே. மூன்றாவது நாளின் முடிவில் என்ன நிகழ்ந்தது என்று இந்த உலகிற்கே தெரியும். முதல் நாள் அந்த வங்கியின் ட்ரேடிங் தள தலைவர், கெவின் ஸ்பேசி தன் நாயின் நோயுற்ற நிலையைப் பற்றி எண்ணி வருந்துவதும், படத்தின் முடிவில் இறந்துவிட்ட நாயை அடக்கம் செய்வதும் கதையை குறிப்பால் உணர்த்திவிடுகிறது.
அந்த இன்வெஸ்ட்மெண்ட் வங்கியில் பெருமளவு ஆட்குறைப்பு நடந்துகொண்டிருக்கிறது. ரிஸ்க் மேனேஜ்மெண்ட் தலவரை தடாலடியாக தூக்க, அவர் அலுவலகத்தை விட்டு வெளியேப் போகும்போது தன்னுடைய ஜூனியரான பீட்டரிடம் ஒரு மெமரி ஸ்டிக்கைக் கொடுத்து ‘இதில் நான் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி இருக்கிறது. மிக முக்கியம்’ என்று சொல்லிவிட்டுப் போகிறார். அன்றைய மாலை பார்ட்டி என்று எல்லோரும் சென்றுவிட எரிக் கொடுத்த பிராஜெக்ட்டை எடுத்து வேலை செய்யும் பீட்டருக்கு அதிர்ச்சி. Subprime பிரச்னையில் தங்கள் வங்கியின் மார்கெட் நிலவரம் படு பாதாளத்திற்கு போகும் அபாயம் இருக்கிறது. சரியாக கணக்கிட்டுப் பார்த்தால், அன்று அந்த நொடியிலே அந்த வங்கி திவால் நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது. அல்லது எட்டிவிட்டது. அதிரடியாக சந்திப்புகள் நடக்க, டிவிஷன் ஹெட், சீஃப் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் ஆபீசர், CEO என்று அத்தனை தலைகளும் விடியற்காலைக்குள் அங்கே கூடி விவாதிக்கிறார்கள்.
தலைக்கு மேல் போய்விட்டது என்று புரிந்து, டேமேஜ் கண்ட்ரோலில் இறங்குகிறார்கள். கார்ப்பொரேட்களுக்கென்றே உரிய வகையில் முதலில் ‘பலி ஆடுகள்’ தயார்படுத்தப்படுகின்றன. பிறகு திரிக்கும் வேலைகள். அடுத்த நாளே அத்தனை டாக்ஸிக் சொத்துக்களையும் விற்க தொடங்குகிறார்கள். ஓரிரு மணிநேரங்களிலேயே சந்தை சுதாரித்துக் கொண்டு இவர்களுடைய திவால் நிலமையைப் பற்றிய பேச்சு பரவுகிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னுடைய அழுகிய உற்பத்தியை சந்தை முழுவதும் பரப்பிவிடுகிறது வங்கி. பிறகு நடுக்கும் அழுகுணி ஆட்டங்களை சொல்லி, இறுதியில் கெவின் தன் இறந்த நாயை புதைப்பதோடு முடிகிறது படம்.
6. ‘வற்றாத நதியே வற்றிப் போய்விட்டால் யாரைப்பார்த்து ஆறுதல் பெறுவது’ என்று தங்கப்பதக்கம் திரைப்படத்தில் ஒரு வசனம் வருமே, அது போல போர்கள், ஆக்கிரமிப்புகள், சர்வதேச ஆயுத பேரங்கள் என்று நாடுகள் சீரழிக்கப்படும்போது, UN போன்ற சர்வதேச அமைப்புகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலனை மீட்க பாடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் UN அமைப்பிற்கே சவால் விட்ட கேஸ்தான் ‘The Whistleblower’. பதின்மவயதில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான கேத்தரின், அமெரிக்க, நெப்ராஸ்காவில் போலிஸ் ஆபிசராக பணிபுரிகிறார். போஸ்னியா விடுதலைப் போருக்கு பிறகு ‘சர்வதேச போலிஸ் காவலராக’ அங்கே பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது அவருக்கு. போருக்குப் பிறகான போஸ்னியாவின் பல பிரச்னைகளில் ஒன்றாக அண்டை நாடுகளிலிருந்து பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து பிராத்தல் செய்வதும் இருக்கிறது. காசுக்கு விற்கப்படும் பெண்கள் போஸ்னியா பார்களில் பணிபுரிய அவர்களை சுற்றி பெரும் இரும்பு வேலியாக, உள்ளூர் போலிஸ் மட்டுமல்லாது சர்வதேச அமைதி காக்கும் அமைப்பினரும் சம்பந்தபட்டிருக்கிறார்கள். பாரில் ரெய்ட் செய்து மாட்டும் பெண்களை மீண்டும் அந்த பார் நடத்தும் கூட்டத்திடமே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
ஒரு ரெய்டில் மாட்டும் இரண்டு பெண்களிடமிருந்து பல விபரங்களைப் பெறும் கேத்தி அவர்களை UN போலிஸ் ஆள் ஒருவரை எதிர்த்து சாட்சி சொல்ல தயார்படுத்துகிறார். ஆனால் அதிகாரத்தையும், அமைப்பையும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ‘சரியான பேப்பர்கள் இல்லை’ என்று அந்தப் பெண்களை பார்டர் தாண்டி உக்ரைனில் கொண்டு விட்டுவிட போஸ்னியா முடிவு செய்கிறது. வழக்கம் போல போலிஸார் அந்தப் பெண்களை பார்டர் தாண்டாமல் காட்டுப் பகுதியிலே கொண்டு விட, மாஃபியா கும்பல் அவர்களை மீண்டும் கைப்பற்றி தங்கள் இடத்திற்கு கொண்டு சென்று டார்ச்சர் செய்கிறார்கள். இனி யாரும் போலிஸோடு பேசக் கூடாது என்பதற்கு முன்மாதிரியாக அத்தனை பெண்களையும் அந்த ‘துன்புறுத்தல்’ காட்சியைப் பார்க்க வைக்கிறார்கள்.
கேத்தி விடாமல் அடுத்தடுத்து பல பெண்களை தேடிப் பிடித்து சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், போஸ்னியா அரசு அத்தனை கேஸ்களையும் ஒரேயடியாக மூடிவிடுகிறது. இன்னொரு ரெய்டில், அந்தப் பெண்களே உள்ளூர் போலிஸுக்கு பயந்துகொண்டு ‘தங்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை’ என்று சொல்லி பதுங்கிக் கொள்கின்றனர். முதலில் சாட்சி சொல்ல தயாராக இருந்த ரயா உட்பட. ‘கண்துடைப்பு’ ரெய்ட் முடிந்துவிட, பார் ஓனர் ரயாவை சுட்டு காட்டில் வீசிவிடுகின்றார். பொறுக்க முடியாத கேத்தி ஒரு பெரிய கட்டுரையை தயார் செய்து UN கவுன்சில், மனித உரிமைக் கழகம் என்றெல்லாம் மெயில் அனுப்ப, அவரையே வேலையிலிருந்து தூக்கி விடுகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் பில்லியன் கணக்கில் போஸ்னியாவுடன் காண்டிராக்ட் போட்டிருப்பதால், இந்த மனித உரிமை மீறல் பற்றியெல்லாம் வெளியேத் தெரியக் கூடாது என்று மூடி மறைத்து விடுகிறார்கள்.
கடைசியில், போஸ்னிய அரசின் இன்டர்னெல் அஃபேர்ஸ் அதிகாரி ஒருவரின் துணையோடு ஆதாரங்களை கைப்பற்றி பிபிசிக்கு கொடுக்கிறார். பப்ளிக்காக UN மேலும் குற்றம் சாட்டுகிறார். விளைவாக, போஸ்னியாவிலிருந்த அத்தனை பீஸ் கீப்பிங் அமைப்புகளும் விலக்கிக் கொள்ளப்பட, அமெரிக்க அரசாங்கம் இன்னமும் அங்கே டிஃபென்ஸ் ஒப்பந்தங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. எல்லா திரைப்படங்களும் “They happily lived ever after” என்று முடிவதிலை.
2
டோஸ்ட்மாஸ்டர்ஸ்
11
மாஸ்டர்
சிறுவயதில் சில வருடங்கள் விருத்தாசலத்தில் இருந்தோம். அப்பொழுது படித்த பள்ளியில் பெரும்பாலும் பெண் ஆசிரியைகளே. அத்தனை ‘மிஸ்’களுக்குமிடையே ஒரே ஒரு மிஸ்டர் ‘மாஸ்டராக’ இருந்தார். அவரே ஹெட்மாஸ்டரும் கூட. ‘மாஸ்டர்’னா அப்பக் கொஞ்சம் டர்ர்ர்ருதான். அப்புறம் மதுரையில் படிக்கும் போதெல்லாம் பள்ளியில் ‘மாஸ்டர்’ புழக்கத்தில் இல்லை. விளிக்கும்போது ‘சாஆஆர்’ என்றும் மற்றவர்களிடம் குறிப்பிடும்போது ‘வாத்தியார்’ என்றே சொல்லி பழக்கப்பட்டாகிவிட்டது. PT மாஸ்டரைக் கூட ‘யாருடா உங்க பிடி வாத்தியார்’ என்றுதான் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். வள்ளிநாயகம் என்று ஒரு கராத்தே மாஸ்டர் எப்போதும் அணியும் இறுக்கமான சட்டைக்காக ஞாபகம் இருக்கிறார்.
பெங்களூருவில் இருக்கும்போதுதான் Toastmasters Club பற்றிக் கேள்விப்பட்டேன். ஆம். எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ‘ஸ்ட்ராங்கா சக்கர கம்மியா’ போடும் டீ மாஸ்டர், வீச்சு ஸ்பெஷல் புரோட்டா மாஸ்டர் என்று தெரிந்து வைத்திருந்த எனக்கு ப்ரெட் டோஸ்ட் போடும் மாஸ்டர்களுக்கு சங்கமா என்று தோன்றியது. இல்லையாம். Toast என்றச் சொல்லிற்கு ‘பிரபலமான’ என்றும் ஒரு அர்த்தம் உண்டு – He is the Toast of the Town என்றுச் சொல்லப்படுவது போல. முக்கியமான நிகழ்ச்சிகளில் விழா நாயகர்களை புகழ்ந்து சில நிமிடங்கள் பேசுவதை (ஞாபகமாக கையில் ஷாம்பெய்ன் கிளாஸ் வைத்திருக்க வேண்டும்) Proposing a toast to என்பார்கள். அப்படியான ஒரு வழியில் இந்த Toastmaster சங்கமானது பல பேச்சாளர்களை உருவாக்கும் ஒரு அமைப்பு என்றும் கொள்ளலாம்.
முன்பின் தெரியாத நபரை சம்பிரதாயமாக அறிமுகப்படுத்திக் கொண்டு அப்புறம் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிப்பவரா நீங்கள்? நாம் வலியச் சென்றுப் பேசினால் மற்றவர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று தயங்குகிறீர்களா? எந்த தலைப்பில் பேசினால் மற்றவர்களுக்கு பிடிக்கும் என்று யோசித்துக் கொண்டே பேசாமலே இருந்து விடுகிறீர்களா? Toastmasters அமைப்பு உங்களுக்கானதே.
ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆறேழு நிமிடங்களுக்கு ஒரு கூட்டத்தின் முன்னர் பேசிப் பழகும் வாய்ப்பைத் தருகிறது. உங்களுக்குப் பயிற்சி தர, உங்கள் பேச்சை சீர்தூக்கி நிறைகுறைகளை அலச, மேலும் பல பொறுப்புகளை சிறப்பாக செய்ய என்று நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது வேலையிலிருக்கு இடத்தில் இருக்கும் கிளப்பில் அவ்வப்போது ஓசிச் சாப்பாடும் போட்டு ‘வந்து பேசிப் பழகு’ என்கிறார்கள். சரி என்று போன மாதம் சங்கத்தில் உறுப்பினராகி விட்டேன்.
பேசுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களின் பேச்சில் இலக்கணப் பிழை, ‘ஆம்.. ஊம்ம்…’ என்று பேச்சு வராமல் காற்று வரும் தருணங்கள், பேசும் நேரம், பேச்சின் தரம் என்றெல்லாம் எடை போடும் வேலைகளும் எடுத்து செய்யுங்கள் என்று ஊக்குவித்தார்கள்.
முதல் சந்திப்பில் ‘Ah Master’ என்னும் பணியை ஏற்றுக் கொண்டு செய்தேன். பேச்சின் இடையே தடங்கலாக, சிந்தனையோட்டம் தடைபடும்போது இட்டு நிரப்பும் பொருளில்லாத சொற்களைப் பற்றி குறிப்பெடுப்பது. ‘ஆங்! அதாங்க, நான் சொன்னேன்ல, இப்ப இவரு சொல்றாரே, அன்னிக்கு அதே நிலமைல, இப்ப நீங்களே சொல்லுங்க’ என்று இட்டு நிரப்பிக் கொண்டே செல்லும் பேச்சாளர்களும் உண்டு. அவர்களுடைய பேச்சில் ‘இட்டு நிரப்பும்’ சொற்கள் எத்தனை உபயோகித்தார்கள். எத்தனை முறை உபயோகித்தார்கள் என்று குறித்துக் கொண்டு அதை தொகுத்து அளிக்கும் நக்கீரர் வேலை. சும்மா சொல்லக்கூடாது. அன்றைக்கு பேசிய அம்மணி அழகாக ஆற்றொழுக்காக பேசி முடித்துவிட்டார். நடுவில் ஒரே ஒரு ‘Ok… ‘ என்று தேவையில்லாமல் சொன்னார் என்று குறித்துக் கொண்டேன் (பின்ன… பிடிச்சிருவோம்ல). அடுத்து பேசிய வியட்நாமிஸ் இளைஞர் சிறப்பாக பேசி எனக்கும் சிற்றுண்டி தருவது போல சில Filler வார்த்தைகள் உபயோகித்திருந்தார். கறாரான ரிப்போர்ட் கொடுத்துவிட்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு வந்தேன்.
இரண்டு வாரத்தில் அடுத்த சந்திப்பு வந்துவிட்டது. இம்முறை பேசுவதற்கு ஆசையிருந்தாலும், எதைப் பற்றி பேசுவது என்று முடிவு செய்யாததினால், Time Master என்ற பொறுப்பை எடுத்துக் கொண்டேன். பிரச்சினையில்லாத வேலை. நமது பட்டிமன்றங்களில் ‘கிர்ர்’என்று மணியடிக்க அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்களே… அதே வேலைதான். மணிக்கு பதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற அட்டைகளை பேச்சாளர் பார்வையில் படுமாறு காட்ட வேண்டும். அன்றைக்கு என்று ஒரு அம்மணி கராத்தே டெமான்ஸ்ட்ரேஷன் எல்லாம் காட்டினார். பாதுகாப்பான இடைவெளியில் அமர்ந்து கொண்டு சிவப்பு கார்டு மட்டும் காட்டவேக் கூடாது தீர்மானித்துக் கொண்டேன். ரிஸ்க் இல்லையா. நல்லவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கராத்தே பற்றி சொற்பொழிவாற்றிவிட்டு அமர்ந்து விட்டார்.
மூன்றாவது மீட்டிங்கில் ‘புறப்படு பாண்டியா’ என்று பேசுவதற்கு பெயர் கொடுத்துவிட்டேன். இந்த வருடத்தின் கடைசி சந்திப்பு என்று பீட்ஸா கோக்கெல்லாம் ஃப்ரீயாக உண்டு என்று வேறுச் சொல்லியிருந்ததினால் கிட்டத்தட்ட முப்பது பேர்வரை வந்து விட்டார்கள். தலைப்பே சிக்காமல் இருக்கும்போது, ட்விட்டரில் Srikan2 என்ற நண்பர் ஒரு Spark கொடுத்தார். எழுதும் போது நம்மை அறியாமல் ஏற்படும் குளறுபடிகளை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ‘Hi Tim!’ என்று டிம் பேய்ன்ஸ் என்னும் வாடிக்கையாளருக்கு மெய்ல் அனுப்பும்போதெல்லாம் அவர் பெயரை ‘Time’ என்றே டைப்பி விடுவது என் வழக்கம். இது போல பேசும்போது ஏற்படும் சொதப்பல்கள் Spoonerism என்று சொல்லப்படும். இதற்கு விளக்கமாக ‘Tips of Slung’ என்று சொல்வார்கள். அதாவது Slip of Tongue (நாக்கு தவறுதல்) என்று சொல்ல நினைத்து அதை தவறிப் போய் Tip of the Slung என்று சொல்கிறார்களாம்
இந்த வார்த்தைக்கும், பழக்கத்திற்கும் சுவாரசியமான வரலாறு உண்டு. இங்கே ஒரு வலைத்தளமே இருக்கிறது. படித்து பயன்பெறுங்கள்.
ஆறு நிமிடங்களுக்கான என்னுடைய கன்னிப் பேச்சை (Icebreaker) தயார் செய்து கொண்டேன். நாக்குழறலிலால் ஏற்படும் வார்த்தை விளையாட்டுகளை நகைச்சுவையோடு சொல்ல வேண்டும் என்பது நோக்கம். நான் தேர்ந்தெடுத்த சில சுவையான Spoonersimகளை சில சம்பவங்களோடு தொகுத்து பேசி முடித்தேன். நல்ல வரவேற்பு மற்றும் ஊக்குவிப்பு இருந்தது. ஒரு சில முன்-தயக்கங்கள் தவிர பெரும்பாலும் சகஜமாக பேச முடிந்தது.
தயார் செய்து பேசுவது ஒரு முறை என்றால் திடீரென்று பேசும் முறை Impromptu Speech என்கிறார்கள். எல்லாரும் டேபிளில் சுற்றி உட்கார்ந்து கொண்டு இருக்க ஒருவர் தொடங்குகிறார் ‘நாங்கள் விடுமுறைக்கு வண்டியில் போய்க் கொண்டிருக்கும்போது 422 சாலையில் பிரேக் டவுன் ஆகிவிட்டது. அப்போது…’ என்று அவர் ஒரு நிமிடத்திற்கு அளந்து விடுகிறார். அவர் விட்ட இடத்திலிருந்து மற்றொருவர் தொடங்கி ‘AAAக்கு ஃபோன் செய்ய ஃபோனில் பேட்டரி இல்லை. டயர் மாற்ற ஜாக்கி இல்லை’ என்று தொடர்ந்து பேசவேண்டும்.
இந்த கலகல பேச்சில் கலந்து கொள்ள ஆரம்ப தயக்கத்தை தாண்டி நாம் நுழையும்போது கிட்டத்தட்ட எல்லாவித சிச்சுவேஷன்களையும் பேசி முடித்து விடுகிறார்கள். புதியதாக ஏதாவது நுனியைக் கண்டுபிடித்து பேச்சை கடத்திக் கொண்டு போக வேண்டும். நானும் ஏழாவதாக கலந்து கொண்டு ஒரு அதிரடி திருப்பம் எல்லாம் கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். பேசிக் கொண்டே இருக்கிறேன். அடுத்து பங்கேற்க யாரும் முன்வரவேயில்லை. ‘ஆகவே இதிலிருந்து நாம் அறியும் பாடம் என்னவென்றால், இன்பச் சுற்றுலா போகும்போது செல்ஃபோன், ஜாக்கியெல்லாம் இருக்கிறதோ இல்லையோ… நமக்கு அடுத்துப் பேச கட்டாயம் ஒரு ஆள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று முடித்துக் கொண்டேன்.
சில சுவாரசியமான நாக்குழறல்கள் இங்கே.
வக்கீல் நண்பன் சிகரெட் பற்றவைக்கும்போது சிரமப்படுகிறான். ‘என்னப்பா செய்ய முயற்சிக்கிறாய்’ என்று கேட்டால் ‘I am Fighting a liar’ என்று சொல்கிறான். அவன் சொல்ல நினைத்தது ‘I am lighting a fire’ என்று.
ஆனால் அந்த லைட்டர் அல்லவா ‘நான் பொய்யனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்ல வேண்டும்?
Shake the Tower – குளிக்கப் போனதுக்காக டெர்ரரிஸ்ட் ஆக்ட்ல அரெஸ்ட் பண்றது டூ மச்சு. (Take the Shower)
Chewing the Doors – வீட்டு வேலை செய்யனுமேங்கிறதுக்காக கதவையா கடிச்சு சாப்பிடறது? (Doing the Chores)
Chipping the Flannel – டிவியில் சேனல் மாத்தறதுக்காக எதுக்கு துணியைப் போய் நோண்டனும்? (Flipping the Channel)
Lack of Pies – ஆமாம். அப்படிச் சொல்லித்தான் அந்தப் பெண்மணி டைவர்ஸ் செய்தார் கணவனை. (Pack of Lies)
Ease my Tears – ரொமாண்டிக்காக Tease my Ears னு சொல்ல நினைத்து செண்டிமெண்டலாக முடிஞ்சது பாருங்க.
Roaring with Pain – மழை பெய்கிறது என்பதை ஒரு மிருகக்காட்சி சாலையிலிருந்து சொல்லும்போது இப்படி நாக்குழறினால்? கேட்கிறவர்களுக்கு கொஞ்சம் எந்த மிருகம் கத்துதோன்னு ‘பக்’என்று இருக்குமே.
Driving in the Right Lane – சிறு மழையில் (light rain) வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கும், வலது பக்கம் (right lane) வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? அதுவும் இந்தியாவில் வலது பக்கம் ஓட்டுகிறேன் என்றால் கேட்பவருக்கு இன்னமும் பதற்றம்.
Bean Dizzy – Dean Busyதான் ஆனால் அதற்காக காஃபி கொட்டையை தூங்கி வழியனுமா?
Dear Queen – என்று சொல்ல நினைத்து அந்தப் பெண்ணின் அப்பாவிடம் Queer Dean என்று சொல்லிவிட்டால்? அவர்தான் Dean வேற
12
பேச்சோடு பேச்சாக
விளையாட்டுப் போல் இருக்கிறது. ஒன்றரை வருடத்திற்கு முன்னர் எனது கன்னிப் பிரசங்கத்தினைப் பற்றி பதிவு செய்திருந்தேன். அதற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து பிரசங்கங்கள் முடித்து அடுத்த நிலைக்கு தயாராகி இன்னும் ஒரு சுற்று கூட முடித்தாகிவிட்டது.
‘ஆனாலும், நீ ரொம்ம்ம்ப பேசறே’ என்று சொல்லி இந்த வருடம் எங்க குப்பத்து டோஸ்ட்மாஸ்டர் கிளப்பின் காரியதரிசி பொறுப்பைக் கையில் கொடுத்து விட்டார்கள். அமெரிக்காவின் ‘சுதந்திர மாநிலமான’ (The State of Independence) பென்சில்வேனியாவின் ஆகசிறந்த District 38, Area 23ன் பிரும்மாண்டமான கிளப்பின், பதினோரு வருட சரித்திரத்தில் முதல் தெற்காசிய காரியதரிசி என்பதை தமிழில் எழுதி பதிவு செய்து கொள்கிறேன். ஹ்க்கும்… ஹ்க்கும்.
மொத்த உறுப்பினர் எவ்ளோங்கிற கேள்வியெல்லாம் எதுக்கு இப்போ? நாப்பதிலிருந்து நாப்பத்தஞ்சிக்குள்ளன்னு சொல்றதைக் கேட்டு நக்கலா சிரிக்கறதுக்கா? அட! மேட்டருக்கு போவோம் வாங்க.
சொற்பொழிவாற்றுவது தவிர, நேரப் பங்கீடு, மேலாண்மை, ஒருங்கிணைத்தல், பொதுஜனத் தொடர்பு என்று டோஸ்ட்மாஸ்டரில் ஏராளமான விஷயங்கள் கற்றுக் கொள்ள இருக்கிறது. உங்கள் அருகாமையில் Toastmasters கிளப் இருந்தால் கட்டாயம் ஒரு எட்டு போய் பாருங்கள்.
பப்ளிக் ஸ்பீக்கிங் என்றால் வைகோ மாதிரி மடை திறந்த வெள்ளம் போல இரண்டு மணி நேரங்கள் எல்லாம் பேச வேண்டாம். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரைதான். கொஞ்சம் முன்னேறி அட்வான்ஸ்ட் சுற்றில் பத்து பதினைந்து நிமிடங்கள் பேசலாம். ‘ஹ.. இம்புட்டுத்தானா’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறதில்லையா… உண்மையில் சற்றுக் கடினமான பயிற்சிதான்.
ஒரு இருபது முப்பது பேருக்கு நடுவில் எழுந்து நின்று ‘உயிருக்கும் உயிரான டீ மாஸ்டர்களே, காபி மேக்கர்களே… ஊ..ங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்’ என்று கௌண்டமணி ஸ்டைலில் கலாய்த்தலாக ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் திட்டம் தீட்டிக் கொண்டு போனால், டுமீல் என்று மனசெல்லாம் ப்ளாங்க் அவுட் ஆகி, தொண்டை கட்டிக் கொண்டது போல கமறலாக ஏதாவது உளரலாக வரும். சகஜமாக சில காலம் பிடிக்கலாம்.
மூன்றாவது பிரசங்கத்தின்போது ஒரு நண்பர் ‘பிரமாதமான நகைச்சுவை உணர்ச்சியய்யா உஙக்ளுக்கு’ என்று ஃபீட்பேக் கொடுத்திருந்தார். நேற்று பதினான்காவது பேச்சை முடித்தபிறகு அதே நண்பர் ‘இப்பொழுது உனது ஆங்கிலம் பரவாயில்லை. நல்ல முன்னேற்றம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அப்போ… நான் தப்புதப்பா இங்க்லீஷ் பேசினதைத்தான் ஜோக்குன்னு நினச்சுகிட்டாரோ? :))
என்னுடைய சிறு பிரசங்கங்களைப் பற்றிய சின்னஞ்சிறு குறிப்புகளின் தொகுப்பு…
1. கன்னிப் பேச்சு.
டோஸ்ட்மாஸ்டர் வழக்கில் Icebreaker என்றும் குறிப்பிடுகிறார்கள். நம்மைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு வரைந்து, அதில் நாலைந்து சுவாரசிய சம்பவங்களை சேர்த்து சொல்ல வேண்டும்.
நான் Spoonerisms பற்றி ஆறு நிமிடம் பேசினேன். ஆங்கில மொழியில் பிரபலமான நாக்குழறல்களை சற்றே கதைவடிவில் என் கல்லூரியில் நிகழந்த சம்பவங்களாக தொகுத்து பேசினேன். நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பேர் நகைசுவையை நகைத்து சுவைத்தார்கள். அது ஒரு வெற்றிதான். ஆனால் சற்று பயந்து பயந்து பேசியதில் உச்சரிப்பில் தெளிவு அதிகம் இல்லை என்று உணர முடிந்தது.
சமீபத்தில் பேயோன் பதிவில் வந்த ஸ்னூப்பரிஸ (Spoonerism எனச் சொல்லும்போதே நாக்குழறி Snooperism எனச் சொல்வார்களாம்) கமெண்ட்டை வெகுவாக ரசித்தேன்.
2. வடிவான பேச்சு
வடிவேலு பேச்சு அல்ல. “இப்படித்தான் நான் புறப்படும்போதே அவன் எதிர்ல வர்றானா… ‘டை’ கட்டிகிட்டு வர்றான்… ப்ளூ ஷர்டுக்கு சிகப்பு கலர்ல டையாம்… எங்க தமிழ் வாத்தியார் ரா கோவிந்தன் கிண்டலா சொல்வார்… நாங்கல்லாம் அவரை ராகோ ராகோன்னு கூப்பிடுவோம்… என்ன கோ, ராகோன்னு அவர் கேக்கற மாதிரி சவுண்டு விடறது… சரவணன்னு ஒரு சேட்டைக்கார பையன் என்ன பண்ணான்னா… ” என்று தடால் தடால் என ட்ராக் மாறிப் போய்விடாமல் கோர்வையாக ஒரு வடிவத்தில் இருக்க வேண்டும் பேச்சு.
வலுவான தொடக்கம், பிறகு கோர்வையான விவரிப்புகள், இறுதியில் சுவாரசியமான முத்தாய்ப்போடு முடிக்க வேண்டும்.
One day of Excitement என்ற தலைப்பில் மீண்டும் ஒரு கொசுவர்த்தியை சுற்றி வைத்தேன். கொஞ்சம் புனைவு கலந்த பள்ளிக்கால அனுபவம். ஒரு நாள் நண்பர்கள் மூவர் ‘செய்யக் கூடாத செய்கை எல்லாம் செய்து பாத்துடனும்’ என்று திட்டம் போடுகிறார்கள். அது நிறைவேறியதா இல்லையா என்பதைப் பற்றித்தான் பேச்சு. சுஜாதா தேசிகன் எழுதிய ஒரு சிறுகதையையும் உபயோகித்துக் கொண்டேன். செம ரெஸ்பான்ஸ். பேச்சைப் பற்றி பதிலுரைத்த ஒரு பெண்மணி ‘நாம் எல்லாரும் இந்த அனுபவத்தோடு அடையாளபடுத்திக் கொள்ளலாம்’ என்ற ரீதியில் சொன்னார்… அடப்பாவிகளா… அப்போ அந்த வயசில எல்லாருமே அப்பாடக்கர்தானா…
3. நேரடியான பேச்சு
இது சற்று பெரிய அரங்கத்தில் நடைபெற்றது. ஓசி சாப்பாடு கொடுக்கிறார்கள் என்று கொஞ்சம் ஓவர் கூட்டம் வேறு அன்று. தடுமாற்றம் இல்லாமல் நன்றாக பேச முடிந்தது.
Get to the point என்பது நோக்கம். அதையே நான் சற்று மாற்றி Get to the point in 30 seconds என்று பேசினேன். முப்பது நொடிகளில் பாதிப்பு ஏற்படுத்த தேவையான மூன்று அடிப்படையான விஷயங்கள் என்று வைத்துக் கொண்டு, அவை ஒவ்வொன்றுக்கும் ஏற்ற மாதிரி ஒன்றிரெண்டு ஜோக்குகள் சொல்லி முடித்துவிட்டேன்.
இந்தப் பேச்சைப் பற்றி விமர்சித்தவர் ‘ஜோக்கெல்லாம் சரி… ஆனால் முப்பது நொடியில் என்ன சாதிக்க முடியும் என்று சொல்லவே இல்லையே’ என்றார். அட… தெரிஞ்சா சாதிச்சிருக்க மாட்டோமா மேடம்…
4. எப்படி சொல்வது?
How to say it என்பது அப்ஜெக்டிவ். என்னத்தை சொல்வது என்று இணையத்தில் வலைவீசி தேடியபோது ‘பூனைக்கு மருந்து கொடுப்பது எப்படி’ என்ற ஒரு பதிவை படித்தேன். செம கலாய்த்தலாக இருந்தது. அப்படியே கொஞ்சம் டிங்கரிங், பெயிண்டிங் அடித்து, கொஞ்சம் பிஸிகல் கெஸ்சர்ஸ் சேர்த்து செய்தேன். எனக்கே திருப்தியாக அமைந்திருந்தது.
இந்தப் பேச்சை விமர்சிக்க வந்தவர் நிஜமாகவே பூனை வளர்க்கிறவராம். ‘பூனைக்கு மருந்து கொடுக்க இத்தனை சிரமமா? இத்தனை வருடத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை’ என்று கொஞ்சம் ‘உர்ர்’ரென விமர்சித்துவிட்டு சென்று விட்டார்.
5. உடல்மொழி
பேச்சுக்கேற்ற அஙக் அசைவுகளுடன் சொல்ல வந்த கருத்தினை சிறப்பாக சொல்ல வேண்டும். அப்பொழுது ஃபுட்பால் சீஸன். அதை வைத்து ஒரு சிறிய கதை போல் செய்து பேசினேன்.
ஒரு லோக்கல் ஃபுட்பால் டீம் தோற்றுப் போய் பாரில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனிடம் போய் ஆறுதல் சொல்லிவிட்டு… அவனுக்கு ஒரு ட்ரிங்க் வாங்கித் தருகிறான் கதைசொல்லி. அவசரமாக கிளம்ப வேண்டியிருப்பதால் அந்த பானத்திற்கான பணமாக இருபது டாலரை பார் டேபிளில் வைத்து விட்டு வெளியேறுகிறான்.
