Veṟṟic cakkaram
சிறுகதைகள்
Backவெற்றிச் சக்கரம்
தமிழ்த்தேனீ
Contents
வெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்
முன்னுரை
1. சொர்கம்
2. உயிர் மாற்றம்
3. வெந்துதணியும்காடுகள்
4. சாவித்ரி
5. சரஸ்வதி
6. யாருக்கும் தெரியாது
7. சாக்கடை
8. காதலி தினம்
9. கைச்சூடு
10. இலவச மருத்துவம்
11. துளசி மாடம்
12. சாமி குத்தம்
13. மாற்றுச் சாவி
14. திறந்தவெளி
15. கர்ப்ப வாசம்
16. ரத்து
17. பம்பரம்
18. மயக்கம்
19. ரிஷிமூலம்
20. பேரின்பம்
21. தகுதி
22. நசுங்கல்
23. நரிவேட்டை
24. ஆபரேஷன் சக்சஸ்
25. மனோதத்துவம்
26. பணம்
27. B பாசிட்டிவ்
28. அடகு
29. அதிர்ச்சி
30. முகமூடிகள்
31. நெற்றிக் கண்
32. சக்கரம்
33. பூடகம்
34. மனிதம்
35. மாயா
36. தப்புத்தாளங்கள்
37. மானச யாத்திரை
38. ரத்த அழுத்தம்
39. புதிய கீதை
40. பாலபாடம்
41. காஞ்சித் துண்டு
42. ஊமைக் கனவு
43. கோயில்
44. சொந்தரத்தம்
45. காதலர்கள் தப்பி ஓட்டம்
46. சம்பந்தி
47. அஸ்தி ( ர ) வாரம்
48. ஆசை மச்சான்
49. காதல் என்றால்
50. விஸ்வரூபம்
51. ரகசியம்
52. கேள்வி ஞானம்
1
வெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்
வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள்
தமிழ்த்தேனீ
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – தமிழ்த்தேனீ – rkc1947@gmail.com
2
முன்னுரை
வாசகப் பெருமக்களே நான் ஒரு நடிகன், கவிஞன், எழுத்தாளன், ஆம் உங்கள் இல்லத்துக்கு உங்கள் அனுமதியோடு உலா வருகின்ற நக்க்ஷத்திரம், உங்கள் தொலைக் காட்சியில், உங்கள் கணிணியில், உங்கள் அனுமதியோடு உங்கள் இல்லத்துக்கு வரும் உங்கள் சகோதரன், தமிழ்த்தேனீ (Thamizh Thenee) அதுவும் உங்கள் மேல் அன்பும் ,அக்கறையும் ,பாசமும் , நேசமும், கொண்ட உங்கள் சகோதரன் தமிழ்த்தேனீ. நான் ஒரு திரைப்பட நடிகன் , தமிழ் எழுத்தாளன் , நாடகாசிரியர். இணையதள எழுத்தாளன், என்னுடைய படைப்புகளில் மனிதம் தான் சிறந்தது என்று வலியுறுத்தி உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.
“ அனைத்துயிருக்கும் அவனே ஆதி !
அவனைவிடவா உயர்ந்ததது ஜாதி ?
நம் இந்திய தேசத்தின் சுதந்திரம் பிறந்த வருடம் 1947, நான் பிறந்த வருடமும் 1947, எனக்கும் சுதந்திரத்துக்கும் வயது 67 , திரு ரங்கசாமி கமலம்மாள் தம்பதிகளின் புதல்வன் “கிருஷ்ணமாச்சாரி” என்னும் “தமிழ்த்தேனீ “. இந்த ப்ரபஞ்சத்திலுள்ள மலர்களில், தமிழ் மொழியில் தமிழ்ப்பூக்களில் உள்ள மகரந்தத்தை சுவைத்து அதிலுள்ள தேனை உரிஞ்சி சேகரித்து வைத்து அந்தத் தேனை உங்களுக்கு அளித்து மகிழ மனம் கொண்டதனால், தமிழ்த்தேனீ என்று மிகவும் விரும்பி பெயர் வைத்துக் கொண்டேன்.
நான் பிறந்து இதுவரை வாழ்ந்து அன்றாடம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை என் மனதில் இருத்திக்கொண்டு அவற்றை அசைபோட்டு அதன் வாயிலாக கிடைத்த உணர்வுகளை, பெற்ற ஞானத்தை, உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு என்னுடைய சிறு வயது முதற்கொண்டு நடந்த அனைத்து ரசமான நிகழ்வுகளை அப்படியே உங்களிடம் பகிர என்னுடைய நினைவுப் பெட்டகத்தில் சேமித்து வைத்திருக்கிறேன், அவற்றில் பல உங்களுக்கு பயன்படலாம் என்னும் கருத்தில் உங்களுடன் பகிர்கிறேன்,
உறக்கமில்லாத,விழிப்புமில்லாத ஒரு மோன நிலையில் நான் என்னுள் மூழ்கியிருந்த ஒரு இதமான வேளையில், என் நினைவுத் தடாகத்தில் சிந்தனை மீன்கள் நீந்தத் தொடங்கின, வாழ்க்கை என்னும் தடாகத்தில் கல்லெறிவோரும் உண்டு, மீன் பிடிப்போரும் உண்டு, முங்கிக் குளித்து பேறு பெருவோரும் உண்டு,பாசம் வழுக்கி நீரில் அழுந்தி எழமுடியாது போவோரும், தளைகளை அறுத்து மீண்டும் எழுவோரும் உண்டு,அது அவரவர் வழி,அதை விதி என்று ஏற்போரும் மதியின் அதிகப்ரசங்கித்தனம் என்று வாதிடும் முற்போக்குச் சிந்தனை கொண்டோரும், அனைவருமே தம்முடைய நினைவுத் தடாகத்தில் மூழ்கி சிந்தனைப் பெருங்கடலில் கலக்க முயல்வர் எனபது தெளிவு.
நான் என்னுடைய வாழ்க்கைத் தடாகத்தில் ஓரளவு முங்கி,மூச்சு முட்டும்போது வெளியே எட்டிப்பார்த்து, கடினமான மற்ற நேரங்களில் மல்லாந்து படுத்து மிதந்து, தாமரை அல்லித் தண்டுகள் போன்ற தாவரங்களின் வேர்களிலிருந்து வரும் தண்டுகள் போன்ற பலவிதமான இன்னல்களிள் மாட்டிக்கொண்டு , முயன்று விடுவித்துக்கொண்டு, அந்த வாழ்க்கைத் தடாகத்திலே ஓரளவு நேர்மை என்னும் குணத்தை கைக்கொண்டு, நீந்திக்கொண்டிருப்பவன்.
அதனால் நீர்க்குமிழிகள் போன்ற நினைவலைகள் எப்போதும் என்னைச் சுற்றி ஊதியும் , பெருத்தும் உடைந்தும், மீண்டும் துளிர்த்தும், அதன் சுவாரஸ்யத்தில் நான் என்னை மறந்து அந்தக் கதிரவனின் ஒளிக்கதிர்களால் ஏற்படும் வர்ணஜாலங்களை ரசித்துக்கொண்டே என் மனதைப் பறிகொடுத்து அந்த நீர்க்குமிழிகளிலேயே உட்புகுந்து, வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என் உள் மனம்,
என்னதான் உடைந்து போனாலும், உருவானாலும் அந்த நீர்க்குமிழிகளின் துகள்களிடையே நினைவுத்தடமாய் அணுவிலும் அணுவாய் இருந்தாலும் அவற்றிலும் அப்படியே அழுந்தி ஆழமாய்ப் பதிந்து இரண்டறக் கலந்து என் ஆழ் மனதுக்குள்ளே அப்படியே நினைவுத் தடமாய்ப் பதிந்து இருக்கும் உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தையும் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு ஊறிப்போய் அப்படியே மீண்டும் நீர்க்குமிழியாய் வெளிவந்து ஊதும்போது அந்த நீர்க்குமிழிகளில் நிறைந்து மறுபடி மறுபடி புதுப்பித்துக்கொண்டு கால ஓட்டத்தின் நினைவுகளையும் கனவுகளையும் சுமந்துகொண்டு ஒளிர்ந்துகொண்டிருக்கிறேன்.
அதனால் எப்போது உடையும் என்றே தெரியாத நீர்க்குமிழி ஆனாலும் உள்ளே பொதிந்திருக்கும் நினைவு தடங்களின் தாக்கம் குறையாமல் மீண்டும் மீண்டும் புதியதாய்த் தோன்றிக்கொண்டே இருக்கிறேன், அதனால் என் சுழற்சிக்கு முடிவே கிடையாது. ஆம் அந்த முடிவில்லாத சுழற்சியும், அவை பதிக்கும் நினைவுத் தடங்களும் எப்போதும் இளமை குன்றாதவை, ஆர்வமும், ஆச்சரியமும், அதிர்ச்சியும், ஆனந்தமும், ரகசியமும், இளமைத் துள்ளலும், எப்போதும் என் கைவசமிருக்கும் அரிய சொத்துக்கள்.
அந்த நினைவு சுரங்கத்தை தோண்டிக்கொண்டே இருப்பதால் அவ்வப்போது சிலபல நல்ல நிகழ்வுகளும், வாழ்க்கையின் ரகசியம் புரியவைத்த இடர்ப்பாடுகளும், இனிய நிகழ்ச்சிகளின் இனிய நினைவுகளும், அனுபவ பாடங்களாக இழையோடிக்கொண்டே இருப்பதால் அந்த நினைவுகளை உங்களோடு பகிர வேண்டும் என்னும் விழைவால் பகிர்கிறேன், கூடவே வந்து அனுபவிக்கத் தயாராய் இருப்பவர்கள் வாருங்கள்.
அழைத்துச் செல்கிறேன், முரண்பாடான மாற்று எண்ணம் கொண்டவர்களும் முரண் தீர்ந்தால் மீண்டும் என்னோடு இணையுங்கள், ப்ரயாணத்தை தொடர்வோம், இப்ரயாணத்தில் உங்களின் அனுபவமும் இணைவதால் என்னுடைய அனுபவம் நிச்சயம் வளரும், உங்களுக்கும் ஏதேனும் நல்ல அனுபவம் கிடைக்கலாம்,
ஒரு எழுத்தாளன் எந்த மொழியில் எழுதினாலும் அவன் அந்த மொழியில் உள்ள சொற்களை எடுத்தாளாமல் ஒரு கவிதையோ, கட்டுரையோ, கதையோ அல்லது எந்தப் படைப்புகளும் உருவாகாது, அதனால் எழுத்தாளர்களை எடுத்தாளர்கள் என்றும் அழைக்கலாம் தவறில்லை என்று தோன்றுகிறது,எழுத்தாளனாக இருந்தாலும், எடுத்தாளனாக இருந்தாலும் ஒரு படைப்பாளி ஒரு படைப்பை படைக்க ஆரம்பிக்கும் முன்னர், அவன் மூளையில் அவன் படைக்கவிருக்கும் படைப்பைப் பற்றிய சிந்தனை ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும், உள்ளுக்குள்ளே உணர்ந்து உணர்ந்து ,
உருப்போட்டு,உருப்போட்டதைஉள்வாங்கி உள்வாங்கியதை ஒரு கர்ப்பிணியின் ப்ரசவ காலம் போல பல வலிகளைத் தாங்கி, அந்தப் படைப்பை அவன் தன்னுடைய குழந்தையைப் போல ப்ரசவித்து, ப்ரசவித்த அந்தக் குழந்தையை, ஒரு தாய் எப்படி சீராட்டி பாலூட்டி, கவனமாய் வளர்க்கிறாளோ அப்படி மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை, அவனுடைய கற்பனைக் குழந்தையை படித்துப் பார்த்து அதன் குறைகளைக் களைந்து, ஒரு சிறந்த படைப்பாக, அந்தப் படைப்புக் குழந்தையை மிளிரச் செய்வதுதான், ஒவ்வொரு படைப்பாளியின் முக்கியமான கடமை.
அது மட்டுமல்ல அவன் படைப்பை படிக்கும் வாசகன் அந்தப் படைப்பை படித்து அதன் மூலமாக ஒரு புத்தி கொள்முதல் பெற்றால், அது அந்தப் படைப்பாளிக்கு வெற்றி! அந்தப் படைப்பு இறை அருள், உழைப்பு, கடினமான உழைப்பு, கற்றல், கற்றவற்றை ஆராய்ந்து அறிதல், போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்னும் மெருகேறி உள்ளுக்குள்ளே இயல்பாக ஊறி, ஊற்றாகப் பெருக்கெடுத்து நதியாகப் புறப்பட்டு அதே வேகத்துடன் தாமாய் இயல்பாக வந்து விழும் சொற்கள் கொண்ட படைப்புகள் தரமான படைப்புகளாக மலர்கின்றன ,கருத்துக்கேற்ப சொற்கள் தாமாக வந்து அமையுமானால் அந்தப் படைப்பு சிறந்த படைப்பாக வெளிவர வாய்ப்புகள் அதிகம்..
”அதாவது ஒரு கற்பனாவாதி எழுத்துக்களை ஆள்கிறான் என்பதை விட, எழுத்துக்கள் ஒரு நல்ல கற்பனாவாதியைத் தேர்ந்தெடுத்து அந்தக் கற்பனாவாதியை ஆண்டு தரமான படைப்புகளாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன, எழுத்துக்கள் எழுத்தாளனை ஆள்கிறது” என்றுதான் தோன்றுகிறது, நம் ரத்தத்தில் உள்ள நம் முன்னோர்களின் ஜீவ அணுக்களால் விளைந்த இந்த தேகத்தில்,அந்த முன்னோர்கள் கற்ற கலைகள், தாமாகவே உள்ளிருந்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வெளிப்படுவதும் உண்டு,
என்னுடைய தாயார் ஒரு எழுத்தாளர், அவருக்கு இயல்பாகவே கதை, கவிதை நாடகம்,கட்டுரை, எழுதும் திறமை இருந்தது, ஒரு காலத்தில் அவர் எழுதிய அவரது படைப்புகள் வெளிவராத பத்திரிகைகளே இல்லை எனும் நிலை இருந்தது, எழுத்தாளர் லக்ஷ்மி டாக்டர் திரிபுர சுந்தரி, வை மூ கோதைநாயகி அம்மாள், போன்ற எழுத்தாளர்கள் அவருக்கு நண்பர்கள்,
அவர் வாழ்நாளின் இறுதித் தறுவாயில் கூட அவர் எழுதிய ” கிருஷ்ண தீர்த்தம் “ என்னும் கதை, அமுத சுரபி, உயர்திரு சங்கராச்சாரியாரால் ஏற்படுத்தப்பட்ட ஜன் கல்யாண் என்னும் அமைப்பு, மற்றும் பாரத ஸ்டேட்வங்கி மூவரும் சேர்ந்து 1980ம் ஆண்டு நடத்திய கதைப் போட்டியில் முதற்பரிசு பெற்று திரு சங்கராச்சாரியார் அவர்களால் அவர்களின் தங்கக் கரங்களாலே தங்க நாணயம் பெற்றவர், மற்றும் அவர் எழுதிய பாடல்கள் திரு எல் கிருஷ்ணன் அவர்களால் இசையமைக்கப்பட்டு, திருமதி பம்பாய் சகோதரிகள் எனப்படும் திருமதி லலிதா, மற்றும் திருமதி சரோஜா அவர்களால் பாடப்பட்டு, சங்கீதா நிறுவனத்தாரால் ”தெய்வீகப்பாமாலை ” என்னும் ஒலி நாடாவாக வெளியிடப்பட்டது.
என் எழுத்துக்கள் என்னை வளர்க்கின்றன, ஒவ்வொரு நாளும் என் மனதில் அறிவு விசாலத்தை ஏற்படுத்துகின்றன, ஒரு செய்தியைப் பற்றி எழுதும்போதே அந்தச் செய்தியை தவறில்லாமல் எழுதவேண்டுமே என்னும் பொறுப்பு கூடுகிறது, அதன் விளைவாக அந்த செய்தியைப் பற்றி மேலும் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது.
ஆகவே எழுத ஆரம்பித்தாலே படிக்க ஆரம்பிப்போம், படிக்க ஆரம்பித்தாலே நிறைய எழுத செய்திகள் கிடைக்கும், இது ஒரு அறிவுச் சக்கரம், இந்த அறிவுச்சக்கரத்தில் நாம் சுழன்றால் மேன்மேலும் நம் ஞானத்தைப் பெருக்கிக்கொள்ளமுடியும்
”ஆன்றோர் செரித்த அறு சுவையின் வெளிப்பாடே இங்கே நமக்கு அகப்பாடு,
எங்கே அறிவு வெளிப்படினும் அதுவே நமக்கு முதல் ஈடு
இறைவன் அருளால் எனக்கு கற்பனை குதிரை அபரிமிதமாக துள்ளும் என் மனதில் ,அப்படிப்பட்ட நேரங்களில் பணியிலிருந்தாலும், அல்லது நல்ல தூக்கத்தில் இருந்தாலும் வரும் கற்பனையை நினைவு வைத்துக்கொண்டு உடனே எழுதி வைப்பது என் வழக்கம், அப்படி நான் எழுதிய கவிதைகள்,
கட்டுரைகள்,கதைகள் ஏராளம், அந்த மொத்தக் கற்பனைப் படைப்புகளையும் அப்படியே சேமித்து வைத்தேன், அவற்றையெல்லாம் இப்போது தட்டச்சுகூடத் தெரியாத நான் சுயமாகக் கணிணி கற்றுக்கொண்டு அந்தக் கணிணியிலே என் படைப்புக்களை எழுத்து வடிவில் கோப்புகளாக சேமித்து வைக்கின்றேன், அது மட்டுமல்ல இன்று இணையத்தில் பல குழுக்களில் நான், தமிழ்த்தேனீ என்னும் புனைப் பெயர் கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறேன், என்னுடைய ஒவ்வொருநாள் வாழ்க்கையிலும் பல பாடங்களைக் கற்றுக்கொள்கிறேன் ,
என்னுடைய எல்லாக் கலைகளுக்கும் காரணமான, மற்றும் எங்களுக்கு கிடைத்த அனைத்து செல்வங்களுக்கும் ஆசிகளுக்கும் காரணமான ” நானும் என் எழுத்தும்” எனும் ஒலி இது என் அன்னையின் ஒலியே, அவரின் ஆக்கமே அவரின் எழுத்தே, அவரின் படைப்பே அதனால் இதை அவர்களுக்கே மன நெகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன், மீண்டும் தொடர்ந்து எழுத இறைவனின் கருணை எனக்கு உண்டு என்னும் நம்பிக்கையோடு உங்களை மீண்டும் என் எழுத்தின் மூலமாக சந்திக்கின்றேன்.
நான் பிறந்த இந்த பாரத தேசத்தின் நலனுக்காகவும், இங்கே இருக்கும் என் மக்களின் நலனுக்காகவும் ஏதேனும் செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன்.அதன் விளைவாக ஐம்பத்து மூன்று வயது வரை நான் அனுபவித்த இன்பங்கள், துன்பங்கள், துயரங்கள், வினோதங்கள், யாத்திரைகள், ஆன்மீக உணர்வுகள், ஆகியவற்றின் மூலமாக எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பதிவு செய்து நான் வாழ்க்கையில் கற்ற பாடங்களை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் படைப்புகளாக மாற்றும் பணியில் மும்மரமாக ஈடுபட்டேன்.
“இந்த சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி அவர்களை அவர்களின் கடமைகளை ஒழுங்காகச் செய்யவைத்து, அவர்களுக்கு நன்மை செய்யவும் நாட்டிற்கு நன்மை செய்யவும் ஆளுவோருக்கு நல்ல அறிவுரைகளை துணிச்சலோடு எடுத்துக் கூறுபவனாக தன்னை வரித்துக்கொண்டு எழுத்தாணியைப் பிடிக்க வேண்டும் ஒரு எழுத்தாளன்
முதலாளியின் பெருமைகளை உணர்ந்து, அவர் நடத்தும் தொழிலின் மேன்மையை உணர்ந்து அதை தொழிலாளர்களுக்கு எடுத்து சொல்லி உண்மையாக உழைக்கும் படி தொழிலாளர்களை அறிவுறுத்தி மேன்மைப்படுத்தி, தொழிலாளர்களுக்காகவும் பரிந்து பேசி அவர்களுக்கும் முதலாளிக்கும் தொழிலுக்கும் நன்மை செய்வதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டவனாக , ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே பாலமாக செயல்படும் சங்கத்தின் தலைவன் போல எழுத்தாணியைப் பிடிக்க வேண்டும் ஒரு எழுத்தாளன்.
பெற்ற தாய் தன் குழந்தைகளுக்கு வேண்டுவனவற்றை இனிமையான வேளை பார்த்து கணவனிடம் இதமாக பதமாக எடுத்துக்கூறி, தன் குடும்ப நிலவரங்களை சரியாகப் புரிந்துகொண்டு கணவனுக்கும் பாரம் இல்லாத யோசனைகளைக் கூறி குழந்தைகளின் வேண்டுகோளையும் நிறைவேற்றும் பாசமிக்க தாயைப் போல நடு நிலை தவறாத குறிக்கோளோடு எழுத்தாணியைப் பிடிக்க வேண்டும் ஒரு எழுத்தாளன் . ”
இப்படிப்பட்ட குறிக்கோள்களை என் மனதில் விதைத்த என் தாயார் ஆர். கமலம்மாள் அவர்களின் அறிவுறைப்படி என்னை வடிவமைத்துக் கொண்டுதான் எழுதத் தொடங்கினேன். அதே பாதையில்தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மனதில் ஒரு திடமான எண்ணத்துடன் எழுத்தாளனாக மலர்ந்தவன் நான். என்னுடைய இந்த முதல் நூலான ” வெற்றிச் சக்கரம் ” சிறு கதை தொகுப்பிலும் என்னுடைய குறிக்கோளை நான் விதைத்திருப்பதைக் காண முடியும்.
ஆகவே என் எழுத்துக்களில் பாசம், பந்தம், குடும்ப நெளிவு சுளிவுகள், அனுசரித்துப் போகும் தன்மை. அறிவுறுத்தும் தன்மை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்மை இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுத்தாணி ஏந்தியவன் நான். ஆகவே மனிதம் என்னுடைய அடித்தளம். உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை வலியுறுத்தி என்னுடைய கதைகள்,கட்டுரைகள், கவிதைகள் இருக்கும்.
அன்றாடம் நாம் சந்திக்கும் நிகழ்வுகளிலிருந்து நாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக , அதே நேரத்தில் தேவையான விழிப்புணர்வு பெறும் வகையில் உங்கள் மனதுக்கும் இதமான கதைகளை வெளியிடுகிறேன்.
“ வெற்றிச் சக்கரம்” சிறுகதைத் தொகுப்பு என்னும் இ புத்தகத்தை கணிணிகளிலும் , கையடக்க இணையக் கருவிகளில் படிக்க எளிதாக வெளியிடுகிறேன் . என் கதைகளில் வரும் பல நல்ல வித்யாசமான அனுபவங்கள் உங்களையும் என்னையும் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வைக்கும் அளவுக்கு நம் சிந்தனைகளைத் தூண்டப் போகின்றன.
எப்போதுமே அழகாக மின்னும் விளக்கில் சுடர் விட்டு எரியும் ஜோதியை இன்னும் ப்ரகாசமாக ஜொலிக்கவிட வேண்டுமென்றால் அந்த விளக்கில் இருக்கும் திரியை தூண்டிவிட வேண்டும். அதுபோல ஏற்கெனவே அறிவாளியான உங்களை மேலும் ப்ரகாசிக்க வைக்கவேண்டுமென்றால்
நம்முடைய நல்ல உணர்வுகளை,அதாவது நகைச்சுவை உணர்வுகள், போன்ற நவரச உணர்வுகளைத் தூண்டிவிடவேண்டும் .அப்படித் தூண்டினால் நிச்சயமாக நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.. அப்படி தினமும் நாம் நம் நல்ல உணர்வுகளைத் தூண்டும் அளவுக்கு நம்முடைய மனங்கள் இணையட்டும், ஒருவருக்கொருவர் உங்களிடமிருந்து நானும் என்னிடமிருந்து நீங்களும் புத்துணர்வைப் பெறலாம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc1947@gmail.com
“வெற்றிச் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கட்டும் நம் அனைவரின் வாழ்விலும்”
1
சொர்கம்
காலையில் எழுந்து குளித்துவிட்டு மனதில் குதூகலத்துடன் இறைவனைக் கும்பிட்டு எழுந்த சுகன்யா வாசலில் அழைப்பு மணி ஒலிக்கவே கதவைத் திறந்தாள் .அங்கே அவளுடைய தாய் கமலம் தயங்கியபடி நின்றிருந்தாள்,ஆனந்த வெள்ளமாய்க் கரைபுரண்டு ஓடிய மகிழ்ச்சித் திக்குமுக்காடலை மறைத்துக்கொண்டு அதிர்ச்சியிலிருந்து மீண்டு ஏம்மா அங்கேயே நிக்கற வாம்மா உள்ளவா என்றாள் சுகன்யா.
எப்பிடி இருக்கே என்ற அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க அப்படியே அம்மாவின் மேல் சாய்ந்து கட்டிக்கொண்டு உன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சு, எப்பிடிம்மா என்னைப் பாக்க வந்தே அப்பாவுக்குத் தெரியுமா என்றாள்.
இல்லை தெரியாது நான் சீக்கிரம் போகணும் கோயிலுக்கு போய்ட்டு வரும்போது மாப்பிள்ளையை யதேச்சையா வழிலே பாத்தேன். அவர்தான் சொன்னார் நீ முழுகாம இருக்கறதை மனசு கேக்கலையே அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று தழுதழுத்தாள் கமலம்.
இந்தா உனக்குப் பிடிக்குமே அந்த மூலைக் கடையிலே போயி பொக்கடா வாங்கிண்டு வந்தேன்,இப்போ இதான் இனிப்பு உனக்கு.சாப்புடு என்று கூறிவிட்டு காதில் மெதுவாக அறிவுறைகளை சொன்னாள் கமலம்.சரிம்மா அப்பிடியே நடந்துக்கறேன், நீ கவலைப்படாதே நீயும் உடம்பைப் பாத்துக்கோ என்றாள் சுகன்யா.
சரி நான் கிளம்பறேன் அப்பா கொஞ்ச நேரம் ஆச்சுன்னா தேடிண்டு வந்துடுவார் என்றபடி கிளம்பிப் போனாள் கமலம்.
வீட்டுலெ எல்லாரையும் பகைச்சுண்டு காதல் ஒண்ணுதான் பெரிசுன்னு கார்த்திக்கை பதிவுத் திருமணம் செய்துகொண்ட நாள் முதலா அம்மா அப்பா ,வேற சொந்த பந்தமே இல்லாமல் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதுவும் தாய்மைப் பேறு அடைந்துள்ள இந்த நிலையில் அம்மா வந்து பாத்துட்டுப் போனது மனதுக்கு ரொம்ப ஆறுதலாய் இருந்தது. வயிற்றைத் தடவி குழந்தை ஆணா பெண்ணா என்றும் தெரியாத நிலையில் டேய் உங்க பாட்டி டா உன்னைப் பார்க்கத்தான் வந்தா என்றாள்.என்னவோ தெரியலை அவளுக்கு சிரிப்பும் அழுகையும் கலந்து வந்தது. இந்த சிரிப்புக்கும் அழுகைக்கும் நடுவே எத்தனையோ சரித்திரங்கள் இருக்கே.
விளையாட்டாய் மாதங்கள் ஓடிற்று.திடீரென்று ஒரு வலி இடுப்பில், என்னதான் அம்மா சொல்லிட்டுப் போனாலும் தாங்க முடியாத வலி வார்த்தைகள் அனுபவத்தை கொடுக்குமா என்ன. அனுபவித்துப் பார்க்கும் பொழுதுதானே அது எத்தனை அவஸ்தை என்று தெரியும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும் என்னும் வெறி அவளைத் தடுமாறவைத்தது. எதுவோ கிடைத்தது பற்றிக்கொண்டாள். சுய உணர்வு வந்து பார்த்த பொழுது அவளுடைய அம்மா கமலம் நின்றிருந்தாள்.
பக்கத்தில் பூப்போல ஒரு குழந்தை. மலர்ந்து சிரிக்க முயன்று உடல் பலகீனத்தால் தோற்றுப் போனாள் அவள், ஆனால் மனதில் ஒன்று தோன்றியது
புதுசாய்ப் பிறந்திருக்கிற இந்தக் குழந்தை, ஏற்கெனவே பார்த்த தன் தாய் கமலம் இவர்கள் இரண்டு பேர் ,தாய்மை. இதைத் தவிர உலகத்தில் காதல் பணம் அந்தஸ்து போன்ற வேறு எதுவுமே உயர்வில்லை சொர்கமில்லை என்று புரிந்தது. அயர்வாய்க் கண் மூடி நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தாள் சுகன்யா.
தூக்கம் வருவதற்குள் ஒரு நினைவு எப்போ கார்த்திக் வந்து குழந்தையைப் பார்ப்பான் அவன் குழந்தையை கையில் தூக்கும் போது பாக்கணுமே என்னும் நினைவுடன் தூங்க ஆரம்பித்தாள்.
2
உயிர் மாற்றம்
இரவு 8 மணிக்கு வந்த மருத்துவர் சாரதாவைத் தனியே அழைத்து நாளைக்கு உங்கள் கணவருக்கு அறுவை சிகிச்சை. ஏற்கெனவே நான் சொன்னாமாதிரி அவருடைய மூளையில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கணும் . இல்லையென்றால் சுய நினைவு இழக்க அதிக வாய்ப்பு இருக்கு . எங்களால் முடிந்த அளவு முயல்கிறோம் மற்ற விவரங்களைத் தலைமைச் செவிலி சொல்லுவாங்க. காலை 6 மணிக்கு அவரை அறுவை சிகிச்சைக்கு அழைச்சிட்டுப் போவாங்க என்று சொல்லிவிட்டுப் போனார்.
ஓய்ந்து போய் உட்கார்ந்தாள் சாரதா. இரவு மணி 12 அப்போதும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டு படுத்திருந்த கண்ணன் கவலை காரணமாக அசந்து போயிருந்த மனைவி சாரதாவைப் பார்த்தார். பாவம் இவள் என்ன செய்வாள். சாரதா நீ படுத்துக்கோம்மா நான் ஏதாவது வேணும்னா கூப்பிடறேன் என்றார். சரி என்று சொல்லிவிட்டுச் சாரதா படுத்துக்கொண்டாள். அவள் மனம் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டே இருந்தது.
தலையணைக்கு அடியில் இருந்த ஒரு சிறிய பழைய புகைப்படம் கண்ணாடி போட்டு பிரேம் போட்டது அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார் கண்ணன். அவர் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ஆமாம் அந்தப் புகைப்படத்தில் இருப்பவள் அவருடைய தெய்வம் மூத்த சகோதரி ராஜாமணி. பூஜை அறையில் இருக்கும் தெய்வத் திரு உருவப் படங்களுக்கு இடையே சுமார் 45 வருட காலமாக வைத்து, தினமும் வணங்கி வரும் அவருடைய சகோதரி ராஜாமணியின் புகைப்படம். மருத்துவ மனைக்கு வரும்போது மறக்காமல் அந்தப் புகைப்படத்தைக் கையோடு கொண்டு வந்து தலையணைக்கு அடியில் வைத்திருந்தார். அந்தப் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு அந்தத் தெய்வீக நாள் நினைவுக்கு வந்தது!
அவருக்கு சுமார் எட்டு வயதிருக்கும் அவருடைய சகோதரி ராஜாமணிக்குச் சுமார் 12 வயது. மூன்றாம் முறை திருப்பிக்கொண்ட டைபாய்ட் ஜுரம் வந்து கண்ணன் மிகவும் நலிந்து போயிருந்த நேரம். அவ்வப்போது நினைவு வருவதும் போவதுமாக இருந்தது அவர் பிழைப்பது கடினம் என்று திட்டவட்டமா எல்லா மருத்துவரும் சொல்லியாச்சு . அன்று மருத்துவமனையில் அவர் படுத்திருந்த போது அம்மாவும் அப்பாவும் கவலையோடு உட்கார்ந்திருந்தனர். ஒரு முறை சற்று தெளிவு வந்தபோது, அவரை மடியில் படுக்க வைத்துக்கொண்டு ராஜாமணி கைகளைக் கூப்பி, மானசீகமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் அவர் மேல் சொட்டிக்கொண்டிருந்தது. அவள் வாய் முணுமுணுக்கும் வேண்டுதல் இறைவன் காதில் விழுந்ததோ என்னவோ அவர் காதில் விழுந்துகொண்டிருந்தது.
பெருமாளே என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ,! என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ! என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ!” வேண்டிக்கொண்டே இருந்தாள் ராஜாமணி. திடீரென்று நன்றாக இருந்த அவளுக்கு வலிப்பு வந்து அவள் மயங்கிக் கீழே விழுந்தாள். அவளுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய அவளைப் படுக்கைத் தள்ளுவண்டியில் (ஸ்ட்ரெக்சரில்) போட்டு அவசர வைத்தியப் பிரிவுக்கு எடுத்துச் சென்றனர். சில வினாடிகளில் அப்பாவும் அம்மாவும் கதறிக்கொண்டிருப்பது காதிலே விழுந்தாலும் எழுந்து போய் என்ன நடந்தது என்று பார்க்க முடியாத நிலை.
அம்மாவும் அப்பாவும் ஓடி வந்து டேய் ராஜாமணி நம்மையெல்லாம் விட்டுட்டுப் போய்ட்டாடா , நீ பிழைக்க மாட்டேன்னு பயந்திண்டு இருந்தோம். நல்லா இருந்த அவ போயிடுவான்னு நினைக்கவே இல்லையே என்று கதறியவுடனே அவருக்குப் புரிந்தது. அவளுடைய வேண்டுதல், அந்தப் பெருமாளையும் அசைத்து உருக வைத்தது விட்டது என்று. ‘அடடா ஒரு உயிரைக் கூட தானமாக அளிக்க முடியுமா? அதுவும் மனப்பூர்வமான வேண்டுதல் மூலமாக வரும் கண்ணீரின் வழியாக ஒரு பாலம் அமைத்து, அந்த உணர்வுப் பாலத்தின் வழியாக உயிர் மாற்றம் செய்ய முடியுமா இன்னொரு உடலுக்குள்?
முடிந்ததே அவர் சகோதரியால்! என்ன ஓர் உருக்கமான வேண்டுதல். சித்தர்களாலும் ஞானிகளாலும் கூட முடியாத ஒரு உயிர்மாற்று வித்தையை எவ்வளவு எளிதாகச் சாதித்துவிட்டாள் அவர் சகோதரி ராஜாமணி? மருத்துவர்களே ஆச்சாரியப்பட்டனர், அவர்களுக்குத் தெரியுமா? அவர் உடலில் இயங்கிக்கொண்டிருப்பது அவருடைய சகோதரி ராஜாமணியின் உயிர் என்று? அப்படிப்பட்ட உயிர்ச் சகோதரி ராஜாமணியின் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு உருகிக்கொண்டிருந்தார் கண்ணன்! பார்த்துக்கொண்டிருக்கும் போதே கை நடுக்கத்தாலோ உணர்ச்சி வேகத்தாலோ அந்தப் புகைப்படம் தவறிக் கீழே விழுந்தது.
அதை எடுக்கக் குனிந்த கண்ணனும் கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் தலையில் என்ன பட்டதென்றே தெரியவில்லை தலையிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது கண்ணன் மயங்கினார் சாரதா சத்தம் கேட்டு, ஓடி வந்தாள். தெய்வமே இவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே யாராவது ஓடிவாங்களேன் என்று கதறினாள் மருத்துவர்கள் ஓடி வந்தனர். கீழே கிடந்த கண்ணனைப் படுக்கைத் தள்ளுவண்டியில் வைத்து அவசர சிகிச்சைப் பகுதிக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சை அறைக்குள் அவர் உயிரைத் தக்கவைக்க போராடிக்கொண்டிருந்தனர் மண்டையில் பலமாக அடி பட்டிருந்தது.
சாரதா ராஜாமணியின் புகைப்படத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு தெய்வமே எப்பிடியாவது அவரைக் காப்பாத்து என்று கண்களில் கண்ணீருடன் வேண்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். நான்கு நாட்கள் நினைவில்லாமல் இருந்த அவருக்கு நினைவு வந்த போது மசமசப்பாக மனைவி சாரதாவின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. சிறிது சிறிதாக நினைவு வந்தது. மருத்துவர்கள் அவரையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மீண்டும் முழுவதுமாக நினைவு வந்த போது சாரதா சொன்னாள்.
இந்த முறையும் உங்களை உங்க ராஜாமணி காப்பாத்திட்டாங்க. அவங்கதான் தெய்வம். தெய்வம் மனுஷ்ய ரூபேணான்னு சொல்வாங்களே, அதே மாதிரி உங்க ராஜாமணி தெய்வமா இருந்து உங்களைக் காப்பாத்திட்டாங்க! “ஆமாங்க டாக்டருங்களே ஆச்சரியப்பட்டாங்க மண்டையிலே அடிபட்ட போது உங்க மூளையிலே இருந்த கட்டி தானாவே உடைஞ்சு போயிடுத்துங்க. அதிலே ஆச்சரியமே உங்களுக்கு வேற எங்கேயுமே அடிபடலை. இனிமே தானா குணமாயிடும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க என்றாள் சாரதா.
அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது அவள் கையில் ராஜாமணியின் படம்! ராஜாமணி! உயிரை மட்டும்தான் நீ எனக்குக் குடுத்தேன்னு நான் நெனைச்சிண்டு இருந்தேன். இந்த உடம்பும் உன்னோடதுதான் எல்லாமே உன்னோடதுதான். அது இப்போதான் எனக்குப் புரிஞ்சுது என்று மனத்துக்குள் கதறினார் கண்ணன். அவர் கண்களில் கண்ணீர்! இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை, ஆத்ம சமர்ப்பணம்.
3
வெந்துதணியும்காடுகள்
அடேடே வாம்மா உள்ளே வா என்ற காமாக்ஷி மாமியிடம் இங்கே கற்பகாம்பாளைத் தரிசனம் செய்யணும்னு வந்தேன் அப்பிடியே உங்களையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன் என்றாள் ரம்யா. இதோ வரேன் இரு குங்குமம் தரேன் இட்டுண்டு போயிட்டு வா என்றபடி உள்ளே போய் குங்குமச் சிமிழுடன் வந்தாள் காமாட்சி மாமி.குங்குமத்தை எடுத்து இட்டுக்கொண்டு கிளம்பினாள் ரம்யா.
அங்கே வந்த காமாக்ஷியின் கணவர் விஸ்வநாதன் “உங்க அப்பாவைப் போன வாரம் ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்லே பாத்தேம்மா. மனையைப் பதிவு செய்ய வந்திருந்தார். எங்க வீட்டு முகவரிதான் குடுத்திருக்கார். அதற்கான பத்திரம் இங்கேதான் வரும் வந்தவுடனே நான் கொண்டு வந்து தரேன் அப்பாகிட்ட சொல்லும்மா என்றார் விஸ்வநாதன். சுருக் என்றது ரம்யாவுக்கு. நம்மகிட்ட சொல்லாம எதையுமே செய்யமாட்டாரே அப்பா ஒரு நிமிஷம் தலை சுற்றிற்று. சமாளித்துக்கொண்டு தெரியும் சொன்னார் என்று சமாளித்துவிட்டு கிளம்பினாள்.
யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு எதுக்கு எங்ககிட்ட மறைக்கணும். நீங்க மனை வாங்கினா நாங்க சந்தோஷப்படுவோம் பொறாமைப்படமாட்டோம் ஏம்பா இப்பிடி செஞ்சீங்க அவமானமா இருக்கு அந்த விஸ்வநாதன் சார் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா நான் உங்க மூத்த பொண்ணுப்பா ஏன் என்கிட்ட சொல்லலை?
ஆவேசத்துடன் ரம்யாகேட்ட கேள்வியில் அதிர்ந்தார் ராமாமிர்தம். முதல் முதலா அவர் வாழ்க்கையில் அவருக்கென்று பிறந்த முதல் குழந்தை. அப்பா என்கிற ஸ்தானத்தை அளித்த பெண். தோளிலும் மார்பிலும் வைத்துக் கொஞ்சி பாசத்தையும் முதற்குழந்தை என்கிற ஆசையையும் கொட்டி வளர்த்த அவருடைய மூத்த குழந்தை. அந்தப் பெண்குழந்தை இப்போது வளர்ந்து ஒரு ஆணுக்கும் வாழ்க்கைப்பட்டு இரு குழந்தைகளையும் பெற்று முதிர்ந்து நிற்கிறாள்.
குழந்தைகளுக்குத் தெரியாமல் நிலம் வாங்கி இருக்கேன் என்று விஸ்வநாதனிடம் சொன்னது தவறு என்று உறைத்தது அவருக்கு. அந்தப் பத்திரம் வந்துவிட்டதா என்று பார்த்து அதை அவர் வீட்டுக்கே சென்று வாங்கி வந்திருக்க வேண்டும். ‘சரி என்னதான் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் இப்படித்தான் முட்டாள்தனம் செய்வோம் என்று யோசித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தார்.
அப்பா உங்களைக் கேள்வி கேட்க, எனக்குத் தகுதியில்லாம இருக்கலாம். ஆனா, மனசு பொறுக்கலைப்பா எனக்கு உள்ள ஒண்ணு வெச்சிண்டு வெளிலே வேற பேசத் தெரியாது. அதுனாலே கேக்கறேன் இது மாதிரி நிலம் வாங்கி இருக்கேன்னு சொல்லியிருந்தா நானும் சந்தோஷப்பட்டிருப்பேனே எதுக்குப்பா என்கிட்டே மறைக்கணும்? நாங்க இப்போ சொந்தமா வீடுகூட இல்லாம இருக்கலாம். நாங்களும் நிமிர்வோம் வீடு வாங்குவோம். ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க எந்தக் காலத்திலேயும் நான் என் சொந்தக் கால்லே நிப்பேனே தவிர உங்ககிட்ட கையேந்த மாட்டேன். எனக்கு இதைக் குடு அதைக் குடுன்னு கேக்கமாட்டேன் என்றாள் ரம்யா.
இன்னும் இவள் குழந்தையாகவே இருக்கிறாளே இவ்வளவு வளர்ந்து கூட இன்னும் புரிந்துகொள்ளாத குழந்தையாகவே இருக்கிறாளே என்கிற அதிர்ச்சியும் நம்மைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாளே என்னும் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை நிலைகுலைய வைத்தது. அவர் வாழ்க்கை அவருக்குப் பல அனுபவங்களைக் கொடுத்திருந்தது ஆனாலும் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவர் சிக்கியதில்லை ஆடிப் போனார் ராமாமிர்தம்.
இன்று வரை எது செய்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து விவாதித்து கூடியவரை ரகசியம் ஏதும் இல்லாமல் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு செயல்பட்டிருக்கிறார் ராமாமிர்தம். ஏதோ ஆண்டவன் புண்ணியத்திலே அவர் உழைப்பிலே அவருக்கு வந்த பணமே அவரையும் அவர் மனைவி லலிதாவையும் கடைசீ வரை யாரிடமும் கையேந்தி நிற்காத ஒரு நிலையைத் தந்திருக்கிறது. பேராசை இல்லாத ராமாமிர்தத்துக்கும் அவர் மனவிக்கும் இருப்பதற்கு ஒரு வீடு, கையில் ஏதோ கொஞ்சம் பணம் என்று இருந்தாலும் தினமும் இந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த மேடு பள்ளம் சரிவு உயர்வு, அவமானங்கள் சுனாமிகள் இடி மின்னல் மழை பூகம்பம்…. அத்தனையிலும் கூடவே நின்று தோள் கொடுத்துத் தாங்கி அவரையும் கீழே விழாமல் தாங்கி தானும் நிமிர்ந்த அவர் மனைவி லலிதா அவளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.
இரவு வீட்டுக்கு வருவதற்கு எத்தனை நேரமானாலும் தூங்கிப் போனாலும் அவர் வந்தவுடன் எப்படியோ அறிந்துகொண்டு அத்தனை தூக்கத்திலும் இருட்டில் அவரைத் தேடிக்கொண்டு வந்து, அவர் மார்பில் தூங்கிய குழந்தை ரம்யா . யாராவது அவரைப் பற்றி ஏதேனும் சொன்னால் ஒற்றை விரலை நீட்டி எங்க அப்பாவை இப்பிடிச் சொன்னீங்க அடிச்சிருவேன்’ என்பாள் அந்தக் குழந்தை அவரைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாளே.
அவளுக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத நிலையில், வாடகை வீட்டிலே ரம்யா இருப்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து ரகசியமாக அவர் செய்த காரியம் இன்று அவரைக் குற்றவாளியாக்கி இருக்கிறது. யாருக்காக அதைச் செய்தாரோ அந்த மூத்த பெண்ணே அவரைக் குற்றவாளியாக்கி ஏதோ நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து தகாத குற்றம் செய்தவரை விசாரிப்பது போல் கேட்கிறாள். மனம் ஒடிந்து போனது அவருக்கு. பெற்ற குழந்தைகளில் அனைவரையும் சமமாகப் பாவித்தாலும் யார் சற்றே பலவீனமாக இருக்கிறார்களோ அந்தக் குழந்தையின் மேல் ஒரு தனிக் கவனமும் ஆதரவும் காட்டுவது இயல்பு. இதைப் புரிந்துகொள்ளாமல் யாருக்கும் எந்த துரோகமும் செய்யாத அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள் குழந்தைகள் என்னும் அவரது அசாத்திய நம்பிக்கை தகர்ந்து போனதில் ஏற்பட்ட அதிர்ச்சி.
மற்ற இரு குழந்தைகள் ஏதோ ஓரளவுக்கு அவர்கள் சுய தேவையை ஈடு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். சமாளித்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை. ஆனால் பெரிய பெண் வாழ்க்கைச் சூழலைச் சமாளித்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாளே சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல். இன்னும் குழந்தைகளை வேறு படிக்க வைக்கணும் என்று யோசித்து யாருக்கும் இப்போ சொல்லவேண்டாம் என்று நினைத்தது தப்பா? வங்கியில் தங்களின் பாதுகாப்பு கருதி வைத்திருந்த பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒரு நிலம் வாங்கினார். அதுவும் ஒரு வேளை பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் நன்றாக உழைத்து அவர்களாகவே வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால் மகிழ்ச்சியோடு இப்போது வாங்கிய நிலத்தை மூணு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
அப்படி ஒரு வேளை பெரிய பெண் இதே நிலையில் இருந்தால் மற்ற இரு பிள்ளைகளின் சம்மதத்தோடு பெரிய பெண்ணின் முன்னேற்றத்துக்காக கொடுக்கலாம் என்று எண்ணித்தானே வாங்கினார்? சரி இவளுக்கு எப்படிப் புரியவைப்பது எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேட்பாள். அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார்.
சரி விடுங்கப்பா உங்க இஷ்டம் நான் யாரு உங்களைக் கேள்வி கேட்க நீங்க செய்யிற எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும்னு நான் எப்படி எதிர்பாக்கலாம் என்று சுய இரக்கம் ஆட்டிவைக்க அவள் அலுத்துக்கொண்டிருந்தாள். அவருக்குத் தோன்றியது இவள் வளரவே இல்லை அப்படியே இன்னமும் குழந்தையாய்த்தான் இருக்கிறாள் அவருக்கு ஒன்று புரிந்தது. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிவு உறைத்தது. அனுபவம் தரும் பாடம் அதற்கு ஈடே இல்லை. இவளுக்கும் அனுபவம் பாடம் சொல்லித் தரும் என்னும் நம்பிக்கை பிறந்தது. அவளுக்குப் பதில் சொல்லவில்லை.
வெந்து தணிந்த காடு புகைந்துகொண்டிருந்தது. அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது! ஆனால் அனுபவமில்லாத இன்னொரு காடு, சுடும் என்று தெரியாமலே தனக்குள் அக்கினிக் குஞ்சை வைத்துக்கொண்டு வெந்துகொண்டிருக்கிறது.
4
சாவித்ரி
காலையில் எழுந்து அவசர அவசரமாகக் குளித்துவிட்டு, அலுவலகம் செல்லத் தயாராய் வெளியே வந்த சாவித்திரிக்கு அந்தக் காட்சி கண்ணில் பட்டது. அவளுடைய மாமியார் குளித்துவிட்டு பட்டுப் புடவை சரசரக்க காமாட்சி அம்மன் திரு உருவப் படத்தின் முன்பாக செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீ காமாட்சி அன்னைக்குச் சமர்ப்பித்து காரடையும் கட்டியாக வெண்ணெயையும் வைத்து வெற்றிலை, பாக்கு மஞ்சள், வாழைப்பழம் எல்லாம் தட்டில் வைத்து அதன் முன்னே உட்கார்ந்து பூஜை செய்து முடித்துவிட்டு உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன் ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும் என்று மனமார வேண்டிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்து, கணவரையும் நிற்கவைத்து அவருக்கும் ஒரு நமஸ்காரம் செய்தாள். அவரும் மகிழ்ச்சியுடன் தீர்க்காயுஷ்மான் பவ தீர்க்க சுமங்கலி பவ என்று வாழ்த்தினார்.
ஒரு புன்னகையுடன் அம்மா எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன் என்றபடி கைப்பையை எடுத்துக்கொண்டு சாவித்திரி கிளம்பினாள். இந்தாம்மா இந்த வெத்தலை பாக்கு எடுத்துக்கோ என்று நீட்டிவிட்டு ஏம்மா ஏதோ முக்கியமான புராஜக்ட் அதுக்கு முக்கியமா ஏதோ ஒண்ணு எடுத்துக்கணும்னு சொன்னியே, அதை எடுத்துண்டியா என்றாள் மாமியார். நல்லவேளைம்மா ஞாபகப்படுத்தினீங்க என்றபடி உள்ளே சென்று அந்த முக்கியமான கோப்பை எடுத்து பையில் வைத்தபடி சரிம்மா நான் வரேன் என்று சாவித்திரி கிளம்பினாள். மதியம் உணவு இடைவேளை வரை மூச்சுவிடக்கூட நேரமில்லை. உணவு முடித்து மீண்டும் மீட்டிங் போயாகணும். அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்கி விட்டு கான்பரன்ஸ் ஹாலுக்குச் சாவித்திரி ஓடினாள். இன்று ஒரு புதுத் திட்டம் தொடங்கும் நாள் வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர் மீண்டும் டெமோ தொடங்கியது மிகச் சாமர்த்தியமான முறையில் தன்னுடைய விவரிப்பை முடுக்கினாள் சாவித்திரி வந்திருந்த வெளிநாட்டினர் அவளுடைய ஆங்கிலப் புலமையையும் கணிணித் திறமைகளையும் வியந்து பாராட்டிக்கொண்டிருந்தனர்.
முக்கியமாக அவளுடைய திறமையினால் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் அன்றே நிறைய ஆர்டர்கள் கிடைத்தன. அத்தனையும் கோடிக்கணக்கான ரூபாய்கள் லாபம் தரக் கூடியவை. வந்திருந்த அத்தனை பேரும் மகிழ்ச்சியாகக் கிளம்பினர்.அப்பாடா’ என்று சற்றே ஓய்வாக உட்கார்ந்தாள் தொலைபேசி அழைத்தது முதலாளி தர்மராஜ் அழைக்கிறார். இதோ வந்துட்டேன் சார் என்றபடி அவருடைய அறைக்குச் சாவித்திரி சென்றாள்.
உக்காருங்க சாவித்திரி மேடம். உங்களை எப்படிப் பாராட்றதுன்னே தெரியலை. உண்மையில் சொல்லப் போனா இன்னிக்கு உங்க பேச்சு மிகவும் அற்புதம். இந்த புராஜக்ட் உங்க உழைப்பாலே உருவானது. நான் நிச்சயமா நம்பிக்கையே இல்லாமதான் இருந்தேன் இந்த புராஜக்ட் மட்டும் வெற்றி அடையலேன்னா இந்த நிர்வாகத்தையே இழுத்து மூடிடலாம்னுதான் இருந்தேன் சத்தியவான் உயிரை மீட்ட சாவித்திரி போல போராடி இந்த நிர்வாகத்துக்கு மறுவாழ்வு குடுத்திருக்கீங்க. உங்களை எப்படிப் பாராட்றதுன்னே தெரியலை ஆமாம் சாவித்திரிமேடம் நீங்க மரணப் படுக்கையில் இருந்த இந்த நிர்வாகத்துக்கு உங்க திறமையாலே மறுபடியும் உயிர் குடுத்திருக்கீங்க. நான் உங்களுக்கு ஏதாவது குடுக்கணும் என்ன வேணும்னாலும் கேளுங்க என்றார் நிர்வாகி தர்மராஜ்.
இது என்னோட கடமை சார் உங்க பாராட்டுக்கு நன்றி என்று புன்னகைத்த சாவித்ரி அந்தப் புன்னகை மாறாமலே சார் எங்களுக்கு விடுதலை வேணும் , இந்தக் கட்டுப்பாட்டிலேருந்து எங்களுகெல்லாம் விடுதலை வேணும். இந்த புராஜக்ட் வெற்றிக்காகத்தான் காத்திருந்தோம். பணம் இல்லாமே நாங்க கொஞ்சம் கஷ்டப்படுவோம் இல்லேங்கலை ஆனா, வேற நிர்வாகத்திலே வேலை கிடைக்கும்னு நம்பிக்கையோட எங்க மனசை மாத்திக்கிட்டு ஒரு முடிவெடுத்திருக்கோம். இன்னிக்கு நாங்க பெண்கள் பத்து பேரும் ராஜினாமா செய்யப் போறோம் வேற வழியில்லே.என்றாள் சாவித்திரி.ஆனா ஒரு விஷயம் சொல்றேன் இங்கே திருமணமாகாத பெண்கள்னு நினைச்சிக்கிட்டு நீங்க வேலைக்கு வெச்சிருக்கிங்களே நான் உட்பட அத்தனை பேரும் திருமணமானவங்க என்றாள்.
அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்த நிர்வாகி தர்மராஜ் எழுந்தார். மேடம் நீங்க யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் இனிமே இந்த நிர்வாகத்திலே திறமையானவர்கள் திருமணமாகி இருந்தாலும் வேலை உண்டு. அப்பிடீன்னு நான் விதிமுறைகளில் திருத்தம் செய்யறேன் நீங்கள்லாம் இல்லாமே புராஜக்ட் நின்னு போயிடுமேங்கிற பயத்திலே சொல்லலை என்னோட தவறுக்குப் பிராயச்சித்தமா நம்ம அலுவலகத்திலே வேலை செய்யற எல்லாப் பெண்களுக்கும் பிரசவ காலத்து மொத்தச் செலவையும் மூன்று மாதச் சம்பளத்துடன் கூடிய விடுப்பையும் இந்த நிர்வாகம் அனுமதிக்கும்” என்றார்.
சார் உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியலே இனிமேயும் நாங்க எல்லாரும் உண்மையா இந்த நிர்வாகத்தோட முன்னேற்றத்துக்காக உழைப்போம் என்றாள் கைகூப்பியபடி சாவித்ரி
சுபம்
5
சரஸ்வதி
“சரஸ்வதி டெல்லிலெல்லாம் ரொம்பக் குளிராம். அதுவுமில்லாமே நாம் போயிட்டு வரப் போற பத்ரிநாத் இமய மலைக்குப் பக்கத்திலே இருக்கு. தாங்க முடியாத அளவுக்குக் குளிர் இருக்குமாம். எதுக்கும் ரெண்டு கம்பளி எடுத்துக்கோ என்றேன் சரஸ்வதியிடம். பல காலமாக கோடித்து இப்போதுதான் வேளை வந்திருக்கிறது. கடமைகளையெல்லாம் ஓரளவு முடித்தாயிற்று. பத்ரிநாத் சென்று தரிசித்து வரவேண்டும் என்னும் ஆசை நிறைவேறும் தருணம். மிக உற்சாகமாக ,சரி நீங்களும் உங்களுக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வெச்சிக்கோங்க. அங்கே போனா எது கிடைக்கும் எது கிடைக்காதுன்னு தெரியாது என்றாள். எனக்கு புரிந்தது . அவள் பூடகமாக எதைச் சொல்கிறாள் என்று.
எனக்கு , அவ்வப்போது சிகரெட் பிடிக்கும் வழக்கம் உண்டு அதை அவ்வப்போது கண்டிக்கும் வழக்கம் அவளுக்கு. ஜாக்கிரதை இதையெல்லாம் நிறையப் பிடிக்காதீங்கோ உடம்பு கெட்டுப் போயிடும் என்பாள். ஆனாலும் வாட்ச்மேனிடம் காசு கொடுத்து வாங்கி வரச் சொல்லும் போது கண்டுகொள்ள மாட்டாள்.
“சரி டிக்கெட்டெல்லாம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோங்க. அப்புறம் டெல்லிலே போயி இறங்கி ஒரு டாக்சி வெச்சிண்டு வெங்கடேஸ்வரா மந்திருக்கு போயிடலாம். அப்புறம் அவர் பொறுப்பு அங்கேருந்து தேவநாதன் பத்ரிநாத்துக்குக் கூட்டிண்டு போயிடுவார் என்றாள். “சரி சர இது வரைக்கும் பத்து வாட்டி சொல்லிட்டே நானும் பத்திரமா டிக்கட்டெல்லாம் எடுத்து வெச்சிண்டுட்டேன்னு சொல்லியாச்சு என்றேன்
ஆரம்பத்திலேருந்து இவளுக்கு இவளோட பயத்தையெல்லாம் என்மேலே ஏத்தி வெக்கெறதே வழக்கம். வாசலில் ஏதோ சத்தம் கேட்டு , எட்டிப் பார்த்தேன்! மைதிலி மன்னி காரிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள் என்னடா இது உலக அதிசயம்! என்று மனம் ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்துக்கொண்டு வாசலுக்கு ஒடினேன். மன்னி கதவின் அருகே வந்து நிற்கிறாள் வாங்க என்று கூப்பிடவா ? நீங்க எதுக்கு என் வீட்டுக்கு வந்தீங்க என்று கேட்பதா என்று குழம்பி ஏதோ ஒன்று உள்ளுக்குள்ளே உணர்த்த வாங்கோ மன்னி” என்று கதவைத் திறந்து விட்டேன் அண்ணாவின் மூத்த மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “சித்தப்பா பத்ரிக்கு போயிட்டு வரப் போறீங்களாமே. அம்மாவும் உங்களோட வராளாம் கூட்டிண்டு போயிட்டு வரமுடியுமான்னு கேக்கச் சொன்னா என்றான் அவன்.
சரஸ்வதியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். திருமணமாகி வந்ததிலிருந்து மன்னி படுத்திய பாடெல்லாம் தெரிந்தும் அடுத்தும் அவள் படுத்திய பாட்டுக்கெல்லாம் ஈடுகொடுத்து அமைதி காத்த சரஸ்வதியின் வாயிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்று அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“வரச்சொல்லுங்கோ கூட்டிண்டு போயிட்டு வரலாம் மன்னிக்கு மட்டும் வேற யாரு இருக்கா நாமதானே செய்யணும் என்றாள் சரஸ்வதி. பழசையெல்லாம் மறக்கறதுதான் நல்லது. நாம என்ன தலையிலேயா தூக்கிண்டு போய்ட்டு வரப் போறோம் கொஞ்சம் பத்திரமா பாத்துக் கூட்டிண்டு போயிட்டு திரும்பக் கொண்டுவந்து விடணும் பாத்துபோம் பகவான் இருக்கார் என்றாள்.
இவ பாவம் இதுவரைக்கும் எனக்கு வாழ்க்கைப்பட்டு எங்கும் போனதில்லை போகச் சந்தர்ப்பமே அமையவில்லை. திருமணம் அதன் பின்னர் வரும் வருமானத்தில் நடுத்தர வாழ்க்கை. அதிகப்படி ஏதும் செய்ய முடியாதபடி அரைகுறை வருமானம். பிள்ளைகள் படிப்பு பற்றாக்குறைக்கு நிமிர முடியாத அளவுக்குக் குருவியின் தலையில் பனங்காய் போல அம்மாவின் புற்று நோய்க்கே மாதா மாதம் சக்திக்கு மீறிச் செலவு மன்னியிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டு , வேலை வேலை என்று எப்போதும் வேலை செய்து வரக்கூடாத நோய் கொடிய நோய் வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள் அம்மா.
கணவனின் அம்மா என்றாலே அவளைக் கொடுமைப்படுத்த வேண்டும் இல்லையென்றால் , அவள் உன்னைக் கொடுமைப்படுத்துவாள் என்று மன்னிக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ அம்மாவை எவ்வளவு துளைக்க வேண்டுமோ அவ்வளவு துளைத்துவிட்டாள் வார்த்தைச் சவுக்கடிகளாலும் குடும்பத்தை இரண்டாக்குவதிலும்.
மனத்தில் ஏற்பட்ட காயம் அம்மாவுக்குப் புற்று நோயாக உருவெடுத்து செய்யாத வைத்தியமில்லை வேண்டாத தெய்வமில்லை. டாக்டர் ராஜலட்சுமி புற்று நோய் மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். இனி வைத்தியம் செய்து உபயோகமில்லை. இவ்வளவு நாட்கள் உங்கள் சம்பளத்தை வைத்துக்கொண்டு எப்படி செய்தீர்களோ உங்கள் பாசத்தை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இனி அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்றார்.
ஆனால் இறைவன் எங்களுக்குப் பூலோக நரகத்தை என் அம்மாவின் வியாதி மூலமாகப் புரியவைத்தான். ஆமாம் அவதிப்பட்டுக்கொண்டே அம்மா எட்டு வருடம் உயிரோடிருந்தாள். என்னதான் முடிந்த வரை வைத்தியம் பார்த்தாலும் அம்மாவின் வலியை வாங்கிக்கொள்ள முடியவில்லையே. அம்மாவின் மேல் உயிரையே வைத்திருந்த எங்களையே இறைவா அம்மாவை எடுத்துக்கொண்டு விடு அவள் படும் பாட்டை சகிக்க எங்களால் முடியவில்லை என்று வேண்ட வைத்தான் இறைவன். அது கொடுமையின் உச்சகட்டம். இந்த நிலை யாருக்குமே வரக் கூடாது என்று இருவருமே இறைவனை மனமார வேண்டினோம்.
பூலோக நரகத்தின் வலையில் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் விதியின் கரங்களுக்கு மறுப்புச் சொல்ல எண்ணி கையைக் காலை ஆட்டி இன்னும் வகையாக வலையில் சிக்கிக்கொண்டு எப்படி மீள்வது என்றே தெரியாமல் விதி என்னும் சிலந்தி எப்போது வந்துவிடுமோ என்னும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை முப்பது வருடமாக.
முதல் நாள் இரவு நினைவே இல்லாமல் படுத்திருந்த அம்மாவிடம் உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ தோன்றியது என்னைப் பெற்றெடுத்த தெய்வத்திடம் அமுதம் குடித்து வளர்ந்த நான் அந்தக் கனக முலையையும் நான் குடியிருந்த கோயிலான அவள் வயிற்றையும் ஒரு முறை இதமாக தடவி விட்டு இரு கையையும் கூப்பிக்கொண்டு ‘என்னை பெத்த அம்மா உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன். என்னைப் பெற்று இந்த பூமிக்குக் கொண்டு வந்த உனக்கு எப்படி என் நன்றிக் கடனைத் தீர்ப்பேன் என்று எண்ணி கண்ணில் நீர் வழிய மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டே சற்று நேரம் இருந்தேன். பல நாள்களாக நினைவில்லாமல் இருந்த அந்த உடலில் கூட உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு சலனம் ஓடுவதை உடல் அசையாவிட்டாலும் உணர்வுகள் அசைவதை என் மனத்தால் உணர முடிந்தது.
‘அம்மா இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு மகனாகவே பிறக்கவேண்டும். அதற்கு அருள் செய்வாய் தாயே என்று வேண்டிக்கொண்டேன். ஆமாம் அப்பா இறந்து போகும்போது எனக்கு பதினோரு வயது. அன்றிலிருந்து இன்று வரை என்னை ஆளாக்க இவள் பட்ட கஷ்டம் கண்முன்னால் நான் கண்ட இவள் உழைப்பு நேர்மை மனோதிடம் அப்பப்பா இவள் இறந்து தந்தை உயிரோடிருந்தால் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே!
தூக்கம் கண்களைச் சுழற்றியது அப்படியே கட்டிலின் கீழே படுத்துக் கண்ணயர்ந்தேன். நல்ல தூக்கத்தில் என் மனைவி என்னை எழுப்பினாள். என்ன என்றேன். கண்களைக் கசக்கியபடி வாயில் முந்தானையைப் பொத்தியபடி அம்மா என்றாள். திடுக்கிட்டு எழுந்து அம்மாவைப் பார்த்தேன். அவள் நிச்சலனமாக இறந்து போயிருந்தாள். இத்துணை நாட்களாக வலியினால் ஏற்படும் முகச் சுழிப்பைக் கண்டிருக்கிறேனே தவிர புன்னகையைக் கண்டதில்லை. அவள் இதழ்க் கடையோரம் இப்போது நிம்மதியான புன்னகை.
