Vizhā eṭuttuppār
பொது அறிவு
Backவிழா எடுத்துப்பார்
ஆசிரியர் : என்.சி.மோகன்தாஸ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கதைகளை நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து எழுதிவிடலாம். கற்பனையில் உலகத்தையே சுற்றலாம்.
ஆனால், செய்தி தொகுப்பதோ, பேட்டி எடுப்பதோ அப்படி முடியாது. ஊரெல்லாம் சுற்றி அலைந்து –களைந்து செயல்பட வேண்டியிருக்கும். ஒரு விழாவை ஏற்பாடு செய்வதிலும் கூட இதே அலைச்சல்தான்.
கதைகள், நாவல் என்றிருந்த என்னை, முதலீடு எனும் பத்திரிகையின் ஆசிரியர் அரிதாசன், “குவைத்திலிருக்கிற பிசினஸ்மேன்களை சந்தித்து தொடராக எழுதித்தர முடியுமா?” என்று கேட்டார்.
குவைத்தில் என்றில்லை, உலகின் பல பாகங்களிலும் இந்தியர்கள் பல பெரிய பதவிகள் வகித்தாலும் கூட, அது சரியாய் வெளிப்படுவதில்லை. இந்தியா என்றால் ஏழைநாடு –என்கிற துச்சமான கண்ணோட்டமே பொதுவாய் இருந்து வருகிறது.
குவைத்தை எடுத்துக்கொண்டால் –எழுபது சதவிகித கம்பெனிகளிலும், பிசினஸ்களிலும் இந்தியர்கள்தான் முன்னணியில் இருக்கின்றனர். அவற்றை பெருமையுடன் வெளிப்படுத்த வேண்டும். என்கிற தாக்கம் மனதில் நீண்டநாளாகவே இருந்து வந்தது.
அதற்கு இதை ஒரு வாய்ப்பாய் பயன்படுத்த பல துறைகளிலும் வெற்றிப்பெற்ற இந்தியர்களை சந்தித்து அவர்களின் வெற்றிபெற்ற வரலாறை எழுதி தொகுத்து ஃப்ரண்ட்லைனர்ஸ் என்று ஆங்கிலத்தில் புத்தகமாக தொகுத்தேன்.
அப்புத்தகத்தை வெளியிட வேண்டி குவைத்திற்கு யாரை அழைத்து வரலாம் என்று யோசித்தபோது முன்னாள் மத்திய நிதி அமைச்சர்களான டாக்டர் .மன்மோகன் சிங் அல்லது ப.சிதம்பரத்தை அனைவரும் சிபாரிசு செய்தனர்.
மன்மோகன் சிங்கை அணுகியபோது நாங்கள் கேட்ட தேதியில் அவர் பிஸி. சரி சிதம்பரம்தான் சரியான நபர் என்று அவரை ஏற்பாடு செய்ய தீர்மானித்தோம். சிதம்பரம் ரொம்ப கறார் என்று அவரை எளிதில் அணுகமுடியாது –பிடிகொடுத்தே பேசமாட்டார் என்றும் கேள்விபட்டிருந்தேன்.
அது உண்மை என்கிற மாதிரி –நான் அனுப்பின நபர்கள் எல்லாம் அவரை சந்திக்க முடியாமல் திரும்பிவிட்டனர். எப்படியும் அவரை ஏற்பாடு செய்துவிடுவது என்று விடுமுறைக்கு வைராக்கியத்தோடு வந்தேன். அவர் டெல்லி, லண்டன், அமெரிக்கா என்று எப்போதும் ஆகாயத்திலேயே இருந்தார்.
எனக்கு அவரை முன்பின் அறிமுகமில்லை. விஷயத்தை தினமலர் வாரமலரின் பொறுப்பாசிரியிடம் தெரிவித்தபோது,“கவலைப்படாதீங்க –நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்று நூருல்லா எனும் சீனியர் ரிப்போர்ட்டரை அழைத்து அறிமுகப்படுத்தினார். நூருல்லா பம்பரமாய் சுழன்று –தூர்தர்ஷன் முன்னாள் நியூஸ் எடிட்டரான திருநாவுக்கரசு அவர்களை போய் பாருங்கள் என்றார்.
திருநாவுக்கரசு, சிதம்பரத்தின் குடும்ப நண்பரும், ஆலோசகரும் ஆவார். அவரே சற்று தயங்கி, “நான் சிதம்பரத்தை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வாங்கி தருகிறேன். நீங்களே நேரில் பேசிக்கொள்ளுங்கள்” என்றார்.
அன்றைய பாரதி கலைமன்ற துணைத்தலைவி திருமதி ஆனந்தி நடராஜன், இனியவனுடன் மறுநாள் சிதம்பரத்தை அவரது வீட்டில், அவர் கொடுத்திருந்த நேரத்தில் சந்தித்தோம். குவைத்திற்கு வர ஒப்புக்கொண்டவர்.
“தேதி பின்னர் தருகிறேன்’’ என்றார்.
“சரி பாஸ்போர்ட் காப்பி கொடுங்கள். விசா எடுத்து அனுப்புகிறேன்’’ என்றேன்.
உடன் அவர் “விசாவா- எனக்கா?” என்று சிரித்தார். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்? என்று எழுந்துவிட்டார்.
அரபு நாடுகளுக்கு அவர் முன்பின் வராததால் விசாபற்றி அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த விசாவானாலும் இங்கிருந்து தான் எடுக்க வேண்டும் இந்தியாவிலிருந்து எடுக்க இயலாது.
டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருக்கிற அவரே இந்தியாவில் அப்ளை பண்ணி நொந்துப் போகும்படியாயிற்றாம்.
சிதம்பரம் பல விஷயங்களில் ரொம்ப கறார். அனாவசிமாய் யாருடனும் பேசுவதில்லை யாரிடமிருந்தும் எதுவும் எதிர்ப்பார்ப்பதுமில்லை. பெறுவதுமில்லை.
அவரிடம் தேதி வாங்குவதில் சற்று சிரமம் இருக்கவே செய்தது “அதான் தரேன்னு சொன்னேனே. ஏன் போனுக்கு வீணாய் செலவு பண்றீங்க்க?’’ என்பார்.
“இல்லை. இங்கு குவைத்தில் நிகழ்ச்சி நடத்த அதிகமாய் அரங்குகள் இல்லை. தேதி கொடுத்துவிட்டால் அரங்கம் புக் பண்ண வசதியாயிருக்கும்.
“என்னால் ரொம்ப முன்னாடி தேதி தர இயலாது. நிகழ்ச்சிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தருகிறேன்’’ என்றவர் அதன்படியே தந்தார்.
இந்ததேதி வாங்குகிற விஷயத்தில் மூப்பானாரை விட இவர் மேல் என்று சொல்லலாம். சென்னையில் இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நடத்த இலக்கியவீதி அமைப்பு மூலம் ஏற்பாடு நடந்தது.
அதற்கு மூப்பனார் அவர்களை அழைக்க வேண்டி நானும், இலக்கியவீதி இனியவன் அவர்களும் அணுகினோம். விழாவிற்கு வரசம்மதிக்க மூப்பனார். தேதி பிறகு தருவதாகச் சொன்னார்.
அவரிடம் தேதி பெற வேண்டி, ஜேடிசி பிரபாகரன் மூலமும் , மற்றவர்கள் மூலமும், மூப்பனார் போகுமிடமெல்லாம் துரத்திச்சென்று, சென்னையிலிருக்கும் போது தேதிதராத அவர் திருநெல்வேலியில் கூட்டம் ஒன்றிற்கு சென்று அங்கிருந்து தேதி கொடுத்தார்.
அவரது தேதி உறுதி செய்வதற்குள் ஏற்கனவே பதிவு செய்திருந்த அரங்குகளை மூன்று முறை மாற்ற வேண்டியதாயிற்று. (தலைவர் அரசியல் முடிவு என்றில்லை-எல்லா விஷயத்திலுமே அப்படித்தான் போலிருக்கிறது. ஆற அமர-நம்மை ஆறப்போட்டு-விடுவதில் வல்லவர்.)
குவைத் வருகை குறித்து சிதம்பரம் எந்தவித கண்டிஷனும் போடவில்லை. ஆனால் புத்தக வெளியீடு தவிர வேறு எந்த நிகழ்ச்சி என்றாலும் என்னை கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படியே அவர் குவைத் வந்தபின்பு மணி வாரியாக அவரது நிகழ்ச்சியை பட்டியலிட்டு அவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றேன்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் –அந்த பட்டியலில் உள்ள நேரத்தை நாங்கள் மறந்துவிட்டாலும், அவர் மறப்பதாக இல்லை.
“மோகன்தாஸ்! பத்துமணிக்கு பிரஸ்மீட்டா. சரி பத்துமணிக்கு பார்க்கலாம்!” என்று அறை கதவை மூடிக் கொள்வார்.
பத்துமணிக்குப் போனால் அவர் ரெடியாயிருப்பார். அது மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் அவர் கறார். எல்லாவற்றையும் விட அவரது துணிச்சலையும், கம்பீரத்தையும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.
அவரது நிகழ்ச்சி குறிப்பில்- குவைத்திலுள்ள பிரபல வங்கி ஒன்றில் சேர்மனை பார்ப்பதாக இருந்தது. சிதம்பரம், “அவர் எப்போ பார்க்க வரார்?” என்று கேட்டார்.
“இல்லை சார். அவர் இங்கு வரலை. நாம்தான் அவரை பார்க்கச் செல்லவேண்டும்’’ என்றேன்.
“ஏன்?”
“அவர் அரசபரம்பரையை சேர்ந்தவர், அதனால்”
“ஸோ வாட்? நான் பர்சனல் விசிட்டில்தான் வந்திருக்கிறேன். அரசாங்க அழைப்பில் வரவில்லை அரசாங்க விருந்தினராக வந்திருந்தால், அவர்கள் அழைக்கும் இடத்திற்கு போய் பார்க்கலாம். ஸாரி! நான் அங்கு வருவதாக இல்லை. வேண்டுமானால் அவர்களை ஹோட்டலுக்கு வந்து என்னை பார்க்கச் சொல்லுங்கள்!”
அவர் சொன்னதும் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. அருகிலிருந்த இந்திய தூதுவரும் இவரது துணிச்சலை பார்த்து ஆடி போய்விட்டார்.
சிதம்பரம் தொண்டர்களிடம் எளிதாய் பழகுகிறாரோ என்னவோ தெரியாது. பொருளாதாரத்தைப் பற்றி பிரமாதமாய் பேசுகிறார். குவைத்தில் அவர் கலந்துக் கொண்ட இரண்டு நிகழ்ச்சிகளிலுமே அவருடைய பேச்சு வானத்தை தொட்டுவிட்டது.
சிதம்பரத்தை எத்தனையோ உள்ளூர் வி.ஐ.பிகளும், இந்திய பிசினஸ்மேன்களும் சந்திக்க வந்தனர். ஆனால் அவர்கள் கொடுத்த பரிசு பொருட்கள் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோருக்குமே “ஸாரி!”
வி.ஐ.பி.கள் என்றில்லை –நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்கிற முறையில் நாங்கள் கொடுத்த பரிசைகூட அவர் மறுத்திவிட்டார்.
(அவரது மகனின் திருமண அழைப்பிதலில் பரிசளிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தும் கூட பலரும் பரிசளித்துவிட –திருமணம் முடிந்து அவற்றையெல்லாம் –ஆள்வைத்து சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைத்தவராயிற்றே சிதம்பரம்!) பரிசு என்றில்லை-
“ஏதாவது வாங்கலாம் –ஷாப்பிங் அழைத்துப் போங்கள்!” என்றார். சரி என்று அழைத்துப் போனோம். சில அரபிவகை பொருட்கள் வாங்கினார். நான் பில் பே பண்ணினேன். அவர் மறுக்கவில்லை. அட இதாவது வாங்கிக் கொண்டாரே எங்களுக்கு திருப்தி.
ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ரூமிற்கு வந்ததும் நான் கொடுத்த தொகையை கணக்கு பண்ணி தன் பெட்டியிலிருந்து டாலராக திருப்பி தந்துவிட்டார்.
“என்ன சார் இதெல்லாம்?”
“நோ…நோ..பிடிங்க!’’ என்று ஒரு முறை முறைத்து டாலரை கையில் திணித்துவிட்டார்.
இந்த காலத்திலும் இப்படியும் ஒரு அரசியல்வாதி! நேர்மையாகவும் கறாராகவும் இருப்பதால்தான் எலக்ஷனில் அவர் தோற்றுப்போக வேண்டி வந்ததோ!
திரு.ப.சிதம்பரம் குவைத்தில் ஃப்ரண்டலைனர்கள் புத்தகத்தை வெளியிட்டது எங்களுக்கு மிகப்பெரிய கெளரவத்தை ஏற்படுத்தி தந்தது உண்மை. இந்த நிகழ்ச்சி பாரதி கலை மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
டி.என்.சேஷன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஃப்ரன்ட்லைனர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு முதலில் ப.சிதம்பரத்துடன் டி.என்.சேஷனையும் அழைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். இரண்டு ஜாம்பவான்கள் எனும்போது குவைத்திலுள்ள இந்தியர்கள் அனைவரின் கவனமும் இப்புத்தகத்தின் மேல் திரும்புமே!
ஆனால் சிதம்பரம், சேஷன் இருவருடைய சுபாவம், ஈகோ எல்லாம் ஒத்துப்போகுமா என்கிற ஐயம் எழுந்தது. இருவரையும் ஒன்றாய் அழைப்பதைவிட தனித்தனியாய் அழைக்கலாமே என்று நண்பர்கள் அபிப்ராயப்பட்டனர்.
டி.என்.சேஷனை பற்றி – அவர் ஒரு தடாலடி மனிதர் –சின்னத்தவறு என்றால் கூட பொறுக்கமாட்டார்-பொரிந்து தள்ளிவிடுவார் என்று கேள்வி பட்டிருந்ததால் அவர் வேணுமா –நமக்கு சரிப்பட்டு வருவாரா என்கிற பயம் இருக்கவே செய்தது.
சேஷனை முன்பின் அறிமுகமில்லை. தினமலர் அந்துமணி அவர்களிடம் சொன்னதும், நூருல்லாவை அனுப்பி வைத்தார். என் சார்பில் நண்பர் ராஜசேகர். சேஷனை தயக்கத்துடனும் பயபக்தியுடனும் போய் சந்தித்து அழைக்க, “உடனே சரி’’ என்று விட்டார்.
“அகில இந்திய அளவில்-குவைத்திலிருக்கிற வெற்றிப் பெற்ற இந்தியர்களை உள்ளடக்கி உருவாக்கியுள்ள புத்தகம் நிச்சயம் நமக்கு பெருமை சேர்க்கும். அவசியம் வரேன். ஆனால் என்னால் தனியாக வர இயலாது. என் மனைவியையும் அழைத்து வர டிக்கட் ஏற்பாடு செய்வீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார்-சேஷன்.
“இல்லை சார். இரண்டு முதல் வகுப்பு டிக்கட் என்கிறபோது சற்று சிரமமாயிருக்கும்’’ என்று நண்பர் சொல்ல, “அப்படியா… பரவாயில்லை. என் மனைவிக்கும் சேர்த்து விசா மட்டும் எடுத்துவிடுங்கள் டிக்கட் நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சேஷன் தெரிவித்ததாக நண்பர் என்னிடம் போனில் தெரிவித்தார்.
“அவருக்கு இன்னொரு டிக்கட் ஏற்பாடு செய்ய முடியுமா?”
“சேஷன் எவ்ளோ பெரிய நபர்! எத்தனை திடகாத்திரமாய் எலக்ஷன் வேலைகளை கவனித்தவர்! அவருக்கு இருந்த செல்வாக்கிற்கு (எம்.பி.எலக்ஷனில் நின்றதால் பொது ஜனங்களின் முகசுளிப்பை பெற்றுவிட்டார் என்பது துரதிர்ஷடம்) தனக்கு இரண்டு டிக்கட் கொடுத்தால்தான் வருவேன் என்று சொல்லலாம். அதை விட்டுவிட்டு நம்மிடம் விண்ணப்பிக்கிறார் என்கிறபோது.
அந்த நேர்மைக்கும், தன்னடக்கத்திற்கும் என்ன விலையும் கொடுக்கலாம் என்று தோன்றிற்று. எக்காரணம் கொண்டும் அவருக்கு செலவு வைக்கக்கூடாது என்று முடிவெடுத்து, அவருக்குவேண்டி இரண்டு முதல் வகுப்பு டிக்கட்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல் எல்லாம் ஏற்பாடு செய்தோம்.
சேஷன் வருகிறார் என்றதும், குவைத்திலுள்ள இந்திய அமைப்புக்கள் குறிப்பாய் மலையாள அமைப்புக்கள் தங்களது நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக் கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தன.
அவர் பிற நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதிக நாட்கள் தங்க வேண்டும் அந்த அதிகபடி செலவுகளை யார் ஏற்றுக் கொள்வது என்று கேட்டேன்.
“பிரச்சனையில்லை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சேஷனிடம் அனுமதி பெற்றுத் தாருங்கள் என்றனர். சேஷனிடம் விபரம் சொல்ல “சரி, வருவதே வருகிறேன். பிறரின் நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்கிறேன்’’ என்று சம்மதித்தார்.
ஆனால், “தயவு செய்து எந்த பிசினஸ் அல்லது கமர்சியல் நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்காதீர்கள், நான் வரமாட்டேன். என்னைக் கேட்காமல் அந்த மாதிரி நிகழ்ச்சி எதையும் ஒப்புக் கொள்ள வேண்டாம்’’ என்று விட்டார்-கறாராய்.
அந்த சமயத்தில் எங்கள் ஸ்பான்சர்களில் ஒருவரான `ஹைவே சென்டர்’ எனும் பிரபல டிபார்ட்மென்டல் ஸ்டோரின் உரிமையாளர் திரு.கே.ஜி.ஆப்ரஹாம் தனது ஸ்டோரின் ஐந்து ஆண்டு நிறைவு விழாவில், சேஷன் கலந்துக்கொள்ள வேண்டும் என்றார். அதற்கும் சேஷன் ஒப்புக் கொள்ளவில்லை.
வேறொரு நகைகடை திறப்பு விழாவிற்கும் அவரை அழைத்தார்கள். “திறப்பு விழாவிற்கு வந்தால் நல்ல கிஃப்ட் தருகிறோம்’’ என்றனர். தானே வருகிற கிஃப்ட்டை ஏன் விடவேண்டும் என்று சேஷனின் காதை மெல்ல கடித்தேன்.
அவர் ஒரே வார்த்தையில் “ஸாரி’’ சொல்லிவிட அவரது மனைவியை உசுப்பிவிட்டு (நகை ஆசைக்கு மயங்காத மனைவிகள் உண்டா என்கிற நப்பாசையில்) நீங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்யுங்களேன்!’’ என்றோம்.
“ஐயையோ நான் மாட்டேன். உங்களுக்காவது இரண்டு நாள் உறவுதான். நான் அவருடன் கடைசிவரை வாழ வேண்டியவள். என்னை விட்டிருங்க! என்று கையெடுத்து கும்பிட்டார்.
சேஷனுக்கு குழந்தைகள் இல்லையென்பதாலோ என்னவோ மாணவர்களின் நிகழ்ச்சிகளில் அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார். குவைத்திலும் ஏழு இந்திய பள்ளிகளின் நிகழ்ச்சிகளில் அவர் ஆர்வமுடன் கலந்துக் கொண்டார்.
சேஷனுடன் பழகும் போதுதான் தெரிகிறது-அவர் தனிமையில் ஒரு குழந்தைபோல பழகுவது. சிதம்பரம் தனிமையில் கறாராகவும், பொது மேடையில் சாந்தமாகவும் இருப்பார். இவரோ பொதுமேடையில் கர்ஜிக்கிறார். பழகும்போது இவரைப் பற்றின அபிப்ராயமெல்லாம் மாறிவிட்டது.
சேஷன் எனும்போது `கான்ட்ரவர்ஸி’ இல்லாவிட்டால் எப்படி? குவைத்திலும் அந்த மாதிரி சம்பவங்கள் நிகழ்ந்தது வாஸ்தவம்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி சேஷனை அதிக நாட்கள் தங்க வைப்பதில் ஒரு நாள் வாடகையை ஏற்றுக் கொள்வதாக முதலில் ஒப்புக் கொண்டிருந்த மலையாள அமைப்பு ஒன்ரு இடையில் முரண்டு பண்ண ஆரம்பித்தது.
“நாங்கள் பணம் தரமுடியாது. என்ன சேஷனை வைத்து பணம் பண்ணுகிறீர்களா?’’ என்று தகறாருக்கு வந்தனர். பணம் பண்ணுவதானால் எதற்காக சேஷனை அழைக்கணும் ஏதாவது சினிமா நட்சத்திரத்தை அழைத்தால் போதாதா?
அவர்களின் வார்த்தைகள் எங்களை நோகடித்தன. பாவிகள், இதே மாதிரி சேஷனிடம் சொல்லி வைத்து, அவரும் அந்த மாதிரி என்னை நினைத்து ரசாபாசமாகிவிடப் போகிறதே –என்கிற பயம் இருக்கவே செய்தது.
எதற்கும் இந்த பிரச்சனையை அவரிடம் சொல்லிவிடலாம் என்று பேச்சை ஆரம்பித்தேன். உடனே அவர்,“மோகன்தாஸ்! இதோ பாருங்கள்! உங்களை எனக்கு இதற்கு முன்பு தெரியாது. பத்திரிகை மூலமாகத்தான் அறிமுகம். யார் என்ன பேசினாலும் கவலையில்லை. நீங்கள் என்னை அழைத்து வந்திருக்கிறீர்கள். எனது மதிப்பும் மரியாதையும் இப்போது உங்களிடம் உள்ளது. உங்களை மீறி எதுவும் செய்ய மாட்டேன்’’.
அவர் அப்படிச் சொல்லவும் எங்களுக்கு வார்த்தைகளே வரவில்லை.
அந்த மலையாள அமைப்பின் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை ஆறு முப்பது என்று அறிவித்திருந்தார்கள். சரியாய் ஆறு இருபதுக்கு சேஷன் ஹாலில் ஆஜர்!
அங்கே அரங்கில் சுமார் நூறுபேர்தான் இருந்தனர். நிகழ்ச்சிக்கு வரவேண்டிய இந்திய தூதுவரும் வந்து சேரவில்லை.
ஆறு முப்பதிற்கு சேஷன், “நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா?’’ என்றார். அவர்கள் தயங்கி “இன்னும் அம்பாஸிடர் வரவில்லை. இன்று வேலைநாள் என்பதால் ஏழரைக்குத்தான் கூட்டம் வரும்!’’ என்றனர்.
“எனக்குக் கூட்டத்தைப் பற்றி கவலையில்லை சொன்ன நேரத்திற்கு ஆரம்பியுங்கள்! இல்லாவிட்டால் நான் பாட்டிற்குப் போய்விடுவேன்,’’ என்றதும் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.
அம்பாஸிடர் பதினைந்து நிமிடம் லேட்டாகதான் வந்து சேர்ந்தார்-வேறு நிகழ்ச்சி முடிந்துவர அவருக்கு லேட்டாயிற்று.
சேஷன், தான் பேசும்போது, `நாம் முன்னேற முடியாமல் இருப்பதிற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று –எதையும் நேரப்படி செய்யாமை. உதாரணத்திற்கு இந்த நிகழ்ச்சியையோ எடுத்துக் கொள்ளுங்களேன்! இன்று புதன்கிழமை-வேலைநாள் என்பதும்- ஏழரைக்குத்தான் மக்கள் வர இயலும் என்பதும் தெரிந்த விஷயம் என்கிறபோது –எதற்காக ஆறரைக்கு நிகழ்ச்சியை அறிவிக்கிறீர்கள்? சொன்னால் சொன்ன நேரத்திற்கு வரவேண்டும் இல்லாவிட்டால் நிகழ்ச்சியை ஒப்புக் கொள்ளவேக் கூடாது’’ என்று ஒரு போடு போட்டார்.
அன்று அவர் போட்ட போட்டில் மறுநாள் பாரதி கலைமன்றம் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக இருந்த அம்பாஸிடர், என்னை போனில் அழைத்து, “இந்த சேஷனுக்கும் நமக்கும் ஒத்துவராது . நாளை வேறு ஒரு நிகழ்ச்சி முடிந்து நான் வரவேண்டும். அதற்கும் லேட்டானால் இவர் விளாசுவார். வேண்டாம் “ஆளை விடுங்கள்!’’ என்று ஒதுங்கிக் கொண்டது மறக்க முடியாத நிகழ்ச்சி.
இன்னொரு நாளில்-
ஏழாரைக்கு ஒரு நிகழ்ச்சி சேஷனுக்கு இருந்தது. ஆறாரைக்கு திரு.தாமஸ் சாண்டி அவர்கள் தன் பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு அவசியம் வந்தாகணும் என்கவே, “சரி வருகிறேன். ஆனால் ஏழு மணிக்கு என்னை விட்டுவிட வேண்டும், ஏழாரை நிகழ்ச்சியில் நான் தாமதிக்காமல் கலந்துக்கணும்!” என்றார்.
“அப்படியே ஆகட்டும்’’ என்று அவர் சம்மதிக்க சேஷனை சரியாய் ஆறாரைக்கு அங்கு ஆஜர் படுத்தினோம். அங்கு சேஷனை வைத்துக் கொண்டு மேடையில் அவர்கள் பாட்டிற்கு பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். அவரை அழைக்கிற முகமே தெரியவில்லை.
மணி ஆறு ஐம்பது. சேஷனின் முகம் இருண்டுப் போயிற்று. ஆறு அம்பத்தைந்துக்கும் –அந்த நிகழ்ச்சி முடிகிற மாதிரி தெரியவில்லை. அங்கே என்னவோ நடக்கப் போகிறது என்பது புரிந்தது.
