Yāḷi muṭṭai
சிறுகதைகள்
Backயாளி முட்டை
சிறுகதைத் தொகுப்பு
பா. ராகவன்
எப்போதும் நான் பிரமிக்க என்னத்தையாவது ஒளித்து வைத்து எழுதும் பேயோனுக்கு.
முன்னுரை
இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான்.
குமுதத்திலும் ஜங்ஷனிலும் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எதற்காகவாவது format செய்யவேண்டி நேர்ந்து அதிலும் பல அழிந்து போனது. Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஜிமெயில் காலத்துக்குப் பிறகுதான் எழுதியவை இல்லாது போகவாய்ப்பில்லை என்றானது. அக்காலம் வந்தபோது நான் சிறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.
எதிலும் ஒழுங்கில்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என் ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகிப் போனது எம்பெருமான் சித்தம். பெரிய இழப்பு ஒன்றுமில்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலில்லை.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பிலும் இல்லை. கல்கி, அமுதசுரபி, குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. சில கதைகள் எனது இணையத் தளத்தில் மட்டுமே பிரசுரமானவை. பிரசுரம் சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதிர்ந்துபோனபிறகு எழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கிறது. இலக்கிய ரப்பர் ஸ்டாம்புகளுக்காகவோ, விருது கிளுகிளுப்புகளுக்காகவோ எழுதாமல் முற்றிலும் என் சொந்த சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதிய கதைகள் இவை.
உங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காது போனாலும் பிரச்னையில்லை.
ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமிழில், குறிப்பாக என்னுடைய தலைமுறையில் என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக எழுதக்கூடிய எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிட்டாத சில அபூர்வ நல்வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரில் பேசிப் பழக முடிந்திருக்கிறது. கடிதத் தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. உட்கார்ந்து அரட்டையடிக்க முடிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதிக்கு மீறியவை. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சிறந்த இலக்கியமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தியமும் இல்லை. மாதம் பிறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும், படுத்த வினாடி வருகிற உறக்கமும், பிரச்னையற்ற சூழலும், சுக சௌகரியங்களும் அனுபவிக்கக் கிடைக்கும் வாழ்விலிருந்து இலக்கியம் பிறக்காது.
அதற்குச் செருப்படி படவேண்டும். வலி மிகுந்த வாழ்விலிருந்தே பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்கி பட்ட பாடுகளை இன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்தி காட்டும் உலகை இன்னொருத்தன் காட்டிவிட முடியுமா. அசலான இலக்கியமென்றால் அது. நான் அந்த ரகமல்ல. வேறெந்த ரகமும் அல்ல.
என் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது விஷயம்.
பா. ராகவன்
30 மே 2015
உண்ணி
எதிர்வீட்டு மாலதி ஒரு பூனை வளர்த்துக்கொண்டிருந்தாள். பூனைக்குட்டி என்றும் வளர்ந்த பூனை என்றும் சொல்ல முடியாத பருவத்துப் பூனை அது.
கல்லூரிக்குச் செல்லும் நேரம் நீங்கலாக மாலதியைப் பெரும்பாலும் அந்தப் பூனையுடன் தான் பார்ப்பேன். வாசல் படியில் அமர்ந்து அதன் ரோமத்தைக் கோதிவிட்டுக்கொண்டோ , அதன் மூக்குடன் தன் மூக்கை உரசி விளையாடிக்கொண்டோ இருப்பாள்.
பூனையின் மேனி பார்க்கமட்டுமே பரிசுத்தம். எத்தனை கிருமிகள், உண்ணிகள் இருக்குமோ? ஐயோ, இந்தப்பெண் ஏன் இப்படி ஈஷுகிறாள்; உடம்புக்கு ஏதாவது வந்துதொலைக்கப் போகிறதே என்று எனக்குத் தான் எப்போதும் பதறும்.
எதிர்வீடு தான் என்றாலும் எங்காவது பார்த்தால் அடையாளம் கண்டு அரைப் புன்னகை செய்யுமளவு மட்டுமே எங்களுக்குள் நெருக்கம் என்பதால் கொஞ்சம் தயங்கினேன். போயும் போயும் முதல் சம்பாஷணையைப் பூனை உண்ணியிலிருந்தா தொடங்குவது?
ஒரு நாள் நட்ட நடு ராத்திரி ஒன்றுக்குப் போகவென எழுந்திருக்க வேண்டியதானது. உறக்கம் கலைந்ததால் கொஞ்சம் வெளியே வந்து இரவின் மரகத வெளிச்சத்தை அனுபவித்தபடி சற்று நின்றேன்.
தற்செயலாக எதிர்வீட்டு மொட்டைமாடியைப் பார்த்தால், அங்கே மாலதி! எப்போதும் போல் அப்போதும் அவள் மடியில் அந்தப் பூனை. என் யூகம் சரியானால், அவள் அப்போது அந்த ஜந்துவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
மிகத் தீவிரமாக.
என் வியப்பு அதுவல்ல; பூனையும் தன் மொழியில் கிசுகிசுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருந்தது தான்.
இது என் பிரமை, அல்லது தூக்கக் கலக்கத்தின் காரணமாயிருக்கும் என்று நினைத்தேன். ஒரு வேளை அவள் சித்தம் பிறழ்ந்தவளாக இருப்பாளோ? ஐயோ பாவம் வயசுப் பெண். நாளைக்கே கல்யாணமாகி புருஷன் என்றொருவன் வந்தால் , இதைக்கண்டு என்ன சொல்வான்? ஜீவ காருண்யம் உத்தமமானது தான். ஆனால் இது வேறுவிதமாகவல்லவா இருக்கிறது?
அவள் தன் பூனைக்கு வெங்காய சாம்பார் சாதமும் தக்காளி ஜூஸும் பாப்கார்னும் (ரகசியமாக) பான்பராகும் தருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போதே அவளிடம் இல்லாவிட்டாலும் அவளது பெற்றோரிடம் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். எதுவோ என்னை அப்போதெல்லாம் தடுத்தது.
ஆனால் இந்த அர்த்தராத்திரி கூத்தைப் பார்த்தபின் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
விடியட்டும் என்று காத்திருந்தேன். பல் கூடத் துலக்காமல் நேரே அவள் வீட்டுப் படியேறி, கதவைத் தட்டிவிட்டு நின்றேன்.
சில விநாடிகளில் கதவு திறந்தது. அவர் எதிர்ப்பட்டார். படபடவென்று விஷயத்தைக் கொட்டிவிட்டு, கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் வீட்டுக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டேன்.
அடுத்த சில நாட்களில் அவள் மீண்டும் என் பார்வையில் தென்பட்டபோதெல்லாம் பூனை இல்லாமல் தான் இருந்தாள். ஆனால் முகம் மட்டும் வாடியிருந்தது போலிருந்தது. நான் ஏதும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
விரைவில் அவள் சகஜநிலைமைக்குத் திரும்பியதையும் கவனித்தேன். பூனையை மறந்துவிட்டாள் போலிருக்கிறது .
எனக்கு அரிக்க ஆரம்பித்தது.
உற்றார்
பூமியாகப்பட்டது, தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தபோது, மீனாட்சி மாமியின் எண்பது வயதுக் கணவருக்குப் பக்கவாதம் வந்தது. அதே பூமி சூரியனையும் சுற்றி வந்தபோது மீனாட்சி மாமிக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து உடம்புக்கு முடியாமல் போய் ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டார்.
காலனி முழுக்க அதுதான் பேச்சு. ஐயோ பாவம் மாமி. படுக்கையை விட்டு எழமுடியாத கணவரை நினைத்தபடியே ஆஸ்பத்திரியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருப்பார். பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் இல்லை. காலனியில் உள்ள முப்பது குடித்தனக்காரர்களுக்கும் மாமி என்றால், சொந்தமாகப் பெற்று எடுத்த அம்மாவைப் போல ஒரு இது. சிநேகிதங்களைத் தவிர சொத்து எதுவும் சேர்த்து வைத்திராத மாமி. கோடையில் இலை வடாமும் மாங்காய் வற்றலும் கொண்டைக்கடலை ஊறுகாயும் போட்டுக்கொடுத்து, வாடாத உறவுகளை எப்போதும் உறுதிப்படுத்திக்கொண்டுவிடுகிற மாமி.
மாமி, உங்களுக்கு மட்டும் கைமுறுக்கு எப்படி இப்படித் தாமரைப்பூவா அமையறது? மாமி, புளியோதரை வாசனை தூக்கி அடிக்கிறதே? மாமி, நீங்க காப்பிதான் போடறீங்களா? உங்க காப்பிக்குன்னு ஒரு ஸ்பெஷல் வாசனை எப்படியோ வந்துடறதே. மைகாட், மாமி எப்படி வீட்டை இவ்ளோ சுத்தமா வெச்சிக்கறேள்? பின்றேள் போங்கோ.
அற்ப விஷயங்களின் தேவதையாகத் தனது எழுபதாவது வயதில் மாமி அந்தக் காலனியில் அறியப்பட்டார். உடம்புக்கு முடியாத கணவரும், உதவிக்கு ஆளில்லாத வாழ்க்கையும் வருத்தம் தரக்கூடியவைதான். ஆனாலும் பிரச்னையில்லை. வாழ்க்கை அழகானது. அர்த்தமுள்ளதாக்க வேண்டியதும் அவசியமானதே. வலியச்சென்று ஒரு பாட்டில் ஊறுகாய் போட்டுக் கொடுத்து வாழ்நாள் விசுவாசத்தை வாங்கிவிட முடிகிறது. உடனடியாக எதுவும் பிரதியாகச் செய்யவேண்டுமென்பதில்லை. கட்டையைக் கிடத்தினால் எடுத்துப் போட நான்குபேர் வேண்டித்தானே இருக்கும்?
மாமி, மாமாவுக்கு சிசுருஷை செய்த நேரம் போக, சுலோக கிளாஸ் எடுக்கிறேன் என்று அறிவித்தார். பக்தி எப்போதும் விலைபோகக் கூடியது. வேலைகள் ஒழிந்த பதினொன்றரை மணிக்குப் பத்துப் பன்னிரண்டு பெண்கள் அவரிடம் சுலோகம் கற்றுக்கொள்ள வரத்தொடங்கினார்கள். ஸ்ரீசூக்தம். லஷ்மி அஷ்டோத்திரம். கனகதாரா ஸ்தோத்திரம். லலிதா சஹஸ்ரநாமம். மாமி, ஃபீஸ் எவ்ளோன்னு சொல்லுங்கோ. சீ போடி, அதெல்லாம் பேசப்படாது.
அவர்கள் மாமியிடமிருந்து நிறைய பெற்றவர்கள். அதனால் அவர்களுக்கு ஒரு பிரச்னையென்றால் யாரும் விட்டுவிடக்கூடியவர்கள் இல்லை. சி பிளாக் அகிலா, மாமாவுக்குக் காலை டிபன் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். ஏ-டூ சந்தான லட்சுமி மதிய உணவு தன்னுடையது என்று சொன்னாள். மாமா இரவில் சாப்பிடுவது வெறும் கஞ்சிதான். அது ஒரு பிரச்னையா? பக்கத்து போர்ஷனில் இருக்கிறேன். நான் செய்ய மாட்டேனா என்று காயத்ரி கேட்டாள். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு இளைப்பாற இடமில்லாமல் இல்லை.
மாமாவின் மாத்திரைகள், மாமாவின் பெட்-பேன், மாமாவின் டிரான்சிஸ்டருக்கு வீரியம் குறையா ட்யூராசெல், அவ்வப்போது சைகை செய்தால் நெஞ்சு நனைக்கக் குடிநீர், பக்கத்திலிருந்து எப்போதும் கவனித்துக்கொள்ள ஷிப்ட் முறையில் பொறுப்புள்ள நபர்.
மாமி, கவலையே படாதீர்கள். மாமாவைப் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் பொறுப்பு. நீங்கள் நிம்மதியாக ட்ரீட்மெண்ட் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று காலனியே புடைசூழ்ந்து வாக்களித்தது. ஹெல்த் செண்டர் கட்டிலில் பலவீனமாகப் படுத்திருந்த மாமி, புன்னகையில் நன்றி சொன்னாள். திக்கற்றவர்களுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் தெய்வங்கள்.
‘என்னமோ போங்கோடி. நீங்கள்ளாம் எங்கெங்கேருந்தோ, யார் யார் வயித்துலயோ உதிச்சி வந்திருக்கேள். நான் என்ன பண்ணிட்டேன் உங்களுக்கெல்லாம்? இப்படிப் பெத்த தாய் மாதிரி பாத்துக்கறேளே.’ குளூகோஸ் பாட்டில் ஒன்றிரண்டு ஏற்றப்பட்ட பிறகு மாமிக்குக் கொஞ்சம் பேச்சு வந்தது. ஆஸ்பத்திரியில் அதுவரை ஆன செலவை ஏ பிளாக் விசுவநாதன் பார்த்துக்கொண்டார் என்று தெரிந்ததும் மாமியின் விழியோரம் ஒரு சொட்டுக் கண்ணீர் தெரிந்தது. முப்பது வீட்டுக்காரர்களும் இப்போதே டிஸ்சார்ஜ் நிதி சேர்த்து காயத்ரியிடம் கொடுத்தனுப்பியிருக்கும் விஷயத்தைத் தாமதமாகச் சொன்னார்கள். மாமி மூக்கையும் கண்ணையும் சேர்த்துத் துடைத்துக்கொண்டார்.
‘ஐயோ மாமி உணர்ச்சிவசப்படாதிங்கோ. பிபி ஏறிடப் போறது.’
‘இறங்கினதுதானே பிரச்னை? ஏறட்டும், வீட்டுக்கு வந்துடுவா.’
எதிர்பார்ப்பவர்களை ஏமாற்றுவது அழகல்ல. மாமி சற்றே சிரிக்க முயற்சி செய்தார். திரும்பவும், வீட்டிலிருக்கும் தன் கணவரின் உடல்நிலை பற்றிக் கேட்டார். அவர் ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா? ஆறு முறை ஒன்றுக்குப் போகிறாரா? ஒரு பாட்டில் தண்ணீராவது முழுக்கக் குடிக்கிறாரா? மருந்து மாத்திரைகள்? சுவாமி அலமாரியில் குருவாயூரப்பன் போட்டோவுக்குப் பின்னால் மின்சார அட்டை இருக்கிறது. நாளைக்கு ட்யூ டேட். அட்டைக்குள்ளேயே பணமும் இருக்கிறது.
‘நாங்க பாத்துக்கறோம் மாமி.’
‘நெனவு தப்பி விழுந்ததுல எல்லாம் போட்டது போட்டபடி ஆயிடுத்தேடி. ஸிங்க்லே பத்துப்பாத்திரம் தேய்க்காம கிடக்கும்.’
‘எல்லாம் தேய்ச்சாச்சு மாமி.’
‘ஆருடி பண்ணினது?’
‘காயத்ரி வீட்டு வேலைக்காரி போய் துலக்கிவெச்சிட்டு வந்துட்டா.’
‘நன்னா இருக்கட்டும்.’
மாமி கண்களை மூடிக்கொண்டாள். கூடுதலாக மூச்சு வாங்குவதுபோல் இருந்தது. கொஞ்சம் அமைதி தேவை. குடுகுடுவென்று ஓடிக்கொண்டிருந்தவரை ஒன்றுமே தெரியவில்லை. மாமா பக்கவாதம் வந்து விழுந்தபோதுகூட மாமி ஒருநாள்தான் அதிர்ச்சியில் இருந்தாள். மறு தினமே புடைவையை இழுத்துச் சொருகிக்கொண்டு தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
‘வேற என்ன பண்ணச் சொல்றேடி? கவலைப்பட்டுண்டு உக்காந்திருந்தா கஞ்சிக்கு யார் பொறுப்பு? என்னை அவர் தாங்கினார். அவரை நான் தாங்கத்தானே வேணும்?’
மாமா, பிடபிள்யூடியில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர் என்று மாமி சொல்லியிருக்கிறாள். காலனிக்கு அவர்கள் குடி வந்தபோதே ஓய்வுபெற்ற தம்பதியராகத்தான் வந்தார்கள். பிள்ளைகளும் பெண்களும் அமெரிக்காவில் இருப்பார்கள் என்று அக்கம்பக்கத்தில் ரொம்பநாள் வரைக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டில் ஒரு டெலிபோன் கனெக்ஷன் கூட இல்லாதது உறுதியபோதுதான் மெல்ல விசாரித்தார்கள்.
'நாமிருவர் நமக்கிருவரெல்லம் ஊருக்கு. எங்களுக்கு, நமக்கு நாமிருவர். அவ்ளோதான்’ என்று சிரித்தபடி மிளகாய்ப்பொடிக்கு வறுத்துக்கொண்டிருந்தார் மாமி.
’ஓ, சாரி மாமி’ என்றாள் டி-4 லாவண்யா.
‘எதுக்குடி சாரி? இருவத்தஞ்சு வயசுல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. எழுவத்தஞ்சுல என்ன கஷ்டம்? எல்லாம் பழகிண்டுடறதுல இருக்கு. தலைக்குமேல வெச்சு தாங்கற புருஷன் போதாதா? முப்பது வருஷம், ஒரு மாசம் தவறாம, புதுப்புடைவை வாங்கித் தந்திருக்கார். எந்த மனுஷன் செய்வான் சொல்லுங்கோ.’
மாமிக்குத் தன் கணவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது. அன்பான கணவர். அக்கறைமிக்க கணவர். பொதுப்பணியோடு குடும்பப் பணிகளிலும் குறை வைக்காத கணவர். ஓய்வு பெறும் வயது பொதுவானது. முதுமை பொதுவானது. நோய்கள் பொதுவானவை. ஓடிக்களைத்தவர் இன்று படுத்துக் கிடக்கிறார். அதனாலென்ன? மாமியால் இன்னும் ஓட முடிகிறதே. போதும்.
மாமாவின் பென்ஷன் ஏழாயிரமோ என்னவோ வருவதாக மாமி ஒருமுறை சொல்லியிருக்கிறார். இருவருக்குச் சாப்பாடு, வாடகை, மருந்து மாத்திரைகள். ஒரு அவசர ஆத்திரத்துக்கு மாமி என்னதான் செய்வாள்? காலனிவாசிகள் ஊறுகாய் பாட்டிலுக்கும் சுலோக கிளாசுக்கும் மற்றதுக்குமாக எப்படியாவது முடிந்ததைக் கொடுக்க முயற்சி செய்துகொண்டேதான் இருந்தார்கள்.
ம்ஹும். மூச்சு விடப்படாது.
‘நீங்க பண்றது அநியாயம் மாமி. கடையிலே காசு குடுத்து வாங்கினா ஒரு பாட்டில் ஊறுகாய் என்ன விலை தெரியுமா?’
‘என்னவா இருந்தா எனக்கென்னடி? என் பொழுதுபோக்குக்கு நான் ஊறுகாய் போடறேன். பிபி இருக்கு, நான் சாப்பிட முடியாது. வெச்சிண்டு என்ன பண்றது? நன்னா இருக்குங்கறேள். சப்பு கொட்டிண்டு சாப்பிடறேள். அதுவே திருப்தி. போதும் போ.’ என்று சொல்லிவிடுவார்.
ஒரு சமயம் ஈ 14 சந்திரசேகரன் பிள்ளைக்குத் தீராத ஜுரம். ஆறு வயசுப் பையன். குரோசின் கொடுத்துப் பார்த்ததில் ஆரம்பித்து, ரத்தப்பரிசோதனை அளவுக்குச் சென்ற பிறகு பன்றிக் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார்கள். பதறிவிட்டது காலனி. சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்டில் வசித்த சந்திரசேகரனுக்கு இரண்டு குழந்தைகள். இன்னொன்றுக்குத் தொற்றிக்கொண்டு விடப்போகிறதென்று அவர் தவித்த தவிப்பு சொல்லி மாளாது.
மாமிதான் தீர்மானமாகச் சொன்னாள். ‘சந்துரு, குழந்தைய எங்காத்துல கொண்டுவந்து விட்டுடுங்கோ. நான் பாத்துக்கறேன்.’
வாய் வார்த்தைக்குச் சொல்பவரில்லை அவர். விடுவிடுவென்று சந்திரசேகரன் வீட்டுப் படியேறி, சுவரோரம் சுருண்டுகிடந்த பையனைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு நேரே தன் போர்ஷனுக்குப் போய் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டுவிட்டாள்.
அச்சத்தில் ஒருவாரம் காலனி முழுக்கக் கதவு திறக்கவில்லை. விளையாடும் பிள்ளைகள் அத்தனை பேரையும் வீட்டுக்குள் அடைத்துவைத்தார்கள். ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டுக் குடும்பத்துடன் ஊருக்குப் போனார்கள். சந்துருவும் அவர் மனைவியும் மட்டும் மாமி போர்ஷனுக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் மருத்துவமனைக்குமாக நடந்தார்கள். பையன் பிழைத்து எழுந்தபிறகு மாமிக்கு மஞ்சள், குங்குமத்துடன் கோ ஆப்டெக்ஸ் புடைவை வைத்துக் கொடுத்து விழுந்து சேவித்து நன்றி சொன்னார்கள்.
‘உங்க தைரியம் யாருக்கும் வராது மாமி.’
‘என்ன பேசறே நீ? இதுக்கு தைரியம் என்னத்துக்கு? குழந்தை உசிரில்லையா முக்கியம்?’
எல்லோருக்கும் யாராவது பெரியவர்கள் வேண்டியிருக்கிறார்கள். எப்போதாவது ஆலோசனை கேட்க. எப்போதாவது ஆசி வாங்க. எப்போதாவது எண்ணி நெகிழ்ச்சியுற. மீனாட்சி மாமி, அந்தக் காலனியின் நடமாடும் பழுத்த பெண் தேவதையாக அறியப்படத் தொடங்கியது அதன்பிறகுதான். மாமி, பரீட்சைக்குப் போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்கோ. மாமி கரெக்டா எட்டரைக்கு காக்காய்க்கு சாதம் வைக்க வெளிய வருவா. அப்ப வீட்டை விட்டுக் கிளம்பு. மாமி, முடக்கத்தான் கீரையிலே தோசை பண்ணமுடியும்னு சொன்னிங்களே, எப்படி?
0
பூமி திரும்பவும் தன்னைத்தானே மூன்று முறை சுற்றிய பிறகு மாமியை ஹெல்த் செண்டரில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஏகப்பட்ட டெஸ்ட் ரிசல்டுகளும் எக்ஸ் ரே, ஈசிஜி ரிப்போர்ட்டுகளும் பெட்டி பெட்டியாக மாத்திரைகளும் மருந்து பாட்டில்களும் பிளாஸ்டிக் கூடையை நிறைத்தன. வாழ்நாளில் ஒருமுறைகூட மருத்துவப் பரிசோதனை என்று செய்துகொண்டிராத மாமிக்கு சர்க்கரை இருக்கிறது. ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கிறது. அடிக்கடி முதுகு வலி என்று சொல்வதை டாக்டரிடம் சொன்னபோது அப்டமன் ஸ்கேன் எடுக்கச் சொல்லி, சிறுநீரகத்தில் இரண்டு கற்கள் என்று தெரியவந்திருக்கிறது.
‘மீனாட்சி மாமி, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வயதுக்கேற்ற உழைப்பு போதும். ரொம்ப சிரமப்படுத்திக்கொள்ளாதீர்கள்.’
மாமி வழக்கம்போல் சிரித்தார். ஈஸ்வரன் சித்தம் என்று புத்தி போட்டுக்கொண்டார். டாக்டருக்கும் நர்ஸ்களுக்கும் ஆயாக்களுக்கும் நன்றி சொல்லி பிளாஸ்டிக் கூடையுடன் வெளியே வந்தார். காலனிவாசிகள் ஆட்டோ கூப்பிட்டு ஏற்றி அலுங்காமல் அழைத்துப் போனார்கள்.
உலகம் மாறவில்லை. உயிர்கள் மாறவில்லை. போட்டது போட்டபடி விட்டுச் சென்ற வீடு அப்படியேதான் இருக்கிறது. பக்கவாதத்தில் படுத்துக்கிடக்கும் மாமியின் கணவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். மூன்றுநாளில் அவரிடமும் பெரிய மாற்றமில்லை. நல்லவர்கள் நன்றாகவே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மீனாட்சி, எப்படி இருக்கே? அவர் பார்வை கேள்வி கேட்கிறது. எனக்கு ஒண்ணுமில்லை. பதில் பார்வை பதில் சொல்கிறது. அறுபது வருடங்களுக்குமேல் சேர்ந்து வாழ்ந்துவிட்டவர்களுக்கு சொற்கள் அநாவசியம்.
மாமியின் கண்கள் நிறைந்திருந்தன. ’உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்லுவேன்? பெத்த பிள்ளைகள் மாதிரி என்னையும் என் ஆத்துக்காரரையும் பாத்துண்டிருக்கேள்.’
நெகிழ்ச்சியில் அவர் குரல் நடுக்கம் கண்டது.
‘ஐயோ மாமி, என்ன பேசறிங்க? இது எங்க கடமை இல்லியா? ஏன் வேத்து மனுஷங்களா நினைக்கறிங்க?’
‘சந்தோஷம்டி. போதும்டி எனக்கு. இந்த ஜென்மத்துக்கு இது போதும்டி பொண்ணுகளே.’
‘இதோ பாருங்கோ மாமி, டாக்டர் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்லியா? இனிமே நீங்க பழையபடி சூப்பர் லேடி மாதிரி ஓடிண்டிருக்கப்படாது. உக்காந்த இடத்துல மாமாவ பாத்துக்கறதோட நிறுத்திக்கணும், ஆமா.’
மாமி சிரித்தார். ‘எப்படிடி முடியும் கோகிலா? வேளைக்கு வயித்துல மணி அடிச்சுடறதே.’
‘அந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீங்க இப்படி ஏதாவது சொல்லுவிங்கன்னு தெரிஞ்சிதான் நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கோம்.’
‘என்னதுடி?’ என்றார் மாமி. திரும்பித் தன் கணவரை ஒருமுறை பார்த்துக்கொண்டார். உணர்ச்சியற்ற முகத்தில் அவர் வெளிப்படுத்துவதுதான் என்ன? புதிய ஏற்பாட்டை முன்னதாக அவரிடம் சொல்லியிருப்பார்களா?
‘நல்ல இடம் மாமி. ஏ க்ளாஸ் சர்வீஸ். தனி ரூம் தந்துடுவா உங்க ரெண்டு பேருக்கும். ரூம்ல டிவி உண்டு. கட்டில் உண்டு. வேளைக்குச் சாப்பாடு. டாக்டர் உண்டு. ஹெல்ப்பர் உண்டு. காம்பவுண்டுக்குள்ளயே கோயில் இருக்கு. கடைசி வரைக்கும் ஒரு பிரச்னையும் இருக்காது. இருக்கறவா எல்லாரும் டீசண்ட் பீப்பிள். நீங்க சௌக்கியமா இருக்கலாம்.’
‘என்ன சொல்றேள் நீங்க? ஒண்ணும் புரியலியே’ என்றார் மீனாட்சி மாமி.
’புதுசா திறந்திருக்கா மாமி. பேப்பர்லல்லாம்கூட விளம்பரம் வந்துதே, ஸ்டார் ஓல்ட் ஏஜ் ஹோம்.. பாக்கல நீங்க?’
மாமி பதில் சொல்லவில்லை. சில வினாடிகள் மௌனமாக இருந்தார்.
‘என்ன மாமி? பேசமாட்டேங்கறேளே.’
சட்டென்று திரும்பிச் சிரித்தார். ‘என்னடி பேசறது? பிள்ளை இல்லாத குறை தீர்ந்தது போ’ என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே போனார். மாமா கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தார்.
108 வடைகள்
ஆஞ்சநேயர் தயாராக இருந்தார். அலங்காரம் முடிந்துவிட்டது. ஆபரணாதி விஷயங்களை பட்டர் அமர்க்களமாகச் செய்து முடித்து, விளக்குத் திரியைத் தூண்டிச் சுடர வைத்தார். வியர்வையைத் துடைத்துக்கொண்டு சந்நிதியை விட்டு வெளியே வந்தார். ஆச்சு. நாலு வரி மந்திரம். வடைமாலை சாத்திவிடவேண்டியதுதான். இன்றைய உபயதாரருக்கு என்ன செய்யலாமென்று ஆஞ்சநேயர் எண்ணியிருக்கிறார்?
யோசித்தபடியே சந்நிதியைத் திரும்பிப் பார்த்தார் பட்டர். மணமும் கனமுமாக மேனியெங்கும் பரவிக்கிடக்கும் சாமந்தி, ரோஜா, மல்லி, துளசி மாலைகளுக்கு நடுவே ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு ஆவின் வெண்ணெய் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. பட்டரின் கலை உள்ளம் சாதாரணமானதல்ல. வெண்ணெய்ப் பந்தின் நடுவே அவர் வைத்திருக்கும் சிறு செந்தூரப் பொட்டு ஐம்பதடி தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும். வெண்ணெய்போல் இளகிக் குளிர்ந்த நெஞ்சம் ஆஞ்சநேயருடையது. ஆளைச் சரியாக அளந்து அள்ளிக்கொடுப்பதில் விற்பன்னர். விவகாரம் பிடித்த ஆசாமி என்றால் விளையாடிப் பார்க்கத் தயங்காதவர். வடை விஷயத்தில் அவரது தீராத விளையாட்டுகள் பிராந்தியமெங்கும் பிரசித்தமானது. இன்னும் தினத்தந்தியில் வராதது ஒன்றுதான் மிச்சம். விரைவில் அதற்கும் ஆவன செய்யச்சொல்லி செட்டியாரிடம் பட்டர் சொல்லியிருக்கிறார்.
பத்திரிகைகளுக்கென்ன? விஷயம் தெரிந்துவிட்டால் வரிந்துகட்டிக்கொண்டு எழுதித் தள்ளிவிட மாட்டார்களா? இன்னும் காலம் வரவில்லை என்று செட்டியார் நினைக்கிறார் போலிருக்கிறது. கோயில் கண்ட கோமகன். அதிகப் பிரபலம் துரித சிக்கல் என்றும் எண்ணியிருக்கலாம். ஆனால் ஆஞ்சநேயர் புகழை அப்படியொன்றும் வெகுநாள் ஒளித்துவைத்துவிட முடியுமென்று பட்டருக்குத் தோன்றவில்லை. செய்கிற காரியம் அத்தனை அற்பமானதா என்ன?
அவருக்கே முதலில் வெகுநாள்வரை அப்படியொரு விளையாட்டு நடக்கிற விஷயம் தெரியாமல்தான் இருந்தது. தினமும் யாராவது என்னவாவது வேண்டிக்கொள்கிறார்கள். வடைமாலை சாத்துகிறார்கள். அர்ச்சனை முடிந்ததும் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, சாஸ்திரத்துக்குப் பத்து வடைகளை பக்தர்களுக்கு வினியோகித்துவிட்டு, மிச்சத்தைத் தூக்குவாளியில் வீட்டுக்கு எடுத்துச் சென்று சாம்பார் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடுகிறார்கள். வேண்டிக்கொண்டாலும் வடை. வேண்டுதல் நிறைவேறினாலும் வடை.
வேண்டுபவர் பார்வையிலிருந்தே இதனை கவனித்துவந்தவரை வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. தற்செயலாகத்தான் பட்டர் ஒருநாள் வடையின் பார்வையிலிருந்து கவனிக்க ஆரம்பித்தார். நூற்றி எட்டு வடைகள். சாத்திய மாலையை எடுத்து உதிர்த்துக் கொடுத்துவிடுவதோடு அவர் பங்கு முடிந்துவிடும். கோக்கும்போது எண்ணுவார். சரியாக நூற்று எட்டு. உதிர்க்கும்போது எண்ணுகிற வழக்கமோ அவசியமோ அவருக்கு ஏற்பட்டதில்லை.
அப்படி ஏற்பட்ட அன்று விஷயம் புரிந்தது.
‘என்ன சாமி, நூத்தி எட்டுல ஒண்ணு குறையுது?’ யாரோ மாலையிட்ட மன்னவர் சந்நிதியில் வைத்தே எண்ணிப் பார்த்துக் கேட்டுவிட்டார். பட்டருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
‘இல்லியே? சரியாத்தானே இருக்கும்? எண்ணித்தானே கோத்தேன்?’
‘பாருங்க. நீங்களே எண்ணிருங்க.’
பக்தர்களும் ஆஞ்சநேயரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கடவுளே, இதென்ன புதுச்சிக்கல்? பட்டர் பதற்றத்துடன் எண்ணினார். இரண்டுமுறை எண்ணியபோதும் நூற்று ஏழுதான் வந்தது. அவருக்குப் புரியவில்லை. வீட்டில் வடை தயாரானதும் எண்ணித்தான் எடுத்துவந்தார். கோக்கும்போதும் நூற்றெட்டு ராமநாமங்களைச் சரியாகத்தான் உச்சரித்தார். ஆனாலும் கணக்கு உதைக்கிறது. எங்கே போனது அந்தக் கடைசி வடை?
உபயதாரர் போய்விட்டார். பட்டருக்குத்தான் அன்று தூக்கம் வரவில்லை. ஆஞ்சநேயா, எங்கே பிரச்னை?
மறுநாள் அந்த உபயதாரர் ஓடி வந்தார். ‘சக்திவாய்ந்த சாமிங்க! எம்புள்ளைக்கு யு.எஸ். விசா கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு வடைமாலை சாத்தினேன். எப்பவும் கண்ட கேள்வி கேட்டுக் கழுத்தறுக்கறவங்க இன்னிக்கி இவன் எதிர்ல போயி நின்னதும், வாயத் தொறக்காம விசா குடுத்துட்டாங்களாம்.’
தொலைந்துபோன ஒருவடை பற்றிய சிந்தனை அதன்பின் பட்டருக்கு இல்லாமலானது. மேலும் மேலும் தினமும் வடைமாலைகள் சாத்தப்பட்டன. வேறு வேறு உபயதாரர்கள். வேறு வேறு பிரார்த்தனைகள். எத்தனை பேருக்கு பலித்தன? எத்தனை பேர் இன்னும் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள்?
பட்டருக்குத் தெரியாது. திரும்பவும் அது தெரிய ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. அதே பிரச்னை. சாத்திய புண்ணியவான் எண்ணிப் பார்த்ததில் ஒரு வடை குறைந்தது. இவர், நின்றுபோன தம் மகளின் திருமணம் திரும்ப நடக்க வேண்டி ஆஞ்சநேயரைத் தேடி வந்தவர். பட்டருக்குப் பழக்கமான மனிதர்.
‘எப்படின்னு தெரியல்லே எனக்கு. நூத்தெட்டு வடை எண்ணித்தான் கோத்தேன். இப்ப உதிர்க்கும்போது ஒண்ணு குறையறது. நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சிக்க வேண்டாம்.’
அவர் ஒன்றும் நினைத்துக்கொள்ளவில்லை. நூற்று ஏழையும் பக்தர்களுக்கு விநியோகித்துவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார்.
மறுநாளே ஓடி வந்தார். ‘பட்டரே என்னால நம்பவே முடியல. நிச்சயதார்த்தம் முடிஞ்சப்பறம் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு முறுக்கிட்டுப் போன மாப்ள வீட்டுக்காரங்க, வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டுட்டு நாள் குறிக்கச் சொல்லிட்டுப் போயிட்டாங்க ஓய்! உங்க ஆஞ்சநேயர் பெரியாளுதான்!’
பட்டருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நிஜமா? அப்படியும் இருக்குமா? யாருக்காவது உடனடியாக அருள் பாலிப்பது என்று முடிவு செய்துவிட்டால் ஆஞ்சநேயர் நூற்று எட்டில் ஒரு வடையை அதற்கான டோக்கன் அட்வான்ஸாகத் தானே சாப்பிட்டுவிடுகிறாரா என்ன?
வெளியே சொல்லவில்லை. ஆனால் அன்று முதல் மாலையை எண்ணிக் கோப்பதுபோல் எண்ணி அவிழ்க்கவும் ஆரம்பித்தார். சில நாள் நூற்றெட்டு வடைகள் சரியாக இருக்கும். சில நாள் சரியாக நூற்றி ஏழுதான் இருக்கும். ரகசியத்தைத் தன் மனத்துக்குள் பூட்டிவைத்துக்கொண்டு உபயதாரரிடம் மெல்லப் பேச்சுக்கொடுப்பார் பட்டர்.
‘என்ன வேண்டுதல் நமக்கு?’
சம்பந்தப்பட்டவர் விருப்பமிருந்தால் உள்ளதைச் சொல்லுவார்.
‘கவலைப்படாதிங்கோ. நாளைக்கு விடிஞ்ச நாழிக்கு நல்ல சேதி வரும்’ பொதுவில் நல்லவார்த்தை சொல்லிவிட்டு பட்டர் சந்நிதிக்குள் போய்விடுவார்.
சொல்லிவைத்த மாதிரி மறுநாள் காலை சம்பந்தப்பட்ட உபயதாரர் ஓடி வருவார்.
‘பட்டரே, உங்க வாய்க்கு சர்க்கரை போடணும். நடந்துடுச்சி! நடந்துடுச்சி!’
பட்டருக்குப் புரிந்துவிட்டது. இவர் சாதாரண ஆஞ்சநேயர் இல்லை. நிஜமான சக்திமான். வடையில் இருக்கிறது விடை!
செட்டியார் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொன்னார்.
‘என்னாலயே நம்ப முடியல்லே செட்டியார்வாள். ஆனா நடக்கறது நிஜம்.’
‘அப்படின்னா?’
‘உங்களுக்கு ஆயிரம் ஜோலி. ஏகப்பட்ட பிசினஸ். இந்தக் கோயிலைக் கட்டினது புண்ணியத்துக்காக. ஆனா ஒண்ணு. நல்ல மனசோட கட்டியிருக்கேள். அதனாலதான் இப்படிப்பட்ட அற்புதமெல்லாம் நடக்கறது.’
‘புரியல ஐயிரே.’
‘கஷ்டம்தான். சாத்தற வடைமாலைல அனுமார் ஒண்ணை எடுத்துக்கறார்னு சொன்னா கலிகாலத்துல என்னைப் பைத்தியம்னு சொல்லுவா. ஆனா அதான் சத்தியம். ஒண்ணில்லே, ரெண்டில்லே.. ஏழெட்டு தடவை செக் பண்ணிட்டுத்தான் உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லவே வந்தேன்.’
செட்டியார் தீவிரமாக யோசித்தார். அப்படியா? நான் கட்டிய கோயிலிலா? அற்புதம் நடக்கிறதா? இது மற்றவர்களுக்குத் தெரியுமா?
‘ம்ஹும். நான் மூச்சு விடலே! ஆனா தெனமும் சாத்தற மாலைல இருக்கற வடைகளை எண்ணிப் பாக்காம இருக்கறதில்லே. கரெக்டா நூத்தெட்டு இருந்தா சாதாரணம். ஒண்ணு குறைஞ்சிருந்தா விசேஷம். மறுநாள் அவாளுக்கு நெனச்ச காரியம் கைகூடிடும்.’
‘சரி, பாப்போம்’ என்று சொல்லிவிட்டுச் செட்டியார் அவரை அனுப்பிவிட்டார். மறுநாள் முதல் தினமும் மாலை ஆறு மணிக்குத் தவறாமல் அவர் தான் கட்டிய கோயிலுக்கு வர ஆரம்பித்தார். வடைமாலை சாத்துகிற வேளை.
பட்டர் மாலை சாத்துவார். செட்டியார் பேசாமல் ஓர் ஓரமாக நின்று கவனிப்பார். பூஜை முடிந்து நைவேத்தியம் ஆனதும் மாலையைக் கழற்றி எண்ணி உதிர்ப்பார். செட்டியார் பார்த்துக்கொண்டே இருப்பார். நூற்றெட்டு என்றால் பட்டர் பேசாமல் வேலையைப் பார்ப்பார். ஒன்று குறைகிற தினங்களில் செட்டியாருக்குக் கண்ணைக் காட்டுவார். சம்பந்தப்பட்ட உபயதாரரிடம் செட்டியார் பேச்சுக் கொடுப்பார்.
என்ன பிரார்த்தனை? என்ன விஷயம்? எதற்கு வடைமாலை சாத்துகிறார்?
பட்டர் வழக்கம்போல் அவர் புறப்படும்போது நல்ல வார்த்தை சொல்லுவார். ‘கவலப்படாம போங்கோ. நாளைக்குக் கார்த்தால உங்க பிரார்த்தனை நிறைவேறலைன்னா என்னை வந்து ஏன்னு கேளுங்கோ. ஆஞ்சநேயர் லேசுப்பட்டவர் இல்லே.’
மறுநாள் காலை கோயில் திறப்பதற்கு முன்னமே செட்டியார் வந்து நிற்பார். எட்டு மணியைத் தாண்டியதில்லை. சம்பந்தப்பட்ட முதல்நாள் உபயதாரர் மூச்சிறைக்க ஓடிவருவார். ‘ஐயரே, நீங்க சொன்னது நூத்துல ஒரு வார்த்தை. ஆஞ்சநேயர் கண்ணைத் தொறந்துட்டார்.’
பட்டர் செட்டியாரைப் பார்ப்பார். செட்டியார் வியப்பில் கைகூப்புவார். அற்புதம் புரியும் ஆஞ்சநேயர். இதை உலகுக்கு அறிவித்துவிட்டால்தான் என்ன? கோயில் பிரபலமாகும். பெரிதாகும். வருமானம் சேரும். எண்ணிப் பார்க்க முடியாத என்னென்னவோ நடக்கக்கூடும்.
‘செய்யலாம் ஐயரே. ஆனா ஒண்ணே ஒண்ணு கேட்டுடறேன், தப்பா நினைச்சிக்காதிங்க.’
’சொல்லுங்கோ’
‘வடைல ஒண்ணை நீங்க எடுத்து சாப்பிட்டுடறதில்லிங்களே.’
‘எம்பெருமானே!’ என்று நெஞ்சில் கைவைத்தார் பட்டர். ‘சத்தியமா கிடையாது செட்டியார்வாள். எனக்கென்ன சக்தி இருக்கு? வடை குறையற அன்னிக்கு பலன் தெரியறதா இல்லியா?’