நான் மானசீகமாகச் சொன்னது உனக்குப் புரிந்ததா அம்மா. அதுதான் புன்னகைக்கிறாயா உண்மையாகவே என்னை விட்டுப் போயிட்டியா “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்கிற வரிகள் தானாய் என் மனத்துக்குள் ஓடின. அடக்க மாட்டாதவனாய் தாயின் மேல் விழுந்து குமுறிக் குமுறி அழுதேன். இனி நான்தான் ஆதாரம் உனக்கு கவலைப்படாதே என்பது போல் என்னை ஆதரவுடன் எழுப்பி தன் தலைப்பினால் என் கண்ணையும் முகத்தையும் துடைத்துவிட்டு, தன் மேலே ஆதரவுடன் தாங்கிக்கொண்டாள் என் மனைவி.
அக்னி தேவனின் அசுரப் பசிக்கு அன்னையை கொடுத்துவிட்டு அடுத்தடுத்து செய்யவேண்டிய காரியங்களைச் செய்து, அன்னையைக் கரையேற்றியாயிற்று. சாதாரண மனிதன் தானே நான். நமக்கெல்லாம் மறதி ஒரு வரப்ப்ரசாதம். வழக்கம் போல் இயந்திர கதியாய் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியாயிற்று. அடுத்தடுத்து அம்மாவின் ஆசியுடன் முதல் பெண் கல்யாணம். அடுத்த மகன் கல்யாணம், அடுத்து கடைக்குட்டியின் கல்யாணம் எல்லாம் முடிந்து, ஓரளவு கடமைகளை முடித்தாயிற்று என்று இருக்கும் நிலையில் ஒரு தைரியம். வெகுநாட்களாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்த பத்ரிநாத் பயணம். அதற்கு வேண்டிய பணமும் கட்டியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பவேண்டும்.
அப்பா இறந்து போய் குடும்பப் பொறுப்பு அண்ணாவின் தலையில் வந்து, சில காலத்துக்குள் அண்ணாவின் திருமணம் முடிந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து, ஆறே மாதத்துக்குள் அம்மாவைப் பாடாய்ப் படுத்தி அழவிட்டு, வேலைக்காரியைப் போல நடத்தி மனிதர்களிடம் சொன்னால் வம்பு வரும் என்று கோயிலில் போய் உட்கார்ந்து அழுது குமுறி, தன் சோகங்களை அவனிடம் கொட்டித் தீர்த்துவிட்டு நிராதரவான நிலையை மனத்தில் கொண்டு என்னையும் என் தம்பியையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய கடுமையான சூழ்நிலையில் எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு வேலைக்காரியாய் வலம் வந்துகொண்டிருந்த அம்மாநினைவுக்கு வந்தாள். ஒரு பெண்ணால் இப்படிக்கூட ராட்சசி போலச் செயல்பட முடியுமா என்று அனைவருமே வியக்கும் வண்ணம் அம்மாவையும் என்னையும் என் தம்பியையும் வேலை வாங்கி, பட்டினி போட்டு அப்படியும் தன் கொடுமையின் உச்ச கட்டமாக அண்ணாவை விட்டே எங்களை வீட்டைவிட்டுத் துரத்திய மன்னி.
அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. மாலையில் வீட்டுக்கு வந்த அண்ணாவிடம் , நாளையிலிருந்து இந்த வீட்டில் நான் இருக்க வேண்டுமென்றால் உங்கள் அம்மாவும் தம்பிகளும் இங்கே இருக்கக் கூடாது. அப்பிடி அவங்கதான் வேணும்னா நான் எங்கேயாவது ஓடிப் போயிடுவேன். உங்களுக்குதான் மானம் போகும். என்னை நீங்க வீட்டை விட்டுத் துரத்திட்டீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்வேன்’ என்று ப்ரகடனம் செய்தாள் மன்னி. ஒரு பரிதாபமான சூழ்நிலைக் கைதியான ஆண்மகனை அன்றுதான் வாழ்வில் கண்டேன் , ‘வேணாம் மைதிலி . என் அம்மாவையும் என் தம்பிகளையும் என்னை விட்டுப் பிரிச்சிடாதே’ என்று குடும்ப மானம் போகக் கூடாதே என்று அஞ்சி, ரகசியமாகக் கதறிய அண்ணனிடம். ‘நான் சொன்னதைச் செஞ்சிட்டு, என் வீட்டுக்கு வந்து விவரம் சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் இங்கே திரும்பி வரேன்’ என்றபடி, துணிமணிகளை எடுத்துகொண்டு, ஒரு வயதுக் குழந்தையையும் எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே போனாள் மைதிலி மன்னி.
அம்மா அண்ணாவைப் பார்த்து டேய் எனக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம். நாங்க வெளியிலே போறாம் என்று வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து நடுத்தெருவில் நின்று எங்கே போவது என்றே தெரியாமல் விழித்துக்கொண்டு நின்ற அம்மாவை, யதேச்சையாக விஷயம் கேள்விப்பட்டு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்து எனக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்து பத்து ரூபாய்க்கு ஒரு வீட்டையும் வாடகைக்கு ஏற்பாடு செய்த உறவுக்காரப் பெண்மணி.
அதன் பிறகு சுய உழைப்பால் அணு அணுவாய் வளர்ந்து அந்த ஆலையில் வேலைக்கு சேர்ந்து இரண்டு நாட்கள் வேலை செய்த பின் கைகளைப் பார்த்தேன். ஆங்காங்கே கிழிந்து உள்ளங்கை ரணகளமாக இருந்தது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் என்னால் முடியாதும்மா நாளையிலேருந்து வேலைக்குப் போகமாட்டேன்’ என்றேன். அம்மா என்னைத் தீர்க்கமாகப் பார்த்தபடி ‘இல்லே நீ வேலைக்கு போற என்றாள்.
உள்ளங்கையும் மனதும் பழகிவிட்டது இந்த வாழ்க்கைக்கு. நம்ம உடம்பும் மனசும் நாய் மாதிரி எப்பிடிப் பழக்கறோமோ அப்பிடி இருக்கும் என்று அம்மா சொன்னது நியாபகத்துக்கு வந்தது. இந்த நாய்க்கும் உடம்பும் மனசும் பழகியது. ஒரு தைரியம் வந்தது. இன்று நிமிர்ந்து நிற்பதற்கு அன்னிக்கு அம்மா சொன்ன வார்த்தைதான் வேதமாக அடி நாதமாகச் செயல்பட்டிருக்கிறது.
ஆயிற்று , அண்ணாவும் மைதிலி மன்னியிடம் தாக்குப் பிடிக்காமல் சீக்கிரமே போய்ச் சேர்ந்தார். மனிதர்களுக்குக் கைவிட்டுப் போன பின்னால்தானே அருமை புரிகிறது மன்னியும் உணர்ந்தாள். ஒரு நாள் மன்னியிடமிருந்து போன் ‘என்ன கண்ணா ரொம்ப நாளாச்சு சரஸ்வதியையும் கூட்டிண்டு வந்துட்டு போயேன் என்றாள்.
ஆச்சரியம்! வீட்டுக்குப் போனாலே ‘உன்னை யாரு வரச்சொன்னா என்பாள் மன்னி. அந்த மன்னி இப்போது எப்படி மாறிவிட்டாள். தனிமை மனிதரைத் திருத்திவிடுமோ! ஏன் நீங்க ரெண்டு பேரும் வரவே மாட்டேங்கறீங்க ஒரு நாள் வந்துட்டுப் போங்களேன் என்கிறாள்.
அந்த மன்னி எங்களோடு பத்ரிநாத் வருகிறாளாம். மன்னியிடமிருந்து போன். “என்ன கண்ணா நானும் உங்களோடு வரட்டுமா கூட்டிண்டு போக முடியுமா என்றாள். மன்னியும் அம்மாவுக்குச் சமம்தான் அப்பிடீன்னு அம்மாவோட குரல் காதுலே கேட்டது. வாங்கோ மன்னி நாங்க கூட்டிண்டு போயிட்டு வரோம், ஒண்ணும் கஷ்டமில்லே” என்றாள் சரஸ்வதி
ஆயிற்று , பத்ரிநாத் போகும் வழியிலெல்லாம் சரஸ்வதியின் கையைப் பிடித்தபடி வந்துகொண்டிருக்கிறாள் மன்னி. வயசாச்சு நடக்க முடியலை மூச்சு வாங்கறது மன்னிக்கு. நான் சொன்னேன் நிதானமா வாங்கோ அவசரமில்லே என்று ஒரு பக்கம் நானும் இன்னொரு பக்கம் சரஸ்வதியும் கையைப் பிடிச்சு அழைச்சிண்டு போனோம்.
கங்கைக் கரை ஓரம் கங்கை பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள். கண்ணா நானும் கங்கையில் குளிக்கணும் என்றாள் மன்னி. “நீங்க இங்கே கரையோரமா உக்காருங்கோ. நானும் உங்க பிள்ளை மாதிரிதானே. நான் சொம்பாலே மொண்டு கொட்றேன் குளிங்கோ என்று சொல்லிவிட்டு சொம்பால் ககையின் புனித நீரால் மன்னியைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன்.
மனதுக்குள் எங்க அம்மாவைக் கங்கைக்குக் கூட்டிண்டு வர முடியலை. அதுக்காகத்தான் பகவான் எனக்கு இப்பிடி ஒரு கொடுப்பினையைக் கொடுத்தானோ என்னும் எண்ணம். அம்மாவைக் குளிப்பாட்டுவது போலவே இதமாகக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலே ஆணென்ன பெண்ணென்ன எல்லோருமே அர்த்தநாரிகள்தான் அப்பிடீன்னு மனசிலே தோன்றிக்கொண்டிருந்தது.
ஆயிற்று கங்கையில் குளித்துவிட்டு, மைதிலிமன்னிக்கு சரஸ்வதி உடம்பு துடைத்துக்கொள்ளவும் புடவை உடுத்திக்கொள்ளவும் உதவிக்கொண்டிருந்தாள். மூவரும் கங்கைக் கரையில் சற்றே உட்கார்ந்தோம். மன்னி கங்கையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. “ஏன் மன்னி, என்ன ஆச்சு? ஏன் அழறீங்க?” என்றேன்.
“அழலை அண்ணாவை நினைச்சிண்டேன் என்றாள். என்னவோ தெரியலை திடீர்ன்னு என் கையைப் பிடிச்சிண்டு “டேய் கண்ணா நீயும் சரஸ்வதியும் நன்னா இருப்பேள். உங்களுக்கு ஒரு குறையும் வராது என்றாள் மைதிலி மன்னி.
நாம உடுத்திண்டு இருக்கற வஸ்திரத்தை கங்கையிலே விட்டுட்டா நாம பண்ண பாவமெல்லாம் அந்த வஸ்திரத்தோட போயிடும்னு சொல்லுவா அப்பிடீன்னு சொல்லிண்டே ஒரு புடவையைக் கங்கையில் விட்டாள் மன்னி. கங்கையின் பிரவாகத்தில் புடவையும் சுழித்துக்கொண்டு காணாமல் போனது. அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் மன்னி மைதிலி.
சரி மன்னி, நாம இங்கே பத்ரிநாத் கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே மானான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே சரஸ்வதி நதியோட உற்பத்தி ஸ்தானம் இருக்கு. அங்கேயும் போயி பாக்கலாம். ஆனா ஒண்ணு அங்கே கொஞ்சம் உயரமா மலை ஏறணும். சரஸ்வதி நதியை வேறெங்குமே பாக்க முடியாது. அவ பூமிக்கு அடியிலேயே ரொம்ப ஆழமா பிரயாணம் பண்ணிண்டு இருக்கா என்றேன்.
“வேண்டாம் என்னாலே இந்த உயரத்துக்கு மேலே வரமுடியும்னு தோணலே. அதுவும் நீங்க ரெண்டுபேரும் கையைப் பிடிச்சுக் கூட்டிண்டு வந்ததாலே முடிஞ்சிது. நான் சரஸ்வதியை இதோ இங்கேயே பாத்துக்கறேன். புரியலையா? இவளைத்தான் சொன்னேன். உன் பொண்டாட்டி சரஸ்வதியைத்தான் சொன்னேன் என்றாள். சரஸ்வதியின் கையையும் என் கையையும் பிடித்தபடி. மைதிலி மன்னியின் கண்களில் இருந்து வழிந்து பெருகி கங்கையும் யமுனையும் ஸரஸ்வதியும் சங்கமித்து மூலஸ்தானத்திலிருந்து பொங்கி வழிவது போல் கடைக்கண்ணால் என்னையே பார்த்துக்கொண்டு பிரவாகமா பரவசமாய் ஓடிக்கொண்டிருந்தாள் ஆகாயத்திலிருந்து புறப்பட்டு பூமியின் பாவங்களையெல்லாம் நீக்கும் கங்கை.
6
யாருக்கும் தெரியாது
வாழ்க்கையில் முதன் முதலாக, மனசாட்சிக்கு எதிராகச் செய்த ஒரு செயல். ஆமாம் மகத்தான தவறு. ஆனால் யாருக்குமே தெரியாது அவன் செய்த தவறு. யாரும் அவனைக் குறை கூற முடியாது. அவ்வளவு நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செய்த குற்றம். அவனாக வாயைத் திறந்து சொன்னாலொழிய ஒரு ஈ எறும்புக்குக் கூடத் தெரியாது. அப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டாலும் மாட்டிக்கொள்வோம் என்கிற பயமே இல்லை ரமேஷுக்கு தைரியமாக இருந்தான் அவன்.
பார்வதி அம்மாள் குடும்பத்தில் மூன்று பிள்ளைகள், மூன்று மருமகள்கள் பேரன் பேத்திகள் என்று ஒரு குறையுமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கணவனை இழந்து அதன் பின்னரும் தன் தன்னம்பிக்கை தளராமல் தான் பெற்ற மூன்று பிள்ளைகளையும் வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கி, தலை நிமிர்ந்து நடமாடிக்கொண்டிருக்கும் பார்வதி அம்மாள் ஓர் அதிசயம்தான். ரமேஷுக்கு அவர்கள் வீட்டில் அனைவரிடமும் நல்ல விதமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆமாம், அவனுடைய அப்பா காலத்திலிருந்து அவர்கள் குடும்ப நண்பர்களாக அந்தக் குடும்பம் பல காலமாகப் பழகி வந்தது.
ஒருநாள் அந்தப் பார்வதி அம்மா அவனைக் கூப்பிட்டு டேய் ரமேஷ் உன்னை நம்பி உன்கிட்ட ஒரு வேலையைக் கொடுக்கப் போறேன் செய்வியா என்றாள். அதுக்கென்னம்மா செய்யறேன் சொல்லுங்க என்றான் ரமேஷ். அந்தக் குடும்பத்தில் யாருக்குமே தெரியாமல் கொஞ்சம் பணம் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய். அதை யாருக்கும் தெரியாமல் வங்கியில் அவள் பேரில் போடச் சொன்னாள் பார்வதி பணத்தையும் அவனை நம்பி ஒப்படைத்தாள்.
அதுவரை யாரிடமும் கையேந்தாமல் தனித்து நின்று உழைத்து முன்னுக்கு வந்து, கௌரவமாக வாழ்ந்தாயிற்று. தன் அந்திமக் காரியங்களுக்குக் கூட பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது. அப்போதும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்தில் பார்வதியம்மாள் அவருடைய கணவனுக்கு வந்த பென்ஷன் பணத்தில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம். அடடா அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் சேர்த்துவைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள். இவ்வளவு கடமைகளையும் முடித்தும் அவன் நீட்டிய வங்கிக் காகிதங்களில் நம்பிக் கையெழுத்திட்டாள் பார்வதி அம்மாள். அப்போது கூட ரமேஷ் மனிதனாகவே இருந்தான்.
ஆனால் எப்போது அவன் மூளைக்குள் சாத்தான் புகுந்ததோ தெரியவில்லை. அந்தப் பணத்தை வங்கியில் போடாமல் தன் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான் ரமேஷ். அது வரை மனிதனாக இருந்த ரமேஷின் மூளைக்குள் ஓர் எண்ணம். இந்தப் பணத்தை நம்மிடம் கொடுத்தது யாருக்குமே தெரியாது. இதை அப்படியே அமுக்கிவிட்டால் என்ன எந்தக் காலத்தில் தன்னால் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்று சாத்தான் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தச் சாத்தானின் குரலுக்கு ரமேஷ் செவிசாய்த்தான். கெட்டதைச் செய்யும் போது தீய சக்திகள் உதவும் என்பது எவ்வளவு உண்மை. அவன் மனத்துக்குள் ஒரு சாத்தான் புகுந்து, அவனை ஆட்டி வைத்துக்கொண்டிருந்தது.
அந்த அம்மாள் தன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள். அவள் வைத்திருந்த நம்பிக்கை இப்படி ஒரு கீழ்த்தரமான செயலுக்குத் தன்னை ஆளாக்கும் என்று ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் குடும்பத்தாரோடு பழகுவதைத் தவிர்த்திருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. காலம் கடந்த ஞானோதயம். தன் மேலேயே ரமேஷுக்கு வெறுப்பாயிருந்தது. அவன் செயலுக்கு உதவுவது போல் திடீரென்று யாரிடமும் இதைப் பற்றி சொல்லாமலே இருதய வெடிப்பினால் அன்று இரவே இறந்து போனாள் பார்வதி அம்மாள். அப்பாடி அந்தப் பார்வதி அம்மாளும் இறந்து போயாச்சு. இனி தான் செய்த அந்தக் காரியம் யாருக்குமே தெரியாது. ரமேஷுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
செய்தி கேள்விப்பட்டு அவர்கள் வீட்டுக்கு ஓடினான் ரமேஷ். செய்யவேண்டிய சாங்கியங்களையெல்லாம் முடித்து பார்வதி அம்மாளின் பூத உடலைத் தூக்கும் நேரம் வந்தது. பார்வதி அம்மாளின் மூத்த மகன் பார்வதி அம்மாளின் உடலைத் தூக்க ரமேஷை அழைத்துமுன் பக்கமாகத் தூக்குப்பா நீதான் எங்களையெல்லாவிட ரொம்ப உற்ற துணையாய் மூத்த மகன் போல எங்க அம்மாவைக் கவனிச்சே என்றார்.
பார்வதி அம்மாளின் மூத்த மகன் இப்போ அம்மாவோட 16 நாள் காரியங்கள் நடத்தப் பணம் வேணும். பிள்ளைகள் மூவரும் பங்கு போட்டுக்கொண்டு செய்வோம் என்று பேசிக்கொண்டிருந்தனர். ரமேஷ், உன்னைப் பத்தி அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ரமேஷ் என் வயித்திலே பொறக்காத இன்னொரு மகன்னு என்று கூறிவிட்டு பெருமூச்சு விட்டார் மூத்த மகன். இந்தச் சொற்களைக் கேட்டதும் ரமேஷ் மனத்தில் இருந்த சாத்தான் இறந்து போனது. பார்வதியம்மாள் உயிரோடு உலவ ஆரம்பித்தாள்.
ரமேஷ் அவனையும் அறியாமல் நீங்க யாரும் கடசீ வரை கஷ்டப்படக் கூடாதுன்னு நேத்திக்கிதான் என்கிட்ட ஒரு லட்ச ரூபாயைக் குடுத்து அவங்களோட கடைசீ செலவுக்கு வெச்சிக்க சொன்னாங்க. அதுக்குள்ளே இப்பிடி நம்மையெல்லாம் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டாங்களே அம்மா என்று அழுதபடி ரமேஷ் பார்வதி அம்மாளின் உடலைத் தூக்கி அவர்கள் கால் தன் தலையில் படுமாறு வைத்துக்கொண்டுஅம்மாஅம்மா என்று குமுறி அழுதான் ரமேஷ். அவன் பாவங்கள் கரைந்து அவன் கண்களில் வழியத் தொடங்கிற்று.
கலி வெட்கியது!
7
சாக்கடை
என்னவோ ஒரு மாற்றம் தெரிகிறது இவன்கிட்ட… என்னான்னு புரியலை. எப்போதும் போலவே இரவு வருவதும் வரும்போதே குடித்துவிட்டு வருவதும் வழக்கம்போல தொடர்கிறது. ஆனால் ஒரு நிம்மதி. இவன் எப்போதுமே அதிகமாகக் குடிப்பதில்லை. குடித்திருந்தாலும் நிதானம் தவறாமல்தான் இருப்பான். இப்போதும் அப்படியேதான் இருக்கிறான். ஆனாலும் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. அஞ்சலைக்குக் குழப்பம் தலையைத் தின்றாலும் சரி அதுவாக ஒருநாள் வெளியே வரும் என்று அவளும் கூடிய வரையில் இயல்பாகவே இருந்தாள்.
இன்னும் அவன் வரவில்லை. பிள்ளைக்குப் பால் கொடுத்துவிட்டு தூளியில் போட்டு ஆட்டிக்கொண்டிருந்தாள். தூளிக் கயிற்றின் அல்லாட்டம் போல, அஞ்சலைக்கு இவனைக் காதலித்ததும் அதனால் வந்த எதிர்ப்புகளும் அத்தனையையும் பொருட்படுத்தாமல் திடமாக நின்று இவனையே கல்யாணம் செய்துகொண்ட அந்த அத்தனை ரத்தக் களறிகளும் நினைவுக்கு வந்தன.
திடீரென்று ஏதோ இனம் புரியாத சத்தம், எலி வளை தோண்டுவது போல. உற்றுக் கவனித்தவள், அந்த சத்தம், தூளியிலிருந்துதான் வருகிறது என்பதை உணர்ந்து எட்டிப் பார்த்தாள். இவள் கொடுத்த பால் தொண்டையில் மாட்டிக்கொண்டது போலும். குழந்தை மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. பதறிப் போய்க் குழந்தையை எடுத்து, முதுகில் தட்டினாள்.
இன்னும் குழந்தை தவித்துக்கொண்டிருந்தது. அவளுக்கு திடீரென்று ஒரு நிகழ்வு மூளையில் உறைக்கவே, குழந்தையைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு சற்றே ஓங்கி முதுகில் அறைந்தாள். குழந்தையின் வாயிலிருந்து சளியும், பாலும் கலந்து வெளியே வந்து விழுந்தன. குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. ஆனால் நன்றாக மூச்சு விட ஆரம்பித்தது. குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஒரு விபத்திலிருந்து தப்பிய மன நிலையுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அப்படியே உட்கார்ந்தாள்.
உள்ளே நுழைந்தான் கோபால். வழக்கம் போல கொடியில் இருந்த லுங்கிக்கு மாறிவிட்டு கைகால் கழூவிக்கொண்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தான். அவன் முகம் ஏதோ சரியில்லை.
இதோ பாரு புள்ளே, நான் உன்னைக் காதலிச்சுதான் கல்யாணம் செஞ்சிகிட்டேன். நீ படிச்சவ. ஆனா நான் படிக்காதவந்தான். இந்தக் குழந்தை பொறந்துலேருந்து எனக்கு உன்கிட்ட நம்பிக்கையே போயிடிச்சு. நானும் கருப்பு நீயும் கருப்பு ஆனா, இந்தக் குழந்தை மட்டும் நல்லா சிவப்பா பொறந்திருக்கு. பெரிய மனுஷனுங்க வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கறா மாதிரி என்னாலே இருக்க முடியலை. அதான் உடைச்சு சொல்லிட்டேன். நீ உண்மையிலேயே என்னக் காதலிச்சிருந்தா, இப்போ இந்தக் குழந்தையோட ரத்தத்தையும் என் ரத்தத்தையும் சோதனை செஞ்சு பாக்கலாம். அதுக்கு இப்போ நிறைய வசதி வந்திடிச்சு. அப்பிடிச் செஞ்சி இந்தக் குழந்தை என்னோடதுதான்னு சொல்லிட்டாங்கன்னா அதுக்கு அப்புறம் நாம் சேந்து வாழலாம். அப்போதான் என் சந்தேகம் தீரும் என்றான்.
மனத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை அப்படியே முழுங்கிவிட்டு யோவ், என்னா பேசறேனு புரிஞ்சுதான் பேசுறியா சரி இப்போ சொல்றேன் நீ சொன்னா மாதிரி இப்போ நிறைய வசதி வந்துடுச்சி இது உன் குழந்தையான்னு சோதிச்சுப் பாக்க. ஆனா ஒரு பொண்ணு மனசுலே என்னா இருக்குன்னு சோதிச்சுப் பாக்க எந்த நவீன கருவியும் வரலைய்யா! உன்னையை மாதிரி சந்தேகப்படறவனுக்கு உடம்பு மேலே சந்தேகமா மனசு மேலே சந்தேகமான்னு தெரியலை!
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குழந்தைக்கு பொறை ஏறிடிச்சு. சளி தொண்டையிலே அடைச்சிகிட்டு. மூச்சு விட முடியாமே தவிச்சிது. குழந்தையோட ரெண்டு காலையும் பிடிச்சிகிட்டு முதுகிலே ஒரு அறை விட்டேன் தொண்டையிலே அடைச்சிக்கிட்டிருந்த மொத்த சளியும் வெளியே வந்து விழுந்திடிச்சு. ஆனா உன்னைய மாதிரி ஆம்பிள்ளையை தலைகீழா கட்டி, அடி அடின்னு அடிச்சாலும் உன் மனசில இருக்கற சந்தேகம் வெளியே போகாதுய்யா. காலம் முழுதும் உறுத்திக்கிட்டேதான் இருக்கும். இனிமே காலம் முழுதும் மூச்சு முட்டிகிட்டேதான் இருக்கும். உன்னையை மாதிரி ஆம்பிள்ளைங்களுக்கு தெளிவா மூச்சு விட முடியாது.
ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் இது வரைக்கும் உன்னைத் தவிர வேற யாரும் என் மனசையும் தொடலே, உடம்பையும் தொடலே. நான் மனசால வேற ஒருத்தன்மேலே ஆசைப்பட்டு அவனோட படுத்தா, நீ சொல்றியே அதே நவீனத்தை உபயோகிச்சு விஞ்ஞானத்தாலேயும் கண்டுபிடிக்க முடியாதபடி கெட்டுப் போக என்னாலே முடியும். யார் நெனைச்சாலும் கண்டுபிடிக்க முடியாது. ஒரு பொண்ணை அவளா நெனைச்சா தவிர வேற யாராலேயும் கெடுக்க முடியாதுய்யா உனக்கு இதெல்லாம் புரியாது. எப்போ உன் சந்தேகம் தீருதோ, அன்னிக்கு வா. மனசிருந்தா உன்னைய ஏத்துக்கறேன்.
இப்போ மொதல்லே இந்த வீட்டை விட்டு வெளியே போய்யா! என்றாள் தீர்மானமாக.
8
காதலி தினம்
அருண் முதன் முறையாகப் படி தாண்டினான்! கமலனுக்கு ஆச்சரியமாய் இருந்தது அருணா இப்படி! அருண் எப்படிப்பட்ட நண்பன் எப்படிப்பட்ட மனிதன்!
அருண் – அனுபமா வாழ்க்கை அது ஒரு ஆனந்தத் தேரோட்டம் மல்லிகைப் பூந்தோட்டம் வாலிப வயதிலும் கல்லுரியில் படிக்கும் போதும் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல் ரிஷ்யசிங்கர் என்ற பெயர் எடுத்த அருண் அனுபமாவை யதேச்சையாகப் பார்த்த பின் இமைகளை மூட மறந்த அருண். அது காதலா-பூர்வ ஜன்மத் தொடர்ச்சியா?
காதல் எவ்வளவு கடினமான விஷயம் அது கேட்டவுடன் கிடைக்குமா கிடைத்தது! அருணுக்கு மட்டும்.
நேருக்கு நேர் கண்களைப் பார்த்து என்னை மணக்க உனக்குச் சம்மதமா என்று கேட்ட அருணுக்கு அனுபமா அவன் உள்ளத்தைப் படித்தவள் போல் சம்மதம் என்றாள் பெற்றோர் சம்மதத்துடன் ஆனந்தமாக நிறைவேறியது அவர்களின் கல்யாணம்.
ஆந்த்ரீகமான ஆதர்ச தம்பதிகள். அருண் குழந்தையானான். அனுபமா தாயானாள். தாய்மையின் புனிதமான தோற்றம் அனுபமாவின் உடலில் ஒரு புது மெருகேற்றி இருந்தது. கண்களின் கீழே மெல்லிய கரு வளையம். அது அவளுடைய பொன் நிறத்துக்கு இன்னும் கூடுதலான அழகைக் கொடுத்திருந்தது. அணு அணுவாக அவளைப் பார்த்து ரசித்த அருண் அன்றிலிருந்து அவளுக்குத் தாயுமானான் கண்களில் வைத்து இமைகளில் தாங்கினான்.
உடல் சுகத்துக்கு மட்டுமே முதல் இடம் கொடுக்கும் ஆண்களுக்கு மத்தியில் உள்ளத்தை அனுபமாவின் ஆந்த்ரீகமான காதலைப் பெற்றவன் உன்னதமான தாய்மையின் சிறப்பை பெண்மையின் சிறப்பைப் போற்றும் சிறந்த ஆண்மகன் அருண். அந்த அருணா இப்படி!
திருமணமான முதல் வருட ஆண்டு விழா. அதைச்சிறப்பாக கொண்டாடினர் சம்பந்திகள் இருவரும். அருணும் அனுபமாவும் காலையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு உல்லாசப் பறவைகளாய் கடற்கரை பூங்கா சினிமா என்று போய்விட்டு, பிறகு பிரவுசிங் மையத்துக்குப் போய் நண்பர்களிடம் இணையத்தில் பேசிவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பினர். வழக்கம் போல் இனிதான தாம்பத்யம் எல்லாம் முடிந்து அயர்வாய் திருப்தியாய்க் கண்ணயர்ந்தனர் இருவரும்.
மறுநாள் பொழுது விடிந்தது வழக்கமாக விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு ஹாய் டியர் என்று சொல்லிக்கொண்டே கையில் காபியுடன் அருணை எழுப்பும் அனுபமா அன்று காலை அருண் எழுந்த பிறகும் எழவில்லை?
கர்ப்பவதியல்லவா அதனால் ஏற்பட்ட சோர்வு என்று நினைத்த அருண் அவளைச் சீண்டினான். அவள் அப்போதும் அசையாமல் படுத்துக் கிடந்ததைப் பார்த்து போறும் அனு சீக்கிரம் எழுந்திரு இன்னிக்கு டாக்டர் கிட்ட போகணும், 10 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வயித்துல குட்டிப் பையன் எப்பிடியிருக்கான் உன்னோட ஹெல்த் எப்பிடி இருக்குன்னு செக் பண்ணணும் எழுந்திரு அனு என்றான்.
அனு அசையாமல் கிடந்தாள் அருண் பதறிப் போய் அவளின் முகத்தைத் திருப்பினான் மூச்சு நின்று போய் இருந்தது மருத்துவர் வந்து இயற்கையான மரணம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ப்புறம் நடந்ததெல்லாம் அருணின் மயக்க நிலையிலேயே நடந்தது.
சாதாரணமாக எமன் பழி சுமக்கமாட்டான் எந்த ஒருவர் இறப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் ஆனால் அனுபமா விஷயத்தில் எமனே பழி சுமந்தான். அருண் நினைத்தாவது பார்த்தானா எந்த நோயுமில்லாது ஆரோக்கியமாக மான் குட்டியைப் போல் வளைய வந்த அனு ஒரு அலுக்கல் குலுக்கல் இல்லாமல் இரவு தூங்கிய அனு காலையில் எழுந்திருக்கவில்லை.
அனு சிரித்துக்கொண்டே தன் கடைசீ மூச்சை விட்டுவிட்டாள்.மல்லிகைப் பூந்தோட்டம் அலுங்காமல் தீயில் கருகியது போல அமைதியாகப் போய்விட்டாள். முதல் நாள் இரவு அனு அவனைக் கட்டிக்கொண்டு ‘அருண் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான்தான் உனக்குப் பொண்டாட்டி. நீதான் எனக்கு புருஷன்’ என்று நெகிழ்ந்து போய், கண்களில் நீர் வழியச் சொன்னது ஞாபகம் வந்தது. குமுறினான் அருண். அன்றிலிருந்து தன் மொத்த இயக்கத்தையும் மறந்த நடைப் பிணமானான் அருண்.
அதற்குப் பிறகு எத்தனையோ முறை அவனை ஒருசாதாரண மனிதனாக்க எவ்வளவோ முயன்ற கமலன் தோற்றுக் கொண்டே இருந்தான்.
கடைசியாக டேய் அருண். உங்க அப்பா அம்மாவைக் கொஞ்சம் நினைச்சுப் பாரு. நீ பழைய மாதிரி ஆகணும் இந்த உலகத்துல இது சகஜம்டா. இப்பிடியே இருக்காதே உன்னை மாத்திக்கோ என்னோட வா என்று தனக்கே பழக்கமில்லாத ஒரு புதிய இடத்துக்கு அழைத்தான் கமலன்.
அதைக் கேட்டவுடன் அருண் சீறியது ஞாபகம் இருக்கிறது.
டேய் கமலன் என் அனுவை விட சிறந்த பொண்ணு இனிமே உலகத்துல கிடைக்க மாட்டா. இனிமே இந்த மாதிரி பயித்தியக்காரத்தனம் எல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே. இதோட நிறுத்திக்கோ என்று சீறினான் அருண்.
கமலனால் தன்னையே நம்ப முடியவில்லை அந்த அருணா இப்படி,அருணா சொன்னான் அந்த வார்த்தைகளை…? பதறிய கமலனைக் கொஞ்சமும் சட்டை செய்யாத அருண் உன்னால முடியுமா நானே ஏற்பாடு செய்துக்கவா என்று கேட்டவுடன் அதிர்ந்தான் கமலன். நானே ஏற்பாடு செய்றேன் என்று சொல்லிவிட்டு ஏற்பாடுகளும் செய்தான் கமலன்.அன்று இரவு கமலன் சாப்பிடவில்லை, தூங்கவில்லை.
புகழ் பெற்ற அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதிகார வர்கத்தின் கரங்களைப் பணம் என்னும் வசதியால் முடக்கிப் போட்ட அந்த ஐந்து நட்சத்திரஹோட்டலில், குளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஃபோம் மெத்தையில் நிச்சலனமாக மல்லாந்து படுத்து இருந்தான் அருண்! அன்று அவனுடைய அனுபமா அவனை விட்டுப் பிரிந்த நாள். அருணை அவனுடைய முதலிரவு உடை அலங்கரித்திருந்தது. அனுபமாவின் நினைவுகள் அவன் மனத்தை ஆக்ரமித்திருந்தன.
அறைக் கதவு திறந்தது அவள் உள்ளே நுழைந்தாள். அவள் பல பெரிய அரசியல்வாதிகளை மண் கவ்வ வைத்த அவள், பல சினிமாக்காரர்களின் பணம் பண்ணும் யந்திரமான அவள், சினிமாப் பைத்தியங்களின் கனவுக் கன்னியாய் விளங்கி, இரவுத் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கும் அவள், ஒய்யாரமாய் உள்ளே நுழைந்தாள்! அதிர்ச்சி! அவளுக்கு அதிர்ச்சி!!
அவள் வந்தவுடனே ஓடி வந்து அவளை மகாராணியாகப் பாவித்து, காலடியில் வீழ்ந்து கிடக்கும் சீமான்களிடையே, அவள் வந்தது கூடத் தெரியாமல் படுத்துக் கிடக்கும் அருணைப் பார்த்து… தான் வந்த அறையின் எண் சரிதானா என்று சந்தேகப்பட்டு வெளியே சென்று, அறை எண் சரிதான் என்று உறுதியும் செய்து, மீண்டும் உள்ளே நுழைந்தாள் அவள். அப்போதும் அவன் தன்னைக் கவனிக்காததால் எரிச்சலாகி பின் தன் தொழிலுக்கே உரிய சாகசத்துடன் அவனை நெருங்கினாள் அந்த 100% தொழில்காரி. அவனை நெருங்கி ஒயிலாக கவர்ச்சியாகக் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள். வேனிடி பேகை அலட்சியமாகக் கட்டிலில் போட்டுவிட்டு கதவைத் தாழ்ப்பாள் போட்டாள்.
அவள் அவனைப் பார்த்துக் கவர்ச்சியாக சிரித்தாள். அருணின் அருகே வந்து அவனை மென்மையாக முத்தமிட்டாள் அவள் அவனுக்குக் கொடுக்கும் முதல் முத்தம். அருண் திடுக்கிட்டு எழுந்தான்.
நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படி என்ன யோசனை என்று கேட்டுக்கொண்டே அவனை அணைத்தாள் அவள்.
அருண் அவளை தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டே மெதுவாக விலக்கி, கட்டிலில் உட்கார வைத்தான்.
உன் பேரென்னஅருண் கேட்ட கேள்விக்குக் கடகடவெனச் சிரித்த அவள், உனக்கு எந்தப் பேரு பிடிக்குமோ அதான் என் பேரு என்றாள், கவர்ச்சியாகச் சிரித்தபடி. ஆமாம் என் பேரைக் கேட்டீங்களே உங்க பேரென்ன நான் உங்களை எப்படி கூப்பிடறது உங்களோட உண்மையான பேரோ இல்லை உங்களுக்கு எப்பிடிக் கூப்பிட்டா பிடிக்குமோ அந்தப் பேரோ சொல்லுங்க அப்பிடியே கூப்பிடறேன். ஆமா என்ன கேட்டீங்க நான் எப்பிடி இந்தத் தொழிலுக்கு வந்தேன்னுதானே ஆமா உங்களைப் பாத்தா நல்ல பிள்ள மாதிரி தெரியுதே, நீங்க எப்பிடி இங்க வந்தீங்க இப்பிடீ மாத்தி மாத்தி கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா பொழுது விடிஞ்சிரும். வா என் புதிய காதலனே என்றாள் அவள். அருணிடம் எந்தச் சலனமும் இல்லை.
என்னா… என்ன வச்சு கதை எழுதப் போறீங்களா.இல்ல கல்யாணம் செஞ்சுகிட்டு ஒரு விபசாரிக்கு வாழ்க்கை குடுக்கப் போறிங்களா கலகலவெனச் சிரித்தாள் அவள்.
அமைதியாக இருந்த அருண், அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டே அதெல்லாம் இல்ல ஆனா நீ எனக்காக ஒண்னு செய்யணும்
இன்னிக்கு ஒரு நாள் நீ என் மனைவியா என் அனுபமாவா மாறணும், வாழணும் முடியுமா என்று கேட்டுவிட்டு காத்திருந்தான் அருண்.
(ஏற்கெனவே கமலன் இவனைப் பத்தி சொல்லியிருந்ததால் அவளுக்கு இவன் பைத்தியமோ என்று சந்தேகம் வரவில்லை)
சரி அதுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லு என்றாள் அவள் ஒரு வறட்டுக் குரலில்.
நன்றி நீ ஒண்ணும் செய்யவேண்டாம். நீ இன்னிக்கு மட்டும் உடம்பால வாழாதே மனசால வாழு. புரியலையா இன்னிக்கு ஒருநாள் மட்டும்நீ என் கண்மணியா என் பெட்டர் ஹாஃபா என் மனைவியா என் உலகமா எனக்கு எல்லாமா மாறணும் வாழணும் முடியுமா
கேட்டுவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுபவனைப் பார்த்து அவள்… கண்களிலும் முதல் முறையாகக் கண்ணீர் துளிர்த்தது…….! வெகு நாட்களுக்குப் பிறகு.
அவளுக்கு அற்பக் காசுக்காக கட்டிய மனைவியை தன்னை விற்ற அவள் கணவனின் ஞாபகம் வந்தது. காதல் என்றாலே காமம் என்று அர்த்தப்படுத்திக்கொண்டு கண்ட இடங்களில் கட்டிப் புரளும் இப்படிப்பட்ட ஆண்களின் இல்லை இல்லை மிருகங்களின் மத்தியில்… இப்படி ஒரு மனிதனா இவ்வளவு மனிதநேயமா இப்படிக்கூட ஆண்கள், மனைவி மேல் பாசம் வைப்பார்களா.? காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட மனைவியை அவள் இறந்து போன பின்னால் கூட இப்படி நேசிக்க முடியுமா?! அடடா எப்படிப்பட்ட கணவன் இவன்.எப்படிப்பட்ட மனிதன் இவன்? இவனில் இருந்து பிரித்து இவள் மனைவியைக் கொண்டு போக, எப்படி மனசு வந்தது ஆண்டவனுக்கு? இவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம்.
சுதாரித்துக்கொண்டு எழுந்தாள், அந்தத் தொழில்காரி, இல்லை இல்லை மனைவி. குமுறிக் குமுறி அழுபவனை, முகம் தாங்கி அழாதேடா கண்ணா என்று முகம் தாங்கி, தன் சேலைத் தலைப்பால் அவன் முகம் துடைத்து தன் மார்பிலே அவனைத் தாங்கி ஆமா உன் பேரு என்ன என்றாள்.
அருண் என்று ஒரு குழந்தையைப் போல் தேம்பிக்கொண்டே சொன்னவனை அணைத்துக்கொண்டு அருண் இந்த நிமிஷம் முதல் நீ என்ன வேண்டாம்னு சொல்ற வரைக்கும் நான்தான் உன் அனுபமா ! சரி ஒரு நிமிஷம் இரு என்ற அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் அனுபமாவின் முதல் இரவுப் புடவையைக் கட்டிக்கொண்டு ஓர் ஓரமாக உட்கார்ந்து அனுபமாவை மனத்தில் ஆந்த்ரீகமாக நினைத்து ‘அனுபமா நீ யாரோ எவரோ எனக்குத் தெரியாது. நான் இதுக்குத் தகுதியானவள்தானா எனக்குத் தெரியாது. ஆனா நான் உன்னை மனப்பூர்வமா பிரார்த்தனை பண்றேன். இந்த மனுஷனுக்கு அமைதியைக் கொடுக்க நீ என்னுள் வரவேண்டும். உன்னை என்னில் நான் ஆவிர்பவிக்கிறேன். அதனால எனக்கு சக்தி கொடு. இந்த உன்னதமான மனுஷனுக்கு என்னை அனுபமாவாகவே காட்டு ன்னு வேண்டிக்கிட்டு மனதால் உடலால் ஆத்மாவால் அனுபமாவாக மாறினாள் அவள்.
அனுபமாவாக மாறிய அனுபவமே சுகமாக, இதமாக, புதுப்பிறவி எடுத்தது போல் உடலில் புது இரத்தம் பாய்ந்ததுபோல், புனர் ஜன்மம் எடுத்தாள் அவள்.
அல்ல அல்ல இப்போது அவளல்ல…! இவள்.
“மானச சஞ்சரரே ப்ரம்மணீ மானச சஞ்சரரே
மதஸ்லிதி பின்ச்சா லங்க்ருத சிகுரே”
எங்கிருந்தோ ஒலித்துக்கொண்டிருந்தது.
அவள் இல்லை இல்லை அனுபமா என்னும் இவள் எழுந்தாள். அருணும் எழுந்தான். அருணும் அனுபமாவும் கை கோத்துக்கொண்டு, அறைக்கு வெளியே நடந்தனர். காலாற நடந்தனர். அனு, அருணின் தோளில் தலை சாய்த்துக்கொண்டு குதூகலமாக ஆனந்தமாக பீச் சினிமா ஹோட்டல்,
கடைசியாக ஆத்மார்த்தமாகக் கோயிலுக்கும் சென்றுவிட்டு மீண்டும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தனர். அன்று அருணுக்கு இரண்டாம் முதல் இரவு. இவளுக்கும்தான். ஏனென்றால் அவள்.. இல்லை இல்லை இவள் அனுபமாதானே. பொழுது விடிந்தது. அனுபமா எழுந்து குளித்துவிட்டு தலை உலருவதற்காக நுனி முடிச்சிட்டு அருணை எழுப்பினாள். அனுபமாவின் தலையிலிருந்து அருண் முகத்தில் நீர்த் திவலைகள் தெறித்தன. அருண் எழுந்தான்.
குட் மார்னிங் அனு என்றான். குட்மார்னிங் சொல்லி அவனை மென்மையாக முத்தமிட்டாள் இவள். அனுபமா.
அடடா முதலில் வந்த அவள் கொடுத்த முத்தத்துக்கும் இந்த இவள்… அனுபமா முத்தத்துக்கும் எத்தனை வேறுபாடு?
இவள் சிரித்தாள். அது ஒரு குடும்பப் பெண்ணின் சிரிப்பு.
இவள் நடந்தாள். அது ஒரு குடும்பப் பெண்ணின் நடை.
இவள் கொடுத்த முத்தம், இது இல்லறத்துத் தேவதை கொடுக்கும் முத்தத்துக்கு ஈடான முத்தம்.
இவள், அருணின் கையைப் பிடித்தபடி…. அருண் !!!
”என் வாழ்க்கையிலே நேத்து ஒரு பொன்னான நாள் ! இல்லை.. இல்லை நான் பெண்ணான நாள் ! நான் இந்த நாளை மறக்க மாட்டேன் என்றபடி அனுபமாவின் புடவையை அவிழ்த்து மடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டு அங்கே வைத்துவிட்டு, சரி நான் போய்ட்டு வரட்டுமா என்றாள்.
அரைகுறை மனதுடன் அருண் மவுனமாகத் தலை ஆட்டினான். இவளில் இருந்து பிரிந்து அவள் ஏக்கத்துடன் வெளியே சென்றாள்.
கமலன் உள்ளே நுழைந்தான்.
அருண் அவள் இந்தக் கவரை உன்கிட்ட கொடுக்கச் சொன்னா இந்தா என்று கமலன் நீட்டிய அந்தக் கவரை வாங்கிப் பிரித்தான் அருண். அதிலிருந்த கரன்சிகள் அந்த அறையெங்கும் சிதறின. அந்தக் கடிதத்தில்
உலகத்தின் சிறந்த ஆண்மகனே அருண்
” தாம்பத்யத்துக்கு விலை கிடையாது ”
என்று எழுதி என்றும் உங்கள் அனுபமா
என்று கையொப்பம் இட்டிருந்தாள் அவள். அருண் குமுறிக் குமுறி அழத் தொடங்கினான். அருண் எதற்காக அழுகிறான்? யாருக்காக அழுகிறான் என்று தெரியாமல் கமலன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
9
கைச்சூடு
தொலைபேசி அழைப்பு கிர்ரிங் என்றது எடுத்துப் பேசினேன் மறு முனையில் 14 வயது நிரம்பிய சுரேஷ், என் அக்கா மகன் “என்னப்பா சுரேஷ், என்ன விஷயம் என்றேன். மாமா அப்பாவுக்கு உடம்பு சரியில்லை டாக்டர் வந்து பாத்துட்டுப் போனார் என்றான். என்ன ஆச்சு என்று பதறினேன். தலை வலிக்கிறது என்று மாலையில் வந்து படுத்தார். தலைவலி தாங்காமே சுவத்திலே முட்டிக்கறார். அதுனாலே டாக்டரை வரவழைச்சு காமிச்சோம். டாக்டர் வந்து பாத்துட்டு சலைன் வாட்டர் ஏத்தணும்னு வீட்டிலேயே ஏத்தினார்” என்றான்.
இப்போ எப்பிடி இருக்கு என்றேன். ஆனால் மனத்துக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத கிலி. மாமா எப்பிடி மாமா சொல்றது டாக்டர் வரும்போதே அப்பாவுக்கு உயிர் போயிடுத்து. அம்மாவைச் சமாளிக்கத்தான் சலைன் வாட்டர் ஏத்தறா மாதிரி டாக்டர் செட்டப் செஞ்சி வெச்சிட்டுப் போனார். டாக்டர் எங்க பக்கத்து வீட்டு அம்மாகிட்டே சொல்லிட்டுப் போய்ட்டாரு. அந்த அம்மா என்கிட்ட மட்டும் சொன்னாங்க. ஆனா அம்மாவைப் பக்கத்திலே உக்கார வெச்சிட்டு உங்களுக்கு போன் செஞ்சேன்” என்றான்.
நான் உடனே சமாளித்துக்கொண்டு அம்மாகிட்ட சொல்லிடாதே. நாங்கள்ளாம் வர வரைக்கும் சலைன் வாட்டர் ஏறுதுன்னு சொல்லு. சீக்கிரம் நாங்க வந்துடறோம் என்று சொல்லிவிட்டு, முடிந்த வரை உறவினர்களுக்குச் செய்தியைச் சொல்லிவிட்டு, கிடைத்த பேருந்தில் ஏறி, பெங்களூருக்குக் கிளம்பினேன். இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் நினைவு வந்தது, எதுவும் சாப்பிடவில்லை என்று. ஆனால் சாப்பிடப் பிடிக்கவில்லை. தொண்டை வறண்டு போனது. சரியென்று எதிர்க் கடையில் ஒரு விக்ஸ் மாத்திரை வாங்கி வாயில் போட்டுக்கொண்டேன். விக்ஸ் மாத்திரையின் இனிப்பு, தொண்டையில் இறங்கியதும் நினைப்பு வந்தது. என்ன இது? துயரத்தில் இருக்கும் போது கூட மனிதனுக்குப் பசியும் தாகமும் துன்பப்படுத்துவது நிற்பதில்லை என்றும், அதுவும் போதாக் குறைக்கு விக்ஸ் மாத்திரையின் இனிப்பு தொண்டையில் இறங்கியது. அப்போதுதான் நினைவுக்கு வந்தது இது போன்ற நேரத்தில் யாராவது இனிப்பு உண்பார்களோ ஏன் இப்படி ஏடாகூடமாக ஏதோ செய்துகொண்டிருக்கிறேன் என்னும் நினைவு வந்தது.
என்னதான் மனத்தை அமைதிப்படுத்திக்கொண்டு தைரியமாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், எல்லா நடிப்புகளுமே மற்றவரை ஏமாற்றப் பயன்படுகிறதே தவிர நம் மனத்தை ஏமாற்றவே முடிவதில்லை என்னும் உண்மை புரிந்தது. விக்ஸ் மாத்திரையின் இனிப்பே கசந்தது. கீழே இறங்கிப் போய்க் குப்பைத் தொட்டியில் அதைத் துப்பினேன். விக்ஸ் மாத்திரையைத் துப்ப முடிந்தது. ஆனால் நினைவுகள்
ஆமாம், என் மனத்துக்கு இனிய சகோதரி அவள் துன்பத்தில் இருக்கிறாள் அவளின் வாழ்க்கைத் துணை அவளை விட்டுப் பிரிந்தது கூடத் தெரியாமல் பரப்ரும்மமாய்ப் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறாள் தன் கணவனுக்கு ஏதும் ஆகக் கூடாது என்று. இனி ஆவதற்கு என்ன இருக்கிறது கொடுமை அல்லவா இது மனிதர்களுக்கு ஏன் இது போன்ற நிலைகளை இறைவன் ஏற்படுத்துகிறான் இறைவன்.
நாத்திகர்கள் சொல்வது போல் இறைவன் என்பவன் ஒருவன் இல்லையோ அல்லது இருந்தும் இரக்கம் இல்லாதவனாகத்தான் இருக்கிறானா இறைவன் மனம் கசந்து போனது விக்ஸ் மாத்திரை போல். இறைவனும் விக்ஸ் மாத்திரை போலத்தான் வேண்டும்போது போட்டுக்கொண்டாலும் முதலில் இனித்தாலும் அதன் பிறகு துயரங்கள் நம்மை மூழ்கடிக்கும் போது கசந்து போகிறான் எப்போது கசக்கிறான் எப்போது இனிக்கிறான் என்பதும். எந்தச் சூழ்நிலையிலும் நம் இருமலைப் போக்காமல் வெறும் ஏமாற்று வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறான் நம் துன்பங்களைப் போக்காமல். அதிகம் கேட்டால் விதி என்று சமாளிக்கப் பல பேர் இருக்கையில் தனக்கு ஒன்றும் கவலையில்லை என்பது போல கல்லுளி மங்கனாக இருக்கிறான் இறைவன். கல்லுளி மங்கன். ஆமாம் கல்லுளி மங்கன்தான்.
மனத்தில் ஏதோ சிந்தனைகள். சார் டிக்கட் வாங்கறீங்களா என்று நடத்துநரின் குரல் கேட்டதும் மீண்டேன். டிக்கட் வாங்கி பையில் வைத்ததும் மீண்டும் கை மனத்தில் பட்டுவிட்டது போலும். ஸ்விட்ச் போட்ட ரேடியோ போல பாடத் தொடங்கியது மனக் குரல்.
எனக்குப் பத்து வயதிருக்கும். என் அக்காவுக்குப் பதினாலு வயது ஆனால் என் கையைப் பிடித்துக்கொண்டு உலகையே வலம் வருவாள் தைரியத்துடன். ஆம் அப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை என் மேல். எப்போதும் என் உள்ளங்கை, அவள் கைகளுடன் இணைந்தே இருக்கும். அந்தப் பாசமான அக்காவின் கைச்சூடு இப்போதும் என்னால் உணர முடிகிறது. யாரேனும் தவறான பார்வையை என் அக்காவின் மேல் வீசினால் ஒரு முறை முறைப்பேன், அந்த வயதிலேயே. அது எப்படியோ, அது தவறான பார்வை என்று எனக்குப் புரியும். என் அக்கா சிரிப்பாள். வீட்டுக்கு வந்தவுடன் கேட்பாள்.
ஏன்டா தைரியமா முறைக்கிறியே அவன் அடிச்சா என்ன பண்ணுவே ‘ஓங்கி ஒரு உதை விடுவேன். அவன் கீழே போயி விழுந்துடுவான், ஆமா’ என்பேன் ஆக்ரோஷத்துடன். விழுந்து விழுந்து சிரிப்பாள் அக்கா. வளையல் கடையா காய்கறிக் கடையா. எல்லாக் கடைகளுக்கும் கோயிலுக்கும் என் கைப்பிடித்தே கூடவே அழைத்துச் சென்ற அக்கா. எப்படி பேரம் பேசுவது எப்படி சாமி கும்பிடுவது என்றெல்லாம் எனக்கு நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் இருந்த அக்கா. இதமாகவும் பதமாகவும் எனக்கு வாழ்க்கையின் நடைமுறையை உணர்த்திய அக்கா.
நன்றாக நினைவிருக்கிறது. முதன் முதலில் அவள் படிக்கும் பள்ளியில் என்னை முதல் வகுப்பில் சேர்த்துவிட்டு, அவள் அவளுடைய வகுப்புக்குச் சென்றாள். பத்திரமா இருக்கணும் நான் மாடிலே வேற கிளாஸ்லே இருக்கேன் பயப்படாதே ’ என்றெல்லாம் சொல்லிவிட்டு அவள் அகன்றதும் வீறிட்டு அழ ஆரம்பித்தேன். பிடிவாதம் பிடித்தேன். ஆக முதல் நாள் அவள் வகுப்பிலே அவள்கூடத்தான் உட்கார்ந்தேன்.
ஆமாம் முதன் முதலாக ஒண்ணாம் வகுப்புக்குப் பதிலாக ஆறாம் வகுப்பில் உட்கார்ந்த ஒரே மாணவன் என்னும் பெருமையை எனக்களித்த அக்கா.
அவளுக்கு இப்படி ஒரு சோதனையா அதுவும் வாழ்க்கைத் துணையை இந்த வயதிலேயே இழந்து அல்லல் படும் துயரம் அவளுக்கு வாய்த்ததா தெய்வமே இது நியாயமா என்றெல்லாம் மனத்துக்குள் அரற்றிக்கொண்டிருந்தாலும் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்க முடிந்தது எனக்கு. அக்கா சொல்லிக் கொடுத்த பல பாடங்களில் இதுவும் ஒன்று. பேருந்து, பெங்களூரை அடைந்தது. அனைவரும் வீட்டுக்குள் நுழைந்தோம்.
அக்கா சலனமே இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க, எனக்கு அடி வயிற்றிலிருந்து பீரிட்டு வந்த துக்கத்தை, எப்படி அடக்கினேனோ தெரியவில்லை. அக்காவுக்கு விவரம் சொன்னோம். தலையைக் கோதி முடித்துக்கொண்டு எழுந்தாள். அடுத்து, அவள் போட்ட கட்டளைகளால் அத்தனை காரியங்களும் நடந்தன. பதினாறு நாட்கள் காரியங்கள் எல்லாம் முடிந்தது. எல்லாம் முடிந்து ஓய்வாக உட்கார்ந்தோம்.
என் அக்கா அத்தனை பெரியவர்கள் இருந்தும் என் அருகில் வந்து உட்கார்ந்து, என் கையைப் பிடித்துக்கொண்டாள். அவள் மனத்தின் முழுச் சூடும் அவள் கைவழியே நான் உணர்ந்தேன். அக்கா எப்பிடிக்கா என்று ஆரம்பித்தேன். என் கையை இறுகப் பிடித்து அழுத்தியபடி, என் அக்கா சொன்னாள்.
எனக்கு அவர் போன வினாடியே தெரிஞ்சி போச்சுடா சுண்டு வெரல்லே அடிபட்டாலே துடிச்சுப் போறமே என் உயிரே போறதுன்னா எனக்குத் தெரியாம இருக்குமா எனக்கு தெரியும்டா ஆனா இந்தப் பசங்க, சிறுசுங்க பயந்துடப் போறதேன்னுதான் நீங்கள்ளாம் வர வரைக்கும் எதுவும் தெரியாத மாதிரி உட்காந்திருந்தேன். இனிமே நான் என்னடா செய்வேன்” என்று சொல்லிக்கொண்டே ஆக்ரோஷமாய் அழ ஆரம்பித்தாள். நாங்கள் உறைந்தோம்!
 
10
இலவச மருத்துவம்
” இலவச மருத்துவம் ”
அந்த புகழ் பெற்ற மருத்துவ மனையின் திறப்பு விழா, அதுவும் எங்கள் பகுதியில். திறப்பு விழா முதல் நாள் அன்று வருவோருக்கு வைத்தியம் இலவசம் என்று ஒரு அறிவிப்பு வேறு! போய்ப் பார்க்கலாம் சிறிது நாட்களாகவே தலை வலி வந்துகொண்டே இருக்கிறது.
குறிப்பிட்ட நாள் அன்று அந்த மருத்துவ மனையின் திறப்பு விழாவுக்கு போனேன்.இலவசம் என்று அறிவித்தாலே உடனே கூடும் கூட்டம்,அதற்கு ஏற்றார்ப்போல மருத்துவ மனை அருகே மக்கள் கூட்டம். அங்கே போகும் வழி நெடுக சுத்தம் செய்து சுண்ணாம்பு போட்டு வைத்திருந்தார்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதே போல் எல்லா நாட்களிலும் பராமரித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
யாரோ மந்திரி வந்து திறந்து வைக்கப் போகிறார் என்று ஒலி பெருக்கியில் அறிவிப்பு அளித்துக்கொண்டே இருந்தார்கள். அந்த மந்திரி வந்து திறக்கும் வரை பொது மக்கள் அமைதி காக்கும் படி வேண்டிக்கொண்டிருந்தார்கள். மக்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தார்கள் (வாழ்க்கையில் அல்ல) மருத்துவ மனையை
நோக்கி. கூட்டம் அலை மோதியது. வரிசையாக கார்கள் சைரன் ஒலியோடு முழங்கியபடி வந்து நின்றது. ஒரு காரிலிருந்து மந்திரி இறங்கினார். ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டஇடத்தில் மந்திரி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க என்று சொல்லும்படியாக நிதானமாக நடந்து கொண்டிருந்தார்.
மக்கள் கல்லிலும் பள்ளத்திலும் மேட்டிலும் அவதிப்பட்டாலும் தங்கள் கஷ்டங்களைப் பாராமல் மந்திரியைப் பார்க்கும் ஆர்வம் மிகுதியால் ந்திரியைப் பார்க்க முண்டியடித்தனர், மந்திரி மருத்துவ மனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மக்கள் கரகோஷம் செய்தனர்.
மீண்டும் மந்திரி காரில் ஏறிக்கொள்ள அதே சைரன் ஒலியோடு கார்கள் விரைந்தன,காணாமல் போயின. ரத்தினக் கம்பளம் சுருட்டி வைக்கப்பட்டது பத்திரமாய், அது வரை மக்கள் வெள்ளம் உள்ளே வராமல் இருக்க காவல் துறையினர் மிகக் கவனமாக தடுப்புகளிப் போட்டு மக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர் . மருத்துவ மனையின் உரிமையாளரிடமிருந்து வந்த செல்போன் செய்தியினால் காவல் துறை அதிகாரி தன் ஆட்களுக்கு சமிக்ஞை செய்தார் விலகலாம் என்று ,காவல் துறை விலகியது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து ஆரவாரமாய்க் குரல் கொடுத்துக்கொண்டே ஓடியது.
சற்று நேரத்தில் வயதானவர்கள் பெண்மணிகள் குழந்தைகள் போன்றோர் கீழே விழுந்தனர் மக்கள் கூட்டத்தால் மதங்கொண்ட யானைக் கூட்டத்தினால் மிதிக்கப் படுவது போல மிதி பட்டனர். ஆங்காங்கே மக்களின் அவலக் குரல், ஓலமாய் வீறிட்டது, பலர் இறந்து போயினர், பலர் கைகால்கள் உடைந்தது சிறு குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் திணறி இறந்தனர்.
மருத்துவ மனையின் உள்ளிருந்து பல தாதியர் ஓடி வந்து அடிபட்டோரையெல்லாம் தூக்கிச் சென்று உடனடி மருத்துவம் இலவசமாக அளித்தனர். இறந்து போனவர்களுக்கு இலவசமாகவே சான்றிதழ்களும், கொண்டு செல்ல வாகனங்களும் இலவசமாகவே ஏற்பாடு செய்யப்பட்டது.
நான் இந்தக் காட்சியெல்லாம் என் காமிராவில் பதிப்பிக்க முயன்றேன் அப்போது காணாமல் போயிருந்த ஒரு காவல்காரர் என் காமிராவை பிடுங்கி தூக்கிப் போட்டு காலால் மிதித்து உடைத்துவிட்டு, என்னையும் அவர் லத்திக்கம்பால் ஒரு போடு போட்டார். நினைவிழந்தேன், கண் விழித்துப் பார்த்த போது என் மனைவி என் அருகே கவலையுடன் அமர்ந்திருந்தாள்.
அந்த புகழ் பெற்ற மருத்துவ மனையின் குளிர் சாதன அறையில் என் காயங்களுக்கும் மருத்துவம் செய்து படுக்க வைத்திருந்தனர். மனதுக்குள் ஆத்திரம் பொங்கியது, எப்படியாவது இந்தச் செய்தியை பத்திரிகைகளுக்கு அளிக்க வேண்டும், மக்களிப்படியெல்லாம் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு தங்களின் பொன்னான எதிர்காலத்தையும் ,உயிரையும்கூட இழக்கிறார்களே இது மிகவும் தவறு என்று பத்திரிகைகள் மூலமாக மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்னும் எண்ணத்தில். ஒரு பத்திரிகைக்காரரை செல் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் சொன்னார் சார் ஏற்கெனவே செய்தி போட்டுட்டோமே படிச்சுப் பாருங்க சார் என்றார்.
பக்கத்தில் இருந்த பல பத்திரிகைகளை எடுத்துப் படுத்துப் பார்த்தேன்
அனைத்துப் பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்தில்
தர்மவான் தர்மலிங்கம் மருத்துவ மனை திறப்பு விழா கோலாகலம்
இலவச மருத்துவ உதவியால் மக்கள் மகிழ்ச்சி”
மக்கள் தர்மலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்
என்று படித்துவிட்டு மீண்டும் மயங்கினேன்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
11
துளசி மாடம்
அப்பா, நானும் உனக்குப் பொறந்த பொண்ணுதானா ஏம்ப்பா என்னை மட்டும் எப்பவும் திட்டிகிட்டே இருக்கீங்க அக்கா எது செஞ்சாலும் பாராட்டறீங்க. ஆனா நான் எது செஞ்சாலும் அதிலே ஒரு குறை கண்டுபிடிச்சிகிட்டே இருக்கீங்க ஏம்ப்பா உங்களுக்கு இந்த பாரபட்சம் நீங்க அடிக்கடி என்னை யார்கிட்டயோ தவிட்டுக்கு வாங்கினதா சொல்லும்போதெல்லாம் விளையாட்டா சொல்றீங்கன்னு நெனைச்சிகிட்டு இருந்தேன்.
ஆனா அது விளையாட்டு இல்லேன்னு என் மனசிலே படுது. சொல்லுங்கப்பா நானும் நீங்க பெத்த பொண்ணுதானா கண்களில் துளிர்த்த கண்ணீர் முத்துக்களுடன், நகம் கடித்தபடியே கேட்ட மகள் பிரியாவை நிமிர்ந்து பார்த்தார் ஷண்முகம். பிரியா முதல்லே இந்த கண்ணீர் அப்புறம் நகம் கடிக்கறது ரெண்டையும் விட்டுடு. இந்த ரெண்டு வழக்கமும் இருக்கறவங்க தன்னம்பிக்கை இல்லாதவங்க அப்பிடீன்னு பெரிய பெரிய மனோதத்துவ மேதைகள் எல்லாம் சொல்றாங்க. இங்கே வந்து உக்காரு!” என்றார் இதமான குரலில்.
பிரியா எதிரே வந்து உக்கார்ந்தாள். இப்போ நல்ல பொண்ணு நீ. சரி மறுபடியும் நீ கேட்ட கேள்வியைக் கேளு என்றார் ஷண்முகம். “சரிப்பா, மறுபடியும் கேக்கறேன். நானும் நீங்க பெத்த பொண்ணுதானா” ஆக்ரோஷமாக மீண்டும் கேட்டாள் பிரியா! “இல்லேம்மா, நீ நான் பெத்த பொண்ணு இல்லே என்றார் ஷண்முகம், அமைதியாக. பிரியா அதிர்ந்து போய் அழ ஆரம்பித்தாள்.
போதும் உங்க விளையாட்டு. குழந்தையை ஏன் இப்பிடி கலங்க வைக்கிறீங்க நிறுத்துங்க உங்க பேச்சை என்ற மனைவி காமாட்சியிடம், இல்லே காமாட்சி, நான் பிரியாவைக் குழப்பலே தெளிய வைக்கப் போறேன். ஆமாம் எல்லாத்தையும் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. அதுனாலே என்னைப் பேசவிடு காமாட்சி என்றார் ஷண்முகம். காமாட்சி ஏதோ புரிந்தாற்போல் அமைதியாக உட்கார்ந்தாள். ஷண்முகம் மேலும் பேச ஆரம்பித்தார்.
இப்போ நீ அழறியே இதுதான் உன் வாழ்க்கையிலே கடைசீ முறையா இருக்கணும். இனிமே எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ அழக்கூடாது. பிரியா! சாதாரணமா எல்லாப் பொண்களும் இருக்கற மாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு , யோசிக்காம அழவேண்டிய பொண்ணு நீ இல்லேம்மா. முதல்லே கண்ணைத் துடைச்சிக்கோ. இனிமே நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் அழக்கூடாது. இப்போ நான் சொல்றதைக் கவனமாக் கேளு . நான் சொல்லப் போற ஒவ்வொரு வார்த்தையும் உன்னோட எதிர்காலம் இந்த நாட்டோட எதிர்காலம்.
நம்ம நாடு பாரத நாடு, இதுலே தாயா இருந்து, நம்மையெல்லாம் காக்கற தெய்வம் பாரத தேவி .
நாடு இன்னிக்கு இருக்கற நிலைமை தெரியுமா உனக்கு இப்போ இருக்கற நிலமையிலே பெண்கள் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைன்னு மஹாகவி பாரதியார் சொன்னா மாதிரி தீமைகளைப் பொசுக்கற மஹிஷாசுரமர்த்தினியா ஒரு நல்ல சக்தியா இந்த நாட்டுக்கே தாயா விளங்கணும். தீமைகளை அடியோடு ஒழிக்கணும். இப்போ நாட்டிலே இருக்கற லஞ்சம் ஊழல் இதையெல்லாம் அழிக்கிற விஸ்வரூபக் காளியா உருவெடுத்து கெட்டவங்களையெல்லாம் திருத்தி அல்லது அழிச்சு நல்லவங்களையும் நாட்டையும் காப்பாத்தற தீரம் மிகுந்த உக்கிர காளியா உருவெடுக்கணும். அதுக்காகத்தான் உன்னை எந்த அளவுக்குப் பண்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பண்படுத்தத்தான் நான் உன்னோட சிறு வயசிலேருந்தே உன்னை மட்டும் பாத்துப் பாத்து வளத்தேன்.
பெரியவ ரேகாவுக்கும் உனக்கும் ஒரே மாதிரிதான் சொல்லிக் குடுத்தேன். சாதாரணமா எல்லாப் பெண்களைப் போல அவளும் நல்ல குணத்தோட இருப்பா. ஆனா அதுக்குமேலே வீராங்கனையா அவ வளர்றதுக்கு சந்தர்ப்பமில்லே அப்பிடீன்னு புரிஞ்சிண்டேன். ஆனா, உன்னை எப்பிடி வளக்கணும்னு முடிவு செஞ்சு, அப்பிடி வளர்க்கறதிலே மட்டும் ஒரு தனி அக்கறை காமிச்சேன் அதுக்கு ஒரு காரணம் இருக்கு.
என்னோட வளர்ப்பு முறை, உன்னைப் புண்படுத்தி இருக்கலாம். ஆனா, நிச்சயமா நான் எதிர்பாக்கற அளவுக்குப் பண்படுத்தி இருக்கும் அப்பிடீங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. உனக்குன்னு ஒரு பெரிய பொறுப்பு இருக்கும்மா. இப்போ சொல்றேன் நீ யாரூன்னு! நீ யாரோட பொண்ணுன்னு சொல்றேன். உங்க அப்பா என்கிட்ட எதுக்காக உன்னைக் குடுத்து வளக்கச் சொன்னாருன்னு சொல்றேன். ஆனா நீ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு குடுக்கணும். சரியான நேரம் வரும் வரைக்கும் இந்த ரகசியத்தைக் காப்பாத்துவேன்னு சத்தியம் செய்யிம்மா, நான் உன்னை நம்பி உங்க அப்பா யாருன்னு சொல்றேன்” என்றார் ஷண்முகம்.
அவர் பேசுவதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பிரியா கண்கள் மலர அப்பா என்னாலே இந்த உண்மையான அதிர்ச்சியை தாங்க முடியலை. இருந்தாலும் நான் உங்க பொண்ணுப்பா! உங்களோட பொண்ணுதான்! இப்போ நீங்க சொல்லப் போற யாரோ ஒருத்தரோட பொண்ணா நான் பொறந்திருக்கலாம் ஆனா பெரியாழ்வார் வளத்த பொண்ணு ஆண்டாள் மாதிரி நான் எப்பவுமே உங்க பொண்ணுதாம்ப்பா1
எனக்கு நீங்கதான் பெரியாழ்வார்! இப்பிடிப்பட்ட நேர்மையான ஒரு தகப்பனுக்கு வளர்த்த மகளா ஆனதுக்கு சந்தோஷப்படறேன். என்னை விடக் குடுத்து வெச்சவங்க வேற யாருமே இருக்க முடியாது! அதுனாலே எப்பவுமே உங்க பொண்ணுதான் நான். குடுத்த வாக்கை நிச்சயமா காப்பாத்துவேன். நீங்க நினைக்கிறா மாதிரி இந்த நாட்டை, இந்த நாட்டு மக்களைக் காப்பாத்தற ஒரு நல்ல சக்தியா என்னை என் மன உறுதியை நான் வளத்துப்பேன் என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள் பிரியா!
இங்கே வாம்மா என்று பிரியாவை கிட்டே அழைத்து, அப்பிடியே தோளிலே சாய்த்துக்கொண்டு, தலையைத் தடவி, உச்சி முகர்ந்து, நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் நீ என் பொண்ணுதாம்மா! எந்த ஜென்மத்துப் பந்தமோ எப்போ நீ என் மகளாப் பொறந்து, என்கிட்ட இல்லாமப் போயி என்னோட இருக்கணும்னு வரம் வாங்கிண்டு யாருக்கோ பொறந்தாலும் சரியா என்கிட்ட வந்து சேர்ந்து வளர ஆரம்பிச்சியோ அப்பவே எனக்கு புரிஞ்சிடுத்தும்மா நீ என் பொண்ணுதான்னு. குடுப்பினை இல்லாம கிடைக்குமா, உன்னை மாதிரி ஒரு பொண்ணு? நான் பெரியாழ்வாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனா என்னைப் பொறுத்தவரை நீதாம்மா ஆண்டாள் என்றார் நெகிழ்ந்து.
சமாளித்துக்கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்ட ஷண்முகம் இந்த வினாடிலேருந்து உன் கடமை ஆரம்பிக்குது. இனி மகளே உன் சமத்து என்றார். மூத்தவள் ரேகாவும் காமாட்சியும் பிரியாவை அணைத்துக்கொண்டனர்.
தொலைக்காட்சியில் நேரடி ஓலிபரப்பு, பரபரப்பான அரசியல் நிகழ்வுகள்! ஊழல் செய்து அவர் குற்றவாளி என்று எதிர்க் கட்சிகள் ஏகோபித்த எதிர்ப்பை தெரிவித்தும் அவரை, கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாதே என்கிற சுயநலத்தால், ஆளும் கட்சியைச் சார்ந்த அவரை நிரபராதி என்று நிரூபிக்க முயன்று கொண்டிருந்தது. ஆமாம், திரு.ராஜசேகர் பல காலமாக அரசியல்வாதியாகவே வாழ்ந்து, பல ஆண்டுகள் பதவிகள் வகித்து வந்த ராஜசேகர் அவர்களின் வீடு, புலனாய்வுத் துறையினரால் சோதனைக்கு ஆளாகிக் கொண்டிருந்த காட்சியை நேரிடையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர். மக்கள் ஆர்வத்துடன் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
புலனாய்வுத் துறை மேலதிகாரி முழுவதுமாக அவர் வீட்டைச் சோதனை போட்டுவிட்டு, அவர் வீட்டில் ஒரு தடயமும் கிடைக்கவில்லை அவர் மேல் எந்தக் குற்றச்சாட்டும் சொல்ல முடியவில்லை என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கே அனுமதியுடன் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். அவள் பிரியா! அவள் கொடுத்த சொத்து விவரங்கள், பத்திரங்கள், அனைத்தும் மேசையின் மேல் பரப்பப்பட்டன. பிரியா பொது மக்களிடம் நேரிடையாக பேசத் தொடங்கினாள். இந்த அரசியல் மேதை திரு.ராஜசேகர் என் தந்தை. அதற்கு இதோ ஆதாரம். நான் இவருடைய ஒரே மகள் பிரியா. இவர் மிகவும் புத்திசாலி வருங்காலத்தைக் கணிக்கும் திறன் பெற்றவர். ஆனால் அந்தத் திறமைகளைத் தன் சொத்துகளைக் காப்பாற்றவும் தன் மகளான என் வருங்காலத்தை யோசித்தும் மிகவும் சாமர்த்தியமாக என்னைத் தன் வாழ்விலிருந்தே விலக்கி வெகு காலத்துக்கு முன்பே ஷண்முகம் என்பவரிடம் ஒப்படைத்து மிகவும் புத்திசாலித்தனமாக இதுவரை இவர் செய்த ஊழல்களை மறைத்து, இவர் அநியாய வழியில் சம்பாதித்த அத்தனை சொத்துகளையும் காப்பாற்றிக்கொள்ள இவர் செய்த தந்திரமே என்னையும் சொத்துகளையும் ஷண்முகத்திடம் ஒப்படைத்தது.
நாட்டைப் பற்றி, நாட்டு மக்களைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் நாட்டையே சுருட்டி, ஊழல் பல செய்து சொத்துகளைக் குவித்து வைத்திருக்கும் இவர் போன்ற அரசியல்வாதிகளை இனம் காணுங்கள் மக்களே என்னைப் பெற்றவராயினும் யாராயினும் இனி அவர்களையெல்லாம் ஒருவர் பாக்கிவிடாமல் அத்தனை பேருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்து அவர்கள் கொள்ளையடித்த மொத்த சொத்துகளையும் மீண்டும் தேசத்துக்கு ஒப்படைப்பதே இனி என் குறிக்கோள். நம் நாட்டையும் நம்மையும் மீட்டு, நம் நாட்டை உலக அரங்கில் தலை நிமிரச் செய்வதே என் நோக்கம். நம் நாட்டின் சொத்தாகிய இந்த மொத்த சொத்துகளையும் மீண்டும் நாட்டிற்கே ஒப்படைக்கிறேன்.
ஆமாம், இன்று முதல் நான் இவருக்கு மகளல்ல. இவர் அளித்த சொத்துகளில் ஒன்றையும் உபயோகப்படுத்தாமல் ஒரு நல்ல நோக்கத்துக்காக என்னை தன் உழைப்பில் சம்பாதித்த சாதாரண நடுத்தர வர்கத்தில் நேர்மையாக வாழ்கின்ற ஒரு ஆசிரியர், என்னை வளர்த்து ஆளாக்கிய ஆசிரியர் ஷண்முகத்தின் மகள். என் பெயர் பிரியா அல்ல உக்கிரகாளி என்றாள் ஆவேசமாய் ஒற்றை விரலை நீட்டி.
தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஷண்முகம், வந்தே மாதரம் என்று ஓங்கி முழக்கமிட்டார்.
சுபம்
12
சாமி குத்தம்
நாளைக்கு வீட்டிலே வேத பாராயணம் இன்னும் நிறைய பொருள் வாங்கணும் அதுனாலே நீங்க போயி இந்தப் பட்டியல்ல இருக்கறதெல்லாம் வங்கிண்டு வந்திருங்கோ என்றாள் காமாட்சி. சரி வாங்கிண்டு வரேன் என்று கடைக்குக் கிளம்பினார் விஸ்வநாதன்.
பழமுதிர்ச்சோலை வாயிலில் காரை நிறுத்தவே இடமில்லாமல் திண்டாடி, கடைசியில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று, பட்டியலில் உள்ள காய்கறிகள், பழ வகைகளை விஸ்வநாதன் எடுக்க ஆரம்பித்தார்.
காமாட்சி சொன்ன அனைத்தையும் வங்கிக்கொண்டு விட்டுக்குள் நுழைந்தார் விஸ்வநாதன் என்ன எல்லாம் வாங்கிட்டீங்களா ” என்றாள் காமாட்சி. எல்லாம் வாங்கிட்டேன். தொணதொணன்னு கேட்டுண்டே இருக்காதே என்றார் விஸ்வநாதன். என்ன ஆச்சு உங்களுக்கு இப்போதானே ஒரு தடவை கேட்டேன். அதுக்குள்ளே எரிஞ்சி விழறீங்க என்றாள் காமாட்சி. “சரி விடு. ஏதோ கோவம். அந்தக் கடைக்குப் போனேனா என்று அந்தக் கடையில் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தார் விஸ்வநாதன்.
காரை விட இடமே இல்லை. பழமுதிர்ச்சோலை வாசலில் ஒரு வழியாக ஒரு காரின் பின்னால் இருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்து காய்கறிகள் பழங்கள் வாழை இலை வெற்றிலை எல்லாம் எடுத்து கூடையில் நிரப்பிக்கொண்டிருந்தார் விஸ்வநாதன். அந்த அங்காடியின் வாயிற்காவலர் அவரைத் தேடிக்கொண்டு வந்து, சார் நீங்க காரை நிறுத்தி இருக்கீங்களே அந்தக் காருக்கு முன்னாடி இருக்கற காரை வெளியே எடுக்கணுமாம். உங்க காரை கொஞ்சம் நகத்தறீங்களா என்றார்.
அடடா இதோ வந்துட்டேன் என்றபடி, சேகரித்த காய்கறிகளை வைத்துவிட்டு இதுக்கு பில் போடுங்கோ இதோ வந்து பணம் குடுக்கறேன் என்றபடி வெளியே வந்தார். எதிரே ஒரு பெண்மணி முகத்திலே பணக்காரக் களை சொட்டியது. ஏன் என்னோட காருக்குப் பின்னாடி உங்க காரை நிறுத்தினீங்க நாங்க காரை எப்பிடி எடுக்கறது கொஞ்சமாவது யோசனை வேண்டாமா?” என்றாள் அதிகாரமாக அவருடைய வயதுக்கும் மதிப்பு தராமல் அதிகாரக் குரலில். சரி அதுக்குதானே பில் கூடப் போடாமல் வந்திருக்கேன், எடுத்துடறேன் என்றார் விஸ்வநாதன். அந்தப் பெண்மணி இதெல்லாம் முன்னாடியே யோசிக்கணும் என்றாள் திமிராக
விஸ்வநாதன் இதோ பாருங்க நீங்க நிறுத்தின இடமே காரை நிறுத்தக் கூடாத இடம்தான். என்ன செய்யிறது காரை நிறுத்த இடமே இல்லே. அதான் நான் வந்துட்டேனே. அதுக்கும் மேலே பேசிண்டே போறீங்களே என்று சொல்லிக்கொண்டே காரைப் பின்பக்கமாக நகர்த்தினார். முன்னால் இருந்த காரில் உட்கார்ந்தாள் அந்தப் பெண்மணி. அந்தக் காரின் ஓட்டுனர் காரை எடுத்தார். போகும்போது இனிமேலாவது காரை நிறுத்தறதுக்கு முன்னாடியே யோசிங்க என்றாள் அந்தப் பெண்மணி.
விஸ்வநாதனுக்கு கோவம் வந்தது சரிங்க இனிமே பாத்து உங்க கார் இல்லாத இடமா நிறுத்தறேன் என்றார். உடனே அந்தப் பெண்மணி, உங்களுக்கு ரொம்பத் திமிரு கிண்டல் செய்றீங்க. இந்தக் கிண்டலெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்றாள் கார் கிளம்பியது.
எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்து, மீண்டும் காய்கறிகளை எடுத்துக்கொண்டு . பணம் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். என்ன வரவர நாட்டிலே பெண்களெல்லாம் கொஞ்சம் கூடப் பொறுமையில்லாமே இப்பிடிப் பேசறாங்க என்றார் விஸ்வநாதன்.
சரி சரி அப்பிடித்தான் இருக்கும். இதுக்கெல்லாம் நீங்க டென்ஷனாகாதீங்க என்று சமாதானப்படுத்தினாள் காமாட்சி.
மறுநாள் வேத பாராயணக் கோஷ்டி வந்து வேத பாராயணமும் ஆரம்பித்தாயிற்று. சுமூகமாக நடந்து முடிந்தது வேத பாராயணம். வந்திருந்த அனைவருமே சந்தோஷமாய்ப் பிரசாதங்களைச் சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினர்.
மறு நாள் விஸ்வநாதன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டார். செல்லும் வழியில் ஒரு போலீஸ்காரர் அவர் காரை மடக்கி நிறுத்தச் சொன்னார். விஸ்வநாதனும் நிறுத்தினார். அந்த போலீஸ்காரர் கேட்ட அனைத்து விவரங்களையும் முறையாக அளித்தார். ஆனால் அந்தப் போலீஸ்காரர் இதெல்லாம் சரியா இருக்கு.
ஆனா நீங்க இங்கே வரவேண்டிய வேகத்தை விட அதிக வேகமா வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தீங்க. அதுனாலே அபராதம் கட்டிட்டுப் போங்க என்று ஒரு தொகை எழுதி, அவரிடம் கொடுத்தார். விஸ்வநாதனுக்கு ஏதோ புரிந்தது. மௌனமாக அவர் நீட்டிய காகிதத்தைப் பெற்றுக்கொண்டு தொகையைக் கட்டி, ரசீது வங்கிக்கொண்டு கிளம்பினார். மறுநாள் அவர் காரை வாயிலில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். காமாட்சி கொடுத்த காப்பியைக் குடிக்கும் போது, வாசலில் நாலு பேர் குடி போதையில் கலாட்டா செய்துகொண்டிருந்தனர். வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அந்த நால்வரில் ஒருவன் டேய் இந்தக் காரை அடிச்சு நொறுக்கலாமா நம்மை யார்றா என்னா செய்ய முடியும் ” என்றபடி கையிலுள்ள கைத்தடியால் காரை அடிக்க ஓங்கினான். விஸ்வநாதன் ஓடி வந்து ஏம்பா எதுக்கு எங்க காரை அடிக்கிறீங்க. நான் போலீஸ்லே கம்ப்ளைண்ட் குடுப்பேன் என்றார்.
அதில் ஒருவன் இதோ பார்றா போலீஸ்லே கம்ப்ளைண்ட் குடுப்பாராம் என்றபடி நக்கலாய்ச் சிரித்தான். அதற்குள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரவே, அவர்கள் சரி இன்னிக்கு வேண்டாம். இன்னொரு நாள் பாத்துக்குவோம் என்றபடி கலைந்து போனார்கள்.
மறுநாள் விஸ்வநாதன், காரை எடுக்க அலுவலகத்திலிருந்து கீழே வந்து காரில் ஏறினார். கார் அப்படியே அமுங்கியது. என்ன இது என்று வெளியே வந்து பார்த்தால், காரின் இரண்டு பின்பக்க டயர்களும் யாரோ கத்தியால் கிழித்தது போல் கிழிந்து போயிருந்தன.
‘ஏன் இப்பிடி நமக்கு மட்டும் எல்லாம் தவறாகவே நடக்கிறது’ என்று யோசித்தபடியே அதிர்ந்தார் விஸ்வநாதன். மீண்டும் அவருக்குள் பழைய நினைவு வந்தது ஏன் இப்பிடி ஆகிறது. யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று யோசித்தார்.“சரி ஏதோ சாமி குத்தம் போலிருக்கு, நேரமே சரியில்லே என்று வாய்விட்டு முணுமுணுத்தார்.
சார் நீங்களா, இதுதான் உங்க ஆபீசா” என்றார் ஒருவர். விஸ்வநாதன், ஆமாம், அது சரி நீங்க யாருன்னு தெரியலையே என்றார். சார், என்னைத் தெரியலையா நான்தான் சார் அன்னிக்குப் பழமுதிர்ச்சோலை கடை வாசல்லே ஒரு அம்மா தகராறு பண்ணாங்களே அந்தக் காரோட டிரைவர் என்ற அவர், தொடர்ந்தார். சார் நீங்க நினைக்கிறா மாதிரி சாமி குத்தமெல்லாம் ஒண்ணுமில்லே. அந்த அம்மாவோட புருஷன் பெரிய அதிகாரியா இருக்காரு. அது தெரியாமே, நீங்க அந்த அம்மாகிட்டே நியாயமெல்லாம் பேசினீங்க. அதுதான் காரணம் இதுக்கெல்லாம். இது சாமி குத்தமில்லே, சார். சில திமிர் பிடிச்ச மனுஷங்களோட குத்தம். ஆமா சார் சாமி குத்தம் இல்லே மனுஷ குத்தம் என்றார்.
13
மாற்றுச் சாவி
வெகு நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்காததால் எரிச்சல் அடைந்து, பொறுமை இழந்தாள் காமினி. உள்ளே தன் புருஷன் சரவணன், அப்படி என்னதான் செய்கிறானோ என்று கோபமாய் வந்தது அவளுக்கு. புரியாமல் நின்றுகொண்டிருந்தாள். நேரமாக நேரமாக, மனது குழம்பியது.
அவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன், தனக்கும் சரவணனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனக்கசப்பில் முடிந்தது நினைவுக்கு வந்தது. அவன் சொல்லும் எதையுமே அவள் காதில் வாங்கிக்கொண்டு சரியாகச் செயல்படுவதில்லை என்று அவன் திட்டியதும் எதையுமே சற்று சிந்தித்து முன் யோசனையுடன் செயல்படுதல் வேண்டும் என்று அவன் சொன்னதும், இப்போ முன் யோசனை இல்லாமே நான் என்ன செய்யறேன்? எதுக்கு எப்போ பாத்தாலும் அட்வைஸ் குடுத்திண்டே இருக்கீங்க?’ என்று அவள் வாக்குவாதம் செய்ததும் நினைவுக்கு வந்தது.
ஏற்கெனவே சரவணன் செய்துகொண்டிருந்த வியாபாரம் நம்பி இருந்த வங்கி வைப்புகள் எல்லாமே உலகப் பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டு வேதனையுடன் இருந்த அவனிடம் தானும் விட்டுக் கொடுக்காமல் வாக்குவாதம் செய்தது நினைவுக்கு வந்தது.
அதுவும் போதாக் குறைக்கு காலையில் அவள் அலுவலகத்துக்குக் கிளம்பும்போது ஏற்பட்ட சிறு வாக்குவாதமும் சில விநாடிகளில் வளர்ந்து அவனிடம் சண்டை போட்டுக்கொண்டு கிளம்பியதும் நினைவுக்கு வந்தது. மனமுடைந்து இருக்குமோ? ஒருவேளை ஏதாவது விபரீத முடிவை எடுத்து விட்டானோ நினைக்கவே அவள் மனம் பதறியது. நிலைகுலைந்து போனாள் காமினி. மீண்டும் தட்டிப் பார்த்துவிட்டு ஏதோ விபரீதம் ஆகிவிட்டது என்று முடிவுக்கு வந்தவளாய் அக்கம் பக்கம் இருப்பவர்களையெல்லாம் அழைத்து, தன் நிலையைச் சொன்னாள் காமினி.
அனைவரும் பதறிப் போயினர். சிலர் கடப்பாரை கொண்டு வந்து கதவை உடைத்தனர். கதவு கீழே வீழ்ந்தது. காமினி பதறிக்கொண்டே ஓடிப்போய் என்னங்க எங்கே இருக்கீங்க என்று பதறியபடி ஓடினாள். எங்கும் அவனைக் காணாமல் பதறி அழத் தொடங்கினாள். அப்படியே மடங்கி உட்கார்ந்து அழத் தொடங்கினாள். மற்றவர் ஒவ்வோர் இடமாக தேடத் தொடங்கினர். ஒருவர்சரிப்பா எதுக்கும் போலீசுக்குச் சொல்லிடலாம் என்றார்.
மூன்றாவது படுக்கை அறையின் குளியல் அறையிலிருந்து ஷாம்பூ மணக்கத் தலையை துவட்டிக்கொண்டே வெளியே வந்த சரவணன், காமினி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து பதறினான். ஏம்மா எதுக்கு அழறே என்ன ஆச்சு என்றான், அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு.
ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கே சொன்னாதானே தெரியும்’ என்று கேட்டபடியே நிமிர்ந்து பார்த்த சரவணன் அதிர்ந்து போனான்.
என்னா கலாட்டா இது எதுக்கு எல்லாரையும் வரவழைச்சிருக்கே எதுக்கு கதவை உடைச்சீங்க ஆமாம் உன்கிட்ட ஒரு சாவி இருக்குதே, அதை வைத்துக் கதவைத் திறக்க வேண்டியதுதானே ஏன் இப்பிடி கதவையெல்லாம் உடைச்சு என்ன ஆச்சு… என்றான்.
14
திறந்தவெளி
கன்னிப் பருவத்திலே வழக்கமாய் வரும் கனவுகள் கற்பனைகள் எல்லோருக்கும் வருவது போலவே கனகாவுக்கும் வந்தன. வாழ்க்கை சொர்க்கமாகத் தோன்றியது. எதைப் பார்த்தாலும் குறும்பு மின்னியது. அடிக்கடி சிரிப்பும் வந்தது வாழ்க்கையே சுவையாக மாறியது. நகைச்சுவை உணர்வு தானாக விளைந்தது. எதையுமே ரசிக்க வேண்டும் என்னும் ஆவல் கிளர்ந்தது.
ஆமாம் ஆனால் எல்லாம் இப்படி வறண்டு போகும் என்று எதிர்பார்க்கவில்லை அவள். எல்லா உணர்வுகளும் எல்லோருக்கும் வரும் ஆனால் சிலருக்கு மட்டும் நடக்கும். எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்னும் வாழ்க்கையின் யதார்த்தம் அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்தியது. அவளும் ஏறக்குறைய அதை ஏற்று வாழப் பழகிவிட்டாள். இருந்தாலும் பலருக்கு கிடைக்கும் அந்த இயல்பான வாழ்க்கை சுகானுபவங்கள் அவளுக்கு மட்டும் ஏன் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன எட்ட எட்ட இன்னும் கொஞ்சம் உயரமாய் எட்டாத விண் வெளியாய் கடக்கக் கடக்கக் குறையாத பாலைவனமாய் ஏன் இப்படி ஆகிப் போனது
இன்றும் யாரோ பெண்பார்க்க வருகிறார்களாம். புதுக் கன்னியாய் இருந்த அவள், முதிர் கன்னியாய் முதிர்ந்துவிட்டாள். வருபவன் தலை வழுக்கை என்றாலும், வயதில் முதிர்ந்தவன் என்றாலும் அவனுக்குப் பிடித்திருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை அமையும். அவளுக்கு ஏனோ (Beggers can not Be a chooser) என்னும் சொல் நினைவுக்கு வந்தது. அவள் மட்டும் என்ன தவறு செய்துவிட்டாள் அப்படி
ஒரு நாள் விரக்தியில் அம்மாகூட யாரையானும் காதலிக்கவாவது உனக்குத் திறமை இருக்கா அதுவும் இல்லையே. பகவானே, இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுன்னு பகவானை வேண்ட ஆரம்பித்துவிட்டாள். அப்பாவோ கேட்கவே வேண்டாம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட அவள் மனம் புண்படும்படி பேசியதில்லை. ஆனால், உனக்குக் கல்யாணம் ஆனப்புறம்தான் அடுத்தவளுக்குக் கல்யாணம் செய்யணும். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சால் நல்லா இருக்கும் அப்பிடீன்னு ஒரு பெருமூச்சு விடறாரே அதுவே போதுமே. அப்பாவின் பெருமூச்சும் அவள் மனத்தில் தீயாய்த் தகித்துக்கொண்டிருந்தது.
மாலை மணி ஆறு. பெண்பார்க்க வந்தவர்கள் வீட்டினுள் நுழைவதும், அப்பா அவர்களை வழக்கமாக வரவேற்கும் பாணியில் குரலில் போலியான உற்சாகத்துடனும், ஆனால் அநேக எதிர்பார்ப்புகளுடனும் வரவேற்பது காதில் விழுந்தது. ‘கனகா அவங்கல்லாம் வந்துட்டாங்க. ரெடியா இரு அப்பிடீன்னு பரபரத்தாள் அம்மா, ஏதோ ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராக்குவது போல. அவள் கவலை அவளுக்கு. கிட்டே வந்து புடவைத் தலைப்பை இழுத்து நன்றாகப் போர்த்திவிட்டாள். சரி அவங்க வந்து கொஞ்ச நேரம் கழிச்சு நான் வந்து உன்னைக் கூட்டிண்டு போறேன். இங்கேயே இரு. முகத்தைக் கொஞ்சம் புன்சிரிப்பா வெச்சிக்கோ’ என்றபடி கூடத்துக்கு போனாள்.
எப்போ நம்ம காட்சி வருமோ அப்போ சரியான நேரத்துக்கு உள்ளே நுழைஞ்சு நம்ம கதாபாத்திரத்தை வசனமெல்லாம் மறக்காம பேசி சரியா நடிக்கணுமேன்னு கவலைப்படற நடிகன் மாதிரி எப்போ கூப்புடுவாங்களோ அப்பிடீன்னு ஒரு படபடப்போட காத்திருந்தாள் கனகா. வழக்கமான வரவேற்பு எல்லாம் முடிந்த பின்னால் அம்மா உள்ளே வருவது தெரிந்தது.
அவங்களுக்குக் காப்பி எடுத்துண்டு போயி குடுத்துட்டு நமஸ்காரம் செய்யி என்றாள், ஏதோ இதுதான் எனக்கு முதல் முறை போல் நினைத்துக்கொண்டு.
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க, நடந்து வந்துகொண்டிருந்தாள் கனகா. மனதுக்குள் மாப்பிள்ளை எப்பிடி இருப்பாரோ கருப்போ சிவப்போ உயரமோ குள்ளமோ எப்பிடி இருந்தா என்ன இவனாவது நம்மைப் பிடிக்கிறதுன்னு சொல்லணும். அதுக்கப்புறம் அவங்க கேக்கறதெல்லாம் செய்ய அப்பாக்குச் சக்தி இருக்கணும். அப்பா ஒப்புக்கணும் இன்னும் இத்யாதி இத்யாதிகள். சரி ஆண்டவா நீ விட்ட வழின்னு மனசுக்குள்ளே நெனைச்சிண்டு கூடத்துக்கு வந்து அவங்களுக்கெல்லாம் காப்பியைக் கொடுத்தாள் கனகா!
தாம்பாளத்தைக் கீழே வைத்துவிட்டு, குனிந்து நமஸ்கரித்தாள். அவள் மனத்தில் எப்போதோ எழுதிய
“இது முப்பதாவது முறை
ஒரு வேளை இவன் தானோ ”
என்ற புதுக்கவிதை வரிகள் நிழல் படமாய் ஓடின.
அப்படியே லாகவமாய் மாப்பிள்ளையைப் பார்த்தாள். அட அழகாகத்தான் இருக்கிறார்! இளமையாகவும் இருக்கிறார். மனக்கண்ணில் தன் பக்கத்திலே அவரை நிறுத்திவைத்து ஜோடிப்பொருத்தம் பார்த்தாள். இப்பிடி உக்காரும்மா என்ற பெரியவர்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து அப்படியே பவ்வியமாய் உட்கார்ந்தாள். அவள் தலை குனிந்தவண்ணம் இருந்தாலும் ஒரு வேளை இவன்தானோ என்னும் வரிகளில் மனம் நிலைத்தது. காதுகள் கூர்மையாயின.
மாப்பிள்ளை ரமேஷ் அவருடைய தகப்பனாரிடம் ஏதோ சொன்னதும் அந்த இடமே திடீரென்று மகிழ்ச்சியில் திக்கு முக்காடியது. கனகாவுக்குப் புரிந்தது. மாப்பிள்ளை தன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார் என்று. நிமிர்ந்து பார்த்தாள். அம்மாவுக்கு வாயெல்லாம் பல். அப்பா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். வனப்பின் உச்சியில் இருந்த தங்கை கல்யாணி மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன் அக்காவைப் பார்த்துக் கட்டை விரலை உயர்த்தினாள். காதருகே வந்து கங்ராட்ஸ் அக்கா என்றாள். கனகாவுக்கும் மனம் நிறைந்தது.
பெண்பார்க்க வந்த ரமேஷின் தாயார், கனகாவைப் பார்த்து ‘நீயும் நல்லா பாத்துக்கோம்மா. உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா என்றாள். மீண்டும் ஒரு முறை மாப்பிள்ளையைப் பார்த்தாள் கனகா அதிர்ந்தாள் மாப்பிள்ளை ரமேஷ் கிண்டல் செய்துகொண்டிருந்த கனகாவின் தங்கை கல்யாணியிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் இருவரையும் பார்த்த கனகாவின் மனத்தில் அட, நாம இப்பிடி சிந்திக்கலையே என்று ஒரு புது எண்ணம் தோன்றியது. மனத்தில் தோன்றிய எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்தாள்.
நான் மாப்பிள்ளைகிட்ட தனியா பேசணும் என்றாள். அதுனாலென்ன ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுங்க தப்பில்லே. ஓரளவாவது புரிஞ்சிண்டுதான் கல்யாணம் பண்ணிக்கணும். அப்போதான் வாழ்க்கை நல்லா இருக்கும் என்றாள் பையனின் தாயார் பெருந்தன்மையாக.
கனகாவும் ரமேஷும் கூடத்தில் தனித்து விடப்பட்டனர். மற்றவர் அனைவரும் எழுந்து வீட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.
கனகா ரமேஷிடம் நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு, நான் அடிக்கடி பெண் பார்க்க வர்றவங்க முன்னாடி நமஸ்காரம் செஞ்சு, அவங்க நிராகரிச்சதுக்கு அப்புறம் மனசு உடைஞ்சு போயிருக்கேன். முதல் முறையா என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன ஆண்மகன் நீங்கதான். எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா என் மனசுலே தோன்றியதைச் சொல்றேன். ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம். எனக்குன்னு ஒருத்தன் வராமலா போகப் போறான். எனக்கு பழகிப் போச்சு. அதுனாலே நான் காத்திருக்கத் தயார். இந்த நிலைமை இனிமே எந்தப் பொண்ணுக்கும் வரக் கூடாது. குறிப்பா என் தங்கை கல்யாணிக்கு வரவே கூடாது. அதுனாலே நீங்க கல்யாணியைக் கல்யாணம் செஞ்சிகிட்டா எனக்கு மகிழ்ச்சியா இருக்கும் என்றாள் கனகா.
ரமேஷ் அவளை வினோதமாகப் பார்த்தான். சரி நான் கூடத்திலே போயி சொல்லிடறேன். கவலைப்படாதீங்க. உங்களை மாட்டிவிட மாட்டேன் என்றான். மீண்டும் அங்கே அனைவரும் கூடினர். மாப்பிள்ளை தொண்டையைச் செறுமிக்கொண்டு நாங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசினோம். நான் இந்தக் கல்யாணம் செஞ்சிக்கறதிலே பெருமைப்படறேன். ஆமாம் எனக்குக் கனகாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த நிமிஷம் முதல் இந்த வீட்டு மாப்பிள்ளை மட்டுமல்ல நான். இவங்களுக்கும் பிள்ளை மாதிரிதான். கல்யாணிக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து பொருத்தம் பார்த்து ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நேரத்திலே நடத்தணும் அப்பிடீங்கறது என் ஆசை. கவலைப்படாதீங்க. கல்யாணிக்கு ஏத்த மாப்பிள்ளை பாக்கறது என் பொறுப்பு என்றான் ரமேஷ்.
அங்கே மீண்டும் மனிதம் பூத்தது.
15
கர்ப்ப வாசம்
செல்போன் சிணுங்கியது. ஹலோ என்றார் ராமநாதன். எதிர்முனையில் வழக்கத்துக்கு மாறான இளமையான உற்சாகக் குரல்.
ஏங்க நான் என்னோட தோழி கமலா வீட்டிலேருந்து பேசறேன். நேத்து எங்க மாமா பொண்ணோட கல்யாணம் நல்லா நடந்துது. நீங்க ஏன் வரலேன்னு எல்லாரும் கேட்டாங்க. நான் அவருக்கு முக்கியமான மீட்டிங், அதுனாலே அவராலே வர முடியலைன்னு சொன்னேன். எல்லாரும் உங்களை விசாரிச்சேன்னு சொல்லச் சொன்னாங்க. நீங்க வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க. அப்புறம் ராத்திரி ஞாபகமா கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்புடுங்க. நான் நாளைக்கு ராத்திரி கிளம்பி நாளை மறுநாள் காலை 8 மணிக்கு செண்ட்ரலுக்கு வந்துருவேன். என்னோட என் தோழி கமலாவும் அவ புருஷன் ஜெயராமனும் வராங்க. அதுனாலே நாங்களே ஒரு டாக்ஸி புடிச்சு வந்துடறோம் நீங்க அலையவேணாம் என்றாள், அவரின் தர்ம பத்தினி பாக்கியம்.
ஹூம் சரி ஜாக்கிரதையா வா என்றார் ராமநாதன். சரிங்க நான் ஜாக்கிறதையா வரேன். கூடவே கமலா இருக்கா. பயப்பட ஒண்ணும் இல்லே. நீங்க கவலைப்படாமே தூங்குங்க. சரி குட் நைட் என்றாள் பாக்கியம். பாக்கியத்தின் குரலில் இருந்த உற்சாகம் அவரையும் தொத்திக்கொண்டது போல் ஒரு உணர்வு. அப்பிடி என்ன இவள் உற்சாகத்துக்கு காரணம் என்று யோசித்தார் ராமநாதன்!
இவளைப் பெண் பார்க்க அந்தக் கிராமத்துக்கு சென்றது அவர் மனத்தில் பசுமையாய் உலா வந்தது.
பெண் பார்த்து வழக்கம்போல அவர்கள் மரியாதையாக அளித்த பஜ்ஜி, கேசரி எல்லாம் உண்ட பிறகு, ஆவலுடன் இவர் முகத்தையே அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ராமநாதனுக்கு அப்போது வயது 27. ஆனாலும் மிகவும் தெளிந்த மனத்துடன் வாழ்க்கையைத் திட்டமிட்டிருந்தார். அதனால் பெண்ணின் தந்தை சுந்தர்ராஜனைப் பார்த்து, சார் எனக்குப் பெண் பிடித்திருக்கு. அவங்களையும் ஒரு வார்த்தை கேளுங்கொ என்னை பிடிச்சிருக்கான்னு. அப்பிடிப் பிடிச்சிருந்தா எனக்குச் சம்மதம் என்றார்.
அந்த வீட்டில் இருந்த ஒரு பெரியவர் அதெல்லாம் பிடிக்கும். உங்களைப் போயி யாராவது பிடிக்கலைன்னு சொல்லுவாங்களா என்றார்.
அப்பிடி இல்லை நீங்க அவங்களைக் கேளுங்கோ என்னைப் பிடிச்சிருக்கான்னு. அவங்களுக்குப் பிடிச்சிருந்தா மேலே பேசலாம்’ என்றார் தீர்மானமாக.
சரி கொஞ்சம் இருங்க என்றபடி பெண்மணி ஒருவர் எழுந்து உள்ளே போனார். சற்று நேரம் கழித்து அந்தப் பெண்மணி கூடத்துக்கு வந்து தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு வெட்கப்பட்டபடியே மாப்பிள்ளை அவளுக்கும் உங்களைப் பிடிச்சிருக்காம் என்று சொன்னார்.
ஒரு மகிழ்ச்சி நிறைந்தது கூடத்தில். சரி மேலே பேசலாம் என்று மகிழ்வாக குரல் கொடுத்தார் பெரியவர் ஒருவர்.
ராமநாதனின் அப்பா – அம்மாவிடம் பெண்ணின் தந்தை சுந்தர்ராஜன் ‘என்ன செய்யணும்னு சொல்லுங்கோ செய்யலாம். எனக்கு மூணு பொண்ணு, ஒரு பையன். இவதான் மூத்தவ என்றார். அவர் மகளுக்கு என்னையும், எனக்கு அவர் மகளையும் பிடித்திருக்கே என்கிற மகிழ்ச்சியும், என்ன கேட்பார்களோ நம்மால் செய்ய முடியுமோ நல்ல மாப்பிள்ளையாக நல்ல குடும்பமாக இருக்கிறதே தவறவிடக் கூடாதே என்கிற கவலையும் அவர் குரலில் கலந்திருந்தது.
சார் எங்க அப்பா – அம்மா என்னோட மகிழ்ச்சிக்காகவே வாழறவங்க. நான் எது சொன்னாலும் அப்பிடியே ஏத்துக்குவாங்க. அதுனாலே அவங்ககிட்ட நான் ஏற்கெனவே பேசி இருக்கேன். என் மனசு என்னான்னு அவங்களுக்கு தெரியும் எனச் சொல்லிவிட்டு, என்ன அப்பா அம்மா நான் மேற்கொண்டு சொல்லவா என்பதைப் போல் பார்த்தார் ராமநாதன். அவருடைய பெற்றோர் இருவரும் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் ‘எங்களுக்கும் பொண்ணு பிடிச்சிருக்கு. எங்க வீட்டுக்கு இவதான் மருமகள். அதுனாலே என் பையன் என்ன சொல்றானோ அதையே செய்யுங்க என்றார்கள் ஏகோபித்த குரலில்.
இப்போது சுந்தர்ராஜன் முகத்தில் இன்னும் கூடுதலான பொறுப்பும் கவலையும் சேர்ந்தது. சொல்லுங்கோ நீங்க என்ன செய்யணும்னு சொன்னா நான் அதையெல்லாம் செய்யத் தயாரா இருக்கேன் என்றார். அங்கிருந்த பெரியவர் ஒருவர் மாப்பிள்ளை இந்த ஊரிலே இது வரைக்கும் பொண்ணை வெளியே குடுத்து சம்பந்தம் செய்யிற வழக்கமில்லே. இதுதான் முதல் தடவை. அதுனாலே நீங்க எங்க பொண்ணைக் கல்யாணம் செஞ்சிண்டா இந்த ஊருக்கே நீங்கதான் ஸ்பெஷல்’ என்றார்.
ராமநாதன் அவரைப் பார்த்து முறுவலித்துவிட்டு நான் நல்லா சம்பாதிக்கறேன். என்னோட அக்காவுக்கு கல்யாணம் முடிச்சாச்சு. எனக்கு இனிமே எங்க அப்பா அம்மாவைக் கப்பாத்தற பொறுப்பு மட்டும்தான் இருக்கு. இப்போ உங்க பொண்ணு, அதான் என்னோட வருங்கால மனைவியையும் காப்பாத்தற பொறுப்பும் சேருது. அதுனாலே என்று நிறுத்தினார். எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
என்னோட மனைவி நான் சம்பாதிக்கிற பணத்தை வெச்சிண்டு சிக்கனமா என்னோட வாழ்ந்தா எனக்கு சந்தோஷம். இந்தக் கல்யாணத்துக்கு உங்களாலே கடன் வாங்காமே எவ்வளவு செலவு செய்ய முடியும்னு ஒரு பட்ஜெட் போடுங்க. அதுக்குள்ள கல்யாணத்தை முடிங்க. எனக்கு வேண்டியது ஒரு நல்ல மனைவி. அவ்ளோதான். வேற எதுவானாலும் என்னோட உழைப்பாலேயே சம்பாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என்றான். பெண்ணின் தந்தை சுந்தர்ராஜன் எழுந்து வந்து, ராமநாதனின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘மாப்பிள்ளை நான் போன ஜென்மத்திலே செஞ்ச புண்ணியம் நீங்க’ என்றார். அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
அடடா, கொஞ்சம் விட்டா முப்பது வருஷ வாழ்க்கையையும் நெனைச்சுப் பாக்க ஆரம்பிச்சிருவேன் போல இருக்கே என்று யோசித்தார் ராமநாதன்.
அது சரி அது எப்பிடி இவ்வளவு உற்சாகம் பாக்கியத்துக்கு. எனக்கும் அந்த உற்சாகம் தொத்திக்கிற அளவுக்கு… அப்போதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது கல்யாணம் ஆன அடுத்த வாரமே அவர்கள் குடும்பமும் அந்த ஊரை விட்டு டெல்லிக்குப் போய்விட்டதும், அவரும் அந்த ஊரை மறந்தே போனார். அதன் பிறகு அடிக்கடி டெல்லி போவதும் வருவதுமாக வாழ்க்கை நல்ல நிலைக்கு வந்தாயிற்று. முப்பது வருடம் சந்தோஷமா வாழ்ந்திண்டு இருக்கோம்.
ஏதோ ஓரளவு புரிந்தாற்போல் ஒரு உணர்வு. செல் போனை எடுத்து பாக்கியத்தைத் தொடர்பு கொண்டார் ராமநாதன். எதிர்முனையில் பாக்கியம் என்னங்க என்றாள். அப்போதும் அதே உற்சாகமான குரல். ஆமா ரெண்டு நாளா அந்தக் கிராமத்திலே எப்பிடி பொழுது போச்சு உனக்கு என்றார் ராமநாதன். பாக்கியம் பொழுது போறலைங்க. நாங்க எல்லாம் நேத்திக்கு ஆத்துலே போயி குளிச்சோமே. அப்புறம் கோயிலுக்கு போனோம். கோயில்லே அந்த மண்டபத்தைப் பார்த்ததும் முன்னாலே நாங்க விளையாடினதெல்லாம் ஞாபகம் வந்துது. என்ன இருந்தாலும் பொறந்து வளந்த இடம் சொர்க்கம்தாங்க என்றாள் உற்சாகமாக.
ராமநாதன் சரி பத்திரமா வா. நாளைக்கு நானே கார் எடுத்துண்டு வந்து, உங்களைக் கூட்டிண்டு வரேன் வீட்டுக்கு என்றார் உற்சாகமாக.
அவருக்கும் தன் சொந்த ஊருக்குப் போகவேண்டும் என்கிற ஆசை தோன்றியது.
16
ரத்து
இந்த மாமா யாரும்மா” என்ற அவள் மகன் கார்த்திக்கின் கேள்விக்குத் தடுமாறிய மாலினி, சுதாரித்துக்கொண்டு “கொஞ்சம் பொறு சொல்றேன். இந்த ஐஸ்க்ரீமை சாப்பிடு. சமத்துப் பையன் தானே நீ” என்றாள்.
எதிரே உட்கார்ந்துகொண்டு குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்த சரவணன் ஏன் குழந்தைகிட்ட சிடுசிடுக்கறே இதமா சொல்லேன் என்றான். ஹும் என்னான்னு சொல்ல மாமா இல்லேடான்னு சொல்லலாம். அப்புற இவரு யாருன்னு தொணதொணப்பானே. அப்போ என்னான்னு பதில் சொல்ல இவனும் உங்களை மாதிரிதான். சரியான பதில் கிடைக்காம விடமாட்டான். என்னான்னு சொல்றதுன்னு புரியாமத்தான் சிடுசிடுக்கறேன் என்றாள் மாலினி.
மாலினி, நீ இன்னமும் உன் சிடுசிடுப்பை விடவேயில்லையா கொஞ்சம் கூட மாறாம அப்பிடியே இருக்கே என்றான் சரவணன். “எதுக்கு சிடுசிடுக்கணுமோ அதுக்கு சிடுசிடுத்துத்தானே ஆகணும். அதை நான் செய்யாததாலேதான் இன்னிக்கு இந்த நிலைமைலே இருக்கேன்” என்றாள் மாலினி.
சரி இப்போவாவது புதுசா ஏதாவது பேசலாமா பழசையெல்லாம் மறந்துடலாமான்னு பேசறதுக்குதான் இங்கே வந்திருக்கோம். இனிமேயும் பழசையெல்லாம் நினைவு வெச்சிக்கலாமா, இல்லே மறந்துடலாமா ” என்றாள் மாலினி. நான் இப்போ பேசப்போறது நம்மோட பழைய கசப்பைப் பத்தி இல்லே. நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச தப்பைப் பத்திப் பேசப் போறேன். அதுவும் இனிமே என்ன முடிவெடுக்கணும்னு புரிஞ்சிக்கத்தான். ஒரு ஐஞ்சு நிமிஷம் நான் பேசறேன். பொறுமையா கவனமா கேளு. அதுக்கப்புறம் நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படறேன். அப்புறம் நீ எவ்வளவு நேரம் பேசினாலும் நான் பொறுமையா கேக்கறேன் என்றான் சரவணன்.
இதோ பாரு மாலினி. நாம காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சிகிட்டோம். அப்போ எவ்ளோ குதூகலமா இருந்துது, அதுக்கப்புறம் ஏன் நம்ம வாழ்க்கை சோபிக்கலை. இப்பவாவது புரிஞ்சுக்கோ . காதலிக்கும் போது நீயும் உன்னோட முன்கோபம் போல நிறைய விஷயங்களை மறைச்சிருப்பே. நானும் அது போல என்கிட்ட இருந்த கெட்ட குணங்களை மறைச்சிருப்பேன். ஆமாம் அந்த நேரத்திலே இருந்த ஈர்ப்பு நம்ம கண்ணை மறைச்சிருக்கலாம். ஆனா கல்யாணம் ஆனபிறகும் சினிமா கதாநாயகன், கதாநாயகி மாதிரி இருக்க முடியாது. ஒருநாள் இல்லேன்னா ஒரு நாள், நம்ப ரெண்டு பேரோட இயல்பும் தெரிஞ்சு போகும்.
ஆனா, அப்பிடித் தெரியறதுதான் வாழ்க்கை. அப்பவும் அதையெல்லாம் மறைச்சிண்டு வாழ்ந்தா அது வாழ்க்கையில்லை, துரோகம். அது மாதிரி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிண்டு எல்லார்கிட்டேயும் கெட்ட குணமும் இருக்கும் நல்ல குணமும் இருக்கு. எல்லாம் சேர்ந்த கலவைதான் மனிதர்கள் அப்பிடீங்கற யதார்த்தத்தை புரிஞ்சிக்கறதுதான் வாழ்க்கை. நாம் ரெண்டு பேருமே இந்த நிதர்சனத்தைப் புரிஞ்சிக்கலை. அதுனாலெதான் நம்ம வாழ்க்கை சீக்கிரமே கசந்து போச்சு. விவாகரத்தும் செஞ்சாச்சு.
உண்மையைச் சொல்லப் போனா எனக்கும் உனக்கும் சட்டப்படி எந்தச் சம்பந்தமும் இல்லே. இனிமே மறுபடியும் சம்பந்தம் ஏற்படுத்திக்கணுமா, வேண்டாமான்னு பேசி முடிவெடுக்கத்தான் இப்போ சந்திச்சிருக்கோம்.
“காதலிக்கும் போது ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்க மாட்டமான்னு ஏங்கறதும் பாத்தா நெகிழறதும் சகஜம். ஆனா கல்யாணத்துக்குப் பிறகு நான் பாத்தா நீயும் நீ பாத்தா நானும் எதுக்கு இப்போ முறைக்கறே அப்பிடீன்னு கேக்கறோம். காதலிக்கும் போது எதெல்லாம் நமக்கு கவர்ச்சியா இருந்துதோ அதெல்லாம் இப்போ குறையாத் தெரியுது. இந்த யதார்த்தத்தைப் புரிஞ்சிண்டாதான் வாழ்க்கை. எந்த ஒரு மனுஷன்கிட்டேயும் ஒரு மனுஷிகிட்டேயும் குறையே இல்லாமே இருக்காது. எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிண்டு வாழறதுதான் வாழ்க்கை. நமக்காக இல்லேன்னாலும் நம்ம குழந்தைகளுக்காகவாவது நாம அப்பிடி வாழ்ந்துதான் ஆகணும். அந்த யதார்த்தம் புரிஞ்சதாலேதானே இன்னிக்கு நம்ம குழந்தையோட எதிர்காலத்துக்காக மறுபடியும் ஒண்ணு சேருவோம் அப்பிடீன்னு யோசிக்கிறோம்.
“காதலிச்ச நாளிலேருந்து நீதான் அதிகமா பேசியிருக்கே. நான் கேட்டுண்டு இருந்திருக்கேன். அதான் இன்னிக்கு நான் அதிகமா பேசிட்டேன். நல்லா யோசிச்சு முடிவுக்கு வா! காதலிக்கும் போது அந்தப் பருவம் கவர்ச்சி எல்லாம் நம்ம ரெண்டு பேரையும் யோசிக்க விடலே. ஆனா நாம் ரெண்டு பேருமே இப்போ அனுபவப்பட்டவங்க. நல்லா யோசிச்சு முடிவு செய்யலாம். என்னதான் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ நான் இனிமே தனியா வாழ முடியும்ன்னு திமிர் பேசினாலும் ஆணும் சரி பெண்ணும் சரி அப்புறம் துணையில்லாமே வாழ முடியலைங்கறதுதான் உண்மை.
அதுனாலே நம்மோட நாகரிகத்தை, பாரம்பரியத்தைக் காப்பாத்தவும் முடியாமே, மேல்நாட்டு நாகரீகத்தை, பாரம்பரியத்தைப் பின்பற்றவும் முடியாமே ரெண்டாங்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்துண்டு ரெண்டு பேரும் தவிக்கறதுதான் வழக்கமா இருக்கு.
இன்னிக்கு நாம் எடுக்கப் போற முடிவுதான் முடிவு. ஆனா ஒரு விஷயம். நான் நானாத்தான் இருப்பேன். நீ நீயாவே இரு. காதலிக்கும்போது எதையெல்லாம் மறைச்சமோ அதையெல்லாம் இப்போ சகிச்சுக்க பழகணும். நம்மோட சுயம் ஜெயிக்கட்டும். அதுனாலே என்னை என்னோட சுயத்தோட ஏத்துக்கற மனப்பான்மை உனக்கிருந்தா, உன்னை உன்னோட சுயத்தோட ஏத்துக்கற மனப்பான்மை எனக்கும் இருந்தா, ஒண்ணா சேருவோம். இல்லேன்னா வேண்டாம். இனிமெ நாம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிண்டு ஒத்துப் போகணும். காதல் வேற, கல்யாணம் வேற. இதைச் சரியா புரிஞ்சிக்கணும். இப்போ சொல்லு மறுபடியும் ஒண்ணா சேருவோமா?” என்று கேட்டுவிட்டு நிறுத்தினான் சரவணன்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாலினி. கார்த்திக்கின் கையிலிருந்த ஐஸ்க்ரீம் உருகி, அவன் வாயெங்கும் வழிந்து அவன் சட்டையை நனைத்துக்கொண்டிருந்தது. அவன் வாயையும், அவன் சட்டையையும் துடைத்துவிட்டு, அவனை அணைத்துக்கொண்டு, அவன் காதில் ஏதோ சொன்னாள் மாலினி. கார்த்திக்கின் முகம் மலர்ந்தது.
“ஹை அப்பா! என்று ஓடிப்போய் சரவணனுக்கு ஒரு முத்தம் கொடுத்தான் கார்த்திக்
17
பம்பரம்
தமிழ்த்தேனீ “ பம்பரம் “
நீங்க எடுத்துகிட்ட எந்த வழக்கிலேயும் இது வரைக்கும் நீங்க தோத்ததே இல்லையே, அது எப்பிடி சார் என்கிற நிருபரின் கேள்விக்கு வக்கீல் சட்ட நாதன் நான் அர்த்தநாரி மாதிரி. சட்டத்தை பாதி என் பேருலேயும் மீதியை என் மூளையிலேயும் வெச்சிருக்கேன் அதனாலே இருக்கும் என்று அகங்காரமாகச் சிரித்தார்.
சட்டநாதன் சோபாவில் உட்கார்ந்திருந்தார். அவர் எதிரே அவருக்கு மிகவும் பிடித்தமான மேல்நாட்டு மது வகைகள், மேசையில் இடம் பிடித்திருந்தன. அவருடைய பால்ய நண்பர் ரகுவரன் உட்கார்ந்து, அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
என்னடா அப்பிடிப் பாக்கறே என்றார் சட்டநாதன்.
டேய் சட்ட நாதா குற்றவாளின்னு தெரிஞ்சும் உன்னை மாதிரி வக்கீல் எல்லாம் மனசாட்சியை அடகு வெச்சிட்டு, பணத்துக்காகவோ, பெருமைக்காகவோ உங்க வாதத் திறமைங்கற திமிர்லே அந்தக் குற்றவாளியைச் சட்டத்தோட பிடியிலேருந்து விடுவிச்சு வெளியிலே கொண்டு வர்றீங்களே உங்களை மாதிரி மனுஷங்களாலேதான் நம்ம நாடு இவ்ளோ மோசமா போச்சு. குற்றவாளின்னு தெரிஞ்சா நிச்சயமா பணத்துக்காகவோ வேற காரணத்துக்காகவோ வாதாட யாரும் வராம இருந்தாலே இந்த நாடு தானா உருப்படும். குற்றங்கள் குறையும்.
அதுனாலேதான் சொல்றேன் இதெல்லாம் விட்டுட்டு நேர்மையா வாழ முயற்சி செய்யேண்டா என்றார் ரகுவரன். அயல்நாட்டு மதுவை ருசி பார்த்துக்கொண்டிருந்த சட்டநாதன், கண்கள் சிவக்க நிமிர்ந்தார். இந்தக் கேள்வியைக் கேட்டது நீ என் ப்ரெண்ட்.. அதுனாலே தப்பிச்சே! இல்லேன்னா நடக்கறதே வேற சரிடா அவன் அயோக்கியன்னு எல்லாருக்கும் தெரியும். இவ்வளவு ஏன், நீதிபதிக்கே தெரியும். அப்புறம் ஏன்டா கேஸ் கோர்ட்டுன்னு வராங்க. பொழைப்புடா.
யாருக்கும் இங்கே நீதியை நிலை நாட்டணும்கிற துடிப்பு இல்லே. எல்லாமே பணத்துக்குத்தான்டா. அதை விடு நீ அடிக்கடி சொல்லுவியே ஆண்டவன், அவனுக்குத் தெரியாதா இவன் அயோக்கியன்னு. அப்புறம் ஏன்டா சும்மா இருக்கான் ஆண்டவன் எதுக்கு எங்களை மாதிரி இருக்கறவங்களையும் படைச்சு இவங்க மாதிரி குற்றவாளிங்களுக்கு விடுதலை வாங்கிக் குடுக்கறாரு உங்க ஆண்டவன்
சத்தியம் என்னிக்குமே ஜெயிக்கும். தெய்வம் திடீர்ன்னு ஒரு நாள் அவதாரம் செய்வார். துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் செய்வார். இதெல்லாம் நீ சொல்லிச் சொல்லியே எனக்கு மனப்பாடம் ஆயிடுத்து. கோர்ட்லே கூட நான் மறக்கறதே இல்லே. ரொம்ப நுணுக்கமா வாதாடிட்டு கடைசீயிலே நானும் இதே வார்த்தையைச் சொல்லித்தான் ஜட்ஜோட மனசுலே என் கட்சிக் காரன் நேர்மையானவன்னு ஆழமா பதிய வெச்சி ஜெயிக்கிறேன். ஜட்ஜும் மனுஷந்தானேடா. என்னோட வார்த்தை ஜாலத்துக்கு மயங்கி அவரும் நான் ஏற்படுத்தின சந்தேகத்தோட பலனா என் கட்சிக்காரனுக்குச் சாதகமா தீர்ப்பு சொல்றார்,
எங்கடா போச்சு உன் தெய்வம் ஏன்டா வரலை அந்த அநீதியைத் தடுக்க உன் தெய்வமே பணத்துக்குதான்டா பயப்படுது. மனுஷன் கண்டு பிடிச்ச பனத்துக்குதாண்டா வெலை போகுது. உங்களோட சக்தி வாய்ந்த தெய்வத்தோட விக்ரகங்களையெல்லாம் கடத்தினான். தெய்வத்தோட விக்ரகத்திலேருந்து எல்லா நகையையும் கழற்றி வித்தான். தெய்வங்கள் இருக்கிற கோயிலோட சொத்தையெல்லாம் தன் பேருக்கு மாத்திக்கிட்டான். கோடி கோடியா சம்பாதிச்சான், ஒரு நாள் மாட்டிக்கிட்டான். அவனை நான்தாண்டா என்னோட வாதத் திறமையாலே நிரபராதீன்னு நிரூபிச்சேன். ஏன்டா அப்போ அந்தச் சாமி, தானே பாதிக்கப்பட்டும் வரலை சாட்சி சொல்ல
ஒரு விஷயம் தெரியுமா எங்க அப்பா வக்கீல். நேர்மையான வக்கீல். நியாயத்துக்குப் புறம்பா ஒரு வழக்கையும் எடுக்க மாட்டார். அவருக்கு எத்தனை பேர் சந்தர்ப்பம் கொடுத்தாங்க கடைசீ வரைக்கும் மனசுக்குள்ளே புழுங்கியே செத்தார். அவருக்கு எல்லாரும் முட்டாள்னு பட்டம் கொடுத்தாங்க. கேசும் வரலே, சம்பாத்தியமும் வரலே! அப்போ எங்கடா போச்சு உங்க தெய்வம் அப்போ புரிஞ்சிகிட்டேன் நீதி நேர்மை, நியாயம் இதெல்லாம் சும்மா, பணம் மட்டும்தான் தெய்வம் அப்பிடீன்னு அன்னிக்கு முடிவெடுத்தேன் நானும் வக்கீலுக்குப் படிச்சு பணம் சம்பாதிக்கணும்னு. இப்போ புத்திசாலி வக்கீல்ன்னு பேரெடுத்திருக்கேன். எங்கேடா உங்க சாமி என்றார் தள்ளாட்டத்துடன் சட்டநாதன்.
டேய் சட்டநாதா ஜெயிக்கிறோம்கிற திமிர்லே பேசறே. நாத்திகவாதத்துக்குப் பலம் அதிகம். நாத்திகவாதம்கிறது ஒரு வெறிபிடிச்ச பலம் உள்ள மிருகம். அது இப்போ புரியாது. சரி சரி அதிகமா குடிச்சு உடம்பைக் கெடுத்துக்காதே என்றபடி சட்டநாதனைக் கைத்தாங்கலாக அழைத்துப் போய்ப் படுக்க வைத்துவிட்டு, போர்வையைப் போர்த்திவிட்டு நான் நாளைக்கு வரேன் குட் நைட் என்றபடி கிளம்பிப் போனார் ரகுநாதன்.
மறுநாள் நீதி மன்றத்துக்கு விடுமுறை. காலையில் தினசரியைப் படித்துக்கொண்டிருந்தார் சட்டநாதன். ரகுவரன் குட்மார்னிங் என்று கூறியபடியே வந்தார். வா ரகு நேத்திக்கு நைட் உன்கிட்ட தாறுமாறா பேசினேன். அதெல்லாம் உன்னைப் புண்படுத்தணும்கிற நோக்கத்திலே பேசலை. டேய் ரகு என்னை மன்னிச்சிருடா என்றார் சட்டநாதன்.
அடப் போடா! இப்பிடித்தான் முப்பது வருஷமா பேசிண்டு இருக்கோம். இன்னிக்கு என்ன புதுசா நீ வேற நான் வேறன்னு நான் இது வரைக்கும் நெனைச்சதில்லே. ஆனா எனக்கு ஒரு பயம். நீ எந்த விதத்திலேயும் பாதிக்கப்படக் கூடாது! உனக்கு எந்தக் கெடுதி வந்தாலும் என்னாலே தாங்க முடியாது! டேய் சின்ன வயசிலே தட்டாமாலை சுத்துவோமே நினைவிருக்கா! அதிகமா சுத்தினா தலை சுத்தும் மயக்கம் வரும். ஆண்டவன் ஒரு பெரிய அடியைக் குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு பெரிய கர்வத்தைக் குடுப்பான்னு சொல்வாங்க அதுக்குத்தான்டா பயப்படறேன் என்றார் ரகுவரன்.
ரகு பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒண்ணு உண்டு. இதை நான் நம்பறேன். என்னோட வாழ்க்கை முடியறதுக்குள்ளே என் மூளைக்குச் சவாலான ஒரு கேசை எடுத்து நடத்தி அதுலே ஜெயிக்கணும்கிற ஆசை. அதுக்கு இப்போ சவால் வந்திருக்கு. இந்த பேப்பரைப் படி, இதுலே தூக்கு தண்டனைக் கைதிக்குத் திருமணம் அப்பிடீன்னு ஒரு செய்தி வந்திருக்கு. நிச்சயமா அவன் சாகப் போறான்னு தெரிஞ்சும் எப்பிடிடா அந்தப் பொண்ணு தைரியமா இவனுக்குக் கழுத்தை நீட்றா! என் திறமைக்குச் சவால் இந்தச் செய்தியிலே இருக்குடா! இந்தச் செய்தியை படிக்கிறேன் கேளுடா.
அனாதையான தன்னை எடுத்து வளத்து ஆளாக்கிய தெய்வத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த தாயின் மகனான இந்தச் செல்வத்தை மணக்கப் போகிறேன். இவரால் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் முருகனைவிட இவர் நேர்மையானவர் என்பதை என் மனம் அறியும் அப்பிடீன்னு ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்காடா இந்தப் பொண்ணு மல்லிகா! நான் இந்தப் பொண்ணோட தைரியத்துக்காகவே, தியாகத்துக்காகவே என் மூளையை உபயோகிச்சு இவன் குற்றவாளி இல்லேன்னு நிரூபிச்சு வெளியிலே கொண்டு வந்து இந்தப் பொண்ணோட வாழவைக்கப் போறேன்” என்றார் சட்டநாதன்.
மறுநாள் தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பிரதான செய்தியாக செஷன்ஸ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி செல்வத்தின் சார்பாக மேல் கோர்ட்டில் சட்டநாதன் ஆஜராகிறார். செல்வத்தை விடுவிப்பேன் சட்டநாதனின் சபதம் என்று ஏகத்துக்கும் முழங்கியது. நாடே பரபரப்பானது! நீதிமன்ற வளாகமே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது!
அன்று சட்டநாதனே திணறிப் போனார்.
அந்த அளவுக்கு அந்தக் குற்றவாளியின் மேல் சாட்சியங்கள் வலுவாக இருந்தன. ஆனால் உண்மையில் அவன் குற்றவாளியே அல்ல என்பது சட்டநாதனுக்கு நிதரிசனமாகத் தெரிந்தது. அரசியல் விளையாடியுள்ளது. அவனுக்கு எதிராகப் பல பெரிய பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் செயல்பட்டு வேண்டுமென்றே அவனைச் சிக்க வைத்திருப்பது புரிந்தது, ஆனால் சட்டத்தின் முன், சாட்சியங்களின் முன் அவன் ஒரு கொடூரமான கொலையைச் செய்தவன் என்று நிரூபிக்கப்பட்டு இருந்தது.
ஒரு கணம் தன்னை மறந்து சட்டநாதன் இறைவா இவன் குற்றமற்றவன். இவன் ஒருவனையாவது விடுவித்து என் பழைய கறைகளை நான் போக்கிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இவனை விடுவிக்க நீதான் எனக்கு வழி சொல்ல வேண்டும் என்று மனதுக்குள் இறைஞ்சினார் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அப்போது அவருடைய உதவியாளர் துப்பறியும் தனியார் நிறுவனத்திலிருந்து வந்த ஒரு தஸ்தாவேஜை கொண்டு வந்து அவரிடம் நீட்டினார். அந்த தஸ்தாவேஜில் இரண்டு நற்செய்தி இருந்தது, சட்டநாதனுக்குத். தூரத்தில் பர்வையாளர்களில் ஒருவளாகப் பதைபதைப்புடன் உட்கார்ந்திருந்த மல்லிகாவைத் திர்க்கமாக ஒரு முறை பார்த்தார். அவர் கண்கள் ஒளிர்ந்தன. அந்த டிடெக்டிவ் ஏஜன்சியின் கண்டுபிடிப்பு, அந்த மல்லிகா சிறு வயதில் காணாமல் போன அவருடைய மகள்! மற்றொரு செய்தி அவர் வெற்றிக்கு வழிவகுத்த முக்கியமான செய்தி.
சட்டநாதன் பிரகாசமானார். வாதம் சூடுபிடிக்க சூடுபிடிக்க, சட்டநாதன் வெறிபிடித்த வேங்கையானார். சட்டம் அவர் பிடியில் பலி ஆடாகியது, வேங்கை ஆட்டைக் குதறிக்கொண்டிருந்தது. அதன் ஆக்ரோஷத்தில் சட்டத்தில் மேலும் பல ஓட்டைகள் விழுந்தன. சட்டம் திக்குமுக்காடியது. கடைசியில் ஆடு குதறப்பட்டது.. சட்டம் துகள்களாய்ச் சிதறி, குருதி வழிந்து இறந்து போனது.
கனம் நீதிபதி அவர்களுக்கு ஒரு கோரிக்கை. ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படலாம்.
ஆனால் ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்படக் கூடாது. ஆகவே நான் ஒரு முக்கியமான சாட்சியை இங்கே விசாரிக்க அனுமதி கோருகிறேன் என்று கோரிக்கை வைத்தார், நீதிபதி அனுமதி வழங்கினார். அந்த முக்கியமான சாட்சி! முருகன் ! ஆம் குற்றவாளி செல்வத்தால் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் முருகன்! உயிருடன் இருக்கிறார், அவர் கொலை செய்யப்படவே இல்லை. இவரைக் கடத்தி ஒளித்து வைத்து, கொலைசெய்யப்பட்டதாக சட்டத்தை நம்பவைத்து ஏற்கெனவே இறந்த ஒருவரின் உடலை, முகத்தை சிதைத்து முருகன் என்று நம்ப வைத்து சதி நடத்தி இருக்கிறார்கள் சிலர். அவற்றுக்கான ஆதாரங்கள் இதோ இந்த தஸ்தாவேஜில் உள்ளன என்று அவற்றை நீதிபதியிடம் அளித்தார் சட்டநாதன்.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முருகன், வந்து நின்றான். நீதிமன்றம் வாயடைத்து அமைதி காத்தது.. முருகன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்
ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே இந்த செல்வம் நிரபராதி. அநியாயமாக அவர் செய்யாத குற்றத்துக்குத் தூக்குதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவரை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பெருமிதத்தோடு ஒரு முறை மல்லிகாவை பார்த்துவிட்டு உட்கார்ந்தார் சட்டநாதன்
திரு. சட்டநாதன் அவர்கள் நீதிமன்றத்துக்கு ஏற்பட இருந்த இழுக்கை மிகச் சாமர்த்தியமாக உடைத்தெறிந்திருக்கிறார்.
அவரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது மற்றும் செல்வம் அவர்களை நிரபராதி என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துவிட்டார். ஆகவே இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறானது, இவர் கொலை செய்யவே இல்லை என்பது உறுதியாகி விட்டதால் இவரை விடுவிக்கக் உத்தரவிடுகிறேன் என்று மேலும் படித்துக்கொண்டே இருந்தார். சட்டநாதன் வாழ்க என்ற குரல்விண்ணை முட்டியது!.
மறுநாள் ரகுவரன், சட்டநாதன், மற்றும் மல்லிகா செல்வம் ஆகியோர் உட்கார்ந்திருந்தனர். செல்வமும் மல்லிகாவும் தழுதழுத்த குரலில் நன்றி கூறிக்கொண்டிருந்தனர். அவர்களை இடைமறித்து சட்டநாதன், பேச ஆரம்பித்தார்.
“என்னோட மூளைக்கும் படிப்புக்கும் கிடைச்ச வெற்றி இந்தச் செல்வம். இறைவனோட அருள் என் மகள் மல்லிகா. அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை செல்வம் என்று கூறிவிட்டு எப்பிடி என்றது போல் பார்த்தார் ரகுவரனை.
டேய் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ சொல்லுடா உன் வாயாலே தர்மம் ஜெயிக்கும்னு என்றார் ரகுவரன்.
டேய் ரகு உண்மைதாண்டா. தர்மம் தோக்கறா மாதிரி தெரியும். ஆனா எப்பவும் ஜெயிக்கும் .அது மட்டுமில்லே தெய்வம் இருக்குடா என்றார் நெகிழ்வுடன்.
18
மயக்கம்
உனக்கு எவ்ளோ தைரியமும் ரௌவுடித்தனமும் இருந்தா வயசுக்கு வந்த என் பொண்ணு ரம்யாவை ஒரு ஹோட்டல் அறையிலே ராப்பூராத் தங்க வெச்சிருப்பே. உன்னை மாதிரி அயோக்கியனை நான் பாத்ததே இல்லே. உன்னை நம்பி என் வீட்டுலே குடித்தனம் வெச்சது என் தப்பு. இந்த விஷயம் வெளிலே தெரிஞ்சா எவ்வளவு அவமானம். இனிமே இவளை வேற யாரு கட்டிக்குவான்.
என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுட்டியே. ஏதோ உங்க அப்பா அம்மா எல்லாரும் வெளியூர்லே இருக்காங்கன்னு சொன்னதாலே நல்ல குடும்பத்துப் பையன்னு நெனைச்சு உனக்கு வீட்டை வாடகைக்கு விட்டேன் பாரு, என் புத்திய செறுப்பாலே அடிக்கணும்” என்று கத்தினார் விஸ்வநாதன்.
அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ. என்னடா முறைக்கிறே” என்றபடி ஆங்காரமாய் ஒரு அறை அறைந்தார் விஸ்வநாதன். இதற்காகவே காத்திருந்தாற் போல அந்த வீட்டிலிருந்த எல்லோருமே மனோவுக்குத் தர்ம அடி கொடுத்தனர். மனோ அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு, ரம்யாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
“இன்னும் என்னடா, அவளை முறைக்கறே அதான் குடி கெடுத்துட்டியே அழுதாள் ரம்யாவின் அம்மா காமாக்ஷி. ஆளாளுக்கு அவனைச் சொல்லத் தகாத வார்த்தைகளால் குதறி எடுத்தனர். ரம்யா அழுதாள். நான் உன்னை நம்பி மோசம் போய்ட்டேனே படுபாவி. என் வாழ்க்கையைச் சீரழிச்சிட்டியே என்றாள்.
மனோ முதன் முறையாக வாய்திறந்து, “ரம்யா இப்போ சொன்ன அதே வார்த்தையை இன்னொரு தடவை சொல்லு என்றான். எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன் என்றாள் ரம்யா, ஆங்காரத்துடன்.
சொல்லுவே சொல்லுவே. இப்போ என்ன வேணும்னாலும் சொல்லுவே. முதல் தடவை நீயா வந்து என்னைக் காதலிக்கறதா சொன்னியே, அப்போ நான் என்ன சொன்னேன் நினைவிருக்கா
வேணாம் ரம்யா, நீ ஏதோ இன்பேச்சுவேஷன்லே அவசர முடிவு எடுக்கறே. உங்க அப்பாவும் அம்மாவும் உன்னைத் திட்றாங்கன்னா அது உன்னோட நல்லதுக்குதான். அவங்களுக்கு இல்லாத அக்கறை வேற வெளி மனுஷனுக்கு இருக்கவே முடியாது. அதுனாலே இனிமே காதல் கத்திரிக்காய் அது இதுன்னு உளறாமே காலேஜ் படிப்பை முடிக்கற வழியைப் பாருன்னு சொன்னேனே கேட்டியா
சரி அதுக்கு அப்புறமும் நீ இத்தனை நாளா உன்னைப் பெத்து வளத்த உங்க அப்பா, அம்மா மேலே கூட நம்பிக்கை இல்லாமே, என்னோட சுயரூபம் என்னா? நான் யாரு எங்க குடும்பப் பின்னணி என்னான்னு கூடத் தெரியாம, நான் நல்லவனா, கெட்டவனான்னு கூடத் தெரியாம, முன்னே பின்னே யோசிக்காம என்னை நம்பி ஹோட்டலுக்கு வந்து தங்கினியே. அன்னிக்கு தெரியலையா என்னை மாதிரி ஆளுங்களை நம்பக் கூடாதுன்னு
நீ குடுத்த தைரியத்திலே தானே உன்னை ஹோட்டலுக்கு நான் அழைச்சிட்டுப் போனேன். நானா உன்னை வலுக்கட்டாயமா ஹோட்டலுக்குக் கூட்டிண்டு போனேன். உன் மனசுலேயும் சபலம் இருக்கவேதானே நீயும் வந்தே , ஏதோ நான் உன்னைக் கெடுத்துட்டா மாதிரி பேசறையே, இப்போ நான் சொல்றேன். நீதான், உன்னை மாதிரிப் பொண்ணுங்கதான், என்னை மாதிரிப் பசங்களுக்குத் தைரியம் கொடுத்து, எங்களையும் கெடுத்து, நீங்களும் கெட்டுப் போறீங்க.
அப்புறம் எல்லாப் பழியையும் எங்க மேலே போட்ற வேண்டியது. பெரியவங்க சொல்வாங்க ‘ஊசி இடம் கொடுக்காமே நூல் நுழையமுடியாதுன்னு . இப்போ என்னை மட்டும் குத்தம் சொல்றே என்றான்.
காமாக்ஷி அம்மா உங்க புருஷன் வெளியூருக்கு ஏதோ ஒரு வேலையாப் போனாரு சரி. அன்னிக்கு உங்க பொண்ணு காலேஜ்லே ஒரு டூர் போகப் போறோம். அதுனாலே இன்னிக்குப் போய்ட்டு நாளைக்கு வந்திருவோம்னு சொன்னாளே. உங்க புருஷன்கிட்ட சொன்னீங்களா சரி காலேஜ்லேயாவது விசாரிச்சீங்களா அது சரி இந்தக் காலத்துப் பசங்க அவங்களை நிறையப் பணத்தைக் கொட்டிப் படிக்க காலேஜுக்கும் அனுப்பிட்டு, அவங்களை வேவு பாக்கறதுக்கும் ஒரு ஆளை ஏற்பாடு செய்ய முடியுமா கஷ்டம்தான்.
ஆனா உங்க புருஷனுக்கு ஒரு போன் செஞ்சு விஷயத்தைச் சொல்லி இருக்கலாமே. அல்லது நேத்தே உங்க அப்பாகிட்ட அனுமதி வாங்கி இருந்தா அனுப்புவேன். அவர் அனுமதி இல்லாமே அனுப்ப மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே என்றான்.
அவனை மேலே பேசவிடாமல், எல்லோரும் அவன் மேல் பாய்ந்தனர் அடிக்க. மனோ என்கிற மனோகர் உரத்த குரலில் யாராவது இனிமே என் கிட்ட நெருங்கினா, எல்லாரையும் நான் அடிப்பேன் என்றான்.
அதிர்ந்து போய் அவரவர் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றனர். உங்க யாருக்காவது வெர்ஜின் டெஸ்ட்டுன்னா என்னன்னு தெரியுமா அப்பிடித் தெரியலைன்னா நான் சொல்றேன். ஒரு பொண்ணோட கன்னித் தன்மையை நிரூபிக்கிற விஞ்ஞான பரிசோதனை. உங்க பொண்ணுக்கு அந்த டெஸ்ட்டைப் பண்ணிப் பாருங்க அப்போ தெரியும். உங்க பொண்ணு மேலே என் சுண்டு விரல் கூடப் படலைன்னு.
கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு அவசர முடிவெடுத்து, முன்னே பின்ன தெரியாம, வெளி வேஷத்தை மட்டும் நம்பிக் கெட்டுப் போற பெண்கள் நாட்டிலே அதிகமாயிட்டாங்க. அவங்களுக்கெல்லாம் இது ஒரு பாடமா இருக்கணுன்னுதான் இப்பிடிச் செஞ்சேன். நான் சொல்றதுக்கெல்லாம் என்ன சாட்சின்னு கேக்கறீங்களா என்று கேட்டுவிட்டு திரும்பி விஸ்வநாதனைப் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
ரம்யா விஸ்வநாதன் அதான் உங்க அப்பா காமாக்ஷி அம்மா உங்க புருஷனைத்தான் சொல்றேன். இவரைக் கேளுங்க, இத்தனை நேரமா என்கிட்ட செஞ்சு குடுத்த சத்தியத்துக்காக உங்களோட சேந்துகிட்டு, மனசிலே ரத்தம் வடிஞ்சாலும் வெளிலே அதைக் காட்டிக்காம, உங்கள்ள ஒருத்தரா நின்னு என்னை அடிச்சாரே இந்த நல்ல மனுஷன் விஸ்வநாதன். இவரைக் கேளுங்க உண்மையைச் சொல்வாரு. என்னோட எல்லாத் திட்டத்துக்கும் ஒத்துவந்து என்னோட ஒருத்தரா நின்னு இந்தத் திட்டத்தை வெற்றிகரமா முடிச்சுக் கொடுத்தாரே, அவர்தான் இனிமே பேசணும் என்றான்.
மனோகர், உண்மையிலேயே ஆக்ரோஷமா உன்னை அடிச்சேன். அப்போதான் இவங்க நம்புவாங்கன்னு, வலிக்குதா என்றார் விஸ்வநாதன் பரிவாகத் தடவிக் கொடுத்தபடி.
இல்லே சார். இப்பக் கூட நான் பண்ணது தப்புன்னு உங்க காலைப் பிடிச்சு கதறாமே அப்பிடியே குத்துக் கல்லு மாதிரி நிக்கறாளே உங்க பொண்ணு ரம்யா அதுதான் சார் மனசு வலிக்குது என்றான் மனோகர்.
19
ரிஷிமூலம்
டேய் ரிஷி எழுந்திருடா மணியாச்சு இன்னிக்கு தீபாவளி, எழுந்து சீக்கிரமா குளிச்சிட்டு புதுத் துணியெல்லாம் போட்டுக்கணும், பூஜை பண்ணணும் பட்டாசெல்லாம் வெடிக்கணும் ஸ்வீட் சாப்பிடணும். இப்பிடித் தூங்கினா என்ன செய்யறது இதுக்குதான் நேத்திக்கு சீக்கிரமா படுத்துக்கோடா அப்போதான் காத்தாலே சீக்கிரமா எழுந்துக்க முடியும்னு சொன்னேன். கேட்டாதானே என்றாள் மங்களம்.
கண்விழித்துப் பார்த்தான் ரிஷி. எல்லாம் மங்கலா தெரியறது. இன்னும் பொழுது விடியலை போல இருக்கு என்று அப்படியே கவிழ்ந்து படுத்துக்கொண்டு ரிஷி தூங்க ஆரம்பித்தான். யாரோ உலுப்பி உலுப்பி எழுப்பினர். அட என்னம்மா இது தூங்கவிடாம தொந்தரவு பண்றியே” என்று சலிப்புடன் எழுந்து உட்கார்ந்தான் ரிஷி.சரி சரி போயி சீக்கிரமா பல்லு தேச்சுட்டு வா என்றாள் மங்களம்.
ரிஷி முதல் காரியமாக நேற்று வைத்திருந்த பட்டாசு பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் எடுத்து வெளியில் அடுக்கி வைத்தான் அங்கே வந்த மங்களம் என்னடா இது அப்புறமா பட்டாசெல்லாம் எடுக்கலாம். இப்போ வாடா நலங்கு இடணும் என்றாள். இரும்மா இதோ ஒரே ஒரு பட்டாசு வெடிச்சிட்டு வரேன் என்றபடியே ரிஷி ஓடினான்.
மணையில் கோலம் போட்டு, வரிசையாக எல்லோரையும் உட்காரவைத்து எதிரே தட்டில் இருந்த நலங்குச் சாந்தை எடுத்து காலை நீட்டுங்கோ என்றபடி மங்களம்
எல்லோருக்கும் நலங்கிட்டாள். மாப்பிள்ளைக்கு நம்ம பொண்ணு காயத்ரியை நலங்கு வைக்கச் சொல்லு என்றார் கல்யாணராமன். அதேபோல் மாப்பிள்ளைக்குக் காயத்ரி நலங்கிட்டாள். மாப்பிள்ளை இப்போ நீங்க காயத்ரிக்கு நலங்கிடுங்கோ என்றார் கல்யாணராமன்.
மாப்பிள்ளையும் சிரித்தபடி காயத்ரியின் காலைப் பிடித்து நலங்கிட்டார். வெற்றிலையில் சற்றே சுண்ணாம்பு தடவி பாக்கு வைத்து மங்களம் எல்லோருக்கும் கொடுத்தாள். சீக்கிரம் எல்லாரும் குளிச்சிட்டு வாங்கோ என்றாள்.“சார் நீங்க மாமிக்கு நலங்கிட்டு விடுங்கோளேன் என்றார் மாப்பிள்ளை. மங்களம் வெட்கப்பட்டாள். ரிஷி மனத்தில் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
நலங்கு இட்டு முடித்ததும் எல்லோருக்கும் தலையில் ஒரு கை நல்ல எண்ணெயை வைத்துவிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ என்றாள் மங்களம். அனைவரும் குளித்துவிட்டு வந்தவுடன் புதுத் துணிகளை ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து, எல்லோருக்கும் மங்களமும் கல்யாணராமனும் ஜோடியாக நின்று அளித்தனர். அனைவரும் அவர்களை நமஸ்கரித்து துணிகளை வாங்கிக்கொண்டு புதிய துணிகளை அணிந்துகொண்டு பட்டாசுகள் வெடிக்க கிளம்பினர்.
கொஞ்சம் இருங்கோ. சமையல் ஆயிடுத்து. பூஜை அறையிலே அலங்காரம் பண்ணி வெச்சிருக்கேன். எல்லாரும் வந்து சேவிங்கோ. பூஜையை முடிச்சிட்டு அப்புறமா பட்டாசுக் கதையைப் பாருங்கோ என்றாள். கற்பூர ஹாரத்தி எடுத்து முடித்து பூஜை முடிந்தவுடன் எல்லோரும் பட்டாசு வெடிக்கக் கிளம்பினர். ரிஷி, அத்திம்பேர், நான் ஏரோப்ளேன் வெடி வெடிக்கப் போறேன் என்றபடி மத்தாப்பு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஓடினான். இந்த புடவையிலே நீ ரொம்ப அழகா இருக்கே அப்பிடீன்னு சொல்லிண்டே காயத்ரியிடம் நெருங்கினான் மாப்பிள்ளை.
யதேச்சையாகத் அங்கே வந்த கல்யாணராமன் காப்பியைக் கையில் வைத்தபடி திரும்பினார். மாப்பிள்ளை திடுக்கிட்டு அசடு வழிந்தார்.
கல்யாணராமன், ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ என்று சிரித்தபடியே நகர்ந்து போனார். ரிஷி அத்திம்பேர் சீக்கிரம் வாங்கோ ன்னு கையைப் பிடித்துக்கொண்டான். இதோ வருவார்றா. நீ பட்டாசு வெடிச்சிண்டே இரு. இதோ வந்துண்டே இருக்கார் மாப்பிள்ளை என்றார் கல்யாணராமன். டேய் ரிஷி இந்தாடா உனக்குன்னு அமெரிக்காவிலேருந்து வாங்கிண்டு வந்தேன். ஸ்பெஷல் சாக்லேட் என்றார் மாப்பிள்ளை. தேங்க்ஸ் சொல்லி அதை வாங்கிக்கொண்டு ரிஷி ஓடினான்.
ஏங்க எழுந்து வாங்கோ என்று யாரோ எழுப்பினர். கண் விழித்தார் ரிஷி. எழுந்து மெதுவாக நடந்து வந்து ஈசிசேரில் சாய்ந்துகொண்டு கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு, காதில் காது கேட்கும் கருவியையும் மாட்டிக்கொண்டார். தீபாவளி கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. அத்தனையும் அவரின் மனத்துக்குள்ளே அழியாத மரபு வேர்களாய் ஆழப் பதிந்திருக்கும் இனிய நினைவுகள் என்று.
அவருடைய மனைவி சௌந்தரம் எழுந்து வாங்கோ அப்பிடியே லேசா குளிச்சிட்டு வந்தீங்கன்னா பூஜைக்கு எல்லாம் தயாரா வெச்சிருக்கேன். பூஜை பண்ணிட்டு சாப்பிடலாம் என்றாள். தலையை ஆட்டினார் ரிஷி. எவ்வளவோ முறை அவளைப் பார்த்தவர்தானே. ஆனால் இன்றும் அவருக்கு அவர் மனைவி சௌந்தரத்தைப் பார்த்தால், அம்மா மங்களத்தின் நினைவே வந்தது. பாரம்பரிய மரபு வேர்களின் ஆழம், நமக்கெல்லாம் இன்னும் சரியாகப் புரியவில்லையோ என்று,
ஓ இதுதான் ஜென்ம ஜென்மாந்திரத் தொடர்போ என்று தோன்றியது அவருக்கு.
எழுந்து போய், பூஜை பண்ணலாமா சௌந்தரம் அம்மா என்றார்!
20
பேரின்பம்
எத்தனையோ பேர் வந்து போகும் இடம். ஏறக்குறைய சத்திரம் மாதிரி. ஆமாம் அவள் தொழிலே வரும் ஆண்களை மயக்கி அவளோடு சல்லாபம் செய்ய வைத்து, அதிக பணத்தை அவர்களாகவே அள்ளிக் கொடுக்க வைப்பதுதான். அப்படிப் பழக்கி இருந்தார்கள் அவளை. அவள் இருக்கும் வீட்டின் தலைவி கல்யாணி இவளைத் தனியாக அழைத்து, இன்று இரவு ஒருவர் வரப் போகிறார்.
நல்ல பசையுள்ள பார்ட்டி. நீ நடந்துக்கறதைப் பொறுத்து இருக்கு நம்ம வருமானம். அவருக்குப் பிடிச்சுப் போச்சுன்னா அவரே உன்னோட பர்மனண்ட் கஸ்டமராக் கூட இருப்பாரு. பாத்து நடந்துக்கோ என்று திருமணம் ஆன புதிதில் திருமணப் பெண்ணுக்குச் சொல்வது போல் சொன்னாள். ”சரிம்மா, நான் பாத்துக்கறேன்” என்றாள், சிரிப்புடன் ரஞ்சிதா. ஆனால் அன்று வந்தவரைப் பார்த்து அதிர்ந்தாள் ரஞ்சிதா!
பருவம் வந்து அந்தப் பருவம் அவளைப் பொல்லாத பாடு படுத்திக்கொண்டிருந்த நேரம். எதைப் பார்த்தாலும் சந்தேகமும், ஆனால் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அவளைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது. அவள் வனப்பு, அவளுக்கே ஒரு கர்வத்தை ஏற்படுத்தியது. அடிக்கடி நிலைக்கண்ணாடி முன் நின்று யாரும் அறியாமல் ரகசியமாய் அவள் வனப்பை அவளே ரசித்துக்கொண்டிருந்த யௌவனம், ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், உடலில் ஏற்படும் பருவ மாற்றங்கள் அளித்த சந்தேகங்களும்,
அவற்றைத் தெளிவு செய்துகொள்ளத் தகுந்த தோழி கிடைக்காமையினால் ஏற்பட்ட கோபமும் அவளை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் யாரையும் நம்பி அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள அவள் மனம் இடம் கொடாத அவஸ்தை, அப்படிப்பட்ட நேரத்தில்தான் அவனைச் சந்தித்தாள். அப்படிச் சொல்வதை விட அவன், அவளைச் சந்தித்தான் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
கல்லூரிக்குப் போவதற்காக வாசலுக்கு வந்து அம்மா நான் போயிட்டு வரேன் என்று கூறி விட்டு, வாசற்படியை விட்டு அவள் தெருவில் இறங்குவதற்கும் அந்த மோட்டர் பைக் அவள் மீது வந்து இடிப்பது போல் அருகே வந்து கிரீச்சிட்டு நின்றதும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது பாத்து வாங்க எங்கேயோ பராக்கு பாத்துண்டே ரோட்டிலே நடக்கக் கூடாது என்றான். அந்த மோட்டர் பைக்கில் ஸ்டைலாய் உட்கார்ந்திருந்த அவன் ஏன் நீங்க பாத்து ஓட்ட மாட்டீங்களோ கொஞ்சம் ஏமாந்திருந்தா என்னைக் கீழே தள்ளி விட்டிருப்பீங்களே என்றாள் பதற்றத்துடன்.
அட எத்தனையோ நாளா உங்களையே பாத்துக்கிட்டே இருக்கேன். உங்களுக்கு இப்பிடி பேசக் கூடத் தெரியுமா இனிமே பாத்து ஓட்றேன். சாரி என்று சொல்லிவிட்டு ஒரு புன்சிரிப்புடன் பைக்கைக் கிளப்பி, விர்ரென்று போனான். அவள் நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவன் சொன்ன வார்த்தை, அவளுக்கு நினைவு வந்தது. இவன் ஏன் என்னை எத்தனையோ நாளாக் கவனிக்கறான் என்று மனம் குறுகுறுத்தது.
அதற்காகவே அவன் மோட்டார் பைக்கின் சைலன்ஸரைக் கழற்றிவிட்டு, அவள் தெருவில் அடிக்கடி வருகிறான் என்பது அவனுடைய சுழலும் விழிகளில் தெரிந்த போது, முதலில் கோபம் வந்தது. பிறகு ஆர்வம் வந்தது. ஒருவித மயக்கம் வந்தது. அன்றிலிருந்து அவன் மோட்டார் பைக்கின் சத்தம் அடிக்கடி கனவில் வந்தது, படபடபடவென்று அவனுடைய மோட்டார் பைக் சத்தம் கேட்க ஆரம்பித்தாலே மனது படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. அந்த மோட்டார் பைக் சத்தம், அவள் வாழ்வில் எப்போதும் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கப் போகிறது என்பதை உணராதவளாய் அவள் அவனுடைய வலையில் மெல்ல மெல்ல விழுந்து கொண்டிருந்தாள்.
ஒருநாள் அவள் நடந்து போகும்போது அவளைக் கடந்து அவன் பைக் சென்றது. அவன் பார்வை, அவள்மேலே உரசிவிட்டுச் சென்றது. யாரோ ஒருவர் இந்தப் பையன் ஏன் இப்படி தாறுமாறா வண்டி ஓட்றான் அந்தக் கடைசீ வீட்டுலே இருக்காங்களே. அந்தக் கல்யாணி அம்மா அவங்க பையன் ரமேஷ். ஒருநாள் அந்தம்மா கிட்ட சொல்லணும் என்றபடி பேசிக்கொண்டே போனார்கள்.
கல்லூரியில் வகுப்பில் உட்கார்ந்திருக்கும் போதும் அவன் நினைவு, மாணவர்களின் கரகோஷம் இவளை நினைவுக்குக் கொண்டு வந்தது. புதிதாக வந்திருக்கும் லெக்சரர் இவர் இவர் பேரு கேசவன். நாளையிலேருந்து இவர்தான் உங்களுக்கு வகுப்பு எடுப்பார். உங்க ஒத்துழைப்புக்கு நன்றி என்றபடி விடைபெற்றார் பழைய லெக்சரர். வெல்கம் வெல்கம் என்று கோரஸ் பாடினர் மாணவர்கள். அந்த வரவேற்பைச் சிரித்த முகத்துடன் ஏற்ற கேசவன், அறிமுகம் முடித்து, இன்னிக்கு முதல் நாள். அதுனாலே ஒரு சின்ன பாடம் மட்டும் சொல்லிக் குடுத்துட்டு உங்களை விட்டுடறேன்
என்று ஆரம்பித்து வேதியியலில் முதல் பாடம் இதுதான், எந்த ஒரு ரசாயனத்தையும் நாம உபயோகிக்கிற புயூரெட்டொ பிப்பட்டொ அதுலே நாம கலக்கறதுக்கு உபயோகிக்கிற கண்ணாடிக் குச்சியை நல்லா கழுவி அதுலே பழைய ரசாயனத்தின் சிறு துளிகூட இல்லையான்னு பாத்துட்டுதான், இன்னொரு ரசாயனத்திலே போடணும். இது மிக முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் இன்னிக்கு. இது போதும். நான் இப்போ லாபுக்குதான் போறேன். கெமிஸ்ட்ரீலே ஏதாவது சந்தேகம் இருந்தா லேபிலே வந்து என்னைக் கேக்கலாம் என்று கூறிவிட்டு கிளம்பினார்.
அன்று கல்லூரி வாசலில் இவளுக்காக காத்திருந்த ரமேஷைப் பார்த்ததும் திகீரென்றது ரஞ்சிதாவுக்கு. ஆனால் ரமேஷ் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.இவளையும் ரமேஷையும் நோட்டம் விட்ட சக மாணவிகள் நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தனர். மறு நாள் கல்லூரியின் உள்ளே அவள் படிக்கும் அறைக்கே வந்து வாயிலில் நின்ற ரமேஷைப் பார்த்ததும் பயந்தே போனாள் ரஞ்சிதா. ஆனால் ரமேஷ் அந்த கெமிஸ்ட்ரி லெக்சரரிடம் அனுமதி பெற்று அவர் அருகே சென்று அவர் காதில் ஏதோ சொன்னான்.
தொண்டையை செருமிக்கொண்ட லெக்சரர் கேசவன் ரஞ்சிதா இவர் பேரு ரமேஷ். இவர் உங்க வீட்டுகிட்டதான் இருக்காராம். உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதுனாலே உன்னை அழைச்சிட்டுப் போகணுன்னு சொல்றாரு.
உங்களுக்கு இவரைத் தெரியுமா என்றார். தெரியும் என்று தலையாட்டினாள். அம்மாவுக்கு என்ன ஆச்சு என்கிற கலவரத்துடன், சரி நீங்க இவரோட போங்க. ஒண்ணும் கவலைப் படாதீங்க என்றார் கேசவன்.
ரஞ்சிதா தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அவர்கள் இருவரும் ஜன்னல் பக்கம் வரும்போது, வகுப்பின் உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது. கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிடிச்சு என்று சிலர் சிரிக்கும் சத்தமும் கேட்டது.
ரமேஷுடன் வீட்டுக்கு வந்த போது அங்கே தெருவே கூடியிருந்தது. சுனாமியாய் அடித்துப் போட்டது விதி அவளை. ஆமாம் எந்த ஒரு நோயும் இல்லாமல் கலகலப்பாக வளைய வந்துகொண்டிருந்து, அந்த வீட்டின் ஜீவ நாடியாகவே திகழ்ந்த அவள் அம்மா திடீரென்று மாரடைப்பால் இறந்து கிடந்தாள்.
ரஞ்சிதாவைத் தேற்றி, அவள் அம்மாவின் உடலைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, எல்லா ஏற்பாட்டையும் ரமேஷ் கவனித்துக்கொண்டான். எல்லாச் சடங்குகளும் முடிந்து வெறுமை அவளைத் தாக்கியபோது அவள், ரமேஷின் தோளில் தஞ்சமடைந்தாள். அவளுக்குத் தெரியாது, ரமேஷின் அம்மா என்று அழைக்கப்படும் கல்யாணி அம்மா ஒரு தொழில்காரி என்று. ரமேஷ், ரஞ்சிதாவை அவன் வீட்டுக்கு அழைத்துப் போனான்.
தன் அதிர்ச்சியிலிருந்து மீண்ட ரஞ்சிதா எதிரே உட்கார்ந்திருந்த வேதியியல் விரிவுரையாளர் கேசவனை ஏறிட்டுப் பார்த்தாள். கேசவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. ஏன் சார் நீங்க இது மாதிரி இடத்துக்கு வந்தீங்க என்றாள். இதுதாம்மா முதல் முறை என்று ஒரு கூச்சத்துடன் சொன்னார் கேசவன். அவளையே பார்த்துக்கொண்டிருந்த கேசவன் என் வாழ்க்கையிலே அன்புங்கற கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகலைம்மா. என் மனைவி குழந்தைங்க எல்லாரும் என்னை வெறுக்கறாங்க.
காரணமே இல்லாம, அதுனாலேதான் நான் ஒரு ஆறுதலுக்கு சரி ஒரு மாறுதலுக்கு இங்கே வந்தேன் என்றார். அவருக்குக் காப்பி பிடிக்குமா என்று கேட்டுவிட்டு ரஞ்சிதா, பாலையும் டிகாஷனையும் கலந்து சர்க்கரை போட்டு ஸ்பூனால் கலக்கினாள். அந்த ஸ்பூனை வாஷ் பேசினில் கழுவி, தன்னுடைய தேநீர் இருக்கும் கோப்பையில் போட்டு அதையும் கலக்கினாள்.
ஆமா எனக்கு ஒரு சந்தேகம், காப்பியைக் கலக்கின அதே ஸ்பூனாலே தேநீரைக் கலக்கினா என்ன ஆகும் என்றாள். கூடாதும்மா கெமிஸ்ட்ரீலே நான் சொல்லிக் குடுக்கற முதல் பாடமே அதுதான். நமக்குத் தெரியாது விளைவுகள் எப்பிடி இருக்கும்னு. ஆனா ஒண்ணு ஏதோ ஒண்ணு அதோட தூய்மையை இழக்கும் என்றார். மௌனமாக அவரையே பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சிதா
இவ்வளவும் தெரிஞ்ச நீங்க ஏன் சார் இங்கே வந்தீங்க?” என்றாள்.
திடுக்கிட்ட கேசவன் சற்று நேர மௌனத்துக்குப் பின் இனிமே இங்கே மட்டுமில்லே. வீட்டை விட்டு எங்கேயும் போகமாட்டேன் என்று கூறிவிட்டு அவள் அருகே வந்து நீ உன்னை என் பொண்ணுன்னு சொல்றதா இல்லே அம்மான்னு சொல்றதான்னு தெரியலை” என்று கூறிவிட்டு அவள் நெற்றியின் உச்சியில் முத்தமிட்டு வெளியே போனார்.
21
தகுதி
அப்பா சொன்னதைக் கேட்டு இங்கே இவர் வீட்டுக்கு வந்தது தவறோ என்று முதன் முறையாகக் கணேஷுக்குத் தோன்றியது.
ஆமாம் பத்து நாட்களாகத் தொடர்ந்து இந்தச் சுந்தரேசன் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறான் கணேஷ். காலத்துக்கு ஏற்ப நிறையப் படித்திருந்தும் அவனுக்கு உரிய வேலை கிடைக்காமல் பல நிறுவனங்களில் வேலை பார்த்தும் அவையெல்லாம் திருப்தி அளிக்காமல் தன் தகுதிக்குரிய வேலைக்காக அலைந்துகொண்டிருந்தான் கணேஷ்.
அப்பா வேதாசலம் ஒரு நாள் அவனிடம் என்னுடைய ஆப்த நண்பன் சுந்தரேசன் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரன். அவனைப் போய்ப் பார்த்துவிட்டுவா என்றார். அவருடைய பேச்சை மதித்து, இந்தச் சுந்தரேசன் வீட்டுக்கு முதல் நாள் வந்தது, அவன் மனத்தில் நிழலாடியது.
வாயிலில் இருந்த கூர்க்காவிடம் தன் விவரங்களைத் தெரிவித்து, சுந்தரேசனுடைய நண்பர் வேதாசலம் மகன் கணேஷ் வந்திருப்பதாகத் தெரிவித்துக் காத்திருந்தான். இண்டெர்காமில் கேட்டுக்கொண்டு கூர்க்கா அவனிடம் வந்து, ’உங்களை மொட்டை மாடிக்கு வரச் சொன்னார் என்று சொன்னவுடன் உள்ளே சென்று, படிவழியாக மொட்டை மாடியை அடைந்தான்.
அங்கே பல நிறுவனங்களுக்கு இயக்குனரான சுந்தரேசன் பேரன் கீர்த்தியுடன் சேர்ந்து காற்றாடி விட்டுக்கொண்டிருந்தார். வாப்பா. உங்க அப்பா வேதாசலம் சௌக்கியமா என்று வாய் கேட்டாலும் கையும் மனமும் கண்ணும் காற்றாடி மேலே இருந்தது.
சார் சார், என்ன சார் இது நான் எதிர்பார்க்கவேயில்லை. நீங்க போயி இப்பிடிக் காத்தாடி விட்டுண்டு இருக்கீங்க ’ தட்டுத் தடுமாறி ஒரு வழியாய் வியப்பாய் அந்தக் கேள்வியை கேட்டுவிட்டான் கணேஷ்!
காற்றாடியை அனாயாசமாக இழுத்து, கீழே இறக்கி அந்தக் காற்றாடியைப் பேரனிடம் கொடுத்துவிட்டு, நூலைச் சுற்றத் தொடங்கினார் சுந்தரேசன். அவரையே வியப்பாய் பார்த்துக்கொண்டே , ’நான் நூலைச் சுற்றித் தரட்டுமா ’ என்றபடி அவரிடமிருந்து நூல் கண்டை வாங்கிச் சுற்றத் தொடங்கினான் கணேஷ். பக்கத்தில் இருந்த குழாயில் முகத்தை கழுவி, கை கால்களையும் கழுவிக்கொண்டு, கொடியில் காயப்போட்டிருந்த துண்டை எடுத்துத் துடைத்துக்கொண்டு மிஸ்டர் கணேஷ், நான் இப்போதான் பல தொழில் நிறுவனங்களுக்கு அதிபர். சின்ன வயசிலேருந்து அடி பட்டு உதை பட்டு கீழே விழுந்து மூஞ்சி முகரையெல்லாம் பேத்துண்டு, அதுக்கு நடுவிலே வாழ்ந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். எந்தப் பழசையும் மறக்காதவன்… புரியுதா, அதுனாலேதான் உங்கப்பாவையும் ஞாபகம் வெச்சிண்டிருக்கேன். உங்களையும் வரச்சொன்னேன் புரியுதா ’ என்றார்.
சரி சார் சரி சார்’ என்று திணறினான் கணேஷ். சரி, எனக்கு நாளையிலேருந்து ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீங்க தினோம் இவன் கூட வந்து இவனுக்குக் காத்தாடி விடக் கத்துக் குடுங்க. நாளைக்கு உங்களைப் பாக்கறேன் சரியா’ என்றபடி செல்போனில், ரமேஷ் நான்தான் ஆமாம் சரியா இன்னும் பத்து நிமிஷத்திலே நான் நம்ப கார்பொரேட் ஆபீஸ்லே இருப்பேன். நீயும் வந்துடு. இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் என்று பேசியபடி போய்க்கொண்டே இருந்தார்.
அப்பா நீங்க போய்ப் பாக்கச் சொன்னீங்களே அந்தச் சுந்தரேசன். அடேங்கப்பா என்னா ஒரு மனுசன். என்ன கம்பீரம். என்ன ஒரு நேரம் தவறாமை. என்ன ஒரு எளிமை. அப்பா இருந்தா அவரை மாதிரி இருக்கணும் என்றான் கணேஷ்.அதெல்லாம் சரிப்பா உனக்கு அவர் வேலை குடுத்தாரா என்ற வேதாசலத்திடம் ஆமாப்பா அவரோட பேரனுக்கு காத்தாடி விடக் கத்துக் குடுக்கச் சொல்லி இருக்கார். நாளையிலேருந்து போகப் போறேன் என்ற கணேஷிடம் மிகச் சாதாரணமாக, சரிப்பா போய்ட்டு வா என்றார் வேதாசலம். கணேஷ் அவரையே வியப்பாய் பார்த்துக்கொண்டு நின்றான்.
மறுநாள் சுந்தரேசனின் பேரன் கீர்த்தியை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, காற்றாடிக்கு எப்படி சூத்திரம் போடுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் கணேஷ். சுந்தரேசனின் மனைவி சாந்தா! பெயருக்கேற்றபடி சாந்தம் தவழும் புன்னகையோடு மாடிக்கு ஏறி வந்து கணேஷுக்கும் கீர்த்திக்கும் ஒரு தட்டில் பஜ்ஜி, காப்பி எல்லம் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து சாப்பிடப்பா என்றாள்.
ஏம்மா நீங்க ஏறி வர்றீங்க. கூப்பிட்டிருந்தா நானே வந்து வாங்கிட்டு வந்திருப்பேனே என்ற கணேஷை அதனாலென்ன சரி நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டுட்டு கீழ வரும்போது தட்டுகளைக் கீழே கொண்டு வந்திருங்க என்றபடி இறங்கிப் போனாள். அந்த வாரம் கடைசியில் கீர்த்தி மிக நுணுக்கமாகக் காற்றாடி விட்டுக்கொண்டிருந்தான்.
வெள்ளிக்கிழமை அன்று சுந்தரேசனின் ஒரு முக்கிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிய அனுமதிக்கும் உறுதிக் கடிதம் வந்தது.அப்பா எனக்கு உங்க நண்பரின் கம்பனீலேருந்து அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் வந்திருக்கு என்றான் கணேஷ், மகிழ்ச்சியுடன். சரிப்பா போய்ச் சேந்துடு என்றார் வேதாசலம். சரிப்பா ஆனா ஒண்ணு. என் மனசுக்கு வேலை பிடித்திருந்தா செய்வேன். இல்லேன்னா விட்ருவேன் என்றான் கணேஷ். மறுநாள் அந்த அலுவலகத்துக்கு சென்று பொறுப்பை ஏற்றான் கணேஷ். சுந்தரேசன் அலுவலகத்துக்குள் நுழைந்தார். அனைவரும் எழுந்து மரியாதை நிமித்தமாக இனிய காலை வணக்கம் சொன்னார்கள். ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் காலை வணக்கம் சொன்னவர், நேராக கணேஷ் இருக்கும் மேஜைக்கு வந்து நின்றார்.
கணேஷ் மிகவும் நன்றி சார். ஆனா ஒரு விஷயம். என் தகுதிக்கேற்ற வேலைன்னா செய்வேன். இல்லேன்னா நின்னுடுவேன்’ என்றான்.
‘அது இருக்கட்டும். இன்னிக்கு என் பேரன் நீச்சல் வகுப்புக்குப் போகணும்னு சொன்னான். நீங்க போயி அவனைக் கூட்டிக்கிட்டு நீச்சல் பயிற்சிக்கு போயிட்டு வாங்க’ என்றார் சுந்தரேசன். மன்னிக்கணும் சார். நேத்து வரைக்கும் நான் வேலை இல்லாம இருந்தேன். இன்னிக்கு எனக்கு வேலை இருக்கு. வேலை நேரத்திலே வேற எங்கேயும் போக மாட்டேன். கொஞ்சம் இருங்க’ என்று தன்னுடைய செல் போனை உயிர்ப்பித்து, தன்னுடைய நண்பன் தினேஷை அழைத்து, விலாசம் கொடுத்து, சுந்தரேசனின் பேரன் கீர்த்தியை நீச்சல் பயிற்சிக்குக் கூட்டிப் போகச் சொல்லி வேண்டினான். பிறகு சார் உங்க பேரன் நீச்சல் பயிற்சிக்கு என்னோட நண்பன் தினேஷ் கூட்டிக்கிட்டு போவான்’ என்றான் கணேஷ்.
அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டு, ’இப்போ உங்களுக்கு உங்க அப்பா சிபாரிசிலேதான் வேலை குடுத்திருக்கேன் முதல் நாளே நான் சொல்றதை செய்யமாட்டேங்கறிங்களே என்றார் சுந்தரேசன். கணேஷ் மன்னிக்கணும் சார். நீங்க சொன்ன வேலையைத் தகுந்த ஆள் மூலமா செய்ய ஏற்பாடு செய்துட்டேன். நானே போகணும்னு நீங்க எதிர் பார்த்தா என்னாலே முடியாது என்றான். ஒரு வித இறுக்கமான சூழ்நிலை உருவாயிற்று. சுற்றிலும் இருப்பவர்கள் ஒருவித பயத்தோடு அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
சுந்தரேசன் தீர்க்கமான பார்வையுடன் அவன் அருகே வந்து நின்றார். இப்போ உங்களுக்குக் குடுக்கப்பட்டிருக்கிற வேலையே உங்க அப்பாவோட சிபாரிசிலே குடுக்கப்பட்ட வேலை என்று மீண்டும் சொல்லிவிட்டு நிறுத்தினார். ஒருவித மௌனம் குடிகொண்டது அங்கே. பின் மீண்டும் சுந்தரேசனே தொடர்ந்தார்.
ஆனா இப்போ உங்களுக்கு மேனேஜராகப் பதவி உயர்வு கொடுக்கிறேன்! இப்போ உங்களுக்கு குடுக்கப்பட்டிருக்கிற மேனேஜர் பதவி உங்க தகுதியை மதிச்சு அதுக்குக் குடுக்கற மரியாதை. கங்ராஜுலேஷன்ஸ் ஜெண்டில்மேன். கீப்பிட்அப் என்றார் கணேஷின் கையை இழுத்துக் குலுக்கியபடி
22
நசுங்கல்
தன்னுடைய மெக்கானிகல் ஷெட்டில் வந்திருந்த ஒரு காரைப் பழுது பார்த்துவிட்டு இப்போ சரியாயிடிச்சி எடுத்து ஓட்டிப் பாருங்க சார் என்று அந்தக் காரின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினான் சிவா.
அங்கே ஒரு டொயோட்டா கொரோலா காரை ஓட்டிவந்து நிறுத்திவிட்டு ஏம்பா இந்தக் காரை எவனோ ஒரு மோட்டார் பைக்லே போனவன் இடிச்சிட்டுப் போய்ட்டான் தப்புத் தப்பா வண்டி ஓட்றாங்க, பயந்துகிட்டே எப்பிடியோ கஷ்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமா ஒட்டிக்கிட்டு வந்தேன். முன்னாலே பம்பர்கிட்ட நசுங்கி இருக்கு பாரு. டயர்லே உராயுது. இதைச் சரி செய்ய முடியுமா என்றார்.
சிவா, காரைப் பார்த்தான். செஞ்சு தரேன் சார் உக்காருங்க என்றான். காரின் பின்பக்கம் வந்தவன் பின்பக்கக் கண்ணாடியில் டாக்டர் என்று எழுதியிருப்பதைக் கவனித்து மீண்டும் அவரை உற்று நோக்கினான். அவனுக்கு அவர் யாரென்று நினைவு வந்தது.
அவரை உட்காரச் சொல்லிவிட்டு, காரின் முன்பக்கம் வந்து நசுங்கிய பகுதியைப் பார்வையிட்டு சார் இந்த நசுங்கலை நான் சரி பண்ணித் தரேன். ஆனா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும். அப்பிடி இந்தப் பகுதிக்கு மட்டும் பெயிண்ட் அடிச்சா அது தனியாத் தெரியும். காரோட வர்ணத்துக்கு ஒத்துப் போகாது, பரவாயில்லையா அப்பிடி இல்லேன்னா டிங்கரின் வேலையை முடிச்சிட்டு, மொத்தமா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும்’ என்றான்.
இதோ பாருப்பா, நீ இந்த நசுங்கலை மட்டும் எடுத்துக் குடு. ஓரளவு டயர்லே இடிபடாமெ இருந்தா சரி. மத்தபடி நான் என்னோட சர்வீஸ் செண்டர்லே விட்டுச் சரி பண்ணிக்கிறேன். ரொம்ப வெலை உயர்ந்த காருப்பா டொயோட்டா கரோலா. வெலை எவ்ளோ தெரியுமா கிட்டத்தட்ட பத்து லட்சம் என்றார்.
சரி சார், எத்தனை லக்ஷமா இருந்தா என்னா செய்ய வேண்டியதை செஞ்சுதான் ஆகணும் என்று சொல்லிக்கொண்டே நசுங்கிய பகுதியின் பின்னால் ஒரு மரக்கட்டையை வைத்து முன் பக்கமாக ஒரு சுத்தியலால் டொம்மென்று தட்டினான். டாக்டர் நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்து, ‘என்னாப்பா இது இப்பிடி அடிக்கறே. கொஞ்சம் மெதுவா அடி. நான் யாரையும் இந்தக் காரைத் தொடவே விடமாட்டேன்.
என்னோட வாழ்க்கையிலே நான் அதிகமா நேசிக்கறது இந்தக் காரைத்தான், மெதுவா மெதுவா என்றார். சிவா மனத்தில் அந்தப் பழைய காட்சி விரிந்தது. ஆமாம் இதே டாக்டர் வேலைசெய்யும் மருத்துவமனையில் அவன் உயிருக்குயிராய் நேசித்த மனைவி விமலா ஒரு விபத்தில் மாட்டிகொண்டு குற்றுயிரும் குலை உயிருமாகக் கொண்டு போனபோது நடந்த அந்தக் காட்சி விரிந்தது.
ரத்தம் வீணாகிக்கொண்டிருக்கிறது.
இவன் தவித்துக்கொண்டிருக்கிறான். யாரைக் கேட்டாலும் கொஞ்சம் இருப்பா. இங்கே டாக்டர் நர்ஸ் போதிய அளவு இல்லே. கொஞ்சம் வெயிட் பண்ணு. இதோ டாக்டர் வந்திடுவாரு என்றபடி நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்கள். டாக்டர் வந்தார். அவரிடம் விவரங்கள் சொல்லப்பட்டன. அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் டாக்டர். அவன் மனைவி விமலா நினைவில்லாமல் இருந்தாலும் வலியால் முனகிக்கொண்டிருந்தாள். டாக்டர் அவளது கையை வேகமாக இழுத்தார். அவள் வலியால் அலறினாள்.
சிவா பதறிப் போய், ‘டாக்டர் கொஞ்சம் மெதுவா பாத்துக் கவனமாச் செய்யுங்க. அவளுக்கு வலிக்கிது. அது மட்டுமில்லை. எலும்பு உடைஞ்சிருந்தா இன்னும் அதிகமாயிடும்’ என்றான் பதறிப்போய். இதோ பாருப்பா எங்களுக்குத் தெரியும், என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாதுன்னு. நீ அங்கே போயி ஒரு ஓரமா உக்காரு’ என்று விரட்டினார். டாக்டர். வேறு வழியில்லாமல் தூரமாகப் போய், தெய்வங்களை வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான், தன் இயலாமையை நினைத்து.
தன் மனத்தில் ஓடிய அந்தக் காட்சியின் வலியை மனத்தில் வாங்கிக்கொண்டே, டாக்டரின் காரைச் சரி செய்துகொண்டிருந்தான் சிவா. சுத்தியலால் வளைந்த இடத்தை ஒரு அடி அடித்தான். டாக்டர் பதறிக்கொண்டு ஓடிவந்து ஏன்பா இந்தக் காரோட விலை என்னான்னு தெரியுமா. இப்பிடிப் போட்டு அடிக்கிறியே, மெதுவா பாத்து, நிதானமா செய்யிப்பா என்றார் அதிகாரமான குரலில்.
டாக்டர் போன மாசம் விபத்து நடந்த என் மனைவிக்கு ஆப்ரேஷன் செஞ்சீங்களே நியாபகம் இருக்கா. நோயாளிகள் குடுத்த பணத்திலே வாங்கின காரையே இவ்வளவு மதிக்கிறீங்களே. என் பொண்டாட்டி உயிரு இதைவிடக் கேவலமா நான் பதறினப்போ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ஒரு கணவனோட பதற்றத்தை மதிக்காம எப்பிடி வெரட்டினீங்க.
என்கிட்ட கொண்டு வந்து காரை விட்டுட்டீங்க இல்லே. எனக்குத் தெரியும் எப்பிடி சரி செய்யணுன்னுட்டு. இங்கே நாந்தான் டாக்டர் போயி அங்கே ஒரு ஓரமா உக்காருங்க என்றான், டாக்டரின் மனத்தில் அந்தப் பழைய காட்சி விரிந்தது. எவ்வளவு நேரம் போனது என்றே தெரியவில்லை.
டாக்டர் சார் உங்க காரை சரி செஞ்சுட்டேன்’ என்ற சிவாவின் குரல் கேட்டு மோனம் கலைந்தார் டாக்டர். கார் நசுங்கிய இடம் இப்போது சரியாக இருந்தது. ‘என்னை மன்னிச்சுடுப்பா.. இனிமே நான் யாரையும் கோவமா பேசமாட்டேன்’ என்றார் டாக்டர். நசுங்கி இருந்த அவர் மனத்தையும் சரிசெய்துவிட்டான் அந்த மெக்கானிக்.
23
நரிவேட்டை
உடலும் மனமும் பரபரத்துக் கொண்டிருந்தது கணேசுக்கு. மனைவி தாரிணி அவன் மேல் எந்தச் சந்தேகமும் கொள்ளவில்லை. இந்த விஷயத்தை அப்படியே நாசூக்காக முடிக்க வேண்டும். இப்படி எண்ணங்கள் தோன்றிய போதே இன்னொரு மனது இது நியாயமா, உன்னைச் சந்தேகப்படாத உத்தமமான மனைவிக்கு நீ துரோகம் செய்யலாமா என்று கேட்டது. அந்த இன்னொரு மனத்தை அப்படியே காலால் போட்டு மிதித்து அதன் குரல் தன் செவியில் விழாதவாறு மனத்தை மறைத்துக்கொண்ட கணேஷ் , அன்று எப்படியும் மாலை கற்பகத்தைச் சந்திப்பது என்று முடிவெடுத்தான்.
கற்பகத்தை அவன் முதலில் சந்தித்த நாள் நினைவுக்கு வந்தது. அன்று அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் சோபாவில் உட்கார்ந்திருந்த கற்பகம் எழுந்தாள். அவள் பக்கத்தில் அவளுடைய ஆறு வயதுக் குழந்தை அருண், விளையாடிக் கொண்டிருந்தான்.
உள்ளே இருந்து வந்த தாரிணி வாங்க முகம் கழுவிட்டு வாங்க. இவள் என்னோட கிளாஸ்மேட். யதேச்சையா ஷாப்பிங் மால்லே பார்த்தேன். நான்தான் வரச்சொன்னேன். இவ பேரு கற்பகம். இது இவளோட குழந்தை’ என்றாள். ‘ஹலோ’ என்று கற்பகத்தை நோக்கி ஒரு புன்முறுவல் பூத்த கணேஷ் உக்காருங்க, இதோ வந்துடறேன் என்றாவாறு உள்ளே போய் முகத்தைக் கழுவிக்கொண்டு துவாலையால் துடைத்துக்கொண்டு வேறு ஆடைகளை அணிந்துகொள்ளும் போது, அங்கே வந்த தாரிணி ‘ஏங்க இவ பாவம், இவளோட புருஷன் வேற யாரோ ஒரு பொண்ணோட தொடர்பு வெச்சிண்டு இருந்திருக்காரு அதைக் கண்டு பிடிச்சிட்ட இவ அதட்டிக் கேட்டிருக்கா. இவளை விட்டுட்டு அவரு அந்தப் பொண்னோடயே போய்ட்டாராம். இவளை விவாகரத்து பண்ணிட்டாராம். பாவம் இவ, இந்தக் குழந்தைய வெச்சிண்டு கஷ்டப்படறா. அவகிட்ட ஆறுதலா பேசுங்க என்றாள்.
சரி என்று கூறிவிட்டு வந்து வரவேற்பறையில் வந்து கற்பகத்துக்கு எதிரே உட்கார்ந்தான் கணேஷ் . தாரிணி கையில் காப்பியுடன் வந்து அவனுக்கும் கற்பகத்துக்கும் கொடுத்துவிட்டு, தனக்கும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். ரமேஷ் அருகே, ‘அருண் என்கிட்ட வா’ என்றபடி அவனை அணைத்துக்கொண்டு நானும் நீயும் விளையாடலாமா என்றபடி அவனை அழைத்துக்கொண்டு அறைக்குப் போனான். தோழிகள் பேச ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு நாளும் கற்பகத்தின் வருகையும் நெருக்கமும் அதிகரித்தது. இப்படியே கற்பகத்தின் கதைகளைக் கேட்டுக் கேட்டு, அவள் கண்ணீரில் கணேஷும் தாரிணியும் கரைந்துகொண்டிருந்தனர். பெண்ணின் கண்ணீரும், ஆணின் தேவையற்ற இரக்கமும் குடும்பத்தை அழிக்கும் ஆயுதம் என்பதை இருவருமே உணர மறந்தனர்.
கற்பகம் மனத்திலும் கணேஷின் மனத்திலும் தீ எரிய ஆரம்பித்தது. தாரிணிக்குத் தெரியாமல் வெளியே இருவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் தாரிணிக்கும் இந்த விஷயம் எட்டியது. தாரிணி நிலைகுலைந்து போனாள். ஆனால் அவர்கள் இருவரையும் ஒரு வார்த்தையும் கேளாமல் மனத்துக்குள்ளேயே குமைந்துகொண்டிருந்தாள்.
ஒரு நாள் கணேஷின் தந்தை ஈஸ்வரமூர்த்தி வந்து, அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறந்தது. கணேஷ், வாங்க வாங்கப்பா ‘ என்றான். அவனை நிமிர்ந்து பார்த்தார் ஈஸ்வர மூர்த்தி. அங்கே சோபாவில் இயல்பாக உட்கார்ந்திருந்த கற்பகம் திடுக்கிட்டு எழுந்து வணக்கம் சொன்னாள். உள்ளிருந்து தாரிணி வெளியே வந்து ‘வாங்கோ மாமா’ என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தார் ஈஸ்வர மூர்த்தி. ‘ஏம்மா இந்த வீட்டுக்கு மருமகளா நீ வந்ததிலேருந்து இவ்வளவு நாளா என்னை மாமான்னு கூப்ட்டதே இல்லையே. என்னையும் அப்பான்னுதானே கூப்புடுவ’ என்றார்.
‘அது அது வந்து மாமா, இல்லே இல்லே அப்பா, ஏதோ கொழப்பம்’ என்றாள். சரிம்மா நீ போயி எனக்குக் குடிக்கத் தண்ணி கொண்டுவா என்று கூறிவிட்டு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, வாம்மா கற்பகம், இங்கே வந்து உக்காரு என்றார்.
என்னை நீயும் அப்பான்னே கூப்படலாம். நீயும் என் பொண்ணு மாதிரிதாம்மா என்றார். கற்பகம் தயங்கியபடியே வந்து உட்கார்ந்தாள். ‘ஆமா கற்பகம் உங்களோட கல்யாணம் காதல் திருமணமா அல்லது வீட்டுலே பார்த்து ஏற்பாடு செஞ்சதா என்றார் ஈஸ்வரமூர்த்தி. கற்பகம் தயங்கியபடியே ‘காதல் கல்யாணம்தான் சார் அப்பா ‘ என்றாள். ‘ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பித்தானே கல்யாணம் பண்ணிண்டீங்க. அப்போ யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்திருந்தா கூட இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்காதே.
சரி போனது போகட்டும். உனக்கும் சின்ன வயசு. துணைக்கு யாருமில்லாம வாழறது கஷ்டம். ஆனா ஒண்ணும்மா, உனக்கு வந்த கஷ்டம் உன்னை மாதிரி இன்னொரு பொண்ணுக்கு வரக்கூடாது. வரவே கூடாது. என்ன நான் சொல்றது சரியா?’ என்றார். கற்பகம் திணறினாள். வரக் கூடாதும்மா . இதுக்குப் பதில் சொல்ல ஏன் திணர்றே’ என்றார் ஈஸ்வரமூர்த்தி, அழுத்தமான குரலில். என்ன நான் சொல்றது சரியா கணேஷ் என்றார். இப்போது கணேஷ் அவசர அவசரமாக, ‘ஆமாம்ப்பா பாவம் இவ என்றான். கணேஷையே உற்றுப் பார்த்த ஈஸ்வர மூர்த்தி, ‘அதுக்குதாம்ப்பா சொல்றேன். நீயும் தாரிணியும் ஏன் நானும் கூட முயன்றால் இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் குடுக்க முடியுமா, முடியாதா என்றார்.
கணேஷும் தாரிணியும் தலையை வேகமாக ஆட்டினர். ஒருத்தரோட கஷ்டமான நிலமைக்கு வருத்தப்படறதுனாலயோ, ஆறுதல் சொல்றதுனாலயோ அவங்களோட கஷ்டத்தைத் தீர்க்க முடியாது. கவலைப்படறதை நிறுத்திட்டு அதுக்குத் தீர்வு காண்றதுதான் நல்ல வழி. என்னப்பா சொல்றே என்றார் கணேஷைப் பார்த்து.
கணேஷ் ஆமாம்ப்பா என்றான். ‘சரி இவளும் என் பொண்ணு மாதிரிதான். தாரிணி எனக்கும் மருமகள்னாலும் அப்பான்னு கூப்பி்ட்டா தப்பில்லே. இவ எனக்கு மகமாதிரி. இவளும் என்னை அப்பான்னு கூப்பிட்டா தப்பில்லே. அதாவது உன்னோட தங்கை மாதிரி, உன்னை அண்ணான்னு கூப்பிட்டாலும் தப்பில்லே, சரியா’ என்றார்.
சரி நீ இவளை பாதுகாப்பா ஒரு அண்ணனா கூட்டிக்கிட்டு போயி அவ வீட்டுலே விட்டுட்டு வா. இவ மறுபடியும் வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க, நாம் எல்லாரும் சேர்ந்து ஏற்பாடு செய்வோம்’ என்றார் தீர்மானமான குரலில். கற்பகம் கண்களில் கண்ணீர் தளும்ப,‘அப்பா என்னை ஆசீர்வாதம் செய்யுங்கோ என்றபடி காலில் விழுந்து வணங்கினாள். எழுந்தாள். நான் போய்ட்டு வரேம்ப்பா என்றாள்.
அருண், தாத்தா பை என்றபடி இருவரும் கிளம்பினர். அப்பா, நான் கற்பகத்தைப் பத்திரமா அவங்க வீட்டுலே விட்டுட்டு வரேன் என்றபடி தன் ஸ்கூட்டரை உயிர்ப்பித்தான். ஈஸ்வரமூர்த்தி, காலில் ஏதோ பட்டாற்போல் இருக்கவே குனிந்து பார்த்தார்.
தாரிணி குனிந்து நமஸ்காரம் செய்துவிட்டு, அங்கே படுத்தபடியே நிமிர்ந்து, என்னையும் ஆசீர்வாதம் செய்யுங்கோ அப்பா என்றாள் தழுதழுத்த குரலில். அவளுக்கு ஈஸ்வரமூர்த்தியின் விஸ்வரூபம் தெரிந்தது.
24
ஆபரேஷன் சக்சஸ்
டெட்டாலின் நெடி மூக்கைத் துளைத்தது. மருத்துவ மனைக்கே உண்டான சூழ்நிலை பயமுறுத்தியது. பலர் பச்சை வண்ண உடையுடன் உள்ளேயும் வெளியேயும் போய்வந்துகொண்டிருந்தனர். ஒரு நோயாளி ஸ்ட்ரெக்சரில் அம்மா வலிக்குதே என்று முனகியபடி இருந்தார். அவரை ஸ்ட்ரெக்சரில் வைத்து ஒருவர் சலைன் வாட்டர் பாட்டிலைத் தூக்கிப் பிடித்தபடி மற்றொருவர் வண்டியைத் தள்ளியபடி போனார். அந்த நோயாளியின் உறவினர்கள் அவரையே கவலையுடன் பார்த்துக்கொண்டே கூடவே நடந்து சென்றனர்.
கண்களில் திகிலுடன் பேசிக்கொண்டிருந்தாள் காமாக்ஷி, ஏழு வருஷத்துக்கு முன்னயே நான் சொன்னேன் வேண்டாம் வேண்டாம்னு. இவர் கேக்கலை. விடாப்பிடியா, பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லே. இப்போல்லாம் இதெல்லாம் ரொம்ப சகஜமாயிடுத்து. இப்போ விஞ்ஞானம் இருக்கு. நவீனக் கருவியெல்லாம் வந்தாச்சு. இந்தக் காலத்திலே போயி இப்பிடி பயந்தா என்ன செய்யிறது .
இது மாதிரி எல்லாரும் பயந்துண்டே இருந்தா, எப்படி மக்களுக்கு ஒரு தெளிவு வரும் இது மாதிரியெல்லாம் புதுசு புதுசா செய்ய ஆரம்பிச்சாதானே அதுலே என்ன விளைவுன்னு தெரியும் ஒரு வகையிலே இது எவ்வளவோ மக்களைக் காப்பாத்தப் போற ஒரு புது கண்டுபிடிப்பா கூட இருக்கலாம். எல்லாருக்கும் உதவி செய்யமுடியும். ஒரு வகையிலே பாத்தா இது பொது ஜனசேவை அப்பிடீ இப்பிடீன்னு ஏதேதோ சொல்லி என் மனசை மாத்திட்டாரு இன்னிக்கு நான் பயந்துண்டு இருக்கேன். எல்லாம் இவரால வந்துது. புலம்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமாக்ஷி.
அவளையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் காமாக்ஷியின் கணவர் ராஜசேகர் உள்ளே அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. ’நாலு மணி நேரத்திலே அறுவை சிகிச்சை முடிஞ்சிரும், கவலைப்படாதீங்க என்று கூறிவிட்டு, அறுவை சிகிச்சை அறைக்குள் போய் ஆறு மணி நேரம் ஆச்சு, இன்னும் வெளியே வரலை. மாத்தி மாத்தி நர்ஸெல்லாம் வந்து வந்து போயிண்டே இருக்கா.
யாரைக் கேட்டாலும் பதில் ஒண்ணும் சொல்லாம நீங்க தைரியமா அங்கே போயி உக்காருங்க. எங்க டாக்டர் நல்ல திறமையானவர். நிச்சயமா அறுவை சிகிச்சை வெற்றிகரமா செய்வாரு. அதுனாலே கவலைப்படாதீங்க. நாங்கல்லாம் கூட இருக்கோம் அவர் பக்கத்திலே அப்பிடீன்னு சொல்லிட்டுப் போயிண்டே இருக்கா,’
அறுவை சிகிச்சை நடக்கும் அறையின் வாசலையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமாக்ஷி. அறுவை சிகிச்சை செய்யும் அறையின் கதவு திறந்தது. டாக்டர் நரேன் கைகளைத் துடைத்தபடி, நெற்றி வியர்வையைத் துடைத்தபடி வந்தார்.
அவருக்கு முன்னால் நர்ஸ் எல்லாம் நல்லபடியா நடந்திடிச்சு. நோயாளி நல்லா இருக்காரு. ஆபரேஷன் சக்ஸஸ் என்று சக நர்ஸிடம் கூறினாள். காமாக்ஷி கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் நான் வேண்டாத தெய்வமில்லே. நல்லபடியா முடிஞ்சுதே, பகவானே. உனக்கு நன்றி என்றாள்.
அம்மா அப்பா உங்க ரெண்டு பேர் ஆசீர்வாதத்தாலே நானும் மருத்துவப் பட்டப் படிப்பு படிச்சு, இன்னிக்கு முதன் முதலா ஒரு பெரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமா செஞ்சுட்டேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ என்றபடி டாக்டர் நரேன், நேராக வந்து காமாக்ஷி ராஜசேகர் இருவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். நோயாளியின் உறவினர்கள் டாக்டர் நரேனுக்கு நன்றி கூறினார்கள்.
25
மனோதத்துவம்
ஒரு மாதமாக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு, ‘சரி டாக்டர் அப்பிடியே செய்யறேன். எனக்கு என் மகன் குணமானா போதும்’னு சொல்லிக் கொண்டே, அதே போல அவர் சொல்வதையெல்லாம் செய்துவிட்டு அதன் விளைவுகள் என்ன என்று ஒவ்வொரு வாரமும் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து எதிரே உட்கார்ந்து மிகப் பவ்வியமாக சரி டாக்டர், சரி டாக்டர் என்று பொறுமையாக கேட்டுக்கொள்ளும் பெரியவர் ராமநாதனைப் பார்த்து
மனோதத்துவ நிபுணர் சரபேஸ்வரன் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்க மகன் குமரேசனைக் குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. என் வாழ்க்கையிலே இவ்வளவு பொறுப்பா இருக்கற அப்பாவை இப்போதான் பாக்கறேன். நீங்க செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயமா நல்ல விளைவுகள் இருக்கும். கூடிய சீக்கிறம் உங்க மகன் குமரேசன் குணமாயிடுவார். உங்களுக்கு இருக்கற சின்சியாரிட்டி உங்க மகன் குணமாகணும்னு இருக்கற தீவிரம்
நீங்க காட்ற உண்மையான ஈடுபாடு இதெல்லாம் பாக்கும் போது எனக்கு ஒரு பக்கம் ரொம்ப மகிழ்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கு. இந்த அளவுக்கு புரிஞ்சிகிட்டு நடந்துக்கறவங்க ரொம்பக் குறைவு அதுனாலே, இன்னும் ஒரே வாரம் நான் சொல்லிக் குடுத்த மாதிரியே உங்க வீட்டுலே இருக்கறவங்க எல்லாரும் நடந்துக்கணும். நிச்சயமா உங்க மகன் குமரேசன் ஒரு நார்மலான, மனுஷனா வாழ ஆரம்பிச்சிடுவாரு.
அந்தப் பொறுப்பை நீங்க எடுத்துக்கணும் என்றார் மிருதுவான குரலில்
சார் நீங்க என்ன சொல்றீங்களோ அதே மாதிரி நாங்க நடந்துக்கறோம் எங்க பையன் குணமான போதும் என்றார் ராமநாதன்
இதோ பாருங்க நாங்க பலவிதமான மனுஷங்களோட மனசை ஆராயறோம். ஒவ்வொரு முறை ஒவ்வொரு மனதை ஆராய்ச்சி செய்யும் போதும் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இறைவனோட சக்தி ரொம்பப் பெரிசுங்கிற எண்ணம் வலுப்பட்டுக்கிட்டே வருது.
மனுஷனோட மனம் ரொம்ப விசித்திரமானது. இந்த உலகத்திலே பொறக்கற ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான மன நிலையில் இருக்கு. வளர வளர ஒவ்வொரு குழந்தையும் பலவிதமான சிக்கல்களுக்கு உள்ளாகி, அதிலேருந்து நாம் குடுக்கற அறிவுரைகளினாலோ, இல்லே அந்தக் குழந்தைக்கு அமையற நட்பு வட்டத்தோட செயல் பாட்டினாலோ, அதுக்கு ஏத்தா மாதிரி மாறிகிட்டே வருது, பெத்தவங்களாலேயே பல நேரத்திலே இந்த மாற்றங்களைத் துல்லியமா கணிக்க முடியாது.
அப்பிடி இருக்கும் போது உங்க மகனை ஒரு மாசமாதான் நான் பாக்கறேன் , ஆனா அவரோட நடவடிக்கைகளை நான் கவனிச்சுப் பாக்கும்போது, நிச்சயமா ஒண்ணு புரியுது. உங்க மகனுக்கு ரொம்ப தன்னிரக்கம் அதிகம். சுய பச்சாதாபம் மாதிரி கொடிய நோய் வேற எதுவுமே கிடையாது. அது மட்டுமில்லே…. அவர் மனசுலே எப்பவும் எல்லாரும் அவரைக் குறை சொல்றாங்க , அவர் சொல்றதை யாரும் ஏத்துக்கறதில்லே, அப்பிடீங்கற உணர்வு ஆழமா பதிஞ்சிருக்கு. அதையும் தவிர தன்னாலே யாரும் பாதிக்கப் படக் கூடாது.
அடுத்தவங்க யாரையும் கடுமையாப் பேசக் கூடாது அப்பிடீன்னு நினைக்கிறாரு. அதுனாலே உங்க மேலே எந்த தவறும் இல்லேன்னாலும், அவர் செய்கையாலே நீங்க யாராவது பாதிக்கப்பட்டுட்டீங்கன்னு அவர் நினைச்சாலே அவருக்கு அவர் மேலேயே கோவம் வருது. அந்த சுய இரக்கத்தாலே அவர் என்ன செய்யிறோம்னே தெரியாம உங்ககிட்ட கடுமையா நடந்துக்கிறாரு,
அதுனாலே எப்பவுமே அவர் என்ன சொல்றாரோ அதை மறுக்காம சரின்னு சொல்லுங்க முதல்லே.
பிறகு அவருக்கு புரியறாமாதிரி எடுத்து சொல்லாம். எடுத்த உடனே அது அப்பிடி இல்லே, நான் சொல்றதைக் கேளு, பெரியவங்க சொன்னாக் கேட்டுக்கணும். உனக்கு அனுபவம் போறாது இது மாதிரியான சொற்களை இனிமே அவர்கிட்ட யாரும் சொல்லக் கூடாது புரியுதா? என்றார்.
ராமநாதன் சரி டாக்டர் அப்பிடியே செய்யறோம் என்றார்.
அதே மாதிரி நான் குடுக்கற மாத்திரையெல்லாம் கவனமா, வேளை தப்பாம அவருக்குக் குடுங்க. குறிப்பா அவர் தூங்கும் போது அவரை எந்தக் காரணத்தைக் கொண்டும் எழுப்பாதீங்க.
அவரா எப்போ எழுந்துக்கறாரோ அப்போ எழுந்துக்கட்டும். அவருக்கு பசிக்குமே அப்பிடீன்னு கூட நீங்க கவலைப்பட வேணாம். நான் குடுத்திருக்கிற மாத்திரை அவரைக் கொஞ்சம் கொஞ்சமா குணப்படுத்தும். கவலைப்படாதீங்க” என்றார் சரபேஸ்வரன். ராமநாதன் சரி சார் மறுபடியும் நான் எப்போ இவனை அழைச்சுகிட்டு வரணும் என்றார். சரியா இன்னீலேருந்து ஒரு வாரம் நான் சொல்லிக் குடுத்த மாதிரியே நடந்துக்கோங்க. அடுத்த புதன் கிழமை நீங்க இவரை அழைச்சுகிட்டு வாங்க என்றார் சரபேஸ்வரன்.
அடுத்த புதன்கிழமை, மனோதத்துவ நிபுணர் சரபேஸ்வரன் தன் எதிரே உட்கார்ந்திருந்த குமரேசனைப் பார்த்தார். அவருக்கு தன்னுடைய மனோதத்துவ மருத்துவத்தின் மீது மரியாதை அதிகமாயிற்று. “மிஸ்டர் குமரேசன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க எதுக்கும் இனிமே கவலைப்படாதீங்க. எப்போ வேணும்னாலும் நீங்க என்னை வந்து பாக்கலாம் என்றார் மகிழ்ச்சியாக.
ரொம்ப நன்றி டாக்டர். ஆனா, கவலைப்படாம இருக்க முடியலை. டாக்டர் சார், எங்க அப்பா இவ்வளவு நாளா இப்பிடி இல்லே. கடந்த ஒரு வாரமாதான் இப்பிடி நடந்துக்கிறாரு எதுக்கெடுத்தாலும் கத்தறாரு… அதிர்ந்து கூட பேசமாட்டாரு எங்க அப்பா. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு என்றான் குமரேசன்!
மனோ தத்துவ நிபுணர் சரபேஸ்வரன், குமரேசனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
நீங்க செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயமா நல்ல விளைவுகள் இருக்கும். கூடிய சீக்கிரம் உங்க அப்பா மிஸ்டர் ராமநாதன் சீக்கிரமே குணமாயிடுவார். உங்களுக்கு இருக்கற சின்சியாரிட்டி உங்க அப்பா குணமாகணும்னு இருக்கற தீவிரம், நீங்க காட்ற உண்மையான ஈடுபாடு இதெல்லாம் பாக்கும் போது எனக்கு ஒரு பக்கம் ரொம்ப மகிழ்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கு. இந்த அளவுக்குப் புரிஞ்சிகிட்டு நடந்துக்கறவங்க ரொம்பக் குறைவு.
அதுனாலே, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, உங்க அப்பாவைக் குணப்படுத்தறது என் பொறுப்பு. உங்களுக்கு உங்க அப்பா மிஸ்டர் ராமநாதன் குணமாகணும்னு உண்மையிலேயே எண்ணம் இருந்தா நான் சொல்றா மாதிரியே உங்க வீட்டுலே இருக்கறவங்க எல்லாரும் நடக்கணும். அதைப் பொறுப்பை நீங்க எடுத்துக்கணும். முடியுமா?” என்றார் மிருதுவான குரலில்!
சரி டாக்டர் என்றான் குமரேசன், பவ்வியமாக.
//
26
பணம்
காலங்காத்தாலே எழுந்து அலுவலகத்துக்கு போற அவள் கணவன் ரமேஷுக்குப் பல் தேய்க்கிற பேஸ்ட்டுலேருந்து, துண்டுலேருந்து கர்சீப் வரைக்கும் எடுத்துக் கையிலே குடுத்து இருக்கறது ரெண்டு குழந்தைங்கன்னாலும் பெரியவன் கிஷோர் பள்ளிக்கூடம் போறான் அவங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கறதையெல்லாம் எடுத்துக் குடுத்து, வயித்துக்குக் காலை உணவு குடுத்து மதியம் உணவுக்கு வேண்டியதையெல்லாம் தயாரிச்சு டப்பாவிலே போட்டுக் குடுத்து தலையை வாரி, சீருடை போட்டுவிட்டு அனுப்பறதுக்குள்ளே மூச்சு முட்டிப் போகுது
என்றபடியே புடவைத் தலைப்பால் நெற்றியைத் துடைத்தபடி இதோ இது இருக்குதே என் செல்லக் குட்டி. இவனுக்குக் கிட்டத்தட்ட ஒண்ணரை வயசாகுது. இடுப்பை விட்டுக் கீழே இறங்க மாட்டான். இன்னும் மழலையே மாறலை. ஆனா பேசற பேச்சு இருக்கே யப்பா செம வாலு எப்பிடித்தான் அந்தக் காலத்திலே பத்து பதினொண்ணுன்னு பெத்து வளத்தாங்களோ இதுக்கு வயித்துக்கு குடுத்துட்டு வரேன் அப்போதான் தூங்குவான்,
இல்லேன்னா நம்மளைப் பேச விடாம வம்பு பண்ணுவான் என்றபடி பருப்புச் சாதத்தை ஊட்டி அவன் தூங்க ஆரம்பித்ததும் கீழே விட்டுட்டு, என்ன பண்றது எனக்கு காலம் இப்பிடியே போவுது என்று சலித்துக்கொண்டே பெருமூச்சு விட்டாள் வசந்தா ஏதோ மதிய வேளையாச்சே கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டுப் போலாம்னு வந்தா, தினோம் நீ செய்யிறதையெல்லாம் சொல்லிச் சொல்லிப் புலம்பியே பொழுதை ஓட்டற” என்றாள் சுசீலா!
ஒரு மனுஷின்னா அவளுக்கும் கொஞ்சம் ஓய்வு வேணும், மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும் சரி அதையே நெனைச்சிகிட்டு இருக்காதே, மனசை ப்ரீயா விடு , என்றாள் சுசீலா. பணம் தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஹாலில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தனர். அந்தத் தொடரில் ஒரு பெண் எனக்குப் பணம் முக்கியமில்லே. ஆனா என்னை அவமானப்படுத்தின அந்தத் தியாகுவைப் பழி வாங்காம ஓயமாட்டேன் அவனை வாழ விடமாட்டேன் அவன் எங்க போனாலும் துரத்தித் துரத்திப் பழிவாங்குவேன் என்றாள் ஆண்பிள்ளைக் குரலில் வெறியோடு.
இந்தப் பொம்பளையப் பார்த்தவொடனே ஞாபகம் வருது. உனக்குத் தெரியுமா நம்ம தெருவிலே கோடீ வீட்டுலே இருக்காளே வத்சலா அவ புருஷன் ராஜா வெஷம் குடிச்சிட்டானாம் என்றாள் சுசீலா. ஐயய்யோ ஏன் என்ன ஆச்சு என்றாள் வசந்தா! வத்சலாவோட புருஷன் ராஜா சீட்டு நடத்தினாரு இல்லே அதை ஒழுங்கா நடத்தி அதுலே லாபம் வந்தா பரவாயில்லே.
அவங்க ஆடின ஆட்டம் இருக்கே, எல்லாருடைய பணத்தையும் வாங்கி வெளிநாட்டு டீவீ என்னா நெக்லஸ் என்னா அப்பிடியே மினுக்கினா அது போதாக்குறைக்கு வீட்டை இடிச்சு பெரிய பங்களாவா மாத்திக் கட்டினாரு கடைசீயிலே வரவேண்டிய பணமெல்லாம் வரலைன்னு சொல்லிட்டு யாருக்கும் பணம் குடுக்காம ஏமாத்தி இருக்காரு. எல்லாரும் போலீஸ்லே புகார் குடுத்துட்டாங்க. ஆனா அவராலே பணம் குடுக்க முடியலை. அவருக்கு ஏதோ நஷ்டமாம், என்ன செய்யிறதுன்னே தெரியலையாம், அதுனாலே அந்த ஆளு விஷம் குடிச்சிட்டான் என்றாள் சுசீலா.
ஐயய்யோ நான் கூட என் புருஷன் ரமேஷுக்கத் தெரியாம அவருகிட்ட சீட்டுகட்டி இருக்கேன் அப்போ என் பணமும் வராதா என்று அதிர்ந்தாள் வசந்தா.
அதெல்லாம் கவலைப்படாதே. அவங்க கம்பெனிலேருந்து ஆளுங்கல்லாம் வந்திருக்காங்க இவுரு இப்பிடிச் செஞ்சது அவரு வேலை செய்யிற கம்பனிக்கே தெரிஞ்சு போச்சாம். அதுனாலே அந்தக் கம்பனி இவரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம். வேலையை விட்டு அனுப்பும்போது அந்தக் கம்பனி இவருக்கு சேர வேண்டிய பெரிய தொகையைக் குடுத்தாங்களாம். அந்தப் பணத்திலே எல்லாருக்கும் திருப்பிக் குடுத்துடறேன்னு அந்த ஆளு ராஜா சொல்லி இருக்காரு என்றாள் சுசீலா.
திடீர்ன்னு யாரோ மூச்சுத் திணறுவது போல் சத்தம் கேட்டு, வசந்தா எழுந்து ஓடிப் போய்ப் பார்த்தாள். அவளோட குழந்தை திருதிருன்னு முழிச்சிண்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் மண் உண்டியல் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது. ஐயய்யோ குழந்தை இந்த உண்டியல்லேருந்து கீழே விழுந்த காசை எடுத்து வாயிலே போட்டுண்டான் போல இருக்கு அது தொண்டையிலே மாட்டிண்டு அவனுக்கு மூச்சு திணறுது என்று பதறினாள் சுசீலா.
வசந்தா பதறிப்போய் குழந்தையின் வாயில் விரலை விட்டு எப்படியாவது காசை எடுத்து விடலாம் என்று முயன்றாள். குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. மேலும் பதறிய வசந்தா அழ ஆரம்பித்தாள். நீ ஒண்ணும் பதறாதே. நான் ஆட்டோ கூப்படறேன், நாம ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட போயி எப்பிடியாவது குழந்தை தொண்டையிலே மாட்டிண்டு இருக்கற காசை வெளியே எடுத்துடுவோம் என்றபடி வாசலுக்கு ஓடிவந்து ஒரு ஆட்டோ பிடித்தாள் சுசீலா. அதற்குள் வசந்தா குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு, ஓடி வந்து ஆட்டோவில் ஏறினாள்.
ஆட்டோ அவர்கள் வீட்டுக்கருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அங்கே இதோ பாருங்க, இப்போ டாக்டரெல்லாம் பிசியா இருக்காங்க. நீங்க உடனடியா பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க என்றாள் நர்ஸ். ஆட்டோ பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடியது. உள்ளே டாக்டரிடம் ஓடினாள் வசந்தா.
வசந்தா சொன்ன விஷயத்தை கேட்ட அவள் கணவன் ரமேஷ் அலுவலகத்தில் விஷயத்தைச் சொல்லிவிட்டு உடனடியாகப் பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.
முதலில் குழந்தையைப் பார்த்த டாக்டர் இதோ பாருங்க, ஒண்ணும் பதறாதீங்க என்றபடி எக்ஸ்ரே எடுத்தார். எக்ஸ்ரேவில் ஒண்ணும் தெரியலைம்மா. ஆமா உங்களுக்கு நிச்சயமா தெரியுமா குழந்தை காசை வாயிலே போட்டுண்டானா என்றார். தெரியலை டாக்டர் நான் கூட தொண்டையிலே விரலை விட்டுப் பார்த்தேன். என் விரலுக்கும் ஒண்ணும் அகப்படலை. ஆனா வாயிலேருந்து ரத்தமா வந்துது என்றாள் வசந்தா.
சரி நாம் எதுக்கும் இன்னொரு முறை ஸ்கேன் பண்ணிப் பாத்துடலாம். பூந்தமல்லி நெடுஞ்சாலையிலே ஒரு ஸ்கேன் செண்டர் இருக்கு. நான் எழுதித் தறேன். மத்த இடங்கள்ளே அதிகமா பணம் வசூலிப்பாங்க நீங்க இங்கே போயி ஸ்கேன் பண்ணிண்டு சீக்கிரம் வாங்க என்றபடி தன்னுடைய கைப்பேசியில் பேச ஆரம்பித்தார்.
மீண்டும் வாயிலில் நின்றிருந்த ஆட்டோவிலே ஏறி இதோ பாருங்க உடனடியா இந்த ஸ்கேன் செண்டருக்குப் போங்க என்றாள். அங்கே ஸ்கேன் எடுத்து, அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைக் கொடுத்தவுடன் மீண்டும் பெரிய ஆஸ்பத்திரிக்கே வந்து ஆட்டோக்காரருக்கு 200 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, டாக்டரிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காண்பித்தாள் வசந்தா.
ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர் “ஸ்கேன்லே கூட ஒண்ணும் தெரியலையே என்னா செய்யிறது எனக்கென்னவோ குழந்தை காசு தொண்டை வழியா வயித்துக்கு போயிருக்கும்னு தோணுது. நீங்க காசை எடுக்க, குழந்தை வாயிலே விரலை விட்டீங்க இல்லே அதுனாலே தொண்டையிலே உங்க நகம் கீறி ரத்தம் வந்திருக்கும் என்றார் டாக்டர்.
வசந்தா பதறினாள் கவலைப்படாதீங்க. காசு தானாவே மோஷன் போகும்போது வெளியிலே வந்துடும். அது்க்கு நடுவுலே ஏதாவது ஆச்சுன்னா உடனே குழந்தையை மறுபடியும் அழைச்சிட்டு வாங்க பாப்போம் என்றார் டாக்டர்.
குழந்தை கஷ்டப்பட்டு ம்ம்மா என்றான். வசந்தா குழந்தையின் அருகில் வந்து பதறியபடி என்னடா கண்ணா என்றாள் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி.
குழந்தை ரமேஷை நோக்கி, ப்பா என்றது. ரமேஷ் கண்ணில் கண்ணீருடன் குழந்தையை நோக்கிக் குனிந்தான். குழந்தை வசந்தாவைப் பார்த்துக் கையை நீட்டியது. அதில் ஒரு முழு ஒரு ரூபாய் பளிச்சென்று மின்னியது. ம்மா நானு பத்திரமா வெச்சிண்டு இக்கறேன் காசு உனக்கு தரமாத்தேன் போ காசு என்னுது என்று சொல்லிவிட்டுச் சிரித்தது!
27
B பாசிட்டிவ்
அன்று வந்திருந்த மடல் இது:
அவசரம் ஒரு முக்கிய வேண்டுகோள், உடனடியாக பீ பாசிட்டிவ் வகை ரத்தம் தானம் செய்யுங்கள், கதிர்வேல் என்னும் ஒரு நண்பருக்கு மிக அவசரமாக அறுவை சிகிச்சை செய்யத் தேவையாய் உள்ளது, இப்படிக்கு ரமேஷ் .
அந்தச் செய்தியைப் படித்துப் பார்த்த ராகவன் அந்த மடலில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு
நான் ரத்தம் தரத் தயார் உடனடியாக மருத்துவமனைக்கு வருகிறேன். கவலைப்படாதீர்கள் என்று ரமேஷிடம் சொல்லிவிட்டு தன் டொயோட்டா கொரொலாவை உயிர்ப்பித்தான். வண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. இதோ மருத்துவமனை வந்தாயிற்று.
வாசலிலேயே காத்திருந்த ரமேஷ் வாங்க ரொம்ப நன்றி என்றான்
நன்றியெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். சீக்கிரம் வாருங்கள். ரத்தம் அளிக்க நான் தயார் என்றான். ஒரு நர்ஸ் வாங்க மிஸ்டர் ராகவன். இங்கே வந்து இந்தப் படுக்கையில் படுத்துக்கொள்ளுங்கள் என்றாள்.
ராகவன் அந்தப் படுக்கையில் படுத்தபடி நர்சிடம் ஆமாம் மிஸ்டர் கதிர்வேலுக்கு என்ன வியாதி என்றான். நர்ஸ் சார் அவருக்கு வியாதி எதுவுமில்லே. இன்னிக்கு நடந்த ஒரு விபத்திலே அவருக்கு முதுகிலே அடிபட்டு, அதிக ரத்தம் இழப்பு. ஆகவேதான் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாகணும். நிச்சயமாய் அவருக்கு ரத்தம் தேவைப்படும் என்றாள்.
ஆமாம் அவசரத்துலே அவர் பேரை மறந்துட்டேன். அவர் பேரு என்ன என்றான் ராகவன்.மிஸ்டர் கதிர்வேல். தொலைக்காட்சித் தொடர்லே எல்லாம் நடிப்பாரே, அவரேதான் என்றாள். சுருக்கென்றது ராகவனுக்கு நர்ஸ் ஊசியைச் செலுத்திவிட்டாளா, இல்லையே
ஓ கதிர்வேல் அவனா ராகவனின் முதல் எதிரி கதிர்வேல். ராகவனின் ஒரே தங்கை ரேகாவைக் காதலித்து, ஏமாற்றிவிட்டு அவள் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவன். ‘எதையுமே பாசிட்டிவா எடுத்துக்கணும் ரேகா. இதெல்லாம் வாழ்க்கையிலே ரொம்ப சகஜம். மனசுக்கு பிடிக்காம ஒண்ணா சேந்து வாழ முடியுமா? உன்னை ரொம்ப பிடிச்சுது அப்போ. இப்போ உன்னை எனக்குப் பிடிக்கலை’ அப்பிடீன்னு சொல்லிட்டு, வேற ஒரு பெண்ணைக் கைப்பிடித்தவன்.
அவனா அவனுக்கா ரத்தம் கொடுக்கப் போகிறோம்
இல்லை முடியாது ரத்தம் கொடுக்க முடியாது என்று திமிறி எழுந்தான் ராகவன். நர்ஸ் ஓடி வந்தாள். சார், என்ன சார் ஆச்சு” என்றாள். இல்லே, நான் ரத்தம் குடுக்க முடியாது. இந்தக் கதிர்வேல் என் தங்கையின் சாவுக்குக் காரணமானவன். அவனுக்கு நான் ரத்தம் கொடுக்க முடியாது என்றான்.
சார், உங்க தங்கையோட வாழ்க்கையக் கெடுத்தவர் இந்த கதிர்வேலா இருக்கலாம். இவரோட தப்புக்கு இவருக்கு தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இவருக்கு வாழ்க்கைப்பட்ட வேற ஒரு அப்பாவிப் பொண்ணு என்ன சார் தப்பு செஞ்சாங்க. அவங்களும் உங்க தங்கை மாதிரிதானே என்றாள் என்றாள் நர்ஸ். பொட்டில் அறைந்தாற் போல் ஒரு உணர்வு ராகவனுக்கு. அதிர்ந்தான்.
உங்க ரத்தம் மாதிரியே நீங்களும் Be Positiveஆ இருங்க என்றாள் நர்ஸ். அந்த நர்ஸின் உருவத்தில் தன் தங்கை ரேகாவையே கண்ட ராகவன், புதிய தெளிவுடன் பீ பாசிட்டிவ் என்னும் சொல்லையே வந்தே மாதரம் என்று முழங்குவது போன்ற பாணியில் கையை உயர்த்தி முழங்கிவிட்டு, ரத்தம் கொடுக்கப் படுக்கையில் படுத்தான். அங்கே மானுடம் எழுந்து நின்று மரியாதை செய்தது
28
அடகு
நடைபாதையில் என்ன செய்வதென்றே தெரியாமல் அவனையறியாமல் அவன் கண்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைக்கூட துடைக்காமல் வழியவிட்டபடி நின்றிருந்தான் கண்ணன்.
அவன் வாங்கற சம்பளத்திலேகாலத்தை ஓட்டறதே கஷ்டம். இப்போ என்ன செய்யறது. இதுக்கு பணம்த்துக்கு என்னா செய்யிறது. அப்பா இறந்து போனதும் எப்படியோ இப்படி ஒரு நிலை வந்தது அவனுக்கு அப்பா இருந்த வரையில் ராணி போல் வாழ்ந்த அம்மா யதேச்சையாகக் கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டு வலி தாங்காமல் முனகியபோது அம்மாவின் நிலையைக் கண்டு பதறிப் போய் கைத்தாங்கலாக எழுப்பி, நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, மருத்துவரிடம் கூட்டிச் செல்லவேண்டும் என்பது நினைவுக்கு வரவே, நல்ல செல்வாக்கோடு வாழ்ந்துகொண்டிருந்த மூத்த அண்ணன் விஸ்வநாதனுக்கு செய்தியைச் சொல்லிவிட்டு, அவர் பதிலுக்குக் காத்திருந்தான் கண்ணன்.
எதிர்முனையில் சில வினாடிகள் மௌனம், ஓ இது வேறயா சரி அம்மாவைக் கணபதி டாக்டரிடம் அழைத்துப் போ. அவரிடம் நான் சொன்னதாகச் சொல். அவர் வைத்தியம் செய்வார். அவருக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன். எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்று வந்த பதிலைக் கேட்டவுடன் எப்படி அண்ணனால் இப்படி பதற்றமே இல்லாமல் இருக்க முடிகிறது, என்று யோசித்துக்கொண்டே சரி அண்ணா, நான் கூட்டிப் போகிறேன் என்று போனை வைத்துவிட்டு, மிகப் பழையதான தன்னுடைய ராஜ்தூத் வண்டியில் அம்மாவை உட்காரவைத்து மருத்துவரிடம் அழைத்து வந்து காட்டியதும் அவர் அம்மாவைப் பார்த்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றதும் பகீர் என்றது கண்ணனுக்கு.
சரி உங்க அண்ணன் விஸ்வநாதன் சொல்லி இருக்கார். இன்னிக்கே அட்மிட் பண்ணிடுங்க. அறுவை சிகிச்சை செய்யலாம் என்றார் டாக்டர் கணபதி.. அறுவை சிகிச்சையும் முடிந்து, மருத்துவமனையில் இரண்டு நாட்கள் ஒடிப்போயின.
அன்று அம்மாவை வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். பணம் கட்டும் இடத்தில் மொத்தம் எட்டாயிரம் ரூபாய் ஆகியிருக்கிறது. பணம் கட்டுங்கள். வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று சொன்னதும் “இல்லே என் அண்ணன் வந்து பணம் கட்டுவார். டாக்டர்கிட்ட பேசி இருக்கார் என்ற என்னை அற்பப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்த காசாளர் டாக்டரிடம் இண்டர்காமில் பேசினார். டாக்டர் என்ன சொன்னாரோ தெரியவில்லை, இல்லே உடனே பணம் கட்டுங்க. அப்போதான் அனுப்ப முடியும் என்றார் காசாளர்.
அம்மா பலகீனமாக எப்போ வீட்டுக்கு போகலாம் எவ்ளோடா பணம் கட்டணும் என்றாள். அம்மா அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாதே என்று கூறிவிட்டு அண்ணனுக்கு போன் செய்தான். மணி அடித்தது. ஹலோ யாரு என்று விஸ்வநாதனின் குரல் கேட்டது. அண்ணா என்று ஆரம்பித்தான் கண்ணன். தொலைபேசித் தொடர்பு அறுந்து போனது. அறுந்தது தொலைபேசி இணைப்பு மட்டுமல்ல என்று அண்ணா தொலைபேசியின் ரிசீவரை வைத்ததிலிருந்தே புரிந்தது.
என்ன செய்வது என்றே தெரியாமல் நேராக டாக்டர் கணபதி இருக்கும் அறைக்குச் சென்று டாக்டர அண்ணன் வந்து பணம் கட்டுவாரு இன்னிக்கு வீட்டுக்குப் போகணும் என்றான் கண்ணன், உடனே டாக்டர் கணபதி இங்க என்ன நாங்க தர்ம சத்திரமா நடத்தறோம். உங்க அண்ணன் சொன்னாரு. ஆனா பணம் கட்டலே, அதனாலே பணம் கட்டிட்டுக் கூட்டிக்கிட்டு போங்க என்றார்.
நடைபாதையில் நின்று கலங்கிகொண்டிருந்த கண்ணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பேசாம தன்னோட ராஜ்தூத்தை அடகு வைத்துவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு போகலாம் என்று தோன்றியது, அம்மா கேப்பாங்களே எங்க போச்சு வண்டீன்னு என்ன பதில் சொல்றது பொய் சொல்லிப் பழக்கமும் இல்லே. அது மட்டுமில்லே. அம்மாவும் சேர்ந்து வருத்தப்படுவாளே என்று நினைத்தவனுக்கு அவனறியாமல் கண்ணீர் வழிந்தது.
வேற வழியே இல்லே. அடகுக் கடைக்குச் சென்று ராஜ்தூத் வண்டியை அடகு வைக்க, அந்த அடகுக் கடைக்காரரை அழைத்து தன் வண்டியைக் காட்டினான் கண்ணன். அடகுக்கடைக்காரர் வண்டியைப் பார்க்காமல் கண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று, நீங்கோ ராஜகோபாலனோட பிள்ளேயா?” என்றார். ஆமாம் எப்படி கண்டுபிடிச்சீங்க என்றான் கண்ணன்.
அப்பிடியே உங்க அப்பாவை மாதிரியே இருக்கீங்கோ. மறுபடியும் உங்க அப்பாவைப் பாக்கறாப் போலே இருக்குது. மனசு சந்தோஷமா இருக்குது. உங்க அப்பா எப்படி வாழ்ந்தவரு எத்தினி பேருக்கு உதவி பண்ணியிருக்காரு அதெல்லாம் மறக்கலே. நல்ல மனுஷன். நான் இப்போ நல்ல நெலமையிலே இருக்கறதுக்கு உங்க அப்பாதான் காரணம். அதெல்லாம் பழைய கதை. நானு பணம் தரேன். உங்க வண்டி நீங்களே எடுத்துப் போங்கோ. நிதானமா பணம் குடுங்கோ என்றார் வட்டிக் கடைக்காரர்.
நீங்கோ எனக்கு ஒரு சத்தியம் செய்யணும் செய்றீங்களா இனிமே எந்தக் காரணத்துக்காகவும் அடகுக் கடைக்கு வரக்கூடாது என்றார். கண்ணன் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, இல்லே சேட் இல்லே இனிமே அடகுக் கடைக்கு வரவே மாட்டேன் இந்தப் பணத்தை கூடிய மட்டும் சீக்கிறமா குடுத்துடறேன் நீங்க செய்த உதவிக்கு நன்றி என்றான் கண்ணன். நடைபாதையில் நின்று கண்களில் நீர்வழிய நின்றிருந்தான் கண்ணன். இது வேறு கண்ணீர்!
29
அதிர்ச்சி
ஆமா சார். எங்க அப்பாவும் அம்மாவும் விவாகரத்து செய்துக்கப் போறாங்களாம்”. வைத்தியநாதனின் மகன் ரமேஷ் சொன்ன செய்தியைக் கேட்டு வைத்தியநாதனின் பால்ய நண்பர் கிருஷ்ணன் திகைத்துப் போய்விட்டார்! என்னப்பா சொல்றே என்னால நம்பவே முடியலையே. எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு என்றார்.
நீங்க மட்டும் இல்லே, நாங்க எல்லாருமே அதிர்ச்சியாய்ட்டோம். எங்களாலேயே நம்ப முடியலை. இருந்தாலும் அதுதான் உண்மை. அப்பா தீர்மானமா பேசறார். எங்க அண்ணா ராமநாதனுக்கு சொல்லிட்டோம். அவரும் அதிர்ச்சியாய்ட்டார். நாளைக்குக் காத்தாலே அண்ணாவும் எங்க அண்ணியும் வராங்க. இன்னும் எங்க தங்கை லக்ஷ்மிக்கும் மாப்பிள்ளை கணேஷுக்கும் சொல்லலை. எங்க அண்ணன் ராமநாதன் வரட்டும்னு காத்துகிட்டு இருக்கேன். கண்களில் கண்ணீர் பொங்க, தழுதழுத்த குரலில் ரமேஷ் பேசிக்கொண்டிருந்தான்.
எங்க அம்மாவுக்கு வயசு 58. எங்க அப்பாவுக்கு வயசு 60 போன வருஷம் முடிஞ்சுது. அடுத்த மாசம் 60ஆம் கல்யாணம் செய்யலாம்னு இருந்தோம். கிட்டத்தட்ட நாற்பது வருஷம் அன்னியோன்னிய தம்பதியா இருந்து இவ்ளோ வருஷமா எவ்வளவோ கஷ்டத்திலேயும் தளராம பாடுபட்டு எங்களையெல்லாம் நல்ல நெலமைக்குக் கொண்டு வந்துட்டு, இந்த நேரத்திலெ எங்க அப்பா ஏன் இப்பிடி ஒரு முடிவு எடுத்தார்ன்னே புரியலை சார்.
காரணமும் சொல்ல மாட்டேங்கறாரு. அம்மா பிரமை பிடிச்சா மாதிரி இருக்காங்க. எதுவுமே பேசமாட்டேங்கறாங்க . நீங்க வந்து என் அப்பாகிட்ட பேசிப் பாருங்க. நீங்க சொன்னா ஒருவேளை அவர் மனசை மாத்திக்கலாம். அதுனாலேதான் உங்ககிட்ட வந்தேன்” என்றான் ரமேஷ். ரமேஷ், இந்த விஷயத்தை நீ வந்து எங்கிட்ட சொன்னதா உங்க அப்பாவுக்குத் தெரியவேண்டாம்.
நானும் யதேச்சையா வீட்டுக்கு வரா மாதிரி நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன். பேசிப் பார்ப்போம். உங்க அப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும். லேசுலே முடிவு பண்ணமாட்டார். ஆனா முடிவு பண்ணிட்டா மாத்திக்க மாட்டார் என்றார் கிருஷ்ணன்
நாளைக்கு மறக்காம வந்திருங்க சார்ன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினான். மறு நாள் வைத்தியநாதன் வீட்டில் ரமேஷ், அவன் மனைவி கீதா, ராமநாதன், அவர் மனைவி ஜெயா என அனைவரும் குழுமியிருந்தனர்.
பேராழியா வந்து தாக்கின சுனாமிலே அடிபட்டு, பயத்திலே உறைந்து ஆங்காங்கே தொங்கிண்டு இருக்கற உயிர்கள் மாதிரி ஆளாளுக்கு ஒவ்வொரு சுவரில் சாய்ந்து, பிடிமானமே கிடைக்காமல் உட்கார்ந்திருந்தனர். வைத்தியநாதன் எதிரே உட்காந்து கிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தார். வைத்தியநாதன் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு வாயே திறக்காமல் இறுக்கமாக உட்கார்ந்திருந்தார். கிருஷ்ணன் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். வாசலில் வைத்தியநாதனின் மகள் லக்ஷ்மியும் மாப்பிள்ளை கணேஷும் வந்து இறங்கினர். அவர்கள் கண்களில் அதிர்ச்சி.
லக்ஷ்மி அப்பாவிடம் போய் அவர் பின் பக்கமாகப் போய் அவரைக் கட்டிக்கொண்டு அவர் தோளில் தலையை வைத்தபடி அவர் காதில் இளகிய குரலில் என்னப்பா இது. ஏன் இப்பிடி செய்யறீங்க என்று அவர் முதுகைத் தடவிக் கொடுத்து “வேண்டாம்ப்பா எப்பவுமே எல்லாருக்கும் அமைதியா யோசனை சொல்ற நீங்களே இப்பிடிச் செய்யலாமா அதுவும் இந்த வயசிலே இப்பிடிச் செய்யலாமா? குடும்ப மானமே போயிடும்பா.
சொன்னாக் கேளுங்க எனக்காகப்பா.. நான் உங்க செல்லப் பொண்ணு இல்லையா. நான் சொல்றேன் உங்க முடிவை மாத்திக்கங்க என்றாள் லக்ஷ்மி. வாயைத் திறக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் வைத்தியநாதன்.
வைத்தியநாதனுக்குச் செல்லப் பெண் லக்ஷ்மி, கடைக்குட்டி. எப்போது வைத்தியநாதனுக்குக் கோபம் வந்தாலும் அவள் வந்து அவர் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு எளிதாக அவரைச் சமாளிப்பாள். வீட்டில் யாருக்கு எது வெண்டுமென்றாலும் லக்ஷ்மி மூலமாக வைத்தியநாதனிடம் நிறைவேற்றிக் கொள்வது அந்தக் குடும்பத்தில் வழக்கம். அவள் சொல்லியும் பிடிகொடுக்காமல் இறுக்கமாக உட்கார்ந்திருந்தார் வைத்தியநாதன்.
லக்ஷ்மி வைத்தியநாதனின் அங்கவஸ்திரத்தை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டு அவர் போலவே நிமிர்ந்து நின்று சொன்னாக் கேளு வைத்தியநாதா. பெரியவங்க சொன்னாக் கேக்கணும். யோசிக்காம முடிவெடுக்கக் கூடாது . முன்னாலே யோசிக்காம அப்புறமா வருத்தப்பட்டு யாருக்கு என்ன லாபம், புரியுதா என்றாள் வைத்தியநாதன் பேசுவது போன்ற பாணியில் அவருடைய குரலிலேயே. மறுபடியும், “அப்பா வேண்டாம்பா” என்றாள் கண்ணீருடன்.
அது வரை மௌனமாய் இருந்த வைத்தியநாதன் எழுந்தார். லக்ஷ்மியை அருகே அழைத்துத் தலையைச் செல்லமாகக் கோதிவிட்டு “நான் எதோ கோவத்திலே முடிவெடுத்துட்டேன். யானைக்கும் அடி சறுக்கும். என் வாழ்க்கையிலேயே முதல் முறையா என் முடிவை மாத்திக்கறேன். உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன். டேய் கிருஷ்ணா என்னை மன்னிச்சுடுப்பா. உன்கிட்டயும் நான் பேசாம இருந்துட்டேன் என்றார்.
அது என்ன மாயமோ! பாசத்தில் வழுக்காதவர் யார் கடைக்குட்டி பேச்சுக்கு இவ்வளவு மதிப்பா .வைத்தியநாதனின் மனைவி சாவித்ரி எழுந்து உட்கார்ந்தாள். வந்த பூகம்பம் சுனாமி புயல் எல்லாமே சினிமாலே ரிவர்ஸ் ஷாட் காட்றா மாதிரி திடீர்ன்னு விலகிப் போச்சு. பதற்றம் நீங்கி ஒரு அமைதி வந்தது.
கிருஷ்ணன் அதெல்லாம் பரவாயில்லே. நல்ல முடிவெடுத்தியே , அதுவே போதும் .
அப்போ நான் கிளம்பறேன். வைத்தியநாதா, உன்னோட அறுபதாம் கல்யாணத்தைத் தடபுடலா செய்யணும்னு பசங்க எல்லாரும் ஆசைப்படறாங்க . அதுக்கு வேணூங்கிற ஏற்பாட்டைக் கவனி. நாளைக்கு வரேன்” என்றபடி கிளம்பியவர், ரமேஷைத் தனியாக அழைத்து உங்க அப்பா அம்மாவை யாரும் ஒண்ணும் கேக்கவேண்டாம். அவங்களைத் தனியா விடுங்க. அவங்க மனசு விட்டு பேசட்டும் என்று கூறிவிட்டு கிளம்பினார்.
அன்று மாலை லக்ஷ்மியும் அவள் கணவன் கணேஷும் ஒரு அறையில் பேசிக்கொண்டிருந்தனர். என்னை மன்னிச்சிருங்க. என் பிடிவாதம் தப்புன்னு எனக்கு புரிஞ்சுது. ஏதோ அசட்டுத்தனமா உங்களைப் புரிஞ்சுக்காம தப்புத் தப்பா பேசிட்டேன். நல்லவேளை நான் பேசினதைக் கேட்டு நீங்களும் டைவர்ஸ் செய்துக்கலாம்ன்னு முடிவெடுத்திருந்தா என் நெலமை என்ன ஆயிருக்கும். நெனைச்சாவே பகீர்ங்கறது.
நீங்க பொறுமைசாலி. அதுனாலெ நான் தப்பிச்சேன். இந்த வயசுலே அப்பாவும் அம்மாவும் டைவர்ஸ் செஞ்சுகிட்டாவே இவ்ளோ பாதிக்குதே. நான் யாரைப் பத்தியும் கவலைப்படாம முட்டாள்தனமா டைவர்ஸ் செய்துக்கலாம்ன்னு முடிவெடுத்தேனே. என்னை மன்னிச்சிருங்க” என்றாள், தன் கணவன் கணேஷைக் கட்டிக்கொண்டு.
ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த வைத்தியநாதன் சாவித்ரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்“நான் சொல்லிக் குடுத்தா மாதிரியே நல்லா நடிச்சே சாவித்ரி நீ. உனக்கு நடிகையர் திலகம்னு பட்டமே குடுக்கலாம் என்றார். சரி சரி அவங்க காதுலே விழப்போறது. அசடு வழியாதீங்க என்றாள் சாவித்ரி.
அறையிலிருந்து கணேஷும் லக்ஷ்மியும் வெளியே வந்து நாங்க கிளம்பறோம். குழந்தைகளைத் தனியா விட்டுட்டு வந்திருக்கோம் என்றபடி கிளம்பினர். மாப்பிள்ளை கணேஷ், மாமனாரைப் பார்த்து, கண்களாலேயே நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்
30
முகமூடிகள்
அழைப்பு மணி ஓபன் த டோர் பிளீஸ் என்று இனிமையாக ஒலித்தது, கதவைத் திறந்த ராஜேஷுக்கு ஓர் இனிய அதிர்ச்சி. வா.வ் வாங்க வாங்க எதிர்பார்க்கவே இல்லே உள்ளே வாங்க என்று அழைத்துக்கொண்டு போய் சோபாவில் உட்காரவைத்து விட்டு அதிர்ச்சி விலகாமல் ஆச்சரியத்துடன் தாரிணி யார் வந்திருக்காங்கன்னு வந்து பாரு என்றான்.
தாரிணி இதோ வரேன் என்றபடி வந்தவள் மிஸ்டர் பிரேம் நீங்களா! எங்க வீட்டுக்கு எப்பிடி! மன்னிக்கணும். உங்களை இங்கே பார்த்த அதிர்ச்சியிலே கையும் ஓடலைகாலும் ஓடலை” என்றபடி பிரிஃட்ஜை’த் திறந்து குளிர்பானத்தை ஒரு கோப்பையில் ஊற்றி அவனிடம் அளித்துவிட்டு அவளும் வந்து உட்கார்ந்தாள்.
நானும் முன்பின் அறிவிக்காமல் வந்துவிட்டேன் அதற்கு நீங்கள்தான் என்னை மன்னிக்கணும் என்றபடி கோப்பையை கையில் வாங்கி டீப்பாயின் மேல் வைத்தான் நடிகர் பிரேம்! பிரபல தொலைக்காட்சியில் நேற்று நடந்த மனமொத்த தம்பதிகள் நிகழ்ச்சியை ஏற்று கலகலப்பாக நடத்தி தாரிணியையும் அவள் கணவன் ராஜேஷையும் மனமொத்த தம்பதிகளாகத் தேர்ந்தெடுத்து பாராட்டி முதற் பரிசு வழங்கிய பிரபல நடிகர் பிரேம்!!
திரைப்பட உலகில் கால் பதித்து குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு வெற்றிகரமாகத் திரை உலகில் பவனி வரும் இளம் புயல் பிரேம். அப்படிப்பட்ட பிரேம் முகத்தில் ஒரு கவலை ரேகை. அதைக் கவனியாமல் ஆச்சரியத்துடன் தாரிணி ஐயோ எனக்கு சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்தை எப்படிக் கொண்டாடறதுன்னே தெரியலையே. ஒரு நிமிஷம் என்னோட நண்பர்களை, உறவுக்காரங்களை எல்லாரைம் கூப்பிடறேன். அவங்க நம்ப மாட்டாங்க.
இருந்தாலும் வந்து பாத்தா நம்புவாங்க என்றபடி தொலைபேசியை நோக்கி நகர்ந்தாள் தாரிணி. பிரேம் அவளைப் பார்த்து ஒரு நிமிஷம், நான் உங்க ரெண்டு பேர்கிட்டயும் தனிமையிலே பேச வந்தேன். கூட்டமெல்லாம் வேண்டாம் என்றான். அவன் முகம் வாடியிருந்தது. ஒரு கணம் அதிர்ந்து சரி என்றபடி குழப்பமாய் அவள் கணவன் ராஜேஷைப் பார்த்துவிட்டு வந்து உட்கார்ந்தாள் தாரிணி.
பிரேம் மெல்லிய குரலில் தொடர்ந்தான் அதென்னவோ தெரியலை நேற்று உங்க ரெண்டு பேரையும் பார்த்ததுலேருந்து ஏதோ ஒரு உணர்வு.
உங்ககிட்ட மனம் விட்டு சில உண்மைகளைப் பகிர்ந்துக்கணும்னு தோணிச்சு. உங்க ரெண்டு பேரோட ஒத்துமை உணர்வு, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற தன்மை இதெல்லாம் பார்த்து மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது. இப்போ நான் சொல்லப் போற விஷயத்தை வெளியிலே யார்கிட்டயும் பகிர்ந்துக்க முடியலை. வெளியே தெரிந்தால் மீடியாக்கள் என்னைப் பத்தி மோசமா செய்திகள் வெளியிட்டு என்னோட வாழ்க்கையிலே மேலும் சிக்கல் ஏற்படுத்திடுவாங்க.
அதனாலே தயவுசெய்து வெளியே எதையுமே சொல்லாதீங்க.
என்னை நடிகனா பாக்காம, உங்க சகோதரனா நினைத்துக்கொள்ளுங்கள் என்று தழுதழுத்த பிரேமின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. சமாளித்துக்கொண்டு பேச ஆரம்பித்தான் பிரேம். நான் இப்போ.. இந்த வினாடி முதல் அதுவும் உங்க வீட்டிலே இருக்கிற நேரம் வரை சத்தியமா நடிக்கப் போறதில்லை. சில நேரமாவது ஒரு சாதாரண மனிதனா வாழப் போறேன் என்று கூறிவிட்டு, அவன் மனைவி படுத்தும் பாட்டையும், அவன் அவளுடைய அன்புக்கு ஏங்குவதையும், அவன் மனைவி அவனுடைய புகழ், பணம், அவளுடைய சுற்றம் இவற்றுக்கு அளிக்கும் மதிப்பைக் கூட அவனுக்கு அளிப்பதில்லை என்றும் கூறி உடைந்து போய் மனம் விட்டு அழுதான். தாரிணியும் ராஜேஷும் ஆறுதல் கூறி அவனை ஆசுவாசப்படுத்தினர்.
இப்போது மனம் சற்றே தெளிவாக உள்ளது உங்களுக்கு என் நன்றி” என்று மனமார நன்றி கூறிவிட்டு, “நீங்க ரெண்டு பேரும் ஒரு நாள் என் வீட்டுக்கு வரணும், உங்க காலடி படற நேரமாவது என் வாழ்க்கையில் சந்தோஷம் வருதான்னு பாக்கிறேன் என்று கூறியபடி, தாரிணி கொடுத்த குளிர் பானத்தைக் கையிலெடுத்தான். அந்தக் குளிர்பானம் சூடாகி இருந்தது. வேறு குளிர்பானம் தரட்டுமா என்றாள் தாரிணி. இல்லை வேண்டாம், இந்தச் சூடான குளிர்பானம் போல்தானே என் வாழ்க்கையும் இருக்கிறது. இதையே குடிக்கிறேன் என்று குடித்துவிட்டு முகத்தை துடைத்துக்கொண்டு கிளம்பினான். அந்தப் பிரபல நடிகன் கோடீஸ்வரன் பிரேம்
ஓபன் த டோர் பிளீஸ் என்று இனிமையாய் அழைப்பு மணி ஒலித்தது. உள்ளிருந்தே பார்க்கும் மாயவிழிக் (Magic Eye) கண்ணாடியில் இருவரும் மாறி மாறி முகம் வைத்துப் பார்த்தனர். அவர்கள் இருவரின் வக்கீல்களும் வந்திருந்தனர்.
தாரிணியும் ராஜேஷும் சுதாரித்துக்கொண்டு இயல்பு நிலையை அடைந்தனர். ராஜேஷுக்கும் தாரிணிக்கும் சட்டப்படி விவாகரத்து அளிக்க ஒரு வருடம் சேர்ந்து வாழுவது அவசியம் என்று நீதிபதி கூறியதையும், அதற்காக சேர்ந்து வாழ ஆரம்பித்து அன்றோடு அந்த ஒரு வருடம் நிறைவு பெறுவதும் இருவருக்கும் ஒரு சேர நினைவுக்கு வந்தது. இருவரும் திகைத்தனர், முகத்தை துடைத்துக்கொண்டனர்!
ராஜேஷும் தாரிணியும் கதவைத் திறப்பதா, வேண்டாமா எனக் குழம்பிக் கொண்டிருந்தனர்.
31
நெற்றிக் கண்
முப்பத்து முக்கோடி தேவர்களும் இமை மூடாமல் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர். யாராலும் நிறுத்த முடியாத அளவுக்கு உறுதி பூண்ட அந்த உக்கிரமான தவம் கோரத் தவம் அகோரத் தவம் பிரபஞ்சமே ஸ்தம்பித்துப் போகுமளவுக்கு, உக்கிரமான தவம், கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்த தவம். தவத்தின் உச்சகட்டம். இதுவரை யாருமே செய்யமுடியாத அளவுக்கு எல்லையைக் கடந்த தவம் எல்லோருடைய முயற்சியும் பலனற்றுப் போயின.
ஒரு நெடிய உருவம் உடல் வற்றிப் போய் இருந்தாலும் உள்ளத்தின் வலிமையினால் ஆடாமல் அசங்காமல் அப்படியே கல்லாய் உறைந்து நடத்தும் கடுந்தவம். சூறைக் காற்றும் பெருமழையும் இடியும் மின்னலும் எதாலும் கலைக்க முடியாத கொடுந்தவம். சடா முடியும் உடலெங்கும் புழுதியும் ஏகச் சிந்தையுமாக இடைவிடாது இயற்றும் தவம்.
ஒவ்வொரு யுகத்திலும் காலம் மாறுகிறது. ஆயிரம் வருடங்கள் தவம் செய்தோரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நூறு வருடங்கள் தவம் இயற்றியோரைப் பற்றிப் படித்திருக்கிறோம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கலியுகத்தில் மனப்பூர்வமாக ஒரு கணம் நினைத்தாலே அது ஆயிரம் வருடங்கள் தவம் செய்வதற்குச் சமானம் என்று வேதங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட இந்தக் காலத்தில் இப்படி ஒரு தவத்தைக் கண்டதில்லை யாரும் அப்படிப்பட்ட தவம்.
இதோ இன்னும் சில வினாடிகளில் முடியப் போகிறது இன்னும் சில வினாடிகள் அதன் பிறகு விளையப் போகும் விளைவு ஆம் பல இடையூறுகளைக் கடந்து முன்னேறி வெற்றியைக் காணப் போகும் தவத்தின் மேன்மை தவத்தின் பலனை அடையும் வேளை கைகூடிவிட்டது. இதோ பரம்பொருள் நேரே காட்சி தந்து வரமளிக்கப் போகிறது அப்படி வரமளித்து விட்டால் அதன் விளைவு என்ன ஆகும் நினைக்கவே பயமாயிருக்கிறது!
அப்படிப்பட்ட மிக நுணுக்கமான வேளையில் தன்னுடைய தவத்தைக் கலைக்க யாரோ முற்படுவதை உணர்ந்து இன்னும் தீவிரமாக மனத்தைக் கட்டுப்படுத்தித் தவத்தில் ஆழ்ந்தார் அந்தத் தவசீலர். ஆயினும் இடைவிடாமல் அவருடைய தவத்தை யாரோ கலைக்கின்றனர்.
பொறுமை பொறுமை வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை உடைப்பது போல் ஆகக் கூடாது. எவ்வளவோ சக்தியுடன் தவம் செய்தும் அவரைக் கோபப்படுத்தி அவருடைய தவத்தைக் கலைத்து அதன் விளைவாக அவர் பெற்ற சக்திகளையெல்லாம் வலுவிழக்கச் செய்தும் மீண்டும் தளராமல் பெரு முயற்சி செய்து பிரும்ம ரிஷி பட்டம் வாங்கிய ராஜரிஷி விஸ்வாமித்ரரின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைய வேண்டும். நம் தவத்தைக் கலைக்க முயலுபவர்களின் முயற்சி தோற்கவேண்டும் என்னும் வெறியோடு மீண்டும் தன்னுடைய தவத்தில் ஆழ்ந்து மூழ்கினார் அந்த தவசி.
விதி யாரை விட்டது விதி வலியது. அதன் கைகளில் யாருடைய சக்தியும் செல்லுபடியாகாது! அந்த விதி இவரையும் சீண்டிற்று. மீண்டும் மீண்டும் இவரது தவத்தைக் கலைக்கச் செய்யும் முயற்சியால் ஒரு கணம் தன்னை மறந்து, தவத்தை மறந்து நிஷ்டை கலைந்து அதன் விளைவாக எழுந்த ஆத்திரத்தின் விளைவாக உடல் நடுங்கக் கண் திறந்தார். சிவந்த தன் கண்களால் ஏறிட்டார். மசமசப்பாக எதிரே ஒரு உருவம் தெரிந்தது. அவர் கைகள் தானாக உயர்ந்தன.
எதிரே இருந்தவர் அப்படியே முன் வந்து இதமாக மிஸ்டர் ராமநாதன் எழுந்திருங்க என்றபடி கையைப் பிடித்து அப்படியே நிதானமாக அவரை எழுப்பி நிற்கவைத்து என்னைப் பிடிச்சிக்கங்க முதலில் நிதானனமா கண்ணைத் திறங்க கொஞ்ச நேரத்துக்குக் கண் கூசும். அதுனாலே மெதுவாக நடந்து வாங்க. இதோ பத்தடி தூரம்தான். அந்த அறைக்குள் சென்று உட்காருங்க . இன்னும் பத்து நிமிஷத்திலே உங்களுக்கு வைத்தியம் முடிந்துவிடும். கண்களில் மருந்தை ஊற்றி ஒரு மணி நேரமாகிறது. நான் கூறியபடியே கண்களைத் திறக்காமல் அப்படியே இருந்தீங்க என்றார் பிரபல கண் மருத்துவர் சூரியப்ரகாஷின் உதவி மருத்துவர்.
ரொம்ப நன்றி டாக்டர் என் பையன் இப்போ வந்துடுவான், என்னை அழைத்துப் போக என்றார் ராமநாதன்.
சூரியப்ரகாஷ் உள்ளே நுழைந்து வாங்க ராமநாதன் இந்த இடத்திலே உங்க முகவாய்க் கட்டையை வைத்துக்கொண்டு உங்க வலது கண்ணாலே என் இடது காதைப் பாருங்க. ஹும் அப்பிடியே இடது கண்ணாலே என் வலது காதைப் பாருங்க என்றார். அப்பிடியே கீழே பாருங்க என்று தன் மருத்துவத்தைத் தொடங்கினார். இப்போ எதிரே அந்த போர்ட்லே இருக்கறதைப் படிங்க என்றார் .
டாக்டர் எனக்கு படிக்கத் தெரியாது என்றார் ராமநாதன்.
32
சக்கரம்
ராமசீதா இட்டிலிக் கடை வாசனையாக அமர்க்களமாக மணந்துகொண்டிருந்தது. இடைவிடாது வந்துகொண்டிருக்கும் வாடிக்கையாளர்களைக் கவனித்து உணவுப் பொருட்களோடு தங்களின் உபசரிப்பையும் ராமசேஷனும் அவர் மனைவி சீதாவும் வழங்கிக்கொண்டிருந்தனர்.
ஆய்ந்து ஓய்ந்து கடையை மூடியபோது இரவு 10 மணி. நெற்றி வியர்வையை தன்னுடைய தலைப்பால் துடைத்துவிட்டு தானும் துடைத்துக்கொண்டு, கல்லாவில் இருந்த பணத்தை ஒரு ரூபாய் மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை எடுத்துக்கொண்டு வந்து மொத்தமாக வைத்தார் ராமசேஷன்.
கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு எண்ணத் தொடங்கினர் இருவரும். கணிசமாகச் சேர்ந்திருந்தது அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, இதை நாளைக்குக் கிருஷ்ணனின் பள்ளிக் கூடத்தில் கொண்டு போய்க் கட்டிவிட்டு வந்துடு. நீ வர வரைக்கும் கடைய நான் பாத்துக்கறேன் என்று சொல்லியபடியே, தள்ளிப் போனார் ராமசேஷன்.
சீதா சரி என்று தலையை ஆட்டிவிட்டு அந்தப் பணத்தைக் கொண்டு போய், சுவாமி படத்தின் பின்னால் வைத்துவிட்டு மறுநாள் சிற்றுண்டி விடுதிக்குத் தேவையான ஏற்பாடுகளைக் கவனித்து விட்டுப் படுத்தாள். ராமசேஷனும் சீதாவும் வழக்கம் போல் சுவாமிக்கு நன்றி சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தனர்.
அவர்கள் மகன் கிருஷ்ணன் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான். எப்பிடி இருந்த குடும்பம், எங்கிருந்தோ ஒரு பொண்ணு இந்தக் குடும்பத்துக்கு வந்து எல்லாரையும் ஆட்டிவெச்சு, குடும்பத்தைப் பிரிச்சு இதுமாதிரி நடுத்தெருவிலே கொண்டு வந்து அனாதையா நிக்க வெச்சிட்டாளே. அவங்க கண்ணு முன்னாடி நாம நல்லா படிச்சு முன்னுக்கு வந்து இவா ரெண்டு பேரையும் நல்லா வெச்சிக்கணும் என்னும் உறுதியோடு மீண்டும் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினான்.
ஆனாலும் படிக்கவிடாமல் அவனை அந்த நினைவுகள் ஆக்ரமித்துக்கொண்டே இருந்தன. ஒண்ணு நான் இந்த வீட்டிலே இருக்கணும்னா இவாளை இங்கே இனிமே வெச்சிக்க முடியாது. நானா இல்லே இவங்களா? நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்து சொல்லுங்க. நான் அது வரைக்கும் எங்க அப்பா அம்மாவோட இருக்கேன்’ என்ற படி தீர்மானமாய் பெட்டியைத் தூக்கிகொண்டு படி இறங்கிப் போனாள் மூத்த மருமகள்.
திகைத்து நின்ற அண்ணனிடம் உன்னோட வாழ்க்கைதான் எங்களுக்கு முக்கியம், அதுனாலே நாங்க வெளிலே போறோம், இனிமே எங்களோட பாட்டை நாங்க பாத்துக்கறோம். எப்பிடி இருந்தாலும் உறவு விட்டுப் போகாது. அதுனாலே அவளைச் சமாதானப்படுத்தி அழைச்சிண்டு வந்து அவளோட சந்தோஷமா வாழறதுதான் உன்னோட கடமை. நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணைக் கண் கலங்காமெ வெச்சிக்கணும். அதுதான் சரி. என்று தீர்மானமாகக் கூறிவிட்டு மூவரும் படியிறங்கினர்.
அண்ணன் விதியின் கைப்பாவையாய் வாயடைத்து கண்களில் கண்ணீருடன் நின்றார். ஆனால் அதன் பிறகு அண்ணன் உண்மையிலேயே அண்ணியின் கைப்பாவையாகவே மாறிப் போனார். அவனுக்கு நடுத் தெருவில் ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் அப்பா. மூவருமே அனாதையாக நின்ற கோலம் மனக் கண்ணில் தோன்றியது. அடடா அப்பாதான் எவ்வளவு தீர்க்கதரிசி நீ ஒண்ணும் கவலைப்படாதே உன் படிப்பு எந்தக் காரணம் கொண்டும் நிற்காது. வா போலாம் என்றபடி நடுத் தெருவிலிருந்து ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டு யோசிக்கலானார்.
நாம நடுத்தெருவிலே இல்லேடா ஓரமா வந்துட்டோம் தைரியம் எப்பவும் நம்மைக் கைவிடாது. தெய்வம் நம்மைப் பாத்துக்கும் என்று கூறிவிட்டு யோசித்துக் கொண்டிருந்தார் ராமசேஷன். சிறிது நேரத்தில் அவர் முகத்தில் ஒரு வெளிச்சம்.
ஏன் சீதா நீ இட்லியும் மொளகாப் பொடியும் போட்டு அதுக்கு மேலே கொஞ்சம் நல்ல எண்ணையை விட்டு குடுப்பியே அந்த மாதிரி ருசியை நான் எங்கேயுமே சாப்டதில்லே. எவ்வளவு நன்னா இருக்கும் தெரியுமா’ என்றார்.
சீதா நிமிர்ந்து பார்த்தாள். மறுநாள் அந்தத் தெருவின் கடைசியில் ஒரு குடிசை இரவோடு இரவாக முளைத்தது. வாசலில் ராமசீதாஇட்டிலிக்கடை என்று வெறும் வெள்ளைக் கட்டியால் எழுதப்பட்ட பலகை இருந்தது. உள்ளிருந்து சுவையான இட்லியின் மணமும் சேர்ந்து போவோர் வருவோரை இழுத்தது…. இழுத்தது…. இழுத்துக்கொண்டே இருந்தது.
(சில வருடங்களுக்குப் பிறகு.)
அப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க என்றபடி காலில் விழுந்தான் கிருஷ்ணன். தலைக்கு உசந்த பிள்ளை நமஸ்காரம் பண்ணவுடனே தூக்கி தன் அருகே நிக்க வெச்சுண்டு ராமசேஷன் என்னப்பா பாஸ் பண்ணிட்டியா நீதானே முதல் மார்க் வாங்கி இருக்கே என்றார். உச்சி மோந்து ஆசீவாதம் செய்தார்.
சீதா நிமிர்ந்து பார்த்தாள். இரு வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணன் அப்பா அம்மா நீங்க ரெண்டுபேரும் உழைச்சது போதும். கடையை மூடிடுங்கோ. இனிமே உங்களை பாத்துக்கறது என் பொறுப்பு என்றான்.
ராமசேஷன் சீதாவைப் பார்த்தார். சீதா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் அந்தப் பார்வை கொஞ்சம் குழம்பி, பின் தெளிவடைந்தது. என்னம்மா என்ன யோசனை என்றார் ராமசேஷன். ஒண்ணும் கவலைப்படாதே நம்ம புள்ள நல்ல புள்ள என்றார்.
சீதா சரி என்று ஒரு ஒற்றைச் சொல் சொல்லிவிட்டு மீண்டும் அவரை நிமிர்ந்து பார்த்தாள். அதில் சீரான தெளிவான பல செய்திகளின் நீரோட்டம் இருந்தது. இன்னும் இரண்டு வருடங்கள் கழிந்தது. கிருஷ்ணன் ஒரு நாள் அப்பா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று தயங்கினான்.
சொல்லுப்பா. என்ன விஷயம் என்றார் ராமசேஷன். ஒண்ணுமில்லைப்பா எனக்கு ஒரு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சுவைக்கறீங்களா என்றான். உடனே ராமசேஷன் ரொம்ப சந்தோஷம். பொண்ணு யாருன்னு சொல்லு. நானே போய்ப் பேசிட்டு வந்துடறேன்’ என்றார்.
பெண்ணின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது இதோ பாருங்க. நாங்க உழைப்பையும் தெய்வத்தையும் நம்பறோம். அதுனாலே வரதட்சிணை அப்பிடி இப்பிடியெல்லாம் பேசாதீங்க. எங்க வீட்டிலே ரொம்ப நாளா ஒரு பொண்ணு குழந்தை இல்லை. உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்புங்க. நாங்க எங்க பொண்ணு மாதிரி பாத்துக்கறோம்’ என்றார் ராமசேஷன்
சீதா சிரித்த முகத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு இயல்பானாள் ராமேஷம் புரிந்துகொண்டார். இதோ பாருங்க சீதாக்கு கூட உங்க பொண்ணைப் பிடிச்சிருக்கு என்றார் ராமசேஷன் அந்தப் பெண் லக்ஷ்மி வந்து அனைவருக்கும் நமஸ்காரம் செய்தாள். ராமசேஷனிடம் வந்து மாமா என்றாள். மாமான்னு சொல்லாதேம்மா. அப்பான்னே கூப்புடு என்றார் ராமசேஷன். நாதஸ்வர சத்தம் கேட்க ஆரம்பித்தது.
எல்லாம் மங்களமா முடிஞ்சுடுத்து. இனிமே இவ உங்க வீட்டுப் பொண்ணு என்றார்கள். ஒரு மாதம் கழித்து ஏர்போர்ட்டில் மருமகளையும் மகனையும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துவிட்டு அக்கடா என்று உட்கார்ந்தார்கள் ராமசேஷனும் சீதாவும். ஒரு வருடம் கழிந்தது. தொலைபேசியில் கிருஷ்ணன் அப்பா எங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குப்பா என்றான். சீதா நமக்கு பேரன் பிறந்திருக்கானாம். இன்னும் மூணு மாசத்துலெ குழந்தையைக் கூட்டிண்டு இங்கே வராங்களாம் என்றார் ராமசேஷன். இருவரும் ஆசையோடு காத்திருந்தனர்.
பேரனை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனும் அவன் மனைவி லக்ஷ்மியும் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தனர். ராமசேஷன் பேரனைப் தோளிலே தூக்கியபடி கொஞ்சிவிட்டு சீதாவிடம் கொடுத்தார் . பேரன் தாத்தா பாட்டி என்றான் மழலையில்.அவர் கூடவே வெளியே வந்த கிருஷ்ணன்,அப்பா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்றான், சொல்லுப்பா என்றார் ராமசேஷன் .
அப்பா அம்மா பாவம்பா நாமெல்லாரும் இருந்தோமே அந்த தெரு அந்த வீடு பக்கத்திலேயே கோயில் அதெல்லாம் அம்மாக்கு ரொம்பப் பிடிக்கும்பா. அதுனாலே அந்த வீட்டை நான் உங்க பேர்லே வாங்கிட்டேன் நீங்க ரெண்டு பேரும் அங்கேயே போய் இருந்தா அம்மாக்கும் சந்தோஷமா இருக்கும் அம்மாக்கும் தோட்டம் போடறது, செடி நடறது இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்றான்.
சீதா நம்ம சந்தோஷத்துக்காக கிருஷ்ணன் யோசிச்சு ஒரு முடிவு எடுத்திருக்கான் காதிலே விழுந்துதா . சரிப்பா ஆனா ஒரு கண்டிஷன் . எதுக்கு தெரியுமா உன்னை மாதிரி நல்ல பிள்ளைகள் குறைவு . எத்தனையோ பிள்ளைகள் பெத்தவங்களை வெச்சுக்கறதில்லே அதுனாலே நானும் அம்மாவும் மறுபடியும் அந்த இட்லிக் கடையை ஆரம்பிக்கப் போறோம் . நடுத்தெருவும் தெரு ஓரமும் உலகத்துலெ எல்லா இடத்திலேயும் இருக்கும் இல்லே.
ஏன் சீதா நீ இட்லியும் மொளகாப் பொடியும் போட்டு அதுக்கு மேலே கொஞ்சம் நல்ல எண்ணையை விட்டுக் குடுப்பியே எவ்வளவு நன்னா இருக்கும் தெரியுமா என்றார் ராமசேஷன். எட்டு ஊருக்கு வாசனை மணக்கும் என்றாள் சீதா . நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன் . மீண்டும் ராமசீதா இட்டிலிக்கடை தொடங்கியது, பலமுதியவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ராமசீதா இட்டிலியும் மிளகாய்ப் பொடியும் நல்லெண்ணெயும் மணக்க ஆரம்பித்தது.
சுபம்
33
பூடகம்
ராமநாதனிடம் வந்து தாத்தா ஒரு கதை சொல்றியா என்றாள் பேத்தி ரம்யா. அவளுக்குத் தினமும் ஒரு கதை சொல்லணும். சரிம்மா வா. இங்க வந்து உக்காரு. நான் உனக்கு நிறைய கதை சொல்லி இருக்கேன். இன்னிக்கு வித்யாசமா ஒரு கதை சொல்லப் போறேன். நல்லா கவனிக்கணும், சரியா என்று கதை சொல்லத் தொடங்கினார்.
உன் தாத்தா, அதான் நானு. நிறையப் படிக்கலே அதுனாலே ஒரு பேக்டரிலே தொழிலாளியா வேலை செஞ்சேன் ஏன் தாத்தா பேக்டரின்னா என்னா என்றாள் ரம்யா. அது வந்தும்மா தொழிற்சாலை என்றார். அப்பிடியா என்று புரிந்தவள் போல் கேட்டுவிட்டு, அது சரி தொழிற்சாலைன்னா என்னா என்றாள். திணறினார் ராமநாதன்.
பிறகு சமாளித்துக்கொண்டு, தொழிற்சாலைன்னா எப்பிடி சொன்னா உனக்குப் புரியும். சரி இப்பிடிச் சொல்றேன். தொழிற்சாலைன்னா தொழில் நடக்கற இடம். அதாவது இப்போ நம்ம வீட்டிலே டீவீ இருக்கு, மின் விசிறி இருக்கு, ஃப்ரிட்ஜ் இருக்கு. இதெல்லாம் ஒரு இடத்திலே தயார் செய்வாங்க. அந்த இடத்துக்கு பேரு தொழிற்சாலை என்றார். ஓ அப்பிடியா சரி கதையைச் சொல்லுங்க என்றாள் ரம்யா.
அது மாதிரி காரெல்லாம் தயாரிக்கிற ஒரு தொழிற்சாலையிலே நான் வேலை செஞ்சேன். அங்கே வேலை செய்யற என்னை மாதிரி தொழிலாளர்களுக்கு நன்மை செய்யறதுக்காக அந்த பேக்டரிலே ஒரு சங்கம் இருந்துது. ஒரு நேரத்திலே அந்தச் சங்கத்துக்கும் மொதலாளிகளுக்கும் தகராறு வந்துது. அந்தத் தகறாரைப் பயன்படுத்தி வேற ஒரு சங்கமும் அந்தப் போராட்டத்திலே கலந்துகிச்சு .
ஓ அப்பிடியா சரி சரி சங்கம்னா என்னா என்றாள் ரம்யா. ராமநாதனின் மருமகள் இப்பிடி குறுக்கே குறுக்கே கேள்வி கேட்டா, தாத்தா எப்பிடிம்மா கதை சொல்லுவாரு என்றாள்.
இல்லேம்மா இப்பிடி கேள்வி கேக்கறதுதான் நல்லது, அவ நான் சொல்றதைக் கவனிக்கறா அப்பிடீன்னு அர்த்தம். இது மாதிரி குழந்தைங்க கேக்கற கேள்விகளுக்கு நாம சரியா பதில் சொல்லி அவங்களுக்கு புரிய வைக்காமதான் நம்மோட குழந்தைங்களுக்கு நம்ம கலாச்சாரம்னா என்னான்னே புரியாம போயிடிச்சு என்றவர், பேத்தியிடம் திரும்பினார்.
இதோ பாரு ரம்யா உனக்குச் சந்தேகம் வர இடத்திலே கேள்வி கேளு. தாத்தா எனக்குத் தெரிஞ்சவரைக்கும் பதில் சொல்றேன். தெரியலைன்னா யாரையாவது கேட்டு உனக்குப் புரியறா மாதிரி சொல்றேன். சரியா இப்போ சங்கம்னா என்னான்னு சொல்றேன். அந்தத் தொழிற்சாலையிலே நிறைய பேரு வேலை செஞ்சோம். முதளாளிகிட்ட எடுத்துச் சொல்லி எங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்ய ஒரு தலைவரை வெச்சிகிட்டு அவர் கீழே அவருக்கு உதவி செய்யச் சில பேரை வச்சு அந்த அமைப்புக்கு சங்கம்னு பேரு வெச்சோம்.
ஆக மொத்தம் அந்த பேக்டரிலே வேலை செய்யிற தொழிலாளருக்கு ஆதரவா ஒரு சங்கமும், மொதலாளிக்கு ஆதரவா ஒரு சங்கமும் வேலை செய்ய ஆரம்பிச்சுது. மொத்தத்திலே மொதலாளிகள்லாம் ஒண்ணா சேர்ந்து நாங்க தொழிற்சாலையை மூடப் போறோம்ன்னு அறிவிச்சிட்டாங்க. அப்பிடி தொழிற்சாலையை மூடக் கூடாதுன்னு எங்க சங்கம் போராட்டம் ஆரம்பிச்சிது
இதோட விளைவு ரெண்டு சங்கத்துக்காரங்களும் அடிதடிலே இறங்கினாங்க. அந்தத் தொழிற்சாலையிலே வேலை செய்யற எங்களையெல்லாம் போட்டு அடிச்சாங்க, பல பேரை வெட்டினாங்க, ஆக மொத்தத்திலே, நாங்க எல்லாம் உயிருக்குப் பயந்து ஓடிக்கிட்டே இருந்தோம். அப்போ உங்க பாட்டி என்னோட இல்லே. உங்க அப்பாவைப் பெத்தெடுக்கறதுக்காக டெல்லி தாண்டி ஒரு ஊரிலே இருந்த அவங்க அம்மா அப்பாவோட போய்த் தங்கி இருந்தாங்க. அப்போ உங்க அப்பா கணேசன் பொறந்தாரு. ஆனா அந்த நேரத்திலே என்னாலே உங்க அப்பாவைக் கூட போயி பாக்க முடியலை.
திடீர்ன்னு ஒரு நாள் தொழிற்சாலை மூடிட்டதா அறிவிச்சுட்டாங்க. இருந்த வேலையும் போயிடிச்சேன்னு எனக்குக் கவலை, பொறந்த குழந்தையைப் போயி பாக்க முடியலையேன்னு கவலை. எல்லாம் சேந்து நானு இங்கே மெட்ராசிலே இருந்தேன். ஒருநாள் என்ன வேணா ஆகட்டும் என் பையனை அதான் உங்க அப்பாவைப் போயி பாக்கலாம்னு கையிலே இருந்த காசையெல்லாம் திரட்டி, டெல்லிக்கு ஒரு டிக்கட் எடுத்து உங்க பாட்டி இருந்த வீட்டுலே போயி உங்க அப்பாவைப் பாத்தேன்.
அந்தக் காலத்திலே நாங்கல்லாம் அதிகமா படிக்காததனாலே உடல் உழைப்பாலே வேலை செஞ்சோம். ஆனா இப்போ நீ நல்லா படிக்கற. நல்ல வேலைக்குப் போறீங்க. உங்க அப்பா கணேசன் நல்லா படிச்சிட்டு, நல்ல வேலையிலே இருக்காரு. நிறைய சம்பாதிக்கிறாரு. உங்க அப்பா மூளையாலே வேலை செய்யறாரு.
அந்தக் காலத்துக்கு ஏத்தா மாதிரி எங்களுக்கு அப்போ ஒரு மாதிரி டென்ஷன். இப்போ இவ்ளோ படிச்சிட்டு, வேலைக்குப் போற அவங்களுக்கு வேற மாதிரி டென்ஷன். அதுனாலே அப்பா வந்தவுடனே அவரைத் தொந்தரவு செய்யாமே அம்மாவுக்கும் அவருக்கும் உதவறா மாதிரி நடந்துக்கணும் புரியுதா எப்பிடி இருந்துது கதை” என்றார்.
ரம்யா ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்துது தாத்தா. நீங்க சொன்னா மதிரியே நானும் நல்லா படிக்கறேன். அப்பா அம்மாவுக்கு உதவறேன் என்றாள்.
அன்று மாலை அவருடைய மகன் கணேசன், உள்ளே நுழைந்து கைகால் முகம் கழுவிக்கொண்டு, அவனுடைய அறைக்குப் போனான். ராமநாதன் பேத்தியையே பார்த்துக்கொண்டிருந்தார். ரம்யா படித்துக்கொண்டிருந்தாள். கணேசனின் அறைக்குள்ளிருந்து அவருடைய மருமகள் குரல் மெலிதாகக் கேட்டது.
ஏங்க எல்லாரும் டாண்ணு மணி அஞ்சானவுடனே கிளம்பிடறாங்களாம் வீட்டுக்கு.நீங்க மட்டும் ஏன் இப்பிடி நேரம் காலம் பாக்காம உழைச்சு உடம்பைக் கெடுத்துக்கறீங்க எவ்ளோ சொன்னாலும் உங்களுக்குப் புரியறதே இல்லே
இந்தாங்க துண்டு முகத்தை துடைச்சிக்கங்க. இதோ நான் போயி காப்பி எடுத்திட்டு வரேன். குடிச்சிட்டு அமைதியா கொஞ்ச நேரம் டீவீ பாருங்க ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் உடம்பைப் பாத்துக்கங்க என்றாள்.
‘என்ன இது என்னிக்கும் இல்லாம இன்னிக்கு இவளுக்கு நம்ம மேல பாசம் பொத்துக்கிட்டு வருது ன்னு மனசுக்குள்ளே நெனைச்சாலும் சரிம்மா என்றான் அமைதியாக.
அம்மா அப்பா டயர்டா இருக்காரு தொந்தரவு செய்யாதே, அப்பாவுக்கு காபி குடு என்றாள் ரம்யா.
எப்பிடி பேசறா பாத்தீங்களா இவளைப் பெத்ததுக்கு ஒரு ஆம்பிளைப் புள்ளையைப் பெத்திருக்கலாம் என்றாள் பெத்துக்கோயேன் என்றாள் ரம்யா . ராமநாதன் புன்னகை பூத்தார்!
34
மனிதம்
ஏங்க இந்த கிச்சனுக்கு பின்னாலே இருக்கற வராந்தாவுலே வாஷிங் மிஷின் வெச்சிருக்கோமே அதுக்கு பின்னாலே ரெண்டு புறா எங்கிருந்தோ குச்சியெல்லாம் கொண்டாந்து கூடு கட்டி இருக்குது. ரெண்டு புறாவும் அங்கங்கே கழிஞ்சி வெக்குது. வீடே நாறுது, அதைத் துரத்துங்க என்றாள் காமினி.
அங்கே போய்ப் பார்த்தேன், என்னை தள்ளிக்கொண்டு ஜோடியாகப் படபடவென்று பறந்து போனது ரெண்டு புறாவும். அவை பயந்து பறந்ததோ என்னைப் பயமுறுத்தப் பறந்தோ. உண்மையில் திடுக்கிட்டுப் பயந்தது நான். ஜன்னல் கதவுகள் வாஷிங் மிஷின் மேலெல்லாம் புறாக்களின் எச்சம்.
வாஷிங் மிஷின் பின்னால் கூடு கட்டி இல்லறம் நடத்தி இரு குட்டிகள் வேறு போட்டிருந்தன. அந்தக் குட்டிகளைப் பார்க்க பாவமாய் இருந்தது. சரி அந்தக் குட்டிகளுக்கு ரெக்கை முளைச்சதும் பறந்து போயிடும் இப்போ துரத்தினா எப்பிடி புறா தன்னோட குட்டிகளை தூக்கிண்டு போவும், கொஞ்சநாள் பொறுத்துக்க என்றேன்.
இரண்டு வாரம் கழித்து சிறகுகள் முளைத்து இரண்டு புறாக்குட்டிளும் பறந்து போனது. நானும் காமினியும் வாஷிங் மிஷினை நகர்த்தி , அந்த இடத்தை சுத்தம் செய்து வைத்தோம். அன்று மாலையே மீண்டும் அந்தப் புறாக்கள் வழக்கமாய் தாங்கள் வந்து உட்காரும் இடத்தில் சமையலறையின் ஜன்னல் கதவுமேல் வந்து அமர்ந்தது.
மீண்டும் இவை இல்லறம் நடத்தும், வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு இதமாக, அமைதியாக அந்தப் புறாக்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இதோ பாருங்க ஒரு முறை உங்களுக்கு இடம் கொடுத்தேன், உங்க குட்டிகளையும் பத்திரமா தொந்தரவு செய்யாம காப்பாத்திக் கொடுத்தேன், அதுனாலே இனிமே இங்கே வராதீங்க, வந்தா துரத்துவேன் என்றேன்.
புறாக்களும் புரிந்தாற் போல படபடவென்று பறந்து போயின. இரவு யதேச்சையாய் ஏதோ சத்தம் கேட்க வராந்தாவில் எட்டிப் பார்த்தேன், அதே புறாக்கள் திருட்டுத்தனமாய் அதே கதவுகள் மேல் உட்கார்ந்திருந்தது. கையில் கிடைத்த மூங்கில் கழியால் அவைகளை மிரட்டி விரட்டினேன்.
அங்கே வந்த காமினி என்னாங்க அதிசியமா இருக்கு? நீங்க புறாவையெல்லாம் துரத்த மாட்டீங்களே, என்ன ஆச்சு உங்களுக்கு என்றாள்
காமினி நல்லா யோசிச்சுப் பாரு. பெத்து வளத்து ஆளாக்கின பெத்தவங்களையே பிள்ளைங்க மனிதாபிமானமோ, நன்றியோ இல்லாம வீட்டை விட்டுப் போகச்சொல்றாங்க. இவங்க இந்தப் புறாக்களுக்கா மனிதாபிமானம் காட்டுவாங்க . அதுனாலேதான் இந்தப் புறாக்களின் நன்மைக்காகத்தான் துரத்தறேன். பாவம் அதுங்களாவது வேற இடத்திலே போயி நிம்மதியா இருக்கட்டும்.
சொல்லிகிட்டே இருக்கேன் அதுங்க புரிஞ்சிக்காம அடம் பிடிக்குதுங்க, மறுபடியும் இங்கேயே வந்து உக்காருதுங்க. எல்லாத்தையும் வெளிப்படையா சொல்ல முடியுமா? நம்மோட நல்லதுக்குதான் சொல்றாங்கன்னு புரிஞ்சிக்கிட்டு அடங்கி நடக்கணும் இல்லே சொன்னா கேக்கணுமில்லே
நியாயத்துக்கு அடங்க மறுத்தா சிங்கமா இருந்தாலும், புலியா இருந்தாலும், புறாவா இருந்தாலும் தண்டிச்சுதான் ஆகணும் என்றேன் நான்.
புரியாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் காமினி.
35
மாயா
அறுபது வருட காலமாக வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அனுபவித்து வாழ்ந்தாயிற்று. சொர்க்கம், நரகம் எல்லாவற்றையும் அனுபவித்தாயிற்று. இனி என்ன? இந்த ஒரு கேள்வி அவர் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டியது வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் முடிவு என்ன?
எதற்காக வாழ்கிறோம். இந்த உலகின் மாயங்களிலிருந்து, வழக்கமான நடைமுறைகளிலிருந்து எப்போது எப்படி விடுபடுவது மூச்சு முட்டியது.
முடிவே தெரியாமல் வாழ்வது கொடுமை! சலிப்பு தட்டிவிட்டது வாழ்க்கை! நினைத்தவுடன் ஏறிப் போக ஏணியா இருக்கிறது இல்லையே!
ஏணி கிடைத்தாலும் எங்கே போவது என்னும் இலக்கு தெரியாத வாழ்க்கை. தினமும் காலையில் எழுந்து இயற்கை உபாதைகளைக் கழித்து, குளித்து இறை வணக்கம் செய்து, உணவு உண்டு, மற்ற பொழுதுகளை வாழ்க்கையின் அன்றாடப் பொய்களிலும் உண்மைகளிலும் பெருமைகளிலும்பாராட்டுகளிலும் பொறாமைகளிலும் பயத்திலும் கவலைகளிலும் மகிழ்ச்சியான நிகழ்வுகளிலும் கழித்து, இரவு படுத்து உறங்கி மீண்டும் காலையில் எழுந்து!
ஹூம்!
இந்த வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து எப்போது விடுபடுவது அப்படி விடுபட்டால் அப்போது கிடைக்கும் சக்கரம் எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்கும் அந்தச் சக்கரமும் இதே போன்று சுழல்தானா விடுபட முடியுமா? முடியாதா இதென்ன பள்ளிப் பாடம் போன்றதா என்ன அந்தந்த வகுப்புப் பாடத்தை முறையாகப் படித்து அடுத்த வகுப்புக்குச் செல்வது போல் எப்போது விடுதலை விடுதலை நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் கேள்விகள், கேள்விகள் முடிவில்லாத கேள்விகள். விடையறியாத கேள்விகள்.
வெளியே தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள்ளேயே எப்போது சுயத்தை அடைவோம், சுயம் என்பது என்ன? என்றெல்லாம் யோசித்துக்கொண்டு, எதற்காக ஏங்குகிறோம் என்பதே தெரியாமல், எதை அடையக் காத்திருக்கிறோம் என்றே தெரியாமல் செயற்கையாக வாழ்ந்துகொண்டு பயந்து கொண்டிருக்கிறோம்.
அவர் பார்வை அவரையறியாமல் குழந்தையிடம் சென்றது. குழந்தை பொம்மையால் தானே தன் தலையில் இடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது. அவருக்குத் தோன்றியது நாமும் இதே நிலையில்தான் இருக்கிறோம். வாழ்க்கை என்னும் விளையாட்டில் எதன் மேலாவது அவ்வப்போது இடித்து மோதிவிட்டு அது இடித்துவிட்டது என்று அதன்மேல் பழியைப் போட்டு, அழுதுகொண்டு, யாராவது வந்து சமாதானம் சொல்வார்களென்னும் எதிர்பார்ப்பில் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.
குழந்தை அழும் குரல் கேட்டு நினைவிலிருந்து மீண்டார் ராமசேஷன். குழந்தையைத் தூக்கி வேண்டாண்டா கண்ணு. அழாதே. பொம்மை இடிச்சுடுத்தா இப்போ தாத்தா அந்த பொம்மையை அடிக்கிறேன் பாரு என்று சொல்லி, அந்தப் பொம்மையை அடிப்பது போல் பாவனை காட்டினார். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு சற்றே சமாதானமாகி கண்களில் நீருடன் சிரித்தது. அச்சு என்று சொல்லி அதுவும் அந்தப் பொம்மையைத் தன் பிஞ்சுக்கையால் ஒரு அடி அடித்துவிட்டு, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுச் சிரித்தது.
மீண்டும் அதே பொம்மையை எடுத்து விளையாட ஆரம்பித்தது குழந்தை. வேண்டாம் மறுபடியும் இடிச்சுக்குவே. அதை வெச்சிரு என்று அதனிடமிருந்து வாங்கி வைத்தார். அந்தப் பொம்மைதான் வேண்டும் என்று அழ ஆரம்பித்தது குழந்தை. அதன் பிடிவாதம் தாங்காமல் மீண்டும் அந்தப் பொம்மையை அதனிடமே கொடுத்தார். மீண்டும் அந்தப் பொம்மையுடன் விளையாட ஆரம்பித்தது குழந்தை. மீண்டும் கணினியிடம் வந்து உட்கார்ந்தார் ராமசேஷன்.
தொலைபேசி அழைத்தது. மறுமுனையில் அவருடைய தர்மபத்தினி, “ஏங்க குழந்தை அழாமே இருக்கானா அப்பிடி அழுதா போன் பண்ணுங்க. உடனே வந்துடறோம். குழந்தைக்குச் சரியா பத்து மணிக்குப் பசிக்கும். மேஜை மேலே பால் வெச்சிருக்கேன், அழுதா குடுத்திருங்க என்றாள்.
சரிம்மா, நான் பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டுத் தொடர்பை அறுத்தார். பால் பாட்டிலை எடுத்து, குழந்தைக்குக் கொடுக்க ஆரம்பித்தார். ஜிர் ஜிர்ரென்று உறிஞ்சிவிட்டு, பாதி பால் இருக்கும் போதே உறங்க ஆரம்பித்தது குழந்தை.
சற்றே பாட்டிலை அசைத்ததும் மீண்டும் அரைத் தூக்கத்திலேயே உறிஞ்சியது. மொத்தப் பாலையும் குடித்ததும் குழந்தையைக் கீழே விட்டார். தலையணையைப் பக்கவாட்டில் அணைத்து வைத்துவிட்டு, சத்தம் போடாமல் தள்ளி வந்து நாற்காலியில் உட்கார்ந்து குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு விசும்பல், உடனே விசும்பலை நிறுத்திவிட்டு அழகாக ஒரு சிரிப்பு, மீண்டும் ஆழ்ந்த தூக்கம். திடீரென்று மிரள மிரள விழித்தல், மீண்டும் ஒரு சிரிப்பு என்று தனி உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தது குழந்தை. சிறிது நேரம் மௌனத்தின் விகசிப்பில் மூழ்கி இருந்தார், எந்த எண்ணங்களுமே இல்லாமல் வெறுமையாக. நேரம் போனதே தெரியவில்லை.
திடீரென்று குழந்தை நினைவு வரவே எட்டிப் பார்த்தார். குழந்தையைப் படுக்கையில் காணவில்லை. டேய் கண்ணா எங்கே இருக்கேன்னு தேடிக்கொண்டே எல்லா அறைகளிலும் பார்த்தாயிற்று. காணவில்லை. பகீரென்றது! மீண்டும் மும்மரமாகத் தேடினார். குழந்தை பதிலே சொல்லாமல் இருந்தது. உண்மையிலேயே அவருக்குள் ஒரு திகில் பரவியது. எங்கும் போக, சாத்தியம் இல்லையே. வாயிற்கதவு தாழிட்டு இருக்கிறது. தேடினார்.
டேய் கண்ணா, எங்கே இருக்கே பதில் சொல்லுடா கண்ணு தாத்தா தேடிண்டே இருக்கேன் பாரு ஹுஹும்… பதில் இல்லை . அவருக்குத் தலை சுற்றியது! பதற்றம் அவருடைய ஒவ்வொரு செல்லிலும் தொற்றிக்கொண்டது! என்னதான் அவரோட பிள்ளையின் குழந்தை, அவருக்குப் பேரன் என்றாலும். அந்தக் குழந்தையை கவனித்துக்கொள்ளும் உரிமை இருக்கும் அளவுக்கு அந்தக் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அந்த உரிமையைப் பற்றியோ, அவ்வளவு நேரம் அவர் மிகவும் பாதுகாப்பாகக் குழந்தையைக் கவனித்துக்கொண்டதைப் பற்றியோ கவலைப்படாமல் அவரை உலுக்கி எடுத்துவிடுவார்கள் என்னும் நினைப்பே அவருக்குப் பதற்றத்தை அதிகப்படுத்தியது.
அப்படியே தலை சுற்றி கீழே உட்கார்ந்தார். அதையும் தவிர அந்தக் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அவருடைய மனமே அவரைத் தண்டிக்கும். குற்ற உணர்வு என்னும் கருவியாகி, நரகத்தைத் தோற்றுவிக்குமே. உண்மையிலேயே பயந்து போனார் ராமசேஷன்.
திரைச்சீலையின் பின்னே இருந்து அரைகுறையாக வெளியே வந்து முகத்தை மட்டும் காட்டி காணும் அட்டாச்சு தாத்தா என்று மழலைக் குரலில் அழைத்துவிட்டு, தன் பொக்கை வாய் திறந்து சிரித்தது குழந்தை!
நிம்மதிப் பெருமூச்சுடன் பாய்ந்து ஓடி, குழந்தையை எடுத்துக்கொண்டு, “செல்லப் பையா, தாத்தா இவ்வளவு நேரமா தேடிண்டு இருக்கேன். நீ காணும் அட்டாச்சு பண்றியா?” என்று அதன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார்.
அந்தக் குழந்தையின் முகத்தில் எல்லா விடையும் கிடைத்தாற்போல் ஒரு உணர்வு அவருக்கு. வாழ்க்கை செய்யும் மாயங்கள் எப்போதும் புரிவதில்லை! அது புரியத் தொடங்கும்போது வாழ்க்கை என்பது மாயமாகிவிடுகிறது. அல்லது கடைசி வரை புரியாமலேகூட வாழ்க்கை மாயமாகி விடுகிறது. ஆகவே மாயம் எப்போதும் புரியாதோ என்று அவருக்கு ஒரு எண்ணம் வந்தது. திரும்பிப் பார்த்தார்.
குழந்தை கைகளைக் கூப்பி, “உம்மாச்சி காப்பாத்து” என்றது.
36
தப்புத்தாளங்கள்
சதாப்தி ரயிலில் பதிவுப் பட்டியலில் ராம்ஜீ என்கிற பெயரைப் பார்த்து இருக்கை எண்ணைச் சரிபார்த்து, தன்னுடைய பெட்டியை மேலே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார் ராம்ஜீ. பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒருவர் தன் முகத்தை மூடியிருந்த புத்தகத்தை எடுத்துவிட்டு நிமிர்ந்தார். வாங்க ராம்ஜீ எப்பிடி இருக்கீங்க என்றார் அவர். அதில் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்தது. ஹும் சௌக்கியம், மிஸ்டர் முத்துஸ்வாமி. நீங்க சௌக்கியமா என்று கேட்டுவிட்டு இருக்கையில் சாய்ந்தார் ராம்ஜீ.
ராம்ஜீ பணி புரிந்த ஆலையில், அவருக்கு மேலாளராகப் பணியாற்றியவர் இந்த முத்துஸ்வாமி. ராம்ஜியின் மனம் சதாப்தியை எதிர்த்து அதே வேகத்தில் பின்னோக்கிச் சென்றது. அவருடைய பழைய நினைவுகள் மேலே வரத் தொடங்கின. அந்தப் பிரபலமான நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலங்கள் மனக் கண்ணில் தெரிந்தன. ராம்ஜீ உண்மையாகத் தொழிலை மதித்து நடந்தவர். பலவிதமான ஆபத்துகளில் நிர்வாகத்துக்கு உதவியவர். ஒரு தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாது, தீயை அணைத்து நிர்வாகத்திற்கு ஏற்பட இருந்த பெரும் இழப்பைத் தடுத்தவர் என்கிற முறையில் ராம்ஜீயைப் பாராட்டியது நிர்வாகம். ஹும் அதெல்லாம் பழைய கதை.
அப்படிப்பட்ட நிர்வாகத்தில் திடீரென்று பழைய மேலாளர் வயதானதால் பணி ஒய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக வந்த புதிய பொறுப்பாளர்தான் இந்த முத்துஸ்வாமி. நேர்மையாக இருந்த காரணத்தால் ராம்ஜீ யாரிடமும் தலை வணங்கியதில்லை. வீண் கர்வத்துக்கும் தலைக்கனத்துக்கும் மொத்த உருவமாக வந்த இந்த முத்துஸ்வாமிக்கும் ராம்ஜீக்கும் அடிக்கடி தகராறுகள் தோன்ற ஆரம்பித்ததில் வியப்பில்லைதான். ராம்ஜீ அந்த நிறுவனத்தை விட்டு, தானாக விலக வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய முத்துஸ்வாமி இவர்தான். இந்த முத்துஸ்வாமி அளித்த தொல்லைகள் கணக்கில் அடங்காதவை. அத்தனையும் பொறுத்துக்கொண்டு தன் வீட்டுச் சூழ்நிலை காரணமாகத் தாங்கிக்கொண்டு பணிபுரிந்துகொண்டிருந்தார் ராம்ஜீ.
ஒரு நாள் மேலாளர் அழைக்கிறார் என்று கூறிய பணியாளரை அனுப்பிவிட்டு, முத்துஸ்வாமி இருந்த அறைக்குள் ‘உள்ளே வரலாமா‘ என்று அனுமதி பெற்று, நாற்காலியில் உட்கார்ந்தார் ராம்ஜீ. ‘என் அனுமதி இல்லாமல் என் அறையில் உட்காரக் கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா அது இருக்கட்டும். எல்லாருமே நான் சொன்னாக் கேக்கறாங்க. நீங்க மட்டும் தொழிலாளருக்குப் பரிந்துகொண்டு என்னை எதிர்க்கிறீங்களே. இது தப்புன்னு உங்களுக்குத் தெரியலையா’ என்றார் முத்துஸ்வாமி
எழுந்து நின்ற ராம்ஜீ, ‘சார், என்னிக்கும் எப்பவும் நான் நியாயத்துக்குத்தான் தலை வணங்குவேன். அநியாயத்துக்கு நான் தலை வணங்க மாட்டேன்’ என்றார். அன்றிலிருந்து ராம்ஜீக்கு ஆரம்பித்தது தலைவலி. ஒரு நாள் கூட அவரை நிம்மதியாய் விடவில்லை. அத்தனையும் நினைவுக்கு வந்தது, கடைசியில் ஒரு நாள் ராம்ஜீயை அழைத்து இன்னும் ஒரு வருட காலத்துக்குள் உனக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தி, பணியிலிருந்து அனுப்புகிறேன் என்று வாய்விட்டு சொல்லவிலையே தவிர, எவ்வளவு தொல்லை தர முடியுமோ அவ்வளவு தொல்லை தந்தார் முத்துஸ்வாமி. அதிகார பலமும் ஆணவமும் இருக்கும் ஒருவரிடம் நேர்மையான ராம்ஜீ போன்றவர்கள் எத்துணை நாள் தாக்குப் பிடிக்க முடியும்?
அதற்கேற்றாற்போல் ஆலையில் ஆட்குறைப்பு செய்யவேண்டிய கட்டாயம். அந்தப் பொறுப்பை இந்த முத்துஸ்வாமியிடம் கொடுத்தார்கள் நிறுவன உரிமையாளர்கள். ஏற்கெனவே மந்தி, அதற்கு கள்ளும் ஊற்றிக் கொடுத்தால்? இந்தக் முத்துஸ்வாமிக்கு இன்னும் வசதியாகப் போய்விட்டது. யார் யாரை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் ஒரு பட்டியலைத் தயார் செய்தார் முத்துஸ்வாமி. அந்தப் பட்டியலில் ராம்ஜீயின் பெயர் முதலில் இருந்தது. யாரோ ஒரு புண்ணியவான் ராம்ஜிக்கு இந்தச் செய்தியை ரகசியமாகக் கூறினார்.
ராம்ஜியும் முடிவெடுத்தார், முத்துஸ்வாமி தன்னை அனுப்பு முன் தானே பணியை உதறி வெளியே வருவதென்று. அதே போல் தன்னுடைய விருப்ப ஒய்வு விண்ணப்பத்தைத் தானாகவே இவரிடம் அளித்தார் ராம்ஜி. முத்துஸ்வாமிக்கு மிகவும் சந்தோஷம். மறு நிமிடமே அதற்கு வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்தார். ராம்ஜி இந்த ஆலையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர். அவர் பணி செய்யாத பகுதியே இல்லாத ஆலையை விட்டு, தாயைப் பிரிவது போன்ற துக்கத்துடன் பிரிந்தார்.
இன்றும் அந்த வழியாகப் போகும்போது என்னை வளர்த்த தெய்வமே, உனக்கு நன்றி என்று சொல்லாமல் போவதில்லை ராம்ஜி. அப்படிப்பட்ட ஆலையை விட்டு வேறு வழியில்லாமல் வெளியே வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கினவர் இந்த முத்துஸ்வாமி. அது ஒரு கொடுமையான காலம். அராஜகமும் அதிகாரமும் ஆணவமும் தான்தோன்றித் தனமும் நேர்மையை வெற்றிகொண்டன.
தான் தோற்றதற்குக் கூட ராம்ஜி கவலைப்படவில்லை. ஆனால் தருமமும் நியாயமும் என்றுமே தோற்கின்றவே என்கிற மன வருத்தத்துடன் ஆலையைப் பிரிந்து வெளியே வந்தார். அதற்குப் பிறகு அவருடன் பணி புரிந்தவர்கள், அடிக்கடி ராம்ஜியிடம் வந்து ‘முத்துஸ்வாமியின் ஆட்டம் அதிகமாகிவிட்டது, அவருடைய அராஜகம் மிகவும் அதிகரித்து விட்டது’ என்று சொல்லுவார்கள். என்ன செய்ய முடியும், வருத்தப்படுவதைத் தவிர. பலபேர் இந்தக் முத்துஸ்வாமியால் பாதிக்கப்பட்டு ஆலையை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
ராம்ஜி நிகழ்காலத்துக்கு வந்தார். தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முத்துஸ்வாமியைத் திரும்பிப் பார்த்தார். இவரைப் பார்த்து சுமார் பத்து வருடங்கள் ஆகின்றன. பத்து வருடங்கள் கழித்தும் இன்னும் அதேபோல் கொஞ்சமும் கர்வமும் மிடுக்கும் குறையாமலிருந்தார் முத்துஸ்வாமி. பார்வையிலும் உதட்டுச் சுழிப்பிலும் ஏளனம் தொக்கி நிற்கும் அதே திமிர்த்தனமான பார்வை.
முத்துஸ்வாமி, ராம்ஜீயைப் பார்த்து, “என்ன ராம்ஜீ எப்பிடி இருக்கீங்க?” என்றார். புன்னகையுடன் நல்லா இருக்கேன் என்ற ராம்ஜீ ஆமாம் நீங்க எப்பிடி இருக்கீங்க என்றார்.
எனக்கென்ன நான் எப்பவுமே நல்லாதான் இருக்கேன்” என்றார் முத்துஸ்வாமி. சிறிது நேரம் சென்றது. முத்துஸ்வாமி, ராம்ஜியைப் பார்த்து நான் கொஞ்ச நேரம் மேல் பர்த்திலே தூங்கறேன். கீழே இருக்கிற சிவப்புப் பெட்டி என்னோடது. ஒரு கண்ணு வச்சுக்கங்க என்று சொல்லிவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். சிறிது நேரம் விழித்திருந்த ராம்ஜீயும் லேசாகக் கண்ணயர்ந்தார். திடீரென்று பூகம்பம் வந்தாற்போல் ஒரு குலுக்கல், ஒரே கூக்குரல்கள். ராம்ஜீயும் சரிந்து விழுந்தார். முத்துஸ்வாமியும் விழுந்தார். அவருக்குப் பலத்த அடிபட்டு, நெற்றியிலிருந்து ரத்தம் பொங்கி வர ஆரம்பித்தது.
பிரயசைப்பட்டு எழுந்து கதவு வழியே எட்டிப் பார்த்தார் ராம்ஜீ. லெவல் கிராசிங்கில் பழுது பட்டு நின்று போன ஒரு பேருந்தின்மேல் மோதாமல் இருக்க, ரெயில் ஓட்டுநர் போட்ட பிரேக், ரெயில் பெட்டிகளை அதிர வைத்திருக்கிறது என்று உணர்ந்தார். உடனடியாக யாரேனும் மருத்துவர் இருக்கிறாரா வண்டியில் என்று கேட்டு, நல்ல நேரமாய் ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து, முத்துஸ்வாமிக்கு முதல் உதவி செய்து படுக்க வைத்துவிட்டு, முதுகு வலி தாங்காமல் அவரும் உட்கார்ந்தார்.
மீண்டும் அனைவரும் சுதாரித்துக்கொண்டதும் ரயில் ஓடத் தொடங்கியது. டெல்லியை சமீபித்து டெல்லி நிலையத்தில் நின்றது. ஒரு வாலிபன் வந்து, முத்துஸ்வாமியைப் பார்த்து அப்பா என்ன ஆச்சு தலையிலே கட்டு போட்டிருக்கீங்க என்று பதறினான்.
அவருக்கு லேசா அடி பட்டுதுப்பா. பயப்படறா மாதிரி வேற எதுவுமில்லே என்ற ராம்ஜியைப் பார்த்து, அங்கிள் நீங்களா நான் பதறிப் போய்ட்டேன். நல்லா இருக்கீங்களா?” என்றான். அடேடே அக்க்ஷய், எப்பிடிப்பா இருக்கே நல்லா இருக்கியா? எப்போ அமெரிக்காவிலிருந்து வந்தே என்றார் ராம்ஜீ. “போனவாரம் தான் வந்தேன் அங்கிள் என்று கூறிவிட்டு முத்துஸ்வாமியின் திரும்பி, “அப்பா உங்களுக்கு ஒண்ணும் இல்லையே என்று கேட்டுவிட்டு, இவர் என்று ஆரம்பித்தான்.
அதற்கு முத்துஸ்வாமி தெரியும் அக்ஷய் ராம்ஜி எங்கிட்ட வேலை பார்த்தவர் என்றார். அது மட்டுமில்லே எனக்கு அடிபட்டதும் ஒரு டாக்டரைத் தேடி, முதல் உதவி செஞ்சார் என்றார். உடனே அக்க்ஷய் அட அப்பிடியா, என்ன அதிசயம் பாருங்கப்பா. இப்போ இவரோட மகன் விஸ்வநாதன் தான் என்னோட மேனேஜர், அமெரிக்காவில. எங்க கம்பனி முதலாளியோட வலது கை. ரொம்ப நல்ல மனுஷன். இவரை மாதிரியே என்றான்.
“என்னோட திறமைகளை எல்லாம் எங்க நிறுவனத்திலே எடுத்துச் சொல்லி எனக்குப் பணி உயர்வெல்லாம் வாங்கித் தந்தவர் இவரோட மகன் விஸ்வநாதன் தான் என்றான் அக்க்ஷய். முத்துஸ்வாமியின் முகம் இருண்டது. ஒரு கண நேரத்துக்குள் முத்துஸ்வாமிக்குப் பயம் வந்தது. தன் மகனை இந்த ராம்ஜீ பழிவாங்கி விடுவாரோ என்று. இன்னும் முத்துஸ்வாமியின் முகம் இன்னும் இருண்டே இருந்தது.
ரெயிலை விட்டு கீழே இறங்கிய ராம்ஜீ, மெதுவாக முத்துஸ்வாமியின் கையைக் குலுக்கிவிட்டு உங்கள் மகன் மிக திறமைசாலி வேலையில் கெட்டிக்காரன் என்று என் மகன் சொல்லுவான். உங்கள் மகனுக்கு உதவியாக என் பிள்ளை இருப்பான், கவலைப்படாதீங்க என்று அக்க்ஷயின் காதில் விழாதபடி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்..
இறைவனின் கணக்கு என்றுமே தவறுவதில்லை
37
மானச யாத்திரை
15 நாளா நினைவில்லை, டாக்டர் வந்து பாத்துட்டு, இந்த அம்மா கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டாங்க, ஜாக்கிரதையா பாத்துக்கோங்க. வேற ஒண்ணும் பண்ண முடியாது,. ஒரு வேளை நினைவு வரலாம். அல்லது வராமலே இருக்கலாம். ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டுப் போனார்
நினைவில்லாமல் படுத்திருந்த கமலத்துக்கு இதுவும் காதில் விழுந்தது. ஆனால் ஒரு உணர்ச்சியையும் காட்ட முடியலை. உணர்ச்சியை காட்ட முடியலை. ஆனா உள்ளே ஓடற நினைவுகளை நிறுத்த முடியலை. கோமா ஸ்டேஜிலே இருக்கேன்னு டாக்டர் சொன்னது, எனக்குக் காதிலே விழுந்துது. மனசே உனக்கு காதிலே விழல்லையா? என்று மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள் கமலம்.
கமலத்துக்கு அவளோட ஆத்துக்காரர் அடிக்கடி சொல்றது ஞாபகம் வந்துது. அவ நாம சொல்ற எதையுமே காதிலேயே வாங்கமாட்டா, அப்பிடியே காதிலே வாங்கினாலும் மனசுலே போட்டுக்க மாட்டா! சிரிப்பாய் வந்தது கமலத்துக்கு! மனசிலே போட்டுண்டு இருந்தா, இத்தனை நாள் வாழ்க்கையை ஓட்டி இருக்க முடியுமா? கோயில் காலம் ஆறது போல இருக்கு, அதான் மேளச் சத்தமும் நாதஸ்வரமும் கேக்கறது. கோயில் காலம் ஆனவுடனே கோஷ்டி ஆகும், கோஷ்டி சாதிச்சவுடனே எல்லாருக்கும் ப்ரசாதம் குடுப்பா. கோஷ்டி சாதிக்கறது காதிலே விழுமோ என்னமோ, பிரசாதத்துக்கு மனசு மட்டும் காத்துண்டு இருக்கும்.
இப்பிடித்தான் ஒருநாள் விடியக் காத்தாலே எழுந்து அடையவளைஞ்சான் பக்கமாப் போயி வழியிலே கொழுகொழுன்னு நிக்கற பசுவையும் கூடவே ஒட்டி ஒட்டி உறவாடிண்டு துள்ளித் துள்ளிக் குதிக்கற கன்னுக்குட்டியையும் தடவிக் குடுத்துட்டு காவிரிலே குளிச்சிட்டு, துணியெல்லாம் தோச்சு தோளிலே போட்டுண்டு அப்பிடியே பித்தளைக் குடத்தை நன்னா பொன்குடம் மாதிரி தேச்சு அதிலே நல்ல இடமா பாத்து காவேரிலேருந்து தண்ணி மொண்டாள் கமலம். ஆத்துக்கு வந்து திண்ணையிலே இருக்கற ஏணி மாதிரி படியிலே ஏறிப் போயி மொட்ட மாடிலே துணியெல்லாம் உலத்திட்டு, கீழே வந்து ஆத்து வாசல்லே கோலம் போட்டுட்டு பரபரன்னு தளிகையெல்லாம் முடிச்சு, பெருமாளுக்கு அமிசைப் பண்ணிட்டு ஆத்திலே மத்தவாள்லாம் சாப்பிடறதுக்கு தயாரா வெச்சுட்டு கோயிலுக்குப் போகலாம்னு வெளியே வந்தாள் கமலம்.
நேரம் ஆயிடுத்து. கோயில் காலமும் முடிஞ்சு கோஷ்டி முடிஞ்சு பிரசாதமும் குடுத்தாச்சு… கடைசியா நின்ன அவளுக்கு பிரசாதம் கிடைக்கலே, தீந்து போச்சு, செத்த முன்னே வரதுக்கென்ன போயிட்டு நாளைக்கு வாங்கோ அப்பிடீன்னார் பட்டாச்சாரியார். மனசே ஒடைஞ்சு போச்சு. அது சரி, எதுக்கு இவ்ளோ கோவம் வரது நமக்கு. அப்பிடீன்னு ஒரு மனசு நெனைச்சாலும் இன்னொரு மனசு, பட்டாச்சாரியாரைப் பெருமாளுக்கு அடுத்தபடியா நெனைச்சிண்டு இருக்கோம், அதான் அவர் பிரசாதம் குடுக்கலைன்னா ஏதோ நம்மளைப் பெருமாளே ஒதுக்கிட்டா மாதிரி ஒரு அழுகை வரது. சரி நமக்குக் குடுத்து வெச்சது அவ்ளோதான் அப்பிடீன்னு நெனைச்சிண்டு திரை திறந்ததும் பெருமாளைப் போயி சேவிச்சிட்டு அப்பிடியே பிரதக்ஷணமா வந்துண்டே இருக்கச்சே, எல்லார் கையிலேயும் ப்ரசாதம், அவாவா சாப்டுண்டே, பேசிண்டே போயிண்டிருக்கா.
என்ன இருந்தாலும் பெருமாளுக்கு அமிசைப் பண்ணதுன்னா அதுக்கு ஒரு தனி ருசி வந்துர்றது, பொங்கல் மணக்கறது பாரும், என்றார் ஒருவர். அது நெய் வாசம் ஓய் என்றார் இன்னொருவர். எல்லாரும்தான் நெய் குத்தி பொங்கல் பண்றா. இந்த வாசமும் ருசியும் வரதா என்ன இது தனி ருசி. பெருமாள் அமிசைப் பண்ணினாத்தான் வரும்’ என்றார் இன்னொருவர்.
நாக்கில் ஜலம் ஊறியது. மனசு ஒடிஞ்சு போச்சு, அது எப்பிடி எனக்குப் பிரசாதம் கிடைக்காம போகலாம்? நான் என்ன இன்னிக்கு நேத்தா வரேன். நெனைவு தெரிஞ்ச நாளிலேருந்து உன்னைச் சேவிக்க வந்துண்டேதானே இருக்கேன். இது உனக்கே அடுக்குமா? மனசு பொருமிற்று. திடீர்ன்னு ஒரே சத்தம். யார்கிட்டேயோ இருந்த பிரசாத தொன்னையைக் குரங்கு பிடுங்கிண்டு போயிடுத்தாம். ஜாக்கிரதையா வெச்சிக்கப்படாதோ இங்கதான் குரங்கு வரும்னு தெரியுமோன்னோ’ என்று ஒரு அங்கலாய்ப்பு. இல்லே கெட்டியாதான் பிடிச்சிண்டு இருந்தேன். கண்மூடிக் கண் திறக்கறதுக்குள்ளே எங்கேந்து வந்துதுன்னே தெரியாம திடீர்ன்னு வந்து பிடுங்கிண்டு போயிடுத்து. கைக்கெட்டினது வாய்க்கெட்டலையே என்றார் அவர்.
நல்ல வேளை நான் வெச்சிருக்கேன். இந்தாங்கோ என்று இன்னொருவர், அவருக்குக் கொஞ்சம் பிரசாதம் கொடுத்தார்.
ஆஹா தேவாமிர்தமா இருக்கு. இதைப் போயி அந்தக் குரங்கு பிடுங்கிண்டு போயிடுத்தே என்று அங்கலாய்த்தார் அவர்.
குரங்குன்னு சொல்லாதீங்கோ. ஆஞ்சனேயர் அவர் அப்பிடித்தான். நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும் என்று சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தார் அவர். இவா யாருக்கும் கண்ணிலே படாதோ, எனக்குப் பிரசாதமே கிடைக்கலையே. எனக்குக் கொஞ்சம் குடுக்கணும்னு இவாளுக்குத் தோணாதோ நாமளா கேட்டு வாங்கிச் சாப்படலாம்னா அதுக்கும் மனசு கேக்க மாட்டேங்கறது. எனக்கு மனசுக்குள்ளே ஒரு சுய இரக்கம், எனக்கு மட்டும் கிடைக்கலையே, பகவானே நான் என்ன பாவம் பண்ணேன். என்னை மட்டும் சோதிக்கிறயே என்று.
இதென்னது இன்னிக்கு, கொஞ்சூண்டு பொங்கல் அது கிடைக்கலேன்னு இவ்ளோ கஷ்டமாயிருக்கு மனசு? இந்த மனசு கஷ்டப்படறது பொங்கலுக்கு இல்லே, நமக்கு எப்பிடி பிரசாதம் கிடைக்கலேன்னு பொருமல், வேற ஒண்ணும் இல்லே. பகவானே அப்பிடீன்னு கை ரெண்டுத்தையும் சேத்து கூப்பிண்டு, ‘நீதான் என்னைக் காப்பாத்தணும். வரவர எனக்கு மனசு திடமே இல்லாமே அலைக்கழிக்கறது. என் மனசுக்குத் திடத்தைக் குடு’ அப்பிடீன்னு வேண்டிண்டு திரும்பினாள் கமலம். அவள் கையில் ஏதோ விழுந்தது. அப்பிடியே கெட்டியா பிடிச்சிண்டு, என்னான்னு பார்த்தா ஒரு தொன்னையிலே பொங்கல்.மேலே அந்தக் குரங்கு உக்காந்துண்டு இவளையே பாத்துண்டு இருக்கு. அந்தக் குரங்கோட கண்ணிலே ஒரு கருணை நமக்குத்தான் இப்பிடியெல்லாம் தோண்றதா இல்லே உண்மையாவே கருணையா புரியலை. இருந்தாலும் பயம். அது வந்து பிடுங்கிண்டு போயிடுத்துன்னா, என்ன பண்றது பொங்கலை எடுத்துச் சாப்பிடலாம்னு கையிலே எடுத்தா மனசு சொல்றது அந்தக் குரங்கு வாயை வெச்சிருக்குமே. அதைப் போயி நாம் சாப்படலாமான்னு இப்போ அந்தப் பொங்கலைச் சாப்பிடறதா வேண்டாமான்னு தெரியலை.
அதெல்லாம் வாயை வெச்சிருக்காது. அது கையிலே கிடைச்சா ஒரு நிமிஷத்திலே சாப்ட்ருமே. ஒரு வேளை நம்ம மனசு புரிஞ்சுதான் நமக்குக் கொண்டுவந்து குடுத்துதோ இந்தக் குரங்கு. ஒரு வேளை ஆஞ்சனேயர்தானோ இந்தக் குரங்கு சரி பெருமாள் பிரசாதம் சாப்புடுவோம்னு முடிவு பண்ணி ஒரு கவளம் கையில் எடுத்தாள் கமலம். அந்தக் குரங்கு இவளையே பார்த்துக்கொண்டிருந்தது. கையில் எடுத்த அந்தக் கவளத்தை அப்பிடியே அந்தக் குரங்குக்கு நீட்டினாள். குரங்கு இப்போது இறங்கி வந்தது. இவள் மனக் குரங்கும்தான் இறங்கியது. இவள் கையிலிருந்து ஸ்வாதீனமாக வாங்கி பொங்கலை வாயில் போட்டுக்கொண்டது குரங்கு. ஒரு சீற்றமில்லை, சாதுவாக இவளுடன் நடந்து வந்துகொண்டிருந்தது. இவள் ஒரு வாய், குரங்கு ஒரு வாய் என்று இருவரும் பிரசாதத்தை முடித்தனர்.
குரங்கு இவள் புடவையைப் பிடித்து, இவள் மேலேறி, தோளில் உட்கார்ந்து முகத்தோடு முகமாக வைத்துக்கொண்டு இவளையே தன் கண்களால் உற்றுப் பார்த்தது. அதன் கண்களில் கருணையா. மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளின் உருவம் அந்தக் குரங்கின் கண்ணில் தெரிந்தது. பிரமையா என்று யோசிப்பதற்குள் குரங்கு மதில் சுவருக்குத் தாண்டியது. அங்கே உட்கார்ந்துகொண்டு, தன் தலையில் கை வைத்துக்கொண்டு, தன் பல் தெரிய கிர்ரென்றது. யார் யாருக்கு என்ன பிராப்தமோ அதுதான் கிடைக்கும். கமலத்துக்கு புரிந்தது, ஓ இன்னிக்கு ஹனுமத் பிரசாதம்ன்னு.
அவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் சிரித்தாள், வாய்விட்டுச் சிரித்தாள், ஆனால் உதடு அசையவில்லை. உடலில் ஒரு குலுங்கல் இல்லை. ஆமாம் அவளுக்குக் கோமாவாயிற்றே. அதான் ஒண்ணும் அசையலை.
சுபம்
38
ரத்த அழுத்தம்
ஏனோ தெரியவில்லை, சில நாட்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் சத்தம் போடுவதாக எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. என் மனைவியிடமும், பெண்களிடமும், பேரன்களிடமும் சத்தத்தைக் குறையுங்கள், இல்லையென்றால் சீக்கிரம் காது செவிடாகிவிடும் என்று அலுத்துக்கொள்வது என் வழக்கமானது. படிக்க வேண்டிய வயதில் கல்வியை ஒழுங்காகக் கவனித்துப் படிக்காமல்,சதா சர்வ காலமும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னெ உட்கார்ந்து, உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு எதிர்காலத்தையே பாழாக்கிக்கொள்ளும் சிறுவர்களையும் சிறுமிகளையும் கண்டால் எரிச்சல் வருகிறது.
நல்ல தூக்கத்தில் மாடி வீட்டுக்காரர்கள் கதவை அறைந்து சாத்தினால் கோவம் வருகிறது. நாங்கள் வசிக்கும் தெருவில் நடிகர்களின் உபயத்தால் இரவு மணி பதினொன்றாகியும் ரசிகர்களின் உற்சாக ஒலிபெருக்கிகள் போடும் திரைப்பாடல்களின் இரைச்சல் கேட்கும்போது. ஐயோ உடல் நலம் சரியில்லாதவர்கள், குழந்தைகள்… போன்றோருக்கு இடைஞ்சலாக இருக்குமே என்று தோன்றுகிறது.
தெருவிலே இளைஞர்கள் உற்சாக பானங்களை அருந்தி, அதன் விளைவால் அவர்கள் போடும் தேவையில்லாத சத்தங்களையும் காது கொடுத்துக் கேட்க முடியாத நாராச வார்த்தைகளையும் கேட்டாலும் அவர்கள் ஓட்டும் இரு சக்கர வாகனங்கள் அதன் குரல் அமுக்குவானைப் பிடுங்கி விட்டதால் போடும் இரைச்சலும் ஆத்திரமூட்டுகின்றன.
அரசியல் கட்சிகள் உப்பு சப்பில்லாத, மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத அவலங்களை மறைக்கப் போடும் ‘வாழ்க’ கோஷங்கள் கேட்டாலும் உடல் ஆத்திரத்தால் நடுங்குகிறது.
அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கே கஷ்டப்பட்டாலும், வீட்டிலே குழந்தையின் பசிக்குப் பால், பெரியவர்களின் பசிக்குச் சாதாரண உணவைக் கூட அளிக்க முடியாமல், தாங்கள் சம்பாதிக்கும் பொருளினால் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு, போதையினால் தள்ளாடி மகா நடிகர்களின் உருவம் வரைந்த அட்டைகளுக்குப் பாலபிஷேகம் செய்யும் படித்த இளைஞர்கள் போடும் அறிவுத் தள்ளாட்டமும் எரிச்சலூட்டுகிறது.
நம் நாட்டின் பாரம்பரியமான ஆலயங்களின் சீரழிவு, அவற்றைச் சரியாகப் பராமரிக்காமல் நம்முடைய நாட்டின் பழம் பெரும் கலைகளையெல்லாம் கல்லாக, மண்ணாக மாற்றி விற்று, தங்களின் சொந்தச் சொத்துகளாகச் சேர்த்துக்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர்கள், அலுவலர்கள், பொறுப்பாளர்கள், அந்த ஆலயங்களுக்கு இருக்கும் சொத்தான நிலங்களிலிருந்து வரும் வருவாயைக் கூடத் தாங்களே பங்கு போட்டுக்கொண்டு, அன்றாட நிர்வாகத்துக்கே வழியின்றி ஆண்டவனையே ஏமாற்றி, ஆண்டவனுக்குத் தொண்டு செய்யும் பக்தர்களையும் சாப்பாட்டுக்கே அலையவிடும் அவலம் நினைத்தாலே எரிச்சலூட்டுகிறது.
நடக்கவே லாயக்கில்லாத சாலைகள், நடைபாதை, ஆங்காங்கே தொங்கும் ஆபத்தான மின்சார ஒயர்கள், பாதையின் நடு மத்தியில் இவர்களால் போடப்பட்டிருக்கும் மீடியன்களிலிருந்து உடைந்து ஆங்காங்கே சாலையில் வீழ்ந்து கிடக்கும் கற்கள், எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் மாடுகள், நாய்கள் அவைகளால் ஏற்படும் ஆபத்துகள், சுத்தமான குடிநீரையும் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியத்தில் மக்கள் நிலையைக் கண்டால் எரிச்சல் வருகிறது.