டென்ஷனுடன் காத்திருந்தோம். சரியாய் ஏழாயிற்று பாருங்கள்-சேஷன் சட்டென எழுந்து விட்டார். “மோகன்தாஸ்- வாங்க போகலாம்!’’ என்று விருட்டென வெளிநடப்பு செய்ய, ஏற்பாட்டாளர் பின்னாலேயே ஓடி வந்து “வாங்க சார்! ரெண்டு வார்த்தை பேசிவிட்டு –போயிருங்க!’’ என்க- நோ! என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க –உங்க மனசுல? என்று முறைத்துவிட்டு காரில் ஏறி பறந்துவிட்டார்.
சேஷன், தேசபக்தி அறக்கட்டளை என வைத்திருக்கிறார். அதற்கு நிதி சேர்க்கலாமா என்று கேட்டேன். “வேணாம், இதை மேடையில் அறிவித்தால் நான் அதற்காக வந்தது போலாகிவிடும்’’ என்று மறுத்துவிட்டார்.
சேஷனுக்கு பக்தி அதிகம். அது அறிந்து சில பக்தி மார்க்கங்கள் தங்களின் பூஜையில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அவரை அழைக்க- “நான் இங்கு பக்தியை பரப்ப வரவில்லை. அரபு நாட்டிற்கு வந்து நான் பூஜையில் கலந்துக் கொள்வது வேறு மாதிரியாக பேசப்படும் . பக்தி மனதில் இருந்தால் போதும்’’ என்று மறுத்துவிட்டார்.
ஐந்து நாட்கள் எங்களுடன் இருந்தும் கூட, அவர் போனுக்காக ஒரு பைசா செலவு வைக்கவில்லை. சென்னைக்குச் சென்றதும் மனம் உருகி, “குவைத் பயணத்தை என் உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்’’ என்று பேக்ஸ் அனுப்பினது நெகிழ வைத்தது.
டைரக்டர் கே.பாலசந்தர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டைரக்டர் பாலசந்தரை நம்மூரில் எளிதாய் சந்திக்கவும் பேசவும் முடியுமோ என்னவோ தெரியவில்லை. அவர் கோபக்காரர் என்று அருகிலிருப்பவர்களே தயக்கம் காட்டுவதுண்டு?
ஆனால் குவைத் தமிழ் ரசிகர்கள் மூன்று நாட்கள் அவருடன் இயல்பாய் நெருங்கி பழக முடிந்தது.
பாலசந்தரிடம் ஒரு பழக்கம், தன்னைவிட எளியவராயினும், புதியவராயினும் அவர்களை அவர் பாராட்டத் தயங்குவதில்லை. தனது தகுதி மறந்து, உணர்ச்சி பொங்க பாராட்டித் தள்ளிவிடுவார். அது அவரது பெருந்தன்மை.
ரஜினி -25 விழாவிலும், படையப்பா விழாவிலும் அவரது குருவாக இருந்தும்கூட சிஷ்யனை அவர் கெளரவித்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது.
நான்கு தலைமுறைகளாக முதல் இடத்திலேயே இருந்து ஜாம்பவான்கள் பலரையும் உருவாக்கின கே.பி.க்கு வேறு யாரும் விழா எடுக்கும் முன்பு நாம் எடுத்துவிட வேண்டும் என்று தோன்றிற்று.
டி.வி.செய்தி வாசிப்பாளரும், நடிகருமான வரதராஜன் அவர்கள் ஏற்பாடு செய்துக் கொடுத்தார். கே.பி.யிடம் விபரம் சொன்னபோது, “நான் பொதுவா பாராட்டு விழாக் கெல்லாம் ஒத்துக்கிறதில்லை. எதுக்கு இதெல்லாம்?’’ என்று தயங்கினார். “வேணுமா?’’
“வேணும் சார் உங்களின் 40 வருட சாதனையை பாராட்டுவதில் குவைத் தமிழர்களுக்கும் ஒரு கெளரவம் கிடைக்கும். ரசிகர்கள் வற்புறுத்தவே (ஏன் தொல்லை தாங்காமல்!) “சரி பார்க்கலாம்” என்றார்.
அப்புறம் விட்டிருவோமா என்ன-அந்த ஒரு வார்த்தையை வைத்தே அவரை தொந்தரவு செய்து தேதியை வாங்கினேன். அந்த தேதியில் இன்னொரு விஷேசம்-அன்றுதான் அவரது சிஷ்யரான ரஜினிக்கு டெல்லியில் பத்மபூஷன் பட்டம் (30.03.2000) கொடுக்கப்பட்டது. அதே நாளில் `குரு’வுக்கு குவைத்தில் `படவுலக பிரும்மா’ எனும் பட்டத்தை நாங்கள் வழங்கினோம்.
பாலசந்தர் வருகிறார் என்பதை அறிந்ததும் அகில இந்திய அளவில் அவருக்கு குவைத்தில் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அவரது ஏக்துஜே கெலியே படம்! அனைவரும் விரும்பின படமாயிற்றே அது!.
அந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை தரவே, விழாவை மிகபெரிய அளவில் நடத்துவது என்றும், பெரிய ஹால் பிடித்து பெரும்பான்மையான ரசிகர்களும் கண்டுகளிக்க செய்வது என்றும் முடிவெடுத்தோம்.
குவைத்திலுள்ள வெற்றிப்பெற்ற இந்தியர்களை உள்ளடக்கி நண்பர்களின் துணையுடன் நான் தொகுத்து வெளியிட்டுவரும் Frontliners புத்தகம் மூலம் இந்தியாவில் Wehelp எனும் அறக்கட்டளை உருவாக்கி உதவி வருகிறோம். இப்புத்தகத்தின் மூன்றாம் பகுதி மூலம் கார்கில் நிதிக்கு மூன்று லட்சரூபாய் வழங்கினோம். அப்புத்தகத்தை நடிகர் சரத்குமார் வந்து வெளியிட்டிருந்தார்.
பொதுவாக, ஒவ்வொரு முறையும் புத்தகம் தயாரித்த பின்னர்தான் அதன் வெளியீட்டு விழாவிற்கு யாரை அழைக்கலாம் என்று யோசிப்போம்.
ஆனால் கே.பி.விஷயம் நேர் எதிர். அவர் தேதி கொடுத்ததுமே அவரது பாராட்டு விழாவிலேயே Frontliners நான்காம் பகுதியை வெளியிடலாம் என்று –தீர்மானித்து –குவைத்திலிருக்கிற பத்து இந்திய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் `ரேங்க்ஹோ’ல்டர்களை தொகுத்து வெளியிட்டு அவர்களுக்கு ஊக்கம் தரலாம் என ஆரம்பித்தோம்.
அத்துடன் KB -40 எனும் சிறப்பு மலரையும் தயாரித்தோம், எங்களுடன் செளத் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டில் `சியாரா’ அமைப்பும் சேர்ந்துக் கொண்டன.
பாலசந்தர் டி.வி.சீரியலில் எப்போதும் பிஸி. அவரை போனில் பிடிப்பதே சிரமமாயிருக்கும். அவரது தொடர்புகளை வரதராஜன் பார்த்துக் கொள்ளவே, எனது வேலை எளிதாயிற்று.
ரிசர்வ் டைப்பான கே.பி.-குவைத்தில் மூன்று நாட்கள் அனைவருடனும் சகஜமாய் பேசி- பழகினது இன்ப அதிர்ச்சி. அவர் தனக்கு ஹோட்டலில் ரூம் போட வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. “எது வசதியோ அதன்படி ஏற்பாடு செய்யுங்கள் போதும்!’’ என்றுவிட்டார்.
ஹோட்டலை விட வசதியாக-பிரபல பிளாஸா ஹோட்டலில் பைனான்ஸ் கன்ட்ரோலராக இருக்கும் கவிஞர் பெரியசாமியின் வீட்டிலேயே அவருக்கு தங்க ஏற்பாடு செய்தோம். (பெரியசாமி எங்களுக்கெல்லாம் எல்லைசாமி மாதிரி. சிறந்த பண்பாளர், கவிஞர் மனிதாபிமானி).
அன்றைய நிகழ்ச்சியில் குவைத் இந்திய தூதுவர் முதலில் கலந்து கொள்வதாக இல்லை. பிறகு பாலசந்தரை சந்தித்ததும். அவரும் கலந்துக் கொண்டார். தூதரக அமைச்சர் திரு.கருப்பையாவும் கலந்துக் கொண்டு KB -40 சிறப்பிதழை வெளியிட்டார்.
பாலசந்தரின் படங்களிலிருந்து காட்சிகளையும் பாடல்களையும் குழந்தைகள் அரங்கேற்ற அவர் மிகவும் ரசித்தார்.
செளத் இந்தியன் சொசைட்டி, ஹோம்வீடியோ போட்டி நடத்தி, அதை பாலசந்தரை வைத்தே தேர்வு செய்ய வைத்து, சிறந்த படத்திற்கு பாலசந்தர் அவார்டை அவர் கையாலேயே வழங்கிற்று.
வழக்கம்போல வயதையும் மீறி பாலசந்தர் உற்சாகமாகவே பேச ஆரம்பித்தார். “வைரமுத்து, பாரதிராஜா போன்றவர்கள் பேசின மேடையில்-சுமாராக பேசக்கூடிய நானும் பேசுவது தயக்கமாகதானிருக்கிறது. சென்னையில் உள்ள எனது இயல்பான டென்ஷன் வாழ்க்கையிலிருந்து மூன்று நாட்கள் விடுபட்டு சம்மந்தியை கவனிப்பதுபோல கவனித்துக் கொண்டு எனது வாழ்வில் பத்து வயதை குறைத்து உற்சாகம் தந்திருக்கிறீர்கள்’’ என்று கே.பி.உருகினார்.
கே.பி.-சில விஷயங்களில் ரொம்ப கறார். அனாவசியமாய் அடுத்தவர்களுக்கு செலவு வைக்கக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார். பர்ச்சேஸிற்கு போனபோது கூட ரொம்ப யோசித்து யோசித்துதான் வாங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து சினிம பிரபலங்களை வரவழைக்கலாம் என்று நினைத்தோம் கே.பி.“வேணாம்சாமி! எதுக்கு ஆடம்பரம்?” என்று மறுத்துவிட்டார். “நான் சொன்னால் பலரும் வருவார்கள். ஆனால் எனக்காக தங்கள் சொந்த வேலையை விட்டுவிட்டு யாரும் வரவேணாம். வீண் செலவுகளை தவிர்த்து-ஏதாவது நல்ல காரியத்திற்கு உதவி பண்ணுங்கள்’’ என்று யோசனை தெரிவித்தார்.
அதன்படியே இந்த நிகழ்ச்சியின் மூலம், ஊனமுற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவரும் அமர்சேவா சங்கத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்கினோம்.
வரதராஜன் ஏற்கனவே நாடகம் போட குவைத் வந்திருப்பதால் பர்ச்சேஸில் அவர் கைதேர்ந்திருந்தார். ஆனால் பாலசந்தர் பெரிதாய் எதிலும் ஆர்வம் காட்டவில்லை. படப்பிடிப்பிற்கு பயன்படும் திரைச்சீலைகள், வால்பேப்பர், பேனா, பென்சில் போன்ற ஸ்டேஷனரி பொருட்களில்தான் கவனம் செலுத்தினார்.
உள்ளூர் ரசிகர்களுக்கு நெருங்கி பழகமுடியாத வாய்ப்பு குவைத் ரசிகர்களுக்கு கிடைத்தது. அதே மாதிரி உள்ளூரில் கிடைக்காத சுதந்திரம் அவருக்கு குவைத்தில் கிடைத்ததாக கே.பி.மனநிறைவோடு குறிப்பிட்டது எங்களுக்கு சுகமாயிருந்தது.
இந்த மேடையில் வைத்து நண்பர்கள் அரசவை சேகரின் `என் வாசப்பூவே’ நூலும் பெரியசாமியின் `தளிர்கள்’ நூலும் பாலசந்தரால் வெளியிடப்பட்டது.
டைரக்டர் பாரதிராஜா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பார்வைக்கு கொஞ்சம் முரடாகத் தெரிந்தாலும் பழகுவதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறார். டைரக்டர் பாரதிராஜா.
கோபக்காரர், அத்தனை எளிதாய் யாரும் அவரை நெருங்கிவிட முடியாது என்பார்கள். சென்னையில் எப்படியோ தெரியாது. குவைத் பாரதி கலை மன்றத்தின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த போது அனைவரிடமும் சகஜமாகவே பழகினார்
தாஜ்மஹால் படம் சரியாக போகாததில் மனதிற்குள் தளர்வு இருந்தாலும்கூட அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
வெளிநாட்டு பயணம் என்பது அவருக்கொன்றும் புதிதில்லை. ஜனவரியில் லண்டனிலிருந்து வந்த அழைப்பை ஏற்காத அவரை புகைப்பட நண்பர் யோகா வற்புறுத்தி அழைத்து வந்திருந்தார்.
பொதுவாக சினிமாக்காரர்கள் என்றால் விமானத்தில் முதல்வகுப்பு டிக்கட் கேட்பார்கள் ஹோட்டலில் தனித்தனி அறைகள் போடச் சொல்வார்கள்.
ஆனால், சொந்த செலவில் போகும்போது முதல்வகுப்பின் பயணம் செய்யும் பாரதிராஜா, பிறருக்கு வீண் செலவு வைக்கக்கூடாது என்று சாதா வகுப்பு போதும் என்றதுடன், தனக்கும் வண்ணப்பட யோகாவுக்கும் தனித்தனி ரூம்கள் வேண்டாம். ஒரே ரூம் போதும் என்று தெரிவிக்கவும் ஆச்சர்யமாயிற்று.
நம் பிரபலங்கள் வெளிநாடு சென்று வந்ததும் அங்கு இட்லி சாம்பார் கிடைத்தது. தோசை கிடைத்தது என்று பெருமையாக எழுதுவதுண்டு. அதை மனதில் வைத்துக் கொண்டு கவிஞர் வைரமுத்து வந்தபோது, இட்லி-வடை ,பொங்கல், நம்மூர் சாப்பாடு என்று ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தோம்.
பிரமாதமாக இருக்கிறது என்று சாப்பிட்ட அவர் “இட்லி தோசையெல்லாம்தான் நம்மூரில் சாப்பிடுகிறோமே.. அரபிநாட்டு உணவு வகைகள் ஆர்டர் செய்யுங்கள் சாப்பிட்டுப் பார்க்கலாம்’’ என்றிருந்தார்.
பாரதிராஜாவும் அதே மாதிரி கேட்ககூடும் என நினைத்து அவர் குவைத் வந்திறங்கியதும் இரவு சாப்பாட்டிற்கு இன்டர்நேஷனல் உணவு வகைகளை அவர்கள் தங்கியிருந்த பிளாசா ஹோட்டலில் அதன் பைனான்ஸ் கன்ட்ரோலரும் தமிழருமான பெரியசாமி ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் பாரதிராஜாவோ,“நாங்கள் பயணகளைப்பில் வந்திருக்கிறோம். ஏர் இந்தியாவில் நல்ல சாப்பாடும் கொடுத்தார்கள். ஆகையால் எனக்கு லைட்டாக ரசமும், கொஞ்சம் சாதமும் இருந்தால் போதும்!’’ என்றார்.
`மண்வாசனை’ தந்தவராயிற்றே! எங்களுக்கு ஆச்சர்யம். வேறு ஏதாவது பெரிதாய் கேட்டிருந்தால்கூட ஏற்பாடு செய்திருக்கலாம். நடுராத்திரியில் ரசம்?
எங்கேப் போவது? உடன் நண்பர் ராஜன் தன் வீட்டிற்கு போனில் ரசம் வைக்கச் சொல்லி வாங்கிவந்து கொடுக்க, மணக்க சாப்பிட்டார்.
பாரதிராஜா கலகலப்பாக பேசுகிறார். ஆனால் கேள்விமேல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தால் உடன் மூக்கு சிவந்து விடுகிறார்.
சாதா ரசிகர்கள் என்றாலும் சரி, பாரதிராஜா தோளோடு தோள் சேர்த்து, அரவணைத்து பழகுகிறார். படம் எடுத்துக் கொள்கிறார். அவர்கள் பரிசு பொருட்கள் கொண்டு வந்தால்,“எதுக்குப்பா இதெல்லாம்? நீ இங்கே என்ன வேலை பார்க்கிறாய்? குடும்பத்துக்கு என்ன அனுப்புகிறாய்-என்று கரிசனத்தோடு விசாரித்து. திருப்திப்பட்டால் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்.
கடைவீதிக்கு போகும்போது எதிர்வரும்- மறிக்கும் ரசிகர்களை கண்டு மிரளாமல் “இது தான்யா உண்மையான அன்பு–இதுதான் என் சம்பாத்யம்’’ என்று உருகுகிறார். “நான் உங்களுக்கெல்லாம் சினிமா கொடுத்ததை தவிர, வேறு என்னய்யா செஞ்சுட்டேன். எதுக்காக –இத்தனை பாசம்?’’ என்று கண் கலங்குகிறார்.
அரபுநாட்டில் படமெடுக்க வேண்டும் என்கிற யோசனை இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. பாரதிராஜா, குவைத் நாட்டின் எண்ணெய் வளம் எண்ணெய் கிணறுகள், பற்றி நிறைய விசாரித்தார்.
உள்ளூர் மக்களின் பழக்கவழக்கங்கள், திருமணம், சம்பளம், உடைகள் என்று ஆர்வத்துடன் கேட்டவருக்கு, “எனக்கும் ஷேக் போல உடை அணிய ஆசை. ஏற்பாடு பண்ணுவீர்களா?’’ என்றார் குழந்தைபோல.
உடன் பிரபல கம்பெனியின் மானேஜரான நாகா துணி எடுத்து கொடுக்க திருச்சி ஹோட்டல் நடத்தும் டில்லி பாஷா ஒரு மணி நேரத்தில் தைத்துக் கொண்டு வந்துவிட்டார்.
அந்த உடையை குவைத் ஷேக் ஒருவரே பாரதிராஜாவுக்கு அணிவித்து பூரித்துப் போனார். முதல்மரியாதை சிவாஜி போல ஆசைக்கும், விளையாட்டு சிந்தனைக்கும் வயதில்லை என்பதை இந்த ராஜாவுக்கு நிரூபிக்கிறமாதிரி இருந்தது.
அவரது அடுத்த ஆசை-பாலைவன கப்பலை பார்க்க வேண்டும் என்பது. நண்பர் புகழ் `ஒன்றென்ன ஆயிரம் ஒட்டகங்களை காட்டுகிறேன் வாருங்கள்’’ என்று ஒட்டக காம்பிற்கு அழைத்துப் போனார். பாலைவனத்தில் அங்கே ஆடுகளை அடைப்பது போல ஒட்டகங்களை அடைத்து வைத்திருந்தனர். அவற்றிற்கு இவர் பிஸ்கட் கொடுத்து மகிழ்ந்தார்.
பாரதிராஜாவின் படங்களில் வெள்ளை தேவதைகள் வருவார்களே… அது மாதிரி வெள்ளை ஒட்டகங்களை பார்த்ததும் இவரது மகிழ்ச்சி அதிகமாயிற்று.
அந்த சமயம் குவைத்தி ஒருவர் ஒட்டகத்தில் ஏறி வர,“ சார்! நீங்களும் ஏறி பயணம் செய்கிறீர்களா? என்றதும்,“ஓ…யெஸ்! நான் ரெடி!’’ என்று கிளம்பினார். அந்த குவைத்தி முதலில் சம்மதிக்கவில்லை. பிறகு பணம் கொடுத்தால் அனுமதிக்கிறேன் என்றான். அவனுக்கு 750 ரூபாய் பேரம் பேசி, பணியவைத்து கொடுத்து சம்மதிக்க வைத்தோம்.
ஆனால் அது கால்ஷீட் கொடுக்காமல் முரண்டு பண்ணிற்று. பிறகு அதற்கும் பிஸ்கட் கொடுத்து சரிபண்ணி எடுத்தோம்.
`நம்மூரில் நான் ஷாப்பிங்கே போவதில்லை போனாலும் ஒன்று ரசிகர்கள் தொல்லை –அல்லது பொறுமை இருப்பதில்லை. இங்காவது சுதந்திரமாலய் எடுக்கிறேன் என்று சிட்டி செண்டரில் அலசோ அலச என்று அலசினார்.
“மனைவியிடம் எப்படியும் நல்ல பெயர் வாங்கிவிடுவதென்கிற தீர்மானமா?’’ என்று கேட்டேன்.
“ஹீம்…எங்கே! அந்த பாக்கியம் எந்த கணவனுக்கும் கிடைக்கப் போவதில்லை!’’ என்று சிரித்தார். அதை கேட்க சந்தோஷமாயிருந்தது. இவருக்கும் இதே கதிதான் போலிருக்கிறது!
`தாஜ்மஹால்’ படம் பற்றியும், மகன் மனோஜ் பற்றியும் கேட்கலாமா கூடாதா என்கிற தயக்கத்துடன் அணுக, “எது வேண்டுமானாலும் கேளுங்க’’ என்று தட்டிக் கொடுத்தார் (நிஜமாலுமே)
“மண்வாசனை, கிழக்குச்சீமையிலே போன்று தமிழ் மணம் கமழ பெயர் வைத்த நீங்கள் தாஜ்மஹால் என்று பெயரிட்டதேன்?’’
“சினிமாவில் எப்போதுமே இது ஒரு சாபம். ஒருவர் ஒரு கோணத்தில் படம் எடுத்து வெற்றிகண்டு விட்டால், அதே மாதிரியான எதிர்ப்பார்ப்பு வளர்ந்துவிடுகிறது. முன்பு 16 வயதினிலே, கிழக்கேப் போகும் ரயில் தான் எடுத்ததும் –பாரதிராஜாவுக்கு கிராம படம்தான் எடுக்கவரும் என்று பேச ஆரம்பித்தார்கள். அப்படியில்லை என்று நிரூபிக்க சிகப்பு ரோஜாக்களை தந்தேன். பிறகு கிராமபடம், காதல், அரசியல் என்று வெரைட்டியாக தர ஆரம்பித்தேன். படதலைப்பு விஷயத்திலும் கூட அப்படிதான்.
காதல் எனும் புனிதத்தை குறிப்பிட காதல் சின்னமான `தாஜ்மஹால்’ பெயர் பொருந்தம்மாக இருக்கும் என்று கருதி வைத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது.
“இந்த `ர’ சென்டிமென்ட் உங்களுக்கு எப்படி வந்தது? ராதிகா, ராதா. ரத்தி. ரேவதி, ரஞ்சனி, ரஞ்சிதா, ரேகா என்று நடிகைகளுக்குப் பெயர் வைத்த நீங்கள் இப்போது அதை விட்டு விட்டதேன்?’’
பாரதிராஜாவுக்கு, சற்று கேலிப் புன்னகையை வீசி, “நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ தெரியாது, எனக்கு இந்த மாதிரி சென்டிமென்ட்களிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. இந்த பெயர் விவகாரமெல்லாம் வெறும் விபத்து. புதுமுகங்களை புகுத்தும்போது ராதிகா, ரத்தி என பெயரிட்டது. அந்த நேரத்தில் தோன்றின யோசனைதான். பிறகு அருணா, விஜயசாந்தியை அறிமுகப்படுத்தலியா? முதலில் இரண்டு பெயர்களில் `ர’ இருக்கவும், பத்திரிகைகள் `ர’ எனக்கு ராசி என எழுதி எழுதி சுற்றியிருப்பவர்களும் அதை நம்பி, அதே மாதிரியே வைத்துவிடலாமே என்று தூண்டினர்.
என்னால் அறிமுகப்படுத்தப்படும் நடிகைகளும்கூட இதை நிஜமென நம்பி, `ர’வில் பெயர் ஆரம்பித்தாலே, தாங்களும் வெற்றிபெற முடியும் என நினைத்து, அப்படியே பெயர் வைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கவே –அதற்கு நான் சம்மதிக்க வேண்டியதாயிற்று.
“நீங்கள் பல நடிகர் –நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். பல ஆர்டிஸ்ட்களை உருவாக்கியிருக்கிறீர்கள்-இவர்களில் உங்கள் பெயர் சொல்லும்படி இருப்பது யார் யார்?’’
“நான் அறிமுகப்படுத்தினாலும்கூட, அவரவர்கள், அவரவர்களின் சொந்த திறமையில்தான் வளர்கிறார்கள். அதனால் யாரும் என் பெயரைச் சொல்ல வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பாரதிராஜாவின் பெயரைச் சொல்கிற மாதிரி இருக்கிற ஒரே நபர் பாரதிராஜாதான்.
“தமிழ் சினிமாவில் யதார்த்தமாகவும், கிராமியமனம் கமழவும் இனிய சங்கீதத்தை வழங்கியவர்கள் என்கிற ஆதங்கத்தில் இதை கேட்கத் தோன்றுகிறது. இளைராஜாவை விட்டு ஏன் பிரிந்தீர்கள்? திரும்ப அவருடன் எப்போது சேரப் போகிறீர்கள்?’’
“இளையராஜா ஒரு ஜீனியஸ் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து யதார்த்தத்தை வெளிப்படுத்தினோம் என்பதும் உண்மை. எங்களிடையே உள்ள பாசம்-உணர்வுகளுக்குள் இப்போதும் எந்த விரிசலுமில்லை. சில நேரங்களில் சில விஷயங்கள் காரணம் தெரியாமலேயே நிகழ்ந்து விடுகின்றன.
அவர் என்னுடன் மட்டுமன்றி, பல்வேறு ரசனை திறமையுள்ள டைரக்டர்களுடனும் பணியாற்றி, தனது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அது மாதிரி நானும் பலருடனும் இணைந்து பலவித பரிவர்த்தனைகளையும் வெளிப்படுத்த வேண்டாமா? எனது திறமையின் இன்னொரு வெளிப்பாடும் முகமும் வெளிச்சத்துக்கு வரவேண்டுமே.