‘அதான் எனக்கும் டவுட்டா இருக்கு’ என்று யோசித்தபடி செட்டியார் போய்விட்டார்.
மறுநாள் அவருக்கு ஒரு யோசனை வந்தது. பட்டர் சொல்வது சரி. செய்தியை வெளியே சொல்லவேண்டியதுதான். ஒன்றுமில்லாத எத்தனையோ கோயில்களுக்குப் புனைகதைகள் உருவாக்கி, கூட்டம் சேர்த்துவிடுகிறார்கள். உண்மையிலேயே அற்புதம் புரியும் ஆஞ்சநேயரை கவனிக்காமல் விடுவதா?
ஆனாலும் ஒரு பரீட்சை பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. கடவுளிடம் விளையாடலாமா? கோபித்துக்கொண்டுவிட்டால்?
சேச்சே. ஆஞ்சநேயர் அப்படிப்பட்டவர் அல்லர். சிறு வயதிலிருந்தே அவருக்கு விருப்பமான தெய்வம். கொத்தவால்சாவடியில் அவர் மூட்டை தூக்கிப் பிழைப்பைத் தொடங்கிய நாள் தொட்டு தினமொரு படியாக உயர்த்திக்கொண்டு வந்திருப்பவர். நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் ஆஞ்சநேயரிடம் சொல்லாமல் செட்டியார் எதையும் செய்ததில்லை. நல்லது கெட்டது கலந்தவன்தானே மனிதன்? தனக்கு இப்படியொரு எண்ணம் வந்திருப்பதும் ஆஞ்சநேயரின் செயலாகத்தான் இருக்கவேண்டும். சந்தேகமில்லை.
‘ஐயரே, வர வெள்ளிக்கிழமை மட்டும் வெளியார் உபயம் வாங்காதிங்க. அன்னிக்கி வடைமாலை நம்முது. புள்ளையோட பொறந்தநாள் பாருங்க!’
செட்டியார் சொன்னபோது பட்டருக்கு வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை. கோயில் கட்டியவர் ஒருநாள் வடைமாலை சாத்துவது பெரிய விஷயமா என்ன?
வழக்கம்போலவே அன்று பட்டரின் மனைவி குளித்துவிட்டு ஆசாரமாக வடை தயாரித்தார். வழக்கம்போலவே பட்டர் அதை எண்ணி மாலையாகக் கோத்தார். வழக்கம்போலவே ஆஞ்சநேயருக்குச் சாத்தி, சுலோகம் சொன்னார். செட்டியாரும் வழக்கம்போல் வந்து நின்று வணங்கினார்.
‘ஆஞ்சநேயா, நான் உன்னிய டெஸ்டு பண்றேன்னு தப்பா எடுத்துக்காத. இது டெஸ்டுக்கு டெஸ்டு. வேண்டுதலுக்கு வேண்டுதல். கேட்டது, கேக்காதது எல்லாத்தையும் அள்ளிக்குடுத்திருக்கே. ஊர் மதிக்கிற வாழ்வு. ஒண்ணுத்துக்கும் குறைச்சல் இல்லே. ஆனா எம்பொண்டாட்டி என்னோட பேசி ஆறு வருசம் ஆச்சி. என்னிக்கோ சபலப்பட்டு செஞ்ச தப்புக்கு இப்ப வரைக்கும் தண்டிச்சிக்கிட்டிருக்கா. வெச்சிக்கவும் முடியாம விடவும் முடியாம நாம்படுற பாடு ஒனக்குத்தான் தெரியும். என்ன செய்யணுமோ பாத்து செய்யி. இதுக்குமேல நான் என்ன சொல்றது?’
மனமுருக வேண்டிக்கொண்டு, கற்பூரம் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டார். பட்டர் சந்நிதிக்குத் திரும்பச் சென்று மாலையை எடுத்து அவிழ்த்தார். ஒவ்வொன்றாக எண்ணி, பாத்திரத்தில் போட்டார். ஆர்வம் தாங்கமாட்டாமல் செட்டியார் அவசரமாக சந்நிதிப் படியேறி வந்து எட்டிப் பார்த்தார்.
‘எண்ணிட்டிங்களா? எவ்ளோ இருக்கு?’
பட்டர் மேனி நடுங்க எழுந்து ஆஞ்சநேயரைப் பார்த்தார். அவர் கரங்கள் தன்னிச்சையாக உயர்ந்து வணங்கின. கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்தது.
‘சொல்லுங்க ஐயரே. எவ்ளோ இருக்கு?’
‘புரியல செட்டியார்வாள். நூத்தி ஒம்போது இருக்கு’ என்றார் பட்டர்.
நாயகி
ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்குரிய எந்த இலட்சணமும் அந்த ஸ்டேஷனுக்கு இல்லை. மிக நீண்டதொரு தூக்குமேடை போல் காட்சியளித்தது. ஆளற்ற வெறுமையும் எரியும் வெயிலும் அலைபுரளும் கானல் கோட்டு வெளியும் கண்ணில் தென்படாமல் குலைத்து அடங்கும் நாய்க்குரலும் சற்று அச்சமூட்டுவதாயிருந்தது. மிஞ்சிப் போனால் நூறு குடும்பங்கள் கூட அங்கிருக்காது எனப்பட்டது. ஜமீன், தன் சொந்தச் செலவில் கட்டிக் கொண்ட ஸ்டேஷனுக்கு அரசு ரயில்கள் நின்று மரியாதை செலுத்திய நூறு வருடத்து சரித்திரத்தின் மேலும், ஸ்டேஷனிலிருந்த ஒரே மர பெஞ்சின் மேலும் புழுதி படிந்து மங்கச் செய்திருந்தது.
சாப்பிட்ட இலையும் தண்ணீர்க் குவளையுமாக ஸ்டேஷன் மாஸ்டர் வெளியே வந்தார். தண்டவாளம் தாண்டி அவர் விசிறியடித்த இலைக்கொரு காகம் மேற்கிருந்து விரைந்து வந்தது. சப்தமுடன் கொப்பளித்து விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தவர், ‘வந்துட்டீங்களா? ரயில் நின்னப்ப பார்த்தனே? இறங்கலையே? நீங்கதானே பெரிய வீட்டுக்கு வந்திருக்கறது?' என்றார்.
ரயில் நின்றபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டேஷன் வந்ததற்கான எந்தப் பரபரப்புமில்லாமல், சிக்னலில் நின்றதுபோல் நின்று, நகர்ந்துவிட்டது வண்டி. விதியே என்று வீரக்குடி ஜங்ஷனில் இறங்கி தண்டவாளத்துக் கட்டைகளை எண்ணிக்கொண்டே அரை மணி நடந்து, இங்கு வந்து சேர்ந்திருந்தேன்.
‘அடடா!' என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். ‘இப்பத்தான் ஐயா வீட்டுலேருந்து போன் வந்தது. ஆளைக் காணுமே, வந்தாரா, இல்லையான்னு கேட்டு. வாங்க, ஒரு நிமிசம்' என்றவர், அறைக் கதவை இழுத்துச் சாத்தி விட்டு, சைக்கிளைத் தட்டி ஏறி, ‘உட்காருங்க' என்றார்.
‘வழி சொல்லிட்டீங்கன்னா போதும். நான் போயிடறேன்' என்றேன். ஸ்டேஷனுக்கு குதிரை வண்டி ஏதாவது அனுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். ஒரு ஸ்டேஷன் மாஸ்டரை சாரதியாகக் கொண்டு சைக்கிள் பயணம் செய்வதன் மீதான இருப்பியல் சார்ந்த வினாக்கள் எழுந்து அலைக்கழித்தன.
‘அட, வாங்க சும்மா' என்றார் எஸ்.எம். ஜமீன் தனியொரு ரயில்வே போர்டு வைத்து நடத்திக் கொண்டு, சைக்கிள் சேவைக்குத் தனியே அலவன்ஸ் தருகிறாரோ என்னவோ.
செம்மண் சாலையில் கரகரத்து ஊர்ந்து சென்றது சைக்கிள்.
வழிமுழுக்கப் பேசிக்கொண்டே வந்தார் ஸ்டேஷன் மாஸ்டர். ஓர் ஆராய்ச்சி என்றால் அதில் கண்டிப்பாக முயல் இருக்க வேண்டுமென்று அவர் நம்பியிருந்தார்.
குறுந்தாடி வைத்துக் கொள்ளாமல், முயலின் மீது தன் ஆய்வைப் பரிசோதித்துப் பார்க்காமல், குறைந்தபட்சம் கண்ணாடியணிந்த உதவியாளன் உடன் என்ன ஆராய்ச்சி? இதற்கெல்லாமும் பல்கலைக்கழக மானியம் கொடுக்கிறார்களா என்ன?
‘ஐயா, அறிவியல் என் துறையல்ல. பண்டைய ஜமீன் வம்சங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு முயலின் துணை அவசியமுமல்ல. தேர்ச்சி பெற்ற ஜமீன் பரிசாரகர்கள் முயல்கறி சமைத்துப் போட்டால் ருசித்துப் பார்க்க ஆட்சேபணை இல்லை.'
‘நல்லதுங்க. அந்தா பாருங்க. பெரிய வீடு வந்திருச்சி. இங்கனவே இறங்கிக்கறீங்களா? ரெண்டு பத்துக்கு ஒரு கூட்ஸ் வரும். ஐயா வீட்டுத் துணிகளை வெளுத்து எடுத்தாருவாங்க. போயி, வாங்கி எடுத்தார டைம் சரியா இருக்கும்.'
அவர் ஜமீனின் குதிரை லாயத்தில் சாணமள்ளிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பரம்வீர் சக்ராவுக்குப் பதிலாகக் குழாய் மாட்டி ஸ்டேஷனில் அமர்த்தியிருப்பார்கள், சேவையைப் பாராட்டி.
கம்பீரம் தோய்ந்த கிழட்டு ராட்சஸன் மாதிரி அமர்ந்திருந்த பங்களாவை நோக்கி நடந்தேன். மிக உயரே, பருந்தொன்று, மாளிகையை வட்டமிடக் கண்டேன்.
2
‘ஆத்தா, இவுகதான் உம்ம மயன் சொன்ன ப்ரொபசரு. மெட்ராசுலேருந்து வந்திருக்காவ' என்றார் மானேஜர்.
நானொரு ப்ரொபசர் அல்ல என்பதை முதலில் அவருக்குத் தெளிவுபடுத்திவிட விரும்பினேன். ஆனால், ஆய்வு மாணவன் என்றால் கிழவி அசிரத்தையாகப் பேச விரும்பாமலாகக் கூடும் ‘கதை கேக்க வந்தியா? எளுந்து போடே மூதி!' என்று விரட்டியடித்த ஜமீன் கிழவர்களின் பரிச்சயம் சமீப காலத்தில் சற்று அதிகமாகவே லபித்திருந்தது. கதை கேட்கும் வயது கடந்துவிட்ட பேரன் பேத்திகள் திசைக்கொருவராகப் பிரிந்துவிட்ட பின்னர் யானைத் தந்தங்களுக்கு நிகரானதொரு புராதனச் சின்னமாக மாளிகையில் பகல் இரவற்றுத் தனிமையில் அலைந்து அதிகாரம் புரியும் கிழவிகளுக்குக் கதை சொல்வதிலான விருப்பம் மழுங்கிப் புழுத்துப் போயிருக்கும். வேளைக்குச் சோறும் வாய் நமநமத்தால் வசவும் மீளாத இரவுகளில் கரகரத்த, நடுங்கும் குரலில் எழும் இருமலுமாகப் பாதி இறந்த கிழவிகள் ச்¢லரைக் கண்டிருக்கிறேன்.
ஆய்வு நோக்கங்கள் மறந்துபோய், கரை காண முடியாத அவர்களது மனவெளிப் பாலைகள் அலைந்து திரியும் பேரவா உந்த, முயன்று, தோற்றுத் திரும்பியிருக்கிறேன்.
ஆய்வின் சாரமாகத் திரண்டு வரும் தோல்வி, கரும்பூதமாகத் துரத்த, அலுப்புற்று விழுவதும் மறுபடி எழுந்து வருவதுமாக நீளும் நாள்களின் தாற்காலிக விளிம்பில் இதோ, இன்னுமொரு காது நீண்ட கிழவி.
குடிக்க என்ன கொடுத்தாய் என்று சைகை மூலம் மானேஜரிடம் கேட்டாள் கிழவி. உண்டு முடித்த அற்புதமான பகலுணவு பற்றி நான் உற்சாகமாகக் கூற ஆரம்பித்தேன். இதுவும் அனுபவ சாரந்தான். உன்னைக் குளிரச் செய்ய உன் வீட்டுச் சமையலை நான் புகழ்ந்தாக வேண்டும். அது புளித்து ஊறிய களியுருண்டையாயிருந்தாலும் சரி.
கிழவி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மறுபடியும் குடிக்க ஏதாவது கொடு என்று மானேஜரிடம் சொன்னாள்.
‘ஆத்தா இப்படித்தாங்க அவங்க எதிர்க்க ஒரு கிளாஸ் மோர் குடிக்காட்டி, திருப்திப்படமாட்டா' என்று சொல்லிவிட்டு, ‘சங்கரபாண்டீ' என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.
கிழவியின் வயதை என்னால் அனுமானிக்க இயலவில்லை. நூறோ, எண்பதோ, நூற்றியிருபதோ இருக்கலாம். ஒரு கிராஃப் தாள் போல முகத்தின் குறுக்கே ஓடிய நூற்றுக்கணக்கான கோட்டுச் சுருக்கங்களினடியில் புதையுண்ட விழிகள், கோதுமை நிறத்தில் இலக்கற்று அலைபாய்ந்து கொண்டிருந்தன. உதிர்ந்ததுபோக ஒட்டிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு இமைகள் வெளுத்திருக்க, பற்களற்ற வாய் அசையும்போது தவளையின் வயிறு போலத் தென்பட்டது.
‘காது அவ்வளவா கேக்காதுங்கா. பேச்சும் குறைஞ்சிடிச்சி. மதியத்துக்கு மேல பார்வை சரியா இருக்காது. ஆறு மணி ஆச்சின்னா சுத்தம். பெருமா கோயில்ல சாமி ஏளப்பண்றாப்பிலே தூக்கியெடுத்துப் போயி வெச்சாத்தான் செரி. ஜயா மாசம் ஒருக்கா வாரப்ப எங்கிருந்துதான் இவுகளுக்கு வீரம் வருமோ தெரியாது. எளுந்து நடமாட ஆரமிச்சிருவாக. அதிசெயமா குரல் ரெண்டு ரூம்பு தாண்டிக் கேட்கும். அவுரு திரும்பிப் போறண்ணிக்கி அளுமோ, அளுமோ, அப்பிடி அளும். அடுத்த மூணுநா ஒரு பேச்சு வரணுமே? ம்ஹூம், பிறவு செரியாப்போவும்'
அத்தனை பெரிய அரண்மனையில் ஓர் ஓரத்தில் குவித்து வைத்த குப்பை போல் கலைந்து அமர்ந்திருந்தாள் கிழவி. சென்னையில் பெரிய தொழிலதிபராயிருக்கும் இவள் மகனை, விஷயத்தை விளக்கிச் சந்தித்தபோது ஒரு ஜமீந்தார் என்கிற உணர்வெல்லாம் சுத்தமாகத் தனக்கில்லை என்று தெரிவித்தார். விவசாய விஞ்ஞான சாதனங்கள் சதனங்கள் உற்பத்தி செய்யும் அவரது நிறுவனம் பங்குச் சந்தையில் உயர்மட்ட நிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதற்கான முயற்சியில் தனக்கு உறங்கக் கூடச் சராசரியாக் மூன்று மணி நேரங்களே கிடைப்பதாகச் சொன்னார். “நீங்கள் ஊருக்குப் போய் அம்மாவிடம் பேசிப் பாருங்கள். அவர்ள் உதவக்கூடும் உங்கள் ஆய்வுக்கு” என்றார் பெருந்தன்மையுடன்.
நான் கிழவியைப் பார்த்தேன். கருவேப்பிலை, இஞ்சி நேர்த்த நீர்மோர் குவளையைக் காலி செய்து நான் வைத்துவிட்டதை கவனித்துவிட்டு, திருப்தியாகச் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். சில விநாடிகளில் அப்படியே குறட்டைச் சத்தம் கேட்டது.
“அத்தா எப்பவும் இப்படித்தாங்க. நெனச்சப்ப டக்குனு தூங்கிடும். எளும்ப ரெண்டவராச்சும் ஆகும்” என்றார் மேனேஜர்.
அவளை அப்படியே சாயவைத்து தலைக்கொரு திண்டைக் கொடுத்து, மின்விசிறியை அவள் புறமாகத் திருப்பி வைத்தார்.
நான் இன்னொரு கிளாஸ் நீர்மோர் கேட்டு வாங்கி அருந்திவிட்டு, எழுந்து வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.
3
மனிதர்களைக் கொசுவாக உணரச் செய்யும் மிக உயரமான சுவர்கள் தாங்கிக் கொண்டிருந்த மேற்கூரை பிரமிட் வடிவில் இருந்தது. பாடம் செய்யப்பட்ட புலித்தலைகள் இல்லாத ஜமீன் பங்களாக்களை இதுகாறும் நான் பார்த்ததில்லை.
“வாங்க” என்றா மேனேஜர். மூன்றாம் கட்டும் கதவைத் திறந்ததும் கிரிக்கெட் பிட்ச் மாதிரி நீண்டிருந்த முற்றத்தில் மிளகாய் காய்ந்து கொண்டிருந்தது. செவ்வக வடிவில் சுற்றியிருந்த தாழ்வாரச் சுவர்களில் ஆங்காங்கே பச்சை நிறக் கதவுகள் தென்பட்டன. “இது பூசை ரூம்புங்க. இது பெரிய ஜமீன் இருந்தப்ப, வெத்தல பாக்கு போட உட்கார்ற இடங்க. இது பளைய சாமானுங்க வெக்கற இடம். அது பாருங்க, ஜமீன் வூட்டுக்காரங்களோட் அஜிம்மு” என்று காட்டிக் கொண்டே வந்தார் மேனேஜர். ஓரிடத்தில் கண்ணாடி போல் மழமழத்த பச்சை நிறத் தரைத்தளம் சதுரமாக ஒரு குளம் போலிருக்க, “அம்மணிங்க சோழி ஆடுவாங்க இங்க. நாங்க ஆம்லெட் தரைன்னுவோம். சிமிண்டு இல்லாம முட்டைக் கலவையால மட்டும் போட்ட தளங்க” என்றார்.
சத்தமெழுப்பிய மரப்படியில் ஏறி முதல் தளத்தை அடைந்தோம். கீழிருந்தது போலல்லாமல் மிகக் குறுகலான தாழ்வாரம் சுற்றி நீண்டிருக்க, வம்ச நாயக்கர்களின் ஓவிய முகங்கள் சட்டமிடப்பட்டு வரிசையாகக் காட்சியளித்தன.
“கவனிச்சீங்களா? இங்க ஃபேனுமில்லை, ஏசியுமில்லை. ஆனா சில்லுனு இருக்கு பாருங்க? அதான் டெக்னிக்கு. வெளிக்காத்து ஆக்ரோசமா தாக்கறப்ப மெல்லிசு ஓட்டைங்களை போட்டு வெச்சா என்னாவும்? சும்மா குளத்தங்கரை கணக்கா சில்லுனு ஆயிடாது?”
அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் பொட்டு வைத்தாற்போல வானத்துளிகளைக் கண்டேன்.
“இந்த ஜமீன் எத்தனை வருஷத்துதுங்க?” என்றேன் மேனேஜரிடம்.
“அது ஆச்சிங்க நூத்தம்பது வருசம். இவுக முப்பாட்டன் வெள்ளைக்காரனுக்கு ரொம்ப விசுவாசியாட்டு இருந்திருக்காரு. இங்க வரி கிரி வசூலிச்சுத் தாறது, சட்டாம்பிள்ளைக் காரியம் பாக்கது, துரைங்க ஓய்வெடுக்க வந்தா சாராயம் ஊத்தித் தாரதுன்னு இருந்திருக்காவ. அவனுக்கென்ன? நல்லா குடிச்ச வேளையில வள்ளல் மனசு வந்துட்டு. எடுத்துக்கடா இந்த கிராமத்தனிருக்கான். முன்ன நானூத்தம்பது ஏக்கரா சொத்து. இவுக தாத்தா சாரட்டுல போறத நாலு வயசுல பாத்த ஞாபகம் இருக்குங்க. பெரிய்ய குடும்பம். பங்காளிங்க மட்டும் பதினெட்டு பேருன்னா பாத்துக்கிடுங்க. இப்பம் யாரும் இல்லை. ஐயா மட்டும்தான்.”
“எல்லாருமா காலமாயிட்டாங்க?” என்றேன்.
“ஆமுங்க” என்றவர் சற்றுக் குரல் தாழ்த்தி, “யார் சாவும் நேரானதா இல்லீங்க. என்னமோ குலசாபம். வெட்டுப்பட்டே செத்துப் போனாங்க” என்றார்.
4
வானம் மறைத்த கருமையில் கரைந்து உப்படிகையில் நின்றிருந்தேன். உறக்கம் வரவில்லை. நெடுநெடுவென நீண்டிருந்த மேல் தளத்தில் அரண்மனை வேலையாள்களுக்குக் குடிசை அடித்துக் கொடுத்திருந்தார்கள். தரையெங்கும் உடல்கள் உறங்கிக் கிடக்க, எங்கோ தொலைவில் தவளைச் சத்தம் கேட்டது. மழைக்கு முந்தைய புழுக்கம் காற்றைக் கட்டிப் பிடித்திருக்க, பசிப்பது போலிருந்தது எனக்கு. இந்த நேரத்தில் யாரை எழுப்பி என்ன கேட்க முடியும்?
சத்தமின்றி கீழிறங்கினேன். இருளை மிகைப்படுத்திக் காட்டும் விதமான முட்டை விளக்குகள் முப்பதடிக்கு ஒன்றாக எரிந்து கொண்டிருக்க, கிழவியின் அறைக்குள்ளிருந்து வந்த சத்தம் என் கால்களை அசைவற்றுப் போகச் செய்தது. ஓசையின்றி அருகே செல்ல, அது பேச்சொலியல்ல; யாரோ பாடுகிறார்கள் என்பது விளங்க, வியப்பானது. கீழ்க்குரலில், மொழியற்ற ஒலி வடிவில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது குரல். தயக்கமிருந்தாலும் மெதுவாகக் கதவைத் தள்ளி, உள்ளே பார்த்தான்.
சட்டென்று ஒலி நின்று கிழவி நிமிர்ந்து பார்த்தாள். “ஆரு?” என்றபோதுதான் முதல் முதலில் அவள் குரலைக் கேட்டேன்.
“நாந்தான் ஆத்தாஸ மெட்ராசுலேர்ந்து வந்திருக்கனேஸ”
“தூங்கலையா தம்பி?” என்றாள் கிழவி.
“இல்லத்ஹ்டா. உங்க பாட்டுச் சத்தம் கேட்டிச்சா? நேரா எழுந்து வந்துட்டேன்/”
“பாட்டா! ஹெ!” என்றஹ்டு கிழவி. “அவுகளோட பேசிட்டில்ல இருந்தேன்?”
விளங்காமல், “நல்லாவே பாடறீங்க” என்றேன். அருகே அமர்ந்து.
“பாட்டில்லைன்னு சொல்லுதேனில்ல? இங்கிருந்து ஒரு குரலை அனுப்புவேன், மேலுக்கு. அவுக அதைப் பிடிச்சுகிட்டு இறங்கி வருவாங்க. ரெண்டு பேரும் பேசிகிட்டிருப்போம். விடிஞ்சதும் மறு குரல்ல ஏறிப் போயிருவாக” என்றாள் கிழவி.
முதுகு சிலிர்த்தது எனக்கு. யாரும் நுழைந்துவிட முடியாததொரு பேருலகையல்லவா கிழவி தனக்கென்று உருவாக்கி வைத்திருக்கிறாள். பகலெல்லாம் அவள் உறங்கி விடுவதன் காரணம் புரிந்தது.
“ஆத்தா, உங்கள் வீட்டுக்காரரை எனக்குக் காட்டுவீங்களா?” என்றேன் சிரித்துக் கொண்டே.
“எங்கே? எனக்கேதான் கண்ணவிச்சி வெச்சிருக்கானே? அவுக வருவாக. கையப் பிடிச்சிகிட்டு உக்காந்திருப்பாக. ஏதும் கேட்டா பதில் சொல்வாக. நேரமாச்சி, வாரேன்னு கிளம்பிருவாக. சமயத்துல அவர் போறப்ப குரல் கம்மி, அளுதுடுவேன். தொப்புன்னு விளுந்துடுவாக. ஐயோன்னு மறுபடியும் குரல் கொடுப்பேன். பிடிச்சிகிட்டு ஏறிப் போயிடுவாக.”
உறங்கும் எண்ணமே மறந்துவிட்டது எனக்கு. கிழவியின் மானசீக உலகின் கண்கூசச் செய்யும் வெளிச்சத்தில் ஒரு தும்பி போல் படபடத்துப் பறந்து கொண்டிருந்தேன்.
“அவரு பெரிய ராசாவா இருந்தாருன்னு சொன்னாரே மேனேஜர்?”
“சொன்னானா? சொல்லிருப்பான், சொல்லிருப்பான். பின்னே? மனுச வாழ்க்கையா வாழ்ந்தாக மகராசன்? ஊரு, சாமியாவுல்ல தொழும்! மம்முதங் கணக்கா என்ன நடெ! என்ன கெம்பீரம்?ஒடம்பொறந்த ஒருத்தனுக்குமில்லாத லெச்சணமில்லா? வேட்டைக்குப் போனாருன்னா, வனதேவதை மண்டு போட்டில்ல கேவும்? இத்தன மானு, இத்த மிளான்னு கப்பமாட்டு கொண்டு வந்து வெச்சி, மிச்சத்தப் பொறவு பார்த்துக்கிடவும்னு கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பிருமில்லே?”
“நீங்க போயிருக்கீங்களா ஆத்தா?”
“ஆருடெ வெவரந்தெரியாதவனாட்டு பேசுத. பொட்டச்சி எங்கன போவுறது? எல்லா அவரு சொல்லுறதுதேன்.”
கிழவியின் கண்களில் தென்பட்ட ஒளிக்கீற்று அறையை நிறைத்துத் ததும்புவதாகப்பட்டது. தன் மானசீகப் பற்றுக் கோல் துணையில் அவள் இருந்து கழித்த வருடங்களைத் தேடியெடுத்து மேய்ந்து பார்ப்பதில் அத்தனிஅ சிரமமிருக்காது என்று நினைத்தேன். பகலில் உறங்கி, இரவில் விழித்திருக்கச் சற்று பழக வேண்டும்.
தன் படுக்கையின் பின்புறம் எதையோ தேடி எடுத்தவள், பாட்டில் மூடியைத் திறந்து மடக் மடக்கென்று நான்கு வாய் குடித்துவிட்டு மூடிவைக்க, வியப்பில் “என்னது ஆத்தா?” என்றேன்.
“ஔசதம்!” என்றது, அசிரத்தையாக.
சற்றும் எதிர்பாராத அந்த நெடி என் மூளையைத் தாக்க, கிழவியின் ஸ்டாமினா பற்றிய சிந்தனையே அச்சமூட்டுவதாயிருந்தது.
“உறவுக்காரங்க வேற யாரும் இப்ப இல்லையா ஆத்தா?” என்றேன் மெதுவாக.
“எம்மயன் மட்டுந்தா” என்றாள் உடனே.
“இருந்தாலும் உங்களை விட்டுட்டு அவரு மட்டும் மெட்ராஸ் போயிட்டது சரியில்ல ஆத்தா. பாவம், வயசான காலத்துல.”
என்னைத் தொடரவிடவில்லை. “இருக்கட்டும்டே. நாந்தேன் அனுப்பி வெச்சேன். இங்க அவன் வாழமுடியாஹ்டு பார்த்துக்க.”
“ஏன் ஆத்தா?”
“வெப்பம் புடிச்ச மாளிகையிது. கெட்ட ஆவிங்க பொளுதும் சுத்திச் சுத்தி வருதுக. அந்தா, அந்தா பார் - சுதர்சனன் மேயுதான் தெரியுமா? இவம்பெரியப்பம்மவன். கட்டேல போறவன். செத்தொழிஞ்சும் விட்டொழிய மாட்டேங்குதான். நானொருத்தி வீட்டைச் சுத்தி மந்திரவேலி போட்டு வெக்காட்டி விளுங்கி ஏப்பம் விட்டிருப்பானுவ., பேதியில போறவனுவ. ஒரு படையேல்ல இங்க வாழுது? எப்பம் எம்மயன் வருவான். மேலே விளுந்து விழுங்கீறலாம்னுட்டுதானே காத்திருக்கானுவ? புளுத்தப் பய மக்கா, புளுத்தப் பய.”
ஆடிப் போயிருந்தேன். கண்ணவிந்த கிழவிக்கு ஆவிகள் உலவுவது தெரிகிறதா? என்ன சொல்கிறாள் இவள்?
“அவுக ஒடம்பொறந்தவக இருந்தானுவளே, காக்காசுப் பயனத்தவக. வடிச்சி வெப்பேன், பானை பானையா. விழுங்கி, ஏப்பம் விட்டு, உருளச் சொல்லு? நல்லா உருளுவானுவ பித்தளச் சொம்பு கணக்கா. நாசமாப்போற பயலுவ. சொத்தைப் பிரின்னவ. நெலத்தக் கூறு போடுன்னாவ. வீட்டை வித்துப் பங்கு பிரின்னாவ மக்கா! எம்புருசனா மசியற மனுசன்? போங்கடே பொசகெட்டவனுவளான்னு வீசினாரு பார் ஒருக்கா... இஞ்ச பிடிச்ச ஓட்டம் வீரக்குடி போயித்தான் நின்னாவ. எப்பம்பாரு சண்டை. எப்பம்பாரு சள்ளை...
சற்றே குரலைத் தழைத்தவள், “இந்த சமீனுக்குன்னு ஒரு குலசாமி உண்டு. வீருமாராத்தான்னு பேரு. அவ ஒருக்க வந்து சொல்லீட்டே போனா: பிரிச்சி கிரிச்சிப் பேசினீகளோ மக்கா, பொலிபோட்ருவேன்னு. இவுக பாட்டா ரெத்தத்தத் தண்ணியா சிந்தி உழைச்சி சம்மாரிச்ச பூமியல்லா? கூறு போட்டு ஆளுக்கொண்ணு திங்க இதென்ன பொரிளங்கா உண்டையா?”
“அதானே?” என்றேன் உசுப்பும் விதமாக. கிழவி இன்னொருமுறை பாட்டிலைத் திறந்து ஊற்றிக் கொண்டாள்.
“கேட்டியா? ஓரு அப்பிசி மாசம். மள வெளுத்து ஊத்துது. இவுக சிம்மம்பட்டு வரையும் போய் வாரேன்னு கிளம்பினாவ. எதுக்குங்கே? அவுக தம்பி மயனுக்குப் பொண்ணு பாக்க! குத்துவெளக்கு ஏத்தி வெச்சாப்புல இருக்கணும்டீன்னு ஏண்ட்ட சொல்லீட்டே இருப்பாக. எம்மயனுக்கு வாய்ச்சவதா சீக்காளியாப் போனா. அடுத்தவ அஷ்டலெச்சுமி அம்சமா வரோணும்னுட்டு அவுகளுக்குக் கெனா. தம்பி சொல்லுதான், ‘நீ பாத்தாச் செடிதான்' எண்ணு. இது ஏதுடா பாசம் கம்மா ஒடச்சிக்கிட்டு ஊத்துதுன்னு அப்பமே நெனச்சேன். செரிதான் மனுச புத்தி ஊஞ்சப் பலகையாட்டம் தானேன்னு நினைச்சேன். மள கொட்டுது பாரு. அப்பிடியொரு கொட்டு! இவுக சாரட்டு புடிச்சி ஏறி கெளம்பிட்டாக. நண்ணி கெட்ட நாலு நாயிக பிளான் தெரியுமா? வழியில மடக்கி, வெட்டிப் போடுதுண்ணு...”
“ஐயோ!”
“கேளு! பாதையில்லாத பாதையில போனாரா? இவனுவ இந்தா வாரம் மதினின்னு பின்னொடவே கெளம்பிட்டாவ. அப்பவே சம்சயப்பட்டேன். செரி, நம்ம மவராசனுக்கு வனதேவதையே பணிஞ்சிப்போவா. இந்தப் பயித்தாரப் பயலுவ மளைலநெனஞ்சி சளி புடிச்சித்தான் வருவானுவ. வேறொண்ணும் களேட்டீறமாட்டானுவன்னு நெனச்சிப் போட்டேன்.
“ஆச்சா? ஒரு மணியாச்சு, நெண்டு மணியாச்சு. பொளுது சாஞ்சி இடி புரட்டுது. இவுக வாராக, ஒத்தை ஆளா. என்னான்னு சாரிச்சா, சொல்லுதாரு, வளியில தம்பிமாரு நாலு பேரும் தலை உருண்டு கெடுக்காமுண்ணு! பிடிச்சிது பாரு பீதி. ஒரே ஓட்டம், சாமியாண்ட ஓடினேன். பர்த்தா, மக்கா நம்பமாட்டே. அவ கையில புடிச்ச சூலத்துல ரெத்தஞ் சொட்டுது. கிளர்ந்து போசி பார்த்துக்க. சொத்தென்னடே சொத்த்! இவுக உசிர வெச்சிருந்தாக அவுக மேல. வெவரங்கெட்ட நாயிக, நாண்டுபோனாவ...”
கிழவியின் உடல் ஆடிக் கொண்டிருந்தது. பீதியில் எனக்கு வியர்த்திருந்தது. தொலைவில் ஒற்றை மாட்டின் குரல் ஒலிக்க, மணி மூன்றரை ஆகியிருந்தது. கிழவி, காலை நீட்டிப் படுத்துக் கொண்டாள். நான் எழுந்திருக்கலாமா என்று யோசித்தேன்.
“அந்தக் காத்தைக் கொஞ்சம் திருப்பி வையி” என்று உத்தரவிட்டாள் கிழவி.
நான் டேபிள்ஃபேனை அவள் பக்கமாகத் திருப்பினேன்.
“கேட்டியா? அவுக தம்பிமார் மயனுவ ஒவ்வொருத்தனுஞ் செத்ததும் இப்பிடித்தேன். மனசுல ஒரு கோணல் விளுந்திருச்சின்னு வையி. வீருமாராத்தா விளிச்சிகிடுவா. பதினெட்டு பொலி போட்டா. எத்தினி? பதினெட்டு! இப்பம் சுத்தி வாரானுவ ஆவிகளா. நல்லசாவு நேர்ந்தாத் தானே நல்ல கெதி வாய்க்கும்? கொள்ளியில போறவனுவ. பணப்பிச்சி பிடிச்சி அலைஞ்சானுவ. கொலைக்கு அஞ்சாதவனுவ பார்த்துக்க. ஆனுமுட்டும் என்னைப் போட்டுத் தள்ளப் பாத்தானுவ. ஏங்கிட்ட மந்திவேலி உண்டில்லா? நெருங்கினா எரிச்சிப் போடுமே?”
“அதென்ன ஆத்தா மந்திரவேலி?” என்றேன் ஆர்வம் தாங்கமாட்டாதவனாக.
“அவுக மொதமொத எங்கொரலைப் பிடிச்சிக்கிட்டு இறங்கி வாரப்ப குடுத்துப் போட்டுப் போனாரு. கண்ணுக்குத் தெரிஞ்சா அதெப்பிடி மந்திரமாவும்? சந்திரமதி தாலியொக்க அவுக மாட்டிவுட்டுப் போனத அவுக மட்டுந்தான் பாக்க முடியும். ஒரு காத்துக் கருப்பு அண்டனுமே? ம்ஹும்! ஷ்ட்ராங்! என்று ஆர்ம்ஸ் காட்ட்சி சிரித்தாள் கிழவி.
சன்னலைத் திறந்து பார்த்தேன். வானில் ஒரு விமானம் கடந்து மறைந்தது. தோட்டத்துச் செடிகள் மொக்கு விட்டிருக்க, கிழவி எழுந்து என் தோளைத் தட்டினாள்.
“பதினெட்டு தடியனுவள பொதச்ச பூமி இதா. பூத்திருக்கு பாரு, சீமெக்கரி லெச்சணமா.”
முதுகுத்தண்டு சிலிர்த்தது எனக்கு. அப்படியே சரிந்து படுத்தேன். மொட்டுகள் வெடித்து, வாசனை ம்தந்து வந்து நாசியில் நுழைய, நரம்புகள் செயலிழந்து உறங்கிப் போனேன்.
5
“ப்ரொபசர் இங்க எப்ப வந்து படுத்தீரு?” என்று மேனேஜர் எழுப்பியபோதுதான் கண் விழித்தேன். கொஞ்சம் முரண்டு பிடித்தபின் இரவு நிகழ்ந்தவை ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, “ஆத்தாவோட பேசிட்டிருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்” என்றேன் வெட்கமாக.
“ஆத்தாவா? அதுகு ராத்திரியே பேதியெடுக்க, ஆசுபத்திரிக்கில்ல கொண்ட்டு போனோம்?”
குழப்பமாயிருந்தது. “எப்ப போனீங்க?” என்றேன் சந்தேகமாக.
“நீங்க படுத்த நிமிஷம் தூங்கிட்டீகளா?” ஒம்பதரைக்கே அவுகளைத் தூக்கிட்டுப் போயிட்டம். அடிக்கடி வாரதுதான். ஆனா உசிரு கெட்டி. இந்தா, பத்து மணிக்கு வந்துருவாக பாரும்” என்றார் மேனேஜர்.
முற்றிலும் புரியாமல் நான் அந்த அறையைப் பார்த்தேன். பழைய உடைசல்களும் பிரப்புக் கூடைகளும் ஓர் உபயோகமற்றா சைக்கிளும் அங்கிருக்கக் கண்டேன். ஒட்டடை படிந்து, நான் கணக்கில் தரை கூட்டாமல் புழுதியும் குப்பையுமாயிருக்கக் கண்டு மேலும் குழம்பினேன்.
“பெரியவக இருந்த காலத்துல இது அவுக பெட்ரூம்பா இருந்தது. பிறவு ஆத்தா இந்தப் பக்கமே வாரதில்லை. என்னருந்தாலும்பளசு நெனப்பு வந்து கஷ்டமாவுமில்ல?” என்றார் மேனேஜர். நான் பதிலேதும் பேசவில்லை.
பல் துலக்கிவிட்டு, அவசரமாக அவருடன் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினேன். கிழவி ஒரு பழைய தாள் மாதிரி படுக்கையில் கிடந்தாள். டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.
“ஆத்தா! ஆத்தா!” என்று மேனேஜர் அழைக்க, ஒரு குகையிலிருந்து மீள்வது போல அவள் கண்கள் மயங்கித் திறந்தன. பேசும் சக்தி முற்றிலுமாக இருக்காது என்பஹ்டு பார்த்ததுமே புரிந்தது.
நம்ப முடியாமல், காய்ப்பேறிக் கறுத்துக் கிடந்த கிழவியின் கையை மெல்லத் தொட்டுப் பார்த்தேன்.
அடுத்த விநாடி ஜமீன் வீட்டுக்குத் தலை தெரிக்க ஓடினேன். மூன்றாம் கட்டுத் தாழ்வாரங்களைக் கடந்து வலப்புறம் மாடிப்படி அருகில் இருண்டு கிடந்த அந்த அறையை உதைத்துத் திறந்து இலக்கற்றுத் தேடினேன்.
இரும்பு வாளிகள், உபயோகமற்ற கரண்டிகள், உடைந்த ராட்டினம், தகரத் தகடுகள் எனக் குவிந்திருந்தனவற்றை விலக்கியபோது அது அகப்பட்டது. துருப்பிடித்து ஒரு குறுவாள். பாய்ந்து எடுத்து வெளிச்சத்தில் பார்த்தேன். பிடியில் ரத்தக்கறை படிந்து இருகியிருந்தது.
பிரமை பிடித்தவன் போல் சன்னலருகே வந்து நின்றேன். செடியோ, பூக்களோ அற்ற மண் மேட்டில் சுள்ளிகள் அடுக்கியிருக்கக் கண்டேன்!
யாளி முட்டை
ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரியை உதைக்கவேண்டும். அவன் முன்குடுமியைப் பிடித்து உலுக்கி, 'படவா, என்னத்துக்காக இப்படியொரு முழுப்புரளியைக் கிளப்பிவிட்டு, மேலிடத்தை உணர்ச்சிமேலிடச் செய்து, எங்கள் பிராணனை வாங்குகிறாய்?' என்று ஜிம்பு ஜிம்பென்று ஜிம்பவேண்டும். பிடி மண்ணை அள்ளி அவன் முகத்தில் வீசி, ஆத்திரம் தீர அவன் வம்சத்தையே சபிக்கவேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு பழைய காளி கோயிலாகப் பார்த்து இழுத்துக்கொண்டுபோய், தூணில் கட்டிவைத்து, சாட்டையால் அடித்தே பலி கொடுத்தாலும் பாதகமில்லை. ஆடு, மாடு பலி கொடுத்தால் தான் பாவம். ஆசாமியைக் கொடுத்தால் தப்பில்லை. அதுவும் சோதிடத்தை வைத்து ஏமாற்றுகிற ஆசாமி.
இப்படியெல்லாமும் விநோதமான பரிகாரங்கள் இருக்கமுடியுமா தெரியவில்லை. கற்பனை வளம் மிக்க சோதிடர்களும் சில்லறை சோழிச் சித்தர்களும் தெருவுக்கு நாலுபேரெனப் பெருகி விட்டார்கள். இந்தப் பயல்களெல்லாம் ஆரம்பத்தில் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சுளைகளுடன் சேர்த்துப் பிள்ளையார் பொம்மை எடுத்துக்கொண்டிருந்தபோதே பிடித்து நாலு சாத்து சாத்தியிருந்தால் இத்தனை தூரத்துக்கு இப்போது வளர்ந்திருக்கமாட்டார்கள்.