இவன் பணம் கொடுப்பதைப் பார்க்கின்ற ஒரு கிருத்துவம் பிடித்த ஆள், மேட்ச் ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள், பணத்திறகாக தோற்றுப் போய்விட்டார்கள் என்று சொல்ல ஆரம்பிக்க அது பரப்ரப்பாக ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்குட் என்று பரவி டிவி நியூஸில் ஃப்ளாஷாக வர ஆரம்பித்துவிட்டது. நகர மேயர் விசாரணை செய்ய உத்தரவிடுவதாக நியூஸில் சொல்கிறார்கள். நடுவில் ஃபுட்பால் டீம் கேப்டனுக்கும் பாரில் பணியாற்றுகிற பெண்ணிற்கும் இருக்கும் தொடர்பம் அம்பலமாகிறது.
இப்படியாக இருபது டாலரில் ஒரு ஃபுட்பால் மேட்ச்சை ஃபிக்ஸ் செய்தேன் என்று சொல்லி முடித்தேன். சொல்லும்போது கதை சரியாக ரீச் ஆகவில்லை என்று தெரிந்தது. நாம என்ன கி.ராஜநாராயணனா அற்புதமா கதையை சொல்வதற்கு என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.
6. குரல் மாறுதல்கள்
Vocal Variety காட்டி பேச வேண்டிய பேச்சு. அப்பொழுதுதான் நியுயார்க்கில் ஒரு டைனோசர் ஷோ பார்த்துவிட்டு வந்திருந்தேன். அதையே தலைப்பாக வைத்து டைனோசர்கள் போல நடந்து, சத்தமிட்டு காட்டினேன். முத்தாய்ப்பாக ஷோ முடிந்ததும் அந்த டைனோசர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டதாகவும், அதில் ஒரு பெருசு தன்னோட குட்டிகிட்ட ‘இது என்ன பெரிய வேடிக்கை… அடுத்த ஃப்ளோரிடா போவோம்ல அங்க வர்ற மனுஷப்பயங்க கூட்டத்தைப் பாரேன். இன்னும் வேடிக்கையாக இருக்கும்’ என்று சொன்னதாகவும் சொல்லி முடித்தேன். அதாவது டைனோஸர்கள் பார்க்கும் ‘மனிதர்கள் ஷோ’வில் நான் பங்கேற்றது போல் இருந்தது என்று சொல்ல, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
7. ஆராய்ச்சி பேச்சு
பேசுபொருளைப் பற்றி திறம்பட ஆய்வு செய்திருக்க வேண்டுமாம். சட்டென இலக்கியத்திற்கு தாவி Popular Pairs என்ற தலைப்பில் ஹெர்லக் ஹோம்ஸ் / வாட்சன் ஜோடி, ஜீவ்ஸ் / ஊஸ்டர் ஜோடி மற்றும் ஃபிலியாஸ் / பாஸேபர்தூ ஜோடி என்று தொகுத்து பேசினேன். உதவிக்கு பவர்பாய்ண்ட் வைத்துக் கொண்டு தகவல களஞ்சியமாக தொகுத்து அளித்தேன்.
‘தொர… லிட்டரேச்சர் பத்தில்லாம் பேசுது’ங்கற அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சூனா பானா அப்படியே மெய்ன்டைன் பண்ணிக்கடா என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டு வந்துவிட்டேன்.
8. விஷுவலான பேச்சு
சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்… சில பொருட்களை காட்சிப்படுத்தி பேச வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பொருள் இருக்க வேண்டுமாம்.
ஒரு ஆப்பிளையும் ஆரஞ்சையும் எடுத்துக் கொண்டு போனேன். ‘ஆப்பிளையும் ஆரஞ்சையும் எப்படியெல்லாம் ஒப்பிடலாம்’ என்பதுதான் தலைப்பு. செம ரவுசு. மக்கள் வெகு சுவாரசியமாக ரசித்தார்கள். நியூட்டனின் புவியீர்ப்பு விசை, ஐன்ஸ்டைனின் ரிலேடிவிட்டி தேற்றம் என்றெல்லாம் ரவுண்டு கட்டி அடித்த பேச்சு. நல்ல Spontaneousஆக நிகழ்த்த முடிந்தது.
9. தூண்டச் செய்யும் பேச்சு
Persuade with Power. அதாவது பேச்சைக் கேட்கிறவர்களை செயலில் இறங்கத் தூண்டும் அளவுக்கு இருக்க வேண்டுமாம். அழுகிய முட்டையை வீச அல்ல.
‘தொலைந்து போன எனது சொற்பொழிவு’ என்ற தலைப்பில் பேசினேன். அன்றைக்கு நான் தயாரித்து வைத்திருந்த சொற்பொழிவு தொலைந்து போய்விட்டதாக சொல்லி.. அந்தப் பேச்சைப் பற்றிய தகவல்களை சொன்னேன். எத்தனை வார்த்தைகள் இருந்தது, எப்படி தயாரித்தேன், எதைப் பற்றியெல்லாம் தகவல் சேகரித்தேன்… இப்படி ஒரு நேரேஷன். இறுதியில் ‘இல்லாத பேச்சைப் பற்றி இவ்வளவு பேசுகிறேன் பாருங்கள்… இருக்கும் விஷயங்களைப் பற்றி நீங்கள் எல்லாம் எவ்வளவு பேசலாம்? உடனே உங்கள் பெச்சை தயார் செய்யுங்கள்’ என்று சொல்லி முடித்தேன்.
Wickedly humorous என்று ஒரு பட்டத்தை அளித்தார் பேச்சைப் பற்றி ஃபீட்பேக் கொடுத்தவர்.
10. நேயர்களை பாதிக்கும் பேச்சு
பாதிப்பு என்றால் தவறாக நினைக்காதீர்கள். Inspire செய்ய வேண்டும். சட்டென மைக்கேல் டக்ளஸின் ‘Greed is Good’ பேச்சு நினைவிற்கு வந்தது. அதையே தலைப்பாக்கி பேராசைப் பாத்திரங்களாக நாலைந்து பேரைப் பற்றி பேசினேன்.
‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ வரம் பெற்ற மைதாஸ் பற்றியும், தல்ஸ்தோயின் கதையில் வரும் ‘ஓடிய இடமெல்லாம் உனதாகும்’ வரம் பெற்ற பாக்கோமைப் பற்றியும், கோடலியை தொலைத்துவிட்டு தேவதையிடம் நேர்மையாக வேண்டிய விறகுவெட்டியைப் பற்றியும் மூன்று விதமான கதைகளை சொல்லி,
‘Greed is Good, but Contentnment is THE BEST’ என்ற நீதியோடு முடித்துக் கொண்டேன்.
அடுத்த சுற்றில் முழுவதும் கேளிக்கைப் பேச்சு (Entertainment) மற்றும் கதை சொல்லுதல் (Story telling). அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்
13
கேளிக்கைப் பேச்சு
இப்பொழுது டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமைப்பில் இரண்டாவது சுற்றில் பேசிக் கொண்டிருக்கிறேன். Advanced Communicator Bronze என்று அதற்குப் பெயர். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் சிவப்பு கட்டம் போட்ட இடம்தான் அது. அந்த சார்ட்டில் இருக்கும் அத்தனை நிலைகளையும் தாண்டினால் Distinguished ToastMaster என்ற பட்டமாம். தற்போதைய வெண்கலத்தில் இரண்டு பிராஜெக்டுகளாக பத்து பேச்சுகள் உண்டு. முதல் நிலையில் Entertainment Speaker (கேளிக்கை பேச்சாளர்) என்று ஐந்து பேச்சுகள் முடித்து அரைக்கிணறு தாண்டியாகிவிட்டது. அடுத்த நிலைக்கு ‘கதை சொல்லி’ தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
கெக்கரேபிக்கரே என்று எது செய்தாலும் அதை கேளிக்கை லிஸ்ட்டில் காட்டிவிடலாம் என்பதால்தான் அதைத் துணிந்து தேர்ந்தெடுத்தேன். பிப்ரவரியில் இருந்து ஆகஸ்ட்வரை ஆறு மாதங்கள் ஆகிற்று முடிக்க.
கேளிக்கைப் பேச்சு
‘எனது அதிர்ஷ்ட தேவதை ஒரு நரிக்கொம்பு’ என்று ரவுசு விட்டு ஆரம்பித்த பேச்சு இது. நரிக்கொம்பைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும் என்று அறிமுகப்படுத்தி, ‘இதோ இதுதான் அந்த நரிக்கொம்பு’ என்று பார்வையாளர்களிடையே சுற்றுக்கு விட்டேன். இதோ என் தாத்தாதான் இந்த நரிக்கொம்பை முதலில் பெற்று வந்தார் என்று என் புகைப்படத்தையே காட்டினேன். சின்ன வயசில் என் தாத்தா என்னைப் போல்தான் இருந்தாராம் என்று சொல்ல செம சிரிப்பு. அதான் சொன்னேனே கெக்கரேபிக்கரே என்று எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று.
நரிக்கொம்பின் அருமை பெருமைகளை (உதவி- விக்கிபீடியா) சொல்லிவிட்டு, இறுதியாக பார்வையாளர்களிடையே ‘நினைப்பதையெல்லாம் நடத்தி காட்டும் நரிக்கொம்பை நீங்கள் கையில் வைத்திருந்தீர்களே… எதுவும் நினைத்து பார்த்து டெஸ்ட் செய்தீர்களா?’ என்று கேட்டேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் நினைத்தது நடக்காததற்கு காரணம் அது போலி, இதுதான் ஒரிஜினல் என்று இன்னொரு நரிக்கொம்பை காட்டினேன். இதோ டெமோ செய்து காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு ‘இந்த அறையில் இருக்கும் போலி நரிக்கொம்பை மறையச் செய்துவிடு’ என்று சொல்ல அந்த போலி நரிக்கொம்பு காணாமல் போய்விட்டது. முன்னமே கேட்டுக்கொண்டிருந்தபடி பார்வையாளர்களில் ஒருவர் அதை எடுத்து மறைத்து விட்டிருந்தார். நினைத்த அளவுக்கு டிரமாட்டிக்காக செய்ய முடியாவிட்டாலும் ஏதோ புதியதாக முயற்சி செய்த நிறைவு. ஃபீட்பேக் கொடுத்த அம்மணி பக்கம் பக்கமாக பாராட்டினார்.
கேளிக்கை பேச்சுக்கான தேவைகள்
படம், பாட்டு என்றெல்லாம் சேர்த்து பேசினால் கேட்பவர்கள் மனதில் தங்கும் என்பதுதான் இந்த பிராஜெக்ட்டின் அடிப்படை. ‘என்னைக் கெடுத்த கல்வி’ என்ற தலைப்பில் ஒரு பவர்பாய்ண்ட் செய்துகொண்டு பேசினேன். எனது படிப்பு எனக்கு ஒன்றுமே செய்யவில்லை. ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பெற்றுத்தரவில்லை, 140 எழுத்துகளில் ட்வீட்ட சொல்லித்தரவில்லை, ப்ளாக் ட்ராஃபிக் கூட்ட சொல்லித்தரவில்லை என்று ஜாலியாக போட்டு தாக்கினேன். வரலாற்றை திருத்தி எழுத முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் வரலாற்று பரீட்சையில் எழுதுவதையெல்லாம் திருத்துகிறார்கள் என்று கார்க்கி ஸ்டைல் காமெடிகள் சிலதும் சேர்த்திருந்தேன். இந்த தோல்விக்கு ஒரே பரிகாரம் நான் படித்த பள்ளிக்கு சென்று கட்டிய பணத்தையெல்லாம் ரீஃபண்ட் கேட்கப் போகிறேன் என்று சொல்லி முடித்தேன். FRIGYES KARINTHY என்ற ஹங்கேரியர் எழுதிய நாடகத்தை (எப்போதோ பள்ளியில் படித்தது) முன்வைத்து அமைத்துக் கொண்ட கதை. நல்ல ரெஸ்பான்ஸ். பேச்சை Evaluate செய்தவர் முடிவு பிரமாதம் என்று பாராட்டினார்.
வேடிக்கை பேச்சு
சிரிப்புதான் கேளிக்கை பேச்சிற்கான முக்கிய தேவை. சொந்த அனுபவத்திலிருந்து ஏதாவது சொல்லி சிரிக்க வை என்று கைட்லைன் கொடுத்திருந்தார்கள். ‘Being Indian’ என்ற தலைப்பில் ஆறு நிமிடம் பேசினேன். பொதுவான Standup Comedyகளில் தாழ்த்தி பேசுவது போல் இல்லாமல் சற்று Genuine அனுபவங்களாக சொல்லிக் கொண்டு போனேன். தொடங்கும்போதே முன்னெச்சரிக்கையாக ஒரு ஜோக் சொல்லி நான் கையை உயர்த்திக் காட்டும்போது சிரித்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கான க்யூ என்று சொல்லி வைத்துக் கொண்டேன். ஜாலியாகப் போனது. எல்லாரும் நன்றாகவே சொல்லிக்கொடுத்தபடி சிரித்தார்கள்.
உணர்ச்சிகரமான பேச்சு
திடீர் திடீர் திருப்பங்களுடன் ஒரு த்ரில்லர் ஸ்டோரியை எடுத்துக் கொண்டேன். ‘அங்கிள் சார்லியை கொன்றது யார்?’ என்பதுதான் தலைப்பு. சொல்லும்போது கொஞ்சம் நீண்டு நீர்த்துப் போய்விட்டது. இன்னும் கொஞ்சம் டிராமா சேர்த்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. நல்லவேளை. யாரும் எழுந்து ‘நான் கொல்லலயே’ என்று காமெடி செய்யவில்லை.
டின்னர் பேச்சு
டின்னருக்கு அப்புறம் கலந்துரையாடலில் பேசுவது போல் இயல்பான பேச்சு என்று பிராஜெக்ட். ஆடியன்ஸிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவருடைய டின்னருக்கான நன்றி என்று சொல்லிவிட்டு அப்படியே கேஷுவலாக வேறு வேறு தலைப்புகளில் பேச்சைக் கொண்டு சென்றேன்.
‘பிரமாதமான டின்னர். மிகவும் ரசித்தேன். ஆனால் என்ன… நீங்கள் பரிமாறிய சாலட் அளவுக்கு இந்த வைன் பழசாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உருளைக்கிழங்கு கருகிய அளவுக்கு ஸ்டீக் வெந்திருக்கலாம். இந்த அறையின் வெப்பம் அளவுக்காவது உங்கள் காப்பி சூடாக இருந்திருக்கலாம்’ என்று கலாய்த்துவிட்டு, அப்படியே மாமாவின் திருமண தினம், குழந்தையின் புகைப்படத்தை பாராட்டிய நண்பர் என்று சில ஜோக்குகளை சேர்த்து பேசினேன். எல்லாம் மெயிலிலும் இணையத்திலும் கண்டறிந்ததுதான். பாராட்டிய பேசியவர் ‘ஆறு மாதமாக இந்த பிராஜெக்ட்டை எப்படி செய்வது என்று திணறிக் கொண்டிருந்தேன்’ என்று சொல்ல்லிப் பாராட்டினார். இவனே செய்துவிட்டானே நாம் செய்ய முடியாதா என்று சுய ஊக்குவிப்பு செய்து கொண்டிருப்பார் போல.
14
அஞ்சு கதைகளை அஞ்சு மாசத்துல அஞ்சு அஞ்சு நிமிஷமா...
அஞ்சு கதை…
நீங்க கதைன்னு சொன்னாலேப் போறாதா? நாங்களே அஞ்சி ஓடிடமாட்டோமா… தனியா வேற சொல்லனுமா?
இல்ல சார்… அஞ்சு அஞ்சு நிமிஷமா அஞ்சு கதைகளை
ஹார்ட் அட்டாக்கே மூணு தடவைக்கு மேல தாங்காது. உங்க டார்ச்சர் விட்டு விட்டு அஞ்சு தடவைன்னா எப்படி சார் தாங்கும்?
அஞ்சு மாசமா அஞ்சு அஞ்சு நிமிசமா அஞ்சு கதைகளை…
என்னதான் சொல்ல வர்றீங்க இப்ப?
டோஸ்ட்மாஸ்டர் பத்திதான் சார். Advanced Communicatorல வெண்கலம் வென்றாச்சு. அடுத்து வெள்ளி, தங்கம்னு பெரிய திட்டம் போட்….
ஐயைய்யோ… டோஸ்ட்மாஸ்டரா?
அப்புறம் அந்த நண்பரை இணையவெளியில் எங்குமே காணோம். அந்தர்தியானமாகி விட்டார். இதற்கெல்லாம் அசந்து விடுவோமா. ஹெஹெ…
இந்தச் சுற்றில் நான் எடுத்துக் கொண்ட தீம் ‘கதைசொல்வது‘. மொத்தம் ஐந்து பேச்சுகள்.
1. நாட்டுப்புறக் கதை:-
ஜூனியருக்கு அவ்வப்போது சொல்லும் கதையில் ஒன்றான ‘மீனவனும் ஜீனியும்’ கதையைத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆயிரத்தோர் அரேபிய இரவுகளில் முதலில் வரும் கதை. இங்கே அசைபடமாகவே பார்க்கலாம்.
இந்தக் கதைக்கு எக்ஸ்டென்ஷனாக இன்னொரு முடிவு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். இறுதியில் அந்த மீனவன் தந்திரமாக ஜீனியை ஏமாற்றி மீண்டும் ஜாடியில் அடைத்து கடலில் தூக்கி எறிந்து விடுவான் இல்லையா? அந்த ஜாடி பல நூற்றாண்டுகள் கழித்து எனக்கு அகப்படுகிறது. இப்பொழுது நான் எப்படி அந்த ஜீனியிடமிருந்து தப்பிப்பது?
ஆனால் நேர நெருக்கடியில் ஒரிஜினல் கதையை மட்டும்தான் சொல்ல முடிந்தது. ‘கூடுதல் கதை’யை அப்புறம் எப்பொழுதாவது எழுத வேண்டும்.
2. பர்சனலா ஒரு கதை
சொந்த அனுபவத்திலிருந்து ஏதாவது ஒரு கதை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஒரு வியட்நாமிய நண்பருக்கு திருமணம் ஆகியிருந்தது. ஏழு வருடமாக டேட் செய்துகொண்டிருந்த பெண்ணைக் கைபிடித்திருந்தார். திருமணம் முழுவதும் அவர்கள் இருவரும் மட்டுமே திட்டமிட்டு நடத்தியிருந்தார்கள். அந்த திருமணத்தையும் எங்கள் திருமணத்தையும் ஒப்பிட்டு ‘நான் முதன்முதலாக அவளை சந்தித்த பொழுது’ என்ற தலைப்பில் ஆட்டோ ஃபிக்ஷன் ஓட்டினேன்.
திருமணத்திற்கு முன்னால் என் மனைவியை இரு முறைகள்தான் சந்தித்திருக்கிறேன். முதலில் ‘பெண் பார்க்க போனது’. இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம். இரண்டு தடவையும் எங்களைச் சுற்றி ஒரு பத்து இருபது பேர்களாவது இருந்திருப்பார்கள். பெண் பார்க்கும் படலத்தின் போது திக்கித்திணறி ‘ரெண்டொரு வார்த்தைகள் தனியாப் பேசிக்கலாமா’ என்று அனுமதி வாங்கியபோது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அந்த அனுபவத்தை சற்று விவரித்து கதையாக சொல்லி முடித்துவிட்டேன்.
3. இதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால்
சரியாக கதைக் கரு எதுவும் அகப்படாமல் சிறுவர் கதை தொகுப்பில் இருந்து ‘கிழவியும், நான்கு நண்பர்களும்’ என்ற ஒரு கதையை சொல்லி, அதற்கொரு நீதியையும் சொல்லி ஒப்பேற்றிவிட்டேன். கதையின் தலைப்பாக ‘சொல்வதை சரியாக உரக்கச் சொல்’ என்று வைத்திருந்தேன். ஆனால் தலைப்புக்கும் கதைக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதாக எனக்கே நம்பிக்கையில்லை.
4. நெகிழ்ச்சிக் கதை
ஆங்கிலத்தில் நெகிழ்ச்சியான சிறுகதை என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ஓ. ஹென்றியின் The gift of the Magi. கதையைப் படங்களாக விளக்கும் பாணியில் ஒரு நல்ல பவர்பாய்ண்ட் ப்ரசென்டேஷன் தயாரித்துக் கொண்டு போனேன். ஒரே ஒரு சறுக்கல் என்னவென்றால், ஆடியன்ஸ்க்கு இந்தக் கதை நன்கு அறிமுகமாயிருக்கும் என்ற ஓவராக நம்பியதுதான். என் பேச்சை விமர்சிக்க வந்தவருக்கு கதையில் ஏகப்பட்ட சந்தேகங்கள் வந்துவிட்டன. ஒருவழியாக சமாளித்து விட்டேன். சிக்ஸர் அடிக்க நினைத்து சிங்கிள் ரன் எடுத்த கதையாகி போனது.
5. வரலாற்றுக் கதை
வரலாற்றுக் கதை என்றவுடன் சட்டென நினைவுக்கு வந்தது தென்னமெரிக்காவில் இன்கா பேரரசை முடிவுக்கு கொண்டு வந்த ஸ்பானியர்களின் இரண்டாவது போர்தான். Guns, Germs and Steel என்ற புத்தகத்தில் ஜேர்டு டைமண்ட் சொல்லும் The battle of cajamarca கதை. கிட்டத்தட்ட எழுபதாயிரம் வீரர்களைக் கொண்ட இன்கா படையை வெறும் நூற்று சொச்சம் பேர் கொண்ட சிறிய படை கொண்டு ஸ்பானிய ஜெனரல் ஃப்ரான்ஸிஸ்கோ பிஸாரோ ஜெயித்துவிடுகிறார். இந்தப் போரின் முன்னும் பின்னுமான வரலாற்று தகவல்கள் ஏராளம். மிகவும் உற்சாகமாக சொன்ன கதை. இம்முறை என் பேச்சைப் பற்றி விமர்சிக்க வந்தவர் ஒரு ஸ்பானிஷ்காரதான். பிறகு தனியாக என்னை சந்தித்து ‘எனக்கே நீ சொல்லித்தான்பா இந்த வரலாற்றுக் கதை தெரிந்தது’ என்று சிலாகித்து மகிழ்ந்தார்.
சரி…சரி… அவர் வாய் வார்த்தையாத்தான் சொன்னார். அதுக்குள்ள மண்டையில குட்ட வந்திடாதீங்க.
இந்த சீரிஸில் பெற்ற மிகப் பெரிய அனுபவம்… ‘கதை எழுதறதை விட கதை சொல்றது மிகவும் கடினமான விஷயம்’. அடுத்த படிக்கு எந்த திசையில் அடியெடுத்து வைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
15
பேச்சும் அதன் மதிப்பும்
அவர் பெயர் சரியாக நினைவில்லை. ஏதோ ஒரு ரெட்டிகாரு. அவசரத்திற்கு லக்ஷ்மண ரெட்டி என்று வைத்துக் கொள்வோம். பெங்களூரூவில் வேலை செய்து கொண்டிருந்த காலம். நிறுவனத்தை யாரோ வாங்கி, யாரோ முதலீடு செய்து, யாரையோ எட்டி உதைத்து வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். எஞ்சியிருந்த பிஞ்சிப்போன கூட்டத்திலிருந்து பொறுக்கியெடுத்த 10 பேரை பல்வேறு தலைமைகளை ஏற்க ஒரு பயிற்சிக் கூட்டம். அதை நடத்தத்தான் லக்ஷ்மண ரெட்டி வந்திருந்தார். பயிற்சி என்ற போர்வையில் அது ஒரு பரீட்சைதான். வொர்க்ஷாப் முடிவில், பங்கேற்பாளர்களைப் பற்றி அவர் தரப்போகும் ரிப்போர்ட்டுக்காக மேலிடமும் காத்திருந்தது.
முதல்நாளில் ஒரு கார்ட்டூன் படத்தை திரையில் போட்டுக் காட்டினார். ரம்மியமான சோலைக்கு நடுவே ஒரு பெஞ்ச்சின் பின்புறம். இரண்டு பேர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். தொப்பி அணிந்திருந்த, கிராப் தலைக்காரர் கையை பக்கத்தில் நீண்ட கூந்தலுடையவர் மேல் போட்டு அணைத்தபடி இருக்க இரண்டு பேரின் முதுக்குப்புறம்தான் தெரிகிறது.
‘இந்தப்படத்தைப் பார்த்ததும் என்ன நினைக்கிறீர்கள்?’
பங்கேற்பாளர் எல்லோரும் ஒவ்வொரு பதிலை சொல்லியபடி இருந்தார்கள். பொதுவாக எல்லோரும் ‘ஏகாந்தத்தில் இருக்கும் காதலர்’ என்ற ரீதியில் தங்கள் அவதானிப்புகளை பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
இந்தப் படத்தின் தந்திரமே அந்த சூழலை பின்புறமாக காட்டுவதுதான் என்று எனக்கு உடனே புரிந்துவிட்டது. இந்தப் படத்தின் மறுபக்கம் பார்க்காமல் கருத்து சொல்வது என்பது தவறாகத்தான் இருக்கும். Appearance is deceptive என்று சொல்வார்களே… அதை விளக்கத்தான் இந்தப் படத்தை ரெட்டிகாரு போட்டுக் காட்டுகிறார் எனப் புரிந்தது.
ஆனால் சோகம் என்னவென்றால், என்னால் அதை சட்டென விளக்கி சொல்ல முடியவில்லை. என் முறை வந்தபோது சிரித்துவிட்டு, ‘இரு நண்பர்கள் என்றுகூட இருக்கலாம்’ என்ற மாதிரி எதையோ மென்று முழுங்கிவிட்டு நிறுத்திவிட்டேன். ஸ்டீரியோடைப்பான பதில் இல்லையென்றாலும் ஆணித்தரமான பதிலாகவும் இல்லாததால் ரெட்டிகாரு இஷ்டத்திற்கு என் பதிலை திரித்து கிண்டலடித்து சூழலை இலகுவாக்கிவிட்டு படத்தின் மறுபக்கத்தை போட்டுக்காட்டினார்.
அந்தப் படத்தில் தொப்பி அணிந்த ஒரு பெண்ணும், ஒரு நாயும் பார்க் பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தனர். அந்த நாயின் நீளக் காதுகளை பின்னாலிருந்து பார்த்தால் நீண்ட கூந்தல்போலத் தெரியும்படி கார்ட்டூனிஸ்ட் வரைந்திருந்தார்.
பிறகு அவருடன் தனியாக உரையாடும் சந்தர்ப்பத்தில் அவர் இதே சம்பவத்தை நினைவுகூர்ந்து, ‘நீ சரியானபடி அவதானித்திருந்தாய். ஆனால் அதை சரியாக சொல்லவில்லை. உன் பிரச்னை சிந்திப்பதில் இல்லை. அதை வெளிப்படுத்துவதில். டோஸ்ட்மாஸ்டர்ஸ் போன்ற கிளப்கள் உனக்கு உதவக்கூடும்’ என்றார்.
ஒவ்வொருவரின் வளர்ப்பிலும் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. என்னைப் போன்ற சிறுநகரவாசிகளுக்கு, பெருநகரங்களின் சந்திக்கும் முதல் சவாலே தன்னை எப்படி சரியாக வெளிப்படுத்திக் கொள்வது என்பதுதான். வெகுளித்தனம் பலவீனமாக பார்க்கப்படும். நகாசுகளற்ற இயல்பு நாகரீமற்றதாக தெரியும். சிறு தவறுகள் கூட திறமைக்குறைவாக தீர்ப்பளிக்கப்படும்.
சிந்தனைகளை வளப்படுத்திக்கொள்வதைப் போல செயல்பாடுகளையும், வெளிப்பாடுகளையும் (expressions) வளப்படுத்திக் கொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த காலம் அது. பல கூட்டங்களிலும் தவறாக புரிந்துகொள்ளப்படுவோமோ என்ற பயத்தில் மௌனமாகவே இருந்துவிடுவது உண்டு. அதன் பக்கவிளைவாக இரண்டு பிரச்னைகள். “இவன் பேசாமலேயே இருக்கிறானே… மண்டைக்கனம் அதிகமோ” என்றோ அல்லது நெருங்கிப்பேசும் தருணத்தில் “இவ்ளோதான்ப்பா இவன்…. இதுக்குப் போயா இவ்வளவு சீன் போட்டான்” என்றோ தவறான பிம்பம் உருவாகக்கூடிய சாத்தியங்கள் இருந்தன. இந்த anxiety உணர்வை வெற்றிக்கொள்ள ஒரே வழி, பேசுவதற்கான தொடர்பயிற்சிதான். அதற்குத்தான் டோஸ்ட்மாஸ்டர்ஸ் போன்ற களங்கள் வாய்ப்பளிக்கின்றன.
தற்போதைய அலுவலகத்தில் வேலைக்கு பொறுப்பேற்றுக் கொண்ட முதல் வாரமே, ‘டோஸ்ட்மாஸ்டரில் சேர வருகிறீர்களா’ என்ற் போர்டு பார்த்ததும் ரெட்டிகாரு நினைப்பில் உடனே போய் பணத்தைக் கட்டிவிட்டேன். இன்றுடன் நான்குவருடங்கள் முடிகிறது.
இப்போதும் பேசுவதில் அந்த anxiety உணர்வு மேலோங்கியிருந்தாலும், இலக்கண தவறுகளோ, பொருட்பிழைகளோ ஏற்படும் அச்சம் இருந்தாலும், தயக்கத்தை மட்டும் குறைத்துக் கொள்ள முடிகிறது. பேசுவதோ, அல்லது பிறர் பேசுவதைப் பற்றி மதிப்பிடுவதோ பெரிய பிரச்னையாக இல்லை. நகைச்சுவை பேச்சுப்போட்டிகளில் கூட போய் கலந்து கொள்ளத் தயங்கியது இல்லை. ஆகப்பெரிய சவாலாக இருந்தது ‘அடுத்தவருக்கு வழிகாட்டியாக’ (Mentoring a member) இருக்க வேண்டிய பிராஜெக்ட்தான். மிகவும் பிரயாசைப்பட்டு இரண்டு மூன்று நண்பர்களை தயார்படுத்த முனைந்தும், வெவ்வேறு காரணங்களினால் அவர்கள் தொடரமுடியாமல் நின்றுவிட, ஜான் ஏறினால் முழம் சறுக்கும் கதையாக போய்க்கொண்டிருந்தது. ஒரு லெபானிய நண்பர் உற்சாகத்தோடு ஒத்துழைத்து சிறப்பாக சொற்பொழிவுகளை பொழிந்து தள்ளி ‘நீ ஒரு நல்ல வழிகாட்டி’ என்று சான்றளிக்க இத்துடன் முக்கியமான மூன்று நிலைகளை கடந்து நான்காவது நிலைக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். “அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாச்சு” என்று பீற்றிக்கொள்வதற்கு ஏற்றவகையில் ஒரு Flow-chart.
3
அமெரிக்காவின் குறுக்கே
16
மேற்கிலிருந்து கிழக்கே - 1
ஏறக்குறைய இரண்டு வருடமாக அமெரிக்க மேற்கு கடற்கரை ஓரமாக Bay Area என்று சொல்லப்படும் சிலிக்கன் பள்ளதாக்கில் குப்பை கொட்டிவிட்டு இப்பொழுது கிழக்கு கடற்கரைக்கு வேலை நிமித்தமாக பயணமாகிறேன். இக்கரையிலிருந்து அக்கரைக்கும் கிட்டத்தட்ட 3000 தூரம் இருக்கும். Coast-to-Coast கார் பயணம் செய்ய வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஒரு ஆசை உண்டு. இந்த இடமாற்றத்தை சாக்கிட்டு அந்தப் பயணத்தை செய்து விட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.