நிச்சயம் நான் முழுவதும் கற்றவனில்லை. திறமை முழுவதையும் இதுவரை வெளிப்படுத்திவிட்டதாகவும் நினைக்கவில்லை. காலகட்டத்திற்கு ஏற்ப-ரசனைக்கு ஏற்ப நானும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. புதிய பரிணாமங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் காம்பினேஷன்! என்னைக்கிருந்தாலும் திரும்பவும் இளையராஜாவும் நானும் இணைவோம் என்பது உறுதி.’’
“பாரதியாரின் மேல் உள்ள பற்றுதான் உங்களை இந்த பெயர் வைத்துக்கொள்ள தூண்டிற்றா? அப்படியானாலும் அவருடைய கருத்துக்களை வலியுறுத்தி படங்கள் எடுப்பீர்களா?’’
“மன்னிக்கணும்.. பாரதியார் ஒரு மகான். நான் ஒரு சாதாரணன். அவருடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளர்ந்து விடவில்லை. என் சகோதரி மற்றும் சகோதரர் பெயர்களை இணைத்து இப்படி வைத்துக் கொண்டேன். அது பாரதியாரை ஞாபகபடுத்தினால்-அதற்காக நிச்சயம் பெருமைப்படுகிறேன் நன்றி’’.
“சினிமாவுக்கு ஏன் வந்தோம் என்று நினைத்ததுண்டா?’’
“சத்யமா இல்லை. ஊரில் இருக்கும்போது பெரிய அளவில் எனக்கு படிக்கமுடியவில்லை. அதற்கான வசதியும் இல்லாமல் போயிற்று. பிழைக்க வழி தேடினபோது பலவித எண்ணங்கள் மனதில் ஒடின.
சின்ன வயதில் நிறைய கதைகள் படிப்பேன். கதை எழுதி கதாசிரியராக மாறலாமா என யோசித்திருக்கிறேன். கதாசிரியன் என்றால் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத்தான் போய் சேரமுடியும்.
அடுத்த சாய்ஸ் பாலிடிக்ஸ்! அதில் நண்பர்களைவிட விரோதிகளே அதிகம் உருவாகிவிடுவர். புகழ் கிடைத்தால் கூட இன்று ஜெயித்தாலும் நாளை தோல்வி என்கிற நிலைமை.
சினிமா ஒன்றுதான் உலகம் முழுவதும் அனைவரும் விரும்பி ஏற்கிற மீடியா. 300 பக்க விஷயத்தை இரண்டரை மணிநேரத்தில் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்துவிட முடிகிற பவர் இதற்கு இருப்பதால் இந்தத் துறையை நானே விரும்பி தேர்ந்தெடுத்தேன். எத்தனை தோல்விகள் வந்தாலும் இன்னும் விரும்பிக் கொண்டேயிருப்பேன்.
காரணம் நாம் எங்கே போனாலும், என்னை அடையாளம் கண்டுக்கொண்டு விஷ்பண்ணுகிறார்கள். பேச வருகிறார்கள். நான்கு பேரை கவர முடிகிற துறை சிறப்பாய் அடையாளம் காட்டப்படுகிற துறையில் இருக்கிறேன் என்பதே பெருமைபடுகிற விஷயம்தான்! இந்த அபரிமித பேர்-புகழால் சுதந்திரமும்- சுதந்திரமாய் வெளியே போக முடியாமல் போவதும் ஒரு குறைபாடு தான் என்றாலும் கூட அதை நான் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை.’’
“பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் உங்களை பாதிப்பதுண்டா?’’
“நிறையவே பாதிக்கின்றன. என் சிந்தையை ஆக்கபூர்வமாய் செயல்படவிடாமல்,டிஸ்டர்ப் பண்ணிவிடுகின்றன. அதனால் அந்த மாதிரி விஷயங்களை நான் பார்ப்பதுமில்லை. அவற்றிற்கு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.’’
“உங்களது முன்கோபம் பற்றி….?’’
“ஒரு காலத்தில் நான் ரொம்ப கோபக்காரனாக, தடாலடியாக இருந்தது உண்மை. ஆனால் இப்போதெல்லாம் ரொம்பவும் அவற்றை கட்டுப்படுத்திக் கொண்டுள்ளேன், இருந்தாலும் கூட ஒரு விஷயத்தை மட்டும் என்னால் ஜீரனிக்க முடியவில்லை.
நான் ஒரு டைரக்டர் எனக்கு சில விஷயங்களை தெரிந்திருக்கலாம்- என் துறையில் நான் தேர்ச்சி பெற்றிருக்கலாம். அதற்காக- உலகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்துமே எனக்குத் தெரிந்திருக்கும்-அல்லது தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்து கேள்விமேல் கேள்வியாய் கேட்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
நானும் சராசரி மனிதன்தான், சினிமாவிற்கும் அப்பாற்பட்டு எதற்கு எனக்கு இத்தனை முக்கியவத்துவம் கொடுக்க வேண்டும்! எனக்கென்றில்லை எந்த சினிமா கலைஞன் என்றாலும் சரி, அவனது திறமையை ஆராதியுங்கள். ரசியுங்கள். பாராட்டுங்கள் அதற்கப்பால் தனிமனித ஆராதனை,போற்றல்-புகழ்ச்சி எல்லாம் எதற்கு? அவரவர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள்,பொறுப்புக்கள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு வெறித்தனமான ஆராதனைகள் எதற்கு என்று நினைக்கும்போது கோபம் எழுகிறது.
“எத்தனையோ நடிகர்களை உருவாக்கி வெற்றிபெற வைத்த நீங்கள் –உங்கள் மகனை மட்டும் வெற்றிபெற வைக்க முடியாமல் போனதேன்?’’
“சொந்த மகனை வைத்து படமெடுக்கும் போது ஏற்படும் இயல்பான தர்மசங்கடங்களுக்கு நானும் விதிவிலக்காக இருக்கவில்லை என்பது உண்மை, ஐயோ… இவனை இந்த பாடு படுத்துகிறோமே…. என்று அப்பாவாய் விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஒரு விஷயம்.
தாஜ்மஹாலில் வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலைஞர்கள் எல்லோருமே தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருப்பது நிஜம். இந்த பாரதிராஜா மட்டும்தான் தோல்வியடைந்திருக்கிறான்.
ஜனங்கள் என்னிடம் யதார்த்தத்தையே எதிர்பார்க்கிறார்கள். எப்போதும் கொடுக்கும் யதார்த்தத்திலிருந்து சற்று விலகி….ஃபேன்டளியாக கற்பனையாக கிராமத்தை காண்பித்தால் ரசிப்பார்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தேன். ஜனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இனி நான் உஷாராக இருப்பேன். ரசிகர்கள் எப்போதும் யதார்த்த பாரதிராஜாவையே எதிர்பார்க்கிறார்கள்.
இந்த தோல்வி எனக்கு தானே தவிர- நடிகன் மனோஜிற்கு அல்ல. அவர் நிச்சயம் சிறந்த கலைஞன் தான். என் கணிப்புகள் பெரும்பாலும் தவறுவதில்லை. மனோஜ் சிறந்த நடிகனாக –பேரும்புகழும் பெறப் போவது உறுதி.’’
கவிஞர் வைரமுத்து
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிஞரின் நாக்கில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. கூட்டத்தை தன்பக்கம் வசப்படுத்திவிடும் ஆற்றல். குவைத்தின் பாரதிகலை மன்ற நிகழ்ச்சியில் பேசும் போதும் அப்படித்தான்.
ஏற்றி, இறக்கி எங்கே ஆழம் கொடுக்கணும், எங்கே குரலை உயர்த்தனும், எங்கே ஜோக்கடிக்கணும், எங்கே உணர்ச்சிபூர்வமாக பேணும் என்பதெல்லாம் இவருக்கு அத்துப்படி. தமிழ் என்று சொல்லும்போது ஒரு ஆவேசம். மைக்கின் முன்னால் வந்து நின்று அப்படி… சட்டையை சுருட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தார். பாருங்கள், இரவு பனிரண்டு வரை எவரும் அசையவில்லை.
அது அவரது வெற்றி என்பதைவிட, தமிழுக்கு அவர் வாங்கித் தந்திருக்கிற வெற்றி.
பாரதிகலை மன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுடன் இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.
தமிழன்; “மற்ற கவிஞருக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என் நிறம் என்று சொல்வார்கள். ஆமாம், இது தமிழனின் தனி நிறம்.வெயில்தேசத்து நிறம். உழைப்பின் நிறம், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அம்மண்ணை தமிழன் மேம்படுத்தும் நிறம்.
வெப்ப நாட்டில் பிறந்த அனைத்திற்குமே வீரியம் அதிகம். மலையில் பூக்கிற பூவைவிட, தரையில் பூக்கும் மல்லிகைக்கு வாசம் அதிகம். மலைநீரைவிட, ஓடை நீருக்கு சுவை அதிகம், மலை பாம்பைவிட, கட்டுவிரியனுக்கு விஷம் அதிகம். அப்படியிருக்கும் போது வெப்பநாட்டில் பிறந்த தமிழன் மட்டும் எப்படி சோடை போவான்?
சிங்களத் தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ் தோழன் அழகு செய்தான். எகிப்து நாட்டின் நதிகரையில் இளந்தமிழர் பவனி வந்தனர். இன்று ஐரோப்பியர் மற்றும் மேற்கத்திய நாடுகளில் தமிழனின் மூளை ஏகமாய் விலை போகிறது.
தமிழன் எங்கு வேண்டுமானாலும் உழைப்பான் –தமிழ்நாட்டைத் தவிர –என்பார்கள்.
இரண்டு மலையாளிகள் சந்தித்தால் ஒரு டீகடை உருவாகிறது. இரண்டு புலவர் சந்தித்தால் மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் வேண்டும் என்பார்கள். இரண்டு மராட்டியர் சந்தித்தால் ஒரு தொழிற்சாலை உருவாகும் இரண்டு பஞ்சாபிகல் சந்தித்தால் ஒரு துப்பாக்கி உருவாகும்.
இரண்டு தமிழர்கள் சந்தித்தால்….
முதலில் சந்திக்கட்டும். அப்புறம் மற்றது பற்றி பேசலாம் என்று கிண்டலாக சொல்வார்கள். நம்மவர்கள் சந்திப்பதே பெரும் காரியமாக கருதப்படுகிறது. அந்தக் கருத்தை மாற்றி ஒரு ஒற்றுமை எழ வேண்டும். நம்மவர்கள் எதற்கும் சளைத்தவர்களல்ல.
மிடுக்கும் துணிச்சலும் மிக்கவர்கள். அஞ்சாநெஞ்சினர். அதற்கு கவிஞர் பாரதியே ஒரு உதாரணம்.
சுதந்திர போராட்ட சமயத்தில் மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்த சென்னை வந்திருந்தார். அருகில் ராஜாஜி, சத்யமூர்த்தி, வா.ரா.போன்றவர்கள் நிற்கிறார்கள்.
பாரதி விறுவிறுவென்று உள்ளே போனார். அவர் காந்தியிடம் முன்னரே அப்பாயின்ட்மென்ட் வாங்கவில்லை. காற்றுக்கும் தமிழுக்கும் எதற்கு அப்பாயின்ட்மென்ட்?
“நான் புதன்கிழமை ஒரு நிகழ்ச்சி வைத்திருக்கிறேன். உங்களால் தலைமை தாங்கி நடத்தித் தர முடியுமா?’’ என்று கேட்டார்.
புதன்கிழமை எனக்கு வேறு நிகழ்ச்சி இருக்கிறது. வியாழன் வருகிறேன்.’’ என்றார் காந்தி.
“வியாழன் எனக்கும் வேறு நிகழ்ச்சி இருக்கிறது வருகிறேன். என் நிகழ்ச்சிக்கும் உங்களது ஒத்துழையாமை இயக்கத்திற்கு நன்றி!’’ என்று சொல்லிவிட்டு வந்தபாடே திரும்பி போய்விட்டான் பாரதி.
சாகும்வரை அவனிடம் அந்த கம்பீரமும் விரைப்புமிகுந்தது. தமிழ் எனும் மின்சாரம் அவனது உடலில் பாய்ந்துக் கொண்டிருந்தது.
கவிதை என்பது-
— வானத்தை அளந்து உள்ளங்கையில் உருட்டிவிடுவது;
— கடலை திரட்டி சங்கில் வைத்து விநியோகிப்பது.
— பிரபஞ்சத்தை சின்னச்சின்ன துளியாக்கி பார்வைக்கு சமர்விப்பது;
இசையமைப்பாளர்கள் சப்தங்களை இசையால் கிழித்துப் போடுகின்றார்கள். கவிஞனோ அவற்றை தமிழால் தைத்து –தருகிறான்!
கவிதைக்கு வார்த்தைகள் ரொம்ப முக்கியம். வார்த்தைகளை கவனமாக யோசிக்க வேண்டும்.
கற்பனையில் வருவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. கூடாது. சொற்களை நிறுத்தி வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.இடம்-பொருள் பார்த்து அவற்றை பிரயோசிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு `தஞ்சாவூர் மண் எடுத்து….’ பாடலை எடுத்துக் கொள்வோம்.
அந்த சிலையின் கழுத்துக்கு –சங்ககிரிமண் இடுப்புக்கு கஞ்சனூர்;
கூந்தலுக்கு கரிசல்காட்டுமண்; உதட்டுக்கு தேனூர்; காலுக்கு பட்டுக்கோட்டை; நகத்துக்கு பாஞ்சாலங்குறிச்சி;
வார்த்தைகளை மட்டுமின்றி எழுத்தை இடம் மாற்றினால் கூட, பொருள் வித்தியாசப்பட்டுவிடும். உதாரணத்திற்கு ஒலி-ஒளி-ஒழி வலி,வளி,வழி!
அதே மாதிரி வார்த்தை பிரயோகங்களுக்கு இடம் பார்த்துதான் பொருள் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு –வா ஒரு சொல் தான்.
வா-என்று தாய் அழைத்தால் அதற்கு அர்த்தம் ஒன்று. நண்பன் அழைத்தால் வேறு அர்த்தம். ஒரு பெண்ணை பார்த்து வேறு பெண்னை அழைத்தால்… அது ஃபயர் படம்! ராத்திரியில் குழந்தையை தூங்க வைத்து மனைவி கணவனை அழைத்தால்… அதற்கு அர்த்தம் வேறு!
அந்த நாட்களில் –புகழேந்தி எனும் கெட்டிக்கார புலவன் இருந்தான். அங்கே ஒட்டக்கூத்தன் எனும் விமர்சகன். அவன் அதைவிட கெட்டிக்காரன். அவன் எப்போதும் தன் கையில் குரடு ஒன்று வைத்திருப்பான். பிழை கண்டுபிடிப்பதே அவனது வேலை!
புலவனின் பாடலில் பிழை கண்டுபிடித்து, பிழை ஒன்றுக்கு ஒரு காதை எடுத்துவிடுவான்.
அரசசபையில் ஒரு சமயம் புகழேந்திப் புலவர் “மல்லிகையே வென்சங்கா, வண்டு ஊத’’ என்று பாடல் ஒன்று பாட, ஒட்டக்கூத்தன் அதில் பொருள் பிழை இருக்கிறதென்றான். உடனே சபையில் இருப்பவர்கள் திகிலோடு புகழேந்தியை பார்த்தனர்.
புலவனுக்குத் தண்டனை ஒரு காதா, இருகாதா இல்லை காதே இருக்காதே என அச்சம்.
ஒட்டக்கூத்தன்,“புலவரே! மல்லிகையை சங்கு என்கிறாய். வண்டு அதன் மேலிருந்து ஊதுகிறது என்கிறாய். இது எப்படி சாத்தியம்? சங்கை மேலிருந்து ஊத முடியாது. ஒலிவராது. பின்பக்கம்தான் ஊத வேண்டும்!’’ என்று விளக்கம் சொல்ல –சபை சபாஷ் என்று நிமிர்ந்து அமர்ந்தது.
இதற்குப் புலவர் என்னச் சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தது. புகழேந்தி எழுந்தார். “மன்னிக்கணும். கள் குடிப்பவனுக்கு தலை எது, கால் எது என்று தெரிவதில்லை. அதுபோல்தான் கள் குடிக்கும் வண்டும், மல்லிகையின் மேல் ஊதிற்று!’’ என்க சபையில் ஒரே ஆரவாரம்.
தமிழ்பற்றி இவ்வளவு பேசும் நான் ஏன் திரைப்படத்திற்கு வந்தேன்? எப்படி வந்தேன்?.
“நான் ஏன் சினிமாவுக்கு வந்தேன்?’’ –வைரமுத்து
ஒரு படைப்பாளினின் பணி, வெறுமனே படைத்து போட்டுவிட்டு போய்விடும் வடு மட்டுமல்ல.
அவற்றை கட்டிக் காப்பதும், தூசு துடைப்பதும், துலக்கி வைப்பதும், போகுமிடமெல்லாம் சுமப்பதும், சுமந்து சென்று வெளியே பறைசாற்றுவதும் அவனது பொறுப்பு; கடமை!
பாமர-படிக்காத தமிழனுக்கு இன்று திரைப்படம் தான் வாசக சாலையாய் இருக்கிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தமிழ்படிக்க வழியில்லை, வாய்ப்பில்லை.
அவர்களுக்கெல்லாம் திரைப்படமும், பாடல்களும் தான் இன்று தமிழை போதிக்கிறது. புரிய வைக்கிறது. சினிமா பாடலுக்கு அத்தனை வீரியம் இருக்கிறது. அதுதான் நவீன உலகத்தின் புதிய புத்தகம். அதில் அங்கங்கே சில தவறுகள் இருக்கலாம். ஆனால் அதற்காக சினிமாவை ஒட்டுமொத்தமாய் ஒதுக்கிவிட முடியாது.
உதாரணத்திற்கு சிம்ரன், ரம்பா போல கவர்ச்சி நடிகை ஆடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு -“மதுவைப்பார்- மாதுவைப்பார். இதில் எங்கு அதிக போதை என்றுதான் எழுதியாகணும்! அங்கு போய் சித்தர் பாட்டை தர முடியுமா என்ன?
இந்த மாதிரி அவதிக்கடையிலும் ஒரு ரோஜா, கிழக்குச் சீமையிலே, உயிரே, கருத்தம்மா, போன்றவைகள் கொடுக்க முடிவதில் சந்தோஷம் இருக்கவே செய்கிறது.
எனது கவிதை இளம் பருவத்திலேயே வெளிப்படுத்தப்பட்ட ஒன்று. நான் பி.ஏ. இரண்டாமாண்டு படிக்கும்போதே புத்தகம் எழுதி, அது பக்கத்து பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.
ஆனால்–எழுதினது மாணவன் என்பதால் பின்னாளில் அது நீக்கப்பட்டது. அந்த சூழலில் எனக்கு ஒரு வெளிச்சம் வேண்டாமா? அங்கீகாரம் வேண்டாமா?
1990ல் டைரக்டர் பாரதிராஜாவை போய்சந்தித்து எனது `வைகறை மேகம்’ என்னும் புத்தகத்தை கொடுத்து படித்துப் பாருங்கள் என்றேன்–விரைப்புடன்.
உடன் அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்.
“நீங்கள் வந்தபின்பு திரைப்படத்துறையில் பெரியதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. யதார்த்த சூழ்நிலை, கேமிரா, எடிட்டிங், இசை என எல்லாவற்றிலும் புதுபரிணாமமும், ஞானமும் ரசிகனிடம் வளர்ந்திருக்கிறது. ஆனால் பாடலில் மொழி மட்டும் மாறவில்லை. எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் மாற்றிக் காட்டுகிறேன் என்றேன்.
அவர் அப்போது கல்லுக்குள் ஈரம் படபிடிப்பிற்காக கிளம்பிக் கொண்டிருந்தார். விமான பயணத்தில் படிக்கலாம் என்று என் புத்தகத்தை பெட்டியில் போட்டுக் கொண்டார்.
விமானத்தில் புத்தகத்தை எடுத்து இரண்டு பக்கம் புரட்டினதுமே அவர் அசந்துப் போயிருக்க வேண்டும். திரும்பி வந்ததும் `உன் புத்தகத்தை வானத்தில் படித்தேன்’ என்றார்.
உடன் நான்,`உயர்ந்த விஷயங்களை உயர்ந்த இடத்தில்தான் படிக்க வேண்டும்’ என்றேன் நகைச்சுவையுடன். `திமிர் உனக்கு போகாதுய்யா!? என்று சொல்லி என்னை அவர் அனுப்பிவிட்டார்.
பிறகு – என் மனைவியின் முதல் பிரசவத்திற்கு வேண்டி விடுப்பு எடுக்க நான் அலுவலகம் போன போது பாரதிராஜாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
நாங்கள் எதிர்ப்புக்கிடையில் காதல் மணம் புரிந்தவர்கள். மனைவிக்கு உதவவோ துணையாக இருக்கவோ யாருமில்லை. மனைவிக்கோ தலைபிரசவம். என் பாடலுக்கும் அன்று தலைபிரசவம்.
எனது பலவருட கனவு நனவாகப் போவதில் ஆனந்தப்பட்டு டாக்டரம்மாவிடம் எனது மனைவியை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அட்லாண்டிக் ஹோட்டலுக்கு ஓடினேன்.
அறை எண்: 410.
அங்கே இளையராஜா, கங்கை அமரனெல்லாம் அமர்ந்திருக்கிறார்கள். என்னை அமரவைத்து “நீ நல்லகவிஞனாக இருக்கலாம். ஆனால் டியூனை கேட்டதும் ஓடிப் போவார்களே அதிகம்’’ என்றுச் சொன்னார்கள்.
“சரி, சிட்சுவேஷனைச் சொல்லி என்னை டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன்!’’ என்றேன்.
ஒரு வேளையில்லா இளைஞன் –மலைவேளை –கனவுகளை நேசிக்கும் அவன் பாடவேண்டும் என்று மொட்டை இளையராஜா பாடிக் காட்டினார்.
எனக்கு மூளையில் பதியவில்லை. இன்னொருமுறை என்றேன். பாடினார். மூன்றாவது முறை பாடச் சொன்னதும் இளையராஜாவுக்கு என் பேரில் நம்பிக்கை விட்டுப் போனது. தன் உதவியாளர் சுந்தர்ராஜனிடம் ,`நீ பாடிக்காட்டு’’ என்றார்.
“இல்லை…இல்லை நீங்களே பாடுங்கள்?’’ என்றேன்.
அவர் பாடிவிட்டு, “அவசரமில்ல. எழுதி நாளை எடுத்துவா! என்றார். “இல்லை இப்போதே தருகிறேன் என்று `இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடலை விளம்பினேன்.
அவர்கள் மட்டுமில்லை, பாரதிராஜாவும் அசந்துப் போனார்கள். இதுதான் என் முதல் பிரவேசம்.
யாரையுமே நம்பாத டிபார்ட்மென்ட் –சினிமா . அங்கே இருப்பவர்கள் ஐஸ் வாட்டரைக்கூட ஆற்றிதான் குடிப்பார்கள். சினிமாவில் நுழைவது கடினம். இரும்புக் கோட்டையான அதில் நானோ காற்றுப் போல நுழைந்தேன். அதற்குக் கதவு திறந்து விட்ட டைரக்டர் பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் நான் என்றென்றைக்கும் நன்றிச் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
விமர்சகர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கவிழ்க்கலாம்.பிரபல வித்வான்களைவிட சுப்புடுவுக்கு அதனால்தான் புகழ் அதிகம்.
`அந்தி மழைப் பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ –என்று ராஜபார்வையில் ஒரு பாடல்.
இந்த பாடலுக்காக விமர்சகர்கள் என்னை போட்டு துவைத்து விட்டார்கள். அப்பாட்டை பாடும் கமல் பிறவிகுருடன். அவனுக்கு எப்படி மழைத்துளியில் இருக்கும் முகத்தைப் பார்க்க முடியும் என்பது கேள்வி.
கேள்வி சரிதான்.
ஆனால் படத்தையும், அது எந்த சூழ்நிலையில் வருகிறது என்பதையும் பார்க்கவேண்டும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்த பாடலை படத்தில் பாடுவார். கமல் வயலின் வாசிப்பார் எஸ்.பி.பி.பாடினதால் நாயனுக்கு சந்தோஷத்தில் கற்பனை பறந்து அப்படி பாடினான். அதில் என்ன, தவறு இருக்கிறது? குருடன் கற்பனை செய்யக்கூடாதா என்ன?
நான் இதுவரை 4000 பாடலுக்குமேல் எழுதியிருக்கிறேன். இதில் 3990 பாடல் மெட்டுக்குதான் எழுதினேன்.
கண்ணுக்கு மையழகு, நீ காற்று –நான் மரன், விழியில் நுழைந்து.. இப்படி வெகு சில மட்டுமே நான் நேராய் எழுதிக் கொடுத்தது.
மெட்டு ஏன் போடுகிறார்கள்?
ஒரு பாடலுக்கு மனநிலை முக்கியம். காலை, மாலை, இரவு, பாடும் நபரின் வயது. இப்படி பல விஷயங்கள் முக்கியம்.
நெஞ்சில் ஓர் ஆலயம் –படம்.
கண்ணதாசன், விஸ்வநாதன் ராம்மூர்த்தியெல்லாம் அமர்ந்திருக்கிறார்கள். டைரக்டர் ஸ்ரீதர் காட்சியை சொல்கிறார்.
“புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாககிடக்கும் கணவன், மனைவியிடம் நீ மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறான். உடன் அவள் பாட வேண்டும்’’ என்று ஸ்ரீதர் சொன்னதும் கவியரசர் “நான் ரெடி, உடனே பாட்டு தருகிறேன்’’ என்கிறார்.
ஆனால், டைரக்டரோ “இல்லை மெட்டு போட்டு தான் பாட்டு எழுதணும் என்கிறார் அப்பாடல் விசும்பலுடன் வர வேண்டும்- என்கிறார்.
ஒரு பெண்ணிற்கு உடல் தேவையை விட மனத்தேவை முக்கியம். உன் சுகம்போதும். முத்தம் போதும்; உன் வாசம் போதும்; உன்மார்பில் சாய்ந்தது போதும்; காயாத உன் எச்சில் போதும்- என்று அவள் நினைத்தால், அவளை கட்டாயப்படுத்தக்கூடாது.
ஸ்ரீதர் எதிர்பார்த்தபடி அன்று போடப்பட்ட மெட்டுதான் (சொன்னது நீ தானா..) சொல்! சொல்!
ரோஜா படத்தில் எனக்கொரு அனுபவம்.
திருநெல்வேலி பெண் காஷ்மீர் பணி பார்த்து பரவசப்பட்டு வெட்கத்துடன் நாயகனை தழுவிக் கொள்கிறாள். அதற்கு ஒரு பாட்டு வேணும் என்றார் மணிரத்னம்.
இது காஷ்மீரமா-இங்கு கார்காலமா; எந்தன் கோயில் புறா, இந்த குளிர் தாங்குமா?
இதை நான் எழுதிக் கொடுத்ததும், மணிரத்னம் என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டி `பாட்டு பிரமாதம்!’ என்று வரிக்கு வரி பாராட்டினார். `அழகான வர்ணனை, அற்புதம்’ என்றுச் சொல்லவும் எனக்கு உச்சி குளிர்ந்துப் போயிற்று.
அத்தனை பாராட்டினவர் கடைசியில், “ஆனால் இந்தப் பாட்டு வேணாம். வேறு எழுதிக் கொடுங்கள்!’’ என்றார். எனக்கு அதிர்ச்சி. எதுவும் விளங்கவில்லை.
“சார்! நீங்கள் என்னை பாராட்டினீர்களா… இல்லை அடித்தீர்களா? இது ஏன் வேணாம்? சொல்லுங்கள்!” என்றேன்.
“சொல்றேன், காஷ்மீர், கோயில்புறான்னு எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா ரசிகனுக்கு அப்புறம் விஷீவலாக தர எனக்கு என்ன இருக்கு? அதனால எனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்து ரசிகனை யூகிக்க வைக்கிற மாதிரி எழுதுங்க!’’ என்றார்.
பிறகு மாற்றி எழுதிக் கொடுத்ததுதான் புதுவெள்ளை மழைபொழிகிறது….? பாடல்.இதில் அவர் எதிர் பார்த்த குளிர் இருக்கிறது. இது எந்த ஊரில் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்று ரசிகனை எதிர்பார்க்க வைத்து-படத்தில் பார்க்கும்போது பதில் கிடைக்கும்படி செய்திருப்பது மணிரத்னத்தின் ஸ்பெஷல்!
இந்தக் காட்சிப் பற்றி ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்.
“அந்தக் காட்சியில் வருவது நிஜ பனிமழை இல்லை. நிஜ பனிமழையை படம்பிடிக்க முடியாது என்பதால் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு தெர்மோகால் வாங்கி, அரைத்து தூள் பண்ணி எடுத்துபோய் தூவினார்கள். அது கிரேட் ஸீக்ரட்! தயவு செய்து இதை நான் சொன்னேன்னு யாரும் டைரக்டர் மணிரத்னத்திடம் சொல்லிவிடாதீர்கள்’’ என்று இந்த சம்பவத்தை வைரமுத்து தெரிவித்தார்.
(ஆகையால் தயவு செய்து யாரும் இதை மணிரத்னத்திடம் சொல்லிவிட வேணாம் ப்ளிஸ்…)
குறிப்பு; கவிஞர் வைரமுத்துவின் நிகழ்ச்சி ஏற்பாடு; நண்பர் கவிஞர் சேதுவும் பாரதிகலை மன்றமும்.
கவிஞர் வைரமுத்துவின் புலமையும் திறமையும் ஊரறிந்த உண்மை. அவரது தமிழுக்கு வில்லையில்லை. அதற்குமப்பால் அவர் கொஞ்சம் கர்வகாரர் என்று குறிப்பிடுவார்கள். காசு-பணத்தில் கறார் என்று அவரை குறைசொல்பவர்களும் உண்டு. எந்த விஷயமானாலும் தெளிவாய் திட்டமிட்டு செயல்படுவதில் அவர் கறார் என்பது உண்மை. இது அவசர உலகம்.
காற்று போக்கில்-போனால் நாம் காணாமல் போய்விடக்கூடும். காலவேகத்தில் நிலைத்து நிற்க திட்டமிடுதல் என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.
குவைத் வந்தபோது –அவரிடம் எந்தவித கர்வத்தையும் பார்க்க முடியவில்லை. ரசிகர்களின் உண்ர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தார். கடைகளுக்கு விஜயம் செய்து அவர்களை சந்தோஷப்படுத்தினார். அவர்கள் தானே முன் வந்து தந்த பரிசுகளை மனம் கோணாமல் ஏற்றுக் கொண்டார். இவர் வலியவர் இவர் சிறியவர் என்று பாகுபாடு பார்க்காமல் பழகினார். பேச்சிலும், பேசும் விதத்திலும் ஒரு அளவுகோல் வைத்து, கண்ணியம், காக்க வேண்டும் என்பதில் அவர் கறாராக இருப்பதாகவே தெரிகிறது.
எஸ்.வி.சேகர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரபுநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் முன்பு பல சிரமங்கள் இருந்தன. கலை நிகழ்ச்சிகளுக்கு விசா வாங்குவதும், அனுமதி பெறுவதும் மிகவும் சிரமமாயிருந்தது. இது தவிர பயம் வேறு.
ஒரு சமயம் துபாயில் `பிணம் தின்னி கழுகுகள்’ என்று மலையாள நாடகம் போட்டனர். அதில் இஸ்லாமை பற்றி தவறாக வருகிறது என்று குற்றம் சுமத்தப்பட்டு, அந்த நாடக கலைஞர்களை பத்திரமாய் `உள்ளே’ வைத்துவிட்டனர். பிறகு அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு கேரள அரசாங்கமே பெரும் பாடுபட்டது.
துபாய் கொஞ்சம் ** என்பார்கள். அங்கே `சில’ விஷயங்களுக்கு அனுமதி உண்டு. அங்கேயே அப்படி என்றால் குவைத்தைப் பற்றி கேட்க வேண்டியதில்லை.
செளதி, கத்தார், ஈரான், ஈராக் அளவிற்கு குவைத்தில் கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் கூட வெளியூரிலிருந்து வந்து யாரும் தமிழ் நாடகங்கள் போட்டதில்லை. அதற்கான முயற்சிகளும் யாரும் எடுக்கவில்லை.
ஈராக் சண்டைக்குப்பிறகு குவைத்தில் முதன்முதலில் நாடகம் போட்ட பெருமை எஸ்.வி.சேகருக்கே போய் சேரும்.
பாரதிகலை மன்றம் அவரது நாடகத்தை போட முன்வந்தபிறகு-அவரது நாடக குழு முழுவதையும் அழைத்துவர இரண்டு பிரச்சனைகள் உதித்தன. ஒன்று –அத்தனை பேர்களுக்கும் விசா கிடைப்பது சிரமம். அதிலும் குறிப்பாய் நடிகைகளும் ரொம்ப சிரமம்.
அடுத்தது –ஏர்டிக்கட்! அத்தனை பேர்களும் வந்துப் போகிற செலவு ஆளை சாப்பிட்டுவிடும். என்ன செய்யலாம் என்று யோசித்த போது சேகரே ஒரு யோசனை சொன்னார்.
“சிரமப்பட வேணாம். நான் மட்டும் வருகிறேன். எனது நாடக ஸ்கிரிப்ட் மற்றும் வீடியோ கேசட்டுகளை அனுப்புகிறேன். உள்ளூரில் திறமை இருப்பவர்களை வைத்து ப்ராக்டீஸ் பண்ணுங்கள். நான் வந்து ரிகர்சல் பார்த்து நாடகம் போட்டுவிடலாம்’’ என்றார்.
அந்த மாதிரி அவர் ஏற்கனவே அமெரிக்காவில் நாடகம் நடத்தி கொண்டிருந்தார். அது நல்ல யோசனையாக படவே பாரதிகலை மன்றம் சரி என்று வேலைகளை ஆரம்பித்தது.
சேகரின் பெரிய தம்பி நாடகம் உள்ளூர் கலைஞர்களால் ஒத்திகை பார்க்கப்பட்டது. சேகர் நான்கு நாள் முன்பே வந்து, அவர்களை தயார் பண்ணி இரண்டு நாட்கள் வெற்றிகரமாய் அரங்கேற்றினார்.
முதன்முதலில் ஒரு தமிழ் நாடகம், ரிகார்ட் கலெக்ஷனில் குவைத்தில் அரங்கேற்றிற்று. என்னதான் ஒத்திகை பார்த்தாலும் உள்ளூர் கலைஞர்களுக்கு மேடையில் சேகரை பார்த்தாலே அலர்ஜி.
அவரது வேகத்திற்கும்,டைமிங் ஜோக்குகளுக்கும், கூட நடிப்பவர்கள் ஈடு கொடுக்க முடியாமல் திணறுவார்கள்.
சேகர் அவற்றையெல்லாம் தன் சமயோசித கமென்ட் அடித்து சரிபண்ணுவிடுவார். ரசிகர்களுக்கு அவைகள் போனஸ் ஜோக்குகளாக அமைந்தன.
சேகர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் வந்து நாடகம் போட்டார். அவரைத் தொடர்ந்து காத்தாடிராமமூர்த்தி, கிரேஸிமோகன், வரதராஜன் எல்லாம் வந்தனர்.
சேகரின் நாடகத்தில் ஆழமான கருத்துக்களோ, கதையம்சமோ இல்லாவிட்டாலும் கூட மக்கள் வெகுவாய் ரசிக்கின்றனர். நாடகத்திற்கும் அப்பாற்பட்டு அவரது நகைச்சுவை பேச்சும், எளிமையாய் பழகும் விதமும் அனைவரையும் கவர்கின்றன.
சினிமா கலைஞர்கள், நிகழ்ச்சி முடிந்ததும் அப்படியே பின்புறமாய் வெளியே போய்விடுவதுதான் வழக்கம். இவர் அதற்கு விதிவிலக்கு. நாடகம் ஆரம்பிக்கும் முன்பு ஒரு முன்னுரை கொடுத்து ரசிகர்களை வசீகரிக்கிறார். நாடகம் முடிந்து-நேருக்கு நேர் நிகழ்ச்சி வைத்து, என்ன கேட்டாலும் பதிலளிப்பார். அதே மாதிரி அரங்கிற்கு வந்து படம் எடுப்பவர்களுக்கு ஈடு கொடுத்து, எல்லோரும் போன பின்புதான் அரங்கத்தில் விட்டு செல்வார்.
ரசிகர்கள் தான் முக்கியம் என்றாலும் கூட அவர்களை நேருக்கு நேர் யாரும் சந்திப்பதில்லை சேகர் அதற்கு விதிவிலக்கு.
மேடையில் என்றில்லை-குவைத்திற்கு வரும் போதெல்லாம் ரசிகர்கள் தங்கள் கடைகளுக்கெல்லாம் அவரை அழைப்பார்கள். சின்னக்கடை பெரியகடை என்று பார்க்காமல் எல்லோரையும் மதித்து போய் சந்தோஷப்படுத்துவார்.
அந்த சந்தோஷம் அவரது நாடக வெற்றிக்கு பயன்படுவதும் உண்மை.
சில விஷயங்களில் சேகரின் பிடிவாதம் மாற்ற முடியாத ஒன்று. ஒருவர் நன்றாக பழகினால் அவருக்கு முழு ஒத்துழைப்பும் தருவார். பார்ட்டி எசகுபிசகென்றால்-காலி பண்ணாமல் விடுவதில்லை.
சேகர், தனக்கென்று செகரட்டரி வைத்துக்கொண்டு –அவர்மூலம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வரச் சொல்வதில்லை எல்லாம் நேரடி தொடர்பு குவைத்திலும் அப்படிதான்.
என்னை மறைவான இடத்தில் தங்கவைத்து ரசிகர்களிடமிருந்து பிரித்துவிடாதீர்கள் என் ரூமிற்கு எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வரட்டும்-போன் பண்ணட்டும் என்பார்.
முதன் முதலில் நாடகம் போட்டபோது பாரதிகலை மன்றத்திற்கு திரைச்சீலைகள் இல்லை. சேகரே அவற்றை தயாரித்து கையோடு எடுத்து வந்துவிட்டார்.
சேகரின் பலமா இல்லை பலவீனமா தெரியவில்லை.ஷாப்பிங் மனிதர் அசருவதேயில்லை. எந்த நாட்டிற்குப் போனாலும் பொருட்களை வாங்கி தள்ளிவிடுவார்.
ஒரு சமயம் –அவர் குறித்த நேரத்திற்கு நாடக ரிகர்சலுக்கு வரவில்லை. என்னாயிற்று என்று அனைவரும் காத்திருக்க- நான்கு மணிநேரம் கழித்து அரக்கப் பரக்க ஓடி வந்தார்.
அப்புறம் தான் தெரிந்தது. அவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வந்த விஷயம்.
“ஏதாச்சும் தப்பு தண்டாவா’’ என்றேன் பதற்றத்துடன்.
“இல்லை எங்கள் காரை பஸ் இடித்து விட்டது. எங்கிட்ட மோதாதேன்னு சொல்லி போலீஸில் போய் புகார் கொடுத்துட்டு வரோம்’’ என்றார்.
குவைத்திலிருக்கிற எங்களுகே போலீஸை கண்டால் அலர்ஜி. போலீஸ் ஸ்டேஷனை பார்த்ததுகூட இல்லை. வந்த இரண்டு நாளிலேயே சேகர் குவைத் போலீஸையும் பார்த்துவிட்டார்.
“ஒரு நாட்டிற்குப் போனால் எல்லாத்தையும் தானே பார்க்கணும்’’ என்பது சேகரின் கமென்ட்!
எஸ்.வி.சேகரின் முதல் நாடகம் குவைத்தில் பாரதிகலை மன்றத்தாலும், அடுத்த நாடகம் சுதர்ஸனாலும் அரங்கேற்றப்பட்டது.
லியோனி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சினிமா-டி.வியில் எப்படி போட்டி எழுந்துள்ளதோ, அதே மாதிரி பட்டி மன்றங்களிலும் போட்டி எழுந்து, பெரிய அளவில் அலை அடித்து ஓய்ந்திருப்பதாகவே தெரிகிறது.
சாலமன் பாப்பையாவின் வெற்றி இலக்கியம் என்றால். லியோனியின் வெற்றி அவர் எடுத்துக்கொள்ளும் சினிமா பற்றிய தலைப்புக்களில் இருக்கிறது. பட்டுக்கோட்டையா- கண்ணதாசனா, சினிமா பாடல்கள் இலக்கியம் ஆகுமா-ஆகாதா போன்ற பாமரர்களும் ரசிக்கும் தலைப்புக்கள் அவரது வெற்றி.
குவைத்தில் லியோனியின் நிகழ்ச்சியை ஒரு அமைப்பு ஏற்பாடு செய்ய, அதற்கு முன்பே, அவரின் முன்னோடியான சாலமன் பாப்பையாவை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலமன் பாப்பையாவுக்கு நடுத்தர மக்கள் என்றால்.லியோனிக்கு நடுத்தர மற்றும் பாமர மக்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தானோ என்னவோ, பணம் விஷயத்தில் அவர் கறாராய் பேசிக்கொள்கிறார். ஒரு நிகழ்ச்சி என்றால் இவ்வளவு என கணக்கு. சினிமா கவர்ச்சியும் அவருக்குத் துணைபுரிகிறது.
குவைத்திற்கு அவர் இரண்டு முறை தேதி கொடுத்து, கடைசியில் கோடை விடுமுறையில் வந்தார். அது விடுமுறை என்பதால் அவரது மனைவி, மகள் இருவரையும் துணைக்கு அழைத்துவந்தார். இவருடன் பட்டி மன்றத்தில் பேசுவதற்கு தன் சகாக்களான புலவர் பால்ராஜீம்,குயிலனும் கூட வந்திருந்தனர்.
ஐந்துபேருக்கும் விசா, தங்கும் வசதி, சாப்பாடு விமான டிக்கெட் இவற்றுடன் இவர்களின் சம்பளம் எல்லாவற்றையும் நினைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முதலில் கொஞ்சம் தயங்கினார்.
குவைத்தில் நிகழ்ச்சிகளை வெளியே திறந்த வெளியில் நடத்த அனுமதியில்லை. அரங்குக்குள்தான் நடத்த முடியும். அரங்கு எனும் போது அதிக பட்சம் 1200 பேர்களை உள்ளடக்கலாம்.
லியோனி நிகழ்ச்சி எனும் போது, தொழிலாளர்கள் வந்தாலும், அவர்கள் ஒரு தினாருக்குமேல் டிக்கட் (ஒரு தினார்-தற்போது 143 ரூபாய்) வாங்க மாட்டார்கள். ஸ்பான்சர்கள் பிடித்து விழா செலவை கவனிக்க வேண்டும்.
வந்தது வரட்டும் என்று ஏற்பாட்டாளர் களத்தில் இறங்கினார். லியோனி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு.
பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு கலைஞர்கள் வந்தாலும் அவர்களை அழைத்துக்கொண்டு கடைவீதியில் ஒரு நகர்வலம் வருவது வழக்கம்.
அந்த மாதிரி கடைகளுக்கு போவதால், ஒன்று பொதுமக்களுக்கு “வி.ஐ.பி. வந்துவிட்டார்’’ என்று செய்திபரவும்.அடுத்து ஸ்பான்சரின் கடைக்கு பப்ளிசிட்டி மூன்றாவது –வருகிற கலைஞர்களுக்கும் கடைகள் மூலம் பரிசுபொருட்கள் குவியும்.
லியோனி என்றில்லை, மற்ற கலைஞர்கள் கூட “இப்படி நகர்வலம் வந்தால் இங்கேயே எங்களை பார்த்துவிட்டு போய் விடுவார்கள். அரங்குக்கு டிக்கட் வாங்கி வரமாட்டார்கள்’’ என்று தயங்கினர்.
“அப்படியெல்லாமில்லை. உங்களை கூட்ட நெரிசலில் பார்க்கும்போது ரசிகர்களுக்குத் திருப்தி ஏற்படாது. மறுநாள் நிகழ்ச்சியில் பார்க்கவேண்டும் என்று ஆர்வம் ஏற்படும் பாருங்கள்’’ என்று அழைத்துச் செல்வோம்.
இந்த ஃபார்முலா குவைத்தைப் பொருத்தவரை நிஜம். இங்கே லோக்கல் டெலிபோன் கால் இலவசம் என்பதால் விஷயம் சட்சட்டென பரவிவிடுவது வாடிக்கை.
லியோனி நிகழ்ச்சிகளில் கலகலவென பேசினாலும்கூட, நேரில் கொஞ்சம் ரிசர்வ்டைப்பாகவே தெரிகிறார். ஜாஸ்தி பேசுவதில்லை. கொஞ்சம் நாணத்துடன்கூடிய சிரிப்பு. அவரது மகள் அதற்கு நேர் எதிர், கடி ஜோக்குகளாகச் சொல்லி கடிக்கிறார். லியோனியின் மனைவியும், மகளும்கூட பட்டிமன்றத்தில் பேசுவதுண்டாம்.
லியோனிக்கு தென் தமிழகத்து ரசிகர்கள் அதிகம். அன்றைய நிகழ்ச்சியில் அரங்கு நிறைவதற்கு அவர்கள் பெரிதும் உதவினர். குவைத்தில் திருச்சி,தஞ்சை,புதுக்கோட்டை,மதுரை மக்கள் அதிகம்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் லியோனி தன் சினிமா அனுபவம்,கிளாப் அடிப்பது போன்ற விஷயங்களை நகைச்சுவையோடு வெளிப்படுத்தினார். பட்டி மன்றத்தில் பால்ராஜ் ஒரு பக்கமும், குயிலன் மறுபக்கமும் எதிர்த்து பேசினர். இருவருமே பார்வைக்கு சாதாரணமாய் இருந்தாலும் பேச்சில் வெடித்து தாக்குகின்றனர்.
இடைவேளையில் –லியோனி-அதே தலைப்பை (சினிமா பாடல்கள் இலக்கியமாகுமா இல்லையா!) ரசிகர்களிடம் கொடுத்து அவர்களில் சிலரையும் பேசச்சொல்லி, அவற்றையும் தன் தீர்ப்பில் கோடிட்டு காட்டியது ரசிகர்களை கவர்ந்தது. நிகழ்ச்சி பனிரண்டு மணிவரை நீண்டும் கூட கூட்டம் கலையாதது லியோனியின் வெற்றி.
குறிப்பு:
லியோனி, சின்னிஜெயந்த் இருவரின் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு; நண்பர் சியாரா சுதர்ஸன்.
சின்னிஜெயந்த்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கூட்டத்தை கட்டிப்போடுவது என்பது சாதாரண விஷயமில்லை. நிகழ்ச்சியில் கொஞ்சம் போரடித்தாலும் மக்கள் எழுந்து வெளியே போவதும், விசிலடிப்பதுமாயும் இருப்பார்கள்.
கூட்டத்தை அமரவைக்கும் வித்தை தெரிந்தவர்களில் சின்னிஜெயந்தும் ஒருவர்.
மிமிக்ரி செய்யவேண்டி சின்னிஜெயந்த தன்னுடன் படவாகோபி. என்பவரையும் அழைத்து வந்திருந்தார். சின்னி ஒரு கால கட்டத்தில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர். இடையில் காதல்,கால்ஷீட் குளறுபடி, கொஞ்சம் மூர்க்க குணம் இவற்றால் சோடை போய் மறுபடியும் ஃபீல்டுக்கு வந்திருப்பவர்.
மேடையைக் கொடுத்துவிட்டால் போதும் மனிதர் மூன்று மணிநேரம் சமாளித்துவிடுகிறார். குவைத்திலும் அப்படித்தான் வழக்கமான் ரஜினி,கமல்,டைனோசர் மிமிக்ரியுடன், வாரியார், நாகூர் அனிபா பாடல்கள் இவரது ஸ்பெஷாலிடி.
சின்னியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி `சல்பேட்டா, குல்ஃபா’ என்று அவர் பேசும் குஷாலானை பாஷை! அதற்கு அவருக்கே அர்த்தம் தெரியாது. மேடையில் மிமிக்ரி பண்ணும் போதே எம்.ஜி.ஆர். பாடலுக்கிடையில், கீழே அரங்கில் இறங்கி முதிய பெண்ணை அரவணைப்பு, குழந்தையைத் தூக்கி கொஞ்சல் என அசத்துகிறார்.
சின்னி, தனக்கு ஹோட்டல் ரூம்தான் வேணும் என்று கண்டிஷன் போடவில்லை. அவருக்கு வந்த கூட்டத்தை பார்த்து மயங்கின இந்திய தூதுவர் நாயர். மறுநாள் சின்னியை அழைத்து பார்ட்டி கொடுத்து பாராட்டினது சின்னிக்கே நம்பமுடியாத அதிர்ச்சி. “சார் இந்த பாராட்டை சென்னைக்கு கால்போட்டு என் மனைவியிடம் சொல்லுங்க. நான் சொன்னா நம்பமாட்டா!’’ என்று சின்னி அம்பாசிடரை வைத்து வீட்டில் பேர் வாங்கிக் கொண்டார். எல்லா வீட்டிலும் இதே நிலமைதான் போல!
காத்தாடி ராமமூர்த்தி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செலவு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, காத்தாடி மட்டுமே குவைத்திற்கு வந்திருந்தார். நாடகத்தின் பிற பாத்திரங்களை குவைத்தில் உள்ளவர்களே வழக்கம் போல சிறப்பாக செய்தனர். நாடகம் மாபெரும் வெற்றி!
முப்பது வருட நாடக அனுபவமும், 4500 முறை மேடை ஏறியவருமான காத்தாடி ரொம்ப ரொம்ப சிம்பிள். “எனக்கென்று ஹோட்டலில் ரூம் வேணாம். நண்பர்கள் யாருடைய வீட்டிலாவது தங்கிக்கொள்கிறேன். சைவ சாப்பாடு போதும்’’ என்று கூறிவிட்டார்.
காத்தாடி ஏற்கனவே அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று நாடகம் போட்டிருக்கிறார், இதுவரை `டிவி’ யிலும் 25 சீரியல்கள் செய்துவிட்டார். பாக்யம் ராமசாமியின் அப்புசாமி- சீதாபாட்டி சீரியலும், பஞ்சு-பட்டு –பீதாம்பரம் சீரியலும் மிகவும் பிரபலம்.
“எப்போதும் காமெடி நாடகங்கள் தானா, சீரியஸ் நாடகங்கள் போடக்கூடாதா?’’ என்று கேட்டால், சமீபத்தில் பாம்பே சாணக்யாவுடன் சேர்ந்து அப்படி ஒன்று போட்டேன். நாடகம் நல்லாருக்கு என்று ரசித்தவர்கள் கடைசியில் நல்லாதான் இருக்கு. ஆனால்,உனக்கு ஏன் இதெல்லாம்? என்று சபித்துவிட்டனர், நான் என்ன செய்வது? என்கிறார்.
அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது குவைத் அனுபவங்கள் பற்றி கேட்டேன்.
“அமெரிக்கா, சிங்கப்பூர் என்றால் நம்மவர்கள் நம் கலாச்சாரத்தை மறந்து அப்படியே அந்த நாட்டு கலாச்சாரத்துடன் ஒன்றிப் போய் விடுகின்றனர். ஆனால் குவைத்தில் நம்மவர்கள்- நம்மவர்களாகவே இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மூரின் அவசர ஆர்ப்பாட்டங்களில், நாடகம், நாட்டியம், பஜன், சுலோகம், பாட்டு, திருப்புகழ் என்று நினைத்து பார்க்கக்கூட நேரமில்லை’’
“ஆனால், குவைத் குழந்தைகள் இவற்றை தவறாமல் கற்றுக்கொண்டிருப்பதை பார்க்கும்போது சந்தோஷம் எழுகிறது.
“நம்மூரில் கார் பயணத்தில் `வேகமாப் போ…. வேகமாப் போ’ என்று விரட்ட வேண்டியிருக்கும். ஆனால், இங்கே `மெல்லப்போங்கள்!’ என்று கெஞ்ச வேண்டிய நிலமை. அந்த அளவிற்கு வாகனங்கள் பறக்கின்றன. அதுவும் 120 கி.மீ.க்கு மேல் பாய்ந்தால் காருக்குள் அபாய மணி அடிக்கிறது. அதை கேட்கும் போதே நடுக்கம். ஆனால், அவர்களுக்கு அது சகஜமாயிருக்கிறது.
“அடுத்து நான் முக்கியமாய் குறிப்பிட வேண்டிய விஷயம் ஹிந்தி வட மாநிலத்தவர், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பெரும்பாலும் கடைகளிலும் வெளியேயும் ஹிந்திதான். ஹிந்தி தெரியாததால் நான் மிகவும் சிரமப்பட்டு விட்டேன். அரபிக் மொழி படிக்காவிட்டாலும் பரவாயில்லை. அரபு நாடுகளில் ஹிந்தி அவசியம் தெரிந்து கொண்டாக வேண்டும் போலிருக்கிறது.
“நம் அரசியல்வாதிகள் நம்மவர்களின் மீது கொஞ்சம் கருணை காட்ட வேண்டும். தமிழ்நாட்டிற்கு வேண்டுமானால் ஹிந்தி தேவையில்லாமல் இருக்கலாம். வெளியே செல்பவர்களுக்கு ஹிந்தி ரொம்ப ரொம்ப தேவை. அதை படிக்காமல் போனதில் வெட்கப்படுகிறேன்.’’
இந்த நிகழ்ச்சி ஏற்பாடு: சின்மயா அமைப்பு.
ரவி தமிழ்வாணன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லண்டன் புத்தக கண்காட்சி –அமெரிக்க பயணத்தின் இடையே மணிமேகலைப் பிரசுர அதிபர் ரவி தமிழ்வாணன் குவைத்திற்கும் ஒரு விசிட் அடித்திருந்தார்.
லேனா தமிழ்வாணன் அளவிற்கு இவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் கூட, லேனாவின் புகழும், நிழலும் இவருக்கும் பெரிதும் கை கொடுப்பது நிஜம்.
லேனாப் போல மேடை பேச்சு அனுபவம் ரவிக்கு இல்லை. ரேடியோ எப்.எம்.-ல் நிகழ்ச்சிகள் தருவதோடு சரி, இருந்தும் கூட தெளிவாய், ஆணி அடித்தது போல ரவி வெளிப்படுத்தின கருத்துக்களுக்கு குவைத் தமிழர்களிடையே பலத்த வரவேற்பு!
`ப்ரண்ட்லைனர்ஸ்’ ஆங்கில புத்தக குழு சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில் ரவி சிறப்பாக உரையாற்றினார்.
ரவி தமிழ்வாணன் பேச்சின் சில பகுதிகள்.
என் அப்பா தமிழ்வாணனின் மறைவிற்கு பிறகு குடும்பமே கதிகலங்கி போயிற்று. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைப்பவர்கள் அவரைப் பார்த்து அவசியம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கின அவர். தனக்கு நெஞ்சு வலி வந்த போது, டாக்டர் கொடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை.
அதை அலட்சியப்படுத்தி உரிய சிகிச்சையும் ஓய்வும் எடுக்காமல் உழைத்ததின் விளைவு ஒரு இரண்டு நிமிட அவகாசத்தில் இறந்துப் போனார். அது அவருக்கு மரண வயது இல்லை.
உழைப்பும், கடுமையான முயற்சியும் முன்னேற்றத்திற்கு முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியம் நமது உடல், நமது ஆரோக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியம்தான் வளர்ச்சிக்கு உதவ முடியும்.
ஆகையால் கடும் உழைப்பாளிகளே …உங்கள் உடல் நலத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
அதுமாதிரி பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமன்றி குடும்பத்திற்கும் மனைவி, குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். பணம் மட்டுமே மகிழ்ச்சியை தந்துவிட முடியாது.
பெரும்பாலான குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் வர காரணமே கணவன் மனைவி சரிவர பேசிக் கொள்ளாததும், கலந்து பேசாததும்தான். குடும்பத்தின் பிரச்சனைகளை அன்றாடம் கலந்து பேசுங்கள். எந்த வித மனஸ்தாபமானாலும் ஓடிப்போவது நிச்சயம்.
அப்பாவின் மரணத்திற்குப் பிறகு `கல்கண்டு’ இதழை யார் பார்த்துக் கொள்வது, பதிப்பகத்தை யார் பார்த்துக் கொள்வது என்கிற கேள்வி எழுந்தது. அப்பாவின் தொழிலை ஏற்று நடத்தக்கூடிய பக்குவம் அப்போது எனக்கோ, லேனாவிற்கோ இல்லை.
இருந்தும் கூட லேனாவிடம் `கல்கண்டு’ பொறுப்பும், பதிப்பகம் என்னிடமும் ஒப்படைக்கப்பட்டது. பதிப்பக தொழில் பார்க்காமல், வேறு தொழிலுக்கு போயிருந்தால் நாங்கள் இன்னும் கூட அதிகமாய் சம்பாதித்திருக்கலாம்.
ஆனால், இதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் வேறு தொழிலில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே! பதிப்பக பொறுப்பு ஏற்று 22 வருடங்களாகிறது. இதுவரை அதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை.
சிலபேர் விருதிற்காக மட்டுமே எழுதுவர். சிலர் விருதிற்காக மட்டுமே புத்தகங்களை பதிப்பிப்பர். ஆனால், எங்கள் நோக்கம் எப்போதுமே பாமர மக்களின் நலன்தான்!
நல்ல விஷயங்களை எளிமையாய், சுவையாய் புரியும்படி வெளியிட்டு, சாதாரண மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதற்காக விருதிற்கு நாங்கள் எதிரி என்று அர்த்தமல்ல. பலவித விருதுகள் எங்கள் நூல்களுக்கும் கிடைத்துள்ளன.
“டி.வி’, இண்டர்நெட் தாக்கத்தினாலும் கூட மணிமேகலைப் பிரசுரம் சோர்ந்து போய் விடவில்லை. ஏறக்குறைய ஒன்றேகால் நாளிற்கு ஒரு புத்தகம் வீதம் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இப்படி பல விஷயங்களை கூறி வாசகர்களை ஆச்சரியப்படுத்தினார் ரவி.
நடிகர் சரத்குமார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திட்டமிட்டு செயல்படுத்தும் காரியங்கள் சில சமயம் நடக்காமல் போய்விடுவதுண்டு. சில காரியங்கள் தற்செயலாய் தீர்மானிக்கப்பட்டு பிரமாதமாய் முடிவதும் உண்டு.
குவைத்தில் நடந்த நடிகர் சரத்குமாரின் நிகழ்ச்சி அதற்கு ஒரு உதாரணம்.
மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக கண்காட்சிக்காக லண்டன், அமெரிக்க என்ரு பயணப்பட்டிருந்த அதன் அதிபர் ரவி தமிழ்வாணன் ஒரு நாள் எனக்கு போன் பண்ணி “குவைத்தில் ஒரு நாள் இறங்கி சுற்றிப் பார்க்கணும். விசா எடுக்க முடியுமா?’’
உடனே குவைத் இந்தியா எக்ஸேஞ்சின் மானேஜிங் டைரக்டரான ரெங்கசாமி அவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்து, அவர் வந்து, திடீர் நிகழ்ச்சியெல்லாம் வைத்தோம்.
குவைத்திலிருந்து அவர் துபாய் செல்வதாக இருந்தது. அப்போது பேச்சுவாக்கில் நடிகர் சரத்குமார் துபாயில் இருக்கிறார் என்றார். உடன் மூளையில் ஒரு பொறி.
அந்த சமயம் ப்ரண்ட்லைனர்ஸ் மூன்றாம் பாகம் தயாரித்துக் கொண்டிருந்தேன். அதன் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தால் என்ன என்று தோன்ற “சரத்தை ஏற்பாடு செய்து தர முடியுமா?’’ என்று ரவி அவர்களிடம் கேட்டேன்.
அவரும் சரத்குமாரிடம் என்னைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்தினார். சரத்குமாரை எனக்கு முன்பின் அறிமுகமில்லை. எனது புத்தகங்கள், ப்ரண்ட்லைனர்ஸ்-ன் செயல்பாடுகளை ரவி சொல்ல, அவருக்கு ஒரு அபிப்ராயம் வந்திருக்க வேண்டும்.
போனில் நான் அழைப்பு விடுக்க,“எந்த மாதிரி நிகழ்ச்சி நடத்தப் போகிறீர்கள்? கமர்சியல் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில்லை என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்’’ என்றார். “இல்லை சார். நாங்கள் கமர்சியலாக எதுவும் செய்வதில்லை, நிகழ்ச்சி மூலம் சமூக சேவை மட்டுமே செய்கிறோம். உங்களது தேதி வேணும்’’என்றேன்.
அவரும் சம்மதித்து மார்ச்சில் ஸ்விட்சர்லாந்து படப்பிடிப்புக்குப் போகிறேன். அப்போது வைத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் அதற்குள் புத்தக வேலை முடியவில்லை.
முடித்து அவரை அணுகலாம் என்று நினைத்தபோது கார்கில் யுத்தம் நடந்தது. அந்த சமயம் புத்தக வெளியீட்டு விழாவை கார்கில் யுத்த நிதிக்காக அமைத்துவிடலாம் என்று சரத்திடம் யோசனை தெரிவித்தேன்.
அவரும் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு, சென்னையிலும் நிகழ்ச்சி முடிந்து குவைத் வர தேதி கொடுத்தார்.
குவைத்தில் பலவித அமைப்புக்களும் கார்கில் நிதி திரட்டி இந்திய தூதுவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தன. அப்போது இந்திய தூதுவர்,“கார்கில் நிதிக்காக நிதி திரட்டும்போது, நிகழ்ச்சி செலவுகளை குறைக்கவேண்டும். கலைநிகழ்ச்சிக்காகவும் கலைஞர்களுக்காகவும் அதிகமாய் செலவு செய்தால் பிறகு மிச்சம் எதுவுமிருக்காது’’ என்றார்.
“சரத்குமார் பெரிய நடிகராயிற்றே-அவருக்கு பணம் தர வேணாமா?’’ என்றார்.
“இல்லை சார். எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் அவர் வருகிறார்’’ என்றதும் அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எங்களுக்கும்தான்! சரத்குமார் பற்றி முன்பு அவ்வளவாக தெரியாததால், பணம் நேராக கேட்காவிட்டாலும், வேறு வழியில் நிறைய செலவு வைத்துவிடுவாரோ என்கிற தயக்கம் இருக்கவே செய்தது.
அம்பாஸிடர், “சரி, ப்ரண்ட்லைனர்ஸ் மூலம் எவ்ளோ நிதி தர முடியும்?’’ என்றார். “குறைந்தபட்சம் ஒரு லட்சரூபாய்’’ என்றோம். அதிலும் அவருக்கு இன்ப அதிர்ச்சி.
கார்கில் நிதி பற்றி பேச வேண்டி அவர் கூட்டின மீட்டிங்கில் ப்ரண்ட்லைனர்ஸ் புத்தகம் மூலம் மோகன்தாஸ் ஒரு லட்சம் தருகிறேன் என்றிருக்கிறார். அதுபோல மற்றவர்களும் தரமுன் வரலாம்’’ என்றார். உடனே இந்திய தொழிலதிபர்களும், அசோசியேஷன்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தங்களது பங்கை லட்சக் கணக்கில் அறிவித்து, ஒரே நாளில் 50 லட்சம் ரூபாய் நிதி உறுதியாயிற்று.
(நாங்கள் வாக்கு கொடுத்தது ஒரு லட்ச ரூபாய் தான். ஆனால் கொடுத்ததோ மூன்று லட்சத்து எட்டாயிரம் ரூபாய்.)
சரத்குமார் எதிர்பார்த்தபடி இல்லவே இல்லை. ஒரு சினிமாக்காரருக்கு வேண்டாத பல குணங்களும் அவரிடம் உள்ளன.
முகத்து நேராய் பேசுதல், சரியான திட்டமிடுதல், பிறர் பொருளுக்கு ஆசைபடாமை, எளிமை கஷ்டபடுபவர்களுக்கு உதவுதல், நாட்டுப்பற்று என்று அவரிடம் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள் ஏராளம்.
முன்பின் அறிமுகமில்லாவிட்டாலும் கூட, அவர் எங்கள் மேல் நம்பிக்கை வைத்து அவரே டிக்கட் வாங்கி வந்தார். அந்தத் தொகையை இங்கு வந்துதான் திருப்பிக் கொடுத்தோம்.
அவர் எந்தவித கண்டிஷனும் போடாமல் வெளியேயும் சரி, நிகழ்ச்சியிலும் சரி மிகவும் ஒத்துழைப்பு தந்தார். சினிமாவில் இருந்தும்கூட அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இருப்பதாய் தெரியவில்லை.
குவைத்தில் அவருக்காக சாப்பாடு, டிக்கட், ரூம் செலவு மட்டும்தான் எங்களுடையது. சில பேர் இருக்கிறார்கள். ஐஎஸ்டீ போன் பேசிப் பேசியே நம்மை போண்டியாக்கிவிடுவார்கள்.
சரத்குமார் ஐஎஸ்டீ கால் நிறையவே பேசினார். ஆனால் அந்த பில்லை அவரே ஏற்றுக் கொண்டார். அதே மாதிரி பர்ச்சேஸ் பண்ணினதிற்கெல்லாம் அவரே பணம் செலுத்தினார்.
கூலிங்கிளாஸ் வாங்கின வகையில், அவருக்காக நாங்கள் பத்தாயிரம் ரூபாய் செலுத்தியிருந்தோம். அது கனக்கில் விட்டுப் போயிற்று. ஆனால் அவர் திரும்பிப்போய் மூன்றாம்நாள் அவரது உறவினர் மூலம் அந்தத் தொகையை எங்களிடம் ஒப்படைத்துவிட்டார். ஆச்சர்யம்! இப்படியும் ஒரு சினிமாக்காரர்!
கடைகளுக்கு அழைத்துப் போனபோது சென்ட்ரல் வீடியோ முஸ்தபா,“உங்களுக்கு செயின் வாங்கி தரேன். எந்த மாதிரி வேணும் சொல்லுங்கள்’’ என்க-“ஸாரி நான் நகை அணிவதில்லை, வேணாம்!’’ என்றார்.
“பரவாயில்லை உங்கள் மனைவிக்கு… கொடுங்கள்!’’
“என் மனைவியும் நகை விரும்புவதில்லை!’’ என்று சொல்லிவிட்டார். சரத்குமாரின் அன்றைய நிகழ்ச்சி
சூப்பர் ஹிட். குவைத் தமிழ் நிகழ்ச்சி வரலாற்றில் ரிகார்ட் ஏற்படுத்தி –இடமின்மையால் நூற்றுக்கணக்கானோர் திரும்பிப் போகும்படியாயிற்று.
சரத்குமாருக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டத்தை அன்று புரிந்துக் கொள்ள முடிந்தது.
குவைத்தில் நான்கு நாட்கள் சரத்குமார் இருந்தார். அப்படியும் கூட யாருக்கும் சலிக்கவில்லை. நண்பர் பெரியசாமி “ என் சொந்த செலவில் இன்னும் ஒரு வாரம் இருங்கள்!’’ என்று உருகின அளவிற்கு அவர் போகும்போது எல்லோரிடமும் சோகம் தட்டியது நிஜம்.
நடிகர் ஜெயசங்கர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிவரஞ்சனி சிவாயும், நண்பர் சென்ட்ரல் வீடியோ முஸ்தபாவும் குழந்தைகளுக்காக கலைநிகழ்ச்சி நடத்தப் போவதாகவும், அதில் கலந்துக் கொள்ள சிறப்பு விருந்தினர் யாரையாவது ஏற்பாடு செய்து தாருங்கள் என்றனர்.
அப்போதுதான் நடிகர் ஜெய்சங்கரின் ஞாபகம் வந்தது. ஏற்கனவே வேறோரு நிகழ்ச்சிக்கு வேண்டி அவரை அணுகியிருந்தேன். ஜெய்யும் சம்மதித்திருந்தார்.
இம்முறை தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டுவிழா என்றதும் அவர் உடன் ஒப்புக் கொண்டு,“துணைக்கு என் மனைவியையும் அழைத்து வரலாமா?’’ என்றார்.
“இல்லை சார் இது கமர்சியல் நிகழ்ச்சியில்லை. செலவு எங்களால் தாங்கமுடியாது’’ என்க “சரி…சரி அப்படின்னா வேணாம்!’’
“குவைத்திற்கு வருவதை முன்னிட்டு குவைத்திலுள்ள் முக்கிய தமிழர்களை நான் கெளரவிக்க வேண்டும். முன்னனியில் இருக்கிற 10 பேர்களைச் சொல்லுங்கள்’’ என்றார்.
“அதெல்லாம் வேணாம் சார். நீங்கள் பொது மனிதர் யாரையாவது சிலரை மட்டும் கெளரவித்தால், அது நன்றாக இருக்காது. மற்றவர்கள் உங்கள் மேல் வருத்தப்படுவார்கள் என்றதும், “நீங்கள் எனக்கு ஒன்று செய்யும்போது பதிலுக்கு நானும் ஏதாவது செய்ய வேண்டாமா-இந்த ஜெய் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவன் என்று காட்ட வேணாமா?’’ என்றார்.
ஜெய்யிடம் தொடர்பு கொள்வதிலோ, கலந்து பேசுவதிலோ எந்தவித கஷ்டமும் இல்லை. நிகழ்ச்சிக்கான பப்ளிசிட்டி போஸ்டர்களை அவரே அங்கிருந்தே அடித்து அனுப்பிவிட்டார்.
ஜெய்சங்கர் சிறப்புமலர் ஒன்று தயாரித்து எடுத்து வந்தவர், “நான் மெர்ஸிஹோமிற்கு உதவ வேண்டும். இந்த புத்தகங்களை மக்களிடம் கொடுத்து, அவர்கள் தரும் தொகையை உண்டியலில் போடுங்கள். நான் ஒன்று சேர்ந்து உதவி பண்ணலாம்’’ என்றிருந்தார்.
ஆனால் அவரது நேரம் சரியில்லை போலிருக்கிறது. ஏர்போர்டிலிருந்து அவர் வெளியே வரவே ஒரு மணி நேரமாயிற்று. என்னாயிற்று ஏன் ஆளை காணோம் என்று சந்தேகப்பட்டு விசாரித்தபோது-
“அவரால் நடக்க முடியாத அளவிற்கு டயர்டாக இருக்கிறார்’’என்கிற தகவல் வர-பிறகு வீல் சேரில் அமர்த்தினர்.
அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவர் மயக்கமாகி பேச்சு மூச்சில்லாமல்-மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. `கோமா’வில் இருந்த அவர் தீவிர சிகிச்சையாலும், ரசிகர்களின் பிரார்த்தனையாலும் மறுபிறப்பு எடுத்துள்ளார்.
அரசாங்க மருத்துவமனையில் அவரை பார்க்க எப்போதும் திரளான கூட்டம், நான்காம் நாள் அவர் கண்திறந்த போது, அவர் ஒப்புக் கொண்ட கேரள நிகழ்ச்சியும், இன்னும் முடியவில்லை என்று நினைத்து “சீக்கிரம் `பெட்’ லிருந்து விடுபட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளணும்’’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.
அவருக்கு முன்பே உடல்நலம் சரியில்லாமல் `அப்பல்லோவில்’ அட்மிட்டாகி கொஞ்சம் சரியானதும் குவைத் கிளம்பினாராம். வீட்டினர் தடுத்துப்பார்த்தும் கேட்கலை. “ஏற்கனவே கொடுத்த தேதியை மாற்றக்கூடாது. எக்காரணம் கொண்டும் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யக்கூடாது’’ என்று கிளம்பி வந்தாராம்.
மோசமான உடல் நிலையிலும் கூட, அவரது நல்ல எண்ணம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் வந்த இடத்தில் இப்படியாயிற்றே என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கவலை. என்ன செய்வது, எப்படி அவரை பத்திரமாய் ஊருக்கு அனுப்புவது என்பதில் குழப்பம்.
முழுவதும் குணமாகாமல் அவரை ஆஸ்பத்ரியும் ரிலீஸ் செய்யாது. விமானத்திலும் பயணத்திற்கு அனுமதிக்கமாட்டார்கள். இந்த நிலையில் இந்திய தூதரகத்திலும், சென்னையில் முதலமைச்சருக்கும் தகவல் கொடுத்து உதவி கோரப்பட்டது. ஜெய்யின் மகன் டாக்டர் விஜய் வந்தார்.
ஜெய்சங்கரின் விருப்பபடி-அவர் ஆஸ்பத்ரியில் இருக்கும்போதே, நிகழ்ச்சி நடத்தப்பட்டு அவரது உடல் நலம்பெற பிராத்தனையும் செய்யப்பட்டது.
அவர் பேச ஆரம்பித்ததும், “திரும்ப நிகழ்ச்சி நடத்துங்கள். எனக்கு உதவினவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்று வற்புறுத்தினார். அவரது திருப்திக்காக டாக்டரிடம் அனுமதி பெற்று, அவர் கிளம்பும் தினத்தில் ஜெய் பாராட்டுவிழா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் மறுபடியும் அவரிடம் தளர்ச்சி, மறுபடியும் மயக்கம். எல்லோருக்கும் அதிர்ச்சியாயிற்று.
அவரது குடும்பத்தினர் ஊரில் கவலையில் இருக்க, குவைத்திலிருந்து அவரை எப்படியும் அழைத்துப்போக வேண்டும் என்று அவரது மகன் மிகுந்த பிரயாசைபட்டார்.
மூன்றாம் நாள் மீண்டும் ஜெய் `மறுபிறப்பு’ எடுக்க விஜய் தனது `ரிஸ்கில்’ அழைத்துப் போய் அவரை அப்பல்லோவில் அட்மிட் பண்ணி சிகிச்சையை தொடரவேதான் குவைத் தமிழர்களுக்கு நிம்மதி.
ஜெய்-ஜாலியானவர் எப்படியோ அமர்க்களமாய் நடக்க வேண்டிய அவரது நிகழ்ச்சி-வேறு மாதிரி ஆகிவிட்டதில் அனைவருக்குமே தர்மசங்கடம். சென்னைக்கு சென்றதும் சில வாரங்களில் அவர் இயற்கை எய்தியது குவைத் தமிழர்களுக்கு பேரதிர்ச்சியாயிற்று.
கிரேஸிமோகன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எஸ்.வி.சேகருக்கு அடுத்தபடியாக நாடக உலகில் வெற்றிக்களிப்பில் இருக்கும் கிரேஸியை தனி மனிதனாக (ஒத்தைக்கு ஒத்தையாக) பார்க்க முடிவதில்லை. மேடையில் அவர் பிரதர்சனம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவரின்றி அந்த குழு இல்லை.
சேகரின் நாடகத்தில் அவர்தான் பிரதானம். அவருக்காகவே நாடகம்! ஆனால் கிரேஸின் குழுவில் அவருடன் சேர்ந்து நான்கைந்து பேர்களும் வந்தாக வேண்டும்.
பாரதிகலை மன்றத்திற்கு நாடகம்போட குவைத் வந்த போதும் கூட அவர்கள் அப்படித்தான். நானோ பாலாஜியோ தனியாக வர இயலாது. எங்களின் கதாபாத்திரங்களை வேறு யார் செய்தாலும் சரியாக இருக்காது. அதனால் எங்கள் ஐந்து பேருக்கு டிக்கட் விசா எடுத்தால் மட்டும் வர இயலும் என்று விட்டனர் கறாராய்.
அவர்கள் ஜாலி டைப் என்றாலும் கூட, கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கறார். பட்ஜெட்டை அனுசரித்து நான்கு பேருக்கு மட்டுமே டிக்கட் தர இயலும் என்றதும், “சரி பரவாயில்லை. பஞ்சபாண்டவர்களான எங்களை பிரிக்கும் பஞ்சமா பாதக பழி பாரதிகலை மன்றத்துக்கு வேண்டாம். ஐந்தாவது நபருக்கும் விசா தாருங்கள். டிக்கட் நாங்களே எடுத்துக் கொள்கிறோம்’’ என்றார்.
சொன்ன மாதிரியே ஒரே குடும்பமாய் வருகின்றனர். செயல்படுகின்றனர். பாரதி கலைமன்றத்தின் துணை தலைவி தன் வீடருகிலேயே இடம் பார்த்து, அவர்களை தங்க வைத்திருந்தார். அவர்கள், தங்களுக்கு ஹோட்டல்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. ரொம்ப யதார்த்தம்!
கிரேஸி பாய்ஸ் ஜோவியல் மட்டுமில்லை-பழகும்போது ஒரு அன்யோன்யம்! வாழ்க்கையில் கவலையேயில்லாததுபோல வெளியே எப்போதும் ஒரு சாந்தம்! கமுக்கம்!.
அவர்களுக்குள் உள்ளுக்குள் என்ன பிரச்சனையிருந்தாலும் வெளியே தெரிவதில்லை. எந்த விஷயத்திற்கும் முகம் சுளிப்பதில்லை. முரண்டு பண்ணுவதில்லை.
சாப்பிட அழைத்தால் அப்படியே, சொந்த வீட்டிலிருப்பது போல டிராயர் பனியனுடன் (பெர்முடாஸ்!) எழுந்து வந்துவிடுவார்கள்.
சாப்பிட்டு முடிந்ததும், அவரவர்கள் பாட்டிற்கு போய் ஹாயாய் தூக்கம்!’’ என்ன இப்படி தூங்கறதுக்கா குவைத் வந்தீங்க?’’ என்று கேட்டால், “இந்த மாதிரி தூக்கம் சென்னையில் எங்கே கிடைக்கிறது-எங்கே அதுக்கு நேரம்! சம்பளத்தோடு சாப்பாடும் தூக்கமும் தந்திருக்கீங்களே… ரொம்ப நன்றி’’ என்று சிரிக்கின்றனர்.
கிரேஸிக்கு பர்ச்சேஸிலோ, ஊர் சுற்றிப் பார்க்கணும் என்பதிலோ பெரிய அளவில் `கிரேஸ்’ இருப்பதாய் தெரியவில்லை. ஒவ்வொரு பொருளை பார்க்கும்போது நம் ஊர் பணத்திற்கு கணக்கு பார்த்து அவசியமானதை மட்டுமே தொடுகின்றனர்.
அதே மாதிரி வாங்கின பொருளிற்கு விலை ஸ்பான்சரின் தலையில் கட்டுவதில்லை. அனைத்தையும் கணக்கில் வைத்து நாடக சம்பளத்தில் கழித்து விடுகின்றனர்.
தள்ளியிருக்கும்போது –ரிசர்வ் டைப்பாக தெரிந்தாலும் பழகினபின்பு பார்த்தால்-கடிமன்னர்கள்! பேச்சில் நகைச்சுவையுடன், ஒரு தோழமை, பிறரின் கருத்துக்களுக்கும் காதுகொடுக்கும் தன்மை, அடுத்தவர்களின் மனம் கோணாதபடி விஷயத்தை பக்குவமாய் எடுத்துரைத்தல் என்ரு இவர்களிடம் பல் ப்ளஸ் பாயிண்ட்கள்!.
நாடக ரிகர்சலில், லோக்கல் கலைஞர்கள் தப்புசெய்தாலும் இவர் கோபப்படுவதில்லை. தப்பாய் பண்ணுபவரை ஒரு ஓரமாய் தள்ளிக் கொண்டு போய், கட்டிபிடித்து, கும்பிட்டு, தட்டிக்கொடுத்து, “இப்படி இல்லேம்மா-இப்படி பண்ணணும்!’’ என்று கூலாக எடுத்துரைத்து நெகிழ வைப்பார்.
அவற்றை மீறி மேடையில் தவறு நடந்தாலும் பெரிதுபடுத்துவதில்லை.
சிலரை அழைத்து வந்து நிகழ்ச்சி முடித்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். புக் பண்ணும்போது “என்னை அழைத்தால் போது-வேறு எதுவுமே வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு, வந்தபின்பு செலவுக்கு மேல் செலவாக வைத்து, காலி பண்ணிவிடுபவர்கள் உண்டு.
“ஆனால் கிரேஸி அந்த ரகமில்லை. குவைத்தில் என்றில்லை-சென்னையில் அவரது வீட்டிலும் சரி, என்றும் அன்பான –கலப்படமில்லா பாசம்! அந்த பொய் கலக்காத நேசம் பிடித்தமான ஒன்று’’ என்று உருகுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஆனந்தி நடராஜனும், நடராஜனும்.
சாலமன் பாப்பையா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாலமன் பாப்பையா அவர்களும் கூட குறுகிய கால இடைவெளியில் தேதி கொடுத்து இரண்டு நாளில் திரும்பி போய்விட்டார். ஊரில் வேறு நிகழ்ச்சி இருந்ததால்-குவைத் உபசரிப்பை முழுதாய் அனுபவிக்க முடியாமல், முழுதாய் சுற்றிப் பார்க்க முடியாமல் `கனவு போல ஊர் திரும்ப வேண்டியுள்ளதே’ என்று வருத்தப்பட்டார்.
பட்டிமன்றத்தை எளிமைப்படுத்தி பாப்புலர் ஆக்கினதில் முதலிடம் இவருக்குண்டு. வயது, தலைமுறை வித்தியாசம் பார்க்காமல், தோளோடு தோள் அரவணைத்து பேசும் எளியவர்.
பட்டிமன்றம் என்பது இன்னொரு பணம் பண்ணும் தொழில் என்று ஆகிவிட்ட இன்றைய நிலவரத்தில், இவர் சற்று மாறுபட்டவர். சினிமாகாரர்களும் சரி, பட்டிமன்ற கலைஞர்களும் சரி ஓரிடத்திற்கு போகிறார்கள் என்றால் ரேட் பேசும்போது ஒரு நாள் நிகழ்ச்சி என்றால் இவ்வளவு –இரண்டு நாள் என்றால் இவ்வளவு என்று கறாராக பணம் பேசிவிடுவார்கள்.
அதில் பாதி தொகையை அட்வான்சாக தந்தால்தான் அக்ரிமென்டே போடுவார்கள். (நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு பணம் தராமல் ஏமாற்றிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு)
ஆனால் இவர் ஜெம். ரொம்ப டீசண்ட், ரேட் விஷயத்தில் கெடுபிடி பண்ணவில்லை. கொஞ்சங்கூட அலட்டலில்லாமல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருமதி ஆனந்தி நடராஜனின் வீட்டிலேயே தங்கினது மட்டுமன்றி, மிகுந்த ஒத்துழைப்பும் தந்தார்.
அது மட்டுமன்றி கேம்பகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அவர்களுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்று அவர்களுக்காகவும் இன்னொரு பட்டிமன்றம் நடத்தவும் செய்தார்.
அதற்காக தனியாக பிரதிபலன் எதுவும் கேட்கவில்லை. அதிலும் சொல்லப்போனால்-எந்த நிகழ்ச்சிக்காக வந்தாரோ –அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள்-இலவச நிகழ்ச்சி நடந்தது. அதில் ரசிகர்களுக்கும் சந்தோஷம் தொழிலாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
நாடகம் போலவே –சாலமன் பாப்பையா நடுவராக இருக்க, பேச்சில் கலந்துக் கொள்பவர்கள் உள்ளூர் பேச்சாளர்கள்! தலைப்பை மட்டும் சாலமன் தந்துவிட்டார். ரிகர்சல்கூட பார்க்கவில்லை.
பட்டிமன்ற பேச்சாளர்கள் போலவே உள்ளூர்வாசிகள் பேச-சாலமன் பாப்பையா- நகைச்சுவையுடன் பேசி சமாளித்தார். தனியார் டி.வியில் அவர் தினசரி நிகழ்த்தும் உரை-கடல் கடந்து மக்களை சென்றடைவதில் அவருக்கு பெருமிதம்.
“தமிழை கொச்சையாக –நடைமுறை பாஷையில் பேசுகிறீர்களே…?’’ என்று கேட்டால்-
“அதில் என்ன தவறு? முன்பெல்லாம் தமிழ் என்றாலே மாணவன் அலறுவான், ராமாயணம், மகாபாரதம் என்று வெகுஜன மக்களுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருந்தார்கள். அதனால் தமிழ் வளராமல், அதன் சிறப்பு வெளிப்படாமல் இருந்தது.
தமிழின் சிறப்பை எளிமைப்படுத்தி –அடிமட்ட மக்களும் புரிந்துக் கொள்ளும் அளவில் பேசுவதால் எல்லோரும் ரசிக்கிறார்கள். பொது ஜனத்திடமும் நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை எளிதாய் கொண்டு போய் சேர்க்க முடிகிறது.
நாம் என்ன சொல்கிறோம். என்ன கருத்துக்களை சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது இரண்டாம் பட்சம்’’ என்கிறார் சிரித்தபடி.
சாலமன் பாப்பையா, குவைத் இந்திய தூதரக அமைச்சர் கருப்பையாவை சந்தித்து, பழந்தமிழ் குறித்து ஆழமாய் விவாதிக்கவும் செய்தார்.
சாலமன், குவைத்திற்கு வரும்போது விமானத்தில் முதல் வகுப்பில் வந்தார். “அதற்கு முன்பு இரண்டாம் வகுப்பில் மட்டுமே பயணம் செய்திருந்த எனக்கு அந்த உபசரிப்பும், அணுகுமுறையும் வித்தியாசமாய் இருந்தது. அங்கே வேட்டிகட்டி இருந்த ஒரே ஆசாமி நான்தான். கிராமத்து ஆள் என்று எல்லோரும் வித்தியாசமாய் பார்த்ததை என்னாலும் உணர முடிந்தது. அடப் போங்கப்பா –என்று நானும் மற்றவர்களை அலட்சியப்படுத்திவிட்டேன்’’ என்று யதார்த்தமாய் வெகுளியாய் விவரித்தார் பட்டிமன்றத்தார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடு ; பாரதிகலை மன்றம்.
நடிகர் நெப்போலியன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குவைத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இந்திய அமைப்புக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நிகழ்ச்சி நடத்த வேண்டி ஸ்பான்சர்களுக்காக போட்டிப் போடுவதால் இங்கே எப்போதுமே ஸ்பான்சர்களுக்கு பஞ்சம்.
இந்த நிலையில் கலைஞர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவது சமயத்தில் அசோசியேஷன்களுக்கு சிரமமாயிருக்கும்.
கலைஞர்கள், மேடையில் Perform பண்ணினால் மட்டுமே சன்மானம் பேசுவார்கள். நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்க வருபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படுவதில்லை. வருபவர்களின் டிக்கட்-விசா-ஹோட்டல்-சாப்பாடு-பரிசு என்று அதுவே நல்லதொகை வந்துவிடும்.
பாரதி கலைமன்றத்தில் அப்போது தலைவராக இருந்த செந்தமிழ் அரசுவும் செயலாளர் சாக்ரடீசும் “பாரதிகலைமன்றத்திற்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்றிருக்கிறோம். உங்களது செல்வாக்கில் சினிமா நட்சத்திரங்களை ஏற்பாடு செய்து தாருங்கள்’’ என்று என்னை அணுகினர். (இது 1999).
நானும் விடுமுறைக்கு சென்னை வந்தபோது, அவர்களுக்கு வேண்டி பல நட்சத்திரங்களையும் சந்தித்து பேசினேன். இவர்களின் சின்ன பட்ஜெட்டிற்கு பிரபல நட்சத்திரங்கள் ஒத்துவரவில்லை. சிலருக்கு தேதியில்லை.
“சரி, கலை நிகழ்ச்சி வேணாம். சிறப்பு விருந்தினராக யாரையாவது ஏற்பாடு செய்யுங்கள்” என்றனர்.
அந்த நேரம் (டிசம்பர்-2) தனது பிறந்த நாளிற்காக குடும்பத்துடன் துபாய் செல்லவிருந்த நெப்போலியன் சிக்கினார். அவர் எனது நீண்ட நாள் குடும்ப நண்பர். அவரிடம் விபரம் சொல்லி “சன்மானம் எதிர்பார்க்காமல் வரணும். உங்கள் பிறந்த நாளை குவைத்தில் ரசிகர்களின் முன்னிலையில் கொண்டாடலாம்! அதன்பிறகு அப்படியே நீங்கள் துபாய் செல்லலாம்’’ என்றதும் சம்மதித்து வந்தார்.
இதே மாதிரி ஜனவரி 2000 பொங்கல் விழாவிற்கு வரதராஜன் –நித்தியாவின் நாடகத்தை ஏற்பாடு செய்துவிட்டு,“அதற்கு சிறப்பு விருந்தினராக டைரக்டர் பாரதிராஜா அவர்களை எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுங்கள்’’ என்று அவர்கள் என்னிடம் கேட்டனர்.
சரியென்று நண்பர் வண்ணப்பட யோகா அவர்களிடம் விபரம் சொல்லி, டைரக்டரை எப்படியாவது சம்மதிக்கவைத்து அழைத்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்றேன்.
எனது வேண்டுகோளை அவரால் தட்ட முடியவில்லை. பாரதிராஜாவின் மனநிலை அறிந்து அவரை சம்மதிக்க வைத்து யோகா அழைத்து வந்தார். அந்த விபரம் வேறு பக்கங்களில்..?
நெப்போலியன் நிச்சயம் யோக காரராகத்தான் இருக்கவேண்டும். கடல் கடந்து வந்து பாரதிகலைமன்ற மேடையில் பிறந்த நாள் கொண்டாடுவது ஒரு பாக்யம் தானே!
ஆஜானுபாகுவாக இருந்தாலும்கூட நெப்ஸிடம் எப்போதும் புன்னகை மாறா முகம். சகஜமாகவும், கிராமத்து வாசனையுடனும் பேசுவது அவரது சிறப்பு. சட்சட்டென வரும் கோபம் மைனஸ்பாயின்ட்.
அவர் நடிக்கர் என்பதால் அவரது சமுதாயத்தில் பெண் கொடுக்க பலரும் முன்வராத விஷயம் எனக்குத் தெரியும். நடிகன் –நடிகைகள் பக்கம் தாவி விட்டால் தங்கள் பெண்ணின் கதி என்னாவது என்கிற பயம்.
அதையும் மீறி கல்யாணம் செய்துக்கொண்டவர், “தான் நடிகன்தாண்டா ஆனா என் மனைவிக்கு விசுவாசமா இருக்கேன். அவளை மகாராணி மாதிரி வச்சிருக்கேன். பாருங்க!’’ என்று நெப்ஸ் காலரை தூக்கிவிட்டுக் கொள்வார்.
அது உண்மை. மது, மாது விஷயத்தில் அவர் ரொம்ப ஸ்டிரிக்ட், பெண்களுக்கு மரியாதை செலுத்துவது இவரது சிறப்பு.
இப்போதெல்லாம் சினிமா உலகம் டல்லடிப்பதால், அதை நம்பியிருக்காமல் பிசினஸ் வழியிலும் நட்சத்திரங்கள் இறங்கிவிடுவது சகஜமாகி இருக்கிறது. நெப்போலியனும் அதற்கு விதிவிலக்கல்ல.
அவர் குவைத் வந்தபோது ராஜா எனும் பிசினஸ் நண்பரை அறிமுகப்படுத்தினேன். நெப்ஸ் அவரை கெட்டியாக பிடித்துக்கொண்டு-அடுத்த ஆறுமாதத்திலேயே குவைத்தில் ஏற்றுமதிக்கு வியாபார தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.
டெல்லிகணேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம் நாட்டில் எப்படி நூற்றுக்கணக்கில் கட்சிகள் இருக்கின்றனவோ, அதே மாதிரி குவைத்திலும் நூற்றுக்கணக்கில் இந்திய அமைப்புக்கள் உள்ளன. யோசித்துப் பார்த்தால் அரபுநாட்டுக்குப் பணம் சம்பாதிக்க வந்தோமா இல்லை பொழுது போக்கவா என்று சிலருக்கு தோன்றும்.
நம்மூரில் திருமணம், கோயில், பார்க், பீச் விஷேசங்கள் என்று பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன. இங்கே டி.வி, வீடியோவை விட்டால் எப்போதாவது நடக்கும் கலை நிகழ்ச்சிகள் தான் குடும்பத்தையும் நாட்டையும் விட்டுவிட்டு பாலைவனத்திற்கு வந்திருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வடிகால்!
அந்த அடிப்படையில் நிகழ்ச்சிகள் தர போட்டாப் போட்டி தமிழர்களுக்கு மட்டும் மூன்று அமைப்புக்கள் உள்ளன. (மலையாளிகளுக்கு 33 அசோசியேஷன்கள்!)
மூன்று அமைப்புக்களிலும் சமயத்தில் பனிப்போர் நடப்பதுண்டு. ஒரு அமைப்பு நடிகர் ஒருவரை கொண்டு வந்துவிட்டால், அடுத்த அமைப்பு அதைவிட சிறப்பாய் வேறு ஏதாவது செய்தாக வேண்டும் –யாரையாவது நாமும் அழைத்து வந்தாக வேண்டும் என்று களத்தில் இறங்குவதுண்டு.
இந்த பனிப்போரில் சில நட்சத்திரங்களுக்கு யோகம் அடிப்பதுண்டு. அப்படி அதிர்ஷ்டம் பெற்றவர்களில் டெல்லிகணேஷும், வெண்ணிற ஆடை மூர்த்தியும் உண்டு.
நாடகங்களையே அவர்கள் மறந்து சினிமாவில் முழு அளவில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், பாரதி கலைமன்றம் அவர்களை நாடகம் போட அழைத்தது. டெல்லிகணேஷும் சரி என்று ஒப்புக் கொண்டு, தன்னிடமிருந்த பழைய ஸ்கிரிப்ட்டை அனுப்பி தந்தார்.
அது இந்த காலகட்டத்திற்கு பழசாக இருந்தாலும் கூட, குறுகிய கால இடைவெளியில் நாடகம் போட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளூரில் ரிகர்சல் நடந்தது.
டெல்லிகணேஷும் நான்கைந்து நாட்களுக்கு முன்பே வந்துவிட்டார். அவர் வந்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தார். வெ.ஆ.மூர்த்தி தனக்கு ஷூட்டிங் இருக்கிறது என்றும் சொல்லி நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்புதான் வந்தார்.
நிகழ்ச்சிக்கு முன்பு அவர் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பினதில் கிளைமேட் ஒத்துக் கொள்ளாமல் அவரது தொண்டை கட்டிக் கொண்டது. மூர்த்தி என்றாலே –ஏதாவது வினோதமாய் ஓசை எழுப்புவார் –மேனரிசம் பண்ணுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
வினோத ஓசை மட்டுமில்லை-நாடகத்தில் சொற்ப சமயமே தலைகாட்டும் வசனத்தைக்கூட அவரால் பேசமுடியாமல் போனது துரதிர்ஷ்டம்.(பாடகர்கள் எப்படி தங்கள் குரல்வளத்தை பாதுகாத்துக் கொள்கிறார்களோ, அதுமாதிரி கலைஞர்களும் அவசியம் பாதுகாத்துக் கொள்ளக்கூடாதோ)
பெரும் செலவுபண்ணி, நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார்கள். ஏர் டிக்கட், ஹோட்டல், சாப்பாடு, கலைஞர்களுக்கு சம்பளம் என்று கொடுத்து அழைத்து வருகிறார்கள். அப்படியிருக்கும் போது கலைஞர்கள், ரசிகர்களுக்கு நிகழ்ச்சிகளை நன்றாக தரவேண்டாமா? கடல்கடந்து வாழும் ரசிகர்களை ஏமாற்றலாமா?
வெ.ஆ.மூர்த்தி இயல்பில் நன்றாக பழக்க்க்கூடியவர். சகஜமாய் பேசுபவர். ஜாலி டைப். ஆனால் அந்த பயணத்தின் போது அவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. கொஞ்சம் சலிப்பு ஏற்படும்படி ஆயிற்று. ராசிபலனிலும், ஜோசியத்திலும் கைதேர்ந்தவரான மூர்த்தியின் ராசி அப்போது சரியில்லை போலும்.
அன்று நாடகமும் அத்தனை சோபிக்கவில்லை. பாலைவன பிரதேசத்தில் நகரத்தை விட்டு வெகு தொலைவில் காம்ப்பில் தங்கி, மிகுந்த ஆர்வத்துடனும் சிரமத்துடனும் வண்டிப்பிடித்து நிகழ்ச்சிகு வந்த தொழிலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம் என்று கல் எறியாத குறை. நாடகம் சுமார் என்பதை உணர்ந்து டெல்லி மோனோ ஆக்டிங் செய்து ரசிகர்களை குஷிபடுத்த முயன்றார்.
டெல்லிகணேஷ் ரொம்ப சாதாரணமாய் காட்சியளிக்கிறார். பேச்சில் தமாஷ், ஈகோ இல்லை. நல்லவிதமாய் ஒத்துழைக்கிறார்.
லஞ்ச், டின்னர் பார்ட்டிகளில் மோனோ ஆக்டிங் பண்ணி பிரமாதமாய் கவர்கிறார் கமலுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தையும், அவர் தன்னுடன் பேசும் பழகும் விதத்தையும் அப்படியே நடித்துக் காட்டுகிறார். மனிதர் மிமிக்ரி ட்ருப் நடத்தலாம். அந்த அளவிற்கு அசத்தல்.
பர்ச்சேஸ் விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித டேஸ்ட், கிரேஸி மோகன் பர்ச்சேஸில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் Ferro Rocher – தேங்காய் சேர்த்த சாக்லெட் என்றால் உயிரைவிடுவார். “இந்த சாக்லெட்டிற்கு என் சொத்தையே எழுதி தருவேன்’’ என்பது அவர், ஆர்கனைசர் ஆனந்தி நடராஜனிடம் அடிக்கும் கமென்ட்.
வரதராஜன், தனக்கு மட்டும் பொருட்கள் வாங்காமல், தனது நாடக குழு உறுப்பினர் அனைவருக்கும் பரிசுகள் வாங்கி சுமந்துப் போனார். டெல்லிகணேஷ் கொஞ்சம் குடும்பபிரியர்! தனது குடும்ப அங்கத்தினர்களுக்கு வேண்டி பொருள்கள் வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்.
அந்த சமயம் இந்திய சுதந்திர பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி சிவாஜிகணேசனை இந்திய தூதரகம் அழைத்து வந்திருந்தது. அவரை போய் பார்க்க வேண்டும் என்று டெல்லிக்கு விருப்பம்.சிவாஜியும் அழைத்தாராம்.
ஆனாலும் டெல்லிக்கு தயக்கம் இந்திய தூதரக மரியாதையில் வந்திருக்கும் அவர் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் தானும் போனால் அது சிவாஜிக்கு மரியாதையாக இருக்காது. அவர் மூத்த கலைஞர். அங்கே அவர்தான் பிரதானம். அந்த இடத்தில் நானும் போய்- ரசிகர்களில் சிலரது கவனம் என்பக்கம் திரும்பினால் அது நன்றாக இருக்காது என்று ஒதுங்கினார்.
பிறகு எல்லாரும் எடுத்துச் சொல்லவே- சிவாஜியை சந்தித்து ஆசிபெற்று மகிழ்ந்தார்.
இலக்கியவாதிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குவைத்திற்கு வந்து வேலைக்கு சேர்ந்ததுமே கல்கி ஆசிரியர் என்னிடம் “குவைத் சிறப்பிதழ் தயாரித்து தர முடியுமா?’’ என்று கேட்டார். பெருமையுடன் `கல்கி’ குவைத் சிறப்பிதழ் தயாரித்துக் கொடுத்தேன்.
அதன் பிறகு குமுதத்தில் குவைத் வேலைவாய்ப்பு பற்றி எழுதும்படி அப்போது ஆசிரியர் பொறுப்பிலிருந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொன்னார். எழுதினேன். தினத்தந்தியில் குவைத் வேலைவாய்ப்பு –வாழ்க்கை முறையை பற்றி தொடராக எழுதச் சொன்னார்கள்.
`பாலைவன சொர்க்கம்’ என தொடராய் எழுதினேன். அதை மணிமேகலை பிரசுரம் புத்தகமாக்கி “இது வேலை வாய்ப்புக்காக அரபுநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இது வெளியே வரவேண்டும்.’’ என்றார்.
அப்புத்தகத்தை வெளிப்படுத்த வேண்டி மணிமேகலை பிரசுரம், சென்னை மியூசிக் அகாடமி மினிஹாலில் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது. அமரர் ஆசிரியர் மணியன் முதல் மாலன், எஸ்.வி.சேகர், லேனா, சத்யமூர்த்தி என்று பலரும் அவ்விழாவில் கலந்துகொண்டு பேசினர்.
ஆசிரியர் சாவி அவர்கள் உடல் நல குறைவால் வர இயலவில்லை. எனது எழுத்திற்கு வெளிச்சம் போட்டு தந்த தினமலர் அந்துமணி மேடைக்கு வராமல் வாசகர்களோடு ஐக்கியமாகி இருந்தார். அவர் எப்போதும் அப்படிதான்.
அந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்த மணிமேகலை பிரசுர ரவி தமிழ்வாணன் வியந்து “இதெ அரங்கிலும் வெளியேயும் பல வெளியீட்டு விழாக்கள் நாங்கள் நடத்தியிருக்கிறோம். உங்களால் மட்டும் எப்படி இந்த அளவிற்குக் கூட்டத்தை திரட்ட முடிகிறது?’’ என்று பாராட்டினது இதமான விஷயம்.
எல்லாமே நண்பர்கள் கூட்டம் வந்தவர்கள் எனக்காக என்று சொல்லிவிட முடியாது. பலவித வி.ஐ.பி களும் பேசுகிறார்கள் எனும்போது அவர்களை பார்க்கவும் வருவது இயல்புதானே! அடுத்து ப்ரண்டலைனர்ஸ் புத்தக வெளியீடு நாரதகான சபாவில் நடந்தபோதும் கூட அப்படித்தான்.அரங்குகள் வெளியேயும் கூட்டம்!
ஒரு நிகழ்ச்சி நடத்தும் போது சும்மான்னாலும் ஒப்புக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டு இருந்துவிடாமல் –திரும்ப நேரிலும் போனிலும் ஞாபகபடுத்துவது அவசியமாக இருக்கிறது. இது அவசர உலகம். அன்றாட தலைவலிகளுக்கிடையே நிகழ்ச்சியை ஞாபகபடுத்துதல் வேண்டும்.
குவைத்தில் –எப்போதும் சினிமாகாரர்களை மட்டும்தான் அழைக்கணுமா- இலக்கியவாதிகளை அழைக்கலாமே என்று அன்று துணை தலைவியாக இருந்த திருமதி ஆனந்தி நடராஜன் அவர்களிடம் தெரிவித்தேன்.
“யாரை அழைக்கலாம் –நீங்களே ஏற்பாடு செய்யுங்கள்’’என்றார். சில பெயர்களைச் சொல்ல, எழுத்தாளர் சுஜாதா, லேனாதமிழ்வாணன், சிவசங்கரி-ஓக்கே ஒவ்வொருவராக அழைக்கலாம் என்றனர்.
சரியென்று சுஜாதா அவர்களிடம் பேசினேன். அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஆறுமாதம் கழித்து அமெரிக்கா செல்லும் வழியில் வருகிறேன் என்றார். லேனாவிற்கும் அப்போது வரமுடியவில்லை.
சிவசங்கரி அவர்களை அறிமுகப்படுத்தி அவரும் சம்மதித்து, பாரதிகலை மன்றத்தில் நிகழ்ச்சி ஏற்பாடாயிற்று.
சிவசங்கரி “நான் இந்திய விமான சர்வீஸில்தான் வருவேன்.’’ என்று கூடவே தனது `இலக்கிய –இந்திய ஒருமைபாடு’ புத்தகத்தை நிறைய கொண்டு வந்து குவைத் வாசகர்களிடம் விநியோகித்துக் கொண்டார்.
ராணி ஆசிரியர் அ.மா.சாமி அவர்கள் ஏற்கனவே ஒரு முறை அரசாங்க அழைப்பின் பெயரில் குவைத் வந்து –பிரமாதமாய் தொடர் எழுதி புத்தகமும் போட்டிருந்தார்.
இரண்டாம் முறையாக அவர் –கவிஞர் வைரமுத்துவையும் அழைத்து வந்து, பாரதிகலை மன்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசினார்.
ஆசிரியர் சாமி அவர்கள் ரொம்ப யதார்த்தம் வயதிற்கும் மீறின சுறுசுறுப்பு. வேகம், கலகலப்பு அவரது சிறப்பு . நிகழ்ச்சி முடிந்ததும் ஊருக்கு திரும்பிவிடாமல் மேலும் இரண்டு நாட்கள் இருந்து குவைத்தை சுற்றிப் பார்த்து- பாலைவன பகுதியிலிருக்கும் தொழிலாளர் கேம்ப்களுக்கு விஜயம் செய்து அவர்களுடன் கலந்து பேசினது அவருக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
நடிகைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலைநிகழ்ச்சிக்காக நட்சத்திரங்கள் வரும்போது, நடிகைகளுக்கு விசா எடுப்பதில் எப்போதுமே பிரச்சனைதான். நடிகைகளுக்கு முன்பெல்லாம் விசா கிடைப்பதில்லை. இப்போது கொஞ்சம் தளர்த்தியிருப்பதாகவே தெரிகிறது.
தமிழைப் பொறுத்தவரை முதன் முதலில் விசாபெற்ற நடிகை என்கிற பெருமையை தட்டிச் செல்பவர் நித்யா. வரதராஜனுடன் நாடகம் போட வந்து நாடக கதாபாத்திரமாக அசத்தினது மட்டுமின்றி ஒரு சகோதரி என்கிற மாதிரியான உணர்வை ஏற்படுத்திச் சென்ற பெருமையும் அவருக்குண்டு.
பாரதிகலை மன்றத்திற்காக நாடகம் நடிக்க வந்த இருமுறையுமே அவர் சாந்தம். முதல் முறை திருமதி ஆனந்தி நடராஜனின் வீட்டிலேயே தங்கி, ரிகர்சல் பார்த்து, குடும்பமாக ஐக்கியமாகி திரும்பிப் போகும் போது கண் கலங்கினவர்.
பொதுவாக நடிகைகளிடம் அதுவும் தமிழ் நடிகைகளிடம் ஒரு கெட்ட பழக்கம் –யாராவது மாட்டினால் பேசி-குலவி-பெரிய அளவில் பர்ச்சேஸ் பண்ணி அண்ணாரின் பர்ஸை காலி பண்ணிவிடுவார்கள் –என்பார்கள்.
நித்யா இதற்கு விதிவிலக்கு என்கிறார் சென்ட்ரல் வீடியோ அதிபரான முஸ்தபா குவைத்தில் வீடியோ சிடியில் முதலிடத்திலிருக்கும் சென்ட்ரல் வீடியோவை, விசிட் செய்யாத கலைஞர்களே இல்லை எனலாம்.
தமிழில் ஆரம்பித்த ஹிந்திவரை அனைவரையும் வரவழைத்து, உபசரித்து, பரிசளித்து அசத்துவது முஸ்தபாவின் சிறப்பு, வரதராஜன் நித்யாவை பர்ச்சேஸிற்காக அழைத்துச் சென்றுள்ள முஸ்தபா “இவர்களை கடைகளுக்கு அழைத்துச் செல்வதில் எனக்கு பயமே இல்லை’’ என்கிறார். “இவர்கள் இருவருமே நிறைய பொருட்கள் வாங்குவார்கள். ஆனால் அதற்குண்டான பில்லை இவர்களே செலுத்திவிடுகிறார்கள்.
பர்ச்சேஸிற்காக எவ்வளவு பணம் மாற்றி எடுத்து வருகிறார்களோ, அதற்குமேல் பொருட்கள் வாங்க இவர்கள் ஆசைப்படுவதில்லை.
அதே மாதிரி இருவரின் அணுகுமுறையும், பக்குவமான பேச்சும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ஒரு விஷயத்தை மறுப்பதிலும்கூட எதிராளியின் மனம் கோணாமல், புன்முறுவலுடன் பதிலளிக்கும் பக்குவத்தை இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதே மாதிரி கலைஞர்கள் என்கிற நிலைக்கும் அப்பாற்பட்டு சின்னச் சின்ன காரியங்களிலும் கவனம் செலுத்தி ரசிகர்களின் நட்புக்கு மரியாதை செலுத்தி தங்களால் முடிந்த அளவில் அவர்களுக்கு உதவுவதிலும் வல்லவர்கள்.
தமிழை பொறுத்தவரை முதன்முதலில் நடிகைகளை அழைத்து வந்து `ஸ்டார் நெட்’டை செளத் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்திற்று.
அதில் சின்னிஜெயந்த், கஸ்தூரி, மஹேஸ்வரி கலந்துக் கொண்டனர். மேடையில் கஸ்தூரியின் குழைவான பேச்சும் சரி, உடையும், நாட்டியமும் சரி கவர்ச்சி. மகேஸ்வரி ரொம்ப அடக்கம்.
நடிகைகளை அழைத்து வரும்போது உள்ள பெரிய சங்கடம் அவர்களுக்குத் துணையாக வரும் தாய்குலங்கள். சிலர் சாது, நடிகைகள் சும்மாயிருக்க, சில தாய்குலங்கள் தாலித்து விடுவதுண்டு. நடிகைகளைவிட இவர்களை கவனிக்கவே அதிக செலவு செய்ய வேண்டிவரும்.
மகேஸ்வரியின் தாய் இயல்பாகவே இருக்கிறார் என்கிறார் முஸ்தபா. “இதற்கு முன்பெல்லாம் ஸ்ரீதேவியுடனும் மகேஸ்வரியுடனும் பலநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏர்போர்ட்டிலிருந்து நேராய் ஹோட்டல் –அங்கிருந்து நிகழ்ச்சி-பிறகு ஹோட்டல் –மறுபடியும் ஏர்போர்ட் என்று பறந்துவிடுவோம்.
குவைத்தில் எங்களுக்கு புது அனுபவம் என்று மஹியின் தாய் உருகினார். “கடைவீதிக்கு அழைத்துப் போவது, சுற்றிக் காட்டுவது என்று அன்யோன்யத்துடன் எப்போதும் கூடவே இருந்து கவனித்துக் கொள்வது நெகிழவைக்கிறது. இனி அடுத்த முறை அழைக்கும்போது ஹோட்டலுக்காக அநாவசிய செலவு செய்யாமல் எங்களுக்கு நண்பர்களின் வீடுகளிலேயே ஏற்பாடு செய்யுங்கள். பணவிஷயத்திலும் கூட நாங்கள் கறார் இல்லை’’ என்று அவர் சொன்னது ஆச்சர்யமான விஷயம்.
நடிகை கஸ்தூரியை பொறுத்தவரை அவர் வெகு ஜாலி டைப் ரொம்ப சோஷியல் –தோளோடு தோள் சேர்த்து பழகாத குறை. யாரையும் எளிதாய் நட்பாக்கிக் கொள்வதாலோ என்னவோ அவரால் `டைம்’ மெயின்டெயின் பண்ண முடிவதில்லை.
லஞ்ச, டின்னர் அல்லது எந்த ப்ரோகிராம் தீர்மானித்தாலும் குறித்த நேரத்தில் அவரால் வரமுடிவதில்லை. யாராவது நட்புடன் அழைத்தால், அவரை பிடித்துவிட்டால் ஹாய்…என்றுச் சொல்லி அவருடன் சேர்ந்து போய் சுற்றிவரும் அஞ்சாத துணிச்சல் அவருக்கு.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டாக்டர் லதாவின் பார்வையில் மஹேஸ்வரி ஜெம். சாதுவாக குடும்பப் பெண்ணாக அவர் அனைவரையும் கவர்கிறார். நேரம் தவறாமை, பேச்சிலும் செயலிலும் வியக்க வைக்கும் அளவில் பண்பாடு காக்கிறார்.
கலை நிகழ்ச்சி முடிந்து, கிஃப்ட் வாங்கி தந்த போது கூட மஹேஸ்வரியும் சரி, அவரது அம்மாவும் சரி, “எதுக்கு இதெல்லாம்? அதான் சம்பளம் கொடுத்துவிட்டீர்கள். நன்றாக கவனித்துக் கொள்கிறீர்கள்…!’’ என்று மறுத்தார்கள்.
அடுத்தமுறை நிகழ்ச்சிக்காக பேசினபோது “உங்களுடன் நன்றாக பழகியாயிற்று. அதனால் அட்வான்ஸெல்லாம் வேணாம். நிகழ்ச்சியைத் தீர்மானித்து தேதியைச் சொல்லுங்கள் போதும் வருகிறோம்.’’ என்றார்கள் பெருந்தன்மையுடன்.
இந்தியன் வுமன்ஸ் லீக் எனும் கேரள பெண்களை கொண்ட அமைப்பு குவைத்தில் இயங்கி வருகின்றது. பல பிரச்சனைகளாலும் பாதுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, அடைக்கலமில்லாமல் அவதிபடும் `ஹவுஸ்மெயிட்’களுக்கு சாப்பாடு, துணிமணி அவர்கள் ஊருக்கு திரும்பிப் போக டிக்கட் என்று இவர்கள் உதவி வருகின்றனர்.
இதற்கு நிதிதிரட்ட வேண்டி இந்த அமைப்பு வருடம் இரண்டுமுறை மேளாக்களும், எக்ஸிபிஷன்களும் நடத்துவதுண்டு. அதில் பிரதானமாய் அங்கம் வகிப்பது நடிகை ரேவதி.
அறக்கட்டளை என்பதாலும், பிறருக்கு உதவுவதற்காக என்பதாலும் ரேவதி பணம் எதுவும் பெறாமல் இலவசமாகவே வந்துப் போகிறார். தான் மட்டுமன்றி தன்னுடன் சுகாசினி, சுகன்யா, போன்றோரையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கி, நிதி திரட்டி தந்துவிட்டு செல்வதை வழக்கமாய் கொண்டிருக்கிறார்.
இவர்கள், தங்குவது ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்றாலும்கூட ரொம்ப சிம்பிள். கமர்சியலாக கடைகளுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ ஒப்புக் கொள்வதில்லை. நடிகை என்கிற கவர்ச்சியை மூலதனமாக்கி ரசிகர்களை மயக்கி கிடைத்தவரை லாபம் என்று பழகுவதில்லை. ரேவதி சுகாசினி இருவருக்குமே அடிப்படையில் உதவும் குணமும், சமூக சேவையில் நாட்டமும் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
முதல்முறை சுகாசினி வந்து சென்றபோது ஊரிலிருந்து அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்படும் ஹவுஸ்மெயிட்களை பற்றி ஊரில் எழுச்சி ஏற்படுத்த வேண்டி சுகாசினி அறிக்கைகள் கொடுக்க-அது குவைத் இந்திய தூதரகம் வரை பிரச்சனையாக்கப்பட்டது.
இந்த மாதிரி ஏமாற்றங்கள் நடக்காமலிருக்க வேண்டி இந்தியாவிலிருந்து ஹவுஸ்மெயிட்களை அனுப்புவதிற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் –என்.ஆர்.சம்பத்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
`இந்தியா ஏழைநாடு, ஏழைகள் நிறைந்த நாடு’ என்கிற மாதிரியான அபிப்ராயம் உலக அளவில் பரவியிருப்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் உலகின் பல பாகங்களிலும் இந்தியர்கள் பெருமளவில் தொழிலிலும், பிசினஸிலும், பெரிய பதவியிலும் கொடிகட்டி பறக்கின்றனர். குவைத்தை எடுத்துக்கொண்டால் எழுபது சதவிகித தொழில்கள் இந்தியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
இதில் தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பவர்கள் பலருமுண்டு. அந்த மாதிரி பெருமை சேர்ப்பவர்களில் திரு.என்.ஆர்.சம்பத்தும் ஒருவர்.
இவர் குவைத் இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்ஸேஞ்ச் கம்பெனியின் ஜெனரல் மானேஜர் குவைத்திலிருந்து ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியாவிற்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. அதில் பெரும்பகுதி இவர்களின் மூலமே அனுப்பப்படுகிறது.
யாராக இருந்தாலும், எந்த ஒரு பெரிய பதவிக்கும் எளிதாய் வந்துவிடுவதில்லை. ஒவ்வொருவருடைய வெற்றிக்குப் பின்னிலும் கடுமையான உழைப்பும், திறமையும் நிச்சயம் இருக்கும் இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
சென்னையைச் சேர்ந்த இவர் இந்து தியோலோஜிகல் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். கடுமையான சட்டதிட்டம், நெறிமுறைகள், ஒற்றுமை, நேர்மை, நாட்டுப்பற்று, இறைபற்று, தியாக மனப்பான்மை, பிறரிடம் அன்பு செலுத்துதல், கடின உழைப்பு, சமுதாய சேவை போன்ற விஷயங்களை பள்ளி தனக்கு கற்றுத் தந்தது என்று பெருமைப்படுகிறார் திரு.சம்பத்.
பத்துவயதிலேயே தந்தையை இழந்த இவரை, இவரது தாத்தாவும் பிரபல வக்கீலுமான என்.சி.விஜயராகவாச்சாரியார் எடுத்து வளர்த்திருக்கிறார்.
தாத்தாவின் பராமரிப்பில் சம்பத் சிறந்த மாணவனாக மட்டுமின்றி, கொள்கை வீரனாகவும் வளர முடிந்தது.“எனது வெற்றிகளும், சாதனைகள் எல்லாமே எனது தாத்தாவால் கிடைத்தவையே ‘’ என்று சம்பத் உருகுகிறார்.
லயோலாவில் எம்.காம்.முடித்து அங்கேயே லெக்ச்சரராக பணியில் சேந்தார். அந்த சமயம் வங்கி தேர்வு எழுதி ப்ரபேஷனரி ஆபீசராக ஸ்டேட் பாங்கில் சேர்ந்தார். 37 வருடம் SBI யில் சர்வீஸ் பார்த்திருக்கிற சம்பத்தின் விருப்பமான சப்ஜெட் –NRI பற்றியது. இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் பணிபுரிந்திருக்கிற சம்பத் –உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்து NRI பத்திரங்களை மார்க்கட் பண்ணியிருக்கிறார்.
NRI சர்வீஸில் அவரது நட்பான அணுகுமுறையும், பிரச்னைகளை சுமுகமாய் தீர்த்து வைக்கும் திறமையும் வங்கிக்கு பலவிதங்களில் உதவியிருக்கின்றன.
சம்பத், இந்தியாவில் பலவித பயிற்சிகளும் பெற்றதுடன் ஜெர்மனி BHF பேங்கில் சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார்.
இவர் கடைசியாக பேங்க் ஆபிசர்களுக்கு முக்கியமான பயிற்சி ஸ்தாபனமாக இருக்கும் ஸ்டேட்பாங்க் ஸ்டாஃப் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்திருக்கிறார்.
“ஸ்டேட்பாங்கில் எனது பயிற்சியும், பெற்ற அனுபவமும் என்னை தொழில் ரீதியாக சிறந்த ஒரு பேங்கராக ஆக்கியிருக்கிறது.ஸ்டேட் பாங்க் மூலம் கடின உழைப்பு, நேர்மை,நாணயம், டீம் ஓர்க் போன்றவற்றை கற்றுக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் சம்பத் பெருமையுடன்.
குவைத்தில் 1982 முதல் 5 வருடங்கள் இதே கம்பெனியில் பணிபுரிந்திருக்கிற சம்பத் இப்போது குவைத் இந்தியா எக்ஸேக்சின் தலைமைப் பொறுப்பை ஏற்று-இந்தியர்களுக்கு சிறந்த சர்வீஸ் கொடுப்பதற்கு பலவித திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
எந்த ஒரு வெற்றிக்கும் டீம் ஓர்க் தேவை எனது சக ஊழியர்களும் எனக்கு பெருமளவில் ஒத்துழைப்பு தருகின்றனர்.
சம்பத்தின் மனைவி திருமதி மாலினியும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் 15 வருடங்கள் ஆபீஸராக பணிபுரிந்து குடும்பத்தை கவனிக்கவேண்டி விடுப்பு பெற்றவர். மகன் அரவிந்த் மும்பையில் படித்து வருகிறார்.
சம்பத்திற்கு பக்க பலமாயிருக்கும் மாலினி, இசையில் அதிக நாட்டமுள்ளவர்.
சம்பத்தின் பொழுபோக்கு, இந்தியன் மற்றும் வெஸ்டர்ன் மியூசிக், சுற்றலா செல்லுதல், மானேஜ்மெண்ட் சம்பந்தமான புத்தகங்கள் படித்தல்.
சொந்த திறமையுடன், மனிதநேயம் வளர்த்து இந்திய சமுதாயத்திற்கு உதவி செய்து, அதன்மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி, கம்பெனியை என்றும் முதல் இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது இவரது ஆசை.
வி.ஐ.பி க்களோடு வி.கே.பி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு நாள் என் ஆபீஸ் தொலைபேசி மணி ஒலித்தது. தொலைபேசியை எடுத்தேன். மறுமுனையில் “என் பெயர் மோகன்தாஸ் Frontliners என்று ஒரு புத்தகம் தயாரிக்கிறேன், அதுவிஷயமாக உங்களைச் சந்திக்க வரலாமா?’’ என்றார். நான் குறிப்பிட்ட நேரத்தில் அவர் வந்தார் மிக எளிமையான தோற்றம். நூறு நாவல்களுக்குமேல் எழுதியவர் –வார பத்திரிகைகளுக்கு தொடர்ந்து எழுதுபவர். ஒரு சிறுகதை பத்திரிகையில் பிரசுரமானாலே தலைகால் புரியாமல் தடுமாறும் மக்கள் மத்தியில் இப்படி ஒருவரா? எழுத்தோடு சமூகசேவை, மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனம்; எதிலும் தீவிரம்-இவைதான் என்.சி.மோகன் தாஸ்.வெறும் தொலைபேசியில் தொடர்பு வளர்ந்து, நெருங்கிய நண்பராகிவிட்ட முதல் வி.ஐ.பி இவர்தான். இவரின் அறிமுகம்தான் என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
அரசியல் உலகமே வியந்து பாராட்டிய ஒரு மேதை. இந்திய பொதுத் தேர்தலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர், உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர். இப்படி பெருமைகளைச் சேர்த்துக்கொண்ட திரு.டி.என்.சேஷன் அவர்களுடன் நானா? அதுவும் அவருடன் இருந்து, விழாக்களில் கலந்து கொண்டது மட்டுமல்ல, அவருக்கு பிரத்தியேக விருந்து உபசாரம் செய்து, அவருடன் அமர்ந்து உரையாடி, விமான நிலையம் வரை சென்று வழியனுப்பியது ஒரு இனிய அனுபவம் மட்டுமல்ல, எனக்கு ஒரு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி, அதைவிட எனக்கு பெருமையான விஷயம், அவர் இந்தியா சென்று எழுதிய கடிதம். ஒரு உயர்ந்த மனிதரின் உன்னத சிந்தனையை பகிர்ந்துகொண்ட நிகழ்ச்சிகள் என் நினைவில் நிற்கும் நிஜங்கள்.
அந்த வரிசையில், சுப்ரீம் ஸ்டார் சரக்குமார் அவர்களை Fromtliners சார்பில் என்.சி.கோகன்தாஸ் அழைத்து வருகிறார், கார்கில் நிதி திரட்டுகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். அதுவும் நான் பணிபுரியும் ஹோட்டலில், தங்குகிறார், பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். புகழின் உச்சியில் நிற்கும் அவரை புகழ் போதை மயக்கிவிடவில்லை. அவரோடு குவைத் வீதியில் Shoping போன நிகழ்ச்சிகள்,கடைகளில் நுழைந்து பேரம் பேசி பொருள்கள் வாங்கியவை எல்லாம் இனிய நினைவுகள், மிக எளிமையாக பழகும் சரத், நிஜ வாழ்க்கையில் நடிக்கதெரியாத ஒரு சிறந்த நடிகர். எதையும் வெளிப்படையாக பேசும் சரத், எனக்கு கிடைத்த நண்பர்களில் மறக்க முடியாதவர் . சென்னையில் அவரை சந்தித்தபோது, குவைத் நினைவுகள் அவர் மீட்டி மகிழ்ந்தது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி.
கவியரசு வைரமுத்து அவர்களும், ராணி ஆசிரியர் அ.ம.சாமி அவர்களும் வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து வரும் விருந்தினர்கள். அனேகமாக எங்கள் ஹோட்டலில்தான் தங்குவார்கள். இவர்களும் அங்கு தங்குவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. கவிதைகளில் ஆர்வம் கொண்ட எனக்கு, கவியரசுவை வரவேற்பதில் பெரிய மகிழ்ச்சி. வைரமுத்து அவர்களுக்கு நகைச்சுவை கலந்த சிந்தனை எப்படி வருக்கிறது? அவருடன் ஒன்றாக உணவருந்தி, ஒரே காரில் பயணம் செய்து, அவரின் பாடல்களை விமர்சனம் செய்து, அவர் எழுதிய பாடலை அவரையே கொஞ்சம் பாட சொல்லி மகிழ்ந்தது மறக்க முடியாத அனுபவம். அவரின் முன்னணியில் நான் மேடையில் எனது கவிதையைப் பாட அவர் அதை பாராட்டி பேசியது எனக்கு நிறைவான நெகிழ்ச்சி, அவரோடு காரில் சென்றபோது அவர் சொன்ன `கடி ஜோக்குகள்’ வயிறு வலிக்க சிரிக்க வைத்தவை. சென்னையில் எனக்குக் கிடைத்த இன்னொரு வி.ஐ.பி நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.
ரவி தமிழ்வாணனுக்கு ஒரு திடீர் வரவேற்பு விழா சுமார் 100 நண்பர்கள் கூடியிருந்த நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக உள்ளே நுழைந்ததும் உடனேயே மேடையில் எனக்கு ஒர் அழைப்பு. ரவி அவர்களை வரவேற்று பேசும்படி. ரவியை இதற்கு முன் நான் சந்தித்ததில்லை. தொலைபேசியில் ஒரு தடவை பேசியதோடு சரி. அவரைப்பற்றி என்ன பேசுவது? எனக்கு சட்டென்று நினைவிற்கு வந்தது தமிழ்வாணனின் கல்கண்டு புத்தகமும் ரவியின் பெரியப்பா திரு. வைரவனும் தான். திரு.வைரவன் அவர்களை எனக்கு எனது கல்லூரி நாட்களிலேயே நல்ல பரீட்சயமுண்டு. வைரவன் அவர்களுடன் நான் பழகிய நிகழ்ச்சிகளை சொன்னதும் ரவி ஆச்சரியத்தில் வியந்துவிட்டார். வைத்திய குறிப்பு பற்றி நான் சொன்ன கிண்டலை இரசித்தார். அன்று அந்த வி.ஐ.பி.யோடு ஏற்பட்ட நட்பு, இன்று பேரூன்றி வளர்ந்துவிட்ட ஆலமரம்.
நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன் குவைத் வந்தபோது தங்கியது எங்கள் ஹோட்டலில்தான். அவர் மீண்டும் இந்தியா செல்லும்போது கண்ணீர் கொப்பளிக்க விடைபெற்ற நிகழ்ச்சி பாரதிராஜா படத்தில் வரும் நிகழ்ச்சியல்ல. அது ஒரு நிஜம். சென்னையில் இருந்து போன் பண்ணும்போது “அண்ணே! எப்படி இருக்கீங்க? எப்ப சென்னைக்கு வாரீங்க?’’ என்று கேட்கும்போது நட்பு மட்டுமல்ல அவரின் நல்ல மனதும் தெரிகிறது.
பாரதிராஜா –பட உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். எங்கள் ஹோட்டலுக்கு அவர் வரும்போது அவரை வரவேற்க வரவேற்பு மண்டபத்தில் காத்திருந்தேன். அவரும் வந்தார். மிக எளிமையாக இருந்தவர். கலைமாமணி யோகா அவர்களோடு வந்திருந்தார். லிப்டில் அவரின் அறைக்கு செல்லும்போது “என்ன என் அறையை மிக உயரத்தில் உள்ள தளத்தில் கொடுத்துவிட்டீர்களே –தலை சுற்றுகிறது’’ என்றார். “இமயத்தின் அறையும் உயரத்தில் தான் இருக்கணும்’ என்று நான் சொல்லவும் வாய்விட்டு சிரித்தார். நான் கேட்ட ஒரு கேள்விக்கு சாப்பாட்டு மேசையில் தாளம் போட்டு இராகத்தோடு பதில் சொன்னதை சிரித்து ரசித்தேன். குவைத் ஆடையை உடுத்திக்கொண்டு Chicken னை ரசித்து சாப்பிட்டது. தனியாக அவருடன் வீதியில் நடந்தது, சினிமாவைப்பற்றி அறையில் விவாதித்தது எல்லாமே ஒரு சுகமான இராகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, `என் நண்பர் பெரியசாமிக்கு இது’ என்று பாரதிராஜா எனக்கு பொன்னாடை போர்த்தி என்னைக் கட்டிக்கொள்ள, நிழல்பட கலைமாமணி அதை படம்பிடித்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. சென்னை சினிமா உலகில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய நண்பர்கள் பாரதிராஜாவும், யோகவும்.
பாரதிராஜா வந்துபோன கையோடு பாலசந்தர். 40 வருடம் சினிமா உலகில் தென்றலாய் வந்து புயலாய் சின்னத் திரையில் வலம் வருபவர். குவைத் வந்தார். அவரால் வெளியிடப்பட வேண்டும் என்பதற்காகவே நண்பர் ரவி தமிழ்வாணன் மூலம் அவரின் மணிமேகலைப் பிரசுரத்தில் அவசரமாக எனது “தளிர்கள்’’ என்ற கவிதைத் தொகுப்பை பிரசுரித்தும் அதை பாலசந்தர் அவர்கள் மேடையில் வெளியிட்டு, என் கவிதைகளை விமர்சித்து பேசியது எனக்கு பெருமை சேர்த்த நிகழ்ச்சி.
அதிகம் பேசாத பாலசந்தர் விவாதிக்கத் தொடங்கினால் கருத்துக்களை கொட்டும் வேகம் என்னை அசத்தியது. அவரோடு பழகி, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, ஒன்றாக நடந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது 3 நாட்கள்தான் என்றாலும் 40 வருட விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இவர் நான் சந்தித்துப் பழகிய இன்னொரு வி.வி.ஐ.பி.
நான் சந்தித்து, பழகின தமிழக வி.ஐ.பிக்கள் வரிசையில் இன்னும் பலர். அரசியல் வித்தகர் பா.சிதம்பரம், நகைச்சுவை பட்டிமன்ற மன்னன் லியோனி, திரைப்பட பாடகர் மனோ, டி.வி.புகழ் வரதராஜன், வெண்ணிறாஆடைமூர்த்தி, சின்னி ஜெயந்த்……. நீண்டு செல்லும் பட்டியல்.
இன்னும் விரிவாய் எழுதலாம் என்று நினைக்கிறேன். (மோகன் தாஸ் கத்தரிக்கோலுடன் மிரட்டுகிறார் பாருங்கள்.) நிறுத்திக் கொள்கிறேன்.
வி.கே.பெரியசாமி, குவைத்.
எல்.ஜி.சி.சேர்மன், திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்மூரில் இப்போதுதான் அயல்நாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் காலூன்ற வழிவகைகள் செய்யப்படுகின்றன. குவைத்தில் நம் எல்.ஐ.சி., பல வருடங்களாகவே உள்ளூர் கம்பெனியான வர்பா இன்சூரன்ஸின் கீழ் இயங்கி வருகிறது.
சமீபத்தில் எல்.ஐ.சி.யின் வளர்ச்சிக்கு வேண்டி அதன் சேர்மன் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி குவைத்திற்கு வந்து மீட்டிங் போட்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு.எல்.ஐ.சி.யை விரிவுபடுத்த அவரது வரவு பெரிதும் உதவியிருக்கிறது.
தனது தகுதியாலும் திறமையாலும் இப்பதவியை பெற்றுள்ள கிருஷ்ணமூர்த்தி எல்.ஐ.சி.பெரிய அளவில் வளர பாடுபட்டிருப்பது நிஜம். பின்னால் என்னென்ன நடக்கும் என்று வரும்முன் கணித்துக்கூறும் அளவிற்கு இவர் ஒரு பிசினஸ் ஞானி என்றும் சொல்லலாம்.
அலுவலர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, தட்டிக்கொடுத்து தங்களின் முழு திறமையையும் பணியில் காட்டவைக்கும் கிருஷ்ணமூர்த்தியிடம் என்ன மாயம் இருக்கிறதோ தெரியவில்லை. எல்.ஐ.சிக்கு இவரது பதவிகாலம்-ஒரு பொற்காலம் என்று சொன்னாலும் அது மிகையாகாது.
கலைமாமணி –வண்ணப்பட யோகா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டைரக்டர் பாலசந்தர் குவைத் மேடையில் பேசும்போது,“இங்கு கவிஞர் வைரமுத்து, டைரக்டர் பாரதிராஜாவெல்லாம் வந்துபோனார்கள் என்று அறிந்தேன். சந்தோஷம், பாரதிராஜாவை எல்லாம் அழைத்து வருவது சாதாரண விஷயமில்லை. அவர் எளிதில் எங்கும் வருபவரல்ல’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அது உண்மை.
பல வெளிநாடுகளிலிருந்தும் அவருக்கு அழைப்பு வந்தாலும் கூட எதையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை, அப்படியே ஒப்புக் கொண்டாலும் மூட் சரியில்லையென்றால் கடைசி நேரத்தில் பயணத்தை கேன்சல் செய்துவிடும் சந்தர்ப்பங்களும் அவருக்கு நேர்ந்திருக்கின்றன.
அப்படிப்பட்டவர் குவைத்திற்கு வர சம்மதித்தார் என்றால் அதற்கு காரணம் கலைமாமணி வண்ணப்பட யோகாதான்.
யோகா இருபது வருடங்களாக எனது குடும்ப நண்பர். அவரது எளிமை, இனிமையாய்ப் பழகும்விதம், அலட்டலில்லாத திறமை, அணுகுமுறை, இடிவிழுந்தாலும் கூட, வெளியே காட்டிக்கொள்ளாத பக்குவம், நட்புக்குக் கொடுக்கும் மரியாதையெல்லாம் அவரிடம் உள்ள தனிச்சிறப்புக்கள்.
இந்திரா காந்தி முதல், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவென்று பலருக்கும் அவர் ஆஸ்தான போட்டோகிராபர். அவருக்கு நெருக்கமில்லாத பிரபலங்கள் இல்லை என்று சொல்லலாம்.
பாரதி கலைமன்றத்தின் (2000 ம் ஆண்டு) பொங்கல் விழாவிற்கு வரதராஜன் –நித்யாவின் நாடகத்தை ஏற்பாடு செய்திருந்தனர். “அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டைரக்டர் பாரதிராஜாவை ஏற்பாடு செய்துதாருங்கள்’’ என்று அன்றைய தலைவர் திரு.செந்தமிழ் அரசுவும் செயலாளர் திரு.சாக்ரடீஸீம் என்னிடம் சொன்னார்கள்.
“பெரிய அளவில் பட்ஜெட் இல்லை. இருந்தாலும் அவர் வந்தால் நமக்கெல்லாம் பெரிய கெளரவமாக இருக்கும். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று அன்புக் கட்டளையிட்டனர்.
நானும் சரியென்று நண்பர் யோகாவிடம் விபரம் சொல்லி,“இங்கே தற்சமயம் பட்ஜெட் இல்லை எப்படியாவது டைரக்டரை அழைத்து வந்தாக வேண்டும்’’ என்று உரிமையுடன் உத்தரவிட அவர் என்ன மாயமந்திரம் செய்தாரோ தெரியவில்லை, பாரதிராஜாவை (அன்பால்) மயக்கி, பாசத்துடன் சம்மதிக்க வைத்து அழைத்து வந்துவிட்டார். பட்ஜெட் பற்றாகுறை என்றதும் விமானத்தில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ததுடன் இருவருக்கும் ஒரே ரூம் போதும் என்று தங்கினதும் பாரதிராஜாவின் சிறப்பு.
Frontliners
சென்னை வெளியீட்டு விழா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Frontliners புத்தகத்தின் முதல் பகுதி முதலீடு இதழ் ஆசிரியர் திரு. அரிதாசனால் புத்தகமாக்கப்பட்டு, இலக்கியவீதி அமைப்பின் மூலம் சென்னை நாரதகான சபா மினி ஹாலில் வெளியிடப்பட்டது.
திரு.மூப்பனார் அவர்களிடம் தேதி வாங்குவதில் சிரமம் இருந்தாலும், குறித்த நேரத்தில் அவர் வந்தது சந்தோஷமான விஷயம்.
புத்தக வெளியீட்டு விழாவில் என்னதான் கவனம் செலுத்தினாலும் ஏதாவது விட்டுப் போகக்கூடும். முக்கிய விஷயமான புத்தகத்தை கிஃப்ட்பேக் பண்ணாமல் விடுபடும் சம்பவம் அங்கும் நிகழ்ந்தது.
அடுத்தது-நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவேண்டிய செந்தமிழ் அரசு அவர்கள் அலுவலம் காரணமாய் சென்னைக்கு புறநகரில் மாட்டிக் கொண்டு வர இயலவில்லை.
என்னடா இது –குருக்கள் இல்லாமல் கல்யாணம் எப்படி –என்ன செய்வது என்று பதற்றத்திலிருக்க, தினமலரின் செய்தியாளரான நூருல்லா அவர்கள்-“கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்’’ என்று மேடை ஏறி, அடுத்த நிமிஷமே மிக பிரமாதமாய் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். (ஆபத்பாந்தவன்!)
பிறகு அரசு வந்து சேர்ந்ததும், அவர் பிக் அப்பண்ணிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இன்று ஒரு தகவல் தென்கச்சி சுவாமிநாதன், திருவாளர்கள் சன் டி.வி.வீரபாண்டியன், இனியவன், கல்கி ராஜேந்திரன், லேனா, குவைத்திலிருந்து ஆனந்திநடராஜன், பாலம் கல்யாணசுந்தரம், விஜய் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை நல்கினர்.
எனது மானசீக குருவான சுஜாதா அவர்கள் அன்புடன் இசைத்து, மேடை ஏறி பேசியது எனக்கு மாபெரும் கெளரவமாயிருந்தது. (எழுத்தின் வேகத்தையும் ஊட்டத்தையும், வீரியத்துடன் கற்றுக்கொண்டாது அவரிடம் தானே!)
எஸ்.வி.சேகர், தான் பாம்பேக்கு ஏழரைமணி விமானத்தில் பறக்கணும், -அதற்கு முன்பு வாழ்த்திவிட்டுப் போகிறேன் என்று வந்து-வாழ்த்திவிட்டு-பறந்தார்.(ஆனால் அவர் ஏர்போர்ட் போவதற்குள் விமானம் பறக்க ஆரம்பித்து விட்டது சங்கடம் சாமி)
அமைச்சர் கே.என்.நேரு, வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வதாக இருந்தது. ஆனால் வேறு ஒரு அவசர வேலை காரணமாக, அவர் வரமுடியாமல் போக, தன் சார்பில் நடிகர் நெப்போலியனை அனுப்பியிருந்தார்.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதன் மூலம் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.
`பாலைவன சொர்க்கம்’ வெளியீட்டு விழா மூலம் உதவும் கரங்கள் வித்யாகரை அழைத்து, பேசவைத்து தையல்மிஷன் வழங்கினோம்.
இந்த நிகழ்ச்சி மூலம்- எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதியில்லாமலிருந்த அரசாங்க பள்ளிக்கூட்டத்திற்கு “தண்ணீர் பேங்க்’’ கட்டிக் கொடுத்தது-ஆத்மதிருப்தி தரும் விஷயம்.
“இந்த வெளியீட்டு விழாவில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று திண்டுக்கல் சென்று –பட்டிமன்ற புயல் திரு.லியோனியை சந்தித்து அழைத்தேன்.
“இதுக்கு எதுக்கு நேரில் வந்து அலையறீங்க-ஒரு போன் பண்ணினால் போதும் ஓடி வந்திருவேனே’’ என்றவர் தன் சகாக்களான பால்ராஜ், குயிலனுடன் தவறாமல் வந்து கலந்துகொண்டார்.
மேடையில் அதிக அளவில் பேச்சாளர்கள் இருக்கக்கூடாது –நிகழ்ச்சி நீண்டு போய் பார்வையாளர்களுக்கு சலிப்பாகிவிடும் என்பார்கள்.
எனது நிகழ்ச்சிகளில் எப்போதுமே மேடையிலும் கூட்டம் அதிகமிருப்பதுகூட வாஸ்தவம் அப்படியிருந்தாலும் சலிப்பு ஏற்படாத வகையில் இன்னும் கொஞ்ச நேரம் பேசமாட்டார்களா –என்று நினைக்கும் அளவிற்கு எல்லாருமே கச்சிதமாய் நச்சென்று பேசுவதே வழக்கம்.
அன்று விழாவின் கடைசி பேச்சாளராக லியோனி அழைக்கப்பட்டார். மனிதர் மைக்கைப் பிடித்ததும் தனது நகைச்சுவையா அரங்கத்தையே அதிரவைத்துவிட்டார். (மூப்பனார் அவர்கள் கூட விழுந்து விழுந்து சிரித்தது, காணக்கிடைக்காத காட்சி) வழக்கம்போல தினமலர் அந்துமணி பார்வையாளர்களிடையே அமர்ந்து, ஒரு தாயின் பரிவுடனும் பாசத்துடனும், தன் சிஷ்யனுக்கு கிடைக்கும் பாராட்டை பெருமிதத்துடன் ரசித்து, யாருக்கும் தெரியாமல் வழக்கம் போல நழுவிவிட்டார்.
வி.ஐ.பி.களின் சாப்பாடும், தங்குமிடமும்
குவைத்தைப் பொருத்தவரை வருகிற விருந்தினர்களுக்கு உபசரிப்போ, சாப்பாடு பிரச்சனையோ இருந்ததேயில்லை. வி.ஐ.பிகளுடன் எப்போதும் ஒரு படை துணைக்கு இருக்கும் உதவிக்கு.
அதுவும் நாங்கள் அழைத்து வரும்போது சொல்லவே வேண்டியதில்லை. நம் வி.ஐ.பிகளை பெரும்பாலும் நண்பர் பெரியசாமியின் பிளாசா ஹோட்டலில் தங்க வைத்துவிடுவோம். அல்லது SAS Hotel சிலருக்கு வீடு செளகர்யம் என்றால் வீட்டிலேயே ஜாகை போடுவதுண்டு.
வி.ஐ.பிகள் எத்தனை நாட்கள் தங்குகிறார்கள் என்பதைத் திட்டமிட்டு, காலை, மதியம், இரவு என கணக்கிட்டு, நண்பர்கள் வீடு அல்லது ஒவ்வொரு நேரமும், லோக்கல் வி.ஐ.பிகளின் பொறுப்பில் ஏற்பாடு செய்யப்படும்.
இது தவிர, Frontliners புத்தகம் மூலம், இங்குள்ள நம்பர்-ஒந் முகல்மஹால் ரெஸ்டாரெண்ட், ஓரியண்டல், வில்லேஜின், தாஞ்சூர் ரெஸ்டாரெண்ட் சீசார், தர்பார் ரெஸ்டாரெண்ட் போன்றவற்றில் பெருமையுடன் அவர்களே விருந்தளிப்பார்.
முகல்மஹாலில் அதன் அதிபர்களான திருவாளர்கள் அசோக் கால்ரா, சூரி, முகேஷ்குமார், ஓரியன்டல் ஷெட்டி, வில்லேஜின் சகாரியா என்றும் உதவிகரம் நீட்டுபவர்கள்.
இது தவிர –தமிழ் வி.ஐ.பிகள் யார் வந்தாலும் சரி, அல்சஃபி எனப்படும் திருச்சி ஹோட்டலுக்கு விஜயம் செய்யாமல் போவதில்லை. டெல்லி பாஷாவும், பாவா சாஹிப்பும் அங்குள்ள அன்வர்,அக்பர் என அனைவரும் நம் வி.ஐ.பிகளை திக்கு முக்காட வைத்து விடுவது வழக்கம். ஹசாவியிலுள்ள ஹோம்டைப் ரெஸ்டாரெண்ட்டும் பிரபலமான ஒன்று.அங்கு நம்மூர் இட்லி, தோசை, முதற்கொண்டு அனைத்தும் பிரசித்தம்.
நம்மூர் ஐட்டங்களுடன் அரபி உணவும் சுவைக்க விரும்புவர்களுக்கு அரபி ரெஸ்டாரெண்ட்களுக்கு அழைத்துப் போவதுண்டு. (உப்பு, புளி-காரமில்லாமல் சவ-சவ்வென தயாரிக்கப்படுவதுதான் அரபி வகைகள்!)
பெத்தபெருமாள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பரபரப்பாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டு சமூகசேவை செய்பவர்களும் உண்டு. அடக்கமாய், சத்தமில்லாமல் பிறருக்கு உதவி செய்பவர்களும் உண்டு.
Kuwait Institute for scientific Research கம்பெனி மெயின்ட்னென்ஸ் என்ஜினியராக பணியாற்றி வரும் திரு.பெத்தபெருமாள் இதிக் இரண்டாம் ரகம்.
பார்வைக்கு சாதுவாகவும், அமைதியாகவும் தெரியும் இவர் பாய்ந்தால் புலி. பலதரப்பட்ட மக்களையும், விஷயங்களையும் கிரகித்து, உலக அளவிலான பிரச்சினைகளை, பிராக்டிகலாக அணுகும் விஷய ஞானியாக நிகழ்கிறார்.
ராமனாதபுரம் கண்டனூரைச் சேர்ந்த (முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தின் ஊர்) இவரது வீட்டில் ஐந்து உடன் பிறப்புகள்.
அழகப்பா என்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் என்ஜினியர் பட்டம் பெற்று, கோவை ஈஸ்வர் இண்டர்ஸ்ட்ரியின் உற்பத்தி பிரிவில் பணிக்கு சேர்ந்தார்.
பிறகு மதுரை செல்லுலூஸ் புராடக்டஸ் மெமிக்கல் தொழிற்சாலையில் புராஜக்ட் என்ஜினியராக இரண்டு வருடங்கள் வேலை பார்த்தார். அந்த சமயம் வோல்டாஸ் சர்வீஸ் மானேஜரான S.S. வெலிங்கர் அங்கே வந்தவர், பெருமாளின் திறமையைப் பார்த்து தன் கம்பெனிக்கு அழைத்துப் போனார்.
வோல்டாஸில் சப்காண்ட்ராக்ட் எடுத்து சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பெருமான் பத்து வருடங்கள் கவனித்து வந்தார். பிறகு அங்கே கான்ட்ராக்டில் போட்டி வந்துவிட்ட சமயத்தில் இவருக்கு குவைத் வாய்ப்பு வந்தது.
ஒரு சமயம் பம்பாய்க்கு உபகரணங்கள் வாங்க வேண்டி போயிருந்த போது பிரபல பதர்முல்லா கம்பெனியின் டைரக்டர் அங்கு வந்திருந்தவர், பெருமானைத் தன் கம்பெனிக்கு அழைத்தார்.
அங்கு பத்துவருடங்கள் பணியாற்றினார். பிறகு ஸ்விஸ் கன்சல்டன்ட் கம்பெனியில் எலக்ட்ரிகல் கன்சல்டன்ட்டாக குவைத் லிபரேசன் டவர் பணியைக் கவனித்துக்கொண்டார்.
சதாம் யுத்தத்திற்கு ஆறுமாதம் முன்பு இந்த KISSR சேர்ந்து சண்டைக்குப் பிறகு முதல் குரூப்பிலேயே திரும்ப வேலைக்கு அழைக்கப்பட்டு மெயின்ட்னென்ஸ் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
மனைவி அழகம்மை இவருக்கு குடும்பத்திற்கும் பக்கபலம். இவர்களின் மூன்று வாரிசுகளில் ஒரு மகனும், மகளும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகியுள்ளனர். பிள்ளைகளும் சரி, மருமக்களும் சரி எல்லோருமே கம்ப்யூட்டர் துரை வித்தகர்கள்.
இரண்டாவது மகள், சென்னை வைஷ்னாவில் எம்.எஸ்.ஸி படித்து வருகிறார்.
பெருமாளின் நிலை நிற்பிற்கும், வளர்ச்சிக்கும் காரணம்-சக ஊழியர்களையும் மதித்து, அன்பாய் அணுகி வேலை வாங்குவதுதான். “மிரட்டி உருட்டி பணிய வைப்பதைவிட, ஒரு விஷயத்தை பக்குவமாய் தெளிவுபடுத்திவிட்டால், அவர்களும் முழு ஈடுபாட்டுடனும், வேகமாகவும் செய்து முடித்து விடுவர்.’’
“எந்த ஒரு வேலையாகட்டும் தொழிலாகட்டும் நல்லுறவு ரொம்ப முக்கியம். எக்காரணம் கொண்டும் நான் வேலையிலோ, தரத்திலோ விட்டுக்கொடுப்பதில்லை. எனது பலமே வேலையின் திறமைதான்.
செய்வதைத் திருத்தவும் செய்ய வேண்டும் காலத்தோடும் செய்ய வேண்டும் என்பது எனது கொள்கை.
காலம் தவறினால் பல விஷயங்கள் காணாமல் போய்விடக்கூடும். இது அவசர உலகம் போட்டி உலகம். அதனால் நமக்கு திறமை மட்டும் இருந்தால் போதாது. அதை உரிய நேரத்தில் வெளிப்படுத்தவும் வேண்டும் அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.’’
பெருமாளுக்கு இளகிய மனது. உதவி என்று யார் வந்து கேட்டாலும் மறுப்பதில்லை. முடிந்த அளவிற்கு செய்து கொடுத்துவிடுவார். இதுவரை 250 பேர்களுக்கு மேல் குவைத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வேலை வாங்கி கொடுத்திருப்பது இவரது சிறப்பு.
குவைத்தில் உள்ளூர் பெரும்புள்ளிகளுடன் இவருக்கு நல்ல நட்பும் தொடர்பும் இருந்து வருகிறது. யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் இவர், அந்த செல்வாக்கை வைத்து சிக்கலை தீர்த்து வைத்துவிடுவார்.
பக்தி, தன்னிடம் உதவி பெற்றவர்களின் அன்பும் பிரார்த்தனையும் தனக்கு மாபெரும் பலம் என்று பெருமிதப்படுகிறார் பெருமாள்.
ஜி.கே. ராமகிருஷ்ணன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொதுஜனசேவை என்பது எல்லாருக்கும் முடிகிற காரியமில்லை. அதற்கு முதலில் ஆழ்ந்த அன்பும் மனிதாபிமானமும் வேண்டும். சகிப்புத் தன்மையும் சொந்த சுகங்களை விட்டுக் கொடுத்து எடுத்துச் செய்யும் மனோபாவமும் வேண்டும். சுயநலம் மறக்கணும் வரட்டு கெளரவத்தைக் தவிர்க்கணும். அப்போதுதான் உண்மையாகவும் நேர்மையாகவும் சேவை செய்யுமுடியும் இந்த மாதிரி பிரகாசிப்பவரில் திரு.ஜி.கே ராமகிருஷ்ணனும் ஒருவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கை கொண்டான் ஊரில் பிறந்து அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்து, மெரின் என்ஜினியரிங் Directorate of Marine Engineer Training மற்றும் கல்கத்தாவில் முடித்தவர்.
இவரது தாத்தா ஜி.ஆர்.கிருஷ்ணன் ஊரில் மிகப் பிரபலமாய் இருந்தவர் மகாத்மா காந்தியால் கவரப்பட்டு, அவரது கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர். அந்த நாளிலேயே ஹரிஜன்களை கோயிலுக்குள் அனுமதித்து, தீண்டாமைக் கொடுமையை விரட்ட உதவினார்.
ராமகிருஷ்ணன் தனது இளமைப் பருவத்திலிருந்தே தன் தாத்தா மூலம்,காந்தி,சுவாமி சிட்பவானந்தா போன்றவர்களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு,அவற்றைக் கடைபிடித்தும் வருகிறார்.
ராமகிருஷ்ணன், சரஸ்வதி கிருபையால் DMET சிறப்பாகப் படித்து. இந்தியா –அயல்நாடுகளில் ஜீனியர் முதல் சீஃப் என்ஜினியர் வரை பிரமாதமாய் வளர்ந்தார். இவர் Maritime Safety and Personal மற்றும் Safety Servival –Qualify Control ஸ்பெஷலைஸ் பண்ணினவர்.
11 வருட அனுபவத்திற்குப் பின் 1990 UK ஷிப்பிங் கம்பெனியில் சேர்ந்து, அங்கு நான்கு வருடமும் பிறகு 5 வருடங்கள் ஹாங்காங்கிலும் பணியாற்றி, 1999-ல் Kuwait Oil Tanker Co-வில் Fleet Quality Control சூப்பரிண்டென்ட்டாகப் பணிபுரிந்து வருகிறார்.
கல்லூரி நாட்களிலேயே ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தரின் வாழ்க்கையைக் கற்று. அவற்றைப் பரப்பி வருகிறார்.
ஸ்ரீராம கிருஷ்ண மடம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்துடனும் நெருக்கமான தொடர்பு கொண்டு சேவை செய்து வருகிறார்.
சொந்த ஊரில் விவேகானந்தர் போதனைக் கூடம் நிறுவி இளைஞர்களுக்குச் சமூக சேவைக்காக உதவி வருகிறார்.
தமிழ் இலக்கியம், பக்தி நூல்கள் படிப்பதும், தமிழ் கருந்தரங்கங்களில் கலந்துகொள்வதும் இவரது பொழுதுபோக்குகள். குவைத் பாரதி தமிழ்மன்றம் மற்றும் SIARA அமைப்புக்களில் துணைத்தலைவர் பதவியுடன், குவைத் ராமகிருஷ்ணா ஸ்ட்டி சென்டரிலும் பங்கு வகிக்கிறார்.
ராமகிருஷ்ணனின் மனைவி திருமதி டாக்டர் கோமதி மதுரையைச் சேர்ந்தவர். Internal Medicine ல் MD படித்து குவைத் ALJAHRA ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார். இவர்களுக்கு அபிநவ் எனும் மகன் உண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக