Vāḻkkaiyiṉ arttam
பொது அறிவு
Backவாழ்க்கையின் அர்த்தம்
புனைவுகள் & கட்டுரைகள்
பேயோன்
முன்னுரை
பைசா பிரயோசனம் கிடையாது, பைசா செலவு கிடையாது.
- என் பாட்டி
'வாழ்க்கையின் அர்த்தம்' என்ற இந்த நூல் எனது 676ஆவது புத்தகம் என்கிறது ஒரு பதிப்புத் துறைப் புள்ளிவிவரம். இது எனது சொந்த ஊகத்துக்கு அருகே வருகிறது. என்னுடைய கணக்குப்படி இது என்னுடைய 675ஆவது நூல்.
பத்துப் பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்ற தகப்பன் சில குழந்தைகளின் பெயரை மறந்துவிடுவது போல, என் புத்தகங்களில் பலவற்றின் தலைப்பு எனக்கு நினைவில்லை. என் புத்தகம் ஒன்றை என் பெயரை மறைத்துவிட்டு என்னிடம் நீட்டினால் எனதில்லை என்று நான் அதைப் படிக்க மறுத்துவிடக்கூடும். அப்படி ஒரு புத்தகம் என்னிடம் தரப்பட்டுக் கட்டாயத்தின்பேரில் படித்து அதை மிக மோசம் என்று விமர்சித்ததும் என்னுடைய புத்தகம்தான் என்று அறி்ந்த பின்பு ஆச்சரியமடையாததும் நிகழ்ந்ததுண்டு.
'வாழ்க்கையின் அர்த்தம்' என்ற இந்தப் புத்தகம் என்னுடையது என்பதை நான் மறக்கப்போவதில்லை. ஏனென்றால் எல்லோரும் வாழ்க்கைக்குச் சொறிந்துகொடுத்துக்கொண்டிருக்க, புணர்ச்சிப் பரவசம் போன்ற அதன் தற்காலிக நிவாரணக் கணங்களை அதன் பிரதிநிதித்துவ டப்பாக்களாக 'டான்ஸ்' ஆடிக்கொண்டிருக்க, உறவுகள், கலைகள், அரசியல் என்று சிடுக்குமொழியில் பீறாய்ந்துகொண்டிருக்க, நான் மட்டுமே ரத்தம் வடியும் அதன் கோரப் பற்களை, அதன் பகட்டுக்குள்ளே பதுங்கியிருக்கும் அழுகிய நிர்வாணத்தை, நிரந்தரத்தின் காரட்டைக் காட்டி நம்மை அது தள்ளி விடும் பாம்புமிகு படுகுழிகளை, எந்தப் பூக்களையும், எந்தப் பட்டாம்பூச்சிகளையும், எந்த வனங்களையும், எந்த வானவில்களையும் பிடித்துத் தொங்காமல் இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கிறேன். வார்த்தைகளின் துரோகங்களுக்கு உடந்தையாவதில்லை எனதெழுத்து.
'குழாயைச் சரியாக மூடுவதில்லை', 'மேட்ச்சிங் கிட்னி', 'நம்மை மீறிய விஷயம்' போன்ற சிறுகதைகளில் மனித சுயநலத்தை, உறவுகளின் பொய்மையைத் தரிசிக்கலாம். 'போதையைப் போடுதல்', 'குற்றக் குழந்தைகள்', 'பால் பொங்கல்' போன்ற பகிர்வுகளில் தனிமனித சுதந்திரத்தின் விரைகளைச் சமூகம் தனது சர்வாதிகார எதிர்பார்ப்புகளால் கசக்குவதைக் காணலாம். தனிமனிதன் பெரும் ஆபத்திற்கிடையே கடமை அரக்கனின் பிடியிலிருந்து தப்பிச் செல்லத் துடிப்பதை 'விஷ ஊசி'யில் பார்க்கலாம். வாழ்வியல் சடங்குகள் எனும் ராட்சத இயந்திரத்திலிருந்து கழன்றாலும் அவ்வியந்திரத்தின் சிக்கல்களிலிருந்து விடுபடச் சாத்தியமில்லாத கொடூரத்தைப் பற்றி மணவாழ்க்கை பற்றிய கடிதங்களில் படிக்கலாம். தகவல் தொடர்பு யுகத்திலும் மொழியின் தொடர்புறுத்தவியலாமை பற்றி 'ஒரு துக்கம் விசாரித்தல்', 'இப்படித்தான் ஒருமுறை', 'ஒரு கை ஓசை' ஆகிய படைப்புகளில் புரிந்துகொள்ள முயலலாம். 'ரேமன்', 'பனிப் புயல்' ஆகிய சிறுகதைகளில் கெட்ட கனவுகளே கொண்டாட்டங்களின், சாகசங்களின் இடத்தை இட்டு நிரப்புவதை உணரலாம். 'மனமாற்றம்', உள்ளீடற்ற வெகுஜனக் கதையாடல்களின் மாயச் சுழலில் சாமானியன் சிக்குறுவதைச் சொல்கிறது.
இவற்றை நான் அழுதுகொண்டு எழுதவில்லை. இதழோரத்து விரக்திச் சிரிப்பின் கசிவை நாவால் நக்கியிழுத்துக்கொண்டு எழுதவில்லை. நான் அடிப்படையில் ஜென் புத்திஷ்டன். எழுதும்போது சிந்தனைகளையே வைத்துக்கொள்வதில்லை. எண்ணங்கள் குறுக்கிட அனுமதிப்பதில்லை. மனதைக் காலியாக்குகிறேன். எனது நனவிலியின் மேல் பாரத்தைப் போட்டுத் தட்டச்சு செய்யத் தொடங்குகிறேன். Be the sword என்று ஒரு ஜப்பானிய சமுராய்ப் பழமொழி உண்டு. அதைப் போல, எழுதாதே, எழுத்தாக இரு என்கிறேன். ஆழ்மனதிலிருந்து நினைவுகள், உணர்வுகள், கருத்துகள், புலன்கள் பொறுக்கிய பிம்பங்கள் மற்றும் ஒலிகள் ஆகியவற்றைச் சுமந்த சொற்கள் தாமாக வந்து விழுவதையும் மூளை அவற்றை மொழியின் தர்க்கத்தால் கோர்ப்பதையும் உணர்ந்து பரவசிப்பதற்கு மட்டும் ஒரு துளி சுயத்தைத் தக்கவைத்துக்கொள்கிறேன்.
இந்த ஒரு துளி சுயத்தில் கலந்து ஜோடனைகளற்ற என் புற உலகை வேடிக்கை பார்க்குமாறு வாசகர்களை அழைக்கிறேன். துண்டிலக்கியம், தேர்ந்தெடுத்த படைப்புகள் என மேலும் இரு மின்னூல்களை அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். அது வரை இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பேயோன்
12-12-2014
சென்னை
குறிப்பு: 'குழாயைச் சரியாக மூடுவதில்லை' என்ற சிறுகதை ஆனந்த விகடனின் 'பேயோன் பக்கம்' பகுதியில் வெளிவந்தது.
கிறிஸ்துமஸ் காட்சிகள்
"இன்று கிறிஸ்துமஸ்!" என்ற செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தி அலறலில் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தபோது காலை மணி ஆறு. வழக்கமாக மகன் பள்ளிக்குக் கிளம்புவதை வேடிக்கை பார்க்க ஐந்தரை மணிக்கே எழுந்துவிடுவேன். இன்று விடுமுறை நாளுக்காகத் தூக்கம் அதிகம்.
என் தெருவிற்கு இருதெருக்கள் தள்ளி இருக்கும் புனித ராபர்ட் தேவாலயத்தின் வாசலில் புத்தாடைக் கோலத்தில் நிறைய கிறிஸ்தவர்கள் காணப்பட்டனர். சிறுபான்மையினராக இருப்பதில் வெட்கமோ என்னவோ, சாதாரண நாட்களில் இவர்களைப் பார்க்கவே முடிவதில்லை. ஜான்களும் மைக்கேல்களும் குழந்தைகளுக்கு அன்று விடுமுறை என்பதை மீறி உற்சாகமாகத் தெரிந்தனர். ஊரில் முக்கால்வாசிப்பேர் பல்கூடத் துலக்கியிராத அந்த நேரத்திலும் சிலர் கோட்டு-சூட்டு அணிந்து முழு மாப்பிள்ளை அழைப்பு ஆடையில் வந்திருந்தார்கள். பணக்காரர்களுக்காக ஓர் இலவசத் திருமணம் நடக்கப்போவது போலிருந்தது. இதற்கு முரண்நகையாய்ப் பெண்கள் நெற்றியில் குங்குமம் இல்லாமல் அமங்கலமாக அலைந்துகொண்டிருந்தார்கள்.
தேவாலயத்தின் உச்சியில் ஒரு பெரிய நட்சத்திரத்தைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். பூமியில் இருப்பவர்களுக்கு நட்சத்திரம் இவ்வளவு பெரிதாகத் தெரியாது என்ற பகுத்தறிவுச் சிந்தனைக்கெல்லாம் இடமில்லை. அத்தனை ஒளியான ஒரு பொருள் சுற்றுப்புறத்தை சுட்டுப் பொசுக்காமல் இருக்கிறதே என்ற ஆறுதல்தான் மிச்சம். மத நிகழ்வு என்பதால் இரண்டு போலீஸ் ஜீப்கள் நின்றிருந்தன. சில இந்து இன்ஸ்பெக்டர்கள் அவற்றின் மேல் ஒய்யாரமாகச் சாய்ந்து விட்டேற்றியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு வந்தால் பரபரப்பாவார்கள் போலும்.
காலை டிபனுக்கு இயேசுவின் ரத்தமும் சதையும் என்றால் பத்து மணியளவில் பிரியாணியை எதிர்பார்க்கலாம். சிறுவயதில் எங்கள் வீட்டருகே இருந்த புனித கிறிஸ்து தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்டது சுவையான அனுபவம். இப்போதுகூட உள்ளூர் எம்.எல்.ஏ.வைத் தெரியும் என்று சொல்லி இந்த தேவாலயத்தினுள் புகுந்து பிரியாணி சாப்பிடலாம் போல் தோன்றியது. அதிர்ஷ்டவசமாக எனது நண்பர் சாய் ஆபிரகாம் குடும்பத்தோடு கண்ணில் பட்டார். "கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சர்ச்சில் எனக்கு பிரியாணி கொடுப்பார்களா?" என்று பேச்சு வாக்கில் நைச்சியமாகக் கேட்டேன். இந்த முறை ஃப்ரைடு ரைஸ்தானாம். நண்பருடன் பேச்சுப் பேசியபடி தேவாலயத்தினுள் இயல்பாக நுழைவது போல் நுழைந்தேன். உள்ளேயும் நல்ல கூட்டம். பாதிரியார் 'கெட்டப்'பில் இருந்த ஒருவர் எதிர்ப்பட்டு நண்பரைப் பார்த்துப் புன்னகைத்தார். ஆனாலும் ஃப்ரைடு ரைஸ் என்ற பின்பு எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அடுத்த ஆண்டு புலவ். அதற்குப் பிறகுதான் மீண்டும் பிரியாணி. அதாவது 2015 வரை பிரியாணி கிடையாது.
நண்பர் ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் விடைபெற்று வெளிவந்து யோசனையாக நின்றுகொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம் வந்து, "இதுல சில வசனங்கள் இருக்கு சகோ" என்று பிரசுரம் ஒன்றை விநியோகித்துச் சென்றார். நானும் வசனம் எழுதுபவன்தான். உதவும் என்று வாங்கிக்கொண்டேன். பிரித்துப் பார்த்தால் வெறும் கதைதான் இருந்தது, வசனம் இல்லை. அருகில் இரு சிறுவர்கள் அதே துண்டுப் பிரசுரத்தில் கப்பல் செய்ய முயன்றுகொண்டிருந்தார்கள். மெல்லிய காகிதம். எனவே கப்பல் செய்யும்போது தாள் கிழிந்தது. அவர்களில் இளையவன் என்னையும் என் கையில் இருந்த துண்டுப் பிரசுரத்தையும் பார்த்தான். நான் என் பிரதியை அமைதியாக பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டேன்.
அந்தக் கோலாகலமான இடத்தை விட்டு சோபையற்ற என் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விருப்பமின்றி நின்றிருந்தேன். தேநீர் சாப்பிடக் கிளம்பியவனை இன்னும் காணோமே என்று என் மனைவி நினைத்தாரோ என்னவோ, செல்பேசியில் அழைத்தார். தோசை மாவும் முட்டையும் வாங்க வேண்டியிருந்தது. சிறிது நேர மனப் போராட்டத்திற்குப் பின்பு என் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துண்டுப் பிரசுரத்தை எடுத்து அந்தச் சிறுவர்களுக்கே கொடுத்துவிட்டு "கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்" என்று புன்னகைத்தேன். என் இடத்தில் கிறிஸ்துவும் அதைத்தான் செய்திருப்பார்.
கடிதம்: வாழ்க்கைத் துணை
ஐயா,
என் வீட்டில் எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டிற்குள்ளாக எனக்குத் திருமணம் நடந்துவிடும் என்றே எண்ணுகிறேன். ஆயினும் எந்த வகையான பெண் எனக்குப் பொருத்தமான மனைவியாக இருப்பாள் என்பதில் எனக்குக் குழப்பமே. என் ஜாதகப்படி நான் அப்பாவி, அன்பானவன், அமைதியானவன். இத்தகைய ஜாதகருக்கு எந்த மாதிரி வாழ்க்கைத் துணைவி சரியாக இருப்பாள்? உங்கள் மேலான ஆலோசனையை நாடி…
ப்ரியங்களுடன்…
வெங்கட்மரணன்
சென்னை
* * *
அன்பின் வெங்கட்மரணன்,
மிக்க மகிழ்ச்சி. என் வாழ்த்துக்களை உங்களுக்கு இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன். பிறகு முடியாது.
முதலில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சில கட்டுக்கதைகளை உடைக்க விரும்புகிறேன். நமக்குப் பிடித்த பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்துகொள்வது, காதலித்துத் திருமணம் செய்துகொள்வது எல்லாம் முதல் மூன்று மாதங்களுக்குத்தான் நிற்கும். அதற்குப் பின்பு வாழ்க்கை தொடங்கியதும் தேர்வுகள், பொருத்தங்கள், ஏன், பொருளாதாரப் பொருத்தங்கள்கூட அர்த்தமற்றவை என்று தெரியத் தொடங்கிவிடும். எனவே கவனமாகத் தேர்ந்தெடுப்பதெல்லாம் வீண் வேலை. இதை மனதில் கொண்டு வேலையை ஆரம்பியுங்கள்.
வாழ்க்கையிலேயே முக்கியமான முடிவு, முன்னதற்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பதுதான். மேற்கத்திய கலாச்சாரம் தனிநபர் சார்ந்து இயங்குவது. ஒரு மனிதன் சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக வாழ்நாள் முழுதும் அவலமானதொரு மணவாழ்க்கையில் படிப்படியாக இற்றுப்போகும் கூத்து அங்கே நடப்பதில்லை. அபாயத்தின் முதல் அறிகுறிகளிலேயே சுதாரித்து விவாகரத்துச் செய்துவிடும் சமூகம் அவர்களுடையது. நம்முடையது மணவாழ்க்கைமையச் சமூகம்.
காதல் திருமணத்தில் 'ரொமான்ஸ்' அம்சம் திருமணத்திற்கு முன்பே கிடைத்துவிடுகிறது. அதனால்தான் அதற்கு மரியாதை. அதன் பின்பு மணவாழ்க்கை நாசமாகப் போனால்கூட அது நாமே வித்திட்ட தவறு என்கிற பெருமையாவது மிஞ்சும்.
பெரியோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அப்படியல்ல. திருமணம் என்ற நிரந்தர ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட பின்புதான் அந்தத் திருமணம் நடந்திருக்க வேண்டுமா கூடாதா என்பதே நமக்குத் தெரியும். ஒரு பெண்ணுடன் காலம் தள்ளுவது சாத்தியமா இல்லையா என்பது அவளிடமிருந்து பிரியவே முடியாத நிலைக்கு நம்மை ஆளாக்கிக்கொண்ட பின்பே நாம் தெரிந்துகொள்வோம். பல காதல் திருமணங்களில் இது திருமணத்திற்கு முன்பே தெரிந்துவிடும். இதுதான் இந்த இருவகை திருமணங்களுக்கு இடையிலான வித்தியாசம்.
பிறப்பதை "Thrown into existence" என்பார் பிரெஞ்சு எழுத்தாளர் சார்த்தர். அதாவது நம் விருப்பத்தையும் அறிதலையும் மீறி இருத்தலுக்குள் எறியப்படுகிறோமாம். அதைவிடத் திருமணம்தான் அப்படி, இல்லையா? போனால் திரும்பி வர முடியாத ஒருவழி ஒற்றையடிப் பாதை அது. ஆனால் அதற்காக நீங்கள் கவலையோ வருத்தமோ பட வேண்டியதில்லை. அவையெல்லாம் பிரயோசனப்படாது. 'பெண் விடுதலை வேண்டும்!' என்று கதறும் பல ஆண்களை எனக்குத் தெரியும்.
அடிப்படையில் மணவாழ்க்கை என்பது விவாகரத்தைத் தவிர்ப்பதற்கான ஓர் ஆயுட்காலச் சடங்குதானே அன்றி வேறில்லை. முதலில் உடலுறவும் சில்லறைச் சந்தோசங்களும் பின்பு குழந்தைகளும் கொஞ்சம் சுமையைக் குறைப்பது போல் தெரியலாம். ஆனால் தப்பிப்பதற்கு உள்ள கொஞ்சநஞ்ச வாய்ப்புகளையும் பறித்துக்கொள்வதே அவற்றின் முதன்மை நோக்கம். மலை வாசஸ்தலத் தற்கொலை முனைகள் அழகாக இருப்பதில்லையா, அது போல.
மலைகளையும் நதிகளையும் போல் நிரந்தரமானது மணவாழ்க்கை. இதை நீங்கள் உணர்ந்தால் வெட்டிக் கனவுகளையும் வீண் எதிர்பார்ப்புகளையும் தவிர்க்கலாம். சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு உதவுவதாகக் கேள்விப்படுகிறேன். சிலருக்குப் புத்தகங்கள், சிலர் கதை எழுதுகிறார்கள், சிலருக்கு ஷாப்பிங் மால்கள். லௌகீக மைல்கற்கள் இதயநோய்க்குத் தாயத்து போல் கொஞ்சம் உதவலாம்.
இப்போது 'சில்வர் லைனிங்'கிற்கு வருவோம். மக்களுக்குக் காதல் திருமணங்களிடம் ஏற்படும் அப்பாவி வயிற்றெரிச்சல் உங்கள் திருமணத்தில் ஏற்படாது. சில காதலர்கள் காதலிக்காக வரதட்சணையைத் தியாகம் செய்கிறார்கள். உங்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது. உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக யதார்த்தம் வலது காலை எடுத்து வைத்து நுழையும் வரை எல்லாம் சுகமாகவே இருக்கும். அதற்குப் பிறகுதான் இருக்கிறது இல்லறம்.
இன்னொரு விதியை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்; இது வாழ்க்கையில் பெரும்பாலான விசயங்களுக்குப் பொருந்தும்: எப்போதுமே உங்களைவிட அதிகமாகக் கஷ்டப்படும் தம்பதிகள் இருப்பார்கள். காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு இணையாக இவர்கள் சண்டை போடக்கூடியவர்கள். இவர்களோடு உங்களை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். சொல்ல முடியாது, இம்மாதிரி ஒப்பீடுகள் உங்கள் மணவாழ்க்கையைத் தேநிலவாகத் தெரியச் செய்யலாம். எக்காரணத்தைக் கொண்டும் பரஸ்பர அழிவுக்குத் திட்டமிடாதீர்கள். பிறகு எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள். அது அது அதனதன் போக்கில் நடக்கட்டும். நீங்களாக எதையும் செய்யாதீர்கள்.
நீங்கள் திருமணத்தில் நம்பிக்கை இழப்பதற்காக நான் இதையெல்லாம் சொல்லவில்லை. எதற்கும் துணிந்த ஆண்கள்தான் திருமணம் செய்துகொள்ளத் தகுதியுள்ளவர்கள். திருமணம் பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கல்ல. குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட்டது வேறு எதனால்?
நீங்கள் அன்றாடம் பார்க்கும் தம்பதிகளைக் கவனியுங்கள். துரோகத்தின் கரிய நிழலில் இளைப்பாறுவது போலவா தெரிகிறார்கள்? பிறவி தம்பதிகள் போல் அல்லவா தெரிகிறார்கள்? அதற்காக அவர்களிடையே நல்லிணக்கமோ பேச்சுவார்த்தையோ இருப்பதாகப் பொருளல்ல. அது ஓர் உத்தி. இந்த உத்தியும் ஆயிரங்காலத்துப் பயிர்தான். இதைக் கற்றுக்கொள்ளுங்கள். சமூகத்தை, குறிப்பாக உங்கள் வீட்டுக் குழந்தைகளை, நம்பவைக்க அது பயன்படும். நம்பிக்கைதானே வாழ்க்கை?
கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
அன்புடன்
பேயோன்
புத்தகக் காட்சிக்கு எனது "டாப் 10″
"இதோ வந்துவிட்டது 2014 சென்னை புத்தகக் காட்சி!" என்று இளமை கணக்காய் துள்ளுகின்றன பதிப்பகங்களும் கிரெடிட் கார்டு நிறுவனங்களும். இந்தப் புத்தகக் காட்சியில் என்னென்ன வாங்கலாம்? விளம்பரத்தால், நண்பர்களின் தூண்டுதலால் வாங்கும் தவிர்க்கப்பட வேண்டிய நூல்கள் போக நாம் வாங்கி அடுக்கிவைப்பதற்குச் சில நூல்களைப் பரிந்துரைக்கிறேன். இதுதான் என்னுடைய "டாப் 10″.
1. அல் கய்தா: கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்
அடால்ஃப் சாவர்க்கர், அல் அத்வானி பதிப்பகம், விலை ரூ. 108
இந்தச் சர்ச்சைக்குரிய சமூக இயக்கம் ஆயிரமாயிரம் பேருக்கு வைகுண்ட/சிவலோக/சொர்க்கப் பிராப்தி கிடைக்கப் பாடுபட்டுவருகிறது. இன்றும் அல் உம்மா, இந்தியன் முஜாகிதீன், சிமி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சில வாசகர் அமைப்புகள் ஆகியவற்றுக்கு "இன்ஸ்பிரேசனாக" உள்ளது. ஆயினும் இது சந்தித்து வரும் சவால்களுக்குப் பஞ்சமில்லை. அல் கய்தாவின் சாதனைகள் யாவை, அதன் 'உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி' கருத்தாக்கமும் இந்து மக்கள் கட்சியின் 'இந்து தேசம்' கருத்தாக்கமும் இணையும் புள்ளிகள், இயக்கம் மேலும் சிறந்தியங்க என்ன மாற்றங்கள் தேவை என்பவை உள்ளிட்ட விசயங்களை இந்நூல் விவாதிக்கிறது. பிற வகை அடிப்படைவாதிகளுக்கும் சாவர்க்கரின் இந்தப் புத்தகம் உதவும் என்றே தோன்றுகிறது.
2. ஹிட்லரின் ஜெர்மனி: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
கபல்ஸ்தாசன், அடல் கய்தா பதிப்பகம், ரூ. 151
உலக வரலாற்றில் கேஷவ் பலிராம் ஹிட்லர் அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் எதிர்ப்பு இருந்ததில்லை. இருந்தாலும் ஹிட்லரின் அடிப்பொடிகளிடையே அவருக்கு பலத்த ஆதரவு இருந்தது. காரணம்? அவர் நேசித்த ஆரிய இனம் தழைத்தோங்கிய இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது ஜெர்மனி ஒரு முன்மாதிரியாக இருந்தது ('திகழ்ந்தது'). குஜராத் மாநிலம் பிற இந்திய மாநிலங்களைவிடப் பெரிதாக எதையும் பிடுங்கிவிடவில்லை என்பது உண்மையே. எனினும் அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏராளமான நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் பிடுங்காத மயிர்களே அதிகம். இதனாலேயே குஜராத் இந்தியாவுக்கு சிறந்த முன்மாதிரி ஆகிறது. ரிக் வேதம், உபநிஷதம், கந்த சஷ்டி கவசம், தெனாலிராமன் கதைகள், 30 நாட்களில் சமஸ்கிருத பாஷை போன்ற நூல்களிலிருந்து ஆதாரபூர்வமான தகவல்களுடன் எழுதியிருக்கிறார் கபல்ஸ்தாசன்.
3. அந்த அதுவும் இந்த இதுவும்: அபுனைவு நூற்தலைப்புகளும் உம்மைத் தொகைப் பயன்பாடும்
முனைவர் இரா. மாணிக்கம், புதுமை பதிப்பகம், ரூ. 370
ஓர் ஆக்கத்திற்குத் தலைப்பு வைப்பது எளிதல்ல. புனைவுகளுக்குத் தலைப்பு வைக்கப் படைப்பூக்க உழைப்பு தேவை. ஆனால் அபுனைவுப் படைப்புகளுக்கு அப்படியல்ல. அபுனைவு எழுத்தாளர்கள் தமது படைப்புகளுக்குப் பெயர் சூட்டக் காலங்காலமாய் உதவிவரும் ஓர் உத்தி உம்மைத் தொகையாகும். லியோ டார்ட்டாய்ஸ் எழுதிய 'சண்டையும் சமாதானமும்' முதல் எனது 'ராமுவும் சோமுவும்' வரை புனைவு ஆக்கங்களிலும் இவ்வுத்தி பயன்பட்டுள்ளது. உம்மைத் தொகைப் பயன்பாட்டின் பரிணாம வளர்ச்சி, பிற மொழிகளில் உம்மைத் தொகைப் பயன்பாடு, உம்மைத் தொகைப் பயன்பாடும் தமிழ்ப் பதிப்புத் துறையின் நாலுகால் பாய்ச்சலும், "உம்மையும் தொகையும்", உம்மைத் தொகைப் பயன்பாட்டின் முன் உள்ள சவால்கள் ஆகிய அத்தியாயங்கள் குறிப்பிடத்தக்கவை.
4. நிகழ்வுகள் 2013
தமிழ் மனோரமா பதிப்பகம், ரூ. 100
2013ஆம் ஆண்டு நிகழ்வுகளின் முழுப் பட்டியல். 'நான்காம் பிறை 3D' திரைப்படம் வெளிவந்தது முதல் ஐ.பி.எல். 6இல் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது வரை, அக்டோபரில் நடந்த இந்தியன் கிராண்ட் ப்ரிக்ஸ் முதல் சுவாமி விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழா வரை, கும்ப மேளா முதல் ஜெயேந்திர சரஸ்வதி தீபாவளி ஆசிகள் வரை, அரவிந்த் காஜலகர்வால் தில்லி முதல்வர் ஆனது முதல் பா.ஜ.க.வின் லாண்டரி செலவுகள் அதிகரித்தது வரை, கிண்டி மொபைல் போன் கடையில் துணிகரத் திருட்டு முதல் ராகுல் காந்தி காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டது வரை, 2,013 முக்கிய நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடியது.
5. ஊருணிப் பூச்சி
அமர்ப்ரீத் காத்தமுத்து, பொன்வேய் பப்ளிஷர்ஸ், ரூ. 80
இந்த ஆண்டின் ஆகச்சிறந்த கவிதைத் தொகுப்பு என்று இதைக் கூறலாம். அவசர யுகத்தின் வாழ்வியலில் உறவுகளின் சமூக அரசியல் தனிநபர் தேர்வுகளில் குறுக்கிடுவதைச் சொற்களின் எல்லைகளை மென்மையாக, ஆனால் நுட்பமாக மீறும் மொழியில் பேசும் கவிதைகள். தமிழ்க் கவிதைவெளிக்கு ஒரு நல்வரவு இந்த அமர்ப்ரீத் காத்தமுத்து.
6. வெறும் பூச்சி
ரோஷன் கருணகிழங்கே, ஐம்பொன் பப்ளிஷர்ஸ், ரூ. 80
இந்த ஆண்டின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்பிது. உலகமயமாக்க வாழ்நிலைச் சூழல்களில் உறவுகளின் மாறுநிலைகள் தனிநபர் ஊடாட்டங்களில் நீர்மிப்பது பற்றி வார்த்தைகளின் வரம்புகளைக் கறாராக மீறும் மொழியில் பேசுகின்றன இக்கவிதைகள். தமிழ்க் கவிதைவெளிக்கு ஆகச்சிறந்த வரவு ரோஷன் கருணகிழங்கே.
7. அஜக்தா, அலேக்தா!
முகேஷ் மாதவன், காவியம் புக்ஸ், ரூ. 1,100
சந்தைப்படுத்தலின் அடுத்த கட்டத்திற்குத் தாய்த் தமிழைக் கரம்பிடித்து அழைத்துச் சென்று விற்பனையிலும் முதல் வாரத்திலேயே வசூலைக் குவித்த இந்த சூப்பர்ஹிட் சிறுகதைத் தொகுப்பு, தமிழ்ப் பதிப்புலகம் இருபத்தோராம் நூற்றாண்டினுள் ஆணித்தரமாக அடியெடுத்துவைத்திருப்பதை விமரிசையாக அறிவிக்கிறது.
8. குறிப்பிடத்தக்க சமூகத் தீமைகள்
ஃபில்லிப் கால்லின்ஸ், தமிழில்: சு. வைத்தியநாதன், சுவை வெளியீடு, ரூ. 120
இன்றைய யுகத்தில் மட்டுமல்ல, என்றைய யுகத்திலும் சமூகத் தீமைகள் தவிர்க்க இயலாதவை. இவற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதென்பது மாளாத செந்நெல். இந்நிலையில் சமூகத் தீமைகளை நடைமுறைக்குகந்த பாணியில் எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் நூலாசிரியர். அதாவது ஃபில்லிப் கால்லின்ஸ். எடுத்துக்காட்டாக, ஒரு சமூகத் தீமையை ஒழிப்பதற்கு, அப்போதைக்கு அதைவிடச் சிறியதான இன்னொரு சமூகத் தீமையை ஆதரிக்க நமது தேர்தல் ஜனநாயகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. நமக்கான சமூகத் தீமைகளைத் தேர்ந்தெடுப்பதோடு புதிய சமூகத் தீமைகளை உருவாக்குவதன் அவசியத்தையும் ஆசிரியர் அழகாகத் தர்க்கித்து எழுதியிருக்கிறார். ஆல்வின் டாஃப்ளர் எழுதிய Future Shockஇனை அடுத்து முக்கியமான அபுனைவுப் புத்தகம் என்பேன்/என்கிறேன்.
9. Crime and Punishment
ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, பெங்குவின், ரூ. 235
தலைசிறந்த சிந்தனையாளர்களான வால்டர் பெஞ்சமின், மிகையில் பக்தின் போன்றோரால் மேதை எனப் போற்றப்பட்டு தமிழ் இணைய உலகில் "எலக்ஸ்" என்று அறியப்படும் தாஸ்தாயெவ்ஸ்கியின் மறக்கவியலாத நாவல். இன்று இலக்கிய திரில்லர் என்ற அடைமொழியுடன் பல நாவல்கள் வருவதைப் பார்க்கிறோம். குற்றமும் தண்டனையுமை மிஞ்சிய இலக்கிய திரில்லரை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை (எனது 'ஒரு லோட்டா இரத்த'த்தைத் தவிர). இந்நாவலை ஓர் உளவியல் மர்மக் கதையாகப் படிக்கலாம். வட்டிக்கடை ஆயாவைக் கொல்ல விரிவாகத் திட்டமிடும் இளம் வெட்டி ஆபீசரான ரஸ்லோநிகோவ் (ரஸ்கோல்நிகாவ்) அவளைக் கொன்றானா? அவளையும் அவள் தங்கையையும் அவன் கொன்ற பின்பு போலீஸ் எப்படித் திணறுகிறது? ரஸ்லோநிகோவ் போலீசுக்குத் தன் மீது சந்தேகம் வருமாறு நடந்துகொள்கிறானா? கொலைக் கருவிகளை ஒளித்துவைத்த இடம் குறித்து வலியச் சென்று போலீசுக்குத் தெரியப்படுத்துகிறானா? கடைசியில் எப்படி அவனே போலீசிடம் சரணடைந்து சிறை செல்கிறான்? படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
10. தேர்ந்தெடுத்த படைப்புகள்
பேயோன், ஆழி பதிப்பகம், விலை பின்னர் அறிவிக்கப்படும்
உலகின் முன்னணி தமிழ் எழுத்தாளரான என்னுடைய கடந்தகாலப் படைப்புகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டால் யோசிக்கலாம் என்று நோபல் பரிசுக் குழு கூறியிருந்தது. அதையொட்டி எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற பெருங்குழப்பத்தினூடே சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள், துண்டிலக்கியங்கள் என ஆயிரக்கணக்கான படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை இந்த நூலாகியிருக்கின்றன. சகட்டுமேனிக்குப் பக்கங்கள். தேர்ந்தெடுத்த படைப்புகளில் நாவல்களே கிடையாதா என ஆதங்கித்துக் கைவிரிப்பவர்களுக்கு ஒரு தகவல்: எனது நூற்றி சொச்ச நாவல்களில் பத்தையாவது சேர்க்கும்படி பதிப்பாளரிடம் உரிமையோடு கேட்டது நிஜம். ஆனால் அவரும் மனிதர்தானே, மறுத்துவிட்டார். இத்தொகுப்பிலுள்ள அனைத்துப் படைப்புகளும் இன்னும் பல மணிநேரங்களுக்குப் பேசப்படும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
பத்தோடு பதினொன்றாக எனது இன்னொரு புதிய நூலான 'பிரிட்டிஷ் ஏஜெண்ட்'டையும் குறிப்பிட வேண்டும். எனது கடைசியாக அச்சேறிய 'ஒரு லோட்டா இரத்த'த்திற்குப் பிறகு எழுதப்பட்ட படைப்புகளின் தொகுப்பு இது. இதிலுள்ள பல படைப்புகள் தற்போது என் வலைத்தளத்தில் இல்லை என்பதால் பலவும் எக்ஸ்குளூசிவ் ரகம்.
குழாயைச் சரியாக மூடுவதில்லை
கணேசுவின் சித்தியும் சித்தப்பாவும் ஊரிலிருந்து அவன் வீட்டிற்கு வந்திறங்கியிருந்தார்கள். பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தவர்கள் வந்தேவிடுவார்கள் என கணேசு எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரம் தங்கி சென்னை கோவில்களுக்கும் கடற்கரைக்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். கணேசுவின் மகள்கள் சித்ராவுக்கும் அமுதாவுக்கும் பட்டுப் பாவாடை வாங்கி வந்திருந்தார்கள். சாப்பிட்டுவிட்டு சமையலைப் புகழ்ந்தார்கள். வாஞ்சையாக இருந்தார்கள்.
முதல் மூன்று நாட்கள் விருந்தாளிகளால் களை கட்டின. ஊர்க் கதை, உறவுக் கதை பேசியதில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்கள் நிறைவாகக் கழிந்தன. பெரியவர்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தங்கள் பிள்ளைகளின் அருமை பெருமைகளையே அதிகம் பேசினார்கள். கிடைத்த இடைவெளிகளில் காயத்ரி தன் மகள்களைப் பற்றிப் பாமாலை பாடினாள்.
நான்காம் நாள் காயத்ரி ஒன்றைக் கவனித்தாள். பாத்ரூம் (குளியலறை) குழாயை யாரோ மூடாமல் விட்டிருந்தார்கள். தண்ணீர்த் துப்பாக்கியிலிருந்து வருமளவு கொஞ்சமாக ஆனாலும் தண்ணீர் டைல்ஸ் தரையில் கொட்டிக்கொண்டிருந்தது. கணேசு இறுக்க மூடுவான். சித்ராவும் பாரதியும் இதில் அப்பாவை உரித்துவைத்திருந்தார்கள். சித்தி எதையும் பார்த்துப் பார்த்துச் செய்பவராகத் தெரிந்தார். ஆகையால் சித்தப்பாதான் சரியாக மூடாமல் போயிருக்க வேண்டும் என்று காயத்ரி கணக்கிட்டாள். இது இன்னும் சில முறை நடந்தது. பேத்திகளுக்குப் பட்டுப் பாவாடை வாங்கிக் கொடுத்ததற்காகக் குழாயை மூடாமல் விட்டுவிட முடியுமா?
"உங்கள் சித்தப்பா பாத்ரூம் குழாயைச் சரியாக மூடுவதேயில்லை. நீங்கள் அவரிடம் சொல்கிறீர்களா?" என்று கணேசுவுக்குக் காயத்ரி அன்புக் கட்டளையிட்டாள். கணேசுவுக்குத் தர்மசங்கடமாகிப்போனது. சித்தப்பாவுடன் கணேசுவிற்கு அவ்வளவு பழக்கம் இல்லை. சுட்டிக்காட்டினால் குத்திக்காட்டுவதாக அவர் எடுத்துக்கொள்ளக்கூடும். "நீதான் வாழைப்பழத்தில் ஊசி கோர்ப்பது போல் பேசுவாயே, அது போல் நீயே சொல்லிவிடேன்" என்றான் கணேசு. 'இதைக்கூடவா செய்யத் துப்பில்லை?' என்பது போல் அவனை முறைத்துவிட்டு விலகினாள் காயத்ரி.
அன்றிரவு சாப்பிட்ட பின் எல்லோரும் மொட்டை மாடிக்குப் போய் உட்கார்ந்தார்கள். அப்போது காயத்ரி தண்ணீர்ப் பிரச்சினை பற்றிப் பேச்சைத் தொடங்கினாள். "இப்போதெல்லாம் நிலத்தடி நீர் முன்பு போல் பம்ப்பில் ஏறி வருவதில்லை. தண்ணீரைத் தண்ணீர் போல் செலவழிக்க முடிவதில்லை. அதனால்தான் நாங்கள் குழாய்களை இறுக்க மூடிவிடுகிறோம். இல்லையென்றால் தண்ணீர் வீணாகிறது. மீண்டும் மோட்டாரை இயக்க வேண்டியிருக்கிறது. இந்தக் குழந்தைகளுக்குத்தான் பொறுப்பே இல்லை. பாத்ரூம் குழாயைச் சரியாக மூடாமல் விட்டுச் சென்றுவிடுகின்றன" என்றாள் காயத்ரி. "ஆமாமாம்" என கணேசு பலமாகத் தலையாட்டினான்.
"டைல்ஸில் தண்ணீர் கொட்டினால் அது காயாது. அதனால் பாத்ரூம் எப்போதும் ஈரமாகவே இருக்கும்" என்று தானே கண்டுபிடித்தது போல் சொன்னார் சித்தப்பா. "எங்கள் வீட்டிலெல்லாம் பாத்ரூமுக்கும் சிமென்ட் தரைதான். தண்ணீர் சீக்கிரம் காய்ந்துவிடும். தரை சொரசொரப்பாக இருப்பதால் வழுக்காது" என்றார் அவர். "இவர் என்னவோ சொல்கிறார். ஆனால் டைல்ஸ் போட்டால்தான் வீடு லட்சணமாக இருக்கும்" என்றார் சித்தி. காயத்ரி கணேசுவைப் பார்த்தாள். பிறகு பேச்சு ரியல் எஸ்டேட், வேலைவாய்ப்பு, நவீன வசதிகள் என்று மாறிவிட்டது.
ஐந்தாம் நாள் காலை ஐந்து மணிக்கு காயத்ரி தோளில் ஆடைகள், துவாலையுடன் குளிக்கக் கிளம்பினாள். பாத்ரூம் விளக்கைப் போட்டதும் குழாயிலிருந்து நீர் கொட்டிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டாள். எழுந்தவுடன் முதல் வேலையாகக் குளித்துவிட்டு அதற்குப் பின்பே பல் தேய்க்கும் வழக்கமுள்ள கணேசு, வாஷ் பேசினில் பல் தேய்த்துக்கொண்டிருந்தான். "அந்தக் குழாயை சரியாக மூடாதது உங்கள் வேலைதானா?" என்று பொரிந்தாள் காயத்ரி. அவன் பல் தேய்த்து முடிக்கும் வரை பதிலுக்குக் காத்திருந்தாள். கணேசு வழக்கத்தைவிட அதிக நிதானத்தோடு எல்லாவற்றையும் செய்துவிட்டு, "காலையிலேயே ஆரம்பிக்காதே" என்று சொல்லி நகர்ந்தான். சித்தி, சித்தப்பா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். காயத்ரிக்கு அவர்களைப் பார்க்கப் பாதி ஏமாற்றமும் பாதி அனுதாபமுமாக இருந்தது. இன்னும் இரண்டு நாள் என்று சொல்லிக்கொண்டாள்.
(டிசம்பர் 2012இல் ஆனந்த விகடன் 'பேயோன் பக்க'த்தில் வெளியானது)
இப்படித்தான் ஒருமுறை…
நள்ளிரவு அல்லது அதிகாலை ஒரு மணி இருக்கும். ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். விழா பத்தேகாலுக்கே பிசுபிசுத்துப் பதினோரு மணி சுமாருக்கு அடங்கியது. எழுத்துலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் காலம் கடந்தது தெரியவில்லை. கிளம்பும்போது மணி பன்னிரண்டு ஐம்பது இருக்கும். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த ஆட்டோவில் அநியாயக் கட்டணத்திற்கு ஏற, துரதிர்ஷ்டவசமாகப் பாதி வழியில் ஆட்டோ நின்றுவிட்டது. ஆட்டோ ஓட்டுநர் நான்கைந்து ஆட்டோக்களைக் கைகாட்டி நிறுத்த முயன்றார். ஒருவர்கூட நிறுத்தவில்லை. சரி, நடந்தே போய்க்கொள்கிறேன் என்று பாதிக் காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். பிறகு அவர் ஒரு ஆட்டோவைக் கைகாட்டி ஏறிச் சென்றுவிட்டது தனிக் கதை.
நடந்தே போய்க்கொள்கிறேன் என்றால் முக்கால் மணிநேர நடை. நள்ளிரவில் தனியாக நடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். நாய்களும் சமூக விரோத விடலைகளும் தங்களை சக்திவாய்ந்தவர்களாக உணரும் நேரமது. அந்த நேரத்தில் நாமெல்லாம் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். எப்போது ஒரு மனிதன் நள்ளிரவில் ஒரு பொதுத் தெருவில் கடந்த சில நொடிகளுக்கு முன்பு பார்த்த நாயின் மூச்சிரைப்பைக் கற்பனை செய்துகொண்டு மயிர்க்கூச்செறிந்து விழியோரத்தால் லேசாகத் திரும்பிப் பார்க்காமல் நடக்க முடிகிறதோ அப்போதுதான் அந்த மனிதன் நள்ளிரவில் நிம்மதியாக நடமாட முடியும் என்று கருதுகிறேன்.
சிறிது தூரம் நடந்த பின் மஞ்சள் தெருவிளக்கொளியில் ஆளில்லாத தெருக்களின் தனிமை என் மீது கவியவில்லை – வயிற்றைக் கலக்கத் தொடங்கியது. சாட்சிகளின்றி எப்போது வேண்டுமானாலும் யாருடைய தாக்குதலுக்கும் ஆளாகக்கூடிய நிர்வாண நிலை. வியர்க்க விறுவிறுக்கக் கந்தசஷ்டிக் கவசம் சொல்லத் தொடங்கினேன். அதற்குள் தொப்பலாக நனைந்திருந்தேன் வேறு. கவசம் பாதியில் மறந்து பன்னிரு விழிகளிலேவிற்குத் தாவினேன். அது முடிந்து புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேவிற்குச் சென்று அதற்குப் பின்பு வேறு எதுவும் தெரியாமல் ஜனகணமனவுக்கு மாறி அதுவும் தீர்ந்துபோய் பராசக்தி வசனங்களுக்கு வந்தபோது தெய்வாதீனமாக என் தெருவில் நுழைந்திருந்தேன்.
சொந்தத் தெரு தந்த தைரியத்தில் மூச்சு சீராகி மிதப்பாய் மெல்லக் கால்வீசி நடந்தேன். விசாலமான தெரு அது. எனது பகுதி நாய்களுக்கு என்னைப் பழக்கம். ஐம்பது அடி நடந்தால் என் வீடு என்கிற நிலையில் எனக்கு நேர்ப் பக்கவாட்டில் இருந்த ஒரு வீட்டிலிருந்து ஓர் அலறல். பெண் குரல். வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, எனக்கு ரத்தம் உறைந்தது. திருடனா? கணவனா? எலியா? கெட்ட கனவா?
அடுத்து ஓசை எதுவும் இல்லாததால் மெல்ல விலகி நடக்கத் தொடங்க, அதே வீட்டிலிருந்து டமார் என்று பெரிதாக ஒரு சத்தம். அது ஒரு "சிங்கிள் ஹவுஸ்" வீடு. ஓசையின்றி வீட்டருகே சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். கும்மிருட்டு. உள்பக்கத்திலிருந்து கண்ணாடிப் பொருட்கள், மரச் சாமான்கள் உடையும் சத்தம். வியர்வை, வாய் வறண்டுபோதல், மூச்சிரைப்பு, பூமி மீதான கால்களின் பிடிமானம் நழுவுதல் ஆகிய எல்லாம் ஒரே சமயத்தில் நிகழ, செல்பேசியை எடுத்து 100ஐச் சுழற்றினேன். உடனே இணைப்பு கிடைத்தது. ஆனால் சத்தமாக அல்லவா பேசித் தொலைக்க வேண்டும். உடனே இணைப்பைத் துண்டித்துவிட்டுக் கதவருகே சென்றேன்.
வருவது வரட்டும் என்று இருண்ட வீடு பாரதிதாசன் கணக்காய்க் கதவை ஓங்கித் தட்டினேன். சில நிரந்தர நொடிகளுக்குப் பின்பு உள்ளே விளக்கெரிந்தது. கதவு திறந்து சட்டையில்லாமல் லுங்கியுடன் ஒருவர் வெளியே வந்தார். முகத்தில் காடுள்ள மிருகம் என்று வர்ணிக்கத்தக்க மீசை-தாடிக்காரர்.
"யாரு?" என்றார் தூக்கம் கலைந்த எரிச்சலில் முரட்டுத்தனமாக. அந்த அலறலில் அவர் மட்டும் எழுந்தது ஆச்சரியம்.
நான் அவரது தோற்றத்தை உள்வாங்கி ஒரு மனப்பதிவை ஏற்படுத்திக்கொண்டு வாயைத் திறப்பதற்குள் அவருடைய மனைவி ஸ்தானத்தில் ஒரு பெண்மணி பின்னே வந்து "யாருங்க?" என்றார். இவர் சற்று முன்புதான் அலறி முடித்தவர் போல் தெரியவில்லை. எதுவும் பிரச்சினை இல்லை என்று பட்டது.
"அதான் இவரும் கேட்டாரு" என்றேன் அந்தப் பெண்ணிடம் புன்னகையுடன். கையில் தொலைக்காட்சி ரிமோட்டுடன் ஒரு பதின்ம வயதுப் பையன் வந்து சேர்ந்துகொண்டான்.
"உங்களுக்கு யார் வேணும்? எங்கேந்து வரீங்க?" மீசைதாடிக்காரர் அழுத்தமாகக் கேட்டார்.
"இல்ல சார், உங்க வீட்ல யாரோ அலர்ற மாதிரி சத்தம் கேட்டுது. அதான் என்ன ஏதுன்னு பாக்க வந்தேன்."
"இங்க யாரும் அலறல. இதக் கேக்கத்தான் சட்டை பேன்ட்டுல்லாம் மாட்டிக்கிட்டு வந்தீங்களா?"
"இல்லல்ல சார், இது ஃபங்ஷனுக்காக மாட்னது. இப்ப கழட்டிருவேன்."
மீசைதாடிக்காரர் திடீரென்று பொங்கினார். "அலோ! கெளம்புங்க. இங்க நிக்காதீங்க!"
"போலீசக் கூப்புடவா செவுள்ள விடவான்னு கேளுங்க." நைட்டியில் இருந்த மனைவி சன்னக் குரலில் ஆலோசனை அளித்தார். இதென்ன புதுப் பிரச்சினை என்று நான் மீசைதாடிக்காரர் முகத்தைத் திகைப்புடன் பார்க்க,
"நீ சும்மாரு நான் பாத்துக்குறேன்" என்றார் மீசைதாடி. பிறகு என்னிடம் அமைதியாக, "கெளம்புங்க" என்றார். அமைதியான ஆட்கள் எப்போது வேண்டுமானாலும் வன்முறையில் இறங்கக்கூடும் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.
"சார், நானும் இந்தத் தெருதான் சார்! தெனமும் இந்தப் பக்கமாத்தான் வாக்கிங் வருவேன்" என்றேன்.
"அப்டியா? நான் உங்களப் பாத்ததே இல்லியே?"
"லேட்டா எழுந்துக்குவீங்களா?"
"வீட்டு நம்பர் சொல்லுங்க?"
"நூத்தி எண்பது."
"இந்தத் தெருவா?"
"இந்தத் தெருதான்னு சொன்னனே. நான் வரேங்க. அதான் ஒண்ணும் இல்லன்னு ஆயிடுச்சே. போய் நிம்மதியாத் தூங்குங்க" என்று தூக்க ஆசை காட்டி நகரத் தொடங்கினேன்.
"யோவ், இருய்யா" என்று அதட்டிய மீசைதாடிக்காரர் என் முதுகுக்குப் பின்னால் பார்த்தார். போலீஸ் ரோந்து ஜீப் வந்துகொண்டிருந்தது..
இந்த ஆள் தெருவில் இறங்கிக் கைகாட்டி ஜீப்பை நிறுத்தினார். முக்கால் மணிநேரத்திற்கு முன்பு இது போல் ஒரு ஆட்டோ நின்றிருக்கலாம்.
ஜீப்பிலிருந்து இறங்கிய எஸ்.ஐ. பாணி ஆளிடம் மீசைதாடிக்காரர் விண்டு வைத்தார்: "பாதி ராத்திரி வீட்டுக் கதவத் தட்டி ஒரே சத்தமா இருக்குன்றாரு."
திகைத்துக் கைகளை விரித்த என்னிடம், "இங்க வாங்க சார்" என்றார் போலீஸ்.
'சார்' என்ற மரியாதை எனக்கு நம்பிக்கையையும் சமத்துவ உணர்வையும் அளித்தது.
"ஹலோ சார்" என்றேன்.
"எங்கேந்து வரீங்க?"
"ஆழ்வார்ப்பேட்டைலேந்து."
"மணி என்ன தெரியுமா?"
"ரெண்டு இருக்கும்" என்றேன் தயங்கி.
"வாட்ச் கட்டிருக்கீங்கல்ல, பாத்துச் சொல்லுங்க."
பார்த்தேன். 1.55.
"தெரியுதுல்ல? இந்த டைம்ல இங்க என்ன பண்றீங்க?"
"ஒரு மீட்டிங் முடிஞ்சி வந்திட்டிருந்தேன். இவுங்க வீட்லேந்து லேடீஸ் அலர்ற மாதிரி சத்தம் கேட்டுது. ஏதாவது பிரச்சினையான்னு பாக்கக் கதவத் தட்டுனேன், அவ்வளவுதான்."
"அந்தாளு ஜன்னல் வழியா எட்டிப் பாத்துக்கினுருந்தாரு." பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. வயிற்றில் புதிதாகப் புளி கரையத் திரும்பிப் பார்த்தால் எதிர்வீட்டு முதல் மாடி இருட்டு.
"எட்டிப் பாத்தியாய்யா?" என்று இறங்கினார் போலீஸ்.
"சார், இது தப்பான திசைல போயிட்டிருக்கு" என்று பதறினேன்.
"நீ தப்பான திசைல வந்துட்டு என்னய்யா பேசுற?" என்றார் மீசைதாடிக்காரர்.
"ஒரு மணிக்கு என்னய்யா மீட்டிங்கு? புளூ ஃபிலிம் பாத்துட்டு வரியா?"
"நான் ஒரு ரைட்டர். ஒரு புத்தக வெளியீட்டுக்குப் போயிட்டு வரேன். கவிதை வாசிப்பு, கலந்துரையாடல்…"
"நீ வாசிப்பியா?"
"நானும் வாசிச்சேன். வா-போ-ன்றத தவிர்த்துருவோமே."
"எங்க, வாசி?"
"வாசிக்கிறதுன்னா… வயலின் மாதிரி கிடையாது. இது படிக்கிறது."
"ஊது?"
எங்கே கவிதை வாசிக்கச் சொல்லிவிடுவாரோ என்று பயந்துகொண்டிருக்கையில் இந்த விநோத வேண்டுகோள் என்னைத் திக்குமுக்காட்டியது.
"இதெல்லாம் ரொம்ப ஓவர்" என்று ஊதினேன்.
"சரி, இங்க எதுக்கு வந்தே?" என்றார் ஊதலில் தோல்வியடைந்த எஸ்.ஐ.
"ஆழ்வார்ப்பேட்டைலேந்து உஸ்மான் ரோடு வரைக்கும் ஆட்டோல வந்தேன். அங்க ஆட்டோ பிரேக்டவுன் ஆகி அங்கேந்து இவ்ளோ தூரம் நடந்து வரேன். இதே தெருலதான் வீடு."
"என்னா நம்பர்?"
"ஒன் எய்ட்டி." ஆங்கிலத்தில் சொன்னது படித்த திமிராகத் தெரியுமோ என்று அஞ்சி உடனே "நூத்தி எண்பது" என்றேன்.
எஸ்.ஐ.காரர் என்னை முறைத்தார். "ஒன் எய்ட்டின்னா எங்குளுக்குப் புரியாதா? வா."
"நான் போய்க்கறேன் சார்."
"நீ ஒன் எய்ட்டியா ஃபோர் டொன்ட்டியான்னு எனக்கெப்புடித் தெரியும்? நான் கூட்டுப்போறேன் வா."
சம்பவத்தில் மூழ்கியிருந்ததில் சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்ததைக் கவனிக்கவில்லை. இப்போது கவனித்தேன். தினமும் பார்க்கும் விளங்காமூஞ்சிகள்தான். இவர்களைப் பற்றியெல்லாம் உருகி உருகி எழுதியிருக்கிறேன். பேத்தியைத் தவறான பள்ளியில் கொண்டு விட்ட தாத்தா, குழந்தைகளின் எதிர்காலத்திடம் தன் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்ட ஃப்யூச்சரிச இளம் தாய், ஏ.டி.எம். வாசலே முதியோர் இல்லமாகிப் போன காவல் கிழவர், இன்னும் மருத்துவர் ஆகும் கனவில் இருக்கும் மூதாட்டி என்று எல்லா உருப்படிகளும் என்னைத்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. ஒருவர்கூட என்னைக் கவனித்ததில்லை போல. தினமும் தொலைக்காட்சியில் வந்து பல்லிளித்துக்கொண்டிருந்தால் இந்த நிலை மாறுமோ என்னவோ.
நிகழ்ச்சி நிரலில் அடுத்த கட்டமாக எஸ்.ஐ. என் வீடுள்ள கட்டிடத்தில் எல்லோரையும் எழுப்பி என்னை வீட்டுக்கு அனுப்புவார் என்று ஊகித்தேன். இதை நிறுத்தியே ஆக வேண்டியிருந்தது.
"சார், ஒண்ணுமே பண்ணாம எதுக்கு சார் அவமானப்படுத்துறீங்க? இந்தத் தெருவுல நான் முழிக்க முடியுமா? வேணும்னா ஏதாவது அட்ஜஸ்ட் பண்றேன்" என்று பர்ஸை எடுத்தேன்.
"ஏய்!" என்று எஸ்.ஐ. மிரட்டியதும் கஞ்சா கேஸாய் உணர்ந்து குறுகிப்போனேன். ஜீப்பை வருமாறு சைகை செய்தார். இரவு லாக்கப் தேசம் என்று தோன்றியது.
"ஒரு ஃபோன் பண்ணிக்கவா சார்?" என்றேன். அது ஒன்று இருந்தது.
"ஒரு ஃபோன்" என்றார் நபர்.
மனைவிக்குத்தான் செய்து சொன்னேன்.
"அவர்ட்ட ஃபோனைக் குடுங்க" என்றார் மனைவி. செல்பேசியை அவரிடம் கொடுத்தேன்.
எஸ்.ஐ. அலட்சியமாக வாங்கியவர், "ம்… ம்… ம்… அதச் சொல்லலியே அடடே. நீங்க விடுங்க, அவரு வந்துருவாரு" என்று சொல்லிவிட்டு செல்பேசியை என்னிடம் திருப்பிக் கொடுத்தார்.
"இன்னொரு வாட்டி பணம் குடுக்க ட்ரை பண்ணாத, புரிதா?"
"மாட்டேன் சார்" என்றேன் புரிதலுடன்.
ஜீப் மெல்ல எங்களருகே மிதந்து வந்து நின்றது. எஸ்.ஐ. கதவைத் திறக்கப் போனார்.
"நான் போலாமா?" என்றேன் தயக்கமாக. என் கவலை எனக்கு.
"போங்க சார், அதான் சொல்லிட்டனே, போங்க" என்றார் எஸ்.ஐ.
நான் எதுவுமே நடக்காதது போல், மீண்ட மரியாதை அளித்த உவகையில் அவரிடம் சொல்லிக்கொண்டு விடை பெற்றேன். நெருங்கிய உறவினர் எஸ்.ஐ.யிடம் என்ன சொன்னாரோ தெரியாது. ஆனால் அதற்குப் பின்புதான் எனக்கு நியாயமாகச் சேர வேண்டிய மரியாதை கிடைத்தது. ஏதாவது வாக்குவாதம் நடக்கும்போது இச்சம்பவம் பேச்சோடு கலந்து வரும்.
எஞ்சிய பயணம் அசுவாரஸ்யமாய்க் கழிந்தது. என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். வெறுப்பால் விகாரமடைந்த முகத்தில் திறந்த நிலையில் இருந்த கண்களால் என்னைக் குதறிவிடுவது போல் பார்த்துக் கதவைத் திறந்தார் நெருங்கிய உறவினர். எந்த விளக்கமும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்று புரிந்ததால் பேசாமல் போய்ப் படுத்துக்கொண்டேன்.
ஜன்னல் வழியே முழு நிலவு மந்தகாசமாகத் தெரிந்தது. நான் பெரிய இயற்கை விஷயமாக மதித்து நிறைய விதந்தோதி எழுதிய நிலாவுக்குக் கீழேதான் அத்தனையும் நடந்தது என்பது சுரீரென்று உறைத்தபோதுதான் அவ்வளவு நேரமும் அடக்கிவைத்திருந்த கழிவிரக்கக் கண்ணீர் பனிக்குடம் போல் வெடித்துக் கிளம்பியது. உள் ரூமின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு விம்மத் தொடங்கினேன்.
"சூ!" என்றார் மனைவி.
மணவாழ்க்கை: மேலும் கடிதங்கள்
அன்புள்ள சார்,
வாழ்க்கைத் துணை தொடர்பான ஒரு கடிதத்துக்கு உங்கள் பதிலைப் பார்த்தேன். என் பிரச்சனைக்கு நீங்களே தீர்வு என்று தோன்றியது. பிரச்சனை இதுதான் சார் – நான் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் தப்பாகிறது. சாதாரணப் பேச்சுகூட சண்டையில் முடிகிறது. எப்போது சனி-ஞாயிறு வருமோ என்ற கவலையிலேயே இளமை கழிகிறது. என்னதான் செய்வது? என் மனைவியை எப்படிப் புரிந்துகொள்வது?
இவண்
சூசை D.
தி.நகர்
அன்பின் சூசை D.,
பெண்களைப் புரிந்துகொள்ள முயன்று சிரமப்பட வேண்டாம். அவர்களே புரியவைத்துவிடுவார்கள். உங்கள் திருமணம் தொடங்கி ஆயுட்கடைசி வரை அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அதை அவர்கள் "மணவாழ்க்கை" என்பார்கள். கவலையே படாதீர்கள், இப்போது புரியாவிட்டாலும் இறுதியில் நீங்கள் பெண்கள் "ஸ்பெஷலிஸ்ட்"-ஆகத்தான் சாவீர்கள். சுமங்கலியாகச் சாவதன் ஆண் வடிவம் இது.
அன்புடன்
பேயோன்
* * *
அன்புள்ள பேயோன் சார்,
நான் உங்கள் நீண்டகால வாசகி. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் ஒரு இளைஞனின் வேதனைகளை 'வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் ஒரு இளைஞனின் வேதனைகள்' என்ற உங்கள் நாவலில் சிறப்பாக வருணித்திருந்தீர்கள். அதே கோணத்தில் உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்க விரும்புகிறேன்.
எனக்குப் பெரியோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே பெற்றோருடன் வளர்ந்ததால் அவர்கள் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறேன். அவர்களை விட்டுப் பிரிந்து இரண்டு நாட்கள்கூட இருந்ததில்லை. அதே போல நானும் என் தம்பி, தங்கையும் இணைபிரியாத பாசம் உள்ளவர்கள். யாரோ ஒரு மூன்றாம் மனிதனுடன் இருப்பதற்காக இதுநாள்வரை வளர்த்த பாச உறவுகளை விட்டுச் செல்லலாமா? உலக நடைமுறை அதுதான் என்றாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இது விஷயத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்கலாம் என விரும்புகிறேன். தயவுசெய்து உதவவும்.
இப்படிக்கு
ஸ்ரீமதி
அன்பின் ஸ்ரீமதி,
உங்கள் உறுதியான அற உணர்வைப் பாராட்டுகிறேன். பெண்கள் திருமணமான பின்பு வேறொருவர் வீட்டில் குடியேறும் நிகழ்வுகளை நானும் பார்த்திருக்கிறேன். உண்மையில் அவை தவிர நான் வேறு எதையும் பார்த்ததில்லை. இதுதான் நம் நாட்டு இயற்கை நியதி.
ஒரு பெண் திருமணமானதும் அவளது அசல் சொந்தங்களைக் கைவிட்டு அன்னியர்களின் வீட்டில் புகுவது பிதுரார்ஜிதக் கலாச்சாரத்தின் (patriarchal culture) விளைபொருளாகும். கலாச்சாரமற்ற பண்டைய சமூகங்களில் இளைஞர்கள் வளர்ந்தவுடன் அவர்களை ராணுவத்தில் சேர்த்துப் போருக்கு அனுப்பிவிடுவார்கள். பெண் பிறந்தவீட்டை விட்டுப் புகுந்தவீடு செல்வதும் அதைப் போன்றதே. நமக்கென்று வீடு வாசல் இருக்கும்போது ஏன் இன்னொருவர் வீட்டுக்குப் போக வேண்டும்?
திருமணமாகிப் புகுந்தவீடு செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டில் என்ன நடக்கிறது? கணவனின் தாய் ஓய்வெடுக்க, அந்தப் பெண்ணே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. கணவனின் நானாவிதத் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது. குடும்பப் பொறுப்பு என்ற பெயரில் ஒன்பது மாதம் குழந்தைச் சுமையை அவள் அனுபவிக்கிறாள். அதன் பின்பு தாயாகவும் பாடுபட வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் சம்பளம், போனஸ்கூடக் கிடையாது. நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலே இந்தக் கதிதான். மோசமான குடும்பத்தில் சிக்கினால் என்ன ஆவாள்? எப்போதாவது அவளது பெற்றோர் தவறாமல் வருடத்திற்கு ஒருமுறை நான்கைந்து மாதங்கள் அவளுடைய கணவன் வீட்டில் தங்கும்போது மட்டுமே ஏதோ சிறிது நிவாரணம் கிடைக்கிறது.
என்னைக் கேட்டால் பெண்கள் திருமணமான பின்பு பெற்றோருடனே இருக்க வேண்டும். அவர்கள் திருமணம் ஆனதையே காரணமாகக் கொண்டுகூட நிரந்தரமாகப் பெற்றோருடன் இருக்கலாம். அப்போதுதான் அந்த உறவு விட்டுப்போகாது. கணவன் எங்கும் ஓடிவிடப்போவதில்லை. ஒரு மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பினால் வந்து பார்க்கப்போகிறான். அல்லது ஏதாவது ஒரு வார இறுதியில் கணவன் வீட்டில் விருந்தாளியாகத் தங்கிவிட்டு வரலாம், சில புத்திசாலிப் பழங்குடிகள் மத்தியில் இந்தப் பழக்கம் இருக்கிறது. கணவன் உடன் இல்லாதிருப்பது முக்கியமானது. "Good fences make good neighbours" என்பார்கள் ஆங்கிலத்தில். இன்று நிலவும் கணவன்-மனைவிப் பிரச்சினைகளுக்கெல்லாம் வேலி தாண்டும் வெள்ளாடுகளே காரணம்.
திருமணம் என்ற பெயரில் இளம்பெண்களின் குடும்பங்கள் பிரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இது ஒரு மாபெரும் இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கெல்லாம் நிம்மதி.
அன்புடன்
பேயோன்
நம்மை மீறிய விஷயம்
'மலைக் குற மகளுடன் வாழு' என ஆடியோ பிளேயரில் சூலமங்கலம் சகோதரிகள் வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்.
"அது ஒண்ணுதான் கொறச்சல்" என்று முணுமுணுத்தான் விநோத்.
"என்னாது?" என்றாள் சாந்தி.
"நீ போயிட்டு எப்ப வருவ?"
"நீங்க வர்றதுக்குள்ளாற வந்துருவேன். இவளுக்கு க்ளாஸ் இருக்கே" என்றாள் அவள். அதாவது 8 வயது மகள் ஜோதிக்கு ஸ்கேட்டிங் க்ளாஸ். ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டு என்னத்தைப் பிடுங்கப்போகிறாள் என்று கேட்டு ஒரு ஞாயிறு அரை நாளை வீணாக்கிக்கொண்ட பின்பு மகளின் ஸ்கேட்டிங் கல்வியில் விநோத் அதிக ஆர்வம் காட்டவில்லை. மனைவியின் உறவினர் வீட்டு விசேஷம் தவிர வேறு எந்தச் சூழ்நிலையிலும் தவற விடக் கூடாத வகுப்பு ஸ்கேட்டிங்குடையது என்பது மட்டும் அவனுக்குப் புரிந்திருந்தது.
அலுவலகத்திற்குக் கிளம்பும்போது வரும் ஆத்திர அவசரம் மாறாதிருந்தாலும் அன்றைய வேலை நாள் விநோதுக்குப் பொன்னாள். சாந்தியின் தந்தைவழிச் சித்தியோ யாரோ 'வீக் டே'யாகப் பார்த்து உத்தரவு வாங்கியிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை உயிரை விட்டிருந்தால் இவனும் அல்லவா கூடப் போக வேண்டும். மனைவிக்கு வடிகாலும் நிறைய தகவலும் கிடைக்கும். மகளுக்கு விளையாடக் குழந்தைகள் கிடைப்பார்கள். ஒரு ஓரமாகக் கையைக் கட்டிக்கொண்டு முகத்தை மையமாக வைத்துக்கொண்டு நிற்பதற்காக அவ்வளவு தூரம் போவானேன் என்பது விசேஷங்கள், கருமாதிகள் இரண்டிற்குமான விநோதின் வாதம்.
இருந்தாலும் வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை என்று விநோதுக்குத் தெரியும். கடைசி நிமிடத்தில் ஏதாவது நிகழ்ந்து தொலைத்துத் தானும் மனைவியுடன் சாவுக்குப் போக நேர்ந்துவிடலாம் என்ற புத்திசாலிப் பதற்றத்தில் அவசரமாகக் கிளம்பினான் விநோத்.
அலுவலகத்திற்குப் போன பின்பு விடுமுறையில் வேலை பார்ப்பது போல் ஒரு 'ரிலாக்ஸை' உணர்ந்தான் விநோத். கடைசியாக இப்படியொரு தருணம் வாய்த்தது எப்போது என்று நினைவுகளைக் கிளறித் தோல்வியடைந்தான். வழக்கத்தைவிட அதிகம் புன்னகைத்தான். துணை மேலாளர் செந்தில்வேல்கூட "என்னப்பா, ஒரே சிரிச்ச முகமா இருக்கே? ஆபீஸ்ல ஏதாவது செட் ஆயிருச்சா?" என்று கண்ணடித்து விசாரித்தார். "அட நீங்க வேற சார் வயித்தெரிச்சலக் கெளப்பிக்கிட்டு" என்றான் விநோத்.
மாலை ஏழு மணி போல் வீடு திரும்பிய விநோதுக்கு வீட்டில் நுழைந்ததும் தூக்கிவாரிப் போட்டது. சாந்தியும் அவனது மாமியாரும் திருமண வயது மைத்துனியும் சாவகாசமாய்க் கதை பேசிக்கொண்டு ஒரு கூடைக் கீரையை ஆய்ந்துகொண்டிருந்தார்கள். கூடத்தில் பெரும்பகுதி அவர்கள் வசம் போயிருந்தது. 'ஆஹா, ஆஹாஹா!' என்று இருந்தது அவனுக்கு. 'சாந்தியின் சொந்தக்காரர்களா கொக்கா? செத்தும் கெடுக்கும் சீதக்காதிகள்' என்று சபித்தபடி இருவரையும் பார்த்தான்.
"நல்லாருக்கீங்களா?" என்ற மாமியார் கேட்டபோது அவர் காலிலேயே விழுந்து 'நீங்க வேண்டாமே ப்ளீஸ்!' என்று அழுது குமுற வேண்டும் போல் இருந்தது விநோதுக்கு. ஆனால் அவனால் இயன்றதெல்லாம் 'வந்துட்டீங்களா? சுத்தம்!' என்ற புன்னகைதான்.
"என்ன இவ்ளோ லேட்டா வரீங்களே?" என்றாள் மைத்துனி அபத்தமாய்.
"இல்லியே, வழக்கமா வர்ற டைம்தான்" என்று இளித்த விநோத் படுக்கையறையை நோக்கி விரைந்தான். சாந்தி அவன் பின்னாலேயே சென்றாள்.
"உங்கம்மாவும் கோமதியும் வந்திருக்காங்களே, என்ன விசேஷம்?" மனைவியின் முகத்தைப் பார்க்காமல் சட்டையைக் கழற்றிக்கொண்டு கேட்டான் விநோத்.
"கோமு எங்கம்மாவ விட்டுட்டுப் போறதுக்காக வந்திருக்கா. காலைல போயிடுவா. எங்கம்மா நாலு நாள் இருப்பாங்க."
"பலே."
"என்ன பலே?" என்றாள் சாந்தி.
"சும்மாத்தான்" என்றான் வழக்கம் போல. அதற்கு மேல் பேசினால் வக்கீல் செலவு. வெளிப்படையாக எதிர்ப்பு எதுவும் வரும் வரை வீண் சண்டை வேண்டாம் என்கிற ரீதியில் சாந்தி வெளியேறினாள்.
ஜோதி எங்கிருந்தோ ஓடிவந்து விநோதின் கால்களைக் கட்டிக்கொண்டாள். "அப்பா, சித்தி, பாட்டி வந்திருக்காங்க" என்றாள் உற்சாகமாக. "வெவரம் கெட்ட ஜென்மம்" என்றான் விநோத் அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி. ஜோதிக்கோ ஒழுங்கான மறுமொழி வேண்டியிருந்தது. "சித்தி, பாட்டி வந்திருக்காங்கப்பா!" என்றாள் மீண்டும், அப்பனின் பரவசமின்மையைப் புரிந்துகொள்ள முடியாமல். "அதுல்லாம் நம்மள மீறுன விஷயம். நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது" என்றான் சன்னக் குரலில். "போப்பா!" என்று அவனைத் தள்ளிவிட்டு ஓடிப் போனாள்.
கோமதி ஒழுங்குப்பிள்ளையாக மறுநாள் காலை கிளம்பிப் போனாள். விநோதுக்கு அடுத்த சில நாட்கள் ரம்மியமாகக் கழிந்தன என்று சொன்னால் நேர்மையாக இருக்காது.
விநோதின் மாமியார் சர்வ வியாபகியாகத் தெரிந்தார். கழிப்பறை கலந்த குளியலறை அவன் வீட்டில். கடிகார நேரப்படி தோளில் துண்டும் கையில் சோப்பும் எடுத்துக்கொண்டு குளிக்கக் கிளம்பினால் மாமியார் மெல்லக் குளியலறைக்குள் புகுந்துகொண்டிருப்பார். காபி டம்ளரை சமையலறையில் வைக்கப் போனால் வழியில் காய்கறி வெட்டிக்கொண்டிருப்பார். டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும்போது கூடத்தைப் பெருக்குகிறேன் பேர்வழி என்று ஃபேனுக்கு பதிலாக டி.வி.யை அணைத்துவிடுவார். ஊருக்கு முன் தூங்கியெழுந்து பாத்திர சத்தத்தால் தூக்கத்தைக் கலைப்பார். அவன் கதவை முக்கால் மூடிவிட்டு உடை மாற்றும்போது "ஜோதி…" என்று அன்பாக அழைத்துக்கொண்டே கதவைத் திறந்து எட்டிப் பார்ப்பார். பரிமாறும்போது 'போதும்' என்று சொன்ன பிறகு இன்னும் ஒரு கரண்டி விழும். மைத்துனி இதற்கு நேரெதிர். முக்கால் கரண்டி விழுவதற்கு முன்பே "போதுமா போதுமா?" என்பாள். மாமியாருக்குக் காய்கறிகளைச் சிறிதாக நறுக்க வராது. ஓட்டல் போல் முழுக் காயையும் பிளந்து சாம்பாரில் போட்டுவிடுவார். கொசுவின் ரீங்காரத்திற்கு ஆம்ப்ளிஃபையர் வைத்த மாதிரி சகிக்க முடியாத குரல். எல்லாவற்றையும்விட, விநோத் வீடு திரும்புவதற்கு முன்பே பாட்டியுடனான நடவடிக்கைகளில் ஜோதி ஐக்கியமாகிவிடுவாள். கூப்பிட்டால் வர மாட்டாள். ஒரு சின்ன தகவலை, சந்தோஷத்தைப் பகிர மனைவி உடன் இல்லாமல் அம்மாவில் தொலைந்திருப்பாள். இதெல்லாம் போக, அவரை அத்தை என்று கூப்பிடுவதா, அம்மா என்று கூப்பிடுவதா? மேடத்தில் விநோதுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் சாந்திக்கும் மேடத்திற்கும் இருக்கக்கூடும்.
மூன்றாம் நாள் இரவு தூங்கும் நேரத்தில் சாந்தி விநோதிடம் ஒன்றைச் சொல்லத் தொடங்கினாள். இறந்துபோன தூரத்துச் சித்திக்கு ஒரே மகன். அவன் சகோதர சகோதரிகள் யாரும் இல்லாமல் தனியாக அழுதுகொண்டிருந்த காட்சி சாந்தியின் மனதில் ஆழமாகத் தைத்துவிட்டது. அவள் அம்மா மனதிலும் தைக்காதிருக்குமா? முதலில் அங்கேதான் தைத்திருக்கும். 'உன் குழந்தையைத் தனியாக விடாதே. இன்னொரு குழந்தை பெற்றுக்கொள். நாளைக்கு எப்படி இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது' என்று மாமியாரும் ஓதியிருக்கிறார். சாந்தி இதைப் புத்தம்புதிய விஷயம் போல் நீட்டிமுழக்கியதைக் கையாலாகாத எரிச்சலுடன் விநோத் பொறுமையாகக் கேட்டான்.
உண்மையில் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய பேச்சு ஜோதிக்கு மூன்று வயது நிரம்பியபோதே தொடங்கிவிட்டிருந்தது. ஜோதி இன்னும் சிறு குழந்தையாக இருந்த நாட்களை அடிக்கடி சிறிது ஏக்கத்துடன் நினைத்துப்பார்த்த விநோதுக்கு அது அற்புதமான வாய்ப்பு போல் இருந்தது. இன்னொரு குழந்தை என்றால் பிரசவ வேதனையை அனுபவிக்கப்போவது தானல்ல என்பதால் அவன் ஆர்வத்தை அவ்வளவாக வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. இருந்தாலும் துக்கடா வேலையை வைத்துக்கொண்டு இன்னொரு குழந்தைக்கு ஆகும் செலவைச் சமாளிக்க முடியாது என்றான். ஆனால் சாந்தி இன்னொரு குழந்தைக்குப் பிரசவ வேதனையை அனுபவிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தாள். எல்லா செலவையும் வரும்போது சமாளிக்கலாம் என்றாள். தயக்கத்திலேயே நாட்கள் ஓடின. பிறகு விநோத் நிச்சயமாகக் குழந்தை வேண்டும் என்றான். அப்போது சாந்திக்குப் பண பயம் வந்துவிட்டது. அவள் நண்பர்களும் உறவினர்களும் எம்.எல்.ஏ.க்களைப் போல் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். தங்களிடம் இருந்ததையும் தாங்கள் செய்த காரியங்களையும் ஃபேஸ்புக்கில் பகிரவும் செய்தார்கள். "பாருங்க, என் கசின் பேங்காக் போய் ஃபோட்டோஸ் போட்டிருக்கா"க்கள் மலிந்தன. "போடாம விட்ருவாங்களா? போறதே அதுக்குத்தானே?"க்களும்தான்.
இப்போது திரைக்கதையில் அம்மா நுழைந்திருந்ததால் திடீரென்று சாந்திக்குக் குழந்தை வெறி வந்துவிட்டது. இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் அது முதல் குழந்தைக்குச் செய்யும் துரோகம் போலவும் தெய்வக் குற்றம் போலவும் ஆகியிருந்தது. தான் சொன்னபோது கேட்காமல் யாரோ சொல்லி வழிக்கு வருவது விநோதுக்கு உறுத்தியது. இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்று சமாதானம் ஆனான். ஆனால் சம்பள உயர்வு ("வர்ற டைம்தான்") வந்தால்தான் இன்னொரு குழந்தையைக் கையாளத் தகுதி வரும் என்று தோன்றியது. நீண்டநேர விவாதம், செலவுப் பட்டியல்கள் எல்லாம் முடிந்த பின்பு சம்பள உயர்வுதான் பதில் சொல்ல வேண்டும் என்று தம்பதி சமேதராய்த் தீர்மானித்தார்கள்.
நான்காம் நாள் சொன்னபடி மாமியார் கிளம்பவில்லை. பல சமயங்களில் இப்படி ஆகிவிடுவதுண்டு. ஆறாம் நாள் மதியம் புறப்படுவதாக சாந்தி ஆறுதல் அளித்தாள்.
ஐந்தாம் நாள்தான் அலுவலகத்தில் செந்தில்வேல் விநோதைத் தன் கேபினுக்குக் கூப்பிட்டார். 'விரைவில் ப்ரொமோஷனை எதிர்பார்' என்பதே அவருடைய நீண்ட, பெருந்தன்மை பொங்கிய உரையின் சாராம்சமாக இருந்தது. பதவி உயர்வு என்றால் சம்பளம் பதினோராயிரம் போல் உயருமாம். கூடுதல் பொறுப்புகள் உறுதி, அவ்வப்போது வெளியூர்ப் பயணங்கள் இருக்கும். பயணங்கள் வருமானகரமானவை. அவன் கேட்டதை அவனால் செரிமானிக்க முடியவில்லை. இப்போது அவனுக்கு வயது முப்பத்தியாறு. நாற்பது வரும்போது வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்றும் அப்போது தேட வேண்டிய வேலைக்கு இப்போதே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான். சுயதொழில் யோசனைகளுக்காக சோம்பலாய் கூகுளைத் தேடுவதும் உண்டு.
"நாளைக்கு லெட்டர் வந்துரும், ட்ரீட் குடுக்க ரெடியா இருங்க" என்றார் செந்தில்வேல். கேபினை விட்டு வெளியே வந்த விநோத் வேறு ஏதோ ஓர் இடத்திற்கு வந்துவிட்டது போல் உணர்ந்தான். 'நமக்கா இதெல்லாம்?' என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. திடீரென்று நடுத்தர வர்க்கத்திலிருந்து உயர் நடுத்தர வர்க்கத்திற்கு வந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டான். இனி அவன் கோட்டு-டை கூடப் போடலாம். அந்த இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம். "நாம புவர் பீப்பிளா?" என்று கேட்கும் மகளிடம் "கொஞ்சம் ரிச்சுதான்" என்று சொல்லிக்கொள்ளலாம். ஏன், அவளை இன்னும் அதிகம் கையைக் கடிக்கும் பள்ளியில் சேர்க்கலாம். கிரெடிட் கார்டு கடனை, வாகனக் கடனை அடைக்கலாம். சிக்கனத்திற்காகக் குறைத்த டீ-சிகரெட்டை அதிகரிக்கலாம். நீண்டகாலமாகத் தள்ளிப்போட்ட 'ஃபுல் பாடி செக்கப்'பை செய்துகொள்ளலாம். புதிய முதலீடு ஏதேனும் தொடங்கலாம். கொஞ்சம் சிக்கனமாக இருந்தால் ஏதாவது சுற்றுலா கிளப்பில் சேரலாம். உரிமையாய்க் கொஞ்சம் அகலக் கால் வைக்கலாம்…
அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்களோடு வீடு திரும்பினான் விநோத். பதவி உயர்வு உறுதிப்படும் வரை சாந்தியிடம் அது பற்றி மூச்சு விடக் கூடாது என்று முடிவெடுத்திருந்தான். ஒன்று கிடக்க ஒன்று ஆகி ஒன்றும் இல்லை என்று ஆகிவிட்டால் அது அவனுடைய குற்றம் என்று ஆகி அவன் நிம்மதி போய்விடும்.
வழக்கம் போல் ஜோதி தூங்கியதும் சாந்தி புதுக் குழந்தை பற்றிப் பேச்செடுத்தாள். ஐஸ்வரியம் வரப்போகிறது என்றதும் ஒரே குழந்தையை வைத்துக்கொண்டு பணத்தை மிச்சப்படுத்தி இன்னும் சொகுசாக வாழலாமே என்று விநோதுக்கு ஒரு ஓரமாகத் தோன்றியது. ஆனால் இரண்டாம் குழந்தை ஆசை அதைவிட வலுவாக இருந்தது. சம்பள உயர்வு வந்ததும் கருத்தடைச் சாதனத்தை அகற்றிவிட்டு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வதாக சாந்தி பிரகடனம் செய்தாள். இந்த முன்னேற்பாடுகளைக் கேட்க விநோதுக்கு பயமாக இருந்தது. எதையும் நிச்சயமாகக் கருத வேண்டாம் என்று எச்சரித்தான். "வரும்தானே?" என்றாள் சாந்தி. "கண்டிப்பா வரும்" என்றான் விநோத். அப்புறம் என்ன?
விநோதின் மனதில் இன்னொரு புதிய கவலை. 'கர்ப்பமாக இருக்கும்போது உன்னை யார் பார்த்துக்கொள்வார்கள், குழந்தை பிறந்த பின்பு ஜோதியையும் கவனித்துக்கொள்ள வேண்டுமே' என்றான். விநோதின் தாய் அவனுடைய திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டார். தந்தை திருமணத்திற்குப் பின்பு போயிருந்தார். தங்கைகள் இருவர் வெளி மாநிலங்களில் மூழ்கியிருந்தார்கள்…
"ஏன், எங்கம்மா இருக்காங்களே!" என்றாள் சாந்தி. உயரே மௌன சாட்சியாகச் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி மடேர் என்று தலை மேல் விழுந்தது போல் இருந்தது விநோதுக்கு. "அவங்க ஃபுல்லா இருந்து பாத்துக்குவாங்க. நல்லா கேட்டீங்க. அவங்க எதுக்கு இருக்காங்க?" என்றாள் அவள் மேற்கொண்டு. அதே கேள்வி அவனுக்கும் தோன்றியதுண்டு. ஆனால் அதற்கு அர்த்தமுள்ள பதில் எதுவும் அவனுக்குக் கிடைத்ததில்லை. சாந்தியின் பதிலில் அவனுக்குத் திருப்தி இல்லை. வேதனை இருந்தது எனலாம். "ஆமாம்ல" என்றான்.
அன்றிரவு விநோத் எவ்வளவு புரண்டு படுத்தாலும், போகுமிடமெல்லாம் மாமியார் குறுக்கே வரும் காட்சியையும் ஜோதிக்கு சடை பின்னும் காட்சியையும் மனக்கண்ணிலிருந்து நீக்க முடியவில்லை. அற்ப விஷயம், ஆனால் இதில்தான் எவ்வளவு சிக்கல்! இதையும் மீறி மனித உயிரினம் உயிர் பிழைத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் விநோத். வாழ்க்கை எனும் சுழித்தோடும் காட்டாற்றுக்குப் போட்டியாக மனிதனும் முகத்தைச் சுழிக்க முடியுமா? அரிதாகச் சில சமயங்களில் அவன் இப்படித் தத்துவமாக இறங்கிவிடுவதுண்டு. நகைமுரணாக, சமையலறையில் மாமியாரின் அதிகாலைப் பாத்திர உருட்டல்தான் அவன் சிந்தனையைக் கலைத்தது.
மறுநாள் விநோத் தன் சோற்றுப் பையை அருகில் போட்டுவிட்டு சீட்டில் அமர்வதைத் தனது திறந்த கேபினிலிருந்து பார்த்துவிட்ட செந்தில்வேல், "விநோத்!" என்று அங்கிருந்தே கத்தினார். விநோத் அவரது அறைக்கு ஓடினான். "கதவ மூடு" என்றார் அவர். கதவை மூடியதும் மேஜை மேல் கிடந்த திறக்கப்படாத உறையை அவனிடம் நீட்டினார். விநோத் உறையைப் பிரித்துக் கடிதத்தைப் பார்த்தான். "Congratulations! Based on your sustained performance…" அதற்கு மேல் படிக்க அவனுக்குத் தேவை இருக்கவில்லை. செந்தில்வேல் ஊகித்த தொகையைவிட இரண்டாயிரம் அதிகமாகவே இருந்தது. பேசிக் தொகையே சம்பளமாகச் சொல்லிக்கொள்ளும் அளவு கணிசமானது.
விநோத் அது கனவா நனவா என்று ஒரு கணம் யோசித்தான். அவன் வாய் உலர்ந்தது. குபீரென்று வியர்த்தது. கைகள் நடுங்கின. இதயம் கட்டுப்பாடின்றி அடித்துக்கொண்டது. பிறகு அந்தக் கடிதத்தை சுக்குநூறாகக் கிழித்து செந்தில்வேலின் தலை மீது அபிஷேகம் போல் கொட்டினான். குப்பைமேனியாக அதிர்ச்சியில் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த துணை மேலாளரிடம் விரக்தியாகப் புன்னகைத்துச் சொன்னான், "இந்த ப்ரமோஷனே எனக்கு வேணாம் சார்."
நூல் அறிமுக உரை: ஆதி கிரணம்
வளரும் இளம் எழுத்தாளர்களில் ஒருவரான கோவிந்த் சீதாராம் தனது முதல் நாவலுக்கான வெளியீட்டுக் கூட்டத்தில் அவரது நாவலைப் பற்றி நான் அறிமுகப்படுத்திப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, முதலில் எனக்குத் தயக்கமாக இருந்தது. காரணம், எழுதுவதற்கு உள்ள நேரம் படிப்பதற்கு இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அந்த நேரத்தில் எழுத வேண்டிய வேலை இருக்கிறது. இதை அவரிடம் சொன்னபோது அவர், பரவாயில்லை, நீங்கள் வந்து மேடையில் நின்றாலே போதும் என்றார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மூத்த எழுத்தாளர்களின் கடமை என்று நினைக்கிறேன். இது மிகச் சாதாரண சிந்தனை. இருந்தாலும் நினைக்கிறேன்.
கோவிந்தின் 'ஆதி கிரணம்' நாவலை நான் படிக்கவில்லை. நாவல் எது பற்றியது என்று சொன்னால் அறிமுக உரைக்கு உதவிகரமாக இருக்கும் என்று கோவிந்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் அதைச் சொல்லவோ என்னவோ என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசத் தொடங்கினார். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு அதைவிட முக்கியமான வேறொரு அழைப்பு வந்ததால் நான் அவருடையதைத் துண்டித்துவிட்டேன். இருந்தாலும் நஷ்டமில்லை. இந்த மேடைக்கே வந்தாயிற்று.
கோவிந்த் அனுப்பிய புத்தக பார்சல் இன்னும் பிரிக்கப்படாமல் மேஜை மேல் இருக்கிறது. ஒரு பிரிக்கப்படாத பார்சலுக்குரிய மர்மத்துடன் இருக்கிறது. அனுப்பியவர் கோவிந்த் என்பதும் அவர் இந்தக் கணத்தில் இன்ன முகவரியில் வசிக்கிறார் என்பதும் மட்டுமே நிச்சயம். உள்ளே என்ன இருக்கிறது என்பது பிரித்துப் பார்க்காத வரை உத்தரவாதம் இல்லை. கோவிந்த் தன்னுடைய முதல் நாவலை அதில் வைத்து எனக்கு அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார், அப்படியே நினைத்துக்கொண்டும் இருக்கிறார். எனக்கு அவரைப் பழக்கம் என்பதால் நானும் அவரை நம்புகிறேன். அவர் பெரிய பொய்களைச் சொல்லுபவர் அல்ல. ஆனால் அதனுள் எது வேண்டுமானாலும் இருக்கக்கூடும்.
இதோ, இதுதான் அந்த பார்சல். இதற்குள் என்ன இருக்கலாம்? ஒரு வண்ணத்துப்பூச்சி – எடுத்தவுடனே அதுதான், ஒரு வானவில் – இதுதான் வழக்கமாக அடுத்த ஐட்டம், ஒரு சிட்டுக்குருவி, ஒரு கடல், ஒரு பூ, ஒரு தோட்டம், ஏன், ஒரு தவளை, ஒரு அணில் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். மர்மம் என்கிற விசயம் இயற்கையாகவே தான் மறைத்துவைத்திருக்கும் பொருளைப் பற்றிய மிகையான எதிர்பார்ப்புகளைத் தூண்டக்கூடியது. திறக்கும் வரைதான் மர்மத்தின் ஈர்ப்பு. திறந்து பார்த்தாலோ – அதில் கடலே இருந்தாலும், சே, இவ்வளவுதானா என்று ஏமாற்றமடைந்து கொட்டிவிடுவோம். இதுதான் மனித இயல்பு. அல்லது இதுவும்கூட மனித இயல்பு என்று சொல்லலாம். ஏனென்றால் மனித இயல்புகள் நிறைய உண்டு. ஒன்றை மட்டும் மனித இயல்பு என்று சொன்னால் மனித ஒற்றைப் பரிமாணமுள்ள ஆளாகிவிடுவான். அது சௌகரியப்படாது.
'ஆதி கிரணம்' பார்சல் இப்படியானதொரு மர்மத்தைத்தான் எனக்குத் தருகிறது. பார்சலைக் கையில் தூக்கிப் பார்க்கும்போது தோராயமாக முன்னூறு கிராம் இருக்கும் என்று தோன்றுகிறது. மதிப்புரைக்கு அனுப்பப்பட்டது என்பதால் இரு பிரதிகள், தலா 150 கி. எனலாம். எனது பல்லாண்டு கால நவீன இலக்கிய வாசிப்பு அனுபவத்தில் 150 கிராமில் அட்டையைச் சேர்க்காமல் கிட்டத்தட்ட 180 பக்கம் பிடிக்கும். அஞ்சல் தலை, அஞ்சலக முத்திரை மற்றும் எழுதப்பட்டதில் உள்ள மைகள், பார்சல் கட்டப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நூல் போன்ற விசயங்களையும் சேர்த்துக்கொண்டால் தைரியமாக 176 பக்கம் சொல்லலாம்.
கோவிந்தின் இந்த நாவலைப் படிக்கவில்லையே தவிர இது மாதிரிப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமுள்ள நண்பர்களிடம் விசாரித்ததில் இவர் என்ன விதமாக எழுதக்கூடியவர் என்பது பற்றி மசங்கலான ஒரு யூகத்தை ஒப்பேற்றிக்கொள்ள முடிந்தது. தலைப்பைப் பார்த்தால் ஏதோ இதிகாச/புராணக் கதையைத் தன்னுடைய உபயோகத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் போலும் என்று தோன்றியது. இவர் மிகவும் கனமான நடையில் எழுதக்கூடியவராம் – நண்பர்கள் சொல்கிறார்கள். கனமான நடை என்றால் எனக்கு யானைக்கால்தான் நினைவுக்கு வரும். இது பழைய வியாதி. இப்போது எழுதுபவர்கள் யானைக்கால் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். எங்களைப் போல யாராவது இளைஞர்களின் நூல் அறிமுக உரைகளில் சொன்னால்தான் உண்டு.. ஆனால் இப்போது இந்த இளைய சந்நிதியினர் எல்லோரும் இந்த நடையில்தான் எழுதுகிறார்கள் என்பது ஒரு நகைமுரண் வேடிக்கை. உதாரணமாக, "க்ஷேமதோஷனின் எதிர்பாராத கடைசி க்ஷண நபும்சகத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்திய ஜனன பரியந்த துரோகக் கிடக்கையையும் எண்ணியெண்ணித் துக்கித்த ரூபகனின் ஆழ்மன எதிர்பௌருஷம்" என்று படிக்கும்போது 'இந்த வியாதியைத்தான் எப்போதோ ஒழித்துவிட்டார்களே' என்று தோன்றும்.
இங்கு மேடையிலும் முதல் இரு வரிசைகளிலும் அமர்ந்திருக்கும் நபர்களைப் பார்க்கும்போது கோவிந்துக்கு உள்ள தொடர்புகளின் வீச்சு புலனாகிறது. முதல் வரிசையில் எனக்கு மிகவும் அபிமான இயக்குநர் சபரி அமர்ந்திருக்கிறார் பாருங்கள் – தமிழ்த் திரைவானை எண்ணிலடங்காத உயரத்திற்கு, சிதிலங்களுக்கு அப்பாற்பட்ட சிகரங்களுக்கு, உலகின் அடி ஆதர்ச மூலைகளுக்கு உயர்த்திய ஒப்பற்ற மகா கலைஞன் இங்கு ஒரு பெட்டிப் பாம்பைப் போல், ஒரு மழைக்கு ஒண்டிய ஒரு நாயைப் போல், கருவிலுள்ள ஒரு குழந்தையைப் போலச் சுருண்டிருக்கும் ஒரு புழுவைப் போல் எவ்வளவு எளிமையாக அமர்ந்திருக்கிறார் பாருங்கள்! சார், வணக்கம் சார், ஐயோ என்ன சார் நீங்கள்!
கோவிந்த் படுசுமாராக எழுதுபவர், ஆனால் மிக உபயோகமானவர் என்று படுகிறது. இந்த உபயோகத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இளம் எழுத்தாளர்களின் உபயோகம் குறைத்து மதிப்பிடுவதற்குத் தகுதியற்றது. இவரது நாவலை நான் படிக்கவில்லைதான். ஆனால் இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று நினைக்கிறேன். அதை அவசியம் படியுங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நானும் படிப்பேன். இது வெறும் 176 பக்கம்தான் இருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே விட்டெறிந்தால் கண்டிப்பாகப் பத்தடி தள்ளித்தான் தரையிறங்கும், அவ்வளவு லேசான எடையுள்ளது இந்த நூல். இதைவிடப் பத்து மடங்கு பெரிய புத்தகங்களையெல்லாம் நாம் படித்ததாகக் காட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த நூலை நிஜமாகவே படிக்கலாம். ஆகவே அவசியம் படியுங்கள். சுருக்கமாகச் சொன்னால், ஆதி கிரணம் – கோவிந்த் சீதாராமன். நன்றி, வணக்கம்.
சோபாவில் ஓர் ஆசிரியர்
நேற்று எனக்கு வங்கியில் ஒரு வேலை இருந்தது. எழுத்துத் தொழில் போக வங்கியிலும் வேலை பார்த்துக் கொழிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு பட்டுவாடா நிமித்தமாகக் கடந்த நான்கு மாதங்களுக்கு பாஸ்புக் என்ட்ரி போட வேண்டியிருந்தது. அது நொடிநேர வேலை என்பதால் காத்திருக்கச் சொன்னார்கள். சிவனே என்று ஒரு சோபாவில் புதைந்தேன்.
என்னைத் தவிர இன்னொரு ஆள் அந்த சோபாவில் உட்கார்ந்து ஏதோ படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். நமக்குத்தான் இந்தப் படிவ அலர்ஜியெல்லாம்; உலகம் படிவங்களை நேசிக்கவே செய்கிறது என்று பத்தி எழுத்தாளனுக்கே உரிய கவித்துவ மென்கெத்துடன் நினைத்துக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன். அந்த ஆள் என் கல்லூரி ஆங்கில ஆசிரியர் போல் இருந்தார். உற்றுப் பார்த்தால் அவரேதான். வி.சி. கல்யாணசுந்தரம். நாங்கள் செல்லமாக அல்லாமல் சுருக்கமாக வி.சி.கே. என்று குறிப்பிடுவோம். இப்போது அந்தப் பெயரில் கட்சியெல்லாம் வந்துவிட்டது.
தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தவரைக் குறுக்கிட்டு "சார்?" என்றேன். அவர் திரும்பிப் பார்த்தார். நினைவுகள் என்னைக் கூப்பிட்டன. தலை, தொப்பை, முதுமை தவிர அப்படியே இருந்தார். கல்லூரிக் காலத்தில் தேவையில்லாத ஒரு மிடுக்கும் முறுக்கு மீசையும் அவருக்கு ஏதோ ராணுவத் தொடர்பு இருந்ததாகப் பலரை நினைக்கவைத்தன. ஆனால் அவருக்கு ராணுவப் பிராப்தி எதுவும் இல்லாதது மட்டுமல்ல, அவர் ஒரு துப்பாக்கியை ஜேம்ஸ் பாண்ட் படத்தில்கூடப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே. அந்த மீசை இப்போது வெள்ளைப்பட்டிருந்தது. காலம் அவரது மயிரைப் பிடுங்கிவிட்டிருந்தது. ஓய்வு பெற்றுவிட்டபடியால் டி-சர்ட் அணியத் தொடங்கியிருந்தார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. "ஹவ் ஆர் யூ சார்?" என்றேன்.
இங்கே சற்றுப் பின்னணி. இந்த வி.சி.கே. சுமாராகப் பாடம் நடத்துவார். ஆனால் அந்தப் பவிசுக்கே மிகவும் கறாரானவர். கோபம் இல்லாமல் கறாரா? இல்லை. இவர் கோபத்தில் பொருட்களைத் தூக்கி எறியக்கூடியவர். மனிதர் எதையுமே கோபத்தில் ஒரு ஓரமாக எடுத்துவைத்து நான் பார்த்ததில்லை. ஒருமுறை – ஒரே ஒரு முறை – அவருடைய வகுப்பிற்கு நான் தாமதமாகச் சென்றுவிட்டேன். இரு வெறுங்கைகளை ஆட்டி ஆட்டித் தனியாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தவர், அறை வாசலில் நான் நிழலாக ஆடியதும் என் பக்கம் திரும்பி முறைத்தார். தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார், பிறகு மீண்டும் என்னுடைய தரிசனம்.
"ஹவ் ஆர் யூ சார்?" என்றேன்.
"ஓப்பன் யுவர் பேக்" என்றார்.
நான் புரியாமல் பையைத் திறந்தேன்.
"கிவ் மீ யுவர் சப்ஜெக்ட் நோட்ஸ்."
"விச் சப்ஜெக்ட் சார்?"
"எனிதிங், எனிதிங்" என்றார் தோளைக் குலுக்கி. 'உன் நோட்டு, உன் ராஜ்யம்' என்று சொல்வது போலிருந்தது. "ஜஸ்ட் கிவ் மீ சம் நோட்புக். ஜென்ரலி ஐ ப்ரிஃபர் சாஃப்ட் பைண்டிங்."
பெரிய பைக்குள் குடாய்ந்து ஆங்கில நோட்டுப் புத்தகத்தையே எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் அதைத் தொடர் ஓட்டக்காரர் போல் பிடுங்கிக் காட்டுத்தனமாய் விசிறியடித்தார். நோட்டு எட்டடி உயரத்திற்கு எகிறி சுவரில் அறைந்து அஜய் அவஸ்தி என்ற மும்பை இறக்குமதி மேல் விழுந்தது.
"டு யுவர் சீட் பிளகாட்*!" என்று கத்தினார்.
எல்லோர் பார்வையும் என் மீது பதிந்திருக்க, நான் மௌனமாக அந்தப் பையனிடம் எனது நோட்டுப் புத்தகத்தை உதிரி பாகங்களாக வாங்கிக்கொண்டு என் இருக்கைக்குச் சென்றேன்.
இதனால்தான் வி.சி.கே.யிடம் யாரும் பேசியதேயில்லை. அவரிடம் பேசிய ஒரே மாணவன் அநேகமாக நான்தான். அதுவும் "ஹவ் ஆர் யூ சார்?" மட்டும்தான். அதுகூட அன்றைக்கு ஒருநாள் மட்டும்தான். அதன் பின்னர் நான் அவர் வகுப்புகளுக்குத் தாமதமாகப் போகவில்லை.
இப்போது அந்தச் சம்பவம் அவருக்கு ஞாபகம் வந்துவிட்டிருக்கலாம். ஏனென்றால் பார்வையில் பழைய வெறுப்பைப் பார்க்க முடிந்தது. 'நீயெல்லாம் இன்னும் இருக்கிறாயா? ஏன்?' என்கிற ரீதியில் பார்த்தார். அவரின் கண்வழிக் கேள்விக்கு பதிலளிக்க வாய் பரபரத்தது. இருந்தாலும் எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா? இலக்கிய எழுத்து பற்றிய இவருடைய அறிவிப்புகள் பலவும் எனக்கு இப்போதும் கட்டுரைகளுக்குப் பயன்படுகின்றன. சிதைந்த நோட்டு உள்பட எல்லாம் பத்திரமாக உள்ளன.
அவரிடமிருந்து இன்னும் பதில் வராததால் "டெல் மீ சார்" என்று ஊக்குவித்தேன்.
"யூ, ஐ டோன்ட் ரிமெம்பர் யுவர் நேம். ஐ நோ யூ வேர் எ ஸ்டூடன்ட். யூ கேம் லேட் ஒன் டே."
"யெஸ் சார், வெரி மச் சார்."
"வாட் டு யூ டூ நவ்?"
"மீ சார்? ஐ அம் எ ரைட்டர் சார். எஸ்டாப்ளிஷ்டு ரைட்டர்."
"யூ ரைட் ஃபுல் டைம்?"
"யெஸ் சார்."
"தட்ஸ் வொண்டர்ஃபுல்! இன் இங்லிஷ் ஆர் டமில்?"
"டமில் சார்."
"வெரி குட். நல்லா எழுது! ஏதாவது புக்ஸ் போட்டிருக்கியா?"
"நானூறு புக்ஸுக்கு மேல வந்திருக்கு சார்."
"வாவ்! தட்ஸ்…"
"யூ வான்ட் டு சீ ஒன் சாம்ப்பிள் சார்?"
நான் மனைவி-குழந்தை புகைப்படம் போல் – ஆனால் அதற்கு பதிலாக – எப்போதும் என்னிடம் வைத்திருக்கும் 'நம்மை வாசிக்கும் புத்தகங்கள்' கட்டுரையை வங்கி ஆவணக் கோப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். ஒரே சமயத்தில் எனது வாசிப்பறிவு, உலக சினிமா அறிவு, இளமைக் காலத்தை நினைவுகூரும் திறன், சமூகப் பார்வை, கவித்துவம், நெகிழ்ச்சி எல்லாவற்றையும் காட்டும் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட கட்டுரை அது.
வி.சி.கே. கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். படிக்கத் தொடங்கினார். அதன்போதே முகம் கடுகடுத்தது. முப்பதாண்டுகளுக்கு முன்பு பார்த்துப் பழகிய முகபாவம். பிறகு நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகக் கட்டுரையைப் பாதியாகக் கிழித்து வங்கி முழுவதும் விசிறியடித்தார்.
"எஃபர்ட்லஸ் ரைட்டிங்!" என்று அலறினார்.
கத்திவிட்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். எல்லோர் பார்வையும் என் மீது பதிந்திருக்க, நான் மௌனமாகக் கட்டுரையைப் பொறுக்கிக்கொண்டு வெளியேறினேன், கொஞ்சம் வேகமாகவே.
*
* பிளகாட் – blackguard எனப் பொருள்படும் அந்தக் காலத்து வசை
ரேமன்
டோக்கியோவின் புறநகர்ப் பகுதியொன்றில் ஒரு பெரிய மருத்துவமனையைக் கட்டுவதற்கான தொடக்கப் பணிகள் ஒரு மது அருந்தகத்தில் வெற்றிகரமாக நடந்தேறின. நான் மேலாண்மை இயக்குநராக இருந்த அமயா கார்ப்பரேஷன் கட்டுமான வேலையைக் குத்தகைக்கு எடுத்திருந்தது. மாநகராட்சி அனுமதி அளித்ததைக் கொண்டாடவும் மேற்கொண்டு திட்டமிடவும்தான் அந்தச் சந்திப்பு. என்னுடன் மது அருந்தியவர்கள் தலைவர் ஹிரோ தகாஹாஷியும் துணைத் தலைவர் ரியோ கிக்குனோவும். அங்கிருந்து, அதுவும் மனமின்றி, வெளியே வந்த கடைசி வாடிக்கையாளர்கள் நாங்கள்தான். எல்லோருக்கும் மட்டுமிஞ்சிய பசி கணக்குத் தொடங்கியிருந்தது. அனுமதிக்கப்பட்டால் கிக்குனோ-சான் சாக்கேயை உணவாகக் கருதி வயிற்றை நிரப்பிக்கொள்ளத் துச்சமாக இருந்தார். ஆனால் மற்ற இருவரான எங்களுக்கு வயிறு திடமாக நிரம்பத் தேவைப்பட்டது.
மாணவர்களும் காதலர்களுமே அதிகம் வருகை தரும் அந்தக் குடிமனை தவிர அந்த இடம் பொட்டலாக இருந்தது. எங்கு பார்த்தாலும் இருட்டு. எங்குமே பார்க்காதிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியோர் இருட்டு. நாங்கள் மூவரும் கைப்பெட்டிகளுடன் செய்வதறியாமல் நின்றிருந்தோம். பிறகு நடந்தே சென்று ஏதேனும் உணவகத்தைக் கண்டுபிடித்துச் சாப்பிட முடிவானது. சில்லிடும் எதிர்க்காற்றைத் தள்ளிக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினோம். கிக்குனோ-சானுக்கு போதை தலைக்கதிகமாக ஏறியிருந்தது. அவருக்குக் குடி தாங்காது. ஆனால் அவர் சொல் பேச்சு கேட்பவர் அல்லர். எதிர்க்காற்று வலுக்கும்போதெல்லாம் அவர் காற்றைத் திட்டியவாறு அதன் மேல் ஜூடோ குத்துகளைப் பொழிந்துகொண்டிருந்தார். பத்து நிமிடங்களில் பொட்டலைக் கடந்து ஊர் எல்லை போன்ற ஓரிடத்தை அடைந்தோம். உணவகம் என்ன, மரங்கள்கூட இல்லை. தன்னந்தனியாக ஒரு சாலை இருந்தது. நிலவொளியில் பளபளத்த அதன் மேல் விளக்குகள் ஆடும் சில வண்டிகள் ஊர்ந்தன.
தகாஹாஷி-சான் சாலையோரத்தில் சிதிலமடைந்த பெயர்ப் பலகை ஒன்றை அவரது சீன "டார்ச்" ஒளியில் கண்டுபிடித்தார். 'டொயாமா ஒட்டல்' என்றது பலகை. அதில் நீண்டிருந்த அம்புக்குறி காட்டிய திசையில் மிக மங்கலாக விளக்கொளிகள் தெரிந்தன. ஆனால் விளக்குகள் மட்டுமே விழித்திருக்குமோ என்று தோன்றியது. பிறகு காக்கையின் எச்சம் போல் என் மேல் ஏதோ பட்டுத் தெறித்தது – மென்மையான பனித் தூறல்.
"இது ஆகிற வேலை இல்லை நண்பர்களே. வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கொள்வோம்" என்றேன் ரென் ஷிமிஸு என்கிற நான்.
"எனக்கு இப்போது சாப்பிட்டே ஆக வேண்டும்" என்றார் கிக்குனோ-சான்.
"கிக்குனோ, உனக்கு போதை ஏறிவிட்டது. இங்கே உணவகம் எதுவும் இல்லை. மெல்ல ஷின்ஜுக்கு வரை நடந்து பேருந்தைப் பிடித்து வீட்டுக்குப் போய்விடுவோம்" என்றார் தகாஹாஷி-சான்.
"நான் டொயாமாவில் ரேமன் சாப்பிடாமல் நகர மாட்டேன்" என்று அப்படியே உட்கார்ந்துவிட்டார் கிக்குனோ-சான். நான் அவரது கைப்பெட்டியை இன்னொரு கையில் எடுத்துக்கொண்டேன். கிக்குனோ-சான் ஒரு ரேமன் பிடிவாதி.
தகாஹாஷி-சான் பெருமூச்சு விட்டார். "சரி, போய்ப் பார்ப்போம். கிக்குனோ, எழுந்திரு. நடுத்தெருவில் சோறு கிடைக்காது."
கிக்குனோ-சான் எங்கள் கைத்தாங்கலில் எழுந்தார். எடையற்ற பெட்டியை ரோஷமாக என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டார். ஓட்டலின் பெயர்ப் பலகையைவிடவாவது உணவு புதிதாக இருக்குமா என்று புலம்பினார் தகாஹாஷி-சான்.
உண்மையில் டொயாமா ஓட்டல் எங்களுக்குப் புதிதல்ல. டோக்கியோவிற்கு ரயில் வருவதற்கு முன்பே எங்கள் பதின்ம வயதுகளில் பயணங்களின்போது இங்கே உணவருந்துவோம். ரேமனுக்கும் புதுமையான பல சுஷி வகைகளுக்கும் பேர்போனது டொயாமா ஓட்டல். என்ன இது, இவ்வளவு சீக்கிரம் தீர்ந்துவிட்டதே என்று பாத்திரத்தைக் கோபிக்கவைக்கும் சுவை டொயாமாவின் ரேமனுடையது. 1890களில் நகரமயமாக்கமும் இடப்பெயர்வும் அந்தப் பகுதியின் மதிப்பைக் குறைத்தன. ஷின்ஜுக்குவின் விளிம்பில் குடியிருந்தவர்கள் டோக்கியோவிற்கு உட்புறம் பெயர்ந்தார்கள். அங்கு ஆலைகளுக்கு அடித்தளங்கள் இடப்பட்டன. ஓட்டல் நசிந்து யாகுஸாக்களும் கெட்ட ஆவிகளும் புழங்கும் இடமானது. அதற்கெல்லாம் முன்பே உலகம் அந்த இடத்தை மறந்துவிட்டது. ஆனால் டொயாமா ஓட்டல் ரேமனின் சுவை மட்டும் மறக்கவில்லை. டோக்கியோவில் எவ்வளவு நல்ல ரேமன் கிடைத்தாலும் அதைச் சுவைக்கும்போது 'இவ்வளவு மோசமாக இல்லாத சுவை டொயாமா ஓட்டலின் ரேமனுடையது' என்று நினைத்துக்கொள்வேன். இவ்வளவிற்கும் நான் பாதி நாள் சாப்பிடுவது ரேமன்தான்.
அந்தப் பெயர்ப் பலகையைப் பார்க்கும் வரை ஓட்டல் மூடப்பட்டு அரை நூற்றாண்டுக்குச் சற்றுக் குறைவாக ஆகியிருக்கும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படி இல்லை போலும். நாங்கள் அதன் புகழைப் பாடிக்கொண்டு சிறிது தூரம் நடந்த பின்பு திடீரென ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் எங்கள் எதிரில் இருந்தது. நான் பார்த்த டொயாமா ஓட்டலாக அது தெரியவில்லை. குறைந்தது 100-150 ஆண்டுகள் பழமையான மேற்கத்திய பாணிக் கட்டிடம் அது. எட்டு மாடிகளுக்குத் தேவையான உயரத்தை ஐந்தே மாடிகள் காவு கொண்டிருந்தன. அண்ணாந்த பார்வைக்குச் சில அறைகளில் மங்கிய விளக்கொளி தெரிந்தது. அகன்ற பெயர்ப் பலகையொன்று நாங்கள் நெருங்கியதும் அறிவித்தது –
டொயாமா ஓட்டல்
உணவு மற்றும் அறைகள்
'கிடைக்கும்' என்ற கடைசிச் சொல்லைக் காணவில்லை.
நாங்கள் பத்திருபது படிகள் ஏறி ஓட்டலுக்குள் நுழைந்தோம். உள்ளே அரைகுறை ஒளியில் ஈரத்தின் வாடை பரவியிருந்தது. சுவர்களின் வண்ணம், சட்டம் மங்கலாக மினுக்க ஆங்காங்கே தொங்கிய ஓவியங்கள், கனமான மரக் கதவுகள் எல்லாம் இடத்தின் முக்கியத்துவத்தைப் பாடின. இம்மாதிரிக் கட்டிடங்கள். சில மனிதர்களைவிட முக்கியமானவை. வரவேற்பு மேஜைக்குப் பின்னே முகத்தில் சுத்தமாக ரோமமே இல்லாமல் அமர்ந்திருந்த ஓர் ஒடிசல் மனிதன் எழுந்து வந்து எங்களை வணங்கி வரவேற்றான். ஓட்டலின் மேனேஜரான எய்ஜி அரிவா என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். மேஜைக்கு மேல் ஒரு தொங்குவிளக்கு எரிந்தது. அங்கு அவனைத் தவிர வேறு யாரும் இருந்தாற்போல் தெரியவில்லை.
"ரேமன் இருக்கிறதா?" என்றார் தகாஹாஷி-சான்.
"உடனே கிடைத்தால் நல்லது," கிக்குனோ-சான் குறுக்கிட்டார்.
"மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. ரேமனுக்குப் பஞ்சமில்லை, ஆனால் இந்த நேரத்தில் கிடைக்காது" என்றான் எய்ஜி.
"சாதாரண ரேமன் எவ்வளவு?" என்று நான் கேட்டேன். அதுதான் விரைவில் தயாராகும்.
"12 சென்."
"நாங்கள் மூன்று பேர் சாப்பிட நூறு சென் தருகிறோம். சுஷிக்கு இன்னும் நூறு. உனக்கு ஐம்பது." போதை பேசியது.
ஒரு கணம் திகைத்த எய்ஜி, "ஆகட்டும் ஐயா" என்று எங்கள் மூவரையும் தலா மூன்று முறை வணங்கினான். தகாஹாஷி-சான் நீட்டிய நோட்டுகளை வாங்கி மேஜைக்கு அடியில் இருந்த டிராயரில் போட்டுப் பூட்டிவிட்டு சாவியைப் பைக்குள் நழுவ விட்டான். திரும்பிப் பார்த்து "கெய்ஜி-குன்! ஆறு ரேமன், ஆறு சுஷி! உடனே!" என்று யாரிடமோ கூவிச் சொன்னான். பிறகு ஓட்டலின் இருண்ட நடை ஒன்றில் சென்று மறைந்தான். கெய்ஜியும் எய்ஜியும் ஒரே ஆளாக இருக்கும் என்றார் கிக்குனோ-சான். இருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
அங்கிருந்த கெட்டியாகத் தூசு படிந்திருந்த நாற்காலிகளில் நாங்கள் அமர்ந்தோம். கிக்குனோ-சான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொள்ள, மற்ற இருவரும் அதைப் பின்பற்றினோம். ரேமனும் சுஷியும் தயாராகி சாப்பிட்டு முடிக்க இரண்டு மணிநேரம் ஆகும். தகாஹாஷி-சான் சாப்பாட்டுக்குப் பின்னர் சாக்கே அருந்த விரும்பினார். நள்ளிரவு இருளில் நடந்து வீட்டிற்குச் செல்ல யாருக்கும் விருப்பமில்லை. எங்கள் வயிறுகள் எழுப்பிய பசியொலிகளைக் கேட்டபடி மௌனமாகப் புகைத்தோம். சற்று நேரத்தில் எய்ஜி மீண்டும் அத்துவானத்தைத் திரும்பிப் பார்த்து "கெய்ஜி-குன்!" என்று கத்திவிட்டுப் போய் ரேமனைக் கொண்டுவந்தான். சில நிமிடங்களில் சுஷிகள் வந்தன.
முதல் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு சாப்பாடு எங்கள் வாய்களைக் கட்டிப்போட்டது. எங்கள் மூவரின் மனைவிகளும் சமைப்பதில் நிபுணர்கள். ஆனால் இது – இந்தச் சுவை அமானுஷ்யத்திற்குச் சளைக்காதது. இந்த உணவைச் சாப்பிட ஆள் பற்றாக்குறை என்றால் ஜப்பானில் நிச்சயம் ரசனைகள் தரமிழந்துகொண்டிருந்தன. சாப்பிட்டபோது எய்ஜியை கிக்குனோ-சான் கேட்டார், "இந்த இடம் வெறிச்சோடிக் கிடக்கிறதே, எல்லோரும் எங்கே போனார்கள்? இங்கு யாரும் தங்குவதில்லையா?"
எய்ஜி பலமாகத் தலையாட்டி மறுத்தான். "யாகுஸாக்கள் வருவதுண்டு."
"யாகுஸாக்களா?" நான் அதிர்ந்து கத்தினேன், "இப்போது யாராவது யாகுஸாக்கள் தங்கியிருக்கிறார்களா?"
"இல்லை" என்றதும்தான் சமாதானம் அடைந்தேன். பச்சைக்குத்தல்களையும் வன்முறையையும் நான் ஒருபோதும் விரும்பியதில்லை.
நாங்கள் இரவுக்கு அங்கேயே தங்கப்போவதை எய்ஜியிடம் சொன்னோம். "கேளிக்கை" ஏதாவது வேண்டுமா என்று கேட்டான். இந்த நேரத்திலும் இடத்திலும் எங்கிருந்து கேளிக்கையை ஏற்பாடு செய்வான் என்று எனக்குப் புரியவில்லை. இதற்கிடையில் "நாங்கள்தான் கேளிக்கை" என்று தகாஹாஷி-சான் சொல்லிச் சிரித்திருந்தார். எய்ஜி எங்கள் மூவருக்கும் சேர்த்து ஒரு பெரிய அறையைத் தயார் செய்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
சாப்பிட்டதும் அவ்வளவு நேரம் பதுங்கியிருந்த ராட்சதத் தூக்க மேகம் அப்படியே என் மேல் கவிந்தமுக்கத் தொடங்கியது. ஆனால் மற்ற இருவரும் குடியைத் தொடர விரும்பினார்கள். நான் அவர்களுக்கு என் சோர்வைத் தெரிவித்துவிட்டு என் அறையைத் தேடிச் சென்றேன். அது மூன்று படுக்கைகளால் பெரிய அறையாகத் தெரியவைக்கப்பட்ட ஒரு சிறிய கூடம். ஒவ்வொரு படுக்கைக்கும் தலைமாட்டில் ஒரு சிறு மேஜை, ஒரு மர நாற்காலி, ஒரு திரி விளக்கு மட்டும் இருந்தன. படுக்கைகள் மேல் கிமோனோக்களும் ஹவோரிகளும் வைக்கப்பட்டிருந்தன. எய்ஜி சுறுசுறுப்பான ஆள். நான் பழுப்பு கிமோனோ-ஹவோரிக்கு மாறிப் போர்வையில் புகுந்துகொண்டேன்…
எனக்குத் தூக்கம் திரளவில்லை. இருந்த சோர்வு உறக்கமாக முதிரவில்லை. மாடிப்படிகளில் ஏறிய சிரமம் தூக்கத்தைக் கலைத்திருக்கக்கூடும். சாப்பிட்ட ரேமன் வயிற்றுக்குள் நூறு புழுக்களாய் நெளியத் தொடங்கியது போல், அவை பின்னிக்கொண்டு சிக்கலாகிவிட்டது போல் சங்கடம். வெளியே விம்மி விம்மித் தணிந்துகொண்டிருந்தது காற்றின் ஓசை. அது ஒரு பெண்ணின் புலம்பலைப் போலவும் இருந்தது. இரவும் பனியும் இருளும் இருந்தால் பெண் நினைவு வராதா என்ன? எனக்குக் கொடி போல் ஒரு மனைவி இருக்கிறாள். அவளும் என்னுடன் இருந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளை எங்கே விடுவது? உறவினர்கள் யாரும் டோக்கியோவில் இல்லை. இருக்கும் பட்சத்திலும் நள்ளிரவில் தம் வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டுக் குழந்தைகள் ஒப்படைக்கப்படுவதை அவர்கள் விரும்புவார்களா என்பது சந்தேகமே. அதுவும் இந்தப் பனியில்.
விளக்கை எடுத்துக்கொண்டு அறைக் கதவைத் திறந்து பார்த்தேன். குளிர்ந்த காற்றோடு பனியின் பட்டாணிகள் முகத்தில் அடித்தன. எங்கள் அறை எதிரே மாட்டியிருந்த விளக்கு பலமாக ஆடியதோடு அதன் சிவப்புக் கூட்டுக்குள் சுடரும் ஆடிற்று. ஓர் ஓவியத்தில் போல் அது ஒளிர்ந்த சிறிய இடம் தவிர மற்ற எங்கும் அடர்ந்த இருள். நிச்சயமாகப் பனிப்புயல் ஒன்று தனது தொடக்கத்தில் இருந்தது. வலப்பக்கம் படிகளில் ஓட்டமான காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினேன். எய்ஜி, கிமோனோவை மடித்துக் கட்டிய கோலத்தில் பூப்போட்ட குடையுடன் என்னை நோக்கி ஓடி வந்தான். சற்று உருகியிருந்த பனியில் வழுக்கி விழுந்தான். எழுந்துகொண்டே, "ஷிமிஸு-சானைக் கீழே கூப்பிடுகிறார்கள்!" என்றான். படுக்கையில் புரண்டு கிடப்பதற்கு நண்பர்களோடாவது இருக்கலாம் என முடிவெடுத்தேன். அறைக்குள் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு கிளம்பினேன்.
எய்ஜி குறுகிய இருட்தாழ்வாரங்களினூடே என்னை மெல்ல அழைத்துச் சென்றான். தகாஹாஷி-சானும் கிக்குனோ-சானும் மிகப்பெரிய கூடம் ஒன்றில் குடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கூடம் ஒரு மன்னனின் அவை அளவுக்கு விரிவாக இருந்தது. ஏதோ விழாவுக்குத் தயார் செய்தது போல் சுவர்களில் பதிந்திருந்த ஏராளமான தீப்பந்தங்கள் அழுக்கான பளிங்குத் தரையில் அடர்ந்த தூரிகைத் தீற்றல்களாகப் பிரதிபலித்தன. எஞ்சிய ஓட்டலின் சூழலுக்குப் பொருந்தாமல் கூடம் பிரகாசித்தது. வாசலை நோக்கிய சுவரைப் பல விலங்குகளின் தலைகள் அலங்கரித்தன. அவற்றுக்குக் கீழே கைக்கெட்டும் உயரத்தில் நான்கு ஜோடி கடானாக்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே ஓட்டலின் பழம்பெருமையைப் பேசும் விஷயங்கள். நான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். குளிருக்கு இடையிடையே தீப்பந்தங்களின் சிறு வெப்ப அலைகள் வீசின.
கிக்குனோ-சான் என் சத்தம் கேட்டுத் திரும்பி, "ஷிமிஸு-சான்! எங்களோடு குடியுங்கள்!" என்று அலறினார். "இங்கே உட்காருங்கள்!" தகாஹாஷி-சானும் தன் அருகில் இருந்த காலி இடத்தைக் காட்டி அலறினார். அவர்கள் நான் வருவதற்கு முன்பே நிறைய குடித்துவிட்டது போல் தெரிந்தது. "திரும்பத் திரும்பக் குடிப்பதா?" என்று மறுத்தேன்.
"சரி! ஷிமிஸு-சான் குடிக்க விரும்பவில்லை" என்றார் கிக்குனோ-சான் என்னிடமே. "எனக்கும் தகாஹாஷிக்கும் இடையே நடக்கப்போகும் சண்டையைப் பாருங்கள்!"
நான் கிக்குனோ-சானிடம் கடிந்துகொண்டேன், "இதென்ன தேவையில்லாத இடத்தில் விபரீத விளையாட்டு! இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும். அது வரை சிறிது தூங்கப் பாருங்கள் இருவரும்!"
"தூக்கமா?" தகாஹாஷி-சான் பெரிதாகச் சிரித்தார். கிக்குனோ-சானும் அவருடன் சேர்ந்து சிரித்தார். எய்ஜிகூடத் தலை குனிந்து ஓசையின்றிச் சிரித்தான்.
"இது தகாஹாஷி-சானுடைய யோசனையா?" என்றேன் அவரிடம். எய்ஜி எதையோ மிக அவசரமாகப் படிப்பது போல் மேலும் கீழும் தலையாட்டினான்.
"கடானா, கடானா" என்றார் கிக்குனோ சான்.
தகாஹாஷி-சான் பதிலளிக்காமல் தள்ளாடி எழுந்து நின்றார். குடித்துக்கொண்டே அவரை வேடிக்கை பார்த்த கிக்குனோ-சானை நோக்கிக் கை நீட்டினார்.
"கிக்குனோ, வா, தோற்றுப்போ!" என்று சொல்லிவிட்டு மீண்டும் பயங்கரமாகச் சிரித்தார். கிக்குனோ-சானும் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றார்.
"எய்ஜி, கத்தி கொண்டுவா" என்றார் தகாஹாஷி-சான்.
எய்ஜி ஓடிப்போய் இரு கடானாக்களைக் கொண்டுவந்து ஆளுக்கொன்று கொடுத்தான்.
"நிச்சயமாக நீ வரவில்லையா? உனக்கும் எய்ஜிக்கும்கூடக் கத்தி இருக்கிறது" என்றார் தகாஹாஷி-சான்.
எப்படியோ கடானாக்கள் பயன்படும் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கிக்குனோ-சான் தனது கடானாவை இரு கைகளால் பிடித்துக்கொண்டு தயாராக நிற்க, நான் நான்கைந்து அடிகள் பின்னே நகர்ந்துகொண்டேன். தகாஹாஷி-சானும் கடானாவைப் பிடித்துத் தயாராக நின்றார். இப்படியே சில நிமிடங்கள் கழிந்தன. அவர்கள் போதையில் நிற்க முடியாமல் அசைந்துகொண்டிருந்தது ஏதோ நடனம் போலிருந்தது. எங்கிருந்தோ எனக்குத் தூக்கம் வந்தது. எய்ஜி காணாமல் போயிருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.
திடீரென்று இருவரும் "ஆ!" என்று கத்தியபடி ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வந்தார்கள். ஆனால் அருகில் வந்ததும் நின்றுவிட்டார்கள். பிறகு பித்துப் பிடித்தது போல் சிரிக்கத் தொடங்கினார்கள். தகாஹாஷி-சான் சிரிப்பதை விடாமல் கடானாவைச் சுழற்றினார். கிக்குனோ-சானின் வலக்கை கடானாவோடு அறுந்து விழுந்தது. கிக்குனோ-சான் வலியில் அலறினார்.
"எய்ஜி! ஷிமிஸு! அதை எடுத்துக் கொடு!" என்று கத்தினார் கிக்குனோ-சான்.
நான் பீதியிலும் குழப்பத்திலும் கிக்குனோ-சானின் வலக்கையை எடுத்துக் கொடுத்தேன்.
"ஆ!" என்று கத்தினார் கிக்குனோ-சான். வலியா கோபமா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
"அவன் கத்தியைக் கேட்கிறான்" என்ற தகாஹாஷி-சான், "இப்போது சிரியேன் கிக்குனோ" என்று சொல்லிவிட்டு சிரிப்பை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
கிக்குனோ-சானின் வலக்கை, ரத்தம் பீறிடாமல் முண்டமாக இருந்தது. நான் என்னுடைய கிமோனோவைக் கழற்றி அவர் வலது தோளில் சுற்ற முயன்றேன். கிக்குனோ-சான் திமிறி உறுமினார். நான் எய்ஜியின் பெயரைச் சொல்லிக் கத்தினேன். ஆனால் யாரும் வரவில்லை.
நான் தகாஹாஷி-சானிடம் கெஞ்சினேன். "தகாஹாஷி-சான், நிலைமை கைமீறிப் போய்விட்டது. நிறுத்திவிடுங்கள். கிக்குனோ-சானுக்கு உடனடி சிகிச்சை தேவை."
"கிக்குனோ, உன் கையில் ரத்தமே வரவில்லை பார். மருத்துவரிடம் காட்டு" என்று தகாஹாஷி-சான் மீண்டும் பயங்கரமாகச் சிரித்தார்.
என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நான் கிக்குனோ-சானிடம் அவரது கடானாவை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிய கிக்குனோ-சான், சடாரென்று பாய்ந்து தமது கடானாவை தகாஹாஷி-சானின் வயிற்றில் பிடி வரை செருகினார். தகாஹாஷி-சான் திகைத்துப்போனார். கிக்குனோ-சான் கடானாவை வேகமாக, ஆனால் தகாஹாஷி-சானின் வயிற்றுக்குக் குறுக்காக இழுத்தபடி வெளியே எடுத்தார். தகாஹாஷி-சானின் குடல் பாதி வெளியே விழுந்து தொங்கியது.
நான் அதைப் பார்த்து உறைந்து நிற்க, தகாஹாஷி-சான் கைகளால் வயிற்றைப் பொத்திக்கொண்டு கத்தினார், "ரேமன்! எனது ரேமன்! எல்லாம் போய்விட்டது."
இவ்வளவு நேரம் அளவில்லாத பயத்தில் இருந்த எனக்கு ரேமனைப் பற்றிக் கேட்டதும் வெறியே வந்துவிட்டது. "தகாஹாஷி-சான்! உங்களுக்கென்ன பைத்தியமா? சாகப்போகிறீர்கள் இரண்டு பேரும்!" என்று சத்தமிட்டேன்.
இப்போது எனக்கு ஒரே ஒரு தேர்வுதான் இருந்தது. அங்கிருந்து தப்பியோடுவது. அப்போதுதான் தகாஹாஷி-சான் கடானாவை என் பக்கமாக வீசினார். "ஷிமிஸு, இந்தா உனக்குக் கொஞ்சம்."
என் தலை தனியே தெறித்து விழுந்தது. உயிர் போகும் வலி. நான் அலறிக்கொண்டே என் தலையை நோக்கி ஓடினேன். ஆனால் சில அடி தூரத்தில் கிடந்த கிக்குனோ-சானின் வலக்கை என்னை முந்திக்கொண்டு என் தலைமுடியைப் பற்றிக்கொண்டது. நான் ஓடிப் போய் என் தலையைப் பிடித்து எழுத்தேன். கிக்குனோ-சானின் கை பிடித்த பிடியை விடவில்லை. "கிக்குனோ-சான், என் தலையை விடுங்கள்!" என்று கிக்குனோ-சானைப் பார்த்துக் கத்தினேன். ஆனால் அவரும் தகாஹாஷி-சானும் கட்டிப்பிடித்து ஒருவரையொருவர் தள்ள முயன்றுகொண்டிருந்தார்கள். எனக்கு மண்டைத் தோலை உரிப்பது போல் தலை முழுவதும் எரிந்தது. வலக்காலால் கிக்குனோ-சானின் மணிக்கட்டை மிதித்து அழுத்திக்கொண்டு என் தலையை விடுவித்தேன். அதை என் கழுத்தின் மேல் வைத்தேன். கையை எடுத்ததும் அது உருண்டு விழப் பார்த்தது. கழுத்தை நெரிப்பது போல் இரு கைகளாலும் தலையையும் கழுத்தையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடினேன்.
"கிக்குனோ, ஷிமிஸு ஓடுகிறான் பார்" என்று பின்னால் தகாஹாஷி-சானின் குரல் கேட்டது. கிக்குனோ-சான் பதிலளித்தாரா என்று தெரியவில்லை. நான் அதற்குள் வெளியே இருந்தேன்.
புயலெதுவும் இல்லாமல் மென்மையாகப் பனி பொழிந்துகொண்டிருந்தது. கிமோனோ அணியாததால் மேலுடலைக் குளிர் அறைந்தது. நான் தலைதெறிக்க ஓடினேன். தலையில் ஓங்கி அடித்தாற்போல் வலித்தது. கால்களும் எலும்புமுறிவு ஏற்பட்டது போல் வலித்தன. வழியில் மரம் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், சாலைகள், வாகனங்கள், விடுதிகள், வீடுகள், ஓடைகள், பாலங்கள், வாராவதிகள், கோவில்கள், ஆலைகள் எல்லாம் தோன்றியும் மறைந்தும் கொண்டிருந்தன. யாரும் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. உடலுக்குத் தொடர்பின்றிக் கால்கள் மட்டும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.
எவ்வளவு நேரம் ஓடினேனோ தெரியவில்லை, ஒரு கட்டத்தில் என் வீடு புலப்பட்டது. வீட்டைச் சுற்றிப் பின்புறக் கதவை இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே விழுந்தேன். அதற்காகக் காத்திருந்தது போல் நினைவிழந்தேன்.
லேசான வலியை உணர்ந்தவாறு கண்விழித்தபோது எதிரே ஒரு நாற்காலியில் என் அழகிய மனைவி மயுமி என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். எனது இரண்டு வயதுக் குழந்தை அயுமி அவள் மடியில் உறங்கிக்கொண்டிருந்தாள். மயுமி என்னைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள். மாலை நேரம் போல் இருந்தது. நான் இன்னும் அரை மயக்கத்தில் இருந்தேன். உறக்கத்தில் நிறைய ரத்தம் இழந்திருப்பேன் என்று தோன்றியது. தலை பாறை போல் கனத்தது. அசைக்க முடியவில்லை.
"தகாஹாஷி…" என்று கேட்கலாமா வேண்டாமா என்ற பயத்துடனே கூரையைப் பார்த்துத் தொடங்கினேன்.
"தகாஹாஷி-சான், கிக்குனோ-சான், அயாமே-சான் எல்லோரும் இப்போதுதான் வந்துவிட்டுப் போனார்கள்" என்றாள் மயுமி.
நான் அதிர்ந்தேன். இது எப்படி சாத்தியம்?
"தகாஹாஷி-சான், கிக்குனோ-சான் – அவர்களுக்கு ஒன்றும் இல்லையா?"
"ஏன், அவர்களுக்கு என்ன? நன்றாகத்தானே இருந்தார்கள்?"
"எய்ஜி பற்றி ஏதாவது சொன்னார்களா?"
"இல்லையே, யார் அது?"
சரி, இதை இப்படியே மறந்துவிடுவோம் என்று தோன்றியது. மனதில் சிறிது நிம்மதி ஏற்பட்டது. ஒரு புதுத் தெம்பும் பிறப்பது போல் உணர்ந்தேன். எல்லோரும் முழுமையாக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. கொலைக் குற்றத்திற்குத்தான் பயந்துகொண்டிருந்தேன்.
"உங்களுக்கு சூப் தயாரித்திருக்கிறேன். இருங்கள், கொண்டுவருகிறேன்" என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு எழுந்த மயுமி, "மருத்துவர் உங்களுக்கு நிறைய ஓய்வு தேவை என்று சொல்லியிருக்கிறார். அசையாமல் படுத்திருங்கள், வந்துவிடுகிறேன்" என்றாள். என் அறையிலிருந்து வெளியேறினாள்.
நான் சிறிது நேரம் எல்லாவற்றையும் ஜீரணிக்க முயன்று கைவிட்டேன். அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். என் ஆடைகள் தூய்மையாக இருந்ததைப் பார்த்தேன். கைகளும் கால்களும்கூடச் சுத்தம் செய்யப்பட்டிருந்தன.
சில நிமிடங்கள் கடந்திருக்கும். வெளியே, அநேகமாக வரவேற்பறை அருகே, சத்தம் கேட்டது. "நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எனக்குத் தெரியும்" என்றது ஓர் ஆண் குரல். என் மனைவியின் மெல்லிய குரல் அதற்கு வன்மையாக ஏதோ பதிலளித்தது. பூட்ஸ் சத்தங்கள் கேட்க, என் அறைக்குள் நான்கு காவல் துறை ஆட்களும் என் மனைவியும் நுழைந்தார்கள். நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. என் சந்தேகம் உறுதியானது. என்னைத் தூக்கில் போடப்போகிறார்கள்!
தலைமை அதிகாரி போல் இருந்தவர் கூறினார், "ஷிமிஸு-சான், தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். உங்கள் சக ஊழியர்கள் தகாஹாஷி-சானும் கிக்குனோ-சானும் ஊருக்கு வெளியே ஒரு பழைய கட்டிடத்தில் கொடூரமாகக் கொலையுண்டு அழுகிய நிலையில் கிடக்கிறார்கள். ரத்தக்கறை படிந்த ஒரு கிமோனோவையும் உங்கள் பெட்டியையும் அங்கு கண்டெடுத்தோம். இதை நீங்கள் விளக்க முடியுமா?"
மயுமி விம்மினாள். அயுமி அவள் காலைக் கட்டிக்கொண்டு என்னை ஓர் அந்நியனைப் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்தாள். நான் யோசித்தேன். இவையெல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்திருந்தால், கிக்குனோ-சானின் கடானாவில் என் கைரேகை பதிந்திருக்கும். நான் கிக்குனோ-சானின் கொலையாளி எனவும் கிக்குனோ-சான் தகாஹாஷி-சானின் கொலையாளி எனவும் காவல் துறை எளிதில் முடிவுகட்டிவிடும். கொலைசெய்யக் கத்தியை எடுத்துக் கொடுத்ததே கொலைக்கு உடந்தை என்றல்லவா கருதப்படும்? கத்தியைக் கொடுத்தபோது நான் அரை மயக்கநிலையில் இருந்தேன் என்ற வாதம் எப்படி எடுபடும்?
"யோசித்தது போதும் ஷிமிஸு-சான். நீங்கள் கண்விழிக்க ஒரு வாரமாகக் காத்திருந்தோம். இதற்கு மேல் எங்களுக்குப் பொறுமை இல்லை. நிறைய கேள்விகள் இருக்கின்றன" என்றார் காவல் துறை அதிகாரி.
நம்புகிறார்களோ இல்லையோ, உண்மையைச் சொல்வதே ஒரே தேர்வு என்று தோன்றியது. மற்றதை நான் வேண்டும் தெய்வங்கள் பார்த்துக்கொள்ளும். கைகளை ஊன்றிக்கொண்டு மெல்லப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன். தலை மட்டும் தலையணையிலேயே கிடந்தது.
நானும் சங்க இலக்கியமும்
ரொம்ப குளோஸ்.
கடிதம்: வாழ்க்கையின் அர்த்தம்
அன்புள்ள பேயோன் சார்,
உங்கள் படைப்புகளின் வாயிலாகவே நான் வாழ்க்கையை நுட்பமாக ரசிக்கக் கற்றுக்கொண்டேன். இருப்பினும் சமீபத்தில் எனது சில நண்பர்கள் சில தத்துவ நூல்களை அறிமுகப்படுத்தினர். அவற்றைப் படித்த பின்பு ஆழ்ந்த மனக் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளேன். வாழ்க்கை அர்த்தமற்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. இதனால் என் வாழ்க்கையில் அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது. நீங்கள் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து அது பற்றிய தகவல்களைப் பதிவுசெய்பவர் என்பதால் உங்களிடம் கேட்கிறேன். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா?
பெ. சரவணகிருஷ்ணன், M.A. B.Ed.
துபாய்
ஐயம்நீர்,
இந்தக் கேள்வியை நாங்கள் எண்பதுகளிலேயே கேட்டுவிட்டோம். இடையே மாதச் சம்பள வேலை, திருமணம், குழந்தைக் குட்டி என்று திசை மாறிவிட்டது. இப்போது இந்தக் கேள்வியே அபத்தமாகத் தோன்றுகிறது.
வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்தால் என்ன சார் செய்யப்போகிறீர்கள்? எப்படியும் உங்கள் குப்பையை நீங்கள்தானே கொட்ட வேண்டும்? அதுதானே வாழ்க்கையின் அர்த்தம்? விலங்குகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? நுண்ணுயிர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? அரசியல் கட்சி அபிமானிகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? அளவிட முடியாத பிரபஞ்சத்தில் ஒரு துகளில் பத்துக் கோடியில் ஒரு பங்குகூட இல்லாத அளவு இருந்துகொண்டு வாழ்க்கையில் அர்த்தம் எல்லாம் எதிர்பார்ப்பது பேராசை இல்லையா? கேட்காமல் மூடிக்கொண்டிருப்பவனெல்லாம் மடையனா?
நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. வேலை வெட்டி இருப்பவர்கள் எல்லோரும் இப்படிக் கேட்டுவிடுவதில்லை. ஆனால் கேட்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் புத்திசாலி என்பது அதிலேயே நிரூபணமாகிவிட்டது. அதில் திருப்திப்பட்டுக்கொள்ளுங்கள். "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" என்றார் வள்ளுவர். "கேள்விகள் கேட்காமல் வாழ்ந்துவிட்டுப் போ" என்றார் ஆத்மாநாம். சிந்தனை என்பது இருபக்கமும் கூரான கத்தி போன்ற ஒரு பெரும் வரம். அதைத் தவறான முறையில் பயன்படுத்தினால் அசிங்கப்படுவீர்கள்.
ஒரு விதத்தில் பார்த்தால், மகிழ்ச்சிதான் வாழ்க்கையின் அர்த்தம். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது. இல்லை என்றால் இல்லை. மகிழ்ச்சி நிலையாக இருப்பதில்லை. சில சமயங்களில் அது துன்பத்திற்கு வழி விட்டு ஒதுங்கிக்கொள்கிறது. இம்மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் அர்த்தத்தை பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேட வேண்டும். எனவே உங்கள் கேள்விக்கு பதில்: வாழ்க்கை விட்டு விட்டு அர்த்தமுள்ளது.
அன்புடன்
பேயோன்
ஒரு துக்கம் விசாரித்தல்
விடிந்ததும் விடியாத குறையுமாக ஒரு மரணச் செய்தி கிடைத்தது. செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது மனைவி வந்து சொன்னார்:
"மணி அப்பா இல்ல, அவர் எறந்துட்டாராம். நீங்க மணிக்கு ஃபோன் பண்ணி விசாரிங்க."
இது என்னைப் பெரிய சிக்கலில் ஆழ்த்தியது. துக்கம் விசாரித்தல் எனக்குச் சிறிதும் பரிச்சயமில்லாத ஒரு துறை. பிறந்தநாள் வாழ்த்துகள், மணநாள் வாழ்த்துகள் என்றால் பல்லைக் கடித்துக்கொண்டு இனிக்கப் பேசிவிடலாம். ஆனால் துக்கம் விசாரிப்பது ஒரு துன்பியல் நிகழ்வு. மனைவி சொன்ன பிறகு அதைத் தவிர்க்க முடியாது. மணியின் அம்மா இவரின் தோழமை.
கையில் செல்பேசியை எடுக்கும்போது கற்றுக்குட்டி நடிகன் போல் உணரத் தொடங்கினேன்.
"வணக்கம் மணி, கேள்விப்பட்டேன். என்னாச்சு அப்பாவுக்கு?"
நல்லவேளையாக மணி சாதாரணமாகப் பேசினான்.
"ஒரு வாரமா காய்ச்சல். ரெண்டு நாள் ஐ.சி.யூ.ல இருந்தாரு…"
"அப்படியே போயிட்டார்…" எடுத்துக்கொடுத்தேன்.
"ஆமா."
"அம்மா நல்லா அழுதாங்களா?"
"பின்னென்ன சார்?"
"ஏன் கேட்டேன்னா அழுதாத்தான் பாரம் குறையும். துக்கத்துல மனசுலயே வெச்சுக்கிட்டா அப்புறம் அதுலேந்து மீண்டு வர்றது கஷ்டம்."
நல்லவன் போல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு திடீரென்று "அம்மா இங்க பக்கத்துலதான் இருக்காங்க, பேசுறீங்களா?" என்றான் மணி, என்னவோ நானும் அவரும் ஐம்பது வருடம் அன்னியோன்யமாகப் பழகியவர்கள் போல. அவர் பெயர் நினைவில் இருப்பதே அதிசயம்.
தயங்கியவன், இங்கிதத்திற்காக ஒப்புக்கொண்டேன்.
"சொல்லுங்க."
'எல்லோரும் பேசிவிட்டார்கள், நீ புதிதாக என்ன சொல்லிவிடப்போகிறாய், நீ பேசுவதால் அவர் திரும்பியா வந்துவிடப்போகிறார்?' என்ற விரக்தி இருந்தது அந்தப் பெண்மணியின் குரலில்.
"ம்ம்… வந்து… நடந்தது நடந்துபோச்சு. மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க. எதுவும் நம்ம கட்டுப்பாட்டுல இல்ல. அதுனால நம்மளால எதுவும் செய்ய முடியாம போச்சேன்ற வருத்தம் எதுவும் வேணாம். நாமளும் சரி, நமக்குத் தெரிஞ்ச எல்லாரும் சரி, யாரையும் சாவு இரக்கப்பட்டு விட்டுவைக்காது. இது இவன் மனைவி, இவ உயிரோட இருக்கணும், இவன் பேரு சாய் ஸ்ரீராம், இவன் சாகணும் அப்படின்னு சாவு தரம்பிரிச்சுப் பாக்காது…. இது மாமூலா நடக்குறதுதான். இதுல யாரும் தனியாள் இல்ல. நாமல்லாம் ஒரு குரூப்பு…"
பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது. எங்கே தவறு செய்தேன் என்று என் மனைவிக்கும் புரியவில்லை. ஆனால் எனக்கு விடியாமுகத்தினன் என்ற அடைமொழி மட்டும் கிடைத்தது.
மூன்று ரூபாய்
பிரியாணிப் பாத்திரத்தில் கடைசிப் பருக்கைகளை விடாமல் கிளறி எடுப்பவனின் தீவிரத்துடன், அதே சமயத்தில் இதையெல்லாம் பகிரங்கமாகச் செய்யலாம் என்ற அமைதியுடன், மூக்கினுள் வலதுகைச் சுண்டுவிரலை நுழைத்து கடிகாரச் சுற்றிலும் எதிர்கடிகாரச் சுற்றிலும் இரண்டு மூன்று முறை 360 டிகிரி திருப்பிக்கொண்டிருந்த தேநீர்க்கடை உரிமையாளர் என்னைப் பார்த்துவிட்டு, "சாருக்கு ஒரு டீ" என்றார்.
அட வயிற்றால் போகிறவனே, இந்தக் கையாலா இவன் பாக்கி மூன்று ரூபாய் சில்லறையை எடுத்துக் கொடுக்கப்போகிறான் என்று நொந்துகொண்டேன்.
என்னிடம் சரியான சில்லறை இல்லை. பாக்கியை அப்புறம் வாங்கிக்கொள்கிறேன் என்று நழுவிவிடலாம். ஆனால் அவர் எனக்குத் தர வேண்டியதை மறந்துவிட்டால் மூன்று ரூபாய் போனது போனதுதான். எக்காரணத்தைக் கொண்டும் அது திரும்ப வராது. அதனிடம் நிரந்தரப் பிரியாவிடை பெற வேண்டியதுதான்.
யோசித்து முடிப்பதற்குள் தேநீர் வந்தது. குடித்துவிட்டு கிளாஸை வைத்துவிட்டு சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய்த் தாளை எடுத்தேன்.
"இந்தாங்க. பாக்கி மூண்ருவா அப்பறமா வாங்கிக்கிறேன்" என்றேன்.
"இல்ல சார், எனக்கு மறந்துரும். நீங்கெ கையோடே வாங்கிட்டுப் போயிடுங்கெ" என்று உரிமையாளர் வலதுகையால் மூன்று ரூபாய்ச் சில்லறையை எடுத்து நீட்டினார். அவருக்குச் சுத்தமான இன்னொரு வலதுகை இருந்திருக்கலாம் போல் இருந்தது எனக்கு. ஓடிவிடலாம் போலவும்தான்.
"ஆ! உங்களுக்கு மூண்ருவா அன்னிக்கித் தரணும்ல?" என்றேன் வேதனை பீறிடும் திடீர் சாமர்த்தியத்துடன்.
"ஓ! அப்ப சரி. பாத்தீங்களா, எனக்கு நியாபகம் இருக்காது, அதுதான் ப்ரச்சனெ" என்று சில்லறைக் காசுகளை அவற்றுக்குரிய கிண்ணங்களில் பிரித்துப் போட்டார். நாளிறுதியில் எனது மூன்று ரூபாய் திரும்பி வர முடியாத இடத்திற்குப் போய்விட்டது.
வீட்டை நோக்கி நடக்கையில் திடீரென்று ஆங்காங்கே கீழே கிடந்த சோடா மூடிகள் எல்லாம் எனக்குச் சேர வேண்டிய சில்லறைகளாகவே தெரிந்தன. பூமாதேவியை நினைத்து 'சரியான சில்லறை கொடுக்கவும்' என்று ஜபித்தபடி தரையை புரூஃப்ரீடிங் பார்வையால் அளாவத் தொடங்கினேன்.
வீடே வந்துவிட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை. நான் பார்த்த அத்தனை சோடா மூடிகளையும் பொறுக்கிப் பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருந்தால் பத்து ரூபாயாவது கிடைத்திருக்கும். மூணு இண்ட்டு மூணு ஒன்பது, மீதி ஒரு ரூபாய் லாபம் அடித்திருக்கலாம். ஆனால் அதிர்ஷ்டம் இல்லை.
ஏழை நாட்டில் பிறந்துவிட்டு இந்த மானம் மரியாதையெல்லாம் எவன் கேட்டான்?
மேட்ச்சிங் கிட்னி
"அப்பா, சாப்பிட வாங்கப்பா" என்று கத்தினாள் பார்கவி. அப்பா மொட்டை மாடியில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.
"எதுக்கு எல்லாத்துக்கும் உங்கப்பாவக் கூப்ட்டுக்குற?" என்றான் மாணிக்கம்.
"இது அவர் சாப்பிடற நேரம். உங்களுக்கு அவரோட சாப்பிடப் பிடிக்கலன்னா சீக்கிரமா சாப்பிடுங்க, இல்லன்னா லேட்டா சாப்பிடுங்க" என்று பொங்கினாள் பார்கவி.
"சீக்கிரமாதான் சாப்பிடுறேன். அஞ்சு நிமிஷத்துக்கு மேல சாப்புட என்ன இருக்கு இங்க?"
பார்கவி பதில் பேசாமல் தீபாவளி போனஸில் வாங்கிய 29 அங்குலத் தொலைக்காட்சியைப் பார்த்தவாறு வெள்ளரிக்காய் நறுக்கிக்கொண்டிருந்தாள்
"உங்கப்பாவப் பாரு" என்றான் மாணிக்கம், "இப்படியே வெயிட் போட்டுக்கிட்டிருந்தார்னா அவரை மொட்டை மாடிலதான் வெச்சுக்கணும். இப்பவே போலீஸ் என்கொயரில்லாம் வருது…"
பார்கவி தொலைக்காட்சி சத்தத்தை இரண்டு புள்ளிகள் அதிகரித்தாள்.
"இந்த ஊர்ல எவ்ளோ தெரு இருக்கு! சாயந்தரம் ஆனா மெதுவா நாலு தெரு நடக்கலாம்ல? ஊர் பூரா கடனா வாங்கிருக்காரு? வெளியூர் ஆளுதான? ரொம்ப நேரம் அசையாம உக்காந்திருந்தா கொலஸ்ட்ரால் பிச்சிக்கும். அதுக்குத்தான் சொல்றேன். நல்லதச் சொன்னா கேட்டுக்கணும். இதுல இவனுக்கு என்ன லாபம்னு யோசிக்கக் கூடாது."
மாணிக்கம் பேசி முடிக்கும்போது பூபதி கூடத்திற்குள் வந்தார். "மாப்ள, ஆபீஸ் கெளம்பலியா?" என்றார்.
"சாப்ட்டு ஓடிற வேண்டியதுதான்" என்றான் மாணிக்கம்.
பார்கவி சாப்பாட்டுத் தளவாடங்களைக் கொண்டுவந்து வைத்தாள். "சாப்பிட வரலாம்" என இருவரையும் பொதுவாக அழைத்தாள்.
பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்த மகன் கோபால் பள்ளி மூட்டையுடன் உள்ளறையிலிருந்து வெளிப்பட்டான். தொலைக்காட்சி எதிரில் குப்பைமேடாக இருந்த காபி மேஜையிலிருந்து சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டான்.
"காலைலயே எங்கடா கெளம்பிட்டே?" என்றான் மாணிக்கம்.
"போப்பா!" என்றவன், "குட்பை எவ்ரிபடி!" என்று கைகாட்டிவிட்டு வாசலை அண்மித்தான்.
"லைட்டர் எடுத்துக்கிட்டியா?" மாணிக்கம் விசாரித்தான்.
"அவனை சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காதீங்க!" கண்டித்தபடி நறுக்கிய வெள்ளரிக்காயை எடுத்துக்கொண்டு எழுந்தாள் பார்கவி.
"மாப்ளைக்கு எப்பவும் விளையாட்டுதான், இல்ல மாப்ள?"
"உங்களுக்குப் புரியுது, சம்பந்தப்பட்டவங்களுக்குப் புரியலியே!" என்றான் மாணிக்கம்.
"ஹெஹ்ஹெஹ்ஹே" என்றார் பூபதி.
மாணிக்கமும் பூபதியும் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். மாணிக்கத்தின் தட்டில் சோற்றைப் போட வந்தாள் பார்கவி.
"அட, முதல்ல அவருக்குப் போடு. அவர்தான் கெஸ்ட்டு" என்றான் மாணிக்கம்.
"இருக்கட்டும் மாப்ள, என்ன ஆயிடப்போவுது?"
"நீங்க சாப்பிட லேட்டாயிரும்ல?"
பார்கவி பரிமாறிக்கொண்டே அவனை முறைத்தாள். மாணிக்கம் பதிலுக்கு ஒன்றரைக் கண் செய்து காட்டினான்.
"ஜோக்கு" என்றான். பார்கவி கண்டுகொள்ளாதது போல் சென்றாள். பூபதி தர்மசங்கடப்பட்டது போல் மாணிக்கத்திற்குத் தோன்றியது.
பார்கவி குழம்போடு வந்தாள்.
அவள் குழம்பை ஊற்றுகையில், "மெதுவா ஊத்து, வெடிச்சிரப் போவுது" என்றான் மாணிக்கம்.
மாணிக்கம் அலுவலகத்திற்குக் கிளம்பிய பின்பு பார்கவியிடம் பூபதி கேட்டார், "அதெப்டிம்மா நீ எவ்ளோ முறைச்சாலும் மாப்ளைக்குக் கோவமே வர மாட்டேங்குது?"
"அவருக்குக் கோவம் வராது. ஆனா நம்மள நல்லா ஏத்திவிட்டு வேடிக்கை பாப்பாரு" என்றாள் பார்கவி எரிச்சலோடு.
"கொஞ்சம் பேசுவாரு, அவ்ளோதான?"
"என்னல்லாம் பேசுவாருன்னு உங்களுக்குத் தெரியுமா?"
"என்னதான் பேசுவாரு?"
"அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது. கோபிக்கே அவர் மேல ச்சீ-ன்னு ஆயிடுச்சு."
"அவனை என்ன பண்றாரு?"
"பேசுறாரே, அது போதாதா? அப்பாவா நார்மலா ஒரு வார்த்தை பேசுறாரா? எப்பப் பாத்தாலும் ஏதாச்சும் எடக்கு முடக்காத்தான் பேசிக்கிட்டிருப்பாரு. டெஸ்ட்ல முப்பது மார்க் வாங்கிட்டு வந்து நிக்குறான், இவரு அவன்கிட்ட ட்ரீட் கேக்குறாரு. முதுகுல நாலு வெக்க வேணாம்?"
"நான் உன்னையோ நீலாவையோ என்னிக்காவது அடிச்சி நீ பாத்திருக்கியா?"
"ஒவ்வொரு குழந்தைய ஒவ்வொரு மாதிரி வளக்கணும்."
"சரி, விடும்மா. அவனவன் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டி புள்ளைங்கள அடிக்கிறான்."
"அப்படி பண்ணாகூட பரவாயில்லயேப்பா, நான் திருப்பி அடிச்சிருவேன். விட்டுட்டு எங்கயாவது போயிடுவேன். இவுரு பேசிப் பேசியே கொல்றாரு. இவர்கிட்ட எப்டி பேசறதுன்னும் தெரியில."
"நீ பேசாம இரு. அப்புறம் பெருசா வளந்துரும். பேசி மனசை ஆத்திக்கோ. தினமும் கோயிலுக்குப் போ. வெள்ளிக்கிழம பூஜை பண்ணு. மனசு நிம்மதியா இருக்கும்."
வெளியே ஏதோ பெரிய சத்தம் கேட்டது. பார்கவியின் வீட்டு காலிங் பெல் காட்டுத்தனமாக நான்கைந்து முறை அழுத்தப்பட்டது. பார்கவி பல்லைக் கடித்துக்கொண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். நடுத்தெருவில் மாணிக்கம் நினைவின்றி விழுந்து கிடக்க, அவனைச் சுற்றிப் பத்து பேர் அவனை உட்காரவைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். மாணிக்கத்தின் பைக் பல அடிகள் தள்ளி பெட்ரோலை ஊற்றியபடி எதிர்ப்பக்கமாகக் கிடந்தது. சிறிது தொலைவில் ஒரு டாடா இண்டிகா ஒரு கதவு திறந்த நிலையில் இருந்தது.
பார்கவி பதறிப் படிகளில் இறங்கி ஓடினாள். சூழ்ந்திருந்தவர்கள் விவரம் சொன்னார்கள். மாணிக்கம் வண்டியைப் பின்னால் நகர்த்தும்போது இண்டிகாகாரன் வேகமாக வந்து இடித்திருக்கிறான். மாணிக்கம் பைக்கிலிருந்து தூக்கியெறியப்பட்டிருக்கிறான். பைக் எங்கேயோ போய் விழுந்துவிட்டது. கார்காரன் காரை விட்டு ஓடிப்போய்விட்டான். பெட்ரோல் டேங்க் கூட உடைந்துவிட்டது. மாணிக்கம் அதிர்ச்சியில் மயங்கிவிட்டான், ஆனால் அடிகிடி எதுவும் பட்ட மாதிரித் தெரியவில்லை. முகத்தில் தண்ணீர் அடித்து சோடா குடிக்கவைத்து பக்கத்து கிளினிக்கில் முதலுதவி கொடுக்கலாம் என்றார்கள்.
அப்போது மாணிக்கத்தின் வயிற்றுப்பகுதிச் சட்டையில் வேகமாக ரத்தம் பரவித் தரையில் சிந்தத் தொடங்கியது. உடனே 108 ஆம்புலன்சை அழைத்தார்கள். பார்கவி ஐயையோ என்று விம்மினாள். அதற்குள் பூபதியும் கீழே இறங்கி வந்துவிட்டிருந்தார்.
ஆம்புலன்ஸ் வந்ததும் மாணிக்கத்தை உடனே அதில் ஏற்றினார்கள். "நீங்க இருங்கப்பா, நான் பாத்துக்குறேன்" என்று பூபதியிடம் சொல்லிவிட்டு பார்கவி ஆம்புலன்சில் ஏறினாள்.
மாணிக்கத்தை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள். சிறிது நேரத்தில், தமிழில் பேசினால் அடித்துவிடக்கூடிய தலைமை ஆசிரியை போல் ஒரு மருத்துவர் வந்து பார்கவியிடம் விளக்கினார்: "ரெண்டு கிட்னீஸும் டேமேஜ் ஆயிருக்கு. ரைட் கிட்னிய ட்ரீட் பண்லாம். ஆனா ரொம்ப நாள் வராது. ரிமூவ் பண்றது பெட்டர். லெஃப்ட் கிட்னி சுத்தமா டேமேஜ் ஆயிருக்கு. லிவர் இஸ் ஓ.கே. நோ ஹெட் இஞ்சுரீஸ், அதனால கவலையில்ல. நமக்கு அர்ஜன்ட்டா ஒரு கிட்னி டோனர் வேணும். எங்களோட யூஷுவல் சோர்சஸ்ல கேட்டிருக்கோம். ஆனா உங்க ஹஸ்பெண்டுக்கு மேட்ச்சிங் கிட்னி கிடைக்கலைன்னா அடுத்து என்ன பண்ணணும்னு யோசிக்கணும். உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க?"
"நான், என் பையன் -"
"என்ன வயசு பையனுக்கு?"
"பதினாறு. ப்ளஸ் ஒன் படிக்கிறான். அப்புறம் எங்கப்பா இருக்காரு. அவருக்கு 69 வயசு" என்றாள் பார்கவி சப்ஜாடாக.
"அப்ப உங்க மூணு பேருக்கும் சில டெஸ்ட்ஸ் பண்ணணும். கிட்னி மேட்ச் ஆகுதான்னு பாக்கணும்."
"என் பையனுக்குக்கூடவா?"
"அடல்ட் கன்சென்ட் இருந்தா பையன் கிட்னி குடுக்கலாம். உங்க ஹஸ்பெண்டுக்கு எந்த கிட்னியும் மேட்ச் ஆகலன்னா என்ன பண்ணுவீங்க? பட் இட்ஸ் அப் டு யூ."
"இல்ல டாக்டர், அவனுக்கும் டெஸ்ட் பண்ணிடுங்க, பரவால்ல."
"பயப்படாதீங்க. கிட்னி டொனேட் பண்ணா ஒண்ணும் ஆகாது. இன்ஷுரன்ஸ், மெடிக்ளெய்ம் எல்லாம் இருக்கில்ல?"
மாணிக்கத்திற்குச் சகலவித குழாய்களையும் பொருத்தியிருந்தது மட்டுமின்றி திரையில் எண்களும் வரைபடமும் தெரியும் ஓரிரு இயந்திரங்களையும் இணைத்திருந்தார்கள். மேல் தோற்றத்திற்கு ரத்தக் காயம் இல்லாமல், ஆனால் சாகக் கிடப்பது போல் தெரிந்தான் அவன்.
மறுநாள் மாணிக்கத்திற்கு நினைவு திரும்பியது. அது வரை பார்கவிக்குச் சந்தேகமாகத்தான் இருந்தது. திடீரென்று நர்ஸ்கள் எல்லாம் குறுக்கும் நெடுக்கும் ஓடி காபரா செய்து 'மாணிக்கம் பேஷன்ட் எக்ஸ்பயரி ஆகிவிட்டார்' என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? இருந்தாற்போலிருந்து எல்லா சுமையும் தன் மீது விழுந்தால் எப்படி இருக்கும் என்று அவளுக்கு உதறியது.
மாணிக்கம் கொஞ்சம் பேசினான், தண்ணீர் கேட்டான். அங்கிருந்த நாற்காலியில் பூபதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டான். அதற்குள் பூபதி அவனைப் பார்த்துவிட்டார்.
"இப்ப பரவால்லையா மாப்ள?" என்றார்.
"வலி பின்னுது" என்றான் மாணிக்கம்.
இரவு கனிவான தோற்றம் கொண்ட வேறொரு முதுநிலை மருத்துவர் வந்தார். அவரும் பெண்தான். "எங்க சோர்சஸ்கிட்டேந்து மேட்ச்சிங் கிட்னி கிடைக்கல. எய்தர் உங்க அப்பா அல்லது உங்க பையன்தான் குடுக்கணும். ரெண்டு பேர்தும் மேட்ச் ஆகுது" என்றார்.
"எங்கப்பாவோட கிட்னி மேட்ச் ஆகுதுன்னா அதையே எடுத்துக்குங்க. அவரு ஹெல்த்தியாதான் இருக்காரு" என்றாள் பார்கவி.
"வேணாம் ப்ளீஸ்!" என்றான் படுக்கையிலிருந்து மாணிக்கம் மூச்சு வாங்க.
"என்ன பேசுறீங்க? கிட்னி இல்லாம உயிரோடயே இருக்க முடியாது!" என்றாள் பார்கவி.
"நான் எங்க வேணாம்னு சொன்னேன். உங்கப்பாதுதானே வேணாம்னேன்!"
"விளையாடாதீங்க-ங்க! அப்ப சின்னப் பையன்கிட்டேந்து கிட்னி எடுப்பாங்களா?"
"அவன் என் பையன்தானே. அப்பனுக்கு மகன் செய்யக் கூடாதா? மனுஷனுக்கு ஒரு கிட்னி போதும். அவனோட கிட்னியக் குடுங்க. இல்லன்னா என்னை சாக விடுங்க" என்றான் மாணிக்கம் சன்னமாக, ஆனால் உறுதியாக.
பார்கவி சிலைத்து நின்றிருந்தாள். 'இவனும் ஒரு மனிதனா?' என்பது அவளுக்கு உறுதிப்பட்டது. எக்கச்சக்கமான சூழ்நிலையில் வந்து மாட்டிக்கொண்டோமே என்பது போல் மருத்துவர் விழித்தார், புன்னகைக்க முயன்றார்.
"டெசிஷன் உங்களுதுதான். இப்ப மணி எய்ட் தர்ட்டி. டென் தர்ட்டிக்கு வந்து பாக்கறேன் உங்களை. எதுக்கும் கவலைப்படாதீங்க" என்று அகன்றார் மருத்துவர்.
மருத்துவர் போன பின்பு பார்கவி மாணிக்கத்திடம் கண்ணீர் கலந்து கேட்டாள்: "உங்களுக்கு கோபி மேல பாசமே இல்லியா? எவ்ளோ சின்னப் பையன் அவன். உங்க பையனுக்கு நீங்க குடுக்கணும். உங்க சுயநலத்துக்காக அவனைக் கூறு போடணுமா! எங்கப்பா கிட்ட நான் என்ன சொல்வேன்? அவர் உங்களுக்கு என்ன பாவம் பண்ணாரு?"
மாணிக்கம் பதிலளிக்காமல் கண்களை மூடிப் படுத்திருந்தான். முன்பகை இல்லாமல் யார் மீதும் வெறுப்பு வரக் கூடாது என்று எவனோ கிளப்பி விட்டிருக்கிறான் என்று நினைத்துக்கொண்டான்.
ஒன்பதரை மணிக்குக் கனிவான மருத்துவர் நல்ல செய்தி சொன்னார். "மேட்ச்சிங் கிட்னி கெடச்சிருக்கு. ஸோ கவலப்படாதீங்க. இந்த ஸ்லிப்பை பில்லிங்-ல குடுத்து பே பண்ணிடுங்க. நாளைக்கு மார்ணிங் சர்ஜரி பண்ணிடலாம். ஹீஸ் அதர்வைஸ் ஓக்கே." பார்கவிக்கு மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கியது. குடும்பம் சிதையாமல் தப்பித்தது போல் உணர்ந்தாள்.
எது எதற்காகவோ எடுத்துவைத்த தொகைகளைத் திரட்டி அறுவைச் சிகிச்சைக்குக் கட்டினாள் பார்கவி. அது வரை செலவு செய்த லட்சங்களில் ஏறத்தாழ அறுபது சதவீதத்தைத்தான் மெடிக்ளெய்ம், காப்பீடுகள் ஆகியவற்றில் மீட்க முடியுமாம். எதற்காக இந்த வீண் செலவு என்று அவளுக்குத் தோன்றாமல் இல்லை.
மூன்று பேர் பகிர்ந்துகொண்ட ஒரு வார்டில் இருவார காலம் இருந்தார்கள். ராத்தங்கல், டயாலிசிஸ் வேதனைகள், ஃப்ளாஸ்க் காபி, கேன்டீன் இட்லி, திடீர் செலவுகளுக்குப் பணம் கட்டுதல், மருந்து, உபகரணங்கள் வாங்கித் தருதல், இதர அலைச்சல்கள், இடையிடைக் கவலைகள், பயங்கள் என்று இரண்டு வாரங்கள் கழிந்தன.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பி வந்த அன்று மாணிக்கம் இருவார செய்தித்தாள்களை அருகில் குவித்துப் போட்டு ஒவ்வொன்றாக மேய்ந்துகொண்டிருந்தான். பார்கவி கஞ்சிப் பாத்திரம் மற்றும் டம்ளருடன் அவனது அறைக்குள் வந்தாள்.
"எங்கப்பா நாளைக்கு நைட் கெளம்பறாரு" என்றாள் குற்றம்சாட்டும் தொனியில்.
"அவரைக் கிளம்பவைக்க ஆறு லட்சமும் ஒரு கிட்னியும் செலவாயிருக்கு. பீம்பாய் பீம்பாய்!" என்றான் மாணிக்கம்.
"அவர் ஒண்ணும் உங்களுக்காகக் கெளம்பல. நாளைக்குக் கெளம்பணும்னுதான் ப்ளான். அவருக்கு 2 மணிக்கு ஃப்ளைட்." உண்மையில் பூபதிக்கு சிகாகோவில் இளைய மகள் வீட்டில்தான் வாசம். அந்த சொகுசைப் போய் விட்டுவிட்டு இங்கே வந்து ஏன் இடத்தை அடைத்துக்கொள்கிறார் என்று மாணிக்கத்திற்குப் புரிந்ததே இல்லை.
"ஆகா, அப்ப நான்தான் அவசரப்பட்டுட்டனா?" என்றான் அவன்.
எப்போதும் போல் பார்கவி பதில் சொல்லாமல் கஞ்சி சார்ந்த பொருட்களை வைத்துவிட்டுப் போனாள். அவள் போனதும் பின்னாலேயே கோபி வந்தான்.
"என்னடா, இப்பதான் அப்பா ஞாபகம் வந்துதா?" என்றான் மாணிக்கம்.
"அப்பா, நான் உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்" என்றான் கோபி எங்கோ பார்த்துக்கொண்டு.
"என்னடா?"
"உனக்காக நான் ஆயுசு பூரா ஒரே ஒரு கிட்னியோட வாழணுமாப்பா?" கோபிக்கு அழுகை வருவது போல் இருந்தது.
"தாத்தா மட்டும் ஆயுசு பூரா ஒரே ஒரு கிட்னியோட வாழலாமாடா? உனக்குத் தாத்தா புடிக்காதா?"
"தாத்தாவ விடு. என் உடம்புலேந்து ஒரு முக்கியமான பார்ட்ட அப்டி எடுக்கலாமா? நான் சின்னப் பையன்தானே?"
"டேய், நான் ஆயுசு பூரா உன் தாத்தாவோட கிட்னியோட வாழணுமாடா? அத யாராவது யோசிச்சுப் பாத்தீங்களாடா? நீ என் மவன்தானே?"
கோபி வாதத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ளும் தோரணையில் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு அறையிலிருந்து வெளியேறப் போனான்.
"டி.வி. சீரியல் ரொம்பப் பாக்காதடா! உருப்புடாம போயிருவ!" என்றான் மாணிக்கம் கோபியின் முதுகிடம்.
போதையைப் போடுதல்
மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான லபக்குதாஸ் (இயற்பெயர் நவநீதன்) ஒரு "தண்ணீர் பார்ட்டி". வாரநாட்கள் தவிர தினமும் குடிப்பவர். நேற்று மாலை வீட்டுக்கு யாரோ வருகிறார்கள் என்று என் மனைவி சொன்னபோது எனக்கு நவநீதனுடன் ஒரு சந்திப்பு திட்டமாகியிருப்பதாகச் சொல்லித் தப்பித்தேன். பல சிக்கல்களில் நான் அவர் பெயரைப் பயன்படுத்திக்கொள்வது பழக்கம்.
நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது கதவு பாதி திறந்திருந்தது. அதை மேலும் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். லபக்குதாஸ் பல சுற்றுக்கள் "ஓல்டு மாங்க்" அருந்தியிருந்தார் ("நானே ஒரு ஒல்டு மாங்க்குதான்யா"). கூடுதலாக இரண்டு மிக்சர் தட்டுகளைப் பார்த்து இரண்டு பேர் குடித்துவிட்டுப் போனதைப் புரிந்துகொண்டேன். நான் குடிப்பவன் அல்ல. "மிக்சர் பார்ட்டி"தான்.
நான் வருவதாக அவரிடம் சொல்லவேயில்லை. இருந்தாலும், "ஏன்யா லேட்டு?" என்றார். அவர் இருந்த நிலையில் வீட்டுக்குள் ஒரு மாடு நுழைந்திருந்தால்கூட அதனிடமும் அதையேதான் கேட்டிருப்பார். என் கண்களைப் பார்க்காதது போல் பார்த்து "இந்த இது… எது?… ஆயிரத்தி அறுபதுகள்ல… புதுசு… எல்லாம் லெதர்… நான் வேணாம்ட்டேன்… கண்டிக்கணும்… ப்ரியம்… அது தாத்பரியத்தின் மௌன ரேகை…" என்று ஒரேயடியாகக் குழறினார். இதற்குப் போட்டியாக என்னாலும் பேச முடியும். அரிதாக சில மேடைப் பேச்சுகள், கட்டுரைகள், மதிப்புரைகள், கவிதைகள், நாவல்கள் அப்படி அமைந்துவிடுகின்றன. ஆனால் அன்றைக்குப் பார்த்து எனக்குப் பொறுமை இல்லை.
இரண்டு ஊர்கள் பயணமிட்டு வந்ததற்காவது சிறிது நேரம் அவரது புத்தக அலமாரியை மேய்ந்துவிட்டுப் போகலாம் என எழுந்து அலமாரியை நோக்கி நகர்ந்தேன். லபக்குதாஸ் என் அசைவுகளை லட்சியமே செய்யவில்லை. அவரைப் பொறுத்த வரை நான் தாமதமாக வந்தேன், அவ்வளவுதான். மற்றபடி நான் அங்கே இல்லை. போதை தர்க்கம் அறியாது.
கடைசியாக நான் திரும்பிப் பார்த்தபோது அவர் தொட்டுக்கொள்வதற்கு வைத்திருந்த பாகற்காய்ப் பொரியலில் ஒரு துண்டை எடுத்து "உங்கிட்ட ஏன் எப்பவும் ஒரு பிட்டர்னஸ்?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
விஷ ஊசி
தோக்வில் சாலை சோதனை நிலையத்தில் இருளடியில் இருந்த கார்களில் உளவாளி விஷ ஊசியின் காருக்கு முன்பு மூன்று கார்கள் இருந்தன. அப்படிப் பார்த்தால் விஷ ஊசியின் கார் அந்த வரிசையில் நான்காவது என்று ஆகிறது. அது பிரச்சினைதான். ஒரு ஏழெட்டு இருந்தால் வசதி என்று நினைத்தான் விஷ ஊசி. சிக்கினால் சாத்தியமான கைதும் அதையடுத்த சிறையடைப்பு, சித்திரவதை மற்றும் மரணமும் சில நிமிடங்களுக்குத் தள்ளிப்போடப்படும் என்றால் யாருக்குத்தான் இனிக்காது?
சரித்திரத்தின் இந்தக் கட்டத்தில் பாரீஸிலிருந்து வெளியேறுதல் நாஜிகளிடமிருந்து தப்புவதாகும். காரணம், பிரான்சின் உள்ளூர்ந்த கிராமப்புறங்களில் நாஜி நடமாட்டம் மருந்துக்கு மட்டுமே. பாரீஸ் போல நாஜிகள் மொய்க்கும் இடங்களாக அவை இல்லை. போராளிகளுக்குத் தெருக்களுக்கு வழி சொல்வது போன்ற உதவிகளை அஞ்சாமல் செய்யலாம். பாரீஸை விட்டு வெளியேற விஷ ஊசி ஜெர்மானியன் போல் வேடம் போட வேண்டும். அவனிடம் ஜெர்மானிய ஆடை அணிகலன்களும் கொஞ்சம் ஜெர்மன் மொழியும் ("டாங்கே!") இருந்தன. ஜெர்மானியர்களுக்கு பிரான்சில் "வாசி லா வாத்யூர்" தவிர ஒன்றும் தெரியாது என்று அவனுக்குத் தெரியும். காவலர்கள் உடைபட்ட பிரெஞ்சில் ஏதாவது கேட்டால் தன்னுடைய ஜெர்மனில் "இயர் இஸ்ட் டி அவுட்டோ" என்று சொல்லிச் சமாளிக்கலாம்.
பிரச்சினை என்னவென்றால், விஷ ஊசி இது வரை என்றைக்குமே கிரகஸ்தன் அல்லன். குடும்ப சமேதனாக காரில் உட்கார்ந்திருந்தால் அவர்கள் விட்டுவிடக்கூடும். தனியாக மோட்டார் வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு ஆளும் ஒற்றனாக இருக்கலாம் என்று உளவுத் தலைவர் ருடோல்ஃப் பீடர்கோப்ஃபிடமிருந்து நேரடி உத்தரவு வந்திருந்தது. ஓர் ஒற்றன் என்ற முறையில் இது அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒற்றன் என்றால் அச்சுக்கோத்தாற்போல் ஒற்றன் கிடையாது. அனுமதியற்ற விருப்ப ஓய்வு பெற்றவன் எனலாம். எனவே விஷ ஊசியை நான்கு நாடுகளின் உளவுத் துறைகளும் பின்னர் நான்கு நாடுகளினுடையக் கூட்டு உளவு அமைப்பு ஒன்றும் தேடிக்கொண்டிருந்தன என்று சொல்ல வேண்டும்.
விஷ ஊசிக்குப் பெண்கள் மீது கடந்தகாலப் பின்னணியுடன் கூடிய உளவியல் வெறுப்பேதும் இல்லை. அவன் பெண்களைப் பிடிக்கவே செய்தான். திருமணம் செய்துகொள்ளும் அளவிற்குப் பிடிக்காது, அவ்வளவுதான். சர்ச்சில் முத்தமெல்லாம் கொடுப்பார்கள் என்று அவனை உளவாளி என்று தெரியாத நண்பர்கள் ஆசை காட்டினாலும் ஒற்றனுக்குத் தேவையற்ற சுமை கூடாது என்பார் அவனைத் தன்னுடைய விசுவாச ஊழியன் என்று நம்பிக்கொண்டிருந்த ஜெர்மன் உளவுத் துறை வட்டச் செயலாளர் (சாவு) எமில் கோட்ஃப்ரீட். "எய்ன் இண்டெலிஜென், நிஹ்ட் பேகேஜென்."
இப்படித்தான் விஷ ஊசி தனிக்கட்டையாகப் பயணிக்க வந்தது. அத்துடன் அவனுக்கு முன்பு இன்னும் ஒரு கார் பாக்கி இருந்தது. காத்திருக்கும் அநேகமான முப்பது நொடிகளில் எந்தப் பெண்ணையாவது சந்தித்து அவளது உள்ளம் கவர்ந்து பெற்றோரைச் சம்மதிக்கவைத்து சர்ச்சில் முத்தம் கொடுத்துத் திருமணம் செய்துகொண்டு வதவத என்று குழந்தைகளும் பெற்றுக்கொண்டு அத்தனை பேரையும் சட்டென்று காரில் ஏற்றிக் குடும்பஸ்தன் என்று காவலர்களிடம் காட்டிக்கொள்ள முடியுமென்றால் விஷ ஊசி அதைத் தாராளமாகச் செய்திருப்பான். அதற்கெல்லாம் தயங்குகிற ஆளே இல்லை அவன். ஆபத்திலிருந்து தப்பிக்க ஆபத்துகளில் இறங்குவது தவிர எதையும் செய்யத் துணிந்தவன் விஷ ஊசி. ஆனால் இப்போதைய நிலைமை அவனை அடுத்த கார்காரன் ஆக்கியிருந்தது. அதிலிருந்து விடுதலை இல்லை.
ஹிட்லர் ஆட்சி எப்படி என்றால் எல்லோருக்கும் ஹிட்லர் மீது நம்பிக்கை இருந்தது. யாருக்கும் அடுத்தவர் மேல் நம்பிக்கை இல்லை. ஒவ்வொருவரும் பக்கத்து நபர் ரகசிய போலீஸ்காரர், ஆனால் ஹிட்லர் பாதுகாப்பானவர் என்று நம்பினார்கள். உண்மையில் ஹிட்லர் நிஜ மனிதர் அல்லர், ஓர் இயந்திரம் என்றும் அதனுள் இருந்த வேறொருவர் அவரை இயக்கினார் என்றும் ஒரு கருதுகோள் இருந்தது. இன்னொரு கருதுகோளின்படி உள்ளே இருந்த ஆள் ஹிட்லர்தான், ஆனால் இன்னும் முட்டாளானவர். எனவே, விஷ ஊசி தன்னை ஜெர்மானியனாகக் காட்டிக்கொண்டாலும் காவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருந்தது. உண்மையில் ஜெர்மானியர்களைத்தான் அவர்கள் அதிகம் சந்தேகித்தார்கள். சராசரி ஜெர்மானியனைவிட கூட்டணி நாடுகளின் உளவாளிகள் தேவையின் கட்டாயத்தால் தரமான ஜெர்மானியக் கல்வி பெற்றிருந்தனர். காவலர்கள் "எங்கே, கதேயின் கவிதை ஒன்றைச் சொல்லு" என்பார்கள். நாம் அப்பாவியாகச் சொன்னால் – சும்மா ஜெர்மனில் ஆனா ஆவன்னா சொன்னால்கூட – மண்டையில் சுட்டுவிடுவார்கள். அதற்குப் பின்பு உயிரோடு இருப்பதாவது!
இதெல்லாம் விஷ ஊசிக்குத் தெரியாமலில்லை. ஆனால் ஓர் உளவாளிக்கு எவ்வளவு தெரிகிறதோ அவ்வளவு பயம் இருக்கும். பிரெஞ்சு பேசினால் தனியாகப் பயணிப்பதன், பொதுவாகப் பயணிப்பதன் காரணத்தை விளக்க வேண்டும். ஜெர்மன் பேசினால் பார்த்துப் பேச வேண்டும். இவ்வளவுதான் விஷயம். இதைச் செய்வதுதான் கடினம்.
கார் வேண்டாம், நடந்து போவோம் என்றாலும் நடைக் காவலர்கள் கூப்பிட்டு அங்கே எங்கே போகிறாய் என்று விசாரிப்பார்கள். அவர்களும் திருப்தி ஏற்படாவிட்டால் உடனே சுட்டுவிடக்கூடியவர்கள்தாம்.
முன்னங்கார்காரன் ஒரு காவலனுடன் ஜெர்மனில் வாதிட்டுக்கொண்டிருந்தான். உளவுப் பயிற்சி எதையும் கவனிக்க விஷ ஊசிக்குச் சொல்லிக்கொடுத்திருந்தது. அவனும் கவனித்தான். கார்காரன் கூரை மேல் இரண்டு பெரிய பெட்டிகளைக் காரோடு சேர்த்துக் கட்டியிருந்தான். காவலர்கள் அதைச் சோதனை போட வேண்டும் என்றார்கள். பாதி நாள் கஷ்டப்பட்டுக் கட்டியது, இப்போது அதை அவிழ்த்துத் திருப்பிக் கட்ட முடியாது என்றான் கார்காரன். அவன் குடும்பத்தினர் உள்ளேயிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவனுடைய பெண் குழந்தை ஒன்று விடைபெறுவது போல் ஜன்னல் வழியே காவலர்களுக்குக் கை ஆட்டிற்று. "அவசரப்படாதே" என்றான் கை ஆட்டப்பட்ட காவலன் அதனிடம்.
விஷ ஊசிக்கு இது நல்ல வாய்ப்பாகப் பட்டது. தன் காரிலிருந்து இறங்கிச் சென்று காவலர்களுக்கு ஆதரவாக கார்காரனிடம் பேசத் தொடங்கினான். அதற்குள் பின்னால் இருந்த கார்கள் பொறுமையிழந்து பாம் பாம் என்று ஒலியெழுப்பத் தொடங்கின. பேசிக்கொண்டிருந்த காவலன் ஆத்திரமாகி வானத்தை நோக்கிச் சுட்டான். உடனே அமைதியாகியது. விஷ ஊசிக்கோ துப்பாக்கிச் சத்தம் கேட்டு வியர்க்கத் தொடங்கிவிட்டது. பற்கள் செய்தியின்றித் தந்தியடித்தன. அதை மறைத்துக்கொள்ளச் சட்டென்று ஒரு பிஸ்கட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான், அவசரமாகக் கடித்துத் தின்பது போல் தெரியட்டும் என்று. ஆனால் பிஸ்கட்டை மென்றுகொண்டே பேசியதில் அவன் பேசியது காவலர்களுக்குப் புரியவில்லை. இன்னொரு காவலன் விஷ ஊசியைத் தள்ளிச் சென்று அவனுடைய காரில் உட்காரவைத்தான். விஷ ஊசி ஜெர்மனில் பேசியதைக் கேட்டு அவன் பிரெஞ்சுக்காரன் என்று நினைத்துக் கையால் பொறுத்திரு என்று சைகை காட்டினான் காவலன். பிறகு சர்ச்சைக்குரிய காரை ஒரு சந்துக்குள் திருப்பி நிற்கவைத்தார்கள். கண்டிப்பாக அந்த கார்காரனுக்குத் தொடர்புகள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காவலர்கள் பேச்சில் இவ்வளவு நேரத்தைச் செலவிட மாட்டார்கள்.
இப்போது ஒரு புதிய பிரச்சினை முளைத்தது. விஷ ஊசி ஆதரித்துப் பேசிய காவலர்கள் அந்த காரோடு சேர்ந்து போனார்கள். அவர்களின் இடத்தில் வேறு காவலர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு விஷ ஊசி ஜெர்மன் பாதுகாவல் துறையின் சூழ்நிலைசார் ஆதரவாளன் என்பது தெரியாது. அடுத்து இவனுடைய கார்தானே.
எந்த மாதிரி அணுகுமுறையால் விஷ ஊசி இரட்டை உளவாளியாகக் கருதப்பட்டானோ அதே அணுகுமுறையை இப்போது அவன் பிரயோகித்தான்: உண்மையைச் சொல்லிவிட்டு ஆளை விடுமாறு கெஞ்சிக் கேட்டுவிடுவது. உண்மையைவிட மேன்மையானது ஏது? இந்தத் தீர்மானம் அவனைக் குழப்பத்திலிருந்து விடுவித்து உற்சாகமளித்தது. புதிய தெளிவில் விஷ ஊசி ஒரு ஜாஸ் ராகத்தைச் சீட்டியடிக்கத் தொடங்கினான். கதேயின் பாடலைக் கேட்டால் நேரடியாகப் பதிலளிக்கக் கூடாது என்பது அப்போதும் கடைபிடித்தாக வேண்டியது என்பதை அவன் மறக்கவில்லை.
விஷ ஊசி பயந்தது போல் புதிய காவலர்கள் இருகைகளை நீட்டிக்கொண்டு அவனை நோக்கி குதித்தோடு வரவில்லை; இடுப்புத் துப்பாக்கியில் கையை வைத்துக்கொண்டு விஷ ஊசியின் காரை நோக்கி மரணமாக நடந்து வந்தார்கள். விஷ ஊசிக்குத் தெளிவெல்லாம் பறந்துபோய் மிதமிஞ்சிய பதற்றத்தில் சிரிப்பு வந்தது. ஒரு காவலன் அருகில் வந்து விஷ ஊசியிடம் பேசாமல் காருக்குள்ளே எட்டிப் பார்த்தான். உடன் இருந்த காவலனிடம் "நிஹ்ட் பெர்சோனென்" என்றான். அந்த இரண்டாம் காவலன் காரைத் தட்டிப் பார்த்தான், கதவின் மேல் காதை வைத்துக் கேட்டான்.
ஒரு வழியாக முதல் காவலன் விஷ ஊசியிடம் கேட்டான்: "என்ன விஷயம்?"
விஷ ஊசி தனது அடையாளக் காகிதங்களை எடுத்தபோது ஜெர்மன் காகிதங்கள்தாம் வந்தன.
"ஒன்றும் இல்லை" என்றான் ஜெர்மனில்.
"ஜெர்மன் எங்கே கற்றாய்?"
"பெர்லினில். நான் ஜெர்மானியன்." சொல்லிவிட்டு வியர்த்தான் விஷ ஊசி.
"ஓ? ஓட்டோ, இவர் ஜெர்மானியராம்."
இரண்டாம் காவலன் முன்னே வந்தான்.
"ஜெர்மானியரா?"
"ஆமாம். கதேயின் பாடல் ஒன்று சொல்லவா?" என்று விஷ ஊசி பாடத் தொடங்கினான். "டென் ஃப்ரீடென் கான் டஸ் வோலன் நிஹ்ட் பெரைட்டன்: வெர் ஆலெஸ் வில்…"
"கிளம்பு, கிளம்பு. திரும்பி வராதே."
"ஹைல் ஹிட்லர்!"
"போ போ, நிற்காதே!"
நண்பர்களும் வாசகர்களும்
லபக்குதாசுடன் பல ஆழமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
பிரக்ஞைக்கும் புறக் காரணிகளுக்கும் இருக்கக்கூடிய உறவு, அல்லது பிரக்ஞை என்பது புறக் காரணிகள் இன்றி (அப்படி எவையும் இல்லாததால்) நம் புலன் உணர்வுகளைக் காரணமில்லாமல் simulate செய்கிற, தனக்குள் அடங்கிய, தான் மட்டுமே இருக்கிற ஓர் அற்ப மாயையா, காலத்திற்கும் பிரக்ஞைக்கும் உள்ள உறவு, மரணம் எப்படி 'உயிர் பிரித'லாக இல்லாமல் ஒரு 'நிறுத்த'மாக (cessation) விளங்குகிறது, தூசு பறக்கும்போது கண்கள் தாமாகச் சட்டென மூடிக்கொள்வது போன்ற அனிச்சைச் செயல்களிலும் இந்த ஓட்டலில் பரோட்டா கொடுமையாக இருக்குமே என்பன போன்ற கவலைகளிலும் வெளிப்படும் சின்னஞ்சிறு பயங்கள்கூட எப்படி உயிர்பிழைத்தல் (survival) குறித்த பயத்துடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளன என்றெல்லாம் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இம்மாதிரி விஷயங்கள் நான் அன்றாடப் போக்கில் சிந்திப்பவைதான். வாசகர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இவை பற்றி எழுதுவதில்லை.
லபக்குதாஸ் சிகரெட்டுகளை ஊதிக்கொண்டே எல்லாவற்றையும் மௌனமாகத் தலையசைத்துக் கேட்டுவிட்டு, "இதெல்லாம் எந்த புக்குல வருது?" என்று கேட்டு அவமானப்படுத்திவிட்டார். "நாமளும் நாலு வார்த்த கத்துக்குவோம்."
அதே விஷயங்களை வார்த்தை மாறாமல் அருமை வாசகர் 'வன்மதி' மோகனிடம் சொன்னபோது அவர் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்துவிட்டு "இதெல்லாம் புக்கா போடலாமே சார்?" என்றார்.
இதுதான் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் உள்ள வேறுபாடு.
விநாயக சதுர்த்திக் காட்சிகள்
ஆண்டுக்கு ஒருமுறை காலையில் எழுந்து பல் தேய்த்துவிட்டுப் பிள்ளையார் வாங்கப் போவது எனக்கும் என் மகனுக்கும் ஒரு சடங்கு. நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, சனியனைச் செய்து முடித்தால் ஒரு காரியம் ஆயிற்று. இன்று காலையில் பிள்ளையார் தாங்கி அட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு நானும் வாரிசும் கிளம்பினோம். நான் நாகரிகமாகத் தோற்றமளித்தேன். என் மகனுக்கு அவனுடைய தாயார் – என் மனைவி – விபூதி, குங்குமம், சந்தனம் என்று நெற்றியை ரணகளம் ஆக்கியிருந்தார். தான் அலங்கரிக்கப்படும் objectification அவமானத்தை அறியாத மாட்டுப் பொங்கல் மாடு போல் அவன் 'எல்லாம் நன்மைக்கே' என்ற முகபாவத்தோடு வந்தான்.
எதுவும் விட்டுப்போகாதிருக்க ஒரு பட்டியல் தயாரித்துச் சட்டைப்பையில் வைத்திருந்தேன்:
பிள்ளையார் (சின்னது) – 1
குடை (சின்னது) – 1
எருக்க மாலை (மொட்டுகள் உடையாதது) – 1
பிள்ளையார்க் கண் – 4
உபரி களிமண் – தேவைக்கேற்ப
சாமந்தி – 2 முழம்
மல்லிகை – 2 முழம்
ஊதுபத்தி – 1 டப்பா
மஞ்சள் வாழைப்பழம் – 6
மளிகைக் கடைக்குப் போவது போல் இருந்தது. ஆனால் அவன் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விடுவான். நாம் அலைய வேண்டியிருக்காது. ஒரே பிரச்சினை, அவனிடம் வாழைப்பழம் இல்லாவிட்டால் நம்மைக் கேட்காமல் லேஸ் சிப்ஸ் போட்டுவிடுவான்.
எல்லோர் வீட்டு வாசலிலும் தெளிவாக, அழகாகக் கோலம் போட்டிருந்தார்கள். மழைக்காலத்தில் நாய்க்குடைகள் மற்றும் புற்றீசல் போல் தெருக்களெங்கும் பிள்ளையார் கடைகள் முளைத்திருந்தன. தரையெல்லாம் வீண் ஓலைத் தோரணங்கள் இறைந்து கிடந்தன. ஓரிரு மாடுகள் அவற்றை அசை போட்டுக்கொண்டு எங்களை வேடிக்கை பார்த்தன. மக்கள் வருடாந்தர சடங்குகளுக்கே உரிய உற்சாகத்துடன் பொருட்களை பேரம் பேசி வாங்கிக்கொண்டிருந்தார்கள். பிள்ளையார்களின் அணிவகுப்பில் எல்லா பிள்ளையார்களும் ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றிலும் தங்களுக்கு வேண்டியதை மக்கள் கவனமாகத் தேர்ந்தெடுத்து வாங்கியதைப் பார்க்க சந்தோசமாக இருந்தது.
நடமாடும் வாகனங்களைக் காணோம். நடராஜா சர்வீஸ்கள்தான் அஸ்திக் கலசம் போல் பிள்ளையார்-குடை-எருக்கமாலை சேர்க்கையைச் சுமந்தபடி காணப்பட்டனர். வெறும் பிள்ளையாருடன் நடை போட்டவர்களைப் பார்த்துக் குடை விற்பனையாளர்கள் "சார், கொட சார்!" என்று கத்தினார்கள். முக்கியமாக, குடும்பப் பெண்களும் இளம்பெண்களும் பட்டாடை அணிந்து ஆங்காங்கே கொண்டாட்டக் களை பறித்தார்கள். அவர்களுக்கு அது ஒரு முழுமையான ஷாப்பிங் அனுபவமாக இருக்கும். அவனவன் லுங்கி அணிந்திருக்க, இந்தப் பெண்கள் மட்டுமே சாமி கும்பிடும் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை அறிந்தாற்போல் பூவும் பட்டுமாய் ஜொலித்தார்கள். எனவே நானும் வாரிசும் அவர்களை வேடிக்கை பார்த்தோம்.
இவற்றுக்கிடையில் சம்பந்தமில்லாத கடைகள் வழக்கம் போல் இயங்கின. தேநீர்க் கடைகளுக்கு வெளியே சிலர் தேநீர் குடித்துக்கொண்டும் சிகரெட் பீடி பிடித்துக்கொண்டும் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தார்கள். முறைசார்ந்த ஆடை அணிந்து அலுவலகத்திற்குச் செல்பவர்கள் பலரையும் பார்த்தேன். அவர்களுக்கு விடுமுறை இல்லை. அவர்கள் போலி மதசார்பின்மை நிறுவனங்களில் பணிபுரிவார்களாக இருக்கும்.
நானும் மகனும் பிரதான சாலையின் முனையை அடைந்துவிட்டோம். அங்கிருந்து பார்த்தால் இன்னொரு நீண்ட தெரு விழாக் கோலம் பூண்டிருந்தது. யாரும் கேட்பாரில்லை. நாங்கள் அதனுள் புகுந்தோம். களிமண் பொம்மைகள் மற்றும் இத்யாதிகளிடையே முதலில் கண்ணில் பட்டவை பாலிதீன் பைகளில் இருந்த கொழுக்கட்டைகள். ஒவ்வொரு பையிலும் ஆறு இருந்தன. ஒரு பை 30 ரூபாய் என்றும் 25 ரூபாய்க்குத் தருவதாகவும் எனக்காக அவர்களே பேரம் பேசி முடித்துக் கையில் தந்தார்கள். நான் பேரம் பேசியிருந்தால் 20 ரூபாய்க்குக் கேட்டிருப்பேன். கடைக்காரர் என்னைப் பிரதிநிதித்துவம் செய்ததற்கான சம்பளமாக நான் ஐந்து ரூபாய் அழ வேண்டியிருந்தது. விலைவாசி.
அந்தத் தெருவில் ஒரு தேவாலயத்தைக் கடந்தோம். அதன் வாசலிலும் பூக்கடைகள், குடை விற்பனையாளர்கள். தேவாலயச் சுவற்றில் கைவிரித்த யேசுவைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது: விநாயக சதுர்த்தி என்பதால் இன்று உருவ வழிபாடு தூக்கலாக இருக்கும். கிறிஸ்தவ சகோதரர்கள் புளகாங்கிதப்படுவார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரர்களின் மத உணர்வு புண்படலாம். அதனால்தான், இந்தக் கூட்டத்தில் சாவு வீட்டுத் தெருவினூடே திருமணப் புரோகிதர் போல் பட்டுக்கொள்ளாமல் நடந்த ஐயங்கார்கள்கூடக் கண்ணில் பட்டார்கள்; ஒரு இஸ்லாமியரைக்கூடப் பார்க்க முடியவில்லை. அல்லது என் அதிர்ஷ்டம் அவ்வளவுதானோ என்னவோ.
அந்த நீண்ட தெருவிலும் அடுத்து வந்த தெருக்களிலும் நாங்கள் அது வரை பார்த்ததே திரும்பத் திரும்ப வந்தன. இதையெல்லாம் தொலைக்காட்சியில் காட்டி "இன்று கொண்டாடப்பட்டது" என்று பொழிப்புரை கொடுப்பான். எனக்கு விநாயகர் சதுர்த்தியை அனுஷ்டித்த உணர்வு ஏற்பட்டது. மகனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். வழக்கமாகக் கேள்விகளின் ஊற்றாக இருப்பவன் வேடிக்கை பார்ப்பதில் தன்னை இழந்திருந்தான். என் வீடு நெருங்கும்போது இந்தக் கொண்டாட்டங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கே இருந்தன என்று மகனுக்குச் சொல்லத் தொடங்கினேன். இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் இது பழைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்திர விழா போல் பேசப்படும் எனவும் அவனை எச்சரித்தேன். அவனுக்கு இப்போது புரியாது. ஆனால் எதிர்காலத்தில் அவன் என் பேச்சை நினைவுகூர வாய்ப்பிருந்தது.
என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியபோதுதான் வயிற்றில் பகீர் என்றது. நெருங்கிய உறவினர் கதவைத் திறந்து எங்கள் இருவரின் கைகளையும் பார்த்துவிட்டு, "வாங்கலியா?" என்றார்.
"இதோ, அதுக்குத்தான் கெளம்பிக்கிட்டிருக்கோம்."
"கையில என்ன?"
"கொழுக்கட்டை" என்று காட்டினேன்.
"நான்தான் வீட்ல செஞ்சிருக்கனே, இது எதுக்கு வீணா?" என்றார் எரிச்சலாய்.
"இதுவும் ஒரு டேஸ்ட்டுதான். சாப்ட்டுப் பாரு" என்று கொழுக்கட்டைப் பையைத் திறந்து நீட்டி நான் ஒன்றை எடுத்துக் கடித்தேன். ரப்பர்.
குரு உத்சவம்
(குறுங்கதை)
கி.மு. காலம், சரஸ்வதி நதிக்கரையோரம். அங்கே ஒரு வனத்தில் ஒரு திவ்ய மரத்தடியில் வேத பாடசாலை ஓடிக்கொண்டிருந்தது.
அடையாளம் தெரியாத ஒரு முனிபுங்கவர் புலித்தோலை தமதடியில் வைத்து அதில் வீற்றிருந்தார். அவரிடமிருந்து பயங்கர தேஜஸ் வெளிக்கிளம்பிக்கொண்டிருந்தது.
குருசாஸ்தா ஒரு கரத்தைத் தமது தண்டத்தின் மேல் வைத்துக்கொண்டும் இன்னொரு கரத்தால் கமண்டலத்தை உருட்டிக்கொண்டும் தம் முன் இருந்த வித்யார்த்திகளுக்கு ஏதோ மந்திர சங்கதியை விளக்கிக்கொண்டிருந்தார். ரோமங்காணாத சிரசாளிகளான அந்தப் பிள்ளைகள் பவ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஒரு சுற்று விளக்கி முடித்த குரு, ஒரு வித்யார்த்தியை நோக்கி, "இந்தாப்பா, நீ சொல்லு" என்றார்.
அந்த வித்யார்த்தி மந்திரத்தை ஒப்பித்தான்:
"ஒம்… சகனா பவது, சகனவ் புனஸ்து
சகவீர்யம் கரவாவகை….
கண்ணுக்குள் நூறு நிலவோ -"
குருமூர்த்தி குறுக்கிட்டார்: "நிலவோ கிடையாது, "நிலவா"."
ஓர் எளிய 'ரெசிப்பி'
உலகம் என்னை சமையலின் பயனீட்டாளனாகவே பார்க்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் மனைவி ஊரில் இல்லாதபோது சமையல் கலையின் ஆழ அகலங்களைத் தேடியலைவது எனக்குப் பிடித்தமான செய்கைகளில் ஒன்று.
இவ்வாறு நான் கண்டுபிடித்த ஓர் எளிய 'ரெசிப்பி'யை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். இந்த பட்சணத்தைத் தயாரிக்க அதிகபட்சம் 30 நிமிடங்கள் ஆகலாம். இது குறிப்பாகத் திருமணம் ஆகாதவர்களுக்குப் பயன்ப(டட்)டும்.
தேவையானவை:
ஓட்டல் வாங்கிய பிரியாணி – 1
தண்ணீர் – 4 கோப்பைகள்
செய்முறை:
தலில் பிரியாணியை ஒரு ஹாட்பேக்கில் வைத்துக்கொள்ளுங்கள். ஹாட்பேக் இல்லை என்றால் பிரியாணியை உங்கள் வீட்டில் சிறிதும் குளிர்ச்சி இல்லாத ஓர் இடத்தில் – எ.கா., ஃப்ரிட்ஜுக்குக் கீழே – வைத்துவிடுங்கள்.
உட்புறம் நன்கு குழிவாக உள்ள ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுங்கள். பிறகு அதைக் கரண்டியால் கிளறிக்கொண்டிருங்கள். ஆவி பறப்பதைப் பார்த்து மயங்கிவிடாதீர்கள். தண்ணீர் கொதிக்கும் வரை கிளறுங்கள். தண்ணீர் விரைவில் சூடாவதற்கு அடுப்பின் நெருப்பை மூன்றாவது கியரில் வைத்திருங்கள்.
(குறிப்பு: எப்போதுமே தேவைக்கு இரு மடங்கு தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். பாதியைக் காலில் சிந்திக்கொண்டால்கூட மீதி வீணாகாமல் இருக்கும்.)
பாத்திரத்தில் நீர் மட்டம் உயரத் தொடங்கியதும் அடுப்பை அணையுங்கள். இப்போது அதே கரண்டியால் தண்ணீரை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றுங்கள். அல்லது அந்தக் கரண்டியில் நீங்கள் ஆர்வம் இழந்துவிட்டிருந்தால் அதை சிங்க்கில் போட்டுவிட்டு வேறு கரண்டியைப் பயன்படுத்துங்கள்.
இப்போது நீங்கள் தயாரித்த உணவை சாப்பிடத் தயார்! பிரியாணிப் பொட்டலத்தைப் பிரியுங்கள். சாப்பிடத் தொடங்குங்கள். தேவைப்படும்போதெல்லாம் நீங்கள் வைத்த வெந்நீரைக் குடித்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் உழைப்பெல்லாம் வீணாகிவிடும்.
பிற்சேர்க்கை: இதைப் படித்துவிட்டுச் சில பேர் 'தண்ணீர் போதுமே, வெந்நீர் எதற்கு' என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பதுதானே நல்லது?
கடிதம்: செய்தித்தாளைக் குழந்தைகள் பார்க்கலாமா?
பேரன்புடைய பேயோன் அவர்களே,
நான் காலையில் செய்தித்தாள் படிக்கும்போது எனது 8 வயது மகள் எட்டி பார்த்து அது என்ன, இது என்ன என்று ஒவ்வொரு கெட்ட செய்திக்கும் விளக்கம் கேட்கிறாள். அவை என்ன மாதிரியானச் செய்திகள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. "போடி உள்ளே!" என்று திட்டவும் மனம் வரவில்லை. இதனை எப்படி சமாளிப்பது?
எல். குழந்தைஸ்வாமி,
திருப்போரூர்
அன்பின் குழந்தைஸ்வாமி,
செய்தித்தாள்களைப் பெரியவர்கள் படிப்பதையே நான் ஊக்குவிப்பதில்லை. நீங்கள் "என்னடா?" என்றால் குழந்தைகளைப் பற்றி, குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பற்றி, கேட்கிறீர்கள்.
எத்தனையோ விஷயங்களைக் குழந்தைகள் எதிர்கொள்ளக் கூடாது என்று பொத்திப் பொத்தி வளர்க்கிறோம். செய்தித்தாளையும் பத்திரிகைகளையும் அவைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். வளர்ந்த பின்பு தெரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தங்களை அவர்கள் பிஞ்சிலேயே பழுத்துவிட்டால் உலகைப் பற்றிய அவர்கள் பார்வை அவநம்பிக்கை மிகுந்ததாகிவிடும். ஆழமான புரிதலும் சரியான வழிகாட்டலும் இல்லாத அவநம்பிக்கை, விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே செய்தித்தாளைக் குழந்தைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
உங்கள் குழந்தைக்கு உலகம் தெரிவது அவசியம் என்பதை மறுக்க முடியாது. இப்போதே தொடங்க வேண்டும் என்றால் அவளுக்கு "கோ கரிக்குலர் ஆக்டிவிட்டி"யாகத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கச் செய்யுங்கள். வாரம் மூன்று படங்கள் என்ற டோஸ் சரியாக இருக்கும். அவள் மனமுதிரும் சமயத்தில் மனம் இறுகி உலகை எதிர்கொள்ளத் தயாராகியிருப்பாள். எல்லா அநீதிகளையும் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதியாக ஏற்கும்படி அவள் பக்குவப்பட்டுவிடுவாள். அது வரை குழந்தையின் புத்தகங்களுக்கு அட்டை போடக்கூட செய்தித்தாளைப் பயன்படுத்தாதீர்கள்.
தவிரவும், செய்தித்தாள்கள் அவற்றின் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்தப்படுபவை. அவர்களுக்கும் பேப்பர் கடைகளுக்கும் இடையிலான வியாபாரம். இது விசயத்தில் நாம் குறுக்கிட வேண்டாம்.
அன்புடன்
பேயோன்
ஷிப்பிங் ஃப்ரீ
பேருந்துப் பயணத்தில் பக்கத்து இருக்கையில் வந்து உட்கார்ந்தவரை நிமிர்ந்து பார்த்தால் வாசகர். புதிதாக வாங்கிய காஃப்கா சிறுகதைத் தொகுதியில் மூழ்கியிருந்தேன். முதல் கதையே தகராறு.
"என்ன புக்கு சார் அது?" என்றார் அவர்.
"இதுதான்" என்றேன் அட்டையைக் காட்டி.
"ஓ, காஃப்காவா? சூப்பர் சார், நான்கூட படிக்கணும்" என்றார்.
"வேணுமா?" என்றேன் புத்தகத்தை நீட்டி.
"இல்ல சார், நீங்க படிங்க."
"முன்னூத்தம்பது ரூவாதான்."
"இல்ல சார், வேணாம், நீங்க படிங்க."
"அடடே, என்ன நீங்க இவ்ளோ கூச்சப்படறீங்க? நம்மளுக்குள்ள என்ன ஃபார்மாலிட்டி? வாங்கிக்குங்க! புது புக்கு!"
"எதுக்கு சார் இதெல்லாம்?"
"சரி, உங்களுக்காக முன்னூத்தி இருவது. இந்தாங்க, புடிங்க."
வாசகர் ஏதோ உயரமான இடத்திலிருந்து குதிக்க வந்து மனம் மாறிக் கீழே இறங்க வழி தெரியாதது போல் விழித்தார். காசில்லையோ என்னவோ.
"கடசியா முன்னூர்ருவா. ஷிப்பிங் ஃப்ரீ" என்றேன்.
வாசகர் நல்ல புத்தி வந்து பர்ஸிலிருந்து முன்னூறை எடுத்துத் தந்துவிட்டுப் புத்தகத்திற்குக் கை நீட்டினார்.
"இனிமே புஸ்தகம் உங்களுதுதானே, படிச்சிட்டுத் தரேன்' என்று ஜன்னலோரமாக வைத்துக்கொண்டேன்.
வாசகர் கண்டிப்பாக ஏதோ ஒரு இனம்புரியாத உளைச்சலில் மௌனமாக இருந்தார்.
"அப்புறம் சமீபத்துல என்ன படிச்சீங்க?" என்றேன்.
அவருக்குப் பேச்சு வராமல் சிவாஜி போல் உதடுகள் துடித்தன. எனக்கு உடனே புரிந்துவிட்டது.
"நம்ம புக்கு ஏதாவது படிச்சீங்களா? சாரிங்க."
குற்றக் குழந்தைகள்
Father heard his children scream,
So he threw them in the stream,
Saying, as he drowned the third,
"Children should be seen, not heard!"
- Harry Graham (Ruthless Rhymes for Heartless Homes. New York: R. H. Russell 1901)
குழந்தைகளைப் பத்து வயது வரை தூளியில் கிடத்தலாம், தப்பே இல்லை. குறிப்பாக அவை வீட்டில் விழித்திருக்கும்போது தூளியில் இருப்பதே சிறந்தது. அப்போதுதான் சனியன்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடி வாழ்க்கையை நரகமாக்காமல் இருக்கும். தூளி இல்லையா? அத்தனை உருப்படிகளையும் ஒரு காலி அறையில் தள்ளிவிட்டு உள்ளே இரண்டு எறிகுண்டுகளை வீசிவிட்டு ஓடிவிட வேண்டும்.
ஒரு பழைய வீட்டின் அடித்தளத்தை ஆட்டங்காணவைக்க ஒரு ஜோடி சத்தமான குழந்தைகள் போதும் என்கிறார் பர்த்ருஹரி. போர்க் காட்சிகளை நயமாக விவரிக்கும் இலக்கியமான கலிங்கத்துப் பரணி, அன்றைய தினத்தின் "செரு" நிறைவடைந்த பின் போர்க்களமானது குழந்தைகள் விளையாடிச் சென்ற இடம் போல் அலங்கோலமுற்றுக் காட்சியளித்ததாகப் பாடுகிறது. படுகாயமடைந்தும் சாகும் தறுவாயிலும் சொந்த மற்றும் பிறத்தியார் ரத்தத்திற்கிடையிலும் கிடந்த வீரர்கள் வலியைப் "பொறாது" எழுப்பிய ஓலங்கள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள் பகிர்வுச் சண்டைக் கூப்பாடுகளை ஒத்திருந்ததாகவும் கூறுகிறது கலிங்கத்துப் பரணி. இதனால் சிலர் கலிங்கத்துப் பரணி போர்க் களத்தின் கோரங்களை மிகைப்படுத்துவதாக விமர்சிப்பதுண்டு. ஆனால் குழந்தைகளின் இறைச்சலால் மூளையின் வேதியியல் நிரந்தரமாக மாறிப்போன ஆண்களைக் கேட்டுப் பாருங்கள். என் நண்பர் ஒருவர்கூட அவர் வீட்டுக்குக் குழந்தைகள் வருவதை "Saw VIII" என்பார்.
பிறக்கும்போது யாரும் கிரிமினலாகப் பிறப்பதில்லை என்று வேதம் ஓதுபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். வீணர்களே, குழந்தைகள் கிரிமினல்களாகப் பிறப்பதில் என்ன பிரயோஜனம்? நான்கு வயதுக்குப் பிறகு அவர்கள் என்ன சுதந்திரப் போராட்டத் தியாகிகளா? காட்டுமிராண்டிகள்! அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் வாரப் பத்திரிகைகளுக்குக்கூட இப்படி அடித்துக்கொள்ள மாட்டோம். தப்பு செய்யாதவர்களுக்கும் சேர்த்து முதுகில் விழும். நாங்கள் இந்தக் குழந்தைகளைப் போல் அடிப்பாரின்றி அலைய மாட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், நாட்டியப் பேரொளி பி.எஸ். வீரப்பா போலவே சிரிக்கும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன்.
எனக்கென்ன ஆச்சரியம் என்றால், எங்கள் காலத்தைப் போலின்றி குழந்தைகள் பள்ளிகளுக்கும் ஆயிரத்தெட்டு கிளாஸ்களுக்கும் அடிமையாக இருக்கின்றன. நமக்குக் கிடைத்தாற்போன்ற குழந்தைப் பருவம் அருகிவிட்டது. இந்த லட்சணத்திலேயே இவைகள் இந்த ஆட்டம் போடுகிறதென்றால் இல்லங்களில் 'ஸ்மோக் டிடெக்டர்' போல் 'டெசிபல் டிடெக்டர்' வைக்க வேண்டியதுதான். சத்தம் இத்தனை டெசிபலைத் தாண்டினால் அதிலிருந்து மயக்க வாயு கசிய வேண்டும்.
குழந்தைகளின் விளையாட்டுகள், தகராறுகள், சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு ஏற்படுத்தும் ஓலங்கள் எந்த அளவுக்கு ஆண் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்கின்றன என்பது பெண்களுக்குப் புரியாது. பெண்கள் சப்தகோஷ மங்கைகள். சத்தத்தை உற்பவித்து சத்தத்தோடு இருந்தால்தான் அவர்களுக்கு வாழ்ந்த மாதிரி, வாழ்ந்து காட்டிய மாதிரி இருக்கும். எத்தனை பேரோசைக்கும் இடையே அசராமல் தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் அசாத்தியத் திறன் அவர்களுக்கு இருக்கும் வரை குழந்தைகளின் கத்தும் கடலோசை அவர்களை பாதிக்காது. "அங்க போய் விளையாடுங்க" என்று அரைநொடி மட்டும் முகத்தைச் சுளித்துக் கத்திவிட்டு மறுகணமே மீண்டும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தொலைக்காட்சியிடம் வாயைப் பிளப்பது அவர்கள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. சமூகத்தில் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு இந்த சுரணைகெட்டத்தனமும் ஒரு காரணம் எனலாம்.
இதில் பெண்கள் குறுக்கிட்டுக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிப் பயனில்லை. ஆகவே குழந்தைகளே, என்னதான் என்னுடைய வீடு இரண்டாம் மாடியில் இருந்தாலும் உங்கள் விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பு நடுக்கூடத்தில் ஒரு குழி தோண்டி என்னைப் புதைத்துவிடுங்கள்.
கானலைத் தேடும் தண்ணீர்கள்
இந்த மாதிரி எத்தனை எழுத்தாளர்களுக்கு நடக்கிறது என்று அறிய ஆவல். இன்று காலை பக்ரீத்தைக் கொண்டாட 'வெல்கம் புக்ஹவுஸ்' என்ற சற்றுப் பெரியதொரு புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன்.
வழக்கம் போல் தமிழ்ப் புத்தகப் பகுதியில் நின்று ஒரு சிறுகதைத் தொகுப்பை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் என் அருகே ஒருவர் வந்து என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரும் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். தற்செயலாக, அது "கானலைத் தேடும் தண்ணீர்கள்" என்ற என்னுடைய கட்டுரை நூல். அவர் என் பக்கம் திரும்பி, "சார், உங்க புக்குதான்!" என்று இளிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவருக்கு என் முகம் தெரியவில்லை.
மனிதர் புத்தகத்தில் ஆழ்ந்தார். என் கவனம் அவர் மீதுதான் இருந்தது. படித்துக்கொண்டிருந்தவர் சில நொடிகளில் "ஹ!" என்றார். இன்னும் சில கணங்களுக்குப் பின்பு "ஐயையோ!" என்று கூவினார். கல்லாவில் இருந்தவரும் ஆங்காங்கே நின்ற வாடிக்கையாளர்களும் அவர் பக்கம் எட்டிப் பார்த்தார்கள். அவரோ எதையும் கவனிக்க முடியாதபடிக்கு மிக ஆழமாக உள்ளே போயிருந்தார்.
"ஹெஹ்ஹெஹ்ஹே, என்னய்யா இது, ம்?" என்றார் அடுத்து. பிறகு "அகிலாண்டேஸ்வரி!" என்றார் அரை விம்மலாய். சிறிது நேரம் மறுப்பது போல் தலையசைத்துக்கொண்டே சில பக்கங்களைக் கடந்தார். பின்பு இரு கைகளிலும் புத்தகத்தைத் தாங்கிப் பிடித்திருந்தவர் ஒரு கையால் சரக்கென்று ஒரு பக்கத்தைக் கிழித்து அதே வேகத்தில் கசக்கித் தலைக்குப் பின்னால் தூக்கியெறிந்தார், படிப்பதைத் தொடர்ந்தார்.
இப்போது ஒருவர் கல்லாக்காரரை நெருங்கி விசாரித்தார். பின்னவரின் பதிலில் வெளிப்பட்ட தகவல்கள்: புத்தகதாரி அந்தக் கடையின் நீண்டகால வாடிக்கையாளர், நிறைய காசு கொடுத்துப் புத்தகங்களை அள்ளிச் செல்வார், பெரிய படிப்பாளி, நன்றாகப் பழகுவார்; அவர் இவ்வாறு நடந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
புத்தக மனிதர் திறந்துவைத்திருந்த பக்கத்தினுள் சத்தம் மட்டும் அதிகம் வரும் விதமாக "தூ!" என்று துப்பினார். சில பக்கங்களுக்குப் பின்னர் நிலைகுலைந்து அருகில் இருந்த தூணை ஒரு கையால் கட்டிப்பிடித்துக்கொண்டார். பின்பு சுதாரித்து நின்று புத்தகக் கடையின் கூரையைப் பார்த்து "கன்னி மூல கணபதி பகவானே!" என்று சொல்லிவிட்டு புத்தகத்தாலேயே முன்மண்டையைப் பல முறை அறைந்துகொண்டார். பிறகு எதுவுமே நடக்காதது போல் தொடர்ந்து படிக்கத் தொடங்கினார். என் புத்தகத்தின் உள்ளடக்கத்தை அவர் மன்னித்து ஏற்றுக்கொண்டுவிட்டது போல் தெரிந்தது. ஆனால் அவரது உள்-அமைதி வெகுநேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து உறுமினார். அவர் முகம் உக்கிரத்தில் சிவந்து வியர்த்தது. எனக்கு மனதில் ஒரு கணம் ஞான ஒளி சிவாஜி எட்டிப் பார்த்துவிட்டுப் போனார்.
புத்தகக்காரர் புத்தகத்தின் முடிவுக்கு வந்தார். பின்னட்டையைப் பார்த்தார். அதில் என் புகைப்படத்தைப் பார்த்தார். பிறகு மெல்லத் தலையைத் திருப்பி என்னைப் பார்த்தார். அவரது கண்கள் வெளிறிப்போயின. மீண்டும் புகைப்படத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டார்.
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்றேன் அவரிடம் அமைதியாக. பின்பு மெல்லிய நடிப்புப் புன்னகையுடன் மெல்ல விலகி நடந்து ஓடியே போய்விட்டேன்.
பனிப் புயல்
இமாலயக் குளிர் என்பார்களே, அப்படி இருந்தது. தாங்கவில்லை. அந்த பூதாகாரமான மேட்டைப் பற்றி என்னுடைய முதல் மனப்பதிவு அதுதான். நான் ஒரு ஆளே ஏழு அங்குல தடிமனுக்கு ஆடைகள் அணிந்திருந்தேன். மற்றவர்களும் நடமாடும் பலூன்களைப் போல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மூன்று லார்ஜ் ராணுவ ரம் உள்ளே போனதில் சற்றுப் போதை இருந்ததே ஒழியப் பற்கள் தந்தியடிப்பதை நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுப் பயிற்சியில் தேற்றிய உடலை மது அருந்தி வீணாக்குகிறோமே என்று குருராஜன் புலம்பினான். காற்றோடு வந்த பனித் துகள்கள் எங்கள் மீசை, தாடியை நரையாக்கியிருந்தன. ஏன், எங்களைச் சுற்றி இருந்த மலைகள் எல்லாமே பனியால் நரைத்திருந்தன.
நாங்கள் அலுவலகத்திற்கு ஆளுக்கொரு மாதம் விடுமுறை போட்டுவிட்டுக் கிளம்பியபோது மொத்தம் 12 பேர் இருந்தோம். குளிரில் விறைத்தும் ஆபத்தான சரிவுகளில் வழுக்கி விழுந்தும் இனம்புரியாத காய்ச்சல்களிலும் செத்துப்போன ஏழு பேர் தவிர இப்போது ஐந்து பேர்தான் பாக்கி. பாதாளப் பிராப்தி கிடைத்த இருவர் எங்கள் சப்ளைப் பொதிகளில் பாதியை எடுத்துக்கொண்டு போனதுதான் பெரிய அடி. கடைசியில் ஷெர்ப்பா மட்டும்தான் உயிரோடு இருப்பான் என்றான் ஷர்மா.
எங்கள் ஷெர்ப்பா ஒரு கில்லாடி கில்பர்ட். மைனஸ் 25 டிகிரியில்கூட அவனுக்குப் பற்கள் நடுங்கவில்லை, உதடுகள் வெடிக்கவில்லை. எங்கள் அவஸ்தைகளைப் பார்த்து முன்பே இடுங்கிய கண்கள் முழுசாய் மூடிக்கொண்டு சிரிப்பான் (அப்படி ஒருமுறை அவன் சிரித்தபோது நாங்கள் அருகிலிருந்த பாறைகளுக்குப் பின்னே ஓடி ஒளிந்துகொண்டோம். சிரித்து முடித்துவிட்டுச் சில நொடிகள் எங்களைத் தேடிக்கொண்டிருந்தான்). எது எப்படியோ, எங்கள் உயிர்ப்பிழைப்பு அவனை நம்பித்தான் இருந்தது.
இப்போது அவனை நினைக்கும்போது மனதில் ஒரு சித்திரம் வருகிறது. முதலில் அதை வடித்துவிடுகிறேன். ஷெர்ப்பாவுக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். எப்போதும் குளிர்ச்சியான வானிலையில் இருந்ததால் வயதுக்கு மீறிய முதுமை எதுவும் தெரியாமல் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவன் போலத்தான் இருந்தான். அவன் முகம் தோலுரித்து நல்ல சூட்டில் நெருப்பில் வாட்டிய உருளைக்கிழங்கு போல் இருந்தது. மது வாடையும் பீடா வாடையும் மாறி மாறி அடித்தன. அடிக்கடி ரத்தத்தைத் துப்பிக்கொண்டிருந்தான். ஆனால் ஆரோக்கியமான ஆள். அவனைக் காட்டிலும் வயதில் குறைந்த எங்களையெல்லாம்விட.
தவிரவும் அவன் மரணத்தைப் பார்த்திருந்தான். அடுத்தது நாமா அல்லது பக்கத்து ஆளா என ஒவ்வொருவரும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கையில் அவன் எங்களில் ஏழு பேரை வழியில் ஆங்காங்கே புதைத்திருந்தான். செத்த எழுவரில் நான்கு பேர்தான் கிறிஸ்தவர்கள் (ஒரு வெள்ளைக்காரன், ஒரு தென்கொரியன், இரு இந்தியர்கள்). ஆனால் அவன் ஒவ்வொருவரையும் புதைத்த பின் மரக்கட்டைகளால் செய்த ஒரு திடீர்ச் சிலுவையை நட்டுவைத்தான். இமாலய மலையேறிகளுக்கு வழிகாட்டும் வேலையில் பாதி அவர்களைப் புதைப்பதுதான் போலும்.
இந்த குருராஜன் என்பவன் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. வயது 30க்கு மேல் இருக்காது. எதிலேயோ கொள்ளை லாபம் அடித்து விருப்ப ஓய்வு பெற்றவன். அவனுக்கு ஷெர்ப்பா மேல் சந்தேகம் இருந்தது. எங்களை எங்கேயாவது அழைத்துச் சென்று பள்ளத்தில் தள்ளிவிட்டு சப்ளைகளைத் திருடிக்கொள்வான் என்று பயந்தான் குருராஜன். அந்தப் பொல்லாத பயம் எங்களையும் தொற்றாமல் இல்லை. எனினும் பள்ளத்தில் தள்ளப்பட்டுக் குளிரில் விறைத்துச் சாவதைவிட சப்ளைகள் திருடுபோவது பற்றித்தான் அதிகம் கவலைப்பட்டோம். இமய மலையேற்ற அனுபவசாலிகளுக்கு இந்தப் பயம் புரியும். நாங்கள் வெறும் வங்கி அதிகாரிகள், குருராஜனைத் தவிர. அவன் ஓய்வு. எங்களுக்கு நறுவிசாக டை கட்டத் தெரியும். உறைகுளிரில் சாகாமல் இருக்கத் தெரியாது. பரங்கிமலையில் மேற்கொண்ட பயிற்சி இமயமலைக்குப் போதவில்லை. இத்தனைக்கும் நாங்கள் உச்சி மார்கழியில் பயிற்சி பெற்றோம். நானும் கொடைக்கானலைவிட நான்கு மடங்கு உயரம், அவ்வளவுதானே, சமாளித்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கடைசியில் அது முற்றிலும் வேறுபட்டதொரு பந்து விளையாட்டாக இருந்தது.
எதற்கு இவ்வளவு பீடிகை? நல்ல கேள்வி. சுருங்கச் சொன்னால் எங்கள் ஷெர்ப்பா திடீரென்று இறந்துவிட்டான். அது எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அந்தக் காற்றில் ஷெர்ப்பாவைத்தான் நாங்கள் நம்பியிருந்தோம். மாரடைப்பு என்றான் சண்முகம். ஷெர்ப்பாவின் உடல் குளிர்ந்துபோய் சொரசொர என்று ஆகியிருந்தது. நாங்கள்கூடக் குளிர்ந்து சொரசொரத்திருந்தோம். அந்த இடத்தின் சீதோஷ்ணமே அப்படி. எங்கள் ஐந்து பேரில் மாரடைப்பு பற்றி அதிகம் தெரிந்தவன் நுங்கம்பாக்கம் கிளையின் சண்முகமே. அவனது உறவினர்கள் பலர் இதயம், நீரிழிவு, காசம், சிறுநீரகம் எனப் பல்வேறு நோய்களால் இறந்திருந்தாலும் கடைசியாக எல்லோரையும் மாரடைப்புத்தான் காவு கொண்டது. ஷெர்ப்பாவுக்கு மூச்சு நின்றுவிட்டதா என்று பார்க்க விழைந்தான் சண்முகம். ஆனால் ஒரு பனிப்புயலின் ஒரு பகுதி போல் வீசிக்கொண்டிருந்த கனத்த காற்று அதற்குப் பேரிடைஞ்சலாக இருந்தது. ஷெர்ப்பாவின் நாசித் துவாரங்களுக்கு அருகில் புழங்கிய காற்று மூச்சுக் காற்றா பனிப்புயல் போட்ட குட்டியா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஷெர்ப்பாவைக் கிள்ளியும் உதைத்தும் சிகரெட்டால் சுட்டும் கத்தியால் லேசாகக் கீறியும் பார்த்த பின்பு அவன் இறந்துவிட்டதாக ஏகோபித்து முடிவு செய்தோம்.
இப்போது ஷெர்ப்பாவைப் புதைக்கும் வேலை என் தலையில் விடிந்து தொலைக்குமோ என்று நான் உள்ளூர அஞ்சுகையில் ஆபத்பாந்தவனாய் தனஞ்சை செயல்பட்டான். இந்த எதிர்ப் பனிப்புயலுடன் மல்லுக்கட்டியவாறு பள்ளம் தோண்டுவதெல்லாம் வங்கி அதிகாரிகளுக்கு ஆகாத காரியம் என்றான் தனஞ்சை. அது மட்டுமின்றி, ஒருவேளை ஷெர்ப்பா அவன் செத்துவிட்டான் என்ற எங்கள் தீர்மானத்தையும் மீறி உயிரோடு இருந்தால்? புதைப்பது அவனை நிரந்தரமாய்ச் சாகடித்துவிடும்தானே? அது கொலை ஆகிவிடும் அல்லவா? ஆகையால் அவனை அப்படியே போட்டுவிட்டுப் போகலாம் என்று முடிவானது.
குருராஜன் உடனே ஷெர்ப்பாவின் பெரிய முதுகுப் பையில் என்னென்ன இருக்கிறது என்று 'இன்வென்டரி' எடுக்கத் தொடங்கினான். மற்ற அனைவரும் அதில் ஆர்வத்துடன் பங்கேற்றோம். ஓர் உபரி சுத்தியல், நான்கு ஜோடி சுருட்டுகள், மூன்று புட்டி ரம், ஒரு புட்டி பிராந்தி, உலர்ந்த முழு பிரெட்டுகள் இரண்டு, சுக்கா ரொட்டிகள் ஆறு, உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் சுமார் கால் கிலோ, கெட்டி ரக நைலான் கயிறு, டைனமைட் குண்டுகள் இரண்டு, மிகப் பழைய ஒளிவீச்சுத் துப்பாக்கி (flare gun) ஒன்று, கம்பளிப் போர்வை, மருந்து வகைகள் சில, ஒரு கத்தி கபடா தொகுதி, நேபாள எழுத்துக்கள் போட்ட டர்க்கி டவல் ஒன்று, விநோத அலங்காரங்களால் மறைக்கப்பட்ட சாமி படம் சிறியது ஒன்று, மாற்று ஆடைகள் பூஜ்யம். இவை போக அவன் அணிந்திருந்த நல்ல பூட்ஸ், ஒரு நீண்ட வேட்டைக் கத்தி, ஆக்சிஜன் டப்பாக்கள், ஸ்வெட்டர்கள், குல்லாய்கள், பைனாக்குலர் மற்றும் பிற பயனுள்ள லொட்டு லொசுக்குகளையும் கணக்கில் சேர்த்தோம். இது தவிர இரு கைகளுக்குமான ஊன்றுகோல்கள்.
குருராஜன் ஷெர்ப்பாவை நிர்வாணமாக்காமல் விட மாட்டான் போலிருந்தது. நாங்கள் அதை ஏற்கவில்லை. ஷெர்ப்பாவின் பையில் இருந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தோம். பஞ்சகாலங்களில் அவை உதவக்கூடும். வெடிகுண்டுகளைப் பயன்படுத்தத் தெரியாததால் அநாவசியத் தற்கொலையில் இறங்க விரும்பாமல் அவற்றை விட்டுவிட்டோம். இவ்வளவு முக்கியப் பொருட்களைப் பார்த்த பின்பு ஷெர்ப்பா உயிரோடு இருக்க சாத்தியம் இல்லை என்று எங்களுக்குத் தோன்றியது. இருவாரகாலம் எங்களுக்கு வழிகாட்டிய ஷெர்ப்பாவுக்கான இறுதி மரியாதையாக அவனது ஆடைகளைச் சூறையாடாமல் விட்டுச் சென்றோம். எங்கள் ஷெர்ப்பாவின் பெயர்கூட எங்களுக்குத் தெரியவில்லை என்பது எங்கள் மனதைக் கனக்கச்செய்தது. அவன் சொன்னான். எங்களுக்குத்தான் குளிரில் மறந்துபோனது – எல்லோருக்குமாய். அதோடு முடிந்தது ஷெர்ப்பாவின் கதை.
ஷெர்ப்பா இல்லாத பயணத்தின் அபாயத்தை குருராஜனின் முதல் யோசனையில் உணர்ந்தேன். எங்கேயாவது உட்காரலாமா என்றான் குரு. ஷெர்ப்பாவின் மரணத்திற்குப் பின்பு எங்கள் எடை அதிகரித்திருந்தது என்னவோ உண்மைதான். அதற்காக எதிரில் என்ன இருக்கிறது என்று தெரிய விடாத ஒரு பனிக் காற்றுக்கு இடையே, கூடாரத்துக்குள்தான் என்றாலும் இளைப்பாறுவது மடத்தனமாகத் தெரிந்தது. சிரமத்தைச் சமாளிக்க ஷெர்ப்பாவின் சாராய புட்டி ஒன்றைத் திறந்து பரிசோதனை ரீதியாகச் சில மடக்குகளைக் குடித்தோம். சில நூறு அடிகளுக்குக் கீழ் நாங்கள் வாயைத் திறந்தால் வெறும் நீராவிதான் வந்தது. இங்கே நாங்கள் பேசினால் நீராவி வெளிப்பட்டு உடனே உறைந்து தூளாகித் தொப்பென்று கீழே உதிர்ந்தது ஆலங்கட்டி மழையாய். அவை நமது வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்றார் கவிஞர் தனஞ்சை. எப்படியும் அவை ஐஸ் கட்டிகள். எனவே அவை மேல் கால் வைத்து வழுக்கி விழாமல் நடப்போம் என்றான் சரவணன் என்ற இன்னொரு சகபயண வங்கி அதிகாரி.
சிறிது நேரம் இப்படி விளையாடிய பின்பு சண்முகம் வரைபடத்தை வெளியே எடுத்தான். சண்முகம்தான் எங்களுக்கு 'ஒழுங்காக்கி'. எனக்கெல்லாம் வழி சொன்னால் புரிந்துகொள்ளத் தெரியாது. சண்முகத்தைப் புதிய ஷெர்ப்பா என்றோம். அவன் அதைக் கேட்டு முதலில் பெருமைப்பட்டாலும் பிறகு முகம் சிறுத்து அப்படி அழைக்க வேண்டாம் என்றான். எங்கள் இலக்கு நெல்சன் சிகரம் என்ற இடம். ஏழை மனிதனின் எவரெஸ்ட் என்று பெயர் பெற்ற அந்த இடத்தை அடைய இன்னும் 4 மேல்நோக்கிய கிலோமீட்டர்கள் இருந்தன. அதாவது கிட்டத்தட்ட 13,000 அடிகள். "பதிமூன்றாயிரம் அடிகள்" என்பது ஒரு சாமியாரின் பெயர் போலிருப்பதாகக் குருராஜன் அபிப்பிராயப்பட்டான். அணிந்திருந்த ஆடைகள் மற்றும் இதர சுமைகளையும் ஏறியேறிக் கனத்த தொடைகளையும் தூக்கிக்கொண்டு ஏற முடியாது என்று தோன்றியது எனக்கு. மூட்டுவலி வேறு 'இப்போது வரலாமா, அல்லது இன்னும் கொஞ்ச நேரம் போகட்டுமா?' என்று கேட்டுக்கொண்டிருந்தது இந்தக் குளிரில் தாகம் எடுக்கவும் வழி இல்லை. சொன்னேன். ஆமோதித்தார்கள். ஆனால் அகதிப் பனிக் கரடிகள் போல் அலையாமல் உண்ண உணவு, இருக்க இடம், பிடிக்க சூடு எல்லாம் கிடைக்குமிடம் நெல்சன் சிகரம்தான். அதை அடைவதற்கு முன்பு ஓய்வில்லை என்று முடிவாகச் சொல்லிவிட்டான் எங்கள் திடீர்க் கொடுங்கோலன் சண்முகம்.
இரண்டாயிரம் அடிகூடத் தாண்டியிருக்க மாட்டோம். அதற்குள் பிரச்சினை ஷெர்ப்பாவின் உருவில் வந்தது. உண்மையில் ஷெர்ப்பா சாகவில்லை. அதற்கு பதிலாக, அவன் விழித்தெழுந்து எங்களைத் தேடத் தொடங்கியிருந்தான். என்ன சிக்கல் என்றால் நாங்கள் அவனைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்று சப்ளைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக ஷெர்ப்பா நம்பியது போல் தெரிந்தது. அரைகுறை இந்தியில் அவன் இதைக் கத்தியதை அனைத்திந்திய வேலைவாய்ப்புக்காக ராஷ்ட்ரபாஷா முடித்த குருராஜன் சொன்னான். அது பொய் என்று அதைவிட மோசமான அரைகுறை இந்தியில் திருப்பிக் கத்த எங்களுக்குக் குரல் இல்லை. ஒரு மாதக் குளிர் மலையேற்றம் எங்களை அதற்குத் தயார்ப்படுத்தவில்லை. திடீரென்று நாங்கள் எதிரெதிர்ப் போரிடும் தரப்புகளானோம். ஷெர்ப்பா எங்களை நெருங்க விடவில்லை. பனியை உருண்டை பிடித்து வீசினான். பிறகு பெரிய கற்களை வீசினான். பின்பு என்ன நினைத்தானோ, டைனமைட் குண்டை வீசினான். மூவர் சிதறினோம். குருராஜனுக்கு ஒரு கால் தெறித்து விழுந்தது. அவனது ரத்தம் உடனே உறைந்தது. ஷெர்ப்பா அதைப் போர் நிறுத்தமாகக் கருதுவான் என்று நம்பி குருராஜனுக்கு அவசரமாகக் கட்டுப் போடத் தொடங்கினோம். கட்டுப் போட்டு முடித்த பின்புதான் தெரிந்தது எங்கள் உழைப்பு வீண் என்று. ஒரு கால் போனதற்கே அவன் நிரந்தரமாக விடைபெற்றிருந்தான். செய்த பாவத்துக்குக் கூலி கிடைத்துவிட்டதாக நினைத்திருப்பான் குருராஜன். அவன் கும்பிட்ட தெய்வம் அப்படி.
நாங்கள் பயந்துபோனோம் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே. எங்களுக்கு ஒதுங்கக் கிடைத்த இடம் ஒரு முதிர்ச்சியற்ற குகை. அதன் சுவர் இரண்டடி ஆழம்தான் இருந்தது. குடையாமல் மேற்கொண்டு உள்ளே போக முடியாது. காற்றில்லாத மழைக்குச் சிறிது நேரம் ஒதுங்கலாம். ஒருபக்கம் சீனர்கள், இன்னொரு பக்கம் பாகிஸ்தானியர்கள், எங்கள் பக்கம் இந்தியர்கள். மூவரில் யாராவது உதவுவார்கள், தாக்குவார்கள், எந்த வழியிலாவது குறுக்கிட்டுக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தோம். கதகதப்பான சிறை அறைக்கு மனம் ஏங்கியது. ஏதேனும் நடக்கும் வரை போர்த்திக்கொண்டு காத்திருந்தோம். அது ஷெர்ப்பா எங்களைச் சந்தடியில்லாமல் நெருங்க மட்டுமே வழிசெய்தது. ஸ்வெட்டர்கள், உபரி ஆடைகள் எவையும் இன்றி வெறும் சட்டை, பேண்ட், ஹவாய் செருப்புடன் அரை நிர்வாணமாகத் தெரிந்தான் ஷெர்ப்பா (நாங்கள் விட்டுச்செல்ல முடிவெடுத்த பொருட்களை குருராஜன் தனக்குக் கிருஷ்ணார்ப்பணம் செய்துகொண்டது எனக்குத் தெரியாது).
கண்களில் கொலை வெறி, நெற்றியிலும் மூக்கிலும் பான் பீடா கரைசல் என ஷெர்ப்பா ஒரு நவயுக ஜெங்கிஸ் கான் போல் தோற்றமளித்தான். நாங்கள் அவனிடம் பரிபாஷையில் பேச முயன்றோம். தனஞ்சை எங்களைக் கைநிறுத்தினான். நான் போய்ப் பேசுகிறேன் என்றான். பர்ஸிலிருந்து மனைவி, குழந்தைகள் அடங்கியதொரு புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்டிக்கொண்டு ஷெர்ப்பாவை நெருங்கினான். ஷெர்ப்பாவின் காட்டுத்தனமான கத்தி வீச்சில் புகைப்படம் தனஞ்சையின் கையோடு சேர்ந்து தூர விழுந்தது. பனியில் கிடந்த குடும்பப் புகைப்படத்தைப் பார்த்து தனஞ்சைக்கு வெறி வந்தது. ஷெர்ப்பா மீது பாய்ந்தான். ஷெர்ப்பா கத்தியை தனஞ்சையின் பாய்ச்சலுக்கேற்பப் பிடித்துக்கொண்டு பக்கவாட்டில் நகர்ந்துகொண்டான். தனஞ்சை சிறிய வாழை மரம் போல் கீழே விழுந்தான். விழுந்தபோது அவனுக்காக ஷெர்ப்பா நீட்டிப் பிடித்திருந்த கத்தியில் கழுத்து கொஞ்சம் அறுபட்டது. அசையாத கோலத்தில் குப்புறக் கிடந்த தனஞ்சையின் வலதுகை பனியை அள்ள முயன்றது. ஆனால் அதைத் தூக்கி ஷெர்ப்பா மேல் எறிவதற்குப் புரண்டு படுத்து எழுந்து உட்கார வேண்டும் என்பதை உணர்ந்தானோ, உயிர்தான் பிரிந்ததோ, தனஞ்சையின் கை பனியின் மீதான பிடியைத் தளர்த்தியது. அவனுக்கு இனிமேல் குளிர்ந்திருக்காது.
நானும் சரவணனும் ஷெர்ப்பாவிடமிருந்து தோராயமாகப் பத்தடி தூரத்தில் ஒரு பாறைக்குப் பின்னால் ஒளிந்திருந்தோம். மலையோடு மலையாக ஒட்டிக்கொண்டிருந்த அந்தப் பாறை எங்கள் இடுப்பளவுதான் இருந்தது. ஷெர்ப்பா சாவகாசமாக தனஞ்சையின் குளிராடைகளையும் பூட்ஸையும் கழற்றி அணிந்தான். அடுத்து கத்தியை சோம்பலாய்ச் சுழற்றியபடி எங்களை நோக்கி மெல்ல வந்தான். நானும் சரவணனும் அவசரமாக ஷெர்ப்பாவுக்குச் சொந்தமான பைக்குள் கை விட்டுத் தேடினோம். ஆளுக்கொரு முனையைப் பிடித்து ஃப்ளேர் துப்பாக்கியை வெளியே எடுத்தோம். அதைப் பிரயோகித்துப் பலனில்லாவிட்டால் ஷெர்ப்பா எங்களை மிக மெதுவாகக் கொல்ல வாய்ப்பிருந்தது. எனக்கொரு ஒரு யோசனை தோன்றியது. ஒரு சாராய புட்டியை எடுத்து அவனிடம் காட்டினேன். ஷெர்ப்பா திகைத்து நின்றான். பிறகு தூக்கிப் போடு என்று சைகை செய்தான். நான் பயங்கலந்த கவனத்தோடு அதை அவன் மேல் எறிந்தேன். ஷெர்ப்பா அதைப் பிடித்து உடனே பல்லால் திறந்து தொடர்மடக்குகளில் சுமார் 200 மில்லி குடித்தான். பிறகு வேட்டைக் கத்தியை அதன் உறையில் சேர்ப்பித்தான். இளித்தபடி எங்களை நோக்கி நடந்து வந்தான். நாங்களும் நிம்மதியில் அளவுக்கு மீறிப் பல்லைக் காட்டிக்கொண்டும் இருகைகளையும் துப்பாக்கி முனையில் போல் உயர்த்திய நிலையிலும் அவனை நோக்கி நடந்தோம். அங்கேயே இருங்கள் என்று சைகை செய்தான் ஷெர்ப்பா. திடீரென்று காற்றின் ஓலம் பெருத்தது, யாரோ வீசியெறிந்தது போல் முகத்தில் உறைபனி அடித்தது. ஷெர்ப்பா காலி சாராய புட்டியை உயரமான ஒரு பாறை மேல் தூக்கியடித்து உடைத்தான்.
சாராயத்தை வீசியது என்னைப் பற்றிய நம்பிக்கையை ஷெர்ப்பாவின் மனதில் விதைத்துவிட்டது போல் தெரிந்தது. அவனும் எங்கள் இரண்டடிக் குழிவில் ஒண்டிக்கொண்டான். எதுவும் நடக்காதது போல் மழலை இந்தியைக் கைவிட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். நானாவது உடைந்த ஆங்கிலத்தில் பேசுவேன். ஷெர்ப்பாவின் ஆங்கிலம் 'நன்கு பொடித்தது'. எங்கள் வசதிக்கு அவன்தான் கிடைத்தான். இருந்தாலும் அவன் சொல்லவந்ததை எங்களுக்குப் புரியவைத்துவிட்டான். சமீபத்தில் இறந்தவர்கள் தன்னைக் கொல்ல முயன்றதால்தான் செத்தார்கள் என்றும் மற்றபடி அவன் ஒரு குழந்தை போல என்றும் ஷெர்ப்பா நெஞ்சைத் தொட்டு விளக்கினான். கடுந்தென்றல் புயலாகி நம்மை உயிரோடு புதைப்பதற்குள் நெல்சன் சிகரத்தை அடைவதுதான் புத்திசாலித்தனம் என்றான். எங்களைப் போன்ற சோப்ளாங்கிக் கற்றுக்குட்டிகளை வைத்துக்கொண்டு இலக்கை எட்டுவதற்குக் குறைந்தது ஒருநாள் ஆகும் என்றான் ஷெர்ப்பா. அந்த 13,000 அடிகளில் 11,000 பயணப்படாமல் அப்படியே இருந்தன. ஷெர்ப்பா விவகாரம் நடந்திராவிட்டால் ஐந்து பேரும் உயிரோடு 5000 அடி ஏறியிருப்போம். இனி திரும்பிப் போக முடியாது. உலகிலேயே மிக உயரமான புலி வாலைப் பிடித்த கதை எங்களுடைய இந்தப் பயணம்தான்.
பேசிக்கொண்டே ஷெர்ப்பா இடுப்பிலிருந்து வேட்டைக் கத்தியை எடுப்பதைக் கவனித்தேன். மெதுவாக ஒரு பதற்றம் பற்றிக்கொண்டாலும் மேலுக்கு அலட்டிக்கொள்ளாமல் இருந்தேன். கத்தியை எடுக்கிறான் பார் என்ற முணுமுணுப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த இடத்தில் சரவணனுக்கு பதிலாக குருராஜன் இருந்தான். அவனுக்கு இரண்டு கால்கள் இருந்தன. பிராணவாயு குறைவான அதிஉயரச் சூழல்களில் தோற்ற மயக்கங்கள் ஏற்படுவது பற்றி எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது என்றாலும் சந்தேகத்திற்கிடமின்றி அங்கே இருந்தது குண்டுவெடிப்புக்கு முந்தைய குருராஜன்தான். இருந்த நிலைமையில் அருகாமைக்காரன் யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். கண்ணில் புலப்படுபவனாக இருந்தால் போதும்.
உடனே நெல்சன் சிகரத்தின் மலையேறிகள் குடிலை அடைந்து படுத்துக்கொள்ளலாம் என்று இருந்தது. அதைவிட மே மாத வெயிலுக்கான தேவை அதிகம். ஆனால் அது சென்னைக்குப் போனால்தான் கிடைக்கும். ஷெர்ப்பா கத்தி விளிம்பால் அடுத்த சாராய புட்டியை நெம்பிக் கிழித்துத் திறந்தான். இடதுகையால் புட்டியை உயர்த்தி வேகமாகச் சில மடக்குகள் குடித்தான். வேண்டுமா என்று எங்களைக் கேட்டான். நான் மறுக்க, சட்டெனக் கத்தியை நீட்டி குருராஜனின் கழுத்தில் செருகினான். "ராமசந்திரப் பிரபுவே" என்று கத்த முயன்று கத்தியைப் பிடித்துக்கொண்டு சரிந்தான் குருராஜன். "ராமச்சன்" வரைதான் சொன்னான். "திரப் பிரபுவே" சிவப்புத் திரவமாக வாயிலிருந்து பொங்கி வந்து அவன் மார்பிலும் நிலத்திலும் கொட்டியது. அருகில் இருந்தவன் குருராஜன்தான் என்று உறுதியானது. சற்று முன்பு ஒரு காலையும் உயிரையும் இழந்தவன் சரவணனாக இருக்கலாம். இழவெடுத்த பனிப் பொழிவில் யார் முகமும் சரியாகத் தெரியவில்லை.
ஷெர்ப்பா இன்னும் சில மடக்குகள் எடுத்தான். நான் எதுவும் சொல்லத் தெரியாமல், நடந்த சம்பவத்தை அவன் விளக்குவான் என்ற நம்பிக்கையில் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். 'இவன்தான் நம் பிரச்சினைகளுக்கெல்லாம் குற்றவாளி; இனிமேல் தடையின்றி நிம்மதியாகப் பயணிக்கலாம்; கவலைப்படாதே, எண்ணி நான்கு மணிநேரத்தில் இவனை மலை மூடிக்கொள்ளும்; எப்படியும் சப்ளைப் பஞ்சத்தோடு உயிருடன் இருந்திருந்தால் இவர்கள் எல்லோரும் மூளை வீங்கிச் செத்திருப்பார்கள்' என்றான் ஷெர்ப்பா. எனக்கு பயமாக இருந்தது. மரணத்தை அவ்வளவு பக்கத்திலிருந்து பார்த்ததில்லை. ஷெர்ப்பா திடீரென்று சரளமாகத் தமிழ் பேசத் தொடங்கியிருந்ததும் நல்ல அறிகுறியாகப் படவில்லை. நண்பர்களும் வேண்டாம், எதிரிகளும் வேண்டாம்; எல்லோரையும் கொன்றுவிட்டு எங்காவது ஒதுங்கிவிடுவோம் போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஒதுங்குவதற்கு இருந்த ஒரே இடம் நெல்சன் சிகரம். அதை அடைய ஷெர்ப்பா வேண்டும். அதற்குப் பின்பு முடிந்தால் ஹெலிகாப்டர் இரவல் கேட்டுக் கொஞ்சம் தாழ்வான இடத்திற்குப் போய்ச் சேரலாம். அதன் பிறகு மொத்தமாகத் தரையிறங்குவது எளிதாக இருக்கும்.
"நெல்சன் சிகரம் போயாக வேண்டும் ஷெர்ப்பா" என்றேன்.
"இல்லை, நாம் கீழே போகிறோம்" என்றான் ஷெர்ப்பா.
நான் பதறினேன். கீழே போக நாட்கணக்கு ஆகும். உயிரோடு அடிவாரத்தை அடைவதாவது!
"ஷெர்ப்பா உன்னைக் கூட்டிச் செல்வான். ஷெர்ப்பாவை நம்பு. ஷெர்ப்பாவுக்கு எல்லாம் தெரியும்" என்றான், வேறு யார், ஷெர்ப்பாதான். "வெறும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக இறங்கும் வழி ஒன்று இருக்கிறது. அபாயத் தருணங்களுக்கு மட்டும் நான் அதைப் பயன்படுத்துவேன். இப்போது அதைப் பயன்படுத்திக் கீழே இறங்குவோம். அங்கே கால் வழுக்கும். கயிற்றை கெட்டியாகப் பிடித்திருந்தால் பத்திரமாகப் போய்ச் சேர்வோம்."
ஷெர்ப்பாவின் வார்த்தைகள் எனக்குத் துளிகூட தைரியத்தைத் தரவில்லை. ஷெர்ப்பா போன்ற ஓர் ஆளுடன் சாகப்போகிறோமே என்ற எண்ணம்தான் எழுந்தது. விபத்துகளில் குடும்பத்தோடு சேர்ந்து சாகிறவர்கள் கொடுத்துவைத்தவர்கள். ஆனால் நான் யாருடன் சாவது என்று தேர்வு செய்யும் நிலையில் இல்லை. இப்போது ஷெர்ப்பாதான் கடவுள். அவனிடம் சரணடைந்தேன். அவன் என்னை உயிரோடு கீழே கொண்டு சேர்த்தால் நல்லது. அது நடக்காவிட்டால் என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று மனதிற்குப் புகட்டிக்கொண்டேன். என் குடும்பம் நடுத்தெருவிற்கு வராதிருக்கப் பல வகைக் காப்பீடுகள் இருக்கின்றன. அது போதும் எனக்கு. குடும்பத்தினரைப் பற்றி நினைக்கையில் அவர்களுடைய முகங்கள் எனக்குத் தொடர்பில்லாத ஏதோ ஓர் இணை உலகத்தில் வாழ்பவர்களுக்குரியவை போல் இருந்தன. ஷெர்ப்பா அந்தச் சிந்தனையின் மேல் காறித் துப்புவது போல் ஒலியெழுப்பினான்.
ஷெர்ப்பா பழகிய இடம் போல் அந்த முரட்டுப் பரப்பில் வேகமாக நடக்க, நான் அவனைப் பின்தொடர்ந்தேன். இப்போது நானும் அவனும் மட்டும்தான் இருந்தோம் என்று கிலியாக உறைத்தது. என்னோடு வந்த மிச்சம் பேர் அவனுக்கு பலியாகியிருந்தார்கள். இவன் ஏன் என்னை விட்டுவைத்ததோடு எனக்கு உதவவும் செய்கிறான் என்ற கேள்வி எழுந்தது. இவனுக்கு நான் பாக்கி எதுவும் தர வேண்டியதில்லை. மொத்த வழிகாட்டுக் கூலியையும் அடிவாரத்திலேயே கொடுத்தாயிற்று. என்னைக் கொல்லக்கூடத் தேவையில்லை, தனியாக விட்டுச் சென்றாலே இரவுக்குள் கட்டியாகி செத்துக்கிடப்பேன். அப்படி இருக்கையில் இவன் என்னை எதற்காக, எங்கே இழுத்துக்கொண்டு போய் உதவுகிறான்? அவனைப் பொறுத்த வரை நானும் துரோகிதானே. புரியவில்லை.
மலைக்கும் ஒரு பெரிய பாறைக்கும் இடையே வளைவாக, சந்து போல் ஓர் இடம் வந்தது. "இங்கே ஜாக்கிரதை" என்றான் ஷெர்ப்பா. நாங்கள் அதனூடே சென்றோம். பத்திருபது அடிகளுக்குப் பிறகு மீண்டும் திறந்த வெளி. துருத்திக்கொண்டிருந்த ஒரு கல்லில் தடுக்கிக் குப்புற விழுந்தேன். சட்டென்று எழ முடியாமல் முதுகுப் பாரம் அழுத்தியது. முன்னே சென்றுகொண்டிருந்த ஷெர்ப்பா அருகில் வந்தான். என் பையைப் பிடித்துத் தூக்கி என்னை நிறுத்துவான் என்று நினைத்தால் பையிலிருந்து சில பொருட்களை வெளியே எடுத்தான். "இப்போது எழுந்திரு" என்றான். எவ்வளவு எடுத்தானோ தெரியவில்லை, அதிகம் சிரமப்படாமல் எழுந்தேன். பாரம் லேசாக இருந்தது. ஷெர்ப்பா கீழே எடுத்து வைத்த பொருட்களைத் தனது பைக்குள் ஒவ்வொன்றாக வைத்தான். எனக்கு வழிப்பறி கொடுப்பது போல் இருந்தது. "உன்னால் தூக்க முடியாது. அப்புறம் தருகிறேன்" என்றான் ஷெர்ப்பா.
இப்போது நாங்கள் விளிம்பு போல் ஓர் இடத்திற்கு வந்திருந்தோம். ஷெர்ப்பா பாதி நிரம்பிய ஒரு சாராய புட்டியைத் தன் பையிலிருந்து எடுத்து நடந்தபடியே குடிக்கத் தொடங்கினான். புட்டிக் கையால் நேராகக் காட்டி, "குதி" என்றான். நான் முன்னே நடந்து சென்று பார்த்தேன். நான்கடி ஆழத்தில் மேகங்களைத் தவிர எதுவும் தெரியவில்லை. "இங்கேயா?" என்றேன். "பயப்படாதே, இங்கே வெறும் புதர்கள்தான் இருக்கும். அடிபடாது. அங்கேயே இரு. சிறுநீர் கழித்துவிட்டு நானும் வருகிறேன். அதற்கு முன் என்னால் குதிக்க முடியாது" என்றான்.
நான் நம்பிக்கை இல்லாமல் சிறிது நேரம் மேகப் பொதியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திரும்பி ஷெர்ப்பாவைப் பார்த்தேன். அவன் குடித்தவாறு மெல்ல ஒரு பாறை இடுக்கைக் குறி வைத்து நடந்துகொண்டிருந்தான். கண்டிப்பாகக் காலில் அடிபடும் என்று நினைப்புடன் நான் மேகத்தின் மேல் குதித்தேன். ரொம்ப நேரத்திற்கு ஜில்லென்று இருந்தது.
ஒரு கை ஓசை
செல்பேசியில் என்னை வந்தடைந்த ஒரு செய்தி நெஞ்சில் இடியாக இறங்கியது. அதோடு நில்லாமல் சிறிது நேரம் அங்கேயே அலைபாய்ந்துகொண்டிருந்தது. செங்கல்பட்டைச் சேர்ந்த என் வாசகர் இராம.திரு. அபிஷேக் இருவாரங்களுக்கு முன்பு வாகன விபத்துக்குள்ளாகியிருக்கிறார். நிறைய ரத்தம் இழந்தாலும் பிழைத்துவிட்டார். இப்போது ஓரளவு தேறி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறார். கேட்டதும் செங்கல்பட்டுக்குக் கிளம்பிவிட்டேன்.
நிறைய படித்தவரான அபிஷேக், அநேகமாக எனது ஒரே வாசகர். எனது படைப்பு ஒன்று வெளியாகும்போது அதைச் சிலாகித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்ப அவர் தவறியதே இல்லை. சென்ற வாரம் ஆகக்கொடூரமான சிறுகதை ஒன்றை எழுதி வெளியிட்ட பின்பு அவரிடமிருந்து பாராட்டு மடல் எதையும் காணோமே என்று சில நொடிகள் வியந்துகொண்டிருந்தேன். விபத்தில் தவறிவிட்டிருக்கிறது வாசிப்பு.
அபிஷேக்கிற்கு வயது 65. ஆமாம், நம்பி விபத்துக்குள்ளாகும் வயதல்லதான். ஆனால் அவர் அதை வேண்டுமென்று செய்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இத்தனைக்கும் அவர் எனது சமீபத்திய சிறுகதையைப் படிக்கவில்லை. ஏன், இரு மாதங்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசியபோதுகூட அவர் விபத்து பற்றி மூச்சு விடவில்லை. இப்போது அந்த உரையாடலைப் பற்றி யோசித்தால், அவர் அதை நாசூக்காகத் தவிர்த்தது போல் தோன்றுகிறது.
12 மணிக்குக் கிளம்பி செங்கல்பட்டுப் பேருந்து நிலையத்தைச் சென்றடைகையில் மதியம் சுமார் 2.30 மணி இருக்கும். அகோரப் பசி என் உடலின் கொழுப்புகளைத் தின்றுகொண்டிருந்தது. இந்தப் பசியில் போனால் நோயாளி என்றும் பார்க்காமல் அபிஷேக்கிடம் தாறுமாறாக சத்தம் போட்டுவிடக்கூடிய ஆபத்து இருந்தது. எனவே அருகில் இருந்த உணவகத்தில் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது காலையில் செல்பேசியில் அழைத்த அதே நபரிடமிருந்து அழைப்பு வந்தது. இப்போதுதான் அபிஷேக் தூங்கி முடித்துக் கண்விழித்தாராம். வலதுகை போய்விட்டதாம். பதறிப்போனேன். என் முகத்தில் உழைப்பாளி போல் வியர்வை முத்துக்கள் அரும்பின. இட்லியை ஸ்பூனால் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், உள்ளுணர்வால் சட்டென ஸ்பூனை எறிந்துவிட்டு நேரடியாகக் கையால் எடுத்து சாப்பிடத் தொடங்கினேன்.
இட்லியை அடுத்துப் பொங்கலும் வடையும் உள்ளே போய்க்கொண்டிருக்க, அபிஷேக்கிற்கு என்ன ஆறுதல் சொல்லப்போகிறேன் என்று மலைப்பாக இருந்தது. அவரது மென்மையான இயல்புக்கும் குரலுக்கும் மாறான உருவம் அவருக்கு. 6.3 அடி உயரம், அதற்கு ஏற்ற அகலம். குறுகலான சந்தில் எதிர்ப்பட்டால் அவர் மீது இடித்துக்கொள்ளாமல் நடக்க முடியாது. இடித்துக்கொள்ளக் கூடாது என்றால் அவரைப் படுக்கச் சொல்லி அவர் மேலே ஏறித்தான் நடந்து போக முடியும். அதுவே ஒரு சிறிய மாடி ஏறி இறங்குவது போல் இருக்கும். அல்ஜைமர்ஸ் வந்தால்கூடக் காணாமல் போக இடமளிக்காத ஆகிருதி அவருடையது. மாமிச மாளிகை போன்ற அந்த சரீரத்தில் ஒரு நீண்ட கை இல்லாவிட்டால் பளிச்சென்று தெரியும். இதில் வேதனையான விசயம் என்னவென்றால், அவர் பெருமளவு வலதுகைப் பழக்கம் உள்ளவர். இந்த வயதில் வலதுகையை இழப்பது கொடுமையிலும் கொடுமை என்பதைக் கல்நெஞ்சக்காரர்கள்கூட ஒப்புக்கொள்வார்கள், ஆனால் தங்களுக்கு அவ்வாறு நேர்வதை விரும்ப மாட்டார்கள்.
கிட்டத்தட்ட இருபதாயிரம் சதுர அடியில் பல அரச மரங்களின் ரம்மியம் சூழ அமைந்திருந்த தனியார் மருத்துவமனை அது. ஆனால் இந்த வர்ணனையைப் பிறகொரு சமயம் வைத்துக்கொள்கிறேன். அபிஷேக் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றலாகி ஒரு தனி அறைக்கு வந்திருந்தார். அறைக்கு வெளியே நின்றிருந்த அவரது மனைவியும் மகள்களும் என்னைக் கண்டு சங்கடமாகப் புன்னகைத்தார்கள். அபிஷேக் கழுத்திலிருந்து கால் வரை போர்த்தப்பட்டு சில மருத்துவ உபகரணங்களை அணிந்து படுத்திருந்தார். அவரால் இனி என்றைக்குமே உரிக்க முடியாத சாத்துக்குடிகளைக் கொண்ட பையுடன் என்னைப் பார்த்ததும் தமது ஆன்மாவில் புரையோடியிருந்த துயரம் அனைத்தையும் கண்களுக்குக் கொண்டுவந்து என்னைப் பார்த்தார். அல்லது கண்திறந்த வாக்கில் தூங்கிக்கொண்டிருந்தாரோ என்னவோ. அப்படித்தான் போல. எனக்குத் தகவல் சொன்ன அன்பர் உள்ளே வந்தார். அபிஷேக்கின் கால் கட்டைவிரலை லேசாக அசைத்து, "யார் வந்திருக்காங்க பாருங்க" என்றார். அபிஷேக் அரைத் தூக்கத்திலிருந்து விடுபட்டு என்னைப் பார்த்தார். செல்பேசி அன்பர் நாசூக்காக வெளியேறினார்.
"என்ன சார் இப்படி ஆயிருச்சு!" என்று அரற்றினார் அபிஷேக்.
இந்தக் கேள்வியைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்றாலும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் 'ஐஸ்பிரேக்க'ராக விக்கிபீடியா உதவியது.
"ரெண்டாயிரத்துப் பதிமூணுல தமிழ்நாட்டுல பதினாலாயிரத்தி ஐநூத்தி நாலு விபத்துகள் நடந்திருக்கு. அதுல பதினஞ்சாயிரத்தி ஐநூத்தி அறுவத்திமூவர் செத்துப் போயிருக்காங்க. அதுனால நீங்க பொழைச்சது ஆகப்பெரிய சில்வர் லைனிங். உங்களுக்குக் கை போனதுல எனக்கும் வருத்தம்தான். ஆனா உங்களை உயிரோட பாக்கறனே அது என்னோட அதிர்ஷ்டம். ஏன்னா வர்ற வழில ஒரு லாரிக்காரன் என்னை ஜஸ்ட்ல மோதியிருப்பான்…"
அவரோ எனது வருத்தத்தை லட்சியமே செய்வதாக இல்லை. "கையே போயிடுச்சே சார்" என்றார் பிடிவாதமாக. அவர் ஆறுதலை ஏற்கும் மனநிலைக்கு வருவதற்கு முன்பு அவர் விளையாட்டுக்கே போகலாம் என்று முடிவு செய்தேன்.
"ஆமாம் சார். வெயிட்டைக் குறைக்கணும், வெயிட்டைக் குறைக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பீங்க. ஆனா இப்படிக் குறையும்னு யார் எதிர்பாத்திருக்க முடியும்?" என்றேன்.
"ஆமாம் சார், இப்ப வெறும் கஞ்சிதான் சார் குடிக்கிறேன்!"
"நான் இங்க வர்றப்பல்லாம் 'வாங்க, ஒரு கை குறையுது'ன்னு ரம்மி ஆடக் கூப்புடுவீங்க. இப்ப உங்களுக்கே ஒரு கை குறையிற மாதிரி ஆயிடுச்சு பாருங்க…"
"அதத்தான் சார் தாங்க முடியல. கை இல்லாம எப்படி சார் வாழுவேன்? அதுக்கு உயிரே போயிருக்கலாம்."
"ஆங் – உயிரப் பத்தி மட்டும் பேசாதீங்க, எனக்குக் கெட்ட கோவம் வரும். உயிருக்கு மதிப்பே கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உயிர மட்டும் விட்டுரக் கூடாது. கை போனா செயற்கைக் கை பொருத்திக்கலாம். உயிர் போனா திரும்பி வராது. வந்தாலும் திரும்பி நமக்கேதான் வரும்னு கியாரண்டி கிடையாது…"
"வாஸ்தவம்தான் சார்" என்றார் அமைதியாக. செயற்கைக் கை பற்றிய நினைவூட்டல் அவருக்கு ஆறுதல் அளித்திருக்கக்கூடும்.
"'செயற்கைக் கை'-ன்றதுலயே ரெண்டு கை இருக்கு பாருங்க…"
சிறிது நேரம் மௌனமாக இருந்தவர், "நான் ஓரமா, மெதுவா இருவத்தஞ்சு கிலோமீட்டர்ல போயிட்டிருந்தேன். லூசுக் கூமுட்டை எதையோ குடிச்சிட்டு சைடுல வந்து மோதிட்டான். கையும் போச்சு காரும் போச்சு. இன்னொரு கார் வாங்குனாகூட ஓட்ட முடியுமா?" என்று பொருமினார்.
"ஐயைய, இப்ப எதுக்கு அதெல்லாம் கெளறிக்கிட்டு? அந்தாளப் புடிச்சாங்களா?"
"அவன் ஸ்பாட்லயே காலி சார்."
"பாத்தீங்களா? உடனே தண்டனை குடுத்த ஆண்டவன் உங்களுக்கு ஒரு வழி காட்டாமலா இருப்பான்?" அபிஷேக் தேர்ந்த சிவபக்தர். அதனால்தான் அறுபத்திமூவரை நைச்சியமாகப் பேச்சில் நுழைத்தது.
"அவனுக்கே அடுக்காது சார்…"
"சார், உங்களை என் அண்ணனா நெனச்சிக்கிட்டு ஒண்ணு சொல்லவா? மனுஷனுக்குக் கை-ன்றது கிட்னி மாதிரி சார். ஒண்ணு போயிட்டா இன்னொண்ண வெச்சு சமாளிச்சிக்கலாம். பொண்ணுங்களுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சிட்டீங்கல்ல, இனிமே உங்களுக்கு எத்தனை கை இருந்தா என்ன சார்? உங்க கடமைகள நீங்க நிறைவேத்திட்டீங்க. நீங்க சம்பாதிச்சுத்தான் பொழைக்கணும்னு இல்ல. உக்காந்து சாப்புட சொத்து இருக்கு. உங்களுக்கு ஒரு கை அதிகமா இருக்குறதா நெனச்சிக்குங்க. இவ்ளோ பெரிய ஒடம்புல ஒரு கை இல்லன்னா இப்ப என்ன சார் ஆச்சு? ஒரு கைதானே சார்? மயிராப் போச்சு விட்ருங்க!"
அபிஷேக் கண்களை மூடிக்கொண்டார். அந்தக் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஆனால் உலகத் தரமான இசையை ரசிப்பது போல் புன்னகைத்தார்.
"இதுக்குத்தான் சார் உங்களக் கூப்ட்டேன்" என்றார்.
அஞ்சலித் தொழிற்சாலை
நண்பர் லபக்குதாசின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் தமது அறையில் கணினி முன்னே உட்கார்ந்து விசைப்பலகையில் நெற்றியைத் திரும்பத் திரும்ப மோதிக்கொண்டிருந்தார்.
"என்னய்யா பிரச்சனை?" என விசாரித்தபடி கணினித் திரையைப் பார்த்தேன். திறந்த வேர்டு கோப்பு ஒன்றில் "அஞ்சலி: வன்மதி மோகன்" என்று இருந்தது. ஆடிப்போனேன். அதற்குக் கீழே நான்கு வரிகள் உரைநடை. வன்மதி 'புகழ்' மோகனுக்கு அதிகம் 30 வயதுதான் இருக்கும்.
"ஒரு பாராவுக்கு மேல நகர மாட்டேங்குது" என்றார் துன்பமாய்.
"வன்மதி இப்ப இல்லையா?" என்றேன் குறையாத அதிர்ச்சியுடன்.
"இல்லாம என்ன? இப்பவே எழுதி வெச்சிட்டா நாளைக்கு உபயோகப்படும்" என்று கணினியில் ஒரு ஃபோல்டரைக் காட்டினார். எல்லாம் உயிரோடுள்ள ஆட்களுக்கான அஞ்சலிகளாய்க் கிடந்தது.
"ஆள் திடீர்னு ஆக்சிடன்ட்ல போயிட்டான்னு வைங்க, அவன் ஆவிய வச்சு ரிசர்ச் பண்ண முடியாது. உயிரோட இருக்குறப்பவே டீட்டெயில்ஸ் வாங்கிக்கணும்."
"அஞ்சலிக் கட்டுரைக்கு வேணும்னு கேட்டு வாங்குனீங்களா?"
"இளம் எழுத்தாளர் அறிமுகம் எழுதுறேன்னு சொன்னேன், மளமளன்னு அவனே ஃபுல் டீட்டெய்ல்ஸ் சொல்லிட்டான். கட்டுரையா வடிவம் பெற மாட்டேங்குது, அதான் பிரச்சனை."
ஃபோல்டரை மூடப் போனவரைத் தடுத்து அந்தப் பெயர்களில் என்னுடையதும் இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தது.
"அத ஓப்பன் பண்ணுங்க" என்றேன்.
"எது, உங்களுதா?" என்று என்னுடைய அஞ்சலியைத் திறந்தார்.
உள்ளே "பேயோன்: 1967-201?" என்று இருந்தது. 'அட பேராசைக்காரப் பாவி மனிதா!' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அதன் கீழே பார்த்தால் எனது எல்லாப் புத்தகங்களும் அடங்கிய ஒரு பட்டியல் மட்டுமே காணப்பட்டது.
"இன்னும் எழுதலியா?" என்றேன்.
"எழுதுனதுதான் இது. உங்களுதாச்சே, நான்லீனியரா பண்ணிருக்கேன்."
"அது சரி. உங்களுக்கும் எவனாவது எழுதி வெச்சிருக்கப் போறான்" என்றபோதுதான் இந்த யோசனை எனக்குத் தோன்றாமல் போயிற்றே என்று கடிந்துகொண்டேன்.
நான் வயதான எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் எழுதிவைத்திருக்கிறேன். லபக்குதாசின் தொலைநோக்கோ, சாலை விபத்துகள், திடீர் நோய்கள் போன்ற வாழ்வின் திடீர் அநிச்சயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.
"அதுக்கு நம்மால என்ன பண்ண முடியும்? வன்மதி பத்தி ஏதாவது பேசுங்க. ரெண்டு மணிநேரமா ட்ரை பண்றேன். ஒண்ணுமே எழுத வர மாட்டேங்குது."
"வாங்க, ஒரு பிரேக் எடுத்துக்குங்க. அப்புறம் தானா எழுத வரும்" என்று டீ சாப்பிட அவரை அழைத்துச் சென்றேன்.
சென்றேனே தவிர உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டேன். வன்மதி மோகனெல்லாம் லேசில் சாகும் ரகம் அல்ல. கெஞ்சிக் கூத்தாடினால்கூட வழிக்கு வர மாட்டார். கடைசியில் வன்மதிதான் லபக்குதாசுக்கு அஞ்சலி எழுதுவார் என்று தோன்றியது. விதி அப்படித்தான் விளையாடும்.
பிறகுதான் தோன்றியது: அஞ்சலி என்பது ஆசுகவி மாதிரி வர வேண்டும். ஆள் போனதாகச் செய்தி வந்ததும் அந்த அவசரத்தில் உட்கார்ந்து எழுத வேண்டும். அப்போதுதான் நாவல் மாதிரி இல்லாமல் அஞ்சலிக்கே உரிய, வாசிப்புத் திருப்தியை அள்ளித் தருகிற வடிவ அமைதி வரும். இல்லாவிட்டால் வெறும் "அவர் நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் ஒரு நல்ல மனிதரும்கூட"-தான். லபக்குதாஸ் போன்ற கார்ப்பரேட் மனோபாவமுள்ள எழுத்தாளர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை.
ஒரு பெருமூச்சு விட்டு லபக்குதாசைப் பார்த்தேன். அவர் குறிப்பாக எதிலும் பார்வையைப் பதிக்காமல் மௌனமாகத் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தார்.
பேட்டிக்கு வந்த மலர்
என்னை நேர்காணலிடத் துடிப்பான இளம் பெண் பத்திரிகையாளர் ஒருத்தி வந்திருந்தார். தொடங்குவதற்கு முன்பு என்னோடு 'இன்பார்மலாக'ச் சிறிது பேசிக்கொண்டிருந்தார். எனக்குப் பக்கத்து இருக்கையில் என் மனைவி.
என் ஊர் எது, எங்கே படித்தேன், எனக்கு என்ன பூக்கள் பிடிக்கும் என்று அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியையும் நான் பேச வாயைத் திறப்பதற்குள் – இத்தனைக்கும் நான் வேகமாகத்தான் திறந்தேன் – மனைவி தடுத்தாட்கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
கேள்விக்காரி என்னை ஒரு மாதிரி தர்மசங்கடமாகப் பார்த்தார். "நம் இருவருக்கு இடையே இன்னொரு பெண் தேவையா?" என்றன இமைகளில் மெல்லிய கோடாகக் கரிய லிப்ஸ்டிக் பூசிய அவரது கெண்டைக் கண்கள். நான் பார்வையாலேயே அவரை சமாதானப்படுத்திவிட்டு மனைவியிடம், "கொஞ்சம் தண்ணி கொண்டாயேன், ஒரே தாகமா இருக்கு" என்றேன்.
மனைவி திடீரென்று அப்பாவியாகி எழுந்து பேசிக்கொண்டே சமையலறைக்குப் போய் ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
இப்போது அடுத்த அஸ்திரம்: "இவுங்க காபி கேக்குறாங்க, இவுங்களுக்கு காபி வேணுமாம்" என்றேன். பத்திரிகையாளர் திடுக்கிட்டு மறுக்கப் பார்த்தார். நான் அவரைக் கையமர்த்தி, "கூச்சமே படாதீங்க, இது என் வீடு மாதிரிதான்" என்றேன்.
மனைவி அகன்றதும் அந்தப் பெண்ணிடம் சொன்னேன்:
"இனிமே கலை, இலக்கியம், சினிமா, உலக அரசியல் பத்தி மட்டும் கேளுங்க. வேற எதப் பத்திக் கேட்டாலும் உங்களுக்கு அவுங்களோட பேட்டிதான் கெடைக்கும். பர்சனல் மேட்டர்லாம் ஈமெயில்ல பேசிக்குவோம்."
சொந்த சிம்பொனிகள்
செல்பேசியில் எனக்குப் பிடித்த மொஸார்ட்டின் 25ஆம் சிம்பொனியை ஹெட்ஃபோனில் விட்டுக்கொண்டு இசையின் மாய உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். சிம்மக் குரலாளுக்கு அது பொறுக்கவில்லை போலும்.
காதுகளின் ஹெட்ஃபோனை விநோதமாகப் பார்த்துக்கொண்டே என்னிடம் பேசத் தொடங்கினார். ஒரு பக்க ஹெட்ஃபோனைக் கழற்றிவிட்டுக் கேட்க ஆரம்பித்தேன். அக்கா பையனுக்கு வேலை கிடைத்திருக்கிறதாம், அவ்வளவுதான் விஷயம். ஆனால் நெருங்கிய உறவினரின் பேச்சு தொடங்கியதோ அந்த இளைஞனின் கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்புத் தேடலில்.
ஓர் அற்புத ஆன்மீக அனுபவம் அற்பமாகத் தடைபட்டதில் எனக்குள் ஒரு பெரும் பூகம்பமே கொந்தளித்தது. இருந்தாலும் ஆத்திரப்பட்டுப் பயனில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். செல்பேசியையும் இசைக் காதணிகளையும் அமைதியாக மேஜை மேல் ஏறக்கட்டினேன்.
"நான் பிஸியாக இருப்பதையும் மீறி நீ என்னுடன் இத்தனை செய்திகளைப் பகிர்ந்துகொள்வது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த விவரமெல்லாம் என்னுடைய தகவல் பசிக்குப் போதவே போதாது" என்று நிதானமாகச் சொல்லிவிட்டு, இது போன்ற தருணத்திற்காகத் தயாராக எடுத்து வைத்திருந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'A Brief History of Time-ஐ அவரிடம் நீட்டி, "பெருவெடிப்பிலிருந்து ஆரம்பி" என்றேன்.
நாவல் யோசனை
ஒரு கற்பனை நாட்டின் மன்னன் நீதி வழுவாது ஆட்சி நடத்துகிறான். ஆனால் அவனுக்கு வயதாக ஆகக் கொடுங்கோலனாக மாறுகிறான். அவனது வாரிசுகள் கொடுங்கோன்மையை ஆதரித்து நாட்டில் கோர தாண்டவம் ஆடுகிறார்கள். மக்கள் தாங்கொணாத் துயரத்தில் ஆழ்கிறார்கள்.
இந்நிலையில் அந்நாட்டின் இளவரசர்களில் ஒருவன் ஒரு திருமண நிகழ்வில் வேற்று நாட்டு இளவரசி ஒருத்தியைச் சந்தித்துக் காதல் கொள்கிறான். அவளும் அவனிடம் காதல் வயப்படுகிறாள். ஆனால் அவன் ஒரு கொடுங்கோல் மன்னனின் கெட்ட மகன் என்று அறிந்ததும் அவனைத் திருந்தச் சொல்கிறாள். இல்லாவிட்டால் தன்னைக் கரம்பிடிக்க முடியாது என்று உறுதிபடக் கூறுகிறாள்.
இளவரசியிடம் தன் மனத்தை முழுவதுமாக இழந்துவிட்ட இளவரசன் திருந்துகிறான். தந்தையிடம் நாட்டை ஒழுங்காக ஆளச் சொல்கிறான். மன்னன் சிரித்து மறுப்பதோடு அவனைச் சிறையில் அடைக்கிறான். இளவரசன் சிறையிலிருந்து தப்பித்துக் காதலியின் தந்தை-மன்னனிடம் தஞ்சம் புகுகிறான். தனது நாட்டின் மீது போர் தொடுத்து மக்களை மீட்கும்படி கேட்டுக்கொள்கிறான். இளவரசியின் தந்தை-மன்னன் அதற்கு ஒப்புக்கொண்டாலும் இனி மகள் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று இளவரசனுக்குக் கட்டளையிடுகிறான். இளவரசன் ஒரு ஜோசியனைக் கலந்தாலோசித்துவிட்டு இதற்குச் சம்மதிக்கிறான். இளவரசிக்கு இது விஷயம் தெரியாது.
இளவரசியின் தந்தை திடீர்த் தாக்குதலாக இளவரசனின் நாட்டின் மீது, அதுவும் இளவரசனின் தலைமையில் போர் தொடுக்கிறான். கொடுங்கோல் படையினர் சரணடைந்து இளவரசன் வெல்கிறான். இது வரை நாட்டை அடிமைப்படுத்திய தனது சகோதரர்களைச் சிறையில் அடைக்கிறான். பின்னர் தன் உப்பரிகையில் நின்று மக்களைக் கூட்டுகிறான், நல்ல காலம் வரப்போகிறது என்று அறிவிக்கிறான். ஆனால் திடீரென்று எல்லாம் மறைந்துவிடுகிறது. "சே, கடைசியில் எல்லாம் கனவா!" என்று அலுத்துக்கொண்டு ஸ்டூலில் நிமிர்ந்து உட்கார்கிறான் வடபழனி விமலா நர்சிங்ஹோம் வார்டு பாய்.
மனமாற்றம்
(குறுநாடகம்)
கதாபாத்திரங்கள்
ஆசிரியர், நடுத்தர வயது – 1
மாணவர்கள் – 33
இடம்: மாநில வாரியப் பள்ளி ஒன்றின் பதினோராம் வகுப்புக்கான வகுப்பறை.
தேதி: ???
(தமிழ் வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர் கையில் தமிழ்ப் பாடநூலை சன்னக் குரலில் உரக்கப் படிக்கிறார். மாணவர்கள் தத்தம் கைகளில் உள்ள பாடநூலைப் பார்க்கிறார்கள். ஒரு மாணவன் மட்டும் ஜன்னலுக்கு வெளியே விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.)
ஆசிரியர்: (புத்தகத்தைப் பார்த்து) மனமாற்றம். இது எளிதில் நிகழ்வதல்ல. ஒரு நிலையில் உள்ள மனம், வேறொரு நிலைக்கு மாறுவதென்றால் –
(ஆசிரியர் வேடிக்கை பார்க்கும் மாணவனைக் கவனித்து முகம் சுளிக்கிறார்.)
ஆசிரியர்: (மாணவனிடம் உரக்க) கோபியர் கொஞ்சும் ரமணா!
(மாணவன் ஆசிரியர் குரல் காதில் விழாமல் வேடிக்கையில் லயித்திருக்கிறான்.)
ஆசிரியர்: (இன்னும் உரக்க) கோபாலகிருஷ்ணா!
(மாணவன் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்கிறான். ஆசிரியர் தொடர்கிறார்.)
ஆசிரியர்: ஒரு நிலையில் உள்ள மனம்…
-திரை-
மனமாற்றம், திரைக்கதை
பள்ளிக் கரும்பலகையில் டைட்டில்கள் தோன்றுகின்றன. முதலில் 'மனமாற்றம்', அடுத்து நடிகர்கள் பெயர். இறுதியில் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் பேயோன்'.
Establishing shot: தமிழக வரைபடம்.
காலை நேரம்.
ஃப்ளாஷ் கட்: ஒரு பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள Staff Room வாசல். உள்ளேயிருந்து ஆசிரியர் வெளிப்படுகிறார். அவர் கையில் உள்ள தமிழ்ப் பாடநூல் ஜூம் ஆகிறது.
ஆசிரியரின் POV: பின்னணியில் வயலின் இசை தொடங்குகிறது. இந்த இசை, வசனம் தொடங்கும் வரை நீடிக்கும். ஆசிரியர் வலப்பக்கம் திரும்பி மாடிப்படிகளில் ஏறுகிறார். மாடிப்படி ரெயிலிங்கில் ஒரு சிறுவன் சறுக்கிக்கொண்டு இறங்குகிறான். ஒரு பெண் ஆசிரியர் நம் ஆசிரியரை முந்திக்கொண்டு படிகளில் தவழ்ந்து ஏறி முதல் தளத்தை அடைந்ததும் எழுந்து ஓடி மறைகிறார்.
ஆசிரியரின் POV: முதல் தளத்திற்கு வந்தாயிற்று. எதிரில் ஒரு சிறுமி வருகிறாள். இவரைப் பார்த்து "உள்ளேன் ஐயா" என்கிறாள். ஒரு வகுப்பறை வாசலுக்கு நேராக இரு மாணவர்கள் முட்டி போட்டிருக்கிறார்கள். எதிர்ப்படும் ஓர் ஆசிரியர் வலக்கையை உயர்த்தி முகமன் கூறுகிறார். மதில் சுவருடன் சேர்ந்த ஒரு தூணில் சாய்ந்து ஓர் ஆண்-பெண் ஆசிரியர் ஜோடி முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது. இருவரும் முத்தத்தை நிறுத்திக்கொண்டு வணக்கம் சொல்கிறார்கள்.
ஆசிரியரின் POV: ஒரு பால்காரர் மெல்ல சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார். ஆசிரியர் அவருக்கு வழி விடுகிறார். குறுக்கே ஒரு பட்டாம்பூச்சி காரிடாரினூடே பறந்து போகிறது. பட்டாம்பூச்சிக்குக் கொஞ்சம் footage. எதிரே ஓர் ஆசிரியர் சஃபாரி சூட்டில் வருகிறார். பட்டாம்பூச்சி அவர் தோளில் எச்சமிடுகிறது. அவர் அதைக் கவனிக்கவில்லை.
ஆசிரியரின் POV: வழியில் ஒரு வகுப்பறை பூட்டியிருக்கிறது. உள்ளேயிருந்து யாரோ ஓயாமல் கதவைத் தட்டுகிறார்கள். அதைக் கடந்து சென்று அடுத்த வகுப்பறையினுள் பார்க்கிறார். இரு நபர்கள் ஜாக்கி வைத்து ஒரு காரை உயர்த்தி டயரை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியரின் POV: தரைத்தளத்தில் மைதானம் தெரிகிறது. குழந்தைகள் உடற்கல்வி வகுப்பில் ஆசிரியரின் மேற்பார்வையில் உடற்பயிற்சி செய்கிறார்கள். அவர்கள் dissolve ஆகி அதே இடத்தில் சில சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.
ஆசிரியரின் POV: ஓர் அறையின் வாசலின் மேல் உள்ள "ஆய்வுக்கூடம்" என்ற பலகை ஜூம் ஆகிறது. ஆசிரியர் கடந்து செல்கிறார்.
ஆய்வுக்கூடத்தில் மாணவர்கள் பியூரெட் பிப்பெட்களில் அமிலங்களை ஊற்றுவதை ஜன்னல் வழியே பார்க்கிறோம். அவர்கள் ஊற்றியது பெரும் நெருப்புடன் வெடிக்கிறது.
பின்னணியில் எல்லாம் பற்றி எரிய ஆசிரியர் அலட்டிக்கொள்ளாமல் ஸ்லோ மோஷனில் கம்பீரமாக நடக்கிறார்.
மீண்டும் ஆசிரியரின் POV: அவர் செல்ல வேண்டிய வகுப்பறை நெருங்குகிறது. வகுப்பறைக்குள் நுழைய, பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் அமைதியாகி நேராக உட்கார்கிறார்கள்.
ஃப்ளாஷ் கட்: ஆசிரியர் கையிலுள்ள பாடநூலின் "மனமாற்றம்" என்ற கட்டுரைப் பக்கம்.
எல்லா மாணவர்களின் பார்வையும் பாடநூலில் பதிந்திருக்கிறது.
ஆசிரியர்
(புத்தகத்தைப் பார்த்து)
மனமாற்றம். இது எளிதில் நிகழ்வதல்ல. ஒரு நிலையில் உள்ள மனம், வேறொரு நிலைக்கு மாறுவதென்றால் -
ஜூம் இன்: ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் ஒரு பையன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.
காமிரா அந்தப் பையனின் பார்வை செல்லும் திசையில் செல்கிறது. சில பெரிய மாணவிகள் மைதானத்தில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைப் பிரித்துவைக்கத் தீயணைப்புப் படையினர் முயல்கிறார்கள்.
குளோஸ் அப்: ஆசிரியரின் முகம். அது கடுப்பில் இருக்கிறது.
ஆசிரியர்
(ஜன்னலோர மாணவனை நோக்கிக் கத்துகிறார்)
கோபியர் கொஞ்சும் ரமணா!
ஆசிரியரின் குரல் அந்தப் பையன் காதில் விழாமல் தொடர்ந்து வேடிக்கை பார்க்கிறான். குளோஸ் அப்: பையனின் முகம். அவன் மெல்லப் புன்னகைக்கிறான்.
குளோஸ் அப்: கடுப்பில் உள்ள ஆசிரியரின் கண்கள்.
ஆசிரியர்
(இன்னும் சத்தமாக)
கோபாலகிருஷ்ணா!
மாணவன் திடுக்கிட்டு ஆசிரியரைப் பார்த்து நிமிர்ந்து உட்கார்கிறான்.
ஆசிரியர்
(இயல்பு நிலைக்குத் திரும்பி)
ஒரு நிலையில் உள்ள மனம்…
இனிய வயலின் இசை பின்னணியில் ஒலிக்க, காமிரா மெல்லப் பின்வாங்கி மேலே உயர உயரச் சென்று செயற்கைக் கோள் உயரத்திற்கு வந்துவிடுகிறது. தமிழகத்தை நோக்கி ஓர் அம்புக்குறி தோன்றுகிறது, வகுப்பறையைக் காட்ட.
- இறுதிக் கடன்கள்* -
* End credits
ஆங்கில நாசூக்கு
ஆங்கிலம் எதையும் நாசூக்காக்கிவிடுகிறது. அதனால்தான் தமிழில் கெட்ட வார்த்தைகளைப் பேசத் தயங்குபவர்கள்கூட ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளைச் சரளமாகப் பேசுகிறார்கள்.
ஒரு பேரிளைஞர் என் வீட்டுக்கு வந்திருந்தார். தம் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் பேச அழைத்தார். முதலில் தொகுப்பை அக்கணமே படித்துப்பார்த்துக் கருத்துச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார். பக்கத்திற்கு 50 ரூபாய் தர ஒப்புக்கொண்டார்.
தொகுப்பைப் பக்கம் விடாமல் படித்தேன். சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்காது. ஒரு நிரபராதிக்கு சிறைத் தண்டனை அளித்துவிட்டது போல் கோபம் வந்தது. புத்தகத்தை 'டப்'பென்று மூடிப் பட்டென்று அவரிடம் நீட்டினேன். அவர் எதிர்பார்ப்பின் இளிப்புடன் என்னைப் பார்த்தார்.
"இந்தக் கவிதைகள எழுதுனதுக்காக… இந்த டேபிள் மேல இருக்குறதையெல்லாம் கீழ தள்ளிட்டு… உங்கள அது மேல படுக்க வெச்சு… உங்க சட்டையோட கீழ் மூணு பட்டனைக் கழட்டி சட்டையக் கொஞ்சம் மேல தள்ளி… அந்த மொண்ணை பேப்பர் கட்டர் இருக்கு பாருங்க, அதால உங்க வயித்துல ரவுண்டா, ஆழமா வெட்டி வயித்தக் கிழிச்சி… கொடல வெளிய எடுத்து… அத எங்க வீட்டு வாசல்ல தோரணமா மாட்டுனேன்னு வச்சிக்கிங்க… அப்புறம் உங்கள மாதிரி ஒரு பய கவிதைன்னு சொல்லிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெக்க மாட்டான்" என்றேன்.
அந்த நபர் முகம் வெளிறி "சார்?" என்றார்.
"சும்மா, ஜஸ்ட் திங்க்கிங் அலௌட்" என்றதும் இயல்பானார்.
பால் பொங்கல்
கியாஸ் அடுப்பில் வைத்த பாலைப் பார்த்துக்கொள்ளும்படி என்னிடம் சொல்லிவிட்டு மனைவி கடைக்குப் போனார். பொங்காத பாலை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது? போர். எனவே பொழுது போக அதை ஒரு கரண்டியால் கடிகாரச் சுற்றில் கிளறிக்கொண்டே இருந்தேன். அதுவும் சலித்துப்போக, கடிகாரச் சுற்றுக்கு எதிராகக் கிளறிக்கொண்டிருந்தேன்.
காலம் ஸ்தம்பித்தாற்போல் இருந்தது. மனைவியும் வந்தபாடில்லை, பாலும் வெந்தபாடில்லை. ஒருவேளை கரண்டியின் கிளறல்தான் பால் பொங்காதிருக்க ஊக்குவிக்கிறதோ என்று சந்தேகம் எழ, கரண்டியை அகற்றிவிட்டேன். கவிதையின் அடுத்த வரிக்காகப் போராடிக்கொண்டிருக்கையில் நம்முடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது பார் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
திடீரென்று பாலுக்கு புத்தி வந்து ஒரேடியாகப் பொங்கியது. எந்த ரயிலைப் பிடிக்க இத்தனை அவசரம்? பாத்திரத்தை மீறிப் பால் வழிந்தது. அது வழிய வழியக் கரண்டியால் அதைத் தடுத்தெடுத்துத் திரும்பத் திரும்பப் பாத்திரத்திற்குள் ஊற்றினேன். அப்படியும் திமிறி வழிந்துகொண்டிருந்தது பால். அதுவே எதிர்பாராத கணத்தில் சட்டென்று அடுப்பை அணைத்து "இப்ப என்ன பண்ணுவே?" என்றேன். பால் அப்படியே அடங்கியது. கேவலம் அரை டம்ளர் பாலுக்கே அவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்!
அடுப்பைச் சுற்றி வெளுத்ததெல்லாம் பால். மனைவி வந்து துடைப்பார்.
எச்சரிக்கை!!!
பெண்கள் முதலில் நம்முடைய உத்தியோகங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். பிறகு நம் கலைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். நம்முடைய ஆடைகளை அணியத் தொடங்கினார்கள். நமக்கான தகவல்களை அறியத் தொடங்கினார்கள். நமது வாகனங்களை ஓட்டத் தொடங்கினார்கள். நமது விளையாட்டுகளை ஆடத் தொடங்கினார்கள். நம்முடைய சிகரெட்டுகளைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். நம்முடைய மதுபானங்களை அருந்தத் தொடங்கினார்கள். இப்போது லெஸ்பியம் என்று நமக்கான பெண்களையும் புணரத் தொடங்கிவிட்டார்கள். நம்முடைய வங்கிக் கணக்குகள் அவர்கள் கைக்குப் போயாயிற்று. நமது சட்டைத் தேர்வுகள் அவர்களிடம் சென்றாயிற்று. நாளை நமக்கான காற்றையும் அவர்கள் சுவாசிக்கக்கூடும். நம்முடைய சொற்களை அவர்கள் பேசக்கூடும். நம்முடைய சிரிப்பை அவர்கள் சிரிக்கக்கூடும். நம்முடைய சுதந்திரத்தை அவர்கள் கைப்பற்றக்கூடும். நம் பாலின அடையாளத்தை அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடும். கடைசியில் அவர்கள் முழுமுற்றாக ஆண்களாகிவிடக்கூடும். பெண்களே இல்லாத ஓர் உலகை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். அடுத்தபடியாக அவர்கள் நம்மைப் பெண்களாக ஆக்கிவிடக்கூடும். நம் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும். நம்மை அதிகாரத்திலிருந்து பிரித்துவைக்கக்கூடும். நம் கணவர்களைப் போரிட்டுக் கொன்று நம்மைச் சிறைபிடிக்கக்கூடும். நம்மை நம் கணவர்கள் எரியும் சிதையில் தள்ளக்கூடும். நமக்கு சொத்துரிமை மறுக்கப்படக்கூடும். நமக்கு ஓட்டுரிமை மறுக்கப்படக்கூடும். நம் கணவர்கள் நம்மைக் குடித்துவிட்டு அடிக்கக்கூடும். நாம் குழந்தைகளை வளர்க்க வேண்டியிருக்கும். நாம் கூடத்தைப் பெருக்க வேண்டியிருக்கும். நாம் கோலம் போட வேண்டியிருக்கும். நாம் சமைக்க வேண்டியிருக்கும். நாம் மேட்ச்சிங் பிளவுசுக்காக அலைய வேண்டியிருக்கும்…
சுட்டிகள்
twitter.com/thepayon
www.writerpayon.com
writerpayon.tumblr.com
கருத்துகள்
கருத்துரையிடுக