சாண்டா கிளாரா, கலிஃபோர்னியா மாநிலத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை (July 25, 2009)கிளம்பி, I-80 என்னும் இண்டர்ஸ்டேட் பாதை வழியாக, நெவடா மாநிலத்தை குறுக்கே கடந்து, யுட்டா (Utah) மாநிலத்தின் மத்தியில் சால்ட் லேக் சிட்டி என்னும் நகரத்தை அடைந்து தங்கலாம் என்று திட்டம். இது ஒரு எண்ணூறு மைல் தூரம். ஒரே நாளில் இத்தனை தூரத்தை கடப்பது சற்றே கடினம்தான். அதுவும் தனியாக பயணம் செய்ய வேண்டியிருப்பதால் செம போரடிக்க வாய்ப்பிருக்கிறது. அங்கிருந்து அடுத்த நாள் பயணத்தில் நெப்ராஸ்கா மாநிலத்தை அடைய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். அந்த திட்டத்தை நாளைதான் தீர்மானம் செய்ய வேண்டும்.
நண்பர்கள் யாரேனும் இவ்வழியில் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப் படுத்துங்கள். கண்டிப்பாக தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன்.
17
மேற்கிலிருந்து கிழக்கே - 2
நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது இருவாரம் முன்னர் 3000 மைல்கள் ஒரே மூச்சாக 3.5 நாட்களில் பயணம் செய்ததை சொன்னேன். அவருடைய உடனடி பதில் ‘இல்லை. நீ பொய் சொல்கிறாய்’. நானே ஓரிரெண்டு நாட்கள் கழித்துதான் அந்த அனுபவத்தை முழுவதுமாக உணர முடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அதே நண்பர்தான் பல வருடங்கள் முன்னர் இம்மாதிரியான ஒரு பயணத்தைப் பற்றிய கற்பனையை என்னுள் விதைத்தது. நன்றி அவருக்கு!
நான் காரோட்ட பழகியதே இரண்டு வருடங்கள் முன்னால்தான். இந்தியாவில் சில நெடுந்தொலைவு பயனங்கள் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் அமெரிக்காவின் நெடுஞ்சாலை அமைப்புகள் கொஞ்சம் சிக்கலானவை. ஹோம்வொர்க் செய்யாமல் புதிய பகுதிகளில் பயணம் செய்வது மிகவும் சிரமம். அதிலும் என்னைப் போன்ற அடிக்கடி வழி தவறும் ஆசாமிகளுக்கு மிகப்பெரும் சவால். அமெரிக்கா வந்திறங்கிய புதிதில் என்னுடை முதல் தரைவழிப் பயனத்தில் பத்து மைலில் சென்றடைய வேண்டிய இடத்திற்கு நான் அதிக நேரம் சென்றுக் கொண்டிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்தேன். மேற்கே செல்வதற்கு பதிலாக கிழக்கே சென்று சிகாகோ downtown வரை சென்று விட்டேன். கிட்டத்தட்ட 30 மைல் பிரயானம் அது. மீண்டும் 40 மைல் மேற்கே பயணம் செய்து முழுவதுமாக வீடு வந்து சேர்ந்தது பெரும் சாதனைதான் அன்று. பின்னர் Nexter நிறுவனத்தின் GPS ஒன்று வாங்கிவிட்டேன். போக வேண்டிய இடம்: வெள்ளை மாளிகை, வாஷிங்டன் என்று உள்ளீட்டினால், ஒபாமா போய்ச் சேருகிறாரோ இல்லையோ உங்களை சரியான பாதையில் கொண்டு சேர்த்து விடும் தானியங்கி வழி சொல்லி. ’இன்னமும் 200 அடியில் இடது பக்கம் திரும்பப் போகிறாயா இல்லையா’ என்று மண்டையில் மணியடித்து வழிப்படுத்தும் சாதனம். வழி தவறிப் போவதினால் உண்டாகும் சிக்கல்கள் இல்லாமல் போனது காரோட்டுவதின் மேல் மேலும் காதலைக் கூட்டியது.
கலிஃபோர்னியா மாநிலத்தில் இருந்து பென்சில்வேனியாவிற்கு இடம் மாற வேண்டிய வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மனதில் தோன்றியது ‘ஆஹா! Coast-to-Coast drive செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம்’. நண்பர்களிடம் சொன்னபோது பலருக்கு அதிலிருந்த எக்ஸைட்மெண்ட் புரியவில்லை. ‘தனியாக அவ்வளவு தொலைவா? எதற்கு அந்தக் கஷ்டம்?’ என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. பொதுவாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே நெடுந்தொலைவு காரோட்டி செல்வது என்பது ஒரு சிக்கன நடவடிக்கையாகவே அறியப் பெற்றிருந்தது. யுனிவர்சல் ஸ்டூடியோ, லாஸ் வேகாஸ், நயாகரா, டிஸ்னிலேண்ட், காஸினோஸ் போன்ற NRI பட்டியலில் இம்மாதிரியான நெடும் பயணம் இடம் பிடிப்பதில்லை. அம்மாதிரியான பயண அனுபவங்கள் சில்வற்றைப் படித்திருந்ததினால் எனக்கு அதில் இருந்த சவால்களும், சௌகரியங்களும் ஓரளவிற்கு தெரிந்திருந்தது.
இவன்தான் என்னுடைய பயணத்தின் இன்றியமையாத தோழன். 2009-ம் வருட டொயட்டோ கரோலா. புத்தம் புதிய வண்டி. நான்கிருக்கைகள், நான்கு கதவுகள் கொண்ட செடான் வகை மகிழுந்து. இந்தியாவில் இருந்தபொழுது 2004-ம் வருடத்து ஃபோர்ட் ஐகான் வைத்திருந்தேன். பெங்களுருவிலிருந்து, முருகனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர் என்று ஒரே வாரத்தில் ஒரு விரைவுப் பயணம் செய்திருக்கிறேன். பழனிக்கு மட்டும் பேருந்து பயணம். ஆனால் அம்முறை எனது பெற்றோர், மனைவி, குழந்தை என்று கார் முழுவதும் மனிதர்கள். இம்முறை கார் முழுவதும் பெட்டிகள், மூட்டைகள் மற்றும் புத்தகங்கள். எத்தனை பெட்டிகளடா அதை வைக்க எத்தனை இடங்களடா என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு கரோலா விஸ்வரூபம் எடுத்து தனக்குள்ளே எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டது.
பயணம் முடிவாவதற்கு முன்பே வீட்டை மொத்தமாக காலி செய்து நண்பர்களுடன் ஜாகை மாறிவிட்டபடியால் அந்த வாரம் முழுவதும் கல்லூரி காலத்து கோடை விடுமுறை போல் கேரம் போர்டு, சீட்டாட்டம் என்று பொழுது போய்க் கொண்டிருந்தது. அவ்வளவுதானா என்று கேட்பவர்களுக்கு, அவ்வளவுதானய்யா எழுத முடியும். Binge drinkging பற்றியெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான். I am back to the TeeToteller Status அப்படி இப்படி சிலிப்பு ஆறதுதான். கிரௌடை க்ளியர் பண்ணிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான். சனிக்கிழமை (1-Aug-2009) அதிகாலை புறப்பாடு, தொடர்ந்து மூன்று தினம் இடைவிடாத பயணம் என்று திட்டம் தயார்.
வெள்ளிக்கிழமை ட்ரையல் ரன் -ஆக அருகிலிருந்து பாலாஜி கோவிலுக்கு Fully Loaded வண்டியை கொண்டுச் சென்றேன். அடுக்கி வைக்கப்பட்ட பெட்டிகள் எதுவும் ஆடாமல் அசையாமல் இருந்தன. No screeching noises. பாலாஜி கொடியசைத்து துவக்கி வைக்க புறப்பட்டது யாத்திரை. ஜெய் ஹோ!
18
மேற்கிலிருந்து கிழக்கே - 3
முதல் நாள் – 25 ஜூலை 2009 – சனிக்கிழமை
ஏதோ ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்தக் கதை. ‘இந்த சாலை எங்கேப் போகிறது?’ என்று அரசன் கேட்க, வழிபோக்கன் சொல்கிறான். ‘இந்தச் சாலை எங்கேயும் போகவில்லை. நீதான் சாலை வழியே போய்க் கொண்டிருக்கிறாய்’. இதையே அப்படியே ஒரு ஜென் கதையாக மாற்றி குரு, சிஷ்யன் என்றெல்லாம் சேர்த்து ஓஷோ சொன்னதாக நினைத்துக் கொண்டால் இந்த கட்டுரைக்கு ஒரு தனி மதிப்பு வந்துவிடுகிறது. உண்மை அதுதான். சாலைகளுக்கு வரலாறு, பரம்பரை எல்லாம் இருக்கிறது. இந்த முழுப் பயணத்திலும் நான் பெரும்பாலும் சென்றது ஒரு சாலை வழியாகத்தான் I – 80. மேற்கே சான் ஃப்ராண்ஸிஸ்கோவிலிருந்து தொடங்கி கிழக்கே நியுஜெர்சி வரை சென்று முடிகிறது. கிட்டத்தட்ட இந்தச் சாலையை நான் முழுவதுமாக கடந்திருக்கிறேன். சோழ அரசர்கள் பாணியில் ‘ஐ எண்பது கொண்ட ஐக்கியவான்’ என்று ஏதாவது பட்டம் போட்டுக் கொள்ளலாம்.
காலை 6 மணிக்கு புறப்பட வேண்டும் என்று முடிவெடுத்து வழக்கம் போல் தாமதமாக 7 மணிக்கு புறப்பட்டேன். I 680, I 880 என்று கொஞ்சம் சுற்றிவிட்டு I 80 -ல் ஏறியாகிவிட்டது. முடிந்தவரை பயணித்துக் கொண்டே இருப்பதுதான் திட்டம். ஆங்காங்கே வயிற்றுப் பசிக்காகவும், வண்டிப் பசிக்காகவும் re-filling செய்ய மட்டுமே நிறுத்த வேண்டியது. கோடைப் பருவத்தில் இம்மாதிரி பயணம் செய்வது இலகுவானது. மற்றப் பருவக் காலங்களில் பயணத்தடைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கலிஃபோர்னியா மாநிலம் பள்ளதாக்கிற்கும் பாலைவனத்திற்கும் இடையில் இருக்கிறதென்றால் நெவடா மாநிலம் சியர்ரா-நெவடா மலைத்தொடர்களை ஒட்டி இருக்கின்றது. போகும் வழியில் புதுப்புது வடிவங்களில் குன்றுகள், மலைகள் நிறையப் பார்க்கலாம். மலை முழுவதும் காய்ந்த புற்கள் படர்ந்து வைக்கோல் நிறத்தில் போர்வை போர்த்தியபடி இருக்கும். வசந்த காலத்தில் இதே புற்கள் பசுமையாக இருக்கும்போது மலையின் நிறமே மாறிவிடும் என்று ஒரு நண்பர் சொல்லியிருந்தார். வேறு சில மலைகளில் ஆங்காங்கே வட்டப் புள்ளிகள் போல புதர்கள் கிளைத்திருக்க, ‘மாம்பழக் கலரிலே புட்டாப் போட்ட, கோபுர அடுக்கு பார்டர் இருக்கிற’ பட்டுப் புடவை டிஸைன் எல்லாம் ஞாபகத்தில் வந்தது. ஆதிகால மனிதனுக்கு முதல் உறைவிடமாக இருந்தது மலைக் குகையும், அடர்ந்த காடுகளும்தான். நமது முன்னோர்களை விட்டு நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் என்று தெரிகிறது.
கிட்டத்தட்ட நான்கரை மணி நேரத்தில் நெவடாவின் எல்லைக்குள் நுழைந்தாகிவிட்டது. அதிக அளவில் வெள்ளிச் சுரங்கங்கள் இருப்பதால் ’வெள்ளி பூமி’ என்று சொல்கிறார்கள். நான் சில நிலக்கரி சுரங்கங்களைத்தான் வழியில் கண்டேன். அதைவிட பிரபலமானது சூதாட்ட விடுதிகள்தான். கேளிக்கைகளில் இந்திரபுரியாகவும், சூதாட்டத்தில் காசை இழக்கும் தந்திரபுரியாகவும் இருக்கும் Reno வை கடந்து யுடா (Utah) மாநிலத்தில் பிரவேசித்தேன்.
யுடா மாநிலம் மார்மானியர்களின் நிலம். இவர்களின் வரலாறு சுவாரசியமானது. மார்மானியர்களின் தலைமயகம் யுடாவின் தலைநகரமான உப்பேரியில் (Salt Lake City) இருக்கிறது. அங்குதான் முதல் நாளிரவு தங்க திட்டமிட்டிருந்தேன். மார்மானியர்கள் கிறிஸ்துவ மதத்திற்கும் அதன் மூலமான யூத மதத்திற்குமிடையே தங்களுக்கு என்று ஒரு மரபை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பெரும் எதிர்ப்புக்கிடயே இல்லினாய் மாநிலத்திலிருந்து யுடாவிற்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு துவக்கம் வரை மார்மனியர்கள் மத்தியில் பலதார மணம் என்பது ஒரு புனித மரபாக அங்கீகரிப்பட்டு வந்திருக்கிறது.
நெரிசல் இல்லாத அமைதியான வீதியில் வண்டி ஓட்டிச் செல்லும்போது எத்தனை மைல் வேகத்தில் போகின்றோம் என்பதில் கருத்தாக இருக்க வேண்டியிருக்கிறது. அதிகபட்ச வேகமாக 75 மைல்கள் குறிப்பிட்டிருந்தால் அதைத்தாண்டாமல் இருப்பது நலம். எங்கிருந்தாவது கொண்டையில் நீல, சிவப்பு விளக்குகள் சுழல போலிஸ் காப்கள் பாய்ந்து வந்து பிடித்துகிறார்கள். Recession நேரத்தில் அபராதங்கள் இரு மடங்காக வசூலிக்கிறார்கள் என்று வேறு பயமுறுத்தி இருந்தார்கள். இந்த அதிகபட்ச வேகத்தை தாண்டாமல் இருப்பதற்கு Cruise Control மிகவும் உதவியாக இருந்தது.
ரயில் பயணங்களில் அமையும் சக பயணிகள் போல சில சமயம் கார் பயணத்திலும் அருமையான பார்ட்னர்கள் கிடைக்கிறார்கள். என்ன ‘எந்தூருக்குப் போறீங்க’ என்றெல்லாம் சம்பாஷனைகள் துவங்க முடியாது. ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு விர்ரென்று போனால் அதிகபட்ச வேக அளவாவது ஒண்ணாவது. ஒரு செட்டாக பறக்க வேண்டியதுதான். நெவடா முழுவதும் ஒரு செவி டாஹோ (Chevy Tahoe) கூடவே பயணித்தார். பெட்ரோல் நிரப்பும் வேளையில் காணாமல் போய்விட்டார். ஒரு வழியாக 12 மணி நேரம் பயணித்து 750 மைல்கள் கடந்து உப்பேரியில் Baymont Inn என்னும் விடுதியை மாலை 7 மணிக்கு அடைந்தேன். ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் நீங்கள் மார்மானியரா என்று கேட்கும் ஆசையை அடக்கிக் கொண்டு முன்பதிவு செய்திருந்த அறையின் சாவியை வாங்கிக் கொண்டு திரும்பினால் விடுதி கடிகாரம் 8 மணி என்று காண்பிக்கிறது. ஆம். யுடா மாநிலம் வேறு டைம் ஜோன் என்பதால் கலிஃபோர்னியாவில் 7 மணி என்றால் இங்கு 8 மணி. இந்த பண்ணிரெண்டு மணி நேர பிரயாணத்தில் சிறிது சிறிதாக ஒரு மணி நேரத்தை இழந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் பாதையில் எங்கோ என்னுடைய ஒரு மணி நேரம் காணாமல் போய்விட்டது.
பேமாண்ட் விடுதி நன்றாகவே இருந்தது. கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ் என்றாலும் நல்ல சௌகரியமான உறக்கம். இழந்த ஒரு மணி நேரத்தை மீட்கவாவது மேற்கை நோக்கி பயணம் செய்யும் வாய்ப்பு அடுத்தமுறை கிடைக்க வேண்டும்.
19
மேற்கிலிருந்து கிழக்கே - 4
இரண்டாம் நாள் – 26 ஜூலை 2009 – ஞாயிற்றுக்கிழமை
சென்ற பகுதியில் சொன்னது போல ஒரு தீவிர ஜென் கதை முயன்றுப் பார்க்கலாம். ஒரு ஜென் துறவியும், அவரது சீடரும் காரில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். நீண்ட நெடிய சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது சீடருக்கு ஒரு சந்தேகம். குருவிடம் கேட்கிறார் ‘இந்தச் சாலை எங்கேப் போகிறது?’ என்று. குரு பதில் சொல்லவில்லை. இன்னமும் கொஞ்ச தூரம் பயணிக்கிறார்கள். வந்த பாதையை திரும்பி பார்க்கும் சீடருக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. இப்பொழுது குருவிடம் கேட்கிறார். ‘இந்தச் சாலை எங்கிருந்து வருகிறது?’. குரு மௌனமாக இருக்கிறார். சட்டென சீடருக்கு ஞானோதயம் பிறக்கிறது. குருவிடம் சொல்கிறார் ‘இந்தச் சாலை எங்கிருந்து வருகிறதோ, அங்கேயேதான் போகிறது’. இதைக் கேட்டவுடன் ஜென் குரு சீடரை குண்டுகட்டாக தூக்கி காரிலிருந்து கீழே போட்டுவிடுகிறார்.
ஜென் கதைகளுக்கு தத்துவ விளக்கங்கள் எல்லாம் சொன்னால் அதன் வசீகரம் போய்விடும் என்பதால் நாம் பயணத்திற்கு மீண்டும் வருவோம்.
முதல் நாளிரவு உறங்கச் செல்லும்போது இன்னமும் இரண்டாயிரம் மைல்கள் செல்ல வேண்டுமே என்ற மலைப்பாக இருந்தது. அடுத்த நாள் செல்ல வேண்டியது நெப்ராஸ்கா (Nebraska)மாநிலத்தின் ஒமாஹா (Omaha) நகரம். வாரன் பஃபே-வின் ஊர். ஞாயிற்றுக்கிழமை பஃபே-யின் ஊரில் தங்கினால் யதேச்சையாக எங்கேயாவது அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்து போகிற போக்கில் அவரும் பெர்க்ஷைரில் ஒரு நூறு பங்குகளை பரிசாக… ம்ஹ்ம்ம்ம் முடியாது. உப்பேரியிலிருந்து (Salt Lake City) ஒமாஹா தொள்ளாயிரத்து மைல்கள் சொச்சம். ஒரே நாளில் அவ்வளவு தூரம் பயணிப்பது சாத்தியப்படாது என்பதால் ஒமாஹாவிற்கு ஐம்பது மேல்கள் மேற்கே நெப்ராஸ்காவின் தலைநகரம் Lincolnல் தங்கலாம் என்று முடிவு செய்தேன். அங்கே தேடிப் பார்த்ததில் I-80 நெடுஞ்சாலைக்கு அருகிலேயே Econo Lodge ஓரளவிற்கு கட்டுபடியாவது போல் இருந்தது. மறுநாள் இரவுக்கு அறை முன்பதிவு செய்துவிட்டு படுத்தேன். மரக்கட்டை போல் சரியான தூக்கம்.
ஞாயிறு காலை ஒன்பதரைக்குத்தான் புறப்பட முடிந்தது. அமெரிக்க காலையுணவாக ஆங்கிலேய மஃபினையும், எருமைக் கண் (bull’s eye) அரைவேக்காடு முட்டையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டு அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கினேன். கனரக வாகனங்களும், மலைப்பாம்பு போல் நீண்ட ட்ரக்குகளும் சுற்றி வர நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தேன். அந்த நெடுஞ்சாலையின் அதிகபட்ச வேகமே எழுபத்தைந்து மைல்கள்தான். அடுத்த லேனில் வந்து கொண்டிருந்த முப்பத்தியிரண்டு சக்கரங்கள் கொண்ட நீண்ட டாங்கர், எண்பது மைல் வேகத்தில் விரட்டிக் கொண்டு வந்தது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் டூயல் (duel) படம் ஏனோ ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது. சிறிது தூரத்தில் தனது சகாவான இன்னொரு ட்ரக்கை சந்தித்ததும் சமர்த்தாக வலதுபக்க லேனிற்கு மாறி ஊர்ந்து செல்லவாரம்பித்தார். ஆங்காங்கே ‘மான்கள் ஜாக்கிரதை’ என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். வலது பக்கம் மலை முகடும், இடது பக்கம் சமவெளியுமாக அருமையான இயற்கை காட்சி கண்முன்னே விரந்தது. மலைக்காட்டில் மான்கள் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும். அவற்றின் வசிப்பிடத்தில் நாம் சாலைகளால் ஊடுருவியிருப்பது தெரியாமல் சிலசமயம் சாலைக்கு குறுக்கே வந்து வாகனங்களில் அடிபட்டுவிட வாய்ப்பு உண்டாம். வழியில் ஆறேழு இறந்த மான் உடல்கள் கிடந்ததை பார்க்க நேரிட்டது. பெரிய ட்ரக்குகளில் அடிபட்டால் வண்டியை நிறுத்திவிட்டு ஓரமாக இழுத்துப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். சிறிய கார்களின் மேல் இருநூறு பவுண்டு மான் வந்து மோதினால் என்னாவது? நல்லவேளை, அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ’வாழ்க நீ எம்மான்’ என்று அம்மான்களை வாழ்த்திவிட்டு, யூட்டாவை (Utah)கடந்து வயோமிங் மாநிலத்தில் நுழைந்தேன். பெரிய நிலபரப்பும், குறைந்த மக்கள்தொகையும் கொண்ட மாநிலம்.
cruise controlல் அதிகபட்ச வேகத்தை அமைத்துக் கொள்ளாததினால் என்னையறியாமலேயே ஆக்ஸிலேட்டரை அழுத்திக் கொண்டு மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தேன். வையோமிங்கின் எல்லைப்பகுதியில் வரிசையாக கார்களை தாண்டிக் கொண்டே நெப்ராஸ்கா(Nebraska)விற்குள் நுழையும் நேரம் ஒரு காவலர் சிவப்பு/நீல விளக்குகள் சுழலவிட்டுக் கொண்டே காரில் துரத்திக் கொண்டு வந்தார். ஆஹா… ஆப்பு ஆலவட்டம் போட்டுகிட்டு வருகிறதே என்று வண்டியை ஓரம் கட்டினேன்.
என்னைத் தாண்டி சென்ற போலிஸ் வண்டி சில நூறடிகளில் நின்று, அரைவட்டக் கண்ணாடியும், முழு மொட்டையுமாக இளவயது போலிஸ்காரர் ஒருவர் இறங்கினார். வண்டி பக்கத்தில் ஒயிலாக நின்றுகொண்டு விரலை அசைத்து என்னை அருகில் வரச் சொன்னார். அமெரிக்க போலிசாரிடம் ஒரு விசயத்தில் நல்ல அனுபவம் உண்டு. வண்டியை நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டு கூடுமானவரை இருக்கையிலேயே (சீட் பெல்ட்டோடு) இருந்து விடவேண்டும். சலாமடிக்கிறேன், வணக்கம் சொல்கிறேன் என்று காரிலிருந்து தடால் புடால் என்று இறங்கினால் நாம் ஏதோ எதிர்ப்பு காட்டுகிறோம் என்று பரபரப்படைந்து கச்சா முச்சாவென்று கத்துவார்கள். மதுரையில் ஒருமுறை பைக்கிலிருந்து இறங்கி நின்று பதில் பேசவில்லையென்று போலீஸ்காரர் ‘துரைக்கு இறங்கி நின்னு பேசத் தெரியாதோ’ என்று மிரட்டியது ஞாபகம் வந்தது. இந்தப் போலிஸ்காரர் விரலை ஆட்டி ’வா அருகே’ என்றது என்னையல்ல, காரைத்தான் என்று ஒரு மாதிரி புரிந்து கொண்டு அவரை நோக்கி சில அடிகள் உருட்டிச் சென்றேன். போதும் என்று சைகை செய்துவிட்டு காரருகே நடந்து வந்தார். இடுப்பைச் சுற்றி சலங்கையோடு இருக்கும் அரைஞாண்க் கொடி போல கைக்காப்பு, குறுந்தடி, வாக்கி டாக்கி, துப்பாக்கி என்று எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கோடு பெல்ட் அணிந்துகொண்டு, கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் படங்களில் காணப்படும் கௌபாய் தொப்பியோடு அருகில் வந்தவர் சம்பிரதாய வசனங்களில் நான் அதிகபட்ச வேகத்தின் அளவை மீறி வண்டி ஓட்டி சென்ற குற்றத்தைக் கூறினார். ஒருமாதிரி தந்தியடித்துக் கொண்டே நான் crosscountry ஓட்டிக் கொண்டு செல்கிறேன் என்பதை கூறி முடித்தேன். கொஞ்சம் சமாதானமானவர் ‘இருந்தாலும் இப்படி இருபது வண்டிகளை ஒருசேர ஓவர்டேக் செய்வது ரொம்பவும் ஓவர்’ என்றுச் சொல்லி ஒரு டிக்கெட் கொடுத்துவிட்டார். ஊருக்குப் போய் அபராதத் தொகையை ஒழுங்காக மணியார்டர் செய்து விடவேண்டும். அசந்து மறந்து கட்டத் தவறினால் அரெஸ்ட் வாரண்ட் போட்டு விடுவார்கள். அமெரிக்க கோர்டுகள் நின்று கொல்லும் தெய்வம் மாதிரி. முப்பது வருடங்கள் கழித்தும் எப்பொழுதாவது வயோமிங் மாநிலத்தில் நுழைந்தால், இதே போலிஸ்காரர் எல்லையில் கைவிலங்கோடு காத்துக் கொண்டிருக்கலாம்.
பிரயாணத்தின் இந்தப் பகுதி பெரும்பாலும் பசுமையாகவே இருந்தது. நெப்ராஸ்காவின் கிழக்குபகுதி CST Timezoneல் வருவதால், இன்று இன்னொரு மணி நேரம் பறிபோனது.
லிங்கனை அடைந்து எக்கோனா லாட்ஜை அடையும்போது இரவு மணி பத்து. வரவேற்பு மேசையில் இருந்த இந்தியர் ’உங்களுக்கு தவறுதலாக புகைக்கும் அறை பதிவு செய்துவிட்டார்கள். உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை உண்டா?’ என்றுக் கரிசனத்தோடு கேட்டார். ஓரிரவு தங்குவதில் எந்த அறையாக இருந்தால் என்ன என்று மிதப்பாக ‘பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது புகைக்கும் அறை என்பது சுருட்டு கோடவுன் போல நாற்றமடிக்கும் அறை என்று. அதில் படுக்கை விரிப்புகளில் நெருப்பு பொத்தல்கள் வேறு. மறுநாள் ஓஹையோவின் டொலீடோவில் தங்குவதற்கு சிவப்பு கூரை விடுதியில் (Red Roof Inn) முன்பதிவு செய்துவிட்டு படுக்கையில் விழுந்தேன்.
4
அனுபவங்கள்
20
கலையும் கற்று மற
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்… ஔவையார் சுலபமாக சொல்லிவிட்டார். ஆனால் ஒரு கலையை கற்று தேர்ந்து பிஸ்தாவாகி உஸ்தாத் ஆவதற்கு முக்கிய தேவை ‘கற்றதை மறப்பது’தான். Unlearning என்று சொல்வார்கள். தங்கவேலு ஒரு திரைப்படத்தில் பூரி செய்வதைப் பற்றி டி பி முத்துலட்சுமிக்கு விளக்குவார். ‘அதான் எனக்கு தெரியுமே’ என்று முத்துலட்சுமி சொல்லிக் கொண்டே வர தஙகவேலு படிப்படியாக எரிச்சல் அடைவார். டி பி முத்துலட்சுமி வெள்ளந்தியாக உருட்டி விழித்துக் கொண்டே பேசுவதை பார்க்க சிரிப்பாக இருக்கும். டி பி முத்துலட்சுமி போலத்தான் நானும். ஒரு விஷயத்தை தொடங்கியவுடனே ‘எல்லாமே தெரிந்து விட வேண்டும்’. அதற்கு வாய்ப்பு இல்லையென்றால் அந்தக் கலையைத் தொடர முடியாது.
மூன்றடிக்கு இரண்டடியில் நாற்காலிக்கும் மேஜைக்கும் நடுவே வைத்துக் கொண்டு எழுத வசதியான நல்ல பெரிய அட்டையை நெட்டுக்குத்தலாக சுவற்றில் சாய்த்து வைத்து டிராயிங் நோட் பேப்பர்களை கிழித்து கிளிப் போட்டு பெரிய கேன்வாஸாக உருவகித்துக் கொண்டு வாட்டர் கலரில் படம் வரைந்ததுதான் என் முதல் சித்திர பழக்கம் என்று நினைக்கிறேன். ‘பிசிறில்லாம வட்டம் போடுன்னா, சட்டியை கவுத்து வச்ச மாதிரி என்ன வரையற…’ என்று டிராயிங் மாஸ்டர் ராபர்ட் முட்டியில் பிரம்பால் அடித்ததினால் ஸ்ட்ரெய்ட்டாக போர்ட்ரெய்ட் வரைய அப்படி ஒரு செட்டப் செய்து கொண்டேன். ‘நல்லா வரைஞ்சான்… நான் பிள்ள பெத்த மாதிரி. பீடி குடிச்சிட்டிருக்கிற மாதிரி… என்ன படம்டா எழவு’ என்று தாத்தா கோபப்பட்டதன் அர்த்தம் புரியவேயில்லை. புரஃபைலில் முகம் வரைந்தால், கிருதா போட்டு, கண்ணாடி போட்டு வாயில் சிகரெட் இல்லையென்றால் ஸ்டைலாக இருக்குமா என்ன? அவ்வளவுதான் என் சித்திர பழக்கம். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு ஜுவாலஜி ரெகார்ட் நோட்டுக்கு வெகு கவனமாக அமீபா, அஸ்கரிஸ் லும்ப்ரிகாய்ட் என்று பிரதி எடுத்தது நினைவில் இருக்கிறது. அமீபாவிற்கு வடிவமில்லையென்றால் என்ன, சுளையாக 20 மதிப்பெண்கள் நிலுவையில் இருக்கும்போது எதற்கு ரிஸ்க் என்று ட்ரேஸ்பேப்பர் வைத்து வரைந்தேன்.
தாத்தா அந்தகாலத்து ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பதால் இயல்பாக அவருக்கு தனது ஆங்கில அறிவு மேல் பெருமை உண்டு. சாண்ட்லர் சீமாட்டி என்ற ஐரோப்பியர் நிறுவிய பள்ளியில் நான் படித்ததால் நிறைய ஆங்கில பேச்சுப் போட்டி நடக்கும். கோடு போட்ட வெள்ளைத்தாளில் தாத்தா உருளை ரூலர் வைத்து மார்ஜின் எல்லாம் போட்டு எழுதிக் கொடுக்கும் கட்டுரையை அப்படியே ‘மக்’ அடித்து மேடையில் பேசிவிடுவேன். தலையில் சொற்ப முடியும் பின்னால் பெரிய பன் கொண்டையுமாக இருக்கும் கரெஸ்பாண்டெண்ட் அம்மையார் அமெரிக்கையாக தலையசைத்து ‘குட்’ என்று சொன்னதை புளகாங்கிதப்பட்டு பாட்டியிடம் சொல்ல ‘எல்லாம் தாத்தா சொல்லிக் கொடுத்ததுதான்’ என்று அவரும் விகசிப்பார். அப்படி ஒன்றும் ஷேக்ஸ்பியர் ரேஞ்சுக்கு எல்லாம் ஒப்பித்த நினைவில்லை. ‘இந்திரா காந்தி 197l பிறந்தார். அவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்ஷினி’ என்ற அளவிலான கட்டுரைகள்தான். திடீரென்று செவ்வாங்கில நாப்பழக்கத்திற்கு வந்ததோர் சிக்கல். சுவர்ணலதா என்ற பாப் கட்டிங் செய்த பெண் சுத்தமான ஆங்கில உச்சரிப்போடு கைகளை அழகாக அபிநயித்து இந்திய பொருளாதாரத்தின் மேன்மைகள் என்றெல்லாம் மேடையில் பேச எனக்கு டெப்பாசிட் காலியானது. அவர் வீட்டிலேயே மம்மி, டாடி என்று பீட்டர் விடுபவர் என்பது கூடுதல் கவர்ச்சியாகி ‘தா… ஓரமா போய் ஒக்காரு’ என்ற ரேஞ்சுக்கு என்னைப் டீச்சர்கள் கழட்டிவிட நா பழக்கம் ’நோ’ பழக்கமாகிவிட்டது.
நாலாம் வகுப்பு டட்லி மிஸ் என் மானத்தை காப்பாற்ற ‘வெனிஸ் வணிகன்’ நாடகத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். பள்ளி Annual தின கொண்டாட்டத்தின் சிறப்பம்சம் என்பதால் மிக தீவிரமாக ரிகர்சல் எல்லாம் பார்த்து ரெடியாக இருந்தோம். தனியாக ஒரு டைலர் வந்து அளவெடுத்து மஞ்சள் பட்டு துணியில் பைஜாமாவும், மெரூன் வண்ணத்தில் நீளக் கோட்டும் தைத்துக் கொடுக்க எனக்கு ஒரே குஷி. அம்மாவிடம் நான் ஷைலாக்காக நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது அம்மா மையமாக ‘அது வில்லன் கேரக்ட்ராச்சே’ என்றார். கையில் ஒரு பேனாக் கத்தியோடு ஆண்டானியோவை அணுகி ஒரு இராத்தல் சதையை வெட்ட வக்கீல் வேடத்தில் வரும் போர்ஷியா (மீண்டும் சுவர்ணலதா) ’ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் சதையை அறுத்துக் கொள்’ என்று சொல்லி என்னை தடுத்தாட்க் கொள்ளும் சீன் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால் ஐந்தாம் வகுப்பில் நான் ‘பி’ செக்ஷனுக்கு போய்விட ‘ஏ’ செக்ஷன் லீனா மிஸ்தான் டிராமாவிற்கெல்லாம் பொறுப்பு என்பதால் நான் பின் அடுப்புக்கு (Back burner) தள்ளப்பட்டேன். அந்த வருடம் எனக்கு கிடைத்த வேடங்கள் ஒரு நொண்டி பிச்சைக்காரனாக வந்து யேசு கையால் சொஸ்தம் ஆவது… லுங்கியோடு தற்கொலை நினைப்பில் இருக்கும் என்னை சமூக சேவகர்கள் மனம் மாற்றுவது… இப்படித்தான். புரவலர் இன்றி இளைத்த புலவன் போலிருந்த என்னை மீண்டும் புஷ்டியாக்கியது மாயா டீச்சர்.
சாண்ட்லர் பள்ளியில் திடீரென்று கலை வகுப்புகள் என்று மாலை நாலரைக்கு மேலாக தபேலா, வயலின், வாய்ப்பாட்டு என்று கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு பக்கத்தில் பரதநாட்டிய வகுப்பு. பத்மா சுப்ரமணியத்தின் மூத்த சகோதரி நீலா கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யைதான் மாயா டீச்சர். ஸ்போர்ட்ஸ் டே-க்கு திடீரென்று Folk நடனம் வைக்கிறோம் என்று மொத்தமாக 5ம் வகுப்பு ‘பி’ செக்ஷனிலிருந்து பத்து மாணவ மாணவியரை அள்ளிக் கொண்டு போய் ‘பாசமலர்’ படத்தின் ‘எங்களுக்கும் வாழ்வு வரும்…’ பாடலுக்கு நடனமாட வைத்தார். விழாவின் போது கூட ஆடிய கீதா என்ற பெண்ணின் தலையலங்காரம் எல்லாம் கலைந்து தலைமுடி அவிழ்ந்து தொங்க சுற்றி சுற்றி ஆடியதை ஆடியன்ஸ் ரசித்தார்களோ இல்லையோ நாங்கள் எல்லாம் விழுந்து புரண்டு சிரித்தோம். டான்ஸ் முடிந்தபிறகு சிரித்ததற்கு தண்டனையாக ஆழமாக நகம் பதிய கிள்ளு வாங்கியபிறகும் மறக்க முடியுமா?
ஆனால் ஸ்போர்ட்ஸ் தினத்தை விட Annual தினத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போன வருடம் மாயா டீச்சர் ஒரு சோலோ நடனம் செய்திருந்தார். ‘சாம்பசிவாய நம ஓம்’ என்ற கிருதியை வரிகளை மட்டும் மாற்றி ‘பார் புகழும் பரனே’ என்று கிறிஸ்துபால் புனையப்பட்ட பாடல். இந்த வருடம் சோலோ ந்டனம் நீதான் என்று கூட்டிக் கொண்டு போய் அரைமண்டலத்தில் நில்லு, அட்டமி போடு என்று செம ட்ரில் வாங்கிவிட்டார். விழா அன்றைக்கு திருமதி நீலா கிருஷ்ணமூர்த்தி வேறு வந்த அலங்காரம் எல்லாம் மேற்பார்வை செய்து, ‘வைரத்தோடு இல்லாம என்ன நாட்டியம்?’ என்று அங்கலாய்த்துவிட்டு, ஏதோ சரிகை பேப்பரை காதில் ஒட்டிவைத்து மேடைக்கு அனுப்பினார். அதே ந்டனத்தை இரண்டு மூன்று முறை ஆடினேன். பிற்பாடு மதுரை காக்கா தோப்பு தெருவில் நீலா கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு நண்பனோடு ரியல் எஸ்டேட் விவகாரமாக போனபோது அவரிடம் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த திருதிரு முழி சிறுவனுக்கும், இந்த நெடுநெடு உயர மனிதனுக்கும் அவரால் தொடர்பு படுத்திக் கொள்ளவே முடியவில்லை.
’சித்ரஹார்’ என்று வாராவாரம் வரும் இந்திப் பாடல் நிகழ்ச்சிகளில் அடிக்கடி விஜய் அரோராவோ, ரிஷி கபூரோ ஒரு கிடாரை மடியில் வைத்துக் கொண்டு ‘ஜங்… ஜஜங்..’என்று மீட்டி ஜீனத் அமனையும், டிம்பிள் கபாடியாவையும் ரொமாண்டிக்காக உஷார் விடுவார்கள். சுஜாதா வேறு அவ்வப்போது கிடாரின் ‘ஜி’ நரம்பு பற்றி ஜிவ்வ்வென எழுதி, கிடார் மேல் ஒரு தீராத மையல் தோன்றிவிட்டது. இத்தனைக்கும் நான் அப்பொழுது அந்த வாத்தியத்தை கண்ணால் கூட கண்டதில்லை. தாத்தா வீட்டில் ஒரு பழைய ஹார்மோனியம் இருந்தது. பெல்லோஸை விடாமல் போட்டுக்கொண்டே பாட்டி சரளமாக வாசிப்பார். ஒரு விசையிலிருந்து இன்னொரு விசைக்கு மாறும்போது ‘கடக்’ ‘கடக்’ என்று சத்தம் வந்தாலும் இனிமையான இசைதான். ’அஞ்சு கட்டை… அஞ்சரை…’ என்று சுருதி பார்த்து ‘ஆறரை கட்டை இவனுக்கு’ என்று கண்டுபிடித்தது நினைவில் இருக்கிறது. மகரகட்டுக்கு முந்தைய பருவம் அது. பெண் குழந்தைக்கு வாய்ப்பாட்டு, ஆண் குழந்தைக்கு மிருதங்கம் என்று ரிசர்வேஷன் கோட்டாவினால் வெறுத்து நான் மிருதங்கம் பக்கமே போகவில்லை. ஆனாலும் கிட்டார் மேல் ஒரு மோகம் மட்டும் நீறு பூத்த நெருப்பாய் கணன்று கொண்டிருக்க யாரோ ‘வயலின் கற்றுக் கொண்டால் கிட்டார் சுலபம்’ என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். ஒரு காலை ஸ்டூலில் தூக்கி வைத்துக் கொண்டு மார்புக்கு குறுக்கே வார் மாட்டிக் கொண்டு மடியோடு கிட்டார் வைத்துக் கொண்டு வாசிப்பது எவ்வளவு ஸ்டைல்… சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு குதிகாலில் முட்டுக் கொடுத்துக் கொண்டு தோளோடு வயலினை சேர்த்து வைத்துக் கொண்டு வாசிப்பதாவது என்று தடுமாறினாலும், பரவாயில்லை எல்லா சாலையும் ரோமுக்கே இட்டு செல்லும் என்ற நம்பிக்கையுடன் வயலின் கற்றுக் கொள்ள முடிவு செய்தேன்.
வயலின் வித்வான் கணபதியா பிள்ளை மதுரை எஸ் எஸ் காலனியில் இருந்தார். மிக எளிமையான தோற்றம். விஜயதசமியன்று டி என் சேஷகோபாலன் குரு தட்சிணை கொடுக்க வந்தபோதுதான் அவர் பாரம்பர்யம் தெரிந்தது. ‘நல்ல நீளமான விரல்ப்பா உனக்கு… நல்லா வரும் வயலின். புதுசு ஒண்ணு வாங்கிக்கறயா… பாம்பேலேந்து கொணாந்திடலாம்’ என்று ஊக்குவித்து கற்றுக் கொடுத்தார். மூன்று மாசமோ என்னவோதான் போக முடிந்தது. ‘நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கனும்’ என்று ஐஸ்வர்யா ராய் பாடுவாரே… அந்த மாதிரி ”என்னது இது… ஜண்டை வரிசை… தாட்டு வரிசைன்னு… எப்படா கீர்த்தனை வாசிச்சு ராஜபார்வை கமல் மாதிரி அந்திமழை பொழிகிறதுலாம் அமர்க்களப் படுத்தறது” என்று விரக்தியாகிவிட்டது. இரண்டு மாசம் கிளாசுக்கு போகவேயில்லை. கணபதியா பிள்ளையே ஒரு நாள் வீட்டுக்கு வந்து ‘அந்த வயலின் சும்மாதானே இருக்கு. நூறு ரூவா கம்மியா என்கிட்டயே கொடுத்திரு’ன்னு வாங்கிக் கொண்டு போய்விட்டார். எனக்கு என்னவோ அவர் ‘நீ ஆணியே புடுங்க வேணாம்டா’ என்று சொன்ன மாதிரி ஒரு பிரமை. ஆனாலும் என் கலைத்தாகத்தை அணைய விடாமல் சுராலியா… தும் மேரே தில் கோ… என்று ஜீனத் அமன் கனவுகளில் வந்து விசிறிவிட்டுக் கொண்டிருந்தார்.
கல்லூரி படிக்கும் போது நண்பரொருவர் விசில் மூலமா அருமையாக பாட்டுப் பாடி பிரமாதப்படுத்துவார். மதுரை டிவிஎஸ் நகரில் ஒருவர் விசிலில் முழுக் கச்சேரியே செய்வார். அந்த உத்வேகத்தில் AIR நிலைய புல்லாங்குழல் வித்வான் சீனுவாசனிடம் புல்லாங்குழல் கற்றுக் கொள்ள முற்பட்டேன். சென்னைக்காரரான அவர் மதுரையில் வெகுகாலம் தங்கியிருந்தாலும் சென்னை தமிழில்தான் அழகாகப் பேசுவார். குழலை ஒழுங்காக பிடித்துக் கொண்டு நாதம் வரும்படி ஊதுவதற்கே இரண்டு மூன்று நாட்கள் ஆனது. என்னைப் போன்ற அவசரகுடுக்கைகள் மனம் புரிந்தவர் அவர். ஓரிரு மாதங்களிலேயே மடமடவென்று மோகன வர்ணம், இரண்டு மூன்று கீதங்கள் என்று கொண்டு வந்துவிட்டார். ‘நாளைக்கு விஜயதசமி… 4 பழம் வெத்தல பாக்கு வச்சிண்டு, நூற் ரூவா பணத்தோட வந்திடனும் மறக்காம’ என்று குரு பக்தியை எளிமையாக சொல்லிக் கொடுத்தார். அது எப்படி தொட்டில் பழக்கம் போய்விடுமா என்ன? புல்லாங்குழல் பயிற்சிக்கும் சீக்கிரமே ஃபுல்ஸ்டாப். சித்திரமும் கைப்பழக்கம்… பழக்கத்தை பழகாததுதான் என் பழக்கம்.
தற்சமயம் இணையம் பெருமளவு நேரம் எடுத்துக் கொள்வதால் எந்த கலையிலும் ஆர்வமில்லாமல் ’இருக்கை கிழங்காக’ (Couch Potato) மாறியாகிவிட்டது. சென்ற வருடம் வாங்கிய யமஹா கீபோர்டோடு இலவச இணைப்பாக சிடியில் சில பாடஙக்ளைக் கொடுத்திருக்கிறார்கள். ப்ளாக், ட்விட்டர், நெட்ஃப்ளிக்ஸ் இல்லாத ஒரு பொழுதில் அந்த சிடியை போட்டுப் வாசித்து பழக வேண்டும்.
21
கடவுள்களின் கார்னிவெல்
பொதுவாக இந்தியர்கள் தாங்கள் அமெரிக்க மண்ணை மிதித்ததற்கு சாட்சியமாக டிஸ்னிலேண்ட், நயாகரா, நியுயார்க் டைம் ஸ்கொயர், லாஸ் வேகாஸ் காஸினோக்கள் என்று பிகாஸா ஆல்பம்களில் நிரப்பி வைத்தாலும் மனதிற்குள் ரகசியமாக ’இங்க எங்கிட்டுய்யா நைட் கிளப், நியூட் பார்லாம் இருக்கு? ஒருதடவ போயிட்டு வந்திரனும்’ என்று வந்த புதிதில் நேர்ந்து கொள்வார்கள். ஆரம்ப பரபரப்புகள் எல்லாம் அணைந்துபோய் டிவியும், கள்ள டிவிடியில் திரைப்படமுமாக வாழ்க்கை சுவாரசியமில்லாது போகும்போது சமூக சந்திப்பு கூடமாக முதலில் தெரிவது கோவில்கள். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களுக்கு அவ்வளவாக கவலையில்லை. சீக்கியர்கள், ஜைனர்கள், இந்துக்கள் போன்ற சிறுபான்மையினர் ஒன்றுகூடி தங்களுக்கான ஆலயம் அமைத்திடும்போது அதனுடைய காஸ்மோபொலிடன் தன்மை மிகவும் சுவாரசியமானது.
சிகாகோ நகரத்திற்கு அருகே எல்க் க்ரோவ் (Elk Grove) என்னும் சிறு ஊரில் தங்கியிருந்த போதுதான் ஒரு தெலுங்கு நண்பர் அரோராவில் இருக்கும் வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலைப் பற்றி சொன்னார். தெலுங்கு அன்பர்களுக்கு பாலாஜி இருக்குமிடமெல்லாம் திருப்பதிதான். வாரயிறுதியில் உன்னையும் கூட்டிக் கொண்டு போகிறேன் என்று வாக்குறுதி தந்தவர், அவர் வீட்டிலிருந்து நான் தங்கியிருக்கும் இடத்துக்குண்டான தூரம், பெட்ரோல் செலவு என்று சில டாலர் கணக்குகளைப் போட்டுவிட்டு சட்டென பின்வாங்கிக் கொண்டார். இவர் இல்லாவிட்டால் நம்மால் போக முடியாதா என்ன என்று வீராவேசமாகத் தீர்மானித்து வாடகைக்கு ஒரு காரையும், வழி சொல்ல ஒரு நண்பரையும் சம்பாதித்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். ஆட்டோ-ட்ரான்ஸ்மிஷன் கார் ஓட்டிப் பழக்கமில்லாததால் கொஞ்சம் மேனுவல் எல்லாம் பார்த்து புரிந்துகொண்டு ஒரு வழியாக கோவிலைச் சென்றடைந்தோம். மிக பிரம்மாணட்மான கோவில்… இல்லை… இடம். அவ்வளவு பெரிய இடத்தில் நடுவில் கோவில் சிறியதாக தெரிந்ததாலும் உண்மையில் அது பெரிய கோவில்தான்.
அமெரிக்க கோவில்களுக்கு என்று சிறப்பு ஆகமங்கள் உண்டு. பெருமாள் சந்நிதி பிரதானமாக இருந்தாலும் அக்கம் பக்கத்தில் சிவன், நவக்கிரகங்கள், சத்ய நாராயணர், சுப்ரமணியர், விநாயகர் சந்நிதிகள் என்று பொதுவுடமை தத்துவத்தை பின்பற்றி எல்லா அன்பர்களையும் வரவேற்கும் அடிப்படையில் பெரும்பாலான கோவில்கள் கட்டப்பட்டிருக்கும். சந்நிதிகளின் முன்னால் காம்கார்டரை கட்டித் தொங்கவிட்டு பக்கவாட்டு டிவியில் ஒளி/ஒலி பரப்பும் வசதி கட்டாயம் உண்டு. அடுத்து நடக்கப் போகும் அபிஷேகம், ஆராதனை பற்றிய பட்டியல் நேரக் குறிப்போடு தெளிவாக காணப்படும். விபூதி, குங்குமம், துளசி தீர்த்தம், சடாரி சார்த்துவது தவிர பிரசாதமாக பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை, ஆப்பிள்கள் என்று கொடுக்கிறார்கள். அதற்கேற்றப்படி உண்டியல் கலெக்ஷனும் பிரமாதமாக இருக்கிறது என்றே அறிகிறேன்.
அரோரா கோவிலில் மேற்குறிப்பிட்டிருந்த அமெரிக்க ஆகம முறைப்படி எல்லா சந்நிதிகளுக்கும் இடமளிக்கப்பட்டு ஒரு கடவுள்களின் கார்னிவெல் போல் காட்சியளித்தது (அப்பாடா தலைப்பை ஜஸ்டிஃபை செய்தாகிவிட்டது). சிறப்பு அம்சமாக வாசலில் ஒரு மெர்சிடெஸ் கார் வைத்து Raffleகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். குலுக்கல் முறையில் கார் பரிசாக விழலாம் என்று பெரிய தட்டி வைத்து விளம்பரமெல்லாம் பிரமாதமாக இருந்தது. எங்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்த நண்பர்கள் குழாமில் ஒருவர் லோக்கலில் மளிகைக் கடை வைத்திருக்கிறார்ப் போல. ‘சின்னக் கடை, பெத்த லாபம். பெத்த காரு, சின்ன ரேஃபல்’ என்று பஞ்சதந்திர திரைப்படத்தின் வசனங்கள் பேசி கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். கோவில் உள்ளே தெலுங்கும் தமிழும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. நாம் இரண்டு வாக்கியம் பேசியவுடனேயே சட்டென நமது மொழியை கணித்து ‘அப்புறம்’ என்று பட்டர்கள் தங்கள் மார்கெட்டிங் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். பிரசாதமாக புளியோதரையும் தயிர்சாதமும் சாப்பிட்ட மாதிரி ஞாபகம்.
கிட்டத்தட்ட அதே போன்ற அமைப்புடன் கலிஃபோர்னியாவில் லிவர்மோர் ஊரிலும், நியூஜெர்ஸி ப்ரிட்ஜ்வாட்டரிலும் கோவில்கள் பார்த்தபோது எனது அமெரிக்க ஆகம தியரி உறுதியானது. லிவர்மோரில் உப கோவிலாக கொல்லைபுறத்தில் துர்க்கை சந்நிதி தனியாக கட்டப்பட்டிருக்கும். ஆறரை அடி உயரத்தில் ஒரு தமிழ் அர்ச்சகர் உற்சாகமாக வரவேற்று பூஜையெல்லாம் செய்து கொடுத்தார். அவ்வப்போது ராமர் பட்டாபிஷேகம், ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம் என்று திருப்பதி ஸ்டைலில் பரபரப்பாக இருக்கின்ற கோவில். இன்னமும் பாரதவர்ஷமும் பரதகணட்த்திலும் இருப்பதாக உருவகித்துக் கொண்டு சங்கல்பம் செய்கிறார்கள். அர்த்தம் எல்லாம் யாருக்கு ஆகப் போகிறது. பாவத்தை செய்தால் போறாதா? புதுவருடம் பிறந்த ஒரு ஜனவரி திங்களன்று கோவிலுக்குப் போன போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. திருப்பதி பாணியில் மடித்து மடித்து க்யூவாக நிறுத்தி எல்லா சந்நிதியையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வெளிபோந்தால் தனியாக அர்ச்சகர்கள் வரிசையாக உட்கார்ந்து கொண்டு துளசி தீர்த்தமும், டிஷ்யூ பேப்பரோடு சக்கரை பொங்கலும் கொடுத்தார்கள். ராமருக்கும் கிருஷ்ணருக்கும் நடுவில் புது வருட ஸ்பெஷலாக திடீர் என்று ஒரு அனந்தசயனப் பெருமாள் பூ அலங்காரத்தில் சயனித்திருந்தார். ஓரிரு வாரங்களில் அவருக்கு முழு ஓய்வளித்து உள்ளே கொண்டு சென்றுவிட்டார்கள். இம்மாதிரி பெரிய கோவில்களுக்கு கமிட்டி, வாலண்டியர் என்று நிறைய ஆள்படைகள் இருந்தாலும் சில லோக்கல் ஸ்பானிஷ் மக்கள் பல பணிகளும் செய்து கொண்டிருப்பார்கள். நாளைய சரித்திரத்தில் ஒரு திருமங்கையாழ்வார் ஸ்பானிஷில் அரங்கன் சேவையாற்றியதைப் பற்றி பாசுரம் பாடினாலும் ஆச்சர்யமில்லை.
லிவர்மோர் கோவிலை விட அருகாமையில் சான் ஹோசேவிலேயே ஒரு லக்ஷ்மி கணபதி கோவிலைக் கண்டறிந்தோம். ஆம். GPS கண்டுபிடிக்க முடியாத ஒரு கிட்டங்கியைத்தான் கோவிலாக மாற்றியிருந்தார்கள். அருகே ஒரு மசூதியும் சர்ச்சும் உண்டு. வசுதைவ குடும்பகம் இல்லையா? இங்கே அதிகம் தமிழ் குரல்கள் கேட்கலாம். பட்டர்களும் ஸ்மார்த்த தமிழர்களே. சமர்த்து தமிழரில்லையய்யா… சிவனை வழிபடும் சைவர்கள் என்று சொன்னேன். வட இந்தியர்கள் தொடங்கி, தெலுங்கர்கள் வழியாக தமிழர் கைக்கு வந்து சேர்ந்திருக்கும் கோவில் என்று நினைக்கிறேன். அதனால்தான் சித்தி விநாயகரும், வெங்கடேச பெருமாளும் வீற்றிருக்க தமிழ் சிவாச்சாரியர்கள் பூஜை செய்கிறார்கள். ஒரு மொபைல் சந்நிதியில் சிவபெருமான் லிங்க சொரூபியாக இருக்கிறார். அவ்வப்போது நகட்டி அந்தண்டை வைத்துவிட்டு ஹால் முழுவதற்குமாக சத்தியநாராயண பூஜை நடத்துவார்கள். பக்கவாட்டில் சின்னதாக ஒரு முருகன் மற்றும் நவக்கிரஹ சந்நிதியும் உண்டு. சித்தி, புத்தி என்று இரு தேவியருடன் ஆஜானுபாகுவான பிள்ளையாரை சந்தன காப்பில் பார்க்கும்போது அற்புதமாக இருக்கும். பிரம்மச்சாரி பிள்ளையாரெல்லாம் இரண்டு பெண்டாட்டிக் கட்டிக் கொண்டால் ஏன்தான் பெண் பற்றாக்குறை ஏற்படாது? நாளைய சந்ததியை எண்ணி சற்றே கவலையாகத்தான் இருக்கிறது.
சான் ஹோசே கோவிலில் திருப்பதி பீமாஸ் புண்ணியத்தில் சாப்பாடு பிரமாதமாக இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் இட்லி, பூரி, போண்டா, புளியோதரை என்று திமிலோகப்படும். மயில்சாமி / விவேக் புகழ் சிவசங்கர் பாபா அமெரிக்கா வந்திருந்த போது சான் ஹோசே கோவிலில் விசேஷ தரிசனம் தந்தார். அப்பொழுது திருப்பதி பீமாஸிலிருந்து கிச்சன் வந்து அமைத்து மசாலா தோசையெல்லாம் போட்டார்கள். எல்லாம் ஃப்ரீ. நான் மதிய உறக்கம் எல்லாம் முடிந்து மெதுவாக போவதற்குள் பாபாவின் சொற்பொழிவு முடிந்து கூட்டம் கிளம்பிவிட்டது. பாபா மட்டும் ஒரு சில அன்பர்களுக்கு பிரத்தியேக டிஜிடல் காமிரா தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்க அருகே சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். சற்றே வெளிறிவிட்டிருந்த டை அடித்த முடியுடனும் பிரயாணக் களைப்புடனும் அதிசயங்கள் செய்து காட்ட முடியாத ’மூட்’டில் இருந்தார். ’யாகவா முனிவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று அடிநாக்கு வரை வந்த கேள்வியை உள்நாக்கை மடித்து உள்ளே தள்ளிவிட்டு, எவ்வளவு எக்கிப் பார்த்தாலும் அவர் கண்களில் சந்திர சூர்யர்களைப் பார்க்க முடியாத ஏக்கத்துடன் கிளம்பினேன்.
சிவாச்சாரியர்கள் சின்சியராக ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்கு என்று டைம்டேபிள் போட்டு பூஜை செய்தாலும், பெருமாள் சற்றே ஒதுக்கப்பட்டாற்ப் போலத்தான் இருந்தது. தசாவதாரம் வந்த புதிதில் அந்த பட்டர் பெருமாளை நமுட்டு சிரிப்போடு பார்த்து ‘பேரு மட்டும் கோவிந்தராஜ பெருமாளா இருந்திருந்தா… ஜஸ்ட் மிஸ் யா’ என்று சொன்னமாதிரி எனக்கு கனவெல்லாம் வந்தது.
பிரதி ஞாயிற்றுக் கிழமை ஒரு ஓரத்தில் தேமேயென்று இருக்கும் முருகனை பிரபலபடுத்தும் பொருட்டு பக்த கோடிகளோடு சேர்ந்து கந்த சஷ்டி கவசம் சொல்வது உண்டு. அன்பர் ஒருவர் முருகனின் அறுபடை வீட்டையும் விளித்து அரோஹரா கோஷம் எழுப்புவார். தொடர்ந்து கான்கார்டு முருகன், லிவர்மோர் முருகன், சான்ஹோஸே முருகன் என்று ஆறுமுகத்தாருக்கு அடிஷனல் படை வீடுகள் செட் செய்துவிடுவார். இன்னமும் 20-30 வருடங்களில் சான் ஹோஸே முருகனுக்கு ஒரு தொன்ம வரலாறு உருவாக்கி திருமுருகாற்றுப்படைக்கு அப்பெண்டிக்ஸாக சேர்க்க வாய்ப்புகள் இருக்கிறது.
நான் சென்ற கோவில்களில் மிகவும் பிடித்த, அமைதியான சூழல் உள்ள கோவில் சான் ஹோசே லக்ஷ்மி கணபதி கோவில்தான். கூடவே அங்கு எப்பொழுதும் கிடைக்கும் மிகவும் அருமையான புளியோதரையும் தயிர்சாதமும். ஐ ரியலி மிஸ் இட்.
பென்சில்வேணியாவிற்கு குடிபெயர்ந்த போது ஆலண்டவுனில் இருக்கும் கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு ஓசி சாப்பாடு கிடைக்குமா என்று ஒரு ஓரத்தில் ஜனித்த ஆசையோடு போனேன். அது ஒரு பூரண இந்தியக் கோவில். ஒரு பக்கம் ஜைனர்களுக்கும், மறுபக்கம் சீக்கியர்களுக்கும் பாகம் செய்துவிட்டு நடுவில் ராதா கிருஷ்ணர் வீற்றிருந்தார். ராதா கிருஷ்ணருக்கு முன்னால் கொலுப்படியில் வைத்த மாதிரி சிவன், பெருமாள், கணபதி, அனுமார் என்று இன்ன பிற தெய்வங்கள். Poker முக பண்டிட் சரியாக மாலை 7:30க்கு துவங்கி இருபது நிமிடங்களில் ஆரத்தி அலங்காரங்கள் முடித்துவிட்டு ரிடையர் ஆகிவிடுகிறார். கோவிலுக்கு வரும் அன்பர்கள் பலரும் ஆண்டவனை விட அடுத்தவரோடு உரையாடுவதில் ஆர்வமாக இருப்பார்கள். கோல்ஃப் கிரவுண்டில் பிஸினஸ் டீல் முடிப்பது போல இந்தக் கோவிலில் பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்.
கோவிலை விட கோவிலுக்கான சஞ்சிகை ஒன்று பரபரப்பாக வலம் வருகிறது. அந்த சஞ்சிகையின் எடிட்டரை அண்மையில் சந்தித்த போது மிகவும் உத்வேகமாக தினப்படி கோவிலின் என்னவெல்லாம் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். திங்கள் கிழமை அனுமார் நாற்பது சொல்கிறோம், வெள்ளிக்கிழமை விண்ணவன் ஆயிரம் சொல்கிறோம் என்று பெரிய பட்டியலேப் போட்டார். நான் அடிக்கடி கோவிலுக்கு வருபவன் என்றதும் சுரத்து குறைந்து விடைபெற்று சென்றுவிட்டார். உண்மையில் இந்திய குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். வந்ததும் நேராக சமூகக் கூடத்திற்கு சென்று பண்டிகை கொண்டாட்டங்கள், கொண்டாட்டத்திற்கு ரிகர்சல், ரிகர்சலுக்கு மீட்டிங் என்று பீட்ஸா பானங்களுடன் கூடி களிக்கிறார்கள். அசந்து மறந்து கூட யாரும் ஆரத்தி சமயம் கூட கோவிலுக்குள் எட்டி பார்ப்பதில்லை.
தற்போது இருக்கும் பகுதிக்கருகே ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் ஒரு அழகான சாரதாம்பாள் ஆலயம் இருக்கிறது. இது இந்தியாவின் சிருங்கேரி மடத்தின் கட்டுபாட்டில் இயங்குகிறது. இளமையான பட்டர்கள் சுருதி சுத்தமாக ருத்ரம், ஸுக்தம் எல்லாம் சொல்லி சாரதாம்பாளுக்கு பூஜை செய்கிறார்கள். பக்கத்தில் ஆதிசங்கரருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. ’டுக்குருங் கரணே’ என்று ஆதிசங்கரர் மறுதளித்த சடங்குகளை விடாமல் பின்பற்றி வரும் அமைப்புதான் அவரது அத்வைத தத்துவத்தை போற்றி பாதுகாக்கிறது . சுப்ரமணியருக்கு சற்றே பெரிய சந்நிதி வைத்திருக்கிறார்கள். நான் முதன்முதலில் போனபோது சற்றே பெரிய பக்தர்கள் கூட்டம் சுப்ரமணிய புஜங்கம் சொல்லி விஸ்தாரமாக வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம். தமிழ் கூட்டம்தான். ஒரு சின்ன மூலையில் சில பல பக்தி புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட விலையென்றில்லாமல் வேண்டியதை எடுத்துக் கொண்டு பணத்தை உண்டியலில் சேர்த்து விடும்படி சொல்கிறார்கள்.
சாண்டா கிளாராவில் ஒரு பாலாஜி கோவில் இன்னமும் கட்டி முடிக்கவில்லை. தாற்காலிகமாக ஒரு சிறிய வீட்டில் வைத்து நடந்து வருகிறது. கர்நாடக மாநிலத்து பட்டர் வட இந்திய பாணியில் ராகம் போட்டு ருத்ரம் சொல்வது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வாரம் முழுவதும் பல பூஜைகளை கிரமமாக செய்து விடுவார். சங்கடஹர சதுர்த்தி, குரு பெயர்ச்சி, பிரதோஷம் போன்ற நாட்களில் ஸ்பெஷல் பூஜைகளுமாக பிரமாதப் படுத்துவார்.
லாஸ் ஏஞ்சல்ஸிலும், பிட்ஸ்பர்கிலும் பிரபலமான கோவில்களுக்கு ஒருமுறை சென்று வந்திருக்கின்றேன். இவ்வளவு கோவில்களை கவனித்ததில் புரிந்தது என்னவென்றால், அமெரிக்காவில் கோவில் கட்ட வேண்டுமென்றால் வெங்கடேச பெருமாள் மிக முக்கியம். அநேக கோவில்கள் ‘பாலாஜி கோவில்’களாகவே அறியப்படுகின்றன. ஸர்வதேவ நமஸ்காரம் ஸ்ரீ பாலாஜி பிரதிகச்சதி – எல்லா தேவதைகளுக்கு செய்யப்படும் வணக்கமும் பாலாஜி பெருமாளுக்கே போய்ச் சேருகிறது.
22
படித்த படிப்பு
தாராள மனதோடு பிரகாஷ்ராஜ் ‘இந்தா 50 லட்சம் வச்சுக்கோ, வேணும்னா கூட 25 லட்சம் வச்சுக்கோ’ என்று படித்த படிப்புக்கு மதிப்பளிப்பதாக விளம்பரம் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நான் பலவருடங்கள் முன்பு எதிர்கொண்ட ஒரு நேர்முகத் தேர்வுதான் நினைவுக்கு வரும். அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பல்வேறு எழுத்துத் தேர்வுகள் எல்லாம் வைத்து வடிகட்டிய பிறகு நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள்.. யார் யாரெல்லாமோ Codd’s கோட்பாடுகள், Classகளுக்கான பரம்பரை பாத்தியதை, வெளிநாட்டு சாவி என்று கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கும்போது, பார்பி பொம்மை போல் சொப்புவாயோடு இருந்த குட்டைக் கூந்தல் அம்மிணி (அந்த ரணகளத்திலும்….ஹிஹி) டகால்னு நடுவில் புகுந்து ‘உன் பொழுதுபோக்கு என்ன?’ என்றார். மனிதவள மேம்பாட்டு துறையை சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும்.
‘இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் புத்தகம் படிப்பதுதான்னு பதில் சொல்வேன். ஏன்னா, நான் புத்தகம் படிக்கிறதைத்தான் பொழுதுபோக்கா வச்சிருக்கேன்’ என்று சுற்றி வளைத்து சொன்னேன். அப்பொழுதெல்லாம் படிப்பது அத்தனையும் கதை புத்தகங்கள்தான் என்னும் குற்றவுணர்ச்சி உண்டு.
அந்தப் பெண் உற்சாகமாக ‘உனக்கு பிடித்த எழுத்தாளர் யார்?’ என்றார். ஏதோ பெருசாக தல்ஸ்தொய், செகாவ்.. என்றில்லாவிட்டாலும் அவர் ரேஞ்சுக்கு ஒரு ஒரு சிட்னி ஷெல்ட்டன், ஹெரால்ட் ராபின்ஸ் ஆவது எதிர்பார்த்திருப்பாரா இருக்கும். நான் சாண்டில்யனிலிருந்து தொடங்கி நீளமாக ஒரு தமிழ் எழுத்தாளர் பட்டியலை சொல்லி முடித்தேன். அக்காலகட்டத்தில்தான் புதுமைபித்தன் படைப்புகளை செம்பதிப்பாக வெளியிடப்படு அவருடைய கதைகளும், அனுபவப் பதிவுகளும் இணையத்தில் பரவலாக படிக்கக் கிடைத்தது (திண்ணை, காலச்சுவடு) . அந்த தாக்கத்தில் கூடவே ‘புதுமைப் பித்தன்’ பெயரையும் சேர்த்து சொன்னேன். அவர் நிஜமாகவே படித்திருந்தாரா இல்லை சும்மாத்தான் கேட்டாரா என்று தெரியவில்லை. ‘புதுமைப் பித்தனுடையதில் உங்களுக்கு பிடித்தது என்ன?’ என்றார். ‘பொன்னகரம், கடவுளும் கந்தசாமி பிள்ளையும்… காஞ்சனை’ என்று யோசித்து யோசித்து சொன்னேன். உடனே அறை முழுவதும் ‘பகபக’வென ஒரே சிரிப்பு. அந்தக் குழுவிற்கு தலையாக இருந்த ஒரு மேனன் ஆர்வமாக ‘அப்படியா? அதென்ன கதை… காஞ்சனாவா?’ என்று புன்முறுவலுடன் கேட்டார். தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் கொட்டி கிளறி வைத்தேன். ‘திஸ் ரைட்டர், மிஸ்டீரியக்கல் எக்ஸ்பீரியன்ஸ் சார். வொய்ஃப் கேரியிங் இன் ஹோம். ஹி கெட்ஸ் ஆல் ஹாரர் எக்ஸ்பீரியன்ஸ். காஞ்சனை மீன்ஸ் கோஸ்ட் ஆர் டிராகுலா மேடம்’
அப்புறம்தான் புரிந்தது அந்த ஹெச் ஆர் அம்மிணியின் பெயர் காஞ்சனா என்பதால்தான் அப்படிஎல்லாரும் சிரித்தார்கள் என்று. என்னை வைத்து பேய்க்கதையா சொல்கிறாய் என்று பூஜ்யத்திற்கு கீழே மதிப்பெண் போட்டாரோ என்னவோ… வேலை சித்தியாகவில்லை. படித்த படிப்பு இப்படியெல்லாம் காலை வாரிவிட்டிருக்கிறது.
பல நண்பர்களின் வாழ்க்கையில் ‘படித்த படிப்பு’ எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பள்ளியில் ஒரு சீனியர் மாணவர். பேச்சுப் போட்டிகளில் எல்லாம் பின்னியெடுப்பார். தடுக்கி விழுந்தால் தனியார் பொறியியல் கல்லூரிகள் ஏற்படாத காலத்தில் அவருக்கு லட்டு போல சிவகாசி மெப்கோவிலேயே இஞ்சினியரிங் சீட் கிடைத்தது.
‘எல்லாவனும் ஈ அண்ட் சி கம்ப்யூட்டர்னு போய் விழறானுவ. கேட்டது கிடைக்கலேன்னா கிழவிய கட்டிக்கறேன்னு மெக்கானிக்கலாவது எடுக்கிறேன்றானுவ. நான் கெமிக்கல்தான் படிக்கப் போறேன். வேலையாகும்போது போட்டி கம்மியாயிருக்கும்ல’ என்று கால்குலேஷன் பண்ணி படிப்பைத் தேர்ந்தெடுத்தார். ஆறேழு வருடங்கள்தான் தூத்துக்குடியில் வேலை பார்த்தார். மொத்தமாக வேலையை தூக்கிப் போட்டுவிட்டு ‘என்னய்யா சம்பளம்… ஏழு வருசத்துல ஏழாயிரம் கூட தாண்டல. சின்னச்சின்ன பயக எல்லாம் கம்ப்யூட்டர் படிச்சிட்டு இருவத்தஞ்சாயிரம், முப்பதாயிரம்னு சம்பாதிக்கறானுவ’ என்று ஜாவா படித்துவிட்டு நியூஜிலாந்தில் போய் கொஞ்சகாலம் வேலை பார்த்தார்.
புறநகர்ப் பகுதியில் பெரிய மில் ஒன்றை மூடியபோது, வள்ளிசாக பல ஏக்கர் நிலத்தை வளைத்துப் பிடித்து நவீன குடியிருப்புகள் கட்டி மதுரையில் ரியல் எஸ்டேட்டில் பெரிய பாய்ச்சல் நிகழந்த காலம். நாளிதழ்களில் வந்த முழுபக்க விளம்பரங்களில் பார்த்தால் ஒருபுறம் நமது நண்பர் பெயரும் இருந்தது. ‘என்ன நாகராஜ், கெமிக்கல் இஞ்சினியரிங்கிலிருந்து கம்ப்யூட்டர் போய் இப்போ சிவிலுக்கு வந்திட்டீங்களா’ என்று கேட்டால் ‘சேச்சே… நான் ஃபைனான்ஸ் மட்டும்தான் பாத்துக்கிறேன்’ என்று சிரித்தார். யோசித்துப் பார்த்தால் அவர் தாத்தா செய்துவந்த வட்டி தொழிலைத்தான் அவர் சிறுவயதிலிருந்தே ஊன்றிப் படித்திருந்தாராக இருக்கும்.
கல்லூரிக் காலத்தில் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு ‘கணக்கு’ பாடம் என்றால் அவ்வளவு கசப்பு. கல்லூரியில் கெமிஸ்ட்ரி மேஜரை விருப்பப்பட்டு எடுத்தார். ஏனென்றால் அதில்தான் கணக்கு பாடத்தை முற்றிலுமாக தவிர்க்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இயற்பியல் பாடம் இருந்தது என்பதால் அவ்வப்போது தேற்றம் நிறுவுவதற்கு எல்லாம் கணக்கை கடன் வாங்கியே ஆகவேண்டும். மஞ்சள் காமாலைக்கு மருந்தாக கீழாநெல்லியை விழுதாக அரைத்து முழுசாக உருட்டி, குளூக்கோஸில் புரட்டி யெடுத்து, கண்ணை மூடிக்கொண்டு, நடுநாக்கில் படாமல் அடித்தொண்டையில் போட்டுக் கொண்டு, அலேக்காக முழுங்குவோமே, அது போல மொத்த தேற்றங்களையும் ஷேக்ஸ்பியர் பாடம் மாதிரி ‘டப்பா’ அடித்துவிடுவார்.
செம்ஸ்டர் தேர்வில் படு விறுவிறுப்பாக கடைசி அரைமணிநேரத்தில் எழுதிக் கொண்டிருந்தார். பரீட்சை மேற்பார்வையாளர் மெள்ள எட்டிப் பார்த்து ‘என்ன குருபிரசாத்… என்ன எழுதிட்டிருக்க என்றுக் கேட்டார்.’ஸ்டோக்ஸ் தியரம்… சார்’ என்று சொல்லிவிட்டு தான் எழுதியதை அவரே ஒருமுறை மீண்டும் புரட்டிப் பார்த்தார். Integration பிரகாரம் ஒவ்வொரு படியாக தேற்றத்தை நிறுவிவிட்டாலும்… ஏதோ குறைகிறதே… புத்தகத்தில் இருப்பது போல ‘அப்படியே’ இல்லாமல் ஏதோ நெருடுகிறதே
‘சீன் காலியாயிருக்கு. பேக்ரவுண்ட் எஃபெக்டுக்கு கூட்டம் இல்லை’ என்று கண்டுபிடித்த டைரக்டர் போல திடீரென ஸ்ட்ரைக் ஆனது அவருக்கு. ஆங்காங்கே Integral குறியீடுகள், அதற்கான ‘கீழ்-மேல்’ வரையறைகள் என்று வேகவேகமாக ‘இட்டு நிரப்பத் தொடங்கினார்’. பார்த்துக் கொண்டிருந்த சூப்பர்வைசருக்கு மயக்கம் வராத குறை. அவர்தான் ஃபிஸிக்ஸ் துறைத் தலைவர் என்பது உபசெய்தி. அடுத்து பல வருடங்களுக்கு தனது வகுப்பில் ‘குருபிரசாத் வழி’யைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை அவர்.
குருபிரசாத் பிறகு எம்பிஏ படித்துவிட்டு இப்போது ஹைதரபாத்தில் பெரிய விளம்பரநிறுவனத்தில் வைஸ் பிரசிடெண்ட்டாக இருக்கிறார். பெர்னோலி மாடல் எல்லாம் உபயோகித்து மார்கெட் ட்ரண்ட் ஆராய்ச்சி அறிக்கை எல்லாம் எழுதுகிறார்.
புள்ளியியல் துறையில் பேராசிரியராக வருவான் என்று நினைத்திருந்த நண்பன் இப்போது ’5 மில்லியன் டாலருக்கு குறைவான ஆர்டர்னா எங்கிட்ட வராதே’ என்று பெரிய கணிணி சேவை நிறுவனத்தின் பெருமைக்குரிய அக்கௌண்ட்களுக்காக வாடிக்கையாளர் மேலாண்மை செய்து கொண்டிருக்கிறான். ‘சிவ் நாடாருடன் டின்னர் சாப்பிட்டேன்’ என்று ஃபேஸ்புக்கில் படம் போடுகிறான்.
‘சடகோபன் ரமேஷும் நானும் ஒண்ணா ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்ல இருந்தோம்’ என்று பெருமையடித்துக் கொண்ட சிவகுமாரிடம் ‘அப்புறம் ஏன் இந்த பொட்டி விக்கிற பொழப்பு’ என்று ரவுண்டு கட்டி கேலி செய்து கொண்டிருந்தோம். சிவகுமார் ஒரு சின்ன கணிணி விற்பனை நிறுவனத்திற்காக பெரிய ஆர்டர்களை துரத்திக் கொண்டிருந்தார். ‘சின்னதா விரல்ல அடிபட்டதுன்னாக் கூட கேரியரே காலியாகிட்ட மாதிரி ஒதுக்கிருவாங்கப்பா. புவ்வாக்கு இந்த மாதிரி வேலைதான் சரி’. பல வருடங்களாக தொடர்பில் இல்லாத காலத்தில், எப்படியும் கோடிக்கணக்கில் ஆர்டரைப் பிடித்து வருடாந்திர விழாவில் CEOவிடமிருந்து ஒரு வாட்ச்சாவது பரிசு வாங்கியிருப்பாரா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ‘புனேயில் ஒரு Event management நிறுவனம் தொடங்கியிருக்கிறேன். இந்த புகைப்படங்களை பாருங்கள்’ என்று ஒரு மெயில் வருகிறது. கூடிய விரைவில் IPLல்லில் பெரிய காண்ட்ராக்ட்களை பிடித்து, சடகோபன் ரமேஷென்ன, சச்சின் டெண்டுல்கரையே தனது நிறுவனத்தின் போர்டில் போட்டு விடுவாரா இருக்கும்.
கல்லூரிப் படிப்பை முடித்து, இண்டியன் எக்ஸ்பிரஸில் நிருபராக பணியாற்றியவர், சிலகாலம் கழித்து புத்துயிர் பெற்றதுபோல புதிய துறையில் மேற்படிப்பு படித்து அமெரிக்க பல்கலையில் பேராசிரியராக பணியாற்றும் கதையை சென்றவாரம் கேட்க நேர்ந்தது.
‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க’ என்று என்னிடம் யாராவது கேட்டால் ‘அப்படியான தருணங்கள் அதிகம் வாய்க்கவில்லை’ என்றுதான் சொல்லத் தோன்றும். அடக்கம் எல்லாம் இல்லை. எத்தனை முறை படித்தாலும் எப்போதாவதுதானே சரியான வாசல் திறக்கிறது. அப்படியான தருணங்கள் வாய்க்கும்போதுதான் கற்றுணர்ந்த திருப்தி ஏற்படுகிறது. பெரும்பாலும் நாம் கற்றது சரியானதுதானா என்று பரிசீலித்து புடம்போடும் வாய்ப்புகள்தான் அதிகம் ஏற்படுமே தவிர, புதியதாக கற்பது வெகு சொற்பம்தான்.
‘காலேஜ் முடிச்சிட்டு சிஏ படிக்கிறதெல்லாம் அந்தக் காலம். இப்பத்தான் ஃபவுண்டேஷன்லாம் வந்திட்டுதே. ஒரே வருஷத்தில் அப்ரெண்டிஸ்ஷிப் போயிடலாம். ஃபோகஸ்டா படிச்சா மூணே வருஷத்தில் ஆடிட்டர் ஆயிடலாம். பத்து வருஷத்துல நான் சுதந்திரமான ஆண்ட்ரப்ரீனியர். சும்மா சுமமா இந்த டிகிரி படி, அந்த டிகிரி படின்னு போரடிக்காதே’ என்று அக்கா மகள் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
“அதுவும் நல்ல ஐடியாதான். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சிஏ முடிச்சிட்டு ஆரக்கிள்ல மென்பொருட்கள் விற்பனை செய்திட்டிருக்கார். நல்ல எதிர்காலம் இருக்கு” என்று விடாமல் உதார் விட்டதும் ‘அட லூசே!’ என்பது போல் பார்த்தாள்.
23
சுற்றிச் சுழலும் சதுரங்கள் - Rubix cube
எனக்கு மிகவும் பிடித்த Rubik Cube இன்று Google Doodleல். 40 வயதாகும் தோழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். என்னுடைய க்யூப் அனுபவங்கள் என்று சிலவருடங்கள் முன்னர் சிறிய குறிப்பாக எழுதியிருக்கிறேன்.
இந்த விளையாட்டை கண்டுபிடித்த ஹங்கேரிய பேராசிரியர் ரூபிக் ஒரு சிற்பக்கலைஞர். முழுவதுமாக கலைக்கப்பட்ட க்யூபிலிருந்து முறையாக எல்லா பக்கங்களையும் சால்வ் செய்யும்போது உருவமில்லாத ஒன்றிலிருந்து உருவத்தை செதுக்கி எடுக்கும் திருப்தி உண்டானது என்னவோ நிஜம்தான். அதே சமயம் க்யூபை சால்வ் செய்யும் வழி தெரிந்துவிட்டால் அதன் புதிர்த்தன்மை முற்றிலும் காணாமல் போய்விட்டது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வில் ஸ்மித் நேரடியாக க்யூப் சால்வ் செய்வதைக் காட்டுவார்கள். கிட்டத்தட்ட அதே ஃபார்முலாவில் அதே நேரத்தில்தான் என்னாலும் முடிக்க முடிகிறது.
ஆனால் ஒன்றரை வயது குழந்தைகூட 38 நொடிகளில் (ஆமாம். நொடிகளில்தான்) முற்றிலும் சால்வ் செய்த சாதனைகள் எல்லாம் யூட்யூபில் கொட்டிக்கிடக்கிறது. இவ்வளவு ஆகாத்தியமெல்லாம் நமக்கு ஆகாது என்பதால் இதையே விரைவாக செய்து 4-4.5 நிமிடங்களில் முடித்துவிடலாம் என்று தீவிரமாக முயன்றிருக்கிறேன். எனக்கான க்யூபை கலைத்து தருவதை பெரிய உதவியாக ஜூனியர் (6 வயது) செய்து கொடுத்துவிட்டு ஸ்டாப்-வாட்செல்லாம் வைத்துக் கொண்டு கண்காணிப்பார். ‘ப்ச்ச்… ஒண்ணரை நிமிஷம் ஆச்சு… இன்னும் ஒரு சைட் முடிக்கல நீங்க. இந்தவாட்டி ஹோப்லெஸ்ப்பா’ என்று ரன்னிங் கமெண்ட்ரி வேறு நடக்கும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ‘இங்க இருக்கற ரெட்டை இப்படிக் கொண்டு வந்திரனும்… ஆனா யெல்லோ மாறிட்டுது’ என்று அவராக முன்னேறிக் கற்றுக் கொண்டு ஒரு சைட் முழுவதும் நிறைப்பதில் ஆர்வம் காட்டினார். ஆகா, இவரை இப்படியே பழக்கி ஒரு ரூபிக் இளவரசனாக ஆக்கிவிடலாம் என்று நான் கற்றுக்கொண்ட யூட்யூப் வீடியோக்களை அவருக்கும் போட்டுக் காண்பித்து “U,R,U`,L`,U,R`,U`,L… இப்படி சுழட்டிகிட்டேப் போனா நாலு மூலையில் இருக்கற நிறங்களும் சைக்ளிக்கா இடம் மாறிட்டே வரும் பாரு…’ என்றெல்லாம் விளக்கினேன். மிகவும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தவர் அடுத்து ஓரிரு மணிநேரங்களுக்கு ஆளையேக் காணோம். எப்படியும் 30 நொடிகளுக்குள் க்யூபை முழுசாக சால்வ் செய்துவிடுவாரோ, அதை எப்படி பதிவு செய்து எப்படி இந்த உலகிற்கு அறிவிப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டே ஐஃபோனைத் துழாவினால் புதியதாக சில வீடியோக்கள் தென்பட்டன. அதி நெருக்கத்தில் ஜூனியரின் முகம் தெரிய, அதற்குள்ளாகவா சாதனையை நிகழ்த்தி, மீடியாக்களில் வந்துவிட்டதா என்று பரபரப்பாக போட்டுப் பார்த்தேன்.
டாட்டு ஸ்டிக்கர்களை எப்படி கையில் படமாக வரைவது, வளையம் வளையமாக ஜிகினா ஸ்டிக்கர்களை எப்படி மணிக்கட்டை சுற்றி உருவாக்குவது, நீள பலூன் வைத்து எப்படி ‘மந்திர வாள்’களை உருவாக்குவது என்று அவரே விளக்கி Selfie மோடில் வீடியோ படமாக சுட்டுத்தள்ளியிருந்தார்.
ஆழாக்கு அரிசி அரைக்காசுக்கு வருமா என்றால் அரைப்படி எண்ணெய் விளக்குக்கு ஆச்சு என்ற கதையாக போய்விட்டது. நல்லா வருவீங்க தம்பி.
24
அறிவியல் திருவிழா!
பொதுவாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே இருக்கும் ஒரு அனுமானம் இங்கிருக்கும் பள்ளிப்படிப்பின் தரம் இந்திய அளவிற்கு கிடையாது என்பது. இது ஒருவகை ‘அக்கரை பச்சை’ மனோபாவம் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இதைப் பற்றி விரிவாக ஆராய்வதற்கான அனுபவம் கிடையாது என்பதால் பெரும்பாலும் நண்பர்களின் கூற்றுக்கு ஒத்துப்பாடி விடுவேன்.நமது ஜூனியர் இப்பொழுதுதான் அருகாமையில் இருக்கும் ப்ரஸ்பட்டேரியன் சர்ச் நடத்தும் பால்வாடியில் சேர்ந்து கலரிங், கட்டிங், ஒட்டிங் வேலைகள் கற்றுக் கொண்டு வருகிறார். இன்னும் நான்கு வயது நிறையவில்லை என்பதால் எழுத்துப் பாடங்கள் எதுவும் கிடையாது. ‘என்னடாது காதர் ஃபாதர்னு பாட்டு?’
’சாப்பிடறதுக்கு முன்னாடி எல்லாரும் பாடுவோம். மிஸஸ் டாஸன் சொல்லிக் கொடுத்தாங்க’
இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை. யாரோ காதரை, எல்லா குழந்தைகளும் ஃபாதர்னு பாடனுமா? ஒருவேளை, மிஸஸ் டாஸனின் அப்பாவாக இருக்குமோ என்று விசாரித்துப் பார்த்தால்…. அது ‘God Our Father’ என்னும் தோத்திர பாடலாம். நல்லவேளை. என் தலை தப்பியது.
சென்ற வாரம் அமெரிக்க பள்ளிகளின் தரத்தை ஒரு துளி நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. பென்சில்வேனியா சிறார்கள் அறிவியல் அரங்கில் (Pennsylvania Junior Academy of Science) இருந்து ஓர் அழைப்பு. வருடா வருடம் நடக்கும் சிறார்கள் சந்திப்பில் அறிவியல் ப்ராஜெக்டுகளை மதிப்பிட தன்னார்வலர்கள் தேவை என்று சொல்ல உடனே மனுப் போட்டு விட்டேன்.
கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் பௌதியல், வேதியல், உயிரியல், கணிணிவியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி என்று பல்வேறு பிரிவுகளில் ப்ராஜ்கெட்டுகள் செய்து பிரசண்டேஷனுக்கு தயாராக வந்திருந்தார்கள். ஒரே நாளில் இரு அமர்வுகளாக நிகழ்ந்தது. காலையில் எட்டாம் கிரேடு மாணவர்களும், பிற்பகலில் ஒன்பதாம் கிரேடு மாணவர்களும் பங்கேற்றார்கள்.
அலுவலகத்திற்கே சாவதானமாக ஒன்பது-ஒன்பதரை மணிக்கு (எத்தனை பேர் காதில புகை வரப்போகுதோ) செல்லும் வழக்கமுடைய நான் கடந்த சனிக்கிழமை காலை ஏழரை மணிக்கே தயாராகி Easton பகுதி உயர்நிலைப் பள்ளிக்கு சென்றேன்.
வாயிலின் அருகேயே தன்னார்வல ஜட்ஜ்களுக்கு பதிவு கௌண்ட்டர் இருந்தது.
’கம்ப்யூட்டர் சைன்ஸுக்கு ஒரே ஒரு யூனிட்தான். ஏற்கெனவே 5 ஜட்ஜ் இருக்காங்க. நீங்க வேற ஏதாவது தேர்ந்தெடுங்க’ என்று சொல்லி விட்டார்கள்.
துணிச்சலாக ’ஃபிஸிக்ஸ் செய்யறேன்’ என்று சொல்லி பதிவு செய்துகொண்டேன். எப்பவோ கல்லூரிக் காலத்தில் படித்தது…
வேலை கொஞ்சம் சுலபம்தான். எனக்களிக்கப்பட்ட யூனிட்டில் மொத்தம் பதினான்கு மாணவர்கள் இருந்தார்கள். எல்லாம் எட்டாவது கிரேடு மாணவர்கள். இயற்பியல் விதிகளின் பிரகாரம் ஒரு ஹைபோதீஸிஸ் தீர்மானித்துக் கொண்டு தாங்கள் நிகழ்த்தி பார்த்த சோதனையைப் பற்றி 10 நிமிடம் பேசுவார்கள். 5 நிமிடம் நாம் கேள்விக் கேட்டு அவர்களின் பிரசண்டேஷனை எடை போட்டு மதிப்பெண் அளிக்க வேண்டும்.
மிகவும் ஆச்சரியமளித்த விஷயம் இதன் ஒருங்கிணைப்புதான். மிக எளிமையான, அதே சமயம் மிகத் தெளிவான பிராசஸ்களை எந்தவித குழப்பமுமின்றி நிகழ்த்தினார்கள். நாள் முழுவதும் நான் பார்த்தவரை ஒரு முணுமுணுப்பு இல்லை. சர்ச்சைகள் இல்லை. அவரவர் வேலையை அவரவர் வெகு திறமையாக செய்து பங்காற்றினார்கள்.
முதல் அமர்வு கிட்டத்தட்ட 75 அறைகளில் நிகழ்ந்தது. நான் 57ம் அறையில் இன்னும் இரு ஜட்ஜ்களுடன் பங்கேற்றேன். மாணவர் திறமையை கணிப்பதைப் பற்றி எவ்வித முன்முடிவும் செய்து கொள்ளாமல் அமர்வை துவக்கினோம்.
ஏறக்குறைய எல்லா மாணவர்களுமே சமயோசிதமான, நடைமுறை மதிப்பு அதிகம் இருக்கும் சோதனைகளையே சமர்ப்பித்தார்கள். முதல் மாணவன் சூரிய சக்தியின் மேல் வெப்பம் ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி ஆராய்ந்திருந்தான். அடுத்து ஒரு மாணவி ஸ்கீயிங் போர்டுகளில் மெழுகை சேர்த்தால் ஏற்படும் பயன்கள் பற்றிய சோதனையை செய்ததாக சொன்னாள். கொஞ்சம் எடக்குமடக்கான அடிப்படை கேள்விகளை திறமையாக எதிர்கொண்டாள்.
கோல்ஃப் மட்டைகளின் வளைவுகள் ‘U’ வடிவத்தில் இருந்தால் நல்லதா ‘V’ வடிவத்தில் இருந்தால் நல்லதா என்று ஒரு மாணவன் சோதனை செய்திருந்தான். ஏகபட்ட தகவல்களுடன் வெகு திறமையாக ப்ரெஸ்ண்ட் செய்தான்.
என்னை மிகவும் கவர்ந்த பிராஜெக்ட் ஜோசஃப் மேலான் என்னும் மாணவனின் Buoyancy பற்றிய பிராஜெக்ட். எளிமையான ஹைப்போதீஸிஸ். பல்வேறு மரங்களின் மிதக்கும் தன்மைப் பற்றிய சோதனை. மேப்பிள், ஓக், பைன் போன்ற ஐந்தாறு மரங்களை வெவ்வேறு அழுத்தத்தில் நீரில் மிதக்கவிட்டு கிடைத்த தகவல்களை தொகுத்து திறம்பட பேசினான்.
ஒரே ஒரு மாணவன் மட்டும் கொஞ்சம் அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டான். வெவ்வேறு எடைகொண்ட பந்துகள், ஒரே நேரத்தில் விடப்பட்டால் (Drop) வெவ்வேறு வேகத்தில் பயணிக்கும் என்பது போலச் சொல்லி மாட்டிக் கொண்டான். கலிலியோ தன் கல்லறையில் சற்றே முகம் சுளித்திருப்பாரோ என்னவோ.
கவண்கல்லிலிருந்து விடப்படும் பந்துகள் பற்றி; Coefficient of restitution; வீசியெறியப்படும் பந்தின் மேல் சுற்றுபுற ஈரப்பதம் ஏற்படுத்தும் விளைவுகள்; இசையினால் இயக்கமுறைகள் மாறுபடுமா; ராம்ப்பின் சாய்மானத்தினால் ஓடும் காரில் ஏற்படும் விளைவுகள்; கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மரங்களின் தாங்கும் சக்தி; பிளேன்களின் இறக்கை வடிவமைப்பு பற்றி; Coefficient of Friction போன்ற பல தலைப்புகளில் மாணவர்கள் சோதனை நிகழ்த்தியிருந்தார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால், இந்த சோதனையை ஏன் தேர்ந்தெடுத்தேன், இதை இன்னோர் முறை செய்தால் என்ன மாற்றங்கள் செய்வேன், இம்முறை நிகழ்ந்த தவறுகள் என்னென்ன… இதன் நடைமுறை சாத்தியங்கள் என்னென்ன என்பது போன்ற பல விஷயங்களையும் சேர்த்தே தொகுத்து வழங்கினார்கள். ஏரோபிளேன் இறக்கை பற்றி பேசிய பையனை,
‘நீ ஏரோபிளேனில் பயணம் செய்திருக்கிறாயா?’ என்று கேள்வி கேட்டபோது ‘இல்லை’ என்று பதிலளித்தான்.
‘பின் ஏன் அதன் பாதுகாப்பைப் பற்றி ஆராய்கிறாய்?’ என்று நண்பர் விளையாட்டாய் கேட்க,
‘I don’t want them to fall on my head” என்றான். சமயோசிதம்.
முடிவாக மூன்று ஜட்ஜ்களும் கூடி அலசி நான்கு மாணவர்களை முதல் வகுப்பில் தேறியதாக கண்டறிந்தோம். இது அவர்களுக்கு PSTS ஸ்காலர்ஷிப் பெற முக்கிய தேவையாகும்.
பெரும்பாலான தன்னார்வல ஜட்ஜக்ள் இந்த அறிவியல் திருவிழாவில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோராக இருந்தார்கள். அதாவது அவர்கள் குழந்தை அல்லாது மற்ற மாணவர்களின் திறமையை எடைபோடும் பொறுப்பில். நான் ஒருவன்தான் வெறும் ஆர்வத்தினால் உந்தப்பட்டு பங்கேற்றிருந்தேன் என்று நினைக்கிறேன்.
மதியம் பள்ளி கேண்டீனிலேயே சாண்ட்விச், சாலட், ப்ரௌனி, சோடாவெல்லாம் கொடுத்தார்கள். ஏதோ வைட்டமின் தண்ணீர் வைத்திருக்கிறார்களே என்று ஆசைபட்டு இரண்டு டாலர் கொடுத்து வாங்கினால் அது இருமல் சிரப் போல மருந்துவாடை அடித்தது. பாவம் இந்த தலைமுறை மாணவர்கள். குச்சி ஐஸ், இலந்தபழம், கொடுக்காப்புளி, மாங்கா பத்தையில்லாமல் எப்படி தங்கள் பள்ளிக்கால அனுபவங்களை நாளை நினைவு கூரப்போகிறார்களோ…
அடுத்த அமர்விற்கு பிஸிக்ஸை எடுக்காமல் புதியதாக பூமி மற்றும் விண்வெளி (Earth & Space) பாடப்பிரிவைக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.
இது ஒன்பதாம் கிரேடு மாணவர்களுக்கான அமர்வு. பிற்பகல் ஒன்றரை மணிக்கு துவங்கும் என்று போட்டிருந்தார்கள். அறைக்கு வெளியில் மாணவர்களின் சளசளப்பு சத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே தவிர, வேறு ஜட்ஜ்கள் யாரையும் காணோம். ஒன்று இருபத்தொன்பதிற்கு ஒரு Metallurgist அம்மையார் அதிரடியாக நுழைந்தார். சம்பிரதாய அறிமுகம் முடிந்தவுடனே ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டு, நான் கணிணி சம்பந்தமான துறையில் பணியாற்றுபவன் என்றதும் முகம் சுருங்கிவிட்டது.
எனக்கு விண்வெளி ஆராய்ச்சியெல்லாம் பிடிக்கும்… ஸ்டார் வார்ஸ் அத்தனை எபிஸோட்களையும் பார்த்திருக்கிறேன் என்று அவரை தேற்றப் போக இன்னமும் பேஜாராகிவிட்டார்.
இம்முறை 12 மாணவர்கள். ஒன்பதாம் கிரேடு என்றாலும் சில மாணவிகள் ஏதோ மாடலிங் பரேடு வந்தது போல படாடோபமாக வந்திருந்தார்கள். இம்முறை முதலிலேயே சக ஜட்ஜ் அம்மணி சொல்லிவிட்டார். கடுமையாக மதிப்பிடாமல், நல்ல ஸ்பார்க் தெரிந்தால் நல்ல மதிப்பெண்கள் கொடுக்க வேண்டும் என்று.
முதலில் வந்த ஸ்பானியப் பெண் சுடுமணலில் தாவரம் வளர்ப்பதைப் பற்றிய சோதனையை விளக்கினார். நல்ல தலைப்புதான் என்றாலும் பாவம் ஆங்கிலம் கொஞ்சம் தகராறு. கையில் வைத்திருந்த பேப்பர்களைப் பார்த்தே படித்ததினால் அவ்வளவு சிறப்பாக எடுபடவில்லை. அடுத்த மாணவர் வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஆவியாதலைப் பற்றிய சோதனை செய்திருந்தார். மேலுக்கு சாதாரண விஷயமாக இருந்தாலும் நடைமுறையில் நிறைய பயண்பாடுகள் உள்ள ஹைப்போதீஸிஸாக தோன்றியது. நல்ல முறையில் கேள்விகளுக்கு பதிலளித்து எங்கள் வேலையை சுவாரசியமாக்கினார்.
அடுத்து ஒரு மாணவர், டீ, காப்பி, சோடாக்களில் தாவர வளர்ச்சியைப் பற்றி விவரித்தார். அடிப்படையான சில விஷயங்களில் தடுமாறியது போல் இருந்தது. ஆரன் என்கிற மாணவர் கடலின் அமிலத்தன்மைக்கு ஏற்ப எப்படி கிளேசியர் உருகுகிறது என்பதை நிரூபிக்க சிறிய சோதனை செய்திருந்தார். ஆனால் விளக்கத்தின் போது ஐஸ் பெர்க் மற்றும் அதன் அமிலத்தன்மைப் பற்றி விளக்க ஆரம்பித்து Metallurgist அம்மையாரை குழப்பிவிட்டார். ஆனாலும் அவருடைய சோதனையை நிகழ்த்திய விதமும் அதை தன்னம்பிக்கையோடு தொகுத்தளித்ததும் நன்றாக இருந்தது.
அடுத்து வந்த பெண் மாடலிங் ஷோவிலிருந்து நேரடியாக வந்தது போன்ற தோற்றத்தோடு இருந்தார். வெவ்வேறு வகையான வெப்பத்தில் நீரில் வளரும் கிரிஸ்டலைப் பற்றிய ஆய்வு. தனக்குத் தெரிந்ததை மட்டும் அழகாக பேசி நிறைவாக செய்திருந்தார்.
தொடர்ந்து பூமியின் மேண்டிலில், Convection Currentsல் ஏற்படும் பாதிப்புகளை பற்றி; கிராமப்புற, நகர்புற சீதோஷ்ணத்தில் ஈரப்பதத்தின் வேறுபாடுகள்; நீர் பிடிப்பான்களின் வகைகளும், அவை மேல் சூரிய வெப்பம் ஏற்படுத்தும் பாதிப்புகளும்; நிலவின் பிறைநிலைகளால் நட்சத்திரங்களின் தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்கள்; வெளிப்புற நிறத்தினால் ஏற்படும் உட்புற வெப்ப நிலை மாறுதல்… இப்படிப் பல சோதனைகளைப் பற்றி மாணவர்கள் விளக்கினார்கள்.
இந்த அமர்வின் ஹைலைட் BP எண்ணெய் கசிவு விபத்தால் உந்தபட்டு சேத் மில்லர் என்ற மாணவன் செய்த சோதனை. கடல் நீரில் கலந்துவிட்டிருந்த எண்ணெயை வெளியேற்ற மனித தலைமுடிகளினால் நெய்யப்பட்ட வலையை பயண்படுத்தினார்களாம். மனித தலைமுடியை விட நாய் முடி இன்னமும் அடர்த்தியானது. நீரிலிருந்து எண்ணெய்யை வெளியேற்ற மனித முடியைவிட நாய் முடி சிறந்தது என்ற ஹைப்போதீஸிஸுடன் சோதனையை நிகழ்த்தியிருந்தான். மில்லரின் டேட்டாக்கள் எல்லாம் சரியாகத்தான் இருந்தன. ஆனால் கடைசிவரை எப்படி நாய்முடி வைத்து வலை நெய்தான் என்று சொல்லாமல் டபாய்த்து விட்டான்.
இம்முறை 5 மாணவர்கள் முதலிடம் பெற்று Penn Stateக்கு செல்கின்றனர். மிகவும் நிறைவான நாளாக இருந்தது. முடிவில் மதிப்பெண்களை கூட்டிப் போடும்போது சக ஜட்ஜ் அம்மணி மிகவும் பொறுப்பாக முதலிடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நோட் எழுதினார். கிறிஸ்டல் வளர்ப்பதைப் பற்றி பேசிய பெண்ணுக்கு
‘Don’t play with your hair much என்று குறிப்பு எழுதுவோம்’ என்றார்.
‘ஐயோ… அதெல்லாம் பர்சனலான கமெண்ட் ஆகிவிடுமே’ என்று சிரித்தேன்.
‘பார்…அந்த கடைசிப் பெண் (வெளிப்புற நிறத்தினால் ஏற்படும் உட்புற வெப்ப வேறுபாடுகள்) பேசும்போது, ஸ்கர்ட்டை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள்’ என்று குறைபட்டுக் கொண்டார்.
அப்பொழுதுதான் உணர்ந்தேன். நான் பேசிக் கொண்டிருப்பது ஒரு Metallurgist மட்டுமில்லை. ஒன்பதாம் கிரேடு படிக்கும் ஒரு டீன்ஏஜ் பையனின் அம்மாவிடமும் கூட.
‘உன் பையனுக்கு மூன்றரை வயதுதானா… கவலைப்படாதே. திடுமென வளர்ந்து நின்றுவிடுவார்கள். உனக்குத் தெரியுமா? இன்றைக்கு இரவு ஸ்கூல் பார்ட்டியில், என் பையனுடன் நடனமாட விருப்பம் தெரிவித்திருக்கிறாள் ஒரு பெண். என் பையனுக்கு என்ன சொல்வதென்று கூட தெரியவில்லை. பாவம்’ என்று அங்கலாய்த்தார்.
ஆமாம். எல்லா அம்மாக்களுக்கும் அவர்கள் பையன்கள் அப்பாவிகளாகவே இருக்க வேண்டும் என்றுதான் விருப்பம்.
(நன்றி: தமிழோவியம்)
25
ஒரு கோப்பை காப்பி
நடந்தது ஒரு துன்பியல் சம்பவம். தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது தற்கொலை செய்துகொள்ள சூழலால் தூண்டப்பட்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டு தற்கொலை போல செட்டப் செய்யப்பட்டதா என்ற கேள்விகளை எல்லாம் தாண்டி, சாதிய வேற்றுமைகளால் நிகழ்த்தப்பட்ட துன்பியல் சம்பவம். இயல்பான ஈர்ப்பில் தேர்ந்தெடுத்த துணையோடு வாழமுடியாமல், நெருக்கடிக்கு ஆளாகி பிரிந்த காதலர்கள். ‘அவருக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக பிரிகிறேன்’ என்று இவர் விரும்ப, இன்று அவரே இல்லை என ஆகிவிட்டது. இளவரசன், திவ்யா காதல் விவகாரம் இந்திய சாதிய விழுமியங்களின் உரைகல். மகாராஷ்ட்ராவில் நிகழ்ந்த கைலாஞ்சி கொலைகள், தமிழகத்தில் மேலவளவு மற்றும் திண்ணியம் கிராமத்தில் நடந்த தலித் கொடுமை, பீகாரின் ரன்வீர் சேனா செய்யும் அட்டூழியம் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. இளவரசன் இழப்பினால் வருந்தும் அவருடைய உற்றார் உறவினர்களுக்கு நமது அனுதாபங்கள்.
நாடு, மதம், மொழி, நிறம், தொழில் என்று எல்லாவித அடையாளங்களையும் கடந்து சாதியில் வந்து நிலைபெறும் குழு மனப்பான்மையே நம்மிடையே அதிகம். வேறெந்த அடையாளத்தையும் விட பிரதானமாக சாதி (மதங்களையெல்லாம் கடந்து) அடையாளம் முன் நிறுத்தப்படுகிறது. சாதிய அடையாளத்தை மறுப்பவர்களும் சாதிய மனோபாவத்தை விடுவதில்லை. Racial (சாதிய) profiling செய்யாத, செய்ய விரும்பாத ஒரு இந்தியரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம்தான்.
இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து இன்று சோஷியல் மீடியாவில் ஆர்த்தெழும் பல கலகக் குரல்களும் எதிர்பார்த்தவைதான். இந்த கலகக் குரல்களால் ஒரு ‘மாதிரி’ (Sample) எதிர்ப்பை பதிவு செய்ய முடியுமே தவிர சாதிய இனக்குழு அடிப்படைகளை தகர்ப்பது ஆகாத காரியம். சாதி-கலப்பு (Exogamy) திருமணங்கள் உண்டாக்கும் அதிர்வலைகளை சமாளிக்க போக வேண்டிய தூரம் அதிகம். மிக அழுத்தமாக கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்க்க அதற்கு மேல் அழுத்தமான வேறு ஒரு கயிற்றைப் போட்டு கட்ட வேண்டியிருக்கிறது. அதனால், முதல் கயிறு நெகிழ்ந்து அவிழ வாய்ப்பு உண்டாகலாம். அடுத்தபடியான அடையாளக் கயிறு எதுவும் சாதி அமைப்பு அளவுக்கு வலிமையானதாக (இதுவரை) இல்லை என்பது நிதர்சனம்.
இன்று மாலை அலுவலக வாசலைக் கடக்கும் துரித நொடிகளில் கண்ணுற்ற சிறு சம்பவமே இந்தப் பதிவை முழுமையாக எழுதத் தூண்டுகோல்.
ஒரு மாதமாக நடந்துகொண்டிருந்த தொழில்நுட்ப மேம்பாடு பிராஜெக்ட் ஒன்றின் கடைசிப் படியான ஆய்வை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வெளியே வந்த ஸ்டீஃபன் லாம்பேர்ட், மிகவும் சோர்வாக இருந்தார். ஆனாலும், உற்சாகமாக, ஆய்வுக்குழுவை வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.
‘வீட்டிற்கு புறப்பட வேண்டியதுதானே ஸ்டீவ்? மிகவும் சோர்வாக தெரிகிறாயே’ என்று முன்வாசல் டெஸ்க்கில் இருந்த சியாரா கோனே அம்மையார் முறுவலித்தபடிக்கே கேட்க, ஸ்டீவ் பெரும் ஆயாசத்துடன்,
‘ஆவ்வ்….! இதோ ஐந்து நிமிடத்தில் புறப்பட்டு விட வேண்டியதுதான். இல்லையென்றால் தலை வெடித்துவிடும். உடனே… உடனே ஒரு காப்பி குடிக்க வேண்டும்’ இயல்பாக கோனே அம்மையாரின் முன்பிருந்த மேஜை விளிம்பில் சாய்ந்து
‘உனக்கு ஏதும் வேண்டுமா? காப்பி? ஜூஸ்? மீட்டிங்கிற்கு கொண்டு வந்த ரிஃப்ரெஷ்மெண்ட்டில் நிறைய மிச்சமிருக்கிறது’
வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டிற்கு புறப்படத் தயாராக இருந்த சியாரா அம்மையார், சற்று நிமிர்ந்து ஸ்டீவ்வை ஒருகணம், ஒரு கணம்தான் பார்த்தார். பிறகு சற்றும் தயங்காமல் ‘குடிக்கலாமே! நன்றி ஸ்டீவ்’ என்றார்.
ஸ்டீவ் சிறிய தலையாட்டலோடு கான்ஃபரன்ஸ் அறையை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்.
கறுப்பு காப்பியா, தேன்விட்டு சர்க்கரை இட்டு, பால் கலந்த காப்பியா, அல்லது ஆரஞ்சு ஜூஸா, இவற்றில் எதை ஸ்டீவ் கொண்டு வந்து சியாரா அம்மையாருக்கு கொடுத்திருப்பார் என்று தெரிந்து கொள்ள ஆசைதான். அதற்குள் என் நடை முடிந்து நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாகிவிட்டது.
ஸ்டீஃபன் லாம்பேர்ட் ஒரு ஜெர்மானியர். ஐந்தாறு தலைமுறைக்கு முன்பாக அமெரிக்காவில் குடியேறியவர்கள். தெற்கு ஜெர்மனியில் பிரபலமான லாம்பேர்ட் குடும்ப தொகுப்பில் எங்காவது ஒரு கண்ணியில் ஸ்டீவ்வும் இருப்பாரா இருக்கும். லாம்பேர்ட் தெருக்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், ஸ்டேடியங்கள் என்று பலதும் இருக்கலாம். இப்பொழுதும் ஏதாவது வர்த்தக ஒப்பந்தத்திற்காக Vendors யாரையேனும் சந்திக்கும்போது சக ஜெர்மானியர் இருக்கிறாரா என்று சாங்கோ-பாங்கோமாக ஆராய்வார். மில்லியன் டாலர் கணக்கில் நிறுவனத்திற்கான வணிக ஒப்பந்தங்கள் செய்யும் அதிகாரம் உள்ளவர்.
‘என்னது 140 ஜிபிக்கு RAM தேவையா? அப்படியென்றால் அது சாஃப்ட்வேர் கிடையாது. இரத்தம் குடிக்கும் ட்ராகுலா. ஸ்டீவ், உன்னை சக்கையாக ஏமாற்றுகிறார்கள்’
என்ன சொன்னாலும், தன்னுடைய தோழர்களை விட்டுக் கொடுக்கமாட்டார்.
மாறாக, சியாரா கோனே கறுப்பின அமெரிக்கர். அதுவும் ஐம்பதுகளுக்கு குறையாத சாதாரண தோற்றத்துடன் கூடிய ஃப்ரெண்ட் டெஸ்க் (Front desk) வேலையாள். நிரந்தரப் பணியாள் கூட கிடையாது. அவருடைய மூதாதையர் ஏதேனும் தென்னாப்பிரிக்கா நாடுகளிலிருந்து கப்பல் கொட்டடிகள் மூலமாக அமெரிக்காவிற்கு வந்து சிவில் வாருக்கு பிந்தைய அரசியல் சீர்திருத்தங்களால் குடிய்ரிமை பெற்று, சூஸன் அந்தோணி போன்றோரின் போராட்டங்களினால் ஓட்டுரிமை பெற்று இன்று தன் சுயகால்களில் நிற்கிறார்.
சற்று விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு ஆராய்ந்தால், ஸ்டீவ்வின் மூதாதையார் யாரேனும் KKK உறுப்பினராகவோ, நண்பர்கள் நியோ நாஜி சித்தாந்தவாதிகளாகவோக் கூட இருக்கலாம். சியாராவின் மூதாதையர் முதுகில் கசையடி தழும்புகளோடு காட்டன் ப்ளாண்டேஷன்களில் கொத்தடிமைகளாக இருந்திருக்கலாம்.
ஆனால், இன்று சியாரா தயக்கமில்லாமல் ஸ்டீவ்விடம் சுதந்திரமாக ஒரு கோப்பை காப்பி கேட்க அவர் உடனே அதை செயல்படுத்துகிறார். இதுதான் முழுமையான விடுதலை.
இந்த தருணத்திற்காக நாம் எவ்வளவு தொலைவு போக வேண்டுமோ?
எவ்வளவு தொலைவாக இருந்தாலும், அந்த பயணத்திற்கான மெனக்கெடல் உகந்ததுதான். நாளைய இளவரசர்களுக்கான காப்பி கோப்பையுடன் காத்திருப்போம்.
26
வேனலை வழியனுப்புதல்
“காக்கையும் கருப்புதான். குயிலும் கருப்புதான். இரண்டிற்குமான வேறுபாடு என்ன? வசந்தகாலம் வந்ததும் தெரிந்துவிடும்” என்றொரு வேடிக்கை பழமொழி வடமொழியில் உண்டு. பொதுவாக எனக்கு பருவங்கள் பற்றிய பிரக்ஞை அவ்வளவாக இருந்ததில்லை. கடும் கோடை, கோடை, அதிகாலை பனியுடனான கோடை என்ற டெம்ப்ளேட் சீசன் மட்டும் பரிச்சயமான தெற்கத்தி ஆள். மூன்றடிக்கு தேங்கிக்கிடக்கும் மழைநீரில் சைக்கிள் விட்டுக்கொண்டு போவது, உச்சிவெய்யிலில் உள்ளங்கால் கொப்பளிக்க கூடைப்பந்து விளையாடுவது, டிசம்பர் மாதக் குளிரில் அதிகாலையில் என்சிசியில் கிராஸ்-கன்ட்ரி ஓடுவது என்ற இயற்கையை எதிர்த்து புரட்சி செய்து வளர்ந்தவன் என்பதால், அமெரிக்காவின் வடகிழக்கு பருவநிலைக்கு பழகிக்கொள்ள சில காலம் பிடித்தது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். ஆனால் கோடையின் அருமை குளிரில்தான் தெரிந்தது. கனத்த போர்வைக்குள் முக்கால்நாளும் முடக்கி வைக்கும் கடுங்குளிரைவிட, உற்சாகத்தை பொங்கவைக்கும் கோடையை கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை. அதுவும் இயற்கை பேரிடர்கள் உக்கிரமடையும்போது குளிர்காலம் இன்னமும் சிக்கலாகிப்போகிறது. உலகாய பிரச்னைகளை எல்லாம், ஃபேஸ்புக்கில் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜில் தீர்த்துவிடும் நண்பர்கள், சாண்டிப் புயலால் மின்சாரமில்லாமல் வாரக்கணக்கில் தவித்துப் போனதிலிருந்து கோடை மீதான காதல் கூடிப் போனது.
ஜெர்மானிய நாட்டுப்புற கதைப்படி பூமியை பிளந்து கொண்டு வரும் பன்றி (groundhog day) வசந்தம் வந்துவிட்டது என்று அறிவிக்குமாம். சிவப்பு வண்ண இறக்கைக் கொண்ட ரேமான் பறவையைப் பார்த்துவிட்டேன் என்று உற்சாகமாக வசந்தத்தை வரவேற்க தயாராவார்கள். இந்த தொல்குடி பழக்கங்களையெல்லாம் சமன்படுத்தும் உலகமயமாக்கல் கொள்கைப்பட்டி வசந்தம்/கோடை பருவம் ‘போர் நினைவு நாள’ன்று (Memorial day) தொடங்கி, ‘உழைப்பாளர் தின’த்தன்று (labour day) முடிகிறது. பல நடைமுறை பழக்கங்களுக்கும் இந்த காலண்டர் அமைப்பு வசதியாக இருக்கிறது.
இவ்வருட வேனில்காலத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடி சென்றவாரத்தோடு வழியனுப்பி வைத்தாகிவிட்டது. சின்ன recap செய்து பார்த்தபோது அன்பின் ஐந்திணை நிலங்களுக்கும் சென்று வந்த நிறைவு ஏற்பட்டது.
பழத்தோட்ட பண்ணைகள்:-
இங்குள்ள பெரிய பண்ணைகளில் ஒரு நிகழ்வாக பார்வையாளர்களை வரவேற்று சுற்றிப்பார்க்க வசதி செய்து தருவார்கள். வேண்டிய பழங்களைப் பறித்துக் கொண்டு, ஆடுமாடுகளுக்கு தீவனம் கொடுத்து, சிறு குழந்தைகள் சவாரி செய்ய சின்னக் குதிரைகள் இருக்க, வைக்கப்போர் வண்டிகளில் சுற்றி வரலாம். நாள் முழுவதும் ஆட்கள் வந்து பறித்துக்கொண்டேயிருக்கும் அளவுக்கு பிரும்மாண்டமான பழத்தோட்டங்களாக இருக்கும். ஸ்ட்ராபெர்ரி, பீச் (Peach), பேரிக்காய், ஆப்பிள் என்று வகைவகையான பழங்களை சீஸனுக்கு ஏற்றவாறு ஃப்ரெஷ்ஷாக பறித்து வரலாம். பார்வையாளர்களை பறிக்க அனுமதிப்பதால் சேதாரம் அதிகம் ஏற்படும் என்று விலை சற்று அதிகமாகத்தான் இருக்கும். இந்த சீஸனில் இரண்டு தோட்டங்களை சென்று பார்த்து வந்தோம். போனவாரம் சென்ற ஆப்பிள் தோட்டத்தில் குலைகுலையாக காய்த்து தொங்கிய கனிகளைப் பார்த்து பரவசப்பட்டு கண்ணில் பட்டதையெல்லாம் பறித்துப் போட்டுக் கொண்டு வந்துவிட்டோம். பில் போட்ட அம்மையார் ‘வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் அறுவடை நாள்வரை வைத்துக் கொண்டு சாப்பிடலாம் நீ. ஆனால் இவ்வளவையும் வைக்க புதியதாக ஒரு ஃப்ரிட்ஜ் அல்லவா தேவைப்படும்’ என்று நமட்டு சிரிப்போடு கலாய்த்துக் கொண்டிருந்தார். மனைவியார் ஆப்பிள் பை (pie), ஆப்பிள் ஜாம் என்று ஏகத்துக்கு ரெசிப்பிகளை தேடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது ‘சோதனை எலியாவதற்கு’ நானே சொந்த செலவில் சூணியம் வைத்துக் கொண்டுவிட்டேன் போல.
விளைச்சல் நிலங்களை இப்படி பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதித்தாலும், சூழலுக்கு சிறிதும் கேடு விளையாதபடிக்கு கவனமாக செய்திருந்தார்கள். பரணர் பாடிவைத்த பசலைபடர்ந்த ஊருண்கேணியெல்லாம் இங்கேயும் இருககா பாஸ் என்று சைஸாக கேட்டுப் பார்த்தேன். அப்படியெல்லாம் இல்லை. வீட்டுக்கு வீடு கோம்பை சைஸுக்கு வேட்டை நாய்கள்தான் இருக்கின்றன என்றார்கள். மனைவி முறைத்துப் பார்த்ததில் இருந்து, அவரும் மருதத் திணை பற்றியெல்லாம் படித்திருக்கிறார் என்று புரிந்தது.
அருவிக் குளியல்:-
‘தோ… இந்தால பொகானோ மலைப்பக்கமா போனீங்கன்னா அருவில்லாம் பிரமாதமா இருக்குமே’ என்று சொன்னபோது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஐநூறு அடிக்கு அப்பால் இருக்கும் அருவியை இங்கே நின்றுக் கொண்டு பார்க்க சொல்வார்கள். இதெல்லாம் ஒரு பொழைப்பு… என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தோம். பொழுதுபோகாத ஒரு சனிக்கிழமை மதியம், என்னதான் அப்படி பென்சில்வேனியாவின் நயாகரா என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது… என்று Bushkill அருவிக்கு பொடிநடையாகப் போய்ப்பார்த்தோம். மஞ்சள் கோட்டுப் பாதையில் போனால் 10 நிமிடத்தில் அருவியைப் பார்த்துவிட்டு திரும்பலாம். நீலக் கோட்டுப் பாதையில் போனால் முக்கால்மணி பிடிக்கும். மலைக்கு பின்பகுதியில் இருக்கும் அருவியையும் சேர்த்துப் பார்க்கலாம். சிவப்புநிறப் பாதையில் போனால் மலைக்குள்ளே குடைந்துக் கொண்டு போய் நான்கைந்து அருவிகள் கூடப் பார்க்கலாம். ஆனால் hiking அனுபவமுள்ளவர் மட்டும் போகலாம் – என்று முழ நீளத்துக்கு விளக்கமெல்லாம் கொடுத்திருந்தார்கள்.
தனியார் சொத்தான மலையையும் அருவியையும், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் சந்தேகத்துடனே உள்ளே புகுந்தால், பாதையெல்லாம் அருமையாகப் போட்டு, வழித்தடமெல்லாம் சிறப்பாக பதிந்து பிரமாதமாக வைத்திருந்தார்கள். நூறு, நூத்தம்பது அடி உயரத்தில் இருந்து ஆக்ரோஷமாக அருவி விழுகிறதைப் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது. அப்படியே சற்று உள்ளேப் போய் அடுத்து என்ன இருக்கிறது பார்த்துவிடலாம் என்று புகுந்தால், மலை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டுவிட்டது. அருவிக்கு பின்னே ஓடும் ‘சிலீர்’ ஆறு, அப்படியே போனால் பின்புறம் மற்றொரு அருவி, அதையும் சுற்றி வந்தால் மலைக்குள்ளே இறங்கி இன்னும் சற்று ஆழத்தில் ‘மனப்பெண் முகத்திரை’ போல வழிந்தோடும் அருவி. பத்தடிக்கு முன்பே வேலிபோட்டு தடுத்திருந்தார்கள். நின்று பார்த்துக் கொண்டிருப்பவர்களை வா-வென சுண்டியிழுக்கும் நீர்த்தாரை. ஓரிருவர் வேலிதாண்டி அருவிக்குள் உட்புகுந்து செல்ல, வரிசையாக எல்லோரும் வேலியை ஏறிக் குதித்து உள்ளே சென்றோம். என்னவொரு சுத்தமான அருவிநீர். கூட்டமோ, சள்ளையோ இல்லாமல் நிம்மதியான, நீண்ட அருவிக்குளியல். கபிலர் (குறிஞ்சித்திணை) பாடியது போல மால்வரை இழிதரும் தூய வெள்ளை அருவியை நீங்கி கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் வழியே நடந்து சென்றோம். ஆற்றின் கரையோரமாகவே தடம்பிடித்துக்கொண்டு வந்தால் அருவியின் முகப்பிற்கு வந்துவிடலாம். அப்போதுதான் தெரிந்தது எவ்வளவு ஆழத்திற்கு சென்றிருக்கிறோம் என்று. படியேறி சமதளத்திற்கு வருவதற்குள் உன்பாடு என்பாடு ஆகிவிடுகிறது. மலைப்பயணம், அருவிக் குளியல் என்று குற்றாலம் போய் திரும்பிய உணர்வு பொங்கியது.
ஏரிக்கரை மணல்கோபுரம்:-
பெல்ட்ஸ்வில்லி (BELTZVILLE) ஏரியென்பது கிட்டத்தட்ட 1000 ஏக்கருக்கு பரந்து விரிந்த நீர்ப்பரப்பைக் கொண்டது. நீளமான, சுத்தமான கரை கொண்ட, நீச்சல் வசதி, படகு சவாரி எல்லாம் கொண்ட பிரமாதமான இடம். கரையோரமாக பெரிய ப்ளாஸ்டிக் கூடாரங்களைப் போட்டுக்கொண்டு குடும்பத்தோடு சூரியக்குளியல் எடுக்கும் கூட்டம் அதிகம். நாங்கள் போனபோது அருகிலிருந்த கூட்டத்தில் அருமையான ஸ்பானிய நாட்டுப்புறப்பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நீச்சல், ஃப்ரிஸ்பி என்றெல்லாம் விளையாடி முடித்தபிறகு குடும்பத்தோடு அமர்ந்து மணல்கோபுரம் எழுப்பி தமிழரின் கட்டக்கலையை உலகறிய செய்தோம். அந்தக் கோபுரத்தை நோக்கி விரைந்து வந்த இரண்டு லட்டீனோ சிறுவர்களைப் பார்த்து ‘ஆகா! நமது கலை அவர்களை எப்படி ஈர்த்திருக்கிறது பார்’ என்று பெருமைப்பட்டு முடிக்குமுன்னர், அவர்கள், அருகிலிருந்த புல்தரையில் உச்சா போய்விட்டு ஓடிவிட்டார்கள். இரண்டடுக்கு கோபுரமாக எடுத்துக் கட்டலாம் என்ற திட்டத்தை கைகழுவிவிட்டு புறப்பட்டோம்.
மூவனார் (நெய்தல்திணை) பாடிய “ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறை”யைத் தேடி நண்பர்களோடு போகத் திட்டமிடப்பட்டு, மழை எச்சரிக்கையால் திட்டம் கைவிடப்பட்டது. ஆர்கழிச் சிறுமீன் ஆர மாந்தும் வெண்காக்கையாக வாய்த்ததே பெருமகிழ்ச்சி.
காடு திரும்பல்:-
முல்லைத்தெய்வமாகிய மாயோனை தரிசிக்கும் திட்டம் வெகுநாட்களாக நிறைவேற்றப்படாமலே இருந்தது. அமெரிக்காவில் பெருமாள் கோவிலுக்கா பஞ்சம்? தடுக்கி விழுந்த இடமெல்லாம் பாலாஜி கோவில்தான். அப்படி விழுந்த கோவிலில் பாலாஜி இல்லையென்றால் அது இந்துக் கோவிலே இல்லை என்று ஃபர்ஸ்ட் அமெண்ட்மெண்ட்டில் திருத்தம் கொண்டு வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. எல்லா பெருமாளும் பெருமாள் அல்ல. ஆதிபெருமாளான பிட்ஸ்பெர்க் பெருமாளே ‘நம்ம’ பெருமாள் என்பது ஆந்திரவர் வாக்கு. பெருமாளைப் போலவே அந்தக் கோவில் உணவகமும் பிரசித்தமானது. சல்லிசான விலையில் அன்னபிரதானங்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். இருநாள் பயணமாக திட்டமிட்டு, சனிக்கிழமையன்று புறப்பட்டோம். பாலத்தை சீர்செய்கிறோம், சாலை உடைப்பெடுத்திருக்கிறது என்றெல்லாம் திசைதிருப்பிய சிறிய இடர்களைத் தாண்டி கோவில் யாத்திரையை முடித்துக் கொண்டு மறுநாள் ஆற அமர ஃபிட்ஸ்பெர்க் மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம்.
பூனையை புலியாகக் காட்டி ஏமாற்றும் வித்தையெல்லாம் செய்யாமல் ஆப்பிரிக்க, ஆசிய, ட்ராபிகள் காடுகளை எல்லாம் உள்ளபடிக்கே உருவாக்கம் செய்து வைத்திருந்தார்கள். சிங்கம் மல்லாக்க படுக்குமா, யானை நின்றுகொண்டே தூங்குமா, மூக்கில் குமிழ் வைத்திருக்கும் முதலை, ஆரஞ்சு வண்ண முடிகளை கொண்ட உர்ராங் உடான்கள், செயற்கை பனிக்குன்றுகளில் உறையும் துருவக் கரடிகள், வெள்ளைவால் மான்கள் என்று நாள்பூரா சுத்திப் பார்க்கும்படிக்கு மிருகங்கள். $2/- கொடுத்தால் சிறுவர்களுக்கு ஒரு zoo key கொடுத்து விடுகிறார்கள். ஒவ்வொரு மிருகத்தின் இருப்பிடத்திலும் சிறியதான ஒலிப்பேழையில் அந்த மிருகங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். சாவி போட்டால் அத்தனை தகவல்களையும், பாடல்களோடு கொட்டுகிறது. அருமையான ஏற்பாடு.
குழந்தைகளுக்கான பிரத்யேகமாக ஏகப்பட்ட விளையாட்டு வசதிகளோடு Kids Kingdom இருந்தது. சீல்களின் வித்தைகளைப் பார்க்கப் போனால் கூடவே ஒரு பையில் சாண்ட்விச்கள் எல்லாம் போட்டு இலவச லஞ்ச் வேறு கொடுத்தார்கள். மான்களுக்கென்று ஒரு தனிப்பாதை போடப்பட்டு அவை சுதந்திரமாக மேய்ந்துகொண்டிருக்க, இடையிடையே கூண்டுகள் போல் அமைத்திருக்கிறார்கள். ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டுக்கு பயணிக்கும்போது மான்கள் நம்மை வேடிக்கைப் பார்க்கின்றன. கடல்குதிரைகள், விலாங்கு மீன்கள், சுறாக்கள் என்று பிரமாதமான அக்வேரியமும் உண்டு. பயிற்சியாளர் மஞ்சள் நிற கோலை கண்ணாடிக்கூண்டின் பக்கவாட்டு சுவரில் பதித்து வைக்க சுறாக்கள் சரியாக வந்து முத்தமிட்டுவிட்டுப் போகிறது. தென்னமெரிக்க ஸ்டிங்க்ரே எனப்படும் நன்னீர் மீன்கள் பெரிய தொப்பி வடிவத்தில் இருக்கிறது. பெரிய தொட்டியில் மேலோட்டமாக அவை நீந்தி வர, அவைகளின் உருண்டு வரும் தலையை நாம் தொட்டுப் பார்க்கலாம். பின்மாலை இருள் சூழும்வரை சுற்றிப் பார்த்துவிட்டு, பேயனார் (முல்லைத்திணை) சொல்லும் “புதுவழிப்படுத்திய மதியுடை வலவோய்” போல வேறுவழியில் (Tollம் இல்லாத தூரமும் குறைந்த பாதையில்) விரைந்து வீடு திரும்பினோம்.
சாகச சவாரிகள்:-
சாகசங்கள் (adventure) இல்லாமல் சவசவ என்று என்னத்தை சுற்றி வருவது என்று வீறு கொண்டு கிளம்பியதுதான் Dorney Park எனும் விளையாட்டு திடல் அனுபவம். இந்த பார்க் வடகிழக்குப் அமெரிக்காவில் பிரபலமான தீம் பார்க் என்றாலும் வள்ளிசாக செலவு ஆகும் என்பதால், வீட்டுக்கு வெகு அருகில் இருந்தும் கண்டுகொள்ளாமலே இருந்தோம். மேலும் குழந்தைகள் சற்று வளர்ந்தபின்பே இம்மாதிரியான இடங்களை அதிகம் விரும்புவார்கள். ஏறத்தாழ கோடைகாலம் முடியும் தருவாயில் ‘வாடிக்கையாளரை வாழ்த்துகிறோம்’ என்று டிஸ்கவுண்ட் விலையில் டிக்கெட் கொடுத்தார்கள். ஓதலாந்தையார் (பாலைத்திணை) பாடிய நெடுஞ்சுவர் நல்லில் இருந்து போரடித்ததால் புன்கண் யானையொடு புலி வழங்கும் பாதையில் சாகசங்களை செய்வோம் என்று புறப்பட்டுவிட்டோம்.
எத்தனை விதமான சாகச சவாரிகள். விண்கல்லில் ஏறி பறந்து விழுவது போல் ஒரு சவாரி, இரும்பு வடிவமைப்பில் இறுமாந்து நிற்கும் ரோலர் கோஸ்டரில் மற்றொரு சவாரி, பேய் பீடித்திருக்கும் படகு சவாரி இன்னுமொன்று என்று இஞ்சினியரிங் கலைக்கு எடுத்துக்காட்டாக ஏகப்பட்ட சவாரிகள். காலையிலிருந்து குழந்தைகளுக்கு துணையாக சுற்றிசுற்றி வந்தவர்கள், வாகாக ஒரு நண்பர் பேபி சிட்டிங் செய்ய ஒத்துக் கொண்டதும், பெரியவர்கள் மட்டும் கூட்டமாக சீறிப்பாய்ந்து அத்தனை சவாரிகளையும் ஒன்றுக்கு இரண்டு முறை சுற்றி வந்து கொட்டமடித்தோம். வானுயர்ந்து நின்ற ஸ்டீல் ரைடில் ஏறும்போதே அடிவயிறு கலங்கியது. உயரப்பறந்து, உருண்டு விழுந்து, அங்கே ஒரு கேமராவில் படம் பிடித்துவிட்டு, அப்படியே தலைகுப்புற திரும்பி சுற்றி வந்து நிற்கும்போது கதிகலங்கிப் போகிறது. ‘தோ… நீ இருக்கற படம்’ என்று பயத்தில் வெளிறிப்போயிருந்த முகத்தை தனியே டிஸ்ப்ளே வேறு வைத்திருந்தார்கள். ‘அப்படியொண்ணும் பயம்லாம் இல்ல. சும்மா வீரத்தை குறைச்சு காமிச்சுக்கறதுதான்’ என்று மீசையை தட்டிவிட்டுக் கொண்டேன்.
அறிவியல் அருங்காட்சியகம்:-
பட்டம் விட்டுக் காண்பித்து நமக்கெல்லாம் படிப்பித்தவர் (இடிதாங்கி சோதனை) என்றளவிற்கு அறிமுகமான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பன்முக ஆளுமை கொண்டவர் என்றறிந்து கொள்ள உதவியது இந்த அனுபவம். பெரிய நண்பர்கள் குழுவோடு ஃப்ராங்க்ளின் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட் சென்றோம். Conducive சூழலில் சிறுவர் / சிறுமியர் எப்படி சுயமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல அறிவியல் சோதனைகளை குழந்தைகளுக்கு ஏற்ப நிகழ்த்திக் காட்டினார்கள். லிக்விட் நைட்ரஜினில் சுருங்கிப் போகும் உலோக குண்டு, கால்சியத்தையும், கார்பனையும் கலந்து வண்ண வண்ண வாணவேடிக்கை நிகழ்த்துவது, மறு-சுழற்சி முறையில் காகிதம் தயாரித்தல் என்று குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் வெகு சுவாரசியம். ஐமாக்ஸ் / 3டி படங்கள் மற்றும் கோளரங்க காட்சிகள் என்று பிரமாதமாக இருந்தது. 18ம் நூற்றாண்டு எரிகல் ஒன்றை பார்வைக்கு வைத்திருந்தார்கள். கால் எதிர்த்த விண்மீன் கனயெரி பரப்பி வீழ்ந்ததை ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னரே கூடலூர்க் கிழார் பாடிவைத்திருக்கிறார் ஐயா என்று உதார் விட்டுக்கொண்டேன். ஆறாம் திணையாக அறிவியல் துறைக்கும் பயணப்பட்டு இவ்வாண்டு வேனலை உற்சாகமாக வழியனுப்பி வைத்தோம்.
5
கணிதமும், கிரிக்கெட்டும், கடவுளும் இன்ன பிறவும்
27
தையல் சொல் கேளேல்
அதெப்படி பெண்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று சொல்லலாம் என்று கோபிக்க வேண்டாம். ‘தையல் சொல் கேளேல்’ என்ற மூதுரையை சொன்னதே ஔவையார் எனும் பெண்மணிதான். ஔவையார் சொன்னதைக் கேட்டால் பெண்கள் சொல்வதைக் கேட்கக் கூடாது. அப்படியென்றால், ஔவையார் சொன்னதை செய்யக் கூடாது. அதாவது, தையல் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். ஓ! அப்பொழுது ஔவையார் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். மீண்டும் ‘தையல் சொல் கேளேல்’… ஔவையார்… பெண்மணி… கேட்பதா.. கூடாதா என்று சுற்றி சுற்றி வருகிறது பாருங்கள். இதைத்தான் முரண்புதிர் (Paradox) என்பார்கள். முரணுரை என்றும் சொல்லலாம். நிறைய பிரபல முரண்புதிர்கள் இருக்கின்றன. நாவிதன் பாரடாக்ஸ், ரஸ்ஸல் பாரடாக்ஸ், பிறந்தநாள் பாரடாக்ஸ், தாத்தா பாரடாக்ஸ் என்று பலவகையான பாரடாக்ஸ்கள் இருக்கின்றன. பினாசியோ என்று ஒரு சிறுவர் கதை பாத்திரம். அவன் பொய் சொன்னால் மூக்கு நீண்டுவிடும். திடீரென பினாசியோ ‘இதோ… என் மூக்கு நீளமாகப் போகிறது’ என்று சொன்னால் என்ன நடக்கும்? யோசித்துப் பாருங்கள். அவன் மூக்கு நீளுமா… நீளாதா…
‘இந்த வாக்கியத்தில் இரு பிழைகள் இருக்கின்றன’ என்பதும் முரண்புதிர்தான். இருப்பதே நான்கு சொற்கள்தானே… இதில் என்னடா பிழை என்று யோசித்தால்… அதுதான் ‘பிழை’ என்கிற சொல் இருக்கே என்பார்கள். அப்ப இன்னொரு பிழை? ‘இரண்டு பிழை’ என்று சொன்னதுதான் அந்தப் பிழை என்று கரகாட்டகாரன் செந்தில் ஸ்டைலில் பதில் வரும்.
தர்க்கம் என்றில்லை. கணிதம், புள்ளியியல், அறிவியல் என்று எல்லாவற்றிலும் இந்த முரணுரை வியாபித்து நிற்கிறது.
‘ஒரு கால இயந்திரத்தில் ஏறி, உங்கள் தாத்தா காலத்திற்கு போய் அவரை உங்கள் கையால் கொன்றுவிட்டால்…’ என்பது போன்ற சுவாரசியமான பாரடாக்ஸ்களினால நம்க்கு அருமையான திரைப்படங்கள் கிடைத்திருக்கின்றன. Back to the future, Terminator, timeline, Timecop போன்ற படங்களில் இந்த முரண்புதிரை முன்நிறுத்தி சம்பவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலை கழகத்தை எதிர்த்து ஒரு பெண்கள் அமைப்பு வழக்கு போட்டது. ‘அட்மிஷனில் ஆண்களுக்கு பாரபட்சம் காண்பிக்கிறார்கள்’ என்று. அந்த கேஸை ஆராய்ந்த கமிட்டி ‘அட்மிஷனில் ஆண்களுக்கு பாரபட்சம் என்று குற்றஞ்சாட்டுவதில் சாரமில்லை. சொல்லப் போனால் அட்மிஷன் பிராசஸஸில் small but significant bias பெண்களுக்குத்தான் காண்பிக்கப்படுகிறது’ என்று தடாலடி அறிக்கை கொடுத்துவிட்டார்கள். இதைத்தான் சிம்ப்ஸன்ஸ் பாரடாக்ஸ் என்கிறார்கள்.
ஒரு சிட்னி ஷெல்டன் கதையில் இப்படி ஒரு சம்பவம் வரும். ‘எதையும் கரைக்கும் திரவம் இது’ என்று விளம்பரபடுத்துவார்கள். அதை நம்பாத ஒரு பெண் கேட்பாள் ‘அதை வைத்திருக்கும் பாட்டிலை ஏன் அது கரைக்கவில்லை’
ஹிரண்யகசிபு பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான் என்பது கதை. ‘இறவா வரம் தர முடியாது’ என்று பிரம்மா முதலிலேயே டிஸ்கிளைமர் போட்டுவிட்டதால் ‘வெளியில் மரணம் கூடாது… உள்ளிலும் மரணம் கூடாது… காலையிலும் கூடாது… மாலையிலும் கூடாது…’ இப்படி ஒரு பெரும் பட்டியல். இப்படியான ஒரு பைனரி ஸ்ட்ராடிஜியை கஷ்டப்பட்டு யோசிப்பதற்கு பதிலாக ‘வேண்டும் போது வரம் கேட்டுப் பெறும் வரம் வேண்டும்’ என்று அடித்திருந்தால் பிரம்மா காலியாகியிருப்பார் இல்லையா?
இந்த முரண்புதிர்களால் என்ன பயன்? உண்மையில் சிம்ப்ஸன்ஸ் பாரடாக்ஸ், பிறந்தநாள் முரண்புதிர் எல்லாம் அடிப்படையில் எளிமையான பிராபப்பிலிட்டி கணக்குகளின் நடைமுறை சாத்தியம்தான். இணைய உலகில் ஹாக்கிங்கிற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் இடையே நிகழும் பெரின்னியல் போராட்டத்திற்கு பின்னால் இம்மாதிரியான புள்ளியியல் முரண்புதிர்கள் நிறைந்திருக்கிறது.
கல்யாணம் ஆன மறுவருடமே கத்திரிக்காய் பிட்ளை சரியாக செய்யவில்லை என்று வேணி மாமியை தள்ளிவைக்க போய்விட்டார் சாமிநாத மாமா. ‘சோத்துல உப்புப் போட்டு திங்கறவனா இருந்தா உம்மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்’ என்று அடிக்கடி உணர்ச்சிபிழம்பாக சண்டை போடுவார்.
‘பின் எப்படி மாமி ஏழு குழந்தைகள்? இதுதான் சாமிநாத மாமா பாரடாக்ஸா?’ என்று கேட்டால் மாமி ‘அடப் போடா! இதிலென்ன புதிரும் புண்ணாக்கும்… இதுதாண்டா இயற்கை’என்பார்.
28
இந்த இடம் போதாது
‘Pierre de Fermat’ – ஏதோ ப்ரெஞ்சுப் பட தலைப்பு அல்ல. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ரெஞ்சு கணிதவியலாளர் ஃபெர்மாட்டின் முழுப்பெயர். ப்ரொட்ராக்டர், காம்பஸ், ஸெட் ஸ்கொயரெல்லாம் வைத்து நாம் வரைந்துபழகும் ‘ஜியாமெட்ரி’யை தோற்றுவித்த டெஸ்கார்டஸின் தோழர். எண் கணிதம், புள்ளியியல், கால்குலஸ், ஆப்டிக்ஸ் என்று பல துறைகளிலும் பங்களிப்பு நிகழ்த்தியவர் அதிகமாக புகழ்பெற்றது ஒரு அரைகுறை வேலைக்குதான் என்றால் நம்ப முடிகிறதா?
கல்லூரியிலோ, பள்ளியிலோ ஃபெர்மாட் தேற்றம் பற்றி படித்திருக்கலாம் நீங்கள். தேற்றம் என்னவோ எளிமையானதுதான்.
மேலே உள்ள படத்தில் மங்கலாக தெரியும் ‘Google’ஐ விட்டுவிடுங்கள். x^n + y^n not equal to z^n என்பது புரிகிறதா? எல்லா எலிமெண்டரி மாணவர்களுக்கும் அறிமுகமான பிதகோரஸ் தேற்றத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ‘Right angled triangle’ன் பக்கங்களின் விகிதாச்சாரத்தை எப்படி ஈக்குவேட் செய்வோம்?
உதாரணத்திற்கு நான்கின் வர்க்கத்தையும் (Square), மூன்றின் வர்க்கத்தையும் கூட்டினால் என்ன வரும்? 3^2 (9) + 4^2 (16) = 25. இந்த 25 என்பது முழு எண்ணான 5ன் ஸ்கொயர் பாருங்கள். இது x^n + y^n = z^n where n = 2 என்னும் ஈக்குவேஷனில் பொருந்துகிறதா?
இது போல இன்னோர் எடுத்துக்காட்டாக 8^2 (64) + 6^2 (36) = 10^2 (100) என்பதையும் சொல்லலாம் இல்லையா?
ஆனால் இது போல முழு எண்களின் க்யூப்களை வைத்து ஈக்குவேஷன்கள் உருவாக்க முடியாது. க்யூப்கள் என்ன… அதற்கு மேலான ^ 4 அல்லது ^ 5 என்ற எந்த எண்ணை வைத்தும் செய்ய முடியாது. இதைத்தான் ஃபெர்மாட் தான் படித்துக் கொண்டிருந்த ஒரு கிரேக்க கணித புத்தகத்தின் மார்ஜினில் சின்ன குறிப்பாக கிறுக்கி வைக்கிறார்.
‘ஒரு க்யூபை இரண்டு க்யூப்களாக பிரிக்க முடியாது. போலவே நான்காவது வர்க்கத்தையும். பொதுவாக இரண்டிற்கு மேலான எந்த வர்க்கத்தையும் இரண்டு வர்க்கங்களாக பிரிக்கவே முடியாது. இதற்கான அற்புத நிரூபணத்தை கண்டுபிடித்துவிட்டேன். அதை எழுத இந்த இடம் பத்தாது’.
கொஞ்சம் ஜியாமெட்ரிப்படி பார்த்தால் குறிப்பிட்ட இரண்டு சதுரங்களை சேர்த்து ஒரு பெரிய முழு சதுரத்தை உருவாக்கி விடலாம். ஆனால் எந்த இரண்டு க்யூப்களையும் வைத்து ஒரு பெரிய க்யூபை உருவாக்கி விட முடியாது என்று சொல்கிறார்.
சுருக்கமாக :- x^n + y^n is never equal to z^n unless n = 2.
ஃபெர்மாட் 1637ல் என்றோ இப்படி எழுதி வைத்துவிட, பிற்கால கணிதவியலாளர்கள் பலரும் இதை முழுவதுமாக நிரூபிக்க தலையால் தண்ணீர் குடித்து தவித்தார்கள். பிறகு 19ம் நூற்றாண்டு பக்கமாக n=3, n=4, n=5 என்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நிரூபணம் கண்டுபிடித்து ‘அடடே… சரியாத்தான்யா சொல்லியிருக்கான்’ என்று வியந்து கொண்டிருந்தார்கள்.
கடந்த 1993ல் எல்லா ப்ரைம் நம்பருக்கும் இந்த தேற்றம் பொருந்துகிறதே என்று கண்டறிந்தாலும் அதிலும் நாலு மில்லியன் வரைதான் நிரூபிக்க முடிந்தது. யாராவது 4578345 என்ற எண்ணிற்கு ஃபெர்மாட் தேற்றம் சொல்லாது என்று சொன்னால் ‘ஆங்… அப்படியா…’ என்று கால்குலேட்டரை தேடி எடுத்து கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். நெஞ்சை நிமிர்த்தி ‘அதெல்லாம் இல்லய்யா… பார்ஷியல் டிஃபெரென்ஷியேஷன் படி இண்டெக்ரல் x=1 டில் x=n’ என்று ‘தில்’லாக கணித சூத்திரத்தில் பதில் சொல்ல முடியாத நிலை.
கடைசியாக பிரிட்டிஷ் அறிவியலாளர் ஆண்ட்ரு வைல்ஸ் 1994ல் முழுவதுமான ஒரு நிரூபணத்தை முன்வைத்தார். ஏழு வருட உழைப்பு ப்ளஸ் நூறு பக்க நிரூபணம். அட்வான்ஸ்ட் அல்ஜீப்ரைக் ஜியாமெத்ரியெல்லாம் புகுந்து புறப்பட்டு ஃபெர்மாட்டின் சின்ன மார்ஜினில் கிறுக்கிய தேற்றத்தை நிரூபித்துக் காட்டி ‘சர்’ பட்டம் வாங்கிக் கொண்டார்.
இன்று கூகுள் முகப்புப் பக்கத்தில் ஃபெர்மாட்டின் 410வது பிறந்தநாளை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட Google Doodle வெளியிட்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு கல்லூரிக் கால நாஸ்டல்ஜியா பொங்கி பிரவகித்து, மீண்டும் ஃபெர்மாட் தேற்ற நினைவலைகள்.
17ம் நூற்றாண்டில் அவர் “இந்த இடம் போதாது” என்று விட்டுவிட்ட நிரூபணம், கிட்டத்தட்ட 350 வருடங்களை நிறைத்துக் கொண்டு பிரும்மாண்ட வரலாறாக மாறிவிட்டது. எவ்வளவு பெரிய இடம் தேவைப்பட்டிருக்கிறது பாருங்கள்!
29
லாஜிக் உலகின் மேஜிக் நாயகன்
இருவாரங்கள் முன்னர் பண்புடன் இதழில் வெளிவந்த கட்டுரை. சேமிப்பிற்காக இங்கும்…
ஈடன் தோட்டத்தில் ஒரே குழப்பம். கடவுள் அறிவு மரத்தை நெருங்கக் கூடாது, அதன் கனியை உண்ணக் கூடாது என்று தடை போட்டுவிட்டதால், ஆதாமும் ஏவாளும் அதனருகே போவதே இல்லை. சாத்தானும் எவ்வளவோ ட்ரிக் செய்துப் பார்க்கிறார் யாரும் மசியக் காணோம். அவர்கள் அறிவுக் கனியை புசித்தால்தானே இந்த பிரபஞ்சத்தை அடுத்த பரிணாமத்திற்கு நகர்த்தி செல்ல முடியும்? ஒரே கவலையும் களேபரமுமாய் இருந்த நேரத்தில் யாரோ அழகான ‘ஆப்பிள்’ லோகோவை அறிவு மரத்தில் ஒட்டி வைக்க… ‘ஆப்பிளின் புதிய ரிலீஸ்’ என்று மக்கள்ஸ் இராப்பகலாக லைன் கட்டி நின்று அறிவுக் கனியை வாங்கி புசித்ததாக ஒரு தொன்ம வரலாறு உண்டாம்.
இம்மாதம் பத்தாம் தேதியிலிருந்து ஈடன் தோட்டத்து ஆப்பிள்களை பிரமோட் செய்ய ஸ்டீவ் ஜாப்ஸும் பிரமோஷன் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவர்தன் ஆன்மா சாந்தியடைவதாக.
ஆப்பிள் பொருட்கள் என்றாலே ஒருவிதக் மனக்கிளர்ச்சியுடன் எதிர்நோக்கும் பயனாளர்களை நாம் பார்க்கிறோம். இந்த உணர்வுமயமான ஒத்ததிர்வு வெகுசில ப்ராண்ட்களுக்கே சாத்தியமாகிறது. கணிணிகள் என்றாலே லாஜிக் நிரலிகள், அல்காரிதம் அலட்டல்கள் என்றிருந்த எழுபதுகளிலிருந்து பின்னாளில் அதை மேஜிக் உலகமாக மாற்றியதில் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு பெரும் பங்கு இருக்கிறது.
இணையத்தில் மேயும் வழக்கமுள்ள எவருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸை பற்றிய அறிமுகம் இல்லாமல் இருக்காது. இணைய சம்பந்தமில்லாதவர்களுக்கு இந்தக் கட்டுரையும் சென்று சேராது என்பதால், இன்ன இடத்தில் பிறந்தார், இன்னாருக்கு தத்து அளிக்கப் பட்டார், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை, எப்பொழுதோ எல்எஸ்டி எடுத்துக் கொண்டார் போன்ற ட்ரிவியாக்களை தவிர்த்துவிடுவோம். இணையத்தில் ஜாப்ஸ் பற்றி சப்ஜாடாக எல்லா தகவல்களும் இறைந்து கிடக்கிறது. தனது பதின்ம வயதுகளில் கொந்தளிப்பான மனநிலையில், தொடர்ந்து தேடலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அதன் விளைவாக ஹிப்பி கலாச்சாரத்தில் ஆர்வம், இந்தியாவிற்கு பயணம், பௌத்தம் தழுவல் என்று நிறைய நிகழ்வுகள். ஆனால், அவர் வாழ்க்கை வரலாற்றை ஊன்றிப் பார்த்தால், இவையெல்லாம் ஸ்டீவ்வின் தேடுதல் பயணத்தின் ஆரம்பக் தடுமாற்றங்களாகத்தான் தெரிகிறது .
இருபத்தியிரெண்டு வயதில், வெற்றிகரமாக ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியபோது, “எளிமையான கணிணி பயண்பாடு ” என்ற புள்ளிக்கு அவர் வந்து சேர்கிறார். அதன் பிறகு, அதுவே தன் வழியென அடையாளம் கண்டு தன்னை அர்பணித்துக் கொள்கிறார் . அவர் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்
‘Machintosh உருவாக்குவதற்கு முன்னரே அது எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எனக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது . அது எப்போதும் இங்கேதான் இருந்தது. நான் எப்போதும் பயனாளர்களுக்கு என்ன தேவை என்று கேட்பது இல்லை. ஒரு புரட்சிகரமான தயாரிப்புக்கு அவர்களால் பெரிதாக உதவி செய்ய முடியாது. அது நமக்குள்ளிருந்துதான் வரவேண்டும்’ .
அவர் சொன்னது போலவே ஐபாட்களும், ஐஃபோன்களும், ஐபேட்களும் நாம் கேட்காமல்தானே நமக்குக் கிடைத்தன.
அந்த சிறிய வயதிலேயே தன்னை ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராக கார்பொரேட் உலகில் நிலைநிறுத்திக் கொள்கிறார் . ஸ்டீவ் வோஸ்னியாக்கின் ஆப்பிள்-II வடிவம்’, ‘பைட்’ அங்காடி பால் டெர்ரலின் முதல் பர்சேஸ் ஆர்டர், மைக் மார்க்குல்லாவின் முதலீடு, விஸி-கால்க் ஸ்ப்ரெட்ஷீட் செயலிகள் என ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வுகளினால் ஆப்பிள் நிறுவனம், எழுபதுகளில் ஆர்த்து எழுந்த கணிணி அலையில் உச்சத்திற்குப் போய் விடுகிறது. அக்காலத்தில் ஆப்பிள்-II கணிணி ஹோம் கம்ப்யூட்டர் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஃபோர்டு நிறுவனத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனம்தான் IPOவில் பொதுமக்களிடமிருந்து அதிக பணம் திரட்டி சாதனை படைக்கிறது. இருபத்தைந்து வயதில் ஸ்டீவ் நூறு மில்லியன் டாலர்களுக்கு அதிபதியாகிறார். ஆனால் ஸ்டீவ்வின் ‘தேடுதல்’ அங்கே நிற்கவில்லை.
ஜெராக்ஸின் PARC ஆய்வுக் கூட அனுபவங்கள் அவரை கணிணி உலகின் எதிர்காலம் கிராஃபிக்ஸ் இண்டர்ஃபேஸ்தான் என்ற தீர்மாணத்தை நோக்கி செலுத்துகிறது. அதுதான் Machintosh கணிணிகளுக்கான தொடக்க புள்ளி. லாஜிக் உலகில் இருந்த கணிணிகள் மேஜிக் உலகிற்கு மாறியது அதன் தொடர்ச்சிதான்.
ஆராய்ச்சி மேஜையில் உட்கார்ந்து புதிய கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தவில்லை. ஆனால் உணர்ச்சி பூர்வமான வடிவங்களை உருவாக்கும் நிறுவனத்தை கட்டியெழுப்பினார். அவர் அனிமேஷன் படங்கள் உருவாக்கியதில்லை. ஆனால் அனிமேஷன் அழகியலை மாற்றி அமைத்தார். நிலைபெற்றுவிட்ட சந்தைகளில் போட்டியிடுவதை விட, போட்டி சந்தைகள் உருவாக்குவதில் அக்கறை காட்டினார். வார்ட்டன் (Wharton) பள்ளிகள் சொல்லித்தராத தொழில்நுட்ப மேலாண்மையை அவர் எளிதில் புரிந்து வைத்திருந்தார். அவருடைய மேஜிக்குகள் என்று நாம் இப்பொழுது கொண்டாடும் சாதனைகளை, பல வருடங்களுக்கு முன்னரே அகவயமாக உணர்ந்து, அந்த சாதனைகளை ஈடேற்ற அயராது உழைத்தார்.
1985ல் ஆப்பிளில் நிகழ்ந்த நிர்வாகப் போட்டியினால் அவர் ஆப்பிளை விட்டு விலக வேண்டியிருந்தது. ‘அதுவும் நல்லதிற்குதான்’ என்று அவரே பின்னாளில் குறிப்பிட்டது போல, அவருடைய அடுத்தடுத்த முயற்சிகளான NeXT, Pixar போன்ற நிறுவனங்களும் கணிணி பயன்பாட்டினை மேம்படுத்திச் சென்றது. இன்றைய World-wide webன் முதல் அடி NeXT Softwareகளினால்தான் சாத்தியமானது. பிறகு ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளில் சேர்ந்து அதை மீள் உருவாக்கி கணிணியின் எல்லைகளைத் தாண்டி தன் வீச்சை விரித்துக் கொண்டது சரித்திரம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளை விட்டு விலகும்போது அதற்கு ஒருவகையில் காரணமாயிருந்த அபாக்கியவான் ஜான் ஸ்கெல்லி அப்பொழுது ஜாப்ஸிற்கு எழுதிய கடிதம் இது….
“ஸ்டீவ், உனக்கு நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன். இன்று இந்த பிரபஞ்சம் சிறிதேனும் மேம்பட்டிருக்கிறது என்றால், அது உன் அக்கறையினால்தான். மிகவும் ரசனையோடும், நேர்த்தியோடும், மயங்க வைக்கும் அனுபவத்தோடும், சமரசமில்லாத தரமான பொருட்களினாலும் அதை மேம்படுத்தியிருக்கிறாய். உன் சாதனை எங்களை எல்லாம் புன்னகைக்க வைத்திருக்கிறது”
சத்தியம். இதையே நாம் எல்லாரும் இன்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். We all miss you Steve!
30
கடவுள் மனிதர்கள்
“வீடுமின் முற்றவும்” என்ற நம்மாழ்வார் பாசுரத்தோடு தொடங்கி தடாலடியாக சிவசங்கர் பாபா எனும் ஹைடெக் யோகி என்று விவரிக்கும் சுஜாதா-வின் பத்தி (Column) ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பழைய கிச்சடிகளை புதிய கலத்தில் பரிமாறுவதும் சோஷியல் மீடியாவின் ஒரு வசதிதானே. இதே போல் யாகவா முனிவரை முன்னிறுத்தி ‘உழவன் நாடாள்வான்னு சொன்னீங்க. தேவகௌடா பிரைம்மினிஸ்டர் ஆயிட்டாரே…’ என்று ரபி பெர்னாட் ஒரு நேர்காணல் நடத்திய நிகழ்ச்சியும் நினைவிருக்கிறது. இந்த இரு “சுயபிரகடன கடவுள் மனிதர்களும்” இணைந்து கலக்கிய அந்த பிரசித்திப் பெற்ற ‘அடிதடி’ கலந்துரையாடலை வாத்தியார் பார்த்த பிறகும் வாத்தியார் இந்த பத்தியை எழுதினாரா என்பது தெரியவில்லை..
அதிக வாசகர்களைக் கொண்ட பிரபல காலம்னிஸ்ட்களுக்கு (Columnist) இது ஒரு சிக்கல். சட்டென பொதுபுத்தியை (‘வலது’, ‘இடது’ என்று எந்த தரப்பாக இருந்தாலும்) எதிர்த்து தடாலடியாக எழுதிவிட முடியாது. நித்யானந்தர் மாதிரி கையும் மெய்யுமாய், மாதுவும் மாத்திரையுமாய் பிடிபட்டால் இணையதளத்தில் வைரஸ் வந்து கட்டுரைகளை அழித்துவிட்டது என்று டகால்ட்டி அடிக்கலாம். சுஜாதா ப்ரிண்ட் மீடியாவில் எழுதியதால் அந்த சான்ஸ் கூட இல்லை பாவம்.
நான் அடிப்படையில் ஒரு சமயசார்பாளன்தான். ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு, மயிர்பிளக்கும் விவாதங்கள் செய்தாலும், சடங்கு சம்பிரதாயங்களில் தொடர்ந்து பங்கேற்றுக் கொண்டுதான் வருகிறேன். பெரும்பாலான மனிதர்கள் ஒருவருக்கொருவர் இசைந்து வாழ்வதற்கு ‘சமயம்’ என்கிற வடிவமைப்புகள் தேவை என்றே நினைப்பவன். வெட்டவெளியில் நிற்கும்போது குளிரிலிருந்தோ, வெயிலிலிருந்தோ பாதுகாத்துக் கொள்ள போர்வை தேவைப்படுகிறது. சமயங்கள் பெயரிடப்பட்டு, நிறுவனமாக்கப்பட்டு, brand value உண்டாக்கப்பட்டு, பொக்கிஷமாக்கப்பட்ட பிறகு அதே போர்வைகள் இரும்புக்கவசங்களாக மாறி போர்களுக்கு தயாராகிவிடுகின்றன என்பதுதான் பிரச்னை.
வாத்தியார் சிலாகிக்கும் ‘கடவுள் மனிதர்’ சிவசங்கர் பாபாவை ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த சின்னஞ்சிறு கோவிலில் பிரயாண களைப்போடு “இவனால் நமக்கு ஏதேனும் உபயோகம் உண்டா” என்பது போல என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அடுத்திருந்த குழுவினரோடு Networking செய்யப் போய்விட்டார். ‘விடு, வீடு’ என்று போதித்தவர் தலைக்கு ‘டை’ அடிப்பதைக் கூட விடவில்லை என்பதுதான் சுவையான முரண். சாதாரண மக்களுக்கு இதுபோன்ற போதனைகள் ஒரு ‘அதிர்ச்சி’யை கொடுக்கின்றன. ராட்டினம் ஏறி சுற்றும்போது ஏற்படுமே ஒரு ‘த்ரில்’… அது போல. ராட்டினம் நின்றதும் இறங்கி பூமியில் கால் பதித்துக் கொண்டு லௌகீக வாழ்க்கைக்கு வெற்றிகரமாக திரும்பிவிடுகிறோம்.
சிவசங்கர் பாபா என்றில்லை… ‘குட்டி’ சாமியாரிலிருந்து ‘புட்டி’ சாமியார்வரை, ஆசார மடங்களிலிருந்து ஹைடெக் மடங்கள், அ-புனித மடங்கள்வரை ஏகப்பட்ட பேர் இந்த வித்தை காட்டுவதில் வல்லவர்கள். எனக்கு சிறுவயதில் முதன்முதலாக அறிமுகமான ‘கடவுள் மனிதர்’ என்று பார்த்தால் பேச்சியம்மன் கோவிலில் மந்திரிக்கும் தாத்தா ஒருவர். கிட்டத்தட்ட சித்தர் ரேஞ்சுக்கு அவரை சிலாகிப்பவர்கள் உண்டு. காய்ச்சல், பூச்சிக்கடி, மஞ்சள் காமாலை, மனப்பிராந்தி, பேயடித்தல், கான்சர் என்று சகலவித உபாதைக்கும் ஒரு சொம்பு நீரை வைத்தே மந்திரித்து கழுத்தில் ஒரு முடிக்கயிறு கட்டிவிடுவார். பாட்டிமார்கள், அத்தைமார்களுக்கு அவர் ஒரு கண்கண்ட தெய்வம். இம்மாதிரி விஷயங்களில் வீட்டு ஆண்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ‘அவங்க நம்பிக்கை சார்’ என்று ஒதுங்கி நின்றுகொண்டு, மந்திரித்தலை பிரம்பிப்பாக பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
பின்னாளில் பைபாஸ் ரோடு பக்கம் அப்பா சொந்தவீடு கட்டிக் கொண்டு இடம்பெயர்ந்தபோது, வீட்டுப் பக்கம் ஒரு சிறு அம்மன் கோவில் இருந்தது. அதில் ஒரு ‘அம்மா’ இருந்தார். அம்மா என்றால் அம்மா இல்லை. ஆதிபராசக்தியின் அம்சமான ஆண் ‘அம்மா’ அவர். முக்காலமும் உணர்ந்த ஞாநி என்றாலும் ஏதோ உடல் உபாதை அவ்வப்போது படுத்திக் கொண்டேயிருந்தது அவரை. கிட்னி பிரச்னையால் வீங்கிய வயிற்றைச் சுற்றி ஆயுர்வேத தைலம் தடவிக் கொண்டு, முனகியவாறு படுத்திருந்தவரை ஒருமுறை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ‘அம்மாவுக்கு இப்ப சுகமில்லை. அப்புறமா வாங்களேன்’ என்று காரியதரிசி சொல்ல அடுத்த ஞாயிறன்று அவரைப் பார்த்து ‘பையன் எப்படி? பூட்ட கேஸா, இல்லை பொழச்சுப்பானா?’ என்று அருள்வாக்கு கேக்கலாம் என்று திட்டம் போட்டு வைத்திருந்தார் அப்பா. சனிக்கிழமையே அம்மா இப்பூவுலகை பரிபாலனம் செய்யும் உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார் என்று செய்தி கிடைத்தது.
நண்பர் ஒருவருக்கு திடீர் சோதனை. அவர் விரலில் அணிந்திருந்த திருமண மோதிரம் காணாமல் போய்விட்டது. அலுவலகத்தில் எல்லோரும் பதறிக் கொண்டிருக்க சக அலுவலர் புன்னகையுடன் அந்த மோதிரத்தை மந்திரத்தால் ‘மீட்டெடுத்து’க் கொடுத்தார். நண்பர் புளகாகிதமடைந்து அந்த ‘அருள்’ பெற்ற மகானை வீட்டிற்கு அழைத்து வந்து உபசாரமெல்லாம் செய்தார். சட்டையைக் கழட்டிவிட்டு, வெற்றுமார்பில் ஸ்படிக, துளசி மாலைகள் புரள, அவர் உடலையெல்லாம் உதறியபடிக்கு அருள் வந்து அரற்றலாக ‘எங்கே உன் குலசாமி…. தொலச்சிட்டியேடாஆஆ’ என்று மிரட்டலாக ஆசி வழங்கினார். ‘அந்த மோதிரத்தை அவரே அபேஸ் செய்து டிராமா செய்திருப்பாரோ’ என்று லாஜிக்கலான கேள்வியை அடிமனதிலேயே புதைத்துவிட்டதால் நண்பருடனான நல்லுறவு இன்னமும் நீடிக்கிறது.
காரைக்குடி சாமியார் என்ற ‘கடவுள் மனிதர்’ ஒருகாலத்தில் எங்கள் குடும்ப வட்டாரத்தில் பிரபலம். காவி நிறத்தில் அளவெடுத்து தைத்த ஜிப்பாவில் பாக்கெட்டெல்லாம் பிதுங்கி வழியும் பேப்பர்களும், நீளமான கூந்தலுமாக இருப்பார். காரியதரிசி எல்லாம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளராததால் அவரே வாடிக்கையாளர் மேலாண்மை செய்ய வேண்டியிருந்தது. அதான் பாக்கெட்டில் அவ்வளவு விசிட்டிங் கார்டுகளும், விலாச குறிப்புகளும். அவருடைய வழிமுறை என்னவென்றால், அருள் வசனங்களை குட்டி டேப் ரிகார்டரில் பதிவு செய்து காசெட்டாக கொடுத்துவிடுவார். கூடவே ‘போய் பூஜையில் வச்சிக்கிடனும்’ எனச் சொல்லி ஒரு மந்திரித்த எலுமிச்சம்பழமும் கொடுப்பார். அந்தப் பழம் வாடி வதங்கி, காய்ந்து கருவாடான பிறகும், ஏதேனும் சிறு துகளாக அருள் ஒட்டியிருக்கலாம் என்ற நப்பாசையில், பாதுகாப்பாக பூஜையறையில் வைத்திருப்பார்கள். அவருடைய கேசட் சொற்பொழிவு கேட்டு ‘தமிழில் எந்த மொழியில் பேசுகிறார் இவர்’ என்று சந்தேகம் உண்டாகலாம். நம்பிக்கை வைத்த பக்தர்களிடம் மட்டும் அந்த மொழியை விளக்கச் செய்யும் பிரத்யேக சாவி இருக்கக் கூடும்.
துமலூர் சாமியார் என்று ஒருவரை நண்பருடன் நேரில் சென்று சந்தித்திருக்கிறேன். மக்கிப் போன வாடையுடன் கூடிய பெரிய பூஜை அறையில், பெரிய பெரிய அம்பாள் படங்களுக்கு நடுவே, கோமணம் தெரிய சிறிய துண்டோடு உட்கார்ந்திருக்கும் பெரியவர்தான் சாமியார் என்பது சொல்லாமலே புரிந்தது. ‘காணிக்கையெல்லாம் போடாதே… ‘ என்று கறாராக சொன்னவர், கிளம்பும்போது ‘அம்பாளுக்கு நெய்விளக்கு ஏத்தினா எல்லா நலனும் சித்திக்கும். ஒரு நூத்தம்பது ரூபா கொடுத்தா, தினமும் உன் பேரைச் சொல்லி தெனம் விளக்கேத்தறேன்’ என்று பேக்கேஜ் டீல் கொடுத்தார்.
பூஜையறையில் நுழைந்தவுடன், முதலில் நோட்டுப் புத்தகத்தில் பிடித்த பூ, பிடித்த எண் என்றெல்லாம் எழுதிவிட வேண்டும். அதைப் படித்தே சாமி நம்முடைய கடந்த ஜென்மம், புனர் ஜென்மம் என்று ஏழு ஜென்மத்தையும் புட்டு புட்டு வைத்து நம்மை கடைத்தேற்ற பரிகாரமும் சொல்லிவிடுவார். ‘ரோஜாப்பூன்னா… கூடவே முள்ளும் உண்டு. பாக்கிறதுக்கு மகிழ்ச்சியா இருந்தாலும் இவருக்கு மனக்கவலை எப்போதும் உண்டு. வியாழக்கிழமை தோறும் பிள்ளையாருக்கு பாலபிஷேகம் செய்திட்டு வந்தா தோஷம் நிவர்த்தியாகும்’ என்று ஒரே போடாக போட்டுவிடுவார். அப்புறம் எவர் இவரை நம்பாமல் இருப்பார்கள். ஒரு நண்பர் புத்திசாலித்தனமாக ‘பாரிஜாதப் பூ’ என்றெழுதிவிட்டார். இந்த பூமியில் எங்கும் கிடைக்காத தேவமலர் அது. விடுவாரா சாமி… ‘தெய்வ நம்பிக்கை அதிகம் இவருக்கு. ஆனா கடந்தகால கர்மபலன் இப்பிறவியில் வந்து ஆட்டுகிறது…’ என்று ஒரு விளக்கமும் அதற்கு பரிகாரமும் சொல்லி டீலை கச்சிதமாக முடித்துவிட்டார்.
கல்கி பகவானுக்கான பிரத்யேக பஜனையில் அவருக்கென்று தனியே நாற்காலியெல்லாம் போட்டு வைத்திருப்பார்கள். பஜனை நடக்கும்போது அவரே வந்து அருள்பாலித்துவிட்டுப் போவார் என்று ஐதீகமாம். நான் பார்த்த பஜனையில் ஓர் அம்மையார் ஆர்வமிகுதியில் அந்த நாற்காலியில் கல்கி பகவானின் திருவுருவ படத்தை வைத்து ஐதீகத்தை நீட்டிக்க முயன்றார். தடாலென படம் குறுக்காக கீழே விழுந்துவிட்டது. கூடியிருந்த கூட்டம் ‘ஆ’வென வாயைப் பிளக்க, அந்த அம்மையார் அலட்டிக் கொள்ளாமல் படத்தை திரும்ப நேராக நாற்காலியில் வைத்துவிட்டு, அதிலிருந்த மல்லிகைச் சரத்தை மட்டும் நீக்கிவிட்டு,. ‘மல்லிகை மாலை வேணாம்னு சொல்றார் சுவாமி’ என்று வியாக்கியானம் வேறு கொடுத்தார். கூடிய விரைவில் கல்கி ஃப்ரான்சைஸை பைபாஸ் செய்து அவரே நேரடி அவதாரமாக ஆகியிருப்பாராக இருக்கும்.
மக்கள் அனைவருக்கும் உலகாய இச்சைகளிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைய போதித்த புட்டபர்த்தி பாபா ‘தனக்கு மட்டும்’ என சில பல கோடிகளை படுக்கையறையில் மறைத்து வைத்திருந்து, பாவம் அதை எடுத்து செல்லமுடியாமலே முக்தி அடைந்தார். அவருடைய அதி-பிரபலத்தால் பொதுமக்களுக்கான அடிப்படை வசதி மேம்படும் பிராஜெக்ட்கள் பலவும் நிகழ்ந்தது என்று குறிப்பிடுபவர்களும் உண்டு. வணிக நிறுவனங்களின் இலாபத்தில் ஒருபகுதியை Charityக்காக ஒதுக்குவது போலத்தானே.
இன்னும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், ரஜ்னீஷ், வேதாத்ரி மகரிஷி என்று கடவுளிடம் நெருக்கமாக அழைத்து போக எத்தனை சாமியார்கள். அவர்களிடம் நம்பிக்கையோடு ஒப்புக் கொடுக்க இத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும் இன்னமும் சாமியார்களுக்கான தேவை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ட்ரைக்ளீனிங் செய்து கஞ்சி போட்டு ஒரு செட் காஷாயத்தை ரெடியாக வைத்திருங்கள். யாருக்குத் தெரியும். சான்ஸ் அடித்தால் நீங்களும் ஒரு ஹைடெக் சாமியாராகி சர்வதேச ஆயுத பேர டீலெல்லாம் செய்யலாம்.
சிறுவயதில் மீனாட்சி கோவிலுக்கு போகும்போது அந்த ‘முட்டாய் பாட்டி’யை அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒருவகையில் தூரத்து உறவினர் என்பதால் ஓரளவுக்கு பின்னணி தெரியும். கணவனை இழந்து கைம்பெண் கோலத்தில், உறவினர்களோடு சொத்துக்காக மல்லுக்கட்டி பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பிறகு எப்படியோ புத்தி பேதலித்து வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டார். போகிற வருகிறவர்களிடம் கையேந்தி காசு வாங்கி அதில் மிட்டாய்கள் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்.
‘நீலவண்ணக் கண்ணா வாடா, நித்தம் ஒரு முத்தம் தாடா’ என்று அடித்தொண்டையில் பாடியவாறு, கரிய வற்றிய கரங்களைக் கொண்டு குழந்தைகளின் கன்னம் வருடிக் கொஞ்சுவார். மிட்டாய் பெற்றுக் கொண்டவுடன் பேயைக் கண்டது போல தலைதெறிக்க ஓடிவிடுவோம். ஒருதடவையேனும் நின்று நிதானித்து அந்த பாட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்திருந்தால், அந்தக் கண்ணனை பாட்டிக்கு அருகில் கொண்டு சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. “அவரவர் இறையவர் குறைவிலர்”
31
சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்
பதினாலு வயது பையனாக வான்கடே ஸ்டேடியமில் பந்து பொறுக்கும் பையனுக்கு ஒரு மிகப்பெரிய கனவு. அதே உலகக்கோப்பை மேடையில் தானும் இடம்பெறவேண்டும் என்பதுதான் அது. அக்கால கட்டத்தின் பல சிறுவர்களின் கனவாக அது இருக்கத்தான் செய்தது.
‘முட்டிக்கு சற்று மேலே எழும்பிய அந்தப் பந்தை, அவர் கவர் திசையில் ட்ரைவ் செய்ய நினைத்து முன்னேறி, கடைசி நொடியில் மட்டையை விலக்கிக் கொள்ள பந்து கீப்பரின் கைக்கு சென்றது’ என்ற கொரகொர ரேடியோ வர்ணனைக்குப் கேட்டுவிட்டு ‘என்னாவாம்… ரன்னே எடுக்கல… அதைப் போய் இவ்ளோ லென்த்ததா சொல்றாங்க’ என்று ஆயாசப்பட்டுக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் புயலென மாறி கட்டுக்கடங்காத கொண்டாட்டத்தில் திளைக்க ஆரம்பித்த காலம் அது.
83-85 காலகட்டம் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரும் திருப்புமுனைக் காலம். ஏகப்பட்ட சாதனைகள் உடைக்கப்பட்டு, சரித்திரம் மாற்றியெழுதப்பட்ட காலம். 87ம் வருட கிரிக்கெட் உலகக்கோப்பை இந்திய மண்ணில் நிகழ்ந்த போது, வான்கடே ஸ்டேடியத்தில் பந்து பொறுக்கிப் போடும் பையனாக போக என் வலக்கையை வெட்டித் தர சித்தமாக இருந்திருப்பேன். அப்படித்தான் சச்சினும், காம்ப்ளியும் இன்னபிற பையன்களும் துடித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.
அதற்கு முந்தைய 83ம் வருட உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், கோலியாத் போன்ற மேற்கிந்திய தீவு அணியை கபில்தேவ்வின் தலைமையிலான இந்தியா வெற்றிக் கொண்டது ஒன்றும் திட்டமிட்டு வியூகம் அமைத்து பெற்ற வெற்றி அல்ல. வெறும் துடிப்பையும், நம்பிக்கையையும் மட்டுமே கொண்டு சாதித்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்திய கிரிக்கெட் அப்படியேதான் இருக்கிறது. கட்டுகோப்பான திட்டமிடுதல், தொலைநோக்கு பார்வை, வெற்றிபெறும் வியூகங்கள் என்றெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் துடிப்பு மிக்க வீரர்களின் சாதனையை மட்டுமே நம்பிக் கொண்டு.
சச்சினுக்கு என்ன குறைச்சல்? இந்திய கிரிக்கெட்டின் தலைவாசலான, அதிகாரமையமான மும்பையில் இருந்தார். கவாஸ்கர் போன்ற நட்சத்திர வீரர்கள் லைம் லைட்டில் இருக்கும்போது அவர் பார்வையில் இவர் விழுந்தார். இரண்டே ஆண்டுகளில் பாகிஸ்தான் டூருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை எளிதில் பெற்றார். அப்துல் காதரின் ஒரு ஓவரில் சில வித்தைகள் காட்ட நாளிதழ்களின் முக்கிய செய்திகளில் அவர் பெயரும் ஓரமாக இடம்பெற்றது. The blue eyed boy என்ற அங்கீகாரம் உடனே அவருக்கு வழங்கப்பட்டது. அடுத்து இரண்டே வருடங்களில் அவருடைய உலகக் கோப்பை கனவும் நனவாகியது. 1991 உலகக் கோப்பையில் இந்திய அணியில் சச்சின் இடம்பெற்றார். தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தினால் இரண்டு மேன் ஆஃப் த மேட்ச் விருதுகளும் பெற்றார். மார்ட்டின் க்ரோவ்வின் மேஜிக்கால் பிரும்மாண்டமாக உருவெடுத்திருந்த நியுஜி அணியிடம் தோற்ற மேட்ச்சிலும் கூட சச்சின்தான் டாப் ஸ்கோர். போதாதா? சந்தோஷமாக புகழ் மழையில் நனைந்து திளைக்க வேண்டியதுதானே?
வாய்ப்புகளும், அதை பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெறுதலும் வீரர்களுக்கு அழகு. ஆனால் சாதனையாளர்களுக்கு? அந்த பதினாலு வயதுக் கனவின் மிச்சம் அவரை அமைதியாக அமரவிடாமல் துரத்திக் கொண்டேதான் இருந்தது. ‘இதல்ல என் குறிக்கோள்’ என்று தன் வேர்களை இன்னமும் ஆழமாக பூமியிலிட்டு விருட்சமாய் வளர்ந்தார். 96 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு லீடிங் ஸ்கோரர், 99 உலகக் கோப்பையில் இரண்டு செஞ்சுரிகள், 2003ம் உலகக் கோப்பையில் அறுநூற்று எழுபது ரன்கள். கிட்டத்தட்ட ஒற்றைக்கையால் இந்திய அணியை உலகக் கோப்பை வெற்றிக்கும் மிக அருகே இட்டுச் சென்றார். ஆயினும் அந்த பதினாலு வயது சிறுவனின் கனவு பூரணமாக நிறைவேறவேயில்லை.
உடல்நல பிரச்னைகள். டென்னிஸ் எல்போ, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை. ‘எங்கள் மதம் கிரிக்கெட். எங்கள் தெய்வம் சச்சின்’ என்ற வெறிபிடித்த ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஒவ்வொரு முறையும் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் இவற்றின் மத்தியில் தன் பதின்ம வயது ஆசைத்தீயை அணையவிடாது தொடர்ந்து தன்னை நிரூபித்துக் கொண்டே வந்தார். இந்த உலகக்கோப்பையாவது… இந்த உலகக்கோப்பையாவது… என்று விடாமல் ஓடிக் கொண்டேயிருந்தார். கிட்டத்தட்ட 24 வருடங்கள் கழித்து அதே வான்கடேவில் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது உலகக்கோப்பையை வென்றெடுத்தபோது அந்த பதினாலு வயதுச் சிறுவன் கண்ணீர் தளும்ப தன் அணியினரை ஓடி ஓடிச் சென்று அணைத்துக் கொண்டு கொண்டாடினான்.
சச்சின் கணக்கற்ற சாதனைகள் படைத்திருக்கலாம். நூறு கோடி மக்களின் நாயகனாக நெடுங்காலம் கோலோச்சியிருக்கலாம். பிராட்மேனிலிருந்து தொடங்கி, இன்றைய காலிஸ் வரை சச்சினோடு ஒப்பிட்டுப் பார்க்காத லெஜண்ட்களே கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் அதி-நட்சத்திரங்கள் பலரும சச்சினின் நிழலில் வளர்ந்தவர்களே. ஆனால் இவை எதுவும் அவருக்கு பொருட்டில்லை.
அவரளவிற்கு, தன்னுடைய பதினாலு வயதுக் கனவை முழுமையடையச் செய்யும் பயனத்தில் சச்சின் கடந்த சில மைல்கற்களே இவை.
சச்சினுக்குள் இருக்கும் என்றும் மாறா சிறுவன்தான் அவரை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்று ஒரு சகாப்தமாக ஆக்கியது. என்னுள் இருந்த சிறுவனையும் எத்தனையோ முறை சந்தோஷபடுத்திய அந்த சிறுவனுக்கு என்றென்றும் என் நன்றிகள்!
32
WC 2011: எவ்வளவோ பாத்துட்டோம். இதைப் பாக்க மாட்டோமா?
83ம் ஆண்டு உலகக் கோப்பை சமயத்தில் கிரிக்கெட் அவ்வளவு பரிச்சயமில்லாத விளையாட்டு. கொர்…கொர்..என சத்ததிற்கு இடையே கரகர குரலில் ரேடியோ கமெண்ட்ரி கேட்கும் மாமாக்கள் அவர்களுக்கே உரிய பரிபாஷையில் ‘அட்ச்சிட்டான்…அட்சிட்டான்… காஜி உட்டாண்டா…’ என்று அலறுவதை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த போது சத்தம் போடாமல் கபில்தேவ் கப்பை லவட்டிக் கொண்டு வந்துவிட்டார்.
85ல் வேர்ல்ட் சீரிஸ் கப் சமயம்தான் தாத்தா வீட்டில் கருப்பு வெள்ளை டிவி கனஜோராக வந்தது. நரோத்தம் பூரி போன்றவர்கள் அலுக்காமல் ‘விக்கெட்டுகளுக்கு இடையே அருமையான ஓட்டம்’ என்று ரிப்பீட்டும் காமெண்ட்ரியுடன் திருவிழாக் கூட்டம் போல் கிரிக்கெட் மேட்ச் பார்த்த நினைவு இருக்கிறது. இறுதி ஆட்டம் ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன். ஸ்ரீகாந்த் மூச்சு வாங்க ஓடி ஓடி 60 ரன்னுகளுக்கு மேல் எடுத்தார். ரவிசாஸ்திரி சாம்பியனுக்கெல்லாம் சாம்பியனாக Audi காரை பரிசாக வாங்கிக் கொண்டு (அதற்கு சுங்கத் தீர்வை கட்டினாராய்யா?) பேச, கவாஸ்கர் ‘நான் இனி காப்டன் பதவியிலிருந்து கீழிறங்கிக் கொள்கிறேன்’ என்று பேட்டிக் கொடுத்தார். என்ன அரசியல் என்றெல்லாம் தெரியாது. ஆனால் கட்டையப் போடும் கவாஸ்கருக்கு எதிரான புரட்சிப் புயல் கபில்தேவ் என்ற சாமானிய ரசிகனின் மனநிலைதான் அப்போது.
87ல் எங்கள் வீட்டிலேயே BPL கலர் டிவி வந்துவிட்டது. பங்கேற்ற அணிகளிலே இளைய கேப்டன் கபில்தேவ்தான் என்ற triviaக்களுக்கெல்லாம் புளகாங்கிதப்பட்டு ஒரு மேட்ச் கூட விடாமல் வெறியோடு பார்த்தேன். மறுநாள் ஹிந்துவில் ஆர். மோகனின் கட்டுரைகளை முன் வைத்து முந்தைய மேட்ச்சை போஸ்ட்மார்ட்டம் செய்து நண்பர்களோடு விவாதித்து… ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதர்ச நாயகர்கள் உண்டு அப்பொழுது. ராமநாதனுக்கு கவாஸ்கர் என்றால் ஆனந்திற்கு ரவிசாஸ்திரி, ஜகதீசனுக்கு அசாருதீன். நான் என்றென்றும் கபில்தேவ்தான். ஸ்போர்ட்ஸ்டாரில் கபில்தேவ் போஸ்டர் தருகிறார்களென கடை கடையாக தேடித் திரிந்து கிடைக்கவில்லை. ஹரி அண்ணன் வைத்திருந்த போஸ்டரை பார்த்து மனதை ஆற்றிக் கொண்டேன். செமி-ஃபைனலில் இங்கிலாந்துக்கெதிரான ஆட்டத்தில் Eleventh hour Samaritanஆக வழக்கம்போல கபில்தேவ். ஹெம்மிங்க்ஸை முட்டிக் கால்ப் போட்டு ஸ்கொயர்லெக்கில் ஒரு பவுண்ட்ரி அடித்து முப்பது ரன்கள் எடுத்துவிட்டார். ஆகா! மீட்பன் இவனன்றோ என்று உணர்ச்சிகரமாக இறுமாந்திருந்த போது, அடுத்த பந்தில் ஆக்ஷன் ரீப்ளே. அதே முட்டி, அதே ஸ்கொயர் லெக், என்ன பந்து மட்டும் சற்று உயரப் பறந்து போய் பாழாய்ப் போன கேட்டிங் டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் பிடித்து விடுகிறார். இந்தியா விளையாடாத ஃபைனல்ஸ் பார்க்கவேயில்லை. பின்ன… மான ரோஷம் வேணாமா என்ன…
91ல் நடக்க வேண்டிய வேர்ல்ட் கப் ஒருவருடம் தாமதமாகி 92ல். ஆஸி-நியூஜிலாந்து இணைந்து நடத்தியது. மார்ட்டின் கிரோவ் ‘கனவு கேப்டனாக’ பரிணமித்து ஒரு மேட்ச் கூட தோற்காமல் டீமை வழிநடத்தினார். வேகப் பந்தாளர்களையெல்லாம் கிரேக்பாட்ச் இறங்கி இறங்கி சாத்த, தீபக் பட்டேல் இரண்டாவது ஓவரிலேயே ஸ்பின் போட… ஒரே காமெடிதான். நியூஜிலாந்து தோற்ற ஒரே மேட்ச் செமி-ஃபைனல்ஸில் பாகிஸ்தானோடு. இந்தியாவும் ஏதோ விளையாடினோம் என்று ஒப்பேற்றினார்கள். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு கபில்தேவ் சோபிக்கவில்லை.
96ல் இந்திய துணை-கண்டத்தில் நடந்த உலகக் கோப்பையில் எனது ஹீரோவைத் தேடி சச்சின் டெண்டுல்கரிடம் சரண் புகுந்தேன். மனுஷன் ஏமாற்றவில்லை. ஆனால் டீம் ஏமாற்றிவிட்டது. ஜான் ஏறினால் முழம் சறுகிய கதையாக ஒரு மேட்ச் ஜெயித்தால் அடுத்த மேட்ச் தோற்றுவிடுவார்கள். ஒரு ஓவரில் வெங்கடேஷ் பிரசாத்தை கவர் டிரைவில் பவுண்ட்ரி அடித்துவிட்டு ஆமிர் ஷோஹைல் பெருமையாக பேட்டை ஆட்டி காண்பிக்க, அடுத்த பந்தில் பிரசாத் ஷோஹைலை போல்ட் ஆக்கி திருப்பி பெவிலியனைப் பார்த்து கைகாட்ட… எந்த த்ரில்லர் திரைப்படமும் தராத த்ரில் அல்லவா அது. அடுத்து ஸ்ரீலங்காவிற்கு எதிரான அந்த அநியாயமான அரையிறுதி ஆட்டத்தை டிவியில் பார்த்த எனக்கே கொலைவெறி வந்தது. வங்காளிகள் உப்பை ஓவராக சாப்பிடுவார்களோ என்னவோ… ஸ்டேடியத்தையே அதகளமாக்கி விட்டார்கள். காம்ப்ளியின் கண்ணீரோடு இந்தியாவின் வேர்ல்ட் கப் கனவும் கரைந்து போனது.
99ல் கைப்புள்ள ரேஞ்சுக்கு தொடங்கிய இந்திய அணி திடீரென விஸ்வரூபம் எடுத்தது போல கென்யா, ஸ்ரீலங்காவை எல்லாம் அடி அடியென அடித்து துவைத்து சூப்பர் சிக்ஸுக்குள் போனது. அதுவும் சவ்ரவ் கங்குலியின் ஏழு சிக்ஸர்கள்… யப்பாஆஆஆ! ஆனால் அடுத்த ரவுண்டில் நாமதான் கடைசி. டூர்னமெண்ட்லேயே அதிக ரன் ராகுல் டிராவிட். ஒரே மேட்சுல அதிக ரன் அடிச்சது கங்குலி. அப்புறமா டிராவிட். அப்புறமா டெண்டுல்கர். எப்படியோ டெக்னிக்கலா ஆளாளுக்கு ரிக்கார்ட் பண்ணிக்கொண்டு டீமை மட்டும் மொத்தமா கவுத்தி விட்டார்கள்.
அந்த வேர்ல்ட் கப் முடிந்தவுடன கபில்தேவை கோச்சாக்கி, டெண்டுல்கரை கேப்டன் ஆக்கி பிரமாதப் படுத்தினார்கள். அது இன்னோர் டைட்டானிக் ஆனது தனி சோகக் கதை.
2003ல் வழக்கம் போல் தடுமாற்றத்தோடு தொடங்கினாலும் பிறகு ஸ்டெடியாகி வரிசையாக ஏழு வெற்றிகள். இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை Times of Indiaவில் ‘The Match of the Tournament’ என்று விளம்பரபடுத்தினார்கள். பெங்களூரில் நண்பர்களோடு பியரும் கையுமாக முழுவதுமாக பார்த்து ரசித்த மேட்ச் அது. மேட்ச் முடிந்தபிறகு ஜெயநகர் 4த் பிளாகிற்கு சாப்பிடப் போய் அங்கே கூடியிருந்த பெரிய கூட்டத்தோடு இன்னமும் கூத்தாடி… மறக்க முடியாத கொண்டாட்டம் அது.
ஃபைனல்ஸைப் பார்க்க ஃப்ரிட்ஜ் முழுவதும் பியர் பாட்டில்களை லோட் செய்து முன்னேற்பாடாக உட்கார்ந்திருந்த போது ஜாகீர் கான் போட்ட முதல் ஓவரில் 13 பந்துகள். விளங்குமா? மறுநாள் பேப்பரில் ரிக்கி பாண்டிங் மடியில் மனைவியை இருத்தி முத்தமிட்டுக் கொண்டே ஓரக்கையில் வேர்ல்ட் கப்பை பிடித்துக் கொண்டு… காதெல்லாம் வெந்து போச்சு.
2007ல் வேலை அழுத்தம் அதிகமாக இருந்ததால் உலகக் கோப்பைப் பற்றி அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. ஆமாம்… வேர்ல்ட் கப் ஆரம்பிச்சாச்சா என்று திரும்பிப் பார்க்கும்போது இந்தியா வெளியேறி இருந்தது. அதற்கப்புறம் எல்லாம் கிரேக் சாப்பல் மட்டும் சோலோவாக விளையாடி மீடியாவிற்கு தீனிப் போட்டுக் கொண்டிருந்தார். The Less said the better.
2011ல் இதோ வருகிறது அதோ வருகிறது என்று உலகக் கோப்பை கிரிக்கெட் வந்தேவிட்டது. நாளை நடக்கும் இந்திய வஙக்தேச மேட்ச் தொடங்கும் நேரம் இங்கே அதிகாலை மூன்றரை மணிக்காம். அலாரம் வைத்து எழுந்து பார்ப்பதா, இல்லை ஏதாவது திரைப்படம், டிவி சீரியல் பார்த்துக் கொண்டே நேரத்தைக் கடத்திவிடலாமா என்று பல யோசனைகள். இவ்வளவு எதிர்பார்ப்புடன் மேட்ச்சை பார்க்கப் போய், நமுட்டு சிரிப்புடன் ஷகீப் அல்-ஹசன் ‘இந்தியாவை தோற்கடித்தப் பிறகுதான் அயர்லாந்தை பற்றி யோசிக்க வேண்டும்’ என்று சொன்னது உண்மையாகிவிட்டால் என்ன என்று அடிமனதில் ஒரு பயமும் இருக்கத்தான் செய்கிறது.
இருந்தாலும், எவ்வளவோ பாத்துட்டோம்… இதைப் பாக்க மாட்டோமா என்ன. தோ! அலாரம் செட் பண்ணியாச்சு.
கருத்துகள்
கருத்துரையிடுக