வெற்று மார்பில் ருத்திராட்சம் பளபளக்க, நெற்றியில் துலங்கிய ஹோமரக்ஷையிலிருந்து வியர்வை ஒழுக, நடுக்கூடத்தில் என்னமோ கட்டங்கள் வரைந்து , சோழிவைத்து எதிரே அமர்ந்து கண்மூடி ஆவேசம் வந்தவன்போல் ராஜீவன் நம்பூதிரி உச்சாடணம் பண்ணிக்கொண்டிருந்தபோதே அகழ்வாராய்ச்சித்துறைத் தலைவருக்குக் கவலை வந்துவிட்டது.
சென்றமுறை இப்படித்தான், எட்டுக்கோடியே தொண்ணுத்தேழு லட்சத்து நானூத்தி இருபத்திமூன்று பச்சை மிளகாய்களை அரைத்துச் சட்னி செய்து கங்காளம்பாளையம் அங்காளபரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனான் தடியன். ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட அம்மனுக்கு நாலு இட்லி வைக்காமல் வெறும் பச்சை மிளகாய்ச் சட்னியை கொட்டு கொட்டென்று கொட்டினால் பாவம் அவள் தான் என்ன ஆவாள்?
ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க அவகாசமில்லை. உடனே நாட்டிலுள்ள அனைத்து விவசாயத்துறை அதிகாரிகளூம் விஞ்ஞானிகளும் வரவழைக்கப்பட்டார்கள்.
தேசம் முழுக்க எங்கெங்கே உயர்தர பச்சை மிளகாய் பயிரிட்டிருக்கிறார்கள் என்று அனைத்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் விசாரிக்க உடனடியாக உத்தரவிடப்பட்டது. மூட்டை மூட்டையாகக் கொள்முதல் செய்து, தனியே பச்சைமிளகாய் கணக்கெடுப்புத்துறை என்று ஒன்றை உருவாக்கி, ஆயிரத்தெட்டுப் பேருக்குப் புதிதாக அரசாங்க உத்தியோகம் கொடுத்து உதிரி உதிரியாக எண்ணி, பெட்டி பெட்டியாக அடுக்கச் சொன்னார்கள். நாட்டுமக்கள் யாரும் அடுத்த ஏழு மாதங்களுக்குப் பச்சை மிளகாயையே கண்ணால் பார்க்கமுடியாதபடி ஆகிவிட்டது.
ஐநூறு ஆட்டுரல்களில், பெண்கள் அழுதவண்னம் சட்னி அரைக்க, அதை அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்தால் பிரச்னைகள் யாவும் தீரும் என்று நம்பூதிரி சொன்னான்.
ஏன் அதை இவன் தலையில் கொட்டித் தேய்க்கக் கூடாது? என்று கேட்டார் பக்கத்திலிருந்த உதவி ஆணையர்.
"உஷ். பேசாம இருமய்யா. பெரிய இடத்து விவகாரம்."
இவ்வாறு, பெரிய இடத்து விவகாரம் முதல் முதலில் பச்சை மிளகாயில் தான் ஆரம்பித்தது. அப்புறம் இன்னொருத்தன் வந்து ஒரு கோடியே எட்டுத் தேங்காயை ஒரே கோயிலில் உடைக்கச் சொன்னான். வேறொருத்தன் பத்தாயிரம் கோயில் அம்மன்களுக்குப் பட்டுப்புடைவை வாங்கி சாத்தச் சொன்னான். இந்தப் பக்கம் அருள்வாக்கு சொல்லிவிட்டு அந்தப் பக்கம் ஒரு புடைவைக்கடையும் திறந்துவைத்தான். தேர்கள். குதிரைகள். யானைகள். எடைக்கு எடை தங்கம். வைரம். வைடூரியம். அன்னதானம், ரத்ததானம், ஆயிரத்தெட்டு அசுவமேத யாகங்கள்.
சே, எத்தனை பக்தி, எத்தனை பரோபகாரம் என்று தேசம் வியந்தது. பிரச்னைகள் தான் தீர்ந்தபாடில்லை. வாழ்க்கை கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கிறது. எதிரிகள் பெருகிவிட்டார்கள். எல்லாம் அந்த வைடூரிய சிம்மாசனத்துக்காக. ஆயிரத்தி நாநூறு வருஷங்கள் முன்னால் விக்கிரமாதித்த மன்னன் விட்டுப்போன சிம்மாசனம் அது. எங்கோ கிராமத்தில் அகழ்வாராய்ந்துகொண்டிருந்தபோது ணங்கென்று இடிபட்டு, அகப்பட்டது.
பயபக்தியுடன் எடுத்துவந்து, தூசுதட்டி சமர்ப்பித்தது தொல்பொருள் துறை.
ஒருதரம் சுற்றி நின்ற அத்தனைபேரையும் புன்னகையுடன் பார்த்துவிட்டு கம்பீரமாக ஏறி அமர்ந்தார் அவர். மக்கள் தம்மையறியாமல் கைதட்டிவிடவே சிம்மாசனம் அன்றிலிருந்து அவருடையதாகிப்போனது.
சிம்மாசனம் கிடைத்ததில் பெரிய சிக்கல் ஏதும் வரவில்லை. ஆனால் வைத்துக் காப்பாற்றுவதில் தான் தாவு தீர்ந்துபோகிறது. தொன்மத்தின் வாசனை பூசிய சிம்மாசனம் அது. கால்கள் லொடலொடத்துக்கொண்டிருக்கின்றன. மரகதப் பூண்போட்ட கைப்பிடி ஆடுகிறது. வெல்வெட் வேலைப்பாடுகள் மிக்க உட்காருமிடத்தில் நிறைய மூட்டைப்பூச்சிகள் குடிபுகுந்துவிட்டன. மேலும் ஆண்டாண்டு காலமாக முகலாய மன்னர் காலத்து மதுப்புதையல்களுடன் சேர்ந்து புதைந்து கிடந்ததில், மதுச்சாடிகள் உடைந்து அதன் வெல்வெட் பாகங்களில் ஊறிப்போய், உட்காரும்போதெல்லாம் ஒருவித போதை தலைக்கேறிப்போய்விடுகிறது. உட்காருமிடம் உறுத்தினாலும் எழுந்திருக்கத் தோன்றாத போதை அது. பெருமை அல்லவா? கம்பீரம் அல்லவா? யாருக்குக் கிடைக்கும்?
ஆனால் எதிரிகள் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். அந்த வைடூரிய சிம்மாசனத்தைக் கைப்பற்றியே தீருவோமென்று வானமண்டலத்து தேவர்கள் சாட்சியாக பதினொருபேர் கூடி நின்று நெருப்பு மூட்டி வீர சபதம் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது.
நல்ல கதையாக இருக்கிறதே? விலைமதிப்பே இல்லாத சிம்மாசனம் அது. உலக அதிசயங்கள் அத்தனையையும் விட மதிப்புமிக்கது. பார்க்கக் கிழடுதட்டிக் கிடந்தாலும் உட்கார்ந்து பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். ஆ, அந்த போதை! அதைப்போய் எதிரிகள் கையில் கிடைக்கவிடுவதாவது?
மேலிடத்திலிருந்து உடனே உத்தரவுகள் வரத்தொடங்கின. சிம்மாசனக் காவலர்கள் என்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. கற்கால ஆயுதங்கள் தொடங்கி அத்தனை ஆயுதங்களையும் அவர்களுக்குத் தாராளமாக விநியோகித்தது சிம்மாசனப் பரிபாலனத்துறை. அந்தப் படையைச் சுற்றி இன்னொரு பெரும்படை. சோழர்காலத்து ஆபத்துதவிப் படையினரின் வம்சத்திலிருந்து தேடித் தேர்ந்தெடுத்த படை இது. அவர்களைச் சுற்றி மேலும் ஒரு படைவரிசை. அவர்களைச் சுற்றி இன்னொன்று, இன்னொன்று என்று ஒன்பது அடுக்குகளாகப் பச்சைச் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டும், கிழக்கில் சூரியன் உதிக்கிற நேரத்தில் எங்கிருந்தோ வந்து இருமுறை சிம்மாசனத்தை எடுத்துப் போய்விட்டார்கள். மீட்டுக்கொண்டுவருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.
இம்முறை விடக்கூடாது. விடவே கூடாது என்று உறுதியுடன்தான் ஏறி உட்கார்ந்தார் அவர். குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது, நீதி விசாரிப்பது, மனுக்கள் பெறுவது, சொற்பொழிவாற்றுவது, தீர்ப்புகள் வழங்குவது, ஓய்வெடுப்பது, பொழுதுபோக்காகத் தாயம் உருட்டுவது, இயற்கைக்கடன் கழிப்பது என எல்லாக்காரியங்களையும் சிம்மாசனத்தில் அமர்ந்தபடியே செய்யத்தொடங்கினார். தீராத முதுகுவலி வந்தபோதும் எழுந்திருக்கவே முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
மருத்துவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். தொடர்ந்து மூட்டைப்பூச்சிகளிடம் கடிபட்டுக்கொண்டே இருந்தால் உடம்பில் ரத்தமே இருக்காதே என்று எடுத்துச் சொன்னார்கள். அதற்குப் பிரதியாக தினசரி மூட்டைப்பூச்சிகள் உறிஞ்சும் ரத்தத்தின் இருமடங்கை உடலில் ஊறச்செய்யும் பச்சிலை மூலிகைகளை எட்டு கடல் தாண்டி எங்கிருந்தோ எடுத்துவரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
செலவு கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. ராஜ்ஜிய நிர்வாகத்துக்கு ஆகிற செலவைப்போல் மும்மடங்கு அந்த வைடூரிய சிம்மாசனத்தைக் காப்பாற்றுவதற்கே ஆகிறது. இது சரியல்ல என்று ஆங்காங்கே பலர் முணுமுணுக்கத் தொடங்கியதும்தான் மந்திரவாதிகளிடம் யோசனை கேட்கிற திட்டம் உருவானது.
ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரி. அவந்தான் இப்போது ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறான். எப்படித்தான் பரிகாரங்களை அவன் தொடர்ந்து, சளைக்காமல் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறானோ?
"தலைநகருக்கு அறுநூறு மைல் வடமேற்கில் இருக்கிற கானகத்தில் எட்டாவது சூரிய வட்டத்தில் அகழ்ந்து ஆராய்ந்தால் அகப்படப்போகிற முதுமக்கள் தாழிக்குள் இருக்கிற ஒரு யாளியின் முட்டை உடைந்து, குஞ்சு பொறிந்திருக்கும். அதை எடுத்துக்கொண்டுபோய் தென் கிழக்கில் முன்னூறு மைல் தொலைவில் இருக்கிற மருதநிலத்துத் திருநிலக்குன்ற ஆலயத்தில் வைத்து பூஜித்து அப்படியே சுற்றித் தூண் எழுப்பிவிட்டால் போதும். எதிரி பலமிழந்து போவான். பகை அழியும். சத்ரு நாசம் நிச்சயம். வழக்கு வியாஜ்ஜியங்கள் இருந்த இடந்தெரியாமல் ஓடிப்போகும்.. இந்தமுறை தப்பு நடக்க வாய்ப்பே இல்லை..." தீர்மானமாகச் சொன்னான் நம்பூதிரி.
"யாளியா?" அதிர்ந்து கேட்டார் தொல்லியல் துறை உதவி ஆணையர்.
"ஓம். யாளிதான். சிங்க முகமும் யானையுடெயெ துதிக்கையுமா இருக்கும். சிற்பங்கள்ளெ பார்த்திருப்பீரே? பகவதியுடெயெ வாகனமாக்கும் அது."
"நாசமத்துப் போவே நீ!"
"எண்டஜோலி இவிடெ முடியுதம்மே." என்று சொல்லிவிட்டு மறக்காமல் தட்சணை பெற்றுக்கொண்டு பகவதீ என்று எழுந்து கிளம்பிப் போயே விட்டான்.
உம், கிளம்புங்கள். யாளி. யாளிவேண்டும் உடனே. அந்தக் காட்டில் போய்த் தோண்டித் தேடுங்கள் என்று உத்தரவிட்டார் பாதுகாப்புத்துறை மகாமந்திரி.
பெரும்படையொன்று திரட்டிக்கொண்டு குதிரைகளும் கூடாரங்களுமாகக் காட்டுப் பகுதிக்கு வந்து முகாமிட்டது தொல்லியல் துறை ஆய்வாளர் குழு.
யாளி. சிற்பங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கிற ஒரு விநோத முகம். மானுடக் கற்பனையின் எல்லையற்ற வீச்சின் விநோத விளைவு. மனித உடலும் யானை முகமும். சிங்கமுகமும் யானையின் துதிக்கையும். குதிரை உடலும் சிங்க முகமும். சிங்க முகமும் யானை உடலும். சிற்பிகளின் கவிதாபூர்வமான கற்பனைகள் பல நூற்றாண்டுகள் கழித்து இப்படியொரு விபரீதத்துக்கு வித்திடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமுடியாது. கடவுளே, மன்னர்களெல்லாரும் ஏன் சிற்பிகளை ஆதரித்தார்கள்? சிற்பிகளெல்லாரும் ஏன் இப்படி விபரீத உருவங்களைப் படைத்தார்கள்? அந்த உருவத்தையெல்லாம் இந்த இழவெடுத்த ராஜீவன் நம்பூதிரி எங்கிருந்து பார்த்து கவனித்துக் குறித்துக்கொண்டு வருகிறான்?
"ஒரு காலத்தில் யாளி இருந்திருக்கிறது. புராணங்களில் அதுபற்றிய குறிப்பு கிடைக்கிறது. மாகாளி பராசக்தி தன் வாகனமாக அதைப் பயன்படுத்தியிருக்கிறாள்.... இதோ பாருங்கள்... சிங்க முகமும் யானையின் துதிக்கையும் கொண்ட ஒரு மிருகம்...மேற்குதேசத்துப் புராணங்களில் வருகிற டிராகன் என்கிற மிருகத்துடன் பலவகையிலும் உருவ ஒற்றுமை கொண்டது...."
"என்னது அது?"
"யாளி - வரலாறும் தொன்மமும். நூற்று எழுபது வருஷத்துப் புஸ்தகம். நூலகத்திலிருந்து எடுத்தேன்."
"அந்த நம்பூதிரியுடன் சேர்ந்து நீயும் நாசமாகப் போ. அவன் ஒரு முட்டாள். ஏமாற்றுக்காரன். மோசடிப் பேர்வழி. முதுமக்கள் தாழியில் யாளியின் முட்டை இருக்குமாம். இத்தனை வருஷம் கழித்து அது உடைந்து குஞ்சு பொறிக்குமாம். இவன் போய்ப் பார்த்தானா, யாளி முட்டைபோட்டுக் குஞ்சு பொறிக்கிற ஜாதி என்று?"
"ஏன், நீங்கள் சபையிலேயே கேட்டிருக்கலாமே இதை?"
தொல்லியல்துறைத் தலைவர் உடனே மௌனமாகிவிட்டார். அவரைப் போலவே தான் அத்தனை பேரும் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். யாரைக் கடிந்துகொண்டு என்ன பயன்? ஒரு யாளி கிடைத்துவிட்டால் போதும். அல்லது யாளியின் முட்டை.
"யாளி முட்டை கோழிமுட்டை மாதிரி இருக்குமா?"
"அபிஷ்டு. என்னத்தையாவது எடுத்துவந்து யாளிமுட்டை என்று ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதே. யாளிமுட்டை சதுர வடிவில் இருக்குமாம். சதுரமுட்டை! ஹும். என்னஒரு முரண்!"
அவர்களுக்கு இன்னொரு கவலையும் மிச்சம் இருந்தது. முதலில் யாளியின் முட்டை இருக்கிற முதுமக்கள் தாழியைத் தேடிப்பிடித்தாகவேண்டும். அப்புறம் அந்த முட்டையை எடுத்துக்கொண்டு எங்கேயோ போகவேண்டும் என்று சொன்னானே... அது எந்த இடம்... என்னவோ தென் கிழக்கில் முன்னூறு மைல் தொலைவில் இருக்கிற மருதநிலத்துத் திருநிலக்குன்ற ஆலயமாமே? அது எங்கே இருக்கிறது?
மருதநிலம்...திருநிலக்குன்றம்....இந்தப் பேரெல்லாம் செத்துப்போய் எத்தனையோ நூற்றாண்டுகளாகிவிட்டன. எங்கிருந்து அந்த தடித்தாண்டவராயன் தேடி எடுக்கிறான், ஒருத்தருக்கும் புரியாமல்?
"அது சாதாரணக்கோயில் இல்லே கேட்டியோ? பரமேஸ்வரன் லிங்கரூபத்திலே இருந்தாலும் முன்னந்தலையிலே சிகை இருக்கும் பார்த்துக்கோ..."
நம்பூதிரியின் குரல் மீண்டும் ஒலித்தது காதுகளில். சிகை வைத்த லிங்கம். எங்கே இருக்கிறது அது?
"என்னெக்கேட்டா? நீ தேடிப்பிடிச்சிக்கோ. அது உங்களது ஜோலியாக்கும். ஞான் கிளம்பட்டே? மனசிலிருக்கட்டும். தென்கிழக்கே முன்னூறு மைல். சிகை வெச்ச லிங்கரூபேஸ்வரன் ஆலயம். மருத நிலத்துத் திருநிலக்குன்றம் எண்டு பேரு. வரட்டே?"
"ஒழிடா கடங்காரா" என்றார் தொல்லியல் துறை ஆணையர்.
நம்பூதிரி குறிப்பிட்ட கானகத்தை அடைவதில் அவர்களுக்குச் சிரமம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் அவன் தோண்டச் சொன்ன இடத்தைக் கண்டுபிடித்ததுதான் பெரிய காரியமாக இருந்தது. அடர்ந்து மரங்கள் ஓங்கியிருக்கும். ஆனாலும் சூரியனின் கிரணங்கள் மிகத்தெளிவாகத் தரையில் வந்து விழும். முன்னொரு காலத்தில் கபிலர் அங்கே இருந்து தான் பூமியைக் குடைந்துகொண்டு போய் பாதாளத்தில் குகை அமைத்துத் தவம் செய்திருக்கிறார் என்று நம்பூதிரி சொன்னான்.
மேலிடத்துப் பெரியவர்களெல்லாம் கைகட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே அகழ்வாராய்ச்சித்துறைத் தலைவரால் எதிர்த்துக் கேள்வி ஏதும் கேட்க முடியாமல் போய்விட்டது. யார் கண்டது? கபிலர் பாதாளம் தோண்டியபோது இந்த நம்பூதிரிதான் பக்கத்திலிருந்து மண் அள்ளிப்போட்டானோ என்னவோ? அப்போதே அந்த யாளி முட்டையை எடுத்துவந்து பத்திரமாக வைத்திருக்கமாட்டானோ கழிச்சல்ல போறவன்?
அடர்ந்த காட்டுக்குள் மூங்கிலும் சந்தனமும் தேவதாருவும் இன்னபிற வானுயர்ந்த மரங்களும் வெட்டப்பட்டு, வெயில் சுள்ளென்று விழுந்த இடமாகப் பார்த்துத் தேடி இது தான் என்று ஏகதேசமாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
"சரி, தோண்டலாமா?"
"ஆகட்டும்"
காளியை வேண்டிக்கொண்டு கடப்பாறையால் முதல் குத்துப் போட்டார் அதிகாரி. அடுத்தடுத்த மூன்று குத்துகளில் அவருக்கு வியர்த்துவிட்டது. பக்கத்திலிருந்த கூலி ஆட்களிடம் கடப்பாறையைக் கொடுத்துவிட்டு கூடார வாசலில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு பார்வையிட ஆரம்பித்தார். மிகவும் கவலையாக இருந்தது அவருக்கு. ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. நல்லபடியாக வீடுபோக முடியுமானால் ஓய்வு ஈட்டுத்தொகை ஒழுங்காக வந்து சேருவதில் சிக்கல் இருக்காது. அபசுரமாக இந்த யாளி முட்டை விஷயத்தில் ஏதாவது நடந்துவிட்டால் பிறகு திருவோடு ஏந்தவேண்டியதுதான். மேலும் எதிரிகள் மீண்டும் படையெடுக்கத் தயாராகிவருவதாகச் செய்தி வந்திருக்கும் நேரம். ஒரு பரிகாரத்தில் சிம்மாசனம் பிழைக்க முடியும் என்று எத்தனை தீர்மானமாக நம்புகிறார்கள்.
யாளி முட்டை. சதுர முட்டை
மாலைக்குள் அந்தப் பிரதேசத்தை சுமார் நூறுபேர் தொடர்ந்து தோண்டியதில் கணிசமான அளவு பள்ளம் உருவாகி, நீரூற்று தென்படத் தொடங்கியது. பெரிய பெரிய மர வாளிகளில் கயிறுகட்டி நீரை முகர்ந்து முகர்ந்து இறைப்பதற்குத் தனியே நூறுபேர் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். தலைநகரிலிருந்து சிறப்புப் பார்வையாளராகப் பாதுகாப்புத்துறை மகாமந்திரி கிளம்பிவந்து எல்லையில் முகாமிட்டிருப்பதாகவும் நாளை பொழுது விடிந்ததும் அவர் காட்டுக்குள் பிரவேசிப்பார் என்றும் பணியாள் வந்து சொன்னான்.
அதிகாரிக்கு அழுகை வந்தது. நிலத்தைத் தோண்டும் பணியாளர்களை மேலும் வேகமாகத் தோண்ட உத்தரவிட்டுவிட்டு மேலே எழுந்து வந்து குவியும் கற்களையும் மண் கட்டிகளையும் புரட்டிப் புரட்டி ஆராய ஆரம்பித்தார். நாசமாப்போற ராஜீவன் நம்பூதிரி எத்தனையடி ஆழம் தோண்டியபின் யாளி முட்டை தென்படும் என்பது பற்றி ஏதும் தகவல் தந்திருக்கவில்லை. இதுவரை ஐம்பதடி ஆழத்துக்கு - முப்பது சதுர அடிகள் பரப்புக்குத் தோண்டியிருக்கிறது. அசப்பில் பிரதேசமே ஹரப்பா மாதிரிதான் காட்சியளிக்கிறது. கொஞ்சம் நம்பிக்கை கொள்ளுமாறு ஏதாவது செப்புக்காசு, இரும்புப் பட்டயம் என்றாவது அவ்வப்போது வரத் தொடங்கியிருக்கலாம். ஊற்றெனப் பெருகிய நீர் கூட வற்றி மீண்டும் பாறை பாறையாகவே வருகிறது. எப்போது கிடைக்கும் யாளி முட்டை?
கவலையிலும் அலுப்பிலும் அவர் உட்கார்ந்தபடிக்கே உறங்கிப்போனார்.
உறக்கத்தில் அவருக்கொரு கனவு வந்தது.
ஆயிரம் அடி ஆழப்பள்ளத்தில் ஒரு பெரிய மரவாளி கயிறு கட்டி இறங்குகிறது. வாளிக்குள் உட்கார்ந்திருப்பது யார்? அவரா? அட, அவரேதான். கையில் பூதக்கண்ணாடியும் சுரண்டிப்பார்க்கும் கொல்லூரும் இன்னபிற புதைபொருள் உபகரணங்களும் இருக்கின்றன. எதனைத்தேடி அத்தனை ஆழத்தில் அவரை இறக்குகிறார்கள்?
"பாத்து, பாத்துப்பா. பயமா இருக்கு. கயிறு போதுமான அளவுக்கு இருக்கா?" தொண்டை கிழித்துப் புறப்படுகிற அவரது குரல் பாதி உயரத்திலேயே கரைந்து போய்விடுகிறது. பூதம் மாதிரி கவிந்த நிசப்தத்தினூடாக மரவாளி மெல்ல மெல்ல இறங்கிக்கொண்டே இருக்கிறது. கையோடு எடுத்து வந்த மெழுகு வர்த்தியைக் கொளுத்தி சுற்றுப்புறத்தைப் பார்க்கிறார் அதிகாரி. தோண்டிய பக்கமெல்லாம் மண்ணாலான யாளியின் உருவங்கள் கூர்மையான பற்களை நீட்டிச் சிரிக்கின்றன. சில யாளிகள் அபூர்வமாக பேண்ட் அணிந்திருக்கின்றன. சில கூலிங் கிளாஸ் அணிந்திருக்கின்றன. அட கிரகச்சாரமே. இந்த யாளி என்ன அழிச்சாட்டியமாக சிகரெட் பிடிக்கிறது. குப்பென்று நாசியில் மோதிய புகையில் அவருக்குத் தும்மல் வந்துவிடுகிறது. சில வினாடிகளில் அந்த நெடி சிகரெட்டின் நெடியல்ல என்பது அவருக்குப் புரிகிறது. விஷ வாயு! ஐயோ என்று அலறிக்கொண்டு கண் விழித்தார் அதிகாரி.
"ஐயா!"
"ஒண்ணுமில்லை. தோண்டறாங்களா?" அநிச்சையாகக் கேட்டுக்கொண்டார் அவர்.
"ஆமாங்க. எழுபதடி போயிருக்குது...மந்திரி வந்துட்டாருங்க..."
அவர் அவசரமாக எழுந்துகொண்டார்.
"என்னய்யா அதிகாரி? என்ன நடக்குது இங்க? யாளி முட்டை கிடைச்சிதா இல்லியா?" எகத்தாளமாகக் கேட்டார் மந்திரி.
"ஐயா, தேடிக்கிட்டு இருக்கங்க." என்றார் அதிகாரி.
"நல்லா, நல்லா தேடணும். முட்டை இல்லாம இங்கேருந்து கிளம்ப முடியாது, பாத்துக்க."
"சரிங்க"
பிரும்மாண்டமாக உழுது அகன்றிருந்த நிலத்தின் விளிம்பில் போய் நின்று சுற்றிப்பார்த்தார் மந்திரி. ஆழத்தில் உழைப்பாளிகள் கற்களைப் பிளந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் முதுகுகளில் துளிர்த்த வியர்வை, அம்மைக் கொப்புளங்கள் போல் மேலிருந்து பார்க்கத் தெரிந்தது. அடுத்த வினாடி அகப்பட்டுவிடக்கூடிய முதுமக்கள் தாழிக்காக அவர்கள் உக்கிரமாகப் பாறைகளைப் பிளந்துகொண்டிருந்தார்கள். ஒரு தாழி. அது மூடியிருக்குமா, திறந்திருக்குமா என்று தெரியவில்லை. உள்ளே இருந்த எந்த முதுமகனைத் தூக்கிக் கடாசிவிட்டு யாளி தன் முட்டையை அங்கே போட்டுவைத்தது என்று தெரியவில்லை. தாழியிலிருந்து யாளியால் தூக்கி எறியப்பட்ட முதுமகன் பிறகு என்னவாகியிருப்பான்? மண்ணோடு மக்கிப் போயிருக்கக்கூடும். அல்லது அந்த யாளியே அவனைத் தின்றிருக்கும். யாளி பிணம் தின்னுமா? தேசத்தில் இப்போதெல்லாம் சாத்திரங்கள் மட்டும்தான் அதனைத் தின்னுகின்றன. அசைவ சாத்திரங்கள்.
மந்திரி கேட்டார் "உங்கள்ள யாரானா யாளி முட்டையை முன்னால பாத்திருக்கிங்களாய்யா? வருசக்கணக்கா இதே நோண்டிப்பண்டார வேலைதானே பாக்குறிங்க?"
"இல்லிங்க... பாத்ததில்லிங்க" என்றார் அதிகாரி.
"தத்திங்க....தத்திங்க..." மந்திரி காறித்துப்பினார். "கிணறு தோண்டப்போங்கய்யா. எதுக்கு தொல்பொருள் ஆய்வுன்னு பெரிசா பேரு வெச்சிருக்கிங்க?"
மிகவுமே சரி. எத்தனை புனிதமான பணி! கிணறு தோண்டலாம், குழாய் ரிப்பேர் செய்யலாம். செருப்புத் தைக்கலாம். காய்கறி விற்கலாம். மூட்டை தூக்கலாம். சாக்கடை சுத்தம் செய்யலாம். சாலை போடலாம். வீதி பெருக்கலாம். விளக்கு விற்கலாம்....
அடிவயிற்றிலிருந்து பெருகிய ஓலத்தை அடக்கமாட்டாமல் கதறியவண்ணம், பள்ளத்தின் விளிம்பில் நின்று கையாட்டிப் பேசிக்கொண்டிருந்த மந்திரியைப் பாய்ந்து அறைந்து, அவர் எதிர்பாராத விதமாக இழுத்துத் தள்ளினார்.
ஓவென்று அலறியபடி விழுந்த மந்திரியின் குரல் வினாடிகளில் அடங்கிப்போனது. காற்று நின்று வீசிய கணத்தில் அதிகாரி ஒரு தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.
"....கண்டெடுத்த முதுமக்கள் தாழியை மேலெடுத்துவந்து திறந்ததும், முட்டையை உடைத்துக்கொண்டு பூதம் மாதிரி சீறியெழுந்த யாளிக்குஞ்சு மந்திரியைத் தாக்கித் தள்ளிக்கொன்றது. சிம்மாசனத்தைக் காப்பாற்ற யாளிமுட்டை உதவுமென்று சொன்ன நம்பூதிரி ஒரு முட்டாள். திரேதாயுகத்து அன்னப்பறவையின் அலகைத் தேடியெடுத்து அதனைக்கொண்டு நெய்யால் ஹோமம் செய்து ஆகுதி வளர்த்தால் போதுமானதென்று சொல்லிவிட்டு விண்ணில் சீறிப்பறந்து மறைந்தது. ஆகவே தொல்பொருள் ஆய்வுக்குழு இப்போது அன்னப்பறவையைத் தேடி வடக்கே பயணம் மேற்கொண்டிருக்கிறது...." என்று எழுதி எல்லோரிடமும் கையெழுத்து வாங்க ஆரம்பித்தார்.
சாட்சிக்காரன் குறிப்புகள்
கனவே போலத்தான் இருந்தது. ஒருமுறை கண் இமைத்துத் திறக்கும் நேரத்தில் அவளை நான் கண்டுகொண்டேன். ஞாபகத்தில் பிசகேதும் இல்லை. ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா - பிராக்கெட்டில் சுத்த சைவம் - முதலாளி தையூர் வரதராஜு முதலியாரின் இரண்டாவது பெண் பொற்கொடிதான் அவள். பதினெட்டு வயதில் பார்த்தது. பத்து வருஷத்துக்கு உண்டான தோற்றம் சார்ந்த மாற்றங்கள் இருப்பினும் அடிப்படை வார்ப்பு மாறிவிடுமா என்ன? தவிரவும் ப்ளஸ்டூவில் அவளுக்கு நான் ஆங்கிலப்பாடம் எடுத்திருக்கிறேன். பிஹோல்ட் ஹர் சிங்கிள் இன் தி ஃபீல்ட், யான் ஸாலிடரி ஐலண்ட் லாஸ் என்று தமிழில் எழுதிவைத்துப் படித்துக்கொண்டிருந்தவள் காதைப் பிடித்துத் திருகி, கண்ணில் நீர் வரவழைத்திருக்கிறேன். அப்போதே அவள் ஜீவராசன்பேட்டை இஸ்மாயில்கனியைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்திருந்தால் ஒருவேளை காதைத் திருகாமல் இருந்திருக்கலாம். அன்றைக்கு அதிகாலை நாலரை மணிக்கு, பதைக்கப் பதைக்க முருகைய நாடார் கடைக்கு எதிரே கோவளம் திருப்பத்தில் அவனுடனும் பெரியதொரு பெட்டியுடனும் அவள் பேருந்தில் ஏறுவதைப் பார்க்க நேர்ந்தபோது கைதூக்கி ஆசீர்வதித்திருக்கலாம். அல்லது கூப்பிட்டு விசாரித்து ஏதாவது நல்லதாக நாலு வார்த்தை பேசியிருக்கலாம்.
முந்தைய வருடம் வரை என்னிடம் படித்துக்கொண்டிருந்த மாணவி. இருளோடு இருளாக யாரோ ஒரு வாலிபனுடன் பேருந்து ஏறி எங்கோ போகிறாள். என்னைத் தவிர அந்தக் காட்சியை நேரில் பார்த்த சாட்சி என்று ஊரில் யாருமில்லை. திருடர்களும் காதலர்களும் பெரும்பாலும் அதிகாலை நேரங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆறு மணிக்கொரு முகூர்த்தம் என்று அவசரமாகச் செங்கல்பட்டுக்குப் புறப்படும் ஆங்கில ஆசிரியர்களும்.
இந்த நிலையில் நான் செய்யக் கூடியது என்ன?
இஸ்மாயில்கனியை எனக்குத் தெரியும். முந்தையவாரம் கூட இரண்டு மீட்டர் காடாத் துணிவாங்கி, அவன் கடையில்தான் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அருமையான டெய்லர். அவனைப்போல் நேர்த்தியாக அண்டர்வேர் தைத்துக் கொடுக்க பிராந்தியத்தில் வேறு யாரும் கிடையாது. சட்டை, ஜிப்பா, சோளி வகையறாக்கள் எதுவானாலும் நம்பி, கொடுக்கலாம். பேண்ட் தைத்தால் மட்டும் கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும். அந்த விஷயத்தில் மட்டும் எழுபதுகளில் வெளியான தமிழ்த்திரைப்படங்களின் ஆடை அலங்கார பாதிப்பிலிருந்து அவன் இன்னும் விடுபடாமலே இருந்தான். பிரச்னை இல்லை. சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆல்டர் செய்து தருவான். இளைஞன். அத்தனை சிறிய வயதில் சுயதொழில் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தவன்.
என்ன தவறு? அவனும் காதலிக்கலாம். பொற்கொடிக்கும்கூட காதல் வருகிற வயதுதானே? ஒரு பிழையும் இல்லை. ஆனால் இந்த விஷயத்தை நான் பார்ப்பதற்கும் ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகாவின் முதலாளி வரதராஜு முதலியார் பார்ப்பதற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் அவசியம் இருக்கும்.
முதலியார் எப்போதோ ஒருமுறை விநாயகர் சதுர்த்தி சமயம் பம்பாய்க்குப் போய்வந்திருக்கிறார். அந்தக் கோலாகலமும் விநாயகரிடம் மராத்தியர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்தியையும் பார்த்தவருக்கு உடனடியாக ஏதோ தோன்றியிருக்க வேண்டும். இரண்டு காரியங்கள் செய்தார். புதுப்பாக்கம் சாலையில் ராஜலட்சுமி திரையரங்கை ஒட்டி, அவருக்கு இருந்த இரண்டேகால் கிரவுண்டு நிலத்தில் ஒரு அழகான பிள்ளையார் கோயில் கட்டினார். ஸ்ரீ அருகம்புல் விநாயகர் ஆலயம். சோழிங்க நல்லூரில் ஆர்டர் கொடுத்து விநாயகர் விக்கிரகம் பளபளப்பாக வந்துவிட்டது. திருப்போரூர் கோயிலிலிருந்து அர்ச்சகர்களும் பிள்ளையார்பட்டியிலிருந்து தலைமை அர்ச்சகரும் வந்திருந்தார்கள். கோலாகலமான விக்கிரகப் பிரதிஷ்டை.
அன்றைய தினமே ஊரின் முதல் ஓட்டலுக்கும் அவர் அஸ்திவாரம் இட்டார். ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா - சுத்தசைவம்.
முதலியார், பெரிய உப்பள முதலாளி. இரண்டு லாரிகள் அவர் பெயரில் ஓடுகின்றன. கோவளம், கேளம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் அவரைக் கலந்துகொள்ளாமல் எந்தப் பெரிய காரியத்திலும் இறங்கமாட்டார்கள். மசான கொள்ளை, ஆடித் திருவிழா என்று வருஷத்துக்கு நாலைந்துமுறை 192 பக்க நோட்டில் சுபம் - லாபம் என்று எழுதி எடுத்துக்கொண்டு புறப்படும் நன்கொடைப் படைகள் முதலில் வரதராஜு முதலியார் வீட்டுக்குத் தான் போகும். எவ்ளய்யா போடணும் என்று கேட்டுக்கொண்டே ரூ. ஐந்நூத்தி ஒன்று என்று எழுதியபடிக்கு ஜிப்பா பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுப்பார்.
நாலுபேர் பாராட்டவென்று செய்தாரோ, நல்ல காரியம் என்று செய்தாரோ தெரியாது. ஊரில் அவர் முதல் கல் எடுத்து வைத்து நிறைய காரியங்கள் நடந்திருக்கின்றன. நான் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்துக்குக் கூட ஒரு மேல்நிலை நீர்த்தொட்டி கட்டித்தர முதல் தொகையாக ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தவர் முதலியார்தான். பிற்பாடு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டடம், சத்துணவுக்கூட ஓலைக் கொட்டகை மாற்றல், விளையாட்டு மைதானத்தில் குடிநீர்க்குழாய் அமைப்பது என்று எங்கள் தலைமை ஆசிரியர் தேடித்தேடி ஒவ்வொரு பணியாக எடுத்துக்கொண்டு அவரிடம் தான் முதலில் போவார்.
ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கக் கூப்பிட்டு ஒரு பொன்னாடை. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி. பிள்ளைகளுக்கு நீர் கொடுத்த வரதராஜு முதலியார் என்று ஓரிரண்டு புகழாரங்கள்.
பணக்காரர்களுக்குப் பணம் தவிரவும் சிலது வேண்டித்தான் இருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் முதலியார் எங்கள் பள்ளிக்கூடத்தைப் பெரிய அளவில் விஸ்தரிக்க உதவிகரமாக இருந்தார். அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து அதுநாள் வரை மேல்நிலைப் படிப்புக்காக திருப்போரூருக்கும் சோழிங்கநல்லூருக்கும் போய்க்கொண்டிருந்த பிள்ளைகள் மெல்லமெல்ல எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வரத் தொடங்கினார்கள். முதலியார் தமது மூன்று மகள்களையும் கூட அங்கேயேதான் விட்டிருந்தார். மூத்தவள் பதினோராம் வகுப்பில் ஃபெயில் ஆனாள். அதனாலென்ன? கருங்குழியில் ஒரு வெற்றிலைத் தோட்டமும் திருப்போரூரில் டூரிங் டாக்கீஸும் வைத்திருந்த கோதண்டராம முதலியாரின் மூத்த மகனைப் பிடித்துத் திருமணம் செய்துவைத்துவிட்டார். எங்கள் பள்ளிக்கூடம் சார்பில் நானும் தலைமை ஆசிரியரும் அந்தத் திருமணத்துக்குப் போய்வந்தோம். திருப்போரூரில்தான் நடந்தது. வெற்றிலை பாக்கு கவரில் வேட்டி, துண்டு வைத்துக்கொடுத்த முதல் நபர், அந்தப் பிராந்தியத்திலேயே அவர்தான்.
அந்தத் திருமணத்தில் பொற்கொடி பட்டுப் பாவாடை தாவணியில் துள்ளித் துள்ளி ஓடிக்கொண்டிருந்தாள். என்னையும் தலைமை ஆசிரியரையும் மிக மரியாதையாகக் குளிர்பானம் கொடுத்து உபசரித்தாள். 'அடுத்து உனக்கு எப்பம்மா?' என்று தலைமை ஆசிரியர் அசட்டு ஜோக் அடித்தபோது, 'நான் படிக்கப் போறேன் சார்' என்று பொற்கொடி சொன்னாள். முதலியாருக்கு அந்த பதிலில் ஏகப் பெருமை. தன் இரண்டாவது மகளின்மீது அவர் பெரிய நம்பிக்கைகள் வைத்திருந்தார். அவள் எம்.பி.ஏ. படிக்க வேண்டும். உப்பளத் தொழிலை நவீனமாக்க வேண்டும். உள்ளூரில் ஒரு அயோடைஸ்டு தூள் உப்பு ஃபாக்டரி கட்டவேண்டும். அதன் நிர்வாகப் பணிகள் அத்தனையையும் அவளிடம் ஒப்படைத்துவிட வேண்டும். நம்ம பள்ளிக்கூடத்தில் படித்து வரும் பையன்களுக்கு அங்கே வேலைவாய்ப்பு அவசியம் இருக்கும்.
"அடேயப்பா" என்றார் தலைமை ஆசிரியர்.
பொற்கொடிக்கு அப்போது பதினைந்து வயதுதான். பத்தாம் வகுப்பில்தான் இருந்தாள். ஜீவராசன்பேட்டை டெய்லர் இஸ்மாயில் கனியை அப்போது அவள் சந்தித்திருக்க முடியாது.
வரதராஜு முதலியார் போன்ற பணக்காரர் மற்றும் பக்தி சீலருக்கு மூன்று பெண்குழந்தைகள் பிறந்தது பற்றியெல்லாம் வருத்தம் இருக்க வாய்ப்பில்லை. அந்த வருடம் தான் அவர் தையூரில் ஒரு பெரிய மாந்தோப்பை விலைக்கு வாங்கி, 'பொற்கொடி ஃப்ரூட்ஸ்' என்று போர்டு மாட்டி, மாம்பழ ஏற்றுமதி சாத்தியங்கள் பற்றியும் யோசிக்கத் தொடங்கியிருந்தார்.
0
நான் எதிர்ப்பக்கம் செங்கல்பட்டு பேருந்துக்காகக் காத்திருந்தபோதுதான் இந்தப்பக்கம் பொற்கொடியும் இஸ்மாயில்கனியும் சென்னை போகும் மாமல்லபுரத்து வண்டியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். ஒரு ஐந்துநிமிடங்கள் நான் முன்னதாகப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்திருந்தால் எதிரெதிரே அவசியம் சந்தித்திருப்போம். அவளாக ஏதும் பேசாவிட்டாலும் நானே ஓரிரண்டு வார்த்தைகள் பேசியிருப்பேன். என்ன ஏது என்று விசாரித்திருக்கலாம். அதற்கு அப்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர்கள் ஏறிய பேருந்து கிளம்பிவிட்டது. பின்புறக் கண்ணாடியை ஒட்டிய நீள இருக்கையில்தான் பொற்கொடி அமர்ந்திருந்தாள். பேருந்து, கோவிந்தராஜ் டாக்டர் க்ளினிக்கைத் தாண்டிய சமயம் அவள் பின்னால் திரும்பி என்னைப் பார்த்ததுபோலிருந்தது.
ஒருகணம் எனக்கு மிகவும் பரபரப்பாகியிருந்தது. இப்போது நான் என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்விதான். விடையே தோன்றாத கேள்வி. உடனே தையூருக்குப் போய் முதலியாரிடம் விஷயத்தைச் சொல்லலாம். தொலைபேசியில் அழைத்தும் சொல்லலாம். ஆனால் நினைவில் வைத்துக்கொள்கிற மாதிரி அடிக்கடி பேசுகிற நபர் இல்லை அவர். அவரது தொலைபேசி எண் வீட்டில் டைரியில் இருக்கிறது. விடிகிற நேரத்தில் அப்படியொரு செய்தி நிச்சயம் முதலியாருக்குக் கசப்பானதாகவே இருக்கும். ஒருவேளை பொற்கொடியின் காதல் விவகாரம் முன்னதாகவே அவருக்குத் தெரிந்திருக்குமானால், ஓரளவு சமாளிப்பார். செய்தியே புதிது என்றால் தாங்குவது சிரமமே. அதுவும் ஒரு டெய்லர் பையன். இஸ்மாயில் கனி.
நான் ஏறவேண்டிய காண்டீபன் பஸ் சர்வீஸ் பேருந்து வந்துவிட்டது. அனிச்சையாக ஏறி அமர்ந்துகொண்டாலும் மனத்துக்குள் ஒரு பதற்றம் இருந்தது. குறுகுறுவென்று உள்ளுக்குள் கொரித்துத் தின்னும் புழு போல. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை தைரியம் வந்துவிடுகிறது! வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்தான். கஷ்டம் தான். காதல் முக்கியம்தான். அதனாலென்ன? பதினெட்டு வருட உறவுகளை சட்டென்று இடதுகையால் ஒதுக்கி வைத்துவிட்டுக் கிளம்பிவிட முடியுமா? அல்லது, எப்படியும் கொஞ்சநாளில் சூடு தணிந்து எல்லாம், எல்லாமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகிவிடும் என்கிற நம்பிக்கை காரணமா?
எந்தப் பெற்றோரும் தம் பெண்ணை முற்றிலுமாக ஒதுக்கிவிடமாட்டார்கள். எந்தப் பெண்ணும் மனத்தின் அடியாழத்தில் பெற்றோருக்கென்று கட்டமிட்டு வைத்திருக்கும் இடத்தில் இன்னொரு உறவை உட்காரவைத்துவிட மாட்டாள். ஆனால், உறவுகளல்ல; உடனடித் தேவைகள் முக்கியத்துவம் பெரும் தருணம் அது.
உடனடித் தேவைகளா! சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். வெறும் சொற்கள். அலகிட்டுப் பார்க்கும்போது எத்தனை பரிமாணங்கள் எய்திவிடுகின்றன. பொற்கொடி எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கவேண்டும் என்று என் மானசீகத்தில் விநாயகரை வேண்டிக்கொண்டேன். ஸ்ரீ அருகம்புல் விநாயகர்.
அவள் தந்தையை நினைத்தால்தான் கவலையாக இருந்தது. முதலியார் அதை எப்படி எதிர்கொள்வார் என்று என்னால் யோசித்தோ அல்லது யூகித்தோ அறியமுடியவில்லை. பெரும் பணக்காரர். ஊருக்கு உபகாரி. முக்கியஸ்தர். நடந்துவரும் தோரணையில் தம் இயல்பையும் இருப்பையும் பதிவு செய்துவிடுகிறவர். ஊருக்குள் ஓடிய முதல் கார், அவர் வாங்கியது. வெள்ளை நிற அம்பாசிடர். பலநாட்கள் பள்ளியில் ஆங்கிலம் இரண்டாம் பாடத்துக்கான ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும். மாலை பிள்ளைகள் வீடு திரும்ப ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். அப்போதெல்லாம் பொற்கொடியை அழைத்துப் போக அந்த வெள்ளை அம்பாசிடர் கார் பள்ளி காம்பவுண்டு சுவருக்கு வெளியே காத்திருக்கும். கஷ்டப்பட்டுப் படித்துக்கொண்டிருக்கிற பொற்கொடி. எப்படியும் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி ஆகிவிடப்போகிற பொற்கொடி. அயோடைஸ்டு உப்பு ஃபாக்டரி ஆரம்பித்து, ஊரில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கப்போகிற பொற்கொடி.
அவள்தான் ஜீவராசன்பேட்டை டெய்லர் இஸ்மாயில் கனியுடன் ஓடிப்போனாள்.
0
செங்கல்பட்டு கல்யாணத்துக்குப் போய்விட்டு நான் ஊர் திரும்பியபோது மணி காலை ஒன்பது முப்பது. நான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போதே விஷயத்தின் சூடு ஊரெங்கும் பரவியிருந்ததைக் கண்டுகொண்டேன். முருகைய நாடார் மளிகைக் கடைக்கு எதிரே கூட்டம் கூட்டமாக ஆட்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். முதலியாரின் உப்பு கொடோன் ஊழியர்கள் பலர் - எதற்கென்று தெரியாமல் - கையில் தடியுடன் சுற்றிச் சுற்றி வரக்கண்டேன்.
சரசரவென்று நான்கைந்து கார்கள் குறுக்கே போயின. ஊரில் கார் வைத்திருப்போர் மொத்தமே இரண்டு பேர்தான். அவர்களுள் ஒருவர் முதலியார். ஆனால் திடீரென்று எங்கிருந்து அத்தனை கார்கள் வந்தன என்று தெரியவில்லை. ஒவ்வொரு காரிலும் ஐந்தாறுபேர் அடைந்திருந்தார்கள். எல்லோரும் இஸ்மாயில் கனியைத் தேடிக்கொண்டிருக்கிறார்களா? உள்ளூரில் சுற்றிச்சுற்றி வந்து என்ன பயன்?
எனக்கு உடனே பல திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வந்தன. காதலியுடன் தப்பியோடும் கதாநாயகன். பிடிபட்டு, எங்காவது குடோனில் அடைக்கப்பட்டு குண்டர்களால் தாக்கப்படும் காட்சிகள். உதட்டோரம் ரத்தம் ஒழுக அவன் சரிந்து விழுவது நிச்சயம். சம்பந்தமில்லாமல் இன்னொரு அறையில் அவன் காதலி உடனே பாட ஆரம்பிப்பாள். உள்ளத்தின் சோகத்தையெல்லாம் பிழிந்து, அவள் பாடி முடிப்பதற்குள் கதாநாயகன் எப்படியும் தன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டுவிடுவான்.
சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் மேலதிக வித்தியாசங்கள் இல்லை போலிருக்கிறது. இந்நேரம் எப்படியும் இஸ்மாயில் கனியும் பொற்கொடியும் சென்னையில் ஏதாவது ஒரு பதிவாளர் அலுவலகத்தில் வேலையை முடித்திருப்பார்கள் என்று தோன்றியது. முன்னேற்பாடுகளுடன் தான் அவர்கள் கிளம்பிப்போயிருக்க வேண்டுமென்று நினைத்தேன். எனக்கு உடனே முதலியாரைப் பார்த்துப் பேசவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதிகாலை அவர்கள் கிளம்பிப் போவதை நான் பார்த்ததாகச் சொல்லுவதற்கில்லை. விநாடி நேரத்தில், அவர்கள் ஏறிய பேருந்து கிளம்பிவிட்டது என்கிற உண்மையை அவரால் உணர இயலாமல் போகலாம். மேலும் இச்சம்பவத்தை ஓர் அவமானமாக அவர் கருதலாம். அந்தஸ்து, சாதி, இன்னபிற காரணங்கள். விசாரிப்பதோ, தகவல் சொல்லுவதோ வலியை அதிகரிப்பதாகவே முடியும். அவர்கள் போனதை நான் பார்த்த விஷயம் என்னுடனேயே இருந்துவிடுவது நல்லது என்று அப்போது தோன்றியது.
அந்த வாரத்தில் ஒருநாள் மாலை வழக்கம்போல் அருகம்புல் விநாயகர் கோயிலுக்குப் போய்விட்டு வந்த என் மனைவி, சந்நிதியின் எதிரே மண்டபத்தில், முதலியார் பிரமை கொண்டவர்போல் மௌனமாக வானம் பார்த்து அமர்ந்துகொண்டிருந்ததாகத் தெரிவித்தாள். பாவமாகத்தான் இருந்தது. ஒரு காதல் அல்லது கலப்புத் திருமணத்தைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய தந்தைதான் நான் என்பதாக - முன்னதாகத் தெரியப்படுத்திவிட வேண்டிய கடமை ஒரு தந்தைக்கு அவசியம் உண்டு போலிருக்கிறது. ஒருவேளை அப்படியொரு மனப்பக்குவம் இல்லாதிருக்குமானால், அதற்கான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். பலபேரைக் கதறியழச் செய்துவிட்டுத்தான் ஒரு காதல் வெற்றி பெற வேண்டும் என்கிற இயற்கையின் நியதி மீது கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால் ஆச்சர்யம், எனக்குப் பொற்கொடியின்மீது கோபம் வரவில்லை. நிச்சயமாக இல்லை. அது ஏனென்றுதான் தெரியவில்லை. இனி அவள் எம்.பி.ஏ. முடித்து அயோடைஸ்டு உப்பு ஃபாக்டரி தொடங்கமாட்டாளே என்கிற வருத்தம் மட்டும்தான்.
ஒரு வாரம், பத்து நாள்கள் வரை ஊரில் அந்தப் பேச்சு பிரதானமாக இருந்தது. இஸ்மாயில் கனி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் சென்னை போலீஸ் உதவியுடன் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். ஒருநாள் காலை பொற்கொடி ஃப்ரூட்ஸ் வழியாக நான் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது தற்செயலாக வரதராஜு முதலியாரைச் சந்தித்தேன். குரலில் பழைய கம்பீரமோ, உற்சாகமோ இல்லாமல்தான் பேசினார்.
"இஷ்டப்பட்டவன கட்டிக்கிட்டு நல்லா இருக்கட்டும் சார். எனக்கு அதில்லை வருத்தம். அவன் யாரு, என்னான்னு கூடத் தெரியாது எனக்கு. சோளி தைக்கத் துணி எடுத்துட்டுப் போவ வீட்டாண்ட வருவானாம். நீங்களே சொல்லுங்க. ஊர்க்காரன் என்ன சொல்லுவான்? மொதலியாருக்குப் பொண்ண பெத்துக்கத் தெரிஞ்சிதே தவுர வளக்கத் தெரியலன்னு பேசமாட்டானுவ? ஊர்க்காரன் என்ன, எங்க சங்கத்துலயே முதுகுக்குப் பின்னால பேசறானுக சார். எம்மொதப் பொண்ணோட புருசன் போன் போட்டு விசாரிக்கிறான். அவனை நாலு பேரு கேக்கறானுகளாம். அவமானமா இருக்காம். என்னா பதில் சொல்லன்னு கேக்கறான். இதுக்குத் தங்கச்சின்னு ஒண்ணு இருக்குது. அதுக்காகத்தான் உசிரை வெச்சிக்கிட்டு இருக்க வேண்டியிருக்குது. இல்லாட்டி நானும் எம்பொண்டாட்டியும் என்னிக்கோ மருந்து குடிச்சிருப்போம்..."
"அடடே, எதுக்கு சார் வருத்தப்படறிங்க? விட்டு விலகற உறவா இதெல்லாம்? நேரம் அப்படி செய்ய வெச்சிருக்கு. எல்லாம் சரியாயிடும். இதெல்லாம் நடந்ததுங்கறதே மறந்துபோகற காலம் ஒண்ணும் கண்டிப்பா வரும். ஆனா ஒண்ணு. நீங்க உங்க மகளுக்கு, மனசு எரிய சாபம் எதுவும் குடுத்துடாதிங்க" என்று எனக்குத் தெரிந்த அளவில் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.
எனக்கும் அப்போது ஒன்றும் பெரிய வயதில்லை. பதினெட்டு வயதுப் பெண்ணின் தந்தை ஒருவரின் மனம் இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் என்ன விதமாகத் துடிக்கும் என்று கற்பனைதான் செய்ய முடியுமே தவிர, வலியின் நிஜமுகம் தெரிய சாத்தியமில்லை.
ஓரிரண்டு மாதங்களில் அவர் அந்தப் பழத்தோட்டத்தைக் கூட யாரோ வெளியூர்க்காரர்களுக்கு விற்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பொற்கொடி ஃப்ரூட்ஸ் என்கிற தகர போர்டு மட்டும் மேலும் கொஞ்சநாளைக்கு அங்கே இருந்தது. பிறகு அதுவும் காணாமல் போய் வேறு பெயர் வைத்துவிட்டார்கள்.
முதலியாரை நினைத்தால் மிகவும் வருத்தமாக மட்டுமே இருந்தது.
அந்த வருட ஆடித்திருவிழாவுக்கு முதலியார் வழக்கம்போல் முதல் நன்கொடையாக ஐந்நூறு ரூபாய் அளித்தார். விநாயகர் சதுர்த்தி சமயம் ஒருவாரம் அருகம்புல் விநாயகர் ஆலயம் அமர்க்களப்படத்தான் செய்தது. பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் ஒரு பகுதியைப் பழுதுபார்க்க வேண்டி தலைமை ஆசிரியர் அணுகியபோது, தயங்காமல் மூவாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.
வேதனை இருந்தாலும் முதலியார் சமாளித்துக்கொண்டுவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் பலபேர் சொன்னதுபோல் பொற்கொடியும் இஸ்மாயில் கனியும் இருக்கிற இடம் தெரிந்துவிட்டதாகவெல்லாம் தெரியவில்லை. அவர்கள் சென்னையிலோ அல்லது வேறெங்காவதோ - சந்தோஷமாகவோ, கஷ்டப்பட்டுக்கொண்டோ வாழ்ந்துகொண்டிருப்பதற்குச் சாட்சியாக ஒரு சிறு தகவல் அல்லது வதந்தி கூட அந்த கிராமத்தை எட்டிப் பார்க்கவில்லை. முதலியார் முயற்சி செய்யாமல் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவர்கள் அப்படி எங்கே தான் போயிருப்பார்கள்?
0
பணி மாற்றம் வந்து நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் வேறு பல ஊர்களுக்குப் போகவேண்டியிருந்தது. தையூர் முதலியார், ஓடிப்போன அவரது இரண்டாவது பெண் எல்லோரும் என் நினைவிலிருந்து இயல்பாக உதிர்ந்துவிட்டிருந்தார்கள். வாழ்வில் எத்தனையோ விஷயங்களுக்கு எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு சமயத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். காலம் நகர்ந்து போகும்போது எல்லாமே சாதாரணமாகிவிடுகிறது. உண்மையில் அறிவையல்லாமல், உணர்ச்சியைத் தொட்டுப்பார்க்கும் எல்லாமே சாதாரணங்கள்தானா? காதல் உள்பட?
ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பொற்கொடியை நான் சென்னையில் வைத்துத்தான் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. சற்றும் எதிர்பாராவிதமாக அடையாறு மத்திய கைலாஷ் பிள்ளையார் சந்நிதி அருகே.
நான் அவளை அடையாளம் கண்டுகொண்டது போலவே அவளும் என்னைப் பார்த்தமாத்திரத்தில் தெரிந்துகொண்டுவிட்டாள். "வணக்கம் சார்" என்றாள் உடனே.
"நல்லா இருக்கியாம்மா?" என்றேன்.
கேட்டிருக்கவே வேண்டாம். அவளை நான் பிள்ளையார் கோயிலில் சந்தித்திருந்தேன். நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். திருமணமான முஸ்லிம் பெண்கள் அணியும் கருகமணித் தாலியும் அணிந்திருந்தாள். கையில் ஐந்து வயதில் ஒரு சிறுவனைப் பிடித்திருந்தாள். இடுப்பில் ஒரு பெண் குழந்தை இருந்தது. முகத்தில் நிம்மதியின் பரிபூரணமான சுவடுகள் இருந்தன. அவள் ஒரு குடும்பத்தலைவி. திருமதி இஸ்மாயில் கனி.
"பையன் பேர் அப்துல்லா. பொண்ணு பேர் லட்சுமி சார்" என்றாள்.
டெய்லராக இருந்தால் என்ன? இஸ்மாயில் கனி நல்லவன். தெரிந்துதான் பொற்கொடி அவனைக் காதலித்திருக்கிறாள். பிரச்னை, அவள் காதலித்ததில் இல்லை. சொல்லாமல் உடனோடி வந்துவிட்டதில்தான். ஆனால் பத்து வருட இடைவெளியில் பேசுவதற்கு மீண்டும் அந்தக் கதையைத் தானா தேர்ந்தெடுக்க வேண்டும்?
"இஸ்மாயில் என்ன பண்றாம்மா?" என்றேன்.
"அதே வேலைதான் சார். ஆனா கொஞ்சம் பெரிய அளவுல செய்யறார். இங்கதான் பக்கத்துல அடையாறு சிக்னல்கிட்ட கடை வெச்சிருக்கார். ஆறுபேர் வேலை பார்க்கறாங்க. ஒரு துணிக்கடை ஆரம்பிக்கிற வேலையிலேயும் மும்முரமா இருக்கார்" என்றாள்.
அடையாறு சிக்னல் அருகில் கடை. எனக்கு அந்தத் தகவல் போதுமானதாக இருந்தது. சந்தேகமில்லாமல் பொற்கொடி சௌக்கியமாகத்தான் இருக்கிறாள்.
என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தேன். அவள் புறப்பட்டுப் போனதை அந்த அதிகாலை வேளையில் நான் பார்த்தது பற்றி. அன்றைய தினம் கிராமமே அத்தகவலால் பற்றி எரிந்தது பற்றி. வரதராஜு முதலியார் அடைந்த பரிதவிப்புகள் பற்றி. பொற்கொடி ஃப்ரூட்ஸ் தோட்டத்தை அவர் விற்றுவிட்டது பற்றி. கிளம்பும்போதுதான் அதைக் கேட்டேன். "அப்புறம் உங்க அப்பாவை சமாதானப்படுத்தினிங்களாம்மா? தங்கைக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? அவ எங்க இருக்கா?"
"அவ ஸ்டேட்ஸ்ல இருக்கா சார். அவ வீட்டுக்காரர் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர்"
நான் கவனமாக இருந்தேன். என் கேள்வியின் முதல் பகுதிக்கு அவள் பதில் சொல்லியிருக்கவில்லை. ஆகவே மீண்டும் அதையே கேட்டேன். "உங்க அப்பாவை சமாதானப்படுத்தினிங்களா?"
அவள் சிரித்தாள்.
"சமாதானப்படுத்த என்ன இருக்கு சார்? அவர்தானே ஊர்ல இருந்தா பிரச்னை வரும்னு எங்களை மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சார்? வாரம் ஒருநாள் அப்பாவும் அம்மாவும் வருவாங்க சார். காலைலேருந்து சாயங்காலம் வரைக்கும் பிள்ளைங்களோட விளையாடிக்கிட்டு இருப்பாங்க. கிளம்பிடுவாங்க. சந்தோஷமா இருக்கோம் சார்" என்றாள் பொற்கொடி.
மகளிரும் சிறுவரும்
அவசரத்தில் கவனிக்கவில்லை. ஏறிய பேருந்தின் முன்புறமே போர்டு இருந்திருக்கும். மகளிரும் சிறுவரும். ஏறும்போதாவது யாரும் எச்சரித்திருக்கலாம். யோவ் பெரிசு, இந்த வயசுல இன்னா தில்லா லேடிஸ் ஸ்பெஷல்ல ஏறுறே என்று எந்த விடலையாவது உரத்த குரலில் கிண்டல் செய்திருக்கலாம். மாநகர இளைஞர்களெல்லாம் திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. கண்டக்டர் பேருந்தின் முன்புறம் இருந்ததால் அவரும் பார்க்கவில்லை. அட, உள்ளே இருக்கிற மகளிரும் சிறுவருமாவது ஒரு சொல் சொல்லியிருக்கக்கூடாதா? சார், இது லேடிஸ் ஸ்பெஷல். யாருக்கும் தோன்றவில்லையா? அல்லது தன் வயதுக்கு அளிக்கப்படும் சலுகையா?
வயதானவர் பாவம். தவறி மட்டுமே ஏறியிருக்கமுடியும். அதனாலென்ன? அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கி வேறு பஸ் பிடித்துக்கொள்ளுங்கள்.
பேருந்து புறப்பட்டு வேகமெடுத்த பிறகு தான் கண்டக்டர் பார்த்தார். அதற்குள் முந்திக்கொண்டு அவரே மன்னிப்புக் கேட்கும் தொனியில் சொன்னார்: "கண்ணு தெரியலை.... நிறுத்தினிங்கன்னா இறங்கிடறேன்..."
சொல்லிவிட்டாரே தவிர அதுவும் சங்கடம் தான். ஆன வயசுக்கு உடம்பில் இல்லாத நோயில்லை. முட்டி வலிக்கிறது. முதுகு வலிக்கிறது. கொஞ்ச நேரம் நிற்கவேண்டி வந்தால் தலை சுற்றுகிறது. கண்ணாடி மாற்றவேண்டும். ஷுகர் டெஸ்ட் செய்து நாளாகிறது. இரவுகளில் உறக்கம் வருவதில்லை. விழித்திருப்பதால் பகலெல்லாம் அலுப்பாக இருக்கிறது. இறங்கி மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதில் சங்கடங்கள் பல உண்டு. முக்கியமாக, போக்குவரத்து பெருகிவிட்டது. எதிரே வரும் ஒவ்வொரு வாகனத்தையும் எமன் அனுப்பிவைத்தது போலத்தான் நோக்கமுடிகிறது.
உலகம் வேகமாகிவிட்டது. பைக்குகளும் சிறு கார்களும் பெருகிவிட்டன. எல்லாருக்கும் எல்லாமே அவசரமாகிவிட்டது. சாலையில் ஒரு வாகனமும் நிதானமான வேகத்தில் போவதேயில்லை. போதாத குறைக்குக் குறுக்கே தன்னிஷ்டத்துக்குப் பாய்கிற தண்ணீர் லாரிகளும் மீன்பாடி வண்டிகளும். ஒரு மாநகரமாக இருப்பதற்கே லாயக்கில்லாத நகரம். சந்து பொந்துகளாலான மாபெரும் குப்பைத்தொட்டி. கடவுளே, எப்படிக் கஷ்டப்படுகிறார்கள் ஜனங்கள்!
கல்லூரிக்குப் போகிற பெண் போலிருக்கிறது. சற்று நகர்ந்து அவரை அருகே உட்காரச் சொன்னாள்.
"பரவாயில்லேம்மா. அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிடுவேன்... தெரியாம ஏறிட்டேன். கண்ணு தெரியல்லே.."
மீண்டும் மன்னிப்புக் கேட்கிற தொனியில் அவர் சொன்னார்.
"இட்ஸ் ஆல்ரைட் சார். அதுவரைக்கும் ஏன் நிக்கணும். உக்காருங்க."
அவருக்குத் தான் சங்கடமாக இருந்தது. முற்றிலும் பெண்கள் நிறைந்த பேருந்து. மகளிரும் சிறுவரும் என்று போர்டில் இருந்தாலும் சிறுவர்கள் யாரும் இல்லை. பதினெட்டு வயது தொடங்கி அறுபது வயது வரை விதவிதமான பெண்கள் மட்டுமே நிறைந்திருந்தார்கள். கல்லூரிக்குப் போகிறவர்கள். அலுவலகங்களுக்குப் போகிறவர்கள். கூடை நிறையப் பூக்களுடன் வியாபாரத்துக்குப் போகிறவர்கள். அலுவலக வேளைகளில் மற்றப் பேருந்துகளில் இருப்பது போன்ற நெரிசல் ஏதும் இதில் இல்லை. எல்லாருமே அமர்ந்திருந்தார்கள். அமர்ந்தது போக மிச்சம் சில இருக்கைகளும் இருந்தன. பெண்கள் சௌகரியமாகப் போய்வர இப்படியான ஏற்பாடு இருப்பது மிகவும் நல்லதுக்கே.
நடத்துநர் இப்போது அவர் அருகே வந்தார். உட்காரலாமா என்று மிகவும் யோசித்து, அந்தப்பெண் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவர், சட்டென்று மீண்டும் எழுந்து நின்றுகொண்டார்.
"கண்ணு தெரியலே...தெரியாம ஏறிட்டேன். அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிடுறேன்..." மீண்டும் அவர் கண்டக்டரிடம் அதையே சொன்னார். அடுத்த பேருந்து நிறுத்தம் வரும் வரை பயணம் செய்வதற்கு டிக்கெட் கேட்டு, சரியான சில்லறையையும் எடுத்து நீட்டினார்.
"டிக்கெட்டெல்லாம் வேணாம் பெரியவரே. இந்தா வந்துரும். நீ பாட்டுக்கு இறங்கிப்போயிரு.." என்றான் அந்த இளைஞன்.
"இல்லேப்பா. டிக்கெட் குடுத்துடு. உனக்கெதுக்குக் கஷ்டம்?"
"அட, பரவால்லங்க. இங்க செக்கிங் ஏதும் வராது. அதும் பீக் அவர் பாருங்க. எதுக்கு ரெண்டு டிக்கெட் நீ வாங்கணும்?"
அவருக்கு உண்மையிலேயே வியப்பாக இருந்தது. பொதுவாக மக்கள் சேவையில் இருக்கிற பணியாளர்கள் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. எரிந்துவிழுகிற கண்டெக்டர்கள். கெட்ட வார்த்தைகள் உதிர்க்கிற டிரைவர்கள். ஊழல் செய்கிற ரேஷன் ஊழியர்கள். லஞ்சம் கேட்கிற போக்குவரத்து கான்ஸ்டபிள்கள். தலை சொறிகிற தொலைபேசி இலாகா லைன் மேன்கள். தகராறு செய்யவே அவதரித்த தண்ணீர் லாரி டிரைவர்கள்.
ஒரு மாறுதலுக்கு அந்த கண்டக்டர் இளைஞன் அவரை மிகவும் வசீகரித்தான். ஆனாலும் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய அவருக்கு விருப்பம் இல்லை. ஆகவே, "இல்லேப்பா. நீ குடுத்துடு" என்று வலுக்கட்டாயமாகச் சில்லறையை அவன் கையில் திணித்தார்.
"சரி, உக்காருங்க"என்று அவன் சொன்னான்.
"இருக்கட்டும்பா."
"சீட்டுதான் இருக்குங்களே, எதுக்கு நிக்கறிங்க. தெரியாமத்தானே ஏறிட்டிங்க. டிராஃபிக்கைப் பாருங்க. சிக்னல் தாண்டவே அஞ்சு நிமிஷம் ஆவும். அதுமுட்டும் எதுக்கு நிக்கணும். சிஸ்டர் நீங்க கொஞ்சம் நகந்துக்கங்க"
ஏற்கெனவே அவரை அமர அழைத்த பெண்ணை அவன் மீண்டும் நகர்ந்துகொள்ளச் சொன்னதும் அவருக்கு மிகவும் சங்கடமாகிப்போனது.
"அடடே, இருக்கட்டும்பா. அந்தப் பொண்ணு அப்பவே என்னை உக்காரத்தான் சொன்னது" என்றார்.
பிறகு அவர் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினார். சரியான போக்குவரத்து நெரிசலில் வண்டி சிக்கி நின்றிருந்தது. அவர் இருந்த பேருந்தின் இருபுறமும் கூட்டம் நிரம்பித் ததும்பும் பேருந்துகள் அணி வகுத்து நின்றிருந்தன. அவர் ஏறியிருக்கவேண்டிய பேருந்தும் அங்கே இருந்தது. ஐயோ, இதில் தான் எப்படி ஏறியிருக்க முடியும்? மூச்சடைத்துக் கண்டிப்பாக விழுந்திருப்போம் என்று அவருக்குத் தோன்றியது. தெய்வம்தான் தன்னை மகளிரும் சிறுவரும் மட்டும் ஏறும் பேருந்தில் ஏற்றி அனுப்பியிருக்கவேண்டும். அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கினாலும் அந்தக் கும்பல் பேருந்தில் நிச்சயம் ஏற முடியப்போவதில்லை. ஒரு ஆட்டோ பிடித்துத் தான் போயாக வேண்டும். ஆட்டோ என்றால் குறைந்தபட்சம் பதினைந்து ரூபாய். அதிகபட்சம் இருபத்தைந்து ஆகும். பென்ஷன் வாங்குகிறவர்களெல்லாம் ஆட்டோவை நினைத்துப் பார்ப்பதே பாவம் என்று அவருக்குத் தோன்றியது.
ஒரு பத்து, பதினோரு மணிக்குப் பிறகு கிளம்பியிருக்கலாம். கூட்டம் இத்தனை இருந்திருக்காது. என்ன பெரிய வெட்டி முறிக்கிற வேலை? மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டுக்கு வருவதை மத்தியானத்தில் நிதானமாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கலாம். இப்படி யோசிக்காமல் கிளம்பியிருக்கவேண்டாம்.
இப்போது ஜன்னலுக்கு வெளியே காத்திருந்த சக பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொத்திக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் தன்னை விநோதமாகப் பார்ப்பது போல அவருக்குத் தோன்றியது.
ஐயா, அவசரத்தில் ஏறிவிட்டேன். இது மகளிர் பேருந்து தான். எனக்குக் கண் சரியாகத் தெரியவில்லை. மனத்துக்குள் சொற்களைக் கூட்டிப் பார்த்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது. எப்படியும் சிவப்பு போர்டு தான் வைத்திருந்திருப்பார்கள். எப்படி கவனிக்காமல் ஏறிவிட்டோம்? சிவப்பு போர்டுக்கும் மஞ்சள் போர்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போகிற அளவுக்குக் கண்பார்வை மோசமில்லை. எப்படியோ பிசகிவிட்டது. என்னவோ ஞாபகம்.
நேற்றிரவு மாப்பிள்ளை மகளைக் கடிந்துகொண்டதைத்தான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார், பஸ் ஸ்டாண்டில். மகள் வேலை பார்க்கிற அலுவலகத்தில் யாரோ ஒரு பெண் புடைவைகள் எடுத்துவந்து கடை விரித்திருக்கிறாள். முன்னூறு ரூபாய்க்கு சாதாரணமாகக் கிடைக்காத உயர்தரப் புடைவைகள். கண்ணுக்குத் தெரியாத சிறு குறைகள் மட்டும் அவற்றில் இருந்ததால் எக்ஸ்போர்ட் குவாலிடி தகுதியிலிருந்து நீக்கப்பட்ட புடைவைகள். பல பெண்கள் ஆர்வமுடன் வாங்க முன்வந்த தைரியத்தில் அவரது மகளும் ஒரு புடைவையை வாங்கி வந்திருந்தாள்.
எதற்கு இப்போது ஒரு புதுப்புடைவை? புதுச்செலவு? அதைத்தான் அவரது மாப்பிள்ளை கேட்டார். நவராத்திரிக்கு ஒரு புடைவை வாங்கியாகிவிட்டது. தீபாவளிக்கென்று தனியே ஒரு புடைவையும் வாங்கியாகிவிட்டது. நடுவில் எதற்கு இன்னொரு தண்டச்செலவு?
சாதாரணமான குடும்பப் பிரச்னை தான். மகள் கொஞ்சம் தணிந்து போயிருக்கலாம். வாங்கினால் என்ன தவறு என்று கேள்விக்கு பதில் கேள்வி பிறந்ததும் சொற்களில் சூடு ஏறத்தொடங்கிவிட்டது. எல்லா நடுத்தர வர்க்கத்து வீடுகளிலும் புடைவைச்சண்டைகள் கட்டாயம் இருந்தே தீரும். பெண்களும் புடைவையும். யுகம் யுகமாகத் தொடரும் உறவு. யுகம் யுகமாகத் தொடரும் சிறு பிரச்னைகள்.
புடைவைகளால் நிரம்பிப் பிதுங்கும் அவளது பீரோவைத் திறந்து, கோபத்தில் அனைத்தையும் அள்ளி வெளியே வீசி, எண்ணிப்பார் என்று கத்தினார் மாப்பிள்ளை.
அவருக்குத் தான் மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. இருந்து இருந்து ஆறு மாதங்கள் கழித்து, ஒரு நாலு நாள் தங்குவதற்கென்று அவர் தம் மகள் வீட்டுக்கு வந்திருந்தபோது அந்தப் புடைவைச் சண்டை வந்திருக்கவேண்டாம்.
அதை நினைத்துக் கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தபோதுதான் தவறுதலாக மகளிரும் சிறுவரும் வண்டியில் ஏறிவிடும்படி ஆகிவிட்டது.
பேருந்தில் இருந்த மகளிரின் புடைவைகளை அவர் பார்த்தார். எல்லாமே அழகாக இருப்பது போலத்தான் தெரிந்தது அவருக்கு. புடைவைகள் விஷயத்தில் பெண்கள் சமரசமே செய்துகொள்வதில்லை என்று தோன்றியது. பஸ்ஸில் மொத்தம் நாற்பத்தைந்து பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரிடமும் குறைந்த பட்சம் இருபது புடைவைகளாவது இருக்கும். அப்படிப் பார்த்தால் இந்தப் பேருந்துக்குள் இருப்பவர்களிடம் மட்டுமே சுமார் தொள்ளாயிரம் புடைவைகள் இருப்பதாக ஆகும். நூறு பேருந்துகள். ஆயிரம் பெண்கள். இருபதாயிரம் புடைவைகள். மாநிலமெங்கும் உள்ள பெண்களிடம் மொத்தமாகக் கணக்கெடுத்தால் குறைந்தபட்சம் சில கோடிப் புடைவைகளாவது தேறும். எத்தனை புடைவைகளை சந்தோஷமாக வாங்கியிருப்பார்கள்? எத்தனை புடைவைகள் சண்டைபோட்டு வாங்கப்பட்டிருக்கும்?
சட்டென்று தலையைச் சிலுப்பிக்கொண்டார். இதென்ன, மகளிர் பேருந்தில் ஏறினால் சிந்தனை கூடவா புடைவையைக் குறித்துத் திரும்பிவிடும்?
பேருந்து புறப்படுகிற வழியாகத்தெரியவில்லை. அவருக்கு அந்த இருக்கையில் உட்கார்ந்திருக்கவே சங்கடமாக இருந்தது. அங்கிருந்த அத்தனை பெண்களின் பார்வையும் தன்மீதே இருப்பதாக நினைத்தார். டிரைவர் கூடத் தனக்கு முன் இருந்த கண்ணாடியில் தன்னையேதான் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். வயசு ஒரு லைசன்ஸ். கிழவன் ஜாலியாக லேடிஸ் ஸ்பெஷலில் ஏறி அனுபவித்துக்கொண்டே வருகிறான் என்று அவன் நினைத்துவிட்டால்?
கடவுளே, என்னத்துக்காக இன்று இப்படியொரு கஷ்டத்தை அளித்தாய்? ஆனால் இது கஷ்டமா என்றும் அவருக்குத் தோன்றியது. நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? இந்தப் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் இப்படி சுகமாக உட்கார்ந்து பயணம் செய்யக்கிடைக்கிற வாய்ப்பு!
சிந்தனையை மாற்றிக்கொள்ள விரும்பி, பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவர் பேச்சுக்கொடுத்தார். "என்னம்மா படிக்கிறே?"
"செகண்ட் இயர் பிகாம் சார்" என்று அந்தப் பெண் சொன்னது. சொல்லிவிட்டு ஜன்னலைப் பார்த்துத் திரும்பிக்கொண்டது. உடனே அவருக்கு மீண்டும் கஷ்டமாகிப்போய்விட்டது. ஒரு அனுதாபத்தில் உட்காரச் சொன்னாலும் மகளிர் பேருந்தில் - கிழவனே ஆனாலும் - ஒரு ஆண் ஏறி அமர்வது பெண்களுக்குச் சங்கடம் தான். தன்பொருட்டு அவர்கள் தினசரி நிகழ்த்தும் உரையாடல்களைத் தவிர்த்திருக்கலாம். கிண்டல்கள், கேலிகள் யாவற்றையும் தாற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்ளப் பெண்களுக்கும் விஷயம் உண்டு. ஆண்களைக் குறித்த கமெண்ட்கள், சங்கேதச் சொற்கள், சிரித்து மகிழச் சில்லறை ஜோக்குகள். பார்த்த படங்கள். கவர்ந்த ஹீரோக்கள். வீட்டில், கல்லூரியில் நடந்த சம்பவங்கள்.
அனுதாபத்தில் தன்னை ஏற்று அங்கீகரித்தாலும் பின்னால் மனத்துக்குள் அவசியம் திட்டித்தீர்ப்பார்கள் என்று அவருக்குத் தோன்றியது. சனியன் பிடித்த டிராஃபிக் ஜாம். வண்டி புறப்பட்டு சிக்னலைக் கடந்துவிட்டால் நூறடி தூரத்தில் அடுத்த ஸ்டாப்பிங் வந்துவிடும். ஓசைப்படாமல் இறங்கி நடந்தே கூட வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். அல்லது இரண்டு மணிநேரம் காத்திருந்து, பேருந்து கூட்டமில்லாமல் வரத்தொடங்கியதும் ஏறிப் போகலாம். உடனே போய் ஆகவேண்டிய காரியம் ஏதுமில்லை. மகன் அலுவலகத்துக்குப் போயிருப்பான். மருமகள் தொலைக்காட்சித் தொடர் எதையாவது பார்த்துக்கொண்டிருப்பாள். உள்ளே நுழைந்ததும் வாங்க என்று சொல்லிவிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவந்து தருவாள். மதியம் டிபனுக்கு என்ன செய்யலாம் என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு அதே பதினாறாண்டுகால அரிசி உப்புமாவைக் கிண்டிக் கொண்டுவந்து வைப்பாள்.
வாழ்க்கையில் சிறு விஷயங்கள் முதல் மிகப்பெரிய விஷயங்கள் வரை எல்லாமே நிர்ணயிக்கப்பட்டுவிட்டவையாகவே இருக்கின்றன. அரிசி உப்புமா முதல் ஆல் இந்தியா ரேடியோவின் மாநிலச் செய்திகள் வரை. ஒரே விதமான அரிசி உப்புமா. ஒரே விதமான மாநிலச் செய்திகள். தலைவர்களின் அறிக்கைகள். முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள். போக்குவரத்து நெரிசல். புடைவைப் பிரச்னைகள்.
இருந்து இருந்து ஒரு மாறுதலை இறைவன் அளித்திருக்கிறான். மகளிர் பேருந்தில் சிறிது தூரப் பயணம். அந்த விநோத அனுபவத்தைக் கூடத் தன்னால் ரசித்து ஏற்க முடியவில்லை. மனக்குறுகுறுப்பும் விவரம் புரியாத குற்ற உணர்வும். நம்பத்தான் முடியவில்லை. வாழ்விலேயே முதல் முதலாக ஒரு மனிதாபிமானமுள்ள கண்டக்டரை அவர் சந்தித்திருக்கிறார். கிண்டல் செய்யாமல் அருகில் அமர இடமளித்த ஒரு கல்லூரி மாணவியைச் சந்தித்திருக்கிறார். பேருந்தில் இருந்த மற்ற அனைத்துப் பெண்களுமே கூட அவர் தவறுதலாக ஏறியதை ஒரு பொருட்டாகக் கருதாததாகவே பட்டது. சிக்னலுக்கு பஸ் நின்றபோது வெளியே சுற்றிலும் நின்ற பேருந்துகளில் தொத்திக்கொண்டு பயணம் செய்த எத்தனையோ வாலிபர்களுள் ஒருத்தருக்குக் கூடவா தன்னைப் பார்த்துக் கிண்டல் செய்யவும் கேலி பேசவும் தோன்றவில்லை?
ஆச்சர்யமாகத்தான் இருந்தது அவருக்கு. இதுநாள் வரை தான் எந்த மதிப்பீடுகளில் வாழ்ந்திருந்தோம்? இளைய தலைமுறை குறித்த குறிப்பிடும்படியான நல்ல எண்ணங்கள் ஏதும் அவருக்கு இல்லை. எல்லாரும் வயதை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எப்போதும் சொல்லுவது அவருக்கு வழக்கம். பேரன்கள், பேத்திகள், மருமகள், மகன், மகள், மாப்பிள்ளை. அத்தனைபேர் மீதும் அவருக்கு விமர்சனங்கள் இருந்தன. விமர்சனம் இல்லாமல் ஏற்கும்படியாக ஏன் யாருமே நடந்துகொள்வதில்லை?
இது தனிநபரின் கோளாறில்லை. தலைமுறையின் கோளாறு என்று அவருக்குத் தோன்றும். இளைய தலைமுறையின் கோளாறாகவும் இருக்கலாம். தன் தலைமுறையின் கோளாறாகவும் கூட அது இருக்கலாம். எப்படியோ இயல்பாகப் பொருந்தாமல், சமரசங்களின் அடிப்படையில் தான் வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்று இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு?
மரணம் குறித்த பயம் ஏதும் அவருக்குக் கிடையாது. தயாராகத்தான் இருந்தார். என்ன பெரிய பயம்? உறங்குவது போலும் சாக்காடு. வள்ளுவர் சரியாகத் தான் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் இறந்துபார்த்துச் சொன்னதில்லை. அதுவும் கூட யூகம் தான். ஆனால் சரியாக இருக்கும்போலத்தான் இருந்தது. தீவிரமாக வாழ்வதும் இறந்துபோவதும் ஒரு பிரச்னை இல்லை. வாழ்ந்து முடித்து, இறப்புக்குக் காத்திருக்கும் தினங்கள் தான் பாரமாக இருக்கின்றன. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல. எப்போதும் கூட்டமாகவே வந்துதொலைக்கிற பஸ். பரவசமானதொரு மாநகரப்பேருந்துப் பயணம் இந்த ஜென்மத்தில் தனக்கு சாத்தியமில்லை என்று அவர் தீர்மானமே செய்திருந்தார். முப்பத்தெட்டு ஆண்டுகாலம் அவர் அலுவலகத்துக்குப் போய்வந்ததும் நெரிசல்களுக்கு இடையில் தான். ஓய்வு பெற்றபோது மற்ற எல்லாவற்றைக்காட்டிலும் அந்த ஒரு விடுதலை தான் அவருக்குப் பெரிதாகப் பட்டது. இனி நெரிசலில் நின்று பயணம் செய்யவேண்டாம்.
சிக்னல் கிடைத்து பேருந்து புறப்பட்டுவிட்டது. அவருக்கு அப்பாடா என்றிருந்தது. இன்னும் சில விநாடிகளில் பேருந்து நிறுத்தம் வந்துவிடும். உட்கார இடம் கொடுத்த கல்லூரிப்பெண்ணுக்கும் கண்டக்டருக்கும் நன்றி சொல்லிவிட்டு இறங்கிவிடலாம். இறங்கும்போது யாரும் கிண்டல் செய்யாமல் இருந்தால் மனம் மிகவும் சமாதானமாகும். எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் மக்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது. எல்லா நிறுத்தங்களில் மட்டுமல்ல. எல்லாத் தருணங்களிலும் கூட. இன்றைக்கு என்னவோ தன் அதிர்ஷ்டம் எதிர்பாராத விதமாக எல்லாம் நடக்கிறது. இதே கல்லூரிப்பெண் இன்னொரு சந்தர்ப்பத்தில் தன்னை முறைக்கமாட்டாள் என்பது நிச்சயமில்லை. இதே கண்டக்டர் இன்னொரு சந்தர்ப்பத்தில் சாவுகிராக்கி என்று சொல்லமாட்டான் என்று நிச்சயமில்லை. இதே பேருந்து நிறுத்தத்தில் தான் மீண்டும் தவறுதலாக மகளிர் பேருந்தில் ஏறும்போது விடலைகள் நாராசமாகக் கிண்டல் செய்யமாட்டார்கள் என்பதும் நிச்சயமில்லை.
கடவுளுக்கு நன்றி. ரசித்து அனுபவிக்க முடியாவிட்டாலும் மாறுபட்ட ஒரு அனுபவம்.
நிறுத்தம் வந்ததும் கண்டக்டர் இளைஞன் இயல்பாக அவரைப் பார்த்தான். அவர் எழுந்துகொண்டு கை கூப்பினார்.
"ரொம்ப நன்றிப்பா. தப்பா நினைச்சுக்காதே. கண்ணு சரியா...."
"பரவால்ல சார். இறங்குங்க" என்றான் அவன்.
அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இறங்கும்போது சரியாக செக்கிங் ஆபீசர்கள் வண்டியருகே வந்து நின்றுகொண்டார்கள். யாரும் அவரிடம் ஏதும் கேட்கும் முன்னதாக அவரே சொல்லிவிட்டார்.
"சாரி சார். கண்ணு சரியாத் தெரியலை. போன ஸ்டாப்பிங்குலே தெரியாம ஏறிட்டேன்.. ஆனா டிக்கெட் வாங்கிட்டேன்.. இதோ பாருங்க...."
அவர் மகளிர் பேருந்தில் ஏறியது குறித்து டிக்கெட் பரிசோதகர் ஏதும் சொல்லவில்லை. மாறாக டிக்கெட்டை வாங்கிச் சரிபார்த்துவிட்டு, 'பார்த்து ஓரமாப் போங்க பெரியவரே' என்று கையைப் பிடித்து பிளாட்பாரத்தில் ஏற்றிவிட்டார்கள்.
அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. மகளிரும் சிறுவரும். தவறிப்போய் ஒரு வயோதிகன் ஏறுவதில் யாதொரு பிழையும் இல்லை என்று சொல்லிவைத்தமாதிரி எல்லாருமேவா நினைப்பார்கள்? தலைமுறை இடைவெளியெல்லாம் இந்தமாதிரி விஷயங்களூடன் சம்பந்தம் இல்லாதவை தானா? அல்லது உலகம் பெருந்தன்மை பழகத்தொடங்கிவிட்டதா? தாம்தான் இல்லாதவற்றையெல்லாம் நினைத்துக் குறுகுறுப்படைந்து கொண்டிருக்கிறோமா? இந்தக் காலத்து இளைஞர்களும் யுவதிகளும் நிஜமாகவே விடலைத்தனத்தை விட்டொழித்துவிட்டார்களா என்ன? மக்கள் சேவகர்கள் அனைவரும் கனிவு பழகிவிட்டார்களா? புடைவை விஷயம் தவிர மற்றவற்றில் பெண்களும் கூட மாறிவிட்டதுபோலத்தான் தெரிகிறது...
அந்தப் பயணம் மறக்கமுடியாத ஒரு அனுபவமாகத் தானிருக்கிறவரை தன்னோடு தங்கியிருக்கும் என்றெல்லாம் அவருக்குத் தோன்றியது. மனத்தளவில் மிக மென்மையாக, இலேசாக உணர்ந்தார். கொஞ்சம் பரவசமாகவும். எப்போதாவது பேரனைக் கூட்டி உட்காரவைத்து இதைச் சொல்லவேண்டும். ஐயய்யே, லேடிஸ் ஸ்பெஷல்லயா வந்தே? என்று அவன் கேலிச்சிரிப்பு சிரிப்பான். கல்மிஷமில்லாத அவனது சிரிப்பு மட்டும் தான் அவருக்கு நெருக்கமான ஒரே விஷயமாக இதுகாறும் இருந்துவந்திருக்கிறது. அந்த ஒரே ஆறுதல் தரும் தெம்பில்தான் அவர் ஆண்டாண்டுகாலமாக மருமகளின் அரிசி உப்புமாவைக்கூடச் சகித்துக்கொண்டிருக்கிறார்.
சாலை இப்போதும் பரபரப்பாகவே இருந்தது. இன்னும் அரை கிலோமீட்டர் நடந்தால் வீடு வந்துவிடும். பஸ்ஸுக்காகக் காத்திருப்பதைக்காட்டிலும் இப்படி எதையாவது நினைத்துக்கொண்டு மெதுவாக நடந்தே போய்விடலாம் என்று அவர் நினைத்தார். பத்திரமாக பிளாட்பாரத்தின்மீது ஏற்றிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு மனத்துக்குள் நன்றி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
முக்கால் மணி நேரத்தில் வீட்டுக்குப் போய்விடமுடிந்தது. வாங்க என்று மருமகள் சொன்னாள். தொலைக்காட்சித் தொடர் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவரை உட்காரச் சொல்லிவிட்டு ஒருதம்ளர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். சம்பிரதாயமாக நாலு வார்த்தைகள் அவரது மகளைக் குறித்தும் மருமகனைக்குறித்தும் விசாரித்துவிட்டு, 'மத்தியானத்துக்கு என்ன செய்யட்டும்?' என்று கேட்டாள்.
அவர் தமக்குள் சிரித்துக்கொண்டு, "என்னமோ தெரியலை. வாய் நமநமன்னு இருக்கு. எதாவது கரகரன்னு டிபன் பண்ணேன்" என்று சொன்னார். அரிசி உப்புமாவின் அடிப்பகுதியைக் காந்தவிட்டால் அதுகூட கரகரவென்று தான் இருக்கும்.. நடந்த களைப்பில் தூங்கிப்போனார்.
மத்தியானம் அவர் எழுந்தபோது மருமகள் டிபன் ரெடி என்று அவரை அழைத்தாள். அவரால் நம்ப முடியவில்லை. அரிசி உப்புமாவுக்கு பதில் சுடச்சுட வெங்காய பக்கோடா.
கிரிக்கெட்டுப்போன கதை
இந்தவாட்டி வேர்ல்டு கப் இந்தியர்களைப் பொறுத்த அளவில் "ஹைலைட்ஸ் பார்க்கக் கூட லாயக்கில்லாத" சங்கதியாகிவிட்டதை துரதிருஷ்டம் என்றெல்லாம் அநாவசியத்துக்கு வருணிப்பது தப்பு. ஒரே சொல் தான் - கொழுப்பு.
அணியில் எல்லாருமே மிக நன்றாகத் தொப்பை வளர்த்திருக்கிறார்கள். காட்ஸில்லா மாதிரி புஸ்ஸு புஸ்ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு ஓடுகிறார்கள். அல்லது ஓடுகிற பந்தை நோக்கி அறிஞர் அண்ணா மாதிரி அடுத்தவருக்கு விரல் உயர்த்திக் காட்டிவிட்டு அக்கடாவென்று இருந்த இடத்திலேயே காலால் புல் பிடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் உருப்படாது. சம்பளம் இல்லாமல், விளம்பர வருமானங்களுக்கும் தடை போட்டு ஒரு ரெண்டு வருஷம் கட்டாந்தரையில் ஆடவிட்டால் தான் சரிப்படும்.
ஒரு பத்திருபது வருஷம் முன்பெல்லாம் இந்திய கிரிக்கெட் அணி இப்படி இல்லை. தோற்கிற ஆட்டங்களில் கூட ஒரு தரம் இருக்கும். டொக்கு வைத்தே கழுத்தறுத்த ரவிசாஸ்திரி போன்ற வீரர்களிடம் கூட ஒரு தொழில்நுட்பத் தேர்ச்சி இருந்தது. கட்டக்கடைசியில் பேட்டை எப்படிப் பிடிப்பது என்பது கூடத் தெரியாமல் ஆடவரும் (அதிகபட்சம் இரண்டு பந்துகளுக்கு) திலீப் ஜோஷி, மணீந்தர் சிங் கூட பல மேட்ச்களில் அற்புதம் செய்திருக்கிறார்கள். விளையாட்டை, பணத்துக்காக மட்டும் விளையாடாத காலம் அது.
ஆஸ்திரேலியாவுடன் ஆடிய ஆட்டத்துக்குப் பரிசாக கல்கத்தாவில் கங்குலி வீட்டின்மேல் ரசிகக் குஞ்சுகள் தாக்குதல் நடத்தினார்களாம். இந்தளவுக்கு கிரிக்கெட் மோகம் உண்டாக்கியதில் பாதியாவது கால்பந்து, ஹாக்கி வகையறாக்களுக்குச் செய்திருந்தால் அவற்றிலாவது மானம் விமானமேறாமல் தவிர்த்திருக்கலாம்.
கிரிக்கெட் ஆட ஆரம்பித்த காலத்திலெல்லாம் இத்தனை வெறிரசிகப் பட்டாளங்கள் இங்கே இல்லை. யோசித்துப் பார்த்தால் சரியாக இருபது வருஷம் முன்னால் தொடங்கிய ஜுரம் இது என்பது புலப்படும். அந்தப் புண்ணியமும் பாவமும் 83 உலகக்கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கபில்தேவ் தலைமையிலான குழுவுக்குச் சேரும்.
அந்தப் பொன்னாளுக்குக் கொஞ்சநாள் கழித்து மேற்கிந்தியத் தீவு அணி இந்தியச் சுற்றுப்பயணம் ஒன்று மேற்கொண்டது. சேப்பாக்கத்தில் ஒரு மேட்ச்.
ரங்காச்சாரி, அப்துல் ஜப்பார், வானொலி அண்ணா கூத்தபிரான் எல்லாம் "பட்டாபிராம் முனையிலிருந்து மால்கம் மார்ஷல் வருகிறார்...ஓடிவருகிறார்...புயல் வேகத்தில் வ்ருகிறார்....இதோ வீசுகிறார்...ஆஃப் ஸ்டம்புக்குச் சற்று விலகி வந்த பந்து மொஹிந்தரின் முழங்காலுக்குச் சற்று முன்னே விழுந்து...ஆ! தென்னைமர உயரத்துக்கு எழும்பிச் சென்று....அதோ, விக்கெட் கீப்பர் கிர்மானியின் கர்ங்களில் அடைக்கலமாகிறது..." என்று திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் போல வானொலியில் , செந்தமிழில் வருணித்து ஒரு மாதிரி முதல் ஜுரத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
பஞ்சாயத்து ஆபீஸ்களில் மட்டுமே தொலைக்காட்சி வந்திருந்த காலம் அது. நான் வசித்த கேளம்பாக்கம் கிராமத்தில் ஒரு சில உப்பள முதலாளிகள் வீட்டிலும் தோல் தொழிற்சாலை ஆபீசர்கள் வீட்டிலும் மட்டும் டி.வி. இருந்தது. தோல் தொழிற்சாலை ஆபீசர்கள் மட்டும்தான் நானறிய அக்காலத்தில் கிரிக்கெட் வெறியர்களாயிருந்தார்கள்.
ஐந்து நாள் மேட்ச் என்றால் முந்தைய நாளிலிருந்தே ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, சுருட்டிவிட்ட லுங்கியும் நாலைந்து பாக்கெட் சிஸர்ஸ் சிகரெட்டுமாக, சோபாவில் தலையணை வைத்து ஒரு மாதிரி ஸ்ரீரங்கநாதர் போஸில் படுத்துக்கொண்டு டிவி வால்யூம், பிக்சர் பட்டன்களை அட்ஜஸ்ட் செய்து வைத்துக்கொள்ள் ஆரம்பித்துவிடுவார்கள்.
என்னைமாதிரி டிவி இல்லாத வீடுகளில் பிறந்த பாபாத்மாக்களிடம் தலா நாலணா வாங்கிக்கொண்டு ஆபீசர்களின் சம்சாரங்கள் வராண்டாவில் அமர்ந்து பார்க்க ("யாரும் பேசக்கூடாது?") மனம் கனிந்து அனுமதிப்பார்கள்.
மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், பேட்ரிக் பேட்டர்சன், கார்னர் போன்ற பெயர்களைச் சொன்னாலே மனத்தில் பனைமரம் போன்றதொரு பிம்பம் உண்டாகும். என்ன வேகம்! என்ன லாகவம்! ஆனால் ஒருத்தர் மூஞ்சி கூட தனித்தனியாக மனத்தில் பதியாமல் ஒட்டுமொத்தமாக ஒரு நெகடிவ் பிம்பம் தான் உண்டாகும். (பிற்பாடு நெகடிவைக் கழுவி பிரிண்ட் போட்டுப் பார்க்க தினத்தந்தி உதவியது.)
அந்த சேப்பாக்கம் மேட்சில் இந்தியா தோற்கவில்லை. கவாஸ்கர் 'ஏழெட்டுநாள்' நின்று ஆடி இருநூற்று முப்பத்த்ஞ்சோ என்னவோ அடித்து டிராவாக்கிவிட்டு மேன் ஆஃப் தி மேட்சையும் வாங்கிக்கொண்டு ரயிலேறிவிட்டார்.
ஆனால் அந்த மேட்ச் எங்கள் அரசுயர் பள்ளி மாணவர்களிடையே அன்று மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. அதுவரை ஸாஃப்ட் பால் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த பள்ளிப் பையன்களின் பார்வை முதல் முதலாக கிரிக்கெட்டின் மீது விழுந்தது.
ஸாஃப்ட் பாலெல்லாம் ஒரு விளையாட்டா? ஸ்டம்பு இல்லை என்பது தவிர அதில் பெரிய அட்வாண்டேஜ் கிடையாது. ஓங்கி ஒரு அடி அடித்துவிட்டு உருட்டுக்கட்டை மாதிரி இருக்கும் மட்டையை விசிறிக்கடாசிவிட்டு பெரிதாக ஒரு சதுரம் ஓடவேண்டும். இதில் என்ன பெப் இருக்கிறது? மேலும் ஆடும்போது வளர்மதி, ராஜாத்தி, ஜெயலலிதா போன்ற பள்ளியின் மாதர் குல மாணிக்கங்கள் நின்று ரசிப்பது கிடையாது.
ஆனால் அந்த லாரி கோம்ஸின் பஞ்சுமிட்டாய்த் தலை குறித்து வகுப்பில் வளர்மதி எத்தனை சிலாகித்துப் பேசினாள்? மொட்டைத்தலை ரிச்சர்ட்ஸின் சூயிங்கம் மெல்லும் அழகைக்கூட ஜெயலலிதா விட்டுவைக்கவில்லை. 'ஹேண்ட்ஸம்' என்ற சொல்லை எங்கள் பள்ளி வளாகத்தில் அந்தப் பெண்கள் தான் முதல்முதலில் அறிமுகப்படுத்தினார்கள். அந்தப் பெரிய கௌரவம் முத்ல்முதலில் மேற்கிந்திய ஆட்டக்காரர்களுக்குக் கிடைத்ததன் சூட்சுமம் தான் இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
அது நிற்க. நாங்கள் ஒட்டுமொத்தமாக ஸாஃப்ட்பாலைப் புறக்கணித்து கிரிக்கெட் ஆடுவது என்று முடிவு செய்தோம். உடனே பத்மநாபன் என்ற குடுமிநாதன் தன் கூந்தலைப் பாதியாக வெட்டிக்கொண்டு லாரி கோம்ஸ் மாதிரி சிகையலங்காரத்துக்கு முயற்சி செய்ய ஆரம்பித்து, தலையில் நிறைய காயங்கள் சம்பாதித்துக்கொண்டான்.
மாதவன் என்னும் ஒன்பதாங்கிளாஸ் பையன் ஹோல்டிங் மாதிரி ஓஓஓடிவந்து பந்துவீசத் தொடங்கினான். அவனது பந்துவீச்சுக்கு நாங்கள் தேர்ட் மேனிலும் செகண்ட் ஸ்லிப்பிலுமாகத் தலா இரண்டு விக்கெட் கீப்பர்களை நிறுத்தவேண்டியதானது.
பள்ளியின் கூட்டுறவுச் சங்கக் கடையில் நிறைய சூயிங் கம்கள் விற்பனையாவதாக வாட்ச்மேன் எட்டியப்பன் வந்து சொல்லிவிட்டுப் போனான்.
உடற்பயிற்சி ஆசிரியர் மாசிலாமணி, பையன்களின் திடீர் கிரிக்கெட் மோகத்தை ஊக்குவிக்கும்விதமாக ஹெட்மாஸ்டரிடம் பேசி பளபளவென எண்ணெய் தடவிய இரண்டு பேட்டும் நாலு ஸ்டம்பும் (ரன்னர் ஸைடுக்கு ஒண்ணு போதும்!) ஒரு பொட்டி நிறைய ரத்தச் சிவப்பில் வாசனை மிக்க கிரிக்கெட் பந்துகளும் வாங்கிவந்துவிட்டார்.
ஆர்வம் மிக்க மாணவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு அணியிலும் 19 பேர் இடம் பெற்றிருந்தோம். ஆளுக்கு இரண்டு ஓவர் ஆடுவது, இரண்டு ஓவர் பந்து வீசுவது என்று பொதுவில் முடிவு செய்துகொள்ளப்பட்டது.
ஒரு ரெண்டு மாசகாலம் அந்த ஜுரம் எங்களுக்கு இருந்தது. கனவிலெல்லாம் பந்துவீசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருமுறையும் வளர்மதியும் ஜெயலலிதாவும் ராஜாத்தியும் கைதட்டிவிட்டு காதோடு வந்து ஹாண்ட்சம் என்று சொன்னார்கள்.
தினசரி மாலை நாலு மணி தொடங்கி இருட்டி, எதிராள் தென்படாமல் போகும்வரை விளையாடி ஒருமாதிரி பேட்டைப் பிடிக்கவும் பந்துவீசவும் பயின்றோம்.
மாசிலாமணி வாத்தியார் அபிஷியலாக ஒரு மேட்ச் ஏற்பாடு செய்தார். வேறு வழியில்லை கிரிக்கெட்டில் 11 பேர் தான் ஆடமுடியும் என்பதால் பயிற்சி காலங்களில் முதல் பந்தில் அவுட்டான பையன்கள் அனைவரையும் சப்ஸ்டிட்யூட் என்று அறிவித்துவிட்டு மிச்சமுள்ளோரை இரு குழுக்களாக்கி ஒரு ஞாயிற்றுக்கிழமை பள்ளி மைதானத்தில் அந்த உற்சவத்தைத் தொடங்கிவைத்தார்.
ஓரத்தில் பானையில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. வீரர்களின் டிரிங்ஸ் இண்டர்வலின்போது அது பயன்படும். புதிதாக பிட்சுக்கு மேக்கப்பெல்லாம் போட்டு இருந்தார்கள். ஹெட்மாஸ்டர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உட்கார ஒரு பிரத்யேக காலரி தயார் செய்யப்பட்டது. மரத்தடியில் ஏழெட்டு நாற்காலிகள். பள்ளியின் முன்னாள் மாணவரும் வேலை இல்லாத ஆனால், கிரிக்கெட் அனுபவம் இருந்த (டிவியில் நிறைய மேட்ச் பார்ப்பார்) சௌந்தர் என்கிற வாலிபர் அம்பயராக (லுங்கியுடன்) வந்து நின்றார். மாசிலாமணி வாத்தியாரே லெக் அம்பயராக நின்றுகொண்டார். காலுக்குக் குறிபார்த்து யாரும் பந்துவீசமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் அவரது கையில் அந்தவார ஆனந்தவிகடனும் இருந்தது.
நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த எங்கள் சக மாணவிகள் ஒரு குழுவாக யூனிஃபார்ம் தவிர்த்து வண்ணப் பாவாடை சட்டையுடன் அடிக்கடி தமக்குள் பேசிச் சிரித்தபடி ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்ததை பத்மநாபன் கவனித்துச் சொன்னான். அவனுக்குள் அப்போது தான் ஏன் லாரி கோம்ஸாக மாறினோம் (நின்ற இடத்திலிருந்து பந்து வீசுவான்.) ஒரு மார்ஷலாகியிருக்கலாமே என்கிற வருத்தம் மேலோங்கியிருந்ததை நாங்கள் உணர்ந்தோம்.
முதல் ஓவரை மாதவன் ஓடி வந்து வீசினான். எல்லா பந்துகளும் ஹெட்மாஸ்டரின் சோடாபுட்டிக் கண்ணாடியை நோக்கியே வீசப்படுவதாக எங்களுக்குத் தோன்றியது. (ஹெட் மாஸ்டர் இங்கிலீஷ் செகண்ட் பேப்பர் எடுப்பவர்.) "ஸ்டம்புக்குப் போடுப்பா" என்று மாசிலாமணி வாத்தியார் அருகே வந்து சொல்லிவிட்டுச் சென்றதும் அடுத்தபந்து அவரை நோக்கிப் பாய்ந்தது.
நான் இருந்த அணி பேட்டிங் வரிசையில் இருந்தது. பள்ளி வளாகத்தில் புகழ்பெற்ற் ஓபனிங் பேட்ஸ்மன் நான் தான் என்பதால் (நிச்சயம் முதல் ஓவர் தாக்குப்பிடித்துவிடுவேன்) மாணவர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ஓபனிங் எனினும் முதல் ஓவருக்கு நிற்கமாட்டேன். மாதவன் மீது என் நம்பிக்கை அப்படி. இரண்டாவது ஓவரில் நாலு ரன் எடுத்ததாக ஞாபகம்.
மேலும் ஓரிரு ஓவர்கள் கடந்திருக்கும். அதற்குள் விக்கெட் கீப்பர் கலியமூர்த்தி "எப்படா ட்ரிங்ஸ் இண்டர்வல் விடுவாங்க?" என்று கேட்டான். மாணவிகள் எதிரே ஸ்டைலாக பானை நீரை கோக்கோகோலாவாக பாவித்து அருந்தி, வியர்வையைத் துடைத்து போஸ் கொடுக்கும் உத்தேசம் அவனுக்கு இருந்திருக்கலாம்.
விதி மாதிரி அன்று ஒரு பந்து கூட ஸ்டம்புக்கு வராத்தால் யாரும் ரன் எடுக்கவோ , அவுட் ஆகவோ வாய்ப்பு இல்லாமல் இலங்கைப் பேச்சுவார்த்தை மாதிரி எங்கள் இன்னிங்ஸ் நீண்டுகொண்டே போனது.
ஹெட் மாஸ்டர் தோ வரேன் என்று எழுந்து போனதும் பிற ஆசிரியர்களும் "வரட்டா மாசிலாமணி?" என்று கழன்றுகொண்டார்கள். தூர்தர்ஷனில் அப்போதெல்லாம் காதுகேளாதோருக்கான செய்தி அறிக்கை ரொம்பப் பிரபலம். காது கேட்பவர்கள் கூட அதைத் தவற விடமாட்டார்கள். அது முடிந்ததும் அதிர்ஷ்டம் இருந்தால் தமிழ்ப்படம் கூடப் போடுவான் என்று மாணவிகளும் எழுந்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பத்து ரன்களைத் தாண்டாமல், ஒரு விக்கெட் கூட விழாமல் அன்றைய மாட்ச் பிற்பகல் ஒன்று முப்பது வரை அந்தரத்திலேயே நின்றது. மைதானத்தில் எங்களையும் மாசிலாமணி வாத்தியாரையும் தவிர வெறு ஆள் இல்லை. அம்பயராக நின்றிருந்த முன்னாள் மாணவர் சாப்பிட்டு வந்துவிடுவதாகச் சொல்லிப் போனவரை திருப்போரூர் பஸ்ஸில் பார்த்ததாக ப்யூன் கணபதி வந்து சொன்னான். ஓவர் கணக்கு வைத்துக்கொண்டு ஆடியிருக்கலாம் என்பதெல்லாம் சிற்றறிவுக்கு எட்டாத காலம் .
"முடிச்சிக்கலாம்டா" என்றார் மாசிலாமணி வாத்தியார்.
"நாங்க பேட்டிங் பண்ணவேண்டாமா?" முறைப்புடன் கேட்டான் மாதவன். உக்கிரமாக ஓடி வந்து பந்துவீசி வீசி அவன் பார்க்க ஒரு பிசாசு போலாகியிருந்தான்.
அடுத்தவார ஞாயிற்றுக்கிழமை மேட்சைத் தொடரலாம் என்றும் அப்போது எதிரணி முதலில் பேட் செய்யலாம் என்றும் ஆசிரியர் சொன்னார்.
அரை மனத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டியதானது.
அந்த அடுத்தவாரம் அப்புறம் வரவில்லை. நடுவே இன்ஸ்பெக்ஷன் வந்துவிட ஆங்கிலம் செகண்ட் பேப்பரிலும் (ஹெட் மாஸ்டர் எடுக்கிற வகுப்பு) புவியியலிலும் மாணவர்கள் ரொம்ப வீக் என்று ஜீப்பில் வந்த இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவ்வளவுதான். எங்கள் பேட்டும் பந்துகளும் பீரோவுக்குள் போய்விட்டன. மாசிலாமணி வாத்தியாரை ஸ்டாஃப் ரூமில் மட்டுமே அப்புறம் பார்க்கமுடிந்தது. மைதானம் பக்கம் அவர் ஒண்ணுக்குப் போகக் கூட வரமறுத்தார்.
பத்மநாபன் மீண்டும் குடுமி வளர்க்க ஆரம்பித்தான். நாங்கள் சமர்த்தாக ஆங்கிலம் இரண்டாம் பேப்பரும் புவியியலும் படித்துக் கெட்டுப்போகத் தொடங்கினோம்.
கல்கத்தாவிலும் அநேகமாக இப்படித்தான் கிரிக்கெட் ஆர்வம் உற்பத்தியாகத் தொடங்கியிருக்க்வேண்டும். ஆனால் அந்த ஊர் மாசிலாமணி வாத்தியார் விடாப்பிடியாக அடுத்தவார ஞாயிற்றுக்கிழமை மேட்சை நடத்தியிருப்பாராயிருக்கும்.
பக்தன்
ஒரு கிளிக்கூண்டு வேண்டும்.
ஆறு வீட்டுப் பிள்ளைகளும் ஏகமனதாக முடிவு செய்து அவரவர் பெற்றோரிடம் மனுத்தாக்கல் செய்தபோது, அப்பார்ட்மெண்ட் வாசலில் மூன்றடிக்கு நான்கடி பரப்பில் கோயில் கொண்டிருந்த பிள்ளையாருக்கு வயிற்றைக் கலக்கியது. நைவேத்தியப் பலகாரத்தில் பிரச்னையிருக்கும் என்றெல்லாம் சிந்திக்கவே முடியாது. அவர் சாப்பிட்டுப் பலகாலம் ஆகியிருந்தது. வாசலில் ஒரு ஜென்மம் வீற்றிருக்கிறது, அதற்குக் கொழுக்கட்டையும் சுண்டலும் இல்லாவிட்டாலும் ரெண்டு இட்லியும் கெட்டி சட்டினியுமாவது கொண்டு வைக்கலாம் என்று நினைக்க யாருமில்லை.
புதிய பிளாட் வாங்கிக் குடியேறும் ஆறு பேரும் கோர நாத்திகர்களாயிருக்கக்கூடும் என்று பிரமோட்டர் நினைத்திருக்க முடியாது. எப்போதும் போல ப்ளான் அப்ரூவலில் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்றுக்கு நாலடி இடம் காட்டி, கைகூப்பித் தொழுது, கட்டி முடித்துக் கொண்டு வைத்துவிட்டு, விற்ற பணத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு வேறு பேட்டைக்குப் போய்விட்டார். கோயில் கொண்ட நாளாக ஒரு கும்பிடு இல்லை. தோப்புக் கரணமில்லை. மணியோசை இல்லை, விளக்கேற்ற ஒரு நாதியில்லை.
பிள்ளையார், தாய்க்குலத்தை மிகவும் நம்பியிருந்தார். அவர்கள் நிச்சயம் நாத்திகர்களாக இருக்கமாட்டார்கள். பக்திப் பரவசம் மேலோங்காவிட்டாலும் பார்த்த மாத்திரத்தில் ஒரு கும்பிடுக்குக் குறையிருக்காது என்று நினைத்திருந்தார். ஆனால் இதென்ன கலித்தாண்டவம்! ஆறு வீட்டுப் பெண்களும் அவரவர் புருஷன்களுக்கு முன்னால் அள்ளி அடைத்துக்கொண்டு ஆபீசுக்கு ஓடி, இருட்டி இரண்டு நாழிகை கழித்து சுருண்டு வீடு வந்து விழுகிறார்கள்!
வாழ்க்கைத் துணைகளை முழுதாகப் பார்ப்பதே வாரம் ஒருமுறை என்னும் பட்சத்தில் வாசல் பிள்ளையாருக்கு வருடத்தில் ஒருநாள் ஒதுக்கினால் போதும் என்று நினைத்திருப்பார்களாயிருக்கும். பிள்ளையார் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார்.
ஆனால் விதி வலியது. பிள்ளையார் சதுர்த்தி விடுமுறை நாளில்கூட அப்பார்ட்மெண்டில் யாரும் அவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஊரெல்லாம் மண் பிள்ளையார்கள் சிவப்புக் கண்ணும் சந்தனப் பொட்டும் கலர்க் குடைகளுமாக பவனி வந்துகொண்டிருக்க, அப்பார்ட்மெண்டில் அவர் எப்போதும்போல் அநாதையாகத் தனித்துக் கிடந்தார். ஆறு வீடுகளிலும் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தன. அபூர்வமான விடுமுறை தினம். துணி துவைக்கலாம். டிவி பார்க்கலாம். திருப்தியாகச் சாப்பிட்டுப் பகலிலும் ஒருமுறை படுத்துத் தூங்கலாம்.
பாவிகளா, நான் இல்லாமல் உங்களுக்கு இந்த வசதி வாய்ப்புகள் வந்துவிட்டதாகவா நினைக்கிறீர்கள்?
பிள்ளையாருக்குக் கோபத்தைக் காட்டிலும் துக்கமே மிகுந்தது. அடக்கிக்கொண்டார். பிள்ளைகள் தவறு செய்யத்தான் செய்யும். பிள்ளையார்தான் பொறுத்துப் போகவேண்டும். அவருக்கும் ஒரு காலம் வருமல்லவா? உறுமீன் வருமளவும் பிள்ளையார்க் கொக்கு காத்திருக்கும்.
ஆறிலொருவன் டிரான்ஸ்பர் ஆகிப் போனான். வாடகைக்கு வந்த சிவசுப்பிரமணியன், அதிர்ஷ்டவசமாக ஆத்திகனாக இருந்தான். மூட்டை முடிச்சுகளுடன் இறங்கும்போதே சந்நிதியின் முன்னால் ஒருகணம் நின்று கைகூப்பிவிட்டு அவன் நகர, பிள்ளையாருக்குச் சிலிர்த்துப் போனது. பக்தா, சிவசுப்பிரமணியா, நீ மட்டும் ஒழுங்காக என்னைத் தொழுதுகொண்டு வா; மற்ற வீட்டுக்காரர்கள் அத்தனை பேரும் பொறாமைப்படும் உயரத்துக்கு உன்னைத் தூக்கி வைக்கிறேனா இல்லையா பார் என்று மனத்துக்குள் உரத்துக் கூவினார்.
அவனுக்கும் பல பிரச்னைகள் இருந்தன. மனைவி ஊரில் இருந்தாள். பிரசவம் முடித்து அவள் குழந்தையுடன் திரும்பி வர எப்படியும் எட்டு மாதங்களாகும். அதுவரை அவனும் பிள்ளையாரைப் போல பிரம்மச்சாரி. ஆபீஸ் முடித்து, ஹோட்டலில் சாப்பிட்டு, தியேட்டரில் வாழ்ந்துவிட்டு உறங்குவதற்கு வீட்டுக்கு வருவான். பெரும்பாலும் பக்தி செய்ய நேரமிருக்காது.
ஆனபோதிலும் பிள்ளையாருக்கு அவனது சகாயம் வேண்டியிருந்தது. குறைந்தபட்சம் அவன் நாத்திகனில்லை. மனத்தில் நினைக்கும் பொழுதுகள் வெகு சொற்பமென்றாலும் கடந்து போகும்போதெல்லாம் கைகூப்பத் தவறுவதில்லை. அவன் தான் இப்போது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யப் போகிறான் சிவசுப்பிரமணியன்?
‘லெட் அஸ் கன்வர்ட் தட் டெம்ப்பிள்’
பிள்ளையார் எதிர்பார்த்தபடியே கோயிலுக்கு உலை வைத்துவிட்டார்கள். சந்நிதியைக் கிளிக்கூண்டாக மாற்றுவது பெரிய விஷயமில்லை. உள்ளே இருக்கும் பிள்ளையாரை காலி பண்ணிவிட்டு வாசலுக்கு ஒரு கம்பி வேலி போட்டுவிட்டால் தீர்ந்தது விஷயம். பிள்ளைகள் பரவசமாகிவிடுவார்கள். பச்சைக்கிளிகளும் காதல் கிளிகளும் வண்ணவண்ணக் கிளிகளும் மூன்றுக்கு நாலடிக் கூண்டில் கொஞ்சி விளையாடும். வேளைக்கு அவற்றுக்குக் கொட்டைகள் கிடைத்துவிடும். கொட்டாங்குச்சி கப்பில் பால் வைப்பார்கள். வாசலில் போகிற தள்ளுவண்டி பழக்காரனை நிறுத்தி மாதுளை வாங்கி உரித்து கம்பிக்குள் வீசுவார்கள். கிக்கிக்கிக்கிக்கீ என்று இரவும் பகலும் அவை ஓயாமல் சத்தமிட்டு விளையாடும். சந்நிதி சாந்நித்தியம் பெறும்.
பிள்ளையாருக்கு துக்கம் தாளவில்லை. தவறான இடத்தில் மாட்டிக்கொண்ட சரியான கடவுள். பக்தா, சிவசுப்பிரமணியா உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை. எப்படியாவது என்னைக் காப்பாற்று.
அன்றிரவு பிள்ளையாருக்கு ஒரு கனவு வந்தது. ஃப்ளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் மீட்டிங்கில் அவர் சார்பாக சிவசுப்பிரமணியன் காரசாரமாக வாதம் செய்துகொண்டிருந்தான். பிள்ளையார் கோயிலைக் கிளிக்கூண்டாக மாற்றுவது தவறு. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
‘மிஸ்டர் சிவசுப்பிரமணியன், நீங்கள் வெறும் டெனண்ட். உங்கள் ஹவுஸ் ஓனரிடம் நாங்கள் பேசிவிட்டோம்’ என்றார் மூன்றாம் நம்பர் வீட்டுக்காரர்.
‘ஆனாலும் நான் வாடகை கொடுக்கிறேன். இப்போது இங்கே வசிக்கிறவனும் நான் தான்.’
‘உங்களுக்கு வேண்டுமென்றால் பிள்ளையார் சிலையை எடுத்துப் போய் உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது.’
சட்டென்று பிள்ளையாரின் கனவு கலைந்துவிட்டது. ஆனால் கனவில் உருப்படியாக ஓர் ஐடியா கிடைத்துவிட்ட சந்தோஷம் அவருக்கு இருந்தது. எப்படியாவது சிவசுப்பிரமணியன் மனத்துக்குள் இந்த யோசனையை தோன்றிவிட வேண்டும். என்னை எடுத்துப் போய் வீட்டுக்குள் வைத்துவிடு என் அருமை பக்தனே.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை அத்தனை வீட்டுக்காரர்களும் முதல் முறையாகப் பிள்ளையார் கோயில் அருகே வந்து கூடி நின்றார்கள். சிவசுப்பிரமணியன் சற்றுத் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தான். பிள்ளையாருக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுதான். இவ்வளவுதான். எடுத்துவிடுவார்கள். பக்தன் சிவசுப்பிரமணியன் என்ன முடிவு செய்திருக்கிறான்?
அவரது பதற்றம் யாருக்கும் புரியவில்லை. எடுத்துவிடலாமா என்று ஒருவர் கேட்டார். ‘ஓயெஸ்’ என்று இன்னொருவர் ஆமோதித்தார். பிள்ளைகள் கிளிக் கனவுகளில் ஹோவென்று கத்திக்கொண்டு அங்குமிங்கும் குதித்து ஓடினார்கள். ஜாக்கிரதையாக சன்னிதியைத் திறந்து, பீடத்தின் மீதிருந்து பிள்ளையாரை வெளியே எடுத்தார் இரண்டாம் நம்பர் வீட்டுக்காரர். வெற்றிக்கோப்பையை ஏந்திய விளையாட்டு வீரன் மாதிரி அனைவரையும் பார்த்துச் சிரித்தார்.
‘மிஸ்டர் சிவசுப்பிரமணியன், எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் நீங்கள் ஆத்திகர்.. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்…’
‘பை ஆல் மீன்ஸ்’ என்றான் சிவசுப்பிரமணியன். இரண்டடி முன்னால் வந்து பிள்ளையாரை வாங்கிக்கொண்டான். தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டான். பிள்ளையாருக்கு ரத்த அழுத்தம் 140/100 ஆகியிருந்தது. பக்தா காப்பாற்று. பக்தா காப்பாற்று. பக்தா காப்பாற்று.
காரியம் முடிந்த திருப்தியில் ஐந்து வீட்டுக்காரர்களும் அவரவர் போர்ஷன்களுக்குப் போனார்கள்.
சிவசுப்பிரமணியன் அவரை ஏந்திக்கொண்டு நேரே கிணற்றடிக்கு நடக்க ஆரம்பித்தான்.
காம்யுவின் வாசனை
என் வீட்டிலிருந்து சுமார் ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர் தூரம் என்பதே முதலில் பிரமிப்பாக இருந்தது. அத்தனை பெரிய தூரத்துக்கு அதற்குமுன் நான் தனியாகப் போனதே இல்லை. கிளம்புவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்தே எனக்குப் பதற்றம் பிடித்துக்கொண்டது. வழியில் படிப்பதற்கென்று தேடித்தேடிப் புத்தகங்களை எடுத்து வைத்தேன். ஆ, இந்தப் புஸ்தகம் எடுத்து வைப்பது எப்போதுமே சிக்கல் பிடித்த காரியம். சில புத்தகங்களை வீட்டில் மட்டும்தான் படிக்க முடியும். சிலவற்றைப் பேருந்து நிறுத்தங்களில், குட்டிச் சுவர்களின் பக்கம் சாய்ந்தவாறு, பூங்கா சிமெண்டு நாற்காலிகளில் அமர்ந்தவாறு படித்தால்தான் சரியாக வரும். இன்னும் சில புத்தகங்களை - தவறாக நினைக்காதீர்கள். கக்கூசுக்கு எடுத்துச் சென்று படித்தால் மட்டுமே சுகமாக இருக்கும். இதெல்லாம் புத்தகங்களின் பிரச்னையா, அல்லது படிக்கிறவன் கிறுக்குத்தனமா என்று எனக்குத் தெரியாது. வருஷக்கணக்காக இப்படித்தான்.
சொன்னால் நம்புவீர்களா? தாமிரபரணிக் கதைகள் என்றொரு புஸ்தகம். சின்ன புஸ்தகம்தான். வேகமாகப் படித்தால் ஒரு மணிநேரம் காணாது. இதை விட்டுவிட்டு ஏழெட்டு தவணையில் மாடிப்படி வளைவுச் சந்தில் நின்றேதான் வாசித்து முடித்தேன். பார்த்துவிட்டால் யாரோ கபாலென்று பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் போட்டுவிடப் போகிறார்களா என்ன? ஆனாலும், சொன்னேனே கிறுக்குத்தனம். அதுதான் காரணமாயிருக்க வேண்டும். முதல் தடவையோடு முடிந்ததென்று எண்ணாதீர்கள். ஒவ்வொரு முறை அந்த நூலை வாசிக்க எடுக்கும்போதும் மாடிப்படி முட்டுச் சந்துக்குத்தான் போவேன்.
ரொம்ப யோசித்தால் ஒரு காரணம் சொல்லலாம். எந்தப் புஸ்தகத்தையும் பின்னொரு காலம் நினைத்துப் பார்க்கும்போது அதை வாசித்த சூழலையும் சேர்த்து நினைத்துக்கொண்டால் தனியொரு வாசனை அகப்படும். ஆனால் ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது எத்தனையோ பலவித வாசனைகளைத் தாண்டித்தான் போகவேண்டியிருக்கும். ரயிலுக்கென்று ஒரு வாசனை உண்டா என்ன. இரும்பு அல்லது அழுக்கின் வாசனை என்பது தாளிப்பு மாதிரிதான். அடிப்படை வாசனை அது நின்று போகும் ஸ்டேஷன்களில் சத்தமில்லாமல் ஏறிக்கொள்வது. குரோம்பேட்டை ஸ்டேஷன் வாசனை பல்லாவரம் ஸ்டேஷனுக்குக் கிடையாது. சைதாப்பேட்டையின் வாசனை மாம்பலத்தை அடையும் முன்பே கீழே குதித்துவிடும். இந்தப் பக்கம் தெற்கே போகிற ரயில் விழுப்புரத்துக்குள் நுழைந்துவிட்டாலே தனியொரு வினோதமான வாசனை ஓடி வந்து மூச்சை நெறிக்கும். தென்னாற்காடு ஜில்லா தாண்டும் வரைக்கும் அந்த வாசனைதான் அப்புறம். திருச்சி, மதுரைப் பக்கம் போனால் ரயிலில் வேறொரு வாசனை ஏறிவிடும். இதுவே திருநெல்வேலி வரை போனால் முற்றிலும் இன்னொரு வாசனை. நெல்லை ஜங்ஷனில் கூட்டத்தை இறக்கிவிட்டுவிட்டு நாகர்கோயிலை நோக்கி நகரும்போது ரயிலே அலம்பிவிட்ட மாதிரி இருக்கும். கொஞ்சநேரம் வாசனைகளற்ற காற்று பெட்டியை நிரப்பியிருப்பது போலத் தோன்றும். அந்த நேரங்களில் என்னவாவது படித்துக்கொண்டிருந்தால் புத்தியில் ஏறவே ஏறாது. வாசிக்கும்போது ஒரு வாசனை தேவைப்படுகிறது. நல்லதா கெட்டதா என்பதல்ல. ஒரு ஞாபகத்துக்கு. கண்டிப்பாகத் தேவை. குறைந்தபட்சம் எனக்கு.
ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர்கள். எனவே ரொம்ப கவனமாகப் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எதுவும் இருநூறு பக்கங்களுக்கு மேற்படாதவையாக. ரெண்டு கதைப் புத்தகங்கள், மூன்று கட்டுரைத் தொகுப்பு, அப்புறம் ஒரு நாவல். ஆ, சொல்லாதிருக்கலாமா?! கவிதை நூல்களை, நான் வங்கிக்குப் போகும்போது மட்டுமே வாசிப்பது. பணம் போடுகிறவர்கள் மற்றும் எடுப்பவர்களின் நடமாட்டங்களுக்கு இடையே மிதமான ஏசி குளிர்ச்சியில், பணம் எண்ணும் இயந்திரம் அவ்வப்போது கடகடகடவென்று ஓடும் சத்தம் கேட்கவேண்டும். எப்போது நுழைந்தாலும் ஆபீசருக்கு ஒரு பையன் டீ எடுத்துக்கொண்டு போவான். ஏலக்காய் போட்ட அந்தத் தேநீரின் சுகந்த நறுமணம் திருட்டுத்தனமாக கிளாசை விட்டு இறங்கி மிதந்து வந்து என் நாசிக்கு ஏறும்போதுதான் கவிதையை ரசிக்கத் தோன்றும். காசை மட்டுமே எண்ணும் பிராந்தியத்தில் கவிதையை எண்ணிக்கொண்டிருப்பது ஒரு சொகுசு. எப்போதாவது முயற்சி செய்து பாருங்கள்.
0
ரயிலேறிவிட்டேன். உடனே புஸ்தகத்தை எடுத்துவிடலாமென்று தோன்றியது. ஆனால் புத்தி தோயுமா? சரி, கொஞ்ச நேரம் போகட்டுமே? எதிர் இருக்கைகளை ஒரு குடும்பம் நிரப்பியிருந்தது. அவர்கள் நம் ஊர்க்காரர்கள் அல்லர். ஆயிரத்தி நாநூறுக்கும் எழுநூறுக்கும் இடையே உள்ள கிலோ மீட்டர்களில் எங்கோ இறங்கவேண்டிய குடும்பத்தார். அந்தப் பிராந்தியத்து மொழி பேசுகிறவர்கள். ஒரு சாஸ்திரத்துக்கு ஹலோ சொன்னார் குடும்பத் தலைவர். நானும் சொன்னேன். முடிந்தது கதை. அவரது மனைவியோ இரண்டு மகள்களோ என் பக்கம்கூடத் திரும்பவில்லை. வண்டி ஏறியதுமே அந்த அம்மாள் ஒரு பெரிய சணல் பைக்குள் இருந்து இரண்டு அடுக்குப் பாத்திரங்களை வெளியே எடுத்து வைத்தாள். அப்பப்பா. ஊரே தின்னுமளவுக்கு ஒன்றன்மீது ஒன்றாக எத்தனை சப்பாத்திகள்! இன்னொரு பாத்திரத்தில் காய்கறிகள் போட்ட கூட்டு இருந்தது. அம்மாள் புத்திசாலித்தனத்துடன் ஒரு கரண்டியும் எடுத்து வந்திருந்தாள்.
வண்டி கிளம்பியதுமே மொத்தக் குடும்பமும் கையில் ஆளுக்கொரு காகிதத் தட்டை ஏந்திக்கொள்ள, அந்த அம்மாள் முதல் சுற்றில் தலா நான்கு சப்பாத்திகளும் தாராளமாகக் காய்கறிக் கூட்டையும் போட்டாள். ருசிக் கலைஞர்களுக்கு நான் சொல்லுவது புரியும். சப்பாத்திக் கூட்டில் பருப்பின் வாசனைதான் மேலோங்கியிருக்க வேண்டும். மற்றதல்ல. வேறெதுவுமல்ல. ஆனால் இந்த அம்மாள் பரிமாறிக்கொண்டிருந்த கூட்டில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனைதான் தூக்கலாக இருந்தது. எனக்கு மூச்சை அடைத்தது. அந்தப் பெரிய பாத்திரத்தில் எப்படியும் சுமார் நாற்பது சப்பாத்திகள் இருக்கும் என்று தோன்றியது. இந்த வேளைக்கு அந்தக் குடும்பம் இருபது சப்பாத்திகளைத் தின்று தீர்த்தாலும் அடுத்த இரு வேளைகளுக்கு தாராளமாகக் காணும். அட தெய்வமே. இந்தப் பயணம் முழுவதற்கும் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனைதானா! பரிசோதகருக்குப் பத்திருபது கொடுத்து இருக்கையை மாற்றிக்கொள்ள முடியுமா என்று யோசித்தேன். ம்ஹும். எனக்கு பதிலாக கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனையை விரும்பக்கூடிய வேறு யாராவது இங்கே வரச் சம்மதிக்க வேண்டும். அதெல்லாம் நடக்காத காரியம்.
ரயில் வண்டி திருவள்ளூரைத் தாண்டிக்கொண்டிருந்தது. மேற்படி குடும்பம் முதல் சுற்றுச் சப்பாத்திகளைத் தின்று முடித்துவிட்டு மீண்டும் தட்டுகளை நீட்ட, அந்த அம்மாள் மேலும் தலா இரண்டு சப்பாத்திகளை வைத்து, கூட்டை மேலே விட்டாள். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது. ஒவ்வொருவர் வயிறின் கொள்ளளவு ஒவ்வொரு மாதிரி இருக்காதா? அதெப்படி குடும்பமே ஆறு சப்பாத்தி தின்னும்? என்னால் மூன்று சப்பாத்திகளுக்கு மேல் எப்போதும் முடிந்ததில்லை. அதிலும் முதல் சப்பாத்திக்கு நான் எதையும் தொட்டுக்கொள்வதில்லை. நெய் விட்டுச் சுட்ட சப்பாத்தியின் நறுமணத்தைப் பருப்புக் கூட்டின் வாசனை கபளீகரம் செய்துவிடும். எனவே முதல் சப்பாத்தி நெய்யை கௌரவிப்பதற்காக. அடுத்ததை கொஞ்சம் போல் கூட்டு சேர்த்து, தொட்டுத் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு, மூன்றாவதில் சற்று தாராளமாகவே பருப்பைச் சேர்த்து கிட்டத்தட்ட பிசைந்தே சாப்பிடுவேன். ருசியின் பூரணம் என்பது வாசனையின் அரவணைப்பைச் சார்ந்தது. வீடு வரை மனைவி மாதிரி சாப்பிடும் வரைதான் ருசி. இந்த விதத்தில் வாசனையானது வீதி வரை உறவு போன்றது.
வண்டி அரக்கோணத்தில் நின்றபோது வேறொரு புதிய நபர் வந்து சேர்ந்தார். சுமார் நூற்று முப்பத்தியேழு வருடங்களாக என்னை அறிந்தவர் போல, நெருங்கும்போதே ஒரு புன்னகை. ஹலோ என்று கை கொடுத்தார். எனக்கு புருவத்துக்குமேல் அரித்தது. அவருக்குக் கொடுத்த கையை உயர்த்தி அரித்த இடத்தில் சொரிந்துகொள்ளச் சென்றபோது குப்பென்று அத்தர் வாசனை அடித்தது. ஆண்டவனே, இதுவும் கடந்து போகவேண்டிய வாசனையே அல்லவா. எப்படி இருபத்தியாறு மணி நேரம் இதில் நீந்த முடியும்?
என் பதற்றம் வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட எனக்கிருந்த ஒரே வழி இதனைத் தாற்காலிகமாக மறப்பதுதான். ஆனால் அது எப்படி முடியும்? வண்டி ஜோலார்பேட்டையில் நிற்கும்போதெல்லாம் காற்றில் ஒரு சுகந்தமான மசால் வடை மடித்த பேப்பரின் வாசனை மிதந்து வரும். அது போச்சு. ஆந்திரப் பிரதேசத்துக்குள் நுழைந்து வேகமெடுக்கும் தருணங்களில் - பெரும்பாலும் அது அதிகாலை நேரம் - குப்பென்று நெல் வாசனை அடிக்கும். நெல் வாசனைக்கும் வைக்கோல் வாசனைக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. இரண்டுமே சுகந்தமானவைதான் என்றாலும் நெல் வாசனையில் கொஞ்சம் ஈரம் கலந்திருக்கும். வைக்கோலின் வாசனைக்கு ஒரு முரட்டுத்தனம் மிடுக்கைக் கொடுக்கும். நீங்கள் எப்போதாவது வைக்கோல் போரில் சாய்ந்தபடி சுந்தர ராமசாமியின் கதைகளை வாசித்ததுண்டா? அபாரமாக இருக்கும். இதே ஜானகிராமனைப் படிப்பதற்கு ஏற்ற வாசனை, அழுக்குப் போர்வையில் கிட்டும். உள்ளதிலேயே அழுக்கான, பழைய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு, கொட்டும் மழை நாளில் செம்பருத்தி வாசித்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது. அச்சிட்ட எழுத்துகள் ஒவ்வொன்றும் போர்வையின் வாசனையை உறிஞ்சி நாசியை நோக்கிப் பீய்ச்சும். கதை புத்திக்குள் இறங்கும்போது போர்வையின் கதகதப்பு உருவாக்கியிருக்கும் வியர்வைப் பிசுபிசுப்பும் வாசனையாக உருப்பெற்று ஒரு நெடியை உருவாக்கும். ஆ, அபாரம். விவரிக்கவே முடியாது அதை.
கிடக்கட்டும். அந்த அரக்கோணத்துக் கனவானின் அத்தர் வாசனையைச் சொல்ல வந்தேன். இது இலவங்கப்பட்டை சேர்த்த காய்கறிக் கூட்டின் வாசனையைக் காட்டிலும் காட்டமானது. இந்தக் காலத்தில் எத்தனையோ நூதனமான வாசனாதி திரவியங்கள் வந்துவிட்டன. மென்மையும் சுகந்தமும் சேர்ந்த வாசனைகள். இவர் ஏன் இன்னும் அத்தரில் இருக்கிறார்? கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. ஒரு காலத்தில் நான்கூட காதி கிராஃப்டில் ஜவ்வாது வாங்கி வந்து பூசிக்கொண்டிருந்தேன். விலை மலிவு, சுதேசிச் சரக்கு என்று சில காரணங்களையும் சொல்லுவேன். ஏனோ சீக்கிரமே எனக்கு அது பிடிக்காமல் போய்விட்டது. வாசனையானது அந்த எதிர் சீட்டு கனவானின் இரண்டாவது பெண்ணின் மோதிர விரல் மாதிரி சன்னமாக இருக்கவேண்டும். விரலைக் காட்டிலும் ஓரிரு மில்லி மீட்டர்கள் பெரிதான மோதிரமொன்றை அவள் அணிந்திருக்கிறாள். அதை மறுகையால் உருட்டிக்கொண்டேவும் இருக்கிறாள்.
நான் வெகுநேரம் அவள் விரலையே பார்த்துக்கொண்டிருந்தேன். சப்பாத்தியை விள்ளும்போது ரொம்ப அழகாக அந்த மோதிர விரல் ஒரு சேவலின் தலைபோல் டொய்ங் என்று முக்கால் சதம் எழுந்து எழுந்து தணிவது பார்க்க ரசமாயிருந்தது. உண்மையில் அந்த இலவங்கப்பட்டை வாசனையை மறக்கடிக்க அந்தக் காட்சிதான் எனக்கு உதவி செய்துகொண்டிருந்தது. ஆனால் அடுத்த வேளையும் அவளது தாயார் அதே சப்பாத்திப் பாத்திரத்தையும் காய்கறிக் கூட்டுப் பாத்திரத்தையும் திறக்கவே செய்வாள்.
0
எங்கே போகிறீர்கள் என்று அரக்கோணத்துக்காரர் கேட்டார். எதிர் இருக்கைக் குடும்பத்தார் வேறு மொழி. என்னால் அவர்களோடு நீண்ட உரையாடல்களை நிகழ்த்த இயலாது. அந்த விதத்தில் நான் அரக்கோணத்துக்காரருக்கு நியாயமாக நன்றி சொல்லவேண்டும். ஆனால் அவர் பேசும்போது அவர் வாய்க்குள் இருந்துவேறு, ஒரு வாசனை வெளிப்பட்டது. மவுத் ஃப்ரெஷ்னர் உபயோகிப்பார் போலிருக்கிறது. இதுவும் எனக்கு இடைஞ்சலே. ஏனென்றால் நான் அப்போது வாசிக்க எடுத்திருந்தது ஒரு ரஷ்யச் சிறுகதைத் தொகுப்பு. பொதுவாகவே பயணங்களுக்கு உகந்தவை சோவியத் காலப் புஸ்தகங்களே. மாறும் நிலக் காட்சிகளும் கணத்துக்குக் கணம் காற்று ஏந்தி எடுத்து வந்து சேர்க்கும் விதவிதமான வாசனைகளும் ரயில் பெட்டியின் இரும்பு வாசனையும் கலந்து கட்டி அந்தப் புத்தகங்களுக்கு ஓர் இறவாத்தன்மை அளித்துவிடும். எத்தனையோ பல வருஷங்களுக்குப் பிறகு தூசு தட்டி மீண்டும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தாலும் முந்தைய பயண வாசிப்பின்போது உணர்ந்த வாசனைகளை ஒன்று மிச்சமில்லாமல் நினைவுகூர்ந்துவிட இயலும்.
ஆனால் அரக்கோணத்து அத்தர்க்காரருடன் பேச்சுக் கொடுத்தபடி இதை வாசிக்க முடியாது. வாசிப்பும் பாழ். வாசனையும் பாழ். எனவே மூடி வைத்துவிட்டு அவர் என்ன மௌத் ஃப்ரெஷ்னர் உபயோகிக்கிறார் என்று விசாரித்தேன். இப்போது இரண்டாவது வேளை சப்பாத்தி, கூட்டு உண்ணத் தொடங்கியிருந்த எதிர் சீட்டுக் குடும்பமும் இதனைக் கவனிக்க ஆரம்பித்தது. அரக்கோணத்துக்காரர் தமது மவுத் ஃப்ரெஷ்னரின் பிராண்டைச் சொல்லிவிட்டு அதன் அருமை பெருமைகளை விவரிக்க ஆரம்பித்தார். ஒரு முறை கொப்புளித்துத் துப்பிவிட்டால் போதும். பன்னிரண்டு மணி நேரங்களுக்கு வாசனை அப்படியே இருக்கும். அவர் ஒரு விற்பனை அதிகாரி. தினமும் ஏராளமான மக்களைச் சந்தித்து உரையாட வேண்டிய பணியில் இருப்பவர். மடிப்புக் கலையாத சட்டை பேண்ட், பளபளப்புக் குறையாத விலை உயர்ந்த ஷூக்கள், டை போலவே மவுத் ஃப்ரெஷ்னரும் அவரது தொழில்சார் தேவைகளுள் ஒன்று.
ஆனால் ஐயா, ரயில் பயணத்திலாவது இதனைத் தவிர்க்கலாமே? இங்கு யார் உங்கள் வாயைப் பிடுங்கி முகரப் போகிறார்கள் என்று கேட்க நினைத்தேன். எதற்கு வம்பு என்று பேசாதிருந்துவிட்டேன். எப்படியும் என் நிம்மதி போய்விட்டது. வண்டி ஏறியதில் இருந்து ஒரே வாசனைதான். இல்லையில்லை. இரண்டு வாசனைகள். ஒருவேளை அதுவுமில்லையோ? ஆம். மூன்று. இலவங்கப்பட்டை போட்ட காய்கறிக் கூட்டின் வாசனை எதிர்ப்புறத்தில் இருந்து. காட்டமான அத்தரின் வாசனை இடப்பக்கமிருந்து. தப்பித்தவறி அந்த உத்தமர் வாய் திறந்தால் அந்த விலை உயர்ந்த மவுத் ஃப்ரெஷ்னரின் வாசனை.
சரி, விதித்தது இதுதான். சகித்துக்கொள்ள வேண்டியதுதான். படிக்கும் இச்சையை மூட்டை கட்டிவிட்டு ஏறிப் படுத்துவிட்டேன். மேல் தளத்துக்குப் போனாலும் இதே வாசனைதான். பெட்டியில் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. பயமாக இருந்தது. இன்னும் காட்டமாக, இன்னும் மோசமாகச் சில வாசனைகளை நுகர வேண்டி வந்துவிட்டால் இந்தப் பயணமே நரகமாகிவிடும். சாகும்வரை மறக்க முடியாத நினைவுகளுக்குச் சேமித்து வைக்க முடியாது போய்விடும். ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர்கள். அதில் சரி பாதி தூரத்துக்குமேல் கடந்தாகிவிட்டது. இன்னும் சப்பாத்திப் பாத்திரம் காலியானபாடில்லை. இடையே எழுந்து ஒருதரம் கழிப்பறைக்குப் போய்வந்த அரக்கோணத்துக்காரர் இன்னொரு தரம் அந்த மவுத் ஃப்ரெஷ்னரைப் போட்டுக் கொப்பளித்துத் துப்பிவிட்டு வந்திருந்தார். நெருங்கும்போதே தெரிந்துவிட்டது. என்ன துணிச்சல் இருந்தால் உங்களுக்கு வேண்டுமா என்று என்னை வேறு கேட்பார்? ரொம்பக் கஷ்டப்பட்டு என் கோபத்தை அடக்கிக்கொண்டேன்.
எதிர் சீட்டுக் கனவானும் அவரது மனைவியும் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களது இரண்டு பெண்பிள்ளைகளும் எதிரெதிரே அமர்ந்து இடையில் துண்டு விரித்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். குடும்ப விளையாட்டு போலிருக்கிறது. வெறுமனே சாப்பாத்தி தின்று சீட்டாடி வாழ்க்கையை ஓட்டிவிடும் உத்தேசமோ என்னமோ. ஒருத்திக்குப் பதினாறு வயதிருக்கும். அடுத்தவளுக்கு இரண்டு அல்லது மூன்று குறைச்சல். ஏறியதில் இருந்து ஒரு முறைகூட அவர்கள் என்னை நேருக்கு நேர் பார்க்கவேயில்லை என்று தோன்றியது. அப்படியொன்றும் பேரழகன் இல்லை என்றாலும் பார்க்கவே முடியாத சொரூபமல்ல. பத்துப் பன்னிரண்டு மணி நேரங்களாகக் குத்துக்கல் மாதிரி எதிரே உட்கார்ந்திருப்பவனுக்கு ஒரு பார்வை தரக் கூடாதாமா! என்ன பிறப்போ, என்ன வளர்ப்போ.
0
இரண்டாம் நாள் பிற்பகல் கடந்து மாலை நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது ரயில். ஆந்திரத்தையெல்லாம் தாண்டியாகிவிட்டது. மூச்சைப் பிடித்துக்கொண்டு இன்றொரு இரவை ஒரே தாவாகத் தாவிவிட்டால் விடியும் நேரம் இறங்கிவிடலாம். அதுவரை இந்த அத்தர், மவுத் ஃப்ரெஷ்னர் மற்றும் இலவங்கப்பட்டை வாசனையைச் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும். மதிய உணவோடு அந்த சப்பாத்திப் பாத்திரம் காலியாகிவிடும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் என் நினைப்பை அந்தப் பெண்மணி தவிடுபொடியாக்கியிருந்தாள். நான் அதுவரை பார்த்திராத அவர்களது இன்னொரு பையில் - இது சீட்டுக்கு அடியில் உள்ளடங்கி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது - வேறொரு சப்பாத்தி மூட்டை இருந்தது. அதே காய்கறிக் கூட்டு. மாலை நேரச் சிறுபசிக்கும் அந்த அம்மாள் அதைத்தான் தன் மகள்களுக்குக் கொடுத்தாள். பாவம் பிள்ளைகள். வாழ்நாளில் எத்தனை லட்சம் சப்பாத்திகளை உண்டு தீர்க்க வேண்டுமென்று விதித்திருக்கிறதோ! அது கூடப் பிரச்னையில்லை. சப்பாத்திகளாலான வாழ்க்கையை இலவங்கப்பட்டை வாசனையுடனேயே வாழ்ந்து தீர்ப்பது எத்தனை பெரிய சாபம்!
எனக்காவது இந்த ஒரு பயணத்துடன் தண்டனை முடிந்துவிடும். அந்தப் பெண்பிள்ளைகளின் நிலைமையை யோசித்துப் பார்த்தேன். எப்படியாவது இவர்களிடம் ராமாமிருதத்தின் தரங்கிணியைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. படிக்கக்கூட வேண்டாம். முகர்ந்தாலேகூடப் போதும். வயல்வெளிகளின் நடுவே பம்ப் செட்டில் குளிக்கும்போது நாசி நுகரும் வாசனை அந்தக் கதைக்குள் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். உடம்பெல்லாம் சில்லிட்டுப் போய்விடும். அபாரமான அனுபவம். ஒவ்வொரு முறை அந்தக் கதையை வாசித்ததும் எனக்கு ஓடிப் போய்க் குளிக்கத் தோன்றும். மணிக்கணக்கில் தண்ணீருக்கடியில் நின்றுகொண்டே இருப்பேன். முதல் தும்மல் வரும்வரை கணக்கு. அதன்பின் தலை துவட்டிவிட்டு வந்து சூடாக ஒரு காப்பி சாப்பிட்டால்தான் (சர்க்கரை கம்மி) கதை ஜீரணமாகும்.
பாழ். எல்லாமே பாழ். ஒரு பெரும் பயணம் இப்படி சர்வநாசமாகும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பேசாதிருப்பதைத் தாண்டி வேறு வழி தோன்றவில்லை. எடுத்து வெளியே வைத்திருந்த என் புத்தகங்களையெல்லாம் மீண்டும் பெட்டிக்குள் போட்டு பூட்டினேன். பெட்டியை சீட்டுக்கடியில் காலால் எக்கித் தள்ளி என் கோபத்தை வெளிப்படுத்தினேன். ரொம்ப நேரம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. சுமார் நாற்பது லட்சம் சொற்கள் ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு உள்ளே பாயத் தொடங்கின. யாரோ படபடவென்று கதவைத் தட்டினார்கள். எனக்குப் புரியவில்லை. அது ரிசர்வ் செய்தவர்களுக்கான பெட்டி. இனிமேல் யாரும் ஏறி அமர இயலாது. இருப்பினும் வெளியே ஓயாமல் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். ஜன்னல்களில் பலப்பல ஆண்கள் மற்றும் பெண்களின் முகங்கள் முட்டி மோதித் தோன்றி ஏதேதோ கூறின. அவசரமும் வெறியும் வேகமும் சொற்களில் தெறித்துச் சிதறின.
வேண்டாம், யாரும் திறக்காதீர்கள் என்று யாரோ கத்தினார்கள். பதிலுக்கு வெளியில் இருந்து எதிர்ப்புக் குரல் பலமாக வந்தது. அவர்கள் ரயிலின் பக்கவாட்டுத் தகரத்தை இடிக்கும் வேகத்தில் பெட்டியே நொறுங்கிவிடும் என்று தோன்றியது. ஒரு டிக்கெட் பரிசோதகர் எங்கள் இடத்தைக் கடந்து போகும்போது அரக்கோணத்துக்காரர், என்ன சார் இதெல்லாம்? என்று கேட்டார். அவர் பதில் சொல்லவில்லை. வருஷக்கணக்கில் அவர் தினசரி சந்திக்கும் காட்சிதான் போலிருக்கிறது. எனக்குத்தான் வெளியே ஏதோ கலவரம், கொலை, தீ வைப்பு நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றியதோ? பெட்டியில் வேறு யாரும் அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை. தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருத்தன் என்னைப் பார்த்து மிரட்டும் தொனியில் கத்தினான். வந்து கதவைத் திற. சீக்கிரம் திற.
கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. அதற்குள் வண்டி கிளம்புவதற்கான சிக்னல் விழுந்துவிட்டது. தப்பித்தோம் என்று உள்ளே இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். எதிர் சீட்டுக்காரரும் அவரது மனைவி மக்களும் மட்டும் ஒன்றுமே நடவாதது போல இருந்தார்கள். இரவுச் சப்பாத்திகளின் எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருப்பதாகவும், போதவில்லை என்றால் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த அம்மாள் சொல்லிக்கொண்டிருந்தாள்.
வண்டி கிளம்பிவிட்டது. வெளியே கத்திக்கொண்டிருந்த கூட்டம் விடாமல் பக்கவாட்டில் இடித்தபடியே வண்டியோடு ஓடி வந்துகொண்டிருந்தது. அரக்கோணத்துக்காரர் தன் பெட்டியைத் திறந்து காற்றுத் தலையணையை எடுத்து ஊதத் தொடங்கினார். நான் வண்டியோடு கூட ஓடி வந்துகொண்டிருந்த கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எந்தக் கணத்தில் அது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. கூட்டத்தில் ஒருவன் ஜன்னல் வழியே கைவிட்டு வண்டியின் கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்திருக்கிறான். வண்டி கிளம்பியபோதும் அவன் தன் முயற்சியைக் கைவிடாமல் இன்னும் ஆவேசமாக முயன்றபடியே ஓடி வர, வண்டி வேகம் பிடிக்கத் தொடங்கிய நேரம் கதவும் திறந்துகொண்டது.
அவ்வளவுதான். ஒரு பத்திருபது பேராவது பாய்ந்து வந்து ஏறிவிட்டார்கள். காச்சுமூச்சென்று ஒரே சத்தம். கதவு திறக்காத களவாணிப் பசங்களா. இதென்ன உன் அப்பன் வீட்டு ரயிலா? இங்கே ஏறி அங்கே குதித்தார்கள். காலில் பட்ட பெட்டிகளையெல்லாம் எட்டி உதைத்தார்கள். இதோ பாருங்கள், நீங்கள் செய்வது சரியில்லை. இது ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட். நீங்கள் ஏறியது சட்டப்படி தவறு. யார் யாரோ பேசினார்கள். டிடிஆரைக் கூப்பிடுங்கள். யாரோ கத்தினார்கள்.
மனிதர் பெரிய கில்லாடியாக இருப்பார் என்று நினைக்கிறேன். வண்டி கிளம்பும்வரை காவல் தெய்வம் மாதிரி பெட்டிக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, தாழ்ப்பாளை உடைத்துக்கொண்டு அவர்கள் ஏறிய நேரம் அவர் நைசாகக் கம்பி நீட்டிவிட்டார். பாதகமில்லை. இதுவும் ஒரு அனுபவம். வெறுமனே சப்பாத்தி தின்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் ரசமாகத்தான் இருக்கிறது.
வண்டி வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. ஏறிய புதியவர்கள் நடைபாதையை அப்படியே ஆக்கிரமித்து உட்கார்ந்துவிட்டார்கள். எனக்குப் புரியாத மொழியில் அவர்களுடைய அறப்போராட்டம் வெற்றி கண்ட பரவசத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். விஷயம் அதுவல்ல. எதிர் சீட்டுக் குடும்பத்தினருக்கும் அரக்கோணத்துக்காரருக்கும் இந்த அத்துமீறல் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் அளித்திருந்தது. இருவரும் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவர்களைத் திட்ட ஆரம்பித்தார்கள். காட்டு மிராண்டிகள். நாகரிகம் அறியாதவர்கள். வெறும் முரடர்கள். இவர்களையெல்லாம் கேட்பாரில்லை. டிடிஆர் கடங்காரர்களுக்கும் இவர்களுக்கும் எப்போதும் ரகசியக் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருக்கும். வேண்டுமென்றேதான் வண்டி கிளம்பும் நேரம் இவர்களை அவர் உள்ளே அனுமதித்திருக்கிறார். வெளியில் இருந்தெல்லாம் கதவைத் திறக்கவே முடியாது. அவர்தான் திருட்டுத்தனமாகத் திறந்து விட்டிருக்க வேண்டும்.
ஏறிய புதியவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. அவர்கள் சிறு வியாபாரிகள் போலிருக்கிறது. ஏதோ கிராமத்தில் இருந்து சரக்கெடுத்துக்கொண்டு பக்கத்தில் எங்கோ டவுனுக்குப் போகிறவர்கள். ஏழெட்டுக் கூடைகளை அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். ஓடும் ரயிலில் கூடைகளுடன் எப்படித்தான் ஏறினார்களோ. எல்லாமே அழுக்குக் கூடைகள். மேலே சிவப்பு நிறத்தில் துணி சுற்றி மூடியிருந்தது. ஒருத்தன் அதில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு கூடைக்கு அப்பால் பொச்சென்று ஒருதரம் துப்பினான். அரக்கோணத்துக்காரர் அலறிவிட்டார். என்ன இது சுத்த நான்சென்ஸாக இருக்கிறதே. ஏய், எழுந்திரு. இது என்ன உன் வீட்டு வாஷ் பேசினா? போய் கக்கூசில் துப்பிவிட்டு வா. கருமம். கருமம்.
போடா சர்தான் என்று அவன் ஒரு பார்வை பார்த்தான். கூட்டத்தில் ஒருவன் உரக்கக் குரல் எடுத்துப் பாட வேறு ஆரம்பித்துவிட்டான். முதல் நாள் மாலை ரயில் ஏறியதில் இருந்து ஒரு அசையாப்படத்தை பார்த்துக்கொண்டிருப்பது போலவே உணர்ந்த எனக்கு இது பெரிய ஆசுவாசமாக இருந்தது. என் இடத்தை விட்டு எழுந்து அரக்கோணத்துக்காரரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு அவர் இடத்தில் நான் அமர்ந்துகொண்டேன். பாடிக்கொண்டிருந்தவனைப் பார்த்துப் புன்னகை செய்தேன். அவன் பாடியது ஏதோ ஒரு ஒரிய சினிமாப் பாட்டாயிருக்க வேண்டும். எனக்கு அந்தப் பாட்டு பிடிக்கவில்லை என்றாலும் அந்த உற்சாகம் பிடித்திருந்தது. ஒரு பார்வையாளன் அகப்பட்டுவிட்டான். அவனை ஏன் ரசிகனாகவும் ஆக்கிவிடக் கூடாது? அவன் மேலும் உற்சாகமாகப் பாடத் தொடங்கினான். இரண்டு பேர் பிரம்புக் கூடைகளில் தாளம் போடத் தொடங்கினார்கள்.
சப்பாத்திக் குடும்பத்தினர் பொறுமை இழக்கும் எல்லையைத் தொட்டிருந்தார்கள். நான்கு பேரின் முகமும் தணல் மாதிரி ஜொலித்துக்கொண்டிருந்தது. வடக்கத்திக்காரர்களுக்கு இந்த மாதிரி ரயில் பயண அனுபவம் ஏற்கெனவே இருந்திருக்கவேண்டும். இருப்பினும் தமிழ் நாட்டுக்கு வந்து திரும்புகிறார்கள் அல்லவா? அந்த பாதிப்போ என்னமோ. நான்கு பேரும் அந்த அத்துமீறல்வாதிகளைக் கண்டபடி திட்டிக்கொண்டே இருந்தார்கள். அவ்வப்போது அரக்கோணத்துக்காரரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். எனக்கு இதுவும் சுவாரசியமாக இருந்தது. என்றால் மேலும் சுவாரசியம் கூட்டலாமே?
என் பங்குக்கு நானும் அந்தப் பாட்டுக்குத் தாளம் போட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். ஒருவன் பாடிக்கொண்டிருந்தான் அல்லவா? அவனோடு இன்னும் இரண்டு பேர் சேர்ந்து பாடத் தொடங்கிவிட்டார்கள். இப்போது பிரம்புக் கூடைத் தாளம் மறைந்து அவர்கள் சீட்டுகளிலேயே தாளம் போட ஆரம்பித்தார்கள். சத்தம் பலமாக இருந்தது. ஆரவாரமாக இருந்தது. சட்டென்று ஒருவன் எழுந்து ஆட ஆரம்பித்தான். நான் எழுந்து நின்று கைதட்டத் தொடங்கினேன். உடனே அவனுக்குக் குதூகலம் பீறிட்டுவிட்டது. சரேலென்று என்னை இழுத்து, என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆட்டம் போடத் தொடங்கிவிட்டான்.
என் பார்வை அந்த எதிர் சீட்டுக்காரரின் பதினாறு வயது மகளின்மீதுதான் முதலில் சென்றது. அவள் என்னைப் பார்க்கிறாளா? நிறுத்தி நிதானமாகக் கவனிக்க முடியவில்லை. ஏனென்றால் எதிர் சீட்டுக்காரர் என்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் ஒரு வார்த்தையும் பேசாமல் உம்மணாமூஞ்சி மாதிரி உட்கார்ந்திருந்தவனுக்குள் இப்படி ஒரு கிறுக்குப்பயல் இருப்பான் என்று அவர் எண்ணியிருக்க மாட்டார். சுத்த நான்சென்ஸ்.
என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். எனக்கு அந்தப் பாட்டும் ஆட்டமும் ரொம்பப் பிடித்துவிட்டது. என்னை அறிந்தவர்கள் யாருமில்லாத ரயில் பெட்டி. ஆடினால் என்ன? பாடினால் என்ன? பத்து நிமிஷம் அந்த கிராமத்தான் கையைப் பிடித்துக்கொண்டு ஆடித் தீர்த்திருப்பேன். மூச்சு வாங்க உட்கார்ந்தபோது அந்தக் கூட்டமே என்னைப் பார்த்து சினேகமாகச் சிரித்தது. ஒருத்தன் சட்டென்று சிவப்புத் துணி போட்டுக் கட்டியிருந்த தன் பிரம்புக் கூடையின் கட்டைப் பிரித்தான்.
குப்பென்று புகையிலை வாசனை. வயல் வெளியில் இருந்து பறித்துக் காயவைத்து எடுத்து வந்திருக்கிறார்கள். எங்கோ கொண்டு விற்கப் போகிறார்கள் போலிருக்கிறது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு புகையிலைக் கட்டையை அதற்குமுன் நான் கண்டதில்லை. நீள நீளமாக பாம்புத்தோல் மாதிரி இருந்தது. கறுத்தும் கனத்தும் சுருண்டும் கிடந்த புகையிலைக் கட்டைகள். அவன் அதிலொன்றை உருவி என்னிடம் நீட்டினான். கடித்துத் தின்னச் சொல்கிறானா, பொடித்து மெல்லச் சொல்கிறானா என்று புரியவில்லை. இருப்பினும் அதை வாங்கிக்கொண்டேன். மூக்கருகே வைத்து முகர்ந்து பார்த்தது பேரனுபவமாக இருந்தது. ஒரு விள்ளல் கிள்ளியெடுத்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி வாயில் போட்டுக்கொண்டேன். கசக்கிய உள்ளங்கையை மீண்டும் முகர்ந்து பார்த்தேன். அவனைப் பார்த்துச் சிரித்தேன்.
அப்படியே காம்யுவின் வாசனை .
ஒரு முத்தம்
இது அவனுடைய கதை. அவன் பேரைச் சொல்லி எழுதத்தான் திட்டம் போட்டேன். இரண்டாவது பத்தியை எட்டும்போதே வேண்டாமென்று தோன்றிவிட்டது. காலம் எழுத்தாளனுக்குச் சாதகமாக இல்லை. என்றைக்கும் போலத்தான். குறைந்தபட்சம் பெண்டாட்டி பிள்ளை குட்டியுடன் அவன் சௌக்கியமாக இருக்கவேணுமென்று நினைப்பதில் என்ன தவறு? அவன் என் நண்பன். பார்த்து இருபது வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டதென்ற போதிலும். தொடர்பே இல்லை என்ற போதிலும். நான் எழுதுகிற மொழி அவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என்றாலுமேகூட. பாதகமில்லை. அவன் வேறு நான் வேறில்லை. ஆன்மாவின் அடியாழத்தில் யாருமேகூட யார் யாரோ இல்லையல்லவா!
கல்கத்தாவில் அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. சாலையெல்லாம் வாணலியில் வதங்கும் கத்திரிக்காய் போலாகிவிட்டிருந்தது. குப்பை எது மண் எது, குழி எது, தார்ச்சாலை எது என்று தெரியாமல்தான் கால் வைக்க வேண்டும். ரொம்பக் கஷ்டம். ஆனால் ஒரு பெரும் மக்கள் கூட்டம் இதைப் பொருட்படுத்தவே செய்யாமல் எங்கோ போர்க்களம் போய்க்கொண்டிருப்பது போல நகர்ந்துகொண்டே இருந்தது. எத்தனை ஆயிரம் மக்கள். இந்த நகரத்தின் சந்தடி மழை நாளில் கூட அடங்குவதில்லை. காரோட்டிகளும் இழுரிக்ஷாக்காரர்களும் பாரபட்சமில்லாமல் நடந்துபோகிறவர்கள் மீது சேறு வாரிப் பூசியபடியே போனார்கள். யாரும் திட்டவில்லை. சேறடிப்பது வாகனங்களின் பிறப்புரிமை போலிருக்கிறது.
'நாம் ஒரு டாக்சி பிடிப்போமா?' என்று அவனிடம் கேட்டேன்.
'இல்லை. நடக்கலாம். எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை' என்று அவன் பதில் சொன்னான். இதற்குமேல் நனையவும் ஒன்றுமில்லை, நனையாமல் காக்கவும் ஒன்றுமில்லை. இது ஒரு அனுபவம். மொழி தெரியாத ஊரில் கிடைத்த புதிய நண்பன். அவனுக்கும் வங்காளம் தெரியாதுதான். அவன் பாரதத்தின் மேற்கு மூலையில் இருந்து வந்திருந்தான். நான் தெற்கு மூலை. அவன் கவிஞன். நான் கதை எழுதுபவன். அவனுக்கு அப்போதே திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தை இருந்தது. எனக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார்கள். அவன் ஒரு கம்யூனிஸ்டு. நானோ கம்யூனிசமும் காலராவும் ஒன்றென நம்புபவன். எப்படிப் பார்த்தாலும் ஒட்டாத ஜந்துக்கள். ஆனாலும் அந்த நகரத்தில் நாங்கள் அன்று காலை சுமார் ஏழே முக்கால் மணியளவில் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து நண்பர்கள் ஆகியிருந்தோம்.
விருது விழா அழைப்பிதழில் எங்கள் புகைப்படங்கள் பிரசுரமாகியிருந்தன. பெரிய கௌரவமான விருது. தேசத்தின் நான்கு மூலைகளில் இருந்தும் நான்கு பேரைத் தேர்ந்தெடுத்துக் கௌரவிக்க அழைத்திருந்தார்கள். எழுதுபவனுக்கு வேறென்ன வேண்டும்? இது ஒரு கிளுகிளுப்பு. மேடைக் கிளுகிளுப்பு. பரம சுகமாக இருக்கும். ஒரே ஒரு கணமாயினும் உலகமே நமக்காகக் கைதட்டுவது போலத் தோன்றும் சுகம் எல்லோருக்கும் வாய்க்காது. எழுத்தாளன் கொம்பு முளைத்தவந்தான். சந்தேகமில்லை. ஆனால் சொல்லிக்கொள்ளக் கூடாது. பேங்க் லாக்கரில் வைர நெக்லஸ் இருக்கிறது என்று அவ்வப்போது பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் போகிற போக்கில் வெறும் தகவலாக உதிர்த்துச் செல்வது மாதிரிதான் இதையும் பேணவேண்டும். இதெல்லாம் ஒரு கலை. ஒரு சாகசம்.
அவன் கையில் விழா அழைப்பிதழ் இருந்தது. இல்லாவிட்டால் ஸ்டேஷனில் இருந்து வெளியே போக விடமாட்டார்களோ? நான் சென்ற ரயில் நின்று, இறங்கி நடக்கத் தொடங்கியபோது என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த அமைப்பாளர்களுடன் அவனும் நின்றிருந்தான். பத்து நிமிஷம் முன்னால் வந்த ரயிலில்தான் அவன் வந்திருந்தான். வரவேற்பெல்லாம் கனஜோராக இருந்தது. அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியதும் அவனையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். பெரிய கவிஞன். ஆறு புத்தகங்கள் வந்திருக்கின்றன. இதற்குள் மூன்று வெளி தேசத்து மொழிகளில் அவனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.
நான் ஹலோ என்று கை நீட்டினேன். அவன் கையில் இருந்த அழைப்பிதழை அருகே இருந்த அமைப்பாளரிடம் கொடுத்தான். தோளில் இருந்த பெரிய மூட்டையை இறக்கிக் கீழே வைத்தான். இயேசுநாதர் மாதிரி இரண்டு கைகளையும் உயர்த்தி பிறகு என்னை நோக்கி நீட்டினான். இரண்டே அடிகள். பாய்ந்து வந்து அப்படியே ஆரத் தழுவிக்கொண்டான். எனக்குக் கொஞ்சம் வெட்கமாகப் போய்விட்டது. என் ஹலோவை அவன் செருப்பால் அடித்துவிட்டான். சிநேகபாவமென்றால் இதுவல்லவா. முகம் தெரிவதோ, மொழி தெரிவதோ, முன் தெரிவதோ அத்தனை முக்கியமா? எழுத்து என்கிற ஒரு கண்ணியில் இரண்டு பேரும் இணைந்திருக்கிறோம். அதற்குமேல் வேறென்ன வேண்டும்?
அன்று காலையே சொதசொதவென்று மழை பிடித்துக்கொண்டிருந்தது. எஸ்பிளனேடு பகுதியில் எங்களுக்கு ஒரு ஹோட்டலில் அறை போட்டிருந்தார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கி எங்கள் டாக்சி அந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேரும்போது ஒன்பது மணிக்குமேல் ஆகிவிட்டது.
'நீங்கள் குளித்து டிபன் சாப்பிட்டு ஓய்வெடுங்கள். மாலை விழாவுக்கு அழைத்துச் செல்ல ஐந்து மணிக்கு வண்டி வந்துவிடும்' என்று சொல்லிவிட்டு விழா அமைப்பாளர்கள் போய்விட்டார்கள். கவர்னரும் யாரோ ஒரு மத்திய அமைச்சரும் விழாவுக்கு வருவதாகச் சொன்னார்கள். கவர்னருக்குக் கவிதை கதையெல்லாம் ஒத்துக்கொள்ளுமா என்று அவன் கேட்டான். உரக்கப் பேசாதே, அவர் பங்குக்கு ஒரு தொகுப்பை எடுத்து நீட்டிவிட்டால் நீயும் நானும் காலி என்று அவன் காதோடு சொன்னேன். அவன் சிரித்தான்.
அன்று மதியம் வரை நாங்கள் குளிக்கக்கூட இல்லை. ஒப்புக்கு நாலு பூரி சாப்பிட்டுவிட்டு, அரை மணிக்கொருதரம் தேநீர் குடித்தபடி ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தோம். மழையில் நனைந்தபடியே கொஞ்சம் வெளியே சுற்றினோம். என் ஆங்கிலத்தைவிட அவன் பேசிய ஆங்கிலம் சிறிது சுத்தமாக இருப்பது போலப் பட்டது. இந்த உணர்வு ஒரு பெரும் இம்சை. அசந்தால் தாழ்வு மனப்பான்மையாக உருப்பெற்றுவிடும். அப்புறம் இலக்கியம் பேச முடியாது. எனவே நான் குற்றம் கண்டுபிடிக்க முடியாதபடி ரொம்ப வேகவேகமாகப் பேச ஆரம்பித்தேன்.
நீ ஏன் கவிதை எழுதுவதில்லை என்று அவன் என்னைக் கேட்டான். யோசித்தேன். இதுவும் தாழ்வு மனப்பான்மைதான். எனக்கு அத்தனை உயரம் சாத்தியமில்லை என்று பதில் சொன்னேன். அவனுக்கு ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. 'நீ அப்படியா சொல்கிறாய்?' என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.
'ஏன் இத்தனை சந்தேகம்? என் மொழியில் கவிதையின் உச்சம் தொட்ட படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். உலகத்தரம் என்பதை நியாயமாக அவர்களை வைத்துத் தீர்மானிக்க வேண்டும். துரதிருஷ்டம், தமிழ் கடல் தாண்டாது' என்று பதில் சொன்னேன். மைகாட், மைகாட் என்று நாலைந்து முறை சொல்லிக்கொண்டான். அவனுக்கு முப்பது வயதிலேயே ஆங்கில மொழிபெயர்ப்பு சாத்தியமாகிவிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் என்று ஏழெட்டு வருடங்களில் மூன்று மொழி மாற்றங்கள் சித்தித்திருக்கின்றன.
'ஒரு இத்தாலியப் பத்திரிகையில் என் கவிதையை வெளியிட்டு இந்திய மதிப்புக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் அனுப்பியிருந்தார்கள்!' என்றான். அடேயப்பா. பத்தாயிரம் ரூபாய்! நான் உடனே கேட்டேன். அந்தப் பணத்தை என்ன செய்தாய்?
அவன் சில வினாடிகள் யோசித்தான். பிறகு, 'நாலு நாள் கோவாவுக்குப் போனேன். இரண்டு பெண்களை உடன் அழைத்துப் போயிருந்தேன். குடித்து, கொண்டாடித் தீர்த்தேன். உண்மையில் நான் அந்தக் கவிதையை எழுதியபோதுகூட அத்தனை பெரிய கவிஞனாக உணரவில்லை. கோவாவில்தான் அதை முழுதாக உணர்ந்தேன்' என்று சொன்னான்.
எனக்கு உள்ளங்காலெல்லாம் சூடாகிவிட்டது. பேச்சு மூச்சில்லை. சொன்னேனே, கிளுகிளுப்பு. இது மேடைக் கிளுகிளுப்பைக் காட்டிலும் பெரிது. எப்படி? எப்படி? அந்த அனுபவத்தைச் சொல்லு என்று அவனை மேலும் தூண்டினேன். அவன் சிரித்தான். 'இரு. நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா?' என்று கேட்டான்.
'அட எனக்கந்தக் கொடுப்பினை இல்லையப்பா. நீ விஷயத்தைச் சொல்லு.'
'நான் சுமார் முன்னூறு பெண்களைக் காதலித்திருக்கிறேன். யாரை வட்டம் போடுகிறேனோ அவள் தன்னால் வந்து விழுந்துவிடுவாள். இது என் ராசி' என்றான்.
ஆள் பார்க்கக் கொஞ்சம் ஷோக்காகத்தான் இருந்தான். முன் நெற்றியில் லேசாக வழுக்கை விழத் தொடங்கியிருந்தாலும் நீளமான முடியால் அதை மறைத்திருந்தான். பேப்பரில் கப்பல் செய்தால் நடுவில் ஒரு முக்கோண நீட்டல் வருமே. அப்படி இருந்தது அவன் மூக்கு. கொஞ்சம் பூனைக் கண்ணோ? கன்னம் ஒட்டித்தான் இருந்தது. ஆனாலும் ஒரு கவர்ச்சி இருந்தது. கவிஞன் என்பதால் வந்த கவர்ச்சியாயிருக்கலாம்.
'ஆனால் நான் பழகும் பெண்களிடம் கவிதை பற்றிப் பேசுவதேயில்லை' என்றான். ரொம்ப கெட்டிக்காரன். பெண்டாட்டியிடம் கம்யூனிசம் பேசமாட்டான். கவிதையில் பெண்டாட்டி பிள்ளையைப் பற்றிக் குறிப்பிட மாட்டான். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் தான் ஒரு கவிஞன் என்பதையேகூடக் காட்டிக்கொள்ள மாட்டான்.
அவனே சொன்னதுதான் இதெல்லாம். 'ரொம்ப சின்ன வாழ்க்கை நமக்கு. பைபிள் காலத்து மக்கள் மாதிரி தொள்ளாயிரம் வருஷம், எண்ணூறு வருஷமெல்லாமா வாய்ச்சிருக்கு? இருக்கறதுக்குள்ள வாழ்ந்துடணும்.'
நான் யோசிக்க ஆரம்பித்தேன். வாழ்வது என்பதுதான் என்ன? பெண்பிள்ளை சகவாசம் இல்லை என்றால் வாழ்க்கையே அர்த்தமற்றதுதானோ?
'அப்படியில்லே. ஒவ்வொரு பெண்ணும் ஒரு தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பும் ஒரு வாழ்க்கை. நீ கொஞ்சம் கவிஞனாகணும். அப்போ புரியும். வெறும கதை எழுத பொண்டாட்டி போதும். கவிதைக்கு சிநேகிதிகள் அவசியம்' என்றான்.
சரிதான், ஒருதரம் கவிஞனாகிப் பார்த்தால் போகிறது.
உடனே அவன் பரவசமுடன் எழுந்துகொண்டான். 'இன்னிக்கே?' என்று கேட்டான். டேய், இது அசலூர். நாம் விருது பெற வந்திருக்கிறோம். இங்கே என்னவாவது விவகாரத்தில் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட நான் தயாரில்லை என்று கறாராகச் சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்பதாயில்லை.
'நீ வா என்னோடு' என்று கையைப் பிடித்துத் தரதரவென்று அறையைவிட்டு வெளியே அழைத்து வந்தான். அந்த நீளமான வராண்டாவில் அப்போது நாங்கள் இரண்டு பேர் மட்டுமே நின்றுகொண்டிருந்தோம். வெளியே மழை விட்டபாடில்லை. இப்படி மழை பெய்தால் விழாவுக்குக் கைதட்ட யார் வருவார்கள் என்று எனக்குக் கவலையாக இருந்தது. மறுநாள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் எல்லாம் எங்கள் பேட்டிகளும் போட்டோக்களும் வரப் போகின்றன. உருப்படாமல் போகப் போகிறேன் என்று தீர்மானமாக நம்பிக்கொண்டிருந்த என் குடும்பத்துக்கு இந்த விருதின் மூலம் கொஞ்சம் நம்பிக்கையளிக்க நான் போட்டிருந்த திட்டத்தையெல்லாம் அவனுக்கு எடுத்துச் சொல்ல நினைத்தேன்.
அவனா கேட்பவன்? 'நண்பா, ஒன்று இரண்டு மூன்று என்று ஐந்நூறு வரை எண்ணு. எண்ணிக்கொண்டே இரு, இதோ வருகிறேன்' என்று எனக்குக் கட்டளை இட்டுவிட்டு விறுவிறுவென்று படியிறங்கிப் போய்விட்டான்.
எனக்கு பயம் பிடித்துக்கொண்டது. ஏதாவது இசைகேடாக ஆகிவிட்டால் என்ன செய்வது? ஆனால் அவன் எதற்கும் துணிந்தவன் போலிருக்கிறது. எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். என்னை சாட்சியாக வைத்துக்கொண்டு எதற்கு இப்படியெல்லாம் திருவிளையாடல் நடத்த நினைக்கிறான்? மொழியே புரியாவிட்டாலும் அவனைக் கவிஞனாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தவித மனச்சிக்கலும் இல்லை. ஆனால் களியாட்டம்தான் கவிஞனின் கல்யாணகுணம் என்று நிறுவ நானா அகப்பட்டேன்?
கொஞ்சம் படபடப்பாக இருந்தது. சத்தமில்லாமல் அறையைக் காலி செய்துவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றியது. அவன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. சீக்கிரமே அறைக்குத் திரும்பிவிட்டான். நல்லவேளை தனியாக வந்தானே என்று கொஞ்சம் ஆசுவாசப்பட்டேன். ம்ஹும். இப்போது அவன் கையில் ஒரு பை இருந்தது. உள்ளிருந்து நான்கு பீர் பாட்டில்களை எடுத்து வெளியே வைத்தான்.
'குடிப்பாய் அல்லவா?'
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவனே ஒன்றைப் பல்லால் கடித்துத் திறந்து என் கையில் கொடுத்தான். 'நீ ஒரு கவிஞனே இல்லை' என்று சொல்லிவிட்டு பாட்டிலை நகர்த்தி வைத்தேன்.
'ஏன்?'
வெளியே மழை பிய்த்துக்கொண்டு ஊற்றுகிறது. இந்த நேரத்தில் ஜில்லென்று பீர் வாங்கி வருவது என்ன ரசனை?'
அவன் சிரித்தான். நடு ராத்திரி ஐஸ் க்ரீம் சாப்பிடும் ரசனைதான் என்று சொன்னான்.
'இதோ பார், மாலை விழா இருக்கிறது. அமைப்பாளர்கள் ஐந்து மணி என்று சொன்னாலும் கவர்னர் வருவதால் இன்னும் சீக்கிரமே நம்மை அழைத்துப் போக வந்தாலும் வந்துவிடுவார்கள். இதெல்லாம் ரொம்பத் தப்பு.'
அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. யாரோ ரெடி, ஸ்டெடி, ஒன் டூ த்ரீ, கோ என்று சொன்னது மாதிரி ஒரு பாட்டிலைத் திறந்து ஒரே மூச்சில் கடகடவென்று குடித்து முடித்துவிட்டு பொத்தென்று கீழே வைத்து ஒரு தரம் மூச்சு விட்டான். சிரித்தான். எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.
மீண்டும் ரெடி ஸ்டெடி ஒன் டூ த்ரீ. அடுத்த பாட்டில். அதுவும் ஒரே மூச்சு.
'டேய் பாவி, போதும்!' என்று கத்தினேன்.
'அவ்ளோதான்' என்றான்.
'அப்ப எதுக்கு நாலு பாட்டில் வாங்கினே? எனக்கு இதெல்லாம் வேணாம்.'
அவன் ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். 'அவ இப்ப வருவா. அவளுக்கு வேண்டியிருக்கும்.'
தூக்கிவாரிப் போட்டுவிட்டது எனக்கு. சரியான கிறுக்கனாயிருப்பான் போலிருக்கிறதே. எனக்கு பயமும் பதற்றமும் பிடித்துக்கொண்டது. சட்டென்று ரொம்பத் தீவிரமாகிவிட்டேனோ? வெளியே மழை மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக வெளியேறியிருப்பேன். இதென்ன ரோதனை!
அதற்குப் பின் அவனோடு பேசவில்லை. ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டேன். மேசை மீது அவனது கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இருந்தது. பார்க்கக் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அவன் யாரை வரச் சொல்லிவிட்டு வந்திருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் அறைக்குள் இன்னொரு நபர் யார் நுழைந்தாலும் நான் கண்ணை மூடிக்கொண்டு வெளியேறிவிடுவது என்று முடிவு செய்தேன்.
'ஆனால் நண்பா, அதுவரை நீ என் புத்தகத்தைப் புரட்டலாமே? என் கவிதைகள் உன்னை ஏமாற்றாது' என்று சொன்னான். சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. காலை ரயில் நிலையத்தில் அவன் ஆனந்தமயமாக என்னைக் கட்டித் தழுவி வரவேற்ற காட்சி நினைவில் வந்தது. சரி, அதற்காகவாவது படிக்கலாம் என்று எடுத்துப் பிரித்தேன்.
அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இரு, ஓடிவிடாதே என்று சொல்லிவிட்டு அவன் போய்க் கதவைத் திறந்தான். அந்தப் பெண் உள்ளே நுழைந்ததும் உடனே கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டான்.
இதற்குமேல் நான் எங்கே கவிதை படிப்பது? நடப்பதை நம்பவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் அச்சமும் கவலையுமாக இருவரையும் மாறி மாறிப் பார்த்தேன்.
'உட்கார்' என்று அவன் சொன்னான். அந்தப் பெண் கட்டில்மீது உட்கார்ந்தாள். குடிக்கிறாயா என்று கேட்டுவிட்டு ஒரு பாட்டிலை எடுத்தான். அவள் வேண்டாம் என்று சொன்னாள். அவன் வற்புறுத்தவில்லை. தானே கொஞ்சம் குடித்துவிட்டு பாட்டிலை வைத்தான். 'இவன் என் நண்பன். பெரிய எழுத்தாளன்' என்று என்னை வேறு அறிமுகம் செய்தான். நானாவது அவனது கவிதைத் தொகுப்பைத் தொட்டுப் பார்த்துவிட்டேன். அவனுக்கு என் கதைகளில் ஒன்றைக்கூடத் தெரியாது. புத்தகத் தலைப்புகூடத் தெரியாது. ஆனாலும் பெரிய எழுத்தாளன் என்று சொல்கிறான்! என்ன ஒரு மனசு.
அவள் எனக்குப் பணிவுடன் வணக்கம் சொன்னாள். நான் பதிலுக்குச் சொல்லவில்லை என்று ஞாபகம். மணி பார்த்தேன். மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினேன். 'சாப்பிடேன்?' என்று சிரித்தான். பயங்கர எரிச்சலாக இருந்தது. ஒரு முடிவுடன் வேகமாக எழுந்து போய்க் கட்டிலில் இருந்து ஒரு தலையணையை எடுத்துத் தரையில் போட்டேன். ஒரு பெட்ஷீட்டை உருவி விரித்தேன். சுவரைப் பார்க்கத் திரும்பிப் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டேன். மாலை விழா முடிந்து இரவு ரயிலேறிவிட்டால் இவன் யாரோ நான் யாரோ. நெஞ்சார ஒருமுறை கட்டித் தழுவியதற்காக இந்தக் கருமாந்திரங்களையெல்லாம் என்னால் சகித்துக்கொள்ள இயலாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
அவன் நாலைந்து முறை என்னைக் கூப்பிட்டான். நான் வம்படியாகக் கண்ணைத் திறக்கவேயில்லை. அப்படியே தூங்கியும் இருக்கிறேன். பொதுவாகப் பசி இருந்தால் தூக்கம் வராது. ஆனால் பயம் இருந்தால் வரும் போலிருக்கிறது. எத்தனை நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது அவன் கட்டில்மீது தனியே அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். அவளைக் காணோம். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எழுந்து உட்கார்ந்து அதிகாரமாக, 'ஒரு காப்பி சொல்லு' என்றேன்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம்? ஏற்கெனவே அவன் காப்பிக்குச் சொல்லியிருக்கிறான். நான் நன்றியுடன் பார்த்தேன். 'எனக்குத் தூங்கி எழுந்ததும் காப்பி வேண்டும். அதுவும் உடனடியாக.'
'குடி' என்றான்.
குடித்து முடித்துவிட்டு, 'சொல்லு. அவ யாரு? எப்ப போனா?' என்றேன். நான் எப்பேர்ப்பட்ட எழுத்தாளன், எத்தனை சொற்சிக்கனம் மிக்கவன் என்பது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
எழுந்து வந்து என் அருகே அமர்ந்தான். 'ஒண்ணும் நடக்கலே. சும்மா ஒரு முத்தம் மட்டும் கொடுத்தேன். அவ்ளோதான். அனுப்பிட்டேன்' என்றான்.
என்னால் நம்பமுடியவில்லை. நிஜமாவா நிஜமாவா என்று ஏழெட்டு தரம் கேட்டேன்.
' மழைக்கு நல்லாருக்கும்னு நெனச்சது வாஸ்தவம்தான். ஆனா ஒரு முத்தம் குடுத்ததுமே ஒரு கவிதை வந்துடுச்சி. அதுக்குமேல அவ இடைஞ்சல். அதான் அனுப்பிட்டேன்' என்றான்.
பேய் விடு தூது
குச்சிப் பாட்டிக்கு ஏன் அந்தப் பேர் வந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பாட்டி செத்துப் போனதை சாக்காக வைத்து துக்கம் கேட்கப் போகிற பாவனையில் மீனாட்சியைக் கிட்டத்தில் பார்த்துவிட்டேன். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட அழகி! இழுத்து எதிரே நிறுத்தி அதைச் சொல்லிவிட வேணும்போல ஒரு தவிப்பு. எத்தனையோ பேர் நினைத்திருப்பார்கள். ஆனால் யார் நேரடியாகச் சொல்லியிருப்பார்கள்? ஆண் பிள்ளைகள் எல்லோரும் என்னைப் போலத்தான். வெறுங்கோழைகள். நினைத்துக்கொள்வதில் என்ன இருக்கிறது? அது ஒரு சொகுசு. கம்பளிக்குள் சுருண்டுகொண்டு குளிரைக் கொண்டாடுவது மாதிரி. அவ்வளவுதான். ஒரு வீரனுக்குத்தான் இதைச் சொல்ல வாய் திறக்கும். செருப்படி விழுந்தாலும் பரவாயில்லை என்கிற சுரணைகெட்டத்தனமும் கூடவே வேணும்.
ஏனென்றால், இந்தப் பெண் பிள்ளைகளுக்கு ஒரு கலியாண குணம் உண்டு. நீ அழகாக இருக்கிறாய் என்று யாராவது சொல்லுவதை ரொம்ப விரும்புவார்கள். ஆனால் அதென்னவோ கொலைக் குற்றம் மாதிரி அப்படி ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிவிடவும் செய்வார்கள். மீனாட்சியே ஒன்றிரண்டு பயல்களை அவளது அப்பாவிடம் மாட்டிவிட்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன்.
நான் அந்தளவு வீரனெல்லாம் இல்லை. அதற்காகக் கோழை என்று சொல்லிவிட முடியாது. பாருங்கள், ஒரு பேயை சிநேகிதம் பிடித்திருக்கிறேன். உங்களால் முடியுமா? செத்தாலும் முடியாது. ஓ, இல்லை. செத்தால் ஒரு வேளை முடியலாம். ஆனால் நான் உயிரோடிருப்பவன். ஆனால் ஒரு பேயின் ஃப்ரெண்ட்.
இதெப்படி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
அன்றைக்கு ராத்திரி நான் அறைக்குத் திரும்ப ரொம்ப நேரமாகிவிட்டது. நைட் ஷோவுக்குப் போய்விட்டு நேரே வருவதென்றால் பன்னிரண்டரை மணிக்கே வந்திருக்கலாம். ஓட்டலுக்குப் போய் பார்சல் வாங்கிச் செல்லலாம் என்று நினைத்ததுதான் தப்பு. பார்சல்தான் ரொம்ப லேட்டாகிவிட்டது.
வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். இன்னும் இரண்டு நீண்ட சாலைகள், ஒரு குறுக்குச் சந்து, ஒரு குப்பை மேடு இவற்றைக் கடந்தால்தான் நான் தங்கியிருக்கும் மேன்ஷனுக்குப் போய்ச் சேரமுடியும். ஒரு ஆட்டோ பிடித்தால் அஞ்சு நிமிஷம்தான். அத்தனை சீக்கிரம் போய்ச் சேர்ந்து என்ன செய்யப் போகிறேன்? மீனாட்சியைத் தான் நினைத்துக்கொண்டு படுப்பேன். நினைத்துக்கொண்டு நடக்கவும் செய்யலாமே?
மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.
மீனாட்சிக்கு நகம் கடிக்கிற பழக்கம் இருக்கிறது.
மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.
மீனாட்சி கல்லூரியில் கடைசி வருஷப் படிப்பில் இருக்கிறாள். போன செமஸ்டரில் ஒரு பேப்பரில் ஃபெயில் வேறு ஆகியிருக்கிறாள்.
மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.
பிக்கல் பிடுங்கல் இல்லாத வீடு. அவளது அப்பா, வீட்டை ஒட்டியே ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கிறார். என்னை அவருக்குத் தெரியும். நான் தங்கியிருக்கும் மேன்ஷனில் குடியிருப்போரில் அவரது கடையில் சிகரெட் வாங்காத ஒரே இளைஞன் நாந்தான். (பக்கத்துத் தெருவுக்குப் போய் வாங்குவேன்.)
மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.
மீனாட்சியை அவரொன்றும் கலெக்டர் உத்தியோகத்துக்குப் படிக்க வைக்கப் போவதில்லை என்பதை நானறிவேன். எவனோ ஒருத்தனைப் பிடித்துக் கட்டிவைத்துவிடத் தான் போகிறார். அந்த ஒருவன் ஏன் நானாக இருக்கக்கூடாது?
மீனாட்சி. மீனாட்சி. மீனாட்சி.
நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன் அன்பே. ரேஷன் கார்டில் குடும்பத்தலைவனாகும் தகுதி எனக்கும் வந்துவிட்டது. நீ இன்னும் கிடைக்காதபடியால்தான் நேரம் கடத்த நைட் ஷோ போகிறேன். நீ வந்துவிட்டால் உன்னோடு மாலைக்காட்சிக்குத்தான் போவேன்.
மறந்துவிட்டேன் பார்த்தீர்களா? விஷயத்தை இன்னும் என் வீட்டுக்குச் சொல்லவில்லை. போன முறை என்னைப் பார்க்க ஊரிலிருந்து அப்பாவும் அம்மாவும் வந்திருந்தபோது விவரம் சொல்லி நேரடியாகப் பெண் கேட்கச் சொல்லலாமா என்று நினைத்தேன். அம்மாவை மீனாட்சியின் அப்பாவுடைய பெட்டிக் கடைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திக்கூட வைத்துவிட்டேன். நல்ல மனுஷன். இங்கே ஒரு அவசர ஆத்திரத்துக்கு இவருடைய கடைதான் எங்களுக்கெல்லாம். நடு ராத்திரி எழுப்பிக் கடை திறக்கச் சொன்னாலும் பன்னும் பழமும் கொடுப்பார். பெரிய பரோபகாரி.
அறிமுகம் போதாது? ஆனாலும் ஏனோ மீனாட்சி விஷயத்தை எடுக்க முடியவில்லை. சரி போ, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கதாநாயகியான மீனாட்சியிடமே இன்னும் சொல்லவில்லை. அவள் என்ன நினைப்பாள் என்று தெரியவில்லை. அதற்குள் அம்மாவிடம் சொல்லி என்ன பயன்?
இவ்வாறாக நான் மீனாட்சியைக் குறித்து யோசித்தபடியே நடந்துகொண்டிருக்கும்போதுதான் அந்தக் குப்பை மேட்டுக்குள் இருந்து ஒரு குரல் வந்தது. 'டேய், ரொம்பப் பசிக்குதுடா. கையில இருக்கற பார்சல குடுத்துட்டுப் போயேன்.'
'யாரு?'
குரல் வந்த திசையில் தேடிப் பார்த்தேன். ஆள் யாரும் இல்லை. எனவே மீண்டும் கேட்டேன், 'யாரு?'
'அதெல்லாம் ஒனக்கு வேணா. எனக்குப் பசிக்குது. கையில பிரியாணிதான? அப்படி அந்த குத்துக்கல்லு மேல வெச்சிட்டுப் போயிடேன். இப்பந்தின்னேன்னா ஒரு பத்து நாளைக்குப் பசிக்காது.'
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. யாரோ பாவம் பரம தரித்திரவாசி. பொட்டலத்தின் வாசனை பிடித்து சரியாகக் கேட்டுவிட முடிந்திருக்கிறது. ஒழியட்டும் என்று அந்தக் கல்லின்மீது பிரியாணி பொட்டலத்தை வைத்தேன்.
'நீ போ. தள்ளிப் போயிரு.'
தபார்றா என்று நினைத்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் செல்பவன் மாதிரி நாலடி நகர்ந்து போனேன். ஆனால் நான் கில்லாடி அல்லவா? நடந்த வாக்கிலேயே சரேலென ஒரு அபவுட் டேர்ன்.
அடக்கெரகமே. கல்லின்மீது நான் வைத்த பிரியாணிப் பொட்டலத்தை இப்போது காணோம்! தடதடவென்று அந்தக் குப்பை மேட்டின் மீது ஏறி ஒரே தாவாக அந்தப் பக்கம் எகிறிக் குதித்து ஒரு முழு சுற்று சுற்றி முடித்துப் பார்த்தும் யாரையும் காணோம். என் காலெல்லாம் நாற்றம் பிடித்துக்கொண்டதுதான் மிச்சம்.
'ஏய்.. நீ யாருன்னு சொல்லு? எங்க ஒளிஞ்சிட்டிருக்க? வெளிய வா.' என்று சத்தம் போட்டேன்.
ம்ஹும். பதில் இல்லை.
இதென்ன கயவாளித்தனம்? பிரியாணி கொடு என்று கேட்டு வாங்கிச் சாப்பிடத் தெரிகிறது. நேரில் பார்த்து ஒரு நன்றி சொல்ல வக்கில்லாது போய்விடுமா? இது மட்டும் பகலாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. சரி போ. காசுக்குக் கேடு. இன்று நமக்கு பிரியாணி கொடுத்துவைக்கவில்லை. அறைக்குப் போனால் இரண்டு மலைப்பழங்கள் இருக்கும். சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கவேண்டியதுதான்.
இப்படியாக நான் மனத்துக்குள் சமாதானம் செய்துகொண்டு கிளம்ப நினைத்தபோது மீண்டும் அந்தக் குரல் வந்தது. 'ரொம்ப நன்றி. இது பெரிய உதவி. மறக்கமாட்டேன்.'
இப்போதுதான் எனக்கு மெலிதாக ஒரு பயம் வர ஆரம்பித்தது. ஒருவேளை நிஜமாகவே பேயாக இருக்குமோ?
நான் கேட்டேன், 'நீ யாரா இருந்தாலும் பரவால்ல. நேர்ல வா. நான் ஒன்ன பாக்கணும்.'
'எனக்கு உருவம் இல்லடா. இருந்திருந்தா வந்திருக்க மாட்டனா?'
'எழவே. மூஞ்சி இல்லாத முண்டத்துக்கு பசி மட்டும் இருக்குதாக்கும்.'
எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என் பயம்தான் என் குரலில் கோபத்தை ஏற்றி அனுப்பிக்கொண்டிருந்தது. இது ஏதடா வம்பாப் போச்சு? போயும் போயும் ஒரு பேயிடம் மாட்டிக்கொள்வதாவது? அதுவும் யாராவது ஒருத்தன் பிரியாணி கொடுத்துப் புதை குழிக்குள் விழுவானா?
என் பயமும் கலவர உணர்வும் அதற்குப் புரிந்துவிட்டது போலிருக்கிறது. 'பயப்படாத. ஒன்ன நான் ஒண்ணுஞ்செய்ய மாட்டேன். ஒன்னன்னு இல்ல. யாரையுமே ஒண்ணுஞ்செய்யிற ஜாதி நான் இல்ல. இருந்த வரைக்கும் நல்லதா எதுவும் பண்ணல. அதுக்கே இப்படி ஒரு அவஸ்த. இப்ப பேயா திரியறப்பவேற பாவத்த தேடிக்கணுமா? அதெல்லாம் மாட்டேன். நீ பயப்படாத.'
'நீ.. நீ நிஜமாவே பேயா?'
'ஆமாமா. இன்னுமா ஒனக்கு சந்தேகம் தீரல? அதான் சுத்திப் பாத்தியே? ஆளு யாரும் கண்ணுல பட்டாங்களா?'
'இல்ல. அதான் குழப்பமா இருக்கு.'
'குழப்பமே வேணாம். நான் பேய்தான். ஆனா ஒண்ணுஞ்செய்ய மாட்டேன். நீ எனக்கு பசியாத்தியிருக்க.' மீண்டும் உறுதியளித்தது.
எனக்கு நெஞ்சுக் குழியெல்லாம் உலர்ந்து போய்விட்டது. இடமும் காலமும் மறந்து உடல் நடுக்கம் ஒன்றே சாசுவதம் என்று தோன்றிவிட்டது. அது போய்விடு என்று சொன்னபோதே போயிருக்கலாம். நான் ஏன் நின்றேன்? இந்த அசட்டுத் துணிச்சல் மீனாட்சியிடம் காதலைச் சொல்ல மட்டும், வருவேனா என்கிறது. என்ன ஜென்மம் நான்?
'ஆச்சி. சாப்ட்டு முடிச்சிட்டேன். நான் போயி தண்ணி குடிக்கறேன். நீ கெளம்பு. வீடு போய் சேரு.'
திடுக்கிட்டு மீண்டும் ஒருதரம் சுற்றிப் பார்த்தேன். 'ஏய் இரு. நீ பேய்னு நான் எப்படி நம்பறது?'
'நீ எதுக்கு நம்பணும்? பேய்க்கே பிரியாணி போட்டவன், மனுசனுக்கு என்ன வேணா செய்வ. நல்ல மனசு ஒனக்கு. நீ நல்லாருப்ப. போயிட்டு வா.'
'இந்தா பாரு.. எனக்கு உன் ஆசீர்வாதமெல்லாம் வேணாம். ஒரு ஹெல்ப் பண்ணுவியா?'
இதை எப்படிக் கேட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் கேட்டுவிட்டேன்.
சில வினாடிகள் பதில் ஏதும் வரவில்லை. பேய் தண்ணீர் குடிக்கப் போய்விட்டது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு நான் கிளம்பும்போது, 'என்ன செய்யணும் சொல்லு?' என்று குரல் வந்தது.
கொஞ்சம் யோசித்தேன். ம்ஹும். இதெல்லாம் பெரிய விவகாரம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மடத்தனம் பண்ணிவிடக் கூடாது.
'அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் வரேன்' என்று விறுவிறுவென்று நடக்கத் தொடங்கிவிட்டேன். எங்கே அது துரத்திக்கொண்டு அறை வரைக்கும் வந்துவிடுமோ என்று பயம்தான். நல்லவேளை, அப்படி எதுவும் ஆகவில்லை.
ஒரு நாலைந்து நாள் அந்தப் பக்கமே போகவில்லை. ஆனால் அந்தப் பேயை நினைக்காதிருக்க முடியவில்லை. வாழ்வில் மனிதாபிமானமும் நல்ல மனமும் கொண்ட ஒரு பேயைச் சந்திப்பேன் என்று நான் எண்ணிப் பார்த்திருப்பேனா. சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள். அதுசரி, எதற்கு நம்பவேண்டும்?
அந்த வாரம் முழுவதும் ஆபீசுக்குப் போய் வேலை பார்த்துவிட்டு வாரக் கடைசியில் வழக்கம்போல் நைட் ஷோ பார்த்துவிட்டு மறக்காமல் பிரியாணி வாங்கிக்கொண்டு திரும்பும்போது மீண்டும் அந்தப் பேயை நினைத்தேன். இந்த முறை வேண்டுமென்றேதான் அந்தக் குப்பை மேட்டுப் பக்கமாகப் போனேன். அதே குத்துக்கல். ஒரு கணம் நின்று சுற்றிப் பார்த்தேன். குரல் ஏதும் வரவில்லை. ஆனாலும் பிரியாணிப் பொட்டலத்தை அந்தக் கல்லின்மீது வைத்தேன்.
ஒரு நிமிஷம் முழுதாக ஓடியிருக்குமா? பிரியாணிப் பொட்டலம் மறையவில்லை. ஆனால் பேய் வந்துவிட்டது. 'எனக்கு இப்ப பசியில்லெ. போனவாரம் சாப்ட்ட பிரியாணி இன்னும் மூணு நாளைக்கித் தாங்கும்.'
நான் பதிலேதும் சொல்லாமல் பொட்டலத்தை எடுத்துக்கொண்டேன்.
'என்னமோ உதவி வேணுன்னு சொன்னியே. என்னன்னு சொல்லேன்?'
'அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா நீ பேய்தானான்னு டெஸ்ட் பண்றதுக்கு சொன்னேன். விட்டுடு. அத மறந்துடு.'
'இல்ல பரவால்ல சொல்லு. என்னால முடிஞ்சா செய்வேன். ஒரு நாலஞ்சு ஹெல்ப் பண்ணியாவது இந்த நாறப் பொழப்ப தாண்ட முடியுதா பாக்கறேன்.'
இப்போது எனக்கு சுவாரசியமாகிவிட்டது. பேய்க்குப் பரலோக ப்ராப்தி தேவைப்படுகிறது. சிறு உதவிகளின் மூலம் அது சாத்தியமா? தெரியவில்லை. பரீட்சை செய்து பார்த்துவிடுவதில் ஒன்றும் பிழையில்லையே? சரிதான், எனக்கும் ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. ஏ அன்பான பேயே, நான் மீனாட்சியை விரும்புகிறேன். ஆனால் அவளிடம் அதை எப்படிச் சொல்லுவதென்று தெரியவில்லை. என் சார்பாக நீ அவளிடம் எப்படியாவது என் மனத்தில் இருப்பதைப் புரியவைக்க முடியுமா?
ஒரு வழியாகச் சொல்லிவிட்டேன். பேய் சில நிமிடங்கள் யோசிப்பதற்கு எடுத்துக்கொண்டது. பிறகு, சரி முயற்சி செய்கிறேன்; நீ ஒரு மாதம் கழித்து வா' என்று சொன்னது. சரிதான். பேயே ஒரு மாதம் கேட்கிறதென்றால் பெரிய பிராஜக்ட்தான்.
அடுத்த வாரம் ஊரில் இருந்து என் அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். 'டேய் ஒனக்கு பொண்ணு பாத்திருக்கம்டா' என்று உள்ளே நுழையும்போதே அம்மா அறிவித்துவிட்டாள்.
'யாரு?' என்றேன் அசுவாரசியமாக.
'எல்லாம் ஒனக்குத் தெரிஞ்ச பொண்ணுதாண்டா.. இந்த மேன்ஷனுக்கு எதிர் சைடுல பொட்டிக்கடை வெச்சிருக்காரே நீராத்து பாண்டி, அவரோட பொண்ணு மீனாட்சி.'
மீனாட்சியா!
அம்மா சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. போனமுறை அம்மா வந்திருந்தபோது எதிர்க் கடைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தேன் அல்லவா? அன்றைக்கே மீனாட்சியின் அப்பா என் அம்மா அப்பாவிடம் பேச்சுக் கொடுத்து என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். என் உத்தியோகம், சம்பளம், உடன் பிறந்தோர், ஊரில் இருக்கும் நிலம் நீச்சு என்று சகலமான சேதிகளையும் பேசியிருக்கிறார்கள். மீனாட்சியின் போட்டோவைக் கொடுத்து, ஜாதகம் இருந்தா அனுப்புங்க, பாப்பம் என்று கேட்டிருக்கிறார். அப்பா ப்ரொபஷனல் கூரியரில் ஜாதகம் அனுப்பி, பொருத்தம் பார்ப்பது வரை நடந்திருக்கிறது.
'தெனம் பாக்கற புள்ளதான? படிச்சிருக்க. வேல பாக்குற. சம்பாதிக்கற. அவருக்கு கல்யாண வயசுல பொண்ணு இருக்குது. சரியா இருந்தா முடிக்கலாம்னு நினைக்கறது ஒரு அதிசயமா?'
எனக்கு அதன் பிறகு எல்லாமே அதிசயமாகத்தான் இருந்தது. அடுத்த பத்து நாளில் கல்யாணமே முடிந்துவிட்டது. மீனாட்சியின் அப்பாவே எனக்கு நாலு தெரு தாண்டி ஒரு வீடு பிடித்துக் கொடுத்துக் குடி வைத்துவிட்டார். ஆபீஸ் போய்வர ஒரு ஸ்கூட்டர் வேறு வாங்கிக் கொடுத்திருந்தார்.
என் பதட்டப் பரவசமெல்லாம் தணிய மேலும் பத்து நாள் தேவைப்பட்டது. மீனாட்சியுடன் அந்த வார இறுதியில் ஒரு சினிமாவுக்குப் போயிருந்தேன். இண்டர்வலில் மீனாட்சி சொன்னாள். அவளது பாட்டிதான் முதல் முதலில் என் பேரை அவர்கள் வீட்டில் எடுத்தாளாம். துக்கம் கேட்கப் போனேனே, அந்தப் பாட்டி. 'அந்தப் புள்ள பாக்க லச்சணமா இருக்காண்டா.. நல்லா சம்பாதிக்கறான். நம்ம மீனாச்சிக்குப் பாக்கறதுன்னா பாரு.'
அன்றிலிருந்தே மீனாட்சியின் அப்பா என்னை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். எல்லாம் பிடித்துப் போனபோதுதான் ஜாதகம் அனுப்பக் கேட்டிருக்கிறார்.
மீனாட்சி சொன்னாள். 'ஆனா பொருத்தமெல்லாம் பாக்கவேயில்ல தெரியுமா? பாத்துட்டதா சொன்னாங்க. அவ்ளதான்.'
'ஏன்?'
'வீட்டுல ஒரு பெரிய சாவு விழுந்தா உடனே ஒரு நல்ல காரியம் பண்ணிரணும்னு ஐதீகம். செத்துப் போன பாட்டி எங்கப்பா கனவுல வந்து முன்னாடி சொன்னத திரும்ப ஒருதடவ ஞாபகப்படுத்தியிருக்கா. அதுக்குமேல எங்கப்பா யோசிக்கவேயில்ல. உடனே உங்கப்பாவுக்கு லெட்டர் எழுதிப் போட்டுட்டாரு.'
அதற்குமேல் எனக்குப் படத்தில் மனம் தோயவில்லை. மீனாட்சியை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பிரியாணி வாங்கப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
C/O கருவறை
வழியும் சத்தியமும் ஜீவனும் சந்தேகமில்லாமல் நானே தான். வந்து கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போ என்று எம்பெருமான் கூப்பிட்டான். கூப்பிட்ட மரியாதைக்குப் போய்ச் சேர்ந்தபோது பதினெட்டு மணிநேரம் கூண்டுக்குள் காத்திரு என்று திருப்பதி தேவஸ்தானத்தின் எலக்டிரானிக் போர்டு சொன்னது.
சுந்தரத் தெலுங்கும் மந்திரத் தமிழும் மற்றும் கொஞ்சம் இந்தி, ஆங்கிலம், மலையாளம் கலந்த ஒலிச் சித்திரங்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருக்க, மேலுக்கு ஆணி அடித்து மரக்கட்டை நட்டு ஆங்காங்கே டிவி மாட்டி, படம் காட்டிக்கொண்டிருந்தார்கள். மொட்டை அடித்தவர்கள், அடிக்காதவர்கள் என்று ஜாதி இரண்டொழிய வேறில்லை. கடலை மிட்டாய், கைமுறுக்கு, பஞ்சுமிட்டாய், பட்டாணி சுண்டல். பாக்கெட் உணவுகள், பலமான மசாலா நெடி. சாப்பிட்டுக் கைகழுவ வெளியே போவது சாத்தியமில்லை. உன்னுடைய கைக்குட்டையிலோ, அடுத்தவர் சட்டையிலோ துடைத்துக்கொள். எப்படியும் தரிசனத்துக்குள் விடிந்துவிடும். படுக்க இடமில்லை. உட்கார்ந்த வாக்கில்தான் தூங்க முயற்சி செய்யவேண்டும்.
தூங்கித்தான் ஆகவேண்டுமா என்பது இன்னொரு கேள்வி. ஆன வயது அப்படியொன்றும் அதிகமில்லை என்றாலும் ரத்த அழுத்தம் இப்போதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை. தூங்கி எழுந்தால் பல் தேய்ப்பது அவசியம். குளிப்பது? ஏடுகொண்டலவாடனைக் குளித்துவிட்டுத்தான் தரிசிக்க வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. ஆகவே, பல் தேய்ப்பதும் கூட அப்படியொன்றும் நிர்ப்பந்தமில்லை. நாற்றத் துழாய்முடி நாராயணன் அவன். துர்நாற்றங்கள் மீதும் அவனுக்கு விரோதம் ஏதுமில்லை. தவிரவும் காத்திருக்கும் கூண்டுகளில் கடன் முடிக்க ஒதுக்கமாகக் கட்டிவைத்திருக்கும் இடங்கள் அப்படியொன்றும் சிலாக்கியமாக இல்லை. பாவத்தைத் தொலைத்துவிட்டு வியாதியை வாங்கிக்கொண்டு வர நான் தயாரில்லை.
ஜருகண்டி, ஜருகண்டி.
பேஷ். இங்கேயே ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டம் நகர்கிறது. தோளுக்குமேலே மொட்டையடித்த குட்டிக் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, கச்சம் கட்டிய மொட்டையடித்த பெரியவர்கள் சந்துகளில் நகர்ந்துகொண்டிருந்தார்கள். இப்படி வா, இப்படி வா. அப்படிப் போகாதே. தள்ளாதிங்க சார். எவுரண்டி அக்கட? ஜருகு, ஜருகு..
ஐம்பது ரூபாய் டிக்கெட். நூறு ரூபாய் டிக்கெட். சுப்ரபாத சேவை. திருப்பாவை சேவை. கல்யாண உற்சவம். போனதெல்லாம் இப்படித்தான். இது புதுசு. ஜனதா தரிசனம். வேணாம்டா, உன்னால மணிக்கணக்கா உக்கார முடியாது, நிக்க முடியாது. அப்பறம் அங்க வலிக்கறது, இங்க வலிக்கறதுன்னு ரெண்டு நாள் பிராணன வாங்குவ. கிளம்பும்போது சுற்றமும் நட்பும் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
அதையும்தான் பார்த்துவிடுவோமே? நடந்தே மலையேறி, காத்திருந்து, இலவசமாக தரிசித்துவிட்டு, க்யூவில் நின்று தரும உணவு சாப்பிடுவது ஓர் அனுபவமாக இருக்காது என்பது என்ன நிச்சயம்? தரும தரிசனக்காரர்கள் தேவஸ்தானத்துக்கு ஒரு பொருட்டாக இல்லாது போனாலும் தெய்வத்துக்கு அப்படி இராது. லட்டு கிடைக்காவிட்டாலும் அல்வா கொடுக்காத கடவுள் என்று உத்தமமான பெயர் வாங்கியிருக்கிறார். சந்தேகமென்ன, கண்டிப்பாக ஏதாவது திருப்பம் நேர்ந்தே தீரும்.
டிஜிட்டல் கடிகாரம் இரவு இரண்டு மணி என்று காட்டியது. தூக்கம் வரவில்லை. கொசுத்தொல்லை இல்லாதுபோனாலும் கூட்டம் அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. திடீர் திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் ஏடுகொண்டலவாடா என்று கத்தினார்கள். கூடச் சேர்ந்து கத்தலாம் என்றுதான் தோன்றியது. எது தடுத்தது என்று தெரியவில்லை. பக்தியை அத்தனை உரக்க வெளிப்படுத்தத்தான் வேண்டுமா என்றொரு பகுதிநேரப் பகுத்தறிவாளன் உள்ளே உட்கார்ந்துகொண்டு கேள்வி எழுப்பினான்.
என் பக்தியின் மீது எனக்கு சந்தேகம் கிடையாது. துளியும் கிடையாது. அது ஒரு திட்டவட்டமான பிசினஸ் பக்தி. எனக்கு இதைக் கொடு. உனக்கு நான் இதைச் செய்கிறேன் என்கிற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். இல்லாதுபோனால் ஒரு போன் அடித்து எங்கள் கம்பெனி ஏஜெண்டிடம் சொன்னால் ஏசி காட்டேஜ் ஒதுக்கி, கோயில் கோபுர வாசலிலிருந்து நேராக உள்ளே கூட்டிக்கொண்டு போய்விடமாட்டானா!
அதிகாரி. அடேயப்பா. ஒரு அதிகாரியாகப் போகும்போதெல்லாம் என்ன மரியாதை! பரிவட்டமென்ன, மாலை என்ன, பக்கத்தில் இருந்து தரிசனமென்ன? தட்டில் போடும் பணத்தின் கனத்தைப் பொறுத்து, வேறு சில கண நேர சந்தோஷங்களுக்கும் எம்பெருமான் அவசியம் அருள்பாலித்துவிடுவான். தெய்வம் மனுஷ்ய ரூபேண.
தூங்கும்போதும் அழகாகத் தெரியும் மனிதர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை அகப்பட்டதில்லை, அப்படியொருவர் அல்லது ஒருத்தி. வாய்பிளந்த கோலம். ஆடை கலைந்த கோலம். கால்களை அகல விரித்த கோலம். தலை கலைந்த கோலம். இயல்பாக இருக்கும் எதுவும் சௌந்தர்யமாக இருக்காது போலிருக்கிறது. தவிரவும் அந்தக் குறட்டை. ஆ, எத்தனை எத்தனை சுருதிகளில் குறட்டைகள்! என் பக்கத்தில் உட்கார்ந்த வாக்கில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயதான மனிதர் சிங்கத்தின் குகை மாதிரி வாயைப் பிளந்துகொண்டிருந்தார். ஒரு காலைத் தொங்கப்போட்டு, இன்னொரு காலைக் குத்திட்டு, அதில் கையை ஊன்றி, கையால் முகவாய்க்கு முட்டுக்கொடுத்து - சட்டென்று முன்னெப்போதோ பார்த்த பிரெஞ்சு ஓவியம் ஒன்று நினைவுக்கு வந்தது. ஆனால் ஓவியத்தை ரசித்தமாதிரி ஒரிஜினலை ரசிக்க முடியவில்லை.
யார் கண்டது? இதற்குப் பெயர்தான் மேட்டிமை மனோபாவமோ என்னமோ. என்னைக்காட்டிலும் அவர் ஏடுகொண்டலுவாடனுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருக்கக் கூடும். சட்டென்று வேறுபுறம் திரும்பி உட்கார்ந்துகொண்டேன்.
மூன்று மணிக்கு எங்கோ மணியடித்தார்கள். உறக்கம் கலைந்த மனிதர்கள் சொல்லிவைத்த மாதிரி ஏடுகொண்டலவாடா வெங்கட் ரமணா என்று கூப்பிட்டபடி எழுந்தார்கள். எப்படியும் இன்றைய பொழுது முடிவதற்குள் தரிசனம் கிடைத்துவிடும். இப்போதைக்கு சூடாக ஒரு காப்பி கிடைத்தால் தேவலை. கூட்டம் நகரத் தொடங்கியது. முண்டியடித்தார்கள்.
இம்முறை என்னுடைய டீல் ஒன்றும் பிரமாதமில்லை. ஒரு தவறு செய்திருந்தேன். எனக்கு மட்டுமே தெரிந்து, நானே மறைத்து, தப்பித்துவிட்ட தவறு. மன்னித்துவிடு எம்பெருமானே என்று மனத்துக்குள் கூப்பிட்டுக் கேட்டேன். சரி, ஒழிந்துபோ, வந்து ஒரு நடை சேவித்துவிட்டுப் போய் வேலையைப் பார் என்று சொல்லியிருந்தான். சேவித்துவிட்டால் சரியாகிவிடும். சரணாகதி என்பது எத்தனை சௌகரியம். உமக்கே நாம் ஆட்செய்வோம். எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கத் தயாரான கடவுள். பாவத்துக்குச் சம்பளம் கொடுக்காத பரமாத்மா. அப்பேர்ப்பட்டவனை பதினெட்டு மணிநேரம் காத்திருந்து தரிசிப்பது ஒன்றும் தப்பில்லை. எத்தனை அதிகாரிகள், அமைச்சர்களுக்காக மணிக்கணக்கில், நாள் கணக்கில் காத்திருந்திருக்கிறேன்.
சத்தம் அதிகமாக இருந்தது. என் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். என்னுடைய காணிக்கை அங்கே ஒரு சிறு பேப்பர் பொட்டலத்துக்குள் இருந்தது. இந்த காணிக்கை சூட்சுமம்தான் எனக்குப் புரியவேயில்லை. படியளப்பவனுக்கே பைசா கொடுப்பதா என்று மீண்டும் பகுத்தறிவாளன் கேட்கிறான். முடியைக் கொடுப்பதிலாவது ஒரு லாஜிக் இருக்கிறது. மானுடப் பிறவிகளின் ஆணவச் சின்னமல்லவா அது? சீவி சிங்காரிப்பதெல்லாம் அதைத்தானே? மழித்துப் போடும்போது அகந்தையையே மழித்து ஒழிப்பதாக எப்போதும் தோன்றும் எனக்கு.
ஆனால் நான் அப்படியொரு வேண்டுதல் செய்ததில்லை இதுவரை. நெட் கேஷ். பிசினஸில் முடி காணிக்கையெல்லாம் சரிப்படாது. செக் டிரான்ஸாக்ஷனும் கிடையாது. நெட் கேஷ். கறுப்பு வெள்ளைக் கலவை பெரிய விஷயமில்லை. என்னிடம் இருந்தால் கறுப்பு. அவன் உண்டியலில் போய்ச் சேர்ந்தால் அதன் நிறம் வெண்மை. எம்பெருமான் ஒரு வினோதமான கரன்ஸி கன்வர்ட்டரும் கூட.
கூட்டம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. கூண்டு கூண்டாக நான் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். ஏடுகொண்டலுவாடா, வெங்கட் ரமணா, கோவிந்தா, கோவிந்தா. திசை தெரியவில்லை. நான் நின்றுகொண்டிருந்த கூண்டிலிருந்து கோவில் எந்தப் பக்கம் என்பது கூடச் சட்டென்று மறந்துவிட்டது. எட்டுத்திசையிலும் அவன் இருந்தாலும் அந்தக் கருவறைதான் எல்லோருக்குமே இலக்கு. எதிரே போய் நிற்க ஒரு கணம். திருமுகத்தை ஏறிட்டுப் பார்க்க ஒரு கணம். அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு வரி பிரார்த்தனை. ஒரு சின்ன மனமுருகல். எதிரே நிற்கும் கணத்தில் ஒரு பூ அல்லது துளசி விழுமானால் நல்ல சகுனமாக எடுத்துக்கொண்டு அடுத்த ஆறு மாதத்தை ஓட்டிவிடலாம். எல்லாம் அவன் செயல். அதற்கெல்லாம் அவகாசமிருக்காது. ஜருகண்டி, ஜருகண்டி.
ஒரே ஒரு பயம்தான். நிவேதிதாவைக் கைவிட முடிவு செய்தபோது அந்த பயமில்லை. எங்கே ஊரைக் கூட்டி நாரடித்துவிடுவாளோ என்று தோன்றியபோதுதான் அது பற்றிக்கொண்டுவிட்டது.
அந்தஸ்து. கௌரவம். மரியாதை. மாபெரும் சபைகளில் நடக்கும்போதெல்லாம் விழும் மாலைகளின் எண்ணிக்கை. இதெல்லாம் ஏன் அவளுடன் பழக ஆரம்பித்தபோது தோன்றவில்லை என்று தெரியவில்லை. ஜாலியாகத்தான் இருந்தது. சந்தோஷமாகத்தான் இருந்தது. கொஞ்சம் கிளுகிளுப்பாகவும் இருந்தது. எக்காலத்திலும் லைசென்ஸ் கிடைக்காத உறவு என்பது உள்ளூரத் தெரிந்திருந்தபோதிலும் வேண்டியிருந்தது. பணத்திமிர் என்று நண்பர்கள் சொன்னார்கள். அப்படியா? தெரியவில்லை. ஒருவேளை இருக்கலாம். திமிரும் அழகுதானே? ரசிக்கலாம், தப்பில்லை என்று நினைத்ததுதான் தப்பாகிவிட்டது.
நோமோர் நிவேதிதா. போய்விடு. இதற்குமேல் தாங்காது. எனக்கும் சரிப்படாது, உனக்கும் சரிப்படாது. காரண காரியங்களுடன் விளக்கிச் சொன்னபோது முதலில் முறைத்தாள். அதிர்ச்சி அல்லது வெறுப்புடன் சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தாள். கொஞ்சம் பணம் கொடுக்கவேண்டியிருந்தது. அவள் அதனை மறுத்துக்கொண்டிருந்தவரைக்கும் பயம்தான். எப்போது ஏற்றுக்கொண்டாளோ, அப்போதே தப்பித்துவிட்ட உணர்வு வந்துவிட்டது.
சீச்சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன்னோடு ஓடிவரத் தயாராக இருந்தேனே, இப்படிச் செய்துவிட்டாயே?
வசனங்கள், மற்றும் வசனங்கள். நான் மறுப்பேதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு என் மனைவி குறித்த பயம் இருந்தமாதிரி அவளுக்கும் அவளது கணவனைக் குறித்த அச்சம் இருக்காமலா இருக்கும்?
எப்படியோ, அந்தக் காண்டம் கடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. ஏடுகொண்டலுவாடனுக்கு நன்றி. இனி உன் முகத்தில் விழிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவனருளாலே அவன் தாள் வணங்கவேண்டியது ஒன்றுதான் பாக்கி.
யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. ஒருத்தருக்கும் தெரியாது. மூன்று வருடகாலம் நாங்கள் பழகியிருக்கிறோம். என்னுடைய அலுவலகத்தில் எனக்குக் கீழே பணிபுரிந்திருக்கிறாள். என்னுடன் சினிமாவுக்கு வந்திருக்கிறாள். கிழக்கு கடற்கரைச் சாலை ரிசார்ட்ஸுக்கு வந்திருக்கிறாள். ஒகேனக்கல் வந்திருக்கிறாள். ஒருத்தருக்கும் எங்கள் நடவடிக்கைகள் தெரியாது. மிகத் திறமையாக நாங்கள் வாழ்ந்திருக்கிறோம், அல்லது நடித்திருக்கிறோம்.
சந்தேகமில்லாமல், நூறு சதவீதத் தவறுதான். தெரிந்தேதான் செய்தோம். அதனாலென்ன? வருத்தப்படாமல் சுமந்த பாரம் என்றாலும் இளைப்பாறுதல் தர எம்பெருமான் தயாராகவே இருந்தான்.
ஜருகண்டி, ஜருகண்டி என்றார்கள். நினைவுகளைப் பொட்டலம் கட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கூட்டத்தோடு உள்ளே போனேன். கோபுரம் கடந்தது. கொடிமரம் வந்தது. தரையெல்லாம் ஈரமாக இருந்தது. அங்கப்பிரதட்சணம் செய்தவர்கள் அரூபமாக மனத்தில் வந்து போனார்கள்.
கோவிந்தா, கோவிந்தா.
யாரோ தள்ளினார்கள். எங்கோ போய் முட்டிக்கொண்டேன். கோவிந்தா கோவிந்தா.
உள்ளே போனது தெரியவில்லை. இருளும் பச்சைக் கற்பூர நெடியும் திடீரென்று சூழ்ந்த பேரமைதியும் என்னவோ செய்தது. சர்வேஸ்வரா, என்னை மன்னித்துவிடு. தவறு செய்தேன். ஆனாலும் மன்னித்துவிடு. இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் தரத் துணிச்சலில்லை. ஆனால் செய்யும்போதெல்லாம் இதே மாதிரி காப்பாற்றிவிடு.
கண்ணை நான் மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஜருகண்டி சத்தம்தான் கேட்டது. மீண்டும் யாரோ பிடித்துத் தள்ளினார்கள். இம்முறை யூ-டேர்ன் மாதிரி இருக்கவே திரும்ப முயற்சி செய்தேன்.
நோ சான்ஸ். அடக்கடவுளே! சந்நிதிக்கு வந்துமல்லவா பார்க்கமுடியாமல் போய்விட்டது. நின்று பார்த்தாலே மனத்தில் பதியாத ரூபம். நடந்தவாக்கில் தலையைத் திருப்பிப் பார்ப்பதாவது!
ஜருகண்டி, ஜருகண்டி.
சட்டென்று எனக்குள் இருந்த இண்டலெக்சுவல் குரல் கொடுத்தான். முட்டாள், நீ பார்க்க வேண்டாம், அவன் உன்னைப் பார்த்தால் போதும்!
அதானே! கால் வலிக்க நடந்து ஏறி, காத்திருந்து வந்தாகிவிட்டது. இனி அவன் பாடு.
சந்தோஷமாகத் திரும்பிவிட்டேன். எம்பெருமான் அந்த எட்டுக்கு எட்டு அறைக்குள் மட்டுமா இருக்கிறான்? எங்கும் இருக்கிறான். எப்போதும் இருப்பான். எனக்கு ஒத்தாசை செய்வதற்காகவே உயிரோடு இருப்பவன்.
நிம்மதியுடன் APTC பஸ் பிடித்துக் கீழே இறங்கி, ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆம்னி பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன்.
யார் சொன்னார்களோ, சத்தியமான வார்த்தை. திருப்பதி போனால் திருப்பமில்லாமல் இருக்காது. வீட்டுக்கு வந்தபோது ஒரு கூரியர் தபால் வந்திருந்தது. நிவேதிதாதான் அனுப்பியிருந்தாள்.
கருவுற்றிருக்கிறாளாம்.
அபூர்வ சகோதரிகள்
கலி முற்றிய காலத்தில், மனுஷத்தனம் மரித்துவிட்ட சென்னைப் பட்டணத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தில் என்னை உத்தியோகம் பார்க்க விதித்து அனுப்பி வைத்தான் எம்பெருமான்.
பத்தாங்கிளாஸ் படித்தவள் என்பது தெரிந்தால் பெருக்கித் துடைக்கச் சொல்ல அனேகமாக யார் மனமும் இடம் கொடுக்காது என்பது என் அனுபவ ஆசான் போதித்த பாடமாகையால், பணியாற்றப் போகுமிடங்களில் நான் என் கல்வித் தகுதி குறித்து ஒருபோதும் பிரஸ்தாபிப்பதில்லை. அப்படியே துருவித் துருவி கேட்கும் சில ஜீவராசிகளும் உண்டு இவ்வுலகில். அச்சமயங்களில் வழக்கமான வேலைக்காரச் சலிப்பை மேல்போர்வையாகப் போர்த்திக்கொண்டு, 'ஆமா, படிச்சிக் கிழிச்சேன் போ' என்றோ, இதற்கொத்த வேறு விதமான சுவாரசியமற்ற சொற்களைக் கொண்டோ பேசுபொருளை மாற்றிவிடுவேன்.
ரொம்ப சுலபம். குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட வயதில் இன்னும் இரண்டு, மூன்றைக் குறைத்துச் சொல்லி, அனுதாப ஓட்டு பெற்றுவிடலாம். ஐயோ, பாவம் சின்னப் பெண் தலையில் இப்படி எழுதிட்டானே.
இருக்கட்டும். உருப்படாத புருஷன் வாய்த்தால் உத்யோகம் பெண்கள் லட்சணம். புரைதீர்ந்த நன்மைக்காக வாய்மையிடத்தில் பொய்யை வைத்தே தீரச் சொல்கிறது வாழ்க்கை.
ஏழெட்டு வீடுகள் பார்த்துவிட்டு, ஒரு மாசம் முன்புதான் இந்த வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு அல்ல. ஆத்துக்கு. மாமி மிகவும் ஆசார சீலி. விடிந்தால் போதும், சாமிகளுடன் பிஸினஸ் நிகழ்த்த ஆரம்பித்துவிடுவாள்.
இருபுறமும் சங்கு, சக்கரம் ஏந்தியவனே, துளசி அணிந்தவனே, நெற்றி நிறைய திருமண் தரித்தவனே, அவனே, இவனே, நமஸ்காரம். கட்டத் தொடங்கியிருக்கும் வீட்டுக்கு மேஸ்திரி வஞ்சனை எண்ணாமல் நீ பார்த்துக் கொள்வாய். அழகிய தாமரையின் மேல் அமர்ந்து முறுவல் புரிபவளே, உனக்கும் ஒரு நோட்டீஸ். எண்ட்ரன்ஸ் எழுதியிருக்கும் கடைசிப் பையனுக்கு அண்ணா பல்கலையிலேயே அனுமதி கிடைக்கச் செய்வது உன் பொறுப்பு. ஹிரண்யவர்ணாம் ஹரிணீ, இரு மாட்டுப் பெண்களும் முறைத்துக்கொண்டு நிற்காமல் குடும்ப கவுரவம் காக்கச் செய்வது உன் கடமை.
எனக்கு அவரிடம் பிடித்த விஷயம் அந்த நேர்மை. ஆமாம். நான் கடவுளிடம் பேரம்தான் பேசுகிறேன் என்று மிகவும் வெளிப்படையாகச் சொல்வார்.
''வாரத்துக்கு எட்டுநாள் நான் விரதம் இருக்கேன். தினசரி பூஜை பண்றேன். அவனை நினைக்காத நாளே கிடையாது. எனக்கு வேண்டியதைக் கேட்டால் என்ன தப்பு? கேளுங்கள், கொடுக்கப்படும். தட்ஸ் ஆல்" என்பார் மிகத் தீர்மானமாக.
எட்டுபேர் கொண்ட குடும்பம், வாரக் கடைசி நாளின் காலை உணவுக்கு ஒன்றுசேரும். பத்து மணிக்கு நான் துணிகள் துவைத்து என் பிறப்புரிமையை நிலைநாட்டத் தொடங்கும்போது, குடும்பம் குழம்பு சாதத்திலும் கடந்த வாரத் தலைப்புச் செய்திகளிலும் இருக்கும். முக்கால் கிரவுண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அது பற்றிய பேச்சு வரும்போது மாமியின் முகம் ஒரு குழந்தையினுடையது போலாகிவிடும்.
அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பேருக்குத் திருமணமாகி விட்டது. மூன்றாமவரின் படிப்பும் முளைத்திருக்கும் வீடும் நல்லபடியாக முடிந்தாக வேண்டும் அவருக்கு. "பாருங்கடா, ஒரே காம்பவுண்ட். ஒரே வீடு. மூணு போர்ஷன். இந்த பைத்தியமும் படிச்சு முடிச்சி, ஒரு கல்யாணம் பண்ணிண்டுடுத்துன்னா, உன் கடமை முடிஞ்சசுடும். அப்புறம் ஒவ்வொருத்தனோடவும் ஒரு வாரம் வந்து இருப்பேன். உட்கார்ந்த இடத்துக்கு சாதம் வந்து விழணும். அப்புறம், இஷ்டப்படி ராமா, கிருஷ்ணான்னு என் ஆத்துக்காரரைக் கூட்டிண்டு கிளம்பிடுவேன்." என்று ஒரே வசனத்தை 1349வது முறையாக ஒலிபரப்புவார். (நான் வருவதற்கு முன் எத்தனை முறை ஒலிபரப்பப்பட்டிருக்கிறது என்பதை அறிய எனக்குமுன் இங்கிருந்த கனக லட்சுமியைக் கேட்க வேண்டும். ஆனால் கனகா இப்போது துபாய் போயிருக்கிறாள்.)
"இந்த தனித்தனி போர்ஷன் சமாசாரமும் தான் பிடிக்கலை. போர்ஷன் தனித்தனியா இருந்தாலும் சமையல் ஒண்ணாவே இருக்கட்டுமே" என்பார் மாமியின் ஹார்ட் அட்டாக் வந்த கணவர்.
நான் மிகவும் ரசித்து அனுபவிக்கும் தருணம் அது. கான்க்ரீட்டில் அவர் ஒரு கட்டடம் கட்டுகிறார். அதை ஒரு வீடாக்கும் பொறுப்பைத் தலையில் சுமந்திருக்கும் இரு மருமகள்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
ஆவலுடன் அவர்களின் முகங்களை கவனிக்கிற விநாடி, என் வாழ்வின் கவித்துவக் கணங்களுள் ஒன்று.
ஆனால் உலகம் தெரிந்த மாமி அந்தப் பேச்சை முளையிலேயே கிள்ளிவிடுவாள். மாமியும் அவரது பழமொழிகளும். தாயும் பிள்ளையும், வாயும் வயிறும். மேலும் உறவு என்பது ஒரு சமையலில் மட்டுமே ஒளிந்திருப்பது அல்ல. ஒத்த உணர்வு என்பது ஒரு லயம். நன்கு இழுத்துக் கட்டப்பபட்ட தம்பூராவின் தந்தியை மீட்டும்போது எழும் நாதத்துக்குச் சமமானது அது. (மாமிக்குக் கொஞ்சம் சங்கீதம் தெரியும். "மாருபல்க" எனும் ஒரு தெலுங்குப் பாட்டை அடிக்கடி சுமாரான சுருதியுடன் பாடுவார். சமயத்தில் குரல் சதி செய்து அவரை அவமானத்துக்கு உள்ளாக்கும்போது 'வயசாயிடுத்து. இப்பல்லாம் முடியறதில்லை' என்பார். எப்போதாவது முடிந்திருக்க வேண்டும்.)
என் அனுபவத்தில், நான் வேலை பார்க்கும் வீடுகளில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் போதும். நல்ல மாதிரியா, சிடுமூஞ்சியா, தாராள உள்ளம் படைத்தவர்களா, கஞ்சூஸா, வம்புப் பிரியரா, வதந்திப் பிரியரா, நல்லுறவாளர்களா, அன்புடன் பிரியப் போகிறவரா - என மனக் கண்ணில் விஸ்வரூப தரிசனம் விழுந்துவிடும். அதற்கேற்ற மாதிரி அவர்களுடன் என் பேச்சு வார்த்தை எல்லைகளை வகுத்துக் கொள்வேன்.
ஆனால் என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியாத பிரகிருதிகளாக இருந்தார்கள், மாமியின் மாட்டுப் பெண்கள். இரண்டு பேர். இரண்டு அழகிய புதிர்கள்.
என் குடிகாரப் புருஷனை நான் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று, எனக்கு அவர்களின் பெரிய உத்யோகத்துப் புருஷர்களைப் பார்த்ததும் தோன்றிவிட்டது. அட ஒருத்தராவது, ஒரு தினமாவது பார்க்கக் கிடைக்க வேண்டுமே! அவர்கள் எப்போது வீட்டுக்கு வருகிறார்கள், எப்போது கிளம்புகிறார்கள், நள்ளிரவு வீடு திரும்புபவர்கள் பெண்டாட்டி சாப்பிட்டாளா, எத்தனை வேளை சாப்பிட்டாள், என்ன சாப்பிட்டாள், வேறென்ன விசேஷம் என்று விசாரிப்பார்களா, அதற்கெல்லாம் அவகாசம் இருக்குமா? அட, அன்புடன் ஒரு முத்தம்? பாசமுடன் ஒரு பார்வை?
இவர்கள்தான் அன்றைய தினத்தில் நடந்ததைச் சொல்வார்களா, ஒரு முழம் பூ வாங்கி வராதது பற்றி இனிய சண்டை போடுவார்களா... எப்போது, நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கும், ஒரு மணிக்குமா... ரொம்ப ஆச்சர்யமாகத்தான் இருக்கும் எனக்கு. இவர்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தது அவரவர் கணவர்களையா, மாமியாரையா என்று சந்தேகம் வரும், சமயத்தில். ஆனால் ஒரு முகச்சுளிப்பும் சலிப்பும் அவர்கள் முகத்தில் பார்த்ததில்லை நான். அவரவர் உலகின் கதவு, ஜன்னல்களை இழுத்துச் சாத்தி, கொக்கி மாட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் நான் அதிகம் கண்டதில்லை. இருக்கியா, இருக்கேன். சாப்டியா, சாப்டேன். சவுக்கியமா, சவுக்யம். கடைக்குப் போறேன், நீ வரியா. இல்லை. நான் வரலை. நீ போயிட்டு வா. காஸ்காரன் வந்தா சொல்லு. சரி, சொல்றேன். நாளைக்கு நான் என் அம்மா ஆத்துக்குப் போகப் போறேன். அப்படியா, சரவணால எனக்கு ஒரு அஞ்சலி கட்டர் வாங்கிண்டு வரியா.
இவ்வாறாகத் தழுவல்களோ, உரசல்களோ அற்ற ஒருவித ஞானகர்ம சந்யாச உறவாயிருந்தது அவர்களுடையது. இதுதான் என் ஆர்வத்தை அதிகம் தூண்டியது. பெண்களால் அன்பு வளர்க்காமல் இருக்க முடியாது. பெண்களால் வம்பு வளர்க்காமல் இருக்க முடியாது. பெண்களால் சண்டை போடாமல் இருக்க முடியாது. பெண்களால் சமாதானம் கொள்ளாமல் வாழ முடியாது. ரொம்ப முக்யம், இரு பெண்கள் ஒரு நேர்க்கோட்டில் ஒருவர் பின் ஒருவராகச் செல்ல முடியாது. மோதிக் கவிழ்வதும், கவிழ்ப்பதும், எழுந்து தட்டிக் கொள்வதும், தட்டி விடுவதுமாக உலகம் பெண்களால் பிரசன்னமடைந்து வருகிறது.
ஆனால் மாமியின் மாட்டுப்பெண்கள் இருவரும் இயல்பாக ஒரு புதிய இலக்கணம் எழுதி வந்தார்கள். மானசீக லட்சுமணக் கோட்டின் இருபுறமும் அவரவர் தம் சமஸ்தானங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.
பத்து நாட்கள் முன்பு இரண்டாவது மாட்டுப்பெண் வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்கிறேன் என்று தன் டி.வி.எஸ். 50யில் ஒரு நாள் திடீரென்று கிளம்பினாள். மாமிதான் ஏற்பாடு செய்து தந்தாராம். 'மூத்தவளுக்கு சங்கீதத்துல ஆர்வம் இல்லை. இவ கத்துக்கறேன்னா. அதான் நானே கூட்டிண்டு போய் பம்மல் விஜயலட்சுமி கிட்ட சேர்த்துவிட்டேன். அவ தூர்தர்ஷன்ல கார்த்தால ப்ரோக்ராம்லாம் குடுத்திருக்கா.' என்று பக்கத்து வீட்டு கல்யாணியிடம் சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டேன்.
இந்தக் காலத்தில் மாமி இன்னும் தூர்தர்ஷன் பார்த்து வயலின் வாத்தியார் தேர்ந்தெடுக்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன். நினைத்ததோடு நிறுத்திக்கொண்டால் அப்புறம் எப்படி வாழ்க்கையின் சுவாரசியத்தைக் கூட்டுவது? நானும் பெண் அல்லவா. ஆகவே இத்தலையாய செய்தியை மூத்தவளிடம் தெரிவித்து அவளது கருத்தை அறிந்துகொள்ள மிகவும் விரும்பினேன். மறுநாள் என் ஜனநாயகக் கடமைகளை முடித்துவிட்டு வீடுதிரும்பும்போது, அவளை வாசலில் பிடித்து, "தங்கச்சி வயலின் க்ளாஸ்க்குப் போகுது போல?" என்று ஸ ப ஸ பிடித்தேன்.
"தெரியலயே" என்றாள் அந்தக் குலவிளக்கு.
"அம்மாதான் சேர்த்து விட்டாங்களாம். இப்பத்தான் வண்டில போகுது" என்று என் சமூக சேவையை முடித்துக்கொண்டு என் வழியே போனேன்.
எனக்குக் கொஞ்சம் வியப்புத்தான். ஒரே வீட்டுக்குள் இருக்கிறார்கள். ஒரு சம்பவம் - பின்னாளில் அது சரித்திர முக்கியத்துவம் கொண்ட சம்பவமாகலாம் - நடக்கிறது. அது வீட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியாதோ? அதுவும் உப்பு உறைப்புகள் சரியாக உள்ள ஒரு 'கூட்டு'க்குடும்பத்தில்?
மறுநாள் நான் என் தொழிலிடத்துக்குப் போனதும் முதல் வேலையாக அந்த மூத்த குல விளக்கிடம், 'கேட்டியா? நெசந்தானே?' என்று கேட்டேன். பதில்தான் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. இதுல நான் கேட்க என்ன இருக்கு? அவளுக்கு இஷ்டம். போறா. எனக்குப் பாட்டும் பிடிக்காது. ஒரு மண்ணாங்கட்டியும் பிடிக்காது." என்றாள்.
"அதுக்கில்லம்மா. நீ மூத்தவ. ஒரு மரியாதைக்காகவாவது உங்கிட்ட சொல்லலாமில்ல?"
"அதெல்லாம் நான் எதிர்பார்க்கல. நீ உன் வேலயப் பார்" என்றாள் தன்னிகரற்ற நிதானமுடன். ஆகவே, நான் என் வேலையான பெருக்கல், கழுவல், துவைத்தலில் என் பிரத்யேக ஈடுபாட்டுடன் மூழ்கிப் போனேன்.
கிளம்பும்போது இம்முறை இளைய குலவிளக்கு சாலையில் எதிர்ப்பட்டது.
"வீணை க்ளாஸெல்லாம் நல்லாப் போகுதாம்மா?" என்றேன் உள்ளார்ந்த அக்கறையுடன்.
"ஐய, வீணை இல்ல கற்பகம், வயலின் க்ளாஸ்" என்றாள் சிநேகப் புன்முறுவலுடன். அப்பாவித்தனம் என்ற போர்வைக்குள் அணுகுண்டு தயாரித்தாலும் யார் கண்ணுக்கும் படாது போலிருக்கிறது. ஆகவே கேட்டேன் :
"அது என்னமோ க்ளாஸ். நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு ஆர்வத்துல உங்க அக்காகிட்ட கேட்டேன். தங்கச்சி என்னமோ கத்துக்குதே, நீ அதுக்கெல்லாம் போகறதில்லையான்னு."
"என்ன சொன்னா?" என்று வலையைத் தேடி வந்து விழப் பார்த்தது இளைய குலவிளக்கு.
"கெட்டுது போ. அதுக்கு நீ போறதே தெரியாதாமில்ல? என்னாம்மா, ஒரே வீட்டுலதானே இருக்கீங்க, இப்படி சொல்றியேன்னா, உன் வேலையப் பார்'னுடுச்சி."
"ச்சீ ஆமாப்பா. நானாவது சொல்லியிருக்கணும். தோணலை" என்று ஸேம் சைடு கோல் போட்டுவிட்டு போயே விட்டாள்.
பின்னொரு நாள் மூத்தவள் நல்லிக்குப் போய், தன் மாமியாரின் திருமண நாளை முன்னிட்டு, ரூபா 6850/-க்கு ஒரு பட்டுப்புடவை வாங்கி வந்திருந்தாள். வந்ததும் மாமியாரிடம் விலை விவரமுடன் எடுத்துக் காட்டியவள், உடனே புடைவையை பீரோவில் வைத்துப் பூட்டியதைக் கண்டேன்.
அன்று மாமி வத்தல் பிழிவது எனும் முழுநாள் யாகம் வைத்துக் கொண்டிருந்ததால் நானும் காலை முதல் மாலை வரை உடன் இருக்க வேண்டியதானது. வயலின் வகுப்பை முடித்துவிட்டு மாலை திரும்பிய தன் இளவலிடம் ஒரு ஆர்வத் துடிதுடிப்புடன் தான் வாங்கி வந்த (அதுவும் மாமியாருக்கு) புடைவையை எடுத்துக்காட்டி ஒரு அலட்டு, அலட்டிக்கொள்ள வேண்டாமோ? ம்ஹும்! யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் வம்சாவளிக் கொழுந்தாக "இன்னிக்கு K TVல ராத்திரி என்ன படம் போடறான்?" என்று பேச ஆரம்பித்தாள்.
ஒரு வேளை இரவு குடும்ப உறுப்பினர்கள் கூடும்போது சொல்வாளாயிருக்கும் என்று நினைத்தேன். மறுநாள் பொறுக்க மாட்டாமல் நானே நம்பர் 2விடம் புடைவை பார்த்தியா என்று கேட்டபோது, 'என்ன புடைவை?' என்று அவள் அன்று பிறந்த குழந்தை மாதிரி கேட்டாள்.
நல்ல குடும்பம் பல்கலைக் கழகம். எனக்கென்ன போயிற்று என்று நான் சும்மா இருந்திருக்கலாம். நானும் பெண்ணாய்ப் பிறந்து தொலைத்த பாவத்துக்கு எவ்வாறு அப்படி இருந்துவிட முடியும்? வாகான ஒரு தினம், மாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தபோது மேற்படி அபூர்வ சகோதரிகளின் குணவிசேஷம் குறித்து சாங்கோபாங்கமாகப் பேச்செடுத்தேன்.
"என்னத்த சொல்றது போ. என் கண்ணு முன்னாடி அடிச்சிக்கிறதில்லை. அவ்வளவுதான். இப்படி விட்டேத்தியா இருக்காதீங்கடி. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு, சிரிச்சிண்டு, உதவிகரமா இருங்கோ. ஒரு வீட்டுல இருக்கறதைவிட ஒத்துமையா இருக்கறமாங்கறதுதான் முக்கியம்னு நான் சொல்லாத நாள் கிடையாது. சரிம்மாங்கறாளே தவிர ரெண்டுபேரும் சேர்ந்து சிரிச்சு நான் பார்த்து அறியேன்.."
சுய சோகத்தில் மாமியின் மூக்கு சிவந்துவிட்டது.
"நீங்க ஏம்மா கவலைப்படறீங்க? ஊருல உலகத்துல இருக்கற பொண்ணுங்கள விட நம்ம குழந்தைங்க எவ்வளவோ தேவலை." என்று எதற்கும் இருக்கட்டும் என்று சொல்லி வைத்தேன்.
மாமி சில கணங்கள் பேசாதிருந்தாள். ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் என்று தோன்றியது. கூட்டுக் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளாயிருக்கலாம்.
"பாரு, மூணாவது மனுஷி. வந்து ஒரு மாசமாகலை. உன் வரைக்கும் அவா நடவடிக்கை எட்டியிருக்குன்னா என்ன அர்த்தம்? இதுங்களை வெச்சுண்டு நான் எப்படி குறை காலத்தை ஓட்டப் போறேன்னு கவலையா இருக்குடி." என்றாள் மாமி.
"எல்லாம் சரியா போயிடும் மாமி. பச்சையம்மாளுக்கு ஒரு தேங்காய் நேர்ந்துக்கங்க" என்று நானறிந்த சாத்வீகத் தீர்வை முன்வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.
மறுநாள் மாமி வீட்டில் ஒரு சம்பவம் - இது நிச்சயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுதான் - நிகழ்ந்தது என்பதை அவர்களது பக்கத்து வீட்டு வேலைக்காரி - என் சக பயணி மூலம் அறிந்தேன். விதி என்னை அன்று விடுமுறை எடுக்கச் செய்திருந்தது.
அன்று காலை மாமி குளித்து முழுகி, பூஜையில் அமர்ந்ததும் வழக்கமான எக்ஸ்பிரஸ் வேக மந்திர உச்சாடணங்கள் புறப்படவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தில் இருப்பவள் போல் வெகுநேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள். மாமியின் இந்த மாறுபட்ட நடவடிக்கையால் கலவரமடைந்த மருமகள்கள் இருவரும் அக்கறையாக அருகே சென்று, என்ன என்று விசாரித்திருக்கிறார்கள்.
"கட்டிண்டிருக்கற வீடோ, என் புருஷனோ, பிள்ளைகளோ எனக்கு இப்ப முக்கியமில்லை. நீங்க ரெண்டு பேரும் சமத்தா, ஒத்துமையா, ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு, சிரிச்சிண்டு, சொந்த அக்கா தங்கை மாதிரி இருப்போம்னு சத்தியம் பண்ணுங்கோ. ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி நடக்கறது, நீ எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு இருக்கறது, ஹாஸ்டல்ல ரூம்மேட்டா இருந்து தொலைக்க விதிச்சவாளாட்டும் நடந்துக்கறது, இந்த வழக்கங்கள் மாறணும்...'
"ஐயோ என்னம்மா என்னென்னமோ பேசறீங்க? இப்ப நாங்க என்ன பண்ணிட்டோம்?" என்று பதறினார்கள் சகோதரிகள்.
"ஒண்ணும் பண்ணலை. ஆனா அவாவா ரூம்ல மாட்டின கடிகாரம் மாதிரி, மணி அடிக்கறதோட கடமை முடிஞ்சி போயிடறதா? வேலைக்காரி கேக்கறா, ஏம்மா உன் மருமகப் பொண்ணுங்க ரெண்டும் இப்படி வடக்கு, தெற்கா இருக்குங்க'ன்னு. ஏண்டி இப்படி மூணாவது மனுஷி பேசற அளவு வெச்சுக்கறீங்க? இந்த வீட்டுல சண்டை போட ஒரு சந்தர்ப்பம் உண்டா? முறைச்சுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கறதா? நான் மாமியார் மாதிரியா நடந்துக்கறேன்? அம்மா இல்லியா?...."
மாமியின் கண்கள் கலங்கிவிட்டன. இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதானே? முறைத்துக் கொள்வதற்கும் முகமும் அகமும் திருப்பிப் போவதற்கும் என்ன இருக்கிறது? இருவரின் நிலையும் பொதுவானது. இருவரின் கஷ்டங்களும் பொதுவானவை. வீட்டில் இருவருக்கான உரிமைகளும் கூடப் பொதுவானவையே அல்லவா?
"சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்?" என்றார்கள் ஏககாலத்தில்.
"சத்தியம் பண்ணுங்கோ. நீ யாரோ, நான் யாரோன்னு இருக்க மாட்டோம்னு.." மாமி தீர்மானமாகச் சொன்னாள்.
சில வினாடிகள் அவர்கள் பேசாமல் இருந்தார்கள். நாடகத் தன்மை கூடிவிடும் சந்தர்ப்பம் குறித்த சிந்தனையாயிருக்கலாம். பிறகு மறுபடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுவிட்டு, "சரி, சத்தியம். இனிமே ஒத்துமையா இருப்போம். போதுமா?" என்றார்கள்.
"நிஜமா" என்று சந்தேகம் தீரமாட்டாத மாமி கேட்கவே, "ஆமா, ஆமா, ஆமா" என்று அழுத்திச் சொன்னவர்கள், "இனிமே வீட்டு விஷயங்களைக் கூட ரெண்டுபேரும் சேர்ந்தே முடிவுசெய்து, செயல்படுத்தறோம்" என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.
மாமியின் மாட்டுப்பெண்கள் சொன்ன சொல் காப்பதில் அரிச்சந்திர புத்திரிகள் போலிருக்கிறது. மறு நாளிலிருந்தே அவர்களின் ஒற்றுமை நடவடிக்கைகள் அமலுக்கு வந்துவிட்டதில் மாமி மிகுந்த சந்தோஷத்துக்கு உள்ளானாள்.
எனக்குத்தான் சங்கடம். கூட்டணி ஆட்சியின் முதல் உத்தரவு, என் வேலை நீக்கம் சம்பந்தப்பட்டதாயிருந்தது.
OOO
பா. ராகவன்
Home Page: writerpara.com
@Twitter: http://twitter.com/writerpara
Email: writerpara@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக