Vā.Mu.Kōmuviṉ puttakaṅkaḷ paṟṟi naṇparkaḷ
பொது அறிவு
Backவா.மு.கோமுவின் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்
வா.மு.கோமு
உள்ளடக்கம்
வா.மு.கோமுவின் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்
முன்னுரை
உள்ளடக்கம்
நண்பன் ஒருவனின் பரிந்துரை
1. நாயுருவி (நாவல்)
2. சொல்லக் கூசும் கவிதை (கவிதைகள்)
3. அப்புச்சி வழி (நினைவோடை குறிப்புகள்)
4. கள்ளி (நாவல்)
5. எட்றா வண்டியெ –நாவல்
6. 57 ஸ்னேகிதிகள் சினேகித்த புதினம் (நாவல்)
7. பிலோமி டீச்சர் (சிறுகதைகள்)
8. மரப்பல்லி (நாவல்)
9. மண்பூதம் (சிறுகதைகள்)
10. சயனம் - நாவல்
11. சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் (நாவல்)
12. சகுந்தலா வந்தாள் - நாவல்
13. ஆசிரிய பற்றி:
14. நடுகல் வெளியீடு புத்தகங்கள்
வா.மு.கோமுவின் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்
வா . மு . கோமுவின் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்
தொகுப்பாளர் – வா . மு . கோமு
புத்தக வாசிப்பில் எல்லோரும் தான் நேரம் கிடைக்கும் சமயங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடம் புத்தகம் எப்படி? என்ற கேள்வியை வைத்தோமென்றால், பரவாயில்லை, வாசிக்க முடியலை, ஆரம்பம் நல்லா இருக்கு போகப் போக செரியில்லை! என்றே சொல்வார்கள். சிலர் வேறு பலர் ஒரு புத்தகத்தைப்பற்றி என்ன சொன்னார்களோ அதையே திரும்பச் சொல்லுவர்.
புத்தகங்களைப் பற்றி விரிவாய் பேசவோ எழுதவோ எழுத்தாளர்களுக்கு நேரமின்மை ஒருபுறம் இருக்க, அடுத்தவர் புத்தகத்தை பற்றி தான் ஏன் பேச வேண்டுமென்ற எண்ணமும் ஒரு காரணமே! ஒரு புத்தகத்தைப்பற்றி கருத்துரை பேச அழைப்பு வந்தால் மட்டுமே கூட்டத்தில் பேச வேண்டும் என்பதற்காக வாசித்து வருபவர்கள் இங்கு நிறையப்பேர். அப்படி பேசுகையில் எழுத்தாளனின் எழுத்துகள் செவ்வாய் கிரகத்தையே எட்டிப்பிடிக்கும் வகையில் உச்சத்தில் இருக்கிறதென மைக் வளையும் வரை பேசி விட்டு செல்வார்.
புத்தக விமர்சனம் என்பதை தமிழில் சிறப்பாக செய்ய ஆட்கள் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பேர்களும் எத்தனை புத்தகங்களுக்குத் தான் எழுதுவார்கள்? அவற்றை வெளியிட பத்திரிக்கைகளும் குறைவுதான் என்பதும் ஒரு பிரச்சனை தான். அவை புத்தகமாக வெளியிடப்படுகையில் கூட பெரும் வரவேற்பைப் பெறுவதில்லை.
புத்தகத்தைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொண்டே ஒரு புத்தகத்தை வாங்கும் மனநிலையில் பலர் இருக்கிறார்கள். அந்த வேலையையே நான் முகநூலில் அவ்வப்போது செய்து வருகிறேன். அதுவும் நானாக வாங்கிப் படித்த புத்தகங்கள், சில நண்பர்கள் அனுப்பி வைத்த புத்தகங்கள் இவற்றிற்கு மட்டுமே! அந்த பதிபகம் வெளியிட்ட புத்தகம் பற்றி நான் ஏன் முகநூலில் எழுத வேண்டும் என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. எதோ கொஞ்சமாச்சும் புத்தகம் பற்றி எழுதுறாப்ல கோமு! என்கிற பெயரை சீக்கிரமே பெற்றுவிட்டேன்.
இவற்றை வாசிப்பாளர்கள் வாசித்து தேவையான புத்தகத்தை நிச்சயம் வாங்கி வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்தப்புத்தகம் பற்றியும் விரிவாக நான் எழுத முயற்சியெடுக்கவில்லை என்பதை விட அவ்வளவு தான் என்னால் எழுத இயலுகிறது என்பதே உண்மை! முன்பாக பிரதிலிபி டாட் காமில் புத்தகங்கள் பற்றி ஒரு தொகுப்பு கொடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக நான் எழுதினவற்றின் தொகுப்பு இது.
புத்தகங்களை வாசித்ததும் அது பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருப்பேன். ஆகவே புத்தகங்கள் பற்றியான என் பார்வைகள் தொடரும்.
அன்போடே என்றும்
வா.மு.கோமு.
விஜயமங்கலம் -638056
பேச : 9865442435
vaamukomu@gmail.com
2
முன்னுரை
எனது வலைதளத்தில் அவ்வப்போது என் நண்பர்கள் எங்காவது படித்து விட்டு எழுதும் மதிப்புரைகளை நேரமிருப்பின் சேகரிப்பேன் . அப்படி பல தவறியும் இருக்கலாம் என்றாலும் இப்போதைக்கு கிடைத்தனவற்றை ஒரு சேகரமாக சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன் . என் புத்தகத்தைத் தேடி புதிய வாசகர் வர இது ஒரு திறப்பாகவும் இருக்கட்டுமென யோசித்தேன் . நிச்சயம் அப்படி நடந்தால் நல்லது தான் . அதை இந்த சின்னத் தொகுப்பு செய்யுமென நிச்சயம் நம்புகிறேன் . வாசித்து எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் !
அன்போடே என்றும்
வா . மு . கோமு
vaamukomu@gmail.com
3
உள்ளடக்கம்
1. நாயுருவி ( நாவல் )
2. சொல்லக் கூசும் கவிதை ( கவிதைகள் )
3. அப்புச்சி வழி ( நினைவோடை குறிப்புகள் )
4. கள்ளி ( நாவல் )
5. எட்றா வண்டியெ ( நாவல் )
6. 57 ஸ்னேகிதிகள் சினேகித்த புதினம் ( நாவல் )
7. பிலோமி டீச்சர் ( சிறுகதைகள் )
8. மரப்பல்லி ( நாவல் )
9. மண்பூதம் ( சிறுகதைகள் )
10. சயனம் ( நாவல் )
11. சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் ( நாவல் )
12. சகுந்தலா வந்தாள் ( நாவல் )
4
நண்பன் ஒருவனின் பரிந்துரை
Tuesday, December 13, 2011
வா . மு . கோமுவின் மண் பூதம் தொடங்கி கிட்டத்தட்ட அவருடைய அனைத்து புத்தகங்களையும் படித்திருக்கின்றேன் . இப்போது ஒட்டுமொத்தமாக அவற்றை மறுவாசிப்பு செய்தேன் . அவரைப்பற்றிய பொது பார்வையாக வைக்க படுவது அவருடைய மன தடைகளற்ற மொழி , குறிப்பாக பாலியல் குறித்து . இது உண்மை என்றாலும் அது மட்டுமே அவர் கிடையாது . அவர் புத்தகங்களில் உள்ள இன்னும் சில பரிமாணங்கள் இவ்வகையான பிம்ப கட்டமைப்பால் அடிபட்டு விடுகின்றன . ‘ மண் பூதம் ‘, ‘ அழுகாச்சி வருதுங் சாமி ‘ புத்தகங்களில் கதை கருக்கள் முற்றிலும் வேறானவை . ‘ கள்ளி ‘ நாவலுக்கு பிறகு தான் இந்த பாலியல் குறித்த பிம்பம் அவர் மேல் விழுந்தது . அது கூட மிகை பிம்பங்கள் தான் உள்ளன .
பாலியல் பற்றி முன்னரே கூட பலர் எழுதி உள்ளனர் . தவிரவும் பாலியல் வர்ணனைகள் என்று அவருடைய ஆக்கங்களில் இருப்பதை விட அதை பற்றிய உரையாடல்கள் , குறிப்பாக அவற்றை பற்றி பெண்கள் பேசும் பேசுக்கள் தான் அதிகம் உள்ளன . அவை எந்த வித தடைகளில்லாமல் , மிக இயல்பாக உள்ளது தான் அவரை தனித்து காட்டுகின்றது . அவர் கதைகளில் வரும் பெண்கள் மிக மிக சுவாரஸ்யமானவர்கள் . தங்கள் உடல் பற்றி , தேவைகள் பற்றி கூச்சம் கொள்ளாமல் அதை கொண்டாட்டமாக எண்ணுபவர்கள் . பல ஆண்களை ஒரே நேரத்தில் பின்னால் அலைய வைப்பவர்கள் , அதே நேரத்தில் அந்த ஆண்கள் மீது possessive ஆகா இருப்பவர்கள் . இப்படி அவர்கள் ஒரு புதிர் தான் , கதையில் வரும் பாத்திரங்களுக்கு மட்டுமல்ல , படிக்கும் நமக்கும் தாம் .
கொங்கு வட்டாரத்தில் உள்ள சாதி வன்கொடுமைகள் பற்றிய குறிப்புகள் நுட்பமாக அவர் கதைகளில் உள்ளது . கொங்கு பகுதியை சேர்ந்த பெருமாள் முருகன் படைப்புகளிலும் இதை காணலாம் என்றாலும் கோமு சற்று வேறு படுகின்றார் . பெருமாள் முருகனின் கதைகளில் , சாதிய கொடுமை மூஞ்சியில் அறைகின்றார் போல் வரும் .
கோமுவின் கதை மாந்தர்கள் ( மாதாரிகள் ) ஒரே அடியாக எதிர்ப்பதும் இல்லை , கொடுமைகளை அப்படியே ஏற்றுகொள்வதும் இல்லை . அவர்கள் குசும்பும் , லொள்ளும் மிக்கவர்கள் , நேரம் கிடைக்கும் போது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தங்கள் எதிர்ப்பை / இருப்பை பதிவு செய்பவர்கள் . இருக்கும் வட்டத்தை மீறாமல் / மீறமுடியாமல் அதற்குள்ளேயே முடிந்ததை செய்பவர்கள் . ( ஒரு கதையில் மாதாரி , கவுண்டர் செய்த கொடுமைக்கு எதிர்வினையாக , அவர் கிணற்றில் குளித்து , மூத்திரம் பெய்து , தோப்பில் மலம் கழித்து , தன எதிர்ப்பை காட்டுகிறார் ). இந்த வகையில் , கோமு – சோ . தர்மன் படைப்புக்கள் ஒரு வகைமையாகவும் ( குசும்பு , நக்கல் ), பெருமாள் முருகன் – இமையம் படைப்புக்கள் ( இறுக்கமான கதை சொல்லல் ) இன்னொரு வகைமையாகவும் , காண முடியும் . ஒரே களம் , நான்கு எழுத்தாளர்கள் , இரு வேறு கதை சொல்லல் முறைகள் .
‘Political Correctness’ துளி கூட கோமுவின் படைப்புகளில் கிடையாது . தனக்கு தோன்றுவதை சொல்வதில் எந்த கூச்சமும் , பாசாங்கும் அவரிடம் இல்லை . இசங்கள் , எழுத்தாளர்கள் என அவர் பகடி செய்பவை பல . ராணி , தேவி , ராணி காமிக்ஸ் தனக்கு பிடிக்கும் என்று எந்த வித பாவனையும் இல்லாமல் சொல்ல துணிவு வேண்டும் . பீடத்தில் இருக்கும் இலக்கியத்தை கீழே இறக்கும் தேவையான செயல் இது . சிறு டவுன்களில் நடக்கும் மாற்றம் நுட்பமாக பல கதைகளில் உள்ளன , குறிப்பாக அலைபேசி வந்த பிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் .
இவை ஒரு புறம் இருந்தாலும் , இரு முனையிலும் கூரான கத்தி போல் , அவருடைய பலங்களே சில சமயம் எதிர்மறையாக செயல்படுகின்றன , குறிப்பாக அவருடைய சமீபத்திய ஆக்கங்களில் இதை காண முடிகின்றது . ‘ சந்தாமணியும் பிற கதை கதைகளும் ‘ எடுத்துக்கொள்வோம் . இதில் முதல் பகுதி ‘ பழனிச்சாமி ‘ பள்ளியில் , காதல் வயப்பட்டு , அதில் தோல்வி அடைவதோடு முடிகிறது . இதில் அந்த வயதில் ஏற்பதும் உடற் கவர்ச்சியைவிட , அவனுடைய ‘ உணர்ச்சி குவியலான ‘ மனநிலை தான் முன்னிறுத்தப்படுகின்றது . இரண்டாம் பகுதி இதற்கு நேர்மாறாக , அவன் ‘total emotional detachment’, என்ற நிலையில் இருக்கின்றான் , உடல் தான் பிரதானம் என்று கதை மாறுகின்றது . இந்த ‘contrast’ மிக முக்கியம் , ஆனால் அது எப்படி சொல்லப்படுகின்றது ? பெண்கள் , பெண்கள் , மேலும் பெண்கள் தான் இந்த பகுதியில் . பழனிச்சாமியோடு உடல்கள் பற்றி , உறவு பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் . ஒழுக்கவியல் பார்வையிலோ , பெண்ணிய பார்வையிலோ இல்லாமல் , சாதாரண வாசகன் என்ற நிலையில் இருந்து படித்தாலும் இந்த பகுதி முழுக்க சதை பிண்டங்களால் இறைந்து கிடக்கின்றது போல் தோன்றும் .
பெண்கள் இப்படி எல்லாம் பேசுவார்களா என்றெல்லாம் கேட்கவில்லை , இப்படி இந்த பகுதி முழுக்க ஒரே வகை எழுத்து விரவி கிடக்க எந்த முகாந்திரமும் இல்லை . பக்கங்களை நிரப்பும் செயலாக தான் இருக்கின்றது . தன்னுடைய புத்தகங்களில் பாலியல் சார்ந்த விவரிப்புக்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்பார்கள் , அந்த எதிர்பார்ப்பைவிட அதிகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது போல் உள்ளது . Victim of his own image. சலிப்பை விட ஒவ்வாமையை தான் இது ஏற்படுத்துகின்றது .
அதே போல் பகடி ஒரு சில இடங்களில் , தனி மனித தாக்குதலாக மாறுகிறது . ‘ நாவலல்ல கொண்டாட்டம் ‘ புத்தகத்தில் உள்ள ‘ பெண் கவிஞர்கள் ‘ பற்றிய அத்தியாயம் ஒரு சான்று . பல பெண் கவிஞர்களின் கலவையாக ஒரு பாத்திரத்தை உருவாக்கி , அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த விமர்சனங்கள் தேவையில்லாதவை . They are in bad taste. இன்னும் சில கதைகளில் போகிற போக்கில் பெண் கவிஞர்கள் பற்றி சில தாக்குதல் இருக்கின்றன . பாலியல் தொழிலாளி ஒருவர் அதை விரும்பி செய்வதாக ஒரு கதையில் உள்ளது . ஜமீலாவின் புத்தகம் படித்து அதை வேறு மாதிரி சொல்ல முயன்றதாக கோமு குறிப்பிடுகின்றார் . More than being politically incorrect, such writing ends up leaving a bad after taste. ஒரு தனித்த எழுத்து முறை வசப்பட்ட பின் அதையே திரும்ப திரும்ப சொல்வது is working it to death. குறிப்பாக ‘ நாவலல்ல கொண்டாட்டம் ‘. கோமு தனது தனிப்பட்ட பாணி என்ற நிலையிலிருந்து , தன்னுடைய பழைய ஆக்கங்களை , பிரதிபலிக்கும் / நகலெடுப்பது என்ற நிலை நோக்கி செல்கிறார் அவருடைய சமீபத்திய ஆக்கங்களில் .
கோமு கண்டிப்பாக படிக்க வேண்டிய எழுத்தாளர் . இதுவரை வரை அவரை படிக்காதவர்களுக்கு என்னுடைய பரிந்துரை ‘ கள்ளி ‘, ‘ மண் பூதம் ‘, ‘ அழுகாச்சி வருதுங் சாமி ‘, ‘ ஒரு பிற்பகல் மரணம் ‘.
1
நாயுருவி (நாவல்)
நாயுருவி – நா . முருகேசபாண்டியன்
தமிழில் நவீனக் கதைசொல்லல் என்பது பெரிதும் நினைவுகளின் வழியே கடந்துபோன சம்பவங்களைப் பதிவு செய்வதாக உள்ளது . அதிலும் இனவரைவியல் சார்ந்து வட்டார மொழி , வழக்கினை முதன்மைப்படுத்தும் நாவல்கள் , ஒரு குறிப்பிட்ட வெளிக்குள் சுருங்கியுள்ளன . நாவல் என்பது புதிய விஷயங்களுக்கு முன்னுரிமை தரும்போது அல்லது நாவலின் வழியே அறியப்பட்ட கண்டுபிடிப்புகள் புதுமையாக வெளிப்படும்போது சுவராசியமிக்கதாகின்றது . அவ்வகையில் வா . மு . கோமுவின் ‘நாயுருவி ” நாவல் கொங்கு பிராந்தியத்தை முன்வைத்துப் புதிய பேச்சுகளை உருவாக்கியுள்ளது . கதையின் வழியே விரிந்திடும் உலகு முடிவற்றதாக நீள்கின்றது . தனது முந்தைய நாவல்களில் பாலியல் விஷயத்திற்கு முன்னுரிமை தந்திருந்த கோமு , இந்த நாவலில் இலக்கியவாதி ஒருவரை முன்வைத்து தன்னைச்சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளைப் பதிவாக்கியுள்ளார் .
கொங்கு வட்டார நாவல் என்றாலே கிராமம் , பண்ணையம் , ஆடுகள் , கவுண்டர் , அருந்ததியர் , வறுமை என்ற பழைய சூத்திரத்திலிருந்து விலகி , தொழில்மயமான சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாயுருவி நாவல் சித்திரித்துள்ளது . இப்படியெல்லாம் நடைபெறும்போது என்ன செய்யமுடியும் என்ற கேள்வியை நாவல் வாசிப்பின் வழியே உருவாக்குகின்றது . பெரியசாமி என்ற எழுத்தாளரை மையமாகக்கொண்டு விரியும் கதையாடலில் கதைசொல்லியான கோமு எல்லாவற்றையும் பகடி செய்துள்ளார் . பெரியசாமி மனப்பிறழ்வுள்ளாகிய நிலையில் அலைந்து திரிந்து வன்மம் தோய்ந்த மனதுடன் ஓடும் ரயிலில் சிக்கி இரு துண்டாகிக் கோரமாக இறந்து போகின்றார் .
எழுத்தின்மூலம் தன்னைக் கண்டறியும் வல்லமையுடைய பெரியசாமியை எது அலைக்கழித்தது ? எதிலும் ஒட்ட முடியாமல் விட்டேத்தியாக அலைகின்றவருக்கு மதுவின் போதை ஒரு சாக்கு . அவருக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்த லட்சியவேட்கை எங்கே போனது ? சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொண்டதுபோல ’சூனிய நிழல்’ நாவலை அச்சிட்டு வெளிட்டவரின் சிதலமும் நொறுங்கலும் முக்கியமானவை . இன்றைய சமூகம் , அரசியல் ஏற்படுத்தும் நெருக்கடிகள் காரணமாகத் தன்னிலிருந்தே அந்நியமானவனின் இருப்பு , ஒருநிலையில் அபத்தமாகின்றது . பொதுப்புத்தியில் இருந்து விலகி யோசிக்கின்றநிலையில் , மனப்பிறழ்வு என்பது தானாக நிகழ்கின்றது . எப்போதும் கசப்பும் சலிப்புமாக இயங்குகின்ற பெரியசாமி ஒருவகையில் தன்னைத்தானே வதைக்குள்ளாக்கின்றான் . இருப்பின் அபத்தமும் அர்த்தமின்மையும் அவனைத் தொடர்ந்து அலைக்கழிக்கின்றன ,
நாவல் விவரிப்பில் இருவேறு போக்குகள் உள்ளன . நாவலின் கதைசொல்லியான பழநிச்சாமியின் அனுபவங்கள் சமகாலத்தின் விமர்சனமாக விரிகின்றன . அதேவேளையில் இறந்த பெரியசாமியின் சிறுகதைகள் , கடிதங்கள் , நேர்காணல் , கட்டுரைகள் , கவிதைகள் ஆகியனவும் நாவலில் இடம் பெற்றுள்ளன . மரபான கதைசொல்லலில் இருந்து மாறுபட்டு தனது இஷ்டம்போல கோமு விவரிப்பது சுவராசியமாக உள்ளது .
நாவல் முழுக்க இடம்பெற்றுள்ள ’கோட்டர்’ எனக் குறிக்கப்பெறும் மதுக்குப்பிகள் தமிழ்ச் சமூகத்தைப் பிடித்துள்ள பேரவலத்தின் குறியீடு . தண்ணீர் அருந்துவது போல மதுவைக் குடித்துத் தீர்ப்பது எதற்காக என்ற கேள்வியை நாவல் சூசகமாக எழுப்புகின்றது . முடிவற்ற போதையில் தன்னையே இழக்கும் ஆண் உடல்கள் காற்றில் மிதக்கின்றன . தறி வேலைக்குப் போவதைவிட நூறு நாள் வேலைத்திட்டம் பெண்களுக்குச் சௌகரியமாக இருக்கிறது . சொந்தக்கதை பேசிக்கொண்டு , பொழுதைப் போக்குகின்றவர்கள் எதிர்காலத்தில் உழைப்பிலிருந்து முழுக்க விலகும் அபாயமுண்டு வயதான பெண்கள்கூட வங்கியில் ஊதியம் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர் . அப்புறம் அரசு வழங்கும் இலவசங்கள் வேறு . மனைவியிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு டாஸ்மாக் கடையை நோக்கிப் போகின்ற ஆணின் மனநிலையை எப்படிச் சொல்ல ? இப்படியாகக் கிராமத்தினர் அன்றாட வாழ்க்கை சரிந்து கொண்டிருக்கின்றது .
மனிதவாழ்க்கையில் இயற்கையான பாலுறவு பற்றிய பெரியசாமியின் கட்டுரை அழுத்தமானது . உடலை முன்வைத்துக் காலந்தோறும் மதங்கள் உருவாக்கும் குற்றமனம் வலுவானது . உலகில் எல்லா மதங்களும் பாலியலைக் கண்டு பயப்படுகின்றன . குண்டலினி , யோகா எனப் பேசும் நித்தியா போன்ற சாமியார்களின் பின்னே திரளும் கூட்டத்தினர் ஒருபுறம் . ஆசிரமம் , மடங்கள் போன்ற இடங்களில் சாமியார்கள் , பாதிரியார்கள் போன்றோரின் பாலியல் அத்துமீறல்கள் இன்னொருபுறம் . தெருவில் திரியும் மனப்பிறழ்விற்குள்ளான பெண்ணைக்கூட விட்டு வைக்காத ஆணின் பாலியல் விழைவு கொடூரமானது .
”பாலியல் உணர்வு மனிதர்களிடம் உள்ள அதிதீவிரமான ஆற்றல். இயல்பான உயிரியல் இயக்கம். அதை அழித்துவிட இயலாது. உள்ளுக்குள் அடக்கி ஒடுக்கி வைக்கவும் முடியாது. எப்படியும் அது வெடிக்கத்தான் செய்யும். ஒரு பலூன் போல்.” இணையகத்தில் போர்னோகிராபி,, அலைபேசியில் ஒருமாதிரியான படங்கள் என வதங்கும் உடல்கள் எளிதில் புறக்கணிக்கக்கூடியன அல்ல. பாலியலை ரசியமாக மறைக்கும் தமிழகத்தில் சிறுமிகள் மீதான அத்துமீறல் தொடங்கி வக்கிரங்களும் கோளாறுகளும் தொடர்கின்றன. என்ன செய்வது என்ற கேள்வி தோன்றுகின்றது.
ஈமுக் கோழி வளர்த்தால் லாபம் கொட்டுமென்று ஆசைப்பட்டு முயன்று நஷ்டப்பட்டவர்கள் பலர் . கோவிலில் ஆடு வெட்டுவதற்குப் பதிலாக ஈமுக் கோழியை வெட்ட முயன்றால் என்ன ஆகும் ? பூசாரிக்கு அருள் வந்து ஈமுவை வெட்டக்கூடாது என மறுப்பினைத் தெரிவிக்கின்றார் . மதுவைக் குடித்துவிட்டு ஈமு இறைச்சியை விழுங்கக் காத்திருந்தவர்கள் ஏமாந்து போகின்றனர் . ஆட்டுக் கிடாய்க்குப் பதிலாக ஈமுக் கோழி என முயலும் மனிதர்கள் பற்றிய சித்தரிப்பு நகைச்சுவையின் உச்சம் .
எழுத்தாளர் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . பெரியசாமியே அப்படித்தான் இருக்கின்றார் . நடுகல் என்னும் சிற்றிதழ் நடத்தும் பெரியசாமியை தேடி வந்த சுப்ரபாரதி மணியன் எதிர்கொண்ட அனுபவங்கள் வேடிக்கையானவை . தோழர் பெருசு . காம் பதிவு என்ற அத்தியாயம் பகடியின் உச்சம் . எழுத்தை முன்வைத்து இலக்கிய உலகில் நடைபெறும் விநோதங்கள் கேலியான தொனியில் பதிவாகியுள்ளன . எல்லாவற்றையும் மிகைப்படுத்திப் புளுகுகின்ற ஒரு எழுத்தாளரின் கோணல் பக்கங்கள் பற்றிய விவரிப்பு கோமுவின் நகைச்சுவைத்திறனை வெளிப்படுத்துகின்றது . எது உண்மை , எது புனைவு என்ற வரம்பினைமீறிக் கதை நகர்கின்றது .
நாவல் விவரிப்பில் நிறைய தகவல்கள் , குட்டிக்கதைகள் , சம்பவங்கள் , குறிப்புகள் ஆங்காங்கே இடம் பெறுவதனால் கதையுடன் ஒன்ற இயலாது . தொடர்ச்சியறு எழுத்தின் வழியே எது புனைவு , எது நிஜம் தகர்க்கப்பட்டு , இப்படியாக மனித வாழ்க்கை உள்ளதே என்ன செய்வது என்ற கேள்வி வாசிப்பினில் தோன்றுகின்றது . இலக்கியச் சூழல் , சமூகப் பிரச்சினைகள் என இருவேறு தளங்களில் விரிந்துள்ள கதைகளின் வழியே வாசகர் அவரவருக்கான பிரதியை உருவாக்கிக் கொள்ளலாம் . நடப்பு வாழ்க்கையின் வெக்கை எங்கும் வலுவாகப் பரவியிருக்கும் சூழலில் , எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாட்டினைப் பகடி செய்வது , ‘ நாயுருவி’ நாவலின் தனித்துவம் . அன்றாட வாழ்க்கையில் பதற்றமும் மன இறுக்கமும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் , வாசிப்பின் வழியே நம்மையே பகடி செய்து கொள்ளத் தூண்டுகிறது நாவலாசிரியர் கோமுவின் ஆளுமை .
நாயுருவி ( நாவல் ), வா . மு . கோமு . உயிர்மை பதிப்பகம் , சென்னை . பக்கம் :254: விலை ; ரூ .190/-.
2
சொல்லக் கூசும் கவிதை (கவிதைகள்)
லதாமகன் பார்வை : சொல்லக்கூசும் கவிதை
கொங்குத்தமிழின் லாவகம் கிட்டத்தட்ட பழகிவிட்டது . தொடர்ந்து வாமுகோமுவைப் படித்துக் கொண்டிருக்கிறேன் . சாந்தாமணியும் இன்னபிறகாதல்கதைகளும் , கள்ளி . இப்போது சொல்லக்கூசும் கவிதை . ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து தொகுப்பாக அல்லது வரிசையாக வாசிக்கும்போது ஒரு மெல்லிய சரடு அவரின் எல்லா எழுத்துக்களையும் சேர்த்து இணைப்பதை ஒரு எளிய வாசகனால் கூட அறிந்து கொள்ள முடியும் . வாமு கோமுவின் எழுத்துக்களின் உலகம் வெள்ளந்தி மனிதர்களாலும் , அடக்குமுறைகளில் வெறுப்பேறிய சாமான்யர்களாலும் நிறைந்தது . இதில் மிகுபுனைவு என்றெல்லாம் போகாமல் , புனைவளவே கூட மறுத்துவிட்டு , உள்ளது உள்ளபடி நேரடி கதைகள் சொல்லும் உலகம் வாமு கோமுவுடையது .
பகடியும் , காமமும் , வெகுளித்தனமும் , பாசாங்கு எளிமையும் ஒரு சேரக் கொண்டவை இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஒவ்வொன்றும்
’இயேசு ஒரு நாள் / மொபட்டில் போவதை / வன்னாம்பாறைக்குள் / மீன் பிடித்துக்கொண்டிருந்த / நான் கண்ணுற்றேன்’
எனத் தொடங்கும் ’முதல் மீன் ‘கவிதை பகடிக்கு சரியான எடுத்துக்காட்டு . திருடிய மொபெட் எனச் சொல்லி இயேசுவைத் தேடிவருபவர் பாதிரியார் . பெத்லேஹேம்க்கு போகிறார் எனக் கிண்டல் செய்பவன் மீன் பிடிப்பவன் . ‘ அப்போதுதான் எனது தூண்டிலில் முதல் மீன் சிக்கியிருந்தது’ என முடியும் கவிதையின் எளிமையோ எள்ளலோ முழுக்க பாசாங்கு மட்டுமே . தன்னளவிலேயே பெரிய அரங்கிற்கான சின்ன கதவைத் திறந்து விடும் சாவியாகத்தான் இதனைப்பார்க்கிறேன் .
’சொல்லக்கூசும் கவிதை’ தன் நிலையைச் சொல்லக்கூசும் கிழவனின் கதை. விரித்து எழுதினால் வழக்கமான வாமுகோமு சிறுகதையாக வந்திருக்கவேண்டியது. காக்கைகளும் அசிங்கம் செய்யும் கிழவனின் கதை இத்தனை கால முதியோர் இல்லங்களின் வரலாற்றை மீட்டு எழுதுவது.வாழ்க்கையை அதன் போக்கில் சில வார்த்தைகளுக்குள் சொல்லி முடிப்பதுதானே கவிதை.
புயல் வீசிய இரவொன்றில்
அவினாசி என் . ஹச் .47 ல்
ஸ்கூட்டர் ஒன்று சாலையில்
படுத்த வாக்கில் உறுமியபடி
ஓட்டுனரைத் தேடுகையில்
இரண்டு அறுந்து போன
ஹவாய் மிதியடிகளையும்
சிவப்பு நிற திரவத்தையும்
மட்டுமே
முகப்பொளியில் பார்க்கிறது
ஒரு புகைப்படமென மனதில் விரிகிறது இந்தக் கவிதை . உறுமியபடி ஒரு ஸ்கூட்டர் . படுக்கைவசத்தில் . அறுந்து போன ஹவாய் மிதியடிகள் . சொன்ன வார்த்தைகளால் காட்சியை விவரிக்கிறார் . சொல்லாத வார்த்தையில் அத்தனை வீரியமாய் மனதில் இறங்குகிறது நிகழ்வு . இதற்கு மேல் என்னவேண்டும் கவிதைக்கு ?
< கூடப்படித்தவள்கள் > கவிதை , இதுவரை சொல்லிவந்த அடிமைத்தனங்களின் ஒட்டுமொத்த குறுக்குவெட்டுத் தோற்றம் . சீரோ டிகிரியின் அத்தியாயத்தில் . ஏ வாசகி என அழைத்து , நீ இதைச் செய்துகொண்டிருக்கலாம் , அதைச் செய்து கொண்டிருக்கலாம் என முனியாண்டி ஒரு பட்டியல் இடுவான் . இதற்கு மேல் எதுவும் பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை என முகத்தில் அறைந்த பக்கங்கள் அவை . 4 பககங்களில் முனியாண்டி சொன்னதை , ஒன்றரைப்பக்கத்தில் பட்டியலிடுகிறார் வாமுகோமு . விதவித காட்சிகளாய் மனதில் உறைந்து போன சிறுவயது தோழிகள் அனைவரும் விதவித புணர்தலில்தான் போய்ச் சேருகிறார்கள் என நிலையைச் சொல்லி , இறுதியில் திருமணமாகாத தோழியில் சலிப்பின் முடியும் கவிதை குட்டி வெடி .
வேப்பை உச்சியில் தவிட்டுக்குருவி
ஒன்று எதற்கோ கத்தியதற்கு
நீதான் கூறினாய் அம்மணி
அதற்குத்தான் கத்துகிறது என
உன் காமத்தைக் கூறுவதில் கூட
உன் வெளிப்பாட்டு உத்தி உத்தமம்
இப்படித்தான் போகிறது மொத்தத் தொகுப்பும் . உத்தி முறை வடிவம் என சிலர் உருட்டி மிரட்டிக்கொண்டிருக்க , இலை உதிர்தலைப்போல அத்தனை வேகமாய் , அத்தனை அழகாய் அத்தனை வீரியமாய் அவிழ்ந்து விடுகின்றன ஒவ்வொரு கவிதையும் . இதுவரை சொல்லப்படாத வாழ்க்கையை இதுவரை பேசிக்கொண்டிருந்த மொழியிலேயே பேசித்தீர்ப்பதுதான் ‘சொல்லக்கூசும் கவிதை’ யின் முதல் பாதை எனப் புரிந்து கொண்டால் , வட்டார வழக்குகள் போடும் சிறு தடைக்கற்களைத் தாண்டியும் , தொகுப்பை ரசிக்கலாம் .———–
நன்றி : லதாமகன் —————
சொல்லக்கூசும் கவிதை – வாமுகோமு
உயிர்மை பதிப்பகம் – ரூ .90
3
அப்புச்சி வழி (நினைவோடை குறிப்புகள்)
அப்புச்சி வழி – வாஞ்சையான மனிதர்களின் நெகிழ்வான வாழ்வியல்கள் .
எழுத்தால் வாசகனை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமானால் , எழுத்தாளனுக்கு அதுவொரு வரம் . வா . மு . கோமுவுக்கு அது அநாயசமாக வாய்த்திருக்கிறது . அப்புச்சிவழி புத்தகத்தை எடுத்து வாசிக்க உட்காருகையில் , ஏதோ பாட்டன் முப்பாட்டன்களின் தொன்மங்களையும் , வாழ்வியல்களையும் பிரித்து வேய்ந்து , தொகுத்திருப்பாரென , ஊகிக்கத்தான் என் சிற்றறிவுக்கு முடிந்தது . ஆனால் தன் தாய்வழித் தாத்தனுக்கு ஏற்பட்ட காம இதழ்களின் வாசிப்புக் காதலையும் , அதன் தொடர்ச்சியாக மூப்பெய்திய அக்கிழவனுக்கு , கோமுக்குஞ்சு செய்து கொடுத்த நிறைவேற்றலையும் படிக்கும்போது எழுத்தாளரின் எதார்த்தம் நம் மனதை இடைமறித்து எக்காளமிடுகிறது .
எல்லோருக்கும் அவரவர் சுற்றத்துடன் இணக்கமான உறவு உண்டு . அது
அவர்களது மனநிலைகளைப் பொறுத்தது . அதில் சில சுவாரசியங்களும் ,
சில பிணக்குகளும்கூட நடந்தேறியிருக்கும் . ஆனால் நாமதில் பிணக்குகளையே நம் மூளைப்பெட்டியில் பூட்டிப் பத்திரப் படுத்திக் கொள்கிறோம் . சுற்றங்கள் நம்மை அணுகும் நேரங்களில் , அப்பிணக்குகளையே நினைவிலிருந்து , மெல்லத் திறந்து பார்க்கிறோம் . அவர்கள்மீது அம்புகளை தொடுக்கிறோம் . எதிர்வரும் அம்புகளால் புண்பட்டு நோகிறோம் . சுற்றத்திற்கும் நமக்குமிருக்கும் ஏராள சுவாரசிய நிகழ்வுகள் பெரும்பாலும் நம்மில் நுழைவதே இல்லை .
சண்டை போட்ட பக்கத்துவீட்டு பங்காளியிடம் , முற்பொழுதுகளில் , கூடிப்பேசிக் களித்திருப்போம் . ஒரே தட்டில் உணவருந்தியிருப்போம் . கம்மாய்க்கரடுகளில் விளையாடி மகிழ்ந்திருப்போம் . அந்த ஹாய்ஸ்யங்களை , நம் மூளை அழுந்தப் பிடித்திருக்குமேயானால் , சாலையில் எதிர்வரும் பங்காளியிடம் , ஒரு சிறு புன்முறுவல் சமாதானம் விடுத்து , உடனே பிணக்கைத் தீர்த்திருக்கலாம் . கோமு அத்தகைய காரியவாதி . சுற்றங்களை அவ்வளவு கொண்டாடியிருக்கிறார் . பிணக்கற்ற ஓர் இனிய பயணத்தில் அவர் பயணப் படுகிறாரென அவதானிக்கிறேன் .
அவரது எள்ளல் பொதிந்த எழுத்து , இந்நூலுக்கு ஆகப்பெரும் பலம் . தான்சார்ந்த உறவுகள் மற்றும் நண்பர்களிடம் காண்கின்ற , வெள்ளந்தித் தனங்களை முடிந்தவரை , உண்மையாய் பதிவு செய்திருக்கிறார் . சில புனைவுகளும் கண்களுக்கு புலப்படுகின்றன . அது சுகர்கோட்டட் சுவாரஸியத்துக்காக தேவைப்பட்டிருக்கலாம் . அது கோமு அவர்களுக்கே வெளிச்சம் .
புத்தகத்தை எடுத்து , முதல் அத்தியாயத்தைப் புரட்டுகையில் , கோமுவின்
மனதை நீங்கள் ஓரளவு கற்று விடலாம் . புத்தகத்திலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும் , ஒரு சிறுகதைக்குப் பஞ்சமில்லாத கருப்பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது . நான் இந்தப் புத்தகத்திலுள்ள இழவுவீடு செல்லும் நண்பன் மற்றும் அட்டக்கத்தி அரவிந்த்சாமியையெல்லாம் படிக்கும்போது , என்னையறியாமல் குபீரென சிரித்தேன் . நல்லவேளை , நான் புத்தகம் படிக்கையில் , வீட்டில் யாருமில்லை . இருந்திருந்தால் , நான் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு , சிரித்த சிரிப்புக்கு என் குடும்பம் , என்னை கோடங்கியிடம் அழைத்துச் சென்றிருக்கும் .
புத்தகத்தில் அச்சுமை வாசனையோடு , டாஸ்மாக் பாரின் முடை வாசனையும் அதிகளவில் நம் மூக்கைத் துளைப்பது சிறு நெருடல் . ஓர் ஆகச்சிறந்த காமெடிப் படம் பார்த்த திருப்தி , இப்புத்தகத்தின் வாயிலாக , அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும .
– சபரிமயில்வாகனன் .
7708754280.
4
கள்ளி (நாவல்)
வா . மு . கோமுவின் “ கள்ளி ” நாவலை முன்வைத்து ……….
” உடைபடும் புனிதங்கள் ” — ஓடை . பொ . துரையரசன்
”மாலைச்சூரியன் அரசனாமலைக்கு மேற்கே கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.” என வழக்கமான பாணியில் வா.மு.கோமுவின் “கள்ளி” நாவல் தொடங்குகிறது. ஆனால், “எல்லோருக்குமே நமஸ்காரம்” என்று நம்மோடு வா.மு.கோமு பேசத் துவங்குவதிலிருந்து தூக்கி வீசுவான் கவலப்படாம நட.. என முடிக்கும் வரை எங்கும் தேங்காத ஒரு தொடர்ச்சியான வேகத்தை நாம் பார்க்க முடிகிறது.
“கள்ளி” தொடங்குகிற முறை அரமாலுமே பழையதாய் இருந்தாலும் நாவலின் களம், வாழ்வு என்பதெல்லாம் புதியன. பொதுவாக நாவல் என்ற இலக்கிய வடிவத்திற்குரியதாகச் சொல்லப்படுகிற வரைவிலக்கணங்களையெல்லாம் ஏற்கனவே சுந்தரராமசாமி, ஜி.நாகராஜன், தமிழவன் ஆகியோர் தங்களது படைப்புகள் மூலம் நிர்மூலமாக்கி விட்டார்கள். கடந்த சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக பொதுப்புத்தியில் நாவல் என்று பதிவு செய்யப்பட்டுள்ள கருத்தமைப்புகளுக்கு முற்றிலும் கள்ளி மாறானது.
நாவலுக்கான மையம் என்று பார்த்தால் “ கள்ளி ” யில் எதுவுமில்லை . இரு தனிப்பட்ட மனிதனைப் பற்றியோ குறிப்பிட்ட சூழல் பற்றியோ பேசுவதில்லை . நாவலின் கதைத் தலைவன் என்றோ கரு என்றோ சாதாரணமாக எல்லா நாவல்களிலும் உள்ளதைப்போல சுட்டிக் காட்ட முடியாது . மேய்ச்சல் காட்டில் காணாமல் போன “ சுந்தரி ” ஆட்டைத் தேடுவதில் தொடங்கி இறுதியாக சரக்கு வாத்தியார் சாவு வரை சொல்லப்படுகிற செய்திகல் ரத்தமும் சதையுமாக வந்து செல்கிற மனிதர்கள் எல்லாம் புதியன . நாவலில் சாதாரணமாக நடைபெறும் உரையாடல்கள் கூட சமூக ஒழுங்கமைவுகளுக்கு எதிரானதாக , அவற்றை தகர்க்கக்கூடியதாக உள்ளது .
“கள்ளி” – வா.மு.கோமு வாழ்கிற செம்மண் புழுதிக்காடுகளாக இருக்கும் கொங்கு மண்டலத்தின் மத்தியப் பகுதிவாழ் மக்களைப் பற்றிய நாவல். எனவே தான் தனக்கு முன்னோடிகளாக ஆர்.சண்முகசுந்தரம், சி.ஆர்.ரவீந்தரன் ஆகியோரை குறிப்பிடுகிறார். சண்முகசுந்தரம் நாவல்கள் பற்றி எஸ்.தோதாத்ரி அவர்கள்… அவரது படைப்புகளில் மையமாக விளங்குவது நிலம். கிராமங்களில் நிலம்தான் உற்பத்திச் சாதனம். கிராம மக்களின் சிந்தனை, உயிர், மூச்சு எல்லாம் நிலத்தில் அடங்கி உள்ளது. நிலத் தகராறு அவரது சிந்தனையில் மையம் கொண்டுள்ளது. அவரது நாவல்களில் நிலத் தகராறும், பாகப்பிரிவினையும் முக்கியக் கருத்தாக விளங்குகின்றன.. எனச் சொல்வார். (ஆராய்ச்சி, மலர் 3, இதழ் 2, பக்கம் 166)
ஆனால் வா . மு . கோமுவின் கள்ளி சண்முகசுந்தரம் படைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது . நிலமும் , நிலம் சார்ந்த உறவுகள் , பிரச்சனைகள் பற்றி கள்ளி நாவலில் ஏதும் இல்லை . ஆனால் கொங்கு மண்ணின் மையப்பகுதி , அதில் வாழ்கிற விளிம்புநிலை மக்கள் , பேசுகிற மொழி ஆகியவற்றினூடே கள்ளி நாவல் உருவாக்கப்பட்டுள்ளது .
கள்ளியில் முத்தாக்கவுண்டர் பண்ணையத்தில் இருக்கிற மல்லி , எப்போதும் குடியில் மூழ்கியிருக்கும் சரக்கு வாத்தியார் , அப்பாவின் ஓய்வூதிய பணத்தில் இருவரும் ஒன்றாக குடிக்கும் சுரேந்திரன் எனப்பல கதைகள் சொல்லப்படுகின்றன .
இவைகளோடு நிலையாக ஒரு தொழில் செய்யாத , ஊருக்குள் பெரிதாக “ மானம் மருவாதி ” இல்லாத எவ்வளவு வேண்டுமானாலும் நிதானமாக கம்மங்கூழு குடிக்கிற மாதிரி சாராயமும் , கோட்டரும் குடிக்கிற சமூகத்தில் எந்தவிதமான பொறுப்புகளும் இல்லாத பழனிச்சாமியின் பாலுறவுகள் சற்றே மிகையாகச் சொல்லப்படுகின்றன . நாவலின்படி பழனிச்சாமி இன்னும் முப்பது வயது தாண்டாத ஒரு இளைஞன் . அவனது தகப்பன் தேடி வைத்துள்ள சொத்தில் வாழ்பவன் .
பழனிச்சாமிக்கு வாழ்க்கையே குடிப்பதிலும் பாலுறவிலும் தான் அர்த்தம் பெறுகிறது . இந்த சமூகத்தின் ஒழுக்க ஒழுக்க நியதிகள் , நீதிகள் எதையும் அவன் கண்டுகொள்வதில்லை சிறைக்குப் போவது நிலவுகிற சமூகத்தில் கேவலமானது . ஆனால் பழனிச்சாமிக்கு அது அனுபவம் . வாழ்க்கையினை எல்லாவற்றையும் கடந்து , அதன் பல்வேறுபட்ட பரிணாமங்களுடன் வாழ்ந்து பார்க்கிற , சிறிதும் உடைமை மனோபாவங்கள் இல்லாதவன் பழனிச்சாமி . வர்க்க கண்ணோட்டத்தில் உதிரியாய் இருந்தாலும் பழனிச்சாமி சோமு முதலியாருடனும் , ஹென்றியுடனும் வைத்துப் பேசப்பட வேண்டியவன் . கெட்டிப்பட்டு இறுக்கமாகிவரும் போலியான நீதி நியதிகளை நிராகரிக்கும் ஆளுமைகள் சிதைந்துபோன பழனிச்சாமி கவனிக்கப்பட வேண்டியவன் .
“ரேட் கடுப்பன்ன நாட்படு தேறலைத்” தொன்று தொட்டு குடித்து வந்த சமூகத்தில் குடிப்பது என்பது சமூகக் கேடானது எனச் சமூகநீதி நியதிகள் சொல்கின்றன. பாலுறவு என்பது மனிதனின் அடிப்படை உணர்ச்சி என்றும் தாகமெடுத்தால் தண்ணீர் குடிப்பது மாதிரி என்றும் சொல்லப்பட்டாலும் பாலுறவுக்கென வரையறுக்கப்பட்டுள்ள நீதி நியதிகள் இருக்கின்றன. இந்த நீதி நியதிகள் உடைமை வர்க்கத்தினரால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நியதிகள் எதுவுமே விளிம்பு நிலை மக்களிடம் இல்லை. இவைகளை அவர்கள் ஒருபோதும் மதிப்பதில்லை. சமூகத்தில் உடைமையாளர் சிந்தனை மேலோங்கியிருப்பதால், எழுத்தில் அவைகள் வரையறைகளாக நீடிக்கின்றன. ஆனால் இந்த எழுத்துகள் எதையும் பார்த்திராத விளிம்புநிலை மக்களின் வாழ்வில் இந்த ஒழுக்க மதிப்பீடுகள் எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
தனியாக குடிப்பது , குடும்பத்தாரோடு குடிப்பது , கும்பலாக குடிப்பது என கள்ளியில் பல நிகழ்ச்சிகள் . குடியும் குடிப்பது தொடர்பான நண்பர்கள் – அவர்கள் சந்திப்பும் உரையாடல்களும் நாவலின் ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் பாலுறவு பற்றியது .
பாலுறவு குறித்து தி . ஜானகிராமன் , கு . ப . ரா , ஜி , நாகராஜன் , அஷ்வகோஸ் எனப்பலர் எழுதி உள்ளார்கள் . தி . ஜானகிராமன் நாவல்களில் ஆண்பெண் உறவுகள் பற்றிச் சொல்லவரும் தி . சு . நடராஜன் … ‘.. இந்நாவல்களிலே பொதுவாக இழையோடும் பிரச்சனை ஆண் – பெண் உறவுகள் பற்றியதாகும் . இப்பிரச்சனை சிதறிக் கொண்டிருக்கும் நிலவுடமைச் சமுதாயத்தின் மத்தியிலிருந்தே எடுக்கப்படுகிறது . அந்த நிலக்களன் கெடாமல் , இந்த உறவு நிலைகளிலோ உண்மையாக காணப்படுகின்ற பல்வேறு சிக்கல்களை மிக உணர்வுபூர்வமாகப் புறச்சூழல்களின் தகுந்த பொருத்தங்களோடு சித்தரிக்கப்படுகின்றன .” எனச் சொல்வார் ( ஆராய்ச்சி , மலர் 3, இதழ் 4, பக்கம் 457)
வா . மு . கோமுவின் பாலுறவு பற்றிய சித்தரிப்புகள் தி . ஜானகிராமன் போன்றவர்களின் கருத்தமைப்புகளில் இருந்து மாறுபட்டவை . கோமுவின் பழனிச்சாமி – சுந்தரி , சுரேந்திரன் சிகாமணி , சுரேந்திரன் சுமதி என எந்த இணையின் உறவானாலும் எந்த சமூகப் பின்புலமும் இல்லை . வெறுமனே பாலுறவு தான் . இவர்கள் எந்தவித தயக்கமோ , நாசுக்கோ இல்லாமல் வெளிப்படையாக இயங்குகிறார்கள் . பாசாங்கோ , பாவனையோ , வெளிவேசமோ இல்லாமல் இருக்கிறார்கள் . இவர்களின் பாலுறவு உரையாடல்கள் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது , ஒரு போதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது . இதுவரை சித்தரிக்கப்பட்டுள்ள பாலுறவுகளில் ,
“ரெண்டு தடக்கா செஸ்சு போட்டீங்க. இன்னொருக்காவும் போட்டு இழுக்கறீங்க.. ஐய்யோ சாமி போதும் இனி எம்படது தாங்காது..”
“ஐய்யோ இன்னொருவாட்டியா? போது போதும் இதுக்கே மூச்சு வாங்கிப் போச்சு நடங்க..”
“..கலியாணங்கட்டி ஒரே நாள்ல ஓடி வந்தவ சாமான் அப்படி ரூசாவா இருக்கும்? கெணத்துக்குள்ளார சேந்து கவுத்தெ போட்டு தண்ணி சேந்துனாப்புல”
“..இதென்ன உங்குளுது நீட்டமா இருக்குது? எம்பட ஊட்டுக்காரனுது குண்டா இருக்கும்”
இப்படிப்பட்ட நேரடியான உரையாடல்களைக் காண முடிகிறது .
பாலுறவு குறித்து சமூகத்தில் நிலவுகிற போலி மதிப்பீடுகளை வா . மு . கோமு கேள்விக்கு உட்படுத்தினாலும் கள்ளி நாவலில் வரும் பாலுறவுகள் எல்லாவற்றிலும் பெண் என்பவள் ஆணை மகிழ்விக்கிற பாலுறுப்புகள் கொண்ட ஜடப்பொருள் தான் . பாலுறவில் சரிபாதியாக இருக்கும் அவர்களுக்கு சக உயிரி என்ற வகையிலோ , எவ்விதமான முக்கியத்துவமும் இல்லை . உறவில் விருப்பு வெறுப்பு என்பதெல்லாம் ஆணின் மனதைப் பொருத்தே . ஆண் தான் ஆதிக்கம் செய்கிறான் . பாலுறவில் ஆதிக்கம் செய்வது ஆணாக இருந்தாலும் சுந்தரி , சிகாமணி , வெள்ளைச் சீலக்காரி , விஜயா , சுமதி , கமலா எல்லோரையும் புணர்ச்சிக்காக அலைகிறவர்களாக , ஏங்குகிறவர்களாக புணர்வது தவிர வேறு ஏதுமற்றவர்களாக ஒற்றைப்பரிணாமத்தில் தட்டையாக படைக்கப் பட்டுள்ள பார்வை ஆரோக்கியமானதல்ல !
கள்ளி நாவலின் முதன்மை நோக்கம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நீதி நியதிகளை உடைத்து நொறுக்குவதே என்றாலும் வேறு சில செய்திகளையும் சொல்கிறார் .
வளர்ச்சி என்ற பெயரில் அரசு அமைக்கும் சிப்காட் தொழில் பகுதிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் , கோவை நூல் துணி உற்பத்தி நிறுவனம் தன் கம்பெனி பேருந்தை சுற்றுப்புற கிராமங்களுக்கு ஓட விட்டு குறைந்த கூலிக்கு பெண்களைக் கவ்விக் கொண்டு போய் வேலை வாங்கித் துப்புவதையும் கதையோடு நெருடல் இல்லாமல் பதிவு செய்கிறார் .
நாவலில் தலித்தியப் பிரச்சனைகள் உள்ளார வருவதற்கு காரணமாக வா . மு . கோமுவின் திட்டமிடல் ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகள் பிரச்சனைகள் வெகு எளிமையாக இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளன . மல்லி – குஞ்சாள் – சண்முகன் மல்லிகா என அந்தக் குடும்பம் அவர்களின் விருப்பு , வெறுப்புகள் நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ளன . கவுண்டர் வீட்டு தட்ட்ப்போருக்கு உரிய இடம் பாசாங்கின்றி உரையாடலில் வெளிப்படுகிறது .
“.. எத்தனை மாதாரிச்சிகளை எம்பட கட்டல்ல நீ படுக்க வெச்சிருப்பே. எல்லாத்துக்கும் சேர்த்து உம்புள்ள இப்ப ஆட்டங்காட்டறா”
“ .. இழுத்தாங்கடா இந்திராவை நம்ம வீட்டுக்கு”
“..அப்படின்னா அவனை புடிச்சுக் கொண்டாந்து போட்டு ஊம்புங்க அவனோடதெ”
என ஆதிக்க சாதியினருக்கு எதிராக தலித்துகள் முழக்கமிட்டாலும் யதார்த்தம் வேறாக இருப்பதை ,
“காலையில் சின்னத்தம்பி கவுண்டர் வீட்டில் ஒரு பிணம் சாய்ந்தது. தூக்குப்போட்டு செத்துப் போனதாகத்தான் இழவுக்குப் போய்வந்தவர்கள் பேசிக் கொண்டு சென்றார்கள்” என வேதனை நிறைந்த வலியோடு பதிவு செய்கிறார்.
கள்ளி நாவல் மீண்டும் ஒருமுறை வாசிக்கும்போது இன்னும் முற்றுப்பெறாத கதையாகவே தோன்றுகிறது . சண்முகன் கலையரசி என்னவானார்கள் ? இப்படியான கேள்விகளூக்கு வா . மு . கோமுதான் பதில் சொல்ல வேண்டும் .
எதிர் வெளியீடு , பொள்ளாச்சி
விலை -190-00
பத்தாண்டு சென்னை வாழ்க்கையில் பெற்றதைவிடவும் இழந்தது அதிகம் . அதில் குறிப்பிடத்தக்கது கொங்குதமிழ் பேச்சு . ஏனோ நாட்பட நாட்பட என் கொங்குதமிழும் நீர்த்துப்போய் இன்னாமச்சி கோட்டர்தமிழாக மாறிவிட்டது . பேச்சுவழக்கெல்லாம் மறந்துபோகுமா என்ன ? என என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டிருந்தாலும் .. மறந்துவிட்டது விட்டதுதான் .
மறந்துபோன கொங்குத்தமிழை அதன் சுவையை மீட்டெடுக்கிற சீரிய முயற்சியை அண்மைக்காலங்களில் மேற்கொண்டு வருகிறேன் . அதைப்பற்றி எப்போதோ நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில் வாமுகோமுவின் கள்ளி குறித்து குறிப்பிட்டார் . கொங்குத்தமிழை அட்டகாசமாக கையாளுகிற சமகால எழுத்தாளர்களில் வாமுகோமு முக்கியமானவர் என்பதை அவருடைய சில சிறுகதைகளின் வாயிலாக அறிந்திருந்தேன் .
உயிர்மையில் அவருடைய சில சிறுகதைகள் படித்திருந்தாலும் நாவல் என்கிற வகையில் சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் குறித்த பல்வேறுபட்ட எதிர்மறை விமர்சனங்களின் அடிப்படையில் அதை படிக்கவேண்டும் என்கிற ஆவல் நிறையவேயிருந்தது . அதுவும் போக சரோஜா தேவி காலந்தொட்டே படிக்கும்போது கிடைக்கிற பாலியல் இன்பம் அண்மைக்காலங்களில் குறைந்துபோனதும் , அது வாமுகோமுவின் எழுத்துகளில் ஏகத்திற்கும் கிடைப்பதாக நண்பர்கள் சொன்னதும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது .
அஜால்குஜால் கதை படிக்க போகிறோம் என்கிற ஆர்வத்தோடு புத்தகத்தை விரித்து வைத்து படிக்க ஆரம்பித்தேன் . எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நாவல் . புத்தகத்தின் எந்தப்பக்கத்தை திறந்தாலும் சாராய போதையும் புணர்ச்சியும் மலிந்து காணப்பட்டது . ஆனால் அதற்காக இந்த நாவலை வெறும் பாலியல் கதையென்கிற என்கிற ஒற்றை பரிமாணத்தின் அடிப்படையில் சுருக்கிவிட இயலாது . வட்டார வழக்கு , தலித் அரசியல் , பாசங்கில்லாத அப்பட்டமான கிராமத்து மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறை .. கொஞ்சமாய் ஆங்காங்கே தொட்டுக்கொள்ள ஊறுகாயாட்டம் செக்ஸ் !
இதை கிட்டத்தட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு என்றும் கொள்ளலாம் . ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான கிராமத்து சூழல் , மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகின்றன . அதையே தன் முன்னுரையில் நாவலாசிரியராகப்பட்டவரான வாமுகோமுவும் தெரிவிக்கிறார் . வாய்ப்பாடி என்னும் ஊரைச்சேர்ந்த மல்லி என்னும் தலித் கூலியாளின் ஒரு மாலைப்பொழுதிலிருந்து கதை துவங்குகிறது . பின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக உள்ளே நுழைய தலித்துகளுக்கும் ஆதிக்கசாதி இந்துகளுக்குமான ஒரு போட்டி தொடங்குகிறது .
போக்கிடமில்லாமல் பிழைப்புக்கு வழியில்லாமல் கவுண்டர் சாதி முதலாளிகளிடம் கைகட்டி வாய்பொத்தி அவர்களிம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலம் வாழ்ந்த ஒரு சமூகம் , அருகாமை நகரத்தில் உருவாகும் தொழிற்புரட்சியால் கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் முதல்முறையாக ஆதிக்கசாதிக்காரர்களிடம் எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறது . அது அந்த ஊரிலும் வாழ்க்கை முறைகளிலும் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது .
வீடுவீடாக போய் சவரம் செய்துகொண்டிருந்த நாசுவன் தனியாக கடைபோடுகிறான் . ஏன்டா உன்ரா எடத்துக்கு நாங்க வந்து முடிவெட்டிக்கோணுமா என கவுண்டர்கள் கொதிக்கிறார்கள் . தலித் பையன் சின்ன கவுண்டச்சியை காதலித்து ஊரைவிட்டே ஓடுகிறான் . பத்தாவது வரை படித்த தலித் பையன் வெள்ளையும் சொள்ளையுமாக சேரில் உட்கார்ந்து கணக்கெழுதுவதை கண்டு சகிக்க முடியாமல் வயிறெரிகிறது ஆதிக்கசாதிக்கு ! இறுதியில் தன் வீட்டு வேலைக்கு தலித்திடம் கெஞ்சி கூத்தாடுவதாக கவுண்டனின் கதை முடிகிறது ! ஆதிக்கசாதியின் அடுத்த தலைமுறை தலித்துகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு தன் அப்பன் பிணத்தை புதைக்க அதுவே குழிதோண்டுகிறது . கல்வியும் வேலைவாய்ப்பும் தலித்திய சமூகத்தில் பெரிய மாற்றங்களை உண்டுபண்ணுகிறது . அது அவர்களை எதிர்த்து கேள்விகேட்கவும் தூண்டுகிறது . முதல்முறையாக திருப்பூர் பனியன் பாக்டரிகள் வாய்பாடியில் தலித்துகளின் புரட்சிக்கு வித்திடுகிறது .
ஆதிக்க சாதியின் பாலியல் வாழ்க்கையும் தலித்துகளின் பாலியல் வாழ்க்கையும் ஒரு ஊரில் எப்படி இருவேறாக கூர்நோக்கப்படுகிறது என்கிற பார்வையும் இக்கதையினூடாக சொல்லப்பட்டிருக்கிறது . கதையில் முதலில் ஒரு விஷயம் மிகவும் நெருடலாக இருந்தது . கதையின் பாத்திரமான பழனிச்சாமியோடு உறவு வைத்துக்கொள்ள கதையில் வருகிற மற்ற எல்லா பெண்களும் துடிக்கின்றனர் . அவனோடு எல்லா கிட்டத்தட்ட எல்லா பெண்களும் படுத்துக்கொள்கின்றனர் . அவன் காடு மேடு கரடு வீடு என எங்கும் யாரையாவது புணர்ந்தபடியே அலைகிறான் . ( கதைக்குள் பழனிச்சாமி வரும்போதெல்லாம் படிக்கும் நமக்கு மனம் குதூகலிக்கிறது ! ஷகிலா படங்களில் ஷகிலா வருவார் முன்னே பிட்டு வரும் பின்னே என்பதற்கிணங்க ). ஆனால் ஒவ்வொரு பெண்ணும் பழனிச்சாமியோடு உறவுக்கு ஒப்புக்கொள்வதற்கு பின்னாலிருக்கிற உளவியல் பிரச்சனைகளையும் சமூக காரணங்களையும் போகிற போக்கில் வசனங்களினூடாகவும் நிகழ்வுகளினூடகவும் தந்துவிடுகிறார் .
அறுப்புக்கு வந்த ரெகார்ட் டேன்ஸ் பெண்ணை கவரும் முத்தா கவுண்டர் . அவளை உறவுக்கு அழைத்து உறவின் உச்சநிலையில் கைமேல காசுவெச்சாதான் அடுத்து என சொல்வதிலாகட்டும் , இருட்டுக்குள் மாதாரி பெண்ணை புணர்ந்தபடியிருக்கும்போது மாதாரிகளிடம் மாட்டிக்கொள்ளும் ஆதிக்கசாதி சுரேந்திரன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாக இருப்பதாகட்டும் , அறுப்பு கூலியை ஏமாற்ற முனையும் கவுண்டனை மிரட்டி பணியவைக்கும் வெளியூர் கூலிகளால் தெம்பாகி தானும் முரண்டு பிடிக்கும் மல்லியின் பாத்திரமாகட்டும் முகத்தில் அறைகின்றன .
குழந்தைகள் இருவர் செக்ஸ் என்பது என்னவென்று தெரியாத காலத்தில் எடக்கு மடக்காக ஏதோ செய்து பார்க்கின்றனர் . அதை பார்க்கிற பெண்குழந்தையின் தாய் பையனை அடிக்க .. பையனின் அம்மாவும் பெண்ணின் அம்மாவும் போட்டுக்கொள்கிற சண்டை பிரமாதமானது . அதுமாதிரி ஊர்பக்கம் நிறைய பார்த்திருக்கிறேன் . அப்படியே அச்சு அசல் வார்த்தைகளின் கோர்வையாக அந்த அத்தியாயம் நிறைந்திருக்கிறது . ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு மனநிலையில் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு .
பழனிச்சாமியும் , மல்லியும் , சுரேந்திரனும் , முத்தா கவுண்டரும் , சுந்தரியும் , வெள்ளை சீலைக்காரியும் நாவலை மூடிவைக்கும்போது மனசெல்லாம் நிறைந்துவிடுகின்றனர் .
கொங்கு மண்ணின் அசல்மனிதர்களையும் வட்டார வழக்கின் சுவையையும் கடந்த ஆண்டுகளில் அங்கே நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் எந்த வித பாசாங்குமில்லாமல் அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறார் வாமுகோமு .
http://www.athishaonline.com/2011/08/blog-post_17.html
வா . மு . கோமு வின் கள்ளி : சாருவின் வாத்தி
நன்றி : தனிமையின் இசை .
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வா . மு . கோமுவின் முதல் நாவல் இது . கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம் . எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றது . வட்டார வழக்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்களில் இதையும் இனிமேல் சேர்த்துக்கொள்ளலாம் . கொங்கு வாழ்வினை தளமாக கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு . ஆனால் இவராலும் அம்மக்களின் வாழ்வை இலக்கியப் பாங்கோடுதான் படைக்கமுடிந்தது . வா . மு . கோமு செய்திருப்பது அசாத்திய மொழி உடைப்பு . இலக்கியம் நுழைய முடியாத அல்லது இலக்கிய வடிவினில் சேர்க்க விரும்பாத , சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி .
எல்லாப் பக்கங்களிலும் மது பொங்கி வழிகிறது . காமம் கரைபுரண்டோடுகிறது . கற்பு , ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தினை ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள் இவரின் கதை மாந்தர்கள் . நள்ளிரவு , விடியல் , முன்னிரவு , என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி , பாறை இடுக்கு , முட்காடு , எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது .
இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு . மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது . விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது இந்நாவல் . முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும் , புதுத்தளமும் , புதுமொழியும் , அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது . எனினும் கிண்டலும் , கேலியும் , காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது . நாவலைப் படிக்கும்போது சத்தம் போட்டு சிரித்தது கடைசியாய் எந்த நாவலுக்கென மறந்து போய்விட்டது . ஆனால் எத்தகைய உம்மணாமூஞ்சிகளையும் வெடித்துச் சிரிக்க வைக்கும் அசாத்திய மொழி இந்நாவலில் சாத்தியமாகி இருக்கிறது .
கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது . கடைசி அத்தியாயத்தை நம்ப எனக்கு சிறிது நேரம் பிடித்தது . லேசான எரிச்சலும் மண்டியது . எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை , தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது .
இவரின் எழுத்துக்கள் பெண்ணியவாதிகள் கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை . பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார் . காமம் மட்டுமே பிரதானமாய் கொண்ட பெண்களை மட்டுமே உலவவிட்டிருக்கிறார் . போதாக் குறைக்கு இந்நாவலை அவரின் காதலி / மனைவிக்கு சமர்பித்திருக்கிறார் . மிக அசாத்திய துணிச்சலராய் இருக்கவேண்டும் .
சாரு இவரைத் தன் முதல் வாரிசாக அறிவித்திருக்கிறாராம் . இந்த ‘ வாரிசு ‘ களின் மீது ஏற்படும் பரிதாபமும் வாரிசுகளை உருவாக்கும் மகோன்னதர்களின் மீது ஏற்படும் எரிச்சல்களும் அத்தனை சீக்கிரம் அடங்குவதில்லை . புனைவிலக்கியத்தில் சாருவின் சாதனைகள் எல்லாம் மேல்தட்டு / நடுத்தர வர்க்கத்து போர்னோ மாதிரிகள் மட்டுமே . வா . மு . கோமு தன் முதல் நாவலிலேயே பல கட்டுக்களைத் தகர்த்திருப்பது சாருவின் சாதனை மாதிரிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை . தன் சார்ந்த பிம்ப உருவாக்கங்களிலிருந்து எங்களின் இலக்கிய பிதாமகர்கள் வெளிவர எல்லாம் வல்ல ரோலான் பர்த்துக்கள் உதவி செய்வார்களாக .
கள்ளி முடித்த கையோடு சோ . தர்மனின் கூகையை ஆரம்பித்தேன் முதல் பத்து பக்கங்களுக்கு மேல் என்னால் படிக்கமுடியவில்லை . விளிம்பின் கதைசொல்லலுக்கு தேவையான அடிப்படை விதயமாக நான் நினைப்பது சரியான மொழி . மிகச் சரியான வட்டார வழக்கு . அம்மொழி சாத்தியமில்லையெனில் சும்மா இருந்துவிடலாம் . விளிம்பின் கதையெழுதுகிறேன் பேர்வழியென அடைப்புக்குறிகளுக்குள் சுந்தர ராமசாமித் தனங்களை பொருத்தி வைப்பது அபத்தமானது . மேலும் இவர் முதல் ஐந்து பக்கங்களில் சொல்லியிருக்கும் அபத்தங்கள் புத்தகத்தை தூக்கி எறிய வைத்தன .
ஆண்டை ஒருவர் எல்லா பறக்குடி வீடுகளிலும் புகுந்து இஷ்டம் போல புணர்ந்து திரிவாராம் . எந்தப் பெண்ணை புணர்கிறாரோ அப்பெண்ணின் கணவன் அவருக்கு சாராயம் வாங்கி வந்து கொடுப்பாராம் .( தானும் கொஞ்சம் குடித்துக்கொள்வாராம் ) ஆண்டை வீட்டில் மனைவியை புணர்ந்து கொண்டிருக்கையில் கணவன் வீட்டுத் திண்ணையில் தன் வயதுக்கு வந்த மகளோடு உட்கார்ந்து அழுவாராம் . ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வந்த கோபத்துக்கு அளவே இல்லை . இந்த மசிராண்டிகள் எந்த கருமத்தையும் எழுதாமல் இருப்பது எல்லாருக்கும் நல்லது . ஒரு புத்தகத்தை பத்து பக்கங்கள் மட்டுமே படித்து மிக மோசமாக விமர்சிப்பது வன்முறைதான் என்றாலும் முழுவதையும் படிக்கும் பொறுமை இல்லை எனக்கு . படித்து முடித்த புண்ணியவான்கள் விளக்கினால் என் சிற்றறிவு சமாதானமடையும் .
5
எட்றா வண்டியெ –நாவல்
எட்றா வண்டியெ–நாவல்
கொங்கு குறும்பு என்பது வா . மு . கோ . முவின் கதைகளில் தவிர வேறு எங்கும் அதிகமாக பார்க்க முடியாது . எவ்வளவு சீரியஸான சம்பவம் என்றாலும் ஜஸ்ட் லைக் தட் என்று நம்மை அந்த இடத்தை சிரித்து கொண்டே கடந்துவிடுவது போல செய்துவிடுவார் . இவரின் கதைகள் வரும் முக்கியமான கதாபாத்திரம் போலதான் இவரும் பேசுகிறார் , நாலு முறை போனிலும் ஒரு முறை நேரிலும் பேசி இருக்கிறேன் அவருடன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்க வைத்துவிட்டார் . வாய்ப்பாடி , விஜயமங்கலம் மற்றும் அதை சுற்றிய ஊர்கள் எப்படி இருக்கிறது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நேரில் எப்படி இருப்பார்கள் அவர்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை துண்டிவிட்டுவிட்டார் .
இவரது முந்தைய நாவல்களை போல இந்த நாவலையும் தனது ஊரை சுற்றி வாழ்ந்துகொண்டு இருக்கும் சிலரில் வாழ்கையை மைய்யமாக வைத்து எழுதி இருக்கிறார் . நாவலின் தொடக்கம் முடிவு எல்லாம் விஜயமங்கலத்தை சுற்றி தான் இருக்கிறது . என்னை போல கோவையை பிரிந்து வாழும் ஆட்களுக்கு கொங்கு மொழியில் அதன் சாரம் குறையாமல் புத்தகத்தை வாசிக்க வாசிக்க கோவையை ரொம்ப மிஸ் செய்கிறேனோ என்கிற கவலை ஏற்படுகிறது .
சாமிநாதன் ஒரு தலித் இளைஞன் . அம்மாவை பிரிந்து வாழும் அப்பாவுடன் மூங்கில் பாளையத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் . தறி ஓட்டுவது தான் பிரதான வேலை என்றாலும் ஒரு சமயம் ட்ரக்டரும் ஒட்டுவான் . சாமிநாதன் அப்பா , கவுண்டர் சகோதரர்கள் , சைக்கிள் கடை வைத்திருக்கும் முருகன் , எதிர் வீடு சரோஜா அக்கா , அவன் வாழ்வில் குறிக்கிட்ட பெண்கள் , அவனாக தேடி சென்ற பெண்கள் , அவனை விட்டு பிரிந்து சென்ற பெண்கள் என்று அவனது காதல் , கல்யாண கதைகளை சொல்லும் நாவல் இது .
நாவல் உள்ளே பன்னிரண்டு அத்தியாயங்கள் இருக்கிறது , சாமிநாதனை சுற்றியே தான் கதைகள் நகர்கிறது . விசுக்கென்று ஒரு காதல் ஜோடி ஒரு அத்தியாயத்தை ஆக்கிரமித்து கொண்டாலும் அதிலும் சாமிநாதன் சம்பந்தப்படுகிறான் . முந்தைய நாவல்கள் போல இந்த நாவலை அவ்வளவு எளிதாக படித்து முடிக்க முடியவில்லை . பாதி புத்தகம் படிக்கும் வரை அரைச்ச மாவையே ஏன் திரும்ப அரைக்கிறார் என்கிற எண்ணம் வருகிறது . அதற்கு பின்னால் சாமிநாதனை நினைத்து கவலைகொள்ளும் விதமாக நாவல் சென்று கொண்டு இருக்கிறது .
நாவலில் முழுக்க முழுக்க தலித்து மக்களின் வாழ்கையை பற்றி சொல்லி இருக்கிறார் . பணம் இல்லாதவனிடம் சிக்கன் குனியா வந்தால் எப்படி சமாளிப்பான் ? தறி குடோனில் முதலாளி சாமிநாதனை அடிமையாக வேலை செய்ய வைக்க தந்திரமாக அட்வான்ஸ் பணம் கொடுப்பது . பெண் பார்க்க சென்ற வீட்டில் பெண்ணின் தகப்பனார் ஸ்வீட் சிக்கு வாசம் வருதா என்று கேட்ப்பது . தந்தையே மகனிடம் கவுண்டர் சரக்கு தந்தா வேண்டாம்ன்னு சொல்ல கூடாது அது குத்தம் என்று தண்ணி அடிக்க சொல்லுவது , வீட்டில் நுழைந்த பாம்பை வறுத்து தின்னுவது . இப்படி நாவல் கொஞ்சம் திகைப்போடு தான் செல்கிறது .
வா . மு . கோ . முவிற்கு செல்போன் மீது அப்படி என்ன ஒரு காதலோ அல்லது கோபமோ சாமிநாதன் கதாபாத்திரத்துக்கு இணையாக உடன் பயணிப்பது இந்த செல்போன் தான் . யாரவது ஒருத்தர் இந்த செல்போனில் பேசி கொண்டே இருகிறார்கள் . அதும் ஏர்செல் தான் எல்லோரிடமும் இருக்கிறது . இந்த நாவல் என்றில்லை முந்தைய நாவல் சாந்தாமணி நாவலிலும் செல்போன் வைத்து பெரிய கதையையே சொல்லி இருப்பார் . இன்றைய காலகட்டத்தில் செல்போன் எவ்வளவு அவசியமானது என்று எல்லோருக்கும் தெரியும் அதை நாவலின் உள்ளே புகுத்தி அதையும் ஒரு கதாபாத்திரமாக செய்துவிட்டார் .
கள்ளி , சாந்தாமணியில் இருந்த பாலியல் வேட்டை ( வேட்கை ) இதில் இல்லை . எள்ளல் , துள்ளல் அதிகமில்லாமல் அடக்கியே வாசித்து இருக்கிறார் . மற்ற நாவல்களை விட இந்த நாவல் கொஞ்சம் வித்தியாசம் தான் . நாவல் முடிந்ததும் சாமிநாதன் பற்றிய கவலை தான் என்னை தொற்றிகொண்டது .
நாவலை படித்துவிட்டு வா . மு . கோ . முவிடம் பேசினேன் . நாவல் எப்படி என்னை கொண்டு சென்றது , சாமிநாதன் என்ன ஆனான் என்று நிறைய கேள்விகள் கேட்டு பதிலையும் பெற்றேன் . வா . மு . கோ . மு வருத்தப்பட்ட ஒரு விஷயம் இந்த நாவலை இவ்வளவு நேர்த்தியாக கொண்டு வர பாடுபட்ட நஞ்சுண்டன் பெயரை மனுஷபுத்திரன் மறைத்தது . நாவல் வெளிவருவதற்கு முன்பே அவர் நான்கு ஐந்து தடவை நஞ்சுண்டன் பெயரை புத்தகத்தில் பதிய சொல்லி இருந்தும் அதை செய்யாதது பற்றி ரொம்ப வருத்தப்பட்டார் .
எட்றா வண்டியே – சங்கடபடாமல் வாங்கி படிக்கலாம்
நன்றி ::
—
With Love
அருண் மொழித்தேவன் (Romeo)
6
57 ஸ்னேகிதிகள் சினேகித்த புதினம் (நாவல்)
57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் – வா . மு கோமு
மல்லிகார்ஜுனன்
எல்லோருக்கும் குழந்தைப்பருவம் தாண்டி இளமைக்கு வருவதென்பது பல புரியாத புதிர்களைக்கடந்து வரும் விஷயமாகத்தான் இருந்திருக்கும் . எல்லோர் வாழ்விலும் பள்ளியை நேசிக்கச்செய்ய ஒரு பெண்ணும் , பள்ளியை வெறுக்கச்செய்ய ஒரு டீச்சரும் நிச்சயம் இருப்பர் . இருந்தாலும் நம்முடனேயே இருந்து கொண்டு நம்மை விட அதிகம் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்களைக் கண்டு அவர்கள் செய்வதை செய்து நம்மை பெரியவர்களாகக் காட்டிக் கொள்வோம் . அதே போல எல்லார் வாழ்விலும் சொந்தத்திலோ பக்கத்து வீடுகளிலோ திருமணமாகாத , திருமணம் செய்து கொள்ள விரும்பாத ஒரு சித்தப்பனோ மாமனோ இருக்கலாம் . அவர்கள் கதை இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும் . “ என்னடா வாழ்க்கை இது ” எனப் புலம்புவார்கள் . நமக்கொன்றும் புரியாதெனினும் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதும் . எப்படியும் ஒரு ஐஸ்க்ரீமுக்கோ , சாக்லேட்டுக்கோ துட்டு நிச்சயம் .
வாமு கோமுவின் கதைகளின் பிரதானம் மொழிநடை . அதுவும் கொங்குப் பகுதிகளில் வாழ்ந்துவிட்டு அல்லது ஓரிருநாள் தங்கிவிட்டு அங்கிருக்கும் பழக்கவழக்கங்களைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் நிச்சயம் அந்த பூமியை , மக்களின் இன்மையை உணர்வார்கள் . இவரின் கதைகளைப் படிக்கும்போது புத்தகத்தின் வாயிலாக ஈரோட்டுக்கோ அவிநாசிக்கோ சென்று தொப்புக்கடீர் என்று விழுந்து விட முடிகிறது . அத்தனை எளிமையான , ஆர்வத்தை தூண்டும் எழுத்து .
வாய்ப்பாடி சென்னிமலை தொட்டு ஈரோடு மாவட்டத்தை சுற்றி நடக்கும் கதைகள் வாமு கோமுவினுடையவை . அங்கு வாழும் வெகுளித்தனம் நிறைந்த கிராமத்து மக்களின் கதைகள் . அந்த மண்ணுக்கே உரித்தான கொங்கு மொழியும் எள்ளளும் நக்கலும் கூடி கை கோர்க்குமிக்கதைகள் வாசிக்கும்போது ஒரு உற்சாகத்தையும் ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன .
இரு நெடுங்கதைகள் சேர்ந்ததுதான் இந்த நாவல் . பள்ளி செல்லும் பழனிச்சாமி , பள்ளியில் அடிக்கும் டெய்சி டீச்சர் , வீட்டில் அடிக்கும் அப்பன் , ஊர்சுற்றும் நண்பர் சகவாசம் என முதலாம் கதையில் கொங்கு மண்ணின் ஒரு சாதாரண சிறுவன் ஒருவனின் குழந்தைப் பருவம் மனக்கண்ணுக்குள் வருகிறது . டீச்சர் அடித்ததால் பள்ளிக்கு போக மறுக்கிறான் அப்பனிடம் அடிவாங்கிக்கொண்டு காட்டுக்குள் பனம்பழம் பொறுக்கப் போகிறான் , சரளமாக கெட்டவார்த்தைகள் பேசுகிறான் , சாதியைச் சொல்லி திட்டுகிறான் , ரயிலேறிப்போய் சினிமா பார்க்கிறான் , ஊர் எல்லைத் திரையரங்கின் போஸ்டர் பார்த்து என்னவாக இருக்குமென சந்தேகிக்கிறான் என பழனிச்சாமியின் பாத்திரம் அப்படியே என் பால்யகால நண்பர்கள் ரமேசான் , சின்னக்குமாரு , பெரிய குமாரு , செந்திலான் அனைவரையும் நினைவூட்டுகிறது .
என்னுடன் படித்தவர்கள்தான் என்றாலும் அவர்களுக்கு நிறைய கெட்டவார்த்தைகள் தெரிந்திருக்கும் . இது பெரிய விஷயமில்லைதான் எனினும் அந்த வயதில் ஒரு கோபத்தை ஆற்றாமையை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வழி இதுதான் . இது மட்டுமல்ல அவர்கள் அந்த வயதில் தெரிந்து வைத்திருக்கக் கூடாதென்று சொல்லப்படும் பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தனர் . இது போலத்தான் பழனிச்சாமிக்கு செந்தில் இக்கதையில் . சிறுவன்தானே என கதையில் அவனைத் திருத்துகிறேன் , மாற்றுகிறேன் பேர்வழி என்றில்லாமல் பழனிச்சாமியின் போக்கிலேயெ கதை பயணிக்கிறது . அவன் காண்பவை , உணர்பவை , பேசுபவை இவையெல்லாம் முதல்கதை .
இரண்டாம் கதை மாரிமுத்துவினுடையது . முப்பத்தைந்து வயதாகியும் திருமணமாகாமல் காட்டை மாமனுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு எந்நேரமும் போதையிலிருக்கும் ஒரு ஆசாமி . கூட ஒரு நாய் ராஜா . ஊர் பெண்கள் கூட கிண்டலடிக்கும் வகையில் திருமணம் செய்யாமல் தறிக்குப் போய் சம்பாதித்து அந்த வேலை வெறுத்து பல வேலைகளை முயற்சித்து , பின்னர் வேலைக்குப் போகப் பிடிக்காமல் குடியே கதி என்றிருக்கும் வேளையில் , சாராயம் காய்ச்சும்போது போலீசில் மாட்டிக் கொள்கிறான் . ஜாமீனில் வெளியே எடுக்கிறார் மாமன் . மாமனுக்குத் தன்மீது பாசம் என்று நம்பி அவர் மகள் மீது ஆசைப்படுகிறான் மாரிமுத்து . இது எல்லாமே மாரிமுத்துவின் நிலத்திற்காக மாமன் போடும் வேஷம் என்றறிந்த பின்னர் இவர்களை விலகி தனக்கான ஒரு ஜோடியைத் தேடிக்கொள்கிறான் . இது இரண்டாம் கதை .
பொதுவாகவே வாமு கோமுவின் கதைகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் அவர்தம் காதல் , திருமணம் , அவர்களின் கலாச்சாரம் போன்றவையும் கொங்கு பகுதிகளில் நிலவி வரும் சாதி சார்ந்த பிரச்சினைகளையும் பிரதிபலிக்கும் . இந்த நாவலில் வரும் இருகதைகளை மட்டும் எடுத்துப் பார்த்தால் பழனிச்சாமி தன் குழந்தைப்பருவம் தாண்டி வெளியே இருக்கும் உலகத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறான் . ஒரு இளைஞனாக முயல்கிறான் . தனக்கு முன் சென்றவர்கள் செய்ததை , செய்ததாய் சொன்னதை செய்கிறான் . கல்வியையெல்லாம் முக்கியமாக கொண்டிராத , எப்படியும் தறி ஓட்டியாவது , உடல் உழைப்பினால் வாழ்ந்து விடலாம் என்று வாழும் மக்களின் வாழ்வு முறையாக இதைச் சொல்லியிருக்கிறார் . மாரிமுத்துவின் கதையிலும் இதேதான் . முப்பத்தி ஐந்து வயதிலும் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் ஒருவன் . இத்தகையவர்களுக்குத் தேவையெல்லாம் அன்றைய தின மகிழ்ச்சி மட்டுமே . கல்வியின் மீது அக்கறையின்றி எதிர்காலம் குறித்த எந்த பிரக்ஞையுமின்றி வாழும் மக்களின் கதை .
ஒரு பகுதி மக்களின் பிரச்சினைகள் மட்டுமே பேசும் கதைகள் என்றாலும் இவரின் எல்லாப் புத்தகங்களிலும் ஒரே மாதிரியான கதையும் காதலும் விஷயங்களும் தொடர்ந்து வாசிக்கும்போது கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்துகிறது . மொழி மட்டுமே ஒரே ஆறுதலாய் நீடிக்கிறது .
நாவல் | எதிர் வெளியீடு | பக்கங்கள் 184 | விலை ரூ . 110
7
பிலோமி டீச்சர் (சிறுகதைகள்)
பிலோமி டீச்சர் – ஒரு பார்வை – சதீஷ் சங்கவி
எதுவுமே இங்குத் திட்டமிட்டு நடப்பதில்லை தான் . யாருக்கும் யார் மீதும் பிரியம் தோன்றலாம் . அதற்காகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தவேண்டியது இல்லை . ஜான்சனின் தூய ஆத்மாவைப் பிலோமி டீச்சர் ஒரு புள்ளியில் உணர்ந்து சிலிர்த்துப்போனாள் .
கணவனை இழந்துத் தன் மகளுக்காக வாழும் ஒரு டீச்சர் தன் மேல் யாரும் அக்கறையற்றவர்களாக இருக்கும் போது , தன் மேலும் , தன் குழந்தை மேலும் அக்கறை காட்டும் ஒருவன் மீது காதல்வயப்படுகிறாள் . இவளுக்குக் காதல் அவனுக்குக் காமம் என்பதை எதார்த்தமாக வாமு . கோமுவிற்கே உண்டான நடையில் நம்மைக் கட்டிப்போடுகிறார் . இந்தக் கதையைப் படித்து அதில் இருந்து நாம் மீள்வதற்கு வெகு நேரம் ஆகும் என்பதில் ஐயமில்லை .
கடலோரக்கவிதைகள் டீச்சரில் ஆரம்பித்த , வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை டீச்சராக வருபவர்கள் அவ்வளவு சீக்கிரம் நம் மனதை விட்டு அகலுவதில்லை அது போலத்தான் இந்தப் பிலோமி டீச்சர் . டீச்சருக்காக மனதை அலைய விடுகிறோமோ இல்லையோ வாமு . கோமுவின் யதார்த்தமான நடைக்காக மனது அலைகிறது பிலோமி டீச்சரை நினைத்து .
இந்த நாவல் ஈரோடு புத்தகச் சந்தையில் வாமு . கோமுவிடம் இருந்து தான் பெற்றேன் , அப்போது முழு வீச்சில் படித்தவன் போகிற போக்கில் படித்தது போல இருந்தது . நேரம் கிடைக்கையில் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் பொழுது அதனுடன் இரண்டு நாள் பயணிக்க வேண்டி இருக்கு .
ஒரு பெண் உண்மையாக ஒருவனை விரும்பினாள் அவளிடம் எந்த ரகசியமும் இருக்காது . எல்லாவற்றையும் அவனோடு பகிர்ந்துவிடுவாள் . அப்போது அவளது இதயம் சுத்தமாக இருக்கும் . அவள் உடலும் அவனுக்காகத் தயாராக இருக்கும் . அவன் எங்குக் கூப்பிட்டாளும் உடன் செல்ல தயாராக இருப்பாள் – உண்மையாக ஒரு பெண் நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் இது எல்லாம் நடக்கும் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார் . இந்த வரிகளைப் புரியாத பல ஆண்கள் ” இவளுக்கு முன்னாடியே அனுபவம் இருக்குமோ நம்மிடம் இவ்வளவு தாராளமாக நடந்து கொள்கிறளே ” எனச் சந்தேகத்தோடு பார்க்கும் பல காதலன்கள் இந்தச் சமூகத்தில் உண்டு .
பஞ்சும் நெருப்பும் என்ற கதையில் இன்றைய திருப்பூரின் காதல் கதைகளைச் களமாக்கி அற்புதமான சிறுகதையாகக் கொடுத்திருக்கிறார் . வேலைக்குச் செல்லும் இடத்திலும் , பயணிக்கு வழியிலும் ஏற்படும் இயற்கையான பார்வை மோதல்களைக் காதலக்கி இவர் கையாண்டு இருக்கும் விதம் நம்மை மீண்டும் ஒரு முறை படிக்க வைக்கிறது இந்தக் கதையோடு பயணிக்கவும் முடிகிறது .
சாதிகள் இல்லையடி பாப்பா என்ற கதையில் காதல் திருணம் செய்து குடும்பத்தை விட்டு ஓடி வருபவர்கள் அறை எடுத்து தங்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அது போலீசாரால் எப்படித் தீர்க்கப்படுகிறது என்பதை நம் ரசிக்கும் , என்ன நடக்குமோ என்று யோசிக்கும் வகையில் த்ரில்லாக சென்று செண்டிமெண்டாக முடித்து நம்மைக் காதலானாக மாற்றுகிறார் .
அந்த விசயம் தான் பெரிய விசயம் என்ற கதையில் கல்யாணத்துக்குப் பின் தடுமாறுகிறவர் எப்படி மாறுகிறார் என்பதை அவரது நடையில் அசத்தி இருக்கிறார் .
ஒவ்வொரு கதையின் ஓட்டமும் என் மனதில் ஓடுகிறது இந்தப் பிலோமி டீச்சர் புத்தகத்தை வாசித்ததில் இருந்து ….
எதிர் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம் 180 ரூபாய் . எல்லாப் பிரபல புத்தகக் கடையிலும் கிடைக்கின்றது .
– நன்றி : சதீஷ் சங்கவி .
8
மரப்பல்லி (நாவல்)
வா . மு . கோமுவின் ‘மரப்பல்லி’ – நாவல் விமர்சனம்
ஓரினச்சேர்க்கை என்பது உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமானது ; இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உலகளவில் பல நாடுகளில் உள்ள பல ஓரினச்சேர்க்கையாளர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது . தற்போது இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்ட போது இது நம் கலாச்சாரத்துக்குப் புறம்பானது என்று எதிர்வினைகளும் இதற்கு வந்தது . பொதுவில் ஆணும் பெண்ணும்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்பது உலக நியதி . காந்தத்தில் கூட வட துருவமும் தென் துருவமும்தான் ஒட்டும் , வட துருவமும் வடதுருவமும் ஒட்டவே ஒட்டாது . அது போலவேதான் இயற்கை மற்றும் கலாச்சாரம் மனித இனத்தைக் கட்டமைத்திருக்கிறது .
இயற்கையை மீறியும் இயற்கையான நிகழ்வுகள் நடந்தேறுவதுண்டு . வேற்று பால் இனத்தின் மீதான ஈர்ப்பு பொதுவானது . ஆனால் ஒரே பால் இனத்தின் மீது ஈர்ப்பு கொண்டு அதனை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதும் இயற்கையை மீறிய ஒரு இயற்கை நிகழ்வுதான் . ஓரினச்சேர்க்கையை பலரும் ஆதரிக்கக் காரணமும் அதுதான் . அவரவரது விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமைகளுக்குள் இது அடங்குகிறது . ஓரினச்சேர்க்கை குறித்து தமிழில் முதல் முதலாக கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்தான் பேசியது . கணேசன் என்னும் பாத்திரம் ஒருவருக்கு ஓரினச்சேர்க்கையாளனாய் இருந்தது என்று மேலோட்டமாய் மட்டுமே பேசியது . இதையும் தாண்டி அழுத்தமாய் ஓரினச்சேர்க்கை குறித்து பேசியிருக்கிறது மரப்பல்லி .
பாலியல் எழுத்தாளர் என்று முத்திரை குத்தப்பட்ட வா . மு . கோமுவின் படைப்புதான் இந்த மரப்பல்லி . ஓரினச்சேர்க்கை புரியும் உயிரினங்களில் மனிதன் மட்டுமல்லாது மரப்பல்லியும் ஒன்று . அதனால்தான் இந்நாவலுக்கு இது காரணப்பெயராக வைக்கப் பெற்றிருக்கிறது . கதை மணிபாரதியிடமிருந்து துவங்குகிறது . மணிபாரதி என்பவன் பல பெண்களை தன் வசீகர மற்றும் ஆறுதல் பேச்சுகளாலேயே கவர்ந்து அவர்களோடு சம்பாஷணைகள் புரிபவன் என்று இவரது முந்தைய நாவலான மங்கலத்து தேவதைகள் நாவலிலேயே விளக்கப்பட்டு விட்டது . மங்கலத்து தேவதைகளின் தொடர்ச்சி என்று எழுதினாரோ என்னவோ இதிலும் மணிபாரதி என்கிற கதாப்பாத்திரம் அதே குணாம்சங்களோடு தோன்றுகிறது .
ரம்யா என்கிற மகளை தாரை வார்த்து விட்டு ஒரு விபத்தில் மணிபாரதியின் மனைவி சாந்தி செத்துப்போனதாக தொடங்கும் நாவலில் மணிபாரதியோ வேறு எந்த பெண்ணையும் மணக்காமல் தன் மகளுக்காகவே வாழ்ந்து வருகிறான் . அப்போது அவனது வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகின்றனர் . ஒன்று பக்கத்து வீட்டுக்காரி வசந்தி ; இன்னொன்று ரம்யாவின் வகுப்பாசிரியை சந்திரிகா . இருவரது வருகையும் மணிபாரதியை பழைய நிலைக்கு திரும்ப வைப்பது போலான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்க , வசந்தியின் தங்கை ப்ரியா பணி புரியும் பனியன் கம்பெனியின் மேனேஜர் ஜெனி என்னும் பெண்ணுடன் நெருக்கம் கொண்டு ஓரினம் என்பதை பொருட்டில் கொள்ளாது அவளைக் காதலிக்கிறாள் .
சாதகம் விளைவித்த பாதகத்தால் இன்னும் திருமணமாகமலிருக்கும் ப்ரியாவை மனைவியை இழந்து தவிக்கும் மணிபாரதிக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவெடுக்கிறார்கள் . ப்ரியாவோ ஜெனியின் காதலில் இருந்து மீளாமலும் மணிபாரதியையும் நிராகரிக்காமலும் இரண்டுக்கும் இடையிலான ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள் . இறுதியில் ஓரினக்காதல் வென்றதா இல்லை ப்ரியாவிடம் வீசிய மணிபாரதியின் ஆண் வாசனை வென்றதா என்பதே கதை .
ஓரினச்சேர்க்கை பற்றி மையமாக பேச வேண்டிய கதையோ சிறிதளவு மட்டுமே அதைப் பற்றி பேசி விட்டு தனது முந்தைய நாவலான மங்கலத்து தேவதைகள் போல் மணிபாரதியின் காமக்களியாட்டங்களைப் பேசத் துவங்கி விடுகிறது . ஆம் , கதையின் மையக் கதாப்பாத்திரமான ப்ரியாவின் அக்கா வசந்தி மற்றும் மணிபாரதி மகளின் வகுப்பாசிரியை சந்திரிகா இருவரிடமும் மணிபாரதி நிகழ்த்தும் காம வேட்டை குறித்து நாவல் பேசுகிறது . வசந்திக்கு காங்கேயத்தில் கட்டிக்கொடுத்த கணவனோ உடலுறவு கொள்வதற்கு லாயக்கற்றவன் . சந்திரிகா டீச்சரின் கணவனோ முழு நேரக்குடிகாரன் . இந்த இரு பாத்திரங்களுமே கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள் . அதாவது கதைப்படி காமத்திற்கு ஏங்குபவர்கள் .
பொதுவாகவே இவரது படைப்புகளில் தெரியும் எதார்த்தம் இதுதான் . இவர் படைக்கும் பெண் பாத்திரங்கள் ஏதேனும் ஒரு சூழலில் கணவனைப் பிரிந்தோ , கணவனின் கொடுமை தாளாமல் ஓடி வந்தோ , கணவனுக்கு ஆண்மை இல்லை எனவோ , கணவன் இறந்து விட்டான் எனவோ எப்படியேனும் அந்த பெண் பாத்திரம் காமத்தை தனது தேவையாக கொண்டிருத்தலின்படியே படைக்கப்படுகிறது . அந்தக் காமத்தேவையை இவரது கதை நாயகர்கள் பழனிச்சாமியோ , மணிபாரதியோதான் வந்து தீர்த்து வைக்கிறார்கள் . இந்நாவலிலும் அதுதான் நிகழ்ந்தேறியிருக்கிறது .
வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்றழைக்கும் வசந்தியோ மணிபாரதி தன்னை காமத்திளைப்பில் மூழ்கடிக்க வேண்டும் என நினைக்கிறாள் . முக்கியமான கதாப்பாத்திரத்தின் தங்கையோ அக்காவோ நாயகனிடம் அத்து மீறி நடப்பதும் இவரது கதைகளில் தொடர்கதை . குடிகாரக் கணவனின் தர்ம அடியிலிருந்து தப்பி ஓடி வந்த சந்திரிகா தன் வீட்டு உரிமையாளரின் பருந்து பார்வையிலிருந்து தப்பிக்க நினைப்பவள் மணிபாரதியின் கழுகுப்பார்வைக்கு இரையாகிறாள் . இப்படியாக இது வரை இவரது நாவல்களில் வழக்கமாக தென்படுபவைகளாகவே கதை நகர்கையில் திடீரென ஒரு அதிர்ச்சி .
ப்ரியாவை காதலிப்பதாகக் கூறிக்கொண்டிருந்தவன் திடீரென அவள் மீது மூர்க்க வெறி கொண்டு அவளை கடித்துத் தின்பவன் போல பலாத்கார முயற்சியில் இறங்கிய போது ஒன்று புரியாமல் கிறக்கத்தோடு நின்றிருக்கையில் அவனைத் தாக்கி விட்டு ப்ரியாவைக் காப்பாற்றுகிறாள் ஜெனி . அவன் நடத்திய மூர்க்கத்தனமான காமவெறித்தாக்குதாலால் ஆண் சமூகம் மீதே வெறுப்புறுகிறாள் ப்ரியா . அச்சமயத்தில் ஆறுதல் தரும் ஜெனி , ப்ரியாவுக்கு முத்தங்களைப் பரிசளிக்கிறாள் . அவளின் அந்தரங்கத்தோடு தனது அந்தரங்கத்தை ஒட்டி உறவாடுகிறாள் . இதெல்லாம் தப்பில்லையா என ப்ரியா வினவும்போது உனக்கு நல்லாருக்கல்ல அப்ப எதுவும் தப்பில்லை என அவளை ஆறுதல் படுத்துகிறாள் . அப்போது துவங்குகிறது ப்ரியாவுக்கும் ஜெனிக்குமான காதல் . ஒரு பெண் இன்னொரு பெண்ணை எப்படிக் காதலிக்க முடியும் ? இது நல்ல கேள்விதான் . இதற்குப் பின் வரும் அத்தியாங்களில் விளக்கமான பதிலும் இருக்கிறது .
ஜெனியின் வாழ்க்கை என்பது அவளது தந்தை தந்த ஊக்கத்தால் எதற்கு பயந்திராதவளாகவும் , எதற்கும் துணிந்தவளாகவும் தன்னை ஒரு ஆண் என்றே கருதிக்கொண்டு ஜீன்ஸ் பேண்ட் அணிவதும் இரவில் லுங்கி கட்டிக் கொள்வதுமாக இருக்கிறாள் . ப்ரியாவை காதல் என்கிற வார்த்தைக்குள் ஆட்படுத்தி அவளிடம் உறவு கொள்ள திருவிழா இரவில் அழைத்துச் சென்றவனோ தன் காரியம் முடிந்ததும் எக்கேடோ கெட்டுப்போ என விட்டுச் சென்று விட்டான் . ஒரு பெண்ணின் காமத்தை மட்டுமே ஆண் சமூகம் எதிர்பார்க்கிறது என்பதை உணர்ந்து ப்ரியா வெறுப்புறுகிறாள் . இப்படியாக ஆண் சமூகத்தின்பால் வெறுப்புற்ற இரண்டு பேரும் ஒன்றிணைகிறார்கள் .
ஓரினத்தின் பால் ஈர்ப்பு கொள்ள ஹார்மோன் மட்டுமல்ல சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்பதை இந்நாவல் தெளிவாக விளக்குகிறது . இவர்களுள் ஜெனி தன்னை ஆணாக பாவித்துக் கொண்டு ப்ரியாவை தன் மனைவியாக நினைத்துக் கொள்கிறாள் . இந்த ஆண் மனோபாவம்தான் அவளை ஆட்டுவிக்கிறது . யாருக்கும் தான் அடிமையாக மாட்டேன் என சொல்லும் ஜெனியோ தனது தனிப்பட்ட சுதந்திரத்தைத் தாண்டியும் காதலிக்கிறேன் என்று சொல்லி வந்த கதிர்வேலிடம் மூர்க்கமாக நடந்து கொள்கிறாள் . ஜெனியின் குற்றங்களை கதிர்வேல் சாடிவிட்டு விடை பெறுகிறான் . ப்ரியாவை மணிபாரதிக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவான போது கூட ஜெனி மணிபாரதியை அழைத்து அதே ஆணாதிக்க மனோபாவத்துடனே பேசுகிறாள் … அதாவது ஆணாதிக்கம் என்பது ஆண்களிடம் மட்டுமே அல்ல …
ப்ரியாவைப் பற்றித்தான் முக்கியமாக பேச வேண்டும் . கையறு நிலையில் தனக்கு தோளுக்கு தோளாய் நின்று எவருக்கும் அடிமையாகி விடக்கூடாது என்று சொல்லும் ஜெனியின் உண்மையான காதலோடு வாழ வேண்டும் என ஆசைதான் இருந்தாலும் ஊர் மட்டுமல்ல பெற்ற தாயும் உடன் பிறந்த சகோதரியும் கூட அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் … மணிபாரதிக்கு திருமணம் செய்து வைக்கத் துடிக்கிறார்கள் … மணிபாரதியோடு ப்ரியா பழகிய போது அவனையும் வேண்டாம் என நிராகரிக்க முடியவில்லை … ஜெனியையும் வேண்டாம் என தூக்கி எறிய முடியவில்லை என இரண்டுக்கும் இடையில் நின்று தத்தளிக்கிறாள் … ஜெனி மனம் முழுவதும் பரவிக்கிடக்கிறாள் அவள் எப்படியும் தன்னை வந்து கூட்டிச் செல்வாள் என நம்பும் ப்ரியாவோ , ஜெனி தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டதும் எவ்வித வருத்தமுமின்றி வருகிறாள் .
ஒரு உண்மை ப்ரியாவுக்கு புரிகிறது ஜெனியிடமும் தான் ஆண் என்கிற நினைப்பும் ப்ரியா தன்னைத் தேடி வர வேண்டும் என்கிற கர்வமும் ஏகத்துக்கும் பரவிக்கிடந்ததால்தான் இந்த வினை என நினைத்து மணிபாரதியுடன் வாழ சம்மதம் தெரிவிக்கிறாள் .
அந்த 7 நாட்கள் படம் திரைக்கதை அளவில் பெரிதும் பேசப்பட்ட படம் . பெற்றோர் எதிர்ப்பு காரணமாக பிரியும் பாக்கியராஜ் – அம்பிகா ஜோடியை , அம்பிகாவை மணந்து கொண்ட ராஜேஷ் மீண்டும் சேர்த்து வைப்பார் . அப்போது தாலி கட்டியவனே கணவனாக உடன் வாழ வேண்டும் என அம்பிகாவை பாக்கியராஜ் விட்டுக் கொடுத்து விடுவது போல கதை முடியும் . எதேர்ச்சையில் இது பிற்போக்குத்தனம்தான் என்றால் வணிக சமரசத்துக்காக இப்படியொரு காட்சியை பாக்கியராஜ் வைத்திருந்தார் . அது போலத்தான் எனக்கு ஜெனியின் மரணமும் படுகிறது .
ஓரினச்சேர்க்கையாளர்களாகவே தங்களது தோளுக்குத் தோளாக ப்ரியாவையும் – ஜெனியையும் வாழ்நாள் இறுதி வரை உலவ விட்டிருக்கலாம்தான் … ஓரினச்சேர்க்கையை ஊர் உலகம் ஏற்பதில்லை என்பது என்னவோ உண்மைதான் . ஆனால் இந்நாவல் ஆசிரியரும் கூட அதை ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டதால்தான் ஜெனியைக் கொன்று மணிபாரதிக்கே ப்ரியாவை வாக்கப்பட வைத்து விட்டார் எனத் தோன்றுகிறது . தமிழ் இலக்கியத்தில் ஓரினச்சேர்க்கை குறித்து இது போன்று இதுவரையிலும் எந்த நாவலும் இவ்வளவு அழுத்தமாக பேசியதில்லை என்ற விதத்தில் மரப்பல்லி ஒரு குறிப்பிடத்தகுந்த ஒரு நாவலாகிறது .
– கி . ச . திலீபன் ( journalistdhileepan@gmail.com)
9
மண்பூதம் (சிறுகதைகள்)
மண்பூதம்–சிறுகதை தொகுப்பு
அன்பு நண்பர் வா . மு . கோமு அவர்களுக்கு ,
வணக்கம் . தாங்கள் அனுப்பித்தந்த மண்பூதம் தொகுப்பு கிடைத்தது . மகிழ்ச்சி . புத்தகம் கையில் கிடைத்ததுமே கடிதம் எழுத நினைத்திருந்தேன் . வேலை நெருக்கடிகளால் உடனே முடியவில்லை . இரண்டு மூன்று நாட்களாய் சிறுகச் சிறுகப் படித்து இன்று தொகுப்பை படித்து முடித்தேன் .
தொகுப்பில் உள்ள பதினேழு கதைகளுமே ஒன்றைப் போல ஒன்றில்லாத தன்மையுடயனவாய் உள்ளன . FANTCY இக்கதைகளில் ஊடும் பாவுமாக இழையோடுவதைக் காணமுடிகிறது . இந்தக்கதைகள் அதன் பாடுபொருள் புதுமையினால் புதியவையாக இருக்கின்றன . எடுத்துரைப்பு முறையிலும் கூட , அலட்டிக் கொள்ளாத டாம்பீகத்தன்மை எதுவுமில்லாத எளிமை இருக்கிறது . ஆனால் கதைத் தன்மை , தமிழுக்கு முற்றிலும் புதிய ஒன்றல்ல . இப்படிச் சொல்வது ஒன்றும் குறை சொல்லுவதற்காக இல்லை . மார்க்குவஸ்ஸின் வரவுக்குப் பிறகு தமிழில் சிலர் இதைப் பரீட்சித்துப் பார்த்துவிட்டார்கள் . எஸ் . ராமகிருஷ்ணன் , ரமேஷ் பிரேம் வெகு காலத்திற்கும் முன்பே ஸில்வியா ( பிரம்மனைத் தேடி ) எனச் சிலர் கையாண்ட , கையாளும் கதைத் தன்மை போலத்தான் உங்கள் கதைகளும் இருக்கின்றன . ஆனால் உங்களை வேறுபடுத்துவது , மிகச் சாதாரணமான அன்றாட வாழ்வில் இதைக் கொண்டு வந்திருப்பதைத் தான் .
மார்க்குவஸ் போன்ற லத்தீன் படைப்பாளிகள் உயிர்ப்போடு இருக்கும் பகுதி அதுதான் . அதை நீங்கள் சரியாக அடையாளம் கண்டிருக்கிறீர்கள் . இதை நீங்கள் பிரக்ஞைப் பூர்வமாகச் செய்யவில்லை என்றாலும் கூட . இது தமிழ் நவீன கதை சொல்லும் முறைமையில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் . மிகச்சாதாரணமான மக்களின் நம்பிக்கைகளும் உங்கள் கதைகளில் பொதிந்து கிடப்பதைக் காண முடிகிறது .
நோயின் அவஸ்தையை மிகவும் நுட்பமாகக் காட்டியிருக்கிறீர்கள் . தங்களின் முன்னுரையைக் கதைகள் படிக்கத் தொடங்கும் முன்னரே படித்து விட்டேன் என்ற போதிலும் கூட , கதை முழுக்க புதுமைப்பித்தன் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தார் . தன் மனைவிக்கு அவர் எழுதிய கடிதங்கள் நினைவில் அசைந்து கொண்டே இருந்தன .
புதிய எழுத்து முறைமையை மிக அழகாக கையாண்டிருக்கிறீர்கள் . புதிய பாடு பொருள்களும் வந்து விழுந்திருக்கின்றன . நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவேன் !
தோழமையுடன் …………. கி . பார்த்திபராஜா .
10
சயனம் - நாவல்
சயனம் – நாவல்
ஈரோடு புத்தகக் கண்காட்சியும் , அதையொட்டி நடுகல் பதிப்பகம் சார்பில் நடந்த ’குருத்தோலை’ வெளியீட்டு நிகழ்வும் அருமையோ அருமை . நாவலைப் பற்றி பெருமாள் முருகன் அருமையாகப் பேசினார் . அதைப் பற்றி தனியாக எழுதலாம் . நண்பர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள் . கிடைத்ததும் யூடியூப்பில் ஏற்றிட வேண்டியதுதான் .
வியாழக் கிழமை ஒரே கொண்டாட்டம் , திண்டாட்டம் . அப்படியும் ஒரு சில புத்தகங்களை வாங்க முடிந்தது . அதில் ஒன்றுதான் எதிர் வெளியீட்டு அரங்கில் வாங்கிய சயனம் நாவல் .
வெள்ளிக் கிழமை மதியம் கையில் எடுத்தேன் . ஆடி மாதக் காற்று . முகிலோடும் வானம் . தென்னை மரத்துக்கடியில் கட்டிலைப் போட்டு வழக்கமாக இடையூறுகள் , தொலைபேசி அழைப்புகள் , ஃபேஸ்புக் ஏதுமின்றி புத்தகம் படிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் . பக்கத்தில் தட்டம் நிறைய முறுக்கு மட்டும் இருந்தால் சரி . அப்படித்தான் சயனத்தில் ஆழ்ந்தேன் . சனிக்கிழமை மதியத்துக்குள் வீட்டில் சுட்ட முறுக்கில் பாதியும் , சயனமும் தீர்ந்தது .
வழக்கமாக முன்னூறு பக்கத்துக்கு மேலுள்ள நாவல்களை வாசித்தால் சலிப்பு உண்டாகி விடும் . ஒரு சில படைப்புகளை வாசித்தால் நாலு நாளுக்கு ஆய் வராது . முடிப்பதற்கு அவ்வளவு முக்க வேண்டியிருக்கும் . சயனமும் கொஞ்சம் பெரிய புக் . முக்கவெல்லாம் வேண்டியிருக்கவில்லை . உள்ளே தானாக இழுத்துக்கொண்டு போனது .
வா . மு . கோமு நல்ல எழுத்தாளர் . இடுப்புக்கு மேலே சிறப்பாக எழுதக் கூடியவர் . இடுப்புக்குக் கீழே அடடா இன்னுஞ்சிறப்பு ! வழக்கமாக அவரது கதைகளில் மேட்டர் இருக்கும் . மேட்டர் – ’ஒருமை’ கவனிக்க ! ஆனால் இதிலே மேட்டர்ஸ் .. மேட்டரோ மேட்டர் .. எல்லாக் கதாபாத்திரத்துக்கும் சீன் வைத்திருக்கிறார் . அதிலும் ஸ்கூலில் சத்துணவு ஆக்கும் அம்மாவும் , குமரேசன் வாத்தியாரும் செஸ் விளையாடுவார்கள் . ( செஸ் தான் .. இடையில் ’க்’ இல்லை .) அடடா அருமை .. மிஸ் பண்ணாதீக . அப்பறம் வருத்தப்படுவீக ..
கோமுவின் நாவல்கள் போகிற போக்கில் நிகழ்வுகளை உரையாடலில் சொல்லிச் செல்லும் . நல்லது கெட்டதுகளை போதித்துக் கொண்டிருக்காது . தலித்தியம் பேசாது . அநேகமாக அவரது ’கள்ளி’ நாவலுக்குப் பிறகு இதில் தலித்தின் வலிகளைத் தொட்டுச் செல்கிறார் . வேலுச்சாமிக் கவுண்டர் கலியனை கரட்டில் தூக்கிக் கட்டிக் கொல்கிறார் . உள்ளூர் பள்ளியின் தலைமையாசிரியை இந்திரா மாதாரி வளவுச் சனங்களோடு ஓரமாக நின்று கோவில் விசேசத்தை வேடிக்கை பார்க்கிறார் . நாவலில் எல்லாக் கதாபாத்திரத்துக்கும் மேட்டர் மடிந்தாலும் தாழ்த்தப்பட்ட ஜாதி வாத்தியார் மட்டும் ஒரு பெண்ணிடம் நூல் விட்டு கன்னத்தில் அடி வாங்கிக் கொள்கிறார் .
கோமுவில் பிற படைப்புகளைப் போல readability இதன் சிறப்பம்சம் . சொல்லாடல் அனாயசமாக அவருக்குக் கைகூடி வருகிறது . அன்றாட வாழ்வில் கிராமங்களில் புழங்கும் மொழிதான் . உதாரணத்துக்கு கலியன் பொண்டாட்டி வள்ளி , “ சந்தேகப்படறவன் பீயை நாய் கூடத் திங்காது” என்று அவனிடம் சொல்வாள் . இந்த மாதிரி உரையாடல்கள் கதை முழுக்க இறைந்து கிடக்கின்றன .
என்ன ஒரே விஷயம் . சென்னிமலைப் பக்கத்தில் எப்போதும் மக்கள் காம இச்சையோடே திரிகிறார்கள் என வேறு பிராந்தியத்து ஆட்கள் நினைக்கும் அபாயம் ஒன்றுதான் . கோமுவைக் கேட்டால் , “ இதெல்லாம் நெசமா நடந்துது தானுங்கோ . நடக்காதத நாம எழுதற இல்லீல்லோ !” என்பார் .
– செல்லமுத்து குப்புசாமி
அன்புச் செல்வன் சயனம் – வா . மு . கோமுவின் நாவலை முன்வைத்து …!
எப்பவுமே திட்டமிடாமல் தனது கதைகளை எழுதும் வா . மு . கோமு தனது சயனம் ( சயனம் என்றால் சகுனமாம் கொங்கு வட்டாரத்தில் ) நாவலையும் அவ்வாறே எழுதத் தொடங்கியுள்ளார் . எழுதி முடித்தும்விட்டார் . முற்றிலும் கிராமம் சார்ந்த நாவல் இது . எதற்கெனவும் மெனக்கெடாததே அவரது எழுத்தின் பலம் என்று நான் நினைக்கிறேன் . இந்நாவலுக்கு கிராமம் என்று பெயர் வைக்க யோசித்து முகநூலில் நண்பர்களின் கருத்துகளை அறிந்த போது சயனம் என்ற பெயர் தேர்வானதாம் . அதனால் சயனம் என்று வைத்துவிட்டார் … சற்றும் யோசிக்காமலே … ஆக எழுதுவது தவிர பிற வேலைகள் எதுவும் என்னுடையதில்லை என்பதில் கருத்தாயிருக்கிறார் .
ஒரு நாவல் உருவாக்கம் என்பது இவரைப் பொருத்தமட்டில் வெறுமனே அவர் மட்டுமே யோசிக்கக் கூடிய விசயமில்லை என்பதில்தான் தொடங்குகிறது வா . மு . கோமுவின் நாவல் . அவர் தன் நாவலின் நாயகனை இதுகாறும் இல்லாதவாறு சிகரெட் தண்ணி போன்ற பழக்கங்கள் அற்றவராய் காட்ட நினைக்கிறார் … தன் ஓட்ட வாயை வைத்துக் கொண்டு பகிர்ந்த போது அது எப்படிங்க .. ஒரு ஏற்பாட்டை பண்டி விடுங்க என்கிறார்கள் நண்பர்கள் … இவரும் உடன்பட்டு சாப்பாட்டுக்காரம்மா பொன்னம்மா என்ற மஞ்சுளாவினை ஏற்பாடு செய்து சரி பண்டி விடுகிறார் .
மிகவும் தெளிவாகத்தாகத்தான் உள்ளார் தனது படைப்புருவாக்கத்தில் … இன்றைய வாசகர்கள் யார் அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்ற உரையாடலில் தொடங்கி தனது வேகப் பிரயோகத்திற்கான நியாயத்தை எடுத்துரைக்கிறார் . நாவலின் முன்னுரையில் ஓர் இரண்டு பக்கங்கள் குமரேசன் வாத்தியாரை கலியனும் சாப்பாட்டுக்காரம்மாவும் அழைத்துச் செல்லும வழி குறித்து வழமையான நாவல்களின் பதிவுகள் போன்று சொல்லிச் சென்று பின்னர் அதையே நாவலில் படிக்கையில் இந்தத் தேவையற்ற உவமைகள் உவமானங்கள் எல்லாம் கழிக்கப்பட வேண்டியவை என்பது மிகைக் கூற்றல்ல .
தலித் பாத்திர அமைப்புகள் , பெண் பாத்திர அமைப்புகள் குறித்து கோமு நிறையவே அனுபவித்து உணர்ந்திருப்பார் போல ..! அதன் தொடர்ச்சியாக முன்னுரையில் வெகு சாக்கிரதையாகக் குறிப்பிட்டு விட்டார் . கொங்கு வாழ்வினைப் பேசும் நாவல் என்பதற்கு முன்னுரையில் ஆசிரியர் தரும் ….’ இதே கதையை அக்கரையம்பாளையம் என்று மாற்றிவிட்டால் அது அந்த ஊர்க்கதை ! கொங்கு மண்ணில் பாளையங்கள் ஜாஸ்தி .!’ என்பது மிகப்பெரிய உண்மைதான் .
குமரேசன் என்ற வாத்தியார் தம்மடிக்கவும் தண்ணியடிக்கவும் மாட்டார் . ஆனால் , அதற்கான குஞ்சுமா விரைக்காது … விரைக்காவிட்டாலும் கூட விரைக்க வைக்கும் முயற்சியில்தான் நாவல் உள்ளது .
வேலுச்சாமிக்கவுண்டரும் பொன்னுச்சாமிக் கவுண்டரும் பங்காளிகளாய் இருந்து சின்னச்சாமியை சேர்த்துக்கொண்டு பண்ணும் அட்டூழியம்தான் நாவல் என்றால் மிகையாகாது . கலியனும் வள்ளியும் பொடுசாளும் சாதி வர்க்க ஆதிக்கத்திற்குப் பலியாகின்றனர் . மஞ்சுளா என்ற பொன்னம்மாளுடன் குமரேசனின் சதுரங்க ஆட்டம் அதிலும் குறிப்பாக ஒவ்வோர் தோல்விக்கும் ஓர் ஆடை அவிழ்க்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை சுவாரசியமானது . திருமண மண்டபத்தில் சின்னச்சாமி மற்றும் வேலுச்சாமியின் இரவு நேர சமையற்பெண்களின் ஊடான கூடல் தனிக் கதை . ஜெயந்தி குமரேசனை மடியில் கிடத்தி முத்தம் பெற்று முக்தியடைந்ததுதான் நாவலில் இறுதித்தீர்ப்பு என்றால் அது உண்மையில்லை . குமரேசன்களும் ஜெயந்திகளும் ஆண்களையும் பெண்களையும் முறையே உத்தமர்களாக நினைத்திருப்பது தவறு என்று உண்ர்ந்தது மட்டுமே நாவலின் வெற்றியென நம்பும்படியாக உள்ளது சகுனம் …. என்ற சயனம் …!
11
சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் (நாவல்)
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – விமர்சனம்
காதலின் அடுத்த படிநிலை காமமா ? இல்லை காமமும் காதலும் இரண்டறக் கலந்ததா என்கிற கேள்வி இன்றைய சூழலிலும் பலருக்கும் உண்டு . காதலும் காமமும் உலகில் உயிர் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் பொதுவானது . இந்தக் காமத்தில் கலாச்சாரம் என்னும் வரையறைய வகுத்துக்கொண்டவன் மனிதன் . உற்பத்திச் சமூகமாக மனித இனம் உருவான பின்புதான் நாகரிகம் , கலாச்சாரம் தோன்றியிருக்கிறது . சமூகம் உருவாவதற்கு முன்பு உலகம் இரண்டு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது . ஒன்று அநாகரிக காலகட்டம் இன்னொன்று நாகரிக காலகட்டம் . அநாகரிக காலகட்டத்தில் உடலுறவு கொள்வதற்கு ஆண் பெண் என்னும் வரையறை மட்டுமே இருந்திருக்கிறது .
மற்றபடி உறவு வரையறைகள் அந்தக் காலங்களில் வகுக்கப்பட்டிருக்கவில்லை . இப்படியாக உற்பத்திச் சமூகமாக உருவான போதுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கலாச்சார நெறிமுறைக்குள் காமம் கட்டுப்படுத்தப்பட்டது . இப்படியாக கலாச்சாரச் சூழலில் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு வரையறைக்குள் இருந்த பாலியல் என்பது இன்றைய கலாச்சார சீர்கெட்டில் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை நமக்குப் படம் பிடித்துக் காண்பித்திருக்கிறது இந்த நாவல் . கிராமத்தின் அறியப்படாத இன்னொரு முகத்தை அழுத்தமாக பதிந்ததில் இந்நாவல் பாராட்டுக்குரியது . இருந்தும் இந்நாவல் பல விமர்சனங்களுக்கும் உரியதாக ஆகியிருப்பதற்கு காரணம் இதில் கையாண்டிருக்கும் மிகத் தீவிர பாலியல்தான் . பாலியல் என்பது எந்த இலக்கியத்தில்தான் பேசப்படவில்லை . ராமாயணம் , சரசுவதி சபதம் ஆகியவை எதைப் பேசுகின்றன ? இலை மறைவு காய் மறைவாய் சொல்லப்பட்டு வந்த பாலியலை வெட்ட வெளிச்சமாய் முதலில் பேசியது ஜி . நாகராஜந்தான் . குறத்தி முடுக்கு , நாளை மற்றுமொரு நாளே என பாலியல் என்பதன் கூறுகளையும் பாலியல் தொழிலாளர்களைப் பற்றியும் முதலில் பதிவில் வைத்தவர் அவர் .
அடுத்து தஞ்சைப் பிரகாஷின் மீனின் சிறகுகள் பாலியலை ஓரளவு காட்டமாகவே கையாண்டது . இவையெல்லவற்றையும் விட இந்நாவல் பாலியலை அப்பட்டமாய் பதிவு செய்திருக்கிறது கதையை தூக்கி நிறுத்தும் பாத்திரப் படைப்புகள் மட்டும் இதில் இல்லையெனில் இது சரோஜா தேவி புத்தகமாகப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை . இந்நாவலை படிக்கையில் மனுஷ்ய புத்திரனின் விற்பனைப் பசிக்கு வாய்ப்பாடியில் அமர்ந்து கொண்டு வா . மு . கோமு தீனி போட்டிருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது .
முதலில் சாந்தாமணி ….
சம காலத்தில் காதல் என்பதைப் பற்றின புரிந்துணர்தலே பலரிடம் காணப்படுவதில்லை . ஆறாம் வகுப்பு மாணவி எட்டாம் வகுப்பு மாணவனோடு ஓடிப்போக முயற்சித்த போது மாட்டிக் கொண்ட கதைகளை நிவிஸ் பேப்பரில் படித்திருக்கிறோமே . சமீபத்தில் வந்த களவாணி முதற்கொண்டு பள்ளிக்குச் செல்லும் பெண்ணை காதலிப்பது போன்ற கதைகள் சினிமாக்களில் பேசப்பட்டிருக்கிறது . பள்ளிக்காதல்கள் பெரும்பான்மையான விழுக்காடு தோல்வியில்தான் சென்று முடியும் என்பது மனோ ரீதியான உண்மை . அதைச் சொல்லும் நோக்கோடு எழுதினாரோ தெரியவில்லை சாந்தாமணி இதைத்தான் பேசுகிறது .
வேலம்பாளையத்தில் சாந்தாமணியிடமிருந்து தொடங்குகிறது கதை . பழனிச்சாமி என்ற மாணவன் தனது பள்ளியில் மாணவத் தலைவராக போட்டியிடுகிறான் என்பதையும் அவன் தன்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது போலவும் அத்தியாயம் தொடங்குகிறது . பள்ளி மாணவர் தலைவன் தேர்தல் குறித்து அழகாக விவரிக்கப்படுகிறது . பழனிச்சாமி தேர்தலில் தோற்கிறான் ( நல்ல வேலை ஹீரோயிசம் காட்டப்படவில்லை ) இப்படியான காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க வகுப்பறையை விட்டு பழனிச்சாமியும் சக்தியும் சென்று பள்ளி எதிர்க்கவே தம் அடித்து நிற்பது போல் காட்டும் காட்சி இலேசான அதிர்ச்சியைத் தருகிறது . ஆறாம் வகுப்பு மாணவனது பாக்கெட்டில் இன்று ஹான்ஸ் பாக்கெட்டைப் பார்ப்பது சாதாரணமானது என்றாலும் பள்ளி எதிர்க்கவே ஒரு மாணவன் புகை ஊதும் அளவான தைரியம் எப்படி என்பதில் எனக்கு சற்றே ஒரு குழப்பம் . பழனிச்சாமி சாந்தாமணியை உசுருக்கு உசிராய் காதலிக்கிறான் எந்நேரமும் அவள் நினைப்பிலேயே ஆகாசத்தில் பறக்கிறான் .
ஆனால் சாந்தாமணிக்கோ பழனிச்சாமியைக் காதலிப்பதற்காகவா அம்மா நம்மைப் பெற்றெடுத்து ஊத்துக்குளிப் பள்ளிக்கு போய் வா மகளே என்று அனுப்பியது என காதலைப் புறந்தள்ளுகிறாள் . காதல் புறக்கணிக்கப்பட புறக்கணிக்கப்பட வளரல்லவா செய்கிறது . பழனிச்சாமியின் சாந்தாமணி குறித்த கவிதைகளை படிக்கும்போது சாந்தாமணிக்குள்ளும் காதல் மலர்கிறது . இங்குதான் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் . சமகாலப் பெண்களின் மன நிலை எப்படிப்பட்டது என்பதை தெள்ளத் தெளிவாக சாந்தாமணி பாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் .
தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பழனிச்சாமியின் கற்பனை ஓவியத்தைக் கந்தலாக்கும் ஒரு காட்சி போதுமே . பள்ளிப்பருவத்தில் ஹார்மோன் நச்சரிப்பால் எழும் ஒரு வித ஈர்ப்பு காதல் என்று தவறாக உணர்ந்து கொள்ளப்படுகிறது . சாந்தாமணி பன்னிரெண்டாம் வகுப்புப் பெண்னாக இருந்தாலும் அவளிடம் குழந்தைத் தனங்களே நிரம்பியிருக்கின்றன . தன் காதலன் தான் சொன்னதுக்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்பது எல்லாக் காதலிகளின் கனவாக இருக்கத்தான் செய்கிறது . ஆனால் சக்தி போன்ற காதலன்களால் அவர்களின் கனவு சுக்கு நூறாக்கப்படுகிறது . சக்தியை தன் உறவுக்காரப் பெண்ணான பூங்கொடி விரும்புகிறாள் . சக்திக்குள்ளும் எழுந்து நிற்கும் கிளர்ச்சி பூங்கொடியுடன் எப்படியேனும் உறவு கொண்டாக வேண்டும் என்கிற முயற்சி ஆகியவை பாலியல் வசனங்களோடு பதியப்படுகிறது .
சினிமா தியேட்டரில் முலை கசக்கும் சக்தியின் கையைத் தட்டி விட்டதற்காக பூங்கொடியின் மீது கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது ? பூங்கொடி எப்படிப்பட்டவள் என்பது பின்னால் விவரிக்கப்பட்டாலும் சக்தியின் செயல்பாடும் வரம்பு மீறல்தானே . தன்னோடு பேச மறுக்கும் சக்தி முன் கையை காம்பஸால் கிழித்துக் கொண்டு தன்னோடு அவனைப் பேச வைத்தே ஆக வேண்டும் என்கிற பூங்கொடியின் வெறி பெரும்பாலான பெண்களின் இயல்பில் ஊறிப்போனதை இங்கு எவரும் மறுப்பதற்கில்லை . சொன்னால் பெண்ணியவாதிகள் கொந்தளிப்பார்கள் . “ உன்கிட்டே ஒவ்வொரு நிமிசமும் பயந்துக்கிட்டேதான் பேச வேண்டியிருக்கு … திடீர்னு கத்தி எடுத்துட்டு கழுத்துல வெச்சுட்டு செத்துவன்னு கூட நீ மிரட்டுவே” என்று சொல்லி காதலை உதறிப்போகும் இடம் சிறப்பு .
ஊர்த்திருவிழாவுக்கு வர முடியாததற்கு உடம்பு சரியில்லைங்கிறது காரணமா என்று தேவையில்லாமல் கோபம் கொள்ளும் சாந்தாமணியை பழனிச்சாமி தூக்கியெறியும் தருணங்களும் அப்படித்தான் . புரிந்துணர்வு இல்லாத காதலைப் பற்றியும் ஆண் பெண் ஈகோ குறித்தும் பேசிய படங்களைக் காட்டிலும் கொங்கு மண் வாசத்தோடும் அதன் இயல்போடும் கதையை கட்டமைத்த விதத்தில் இது இந்நாவலைப் பாராட்டலாம் . அதே சமயம் பள்ளிப் பருவக்காலங்களிலிருந்தே பழனிச்சாமியின் பாலியல் விளையாட்டுக்களைக் காட்டியாக வேண்டும் என்கிற அவசியம் என்ன இருக்கிறது ? ஜான்சி கதாப்பாத்திரத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமேயானால் தன் வீடேறி வரும் பழனிச்சாமியை நினைத்து பூரிக்கும் தருணம் சாதியம் குறித்து சற்றே அலசப்படுகிறது . காதலை அறவே வெறுக்கும் ஜான்சி பழனிச்சாமியின் பாலியல் குறும்புகளுக்கு ஒத்துழைக்கிறாள் என்றால் அது அவளின் மீதான பிம்பத்தில் கல் கொண்டு எறிவது போலத்தான் ஆகி விடும் .
இதை விடக் கொடுமை என்னவென்றால் தன் அக்காவின் காதலனை மச்சான் என்று அழைக்கும் சாந்தாமணி தங்கை சுகந்தியின் கதாப்பாத்திரம்தான் . தன்னைத் தூக்கிக் கொள்ளச் சொல்லும்போது தன் முலைகளையும் தொட்டு வருடும்படியான காட்சிகளை வைத்து நாம் ஒட்டுமொத்த மாணவிகளையும் மேம்போக்கான கருத்தில் கொள்ள முடியாதே . புரிந்துணர்வற்ற பள்ளிக்காதல்கள் தோற்கும் என்ற உண்மையை பதிந்தது என்றாலும் சாந்தாமணியில் வரும் ஜான்சி , சுகந்தி கதாப்பாத்திரங்கள் மனுஷ்யபுத்திரனின் விற்பனைக்கு தீனி போட்டதாய் அமைந்திருக்கிறது . பழனிச்சாமியின் கடிதங்கள் அவனது காதலின் வலியை அழுத்தமாக உணர்த்திற்று . பழனிச்சாமி , சாந்தாமணி , சுகந்தி இவர்கள் மூவர் கடிதம் எழுதியிருக்கலாம் நாவலோடு சேர்த்து நாவல் நடையிலேயே ஆசிரியர் கடிதத்தை எழுதியிருப்பதைத் தவிர்த்திருந்தால் உண்மைத் தன்மையோடு இருந்திருக்கும் .
அடுத்து இன்ன பிற காதல் கதைகள் …
இது பழனிச்சாமியின் திருவிளையாடல்கள் . இதை ஒவ்வொரு அத்தியாயமாக விளக்கித்தான் தீர வேண்டும் . பெல்லா கதாப்பாத்திரத்திடம் நடக்கும் போன் உரையாடல்தான் முதல் அத்தியாயம் . திருமணம் முடிந்து தன் கணவனோடு எப்படியெல்லாம் உறவு கொண்டேன் என்று பெல்லா பழனிச்சாமிக்கு விவரிக்கிறாள் . கணவன் மனைவி அந்தரங்கத்தை மனைவி இன்னொரு ஆணுடன் பகிர்ந்து கொள்வது என்பது எவ்வளவு பெரிய அறுவறுப்பு . அடுத்த அத்தியாயம் சுமதி . ஒரு பாலியல் தொழிலாளியிடம் பழனிச்சாமி உறவு கொண்டதை அஞ்சரைக்குள்ள வண்டி போல் விளக்கியிருக்கிறது இதன் அவசியம்தான் என்ன ? எத்தனையோ பேருடன் உறவு கொள்ளும் அவள் பழனிச்சாமியுடன் உறவு கொள்வதை மட்டும் ஏதோ விசேஷம் போல் அதற்கு ஒரு அத்தியாயத்தை தாரை வார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ? ஷாலினி அத்தியாயத்தில் மிகவும் கனமான சம்பவத்தை போகிற போக்கில் கடந்து சென்று விட்டார் .
முலைகளையும் தொடைகளையும் வெறிகொண்டு கடித்துத் துப்பிய ஒரு காமப்பிசாசிடமிருந்து தப்பி வந்த அவளது வலிகளை இன்னும் அழுத்தமாக்கியிருக்கலாம் அவளது வலிகளுக்கு பழனிச்சாமியின் காமம் மருந்தாக அமைந்திருக்கிறது . கீதாவிற்கு பழனிச்சாமி எழுதும் கடிதம் உண்மையிலுமே பாதிக்கப்பட்டவனின் வலிகளை கண் முன் நிறுத்துகிறது . கீதா தன்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை தன்னை வேண்டுமென்றே புறக்கணிக்கிறாள் என்பது தெரிந்தும் கூட பழனிச்சாமி கீதா பின்னாலே லோ லோ வென சுத்துவது டூ டூ மச் . புது கிராக்கியிடம் உறவு கொண்டு விடி வாங்கிக்கொள்ளும் சுந்தரேசன் கதாப்பாத்திரத்திற்கான அத்தியாயத்தில் திருநங்கைகளின் பாலியல் வாழ்க்கை மெல்ல கடந்து செல்கிறது . விடி வாங்கிக் கொண்டு இவன் படும் அல்லல் குறித்து விளக்கப்படுகிறது .
எல்லாம் சரி மருத்துவமனையில் அந்த நர்ஸ் துணியை அவிழ்த்துக் காட்டுவதெல்லாம் எந்த ஊர் நியாயமுங்க ? மீனா அத்தியாயமும் மீனா பழனிச்சாமிக்கான போன் உரையாடல்தான் . நீலப்படங்கள் போல் கல்லூரி மாணவிகளிடம் மாணவன் ஒருவன் செக்ஸியாகப் பேசிய பதிவுகள் நிறைய பேரின் செல்போன்களில் உலா வரத் தொடங்கின . அப்படிப்பட்ட ஒரு போன் பதிவைத்தான் இவற்றில் பயன்படுத்தியிருக்கிறார் . இது படிப்பவர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென்ற பூரிப்பை ஏற்படுத்துமோ தவிர வேறெதையும் ஏற்படுத்தவில்லை . கணவனுடன் உறவே கொள்ளாமல் விதவையாகிய குணவதியின் வலியை “ எனக்கு கலர் சேலை கட்டிப்பாக்கனும்னு ஆசையா இருக்கு பழனி ” என்று சொல்லும் ஒரே வார்த்தையில் பதிய வைத்தது ஒரு வித உருக்கத்தை விதைக்கிறது . இப்படியாக வாழ்வில் பல பெண்களுடன் பழனிச்சாமி நடத்திய காமக்களியாட்டத்தை சொல்லிச் செல்லும் கதைக்கு முடிவு வேண்டுமல்லவா ?
மூன்று பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணை தனக்குத் துணைவியாக்கிக் கொள்கிறான் பழனிச்சாமி . இறுதியில் மீனாவுடன் ஒரு செல்போன் உரையாடலோடு நாவல் முடிகிறது . நாந்தான் உன்னை ஏமாத்திட்டேன் நீ என்னை எடுத்துக்கோ என்று மீனா சொல்லும் தருணம் . “ அம்மா போனதுல சுத்தமா மனசு விட்டுட்டேண்டி . வீட்டுல திரும்பின பக்கமெல்லாம் அம்மா நின்னுட்டு இன்னும் என்னடா படுக்கை … உடம்பு சரியில்லையாடா ? சாப்பிட வாடான்னு கூப்பிட்டே இருக்கிற மாதிரி இருந்துச்சு . எத்தனை தடவை இதா வந்துட்டன்மான்னு எந்திரிச்சு போய் தேடினேன் தெரியுமா ? ” இந்த இடம் உண்மையிலுமே தாய் இறந்த வலிகளை வாசகனுக்குக் கடத்திச் செல்கிறது .
ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்று கேட்காதீர்கள் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கேளுங்கள் – ஜி . நாகராஜன் . இந்நாவலில் அந்த ஏன் என்ற கேள்விக்குத்தான் பதிலைக் கண்டுணரவே முடியவில்லை . கலாச்சார சீர்கேடு என்பதை கிராமிய அளவில் பதிவு செய்திருந்தாலும் அது ஏன் ? என்கிற காரணப்பொருளை விளக்காததால் இந்நாவல் முழுமையடையாததாகவே தோன்றுகிறது .
– கி . ச . திலீபன்
000
கொஞ்ச நாளுக்கு முன்னாடி விஜய் டிவில 16 படம் போட்டாங்க . ரொம்ப ஆவலா அந்த படத்தை பார்த்து கடைசீல த்துதூ துப்பிட்டு போனேன் . படம் அவ்வளவு கேவலமா இருந்துச்சு , அதும் அந்த கிராமத்தில் வளர்ந்த காதல் கதை சுத்த கொடுமை . அந்த சின்ன பொண்ணு பேசுற டயலாக் கேட்டு கேட்டு என்னோட மண்டைய நல்லா சொரியவிட்டங்க , ஓவர் காண்பிடன்ஸ் அந்த படத்தோட டைரக்டருக்கு எப்படி படம் எடுத்தாலும் மக்கள் அதை ரசிப்பாங்கன்னு நினைச்சிட்டாரு போல அதான் படம் ஊத்திகிச்சு . இப்படி தான் இருக்கு சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் . கொஞ்சம் விரிவா உள்ள பார்க்கலாம் வாங்க .
பழனிச்சாமியின் காதல் மற்றும் காமத்தின் நினைவு குறிப்புதான் இந்த நாவல் . இதை முழு நீள நாவல் என்று சொல்வதைவிட ஒரு குறுநாவல் மற்றும் சில சிறுகதைகள் என்று சொல்லலாம் .
பழனிச்சாமி பள்ளி கூடத்தில் படிப்பதில் இருந்து ஆரம்பிகிறது சந்தாமணியுடனான காதல் கதை . விரட்டி விரட்டி சாந்தமணியை காதலிக்கிறான் முதலில் பயந்து ஒதுங்கும் சாந்தா பிறகு அவன் பக்கம் சாய்கிறாள் . இருவரும் லவ்வோ லவ்வுன்னு லவ்வுறாங்க அடிகடி காதல் கடிதங்கள் பரிமாறி கொள்கிறார்கள் . இப்படி இருந்த அவர்களின் தெய்வீக காதல் ஒரு கட்டத்தில் புட்டுக்குது அது ஏன் எதானால் எப்படி என்று நீட்டி முழங்கி இருக்கும் கதையே சாந்தாமணியின் அத்தியாயம் . பழனிச்சாமியின் நண்பன் சக்தி , அவனுக்கு ஒரு காதலி பெயர் பூங்கொடி . இவர்கள் காதல் ட்ராக் ஒரு பக்கத்தில் சென்றுகொண்டு இருக்கிறது , ஒரு கட்டத்தில் பூங்கொடியின் தொல்லை தாங்காமல் சக்தி அவளிடம் இருந்து பிரிந்துவிடுகிறான் . கடைசியாக பூங்கொடியிடம் பேசும் வசங்கள் எல்லாம் நச்சு . ரொம்ப உண்மையான வார்த்தைகளா இருக்கிறது அதில் , எந்த ஒரு காதலியும் தனது காதலன் தன் சொல் கேட்டு நடக்கவேண்டும் என்றே நினைக்கிறார்கள் . அதற்காக எது வேண்டுமானாலும் செய்வதற்கு துணிந்து விடுகிறார்கள் , பலர் அவனை பயமுறுத்தியே காரியத்தை சாதித்து கொள்கிறார்கள் . இதை நச்சுன்னு எழுதி இருக்காரு , இந்த அத்தியாயத்தில் எனக்கு பிடிச்ச பகுதி சக்தி பூங்கொடி கிட்ட பேசுற இடம் தான் .
சாந்தாமணி தங்கை சுகந்தி .. இவ்வளவு அபத்தமான ஒரு கதாபாத்திரத்தை இது வரை பார்த்தது இல்லை . மச்சானுக்காக எதுவேண்டும் என்றாலும் செய்ய காத்துகொண்டு இருக்கிறாள் . மலை கோவிலுக்கு செல்லும் போது பழனிசாமியை தூக்க வைத்து அவள் செய்யும் அழிச்சாட்டியம் எல்லாம் புத்தகத்தில் தான் படிக்க முடியும் . ஸ்கூல் படிக்கும் பெண்ணிற்கு இவ்வளவு அறிவு கூடாது ஆசிரியரே , அந்த சம்பவத்தை படிக்க படிக்க சிரிப்புதான் . சுகந்தி கதாபாத்திரத்தை வைத்து காம விளையாட்டு ஆடியிருக்கிறார் வா . மு . கோமு .
இந்த முதல் அத்தியாயம் முற்றிலும் கோணல் என்றே சொல்லலாம் . பள்ளியில் படிக்கும் காலத்தில் நடந்த காதல் கதை என்று எழுதி இருந்தாலும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்ப மெச்சுரிட்டியாக இருக்கிறது . இதுவே போதும் புத்தகத்தின் தரத்தை குறைப்பதற்கு . அடுத்து காதல் கடிதங்கள் என்கிற பெயரில் இருக்கும் அறுவை பக்கங்கள் . சொன்னதயே திரும்ப திரும்ப சொல்வதை போல வார்த்தைகள் மட்டும் இடம் மாற்றி இருக்கிறது . கொடுமை சுகந்தி கூட பழனிச்சாமிக்கு கடிதம் தந்துவிடுகிறாள் . சாந்தாமணி காதல் கதை கல்லூரியில் நடப்பதை போல இருந்தாளாவது அவர்கள் பேசிக்கொள்வதை கொஞ்சம் நம்பலாம் . இதற்கு நடுவில் பழனிச்சாமிக்கு ஜான்சி மீது ஒரு கண் . அவளும் அதே போல தான் இருக்கிறாள் அதாவது இங்கே இருவரிடமும் தெய்வீக காதல் இல்லை இருப்பது காமம் மட்டுமே எப்போ டைம் கிடைக்கும் மேட்டர் பண்ணலாம் என்கிற நினைப்பிலே இருகிறார்கள் . பதின்மவயதில் ஏற்படும் காதல் எவ்வளவு அடிவாங்கும் என்று ரெண்டு பேர் பக்கத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் . சொன்னதையும் சொன்னார் கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்ல முதல் அத்தியாயம் நீண்டு கொண்டே செல்கிறது . அதும் அந்த காதல் கடித பக்கங்கள் எல்லாம் ஓவர் டோஸ் நடுவில் கவிதை வேறு .
இந்த குறைகளாலே பக்கங்களை அலுப்புடன் நகர்த்தவேண்டி இருக்கிறது . கதையை சாதாரண மொழி நடையில் எழுதி இருந்ததால் வந்த வினையோ என்று நினைக்கிறன் . இதுவே கொங்கு தமிழில் எழுதி இருந்தால் சுவாரசியம் கூடி இருக்கும் , கள்ளியின் கையாண்டு இருந்த கதைகளம் தான் இதிலும் கையாண்டு இருக்கிறார் அதே போல கொங்கு தமிழிலே கதையை நகர்த்தி கொண்டு சென்றிருந்தால் கண்டிப்பாக கள்ளி இரண்டாம் பாகம் என்று நினைக்கும் அளவுக்கு புத்தகம் வந்து இருக்கும் பச் அது இல்லாமல் கொஞ்சம் போலவே கொங்கு தமிழை பயன்படுத்தியது மிக பெரிய சறுக்கல் . கள்ளியில் கையாண்டு இருந்த அந்த நக்கல் நையாண்டி இதில் மொத்தமாக தொலைத்து போயிருக்கிறது .
அடுத்த அத்தியாயம் இன்ன பிற காதல் கதைகள்
இந்த பகுதியில் வருவது பழனிச்சாமி கரெக்ட் பண்ண பெண்கள் , பெண்மணிகள் , அவனை கரெக்ட் பண்ண பெண்கள் பெண்மணிகள் அப்பறம் அவன் நண்பர்கள் .
பழனிச்சாமி மோடா குடிகாரனாய் இருக்கிறான் எப்பொழுதும் தண்ணி போட்டு கொண்டே இருப்பதுதான் வேலை கூடவே பெண்களையும் !!!
கீதா , பெல்லா , சுமதி , ஷாலினி , மீனா , வால்பையன் என்று லிஸ்ட் நீண்டு கொண்டு செல்கிறது . பெண்கள் பெயரில் வரும் அத்தியாங்கள் எல்லாம் முதலிலே தெரிந்து விடுகிறது பழனிச்சாமி மேட்டர் பத்தி தான் இருக்கும் என்று , நமது எண்ணத்தை அவ்வாறே நிறைவேற்றி விடுகிறார் . செல்போனில் நடைபெறும் காம உரையாடல்கள் எல்லாம் கிளு கிளுப்பை தருகிறது . இரண்டு முன்று நபர்களிடம் இவ்வாறு போனில் கடலை போடும் விதம் எல்லாம் உண்மைகள் நடந்தவைகளே என்று நம்ப தகுந்த வட்டாரதில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன .
கீதா என்கிற பெண்ணிற்கு எழுதி இருக்கும் கடிதத்தில் தன்னை எப்படி எல்லாம் அவர் அலைகழித்தார் என்று சொல்லி இருக்கிறார் . இந்த பெண்ணை போல ஒரு சில பெண்களை நான் கோவையில் சந்தித்து இருக்கிறேன் . ஒரு நாள் ஒருத்தனுடன் உடலை ஒட்டி கொண்டு வருபவள் அடுத்த நாள் வேறு ஒருவனுடன் அதே போல வருவாள் . இப்படி ஆளை மாற்றி மாற்றி வரும் சில பெண்களை கரெக்ட் செய்வதற்கே சில அல்ல கைகள் அங்கு சுற்றி கொண்டு இருக்கும் . தூண்டில் போடாமலே மீனை பிடிகிறது எப்படி என்று அவர்களிடம் தான் கேட்கவேண்டும் . இரண்டொரு நாளில் அவனுடன் கிராஸ்ரோட்டில் இருவரும் கைகோர்த்து நடப்பதை பார்த்தால் தெய்வீக காதலர்கள் போல தெரிவார்கள் . என்னை பார்த்த உடனே ரெண்டும் பம்பிட்டு அப்படியே எஸ் ஆகிடும் .
வால்பையன் ஒரு அத்தியாயத்தில் வருகிறார் , இருவரும் போனிலே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஆபாச ஜோக் சொல்லி அடித்து விளையாடுகிறார்கள் . அந்த அத்தியாயம் முழுக்க ஜோக்குகள் சாரமாரியாக வந்து சிரிப்பலையை ஏற்படுத்துகிறது .
செல்போன் வைத்து என்ன விதை எல்லாம் காட்டலாம் என்று பல அத்தியாங்களில் சொல்லி இருக்கிறார் . மீனாகுட்டி ஆகட்டும் , பத்மப்ரியா ஆகட்டும் எல்லோரிடமும் கடலை போட்டுக்கொண்டே இருக்கிறார் . இரண்டாம் பாகத்தில் எல்லா பெண்களிடமும் இப்படியே பண்ணி கொண்டு இருப்பதை படிக்க படிக்க அயர்ச்சியாக இருக்கிறது . எவ்வளவு நேரம் தான் நாம விளக்கு புடிக்கிறது :(. இதை எல்லாம் தாண்டி வந்தால் கடைசில் இருக்கிறது மிக பெரிய ஆப்பு . இவ்வளவு கேப்மாரிதனத்தை பண்ணிவிட்டு புரசியாளன் கணக்காக ஜெயாவை கல்யாணம் பணிகொள்கிறது எல்லாம் தமிழ் சினிமாவில் கடைசில் சீன்ல போலீஸ் வருவதை போல இருக்கு .
சாரு புத்தகத்தை வெளியே எங்கு சென்று படித்தாலும் மடியில் வைத்தே படிக்க வேண்டி இருக்கும் . அதே போலதான் வா . மு . கோமு புத்தகங்களையும் . கொஞ்சம் ஏமாந்தாலும் பொதுவில் நமது மானம் கப்பல் ஏறிடுமோ என்கிற கவலைவருகிறது . அதற்காகவே இன் பண்ணி இருந்த சட்டையை வெளியே எடுத்து விட்டு படிக்கவேண்டி இருக்கு .
புத்தகத்தை பற்றிய எனது கருத்து மட்டுமே எழுதி இருக்கிறேன் . நீங்கள் புத்தகத்தை படித்து அதை ஆஹா ஓஹோ என்று பாராட்டினால் அதற்கு வா . மு . கோமு கம்பெனியே பொறுப்பு .
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா . மு . கோமு
உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியன் தெரு ,
அபிராமபுரம்
சென்னை -600018.
000
சாந்தாமணி – ஷாகிப்கிரான்
விரிவுபடுத்தி எழுதப்பட்ட புனைவு ஒன்றே நாவல் . அது பொதுவாக உரைநடை வடிவில் இருக்கும் . இதுவே நாவலுக்கான மிக எளிய வரையறையாக இருக்கிறது . இந்த குறைந்த அளவு வரையறைக்குஎந்த அளவு ஒரு எழுத்து உடன்பட்டிருக்கிறது . அப்படி அது ஒரு புனைவின் வழியாகத் தன்னை எப்படிநாவல் என்ற எல்லைக்குக் கொண்டு செல்கிறது முதலிய கவனங்கள் வா . மு . கோமுவின் நாவலைவிமர்சனத்திற்கு உட்படுத்தும்போது நம்முன் எழும் ஒருவகையான சவால்
கவிதையைப் போலல்லாமல் நாவலுக்கு மிகக் குறைந்த வரலாற்றையே நாம் கொண்டுள்ளோம் . பிரதாப முதலியார் சரிதம் தொடங்கி வா . மு . கோமுவின் சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகள் வரை ஒரு பயணத்தை அடைந்திருக்கின்றோம் . இந்தப் பயணம் எத்தகைய முடிவுகளைமுன்வைக்கிறது ? நாவலானது தனது வடிவம் , உத்தி , உள்ளடக்கம் , அழகியல் , இயல்புநிலை முதலியவற்றைத் தாண்டி எப்படி தன்னை ஒரு எழுத்துப் பிரதியிலிருந்து அல்லது ஒரு தகவல்அல்லது கருத்து நிலையிலிருந்து இலக்கியமாமாக்கிக் கொள்கிறது . அந்த புள்ளி எந்த நிலையை அத்தகைய ஒரு பிரதியில் செயல்படுத்துகிறது ? இதுதான் நாவல் தனது பாதையில் கொண்டிருக்கும்படிநிலை உயரமா என்று சந்தேகம் எழுகிறது . எத்தகைய கூறுகள் ஓர் எழுத்தை இலக்கியமாக்குகின்றன . அது இலக்கியத்தில் பேசப்படும் இசங்களால் நிர்ணயிக்கப்படுகின்றதா என்றகேள்வியும் தொடர்கிறது .
இசங்கள் ஒன்றை ஒன்று கடந்து ஒரு வகையான எளிய நிலைக்குத் திரும்பிவிட்டன . அல்லது எளிமையைத் தன்னுள் மிகைப்படுத்தி வருகின்றன . அத்தகைய ஒரு வடிவமாகச் செவ்வியல் தன்மையைச் சொலல்லாம் . செவ்வியல் தன்மையானது இயல்புணர்வின் நேரடியாகச் செயல்படும்ஒரு தன்மையைக் கொண்டிருப்பதால் என்றைக்குமான இலக்கிய ஒழுங்கை அது அடைகிறது . இந்தநாவலானது முதல் பாகத்தில் செவ்வியல் ஒழுங்குடைய ஒரு நாவலாகத் தொடங்கி இரண்டாம்பாகத்தில் செவ்வியல் ஒழுங்கை மிக எளிய வடிவில் பின்நவீனத் தன்மையை அடையாளப்படுத்தும் ஒருவகை உத்தியாக்க முயன்றிருக்கிறது . தீவிர உட்சிக்கல்களுக்கு உருக்கொடுத்தல் , முரண்பாட்டு இறுக்கம் , தெளிவின்மை , இந்த வகையில் இவை தங்களுடன் தொடர்புடைமை ஆகிய இவற்றை முன்னெப்போதும் கையாளாத சொல்லல் முறையில் தன்னைத்தானே எள்ளல் செய்வதை வெளிப்படுத்துவது என்பது ஒரு வகையில் பின்நவீனத்துவத்தைவரையறைப் படுத்துவதாகும் . இதில் இரண்டாம் பாகமானது தீவிர உட்சிக்கள்களுக்கோ , முரண்பாட்டு இறுக்கத்திற்கோ இடம் தருவதில்லை . ஆனால் , தெளிவின்மையும் அவை எவ்வளவுஎளிய வடிவைக் கொண்டிருந்தாலும் அவற்றிற்கான தொடர்பு குறித்த ஒரு அபத்தமும் தொடர்பற்ற தன்மையையும் கொண்டிருக்கின்றன . அதேபோல அந்தத் தொடர்பானது ஒரு வகை பாலியல்தன்மையிலான வெற்று காம செய்கைகளின் ஒரு கூட்டாக அமைவதும் அதன் இயங்கியல்தளமானது அதாவது அது நடப்பதாகக் காண்பிக்கப்படும் அல்லது சொல்லப்படும் சமூக வாழிடம்அது வெகு சாதாரணமாகப் பாவிக்கப்படும் ஒரு சிதைவுற்ற பண்பாட்டு மக்கள் வாழும் நிலப்பரப்பு . அது நகரியமும் அதனால் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே இருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தால் உருவாக்கும் தாக்கத்தையும் அதன் சிதைவுகளையும் தொகுப்பதன் மூலம் ஒரு தொடர்பின்மையில் தொடர்புடமையை உருவாக்கி , பின்நவீனத் தன்மையை சாயலாக்கமுயலுகிறது .
366 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை வாசகனால் ஒரே மூச்சில் மிக எளிதில் வாசித்துவிடமுடியும் என்றே நம்புகிறேன் . முதல்பாகம் சாந்தாமணி . இரண்டாம் பாகம் இன்னபிற காதல் கதைகள் .
முதல் பாகம் ஒரு கிராமத்துப் பள்ளியில் நடக்கும் மாணவப் பருவ காதலைப் பேசுகிறது . பழனிச்சாமிதான் அந்தக் காதல் கதையின் கதாநாயகன் . அவனது காதலிதான் சாந்தாமணி . பழனிச்சாமி பள்ளி மாணவர்த் தேர்த்லில் நின்று ஏழு ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனவன் . அவனது உயிர் நண்பன் சக்தி . இந்தக் காதல் கதையின் இடையில் வரும் கதாபாத்திரங்கள் பூங்கொடி , ஜான்ஸி , சுகந்தி இன்னும் சிலர் . பூங்கொடி சக்தியின் காதலி . வழக்கமான நாம் அன்றாடம்கேள்விப்படும் ஒரு காதல் கதையாக இருந்தாலும் வா . மு . கோமு தனது கை வண்ணத்தால்கதாபாத்திரங்களின் விருப்பங்களை மொழிகிறார் . அது நமது இயல்பு வாழ்வில் எத்தகையஅறமுமற்ற சில பிம்பங்களை நினைவுபடுத்துகிறது . என்றாலும் பள்ளியில் படிக்கும் அதாவதுபன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களான அவர்கள் தங்களது இயல்பில் சற்றே மிகைப்படவடிவமாகவே தெரிகின்றனர் .
இரண்டாம் பாகத்தில் தனித்தனி அத்தியாயங்களில் , வெவ்வேறு விதமான உரையாடல்களை , கடிதங்களை , கவிதைகளை , விவரிப்புகளை காதல் கதையாக்க மாற்ற முயன்றிருக்கிறார் . குறிப்பாகஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பெண் பெயரைக் கொண்டிருக்கிறது . இப்படி அமைக்கப்பட்டிருக்கும்இரண்டாம் பாகமானது முதல் பாகத்தில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் தன்னுள்கொண்டிருப்பதில்லை . அதாவது கதாநாயகன் பழனிச்சாமியைத் தவிர . அல்லது போர்ஹேகதைகளில் வருவதுபோல இந்த பழனிச்சாமி ஒரு கூட்டுமனத்தின் கால நீட்சியா என்றும் எண்ணவைக்கிறது . இரண்டாம் பாகம் கிட்ட்த்தட்ட உடலுறவு பற்றிய மிகப்பெரிய உரையாடலுடன்நீள்கிறது .
நாவலின் அட்டை குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகமானது , ‘ பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா . மு . கோமுவின் இந்தப் புதிய நாவல் . ஆபாசமென்றும் மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா . மு . கோமு . நம்முடைய ஆசாபாசங்களும் இரகசியங்களும் நம்மை எந்த அளவிற்கு இன்பமூட்டுமோ அந்த அளவிற்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது . எந்த அளவிற்கு அது நம்மை பயப்பட வைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது . நகரங்கள் , கிராமங்கள் , சமூக , பொருளாதார வித்யாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒரு பொதுப் பண்பாடு எவ்வாறு எல்ல இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது .’
முதல் பாகமானது மேலே சொல்லப்பட்ட்து போல பாலின்பத்தின் வேட்கைகளும்வெளிப்பாடுகளும்தான் என்றாலும் ஆசிரியர் காண்பிக்கும் பண்பாட்டு வெளியானது இயல்புநிலையிலிருந்து வெகு அந்நியப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது .
அதாவது அவர் சித்தரிக்கும் பள்ளியானது ஒரு கல்லூரிக்கு இணையாகக் காட்டப்படுகிறது . மாணவர்கள் தங்களது குடும்பம் , சூழல் , பள்ளியின் கட்டுப்பாடுகள் போன்ற எதையும்எதிர்கொள்வதாகவோ அல்லது அத்தகைய ஒன்று இருப்பதையோ நினைவுபடுத்துவதோ இல்லை . அல்லது அந்தக் கதையானது கதாசிரியனின் மன உலகில் நடக்கும் ஒரு புனைவைப் போல தோற்றம்கொள்கின்றது . கதாபாத்திரங்களின் மனநிலையானது ஒற்றைத் தன்மையுடன் ஒருஇனக்குழுவிலிருந்தோ அல்லது பொதுவான ஒரு மனித சமூகத்திலிருந்தோ தருவித்துக்கொள்ளாமல் இருப்பதால் அது கதாசரியனின் வக்கரமான மனநிலையைப் பிரதிபலிப்பதாவேஅமைவதாக நினைக்கத் தோன்றுகிறது ..
பள்ளி என்பது அரசு பள்ளியாக இருந்தாலும் தனியார் பள்ளியாக இருந்தாலும் அது மிகப் பெரியநிறுவனம் . அதன் கட்டமைப்புகள் மதிய உணவு வழங்குவது வரை தனக்கான அதிகாரங்களைக்கொண்டிருக்கும்போது அறிவியல் துறையில் படிக்கும் மாணவர்களால் எத்தகைய கட்டுப்பாடும்இல்லாமல் சுதந்தரமாக இயங்க முடிவதும் ஆசிரியரை மன்னிப்பு கேட்க வைப்பதும் , வகுப்பறைகளில் சல்லாபம் கொள்வதும் , எப்போதும் வகுப்புகளைப் புறக்கணித்துவெளியேருவதும் , பள்ளியிலேயே மது அருந்துவதும் கலவியின்பம் காண முயல்வதும்கட்டுப்பாடான பள்ளிகளில் படித்து ஒழுக்கமான குடும்பங்களில் வாழ்ந்த நமக்கு பெரியவியப்பாகவும் சாத்தியமற்ற ஒரு புனைவுமாகவே தெரிகின்றன .
ஆனால் நாவலில் காட்டப்படும் பாத்திரப் படைப்பானது ஒரு தேர்ந்த கதாசிரியரின் ஆளுமையைக்காட்டவே செய்கிறது . சாந்தாமணியின் காதலுக்காக உருகி நிற்கும் பழனிச்சாமி எந்த சிறுஉறுத்தலுமில்லாமல் ஜான்ஸியிடம் சல்லாபம் கொள்கிறான் . ஆனால் சாந்தாமணியைத் தொடவும்தயங்கும் அவன் அவளது தங்கையின் விருப்பப்படி அவளை சாந்தாமணி இருக்கும்போதேஅவளுக்குத் தெரியாத்தைப்போல சல்லாபிக்கிறான் . அதேபோல தனது காதலியான பூங்கொடியைசினிமா தியேட்டரிலேயே உறவுக்கு அழைக்கும் சக்தி அவனது வீட்டில் குடியிருக்கும் கலைவாணிஅவனை சல்லாபிக்க அனுமதிப்பதில்லை . சுகந்தி ( சாந்தாமணியின் தங்கை ) வேட்கையில் அலையும் ஒரு பிஞ்சில் பழுத்த பழம் , அந்தப் பிஞ்சைப் பழுக்க வைத்தது சக்திக்கு தியேட்டரில் இணங்க மறுத்த பூங்கொடி . அந்த பூங்கொடிதான் லெஸ்பியனாக சுகந்தியைப் பழக்கப்படுத்தியவள் . இத்தகைய மன அமைப்பானது நுணுக்கமாக மனித மனத்தின் மிகப் பிரமாண்டமான சிக்கல் முடிச்சிகளின் வெளிப்பாடுகள் . இவை இயல்பான மனோநிலைக்கு புரிபடாத ஒரு மனோதத்துவ ரகசியம் . ஆனால் இதை செம்மையாகக் கையாளத் தவறிய ஒரு நாவலாகத்தான் எண்ணத் தோன்றுகிறது .
அன்னா கரினா , மேடம் பொவாரி போல எத்தகைய வலுவான கதையமைப்பையோ , அதற்கானஇயங்குதளத்தையோ கொண்டிருப்பதில்லை . மாற்றாக மிக எளிய கதையானது மிக அதீத பாலியல்வேட்கையை , அல்லது அத்தகைய சிதைவுற்ற மனநிலைகளை எத்தகைய நிர்பந்தமுமற்றநாவலின் சூழலுக்குள் மிகைப்படித்திய வண்ணமே எந்த உணர்வொழுங்கும்தனதியல்பிலில்லாதபடிக்கு நிற்கிறது .
பாத்திரங்களின் மனோபாவமானது விடலைப் பருவத்தைப் பற்றியதாக இருந்தாலும்விவரிக்கப்படும் அந்த மனோபாவமானது அத்தகைய விடலைப் பருவத்தைக்கடந்தவர்களைப்போல தோற்றம் கொள்கிறது . அல்லது போதிய வலுவில்லாமல் அமைக்கப்பட்டதிரைக்கதைபோல ஆளுமைகள் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன . இது நாவலை இலக்கியமாகும்தன்மையற்ற ஒன்றாக மாற்றிவிடுகிறது . அத்தகைய ஒரு பழுதை உணர்ந்த கதாசிரியர் அதற்கானமாற்றாக பாலியல் வேட்கைகளை முன்னிருத்துவதாக எண்ணத் தோன்றுகிறது . தீவிர இலக்கியவாசகன் முதல் வாசிப்பிலேயே இதை உணர்ந்து கொள்வான் .
பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட நிலம்சார்ந்தபண்பாட்டுவெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்கான எந்தத் தடையமும் நாவலில்விவரிக்கப்படுவதே இல்லை . அல்லது அதற்கான வெளியில் நாவல் இயங்குவதே இல்லை என்றுகூறிவிடலாம் . ஏனென்றால் நாவலானது நாம் பேசிக்கொண்டிருக்கும் பண்பாட்டிற்கு வெளியில்அதற்கு எதிரான ஒரு கதியில் அதாவது புனைவைப் போன்ற ஒரு திரிசங்கு சொர்க நாவல்போலவோ , சரோஜா தேவி நாவலில் இயங்கும் சாத்தியமில்லாத ஒரு பிரதிமையைக்கொண்டியங்குவதால் அத்தகைய ஒரு பயன்பாடு அல்லது கூற்றானது சாத்தியமில்லாமலும்போய்விடுகிறது .
இரண்டாம் பாகமானது முதல் பாகத்தைப் போல ஒரு தொடர்ந்த கதையமைப்பில் இயங்காமல் , தனித்தனி பின்னங்களாக காட்டப்பட்டிருப்பது , அத்தகைய பிம்பங்களின் ஒட்டுமொத்த சாயலானதுமுதல் பாகத்தின் தீவிரத்தன்மையோடு ஒப்பு நோக்கப்பட்டு , அதற்கான ஒரு சுவடில் மீண்டும்மற்றொரு பயணத்தைத் தொடர்வதற்காக செய்யப்பட்டிருக்கிறது . இந்த உத்தியானது முழுவதுமாகவெற்றியடையாமல் போனதற்குக் காரணம் அது எத்தகைய வலுவுமில்லாத பாலியல்செயல்பாடுகளாக அல்லது அத்தகைய உரையாடல்களை வெற்று நீட்சிகளாகக் கொண்டிருப்பதே .
இதை இப்படியும் சொல்லலாம் . நடிகர் ராஜேஸும் வடிவுக்கரசியும் நடித்த படம் கன்னிப்பருவத்திலே . பாக்கியராஜ் வில்லனாக அதாவது anti – hero வாக வருவார் . படத்தில்படுக்கையறை காட்சியும் உடலுறவு காட்சியும் காட்டப்படும் . அதை சென்சார் செய்யவே முடியாதஅளவிற்கு கதைக்கான ஒரு வலுவாக , கதையை தீர்மானிக்கும் முக்கிய கூறாக வைத்திருப்பார்கள் . கதை இதுதான் . கதாநாயகன் ஒரு ஜல்லிக்கட்டு வீரன் . ஊர் பெண்களுக்கெல்லாம் அவன் ஒரு கனவு . கதாநாயகியைக் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறான் . பிரச்சனை வருவதேமுதலிரவில்தான் . உடலுறவு ஆரம்பிப்ப்தைக் காண்பிப்பார்கள் . ஆனால் தொடரமுடியாமல் அவன்தோற்றூப்போகிறான் . சரி . மற்றொரு நாள் பார்க்கல்லாம் என்றால் மீண்டும் தோல்விதான் . காரணம்ஜல்லிக்க்ட்டில் ஒருமுறை மாடு முட்டித் தள்ளிவிட அவனது ஆண்மை சீர்படுத்த முடியாதபடிகுறைபட்டுவிடுகிறது . மருத்துவர் சொல்வதை யாரிடமும் சொல்ல முடியாமல் சுகமும்கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும்போதுதான் கதாநாயகனின் தம்பிக்கு இந்த விஷயம்தெரியவர , நாயகியை மிரட்டுகிறான் . அவளது கணவணின் ஆண்மையற்ற தன்மையை ஊரில்எல்லோரிடமும் சொல்லிவிடுவேன் என்கிறான் . தனது ஆசைக்கு அவளை இணங்கச் சொல்கிறான் . கதை இவ்வாறு போகிறது . இங்கே அத்தகைய காட்சி வலுவை நாம் உணருகிறோம் . அப்படிப்படவலுவான எந்த அத்தியாயமும் இரண்டாம் பாகத்தில் இருப்பதாகக் காணமுடிவதில்லை .
முதல் பாகத்தின் முடிவில் பழனிச்சாமியும் சக்தியும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி . ‘ ரொம்ப தப்பு பண்றோம்டா . யாரோ பெத்து வளர்த்துன ஒரு பெண்ணை காதல்னு சொல்லிட்டு இழுத்துட்டுப் போய் முத்தம் குடுக்கறதும் , முலை கசக்கறதும் எனக்குப் பாவமாப்படுது . அதில்லாம எதிர்பார்ட்டிக்கு நம்ம மேல விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்காமலே , நம்ப ஆசைக்கு எல்லாமே நடந்தே ஆகணும்னு விருப்ப்ப்படறோம் . பாவம்டா . . . எல்லாமே பாவம் .’ இது சக்தியின் வார்த்தைகளாக இருக்கின்றன . ஆனால்பழனிச்சாமி இந்தக் கருத்தை ஆதரிப்பதுமில்லை . மறுப்பதுமில்லை . நாவல் உருவாக்கும்கட்டமைப்பிற்கு முற்றிலும் முரணான ஒரு விஷயமாக இருக்கிறது . இத்தகைய ஒருகருத்துநிலையை ஆசிரியர் தனது ஆபாச மனவிகாரங்களை சரிகட்டும் உத்தியாக்க்கமுயன்றிருக்கிறார் . இதே போலவே சக்தி மற்றொரு கதையைச் சொல்கிறான் . ‘ அண்ணன் செத்த உடனே தம்பி , அண்ணிக்காரிக்கு ரூட் விட்டுட்டே இருந்தானாம் . அட அண்ணின்னா அம்மா மாதிரிதான கிட்ட்த்தட்ட . டார்ச்சர் குடுத்து குடுத்து அண்ணிக்கு விருப்பமில்லாமயே வம்புல புடிச்சி மாட்டிக்கிட்டு இருந்திருக்கான் . இது அவன் சம்சாரத்திற்கும் தெரிந்தேதான் நடந்துட்டு இருந்திருக்கு . முன்னத்த நாள் சாயந்திரம் இப்படி பாம்பு கடிச்சு நுரை தள்ளிட்டு கெடக்கான்னு காட்டுக்கு ஓடி நாலஞ்சு பேரு தூக்கிக்கிட்டு வரவரவே உசுரு போயிடுச்சாம் . விரியன் பாம்புதான் கடிச்சிருக்கோணும்னு பேசிக்கிட்டாங்க . கொண்டு வந்தவங்க , பாடிய வாசல்ல வச்சிருக்காங்க . வாசல் படியில உட்கார்ந்திருந்த அண்ணிகாரி தப்புறு குப்புறுன்னு பொணத்துக்கிட்ட ஓடிப்போய் வேட்டியை அவுத்துட்டு விரையோட சேத்து அவன் குஞ்சுமணியை வாயில கடிச்சு வாசல்ல துப்பிபோட்டு போய் மறுபடியும் வாசப்படியில உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிடுச்சாம் .’ என்ன மாதிரியான மனதின் உணர்வதிர்வை ஆசிரியர் நிறுவவருகிறார் ?
நாவலில் விவரிக்கப்படும் உரையாடல்கள் இத்தகைய ஒரு பாலியல் தினவை வெகு சாதாரணமாகஎதிரானிடம் வெளிப்படுத்தும் அளவிற்கு நமது சமூகம் தயாராகிவிட்டதா என்பதே . உள்ளபடியேபார்க்கப்போனால் இத்தகைய நாவல் அதாவது தனது குறிகளை எந்நேரமும் திறப்பதற்குத் தயாராகஇருக்கும் பெண்களை கற்பிக்கும் கதாசிரியன்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .
இரண்டாம்பாகமான பழனிச்சாமி முதல்பாகத்தில் சாந்தாமணியால் காதலின்மேல் வெறுப்புற்றுவேட்கைகளை முன்மொழிபவனாகவே மாறிவிடுகிறான் . இது ஜான்ஸி அவனுக்குத் தந்த ஒருஅறம் . ஆனால் நாவலின் இறுதியில் பழனிச்சாமி தன் மனைவி ஜெயாவை அணைத்தபடி தனதுசெல்போன் காதலி மீனாவிற்கு குட்நைட் சொல்கிறான் . மீனாக்குட்டி இவனது செல்போன் துணை . ஒரு நண்பனின் தங்கை . அத்தகைய வேட்கைகளின் தினவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒருதுணை . இங்கே இரண்டாவது பாகத்தில் ஒருசில கடிதங்களை , கவிதைகளை வைத்திருந்தாலும்செல்பேசி உரையாடல்கள்தான் அதிக பக்கங்களைப் பிடித்திருக்கின்றன . அது மனிதவாழ்முறையானது தொலைத் தொடர்பு தகவல் பரிமாற்ற முன்னேற்றங்களால் எத்தகையசாதகங்களை , பாதகங்களைக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டி நிற்கவே செய்கின்றது .
மிக மிகச் சொற்பமான நாவல் தன்மைகளையும் மிக அதிக அளவில் பாலியல்இட்டுகட்டல்களையும் வெகு சாதாரணமான புனைவையும் கொண்டிருக்கும் இந்தப் பிரதியைவாசித்தவுடன் எழுந்த சில கேள்விகளே இத்தகைய ஒரு படைப்பிற்கான விமர்சனத்தை முடித்துவைக்கும் . அந்தக் கேள்விகள் . . .
பெண்கள் லெஸ்பினாக மாறுவதைக் காட்டும் அதே சமயம் , ஒரு ஹோமோவுக்கான எந்தத் தடையத்தையும் நாவல் கொண்டிருப்பதில்லை .
விருப்பங்களை மொழிவதை எடுத்துக் கொண்டால் , பெண்களின் விருப்பங்களாகக் காட்டப்படும் பாலியல் வேட்கைகள் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை ஒரு ஆணிய மனம் வரிந்துகொண்ட பெண் விருப்பங்களாகத்தான் தெரிகின்றன .
நாவலின் மையம் ஆணாதிக்கப் பரப்பிலிருந்து விரிவதாகவே இருக்கிறது . சாந்தாமணியை அவளது பிடிவாத குணத்துடன் மைய கதாநாயகனும் சரி , துணைக் கதாநாயகனும் சரி ஏற்றுக் கொள்ள மறுத்து காதலையே துறந்துவிடுகின்றனர் .
கதாபாத்திரங்கள் வாழ்க்கைத் தேவைகள் எதற்கும் முனைப்பில்லாத வெறும் பாலியல் முனைப்புடனே நிற்கின்றன . இது இலக்கியத் தரத்தில் நாவலை எங்கே கொண்டு செல்கிறது ? அல்லது இது எப்படி ஒரு நாவலாகிறது ?
சில சிறுகதைகளில் மிகச் சிறப்பாக , குறிப்பாக உலக இலக்கிய அளவில் பாலியல் விஷயங்களையும் , மனித மனதின் விசித்திர செயல்பாட்டையும் சாதாரணமாகச் சொல்லிச் சென்ற வா . மு . கோமுவின் சிறுகதைகளுக்கிடையே நாவலின் வடிவம் அல்லது புனைவு ஏன் வெற்றியடையவில்லை ?
பாலியல் விஷயங்களை வெறும் பாலியல் நடைமுறையாகப் பார்க்காமல் , அதன் பல்வேறுபட்ட சமூகக் சிக்கல்களாகவும் தனிமனித சிதைவுகளாகவும் ஏன் வெளிப்படுத்தக் கூடாது ? அதற்கான புனைவுகளும் உத்திகளும் நாவலில் எத்தகைய சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன ?
இத்தகைய தமிழ் நாவல்கள் உலக இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கும்போது அதன் கடைக்கோடி நிலையானது ஏன் மேம்படுவதில்லை ?
Ingmar Bergman – ன் Persona என்ற படத்தில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் தங்களது உடலுறவு அணுபவங்களை பேசிக்கொள்வதாக இருக்கும் . அந்தப் படத்தில் அது காட்சி வழியாக்க் காண்பிக்கப்படாமல் உரையாடல் வழியாக நிகழ்த்தப்படுவதால் அதன் வலுவானது sexual erection – க்குப் பதிலாக mental and social distortion – னாக பூடகமான ஒரு மன ஒழுங்கில் விளக்கப்படுகிறது . அத்தகைய சாத்தியங்களை ஏன் நம்மால் பயன்படுத்த முடிவதில்லை . அல்லது அதன் மீள் தன்மையானது நமது பொது புத்திநிலைக்கு தயாரான ஒன்றாக இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது .
எப்போது நாம் வணிக நோக்கமற்ற அல்லது அதுவே பிரதானமான ஒரு நிலையிலிருந்து வெளியேறி தீவிர இலக்கியத்தை மக்கள் முன் வைக்கப்போகிறோம் ?
இத்தகைய நாவலுக்கான தேவை என்ன என்று புரியவில்லை . ஜி . நாகராஜனையும் சத் ஹசன் மாண்டோவையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் ? அவர்களுக்கான இடம் எதுவாக நம்மிடையே இருக்கிறது ? அதாவது இந்த நாவலின் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்ற ஒரு செய்தியானது எதைக் காட்டுகிறது ?
பின்குறிப்பு : நல்ல படைப்பொன்றே ஆழமானதும் கவனிக்கத்தக்கதுமான ஒரு விமர்சனத்திற்கு இடம் தருவதாக இருக்கிறது .
000
000
12
சகுந்தலா வந்தாள் - நாவல்
சகுந்தலா வந்தாள் – நாவல்
நடுகல் பதிப்பக துவக்க விழாவிற்கும் , அதன் புத்தக வெளியீட்டுக்கும் செல்வோம் என்பதை இறுதிவரை முடிவு செய்யவில்லை . நண்பன் Rasu Rasu செல்வதை அறிந்து , நானும் அண்ணன் Seema Senthil அவர்களும் கிளம்பிச் சென்றோம் .
விழா நல்லபடியாக நடந்து முடிந்ததும் . புத்தகங்களை வாங்கிக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினோம் . ஈரோட்டிலிருந்து , கோவைக்குச் சரியாக இரண்டு மணிநேர பேருந்துப் பயணம் . புத்தகங்கள் இருப்பதால் இரண்டுமணிநேரம் பயணக் களைப்பு தெரியாது என்பதால் முதலில் நான் திரு வா . மு . கோமு அவர்களின் சகுந்தலா வந்தாள் , புத்தகத்தைக் கையில் எடுத்தேன் .
பேருந்து பெருமாநல்லூர் தாண்டி வந்துகொண்டிருந்தபொழுது புத்தகத்தின் முன்னுரை தாண்டி முதல் அத்தியாயத்திற்குள் நுழைந்தேன் . சரியாக 29 வது பக்கம்வரைதான் என்னால் படிக்க முடிந்தது . சற்று இறுக்கமான காற்சட்டை அணிந்து இருந்தேன் , அதனால் மடியில் வைத்து புத்தகம் படிக்க முடிய வில்லை என்பதே பொருத்தமாக இருக்கும் . நிலைமையைச் சரிசெய்து கொண்டு வீட்டிற்குச் சென்றே படித்துக் கொள்ளலாம் என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன் .( இரட்டை அர்த்தமாய் இதை எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல )
நேற்றைய தினமே புத்தகம் பற்றிய பதிவு போடலாமா ? வேண்டாமா ? என்ற எண்ண ஊசலாட்டத்தின் மத்தியில் , இப்பொழுது ஒருமனதாகவே பதிவு செய்துவிட்டேன் .
நான்கு அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் உங்களைப் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி . அதே பரவச நிலையோடே விபச்சாரத்தில் தன் தாயால் தள்ளப்பட்ட கல்பனாவுக்கும் , அவளைக் காதலிக்கும் ஜானுக்கும் இடையிலான ஊடல் , கூடல்களை அவர் பாணியிலேயே அடித்து நொறுக்குகிறார் .
இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகமாகும் கமலக் கண்ணனைக் கட்டாயம் உங்களுக்குப் பிடித்துப் போகும் . அதுபோலவே மூன்றாம் அத்தியாயத்தில்தான் சகுந்தலா வருகிறாள் . இரண்டாம் அத்தியாயத்தில் க . கண்ணனை அவன் மனதிற்குள் சகுந்தலாவை எண்ணிப் புலம்பவிட்டு , மூன்றாம் அத்தியாயத்தில் சகுந்தலாவை அட்டகாசமாக அறிமுகப்படுத்தி , நம் வாழ்க்கையில் எங்கேனும் ஏதேனும் சந்தித்திருந்த பாத்திரத்திற்கு சகுந்தலா எனப் பெயர்சூட்டி மனதில் நுழையவைக்கிறார் .
‘ நாணயஸ்தனுக்கு ‘ மொழிபெயர்ப்பு தொறந்தவாயன் என்பதிலிருந்து , கணவன் மனைவிக்கு இடையே கூடல் அரங்கேற கணவன் நடத்தும் பிரம்மப்பிரயத்தனம் உற்பட அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறார் . க . கண்ணனை மனதிற்குள் இருந்து பேச வைத்ததிலிருந்து , எழுத்தாளர் ஒரு மனிதன் மனதிற்குள் எந்த அளவுக்கு ஊடுருவ முடியுமோ அந்தளவுக்கு உள்சென்று வார்த்தைகளைக் கொண்டு வந்து சம்பவப்படுத்தி இருக்கிறார் என்பதை அறியமுடியும் .
இந்நாவலில் காட்டப்பட்டிருப்பது ஒரு சகுந்தலாவின் வாழ்க்கை மட்டுமே என்று கி . ச . திலீபன் அவர்கள் கூறியதைப் புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளனர் . ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ஓராயிரம் கமலக்கண்ணன்களின் புலம்பல்களும் காட்டப்பட்டிருக்கிறது .
முன்னுரையிலயே இது பைசாவிற்காக எழுதப்பட்ட நாவல் என்று எழுத்தாளர் சொல்லி விடுவதால் சிற்சில விசயங்களை சமரசம் செய்துகொண்டாக வேண்டியுள்ளது . இருப்பினும் சமூகத்தின் குரூரத்தை எழுத்தாகப் பதிவு செய்த திரு வா . மு . கோமு அவர்களின் தைரியத்தைப் பாராட்டியாகவே வேண்டும் .
நன்றி .
சகுந்தலா வந்தாள் – வா . மு . கோமு
படைப்பாக்கம் : சீனு
பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில் , சமூகம் உங்களை எந்த அடுக்கில் வைத்து அழகு பார்க்கிறது என்பதைப் பொறுத்தே ஒரு புத்தகம் உங்களினுள் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஏற்படுத்தாமல் போவதற்குமான சாத்தியங்களைக் கொண்டுள்ளன . நீங்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால் ஒரு மத்திய குடும்ப சூழலை , நீங்கள் தினசரி அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நாவல் உங்களினுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உறுதியில்லை அதற்கான அவசியமும் இல்லை . இதுவே இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு உலகத்தை அதில் நடமாடும் மக்களைப் பற்றிய வாழ்வியலை அந்த எழுத்தாளர் அறிமுகப்படுத்துகிறார் என்றால் அதனால் ஏற்படும் தாக்கம் வேறுவிதமாய் இருக்கும் . கிட்டத்தட்ட இந்த சகுந்தலா வந்தாள் கூட அப்படியான ஒரு நாவல் தான் .
கல்பனா என்னும் சிறுமி தன் இரண்டாவது அப்பாவால் சீரழிக்கப்பட அவளை விபச்சார விடுதியில் கொண்டு சேர்க்கிறாள் ஏற்கனவே பாலியல் தொழிலாளியாக இருக்கும் அவள் அம்மா . பருவம் அடைந்த சில நாட்களிலேயே விபச்சார விடுதில் சேர்க்கப்படும் கல்பனா , அங்கே தன் நாட்கள் எப்படி நகருகிறது , என்ன மாதிரியான மனிதர்களைச் சந்திக்கிறாள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதில் இருந்து வளர்கிறது கதை . கதையில் மொத்தமும் நான்கே நான்கு மையக் கதாப்பாத்திரங்கள்தான் . கல்பனா , ஜானி , சகுந்தலா பின் கமலக்கண்ணன் . இதில் கிட்டத்தட்ட கதாநாயக அந்தஸ்து கொண்ட நபர் திருவாளார் கமலக்கண்ணன் .
கல்பனா பாலியல் தொழிலாளியாவதற்கு முன்பே அவளுக்கு ஜானி என்றொரு காதலன் இருந்துள்ளான் , தன்னை ஒருதலையாய்க் காதலித்தவன்தான் என்றபோதிலும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தான் வசிக்கக்கூடிய விபச்சார விடுதியில் வைத்தே ஜானியை சந்தித்து விடுகிறாள் கல்பனா . தான் உருகி உருகி காதலித்த பெண் , பாலியல் தொழிலாளியாக இருக்கிறாள் என்பதை ஏற்றுகொள்ள முடியாமல் தவிக்கிறான் ஜானி . அவளுக்காக காத்திருந்த நாட்களையும் காதலித்த நாட்களையும் அவளிடம் கூறி தன்னோடு வந்து மணமுடித்துக் கொள்ளும்படி கேட்கிறான் . இவளோ தான் ஒரு பாலியல் தொழிலாளியாகவே மாறிவிட்டதாகவும் தனக்கு குடும்பம் நடத்தத் தெரியாது என்றும் கூறுகிறாள் . அதாவது இத்தனை நாட்களில் அவள் இருக்கும் நான்கு சுவற்றைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதையே அவள் அறிந்திருக்கவில்லை . அல்லது அதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை . கல்பனாவின் பார்வையில் அவள் கூறுவது மிகச்சரியே , இருந்தும் அதனை ஜானியால் ஏற்றுகொள்ள முடியவில்லை .
இந்தக் காதல் தோல்வியில் இருந்து மீள ஜானுக்கு உடனே வேறொரு பெண் தேவையை இருக்கிறாள் . இந்நேரத்தில் தற்செயலாக ஜெராக்ஸ் கடையில் பார்க்கும் ஒரு பெண்ணின் மீது மையல் கொள்கிறான் . அந்தப் பெண்தான் சகுந்தலா . இவர்களுக்கு இடையேயான காதல் என்பது இதுநாள் வரை நா ( ம் ) ன் அறிந்திராத கொச்சை மொழியில் எழுதப்பட்ட காதல் . ஜான் எடுத்த உடனேயே அவளிடம் கொச்சை மொழியில் பேசத்தொடங்குகிறான் , மெல்ல சகுந்தலாவும் அதை விரும்பத் தொடங்குகிறாள் . மொபைல் போன் மூலம் மெல்ல வளருகிறது இவர்கள் காதல் . ஒரு கட்டத்தில் தனது பிறந்தநாள் பரிசாக தன்னையே ஜானுக்கு அளிக்கிறாள் சகுந்தலா .. ஜானிக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காதலையும் ஊடலையும் காமத்தையும் கொங்கு மொழியில் ரசிக்கும்படி எழுதியுள்ளார் வாமுகோமு .
இனி கமலக்கண்ணன் . இவர் தன்னுடைய புலம்பல்களின் ஊடாகவே நம்மிடம் அறிமுகமாகிறார் . முதலில் அவர் என்ன பேசுகிறார் ஏன் இப்படி பிணாத்துகிறார் என்பது புரியாவிட்டாலும் மெல்ல ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ அனைத்தும் புரியத் தொடங்குகிறது . தற்சமயம் கமலக்கண்ணன் ஒரு நல்ல முதலாளியிடம் நல்லா விசுவாசியாக இருந்து வேலையை இழந்தவர் . மனைவி தன்னுடன் சண்டையிட்டு இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அப்பன் வீட்டுக்குப் போய்விட்ட மன வருத்தத்தில் இருப்பவர் . போதாக்குறைக்கு சகுந்தலா என்னும் தன்னுடைய அத்தைப் பெண்ணின் மூலம் வந்த தேவையில்லாத பிரச்சனைகள் .
அல்லது சகுந்தலா எப்போது கமலக்கண்ணனின் வாழ்க்கைக்குள் குறுக்கிட்டாளோ அப்போதிருந்தே பிரச்சனைக்குள் தள்ளப்படுகிறான் கமலக்கண்ணன் . சகுந்தாலவிற்கு ஒரு கறுப்புப் பக்கம் இருக்கிறது , அதில் இருந்து அவளை மீட்பதற்காக உதவி செய்கிறார் கமலக்கண்ணன் , சகுந்தலாவிற்கு உதவக் கூடாது என்று அவன் மனைவியும் அம்மாவும் எவ்வளவோ மறுத்தும் கூட கேட்காமல் சகுந்தலா என்னும் அந்த குழிக்குள் போய் விழுகிறான் கமலக்கண்ணன் . இங்கே கமலக்கண்ணனுக்கும் அவன் மனைவிக்கும் , கமலக்கண்ணனுக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காட்சி நகர்வுகளை அற்புதமாக நகர்த்தியிருப்பார் வாமுகோமு . கமலக்கண்ணனின் மனைவி கணவனை தன்னுள் வைத்து ஆள நினைக்கும் ஒரு பெண் , சாதாரணமாகத் திட்டுவது என்றாள் கூட பச்சை பச்சையாகத்தான் திட்டுகிறாள் .
ஆனால் சகுந்தலாவோ சரியான காரியக்காரி . தன்னுடைய அந்த நிமிட உல்லாசத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவள் . கற்பிலிருந்து கருவறை வரை அனைத்தையும் விற்கத் துணிந்தவள் . இவர்கள் இடையேயும் மாட்டிக் கொண்டு கமலக்கண்ணன் புலம்புவதைப் பார்க்க நமக்கே பாவமாய் இருக்கும் . சில சமயம் சகுந்தலா மீது கோபம் வருவதற்குப் பதிலாக கமலக்கண்ணன் மீது கோவம் வருகிறது . தன் இயலாமையால் தன்னைத்தானே நொந்து கொள்பவனை யாருக்குத்தான் பிடிக்கும் . ஆனால் இது ஒன்றும் எதார்த்தத்தை மீறிய நிகழ்வு இல்லையே . நிகழ்வாழ்வில் உங்களுக்குத் தெரிந்தவராகவோ அல்லது உங்களில் ஒருவராகவோ கூட அந்தக் கமலக்கண்ணன் உலவக்கூடும் . மொத்தத்தில் ‘ சகுந்தலா வந்தாள் ‘ வாழ்வில் ஏதோ ஒர் இடத்தில் நாம் சந்திக்கக் கூடிய நான்கு மனிதர்களின் மிக அருகில் சென்று அவர்களுக்குள் இருக்கும் அந்தரங்கத்தைப் படம் பிடித்துக் காட்டி இன்னார் இப்படித்தான் இருப்பார்கள் என்பதோடு முடிகிறது .
வாமுகோமு எழுதியவற்றில் நான் படிக்கும் முதல் நாவல் இதுதான் . கொங்கு மொழியில் எழுதப்பட்ட நாவல் என்பதால் சில இடங்களில் சில வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை , சிலவற்றை வாக்கியத்தின் கட்டமைப்பின் மூலம் இதுவாக இருக்குமோ என்று அவதானிக்க வேண்டியிருக்கிறது . மேலும் கமலக்கண்ணன் புலம்பும் மிக சில இடங்களைத் தவிர்த்து நாவல் மொத்தத்தையும் அலுப்பு தட்டாமல் நகர்த்தியிருக்கிறார் வாமுகோமு .
சிறிய எச்சரிக்கை . ஒருவேளை நீங்கள் பாலியல் சம்மந்தமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு புத்தகம் படிப்பதை உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் விரும்பாது போனாலோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் படிப்பதை நீங்கள் விரும்பாது போனாலோ அதற்கான முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் சகுந்தலாவை வரவழைக்கவும் , ஏனெனில் இவளும் இவளோடு பழகுபவர்களும் கொஞ்சம் மோசமானவர்கள் .
பாலியல் சார்ந்த வார்த்தைகள் சம்பவங்கள் அனைத்தும் அப்படிக்கு அப்படியே எழுதப்பட்டுள்ளதால் உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும் என்று தெரியவில்லை . ஒருவேளை வாசிக்கத் தொடங்கினீர்கள் என்றால் புத்தகம் முழுவதையும் முழுமூச்சில் வாசித்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் , காரணத்தை விளக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறன் . வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம் .
ஒன்று முழுக்க முழுக்க காமரசம் சொட்டும் ஓரளவிற்கு ஆபாச வார்த்தைகள் குறைந்த சில பாலியல் சம்பவங்கள் அடங்கிய புத்தகம் . இரண்டாவது உளவியல் ரீதியாக பாதிகப்பட்ட ஒருவன் அல்லது எதையுமே எதிர்த்துக் கேட்கத் துணிவில்லாத நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளகூடிய ஒருவனின் மன ஓட்டங்களின் உளவியல் சார்ந்த புத்தகமாகவும் இதனைக் கொள்ளலாம் . இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாக உருவெடுத்திருப்பது தான் சகுந்தலா வந்தாள் . இதில் எந்தப் பகுதியை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளபோகிறீர்கள் என்பது உங்களுக்கு விடப்பட்ட சவால் . ஆனால் கதை முடியும் போது நிச்சயமாய் இரண்டின் தாக்கமும் உங்களிடம் இருக்கும் என்பதே சகுந்தலா வந்தாளின் வெற்றி . மணவாழ்க்கையில் நுழைந்தவர்கள் நுழைய இருப்பவர்கள் என்று இரு தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகம் .
13
ஆசிரிய பற்றி:
வா . மு . கோமு தன்னுடைய வித்தியாசமான , துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர் . திருப்பூரைச் சேர்ந்தவர் , பெரும்பாலும் தான் கையாளும் படைப்புகளில் கொங்கு மொழியைப் பிராதனமாகக் கொண்டு எழுதி வருகிறார் . கலாச்சாரரீதியான மனத் தடைகளை , மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது . எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்குகின்றன .
கருத்துகள்
கருத்துரையிடுக