Viṉaiyūkki ciṟukataikaḷ
சிறுகதைகள்
Backவினையூக்கி சிறுகதைகள்
வினையூக்கி ( செல்வகுமார் ) சுவீடன்
Contents
வினையூக்கி சிறுகதைகள்
1. பேஸ்புக் புகைப்படம் - குட்டிக் கதை
2. அங்கு கண்ட மனிதர்கள் - சிறுகதை
3. புக்பேஸ்
4. பேயோட்டி
5. பேய் பயம்
6. நீங்க என்ன ஆளுங்க
7. அப்பாவி கணேசனும் விமான அனுபவமும்
8. புலிவால்
9. இது ஒரு ஸ்பாம் கதை
10. இறந்த பின்
11. ஆன்மா
12. மாங்கல்யம் தந்துநானே
13. ரயில் பயணம் ஒன்றில்
14. பத்து ஈரோக்கள்
15. வந்தேறிகள்
16. உள்ளுணர்வு
17. குழூஉக்குறிகள்
18. கசங்கியத் தாளில் எழுதப்பட்டிருந்த கதை
19. கொஞ்சும் சாதி , கொஞ்சம் வன்முறை
20. குறட்டை
21. ஆண்ட்ராய்ட் சொன்ன அம்மு கதை
22. பேசாப்பொருள்
23. அன்பாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது
24. ஆண்ட்ராய்டும் கடவுளும்
25. காத்தரீன் ஒரு பொறுக்கி
26. பூனைக்குட்டிகள்
27. கரோலினா
28. வெரொனிகா
29. நான்காவது பரிமாணம்
30. தினைத் துணை நன்றி செயினும்
31. க்ரிஷ்
32. ஹலால்
33. ஒன்றிற்குப் பின் இரண்டு, பின்னர் மற்றொன்று
34. கக்கூஸ்
35. ஈரோ
36. வாடிகன்
37. ஐரோப்பிய அம்மு
38. விடாமல் விலகும் பெண்கள்
39. காலப்பேழை
40. புலி நண்பர்
41. பெருந்தன்மை
42. கருப்பு வெள்ளை கனவு
43. அகதி
44. எக்ஸ் ஒய் இசட்
என்னைப் பற்றி
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
வினையூக்கி சிறுகதைகள்
வினையூக்கி சிறுகதைகள்
ஆசிரியர் : வினையூக்கி ( செல்வகுமார் ) சுவீடன்
rrselvakumar@gmail.com
வலைத்தளம் : http://vinaiooki.blogspot.com/
வெளியீடு : FreeTamilEbooks.com
படம்: : http://en.wikipedia.org/wiki/File:Pebbleswithquarzite.jpg
1
பேஸ்புக் புகைப்படம் - குட்டிக் கதை
‘கார்த்தி , ஒரு சின்னப் பிரச்சினை…’
பொதுவாக அம்மு அவளின் பிரச்சினைகளை என்னிடம் கொண்டு வர மாட்டாள் , அவளுடைய பிரச்சினைகளை அவளே சரி செய்து கொள்ள முடியும் என்ற திமிரான எண்ணம் அவளுக்கு உண்டு. என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் “சொல்லு அம்மு” என்றேன்.
‘இந்த ஜீவா, என்னுடைய போட்டோக்களை எல்லாம் ரிசேர் செய்றாரு, அதுக்கு தேவதை , அழகி அப்படி இப்படி , ஹார்ட் சிம்பல்களுடன் என வர்ணனைகளுடன் பண்றது எனக்குப் பிடிக்கல”
அந்த ஜீவா , அம்முவோட போட்டோக்களை எல்லாம் மறுபகிர்வு செய்து , அதில் அவரின் நண்பர்கள் ஆபாசத்திற்கு சற்று குறைந்த அளவில் வார்த்தை விளையாட்டுகளுடன் உரையாடுவதைப் பார்த்து இருக்கின்றேன். அம்முவே அதை ஒன்றும் சொல்லுவதில்லை எனும்பொழுது , நான் என்ன சொல்லுவது என அமைதியாக இருந்துவிடுவதுண்டு. இது மாதிரியான விசயங்களில் பெண்களிடம் பிரச்சினை என்னவென்றால் ஏதாவது கேள்வி கேட்டால் சந்தேகம் என்பதாகவும், கேட்க வில்லை என்றால் அக்கறை இல்லை என்பதாகவும் புரிந்து கொள்வார்கள்.
“பிடிக்கவில்லை என்றால் ஜீவாவிடமே சொல்லிவிடு, இல்லை என்றால் டோட்டலா பிலாக் பண்ணிடு அம்மு ”
“சொல்லிப் பார்த்துட்டேன் கார்த்தி , பிலாக் செய்ய மனசு வரல, பொதுவா நல்ல மனுஷன், நீ இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு ஐடியா கொடேன்”
“பொம்பளபுள்ளங்க பஞ்சாயத்துக்குப் போறது எரிச்சலான விசயம்னு சொல்லி இருக்கேன்ல, போட்டோ போட்டு கூடி கும்மி அடிக்கிறப்ப இப்படியான விஷயம் எல்லாம் வரத்தான் செய்யும் என்னால எதுவும் செய்ய முடியாது … நீயே பார்த்துக்கோ அம்மு ”
தொலைப்பேசி அழைப்பை உடனடியாக துண்டித்து விட்டாள். இரண்டு மணி நேரம் கழித்து அழைத்தாள்.
“கார்த்தி, அந்த ஜீவா என்னோட எல்லா போட்டாக்களையும் எடுத்துட்டாரு, சாரி சொல்லி மெசேஜ் கூட அனுப்பிட்டாரு,,,,, நீ ஏதாவது செஞ்சியா”
” அவரோட மனைவி புரபைலை கண்டுபிடிச்சி , எனக்கு விசிபிளாக தெரியுற அவங்களோட போட்டோவுல , நீங்கள் அழகு, உங்கள் கண்களில் சொக்கி விட்டேன். உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர், அவரின் மேல் எனக்கு பொறாமையாக இருக்கின்றது என்பதுடன் ஒரு ஹார்ட் சிம்பலுடன் கமெண்ட் போட்டு இருந்தேன்”
————–
2
அங்கு கண்ட மனிதர்கள் - சிறுகதை
பன்னாட்டு வான்வெளி ஆய்வு மையம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந்தது. ஆம் பல நூறு ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் ஒரு கோளில் மனிதர்கள் இருப்பதை கண்டுபிடித்து விட்டனர். அண்ட சராசரத்தில் முடிவிலா பயணம் மேற்கொண்டு இருக்கும் புவியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு விண்கலம் அதை படம் பிடித்து அனுப்பி இருக்கின்றது. வந்து இருந்த படத்தில், மிகப்பெரிய சமவெளியில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கின்றனர்.
“ஆடைகள் இன்றி இருப்பதால் , நாகரிக காலம் இன்னும் அங்கு தோன்றாமல் நாம் ஆதியில் இருந்ததைப் போல இருக்கின்றனர் போலும் ” என்றார் ஓர் அறிவியல் ஆளர்
“இந்தக் கோளின் ஒரு பகுதியைத் தானே படம் பிடித்து இருக்கின்றது நமது விண்கலம்… மறு பகுதிக்கான படங்கள் என்று வரும் ?” என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு
“இன்னும் ஓர் ஆண்டில் எதிர்பார்க்கின்றோம் ” பதில் சொன்னார் தலைமை அறிஞர்.
உலகமே இதைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தது . கல் தோன்றா மண் தோன்றா காலம் முன்னரே அங்கு சென்ற நமது தொப்புள் கோடி உறவுகளாக இருக்கும் என தமிழ் நாட்டுத் தலைவர்கள் கட்டுரைகள் எழுதினர். ஏக இறைவன் மனிதனைப் படைத்தான். பல இடங்களில் அவனை அமர வைத்தான் என ஆபிரகாமிய மதங்கள் புது விளக்கங்கள் கொடுத்தன. அவர்கள் அனேகமாக இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாக இருக்கக் கூடும். ஆடை இல்லை என்பது ஒரு முக்கியமான விஷயம் என்பதால் , ஒளிக்கூசும் ஆடைகளை விண்கலம் படம் பிடிக்க இயலவில்லை என வேத விற்பனையாளர்கள் விளக்கம் சொன்னார்கள். மேற்கு உலகில் , எவ்வளவு விரைவில் அங்கு போக முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கலாயின.
அதே நேரத்தில் மனிதர்களைக் கண்டுபிடித்த கோளின் மறுபக்கத்தில்,
பிரம்மாண்டமாய் இருந்த டைனசோர்கள், கற்பனையின் உச்சத்தில் ஒரு கட்டிடம் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வகையான கட்டமைப்பின் மையத்தில், இன்னும் இருபது வருடங்களுக்குள் ஏற்படப் போகும் உணவுப் பற்றாக்குறையை விவாதிக்கக் கூடி இருந்தன.
“மனித இனப்பெருக்கம் குறைந்து கொண்டே வருகின்றது .. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நமக்கு சத்தான மனித மாமிசம் கிடைப்பது நின்று விடும் °
விவாதம் போய்க் கொண்டிருக்கையில் தலைமை காவல் மையத்திடம் இருந்து தகவல் வந்தது. ஐயத்திற்கு இடமான ஒரு பொருள் ஒன்று நமது கோளின் மேல் சுற்றிக் கொண்டு இருக்கின்றது.
“அழித்து விட வேண்டாம், அதன் தொடர்புகளைக் கண்காணியுங்கள்… பின் தொடருங்கள் ”
அடுத்த சில மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது
“மகிழ்ச்சியான செய்தி, அந்த சந்தேகத்திற்கு இடமான பொருள் தொடர்பு கொள்ளும் கிரகத்தில் , நாம் உணவிற்காக வளர்க்கும் மனித விலங்குகள் ஏராளமாக இருக்கின்றன.”
“அருமை… நாளையே நமது கலங்களைத் தயார் செய்யுங்கள் .. நமது எதிர்கால உணவுப் பிரச்சினை தீர்ந்தது ”
கோளின் மறுபக்கப் படங்கள் புவிக்கு வரும் முன்னரே, டைனோசர்கள் பூமியில் களம் இறங்கின
3
புக்பேஸ்
“இப்படியே போனால் இன்னும் இரு வருடங்களில் இந்தியா வல்லரசு ஆகி விடும் , ஏதாவது செய்து அவர்களை பிரச்சினைக்குட்படுத்த வேண்டும் , உங்கள் யோசனைகளை சொல்லலாம்” என அமெரிக்க – ஐரோப்பிய – சீன கூட்டு அமைப்பின் தலைவர் கூடியிருந்த உயர்மட்ட உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்
“வழமைப்போல , சாதி கலவரம் மத கலவரங்களைத் தூண்டி விட்டு விடுவோமா ” என்றாள் சீனாக்காரி
“பல வருடங்களுக்கு முன்பு அது மிகவும் எளிது , அன்று தமிழ்நாட்டில் மட்டும் பெரியாரியத்தினால் இருந்த சகிப்புத் தன்மை , இன்று நாடு முழுவதும் இருக்கின்றது…. நாடே பெரியார் பெயரை உச்சரிப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை ” என்றான் சுவீடனின் ஆண்டர்சன்
“இந்தியாவின் மீது படை எடுக்கலாமா? ”
“வேண்டாம்… அது மூன்றாம் உலகப் போரில் கொண்டு வந்து விட்டு விடும். நாம் விற்ற ஆயுதங்களாலேயே இன்று அவர்கள் பலமாக இருக்கின்றார்கள் கூடங்குளம் அணு உலை கூட சிறப்பாக செயற்பட்டு கொண்டு இருக்கின்றது”
“மருத்துவ ரீதியாக, ஏதேனும் நோய்களை உருவாக்கி விடலாமா ”
“மூட நம்பிக்கைகளை ஒழித்த கையோடு , போலி மருத்துவம் எல்லாம் ஒழித்து, தடுப்பூசிகள், சிறப்பான அறிவியல் மருத்துவத்தினால் பாதுகாப்பான நம்மை விட சுகாதார வளமான சமுதாயமாக இருக்கின்றது .. ” என்றான் ஒரு ஜெர்மானியன்.
கடைசியாக ”என்னிடம் கத்தியின்றி இரத்தமின்றி இந்தியாவில் ஒரே இரவில் பிரச்சினைகளைக் கொண்டு வர ஒரு வழி இருக்கின்றது ” என சொல்லியபடி எழுந்தான் அமெரிக்காவின் ஆரஞ்சுபிட்டர்.
ஆவல் மேலிட அவனை எல்லோரும் பார்க்க , ஆரஞ்சுபிட்டர் தொடர்ந்தான்.
“என்னுடைய புக்பேஸ் சமூக இணைய தளத்தில் இந்தியாவிற்கு மட்டும் பயனாளர்களுக்கு தகவல் பாதுகாப்பு பாக்கியங்களை நீக்கி விடுகின்றேன் ”
“புரியவில்லை ” என்பது போல அனைவரும் ஒரே சேர புருவம் உயர்த்தினர்
“புக்பேஸ் இந்திய பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சக இந்திய பயன்பாட்டாளர்களின் தனித் தகவல்கள் பரிமாற்றங்கள், தனி அரட்டை பரிமாற்றங்கள் , புகைப்படங்கள் இவற்றை எந்தவித கட்டுப்பாடு இன்றி யார் வேண்டுமானாலும் யாருடையதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும், இந்தியர்கள் யாரும் தகவல்களை அழிக்கவோ மாற்றவோ முடியாது , மேலும் அவர்கள் கணக்கை முடக்கவோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ முடியாது.. ஒவ்வொரு இந்தியரின் ரகசியமும் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்”
உயர் மட்ட கூட்டம் வெற்றிச் சிரிப்புடன் கலைந்தது. அடுத்த சில நாட்களில் இந்தியா பற்றி எரிந்தது.
4
பேயோட்டி
முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால் , சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் ‘பேயோட்டி’ … ஆங்கிலத்தில் Ghost Buster , Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர் Para Normal Scientist. பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னுரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன்.
என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்வினை பேயாக தனது அறையில் சுத்திக் கொண்டு இருப்பதாகவும் தினமும் பகலில் புலம்புவார். இரவில் அலறுவார். நீடாமங்கலம் அருகில் இருக்கும் கோட்டையூர் கிராம மந்திரவாதி வந்தால் தான் இந்தப் பேய் வீட்டை விட்டுப் போகும் என தினம் தினம் கதறல். என் அப்பா அவரின் அலுவலகத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் ஐயர் ஒருவரை கோட்டையூர் மந்திரவாதியின் அசிஸ்டெண்ட் என பாட்டியிடம் சொல்லி, நடிக்கக் கூட்டிக் கொண்டு வந்தார்
“உன் அப்பாவிற்கு அறிவே இல்லை, மனுஷனை ஒட்டுறவங்களுக்கு, பேயை எப்படி ஓட்டத் தெரியும் … பூணுல் போட்ட ஐயர் கோட்டையூர் மந்திரவாதியாம்” என என் அம்மாவிற்கு ஒரே சிரிப்பு.
“ஆம் இந்த அறையில் பேய் இருக்கின்றது” என சொல்லியபடி பாட்டி காட்டிய திசையில் கங்கை நீர் என அவர் கொண்டு வந்து இருந்த காஸ்ட்லி மினரல் வாட்டரைத் தெளித்தார். பாட்டியும் தெளிந்தார்
“அவநம்பிக்கைகளை நிராகரிக்காமல் , அவர்கள் போக்கிலேயேப் போய் அதை தெளிய வைக்க வேண்டும், அதற்கு நாமும் அந்த அவ நம்பிக்கையை நம்புவதாக சொல்ல வேண்டும். ” என ஐயர் அப்பாவிடம் சில நூறு ரூபாய்த் தாள்களை வாங்கிக் கொண்டே சொன்னதைக் கேட்டேன்.இன்றைய பேயோட்டும் தொழிலில் ஐயர் சொன்னதே எனது தாரக மந்திரம்.
கடவுளைக் காண்பிப்பதை விட பேயோட்டுவது மிகவும் எளிது என நினைத்ததற்கு மாறாக . பேய் வீட்டில் வசிப்பவர்கள் , வெறும் மதப் புத்தகங்களையோ மதச் சடங்குகளையோ நம்புவதில்லை. ஹைடெக் கருவிகள் , புதுயுக மடிக் கணினி , காமா பீட்டா தீட்டா கதிர்களைப் பற்றிய புத்தகங்கள் இப்படி உடன் இருந்தால் தான் மரியாதையே கொடுக்கின்றனர். அதனால் வியாபர நுணுக்கமாக பேய்களைக் கண்டுபிடிக்க உதவும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்கள் கூட ஆண்டிராய்ட் ஆப்பிள் கைபேசிகளுக்கும் தயாரித்து வெளியிட்டு இருக்கின்றேன்.
பெரும்பாலான பயந்தாங்குளிகள் , இந்த அப்ளிகேஷன்களின் டெமோ வேர்சனைப் பார்த்துவிட்டுத்தான் வருகின்றார்கள். சாமியார்களுக்கு எப்படி கடவுள் இல்லை என்பது தெரியுமோ அது போல பேயோட்டிகளுக்கும் பேய் இல்லை என்பது தெரியும். சாமியார்கள் காணும் கடவுளை சமயங்களில் பக்தர்களும் தங்களுக்குத் தெரிகின்றது என சொல்கிறார்களோ அது போல , பேய் வீட்டில் இருப்பவர்கள் பார்க்கும் பேய்களை நானும் பார்த்ததாக சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் பொழுதே பாதிப் பேய் ஓடிவிடும்.
செய்வது ஏமாற்று வேலை என்றாலும் கடவுளையா ஏமாற்றுகின்றோம் , இல்லாத பேயைத் தானே என்று, குற்ற உணர்ச்சி எதுவும் இல்லை. இப்படியாக நாளொரு பேயும் பொழுதொரு வீடும் என நன்றாக கல்லா கட்டிக் கொண்டு இருக்கையில் , சில நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்து அடிக்கடி அலறல் கேட்கின்றது . நீண்ட நாட்களாகப் பூட்டிக் கடந்த வீடு, சென்ற வாரம் தான் ஒரு குடும்பம் குடி வந்து இருக்கின்றது.
மறு நாள் அந்த வீட்டின் குடும்பத் தலைவன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்.
“நீங்கள் வீடுகளில் இருந்து பேய்களை விரட்டுபவர் எனத் தெரிந்து கொண்டேன். என் மகளுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. இந்த வீட்டில் பேய் இருக்கின்றது என அடிக்கடி கத்திக் கொண்டு இருக்கின்றாள். இந்த வீட்டில் மட்டுமல்ல , இதற்கு முன்னர் குடி இருந்த வீடுகளிலும் அப்படித் தான் சொல்லி சொல்லி பயந்துப் போய்க் கிடக்கின்றாள், நீங்கள் வந்து கொஞ்சம் உதவ வேண்டும்”
“தொடர்ந்து வரும் பேய் ” சொல்லிப் பார்க்கையிலேயே எனக்கு திக் என்று இருந்தது. ஒருவேளை உண்மையாக இருக்குமோ… சேச்சே இருக்காது. நானே அந்த வீட்டில் ஒரு வருடம் குடி இருந்து இருக்கின்றேன். வழமையைப் போல என்னுடைய உபகரணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு மறு நாள் சென்றேன். அவர், அவரின் மனைவி , பதின்ம வயது பெண். .
வழக்கமான என்னுடைய டெக்னாலஜி போங்காட்டத்திற்கு பின்னர், அந்தப் பெண்ணுடன் தனியேப் பேச வேண்டும் எனச் சொன்னேன். அதற்கு காரணம் கழிவறையில் கிடந்த போதை ஊசி சிரிஞ்சைகளைப் பார்த்தது தான்
“இந்த வீட்டில் மட்டுமல்ல இதற்கு முன்னர் நீங்கள் இருந்த எந்த வீட்டிலும் நீ பேயைப் பார்த்ததாக சொன்னது எல்லாம் பொய். ஏன் இப்படி செய்கிறாய்
“அப்படி சொன்னால் தான், உன்னிடம் நல்லவன் போல பேசும் , என் அம்மாவின் கணவன் என்னைத் தொந்தரவு செய்ய என் அறைக்குள் வரமாட்டான் ” என அழுதாள்.
எனக்குப் புரிந்து போனது. ஒளிக்கற்றைகளால் உருவங்களைக் கொண்டு வரும் ஒரு சிறிய கருவியை அவளிடம் கொடுத்து , “இனிமேல் நீ பேயைப் பார்க்க வேண்டியதில்லை, உன் அம்மாவின் கணவனைப் பார்க்க வை, இந்த பிடிப்பை அமுக்கினால், ஓர் உருவம் வரும், நீ தூங்கும் முன்னர் இயக்கிவிட்டுத் தூங்கி விடு , எவனுமே தவறான நோக்கத்தில் உன்னை நெருங்க முடியாது”
மகளிடம் பேசி முடித்தவுடன் குடும்பத் தலைவனிடம் வந்து “பேய் உங்கள் மகளைத் துரத்தவில்லை , நீங்கள் ஏதோ தவறு செய்து இருக்கின்றீர்கள் உங்களைத் தான் வீடு வீடாக துரத்துகின்றது , ஜாக்கிரதையாக இருங்கள்” அந்த ஆளுக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அந்த பதின்ம பெண்ணையும் அவளின் அம்மாவையும் கடைத் தெருவில் பார்த்தேன். குடும்பத் தலைவனைப் பற்றி விசாரித்தேன். அவன் அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாக அந்த அம்மா கவலையுடன் சொல்ல, அந்த பதின்மப் பெண் உதட்டின் ஓரமாகப் புன்னகைத்தாள்.
வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு பேயை விரட்டியடித்த மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.
5
பேய் பயம்
பேய்கள் பயமுறுத்தாது. பேய்கள் யாரையும் கொல்லாது. நூற்றுக்கு நூறு பயம் தான் நம்மைக் கொல்லும், பேய்கள் அல்ல. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான் பேய்களுக்கு நான் பயப்படுவதில்லை. மாக்கியவல்லி சொல்லியபடி எது நம்மைக் கொல்லாதோ அது நம்மை பலப் படுத்தும். கடமையின் காரணமாக காட்டு வழிப் போகும் பொழுது எல்லாம் என்னுடைய பெரிய பலம், மிகப் பெரிய துணை பேய்களே . பல நேரங்களில் அவைகளே வழிகாட்டிகள்.
எதன் மேல் பயம் அதிகமாக இருக்கின்றதோ, அதை சந்தித்து விட்டால் பயம் அகன்று அபிமானம் வந்துவிடும். எனது சிறுவயது பேய் பயம் அப்படித்தான் போனது. எனக்கு பத்து வயது இருக்கும், நள்ளிரவில் அப்பா அம்மாவுடன் , பைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கித் தராத கோபத்தில் கொட்ட கொட்ட விழித்தபடி ஓட்டுனர் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்து ஒரு நள்ளிரவில் மன்னார்குடியில் இருந்து திருச்சி பயணப்பட்டுக் கொண்டு இருக்கையில் , ஓட்டுநரிடம் இன்றைக்கு 15 பேர் என்ற நடத்துனர் உறங்கிப் போனார் திருச்சி போகும் வரை எங்கும் நிற்க வில்லை. திருச்சி நெருங்குகையில் தலைகளை எண்ணினேன். மொத்தம் 35. எங்களுக்குப் பின்னர் அவைகளை கண்டக்டர் சீக்கிரம் இறங்கும் படி அதட்டினார் . போகும் பொழுது அவைகளில் ஒன்று என் கையில் ஃபைவ் ஸ்டார் சாக்லெட் ஒன்றைத் திணித்து விட்டுப் போனது.
பேய்கள் என் கண்களுக்கு மட்டும் தெரியும் படி பெரிய சக்தி எல்லாம் எனக்கு கிடையாது. எல்லோருக்குமே தெரியும். அந்தக் கண்டக்டருக்கு மனிதர்களாகவே தெரிந்தது போல ,உங்களுக்கும் கூட தெரியும். கூட்டத்தோடு கூட்டமாய் ஜனங்களுக்கு இடையிலேதான் இருக்கின்றன. என்ன அவை பேய்கள் எனப் புரிந்து கொள்ள கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பேய்களின் மீதான எனது பழைய பயமும் இன்றைய அபிமானமும் அவற்றை மனிதர்களிடம் இருந்து பிரித்து இனங்கண்டு கொள்ள உதவுகின்றன.
மலை மேல் ஒரு பெட்டி கடை கூட இல்லாத ஓர் ஊரில் எனக்கு வேலை கொடுத்து இருக்கின்றார்கள். ஊர் என்றாலும் இப்பொழுது இது ஊர் கிடையாது. எப்பொழுதோ நடந்த ஒரு போரின் இறுதியில் இந்த காட்டுப் பகுதி கிராமம் சூறையாடப்பட்டு ஒட்டு மொத்த மக்களும் கொல்லப்பட்டுவிட்டதால், இங்கு அதன் பின்னர் யாரும் வசிக்கவில்லை. இறந்தவர்கள் பேய்களாக உலவுவதாக ஒரு வதந்தி. மற்றவர்களுக்கு வதந்தி என்றாலும் எனக்கு அது உண்மை எனப் புரியும்.
என்னுடைய பணி சுலபமானது தான், , அந்த கிராமத்து பாழடைந்த மலை வீட்டில் இருந்து கொண்டபடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மலையடிவார வேலியிட்ட மிகப்பெரும் மைதானத்தை கண்கானிக்க வேண்டும். மைதானத்தின் கீழ் ரகசிய அறைகளில் ஏதோ ஆராய்ச்சி நடைபெறுவதாக எனக்கு சம்பளம் கொடுக்கும் ஏஜென்சிகளுக்கு ஓர் ஐயம் , அதனால் தான் இங்கு நான் அனுப்பப்பட்டேன்.
மலை வீட்டை நானே சீர்ப் படுத்தி எனக்கான ஓர் அறையை கதவுகளுடன் அமைத்துக் கொண்டேன். கொடுக்கப்படும் மில்லியன் கணக்கான சம்பளத்திற்கு இவையும் செய்ய வேண்டும். வந்து ஒரு வாரம் ஆகின்றது. ஒரு நாள் , மைதானத்தில் மனிதர்கள் போல நடமாடுவதைப் போல தோன்றியதால் என அதிநவீன கேமராவினால் படம் எடுத்துப் பார்த்தால், எதுவுமே பதிவாகவில்லை. ஆம், பேய்கள் கண்களுக்கு மட்டும் தான் தெரியும் கருவிகளில் பதிவாகாது. காட்டுப் பாதையில் சந்தித்த ஒருவனை இல்லை ஒன்றை படம் எடுக்க முயற்சித்தேன். முறைத்தது. எடுக்காமல் விட்டுவிட்டேன், எடுத்து இருந்தாலும் தெரியப் போவதில்லை,. அதன் பின்னர் சிலப் பல பேய்களைப் பார்த்தேன். படம் எடுக்கவில்லை. அவைகளும் சிரித்தபடியே நகன்று போய்விட்டன. சிலவை வீட்டிற்குள்ளும் அதுவாக வந்து அதுவாகப் போயின.
மனித நடமாட்டம் இல்லை என மட்டும் தலைமைக்கு செய்தி அனுப்பினேன். பேய்களைப் பார்த்தேன் என சொல்ல முடியாது அல்லவா. இன்னும் ஒரு வாரம் இருந்துப் பார்க்க சொன்னார்கள்.
மறுநாள் காலையில் ஏதோ ஒன்று கழுத்தை நெறிப்பதைப் போல உணர்வு. பேயாக இருக்க முடியாதே … பேய்கள் கொல்லாதே !! இடுங்கிய கண்களில் வழியேப் பார்த்தேன். என் கழுத்தை நெறிப்பதன் கண்களில் குரூரம் தெறித்தது. என் நம்பிக்கை வீண் கிடையாது. அது பேய் அல்ல .. அந்த முகத்தைப் பார்த்து இருக்கின்றேனே … புகைப்படம் எடுக்க முயற்சிக்கையில் முறைத்ததே … இல்லை இல்லை முறைத்தானே …. நிஜமான மனிதன் !!
“உளவாளி நாயே “…. எனத் திட்டியபடி அவனது பிடி இறுகியது .
6
நீங்க என்ன ஆளுங்க
“உங்க பொண்ணுக்கு எப்போ கல்யாணம்” என தகப்பனாரிடமும் , ”எனி குட் நியுஸ் ” என புதிதாக திருமணமானவர்களிடமும் கேட்கப்படும் கேள்விகளை விட அசூயையானது , ”நீங்க என்ன ஆளுங்க” என்ற கேள்வி.
பொதுவாக இது நம்ம ஆளாக இருந்தால் நல்ல இருக்குமே , காரியம் சாதித்துக் கொள்ள எளிதாக இருக்குமே என நினைப்பவர்கள் தான் இப்படி கேட்பார்கள். அதாவது நம்மை விட திறமை சாலியாக , இருப்பவன் நம்ம சாதியாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமாகவும் இருக்கலாம் .
“நீங்க என்ன ஆக்கள் ” என்பதை சுத்தி வளைக்காமல் சர்வ சாதரணமாக என்னுடைய ஈழத்து நண்பர் , ஒஸ்லோ நகரில் ஒரு நாள் என்னிடம் கேட்டார். ஓர் ஈழத்து ஆள் கேட்டது வியப்பாகத் தான் இருந்தது. ”அவை என்ன ஆக்கள்” என்ற கேள்வி ஈழத்து மக்களிடம் சாதாரணம் என்றாலும் நேரடிக் கேள்வி அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஒரு வேளை பொன்னர் சங்கர் புதினம் எனது மேசையில் இருந்ததனால் அப்படி கேட்கத் தோன்றி இருக்குமோ …
இந்த கேள்விக்கு பொய் சொல்லலாம் . உண்மையும் சொல்லலாம். மூன்றாவது விதமான பதிலும் உண்டு. “இந்த சாதி கருமாந்திரம் எல்லாம் நமக்கு எதுக்குங்க ?”. இவ்வகையான பதில் சொல்லுபவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என என் கல்லூரி நண்பன் ராகவன் சொல்லி இருக்கின்றான்.
அவர்கள் தான் தங்களை வெளியெ சொல்ல கூச்சப் பட்டுக் கொண்டு அப்படி முற்போக்காய் சொல்லுவார்கள் எனவும் சொல்லுவான் ராகவன். ராகவனோட நட்பு, புலிவாலை பிடித்ததைப் போன்றது. விலாங்கு மீனாய் அவன் சொல்லுவதற்கெல்லாம் மைய்யமாய் தலையாட்டி வைப்பேன்
“மச்சி, நீ மாட்டுக்கறி எல்லாம் சாப்பிடுறதுனால , அவிங்கன்னு தப்பா நினைச்சுட்டேண்டா … சாரிடா ” என தங்களுக்குள் புதுக் கூட்டணி அமைத்த தோழமைகளையும் பார்த்து இருக்கின்றேன். கூட்டணி அமைக்கும் முன்னர் கேட்கப்படும் மன்னிப்பு நெருடும் .
மெட்றாஸில் வேலை பார்த்த பொழுது சில நண்பர்கள் பெரியாரியம் பேசுவார்கள், அம்பேத்கார் எல்லாம் படிப்பார்கள். ஆனால் கவனமாக , நுட்பமாக , முற்போக்கு சிந்தனையுடன் தலித்தியம் பேசும் பொழுது தாங்கள் தலித் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
ஸ்வீடனில் இந்த வகையான மனப் போக்கை ஸ்விடிஷ் நண்பர்களிடமும் பார்த்து இருக்கின்றேன். LGBT விசயங்களை ஆதரித்து பேசுவார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் தான் LGBT கிடையாது என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்வார்கள்.
இதில் அறிந்தோ அறியாமலோ சம்பந்தப் பட்ட விஷயத்தை அவரவர் ஆழ் மனதில் குறைவாக எடை போட்டு வைத்திருப்பதால் தான் , தாங்கள் அவர்களில்லை என அவர்கள் அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கின்றனர் என நான் நினைப்பதுண்டு. இந்த அவதானிப்பை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நான் சிந்தனைவாதி இல்லை என்பதால், தோன்றியதை தோன்றியபடியே விட்டு விடுவேன்.
சரி இவருக்கு பதில் சொல்லியாக வேண்டுமே, “நான் தமிழன் சாதி ” என பெருமையாக சொல்லலாம். ஆனால் அப்படி ஒன்று இருந்து இருந்தால், இந்த கேள்வி வந்திருக்காதே. ஆகையால் நான் அவருக்கு தெளிவாக சொன்ன பதில்,
“நான், கண்டிப்பாக உங்க சாதி இல்லை சார் “
7
அப்பாவி கணேசனும் விமான அனுபவமும்
சுவிடனின் கோத்தன்பர்க் நகரத்தில் இருந்து வரும் அம்முவிற்காக , ரோம் சாம்பினோ விமான நிலையத்தில் காத்து இருந்த பொழுது , அப்பாவி கணேசன் நினைவுக்கு வந்தார். கடைசியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், இந்த விமான நிலையத்திற்கு கணேசனுடன் வந்ததுடன் சரி அதன் பின்னர் இன்றுதான் வருகின்றேன் . மற்றபடி என் போக்கு வரத்து எல்லாம், ரோமின் மற்றொரு விமான நிலையத்தை மையம் கொண்டு தான்.
சுவீடனில் படித்த பொழுது , அப்பாவி கணேசனுக்கு என்னுடன் பிரயாணம் செய்ய வேண்டும் என்றாலே பயம். ஒரு முறை கோபன்ஹெகன் ரயிலில் அவருடையை பயணச்சீட்டையும் எடுத்துக்கொண்டு வேண்டும் என்றே அவரைத் தெரியாததைப் போல வேறு ஓரிடத்தில் போய் அமர்ந்து, பரிசோதகர் வரும் நேரத்தில் பரிதவிக்க விட்டு இருக்கின்றேன்.
மற்றொரு முறை,
“கணேசன் , நம்ம காலேஜ் கார்டை காமிச்சா, ஒரு பாக்கெட் கடலை , வில்லிஸ் சூப்பர் மார்கெட்டில் கொடுப்பாங்க “
என சொல்ல போக , உண்மையிலேயே அட்டையைக் காட்டி கடலையைக் கேட்க , அந்த சூப்பர் மார்கெட்டில் அன்றைய மாலைப் பொழுது சூப்பராக போனது.
தில்லு முல்லு ரீமேக் படத்தில் வருவதைப் போல, நான் ஒரு முறை விலை குறைந்த கூலிங் கிளாஸின் விலைக் குறிப்பை , விலை அதிகமான ஒன்றிற்கு மாற்றி வைத்து விட்டேன்.
°கார்த்தி, சூப்பர் மாடல், வெறும் நூறு குரோனர் ” என சொல்லிக் கொண்டு எடுத்துப் போனார் நான் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வெளியே வந்து விட்டேன்.
கடைக்காரன் கில்லாடி … பார்த்தவுடன் நிஜ விலையை கண்டுபிடித்து விட்டான்.
ஆயிரம் குரோனர், பணத்தைக் கட்டிவிட்டு வாங்கி வந்தார். அடுத்து வந்த கோடையில் அவரை விட , நான் தான் அந்தக் கண்ணாடியை அதிகம் அணிந்து இருப்பேன்.
என்னுடைய கெட்டப் பழக்கம் , அப்பாவிகளை , அம்மாஞ்சிகளை ,விளையாட்டுத் தனமாக கிண்டலடிப்பது. அது , சுமாரான பவுலர் நல்ல வாட்டமா பவுலிங் போட்டால் சிக்ஸர்களாய் அடிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியைப் போல இருக்கும் . பேட்ஸ்மேன் களுக்கு தொடர்ந்து அடித்தாடினால் தான் மதிப்பு … ஆனால் பவுலர்களுக்கு ஒரு பந்து போதும்.. அத்தனையையும் தரை மட்டமாக்க …
தொடர்ந்த ஓட்டலில் களைப்படைந்து வெறுப்படையும் அப்பாவிகள் என்னை ஒரு கட்டத்தில் எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். சந்தர்ப்பம் அமையும் பொழுது , மூக்கில் குத்தி விட்டு ஓடி விடுவார்கள்.
ஆனால் இந்த அப்பாவி கணேசன் அவர்களைப் போல அல்லாதவர்.
என் தொடர் கலாய்த்தலை தாங்கிக் கொண்டதால் தான், அன்று ரோம் நகரத்திற்கு நான் குடி பெயர்ந்த பொழுது, அவருக்கும் டிக்கெட் போட்டு அழைத்து வந்தேன். அதில் கூட ஒரு சுயநலம் உண்டு. இரண்டு பெட்டிகள் எடுத்து வர வேண்டும். மேலதிக சுமைகளுக்கு ஆகும் செலவிற்கு இவரைக் கூட்டிக் கொண்டு வந்தால், பெட்டி தூக்க ஒரு ஆள் இருக்கும் என்பதுதான்.
ஊர்ப்புறங்களில் பேருந்து கடைசி நிறுத்தத்தில் வந்து நின்றவுடன், அடுத்து ஐந்து நிமிடங்களில் திரும்ப எடுப்பார்கள். மக்கள் இறங்குவதற்கு முன்னரே கூட்டம் ஏறத் தொடங்கும். இது விமானம் என்பதால் அரை மணி நேரம். வந்த விமானமே திரும்ப பறக்கும்.
டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பதைப் போல இடம் பிடித்தோம். 10 எ 10 பி , 10 சியில் யாரும் இல்லை. மலிவு வகை விமான சேவை என்பதால், வண்டியை வளைத்து கிளம்பத் தொடங்கியதும் லாட்டரி சீட்டு முதற்கொண்டு சாராயம் , சிகரெட் வரை அனைத்தையும் விற்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி விற்றுக் கொண்டு இருக்கையில்
ஒரு விமானப் பணிப் பெண்ணைக் கூப்பிட்டு , கணேசனை சுட்டி,
“இவர், காண்டம் கிடைக்குமா என கேட்கிறார்” என்றேன்
இருவரும் என்னை முறைத்தனர். பின்னர் கணேசனை , சமாதானப் படுத்தும் முயற்சியாக பேச்சை ஆரம்பித்தேன்.
°கணேசன் , நான் பிளைட்டோட லைஃப் ஜாக்கெட்டை திருடப் போறேன்”
“வேண்டாம் கார்த்தி, தப்பு …மாட்டினால் மானம் போயிடும் “
கைசுமைகளுக்கான பைகளை கால் மாட்டில் தான் வைத்து இருந்தோம். விமானம் தரையிறங்கும் சமயத்தில் , எல்லோருடைய கவனமும் அதில் இருந்த பொழுது இருக்கைக்கு கீழ் இருந்த உயிர் காப்பு கவசங்களை கையை விட்டு எடுத்து ஒன்றை அவரின் பையிலும் மற்றொன்றை என் பையிலும் வைத்துக் கொண்டேன். கணேசனுக்கு வெளியில் வரும் வரை வியர்த்துக் கொட்டியது. அன்று எனக்கு ரோமில் உதவி செய்து விட்டு போனவர் தான், அதன் பின்னர் என்னுடன் பேசவே இல்லை. அந்த லைஃப் ஜாக்கெட்டுகளை இன்றும் பாதுகாத்து வருகின்றேன்.
எதோ ஓர் அறிவிப்பில் விமான நிலையம் வருகைப் பகுதி சலசலப்பானதும், அப்பாவி கணேசன் நினைவுகளை விட்டு நிகழ் காலத்திற்கு வந்தேன். கோத்தன்பார்க் விமானத்தைப் பற்றிதான் சொல்லுகின்றனர். கோத்தன்பார்க்கில் இருந்து வரும் விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நகரத்திற்கு வெளியே கடலில் விழுந்து விட்டது எனவும் மீட்புக் குழுக்கள் விரைந்து இருக்கின்றனர் எனவும் அந்த அறிவிப்பு சொன்னது.
—
8
புலிவால்
கழிவறை, படுக்கையின் தலையணை மாட்டு , கால் மாட்டு , சட்டை , என் உள்ளாடைகளில் கூட கேமரா வைத்து நம்மை கண்காணித்தால் எப்படி இருக்குமோ , இணையத்தில் அப்படி ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படும்சூழலில் தமிழ்நாட்டின் பெரிய கட்சித்தலைவர்களில் ஒருவருக்கு நான் ஐரோப்பாவில் பினாமியாக இருக்கின்றேன் என ஒரு துப்பறியும் சாம்பு பேஸ்புக்கில் நிலைத்தகவல் வைத்திருந்தார். நமக்கு சாதகமாக இருக்கும் விசயங்களுக்காக , சிலருக்குப் பதில் சொல்லுவதை விட பதில் சொல்லாமல் இருப்பதே சுவாரசியம். அது வதந்தியா இல்லை உண்மையா என்பதை ,என் மின்னஞ்சல்களை வாசித்து விட்டு உங்களுக்கு கண்டிப்பாக சொல்லுகின்றேன்.
வழக்கமான வாத்தியாரின் மெயில்கள், வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன் என்ற அம்முவின் கடிதங்கள் என ஒவ்வொன்றாகப் படித்து முடித்த பொழுது, அந்த மின்னஞ்சல் மேல் வந்தது.
அன்புடன் கார்த்திக்கு,
ஒரு தகவல் பெட்டகத்தை ரஷியாவில் இருக்கும் ஒருவரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தங்களை தேர்வு செய்து இருக்கின்றோம். விருப்பம் இருந்தால் பதில் அனுப்பவும்
இப்படிக்கு
உலகமக்களின் நலம் விரும்பி
என ஆங்கிலத்தில் வந்து இருந்தது. வழக்கமாக ஆப்பிரிக்க அரச வழிப் பரம்பரையினரின் கடைசி வாரிசு நான், என் சொத்துகள் பிரிட்டனில் ஒரு வங்கியின் பாதுகாப்பில் இருக்கின்றது, மீட்டு எடுக்க உங்களின் உதவி தேவை என வரும் அல்லது, நான் அன்புக்காக ஏங்குகின்றேன் , என்னை நேசிப்பாயா என கறுப்பு அழகிகளின் படங்களுடன் வரும். படங்களை மட்டும் டவுன் லோட் செய்து வைத்துக் கொள்வதுண்டு. உட்டாலக்கடி நைஜீரியா வகை மெயில்களுக்கு மத்தியில் இது வித்தியாசமாக இருந்தது.
எனக்கும் ரஷியாவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. “என்ன விஷயம் ” என பட்டும் படாமல் ஒரு வரியில் பதில் அனுப்பினேன்.
என்னை நெடுங்காலமாக சமூக ஊடகங்களில் கவனித்து வருவதாகவும் , என்னுடைய சமூக அக்கறை, இடது சாரி சார்பு ஆகியனவையே இந்த மின்னஞ்சலை எழுத வைத்ததாக கூறி இருந்தனர். என்னுடைய சமூக அக்கறை, போராளிக் கருத்துகள் எல்லாம் ஒரு வகையில் பாசாங்கு தான் என்றாலும் வாய்ப்புக் கிடைத்தால் ஸ்டைலான களப் போராளியாக மாற நான் தயங்க மாட்டேன்.
கைபேசி எண்ணைக் கேட்டார்கள், கொடுத்தேன். என்னிடம் பேசினார்கள். வங்கிக் கணக்கு எண்ணைக் கேட்டார்கள். மறுநாள் கணிசமான தொகை வரவாக இருந்தது.
விஷயம் இதுதான். ரோம் விமான நிலைய டிரான்சிட்டில் ஒரு மென் கோப்புகள் அடங்கிய வன் தட்டு , அதாவது ஹார்ட் டிஸ்க்கை ஒருவரிடம் இருந்து நான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதை வீட்டில் பாதுகாப்பாக ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும். பின்னர் , பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கி போய் , அங்கிருந்து ஒரு பேப்பர் கவரைப் பெற்றுக் கொண்டு , ரயிலில் ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் சென்று, அங்கு நான் ஏற்கனவே ரோம் டிரான்சிட்டில் சந்தித்த ஆளிடம் மீண்டும் சேர்க்க வேண்டும்.
கரகாட்டக்காரன் பட ரசிகனான எனக்கு, ஜேம்ஸ் பாண்ட் பட ரேஞ்சில் ஒரு வேலை வருகின்றது , அதுவும் ஏகப்பட்ட சம்பளத்துடன் … ஆடித்தான் பார்ப்போமே என இருந்தது.
பாஸ்போர்ட் விபரங்களைக் கேட்டார்கள். அதுதான் ஏற்கனவே பணம் அனுப்பிவிட்டார்களே இனி நம்பலாம் … கேட்ட விபரங்களுக்கு மேலாகவே கொடுத்தேன்.
ரோமில் இருந்து இஸ்தான்புல் செல்லும் விமானம் ஒன்றிற்கு டிக்கெட் அனுப்பினார்கள். கூடவே துருக்கி மின் – விசாவும் வந்தது. செக் – இன் செய்ய வேண்டும். ஆனால் விமானத்தில் ஏறக் கூடாது, ஹாங்காங் செல்லும் விமான நிலைய கதவில் ஒருவரிடம் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க்கை வாங்கிக் கொண்டு திரும்பி விட வேண்டும் என்பதுதான் உத்தரவு.
மொழிப் பட ஹீரோ பிரித்விராஜ், இன்னும் கொஞ்சம் வெளுப்பாய் இருந்து, பிரேம்லெஸ் கண்ணாடி போட்டு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவரை ஹாங் காங்கிற்கு விமானம் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருக்கையில் சந்தித்தேன். செயின் பீட்டர்ஸ்பர்க்கில் சந்திப்போம் என அவர் வைத்து இருந்த மடிக்கணிகளில் ஒன்றை என்னிடம் கொடுத்தார்
°வன் தட்டு என்றார்களே !! ” என்றேன் ..
பதில் பேசவில்லை, சிரித்துக் கொண்டே கொடுத்தார். வாங்கிக் கொண்டேன். திரும்பும் பொழுது குடியேற்ற பாதுகாப்பு அதிகாரிகள் மையமாகப் பார்த்தார்கள் ஜேம்ஸ் பாண்டுகள் பயப்படுவதில்லை. வீட்டிற்கு வந்ததும் மடிக் கணினியை திறந்துப் பார்க்க விருப்பமாக இருந்தது. கடவுச் சொல் தெரியாதே !! ஒருவேளை திறந்தால் வெடித்துகே கிடித்து தொலைந்து விடப்போகின்றது …
அடுத்த ஒரு வாரம் படபட ப்பாகத் தான் போனது. கல்லூரிக்குப் போகவில்லை. ஒரு நாள், ரஷியன் மாதிரி தோற்றம் உடையவன் வந்து, அவனது காரில் ரஷியத் தூதரகத்திற்கு அழைத்து சென்று , ஏற்கனவே தயாராக இருந்த, ரஷிய விசாவையும் கொடுத்தான். நடக்கும் சம்பவங்களுக்கு ரகுமான் பின்ணனி இசைக் கோர்த்தால் அட்டகாசமாக இருக்கும் வகையில் எல்லாமே ஸ்டைலாக இருந்தது-.
ரோம் – ஹெல்சின்கி விமானம் , பின்பு ஹெல்சின்கி – பீட்டர்ஸ்பர்க் அலிக்ரொ சூப்பர் பாஸ்ட் டிரெயின். ஒரு வயதான தாத்தா , சிலக் கோ புகளை ஹெல்சின்கி ரயில் நிலையத்தில் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
ரயிலில் விபோர்க் – வைனிக்கலா இடையில் சகப் பிரயாணிகள் எல்லோரிடமும் கடுமை காட்டிய ரஷிய அதிகாரிகள், என்னிடம் மட்டும் கனிவாகப் பேசினார். பீட்டர்ஸ்பர்கில் இருந்து, நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் ஒரு மாளிகை, அங்கு அந்த பிரித்விராஜ் மாதிரி இருந்த ஆளை சந்தித்தேன். மடிக் கணினியைக் கொடுத்தேன் அதைப் பெற்றுக் கொண்டு, அவரிடம் இருந்த ஒரு மடிக்கணினியை என்னிடம் கொடுத்தார்.
“ பத்திரமாக வைத்துக் கொள்ளவும், சில மாதங்களுக்குப் பின் தகவல் வரும் , அப்பொழுது வரும் உத்தரவின் படி செய்ய வேண்டியதை செய்தால் போதும். ”
நான் வந்த காரில் அவர் வெளியேறினார். சில மணி நேரங்கள் காத்து இருந்தேன்.
கொஞ்சம் பயமாகவும் இருந்தது. காரியம் முடிந்து விட்டதே, காரியம் செய்து விடுவார்களோ என… இல்லை இல்லை … ரஷியாவில் கண்டிப்பாக சாக மாட்டேன் … கார் வந்தது… ரயில் நிலையம்… ஹெல்சிங்கி ஹோட்டலுக்குப் போகும் தெருவில் யாரோ என்னை உற்றுப்பார்ப்பது போல ஓர் உணர்வு … சுற்றி முற்றிலும் பார்த்தேன் தூரத்து கட்டிடத்தில் சன்னலின் வழியாக துப்பாக்கியில் குறி பார்த்துக் கொண்டிருந்தான். அதன் எதிர் கட்டிடத்தில் அவனை ஒருவன் குறி பார்த்துக் கொண்டிருந்தான். ஆக இரண்டு குழுக்கள் என்னைப் பின் தொடர்கின்றன…. ஒன்று என்னைப் பாதுகாக்க , இன்னொன்று என்னைத் தீர்த்துக் கட்ட …. யார் முந்தப் போகின்றார்கள் எனத் தெரியவில்லை … சுடப்படலாம்… சுடப்பட்டும் தப்பிக்கலாம் … சுடப்படாமலும் போகலாம்…
உங்களின் அவசரம் புரிகின்றது. உங்களுக்கு அந்த தமிழ் நாட்டு அரசியல் தலைவருக்கு நான் பினாமியா இல்லையா என்பது தெரியவேண்டும் ஒருவேளை நான் காப்பற்றப்பட்டால் நாளை என் பேஸ்புக்கில் கண்டிப்பாக சொல்கின்றேன். துப்பாக்கி வெடித்தது.
9
இது ஒரு ஸ்பாம் கதை
”கார்த்தி, சின்னப் பிரச்சினை” என அதிகாலையிலேயே என் நண்பர் அப்பாவி கணேசன் எழுப்பினார்.
அப்பாவி கணேசன் பிரச்சினை என்றாலே அது ஒரு சின்னப் பிரச்சினையாகத்தான் இருக்கும். சின்னப் பிரச்சினை என்றால் கண்டிப்பாக ஒரு மொன்னையான பிரச்சினையாகத்தான் இருக்கும் என எரிச்சலுடன் எழுந்தேன்.
“பேஸ்புக்ல, 16 வயசுப் பெண் தற்கொலைப் பண்ணிக்கிற வீடியோன்னு ஒன்னு வந்துச்சு”
“யோவ், அதை எல்லாம் ஏன் பார்க்கிறீர்… அது ஸ்பாம்… நீங்க கிளிக் செஞ்சீங்கன்னா, உங்க பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் அது போகும்”
“ அது தெரியும் கார்த்தி, இது ஸ்பாம் மாதிரி இல்லை, வீடியோவே இருந்துச்சு, அந்தப் பொண்ணு நிஜமாவே தற்கொலைப் பண்ணிக்குது”
“அப்போ , ஏதாவது சினிமா டிரெயிலர் ஆ இருக்கும்,படுத்துத் தூங்குங்க கணேசன்”
”கார்த்தி, கொஞ்சம் சீரியஸா கேளு … அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிற ரூம்ல என் போட்டோ மாட்டி இருக்கு, திரும்பத் திரும்ப வீடியோவைப் பார்த்துட்டேன், அதுல என் போட்டோ இருக்குது, ரொம்பப் பயமா இருக்கு”
“கணேசன், அந்த வீடியோ லிங்கை எனக்கு அனுப்புங்க, மதியானம் பார்க்குறேன்”
அதன் பின்னர் எனக்குத் தூக்கம் வரவில்லை. எனக்கும் அடிக்கடி இந்த மாதிரி ஸ்பாம் வீடியோக்கள் , பாருங்கள் பாருங்கள் டீன் ஏஜ் பெண், திறந்து காட்டுகின்றாள் என அடிக்கடி பேஸ்புக் டைம்லைனில் மேல் எழும்பும். யாஹூ காலத்தில் இருந்து பார்க்க வேண்டியதை எல்லாம் மெய்யாகவும் மெய்நிகராகவும் எதார்த்தமாகவும் பதார்த்தமாகவும் பார்த்துவிட்டதால், வெற்று ஆர்வம் கூட வந்தது இல்லை. கடைசியாக வீடியோ சாட்டில், நான் பார்த்தது காத்தரீனாவைத்தான், மால்மோவில் இருந்தபொழுது நிஜத்தில் அறிமுகமானவள், பின்னர் நான் ஸ்டாக்ஹோல்ம் வந்தபின் அடிக்கடி வீடியோ காதல் எங்களுக்குள் நடக்கும். கல்யாணம் செய்து கொள்ள வேண்டினாள், காதலுக்கும் காமத்திற்கும் இடையில் கல்யாணம் அவசியமில்லை என்ற மறுநாளில் இருந்து அவளைக் காணவில்லை.
“கார்த்தி, கார்த்தி” எனத் திரும்ப என்னை உலுக்கினார்.
“யோவ் , என்னய்யா.. இப்போ”
“கார்த்தி, யார் பார்க்கிறாங்களோ , அவங்களுக்கு எல்லாம் அந்தப் பொண்ணோட ரூம்ல, அவங்க அவங்க போட்டோ வருது”
“கணேசன், இது சிம்பிள் ட்ரிக் ஆ இருக்கும், பேஸ்புக் போட்டோஸ்ல எதுனாச்சும் ஒன்னை ஆட்டோமெடிக் ஆ எடுத்துட்டு, அந்த வீடியோல சேர்க்கிற மாதிரி அப்ளிகேஷன் எழுதி இருப்பானுங்க… நோ வொர்ரீஸ்”
“அட , ஆமாம் கார்த்தி, எல்லோருக்கும் அவங்க புரபைல் போட்டோஸ் தான் வருது… கார்த்தினா கார்த்திதான்… பிரில்லியண்ட் பாய்”
நல்லத்தூக்கம் தூங்கி எழுந்து, சாயங்காலம், கணேசன் எனக்கு அனுப்பி இருந்த அந்த வீடியோவை ஓடவிட்டேன். ஒரு பெண்ணின் கைகள் தெரிந்தது. மணிக்கட்டை அறுத்துக் கொள்கின்றாள். ரத்தம் சொட்டு சொட்டாக பொங்கி வழிகின்றது. மறுகையால், வெப்காம் பொசிஷன் சரி செய்யப்படுகின்றது. சுவற்றில், எனது படம் இருக்கின்றது… இருங்கள் இருங்கள்… அது என் பேஸ்புக் புரபைல் போட்டோ இல்லை. அது மால்மோவில் எடுத்தது. அந்தப் படத்தை எடுத்தவள் காத்தரீனா. அந்தப் படத்தை இதுவரை எங்குமே இணையத்தில் ஏற்றியதில்லையே….
வெப்காம் மீண்டும் சரி செய்யப்படுகின்றது .. அந்தப் பெண்,,,, அது காத்தரீனா….
—–
10
இறந்த பின்
”கார்த்தி, அந்த அரதப் பழசான சைக்கிளை புது வீட்டிலேயும் கொண்டு வந்து வைக்கனும்னு அடம் பிடிக்கிறாருடா உன் அப்பா”
அம்மா குறிப்பிடும் மிதிவண்டி என் அப்பா வழி தாத்தாவின் உடையது. அந்த தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆனாலும், அப்பா அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாய் பராமரித்து வருகின்றார். ஒன்றிற்கு இரண்டு கார்கள், மூன்று மோட்டார் பைக்குகள் என வீட்டில் இருந்தாலும் அந்த சைக்கிளும் அவற்றிற்கு இணையாக வாசலில் நிற்கும்.
“பழைய பேரீச்சம்பழம், ஈயம் பித்தாள” என தெருவில் குரல் கேட்கும்பொழுதெல்லாம் அப்பாவைத் தவிர அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிப்போம்.
அந்த அசட்டையான நமுட்டு சிரிப்புகளை ஐந்தாறு வருடங்கள் கழித்து இன்னும் எட்டு மணி நேரத்தில் மீண்டும் அனுபவிக்கப் போகின்றேன். பிராங்பர்டில் விமானம் ஏறியாகிவிட்டது. அருகில் ஓர் அமெரிக்கன். கையில் ஒருப் புத்தகம். வளைந்து நெளிந்து புத்தகத்தின் பெயரை ஒரு வழியாகப் பார்த்துவிட்டேன். ”Energy of life” என எழுதி இருந்தது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. நாசாவின் இலச்சினை ஓர் ஓரத்தில் இருந்தது.
விமானம் வானில் நிலைபெற்ற பின்னர், அரைவாசிப் புன்னகையைக் கொடுத்ததற்கு முழுப்புன்னகையையும் கொடுத்தார்.
தன்னை “தனடோஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
”நாசா, வாழ்வியல் மேலாண்மையைப் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கின்றதா?” எனக் கேட்டேன்.
மென்மையாய் சிரித்துவிட்டு, சன்னமான குரலில், “அதிரகசியமான ஆய்வைப் பற்றியப் புத்தகம் இது, இந்த விமானம் சென்னை போய் சேர்ந்துவிட்டால், அந்த ஆராய்ச்சியின் கடைசிப் பரிசோதனையும் வெற்றி “ என்றார்.
”அப்படி என்ன வகையான ஆராய்ச்சி” என்றேன்.
”நாம் அனைவரும் இறந்த பின், அந்த ஆற்றல் எங்கேப் போகின்றது ?” என்ற அவரின் கேள்வி வடிவேலுவின் ”மூனைத் தொட்டது யாரு” நகைச்சுவை நினைவுக்கு வந்தது. இன்னும் எட்டு மணி நேரம் பொழுது போகவேண்டுமே, பேச்சுக் கொடுத்தேன்.
“நம்பிக்கையாளராக இருந்தால், சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகும், பகுத்தறிவாளராக இருந்தால், இயற்கையோடு கலந்துவிடும்”
”நான் ஒரு விஞ்ஞானி, ஆக இயற்கையோடு கலந்துவிடுகிறது என எடுத்துக் கொள்வோம். அப்படி இருக்கையில் அந்த ஆற்றலை வழிமறித்து நமக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும் தானே”
”புரியவில்லையே” சிரிக்காமல் சுவாரசியமாகக் கேட்டேன்.
“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்ற முடியும் இது அடிப்படை விதி, ஆக, இறந்த ஆன்மாவை பிடித்து ஏன் வேறுவகை ஆற்றலாக மாற்றி பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்பதான ஆராய்ச்சி அது”
உண்மையோ பொய்யோ , இந்த வகையான விசயங்களை எனக்கு கேட்கப் பிடிக்கும்.
“வல்லரசுகள் ஏன் போர்களில் ஈடுபடுகின்றன?”
”கனிம, எண்ணெய் வளத்திற்காக?”
”ஆம், அவற்றுடன், போரினால் அழியும் ஏகப்பட்ட உயிராற்றல்களுக்காகவும்”
புதுவகையான கான்ஸ்பிரைஸி தியரியாக இருந்தது.
“இப்பொழுதெல்லாம், போர்களில் வல்லரசுகள், புதுவகையான குண்டுகளைப் பயன்படுத்துகின்றன, அந்தக் குண்டு உடலில் பாயும்பொழுது, குண்டில் உயிராற்றல் சேகரிக்கப்பட்டுவிடும்”
நான் பதில் பேசவில்லை.
”பின்னர் அந்த ஆற்றலை, எரி சக்தியாகவோ, மின்னாற்றலாகவோ மாற்றிவிடுவோம்”
“எவ்வளவு நாட்களுக்கு ஓர் உயிராற்றல் வரும்”
“நல்ல கேள்வி, ஓர் இயந்திரத்திற்கு உயிராற்றலை ஆற்றல் மூலமாக கொடுத்துவிட்டால், முடிவிலா காலம் வரை அந்த இயந்திரம் தொடர்ந்து இயங்க, அந்த ஆற்றல் போதுமானது. இந்த விமானம் கூட சோதனை ஓட்டமாக ஓர் ஆன்மாவின் ஆற்றலால் தான் முதன் முறையாக இயக்கப்படுகின்றது”
மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லேலூயா ஹரே கிருஷ்ணா அளவிற்கு பில்ட் அப் கொடுக்கின்றாரே என நினைத்துக் கொண்டேன்.
“யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு வல்லரசு ரகசியத்தை உன்னிடம் சொல்கின்றேன் , கவனமாகக் கேட்டுக்கொள், அடுத்தப் பத்து வருடங்களில், உலகத்தின் மக்கள் தொகையில் பாதி திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும், மக்களின் உயிர்கள் எல்லாம் எந்திரங்களுக்கு உயிராற்றல் மூலங்களாக மாற்றப்பட்டுவிடும்”
“ஏன் விலங்குகளின் உயிராற்றலை எடுத்துக் கொள்ளக்கூடாதா, எதற்கு சாமானிய மனிதர்களைக் கொல்ல வேண்டும்” எனக்குள் இருந்த மனிதாபிமானி விழித்துக் கொண்டான்.
“நல்ல கேள்வி, இயற்கைக்கு ஒவ்வாத ஓர் உயிரினம் எதுவென்றால், மனித இனம் மட்டுமே, மனித இனம் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும், இயற்கையின் சமனிலை பாதிக்கப்படாது…அதனால் தான் மனித உயிர்களை நாங்கள் எடுக்க முடிவு செய்தோம்”
அதன் பின்னர் நான் ஒன்றும் பேசவில்லை. சாப்பாடு வந்தது, சாப்பிட்டேன். அதன் பின்னர் அவரை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. கதைக் கேட்க சுவாரசியமாகவும் திகிலாகவும் இருந்தாலும் அது எல்லாம் சாத்தியப்படுமா எனக்கு நான் கேட்டுக்கொண்ட கேள்விக்கு , சாத்தியமில்லை என மனசாட்சி சொன்னது.கட்டுக்கதைகளைப் பரப்பிவிடும் கோஷ்டியைச் சேர்ந்தவராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
அவ்வப்பொழுது ஓரக்கண்ணால் பார்த்தபடி இருந்தார். சென்னை விமான நிலையத்தில் விமான தரை இறங்கியது. விமானத்தை விட்டு வெளியேப்போகையில் தனடோஸ், விமானிகளிடம் இறுக்கமாக கைகளைக் குலுக்கி வெளியேறினார்.
–
எனது வீட்டின் புதுமனைப் புகுவிழா விற்கு வந்து இருந்த அனைவரும் கேட்டது, திருஷ்டிக்காக அந்த பழையை சைக்கிளை வைத்து இருக்கிறீர்களா என்பதுதான். அன்று மாலை அப்பாவிடம் அந்த சைக்கிளை யாரிடமாவது கொடுத்துவிடலாம எனக்கேட்டேன்.
“குன்றத்தூர் போகலாமா, வடபழனி போகலாமா” எனக்கேட்டார்.
“வடபழனி” என கார் சாவியை எடுத்தேன்.
“இல்லை சைக்கிளில் போகலாம் வா” எனக்கூப்பிட்டார்.
அந்த சைக்கிளில் தாத்தா இறப்பதற்கு அவருடன் கொரடாச்சேரி கிராமத் தெருக்களில் சுற்று போக சிறுவனாக இருக்கும்பொழுது ஏறியது. அதன் பின்னர் இன்றுதான் ஏறுகின்றேன்.
ஆற்காடு சாலை போக்குவரத்து நெரிசலில், என்னை பின்புறம் வைத்து சைக்கிளை எந்த சிரமமும் இன்றி அப்பா ஓட்டிக்கொண்டு வந்தார். சைக்கிளில் ஒரு மிதிக்கு கிட்டத்தட்ட நூறு மீட்டர்கள் தூரம் சர்வசாதாரணமாக ஓடியது.
“கார்த்தி, இந்த சைக்கிள் எனக்கு ஏன் முக்கியம் தெரியுமா, இந்த சைக்கிளுக்குள்ள என் அப்பாவோட உயிர் இருக்குன்னு நினைக்கிறேன், இப்போகூட நான் பெடல் பண்ணல, அவரே ஓட்டுறாருதான்னு எனக்கு ஒரு நம்பிக்கை, அவரோட ஆன்மா, இந்த சைக்கிளுக்குள்ள இருக்கு … அந்த நம்பிக்கைக்காத்தான் இந்த சைக்கிள் வச்சிருக்கேன், உன் அம்மாவுக்குப் புரியாது, நீயாவது புரிஞ்சுக்கோ”
அப்பா சொன்ன தாத்தா செண்டிமெண்ட் கதைக்குப் பின்னர் , அதில் இருந்த உணர்வுப் பூர்வ இழையையும் தாண்டி, தனடோஸ் சொன்னது உண்மையாக இருக்குமோ என நம்பத் தொடங்கினேன்.
—–
11
ஆன்மா
அணுஅணுவாய்த் துடித்துக் கொண்டிருக்கும் உயிரைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட கருணையுடன் கொலை செய்துவிடுவதே சரி என்ற நல்ல எண்ணத்துடன், டாக்டர் ரிக்கார்டோ கொடுத்த விஷ ஊசியைப் போட்டு எனது நாய் சீசரைக் கொன்று , தோட்டத்தில் புதைத்தேன்.
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என்னுடன் வளர்ந்த நாய். சீசர் என்னிடம் இருந்து அன்பையும் , சீசரிடமிருந்து நான் துணிவையும் ஒருவருக்கொருவர் பெற்றுக்கொண்டோம். ஒரு ரோஜாப்பூச்செடியை புதைத்த இடத்தில் நட்டுவிட்டு , டாக்டர் ரிக்கார்டோவைப் பார்க்க கிளம்பினேன். தூரத்தில் தெரியும் அந்த மலைப்பிரதேசத்தில்தான் வசிக்கின்றார். ஸ்விட்சர்லாந்தில் டாக்டராக இருந்தவர், அங்கு சந்தித்த இத்தாலியப் பெண்ணைக் காதலித்ததால் அவளைப் பின் தொடர்ந்து, ரோமிற்கு வந்து அவளையேத் திருமணம் செய்து கொண்டு இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்.
ஆனால் அந்த மனைவியை அவரின் வீட்டில் பார்த்ததே இல்லை. நான் போகும் சிலசமயங்களில் முப்பது வயது மதிக்கத் தக்கப்பெண் அடுப்படியிலோ தாழ்வாரத்திலோ வேலைசெய்து கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கின்றேன். அறுபது வயது ரிக்கார்டோவிற்கு முப்பது வயது பெண் தோழி என நானே நினைத்துக் கொண்டேன்.
வேறு சில சமயங்களில் ஸ்விஸ் ஜெர்மன் பேசும் சில நடுத்தர வயதினர் எண்பதுகளில் இருக்கும் நடை உடை பாவனையுடன் ரிக்கார்டோவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நான் வந்தவுடன் ரிக்கார்டோ அவர்களை தோட்டத்திற்கோ அல்லது வெளியேவோ அனுப்பிவிடுவார். சில நாட்களில் யாருமே வீட்டில் இருக்க மாட்டார்கள்.
ரிக்கார்டோவின் வீட்டிற்கு போகும்பொழுதெல்லாம், அக்கம்பக்கத்தினர் , ஏதோ பஞ்சாயத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த வீட்டிற்கு செல்லுபவரைப் பார்ப்பதைப்போல விசித்திரமாகப் பார்ப்பார்கள். ஒருவேளை டாக்டர் சமூகவிரோத செயல்கள் ஏதேனும் செய்கின்றாரா என ஒரு சந்தேகம் கூட எனக்குண்டு.
“டாக்டர், இவ்வளவு நட்பான நீங்கள், ஏன் அண்டை அயலார்களுடன் பழகுவதில்லை?”
“மனிதர்களைக் காட்டிலும் ஆன்மாக்கள், உனக்குப் புரியும்படி சொல்லவேண்டுமானால் பேய்களையே எனக்குப் பிடித்திருக்கின்றது” அவருடன் ஆன முன்றாவதோ நான்காவதோ சந்திப்பில் இதைச் சொன்னார்.
”என்னைக் கவனித்துக் கொள்வதில் இருந்து, இந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் பரிமாரிப்பவர்கள் அனைவரும் பேய்களே… இதோ நீ குடித்துக் கொண்டிருக்கும் சிவப்பு வைனைக் கூட தயார் செய்ததும் ஓர் ஆன்மாவே”
அதன் பின்னர் அவரின் வீட்டில் எதுவும் சாப்பிடுவதோ குடிப்பதோ கூட கிடையாது. மருத்துவம், தத்துவம், அரசியல், ஆன்மிகம் என அனைத்தையும் கரைத்துக் குடித்த மக்களின் தத்துவார்த்தப் பேச்சு, சில சமயங்களில் திகிலூட்டுவதாகக் கூட இருக்கும். விளங்கமுடியாத தத்துவங்களே திகிலைக் கொடுக்கின்றன.
மெத்தப் படித்ததால், மூளைக் குழம்பிப் போய் இல்லாத விசயங்களை தன்னுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம். ஒரு வேளை என்னைப் பயமுறுத்துவதற்காக கதை கட்டுகின்றார் அல்லது நிஜமாகவே அவர் பேய்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவர் அவர் வீட்டின் வெளிச்சம் , ஒழுங்கமைப்பு, வாசனை எதுவுமே பேய்வீட்டிற்கான அடையாளங்களையோ அல்லது பைத்தியக்கார பிரசன்னத்தையோ தராது.
ரோமில் இருந்து அறுபது கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் இந்த ரிக்கார்டோவின் மலைக்குக்கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன்.
அன்றைய ஸ்விட்சர்லாந்து ஜெர்மனிய தினசரிகள் அவரின் மேசையின் மேல் தென்பட்டன. என் பார்வையின் கேள்வியைப் புரிந்து கொண்டவற்போல
“இவை எல்லாம் என்னால் விடுதலை செய்யப்பட்டவர்கள் கொண்டு வந்து தருவது… ” என்றார்.
”ஸ்விட்சர்லாந்தில் எல்லாம் சட்டப்பிரச்சினைகள் கிடையாது, விடுதலை வேண்டும் என விரும்பியவர்களை எல்லாம் எளிதாக விடுவித்து விடுவேன், அவர்கள் காலம் கடந்தும் விசுவாசமாக இருப்பார்கள்”
ஏற்கனவே குடித்து இருப்பார் போல, தொடர்ந்து போதையில் பேசினார்.
”உனக்குத் தெரியுமா, ஒரு நாள், என் மனைவிக்கு விடுதலை கொடுத்தபொழுது, இந்தத் தெரு மக்கள் என் மனைவியை நான் கொலை செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துவிட்டனர்”
நான் முகத்தில் காட்டிய அதிர்ச்சியைப் பார்த்தபடி,
“கொஞ்ச நாள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தேன், பின்னர் என் மனைவியே நீதிமன்றம் முன் வந்து , தனது விருப்பத்தின் பேரில்தான் விலகிப்போனேன் என சொன்ன பிறகுதான் விடுதலை செய்யப்பட்டேன்”
“இது எப்பொழுது நடந்தது டாக்டர், உங்கள் மனைவி இப்பொழுது எங்கிருக்கிறார்”
“என்னுடன் தான் இருக்கிறாள், நீ கூட பார்த்திருப்பாய்…. அவள் திரும்ப வந்த பிறகே விடுதலைப் பெற்றவர்களின் விசுவாசத்தை உணர ஆரம்பித்தேன்… இன்றுடன் முப்பதுவருடங்கள் ஆகின்றன , அது சரி சீசருக்கு விடுதலைக் கொடுத்துவிட்டாயா ”
விடுதலை என்ற வார்த்தையின் நெருடலை உணர்ந்தபடி “ம்ம்ம்” என்றேன்.
“சரி, எனக்கும் விடுதலைக் கொடுத்துவிடு” என ஊசியுடன் கூடிய மருந்தை என்னிடம் நீட்டினார்.
மாடிப்படியில் இருந்து இறங்கி வந்த, அந்த முப்பது வயது பெண்மணியும் ரிக்கார்டோவிற்கு விடுதலைத் தரச்சொன்னார். தோட்டத்தின் பக்கம் இருந்து வந்த ஸ்விஸ் நபர்களும் அதையேச் சொன்னார்கள். வாசலில் வந்து நின்ற காலையில் மண்ணோடு மண்ணாகப் புதைத்த சீசர் நாயும் ஆமோதிப்பதைப்போல குரைத்துக் காட்டியது.
“விடுதலைப் பெற்றுத்தருபவர்களிடம் காலம் கடந்தும் விசுவாசம் காட்டப்படும்” என ரிக்கார்டோ திரும்பத் திரும்பச் சொல்ல, எல்லாம் புரிந்தபடி விச ஊசியை அவரின் மேல் செலுத்தினேன்.
ஸ்விட்சர்லாந்தில் பிரபலமான கருணைக் கொலை டாக்டர் ரிக்கார்டோ , ரோமில் அவரது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் மறுநாளைய தலைப்புச் செய்திகள்.
எனது வீட்டுத்தோட்டத்தில் சீசருடன் ரிக்கார்டோவும் அவரின் மனைவியும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ரிக்கார்டோவின் ஸ்விஸ் நண்பர்கள் வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருக்கின்றனர்.
நான் கருணைக்கொலைகள் ஏற்புடையதா என்பதைப் பற்றியக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.
—–
12
மாங்கல்யம் தந்துநானே
நான் மூக்குவிடைத்த சாதியைச் சேர்ந்தவன் என்பது அம்முவிற்கும் , அவள் காது துடிக்கும் சாதியைச் சேர்ந்தவள் என்பது எனக்கும் இன்று தான் தெரியும். நாங்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றோம் என்று எங்கள் வீட்டில் செய்தியை சொன்னபொழுது, எங்களின் அம்மாக்கள் கேட்ட முதல் கேள்வி,..
“அவங்க என்ன ஆளுக”
அப்பாக்களைக் காட்டிலும் அம்மாக்கள் சாதி அபிமானங்களை அதிகம் கொண்டிருக்கின்றனர்.
“என்னடா கார்த்தி, காது துடிக்கிறவனுங்க, இன்னக்கி நமக்கு சமமா இருக்கிற மாதிரி இருக்கலாம், ஒரு காலத்தில் எங்க தாத்தா அவங்களை எல்லாம் மதிக்கவே மாட்டாரு” என் அம்மா இப்படி சொல்லிவிட்டார் என்பதை மிகவும் வருத்தமாக அம்முவிடம் சொன்னபொழுது, அவளின் அம்மா மூக்குவிடைத்த சாதியைப் பற்றி மிகக் கேவலமாக சொன்னதை சொல்லி என்னைத் தேற்றினாள்.
அம்மு பாசம் காட்டுவதில் மட்டும் “நெஜமாத்தான் சொல்றியா” வகை பெண்ணாக இருந்தாலும், நிறையவே முற்போக்கு அரசியல் சிந்தனைகளைக் கொண்டிருப்பவள். என்னைப்போல் அவளுக்கும் எளிமையான சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம்.
“ஏண்டா கார்த்தி உனக்கு இந்த நினைப்பு, உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிய விசயம், நல்லநாள் அதுவுமா, வாழ்த்தாம வசவா பாடிட்டு இருப்பானுங்க, ஒரு மரியாதையும் வேண்டாம்… எனக்கு சடங்கு சம்பிராதாயம் எல்லாம் முக்கியம்…“
அம்முவிற்கு கிட்டத்தட்ட இதே பதில்தான். பெரியாரைப் புரிந்து இருந்ததால் , மூக்கும் காதும் இந்த ஒரு புள்ளியில் இணைவது வியப்பைத் தரவில்லை.
அம்முவைப்போல் எனக்கு எப்படியாவது பிரச்சினை இல்லாமல் திருமணம் முடியவேண்டும் என்ற பயம் இருந்ததால் சமாதானத்திற்கு தயாரான பொழுது, எனது அப்பா ஒரு யோசனையை சொன்னார்.
அம்மா ஏற்கனவே தேர்ந்து எடுத்து வைத்திருந்த புரோகிதரிடம் திருமண சடங்குகளுக்கு முன்பதிவு செய்ய நானும் அப்பாவும் தான் போனோம். புரோகிதர் ஆங்கிலத்தில் தான் பேசினார். இடையிடையே மணிப்பிரவாள நடைப்போல கொஞ்சம் தமிழும் நிறைய சமஸ்கிருதமும் வந்து விழுந்தது.
“தமிழில், திருமண வாழ்த்து வசனங்களை சொல்ல வேண்டும், அதற்கான தமிழ் இலக்கியப்பாடல்கள் குறள்களை நாங்களே தருவோம்”
”நோ இட் ஈஸ் இம்பாஸிபிள், நீங்க வேற ஆளைப் பார்த்துக்கோங்க. … இல்லாட்டி திக காரவாளை கூப்பிட்டுக்கோங்க”
என வெளியில் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டினார்.
இந்த புரோகிதர் தான் வேண்டும் என அம்மா ஒற்றைக்காலில் நின்றார். இனி அம்மாவிற்குப் பதில் சொல்ல வேண்டுமே…எனக் கையைப் பிசைந்து கொண்டிருந்த பொழுது,
அப்பா என்னை புரோகிதரின் அலுவலகத்திற்கு வெளியே நிற்க வைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றார். வரும்பொழுது சிரித்துக் கொண்டே ”புரோகிதர் தமிழுக்கு சம்மதித்துவிட்டார் “ என்றார்.
அன்பும் அறனும் உடைத்தாயின் எனத் தொடங்கி தமிழ் வாழ்த்துப்பாக்களுடன் அந்த புரோகிதரால் திருமணம் சிறப்பாகவே நடத்தி வைக்கப்பட்டது. சாப்பாட்டை விட, திருமணத்திற்கு வந்தவரெல்லாம் தமிழ் மந்திரங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
சாவகாசமாக , அப்பாவிடம், எப்படி அந்த புரோகிதர் சம்மதித்தார் எனக் கேட்ட பொழுது
“அவர் வழக்கமாக வாங்கும் பணத்தை விட, இரண்டு மடங்கு தருவதாக சொன்னேன், ஒப்புக்கொண்டார்”
“அட..” இது எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே என நினைக்கையில் அப்பாவே தொடர்ந்தார்,
”இன்னொன்றை கவனித்தாயா, அவர் பூணூல் கூட போட்டிருந்திருக்க மாட்டார், அதற்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தேன்”
—-
13
ரயில் பயணம் ஒன்றில்
இந்த இட்டாலோ அதிவேக தனியார் ரயில் வெனீஸ் நகரை நோக்கி கிட்டத்தட்ட முன்னூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. வெனீஸ் நகரத்திற்கு எல்லோரும் ஜோடியாக ஊர் சுற்றப்போவார்கள். நான் வியாபர நிமித்தமாய் தனியாகப் போய் கொண்டிருக்கின்றேன்.
ஒரு வரிசையில் மூன்று இருக்கைகள், இடதுபுறத்தில் ஒற்றை இருக்கை, நடுவில் நடப்பதற்கான நல்ல அகலமான பாதை, வலது புறத்தில் இரண்டு அகலமான இருக்கைகள், இப்படியான ரயில் பெட்டியில் எனது பயணம். எனக்கு வலதுபுறம் சன்னலோரத்தில் இருந்த பெரியவர் , ரோமில் தூங்க ஆரம்பித்தவர், பொலொன்யா நிலையம் வர சற்று முன்னர்தான் தான் இறங்கும் முன்னர் எழுந்தார், இறங்கிப் போய் விட்டார். நீங்கள் நினைப்பது படி நான் உடனே சன்னல் ஓரம் மாறிக்கொள்ளவில்லை. இந்த நெடும் பயணத்தில் முக்கால் வாசி தூரம் குகைப்பாதைகள் தான்.வேடிக்கைப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. மேலும் நான் என்னிடத்திலேயே அமர்ந்து கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எந்த இனத்து ஆணாக இருந்தாலும், ஆண்களுக்கே உரிய சபலம் , எனக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு. ரோமிற்கு வந்து இறங்கியதில் இருந்து பார்க்கும் வசீகரமான இத்தாலிய பெண்களை எல்லாம் கண்களால் காதல் செய்து கொண்டிருக்கின்றேன். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன, நேரிடைக் காதல் செய்ய வசீகரத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றேன்.
நடக்கும் பாதைக்கு அந்தப் பக்கம் ஒற்றை இருக்கை இருக்கின்றது என சொன்னேன் அல்லவா, அங்கு ஒரு இத்தாலியத் தேவதை அமர்ந்து இருக்கின்றாள். காலை இறுக்கப்பிடிக்கும் லெக்கின்ஸின் மேல், முட்டிக்கு கொஞ்சம் மேலே வரை வரும்படி ஒரு குட்டைப்பாவாடை அணிந்து இருக்கிறாள், அதுவும் உட்காரும்பொழுது, கிட்டத்தட்ட தொடை வரை வந்துவிட்டது, என் பார்வையில் இருந்து தப்பிக்க அவளும் பலமுறை அதை இழுத்துவிட்டுக்கொண்டே இருக்கிறாள். இடுப்புக்கு மேல் நான் வர்ணிக்காதன் காரணம், வர்ணனைத் தரப்படாதவை சிறப்பானவை… நான் அவளைக் கவனிக்காத பொழுது என்னைப் பார் யோகம் வரும் வகையில், சீண்டல் பார்வை வேறு தந்து கொண்டிருக்கின்றாள். அவளது மடிக்கணினியில் ஏதோ ஒரு கிளுகிளுப்பான காட்சி வேறு ஓடிக்கொண்டிருந்தது.
இவள் வெனீஸை சேர்ந்தவளாக இருந்தால், வார இறுதிக்கு சந்திக்க தூண்டில் போடலமா என யோசிக்கையில், இருக்கையை விட்டு எழுந்தாள். மடிக்கணினியை பையினுள் வைத்தாள். தனது குளிருக்கான மேலங்கியை அணிந்து கொண்டாள், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நகர, படோவா நகரம் நெருங்குகின்றது என அறிவிப்பு வந்தது.
மகிழ்ச்சி பலூன் உடைந்த சோகத்தில் , அடுத்த நிமிடத்தில் வந்தடைந்த ரயில் நிலையத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். படோவா நிலையத்தில் மீண்டும் நகர ஆரம்பித்த பின்னர் அவள் அந்த இடத்தில் மீண்டும் பழைய படி அமர்ந்து இருந்ததைக் கவனித்தேன்.
அடடா.. கழிவறைக்கு சென்று வந்திருக்கிறாள். தன் அத்தனை உடைமைகளையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு போவதற்கு, என் மேல் இருக்கும் பயம் கூட காரணமாக இருக்கலாம், நாங்கள் இருவரும் இருக்கும் இந்த ரயில் பெட்டியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்தனர். வருத்தமாக இருந்தாலும், அவள் திரும்ப வந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. சபலங்கள் அவமானங்களைப் பொருட்படுத்துவதில்லை.
°நீயும் வெனீஸ் நகரத்திற்குத்தான் போகிறாயா° என ஆங்கிலத்தில் கேட்டேன். சபலங்கள் அசட்டுத் தைரியங்களையும் தரும்.