கொசு, மற்றும் சுகாதாரமின்மையினால் ஏற்படும் வியாதிகளால் பாதிக்கப்பட்டு, அவற்றிற்குச் சரியான மருத்துவ உதவிகள் கூடக் கிடைக்காத நிலையில் அலட்சியமான மருத்துவ மனைகள்… இவற்றையெல்லாம் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் திரைப்படம் பார்க்க வரிசையில் நிற்கும் மக்கள், இவர்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. மீண்டும் மீண்டும் இலவசங்களுக்குப் பலியாகி, தங்களின் பொன்னான வாக்குகளின் மதிப்பே தெரியாமல் நடந்துகொள்ளும் மக்கள், தங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் தீமையைத் தேடிக்கொள்ளும் அறிவாளிகளைப் பார்த்தாலும் கோபம் வருகிறது.
என் மூத்த பெண், ‘அப்பா, நீங்க போயி உங்க காதையும் அப்பிடியே உங்க ரத்த அழுத்ததையும் பரிசோதனை பண்ணிக்கோங்க’ என்றாள்.
பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது நானா?
மனவியைத் திரும்பிப் பார்த்தேன். அவள் எதுவும் சொல்லாமல் ‘கம்’மென்றிருந்தாள்.
சுபம்
39
புதிய கீதை
நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. மந்திர கோஷம் காதில் வந்து இனிமையாக ஒலித்தது. உள்ளே நுழைந்தவுடன் மேஜையில் சந்தனம் பன்னீர் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. யாருக்கு வேணுமோ எடுத்துக்கலாம் என்கிற பாவனையில்.
எதிரே இருந்த மணமேடையில் திருமணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஹோமகுண்டத்தின் புகை நடுவே தேவர்கள் போல் அமர்ந்திருந்தனர், அவ்வப்போது கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி.
தெரிந்த முகங்கள் இருக்கையிலேயே இருந்து கொண்டு ஒரு சின்னப் புன்னகையை மட்டும் அளித்துவிட்டு மீண்டும் மணமேடையைப் பார்க்கத் தொடங்கினர்.
நாற்காலியில் உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கினேன். பெண்கள் 1500 ரூபாய்கள் கொடுத்து நன்றாக அழகாக இருந்த தலைமுடியை நேராக, குட்டையாக ஆக்கிக் கொண்டு விட்டலாச்சாரியார் திரைப்படத்தில் வரும் மோகினிப் பிசாசுபோலக் காட்சி அளித்தனர்.
சில பெண்கள் புடவையிலும், பலபெண்மணிகள் பேண்ட் சொக்காயுடனும் வலம் வந்து கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்க்கும்போது மனம் பொறுக்கவில்லை. மனதுக்குள் பொறுமிக்கொண்டிருந்தேன்.
கெட்டி மேளம் கெட்டிமேளம் என்று குரல் கேட்டது. திருமாங்கல்ய தாரணம் ஆயிற்று. கையிலிருந்த அக்ஷதையையும் பூக்களையும் அருகே சென்று போட வழியில்லாமல், கூட்டம் அலை மோதியது. ‘திருப்பதிக்கு செல்கிறோம்’ என்று கூறுபவர்களை நம்பி காசு போடுவது போல, நாம் திருப்பதிக்கு காசு போட்டாயிற்று என்கிற மன நிறைவுடன் மனதை சமனப்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்தே தம்பதிகள் தலையில் போடுவதாக நினைத்துக் கொண்டு முடிந்த அளவு எட்டி வீசினோம். அந்த பூக்களும் அக்ஷதையும் முன்னால் நின்றிருந்த பல பேரின் தலையில் விழுந்தது. ஆனால் தம்பதிகளை ஆசீர்வதித்தார்ப் போன்று மனதுக்குள் ஒரு திருப்தி .
இப்போதைய நடைமுறையில் யாரும் வந்து. உணவு உண்ணுங்களேன் என்று உபசரிக்க மாட்டார்கள் என்று புரிந்து கொண்ட பல பேர் வரிசையில் நின்று பரிசுகளை அளித்து விட்டு தாமாகவே உணவுக் கூடத்துக்குள் நுழைந்து உண்டுவிட்டுக் கிளம்பினர். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மனைவி ஏன் உங்கள் முகம் இவ்ளோ கடுகடுப்பாக இருக்கு கொஞ்சம் சிரிச்சா மாதிரி வெச்சுக்கோங்களேன் என்றாள்.
இங்க பாக்கற காட்சிகள் எனக்குப் பிடிக்கலை. நம்மோட பாரம்பரியமான பழைய திருமணங்களில் பெண்கள் நன்றாக தலை பின்னிக் கொண்டு பூ வைத்துக் கொண்டு மங்களகரமாக காட்சி அளிப்பார்களே, அன்பாக உண்மையான பாசத்துடன் வரவேற்பார்களே, மரியாதையாக அழைத்துப் போய், உண்ணச் சொல்லி கூடவே இருந்து கவனித்து பாசமழை பொழிவாங்களேஅதெல்லாம் நெனைச்சுப் பாத்தேன் . இப்போ நடக்கறதெல்லாம் பார்க்கப் பார்க்க கோவம் வருது, அது சரி நீ எப்படி சற்றும் பாதிப்பில்லாமல் சிரித்த முகமாக இருக்க என்றேன் மனைவியிடம்.
நான் இங்கே நடக்கறதை பாக்கலை அதோ மணமேடையிலே ராதையும்கிருஷ்ணனும்,சந்தோஷமா உக்கார்ந்திருக்காங்க . கோபிகா ஸ்த்ரீகள் சுற்றிலும் இருந்து நடனமாடிக்கிட்டு இருக்காங்க . என்றாள். தேவர்கள் எல்லாம் பூமாரி பொழிஞ்சிகிட்டு இருக்காங்க. இது கலிகாலங்க, இவங்க இப்பிடித்தான் இருப்பாங்க. இவங்களை நாமதான் மனசுக்குள்ளேயே மாத்திப் பாக்கணும் அப்போதான் மனசு சந்தோஷமா இருக்கும் என்றாள் எதிரே இருந்த மனைவி கிருஷ்ண பரமாத்மா போலவும் நான் அர்ஜுனன் போலவும், அவள் கூறிய சொற்கள் கீதை போலவும் ஒலித்தது எனக்கு.
ஆமாம் நம் மனநிலையைக் காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் என்னும் கீதை எனக்கு புரிந்தது.
40
பாலபாடம்
ஸ்கூட்டரை நடையில் நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் சுரேஷ். வியர்வையில் அவன் சட்டை தொப்பலாய் நனைந்திருந்தது. இந்த லட்சணத்திலே டை வேற கட்டிண்டு, தினமும் ஆபீசுக்குப் போகணும். கழுத்தை இறுக்கிற்று டை. அதை முதலில் முடிச்சவிழ்த்துத் தளர்த்தினான்.
வழியெங்கும் மணலும் தூசியும் கண்ணில் விழுந்து கண்களையே சிவப்பாக்கி வைத்திருந்தன. ஸ்கூட்டரின் கண்ணாடியில் அவன் முகமே அவனுக்கு விகாரமாய்த் தெரிந்தது. எப்பிடியாவது ஒரு கார் வாங்கணும். என்று நினைத்துகொண்டு பக்கவாட்டில் இருந்த பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் சுரேஷ்.
வழக்கமாய் அவன் வந்தாலும் கவனிக்காமல் தொலைக்காட்சியில் லயித்திருக்கும் அவன் மனைவி லதா,
அன்று அதிசயமாய் இவன் வந்தவுடன் எழுந்து மரியாதையாக வாங்க என்றாள். நேராக உள்ளே போய் சட்டையைக் கழற்றி, கோட்ஸ்டாண்டில் மாட்டினான். முழுக் கால்சராயைக் கழற்றிக் கட்டிலில் போட்டுவிட்டு ஒரு அரைக் கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான். அவன் மனைவி லதா கையில் காப்பியுடன் வந்து காப்பி சாப்பிடுங்க என்றாள். அதிசயமாய் இருந்தது அவனுக்கு.
ஓ காலையில் சண்டை போட்டுவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பியது நினைவுக்கு வந்தது. காப்பி வேணாம் என்றான்.சரிங்க மோர் சாப்பிடறீங்களா என்றாள் லதா. எதுவும் வேணாம் என்றான் சுரேஷ். மௌனமாக வெளியே போனாள் லதா. எல்லாமே விசித்திரமாக இருந்தது சுரேஷுக்கு. எதையாவது சொல்லி அவனைக் கத்தவைப்பாள். இன்று என்னவோ மௌனம் காக்கிறாளே இவள், நாம காலையிலே சண்டை போட்டுட்டு போனதிலே திருந்திட்டாளா ஒண்ணும் புரியவில்லை அவனுக்கு.
மணி எட்டாகப் போவுது சாப்பிட வரீங்களா என்றாள் லதா. மௌனமாக உணவை முடித்துவிட்டு வந்து கட்டிலில் படுத்தான். வழக்கமாக அவன் பக்கத்தில் வந்து படுக்கும் லதா கட்டிலின் பக்கத்தில் கீழே ஒரு துணியை விரித்துப் படுத்தாள்.
என்ன கோவமா என்றான் சுரேஷ். அதெல்லாம் இல்லீங்க என்று பதற்றத்தோடு கூறினாள் லதா. அவனுக்கு மனத்துக்குள் சிரிப்பாய் வந்தது. ஒரே நாள். குரலை உயர்த்தியதற்கே இவ்வளவு மாற்றமா
சரி சரி அதெல்லாம் விடு. இங்கே வந்து படு என்றான். வேணாங்க என்றாள் லதா. சரி ஏதோ கோவத்திலே கத்திட்டேன். அதெல்லாம் மனசிலே வெச்சுக்காதே. கீழே படுத்துக்கிட்டா உனக்குக் குளிர் தாங்காது. ஏசீ ரூம் குளிரும் வந்து கட்டில்லே படு என்றான் சுரேஷ் . சரிங்க என்று கட்டிலில் வந்து, கொஞ்சம் இடைவெளி விட்டுப் படுத்துக்கொண்டாள் லதா, சுரேஷ் அவளை திரும்பிப் பார்த்தான்.
அப்போதுதான் அவனுக்கு உரைத்தது. காலையில் கோவத்தில், ‘என்னை மாதிரி மனசிலே ஒண்ணும் வெச்சிக்காம, ஒழுங்கா இருக்கற நல்ல புருஷனை இப்பிடித்தான் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோவமூட்டிக் கத்த விடுவீங்க பொம்பளைங்க. உங்களுக்கெல்லாம் சாராயத்தைக் குடிச்சிட்டு வந்து கலாட்டா செய்யறானே, அவன்கிட்டதான் ஒழுங்கா இருப்பீங்க என்று அவன் கூறிவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது.
அடடா! அதானா விஷயம். அவளைத் தன் பக்கமாக வலுக்கட்டாயமாகத் திருப்பி ஏய் நான் ஒண்ணும் காலையிலே சொன்னா மாதிரி சாராயத்தையெல்லாம் குடிச்சுட்டு வரலை பயந்திட்டியா என்று அவள் முகத்தில் ஊதிக் காண்பித்தான் சுரேஷ்.
லதாவின் முகத்தில் ஒரு தெளிவு ஒரு வினாடிக்குப் பிறகு எனக்குத் தெரியாதா உங்களுக்கு எதுவுமே துப்புக் கிடையாது ன்னு என்றாள் லதா.
வாழ்க்கையில் முதன் முறையாகப் பெண்களைப் புரிந்துகொள்ள, பால பாடம் ஆரம்பமாயிற்று சுரேஷுக்கு. சிரித்தபடியே தூங்கிப் போனான் அவன்.
41
காஞ்சித் துண்டு
பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான எதையாவது அல்லது,நம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களில் எதையாவது விட்டுவிடச் சொல்லுவார்கள் பெரியோர்,ராகவனும் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார்,அதாவது அவர் விரும்பி உபயோகிக்கும் காசித்துண்டை விட்டுவிடத் தீர்மானித்தார்,
எதையும் ரசித்து செய்யும் ராகவனுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு பழக்கமுண்டு காசித்துண்டு என சொல்லப்படும் ஒரு வகை காவி நிறத்துண்டை தேவைப் பட்ட போது வாங்குவார். அந்த துண்டினால் என்ன லாபம் என்று கேட்கிறீர்களா . அந்த துண்டு மெலிதாக இருக்கும்,
அதன்காரணமாக குளித்துவிட்டு துடைத்துக்கொள்ள உடலுக்கு உறுத்தாத வண்ணம் இருக்கும்,மற்றும் கொடியில் போட்ட குறுகிய நேரத்திலேயே காய்ந்து விடும் பெட்டியில் அடுக்கும் போது அதிக இடம் அடைக்காது. காசித்துண்டை உபயோகிக்க இவ்வளவு வலுவான காரணங்கள் இருந்தும் காசிக்குப் போனால் முதலில் இந்தக் காசித்துண்டை விட்டுவிடலாம் என்று அவர் முடிவு செய்ததற்கு முக்கியமான காரணம் உண்டு.
அவரிடம் இருந்த துண்டுகள் எல்லாம் நைந்துவிட்டன. அதனால் மீண்டும் காசித்துண்டு வாங்கவேணும் என்று ஒரு நாள் அவர் மனைவியிடம் தைரியமாகச் சொன்னார். எதையுமே சற்று நிதானித்து யோசித்து செய்யும் அவர் மனைவி ராஜம் சற்றும் தாமதியாமல் உடனே சரி வாங்கிவிடுவோம் என்றாள் அப்போதாவது அவர் யோசித்திருக்க வேண்டும் தவறினார்.
மறுநாள் அவர் மனைவி ராஜம் அவளாகவே ஏங்க காசித்துண்டு வாங்கணும்னு சொன்னீங்களே என்று நினைவூட்டினாள் சாதாரணமாக இவர் சொன்னால் கண்டுகொள்ளாமல் இருக்கும் ராஜம் அவளாகவே வலிய வந்து இவர் தேவையை நினைவூட்டினாள் அப்போதாவது அவர் கவனித்து யோசித்திருக்கவேண்டும் தவறினார் .
ஏங்க எப்பவுமே காசித்துண்டு காஞ்சீபுரத்தில் நல்லா இருக்கும்,நாம் ரெண்டு பேரும் காஞ்சீபுரம் போயி காசித்துண்டு வாங்கிவரலாமா என்று கேட்டவுடன், மயங்கிப் போய் அடடா நம் மேல் எவ்வளவு அக்கறை என்று மகிழ்ந்தாரே அப்போதாவது அவர் யோசித்திருக்கவேண்டும் தவறினார்.
தம் வீட்டுக்கருகே உள்ள பல கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் காசித்துண்டு அதற்கு ஏன் காஞ்சீபுரம் போகவேண்டும் என்று யோசனை வந்தாலும் துண்டு நல்ல தரமாக காஞ்சீபுரத்தில் கிடைக்கும் என்று மனைவி கூறியதன் மர்மத்தை அவர் அப்போதாவது யோசித்திருக்கவேண்டும் தவறினார்.
அவர் எண்ண ஓட்டத்தை படித்தவள் போல் காஞ்சீபுரம் போய் ஏன் துண்டு வாங்கவேண்டும்,இங்கே கிடைக்காதா என்றுதானே யோசிக்கிறீங்க..என்றாள் ராஜம்,அதற்கு அவளாகவே ஒரு விளக்கமும் அளித்தாள்,
காஞ்சீபுரம் போய் துண்டு வாங்கும் சாக்கில் அப்படியே காஞ்சி காமாக்ஷியையும், வரதராஜரையும், அங்கே உள்ள மற்ற திருத்தலங்களையும் தரிசித்து வரலாமே, ஒரு கல்லில் இருமாங்காய் என்றாள் ராஜம் மறுநாள் காஞ்சீபுரம் போக ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்தார், ராஜம் யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். பேசி முடித்துவிட்டு ராகவனிடம் திரும்பிய ராஜம் எங்க எப்பிடியும் நாம கார்லெதானே போய்ட்டு வரப்போறோம் என் தங்கை கல்யாணியும் வரேங்கறா கூட்டிட்டுப் போலாமா என்றாள். அவருக்கும் அது நியாயமாகவே தோன்றியது சரி வரச்சொல்லு என்றார் அப்போதாவது யோசித்திருக்கலாம்.
ஏங்க இப்போ கல்யாணி வரும்போது அவளோட குழந்தைகளை யார்கிட்ட விட்டுட்டு வருவா, அதுனாலே குழந்தைகளையும் அந்தக் குழந்தைகளைப் பொறுப்பா பாத்துக்க அவளோட மச்சினர் பொண்ணு ராதிகாவையும் கூட்டிண்டு வரேன்னு சொன்னா என்றாள் சரி என்றார் ராகவன். அதுனாலே சின்னக் கார் போறாது, பெரிய காரே ஏற்பாடு செஞ்சிருங்கோ என்றாள், சரி என்றார் ராகவன்.
மறு நாள் காலையில் குளித்துவிட்டு பெரிய காரில் ராகவனும்,ராஜமும் ஏறி அமர்ந்தனர் ஏங்க நாம் போற வழிலேதானே தாம்பரம் அங்கே இந்து மிஷின் ஹாஸ்பிடல் கிட்ட கல்யாணி வந்துடறேன்னு சொன்னா அங்க போயி அவங்களையும் கூட்டிகிட்டு போகலாம் என்றாள் ராஜம்.
கார் விரைந்தது டரைவர் சார் ஒரு ஐநூறு ரூபாய் குடுங்க டீசல் போட்டுக்கறேன், அப்புறமா கணக்கு பாத்து கழிச்சிக்கலாம் என்றார் . ராகவன் சரி என்றார். தாம்பரம் போய் கல்யாணி ராதிகா மற்றும் குழந்தைகள் கிஷோர், ஜனனீ எல்லோரையும் ஏற்றிக்கொண்டு அப்படியே ஹைவே மோட்டலில் போய் கார் நின்றது. காலை உணவுக்காக காலை உணவு முடித்துவிட்டு மோட்டலுக்கு 400 ரூபாய் அதன் பிறகு வெளியே இருந்த கடையில் குழந்தைகள் விளையாட பொம்மைகள் எல்லாம் வாங்கிக் கொண்டுஆக மொத்தம் 1500 செலவில் கார் தாம்பரத்தை தாண்டி நெடுஞ்சாலையில் விரைந்து, டோல்கேட்டில் அவர்கள் கேட்ட பணத்தை ராகவன் தன் பையிலிருந்து கொடுக்க டோல்கேட்டையும் தாண்டி ஒரு வழியாக காஞ்சீபுரம் வந்தாயிற்று.
ஏங்க முதல்லே நாம பச்சையப்ப முதலியார் கடைக்கு போயி காசித்துண்டை வாங்கிட்டு அப்புறம் கோயிலுக்கெல்லாம் போகலாம் என்றாள் ராஜம் அப்போது காலை மணி 9. கார் பச்சையப்ப முதலியார் கடைக்கு முன்னால் நின்றது, அனைவரும் கடைக்குள் சென்றனர், அதற்குள்ளாகவே அந்தக் கடையில் பெண்கள் கூட்டம், நீங்க அதோ அங்கே காசித்துண்டு இருக்கு அந்தக் கௌண்ட்டர்லே வாங்குங்க நாங்க சும்மா உள்ளேபோயி பட்டுப் புடவையெல்லாம் புதுசா ஏதாவது வந்திருக்கான்னு பாத்துட்டு வந்துடறோம் . ஜானகி கல்யாணத்துக்கு இங்கேதான் வாங்கப் போறோம் என்ற ராஜம்.
நீங்க இந்தக் குழந்தைகளை உங்க கூட வெச்சுக்கோங்க, என்றபடி பெண்கள் கூட்டத்தில் கரைந்து காணாமல் போனார்கள் பெண்மணிகள் குழந்தைகளை வைத்துக்கொண்டு ராகவன் சமாளித்துக்கொண்டிருந்தார் கடை ஊழியர் சொன்னார் சார் ஒரு போன் போட்டு கேட்டுகிட்டு வரகூடாதா காசித்துண்டு இருந்ததெல்லாம் வித்துப்போச்சு நாளைக்கு வந்துடும் என்றார்.
வெகு நேரம் பொறுமையோடு காத்திருந்து நாகரீகம் கருதி தன் கோவத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு ராஜத்தை தேடிக்கொண்டு கடையுள்ளே பேந்தப் பேந்த முழித்தபடி உலாத்தினார் ராகவன்.
இரு புறமும் குழந்தைகளை கையில் பிடித்தபடி பெரிப்பா எனக்கு ஓண்ணுக்கு போகணும் என்றான் கிஷோர் கடைக்காரரை அணுகி ஏம்பா இந்தப் பையன் ஒன் பாத்ரூம் போகணுமாம் பாத்ரூம் இருக்கா என்றார் ஒரு வழியாக அவர்களை அழைத்துக்கொண்டுபோய் கையெல்லாம் சுத்தம் செய்து அழைத்து வந்தார்.
ராகவன், ஜனனீ பெரிப்பா இங்கே நாங்க வரும்போதெல்லாம் எங்க அம்மா பக்கத்து தெருவுலெ ஒரு பட்டாணிக் கடை இருக்கு பெரீய மார்கட் இருக்கு அங்கே கூட்டிண்டு போயி கடலை சுடச்சுட வாங்கிக் குடுப்பாங்க என்றாள்.
இருவரையும் அழைத்துப் போய் அந்தக் கடையில் கடலை குடுப்பா என்றார், அந்தக் கடைக்காரர் அடேடே வாம்மா உங்க அம்மா வரலையா அடிக்கடி வருவாங்களே என்றார் ராகவனுக்கு திக்கென்றது. ஒரு வழியாக மீண்டும் கடைக்கு வந்து உள்ளே சென்று அவர்களைக் கண்டு பிடித்து என்னம்மா செய்றீங்க மணியாச்சு சீக்கிரம் வாங்க கோயிலுக்கு போகணும் என்றார்.
கடை ஊழியர் சார் பொறுமையா இருங்க இப்போ ஒரு மணி ஆவுது கோயிலெல்லாம் மூடி இருப்பாங்க. நாலு மணிக்கு திறப்பாங்க என்றார் சரி என்றார் ராகவன். சரி எல்லாருக்கும் பசிக்கும் நீங்க எல்லாரும் போயி உங்க சாப்பாட்டை முடிச்சிட்டு வந்திருங்க நீங்க கேட்டபடி எல்லாப் புடவையையும் எடுத்து வைக்கிறோம் வந்து பாருங்க என்றார் கடைக்காரர் மரியாதையாக. அனைவரும் காரில் ஏறி உட்கார்ந்து ஹோட்டல் சரவணபவனுக்குள் நுழைந்து இடம் கிடைக்காமல் காத்திருந்து அதன் பின்னர் ஒரு வழியாக கிடைத்த இடத்தில் உட்கார்ந்து உணவை முடித்துவிட்டு மீண்டும் கடைக்கு வந்தனர், முகமலர்ச்சியுடன் வரவேற்றார் கடைக்காரர்.
மீண்டும் குழந்தைகளோடு போராடி எப்படியோ சமாளித்துக்கொண்டிருந்தார் ராகவன், மணி நாலு சரி கோயிலுக்கு கிளம்பலாம் என்றாள் கையில் ஒரு பெரிய பட்டுப்புடவை மூட்டையுடன் ராஜம், கடைக்காரர் கொடுத்த ரசீதுச் சீட்டை பார்த்தார் ராகவன் 10318.00 ரூபாய், தன்னுடைய பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து மௌனமாக அவரிடம் அளித்துவிட்டு, கடையிலிருந்து கிளம்பினார்.
கடைக்கு வெளியெ வந்தவுடன் கல்யாணி ஐயோ மறந்தே போச்சு இன்னிக்கு ராத்திரி எஙக் வீட்டுக்காரர் சிங்கப்பூருக்கு போறார் இனிமே கோயிலுக்கெல்லாம் போயிட்டு எப்போ வீட்டுக்கு போறது கோயிலெல்லாம் இன்னொருநாள் பாத்துக்கலாம் எங்க வீட்டுக்காரர் இவரை மாதிரி பொறுமை கிடையாது கத்துவார் என்றாள் ராகவனைக் காட்டி.
ராகவன் சரி என்றார் கார் நேராக தாமபரம் வந்து கல்யாணின் ராதிகா மற்றும் குழந்தைகள் கிஷோர் ஜனனீ எல்லோரையும் சேலையூரில் அவர்கள் வீட்டுக்குச் சென்று இறக்கி விட்டுவிட்டு, வீடு திரும்பியது வாடகைக்கார் ட்ரைவர் சார் நீங்க 500 ரூபாய் கொடுத்திருக்கீங்க, அதுபோக மீதி ரூபாய் குடுத்தா போதும் என்று சொல்லி ராகவன் கொடுத்த 1460 ரூபாயை வாங்கிக்கொண்டு தலையைச் சொரிந்தார். புரிந்தது ராகவனுக்கு, தனியாக ட்ரைவருக்கு 100 ரூபாய் அளித்துவிட்டு ராஜம் வாங்கியிருந்த புடவை மூட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
மின்சார வெட்டு லிப்ட் வேலை செய்யவில்லை இரண்டு மாடிகளை ஏறி வீட்டுக்குள் நுழைந்து பெருமூச்சு விட்டார் ராகவன்.
மின்சாரம் வந்து விளக்குகள் பளீரென எரிய ஆரம்பித்ததுவிர்ரென்று லிப்ட் இயங்கியது ராஜம் ஏங்க இந்தப் பட்டுப் புடவையைப் பாருங்க ஜொலிக்குது என்றாள்.
ஏங்க நம்ம அண்ணா நகர்லேயே காதி கிராமோத்பவன் இருக்கு,அங்கே போயி காசித்துண்டு வாங்கலாம் என்றாள் சரி சரி அதை நான் பாத்துக்கறேன் இப்பிடீ பொடி நடையா போயி வாங்கிட்டுவந்துடறேன் என்றார் ராகவன்.
காசிக்குப் போனால்தானே எதையாவது விடவேண்டும். அதற்காக காஞ்சிக்கு ஏன் போகவேண்டும் ராகவன் யோசித்தார் சென்னையிலேயே காசித்துண்டை விட்டுவிடுவது என்று முடிவெடுத்தார் ராகவன் எப்போதுமே புத்திசாலி
42
ஊமைக் கனவு
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை யாரோ மலை உச்சியில் இருந்து
உருட்டிவிட்டாற் போல திடுக்கிட்டு எழுந்த ராகவன்
கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சுதாரித்துக் கொண்டு மணியைப் பார்த்த போது,விடியற்காலை மணி 5.30.
விடிகாலைக் கனவுகள் அப்படியே பலிக்கும் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது. பதறிப் போனான் ராகவன். அதே யோசனையோடு படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு மனதிலிருந்து நீங்காத அந்த விபரீதக் கனவை அசை போடத் துவங்கினான்.
பேருந்துப் பயணத்திலும் அலுவலகம் சென்ற பின்னரும் அந்தக் கனவின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாமல் அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு, வீட்டுக்கு வந்து என்ன ஏன் இப்பவே வந்துட்டீங்க என்ற சகதர்மிணியின் குரலால் விடுபட்டு, ஒன்றுமில்லை கொஞ்சம் தலைவலி என்றவன் உடுப்புகளைக் கூட களையாமல் அதே படுக்கையில் படுக்கப் போனவன்
அந்தப் படுக்கையில் படுக்கவே பயந்து, நாற்காலியில் உட்கார்ந்தான்.
எப்போதுமே எல்லா விஷயங்களையும் சக தர்மிணியிடம் பகிர்ந்து கொள்ளும் ராகவன், இதைப் பற்றிப் பேசி அவளையும் குழப்புவானேன் என்று எண்ணமிட்டபடி தான் மட்டும் குழம்பிக்கொண்டிருந்தான். இது என்ன மன விசித்திரம், எண்ணங்களே கனவுகளாய் வருமென்று விக்ஞானம் சொல்லுகிறதே,ஆனால் எனக்குள் அந்த எண்ணமே இல்லையே,பின் எப்படி வந்தது அந்தக் கனவு, யோசித்து யோசித்து மூளை சூடானது சகதர்மிணி கொடுத்த காப்பியைப் பருகியபடியே அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராகவனிடம் வந்து உட்கார்ந்தாள் அவன் மனைவி சுஜாதா.
என்னங்க ஏன் என்னவோ போல இருக்கீங்க, நான் கொஞ்சம் அமிர்தாஞ்சனம் தேய்த்து விடட்டுமாஎன்ற சுஜாதாவை நிமிர்ந்து பார்த்தான் சுஜாதா அவன் நெற்றியில் கொஞ்ஜம் அமிர்தாஞ்சனத்தை தடவி தேய்த்துவிட அதன் சுகத்தில் கொஞ்ஜம் லயித்துப் போன ராகவன் திடுக்கிட்டு தள்ளி உட்கார்ந்தான்.
பதறிப் போன சுஜாதா வாங்க நாம டாக்டர்கிட்ட போய் காமிச்சுட்டு வந்துடலாம் என்றாள் கவலையுடன், அவளையே வெறித்தபடி இருந்த ராகவன் என்னைத் தனியா கொஞ்ச நேரம் இருக்கவிடேன் என்று எறிந்து விழுந்தான். திருமணம் ஆகி இத்தனை வருடங்களில் அதிர்ந்து கூட பேசாத ராகவனின் ஆத்திரம் கலந்த குரல் சுஜாதாவை திடுக்கிட வைத்தது. அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
இதோ பாரு எப்பவுமே எனக்கு பெண்கள் அழுதாப் பிடிக்காது இப்போ என்ன ஆயிடித்தூன்னு நீ அழற முதல்ல கண்ணைத் துடைச்சுக்கோ என்னைத் தனியா கொஞ்ச நேரம் விடு என்ற கணவனை ஆச்சரியமாக பார்த்த சுஜாதாஅவனை விட்டு விலகி வெளியே சென்றாள்.
ஏதாவது வேனும்னா என்னைக் கூப்புடுங்கோ, என்ற அவள் குரல் அவனை ஏதோ செய்தது சரி இந்த நிலைமை சரியில்லை, இது வரைக்கும் எதுக்குமே மனைவியை குரல் உயர்த்தி பேசாதவன் இன்று நடந்து கொண்டவிதம் அவனுக்கே ஒரு குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது.
ஒரு கனவு நம்மை இவ்வளவு தூரம் ஆட்டி வைக்க நாம் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்த ராகவன் ,சுஜாதா இங்க வா என்றான் சுஜாதாவும் அவன் குரலுக்கு உடனே ஓடி வந்து என்னங்க கூட்டீங்களா என்று அவலுடன் அவனருகில் உட்கார்ந்தாள்.
சுஜாதா என்னை மன்னித்துவிடும்மா ஏதோ குழப்பத்துலெ உன் கிட்ட எறிஞ்சு விழுந்துட்டேன் அப்பிடீன்னு சொல்லிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராகவன் மனதில் அப்படிக் கூட நடக்குமா நம் மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விடுமா தானாய்ச் சிலிர்த்த உடலைக் குறுகிக் கொண்டான் ராகவன்.
பதறிப் போன சுஜாதா அவனுக்குப் போர்வையை எடுத்து போர்த்திவிட்டு நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க! என்றபடி விலகிப் போய் ,குடும்ப டாக்டரை தொடர்பு
கொண்டு அவரை வரவழைத்தாள்.
டாக்டர் வந்து என்ன ராகவன் உடம்புக்கு என்ன என்றார் . திடுக்கிட்டான் ராகவன் இப்போ எதுக்கு இப்பிடி ஆர்ப்பாட்டம் செய்யறே எனக்கு என்ன ஆச்சு, எதுக்கு டாக்டரையெல்லாம், வரவழைச்சே என்றான் சுஜாதாவிடம்.
டாக்டர் அவனை சோதித்துவிட்டு பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை ஜுரம்கூட இல்லை இவருக்கு ஏதோ மன அதிர்ச்சிதான்னு நெனைக்கறேன் கொஞ்ச நேரம் தூங்கட்டும் சரியாயிடும்,என்றபடி நான் வரேன் ராகவன் கொஞ்சம் தூங்குங்க
என்றபடி வெளியே போனார் .
ஆமாம் இப்போஎனக்கென்ன ஆச்சு எதுக்கு சுஜாதாகிட்ட எறிஞ்சு விழறேன் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட ராகவன்,சுஜாதாவை மன்னிப்பு கோறும் பாவனையாக திரும்பிப் பார்த்தான். சரி நீங்க தூங்குங்க என்றபடி வெளியே போனாள் சுஜாதா.
மீண்டும் தூங்கத் துவங்கினான் ராகவன் “ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை யாரோ மலை உச்சியில் இருந்து உருட்டிவிட்டாற் போல திடுக்கிட்டு எழுந்த ராகவன் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சுதாரித்துக் கொண்டு மணியைப் பார்த்த போது ,விடியற்காலை மணி 4.30.
இது போன்ற கனவு நமக்கு வரக் கூடாதே விடியற்காலையில் கண்ட கனவு அப்படியே பலிக்கும் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது பதறிப் போய் எழுந்தான் .
இல்லை எழுந்தார் கட்டை ப்ரும்மச்சாரியான ராகவானந்த பால சன்யாசி
— சுபம் —-
43
கோயில்
இன்னிக்கு நங்க நல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி உற்சவம், போயி அந்த விஸ்வரூப ஆதி ஆஞ்சனேயரை தரித்து வரலாம் என்று பக்தியுடன் கேட்ட தாரிணியை மறுக்க முடியாமல் புறப்பட்டான் பத்ரி, இருவரும் அவர்களின் மகன் ராகவேந்திரனையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினர்,
ஒரு நிமிஷம் என்று அவசர அவசரமாக தாரிணி நேற்று போட்ட கூழ் வற்றலை எடுத்து மாடியில் உலத்தி விட்டு வந்து வாங்க போகலாம் என்றாள், கிளம்பினர், கோயிலில் வடைமாலை கோர்த்தாற்போல் நெருக்கமாக பக்தர் கூட்டம் நெருக்கியடித்தது,
எப்படியோ வரிசையில் நின்று ஒரு வழியாக ஆதிவிஸ்வரூப ஆஞ்சனேயரை தரிசனம் செய்துவிட்டு அப்படியே ப்ரதக்ஷணமாக வந்து ராமர் சன்னதியிலும் சேவித்துக்கொண்டு, அங்கே ராமநாம பஜனை செய்துகொண்டிருந்த இடத்திலும் சற்று நேரம் உட்கார்ந்து
வெளியெ வரும் இடத்தில் அவர்கள் அளித்த ப்ரசாதத்தையும் தொன்னையில் வாங்கிக் கொண்டு அந்தப் ப்ரசாதத்தை சாப்பிட்டுவிட்டு கோயில் எதிர்ப்பக்கம் இருந்த குப்பைத் தொட்டியில் தொன்னையைப் போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த குழாயில் கையை அலம்பிவிட்டு காரை நோக்கி நடந்தனர். தாரிணி இன்னிக்கு கூட்டம் அதிகமா இருந்தாலும் நல்ல தரிசனம் நிம்மதியா சேவிச்சோம் என்றான் பத்ரி, ஆமாம் என்றாள் தாரிணி
வீட்டை அடைந்து அறைக்குள் சென்று புடவையை மாற்றிக்கொண்டு வந்த தாரிணி காக்கைகள் கும்பலாய்க் கத்துவதைக் கேட்டு திடுக்கிட்டு எங்க ஒருவேளை குரங்கு வந்திருக்குமோ, காக்காயெல்லாம் இப்பிடிக் கத்தறதே என்று கேட்டுவிட்டு அடேடே மாடிலே கூழ்வத்தல் காயப் போட்டிருக்கேனே என்று மாடிக்கு ஓடினாள்.
அங்கே கொழு கொழுவென்று ஒரு குரங்கு மொத்த வத்தலையும் கடித்து துப்பிக்கொண்டிருந்தது , தாரிணியின் குழந்தை ராகவேந்திரன் அந்தக் குரங்கையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மொத்த வத்தலும் போச்சே என்று ஆத்திரத்தோடு ஏண்டா ராக்வேந்திரா ஒரு குச்சியை எடுத்து அந்தக் குரங்கை விரட்டாம வேடிக்கை பாத்துண்டு நிக்கறையே என்று ஓங்கி ஒரு அறை விட்டாள் குழந்தையை .
நங்க நல்லூரில் ராம நவமி உற்சவம் முடிந்து விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றினர், தீப ஆராதனை நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கண்ணை மூடிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டனர் பக்தர்கள் கண்ணை மூடிய அந்த ஒரு வினாடியில்
ராகவேந்திரன் அடிபட்டதற்கு ஆஞ்சநேயர் மனப்பூர்வமாக ஆறுதல் சொன்னார், குழந்தை ராகவேந்திரன் கண்களில் உதயமாகிய கண்ணீரில் ஆஞ்சநேயர் தெரிந்தார்.
44
சொந்தரத்தம்
அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தான் ஸ்ரீனிவாசன், அவன் எதிரே அவனிடம் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து நம்பிக்கையோடு உட்கார்ந்திருக்கிறார் ராமநாதன். என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான் ஸ்ரீனிவாசன், எப்பிடிச் சொன்னால் இவருக்குப் புரியும் அதுவும் இவர் இருக்கும் நிலையில் யோசித்து ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு சார் என்னை மன்னிக்கணும் நீங்க என்னாலெ முடியாது சார் என்றான் தீர்மானமாக,
இப்பிடி உங்ககிட்டயே சொல்றதுக்கு நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் வாங்கிக்கிறேன் ஆனா என்னாலே இதுமட்டும் முடியாது சார்,அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான் ஸ்ரீனிவாசன்.
ராமநாதன் கத்திக்கொண்டிருந்தார் கொஞ்சமாவது நன்றி இருந்தா இப்பிடிப் பேசுவியா நடுத்தெருவுலெ இருந்த உன்னை படிக்க வெச்சு ஆளாக்கி இன்னிக்கு நீ ஒரு பெரிய தொழிலதிபர்.
அப்பிடி நான் என்ன கேட்டுட்டேன் என் பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிறியான்னுதானே கேட்டேன். உன் சொத்தை எழுதிக்குடுன்னா கேட்டேன் உனக்கு வரதட்ஷணையா எவ்வளவு தரணும் சொல்லு. உனக்கு என்னென்ன வேணுமோ ஒரு பட்டியல் குடு. எல்லாத்தையும் செய்யறேன். என்னை என்ன வக்கத்தவன்னு நெனைச்சியா. ஏதோ என் கண்ணுக்குத் தெரிஞ்சு நல்ல பையனா இருக்கியே. உன்கையில என் பொண்ணை பிடிச்சுக் குடுத்துட்டா நிம்மதியா இருக்குமேன்னு கேட்டேன்.
அது சரி என்ன இருந்தாலும் சொந்த ரத்தமாயிருந்தா இப்பிடிப் பேசுவியா என்றார் . அப்போது அங்கே வந்த அவருடைய மனைவி சாரதா ஆமாங்க சொந்த ரத்தம்தான் என்றாள். அதிர்ந்து நிமிர்ந்தார் ராமநாதன்.
நீங்க ஹார்ட் அட்டாக் வந்த போது உங்களுக்கு ரத்தம் கொடுத்து காப்பாதினவனே இந்த ஸ்ரீனிவாசன்தான். அதான் அன்னிலேருந்து ஏன் அதுக்கு முன்னாடியே கூட உங்களை அவனோட அப்பாவாத்தான் மதிச்சிண்டு இருக்கான். நம்ம பொண்ணு சாருலதாவை தங்கையாத்தான் நெனைச்சுண்டு இருக்கான்.
என்னைக்கூட அம்மான்னுதான் கூப்படறான் அது புரியாம கத்திண்டு இருக்கீங்க என்றாள். இது வரை அவருக்கு முன்னால் வந்து பேசியே அறியாத சாரதா. அன்னை சாரதா தேவி போலவே காட்சி அளித்தாள் அவருக்கு,…அதிர்ந்து போய் நின்றிருந்தார் ராமநாதன்.
சார் இல்லே இல்லே அப்பா நான் நம்ம சாருலதாவுக்கு ஒரு நல்ல வரன் பார்த்திருக்கேன். கல்யாண செலவெல்லாம் நாமதான் செய்யப்போறோம். அந்தப் பையனுக்கு நான் உத்தரவாதம் தரேன்.ரொம்ப நல்ல குடும்பம் என்றான் ஸ்ரீனிவாசன்.
ராமநாதன் வார்த்தை வராமல் தடுமாறிக் கொண்டிருந்தார் அவனை அப்படியே கட்டித்தழுவினார் அவருடைய பாசமான கைகள் அவனுக்கு வார்த்தைகளால் உணர்த்த முடியாத மன்னிப்பு கேட்டலையும் நன்றியையும், உணர்த்தின.
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
45
காதலர்கள் தப்பி ஓட்டம்
அந்தக் காவல் நிலையத்தின் உயர் அதிகாரி தலையைப் பிய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எதிரே இருந்த அனைவரும் ஒரே குரலில் கத்திக் கொண்டிருந்தனர்.
சத்தம் தாங்க முடியவில்லை ஆனால் யாரையும் கட்டுப் படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் பெரிய இடத்திலிருந்து வந்த சிபாரிசு யாரையும் அதட்டிக் கூட பேச முடியவில்லை
இதோ பாருங்க தயவு செய்து ஒவ்வொருத்தரா பேசுங்க
எனக்கு ஒண்ணுமே காதிலெ விழமாட்டேங்குது.
ஏதோ பெரிய மனசு பண்ணி ஒருத்தர் எல்லாரும் சும்மா இருங்கப்பா நான் சொல்றேன் என்றார் சத்தம் கொஞ்சம் மட்டுப்பட்டது. சார் இப்போ நெலமை ரொம்ப மோசம். எங்களுக்கெல்லாம் என்ன செய்யிறதுன்னே தெரியலை. ஒரு வாரத்துலெ கல்யாணம் இந்த நேரத்திலெ மாப்பிள்ளையையும் பொண்ணையும் காணோம்னா ஊர்லெ என்ன பேசுவாங்க.
உங்களுக்கு தெரியும் இல்லே இந்த நாட்டிலேயே எங்க குடும்பத்தைப் பற்றி தெரியாதவங்களே கிடையாது அது மட்டுமில்லை மாப்பிள்ளையை தெரியாதவங்க தமிழ் நாட்டிலேயே யாரும் கிடையாது. அப்பிடி இருக்கும் போது இந்த விஷயம் வெளியிலெ கொஞ்சம் தெரிஞ்சாக்கூட அசிங்கமாயிடும். பத்திரிகைக் காரங்களுக்கு தெரிஞ்சாப் போதும் பத்தி பத்தியா எழுதிக் கிழிச்சுடுவாங்க.
அதுனாலெதான் சொல்றேன் இவங்களுக்கு கொஞ்சமும் தெரியலை. கத்தாதீங்கைய்யா தயவு செய்து சொல்றேன் கத்தாதீங்க..நான் பாத்துக்கறேன் இந்த இன்ஸ்பெக்டர் எப்பிடியும் கண்டு பிடிச்சு குடுத்துருவாரு.
இதோ பாருங்க இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரிஞ்சு மாப்பிள்ளையும் பொண்ணும்,அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புறிஞ்சவங்க என்றார் அந்தப் பெரியவர்.
இன்ஸ்பெக்டர் உடனே சார் நீங்க சொல்லுங்க அவங்களை யாராவது கடத்திகிட்டு போயிருக்கலாமோ அவங்களுக்கு யாராவது விரோதி இருந்தா சொல்லுங்க எங்களுக்கும் தேடறதுக்கு வசதியா இருக்கும்.
நாங்க எந்த கேசுக்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லே
நாங்க ரொம்ப கவனமா இருந்தாகணும் விஷயம் கொஞ்சம் வெளிலே தெரிஞ்சாலும் ஹோம் மினிஸ்டர் எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு யார் கிட்டயும் சொல்லவும் முடியாது ரகசியமா தேடணும்.
தயவு செய்து நீங்க எல்லாரையும் உங்க வீட்டுக்கு போகச் சொல்லிடுங்க , நீங்க மட்டும் இருந்தா போதும் என்றார்.
அவர் போய் என்ன சொன்னாரோ தெரியலை எல்லாரும் ஏதோ பேசிக் கொண்டே கிளம்பிச் சென்றனர்.
சார் இப்போ சொல்லுங்க என்ன செய்யப் போறிங்க என்ற அந்தப் பெரியவரைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியாமல்
தலையில் கை வைத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
ஒரு போலீஸ்காரர் சாதாரண உடையில் வந்து இன்ஸ்பெக்டரிடம் ஏதோ சொன்னார் , இன்ஸ்பெக்டரின் முகம் மாறியது ,சரி நீங்க அங்கேயே இருங்க , கண் காணிச்சிகிட்டே இருங்க நான் சொல்ற வரைக்கும் அவங்களை எங்கேயும் தப்பி போக விடாதீங்க என்றார், விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு அகன்றார் போலீஸ்காரர்.
இப்போது இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஒரு சந்தோஷம்
கவலைப்படாதீங்க கண்டு பிடிச்சுட்டாங்க, வாங்க போகலாம் என்ற படி தொப்பியை மாட்டிக் கொண்டு 302 வண்டியை எடுங்க என்றார் கம்பீரமான குரலில் காவல்துறை வாகனம் கோயில் வாயிலில் போய் நின்றது . அந்தக் கோயில் கருவறையிலிருந்து குருக்கள் சகிதமாக கழுத்தில் திருமாங்கல்யத்துடன் வெளிவந்த கல்யாணப் பெண்ணையும், மாப்பிள்ளையையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர் அத்தனை உறவுக் காரர்களும் அதிர்ச்சி கொஞ்சம் தெளிந்து அந்தப் பெரியவர்
என்ன மாப்பிள்ளை இது எதுக்கு இப்படி திருட்டுத் தாலி கட்டணும் நாங்கதான் எல்லாரும் உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கத்தானே ஏற்பாடெல்லாம் செய்யிறோம் என்றார்
மாப்பிள்ளை பேச ஆரம்பித்தார் இதோ பாருங்க உங்க எல்லார்கிட்டையும் சொன்னோம். அனாவசியமான செலவே யாரும் செய்ய வேண்டாம் அப்பிடீன்னு அப்பிடி இருக்கும் போது நீங்க எல்லாரும் சேந்து ஏற்பாடெல்லாம் செஞ்சீங்க, அப்புறம் எதுக்கு எங்களை குறை சொல்லணும்.
என்ன மாப்பிள்ளை சொல்றீங்க என்றார் புரியாத குரலில் பெரியவர். நாங்க எவ்வளவோ சொன்னோம் யாரும் கேக்கலை
அதுனாலே தான் இப்பிடி ஒரு முடிவெடுத்தோம். எவ்வளவோ சின்னஞ் சிறுசுகள் கல்யாணம் செஞ்சுக்க பணம் இல்லாம திண்டாடும்போது, எதுக்கு எங்களோட அறுபதாம் கல்யாணத்துக்கு அனாவசியமா செலவு செய்யணும்?
அதுனாலேதான் இப்பிடி ஒரு முடிவெடுத்தோம் என்றார்கள் ஒரே குரலில் அந்த முதிய தம்பதிகள்.
சுபம்
46
சம்பந்தி
அந்தக் கல்யாண மண்டபத்தின் கூடத்தில் ஒரு மேடையில் அருணும் அனுபமாவும் கைகோர்த்து நின்றிருந்தனர், கழுத்திலே மாலைகள் ஒளிர , மேடையெங்கும் சிதறிய ரோஜாப் பூக்கள் வருபவர்களுக்கு இவர்கள் நாளை புதியதாய்த் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் புது மணமக்கள் என்று கட்டியங் கூறிக்கொண்டிருந்தன,ஒரு பெரிய வரிசை மணமக்களுக்கு அவர்களின் அன்பளிப்பை வழங்க காத்துக் கொண்டிருந்தது,
அவ்வப்போது அங்கு வந்து எட்டிப்பார்த்துவிட்டு உணவு உபசரிப்புக்காக உணவுக் கூடத்திற்கு சென்று எல்லாரையும் உபசரித்துவிட்டு சத்திரத்தில் உள்ள அனைவரையும் புன்னகையோடு உபசரித்துக் கொண்டிருந்தார் மணப்பெண் அனுபமாவின் தந்தை கணேசன்,
அவர் காதில் ஒரு சிறுவன் மாமா உங்களை சம்பந்தியம்மா கூப்பிடச் சொன்னாங்க அவங்களோட அறையிலே இருக்காங்க என்றான், பகீர் என்றது கணேசனுக்கு ஏனோ அந்த அம்மா கூப்பிட்டாலே குலை நடுங்குகிறது .
ஒவ்வொரு முறை அவரை அந்த சம்பந்தி அம்மா அழைக்கும்போதும் குறைந்த பக்ஷம் பத்தாயிரம் ரூபாய்க்கு
செலவு வைப்பாள், பெண் பார்த்து சம்பந்தம் பேசி முடித்து இதோ இப்போது திருமணம் நடக்க வரவேற்பு நடந்துகொண்டிருக்கும் இந்த நிமிஷம் வரை சரி என்ன சொல்கிறாள் அந்த அம்மா என்று பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் பலி ஆடு போன்று சம்பந்தி அம்மாவின் அறையை நோக்கி நடந்தார் கணேசன்.
சம்பந்தி அம்மாவின் அறையிலே சம்பந்தி அம்மா கணேசனிடம்
ஏற்பாடெல்லாம் கன ஜோரா செஞ்சிருக்கீங்க என்றாள் கணேசனுக்கு அடி வயிற்றில் சிலீரென்றது. எதற்கு அடி போடுகிறாள் இந்தப் பெண்மணி என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்து ஏதோ என்னாலானது என்றார் அடக்கத்துடன்.
அடுத்து சம்பந்தி அம்மா அஸ்திரம் தொடுத்தாள்
நாளைக்கு காத்தாலே உங்க பொண்ணு எங்க வீட்டு மருமக
அப்புறம் உங்களுக்கு பொறுப்பு கழிஞ்சுடும் என்றாள்
ஏன் அப்பிடி சொல்றீங்க எப்பவுமே என் பொண்ணுதானே அவ உங்க வீட்டுக்கு மருமகளா ஆய்ட்டாலும் என்றார் கணேசன்
அதுக்குதான் சொல்றேன் நான் உங்க கிட்ட பேசும்போது லிஸ்டுலெ ஒண்ணு விட்டுப் போச்சு அதான் மாப்பிள்ளையும் ஆசைப்படறான்
அதுனாலே ஒரு வைரத்தோடு போட்டுடுங்கோ என்றாள்.
சம்பந்தி இப்போ எங்க போயி நானு வாங்கறது என்று தடுமாறினார் கணேசன்,, என்ன பெரிய விஷ்யம் காரெடுத்டுண்டு போனா பத்தே நிமிஷம் பக்கத்திலே தானே இருக்கு ஜீ ஆர் தங்க மாளிகை என்றாள் சம்பந்தி அம்மா பாவம் டீ அந்த மனுஷன் என்றார் சம்பந்தியின் கணவர் எல்லாம் எனக்குத்தெரியும் நீங்க சும்மா இருங்க என்று அவர் வாயை அடைத்தாள் சம்பந்தி அம்மா.
தலையை மட்டும் ஆட்டிவிட்டு வெளியே வந்தகணேசனுக்கு வியர்த்தது, அப்படியே தன் அறைக்கு வந்தவர் மயங்கிச் சாய்ந்தார் சம்பந்தி வீட்டாருக்கு செய்தி போனது சம்பந்தி அம்மா வரும்போது டாக்டர் கணேசனின் மனைவி அலமேலுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் . இப்போ கணேசன் சார் இருக்கிற நிலைமை ரொம்ப சீரியஸ் உடனடியா அவரை ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்கோ என்றார்.
கணேசனின் மனைவி அலமேலு நாளைக்கு காத்தாலே அவர் பொண்ணை தாரை வாத்துக் கொடுக்கணுமே, தெய்வமே நான் என்ன செய்யப் போறேன் ,இப்பிடி இவரை வெச்சிண்டு என்று பதறினாள்
அலமேலுவையும் சம்பந்தி அம்மாவையும் தனியாக அழைத்து அவருக்கு கவலை வரா மாதிரியோ அதிர்ச்சி தரா மாதிரியோ எந்த செய்தியும் இனிமே அவர்கிட்ட சொல்லக் கூடாது ஜாக்கிரதையா பாத்துக்கோங்க, கல்யாணம் முடிந்த கையோடு அவரை அட்மிட் பண்ணுங்க நான் இப்போ ஸ்ட்ராங்கா ஒரு இஞ்சக்ஷன் போட்டுருக்கேன் நான் வரேன் என்று கிளம்பினார் டாக்டர் சுந்தரேசன்.
சம்பந்தி அம்மாவும் அவரின் அடிப்பொடியாகிய அவளுடைய கணவனும் அப்படியே ஒதுங்கி அவர்களின் அறைக்கு நடந்தனர், .
சம்பந்தி அம்மாளின் அறையில் அந்த சம்பந்தி அம்மா பதறிக்கொண்டிருந்தாள் என்னங்க இது இப்பிடி ஆயிப்போச்சு நாளைக்கு எப்பிடிக் கல்யாணம் நடக்கும் நாம்வேற நிறைய பெரிய மனிதர்களைஎல்லாம் அழைச்சிருக்கோம் கல்யாணத்துக்கு இப்போ என்ன செய்யிறது என்று பதறினாள்.
தன்னுடைய உறவுக்காரர்களில் அந்தரங்கமான சிலரை அழைத்து யோசனை கேட்டாள் சம்பந்தி அம்மா. இதோ பாரு இந்த நேரத்திலெ சுமுகமா கல்யாணம் நடத்தற வழியைப் பாருஅவர்களும் சேர்ந்து கவலைப்பட்டு சம்பந்தி அம்மாளின் கவலையை அதிகப்படுத்தினர்.
சம்பந்தி அம்மா ஒரு முடிவுக்கு வந்தவளாய்
கணேசனின் மனைவி அலமேலுவிடம் வந்து ஒண்ணும் கவலைப்படாதீங்கோ அவருக்கு ஒண்ணும் ஆகாது டாக்டர் பாத்திருக்கார் இஞ்சக்க்ஷனெல்லாம் போட்டிருக்காரே எல்லாம் சரியாயிடும். அவரைக் கவலைப்படாம இருக்கச் சொல்லுங்கோ
எனக்கு எதுவுமே வேணாம் நீங்க உங்க பொண்ணுக்கு எது செய்யலேன்னாலும் பரவாயில்லே. இந்த மனுஷன் நல்லபடியா எழுந்து பொண்ணை தாரை வாத்து குடுத்தா அது போதும்
நாளைக்கு நிறைய பேரு வரப்போறா அவா முன்னாடி கல்யாணம் சரியா நடக்கணுமே . இல்லேன்னா ரொம்ப அசிங்கமாயிடும் என்று சொல்லிவிட்டு அவரை பாத்துக்கோங்க ஏதாவது உதவி வேணும்னா கேளுங்கோ நாங்க எல்லாம் இருக்கோம் என்றாள் சம்பந்தி அம்மா கரிசனத்துடன்.
மறு நாள் காலையில் எழுந்து மிகவும் தளர்வாக மணையில் உட்கார்ந்து கணேசன் எல்லாவற்றையும் செய்தார் நாற்காலியில் உட்கார்ந்து பொண்ணை மடியிலே உட்காரவைத்து தாரை வார்த்துக்கொடுத்தார் அனைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.
சம்பந்தி அம்மாள் அவரிடம் வந்து எப்பிடியோ நல்லபடியா கல்யாணம் செஞ்சு முடிச்சிடீங்க என்ன பண்றது எல்லாத்தையும் நாங்க அட்ஜஸ் பண்ணிடுதான் போகணும் நாம நெனைச்சது எல்லாம் நடக்கணும்னு எதிர் பார்த்தா முடியுமா என்றாள் அங்கலாய்ப்புடன் . சம்பந்தி விருந்து முடிந்து பெண்ணையும் அவர்கள் வீட்டிற்கு கொண்டு போய் விட்டு விட்ட கையோடு அப்படியே காரைத் திருப்பி டாக்டர் சுந்தரேசன் வீட்டுக்குப் போய் உள்ளே நுழைந்தார் கணேசன்
சுந்தரேசனின் கையைப் பிடித்துகொண்டு கண்களில் நீருடன்
ஜமாய்ச்சுட்ட சுந்தரேசா நீ டாக்டர் மாதிரியே நடிச்சு பின்னிட்ட எப்பிடியோ நாந்தான் உனக்கு நன்றி சொல்லணும் என்றார் கணேசன்.அது சரி ஆனா என்னை இப்பிடி டாக்டரா நடிக்க வெச்சு கல்யாண சாப்பாடு கூட சாப்பிட விடாமல் பண்ணிட்டீங்களே கணேசன் என்றார் திடீர் டாக்டர் சுந்தரேசன்
47
அஸ்தி ( ர ) வாரம்
கள்ளச்சிரிப்புடன் கூடிய பணிவுடன் எதிரே நின்றிருந்த மேஸ்திரி சின்னானை ஏறிட்ட ராமநாதன். மனதுக்குள்
ஏன் இப்படி கொஞ்சமும் நன்றியில்லாமல் நடந்துகொள்கிறான் இந்தச் சின்னான் என்று யோசித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன் முதன் முதலில் சின்னான் அவர் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்து கண்ணில் கண்ணீருடன் ஐய்யா உங்களைப் பத்தி நிறையா பேரு சொன்னாங்க என்னோட நிலைமை ரொம்ப மோசம்.
இருந்த ரெண்டு காணி நெலத்தையும் விவசாயம் பண்ண முடியாம வித்துப்போட்டு வந்துட்டேனுங்க. ஏற்கெனவே ரெண்டு பொட்டைப் பிள்ளைகளை பெத்து வெச்சிருக்கேன்
இப்போ இருக்கிற நெலமையிலே என்னாலே அந்த கிராமத்திலே வாழ முடியலைங்க.
என்னை ஏமாத்தி நான் வித்த நெலத்தையும் அடி மாட்டு வெலைக்கு வாங்கிகிட்டாரு எங்க கிராமத்துலெ இருக்கிற
பெரிய மனுஷன் அவரை என்னாலே ஒண்ணும் செய்ய முடியாதுங்க. அதுனாலே பட்டணத்துக்கு பஞ்சம் பொழைக்க வந்தேனுங்க நிறையா இடத்திலே வேலை கேட்டேன் யாரும் ஒரு உதவியும் செய்ய மாட்டேங்கறாங்க.
ஒருத்தர் சொன்னாரு உங்களைப் பாக்கும் படி அதுனாலேதான் வந்தேன் .எப்பிடியாச்சும் எனக்கு ஒரு நல்ல வழி காமிச்சீங்கன்னா நான் பொழச்சுக்குவேன், என் குடும்பத்தை காப்பாத்துங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போவும்
என்ன வேலை குடுத்தாலும் செய்யிறேன் சாமி.
என்று கதறிய சின்னான் அவர் கண் முன்னே தெரிந்தான்.
அவன் மேல் இரக்கப்பட்டு பல பேரிடம் சொல்லி ஒரு தெரிந்த கட்டிடம் கட்டும் மேஸ்திரியிடம் சொல்லி அவனுக்கு சித்தாள் வேலை வாங்கிக் கொடுத்ததும் சின்னானும் அவரை அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போவதும் தொடர்ந்தது.
ஒருநாள் சின்னான் . ஐய்யா உங்க புண்ணியத்துலே நிறைய வேலை கத்துகிட்டேனுங்க இப்போ பெரிய ஆளு கூலி குடுக்கறாங்க, ஒரு நாளைக்கு நான் வேலைக்குப் போய்ட்டா நானூத்தி அம்பது ரூவா தராங்க. ஏதோ உங்க புண்ணியத்துலெ கொஞ்சம் காசு பணம் சேத்து புள்ளைகளைப் படிக்க வெச்சிகிட்டு இருக்கேன் நீங்களும் அப்பப்போ உதவறீங்க.
அதுனாலே நானும் ஒரு மனுஷனா சுத்திக்கிட்டு இருக்கேனுங்க உங்களை என் வாழ்நாளுலே மறக்க மாட்டேனுங்க. என்று கூறிய சின்னானா இப்போது தன் எதிரே நின்றுகொண்டு பெரிய கட்டிடப் பொறியாளன் போல் பேசிக் கொண்டிருக்கிறான் , அதுவும் கொஞ்சமும் நன்றியில்லாமல் இது வரை அவர் கொடுத்த பணத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு ஆரம்பித்த அவருடைய வீட்டை பாதியிலே நிறுத்தி பலவகையிலும் அவருக்கு தொல்லை கொடுத்து அவனை விட்டால் வேறு வழிகிடையாது என்னும் நிலையை உருவாக்கிவிட்ட அவனை நிமிர்ந்து பார்த்தார் ராமநாதன்
ஒரு வேளை இவனை நம்பி இந்த வீடுகட்டும் வேலையை ஒப்படைத்தது தவறோ. தலைக்குமேலே போய்விட்ட நிலையை எண்ணிப் பார்த்துவிட்டு சரி முடிவா என்ன சொல்றே சின்னான் இன்னும் மேல் தளமே போடலை அதுக்குள்ள ஏற்கெனவே நான் போட்டு வைத்திருந்த கணக்குப்படி நிறைய பணம் செலவாயிடிச்சு இன்னும் எவ்வளவு நாள் இப்படியே வேலையய இழுக்கப் போறே எப்போ முடிப்பே என்றார்.
உடனே சின்னான் என்னங்க இப்பிடிப் பேசறீங்க நீங்களும் நாப்பது நாளா தினமும் வரீங்க ,நாங்க செய்யிற வேலையைப் பாத்துகிட்டு தானே இருக்கீங்க என்னா செய்யிறது சிமண்டு ,மணலு எல்லாம் வெலையேறிப் போச்சுங்க ,அதுமட்டும் இல்லீங்க வெலை செய்யிறதுக்கு ஆளும் கிடைக்க மாட்டேங்கறாங்க, தினோம் நானு இவனுங்களைத் தேடிப்பிடிச்சு கூட்டியாறேன் உங்க வேலை நிக்கக் கூடாதுன்னுட்டு. நான் என்னா செய்ய முடியும் சொல்லுங்க என்றான்.
ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஏதேதோ காரணம் சொல்லி கடந்த பதினைந்து நாட்களாக வேண்டுமென்றே இழுத்துக்கொண்டிருக்கும் அவனைப் பார்த்த
சரி பேசினதையே பேசிக்கிட்டு இருந்தா ஒண்ணும் ப்ரயோசனமில்ல நாளைக்கு தளம் போட்டாகணும்
இப்போ முடிவா என்ன சொல்றே என்றார் ராமநாதன்.
அதானுங்க நானும் சொல்றேன் இந்தப் பயலுங்க இருக்கானுவளே இவிங்களுக்கு கொஞ்சமும் நன்னி கிடையாதுங்க இத்தினி நாளா இங்க வேலை குடுத்து சாப்பாடு குடுத்து, டீ வாங்கிக் குடுத்து எல்லாம் செஞ்சிருக்கோமுங்க இவனுங்க என்ன சொல்றாங்க தெரியுமா. நாளைக்கு வேலைக்கு வந்து தளம் போடணும்னா இது வரைக்கும் நாம் குடுத்த கூலியைவிட அதிகமா குடுத்தாதான் வருவானுங்களாம், நான் நல்லாச் சத்தம் போட்டுட்டேனுங்க. கொஞ்சம் கூட நன்னி இலாத பசங்க என்றான் சின்னான்.
என்னது இன்னும் அதிக கூலி குடுத்தாதான் வருவாங்களா !
அதிர்ந்து போய் உட்கார்ந்தார் ராமநாதன். அப்போது அங்கே வந்த அவருடைய பிள்ளை ரமேஷ் அப்பா ஏம்ப்பா இப்பிடி உக்காந்திருக்கீங்க என்ன ஆச்சு என்றான் .இன்னும் அதிக கூலி குடுத்தாதான் நாளைக்கு வேலைக்கு வருவாங்களாம் என்றார் சோகமாக
ரமேஷ் அப்பா இப்போ என்ன ஆயிடிச்சு ஏன் பதர்றீங்க
இப்பல்லாம் அப்பிடித்தாம்பா சின்னான் சொல்றது உண்மை ,வேலை செய்ய ஆட்கள் கிடைக்கிறது இல்லே அதுனாலே அவங்க கேக்கிற கூலியைக் குடுத்து வேலையை முடிப்போம் வேற வழியில்லே.
சின்னான் நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க ஆமாம் எவ்ளோ அதிகமா கேக்கறாங்க என்றான் ரமேஷ். ஒவ்வொருத்தனும் நூறு ரூபாய் அதிகமா கேக்கறாங்க தம்பி, நானு எப்பிடியாவது வேலையை சீக்கிறம் முடிச்சுடனும்னு பாக்குறேன் , அப்பா புரிஞ்சுக்க மாட்டெங்கறாரு என்றான் சின்னான்.
சரி நாளைக்கு நீங்க எல்லாரையும் கூட்டிகிட்டு காலையிலே ஒன்பது மணிக்கு வந்துடுங்க வேலையை ஆரம்பிச்சு ஒரே முச்சுலே தளத்தை போட்டு முடிக்கணும், என்றான் ரமேஷ்.
ஆமுங்க தளம் போடும்போது நிறுத்டி நிறுத்திப் போட்டா ஒட்டாதுங்க, அப்புரம் ஒழுகும் ,அதுனாலே நாளைக்கு வெரசா வந்து வெலையை தொடங்கிடறேனுங்க பொழுது போறதுக்குளே முடிச்சே ஆவணும். அப்போ நானு வரேனுங்க என்று கூறிவிட்டு அவனுடைய ஆட்களை ஒரு பார்வை பார்த்தான் சின்னான்.
ஐய்யாவை எப்பிடி பணிய வைத்தேன் பார்த்தீர்களா என்னும் பொருள் அடங்கி இருந்தது. அந்தக் கூலியாட்களும் அந்தப் பார்வையை அமோதிப்பது போல புன்னகை செய்தனர்
மறு நாள் காலை ஒன்பது மணி, சின்னானும் அவனுடைய ஆட்களும் கட்டிடம் கட்டும் இடத்துக்கு வந்தபோது ஏற்கெனவே அங்கே சித்தாள்களும் ஒரு மேஸ்திரியும் , வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அதிர்ந்து போய் கத்த ஆரம்பித்தான் சின்னான்.
என்னாது இது எங்களை ஏமாத்தறீங்களா! அது எப்பிடி நாங்க வேலை செஞ்ச கட்டிடத்திலே எங்களை விட்டு வேற ஆளுங்களை வேலை செய்யச் சொல்லுவீங்க மரியாதையா எல்லாரையும் கீழே இறங்கி போகச் சொல்லுங்க இல்லேன்னா அசிங்கமாயிடும் என்று கத்தினான் சின்னான்.
சர்ரென்று ஒரு காவல்துறை வாகனம் வந்து நின்றது
அதிலிருந்து இறங்கிய காவல்துறை அதிகாரி நேராக சின்னானிடம் வந்து என்னப்பா என்ன கலாட்டா செய்யிறியா
ஏற்கெனவே நீ மிஸ்டர் ராமநாதனிடம் வாங்கிய பணம், மணல் ஜல்லி எல்லாம் வாங்கினதுக்கு நீ அவர்கிட்ட குடுத்த ரசீது , எல்லாம் எங்க கிட்ட குடுத்திருக்காரு. நீ குடுத்த ரசீது எல்லாத்திலேயும் அதிகமா பணம் போட்டு ரசீது வாங்கி இருக்கே , அந்தக் கடையிலெல்லாம் விசாரிச்சிட்டுதான் இங்கே வந்திருக்கோம். இதோ பாரு இந்த ரசீது
இதைக் கணக்கு பார்த்தா நீ இவரை ஏமாத்தி எண்பதாயிரம் ரூபா அதிகமா வாங்கி இருக்கே. உன்மேலே கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு மிஸ்டர் ரமேஷ்
மரியாதையா உடனே எண்பதாயிரத்தை குடுக்கிறியா இல்லே உள்ளே போட்டு உங்க எல்லாரையும் விசாரிக்கணுமா எப்பிடி வசதி என்றார் காவல்துறை அதிகாரி. சின்னான் முகம் ரத்தம் சுண்டி வெளுத்தது, நிலமையின் விபரீதம் அவன் மூளைக்குள் உரைத்தது .
சின்னான் காவல்துரை அதிகாரியிடம் வந்து ஐய்யா எங்களை மன்னிச்சிருங்க எங்க கிட்ட அவ்ளோ பணம் கிடையாது, நாங்க இன்னையிலேருந்து நாணயமா வேலை செஞ்சு இந்தக் கட்டிடத்தை முடிச்சுக் குடுத்துர்றோம் என்றான்.
கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் கீழே வந்து ராமநாதனிடம் என்னங்க நீங்க கூப்டீங்கன்னுதானே வந்தோம் இப்போ எங்களுக்கு வேலை இல்லாம பண்ணிட்டீங்களே என்றார்கள்.
ராமநாதன் இங்க பாருங்க இன்னிக்கு உங்களுக்கு கூலியை நான் குடுத்துடறேன் ,உங்களை வெறும் கையோட அனுப்ப மாட்டேன் , ஏதோ தெரியாத்தனமா தப்பு பண்ணிட்டான் சின்னான் அவனே செய்யட்டும் மீதி வேலையை
என்றார் ராமநாதன். சின்னானின் ஆட்களால் வேலை மும்மரமாக ஆரம்பிக்கப்பட்டது
காவல் துறை அதிகாரியும் சுமுகமா முடிஞ்சு போச்சுங்க நாங்க கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு வேலையாட்களும் காவல் துறை ஆட்களும் அங்கிருந்து அகன்றனர்.
கோடம்பாக்கத்தில் நாடகம், தொலைக் காட்சித் தொடருக்கு உடைகள், தரும் கடையில் வேலையாட்களும், காவல்துறை அதிகாரியும், காவலர்களும் தங்கள் உடைகளைக் கழற்றிக் கொடுத்தனர், சின்னத்திரை நடிகர்கள் அவர்கள்,
அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பினான் ரமேஷ்
கிருகப் ப்ரவேஸம் அன்று ராமநாதன் சின்னானிடம்
இதோ பாரு நடுவுலே நீ கொஞ்சம் புத்தி மாறிப் போய்ட்ட இருந்தாலும் இந்த வீடு நீதான் நல்லபடியா முடிச்சுக் குடுத்திருக்கே, நீயும் உங்க ஆட்களும் நல்லா சாப்ட்டுட்டுதான் போகணும் அப்போதான் எனக்கு திருப்தியா இருக்கும் என்றார்
ரமேஷ் ராமநாதனையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவர் போட்டுக்கொடுத்த திட்டம் எவ்வளவு நன்றாக பலனளித்தது என்று எண்ணிப் பார்த்து மனதுக்கு
சபாஷ் அப்பா என்று சொல்லிக்கொண்டான் ரமேஷ்
சுபம்
48
ஆசை மச்சான்
தினமும் சாராயத்தை குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் எதுவுமே பேசாமல் போதையில் மயங்கிக் கிடந்துவிட்டு மீண்டும் மறுநாள் பொறுப்பாக வேலைக்குச் சென்று மாலையில் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டிருக்கும் புருஷன் மாரியப்பனிடம் வேண்டாய்யா நாம் நம்ம புள்ளைகளை வளத்து ஆளாக்கி அதுங்களையாவது படிக்க வெச்சு முன்னுக்குக் கொண்டு வரணும் அதுங்களும் நம்மளை மாதிரியே அன்னாடங் காச்சியா இருக்கக் கூடாதுய்யா இப்பிடி தினோம் குடிச்சிக்கிட்டே இருந்தா எப்பிடியா இதுங்களை வளத்து ஆளாக்க முடியும் என்றாள் அஞ்சலை .
என்னா செய்யச் சொல்றே எனக்கும் புரியுது ஆனா வேலை செஞ்சிட்டு உடம்பு ஓஞ்சி போகுது உடம்பெல்லாம் வலிக்குது அதை மறந்து தூங்கினாத்தானே மறா நாள் வேலைக்கு போவ முடியும், அதான் இந்தக் கண்றாவியைக் குடிச்சி புட்டு தூங்கறேன் என்ற புருஷனை பரிதாபமாகப் பார்த்தாள் அஞ்சலை
மறுநாள் வழக்கம் போல கையில் பணம் பற்றாக்குறையால் அளவோடு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மாரியப்பனின் காதில் அஞ்சலையின் தீனமான குரல் கேட்டது . என்னை விடுயா என் புருஷன் வந்தா உன்னையக் கொன்னே போட்டுடுவான். மரியாதையா என்னைய விட்று என்று கதறிக் கொண்டிருந்தாள் அஞ்சலை.
அவளை வலுக்கட்டாயமாக கட்டி அணைத்துக்கொண்டிருந்த பழனி அவளை விடாமல் தொந்தரவு செய்வதை பார்த்த மாரியப்பன் குண்டுக்கட்டாக அவனைத் தூக்கி எறிந்தான். போய் விழுந்த வேகத்தில் அப்படியே தலையில் அடி பட்டு மயங்கிப் போனான் பழனி, மற்ற குடிசைக்காரர்கள், அவனை தூக்கிக்கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
மாரியப்பன் அஞ்சலையிடம் வந்து கவலைப்படாதே புள்ளே நானு இருக்குறேன் ஒரு பய இனிமே உங்கிட்ட நெருங்க முடியாது என்ன மன்னிச்சுக்க அஞ்சலை நான் குடிச்சுட்டு இப்பிடி இருக்கறதாலதானே இது மாதிரி மொள்ளமாரிக்கெல்லாம் உன் மேலேயே கைவைக்க துணிச்சல் வருது.
இனிமே குடிக்கவே மாட்டேன் இது ஆத்தா மேல சத்தியம் நம்ம குழந்தைங்க மேல சத்தியம் என்று கதறினான் மாரியப்பன்.
மறுநாள் வேலையை முடித்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டிருந்த மாரியப்பனிடம் என்னா மச்சான் இன்னா இன்னிக்கு குடிக்க வரலியா ஏதோ குடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சிட்டேன்னு கேள்விப்பட்டேன், அதெல்லாம் ஒண்ணும் கவபடாதே மச்சான் அப்பிடித்தான் பொம்பளைங்க பயமுறுத்துவாளுக அவுங்களுக்கு என்னா தெரியும் நம் கஷ்டம் என்றான் குடிகார சகா பெருமாள் அவனை மச்சான் என்று பெருமாள் அழைத்தது மனதுக்கு இதமாக இருந்தது.
மாரியப்பனின் நாவு அந்த சாராயத்துக்காக ஏங்கியது,ஆமாம் ,பெருமாள் சொல்றதும் சரிதானே இவங்களுக்கு என்னா தெரியும்
நாம படற கஷ்டம் அடப்போ சத்தியமாவது மண்ணாங்கட்டியாவது
சாராய போதை சுகத்துக்கு முன்னாலே அவன் கால்கள் தானாக நடக்கத் தொடங்கின சாராயக் கடையை நோக்கி.
கடைக்குச் செல்லும் வழியில் பெருமாள் அவனை இன்னும் கொஞ்சம் உசுப்பும் விதமாக ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா
நீ அடிச்சிப் போட்டியே அந்தப் பழனியைப் பாக்கப் போயிருக்கா உம் பொண்டாட்டி அஞ்சலை. அந்தப் பழனி தானே உம் பொண்டாட்டியை கெடுக்கப் பாத்தான் அவனைப் போயி இவ எதுக்கு பாக்கோணும் இது எனக்கு ஒண்ணும் சரியா படலை என்றான்.
அதிர்ந்து போன மாரியப்பன் இவளுக்கு அவன்கிட்ட என்னா வேலை ,
எதுக்கு இவ அவனைப் பாக்கப் போனா சாராயம் குடிக்காமலே ஆத்திரம் தலைக்கேற அந்த மருத்துவ மனையை நோக்கி அறிவாளோடு ஒடினான் மாரியப்பன். அங்கே அஞ்சலை பழனியிடம் அண்ணாத்தை என்ன மன்னிச்சிடு. என் புருஷனை திருத்த எனக்கு வேற வழி தெரியலை, அதுனாலேதான் உன்னிய நான் அப்பிடி நடிக்கச் சொன்னேன். பாவம் எனக்காக நீ அடி வாங்கி படுத்திருக்கே என்றாள்.
அத்த வுடு தங்கச்சி இப்போ உன் புருஷன் குடிக்காம இருக்கானா அது போதும் இப்பிடித்தான் போன மாசம் என் தங்கச்சியோட புருஷன் குடிச்சு குடிச்சே குடலு வெந்து செத்துப் பூட்டான். இப்போ அந்தக் குழந்தைகளும் அவளும் தடுமாறிகிட்டு இருக்காங்க அது மாதிரி உன் வாழ்க்கையும் ஆகக் கூடாதுன்னுதானே நான் அடி வாங்கினேன் என்றான் பழனி.
இதைக் கேட்ட மாரியப்பனுக்கு அவனுடைய ஆத்திரமெல்லாம் ஒரு நொடியில் அப்படியே காற்று போன பலூனாக வடிந்தது. அறிவு விழித்துக் கொள்ள ஆரம்பித்தது, அவன் மயக்கம் தீர்ந்து உளமாற புரிந்துகொண்டு மடை திறந்த வெள்ளம் போல் கண்ணிலிருந்து வழியும் நீரை நிறுத்த வழி தெரியாமல் திகைத்து நின்றான் மாரியப்பன்.
பழனீ என்னிய மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு பழனீ என்று தன் காலில் விழுந்து கதறிக்கொண்டிருக்கும் மாரியப்பனை பழனி அப்படியே தூக்கி அணைத்துக்கொண்டு மச்சான் கடலுக்கு மீன் பிடிக்கப் போறவங்க கூட இடுப்புக் கயித்தை மச்சானை நம்பித்தான் குடுப்பாங்க, என்னிய நம்பு மச்சான் நான் உனக்கு த்ரோகம் செய்யமாட்டேன் என்றான் .மாரியப்பன் கண்ணிலிருந்து அது வரை அவன் குடித்த சாராயமெல்லாம் பாவ மன்னிப்பாக வழிந்து கொண்டிருந்தது .
குழந்தை ராசு அம்மா ஏம்மா அப்பா அழுவுறாரு
குடிக்க காசில்லையா அதுனாலே அழுவுறாரா என்றான்
அஞ்சலை மாரியப்பனையே கண்ணில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் குழந்தையை அப்படியே அள்ளி அஞ்சலையையும் பழனியையும் சேர்த்து அணைத்துக்கொண்டு அதில்லடா ராசு உங்க அம்மாவுக்கு ஒரு நல்ல அண்ணனும்
எனக்கு ஒரு நல்ல மச்சானும் உனக்கு ஒரு மாமனும் கெடைச்சிருக்கான். அதுனாலே சந்தோஷமா சிரிச்சேன் அழுவலைகண்ணு என்றாள்.
அழுதா மட்டும் இல்லேடா சிரிச்சாலும் கண்ணீர் வரும் அதான் கண்ணுலே தண்ணி வருது என்றான் மாரியப்பன்.
இனி ஒரு சொட்டு சாராயமும் அவன் உள்ளே போகாது
” உணர்ந்த உள்ளம் வடிக்கும் கண்ணீரை மீண்டும் கண்வழியே உள்ளத்திற்கு அனுப்ப யாரும் இது வரை பிறக்கவே இல்லை ”
சுபம்
49
காதல் என்றால்
கார்லேருந்து எல்லாத்தையும் எடுத்திடேன் என்றபடி சுப்புலட்சுமியும் சிவாவும் உள்ளே வந்தனர். சரி. நானும் கிளம்பறேங்க. வீட்டிலே அம்மா காத்துகிட்டு இருப்பாங்க. சார் ரிடையர் ஆற நிகழ்ச்சியைப் பாக்கணும்னுதான் வந்தேன் என்றபடி கிளம்பியவனை சிவா கைகால் ஓடவிடாம ஆக்காதே! ஒருவாய் காப்பிதண்ணி குடிச்சிட்டு அப்புறமா போ! என்றபடி உள்ளே போய் காப்பியை எடுத்திட்டு வந்து கர்த்திகேயனுக்கும்.சிவாவுக்கும் கொடுத்தாள்.
காலைலே 7 மணிக்கெல்லாம் கிளம்பி ஆபீசுக்கு போய்ட்டீங்கன்னா சாயங்காலம் 7 மணியாவும் வரதுக்கு, இனிமே எப்பிடி பொழுது போகும் உங்களுக்கு ஏதாவது ப்ளான் வெச்சிருக்கீங்களா என்றான் சிவா.
டேய் சிவா! நீ என் மனசில ஓடறதை சரியாக் கண்டுபிடிச்சா மாதிரி கேள்வி கேக்கற! அதான் யோசிச்சுகிட்டு இருக்கேன். எனக்கு அந்த வேலையை விட்டா வேறு ஒண்ணும் தெரியாது.. ஏதோ இதுவரைக்கும் வேலை கொடுத்த அந்த ஆபீசுக்காகவே யோசிச்சு யோசிச்சு வேலையை நேர்மையா செஞ்சிட்டேன். இது வரைக்கும் ஒருநாள் கூட லீவு எடுத்ததில்லே. அதுக்காகவே எங்க எம்.டீ. மேடையிலே என்னை எப்பிடிப் பாராட்டினார் பாத்தியா! எப்போ வேணா மறுபடியும் வேலை செய்யணும்னு எண்ணம் வந்தா இந்த ஆபீஸ் உங்களுக்கு கதவைத் திறந்தே வெச்சிருக்கும்னு சொன்னார். கவனிச்சியா என்றார் கார்த்திகேயன்.
சார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! எல்லோருமே மேடையிலே அப்பிடித்தான் பாராட்டுவானுங்க. அதெல்லாம் நம்பிகிட்டு அங்க போய் நிக்காதீங்க. மதிக்கமாட்டாங்க. அதெல்லாம் மேடை நாகரீகம் அத்தோட சரி என்றான் சிவா. நீங்க ஒண்ணு செய்யலாம், நாலு பேரை வெச்சிகிட்டு உங்க அனுபவத்தை அதும் மூலமா கிடைச்ச அறிவை, யுக்திகளை எல்லாம் யாருக்காவது சொல்லிக்குடுங்க. நல்ல பொழுது போக்கா இருக்கும். எல்லோருக்கும் உதவியாகவும் இருக்கும்.
சரி நான் கிளம்பறேன். என்றபடி சிவா கிளம்பினான்.ஏனுங்க இப்பவே மணி எட்டாவுது. ஏதாவது கொஞ்சம் சாப்டுட்டு ரெஸ்ட் எடுங்க உழைச்சதெல்லாம் போதும்! இந்த வேலையில், உங்க உழைப்பிலே படிப்படியா முன்னுக்கு வந்து, நம்ம பிள்ளைங்களுக்கு நம்மால் முடிஞ்ச படிப்பைக் குடுத்து கல்யாணமும் செஞ்சு முடிச்சிட்டோம்! அந்த முருகன் புண்ணியத்திலே எல்லோரும் நல்லா இருக்காங்க. இனிமே பெரிய பொறுப்புன்னு எதுவும் நமக்கு இல்லே. நல்ல நல்ல புத்தகமா வாங்கிப் படிங்க, கொஞ்ச நேரம் டீவி பாருங்க மனசை அமைதியா வெச்சிக்கிட்டு நீங்க அமைதியா இருக்கற வழியைப் பாருங்க என்றாள் சுப்புலட்சுமி.
எங்க ஆபீசிலே நான்தான் மேனேஜர், அங்கே நான் சொன்னதை எல்லோரும் செய்வாங்க. இங்கே நீதான் மேனேஜர். இனிமே நீ சொல்றதை நான் செய்யணும்! தாய்க்குப் பின் தாரம்னு சொல்லுவாங்க! என்றார் கார்த்திகேயன் சிரித்தபடி.
என்னைக் கிண்டல் செய்யலேன்னா உங்களுக்கு பொழுது போவாதே. நான் நல்லதைத்தான் சொல்லுவேன். நான் சொல்றதைக் கேட்டா நல்லதுதான் நடக்கும் . என்ற சுப்புலட்சுமி தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தாள்.
அந்த சீரியலில் ஒரு பெண் தன் காதலனிடம் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தாள் ரமேஷ் என்னை ஏமாத்திடலாம்னு நெனைக்காதே, என்னைக் காதலிச்சுட்டு வேற ஒருத்திய நீ கல்யாணம் கட்டிகிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன். உன்னையும் வாழவிடமாட்டேன். என்றாள் முகத்தை கர்ண கடூரமாக வைத்துக்கொண்டு.
காதல் காதல் காதல். இந்தக் காதலைவிட்டால் பேசறதுக்கு எழுதறதுக்கு வேற எதுவுமே இல்லையா எரிச்சலோட டீவியை அணைத்தார் கார்த்திகேயன்.
”இவ ஏன் இப்பிடி ராட்சசி மாதிரி கத்தறா இவளை எப்பிடி இவன் காதலிச்சான் முட்டாள் முட்டாள் என்றார் கார்த்திகேயன்.
நீங்க இதுவரைக்கும் சீரியல் எல்லாம் பாத்ததில்லே. அதனால்தான் குழப்பம் இல்லாம தெளிவா இருக்கீங்க! நேஷனல் ஜியாகரபிக் ன்னு ஒரு சேனல் இருக்கு. அனிமல் ப்ளானட்டுன்னு ஒண்ணு இருக்கு இதெல்லாம் பாருங்க! ட்ராவல் அண்ட் லிவ்விங் ன்னு ஒரு சேனல் இருக்கு அதைப் பாருங்க! இனிமே ரெண்டு பேரும் கிளம்பி எல்லா ஊரையும் சுத்திப்பாக்கலாம்! என்றாள் சுப்புலட்சுமி.
இதோ இந்தப் புத்தகத்தை பொரட்டினா, முதல் பக்கமே காதல்ன்னு ஒரு கவிதை, டீவியோட லட்சணம் தெரிஞ்சு போச்சு! ஏன் இப்பிடி எல்லோருமே காதல் காதல்னு இதைப் பத்தியே பேசிண்டிருக்கானுங்க. இத விட்டா பேசறதுக்கும் எழுதறதுக்கும், சினிமா எடுக்கறதுக்கும் வேற ஒண்ணுமே இல்லையா எப்பிடி எல்லோருக்கும் மூளை இப்பிடி வறண்டு போச்சு அது சரி இந்தக் காதலப் பத்தி உன் அபிப்ராயம் என்ன” என்றார்.
சுப்புலட்சுமி ”காதலைப் பத்தி பேசற வயசைப் பாரு இதப்பத்தியெல்லாம் எனக்கொண்ணும் தெரியாது. உங்களை எனக்கு கல்யாணம் கட்டி வெச்சாங்க. வாழ்ந்து நம்ம கடமையை நெறைவேத்தியாச்சு. அவ்ளோதான் எனக்குத் தெரியும்! தனித்தனியா பொறந்தோம் ஒண்ணா சேர்ந்தோம் தனித்தனியா போகப்போறோம் இதுலே காதல்னா என்னான்னு சொல்றது.
உங்களுக்கு என்னைக் கல்யாணம் கட்டிக் குடுக்கும்போது, எங்கம்மா சொன்னாங்க’நீயும் சந்தோசமா இரு. உன் புருசனையும் சந்தோஷமா இருக்க விடுன்னு அதைத்தான் நானும் செஞ்சுகிட்டு இருக்கேன். இப்போ காதலிக்கறவங்க யாரு சந்தோசமா இருக்காங்க சரிங்க எனக்குத் தூக்கம் வருது. உங்களுக்கு கிச்சன்லே பால் காய்ச்சி வெச்சிருக்கிறேன். மறந்து போயிட்டுதுன்னு அப்பிடியே வெச்சிட்டு தூங்கிடாதீங்க! எறும்பு மொச்சிடும். குடிச்சிட்டு வந்து நேரத்தோட துங்குங்க என்றபடி உள்ளே போனாள் சுப்புலட்சுமி.
அப்பிடியே சோபாவில் உட்கார்ந்து அசை போடத் துவங்கினார் கார்த்திகேயன். சற்று நேரம் சென்றபின் பாலை எடுத்து குடித்துவிட்டு படுக்கை அறைக்குப் போன கார்த்திகேயன் சுப்புலட்சுமியைப் பார்த்தார். அவள் நல்ல தூக்கத்தில் இருந்தாள். கள்ளங் கபடம் இல்லாதவ! படுத்தா உடனே தூங்கிப் போறா எனக்கு ஒரு மணிநேரம் அட்வைஸ் பண்றா. குளுருது அதுகூடத் தெரியாம தூங்கறா இவளை என்னா சொல்றது என்றபடி அருகே சென்று குனிந்து போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டுப் படுத்தார். .காதல் என்றால் என்னவென்று புரிந்தது அவருக்கு
50
விஸ்வரூபம்
காத்தாலேருந்து பல்லுலே பச்சைத் தண்ணி கூட படாம, ஆசாரமா அப்பா வைத்தீஸ்வரனுக்கு திவசம் பண்ணியாச்சு, புரோகிதர் சொன்ன மந்திரங்களையெல்லாம் ஒண்ணு விடாம சொல்லி, பக்தி ஸ்ரத்தையா தெவசத்தைப் பண்ணி முடிச்சாச்சு. காக்காய்க்குப் பிண்டம் வெச்சுட்டு, காக்காய் வந்து சாப்பிடறதானு பாத்துட்டு வாங்கோ. வந்து நீங்கள்லாம் சாப்பிடலாம்ன்னு புரோகிதர் சொன்னவுடனே பிண்டத்தைக் கொண்டு போய் மொட்டை மாடீலே வெச்சுட்டு, தகப்பனார் காக்காய் வடிவுலே வந்து பிரசாதத்தை எடுத்துச் சாப்பிடறதைப் பாக்க நின்னுண்டு இருக்கார் ராமேசம்.
ஒரு காக்காய் வந்து பார்த்துவிட்டுப் பறந்து போனது. மீண்டும் மீண்டும் வருவதும் போவதுமாகப் பறந்துகொண்டே இருந்தது. நான்காவது முறையாக வந்து சுவர் விளிம்பில் உட்கார்ந்து கா கா. கர்ர்ர்ர்ர் என்றது.
ராமேசத்துக்கு இந்தக் காக்காய் தன்னோட அப்பாவாவாயிருந்தா, இப்போ அவர் காக்காய் வடிவிலே வந்து நாம குடுக்கற பிண்டத்தை ஏத்துக்கறார் என்றால், இப்போ இவர் கா கான்னு கத்தினாரே, அதுக்கு என்ன அர்த்தம்? அவர் காக்காய் பாஷையில் சொல்வதைப் புரிந்துகொள்ளப் பறவைகளின் மொழி தமக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணினார். ராமேசம், காலையிலிருந்து பட்டினி. கண் இருட்டிக்கொண்டு வந்தது. ‘சீக்கிரம் இவர் சாப்பிட்டுட்டு போனார்ன்னா, நாம் போயி சாப்பிடலாம். பசி பிராணன் போறது. இந்த அப்பாவுக்கு எப்பவுமே அடுத்தவா அவசரம் புரியாது’ என்று நினைத்துக்கொண்டார்.
காக்காய் விஸ்வரூபம் எடுத்தது. அங்கே ராமேஷத்தின் தந்தை வைத்தீஸ்வரன், காக்கை வடிவில் நின்றுகொண்டு பேசினார். ராமேஷத்துக்கு காக்காயின் பாஷை புரிய ஆரம்பித்தது.
“ஏன்டா ராமேசா அவசரக் குடுக்கை, நான் சாதாரணமா பேசினாலே உனக்குப் புரியாது. இப்போ காக்காய் வடிவத்திலே வேற பேசறேன். நீ என்னத்தைப் புரிஞ்சுக்கப் போறே. சரி நான் ஊதற சங்கை ஊதறேன். புரோகிதர் சொன்னாரே நாம இந்த உலகத்துக்கு வரக் காரணமாயிருந்த முன்னோர்களுக்குத் தெவசம் பண்ணனும். அப்போதான் அவா ஆத்மா சாந்தியா இருக்கும். பிதுர் லோகத்திலே அவா நமக்காக வேண்டிப்பா. இல்லேன்னா அவ மனசு புண்படும். அவா மனசு புண்பட்டா நமக்கு அது சாபமா அமையும், நம்மோட வாரிசுகள் நன்னா இருக்கணும்னா, நாம பித்ருக்களுக்குப் பிண்டம் போடணும். அப்பிடீன்னு. அதுக்கு பயந்துதானேடா தெவசம் பண்றே, இல்லேன்னா பண்ணுவியா?
ஏன்டா நீ மாடிக்கு வந்து கா கான்னு கூப்பிட்டவொடனே நான் ரெடியா காத்திண்டு இருந்து, நீ பிண்டத்தை வெச்சவுடனே சாப்பிட்டுட்டு போயிடணும், அதானே உன் நெனைப்பு? அது சரி, நான் இப்போ காக்காய் வடிவத்திலே வந்திருக்கேன். நீ வெச்சிருக்கியே இதெல்லாம் சாப்பிடறேன், ஆனா ஒண்ணு. இவ்ளோ வயசாகியும் உனக்கு இன்னும் புத்தி வளரவே இல்லேடா. கொஞ்சம் கூட மாறாம அப்பிடியே அசமஞ்சமா இருக்கியே. எல்லாத்தையும் கொண்டு வந்து இப்பிடி வெச்சுட்டு, நீயும் பக்கத்திலேயே நின்னுண்டு இருந்தா நான் எப்பிடிடா வந்து தைரியமா சாப்புடுவேன்.
நான் உயிரோட இருக்கும் போதே உன் பக்கத்திலே வர பயப்படுவேன், கிட்ட வந்தாலே சள்ளுன்னு எரிஞ்சு விழுவே. நான் காக்காய் வடிவத்திலே இருக்கேன் எப்பிடி தைரியமா கிட்ட வரமுடியும். நானும் அப்பிடீ இப்பிடீ பறந்து போய்ட்டு அப்போவாவது நீ புரிஞ்சிப்பியான்னு திருப்பியும் வந்து பாத்தா, அப்பிடியே குத்துக் கல்லாட்டும் இங்கேயே நிக்கிற, கொஞ்சம் தள்ளிப் போக வேண்டியதுதானே? எத்தனை தடவை நானும் உனக்குப் போக்கு காட்டி, பறந்து பறந்து போயிட்டு வறது. இப்போவாவது கொஞ்சம் தள்ளிப் போயேண்டா. எனக்குப் பசிக்கறது” என்றார் வைத்தீஸ்வரன்.
திடுக்கிட்டுக் கண் விழித்தார் ராமேஷம்.
காக்காய் தன் சிறிய உருவத்துடன் அவரையே பயத்துடன் பார்த்துக்கொண்டு, பறந்து பறந்து போய்விட்டு வந்து உட்கார்ந்து, மீண்டும் பறந்து ஒரு வட்டம் அடித்துவிட்டு வந்து உட்கார்ந்தது.
சுபம்
51
ரகசியம்
அப்பா எப்பவுமே நீங்க சொல்றதைத்தான் நாங்க கேக்கணும்னு கிடையாது, நாங்களும் வளந்துட்டோம், நாங்க சொல்றதை இனிமே நீங்க கேளுங்கோ அம்மாவை திட்டிண்டே இருக்காதீங்கோ என்று கடுமையாகக் கூறிய மகன் தேசிகனை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன்.
பதினெட்டு வயதில் 90 ரூபாய் சம்பளத்தில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து உழைத்தவர். வாழ்க்கையில் எதற்குமே கலங்காது எந்த நேரத்திலும் நிதானத்தைக் கைவிடாமல் காத்த பொறுமைசாலி . எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்ட போதும் எப்பிடி இருக்கீங்க என்று கேட்கும் அனைவரிடமும் எல்லாப் ப்ரச்சனைகளோடும் நலமாக இருக்கிறேன் என்று புன்னகையுடன் கூறும் பக்குவம் உள்ள ராமசேஷன்.,
சிறிக சிறுக சேர்த்து பெற்றவர்களின் கடைசீக் காலம் வரை அவர்களை மனம் நோகாமல் இதமாக நடத்தி தந்தையார் இறந்த போதிலிருந்து கடைசீவரை தன் தாயார் மைதிலியை யாரிடமும் விடாமல் தானே பார்த்துக்கொண்டு கிட்டத்தட்ட நாற்பது ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தாயிற்று.
இது வரை யாரிடமும் எதற்காகவும் தலை குனிந்ததில்லை, யாசகம் கேட்டதில்லை மனசாட்சி தெய்வம் இரண்டைத் தவிர யாரிடமும் பயப்படாமல் வாழ்க்கையை கழித்தாயிற்று.
அந்தக் கஷ்டங்களின் நிழல்கூட மனைவி குழந்தைகளைத் தாக்காமல், தானே மொத்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு இரு பெண் குழந்தைகளையும் ஒரு பிள்ளையையும் தன் சக்திக்கு மேலாக படிக்கவைத்து ஆளாக்கி ,பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து, பிள்ளைக்கும் அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைத்து பொறுப்புகளை வெற்றிகரமாக செயல் படுத்தியாயிற்று. இவருக்கு திருமணமாகி விளையாட்டு போல முப்பத்தாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது,அவர் மனைவி மங்களத்துக்கு தெரியும் அவருடைய அந்தரங்கம்.
ராமசேஷனும் மங்களமும் இருவரும் திருமணநாளில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை சேவித்துவிட்டு வருகிறோம் என்று கிளம்பிப் போய் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து அவர்களின் பிள்ளை தேசிகனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டனர்.
தேசிகன் என்ன அம்மா தரிசனம் நன்றாக கிடைத்ததா? ரொம்ப அலையாதீங்கோ, வேளைக்கு சாப்டுக்கோங்கோ என்றான் கரிசனத்துடன். சரிடா இதோ போனை அப்பாகிட்ட குடுக்கறேன் என்று மங்களம் போனை ரமசேஷனிடம் கொடுத்தாள். அப்பா அம்மாவை ஜாக்கிரதையா பாத்து கூட்டிண்டுபோய்ட்டு வாங்கோ, அம்மாவை ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்கோ,கொஞ்சம் இதமா நடந்துக்கோங்கோ என்றான் தேசிகன். .
ராமசேஷன் சரிப்பா நான் உங்க அம்மாவை ஒண்ணும் சொல்ல மாட்டேன்,பத்திரமா கூட்டிண்டு வரேன், நீங்க எல்லாரும் பத்திரமா இருங்கோ, என் பேரன் கிருஷ்ணனை பத்திரமா பாத்துக்கோங்கோ ரெண்டு பேரும் என்றார்.
அவருடைய மருமகள் தொலைபேசியில் வந்தாள் அப்பா அம்மா இங்கேநாங்க ரெண்டு பேரும் நன்னா இருக்கோம் உங்க பேரன் பண்ற லூட்டிதான் தாங்க முடியலை, தாத்தாபாட்டி எப்போவருவான்னு நச்சரிக்கறான் சீக்கிரம் தரிசனத்தையெல்லாம் முடிச்சிண்டு வாங்கோ என்றாள். சரிம்மா நாங்க நாளைக்கு வந்துடுவோம் சரி போனை வெச்சிடறேன் என்றார் ராமசேஷன்.
ராமசேஷனும் மங்களமும் ரொம்பக் கொடுத்து வெச்சவங்க நல்ல பிள்ளையைப் பெத்திருக்காங்க, எப்பவுமே மரியாதைக் குறைவா பேசாத அதிர்ந்து கூடப் பேசாத குணம் எல்லாருக்கும் நல்லது செய்யணும், நாட்டுக்கு ஏதாவது செய்யணும்கிற நல்ல எண்ணம் ,எல்லா உறவுக்காறங்ககிட்டேயும் அன்பாபாசமா பழகற பிள்ளை தேசிகன் . அந்தப் பையன் அமெரிக்காவிலே பெரிய கம்பனீலே பெரிய பதவீலே இருக்கான். ரொம்ப புத்திசாலி, வேலையிலே கெட்டிக்காரன், அப்பிடீன்னு அவன் வேலை செய்யிற கம்பனியிலேயே இவனுக்கு ரொம்ப மரியாதை தராங்க, என்று எல்லாரும் சொல்லும்போது ராமசேஷனுக்கு ரொம்ப இதமாவே இருந்துது மனசு, அவருக்கும் அவருடைய பிள்ளை தேசிகன் நேர்மையான நல்ல பிள்ளை என்று தெரியும் பாசமான பிள்ளைதான்.
ஆனாலும் கொஞ்ச நாளா அவன் மனசுலே என்ன இருக்குன்னு தெரிஞ்ச போது கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்துது, அவன் என்ன புரிஞ்சிண்டான்னே தெரியலை, ஒண்ணு புரியறது, இந்த மேல் சாவனிசம், பீமேல் சாவனிசம் இதெல்லாம் படிச்சிட்டு, பழங்காலத்திலே புருஷாள்ளாம் எப்படி பொண்டாட்டியை அடிமையா நடத்தி இருக்கா, எப்பிடி இவ்ளோ மோசமா நடந்துக்க அவாளுக்கு மனசு வந்துது இப்பிடியெல்லாம் அவர் காது பட பேசுவதைக் கேட்டிருக்கிறார்.
அது மட்டுமல்ல என் பொண்டாட்டியை நான் எனக்கு சரி சமானமா நடத்துவேன், அவளுக்கு உண்டான மரியாதையை குடுப்பேன், என்று கொள்கைப் பிடிப்போட நடந்துக்கிறான், இதெல்லாம் பெருமையாதான் இருக்கு. ஆனா கொஞ்ச நாளாவே ராமசேஷன் சொல்றது சரியாவே இருந்தாலும் பிடிவாதமா அதை மறுத்துட்டு, அப்பா சும்மா இருங்கோ உங்களுக்கு ஒணும் தெரியாது, அம்மா எது பண்ணாலும் குறை சொல்லுவேள் அது ஒண்ணுதான் தெரியறது உங்களுக்கு, அப்பிடீன்னு ஒரு நாள் பேசினதக் கேட்டவுடனே அதிர்ச்சியா இருந்துது ராமசேஷனுக்கு,
ஒண்ணு புரியறது அவன் குழந்தை இன்னும் இந்த வாழக்கையோட சூக்ஷுமத்தை சரியா புரிஞ்சிக்காத குழந்தை,அது மட்டுமில்லே இதமா பேசி அவா காரியத்தை நடத்திக்கறவா யாரு, காரியம் நடக்கணும்னா அதுக்கேத்த மாதிரி இச்சகம் பேசறவா யாரு எந்த ப்ரதிபலனும் எதிர்பாக்காம அவனோட நலத்தைப் பத்தி யோசிக்கறவா யாருன்னு இன்னும் புரியலை,அம்மாவை பத்திரமா பாத்துக்கணும் இல்லேங்கலை ஆனா நல்ல அப்பாவையும் புரிஞ்சுக்கணும் என்று ஒரு ஏக்கம் எழுந்தது அவருக்கு.
ஆனாலும் ஒரு திருப்தி தன்னோட காலத்துக்கு அப்புறம் அம்மாவை மனம் கோணாம அனபா நடத்துவான் அப்பிடீன்னு ஒரு திருப்தி. அதுனாலே அவன்கிட்ட ஒண்ணுமே பேசாம அப்பிடியே விட்டுட்டு சரிப்பா என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டார் ராமசேஷன் அனாவசியமா தேவையில்லாம அவன்கிட்ட பேசறதைக் கொஞ்சம் குறைச்சிண்டார், எதுக்கும் அவன்கிட்ட விவாதமே வளத்துக்கறதில்லே என்ற முடிவோட இன்னும் கொஞ்சம் இதமா இருக்க ஆரம்பித்தார் ராமசேஷன்.
ஸ்ரீரங்கத்திலேருந்து வந்து ப்ரசாதமெல்லம் குடுத்துட்டு அங்கே கோயில் வாசலில் இருந்து வாங்கி வந்த ரங்கநாதப் பெருமாள் பொம்மையை பேரன் கிருஷ்ணைடம் கொடுத்தார். மறு நாள் அவருடைய பேரன் கிருஷ்ணன் விளையாடிக்கொண்டிருந்தான், அவன் வழக்கமா விளையாடற கார் பொம்மை ஒரு பக்கம் உடைஞ்சு போயிருந்தது. அந்தக் கார் பொம்மையை அவனிடமிருந்து வாங்கி மேலே வைத்துவிட்டு நேத்துதானே சொன்னேன் இந்தக் கார் பொம்மையை எடுக்காதேன்னு கையைக் கிழிச்சுடும்னு , உங்க அம்மா எடுத்துக் குடுத்தாளா? இனிமே இந்தக் கார் பொம்மையை எடுத்தே அப்புறம் அடிச்சிருவேன் என்றான் தேசிகன்.
கிருஷ்ணன் அப்பாவை நிமிர்ந்து பாத்து அப்பா நானும் வளந்துட்டேன் எப்பவுமே நீங்க சொல்றதையே கேக்கணும்னு சொல்லாதீங்க ஹும் எனக்குத் தெரியும் எந்தப் பொம்மையை வெச்சிண்டு விளையாடணும்னு. நானேதான் எடுத்துண்டேன், அம்மா எடுத்துக் குடுக்கலை
ஏன் எல்லாத்துக்கும் அம்மாவைத் திட்றீங்க என்றான் தன் மழலை மாறாத குரலில். என் மருமகள் களுக்கென்று சிரித்தாள்.
ராமசேஷன் ஒன்றும் சொல்லவில்லை! அமைதியாக தேசிகனையே பார்த்துக்கொண்டிருந்தார். தேசிகன் தலைகுனிந்தான்.
சுபம்
52
கேள்வி ஞானம்
எதுக்காக அந்தப் புத்தகத்தைப் படிக்கணும் அப்புறம் இப்பிடி எதுக்கு தனியாப் புலம்பணும்.தேவையில்லாத வேலை நேற்றிலிருந்து தூக்கம் பிடிக்கவில்லை சாப்பாடு பிடிக்கவில்லை மன நிம்மதியே கெட்டுவிட்டது ஏதோ நாமெ பாட்டுக்கு அன்னன்னிக்கு என்ன முடியுமோ அந்த காரியங்களை செஞ்சுட்டு நிம்மதியா தூங்கினோம் அதையும் கெடுத்தார் அந்த எழுத்தாளர்.
அவரை நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது இந்த எழுத்தாளர்கள் சும்மா இருக்க மாட்டாங்களா ஏன் இப்படி சும்மா இருக்கும் சங்கையெல்லாம் ஊதிக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் .
நாட்டுலெ எவ்வளவோ நல்ல நிகழ்ச்சி நடக்கிறது டிசம்பர் மாசம் ,இசைவிழா அமக்களப் படுகிறது. ஒரு நாளாவது ஒரு கச்சேரியில் போய் உட்கார்ந்து நல்ல கீர்த்தனைகள் ஏதாவது கேட்டீர்களா.
இளையராஜாவோட ம்யூசிக் கான்செர்ட் அமக்களமா நடக்கிறது அங்கேயாவது போய் ஒரு பாட்டையாவது கேட்டு ரசிச்சீங்களா,
எல்லாருக்கும் பிடித்த கிரிக்கெட் என்னிக்காவது போய் அந்த கேலரிலெ உட்காந்து அப்பிடியே சாண்ட்விட்ச் கொஞ்ஜம் கோக்கோ கோலா சாப்டுட்டு ஒரு சிக்ஸரோ அல்லது ஒரு நல்ல கேச்சோ பார்த்து ரசிச்சிருக்கிங்களா. அட குறைஞ்ச பட்ஷம் ஒரு நாட்டியம் அல்லது ஒரு நாடகம்
எதையாவது பாக்கணும்னு மெனெக்கெட்டு பஸ்ஸிலேயோ இருசக்கர வாகனத்திலேயோ அதிலே போய் அந்த வாகனத்த விடறதுக்கு இடமில்லாம திண்டாடி ஒரு வழியா வாகனத்தை அறைகுறை மனசோட கிடைச்ச இடத்திலெ விட்டுட்டு வேகவேகமாப் போய் நமக்கு குடுத்த நாக்காலிலெ உட்கார்ந்து எதையாவது ரசித்திருக்கிறீர்களா.
எதுவுமே இல்லையா சரி திருவல்லிக்கேணி போற ஏதாவதொரு வாகனத்தில் போய் அந்தக் கடல் மணல்ல கால் புதையப் புதைய நடந்து, அப்பிடியே அங்க மணக்கற பஜ்ஜியை வாங்கி சாப்டுட்டு அப்பிடியே கடலோரமாப் போய் கால்லேருந்து இடுப்பு வரைக்கும்
நனைக்கற அலையிலெ நின்னு தூரத்திலெ அங்கங்கே நின்னுகிட்டிருக்கிற கப்பல்களை வேடிக்கை பாத்துட்டு பின்னால வர குதிரை நம்மை இடிச்சுத் தள்ளிடுமோன்னு பயந்து கொஞ்ஜம் ஒதுங்கி யார் காலையோ மெதிச்சு சாரி சொல்லி வழிஞ்சு,அப்பிடியே சின்னஞ் சிறுசுகள் குதூகலத்தோட
விளையாடற காட்சியைப் பாத்திருக்கிங்களா.
அந்த மீனவக் குழந்தைகள் பயமே இல்லாம கடல்ல நீச்சல் அடிச்சுண்டே போய் நடுக்கடலுக்கே போய்ட்டாளோன்னு ப்ரமை
ஏற்படுத்தற அந்த திகில் உணர்ச்சியை அனுபவிச்சு இருக்கிங்களா ஏதோ நாடகத்துக்கு தட்டி கட்டி இருக்கறாமாதிரி ஒரு வெள்ளைத்துணியிலெ தட்டி கட்டி அதுலெ நாடகத்துலெ வர கதா பாத்திரம் மாதிரி ஒவ்வொரு பலூன் ஒவ்வொருமாதிரி மாட்டி வெச்சிருக்கானே அதையெல்லாம் அந்த குறவன் துப்பாக்கிய வாங்கி ஒரு பலூனையாவது சுட்டு இருக்கிங்களா அதுவும் இல்லையா என்ன மனுஷனய்யா நீர்?
வைகுண்டஏகாதசி அன்னிக்கு வைகுண்ட வாசல் வழியா வாசல் வழியா பார்த்தசாரதி பெருமாளோட நாமளும் ஒருத்தரா அந்த கும்பல்ல கோவிந்தா போட்டுண்டே வந்தீங்களா அதுவும் இல்லையா நீங்க என்னதான் செய்யறீங்க !
இது மாதிரி ஒரு வெவஸ்தை கெட்டதனமா ஒரு கேள்வி வேற! இந்த எழுத்தாளருக்கு. இப்பிடியெல்லாம் மக்களை தூண்டி விடற எழுத்தாளர்கள் உண்மையிலேயே மக்கள் என்ன நிலைமையிலெ இருக்காங்கன்னு தெரியாம ஏதாவது கவர்ச்சியா எழுதணும்னுட்டு எழுதறாங்க பாதிக்கப்படறது நாமெதானே. ஏய்யா எழுத்தாளரே கேள்விகள் கேட்பது சுலபம் பதில் சொல்றதுதான் கஷ்டம்னு உமக்குத் தெரியாதா எங்களை மாதிரி நடுத்தர வர்கத்துக்கு காலையிலெ குழாயிலே தண்ணி பிடிச்சு பல்தேச்சு குளிச்சுட்டு,நானும் அவளும் சேர்ந்து குழந்தைகளை தயார் பண்ணி,அதுங்களையும் வாசல்ல வந்து என்னா சார் ரெடியா பையன் சீக்கிறம் அனுப்புங்க,அப்பிடீன்னு கொரல் குடுக்கற ஆட்டோக்காரன் மதியை கொஞ்சம் இருப்பா இதோ அனுப்பறேன் அப்பிடீன்னு சொல்லிட்டு சீக்கிறம் கிளம்புங்கடா ஆட்டொக்காரன் காத்துண்டு இருக்கான் ன்னு சொல்லி
அதுலெ அனுப்பிட்டு ,
பொண்டாட்டியை கூட்டிண்டு போய் ஆபீசுலெ விட்டுட்டு அவசர அவசரமா ஆபீசுக்குப்போய் அந்த மேனேஜர், வேணாம் என் வாயைக் கிளறாதீங்க அவரைப் பத்தி என் மனசுலெ இருக்கறதை அப்பிடியே சொன்னா எனக்கு வேலை போயிடும். அவர்கிட்ட மாட்டிண்டு முழிச்சு தலையை தலையை ஆட்டிண்டு எப்பிடியோ சமாளிச்சு அன்னிக்கு பொழுதை ஓட்டிட்டு அப்பாடா மணி 5 ஆயிடுத்துன்னு பெருமூச்சோட கிளம்பலாம்னு பாத்தா அப்பொதான் என்னைப் புதுசாப் பாக்கறாமாதிரி ஒரு பார்வை பாத்துட்டு ஏன் மிஸ்டர் நாளைக்கு கொஞ்சம் சீக்கிறம் வரமுடியுமா ஆடிட் இருக்கு ,எனக்கு தெரியும் உங்க சின்சியாரிடி நீங்க வந்துடுவீங்க ஒரு எட்டு மணிக்கு வந்துடுங்க . நாமெ எல்லாத்தையும் ஒரு வாட்டி சரியாப்பாத்து வெச்சுடலாம் என்கிற மேனேஜரிடம் அதுகென்ன சார் நான் வந்துடறேன் அப்பிடீனு புன்னகையோட சொல்லிட்டு ,
மனசுபூரா எரிச்சலோட வேண்டாம் நான் மனசுக்குள்ள அவரை என்ன திட்டினேன்னு உங்க கிட்ட சொன்னா வம்பாயிடும்
இந்த வேலை போச்சுன்னா அவ்ளோதான் சரி சார்னு அவர்கிட்ட சொல்லிட்டு வேக வேகமாக் கிளம்பி மேடும் பள்ளமும் சாக்கடைத் தண்ணியும்கலந்த மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் அப்பிடீங்கற பாட்டு மாதிரி எப்பிடியோ கஷ்டப் பட்டு ப்ரயாணம் பண்ணி பொண்டாட்டியை அவ ஆபீசுக்குப் போய் அவளையும் அழைச்சுண்டு வீட்டுக்கு வந்து உள்ள நொழைஞ்சா.
உள்ளேருந்து ஏதோ வியட்நாம் போர் நடக்கறா மாதிரி ஒரு சத்தம் கேட்டு பதறிப் போய் உள்ளே போனா என் பசங்கதான் ரெண்டுபேரும் என்னைப் பாத்தவுடனே இவந்தாம்பா,இல்லப்பா இவந்தான் அப்பிடீனு குரல்விட்ட அவர்கள் இருவரையும் ஒரு புன் சிரிப்போட சமாதானப் படுத்தி மேனேஜரைக் கூட சமாளிச்சுடலாம் . இந்தப் பசங்களை சமாளிக்கறது இருக்கே அப்பப்பா ஏதோ காப்பின்னு பொண்டாட்டி குடுத்த திரவத்தைக் குடிச்சுட்டு இந்த பசங்களுக்கு ஹோம் வொர்க் அதுக்கு கொஞ்ஜம் நேரம் அவங்களோட போராடிட்டு நிமிந்து பாத்தா மணி எட்டு சரி சரி சாப்பபாடு போடு காலையிலெ சீக்கிறம் போகணும் சொன்னவுடனே ஏங்க நானும் உங்களை மாதிரிதானே ,உங்களோடதானே வீட்டுக்கு வந்தேன் ,கொஞ்ஜம் பொருமையா இருக்க கூடாதா ஒரு ஹெல்ப் கிடையாது வெட்டி அதிகாரம் அப்பிடீங்கறா பொண்டாட்டி.
வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு அவ மட்டும் என்ன பண்ணுவா அவளுக்கும் முடியலை சரிம்மா என்ன செய்யணும்னு சொல்லு நான் செய்யிறேன்னு சொன்னா ஆமா நான் ஒவ்வொண்ணா உங்ககிட்ட சொல்லி நீங்க அதைப் புரிஞ்சுண்டு செய்யறதுக்குள விடிஞ்சுடும் அப்பிடீங்கறா
என் மேனேஜரே எவ்வளவொ பரவாயில்ல.
ஒருவழியா சாப்டுட்டு படுக்கறதுக்குள்ள மணி பத்து. இதுலெ இந்த எழுத்தாளர் வேற மனுஷன் இருக்கற நிலைமை
புரியாம,நேரப் போய் அந்த எழுத்தாளர் வீட்டைக் கண்டு பிடிச்சு நல்லா நாலு கேள்வி கேக்கணும் , போறேன் இந்த ஞாயிற்றுக் கிழமை இதுதான் முதல் வேலை முடிவெடுத்தபடி தூங்கிப் போனேன்.
ஞாயிற்றுக் கிழமை ஒரு நண்பர் வீட்டுக்குப் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு அந்த எழுத்தாளர் வீட்டுக்கு போனேன், அங்க போய் சார் உள்ளே வரலாமான்னு ஒரு குரல்குடுத்தேன் ஒரு பெண்மணி யாரு என்றாள் நான் அவரோட ரசிகன் அவரைப் பாக்கணும் என்றேன். அந்த பெண்மணி என்னைப் பார்த்த பார்வை சரியில்லை ஏதோ அற்பப் புழுவைப் பார்ப்பது போல் ஒரு பார்வை.
சரி இவங்க கிட்ட நமக்கு ஏன் தகறாரு அங்கே அந்தப் பக்கம் இருக்காரு உள்ளே போங்க என்று படி தாண்டி உள்ளே போனாள் அந்தப் பெண்மணி. நான் அந்த எழுத்தாளர் இருந்த அறைக்குள் நுழைந்தேன்,அடேடே வாங்க சார் வாங்க என்றார் மலர்ச்சியான முகத்துடன் உக்காருங்க என்ன சாப்பட்றீங்க என்ற அவரிடம் நான் சொல்ல வந்த விஷயத்தை எப்பிடி ஆரம்பிப்பது என்று தெரியாமல் நான் உங்கள் ரசிகன் என்றேன் சார் நீங்க எழுதின பூலோக சொர்கம் படிச்சேன்.
அப்பிடியா அது நான் ரொம்ப ரசிச்சு எழுதினது என்றார் அவர் சரி எழுத்தாளரே நீங்க ரசிச்சா உங்களுக்குள்ள வெச்சுக்கு வேண்டியதுதானே ஏன் எங்க உயிரை வாங்கறீங்க எல்லாம் மனதுக்குள் (நடுத்தர வர்கம்) ரொம்ப நல்லா இருந்தது அப்பிடின்னேன் . உடனே அவர் என் கையைப் பிடித்துக் கொண்டு சார் ஒரு எழுத்தாளனுக்கு ரசிகனோட பாராட்டு தான் ஊட்ட சத்து மாதிரி எனக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க பாராட்டினது என்றார் மன நிறைவுடன் என் கோபம் அவருக்குத் தெரியுமா. நான் மீண்டும் கோபத்துடன் அவரை நறுக்குன்னு கேள்வி கேக்கணும்னு தயார் செஞ்சு வெச்சிருந்த கேள்விக்கணையை தொடுக்க கொஞ்சம் என்னையே தைரியமூட்டிக் கொண்டு ஆரம்பிக்க வாயெடுத்தேன்.
அந்த எழுத்தாளரின் கண்களில் கண்ணீர் சார் என்ன ஆச்சு என்று பதறினேன் ஒண்ணுமில்லை உகாருங்க என்று என்னை அமைதிப் படுத்திவிட்டு சார் இந்த உலகத்துலெ நிறைய விசித்திரம் இருக்கு, ‘எனக்கு நிறைய வசதி இருக்கு, கார் பங்களா,எல்லாம் இருக்கு, ஆனா நான் எழுதற எழுத்துக்கள் எல்லாம் என்னை வந்து பாக்கறாங்களே அவங்களோட அனுபவம்தான்
நான் எங்கயும் போறதில்லெ . ஆமா யாரோ சொல்றதையெல்லாம் கேட்டு எழுதிட்டு நீங்க எழுத்தாளர்னு பேர் வாங்கிக்கிறீங்க என்றேன் (மனதுக்குள்தான்) ஓ அப்பிடியா உங்க அனுபவங்களை சொல்லுங்க நீங்க எப்பிடி இவ்வளோ நல்லா எழுதறீங்க. (டேய் நீ இந்த ஆளை திட்றதுக்காக இங்க வந்துட்டு ஏதோ பேட்டி எடுத்துண்டுஇருக்க ) என்னை உணர்த்தியது உள்ளிருந்து ஒரு குரல். அடேடே ஆமாம் சரி சரி கேட்டுர வேண்டியதுதான்
அவரை நிமிர்ந்து பாத்தேன் அவர் எனக்கு ரெண்டு காலும் கிடையாது .இருக்கு ஆனால் போலியோ அட்டாக் ,அதுனாலே எப்பவும் வீல் சேர்தான் நான் அந்த “ பூலோக சொர்கம் “ கதையிலெ எழுதினது எல்லாம் கேள்வி ஞானம் தான் என்றார் அவர் கால்களைப் பார்த்தேன் சூம்பிப் போய் இருந்தது. அதுனாலெ அடிக்கடி வாங்க, நீங்கள்ளாம் சொல்றதை வெச்சுதான் நான் நிறையா என் கற்பனையும் சேர்த்து
எழுதணும் ,பாவம் என் பொண்டாட்டி அவளையும் எங்கயும் கூட்டிண்டு போறதில்லே என்றார் எழுத்தாளர்
எல்லாக் கேள்விகளயும் மனதுக்குள்ளெ அடக்கிண்டு சார் நான் அடிக்கடி இங்க வரேன் உங்களோட பேசினது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அப்போ நான் விடை பெறுகிறேன் என்றபடி கிளம்பினேன்.
அந்த எழுத்தாளர் என் மனசுலெ இருப்பதைப் படித்தாற் போல சார் அடிக்கடி வாங்க உலகத்துலேயே ரொம்பக் குடுத்து வெச்சவங்க
நடுத்தர வர்க்கம்தான் அவங்க அனுபவிக்கிற அத்தனை கஷ்டங்களும் எல்லா நிகழ்வுகளும்தான் சொர்கம் , பூலோக சொர்கம். ,அதுதான் உண்மையான பூலோக சொர்க்கம் அப்பிடீன்னார். நான் உறைந்து போனேன் . மனதைப் படிப்பவர்கள்தான் எழுத்தாளர்கள்
எனக்கும் புரிந்தது அது.
1
கல்கி - நூல் அறிமுகம்
2
தென்றல் - நூல் விமர்சனம்
3
நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
4
இயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்
உ
கடவுள்துணை 24/04/2011
அன்புள்ள திரு சாரி அவர்களுக்கு
நான் உங்களுக்கு கடிதமாகவே எழுதுகிறேன். நல்ல நண்பர்களுக்குள் அணிந்துரை, முகவுரை, பொழிப்புரை, பதவுரை, எல்லாம் வேண்டாம்.அது நட்புக்கு வில்லனா இருக்கும். அதுக்கு முன்னாடி உங்களைப் பத்தி வாசகர்களுக்கு நான் சொல்ல வேணாமா?
எங்கண்ணன் மறைந்த திரு எம் ஆர் ராஜாமணிக்கு ஒரு நாடகக் குழு இருந்துது. அது MRR தியேட்டர்ஸ், எனக்கு ஒரு நாடகக் குழு இருந்துது, அது விஸ்வசாந்தி. நாங்கள் இருவரும் தனித்தனியே நாடகக் குழுக்கள் வைத்து இருந்தாலும் எங்கண்ணன் நாடகக் குழுவுக்கு நான் அவ்வப்போது கதை, வசனம் எழுதுவேன். அவரது நாடகங்களை இயக்கவும் செய்வேன்.
எனக்கும் எங்கண்ணனுக்கும் மிகப்பெரிய வித்யாசம் உண்டு, கதைக்குத் தகுந்தா மாதிரி ஆட்களைத் தேடுபவர் அவர். எனது நாடகக் குழுவில் இருந்த என் நண்பர்களுக்கு தகுந்தா மாதிரி பாத்திரங்களை உருவாக்குவேன் நான். In Shorts, He who more bothered About The Quality Of His Plays And I Was More Bothered About Retaining My Friends With Me.
“கீழ்வானம் சிவக்கும்” அப்பிடீங்கற கதையை எங்கண்ணன் நாடகமா போட ஆசைப்பட்டு அதை டைரக்ட் பண்ண என்னக் கூப்பிட்டார். அந்த நாடகம்தான் பிற்காலத்தில் சிவாஜி சார் நடிச்சு அதே பேர்லே வெளிவந்த சூபர் ஹிட் படம்.
அப்படி அந்த நாடகத்தை தயாரிக்க நினைச்சபோது படத்தில் சரத்பாபு நடிச்சாரே அந்தக் கதாபாத்திரத்திலே, சிவாஜி சார் மகன் கதாபாத்திரத்திலே சரிதா கணவர் கதா பாத்திரத்திலே, நடிக்க அழைத்து வரப்பட்ட இளஞர்தான் Mr சாரி. அந்தக் காலத்திலே அவர் TVS STAFF. பழகின ஒரே நாள்லே தெரிஞ்சிது பக்கா ஜென்டில்மேன்னு. ஆனா அவருக்கு கொடுக்கப்பட்ட்து பக்கா அயோக்கியன் Role. நல்லா நடிச்சார் ,நல்ல நண்பரானார். இதான் எனக்கும் Mr. சாரிக்கும் பழக்கம் ஆரம்பிச்ச கதை.
இப்ப Mr. சாரிக்கு நேரிடையா எழுதறேன்.
Mr. சாரி இடைப்பட்ட காலங்களில் நீங்க பல குழுக்கள்ல நடிச்சது, பல டெலிவிஷன் சீரியல்கள்ல நடிச்சது , TVS லேருந்து சுய ஓய்வு பெற்றது, குழந்தைகுட்டிகளை Settle பண்ணது எல்லாருமே ஒவ்வொரு கோணத்திலேயும் ( உங்க கடமையை நீங்க ஒழுங்கா செய்யறவர்ன்னு உலகத்துக்கு நிரூபிச்சுக் காட்டியது
இப்ப “தமிழ்த்தேனீ” ங்கற பேர்லே எழுத்தாளனா நீங்க வளந்துட்டு வந்த செய்தி மனதுலே தேனா பாஞ்சுது. “வல்லமை “ அப்பிடீங்கற தலைப்புல
52 சிறுகதைகள் எழுதி அதுக்கு உங்க அணிந்துரை வேணும் சார்ன்னு என் முன்னாடி வந்து நின்னபோது மூணு விஷயங்கள் என் மனசிலே ஓடிச்சு.
•ஒரே தலைப்புல பத்து கதாசிரியர்கள் கிட்ட பத்து விதமான கதைகள் வாங்கி , ஒவ்வொரு கதையையும் இரண்டு மணி நேர டீ வீ சீரியல் நாடகமா எடுத்து, அதை ஜெயா டீவீல ஒளிபரப்ப Proposal கொடுத்திருக்கற விஷயம் Mr. சாரிக்கு எப்பிடித் தெரிஞ்சிது? அதுதான் நட்பின் ஒரே கோண சிந்தனையா?
• ஒரு கதையை யோசிச்சு 52 பக்கம் எழுதறது ரொம்ப Easy. ஆனா 52 விதமான கதைகளை யோசிச்சு ,அதுக்கு ஒரு ஆரம்பம் ஒரு நடு, ஒரு முடிவு கொடுத்து எழுதற “இம்சை” இருக்கே . Mr. சாரி தைரியசாலி சார் நீங்க. உங்ககிட்ட “வல்லமை “ இருக்கு .
•52 கதைகளையும் படிச்சேன், ஒவ்வொண்ணா விமர்சனம் எழுதினா அது அறுக்கும். ஒட்டு மொத்தமா எழுதறேன். நிறையையும் எழுதறேன், குறையையும் எழுதறேன்.
•டீ வீ தயாரிப்பாளர்களுக்கு ஏன் நீங்க உங்களை கதாசிரியரா அறிமுகப் படுத்திக்கலை, அப்பிடி Proper ஆ அறிமுகப் படுத்திகிட்டு இருந்தா ராடன் டீ வீ லேயோ ,அல்லது அந்த மாதிரி ஒரு பெரிய தயாரிப்பு கம்பனியிலேயோ நீங்கதான் பர்மனன்ட் “கிரீயேட்டிவ் ஹெட்” அந்தத் திறமை உங்ககிட்ட இருக்கு.
•வசனங்களுக்கு கொடுக்கற அழுத்தத்தைவிட மனப் போராட்டங்களுக்கு ,மன உணர்வுகளுக்கு ,மன அழுத்தங்களுக்கு நீங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கறதுனால் Re Recording க்கு Importance கொடுத்து Visuval ஆ ஒரு சீனைப் பார்க்க முடியுது.
•கதைகளுக்கு ஆரம்பம் இருக்கு , Build up இருக்கு , Cinima இருக்கு so பூரணமா இருக்கு, பர்சனல் லைப்ல உங்க Character மாதிரியே
குறைகள்:- ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அழகு நல்ல எடிட்டரா இருக்கணும். உங்க கதைகளை நீங்களே மறுபடியும் படிச்சுப் பாருங்க, 10 கதைகளையாவது நீங்களே வீசி கடாசிடுவீங்க.
•Family Subject தான் நல்லா வருதே, எதுக்காக புதுசு புதுசா Frame பண்ண ஆசைப்படறீங்க? Readers Srilanka வுக்கு Visa கொடுத்தா Srilanka தான் போகணும் Malaysia போகக் கூடாது.
•திருவல்லிக்கேணி, மைலாப்பூர், ,மாம்பலம், தாண்டி தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் இங்கெல்லாம் போங்க,
•“மன்னி “ யைப் பத்தி எழுதுங்க ஆனா “அண்ணியைப் “பத்தியும் எழுதுங்க .அதே சமயம் “மாமா”வைப் பத்தியும் எழுதுங்க.நான் அந்தக் காலத்தில பண்ணின தப்பை பண்ணாதீங்க. Brahminism தலைதூக்குது.
• இயக்குனர்
விசு
• 60 க்கு அப்புறம் ஆளப் போறீங்க வாழ்த்துக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக