Veḷḷikkiḻamai viratak katai
சிறுகதைகள்
Backவெள்ளிக்கிழமை விரதக் கதை
தொகுப்பாசிரியர்
மீ. பழனியப்பன்
பதிப்புரை
காலம் காலமாக எங்கள் குடும்பத்தில் பழக்கத்தில் இருந்து வரும் வெள்ளிக்கிழமை விரத முறைகள் குறித்தும், அதனோடு சொல்லப்பட்டு வரும் கதையையும், எல்லோரும் அறிந்து பயன் பெறும் வகையில் எனது முதல் மின்னூலாக, எனது தாய்மொழியாம் தமிழில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இதனை ஒரு புத்தகமாக வெளியிட அறிவுருத்தியும், விரத முறைகளை விளக்கிச் சொல்லியும், பிழை திருத்த உதவியாக இருந்த எனது மனைவி திருமதி செளந்தரம், மற்றும் இந்த மின்னூலை வெளியிட தூண்டுகோலாய் இருந்த, www.freetamilebooks.com குழுவைச் சேர்ந்த, திரு சீனிவாசன், திரு சிவலிங்கம், திரு லெனின் குருசாமி ஆகியோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மிகக் குறுகிய நாட்களில், இந்த மின்னூலுக்கு ISBN எண் கிடைக்க வழிவகை செய்து, என்னைப் போன்ற தொடக்க நிலை புத்தக வெளியீட்டாளர்களை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.
இந்த மின்னூலைப் படித்து பயன் பெறுங்கள்! தங்கள் மேலான கருத்துக்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு (pal@cmsys.sg) அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
தொகுப்பாசிரியர்
மீ. பழனியப்பன்
பொருளடக்கம்
நூல் குறிப்பு
பதிப்புரை
பொருளடக்கம்
சமர்ப்பணம்
வெள்ளிக்கிழமை விரத முறை
வெள்ளிக்கிழமை விரதக் கதை
அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்
சமர்ப்பணம்
என் தந்தையின் திருவடிகளில்
எனது முதல் மின்னூலை
சமர்பிக்கின்றேன் !
தொகுப்பாசிரியர்
மீ. பழனியப்பன்
உ
சிவமயம்
வெள்ளிக்கிழமை விரத முறை
வெள்ளிக்கிழமை தலை குளித்துவிட்டு, விளக்கு முன் இந்த கதையை பக்தியுடன் சொல்லிவிட்டு ஒரு சுமங்கலிக்கு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம், பூ கொடுக்கவும். எல்லாம் வல்ல மகாலெட்சுமியின் அருளால், ஸகல செளபாக்கியமும் உண்டாகும் என்பதில் ஐய்யமில்லை.
இந்த விரதத்தை, தை மாதத்தில், ஸப்தமி தினத்தில் அல்லது அம்மாவாசைக்கு அடுத்து வரும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில், நல்ல நாளாகப் பார்த்து ஆரம்பிக்கலாம். தொடர்ந்து, 16 வெள்ளிக்கிழமை வழிபட வேண்டும். இடையே சில வாரங்கள், தவிர்க்க முடியாத காரணங்களால், வழிபட இயலவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆரம்பித்ததில் இருந்து, மொத்தம் 16 வாரம் வழிபாடு செய்ய வேண்டும்.
காலையில் நீராடி, பால் அல்லது காபி தவிற வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. சாமி கும்பிட்ட பின்னர் தான் சாப்பிட வேண்டும். கதையைக் கேட்கும் சுமங்கலியும் பட்டினியாக இருக்க வேண்டும். கதை கேட்க யாரும் இல்லையெனில், ஏற்றி வைத்துள்ள விளக்கிடம் கதையைக் கூறலாம்.
முதலில் உங்கள் பூஜை அறையில் அல்லது எங்கு வழிபாடு நடத்தப் போகின்றீர்களோ, அந்த இடத்தில், பச்சரிசி மாக்கோலம் போடவும். அந்த கோலத்தின் மேல், வெங்கலத் தட்டில் அல்லது ஒரு தாம்பாளத்தில், 1 உழக்கு பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். அரிசியின் மேல், 5 மூக்கு விளக்கை கிழக்கு நோக்கி வைத்து, 5 திரி போட்டு ஏற்ற வேண்டும். விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், சிறிய அகல் விளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும். விளக்கின் சுடரில் இருந்து ஊதுபத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. அதற்கு தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும். விளக்கிற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும். கதை படிக்கும் முன்னர் விளக்கின் முன் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம், பூ எல்லாம் ஒரு தாம்பாளத்தில் வைக்க வேண்டும். ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி வைத்து, பூ போட்டு, விளக்கு நாச்சியாரை வணங்கி, விளக்கு பாட்டு, கணேசர் பாட்டு, முருகன் பாட்டு, அம்மன் பாட்டு எல்லாம் பாடி, உச்சி நேரம் வரும் பொழுது, 11 மணிக்கு கதையைப் படிக்க ஆரம்பித்தால், 12 மணி வந்து விடும்.
வெள்ளிக்கிழமை விரதக் கதையைப் படித்து முடித்தவுடன், சூடம் ஏற்றி, வழிபட வேண்டும். பின்னர் விளக்கைச் சுற்றி 16 தடவை பிரதட்சனம் செய்து, சுமங்கலிக்கு ஒரு தட்டில் வைத்து, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம், பூ கொடுக்க வேண்டும். கன்னிப் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் சர்க்கரை அல்லது கல்கண்டு மற்றும் கிஸ்மிஸ் பழம் மட்டும் கொடுக்க வேண்டும்.
விளக்கு வைக்க உபயோகித்த அரிசியை ஒரு டப்பாவில் கொட்டி வைத்து, வண்டு வராமல் இருக்க, உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். 16 வாரம் இதை மீண்டும் மீண்டும் உபயோகித்த பின்னர், சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் செய்து சாப்பிடவும்.
வெள்ளிக்கிழமை விரதக் கதை
பாலா தேவி நமஸ்காரம்
லலிதா தேவி நமஸ்காரம்
லெட்சுமி தேவி நமஸ்காரம்
பார்வதி தேவி நமஸ்காரம்
சரஸ்வதி தேவி நமஸ்காரம்
சாயா தேவி நமஸ்காரம்
ஸர்வாப்யோ தேவதாப்யோ
நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
நாகூர் நாகபட்டணம் என்னும் ஊரில், நாராயண அய்யர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு நாலு வேதம், ஆறு சாஸ்த்ரம், அறுபத்து நான்கு கலை ஞானம், தேவி பூஜை, சிவ பூஜை, அக்னி ஹோத்திரம், வைசுவதேவம் எல்லாம் உண்டு. அவர் 64 கலை ஞானத்தையும் ஆராய்ந்து பார்த்து, அன்று செய்த பாவத்தை அன்றே போக்கிக் காலம் நடத்தி வந்தார். அவர் மிகவும் பரம ஏழை. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. அந்த குழந்தைகளுக்கு, அல்லசலில் துணி வாங்கிப் போட்டு, எண்ணெய் வாங்கித் தேய்த்து வளர்த்து வந்தார். அந்த குழந்தைகள் பெரிதாகி விட்டன. அவருடைய பத்தினியாகப்பட்டவள் அவரைப் பார்த்து, நம்முடைய குழந்தைகள் பெரிதாகி விட்டனவே? அவர்களை கன்னிகா தானம் செய்து கொடுக்க வேண்டாமா? என்று வருத்தப்பட்டாள். அவர் சரி என்று சொல்லிவிட்டு, அன்று போக மறுநாள் அந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு, பெரியவூர் பெரியபட்டணம் என்னும் ஒரு ஊருக்குப் போனார். அந்த ஊரில், பெரிய ஸோமயாஜியார் என்று ஒரு அந்தணர் இருந்தார். அவருக்கும் நாலு வேதம், ஆறு சாஸ்திரம் அறுபத்து நான்கு கலை ஞானம், தேவி பூஜை, சிவ பூஜை, அக்னி ஹோத்திரம், வைசுவதேவம் எல்லாம் உண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு, உச்சி உருகும் வேளையில், வாசலில் வந்து, உச்சியை அண்ணார்ந்து பார்த்து, கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே, நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து, “இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதி உண்டா, பரதேசி உண்டா, யார் இருந்தாலும் போஜனத்திற்கு வாருங்கள்” என்று சொல்லிக் கூப்பிட்டார். அது கேட்ட நாராயண அய்யர், “இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான் தான்” என்று சொன்னார்.
“நீரே ஆனால் வாரும்” என்று சொல்லி, உள்ளே அழைத்து கொண்டு போய், கால் அலம்ப ஜலம் கொடுத்து, அர்க்கிய பாத்தியம் கொடுத்து, தலை வாழை இலை போட்டு, தாமிர பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து, பசும் பால் பாயாசம் வைத்து, பசும் தயிர் பச்சடி வைத்து, பசும் நெய்யில் 18 பட்சணங்கள் செய்து, பாலிட்டு, பழமிட்டு, தேன் எல்லாம் விட்டு, “ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன், இருந்து சாப்பிடுங்கள்” என்று சொல்லி விட்டு, திருப்தியாய் போஜனம் அளித்து, கை அலம்ப ஜலம் கொடுத்து, தாம்பூலம், தட்சணை கொடுத்து, “தாங்கள் எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு இவர், “எனக்கு நாகூர் நாகபட்டணம், என் பெயர் நாராயணய்யர், நான் மிகவும் பரம ஏழை, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், அந்த குழந்தைகளுக்கு கன்னிகாதானம் செய்யும் காரணமாய் கிளம்பி வந்து இருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு அந்த பிராமணர், “எங்கள் மூத்த குமாரனுக்கு உங்கள் மூத்த குமாரத்தியைக் கன்னிகாதானம் செய்து கொடுங்கள்” என்றார். அதற்கு இவர், “சரி” என்று சொல்லிவிட்டு, அன்று போக மறுநாள், மூத்த பெண்ணுக்கு மங்கள ஸ்நானம் செய்து, பட்டாடையுடுத்தி, துளசியும் தீர்த்தமும் விட்டு, “ஓம் தத்ஸத் ப்ரம்மார்ப்பண மஸ்து” என்று சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுத்தார். இந்த கன்னிகாதானம் செய்த புண்ணிய பலத்தால், 18 தலைமுறை பித்ருக்கள் கரையேறினார்கள்.
அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு, சிறிய பெண்ணோடு, சிறியவூர் சிறியபட்டிணம் என்னும் ஊருக்குப் போனார். அந்த ஊரில், சிறிய ஸோமயாஜியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்கும் நாலு வேதம், ஆறு சாஸ்திரம் அறுபத்து நான்கு கலை ஞானம், தேவி பூஜை, சிவ பூஜை, அக்னி ஹோத்திரம், வைசுவதேவம் எல்லாம் உண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு, உச்சி உருகும் வேளையில், வாசலில் வந்து, உச்சியை அண்ணாந்து பார்த்து, கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே, நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து, “இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதி உண்டா, பரதேசி உண்டா, யார் இருந்தாலும் போஜனத்திற்கு வாருங்கள்” என்று கூப்பிட்டார். அது கேட்ட நாராயணய்யர், “இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான் தான்” என்று சொன்னார்.
“நீரே ஆனால் வாரும்” என்று சொல்லி, உள்ளே அழைத்து கொண்டு போய், கால் அலம்ப ஜலம் கொடுத்து, அர்க்கிய பாத்தியம் கொடுத்து, தலை வாழை இலை போட்டு, தாமிர பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து, பசும் பால் பாயாசம் வைத்து, பசும் தயிர் பச்சடி வைத்து, பசும் நெய்யில் 18 பட்சணங்கள் செய்து, பாலிட்டு, பழமிட்டு, தேன் எல்லாம் விட்டு, “ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன், இருந்து சாப்பிடுங்கள்” என்று சொல்லி விட்டு, திருப்தியாய் போஜனம் அளித்து, கை அலம்ப ஜலம் கொடுத்து, தாம்பூலம், தட்சணை கொடுத்து, “தாங்கள் எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு இவர், “எனக்கு நாகூர் நாகபட்டணம், என் பெயர் நாராயணய்யர், நான் மிகவும் பரம ஏழை, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், அந்த குழந்தைகளுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டிய காரணமாய் பெரியவூர் பெரியபட்டணம் போனேன். அந்த ஊரில், பெரிய ஸோமயாஜியாரின் மூத்த குமாரனுக்கு, என் மூத்த குமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுத்தேன். இளைய குமாரத்தியோடு இங்கே வந்து இருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு அவர், “அப்படியானால், எங்கள் இளைய குமாரனுக்கு உங்கள் இளைய குமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள்” என்றார். அதற்கு இவர், “சரி” என்று சொல்லிவிட்டு, அன்று போக மறுநாள், அந்த குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்து, பட்டாடையுடுத்தி, துளசியும் தீர்த்தமும் விட்டு, “ஓம் தத்ஸத் ப்ரம்மார்ப்பணமஸ்து” என்று சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுத்தார். இரண்டாவது கன்னிகாதானம் செய்து கொடுத்த புண்ணிய பலத்தால், 21 தலைமுறை பித்ருக்கள் கரையேறினார்கள். பிறகு அவர் அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு, அவர் திரும்பி ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.
இது இங்கே இப்படி இருக்க, கைலாசத்தில், பரமசிவனிடத்தில், லெட்சுமி, சரஸ்வதி, பார்வதி மூவரும் போய், நமஸ்காரம் செய்து, “ஸ்வாமி, ஸ்திரீகளை கேவலமாகச் சொல்கிறார்களே, ஸ்திரீகளுக்கு மோட்சார்த்தம் என்றால் என்ன? காம்யார்த்தம் என்றால் என்ன? இவற்றின் அர்த்தங்களை எங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று கேட்க; அதற்கு பரமசிவன், “மோட்சார்த்ததிற்கு வழி வேண்டும் என்றால், தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் சாம்பல் பூசணிக்காயைக் கொண்டு வந்து, வஜ்ர வைடூரிய ஆபரணங்களை பூட்டி, ஐந்து உழக்கு அரிசி போட்டு, அவிசு வைத்து, கும்பம் வைத்து, வடை, பாயாசம், மோதகம் எல்லாம் செய்து, ஒரு நல்ல ஸத் பாத்திரமான ஒரு பிராமணனுக்கு தானம் செய்தால், மோட்சார்த்தம் உண்டு”.
“காம்யார்த்ததிற்கு வழி வேண்டும் என்றால், 10-12 வயதுக்குள், தாய் தகப்பனுக்கு அடங்கி நடக்கவும். அதற்கு மேலிருந்தால், புத்திரர்களுக்காவது, சகோதரனுக்காகவது அடங்கி நடக்கவும். அப்படி இருக்கும் காலத்தில், பகவானை தியானித்துக்கொண்டு இருக்கவும்” என்று கூறினார்.
உடனே லெட்சுமி தேவி, தை மாதத்தில், ஸப்தமி தினத்தில், அந்தரமான காட்டில், இந்திரவாளிப் பட்டாடை கொண்டு, நான்கு பக்கமும் திரைக் கட்டி, மாவிலை தோரணம் கட்டி, எலுமிச்சம் பழத்தை ரசக்குண்டாகக் கட்டி, மெழுகிப் பெருக்கி, முத்து முத்தாய் கோலமிட்டு, சாம்பல் பூசணிக்காயைக் கொண்டு வந்து, வஜ்ர வைடூரியங்கள் பூட்டி, ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிசு வைத்து, கும்பம் வைத்து, வடை, பாயாசம், மோதகம் எல்லாம் செய்து, குடலை குடலையாக புஷ்பங்கள் கொண்டு வந்து, கூடை கூடையாக பலவித பழங்கள் கொண்டு வந்து, ஊதுபத்தி, சாம்பிராணி எல்லாம் கொளுத்தி வைத்து, பூஜைக்கு சித்தமாய் இருந்தாள்.
இது இப்படி இருக்கும் போது, இந்த பிராமணர், நாம் போகும் போது வெறும் காடாய் இருந்ததே, இப்பொழுது இவ்வளவு வைபோகமாக இருக்க வேண்டிய காரணம் என்ன என்று நினைத்து, திரையை நீக்கிப் பார்த்தார். அப்போது லெட்சுமி, “இச்சார், எளியார், அதிதி, பரதேசி யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்” என்று சொன்னாள். அதற்கு இவர், “இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான் தான்” என்று சொன்னார். “நீரே ஆனால் வாரும்” என்று சொல்லிவிட்டு, பூஜை எல்லாம் முடித்துக்கொண்டு, பூசணிக்காயை தானம் கொடுக்கப் போனாள். அப்பொழுது, சரஸ்வதியும் பார்வதியும் அங்கு தோன்றி, “லெட்சுமி, என்ன காரியம் செய்கிறாய், நாம் தேவர்கள் அல்லவா, கேவலம் பூலோக மனிதனுக்கு தானம் கொடுக்கிறாயே” என்று சொன்னார்கள். அதற்கு அவள், “இவர் பெரிய மஹானுபவர், இரண்டு பெண்களை கன்னிகாதானம் செய்து கொடுத்து 21 தலைமுறை பித்ருக்களை கரையேறியிருக்கிறார், அதனால் அவரையே தானத்திற்கு வருத்தியிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, சாம்பல் பூசணிக்காயை தானம் கொடுத்துவிட்டு, சொல்லலானாள்:
“சந்திர சூரிய விரதக் கதை உண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையைக் கேட்போருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன். பட்ட பசுவும் பால் கறக்கும். பகையான பேர்களும் உறவாவார்கள். அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காத வழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூர வழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை. எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை ’தேவகதை’ என்று எல்லோருக்கும் சொல்லவும்”, என்று சொல்லிவிட்டு, லெட்சுமி தேவி அந்தர் த்யானம் ஆகிவிட்டாள். இந்த பிராமணர், அந்த பூசணிக்காயை யானை மேல் வைத்துக்கொண்டு, மேளதாளத்துடன் ஊர்கோலமாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
இது இப்படி இருக்கும் போது, அவருடைய பத்தினியாகப்பட்டவள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு போனாரே, வரக் காணோமே என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தாள். அப்போது, அடுத்த வீட்டுத் தோழியானவள், “அரிசி கொண்டு வந்து தருகிறேன், சமையல் செய்து சாப்பிடு” என்று சொன்னாள். அதற்கு அவள், “என் கணவர் நாலு ஊருக்குப் போனால், நாலு உழக்கு அரிசி கொண்டு வருவார், ஐந்து ஊருக்குப் போனால் ஐந்து உழக்கு அரிசி கொண்டு வருவார், அதைக்கொண்டு நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்து வருகிறோம். கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க முடியாது, அதனால் வேண்டாம்” என்று சொல்லி விட்டாள். அதற்கு தோழி, “என் கூட ஒத்தாசையாக, வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, அரிசி வாங்கிக் கொள்” என்று சொன்னாள். “சரி” என்று சொல்லிவிட்டு, அவள் கூட வீட்டு வேலைகளை செய்து வந்தாள்.
நாராயணய்யர் மனைவி, லெட்சுமி தேவி தானம் கொடுத்த தினம் ராத்திரியில் ஒரு சொப்பனம் கண்டாள். அதே கவலையில், அடுத்த நாள் தோழி வீட்டுக்குப் போகவில்லை. தோழி வந்து, “என்ன சமாச்சாரம்” என்று கேட்டாள். அதற்கு அவள், “நேற்று இரவு, ஒரு ஸ்த்ரீ தீபமும், தீர்த்தமும் கொண்டு வந்தாற் போல் சொப்பனம் கண்டேன். அதே கவலையாய் இருக்கிறது” என்று சொன்னாள். அதற்கு தோழி, “எல்லாம் நன்மைக்குத் தான் இருக்கும். நான் அரிசி கொண்டு வந்து தருகிறேன். சமையல் செய்” என்று, அரிசி கொண்டு வந்து கொடுத்தாள். சாலில் கொட்ட வேண்டும் என்று போனவள், சால் நிறைய அரிசி இருந்ததைக் கவனியாமல் அரிசியைக் கொட்டினாள். நிறைய இருந்ததின் காரணமாக, அரிசி கீழே கொட்டிவிட்டது. அரிசி கீழே சிந்தினால், ஐஸ்வர்யம் குன்றிப்போகும் என்பார்கள். இந்த ஐஸ்வர்யம் கூட ஒட்டலாகாதா?” என்று கவலைப்பட்டாள். அதற்கு தோழி, “எல்லாம் சரியாகத்தான் இருக்கும். அடுப்பு மூட்டி சமையல் செய்” என்று சொல்லிவிட்டு, வாசலில் வந்தாள். வந்தவள், இந்த பிராமணர் மேள தாளத்துடன் வருவதைப் பார்த்து, உள்ளே சென்று, “நீ கண்ட சொப்பனம் நல்ல சொப்பனம் தான். உன் புருஷர் குபேரன் போல் மேள தாளத்துடன் வருகிறார் பார்” என்று சொன்னாள். அது கேட்ட பிராமணரின் மனைவி வெளியே வந்து பார்த்து உண்மை என்ற்றிந்தாள். நாராயணய்யர் வந்தவுடன், அவர் கால் அலம்ப ஜலம் கொடுத்தாள். அவர் கால் அலம்பியதும், அந்த தீர்த்தத்தை தலையில் ப்ரோட்சித்துக்கொண்டு, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உட்க்கார வைத்து, “அரிசி இருக்கிறது, சமையல் செய்யட்டுமா?” என்று கேட்டாள். “சமையல் செய்வது இருக்கட்டும், நான் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று சொன்னார். “சரி” என்றாள். அவர் சொல்லலானார்:
“சந்திர சூரிய விரதக் கதை உண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையைக் கேட்போருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன். பட்ட பசுவும் பால் கறக்கும். பகையான பேர்களும் உறவாவார்கள். அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காத வழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூர வழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை. எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை தேவகதை, கேட்டதை எல்லோருக்கும் சொல்லவும், என்று சொல்லிவிட்டு லெட்சும் அந்தர்த்யானமாகி விட்டாள்”, என்றார். இந்த கதையை அவர் மனைவி சிரத்தையுடன் கேட்டாள். அதிலிருந்து அவர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியமும் உண்டாகி, தரித்திரம் இல்லாமல் நன்றாய் இருந்தார்கள்.
இப்படி இருக்கும் போது ஒரு நாள் அவள் தன் புருஷரைப் பார்த்து, “நாம் தரித்திரமாய் இருக்கும் போது, நம்முடைய குழந்தைகள் நம்மோடு இருந்தனர். நாம் செளகரியமாய் இருக்கும் பொழுது நம்முடைய குழந்தைகளை பத்து நாளைக்கு இங்கே அழைத்து வாருங்கள்” என்று சொன்னாள். “என்ன இருந்தாலும் ஸ்த்ரீ புத்தி தானே” என்று சொல்லி விட்டு, பெரியவூர் பெரியபட்டிணம் என்னும் ஊருக்கு, பெரிய பெண் வீட்டிற்கு போனார். பெரிய பெண் அப்பாவிடம், “நீங்களும் அம்மாவும் செளகரியம் தானே?” என்று கேட்டாள். “செளகரியம் தான் அம்மா” என்று சொன்னார். “இலை போடுகிறேன், சாப்பிட வாருங்கள் அப்பா” என்று சொன்னாள். “சாப்பிடுவது இருக்கட்டும், நான் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்றார். அதற்கு அவள், “அடுப்பில் பால் இருக்கிறது. வாசலில் ஆள் காத்து இருக்கிறார். கொட்டிலில் மாடு கத்துகிறது. இந்த மாதிரி வேலை தொந்தரவு இருக்கும் போது எப்படி கதை கேட்பேன். என் கதை தான் பெரிய கதையாக இருக்கிறது” என்று அலுத்துக்கொண்டாள். “சரி” என்று சொல்லிவிட்டு சிறியவூர் சிறிய பட்டிணம் என்னும் ஊருக்கு, சிறிய பெண் வீட்டிற்கு போனார். சிறிய பெண் அப்பாவிடம், “நீங்களும் அம்மாவும் சேமம் தானே?” என்று கேட்டாள். “சேமம் தான் அம்மா” என்று சொன்னார். “இலை போடுகிறேன், சாப்பிட வாருங்கள் அப்பா” என்று சொன்னாள். “சாப்பிடுவது இருக்கட்டும், நான் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்றார். அவள் “சரி” என்றாள். அவர் சொல்லலானார்:
“சந்திர சூரிய விரதக் கதை உண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையைக் கேட்போருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன். பட்ட பசுவும் பால் கறக்கும். பகையான பேர்களும் உறவாவார்கள். அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காத வழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூர வழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை. எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை தேவகதை”, என்றார். இந்த கதையைச் சொல்லிவிட்டு அவர் த்ரிகால ஞானியாய்த் தவம் செய்யப் போய் விட்டார். இந்தப் பெண், இந்த கதையைக் கேட்ட மறுநாள் அஷ்ட ஐஸ்வரியமும் உண்டாகி, நன்கு இருந்தாள்.
பெரிய பெண் இந்த கதையைக் கேட்காத்தினால், திருடர்கள் இட்ட கொள்ளையினால் வீட்டில் ஒன்றும் இல்லாமல் போய், குழந்தைகள் எல்லாம் பசி தாகம் என்று கதற, கொல்லையில் இருந்த குருத்து மூங்கிலில் அடிக்கணுவை எடுத்துக்கொண்டு, தங்கை வீட்டிற்குப் போய், மோராவது வாங்கி, தாகத்தைத் தீர்க்கலாம் என்று வந்தாள். தங்கை அவளைப் பார்த்து, “அக்கா, உனக்கு இவ்வளவு வறுமை வர வேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவள், “சில காலத்திற்கு முன்பு மஹா சத்ரு போல் நம்முடைய தகப்பனார் வந்து, “ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று சொன்னார். நான் கேட்க மறுத்தேன். அதன் பின் இவ்வளவு வறுமை வந்து கஷ்டப்படுகிறேன்’ என்று சொன்னாள். அதற்கு இவள், “நம்முடைய தகப்பனாரைப் பற்றி அவ்வாறு சொல்லாதே. அவர் மஹானுபவர். அவர் ஒரு கதை சொன்னார். அதைக் கேட்டதிலிருந்து, அஷ்ட ஐஸ்வரியங்களும் உண்டாகி, நன்றாக இருக்கிறேன். நீ மோரைக் கொண்டு போய் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு வா. நான் உனக்கு அந்தக் கதையைச் சொல்கிறேன்” என்று சொன்னாள். பெரிய பெண்ணும் மோரைக் கொண்டு போய் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, உச்சி உருகும் வேளையில், தங்கை வீட்டிற்குத் திரும்பி வந்தாள். தங்கை கதையைச் சொல்லலானாள்:
“சந்திர சூரிய விரதக் கதை உண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையைக் கேட்போருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன். பட்ட பசுவும் பால் கறக்கும். பகையான பேர்களும் உறவாவார்கள். அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காத வழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூர வழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை. எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை தேவகதை”, என்று சொல்லிவிட்டு, “இந்தக் கதையை, இன்றைய தினம் அஸ்தமனத்திற்குள், எந்த ஜாதியாய் இருந்தாலும் மூன்று பேருக்கு உபதேசம் செய்” என்று சொன்னாள்.
உடனே பெரிய பெண், தங்கை வீட்டிலிருந்து கிளம்பி வெகுதூரம் போனாள். வழியில் ஒரு வாணியனைக் கண்டாள். அவனைப் பார்த்து, “நான் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்றாள். அதற்கு அவன், “நான் அரசர் வீட்டிற்கு எண்ணெய் குடம் கொண்டு போகும் பொழுது, கீழே விழுந்து எண்ணெய் குடம் உடைந்து விட்டது. அரசர் என்ன செய்வாரோ என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் போது, எப்படி கதை கேட்பேன்” என்றான். அதற்கு அவள், “நீ கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி. நான் சொல்ல வேண்டிய கடமையைச் சொல்கிறேன்” என்று கதையைச் சொல்லலானாள்:
“சந்திர சூரிய விரதக் கதை உண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையைக் கேட்போருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன். பட்ட பசுவும் பால் கறக்கும். பகையான பேர்களும் உறவாவார்கள். அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காத வழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூர வழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை. எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை தேவகதை”, என்று கதையைச் சொன்னாள்.
இந்தக் கதையைச் சொன்னவுடன், அவனைச் சுற்றிலும் எண்ணெய் குடங்கள் உண்டாகின. அவன், “நீ யாரம்மா? பரதேவதை போல் கதையைச் சொல்ல வந்தாய், நான் கேட்க மறுத்தேன். இவ்வளவு எண்ணெய் குடங்கள் வர வேண்டிய காரணம் என்ன? எனக்கு ஒரு குடம் எண்ணெய் போதும்” என்று சொன்னான். அதற்கு அவள், “லெட்சுமி தேவி அநுகிரகத்தினால் இவ்வளவு எண்ணெய் குடங்கள் உண்டாகின. இவைகளை வைத்துக்கொண்டு செளகரியமாக இரு” என்று சொல்லி விட்டு இன்னும் கொஞ்சம் தூரம் போனாள்.
வழியில் ஒரு குயவன் அழுது கொண்டு இருந்தான். அவனைப் பார்த்து, “நான் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்றாள். அதற்கு அவன், “நான் ஆறு மாதமாக சூளைப் போட்டு, சூளை வேகாமல், வியாபாரமே இல்லை, குழந்தைகள் எல்லாம் பட்டினியாக இருக்கின்றன. இப்படி இருக்கும் போது, நான் எப்படி கதை கேட்பேன்” என்றான். அதற்கு அவள், “ நீ கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி. நான் சொல்ல வேண்டிய கடமையைச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, கதையைச் சொல்லலானாள்:
“சந்திர சூரிய விரதக் கதை உண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையைக் கேட்போருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன். பட்ட பசுவும் பால் கறக்கும். பகையான பேர்களும் உறவாவார்கள். அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காத வழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூர வழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை. எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை தேவகதை”, என்றும் சொன்னாள்.
இந்தக் கதையைச் சொன்னவுடன், அவன் வீட்டில் தங்கமும் வெள்ளியுமாக பாத்திரங்கள் உண்டாகின. அவன், “ நீ யாரம்மா? ஈஸ்வரி போல் கதை சொல்ல வந்தாய். நான் கேட்க மறுத்தேன். இவ்வளவு பாத்திரங்கள் வர வேண்டிய காரணம் என்ன? எனக்கு வேண்டியது மண் பாத்திரங்கள் தான்” என்றான். “லெட்சுமி தேவி அநுகிரகத்தினால் இவ்வளவு பாத்திரங்கள் உண்டாகின. இவைகளை வைத்துக்கொண்டு செளகரியமாக இரு” என்று சொல்லி விட்டு இன்னும் கொஞ்சம் தூரம் போனாள்.
அக்ரஹாரத்தில், ஒரு வீட்டில், ஒரு பெண்மணி அழுது கொண்டு இருந்தாள். விளக்கு எரிந்து கொண்டு இருந்த்து. அவளைப் பார்த்து, “நான் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்றாள். அதற்கு அவள், “நான் அஸ்தமனத்திற்கு மாடு கறந்து, பால் கொண்டு வந்து, பாயாசம் வைத்து, பகவானுக்கு நிவேதனம் செய்து, என்னுடைய 9 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். குழந்தைகள் இறந்து கிடக்கின்றன. இந்த விதமாகப் பாயாசத்தை நிவேதனம் செய்ததினால், பகவான் என்ன பாடுபடுகிறாரோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, எப்படி கதை கேட்பேன்” என்றாள். அதற்கு அவள், “ நீ கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி. நான் சொல்ல வேண்டிய கடமையைச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, தீபத்தை தூண்டிவிட்டு, தீப நாச்சியாரே கதையைச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, தீபத்திடம் உட்கார்ந்து, கதையைச் சொல்லலானாள்:
“சந்திர சூரிய விரதக் கதை உண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்திருந்து கேட்க வேண்டும். இந்த கதையைக் கேட்போருக்கு கேட்ட பொருளும் கைகூடும். கங்கா ஸ்நானம் செய்த பலன். பட்ட பசுவும் பால் கறக்கும். பகையான பேர்களும் உறவாவார்கள். அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காத வழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூர வழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை. எதை மறந்து சாப்பிட்டாலும் கதையை மறந்து சாப்பிடாதே. கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய். தேவர்கள் இட்ட கதை தேவகதை”, என்றும் சொன்னாள்.
இவ்வாறு சொன்னவுடன், லெட்சுமி தேவியானவள், ஒரு செம்பில் தீர்த்தமும், ஒரு கையில் பிரம்பும் எடுத்துக்கொண்டு வந்து, குழந்தைகள் மேல் தெளித்து ஒரு தட்டு தட்டி எழுப்பி விட்டாள். குழந்தைகள் எல்லாம் தூங்கி விழித்தன போல் எழுந்தன. “நீ யாரம்மா? லெட்சுமியோ, சரஸ்வதியோ, பார்வதியோ? கதை சொல்ல வந்தாய். நான் கேட்க மறுத்தேன். குழந்தைகள் எல்லாம் எழுந்திருந்த விதத்தை எனக்கு சொல்ல வேண்டும்” என்று சொல்ல, “நான் இந்த கதையைச் சொல்ல வேண்டும் என்று சொன்னேனே தவிர, நான் லெட்சுமியும் அல்ல, சரஸ்வதியும் அல்ல, பார்வதியும் அல்ல. உன்னைப் போன்றவள் தான். லெட்சுமி தேவியின் அநுகிரகத்தினால் குழந்தைகள் எல்லாம் பிழைத்து விட்டன. இவைகளை வைத்துக்கொண்டு செளகரியமாக இரு” என்று சொல்லிவிட்டு, வீடு திரும்புவதற்குள், அவள் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் உண்டாகி, அவள் வீட்டில் உள்ளவர்கள், இவளை எதிர்கொண்டு அழைக்க வந்தார்கள். அதற்கு மேல் அவர்களும், தரித்திரம் இல்லாமல் நன்றாய் இருந்தார்கள்.
இந்த கதையை பக்தியுடன் சொன்ன பேரும், கேட்ட பேரும் சேமமாய் இருப்பார்கள் என்று பெரியோர்கள் கூறியுள்ளார்கள்.
பாலா தேவி நமஸ்காரம்
லலிதா தேவி நமஸ்காரம்
லெட்சுமி தேவி நமஸ்காரம்
பார்வதி தேவி நமஸ்காரம்
சரஸ்வதி தேவி நமஸ்காரம்
சாயா தேவி நமஸ்காரம்
ஸர்வாப்யோ தேவதாப்யோ
நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
ஓம் |
காத்யாயனி மஹாமாயே |
மகாயோகின்யதீச்வரி |
நந்தகோபசுதம் தேவீ |
பதிம் மே குருதே நமஹ ||
ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ
குபேர காயத்ரீ
ஓம் யக்ஷசாய ச வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி
தன்னோ ஸ்ரீத ப்ரசோதயாத்
சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
அனைத்து மங்களங்களையும் மாங்கல்யத்தையும், ஆரோக்யம், ஆயுள் உள்ளிட்ட எல்லா நலன்களையும், எல்லா செல்வங்களையும் அளிக்கக்கூடியவளே. த்ரயம்பகியே, நாராயணியே உன்னைச் சரணடைகிறேன்.
அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்
வருவாயே லெட்சுமியே வருவாயே
உன்னை வாயாறப் பாடுகிறோம் வரம் தருவாயே
எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே!
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லட்சுமியே!
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்
சிந்தனைக்குச் செவிசாய்த்து சீக்கிரமென் னில்லம்வந்து
உந்தனருள் தந்திருந்தால் உலகமெனைப் பாராட்டும்!
வந்தமர்ந்து உறவாடி வரங்கள் பல தருவதற்கே
சந்தான லட்சுமியே தான் வருவாய் இதுசமயம்
யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால்
காணுமொரு போகமெலாம் காசினியில் கிடைக்குமென்பார்!
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்
அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ!
இன்றோடு துயர்விலக இனிய தன லட்சுமியே
மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்
எங்கள்பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும்
தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே!
பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லட்சுமியே
மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்
கற்றுநான் புகழடைந்து காசினியில் எந்நாளும்
வெற்றியின்மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கின்றேன்
பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜய லட்சுமியே
வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம்
நெஞ்சிற் கவலையெலாம் நிழல்போல் தொடர்ந்ததனால்
தஞ்சமென உனையடைந்தேன் தாமரைமேல் நிற்பவளே
அஞ்சாது வரம்கொடுக்கும் அழகுமகா லட்சுமியே!
வஞ்சமிலா தெனக்கருள வருவாய் இதுசமயம்
ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும்
சூழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே!
வாழும் வழிகாட்டிடவே வாவீர லட்சுமியே!
மாலையிட்டுப் போற்றுகின்றேன் வருவாய் இதுசமயம்.
-கவிஞர் சிவல்புரி சிங்காரம்
கருத்துகள்
கருத்துரையிடுக