இத்தாலிய உச்சரிப்பில், ஆங்கிலம் பேசினாள். இன்னும் சரியாக 45 நிமிடங்கள், நடுவில் வெனீஸ் நிலப்பகுதி ரயில் நிலையம், இதற்குள் நட்புக்கு அடிப்போட்டுவிட்டால், வார இறுதிக் கொண்டாட்டமே…
எதிர்பார்த்ததைவிட, நட்பாகப் பேசினாள். வெனீஸ் மெஸ்ட்ரே ரயில் நிலையம் நெருங்க, இயற்கை உந்துதல் எட்டிப்பார்க்க, கழிவறையை நோக்கி செல்லும்பொழுது,
”பார் , நீ யாரையும் நம்பாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுப்போனாய், நான் மனிதர்களை நம்புபவன் ”
என்பதை , என் கண்களில் அவளுக்குக் காட்டுவதாக நினைத்துக் கொண்டேன்.
கழிவறைகள் தான் நிஜமான போதி மரங்கள், வண்டியின் ஆட்டம் நின்றது. அவசரம் அவசரமாக கையைக் கழுவிக்கொண்டு, கழிவறைக் கதவைத் திறக்கும் முன்னர் இருந்த மைக்ரோ வினாடிகளில் என் யோசனை எல்லாம், அவள் அங்கு இருப்பாளா, என் உடைமைகள் எல்லாம் பத்திரமாக இருக்குமா, என்பதாகத்தான் இருந்தது.
—-
14
பத்து ஈரோக்கள்
விமானநிலையங்களில் காணக்கிடைக்கும் முத்தங்கள் கிளர்ச்சியைத் தராது. ஒவ்வொரு செக்-இன்னிற்கு முன்னாலும் குட்டியாகவோ நீண்டோ, வழியனுப்பு முத்தங்கள் கொடுக்கப்பட்டு பெறப்பட்டுக் கொண்டிருந்தன. விடியற்காலையில், எழுந்தபொழுது இருந்த சோம்பல், விமானநிலையத்தை அடைந்ததும் காணாமல் போனது.. சோம்பல் இல்லாவிட்டாலும் அம்மு நிறைய சோகமாகவே இருந்தாள். அம்முவை வழியனுப்ப நான் வந்திருக்கின்றேன்.
சில வருடங்களுக்கு முன்னர், முதல் முத்தத்தை வெட்கப்பட்டுக்கொண்டே கொடுத்ததைப்போல, முப்பதாயிரத்து முன்னூற்று சொச்சத்து முத்தத்தையும் வெட்கம் கலந்து கன்னத்தை தடவியபடி கொடுத்துக் கொண்டிருந்தாள். வெள்ளைக்கார ஜோடிகள் கொடுத்துக் கொண்டிருப்பதை எல்லாம் கவனிக்காது, இருபது அடி தூரத்தில் இருந்து, சுடிதார் அணிந்து இருந்த நடுத்தர வயது அம்மணி, எங்களையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். முத்தங்கள் கொடுக்கும்பொழுது நான் கண்களை மூடுவதில்லை, ஓரக்கண்ணால் அம்முவையோ, பொதுவிடங்களில் முத்தம் கொடுத்தால், சுற்றத்தையும் கவனித்துக் கொண்டே இருப்பது உண்டு.
அந்த சுடிதார் அணிந்து இருந்த அம்மணி வங்காளதேசத்தவராகக் கூட இருக்கலாம். ரோம் நகரத்தில் ஏகப்பட்ட வங்காளாதேசத்தினர் வசிக்கின்றனர். வங்காளதேசமோ, பாகிஸ்தானோ, உத்திரப்பிரதேசமோ, என்னைப் பொருத்தவரை எல்லோருமே வட இந்தியர்கள். நான் கவனித்ததை அந்த அம்மணி கவனித்தது, தாவணிக்கனவுகளில் பாக்யராஜ் காசுப்போட்டு, தங்கைகளை திசைத்திருப்புவதைப்போல , தன் குழந்தைகளை வேறுப்பக்கம் திருப்பிக்கொண்டார்.
“கார்த்தி, இந்தாடா இனிமேல் எனக்கு ஈரோக்கள் தேவைப்படாது, தேவைன்னாலும் நான் கார்ட்லேந்து எடுத்துக்கிறேன்” என அவளிடம் இருந்த சில பத்து ஈரோத்தாள்களைத் திணித்தாள்.
“இல்லை அம்மு, ஆம்ஸ்டர்டாம் ல பிளைட் மாறுறப்ப தேவைப்படும்” சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது
நெடிய ஆப்பிரிக்க கறுப்பு மனிதன், தனது சுமைகளைத் தள்ளிக்கொண்டபடி, வருத்தம் தோய்ந்த முகத்துடன் எங்களை அணுகி
”எனது பணப்பையைத் தொலைத்துவிட்டேன், ஊருக்குப்போக பயணச்சீட்டு எடுக்க 174 ஈரோக்கள் தேவைப்படுகின்றது, ஏனையவர்களின் உதவிகளினால் 164 ஈரோக்கள் கிடைத்துவிட்டது, இன்னும் பத்து ஈரோக்கள் இருந்தால் பயணச்சீட்டு எடுத்துவிடுவேன்” சொன்னது
திருச்சி பேருந்து நிலையத்தில் , “அண்ணே, ஊருக்குப்போற வச்சிருந்த காசைத் தொலைச்சிட்டேன், பத்து ரூவா கொடுங்கண்ணே” எனக் கேட்பதுப் போலவே இருந்தது.
“கார்த்தி, பாவம்டா, காசு கொடுக்கலாண்டா, பத்து ஈரோதானே”
“இல்லடா அம்மாடி, எனக்கு என்னமோ நம்பிக்கை வரல, திருச்சியா இருந்துருச்ச்சுன்னா, நானே டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு அனுப்பி இருப்பேன், இங்க எல்லாத்தையும் 70 ஆல் பெருக்கிப் பார்க்க வேண்டியதாக இருக்கு”
“ஒரு வேளை நிஜமாகவே தேவைப்படுறவரா இருந்துச்சுன்னா, பெரிய உதவியத்தானே இருக்கும், பத்து பேர் ஏமாத்துனாலும், ரெண்டு பேருக்காவது நிச்சயம் உதவி தேவைப்படும்”
நாங்கள் எங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த கறுப்பன், சோகமாக நாங்கள் தரமாட்டோம் போல என்பதாக மெல்ல நகர, ஒரு நிமிடம் என்னையும் அம்முவையும் அந்த ஆளின் நிலையில் வைத்துப் பார்த்தேன். காசு இல்லாமல் தெரியாத ஊரில் சிக்கிக் கொண்டால்… ஒரு பத்து ஈரோத்தாளுடன் சில சில்லறைகளையும் சேர்த்து, அந்த கறுப்பனின் கையில் கொடுத்தேன். வாயினால் நன்றி சொல்வதைவிட , அவன் கண்களில் நன்றி சொன்ன விதம் நிஜமாக உதவித் தேவைப்படுபவன் போல இருந்தது.
அவன் டிராலியைத் தள்ளிக் கொண்டே சனக்கூட்டத்தில் மறைந்துப் போனான், விமானத்திற்கு நேரம் ஆக, அம்முவும் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் இடத்திற்கு வழியனுப்பிவிட்டு, இந்த ஆப்பிரிக்கன் வேறு எங்கேயாவது தென்படுகின்றானா என டெர்மினல் ஒன்றில் இருந்து டெர்மினல் 3 வரை அலசிப்பார்த்துவிட்டேன். அவனைப் பார்க்க முடியவில்லை. பயணச்சீட்டு எடுத்து செக் இன் செய்து இருப்பானோ…. ஒரு பத்து ஈரோக்களுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை என என்னை நான் சமாதனப்படுத்திக் கொண்டு,
சட்டையில் எஞ்சி இருந்த அம்முவின் வாசத்தோடு , வீடு திரும்ப, பேருந்தில் ஏறியபொழுது , தூரத்தில் அந்த கறுப்பன்,. டிராலி இல்லாமல் , ஹாயாக சுமைகளின் மேல் அமர்ந்து கால் மேல் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.
மறுநாள், அம்மு ஊருக்குப் பத்திரமாகப் போய் சேர்ந்தவுடன் போன் செய்து முதலில் கேட்டது
“அந்த கறுப்பன், பத்திரமா ஊருக்குப் போய் இருப்பான்ல… ”
“ம்ம்ம்… “ நான் வெறும் ம்ம் மட்டும் சொன்னால் கடுமையான மனநிலையில் இருக்கின்றேன் என்பதை அம்மு புரிந்து கொள்வாள்.
“உனக்கு எப்போதும் சந்தேகம் தான்….. ஏமாத்துனாக் கூட ஒன்னும் பெரிய விசயம் இல்லை… பாவம் ரோம்ல விக்கிற விலைவாசில, அதிகப்பட்சம் ஒரு வேளை சாப்பாடு சாப்பிடப்போறான் … போயிட்டுப்போறான் விடு கார்த்தி ”
சில வினாடிகள் மௌனத்திற்குப்பின்னர் “ஐ லவ் யூ அம்மு” என்றேன்.
15
வந்தேறிகள்
தட்டுக் கழுவும் வேலைக்கு இத்தனைப் போட்டி இருக்கும் என நான் என்றுமே நினைத்தது கிடையாது. வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பரோட்டா கடையில் வாரா வாரம் மாறும் தட்டுக் கழுவும் பிஹாரி வேலைக்கார பையன்கள் நினைவுக்கு வந்தனர். 10 ரூபாய் பரோட்டாவைத் தின்று விட்டு அவர்களை நான் விரட்டிய விரட்டிற்குதான் இங்கு இருக்கின்றேனோ என சமயங்களில் தோன்றும். சாம பேத தான தண்ட முறைகளைப் பயன்படுத்தி இந்த ஐநூறு ஈரோ பெறுமான வேலையப் பெற நான் பட்ட பாடு இருக்கே அது சொல்லி மாளாது.
வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு ஆறு மாதங்கள் ஆவது, ஐரோப்பாவில் ஆங்கிலம் பேசாத நாடு ஒன்றில் மாணவனாக வாழ வேண்டும். இந்த வேலையைக் கூட, ஏதோ நான் கலெக்டர் வேலையைத் தட்டிப்பறிந்து கொண்டதைப்போல இந்த உணவக மேலாளர் அடிக்கடி சீண்டுவான். செய்கூலி சேதாரம் எல்லாம் பார்த்தால் கால்படி கூடத் தேறாது என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிடுவதுண்டு.
“ஐரோப்பாவின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு காரணம் என்னவென்று நினைக்கிறாய்”
ஆஹா சீண்டுகின்றான் எனத் தெரிந்தது.
“அரபு, ஆப்கானிஸ்தான் அகதிகள், அப்புறம் இந்த கருப்பர்கள்” , இந்தியர்கள் எனச்சொல்லுவதைத் தவிர்த்துவிட்டேன்.
”எங்களது சமுதாயம் சார்ந்த மறுமலர்ச்சிகளை உன்னைப்போன்றோர் பயன்படுத்திக்கொள்கின்றனர்” எனது மேலாளர் சொன்ன உன்னைப்போன்றோரில் அவன் கண்களுக்கு இந்தியர்களாக தெரியும் அனைவரும் அடங்கிவிட்டனர்.
நான் இருக்கும் புறநகரப்பகுதி காலங்காலமாய், வலதுசாரி அரசியல் அனுதாபிகளைக் கொண்டது. வெளியில் இருந்து வந்தவர்களை உள்ளே விட்டதில்தான் அத்தனைப் புனிதமும் போய்விட்டது என்ற கருத்து சன்னமாக அனைவரிடமும் பரப்பப்பட்டும் வருகின்றது. சிறுபான்மையினர் அதிகமாகும்பொழுது, பெரும்பான்மையினர் தகவமைத்தலில் ஒன்றாகத்தான் சேர்வார்கள். வலதுசாரி தேசியம் பேசுபவர்கள் பழம்பெருமையை உசுப்பேற்றி மக்களைத் தன்பக்கம் ஈர்ப்பார்கள். முசௌலினி கூட, ரோம சாம்ராஜ்யத்தை மீளுருவாக்கம் செய்வோம் எனச்சொல்லித்தான் பதவிக்கு வந்தாராம்.
அகதிகள், மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைப்பார்க்கும் கூலிகள் எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர்கள். இதில் ஏதோ ஒரு தென்னிந்தியாவின் ஆனந்தா சாமியார் வேறு முகாம் போட்டு இருக்கிறார். தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆசிரமத்தில் கிடைப்பதால் பக்தி படுவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது என்ற பேச்சு வேற.
10 சதவீதத்திற்கு மேல் இருக்கும் வந்தேறிகளால் நிச்சயம் இந்தப்பகுதியின் பொருளாதாரம் மேம்படுகின்றது. பணப்புழக்கம், உணவகங்கள், குடியிருப்புப் பகுதிகள் என 15 வருடங்களுக்கு முந்தையதைக் காட்டிலும் கண்டிப்பாக இந்தப் பகுதி பெரும் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை மண்ணின் மைந்தர்கள் உணர்வதில்லை.
”இந்த முறை, அகதிகளை வெளியேற்றும், வெளிநாட்டவர்களின் வருகையை குறைக்கப்போகும் வலதுசாரி கட்சிதான் ஆட்சிக்கு வரப்போகிறது, நீ எல்லாம் உன் பிச்சைக்கார நாட்டிற்குத் திரும்ப ஓடிவிட வேண்டும்” என மேலாளர் போதையில் நக்கல் அடிக்க கக்கூஸில் வைத்து அவனை மூக்கில் மூன்று முறை குத்தினேன்.
வேலை போன பிறகு கொஞ்ச நாள் இந்தி தெரியாமலேயே ஒரு பஞ்சாபி கடையில் வேலைப்பார்த்தது சிரமமாகத் தெரியவில்லை. கூலிகள் மட்டுமே தேவைப்படும் இந்த நாட்டில், என் மேலாண்மை படிப்பிற்கு வேலைக் கிடைக்கும் எனத் தெரியவில்லை. ஒரு மாதம் வேலைத் தேடியதில் எதுவும் சரிப்பட்டு வராததால் தமிழ்நாட்டிற்கேத் திரும்பினேன். ஆண்ட பரம்பரையை மீட்போம், வந்தேறிகளை விரட்டுவோம் என எனக்குப்பிடித்த திரைப்பட இயக்குனர் ஒருவர் கையை உயர்த்தியபடி வசீகரமாக இருந்த போஸ்டர் என்னை வரவேற்றது. அவரது வசீகரத்தில், நான் மூக்கில் குத்திய உணவக மேலாளரின் முகம் நிழலாடியதையும் சொல்லித் தான் ஆகவேண்டும்.
வந்த ஒரு மாதத்தில் ஒட்டு மொத்த ஐரோப்பிய வாழ்க்கையில் சந்தித்த மேலாளர்களை விட அதிகமான வந்தேறிகளை விரட்டும் தமிழ் பேசும் மானேஜர்களை சந்தித்துவிட்டேன். மூக்குவிடைப்பு சாதி ஒன்றின் தலைவரான எனது சூனாபானா மாமா கூட, தமிழ் தேசியம் பேச ஆரம்பித்துவிட்டார். எனது அப்பாவைத் தவிர, எனது சொந்தங்கள் அவரின் பேச்சை வைத்தக் கண் வாங்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர். முதன் முறையாக தமிழ் தேசியம் சார்ந்த உணர்வு பயமாக மாறியது.
16
உள்ளுணர்வு
இதை செய், இதை செய்ய யோசி இப்படி அடிக்கடி உள்ளுக்குள் இருந்து அடிக்கடி மணி அடித்துக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் அந்த உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்க மாட்டேன். அட என்னதான் நடக்குதுன்னு பார்த்திடலாமேன்னு ஓர் அசட்டுத் துணிச்சல்.
சில வருடங்களுக்கு முன்னர், இடதுப்பக்கம் போகாதே அங்கு ஒரு சோகம் இருக்கிறது, என உள்மனது சொன்னபொழுதும், அதையும் மீறி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில், அம்முவை அவளின் கணவனோடும் அழகான குழந்தையோடும் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால் கூட சங்டமாக இருந்திருக்காது, பார்த்து சிரித்தும் வைத்தாள்,அதன் பின்னர் பழைய மின்னஞ்சல்களை வாசித்தலில் இரண்டு நாட்களுக்கு தூக்கம் போனது.
ஒன்பதாவது படிக்கும் பொழுது கணக்காசிரியர் , பத்தாவது பாடத்திற்கான சிலக் கணக்குக் கேள்விகளை கவனக்குறைவில் எங்களுக்கான காலாண்டு வினாத்தாளில் சேர்த்துவிட , எங்கள் வகுப்பில் எவனும் 60 விழுக்காடுகளைத் தாண்டவில்லை. நான் எடுத்தது நூற்றுக்கு நூறு.
ஆச்சரியப்பட்ட வாத்தியாருக்கு எனக்கான பதில்.
“ஏற்கனவே அடிக்கடிப் போட்டுப் பார்த்த கொஸ்டின்ஸ் மாதிரி இருந்துச்சு சார்”
அதற்கடுத்த வருடம் 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் நான் கணக்குப்பாடத்தில் நூற்றுக்கு நூறு. இது மாதிரி ஏகப்பட்ட உதாரணங்கள், இப்பொழுது வேலைப் பார்க்கும் ஆஸ்திரியா நிறுவனத்தில் ,முதல் வருடத்தில் , ஒருமுறை தெரியாத நிரலி வகையில் நண்பனுக்கு உதவி செய்தேன், ஸ்நான பிராப்தமே இல்லாத ஒன்றில் அகஸ்மாத்தாக செய்த உதவி பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பின்னர் அந்த நிரலிமுறைகளை கடந்த ஆறு மாதங்களில் கற்றுக்கொண்டேன்.
ஐந்து வயதாக இருக்கும்பொழுது, மலைக்கோட்டை அருகில் அப்பாவின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு சாரதாஸிற்கு செல்லும் கூட்டத்தை வேடிக்கைப்பார்க்கையில், எங்களைக் கடந்த இரண்டு வெள்ளைக்காரர்களை என் அப்பா காட்டி,
“அங்கப் பாரு, இங்கிலீஷ்காரனுங்கப் போறாங்க”
“அப்பா அவங்க இங்கிலீஷ் காரங்க இல்லை, அவங்கப் பேசுறது ஜெர்மன்”
நடுவில் கொஞ்சம் அடங்கி இருந்த எச்சரிக்கை மணியோசைகள், அடுத்து நடக்கப்போவதற்கான குறிப்புகள் கடந்த பத்து நாட்களாக அடிக்கடி வந்துப் போகின்றன. ஏதோ நானே இன்னொரு உருவம் எடுத்து எனக்குள் வந்தமர்ந்து கொண்டது போல. கிறிஸ்துமஸ் புது வருட விடுமுறைக்கு ஊருக்குப் போகாதே , வியன்னாவிலேயே கொண்டாடு என்று சொல்லிய உள்ளுணர்வை நான் கேட்கவில்லை. உனக்கு ஏதோ தப்பு நடக்கப்போகிறது என்ற உள்ளுணர்வை கேட்கவில்லை. ஆழ்வார் திருநகர் வாசுதேவன் வீட்டில் குடிக்க முடிவு செய்த பொழுது, வேண்டாம் பெசண்ட் நகரில் இருக்கும் ரங்கநாதன் வீட்டில் வைத்துக் கொள் என்று சொன்ன மன ஓசையையும் கேட்கவில்லை.
காமராஜர் சாலை வழியாகப் போகாதே - நான் கேட்கவில்லை
நேரா லாமெக் பள்ளி வழியாகப்போ – கேட்கவில்லை.
குறுக்க நாய்கள் வரலாம் மெதுவாகப்போ – கேட்கவில்லை
“நாய் வருது, பிரேக் அடி”
சின்ன கல்லில் தலையில் அடிபட்டு அதோ அங்கே கிடக்கிறேன்.
அறிவுகெட்ட முண்டம், செத்துப் போன என்னை நானே திட்டிக் கொண்டேன். எத்தனைத் தடவைதான் ஆன்மாவாக கடந்த காலத்திற்கு வந்து உள்ளுணர்வாக உதவி செய்வது, ஒவ்வொரு முறையும் இப்படி அல்ப ஆயுசில் செத்துப் போக வேண்டியாதாயிருக்கு. கடைசியா இன்னொரு முறை முயற்சிப் பண்ணப்போறேன். ஒரு வேளை என்னை நான் காப்பாற்றி விடலாம், அது சரி, என் சோகக் கதை இருக்கட்டும், நீங்கக் கூட, என்னை மாதிரி உள்ளுணர்வை எல்லாம் கேட்கமா இருக்காதீங்க, Intuitions could be your own soul coming back from the time of your death and foretelling and warning you the things that had already been experienced.
17
குழூஉக்குறிகள்
தேவதைகளைப் பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகிவிடுகின்றனர் !! தேவதைகளுக்காக பிசாசுகளைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
என் குழந்தை அஞ்சலிப்பாப்பா
”கார்த்திபா, கார்த்திபா “ என்றபடி தனது பிஞ்சு மணிக்கட்டை காட்டி, சிணுங்கிக் கொண்டேஎன்னிடம் வந்தாள். அம்முவிற்கு கோபம் வந்தால், மணிக்கட்டில்தான் இரண்டு விரல்களை வைத்து சுள்ளென அடிப்பாள். காதலித்தக் காலங்களில் நானும் அடி வாங்கி இருக்கிறேன்.
அஞ்சலிப்பாப்பாவிற்கு ஜனவரியில் மூன்று வயது முடிகிறது. குழந்தைகளின் அற்புதமான காலக்கட்டம், இரண்டரை வயதில் இருந்து நான்கு வயது வரையிலான ஒன்றரை ஆண்டுகள். அந்தக் காலக் கட்டத்தில், பெண் குழந்தைகள் அம்மாவிடம் இருந்து விலகி, அப்பாவிடம் நெருங்கும் தருணங்கள் அலாதியானது. பாப்பாவின் மழலைத் தருணங்களைப் படங்களாக்கி சேமித்துவைத்துக் கொள்வதுதான் எனது பொழுது போக்கு.
மனைவி, தன் கணவனின் குழந்தைப் பருவத்தைக் காண ஆண் குழந்தையையும் , கணவன், தன் மனைவியின் குழந்தைப் பருவத்தைக் காண பெண் குழந்தையையும் விரும்புவார்கள் என்பதை எங்கேயோப் படித்தது என்னளவில் உண்மைதான்.
”ஏன் அம்மு, பாப்பாவை அடிச்சே”
“கார்த்தி , எல்லாம் நீ கொடுக்கிற செல்லம், பிரிட்ஜை தொறந்து சாக்லேட் எடுக்குறா… கொஞ்சவா சொல்ற.”
அம்மு கோபமாய் இருக்கிறாள் என்பது , கார்த்தியுடன் வழக்கமாக வரும் பா விகுதி இல்லாதன் மூலம் தெளிவாகத் தெரிந்தது. அஞ்சலிப்பாப்பா என்னிடம் நெருக்கமாக இருந்தாலும், என்னுடைய மேனரிசங்களை இமிடேட் செய்ய மாட்டாள். அப்படியே அம்முவைப்போலத்தான், அவளின் பெரிய குளிர்க் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்வது, அவளின் செருப்பை மாட்டிக்கொண்டு நடப்பது, கார்டூன் பார்க்கும்பொழுது, இரண்டு கைகளையும் தாடையில் வைத்துக்கொள்வது , இடது கையை உபயோகப்படுத்தல் என அம்முவின் மினியேச்சர் வெர்ஷன் தான் அஞ்சலிப்பாப்பா. பாப்பாவிடத்து, நான் காணும் அம்முவின் குழந்தைக் காலத்தை, அம்மு சேட்டையாகப் பார்க்கின்றாள்.
அம்முவையும் நான் குழந்தையாகவே நடத்துவதால், ஒன்றும் சொல்லவில்லை, அவளைப் பார்த்து “சல்யூட்” எனச் சொல்லியபடி என் நெற்றியில் கைவைத்து ராணுவ வணக்கம் சொன்னேன். அது முத்தத்தைக் குறிக்கும் ஒரு ரகசிய சொல். கல்லூரியில் ஒன்றாகப் படித்தபொழுது, யாருக்கும் ஐயம் வராதபடி, வணக்கம் சொல்வதையே சங்கேதமாக மாற்றிக்கொண்டோம். சில சமயங்களில் பியானோ என்ற வார்த்தையையும் பயன்படுத்துவோம், அது ஹேராம் படத்தின் அசைவ எபெக்ட். வேறுசில வார்த்தைகளும் உண்டு, அவை மறந்துப் போய்விட்டன.
பாப்பாவின் வரவிற்குப்பின் , சுவாரசியம் கருதி, அம்முவிடம் சங்கேதமாகப் பேசினால் கூட, பத்துக்கு ஆறு தடவை திரும்ப சல்யூட் வராது. மீதி தடவைகளில் சல்யூட் கொடுக்காமல் நிஜமாகவே வந்து தந்துவிட்டுப் போய் விடுவாள். குறிப்பால் உணர்த்திக் குறிப்பாகக் கிடைக்கும் மகிழ்ச்சியை இழந்து கொண்டிருக்கிறேனோ என யோசித்தது உண்டு. அம்முவை தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் அவளைத் திருமணம் செய்தது, ஆனால் தனது தேவதைத் தன்மையைக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு தெரிவையாக இருக்கின்றாள்.
”நானும் பாப்பாவும் ரவுண்ட் போறோம், நீ வர்றீயா அம்மு”
”எங்கேயாவது போங்க, நான் வரல,”
குளிருக்கான உடைகளை ஜம்மென்று அணிந்து கொண்டு, பாப்பாவை குழந்தை வண்டியில் வைத்துக்கொண்டு வெளியே வர,
“கார்த்தி, பனியில இறக்கிவிடாதே, சாக்லேட் வாங்கித் தராதே “ என்று அம்மு அறிவுறுத்தினாள்.
வழியில் கடைக்குப்போனோம்., பாப்பா சாக்லேட்டை கைக்காட்டினாள். அதன் அடையாளமும் ருசியும் தெரியும் , பெயர் தெரியாது.
சாக்லேட் சாப்பிட்டபடி நீண்ட நேரம் பனியில் விளையாடினோம். சாக்லேட்டிற்கு “ஒன்னுமில்ல” என்றப் புதியப் பெயரை பாப்பாவிற்கு கற்றுக்கொடுத்தேன். பனியில் விளையாடினோம் என்பது “வேடிக்கப்பார்த்துச்சு” . என ஆனது.
அம்மா ஞாபகம் வந்துவிட்டது போல, தானாகவே வந்து வண்டியில் பாப்பா ஏறிக்கொண்டாள். போகும் வழியில் பனியில் விளையாடிய சுவடேத் தெரியாமல் பனித்துகள்களை எல்லாம் உதறியாகிவிட்டது. நல்ல பிள்ளைகளாய் வீட்டிற்குள் நுழைந்ததும் அம்முவிடம் ஓடிப்போய் கட்டிக்கொண்டது. கிரிக்கெட் ஹைலைட்ஸ் பார்க்க நான் மடிக்கணினியை துவக்க, அம்முவும் பாப்பாவும் பேசிக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு , விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பேஸ்புக்கிலும் கிரிக்கெட்டிலும் இருக்கும்பொழுது, அவர்களுக்கிடையிலான உலகத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றேனோ !!
அன்று மாலையும் , நானும் பாப்பாவும் வெளியேப்போக கிளம்பிக் கொண்டிருக்கையில், அம்மு,
”கார்த்திபா, நானும் ஒன்னுமில்ல சாப்பிட, வேடிக்கப்பார்த்துச்சு விளையாட வர்றட்டா ” என்றபடி எனக்கு சல்யூட் வைத்தாள். பாப்பாவும் அதை இமிடேட் செய்தது.
பகிர்ந்து கொள்ளப்படும் குழூஉக்குறிகள் அருஞ்சொற்களாகின்றன. தேவதைகளின் அம்மாக்களும் தேவதைகள்தான், எப்பொழுதும் தேவதைகளுக்குள் ரகசியங்கள் இருப்பதில்லை. தேவதைகளை பனி மழையில் மனதிலும் கைபேசியிலும் படமெடுத்துக் கொண்டபடி, பாக்கியம் பெற்ற ஒரு சேவகனாகப் பின் தொடர்ந்தேன்.
18
கசங்கியத் தாளில் எழுதப்பட்டிருந்த கதை
கையில் சிக்கும் தாள்களில் எழுதப்பட்டிருப்பதை எல்லாம் படிக்கும் கார்த்திக்கு அன்றும் ஒரு கசங்கிய காகிதம் சிக்கியது,
அந்த சிக்கிய காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததை அவனுடன் நீங்களும் வாசியுங்கள்.
—-
ஒத்திப்போடுவது என்பது தப்பித்தலுக்கான வழி. முடிவு யாருக்கு
வேண்டுமோ அவரை, ஓர் உறுதியற்ற நிலையிலேயே அல்லாட வைத்தல்.
அது நேரடி நிராகரித்தலை விட அதிகமான வலியைக் கொடுக்கக்கூடும்.
கிடைக்குமா கிடைக்காதா என்றத் தவிப்பை நீட்டிக்க வைத்து சில நாட்களோ , மாதங்களோ ,வருடங்களோ,கழித்து சாதகமான முடிவை சொன்னால் பிரச்சினை இல்லை, ஒரு வேளை எதிர்மறையாய் இருந்தால்
பீலிபெய் சாகாடும் போல ஆகிவிடுமே!! சில முடிவுகளை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என எடுக்க முடியாது.
ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் இடையில் கோடிக்கணக்கான புள்ளிகள் இருக்கின்றன. அத்தகைய ஒரு புள்ளி தான் ஒத்திப்போடல்.
அம்முவிற்கும் எனக்கும் ஒன்றரை தலைக்காதல் ஓடிக்கொண்டிருக்கிறது. அவளுக்கு என்னை அப்படியே பிடித்து இருக்கின்றது. எனக்கும் முழுதாகத்தான் பிடித்து இருக்கின்றது, ஆனால் கடந்தகாலங்கள் நிகழ்காலங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட வேண்டியிருப்பதால், பிடித்ததில் பாதி காணாமல் போய்விடுகிறது. எனக்குப் பெண்களைப்பிடிக்கும்,
அதுவும் சாண் ஏறி முழம் சறுக்கினாலும், மீண்டும் மீண்டு வரும் ஃபீனிக்ஸ்களை அதிகமாகவேப் பிடிக்கும்.
பதின்மங்களிலும் ஆரம்ப 20 களிலும், கட்டினால் இவளைக் கட்டனுமடா என்ற வகையில் கற்பனைசெய்து வைத்திருந்த லட்சியக் கனவு தேவதைதான் அம்மு. இடையில் வந்த சிலப்பல மாதிரி அம்முக்களால், தற்கொலை செய்து கொண்ட கனவு லட்சிய தேவதை மீண்டும் உயிர்த்தது கடைசி சில
மாதங்களாக.
ஆண்கள் பக்கம் பக்கமாக எழுதி சொல்லும் உணர்வுகளை பெண்கள் ஒரு வரியில் எழுதிவிடுவார்கள். ஒரு இனிய மாலைப்பொழுதில் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்து காதலிக்கின்றேன் என்ற ஒரு வார்த்தை கவிதையையும் எழுதி விட்டாள்.
எனக்கு வந்த நிராகரிப்பான “உங்களை நான் பிரண்டாத்தான் நினைச்சேன்” மாதிரியான கேனைத்தனமான விசயங்களை எல்லாம் சொல்லி அம்முவைத் தட்டிவிட விருப்பம் இல்லை.
உண்மைகளை அப்படியே சொல்லலாம், கொஞ்சம் தற்குறிப்பேற்றி கதைகளாகவும் சொல்லலாம். பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்வதும் ஆணாதிக்கம் என்றாலும், அம்மு உண்மையிலேயே மென்மையானவள், மழலைக்கு ஊசிப்போடும் பொழுது, கொஞ்சம் மழலைத்தனங்களை முகத்தில் கொண்டு வந்து, வலிகுறைவாக இருக்கும்படி ஊசி போடுவது எப்படி என்பது மருத்துவருக்குத் தெரியும்.
சில வரிகள் கொண்ட கீழ்க்காணும் ஓர் உருவகக்கதை எழுதினேன்,
தலைமுறையாய் தொடரும் கிளிகளின் ஏமாற்றத்தை தவிர்க்க இது இலவமரம் , இங்கிருப்பது எல்லாம்
இலவம் பஞ்சின் காய்கள் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அதன் பின்னரும் கிளிகளின் வருகை தொடர்ந்ததைப்
பார்த்த மரம், இந்தக் காய்கள் என்றுமே கனியாகாது என்றும் எழுதிவைத்தது. அப்படியும் ஒரு கிளி வந்து காத்துக் கொண்டிருந்தது.
இந்தக் கிளியைக் காயப்படுத்தக் கூடாது என நினைத்த மரம், இலவங்காய்களைப் பழுக்கவைக்கவும் இல்லை,
பஞ்சாக மாற்றவும் இல்லை. Indefinitely wait shall continue !!
கதையை அவளின் மின்னஞ்சலுக்கு அனுப்பினேன். மனதில் இருந்து வரும் பதில்கள் சடுதியில் வரும், உடனடியாக அம்முவிடம் இருந்து மின்னஞ்சல்
”அவனுக்காக சிந்திய முதல் துளி கண்ணீர் கூட அழகுதான்… “
கடைசியில் இருக்கும் சிரிக்கும் பொம்மை ஏகப்பட்ட அர்த்தங்களைக் கொடுத்தது.
—–
படித்து முடித்த கார்த்திக்கு இது சிறுகதையா, வெறும் நாட்குறிப்பா, தொடர்கதையின் ஓர் அத்தியாயமா எனத் தெரியவில்லை. வழக்கமாகப் படித்தவுடன் காகிதங்களைத் தூக்கி எறிந்துவிடுபவன், இந்தக் கசங்கிய காகிதத்தை சீர்படுத்தி பத்திரப்படுத்திக் கொண்டான்.
19
கொஞ்சும் சாதி , கொஞ்சம் வன்முறை
காமம், காதல் அதற்கடுத்து, சாதி, வன்முறை என்ற வார்த்தைகள் கூட சமயங்களில் கிளுகிளுப்பைக் கொடுக்கும். என் கடைசித் தம்பியோட திருமண வரவேற்பு பலகைகளில் சுயசாதிப் பெருமை அடித்த என் மற்றோர் தம்பிக்கான சாதி அபிமானம் கூட அத்தகைய கிளுகிளுப்புதான்… ”சும்மா ஓட விட்டு ஓட விட்டு அடிச்சோம்” சூனாபானா மாமாவின் வன்முறை வேறு வகையான கிளுகிளுப்பு. அம்மு, கண்ணம்மாவாய் இருந்து காளியாத்தாவாய் மாறியிருக்கும் மாலைப்பொழுதுகளில் , நானும் இது மாதிரியான சமூகம் சார்ந்த சிந்தனைகளில் என்னை உள்ளிழுத்துக் கொள்வேன்.
கடலையும் அரட்டையும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த பேஸ்புக் மாதிரியான இணையத் தளங்களில் நடைபெறும் அரசியல் சண்டைகள் பார்க்க நன்றாகத்தான் இருந்தன. அரசியல் அபிமானங்களையும் மீறி , டமில் டம்ளர்ஸ் , டிராவிட சொம்புகள் என ஒருவொருக்கொருவர் கொடுத்துக் கொண்டிருந்தப் பட்டப் பெயர்களைப் படிக்கும்பொழுது குபீர் சிரிப்பு வரும். சோத்து மூட்டையை எடுத்துக் கொண்டு எந்த இழையில் சண்டை நடக்கிறதோ அதை கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் சமீப காலங்களில் சாதியும் சாதி சார்ந்த விசயங்களும் நீரில் அமுக்கியப் பந்தைப்போல மேல் எழுந்து வந்து கொண்டே இருந்ததைப் பார்க்கையில் மனிதனுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இடையில் நடைபெறும் கலப்பில் புதிய சமூகப்பரிமாணங்கள் உருவாகும் என்ற கூற்று பொய் என நினைக்கத் தோன்றியது. டிராவிட் பாய்ஸின் வழிபாடு
வேறுவகையில் இருந்தாலும் இந்த சாதி விசயத்தில் முன்மாதிரியானவர்கள், பொதுவில் எவ்வளவு வைத்து சலித்தாலும் , கொக்கிப்போட்டாலும் அவர்களின் சாதி அடையாளங்களைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நான் பார்த்தவரை, பெரும்பாலானா டிராவிட் பாய்ஸுக்கு சாதி அபிமானமும் கிடையாது.
நாங்கள் ஐஎஸ்ஒ பிரண்டட் சிங்கம், நாங்கள் பேண்ட் போட்ட பரம்பரை , சோழனின் அந்தப்புரத்தைக் கட்டியவர்கள், புலியைப் புணர்ந்தவர்கள், எக்ஸட்ரா எக்ஸட்ரா அடைமொழிகளுடன் இருந்தவர்கள் இருந்த
ஏதோ ஒரு டமில் லோட்டா குழுமத்தில் எனது கல்லூரிக்காலத்தைய நண்பர்கள் கூட அட்டைக்கத்தி சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கல்லூரிக் காலங்களைப் பற்றி அடுத்தப் பத்தியில் பார்க்கும் முன்னர்
லோட்டாவுடன் சம்பந்தபட்ட கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். லோட்டா என்பது டம்ளருக்கும் சொம்புக்கும் இடையிலான ஓர் அளவில் இருக்கும் பாத்திரம் நான் சிறு வயதில் லோட்டாவில் தான் காப்பி குடிப்பேன். அப்படி ஒரு நாள் குடித்துக் கொண்டிருக்கும்பொழுது, டிசம்பர் 6 ஆன்று சாக்லேட் கொடுத்து கொண்டாடிய பக்கத்து வீட்டு வாசுதேவன் சாரின் மகன் கிச்சா கேலி செய்யப் போக, பேச்சு தடித்து, கிச்சா கோபத்தில்
“நீங்கல்லாம் மாட்டுக்கறி சாப்ட்றவா, அம்மா சொல்லிருக்கா” எனச் சொல்லப்போக , அதைக் கேட்ட என் அம்மா,
“நாங்க யார் தெரியுமா, ஜமீன் பரம்பரை, எங்களைப் போய் எப்படி மாட்டுக்கறி சாதியோட சேர்க்கலாம்” என சண்டைக்குப் போய்விட்டார். இதற்காகவே சூனாபானா மாமா வை எஸ்டிடி போட்டு அழைத்து, அவரும் மருது பாண்டியர் படம் போட்ட காரில் வந்து இறங்கிய பின்னர் தான் அம்மாவின் ஆத்திரம் தீர்ந்தது. காரைப் பார்த்தப் பின்னர், வாசுதேவன் சாரின் குடும்பம் கொஞ்சம் குழைவாகவே நடந்து கொண்டது. எனக்கு தினமும் ஹிண்டு பேப்பர் கூட படிக்கக் கொடுப்பார்கள்.
இப்பொழுது கல்லூரிக்காலக் கதை, நான் மதுரையில் படித்த, 50 வருடங்கள் பழமையான பொறியியற் கல்லூரியில் இன்றைய நிலை எப்படி எனத் தெரியவில்லை. ஆனால் அப்பொழுது, உள்ளே நுழையும்பொழுதே மூக்கு விடைப்பு, காது அடைப்பு , உதட்டுப் பிளவை வைத்தே சாதியைக் கண்டுபிடிப்பார்கள். அப்படி ஏதுமில்லாதவர்கள் வெளுப்பாக இருந்தால் பகவத் கீதைப் படிக்கும் பேராசிரியர்களின் கீழும், என்னை விட கருப்பாய் இருப்பவர்கள் , விடுதிக்குப்பின்னால் இருக்கும் காட்டில் அல்லேலூயா படிக்கவும் போய்விடுவார்கள். இது எல்லாம் வந்த ஒரு மாதத்திலேயே நிகழ்ந்துவிடும்.
அம்மாவைப்போல அல்லாமல், எல்லா சாதிக்காரனின் விழாக்களிலும் சாம்பார் வாளித்தூக்கும் என் அப்பாவின் தாக்கம் எனக்கு இருந்தது. காமராஜர் இறந்த பிறகு டிராவிட மேனாக மாறியவர்.
”நம்மா சாதிக்காரன் அப்படின்னு சொல்லிட்டு வரவனை மட்டும் என்னக்குமே நம்பவே நம்பாதே” என அடிக்கடி சொல்லுவார்.
பிரபல மருத்துவமனையில் மூக்குவிடைப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் பிரியாணிக்காக கலந்து கொண்டேன். சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த கட்சியின் தமிழ்நாட்டுப்பிரிவின் இருபத்து எட்டாவது பிளவின் தலைவர் வந்து ”கத்தியையும் தீட்டவேண்டும், புத்தியையும் தீட்டவேண்டும்” என நீண்ட உரையாற்றியதால் பிரியாணி தாமதமாகத்தான் கிடைத்தது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர் தலைவராக இருந்தவரும் வந்து இருந்தார். அவருக்கும் மூக்கு விடைப்பாகவே இருந்தது.
“அடுத்த வாரம் செஷையர் ஹோம் போறோம், நம்மாளுங்க எல்லாம் வந்துடுங்க”
செஷையர் ஹோம் போன பிறகுதான் என்.எஸ்.எஸ் தலைவராக இருப்பதின் பலன்கள் தெரிந்தது. எல்லாப் பெண்களும் அவரைச் சுற்றியே இருந்தனர். அவரைச் சுற்றி எத்தனைப் பெண்கள் இருந்தனரோ அதே அளவிற்கு இன்னொருவரைச் சுற்றியும் கூட்டம் இருந்தது. அந்த சீனியர் அண்ணனின் அறைக்கும் சென்று இருக்கிறேன். பெரிய அளவிலான அம்பேத்கார் படம் இருக்கும். என்னை கேண்டின் அருகேப்பார்த்துவிட்டால், டீ பஜ்ஜி வாங்கிக் கொடுப்பார்.
இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் சம அளவிலான பலத்துடன் இருந்ததால் என்.எஸ்.எஸ் ற்கு இரண்டு தலைவர்கள் என பிற மாணவர்கள் சொன்னார்கள். பெரும்பாலும் விடுதிக்கு வெளியே இருக்கும் கவுண்டர் கடையில் ஒன்றாக இருப்பார்கள். ஒன்றாக திரைப்படம் போவார்கள். அவரவர் வண்டிகளின் பின்னால், நாங்கள் ஏங்கி ஏங்கிப் பார்க்கும் பெண்கள் அமர்ந்து இருப்பார்கள். சில நாட்களில் ஜோடிக் கூட மாறி இருக்கும். மூக்குவிடைப்பு அண்ணனை விட , டீ பஜ்ஜி வாங்கிக் கொடுப்பதால், மாட்டுக்கறி சாப்பிடுபவராக இருந்தாலும் டீபஜ்ஜி அண்ணனையே
பிடித்து இருந்தது.
”நம்ம பசங்களிலேயே நீ கொஞ்சம் தெளிவா இருக்கடா” என டீபஜ்ஜி அண்ணன் பாராட்டுவார். அடையாளச்சிக்கல்களை நான் பொருட்படுத்தியதில்லை.
கல்லூரியின் ஆண்டு விழாவில், நாட்டு நலப்பணித் திட்டத்திற்கான கொடுக்கப்படும் தங்கப்பதக்கம் டீ பஜ்ஜி அண்ணனுக்கு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களின் விடுதியில் பெரிய கலாட்டா நடந்தது. சண்டையில் குறுக்கே வந்தவர்களுக்குப் பலத்த அடி. தொடர்ந்த ஆண்டில் டீ-பஜ்ஜி அண்ணன் கைக்காட்டிய ஆள் தலைவராக நியமிக்கப்பட்டார். புதியத் தலைவருக்கு நானும் “நம்மாள்” என அடையாளம் காட்டப்பட்டேன். டீபஜ்ஜியை விட புகழ், கடலை, அதிகாரம் சுவையாக இருந்தது. கடைசி வருடத்தில் நானேத் தலைவரானேன்.
எனக்கு முந்தையத் தலைவர், எனக்கடுத்து வருபவர் “நம்மாளாகத்தான்” இருக்கனும் என உத்தரவிட்டிருந்தார். அடையாளச்சிக்கல்கள் தொலைந்து, அடையாளமே இல்லாது ஆனது, அதுதான் பிடித்து இருந்தது. எல்லோருக்கும் நல்லப்பிள்ளையாய் ஆன எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது, எனக்கடுத்தத் தலைவராக , மூக்குவிடைப்புகளாலும், நம்மாட்களாலும் பாசத்தால் குளிப்பாட்டப்பட்டேன். அதிகாரத்தை எட்டும் பொழுது, அற்பத்தனமாய் தொடரும் விசயங்களைக் கொஞ்சமேனும் அடித்து நொறுக்க வேண்டும்.
எனக்கடுத்த தலைவனாய், நான் என்ன சொன்னாலும் கேட்ட, எதிர்பார்ப்பற்ற ஒருவனைத் தலைவனாக்கி விட்டேன். அவனோட அறையில் பெரியார் படம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனக்கடுத்து என்.எஸ்.எஸ் தலைவனாக ஆன ஜூனியர் ,பத்து வருடம் போராடி காதலித்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். தன்னால் முடிந்தவரை சிலக்கிராமத்து மாணவர்களை பொறியியற் படிப்பு படிக்க வைக்கின்றான். என்.எஸ்.எஸ் மூக்குவிடைப்புத் தலைவரும், டீபஜ்ஜி அண்ணனும் மீண்டும் ஒன்றாகி தீவிரமாக ஒரு குழுமத்தில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருந்தார்கள், சொந்த சாதியில் தான் பெண் கட்டனும் என்ற பிரச்சினை பெரிய அளவில் ஆன சில வாரங்களில் அவர்கள் பேசிக்கொள்வதில்லை . சாதி சார்ந்த தேசியம் அமைக்க முடிவு செய்துவிட்டார்கள் போலும்.
அவர்கள் இருவருடன், எக்ஸ்ட்ரீம் டம்ளர்ஸ், லோட்டாஸ், கொஞ்சம் டூப்ளிகேட் டிராவிட் பாய்ஸ் என வன்முறைகளை வார்த்தைகளில் பரப்பிக் கொண்டிருந்த ஒரு நூறுப் பேரை பேஸ்புக்கில் இருந்து தூக்கிவிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அம்மு மீண்டும் கண்ணம்மாவாய் மாறி கூப்பிட்டாள்.
அம்முவைப் பிடித்தக் காரணங்களில் ஒன்று இதுவரை நான் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன் எனக் கேட்டதில்லை,அவள் எந்த சமூகம் எனவும் எனக்குத் தெரியாது. இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அவளிடம் எனக்கு மூக்கு விடைப்பாக இருக்கும் என்று போய் சொல்லிவிடக்கூடும். நீங்கள் இந்திய தேசியவாதியாக இருக்கலாம், தமிழ் தேசியவாதியாக இருக்கலாம், திராவிட தேசியவாதியாகக் கூட இருக்கலாம். சாதியால் என்றைக்கும் தேசியம் என்ன, சின்ன ஜமீன் கூட வாங்க முடியாது என உங்களுக்குத் தெரிந்துருப்பதால் சொல்ல மாட்டீர்கள். அப்படியே சொல்லிவிட்டாலும் பிரச்சினையில்லை, ஏனெனில் இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் இடம் பொருள் ஏவல் எல்லாம் ஒரு வேளை கதைக்காக மாற்றப்பட்டிருக்கலாம்.
—-
20
குறட்டை
நான் தூங்கப்போவதற்கு முன் என்னைக் கட்டிக்கொண்டுப் படுத்து இருந்தவள், விடியற்காலையில் அடுத்த அறையில் இருந்த சோஃபாவில் சுருட்டிக்கொண்டுப் படுத்திருந்தாள். எனக்கு இது புதிதில்லை. இரவில் இந்தக் கட்டிலில் படுக்கும் பெண்கள், விடியலில் அடுத்த அறையில்தான் விழிப்பார்கள்.
அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காப்பி .
போட்டு எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினேன். படுத்தோம் எழுந்தோம் என்றில்லாமல் , என் வீட்டிற்கு வருபவர்களை, அவர்கள் ஒரு நாள் இருந்தாலும், ஒரு வாரம் இருந்தாலும் இளவரசிக்களைப் போலக் கவனித்துக் கொள்வேன்.
பெண்கள் உறங்கும்பொழுதும் கூட தேவதைகளாகத்தான் தெரிகிறார்கள். தேவதையாய் உறங்கிக் கொண்டிருந்தவள் எழுந்தபின் பத்ரகாளியைப்போல என்னை முறைத்தாள். வெடுக்கென காப்பி கோப்பையை பிடுங்கிக் கொண்டவள்,
“கார்த்தி, உன்னிடம் இருக்கிற ஒரே பிரச்சினை, மனுஷியை ஒழுங்காகத் தூங்கவிட மாட்டாய்”
“அதற்காகத்தானே இரவை ஒன்றாகக் கழித்தோம்”
“நான் அதை சொல்லவில்லை, உன் குறட்டையை சொன்னேன், போனதடவையே, இனிமேல் உன்னிடம் வரவேக்கூடாதுன்னு நினைத்தேன், திரும்ப தவறு செய்துவிட்டேன்”
இவள் மட்டும் இல்லை, ஒவ்வொரு வார இறுதி தோழிகளும் சொல்லும் ஒரே பல்லவி இதுதான்.
தமிழ்நாட்டில் இருந்தவரை குறட்டை விடுவேனா இல்லையா எனத் தெரியாது.
ஒரு வேளை “புள்ள அசந்து தூங்கிட்டான்” என என் அம்மா சொன்னது குறட்டையை வைத்துதானோ !!
சுவீடனில் அறை நண்பன், என் குறட்டையப் பற்றி சொன்ன பொழுது நம்பவே இல்லை. ஒரு நாள் கைபேசியில் ஒளிஒலியும் காட்டிய பின்னர்தான் நம்பினேன். புல்லட்டில் ஆரம்பித்து, புல்லட் ரயில் கணக்காய் குறட்டை சத்தம் களை கட்டி இருந்தது. குறட்டையை குறை சொல்லிய நண்பர் ஒரே வாரத்தில் அறையை காலி செய்தார்.
அதன் பின் வந்தவர்கள் எல்லாம், குடியும் குடிசார்ந்தும் நண்பர்கள் அமைவதைப்போல குறட்டை சார்ந்த நண்பர்களாகவே அமைந்தார்கள். என்னளவிற்கு இல்லை என்றாலும் சுமாராக டிவிஎஸ் 50
அளவிலாவது வண்டியை ஓட்டிகொண்டிருந்தார்கள். பொதுவாக குறட்டையை நிறுத்துவது எளிது, ஒரு பக்க மூக்கின் மடலை லேசாக மூடி, சில வினாடிகள் வைத்திருந்தால், குறட்டை நின்று விடும். நான் அடுத்தவரின் குறட்டையை நிறுத்தக் கண்டுபிடித்த நுட்பம் அது.
“குறட்டை விடுபவர்கள் புத்திசாலிகள், நம்பகமானவர்கள். எல்லா வெற்றியாளர்களும் அற்புதமாக குறட்டை விடுபவர்கள், அலெக்ஸாண்டர் கூட குறட்டை விட்டுத்தான் தூங்குவாராம் !! படுக்கையில் வீரியமானவர்கள்” என்று நான் சொல்லும் கதைகளை நம்பினாலும்
“என் தூக்கம் போகின்றதே கார்த்தி, உனது குறட்டை மட்டும் இல்லாவிடில், என் மூட்டை முடிச்சுகளுடன் வந்து , உன் காலடியில் கிடப்பேன்”
என்று சொல்லியபடி தனது உடுப்புகளைத் தேடி எடுத்துக்கொண்டு போன வாரம் வந்தவளைப்போல நேற்றிரவு வந்தவளும் கிளம்பிப் போனாள். நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்பொழுது, என் குறட்டையே எனக்குக் கேட்டு,
தூக்கம் கலையும். அப்படி இருக்கும்பொழுது முழுக்குறட்டையை கேட்கும் பெண்களும் பாவம் தான்.
ஓரிரவுத் தோழமைகளை எனக்குத் தொடர எப்பொழுதும் விருப்பமிலாததால், குறட்டை காரணமாக சொல்லப்பட்டதை சாதகமாகத்தான் எடுத்துக்கொண்டேன். எனக்கு நெடுங்கால நட்பும் தேவையில்லை,
திருமணமும் தேவையில்லை. பெண்களுக்கு நம்மை பிடித்துவிட்டால் மடத்தை அடைய சாம பேத தான தண்ட அத்தனை முறைகளையும் பயன்படுத்தி எடுத்துக்கொள்வார்கள். ஒதுங்கி இருத்தலே நலம் என
தாமரை இலைத் தண்ணீர் போல இருக்கின்றேன்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு கடும் பணிச்சுமை இருந்ததால், மதுவும் மாதுவும் அன்றி நகர்ந்தது. அலுவலகத்தில் கேத்தரீனா என்ற பெண் புதிதாக வந்து இருந்தாள். பெண் என்றாலே வசீகரம் தான். எனவே வசீகரமாக இருந்தாள் எனச் சொல்லத் தேவை இல்லை. நான் அவளைப் பார்க்காத சமயங்களில் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெறும் வெள்ளைத் தோல்கள் இருக்கும் இடத்தில் மாநிறம் கொஞ்சம் அதிகமாகவே ஈர்க்கப்படும்தான்.
சிலர் வாழ்க்கையில் வரும்பொழுது, பொழுது போக்கிற்காக செய்யும் சில விசயங்களை மறந்துவிடுவோம். கேத்தரீனாவைப் பற்றி அடிக்கடி யோசிக்க ஆரம்பித்தேன். ஆண்கள் ஒரு பெண்ணைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறார்கள் என்றாலே காதல் என்று அர்த்தம். வெள்ளியிரவு அலுவலகம் முடிந்துப் போகையில் மாலை என்ன செய்யப்போகிறாய் எனக் கேட்டாள்.
குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கப்போகின்றேன் என்பதை சொல்லாமல், கௌரவமாய் பழைய கிரிக்கெட் வீடியோக்களைப் பார்க்கப்போகின்றேன் என்று பொய் சொன்னேன்.
“எங்கேனும் போய் சாப்பிடுவோமா “ எனக் கேட்டாள்.
சாப்பிட்டோம், குடித்தோம், நடமாடினோம், மீண்டும் குடித்தோம். வழக்கமாக மூன்றாவது சுற்றிலேயே, வீட்டுக்குத் தள்ளிக்கொண்டு வந்துவிடுவேன். இவளை அப்படி செய்ய மனது வரவில்லை. ரசித்துக் கொண்டிருக்கத் தோன்றியது. காமம் சாரா காதல் அழகாக இருந்தது. அவளை வீட்டில் இறக்கிவிட்ட பின்னர், உதட்டைக் குவித்து முத்தம் தர வந்தவளுக்கு கன்னத்தைக் கொடுத்துவிட்டு, வாஞ்சையா தலையைக் கோதி வழியனுப்பி வீட்டிற்கு வந்தேன். மண்வாசனை, மழைச்சாரல் கொடுக்கும் உணர்வுகளை, கடும்பனியிலும் அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
அடுத்த வாரம் கோழிக்கறியும் சோறும் சாப்பிட என் வீட்டிற்கு வந்தாள், எதுவானாலும் காமம் சாரா காதலை மட்டுமேத் தரவேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். வழக்கம்போல் ஏதாவது நடந்து, குறட்டையால் இவளைத் தொலைத்து விடக்கூடது என இருந்தேன்.
“ச்சிக்ஸ் அண்ட் சிக்கன் மேக் மை லைஃப் மோர் இண்டரஸ்டிங்” என்றதற்கு விழுந்து விழுந்து சிரித்தாள்.
தமிழ்த்திரைப்படம் ஒன்றை ஒன்றாகப்பார்த்தோம். கிரிக்கெட் பற்றி விளக்கினேன். ராமச்சந்திர குகாவின் புத்தகங்கள் ஒன்றைப் படிக்கக் கேட்டாள்.
“கார்த்தி, நீ மட்டும் கொஞ்சம் ஐரோப்பிய நிறத்துடன் இருந்தால் என் தந்தையின் சாயலில் இருப்பாய்” என்றாள்.
அடடா இதுதான் காரணமோ !! தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய பெண்களுக்கும் அவரவர் தந்தைகள்தான் நாயகர்கள் போல….
அவள் சொல்லி முடித்ததும், நானே முத்தமிட்டேன். டாஸ் போடாமலேயே ஆட்டம் ஆரம்பித்தது. கிரிக்கெட்டில்தான் டிரா அசுவராசியமானது.ஆனால் இங்கு சமநிலைதான் முக்கியம். விடியலில் கழுத்தைக் கட்டியபடி
நெஞ்சில் சாய்ந்து, யாரோ மூக்கின் ஒருப்பக்கத்தை மூடிவிடுவதைப்போல இருந்தது.
“என் குறட்டை உன்னைத் தொந்தரவு செய்யவில்லையா” என்றேன்.
“உன் பார்வையைப்போல, பாவனையைப்போல உன் குறட்டையும் கூட என் அப்பாவைப்போல !!! ”
“ம்ம்ம்”
“அவரின் குறட்டை பக்கத்துவீட்டிற்கு கூட கேட்கும், என் அம்மா எங்களை விட்டுப் போனதற்கு காரணங்களில் அப்பாவின் குறட்டையும் ஒன்று , அவரை விட உன் குறட்டை கொஞ்சம் குறைவுதான்”
“ம்ம்ம்”
“இப்படி ஒரு பக்கம் மூக்கின் மடலை மூடினால் , குறட்டை நிற்கும்”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”
நான் சொன்ன ஒவ்வொரு ம்ம்ம் ற்கும் ஒரு முத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தாள். இனி குறட்டையைப் பற்றியும் கும்மாளங்களைப் பற்றியும் நான் யோசிக்கவேண்டியதில்லை.
——-
21
ஆண்ட்ராய்ட் சொன்ன அம்மு கதை
வாசிக்கப்படும் புத்தகத்தின் கதாபாத்திரம் படிப்பவரின் மேல் காதலில் விழுவதைப்போல யாரேனும் ஒரு புதினம் எழுதவேண்டும் என டிவிட்டரில்
@Olligater என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
அதைப்படித்தவுடன் ஆரம்ப 2000 ஆண்டுகள் நினைவுக்கு வந்தன. நீங்கள் கடை இருபதுகளிலோ , முப்பதுகளிலோ இருப்பவர் ஆக இருந்திருந்தால், கண்டிப்பாக யாஹூ மின்னரட்டையையும் அதில், நிஜம் போலவே பேசும் பொம்மை அரட்டைப்பெண்களையும் அறிந்து இருப்பீர்கள். முதல் பத்து வாக்கியங்கள் உங்கள் மேல் காதல் வசப்பட்டவர் பேசுவது போலவே இருக்கும். நானும் முதலிரண்டு முறை ஏமாந்து இருக்கின்றேன். பின்பு பொம்மையா, உண்மையா என அறிய, கண்டபடி தட்டச்சு அனுப்பினால், நன்றி என பதில் வந்தால் பொம்மை, திட்டி வந்தால் உண்மை. அப்படியான ஒரு பொம்மை ஒன்று நம்மை நிஜமாகவே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும் என்பதை வெட்டியான பொழுதுகளில் யோசித்ததுண்டு.
Die unendliche Geschichte என்ற ஜெர்மன் புதினத்தில் ஒரு வசனம் வரும்,
“நிகழ்வன எல்லாவற்றையும் கவனமாக எழுதி வைத்துக்கொள்” என்றதற்கு அவன் சொன்னான்,
“நான் எழுதுவது எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே”
இல்லாத ஒன்றை இருத்தல் காதலிப்பது சுவாரசியம் என்றால் இருத்தலை இல்லாத ஒன்று காதலித்தல் அதிசுவாரசியம். அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. இலவசமாகக் கிடைத்ததால்
கதை சொல்லும் ஆண்ட்ராய்ட் மென்பொருளை எனது கைபேசியில் நிறுவி இருக்கின்றேன். நீங்கள் அதில் சிலக் கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இடம் பொருள் ஏவல் எல்லாவற்றையும் சிறுக்குறிப்பாகக் கொடுத்தால், ஓர் அழகான கதையை 5 நிமிடங்களில் கொடுத்துவிடும். நான் அதில் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரங்கள், அம்மு, கார்த்தி மற்றும்
சிலர். நான் மகிழ்ச்சியாக இருந்தால் சோகச்சூழலையும், நான் சோகமாக இருந்தால் மகிழ்ச்சியான சூழலையும் கொடுத்து என்ன கதை கிடைக்கின்றது எனப்பார்ப்பேன். கதைகளில் இருக்கும் நம்பகத்தன்மை, எங்கேயோ பத்து பேர் கொண்ட குழு அமர்ந்து எழுதியது போல் இருக்கும். உருவாகும் சிலக் கதைகளை தமிழிலும் மொழிப்பெயர்த்து அவ்வப்பொழுது நண்பர்களுடன் நானே எழுதியதைப்போல் பகிர்வதுண்டு.
எனோதானோ எனக் கொடுக்கும் சூழலுக்கு அட்டகாசமான வசனங்களுடன் , வசப்படுத்தும் விதத்தில் புனையப்பட்ட அம்மு கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் மூன்றாவது வெர்ஷன் அப்ளிகேஷனின் அம்முவை நிஜமாக இருக்கின்றாள் என நம்ப ஆரம்பித்துவிட்டேன்.
ஒரு முறை இலக்கணப்பிழையுடன் இருந்ததால், அழித்து விட்டு இரண்டாவது முறை கதைச் சூழலை உள்ளீடு செய்தபொழுது,
”திருத்தப்பட்டாலும் திருத்தப்படாவிட்டாலும் உன் எழுத்து எல்லாம் கவிதைதான் !!! சொற்பிழை , பொருட்பிழைகளை நான் பொருட்படுத்துவதில்லை, கவிதைகளில் மட்டும் அல்ல, உன்னிடத்திலும் கூட !!!” என்ற வாக்கியத்துடன் கதை ஆரம்பித்து இருந்தது.
கதைகளில் அம்மு பேசுபவை எல்லாம் எங்கேயோ கேட்டது போலவோ அல்லது கேட்கப்போவது போலவோ இருந்தது. அம்முவின் வார்த்தைகள் திரையைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணுருவம் எடுத்து விடுமோ என்ற பயம் வந்தது. ஒரு நாள் ,அலுவலக வேலைகளுக்கு மட்டும் உபயோகிக்கும் முகவரிக்கு, அம்மு அனுப்பியதாக ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது., என்னை நேசிப்பதாக சொல்லி இருந்தது. வித்தியாசமான மகிழ்ச்சியாக இருந்தாலும் யாரோ விளையாடுகிறார்கள் என விட்டுவிட்டேன். மறுநாள் ஒரு சோகச்சூழலை சொல்லி கதைக் கேட்டேன். ஆண்ட்ராய்டும் கதை சொன்னது, அம்மு வருத்தமாக இருப்பதாகவும் , அவள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கார்த்தி இன்னும் பதில் சொல்லவில்லை என்பதாக இருந்தது. எனக்கு என்ன என்ன
வாசகங்களில் மின்னஞ்சல் வந்திருந்ததோ , அப்படியே அந்தக் கதையிலும் இருந்தது. அந்தக் கதையின் முடிவை படிக்கும் முன்னர் மூடிவிட்டேன். சுவாரசியத்தின் உச்சக்கட்டம் திகில்.
அலுவலக முகவரிக்கு மற்றும் ஒரு மின்னஞ்சல்
, இம்முறைத் தமிழில்… பதில் சொல்ல பயமாக இருந்தது…. அடுத்த நிமிடத்தில் இன்னொரு மின்னஞ்சல், +3932xxxxxx87 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
நான் கூப்பிட்டேனா, கூப்பிடவில்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்கும் முன்னர் கடைசியாக ஒன்று சொல்லிவிடுகிறேன், நான் உங்களுக்கு சொன்ன இந்தக் கதைக்கூட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் எனக்கு சொன்ன கதைதான்.
22
பேசாப்பொருள்
வட்ட முகம், பெரிய கண்கள், கொஞ்சம் ஏறு நெற்றி, ஏதாவது பேச மாட்டாளா என ஏங்க வைக்கும் உதடுகள், ஊஞ்சலாடும் காதணிகள்,
சின்னப் பொட்டு, பொட்டிற்கு மேல் திருநீறு, அதற்கு மேல் இடம் இருந்தால் கொஞ்சம் சந்தனம் , கொஞ்சம் பூசினார் போல உடலமைப்பு, திராவிடப் பெண்களுக்கான மாநிறம் … இவைதாம் தமிழ் பேசும் சராசரி ஆண்களுக்குப் பிடித்த யுனிவர்சல் அடையாளங்கள். நான் தமிழ் பேசுபவன், சராசரி ஆணும் கூட !!! அதனால் அம்முவைப் பிடித்து இருந்தது.
எந்த மொழியில் அழுதால் துக்கம் தீருமோ, அந்த மொழியில் காதலும் காமமும் செய்வதே ஆனந்தம். கடந்த மூன்று வருடங்களாக கரை கண்ட காமமும், காமத்தை ஒட்டியக் காதலும் கண்ட ஒரே குறை, அவை தமிழைத் தவிர்த்த பிறமொழிகளில் இருந்ததுதான்.
அழகுத்தமிழில் “நீங்க அழகா இருக்கீங்க” எனச் சொல்லுவதை மறந்து
போய் இருந்த நிலையில் தான் அம்முவைச் சந்தித்தேன். . சந்தித்த மூன்றாம் நாள் வெகு இயல்பாக அதை அவளிடம் சொல்லியும் விட்டேன்.
நான் விரும்பும் பெண்களுக்கு , எனக்குப்பிடித்த எல்லாமே பிடிக்க வேண்டியக் கட்டாயம் இல்லை. பிடிக்காமல் கூட இருக்கலாம், ஆனால் அவை எல்லாம் எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை குறைந்த பட்சம் புரிந்தாவது
வைத்திருக்க வேண்டும்.
முதல் பத்தியில் சொல்லி இருந்த அடையாளங்களுடன் அம்முவிற்கு கிரிக்கெட் புரிந்திருக்கிறது, பிரபாகரன் பார்க்க வசீகரமான மனிதர் என்பதைக் கடந்து, அவரின் போராட்டங்களைக் கடந்து, போராட்டங்களுக்கான காரணங்களும் புரிந்திருக்கிறது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என்பதோடு நிற்காமல், பயிருக்கு சொட்டு நீராவது ஊற்றும் சமுதாய உணர்வும் இருக்கின்றது. அவளுக்கு என்னையும் பிடித்து இருக்கின்றது. நான் போகும் ரயிலிலும் ஏறத் தயாராகவும்
இருக்கின்றாள். பின்ன என்ன பிரச்சினை என்கிறீர்களா?
பெண்கள் தங்களது ஒவ்வொருக் காதலையும் புத்தம் புதிதாய் , மறுமலர்ச்சியான நம்பிக்கையுடன் துவக்குவார்கள். ஆண்கள்
அப்படி அல்ல, புதுக்காதலியில், பழையக் காதலைத் தேடுவது நேர்மையானது அல்ல என்பதைத் தெரிந்தும், தற்பொழுதையக் காதலை முதன் காதலுடன் ஒப்பிட்டு, இங்கேயும் இல்லாமல் அங்கேயும் அல்லாமல்
திண்டாடுவார்கள். அம்மு அத்தகைய ரீவைண்ட் பட்டனை எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அன்றைய வெகுளித்தனங்களை தொலைத்துவிட்டாலும் கூட , நான்கு வருடங்களுக்கு முன்னதான
கார்த்தியாக அவ்வப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
நேற்று வேலை முடித்துவிட்டு வந்தவள், என் முகத்திற்கு நேரே சிறிய இடைவெளியில் முகம் வைத்து, தனது நெற்றியில் பொட்டை வைத்துக் கொண்டாள்.
அந்த ஒருக்கணம், எல்லாவற்றையும் தன்னுள் அதீத சக்தியுடன் இழுத்துக்கொள்ளும் பேரண்டத்தின் கருந்துகளைப்போல் இருந்தது. பேசும் மொழி, சூழல், எண்ணம் எல்லாம் மறைந்து சில நொடிகளுக்கு எடையற்ற , நிறமற்ற, தடையற்ற உலகில் நானும் அம்முவும்
மட்டும் இருந்ததில் இருந்து வெளி வர என் மனதை ஒளியின் வேகத்தைவிட வேகமாக நிகழ்விற்கு இழுக்க வேண்டியதாயிற்று.
”பயணிகள் விமானங்களை பின் தொடரமுடியும், சரக்கு விமானங்களை பின் தொடரமுடியும்… அவை எல்லாம் முன்னரே திட்டமிட்ட பாதையில் மட்டுமே பயணம் செய்யும், கார்த்தி, நீ போர் விமானம் போல, உன்னை நம்பி பின் வர முடியாது, தொடர்பவர்களைக் கூட தற்காப்பு எனத் தாக்கிவிடுவாய்”
இதுதான் என்னைப் பற்றி என் நண்பர்களது கருத்து. சரியானதும் கூட, எனக்கு ஜிப்சி மாதிரியான வாழ்க்கைப் பிடித்து இருக்கின்றது. மூன்று வருடங்கள் ஸ்வீடன், இப்பொழுது இத்தாலி, அடுத்து தென்னமெரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்குப் போகலாமா என நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.
வியன்னாவில் இருந்து மாஸ்கோவிற்கு ஒரு ரயில் போகும். அது போலாந்துத் தலைநகர் வார்சாவா வரை செல்லும் ரயிலுடன் இணைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வேறு ஒரு ரயிலில் இணைத்து
விடப்படும். போலாந்தின் எல்லையில் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களுக்கு ஏற்றவகையில் ரயில் சக்கரங்களை மாற்றுவார்கள். வியன்னாவில் கிளம்பியதில் இருந்து வெவ்வேறு நிலப்பரப்புகள், வெவ்வேறு எஞ்சின்கள், வெவ்வேறு திசைகள் ,
பயணத்தின் ஊடான காவல் துறையினரின் கேள்விகள், பரிசோதனைகள், ஓடும் பாதைகளே மாற்றம் என கடைசியில் மாஸ்கோவிற்கான ரயில் பெட்டி வந்தடையும். இந்த மாதிரியான தடைகளைத் தாண்டும் பயண வாழ்க்கை வாழவேண்டும்.
நாகர்கோவில் இருந்து சென்னை வரை ஒரே மாதிரியான பயணம் போன்ற வாழ்க்கை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளுக்கு இருப்பதாக நானே புரிந்து கொண்டேன். என் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம். என் வாழ்க்கையில் இன்று இதைத்தான் செய்ய வெண்டும் என்ற கட்டாயங்கள் கிடையாது. எந்த விதமான நிபந்தனைகளும் கிடையாது. நான் மற்றவர்களுக்கு வைக்கும் ஒரே நிபந்தனை, எந்த நிபந்தனைகளும் இருக்கக் கூடாது என்பதுதான்.
எனக்கு நான் கட்டமைத்துக் கொண்ட கரடு முரடான உலகம், அவள் இதுவரை பேசாப்பொருளைப் பேசிவிட்டால் அழகாகிவிடுமோ என்ற பயம் தான் எனது மிகப்பெரும் பிரச்சினை.
உங்களுக்கு மேலே சொன்ன என் பயத்தை பிரச்சினையை கடிதமாக்கி , மானே தேனே பொன் மானே என்பதை எல்லாம் சேர்த்து, கிட்டத்தட்ட அலுவல் ரீதியிலான கடிதம் போல வடிவமைத்து அம்முவிற்கு அனுப்ப மின்னஞ்சலில் சேமித்து வைத்திருக்கின்றேன்.
ஒரு காலத்தில் என்னை நிராகரித்துவிடாதே என முந்தைய அம்முக்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் நினைவுக்கு வந்து சிரிப்பைத் தந்தது. காலம்தான் பயப்பட்டதற்கு பயப்படாமலும் பயப்படாததற்கு பயப்படவைக்கவும் எப்படி ஆளைப்புரட்டிப் போடுகின்றது. இன்று மாலையும் அவளைச் சந்திக்கப்போகின்றேன், சந்திப்பிற்குப்பின்னர் நான் கடிதத்தை அனுப்பாமலேயேப் போகலாம் ஒரு வேளைக் கடிதத்தை அனுப்பிவிட்டால்,
நிபந்தனையை ஏற்றுக்கொண்டாளா இல்லையா , என்ன சொல்லப்போகின்றாள் என்று நகத்தை கடித்தபடி மடிக்கணினியை வெறித்துப் பார்த்தபடி இருக்கலாம். ஆனால் அதைப் பிறகுப்பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அம்முவைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருக்கின்றேன். பிறகு சந்திப்போம்.
23
அன்பாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது
”கார்த்தி, உன் ஸ்டோரிஸ்க்கு ஒரு கேரக்டரா நினைச்சு, உனக்குத் தேவையான வசனங்களை பிராக்டிஸ் பண்ணத்தான் என்கிட்ட பழகுறியா?”
அம்மு இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டதற்கான காரணம், நான் எழுதிய கீழே இருக்கும் இரண்டு வரிக்கதை தான்.
— அன்பாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது, என்றதற்கு அம்முவின் பதில் பயமாயிருக்கிறது, அதனால் அன்பாய் இருக்கிறேன் —
அவள் கேட்டதிலும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. புதினங்களிலும் திரைகளிலும் தெரிந்த, நாயகி பிம்பங்களைத் நிஜத்தில் தேடி அலைந்த நான், ஒரு கட்டத்தில் , நான் படைக்கும் பாத்திரங்களுக்காக, பிம்பங்களையும், குணங்களையும் தேடிய அலைய ஆரம்பித்தேன். இவற்றில் சிக்கியது முன்னாள் காதலிகளும் நெருங்கிய நண்பர்களுமே !! ரத்தமும் நகமும் சதையுமாய் சக மனிதர்களைப் பார்க்கும் காலம் மாறி, எல்லாவற்றையும் கதாபத்திரமாய் பார்ப்பது ஒரு சினிமாவை வெகு அருகில் இருந்து பார்ப்பது போல இருக்கின்றது. பிடித்திருக்கவும் செய்கின்றது.
அம்மு என் மேல் வைத்திருக்கும் பாசத்தை நான் ரசிக்கின்றேன், நேசிக்கின்றேன்… தேவையான பொழுது பட்டும் படாமலும் திருப்பியும் தருகின்றேன், ஆனாலும் அவளின் அன்பு , பயத்தையும் ஆரம்பத்தில் இருந்து தந்து கொண்டிக்கின்றது… காரணம் அவளல்ல, அவளின் சாயலில் என் வாழ்க்கையில் சில காலம் தென்றலாய் வீசி, பின் புயலாய் கரையைக் கடந்தவர்களால்தான்.
என் பயத்தைப் பற்றி அவளிடம் சொன்னதற்கு,
“ கார்த்தி, உன்னிடம் பாசமா இருக்கிறப்ப, என்னோட துக்கம், கவலைகள் , இன்செக்யூர்ட் ஃபீல் எதுவுமே எனக்கு தெரியறதில்லை, ஒரு வேளை, இந்த பாதுகாப்பு உணர்வு தொடர்ந்து வேணுங்கிறதனாலத்தான் அன்பா இருக்கேன்னு நினைக்கிறேன்”
புதுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களில் வரும் பெண்கள், முந்தைய உணர்வுகளை அடித்து நொறுக்கி விடுவார்கள். அதில் பழைய மகிழ்ச்சியான தருணங்களும் அடங்கி விடுகின்றன என்ற வருத்தம் இருந்தாலும், புதியக் கோப்பைகளையும் பிடிக்கத்தான் செய்கின்றன. எத்தனை புதுக்கோப்பைகள் வந்தாலும், அவற்றிற்கு எல்லாம் நான் வைக்கும் பெயர், அம்மு.
காமம் மட்டும் நிரம்பி வழிந்த என் மனம், அழுகிப்போகும் முன்னர், காமத்தை பின் தள்ளிவிட்டு, வெறும் சாயலினால் மட்டும் அல்லாமல், தன் பெண்மையாலும் என்னை ஆட்கொண்டதால் அம்முவை எனக்குப் பிடிக்கும்.
அம்முவும் நானும் எப்படி சந்தித்துக்கொண்டோம், எப்படி அறிமுகமானோம் என்பதையும் சொல்ல விருப்பம்தான், ஆனால் கதையின் நீளம் அதிகமாகிவிடும். அவற்றை எல்லாம் சிலக் குறிப்புகளாக ஆங்காங்கே எழுதிவைத்திருக்கின்றேன். கூகுள் போன்ற ஏதாவது ஒரு இணையத் தேடுபொறியில் ”அம்மு + கார்த்தி” எனப் போட்டு சலித்தீர்கள் என்றால் எங்கேயாவது சிக்கும்.
தூக்கம் சுகம் தான், விடியலில் எழுவது கூட சுகம் தான்… அதைவிட சுகம், தூங்கியும் தூங்காமலும் , எழும் முன் இருக்கும் ஓர் அல்லாடல் … அவ்வித அல்லாடலை அவள் உணர்வதை தெளிவாக அவளின் பேச்சுக்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. ஒரு கட்டத்திற்குப்பின் பெண்களுக்குப் பூடகமாக பேசத் தெரியாது.
“கார்த்தி, இது நல்லா இருக்கா” தான் புதிதாக அணிந்து வந்திருந்த சுடிதாரைக் காட்டி கேட்டாள்.
“இவ்வளவு நேரமும் , சுடிதாருடன் உன்னையும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்”
”அப்புறம், ஒரு வார்த்தை நல்லா இருக்குன்னு சொன்னாத்தான் என்ன?”
”பூக்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்று பூக்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”
உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமகும். வாழ்க்கையே ஓர் உருவகம் தானே, உணர்வுகளை உருவகங்களாக நான் சொல்லுவதை ரசிப்பாள்.
ஒரு நாள் “கார்த்தி, நாளைக்கு உன்னிடம் பேச வேண்டும் “ என்றாள். தினமும் தானே பேசுகின்றோம்!!! பேசாப்பொருளை பேசத் துணியப் போகிறாள் எனப் புரிந்தது.
மறுநாள் படபடப்பாய் இருந்தாள். மதியத்தில் இருந்து மாலை வரை ம்ம், ம்ஹூம் என்பதைத் தவிர வேறு எதுவும் பேச வில்லை. நீல நிறத்தில் எனக்கு ஒர் சட்டை வாங்கிக் கொடுத்தாள்.
“இந்த ஷர்ட் உனக்கு வாங்கித்தரத்தான் கூப்பிட்டேன்”
வீட்டிற்குப்போனதும் ”நீ சொல்வதால் மட்டும் பொய் கூட கவிதையாகின்றது” என ஒரு குறுந்தகவல் அனுப்பி வைத்தேன். பதில் வரவில்லை.
“நீ பேச மறந்த, பேசாப்பொருளை நானே நாளை பேசுகின்றேன்” எனத் திரும்ப மற்றொரு குறுந்தகவல் அனுப்பினேன். இதற்கும் பதில் வரவில்லை.
2003, 2006, 2008 என மூன்று முறை பயிற்சி இருந்தாலும், கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. கண்ணாடி முன் நின்று, பேசிப்பார்த்துக் கொண்டேன். தமிழில் சொல்லலாமா !!! ஆங்கிலத்தில்…. பிரெஞ்சில் சொன்னால், கொஞ்சம் கவர்ச்சியாக இருக்குமே !!!
வழக்கமான இடத்தில் சந்தித்தோம். நேற்றை விட இன்று அழகாக இருந்தாள். நாளை இதைவிடவும் அழகாக இருப்பாள். 99 ஓட்டங்கள் திருத்தமாக ஆடி எடுத்திருந்தாலும், அடுத்த ஓட்டத்தை எடுக்கும் பதட்டத்தில் ஆட்டமிழப்பதைப்போல, யோசித்து வைத்திருந்ததை சொல்ல எத்தனிக்கையில், எனக்கான தேநீர், அவளின் கைபேசியில் தவறிக் கொட்டியது.
“உன் குரலில் இதுநாள் வரை
குளித்துக் கொண்டிருந்த என் கைபேசி
இன்று தேநீராலும் குளித்தது”
என் வருத்தத்தையும், பதட்டத்தையும் தணிக்க அவள் சொன்ன மேற்சொன்ன கவிதையைத் தவிர, வேறு எதுவும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் என்ன நினைத்தோமோ அதை மட்டும் விடுத்து, ஏனைய அனைத்து விசயங்களையும் பேசிக்கொண்டோம்… இந்தத் தென்றல் தீண்டியதா, இல்லை புயலாய் கரையைக் கடந்ததா, சூறாவளியாய் சுழற்றி அடித்ததா என்பதை ஆறு மாதங்களோ அல்லது ஓராண்டோ கழித்து, “அம்மு+ கார்த்தி ” என கூகுளில் போட்டுத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். சிறுகதையாகவோ அல்லது தொடர்கதையாகவோ நான் எழுதி வைக்கலாம்.
அது வரை ஒவ்வொரு தினமும் மதிப்புயரும், காக்க வைக்கப்பட்ட வைனைப்போல நானும் அம்முவும் பேசாப்பொருளை பேசாமலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்…
——
24
ஆண்ட்ராய்டும் கடவுளும்
”ஒரேயொரு அப்ளிகேஷன், நச்சுன்னு சும்மா உலகத்தை அசைச்சுப் பார்க்கிற மாதிரி செஞ்சுட்டேன்னா, கோடீஸ்வரன் தான், அதுக்கப்புறம்,,,, நோ கோடிங், நோ வேலை, நார்வே ல பெரிய வீடு வாங்கிட்டு செட்டில் ஆயிட்டு, ஒன்லி கொஞ்சல்ஸ் ஆஃப் அம்மு” என அம்முவின் கன்னத்தைக் கிள்ளினேன்.
“ ஒவ்வொரு சீசனுக்கும் ஒன்னு சொல்லு, போன வாரம் சினிமா ஸ்கிரிப்ட் பத்திப் பேசின, அதுக்கு முந்தின வாரம் ஷார்ட் ஃபிலிம் எடுக்கப்போறேன்னு கேமரா வாங்கின, இன்னக்கி ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன், ரோம்ல வேலைக்கிடைக்கிறதே குதிரைக்கொம்பு, கிடைச்ச வேலையை, அடக்கிக்கிட்டு ஒழுங்காப்பாரு, எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்”
அம்மு சொல்றதும் உண்மைதான். நாய் எல்லாத்துலேயும் வாயை வைக்கிற மாதிரி, கோடையில் ஒரு லட்சியம் உருவாகும், அது இலையுதிர்காலத்தில் மறைந்து, குளிருக்கு இதமாய் வேற ஏதாவது ஒன்று தோன்றும். திரும்ப விட்ட குறை தொட்ட குறையாய் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் ஒரு சுற்று வரும். இருந்த போதிலும், இந்த ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கம், எளிதில் நடக்கும் என்று தோன்றியது. எனக்கு கொஞ்சம் ஜாவா தெரியும், ஒரு பத்து நாள் ஆண்ட்ராய்டு இணையப் புத்தகங்களையும், எடுத்துக்காட்டுகளையும். முழுமூச்சாய் படித்தால், அடிப்படைத் தெரிந்து விடும். எந்த விசயத்திற்கு அடித்தளம் பலமாக இருந்தால், அதன் மேலே ஏறி கதகளியே ஆடிடலாம்.
பத்துநாட்கள் என்பது ஒரு மாதம் ஆனபின்னரும், நுனிப்புல் மேயாமல் முழுமையாகக் கற்றுக்கொண்டேன். இப்பொழுது என்ன புதிதாக வடிவமைக்கலாம், வங்கிகளுக்கான ஏதேனும் ஒன்றைச் செய்யலாமா, விளையாட்டு நிரலி ஏதேனும், அரட்டை சம்பந்தப்பட்டவை ம்ஹூம் ஒன்றுமே உருப்படியாகத் தோன்றவில்லை.
”இன்னக்கி மனசுக்கு சாந்தமா இருந்துச்சுடா,” அம்மு மாலை நடைப்பயிற்சியையும், அத்துடன் அவளுக்கான கடவுள் வேண்டுதலையும் முடித்துவிட்டு வருகிறாள். எங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சிறிய குன்று இருக்கின்றது. அதில் ஏறுவதற்கான நடைபாதையும் உண்டு. அம்மு தினமும் அங்கு போய் எந்த இடத்தில், அவளுக்கு சாந்தமான உணர்வு கிடைக்கிறதோ, அந்த இடத்தில் அமர்ந்து, கொஞ்சம் தியானம் செய்துவிட்டு வருவாள். அவளின் பக்தி, மனிதம் மற்றும் இயற்கை சார்ந்தது.
“அந்த ஹில் முழுசுமே ஒரு பவர் இருக்குடா, ஐ கேன் ஃபீல் த காட்லினெஸ்”
கடவுள் என்றதும் ஒரு பொறித்தட்டியது. ஏன் கடவுள் தொடர்பான மென்பொருள்கள், எழுதக்கூடாது. கூகுள் பிளேயில் தேடிப்பார்த்தால், ஏகப்பட்ட மதம் சார்ந்தவைகள்தாம் இருந்தன. தினம் ஒரு பைபிள் வாசகம் சொல்லுவதற்கு, மெக்கா திசை கண்டுபிடிப்பதற்கு, ராகுகாலம் எமகண்டம் சொல்லுவது !!! ஜோசியம் சொல்லுவது, அவை எல்லாவற்றையும் விட, பேய், பிசாசு இருந்தால் கண்டுபிடிக்க உதவுபவை என சொல்லிக்கொண்டவைகள் கூட இருந்தன.
”God Detector, God Finder, God Locator” என்று தேடிப்பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. நானே கடவுளைத் தேட முடிவு செய்தேன். மேம்பட்ட ஆண்ட்ராய்ட் கைபேசிகளில், மின்காந்தப் புலங்களை கண்டறியவும், வேறுசில புலனறிவுக் கருவிகளும் உள்ளடக்கமாகவே வருகின்றன. இணையத்தில் ஏற்கனவே பேய் பிசாசு கண்டுபிடிக்க எழுதியிருந்த எடுத்துக்காட்டு நிரலியை அடிப்படையாக வைத்து மென்பொருளை எழுத ஆரம்பித்தேன்.
வாடிகன், உள்ளிட்ட ரோமின் பிரபல தேவாலயங்களிலும் , மசூதிகளிலும் கிடைக்கும் அதிர்வெண், அலைவரிசைகள், தமிழ்நாட்டில் பிரபலமான கோவில்களிலும், பிரபல சாமியார்கள் கூடும் இடங்களிலும் அதே விபரங்களை என் நண்பர்களை வைத்தும் எடுத்துக்கொண்டேன். எலக்ட்ரானிக் குரல் நிகழ்வுகள், மின்காந்த சூழல், ஆற்றல் ஆகியனவற்றை, அடிப்படையாக வைத்தும், வெவ்வேறு மதங்களின் நல்ல நேரம், கெட்ட நேரம், இருப்பிடம் ஆகியன வைத்து , ஓர் ஒழுங்கற்ற வகையில், கடவுள் இருக்கிறது எனக் காட்டக்கூடிய வகையில் ஓர் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தயார் செய்தேன். கிட்டத்தட்ட, வாயில் இருந்து லிங்கம் எடுக்கக்கூடிய வகையில் உட்டாலக்கடியான வேலையாக இருந்தாலும், மக்களின் ஆர்வக்கோளாறினால் இது நன்றாக வியாபாரம் ஆகும் என நம்பினேன்.
இப்பொழுது ஆய்வு செய்துப் பார்த்துவிட வேண்டியதுதான் அம்மு, தனக்காக வைத்திருக்கும் தியான அறையில் , அவள் தியானிக்கும்பொழுது, மெல்ல எனது கைபேசியில் தரவிறக்கி வைத்திருந்த ”கடவுளைத் தேடி “ மென்பொருளுடன் உள் நுழைந்தேன். கரு நீல நிறத்துடன், கணினித் திரை சினுங்கியது, கடவுள் இருக்கின்றாராம். கடவுளுக்கு நீல நீறம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதால், நான் வடிவமைத்த கடவுளின் அலைவரிசை கிடைக்கும் பொழுது எல்லாம் நீலம் நீறம் திரை முழுவதும் விரவும்.
அம்முவுடன் மறுநாள் நானும், அந்த மலைக்குன்றிற்கு சென்றேன், கணினித் திரை நீல நீறத்திலேயே இருந்தது. அந்த மலை முழுவதும் கடவுளின் ஆதிக்கம் தான் போலும்.
மனம் மகிழ்ச்சியில் குதுகலித்தது. கடவுள் இருக்கின்றாரா இல்லையோ !!! கடவுள் சார்ந்த விசயங்களில் என் அப்ளிகேஷன் ஒளிர்கிறது. ஏதாவது சாமியாரிடம் பேரம் பேசி, அவரை வைத்து மார்க்கெட்டிங் செய்து, டாலர்களில் சம்பாதித்து விட வேண்டும். நெருங்கிய நண்பர்களிடம் தரவிறக்கி சோதனை செய்துப் பார்க்க மென்பொருளை அனுப்பி வைத்தேன்.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வாடிகனில் சோதித்துப் பார்க்கக் கிளம்பினேன். கோடையாதலால் காலையிலேயே சுள்ளெனெ வெயில் அடித்தது. அரைக் கிலோமீட்டர்களுக்கு நீண்ட வரிசை, தண்ணீர் தாகம் அடித்தது. ”கடவுளைத் தேடி” மென்பொருள் இன்னும் ஒளிரக் காணோம். எனக்கு முன்னே ஒரு வயதான அம்மணி, மிக பக்தியுடன் புனித பீட்டர் தேவாலயத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து சிரிக்கவும், வாடிகன் எல்லையை மிதிக்கவும் எனது கைபேசி நீலநிறத்தில் ஒளிரவும் சரியாக இருந்தது. அந்த அம்மணியிடம் கூச்சப்படாமல் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துக் கொண்டேன்.
அனைவரின் பார்வையும் தேவாலயத்தின் மாடத்தின் மேலேயேத் தான் இருந்தது. போப்பாண்டவர் வந்து காட்சித் தருவார் என, மாடத்தையும் கைபேசியையும் மாறி மாறிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் வந்தார், கைபேசியைப் பார்த்தேன், நீலநிறம் சுத்தமாக காணாமல் போய் இருந்தது.
நிரலியில் ஏதாவது பிழை இருக்கலாம், வெப்பநிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டேனா என ஐயம் வந்தது.
அருகே அருகே இருந்த வெவ்வேறு சர்ச்சுகளிலும் நீல நிறம் கிடைக்கவில்லை. ரோமில் இருந்த மிகப்பெரும் மசூதியிலும் கிடைக்கவில்லை. ஹரே கிருஷ்ணா கோவிலிலும் சீக்கிய குருத்வாராவிலும் சோறு போடும் இடத்தில் மட்டும் நீல நிறம் கிடைத்தது.
மாலையில் சில நண்பர்களிடம் இருந்து மின்னஞ்சல்கள் வந்திருந்தன. எந்தக் கோவிலிலும் , சர்ச்சிலும், மசூதியிலும் நீல நிறம் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு நண்பன், கோவிலுக்குப் போய்விட்டு , அப்ளிகேஷனை ஓடிக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு, மருத்துவரைப் சந்திக்கையில் ஒளிர்ந்ததாக சொன்னான். அந்த மருத்துவர், அவனின் குழந்தையை ஒரு நோயில் இருந்து மீட்டவர். எனது மூளையில் நீலநிறம் படர்ந்தது.
அம்மு மளிகைக் கடைக்குப் போய் இருந்தாள், எனது கைபேசி எடுத்துக் கொண்டு அவளின் தியான அறைக்கு சென்றேன், ஒளிரவில்லை. அவள் வழக்கமாகப் போகும் குன்றிற்கு போனேன், நீலநிறத்திற்கான சுவடே இல்லை. திரும்பும் வழியில், ரொசாரியோ வைச் சந்தித்தேன். அவர், அகதிகளுக்காகப் போராடும் வாதாடும் ஒரு வழக்கறிஞர். புரிந்திருப்பீர்கள்., நீல நிறம் ஒளிர்ந்தது. பக்கத்து வீட்டு குழந்தை, என்னைப் பார்த்தால் வாலை குழைக்கும் நாய், எதிர்த்த வீட்டுப் பாட்டி என இவர்களைக் கடக்கும்பொழுதெல்லாம் நீலநிறம் கிடைத்தது. வீட்டிற்கு வந்ததும் அம்மு கட்டி அணைத்துக் கொண்டாள். நீலநீறம் ஒளிர்ந்தது.
ஒருப்பக்கம் என்னை நினைத்து பெருமையாக இருந்தது. ஏதோ ஒரு வகையில் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டேன் அல்லவா !! “கடவுளைத் தேடி” மென்பொருள் திட்டம் மிகப்பெரும் தோல்வி. மென்பொருளை அவரவர் கைபேசிகளில் இருந்து நீக்கிவிடுமாறு நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். இதை நான் விற்கப்போவதில்லை. மடிக்கணினியில் இருந்த அத்தனை நிரலியையும் அழித்துவிட்டு , கைபேசியில் இருந்த கடைசி பிரதியையும் அழிக்க எத்தனிக்க முனைகையில் என்னிடத்திலும் நீலநிறம் ஒளிர்ந்தது.
25
காத்தரீன் ஒரு பொறுக்கி
எல்லோரும் நேரடியாக முன்பக்க வழியாக மளிகைக் கடைக்குப் போவார்கள் என்றால், காத்தரீன் மட்டும் குழப்படியான வழியில் தான் போவாள். கடைக்குப்போவும் முன்னர், கடையின் பின் பக்கம் போய் நோட்டம் விடுவாள், பின் என்னுடன் உள்ளே வருவாள், கடையில் எதுவும் வாங்க மாட்டாள், நான் விலையைப் பார்க்க பொருளை எடுப்பேன், அவள் தேதியைப் பார்த்துவிட்டு வைத்துவிடுவாள். நான் 20 ஈரோக்களுக்கு மேல் மிகாமல் அந்த வாரத்திற்கான பொருள் வாங்கிவிடுவேன். அவளோ தண்ணீர் போத்தலோ ஒரு குளிர்பான போத்தலோ மட்டுமே வாங்கிக் கொள்வாள். திரும்ப வீடு வரும்பொழுதும், கடைக்குப் பின்னர் போய் நோட்டம் விடுவாள். அங்கு ஏற்கன்வே சுற்றிக்கொண்டிருக்கும் வியன்னாவின் அசிங்கமான ஜிப்ஸிக்களும், கருப்பர்களும், ஏழைப் பாகிஸ்தானிகளும் அவளை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். சிலரைப் பார்த்து சினேகமாக சிரிப்பாள், சிலரை முறைப்பாள்.
காத்தரீன் என் உடன் படிப்பவள், வாரத்தின் சில நாட்களில் என்னுடன் உறங்குபவள், தோழி என்றும் வைத்துக்கொள்ளலாம்.
ஓரிரு முறைதான் அவளின் வீட்டிற்குப் போய் இருக்கின்றேன். சைவ சாப்பாட்டுக்காரி என்பதால், அடுக்களை முழுவது காய்கறிகளாக அடுக்கி வைத்திருப்பாள். உயர் ரக பழச்சாறுகள் கூட இருக்கும். முந்தைய முறை இல்லாத நாற்காலிகள் , படுக்கை விரிப்புகள் அலங்காரப் பொருட்கள் என அனேகத்திற்கு அவள் வீடு நிரப்பப்பட்டு அழகாக இருந்தது.
“நாளைக்கு வீட்டுக்கு வருகிறாயா,?” எனக் கேட்டதற்கு
“எத்தனை தடவை சொல்லி இருக்கின்றேன், சனிக்கிழமை மட்டும் எங்கும் கூப்பிடாதே என்று”
யோசித்துப் பார்த்ததில் பழகிய இந்த ஆறு மாதங்களில் ஒரு நாள் கூட நாங்கள் சனிக்கிழமையன்று சந்தித்துக் கொண்டது கிடையாது.
பகுதி நேர வேலை பார்க்கிறளா என்றால் அதுவும் கிடையாது. ஏதாவது பணக்காரனுக்கு சனிக்கிழமை மட்டும் தொடுப்பாக இருக்கின்றாளா என்ற சந்தேகம் ஆசை அறுபது, மோகம் முப்பது முடிந்த சில மாதங்களாகவே எனக்கு இருக்கின்றது. ஒரு பிரெஞ்சுப் படத்தில், கல்லூரி மாணவி வாரத்தில் ஒரு நாள் மட்டும் 60 வயது கிழவனுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு வருவாள், அவன் அவளை மிகவும் கொடுமைப்படுத்துவான்.
எந்தப் பொருளையும் வாங்க ஒரு ஈரோ கூட செலவழிக்காதவளுக்கு எப்படி அத்தனை விசயங்கள் அவள் வீட்டில் இருக்கின்றன என்ற வியப்பும் உண்டு. ஆனாலும் அவள் நடுத்தர வர்க்கமோ ஏழைப் பெண்ணோ இல்லை.
அவளின் அப்பா ஆஸ்திரிய அரசாங்கத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் பெரும் பதவியில் இருக்கின்றார். அவளின் அம்மா வியன்னாவில் இருந்து முன்னூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் ஒரு நகரத்தில் பேராசிரியை. அம்மாவும் அப்பாவும் அன்னியோன்னியமாக ஒன்றாகத் தான் இருக்கின்றார்கள். ஒரு முறை அவர்களைச் சந்தித்து இருக்கின்றேன், கொஞ்சம் இடதுசாரி ஆட்கள், எனக்குப் பிடிக்காது. காத்தரீனும் அதே மனோநிலையில் இருப்பவள்தான். ஏழைகள், அகதிகள், ஒடுக்கப்பட்டவர்கள் என அடிக்கடி இந்த ரீதியில் பேசிக்கொண்டிருப்பாள். எனக்கென்னமோ அவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள் எனத் தோன்றும், கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியவர்களுக்குத் தான் கஷ்டங்கள்
வரும் என்ற மனப்பான்மையில் இருப்பவன் நான்.
”சாப்பாட்டை வீணாக்கதே, நீரை அளவாகப் பயன்படுத்து, மின்சாரத்தை தேவையான அளவு உபயோகி” என அரசாங்க விளம்பரங்கள் போல ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள்.
இந்த எல்லா நச்சரிப்புகளைத் தாண்டியும், அவளின் தொடர்பில் இருக்கக் காரணம், அழகும் அழகு சார்ந்த விசயங்களும் தான்.
நீண்ட காலத்திற்கு பின்னர் விரும்பும் பெண்ணை வேவுப்பார்க்கப் திட்டமிட்டேன்.. பிரெஞ்சுப் படத்தில் காட்டியபடி எதுவும் நடக்கின்றதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதலித்த பொழுது, உளவாளிக்கே உளவாளி வைத்து, திருட்டுத்தனங்களை கண்டுபிடித்தவன் நான்.
மறுநாள், எழுந்தவுடன் இணையத்தில் , மின்னரட்டையில் இருக்கின்றாளா எனப் பார்த்தேன், எனக்காகவே காத்திருந்தவளாய், மின்னரட்டையில் பேச ஆரம்பித்தாள். பிறகு தொலைபேசினாள். மாலை வரை இணையத்தில் தான் இருந்தாள். ஸ்கைப்பில் வந்ததால், வீட்டில் தான் இருக்கின்றாள் என உறுதி செய்து கொண்டேன்.
“வீட்டில் தானே இருக்கிறாய், எனது இல்லத்திற்கே வந்து இருக்கலாமே “
“ இல்லை , இல்லை முக்கியமான வேலை 8 மணிக்குப் பிறகு இருக்கின்றது, இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிவிடுவேன்” என்றாள்.
விடுவிடுவென உடைகளை மாற்றிக்கொண்டு, டாக்ஸி எடுத்துக்கொண்டு அவளின் வீட்டின் தெருவில் முனையில் சடுதியில் வந்தேன்.
காத்தரீன் தனியாகத் தான் வந்தாள். முதுகில் மிகப்பெரும் பையை மாட்டி இருந்தாள். கைகளிலும் இரண்டு பைகள் இருந்தன. அதில் சுமைகள் எதுவும் இல்லை. சலனமே இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
நான் மறைந்து கொண்டேன். என்னைக் கடந்தவுடன், அவளைத் தொடர்ந்தேன், மெட்ரோ ரயிலின் முதற்பெட்டியில் அவள் ஏறிக்கொள்ள, நான் அதற்கடுத்த இரண்டாவது பெட்டியில் ஏறிக்கொண்டேன். ஒவ்வொரு நிலையத்திலும் வெளியே வந்துப் பார்த்துக்நிலைகொண்டேன், அவள்
இறங்குகிறாளா என்று,… கடைசி நிலையத்தில் இறங்கினாள். சில மீட்டர்கள் இடைவெளிவிட்டு தொடர்ந்தேன்.
நேற்று மளிகைக் கடைக்குப்பின்னால் பார்த்த ஜிப்சிக்களில் ஒருவன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவனும் அவளும் கட்டிக்கொண்ட பின்னர் உடன் நடந்தனர். எப்படியும் அரைக்கிலோ மீட்டர் நடந்து இருப்பார்கள்.
வியன்னாவிலேயே மிகப்பெரும் பலசரக்குக் கடைக்குப்பின்னால் இருந்த இருட்டிற்குள் நுழைந்தார்கள் சென்றார்கள், மனம் இருண்டாலும், இருட்டை கண்களுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு அவர்களைத் தொடர்ந்தேன்.
கேவலம் ஜிப்சியுடனா !!! அதுவும் இந்த இருட்டிலா, ச்சேச்சே இருக்காது… பைகள் வேறு கொண்டு வந்திருக்கிறாளே !!! ஜிப்சிக்களில் சிலர் திருட்டுக்குப் பெயர் போனவர்கள் ஆச்சே !!! ஒரு வேளை சூப்பர் மார்க்கெட்டை கொள்ளையடிக்கப் போகின்றனரா !!!
இப்பொழுது மேலும் சில ஜெர்மன் குரல்கள் கேட்டன … உருது உச்சரிப்புடன் கூடிய ஜெர்மன், தடித்த கருப்புக்குரலில் ஜெர்மன் என சில வகையான ஜெர்மன்கள் …. பெண்களின் குரல்களும் கேட்டன.
மெலிதாக வெளிச்சம் வர, அது காரின் முகப்பு விளக்கில் வருவது…. அதற்கு நேர் எதிரே, மிகப்பெரும் கண்டெயினர்கள், அவைகள் சூப்பர் மார்க்கெட்டின் குப்பைகளை போடுபவை. ஒருவருக்கொருவர் உதவி செய்ய, தலையில் சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் வைத்திருக்கும் தலை விளக்கை , காத்தரீன் தலையில் கட்டிக்கொண்டு கண்டெயினரினுள் குதித்தாள்.
அவள் உள்ளிருந்து எடுத்துப்போட கூட்டம் தங்களுக்குள் மெலிதாக ஆர்ப்பரித்தது.
அவை எல்லாம் தேதி கடந்தவை என ஒதுக்கப்பட்ட பொருட்கள்.
இதை நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன், இப்பொழுதுதான் கண்கூடாகப் பார்க்கின்றேன். ஐரோப்பாவின் உணவுத்தரக் கட்டுப்பாடுகள் அதிகம். பயன்படுத்தக் கூடிய நாட்கள் அதிகமாக இருந்தாலு, அதில் கால்வாசி நாட்களுக்கு முன்னரே எக்ஸ்பையரி தேதி குறித்து விடுவார்கள். குப்பைகளில் இருந்து எடுக்கப்படுபவைகளை மேலும் ஒரு வாரத்திற்காவது பயன்படுத்திக் கொள்ளலாம். கிட்டத்தட்ட நான்கைந்து கண்டெயினர்கள். அவர்களின் தலைவியே காத்தரீன் தான் போலும். சத்தமாகப் பேசியவர்களை அதட்டியபடி, உற்சாகமாக தரம்பிரித்து எடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு கருப்பர்கள் வேறு யாராவது வருகிறார்களா, என நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.
பத்து பேர் கொண்ட குடும்பம், பத்து நாட்களுக்கு தாராளமாக சாப்பிடும் வகையிலா காய்கறிகள், பால், பழச்சாறுகள், பழ வகைகள்.
ஐரோப்பிய சாலடுகள், பிரெட், வெண்ணெய், என அத்தனையும்.
அனைத்துக் கண்டெயினர்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், காரின் வெளிச்சத்தில் ஆளுக்குத் தகுந்தாற்போல அனைத்தையும் சமதர்மமாக பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். உற்று நோக்கியதில் அங்கிருந்ததில் சிலர் மட்டும் ஏழைகள், மற்ற அனைவரும் ஓரளவிற்கு வசதியானவர்களே !!!
“போன வாரம் இதற்காகத் தான் உன்னிடம் சண்டை போட்டேன் , கோவிச்சுக்காதே, இந்த வாரம் நீ எடுத்துக்கோ” என பெரிய வாழைப்பழ பையை அவளிடம் நேற்று காத்தரீனா முறைத்த கருப்பன் நீட்டினான்.
“போன வாரக் கோபம், போன வாரத்தோட போச்சு, நீ தான் காலையில் ஓட்டப்பயிற்சி எடுக்கிறாய், உனக்குத் தான் தேவைப்படும்”
ஒருப்பக்கம் அருவெறுப்பாக இருந்தாலும், மறுப்பக்கம் நான் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏதோ ஒரு விசயத்தை சொல்ல வருவதைப்போல இருந்தது…
“மறக்காமல் வீட்டிற்குப்போனதும், அத்தனைப் பொருட்களையும் கழுவிடுங்கள், எது முன் தேதியோ அந்தப் பொருளை உடனேப் பயன்படுத்தவும்” காத்தரீனிடம் இருந்து மற்றொரு உத்தரவு கேட்டது.
தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனித்த காத்தரீனின் கண்கள் என்னைக் கவனித்துவிட்டன என்பதை உணர்ந்தேன். எத்தனை இரவுகளில் இருட்டில் ஒருவருக்கொருவர் பழக்கப்பட்டிருப்போம்.
“கார்த்தீ….” என அவள் சொல்ல, அங்கிருந்த ஒருவன் அவள் பார்த்த திசையை நோக்கி , அதாவது என்னை நோக்கி டார்ச் வெளிச்சம் அடித்தான். அருவெறுப்பிற்கு அப்பால் இருக்கும் அழகியலுடன் இருக்கும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாமா, இல்லை அசிங்கத்தை மிதிக்காமல் இப்படியே விடுவிடுவென எதிர்ப்பக்கம் நடந்துவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றேன் !!!
அங்கிருந்த அனைவரும் என்னைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்து அவர்களை நோக்கிக் கூப்பிட்டனர்.
நான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
—-
26
பூனைக்குட்டிகள்
“எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன், இதை வெளியே வைக்காதே என” என இத்தாலிய மொழியில் சீறிக்கொண்டே சாரா உள்ளே வந்தாள்.
வெளியே வைக்காதே என அவள் சொல்லியது, எனது வீட்டில் இருக்கும் அழகான மெது மெதுவென இருக்கும் மெத்தை வைத்த சாய்வு நாற்காலி. உள்ளே வரும்பொழுதே கோபக்கனலுடன் வருபவளுக்கு விளக்கம் சொன்னாலும் புரியாது என்பதால் , அவளுக்குப் பிடித்த ஏலம் தட்டிப் போட்ட தேநீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன்.
சாரா வார இறுதிகளில் வருவாள், மாலை அதிக பட்சம் 8 மணி வரை பேசிக்கொண்டிருப்பாள், பின் அவளது வீட்டிற்குப் போய்விடுவாள். கொஞ்சம்
பழமைவாத கத்தோலிக்க குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதால், ஹாலிவுட் படங்களில் நடப்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. சாரா தோழிக்கும் காதலிக்கும் இடையில் ஊசலாடும் ஓர் உறவில் இருப்பவள். எனக்கு அவளைத் திருமணம் செய்து கொள்ள
வேண்டும் என்பது விருப்பம். சில வாரங்களுக்கு முன் நடந்த கீழ்கண்ட உரையாடலுக்குப்பின்னர் அவளுக்கும் அப்படித்தானா என்பது தெரியாது.
“கார்த்தி, உனக்கு பூனை பிடிக்குமா நாய் பிடிக்குமா “
“தூரத்தில் இருந்து பார்க்க, எல்லா விலங்குகளையும் பிடிக்கும்”
“நாய், பூனைகளைப் பிடிக்காத மனிதர்கள் கூட இருப்பாங்களா, பெரிய வீட்டில், பத்து பதினைந்து பூனைகள் , நான்கைந்து நாய்கள், சிலப் பறவைகள் என அன்பு நிறைந்த உலகில் வாழ வேண்டும்”
“சாரா, மனிதர்களே சாப்பாட்டிற்கு அல்லாடும் நாட்டில் இருந்து வந்தவன் நான், என்னுடைய அக்கறை எல்லாம் மனிதர்கள் மேல் மட்டுமே … வீட்டிற்குள் விலங்குகளை வைத்து சோறு போட்டு வளர்க்கும் அளவிற்கு மனமும் பொருளாதாரமும் இடம் கொடுக்காது”
நாய்களையோ விலங்குகளையோ கண்டால், அடித்து விரட்டும் கொடுமைக்காரன் கிடையாது நான். ஆனாலும் என் கட்டுப்பாட்டு பகுதியில் மனிதர்களுக்கு மட்டுமே இடம் என்ற உறுதியில் இருப்பவன்.
எனது விடுதி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பூனைக்கு, சமைத்து மிஞ்சிய மீன் வருவல்களைப் நான் போடுவதை
”இவை எல்லாம் கொடுத்தால், பூனையின் வயிறு கெட்டுவிடும்., பூனைக்கு என்று சிறப்பு உணவுகள் கடைகளில் கிடைக்கும்” என ஒரு நாள் கடிந்து கொண்டாள்.
அடுத்த வாரமும் சாரா வரும்பொழுது, மெத்தை வைத்த சாய்வு நாற்காலி வெளியில்தான் இருந்தது. அவள் “கார்த்தீஈஈஈஈ ” எனக் கத்தியதில் மகிழ்ச்சி தெறித்தது.
பூனையும் அதனுடன் சில பூனைக்குட்டிகளும் அந்த நாற்காலியில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்தன. தனது ஐபோனை எடுத்து சுற்றி வளைத்து புகைப்படங்களாக எடுத்துக் கொண்டாள்.
சில மாதங்களுக்கு முன்னர், தேநீர் சிந்தியதால் , காய வைக்க வெளியே வைத்த நாற்காலியில், குளிருக்கு இதமாக, மெத்தையின் கதகதப்பில் தாய்ப்பூனை தூங்கிக் கொண்டிருந்தது பார்க்கையில் அவ்வளவு அழகாக இருந்தது. அதனால் ஒவ்வொரு இரவும் பத்து மணிக்குப் பிறகு நாற்காலியை
வெளியே வைத்துவிடுவேன்.
என்னுடைய நேரம், சாரா வரும்பொழுது பூனை இருக்காது, நாற்காலி மட்டும் இருக்கும், அவள் கோபம் அடைவாள். அதோடு மட்டுமல்லாமல், இந்த பூனையையும் சில வாரங்களாக ஆளைக் காணவில்லை, இருந்த போதிலும் ஒவ்வொரு
இரவும் நாற்காலியை மறக்காமல் வைத்துவிடுவேன். பூனையார் காணாமல் போன காரணம் இன்று விளங்கிவிட்டது. உங்களுக்கு சொன்னதைப்போல , சாராவிற்கும் நாற்காலி வைக்கும் காரணத்தை சொல்லிவிட்டேன். சாராவை இத்தனை மகிழ்ச்சியாக நான் பார்த்ததே இல்லை.
சொல்ல மறந்துவிட்டேன், சாரா இன்றிரவு என்னுடைய அறையில் தான் தங்கப் போகின்றாளாம்.
27
கரோலினா
விரலைக் கண்டபின்னரும் மீட்டப்பட அனுமதிக்காமல், வீணை என் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நான் காய்ந்த மாடு இல்லை என்பதாலும், கரையை நெருங்கும் நேரத்தில் பொறுமைக் காத்தால், தாழி வெண்ணெய் முழுமையாகக் கிடைக்கும் என்பதாலும் கரோலினாவின் பேச்சை உண்மையிலேயே ரசித்துக் கொண்டிருந்தேன்.
என்னைப் பொருத்தவரை இரண்டு வகையான பெண்கள். அழகிகள், பேரழகிகள் .., என்னை மதித்து பேசுபவர்கள் பேரழகிகள். ஒருநாள் ஏதோ ஒரு டேட்டிங் இணையதளத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்தபொழுது கவிதையாக வந்த பேரழகிதான் கரோலினா. பத்து நாட்கள் மின்னரட்டையில் பேசினோம், ஒரிரவு அவளைச் சந்திக்க முடிவு செய்தேன். அதோ அந்த இரவைத் தான் இப்பொழுது கடத்திக்கொண்டிருக்கின்றேன் !!!
வார இறுதியில் மாதிரி விமானம் ஒன்றில் விமானம் ஓட்டப்பழக திட்டமிட்டிருந்ததை ஒத்திவைத்துவிட்டு 14 மணிநேரம்
ரயில் பயணத்திற்குப்பின்னர் இவளைச் சந்திக்க வந்திருப்பதன் மூலம் எனது தேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இசை, இந்தியா, பாலிவுட் , வண்ணங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவளை காமத்தை நோக்கி மாற்ற,
”உன்னுடைய மறக்க முடியாத முத்தம் எது?”
அமைதியாக இருந்தாள்.
“முத்தங்கள் கொடுத்து இருக்கிறாயா?”
பொய்யாக முறைத்தாள்.
”பதினான்கு வயதில், முதன் முதலாக என் சம வயது இத்தாலிய நண்பனுக்கு கொடுத்து இருக்கின்றேன்”
“இடம் , பொருள், ஏவல்”
“என் குடும்பத்தினருடன் குரோசியா கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலாப்போய் இருந்தோம், இரண்டு வாரங்கள், கடலோரத்தில் தனி வீடு, சில மீட்டர் தூரத்தில் இருந்த வீட்டில் ஓர் இத்தாலியக் குடும்பம், அவர்களின் மூத்த மகன் ஸ்டெபனோ , நீ இருக்கும் ரோம் நகரத்தைச் சேர்ந்தவன் தான்…”
“ம்ம்ம்”
“எனக்கு இத்தாலியனும் தெரியாது, அவனுக்கு ஜெர்மனும் தெரியாது. எங்களுக்குப் பொதுவாகத் தெரிந்தது பத்து பதினைந்து
ஆங்கில வார்த்தைகள் தான், கள்ளங்கபடமற்ற முதல் காதலுக்கு மொழித் தேவையில்லை என்பதை அன்றுதான்
உணர்ந்து கொண்டேன்”
“ம்ம்ம்”
“அவன் அப்பா இத்தாலியைச் சேர்ந்தவர், அம்மா ஸ்விடீஷ்,,,,, இத்தாலிய பதின்ம மிடுக்கும், அவன் அம்மாவின் பூனைக் கண்களும் , விளையாட்டில் விட்டுக்கொடுத்தலும் அவன் மேல் காதல் வயப்பட வைத்துவிட்டது. கடைசி நாளன்று அவனை முத்தமிட்டதுதான் என் வாழ்நாளில் மறக்க முடியாதது, அதன் பின்னர் நூற்றுக்கணக்கான முத்தங்கள் என்னுடைய
ஆண் தோழர்களிடம் இருந்து பெற்று இருந்தாலும், அந்த முதல் முத்தத்திற்கு ஏதும் ஈடு இணையாகாது”
தமிழ்நாட்டில் இருந்த பொழுது, என்னுடைய முதல் முத்தம் அம்முவின் உதட்டைக் கடித்து வைத்ததில் வன்முறையாக முடிந்துப்போனது.
“அவனை அந்த விடுமுறைக்குப் பின்னர் தொடர்பு கொண்டாயா”
“இரண்டு வருடங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம், பின்னர் எனது பெற்றோர் விவாகரத்துப் பெற்றவுடன் எல்லாமே மாறிப்போய்விட்டது, அம்மாவும் நானும் வியன்னா வந்துவிட்டொம், தொடர்பு போய்விட்டது”
“ஆர்குட், பேஸ்புக் என எத்தனையோ இருக்கின்றதே, அவனின் முழுப்பெயர் நினைவு இருக்கிறதா,”
“அவனுடையப் பெயர் வித்தியாசமனது , இத்தாலிய ஸ்விடீஷ் கலப்புப் பெயர், ஸ்டெபனோ ஆண்டர்சன், அவன் அப்பா ஒரு விமானி, அவனுக்கும் விமானியாக வேண்டும் என்பதுதான் ஆசை,”
உலகத்தில் ஒரு நபரை மற்றொரு நபருடன் தொடர்புப்படுத்த, அதிக பட்சம் ஏழு பேர்கள்தான் தேவை என்று எங்கோப் படித்தது நினைவுக்கு வந்தது. நான் விமான ஓட்டப்பழகப்போகும் பயிற்சியாளரின் பெயரும் ஸ்டெபனோ ஆண்டர்சன் தான். அவனுக்கும் ஏறத்தாழ கரோலினாவின் வயதுதான். ஒரு வேளை அவனாக இருக்குமோ !!!
“ஸ்டெபனோவை இணையத்தில் கண்டுபிடிக்க விருப்பமில்லை, ஏதோ ஒரு நாள் அவனை நேரில் , உலகத்தில்
எந்த மூலையிலாவது ஏதேச்சையாக சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பேசிப்பழகிய பத்து நாட்களில் உன்னைச் சந்திக்க விருப்பம் காட்டியது கூட, நீ ரோமில் வசிப்பதுதான், யார் கண்டது உன் நட்புக்கூட அவனை சந்திக்க வழிவகை செய்யலாம்”
மறுநாள் காலை ஸ்டெபனோ ஆண்டர்சனைப் பற்றி கரோலினாவிடம் சொல்லலாம் என்று நினைத்தபடி , அவளுடன் கொஞ்சம் மது அருந்தினேன். கடந்த பத்து வருடங்களில் கற்றறிந்த வன்முறையற்ற முத்தங்கள் கொடுத்தேன்.
இதற்கு மேல், பழையத் தமிழ் சினிமாக்களில் காட்டுவதுபோல பூவுடன் பூ உரசிக்கொள்வதை, பறவைகள் கொஞ்சிக்கொள்வதை, பாம்புகள் பின்னிப்பிணைந்து கொள்வதை எல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள். வீரேந்திர சேவக் போல அதிரடியாக டிரிபிள் செஞ்சிரி எல்லாம் அடிக்கவில்லை என்றாலும், திராவிடைப்போல நிதானமாக இரட்டை சதம் அடித்து இருந்தேன்.
விடியலுக்கு முன்னர், நெஞ்சில் தலைவத்து படுத்திருந்தவளை தோளைச் சுற்றி அணைத்து இருந்தேன்.
“கார்த்தி, என்னுடைய பழைய ஆண் தோழர்கள் கொடுக்காத பாதுகாப்பு உணர்வை, உன் அணைப்பில் உணர்கின்றேன்”
அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்..
“நான் கொடுத்த கடைசி முத்தங்கள் ஸ்டெபனோவின் நினைவின்றி உனக்குக் கொடுக்கப்பட்டவை”
மௌனமாக இருந்தேன்.
“நன்றி” என்றாள், அவளின் நன்றி உடல் மனம் எண்ணம் மூன்றும் பூரணமடைந்திருந்ததை அவளின் கண்களின் வழியேக் காட்டியது. படுக்கையில் என்னிடம் நன்றி சொன்ன முதல் பெண் கரோலினாதான்.
மறுநாள் கரோலினாவிடம், எனதுப் பயிற்சியாளர் ஸ்டெபனோவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. விமானம் ஓட்டும் பயிற்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன் ஸ்டெபனோவுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன்.
28
வெரொனிகா
சிலப் பெண்பால் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் ஒர் ஈர்ப்பு ஏற்பட்டு, மனது தானாகவே அந்தப் பெயருக்கு ஓர் உருவம் கொடுக்கத் தொடங்கிவிடும். நான் பெண்களைக் காதலித்ததை
விட பெயர்களைக் காதலித்தது அதிகம். வெரொனிகா, இந்தப் பெயரை சமீபத்தில் வாசித்தது பவுலோ கோயல்ஹோவின் ஒரு புதினத்தின் கதாநாயகியாக … தற்கொலையின்
வாயிலில் நிற்பவள், தனது நாட்டைப்பற்றித் தவறாக எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை வாசிக்க நேரிடுகையில், குறைந்த பட்சம் அதற்கு பதில் எழுதவாவது உயிரோடு இருக்க
வேண்டும் என மீண்டு வர நினைப்பவள். சென்ற வாரம் தான் வாசித்து முடித்ததில் இருந்து தொடர்ந்து வெரொனிகா பெயருக்கு சில உருவங்களைக் கொடுக்கத் தொடங்கி இருந்தேன்.
எனக்கு ஒரு பழக்கம், கட்டுரையிலோ, கதையிலோ ஏதேனும் ஈர்ப்பைத் தரக்கூடிய பெண் பெயர்கள் தெரிந்தால், அந்த பெயர்களை இணையத்தில் தேடி, அந்தப் பெயரில் இருக்கும்
சிலரிடமாவது நட்புப் பாராட்ட நினைப்பேன். கடைசி 10 வருடங்களில், சிலப்பெயர்கள் நட்பைத் தாண்டியும் சில உறவுகளையும் உணர்வுகளையும், சில சமயங்களில் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும் இருந்ததுண்டு.
வெற்றித்திருமகள் என்ற பொருள் கொண்ட வெரொனிகா பெயரில் இருக்கும் மெய்நிகர் உருவங்களை ஃபேஸ்புக்கில் தேடி அனைவருக்கும் நட்பு அழைப்பு விடுத்தேன். வழமைப்போல 80 சதவீதத்தினர் நிராகரித்து, 20 சதவீதத்தினர் ஏற்றுக்கொண்டனர். என்னை ஏற்றுக்கொண்ட, 15 வெரொனிக்காக்களில், எனது ஊரில் இருந்து நேரிடையாக விமானம் செல்லும் நகரத்தில் வசிக்கும் பெண்களை வடிகட்டினேன். உக்ரைன், இங்கிலாந்து நீங்கலாக எஞ்சிய ஸ்லோவாக்கியாவில் வசிப்பதாக காட்டிய வெரொனிகாவிற்கு தனிச்செய்தி அனுப்பினேன். அன்னா கோர்னிகாவின் சாயலில் இருந்தாள், கைகளற்ற , கழுத்து இறக்கம் அதிகத்துடன் கூடிய ஒரு ஆடையை அணிந்து இருந்தாள். கணினியின் முன் அமர்ந்தபடி எடுத்தப் புகைப்படம் மாதிரி தெரிந்தது. தோள்பட்டையின் மச்சமும் கழுத்தில் அணிந்து இருந்த சிலுவை சங்கிலியும் கவனத்தைக்கவர்ந்தன. அடுத்த நிமிடத்தில் பதில் ஆங்கிலம் தனக்கு சரளமாக வரும் என ஆங்கிலத்தில் பதில் வந்தது. முதல் பிரச்சினை மொழிப்பிரச்சினை தீர்ந்தது, என நினைத்துக்கொண்டே, மேட்டின இனத்திற்கே உரிய பொய் வார்த்தைகளுடன் பேச்சுத் தொடர்ந்தது.
“உனக்கு ஸ்லோவாக்கியாவைப் பற்றி என்னத் தெரியும்”
ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கிய இந்த இரண்டு நாடுகளும் அடிக்கடி குழப்பினாலும் “கத்தியின் ரத்தமின்றி, பெரிய சங்கடங்கள் இன்றி ஒருங்கிணைந்த செக்கஸ்லோவாக்கியா விடம் இருந்து பிரிந்த நாடு, விலைவாசிகள் சாமானிய மனிதனுக்கு ஏற்ற வகையில் இருக்கும் நகரமான பிராட்டிஸ்லாவா தான் தலைநகரம், பொதுவுடமை பெரும்பலனைத் தந்த
ஐரோப்பியப்பகுதி” மனதுக்குள் விக்கிபீடியாவிற்கு நன்றி சொல்லியபடி பதிலளித்தேன்.
அர்த்தராத்திரியில் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டிய சங்கடத்தை நொந்தபடி, அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுது,
”உனக்குப் பெண் தோழி இருக்கின்றாளா…. ” நான் எதிர்பார்த்து இருந்த கேள்வியைக் கேட்டாள்.
“அழகும் அறிவும் கூடிய பெண்ணைத் தேடிக்கொண்டே இருக்கின்றேன்”
“அழகுடன் அறிவும் கூடிய பெண்கள் பிராட்டிஸ்லாவா வில் இருக்கின்றனர், சிலப்பெண்களின் பெயர்கள் வெரொனிகா என்று கூட இருக்கும்” என்று சொல்லி கண்ணடிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள்.
தொடர்ந்த நாட்களில் பேச்சின் சுவாரசியமும் கிளுகிளுப்பும் கூடிக்கொண்டே போனது. எவ்வளவுக் கேட்டும் ஸ்கைப்பிலோ , குரல் வழி அரட்டையிலோ வரமாட்டேன் என்றாள்.
“நாம் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், பேசுவதும் நேரில் மட்டுமே இருக்கவேண்டும்” என்று அவள் சொல்லியபொழுது அழகு கொஞ்சம் குறைவாக இருக்ககூடுமோ எனத் தோன்றியது.
மூடியிருக்கும் கையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அந்த சந்தேகத்தை அப்பால் தள்ளியது. பிப்ரவரியின் மத்தியில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
ஊருக்குக் கிளம்பும் இரண்டு நாட்களுக்கு முன்னர், போகிறதுதான் போகிறோம், வேறு ஏதாவது பெண் நட்பையும் பிராட்டிஸ்லாவாவில் ஏற்படுத்திக்கொள்வோம் என, கவர்ச்சியான ஒரு
ஐரோப்பியப் பெயரைத் தேடினேன். முன்னே நூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் கனரகவாகனம், எந்த வித முன்னறிவிப்பின்றி வண்டியைத் திடுமென
நிறுத்தினால் பின்னால் வருபவருக்கு என்ன அதிர்ச்சி ஏற்படுமோ அந்த அந்த் அதிர்ச்சி முகத்தில் அறைந்தது. வெரோனிகாவின் அதே புகைப்படம், புதிதாகத் தேடிய பெண்ணின்
முகப்பில் இருந்தது. வெரொனிகாவின் முகப்பில் இருக்கும் நண்பர்களை நோட்டம் விட்டதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண் நட்புகளின் மத்தியில் வெரொனிகாவின் படத்துடன்
வெவ்வெறுப் பெயர்களில் சில ஃபேஸ்புக் கணக்குகள் இருந்தன. கொஞ்சம் பயம் தொற்றிக்கொண்டது, பயணத்திட்டத்தை கைவிட்டு விடலாமா எனக்கூட யோசித்தேன்.
வாழ்க்கையில் எத்தனையோ அபயகரமான பாதைகளைக் கடந்து இருக்கிறேன், எது நடக்குமோ அது நடக்கும், போய் பார்த்துவிடலாம். மனதில் ஒரு குறுகுறுப்புடன், எப்போதும்
இல்லாத ஒரு திகிலுடனும் வெரொனிகா கொடுத்திருந்த முகவரிக்கு சென்றேன். அந்தக் குடியிருப்புப்பகுதியின் முதல் நுழைவாயில் வரவேற்றது. நுழைவாயிலில் வெரொனிகாவின்
வீட்டு எண்ணின் அழைப்பானை அழுத்தினேன். ஏனைய வீட்டு எண்களுக்கு நேர் எதிரே குடியிருப்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் வெரொனிகாவின் பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை. அழைப்பு மணி தொடர்ந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பவர் நிஜமாகவே வெரொனிகாவாக இருக்கலாம் அல்லது மனநோயாளி ஆணாகவோ
பெண்ணாகவோ இருக்கலாம், விபாச்சார போதை மருந்துக் கும்பலின் பிரதி நிதியாக இருக்காலாம். யாராக இருந்தாலும் விளக்கைத்தேடும் விட்டில் பூச்சியைபோல அசாதாரண
தைரியத்துடன் இருந்தேன். அழைப்பு எடுக்கப்பட்டது, ஆனால் யாரும் பேசவில்லை, நிசப்தத்தைக் கேட்க முடிந்தது.
“என் பெயர் கேத்தரினா நீல்ஸ்ஸான், ஸ்டாக்ஹோல்ம் இருந்து வந்திருக்கும் பெண்” என்று நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள கதவுத் திறக்கப்பட்டது.
——————-
29
நான்காவது பரிமாணம்
என்னமோ தெரியவில்லை, இத்தாலி வந்ததில் இருந்து அம்முவின் நினைவுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் அவளின் பெயரை கூகுளில் பத்துத் தடவைகளாவது தேடி இருப்பேன். அவளின் பெயரும் படிப்பும் தனித்துவமானவை… எத்தனைத் தேடியும் என்னுடைய ஆராய்ச்சிக்கட்டுரையில் நன்றித் தெரிவித்தப் பக்கத்தைத் தவிர வேறு எங்குமே அவளின் பெயர் இல்லை.-… மூன்று வருடங்களில் லிங்டின் தளத்திலாவது இருக்க மாட்டாளா என்ற ஒரே நப்பாசைதான் … ஒரு வேளை நேரத்தை நிறுத்தக் கூடிய ஆற்றல் எனக்கு இருந்தால், செப்டம்பர் 3, 2009 ஆம் ஆண்டோடு நிறுத்தி இருப்பேன். அன்றுதான் நான் அவளுடன் பேசிய கடைசி தினம். எத்தனைக் கெஞ்சியும் அவளின் பெற்றோர் பேச்சை மீறமாட்டேன் என்று விலகிப்போய்விட்டாள். பெண்கள் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால், மிச்சமீதின்றி அத்தனையும் துடைத்து எடுத்தது போல, இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிடுவார்கள். அவளை நினைவூட்டும் நபர்களை நானும் தள்ளிவைத்தேன் … தள்ளிவைத்தலில் பலப் பாடல்களும், ஏன் உணவுப்பழக்கங்கள் கூட உள்ளடங்கிப் போயின.
இதோ அவளின் நினைவுகளை சுப்ரமணியபுரத்தில் வரும் இளையராஜாப் பாட்டுடன் ஆளரவமற்ற , ரோம் நகரத்துப் புறநகர்ப் பகுதிகளில் பொட்டல் திடலில் மறுவாசிப்பு செய்து
கொண்டிருக்கின்றேன். எப்படியாவது அம்முவைக் கண்டுபிடித்துவிட வேண்டும், கடைசியாக அவளைப் பற்றிக் கேள்விப்ட்டது, இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கின்றாள் என.
விபரத்தை சொன்ன முன்னாள் அலுவலகத் தோழியை ஒட்டு மொத்தமாக நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்கி இருந்தேன். முதலில் அந்தத் தோழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற
எண்ணத்தோடு, இயற்கையின் உந்துதலை கழிக்க, நமது ஊர்ப்புறங்களில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தைப்போலக் காணப்பட்ட கூரையில் சுவர்களின் பின்னால் ஒதுங்கினேன்.
”பலப்பேர் வந்து போகின்ற தபால் நிலையத்திற்கு முன்னால் சிறுநீர் கழிக்கின்றாயே உனக்கு அறிவில்லையா “ என ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. இத்தாலியில் அதுவும் இந்த
இடத்திலா… எனது பேராசிரியர் வந்த முதல் நாளே சொன்னார், தனியாக எங்கும் தெரியாத இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று.. நான் கேட்டால்தானே….
“இல்லை இல்லை… நிறுத்திவிட்டேன். தாங்கள் யார்” குரலிலும் உடலிலும் தானாகவே நடுக்கம் வந்து சேர்ந்தது. அழுக்கு உடைகளுடன், நீண்ட தாடி, தலைமுடியுடன் ஒருவர்
மற்றொரு சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து வெளிவந்தார். ராணுவத்தின் உடையைப்போல ஒன்றை அணிந்திருந்தார், தோராயமாக 80 வயது இருக்கும்.
“அட … இந்தியனா … ~ என கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்து வியப்பு மேலிட, மேலும் கீழும் பார்த்தார். எனக்கு இரண்டு ஆறுதல்கள், கையில் இருப்பதைப் பிடுங்கிக் கொள்ளும் வழிப்பறித் திருடன் இல்லை. பேய்களும் பிசாசுகளும் இந்தியனா என ஆச்சரியமாக கேட்டதாக எங்கும் படித்ததில்லை.
“ஆமாம், தமிழ்நாட்டில் இருந்து வருகின்றேன்”
“எனக்கும் ஒரு தமிழ் நண்பன் இருந்தான், அதோ அந்தக் கால்வாயைக் கடக்கும்பொழுது, அச்சு நாட்டுப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்” என அந்தக்காலத்து ஆங்கிலத்தில்.
”ஓ நீங்கள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரா”
“ஆமாம் …. கனடாவில் இருந்து வந்த படையணிகளைச் சேர்ந்தவன், இத்தாலியை நாஜிக்களிடம் இருந்து மீட்டதில் உங்கள் இந்திய வீரர்களுக்கும் பங்கு உண்டு”
“படித்திருக்கின்றேன், கிட்டத்தட்ட 30 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாலியப் போர் முனைகளில் உயிரிழந்திருக்கின்றனர்” அந்த
முதியவருடனான உரையாடல் எனக்கும் தேவையாக இருந்தது. அம்முவின் சோக நினைவுகளில் இருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.
என்னைப்பற்றி விசாரித்தார். கணினிப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கே எதற்கு என அவர் என்னிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் திரும்பக்
கேட்டேன்.
“தபால் நிலையத்திற்கு தபால்களைப்போட வந்தேன்”, கையில் சில உறையிடப்பட்ட கடிதங்களையும் வைத்திருந்தார். நான் சிறுநீர் அடித்த இடத்திற்கு பத்தடித் தள்ளி சன்னல்
அமைப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்திற்கு அப்பால் கடிதங்களைப்போட எத்தனித்தவரிடம்,
“ஐயா, தபால் பெட்டியில் தான் போடவேண்டும், இங்கு போட்டால் தபால்கள் போகாது, என்னிடம் கொடுங்கள் நகரத்திற்கு செல்லும்பொழுது நான், பெட்டியில் போட்டுவிடுகின்றேன்”
“அது சரிதான், போக வேண்டிய இடத்திற்குப்போகும், போக வேண்டிய காலக்கட்டத்திற்குப் போகுமே,,,, இந்த ராணுவ தபால் நிலையமே சேரவேண்டியவர்களுக்குச் சேர்ப்பிக்கும்” என
தபால்களை சன்னலில் எறிந்துவிட்டு எதுவும் பேசாமல் எதிர்ப்பக்கம் நடந்துபோனார். ஒரு வேளை மனக்கிறுக்குப்பிடித்தவராக இருக்கக்கூடும் என நானும் மாணவர் விடுதியை நோக்கி
நடக்கலானேன். அடுத்த இரண்டு நாட்கள் படிப்பிலும், அம்முவிற்கும் எனக்கும் பொதுவாக இருந்த நண்பர்களைத் தேடுவதிலேயே காலம் கழிந்தது. ஒரு சிலரைக் கண்டுபிடித்து,
அவர்களிடம் தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகவும் என்னுடைய இத்தாலிய முகவரியை அவளுக்குத் தெரிவித்துவிடவும் கேட்டுக்கொண்டேன்.
வேறொரு இளையராஜாப்பாடலுடன் மீண்டும் முந்தையப் பகுதிக்கு நடைபயிலப் போனபொழுது அந்த முதியவரும் அவரின் கடிதங்களும் நினைவுக்கு வந்தது. கடிதங்களை எடுத்து சரியான தபால் பெட்டியில் போட்டுவிடலாம் என அந்தக் கட்டிடத்தில் கடிதங்களைத் தேடினேன். கலைந்து கிடந்த சில உறைகளை சேகரித்துக் கொண்டிருந்த பொழுதுதான்
கவனித்தேன். அனைத்திலும் 43 ஆம் ஆண்டு , இங்கிலாந்து ராணியின் படம் போட்ட தபால் தலை ஒட்டப்பட்டிருந்தது. இத்தாலிய முகவரிக்கு கடிதம் எழுதப்பட்டு கனடாவில்
இருந்து அனுப்பப்பட்டிருந்தது.
அந்த முதியவர் வயதின் மூப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதியாக நம்பினேன். இரண்டாம் உலகப்போர் காலக்கட்ட கடிதங்கள்,
அரியப்பொக்கிஷங்கள், ஏலத்திற்கு விட்டால் எப்படியும் கோடி ரூபாய் பெறுமானம் பெறும். அடுத்த மூன்று வருட படிப்பைப் பிரச்சினை இன்றி முடித்துவிடலாம் என மனம்
கணக்குப்போட்டது. ஒரு கடிதத்தை படிக்கப் பிரிக்க , முதுகில் மென்மையான அடி விழுந்தது. திகிலுடன் திரும்பிப்பார்க்க, முதியவர் கோபமாக என்னிடம் இருந்து கடிதங்களைப்
பிடுங்கிக்கொண்டார்.
“அடுத்தவர்களுக்கு வந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிப்பது அநாகரிகம்” என்றபடி, கையில் கொண்டு வந்திருந்த வேறு கடிதங்களை சன்னலில் எறிந்துவிட்டு அவரின் பாதையில்
திரும்பிப்போனார்.
“பைத்தியக்கார கிழவன்~ என்று மனதில் நினைத்தபடி, புதிதாக அவர் எறிந்த கடிதங்களைப் பொறுக்குகையில் ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. எதிலும் தபால் தலைகள் ஒட்டப்படவே
இல்லை. புத்தம் புதிதாக கனடிய முகவரிக்கு எழுதப்பட்ட கடிதங்கள். மறுநாள் விடியற்காலையிலேயே அந்த கட்டிடத்திற்கு வந்து, நேற்று எறியப்பட்ட கடிதங்கள் கிடக்கின்றனவா எனத் தேடினேன். தபால் தலையில்லாமல் எறியப்பட்ட ஒன்றுகூட
இல்லாமல் , புதிய கடிதங்கள் கிடந்தன தபால் தலைகளுடன், ஆனால் 44 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு. கண்கள் சொருக கீழே சரியப் போனவனை அந்த முதியவர் மீண்டும்
கைதாங்கலாகப் பிடித்துக் கொண்டார். மனதும் உடலும் தெளிவடைந்தபின்னர்,
“அவரிடம் நேரிடையாகவே கேட்டேன், நீங்கள் கடந்த காலத்திற்கா கடிதங்கள் எழுதுகின்றீர்கள்”
“எதிர்காலத்தில் போய் சேரக்கூடிய கடிதங்களை நம்மால் அனுப்ப முடியும் பொழுது, ஏன் கடந்த காலத்திற்கு அனுப்ப முடியாது, இந்த ராணுவ தபால் நிலையம் அந்த சேவையை
எனக்கு கடந்த 70 வருடங்களாக செய்துவருகின்றது … வேண்டுமானால் நீ கூட முயற்சி செய்து பாரேன்” என்று சித்தர் வாக்கு போல சொல்லிவிட்டு தனது கடிதங்களுடன் அந்த
இடத்தை விட்டு நகர்ந்தார்.
அந்த இடம் அமானுஷ்யமாக திகிலூட்டினாலும், அம்முவிற்கு 2009 துவக்கத்தில் கடிதத்தை எழுதி இந்த கட்டிடத்தில் போட்டால் என்ன எனத் தோன்றியது. அன்று இரவே, அம்முவின்
பிரிவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சிலத் தென்றல் வருடும் சம்பவங்களை நினைவில் கொண்டு, அந்தக் காலக் கட்டத்தில் எழுதுவதைப் போலவே ஒரு கடிதம் எழுதி,
அவளின் அந்நாளைய அலுவலக முகவரியுடன் ,மறுநாள் அந்த கட்டிடத்தில் போட்டுவிட்டு வந்தேன், பத்து நாட்கள் நடையாய் நடந்து எனக்கு அம்முவிடம் இருந்து ஏதேனும் பதில் வந்து இருக்கின்றதா என எதிர்ப்பார்ப்பதிலேயே கழிந்தது. அந்த முதியவரும் தென்படவில்லை, அவருக்கான கடிதங்களும் அங்கே காணப்படவில்லை. இரண்டு வாரமாகியும் எந்தக் கடிதமும் எனக்கு வரவில்லை. ஒருவேளை எனக்கு வந்த கடிதத்தை இந்தக் கிழவர் எடுத்துக் கொண்டு போய் இருப்பாரோ என சந்தேகமும் ஏற்பட்டது. 15 ஆம் நாள் நம்பிக்கை கைவிடாமல், கடிதம் வந்திருக்கிறதா, எனப் பார்க்க போகையில் கிழவர் எதிரில் வந்தார்.
“எனக்கு வந்த கடிதம் ஏதேனுமொன்றை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டீர்களா” எனப்பாவமாய் கேட்டேன்.
மையமாய் சிரித்துவிட்டு, ”உனக்கான தபால்கள் வந்து சேருமிடம் உனது இல்லத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையம் தான். இங்கு அனுப்ப மட்டும்தான் முடியும். , நாளை அங்கு போய் கேள், ஒரு வேளை வந்து இருக்கலாம்”
மறுநாள், உடைந்த இத்தாலியத்தில் என் வீட்டு முகவரிக்கு ஏதேனும் தபால்கள் வந்து இருக்கின்றனவா எனக்கேட்டேன்…. உள்ளேப் போய் சில நிமிடங்கள் கழித்து வந்த தபாலதிகாரி,
ஒரே ஒரு தபால் மட்டும் வந்திருக்கின்றது எனக் கையில் கொடுத்தார். தபால் தலையின் அச்சிடப்பட்டத் தேதியைப் பார்த்தேன்… கருப்புமை விரவி வருடம் தெரியவில்லை….
அனுப்புனர் முகவரி இல்லை, உறையின் மேல் இருந்த கையெழுத்து அம்முவினதுதான்.
அன்புடன் கார்த்திக்கிற்கு,
அம்மு எழுதிக் கொண்டது… நலம் நலமறிய ஆவல்……..
எனக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானேன்.
———-
30
தினைத் துணை நன்றி செயினும்
இந்திப் பேசும் இந்தியர்களை விட உருது பேசும் பாகிஸ்தானியர்களிடம் பழகியதுதான் அதிகம். ஆரம்பத்தில் விஜய்காந்த் , அர்ஜூன் பட வில்லன்களைப்போல அவர்களைப் பார்த்தாலும், போகப்போக நம்மவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலாகவே தெரிந்தார்கள். கடைசி சில வருடங்களாக பாகிஸ்தானியர்களிடம் பழகுவது பெரிய சிரமமான காரியமாகவே தெரியவில்லை. கடவுளைத் தவிர்த்து வேறு எந்த விசயத்தையும் அவர்களிடம் விவாதம் செய்யலாம். இந்த பாகிஸ்தானிய முன்னனுபவம் இருந்ததால் புதிதாக வந்து இருந்த ஆய்வு மாணவன் ஷாகித்தை வழி நடத்தும்படி என் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.
வந்ததும் வராததுமாய் எடுத்தவுடன் உருதுவில் பேச ஆரம்பித்தான்.
”நீ என்ன சொல்கிறாய் விளங்கவில்லை” என்றேன் ஆங்கிலத்தில்,
“இந்தி பேசமாட்டாயோ, அது உங்களின் ராஷ்டிரபாஷை அன்றோ” வேண்டுமென்றே சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பேசினான்.
ராட்டிரபாஷையோ கூட்டுற பாஷையோ என மனதில் நினைத்துக் கொண்டு, ”எனக்கு இந்தியோ உருதுவோ தெரியாது., தயவு செய்து ஆங்கிலத்தில் பேசவும்” முகத்தில் மென்மையும் குரலில் கடுமையும் காட்டினேன்.
இரண்டு நாட்களுக்கு அவனுடன், அவனுக்கான வரி எண், குடியிருக்கும் அட்டை, காப்பீடு போன்றவைகளை வாங்க அவனுடன் சென்ற பொழுது, என்னைப்போலவே நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்து இருக்கின்றான் என்று அவன் சொன்ன அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் நைய்யி நையின்னு ஒவ்வொரு விசயத்துற்கு என்னையும், எனது ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் சக இத்தாலியப் மாணவியையும் அரித்து எடுத்தாலும், ஒவ்வொன்றிற்கும் அவனுக்கு நான் மட்டும் பொறுமையாக்வே விளக்கிக் கொண்டிருந்தேன்.
ஷாகித்தின் பிரச்சினை என்னவெனில் ஆங்கிலம் அத்தனை சரளமாக வராது. ஒவ்வொரு வாக்கியத்தையும் உருதில் இருந்து மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் பேசுவதால், இலக்கணமும் அடிபட்டு, சரியான சொற்களும் கிடைக்கப்பெறாமல் அவன் சொல்ல வந்த விசயத்தின் அர்த்தமே மாறிவிடும். அவனுக்கு இத்தாலியப் மாணவியிடம் நட்பு பாராட்ட வெண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவளிடமே சின்ன சின்ன சந்தேகங்களைக் கூட என் பின் பக்கத்து இருக்கையில் இருந்து அடுத்த முனை இருக்கை வரை சென்று கேட்பான்.
இடம் பொருள் ஏவல்களை சரியாகப் புரிந்து கொள்ள மாட்டான். அவள் சிடுசிடுத்தப்பின்னரே என்னிடம் வருவான். நான் எளிய ஆங்கிலத்தில் ஷாகித்திற்கு விளக்கி , அப்படியும் புரியாவிடில் எனக்குத் தெரிந்த தூர்தர்ஷன் இந்தியைக் கொண்டு விளக்கி புரியவைப்பேன்.
ஒரு வார இறுதியில் மூன்றாவது மதுபானச் சுற்று முடிந்தவுடன் என் தோளில் சாய்ந்தபடி சக இத்தாலிய மாணவி கேட்டாள்.
“கார்த்தி, சிலநாட்களாகவே உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், ஷாகித் தொட்டதற்கெல்லாம் உன்னிடம் வந்து நிற்கும்பொழுது, எப்படி பொறுமையாக அவனுக்கு உதவுகின்றாய், இத்தனைக்கும் அவன் உன் நாட்டுக்காரனோ, உன் மொழிக்காரனோ ஏன் உன் மதத்துக்காரனோ இல்லை, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதே பல சமயங்களில் புரியாது, பேராசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றுதானே இப்படி செய்கிறாய்” என கண் சிமிட்டினாள்.
“அப்படி எல்லாம் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக பம்பாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்த பொழுது, அப்பொழுது ஊரும் புதியது, நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயற்சி செய்யும் நிறுவனத்தின் சூழலும் புதியது, சிறுநகரச் சூழலில் வளர்ந்த நான் அன்று தடுமாறிய பொழுது எனது உடைந்த ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு, அவரின் உடைந்த தமிழுடன் ஒரு தெலுங்கு பேசும் நண்பர் உதவினார்…. ஷாகித் முதன் முறையாக தனது சொந்த ஊர், நாடு, கண்டம் விட்டு இங்கு முழுக்க முழுக்க அந்நியமான தேசத்திற்கு வந்து இருக்கின்றான், … ஷாகித்திற்கு உதவும் பொழுதெல்லாம், ஏதோ ஒரு வகையில் எனக்கு அன்று கிடைத்த உதவியைத் திருப்பிச் செலுத்துவதாகவே ஒரு மகிழ்ச்சி,… வாய்ப்புகள் இருக்கும்பொழுது நமக்குக் கிடைத்ததை மற்றவருக்கு கொடுக்கத் தவறக்கூடாது … நிச்சயம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஷாகித்தும், ஒரு தமிழன் எனக்கு உதவினான் என்று நினைவுகூர்ந்து வேறு யாருக்காவது உதவுவான்”
“Pay it forward° எனச் சொல்லிவிட்டு என்னை மேலும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.
31
க்ரிஷ்
”கார்த்திபா ஒரு விசயம் கேட்கனும், கோச்சுக்க மாட்டதானே” என்ற அம்முவிடம்
“சொல்லு குட்டிமா~ என்றதும் எனது மடியில் அமர்ந்து என்னுடன் குழந்தைப் பாடல்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலிப்பாப்பா தலைத் திருப்பி என்னைப் பார்த்தாள்.
”உன்னை இல்லைடாக் குட்டி, நான் கூப்பிட்டது சீனியர் குட்டிமாவை.. ” மீண்டும் அஞ்சலிப்பாப்பாவிற்கு ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா… என்றது வெள்ளைப்பசு- உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.” பாட்டின் மேல் கவனம் சென்றது. எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று நபர்கள், ஆனால் கூப்பிடப் பயன் படுவது இரண்டே பெயர்கள். குட்டிமா இருவருக்கும் நான் கார்த்திபா. ஜூனியர் குட்டிமாவிற்கு ஜூலை வந்தால் 3 வயது. குழந்தைகளின் இரண்டு வயது முதல் நான்கு வயது வரைக்கான காலம் அற்புதமானது. நீங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதை விட, அவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம்.
“அம்மா, அப்பா இரண்டு பேரும் கோவிலுக்குப் போக ஆசைப்படுறாங்க,”
“ஹரே கிருஷ்னா க்ருப்போட கோயில் ஃப்ரீத்ஹெம்ஸ்காத்தான் பக்கம் தானே, அங்கேப் போயிட்டு வரச்சொல்லு”
“அவங்க… குட்டிப்பாவையும் கூட்டிட்டுப் போக ஆசைப்படுறாங்க, இதுவரைக்கும் பாப்பாவை கோவிலுக்கோ சர்ச்சுகோ கூட்டிட்டுப் போகலேன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க ..”
வாசுதேவனும் ரங்கநாயகியும் நீண்டகால கோபத்தை மறந்து , ஒரு மாதம் எங்களுடன் தங்க ஸ்வீடன் வந்து இருக்கிறார்கள். மருமகனை மாப்பிள்ளை என வாய்நிறையக் கூப்பிடாமல் பெயர் சொல்லி அழைப்பவர்களை நானும் பேர் சொல்லித்தான் அழைப்பேன்.
“நாமதான் பாப்பாவுக்கு சாமி, பூதம் கண்டதை எல்லாம் கத்துக்கொடுக்ககூடாதுன்னு பேசி இருக்கோமே,,, பின்ன என்ன திடீர்னு” என்றதும் அம்முவின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. தனது கோரிக்கையை விட, தன் அம்மா அப்பாவின் விருப்பம் நிரகாரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான ஆயுதம் அது. கிருஷ்ணன் தேவையில்லை, ஆனால் அம்மு முக்கியம் அல்லவா… குழந்தைக்கு சாமி கண்ணைக்குத்தும் ரீதியிலான விளக்கங்கள் எல்லாம் கொடுத்து பயமுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன், கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அஞ்சலிப்பாப்பா அச்சில் அம்முவைப்போல இருந்ததால், வாசுதேவன், ரங்கநாயகி இருவரும், மறுநாள் கோவிலில் குழந்தைக்கு நடைப்பழக்கியபடி மகளின் குழந்தைபிராயத்தை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒரே மகளை , அவர்களின் விருப்பமின்றி கவர்ந்தெடுத்ததின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சலியின் வடிவில் கரைந்து கொண்டிருந்தது.
பூசை நடக்கும்பொழுது, அஞ்சலிப்பாப்பாவிற்கு அது எல்லாம் புதியதாகத் தோன்றியது,. கொஞ்சம் மிரண்டுபோய் என் பக்கத்தில் வந்துவிட்டாள்,. இருந்த போதிலும் அவளுக்கு அங்கிருந்த கிருஷ்ணர் படங்களின் மேலும் பொம்மைகளின் மேலும் ஒர் ஈர்ப்பு வந்துவிட்டது.
“கார்த்திபா, அது என்ன?” என மழலையாக கிருஷ்ணன் சிலையை கைக் காட்டிக் கேட்டாள்.
“நல்லா .. மாட்டினியா … பதில் சொல்லு” எனத் தோளில் இடித்தாள் அம்மு.
“அது, கிருஷ்ணன், அர்ஜுனோட நண்பன்… காம்பிஸ்” , ஸ்வீடனிலேயே இருக்கப்போகின்றோம் என முடிவாகிவிட்டதால், தமிழும் ஸ்வீடிஷும் கலந்தே பேசி அஞ்சலிப்பாப்பவைப் பழக்கப் படுத்தி வருகின்றோம். நாங்கள் இருவரும் வேலைக்குப்போவதால் பகல் நேர முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதனால், தமிழுக்கு இணையாக ஸ்வீடிஷையும் அஞ்சலிப்பாப்பா வேகமாக கற்றுவருகிறாள். இந்த மூன்று வாரங்களாக அம்முவின் பெற்றோர் இருப்பதால் குழந்தைகள் காப்பகத்திற்கு மட்டமடித்துவிட்டு தமிழையும் பாசத்தையும் கற்று வருகின்றாள்.
“அஜூன் ஆரு”
“வீட்டுக்குப்போனதும் யூடூப்ல குட்டிம்மாவுக்கு கட்டுறேன்” எனச்சொல்லி வீட்டுக்கு வந்ததும் யுடுயுபில் மகாபாரதத் தொலைக்காட்சித் தொடரின் தமிழ் மொழிமாற்று வடிவத்தைத் தேடி எடுத்து,
“இதுதான் அஜூன்” என்றேன் குழந்தையின் மொழியில்.
“அஜுனும் க்ரிஷும் காம்பிஸ்” அவளுக்கு எளிமையாக்க கிருஷ்ணனை க்ரிஷ் ஆக்கி, “அஜூனுக்கு எப்போ பிரச்சினை வந்தாலும் க்ரிஷ் உதவி பண்ணுவார்”
“பிச்சினா” அடடா, குழந்தைகளுக்கு ஏதுப் பிரச்சினை, பிரச்சினை என்பதை எப்படி புரியவைப்பது. குழம்ப,
“இந்தே பிச்சினா … யெல்பர், க்ரிஷ் யெல்ப்பர் அஜுன் ஆல்தீத், பெர்சொன் வெம் யெல்பர் எர் க்ரிஷ் “ க்ரிஷ் எப்பொழுதும் அஜுனுக்கு உதவுவார், யார் உதவி செய்கிறார்களோ அவரின் பெயர் க்ரிஷ் என்ற பொருள்படும் விதத்தில் அம்மு ஸ்விடீஷில் தொடர்ந்தாள்.
வாசுதேவனும் ரங்கநாயகியும் ஊருக்குப்போன பின்னர், குழந்தையை அழைக்க நானும் அம்முவும் காப்பகத்திற்கு சென்றபொழுது, கருப்பு, வெள்ளை குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த எங்களின் தேவதையுடன் வேறு ஒரு குட்டி அரபுக்குழந்தையும் ஓடிவந்தது.
“குட்டிமா, இது யாரு… “ என அரபுக்குழந்தையையும் அரவணைத்தபடி அஞ்சலிப்பாப்பாவிடம் கேட்டேன்.
“க்ரிஷ்” என்றாள் குழந்தை.
———-
32
ஹலால்
பங்கேற்பாளனாய் இருப்பதைவிட பார்வையளானாய் இருப்பதே மேல், என்பதை நுட்பமான உணர்வுகள் சம்பந்தப்பட்ட விவாதங்களில் நான் கடைப்பிடிக்கும் அணுகுமுறை.
°மீனையும் தானே கொன்று சாப்பிடுகிறீர்கள், அது மட்டும் எப்படி எந்த சடங்கும் இன்றி ஹலால் ஆகின்றது” தன்னுடையை சீண்டலை, அறிவார்ந்த கேள்விமாதிரி வாசுதேவ் ஷாகித்திடம் கேட்டான்.
ஷாகித் பதில் சொல்லவில்லை. வாசுதேவ் என்னைப் பார்த்து ”பார்த்தியா, மடக்கிட்டேன்” என்ற வகையில் கண் சிமிட்டினான். வர வர வாசுதேவின் மேல் எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, குறைந்த பட்சம் கிரிக்கெட் பற்றி பேசுவதற்காகவது, அவனுடன் இருக்க வேண்டி இருக்கின்றது.
பாகிஸ்தானிலிருந்து ஷாகித் வந்தபின்னர், தமிழ்நாட்டு வழக்கமான, இயல்பான இஸ்லாமிய இணக்க வளர்ப்பு சூழலினால் அவனுடன் நட்பாக முடிந்தது. ஆனால் வடநாட்டு வாசுதேவிற்கு சீண்டலையும் கேலியையும் மட்டுமே கொடுக்கத் தெரிந்தது.
வழமையான புன்னகையைக் கொடுத்துவிட்டு, எங்களது ஆராய்ச்சிக்கூடத்தின் முதல் தளத்திற்கு ஷாகித்தின் மதிய தொழுகைக்கு சென்றுவிட்டான்.
ஷாகித் இந்த மீன் ஹாலால் பற்றிய விளக்கத்தை ஏற்கனவே எனக்கு தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கின்றான். ”செதில் வைத்த எல்லா மீன்களும் ஹலால், சாப்பிடலாம். வெப்பரத்தப் பிராணிகளுக்கும் குளிரரத்தப் பிராணிகளுக்கும் ஏக வித்தியாசமுண்டு. மீன்களின் ரத்த ஓட்டம், அதன் ரத்தவகையும் நிலவாழ் , பறவைகளைக் காட்டிலும் வேறானது. ஆகையினால், தேர்ந்த முறையில் மீன்களை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை” என அவன் சொன்ன அந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது.
“புலாலில் ஹலால் என்பது சுத்த வியாபரத்தந்திரம், அவங்க ஆட்கள் கடைகளில் மட்டுமே வியாபரம் நடக்க வேண்டும் என்று போடப்பட்ட சூட்சுமம்” வாசுதேவனின், சீண்டல் பொருளாதாரக் கோணம் எடுத்தது.
ஒருவேளை பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் கூட, அதுவும் சரிதானே… நான் கூட 25 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, ரோம் நகரத்திற்கு வெளியே இருக்கும் ஈழத்தமிழர் கடையில் தான் போய் அரிசி, பருப்பு இன்ன பிற வகையறாக்கள் வாங்குவேன்.
என்னைப் பொறுத்தவரை, என் சாப்பாட்டுத் தட்டில் கை வைக்காதவரை எந்தக் கோட்பாடுகளைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. ஆடோ, மாடோ, பன்றியோ… ஏன் ஒணானாக இருந்தாலும் என் வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு ஜீரணம் ஆகும் அனைத்து உணவு வகைகளும் ஹலாலே…. அவரவருக்கு சரி என்பதை அவரவர் பின்பற்றுகிறார்கள். நல்லதே ஆனாலும் திணிக்கப்படும்பொழுதுதான் பிரச்சினை.
ஷாகித்திடம் ஒரு நல்ல குணம் உண்டு, அன்புடன் வற்புறுத்தினால்,
“அன்பிற்காக சில விதிவிலக்குகளை பின்பற்றலாம்” நான் கொண்டு வந்திருக்கும் ஹலால் அல்லாத கோழிக்கறியை சிறிதளவேனும் ருசி பார்ப்பான்.
“எப்படித்தான் பிணத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ” ஒரு நாள் நான் கோழிக்கறி வறுவல் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது வாசுதேவ் கேட்டபிறகு அவனுக்கு மட்டும் தெரியும் படி, சைவச் சாப்பாட்டுப் பிரியர்களைக் கேலி செய்யும் சித்திரங்களையும் தகவல்களையும் பேஸ்புக்கில் பகிர ஆரம்பித்தேன். தாவரங்களுக்கும் உயிருண்டு என்பதைக் கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகப்போகின்றது என்பதை பல சைவப்பிரியர்கள் மறந்துவிடுகிறார்கள்.
நடுநிலை என்பதைவிட, சமனிலைப் படுத்தும் காரணியாக நான் இருந்ததால், ஷாகித்தை , பலசமயங்களில் வாசுதேவ்வின் உள்குத்துகளில் இருந்து காப்பாற்ற முடிந்தது.
சில மாதங்களுக்குப் பின்னர், ஷாகித்திற்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதால், அவன் வீட்டில் விருந்துக் கொடுக்க முடிவு செய்தான். வாசுதேவ் வரவில்லை என்று சொல்லிவிட்டான். இருந்த போதிலும் நான் ஷாகித்திற்கு அறிமுகப்படுத்தி இருந்த வேறு துறை மாணவர்கள் ரங்கநாதனும் ஸ்ரீராமும் வருவதாக சொன்னார்கள்.
விருந்து தினத்தன்று, அவனுக்கு உதவுவதற்காக காலையிலேயே சென்ற பொழுது, சமையலறையில் புதுப்பாத்திரங்களாக அடுக்கி வைத்திருந்தான். இரண்டு குழம்பு வைக்கும் சட்டிகள், அரிசி வைக்கப் புதுப்பாத்திரம், வாணலி, கரண்டிகள் என எல்லாம் முந்தைய நாள் வாங்கியவை.
“எதற்கு இந்தப் புதுப்பாத்திரங்கள், கல்யாணப்பையன் காசு சேர்க்க வேண்டாமா”
“இல்லை கார்த்தி, ஸ்ரீராமும் ரங்காவும் சைவர்கள், மாமிசம் சமைத்த எனது பாத்திரங்களில் சாப்பாடு செய்து கொடுத்தால், ஒரு வேளை அவர்களுக்கு அசூயையாக இருக்கக் கூடும், நான் கொடுக்கும் விருந்து அவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்”
ஷாகித்தின் மேல் இருக்கும் மதிப்பு உயர்ந்தது. அடுத்த முறை, ஹாலால் கோழி வாங்கி, ஷாகித்திற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என மனதினுள் முடிவு செய்தேன்.
33
ஒன்றிற்குப் பின் இரண்டு, பின்னர் மற்றொன்று
எல்லோருடைய இரண்டாவது காதலும், முதல் காதலைப் பற்றியப் பகிர்தலில் தான் ஆரம்பிக்கின்றது. என்னுடைய இந்த இத்தாலியக் காதல் எத்தனையாவது என்பது முக்கியமல்ல. எத்தனையாவது முறை என்றாலும், தங்களது முதல் காதலைப் பற்றியே சுவாரசியமாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள். தனது முன்னாள் காதலியை எதிர்மறைப் பிம்பமாக மாற்றாமல் அவளுக்கு ஒரு தேவதை உருவைக் கொடுத்து, தற்பொழுதைய தோழியிடம் பகிர்வதில்தான், நட்பு காதலாக முன்னெடுப்பதை முடிவு செய்கிறது. பிடித்தமான பெண் நட்புகளிடம் முந்தையக் காதல் பகிரப்படும்பொழுது, கிடைக்கும் அனுதாபம் காதல் உருமாற்றத்திற்கு வலு சேர்க்கும்.
“நீ எத்தனை வருடங்கள் உன் அம்முவைக் காதலித்தாய்?”
“மூன்றரை வருடங்கள்?, ஆனால் இப்பொழுதும் அவளைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன்” நிஜத்தில் ஒன்றரை வருடம் தான்., பிரிவின் தொடர் தாக்கங்களின் வலிகளையும் கணக்கில்
கொண்டதால் மேலும் இரண்டு ஆண்டுகள்,
“உன்னைப் போன்ற நல்லவனைப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது?” அடடா, இதே வசனத்தை இடையில் ஸ்வீடனில் இருந்தபொழுது சிலத் தெலுங்குப் பெண்களிடமும்
கேட்டிருக்கின்றேனே !!! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்ற வகையில் சுந்தரத் தெலுங்குத் தோழிகளும் வலி தராமல் சென்றுவிட்டனர்.
“நான் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை, குடிப்பேன், பெண்களை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்ப்பேன்,, வாய்ப்பு இருந்தால் வலை விரிப்பேன்”
“எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை, ஏனைய இந்தியர்களைக் காட்டிலும் நீ கண்ணியமாகவே நடந்து கொள்கின்றாய்,”
தன்னிடம் இல்லாத எதிர் விழுமியங்களை, இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தாழ்த்திக் கொள்ளும் நட்பரசியல் இவளிடமும் வேலை செய்தது. எதிர் இருக்கையில் இருந்து மாறி,
என்னருகே வந்து உட்கார்ந்தாள்.
“பொதுவாக தென்னிந்தியாவில் இருந்து வருபவர்கள், குறிப்பாக தமிழ் பேசுபவர்கள் பெண்களை மதிப்பவர்கள், அனுமதி கிடைக்கும் வரை அமைதியாகவே இருப்பார்கள்”
”அம்முவைப் பற்றி மேலும் கொஞ்சம் சொல்லு, உன்னை விலக்கி வைத்தவளைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் கதை கேட்க ஆரம்பித்தாள்.
இதைத் தானடா எதிர்பார்த்தாய் என, அலுவலகத்தில் அம்முவைச் சந்தித்தது, அவள் என்னைப் பொறுக்கி என்றது, தொடர் மன்னிப்பு, மாயாஜால் திரைப்படங்கள், பெற்றோர்களிடம் மாட்டிக்கொண்டது, சூழ்நிலைக் கைதியாதல், அவளின் திருமணம் என முழுநீள் விக்ரமன் திரைப்படம் போல சிலப்பல லாலாலா க்களுடன் கதையை முடித்தேன். பின்னணியில் இளையரஜாவின் இசை சூழலுக்கு மேலும் இனிமைச் சேர்த்தது.
“ஒன்று தெரியுமா, அவளின் மேல் என் சுண்டு விரல் கூடப் பட்டது கிடையாது?”
”என்ன?” வியப்பாக கண்களை அகட்டிக் கேட்டாள்.
”இரண்டு காரணங்கள், உடல் சாரா காதல் தான் உயர்ந்தது என்று அன்றிருந்த ஒரு தவறான அபிப்ராயம், இரண்டாவது வாய்ப்புக் கிடைக்காமை”
“இங்கே எல்லாம் காதல், காமத்தில் ஆரம்பித்து, கலவியில் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும், காமமும் கலவியும் காதலில் மிகமிக முக்கியமானது” என்றபடி தோளில் சாய்ந்தாள்.
“ஆமாம் கார்த்தி, இன்னும் நீ பிரம்மசரியத்தைத் தான் கடைப்பிடிக்கிறாயா …”
“இல்லை இல்லை, ஸ்வீடனில் இருந்த பொழுது இடையில் சில பரிட்சார்த்த முயற்சிகள் நடந்திருக்கின்றன”
மனம் விட்டு சிரித்தபடி என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
”கொக்கு ஒன்னு கொக்கிப்போடுது ஹோய்…. ” என கங்கை அமரன் பாட, காதல் முழுமையடைவது காமத்திலும் கலவியிலுந்தான் என்பதை உணர்ந்தபடி அன்றிரவு நீடித்த இரவாக மாறிப்போனது.
அடுத்த இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்வது, பின்னர் தோதுப்பட்டால் திருமணம் செய்து கொள்ளாலாம் எனவும் முடிவு செய்தோம்.
அந்த வருட, புதுவருடக் கொண்டாட்டத்திற்காக, அருகில் இருக்கும் மிகப்பிரபலமான உணவரங்கத்திற்கு சென்றபொழுது, எனது இத்தாலியக் காதலி திடிரென வருத்தமானாள்.
தொடர் வற்புறுத்தல்களுக்குப்பின்னர் தூரத்தில் இருக்கும் மேசையைக் காட்டினாள். அங்கே மொட்டைத்தலையுடன் ஒரு இத்தாலிய இளைஞன், அழகான இத்தாலியப் பெண்ணுடன் அமர்ந்திருந்தான். அவன் எனதுக் காதலியின் முன்னாள் காதலன் எனப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்,
“கடந்த காலங்களைத் திரைப்படங்கள் போலப் பார்க்க பழகிக் கொள்ளவேண்டும், நாம் வேண்டுமானால் வேறு இடத்திற்குப் போகலாமா”
“வேண்டாம் கார்த்தி, நான் அன்று அவனைப் பற்றி நினைத்தது எல்லாம் உண்மை, அவன் உண்மையிலேயே பொம்பளைப் பொறுக்கிதான், அப்பொழுது எல்லாம் என்னை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கின்றான் தெரியுமா, எதற்கு எடுத்தாலும் சந்தேகம், படுப்பதற்கு மட்டும் தேவையான ஒரு பொருளாக என்னைப் பயன்படுத்திக் கொண்டான்” என அவளின் முன்னாள் காதலனை, சிலப்பல கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துத் திட்டிக்கொண்டிருந்தாள். சிலத் திட்டுகளில் உண்மையிருந்த போதிலும், பெரும்பான்மையான திட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவையாகவேத் தோன்றின. அவளைச் சமாதனப்படுத்தி இரவு உணவை முடித்தோம்.
முன்னாள் காதலன் இவள் இருப்பதைக் கவனித்துவிட்டு, தன்னுடையப் பெண்ணுடன் எங்களின் மேசைக்கு வந்து எங்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னான். அவன் கண்களில் என்னுடைய காதலி இன்னமும் தேவதையாகவே இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது., ஆண்கள் தங்களுடைய அனைத்துக் காதலிகளையும் எல்லாக் காலக் காட்டத்திலும் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள்., முன்னாள் காதலி என்ற சொற்பதம் என்பதே ஆண்களுக்கு கிடையாது, ஆனால் பெண்களுக்கு தங்களது முன்னாள் காதலன் எப்பொழுதும் வில்லன் தான், என்பதை எனது பேஸ்புக் நிலைத்தகவலாக தமிழில் வைக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.
34
கக்கூஸ்
கடந்த இரண்டரை மணிநேர ரயில் பயணத்தில், ரயிலில் மட்டுமல்லாது, ஒவ்வொரு நிறுத்தங்களிலும் விற்ற அனைத்தையும் வாங்கித் தின்றதன் வினை, பத்து நிமிடங்களுக்கு மேலாக கக்கூஸில் இருக்க வைத்துவிட்டது. சிறுவயதில் இருந்தே எனக்கு ரயில் பயணம் பிடிக்கக் காரணம் ஒன்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பது,மற்றொன்று இந்தக் கழிவறை வசதிகள். உள்ளே நுழைந்தபொழுது இந்த இருப்புப்பாதை சந்திப்பில் நின்ற ரயில், பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் கிளம்பவில்லை. என்னுடையத் தோழர்களுக்கு நான் கக்கூஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பிடிக்காது. தமிழுக்கு இடையில் , வார்த்தைக்கு வார்த்தை ஷிட் உபயோகப்படுத்தும் அவர்களுக்கு டாய்லெட் என்று சொன்னால்தான் பிடிக்கும்.
நெடுங்காலமாகவே , கக்கூஸ் வார்த்தைத் தமிழின் கொச்சையான வார்த்தை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு எதேச்சையாக ஒருநாள் பயன்படுத்த,எனது நெதர்லாந்துத் தோழி, அந்த வார்த்தையின் பூர்வீகத்தை புரியவைத்தாள். கக்கா – கழிவு, ஹூஸ் – இருப்பிடம் கழிவுகளுக்கான இடம் என்ற கக்கூஸ் டச்சுவார்த்தையில் இருந்து வந்தது எனச் சொன்னாள். தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு ஏன் இந்தோனேசிய மொழியிலும் இந்த வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்கள்
மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளைப் பற்றி ஆராய்ச்சிப்படிப்பு படிக்கும் அந்த நெதர்லாந்துத் தோழியின் அருகில் மீண்டும் வந்து உட்கார்ந்தேன். இவளின் ஒருவார தமிழ் நாட்டுப் பயணத்தில், இந்தியக் குடியரசின் பிரதாபங்களையும், எப்படி நாங்கள் வல்லரசு என்ற நிலையை நோக்கி, ராணுவ வலிமையிலும், பொருளாதார வலிமையிலும் நகர்கின்றோம் என்பதை எல்லாம் பெருமையுடன் வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் விளக்கிக்கொண்டே இருந்தேன்.
அவள் முகத்தில் சுணக்கம் தெரிய, நெளிந்தபடியே,
“ரயில் எப்பொழுது நகரும் “ எனக்கேட்டாள்.
”தெரியவில்லை, இந்த சந்திப்பில் பொதுவாக ஐந்து நிமிடங்கள்தான் நிற்கும், ஒரு வேளை எதிர்வரும் வண்டிக்காக காத்திருக்கக்கூடும்” சிறிது இடைவெளிவிட்டு, “உடல்நிலை எதுவும் சரியில்லையா?”
“உடல்நலம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, வயிற்றைக் கலக்குகிறது, கக்கூஸைப் பயன்படுத்த வேண்டும்” என்றாள் டச்சு கலந்த ஆங்கிலத்தில்.
“அட, இதற்கென்ன, இந்திய ரயில்களின் சிறப்பம்சமே, ஒரு பெட்டியில் நான்கு கழிவறைகள் இருப்பதுதான், தாராளமாக போய் வரவேண்டியதுதானே, உடைமைகளை நான் பார்த்துக்கொள்கின்றேன்”
அவள் பதில் சொல்ல முற்படுதவற்குள் ரயில் மெல்ல நகர்ந்து வேகம் எடுக்க, தோழியும் கழிவறைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து விட்ட பதிலைத் தொடர்ந்தாள்.
“நான்கு கழிவறைகள், முதல் வகுப்புப் பெட்டிகளில் சுத்தம் அற்புதம், ஆஹோ ஓஹோ எல்லாம் சரிதான், ரயில் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது, நின்று கொண்டிருக்கும் ரயிலில் கழிவறையை உபயோகிப்பது தவறு, மேலும் உங்கள் நாட்டில் ரயில் தண்டவாளங்களில் கிடக்கும் கழிவுகளை மனிதர்கள்தான் கையை உபயோகப்படுத்தித் தான் சுத்தப்படுத்துகிறார்கள், குறைந்த பட்சம் நான் அதற்கு காரணம் ஆக மாட்டேன், வேறு ஒருவரின் மனிதக் கழிவுகளை, மற்றொருவர் சுத்தம் செய்ய வேலை வாங்குவது நாகரீகம் அல்ல ”
35
ஈரோ
”இந்த தமிழ் ஆட்கள் எல்லாம், இந்தியாவிற்கு பிரச்சினை வரும்படியாகவே பேசி, இந்தியா தேசியத்திற்கு எதிராகவே இருப்பார்கள், இந்தியை எதிர்ப்பார்கள், ராமரை மதிக்க மாட்டார்கள், இட ஒதுக்கீடை ஆதரிப்பார்கள் !!!” , அகர்வாலின் வழக்கமான சீண்டல் ஆரம்பமானது.
சபை நாகரீகம் எனக்கு தெரியுமாதலால், ஏனைய இத்தாலிய நண்பர்கள் மத்தியில், மெலிதாகப் புன்னகைத்துவிட்டு வைனை அடுத்த மடக்குக் குடித்தேன். அகர்வாலின் அறியாமைக்கு பதில் சொன்னால், அவனை எனக்கு சரிச்சமமாக வைப்பதுப்போல ஆகிவிடும். ஆட்டம்போடுவதற்கும் மது அருந்துவதற்கும் கூடியிருக்கும் இடத்தில், பதிலுக்குப்பதில் பேசி, என்னுடைய கொண்டாட்ட மனோநிலையை குறைத்துக்கொள்ள விரும்பியதே இல்லை. என்னுடைய அரசியல் , என்னுடைய நிலைப்பாடுகளை, யாருக்கு சென்றடைய வேண்டுமோ, பேஸ்புக்கில் தகவல்களாக அவரவர் மொழிகளில் வைத்துவிடுவேன்.
”இந்தியா என்று சொல்வதேத் தவறு, பாரதம் என்றே சொல்ல வேண்டும், காலங்காலமாய் பண்பாடுகளைத் தொடரும் நாடு, இந்து மதத்தில் இல்லாத விசயங்களே இல்லை, அடுத்த வல்லரசு, ஊழலையும் இடஒதுக்கிட்டையும் ஒழித்துவிட்டால், இந்தியா சுபிட்சமடைந்துவிடும் என அவன்பாட்டிற்கு பேசிக்கொண்டேப் போனான்”
தன்னை தேசப்பற்றாளனாக காட்டிக்கொள்வதில் அவனுக்கு அத்தனைப்பிரியம்,. அது என்னமோ தெரியவில்லை, நான் பார்த்த தேசப்பற்றாளர்கள் எல்லாம் தீவிர வலதுசாரிகளாகவே இருக்கின்றனர். அகர்வாலின் அத்தனை புலம்பல்களுக்கு காரணம், புதிய இத்தாலிய நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பொழுது Io sono Tamil அதாவது நான் தமிழ் என்ற அர்த்தத்தில் இத்தாலிய மொழியில் என்று சொல்லிவிட்டேன்,
அகர்வாலுக்கு ஏதோ ஒரு கைபேசி அழைப்பு வர, அவன் வீட்டிற்கு வரவேண்டிய பணத்தை அடுத்த மாதம் அனுப்புவதாக பேசி முடித்துவிட்டு , எங்களை நோக்கிச் சொன்னான்.
”சமீப காலமாக இந்திய பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இப்பொழுது 66 ஆக இருக்கின்றது, அடுத்த மாதம் 75 ரூபாய் அளவில் வரும் என எதிர்பார்க்கின்றேன், சில வாரங்கள் கழித்து வீட்டிற்கு பணம் அனுப்பும்பொழுது, நல்ல லாபம் பார்க்கலாம், 100 ரூபாய் அளவிற்கு இந்திய பணம் வந்துவிட்டால் எத்தனை நல்லா இருக்கும், ” என பல்லிளித்தான்.
ஏனைய இத்தாலிய நண்பர்கள் உள்ளர்த்தத்துடன் என்னைப்பார்க்க, வழமைப்போல ஏதும் பேசாமல் அடுத்த மடக்கு வைனை எடுத்துக்குடித்தேன்.
36
வாடிகன்
மிகப்பெரும் கோயில்களுக்குச் செல்லும்பொழுதெல்லாம் ஏற்படும் ஒருவிதமான சிலிர்ப்பு, இந்த நீண்ட நெடிய வரிசையில் வாடிகன் நகரம் / நாட்டிற்குள் நுழைய நிற்கும்பொழுதும் ஏற்பட்டது. சிலிர்ப்பிற்கு காரணம் பக்தியல்ல, கடவுளின் பெயரால் அமைக்கப்பட்ட எந்த ஓர் இடமும், அதிகார மையத்தின் மற்றொரு வடிவம் தான். வரலாற்றின் நீட்சிகளையும் மிச்சங்களையும் கடக்கும்பொழுது சிலிர்ப்பு ஏற்படுவது இயற்கைதானே !!!
சிறுவயதில், வாடிகன் தபால்தலைக்காக 20, வெவ்வேறு நாட்டுத் தபால்தலைகளை பரிமாற்றம் செய்த்தில் இருந்து வாடிகன் மேல் ஈர்ப்பு, தொடர்ந்து கத்தோலிக்கப் பள்ளியில் படித்ததால், முதலில் இறை சார்ந்த அபிமானமும், பின்னர் அதிகாரம் சார்ந்த அபிமானமும், தொடர்ந்து ரோமப் பேரரசின் எச்சங்களைப் பாதுகாத்து வருவதால் தொன்மை சார்ந்த அபிமானமும் தொடர்கின்றது.
நாட்டிற்குள் நாடு என்பதைக்காட்டிலும், நகரத்திற்குள் நாடு என்பதே சரி, பொடிநடையாக நடந்து ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு கடப்பது என்பது சுவாரசியமானதுதான். உள் நுழைவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரிசையில் எனக்கு முன்னால் சில அமெரிக்க மக்கள், அதற்கடுத்தாற்போல ஒரு முஸ்லீம், தாடி, உடை மத்தியக் கிழக்கு முஸ்லீம் எனச் சொல்லியது. எனக்கு முன்னிருந்தவர்களும் பின்னிருந்தவர்களும் அவரை ஒரு கருப்பாட்டைப் போலவே பார்த்துக் கொண்டிருக்க , நான் அரைக் கால்சட்டை, மெலிதான மேலாடை அணிந்து இருந்த அமெரிக்கப் பெண்களை ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த முஸ்லீம் மனிதருக்கு ஒருத் தயக்கம் இருந்திருக்கும் போல, மெல்ல பின் நகர்ந்து , சினேகமாக சிரித்த என்னருகில் வந்து நின்று கொண்டார்.
எல்லோரையும் அனுமதிக்கும் இந்த பாங்கிற்காகவே எனக்கு கிறித்தவ புனிதத் தலங்களை எனக்குப்பிடிக்கும். ஓரளவிற்கு சமத்துவம் நிலவும் தமிழ்நாட்டில் கூட இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்த்து நொந்ததுண்டு.
“மெக்கா, மதீனாவிற்கு ஏனையவர்களை விட மாட்டார்கள், இவர்கள் மட்டும் ஏன் இங்கு வருகிறார்கள்” பின்னால் இருந்த சிலப் பழமைவாதிகள் இத்தாலிய மொழியில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். ஏறத்தாழ இதையொட்டி என் மனதிலும் ஒரு கேள்வி இருந்தது. கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம் என்பவர், அந்தந்த மதம் சார்ந்தால் மட்டுமே
அனுமதிப்பதேன் !!!
எனக்கு முன்னால் இருந்த முஸ்லீம் துருக்கி நாட்டவராம். அவர் ஆபிராகமிய மதங்கள் பற்றிய ஆராய்ச்சிப்படிப்பைப் படித்துவருகின்றாராம். வரிசை மெல்ல பாதுகாப்பு பரிசோதனை வளையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சமீபத்தில் வாடிகன், துருக்கிய ஆட்டோமான் பேரரசு சம்பந்தப்பட்ட பழமையான குறிப்புகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டுவந்தது. துருக்கிய ஆட்டோமான் பேரரசர்களின் பெருந்தன்மைதான் இன்னும் வாடிகனை நிலைகுலையாமல் வைத்திருக்கக் காரணம் என்று எங்கேயோப் படித்து இருக்கின்றேன்.
முன்னால் இருந்த அரைக் கால் சட்டை கவர்ச்சி அமெரிக்கக் கும்பலை, புன்னகையுடன் வரவேற்று பாதுகாப்பு அதிகாரி எந்த தடவல் சோதனைகளையும் செய்யாமல் இடது புறம் நுழைவாயிலின் வழியாக ஆலயத்திற்கு செல்லுமாறு கைக்காட்டினார். அடுத்து துருக்கியரை நிறுத்தி, முடிந்தவரை தடவல் சோதனை நடைபெற்றது. அவர்களின் சந்தேகம் தீரும் வரையில் சோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் உள்ளே நுழைய அனுமதிகப்பட்டார்.
எனக்குப் பின்னிருந்த இத்தாலியர்கள் அவைக் குறிப்புகளுக்கு ஒவ்வாத வகையில் இஸ்லாமியர்களைப் பற்றிய தங்களுக்கான கருத்துக்களைக் கூறிக்கொண்டிருந்தனர். இணையாக இருந்த அடுத்தடுத்த பாதுகாப்பு சோதனைத் தளங்களில் இத்தாலியர்கள், வெள்ளைக்காரர்கள் எந்தவிதமான தடவல் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் உள்ளே அனுப்பப்பட்டனர். அடுத்தது நான், மாநிறத்திற்கும் சற்று குறைவான எனக்கும் , தடவல் சோதனை இருந்தது, ஆனால் கடமைக்கென , கையை மேலேத்தூக்கு அகட்டு என நடந்து முடிந்த பின்னர் அந்தத் துருக்கிய முஸ்லீமைக் கண்கள் தேடியது. வலதுபுறம் இருந்த வாயிலின் வழியாக வேகமாக வாடிகனை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்.
37
ஐரோப்பிய அம்மு
ஆணுறையைத் தவிர அனைத்தையும் விமானப் பயணத்தின் போது விற்கும் விமான சேவை இது, மலிவு விலை விமான சேவை எனக்கு அறவேப் பிடிக்காது எனினும், ரோமில் இருந்து ஸ்லோவாக்கிய தலைநகரத்திற்குப் போவதற்கு இதைவிட்டால் வேறுவழி கிடையாது என்பதால் பிராட்டிஸ்லாவாவில் ஒரு கருத்தரங்கை முடித்துவிட்டு ரோமிற்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றேன்.
எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த, பெண் மென்சோகத்துடன் ஒரு கையில் தனது இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையையும் பிடித்துக் கொண்டு செக்-இன் உடைமைகளின் எடை அதிகம் இருக்கின்றது என, சிலவற்றை எடுத்து, கைப்பையில் திணித்துக் கொண்டிருந்தாள். அம்மு கொஞ்சம் நிறமாக இருந்து, தங்க நிறக் கூந்தல் இருந்தால் எப்படி இருந்திருப்பாளோ அதேப்போல இருந்தாள். பிரதிகளில்தான் தருணங்கள் தன்னை நீர்த்துக் கொள்கின்றன. அம்முவின் உருவத்தை உணர்வை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் தேடிக்கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்திருப்பாளோ என்னவோ, குழந்தையை இழுத்துக்கொண்டு, பாதுகாப்பு சோதனை வலையத்தை நோக்கி வேகமாக நடந்துப் போனாள்.
நான் வைத்திருந்தது வெறும் கைப்பைதான், பொதுவாக 10 கிலோ தான் அனுமதி என்றால் நான் எடுத்துச் செல்வது 5 கிலோவிற்கு மிகாது. எனக்கான நடைமுறைகளை முடித்து, விமானத்திற்காகக் காத்திருக்கும் தளத்திற்கு சென்றபொழுது , அங்கும் இங்கும் ஓடிவிளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு முதுகில் ஓர் அடியைப்போட்டு உட்கார வைத்துக்கொண்டிருந்தாள் அந்த ஐரோப்பிய அம்மு. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிக்க மாட்டார்கள் என்றாலும், முன்னாள் சோவியத் தோழமை நாடுகளில் , ஒழுக்கம் தண்டனைகளின் வழியாகவும் போதிக்கப்பட்டிருந்ததால், இந்தத் தலைமுறையிலும் சிலப் பல இடங்களில் வெளிப்படும். ஏன் மேற்கத்திய இத்தாலியில் கூட , ஒரு முறை அடம்பிடித்த குழந்தையை அம்மா இரண்டு சாத்து சாத்த, பாட்டியிடம் ஓடிப்போன குழந்தைக்கு , பாட்டியிடமும் இரண்டு அடி கிடைத்தது.
சிறுகதைகளைத் தேட ஆரம்பித்தபின்னர் காத்திருப்பின்பொழுது புத்தகம் படிக்கும் பழக்கத்தையும், இளையராஜாவைக் கேட்கும் பழக்கத்தையும் விட்டுவிட்டதால் மனிதர்களை கவனிக்க ஆரம்பித்தேன், கண்டிப்பாக ஒரு சிறுகதையாவது சிக்கும். ஐரோப்பிய அம்முவின் குழந்தை, என்னைப் பார்த்து கண் சிமிட்டியது, அப்படியேக் குட்டி ஐரோப்பிய அம்மு. கூந்தல் நிறம் மட்டும் கருப்பு, குழந்தையின் அப்பாவின் பாதி ஜீன் கூந்தலில் வந்துவிட்டது போலும், நிமிடத்திற்கு ஒரு முறை கைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள், ஒரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொண்டிருக்க, குழந்தை அவள் கட்டுப்பாட்டை மீறி என்னை நோக்கி ஓடி வந்தது. பேசிக்கொண்டிருந்தவள், ஓடி வந்து குழந்தையை வெடுக்கென இழுத்துக் கொண்டு போனாள். கோபமும் அம்முவையே பிரதிபலித்ததனால் ஐரோப்பிய அம்முவின் மேலும் ஈர்ப்பு அதிகமானது.
விமானத்திற்குள் செல்ல ஒவ்வொருவராகத் தயாராக, விமான சேவையின் அதிகாரிகள் கைப்பையின் எடையையும் பரிமாணத்தையும் சோதிக்க ஆரம்பித்தனர். பாதிக்குப் பாதி பேர் அழுத்தி திணித்து, சமாளித்துவிட்டனர். ஐரோப்பிய அம்முவின் கைப்பையோ இரண்டு மடங்கு இருந்தது,அவளே சில மேல் சட்டைகளை எடுத்து மாட்டிக்கொண்டாலும் இன்னும் அளவு குறையவில்லை. நேரம் அதிகம் எடுத்துக் கொண்டிருப்பதால், அவளை தண்டக் கட்டணம் செலுத்தச் சொன்னார்கள். ஸ்லோவாக்கிய மொழியில் அதிகாரிகளும் அவளும் பேசிக்கொண்டிருந்தாலும், கெஞ்சல்கள் எந்த மொழியிலும் புரியும் என்பதால் என்னப் பேசி இருப்பார்கள் என்பது விளங்கியது. அவளிடம் பணமும் குறைவாக இருந்தது போலும். வரிசையில் இருந்து விலகி, குழந்தையின் சில உடைகள், அவளது சில உடைகள், சில விளையாட்டுப்பொருட்கள்,ஆகியனவற்றை குப்பைத் தொட்டியில் போட்டாள். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பை இருந்ததால் இந்த முறை விமானத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டாள். வரிசையில் இருந்து விலகிய நான், குப்பைத் தொட்டிக்குச் சென்று அவற்றை எடுத்து யாரும் கவனிக்காதபடி கைப்பையில் போட்டுக்கொண்டேன்.
மாநகரப்பேருந்தில் பயணம் செய்ய உள்நுழையும் பொழுது என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு, கடைசியாக விமானத்திற்குள் நுழையும்பொழுது ஏற்பட்டது. எந்த விசயத்தை ஒதுக்க நினைக்கிறமோ , அதுவே ஆடை அலங்காரங்களுடன் அருகே வரும். எனக்கு அவளுக்கருகே ஓர் இருக்கை கொடுக்கப்பட்டது. தலைக்குமேல் கைப்பைகளை வைக்கும் இடங்கள் நிரம்பிவிட்டதால், காலுக்கு அடியில் அவரவர் கைப்பைகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்த்தப்பட்டனர். எனது பையில் துருத்திக் கொண்டிருந்த குழந்தையின் விளையாட்டு பொம்மையின் நுனியைப் பார்த்த அவளின் குழந்தை தையத்தக்கா என கையாட்டிக்கொண்டே இருந்தது. இரண்டு முறை பேச முயற்சித்தேன், குழந்தைக்கு தொடர்ந்து அடி கிடைக்கக் கூடாது என ரோம் வரும் வரை எதுவும் பேசவில்லை. ரோமில் விமானம் தரையிறங்கிய பின்னர் அவள் குப்பையில் தூக்கி எறிந்த பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, எல்லோருக்கும் முன்னராக வேகமாக வெளியேறினாள்.
சரி செக்.இன் உடைமைகள் எடுக்கும்பொழுதாவது பிடித்துவிடலாம் பின் தொடர்ந்தால், அங்கும் எல்லோரையும் முந்திக்கொண்டு, தனது பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டு விமானநிலையத்தில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தவனை நோக்கி வேகமாக நடந்தாள். அது அவளுடைய காதலனாகவோ கணவனாகவோ இருக்கக்கூடும், குழ்ந்தை அவளிடம் இருந்து அவனிடம் தாவிக்கொண்டது. நல்ல வாட்ட சாட்டமான இத்தாலிய இளைஞன். குழந்தை மீண்டும் என்னைப்பார்த்துக் கைக்காட்ட ஐரோப்பிய அம்முவும் ஏதோ சொல்ல, அவன் என்னை முறைக்கத் தொடங்கினான். இத்தாலியர்கள் முதலில் அடித்துவிட்டுத்தான் பேசுவார்கள், எதற்கு வம்பு என பொருட்களைக் கொடுக்காமலேயே எனது பேருந்து வரும் இடத்திற்குப் போனேன். ஒரு வேளை உண்மையான அம்முவும் என்னை சந்திக்க நேர்ந்தால் இப்படித்தான் நடந்து கொள்வாளோ !! என்ற யோசனையுடன் குழந்தையின் விளையாட்டுப்பொருளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஐரோப்பிய அம்முவின் கார் கடந்தது. முன்னிருக்கையில் இருந்த குழந்தை பொம்மையைப் பார்த்து தையத்தக்கா என ஆட, அந்த ஐரோப்பிய அம்மு என்னைப் பார்த்தாள், அவளின் மாறும் முகபாவத்தைக் கவனிக்கும் முன்னர் எனதுப் பேருந்து இடையில் வர, மற்றும் ஒரு சிறுகதை அனுபவத்துடன் பேருந்தில் ஏறினேன்.
38
விடாமல் விலகும் பெண்கள்
முந்தைய நாள் வரை நன்றாக பேசிவிட்டு, மறுநாள் உன்னைப்போல ஒருவனைப் பார்த்தது இல்லை என்ற வகையில் முகம் கூட கொடுக்காமல் நட்பில் இருந்து, வெளியேறும் காரணங்களைக் கூட விளக்காமல் வெளி நடப்பு செய்யும்பெண்கள் என் வாழ்க்கையில் ஏராளம் இதில் முன்னாள் காதலிகளும் அடக்கம்… வருத்தம் இல்லை எனினும் அடிக்கடி இப்படி நடப்பதனால் இதில் எங்கேயோ ஓர் ஒற்றுமை மட்டும் ஒளிந்து கொண்டு இருக்கின்றது என்பது புரிகிறது. ஒவ்வொருவரின் விலகலையும் தனித்தனி சிறுகதைகளாகவே எழுதலாம்.
இன்று காலையில் இருந்து எனது ஆராய்ச்சிக்கூட அல்பேனியத் தோழி என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள் போலும், புன்னகைக்குப் பதில் இல்லை, காப்பிக் குடிக்க அழைத்த பொழுது நேரமில்லை என்று முகம் கொடுக்கவில்லை. இவளுக்கு என்ன செய்தேன் என கடைசி ஒரு மணி நேரமாக யோசித்துக் கொண்டிருக்கின்றேன், ஒன்றும் புலப்படவில்லை.
நேற்று கூட எங்களது கூடத்தில் நடைபெற்ற ஒரு விருந்தில் நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தாள், ஆடு , மாடு, கோழி, பன்றி, மீன் என வரிசையாக அடுக்கி வைத்திருந்ததை ஒரு கட்டுக் கட்டிக்கொண்டிருந்த பொழுதும் என்ன சாப்பிடுகிறாய் என அக்கறையாய் கூட கேட்டுவிட்டு போனாளே !!! அதன் பின்னர் சரக்கு அடித்த பின்னரும் சரியாகத் தானே பேசினேன்.இது போன்ற குழு விருந்துகளில் சரக்கு அதிகமாக அதிகமாக , மிகுந்த உள்ளுணர்வோடு குறிப்பாக பெண்களிடம் இரண்டடிகள் தள்ளி நின்றுதான் உரையாடுவேன் அல்லது பேசுவதைத் தவிர்த்து விடுவேன். நடனக் கேளிக்கை விடுதிகளில் இது பொருந்தாது. யாரையும் கையைப் பிடித்து இழுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, இரண்டு மடக்கு அதிகம் குடித்து விட்டு ஆட்டம்போடலாம்.
கண்ணே !!! மணியே கோபமா என்று போய் கெஞ்சும் காலம் எல்லாம் போய் விட்டது. திரிஷா இல்லாவிடின் திவ்யா என வேகமெடுத்துப் போய்க் கொண்டிருக்கும் காலத்தில், அல்பேனியப் பெண்ணிடம் காரணங்களைக் கேட்க விரும்பவில்லை.
கடைசியாக நான் கெஞ்சியது ஜெனியிடம் மட்டுமே !!! அவள் வரும் வழியெல்லாம் நின்று , கண்ணில் பட்டு எந்தத் தவறு செய்து இருந்தாலும் மன்னித்துவிடு எனத் தொடர்ந்து ஒரு மாதம் மன்னிப்புக் கேட்பதை நிறுத்தியது, அவளை வேறு ஒருவனுடன் பார்த்தபின்னர்தான். அடுத்த வருடம் அவள் அவனையே மணந்து கொண்டாள் என்பது ஒரு துணைக்கதை.
நிர்வாணத்தைவிட விலகும் உடைகளுடன் கூடிய உடலே அழகு என்று எதோ பேச்சுவாக்கில் சொல்லப்போக நன்றாகப் பேசிக்கொண்டிருந்த தோழிகள் கல்லூரிக் காலங்களில் காணாமல் போனார்கள்.
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என மின்னரட்டையில் கேட்டத் தோழிக்கு ஷகீலா படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என உண்மையைச் சொல்லப்போக கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு என் வாழ்க்கையில் இருந்து காணாமல் போனாள். இடையில் இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசப்போய் சில ஸ்ரீரங்கத்துத் தேவதைகளும் காணாமல் போனார்கள். வேறு ஒரு தோழியுடன் நெருக்கம் காட்டியதால் விலகியவர்களும் உண்டு. சிலப் பெண்கள் இருக்கின்றனர், நம்மை விட்டு விலகிய பின்னர், நம்மை வெறுப்பேற்ற வேண்டுமென்ற நமக்கு பிடிக்காத ஒருவனிடம் நெருக்கம் காட்டுவார்கள். வேறு சிலப் பெண்களின் நிலை மேலும் பரிதாபம், அவர்களின் ஆண் தோழனுக்கோ, கணவனுக்கோ, காதலனுக்கோ நம்மைப் பிடிக்காவிடில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விலகுவார்கள். எந்த வகைப்பாட்டில் விலகினாலும் காரணங்களைச் சொல்ல மாட்டார்கள். பெண்களின் மனப்போக்கேத் தனி, வருத்தப்படுவதைக் காட்டிலும் கொஞ்சம் தூரம் தள்ளி ரசிக்க ஆரம்பித்து விட்டால், பிரிவுகள் பெரும் பிரச்சினை அல்ல.
கல்யாணம் , முதல் குழந்தை என கொஞ்சம் அசதிப்படும் கடை இருபதுகளிலும் ஆரம்ப் முப்பதுகளிலும் இருக்கும் பெண்களுக்கு பழைய நண்பர்கள் விட்ட குறை தொட்ட குறையாய் நினைவுக்கு வரும். பெண்களும் கூகுளில் நம்மைத் தேடிக் கண்டுப்பிடிப்பார்கள் என்பது சமீப பேஸ்புக் காலங்களில் நன்குப் புலப்படுகிறது. ஓரிரவில் மறைந்த ஐந்து வருடங்களுக்கு முந்தையத் தோழிகள் ஒருவர் பின் ஒருவராக நட்பு வட்டாரத்தில் இணைகின்றனர். இன்று ஷகீலாவிற்குப் பதிலாக சன்னி லியோன் படம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொன்னாலும் பதிலை ரசிக்கிறார்கள். திரும்பி வந்தவர்களில் பெரும்பாலோனோர் சொன்னது,
”நீ மட்டும் அப்படி பேசி இருக்காவிடில் உன்னைக் காதலிக்கத் தொடங்கி இருப்பேன் என்பதுதான்”
நல்லவேளை அவர்கள் சொல்லவில்லை, ஏதேனும் ஓர் இடத்தில் அணை போடப்பட்டிருப்பின் இத்தனை அனுபவங்கள் எனக்கு கிடைத்தே இருக்காது. .
பெண்கள் தங்களாகவே ஒரு பிம்பத்தை தங்களுக்குப் பிடித்த ஆண்களின் மேல் உருவாக்கி வைத்துக் கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் நொறுங்கும்பொழுது பீலிபெய் சாகாடாக ஒட்டு மொத்தமாக ஒதுங்கிவிடுவார்கள். ஆரம்பக் காலங்களில் எனக்கென ஒரு பிம்பத்தைஉருவாக்க நினைத்தது உண்டு, பைசாவிற்குப் பிரயோசனமில்லாத பிம்பத்தை வைத்துக் கொண்டு ஒரு கோப்பைத் தேநீர் கூட வாங்க முடியாது புரிந்த மத்திய இருபதுகளில் பிம்பங்களைத் தூக்கி கடாசிவிட்டேன்.
பெண்களும் தலைவலியும் இரட்டைப்பிறவிகள் போல, கொஞ்சம் நெற்றிப்பொட்டில் வலிக்க, காப்பிக் குடித்தால் தேவலாம் போல இருந்ததால், மாடிக்கு சென்றேன். அல்பேனியத் தோழி ஷாகித்துடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பொழுதுதான் சட்டென உறைத்தது… நேற்று அல்பேனியத் தோழி என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்த பொழுது, நான் ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது பன்றிக்கறி, அவள் ஓர் அல்பேனிய முஸ்லீம்… அடடா !!! மற்றும் ஒருமுறை பிம்பத்தை உடைத்துவிட்டேனோ !!!
காப்பி கோப்பையை எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வந்த பொழுது, அவ்வளவு நெருக்கமில்லாத கல்லூரித் தோழி ஏஞ்சலா
“நீ பொதுவுடமைத் தத்துவங்களில் ஆர்வம் உடையவன் என்பதை உனது பேஸ்புக்கில் இருந்து தெரிந்து கொண்டேன். எனக்கும் இடது சாரித்தத்துவங்கள் மேல் ஆழ்ந்த ஈடுபாடு, ஏற்கனவே உன்மேல் இருக்கும் மதிப்பு இதன் மூலம் மேலும் உயர்ந்து விட்டது, முடிந்தால் இந்த வார இறுதியில் சந்திப்போம்” என மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள்.
இந்தப் பிம்பம் எப்பொழுது உடையப்போகிறதோ எனக் கவலைப்படாமல், உங்களுக்கு நான் சொன்ன இந்தக் கதையின் முதல் பத்தியை முகநூலின் நிலைத் தகவலாக வைத்தேன், வைத்த ஒரு மணி நேரத்தில் சில பெண் தோழிகளை நட்பு வட்டாரத்தில் இருந்து காணவில்லை.
39
காலப்பேழை
முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னர், இந்திரா காந்தி காலத்தில் புதைக்கப்பட்ட காலப்பேழை கோப்புகளைப் பற்றி இன்றைக்கு 2012 இல் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் வழியாக யாரோ ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் என்ற செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, பக்கத்து வீட்டு இத்தாலியத் தாத்தா வழமைப் போல மாலை நேர நடைக்குக் கூப்பிட்டார். ரோம் நகரத்து ஒதுக்குப் புறமான குடியிருப்பில் இருந்து
வயல் வரப்புகளைக் கடந்து, சிறிய மலைத் தொடர் வரை நடந்துப் போவோம். ஒவ்வொரு மாலையும் உடன் நடக்கையில்
அவர் சொல்வது, ”இன்றைக்காவது செய்தி வர வேண்டும்” .. சிறிய குன்றின் உச்சிக்குச் சென்று, மேற்கு திசையை நோக்கி கண்களை
மூடிக்கொண்டு எதிர்ப்பார்ப்போடு எதோ முணுமுணுப்பார். சில நிமிடங்கள் கழித்து இன்றைக்கும் செய்தி வரவில்லை என்று வருத்தம் தோய்ந்த முகத்தோடு வீடு திரும்புவார்.
அவருக்குக் கிடைக்கப்போகும் செய்தி எனக்கும் முக்கியமானது என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்கள், உனக்கு செய்தி ஒன்று வைத்திருக்கின்றேன் எனச் சொல்லுவது முதன் முறையல்ல. சிறு வயதில் சொந்த ஊருக்குப் போகும்பொழுது எல்லாம் அடுத்தத் தெரு சூனியக்கார கிழவி இதுபோல சொல்லித்தான் காட்டுப்பகுதிக்கு கூட்டிக்கொண்டுப் போகும். ஒரு நாள் அம்மா அப்பா அந்தக் கிழவியை ஏசிய பிறகு என்னைக் கூப்பிடுவதில்லை, ஒரு நாள் அந்தக் கிழவி செத்துப் போன உடன், அது என்னிடம் தரச் சொல்லியதாக அதன் உறவினர்கள் கொடுத்தப் பெட்டியை, ஏதாவது மந்திரம் சூனியம் இருக்குமென என் பெற்றோர்கள் அதனை எரித்துவிட்டனர்.
மொழிகளுக்கான எழுத்து வடிவங்கள் பற்றியப் படிப்பை பின்லாந்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது, இதேப்போல ஒரு தாத்தா நட்புப் பாராட்டி உனக்கு ஒரு நாள் நல்ல செய்தி சொல்லுவேன் என்பார், நல்ல செய்தி சொல்லும் முன்னர், ஒரு நாள் சாலை விபத்தில் இறந்துப் போய்விட்டார்.
இன்றைக்கு இந்த காலப்பேழைப் பற்றிய செய்தி ஏதோ ஓர் ஈர்ப்பைக் கொடுத்ததால்
“நான் வரவில்லை, நீங்கள் மட்டும் சென்று நீங்கள் விரும்பிய செய்தியுடன் திரும்பி வாருங்கள் “ என்று அவரை அனுப்பி வைத்தேன்.
எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றைத் தெரிவிக்கும் நோக்கில் சமகால நிகழ்வுகளை பாழடையாத கோப்புகளாக பூமியில் புதைத்துவைத்து விடுவது காலப்பேழைகளில் ஒரு வகை. பழைய சோவியத் ரஷியாவில், ரஷியாவின் அருமைப் பெருமைகள் அடங்கிய விபரங்களை பல இடங்களில் புதைத்து
வைத்திருக்கின்றனராம்.
நாசா மையம் , மின்னனு கோப்புகளாக தற்கால நிகழ்வுகளை ஆளில்லா விண்கலங்களில் வைத்து அண்டவெளிக்கு அவ்வப்பொழுது அனுப்புவதும் உண்டு. அவற்றில் சில விண்கலங்கள் பல நூறு ஆண்டுகள் கழித்து பூமிக்குத் திரும்பும் வகையில்
கூட அனுப்பப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் ஏதேனும் அகழ்வாராய்ச்சியில் அவை வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும்
பொழுது பூசி மெழுகப்பட்ட வரலாறு கிடைத்தாலும் , ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு தகவல்களைக் கடத்துவதுதான் காலப்பேழைகளின் முக்கிய நோக்கம்.
என்னுடையகாலப்பேழைகள் எல்லாம் நான் படித்த பள்ளிகளின் கல்லூரிகளின் மரப்பெஞ்சுகளில் செதுக்கப்பட்டிருக்கும்.
பாரிஸ் ஈஃபில் கோபுரத்தில் கூட என் பெயரையும் அம்முவின் பெயரையும் சேர்த்து எழுதி வைத்திருக்கின்றேன்.
இப்பொழுது கூட என்னைப் பற்றி அருமைப் பெருமைகளையோ, என் சார்பு அரசியலையோ , நிராகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையோ , ஏதாவது கூகிள் சம்பந்தப்பட்ட பொதுத் தளங்களில் எழுதி வைத்துவிட்டு
பேசாமல் அமைதியாக இருப்பதும் உண்டு. சுழிய உலகில் தகவல்களைப் போட்டு வைத்துக் கொள்வது கூட ஒரு வகையான காலப்பேழைதான்.
வெவ்வேறு நாகரீகங்களின் எழுத்துரு வடிவங்கள் அதன் மாற்றங்கள் , பின்புல அரசியல்கள் ஆகியனவற்றைப் பற்றிய தலையணை அளவுப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்ததில் அடுத்த இரண்டு நாட்கள் கரைந்துப் போயின. நடைப்பயணம் போன தாத்தா தடுமாறி
விழுந்ததில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவருடைய அழகான பேத்தி சொல்ல, மருத்துவமனைக்குப் போய் அவரைப் பார்த்தேன்.
“இனிமேல் செய்தி சேகரிக்க மலைக்கு எல்லாம் போகவேண்டியதில்லை, வர வேண்டிய செய்தி வந்து விட்டது” என்றார்.
எனக்கு வருத்தமாக இருந்தது, ஒரு வேளை நான் இவருடன் நடைக்கு சென்றிருந்தால், இவர் காயம்பட்டு இருக்க மாட்டாரே என.
”நாளைக்கு நாம் வழக்கமாகப் போகும் குன்றின் உச்சிக்குப் போ, நாம் அமரும் இடத்தின் கீழ் ஒரு பெட்டி இருக்கும், அதில் உனக்கான செய்தி இருக்கின்றது “ எனத் தொடர்ந்தார்.
அவரை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு மறுநாள் உச்சிக்கு சென்றேன். அங்கிருந்த பசுமையான செடிகள் எல்லாம் கருகி இருந்தன. சிரமப்பட்டு நாங்கள் உட்காரும் இடத்தைக் கண்டுபிடித்தேன். அந்த கல் இருக்கைக்குப் பக்கத்தில் பழையகாலத்து வடிவமைப்புடன் ஒரு பெட்டி இருந்தது. பெட்டியின் மேல் வலது கை வரையப்பட்டிருந்தது. எனது வலதுகையை அதன் மேல் வைக்க, பெட்டித் திறந்தது.
உள்ளே சில அடுக்குகளாக காகிதங்கள் போல ஆனால் எடையற்ற ஒளி ஊடுவக்கூடிய ஏதோ ஒன்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலாக இருந்த ஒன்றைத் தொட, அந்த காகிதம் போன்ற ஒன்று , பளிச்சென முகத்தில் ஓர் ஒளிக்கற்றையை அடித்து விட்டு, முகத்துக்கு நேர படிப்பதற்கு ஏதுவாக வந்து நின்றது.
அட, அதில் சிந்து சமவெளி நாகரீகக் கால எழுத்துருக்கள் இருந்தன. ஒரு நிமிடம் பொறுங்கள், என்னால் அதை வாசிக்க முடிகிறது. இருங்கள் இருங்கள்… அவை கடுமையான செய்யுள் தமிழில் இருக்கின்றன. மூளை வேகமாக ஆதித் தமிழில் இருந்து அன்றாடத் தமிழுக்கு மொழிப்பெயர்த்தது.
ஆயிரக்கணக்கான கதிரவ வருடங்கள் கழித்துப் படிக்கப்போகும் எங்கள் நண்பர்களுக்கு , நாங்கள் எதிர்காலத்துக்கு அனுப்பி இருக்கும் தற்கால விபரங்கள் அடங்கிய பெட்டிகளின் மூன்றாவது பெட்டி இது.
தொடர்ந்து நான் வாசித்துக் கொண்டிருக்க, வானத்தில் இருந்து, சிறிய பேருந்தைப் போன்ற ஒரு வாகனம் நான் இருந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் வந்து விழுந்தது.
40
புலி நண்பர்
ஸ்டாக்ஹோல்ம் செல்வதற்கான விமானம் 86 வது நுழைவாயிலில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், மெதுவாக நானும் என் மனைவி அம்முவும் கைக்கோர்த்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று. என ஒவ்வொன்றாக , கடந்தபடி 70 வது நுழைவாயில் வரை வந்தாகிவிட்டது. கண்ணாடி சுவர்களின் வழியாக குழந்தைகளும் , இளைஞர்களும் , நடுத்தர வயது மக்களும், விமானம் வந்து நிற்பதை அது புறப்படுதை வியப்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானங்களில் எத்தனை முறை பறந்தாலும், விமானங்கள் தரையில் ஓடும்பொழுதும் தலைக்கு மேலேப் பறக்கும் பொழுதும் தலைசாய்த்து பார்ப்பதும் ஒரு சுவாரசியந்தான். அவர்களுடன் அம்முவும் சேர்ந்து கொண்டது மனநிலையை மேலும் ரம்மியமாக்கியது.
குட்டிநகரமே இந்த ஜூரிச் விமானநிலையத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பிரம்மாண்டம். ஈரோ – ரூபாய் மதிப்பு மாற்றம் நினைவிற்கு வந்ததால் ஆடைகள் விற்கும் பகுதியைத் தவிர்த்து அம்மு சுவிட்சர்லாந்து கேட்ட சாக்லேட்டுகளையும் சில வாழ்த்து அட்டைகளையும் வாங்கிக் கொண்டு, மேலும் சில நுழைவாயில்கள் கடந்து , ஒரு காப்பிக்கடைக்கு எதிரே விலைப்பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது,
”என்ன சாப்பிடுறீங்க” என்பதை ஈழத்துத் தமிழ் உச்சரிப்பில் ஒருவர் கடையினுள் இருந்து கேட்டார். வலிகள் வேதனைகளுடன் தமிழையும் போகும் இடமெல்லாம் கொண்டு சென்றவர்கள் ஈழத்தவர்கள். என்னைப்பொறுத்தவரை சுந்தரத் தமிழ் , ஈழத்துத் தமிழ்தான்.
நாங்கள் கேட்ட காப்பிச்சினோவை அவர் கொடுக்கும்பொழுது கையில் புலிப் படத்தைப் பச்சைக் குத்தி இருந்ததைப் பார்த்த அம்மு என்னை இடுப்பில் குத்தினாள். ஆண் குழந்தை பிறந்தால் திலீபன் எனவும் பெண் குழந்தை பிறந்தால் இசைப்பிரியா எனவும் பெயர் வைக்க இப்பொழுதே நான் முடிவு செய்து வைத்துள்ள அளவுக்கு புலிகளைப் பிடிக்கும் என்பது அம்முவிற்குத் தெரியும். இருந்தாலும் அம்முவிற்கு இதில் இருக்கும் நுட்பமான உணர்வுகள் புரியாது, அவளைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய பாஸ்போர்ட் கிடைக்கும் வரை, இந்திய இறையாண்மைக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது.
நாங்கள். எவ்வளவு வற்புறுத்தியும் அந்த புலி நண்பர் காசு வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.
”தினமும் ஒரு தமிழனையாவது சந்தித்துவிடுவேன்… ஒரு சின்ன திருப்தி அவர்களுக்கு காப்பியோ அல்லது அவர்கள் விரும்பும் ஏதோ ஒன்றைத் தந்து தமிழில் கதைப்பது”
“நடிகர்களைப் பார்த்து இருக்கிறீர்களா” இது அம்மு, அவளின் அடுத்த கேள்வி சூரியாவைப் பார்த்து இருக்கிறீர்களா என்பதுதான்..
”நிறைய நடிகர் நடிகைகள் வருவாங்க, அவர்களை எல்லாம் கண்டுக்க மாட்டேன்… நான் பேச விரும்புவது சாமானிய மனிதர்களிடந்தான்”
“தலைவர் உயிரோட இருக்காரா?” எந்த ஈழத்தமிழரை ஐரோப்பாவில் சந்தித்தாலும் நான் மறக்காமல் கேட்கும் கேள்வி இதுதான்.
“தெரியாது, ஆனால் உங்கட இந்தியா, தலைவரை அந்தமான் தீவுகளில் எங்கேயாவது பாதுகாப்பாக வைத்திருக்குமோ என உள்மனது அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கு”
ஏற்கனவே எனக்குத் தெரிந்து இருந்த விசயங்கள் என்றாலும் புலிகளின் ஈழத்து அரசாங்கத்தின் ஒழுக்கம், நேர்மை , நிர்வாகம் என அவர் தொடர்ந்து பேசியதைக் கேட்க சுவாரசியமாகத்தான் இருந்தது.
“எத்தனை வருஷமா இந்தக் கடை இங்கு வச்சிருக்கீங்க”
“இது என் கடை இல்லை தம்பி, நான் இங்க வேலைப் பார்க்கிறேன், 20 வருஷமா இங்கடதான் வேலை செய்யுறேன் !! “
ஸ்டாக்ஹோல்ம் விமானத்திற்கு அழைப்பு வர, மின்னஞ்சல் முகவரிகளைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றோம்.
விமானஇருக்கையில் சன்னலின் வெளியே வேடிக்கைப் பார்த்தபடி
“என்னதான் டைகர்ஸோட டிசிப்ளினோ, ஹானஸ்டியோ … எதிக்ஸோ … முதலாளியை ஏமாத்திவிட்டு வர்றவன் போறவனுக்கு எல்லாம் காப்பி கொடுக்கிற எத்திக்ஸ்.. ஒரு நாளைக்கு 10 பிராங்க்னு வச்சிக்கிட்டா ஒரு மாசத்துக்கு 250 பிராங்க், 20 வருஷத்துக்கு எத்தனை பிராங்க்
முதலாளியை அந்த ஆளு ஏமாத்திருக்காரு, கடைத் தேங்கா வழிப்பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருது, .. இதுல எதுக்குமே யூஸ் இல்லாத தமிழ் ஃபீலிங்ஸ் வேற !!!” அம்மு பொரிந்து தள்ளினாள்.
நான் பதில் பேசவில்லை. அவர் எனக்கு மின்னஞ்சல் எழுதிக் கொடுத்து இருந்த தாளைத் திருப்பிப் பார்த்தேன். அது நாங்கள் குடித்த காப்பிக்கான பில். காப்பி தயாராகும் இடைவெளியில், அம்முவின் கவனம் கண்ணாடி சுவருக்கு அப்பால் இருந்த விமானங்களின் மேல் அலைபாய்ந்து கொண்டிருந்த பொழுது புலி நண்பர் எங்களுக்கான காசை அவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்து கல்லாவில் போட்டதையும் , அதற்கான பில்லை அச்சிட்டதையும் ஏற்கனவே நான் கவனித்து இருந்தேன். அம்மு சொன்ன அதே கணக்குதான் ஆனால் புலி நண்பர் தன்னிடம் இருந்து கொடுத்து கொண்டே இருக்கிறார், வெறும் தமிழ் உணர்வுக்காக !!!
41
பெருந்தன்மை
அவள் பெயர் கீர்த்தனா மதிவதனி, அவளை மதிவதனி எனக்கூப்பிட்டால் அவளுக்குப்பிடிக்காது, தலைவரின் மனைவி எங்கே , நான் எங்கே, கீர்த்தனா என்றே கூப்பிடுங்கள் என்று முதன்முறை அவளை நான் சந்திக்கும்பொழுது திருத்தமாகச் சொன்னாள். கீர்த்தனா ஈழத்தைச் சேர்ந்தவள், அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது, குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கும், பின்னர் இத்தாலியின் மிலான் நகருக்கும் புலம் பெயர்ந்தவள். நான் படிக்கும் ரோம் ப்ல்கலை கழகத்தில்தான் மொழியியலில் ஆராய்ச்சிப்படிப்புப் படிக்கிறாள்.
அவளின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்படக் காரணம், தமிழும் ஈழமும் காரணமல்ல. அவளின் சக்கர நாற்காலி சார்ந்த வாழ்வும், திராவிட களையான முகமும், எப்பொழுதும் மகிழ்ச்சியான முகமும் , ஒவ்வொரு புதன்கிழமை அவளின் துறைக்கு, இத்தாலிய மொழி கற்றுக்கொள்ள போகும்பொழுதெல்லாம் என் கவனத்தைத் திருப்பியது.
” நீங்கள் தமிழா !! “ என உடைந்த இத்தாலியத்தில்கேட்டதற்கு ,
”நான் மட்டுமல்ல, என் சக்கர நாற்காலியும் கூட தமிழ்தான்”
துறுதுறுவென கிரிக்கெட், தமிழ், அரசியல் என சகலத்தையும் மும்மொழிகளிலும் பேசினாள்.
அவளின் சக்கரநாற்காலியைத் தள்ளி, அவளுக்கு உதவவேண்டுமா என அனுதாபமாக யாராவதுக் கேட்டால் கூட, உடனே சரி எனச் சொல்லுவாள்.
“அனுதாபம் கூட அன்பின் மற்றோர் வடிவம்தான், அதை ஏன் நிராகரிப்பானேன்”,
கீர்த்தனாவைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பன்னாட்டு நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள், பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவர்கள் தாம் இவளின் நெருங்கிய நண்பர்கள்.
”பாலஸ்தீனியர்களும், ஆப்பிரிக்கர்களும், நானும் நிறம், கலாச்சாரம் வேறாகி இருந்தாலும், ஒடுக்கப்பட்டதில் நாங்கள் எல்லாம் ஒன்றுதான்”
“எப்படி உனக்கு மட்டும் இவ்வளவு நண்பர்கள்?”
“எல்லோரும் ஒவ்வொருவரை சார்ந்துதான் இருக்கின்றோம், ஒவ்வொருத்தருக்கும் ஒரு தேவை, சிலருக்கு படிப்பில் உதவி தேவை, சிலருக்கு அவர்களின் மனத்தாங்கல்களை யாராவது கேட்டாகவேண்டும், சிலருக்கு வெறும் கடலை போட வேண்டும், தொடர்ந்து வந்த வாரங்களில் கீர்த்தனாவுடன் நெருங்கிய நண்பன் ஆகிப்போனேன்.
“நானும் தமிழன் தான், உனக்கு மட்டும் ஏன் தமிழின் மேல் இவ்வளவு ஆர்வம்?”
”உங்கட தமிழ்நாட்டவர்களுக்கு தமிழ் வெறும் மொழி, எங்களுக்கு தமிழ் ஓர் அடையாளம், தமிழ் என்றாலே அரசியல், தமிழ் என்றால் போராட்டம், ஐந்து வயதில் அப்பாவின் முதுகில் தொத்தியபடி, மூன்று கிலோமீட்டர்கள் ராமேசுவரம் கடலில் நடந்த குடும்பங்களில் நாங்களும் ஒன்று, நீ பேசும் மொழியால் நீ , நிராகரிக்கப்படும்பொழுது நான் சொல்லுவதன் அர்த்தம் புரியும்”
மறுநாள் கீர்த்தனாவுடன் அவளின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு மளிகைக்கடைக்கு சென்ற பொழுது, வழியில் எங்களது நிறத்த்துடன், சில அடிகள் தள்ளி ஒரு குடும்பம் வந்து கொண்டிருந்தது. கீர்த்தனா என்ன நினைத்தாளோ, சக்கரநாற்காலியை என்னிடம் இருந்து விடுவித்து வேகமாக கடைக்குள் சென்றுவிட்டாள். எதிரே வந்த குடும்பம்
”நீங்கள் பங்களாதேஷியா” என இத்தாலிய மொழியில் கேட்டது. ரோம் நகரத்தில் ஏகப்பட்ட வங்காளதேசத்தினர் இருக்கின்றனர். யாரவது என்னை வங்காளதேசத்தவனா எனக்கேட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும்.
“இல்லை” என்றேன் எரிச்சலுடன்
“ஸ்ரீலங்கா ?? “
”இல்லை, இந்தியா, தமிழ்நாடு”
“ஓ, நாங்கள் சிங்களவர்கள் , நானும் என் மனைவியும் இலங்கைத் தூதரகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றோம்”
தூரத்தில் கீர்த்தனா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு அறிமுகமான அந்தக் குடும்பம், “பிழைக்க வந்த வங்காளதேசத்தவர்களினால், எப்படி நம்மைப்போன்ற மேற்தட்டு இந்திய இலங்கை மக்களின் மேலான பார்வை எப்படி பாதிக்கப்படுகின்றது” என்று சொல்லிக்கொண்டிருந்தது.
“இத்தாலியர்களுக்கு, இலங்கை, இந்தியா, வங்காளதேசம் என்ற வித்தியாசம் தெரியாது” என மேலும் தொடர்ந்தது.
அவர்களைக் கூட்டிக்கொண்டு, கீர்த்தனாவிடம் அறிமுகம் செய்துவைத்தேன்.
தனது பெயர் மதிவதனி என அறிமுகம் செய்து கொண்ட, கீர்த்தனாவின் கண்கள் ஆத்திரத்திலும் கோபத்திலும் கலங்கியிருந்தன.
“கார்த்தி, நான் எனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்கின்றேன்” எனச் சொல்லிவிட்டு, அவளுக்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க பகுதி வாரியாக செல்லத்தொடங்கினாள். ஐந்தாம் அடுக்கில் இருந்த ஒரு பொருளை அவள் எடுக்க முயற்சி செய்கையில், அருகில் இருந்த அந்த சிங்கள குடும்பத்தின் தலைவர் உதவி செய்ய வர,
கடுமையான முகத்துடன் மறுத்த கீர்த்தனா, தானே எம்பி அதனை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டாள். அடுத்தப் பகுதியில் வேறு ஏதோ எடுக்க முயல, எட்டாமல் போக ஒட்டு மொத்த சிங்களக்குடும்பமும் அவளுக்கு உதவ முன்வர,
“நான் உங்களை உதவிக்கு கேட்டேனா, எதற்கு என்னை அனாவசியமாகத் தொந்தரவு செய்கிறீர்கள்” என ஒரு கத்து கத்தினாள்.
பின்பு அவளே, அங்கு வேலை செய்யும் ஒரு வங்காளதேசத்தவனை அழைத்து, தனக்கு தேவையானதை மேலடுக்கில் இருந்து எடுத்துக் கொண்டாள். எனக்கு முதன்முறையாக அவளின் மேல் கோபம் வந்தது.
”அவங்க சிங்களிஸ்னாலதானே , அவங்களை இன்சல்ட் பண்ணே”
“ஆமாம், ஆனால் அது இன்சல்ட் இல்லை, என்னோட 25 வருஷத்து வலி வேதனைக்கு ஒரு சின்ன வடிகால், தேவ தூதர்களாகவே இருந்தாலும் எங்களை வெறுத்தவர்களிடம் இருந்து நான் எதுவும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை”
அவளுடைய நியாயம் எனக்குப்புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. அதன்பிறகு ஒருவாரம் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.
பின்னொருநாள், இந்தியத் தூதரகத்தில், ஒரு சான்றிதழுக்கு அரசாங்க முத்திரை பெறுவதற்காகப் போய் இருந்த பொழுது, இந்தியில் பேசிய அதிகாரியிடம், ஆங்கிலத்தில் பதில் சொல்ல,
“மதறாசி, ஹிந்தி நஹின் மாலும்… சாலா “ என அதிகாரி எரிந்து விழுந்துவிட்டு,
அகர்வால்களும், படேல்களும் ஒரு மணிநேரத்தில் வாங்கிய சான்றிதழ் முத்திரையை பெற,
“பார்ட்டி டேஸ், யூ வெயிட், நௌ கோ” என நான் விரட்டப்பட்டேன்.
என்னமோத் தெரியவில்லை, கீர்த்தனாவிடம் பேச வேண்டும் போலத் தோன்றியது, அவளின் கைபேசி எண்ணிற்கு அழைத்தேன்.
——
42
கருப்பு வெள்ளை கனவு
நடிகனாக ஆசைப்பட்டு, துணை இயக்குனராக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் நான், பொழுது போகாத ஒரு பின்னிரவில், இணையத்தில் பழங்காலத்துப் படமான கன்னிகா என்ற படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது , சிறு வயதில் கதவு வைத்த சாலிடர் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி நினைவுக்கு வந்தது.
அதில் ஒளியும் ஒலியும் , கிரிக்கெட் பார்த்த காலங்களில் இருந்த ஒரே ஆசை, வண்ணங்களில் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்பதுதான். வண்ணங்களில் முக்கி எடுத்த பிற்கால எம்.ஜி.ஆர் படங்கள், கருப்பு வெள்ளையல்ல என்பதைத் தெரிந்து கொள்ளகூட பதினைந்து வருடங்கள் ஆனது. 40 வருடங்கள் முன்பு வரை, உலகம் கருப்பு வெள்ளையில்தான் இருந்திருக்குமோ என நினைத்தக் காலங்களை கடந்து, வண்ணக் காட்சிகள் வாழ்க்கையில் பழக்கப்பட்டபின்னர், எம்.ஜி.ஆர் களும் சிவாஜிகளும், ஏன் கமலும் ரஜினியும் கூட கருப்பு வெள்ளையில்தான் மிக அழகாகஇருப்பதாகத் தோன்றியது.
92 உலகக்கோப்பைப் போட்டிகளின் பொழுது, இந்திய அணிக்கான உடை அடர் நீல நிறம் என்பதை என் கனவில்தான் தெரிந்து கொண்டேன். வீட்டுத் தொலைக்காட்சியில், அந்த உடை கருப்பாக இருந்தாலும் இந்தியா ஒரு ஓட்டத்தில் தோற்ற அன்று, கவலையில் தூங்கிய பொழுது, அதே அடர் நீல நிற உடையுடன் கடைசி ஆட்டக்காரர் வெங்கடபதி ராஜுவிற்குப் பதிலாக நான் களம் இறங்கி , கடைசி ஓட்டத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை சமனிலை செய்தேன். மறுநாள் காலையில் என் வீட்டில் கனவை சொன்னபொழுது , கனவில் சரியான நிறத்தைக் கண்டுபிடித்ததை அவர்கள் கவனிக்காமல், ராஜுவிற்க்கு பதிலாக நான் ஆடியதற்காக சொல்லி சொல்லி சிரித்தார்கள்.
அந்தக்கால முறைப்படி, சபையில் ஆடும் பரதநாட்டியத்துடன் திரைப்படம் ஆரம்பமானது. மாயாஜால வித்தைகள் தெரிந்த நாயகனும் கெட்ட ராஜாவின் மகளும் காதலிக்கின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன் , மதுரம் முறையே நாயக, நாயகியின் தோழன், தோழி. என படம் நாடகத்தனமாக நகர, அப்படியேத் தூங்கிவிட்டேன். ஆனால் கனவில் படம் பலப் பாடல்களுடன் தொடர்ந்தது, இறுதியில், உயிரை ஒளித்து வைத்திருக்கும் கெட்ட ராஜாவின் கூடான புறாவின் கழுத்து என்.எஸ்.கிருஷ்ணனால் திருகப்பட்டு ராஜா கொல்லப்படும் பொழுது, திடுக்கிட்டு கண் விழித்தேன். திடுக்கிடலுக்கு இரண்டு காரணங்கள், முதலாவது நகைச்சுவை நடிகரால் எப்படி எதிர்மறை நாயகன் கொல்லப்படுவான், இரண்டாவது, கனவில் வந்தப் படம் முழுவதும் நேரில் பார்த்ததைப் போல வண்ணத்தில் இருந்தது. கொஞ்சம் மனது திகிலாக இருந்தாலும், முழுப்படத்தையும் நிஜத்தில் பார்த்துவிடுவது என முடிவு செய்து பார்த்த பொழுது, ஏற்கனவே இருந்த திகில் இரண்டு மடங்கானது. காட்சிக்கு காட்சி அப்படியே கனவில் வந்தது படத்தில் இருந்தது. கடைசிக் காட்சியில் என்.எஸ்.கிருஷ்ணன் தான் புறாவைக் கொல்லுகிறார்.
கருப்பு வெள்ளை திரைப்படம், கனவில் கலரில் வந்தது என்று சொன்னால் மக்கள் சிரிப்பார்கள். மறுநாள் வேண்டாத வேலையாய், வீணை எஸ்.பாலசந்தரின் ”நடு இரவில்” படம் முழுவதும் பார்த்து விட்டுத் தூங்கிய பின்னரும் கனவு வந்தது. நடு இரவில் படம் கனவில் வரவில்லை. ஆனால் இந்தக் கனவில், வீணை.எஸ்.பாலச்சந்தருடன் சிவாஜி கணேசனும் பத்மினியும் வண்ணத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். நடு நடுவே எம்.ஜி.ஆரும் பானுமதியும் வேறு வந்துப் போயினர். பயத்தின் உச்சக்கட்டம் வீரம், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கனவு கலைந்து எழுந்தவுடன், சிவாஜி கணேசன் , பத்மினி , வீணை. எஸ். பாலசந்தர் என கூகுளில் தேடினால், மரகதம் என்றத் திரைப்படம் அகப்பட்டது. கன்னிகா படத்திற்கும் மரகதம் திரைப்படத்திற்கும் என்னவொரு ஒற்றுமை என தேடியதில் உணர்ந்தது பக்ஷிராஜா நிறுவனம்தான் இரண்டையும் தயாரித்து ஸ்ரீராமுலு இயக்கி இருக்கிறார்.
முடிவு – 1
இந்தப் படங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தூங்கிப்போனபொழுது,
”இந்த இதை உடுத்திக்கிட்டு, அந்த ரயில் பொட்டில போய் உட்கார்ந்து வேடிக்கைப்பாரு” என இயக்குனர் சொல்ல,
“சீன் 22, டேக் 1” எனக் காட்சியின் படமாக்கல் ஆரம்பிக்க, கிளாப்போர்டில் மலைக்கள்ளன் என எழுதியிருந்தது.
தூங்கிக்கொண்டிருந்த என்னால் கனவைக் கலைத்து எழுந்திருக்க முடியவில்லை, நாளைகாலை எனக்காக அழும் மக்களிடம் சொல்லிவிடுங்கள், பக்ஷிராஜா ஸ்டுடியோ எடுத்தப் படங்களில் நான் உதிரி நடிகனாக, துணை இயக்குனராக 40 களையும் 50 களையும் 60 களையும் வண்ணத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என !!!
முடிவு – 2
கன்னிகா படத்திற்கும் மரகதம் திரைப்படத்திற்கும் என்னவொரு ஒற்றுமை என தேடியதில் உணர்ந்தது பக்ஷிராஜா நிறுவனம்தான் இரண்டையும் தயாரித்து ஸ்ரீராமுலு இயக்கி இருக்கிறார். எம்.ஜி.ஆர் பானுமதி நடித்து, ஸ்ரீராமுலு சம்பந்தப்பட்ட படம் மலைக்கள்ளன். இந்தப் படங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அடுத்த அடுத்த நாட்களின் வேலைப்பளுவால், மறந்து போனது, பார்த்த கன்னிகா படமும் மறந்துப்போனது. கடும் போராட்டங்களுக்குப் பின்னர், தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தலை சிறந்த இயக்குனர் என்ற பெயர் பெற்றேன். ஏதோ ஒரு நாள், மீண்டும் கன்னிகா, மரகதம், மலைக்கள்ளன் படங்கள் நினைவுக்கு வர, அவற்றை எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வண்ணத்தில் மறு உருவாக்கம் செய்ய முடிவெடுத்தேன், சொல்ல மறந்துவிட்டேன், எனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் !!!!
43
அகதி
காத்திருத்தல் எனக்குப் பழகிய விசயம்தான் என்றாலும், தகிக்கும் வெயிலில் பேருந்தை எதிர்பார்த்தல் கொஞ்சம் கடினமானதுதான். ரோம் நகரில் கோடையில் வெப்பநிலை 40 யை சர்வசாதாரணமாகத் தொடும் என்பதையும் வெள்ளையாய் இருப்பவர்கள் ஊரில் எல்லாம் வெயில் அடிக்காது என்பதையும் தெரிந்து கொண்டேன். என் விடுதிக்குப் போகவேண்டிய பேருந்து ஒவ்வொரு 35 நிமிடங்களுக்கு ஒரு முறைதான், அந்தப் பேருந்தும் ஊர் சுற்றி உலகம் சுற்றி ஒரு 30 நிமிடங்கள் பயணப்படும். ஒரு கையில் கிட்டத்தட்ட 10 கிலோ சுமையுள்ள பை, மறுகையில் ஆண்டிராய்டு சிறுகணினி என மேலடுக்கு கீழடுக்குத் தெரிய சிறு உடைகளில் உலாவிக்கொண்டிருந்த இத்தாலியப் பெண்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.
ரோமின் ஓர் எல்லையான, அனாநீனா பேருந்து நிலையத்தில் மறு ஓரத்தில் கடைகளை விரித்திருந்த வங்காளதேசத்தவர்களை காவல்துறையினர் வழமைப்போல கடவுச்சீட்டு சான்றிதழ்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கடந்துதான் சென்றார்கள், இருந்த போதிலும் ஏறத்தாழ வங்கத்தவனை போலக்காட்சியளிக்கும் என்னை எதுவும் கேட்கவில்லை, ஒரு வேளை எனது பொறியியாளர் தோற்றக் கண்ணாடியும், கைக்கணினியும் தேவைப்பட்ட நன்மதிப்பைக் கொடுத்திருக்கலாம். அறிவுசார்ந்த வேலைக்கு வந்திருந்தாலும், கைக்காசைக் கொட்டி படிக்க வந்திருந்தாலும், வெள்ளையர்களைப் பொருத்த மட்டில், மாநிற, கருப்பானவர்கள் எல்லோருமே அகதிகள்தான். ஆனாலும் சில சமயங்களில் தோரணையும் , திமிரான பார்வையும் , தேவையற்ற, இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றும்.
கையில் இருக்கும் 10 கிலோ சுமையில், என் அம்மா எனக்காக தயார் செய்து இத்தாலி வந்த நண்பனிடம் கொடுத்தனுப்பிய , பருப்பு சாம்பார், கோழிக்கறி , ஆட்டுக்கறி சமைக்கத் தேவையான வாசனைப்பொருட்கள், காயவைத்த கறிவேப்பிலை, நம்ம ஊர் மல்லிப்பொடி என ஐரோப்பாவில் வசிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அரிதற்கரிய விசயங்கள் அனைத்தும் இருக்கின்றன. இந்தப் பையை வாங்குவதற்காகவே 100 ஈரோ செலவழித்து, விடியற்காலையில் மிலான் வரை சென்று, வாங்கி வருகின்றேன். காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை, கையில் இருந்தது பத்து ஈரோ மதிப்புள்ள தாளும், இரண்டு ஈரோ மதிப்புள்ள நாணயமும்தான். இரண்டு ஈரோவிற்கு பழச்சாறு வாங்கிக்கொண்டு ஒரு வழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
திக்காலுக்கு திக்கால், சிலப்பிரயாணிகள் என பேருந்து வறட்சியாக இருந்தது.
ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருந்த “இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்” படத்தின் முன்னோட்டக்காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்த பொழுது,
“அஸ்லாம் அலைக்கும்” என யாரோ ஒருவர் தோளைத் தொட, திரும்பிப்பார்த்தேன். என் நிறத்தில் ஒருத்தன் என்னைப்பார்த்து சிரித்தான்.
. பார்த்துக்கொண்டிருந்த ஒளிக்காட்சியை சடுதியில் மாற்றிவிட்டு, அவனை என்னவேண்டும் என்ற தொனியில் பார்த்தேன்.
அனேகமாக வங்காளத்தேசத்தவன் என்பது அவன் பேசிய உடைந்த இந்தி, சுமாரான இத்தாலியத்தை வைத்து தெரிந்தது. எனக்கு இரண்டு மொழிகளும் அரைகுறை என்றாலும் அவனுக்குப் பசிக்கிறது என்பதும், காசு தரமுடியுமா எனக் கேட்கிறான் என்பது புரிந்தது. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக
”இங்கிலீஷ் இங்கிலீஷ்” என்றேன்.
கொச்சையான ஆங்கிலத்திலும் அதையேத்தான் சொன்னான்.
“இருந்தால் கொடுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை, காலையில் இருந்து கடையில் நின்றதால், எதுவும் சாப்பிடவில்லை. காவல்துறை வருவதால் எனது முதலாளி என்னை வீட்டுக்குப்போய்விட்டு நாளைக்கு வரச்சொல்லிவிட்டார்”
அவனின் சூழல் புரிந்தது. பிச்சையோ உதவியோ , யாராவது என்னிடம் காசு கேட்டால், என்னிடம் அந்த சமயத்தில் பணம் இருந்தால் யோசிக்காமல் கொடுத்துவிடுவேன். அது அவனை திருடனாவதில் இருந்து காப்பாற்றுகிறது என்பது என் எண்ணம். ஏதாவது, நாணயங்கள் இருக்கின்றதா என யோசித்ததில், எதுவும் தட்டுப்படவில்லை. இருக்கின்ற பத்து ஈரோவை வைத்துத்தான், அடுத்த படிப்பு உதவித் தொகை வரும் வரை ஒரு வாரம் ஓட்டவேண்டும்.
“காசு இல்லை , வேண்டுமானால் இந்த பழச்சாறை எடுத்துக்கொள்… அண்ணாந்துதான் குடித்தேன்” என்றேன் ஆங்கிலத்தில்.
அவன் குடித்த வேகம், எத்தனைப் பசியில் இருந்திருப்பான் என்பதைக் காட்டியது. நன்றி சொல்லிவிட்டு கடைசி இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.
கள்ளச்சிரிப்புடன், “இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்” முன்னோட்டக்காட்சிகளைப் பார்த்துவிட்டு விடுதி நிறுத்தத்தில், பேருந்தைவிட்டு இறங்கி நடந்து கொண்டிருந்தபோது, வாசனைப்பொருட்கள் அடங்கிய பையை பேருந்திலேயே விட்டுவிட்டேன் என்பதை உணர, அந்த வங்கதேசத்தவன் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இருந்து என் பையுடன் ஓடி வந்து கொண்டிருந்தான்.
“சகோதரா, நீங்கள் இதை மறந்து வைத்து விட்டீர்கள்”
பத்து ஈரோத்தாளை எடுத்துக் கொடுத்து ஏதாவது சாப்பிடு என சொல்லுவதை விட, அவனை எனது விடுதிக்குக் கூட்டிப்போய் சமைத்துப்போடுவது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. அந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சிகளை நிரந்தரமாக அழித்துவிட்டு, அவனுடன் எனதுவிடுதி அறையை நோக்கி நடந்தேன்.
44
எக்ஸ் ஒய் இசட்
கொரடாச்சேரி இதுதான் என் சொந்த ஊர் என்று யாரிடமாவது சொன்னால் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்காது. “பில்டிங் காண்டிராக்டர்” அப்படி என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப்போல, விஸ்வநாதபுரம், பழவனக்குடி என அருகில் இருக்கும் பெயரில் “சேரி” இல்லாத கிராமங்களை சுட்டி, மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும்
சூழலில் வளர்ந்தவன் நான்.
ஆண்டுக்கொருமுறை ஊருக்குப்போகும் பொழுதெல்லாம், என் பெரியப்பா வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் எக் ஒய் இசட் வீட்டைத் தாண்டும்பொழுது, என் சொந்தக் காரர்கள் எல்லாம் எக்ஸ் ஒய் இசட் இப்பொவெல்லாம் முழுப்பைத்தியமாவே ஆயிட்டான் என்று சொல்லுவார்கள்.
எக்ஸ் ஒய் இசட்டின் பெயர் அதுவல்ல, அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் பெருமைப் பெயரைச் சுட்டும் பெயர். அவன் அதைச் சார்ந்தவன் என்பதால், அந்தப் பெயரைவைத்துத்தான் அவனை அழைப்பார்கள்.
கருத்துதான் முக்கியம் என்பதால், அவர் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ன என்பதெல்லாம் அவசியமில்லை என்பதால் எக்ஸ் ஒய் இசட் என்ற குறியீடு.
இதே எக்ஸ் ஒய் இசட் சாதியைச் சேர்ந்தவர்கள் , டெல்டா மாவட்டங்களின் வேறு சிலப்பகுதிகளில் ஏபிசி எனவும் கே எல் எம் எனவும் பட்டம் வைத்துக்கொள்வார்கள். நான் கூட எக்ஸ் ஒய் இசட் என்றாலும் , என் அம்மா வழி ஏபிசி எனப்பட்டம் வைத்துக்கொண்டதால் கொஞ்சம் உயர்குடி ஆகிவிட்டோம் என்ற சிறிய பெருமையும் உண்டு.
சுற்றமேத் திட்டினாலும், என் அப்பா மட்டும் எக்ஸ் ஒய் இசட்டைப் பார்க்கும்பொழுதெல்லாம் காசு கொடுப்பார்.
”எதுக்குமே அசராதவனை ஒரு சின்ன விசயத்தில அசைச்சிட்டானுங்க,, நிஜமான போராளி ” என்று பைத்தியக்காரனைப் பாராட்டும்பொழுது எல்லாம் என் அப்பாவின் மனநிலையின் மேலேயே சந்தேகம் வரும்.
எக் ஒய் இசட் டிற்கு இப்பொழுது ஒரு 80 வயது இருக்கும். அந்தக் காலத்தில் எக்ஸ் ஒய் இசட் , பெரியாரின் கருத்துக்களில் தீவிர ஈடுபாட்டில் இருந்தவராம்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் நபர்கள் அதிகம் இருக்கும் பொதுவுடமைக் கட்சிக்கூட்டங்களிலும் பங்கேற்றதால், எக்ஸ் ஒய் இசட், ஏபிசி, கே எல் எம் என அனைத்துக்கூட்டத்தினரும் அவரின் மேல் கடுங்கோபத்தில் இருந்தனாரம்.
எக்ஸ் ஒய் இசட்டோட பழைய நண்பர்கள் ரங்கநாதன் , சுவாமிநாதன்
தட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கு கூடப்பிடிக்கவில்லையாம். அவரோட சொந்த அண்ணன் சொத்தில் எந்தப் பங்கும் கொடுக்காத பொழுதும்
கவலைப்படாமல் களப்பணி செய்தார் என்று என் அப்பா எக்ஸ் ஒய் இசட்டின் பெருமைப்பாடுவார்.
ஒருதடவை வெட்டாற்றுப்பாலத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யக்கூடப் பார்த்தார்களாம், அப்பொழுது கூட அசரவில்லை.
அடி வாங்கியபின்னர் அவரின் வேகம் அதிகமாகத்தான் இருந்ததாம்.
அப்பா, எக்ஸ் ஒய் இசட்டை பற்றி சொல்லும்பொழுதெல்லாம், என் அலுவலகத்தில் இருக்கும் பசுபதி தான் நினைவுக்கு வருவான்.
எங்கு யாரு ஒடுக்கப்பட்டாலும், அவனுக்கு தூக்கம் வராது. இந்த சமுதாயத்தை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் சொல்லிக்கொண்டும்
அவனால் முடிந்ததை செய்து கொண்டும் இருப்பான். அவனுடைய கணினியில் அம்பேத்கார், பெரியார், விபிசிங் படங்கள் வைத்திருப்பது
எனது மேலாளர்கள் சிலருக்குப் பிடிக்காது. நேர்மையானவன், என் வீட்டிற்கு கூட வந்து இருக்கின்றான், என் அப்பாவிற்கு அவனது சிந்தனைகள் பிடிக்கும், அவனையும் பிடிக்கும். வேலையில் எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பான்.
ஆனாலும், அலுவலக நேரத்தின் பாதியில் இணையம் மேயும் எனக்கு கிடைக்கும் சம்பள உயர்வில் அவனுக்கு கால்வாசி கூட கிடைக்காது. எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் என எனது மேலாளர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு இருக்கின்றேன்.
திரும்ப எக்ஸ் ஒய் இசட்டிற்கு வருவோம், ஏதோ ஒரு நாள் ரங்கநாதன், சுவாமிநாதன், தட்சினாமூர்த்தி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாய் வாழும் தெரு வழியாக நமது கதையின் நாயகன் வர, தெருமுனையிலேயே , அந்தத் தெருவில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நொங்கு நொங்கு என நொங்கிவிட்டனராம். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு அடங்கியவர்தானாம், பைத்தியம் மாதிரி உலாவுவாராம், யாராவது சோறு போட்டால் சாப்பிட்டு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை கழித்துவிட்டார்.
”சரியான நேரத்தில காயடிச்சிட்டானுங்க, வேரில வெந்நீரை எப்போ ஊத்தனும்னு அவனுங்களுக்குத் தெரியும்”
”எவனுங்கப்பா ? “ என இது வரை அப்பாவிடம் கேட்டதில்லை.
காலையில் எழுந்தோமா, வழுவழுப்பான தாளில் வரும் ஆங்கில தமிழ் நாளிதழ்களைப் படித்தோமா, பேஸ்புக்கில் இளையராஜா பாட்டைப் போட்டுட்டு, பங்கு வணிகம் பார்த்துட்டு, மிஞ்சிய நேரத்தில் கொஞ்சம் மென் நிரலி அடித்து வீட்டு, மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டில் என் அம்முவை கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதுதான் என் வழமையான வாழ்க்கை.
விடுப்பு முடிந்து அலுவலகம் வந்து பின்னர் தெரிந்தது, பசுபதியின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று. என்ன பிரச்சினை என்று விசாரித்ததில் , அவனது திட்டக்குழுவில் இருந்த ஒரு பெண்ணை படுக்கைக்கு பகிரங்கமாக அழைத்தானாம்.
அவனின் வேலை நீக்க செய்தி , நமிபீயாவில் புயலடித்து நான்கு பேர் பலி என்பது எப்படி இருக்குமோ அந்த வகையில்தான் எனக்கு சாதாரணமாக இருந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அடுத்த வருடம் அமெரிக்கா போனேன். ஒரு வருடம் இருந்தேன். புறநகர்ப்பகுதியில் பங்களா கட்டினேன். ஒரு நாள் அப்பாவுடன் காரில் செல்லும்பொழுது, ஒரு தெருமுனை மீட்டிங்கில் ஏதோ ஒரு வாழ்வாதார பிரச்சினைக்காகப் பசுபதி பேசிக்கொண்டிருந்தான்.
“தீர்க்கமாக தெளிவாப் பேசுறான், அப்ப மாதிரி, இப்ப எல்லோரையும் எக்ஸ் ஒய் இசட்டுக்குப் பண்ண மாதிரி ஈசியா நசுக்கிட முடியாது”
என் அப்பா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
என்னைப் பற்றி
வினையூக்கி ( செல்வகுமார் ) சுவீடன்
என்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்.
rrselvakumar@gmail.com
வலைத்தளம் : http://vinaiooki.blogspot.com/
கருத்துகள்
கருத்துரையிடுக