தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - பாகம் 1


இலக்கண நூல்கள்

Back

தொல்காப்பியம்
எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை



தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் - பாகம் 1
நச்சினார்கினியர் உரை

Source:
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம்

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை
புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் B.O.L. அடிக்குறிப்புடன்
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
திருநெல்வேலி & சென்னை.
கழக வெளியீடு - 17
Copy-right, May 1944
Published by: The South India Saiva Siddhanta Works: Publishing Society, Tinnevelly, Ltd.
Tirunelveli & Madras.
Printed at the Rajen Electric Press, Madras.
---------

மேற்கோள் நூற்குறிப்பு விளக்கம்.
    அகம் - அகநானூறு நற், நற்றி - நற்றிணை
    *எச்சவியல் +நெடுநல்வாடை
    *எழு - எழுத்ததிகாரம் நாலடி - நாலடியார்
    ஐங்குறு - ஐங்குறுநூறு +பட்டினப் - பட்டினப்பாலை
    குறள் - திருக்குறள் புறம் - புறநானூறு
    குறு, குறுந் - குறுந்தொகை *மரபியல்
    குறிஞ்சிக்கலி - கலித்தொகை +மலைபடு - மலைபடுகடாம்
    சிந்தா - சிந்தாமணி +முல்லைப் - முல்லைப்பாட்டு
    சிலப் - சிலப்பதிகாரம் *தொல்காப்பியம்
    *செய், செய்யு - செய்யுளியல் +பத்துப்பாட்டு
    *சொ, சொல் - சொல்லதிகாரம்

பதிப்புரை

கல்வி, இருவகைப்படும்; ஒன்று, எண்ணும் ஆற்றலைப் பெறுதல்; மற்றொன்று, பல்வேறு கருத்துக்களை அறிந்துகொள்ளுதல். மக்கட்குத் தாய்மொழியே இயல்பான கருவியாதலால், இவ்விருவகைக் கல்விக்கும் எளிதாக அது பயன்படும்; மேலும் எண்ணும் ஆற்றலைப் பெருக்குதற்குத் தாய்மொழிக் கல்வியே சிறப்பின் உரித்தாகின்றது. அதனிலும், இலக்கணப் பயிற்சியால் அவ்வன்மை மிகச் செழித்து நுணுகிக் கொழுந்தோடி வளர்கின்றது.

தமிழ்மொழியில் இலக்கண அமைப்பு இணையற்ற ஆற்றலோடும் அழகுகளோடும் அமைந்திருக்கின்றது. தமிழ்மக்கள் அவ்வகையில் தவப்பேறுடையரென்றே கூறுதல் வேண்டும். இனிய இயற்கை நெறிகளோடு தமிழ் இலக்கணத்தைத் திறம்பட விளக்கும் முழுமுதல் நூல் தமிழில் தொல்காப்பியமாகும். இஃதொன்றே பழைமையும் முதன்மையும் வாய்ந்து, சிக்கலின்றித் தெளிந்து, ஐந்திலக்கணமும் விளக்கும் அரும்பெரு நூலாகத் திகழ்கின்றது. இதனைப் பன்முறை கற்று ஆழ்ந்து பயில்வோர், எண்ணும் ஆற்றலும், பல்வேறு கருத்துக்களை அறிந்துகொள்ளுதலுமன்றி, மெய்யுணர்வுப்பேறும் எளிதின் எய்திச் சான்றோராவர்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் நுட்பதிட்பம், பெருமை, பயன் முதவியவற்றாலேயே இதற்கு உரையாசிரியன்மாரும் பலர் அமைந்தனர். அவர் பலர் எழுதிய உரையுள்ளும், எழுத்ததிகாரத்திற்கு நச்சினார்க்கினியருரையும், சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையருரையும், பொருளதிகாரத்தின் இறுதி நான்கியல்களுக்குப் பேராசிரியருரையும் பெருவழக்காகப் பயிலப்பட்டு வருகின்றன. இவ்வருமை கருதிக் கழகத்தில் இதற்கு முன், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரையுடன் இருமுறை பதிக்கப்பெற்று வெளிவந்திருக்கின்றது. இப்போது மூன்றாம் பதிப்பாக இதனை, உரிய தலைப்புகள், உட்பிரிவுகள் முதலியவற்றுடன் மிகத் திருத்தமாக வெளியிடுகின்றனம்.

பயில்வோரது ஆர்வத்துக்கு ஏற்ற உதவியாயிருக்கும்படி, இப்பதிப்பு, மேலும் சில நலன்களைப் பெற்றுள்ளது. தொல்காப்பிய நூற்பாக்களிலும், அவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரைகளிலும் மாணாக்கர் நன்றாக விளக்கம் பெற வேண்டிய பகுதிகளின்மேல், தக்க ஆராய்ச்சிக் குறிப்புகளும் விளக்கங்களும் மேற்கோளிடங்களுடன், அவ்வப்பக்கத்தின் அடிக்குறிப்பாகத் தெளிவாய்த் தரப்பட்டிருக்கின்றன. நூலின் இறுதியில், 'குற்றியலுகரம் உயிரீறே' என்னும் பொருள்மேல் ஓர் அரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அன்றியும், நச்சினார்க்கினியர், தமக்கு முன் தொல்காப்பியம் முழுவதற்கும் உரையெழுதி உரையாசிரியர் என்னுஞ் சிறப்புப் பெயரால் வழங்கப்பெற்று வரும் 'இளம்பூரண அடிக'ளோடு கருத்து மாறுகொள்ளும் இடங்கள் முழுவதும், நூற்பாக்களோடும் அவரவருரைகளோடும் தொகுத்துச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் இப்பதிப்புக்கு மிக்க உழைப்போடும் அன்போடும் எழுதிச் சேர்த்துதவிய ஆசிரியர், வித்துவான் ஞா. தேவநேயப் பாவாணர் பி.ஓ.எல் அவர்களாவர். அவர்கள் அரிய செயலுக்குக் கழகம் தன் அகமருவிய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

இதன் முற்பதிப்புகளைப் போலவே, முகப்பில், பேராசிரியர் திருமிகு கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ., எம்.எல். அவர்களது அரிய ஆராய்ச்சி முன்னுரை முதலியனவும் இப்பதிப்பில் உள்ளன. ஆராய்ச்சியாளர்க்கும் மாணவர்க்கும் இப்பதிப்பு தகுதியாகப் பயன்படுமென்று நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
----------------------------

திருச்சிற்றம்பலம்.
பொருளடக்கம்
பகுதி சூத்திரங்கள்
முகவுரை
சிறப்புப் பாயிரம்
1. நூன்மரபு 1 - 33
2. மொழிமரபு 34 - 82
3. பிறப்பியல் 83 - 102
4. புணரியல் 103 - 142
5. தொகை மரபு 143 - 172
6. உருபியல் 173- 202
7 . உயிர்மயங்கியல் 203-295
8. புள்ளிமயங்கியல் 296 - 405
9. குற்றியலுகரப் புணரியல் 406 – 483
குற்றியலுகரம் உயிரீறே
நச்சினார்க்கினியர் இளம்பூரணரொடு
மாறுபடும் இடங்கள்
நூற்பா முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்பொருள் விளக்கம்
-------------------------

முகவுரை
தமிழ்ப் பேராசிரியர் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை, எம். எ., எம். எல்., அட்வகேட் அவர்கள் எழுதியது

தொல்காப்பியம் என்னும் இவ்வியல் நூலானது தமிழ் நூல்கள் யாவற்றுள்ளும் பழமையானதாய்த் தமிழிலக்கண முழுமுதனூலாக அமைந்துள்ளது. தமிழ் நூல்கள் யாவற்றினும் தொன்மையாலுஞ் சிறப்பாலும் முதன்மைபெற்ற இந்நூல் இலக்கண
நூலாக அமைந்தது யாவரும் உற்றுநோக்கத் தக்கதே. இதற்கு முற்பட்ட இலக்கியங்கள் இப்பொழுது வெளிவரவில்லை. புறநானூறு முதலியவ்ற்றில் சிற்சில பாட்டுக்களை இந்நூற்கு முற்பட்டனவாகக் கருதக் காரணமுண்டு. இதற்கு முன்னேயே அளவற்ற இயல் இசை நாடக நூல்கள் தமிழில் இருந்தன வென்பதை இந்நூலே நன்கு விளக்குகிறது. இந்நூற் சிறப்புப் பாயிரத்தில் தமிழ் நிலத்துச் செய்யுள் வழக்கும் உலக வழக்கும் ஆய்ந்து இந்நூல் செய்யப்பட்டதென்று கூறப்படுதலால் செய்யுள் வழக்கை
அறிதற்குரிய நூல்கள் பல இருந்தன வென்பது தெளிவே. 'முந்துநூல் கண்டு' என்றமையானும் அது விளங்கும். செய்யுளியலில் தமிழ் நூல்களை ஆசிரியர் எழுவகையாகப் பகுத்து ஓதுதலினாலும் அது தெளியப்படும். அவ்வெழு வகையுள் நிறைமொழி மாந்தரது மறைமொழியையும் ஒன்றாக அவர் கொண்டமையானும்
"அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே" என்று எழுத்ததிகாரம் 102-வது சூத்திரத்தில் அவர் கூறியதாலும், மறைமொழிகளடங்கிய மறை என்னும் நூல்வகை தமிழில் இருந்த்தென்பது இனிது விளங்கும். "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்" என்பதனாலே நாடகநூல்கள் பல விருந்தன வென்பது விளங்கும். 'இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்' என்றதனாலே இசை நூல்கள்
அக்காலத்திற்கு முன்னே நன்கு வழங்கின வென்பது விளங்கும்.
தமது நூலுள் ஒவ்வொரு பகுதியினும் தமிழ் வழக்கினை விதந்தோது மிடங்களில் 'என்மனார் புலவர்' என்று சுட்டுதலால் புலவர்கள் பலர் தமக்குமுன் இயல்நூல் இயற்றியுள்ளார் என்பதையும் அவர் விளக்கக் கருதினார் என்பது வெளிப்படை.

'முந்து நூல்' ஆய்ந்து இந்நூல் செய்தாரென்று சிறப்புப்பாயிரத்துள் கூறப்பட்டுள்ளது. 'முந்துநூல்' இன்னவென்று சுட்டுதற்குரிய அகச்சான்று யாதும் இல்லை. ஐந்திரத்தின் ஆராய்ச்சி இந்நூலாசிரியர்க்கு எவ்வாறு பயன்பட்டதென்று காட்டுதற்கும் நூலுள் அகச்சான்று யாதும் இல்லை. 'முந்துநூல்' என்றது அகத்தியத்தை என்பதற்கு,

    "ஆனாப் பெருமை யகத்திய னென்னு
    மருந்தவ முனிவ னாக்கிய முதனூல்
    பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர்
    நல்லிசை நிறுத்த தொல்காப்பியனும்"

எனப் பன்னிருபடலத்துப் பாயிரச் சூத்திரத்துட் காணப்படுவதே சான்றாகும்.

    "கூறிய குன்றினு முதனூல் கூட்டித்
    தோமின் றுணர்த றொல்காப்பியன்ற
    னாணை யின்றமி ழறிந்தோர்க்குக் கடனே"
என்ற பல்காப்பியப் புறனடைச் சூத்திரமும் இதற்குச் சான்று பகரும்.

சிற்றகத்தியம், பேரகத்தியமென்ற இரு நூலும் இப்போது வெளிவராமையால் இந்நூலை முதனூலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இடமில்லை. ஐந்திரம் என்பது இந்திரனாற் செய்யப்பட்ட வடமொழி முதல் இலக்கணம் என்று பலர் கூறுப. அதைத் தமிழ் நூல் என்றுஞ் சிலர் கூறுப. ஐந்திரமென்பது உபாகமங்களுள் ஒன்றெனக் கூறுவாருமுளர். 'விண்ணவர் கோமான் விழுநூல்' என்ற சிலப்பதிகாரப் பகுதிக்கு இந்திரனாற் செய்த இலக்கணமென்று அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகின்றார். அதற்குச் சமண நூல்களுள் ஒன்றாகிய "இந்திரகாவியம்" என்று பொருள் கொள்ளுவாரும் உளர். இப்போது வடமொழியிலும் இந்திரனாற் செய்த இலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை.

அகத்திய நூலுணர்ச்சியும் தமிழ் நிலத்து இருவழக்கு உணர்ச்சியும் இந்நூல் செய்தற்குப் பயன்பட்டிருக்குமென்பது யாவர்க்கும் தெளிவு. ஒரு மொழிக்கு இயல் நூல் செய்வார் பிறிதொரு மொழி இயல்நூலையும் ஆராய்தல் நூலமைப்பிற்குப் பயன்படுதலேயன்றி நூலுட் கூறப்படும் பொருளாராய்ச்சிக்கு அத்துணைப் பயன் றருதல் அரிது. 'ஐந்திரமோ' 'ஐந்திறமோ' வென்-றையுறுவாருமுளர். ஐந்திர வியாகரணமென்பது வடமொழியில் முதன்முதற்றோன்றிய ஓர் இலக்கண நூலாதலேயன்றி இந்திரனாற் செய்த இலக்கணம் என்பதொன்று கிடையாதென்று 'தமிழ் வரலாறு' எழுதிய தஞ்சை திருவாளர் ராவ் பஹதூர். K. சீனிவாச பிள்ளையவர்கள் கருதுகின்றார்கள். ஐந்திரமென்பது வடமொழியென்றே கருதுமிடத்து அந்நூலுள் வேற்றுமை எட்டு என்று கொண்டவாறே இந்நூலாசிரியரும் கொள்ளுதலின்
அவ்வடமொழி இயல் நூலாரோடு ஒத்த கருத்துடையார் இவ்வாசிரியர் என்பதனை விளக்கக் கருதி 'ஐந்திர நிறைந்த தொல்காப்பிய'னெனச் சிறப்புப் பாயிரமுடையார் கூறினாரென்பர். அங்ஙனம் சிற்சில கொள்கைகளில் வடமொழி ஐந்திர நூற்கருத்தும் இவ்வாசிரியர் கருத்தும் ஒருவாறு ஒத்திருத்தல் கூடுமென்பதே யூகிக்கற்பாலது.

ஆசிரியர் நூல் செய்கின்ற காலத்து வழங்கிய வடமொழி இலக்கணம் ஐந்திரமெனப்படுதலாலும் 'பாணினீயம்' கேட்கப் படாமையாலும் வடமொழிக்கு முதலிலக்கணம் ஐந்திரமெனவும் அதற்குப் பின்னேயே பாணினீயம் தோன்றிய தெனவும் வடமொழியாளர் கொள்ளுதலாலும் தொல்காப்பிய நூலானது வடமொழிப் பாணினீயத்திற்கு முற்பட்ட தென்பது தானே போதரும். வடசொற்கள் தமிழுட் பயிலுதற்கு இந்நூலுள் விதி வகுத்திருப்பதால் ஆரியரொடு தமிழர்க்குத் தொடர்பு இவ்வாசிரியர் காலத்தே ஏற்பட்டிருத்தல் கூடுமென்பது யூகிக்கப்படும்.

"வட வேங்கடந் தென்குமரி" என்று ஆசிரியர் காலத்திருந்த தமிழ் நாட்டெல்லை குறிக்கப்பட்டது. குமரி என்பது யாறோ மலையோ என்ற ஐயப்பாட்டிற்கு இடமாக நிற்பது; அதனை உரை யாசிரியர்கள் யாவரும் யாறு என்றே கொள்கின்றனர்.
காலஞ் சென்ற அரசஞ் சண்முகனார் அதனை மலை என்கின்றனர். புறநானூறு 6-வது பாட்டுள்,

    "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
    தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
    குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
    குடாஅது தொன்றுமுதிர பௌவத்தின் குடக்கும்"

என்ற அடிகளுள் இரண்டாவது அடியிற்கண்ட குமரி என்பதற்குக் கடல் என்று பொருள்கொள்ள இடமில்லை. அதனையாறென்று அச்செய்யுள் உரையிலே காட்டப்பட்டுள்ளது. புறநானூற்று 17-வது பாட்டில்,

    "தென்குமரி வடபெருங்கல்
    குணகுடகட லாவெல்லை"

என்றவிடத்தும் குமரி என்ற சொல் ஓர் யாற்றைக் குறிப்பதாகவே தெரிகின்றது. குமரியாற்றைக் கடல் கொண்டபின்னர் குமரி என்ற பெயராலே தென் எல்லையாகிய கடல் சுட்டப்பட்டிருத்தல் தெள்ளிது. சிறுகாக்கை பாடினியார் தெற்குங் கடலெல்லை கூறியது,

    "வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
    தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
    வம*ரமருள் புணரியொடு பொருது கிடந்த
    நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்
    யாப்பின திலக்கண மறைகுவன் முறையே"

என்பதனால் விளங்கும். 'தொடியோள் பௌவம்' என்ற சிலப்பதிகாரமுங் காண்க. புறநானூற்று 67-வது பாட்டில் 'குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி' என்ற அடிக்கு 'குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே' என்று அதனுரையில் பொருள் கூறப்பட்டுள்ளது. சிலர் அதற்குக் குமரிக் கடற்றுறை என்று பொருள் சொல்லுகின்றார்கள், யாறு என்ற பொருள் படுஞ்சொல் ஆண்டில்லாமையால். குமரி யென்ற சொல் வழங்கும் செய்யுட்களில் பெரும்பான்மையும் பொதுச் சொல்லாகவே அது காணப்படுகின்றது. அப்பெயருடைய யாறு ஒன்று இருந்திருத்தல் கூடுமென்பதைத் தமிழ் நூலோர் யாவரும் ஒப்புக்கொள்ளுகின்றார்கள். மலையும் இருந்ததென்பது 'குமரிக்கோடும்' என்ற சிலப்பதிகார அடியால் விளங்குகின்றது.

ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தே குமரியாறோ அல்லது குமரி மலையோ தமிழ் நாட்டிற் கெல்லை யென்னுங் கேள்விக்கு விடை ஆயத்தக்கது. குமரி மலை கடல்கொண்ட நாட்டில் எவ்வாறு அமைந்திருந்தது என்று ஆயுமிடத்து அந்நாட்டின் எல்லைகளை நன்கறிந்து எழுதியுள்ள 'மறைந்த குமரிக்கண்டம்' (Lost Lemuria*) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே ஒரு பெருமலையானது மேலைக்கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தூரஞ் சென்று பின் தென்மேற்காகத் திரும்பி 'மடகாஸ்கர்' (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவு வரை சென்றதாகத் தெரிகின்றது. அம்மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை. இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்கு வரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெருமலைத் தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது.
------
* Scott Elliot

இம்மலையைத் தமிழிற் குமரியென்றும் வடமொழியில் மகேந்திரமென்றும் முன்னோர் கூறினாரென்பதற்குக் காரணமுண்டு. சிவதருமோத்தரம் என்னுஞ் சைவவுபாகமத்தில் பொதியிற்குத் தென்பால் மகேந்திர முண்டென்றும் அந்நூலுரையுள் தெற்கு முதல் வடக்கு ஈறாக அஃது இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது. அதனடிவாரத்துள்ள தேசம் பொன்மயமான இலங்கையென்றும் குறிக்கப்படுகின்றது;
    "துங்கமலி பொதித்தென்பாற் றுடர்ந்த வடிவாரத்தி
    னங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்"
என்றதனால் அது உணரப்படும்;
"உன்னதத் தென் மயேந்திரமே"
என்ற அடியுங் காண்க.

பஃறுளியாறு என்பது ஓர் பெரிய யாறாகவும் அது நெடியோனென்னும் பாண்டியனுடைய தென்றும் புறநானூற்றுள்ளே குறிக்கப்பட்டுள்ளது;

    "முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்றது காண்க.

    "அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக்கோடுங் கொடுக்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"

என்ற சிலப்பதிகார அடிகளினாலே குமரிமலையும் பஃறுளியாறும் இமயமுங் கங்கையும் போன்றிருந்தன வென்பது கருதப்படும். 'பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு' என்றதனாலுங் குமரிமலையின் பெருமை விளங்கும். நெடியோனுக்குரிய மொழி தமிழ் மொழியாதலாலும் தமிழ் வழங்கும் நாட்டிலுள்ள யாற்றினையை நெடியோனைப் புகழும் புலவனுங் குறித்தல் இயைபுடைமையானும் கடல்கொண்ட நாட்டின் ஒரு பகுதியாதல் தமிழ் நாடென்றே கருதற்பாலது.

பஃறுளியாறும் குமரிக்கோடும் கடல்கொள்ளப் பட்டனவென்றவிடத்து குமரியாற்றை ஆசிரியர் குறியாமையும் நோக்குக. குமரியாறு பஃறுளியாற்றின் வேறாகவே இருந்ததென்று தெரிகிறதால் இரண்டிற்கும் நடுவே நாடுகளிருந்தனவென்று யூகித்தல் கூடும். சிலப்பதிகாரவுரையுள் அடியார்க்கு நல்லார் இவ்விரண்டாற்றிற்கு மிடையிலே 49 நாடுகள் இருந்தனவென்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதற்குச் சான்று காட்டாத போதினும் அவரதனைப் புனைந்துரையாகக் கூறினார் என்று கருத இடமில்லை. பெரும்பான்மையும் பண்டைத் தமிழுரையாசிரியர்கள் நூற்பிரமாண மில்லாமல் யாதுங் கூறுவதில்லை. சரித்திர ஆராய்ச்சி மிக்கில்லாத அக்காலத்தில், கால முறையைக் கருதாமல் முன் நடந்ததைப் பின்னாகவும் பின் நடந்ததை முன்னாகவும் அவர்கள் தொகுத்துக் கூறியிருத்தல் கூடுமேயன்றிப் புதுவதாகப் புனைதல் கிடையாது. மேற்கூறிய புறநானூற்றுட் போந்த 'நெடியோன்' என்னும் பாண்டியனே தொல்காப்பியப் பாயிரத்துட் சுட்டிய 'நிலந்தருதிருவிற் பாண்டியன்' என்று சிலர் யூகிக்கின்றனர். அவர்கள் 'நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோ னும்பல்' என்ற மதுரைக்காஞ்சியை (கலித்தொகை) மேற்கோளாக உரைக்கின்றனர். நிலந்தருதிருவிற் பாண்டியன் என்னுஞ் சொற்றொடரின் பொருள்,
    "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
    புலியொடு வின்னீட்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
    வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்"

என்னும் முல்லைக்கலி 104-ஆவது பாட்டினடிகளின் வைத்து யூகிக் கற்பாலது.

தன்னாட்டைக் கடல் கொள்ள பிற அரசர் நாட்டைத் தன் குடிகட்கு வென்று தந்த சிறப்புடைய பாண்டியன் காலத்தே தொல்காப்பியம் அரங்கேற்றிய தாக அறிகின்றோம். இப்பாண்டியனை 'தென்னவன்' என்று கலித்தொகை ஆசிரியர் கூறியவாறே இளங்கோவடிகளும் கடல் கொண்ட செய்தி கூறுமிடத்து 'தென்னவன்' என்று விளிக்கின்றார். இத்தென்னவனும் பஃறுளியாற்றையுடைய நெடியோனும் ஒரே அரசன் என்று கொள்ளின் மன்னன் ஒருவனே கடல்கோட்கு முன்னும் பின்னும் நெடுங்காலமாக அரசாண்டான் என்பது முடியும். தென்னவன் காலம் கடல்கோள் நடந்த காலமாகத் தெரிதலால் தொல்காப்பியர் காலமும் அக்காலமே யென்பது தெளிவு. 'நிலந்தருதிருவிற் பாண்டிய'னெனப் பாயிரத்துள் விதந்தோதுதலின் அங்ஙனம் நிலந்தந்த பேருதவிக்குப் பின்னேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டதென்று கொள்ளுதல் இயைபுடையதே; அதற்கு முன்னெனக் கொள்வாருமுளர். கடல்கோட்குப் பின் நூல் இயற்றப்பட்டதென்று கொள்ளுமிடத்து 'குமரி' என்பதற்கு 'குமரியாறு' என்றே பொருள்கொள்ளுதல் வேண்டும். கடல் கோள் முடிந்து பிற நாடுகள் கைக்கொள்ளப்பட்டு பாண்டியன் அரசு நிலைத்த பிறகே நிலந்தருதிருவிற்பாண்டிய னென்ற பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும். அப்பெயர் சிறப்புப் பாயிரத்துட் கூறப்படுதலின் ஆசிரியர் நூல் செய்த காலமும் கடல்கோட்குப் பின்னேயாதல் வேண்டும். ஆதலால் அக்காலத்தே 'குமரியாறு' தமிழ் நாட்டுத் தென் எல்லையாகவிருந்ததென்று கொள்ளுதல் பெரிதும் பொருத்தமானது. கடல்கோட்குப் பின் முதன்முதற் செய்யப்பட்ட முழுமுதல் நூல் தொல்காப்பியம் என்பது தெளிவு. கடல்கோட்கு முன் இருந்த நூல்கள் யாவும் இலவாகி யொழிய அதற்குப் பின் செய்யப்பட்ட முதல் நூலாகிய தொல்காப்பியம் இன்றும் நின்று நிலவுகின்றது.

வான்மீகியார் இராமாயண காலத்திலே பாண்டியர் தலைநகர் பொருநையாறு கடலொடு கலக்கின்ற இடத்திற்கு அருகிலிருந்ததென்று குறித்துள்ளார். அக்காரணம் பற்றித்தான் அதனை அலைவாய் என்று தற்கால ஆராய்ச்சிக்காரர்கள் கருதுகின்றார்கள். கடல் கொள்ளப்படுமுன் பாண்டியர்க்குத் தலைநகர் தென் மதுரை யென்று தெரிதலால் தென்மதுரையினின்றும் அலைவாய்க்குத் தலை நகரைப் பாண்டியர் மாற்றிக் கொண்டது அதனைக் கடல் கொண்ட பின்பு என்பது ஊகிக்கப்படும். 'கபாடம்' என்ற வான்மீகி இராமாயணச் சொற்குக் கதவென்றும், கபாடபுரமாய ஊர் என்றும் இருவகைப் பொருள் கொள்ளப்படும். கபாடபுரமென்ற உரையே இயைபுடைத்து; அப்பெயரால் இறையனாரகப் பொருளுரையில் இடைச் சங்கமிருந்த நகர் சுட்டப்படுதலின், இடைச் சங்கத்திற்கு நூல் தொல்காப்பியமென்றும் களவியலுட் கூறப்பட்டது. அதனுள் முதற் சங்க மிருந்தார்க்கு நூல் தொல்காப்பியமென்று கூறப்படவில்லை. அதனைக் கருதுமிடத்துத் தொல்காப்பியம் கடற்கோளுக்குப் பின்னே இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்று தோன்றுகிறது. ஆசிரியர் தொல்காப்பியர் ஜமதக்கினியின் புதல்வராய் பரசுராமர்க்கு உடன் பிறப்பென்று கருதுவார்க்கு இது மிகவும் ஒத்ததே. அங்ஙனம் கொள்ளுமிடத்து தமிழ்நாட்டிற்குத் தென் எல்லை 'குமரியாறு' என்பவர்களுடைய கொள்கையும் வலியுறுகின்றது. அஃதெவ்வாறெனில் பஃறுளியாற்றைக் கடல் கொண்ட காலத்துக் குமரிமலையின் பெரும்பாகமும் அழிந்து போயது. குமரியாறு தொடங்கும்
பகுதியும் குமரியாறும் கடல் கொள்ளப் படாதிருந்தது.
சிவதருமோத்திர உரையுள்ளும், "மகேந்திர மலையின் அடிவாரத்துள்ள கனகமயமான இலங்கையின் பகுதி கடலுள் மறைந்ததென்று கூறப்பட்டுள்ளது." இராமாயணகாலத்தில் மகேந்திரகிரிக்கும் இலங்கைக்கும் நடுவே கடல் இருந்ததென்பது தெரிகிறது. அந்தக்காலமானது தென்
மதுரையைக் கடல்கொண்ட காலத்திற்குப் பின்னாதல் வேண்டும். இக்காரணங்களால் முதற்கடற்கோளுக்குப்பின் மகேந்திர மென்ற குமரிமலையின் ஒருபகுதியும், குமரியாறும், இவற்றிற்கும் இலங்கைக்கும் நடுவே கடலும், குமரியாற்றிற்கும் பொருநையாற்றிற்கும் இடையே நாடும் இருந்ததாகக் கொள்ளுதல் வேண்டும்.

வான்மீகி இராமாயணத்திலே சேர சோழ பாண்டிய ரென்ற தமிழ்நாட்டு மூவேந்தருங் கூறப்படுகின்றார்கள். அந் நூலுள் சோழநாட்டிற்கு வடபால் ஆந்திரம் புண்டரம் முதலிய தேசங்கள் சொல்லப்பட்டமையால் அக்காலத்துத் தமிழ்நாட்டு வடவெல்லை 'வேங்கடம்' என்பது யூகிக்கக்கடவது. வியாச பாரதத்தால* அருச்சுனன் தீர்த்தயாத்திரைச் சருக்கத்தில் பாண்டியர் மணவூர் என்னுமிடத்தில் அரசாண்டதாகத் தெரிகிறது. பாண்டவர் சேனைக்குச் சோறளித்த சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை, முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பாடியிருப்பதாகச் தெரிகின்றது. இராம சரிதம் பாரத சரிதத்திற்கு முந்தியுள்ளதாதலால் பாரத சரித காலத்திற்கு முன்னே பாண்டியர் அலைவாயில் அரசாண்டதாகக் கருத வேண்டும். கபாடபுரமுங் கடல் கொள்ளப்பட்டதாக அறிகிறபடியால் அக்கடல்கோட்குப் பின்னர் பாண்டியர் மணவூரிற் றங்கியதாகக் கருதுதற்கு இடமுண்டு. முடிநாகராயர் செய்யுளுள் இமயத்தையும் பொதியத்தையுமே கூறினமை காண்க. அவர் செய்யுளால் பாரதகாலத்தே தமிழரசர்க்கும் பாண்டவர்க்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகின்றோம். திருவிளையாடற் புராணத்துள்ளும் மணவூர் பாண்டியர் தலைநகரெனக் கூறப்பட்டுள்ளது.

பாரதகாலத்திற்கு முன்னேயே தொல்காப்பியர் நூல் செய்தனர் என்பது தெளிவு. அகத்தியர் தொல்காப்பியர் என்னும் இரு பேராசிரியர் காலத்தைப்பற்றிய முடிபுகட்கு அவ்விருவரும் யாவர் எவ்வகையார் என்பதைப்பற்றி ஒருசிறிது ஆராயத்தக்கது.

அகத்திய முனிவர் வரலாற்றினைத் தமிழறிவுசான்ற திருவாளர் ந.மு. வேங்கடசாமி நாட்டா ரவர்கள் ஆராயாச்சி செய்துவருகின்றார்கள். இவண் அதனைச் சுருக்கிக் கூறுவாம். அகத்தியர் என்ற பெயர் தமிழ்ச்சொல் என்று சிலரும், அகஸ்தியர் என்ற வடமொழிச் சொல்லின் மொழிபெயர்ப்பென்று வேறு சிலருங் கருதுகின்றார்கள். அவர் வரலாறு இருமொழிப் பண்டைப் பனுவல்கள் பலவினும் காணப்படுகின்றது. அவரைத் தமிழ்முனி யென்று கந்தபுராண முடையார் அழைக்கின்றார். கந்தபுராண அகத்தியப் படலத்தில் 'வண்டமிழ் மாமுனி' ' மூதுரைத்தமிழ் முற்றுணர் மாமுனி' ' சந்தநூற் றமிழ்த் தாபதன்' என்றும், திருக்கல்யாணப் படலத்தில் 'மறையொன்று தீஞ்சொற்றமிழ் மாமுனி' என்றும் அவரை ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியர் விதந்தோதினார். விந்தத்தை யடக்குவதற்கு முன் கடல் குடித்த கதை கேட்கப் படுகின்றது; அது மேற்கூறிய அகத்தியப்படலத்தில்,
    "தெள்ளத் தெளிந்த மறைக் கள்வனைச் செற்ற மீன்போ
    லள்ளற் கடலை யொருநீய*கன் கையடக்கிக்
    கள்ளத் தவுண னிலைநாட்டி*ந*ங் கண்ணில் வைத்த
    கொள்ளைக் கருணை யுலகெங்கணும் கொண்டதெந்தாய்"
என்றமையால் விளங்கும். கடலைக்குடித்தது விருத்திர னென்னும் அசுரனை இந்திரன் கொல்லுதற்பொருட்டு என்று திருவிளையாடற் புராணத்துட் கூறப்பட்டுள்ளது. இந்திரன் பிரமனிடம் விருத்திரனை வெல்லும் வழி யாதென்று வினவ, அப்பிரமன் அகத்தியரிடம் அவன் குறையிரக்கும்படி கட்டளையிட்டார். அங்ஙனமே அகத்தியரை வேண்டிக்கொள்ள. அவர் கடலையுண்டு விருத்திரனைக் காட்டினார் என்று திருவிளையாடற் புராணங் கூறுகின்றது. இந்திரன் குறை நேர்ந்தது பொதியின் மலையில் என்பது 'சந்த வெற்படைந்தான் வானோர் தலைவனை' என்ற திருவிளையாடல் இந்திரன் பழிதீர்ந்த படலச் செய்யுளடியால் விளங்கும்.
எனவே விந்த மடக்குவதற்கு முன்னேயே பொதியிலில் அகத்தியர் இருந்தனர் என்பது போதரும். இராமாயணத்துள் "என்றுமவனுறைவிடமா மாதலினால்" என்று பொதிகையில் அகத்தியர் தங்கியிருந்ததாக அறிகிறோம். அதற்குப்பின் சிவபெருமானது திருமணத்திற்காக இமயஞ் சென்று மீண்டனர். மீண்ட கதையைச் சொல்லுமிடத்துக் கந்தபுராணத்துள் அகத்தியர் இறைவனைத் தமிழறிவு ஈதல் வேண்டு மென்று கேட்டதாகக் குறிக்கப்படவில்லை. காஞ்சிப்புராணத்துள் அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது. அங்ஙனம் குறித்தபோதும், தனக்குத் தமிழ்மொழி அன்னியமென்று அவர் சொன்னதாகச் சரித்திரமில்லை. ஆனால் திருவிளையாடற் புராணத்தில் தனக்குத் தமிழ் நன்கு தெரியாததாகக்கூறிய குறிப்பு முதன்முதற் காணப்படுகின்றது. இப்புராணம் கந்தபுராணத்தோடு மாறுபடும் இடங்களில் பின்னையதே சிறப்பாகக் கொள்ளற்பற்று. ஆதலால் திருவிளையாடற் புராண முடையார் கூற்று தமிழ் முனிவரைக் குறித்ததாகக் கருதப்படா.
    "மன்னு மாமலை மகேந்திர மதனிற்
    சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"
என்றும்,
    "மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து
    உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்"
என்றும் வரும் திருவாசக அடிகளாலே 'மகேந்திர மலையில் ஐம் முகங்கொண்டெழுந்தருளி, இறைவர் ஆகமங்களைத் தோற்றுவித்தார் என்பது போதரும். 'மகேந்திரம்' பொதியத்திற்குத் தென்பாலுள்ள ஒரு பெருமலை என்பது முன் குறிக்கப்பட்டது. அம்மலையிலுள்ள நாடு தமிழ் வழங்கிய நாடாதலால் ஆகமங்களைக் கேட்டவர்கள் தமிழர்களாதல் வேண்டும். கேட்ட ஐவருள் ஒருவர் அகத்தியராகவும், ஏனை நால்வருள் ஒவ்வொருவரும் ஐந்து ஆகமங்கள் கேட்டதாகவும் அகத்தியர் மாத்திரம் எட்டு ஆகமங்கள் கேட்டதாகவும் சிவாகமம் கூறுகின்றது. அவ்வைவருடைய கோத்திரமும் ஆரிய கோத்திரமாகக் காணப்படவில்லை. அவை முறையே சிவகோசரம், சிகாகோசரம், சோதிகோசரம், சாவித்திரி கோசரம், வியோம கோசரம் என்பன. இதனால் அகத்தியர் தமிழ் முனிவர் என்பதும் அவர் குமரி மலையைக் கடல்கொள்வதற்கு முன்னேயே ஆகமம் பெற்றவர் என்பதும் விளங்கும். அவர் கடல்கோட்குமுன் தமிழைச் செம்மைப்படுத்திய பேராசிரியராக விருந்திருத்தல் கூடும். அருந்தவமுனிவராதலால் நீண்ட ஆயுளுடையராய் வாழ்ந்திருந்து கடல்கோட்குப் பின்னும் இராமாயண காலத்தில் இராமருக்குக் காட்சி கொடுத்திருக்கலாம். அகத்தியர் அனுமதியின்றி பொருநையாற்றைக் கடத்தல் அரிதென்னும் குறிப்பு வான்மீகத்தில் காணப்படுகின்றது; சில பிரதிகளில் காணப்பட்டதாகக் கூறுந் தண்ட கந்திருத்திய அகத்திய ரென்பவர் தமிழ் முனியின் வேறாய் ஆரியர் தலைவராய் குறுமுனிவர் பெயரைக் கொண்டவராகிய மற்றொருவரென்று யூகிக்கவேண்டியதா யிருக்கிறது. அவரையே நச்சினார்க்கினியர் பாயிர உரையிற் கூறுவதாயுங் கருதலாம். அகத்தியனாருடைய மனைவியை புலத்தியனாருடைய உடன்பிறப்பென்று அவர் கூறுகின்றார். ஆனால் கந்தபுராணமுடையார் தமிழ்முனிவர் மனைவி விதர்ப்ப நாட்டரசன் புதல்வியென்று மொழிந்தனர். இதனாலும் அகத்தியப் பெயருடைய இருவருக்கும் வேறுபாடு காண்க. இந்திரனது சிவிகை சுமந்ததாகக் கூறப்படும் அகத்தியர் தமிழ்முனிவர் அன்று. இந்திரனே தன்னையடைந்து உதவிவேண்ட நின்ற தமிழ் முனிவர் அவன் சிவிகை சுமத்தல் யாங்ஙனம்? இருக்கு வேதப்பாட்டுகளுட் சிலவற்றைக் கூறிய அகத்தியர் தமிழ்முனிவர் என்று கருத இடமில்லை. அப்பாடல்கள் பாரதகாலத்தில் நான்மறைகளை வகுத்த வியாசர் இருக்குவேதத்துட் சேர்த்தவைகளாக இருக்கலாம். நாரதர்க்குக் கும்பத்திற் பிறந்ததாகக் கூறப்படும் அகத்தியர் தமிழ் முனிவரென்று கொள்ள இடமில்லை. அக்கதை தமிழ் முனிவரைப்பற்றி ஆரியர் கட்டிய கதையாக விருத்தல் வேண்டும். அல்லது அப்பெயருடைய ஆரியமுனிவரொருவரைப் பற்றியதாதல் வேண்டும்.

தமிழ் முனிவர்களின் பெயரையும் ஆரியமாக்கித் தமிழ்ப்பெயர் விளவ்கா வண்ணஞ் செய்தல் ஆரிய நூலோரது வழக்கம்போலும். அகத்தியர் என்ற சொல்லினைத் தமிழ்ச் சொல்லாகவே கருதலாம். அது தமிழுக்கு இன்றியமையாதவர் என்ற பொருளுடையது.
'என்றுமுற தென்றமிழை' என்றலால், என்றும் பொதியில் இருந்து வளர்த்தல் அவரது கடமைபோலும்.

ஜமதக்கினியின் புதல்வராகத் தொல்காப்பியரைக் கருதினால் அவர்காலம் இடைச்சங்கமிருந்தகாலம் என்றெண்ண இடமுண்டு ஆனால் பரசுராமரைப்பற்றிக் கூறும் நூல்களுள் தொல்காப்பியரை அவரது உடன்பிறப்பாகக் கூறக்கண்டிலம். சில தமிழ்ப் புலவர்கள் கூறுவதாவது :- "பலராமனும் விரும்பப்படும் மேம்பாட்டினையுடைய பண்டைக்காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளாகிய குறுக்கையர், ஏயர்கோ, காப்பியன், சேக்கிழான் எனப் பெயரியவைகளுள் அவர் பழமைமிக்க காப்பியக் குடியிற் பிறந்தவர்" என்பது.

அங்ஙனந் தமிழ் முனிவராகத் தொல்காப்பியரைக் கருதுமிடத்து, அந்நூல், ஆதியூழின் அந்தத்தையே செய்யப்பட்டிருத்தல் கூடும். இந்நூலுட் சில பகுதிகள் பிற்காலத்துச் சேர்க்கப்பட்டனவாகக் கருத இடமுண்டு. அவைகளிற்பல ஆரியக்கலப்பு மிகுந்த பின்னரே சேர்க்கப்பட்டனவென்று கொள்ளவேண்டும். அந்நூல் எழுத்ததிகாரம் முழுவதிலும் இரண்டு மூன்று சொற்களே தமிழோ வடமொழியோவென்று ஐயுறுவதற்கு இடந்தருவன. அது வடமொழித் தொடர்பு முதன்முதல் அக்காலத்து ஏற்பட்டமைக்கு ஒரு சான்றாகும்.

பரசுராமர் காலத்திலேயே வடநாட்டில் பிராமணருக்கும் ஏனையோர்க்கும் கலகம் விளைந்ததாகத் தெரிதலால் அக்காலத்திலேயே வெவ்வேறு கரணங்கள் யாக்கப்பட்டிருத்தல் கூடும். இன்னொரு முறையாகக் கருதுமிடத்து மனுஸ்மிருதிகள் முதலியவை எழுந்தபின் ஜாதியையும் கரணத்தையும் பற்றிய சூத்திரங்கள் தொல்காப்பியத்திற் சேர்க்கப்பட்டிருத்தல் கூடுமென்று தெரிகிறது. எவ்வாறாயினும் பாரதகாலத்திற்குமுன் தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டதென்று கோடலே பொருத்தமுடைத்து. ஒரு சாரார் சூத்திரமென்ற செய்யுள்வகை வடநாட்டிலே அமைந்த பின்னர் தொல்காப்பியர் தமது இலக்கண் நூலை சூத்திரயாப்பால் இயற்றினர் என்று கூறுகின்றார்கள். கல்ப சூத்திரங்களும் தரும சூத்திரங்களும் உபநிடத காலத்திற்குப்பின் எழுந்தனவென்று கொள்கின்றார்கள். வடமொழிச் சூத்திரயாப்பால் தமிழ் நூல் செய்யப்பட்டதென்று கொள்வதினும் தமிழிலேயே எழுவகைச் செய்யுளுள் ஒன்றாகிய நூலைக்கூறும் பாவினம் அமைந்திருத்தல் கூடுமென்று கொள்ளுதலே இயைபுடைமை காண்க. அது நூற்பா வென்று பெயர் பெறும். எழுவகைச் செய்யுளைத் தம்மகத்துக் கொண்ட தமிழானது அவற்றை இயற்றுதற்குரிய யாப்பு வகைகளை உடைத்தா யிருந்ததில்லை யென்று கூறுவது பொருத்த மில்லாததொன்றே. தொல்காப்பியத்துள் சில இடங்கிளில் சூத்திரமென்ற சொல் வழங்குவதை வைத்து வடமொழிச்சூத்திரம் ஏற்பட்டதன் பின்னரே இந்நூல் இயற்றப்பட்டதென்று கொள்ளுதற்கு இடமில்லை. தொல்காப்பியத்துட் சில பகுதிகள் ஆசிரியர் காலத்துக்குப்பின் சேர்க்கப்பட்டவைகள். மரபியலுட் பெரும்பான்மையும் அவ்வாறே. சூத்திரம் என்ற சொல் வருகின்ற செய்யுட்கள் மரபியலிலேயே காணப்படுகின்றன. அவை ஆசிரியரது செய்யுட்களல்ல வென்பது ஒருதலை.

ஆசிரியர் திருவள்ளுவரது வரலாறு கூறும் தெளிவு நூல் யாதும் இல்லாததுபோல, ஆசிரியர் தொல்காப்பியரது வரலாறு கூறு நூல் யாதுமில்லை. அகத்தியரது மாணாக்கர் தொல்காப்பியர் என்பது மாத்திரம் பல்காப்பியர் உரை, சிகண்டியார் உரை முதலியவற்றால் தெரிகின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் அகத்தியரது பன்னிரு மாணாக்கர்களுள் தொல்காப்பியர் தலைவர் என்பதனைக் கூறும் அடிகளுள்ளன. அவையாவன :-

    "மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
    தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
    தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
    துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
    பன்னிரு புலவரும்"
என்பன.
ஆசிரியர் காப்பியக் குடியைச் சேரந்தவரென்று உரையாசிரியர்கள் கூறுகின்றார்கள். ஜமதக்கினியார் புதல்வர் ஆசிரிய ரென்பதற்கு நச்சினார்க்கினியர் பிரமாணம் யாதுங் காட்டவில்லை. தொல்காப்பியரது இயற்பெயர் திரணதூமாக்கினி என்பதற்கும் உரையளவை இன்னும் வெளிப்படவில்லை. ஜமதக்கினி புதல்வர் என்று கொண்டால் தொல்காப்பியர் ஆரியரென்பது வலியுறும். அதற்குப் பிராமண மின்மையின் அதனை வற்புறுத்தவு மிடமில்லை. ஐந்திரமென்ற வடமொழி வியாகரணத்தை யறிந்தா ரென்பதனாலே அவர் ஆரியராயிருத்தல்வேண்டு மென்பது துணிபல்ல. தமிழாசிரியர் பிற பல மொழிகளையும் கற்றல் புதுமையன்று. ஆசிரியரது சமயம் தமிழரது கடவுட் கொள்கையே யன்றி வேறல்ல. திருவள்ளுவர்க்கு யாது சமயமோ அஃதே தொல்காப்பியர்க்கும் என்று கொள்வதற்கு இரு பேராசிரியரது பெருநூற் பொருளொருமையே சிறந்த காரணமாதல் காண்க. ஆசிரியர் காலத்தே சமணம், புத்தம் முதலியன கிடையா. வைணவம் ஒரு சமயமாகப் பரிணமிக்கவில்லை. மால்வழிபாடு மாத்திரமிருந்தது. ஆசிரியர் அகத்தியனாரது சமயம் சைவம் என்பது தெளிவாதாலால் தொல்காப்பியரது சமயமும் அஃதேயென்று கொள்ளுதல் பொருத்த முடைமை காண்க.
திருவள்ளுவநாயனார் கொள்கையும் அனையதே. தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலியோரது சமயத்தொடர்பான சொற்களை சமணர் புத்தர் தம்நூலுட்கொண்டு வழங்கினமையால் பலர் இருபேராசிரியரும் சமணரா யிருக்கலாமென்று எண்ணுகின்றார்கள். அது எவ்வளவோர் அறியாமை! சமண நூலாசிரியராகிய திருத்தக்க தேவர் முதலியோர் சமணரது முத்திநிலையைச் 'சிவகதி' என்கின்றனர். அருகனைச் 'சிவபரமுத்தி' என்கின்றனர். அக்காரணம் பற்றிச் சமணரைச் சைவரென்று யாராவது கூறுவாரா?

புறநானுறு 6-வது பாட்டு, பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது. முதுகுடுமிப் பெருவழுதி பஃறுளியாற்றையுடைய நெடியோன் வழிவந்தன னென்பது, அவனைக் குறித்து நெட்டிமையார் பாடிய பாட்டால் விளங்கும். அம்முதுகுடுமி காலத்தே குமரியாறு தெற்கிலிருந்த தென்பது தெளிவு. அக்காலத்தே அவ்வழுதியினது குடை முக்கட் செல்வரது கோயிலை வலம் வருவதற்குமாத்திரமே தாழும் என்பது கூறப்பட்டது;

    "பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
    முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
    யிறைஞ்சுக*” என்பது காண்க.

இதனாற் போந்தது யாதெனின் இராமாயண காலத்திலேயே தென்னாட்டில் முக்கட்செல்வர் வழிபாடு சிறந்தோங்கியதென்பது புலனாம். அக்காலத்துப் பெருவழக்கிற்றாகிய முக்கட்செல்வர் வழிபாடே தொல்காப்பியர்க்கும் பல்லாற்றானும் பொருந்துவதாம். ஆரியர் கலப்பு அவர் காலத்தே உணமையின் அவரது வேள்வியும் அரசர்களால் இயற்றப்பட்டன வென்பது தெரிகின்றது. ஆனால் வேள்வி வழக்கு குடிகளுள் அக்காலத்துப் பரவியதாகத் தோன்றவில்லை. ஆசிரியரது மரபினை அறிவர் மரபாகவே கொள்ளல் வேண்டும்.

தொல்காப்பியர் ஆரியராயினுந் தமிழராயினுமாகுக. அவர் காலமாகிய இராமயண காலத்திற்கு முன்னேயே முத்தமிழ் நூல்களும், மூவேந்தரும், முத்தமிழ்ப் புலவரும் உயர்ந்த கடவுட்கொள்கையும் செவ்விய அறநெறியும் உடையராய்த் தமிழ்நாட்டிற் றிகழ்ந் தோங்கின ரென்பதை யாவரும் மறுக்க வொண்ணாது. வான்மீகியார் இராமயணகாலம் கி.மு. 700-க்குமுன் என்பது திண்ணம். ஆதலால் புத்தம் சமணம் முதலிய மதங்கள் உண்டாவதற்கு முன்னேயும் கி.மு. நான்காம் நூற்றாண்டிற் றிகழ்ந்த பாணினி முனிவர் காலத்திற்கு முன்னேயும் தொல்காப்பியம் இயற்றப்பட்ட தென்பது தெளிவு.

தொல்காப்பியரையும் அகத்தியரையும் புத்தர் அல்லது சமணரென்று சொல்வது உண்மைச் சரித்திரத்திற்கு முற்றும் மாறாகவுள்ள ஒரு தப்புமொழியாகும்.

ஆசிரியர் நூல் செய்கின்ற காலத்திலே இன்றைக்கும் மேனாட்டினரும் அறியாத பல நுண்ணூல்கள் தமிழ்நாட்டிலே தழைத் தோங்கின வென்று யூகிப்பதற்கு இந்நூல் இடங்கொடுக்கின்றது. முத்தமிழ் நூல்களும், யோக நூலகளும், மந்திர நூல்களும், தத்துவ நூல்களும், மருத்துவ நூல்களும் மிகுதியாக இருந்தன வென்பது தொல்காப்பியத்தினானே புலனாவதை மேலே காட்டினாம்.

எழுத்ததிகார நூல்மரபாலும், பிறப்பியலாலும், எழுத்தொலி மூல நூலுணர்ச்சி தமிழ்நாட்டிற் சிறப்புற்றோங்கியிருந்த தென்பது தெரியவருகிறது. உலகத்திலே எல்லாவகை மொழிகளிலும் பயில்கின்ற எழுத்தொலிகளை வகைப்படுத்தி அவற்றுள் தனி எழுத்தொலிகள் இன்னவெனவும், கலப்பொலிகள் எழுவதற்குக் காரணமாக அத்தனியொலிகளோடு ஒன்றாதல் பலவாதல் முன்னாதல் பின்னாதல் உடனாதல் இயைகின்ற சார்பொலிகள் இன்ன வென்றும் பண்டைத் தமிழரிஞர் அறிந்திருந்தார்கள். தனி யொலிகள் அனைத்தையும் தமிழ்மொழி நெடுங்கணக்கின் முப்பது எழுத்துகளாக அமைத்து வைத்தனர். எவ்கையான பேச்சொலியும் தனியொலி சார்பொலி அவற்றின் கலப்பொலி என்பவற்றுள் அடங்குதலால் அவற்றைத் தமிழெழுத்துகளால் எழுதும் வன்மையும் நமது முன்னோர் பெற்றுத் திகழ்ந்தனர். இவ்வரிய நூலுணர்ச்சி உலகிலுள்ள எல்லா மொழிகட்கும் மிகவுஞ் சுருங்கிய எளியவாகிய குறியீடுகளைத் தருவது. இந்நூலுணர்ச்சி உலகிற் பரவுமாயின் தமிழ் எழுத்து முறையே உலகெங்கும் பரவி பிற இலிபிகளின் இடர்ப்பாடும் பெருக்கமும் ஓய்ந்து ஒழியும்.

2000 ஆண்டுகளாக மறைந்து கிடந்த இவ்வரிய நூலைத் தமது நுண்மான் நுழைபுல மிகுதிப்பாட்டால் தொல்காப்பிய எழுத்த்திகாரத்தினின்றும் வடித்தெடுத்த பேரமுதமாகத் தற்காலத்தே உதவியருளியவர் பெருங் கலைஞர் திருவாளர் பா. வே. மாணிக்க நாயக்க ரவர்கள் ஆவர். அவர்கட்கு தமிழ் நாடும் பிறநாடும் செயக்கடவதாகிய கைம்மாறு ஒன்று மிலதாயினும் அவ்வரிய நூலைப் போற்றுதலும் பரவச் செய்தலுமே நம்மவர்களின் ஒருதலையாய கடமையாகும். நமது முன்னோர் எழுத்தொலி முயற்சிக்குக் குறியீடு அமைத்தனரேயன்றி அவ்வொலிக்கு மாத்திரம் வடிவமைத்திலர். அதனால் எழுத்தொலி அளவிறந்து பெருகினும் குறியீடுகள் அளவுட் பட்டனவாக அமைந்துள்ளன. இதுவே பெறற்கரிய பெரும் பேறாக எழுத்துநூல் கற்பார் கடைப்பிடிக்க வேண்டியது. இவ்வாறு கொள்ளாது ஒலி ஒவ்வொன்றிற்கும் குறி ஒவ்வொன்று அமைத்தால் ஒலிகளும் பலவாய்க் குறிகளும் பலவாய் வரம்பிழந்து ஓடும். அதனால் வரி வடிவக் கூட்டம் செப்பமடையாது வாளா விரிந்து பயனிலதாம். இதனை மேலைத் தேசத்து எழுத்து நூல் வல்லார் உற்று நோக்கற்பாலர்.

தமிழ் எழுத்தொலி கற்போர் பண்டை எழுத்து நூலுணர்ச்சியின்றி இதுவரை முயன்றமையால் சார்பெழுத்தின் தன்மை அறியாதிருந்தனர். உரையாசிரியர்களும் அவ்வாறே. திருவாளர் நாயக்கரவர்களின் பேருதவியால் சார்பெழுத்தின் தன்மை தமிழர்கட்கு விளங்குவதாயிற்று. சார்பெழுத்தாவன :- குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன. குற்றியலிகரம் இகரக் குறுக்கமன்று. 'கேண்மியா' என்ற சொல்லின் மகரத்தின் மேல் உள்ள இகரம் நேர் இகரமாக ஒலியாது வேறுபட்டிருத்தல் காண்க. இந்தக் குற்றியலிகரம் அகரத்திற்குப் பின் கலப்பதால் எழுகின்ற ஒலியே 'Man' என்ற ஆங்கிலச் சொல்லின் நடுவேயுள்ள உயிரொலியாம்.

குற்றியலுகரம் என்பது வடமொழி 'ரு' 'லு' என்னும் ஒலிகளிலுள்ள உயிரொலிகளாம். ஆய்தம் என்பது எழுத்தோசைக்குக் காரணமாகிய மூச்சொலியே யாகும். அதுசார்ந்த ஒலியின் தன்மையோ டொத்தியலும். அதனைத் தகரத்தின் முன் சேர்க்கும் பொழுது தகரத்தின் ஒலி மென்மையடையும். அவ்வாறு ஆய்தமுந் தகரமுங் கலந்த வொலி அரபி முதலிய மொழிகளில் மிகுதியும் வழங்குகிறது. இவ்வாறு கொள்ளாது ஆய்தத்தின் ஒலி வடிவம் அது ககரத்தின் முன் சேர்ந்தபொழுது எழுகின்ற ஒலியேயாம் என்று பிற்காலத்தார் மயங்கக் கொண்டனர். அதனால் ஆய்தத்தின் பெரும்பயனைத் தமிழர் அறியாது போயினர். குற்றியலிகரம் உயிரொலிகளோடு கலத்தல் தமிழ் மொழியிற் கிடையாது; பிறமொழிகளிலுண்டு. அவ்வாறே குற்றியலுகரம் வல்லின மெய்யின் மேல் மாத்திரம் தமிழ் இயல் நூல்ககளுட் குறித்த முறையில் ஊர்ந்து வரும். வடமொழியிலோ ரகர லகர மெய்களிலும் ஊர்ந்து வருகின்றது. ஆங்கில முதலிய மொழிகளிலோ அது பிற உயிரொலிகளோடுங் கலந்து வருகின்றது. ஆய்தம் தனி எழுத்தொலிகட்குப் பின் கலத்தல் தமிழிலில்லை. வடமொழி முதலியவற்றில் அது அவைகளின் உடன் கலத்தலும் பின் கலத்தலும் காணப்படும்.

தனியொலிகள் முப்பதும் தமிழ் நெடுங்கணக்காக அமைந்த சீர்மை உலகில் பிற எம்மொழிக்குங் கிடையாது. சார்பொலிகள் கலக்கின்ற முறைகள் தமிழிலே மிகச் சுருக்கம். பிற மொழிகளுள் அவை தமிழினும் விரிவுடையன. இதனை உணராமையால் பலர் தமிழானது எழுத்தொலிகள் குறைந்த மொழியென வறிதே பிழை கூறுவர். அவர் தமது எழுத்தொலி நூல் அறியாமையைப் புலப்படுத்தினர் ஆவர். இனியேனும் தமிழர், பிறமொழிகளிலிருந்து எழுத்தொலிகளையும் அவற்றின் வரிவடிவத்தையும் தமிழுட் கடன் வாங்காது தமிழ் எழுத்துக்களின் துணை கொண்டே பிறமொழி ஒலிகளை நுண்ணூற்கு இயைய எழுதிக்கொள்ளும் ஆற்றல்பெற் றுய்வார்களாக.

தமிழெழுத் தொலிகளின் சிறப்புகளையும் செவ்விய அமைப்பையும் பற்றித் திருவாளர் மாணிக்க நாயக்க ரவர்கள் நுணுகி யாய்ந்து மொழிந்தவை பின் வருமாறு:--

1. கூட்டொலிகளைத் தனி யெழுத்துக்களாக மற்றைய மொழிகள் எண்ணுவதுபோலத் தமிழ், தாள் தலை தெரியாது எண்ணுவதில்லை.

2. மற்றைய மொழிகள் போலாது கூட்டல் குறைத்தல் இயலாதவர்க்கு முயற்சியாலாகும் எழுத்தொலிகளிவையென்றும். முயற்சி வேற்றுமையா லாக்கக்கூடிய எண்ணிறந்த எழுத்தொலிகளிவையென்றும், தமிழ் பாகுபடுத்தி யுணர்த்துகின்றது.

3. வாக்குறுப்புகளின் கூட்டல் குறைத்தல் ஏலாத குறிப்பான முயற்சிகளால் ஒலிக்கக் கூடிய எல்லா வெழுத்துக்களும் தமிழ் மொழியில் "உயிர்கள்" என வழங்கும் பன்னிரண்டும் "உடல்கள்" என வழங்கும் பதினெட்டுமே.

4. தமிழெழுத்துக்களி னமைப்பைவிட எளியது நினைத்தற் கெட்டாததாயினும், அதுவே எல்லா மொழிகளுக்கும் பொதுவான அமைப்பாம்.

தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவம் "முத்தமிழ்" என்ற குமூஉக்குறியால் விளங்கும் பிரணவத்தின் வடிவத்தினின்றே எழுந்தன வென்பதையும் இயற்கை நிலைமைகளை இனிது விளக்கும் தமிழ் எழுத்தொலிகளின் சிறந்த ஆற்றலையும் அவற்றின் மந்திரப் பொருளையும் திருவாளர் நாயக்க ரவர்கள் தமது "தமிழ் மறை விளக்கம்" என்ற நூலில் இனிது விளக்கியிருக்கின்றனர். அவற்றின் சுருக்கம் வருமாறு:

(1) இயற்கையில் மூலவடிவமாயுள்ள கருவின் உருவமே தமிழில் ஓகாரம் அதாவது மூலப்பிரணவம். இவ்வடிவமே கடவுளுடைய அபயாஸ்த வரதாஸ்த மூர்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது. இவ்வடிவினின்றே தமிழின் மற்றைய வரிவடிவங்கள்
கிளம்பி யிருக்கின்றன. இவைகள் தந்தம் மந்திரப் பொருளை தந்தம் வடிவாலேயே நன்கு விளக்குகின்றன.

(2) எழுத்துக்களின் மந்திரப் பொருளும், மொழிபடு பொருளும் தமிழில் ஒன்றாக இருப்பது எதனினும் காணாக்காட்சி. "தனிநிலை," "உயிர்கள்", "உடல்கள்" என்பன தமிழெழுத்துக்களின் பகுப்புப் பெயர்களாம்.

    மயிலாப்பூர்,
    உருத்ரோத்காரி வருடம்
    சித்திரை மாதம் 18ஆம் தேதி.         கா. சுப்பிரமணியம்.



கடவுள் துணை

தொல்காப்பியம்
எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியருரை


சிறப்புப் பாயிரம்
(பனம்பாரனார் இயற்றியது)

    வடவேங்கடந் தென்குமரி
    ஆயிடைத்
    தமிழ்கூறும் நல்லுலகத்து
    வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
    எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
    செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
    முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
    புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்;
    நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்
    தறங்கரை நாவின் நான்மறை முற்றிய
    அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து
    மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
    மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
    தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
    பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

என்பது பாயிரம்.1
------------
1. இங்கே பாயிரம் என்றது, சிறப்புப் பாயிரம்.

[பாயிரம்]

எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம். என்னை?

'ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே.'

என்றாராகலின்.

பாயிரம் என்றது புறவுரையை. நூல் கேட்கின்றான் புறவுரை கேட்கிற் கொழுச்சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோல(1) இந்நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை?

'பருப்பொருட் டாகிய பாயிரங்(2) கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நூல்இனிது விளங்கும்.'

என்றாராகலின்.
----------
(1) கொழுச்சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போல' என்பதற்கு, கலப்பைக்கொழுச் சென்றவழி கலப்பைக்குத்தி எளிதாய் நிலத்திற் பதிவதுபோல என்றும், குத்துக்கருவி குத்தியவழித் தையலூசி எளிதாய் தோலில் இறங்குவது போல என்றும், இரு வகையாய்ப் பொருளுரைப்பர்.
(2) பாயிரம் - சிறப்புபாயிரம்.
அப் பாயிரந்தான் தலையமைந்த யானை(3)க்கு வினை(4)யமைந்த பாகன் போலவும் அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றா யிருத்தலின், அது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவுங் குறிச்சி புக்க மான் போலவும் மாணாக்கன் இடர்ப் படுமென்க.
(3) தலையமைந்த யானை - யானைக் கூட்டத்தைக் காக்கும் தலைமை யானை.
(4) வினை - வினைத்திறமை.
(5) நன்னூலார் இவற்றொடு நூலையுங் கூட்டிப் பொதுவின் தொகை ஐந்தென்பர்.

அப் பாயிரம் பொதுவுஞ் சிறப்பும் என இருவகைத்து.

(பொதுப்பாயிரம்)

அவற்றுட் பொதுப் பாயிரம் எல்லா நூன்முகம் உரைக்கப்படும். அதுதான் நான்கு வகைத்து:

    'ஈவோன் தன்மை ஈத லியற்கை
    கொள்வோன் தன்மை கோடன் மரபென
    ஈரிரண்(5)டென்ப பொதுவின் தொகையே.'

என்னும் இதனான் அறிக.

ஈவோர் கற்கப்படுவோருங் கற்கப்படாதோரும் என இருவகையர். அவருட் கற்கப்படுவோர் நான்கு திறத்தார்.

'மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்
உலைவில் உணர்வுடை யோர்.'

இதனுள்,
'மலையே,
அளக்க லாகப் பெருமையும் அருமையும்
மருங்ககல முடைமையும் ஏறற் கருமையும்
பொருந்தக் கூறுப பொச்சாப் பின்றி.'

'நிலத்தி னியல்பே நினைக்குங் காலைப்
பொறையுடை மையொடு செய்பாங் கமைந்தபின்
விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை
இடுதலும் எடுத்தலும் இன்னணி மாக
இயையக் கூறுப இயல்புணர்ந் தோரே.'

'பூவின தியல்பே பொருந்தக் கூறின்
மங்கல மாதலும் நாற்ற முடைமையுங்
காலத்தின் மலர்தலும் வண்டிற்கு ஞெகிழ்தலும்
கண்டோ ருவத்தலும் விழையப் படுதலும்
உவமத் தியல்பின் உணரக் காட்டுப.'

'துலாக்கோ லியல்பே தூக்குங் காலை
மிகினுங் குறையினும் நில்லா தாகலும்
ஐயந் தீர்த்தலும் நடுவு நிலைமையோ
டெய்தக் கூறுப இயல்புணர்ந் தோரே.'

என நான்குங் கண்டுகொள்க.

இனிக் கற்கப்படாதோரும் நான்கு திறத்தார்:

'கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.'

இதனுட் கழற்பெய்குட(1)மாவது கொள்வோனுணர்வு சிறிதாயினுந் தான் கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். மடற்பனை(2) என்பது பிறராற் கிட்டுதற்கு அரியதாகி இனிதாகிய பயன்களைக் கொண்டிருத்தல். முடத்தெங்(3)கென்பது ஒருவர் நீர்வார்க்கப் பிறர்க்குப் பயன்படுவதுபோல ஒருவர் வழிபடப் பிறர்க்கு உரைத்தல். குண்டிகைப்பருத்தி(4) யென்பது சொரியினும் வீழாது சிறிது சிறிதாக வாங்கக் கொடுக்கும் அதுபோலக் கொள்வோனுணர்வு பெரிதாயினுஞ் சிறிது சிறிதாகக் கூறுதல்.
–-------------------------------------
(1) 'பெய்தமுறை யன்றிப* பிறழ உடன றருஞ்
செய்தி கழறபெய குடத்தின சீரே.'
(2) 'தானே தரககொளி னனறித தனபால
மேவிக கொளக்கொடா இடத்தது மடறபனை.'
(3) 'பலவகை யுதவி வழிபடு பண்பின
நல்லோ ரொழித் தலலோரக களிக*குமுடத தெங்கே.'
(4) 'அரிதில் பெயககொண டபபொருள் தானபிறாக
கெளிதீ விலலது பருத்திக் குண்டிகை.'

இனி,

'ஈத லியல்பே இயல்புறக் கிளப்பின்
பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப்
பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஓரையில்
திகழ்ந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக்
கொள்வோ னுணர்வகை அறிந்தவன் கொள்வரக்
கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்.'

இதனான் அறிக.

இனிக் கொள்வோருங் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோரும் என
இருவகையர். அவருட் கற்பிக்கப்படுவோர் அறுவகையர்:

அவர்தாம்,

'தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளனோ டிவரென மொழிப.'

இவர் தன்மை,

'அன்னங் கிளியே நன்னிறம் நெய்யரி
யானை யானே1 றென்றிவை போலக்
கூறிக் கொள்ப குணமாண் டோரே.'

இதனான் அறிக.
-----------
1. ' பாலும் நீரும் பாற்படப் பிரித்தல்--அன்னத் தியல்பென அறிந்தனர் கொளலே.'
' கிளந்தவர் கிளத்தல் கிளியின தியல்பே.'
' எந்நிறந் தோய்தற்கு மேற்ப தாதல்--நன்னிறத் தியல்பென நாடினர் கொளலே.'
' நல்லவை யகத்திட்டு நவைபுறத் திடுவது--நெய்*யரி மாண்பென நினைதல் வேண்டும்.'
' குழுவுபடூஉப் புறந்தருதல் குஞ்சரத் தியல்பே.'
' பிறந்த ஒலியின் பெற்றியோர்ந் துணர்தல்--சிறந்த ஆனேற்றின் செய்தி யென்ப.'

இனிக் கற்பிக்கப்படாதோர் எண்வகையர்:

'மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன்
அடுநோய்ப் பிணியாளன் ஆறாச் சினத்தன்
தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர்
நெடுநூலைக் கற்கலா தார்,'

என இவர்.

இவர் தன்மை,

'குரங்கெறி விளங்காய் எருமை யாடே
தோணி2 யென்றாங் கிவையென மொழிப.'

இதனான் அறிக.
-------
2. 'கல்லா லெறிந்து கருதுபயன் கொள்வோன்--குரங்கெறி விளங்கா யாமெனக்
கூறுப.'
' விலங்கி வீழ்ந்து வெண்ணீ ருழக்கிக்--கலங்கல்செய் தருந்தல் காரா மேற்றே.'
' ஒன்றிடை யார உறினுங் குளகு--சென்றுசென் றருந்தல யாட்டின் சீரே.'
'நீரிடை யன்றி நிலத்திடை ஓடரச் - சீருடை யதிவே தோணி யெனப்.'

இவருட் களங்கடியப்பட்டார்:

'மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார்
படிறு பலவுரைப்பார் பல்கால் நகுவார்
திரிதரு நெஞ்சத்தார் தீயவை ஒர்ப்பார்
கடியப்பட்டாரவாயின் கண்.'

இனிக் கோடன் மரபு;

' கோடன் மரபு கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
முன்னும்3 பின்னும்4 இரவினும் பகலினும்
அகலா னாகி அன்பொடு கெழீஇக்
குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின்
றாசர உணர்ந்தோன் வாவென வந்தாங்
கிருவென இருந்தே டவிழென அவிழ்த்துச்
சொல்லெனச் சொல்லிச் செல்லெனச் சென்று
பருகுவ னன்ன ஆர்வத்த னாகிச்
சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச்
செவிவா யாக நெஞ்சுள னாகக்
கேட்டவை கேட்டவை வல்ல னாகிப்
போற்றிக் கோடல் அதனது பண்பே.'

-----
3. முன்னும்--ஆசிரியன் இருக்கும்போது முன்னாலும்.
4. பின்னும்--ஆசிரியன் செல்லும்போது பின்னாலும்.

' எத்திறம் ஆசான் உவக்கும் அத்திறம்
அறத்தில் திரியாப் படர்ச்சிவழி பாடே.'

' செவ்வன் தெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கின்றான்
பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதுங் காதலான்
தெய்வத்தைப் போல மதிப்பான் திரிபில்லான்
இவ்வாறு மாண்பு முடையார்க் குரைப்பவே
செவ்விதின் நூலைத் தெரிந்து.'

' வழக்கி னிலக்கணம் இழுக்கின் றறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தலென் றின்னவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்.'

' அனையன் அல்லோன் கேட்குவ னாயின்
வினையின் உழப்பொடு பயன்றலைப் படாஅன்.'

' அனையன் அல்லோன் அம்மர பில்லோன்
கேட்குவ னாயிற் கொள்வோ னல்லன்.'

இவற்றான் உணர்க.

இம்மாணாக்கன் முற்ற உணர்ந்தானாமாறு,

' ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே.'

' முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.'

' ஆசா னுரைத்த தமைவரக் கொளினுங்
காற்கூ றல்லது பற்றல னாகும்.'

' அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபாற்
செவ்விதி னுரைப்ப அவ்விரு பாலும்
மையறு புலமை மாண்புநனி யுடைத்தே.'

'பிறர்க்குரை யிடத்தே நூற்கலப் பாகுந்
திறப்பட உணருந் தெளிவினோர்க்கே.'

இவற்றான் அறிக. பொதுப்பாயிரம் முற்றிற்று.

{சிறப்புப் பாயிரம்]

இனிச் சிறப்புப்பாயிரமாவது தன்னால் உரைக்கப்படும் நூற்கு இன்றி யமையாதது. அது பதினொருவகையாம்.

------------------
'ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.'

'காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே.'

இப்பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெறப்பட்டன.
-------

இனிச் சிறப்புப்பாயிரத் திலக்கணஞ் செப்புமாறு :

'பாயிரத் திலக்கணம் பகருங் காலை
நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி
யாசிரிய மானும் வெண்பா வானு
மருவிய வகையா னுவறல் வேண்டும்.'

இதனான் அறிக.

நூல்செய்தான் பாயிரஞ் செய்தானாயிற் றன்னைப் புகழ்ந்தானாம்.

'தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந்
தான்றற் புகழ்த றகுதி யன்றே.'

என்பவாகலின்.

பாயிரஞ்செய்வார் தன்ஆசிரியருந் தன்னோடு ஒருங்கு கற்ற ஒருசாலை மாணக்கருந் தன் மாணாக்கருமென இவர். அவருள் இந்நூற்குப் பாயிரஞ் செய்தார் தமக்கு ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார்.

இதன் பொருள் : வடவேங்கடந் தென்குமரி ஆயிடை - வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமாகிய அவ்விரண் டெல்லைக்குள்ளிருந்து, தமிழ் கூறும் நல் உலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆ இரு முதலின் - தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது 1வழக்குஞ் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு - அவர் கூறுஞ் செந்தமிழ் இயல்பாகப் பொருந்திய செந்தமிழ்நாட்டிற்கு இயைந்த வழக்கோடே முன்னையிலக்கணங்கள் இயைந்தபடியை முற்றக்கண்டு, முறைப்பட எண்ணி - அவ்விலக்கணங்களெல்லாஞ் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோர்க்கு அறியலாகாமையின் யான் இத்துணை வரையறுத்து உணர்த்துவலென்று அந்நூல்களிற் கிடந்தவாறன்றி அதிகார முறையான் முறைமைப்படச் செய்தலை எண்ணி, எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி - அவ்விலக்கணங்களுள் எழுத்தினையுஞ் சொல்லினையும் பொருளினையும் ஆராய்ந்து, போக்கு அறுபனுவல் - பத்துவகைக் குற்றமுந் தீர்ந்து முப்பத்திரண்டு வகை

----------
1. சிவஞானமுனிவர், 'வழக்கினையுஞ் செய்யுளினையும் ஆராய்ந்த பெரிய காரணத்தானே' என உரைகூறி 'நச்சினார்க்கினியார் முதலென்பதனைப் பெயரடியாற்பிறந்த முதனிலைவினைப் பெயராகக்கொண்டு முதலுதவினாலென உரைப்பர் ;
இருமுதலென்னும் தொகைச்சொல் அங்ஙனம் பக்கிசைத்தல் பொருந்தாமை அறிக' எனத் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் கூறியது காண்க.
--------

உத்தியொடு புணர்ந்த இந்நூலுள்ளே, மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டிப் புலந்தொகுத்தோனே - அம்மூவகையிலக்கணமும் மயங்கா முறைமையாற் செய்கின்றமையின் எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டிப் பின்னர் ஏனை யிலக்கணங்களையுந் தொகுத்துக் கூறினான், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து - மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின் கண்ணே, அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு அரில் தபத் தெரிந்து - அறமேகூறும் நாவினையுடைய நான்கு வேதத்தினையும் முற்ற அறிந்த அதங்கோடென்கிற ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, மல்குநீர்வரைப்பின் ஐந்திரம்நிறைந்த தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி - கடல் சூழ்ந்த உலகின்கண்ணே ஐந்திரவியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியினுள்ளோனெனத் தன்பெயரை மாயாமல் நிறுத்தி, பல்புகழ் நிறுத்த படிமை யோனே - பல புகழ்களையும் இவ்வுலகின் கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தையுடையோன் ; என்றவாறு.

இருந்து தமிழைச் சொல்லும் என்க; கொள்ளுகையினாலே பொருந்திய நாடு என்க ; கண்டு எண்ணி ஆராய்ந்து தன்னூலுள்ளே தொகுத்தான் அவன் யாரெனின் அவையின்கண்ணே கூறி உலகின் கண்ணே தன் பெயரை நிறுத்திப் புகழை நிறுத்திய படிமையோன் என்க.

இப்பாயிரமுஞ் செய்யுளாதலின் இங்ஙனம் மாட்டுறுப்பு நிகழக் கூறினார். இதற்கு இங்ஙனங் கண்ணழித்தல் 1உரையாசிரியர் கருத்தென்பது அவருரையான் உணர்க.
------------
1. உரையாசிரியரென்றது தொல்காப்பியத்திற்கு முதன்முதல் உரைசெய்த இளம்பூரண அடிகள். அன்றி, வேறொருவர் என்பாருமுளர். அதுவே எமது கருத்தும்.


இனி மங்கலமரபிற் காரியஞ்செய்வார் வடக்குங் கிழக்கும் நோக்கியுஞ் சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசையை முற்கூறினார், இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி. தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கியுங் கருமங்கள் செய்வாராதலின் தென்றிசையைப் பிற்கூறினார். நிலங்கிடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார். குமரியுந் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார். இவ்விரண்டினையுங் காலையே ஓதுவார்க்கு நல்வினை யுண்டாமென்று கருதி இவற்றையே கூறினார். இவையிரண்டும் அகப்பாட்டெல்லையாயின. என்னை ? குமரியாற்றின் தெற்கு நாற்பத் தொன்பது நாடு கடல்கொண்டதாகலின். கிழக்கும் மேற்குங் கட லெல்லையாக முடிதலின் வேறெல்லை கூறாராயினார். வேங்கடமுங் குமரியும் யாண்டைய என்றால் வடவேங்கடந் தென்குமரியென வேண்டுதலின் அதனை விளங்கக் கூறினார்.

உலகமென்றது பலபொருளொருசொல்லாகலின் ஈண்டு உயர்ந்தோரை உணர்த்திற்று, உலகம்அவரையே கண்ணாகவுடைமையின் என்னை?

"வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான" (மரபியல். 92)

என மரபியலுட் கூறுதலின். அவ்வுயர்ந்தோராவார் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாருந் தலைச்சங்கத்தாரும் முதலாயினோர். உலகத்து -உலகத்தினுடைய என விரிக்க.

வழக்காவது சிலசொற் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த்திற்று, இது வீட்டை உணர்த்திற்று, என்று உணர்விப்பது.

செய்யுளாவது "பாட்டுரைநூலே" (செய்யுளியல்-78) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தாற் கூறிய ஏழு நிலமும்1 அறம் முதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது. முதலினென்றது முதலுகையினாலே என்றவாறு

எழுத்தென்றது யாதனை யெனின், கட்புலனாகா உருவுங்2 கட்புலனாகிய வடிவு3 முடைத்தாக வேறுவேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையையாம். கடலொலி சங்கொலி முதலிய ஓசைகள் பொருளுணர்த்தாமையானும் முற்கு வீளை இலதை முதலியன பொருளுணர்த்தினவேனும் எழுத்தாகாமையானும் அவை ஈண்டுக் கொள்ளா ராயினார். ஈண்டு உருவென்றது மனனுணர்வாய் நிற்குங் கருத்துப்பொருளை. அது செறிப்பச் சேறலானுஞ்4 செறிப்ப வருதலானும்5 இடையெறியப்படுத லானும்6 இன்பதுன்பத்தை யாக்கலானும்7 உருவும் உருவுங் கூடிப்பிறத்த லானும்8 உந்தி முதலாகத் தோன்றி எண்வகை நிலத்9தும் பிறந்து கட்புலனாந் தன்மை யின்றிச் செவிக்கட் சென்று உறும் ஊறுடைமையானும் விசும்பிற் பிறந்து இயங்குவதோர் தன்மையுடைமையானுங் காற்றின் குணமாவதோர் உரு வாம். வன்மை மென்மை இடைமை கோடலானும் உருவே யாயிற்று. இதனைக் காற்றின் குணமேயென்றல் இவ்வாசிரியர் கருத்து. இதனை விசும்பின் குணமென்பாரும் உளர்.
--------
1 ஏழு நிலம்-பாட்டு. உரை. நூல். வாய்மொழி. பிசசி. அங்கதம். முதுசொல் என்பன
2 கட்புலனாகா உரு-ஒலி வடிவம்
3 கட்புலனாகியவடிவு-வரிவடிவம்
4 செறிப்பச்சேறல்-குழலிற்போல செலுத்தச் செல்லுதல்
5 செறிப்ப வருதல்-குடத்திற்போல செலுத்த மீண்டும் வருதல்
6 இடையெறியப்படுதல்-வெளியிடத்தில் வீசப்படுதல்
7 இன்பதுன்பத்தை யாக்குதல் முறையே மென்மை வன்மையால்
8 உருவும் உருவும் கூடிப்பிறத்தல்-உயிர்வடிவும் மெய்வடிவும் கூடிப்பிறத்தல்
9 எண்வகை நிலம்-தலை, மிடறு, நெஞ்சு, பல, இதழ், நா, மூக்கு, அண்ணம் என்பன
-------

இவ்வுரு 'உரு வுருவாகி' (எழு - 17) எனவும் 'உட்பெறு புள்ளி உருவா கும்மே' (எழு - 14) எனவுங் காட்சிப்பொருட்குஞ் சிறுபான்மை வரும். வடிவாவது கட்புலனாகியே நிற்கும். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும், மனத்தான் உணரும் நுண்ணுணர்வில்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறுவேறு வடிவங் காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவம் உடையவாயின. இதற்கு விதி 'உட்பெறு புள்ளி உருவா கும்மே' (எழு - 14) என்னுஞ் சூத்திரம் முதலியனவாம். இவற்றாற் பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். 'எகர ஒகரத் தியற்கையு மற்றே' (எழு - 16) என உயிர்க்குஞ் சிறுபான்மை வடிவு கூறினார்.

இனித் தன்னை உணர்த்தும் ஓசையாவது தன் பிறப்பையும் மாத்திரையையுமே அறிவித்துத் தன்னைப் பெற நிகழும் ஓசை.

சொற்கு இயையும் ஓசையாவது ஓரெழுத்தொருமொழி முதலியவாய் வரும் ஓசை.

இனிச் சொல்லென்றது யாதனை யெனின், எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையையும் ஒருவன் உணர்தற்கு நிமித்தமாம் ஓசையை. இவ்வுரைக்குப் பொருள் சொல்லதிகாரத்துட் கூறுதும். ஈண்டு 'டறலள' (எழு - 23) என்னுஞ் சூத்திர முதலியவற்றான் மொழியாக மயங்கு கின்றனவும் அவ்வாக்கத்தின்கண் அடங்குமென்று உணர்க. எழுத்துச் சொற்கு அவயவமாதலின் அதனை முற்கூறி அவயவியாகிய சொல்லைப் பிற்கூறினார்.

இனிப் பொருளென்றது யாதனை யெனின் சொற்றொடர் கருவியாக உணரப்படும் அறம்பொருளின்பமும் அவற்றது நிலையும் நிலையாமையுமாகிய அறுவகைப்பொருளுமாம். அவை பொருளதிகாரத்துட் கூறுதும்.

வீடு கூறாரோ எனின், அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறுதலன்றி வீட்டின் தன்மை இலக்கணத்தாற் கூறாரென்றுணர்க.
அஃது,
'அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கும் உரிய வென்ப.' (செய்யு - 106)
என்பதனான் உணர்க. இக்கருத்தானே வள்ளுவனாரும் முப்பாலாகக் கூறி மெய்யுணர்தலான் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறினார்.

செந்தமிழ் - செவ்விய தமிழ்.

முந்துநூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசைநுணுக்கமும். அவற்றுட்கூறிய இலக்கணங்களாவன எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன இயலுஞ் சோதிடமுங் காந்தருவமுங் கூத்தும் பிறவுமாம்.

புலம் என்றது இலக்கணங்களை.

பனுவ லென்றது அவ்விலக்கணங்களெல்லாம் அகப்படச் செய்கின்றதோர் குறியை. அவை இதனுட் கூறுகின்ற உரைச்சூத்திரங்களானும் மரபியலானும் உணர்க.

பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவுமிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற் கெல்லாங் குற்றந்தீர விடைகூறுதலின் 'அரில்தப' என்றார்.

அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி ' நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க' என்று கூறுதலானும், தொல்காப்பியனாரும் பல்காலுஞ் சென்று 'யான் செய்த நூலை நீர் கேட்டல்வேண்டும்' என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றங் கூறிவிடுவ லெனக் கருதி அவர் கூறிய கடாவிற் கெல்லாம் விடை கூறுதலின், 'அரில்தபத் தெரிந்து' என்றார்.

அவர் கேளன்மினென்றதற்குக் காரண மென்னை யெனின், தேவரெல்லாருங் கூடி யாஞ் சேரவிருத்தலின் மேருந் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது, இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரிய ரென்று அவரை வேண்டிக் கொள்ள, அவருந் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபாமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப், பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி ' நீ சென்று குமரியாரைக் கொண்டுவருக' எனக் கூற, அவரும் எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவலென்றார்க்கு, 'முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகல நின்று கொண்டுவருக' வென அவரும் அங்ஙனங் கொண்டு வருவழி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டு போகத், தொல் காப்பியனார் கட்டளை யிறந்து சென்று ஒர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட,
அதுபற்றி யேறினார்;

அது குற்ற மென்று அகத்தியனார் குமரியாரையுந் தொல்காப்பியனாரையுஞ் ' சுவர்க்கம் புகாப்பிர்' எனச் சபித்தார்; ' யாங் கள் ஒரு குற்றமுஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெரு மானும் சுவர்க்கம் புகாப்பிர்' என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேளற்க என்றாரென்க.

நான்கு கூறுமாய் மறைந்தபொருளும் உடைமையான் 'நான்மறை' என்றார். அவை தைத்திரியமும் பௌடிகமுந் தலவகாரமுஞ் சாமவேதமு மாம். இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் என்பாரு முளர். அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேதவியாசர் சின் னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச்
செய்தாராகலின்,

முற்கூறிய நூல்கள் போல எழுத்திலக்கணமுஞ் சொல்லிணக்கணமும் மயங்கக் கூறாது வேறோர் அதிகாரமாகக் கூறினார் என்றற்கு ' எழுத்து முறைகாட்டி' என்றார்.

வரைப்பின்கண்ணே தோற்றி நிறுத்த என்க.
இந்திரனாற் செய்யப்பட்டது ஐந்திரம் என்றாயிற்று.

பல்புகழாவன, ஐந்திரநிறைதலும் அகத்தியத்தின்பின் இந்நூல் வழங்கச் செய்தலும் அகத்தியனாரைச் சபித்த பெருந்தன்மையும் ஐந்தீ நாப்பண் நிற்றலும் நீர்நிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான் மிகுதலும் பிறவுமாம்.

படிமை - தவவேடம்.

'வடவேங்கடந் தென்குமரி' என்பது கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்த சொற்சீரடி.1 'ஆயிடை' என்பது வழியசை புணர்ந்த சொற்சீரடி.2 'தமிழ்கூறு நல்லுலகத்து' என்பது முட்டடி3 யின்றிக் குறைவு சீர்த்தாய சொற்சீரடி. இங்ஙனஞ் சொற்சீரடியை முற்கூறினார், சூத்திர யாப்பிற்கு இன்னோசை பிறத்தற்கு. என்னை? 'பாஅ வண்ணஞ், சொற் சீர்த் தாகி நூற்பாற் பயிலும்' (செய்யு - 215)என்றலின். ஏனை அடிக ளெல்லாஞ் செந்தூக்கு.4

வடவேங்கடந் தென்குமரி யெனவே எல்லையும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி யெனவே நுதலிய பொருளும் பயனும் யாப்பும், முந்து நூல்கண்டெனவே வழியும், முறைப்பட எண்ணி யெனவே காரணமும், பாண்டியன் அவையத் தெனவே காலமுங் களனும், அரில்தபத் தெரிந்தெனவே கேட்டோரும், தன் பெயர் தோற்றி யெனவே ஆக்கியோன் பெயரும் நூற் பெயரும் பெறப்பட்டன.

தொல்காப்பியம் என்பது மூன்று உறுப்5படக்கிய பிண்டம்.6 பொருள் கூறவே அப்பொருளைப் பொதிந்த யாப்பிலக்கணமும் அடங்கிற்று, நூறு காணங் கொணர்ந்தானென்றால் அவை பொதிந்த கூறையும் அவை யென அடங்குமாறுபோல.
-------------------------
1 சொற்சீரடி - அசையாலமைந்த சீரால் அடியாக்காது சொல்லையே சீராகக்கொண்டு
அதனாலடியாக்குவது.
2 வழியசை புணர்ந்த சொற்சீரடி - 'தனியசை யன்றிப் பல அசை புணர்க்கப்பட்டு வருஞ் சொற்சீரடி' என்பது நச்சினார்க்கினியம். 'ஒரு சீர்க்கண்ணே பிறிதுமொரு சீர் வரத் தொடர்வதோர் அசையைத் தொடுப்பது' என்பது இளம்பூரணம்.
3 முட்டடி - தூக்குப்பட்டு முடியும் நாற்சீரடி.
4 செந்தூக்கு - நாற்சீரும் நிரம்பிவரும் அடியாலாகும் ஓசை.
5 மூன்றுறுப்பு - நூற்பா (சூத்திரம்), ஒத்து, படலம் என்பன.
6 பிண்டம் - தொகுதி அல்லது திரட்டு.

இனி இவ்வாறன்றிப் பிறவாறு கண்ணழிவு கூறுவாரும் உளராலெனின், வேங்கடமுங் குமரியும் எல்லையாகவுடைய நிலத்திடத்து வழங்குந் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்கள் வழக்குஞ் செய்யுளும் என்றாற் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டினும் வழங்குந் தமிழ்மொழி யினைக் கூறுவாரை நன்மக்களென்றார் என்று பொருள் தருதலானும், அவர் கூறும் வழக்குஞ் செய்யுளுங் கொண்டு எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்தல் பொருந்தாமையானும், அவர் கூறும் வழக்குஞ் செய்யுளுமாகிய இருகாரணத்தானும் எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்தாரெனின் அகத்தியற்கு மாறாகத் தாமும் முதனூல் செய்தாரென்னும் பொருள் தருதலானும், அங்ஙனங் கொடுந்தமிழ் கொண்டு இலக்கணஞ் செய்யக் கருதிய ஆசிரியர் குறைபாடுடைய வற்றிற்குச் செந்தமிழ் வழக்கையும் முந்துநூலையும் ஆராய்ந்து முறைப்பட எண் ணினாரெனப் பொருள் தருதலானும் அது பொருளன்மை உணர்க. இன்னும் முந்துநூல் கண்டுமுறைப்பட எண்ணி யென்றதனானே முதல்வன் வழிநூல் செய்யு மாற்றிற்கு இலக்கணங் கூறிற்றிலனேனும் அவன் நூல் செய்த முறைமை தானே பின்பு வழிநூல் செய்வார்க்கு இலக்கணம் என்பது கருதி இவ்வாசிரியர் செய்யுளியலிலும் மரபியலிலும் அந்நூல் செய்யும் இலக்கணமும் அதற்கு உரையுங் காண்டிகையுங் கூறும் இலக்கணமுங் கூறிய அதனையே ஈண்டுங் கூறினாரென்று உணர்க. அவை அவ்வோத்துக்களான் உணர்க.

'யாற்ற தொழுக்கே தேரைப் பாய்வே
சீய நோக்கே பருந்தின் வீழ்வென்று
ஆவகை நான்கே கிடக்கை முறையே.'

'பொழிப்பே அகலம் நுட்பம் எச்சம் எனப்
பழிப்பில் சூத்திரம் பன்னல் நான்கே.'

'அவற்றுள்
பாடங் கண்ணழி வுதாரணம் என்றிவை
நாடித் திரிபில ஆகுதல் பொழிப்பே.'

'தன்னூல் மருங்கினும் பிறநூல் மருங்கினுந்
துன்னிய கடாவின் புறந்தோன்றும் விகற்பம்
பன்னிய அகலம் என்மனார் புலவர்.'

'ஏதுவின் ஆங்கவை துடைத்தல் நுட்பம்.'

'துடைத்துக் கொள்பொருள் எச்சம் ஆகும்.'

'அப்புலம் அரில்தப அறிந்து முதனூற்
பக்கம் போற்றும் பயன்தெரிந் துலகந்
திட்ப முடைய தெளிவர வுடையோன்
அப்புலம் படைத்தற் கமையும் என்ப.'

'சூத்திரம் உரைஎன் றாயிரு திறத்தினும்
பாற்படத் தோற்றல் படைத்த லென்ப
நூற்பயன் உணர்ந்த நுண்ணி யோரே.'

இவற்றை விரித்து உரைக்க.

சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
--------

தொல்காப்பியம் : 1. எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினயிருரை.

1. நூன்மரபு (1-33 )
[எழுத்தின் இலக்கணம் என்பது இதன் பொருள்; ஆடைக்கு நூல் உறுப்பாதல்
போல மொழிக்கு உறுப்பாகிய எழுத்து இங்கு நூல் எனப் பட்டது.)
எழுத்துக்களின் வகை.

அவற்றின் பெயர் முதலியன
1. எழுத்தெனப் படுப,
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப;
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

என்பது சூத்திரம்.

இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின் எழுத்திலக்கணம் உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்தை உணர்த்திய அதிகாரம் என விரிக்க. அதிகாரம் - முறைமை.

எழுத்து உணர்த்துமிடத்து எனைத்து வகையான் உணர்த்தினாரோவெனின் எட்டு வகையானும் எட்டிறந்த பலவகாயானும் உணர்த்தினார் என்க.

எட்டு வகைய என்பார் கூறுமாறு :- எழுத்து இனைத்(1)தென்றலும் இன்ன பெயரின என்றலும் இன்ன முறையின என்றலும் இன்ன அளவின என்றலும் இன்ன பிறப்பின என்றலும் இன்ன புணர்ச்சியின என்றலும் இன்ன வடி(2)வின என்றலும் இன்ன தன்மையின என்றலுமாம். இவற்றுள் தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும்.
-----
(1) இனைத்து - இத்தனை. (2) வடிவு - ஒலி வடிவு.

எழுத்து இனைத்தென்றலைத் தொகை வகை விரியான் உணர்க. முப்பத்துமூன்று என்பது தொகை. உயிர் பன்னிரண்டும் உடம்பு பதினெட்டுஞ் சார்பிற் றோற்றம் மூன்றும் அதன் வகை. அளபெடை யேழும் உயிர்மெய் இருநூற்றொருபத்தாறும் அவற்றோடுங் கூட்டி இருநூற்றைப் பத்தாறெனல் விரி.

இனி எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் இச்சூத்திரத்தாற் பெற்றாம். வகை "ஔகார இறுவாய்' (எழு - 8) என்பதனானும் 'னகார இறுவாய்' ( எழு - 9) என்பதனானும் 'அவைதாங், குற்றியலிகரங் குற்றியளுகரம்' (எழு - 2) என்பதனானும் பெற்றாம். விரி 'குன்றிசை மொழிவயின்' (எழு - 41) என்பதனானும் 'புள்ளியில்லா' (எழு -17) என்பதனானும் பெற்றாம்.

அளவு அவற்றுள் 'அ இ உ' (எழு -3) என்பதனானும் 'ஆ ஈ ஊ' (எழு 4) என்பதனானும் 'மெய்யின் அளபே' (எழு - 11) என்பதனானும் 'அவ்வியல் நிலையும்' (எழு -12) என்பதனானும் பெற்றாம்.

பிறப்பு பிறப்பியலுட் பெற்றாம்.

புணர்ச்சி 'உயிரிறு சொல்முன்' (எழு -107) என்பதனானும் 'அவற்றுள்,
நிறுத்த சொல்லின்' (எழு - 108) என்பதனானும் பிறவாற்றானும் பெற்றாம்.

இனி எட்டிறந்த பல்வகைய என்பார் கூறுமாறு:-- எழுத்துக்களது குறைவுங்1 கூட்டமும்2 பிரிவும்3 மயக்கமும்4 மொழியாக்கமும்5 நிலையும்6 இனமும் ஒன்று பல வாதலுந்7 திரிந்ததன்றிரிபு அது என்றலும்8 பிறிதென்றலும்9 அதுவும் பிரிது மென்றலும்10 நிலையிற் றென்றலும்11 நிலையா தென்றலும்12 நிலையிற்றும் நிலையாதும்13 என்றலும் இன்னோரன்ன பலவுமாம்.
-------
    1 குறைவு - மாத்திரைக் குறுக்கம்.
    2. கூட்டம் - உயிரும்மெய்யுங் கூடுதல்.
    3. பிரிவு - கூடின உயிரும் மெய்யும் பிரிந்து நிற்றல்.
    4. மயக்கம் - எழுத்துக்கள் அடுத்து நிற்றல்.
    5. மொழியாக்கம் - எழுத்தாற் சொல்லாதல்.
    6. நிலை - எழுத்துக்கள் சொல்லின் மூவிடத்தும் நிற்றல்.
    7. ஒன்று பலவாதல் - ' செம்பொன்பதின்பலம்' என்றாற் போன்ற பல பொருட் சொற்றொடரில் ஒரே யெழுத்து பொருள்தொறும் வேறாதல்.
    8. திரிந்ததன் திரிபு அது என்றல் - லகரம் றகரமாகும் என முதலிற் கூறிப் பின்பு அவலகரமே ஆய்தமாகும் என்றாற்போல, ஓரெழுத்தை மற்றோரெழுத்தாகு மெனக் கூறிப் பின்பு அதே மற்றுமோர் எழுத்தாகும் எனக் கூறல்.
    9. திரிந்ததன் திரிபு பிறிதென்றல் - மகரவீறு கெட்டு அகரவீறானாற்போல, ஓர் ஈறு பிறிதோர் ஈறாகவே நின்று புணரும் என்றல்.
    10. திரிந்ததன் திரிபு அதுவும் பிரிதும் என்றல் - தாம் என்பது தம (தம+அ) என்று நின்றாற்போல ஓர் ஈறு இயல்பீறும் விதியீறும் ஒருங்கே பெற்றுப் புணரும் என்றல்.
    11. நிலையிற்றென்றல் - சொற்கள் பொருட் பொருத்தமுறப் புணர்வதைக் கூறல்.
    12. நிலையாதென்றல் - சொற்கள் பொருத்தமின்றிப் புணர்வதைக் கூறல்.
    13. நிலையிற்றும் நிலையாதும் என்றல் - ஒரேயீறான சொற்களில் ஒன்றற்குரிய இலக் கணத்தை இன்னொன்று பெறாதென விலக்கல்; எ -டு. பலா அக்கோடு என்றாற் போல இரா அக்காலம் என வராதென்றல்.

குறைவு ' அரையளபு குறுகல்' (எழு - 13) 'ஓரளபாகும்' (எழு - 58) என்பனவற்றாற் பெற்றாம்.

கூட்டம் 'மெய்யோடியையினும்' (எழு - 10) 'புள்ளியில்லா' (எழு - 17)
என்பனவற்றாற் பெற்றாம்.

பிரிவு 'மெய்யுயிர் நீங்கின்' (எழு - 139) என்பதனாற் பெற்றாம்.

மயக்கம் 'டறலள' (எழு - 23) என்பது முதலாக 'மெய்ந்நிலை சுட்டின்' (எழு - 30) என்பதீறாகக் கிடந்தனவற்றாற் பெற்றாம்.

மொழியாக்கம் 'ஓரெழுத்தொருமொழி' (எழு - 45) என்பதனாற் பெற்றாம்,
அவ்வெழுத்துக்களை மொழியாக்கலின்.

நிலை ' பன்னீருயிரும்' (எழு - 59) 'உயிர்மெய்யல்லன' (எழு - 60) 'உயிர் ஔ' (எழு - 69) 'ஞணநமன' (எழு-78) என்பன. இவற்றான் மொழிக்கு முதலாம் எழுத்தும் ஈறாமெழுத்தும் பெற்றாம்.

இனம் 'வல்லெழுத்தென்ப' (எழு - 19) 'மெல்லெழுத்தென்ப' (எழு - 20) 'இடையெழுத்தென்ப' (எழு - 21) 'ஔகார இறுவாய்' (எழு - 8) 'னகர இறுவாய்' (எழு - 9) என்பனவற்றாற் பெற்றாம். இவற்றானே எழுத்துக்கள் உருவாதலும் பெற்றாம். இவ்வுருவாகிய ஓசைக்கு ஆசிரியர் வடிவு கூறாமை உணர்க; இனி வரிவடிவு கூறுங்கால் மெய்க்கே பெரும் பான்மையும் வடிவு கூறுமாறு உணர்க.

ஒன்று பலவாதல் 'எழுத்தோரன்ன' (எழு - 141) என்பதனாற் பெற்றாம்.

திரிந்ததன் றிரிபது என்றல் 'தகரம் வருவழி' (எழு - 369) என்பதனானும் பிறாண்டும் பெற்றாம்.

பிறிதென்றல் 'மகர இறுதி' (எழு - 310) 'னகார ஈறு' (எழு - 332) என்பனவற்றாற் பெற்றாம்.

அதுவும் பிறிதுமென்றல் 'ஆற னுருபின் அகரக் கிளவி' (எழு - 115) என்பதனாற் பெற்றாம்.

நிலையிற்றென்றல் 'நிறுத்த சொல்லின் ஈறாகு' (எழு - 108) என்பதனாற் பெற்றாம்.

நிலையாதென்றல் நிலைமொழியது ஈற்றுக்கண்ணின்றும் வருமொழியது முதற்கண்ணின்றும் புணர்ச்சி தம்முள் இலவாதல். அது 'மருவின் தொகுதி' (எழு - 111) என்பதனாற் பெற்றாம்.

நிலையிற்றும் நிலையாதும் என்றல் 'குறியதன் முன்னரும்' (எழு - 226) என்பதனாற் கூறிய அகரம் 'இரா வென் கிளவிக் ககர மில்லை' (எழு - 227) என்பதனாற் பெற்றாம்.

இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையும் என இருவகைய.

அவற்றுட் கருவி1 புறப்புறக்கருவியும் புறக்கருவியும் அகப்புறக் கருவியும் அகக்கருவியும் என நால்வகைத்து. நூன்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி.
மொழிமரபு புறக்கருவி. புணரியல் அகப்புறக்கருவி. 'எகர ஒகரம் பெயர்க் கீறாகா' என்றாற் போல்வன அகக்கருவி.

இனிச் செய்கை2யும் புறப்புறச்செய்கையும் புறச்செய்கையும் அகப்புறச் செய்கையும் அகச்செய்கையு மென நால்வகைத்து. 'எல்லா மொழிக்கும் உயிர் வருவழியே' (எழு - 140) என்றாற் போல்வன புறப்புறச்செய்கை. 'லன எனவரூஉம் புள்ளி முன்னர்' (எழு - 149) என்றாற் போல்வன புறச்செய்கை. 'உகரமொடு புணரும் புள்ளி யிறுதி' (எழு - 163) என்றாற் போல்வன அகப் புறச் செய்கை. தொகை மரபு முதலிய ஓத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாம் அகச்செய்கை. இவ்விகற்பமெல்லாம் தொகையாக உணர்க.
-------
    1 கருவி என்றது சொற்புணர்ச்சிக்குக் கருவியாகும். இலக்கணத்தை, புறப்புறம் புறம் அகப்புறம் அகம் என்பன முறையே ஒன்றினொன்று ஒன்றற்கு அணுகிய நிலையைக் குறிக்கும். புணர்ச்சிக்குக் கருவியாய், நிலைமொழியீறு பற்றிய இலக்கணங் கூறும் நூற்பா அகக்கருவி; நிலைமொழியீறும் வருமொழி முதலும் புணர்ச்சியில் அடையும் பொதுவான நிலைமைகளைக் கூறும் புணரியல் அகப்புறக் கருவி; புணர்ச்சியைக் கூறாது அதனைப் பெறும் சொற்களின் இயல்புகளைக் கூறும் மொழிமரபு புறக் கருவி; அச்சொற்கட்குக் கருவியாகும் எழுத்துக்களைப்பற்றிக் கூறும் நூன்மரபும்
    பிறப்பியலும் புறப்புறக்கருவி.
    2 செய்கையாவது புணர்ச்சி. நிலைமொழியீறு புணரும் முறை அகச்செய்கை; நிலை மொழியீறு சாரியையைப் பெறுவது அகப்புறச் செய்கை; வருமொழி முதல் அடையும் நிலைமை புறச்செய்கை; நிலைமொழியீறும் வருமொழிமுதலும் திரியாதும் கெடாதும் நின்று உடம்படு மெய்யை இடையிற் பெறுவது புறப்புறச் செய்கை.

இவ்வோத்து என்னுதலிற்றோ எனின், அதுவும் அதன் பெயருரைப்பவே அடங்கும்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் இத் தொல்காப்பியமென்னும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் நூன்மரபு என்னும் பெயர்த்தாயிற்று.

நூலென்றது நூல்போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெயராகும். அவ்வொப்பாயவாறு என்னை யெனின், குற்றங் களைந்து எஃகிய் பன்னுனைப் பஞ்சிகளை யெல்லாங் கைவன் மகடூஉத் தூய்மையும் நுண்மையுமுடையவாக ஓரிழைப் படுத்தினாற்போல 'வினையி னீங்கி விளங்கிய அறிவ' (மரபியல் - 14)னாலே வழுக் களைந்து எஃகிய் இலக்கணங்களை யெல்லாம் முதலும் முடிவும் மாறுகோளின்றாகவும், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும் உள் நின்று அகலவும், ஈரைங் குற்றமும் இன்றி ஈரைந்தழகு பெற, முப்பத்திரண்டு தந்திர உத்தியோடு புணரவும்,
'ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்
இனமொழி கிளந்த வோத்தி னானும்
பொதுமொழி கிளந்த படலத் தானும்
மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்' (செய் - 166)
ஒரு நெறிப்படப் புணர்க்கப்படூஉந் தன்மையுடைமையான் என்க. மரபு, இலக்கணம்,
முறைமை, தன்மை என்பன ஒருபொருட் கிளவி.

ஆயின் நூலென்றது ஈண்டு மூன்றதிகாரத்தினையும் அன்றே? இவ் வோத்து மூன்றதிகாரத்திற்கும் இலக்கண மாயவா றென்னை யெனின், எழுத் துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யுளிற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்துமூன்றனைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகைகோடலில் தொகை வேறாம். அளவு செய்யுளியற்கும் இவ்வதிகாரத் திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்குங் கூறிய மாத்திரை இரண்டிடத்திற்கும் ஒத்த அளவு. ஆண்டுக் கூறுஞ் செய்யுட்கு அளவுகோடற்கு ஈண்டைக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது 'அளபிறந் துயிர்த்தலும்' (எழு - 33) என்னுஞ் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியு மாற்றான் உணர்க. இன்னுங் குறிலும் நெடிலும் மூவகை யினமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறைவும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ்வதிகாரத்திற்கே உரியனவாகக் கூறியன 'அம்மூவாறும்' (எழு - 22) என்னுஞ் சூத்திரம் முதலியனவற்றான் எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின் சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாரயிற்று. இங்ஙனம் மூன்றதிகாரத்திற்கும் இலக்கணம் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணங் கூறியதாயிற்று. நூலென்றது தொல்காப்பியம் என்னும் பிண்*டத்தை. இவ்வோத்திலக்கணங்கள் எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் அளவுங் குறைவுங் கூட்டமும் இனமும் மயக்கமும் ஆம். ஏனைய இவ்வதிகாரத்துள் ஏனையோத்துக்களுள் உணர்த்துப.

அற்றேல் அஃதாக, இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்:-எழுத்தெனப் படுப-எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரமுதல் னகர இறுவாய் முப்பஃதென்ப-அகரம் முதல் னகரம் ஈறாகக் கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர், சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே- சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் அல்லாத இடத்து; என்றவாறு.

எனவே, அம்மூன்றுங் கூடியவழி முப்பத்து மூன்றென்ப. அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஔ-க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-த்-ந்-ப்-ம்-ய்-ர்-ல்-வ்-ழ்-ள்-ற்-ன் எனவரும். எனப்படுவ என்று சிறப்பித்துணர்த்துதலான் அளபெடையும் உயிர்மெய்யும் இத்துணைச் சிறப்பில; ஓசையுணர்வார்க்குக் கருவியாகிய வரிவடிவுஞ் சிறப்பிலா எழுத்தாகக் கொள்ளப்படும்.

அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றாரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார்.

படுப, படுவ. படுபவென்பது படுத்லோசையால் தொழிற் பெயராகக்
கூறப்படும். பகரமும் வகரமும் ஈண்டு நிற்றற்குத் தம்முள் ஒத்த உரிமைய
வேனும் எழுத்தெனப் படுப வெனத் தூக்கற்று நிற்குஞ் சொற்சீரடிக்குப் படுப
என்பது இன்னோசைத்தாய் நிற்றலின் ஈண்டுப் படுப வென்றே பாடம் ஓதுக.
இஃது அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல்.

அகர னகர மெனவே பெயருங் கூறினார்.

எழுத்துக்கட்கெல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் "மெய்யினியக்கம் அகரமொடு சிவணும்" (எழு-43) என்பதனாற் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்த்துஞ் சிறப்பான் னகரம் பின் வைத்தார். இனி எழுத்துக் கட்குக் கிடக்கைமுறை ஆயினவாறு கூறுதும்.

குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூறவேண்டுதலின். அன்றி இரண்டை முற்கூறினாலோ வெனின், ஆகாது; ஒன்று நின்று அதனோடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி இரண்டென்ப தொன்று இன்றாதலின். இதனான் ஒன்றுதான் பல கூடியே எண் விரிந்த தென்று உணர்க.

இனி, அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும் "அ-இ-உ அம் மூன்றுஞ் சுட்டு" (எழு-31) எனச் சுட்டுப் பொருட்டாய் நிற்கின்ற இனங் கருதி. அவை ஐம்பாற் கண்ணும் பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்களோடு பிறப்பு ஒப்புமைபற்றி, ஐகார ஔகாரங்கட்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும் பிறப்பு ஒப்புமைபற்றி ஏகார ஓகாரங்களின் பின்னர் ஐகார ஔகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடு கூடி நின்றல்லது தானாக ஓரெழுத்தொருமொழி யாகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின்பின் வைத்தார். அ-இ-உ-எ என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றன் என மெய்யோடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும் பெயர்களொடு கூடிச் சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும்.

ஒகரம் மெய்யோடுகூடியே தன்பொருள் உணர்த்துவ தல்லது தானாகப் பொருளுணர்த்தாதென்று உணர்க. இன்னும் அ-ஆ-உ-ஊ-எ-ஏ-ஒ-ஓ-ஔ என்பன தம்முள் வடிவு ஒக்கும். இ-ஈ-ஐ தம்முள் வடிவு ஒவ்வா, இன்னும் இவை அளபெடுக்குங்கால் நெட்டெழுத்தோடு குற்றெழுத்திற்கு ஓசை இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார ஊகாரங்களாதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர்மயங்கியலுட் பெறுதும்,. இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க.

இனிக் ககார ஙகாரமும் சகார ஞகாரமும் டகார ணகாரமும் தகார நகாரமும் பகார மகாரமும் தமக்குப் பிறப்புஞ் செய்கையும் ஒத்தலின் வல்லொற்றிடைய மெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதல்நாவும் முதலண்ணமும் இடைநாவும் இடையண்ணமும் நுனிநாவும் நுனியண்ணமும் இதழியைதலுமாகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக்களைக் க-ச-ட-த-ப-ங-ஞ-ண-ந-ம-ன என இம்முறையே வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் னகாரம் றகாரமாய்த் திரிதலானும் றகாரமும் னகாரமுஞ் சேரவைத்தார். இவை தமிழெழுத்தென்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடையெழுத்துக்களில் யகாரம் முன் வைத்தார், அதுவும் உயிர்கள் போல மிடற்றுப்பிறந்த வளி அண்ணங் கண்ணுற்று அடையப் பிறத்தலின். ரகாரம் அதனோடு பிறப்பு ஒவ்வாதேனுஞ் செய்கை ஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும் வகாரமும் தம்மிற் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும் கல் வலிது சொல் வலிது என்றாற்போலத் தம்மிற் சேர்ந்துவருஞ் சொற்கள் பெரும்பான்மை யென்பது பற்றி லகாரமும் வகாரமும் சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபிலவேனும் "இடையெழுத் தென்ப யரல வழள"(எழு-21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேர வைத்தார் போலும்.

அகரம் உயிரகரமும் உயிர்மெய் அகரமும் என இரண்டு. இஃது ஏனை உயிர்கட்கும் ஒக்கும். எனவே, ஓருயிர் பதினெட்டாயிற்று,.

இவ் வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியாதார். அதனை உரு வென்றே கோடும். அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடையெறியப் படுதலானும், செவிக்கட் சென்று உறுதலானும், இன்ப துன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங் கூடிப் பிறத்தலானும் தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப் பிறக்கும் என்றமையானும் உருவேயாம். அருவேயாயின் இவ்விடத்திற் கூறியன இன்மை உணர்க. அல்லதூஉம், வன்மை மென்மை இடைமை என்று ஓதினமையானும் உணர்க. உடம்பொடு புணர்த்த1 லென்னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாதல் நிலைபெற்றதென்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினாம்.
----------
    1 உடம்பொடு புணர்த்தலாவது, கூறும் இலக்கியத்திலேயே கூறவேண்டியதொன்றைக் குறிப்பாற பெறவைத்தல். எழுத்துக்கட்குப் பிறப்பிடமும் இயக்கமும் வன்மை மென்மையுங் கூறியவதனாலேயே அவற்றிற்கு உருவுண்டு என்பதைப் பெறவைத்தமை உடம்பொடு புணர்த்தலாம்.

இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூறாராயினார், அது முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவெனப் பிறர்க்கு உணர்த்துதற்கு அரிதென்பது கருதி. அவ்வடிவு ஆராயுமிடத்துப் பெற்ற பெற்ற வடிவே தமக்கு வடிவாம், குழலகத்திற் கூறிற் குழல்வடிவுங் குடத்தகத்திற் கூறிற் குடவடிவும் வெள்ளிடையிற் கூறின் எல்லாத் திசையும் நீர்த்தரங்க மும்1 போல.
-----------
    1. ஒரு நீர்நிலையிற் கல்லையிடின; வட்டமாய் அலைகள் தோன்றினாற்போல, வெள்ளிடையிற் கூறப்பட்ட ஒலியால் வட்டமான ஒலியலைகள் தோன்று மென்பதை நீர்த்தரங்கம்போல என்னும் உவமை உணர்த்திற்று.

'எல்லா மெய்யும் உருவுரு வாகி' (எழு - 17) எனவும் 'உட்பெறு புள்ளி யுருவாகும்மே' (எழு - 14) எனவும் 'மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்' (எழு - 15) எனவுஞ் சிறுபான்மை வடிவுங் கூறுவர். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங் காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவும் உடையவாயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார், உயிர்க்கு வடிவின்மையின், 'எகர ஒகரத் தியற்கையு மற்றே' (எழு - 16) எனச் சிறுபான்மை உயிர்க்கும் வடிவு
கூறினார். (1)
-------------

சார்பெழுத்துக்கள்
2. அவைதாம்,
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.

இது மேற் சார்ந்துவருமென்ற மூன்றிற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று.

இ – ள்: அவைதாம் - மேற் சார்ந்துவருமெனப் பட்டவைதாம், குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் - குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தம் என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளிவடிவுமாம்; எழுத் தோரன்ன - அவையும் முற் கூறிய முப்பதெழுத்தோடு ஒரு தன்மையவாய் வழங்கும் ;2 எ - று.

முற் கூறிய இரண்டும் உம்மை தொக்கு நின்றன. இகர உகரங் குறுகி நின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடுதலின், இவற்றை இங்ஙனங் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. சந்தனக்கோல் குறுகினாற் பிரப்பங்கோ லாகாது. அதுபோல உயிரது குறுக்கமும் உயிரே யாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும்பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார்.

2. இனி, இந்நூற்பாவுக்கு இவ்வாறு பொருள் கொள்ளாது, குற்றியலிகரமும் குற்றிய லுகரமும் ஆய்தமும் என்ற முப்பாற் புள்ளி பெற்ற எழுத்துக்களும் என்று பொருள் கூறுவர் பேராசிரியர். சிவஞான முனிவரும் இதைத் தழுவித் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட் கூறுவர், “குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் - மற்றவை தாமே புள்ளி பெறுமே" என்னும் சங்க யாப்பு (யாப் - விருத்தி : 27 ம பக.) நூற்பாவால், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் முற்காலத்தில் புள்ளி பெற்று வழங்கியமை அறியப்படும். இத்தைகைய வழக்கு இன்றும் மலையாள நாட்டிலுள்ளது.

இவற்றுட் குற்றியலுகரம் நேர்பசையும் நிரைபசையும்1மாகச் சீர்களைப் பல
வாக்குமாறு செய்யுளியலுள் உணர்க.

ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக்கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற் றென்பது உணர்த்தற்கு ஆய்த மென்ற முப்பாற்புள்ளியும் என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப2. இதற்கு வடிவு கூறினார், ஏனை ஒற்றுக்கள்போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன்றாகலின். எழுத் தியல் தழா ஓசைகள்3 போலக் கொள்ளினும் கொள்ளற்க என்றதற்கு எழுத்தேயாம் என்றார். இதனைப் புள்ளிவடிவிற் றெனவே ஏனை எழுத்துக்க ளெல்லாம் வரிவடிவினவாதல் பெற்றாம்.
--------
    1 காசு - நேர்பசை; பிறப்பு - நிரைபசை.
    2. நடுவு வாங்கியிட்டெழுதலாவது மூன்று புள்ளியா யெழுதாமல் மூன்று சிறு சுன்ன
    மாக வளைத்தெழுதல்.
    3. எழுத்தியல் தழா ஓசைகள் கடலொலியும் சங்கொலியும்போல்வன.

முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படுப முப்பஃதென்ப. எனவே, சார்ந்துவரன் மரபின் மூன்றுமே சிறந்தென, ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்தில வெனவும் பொருள்தந்து நிற்ற லின் அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கு மென்றதற்கு எழுத்தோரன்ன என்றார்.

இப்பெயர்களே பெயர். இம்முறையே முறை. தொகையும் மூன்றே. இம்மூன்று பெயரும் பண்புத்தொகை.

'அவைதாம்' 'ஆய்தமென்ற' என்பன சொற்சீரடி. (2)
-----------

1.2. மாத்திரை

ஒருமாத்திரையுடைய குற்றுயிர்
3. அவற்றுள்,
அ இ உ எ ஒ என்னும்
அப்பால் ஐந்தும்
ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப.

இது முற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு அளவுங் குறியும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அவற்றுள்-- முற்கூறிய முப்ப தெழுத்தினுள், அ-இ-உ-எ-ஒ என்னும் அப்பாலைந்தும்--அகர இகர உகர எகர ஒகரம் என்று கூறப்படும். அப்பகுதிகளைந்தும், ஓரளபு இசைக்குங் குற்றெழுத் தென்ப-- ஒரோவொன்று ஓரளபாக ஒலிக்குங் குற்றெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர். இக்காரணப்பெயர் மேல் ஆளுமாறு ஆண்டு உணர்க; எ - று.

தமக்கு இனமாயவற்றின்கணல்லது குறுமை நெடுமை கொள்ளப் படாமையின், அளவிற்பட்டு அமைந்தனவாங் குற்றெழுத்திற் குறுகி மெய் அரைமாத்திரை பெற்றதேனுங் குற்றெழுத்து எனப் பெயர் பெறாதாயிற்று, ஒருமாத்திரைபெற்ற மெய் தமக்கு இனமாக இன்மையின். குற்றெழுத் தென்பது பண்புத்தொகை.

இனி இசைப்பதும் இசையும் வேறாக உணரற்க. அது பொருட்டன்மை1.

"அவற்றுள்" "அ-இ-உ" என்பன சொற்சீரடி2. (3)
---------
    1. பொருட்டன்மை-பொருளின் தன்மை. பொருள் எழுத்து அதன் தன்மை ஒலி.
    2 இக்கூற்றினால்,
    "அவற்றுள்,
    அ இ உ
    எ ஓ என்னும் அப்பாலைந்தும்
    ஓரளபிசைக்குங் குற்றெழுத்தென்ப."
    என அடி வகுப்பதது நச்சினார்க்கினியர் கருத்தெனத் தெரிகின்றது.
-----------

இரண்டுமாத்திரை யுடைய நெட்டுயிர்
4. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும்
அப்பால் ஏழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

இதுவும் அது.

இ-ள்: ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஔ என்னும் அப்பால் ஏழும்-ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஔ என்றுசொல்லப்படும் அக்கூற்றேழும், ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப-ஒரோவொன்று இரண்டுமாத்திரையாக ஒலிக்கும் நெட்டெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர்; எ-று.

எனவே அளவுங் காரணக்குறியும் இங்ஙனம் உணர்த்தி மேல் ஆளுப. ஐகார ஔகாரங்கள் குறிய எழுத்தின் நெடியவாதற்குக் குற்றெழுத்தாகிய இனந் தமக்கின்றேனும் மாத்திரை ஒப்புமையான் நெட்டெழுத் தென்றார். "ஆ ஈ ஊ" "ஏ ஐ" என்பனவற்றெச் சொற்சீரடி யாக்குக3. (4)
------
    3 இவ்வாணையால் "ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பாலேழும்
    ஈரளபிசைக்கும் நெட்டெழுத்தென்ப" என அடி வகுப்பது நச்சினார்க்கினியர் கருத்தெனத் தெரிகின்றது
------------

ஓரெழுத்தே மூன்று மாத்திரை யாகாமை
5. மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே.

இஃது ஐயம் அகற்றியது; ஓரெழுத்து மூவளபாயும் இசைக்குங்கொல்லோ வென்று ஐயப்படுதலின்.

இ-ள். ஓரெழுத்து மூவளபு இசைத்த லின்று-ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையாக இசைத்த லின்று; எ-று.

எனவே பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்றவாறு.

எனவே, பெரும்பான்மை மூன்று மாத்திரையே பெறும் என்றார் புலவர். பல எழுத்தெனவே, நான்கு மாத்திரையும் பெறுதல் பெற்றாம்.
----------

மாத்திரை நீளுமாறு
6. நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி யெழூஉதல் என்மனார் புலவர்.

இ-ள். நீட்டம் வேண்டின்-வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவாராயின், அவ்வளபு உடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்-தாங் கருதிய மாத்திரையைத் தருதற்கு உரிய எழுத்துக்களைக் கூட்டி அம்மாத்திரைகளை எழுப்புக என்று கூறுவர் ஆசிரியர்; எ--று.

கூட்டி யெழுப்புமாறு "குன்றிசைமொழி" (எழு-41) "ஐ-ஔ என்னும்" (எழு-42) என்பனவற்றான் எழுவகைத் தெனக் கூறுப.

எடுத்துக்காட்டு: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,ஐஇ, ஓஒ, ஔஉ எனவரும் இவைமூன்று மாத்திரை பெற்றன. இவைதாம் "நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி" (எழு-43) என்ற அந்நெட்டெழுத்துக்களே அளபெடுத்தலிற் சொல்லாதல் எய்தின. இனி "அளபெடை யசைநிலையாகலு முரித்தே" (செய்யுளியல்-17) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தான் எழுத்தாந்தன்மையும் எய்திற்று.1

இதுதான் இயற்கையளபெடையுஞ்2 செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட செயற்கை யளபெடையுமாய்ச் சொற்றன்மை எய்தி நின்று அலகு பெறுமாறுங் குற்றியலிகரக் குற்றியலுகரங்கள்போல எழுத்தாந்தன்மை எய்தி அலகு பெறாது நிற்குமாறும் அச்சூத்திரத்தான் உணர்க. எனவே, எழுத்தாந் தன்மையும் உடைமையின் அளபெடையோடு கூடி எழுத்து நாற்பது3 என்றலும் பொருந்திற்று. ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின் ஈண்டுக் கூறாராயினார்.
-----------
    1 அளபெடுத்த நெட்டெழுத்துக்கள் ஏழும் தமித்துப் பொருள்தரின் சொல்லாம்;
    தராவிடின் எழுத்தாம்.
    2 இசைவிளி பண்டமாற்று முதலியவற்றில் நீண்டொலிக்கும் உலகியலளபெடையே இயற்கை யளபெடையாம். இனி மகடூஉ மரூஉ என என்றும் அளபெடுத்தே நிற்பவற்றையும் இயற்கையளபெடை யென்பர் ஒரு சார் ஆசிரியர்.
    3 முப்பத்துமூன்றெழுத்துக்களுடன் அளபெடுத்த நெடிலேழுங்ககூட நாற்பது.

அவ்வளபுடைய எனப் பன்மையாகக் கூறியவதனான் இவரும் நான்கு மாத்திரையுங் கொண்டார். என்னை? இவ்வாசிரியரை "முந்துநூல்கண்டு" என்றாராகலின். மாபுராணத்து,

"செய்யுட்க ளோசை சிதையுங்கால் ஈரளபும்
ஐயப்பா டின்றி யணையுமாம்-மைதீரொற்
றின்றியுஞ் செய்யுட் செடினொற்றை யுண்டாக்கு
குன்றுமே லொற்றளபுங் கொள்"

என்ற சூத்திரத்தான் அவர் கொண்ட நான்கு மாத்திரையும் இவ்வாசிரியர்க்கு நேர்தல்வேண்டுதலின். அது "செறாஅஅய் வாழிய நெஞ்சு" (குறள்-1200) "தூஉஉத் தீம்புகைத் தொல்விசும்பு" (மலைபடு-இறுதி வெண்பா) "பேஎஎர்த் துக்கொல்" "இலாஅஅர்க்கில்லை தமர்" (நாலடி-283) "விராஅய்ச் செய்யாமை நன்று' (நாலடி-246) 'மரீஇஇப்பின்னைப் பிரிவு' (நாலடி-220) எனச் சான்றோர் செய்யுட்கெல்லாம் நான்கு மாத்திரை பெற்றுநின்றன. அன்றி மூன்று மாத்திரை பெற்றனவேல் ஆசிரியத்தளை தட்டுச் செப்பலோசை கெடுமாயிற்று. இங்ஙனம் அளபெடாது ஆசிரியத்தளைதட்டு நிற்பன கலிக்கு உறுப்பாகிய கொச்சக வெண்பாக்கள்; அவை அன்னவன்றென
உணர்க.

கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா வோசையை அளபெடை யென்று ஆசிரியர் வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழியல்லது எண்ணெய் புலப்படாவாறு போல என்று உணர்க. இனி அளபெடையல்லாத ஓசைகளெல்லாம் இசையோசையாதலின் அவற்றை 'அளபிறந் துயிர்த்தலும்' (எழு - 33) என்னுஞ் சூத்திரத்தாற் கூறுப.
------------

மாத்திரைக்கு அளவு
7. கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே.

இது மாத்திரைக்கு அளவு கூறுகின்றது.

இ-ள்: கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை - கண்ணிமை யெனவும் நொடி யெனவும் அவ்விரண்டே எழுத்தின் மாத்திரைக்கு அளவு, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே - நுண்ணிதாக நூலிலக்கணத்தை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி; எ - று.

'என' எண்ணிற் பிரிந்து இரண்டிடத்துங் கூடிற்று. கண்ணிமை நொடி என்னும் பலபொருளொரு சொற்கள் ஈண்டுத் தொழின்மேலும் ஓசை மேலும் முறையே நின்றன. ஆசிரியர் எல்லாரும் எழுத்திற்கு இவையே அளவாகக் கூறலின் இவருங் கூறினார். இயற்கை மகன்(1) தன் குறிப்பினன்றி இரண்டிமையும் ஒருகாற் கூடி நீங்கின காலக்கழிவும் அ-எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். இக்கண்ணிமையினது பாகம் மெய்க்குஞ் சார்பிற் றோற்றத்திற்கும் இதன் பாகம் மகரக் குறுக்கத்திற்குங் கொள்க. இக்கண்ணிமை இரட்டித்து வருதல் நெடிற்கும் அது மூன்றும் நான்குமாய் வருதல் அளபெடைக்குங் கொள்க. அதுபோலவே நொடித்தற் றொழிலிற் பிறந்த ஓசையது தோற்றக்கேட்டுக் காலக்கழிவும் அ எனப் பிறந்த ஓசையது தோற்றக்கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். ஏனையவற்றிற்குங் கூறியவாறே
கொள்க.

இனி அவ்வளவைதான் நிறுத்தளத்தல், பெய்தளத்தல்(2), சார்த்தியளத்தல்(3), நீட்டியளத்தல், தெறித்தளத்தல்(4), தேங்கமுகந்தளத்தல்(5), எண்ணியளத்தல் என ஏழுவகைத்து. அவற்றுள் இது சார்த்தியளத்தலாம்.
-------
    (1) இயற்கைமகன் - உடல்நலத்தோடிருந்து இயல்பாய் இமைப்பவன்.
    (2) பெய்தளத்தல் - எண்ணெய்போன்ற நீர்ப்பொருளைப் படியில் ஊற்றியளத்தல்.
    (3) சார்த்தியளத்தல் - ஒன்றன் அளவோடு மற்றொன்றின் அளவை ஒப்பிட்டளத்தல்.
    (4) தெறித்தளத்தல் - இசைக்கருவியைப் புடைத்து அதன் ஒலியைச் செவியாற் கேட்டு மதித்தல்.
    (5) தேங்கமுகந்தளத்தல் - அரிசிபோன்றவற்றை படியால் கும்ப முகந்தளத்தல்.

கண்ணிமைக்கும் நொடிக்கும் அளவு ஆராயின் வரம்பின்றி ஓடுமென்று கருதி ‘நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவாறு’ என்று முடிந்தது காட்டலென்னும் உத்தி கூறினார். இஃது ஆணை கூறுதலுமாம். எனவே எழுத்திற்கே அளவு கூறி மாத்திரைக்கு அளவு கூறிற்றிலர். நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமையின். (7)
----------

1.3. எண் - பன்னீருயிர்

8. ஔகார இருவாய்ப்
பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப.

இது குறிலையும் நெடிலையுந் தொகுத்து வேறோர் குறியீடு கூறுகின்றது.

இ-ள்: ஔகார இறுவாய்ப் பன்னீரெழுத்தும்-அகரம் முதலாக ஔகாரம் ஈறாகக் கிடந்து பன்னிரண்டெழுத்தும், உயிரென மொழிப-உயிரென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் எ-று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதொரு குறி. மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், மெய்யி னிற்கும் உயிருந் தனியே நிற்கும் உயிரும் வேறென உணர்க. என்னை? ‘அகர முதல’ (குறள்-1) என்புழி அகரந் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின். அவ்வகரந் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையையுடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றேயாய் நிற்குந் தன்மையும் பல்லுயிர்க்குந் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்குந் தன்மையும் போல. அது அ என்ற வழியும் ஊர என விளியேற்ற வழியும் ‘அகர முதல’ என்றவழியும் மூவினங்களில் ஏறின வழியும் ஓசை வேறுபட்டவாற்றான் உணர்க. இங்ஙனம் இசைத்துழியும் மாத்திரை ஒன்றேயாம். இஃது ஏனை உயிர்கட்கும் ஒக்கும்.

ஔகார இறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. ‘அகரமுதல்’ என முற்கூறிப் போந்தமையின் ஈண்டு ஈறே கூறினார். (8)
----------

பதினென் மெய்
9. னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப.

இஃது உயிரல்லனவற்றைத் தொகுத்து ஓர் குறியீடு கூறுகின்றது.

இ-ள்: னகார இருவாய்ப் பதினென் எழுத்தும்- ககாரம் முதல் னகாரம் ஈராய்க் கிடந்த பதினெட்டு எழுத்தும், மெய்யென மொழிப-மெய்யென்னுங் குறியினையுடைய என்று
கூறுவர் புலவர் எ-று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. என்னை? பன்னீருயிர்க்குந்தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்குந் தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின்.

னகார இறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. முன்னர் னகார இறுவாயென்புழி முப்பதெழுத்திற்கும் ஈறாகுமென்றார், ஈண்டுப் பதினெட்டெழுத்திற்கும் ஈறாமென்றாராதலிற் கூறியது கூறிற்றன்று.
-------------

உயிர்மெய்க்கு அளவு
10. மெய்யோ டியையினும் உயிரியல் திரியா.

இஃது உயிர்மெய்க்கு அளவு கூறுகின்றது.

இ-ளை: உயிர் மெய்யோடு இயையினும் – பன்னீருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றன வாயினும், இயல் திரியா - தம் அளவுங் குறியும் எண்ணுந் திரிந்து நில்லா; எ-று.

இது 'புள்ளி யில்லா' (எழு - 17) என்பதனை நோக்கி நிற்றலின் எதிரது போற்றலாம். உயிரும் மெய்யும் அதிகாரப் படுதலின் ஈண்டுவைத்தார். அ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங் க என நின்ற இடத்தும் ஒக்கும்; ஆ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங்கா என நின்ற இடத்தும் ஒக்கும் என்பது இதன் கருத்து. பிறவும் அன்ன. ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை யெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய் அரைநாழியுப்பிற் கலந்துழியுங் கூடி ஒன்றரைநாழியாய் மிகாதவாறு(1) போல்வதோர் பொருட் பெற்றி யென்று கொள்வதல்லது காரணங் கூறலாகாமை உணர்க. ஆசிரியன் ஆணை என்பாரும் உளர்.

'விளங்காய் திரட்டினா ரில்லை களங்கனியைக்
காரெனச் செய்தாரு மில்.' (நாலடியார் - 103)

என்பதே காட்டினார் உரையாசிரியரும்.
---------
    (1) ஒரு நாழி நீரில் அரைநாழி யுப்பைக் கலப்பின் ஒன்றரை நாழி யாகாவிடினும் ஒரு நாழிக்குக் கூடுதல் திண்ணம். ஆதலால், இதை மெய்யோடு சேர்ந்த உயிர் உயிரளவாயே ஒலிப்பதற்கு உவமை கூறல் பொருத்தமின்று.
-----------

தனிமெய்க்கு அளவு
11. மெய்யின் அளவே அரையென மொழிப.

இது தனிமெய்க்கு அளவு கூறுகின்றது.

இ-ள்: மெய்யின் அளவே அரையென மொழிப – மெய்யினது மாத்திரையினை ஒரோவொன்று அரைமாத்திரையுடையவென்று கூறுவர் புலவர்; எ- று.

அவ் வரைமாத்திரையுந் தனித்துக் கூறிக் காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயருந் தன்மையாய் நிற்றலின். இனி அதனைச் சில மொழிமேற் பெய்து காக்கை கோங்கு கவ்வை யெனக் காட்டுப. மெய்யென்பது அஃறிணையியற் பெயராதிலின் மெய்யென்னும் ஒற்றுமை பற்றி அரை யென்றார். (11)
----------------

சார்பெழுத்துக்கு அளவு.
12. அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே.

இது சார்பிற் றோற்றத்து மூன்றற்க்கும் அளவு கூறுகின்றது.

இ-ள் : ஏனை மூன்று - சார்பிற் றோற்றத்து மூன்றும், அவ்வியல் நிலையும் - முற்கூறிய அரை மாத்திரையாகிய இயல்பின் கண்ணே நிற்கும்; எ - று.

கேண்மியா நாகு எஃகு என வரும். (12)
--------------

மகரக் குறுக்கம்.
13. அரையளவு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகுந் தெரியுங் காலை.

இது மெய்களுள் ஒன்றற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று.

இ - ள் : இசை உடன் மகரம் அரையளவு குறுகலுடைத்து - வேறோர் எழுத்தினது ஓசையின்கண் மகர வொற்று தன் அரை மாத்திரையிற் குறுகிக் கால் மாத்திரை பெறுதலை யுடைத்து, தெரியுங்காலை அருகும் - ஆராயுங் காலத்துத் தான் சிறுபான்மையாய் வரும்; எ - று.

எ - டு: போன்ம் வரும்வண்ணக்கண் என ஒரு மொழிக்கண்ணும் இரு மொழிக்கண்ணுங்கொள்க. இத் பிறன்கோட் கூறல் என்னும் உத்தி.1 (13)
---------------
    1. தொல்காப்பியர் மகரக் குறுக்கத்தை ஒரு சார்பெழுத்தாகக் கொண்டிலர். நன்னூலாரோ அதைச் சார்பெழுத்தாகக் கொண்டார். நச்சினார்கினியரும் அதைச் சார்பெழுத்தாகக் கருதிக்கொண்டு இது 'பிறன்கோட் கூறல்' என்றார்.
-----------

1.4. வடிவு.

மகரத்தின் வடிவம்.
14. உட்பெறு புள்ளி உருவா கும்மே.

இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது. மகரம் அதிகாரப்பட்டு நிற்றலின் ஈண்டுக் கூறினார்.

இ - ள் : உட்பெறுபுள்ளி - புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளாற்பெறும் புள்ளி, உருவாகும் - மகரத்திற்கு வடிவாம்; எ - று.

எனவே புறத்துப் பெறும் புள்ளியாவது மேற்சூத்திரத்தான் மெய்கட்குக் கூறும் புள்ளி. ஈண்டு உருவென்றது காட்சிப்பொருளை உணர்த்தி நின்றது.

எ - டு: கப்பி கப்பி (கம்மி) எனவரும், இஃது எதிரது போற்றல். (14)
------------

மெய்யெழுத்தின் இயல்பு.
15. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.

இது தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் ஒப்புமைமேல் வேற்றுமை செய்தல் கூறுகின்றது. என்னை? உயிர்மெய்யான ககர ஙகரங்கட்குந் தனிமெய்யான ககர ஙகரங்கட்கும் வடிவு ஒன்றாக எழுதியவற்றை ஒற்றாக்குதற்குப் பின்பு புள்ளி பெறுக என்றலின்.

இ-ள்: மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்- பதினெட்டு மெய்களின் தன்மையானது புள்ளிபெற்று நிற்றலாம்; எ-று.

எனவே உயிர்மெய்கட்குப் புள்ளியின்றாயிற்று. க்-ங்-ற்-ன் என வரும். இவற்றைப் புள்ளியிட்டுக் காட்டவே புள்ளி பெறுவதற்கு முன்னர் அகரம் உடனின்றதோர் மெய்வடிவே பெற்று நின்றனவற்றைப் பின்னர் அப்புள்ளியிட்டு தனிமெய் யாக்கின ரென்பதூஉம் பெறுதும். இதனானே ககரம் ஙகரம் முதலியன புள்ளிபெறுவதற்கு முன்னர் இயல்பாக அகரம் பெற்றே நிற்கும் என்பதூஉம் புள்ளி பெறுங்காலத்து அவ்வகரம் நீங்கும் என்பதூஉம் பின்னர் அப் புள்ளி நீங்கி உயிரேறுமிடத்துத் தன்கண் அகரம் நீங்கியே போக வருகின்றதோர் உயிர் யாதானும் ஒன்று ஏறி நிற்கும் என்பதூஉம் பெற்றாம். ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ (எழு-46) என்னுஞ் சூத்திரத்தானும் இதுவே இதற்குக் கருத்தாதல் உணர்க. (15)
------------

எகர ஒகரங்களின் இயல்பு
16. எகர ஒகரத் தியற்கையும் அற்றே.

இதுவும் அது.

இ-ள்: எகர ஒகரத்து இயற்கையும் அற்றே-எகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளிபெறும் இயல்பிற்று; எ-று.

எனவே எகார ஒகாரங்கட்குப் புள்ளி யின்றாயிற்று. எ-ஒ- என வரும். இஃது உயிர்மெய்க்கும் ஒக்கும். மகரம் ஆராய்ச்சிப்பட்டது கண்டு மகரத்திற்கு வடிவு வேற்றுமை செய்து, அதிகாரத்தான் மெய்யின் தன்மை கூறி, அதன்பின் மாட்டேற்றலின் எகர ஒகரத்தையுங் கூறினார்.
------------

உயிர்மெய்யெழுத்தின் இயல்பு
17. புள்ளி யில்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனை உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல உயிர்த்த லாறே.

இது மெய்யும் உயிருங் கூடிப் புணருமாறும் ஆண்டு அவை திரியாதுந் திரிந்தும் நிற்குமாறுங் கூறுகின்றது.

இ-ள்: புள்ளி இல்லா எல்லா மெய்யும்-உயிரைப் பெறுதற்குப் புள்ளியைப் போக்கின எல்லா மெய்களும், உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும்-புள்ளி பெறுகின்ற காலத்து இயல்பாகிய அகர நீங்கிய வடிவே தமக்கு வடிவாகி நின்று பின்னர் ஏறிய அகரத்தோடுகூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் -- ஒழிந்த பதினோருயிரோடுங்கூடி அவ் வடிவு திரிந்து ஒலித்தலும், ஆயீரியல உயிர்த்தலாறே -- என அவ்விரண்டு இயல்பினையுடைய அவை ஒலிக்கும் முறைமை; எ-று.

புள்ளியில்லா பெய்யெனவே முன்பெற்றுநின்ற புள்ளியை உயிரேற்றுதற்குப் போக்கினமை பெறுதும். உருவுருவாகியெனவே புள்ளி பெறுதற்காக இயல்பாகிய அகரம் நீங்கிய வடிவே பின்னர் அகரம் பெறுதற்கு வடவாமென்பது
கூறினார்.

க - ங - ய என வரும்.

உருவு திரிந்து உயிரத்தலாவது மேலுங் கீழும் விலங்கு பெற்றுங் கோடு பெற்றும் புள்ளிபெற்றும் புள்ளியுங் கோடும் உடன்பெற்றும் உயிர்த்தலாம். கி கீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு கூ முதலியன கீழ்விலங்கு பெற்றன. கெ கே முதலியன கோடு பெற்றன. கா ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார்.1 கொ கோ ஙொ ஙோ முதலியன புள்ளியுங் கோடும் உடன்பெற்றன. இங்ஙனந் திரிந்து ஒலிப்பவே உயிர்மெய் பன்னிருபதினெட்டு
இருநூற்றொருபத்தாறாயிற்று. ஆகவே உயிர் மெய்க்கு வடிவும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. இதனானே மெய் தனக்கு இயல்பாகிய அகரத்தை நீங்கி நிற்பதோர் தன்மையும் பிறிதோருயிரை ஏற்குந் தன்மையும் உடைய தென்பதூஉம், உயிர்மெய்க்கட் புலப்படாது இயல்பாகிய அகரமாய் நிற்குந் தன்மையும் மெய் புள்ளிபெற் றழிந்தவழி அவற்றிற்குத் தக்க உயிராய்ப் புலப்பட்டு வருந்தன்மையும் உடைய தென்பதூஉம் பெற்றாம். உயிர்மெய் என்பது உம்மைத் தொகை. (17)
-----
    1 புள்ளி முதலாவது ஒரு சிறு நட்டுக்கோடாயிருந்து பின்பு குத்தாய்க் குறுகிற்று எனபர்.
-----------

உயிர்மெய் ஒலிக்குமாறு
18. மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே.

இது மெய்யும் உயிருங் கூடியவழி அவற்றின் ஓசை நிற்கும் முறைமை கூறுகின்றது.

இ - ள் : மெய்யின் வழியது - மெய்யினது ஓசை தோன்றிய பின்னதாம், உயிர் தோன்று நிலையே -- உயிரினது ஓசை தோன்றும் நிலை; எ - று.

முன்னின்ற சூத்திரத்தான் மெய் முன்னர் நிற்ப உயிர் பின் வந்து ஏறு மென்றார். அம்முறையே ஓசையும் பிறக்கு மென்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் உப்பும் நீரும் போல ஒன்றேயாய் நிற்றலும் பெற்றும். நீர் உப்பின் குணமேயாயவாறு போல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க.

எ - டு: க - ங - ய எனக் கூட்டமும் பிரிவும் மூவகை யோசையுங் காண்க. (18)
---------------

வல்லினமெய்
19. வல்லெழுத் தென்ப க ச ட த ப ற.

இது தனிமெய்களுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது.

இ-ள்: க ச ட த ப ற - க ச ட த ப ற என்னுந் தனி மெய்களை, வல்லெழுத்தென்ப-வல்லெழுத்தென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர்; எ-று.

இஃது ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி, ஒழிந்த மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும் நோக்கித் தாம் வல்லென்றிசைத்தலானும் வல்லெனத் தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தாயிற்று. (19)
-------------

மெல்லினமெய்
20. மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன.

இதுவும் அது.

இ-ள்: ங ஞ ண ந ம ன - ங ஞ ண ந ம ன என்னுந் தனிமெய்களை, மெல்லெழுத்தென்ப--மெல்லெழுத்தென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர்; எ-று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. மெல்லென்றிசைத்தலானும் மெல்லென்று மூக்கின் வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தாயிற்று.
-----------

இடையினமெய்
21. இடையெழுத்தென்ப ய ர ல வ ழ ள.

இதுவும் அது.

இ-ள்: ய ர ல வ ழ ள -- ய ர ல வ ழ ள என்னுந் தனிமெய்களை, இடையெழுத்தென்ப--இடையெழுத்தென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர்; எ-று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. இடைநிகர்த்தாய் ஒலித்தலானும் இடைநிகர்த்தாய மிடற்றுவளியாற் பிறத்தலானும் இடை யெழுத்தாயிற்று.

வல்லினத்து க-ச-த-ப என்னும் நான்கும் மெல்லினத்துக்கு ஞ-ந-ம என்னும் மூன்றும் இடையினத்து ய-வ என்னும் இரண்டும் மொழிக்கு முதளாதல் நோக்கி இம்முறையே வைத்தார். இப்பெயரானே எழுத்தென்னும் ஓசைகள் உருவாயின. இது சார்பிற் றோற்றத்திற்கும் ஒக்கும். (21)
-----------

1.5. மயக்கம்

மெய் மயங்குமாறு
22. அம்மூ வாறும் வழங்கியல் மருங்கின்
மெய்ம்மயங்1 குடனிலை தெரியுங் காலை.

-------------
    1. (பாடம்) மெய்ம்மயக்

இது தனி மெய் பிறமெய்யோடுந் தன்மெய்யோடும் மயங்கும் மயக்கமும் உயிர்மெய் உயிர்மெய்யோடுந் தனி மெய்யோடும் மயங்கும் மயக்கமுங்
கூறுகின்றது.

இ - ள் : அவ்மூவாறும்--அங்ஙனம் மூன்று கூறாகப் பகுத்த பதினெட்டு மெய்யும், வழங்கியல் மருங்கின் -- வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் எழுத்துக்களைக் கூட்டி மொழிப்படுத்து வழங்குதல் உளதாமிடத்து, மெய் மயங்கும் நிலை -- தனி மெய் தன் முன்னர் நின்ற பிறமெய்யோடுந் தன் மெய்யோடும் மயங்கும் நிலையும், உடன்மயங்கும் நிலை -- அப்பதினெட்டும் உயிருடனே நின்று தன் முன்னர் நின்ற உயிர்மெய்யோடுந் தனி மெய்யோடும் மயங்கும் நிலையுமென இரண்டாம், தெரியுங்காலை -- அவை மயங்கும் மொழியாந் தன்மை ஆராயுங்காலத்து; எ-று.1
-----------
    1. அம்மூவாறும்......மெய்ம்மயங்குடனிலை' என்று ஆசிரியர் கூறியிருப்பதால், மெய்யொடு மெய் மயங்கும் உடனிலை
    எனவே, தனித்து நின்ற எழுத்துடன் முன்னின்ற எழுத்துக்கள் தாங் கூடுமாறு கூறினாராயிற்று. கட்க என்றால் இடை நின்ற தனிமெய் முன்னர் நின்ற தன்னின் வேறாய ககரவொற்றோடு மயங்கிற்று. காக்கை என்றால் இடைநின்ற ககரவொற்று முன்னர் நின்ற தன்னொற்றோடு மயங்கிற்று.கரு என ஈரெழுத்தொருமொழியுங் கருது என மூவெழுத்தொருமொழியும் உயிர் மெய் நின்று தன்முன்னர் நின்ற உயிர்மெய்யோடு மயங்கிற்று. துணங்கை என உயிர்மெய் நின்று தன் முன்னர் நின்ற தனிமெய்யோடு மயங்கிற்று. கல் வில் என உயிர்மெய் நின்று தனிமெய்யொடு மயங்கிற்று.

தெரியுங்காலை என்றதனான் உயிர் முன்னர் உயிர்மெய்மயக்கமும் உயிர் முன்னர்த் தனிமெய்ம் மயக்கமுங் கொள்க. அவை அளை ஆம்பல் என்றாற் போல்வன.

மெய்ம்மயக்கங்களுள் தனிமெய் முன்னர்ப் பிறமெய் நின்று மயங்குதல் பலவாதலிற் பல சூத்திரத்தாற் கூறித் தன் முன்னர்த் தான் வந்து மயங்குதலை ஒரு சூத்திரத்தாற் கூறுப. அவை மயங்குங்கால் வல்லினத்தில் டகரமும் றகரமும் மெல்லினமாறும் இடையினமாறும் பிற மெய்யொடு மயங்கு மென்றும் வல்லினத்திற் கசதபக்கள் தன் மெய்யோடன்றிப் பிற மெய்யோடு மயங்காவென்றும் உய்த்துணரக் கூறுமாறு உணர்க.

மூவாறும் என்னும் உம்மை முற்றும்மை.

இச்சூத்திரம் முதலாக 'மெய்நிலை சுட்டின்' (எழு - 30) ஈறாக மேற்கூறும் மொழிமரபிற்குப் பொருந்திய கருவி கூறுகின்றதென்றுணர்க; எழுத்துக்கள் தம்மிற் கூடி புணருமாறு கூறுகின்றதாதலின், (22)
--------------

தனிமெய் பிறமெய்யுடன் மயங்குமாறு
23. ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்க்
க ச ப என்னும் மூவெழுத் துரிய.

இது தனிமெய் பிறமெய்யோடு மயங்கும் மயக்கம் உணர்த்துகின்றது.

மெய்ம்மயக்கமும் வேற்றுநிலை மெய்ம்மயக்கமுமே குறிக்கப்பட்டனவாம். உயிர்மெய் இரட்டை யெழுத்தாதலின், அது மெய்யோடும் உயிர் மெய்யோடும்
மயங்கும் எனக் கூறுவது பொருந்தாது.

இ-ள்: டறலள என்னும்புள்ளிமுன்னர்-மொழியிடை நின்ற டறலள என்று கூறப்படும் நான்கு புள்ளிகளின் முன்னர், கசப என்னும் மூவெழுத்து உரிய-கசப என்று கூறப்படும்
மூன்றெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய: எ-று.

எ-டு: கட்க கட்சி கட்ப எனவுங் கற்க முயற்சி கற்ப எனவுஞ் செல்க வல்சி செல்ப எனவும் கொள்க. நீள்சினை கொள்ப எனவுந் தனிமெய் பிற மெய்யோடு மயங்கியவாறு காண்க. கட்சிறார் கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலின் ஈண்டைக் காகா. (23)
------------

24. அவற்றுள்,
லள ஃகான் முன்னர் ய வ வுந் தோன்றும்.

இதுவும் அது.

இ-ள்: அவற்றுள்-முற்கூறிய நான்கனுள், லளஃகான் முன்னர்-லகார ளகாரமாகிய புள்ளிகளின் முன்னர், யவவுந் தோன்றும்-கசபக்களே யன்றி யகர வகரங்களும் வந்து மயங்கும்; எ-று.

கொல்யானை செல்வம் வெள்யாறு கள்வன் என வரும்.

இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும் வெள்யாறு எனப் பண்புத்தொகையும் நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின் "மருவின் பாத்திய" என்று கூறுவராதலின் இவ்வாசிரியர் இவற்றை ஒரு மொழியாகக் கொள்வ ரென்று உணர்க. இக்கருத்தானே மேலும் வினைத் தொகையும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக்கொண்டு உதாரணங் காட்டுதும்,. அன்றி இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத் தொகைக்கண்ணும் பண்புத்தொகைக்கண்ணு மன்றி ஒருமொழிக்கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக்கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் போதே நன்றென்று கூறலும்ஒன்று. (24)
-----------

25. ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்த்
தத்தம் *இசைகள் ஒத்தன நிலையே.

இதுவும் அது.

இ-ள்: ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்-ங ஞ ண ந ம ன என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், தத்தம் இசை கள்-தமக்கினமாய் முன்னின்ற க ச ட த ப றக்கள், ஒத்தன நிலையே-பின்னிற்றற்குப் பொருந்தின மயங்கி நிற்றற்கண்; எ-று.

எ-டு: கங்கன் கஞ்சன் கண்டன் கந்தன் கம்பன் மன்றன் என வரும். தெங்கு பிஞ்சு வண்டு பந்து கம்பு கன்று எனக் குற்றுகரமுங் காட்டுப. (25)
-------------

26. அவற்றுள்,
ண னஃகான் முன்னர்க்
க ச ஞ ப ம ய வ ஏழு முரிய.

இதுவும் அது.

இ-ள்: அவற்றுள்-மேற்கூறிய மெல்லொற்று ஆறனுள், ண னஃகான் முன்னர்-ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய-ட றக்களே யன்றிக் க ச ஞ ப ம ய வ என்னும் ஏழெழுத்தும் வந்து மயங்குதற்கே உரிய; எ-று.

எ-டு: எண்கு வெண்சாந்து வெண்ஞாண் பண்பு வெண்மை மண்யாறு எண்வட்டு எனவும், புன்கு புன்செய் மென்ஞாண் அன்பு வன்மை இன்யாழ் புன்வரகு எனவும் வரும். எண்வட்டு வினைத்தொகை. எண்கு புன்கு பெயர். (26)
-------------

27 ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே

இதுவும் அது.

இ-ள்: ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்-ஞ ந ம வ என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே-யஃகான் நிற்றல் பொருண்மை பெற்றது; எ-று.

இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், அக்காலத்து ஒருமொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன.

இனி உரையாசிரியர் உரிஞ்யாது பொருந்யாது திரும்யாது தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் காட்டினாராலெனின், ஆசிரியர் ஒரு மொழியாமாறு ஈண்டுக் கூறி, அதன்கண் இருமொழிபுணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங் கூறி,அதன்கண் "மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும்" (எழு.-107) என்று கூறினார். கூறியவழிப் பின்னும் "உகரமொடு பணரும் புள்ளி யிறுதி" (எழு.163) என்றும் பிறாண்டும் ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர். ஆதலின் ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூறலென்னுங் குற்றமாம்1. அதனால் அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க. (27)
-----------
    1. மயக்கம் வேறு புணர்ச்சி வேறாதலின், ஈண்டுஇருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியதுகூறலென்னுங் குற்றமாம்" என்று நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாது.
----------

28. மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்

இதுவும் அது.

இ-ள்: மஃகான் புள்ளிமுன்-முற் கூறியவற்றுள் மகரமாகிய புள்ளி முன்னர், வவ்வுந் தோன்றும்-பகர யகரமே யன்றி வகரமும் வந்து மயங்கும்; எ-று.

இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வண்ணக்கன் என்றாற்போல்வன காட்டின் "வகார மிசையும் மகாரங் குறுகும்" (எழு- 330) என்ற விதி வேண்டாவாம்.
-------------

29. ய ர ழ என்னும் புள்ளிமுன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்.

இதுவும் அது.

இ-ள்: ய ர ழ வென்னும் புள்ளி முன்னர் -ய ர ழ என்று கூறப்படும் மூன்று புள்ளிகளின் முன்னர், முதலாகெழுத்தும்- மொழிக்கு முதலாமென மேற்கூறும் ஒன்பதெழுத்துகளும், உம்மையான் மொழிக்கு முதலாகாத பிற எழுத்துகளும் ஙகரமொடு தோன்றும்-ஙகாரமும் வந்து மயங்கும்; எ-று.

எ-டு: ஆய்க ஆர்க ஆழ்க, ஆய்தல் ஆர்தல் ஆழ்தல், ஆய்நர் ஆர்நர் ஆழ்நர், ஆய்பவை ஆர்பவை ஆழ்பவை, வாய்மை நேர்மை கீழ்மை, எய்சிலை வார்சிலை வாழ்சேரி, தெய்வம் சேர்வது வாழ்வது, பாய்ஞெகிழி நேர்ஞெகிழி வாழ்ஞெண்டு, செய்யாறு போர்யானை வீழ்யானை என மொழிக்கு முதலாம் ஒன்பதும் வந்து மயங்கின. செய்யாறு என யகரத்தின் முன்னர் யகரம் வந்தது தன்முன்னர்த் தான் வந்ததாம்.

இனி உம்மையாற் கொண்ட மொழிக்கு முதலாகாதவற்றின்கண்ணுஞ் சில காட்டுதும்: ஓய்வு சோர்வு வாழ்வு, ஓய்வோர் சோர்வோர் வாழ்வோர், ஆய்ஞர் சேர்ஞர் ஆழ்ஞர் என வரும். பிற எழுத்துகளோடு வருவன உள வேனும் வழக்குஞ் செய்யுளும் நோக்கிக் கூறிக்கொள்க.

இனி வேய்ங்ஙனம் வேர்ங்ஙனம் வேழ்ங்ஙனம் என மொழிக்கு முதலாகாத ஙகரம் இடைவந்த சொற்கள் அக்காலத்து வழங்கின என்று உணர்க, ஆசிரியர் ஓதுதலின்.இதனை "அகரமொடு தோன்றும்" எனப் பிரித்தோதினார் அக்காலத்தும் அரிதாக வழங்கலின்.

இனி வேய்கடிது வேர்கடிது வீழ்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என்பன காட்டின் அவை இருமொழியாக நிலைமொழி வருமொழி செய்து மேற்புணர்கின்றன ஈண்டைக்காகா என மறுக்க.
-----------

தனிமெய் தன்மெய்யோடு மயங்குமாறு
30 மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்துந்
தம்முற்றாம் வரூஉம் ரழவலங் கடையே.

இது நிறுத்தமுறையானே தனிமெய் தன்னொற்றொடு மயங்குமாறு கூறுகின்றது.

இ-ள்: மெய்ந்நிலை சுட்டின்-பொருணிலைமையைக் கருதின், எல்லா எழுத்தும்-பதினெட்டுமெய்யும், தம்முன் தாம் வரூஉம்-தம்முன்னே தாம் வந்து மயங்கும்,ர ழ அலங்கடையே- ரகார ழகாரங்களல்லாத இடத்து; எ-று.

எ-டு: காக்கை எங்ஙனம் பச்சை மஞ்ஞை பட்டை மண்ணைதத்தை வெந்நெய் அப்பு அம்மை வெய்யர் எல்லி எவ்வி கள்ளி கொற்றி கன்னி என வரும்.

மெய்ந்நிலை சுட்டின் என்றதனால் தனிமெய் முன்னர் உயிர்மெய் வருமென்று கொள்க. எல்லா மென்றது ரகார ழகாரங்கள் ஒழிந்தனவற்றைத் தழுவிற்று (30)
-----------

1.6. எழுத்துக்களின் பிற மரபுகள்

சுட்டெழுத்துக்கள்
31. அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு.

இது குற்றெழுத் தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது.

இ-ள்: அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு - அ இ உ என்று கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னுங் குறியினையுடைய; எ-று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி, சுட்டி அறியப்படும் பொருளை உணர்த்தலின். தன்னின முடித்தல் என்பதனான் எகரம் வினாப்பொருள் உணர்த்துதலுங் கொள்க.

எ-டு: அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எப்பொருள் என வரும். இவை பெயரைச் சார்ந்து தத்தங் குறிப்பிற் பொருள் செய்த இடைச்சொல். இச்சூத்திரம் ஒருதலைமொழித லென்னும் உத்தி1. இதுவும் மேலைச்சூத்திரமும் எழுத்தாந்தன்மை-யன்றி மொழிநிலைமைப்பட்டு வேறோர் குறிபெற்று நிற்றலின் மொழிமரபினைச் சேர வைத்தார்.. (31)
---------
    1 ஒருதலைமொழிதல்-ஓர் அதிகாரத்திற் சொல்லவேண்டிய ஒரு பொருட்கு வேறோர்
    அதிகாரத்தில் இலக்கணங்கூறி அதனையே மற்றவிடத்தும் பெறவைத்தல். சொல்லதிகாரத்திற் சொல்லவேண்டிய சுட்டை எழுத்ததிகாரத்திற் கூறி, அதையே
    சொல்லதிகாரத்திற்கும் பெறவைத்தமை காண்க.
------------

வினா வெழுத்துக்கள்
32. ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.

இது நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறு கின்றது.

இ-ள்: ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா-ஆ ஏ ஓ என்று கூறப்பட்ட அம்மூன்றும் வினா என்னுங் குறியினையுடைய; எ-று.

இதுவும்ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி., வினாப்பொருள் உணர்த்தலின்.

எ-டு: உண்கா உண்கே உண்கோ என வரும். இவற்றுள் ஆகாரம் இக்காலத்து வினாவாய் வருத லரிது. நீயே நீயோ என்பது இக்காலத்து வரும். இவற்றுள் ஏ ஓ என்பன இடைச்சொல்லோத்திலுள்ளுங் கூறினார், ஏகார ஓகாரங்கள் தரும் பொருட்டொகைபற்றி. இது மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்த லென்னும் உத்திக்கு2 இனமாம், யகரஆகாரமும் வினாவாய் வருதலின்.
------
    2 மொழிந்த பொருளோடொன்ற அவ்*வயின மொழியாததனை முட்டின்று முடித்தல்-எடுத்துக்கூறிய பொருளிலேயே அதற்கினமானதும் எடுத்துக் கூறாததுமான பொருளைப்பெறவைத்தல். "ஆ" வினாவில் "யா" வினாவையும் "ஏ" வினாவில் "எ" வினாவையும் அடக்கியது காண்க.
---------

இசைநூன் முறையில் எழுத்தொலிகள்
33. அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.

இது பிறன்கோட் கூறலென்னும் உத்திபற்றி இசைநூற்கு வருவதோர் இலக்கணமாமாறு கூறி, அவ்விலக்கணம் இந்நூற்குங் கொள்கின்றது.

இ-ள்: அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் நரம் பின் மறைய என்மனார் புலவர்-முற்கூறிய உயிரும் உயிர்மெய்யும் மாத்திரையை இறந்தொலித்தலும் ஒற்றெழுத்துக்கள் அரை மாத்திரையின் நீண்டொலித்தலும் யாழ்நூலிடத்தன என்று கூறுவர் புலவர், இசையொடு சிவணிய உளவென் மொழிப- அங்ஙனம் அளபிறந்தும் நீண்டும் இசைத்தல் ஓசையோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்களுக்கும் உளவென்று கூறுவர் ஆசிரியர்; எ-று.

எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையை இறந்தொலிக்குமாறு கண்டு, அஃது இறந்தொலிக்கும் இடங் கூறினார். எழுத்துஞ் சொல்லும் பொருளுங் கிடக்கும் இடஞ் செய்யுளிடமாதலின் . அது மிக்கொலித்தலைச் செய்யுளியலின்கண் "மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ" (செய்.-1) என இருபத்தாறு உறுப்பிற்குஞ் சிறப்புறுப்பாக முற்கூறிப், பின்னர்,

"மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு
மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர்" (செய்.-2)

என இச்சூத்திரத்தோடு மாட்டெறிந்து, பின்னும்

"எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே
குன்றலு மிகுதலு மில்லென மொழிப" (செய்-3)

என்றுங் கூறினார். இது எதிரது போற்றலென்னும் உத்தியுங் கூறிற்று.

எ-டு: "வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி" (கலி-11) என்புழி ழகர ஆகாரமும் ககர ஏகாரமும் மாத்திரை இறந் தொலித்தவாறு உணர்க. "பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவும் உரைத்தனரே" (கலி-11) என்புழி ஙகரவொற்று அளவிறந்தவாறு காண்க. ஒழிந்த மூவகைச் செய்யுட்கும் இவ்வாறே தத்தமக்குரிய பா என்னும் உறுப்பினை நடாத்தி அளவு மிகுமாறு காண்க.

சிவணிய என்பது தொழிற்பெயர்.1 இசையொடு சிவணிய எனவே செய்யுளாதல் பெற்றாம். நரம்பு என்றது ஆகுபெயராய் யாழினை உணர்த்திற்று. மறை என்றது நூலை. மொழிப என்றும் என்மனார் புலவர் என்றும் இருகாற் கூறியவதனால், இங்ஙனம் பொருள் கூறலே ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று. என்னை? செய்யுளியலுட் கூறிய "மாத்திரை யளவும்" என்னுஞ் சூத்திரத்தில் "மேற்கிளந்தன்ன" (செய்-2) என்னும் மாட்டேற்றிற்கு இவ்வோத்தினுள் வேறோர் சூத்திரம் இன்மையின். இவ்விலக்கணங் கூறாக்காற் செய்யுட்குப் பா வென்னும் உறுப்பு நிகழாது, அவை உரைச்செய்யுட் போல நிற்றலின் இவ்விலக்கணங் கூறவே வேண்டுமென்று உணர்க.
----------
    1 தொழிற்பெயர் என்றது வினையாலணையும் பெயரை.

"சூத்திரத் துப்பொரு ளன்றியும் யாப்புற
இன்றி யமையா தியைபவை யெல்லாம்
ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே" (மரபியல்-103)

என்னும் மரபியற் சூத்திரத்தானே இவ்வாறே சூத்திரங்களை நலிந்து பொருளுரைப்பன வெல்லாங் கொள்க.

நூன்மரபு முற்றிற்று.
--------------

2. மொழிமரபு
(மொழிக்கண் நின்ற எழுத்தின் இலக்கணம் உணர்த்துவது)
2.1. சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு

குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடும்
34. குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.

என்பது சூத்திரம். மேல் எழுத்து உணர்த்திய பின்னர், அவை தம்முள் தொடறுமாறும் உணர்த்தி அவ்வெழுத்தானாம் மொழியது மரபு உணர்த்து கின்றமையின், இவ்வோத்து மொழிமரபெனக் காரணப் பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம் முன்னர்ச் சார்ந்து வருமென்ற மூன்றனுட் குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடுங் கூறுகின்றது.

இ-ள்: உரையசைக் கிளவிக்கு வரூஉம்-தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முக மாக்குஞ் சொல்லிற்குப் பொருந்தவரும், ஆவயின்-அம் மியா என்னும் இடைச் சொல்லைச் சொல்லுமிடத்து, யாவென் சினைமிசை மகரம் ஊர்ந்து- யாவென்னும் உறுப்பின் மேலதாய் முதலாய் நின்ற மகரவொற்றினை யேறி, குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்-குற்றியலிகரம் நிற்றலை விரும்பும் ஆசிரியன்; எ-று.

எ-டு: கேண்மியா சென்மியா என வரும்.கேள் என்றது உரையசைக் கிளவி; அதனைச் சார்ந்து தனக்கு இயல்பின்றி நின்றது மியா என்னும் இடைச்சொல். அவ்விடைச்சொல் முதலும் அதனிற் பிரியும் யா அதற்கு உறுப்புமாம் என்று கருதி யாவென் சினை என்றார். மியா இடம்; மகரம் பற்றுக்கோடு.; யாவும் இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு. இவ்விடைச்சொல் தனித்து நிற்றல் ஆற்றாமையிற் கேள் என்பதனோடு சார்ந்து ஒரு சொல்லாயே நின்றுழி இடைநின்ற இகரம் ஒருமொழி யிடத்துக் குற்றியலிகரமாய் வருதலானும் ஆண்டு உணர்த்தற்குச் சிறப்பின்மையானும் ஈண்டுப் போத்தந்து கூறினார். ஊர்ந்தெனவே குற்றிய லிகரமும் உயிரென்பது பெற்றாம், உயிர்க்கல்லது ஏறுதலின்மையின். (1)
-----------

35. புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.

இது குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென்கின்றது.

இ-ள்: புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே- அக்குற்றியலிகரம் புணரியலுள் ஒருமொழிக்கண் ணன்றி இருமொழிதம்மிற் புணர்தலியன்ற நிலைமைக்கண்ணுங் குறுகுதலுரித்து, உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்-அதற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத்தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படும்; எ-று.

குறுகலும் என்னுமிடத்து உம்மையை நிலையிடையும் என மாறிக் கூட்டுக. "யகரம் வருவழி" (எழு-410) என்னுஞ் சூத்திரத்து யகரம் இடம், உகரஞ் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு.

எ-டு: நாகியாது வரகியாது தெள்கியாது எஃகியாது கொக்கியாது குரங்கியாது என வரும். இது மொழிவா மென்னும் உத்தி. (2)
------------

தனிமொழிக் குற்றியலுகரத்திற்கு இடனும் பற்றுக்கோடும்
36. நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே.

இஃது ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துகின்றது.

இ-ள்: குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே-குற்றியலுகரம் வல்லெழுத்துக்கள் ஆறினையும் ஊர்ந்து, நெட்டெழுத்திம்பருந் தொடர்மொழி ஈற்றும்-நெட்டெழுத்தின் பின்னும் ஐவகைத் தொடர்மொழியின் இறுதியிலும் நிற்றல் வேண்டும் ஆசிரியன்; எ-று.

நெட்டெழுத்தினது பின் தொடர்மொழியினது ஈறென நிலத்த தகலம் போல1 ஒன்றியற்கிழமைப்பட்டு நின்றது, அம்மொழியிற் றீர்ந்து குற்றியலுகரம் நில்லாமையின், வல்லாறு பண்புத்தொகை. முற்றும்மை தொக்குநின்றது. அதிகாரமுறைமை என்னும் உத்தியான் நிற்றல் வேண்டு மென்பது வருவிக்க,

எ-டு: நாகு வரகு தெள்ளு எஃகு கொக்கு குரங்கு என வரும். இவ்வாறுவகையும் இடம்; வல்லெழுத்துப் பற்றுக்கோடு. எனவே, மொழிக்கு ஈறாதலும் பெற்றாம். பெருமுரசு திருமுரசு என்பன இருமொழிக்கண் வந்த முற்றுகரம். பா*சு இங்கு ஏது என்னும் முற்றுகரங்கள் வடமொழிச் சிதைவு; தருக்கு அணுக்கு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம். குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடிய அரைமாத்திரையாய் நிற்றலும் முற்றுகரத்திற்கு முன்னர்வந்த உயிரேறி முடியாமையுந் தம்முள் வேற்றுமை2. (3)
-------
    1. நிலத்த தகலம் போல-நிலத்தினின்றும் பிரிக்கப்படாத அகலம்போல.
    2. நச்சினார்க்கினியர் இங்குக்கூறிய குற்றியலுகர இலக்கணப்படி. பெருமுரசு திருமுரசு தருக்கு அணுக்கு என்பனவும் இக்காலத்துக் குற்றுகரங்களாம் .
-----------

புணர்மொழிக் குற்றியலுகரம் தன்மாத்திரையிற் குறுகல்
37. இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான.

இது குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரைமாத்திரையிற் குறுகிவரும் என்கின்றது.

இ-ள்: இடைப்படிற் குறுகும் இடனுமார் உண்டே-அவ்வுகரம் ஒருமொழியுளன்றிப் புணர்மொழி யிடைப்படின் தன் அரை மாத்திரையினுங் குறுகும் இடனும் உண்டு. கடப்பாடு அறிந்த புணரியலான-அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்டுப் பெறுவதெனின், அதன் புணர்ச்சி முறைமை அறியுங் குற்றியலுகரப் புணரியலுள்; எ-று.

"வல்லொற்றுத் தொடர்மொழி" (எழு-406) என்பதனுள் வல்லெழுத்துத் தொடர்மொழியும் வல்லெழுத்து வரும் வழியும் இடம்; ஈற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு.

எ-டு: செக்குக்கணை சுக்குக்கோடு என வரும். இவை அரைமாத் திரையிற் குறுகியவாறு ஏனையவற்றோடு படுத்து உணர்க. இடனு மெனவே இது சிறுபான்மையாயிற்று. (4)
----------

ஆய்தம் தனிமொழியுள் வருமாறு
38. குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.

இது நிறுத்தமுறையானே ஆய்தம் ஒருமொழியுள் வருமாறு கூறுகின்றது.

இ-ள்: ஆய்தப்புள்ளி-ஆய்தமாகிய ஒற்று, குறியதன் முன்னர் உயிரொட புணர்ந்த வல்லா றன் மிசைத்து-குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடுகூடிய வல்லெழுத்தாறின் மேலிடத்த தாய் வரும்; எ-று.

வல்லாறன் மிசைத்து என்றதனானும் ஈண்டுப் புள்ளி என்றதனானும் "ஆய்தத் தொடர்மொழி" (எழு-406) என மேற்கூறுதலானும் உயிரென்றது ஈண்டுப் பெரும்பான்மையுங் குற்றுகரமேயாம். சிறுபான்மை ஏனை உயிர்களையுங் கொள்க.

எ-டு: எஃகு கஃசு கஃடு கஃது கஃபு கஃறு அஃது இஃது உஃது எனவரும், கஃறீது முஃடீ*து என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி என்றதனானும் ஈண்டுப் புள்ளி என்றதனானும் ஆய்தமும் மெய்யாயிற்று. அஃகாமை வெஃகாமை அஃகி வெஃகி அஃகம் எனப் பிறவுயிர்களோடும் வந்தது. கஃசியா தெனத் திரிந்ததுவுங் குற்றியலுகரத்தோடு புணர்ந்ததாம். (5)
-----------

ஆய்தம் புணர்மொழியுள்ளும் வருமாறு
39. ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்

இஃது அவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது.

இ-ள்: ஈறியன் மருங்கினும்-நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தும், இசைமை தோன்றும்- அதன் அரைமாத்திரையே இசைக்குந் தன்மை தோன்றும்; எ-று:

எ-டு: கஃறீது முஃடீது என வரும். இவ்வீறு இயலுமாறு புள்ளி மயங்கிடலுட் பெறுதும். ஈண்டும் இடம் குற்றெழுத்துமேல் வரும் வல்லெழுத்து.
-------------

ஆய்தத்தின் இயல்பு
40. உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான.

இஃது எதிரதுபோற்ற லென்னும் உத்தியாற் செய்யுளியலை நோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது.

இ-ள்: உருவினும் இசையினும் அருகித்தோன்றுங் குறிப்புமொழியும்-நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணுஞ் சிறு பான்மை ஆய்தந் தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும், எல்லாமொழியும்-அவை யொழிந்த எல்லா மொழிகளும், எழுத்தினியலா-ஒற்றெழுத்துக்கள்போல அரை மாத்திரையின்கண்ணும் சிறுபான்மை மிக்கும் நடந்து, ஆய்தம் அஃகாக் காலையான-ஆய்தஞ் சுருங்காத இடத்தான சொற்களாம்1; எ-று.

எனவே, ஈண்டு ஆராய்ச்சியின்றேனஞ் செய்யுளியலிற் கூறும் "ஒற்றள பெடுப்பினும் அற்றெனமொழிப" (செய்யுளியல்-18) என்னுஞ் சூத்திரத்துக் "கண்டண்ணெனக் கண்டுங்கேட்டும்" (மலைபடு-352) என்புழிக் கண்ணென்பது சீர்நிலை எய்தினாற்போலக், "கஃஃறென்னுங் கல்லதரத்தம்" என நிறத்தின்கண்ணும் "சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை" என இசையின்கண்ணும் வந்த ஆய்தம் ஒரு மாத்தைரை பெற்றுச் சீர்நிலை யெய்துங்கால், ஆண்டுப் பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு ஈண்டு எதிரதுபோற்றி விதி கூறினார். ஆய்தம் அதிகாரப்பட்டமை கண்டு. "எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்-வெஃஃ குவார்க்கில்லை வீடு" என்று ஏனையிடத்தும் வந்தன. ஒற்றளபெடுக்குமாறு இவ்வதிகாரத்துக் கூறிற்றிலர், அஃது உயிரளபெடை போலச் சீர்நிலை யெய்தலும் அசைநிலையாந் தன்மையு முடையவாய்ச் செய்யுட்கே வருதலின். இதனானே ஒற்றளபெடையும் ஒரு மாத்திரை பெறு மென்பது பெற்றாம்.

எழுத்தினென்ற இன் உவமப்பொருள். இயலாவென்றது செய்யாவென்னும் வினையெச்சம்.

இவ்வாறன்றி இக் குறிப்புச்சொற்கள் ஆய்தம் இரண்டிட்டு எழுதப்படாவென்று பொருள் கூறிற் செய்யுளியலோடு மாறுபட்டு மாறுகொளக் கூறலென்னுங் குற்றந் தங்கு மென்று உணர்க. (7)
-----------
    1. "மொழிக்குறிப்பெல்லாம்" என்பதற்கு "குறிப்புமொழியெல்லாம் என ஒரே
    பொருள் கொள்ளாது" குறிப்பு மொழியும் "எல்லாமொழியும்" என இரு
    பொருள் கொள்வது அத்துணைச் சிறந்ததன்று.
-----------

2.2. அளபெடை

அளபெடையின் நிலை
41. குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே.

இஃது எதிரது போற்ற லென்னும் உத்தி பற்றிச் செய்யுளியலை நோக்கி "நீட்டம் வேண்டின்" (எழு-6) என முற்கூறிய அளபெடையாமாறு கூறுகின்றது.

இ-ள்: குன்றிசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்- அளபெடுத்துக் கூறாக்காற் குன்றுவதான ஓசையையுடைய அவ் வளபெடைச் சொற்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும், அவை யாவையோ வெனின், நெட்டெழுத்திம்பர் ஒத்த குற்றெழுத்தே-நெட்டெழுத்துக்களின் பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள்; எ-று.

எ-டு: ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ என வரும். குன்றிசை மொழி என்றதற்கு இசைகுன்று மொழி என்றுமாம். இனமொத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும் வடிவும் ஒத்தல். ஈண்டு மொழி யென்றது "அள பெடை யசைநிலை" (செய்யுளியல்-17) என்னுஞ் செய்யுளியல் சூத்திரத்து எட்டு இயற்சீரின்பாற் படுகின்ற எண்வகை அளபெடைச் சொற்களையும் அவை ஆஅ கடாஅ ஆஅழி படாஅகை ஆஅங்கு ஆஅவது புகாஅர்த்து விரா அயது என்பனவாம். கட்டளை1கொள்ளா ஆசிரியர் இவற்றைத் தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலை யென்றும் அடக்குப. இனி மொழி யென்றதற்குத் தனிநிலை ஏழனையுமே கொள்ளின், ஒழிந்த இயற்சீர்ப்பாற்படும் அளபெடை கோடற்கு இடமின்மை உணர்க. (8)
---------
    1. கட்டளை-கட்டளையடி; அதாவது எழுத்தெண்ணி வகுக்கும் அடி.
------------

ஐகார ஔகார அளபெடை
42. ஐ ஔ என்னும் ஆயீ ரெழுத்திற்
கிகர உகரம் இசைநிறை வாகும்.

இஃது ஒத்தகுற்றெழுத்து இல்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது.

இதுவும் எதிரது போற்றல்.

இ-ள் : ஐ ஔ என்னும் ஆயீரெழுத்திற்கு-தமக்கு இனமில்லாத ஐகார ஔகாரமென்று கூறப்படும் அவ்விரண்டெழுத்திற்கு இகர உகரம் இசைநிறை வாகும்-ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைச் சார்த்திக்கூற, அவை அக்குன்றிசை மொழிக்கண் நின்று ஓசையை நிறைப்பனவாம்; எ-று.

ஐஇ ஔஉ என நிரனிறையாகக் கொள்க. இவற்றை முற்கூறிய இயற் சீரெட்டிற்கும் ஏற்பனவற்றோடு உதாரணங் காட்டிக் கொள்க.

இத்துணையும் நூன்மரபின் ஒழிபு.
------------

2.3. எழுத்துக்கள் தொடர்ந்து மொழியாதல்

ஓரெழுத் தொருமொழி
43. நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி

இஃது ஓரெழுத்தொருமொழி உணர்த்துதல் நுதலியவற்றுள் நெட்டெழுத்தானாம் மொழியாக்கங் கூறுகின்றது.

இ-ள்: நெட்டெழுத்து ஏழே-நெட்டெழுத்தாகிய உயிர்களேழும், ஓரெழுத்தொருமொழி-ஓரெழுத்தானாகும் ஒரு மொழியாம் எ-று.

முற்றும்மை தொகுத்து ஈற்றசை யேகாரம் விரித்தார்.

எ-டு: ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என வரும். ஔகாரம் உயிர்மெய்க்கண்ணல்லது வராது, ஊ என்பது தசை. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் விதி. கா தீ பூ சே தை கோ கௌ என வரும் இவை தம்மை யுணரநின்ற வழி எழுத்தாம். இடைநின்று 1பொருளுணர்த்தியவழிச் சொல்லாம். நெட்டெழுத் தேறிய மெய் நெட்டெழுத்தாயுங் குற்றெழுத் தேறிய மெய் குற்றெழுத்தாயும் நிற்றலேயன்றி மெய்க்கு நெடுமையுங் குறுமையும் இன்மை உணர்க. (10)
---------

குற்றெழுத்தின் இயல்பு.
44. குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே.

இது குற்றெழுத்து ஐந்தும் மொழியாகா. அவற்றுட் சில மொழியாகுமென்பது உணர்த்துகின்றது.

இ-ள்: குற்றெழுத்து ஐந்தும்-குற்றெழுத்தாகிய உயிரைந்தும், மொழிநிறைபு இலவே-தாமே நிறைந்து நின்று மொழியாதல் இல; சில மெய்யோடுகூடி நிறைந்து நின்று மொழியாம்; எ-று.

எ-டு: து கொ என வரும்.இவை உயிர்மெய்க்கண்ணல்லது வாராமையானும், உயிர்க்கண்ணும், ஏனை அகரமும் எ*கரமும், அக்கொற்றன் எப் பொருள் எனத் தனித்து நின்று உணர்த்தலாற்றாது இடைச் சொல்லாய்ப் பெயரைச்சார்ந்து நின்று சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்துதலானும் "நிறைபில" வென்றார். முற்றும்மை ஈண்டு எச்சப்பட்டு2 நின்றதென்று உணர்க. (11)
-------
    1. இடைநிற்றல்-நெட்டெழுத்துகள் தம்மை யுணர்த்தி எழுத்தாதற்கும் பொருளை யுணர்த்திச் சொல்லாதற்கும் இடையாக நிற்றல்.
    2 ஈண்டு முற்றும்மைக்கு முற்றுப்பொருள் கொள்ளினும் குற்றமின்று.
------------

மொழியின்பெயர் முறை தொகை
45. ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி
இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.

இது முன்னர் மெய்ம்மயக்கம் உடனிலைமயக்கங் கூறலானும் ஈண்டு "நெட்டெழுத்தேழே" (எழு-43) என்பதனாலும் எழுத்தினான் மொழியாமாறு கூறினார், அம்மொழிக்கு இச்சூத்திரத்தாற் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றார்.

இ-ள்: ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி0 இரண்டிறந்து இசைக்குந் தொடர்மொழி உளப்பட-ஓரெழுத்தானாகும் ஒருமொழியும் இரண்டெழுத்தானாகும் ஒருமொழியும் இரண்டனை இறந்து பலவாற்றான் இசைக்குந் தொடர்மொழியுடனேகூட, மொழி நிலை மூன்றே-மொழிகளின் நிலைமை மூன்றேயாம், தோன்றிய நெறியே-அவை தோன்றிய வழக்கு நெறிக்கண்; எ-று.

எ-டு: ஆ கா நா ஓரெழுத்தொருமொழி, மணி வரகு கொற்றன் ஈரெழுத்தொருமொழி, குரவு அரவ மூவெழுத் தொருமொழெி. கணவிரி நாலெழுத்தொருமொழி அகத்தியனார் ஐயெழுத்தொருமொழி திருச்சிற்றம் பலம் ஆறெழுத்தொருமொழி பெரும்பற்றப்புலியூர் ஏழெழுத்தொருமொழி1.
----------
    1 இங்கு நச்சினார்க்கினியர் உரைநடைக்கேற்பக் கொள்ளாது செய்யுளியற்கேற்பக் கொண்டு சொற்களைக் குற்றுகரமும் மெய்யும் நீக்கி எழுத்தெண்ணுவது பொருந்தாது.

ஓரெழுத்தொருமொழியந் தொடர்மொழியும் என்னாது ஈரெழுத் தொரு மொழியும் ஓதினார், சில பல என்னுந் தமிழ் வழக்கு நோக்கி.

ஆசிரியர் ஒற்றுங் குற்றுகரமும் எழுத்தென்று கொண்டனராதலின் மா கா என நின்ற சொற்கள் மால் கால் என ஒற்றடுத்துழி ஒற்றினான் வேறு பொருள்தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத் தொருமொழி யென்றும் நாகு வரகு என்னுங் குற்றுகர ஈற்றுச் சொற்களிற் குற்றுகரங்கள் சொல்லொடு கூடிப்பொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழி மூவெழுத் தொருமொழி யென்றுங் கோடுமென்பார்க்கு, ஆசிரியர் பொருளைக் கருதாது மாத்திரை குறைந்தமைபற்றி "உயிரி லெழுத்து மெண்ணப்படாஅ" (செய்யுளியல்-34) "குறிலே நெடிலே குறிலிணை" (செய்யுளியல்-3) என்னுஞ் செய்யுளியற் சூத்திரங்களால் இவற்றை எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறா என்று விலக்குவராதலின், அவற்றால் ஈண்டு ஈரெழுத்தொருமொழியும் மூவெழுத் தொருமொழியுங் கொள்ளின், மாறுகொளக்கூறல் என்னுங் குற்றந் தங்குமென்று மறுக்க.

இனி "நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி" (எழு-43) "குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே" (எழு-44) என்பனவற்றான் மெய்க்குக் குறுமை நெடுமை யின்மையான் உயிரும் உயிர்மெய்யுமாகிய நெடிலுங் குறிலுமே மொழியாமென்று கூறி, மீட்டும் அதனையே இச்சூத்திரத்தான் ஓரெழுத்தொருமொழி யென்றெடுத்து அதனோடே ஈரெழுத்தையும் இரண்டிறந்ததனையுங் கூட்டி மொழியாகக் கோடலின், ஒற்றினைக் கூட்டி எழுத்தாகக் கோடல் ஆசிரியர்க்குக் கருத்தன்மை யுணர்க. அன்றியும் "மொழிப்படுத் திசைப்பினும்" (எழு-53) என்னுஞ் சூத்திரத்திற் கூறுகின்றவாற்றானும் உணர்க. "அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃதென்ப" (எழு-1) என ஒற்றினையும் எழுத்தென்றது எழுத்தின் தன்மை கூறிற்று. ஈண்டு மொழியாந் தன்மை கூறிற்று.
-----------

2.4. எழுத்துக்களின் இயக்கம்

தனிமெய் இயக்கம்
46. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்

இது தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது.

இ-ள்: மெய்யினியக்கம்-தனிமெய்களினது நடப்பு, அகரமொடு சிவணும்-அகரத்தோடு பொருந்தி நடக்கும்; எ-று.

எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப்பொருள்களாகிய உருவாக இயக்கும் இயக்கமும் மூவகையாற் காட்சிப்பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு.

எ-டு: "வல்லெழுத் தென்ப க ச ட த ப ற" (எழு-19) "ககார ஙகார முதனா வண்ணம்" (எழு-89) என்றாற்போல்வன நாவால் இயக்கியவாறுகாண்க. எழுதிக் காட்டுமிடத்துக் ககரம் முதலியன உயிர்பெற்று நின்றவடிவாக எழுதிப் பின்னர்த் தனிமெய்யாக்குதற்குப் புள்ளியிட்டுக் காட்டுகின்ற வாற்றான் வடிவை இயக்குமிடத்தும் அகரங் கலந்து நின்றவாறு காண்க.

இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு கூறினாற்போலப் பதினோருயிர்க்-கண்ணும் அகரங் கலந்து நிற்குமென்பது ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்பபடுதலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானு மென்றுஉணர்க. இறைவன் இயங்குதினைக்கண்ணும் நிலைத் திணைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும்ஒப்ப முடிந்தாற் போல அகரமும் உயிர்க்கண்ணுந் தனிமெய்க்கண்ணுங் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கு மென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. "அகரமுதல்" என்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம் அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானுங், கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே யெனக் கூறியவாற்றானும் பிறநூல்களானும் உணர்க.

இதனான் உண்மைத்தன்மையுஞ் சிறிது கூறினாராயிற்று. இதனை நூன்மரபிற் கூறாது ஈண்டுக் கூறினார். "வல்லெழுத் தென்ப க ச ட த ப ற" (எழு-19) என்ற இடத்துத் தான் இடைநின்று ஒன்றென்பதோர் பொருளை உணர்த்தி மொழியாந்தன்மை எய்தி நிற்றலின்;,. (13)
-----------

உயிர்மெய் என்னும் பெயர்
47. தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை.

இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி அவ்வுயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் நின்றகாலத்து அம்மெய்யாற் பெயர் பெறுமாறு கூறுகின்றது.

இ-ள்: எல்லா எழுத்தும்-பன்னீருயிரும் மெய்ந்நிலை தம் இயல் மயக்கங் கிளப்பின்-மெய்யின் தன்மையிலே தம்மடைய தன்மை மயங்கிற்றாகப் பெயர்கூறின், மானமில்லை-குற்றமில்லை; எ-று.

மெய்யயின் தன்மையாவது வன்மை மென்மை இடைமை, தம்மியலாவது உயிர்த்தன்மை. என்றது வல்லெழுத்து மெல்லெழத்து இடையெழுத்தென உயிர்மெய்க்கும் பெயரிட்டாளுதல் கூறிற்று. அவை "வல்லெழுத்தியையின் அவ்வெழுத்து மிகுமே" (எழு-19) எனவும் "மெல்லெழுத்தியையின் இறுதியோ டுறழும்" (எழு-20) எனவும் "இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள" (எழு-21) எனவும், பிறாண்டும் ஆள்ப. எழுத்தை வன்மை மென்மை இடைமை யென விசேடித்த சிறப்பான் இப்பெயர் கூறினார்.

இஃதன்றிப் பதினெட்டு மெய்யுந் தன்மை கூறுமிடத்து மெய்ம்மயக்கங்கூறிய வகையானன்றி வேண்டியவாறு மயங்கு மென்று கூறி "அவற்றுள் லளஃகான் முன்னர் (எழு-24) என்பதனைக் காட்டில், அஃது இரு மொழிக் கண்ணதென மறுக்க. (14)
----------

ஈரொற்றுடனிலை
48. ய ர ழ என்னும் மூன்றும் ஒற்றக்
க ச த ப ங ஞ ந ம ஈரொற் றாகும்.

இஃது ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது.

இ-ள்: ய ர ழ என்னும் மூன்றும் ஒற்ற-ய ர ழ வென்று கூறப்படும் மூன்று புள்ளியும் ஒற்றாய் நிற்ப, க ச த ப ங ஞ ந ம ஈரொற்றாகும். -க ச த பக்களும் ங ஞ ந மக்களும் வந்து ஈரொற்றாகும்-க ச த பக்களும் ங ஞ ந மக்களும் வந்து ஈரொற்றாய் நிற்கும்; எ-று.

எ-டு: வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு எனவும் பீர்க்கு நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு எனவும், காய்ங்கனி தேய்ஞ்சது சாய்ந்தனம் காய்ம்புறம் எனவும், நேர்ங்கல் நேர்ஞ்சிலை நேர்ந்திலை நேர்ம்புறம் எனவும் வரும். ழகாரத்திற்கு வாழ்ந்தனம் என இக்காலத்து நகரவொற்று வரும். ஏனைய மூன்றும் இக்காலத்து வழங்கு மெனின் உணர்க.

இனித் தாழ்ங்குலை தாழ்ஞ்சினை தாழ்ந்திரள் வீழும்படை என அக்காலத்து வழங்குமென்று இத்தொகைச் சொற்கள் காட்டலும் ஒன்று. உரை யாசிரியரும் இருமொழிக்கட் காட்டியவற்றிற்கு அவ்வீறுகடோறுங் கூறுகின்ற சூத்திரங்கள் பின்னர் வேண்டாமை உணர்க. இஃது ஈரொற்றுடனிலையாதலின் ஈண்டு வைத்தார்.

இனி நெடிற்கீழே யன்றிப் பல வெழுத்துந் தொடர்ந்து நின்றதன் பின்னும் ஈரொற்று வருதல் கொள்க. அவை வேந்தர்க்கு அன்னாய்க்கு என்றாற் போல்வனவாம்.
----------

குறிற்கீ ழொற்றாகா மெய்கள்
49. அவற்றுள்,
ரகார ழகாரங் குற்றொற்1 றாகா.

இஃது எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் கூறுகின்றது.

ஈண்டுக் குற்று என்றது தனிக்குறிலை.


இ – ள்: அவற்றுள் - முற்கூறிய மூன்றனுள், ரகார ழகாரம்- ரகாரமும் ழகாரமும், குற்றொற்றாகா - குறிற்கீழ் ஒற்றாகா, நெடிற்கீழ் ஒற்றாம், குறிற்கீழ் உயிர்மெய்யாம்; எ – று.

கீழென்னும் உருபு தொகுத்துக் கூறினார். ஆகாதனவற்றிற்கு உதாரணமின்று.

எ – டு: கார் வீழ் என நெடிற்கீழ் ஒற்றாய் வந்தன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் வந்தன. இவற்றை விலக்கவே, யகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டிடத்தும் ஒற்றாய் வருதல் பெற்றாம். புகர் புகழ் புலவர் என்றாற் போல்வனவோ வெனின், மொழிக்கு முதலாம் எழுத்தினைச் சொல்வனவற்றிற்கே ஈண்டு ஆராய்ச்சியாதலால் அவை வேண்டியவாறே வருமென்று உணர்க. அன்றியுங் குற்றொற்றென்றே சூத்திரஞ் செய்தலிற் குறிலிணை யொற்றினைக் காட்டிக் கடாவலாகாமை உணர்க. இது வரையறையின்றி உயிர்மெய்யோடு தனிமெய் மயங்குவனவற்றிற் சில வொற்றிற்கு வரையறை ஈண்டுக் கூறியது. (16)
------------

தொடர் மொழி இயல்பு
50. குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்
தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல.

இஃது 'அளமிறந் துயிர்த்தலும்' (எழு - 33.) என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் சூத்திரத்திற்குப் புறனடையாய் அதன்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது; என்னை? உயிரும் உயிர்மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ நெடிலோ இசைப்பதென மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயம் அறுத்தலின்.

இ – ள் : குறுமையும் நெடுமையும் - எழுத்துக்களது குறிய தன்மையும் நெடிய தன்மையும், அளவிற்கோடலின் - மாத்திரை யென்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின், தொடர்மொழி யெல்லாம் - அம்மாத்திரை தம்முள் தொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத் தியல - நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும் படியாகத் தொடர்ந்த சொல்லாம்; எ – று.

எ - டு : 'வருவர்கொல் வயங்கிழாஅய்' (கலி - 11) எனவும், 'கடியவே கனங்குழாஅய்' (கலி - 11) எனவுங் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத் தினை மாத்திரை மிகுத்தற்குக் கூடியவாறு உணர்க. ஏனைச் செய்யுட்களையும் இவ்வாறே காண்க. எனவே, மாத்திரை அளக்குங்கால் நெட்டெழுத்தே மாத்திரை பெற்று மிக்கு நிற்கும் என்றமையான், எதிரது போற்ற லென்னும் உத்திபற்றிச் செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று. ஈண்டுக் கூறினார். நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்து வரும் என்பது அறிவித்தற்கு.

அளபென்று மாத்திரையைக் கூறாது அளவெனச் சூத்திரஞ் செய்தமையான் அளவு தொழின்மேல் நின்றது. அது செய்யுளியலுள் 'மாத்திரையளவும்' (செய்யுளியல் - 2) என்பதனாலும் உணர்க. இயல வென்றதனைச் செயவெனெச்ச மாக்கிப் படுத்தலோசையாற் கூறுக.

இனித் தன்னின முடித்த லென்பதனான் ஒற்றிற்கும் இவ்வாறே கொள்க. "குரங்குகளைப் பொலிந்த கொய்சுவற் புரவி" (அகம்-4) என்ற குறுஞ்சீர்வண்ணத்திற்கு உரிய குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்தை மாத்திரை மிகுத்தற்குத் கூடிநின்றவாறு உணர்க. எனவே, குற்றெழுத்துக்களெல்லாம் ஒற்றெழுத்துக்களோடும் நெட்டெழுத்துக்களோடும் கூடி அவற்றையே ஓசைமிகுத்து நிற்கும் என்றவாறாயிற்று. இதனானே ஒற்றிசை நீடலுமென்ற ஒற்றிசை நீளுங்காற் குற்றெழுத்தாய் நீளு மென்றார். இனி உரை யாசிரியர் புகர் புகழ் எனக் குறிலிணைக்கீழ் ஈகார ழகாரங்கள் வந்த தொடர் மொழிகளெல்லாந் தார் தாழ் என்றார்போல ஓசையொத்து நெட்டெழுத்தின் தன்மையவாம் என்றாராலெனின், புகர் புகழ் என்பனவற்றை நெட்டெழுத்தென்றே எவ்விடத்தும் ஆளாமையானும் நெட்டெழுத்தாகக் கூறிய இலக் கணத்தால் ஒரு பயன் கொள்ளாமையானுஞ் செய்யுளியலுள் இவற்றைக் குறிவிணை ஒற்றடுத்த நிரையசையாகவுந் தார் தாழ் என்பனவற்றை நெட் டெழுத்து ஒற்றடுத்த நேரசையாகவுங் கோடலானும் அது பொருளன்மை உணர்க.1 (17)
-----------
    1. இம்மறுப்பு அவ்வளவு பொருத்தமாய்த் தோன்றவில்லை.
---------

செய்யுளியல் ஈரொற்றிலக்கணம்
51. செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈரொற் றாகும்.

இது செய்யுட்கண் ஈரொற்றிலக்கணமாமாறு கூறுகின்றது.

இ-ள்: செய்யுட் போலி மொழி இறுதிவயின்-செய்யுட்கண் போலு மென்னுஞ் சொல்லின் இறுதிக்கண், னகாரம் மகாரம் ஈரொற்றாகும்-னகாரமும் மகாரமும் வந்து ஈரொற்று உடனிலையாய் நிற்கும்.; எ-று.

எ-டு: "அந்நூலை-முந்நூலாக் கொள்வானும் போன்ம்" (கலித்-103) "சிதையுங் கலத்தைப் பயினால் திருத்தித்-திசையறி மீகானும் போன்ம்" (பரி-10-55) என வரும். போலும் என்னுஞ் செய்யுமென்னும் முற்று ஈற்றுமிசை யுகரம் மெய்யொழித்துக் கெட்டு லகாரந் திரிந்;து நின்றது. இஃது இறுதியில் முற்று; இடையிற் பெயரெச்சமாகிய உவமவுருபு 2. ஈண்டு முற்றென்பார் இறுதிமொழி என்றார். (18)
----------
    2. போலும் என்னும் சொல்; உயிர்போலுங் கேளிர் என இடையில் நிற்பின் பெய
    ரெச்சமும் மிகானும் போலும் மீகானும் போன்ம் என இறுதியில் நிற்பின்
    வினைமுற்றும் ஆகும்.
------------

மகரங் குறுகுமிடம்
52. னகாரை முன்னர் மகாரங் குறுகும்.

இஃது அரையளபு குறுகுமென்ற மகாரத்திற்குக் குறுகும் இடம் இதுவென்கின்றது.

இ-ள்: னகாரை முன்னர் மகாரங் குறுகும்-முற் கூறிய னகரத்தின் முன்னர் வந்த மகரந் தன் அரை மாத்திரையிற் குறுகி நிற்கும்; எ-று.

எ-டு: போன்ம் என முன்னர்க் காட்டினாம். னகாரை யென இடைச்சொல் ஈறுதிரிந்து நின்றது.

இனித் தன்னின முடித்த லென்பதனான் ணகாரவொற்றின் முன்னும் மகாரங் குறுகுதல் கொள்க. "மருளினு மெல்லா மருண்ம்" எனவரும். (19)
-----------

மொழிக்கண்ணும் மாத்திரை வேறுபடாமை.
53. மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும்
எழுத்தியல் திரியா என்மனார் புலவர்.

இஃது ஒற்றுங் குற்றுகரமும் ஈண்டு எழுத்துக்களோடு கூட்டி எண்ணப்படாது நிற்கு மென்பதூஉஞ் செய்யுளியலுள் எண்ணப்படாது
நிற்கு மென்பது கூறுகின்றது.

இ-ள்: தெரிந்து-ஒற்றுங் குற்றுகரமும் பொருள்தரு நிலைமையை ஆராய்ந்து, மொழிப்படுத்து இசைப்பினும்-சொல்லாகச் சேர்த்துச் சொல்லினும், வேறு இசைப்பினும்-செய்யுளியலுள் ஒற்றுங் குற்றுகரமும் பொருள்தருமேனும் மாத்திரை குறைந்து நிற்கும் நிலைமையை நோக்கி எழுத்தெண்ணப்படாவென்று ஆண்டைக்கு வேறாகக் கூறினும், எழுத்தியல் திரியா என்மனார் புலவர்- அவ்விரண்டிடத்தும் அரைமாத்திரை பெற்று நிற்கும் ஒற்றுங் குற்றுகரமும் முற்கூறிய எழுத்தாந் தன்மை திரியாவென்று கூறுவர் பலவர்; எ-று.

இதனான் ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் எழுத்தாகி நின்று பொருள் தந்தும், எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறா வென்பது கூறினாராயிற்று. தெரிந்து வேறிசைத்தல் குற்றுகரத்திற்கு இன்றாதலின் ஏற்புழிக்கோடலான் ஒற்றிற்கும் ஆய்தத்திற்குங் கொள்க.1
--------
    1. இவ்வாக்கியம் முன்னும் பின்னுங் கூறியவற்றிற்கு முரணாகக் காண்கின்றது.

எ-டு: அல் இல் உண் எண் ஒல் எனவும், கல் வில் முள் செல் சொல் எனவும், ஆல் ஈர் ஊர் ஏர் ஓர் எனவும், கால் சீர் சூல் தேன் கோன் எனவும் உயிரும் உயிர்மெய்யுமாகிய குற்றெழுத்தையும் நெட்டெழுத்தையும் ஒற்றெழுத்துக்கள் அடுத்துநின்று பொருள்தந்தவாறு காண்க. கடம் கடாம் உடையான் திருவாரூர் அகத்தியனார் என ஈரெழுத்தையும் மூவெழுத்தையும் நாலெழுத்தையும் ஐயெழுத்தையும் இறுதியிலும் இடையிலும் ஒற்றடுத்து நின்று பொருள்தந்தவாறு காண்க. எஃகு தெள்கு கொக்கு குரங்கு என்பனவும் எழுத் தெண்ணவும் அலகிடவும் பெறாத குற்றகரம் அடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க. "உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ-உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான" (செய்யுளியல்-44) என்பது எழுத்து எண்ணப் பெறாமைக்கு விதி.

இனி இச்சூத்திரத்திற்கு எழுத்துக்களைச் சொல்லாக்கிக் கூறினும் பிறிதாகக் கூறினும் மாத்திரை திரியாதென்று பொருள் கூறி, அகரம் என்புழியும் அ என்புழியும் ஆலம் என்புழியும் ஆ என்புழியும் ககரம் என்புழியுங் க என்புழியுங் காலம் என்புழியுங் கா என்புழியும் ஓசை ஒத்து நிற்குமென்றால், அது முன்னர்க் கூறிய இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயனில் கூற்றாமென்க.1 (20)
--------------
    1. இம்மறுப்பு பொருந்துவதன்று.
----------

2.5. போலி

எழுத்துப் போலி
54. அகர இகரம் ஐகார மாகும்

இது சிலவெழுத்துக்கள் கூடிச் சிலவெழுத்துக்கள்போல இசைக்கு மென எழுத்துப்போலி கூறுகின்றது.

இ - ள் : அகர இகரம் ஐகாரம் ஆகும் - அகரமும் இகரமுங் கூடிச் சொல்ல ஐகாரம்போல இசைக்கும், அது கொள்ளற்க; எ – று.

போல என்றது தொக்கது.

எ - டு : ஐவனம் அஇவனம் என வரும்.1 ஆகுமென்றதனால் இஃது இலக்கணமன்றாயிற்று. (21)
-----
    1. இனி, இந் நூற்பாவிற்கு வயிரம் - வைரம் என எடுத்துக்காட்டலும் ஒன்று.
---------

55. அகர உகரம் ஔகார மாகும்.

இதுவும் அது.

இ - ள் : அகர உகரம் ஔகாரம் ஆகும் - அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம்போல இசைக்கும், அது கொள்ளற்க; எ – று.

போல என்றது தொக்கது.

எ - டு : ஔவை அஉவை என வரும்.2 (22)
----
    2. இந்நூற்பாவிற்கு, கவுதாரி - கௌதாரி என எடுத்துக்காட்டினும் ஆகும்.
----------

56. அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.

இதுவும் அது.

இ - ள் : அகரத்திம்பர் யகரப் புள்ளியும் - அகரத்தின் பின் இகரமே யன்றி யகரமாகிய புள்ளி வந்தாலும், ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் - ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவு பெறத் தோன்றும்; எ – று.

எ - டு : ஐவனம் அய்வனம் என வரும்.3 மெய் பெற என்றதனான் அகரத்தின் பின்னர் உகரமே யன்றி வகரப்புள்ளியும் ஔகாரம்போல வருமென்று கொள்க. ஔவை அவ்வை என வரும்.4 (23)
--------
    3. அய்வனம், அய்யர் என்றாற்போல்வன செய்யுளில் எதுகைநோக்கி வரும் திரிபு
    வடிவங்களாகும்.
    4. 'அவ்வை' முந்தியவடிவம். 'ஔவை' அதன்போலி.
-------------

ஐ ஔ குறுகுதல்
57. ஓரள பாகும் இடனுமா ருண்டே1
தேருங் காலை மொழிவயி னான.

இஃது அதிகாரத்தான் ஐகாரத்திற்கும் ஔகாரத்திற்கும் எதிரது போற்ற லென்பதனாற் செய்யுளியலை நோக்கி மாத்திரைச்சுருக்கங் கூறுகின்றது.
----------
    1. ஐகார ஔகாரக் குறுக்க மாத்திரை ஒன்றரை என்பர் நேமிநாதர். இது முதல் கடையிடங்கட்கேற்கும்.

இ-ள்: மொழிவயினான-ஒரு சொல்லிடத்தே நின்ற ஐகார ஔகாரங்கள், தேருங்காலை -ஆராயுமிடத்து, ஓரளபாகும் இடனு மாருண்டே-ஒரு மாத்திரையாய் நிற்கும் இடமும்
உண்டு; எ-று.

உம்மையான் இரண்டுமாத்திரை பெறுதலே வலிவுடத்தாயிற்று. இடனு மென்றது ஒரு சொல்லின் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துங் குறுகும், அது செய்யுட்கண் ஓசை இடர்ப்பட் டொலிக்குமிடத்துக் குறுகு மென்றற்கு. உரையிற்கோடலால் ஐகாரம் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துங் குறுகும், ஔகாரம் முதற்கண் குறுகு மெனக்கொள்க.

எ-டு: ஐப்பசி கைப்பை இடையன் குவளை என வரும். "அடைப்பை யாய்கோறா" எனவும், "புனையிளங் கொங்கையாய் வரும்" எனவும் பிறவாறும் வருவன செய்யுளியலுட் காண்க. ஔவை கௌவை என வரும். ஔகாரம் "கௌவைநீர் வேலிகூற்று" எனத் தொடை நோக்கிக் குறுகுவனவாறுங் காண்க. தேருங்காலை யென்றதனான் ஓரெழுத் தொருமொழியுங் குறுகும். கை பை என வரும். (24)
------------

போலியில் மற்றொரு வகை
58. இகர யகரம் இறுதி விரவும்

இதுவும் போலிகூறுகின்றது.

இ-ள்: இகரயகரம் இறுதி விரவும்-இகரமும் யகரமும் ஒருமொழியின் இறுதிக்கண் ஓசை விரவி வரும், அவ்விகாரங் கொள்ளற்க; எ-று.

நாய் நாஇ எனவரும்.2 (25)
-----------
    2. ஒருகால், நாயி என்பது பண்டை வழக்கா யிருந்திருக்கலாம்.
-------------

2.6. மொழிமுதல் எழுத்துக்கள்

மொழிமுதலாகும் உயிர்கள்
59. பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்.

இது மேல் எழுத்தினான் மொழியாமாறு உணர்த்தி அம்மொழிக்கு முதலாமெழுத்து இவை யென்பது உணர்த்துகின்றது.

இ-ள்: பன்னீருயிரும்-பன்னிரண்டு உயிரெழுத்தும், மொழி முதல் ஆகும்-மொழிக்கு முதலாம்; எ-று.

எ-டு: அடை ஆடை இலை ஈயம் உளை ஊர்தி எழு ஏணி ஐவனம் ஒளி ஓடம் ஔவியம் என வரும். (26)
-------------

தனி மெய் மொழிமுத லாகாமை
60. உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா.

இஃது உயிர்மெய் மொழிக்கு முதலாம் என்கின்றது.

இ-ள்: உயிர்மெய்யல்லன மொழிமுதல் ஆகா-உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனி மெய்கள் மொழிக்கு முதலாகா; எ-று.

எனவே, உயிரோடு கூடிய மெய்களே மொழிக்கு முதலாவன என்றவாறாம். ஈண்டு உயிர்மெய் யென்றது வேற்றுமை நயம் கருதிற்று. ஒற்றுமை நயக் கருத்தின் மேலைச் சூத்திரத்து உயிரோடுகூடி ஆமென்றல் பயனின்றாம் (27)
-----------

பன்னீருயிருடன் மொழி முதலாதல்
61. கதந பமஎனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே.

இது மேற் பொதுவகையான் எய்துவித்த இருநூற்றொருபத்தாறு எழுத்துக்களைச் சிறப்புவகையான் வரையறுத்து எய்துவிக்கின்றது.

இ-ள்: க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும்-க த ந ப ம என்று கூறப்பட்ட அவ்வைந்து தனிமெய்யும், எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே-பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும்; எ-று.

எ-டு: கலை, கார், கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேழல், கைதை, கொண்டல், கோடை, கௌவை, எனவும்; தந்தை, தாய், தித்தி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேன், தையல், தொண்டை, தோடு, தௌவை, எனவும்; நந்து, நாரை, நிலம், நீலம், நுகம், நூல், நெய்தல், நேமி, நைவளம், நொச்சி, நோக்கம், நௌவி, எனவும்; படை, பால், பிடி, பீடு, புகழ், பூமி, பெடை, பேடை, பைதல், பொன், போது, பௌவம், எனவும்; மடி, மாலை, மிடறு, மீளி, முகம், மூப்பு, மெலிவு, மேனி, மையல், மொழி, மோத்தை, மௌவல், எனவும் வரும். (28)
---------

சகர மெய் ஒன்பதுயிருடன் மொழிமுதலாதல்
62. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ ஐ ஔ எனும் மூன்றலங் கடையே1

இதுவும் அது.

இ-ள்: சகரக்கிளவியும் அவற்றோர ற்றே-சகரமாகிய தனிமெய்யும் முற்கூறியவைபோல எல்லா உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாம், அ ஐ ஔ எனும் மூன்றலங்கடையே-
அகர ஐகார ஔகாரமென்று சொல்லப்பட்ட மூன்று உயிரும் அல்லாத இடத்து; எ-று.

எ-டு: சாந்து சிற்றில் சீற்றம் சுரை சூரல் செக்கு சேவல் சொல் சோறு என வரும். சட்டி சகடம் சமழ்ப்பு என்றாற் போல்வன "கடிசொல்லில்லை" (எச்சவியல்-56) என்பதனாற் கொள்க. சையம் சௌரியம் என்பனவற்றை
வடசொல்லென மறுக்க. (29)
----------
    1சகரம் மொழிமுதல் வராதென்று கூறுவது தமிழுக்குச் சற்றும் பொருந்தாது. "அ ஐ ஔ எனும் மூன்றலங் கடையே" என்னும் நூற்பா அடிக்கு "அவை ஔ என்னும் ஒன்றலங்கடையே என்று பாடவேறுபாடும் உள்ளது. சககட்டி, சக்கை, சகடு, சக்தி, சங்கு, சட்டென, சட்டம், சட்டகம், சட்டி, சட்டை, சட சட, சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சணல், சதுப்பு, சப்பட்டை, சப்பென்று, சப்பாணி, சப்பு, சப்பை, சம்பு, சம்மட்டி, சமட்டு, சம்ம, சமழ, சமை, சரடு, சரள, சரி, சருகு, சருக்கரை, சரேல்என, சல்லடை, சல்லரி, சல்லி, சலால், சலங்கை, சலி, சவ்வு, சவம், சவா, சவை, சனி, சளக்கென, சழக்கு, சள்ளென ,சள்ளை, சளை, சற்று, சறுக்கு, சன்னம், முதலிய நூற்றுக்கு மேற்பட்ட தனித்தமிழ்ச் சொற்கள் அடிப்படையானவும் தொன்று தொட்டவும் இன்றி யமையாதனவும் வேரூன்றினவும் சேரிவழக்கினவுமாயிருக்க, அவற்றைப் பிற் காலத்தனவென்று கொள்ளுவது பெருந்தவறாகும். சக்கை, சட்டி, சண்டு, சண்டை, சதை, சப்பு, சலி, சற்று, சறுக்கு முதலிய சொற்கள் எத்துணை எளிமையும் இயல்புமானவை என்பது சொல்லாமலே விளங்கும். சண்டு, சருகு முதலிய சில சொற்கள் பண்டு சகர முதலனவாயிருந்திருத்தல் கூடுமெனினும், சக்கு, சடார், சடோ சரட்டு சலரல சரேல சலவு சளக்கு சளரா சள் முதலிய ஒலிக் குறிப்புச் சொற்களும் அவற்றினடிப்பிறந்தவும் துவக்கந்தொட்டுச் சகர முதவனவாயே யிருந்திருத்தல் வேண்டும். சாப்பிடு என்னும் உலகவழக் கெளிமைச் சொல் சப்பு என்னும் மூலத்தினின்றே தோன்றியதாகும். சப்பு+இடு = சப்பீடு -சாப்பிடு. சுவை என்னும் சொல்லும் சவை என்பதன் திரிபாகவே தோன்றுகின்றது. செத்தான் என்னும் இறந்தகால வினைமுற்று பண்டைக் காலத்தில் சத்தான் என்றே இருந்திருத்தல்வேண்டும். ஓ.கோ.: காண்-கண்டான். கோ- நொந்தான். நெடின முதலான வினைப்பகுதி இறந்தகால முற்றில் முதல* குறு கும்போது இனக்குறிலாய் குறுகுவதே மரபு. தெலுங்கிலும் சரசினாடு (செத்தான்) சச்சிப்போயினாடு (செத்துப்போனான்) என்றே சொல்வர். மேலும் "முழு முதல் அரணும்", "வருபகை போணார் ஆரெயிலும்" அமைத்துக்கொண்ட தொல் காப்பியம் காலத்தமிழர் சட்டிசெய்யத் தெரியாதிருந்தனர் என்பது பெருநகைக் கிடமானதாகும். சட்டி என்பது சமையலுக்கு இன்றியமையாததும், எளிநிலையானதும் , மறுபெயரற்றது மான கலவகை.
-----------

வகர மெய் எட்டுயிருடன் மொழிமுதலாதல்
63. உஊ ஒஓ என்னும் நான்குயிர்
வ என் எழுத்தொடு வருத லில்லை.

இதுவும் அது.

இ-ள்: உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர்-உ ஊ ஒ ஓ என்று சொல்லப்பட்ட நான்கு உயிரும், வ என் எழுத்தொடு வருதலில்லை-வ என்று சொல்லப்படு்ந்தன மெய்யெழுத்தோடு கூடிமொழிக்கு முதலாய் வருத லில்லை; எ-று.

எனவே, ஒழிந்தன மொழிக்கு முதலாம் என்றவாறாயிற்று.

எ-டு: வளை வாளி விளரி வீடு வெள்ளி வேட்கை வையம் வௌவுதல் என வரும். (30)
------------
"சரிசமழ்ப்புச* சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி-சவிசரடு
சந்து சதங்கை சழக்காதி யீரிடத்ததும்
வந்தனவாற் சம்முத லுமவை" என்பது நன்னூல் மயிலை நாதருரை மேற்கோள்.
----------

ஞகரமெய் மூன்றுயிருடன் மொழிமுதலாதல்
64. ஆ எ ஒ
என்னும் மூவுயிர் ஞகாரத் துரிய.

இதுவும் அது.

இ-ள்: ஆ எ ஓ எனும் மூவுயிர்-ஆ எ ஒ என்று கூறப்படும் மூன்று உயிரும், ஞகாரத்துக்கு உரிய-ஞகார ஒற்றொடு கூடி மொழிக்கு முதலாதற்கு உரிய; எ-று.

எனவே, ஏனைய உரியவல்ல என்பதாம்.

எ-டு: ஞாலம் ஞெண்டு ஞொள்கிற்று எனவரும்.

"ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பு" (பெரும்பாண்-132) என்பது திசைச்சொல். ஞழியிற்று என்றாற்போல்வன இழிவழக்கு,. (31)
------------

யகரம் ஆகாரத்துடனே மொழிமுதலாமெனல்.
65 ஆவோ டல்லது யகர முதலாது,

இதுவும் அது.

இ-ள்: ஆவோடு அல்லது யகரம் முதலாது-ஆகாரத்தோடு கூடி யல்லது யகர வொற்று மொழிக்கு முதலாகாது; எ-று.

எ-டு: யானை யாடு யாமம் என வரும்.

யவனர் யுத்தி யூபம் யோகம் யௌவனம் என்பன வடசொல்லெனமறுக்க. (32)
--------

எல்லா எழுத்தும் முதலாம் இடம்
66. முதலா ஏன தம்பெயர் முதலும்

இது மொழிக்கு முதலாகாதனவும் ஒரோ வழி ஆமென்கின்றது.

இ-ள்: முதலாவும்-மொழிக்கு முதலாகா என்ற ஒன்பது மெய்யும், ஏனவும்-மொழிக்கு முதலா மென்ற ஒன்பது மெய்யும் பன்னிரண்டுயிரும், தம் பெயர் முதலும்-தத்தம் பெயர் கூறுதற்கு முதலாம் ;எ-று.

முதலாவும் எனவும் என்ற உம்மைகள் தொக்குநின்றன.

எ-டு: ஙகரமும் டகரமும் ணகரமும் ரகரமும் லகரமும் ழகரமும் ளகரமும் றகரமும் னகரமும் என மொழிக்கு முதலாகாத ஒன்பதும் முதலாமாறு, ஙக்களைந்தார் டப்பெரிது ணந்நன்று எனவரும். இவ்வாறே ஏனையவற்றையும் ஒட்டுக. இனி என என்றதனான் கக்களைந்தார் தப்பெரிது அக் குறிது ஆநெடிது என மொழிக்கு முதலானவற்றையுந் தம்பெயர் கூறுதற்கு முதலாமாறு ஒட்டிக் கொள்க. வரையறுக்கப்பட்டு மொழிக்கு முதலாகாது நின்ற மெய்க்கும் இவ்விதி கொள்க. அவை சகரத்து மூன்றம் வகரத்து நான்கும் ஞகரத் தொன்பதும் யகரத்துப் பதினொன்றுமாம். (33)
-------------

குற்றியலுகரம் மொழி முதலாமாறு.
67. குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்1

இஃது எழுத்துக்களை மொழிக்கு முதலாமாறு கூறி முறையே குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு கூறகின்றது.

இ-ள்: குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்-குற்றியலுகரமானது முன்னிலை முறைப்பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்-தனிமெய்யாய் நின்ற நகரத்து மேனின்ற நகர்தொடு கூடி மொழிக்கு முதலென்றார்,. இது செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று. (34)
---------

மொழிமுதற் குற்றியலுகரத்தின் இயல்பு.
68. முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கின் நிலையிய லான.

இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.

இ-ள்: அப்பெயர்மருங்கின் நிலையியலான-அம்முறைப் பெயரிடத்தே நிற்றலிலக்கணமான குற்றியலுகரம், முற்றிய லுகரமொடு பொருள் வேறுபடாஅது-இதழ் குவித்துக் கூறும் வழி வரும் முற்றுகரத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடுமாறுபோல ஈண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது; எ-று.

காது, கட்டு, கத்து, முருக்கு, தெருட்டு என்பன முற்றுகரமும் குற்று கரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல2 நுந்தை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தாய் என்பதோவெனின் அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான் இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க. இதனானே மொழிக்கு முதலாமெழுத்துத் தொண்ணூற்று நான்கென்று உணர்க. (35)
-----------
    1. "குற்றிய லுகர.................நகரமொடு முதலும் " என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாமென்றாராலோ வெனின் " **துகதையுகரங் குறுகிமொழி முதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ்-சந்திக், குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி, மயலணையு மென்றதனைமாற்று" இவற்றை விரித்துரைத்து விதியும் விலக்கும, அறிந்துகொள்க. என்பது நன்னூல் மயிலைநாதருரை மேற்கோள். (எழு-105)

    2. காது கட்டு முதலியவை முற்றுகரமாயின் ஏவல வினையும் குற்றுகரமாயின் தொழிற் பெயருமாகும்.
---------

2.7. மொழியிறுதி எழுத்துக்கள்

மொழியீறாகும் உயிர்கள்
69. உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும்

இஃது உயிர் மொழிக்கு ஈறாமாறு கூறுகின்றது.

இ-ள்: உயிர் ஔ எஞ்சிய இறுதி யாகும்-உயிர்களுள் ஔகாரம் ஒழிந்தன வெல்லாம் மொழிக்கு ஈறாம் :எ-று

எனவே ஔகாரவுயிர் ஈறாகாதாயிற்று. இஃது உயிர்க்கும் உயிர் மெய்க்கும் பொது.

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என இவை தாமே ஈறாயின. ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ எனக் குறிலைந்தும் அளபெடைக்கண் ஈறாயின. கா தீ பூ சே கை கோ எனவும் விள கிளி மழு எனவும் வரும். எகர ஒகரம் மேலே விலக்குப. "அளபெடை மிகூஉ மிகர விறுபெயர்" (சொல்-125) என்பாராதலின், அளபெடைப்பின் வந்த குற்றெழுத்துங் கொள்வர் ஆசிரிய ரென்று உணர்க. நெட்டெழுத்தேழும் முதன் மொழியாம் என்னுந் துணையே முன்னுணர்த்துதலின் ஈண்டு அவை ஈறாமென்றும் உணர்த்தினார். (36)
----------

ஔ ஈறாகும் இடம்
70. கவவோ டியையின் ஔவு மாகும்

இஃது ஈறாகாதென்ற ஔகாரம் இன்னுழியாம் என்கின்றது.

இ-ள்: ஔவும்--முன் ஈறாகாதென்ற ஔகாரமும், கவவோடு இயையின் ஆகும்-ககரவகரத்தோடு இயைந்த வழி ஈறாம்;எ-று.

எ-டு-: கௌ வௌ எனவரும். எனவே ஒழிந்த உயிரெல்லாந் தாமே நின்றும் பதினெட்டு மெய்களோடுங் கூடி நின்றும் ஈறாதல் இதனாற் பெற்றாம். இதனானே ஔகாரம் ஏனை மெய்க்கண் வாராதென விலக்குதலும் பெற்றாம். உயிர் ஙகரத்தோடு கூடி மொழிக்கு ஈறா மென்பது இதனால் எய்திற்றேனும் அது மொழிககு ஈறாகாமை தந்து புணர்ந் துரைத்தலான் உணர்க.1 இதுவரையறை கூறிற்று. (37)
---------
    1 தந்து புணர்ந்துரைத்தல்-உள் பொருளல*லதனை உளபோலத் தந்து கூட உணர்த்தல், இங்கு, உயிர் ஙகரத்தோடு கூடி மொழிக்கு ஈறாவதுபோலக் கூறியது தந்து புணர்ந்துரைத்தல்.
--------

எகர வுயிர் மெய்யோ டீறாகாமை
71. எ என வருமுயிர் மெய்யீ றாகாது.

இஃது எகரந் தானே நின்றவழி யன்றி மெய்யோடு கூடினால் ஈறாகாதென
விலக்குகின்றது,

இ-ள்: எ என வரும் உயிர் மெய் ஈறாகாது-எ என்று கூறப்படும் உயிர் தானே ஈறாவதன்றி யாண்டும் மெய்களோடு இயைந்து ஈறாகாது. எ-று. (38)
------------

ஒகரம் நகரமெய் ஒன்றுடன் ஈறாதல்
72. ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே

இது விலக்கும் வரையறையுங் கூறுகின்றது.

இ-ள்: ஒவ்வும் அற்று-ஒகரமும் முன்சொன்ன எகரமும் போலத்தானே ஈறாவதன்றி மெய்களோடு இயைந்து ஈறாகாது, நவ்வலங்கடையே-நகரவொற்றோடு அல்லாத இடத்தில்; எ-று.

எ-டு: நொ கொற்றா "நொ அலையனின்னாட்டைநீ" எனவரும். (39)
------------

ஏ, ஓ ஞகர மெய்யுட னீறாகாமை
73. ஏ ஓ எனும் உயிர் ஞகாரத் தில்லை.

இது சில உயிர் சில உடலோடேறி முடியாதென விலக்குகின்றது.

இ-ள்: ஏ ஓ எனும் உயிர் ஞகாரத்தில்லை-ஏ ஓ என்றுகூறப்பட்ட இரண்டுயிருந் தாமே நின்றும் பிறமெய்களோடு நின்றும் ஈறாதலன்றி ஞகாரத்தோடு ஈறாதலில்லை.;ஏ-று.

எனவே ஏனையுயிர்கள் ஞகாரத்தோடு ஈறாமென்றாராயிற்று.

எ-டு: உரிஞ, உரிஞா, உரிஞீ, உரிஞீ, உரிஞு, உரிஞூ இவை எச்சமும் வினைப்பெயரும் பற்றி வரும். அஞ்ஞை, மஞ்ஞை இவை பெயர். ஏனை யைந்தும் விலக்கப்பட்டன. உரிஞோ என்பது "கடிசொல்லில்லை" என்பதனாற் கொள்க. (40)
----------

உ ஊ நகர வகரங்களுடன் ஈறாகாமை
74. உ ஊ காரம் நவவொடு நவிலா,.

இதுவும் அது.

இ-ள்: உ ஊகாரம்-உகர ஊகாரங்கள் தாமே நின்றும் பிறமெய்களோடுநின்றும் பயில்வதன்றி, நவவோடு நவிலா-நகர வொற்றோடும் வகரவொற்றோடும் பயிலா; எ-று.

எனவே ஏனை யுயிர்கள் நகர வகரங்களோடு வருமாயின

எ-டு: நகரம் பொருந என வினைப்பெயராகியும், நா நீ நே எனப் பெயராகியும் நை நொ நோ என வியங்கோளாகியும் வரும். பொருநை என்றுங் காட்டுப. வகரம் உவ வே என வியங்கோளாகியும், உவா செவ்வி வீ வை எனப் பெயராயும் வரும். ஒருவ ஒருவா ஒருவி ஒருவீ ஔவை என்றுங் காட்டுப. ஈண்டு விலக்காத ஏனை யுயிர்களோடு வந்த நகரவகரங்கள் அக்காலத்து வழங்கினவென்று கோடும். இவ்விதியால் இனி நவிலா என்றதனானே வகர வுகரம் கதவு துரவு குவவு புணர்வு நுகர்வு நவ்வு கவ்வு எனப் பயின்று வருதலுங் கொள்க. (41)
-----------

சகர வுகரம் இருமொழிக்கு ஈறாதல்
75. உச்ச காரம் இருமொழிக் குரித்தே

இது சகார உகாரம் பலசொற்கு ஈறாய் வாராது இருசொற்கு ஈறாமென்று வரையறை கூறுகின்றது.

இ-ள்: உச்சகாரம்-உகரத்தோடு கூடிய சகாரம், இரு மொழிக்கே உரித்து-இரண்டு மொழிக்கே ஈறாம்; எ-று.

எனவே பன்மொழிக்கு ஈறாகா தென்றவாறாயிற்று. உரித்தே யென்னும்ஏகாரம் மொழிக்கே யெனக் கூட்டுக.

எ-டு: 24; இஃது உளுவின் பெயர். முசு; இது குரங்கினுள் ஒரு சாசி. பசு என்பதோ வெனின், அஃது ஆரியச் சிதைவு. கச்சு குச்சு என்றாற் போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய சகரம் இருமொழிக்கு ஈறாமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம் பன்மொழிக்கு ஈறாமாயிற்று. உச உசா விசி சே கச்சைசோ எனப் பெயராயுந் , துஞ்ச எஞ்சா எஞ்சி மூசி மூசூ என எச்சமாயும் வரும். அச்சோ என வியப்பாயும் வரும். இன்னும் இவை வழக்கின்கட் பலவாமாறும் உணர்க. (42)
---------

பகர வுகரம் ஒரு மொழிக்கே ஈறாதல்
76. உப்ப காரம் ஒன்றென மொழிப
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே.

இஃது ஒருசொல் வரயறையும் அஃது ஓசை வேற்றுமையால் இரு பொருள் தருமெனவுங் கூறுகின்றது.

இ-ள்: உப்பகாரம் ஒன்றென மொழிப-உகரத்தோடு கூடிய பகரம் ஒருமொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகா தென்று கூறுவர் புலவர், இருவயினிலையும் பொருட்டாகும்மே-அதுதான் தன்வினை பிறவினை யென்னும் இரண்டிடத்தும் நிலைபெறும்
பொருண்மைத்தாம்.; எ-று.

எ-டு: தபு என வரும்.இது படுத்துக் கூற நீ சா வெனத் தன் வினையாம். எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம்.1 உப்பு தப்பு என்றாற் போல்வன குற்றுகரம். உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே ஏனை உயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் பலபொருள் தரும் என்றாராயிற்று. மறந்தப துப்பா என எச்சமாயும், நம்பி செம்பூ பே பெதும்பை எனப் பெயராயும், போ என ஏவலாயும் வரும். இவற்றைப் பிற சொற்களோடும் ஒட்டுக. ஏனை ஈகார பகரம் இடக்கராய் வழங்கும். (43)
--------
    1 இதனால் ஆங்கிலத்திற்போல பண்டைத்தமிழிலும் அசையழுத்தம் (accent) ஒரு சொல்லின் வகையையும் பொருளையும் வேறுபடுத்திற் றென்பதை அறியலாம்.
----------

ஈறாகா உயிர்மெய் இன்னவகையில் ஆமெனல்
77. எஞ்சிய வெல்லாம் எஞ்சுதல் இலவே

இது முன்னர் மொழிக்கு ஈறாம் என்றவற்றுள் எஞ்சி நின்றன மொழிக்கு ஈறாமாறும் மொழிக்கு ஈறாகா என்றவை தம்பெயர் கூறுங்கான் மொழிக்கு ஈறாமாறுங் கூறுகின்றது.

இ-ள்: எஞ்சியவும் எஞ்சுத லில. "கவவோடியையின்" (எழு-70) என்னுஞ் சூத்திரத்தாற் பதினோருயிரும் பதினெட்டு மெய்க்கண்ணும் வந்து மொழிக்கு ஈறா மென்ற பொது விதியிற் பின்னை விசேடித்துக் கூறியவற்றை ஒழிந்தனவும் மொழிக்கு ஈறாதற்கு ஒழிவில, எல்லாம் எஞ்சுதலில-மொழிக்கு ஈறாகாதென்ற உயிர்மெய்களுந் தம்பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிவில; எ-று.

எல்லா மென்றது சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல் என்னும் உத்தி1. உம்மை விரிக்க. ஈண்டு எஞ்சிய வென்றது முன்னர் உதாரணம் காட்டிய ஞகரமும் நகரமும் வகரமுஞ் சகரமும் பகரமும் ஒரு மொழிக்கும் ஈறாகாத ஙகரமும் ஒழிந்த பன்னிரண்டு மெய்க்கண்ணும் எகரமும் ஒகரமும் ஔகாரமும் ஒழிந்த ஒன்பதுயிரும் ஏறி மொழிக்கு ஈறாய் வருவனவற்றை யென்று உணர்க.
----------
    1. "சொல்லினெச்சஞ்சொல்லியாங் குணர்த்தல"-சொல்லினாற்றலாற் பெறப்படும் பொருளையும் எடுத்தோதியாங்குக் கொள்ள வைத்தல்; அஃது "எஞ்சியவெல்லா மெஞ்சுதலிலவே" (எழு- 77) என்புழி, எல்லாமென்பதனை எச்சப்படுத்தற்கு ஆகாதன இருபத்தாறு கொண்டவழியும் அதனை எடுத்தோதிற் சிறப்பின்றென்று கொள்ளற்கஎன்பது" (பேராசிரியம்)

எ-டு: வருக புகா வீக்கி புகீ செகு புகூ ஈங்கே மங்கை எங்கோ எனவும், கட்ட கடா மடி மடீ மடு படூ படை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க) மண்ண எண்ணா கண்ணி உணீ கணு கண்ணூ பண்ணை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க) அத புதா பதி வதீ அது கைதூ தந்தை அந்தோ எனவும் (இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க) கம நென்மா அம்மி மீ செம்முகொண்மூ யாமை காத்தும்வம்மோ எனவும் (இதற்கு ஏகாரம் ஏறிவருவன உள வேற் கொள்க) செய காயா கொய்யூ ஐயை ஐயோ எனவும் (இதற்கு இகர ஈகார உகர ஏகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க) வர தாரா பரி குரீ கரு வெரூ நாரை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க) சில பலா வலி வலீ வலு கொல்லூ வல்லே கலை எனவும் (இதற்கு ஓகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க) தொழ விழா நாழி வழீ மழு எழூ தாழை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), உள உள்ளா வெள்ளி குளீ உளு எள்ளூ களை எனவும் (இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க) கற்ற கற்றா உறி உறீ மறு உறூ கற்றை எற்றோ எனவும் (இதற்கு ஏகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க) கன கனா வன்னி துனீ முன்னு துன்னூ என்னே அன்னை அன்னோ எனவும் வரும். இவற்றுட் பெயராயும் வினையாயும் வருவன உணர்க. இவற்றுட் ககர னகரங்கள் விலக்காத ஒன்பதும் வந்தன. ஆக ஈறு நூற்றுநாற்பத்து மூன்றும் உதாரணமில்லாத பதினெட்டும் ஆக நூற்றறுபத்தொன்று. 2 ஙகரம் மொழிக்கு ஈறாகாதென்பது பெரும்பான்மை யாதலிற் கூறிற்றிலர். இனி ஙகரமும் ஔகாரமும் ஏறாத மெய் பதினைந்தும் எகரமும் ஒகரமும் ஏகாரமும் ஓகாரமும் உகரமும் ஊகாரமும் ஏறாத மெய்களுந் தம்பெயர் கூறுங்கான் மொழிக்கு ஈறாமாறு *ஙப்பெரிது சௌஅழகிது ஞௌதீது என வரும். ஏனையவற்றோடும் இவ்வாறே ஒட்டுக. கெக்குறைந்தது கொத்தீது ஞெவ்வழகிது ஞொத்தீது துந்நன்று நூப்பெரிது வுச்சிறிது வூப்பெரிது என எல்லாவற்றையும் இவ்வாறே ஒட்டுக. இன்னும் எல்லாம் என்றதனானே கந்நன்று ஆநன்ற என மொழிக்கு ஈறாவனவுந் தம்பெயர் கூறும் வழி ஆமென்று கொள்க (44)
-----------
    2. "இதற்கு ஏகார ஓகாரங்கள் ஏறிவருவன உளவேற்கொள்க" எனப் பல மெய்க்குக் கூறியிருப்பதனாலும் என்னே அன்னோ, ஐயோ என்ற வடிவங்கள் காட்டாகக் கொள்ளப்பட்டிருப்பதனாலும்; அடே, வீணே, ஐயே, எற்றே, அரோ முதலிய வடிவங்கள் வழக்கிலிருப்பதனாலும் காட்டுக காட்டப்படாத ஏகார ஓகார உயிர் மெய்யீறுகட்கெல்லாம் காட்டுண்டென அறிக. நச்சினார்க்கினியர் ஈற்றின் மொத்தத்தொகை கூறுமிடத்து "ஆக ஈறு நூற்று நாற்பத்தது மூன்றும் உதாரணமில்லாத பதினெட்டும் ஆக" என்பது ஆக ஈறு நூற்று நாற்பத்தொன்றும் உதாரணமில்லாத இருபதும் என்றிருத்தல் வேண்டும்.
-------------

மொழியீறாம் மெய்கள்
78. ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி.

இது முன்னர் உயிர் ஈறாமாறு உணர்த்திப் புள்ளிகளுள் ஈறாவன இவை யென்கின்றது.

இ - ள் : ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப்பதினொன்றே புள்ளியிறுதி - ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள வென்று கூறப்பட்ட பதினொன்றுமே புள்ளிகளில் மொழிக்கு ஈறாவன: எ – று.

எ – டு : உரிஞ், மண், பொருந், திரும் , பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் என வரும். னகரம் ஈற்று வையாது மகரத்தோடு வைத்தது வழக்குப் பயிற்சியும் மயக்க இயையும் நோக்கி. (45)
-----------

நகரமெய் இருமொழிக்கு ஈறாதல்
79. உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்.

இது மேற் பொதுவகையான் ஈறாவனவற்றுள் வரையறைப்படுவது இதுவென்கின்றது.

இ - ள் : உச்சகாரமொடு நகாரஞ் சிவணும் – உகாரத்தோடு கூடிய சகரம் இருமொழிக் கீறாயவாறு போல நகரவொற்றும் இருமொழிக்கல்லது ஈறாகாது; எ – று.

எ - டு : பொருந் வெரிந் என வரும். (46)
-------------

ஞகரமெய் ஒரு மொழிக்கே ஈறாதல்
80. உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே
அப்பொருள் இரட்டா திவணை யான.

இதுவும் அது.

இ - ள் : உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே – உகாரத்தோடு கூடிய பகரத்தோடு ஞகரமும் ஒத்து ஒரு மொழிக்கு ஈறாம், இவணையான அப்பொருள் இரட்டாது - இவ்விடத்து ஞகாரத்தின் கண்ணான அப்பொருள் பகரம்போல இருபொருட் படாது;
எ – று.

எ - டு : உரிஞ் என வரும். ஞகாரம் ஒரு மொழிக்கு ஈறாதலின் நகரத்தின்பின் கூறினார். இவணை யென்னும் ஐகாரம் அசை. (47)
----------

வகர மெய் நான்மொழிக்கு ஈறாதல்
81. வகரக் கிளவி நான்மொழி ஈற்றது.

இதுவும் அது.

இ – ள் : வகரக் கிளவி நான்மொழி ஈற்றது – வகரமாகிய எழுத்து நான்கு மொழியின் ஈற்றதாம்; எ – று.

எ - டு : அவ் இவ் உவ் தெவ் என வரும். கிளவி ஆகுபெயர், எழுத்துக் கிளவியாதற்கு உரித்தாமாதலின். (48)
-----------

அஃறிணைக்கண் னகரவீற்று மொழிகள் ஒன்பது
82. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப
புகரறக் கிளந்த அஃறிணை மேன.1

இதுவும் அது; வரையறை கூறுதலின்.
---
    1. "மகரத் தொடர்மொழி………. அஃறிணை மேன*" என்று, எகின், செகின், எயின்,
    வயின், குயின், அழன், புழன், புலான்*, கடான் என வரும் ஒன்பதும் மயங்காதன
    வெனக்கொள்ளின்*, பலியன, வலியன, வயான, க*பான, அலவன, கலவன,
    கலுழன, மறையன, செகிலன முதலியன மயங்கப்பெறாவென மறுக்க"
    என்பது நன்னூல் மயிலைநாதருரை. (நூ. 121)

இ - ள் : புகரறக் கிளந்த அஃறிணை மேன – குற்றமறச் சொல்லப்பட்ட அஃறிணைப்பெயரிடத்து, மகரத்தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத்தொடர்மொழி ஒன்பஃது என்ப - மகர ஈற்றுத் தொடர்மொழியோடு மயங்கா தென்று வரையறைப்பட்ட னகர ஈற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று கூறுவர் ஆசிரியர்; எ – று.

ஆய்தம் விகாரம்.

எ - டு : எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என வரும். எகின் எகினம் என்றாற்போல வேறோர் பெயராய்த் திரிவனவுஞ் சந்தியால் திரிவனவுமாய் ஈற்றுள் திரிபுடையன களைந்து ஒன்பதும் வருமேற் கண்டுகொள்க. நிலம் நிலன், பிலம் பிலன், கலம் கலன், வலம் வலன், உலம் உலன், குலம் குலன், கடம் கடன், பொலம் பொலன், புலம் புலன், நலம் நலன், குளம் குளன், வளம் வளன் என இத்தொடக்கத்தன தம்முள் மயங்குவன. வட்டம் குட்டம், ஓடம் பாடம் இவைபோல்வன மயங்காதன. வரையறை னகரத்தின்மேற் செல்லும். மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம்.

மொழிமரபு முற்றிற்று.

3. பிறப்பியல்
[எழுத்துக்களின் பிறப்பிலக்கணம் உணர்த்துவது.]
3.1. எழுத்துக்கள் பொதுவாகப் பிறக்குமாறு

83. உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும்(1) உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான.

என்பது சூத்திரம். இவ்வோத்து எழுத்துக்களினது பிறப்பு உணர்த்துதலிற் பிறப்பிய லென்னும் பெயர்த்தாயிற்று. சார்பிற் றோற்றத்து எழுத்துந்தனிமெய்யும் மொழியி னன்றி உணர்த்தலாகாமையின் அவை பிறக்கும் மொழியை மொழிமரபிடை உணர்த்திப் பிறப்பு உணர்த்த வேண்டுதலின் நூன்மரபின் பின்னர் வையாது இதனை மொழிமரபின் பின்னர் வைத்தார்.

இச்சூத்திரம் எழுத்துகளினது பொதுப்பிறவி இத்துணை நிலைக்களத்து நின்று புலப்படு மென்கின்றது.
--------------------
    (1) எழுத்தை பிறப்பித்தற்கு இடமும் உறுப்பும் என இரண்டு வேண்டும். எழுத்தின் இனத்தன்மையைத் தோற்றும் நெஞ்சு தொண்டை முதலியவை இடம்; தனித்தனி எழுத்தைத் தோற்றும் நா பல் முதலியவை உறுப்பு. மூக்கைத் தொல்காப்பியர் உறுப்பென்றார்; நன்னூலார் இடமென்றார். இருவரும் தலையைஓர் இடமாகக் கொண்டனர். இஃது உடல் நூலுக்கும் ஒலி நூலுக்கும் பொருந்துவதாயத் தோன்றவில்லை.

இ - ள்: எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லுங்காலை -- தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் ஆசிரியன் கூறிய பிறப்பினது தோற்றரவை யாங் கூறுமிடத்து, உந்திமுதலாத் தோன்றி முந்து வளி -- கொப்பூழடியாகத் தோன்றி முந்துகின்ற உதானனென்னுங் காற்று, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ -- தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புறு -- பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமு மென்ற ஐந்துடனே அக்காற்று, நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங் கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புக்களோடு ஒன்றுற்று, அமைய – இங்ஙனம் அமைதலானே, வேறுவேறு இயல – அவ்வெழுத்துக்களது தோற்றரவு வேறு வேறு பலப்பட வழங்குதலையுடைய, காட்சியான நாடி நெறிப்பட - அதனை யறிவான் ஆராய்ந்து அவற்றின் வழியிலே மனம்பட, திறம்படத் தெரியும் - அப்பிறப்பு வேறு பாடுகளெல்லாங் கூறுபட விளங்கும்; எ-று.

சொல்லுங்காலை வளி நிலைபெற்று உறுப்புக்களுற்று இங்ஙனம் அமைதலானே அவை வழங்குதலையுடைய; அவற்றின் வழக்கம் அவற்றின் வழியிலே மனந் திறப்படத் தெரியுமெனக் கூட்டி உரைத்துக் கொள்க. இங்ஙனங் கூறவே முயற்சியும் முயலுங் கருத்தாவும் உண்மை பெற்றாம். (1)
------------

3.2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு எல்லா உயிர்களும் பொதுவாகப் பிறக்கும் வகை

84. அவ்வழிப்
பன்னீ ருயிரும் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.

இஃது உயிரெழுத்திற்குப் பொதுப்பிறவி கூறுகின்றது.

இ-ள்: பன்னீருயிருந் தந்நிலை திரியா - பன்னிரண்டு உயிருந்தத்தம் மாத்திரை திரியாவாய், அவ்வழிப் பிறந்த - அவ்வுந்தி யிடத்துப் பிறந்த, மிடற்று வளியின் இசைக்கும் - மிடற்றின் கண் நிலைபெற்ற காற்றான் ஒலிக்கும்; எ-று.

எனவே குற்றியலிகரமுங் குற்றியலுகரமுந் தந்நிலை திரியு மென்றாராயிற்று. அவ்வெழுத்துக்களைக் கூறி உணர்க. (2)
---------------

அ, ஆ பிறக்குமாறு
85. அவற்றுள்,
அ ஆ ஆயிரண் டங்காந் தியலும்.

இஃது அவ்வுயிர்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி கூறுகின்றது.

இ-ள்: அவற்றுள் - முற்கூறிய பன்னிரண்டு உயிர்களுள், அ ஆ ஆயிரண்டு - அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும், அங்காந்து இயலும் - அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும்; எ-று.

முயற்சி உயிர்க்கிழவன்கண்ணது. அ ஆ என இவற்றின் வேறுபாடு உணர்க.
----------

இகரம் முதலியன பிறக்குமாறு
86. இ ஈ எ ஏ ஐயென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன
அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய.

இதுவும் அது.

இ-ள்: இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அப்பாலைந்தும்-இ ஈ எ ஏ ஐ என்று கூறப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்றோரன்ன -அகர ஆகாரங்கள்போல அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும், அவைதாம் அங்ஙனம் பிறக்குமாயினும் அண்பல்லும் அடிநா
விளிம்பும் உறப் பிறக்கும் வேறுபாடுடைய; எ-று.

அண்பல் வினைத்தொகை. எனவே நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமான பல்லென்று அதற்கோர் பெயராயிற்று. இ ஈ எ ஏ ஐ என இவற்றின் வேறுபாடு உணர்க. (4)
------------

உகர முதலியன பிறக்குமாறு
87. உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்

இதுவும் அது.

இ-ள்: உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் அப்பாலைந்தும்- உ ஊ ஒ ஓ ஔ என்று சொல்லப்படும் அக்கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும்-இதழ் குவித்துக் கூறப் பிறக்கும்;எ-று

உ ஊ ஒ ஓ ஔ என இவற்றின் வேறுபாடு உணர்க. (5)
---------

உயிர்கும் மெய்க்கும் ஒரு பொதுவிதி.
88. தத்தம் திரிபே சிறிய என்ப.

இது முற்கூறிய உயிர்க்கும் மேற்கூறும் மெய்க்கும் பொதுவிதி கூறிச் சிங்கநோக்காகக் கிடந்தது.

இ-ள்: தத்தந் திரிபே சிறிய என்ப-உயிர்களும் மெய்களும் ஒவ்வொரு தானங்களுட் பிறப்பனவற்றைக் கூட்டிக் கூறினேமாயினும் நுண்ணுணர்வான் ஆராயுமிடத்துத் தம்முடைய வேறுபாடுகள் சிறியவாக உடைய என்று கூறுவர் புலவர்; எ-று

அவை எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் என்றவாற்றானுந் தலைவளி1 நெஞ்சுவளி மிடற்றுவளி மூக்குவளி என்றவாற்றானும் பிறவாற்றானும் வேறுபடுமாறு நுண்ணுணர்வுடையோர் கூறி உணர்க. ஐ விலங்கலுடையது.2 வல்லினந் தலைவளியுடையது. ஏனையவுங் கூறிக்கண்டு உணர்க. (6)
-------
    1 தலைவளி எழுத்திற்குப் பயன்படுவதாய்த் தெரியவில்லை.
    2 விலங்கல்-நலிதலை அடுத்த படுத்த லொலிகளைச் சோர்த்துக் கூறும்போது உள்ள ஓசை.
---------

3.3. மெய்யெழுத்துக்கள் பிறக்குமாறு.

க, ங
89. ககார ஙகாரம் முதல்நா அண்ணம்
இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறப்புக் கூறுகின்றது.
3 வல்லினம் நெஞ்சுவளியுடையதென்பதே பொருத்தமானது.

இ-ள்: ககார ஙகாரம் முதல் நா அண்ணம்-ககாரமும் ஙகாரமும் முதல் நாவும் முதல் அண்ணமும் உறப் பிறக்கும். எ-ற

உயிர்மெய்யாகச் சூத்திரத்துக் கூறினுந் தனிமெய்யாகக் கூறிக் காண்க.
முதலை இரண்டிற்குங் கூட்டுக. க ங என இவற்றின் வேறுபாடு உணர்க. (7)
-----------

ச, ஞ
90. சகார ஞகாரம் இடைநா அண்ணம்

இதுவும் அது.

இ-ள்: சகார ஞகாரம் இடைநா அண்ணம்-சகாரமும் ஞகாரமும் இடைநாவும் இடையண்ணமும் உறப் பிறக்கும்; எ-று

இடையை இரண்டிற்குங் கூட்டுக. ச ஞ என இவற்றின் வேறுபாடு உணர்க. (8)
---------

ட, ண
91. டகார ணகாரம் நுனிநா அண்ணம்

இதுவும் அது.

இ-ள்: டகார ணகாரம் நுனி நா அண்ணம்-டகாரமும் ணகாரமும் நுனிநாவும் நுனியண்ணமும் உறப் பிறக்கும்;எ-று

நுனியை இரண்டிற்குங் கூட்டுக. ட ண என இவற்றின் வேறுபாடு உணர்க. (9)
------------

மேலனவற்றிற்கோர் ஐயந் தீர்ந்தது
92. அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின

இது மேலனவற்றிற்கோர் ஐயம் அகற்றியது.

இ-ள்: அவ்வாறெழுத்தும் மூவகைப் பிறப்பின-அக்கூறப் பட்ட ஆறெழுத்தும் மூவகையாகிய பிறப்பினை உடைய;எ-று

எனவே, அவை ககாரம் முதல் நாவினும் ஙகாரம் முதல் அண்ணத்தினும் பிறக்குமென்று இவ்வாறே நிரனிறைவகையான் அறுவகைப் பிறப்பின அல்ல என்றார், (10)
-----------

த, ந
93. அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்
தாம் இனிது பிறக்குந் தகார நகாரம்

இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி கூறுகின்றது.

இ-ள்: அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில்-அண்ணத்தைச் சேர்ந்த பல்லின தடியாகிய இடத்தே, நாநுனி பரந்து மெய்யுற ஒற்ற-நாவினது நுனி பரந்து சென்று தன் வடிவு மிகவும் உறும்படி சேர, தகார நகாரந்தாம் இனிது பிறக்கும்- தகார நகார மென்றவைதாம் இனிதாகப் பிறக்கும்; எ-று

த ந என இவற்றின் வேறுபாடு உணர்க. முன்னர் உறுப்புற்று அமைய என்று கூறி ஈண்டு மெய்யுற ஒற்ற என்றார். சிறிது ஒற்றவும் வருடவும் பிறப்பன1 உளவாகலின். (11)
-------------
    1. சிறிது ஒற்றப் பிறப்பன லகார ளகாரங்கள் . சிறிது வருடப் பிறப்பன ரகார ழகாரங்கள்;
----------

ற, ள
94. அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்

இதுவும் அது

இ-ள்: நுனி நா அணரி அண்ணம் ஒற்ற-நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்- றகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும்;எ-று

இதுமுதலாக நெடுங்கணக்கு முறையன்றி நாவதிகாரம்2 பற்றிக் கூறுகின்றார்.,

ற ன என இவற்றின் வேறுபாடு உணர்க. (12)
---------
    2. நாவதிகாரம்-நாவினால் ஏற்பட்ட முறைமை
---------

ர, ழ
95. நுனிநா அணரி அண்ணம் வருட
ரகாரம் ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்

இதுவும் அது

இ-ள்: நுனிநா அணரி அண்ணம் வருட-நாவினது நுனிமேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்- ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் எ-று.

ர ழ என இவற்றின் வேறுபாடு உணர்க. (13)
----------

ல, ள
96. நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
வாவயி னண்ண மொற்றவும் வருடவும்
லகார ளகார 2மா யிரண்டும் பிறக்கும்.

இதுவும் அது.

இதன் பொருள்: நா வீங்கி விளிம்பு அண்பல் முதலுற – நா மேனோக்கிச் சென்று தன் விளிம்பு அண்பல்லி னடியிலே உறாநிற்க, ஆவயின் அண்ணம் ஒற்ற லகாரமாய் - அவ்விடத்து அவ் வண்ணத்தை அந் நாத் தீண்ட லகாரமாயும், ஆவயின் அண்ணம் வருட ளகாரமாய் - அவ்விடத்து அவ்வண்ணத்தை அந் நாத் தடவ ளகாரமாயும், இரண்டும் பிறக்கும் - இவ்விரண்டெழுத்தும் பிறக்கும் என்றவாறு.
-------
    1. அணருதல் - மேனோக்கிச் சேறல், அணரி - மேனோக்கிச் சென்று.
    2. அவ்விரண்டும் என முன்போற் கூறலே பொருத்தம்.

ல ள என இவற்றின் வேறுபாடு உணர்க.

1இத்துணையும் நாவதிகாரங் கூறிற்று. (14)
-----------
    1. இத்துணையும் நாவதிகாரம் கூறிற்றென்றது, அ - ம் சூத்திரத்தில் நாவிற் பிறக்கும் எழுத்தை அதிகாரப்பட வைத்து அது முதலாக நாவிற் பிறக்கும் எழுத்துக்களையே கூறிவந்தமையை. அதிகாரம் - தலைமை, முறைமை என்பர் நச்சினார்க்கினியர்.
---------

97. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்.

இதுவும் அது.

இதன் பொருள் : இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் - மேலிதழுங் கீழி தழுந் தம்மிற் கூடப் பகாரமும் மகாரமும் பிறக்கும் என்றவாறு.

ப ம என இவற்றின் வேறுபாடு உணர்க. (15)
-----------

98. பல்லித ழியைய வகாரம் பிறக்கும்.

இது வகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.

இதன் பொருள்: பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் – மேற் பல்லுங் கீழி தழுங் கூட வகாரமானது பிறக்கும் என்றவாறு.

'வ என வரும். இதற்கு இதழ் இயைதலின் மகரத்தின் பின்னர் வைத்தார். (16)
-------------

99. அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்.

இது யகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.

இதன் பொருள்: எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை – உந்தியிலெழுந்த காற்று மிடற்றிடத்துச் சேர்ந்த அதனாற் பிறந்த ஓசை, அண்ணங் கண்ணுற்று அடைய - அண்ணத்தை அணைந்து உரலாணி இட்டாற்போலச் செறிய, யகாரம் பிறக்கும் - யகாரவொற்றுப் பிறக்கும் என்றவாறு.

1ஆணி - மரம். ய என வரும். (17)
--------
    1. ஆணி என்றது - உரலின் அடித்துவாரத்தை மறைக்கும் படி இடும் மரத்தை.
------------

100. மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ்
சொல்லிய பள்ளி நிலையின வாயினு
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்.

இது மெல்லெழுத்திற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.

இதன் பொருள்: மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லிய 2பள்ளி நிலையின ஆயினும் - மெல்லெழுத்துக்கள் ஆறுந் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடத்தே நிலை பெற்றனவாயினும், மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும் - ஓசை கூறுங்கால் மூக்கின்கண் உளதாகிய வளியினிசையான் யாப்புறத் தோன்றும் என்றவாறு.

அவை அங்ஙனமாதல் கூறிக் காண்க. யாப்புற என்றதனான் இடையினத்திற்கு மிடற்றுவளியும் வல்லினத்திற்குத் தலைவளியுங் கொள்க. (18)
----------

3.2. பள்ளி - இடம்.

101. சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றுந்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
யொத்த காட்சியிற் றம்மியல் பியலும்.

இது சார்பிற்றோற்றங்கள் பிறக்குமாறு கூறுகின்றது.

இதன் பொருள்: சார்ந்து வரின் அல்லது - சில எழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது, தமக்கு இயல்பு இல என – தமக்கெனத் தோன்றுதற்கு ஓரியல்பிலவென்று, தேர்ந்து வெளிப்படுத்த தம்மியல்பு மூன்றும் - ஆராய்ந்து வெளிப்படுக்கப்பட்ட எழுத்துக்கள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றினையுங் கூறுங்கால், தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி இயலும் - தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்புப் பிறப்பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும், ஏனை ஒத்த காட்சியின் இயலும் - ஒழிந்த ஆய்தந் தமக்குப் பொருந்தின நெஞ்சுவளியாற் பிறக்கும் என்றவாறு.

காட்சி யென்றது நெஞ்சினை. கேண்மியா நாகு நுந்தை எனவும் எஃகு எனவும் வரும்.

ஆய்தத்திற்குச் சார்பிடங் 'குறியதன் முன்னர்' (எழு - 38) என்பதனாற் கூறினார். இனி ஆய்தந் தலைவளியானும் மிடற்றுவளியானும் பிறக்கு மென்பாரும் உளர். மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தலென்பதனான் அளபெடையும் உயிர்மெய்யுந் தம்மை ஆக்கிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்று உணர்க. (19)
----------

102. எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரிறப நாடி
யளபிற் கோட லந்தணர் மறைத்தே
யஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு
மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே.

இஃது எழுத்துக்கடம் பிறப்பிற்குப் புறனடை கூறுகின்றது.

இதன் பொருள்: எல்லா வெழுத்துங் கிளந்து வெளிப்பட – ஆசிரியன் எல்லாவெழுத்துக்களும் பிறக்குமாறு முந்துநூற்கண்ணே கூறி வெளிப்படுக்கையினாலே, சொல்லிய பள்ளி பிறப்பொடு விடுவழி - யானும் அவ்வாறே கூறிய எண்வகை நிலத்தும் பிறக்கின்ற பிறப்போடே அவ்வெழுத்துக்களைக் கூறுமிடத்து, எழுதரு வளியின் உறழ்ச்சிவாரத்தின் அளபு கோடல் - யான் கூறியவாறு அன்றி உந்தியில் தோன்றுங் காற்றினது திரிதருங் கூற்றின்கண்ணே மாத்திரை கூறிக் கோடலும், அகத்து எழுவளியிசை அரில் தப நாடிக் கோடல் - மூலாதாரத்தில் எழுகின்ற காற்றினோசையைக் குற்றமற நாடிக் கோடலும், அந்தணர் மறைத்தே - பார்ப்பாரது வேதத்து உளதே ; அந்நிலைமை ஆண்டு உணர்க, அஃது இவண் நுவலாது - அங்ஙனம் கோடலை ஈண்டுக் கூறலாகாமையின் இந் நூற்கட் கூறாதே, எழுந்து புறத்து இசைக்கும் - உந்தியிற்றோன்றிப் புறத்தே 1புலப்பட்டு ஒலிக்கும், மெய் தெரி வளியிசை அளவு நுவன்றிசினே - பொருடெரியுங் காற்றினது துணிவிற்கே யான் மாத்திரை கூறினேன்; அவற்றினது மாத்திரையை உணர்க என்றவாறு.

இதனை இரண்டு சூத்திரமாக்கியும் உரைப்ப.

இது பிறன்கோட் கூறலென்னும் உத்திக்கு இனம். என்னை? உந்தியில் எழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக் கோடலும் மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும் வேதத்திற்கு உளதென்று இவ் வாசிரியர் கூறி அம் மதம்பற்றி அவர் கொள்வதோர் பயன் இன்றென்றலின். உந்தியில் எழுந்த காற்று முன்னர்த் தலைக்கட் சென்று பின்னர் மிடற்றிலே வந்து பின்னர் நெஞ்சிலே நிற்றலை உறழ்ச்சி வாரத்து என்றார். அகத்தெழுவளி யெனவே மூலாதார மென்பது
பெற்றாம்.

இன் சாரியையை அத்துச் சாரியையோடு கூட்டுக. ஏகாரந் தேற்றம்.

மெய்தெரிவளியெனவே 2பொருடெரியா முற்கும் வீளையும் முயற்சியானாமெனினும் பொருடெரியாமையின் அவை கடியப்பட்டன. எனவே, சொல்லப் பிறந்து சொற்கு உறுப்பாம் ஓசையை இவர் எழுத்தென்று வேண்டுவரென உணர்க;

3 'நிலையும் வளியும் முயற்சியு மூன்று
மியல நடப்ப தெழுத்தெனப் படுமே.'

என்றாராகலின். (20)
------------
    1. புலப்படல் - செவிக்குப் புலப்படல்.
    2. பொருள் தெரியா என்பதற்கு எழுத்தாகிய பொருள் தெரியாத என்பது பொருள். இன்றேல், முற்கும் வீளையும் பொருளுணர்த்துமேனும் என்று இவர் முற்கூறியதோடு மாறுபடும்.
    3. நிலை என்றது இடத்தை, வளி என்றது காற்றை. முயற்சி என்றது முயற்சிப் பிறப்பை.

பிறப்பியல் முற்றிற்று.
-----------

4. புணரியல்
(எழுத்துக்களின் புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது.)
4.1. மொழிகளின் முதலும் ஈறும்

மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துக்கள்
103. மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தி்ன்
இரண்டுதலை யிட்ட முதலா கிருபஃது
அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே உயிரென்று ஆயீ ரியல.

என்பது சூத்திரம். மொழிமரபிற் கூறிய மொழிகளைப் பொதுவகையாற் புணர்க்கும் முறைமை உணர்த்தினமையிற் புணரிய லென்று இவ்வோத்திற்குப் பெயராயிற்று. ஈண்டு முறைமை யென்றது மேற் செய்கை யோத்துக்களுட் புணர்தற்கு உரியவாக ஈண்டுக் கூறிய கருவிகளை.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மொழிமரபிற் கூறிய மொழிக்கு முதலாமெழுத்தும் மொழிக்கு ஈறா மெழுத்தும் இத்துணை யென்றலும், எல்லா மொழிக்கும் ஈறும் முதலும் மெய்யும் உயிரு மல்லது இல்லையென்று வரையறுத்தலும், ஈறும் முதலுமாக எழுத்து நாற்பத்தாறு உளவோ வென்று ஐயுற்றார்க்கு எழுத்து முப்பத்து மூன்றுமே அங்ஙனம் ஈறும் முதலுமாய் நிற்பதென்று ஐயமறுத்தலும் நுதலிற்று.

இ-ள்: முதல் இரண்டு தலையிட்ட இருபஃது ஈறு அறுநான்காகும் மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தினொடு-மொழிக்கு முதலா மெழுத்து இரண்டை முடியிலே யிட்ட இருபஃதும் மொழிக்கு ஈறாமெழுத்து இருபத்துநான்கு மாகின்ற மூன்றை முடியிலே யிட்ட முப்பதாகிய எழுத்துக்களோடே, நெறிநின்று இயலும் எல்லா மொழிக்கும்-வழக்கு நெறிக்கணின்று நடக்கும் மூவகை மொழிக்கும் மெய்யே உயிரென்று ஆயீரியல இறுதியும் முதலும்-மெய்யும் உயிரு மென்று கூறப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய எழுத்துக்களே ஈறும் முதலும் ஆவன; எ-று.

இருபத்திரண்டு முதலாவன பன்னீருயிரும் ஒன்பது உயிர்மெய்யும் மொழிமுதற் குற்றியலுகரமுமாம். இருபத்துநான்கு ஈறாவன பன்னீருயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக் குற்றியலுகரமுமாம். மெய்யை முற்கூறினார் நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழா வென்றற்கு.

எ-டு: மரம் என மெய்முதலும் மெய்யீறும், விள என மெய் முதலும் உயி உயிரீறும், ஆல் என உயிர்முதலும் மெய்யீறும், விள என மெய் முதலும் உயிரீறுமாம். மொழியாக்கம் இயல்பும் விகாரமு மென இரண்டாம். உயிர் தாமே நின்று முதலும் ஈறு மாதல் இயல்பு. அவை மொய்யோடு கூடி நின்று அங்ஙனமாதல் விகாரம் (1)
-------

மொழியிறுதி மெய்கள் புள்ளி பெறுதல்
104. அவற்றுள்
மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்

இது முற்கூறியவற்றால் தனிமெய் முதலாவான் சென்றதனை விலக்கலின் எய்தியது விலக்கிற்று.

இ-ள்: அவற்றுள்-முற்கூறிய மெய்யும் உயிருமென்ற இரண்டினுள், மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல்-மெய்மொழிக்கு ஈறாயவை யெல்லாம் புள்ளிபெற்று நிற்கும்; எ-று

எனவே மொழிக்கு முதலாயினவை யெல்லாம் புள்ளி யிழந்து உயிரேறி
நிற்கு மென்றாராயிற்று. இன்னும் ஈற்று மெய் புள்ளிபெற்று நிற்குமென்றதனானே உயிர்முதன்மொழி தம்மேல் வந்தால் அவை உயிரேற இடங் கொடுத்து நிற்கு மென்பதூஉங் கூறினாராயிற்று. இவ்விதி முற்கூறியதன்றோவெனின் ஆண்டுத் தனிமெய் பதினெட்டும் புள்ளிபெற்று நிற்கு மென்றும் அவைதாம் உயிரேறுங்காற் புள்ளி யிழந்து நிற்கு மென்றுங் கூறினார்; ஈண்டு மெய்முதல் மெய்யீறெனப் பொருளுரைக்க வேண்டினமையின் மொழிமுதன் மெய்களும் புள்ளிபெறுமோ வென்று ஐயுற்ற ஐயம் அகற்றக் கூறினா ரென்ற உணர்க. மரம் எனப் புள்ளிபெற்று நின்றது அரிதென வந்துழி மரமரிதென்று ஏறி முடிந்தவாறு காண்க. (2)
---------

குற்றுகரம் ஒற்றெழுத் தொத்தல்
105. குற்றிய லுகரமும் அற்றென மொழிப.

இது முன்னர்ப் புள்ளியிற்றுமுன் உயிர் தனித்தியலா தென்ற மெய்க்கு எய்துவிக்கின்ற கருவியை எதிரத போற்றி உயிர்க்கும் எய்துவிக்கின்ற கருவிச் சூத்திரம்.

இ-ள்: குற்றியலுகரமும் அற்றென மொழிப-ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறுபோல உயிரேற இடங்கொடுக்கு1 மென்றுகூறுவர் புலவர்; எ-று
--------
    1 "குற்றியலுகரம்...மொழிப" என்பதற்கு குற்றியலுகரமும் மெய்யீறுபோலப் புள்ளிபெறும் என்பதே போந்த பொருளாம். "மெய்யினியற்கை புள்ளியொடு நிலயல...." எகார ஒகரத்தியற்கையும் அற்றே" என்று ஆசிரியர் மாட்டிய விடத்தும் எகர ஒகரம் புள்ளிபெறு மென்பதே கருத்தாதல் தெளிவாம். ஆதலால் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் குற்றியலுகரம் புள்ளியீறுபோல உயிரேற இடங் கொடுக்குமென்று உரைகூறுவது மாட்டேற்றிற்கு முற்றிலும் பொருந்தாது. இதுவே பேராசிரியர்க்கும் சிவஞானமுனிவர்க்கும் சங்கயாப் புடையார்க்கும் கருத்தாம். "தொல்லைவடிவின்...புள்ளி" என்னும் நன்னூல் நூற்பாவுரையில் "ஆண்டு என்ற மிகையானே...குற்றுகரக் குற்றிகரங்களுக்குமேற் புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க" என்று மயிலைநாதர் கூறுவதுங் காண்க.

இம்மாட்டேறு ஒருபுடைச் சேறல் புள்ளி பெறாமையின். அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகரங் கெட்டுப்போக நின்ற ஒற்றின்மேல் உயிரேறிற்றென்று கொள்ளற்க. நாகரிதென்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங்கூடி நின்றல்லது அப்பொருளுணர்த்த லாகாமையின், இஃது உயிரோடுங் கூடி நிற்கு மென்றார். (3)
------------

உயிர் மெய்யீறு உயிரீற்றது,
106. உயிர்மெய் ஈறும் உயிரீற் றியற்றே.

இது "மெய்யே யுயிரென்றாயீரியல" (எழு-103) என்ற உயிர்க்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றியது; உயிர்மெய் யென்பதோர் ஈறு உண்டேனும் அது புணர்க்கப்படாது, அதுவும் உயிராயே அடங்குமென்றலின்.

இ-ள்: உயிர்மெய்யீறும்-உயிர்மெய் மொழியினது ஈற்றின்கண் நின்றதும், உயிரீற்றியதே-உயிரீற்றின் இயல்பை யுடைத்து;எ-று

உம்மையான் இடைநின்ற உயிர்மெய்யும் உயிரீற்றின் இயல்பை யுடைத்து என்றாராயிற்று. உம்மை எச்சவும்மை. ஈற்றினும் இடையினும் நின்றன. உயிருள் அடங்கு மெனவே முத் நின்றன மெய்யுள் அடங்கு மென்றார். இத னானே மேல் விள என்றாற் போலும். உயிர்மெய்க ளெல்லாம் அகர வீறென்று புணர்க்குமாறு உணர்க. வரகு இதனை மேல் உயிர்த்தொடர் மொழி யென்ப. முன்னர் "மெய்யின் வழியது" (எழு-18) என்றது ஓரெழுத்திற் கென்று உணர்க. இத்துணையும் மொழிமரபின் ஒழிபு கூறிற்று. (4)
---------

புணர்ச்சிக்குரிய இருமொழிகளின் இயல்பு
107. உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று
இவ்வென அறியக் கிளக்குங் காலை
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று
ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டே,

இது மேற்கூறும் புணர்ச்சிகளெல்லாம் இருமொழிப் புணர்ச்சியல்லது இல்லை யென்பதூஉம் அஃது எழுத்துவகையான் நான்காமென்பதூஉம் உணர்த்துகின்றது.

இ-ள்: உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்-உயிர் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின்முன் உயிர் முதலாகிய மொழி வரும் இடமும், உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்-உயிர் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் மெய் முதலாகிய மொழி வரும் இடமும், மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்-மெய் தனக்கு ஈறாக இறுஞ் வொல்லின் முன்னர் உயிர்முதலாகிய மொழி வரும் இடமும், மெய்யிறு சொல்மு்ன் மெய்வரு வழியும்- மெய் தனக்கு ஈறாக இறுஞ் சொல்லின் முன்னர் மெய் முதலாகிய மொழிவரும் இடமும், என்று புணர்நிலைச்சுட்டு-என்று சொல்லப்பட்ட ஒன்றெனோடொன்றுகூடும் நிலைமையாகிய கருத்தின்கண், இவ்வென அறியக் கிளக்குங்காலை -அவற்றை இத்துணை யென வரையறையை எல்லாரும் அறிய யாங் கூறுங்காலத்து, நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி யென்று ஆயீரியல-முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லும் அதனை முடித்தலைக் குறித்து வருஞ்சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய; எ-று

எனவே, நான்கு வகையானுங் கூடுங்கால் இருமொழி யல்லது புணர்ச்சியின்று என்றாராயிற்று.

எ-டு: ஆவுண்டு ஆவலிது ஆலிலை ஆல்வீழ்ந்தது என முறையே காண்க. விளவினைக் குறைத்தான் என்றவழிச் சாரியையும் உருபும் நிலை மொழியாயே நிற்குமென்பது நோக்கி அதனை நிறுத்தசொல்லென்றும் முடிக்குஞ் சொல்லைக் குறித்துவரு கிளவியென்றும் கூறினார், இதனானே நிலை மொழியும் வருமொழியுங் கூறினார். முன்னர் "மெய்யே யுயிர்" (எழு-103) என்றது ஒரு மொழிக்கு , இஃது இருமொழிக்கென்று உணர்க. (5)
-----------

4.2. புணர்தலின் இயல்பு

மொழி புணரியல்பு நான்கு
108. அவற்றுள்
நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு
குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப்
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென
ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே.

இது முன்னர் எழுத்துவகையான் நான்கு புணர்ச்சி எய்திய இருவகைச் சொல்லுஞ் சொல்வகையானும் நான்காகு மென்பதூஉம் அங்ஙனம் புணர்வது சொல்லுஞ் சொல்லும் அன்று எழுத்தும் எழுத்துமென்பதூஉம் உணர்த்துகின்றது.

இ-ள்: அவற்றுள்-நிலைமொழி வருமொழி யென்றவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறாகு எழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத்து இயைய-முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லினது ஈறாகின்ற எழுத்தோடே அதனை முடிக்கக் கருதி வருகின்ற சொல்லினது முதலெழுத்துப்பொருந்த, பெயரோடு பெயரைப் புணர்க்குங் காலும்-பெயர்ச்சொல்லோடு பெயர்ச் சொல்லைக் கூட்டும் இடத்தும், பயரொடு தொழிலைப் புணர்க்குங்காலும்-பெயர்ச் சொல்லோடு தொழிற்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு பெயரைப் புணர்க்குங்காலும் -தொழிற் சொல்லோடு பெயர்ச்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு தொழிலைப் புணர்க்குங்காலும்-தொழிற்சொல்லோடு தொழிற்சொல்லைக் கூட்டும் இடத்தும், மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பென ஆங்கு அந்நான்கே-திரியும் இடம் மூன்று இயல்பு ஒன்று என்று முந்து நூலிற் கூறிய அந்நான்கு இலக்கணமுமே, மொழி புணர் இயல்பு-ஈண்டு மொழிகள் தம்முட் கூடும் இலக்கணம்; எ-று

எ-டு: சாத்தன்கை சாத்தனுண்டான் வந்தான்சாத்தன் வந்தான் போயினான் என முறையே காண்க. இவை நான்கு இனத்தோடுங் கூடப் பதினாறாம். இடையும் உரியுந் தாமாக நில்லாமையிற் பெயர்வினையே கூறினார். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் புணர்க்குஞ் செய்கைப்பட்டுழிப் புணர்ப்புச் சிறுபான்மை. பெயர்ப்பெயரும் ஒட்டுப்பெயரு மென இரண்டு வகைப்படும் பெயர். தெரிநிலைவினையுங் குறிப்புவினையு மென இரண்டு வகைப் படுந்தொழில். நிலைமொழியது ஈற்றெழுத்து முன்னர்ப் பிறந்து கெட்டுப்போக வருமொழியின் முதலெழுத்துப் பின் பிறந்து கெட்டமையான் முறையே பிறந்து கெடுவன ஒருங்குநின்று புணருமா றின்மையிற் புணர்ச்சி யென்பது ஒன்றின்றாம் பிற வெனின், அச்சொற்களைக் கூறுகின்றோருங் கேட்கின்றோரும் அவ்வோசையை இடையறவுபடாமை உள்ளத்தின்கண்ணே உணர்வராதலின் அவ்வோசை கேடின்றி உள்ளத்தின்கண் நிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவே பின்னர்க் கண்கூடாகப்1 புணர்க்கின்ற புணர்ச்சியும் முடிந்தனவேயா மென்று உணர்க. இனி முயற்கோடு உண்டென்றால் அது குறித்துவரு கிளவி யன்மையிற் புணர்க்கப்படாது.2 இதுதான் இன் றென்றாற் புணர்க்கப்-படுமென்று3 உணர்க. (6)
-------
    1 கண்கூடாக -கட்புலனாக வரிவடிவில்
    2 முயற்கோடு உண்டு என்றால் பொருளின்மையின், உண்டு என்பது முடிக்குஞ்
    சொல்லன்று
    3 முயற்கோடு இன்று என்றால் பொருளுண்மையின், இன்று என்பது முடிக்குஞ் சொல்
    லாகும். ஆகவே, புணருஞ் சொற்கட்கு அண்மைநிலை மட்டும் போதாது. பொருட்
    பொருத்தமும் வேண்டும் என்பது கருத்து. உரையில் இது என்றது முயற்
    கோட்டை.
----------

புணர்ச்சியில் மூவகைத் திரிபுகள்
109. அவைதாம்
மெய்ப்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று
இவ்வென மொழிப திரியு மாறே

இது முற்கூறிய மூன்று திரிபும் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: அவைதாந் திரியுமாறு-முன்னர்த் திரிபென்று கூறிய அவைதாந் திரிந்து புணரும் நெறியை, மெய் பிறிதலால் மிகுதல் குன்ற லென்று இவ்வென மொழிப-மெய் வேறுபடுதல் மிகுதல் குன்ற லென்று கூறப்படும் இம்மூன்று கூற்றை யுடைய
வென்று கூறுவர் ஆசிரியர்: எ-று

இம்மூன்றும் அல்லாதது இயல்பாமென்று உணர்க. இவை விகற்பிக்கப் பதினாறு உதாரணமாம். மட்குடம் மலைத்தலை மரவேர் இவை பெயரோடு பெயர் புணர்ந்த மூன்று திரிபு. மண்மலை என்பது இயல்பு. சொற் கேட்டான் பலாக்குறைத்தான் மரநட்டான் இவை பெயரொடு தொழில் புணர்ந்த மூன்று திரிபு. கொற்றன் வந்தான் இஃது இயல்பு. வந்தானாற் சாத்தன், கொடாப்பொருள். ஓடுநாகம் இவை தொழிலொடு பெயர் புணர்ந்த மூன்று திரிபு. வந்தான் சாத்தன் இஃது இயல்பு. வந்தாற் கொள்ளும், பாடப் போயினான், சாஞான்றான் இவை தொழிலொடு தொழில்புணர்ந்த மூன்று திரிபு. வந்தான் கொண்டான் இஃது இயல்பு. மூன்று திரிபென்னாது இடனென்ற தனான் ஒரு புணர்ச்சிக்கண் மூன்றும் ஒருங்கேயும் வரப்பெறு மென்று உணர்க. மகத்தாற் கொண்டான் இஃது அங்ஙனம் வந்தவாறு மகர ஈற்று "நாட்பெயர்க் கிளவி" (எழு-331) என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. இரண்டு வருவனவுங் காண்க. (7)
----------

அடை மொழிகளோடு புணர்தல்
110. நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும்
அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய.

இது நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத்தும் அவ்விருமொழியும் அடையடுத்தும் புணருமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ-ள்: நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும்-நிலை மொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்துவருஞ் சொல்லும், அடையொடு தோன்றினும் புணர்நிலைக்கு உரிய-தாமே பணராது ஒரோவோர் சொல் அடையடுத்து வரினும் இரண்டும் அடையடுத்து வரினும் புணர் நிலைமைக்கு உரிய; எ-று

அடையாவன, உம்மைத் தொகையும்1 இருபெயரொட்டுப் பண்புத் தொகை2யுமாம்.
-------
    1 பன்னிரண்டு கண் என்னும்போது, பன்னிரண்டு என்பது பத்தும் இரண்டும் எனப்
    பொருள்படுவதால் உம்மைத்தொகை.
    2 பதினாயிரத்தொன்று என்னும்போது, பதினாயிரம் என்பது பத்தாகிய ஆயிரம் எனப்
    பொருள்படுதலின் பண்புத்தொகையாம். ஆனால் இரு பெயரொட்டுப் பண்புத்
    தொகையன்று. இருபெயரொட்டாயின் பத்து ஆயிரம் என்னுஞ் சொற்கள் தனித்தனி நின்றும் ஒரு பொருளே யுணர்த்தல் வேண்டும். அங்ஙனம் உணர்த்தாமையும், பனைமரம் என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் இருசொல்லும் தனித்தனி ஒரே பொருளை யுணர்த்துவதையும் நோக்குக.

எ-டு: பதினாயிரத்தொன்று ஆயிரத்தொருபஃது பதினாயிரத் திரு பஃது என வரும். இவ்வடைகள் ஒருசொல்லே யாம். வேற்றுமைத் தொகையும் உவமத் தொகையும் முடியப்1 பண்புத் தொகையும் வினைத்தொகையும்
பிளந்து முடியாமையின்2 ஒரு சொல்லேயாம். அன்மொழித் தொகையுந்3 தனக்கு வேறோர் முடிபின்மையின் ஒரு சொல்லேயாம். இத் தொகைச் சொற்களெல்லாம் அடையாய் வருங் காலத்து ஒரு சொல்லாய் வரு மென்று உணர்க. உண்டசாத்தான் வந்தான், உண்டு வந்தான் சாத்தான் என்பனவும்4 ஒரு சொல்லே யாம். (8)
-----
    1 முடிய-இரு சொல்லாய்ப் பிளந்து முடிய. மரக்கிளை என்னம் வேற்றுமைத் தொகை மரம்+கிளை என்றும், முத்துப்பல் என்னும் உவமைத்தொகை முத்து+ பல் என்றும் பிளந்து முடிதல் காண்க.
    2 செந்தாமரை என்னும் பண்புத்தொகையும் கொல்களிறு என்னும் வினைத்தொகையும் திட்டமாக அல்லது தெளிவாக இரு சொல்லாய்ப் பிளந்து முடியாமையும் ஒரு சொற்றனமைப்பட்டு நிற்றலுங் காண்க.
    3 அனமொழித்தொகை என்றும் வெளிப்படாத சொல்லாய் ஏனைத் தொகைகளின் ஈற்றில் பிறத்தலானும் ஒருசொற்றனமைப்பட்டு நிற்றலானும் ஒரு சொல்லாம்.
    4 உண்ட சாத்தனாய் வந்தான் , உண்டு வந்தவனாகிய சாத்தன் எனப் பொருள்படும் போது இவை ஒரு சொற்றனமைப்படும்.
-----------

மரூஉ மொழிப் புணர்ச்சி.
111. மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே.

இது மரூஉச்சொற்களும் புணர்ச்சிபெறு மென்பதூஉம் நிறுத்த சொல்லுங் குறித்து வரு கிளவியுமாய்ப் பொருளியைபில்லனவும் புணர்ச்சி பெற்றாற் போல நிற்கு மென்பதூஉம் உணர்த்துகின்றது.

இ-ள்: மரு மொழியும்-இரு வகையாகி மருவிய சொற்களும், இன்றொகுதி மயங்கியன் மொழியும்5 –செவிக்கினிதாகச் சொற்றிரளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் ஒட்டினாற்போல நின்று பொருளுணர்த்தாது பிரிந்து பின்னர்ச் சென்று ஒட்டிப் பொருளுணர்த்த மயங்குதல் இயன்ற சொற்களும், புணர்நிலைச் சுட்டு உரியவை உள-புணரும் நிலைமைக் கருத்தின்கண் உரியன உள ; எ-று
-----
    5 இந்நூற்பாவின் முதலடியை மருவின் தொகுதியும் மயங்கியன் மொழியும் எனப் பிரித்துப் பொருள் கொள்வதே சிறந்தது. மருமொழியும் இனதொகுதி மயங்கியல் மொழியும் எனப் பிரிப்பது அத்துணைச் சிறந்ததன்று.

மொழியு மென்பதனை மருவென்பதனோடுங் கூட்டுக. இன்றொகுதி யென்றார், பாவென்னும் உறுப்பு நிகழப் பொருளொட்டாமற் சான்றோர் சொற்களைச் சேர்த்தலின்.

எ-டு: முன்றில் மீகண் இவை இலக்கலணத்தோடு பொருந்திய மரு. இலக்கணம் அல்லா மரு "வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்" (எழு-483) என்புழிக் காட்டுதும். இனி,

"இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரல்அவல் அடைய இரலை தெறிப்ப." (அகம்-4)

என்புழி மருப்பினிரலையென்று ஒட்டி இரண்டாவதன் தொகையாய்ப் பொருள் தந்து "புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலா" (எழு-183) என்று உயிரேறி முடிந்து மயங்கி நின்றது. ஆயின், மருப்பிற்பரலென்று மெய் பிறிதாய் ஒட்டி நின்றவா றென்னை யெனின் மருப்பினையுடைய பரலென வேற்றுமைத் தொகைப் பொருள் உணர்த்தாமையின் அஃது அச்செய்யுட்கு இன்னோசை நிகழ்தற்குப் பகரத்தின் முன்னர் நின்ற னகரம் றகரமாய்த் திரிந்து நின்ற துணையேயாய்ப் புணர்ச்சிப் பயனின்றி நின்றது. இங்ஙனம் புணர்ச்சி யெய்தினாற் போல மாட்டிலக்கணத்தின் கண்ணும் மொழிமாற்றின் கண்ணும் நிற்றல் சொற்கு இயல்பென்றதற்கு அன்றே ஆசிரியர் இன்றொகுதி யென்றதென்று உணர்க. "கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினை" (அகம்-2) என்புழி ஓமைச்சினை யென்று ஒட்டி ஓமையினது சினை யெனப் பொருள்
தருகின்றது இன்னோசை தருதற்குக் ககரவொற்று மிக்குக் காண்பி னென்
பதனோடும் ஒட்டினாற்போல நின்றது. "தெய்வ மால்வரைத் திருமுனி யருளால்" (சிலப்-3) என்புழித் தெய்வவரை யென்று ஒட்டித் தெய்வத்தன்மை யுடையவரை யெனப் பொருள் தருகின்றது. இன்னோசை தருதற்கு மாலென்பதனோடும் ஒட்டினாற்போலக் குறைந்து நின்றது. மூன்று திரிபும் வந்தவாறு காண்க. இனி எச்சத்தின்கண்ணும்

    "பொன்னோடைப் புகரணிநுதல்
    துன்னருந்திறல் கமழ்கடாஅத்
    தெயிறுபடையாக எயிற்கதவிடாஅக்
    கயிறுபிணிக்கொண்ட கவிழ்மணிமருங்கிற்
    பெருங்கையானை இரும்பிடர்த்தலையிருந்து
    மருந்தில்கூற்றத் தருந்தொழில்சாயா" (புறம்-3)

என மாட்டாய் ஒட்டிநின்றது1 கயிறுபிணிக்கொண்ட என்பதனோடும் ஒட்டினாற்போல நின்று ஒற்றடுத்தது இன்னோசை பெறுதற்கு . பிற சான்றோர் செய்யுட்கண் இவ்வாறும் பிறவாறும் புணர்ச்சி யில்வழிப் புணர்ச்சி பெற்றாற் போல நிற்பன எல்லாவற்றிற்கும் இதுவே ஓத்தாகக் கொள;க, (9)
--------
    1 மாட்டாய் ஒட்டி நின்றது - எயிறுபடையாக எயிற்கதவிடாஅ மருந்தில கூற்றத்
    தருந்தொழில் சாயா எனக்கொண்டு கூட்டாய் இசைந்து நின்றது.
---------

இருவகைப் புணர்ச்சி
112. வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்
ஒழுக்கல் வலிய புணருங் காலை.

இது மூவகைத்திரிபுனுள் மிக்குப் புணரும் புணர்ச்சி இருவகைய என்கின்றது.

இ-ள்: புணருங்காலை-நால்வகைப் புணர்ச்சியுள் மிக்க புணர்ச்சி புணருங் காலத்து, வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்-வேற்றுமைப் பொருண்மையினைக் குறித்த புணர் மொழியினது தன்மையும், வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்-வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புணரும் மொழியினது தன்மையும், எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் ஒழுக்கல் வலிய-எழுத்து மிகுதலுஞ் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டு குணத்தினானுஞ் செல்லுதலைத் தமக்கு வலியாகவுடைய; எ-று

எனவே ஏனைப் புணர்ச்சிகளுக்கு இத்துணை வேறுபாடு இன்றென உணர்க.

எ-டு: விளங்கோடு இஃது எழுத்துப் பெற்றது. மகவின் கை, இது சாரியை பெற்றது. இனி அல்வழிக்கண் விளக்குறிது, இஃது எழுத்துப் பெற்றது, பனையின் குறை இது சாரியை பெற்றது. இதற்குப் பனை குறைந்த தென்பது பொருளாம். இஃது அளவுப்பெயர். ஒழுக்கல் வலிய என்றதனான் இக் கூறிய இரண்டும் எழுத்துஞ் சாரியையும் உடன்பெறுதலுங் கொள்க. அவற்றுட் கோடென்பது வேற்றுமைக்கண் இரண்டும் பெற்றது. கலத்துக் குறை யென்பது அல்வழிக்கண் இரண்டும் பெற்றது. இதற்குக் கலங் குறைந்த தென்பது பொருளாம். இயல்பு கணத்துக்கண் இவ்விரண்டும் உடன்பெறுதலின்று. அல்வழி முற்கூறாதது வேற்றுமை யல்லாதது அல்வழி யென வேண்டுதலின். எழுத்துப்பேறு யாப்புடைமையானும்1 எழுத்தினாற் சாரியை யாதலானும் எழுத்து முற்கூறினார். வேற்றுமை மேலைச்சூத்திரத்தே கூறுகின்றார்.

அல்வழியாவன அவ்வுருபுகள் தொக்கும் விரிந்தும் நில்லாது புணர்வன. அவை எழுவாய்வேற்றுமை ஆறு பயனிலையோடும்2 புணர்ந்த புணர்ச்சியும், விளிவேற்றுமை தன்பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும், முற்றுப் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், பெயரெச்சமும் வினையெச்சமும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், உவமத் தொகையும் உம்மைத் தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையம் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், அன் மொழித்தொகை பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும் பணபுத்தொகையும் வினைத்தொகையும் விரிந்துநின்றவழிப் புணர்ந்த புணர்ச்சியு மென உணர்க.
-----
    1. யாப்பு-வலி. 2. ஆறு பயனிலை-பொருண்மை சுட்டல், வியங்கொள வருதல்,
    வினைநிலை, யுரைத்தல், வினாவிற்கேற்றல், பண்புகொள வருதல், பெயர்கொள வருதல் என்பன.
----------

4.3. உருபு புணர்ச்சி

வேற்றுமை யுருபுகள்
113. ஐஒடு குஇன் அதுகண் என்னும்
அவ்வா றென்ப வேற்றுமை யுருபே

இது மேல் வேற்றுமை யெனப்பட்ட அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது.

இ-ள்: வேற்றுமையுருபு-முற்கூறிய வேற்றுமைச்சொற்களை, ஐ ஒடு கு இன் அது கண் என்னும் அவ்வாறென்ப-ஐ ஒடு கு இன் அது கண் என்று சொலலப்படும் அவ்வாறு உருபுமென்று சொல்வர் ஆசிரியர்; எ-று

மேற் சொல்லதிகாரத்து எழுவாயையும் விளியையுங் கூட்டி வேற்றுமை எட்டென்பாராகலின் ஐ முதலிய வேற்றுமையாறுந் தொக்கும் விரிந்தும் பெரும்பான்மையும் புலப்பட்டுநின்று பெயர்ப்பொருளைச் செயப்படுபொருள் முதலியனவாக வேறுபாடு செய்து புணர்ச்சி யெய்துவிக்கு மென்றற்கு ஈண்டு ஆறென்றார். ஆண்டு எழுவாயும் விளியுஞ் செயப்படுபொருள் முதலியவற்றினின்றுந் தம்மை வேறுபடுத்துப் பொருள்மாத்திரம் உணர்த்திநின்றும் விளியாய் எதிர்முகமாக்கி நின்றும் இங்ஙனஞ் சிறு பான்மையாய்ப் புலப்பட நில்லா வேறுபாடு உடையவேனும், அவையும் ஒருவாற்றான் வேற்றுமையாயின வென்றற்கு ஆண்டு எட்டென்றாரென உணர்க. (11)
----------

வலிமுதலுருபு புணருநிலை
114. வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்
கொல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

இது நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.

இ-ள்: வல்லெழுத்து முதலிய வேற்றுமையுருபிற்கு - வல்லெழுத்து அடியாய் நின்ற நான்காவதற்கும் ஏழாவதற்கும், ஒல்வழி ஒற்று இடைமிகுதல் வேண்டும் - பொருந்தியவழி வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் இடைக்கண் மிக்குப் புணர்தலை விரும்பும் ஆசிரியன்; எ-று.

வரையாது ஒற்றெனவே வல்லொற்றும் மெல்லொற்றும் பெற்றாம்.

எ-டு: மணிக்கு மணிக்கண் தீக்கு தீக்கண் மனைக்கு மனைக்கண் எனவும், வேய்க்கு வேய்க்கண் ஊர்க்கு ஊர்க்கண் பூழ்க்கு பூழ்க்கண் எனவும், உயிரீறு மூன்றினும் புள்ளியீறு மூன்றினும் பெரும்பான்மை வல்லொற்று மிக்கு வரும். தங்கண் நங்கண் நுங்கண் எங்கண் என மெல் லொற்று மிக்கது. இவற்றிற்கு நிலைமொழி மகரக்கேடு உருபியலிற் கூறுப. ஆங்கண் ஈங்கண் ஊங்கண் என்பன சுட்டெழுத்து நீண்டு நின்றன. இவற்றிற்கு ஒற்றுக்கேடு
கூறுதற்கு ஒற்றின்று.

இனி நான்கனுருபிற்கு மெல்லொற்று மிகாதென்று உணர்க.

இனி ஒல்வழி யென்பதனான் ஏழா முருபின்கண் நம்பிகண் என இகர ஈற்றின் கண்ணும் நங்கைகண் என ஐகார ஈற்றின்கண்ணுந் தாய்கண் என யகர ஈற்றின்கன்ணும் அரசர்கண் என ரகர ஈற்றின்கண்ணும் ஒற்று மிகாமை கொள்க.

இனி மெய்பிறிதாதலை முன்னே கூறாது மிகுதலை முற்கூறிய அதனானே பொற்கு பொற்கண் வேற்கு வேற்கண் வாட்கு வாட்கண் எனத்திரிந்து முடிவனவுங் கொள்க. இதனானே அவன்கண் அவள்கண் என உயர்திணைப் பெயர்க்கண் ஏழனுருபு இயல்பாய் வருதலுங் கொள்க. இவற்றிற்குக் குன்றிய புணர்ச்சி வருமேனுங் கொள்க.

கொற்றிக்கு கொற்றிகண் கோதைக்கு கோதைகண் என விரவுப் பெயர்க்கும் இதனானே கொள்க. (12)
------------

அது உருபின் அகரம் கெடும்
115. ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும்.

இஃது ஆறாவதற்குத் தொகைமரபை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.

இ-ள்: ஆறனுருபின் அகரக்கிளவி - அதுவென்னும் ஆறனுருபின்கண் நின்ற அகரமாகிய எழுத்து, ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும் - நெடுமுதல் குறுகு மொழிகட்கு 'ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும்' (எழு - 161) என விதித்ததனால்
உளதாகிய அகரத்தின் முன்னர்த் தான் கெடுதலை விரும்பும் ஆசிரியன்; எ-று.

தமது நமது எமது நுமது தனது எனது நினது என வரும். இது நிலைமொழிக்கு ஓர் அகரம் பெறுமென விதியாது உருபு அகரம் ஏறி முடியுமென விதித்தால் வருங் குற்றம் உண்டோ வெனின், 'நினவ கூறுவ லெனவ கேண்மதி' (புறம் - 35) என்றாற்போல ஆறாவதற்கு உரிய அகர உருபின் முன்னரும் ஓர் அகர எழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாகக் கருதினாராதலின், ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் பொதுவாக நிலை மொழிக்கண் அகரப்பேறு விதித்து, அதுவென்னும், ஒருமையுருபு வந்தால் ஆண்டுப் பெற்று நின்ற அகரத்தின் முன்னர் அது வென்பதன்கண் அகரங்கெடுக வென்று ஈண்டுக் கூறினாராதலின் அதற்குக் குற்றம் உண்டென்று உணர்க. (13)
-----------

வேற்றுமை யுருபுகள் நிற்குமிடம்
116. வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே.

இது வேற்றுமை பெயர்க்கண் நிற்குமாறு கூறுகின்றது.

இ-ள்: வேற்றுமை பெயர்வழிய - வேற்றுமைகள் பெயரின் பின்னிடத்தனவாம், புணர்நிலை - அவற்றோடு புணரும் நிலைமைக்கண்; எ-று.

எ-டு: சாத்தனை சாத்தனொடு சாத்தற்கு சாத்தனின் சாத்தனது சாத்தன்கண் என வரும். மற்று இது 'கூறிய முறையின்' (சொ - 69) என்னும் வேற்றுமையோத்திற் சூத்திரத்தாற் பெறுதுமெனின், பெயரொடு பெயரைப் புணர்த்தல் முதலிய நால்வகைப் புணர்ச்சியினையும் வேற்றுமை அல்வழி யென இரண்டாக அடக்குதலின் தொழிற் பின்னும் உருபு வருமென எய்தியதனை விலக்குதற்கு ஈண்டுக் கூறினா ரென்க. ஆயின் இவ்விலக்குதல் வினையியன் முதற் சூத்திரத்தாற் பெறுதுமெனின், அது முதனிலையைக் கூறிற்றென்பது ஆண்டு உணர்க. (14)
----------

பெயர்களின் பெயர், முறை, தொகை
117. உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்
றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே.

இது முற்கூறிய பெயர்கட்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது.

இ-ள்: சுட்டுநிலைப் பெயர்-பொருளை ஒருவர் கருதுதற் குக் காரணமான நிலைமையையுடைய பெயர்களை, உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று ஆயிரண்டென்ப-உயர்திணைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும் அஃறிணைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும் என்னும் அவ்விரண்டென்று கூறுவர் ஆசிரியர்.; எ-று

பெயரியலுள் அவன் இவன் உவன் என்பது முதலாக உயர்திணைப் பெயரும் அது இது உது என்பது முதலாக அஃறிணைப் பெயரும் ஆமாறு அவற்றிற்கு இலக்கணங் கூறுகின்றார், ஈண்டுக் குறியிட்டாளுதல் மாத்திரையே கூறினாரென்று உணர்க. இனிக் கொற்றன் கொற்றி என்றாற் போலும் விரவுப்பெயருங் கொற்றன் குறியன் கொற்றி குறியள் கொற்றன் குளம்பு கொற்றி குறிது எனப் பின்வருவனவற்றால் திணை தெரிதலின் இரு திணைப்பெயரின்கண் அடங்கும். கொற்றன்செவி கொற்றிசெவி என்பனவும் பின்னர் வருகின்ற வினைகளால் திணை விளங்கி அடங்குமாறு உணர்க.1 இனி "அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே" (எழு-155) என்றாற் போலப் பிறாண்டும் ஓதுதல் பற்றி நிலை யென்றதனான் விரவுப்பெயர் கோடலும் ஒன்று. (15)
-------
    1. கொற்றன் செவி நெடியன் என்ற விடத்து உயர்திணை என்றும் கொற்றள் செவி
    நெடிது என்ற விடத்து அஃறிணை யென்றும் திணை விளங்கியமை காண்க.
-----------

4.3. சாரியைப்புணர்ச்சி.

சாரியை வருமிடம்
118. அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே

இது சாரியை வரும் இடங் கூறுகின்றது.

இ-ள்: அவற்றுவழி மருங்கின்-அச் சொல்லப்பட்ட இருவகைப் பெயர்களின் பின்னாகிய இடத்தே, சாரியை வரும்-சாரியைச் சொற்கள் வரும்; எ-று

எ-டு: ஆடூஉவின்கை மகடூஉவின்கை பலவற்றுக்கோடு எனப் புணரியனிலையிடைப் பொருணிலைக்கு உதவி வந்தன, சாரியை யென்றதன் பொருள் வேறாகி நின்ற இருமொழியுந் தம்மிற் சார்தற் பொருட்டு இயைந்து நின்றது எனறவாறு. (14)
----------

சாரியைகளின் பெயரும் முறையும் தொகையும்
119. அவைதாம்,
இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென் கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே.

இஃது அச்சாரியைகட்குப் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது.

இ-ள்: அவைதாம்-முன்னர்ச் சாரியை யெனப் பட்ட அவைதாம்; இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன்னென் கிளவி உளப்பட அன்ன என்ப- இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன்னென்னுஞ் சொல்லோடு கூட ஒன்பதாகிய அத்தன்மை யுடையனவும், பிறவுஞ் சாரியை மொழி என்ப-அவை யொழிந்தனவுஞ் சாரியைச் சொல்லா மென்பர் ஆசிரியர்; எ-று.

பிறவாவன தம் நம் உம் ஞான்று கெழு எ* ஐ என்பனவாம். இவற்றுள் ஞான்று ஒழிந்தன எடுத்தோதுவர் ஆசிரியர். "எடுத்த நறவின் குலையலங் காந்தள்"1 (கலி-40) இது வினைத்தொகை; சாரியை யன்று. இன்சாரியை வழக்குப் பயிற்சியும் பலகால் எடுத்தோதப்படுதலும் பொதுவகையான் ஓதிய வழித் தானே சேறலு2 மாகிய சிறப்பு நோக்கி முன் வைத்தார். வற்றும் அத்தும் இன்போல முதல் திரியுமாகலானுஞ் செய்கை யொப்புமையானும் அதன்பின் வைத்தார். அம் ஈறுதிரியுமாதலின் திரிபுபற்றி அதன்பின் வைத்தார். ஒன் ஈறுதிரியுமேனும் வழக்குப்பயிற்சி யின்றி நான்கா முருபின்கண் திரிதலின் அதன்பின் வைத்தார். ஆன் பொருட்புணர்ச்சிக்கு உருபு புணர்ச்சிக்கும் வருமென்று அதன்பின் வைத்தார். அக்கு ஈறு திரியுமேனும் உருபு புணர்ச்சிக்கண் வாராமையின் அதன்பின் வைத்தார். இக்கு முதல் திரியுமேனுஞ் சிறுபான்மைபற்றி அதன்பின் வைத்தார். அன் இன்போலச் சிறத்தலிற் பின் வைத்தார்.
----------
    1 குலையலங் காந்தள் என்பது குலையலங்கு காந்தள் என்பதன் தொகுத்தல்.
    2 பொது வகையான் ஓதியவழி தானே சேறல்-இச் சொல்லுக்கு இன்னசாரியை என விதியாது பொதுவாகச் சாரியைப் பேறு கூறிய விடத்தும் தானே சாரியையாய் அமைதல்.

    ஆனுருபிற்கும் ஆன்சாரியைக்கும் இன்னுருபிற்கும் இன்சாரியைக்கும் வேற்றுமை யாதெனின், அவை சாரியையான இடத்து யாதானும் ஓர் உரு பேற்று முடியும்; உருபாயின இடத்து வேறோர் உருபினை ஏலா வென்று உணர்க. இனி மகத்துக்கை என்புழித் தகரவொற்றுந் தகரவுகாரமும் வரு மென்று கோடுமெனின், இருளத்துக் கொண்டானென்றால் அத்து எனவே வேண்டுதலின் ஆண்டும் அத்துநின்றே கெட்டதென்று கோடும். அக்கு இக்கு என்பனவும் பிரித்துக்கூட்டக் கிடக்கும். தாழக்கோ லென அக்குப் பெற்று நிற்றலானும் ஆடிக்கு என்புழிக் குகரம் நான்கனுரு பாகாமைநயானும் இவை சாரியையாமாறு உணர்க. (17)
------------

120. அவற்றுள்,
இன்னின் இகரம் ஆவின் இறுதி
முனனர்க் கெடுதல் உரித்து மாகும்.

இது முற்கூறியவற்றுள் இன்சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது.

இ-ள்: அவற்றுள்-முற் கூறிய சாரியைகளுள், இன்னின் இகரம்-இன் சாரியையது இகரம், ஆவின் இறுதி முன்னர்- ஆ என்னும் ஓரெழுத் தொரு மொழி முன்னர், கெடுதரல் உரித்துமாகும்-கெட்டுமுடியவும் பெறும்; எ-று.

உரித்துமாகு மென்றதனாற் கெடாது முடியவும் பெறும் என்றவாறு. இஃது ஒப்பக் கூறலென்னும் உத்தி.

எ-டு: ஆனை ஆவினை, ஆனொடு ஆவினொடு, ஆற்கு ஆவிற்கு, ஆனின்
ஆவினின், ஆனது ஆவினது, ஆன்கண் ஆவின்கண் எனவரும்.

இனி முன்னரென்றதனானே மாவிற்கும் இவ்வாறே கொள்க. மானை மாவினை, மானொடு மாவினோடு, மாற்கு மாவிற்கு என ஒட்டுக. ஆகார ஈறென்னாது ஆவினிறுதி யென்று ஓதினமையின் மா இலேசினாற் கொள்ளப் பட்டது.

இனி ஆன்கோடு ஆவின்கோடு, மான்கோடு மாவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழியுங் கொள்க. (18)
-----------

இன் சாரியை ஈறு திரியுமிடம்
121. அளவாகும் மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை
னஃகான் றஃகா னாகிய நிலைத்தே.

இஃது அவ் இன்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது.

இ-ள்: அளவாகும் மொழி-அளவுப் பெயராய்ப் பின்னிற்கும் மொழிக்கு, முதல் நிலைஇய உயிர்மிசை னஃகான்-முன்னர் நின்ற எண்ணுப் பெயர்களின் ஈற்று நின்ற குற்றுகரத்தின்மேல் வந்த இன்சாரியையது னகரம், றஃகானாகிய நிலைத்து-றகரமாய்த் திரியும் நிலைமையை யுடைத்து; எ-று.

எ-டு: பதிற்றகல் பதிற்றுழக்கு. இவற்றைப் பத்தென நிறுத்தி "நிறையுமளவும்" (எழு-436) என்னுஞ் சூத்திரத்தால் இன்சாரியை கொடுத்துக் "குற்றிய லுகர மெய்யொடுங் கெடுமே" (எழு-433) என்றதனாற் குற்றுகரம் மெய்யோடுங் கெடுத்து வேண்டுஞ் செய்கை செய்து "முற்றவின் வரூஉம்' (எழு-433) என்பதனான் ஒற்றிரட்டித்து முடிக்க,.

நிலைஇய என்றதனாற் பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க.
பதிற்றெழுத்து, பதிற்றடுக்கு ஒன்பதிற்றெழுத்து, பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றொன்பது என எல்லாவற்றோடும் ஒட்டிக்கொள்க. அச் சூத்திரத்திற் "குறையாதாகும்" (எழு-436) என்றதனாற் பொருட் பெயர்க்கும் எண்ணுப்பெயர்க்கும் இன்கொடுக்க. (19)
-------------

வற்று முதல் கெடுதல்
122. வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன்
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே.

இது வற்று முதல் திரியுமாறு கூறுகின்றது.

இ-ள்: சுட்டு முதல் ஐம்முன்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சொன்முன் வற்று1 வருங்காலை, வஃகான் மெய்கெட அஃகான் நிற்றலாகிய பண்பு-அவ் வற்றுச் சாரியை யினது வகரமாகிய ஒற்றுக் கெட ஆண்டு ஏறிய அகரம் நிற்றல்
அதற்கு உளதாகிய குணம்; எ - று.
----
    1 வற்றுச் சாரியையை நன்னூலார் அற்றுச் சாரியை என்பர்.

எ - டு : அவையற்றை, இவையற்றை, உவையற்றை என வரும். இன்னும் இவற்றை, அவை, இவை, உவை என நிறுத்திச் 'சுட்டு முதலாகிய ஐயெ னிறுதி' (எழு - 177) என்றதனான் வற்றும் உருபுங் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்க. இவ்வாறே எல்லா உருபிற்கும் ஒட்டுக. அவையற்றுக்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றவழியுங்
கொள்க.

ஆகிய பண்பு என்றதனாலே எவனென்பது படுத்த லோசையாற் பெயராயவழி(1)
எவன் என் நிறுத்தி வற்றும் உருபுங்* கொடுத்து வற்றுமிசை யொற்றென்று னகரங் கெடுத்து அகரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து எவற்றை எவற்றொடு என முடிக்க. (20)
--------
(1) எவன் என்பது படுத்தலோசையாற் பெயராகும் எனவே எடுத்தலோசையால்
வினாவினைக் குறிப்பாகும் என்பதாம்.
------------

னகர ஈற்றுச் சாரியை திரியுமிடம்.
123. னஃகான் றஃகான் நான்கனுரு பிற்கு.

இஃது இன் ஒன் ஆன் அன்னென்னும் னகர ஈறு நான்குந் திரியுமாறு கூறுகின்றது.

இ - ள் : னஃகான் நானகனுருபிற்கு றஃகான் -- னகார ஈற்று நான்கு சாரியையின் னகரமும் நான்கா முருபிற்கு றகாரமாய்த் திரியும்; எ - று.

எ - டு : விளவிற்கு கோஒற்கு ஒருபாற்கு அதற்கு என வரும். இதனை 'அளவாகு மொழிமுதல்' (எழு - 121) என்பதன்பின் வையாது ஈண்டு வைத்தது னகர ஈறுகளெல்லாம் உடன் திரியு மென்றற்கு. ஆண்டு வைப்பின் இன் சாரியையே திரியு மென்பது படும். 'ஒன்று முதலாகப் பத்தூர்ந்த வரூஉ -- மெல்லா எண்ணும்' (எழு - 199) எனபதனான் ஒரு பாற்கு என்பதனை முடிக்க. (21)
--------------

பொருட் புணர்ச்சியில் ஆன் ஈறு திரிதல்.
124. ஆனின் னகரமும் அதனோ ரற்றே
நாள்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே.

இஃது ஆனின் ஈறு பொருட்புணர்ச்சிக்கண் திரியு மென்கின்றது.

இ - ள் : நாள்முன் வரூஉம் வன்முதல் தொழிற்கு - நாட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக உடைய தொழிற் சொற்கு இடையே வரும், ஆனின் னகரமும் அதனோரற்று -- ஆன்சாரியையின் னகரமும் நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியை போல றகர மாய்த் திரியும்; எ - று.

எ - டு : பரணியாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என ரும். 'நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்கு' (எழு - 247) என்றதனான் ஆன்சாரியை கொடுத்துச் செய்கை செய்க. இனி உம்மையை இறந்ததுதழீஇயதாக்கி நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற்றொழிற்கண் இன்னின் னகரமும் அதனோடு ஒக்கு மெனப் பொருளுரைத்துப் பனியிற் கொண்டான் வளியிற் கொண்டான் என இன்னின் னகரமும் றகரமாதல் கொள்க.

இனி, ஞாபகத்தால்1 தொழிற்கண் இன்னின் னகரந் திரியு மெனவே பெயர்க்கண் இன்னின் னகரந் திரிதலுந் திரியாமையுங் கொள்க. குறும்பிற் கொற்றன், பறம்பிற் பாரி எனத் திரிந்து வந்தன; குருகின் கால், எருத்தின் புறம் எனத் திரியாது வந்தன.
------
    1. ஞாபகம் - ஞாபகங் கூறல் என்னும் உத்தி. அதாவது, நூற்பாவைச் சொற் சுருங்கவும் பொருள் விளங்கவும் செய்யாது அரிதும் பெரிதுமாகச் செய்து அதனால் வேறு பல பொருளுணர்த்தல்.
-----------

அத்து முதல் கெடுதல்
125. அத்தின் அகரம் அகரமுனை யில்லை.

இஃது அத்து முதல் திரியுமாறு கூறுகின்றது.

இ - ள் : அத்தின் அகரம் - அத்துச்சாரியையின் அகரம், அகரமுனை இல்லை - அகர ஈற்றுச் சொன் முன்னர் இல்லையாம்; எ – று.

'அத்தவண் வரினும் வரைநிலை யின்றே.' (எழு - 219) என்பதனான் மகப்பெயர் அத்துப்பெற்று நின்றது மகத்துக்கை யென அகரங்கெட்டு நின்றது. விளவத்துக் கண்ணென்புழிக் கெடாது நிற்றல் 'அத்தே வற்றே' (எழு - 133) என்பதனுள் 'தெற்றென்றற்றே' என்பதனாற் கூறுப. (23)
-----------

இக்கு முதல் கெடுதல்
126. இக்கின் இகரம் இகரமுனை யற்றே.

இஃது இக்கு முதல் திரியுமாறு கூறுகின்றது.

இ - ள் : இக்கின் இகரம் - இக்குச் சாரியையினது இகரம், இகரமுனை அற்று - இகர ஈற்றுச்சொன் முன்னர் முற் கூறிய அத்துப் போலக் கெடும்; எ – று.

'திங்கண் முன்வரின்' (எழு - 248) என்பதனாற் பெற்ற இக்கு ஆடிக்குக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என இகரங் கெட்டு நின்றது. இஃது இடப்பொருட்டு. (24)
---------

127. ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும்.

இதுவும் அது.

இ - ள் : ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும் – இக்கின் இகரம் இகர ஈற்றுச் சொன் முன்னரன்றி ஐகார ஈற்றுச் சொன் முன்னரும் மேற் கூறிய கெடுத லியல்பிலே நிற்கும்; எ – று.

'திங்களு நாளு முந்துகிளந் தன்ன' (எழு - 286) எனபதனாற் சித்திரைக்குக் கொண்டான் என்புழிப் பெற்ற இக்கு ஐகாரத்தின் முன்னர்க் கெட்டவாறு காண்க. (25)
------------

அக்கு அகரம் நிற்க ஏனைய கெடுமாறு
128. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி
அக்கின் இறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே
குற்றிய லுகரம் முற்றத் தோன்றாது.

இஃது அக்கு முதல் ஒழிய ஏனைய கெடுமாறு கூறுகின்றது.

இ-ள்: எப்பெயர் முன்னரும்-எவ்வகைப்பட்ட பெயர்ச்சொன் முன்னரும் , வல்லெழுத்து வருவழி-வல்லெழுத்து வருமொழியாய் வருமிடத்து, அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்றத் தோன்றாது-இடை நின்ற அக்குச் சாரியையின் இறுதி நின்ற
குற்றியலுகரம் முடியத் தோன்றாது. மெய்ம்மிசை யொடுங் கெடும் - அக்குற்றுகரம் ஏறிநின்ற வல்லொற்றுத் தனக்குமேல் நின்ற
வல்லொற்றோடுங் கெடும்;எ-று

"ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம்" (எழு-418) என்றதனான் அக்குப்பெற்ற குன்றக்கூகை மன்றப்பெண்ணை என்பனவும், "வேற்றுமை யாயினேனை யிரண்டும்" (எழு-326) என்பதனான் அக்குப்பெற்ற ஈமக்குடம் கம்மக்குடம் என்பனவும், "தமிழென் கிளவியும்" (எழு-385) என்பதனான் அக்குப்பெற்ற தமிழக்கூத்து என்பதுவும் அக்கு ஈறுகெட்டவாறு காண்க. இங்ஙனம் வருதலின் எப்பெய ரென்றார். முற்ற வென்பதனான் வன்கண மன்றி ஏனையவற்றிற்கும் இவ்விதி கொள்க. தமிழ் நூல், தமிழ் யாழ், தமிழ்வரையர் என வரும். இன்னும் இதனானே தமக்கேற்ற இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடித்துக்கொள்க. அன்றிக் கேடோதிய ககரவொற்று நிற்குமெனின், சகரந் தகரம் பகரம் வந்தவற்றிற்குக் ககரவொற்றாகாமை உணர்க (26)
----------

அம் ஈறு திரியு மிடம்
129. அம்மின் இறுதி கசதக் காலைத்
தன் மெய் திரிந்து ஙஞந ஆகும்

இஃது அம் ஈறு திரியுமாறு கூறுகின்றது.

இ-ள்: அம்மின் இறுதி-அம்முச் சாரியையின் இறுதியாகிய மகரவொற்று, கசதக்காலை-கசதக்கள் வருமொழியாய் வருங்காலத்து, தன்மெய் திரிந்து ஙஞந ஆகும்-தன் வடிவு திரிந்து ஙஞநக்களாகும்; எ-று.

எ-டு: புளியங்கோடு, செதிள், தோல் என வரும்.

இது "புளிமரக் கிளவிக்கு" (எழு-244) என்பதனான் அம்முப்பெற்றது. கசதக்காலைத் திரியு மெனவே பகரத்தின்கண் திரிபின்றாயிற்று. மெய்திரிந் தென்னாது தன்மெய் என்றதனான் அம்மின் மகரமேயன்றித் தம் நம் நும் உம் என்னுஞ் சாரியை மகரமுந் திரிதல் கொள்க. எல்லார் தங்கையும் எல்லார் நங்கையும் எல்லீர் நுங்கையும் வானவரி வில்லுந் திங்களும் என வரும். துறை கேழூரன் வளங்கேழூரன் எனக் கெழு வென்னுஞ் சாரியையது உகரக்கேடும் எகர நீட்சியுஞ் செய்யுண் முடிபென்ற கொள்க. (27)
---------

அம் ஈறு கெடுமிடம்
130. மென்மையும் இடைமையும் வரூஉம் காலை
இன்மை வேண்டும் என்மனார் புலவர்.

இஃது அம்மீறு இயல்புகணத்து முன்னர்க் கெடு மென்கின்றது.

இ-ள்: மென்மையும் இடைமையும் வரூஉங்காலை-மென் கணமம் இடைக்கணமும் வருமொழியாய் வருங் காலத்து, இன்மை வேண்டும் என்மனார் புலவர்-அம்முச் சாரியை இறுதி மகர மின்றி முடிதலை வேண்டுமென்று கூறுவர் புலவர்; எ-று

எ-டு: புளியஞெரி நுனி முரி யாழ் வட்டு என வரும். உரையிற்கோட லென்பதனாற் புளியவிலை யென உயிர்வருவழி ஈறு கெடுதலும் புளியிலையென அம்மு முழுவதுங் கெடுதலுங் கொள்க. புளியவிலை யென்றது "ஒட்டுதற் கொழுகிய வழக்கு"1 (எழு-132) அன்று. மென்கணமும் இடைக்கணமும் உயிர்க்கணமுந் தம்மு ளொக்குமேனும் அம்மு முழுவதுங் கெட்டு வருதலின் உயிரை எடுத்தோதாராயினார். புளிங்காய் என்பது மரு முடிபு. (28)
-------
    1 ஒட்டுதற் கொழுகிய வழக்கு-சாரியை பொருந்துதற் கேற்ப நடந்த வழக்கு.
-----------

இன் சாரியை முழுதும் கெடுமிடம்
131. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்
கின்னென் சாரியை இன்மை வேண்டும்.

இஃது இன்சாரியை ஐந்தாமுருபின்கண் முழுவதுங் கெடு மென்கின்றது.

இ-ள்: இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்கு-இன்னென்று சொல்ல வருகின்ற வேற்றுமை யுருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும்-இன்னென்னுஞ் சாரியை தான் இன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன்; எ-று.

எ-டு: விளவின், பலாவின், கடுவின், தழுவின், சேவின், வௌவின் என வரும். இவற்றிற்கு வீழ்பழ மெனவும் நீங்கினா னெனவுங் கொடுத்து முடிவுணர்க. ஊரினீங்கினான் என ஏனையவற்றோடும் ஒட்டுக. இனி "அவற்றுள் இன்னினிகரம்" (எழு-120) என்றதன்பின் இதனை வையாத முறையன்றிக் கூற்றினான் இன்சாரியை கெடாது வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் நிற்றல் கொள்க. பாம்பினிற் கடிது தேள், "கற்பினின் வழாஅ நற்பலவுதவி", "அகடுசேர்பு பொருந்தி யளவினில் திரியாத" (மலைபடு-33) எனவரும். இனி இன்மையும் வேண்டுமென்னும் உம்மை தொக்கு நின்றதாக்கி அதனான் இவை கோடலும் ஒன்று. (29)
---------

புணர்மொழிகளிற் சாரியை வருதல்
132..பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை உருபு நிலைபெறு வழியுந்
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்
ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச்
சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா
திடைநின் றியலுஞ் சாரியை இயற்கை
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்.

இது முற்கூறிய சாரியைகளெல்லாம் புணர்மொழியுள்ளே வருமென்பதூஉம் அம்மொழி தாம் இவை யென்பதூஉம் அவை வாராத மொழிகளும் உளவென்பதூஉங் கூறுகின்றது.

இ-ள்: பெயருந் தொழிலும்-பெயர்ச்சொல்லுந் தொழிற் சொல்லும், பிரிந்து இசைப்ப ஒருங்கு இசைப்ப-பெயருந் தொழிலுமாய்ப் பிரிந்திசைப்பப் பெயரும் பெயருமாய்க் கூடியிசைப்ப, வேற்றுமை யுருபு நிலைபெறு வழியும்-வேற்றுமை செய்யும் உருபுகள் தொகாது நிலைபெற்ற இடத்தும், தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்-அவ்வேற்றுமை யுருபுகள் தோற்றுதல் வேண்டாது தொக்க இடத்தும்1 ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி-தாம் பொருந்துதற் கேற்ப நடந்த வழக்கோடே பொருந்தி, சொற்சிதர் மருங்கின்-சாரியை பெறும் புணர் மொழிகளைப் பிரித்துக் காணுமிடத்து, சாரியை இயற்கை வழி வந்து விளங்காது இடைநின்று இயலும்-அச்சாரியையினது தன்மை அச்சொற்களின் பின்னே வந்து விளங்காது நடுவே நின்று நடக்கும், உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் - அச்சாரியை உண்டாதலும் இல்லையாதலும் ஒடுவுருபினிடத்து ஒத்துவரும்; எ-று

ஒடுவிற் கொக்கும் எனவே ஏனைய ஒவ்வாவாயின.
----
    1. இந்நூற்பாவிற்கு, பெயரும் பெயரும் பெயரும் வினையும் வேற்றுமை விரியில் இரு
    சொல்லாய்ப் பிரிந்திசைக்கும் என்றும், வேற்றுமைத் தொகையில் ஒரு சொல்போல ஒருங்கிசைக்கும் என்றும், பொருள் கொள்வா** நன்னூலாருள்ளிட்ட ஆசிரியர் சிலர்.

எ-டு: விளவினைக்குறைத்தான், கூழிற்குக் குற்றேவல் செய்யும்-இவை பிரிந்திசைத்து உருபு நிலைபெற்றன. "அன்னென் சாரியை" (எழு-194) என்பதனைக் "குற்றியலுகரத்திறுதி" (எழு-115) என்பதனைச் சேர வைத்ததனால் இன்சாரியை வருதல் கொள்க. இவ்விரண்டுருபுஞ் சாரியை நிற்பப் பெரும்பான்மையுந் தொகா வென்று உணர்க. விளவினைக் குறைத்தவன். கடிசூத்திரத்திற்குப் பொன்-இவை ஒருங்கிசைப உருபு நிலைபெற்றன., வானத்தின் வழுக்கி, வானத்து வழுக்கி எனச் சாரியை பெற்றுப் பிரிந்திசைத்து ஐந்தாமுருபு நிலைபெற்றும் நிலைபெறாதும் வந்தது. வானத்தின் வழுக்கல், வானத்து வழுக்கல்-இவை "மெல்லெழுத் துறழும்"(எழு-312) என்னுஞ் சூத்திரத்து "வழக்கத்தான" என்பதனான் அத்துக் கொடுத்து மகரங்கெடுக்க ஒருங்கிசைத்தன. விளவினது கோடு, விளின் கோடு என ஒருங்கிசைத்துச் சாரியை பெற்றவழி ஆறனுருபு தொகாதுந் தொக்கும் நின்றது. இதற்குப் பிரிந்திசைத்த லின்று, மரத்துக்கட் கட்டினான், மரத்துக் கட்டினான் எனப்பிரிந்திசைத்த வழியும், மரத்துக்கட் குரங்கு, மரத்துக் குரங்கு என ஒருங்கிசைத்தவழியுஞ் சாரியை நின்றவழி ஏழனுருபு தொகாதுந் தொக்கும் நின்றது. "கிளைப்பெய ரெல்லாம்" (எழு-307) என்றதனுட் "கௌ" என்றதனான் ணகாரம் டகார மாயிற்று. "நிலாவென் கிளவி யத்தொடு சிவணும்" (எழு-228) என விதித்த அத்து நிலாக்கதிர் நிலாமுற்றம் என்றவழிப் பெறாதாயிற்று. அஃது "ஒட்டுதற் கொழுகிய வழக்கு" அண்மையின். நிலாத்துக் கொண்டான், நிலாத்துக் கொண்டவன் என்பன உருபுதொக்குழி இரு வழியும் பெற்றன. எல்லார் தம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின் இடை நிற்றல் பெரும்பான்மை யென்றற்கு இயலு மென்றார்,. பூவினொடு விரிந்த கூந்தல், பூவொடு விரிந்த கூந்தல் என உடைமையும் இன்மையம் ஒடுவயின் ஒத்தது. இனி இயற்கை யென்றதனான் ஒடு உருபின்கட் பெற்றும் பெறாமையும் வருதலன்றிப் பெற்றே வருதலுங் கொள்க.பலவற்றொடு என வரும். (30)
----------

அத்து வற்று வருமிடத்து நிகழும் விகாரம்
133. அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்
ஒற்றுமெய் கெடுதல் தெற்றென் றற்றே
அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே.

இஃது அத்து வற்று என்பனவற்றிற்கு நிலைமொழியது ஒற்றுக் கேடும் வருமொழி வன்கணத்துக்கண் ஒற்றுப்பேறுமாகிய செய்கை கூறுகின்றது.

இ-ள்: அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்ஒற்று-அத்தும் வற்றுமாகிய அவ்விரண்டு சாரியைமேல் நின்ற ஒற்று, மெய்கெடுதல் தெற்றன்றற்று-தன் வடிவு கெடுதல் தெளியப்பட்டது, அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே-அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று

எ-டு: கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும். "அத்திடை வரூ உங் கலமென் னளவே" (எழு-168) "சுட்டுமுதல் வகரம் ஐயு மெய்யும்" (எழு-183) என்பனவற்றான் அத்தும் வற்றும் பெற்றுவரும் மகர வகர ஈறுகட்கு ஈற்றுவல்லெழுத்துவிதி இன்மையின் அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமென்று சாரியை வல்லெழுத்து விதித்தார். வல்லெழுத்து இன்றித் திரிந்து முடிவன ணகாரமும், னகாரமும், லகாரமும், ளகாரமுமாம். மகர ஈற்றிற்கு அத்தும் வகர ஈற்றிற்கு வற்றும் வருமென்பது அச்சூத்திரங்களாற் பெற்றாம். வற்றே யத்தே யென்னாத முறையன்றிக் கூற்றினாற் புள்ளியிற்றின் முன்னர் அத்தின்மிசை யொற்றுக் கெடாது நிற்றலுங் கொள்க.

எ-டு: விண்ணத்துந் தொட்கும் வெயிலத்துச் சென்றான், இருளத்துக் கொண்டான் என வரும். மெய்யென்றதனான் அத்தின் அகரம் அகர முன்னரேயன்றிப் பிற உயிர்முன்னருங் கெடும் ஒரோவிடத் தென்றுகொள்க. அண்ணாத்தேரி, திட்டாத்துக்குளம் என ஆகாரத்தின் முன்னரும் வரும் அத்தின் அகரங் கெட்டது. இவற்றை அகர ஈறாக்கியம் முடிப்ப. இனித் தெற்றென்றற்றே என்றதனான் அத்தின் அகரந் தெற்றெனக் கெடாது நிற்கும் இடமுங் கொள்க. அதவத்துக்கண், விளவத்துக்கண் என வரும் (31)
-------------

4. 5. எழுத்துச் சாரியை

எழுத்துச் சாரியைகளின் பெயர்
134. காரமுங் கரமுங் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை.

இது மொழிச்சாரியையை விட்டு எழுத்துக்கட்கு வருஞ் சாரியைகளது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது.

இ-ள்: காரமுங் கரமுங் கானொடு சிவணி-காரமுங் கரமுங் கானொடு பொருந்தி, எழுத்தின்சாரியை நேரத் தோன்றும் - எழுத்தின்கண் வருஞ் சாரியையாதற்கு எல்லா ஆசிரியரானும் உடம்படத் தோன்றும்; எ-று

காரமுங் கரமும் எடுத்துச் சொல்லியவழி இனிதிசைத்தலானுஞ் வழக்குப் பயிற்சி யுடைமையானும், வடவெழுத்திற்கும் உரியவாதலானுஞ் சேரக் கூறினார். கான் அத்தன்மை யின்மையினாற் பின் வைத்தார். நேரத் தோன்று மெனவே நேரத்தோன்றாதனவும் உளவாயின. அவை ஆனம் ஏனம் ஓனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடியலாகாவாயின. (32)
---------

நெட்டெழுத்துச் சாரியை.
135. அவற்றுள்,
கரமுங் கானும் நெட்டெழுத் திலவே.

இஃது அவற்றுட் சில சாரியை சில வெழுத்தோடு வாரா வென எய்தியது விலக்கிற்று.

இ-ள்: அவற்றுள்-முற் கூறியவற்றுள், கரமுங் கானும் நெட்டெழுத்தில-கரமுங் கானும் நெட்டெழுத்திற்கு வருதலின்று; எ-று

எனவே, நெட்டெழுத்திற்குக் காரம் வருமாயிற்று. ஆகாரம் ஈகாரம் என ஒட்டுக. ஐகாரம் ஔகார மெனச் சூத்திரங்களுள் வருமாறு காண்க.
----------

குற்றெழுத்துச் சாரியை
136. வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய.

இஃது ஐயம் அகற்றியது; என்னை? நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினாற்போலக் குற்றெழுத்திற்கும் விலக்கற்பாடு உண்டோ வென ஐயம் நிகழ்தலின்.

இ-ள்: வரன்முறை மூன்றும்-வரலாற்று முறைமையையுடைய மூன்று சாரியையும், குற்றெழுத்துடைய -குற்றெழுத்துப் பெற்று வருதலையுடைய; எ-று

அகாரம் அகரம் மஃகான் என ஒட்டுக. "வகார மிசையும்"."அகர இகரம்", "வஃகான் மெய்கெட" எனவும் பிறவுஞ் சூத்திரங்களுட் காண்க.

இஃகான் ஒஃகான் என்பன பெருவழக் கன்று. வரன்முறை யென்றதனான் அஃகான் என்புழி ஆய்தம் பெறுதல் கொள்க. இது "குறியதன் முன்னராய்தப்புள்ளி" (எழு-38) என்பதனாற் பெறாதாயிற்று, மொழியாய் நில்லாமையின். (34)
----------

ஐ, ஔவின் சாரியை
137. ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும்

இஃது "அவற்றுட் கரமுங் கானும்" என்பதற்கோர் புறனடை கூறுகின்றது.

இ-ள்: ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும்-நெட்டெழுத்துக்களுள் ஐகார ஔகாரங்கள் முன் விலக்கப்பட்ட கானொடுந் தோன்றும்; எ-று

ஐகான் ஔகான் என வரும். உம்மை இறந்தது தழீஇயற்று, காரத்தைக் கருதுதலின். (35)
-----------

4.6. உயிரெழுத்தின் புணர்ச்சி யியல்புகள்

138. புள்ளி ஈற்றுமுன் உயிர்தனித் தியலாது
மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல் கெடுத்தே.

இது புள்ளி யீற்றுமுன் உயிர் முதன்மொழி வந்த காலத்துப் புணரும் முறைமை கூறுகின்றது.

இ-ள்: புள்ளி யீற்றுமுன் உயிர் தனித்து இயலாது - புள்ளியீற்றுச் சொன்முன்னர் வந்த உயிர்முதன்மொழியின் உயிர் தனித்து நடவாது, மெய்யொடுஞ் சிவணும்-அப்புள்ளியோடும் கூடும், அவ்வியல் கெடுத்து-தான் தனித்து நின்ற அவ்வியல் பினைக் கெடுத்து;1 எ-று

எனவே, நீரோடு கூடிய பால்போல நின்றதென்று ஒற்றுமை கூறினார்.
ஈண்டு இதனானே உயிர்மெய்யெனப் பெயர்பெற்றது.

எ-டு: பாலரிது பாலாழி, ஆலிலை, பொருளீட்டம், வானுலகு, வானூ,டு வேலெறிந்தான், வேலேற்றான், பொருளையம், பொருளொன்ற, நாணோடிற்று,
சொல்லௌவியம் என வரும்.,

ஒன்றென முடித்த லென்பதனான் இயல்பல்லாத புள்ளி முன்னர் உயிர் வந்தாலும் இவ்விதி கொள்க. அதனை அதனொடு நாடுரி என வரும். இவற்றைக் "சுட்டுமுத லுகர மன்னொடு" (எழு-176) "உரிவரு காலை நாழிக் கிளவி" (எழு-240) என்பனவற்றான் முடிக்க. புட்டியீற்று முன்னுமென உம்மையை மாறி எச்சவும்மையாக்கிக் குற்றியலுகரத்தின் முன்னரும் என அவ்விதி கொள்க. எனவே, "குற்றிய லுகரமு மற்று" (எழு-105) என்றதனோடும் பொருந்திற்றாம். நாகரிது, வரகரிது என வரும். (36)
-----------
    1 "அவ்வியல் கெடுத்து" என்பதற்கு, புள்ளி பெற்று நிற்கும் அம்மெய்யின் இயல்பைக் கெடுத்து என்றே பொருள் கொள்வது தக்கது. "மெய்யுயிர் நீங்கின் தன்னுருவாகும்" என்று அடுத்த நூற்பாவுங் கூறுதல் காண்க.
-----------

உயிர் பிரிந்த மெய்யின் இயல்பு
139. மெய்உயிர் நீங்கின் தன்னுரு வாகும்.1

இஃது உயிர்மெய் புணர்ச்சிக்கண் உயிர்நீங்கியவழிப் படுவதோர் விதி கூறுகின்றது.

இ-ள்: மெய் உயிர் நீங்கின்-மெய் தன்னோடு கூடிநின்ற உயிர் புணர்ச்சியிடத்துப் பிரிந்து வேறு நின்றதாயின், தன் உருவாகும்-தான் முன்னர்ப் பெற்று நின்ற புள்ளிவடிவு பெறும்; எ-று

ஆல் இலை அதன் ஐ என வரும்

உயிர் இன்ன வடிவிற்றென்று ஆசிரியர் கூறாமையின் உயிர்க்கண் ஆராய்ச்சி யின்று.

இனி, எகர ஒகரங்களைப் புள்ளியான் வேற்றுமை செய்தலின், தொன்று தொட்டு வழங்கின வடிவுடைய என்று கோடலுமாம். புணர்ச்சியுள் உயிர் மெய்யினைப் பிரிப்பாராதலின், இது கூறாக்காற் குன்றக் கூறலாம் என்று உணர்க. (37)
-------
    1 இவ்வியல்பு ஒன்றென முடித்தல் என்னும் உத்தியால் குற்றியலுகரத்திற்கும் ஏற்கும்.
--------

உடம்படு மெய் தோன்றும் இடம்
140. எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்.

இஃது உயிரீறும் உயிர்முதன்மொழியும் புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுகின்றது.

இ-ள்: எல்லா மொழிக்கும் - நிலைமொழியும் வருமொழியுமாய்ப் புணரும் எவ்வகை மொழிக்கும், உயிர் வருவழி-உயிர் முதன்மொழி வருமிடத்து, உடம்படுமெய்யின் உருவு கொளல் வரையார்-உடம்படுமெய்யினது வடிவை உயிரீறு கோடலை நீக்கார், கொள்வார் ஆசிரியர்; எ-று

அவை யகரமும் வகரமுமென்பது முதனூல்பற்றிக் கோடும்;

"உடம்படு மெய்யே யகார வகாரம்
உயிர்முதன் மொழிவரூஉங்காலை யான*"

எனவும்,

"இறுதியும்முதலும் உயிர்நி*லை வதினே
உறுமென மொழிப உடம்படு மெய்யே"

எனவுங் கூறினாராகலின், உயிர்களுள் இகர ஈகார ஐகார ஈறு யகர உடம்படு மெய் கொள்ளும். *எகாரம் யகாரமும் வகாரமுங் கொள்ளும். அல்லன வெல்லாம் வகர உடம்படுமெய்யே கொள்ளுமென்று உணர்க.

எ-டு: கிளியழகிது, குரீஇயோப்புவாள், வரையரமகளிர் எனவும், விளவழகிது, பலாவழகிது, கடுவழகிது, பூவழகிரு, கோவழகி,து கௌவடைந்தது எனவும் ஒட்டுக. 'ஏஎ யிவளொருத்தி பேடியோவென்றார்' (சீவக – 652) ஏவாடல் காண்க என ஏகாரத்திற்கு இரண்டும் வந்தன.

ஒன்றென முடித்த லென்பதனான் விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி ஆயிருதிணை என வரும். வரையா ரென்றதனான் உடம்படுமெய் கோடல் ஒருதலை யன்று. கிளி அரிது. மூங்கா இல்லை1 எனவும் வரும். ஒன்றென முடித்த லென்பதனால் 'விண்வத்துக் கொட்கும்' எனச் சிறுபான்மை புள்ளியீற்றினும் வரும். செல்வுழி உண்புழி என்பன வினைத் தொகை யென மறுக்க.2 (38)
---------
1 இத்தொடர்களால், தமிழும் ஒரு காலத்தில் ஆங்கிலத்தைப் போல புணர்ச்சியின்றி எழுதப்பட்டமை ஊகிக்கப்படும்.
2 இம்மறுப்பு சரியானதாய்த் தோன்றவில்லை. செலவுழி உண*புழி என்பன, வினைத் தொகை யல்ல வாதலின் தொழிற் பெயரும் உயிரீறும் புணர்ந்த வினையெச்சங்களாதல் வேண்டும். வினைத்தொகையாயின் செல்லுழி உண்ணுழி என்ற வடிவுகளே கொள்ளல் வேண்டும் ; அங்ஙன மின்றிச் செலவுழி உணபுழி-யென்றிருத்தலின் இவை வினைத்தொகையாகா வென்றே கொள்ளுதல் தகும்.
------------

4. 7. புணர்ச்சியிற் பொருள் வேறுபடுமிடம்

ஒலி வேற்றுமையாற் பொருள் வேறுபடல்
141. எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
இசையில் திரிதல் நிலைஇய பண்பே.

இஃது எழுத்துக்கள் ஒன்று பலவா மென எய்தாத தெய்துவிக்கின்றது.

இ - ள் : எழுத்தோ ரன்ன பொருள் தெரி புணர்ச்சி - எழுத்து ஒருதன்மைத்தான பொருள் விளங்க நிற்கும் புணர் மொழிகள், இசையில் திரிதல் நிலைஇய பண்பு - எடுத்தல்
படுத்தல் நலித லென்கின்ற ஓசை வேற்றுமையாற் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற குணம் ; எ – று.

எ - டு : செம்பொன் பதின்றொடி, செம்பருத்தி, குறும்பரம்பு, நாகன் றேவன்போத்து, தாமரைக்கணியார், குன்றேறாமா3 என இவை இசையில் திரிந்தன. (39)
------
    3 செம்பொன்பதின்றொடி = செம்பொன் + பதின்றொடி, செம்பு + ஒன்பதின்றொடி; செம்பருத்தி = செம் + பருத்தி, செம்பு + அருத்தி; குறும்பரம்பு = குறும் + பரம்பு. குறும்பர + அம்பு; நாகன்றேவன்போத்து = நாகன்றேவன் + போத்து, நாகன்றே + வனபோத்து; தாமரைக்கணியார் = தாமரை + கணியார், தாம் + அரைக்கு + அணியார்; குன்றேறாமே = குன்றேறா + மா, குன்றேறு + ஆமா.
-----------

142. அவைதாம்,
முன்னப் பொருள புணர்ச்சி வாயின்
இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே.

இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.

இ - ள் : அவை தாம் - பல பொருட்குப் பொது வென்ற புணர்மொழிகள் தாம், முன்னப் பொருள் - குறிப்பான் உணரும் பொருண்மையினையுடைய, புணர்ச்சிவாயின் இன்ன வென்னும் எழுத்துக் கடன் இல-புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல; எ-று

சென்பொன்பதின்றொடி என்றுழிப் பொன்னாராய்ச்சி யளவழிப் பொன்னெனவுஞ் செம்பாராய்ச்சி யுளவழிச் செம்பெனவுங் குறிப்பான் உணரப்பட்டது. இசையில் திரித லென்றது ஒலியெழுத்திற் கெனவும் எழுத்துக்கடனில வென்றது வரிவடிவிற் கெனவுங் கொள்க. (40)

புணரியல் முற்றிற்று
--------------

5. தொகைமரபு
(எழுத்துப் புணர்ச்சியுள், தொகுத்துக் கூறுதற்குரிய புணர்ச்சி யிலக்கணங்களை உணர்த்துவது)
5. 1. உயிரீறு மெய்யீறுகளின் பொதுப் புணர்ச்சி


மெல்லினந் தோன்று மிடம்
143. கசதப முதலிய மொழிமேற் றோன்றும்
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான்
ஙஞநம வென்னும் ஒற்றா கும்மே
அன்ன மரபின் மொழிவயி னான.

என்பது சூத்திரம்.

உயிரீறும் புள்ளியீறும் மேலை அகத்தோத்தினுள் முடிக்கும்வழி ஈறுகடோறும் விரித்து முடிப்பனவற்றை ஈண்டு ஒரோவோர் சூத்திரங்களால் தொகுத்து முடிபு கூறினமையின், இவ்வோத்துத் தொகைமர பென்னும் பெயர்த்தாயிற்று. மேல் மூவகை மொழியும் நால்வகையாற் புணர்வுழி, மூன்று திரிபும் ஓரியல்பும் எய்தி வேற்றுமை அல்வழி யென இருபகுதியவாகி எழுத்துஞ் சாரியையும் மிக்குப் புணருமாறு இது வென்று உணர்த்தி அவைதாம் விரிந்த சூத்திரப் பொருளவன்றியுந் தொக்குப் புணருமாறு கூறுதலின், இவ்வோத்துப் புணரியலோடு இயைபுடைத்தாயிற்று. இத் தலைச் சூத்திரம் உயிர் மயங்கியலையும் புள்ளி மயங்கிலையும் நோக்கியதோர் வருமொழிக் கருவி கூறுகின்றது.

இ-ள்: கசதப முதலிய மொழிமேற் றோன்றும் இயற்கை மெல்லெழுத்து-உயிரீறும் புள்ளியீறும் முன்னர் நிற்பக் கசத பக்களை முதலாகவுடைய மொழிகள் வந்தால் அவற்றிற்கு மேலே தோன்றி நிற்கும் இயல்பாகிய மெல்லெழுத்துக்கள், சொல்லிய முறையான் ஙஞநம என்னும் ஒற்றாகும்-நெடுங்கணக்கிற் பொருந்தக் கூறிய முறையானே கசதபக்களுக்கு ஙஞநம வென்னும் ஒற்றுக்கள் நிரனிறைவகையானாம், அன்ன மரபின் மொழிவயினான-அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய மொழிகளிடத்து; எ-று

எ-டு: விளங்கோடு செதிள் தோல் பூ என வரும்.இது "மரப்பெயர்க்கிளவி" (எழு-217) என்பதனான் மெல்லெழுத்துப் பெற்றது. மரங் குறிது சிறிது தீது பெரிது என அல்வழிக்கட் டிரியுமாறு "அல்வழி யெல்லாம்" (எழு-314) என்பதனாற் பெறுதுமேனும் ஈண்டுத் தோன்று மென்றதனால் நிலைமொழிக்கட் டோன்றி நின்ற ஒற்றுத் திரிதல் கொள்க. அன்ன மரபின் மொழியன்மையின் விளக்குறுமை1 விளக்குறைத்தான் என்புழி மெல்லெழுத்துப் பெறாவாயின, இவை ஏழாவதும் இரண்டாவதுந் திரிதலின். இங்ஙனம் எழுத்துப் பெறுவனவுந் திரிவனவு மெல்லாம் வருமொழியேபற்றி வருமென்று உஐணர்க. (1)
-----
    1 விளக்குறுமை என்பது ஆறாம் வேற்றிமையுமாம்.
-------------

வருமொழி யியல்பாதல்
144. ஞநம யவவெனும் முதலாகு மொழியும்
உயிர்முத லாகிய மொழியும் உளப்பட
அன்றி யனைத்தும் எல்லா வழியம்
நின்ற சொல்முன் இயல்பா கும்மே.

இது முற்கூறிய நால்வகைப் புணர்ச்சியுள் இயல்பு புணருங்கால் இக்கூறிய பதினே ழெழுத்தும் வருமொழியாய் வந்த இடத்து இருபத்துநான் கீற்றின் முன்னரும் வேற்றுமையிலும் அல்வழியிலும் வருமொழி இயல்பாய் முடிகவென்கின்றது.

இ-ள்: ஞநமயவ எனும் முதலாகுமொழியும் –ஞநமயவ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாய் நிற்குஞ் சொற்களும், உயிர்முதலாகிய மொழியும் உளப்பட-உயிரெழுத்து முதலாய் நின்ற சொற்களுந் தம்மிற்கூட, அன்றி யனைத்தும்-அப்பதினேழாகிய வருமொழிகளும், எல்லாவழியும்-வேற்றுமையும் அல்வழியுமாகிய எல்லா இடத்தும், நின்ற சொன்முன்-இருபத்துநான்கு ஈற்றவாய் நின்ற பெயர்ச்சொன்முன்னர், இயல்பாகும் -திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும்; எ-று

உயிரீற்றின்கண் எகர ஒகரம் ஒழிந்தன கொள்க.

எ-டு: விள பலா கிளி குரீ கடு பூ சே கை சோ கௌ என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது என மெய்ம்முதன் மொழி வருவித்து, பொருள் தருதற்கு ஏற்பன அறிந்து கூட்டுக. சோ என்பது அரண். அதற்குச் சோ ஞொள்கிற்று எனக் கொள்க. கௌவென்பதற்குக் கௌஞெகிழ்ந்தது நீடிற்று என்க. இனி இவற்றின் முன்னர் உயிர் முதன்மொழி வருங்கால் அழகிது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊறிற்று எழுந்தது ஏய்ந்தது ஐது ஒன்று ஓங்கிற்று ஔவியத்தது என வரும். இவற்றுட் சோவுக்கு இடிந்தது ஈண்டையது உள்ளது ஊறிற்று என்பனவற்றோடு முற் கூறியவற்றையும் ஒட்டுக. இனி வேற்றுமைக்கண் விள முதலியவற்றை நிறுத்தி ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஆக்கம் இளமை ஈட்டம் உயர்வு ஊற்றம் எழுச்சி ஏற்றம் ஐயம் ஒழிவு ஓக்கம் ஔவியம் என ஒட்டுக. ஏலாதனவற்றிற்கு முற் கூறியவாறுபோல ஏற்பன கொணர்ந்து ஒ்டுக.

இனிப் புள்ளியீற்று ணகாரமும் னகாரமும் மேற்கூறுப. ஏனைய ஈண்டுக் கூறுதும்.

எ-டு: உரிஞ் வெரிந் என நிறுத்தி, ஞெகிழ்ந்தது நீடிற்று அழகிது ஆயிற்று எனவும், ஞெகிழ்ச்சி நீட்டிப்பு அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றோடும் ஒட்டுக. மரம் வேய் வேர் யாழ் என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது அழகிது ஆயிற்று எனவும்,. ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றோடும் ஒட்டுக. இவற்றுள் மகர ஈறு வேற்றுமைக்கட் கெடுதல் "துவர" (எழு-310) என்றதனாற் கொள்க. அல்வழிக்கட் கெடுதல் "அல்வழி யெல்லாம்" (எழு-314) என்றதனாற் கொள்க. நிலைமொழித் திரிபு ஈண்டுக் கொள்ளாமை உணர்க. யகர ஈறு யகரத்தின் முன்னர் இரண்டிடத்துங் கெடுதல் ஈண்டு எல்லா மென்றதனாற் கொள்க. வேல் தெவ் கோள் என நிறுத்தி ஏற்பன கொணர்ந்து இருவழியும் ஒட்டுக. ணகார லகார ளகார னகாரங்களின் முன்னர் நகரம் வருமொழியாக வந்துழி அந்நகரந் திரிதலின் அத்திரிந்த உதாரணங்கள் ஈண்டுக் கொள்ளற்க. இவற்றுள் திரிந்து வருவனவுள; அவை எடுத்தோத்தானும்1 இலேசானும்2 ஏனை யோத்துக்களுள் முடிக்கின்றவாற்றான் உணர்க. இனி, எல்லாமென்றதனான் உயிர்க்கணமாயின் ஒற்றிரட்டியும் உடம்படு மெய் பெற்றும் உயிரேறியும் முடியுங் கருவித்திரி புகள் திரிபெனப்படா3. இவ்வியல்பின்கண் ணென்று உணர்க. வரகு ஞான்றது வரகு ஞாற்சி எனக் குற்றுகரத்தின்கண்ணும் இவ்வாறே கொள்க. இருபத்துநான்கு ஈற்றிற்கும் வேற்றுமைக்கும் அல்வழிக்கும் அகத்
தோத்தினுள் நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவனவற்றை ஒரு சூத்திரத்தாற் றொகுத்து முடித்தார். மேலும் இவ்வாறே கூறுப. இவ்வியல்பு வருமொழி நோக்கிக் கூறிய தென்று உணர்க. இவ்வியல்பு புணர்ச்சி மெய்க் கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழாமையின் மெய் முற்கூறினார். (2)
--------
    1 எடுத்தோத்து-வெளிப்படையாய் எடுத்து ஓதும் விதி.
    2 இலேசு-நூற்பாவில் மிகையாயிருக்கும் எழுத்தும் சொல்லும்
    3 உயிர் முதற்சொல் வருமொழியாயின் நிலைமொழியீற்று ஒற்றிரட்டுதலும் இரு மொழிக்கும் இடையில் உடம்படுமெய் தோன்றுதலும் அவ்விருவகை மெய்யின்மேலும் உயிரேறி முடிதலும் கருவித்திரிபுகள்; நிலைமொழியீறும் வருமொழியீறும் திரிதலும், வருமொழி முதன்மெய் தன்னொற்றும் இனவொற்றும் மிகப்பெறுதலும் செய்கைத் திரிபுகள் என்பது நச்சினார்க்கினியர் கருத்து,.
------------

145. அவற்றுள்
மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி இறுதி யான.

இது முற்கூறிய முடிபிற் சிலவற்றிற்கு அம்முடிபு விலக்கிப் பிறிது விதி எய்துவித்தது.

இ-ள்: அவற்றுள்- முற்கூறிய மூன்று கணக்கினுள் மெல்லெழுத்தியற்கை உறழினும் வரையார்-மெல்லெழுத்து இயல்பியல் பாதலேயன்றி உறழ்ந்து முடியினும் நீக்கார், சொல்லிய தொடர்மொழி இறுதியான -சொல்லப்பட்ட தொடர் மொழியீற்றுககண்; எ-று

உம்மை எதிர்மறை, எனவே உறழாமை வலியுடைத்தாயிற்று. கதிர்ஞெரி கதிர்ஞ்ஞெரி நுனி முரி எனவும், இதழ்ஞெரி இதழ்ஞ்ஞெரி நுனிமுரி எனவும் வரும். வருமொழி முற்கூறியவதனால் ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழிகளுள்ளுஞ் சில உறழ்ச்சிபற்று முடிதல் கொள்க. பூஞெரி பூஞ்ஞெரி நுனி முரி, காய்ஞெரி காய்ஞ்ஞெரி நுனி முரி எனவரும். சொல்லியவென்றதனான் ஓரெழுத் தொருமொழிகளுட் சில மிக்கு முடிதல் கொள்க. கைஞ்ஞெரித்தார் நீட்டினார் மறித்தார் என வரும். இன்னும் இதனானே ஈரெழறுத் தொருமொழிக்கண் மெய்ஞ்ஞானம் நூல் மறந்தார்1 எனவரும். இவற்றை நலிந்து கூறப் பிறத்தலின் இயல்பென்பாரும் உளர். பூஞாற்றினார் என்றாற் போல்வன மிகாதன. (3)
---------
1 மெய் நூல் என்னுஞ் சொற்களை நச்சினார்க்கினியர் இங்கு ஈரெழுத்தொரு மொழியாகக் கொண்டது, அவா் "ஓரெழுத் தொருமொழி"என்னும் நூற்பாவுரையில் சொற்களை ஒற்றும் குற்றுகரமும் நீக்கி யெண்ணிய முறையொடு முரணும்.
-----------

ண ன முன் யாவும் ஞாவும்
146. ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்
வினையோ ரனைய என்மனார் புலவர்.

இது யகர ஞகர முதன்மொழி வந்த இடத்து நிகழ்வதோர் தன்மை கூறுகின்றது. இதுவும் புணரியலொழிபாய்க் கருவிப்பாற்படும்.

இ-ள்: ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்-ணகார னகார மென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர் வந்த யாவும் ஞாவும் முதலாகிய வினைச்சொற்கள், வினையோரனைய என்மனார் புலவர்-ஒரு வினை வந்த தன்மையை ஒக்கு மென்று சொல்லுவர் புலவர்; எ-று

எ-டு: "மண்யாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே", "மண்ஞாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே" எனவும், "பொனயாத்த தார்ப்புரவி பரிக்குமே" , "பொன்ஞாத்த தார்ப்புரவி பரிக்குமே: எனவும் வரும்

வினைக்கண் ணெனவே மண்யாமை மண்ஞாமை எனப் பெயர்க்கண் வாராவாயின. ஞா முற்கூறாது யா முற்கூறியவதனான் ஞாச்சென்றவழி யாச் செல்லாது யாச் சென்றவழி ஞாச் செல்லு மென்று கொள்க. மண்ஞான்றது என்றவழி மண்யான்றது என்று வாராமை உணர்க. (4)
------------

ணன ஈறு அல்வழியில் இயல்பாதல்
147. மொழிமுத லாகும் எல்லா எழுத்தும்
வருவழி நின்ற ஆயிரு புள்ளியும்
வேற்றுமை யல்வழித் திரிபிடன் இலவே

இது ணகார ஈறும் னகார ஈறும் அல்வழிக்கண் இயல்பாய் முடியு மென்கின்றது.

இ-ள்: மொழி முதலாகும் எல்லா வெழுத்தும் வருவழி- மொழிக்கு முதலாமெனப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் வருமொழியாய் வருமிடத்து, நின்ற ஆயிரு புள்ளியும்-முன்னர்க்கூறி நின்ற ணகாரமும் னகாரமும், வேற்றுமையல்வழித் திரிபிடன் இலவே-வேற்றுமையல்லாத இடத்துத் திரியுமிடம் இல; எ-று

மண் பொன் என நிறுத்திக், கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந்தது நீண்டது மாண்டது யாது வலிது நுந்தையது அடைந்தது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊட்டிற்று எவ்விடத்தது ஏறிற்று ஐது ஒழுகிற்று ஓங்கிற்று ஔவையது என ஒட்டுக. வருமொழி முற்கூறியவதனால் ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண்டென்று கொள்க. சாட்கோல் என வரும்; இதற்குச் சாணாகிய கோ லென்க. இவை "நின்றசொன்முன் இயல்பாகும்" (எழு- 144) என்ற வழி அடங்காவாயின; அது வருமொழிபற்றித் திரியாமை கூறியதாதலின். இது நிலைமொழிபற்றித் திரியாமை கூறியது,. (5)
---------

அவை வேற்றுமையிலும் இயல்பாதல்
148. வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி
மேற்கூ றியற்கை ஆவயி னான.

இது முற்கூறியவற்றான் வேற்றுமைக்கண் திரிபு எய்திநின்றவற்றை ஈண்டு வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத் தல்வழித் திரியா வென எய்தியது விலக்கிற்று.

இ-ள்: ஆவயினான-அல்வழிக்கண் அங்ஙனந் திரியாது நின்ற அவ்வொற்றுக்கள், வேற்றுமைக்கண்ணும்-வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யிடத்தும், வல்லெழுத்தல்வழி மேற்கூறியற்கை - வல்லெழுத்தல்லாத இடத்து மேற்கூறிய இயல்பு முடிபாம்; எ-று

எனவே, வல்லெழுத்து வந்துழித் திரியு மென்றாராயிற்று.

எ-டு: மண் பொன் என நிறுத்தி, ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை நுந்தையது அழகு ஆக்கம் இன்மை என ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. இதுவுஞ் கெய்கைச் சூத்திரம். மேல் நான்கு சூத்திரத்தாற் கூறியன வல்லெழுத்து வந்துழித் திரியுமாறு தத்தம் ஈற்றுட் கூறுப. (6)
----------

லன முன் த நக்கள் திரித்
149. லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
த ந எனவரிற் றனவா கும்மே.

இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் வருமொழிக் கருவி கூறுகின்றது.

இ-ள்: ல ன என வரூஉம் புள்ளிமுன்னர்-லகார னகாரமென்று சொல்ல வருகின்ற புள்ளிகளின் முன்னர், த ந என வரின் -தகாரமும் நகாரமும் முதலென்று சொல்லும்படியாகச் சில சொற்கள் வரின், றனவாகும் - நிரனிறையானே அவை றகார
னகாரங்களாகத் திரியும்; எ-று.

எ-டு: கஃறீது கன்னன்று பொன்றீது பொன்னன்று என வரும். நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப. (7)
--------

ணளமுன் தந மெய் டண வாதல்
150. ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்.

இதுவும் அது.

இ-ள்: ணளவென் புள்ளிமுன் - ணகார ளகார மென்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர் அதிகாரத்தால் தகார நகாரங்கள் வருமெனின், டண வெனத் தோன்றும் - அவை நிரனிறை யானே டகார ணகாரங்களாய்த் திரிந்து தோன்றும்: எ-று.

எ-டு: மண்டீது மண்ணன்று முஃடீது முண்ணன்று என வரும். நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட் கூறுப. (8)
----------

5.2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

முன்னிலை வினைச்சொல் முடியுமாறு
151. உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பா குநவும் உறழா குநவுமென்
றாயீ ரியல வல்லெழுத்து வரினே.

இது முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு கூறுகின்றது.

இ-ள்: உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் – உயிரீறாய்வந்த முன்னிலை வினைச்சொற்களும், புள்ளியிறுதி முன்னிலைக் கிளவியும் - புள்ளியீறாய் வந்த முன்னிலை வினைச்சொற்களும், வல்லெழுத்துவரின் - வல்லெழுத்து முதலாகிய மொழி வரின், இயல்பாகுநவும் உறழாகுநவுமென்று ஆயீரியல - இயல்பாய் முடிவனவும் உறழ்ந்து முடிவனவு மென அவ்விரண்டு இயல்பினையுடைய; எ-று.

எ-டு: எறிகொற்றா கொணாகொற்றா உண்கொற்றா தின்கொற்றா சாத்தா தேவா பூதா என இவை இயல்பு. நடகொற்றா நடக்கொற்றா ஈர்கொற்றா ஈர்க்கொற்றா சாத்தா தேவா பூதா என இவை உறழ்ச்சி. ஈறென்று ஓதினமையின் வினைச்சொல்லே கொள்க. இவை முன்னின்றான் தொழிலுணர்த்துவனவும், அவனைத் தொழிற் படுத்துவனவு மென இருவகைய. இ ஐ ஆய் முதலியன தொழிலுணர்த்துவன.1 நட வா முதலியன உயிரீறும் புள்ளியீறுந் தொழிற்படுத்துவன.2 நில்கொற்றா நிற்கொற்றா எனத் திரிந் துறழ்ந்தனவும், உறழாகுநவு மென்னும் பொதுவகையான் முடிக்க. இயல்பு முறழ்வுமென் றிரண்டியல்பின என்னாது ஆகுநவு மென்றதனான் துக்கொற்றா நொக்கொற்றா ஞெள்ளா நாகா மாடா வடுகா என ஓரெழுத் தொருமொழி முன்னிலை வினைச்சொல் மிக்கே முடிதல் கொள்க. (9)
-------------
    1. தொழிலுணர்த்துவன - செய்தாய் செய்கின்றாய் செய்வாய் என்பன போன்ற முக்கால முன்னிலை வினைமுற்று. 2. தொழிற்படுத்துவன - ஏவல் வினைமுற்று.
-----------

அதற்குச் சிறப்பு விதி
152. ஔவென வரூஉம் உயிரிறு சொல்லும்
ஞநமவ என்னும் புள்ளி யிறுதியுங்
குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே.

இஃது எய்தியது விலக்கிற்று, முற்கூறியவற்றுட் சில ஆகாதனவற்றை வரைந்து உணர்த்தலின்.

இ-ள்: ஔவென வரூஉம் உயிரிறு சொல்லும்-ஔவென வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞநமவ என்னும் புள்ளியிறுதியும் -ஞநமவ என்று சொல்லப்படும் புள்ளியீற்றுச் சொல்லும்; குற்றியலுகரத்து இறுதியும்-குற்றியலுகரத்தை இறுதியிலேயுடைய சொல்லும், முன்னிலை மொழிக்கு உளப்பட முற்றத் தோன்றா-முன்னர் முன்னிலை மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறழ்ச்சியுமாகிய முடிபிற்கு முற்றத் தோன்றா; எ-று

முற்றவென்றதனான் நிலைமொழி உகரம் பெற்று உறழ்ந்து முடிதல் கொள்க.

எ-டு: கௌவுகொற்றா கௌவுக்கொற்றா, வௌவுகொற்றா வௌவுக் கொற்றா, திருமுகொற்றா திருமுக்கொற்றா, தெவ்வுகொற்றா தெவ்வுக்கொற்றா, கூட்டுகொற்றா கூட்டுக்கொற்றா என வரும். (10)
------

உயர்திணைப் பெயர் புணருமாறு
153. உயிரீ றாகிய உயர்திணைப் பெயரும்
புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும்
எல்லா வழியும் இயல்பென மொழிப.

இஃது உயர்திணைப்பெயர் வன்கணம் மென்கணம் இடைக்கணம் உயிர்க் கண மென்னும் நான்கு கணத்தினமும் இருவழியும் முடியுமாறு கூறுகின்றது.

இ-ள்: உயிரீறாகிய உயர்திணைப் பெயரும்-உயிரீறாய் வந்த உயர்திணைப் பெயர்களும், புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும் - புள்ளியீற்றினையுடைய உயர்திணைப்பெயர்களும், எல்லாவழியும்- நான்கு கணத்து அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா இடத்தும், இயல்பென மொழிப-இயல்பாய் முடியு மென்று கூறுவர் புலவர்; எ-று

வன்கணம் ஒழிந்த கணங்களை "ஞ ந ம ய வ" (எழு-144) என்பதனான் முடிப்பாரும் உளர். அது பொருந்தாது, இவ்வாசிரியர் உயர்திணைப் பெயரும் விரவுப்பெயரும் எடுத்தோதியே முடிப்பாராதலின்.

எ-டு: நம்பி அவன் எனவும், நங்கை அவள் எனவும் நிறுத்தி, அல்வழிக்கட் குறியன் சிறியன் தீயன் பெரியன் எனவும் குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும் ஞான்றான் நீண்டான் மாண்டான் எனவும், ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் எனவும், யாவன் வலியன் எனவும், யாவள் வலியள் எனவும், அடைந்தான் ஆயினான் ஔவியத்தான் எனவும், அழகியள் ஆடினாள் ஔவியத்தாள்னவும்,ஒட்டுக. இனி வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் எனவும் ,ஞாற்சி நீட்சி மாட்சி எனவும், யாப்பு வன்மை எனவும் ,அழகு ஔவியம் எனவும் எல்லாவற்றோடும் ஒட்டுக. ஒருவேன் எனத் தன்மைப் பெயர்க்கண்ணுங் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் எனவும், கை செவி தலை புறம் எனவும் ஒட்டுக. நீ முன்னிலை விரவுப்பெயராதலின் ஈண்டைக் காகா.

இனி உயிரீறு புள்ளியிறுதி என்ற மிகையானே உயர்திணைப் பெயர் திரிந்து முடிவனவுங் கொள்க. கபிலபரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர் என னகர ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தன. ஆசீவகப்பள்ளி நிக் கந்தக்கோட்டம் என இவை அவ் வீறு கெட்டு ஒற்று மிக்கு முடிந்தன. ஈழ
வக்கத்தி வாணிகத்தெரு அரசக்கன்னி கோலிகக்கருவி என இவை ஒருமையீறும் பன்மையீறுங் கெட்டு மிக்கு முடிந்தன. குமரகோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக்கோட்டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்தன. வண்ணாரப்பெண்டிர் இது மிக்கு முடிந்தது. பல்சங்கத்தார் பல்சான்றோர் பல்லரசர் என்றாற் போல்வன ரகரவீறும் அதன் முன்னின்ற அகரமுங் கெட்டுப் பிற செய்கைகளும் பெற்று முடிந்தன.

இனி, எல்லாவழியு மென்றதனான் உயர்திணை வினைச்சொல் இயல்பாயுந் திரிந்தும் முடிவன எல்லாங் கொள்க. உண்கு உண்டு வருது சேறு உண்பல் உண்டேன் உண்பேன் என்னுந் தன்மை வினைகளைக் கொற்றா சாத்தா தேவா பூதா என்பனவற்றோடு ஒட்டுக. உண்டீர் சான்றீர் பார்ப்பீர் என முன்னி லைக்கண்ணும் உண்ப உண்டார் சான்றார் பார்ப்பார் எனப் படர்க்கைக்கண்ணும் ஒட்டுக. இவை இயல்பு. உண்டனெஞ்சான்றேம் உண்டேநாம் என்றாற் போல்வன திரிந்து முடிந்தன. பிறவும் அன்ன. (11)
------

அதற்குச் சிறப்பு விதி
154. அவற்றுள்
இகர இறுபெயர் திரிபிட னுடைத்தே

இஃது உயர்திணைப்பெயருட் சிலவற்றிற்கு எய்தாத தெய்துவித்தது.

இ-ள்: அவற்றுள் இகர இறுபெயர்-முற்கூறிய உயர் திணைப்பெயர்களுள் இகர ஈற்றுப்பெயர், திரிபிடனுடைத்து- இருவழியுந் திரிந்து முடியும் இடனுடைத்து; எ-று

எட்டி1ப்பூ காவிதி2ப்பூ நம்பிப்பேறு என இவ்வுயர்திணைப் பெயர்கள் வேற்றுமைக்கண் மிக்கு முடிந்தன. எட்டி காவிதி என்பன தேயவழக்காகிய சிறப்புப்பெயர். எட்டி மரம் அன்று. அஃது 'எட்டி குமர னிருந்தோன்றன்னை' (மணி. 4:58) என்பதனான் உணர்க. இவை எட்டியதுபூ எட்டிக்குப்பூ என விரியும். இனி நம்பிக்கொல்லன் நம்பிச்சான்றான் நம்பித்துணை நம்பிப்பிள்ளை எனவும், செட்டிக்கூத்தன் சாத்தன் தேவன் பூதனெனவும் அல்வழிக்கண் உயர்திணைப்பெயர் மிக்கு முடிந்தன. இடனுடைத்தென்றதனான் இகர ஈறல்லாதனவும் ஈறு திரியாது நின்று வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. நங்கைப்பெண் நங்கைச்சானி என அல்வழிக்கண் சிறுபான்மை ஐகார ஈறு மிக்கன. இவ்வீற்றஃறிணைப்பெயர் மிக்கு முடிதல் உயிர் மயங்கியலுட் கூறுப. (12)
----------
    1 எட்டி-வணிகருட் சிறந்தோர்க்கு அரசராற் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்
    2 காவிதி-உழுவித்துண்ணும் வேளாளருட் சிறந்தோர்க்கு அரசராற் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.
----------

விரவுப்பெயருள் இயல்பு
155. அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே.

இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென்கின்றது.

இ-ள்: அஃறிணை விரவுப்பெயர் - உயர்திணைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர், இயல்பு மாருள – இயல்பாய் முடிவனவும் உள, உம்மையான் இயல்பின்றி முடிவனவும் உள; எ-று.

உயர்திணைப்பெயரோடு அஃறிணை சென்று விரவிற் றென்ற தென்னை ? சொல்லதிகாரத்து 'இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையின்' (சொல் -172) என்று சூத்திரஞ் செய்வாரா லெனின், அதுவும் பொருந்துமாறு கூறுதும். சாத்தன் சாத்தி, முடவன் முடத்தி என வரும் விரவுப் பெயர்க்கண் உயர்திணைக்கு உரித்தாக ஓதிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தி நின்றஈற்றெழுத்துக்களே அஃறிணை யாண்பாலும் பெண்பாலும் உணர்த்திற் றென்றல் வேண்டும்; என்னை* ? அஃறிணைக்கு ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த்தும் ஈறன்றி ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் ஈறுகள் உளவாக ஆசிரியர் ஓதாமையின்; அங்ஙனம் உயர்திணை இருபாலும் உணர்த்தும் ஈறுகள் நின்றே அஃறிணை யான்பாலையும் பெண்பாலையும் உணர்த்துதலின், அஃறிணை உயர்திணையோடு சென்று விரவிற்றென்று அவற்றின் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவான் ஈண்டுக் கூறினார். இவ்வாறே விளிமரபின்கட் 'கிளந்த விறுதி யஃறிணை விரவுப் பெயர்' (எழு - 15*10) என்புழியும் ஆசிரியர் உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப் பெயரென ஆண்டும் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவர். மாணாக்கன் இனிது உணர்தற்கு இவ்வாறு விரவுப் பெயரினது உண்மைத் தன்மைத் தோற்றம் இரண்டு அதிகாரத்துங் கூறி, அவ் விரவுப்பெயர் வழக்கின்கண் இருதிணைப் பொருளும் உணர்த்தி இருதிணைச் சொல்லாய் நிற்றற்கும் ஒத்த உரிமையவா மெனப் புலப்பட நிற்குமாறு காட்டினா ரென்று உணர்க.

இனி, அவை அல்வழிக்கண் இயல்பாய் நிற்குமாறு:- சாத்தன் கொற்றன் சாத்தி கொற்றி என நிறுத்திக் குறியன் சிறியன் தீயன் பெரியன் குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும், ஞான்றான் நீண்டான் மாண்டான் யாவன் வலியன் ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் யாவள் வலியள் எனவும், அடைந்தான் ஔவித்தான் அடைந்தாள் ஔவித்தாள் எனவும் நான்கு கணத் தோடும் ஒட்டி உணர்க. இனி வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஔவியம் எனவும் ஒட்டுக. இவற்றுள் னகாரம் நிற்பத் தகார நகாரம் வந்துழித் திரியும் உதாரணம் ஈண்டுக் கொள்ளற்க. இனிச் சாத்தன் குறிது சாத்தி குறிது என அஃறிணை முடி பேற்பனவுங் கொள்க. இவற்றொடு வினைச்சொல் தலைப்பெய்ய இவை இருதிணைக்கும் உரியவாம். ஆண்டு நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார். இஃது உயர்திணைக்கும் ஒக்கும். உம்மையான் இயல்பின்றி முடிவன னகார ஈற்றுட் காட்டுதும்.
------------

மூன்றாம் வேற்றுமை முடிபு
156. புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்
தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின்
மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும்
அம்முறை யிரண்டும் உரியவை உளவே
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.

இது மேல் உயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக்கட் கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமைமுடிபு கூறுகின்றது.

இ-ள்: தம்மினாகிய தொழிற்சொல் - மூன்றாவதற்கு உரிய வினைமுதற்பொருளானுளவாகிய தொழிற்சொல், புள்ளியிறுதி முன்னும் உயிரிறு கிளவி முன்னும் வரின் - புள்ளியீற்றுச்சொன் முன்னரும் உயிரீற்றுச்சொன் முன்னரும் வருமாயின், மெய்ம்மையாகலும் உறழத்தோன்றலும் அம்முறை யிரண்டும் உரியவை உள - அவற்றுள் இயல்பாகலும் உறழத்தோன்றலுமாகிய அம்முறை யிரண்டும் பெறுதற்கு உரிய உளவாதலால், வேற்றுமை மருங்கிற் சொல்லிய முறையான் வேண்டும் வல்லெழுத்துமிகுதி - உயிர்மயங்கியலுள்ளும் புள்ளிமயங்கியலுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லிய முறையான் விரும்பும் வல்லெழுத்து மிகுதியை, போற்றல் - ஈண்டுக் கொள்ளற்க; எ-று.

மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம்.1

எ-டு: நாய் புலி என நிறுத்திக் கோட்பாட்டான் சாரப்பட்டான் தீண்டப் பட்டான் பாயப்பட்டான் என வருவித்து இயல்பாயவாறு காண்க. சூர்கோட்பட்டான் சூர்க்கோட்பட்டான், வளிகோட்பட்டான் வளிக்கோட் பட்டான், சாரப்பட்டான், தீண்டப்பட்டான், பாயப்பட்டான் என இவை உறழ்ந்தன. இவை நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவனவற்றைத் தொகுத்தார்.

புள்ளியிறுதி உயிரிறுகிளவி என்றதனாற் பேஎய்கோட்பட்டான் பேஎய்க் கோட்பட்டான் என எகரப்பேறும் உறழ்ச்சிக்குக் கொடுக்க. அம்முறை யிரண்டு முரியவை யுளவே என்றதனாற் பாம்புகோட்பட்டான் பாம்*புக்கோட் பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழி யொற்றுத் திரிதலுங் கொள்க. இவ்வீறுகள் நாய்க்கால் தேர்க்கால் கிளிக்கால் என ஆண்டு வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுமாறு காண்க. (14)
--------
    1. பட்ட+ஆங்கு=பட்டாங்கு - *நேர்ந்த அல்லது உள்ள வகை, உண*மை, உண்மை
    வேறுபாடன்மையின் இயல்பாம்.
----------

இரண்டாம் வேற்றுமைத் திரிபு
157. மெல்லெழுத்து மிகுவழி வலிப்போடு தோன்றலும்
வல்லெழுத்து மிகுவழி மெலிப்போடு தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலுஞ்
சாரியை உள்வழிச் சாரியை கெடுதலுஞ்
சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலுஞ்
சாரியை யியற்கை யுறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க் கவ்வியல் நிலையலும்
மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்
அன்ன பிறவுந் தன்னியல் மருங்கின்
மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப.

இஃது இரண்டாம் வேற்றுமைத் திரிபு தொகுத்து உணர்த்துகின்றது.

இ-ள்: மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் - 'மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே' (எழு - 217) என்றதனான் விளங்குறைத்தானென மெல்லெழுத்து மிகுமிடத்து விளக் குறைத்தானென வல்லெழுத்துத் தோன்றுதலும், வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் - 'மகரவிறுதி' )எழு - 310) என்பதனான் மரக்குறைத்தான் என வல்லெழுத்து மிகுமிடத்து மரங்குறைத்தான் என மெல்லெழுத்துத் தோன்றுதலும் - இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் - 'தாயென்கிளவி யியற்கை யாகும்' (எழு - 358) என்றவழித் தாய்கொலை என இயல்பாய் வருமிடத்துத் தாய்க்கொலை என மிகுதி தோன்றலும், உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் - 'குறியதன் முன்னரும்' (எழு - 226) எனவுங் 'குற்றெழுத்திம்பரும்' (எழு - 267) எனவும் 'ஏயெனிறுதிக்கு' (எழு - 277) எனவுங் கூறியவற்றான் உயிர்மிக்கு வருமிடத்துப் பலாக்குறைத்தான் கழுக்கொணர்ந்தான் ஏக்கட்டினான் என உயிர் கெட வருதலும், சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும் - 'வண்டும் பெண்டும்' (எழு - 420) என்பதனாற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டு கொணர்ந்தான் எனச் சாரியை கெட்டு நிற்றலும், சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும் - 'வண்டும் பெண்டும்' என்பதனாற் சாரியைப் பேறு உள்ள இடத்து வண்டினைக் கொணர்ந்தான் எனத் தன்னுருபு நிற்றலும் (இதற்கு வல்லெழுத்துப் பேறு ஈற்று வகையாற் கொள்க), சாரியை இயற்கை உறழத் தோன்றலும் - 'புளிமரக் கிளவிக்கு' (எழு - 244) எனவும் 'பனையுமரையும்' (எழு - 283) எனவும் 'பூல்வேலென்றா' (எழு - 375) எனவும் பெற்ற சாரியை பெறாது இயல்பாய் நின்று புளிகுறைத்தான் புளிக்குறைத்தான் பனைதடிந்தான் பனைத்தடிந்தான் பூல்குறைத்தான் பூற்குறைத்தான் என மிக்குந் திரிந்தும் உறழ்ச்சியாகத் தோன்றலும், உயர் திணை மருங்கின் ஒழியாது வருதலும் - 'உயிரீறாகிய உயர்திணைப் பெயரும்' (எழு - 153) என்பதனான் வேற்றுமைக்கண் இயல்பாய் வருமென்றவை நம்பியைக் கொணர்ந்தான் நங்கையைக் கொணர்ந்தான் என்றவழி இரண்டனுருபு தொகாதே நிற்றலும், (ஒழியாதென்றதனான் மகற்பெற்றான் மகட்பெற்றான் எனவும் ஆடுஉவறிசொல் 'மழவரோட்டிய'(அகம் - 1) 'அவர்க்கண் டெம்முள்' எனவும் ஒழிந்தும் வருமென்று கொள்க.)

அஃறிணைவிரவுப் பெயர்க்கு அவ்வியல் நிலையலும் - உயர்திணையோடு அஃறிணை விரவும் பெயர்க்குக் கொற்றனைக் கொணர்ந்தானென உருபு தொகாதே நிற்றலும், (அவ்வியல் நிலையலும் என்றதனானே மகப்பெற்றேனென விரவுப் பெயர்க்கண்ணுந் தொகுதல் கொள்க. உருபியலுள் 'தேருங்காலை' (எழு -202) என்ற இலேசான் இதற்கும் முன்னையதற்கும் வல்லெழுத்துப்பேறுங்கொள்க.) மெய் பிறிதாகிடத்து இயற்கையாதலும் - புள்ளி மயங்கியலுள் ணகார னகார இறுதி வல்லெழுத்தியையின் மெய்பிறிதாமென்ற இடத்து மெய்பிறிதாகாது மண் கொணர்ந்தான் பொன் கொணர்ந்தான் என இயற்கையாய் வருதலும், அன்ன பிறவும் - அவைபோல்வன பிறவும், (அவை 'எக்கண்டு பெயருங் காலை யாழநின் கற்கெழு சிறுகுடி' எனவும் 'நப்புணர்வு வில்லா நயனில்லோர் நட்பு' எனவும் வருவழி எக்கண்டு நப்புணர்வு என்னுந் தொடக்கங்குறுகும் உயர்திணைப்பெயர்கள் மெல்லெழுத்துப் பெறுதற்கு உரியன வல் லெழுத்துப் பெறுதல் கொள்க. இன்னுந் தினைபிளந்தான் மயிர் குறைத்தான் தற்கொண்டான் செறுத்தான் புகழ்ந்தான் என வரும்.) தன் இயல் மருங்கின் - தன்னையே நோக்கித் திரிபு
நடக்குமிடத்து, மெய்பெறக் கிளந்து பொருள்வரைந்து இசைக்கும் - பொருள்பெற எடுத்தோதப்பட்டு ஏனை வேற்றுமைப் பொருட் புணர்ச்சியது பொதுமுடிபினைத் தான் நீக்கி வேறு முடி பிற்றாய் நின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப - இரண்டாம் வேற்றுமையது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர்; எ-று

மெய்பெற என்றதனானே சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாது செய்யுட்கண் வருவனவும் பிறவற்றின்கண் உறழ்ந்து முடிவனவுங் கொள்க. "மறங்கடிந்த வருங்கற்பின்" எனவும் "சில்சொல்லிற் பல் கூந்தல்" (புறம்- 166) எனவும் "ஆயிருதிணையி னிசைக்குமன்" (சொல்-1) எனவும் பிறாண்டும் பெரும்பான்மையும் வருமென்று கொள்க. மை கொணர்ந்தான்மைக் கொணர்ந்தான் வில்கோள் விற்கோள் என வரும், இனி இவ்வாறு திரியாது அகத் தோத்திற் கூறிய பொது முடிபே தமக்கு முடிபாக வருவனவுங் கொள்க. அவை கடுக்குறைத்தான் செப்புக் கொணர்ந்தான் என்றாற் போல்வன. "தம்மினாகிய தொழிற்சொன் முன்வரின்"(எழு-156) என்ற அதிகாரத்தான் வினைவந்துழியே இங்ஙனம் பெரும்பான்மை திரிவதென்று உணர்க. இனித் தன்னின முடித்த லென்பதனான் ஏழாவதற்கும் வினையோடு முடிவுழித்திரிதல் கொள்க. அது "வரைபாய் வருடை" (மலைபடு-503) "புலம்புக்கனனே புல்லணற்காளை" (புறம்-258) என்றாற்போல வரும் (15)
-----------

இகர ஐகார ஈற்று அல்வழி முடிபு
158. வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய
அவைதாம்
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்.

இஃது இகர ஈற்றுப் பெயர்க்கும் ஐகார ஈற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.

இ-ள்: வேற்றுமை யல்வழி-வேற்றுமை யல்லா இடத்து, இ ஐ என்னும் ஈற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலைய-இ ஐ என்னும் ஈற்றையுடைய பெயர்ச்சொற்கள் மூவகையாகிய முடிபு நிலையை யுடைய, அவை தாம்-அம்முடிபுகடாம், இயல்பாகுநவும்-இயல்பாய் முடிவனவும், வல்லெழுத்து மிகுநவும்-வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகுநவும்-உறழ்ச்சியாய் முடிவனவும், என்மனார் புலவர்-என இவையென்று கூறுவர் புலவர்; எ-று

எ-டு: பருத்தி குறிது நாரை குறிது சிறிது தீது பெரிது என இவை இயல்பு; மாசித் திங்கள் சித்திரைத் திங்கள் அலிக்கொற்றன் புலைக்கொற்றன் காவிக்கண் குவளைக்கண் என இவை மிகுதி. கிளிகுறிது கிளிக்குறிது தினை குறிது தினைக்குறிது என இவை உறழ்ச்சி.

பெயர்க்கிளவி மூவகைநிலைய வெனவே பெயரல்லாத இரண் உற்று வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இயல்பும் மிகுதியுமாகிய இருவகை நிலையவாம். ஒல்லைக்கொண்டான் என்பது ஐகார ஈற்று வினைச் சொன் மிகுதி. "இனி யணி" (எழு-236) யென்பதன்கண் இகர ஈற்று வினையெச்சம் எடுத்தோதுப. இவற்றிற்குஇயல்புவந்துழிக் காண்க. "சென்மதிபாக" இஃது இகர ஈற்று இடைச்சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. "தில்லைச் சொல்லே" (சொல்-253) இஃது ஐகார ஈற்று இடைச்சொன் மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. "கடிகா" இஃது இகர ஈற்று உரிச் சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. பணைத்தோள் இஃது ஐகார ஈற்று உரிச்சொன் மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. (16)
-----------

இ ஐ ஈற்று ஏழாம் வேற்றுமை முடிபு
159. சுட்டுமுத லாகிய இகர இறுதியும்
எகரமுதல் வானாவின் இகர இறுதியும்
சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும்
யாவென் வினாவின் ஐயென் இறுதியும்
வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவுஞ்
சொல்லியல் மருங்கின் உளவென மொழிப.

இஃது ஏழாம் வேற்றுமை இடப்பொருளுணர்த்தி நின்ற இகர ஐகார ஈற்று இடைச்சொன் முடிபு கூறுகின்றது.

இ-ள்: சொல்லியல் மருங்கின்-இகர ஐகாரங்கட்கு முன்னர்க் கூறிய மூவகை யிலக்கணங்களுள் இயல்பை நீக்கி, சுட்டு முதலாகிய இகர இறுதியும்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், எகர வினாவின் முதல் இகர இறுதியும் -எகரமாகிய வினாவினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும்-சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், யாவென் வினாவின் ஐயென் இறுதியும் -யாவென் வினாவினை முதற்கணுடைய அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகுநவும்-வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகுநவும்-உறழ்ச்சியாய் முடிவனவும், உளவென மொழிப.-உளவென்று கூறுவர் புலவர்; எ-று

எ-டு: அதோளிக்கொண்டான் இதோளிக்கொண்டான் உதோளிக் கொண்டான் எதோளிக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், ஆண்டைக் கொண்டான் ஈண்டைக்கொண்டான் ஊண்டைக் கொண்டான் யாண்டைக் கொண்டான் எனவும் இவை மிக்கன. அதோளி அவ்விடமென்னும் பொருட்டு. அவ்வழிகொண்டான் அவ்வழிக்கொண்டான் இவ்வழி கொண்டான் இவ்வழிக்கொண்டான் உவ்வழிகொண்டான் உவ்வழிக்கொண்டான் எவ்வழிகொண்டான் எவ்வழிக்கொண்டான் என உறழந்தன. சுட்டுச்சினை நீண்டதற்கும் யாவினாவிற்கும் வரும் ஐகார ஈற்றுக்கு உதாரணம் அக்காலத்து ஆயிடைகொண்டான் ஆயிடைக்கொண்டான் என்றாற் போல ஏனையவற்றிற்கும் வழங்கிற்றுப்போலும்,. இனி, ஆங்கவை கொண்டான் ஆங்கவைக் கொண்டான் என்பன காட்டுவாரும் உளர். அவை திரிபுடையனவாம். சொல்லியல் என்றதனானே பிற ஐகார ஈறு மிக்குமுடிவன கொள்க. அன்றைக் கூத்தர் பண்டைச் சான்றோ ரெனவும் ஒரு திங்களைக் குழவி ஒருநாளைக் குழவி எனவும் வரும். (17)
-----------

நெடில்முன் குறில்முன் ஒற்றுக்கள்
160. நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலுங்
குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்
அறியத் தோன்றிய நெறியிய லென்ப.

இது புள்ளிமயங்கிய நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறுகின்றது.

இ - ள் : நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் – நெட் டெழுத்தின்முன் நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடுதலும், குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டலும் - குற்றெழுத்தின்முன் நின்றா ஒற்றுத் தன் வடிவு இரட்டித்தலும், அறியத் தோன்றிய நெறியியல் என்ப - அறியும்படி வந்த அடிப் பாட்டியலென்று கூறுவர் ஆசிரியர் ; எ – று.

இங்ஙனம் நெடியதன் குன்னர் ஒற்றுக் கெடுவன ணகாரமும் னகாரமும்
மகாரமும் லகாரமும் ளகாரமும் என ஐவகையவாம்.

எ - டு : கோணிமிர்ந்தது தானல்லன் தாநல்லர் வேனன்று தோணன்று என நகரம் வருமொழியாதற்கண் நெடியதன் முன்னர் ஒற்றுக் கெட்டது. கோறீது வேறீது எனத் தகரம் வருமொழியாதற்கண் லகாரவொற்றுக் கெட்டது. ஏனைய வந்துழிக் காண்க. இவற்றை 'லனவென வரூஉம்' (எழு - 141) 'ணளவென் புள்ளிமுன்' (எழு - 150.) என்பனவற்றான் முடித்துக் கெடுமாறு காண்க. ஒற்றிரட்டுவன ஞகார நகார ழகாரம் ஒழிந்தன. கண்ணழகிது பொன்னகல் தம்மாடை சொல்லழகிது எள்ளழகிது நெய்யகல் தெவ்வலன் எனக் குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டின.

மேலைச் சூத்திரத்து நான்கனுருபு பிற்கூறியவதனான் ஒற்றிரட்டுதல் உயிர் முதன்மொழிக் கன்ணதென்று உணர்க. குறியது பிற் கூறிய முறையன்றிக் கூற்றினால் தம்மை எம்மை நின்னை என நெடியன குறுகிநின்ற வழியுங் குறியதன்முன்ன ரொற்றாய் இரட்டுதலும், விரனன்று குறணிமிர்ந்தது எனக் குறிலிணையின் முன்னர் வந்த ஒற்றுக் கெடுதலும், வராறீது நன்று எனக் குறினெடிற்கண் நின்ற ஒற்றுக் கெடுதலும், அது கொ றோழி எனவுங் குரிசிறீயன் எனவுந் தொடர்மொழி யீற்று நின்ற ஓற்றுக் கெடுதலும் இடைச் சொல்லோடு ஒட்டுப்பட்டு நிற்றலுங்,1 காற்றீது எனவும் விரற்றீது எனவும் ஒற்று நிற்றலுங் கொள்க. இனி அறிய என்றதனாற் தேன்றீது நாண்டீது என்றாற்போலவன கெடாமை நிற்றலுங், கெடுதலுந் தகரநகரங்கள் வந்துழி யென்பதூஉங் கொள்க. நெறியிய லென்றதனாற் சுட்டின்முன் உயிர்முதன் மொழி வந்துழி அவ்வடை அவ்வாடை என இடை வகரவொற்று இல்வழியும் இரட்டுதல் கொள்க. (18)
---------
    1 அது கொறோழி என்பது இடைச்சொல்லோடு ஒட்டுப்பட்டு நின்று தொடர்மொழியாகி ஈற்றுநின்ற ஒற்றுக் கெட்டது ; குரிசிறீயன் என்பது இடைச்சொல்லோடுஒட்டுப்படாது. இயல்பாயத் தொடர்மொழியாயிருந்து ஈற்றுநின்ற ஒற்றுக் கெட்டது.
------------

குறில்முன் ஒற்று இரட்டாத இடம்
161. ஆறன் உருபினும் நான்கன் உருபினுங்
கூறிய குற்றொற் றிரட்ட லில்லை
ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்
நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான.

இஃது உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுகின்றது.

இ-ள்: நெடுமுதல் குறுகும் மொழிமுன் ஆன-நெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் அறுவகைப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த, ஆறனுருபினும் நான்கனுருபினும் -ஆறாம் வேற்றுமைக்கண்ணும் நான்காம் வேற்றுமைக்கண்ணும், கூறிய குற்றொற்று இரட்டலில்லை-முன்னர் நிலைமொழிக்கு இரட்டு மென்ற குற்றொற்று இரட்டி வருதலில்லை, ஈறாகுபுள்ளி அகர மொடு நிலையும்-நிலைமொழி யீற்றுக்கண் நின்ற ஒற்றுக்கள் அகரம்பெற்று நிற்கும்; எ-று

உருபியலில் "நீயெனொருபெயர்" (எழு-179) எனவுந் "தாம்நாமென்னும்" (எழு-188) எனவுந் "தான்யானென்னும்" (எழு-192) எனவுங் கூறியவற்றாற் குறுகி ஒற்றிரட்டித் தம்மை நம்மை எம்மை தன்னை நின்னை என்னை என வருவன இதனானே தமது நமது எமது தனது நினது எனது எனவும், தமக்கு நமக்கு எமக்கு தனக்கு நினக்கு எனக்கு எனவும் ஒற்றிரட்டாது அகரம் பெற்று வந்தன. நான்காவதற்கு ஒற்று மிகுதல் "வல்லெழுத்து முதலிய" (எழு-114) என்பதனாற் கொள்க. ஆறனுருபாகிய அகரம் ஏறி முடியாமைக்குக் காரணம் "ஆறனுருபி னகரக்கிளவி" (எழு-115) என்புழிக் கூறினாம். ஒற்றிரட்டாமையும் அகரப்பேறும் இரண்டற்கும் ஒத்தவிதி யென்று உணர்க. கூறிய வென்றதனான் நெடுமுதல் குறுகாத1 தம் நம் நும் என வருஞ் சாரியைகட்கும் இவ்விருவிதியுங் கொள்க. எல்லார் தமக்கும் எல்லாநமக்கும் எல்லீர்நுமக்கும் எல்லார்தமதும் எல்லாநமதும் எல்லீர்நுமதும் என வரும் (19)
-----------
    1. தாம் நாம் நூம் (வழக்கற்றது) என்னும் பெயர்களே தம் நம் நும் எனக் குறுகிச்சாரியை யாவதால் "நெடுமுதல் குறுகாத தம் நம் நும்" என நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாது.
-----------

"நும்" என் மொழிக்கும் அவ்விதி
162. நும்மென் இறுதியும் அந்நிலை திரியாது

இது நெடுமுதல் குறுகாத நும்மென்கின்றதும்2 அவ்விதி பெறுமென்கின்றது.
-------
2. இது மேற் கூறப்பட்டது.

இ-ள்: நும்மென் இறுதியும் -நெடுமுதல் குறுகா நும்மென்னும் மகரவீறும், அந்நிலை திரியாது-முற்கூறிய குற்றொற்று இரட்டாமையும் ஈறாகுபிள்ளி அகரமொடு நிலையலும் எய்தும்; எ-று

எ-டு: நுமது நுமக்கு என வரும். (20)
-----------

புள்ளி யிறுதி உகரம் பெறாத இடம்
163. உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமும் உயிரும் வருவழி இயற்கை.

இது புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.

இ-ள்: உகரமொடு புணரும் புள்ளி யிறுதி-உகரப் பேற்றோடு புணரும் புள்ளியீறுகள், யகரமும் உயிரும் வருவழி இயற்கை-யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பெறாது இயல்பாய் முடியும்; எ-று

அவ் வீறுகளாவன புள்ளி மயங்கியலுள் உகரம் பெறுமென்று விதிக்கும் பல ஈறுகளு மென்று கொள்க. உரிஞ் யானா அனந்தா ஆதா இகலா ஈந்தா உழுந்தா ஊரா எயினா ஏறா ஐயா ஒழுக்கா ஓதா ஔவியா எனவும் உரிஞ்யாது அழகு எனவும் ஒட்டுக. ஏனைப் புள்ளிகளோடும் ஏற்பன அறிந்து ஒட்டுக.

"ஞகாரை யொற்றிய" (எழு-296) என்பதனானும் "ஞ ந ம வ வியையினும் (எழு-297) என்பதனானும் யகரமும் உயிரும் வந்தால் உகரம் பெறாது இயல்பாமென்பது பெறுதலின் ஈண்டு விலக்கல் வேண்டா வெனின், எடுத்தோத்தில் வழியதே உய்த்துணர்ச்சி யென்று கொள்க. (21)

இது முதலாக அல்வழி கூறுகின்றார்.
-----------

அளவு நிறை எண்ணுப்பெயர்கள் தம்மிற் புணருமாறு
164. உயிரும் புள்ளியும் இறுதி யாகி
அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉங் காலத் தோன்றின்
ஒத்த தென்ப ஏயென் சாரியை.

இஃது அளவும் நிறையும் எண்ணமாகிய பெயர்கள் தம்மிற் புணருமாறு கூறுகின்றது.

இ-ள்: உயிரும் புள்ளியும் இறுதியாகி-உயிரும் புள்ளியுந் தமக்கு ஈறாய், அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி உளவெனப்பட்ட எல்லாச் சொல்லும்-அளவையும் நிறையையும் எண்ணையுங் கருதி வருவன உளவென்று ஆசிரியர் கூறப்பட்ட எல்லாச்
சொற்களும், தத்தங் கிளவி தம்மகப்பட்ட-தத்தமக்கு இனமாகிய சொற்களாய்த் தம்மிற் குறைந்த சொற்கள், முத்தை வரூஉங் காலந் தோன்றின்-தம்முன்னே வருங் காலந் தோன்றுமாயின், ஏயென் சாரியை ஒத்தது என்ப-தாம் ஏயென் சாரியை பெற்று முடிதலைப் பொருந்திற்றென்பார் ஆசிரியர்; எ-று

முந்தை முத்தை யென விகாரம்.

நாழியே யாழாக்கு உழக்கே யாழாக்கு கலனே பதக்கு என அளவுப் பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்ப் தம்மிற் குறைந்தன வந்தன. தொடியே கஃசு கழஞ்சே குன்றி கொள்ளே யையவி என நிறைப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. ஒன்றேகால் காலே காணி காணியே முந்திரிகை என எண்ணுப்பெயர் ஏகாரம் பெற்றுத் தம் முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. அதிகாரம்பட்ட புள்ளியீறு முற்கூறாததனானே குறுணி நானாழி ஐந்நாழி யுழக்கு என ஏகாரமின்றி வருவனவுங் கொள்க. (22)
-----------

அவை "அரை" என்பதனோடு புணர்தல்
165. அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரைவ தன்றாற் சாரியை யியற்கை.

இஃது எய்தியது விலக்கிற்று.

இ-ள்: அரையென வரூஉம் பால்வரை கிளவிக்கு-அம்மூவகைச் சொன் முன்னர் வரும் அரை யென்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை உணரநின்ற சொல்லிற்கு, சாரியை யியற்கை புரைவதன்று-ஏயென்சாரியை பெறுந் தன்மை பொருந்துவதன்று ; எ-று

ஆல் அசை.

எ-டு: உழக்கரை செவிட்டரை மூவுழக்கரை எனவும் கஃசரை கழஞ்சரை தொடியரை கொள்ளரை எனவும், ஒன்றரை பத்தரை எனவும் இவை ஏயென்சாரியை பெறாவாய் வந்தன. புரைவதன் றென்றதனாற் கலவரை யென்பதனை ஒற்றுக் கெடுத்துச் செய்கை செய்து முடிக்க. இதனானே செவிட்டரை யென்புழி டகரவொற்று மிகுதலுங் கொள்க. "ஒட்டுதற் கொழுகிய வழக்கு" (எழு-132) அன்மையிற் சாரியை பெறாவாயின என்றாலோ வெனின் அவை பெற்றும் பெறாதும் வருவனவற்றிற்குக் கூறிய தாகலானும் இது "தம்மகப்பட்ட" (எழு-194) என வரைந்தோதினமையானும் விலக்கல் வேண்டிற்று1. (23)
--------
1 "ஒட்டுதற்கொழுகிய வழக்கு"...வேண்டிற்று-"ஒட்டுதற்கொழுகிய வழக்கு" என முன்னர்க் கூறியது சாரியை பெற்றும் பெறாதும் வரும் புணர்மொழிகட்கு. இங்குக் கூறியஅரை யென்னுஞ் சொல்லை "வருமொழியாகக் கொண்ட புணர்ச்சிகளெல்லாம் சாரியை பெறாமலே வரும். முந்தின நூற்பாவில் "தம்மகப்பட்ட.. ஏயென் சாரியை" என அரை யென்னும் சொல்லும் அடங்கக் கூறினமையின் அதை இங்கு விலக்க நேர்ந்தது.
--------------

அவை "குறை" என்பதனோடு புணர்தல்
166. குறையென் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை.

இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகக்கின்றது, ஏயென்சாரியை விலக்கி வேற்றுமை முடிபினோடு மாட்டெறிதலின்.

இ-ள்: குறையென் கிளவி முன்வருகாலை-குறை யென்னுஞ்சொல் அளவுப்பெயர் முதலியவற்றின்முன் வருங்காலத்திற்கு, வேற்றுமை யியற்கை-வேற்றுமைப்புணர்ச்சி முடிபிற்கு உரித்தாகக் கூறுந் தன்மை, நிறையத்தோன்றும் – நிரம்பத் தோன்றும்; எ-று.

எ-டு: உரிக்குறை கலக்குறை எனவும் தொடிக்குறை கொட்குறை எனவும் காணிக்குறை காற்குறை எனவும் வரும். உரிய நெல்லுங் குறைநெல்லு மென்க.

வேற்றுமையியற்கை யெனவே இவை வேற்றுமை யன்றாயின. எனவே உரிக்குறை யென்பதற்கு உரியும் உழக்கு மெனப் பொருளாயிற்று. ஏனையவும் அன்ன.

முன்வருகாலை யென்றதனானே கலப்பயறு கலப்பாகு என்றாற்போலப் பொருட்பெயரோடு புணரும் வழியும் இவ்வேற்றுமை முடிபு எய்துவிக்க. பாகென்றது பாக்கினை. நிறைய வென்றதனானே உரிக்கூறு தொடிக்கூறு காணிக்கூறு எனக் கூறென்றதற்கும் இம்முடிவு எய்துவிக்க. (24)
-----------

அவற்றுட் குற்றுகர மொழிகட்குச் சாரியை
167. குற்றிய லுகரக் கின்னே சாரியை.

இது வேற்றுமை முடிபு விலக்கி இன் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது

இ-ள்: குற்றியலுகரக்குச் சாரியை-குற்றியலுகர ஈற்று அளவுப்பெயர் முதலியவற்றுக்குக் குறையென்பதனோடு புணரும் வழி வருஞ் சாரியை, இன்னே- இன்சாரியயையேயாம்; எ-று.

குற்றியலுகரக்கு, இதற்கு அதது விதித்து முடிக்க. குற்றியலுகரத்தின்னே யென்பதும் பாடம்.

உழக்கின்குறை ஆழாக்கின்குறை எனவும் கழஞ்சின்குறை கஃசின் குறை எனவும், ஒன்றின்குறை பத்தின்குறை எனவும் வரும். இதற்கு உழக்குங்குறையு மென்பது பொருள். இது வேற்றுமைக்கண்ணாயின் உழக்கிற் குறையென நிற்கும். (25)
----------

"கலம்" அத்துச்சாரியை பெறுதல்
168. அத்திடை வரூஉங் கலமென் அளவே.

இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, வேற்றுமைவிதி விலக்கி அத்து வகுத்தலின்.

இ-ள்: கலமென் அளவே - கலமென்னும் அளவுப்பெயர் குறையோடு புணருமிடத்து, அத்து இடை வரூஉம் – அத்துச் சாரியை இடை வந்து புணரும்; எ-று.

கலத்துக்குறை. இதனை 'அத்தேவற்றே' (எழு-133) என்பதனான் முடிக்க. இதற்குக் கலமுங் குறையு மென்பது பொருள். சாரியை முற்கூறியவதனானே முன் இன்சாரியை பெற்றவழி வல்லெழுத்து வீழ்க்க.(26)
----------

பனையும் காவும் இன்சாரியை பெறுதல்
169. பனையென் அளவுங் காவென் நிறையும்
நினையுங் காலை இன்னொடு சிவணும்.

இதுவும் அது. வேற்றுமைவிதி விலக்கி இன் வகுத்தலின்.

இ-ள்: பனையென் அளவுங் காவென் நிறையும் - பனையென்னும் அளவுப்பெயருங் காவென்னும் நிறைப்பெயருங் குறையென்பதனோடு புணருமிடத்து, நினையுங்காலை இன்னொடு சிவணும்-ஆராயுங்காலத்து இன்சாரியை பெற்றுப் புணரும் எ-று.

பனையின் குறை காவின்குறை என வரும். இவையும் உம்மைத் தொகை. நினையுங்காலை யென்பதனான் வேற்றுமைக்கு உரிய விதி யெய்தி வல்லெழுத்துப் பெறுதலுஞ் சிறுபான்மை கொள்க. பனைக்குறை காக்குறை எனவரும்.

இத்துணையும் அல்வழி முடிபு. இவற்றை 'வேற்றுமை யல்வழி இஐ' (எழு-158) என்னுஞ் சூத்திரத்திற் கூறாது வேறோதினார், இவை அளவும் நிறையும் எண்ணுமாதலின். (27)
-------------

அளவு நிறைப் பெயர்களில் மொழி முதலாம் எழுத்துக்கள்
170. அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி
உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே
அவைதாங்
கசதப என்றா நமவ என்றா
அகர உகரமோ டவையென மொழிப.

இது முற்கூறிய மூன்றனுள் அளவிற்கும் நிறைக்கும் மொழிக்கு முதலாமெழுத்து இனைத் தென்கின்றது.

இ-ள்: அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி உளவெனப்பட்ட ஒன்பதிற்றெழுத்தே - அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் மொழிக்கு முதலாயுள்ளவென்று கூறப்பட்டன
ஒன்பதெழுத்துக்கள், அவைதாங் கசதப என்றா நமவ என்றா அகரவுகர மோடு அவையென மொழிப-அவ்வெழுத்துக்கள்தாங் கசதபக்களும் நமவக்களும் அகர உகரமுமாகிய அவை யென்று கூறுவர் புலவர்; எ-று.

எ-டு: கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு இவை அளவு. கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மா வரை அந்தை இவை நிறை. நிறைக்கு உகரமுதற்பெயர் வந்துழிக் காண்க. இனி உளவெனப்பட்ட என்றதனானே உளவெனப்படாதனவும் உள. அவை இம்மி ஓரடை இடா என வரையறை கூறாதனவுங் கொள்க. இன்னும் இதனானே தேய வழக்காய் ஒருஞார் ஒருதுவலி என்பனவுங் கொள்க. இங்ஙனம் வரையறை கூறினார், அகத்தோத்தினுள் முடிபு கூறியவழி அதிகாரத்தான் வன்கணத் தின்மேற் செல்லாது ஒழிந்தகணத்தினுஞ் செல்லு மென்றற்கு1. எண்ணுப் பெயர் வரையறை யின்மையிற் கூறாராயினார்2. (28)
---------
    1 "இங்ஙனம் வரையறை ...செல்லுமென்றற்கு" ...முந்தின நான்கு நூற்பாக்களி லும் குறை யென்னும் வலி முதல் வருமொழியே கூறப்பட்டமையின், அதிகாரத் தால் வன்கணத்தின்மேல் மட்டும் செல்லுதலை விலக்கி ஒழிந்த கணத்தின் மேலுஞ் செல்லும் என்று அறிவித்தற்கு இந்நூற்பாவில் வரையறை கூறினார்
    2 எண்ணுப்பெயர்களின் முதலெழுத்துக்கள் மிகப்பல வாதலின் கூறப்படவில்லை.
----------------

5.3 புறனடை

இவ்வியலுக்குப் புறனடை
171. ஈறியல் மருங்கின் இவையிவற் றியல்பெனக்
கூறிய கிளவிப் பல்லா றெல்லாம்
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி
ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே

இஃது இவ்வோத்திற்குப் புறனடை; எடுத்தோத்தனும் இலேசானும் முடியாதனவற்றிற்கு இதுவே ஓத்தாகலின்.

இ-ள்: ஈறு இயல் மருங்கின்-உயிரும் புள்ளியும் இறுதியாகிய சொற்கள் வருமொழியோடு கூடி நடக்குமிடத்து, இவற்று இயல்பு இவையெனக் கூறிய கிளவிப் பல்லாறெல்லாம்-இம்மொழிகளின் முடிபு இவையெனக் கூறி முடிக்கப்பட்ட சொற்களினது அவ்வாற்றான் முடியாதுநின்ற பலவகை முடிபுகளெல்லாம், மெய்த்தலைப்பட்ட வழக்கொடு சிவணி-உண்மையைத் தலைப்பட்ட வழக்கோடுகூடி, புணர்மொழிநிலை ஒத்தவை உரிய- புணரும் மொழிகளின் நிலைமைக்கட் பொருந்தினவை உரியவாம்; எ-று

எ-டு: நடஞெள்ளா என உயிரீறாகிய முன்னிலைக் கிளவி மென் கணத்தோடு இயல்பாய் முடிந்தது. மண்ணுகொற்றா மண்ணுக்கொற்றா மன்னு கொற்றா மன்னுக்கொற்றா உள்ளுகொற்றா உள்ளுக்கொற்றா கொல்லுகொற்றா கொல்லுக்கொற்றா என்பன புள்ளியிறுதி முன்னிலைக்கிளவி உகரம் பெற்றும் உறழ்ந்தும் முடிந்தன. உரிஞுஞெள்ளா இஃது "ஔவெனவரூஉம்" (எழு- 152) என்பதன் ஒழிபு. பதக்கநானாழி பதக்கமுந்நாழி என இவை ஏயென் சாரியை பெறாது அக்குப்பெற்று அதன் இறுதி மெய்ம்மிசையொடுங் கெட்டுப் புணர்ந்தன. வாட்டானை தோற்றண்டை என்பன தகரம் வந்துழித் திரிந்து நெடியதன் முன்னர் நிறுத்திக் ககரவொற்றின் மேலேறின அகரத்தையும் மகரவொற்றையுங் கெடுத்து அரை யென்பதன் அகரத்தை யேற்றி முடிக்க. இது நிறைப்பெயர். ஒருமா வரை யென்பதனை ஒரு மா அரை யென நிறுத்தி வருமொழி அகரங் கெடுத்து ஒருமாரை யென முடிக்க. கலவரை யென்பதனைக் கலரை என முடிக்க. அகர மகரங் கெடுத்து நாகணை யெனப் பிறவும் வருவன வெல்லாம் இச் சூத்திரத்தான் முடிக்க.
-------------

'யாவர்' 'யாது' என்னுஞ் சொற்களின் மரூஉ
172. பலரறி சொன்முன் யாவ ரென்னும்
பெயரிடை வகரங் கெடுதலும் ஏனை
ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை
ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்
மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே.

இது மரூஉச்சொன் முடிபு கூறுகின்றது.

இ-ள்: பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வகரங் கெடுதலும் - பலரை யறியும் அவரென்னுஞ் சொல்லின் முன்னர் வருகின்ற யாவரென்னும் பெயர் இடையில் வகரங் கெடுதலும், ஏனை ஒன்றறி சொன்முன் யாதென் வினா இடை ஒன்றிய வகரம் வருதலும் - ஒழிந்த ஒன்றனை அறியும் அது வென்னுஞ் சொல்லின் முன்னர் வருகின்ற யாதென்னும் வினாச்சொல் இடையிலே உயிரோடு பொருந்திய வகரம் வருதலும், இரண்டும் - ஆகிய அவை யிரண்டும், மருவின் பாத்தியின்மன் பயின்று திரியும் - மருமுடிபின் பகுதியிடத்து மிகவும் பயின்று திரியும்; எ-று.

எ-டு: அவர் யார் எனவும் அது யாவது எனவும் வரும். அவர் யாவரென்பது வகரங் கெட்டு அவர்யாரென நின்றவழி 'யாஅ ரென்னும் வினாவின் கிளவி' (சொ - 210) என்று வினையியலுட் கூறும் வினைக் குறிப்புச் சொல்லாம் பிறவெனின், ஆகாது; அவ்வகரங் கெட்டாலும் ஈண்டு யாவரென்னும் பெயர்த்தன்மையாயே நிற்றலின். அது பெற்றவா றென்னை யெனின், ஈண்டுப் பலரறி சொன்முன் வந்த யாவ ரென்பதன் வகரங் கெடுமெனவே, ஏனை அவன் அவள் என்னும் இருபான் முன்னும் யாவரென்பது வாராதென்றும் அது திரிந்து மருவாய் நிற்கு மென்றுங் கூறுதலானும் 'யாவரென்னும் பெயரிடை' என்பதனானும் பெற்றாம். இதனானே அவன் யாவர் அவள் யாவர் என்றாற் பால் வழுவாமென்பது பெற்றாம். இதனை 'யாவன் யாவள் யாவரென்னு - மாவயின் மூன்றோடு' (சொ - 162) எனப் பெயராக ஓதிய வாற்றான் உணர்க. அன்றியும் யாரென்னும் வினாவின் கிளவி முப்பாற்கும் உரித்தென்று யாரென்னும் வினாவினைக் குறிப்பினை அவன்யார் அவள்யார் அவர்யார் என முப்பாற்கும் ஒப்ப உரிமை கூறுதலானும் அது வேறென்பது பெற்றாம். அது வினையியலுள் ஓதினமையானும் 'வினாவிற் கேற்றல்' (சொ - 66) எனப் பயனிலையாக ஓதினமையானும் வேறாயிற்று.

இனி 'யார்யார்க் கண்டே யுவப்பர்' எனப் பலரறி சொன் முன்னரன்றி இயல்பாக வந்த யாரென்பது யாண்டு அடங்குமெனின் அதுவும் யாரை யாரைக்கண்டென உருபு விரிதலின் யாவரை என்னும் வகரங்கெட்ட பெயரே யாம். அங்ஙனம் நிலைமொழி வருமொழியாய் நிற்றல் பயின்றென்றதனாற் கொள்க. இதனானே "யாவது நன்றென வுணரார் மாட்டும்" என ஏனை ஒன்றறி சொல்லும் நிலைமொழியாய் நிற்றல் கொள்க. இன்னும் இதனானே யாரவர் யாவதது என இவ்விரு சொல்லும் நிலைமொழியாய் வருதல் கொள்க.

தொகைமரபு முற்றிற்று
-------------

6. உருபியல்
(உருபெழுத்துக்களின் புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது)
6.1. உயிரீறுகள்

அகர ஈறு முதலியவற்றில் வேற்றுமை யுருபிற்கு இன் சாரியை
173. அஆ உஊ ஏஔ என்னும்
அப்பா லாறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை

என்பது சூத்திரம்

உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின் இவ்வோத்து உருபிய லென்னும் பெயர்த்தாயிற்று. மேற் றொகுத்துப் புணர்த்ததனை ஈண்டு விரித்துப் புணர்க்கின்றாராகலின் இவ்வோத்துத் தொகை மரபோடு இயைபுடைத் தாயிற்று. இச் சூத்திரம் அகர முதலிய ஈற்றான் வரும் ஆறு ஈற்றுச்சொற்கள் நின்று இன் பெற்று உறுப்பினொடு புணருமாறு கூறுகின்றது. உருபின் பொருட் படவரும் புணர்ச்சி மேற் கூறுப.

இ-ள்: அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர் -அ ஆ உ ஊ ஏ ஔ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஆறினையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர் வருகின்ற வேற்றுமை யுருபிற்கு இன்னே சாரியை- வேற்றுமை யுருபுகட்கு இடையே வருஞ் சாரியை இன் சாரியையே; எ-று

எ-டு: விளவினை விளவினொடு விளவிற்க விளவினது விளவின்கண் எனவும், பலாவினை பலாவினொடு பலாவிற்கு பலாவினது பலாவின்கண் எனவும், கடுவினை கடுவினொடு கடுவிற்கு கடுவினது கடுவின்கண் எனவும், தழூஉ வினை தழூஉவினொடு தழூஉவிற்கு தழூஉவினது தழூஉவின்கண் எனவும் சேவினை சேவினொடு சேவிற்கு சேவினது சேவின்கண் எனவும், வௌவினை வௌவினொடு வௌவிற்கு வௌவினது வௌவின்கண் எனவும் வரும். இவ்வாறே செய்கை யறிந்து ஒட்டுக.

"இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்
கின்னென் சாரியை யின்மை வேண்டும் " (எழு-131)

எனவே ஏனைய இன் பெறு மென்றலின் "ஞநமயவ" (எழு-144) என்பதனான் இயல்பென்றது விலக்கிற்றாம். (1)
------------

அகர ஈற்றுப் பன்மைப் பெயர்கட்கு வற்றுச் சாரியை
174. பல்லவை நுதலிய அகர இறுபெயர்
வற்றொடு சிவணல் எச்ச மின்றே.

இஃது இன்சாரியை விலக்கு வற்று வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ-ள்: பல்லவை நுதலிய பெயரிறு அகரம் – பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி நின்ற அகரம், வற்றொடு சிவணல் எச்சமின்று - வற்றுச் சாரியையொடு பொருந்துதலை ஒழிதலில்லை; எ-று.

எ-டு: பல்லவற்றை பல்லவற்றொடு பலவற்றை பலவற்றொடு சில்லவற்றை சில்லவற்றொடு சிலவற்றை சிலவற்றொடு உள்ளவற்றை உள்ளவற்றொடு இல்லவற்றை இல்லவற்றொடு என ஒட்டுக.

எச்சமின்று என்றதனானே மேல் இன் பெற்றன பிறசாரியையும் பெறுதல் கொள்க. நிலாத்தை துலாத்தை மகத்தை என வரும். இன்னும் இதனானே பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாமுருபு வற்றுப் பெற்றே முடிதல் கொள்க.
-------------

'யா' என் வினாவுக்கும் வற்றுச் சாரியை
175. யாவென் வினாவும் ஆயியல் திரியாது

இஃது ஆகார ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.

இ-ள்: யாவென் வினாவும் - யாவென்று சொல்லப்படும் ஆகார ஈற்று வினாப்பெயரும், ஆயியல் திரியாது – முற்கூறியவற்றுப் பேற்றிற் றிரியாது; எ-று.

யாவற்றை யாவற்றொடு என வரும்.
------------

உகர வீற்றுச் சுட்டுக்கு அன் சாரியை
176. சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே.

இஃது உகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ-ள்: சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச்சொல் அன் சாரியையோடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரங் கெடும் - தான் பொருந்திய மெய்யை நிறுத்தி உகரங் கெடும்; எ-று.

அதனை அதனொடு இதனை இதனொடு உதனை உதனொடு என வரும். அதினை அதினொடு என்றாற் போல்வன மரு முடிப்புழி முடிந்தன.1 ஒட்டிய என்றதனாற் சுட்டுமுதல் உகரமன்றிப் பிற உகரமும் உயிர் வருவழிக் கெடுவன கொள்க. அவை கதவு களவு கனவு என நிறுத்தி அழகிது இல்லை என வருவித்து உகரங் கெடுத்து முடிக்க. இவற்றை வகர ஈறாக்கி உகரம் பெற்றன வென்று கோடு மெனின் வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் பயின்று வரும் வகர ஈறுகளை ஒழித்து ஆசிரியர் 'வகரக் கிளவி நான்மொழி யீற்றது' (எழு - 81) என்றாற்போல வரைந்தோதல் குன்றக்கூறலாம் ஆதலின், அவை உகர ஈறென்று உணர்க. அவை செலவு வரவு தரவு உணவு கனவு என வழக்கின் கண்ணும் 'புன்கண் ணுடைத்தாற் புணர்வு' (குறள் - 1152) 'பாடறியா தானை யிரவு' 'கண்ணாரக் காணக் கதவு' (முத்தொள் - 42) எனச் செய்யுட் கண்ணும் பயின்று வருமாறு உணர்க.
---------
    1. அதினை அதினொடு என்றாற் போல்வன 'வழங்கியன் மருங்கின மருவொடு திரிநவும்* என்னும் அதிகாரப் புறனடையான் முடிந்தன. அதனை அதனொடு என்பன அதினை அதினொடு என மருவின. அன் சாரியையின் மரூஉத் திரிபே இன் என்பது கருத்து.
-----------

ஐகார ஈற்றிற்கு வற்றுச் சாரியை
177. சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே.

இஃது ஐகார ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள்: சுட்டு முதலாகிய ஐயெனிறுதி – சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சொல், வற்றொடு சிவணி நிற்றலும் உரித்து - வற்றுச் சாரியையொடு பொருந்தி நிற்றலும் உரித்து ? எ-று. உம்மையான் வற்றொடு சில உருபின்கண் இன் சாரியை பெற்று நிற்றலும் உரித்து; எ-று.

அவையற்றை அவையற்றொடு இவையற்றை இவையற்றொடு உவையற்றை உவையற்றொடு என ஒட்டுக; இங்ஙனம் ஐகாரம் நிற்க வற்று வந்துழி 'வஃகான் மெய்கெட' (எழு - 122) என்பதனான் முடிக்க.

இனி, உம்மையான் அவையற்றிற்கு அவையற்றின்கண் என நான்காவதும் ஏழாவதும் வற்றும் இன்னும் பெற்று வந்தவாறு காண்க. இனி, ஒன்றென முடித்த லென்பதனாற் பல்லவை நுதலிய அகர ஈற்றிற்கும் இவ்விரண்டு உருபின்கண் வற்றும் இன்னுங் கொடுத்துப் பலவற்றிற்கு பலவற்றின்கண் என முடிக்க. இது மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும்.
-----------

யாவென் வினாவின் ஐக்கும் வற்றுச்சாரியை
178. யாவென் வினாவின் ஐயென் இறுதியும்
ஆயியல் திரியா தென்மனார் புலவர்
ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே.

இதுவும் அது.

இ-ள்: யாவென் வினாவின் ஐயென் இறுதியும் - யாவென்னும் வினாவினையுடைய ஐகார ஈற்றுச் சொல்லும், ஆயியல் திரியாது - முற்கூறிய சுட்டு முதல் ஐகாரம் போல வற்றுப் பெறும் அவ்வியல்பின் திரியாதென்று சொல்லுவர் ஆசிரியர். ஆவயின் வகரம் ஐயொடுங் கெடும் - அவ் ஈற்றிடத்து வகரம் ஐகாரத்தோடுகூடக் கெடும்; எ-று.

யாவற்றை யாவற்றொடு என ஒட்டுக. வகரம் வற்றுமிசை யொற்றென்று கெடுவதனைக் கேடு ஓதிய மிகையானே பிற ஐகாரமும் வற்றுப் பெறுதல் கொள்க. கரியவற்றை கரியவற்றொடு நெடியவற்றை நெடியவற்றொடு குறியவற்றை குறியவற்றொடு என எல்லாவற்றோடும் ஒட்டுக. இரு கருமை நெடுமை குறுமை என்னும் பண்புப்பெயரன்றிக் கரியவை நெடியவை குறியவை எனப் பண்புகொள் பெயராய் நிற்றலின் வகர ஐகாரங் கெடுத்து வற்றுச்சாரியை கொடுத்து முடிக்கப்பட்டன. இவை "ஐம்பாலறியும் பண்பு தொகுமொழி2" (எழு-482) அன்மை உணர்க. (6)
-----------
1 "ஐம்பாலறியும் பண்பு தொகுமொழி"-"கருமபார்ப்பான் கருமபார்ப்பனி கரும் பார்ப்பார் கருங்குதிரை கருங்குதிரைகள் என வரும் இவற்றுட் கரியனாகிய பார்ப் பான் கரியளாகிய பார்ப்பனி கரியராகிய பார்ப்பார் கரியதாகிய குதிரை கரியன வாகிய குதிரைகள் என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்புகொள் பெயர் தொக்கவாறு காண்க" (நச.-உரை)
------------

நீ என்னும் ஈகார ஈற்றுப் பெயர்க்கு னகர ஒற்று
179. நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயின் னகரம் ஒற்றா கும்மே.

இஃது ஈகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது.

இ-ள்: நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும்-நீயென்னும் ஒரு பெயர் தன்மேல் நின்ற நெடியதாகிய ஈகாரங் குறுகி இகரமாம், ஆவயின் னகரம் ஒற்றாகும்-அவ்விடத்து வரும் னகரம் ஒற்றாய் நிற்கும்; எ-று

எ-டு: நின்னை நின்னொடு நினக்கு எனச் செய்கை யறிந்து ஒட்டுக.
நினக்கு என்பதற்கு "ஆறனுருபினு நான்கனுருபினும்" (எழு-161) "வல்லெழுத்து முதலிய" (எழு-114) என்பன கொணர்ந்து முடிக்க. நினதென்பதற்கு "ஆறனுருபி னகரக் கிளவி" (எழு-115) என்பதனான் முடிக்க. நின்னென்பது வேறொரு பெயரோ எனக் கருதுதலை விலக்குதற்கு ஒரு பெயரென்றார். பெயர் குறுகு மென்னாது முதல்குறுகு மென்றது அப்பெயரின் எழுத்தின் கண்ணது குறுக்க மென்றற்கு. நெடுமுத லெனவே நகரங் குறுகுதலை விலக்கிற்று. உயிர்மெய் யொற்றுமைபற்றி நெடியது முதலாயிற்று. "உடைமையு மினமையு மொடுவயி னொக்கும்" (எழு-132) என்றதனை நோக்கி ஒலிவிடத்துச் சாரியை பெற்றே வந்த அதிகாரத்தை மாற்றுதற்குச் சாரியைப்
பேற்றிடை எழுத்துப்பேறு கூறினார். (7)
------------

ஓகார ஈற்றுக்கு ஒன் சாரியை.
180. ஓகார இறுதிக் கொன்னே சாரியை

இஃது ஓகார ஈறு இன்னவாறு புணரு மென்கின்றது.

இ-ள்: ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை-ஓகார ஈற்றிற்கு இடை வருஞ் சாரியை ஒன் சாரியை; எ-று

கோஒனை கோஒனொடு என ஒட்டுக. ஒன்னே யென்ற ஏகாரத்தாற் பெரும்பான்மையாக வருஞ் சாரியை ஒன்னே, சிறுபான்மை இன் சாரியை வருமென்று . "ஒன்றாக நின்ற கோவினை யடர்க்கவந்த"எனவும் கோவினை கோவினொடு சோவினை சோவினொடு ஓவினை ஓவினொடு எனவும் வரும். (8)

ஓவென்பது மதகுநீர் தாங்கும் பலகை.
------------

அகர ஆகார ஈற்றுப் பெயர்க்கு அத்துச் சாரியை
181. அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்
கத்தொடுஞ் சிவணும் ஏழ னுருபே

இஃது அகர ஆகார ஈற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது,

இ-ள்: அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு-அஆவென்று சொல்லப்படும் மரத்தை உணர்த்துகின்ற பெயராகிய சொல்லிற்கு ஏழனுருபு அத்தொடுஞ் சிவணும்-ஏழாமுருபு இன்னோடன்றி அத்தோடும் பொருந்தும்; எ-று

எ-டு: விளவத்துக்கண் பலாவதத்துக்கண் என வரும்.

"வல்லெழுத்து முதலிய" (எழு-114) என்பதனான் வல்லெழுத்துக் கொடுத்துத் "தெற்றென்றற்றே" (எழு-133) என்பதனான் "அத்தினகர மகரமுனை" (எழு-125) க் கெடாமைச் செய்கை செய்து முடிக்க. (9)
-----------

6.2. மெய்யீறுகள்

ஞ, ந, மெய் ஈற்றுக்கு இன் சாரியை.
182. ஞநஎன் புள்ளிக் கின்னே சாரியை.

இது புள்ளியீற்றுள் ஞகார ஈறும் நகார ஈறும் முடியுமாறு கூறுகின்றது.

இ-ள்: ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை-ஞநவென்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வருஞ் சாரியை இன்சாரியை; எ-று

எ-டு: உரிஞினை உரிஞினொடு பொருநினை பொருநினொடு என ஒட்டுக.
-----------

வகர ஈற்றுச் சுட்டுக்கு வற்றுச் சாரியை
183. சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யுங்
கெட்ட இறுதி யியல்திரி பின்றே

இது நான்கு மொழிக்கு ஈறாம் வகர ஈற்றுட் சுட்டுமுதல் வகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள்: சுட்டு முதல் வகரம்-அவ் இவ் உவ் என்னுஞ் சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுச்சொல், ஐயும் மெய் யுங் கெட்ட இறுதியியல் திரிபின்று-ஐகாரமும் ஐகாரத்தான் ஊரப்பட்ட மெய்யுங் கெட்டு வற்றுப் பெற்று முடிந்த யாவை (எழு-178) என்னும் ஐகார ஈற்றுச் சொல்லியல்பில் திரிபின்றி வற்றுப்பெற்று முடியும்;எ-று

எ-டு: அவற்றை அவ்றொடு, இவற்றை இவற்றொடு, உவற்றை உவற்றொடு என ஒட்டுக. (11)
-----------

ஏனை வகர ஈற்றுக்கு இன் சாரியை
184. ஏனை வகரம் இன்னொடு சிவணும்

இஃது எய்தாத தெய்துவித்தது; பெயர்க்கே யன்றி உரிச்சொல் வகரத்திற்கு முடிபு கூறுதலின்.

இ-ள்: ஏனைவகரம் இன்னொடு சிவணும்-ஒழிந்த உரிச் சொல் வகரம் இன்சாரியையோடு பொருந்தி முடியும்; எ-று

தெவ்வினை தெவ்வினொடு என ஒட்டுக. இஃது உரிச்சொல்லாயினும் படுத்தலோசையாற் பெயராயிற்று. (12)
--------------

மகர ஈற்றுக்கு அத்துச் சாரியை
185. மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை.
இஃது மகர ஈறு புணறுமாறு கூறுகின்றது.

இ-ள்: மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை-மகரமாகிய புள்ளியீற்றுச் சொன்முன் வருஞ் சாரியை அத்துச் சாரியை; எ-று.

எ-டு: மரத்தை மரத்தொடு நுகத்தை நுகத்தொடு என ஒட்டுக. "அத்தேவற்றே" (எழு-133) "அத்தினகரம்" (எழு-125) எனபனவற்றான் முடிக்க.
---------------

சில மகர ஈறு இன் சாரியை பெறுதல்
186. இன்னிடை வரூஉம் மொழியுமா ருளவே

இது மகர ஈற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ-ள்: இன்னிடை வரூஉம் மொழியுமாருள-மகர ஈற்றுச் சொற்களுள் அத்தே யன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள; எ-று

மார் அசை

எ-*டு: உருமினை உருமினொடு திருமினை திருமினொடு என ஒட்டுக.
------------

"நும்" என்னும் மகர ஈற்றுப் பெயர் சாரியை பெறாமை
187. நும்மென் இறுதி இயற்கை யாகும்

இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ-ள்: நும்மென் இறுதி இயற்கை யாகும்-நும்மென்னும் மகர ஈறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெற்து இயல்பாக முடியும்; எ-று

எ-டு: நும்மை நும்மொடு நுமக்கு நும்மின் நுமது நுங்கண் என வரும்.

நுமக்கு நுமது என்பனவற்றிற்கு "ஆறனுருபினு நான்கனுருபினும்" (எழு-161) "நும்மெனிறுதியு மந்நிலை" (எழு-162) "வல்லெழுத்து முதலிய" (எழு-114) "ஆறனுருபி னகரக்கிளவி" (எழு-115) என்பன கொணர்ந்து முடிக்க.

நுங்கணென்பதற்கு மேலைச்சூத்திரத்து "மெய்" என்றதனான்1 மகர வொற்றுக் கெடுத்து "வல்லெழுத்து முதலிய" என்பதனான் மெல்லொற்றுக் கொடுக்க. இயற்கை யென்றார் சாரியை பெறாமை கருதி (15)
--------------
    1 மேலைச் சூத்திரம் என்றது வரும் நூற்பாவை. இங்ஙனம் வரும் நூற்பாவினின்று
    முந்தின நூற்பாவிற்கு இலேசு கொள்வது அத்துணைச் சிறந்ததன்று.
------------

"தாம்" "நாம்" "யாம்" என்னும் மகர ஈறுகளும் அன்ன.
188. தாம்நாம் என்னும் மகர இறுதியும்
யாமென் இறுதியும் அதனோ ரன்ன
ஆஎவ வாகும் யாமென் இறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும்.,

இது மகர ஈற்றின் முற்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள்: தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதியும் அதனோரன்ன-தாம் நாம் என்று கூறப்படும் மகர ஈறும் யா மென்னும் மகர ஈறும் நும் மென்னும் மகர ஈறு போல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடைய யாமென் இறுதி ஆ எ ஆகும்-யா மென்னும் மகர ஈற்றுச் சொல்லில் ஆகாரம் எகாரமாம். ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்-அவ்விடத்து நின்ற யகரமாகிய மெய் கெடுதலை விரும்பும் ஆசிரியன், ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்-ஒழிந்த தாம் நாம் என்னும் இரண்டும் நெடியவாகிய முதல் குறுகித் தம் நம் என நிற்கும்; எ-று

எ-டு: தம்மை தம்மொடு நம்மை நம்மொடு எம்மை எம்மொடு என ஆறு உருபோடும் ஒட்டுக. ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்குங் கருவி யறிந்து முடிக்க.

மெய் யென்றதனாற் பிறவயின் மெய்யுங் கெடுக்க. தங்கண் நங்கண் எங்கண் என ஏழனுருபின்கண் மகரங்கெடுத்து "வல்லெழுத்து முதலிய " (எழு- 114) என்பதனான் மெல்லெழுத்துக் கொடுக்க. (16)
----------

"எல்லாம்" என்னும் மகர ஈற்றிற்கு வற்றும் உம்மும்
189. எல்லா மென்னும் இறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையும் இறுதி யான.

இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ-ள்: எல்லா மென்னும் இறுதி முன்னர் வற்றென் சாரியை
முற்றத் தோன்றும்-எல்லா மென்னும் மகர ஈற்றுச் சொன்
முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றென்னுஞ் சாரியை முடியத் தோன்றி முடியும், உம்மை நிலையும் இறுதியான-ஆண்டு உம்மென்னுஞ் சாரியை இறுதிக்கண் நிலைபெறும்; எ-று

மகரம் வற்றின்மிசை யொற்றெனக் கெடுக்க.

எல்லாவற்றையும் எல்லாவற்றினும் எல்லாவற்றுக்கண்ணும் என வரும்.
முற்றவென்றதனான் ஏனை முற்றுகரத்திற்கும்1 உம்மின் உகரங் கெடுத்துக் கொள்க. எல்லாவற்றொடும் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றதும் என வரும்.
முற்றுகரமாதலின் ஏறி முடியா. (17)
----------
    1 இங்கு முற்றுகரம் என்றது ஓடு, கு, அது என்னும் உருபுகளை.
-----------

உயர்திணையில் அது "நம்" சாரியை பெறுதல்
190. உயர்திணை யாயின் நம்மிடை வருமே

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ-ள்: உயர்திணையாயின்-எல்லா மென நின்ற மகர ஈற்று விரவுப் பெயர் உயர்திணைப் பெயரா மெனின், நம் இடை வரும்- நம் மென்னுஞ் சாரியை இடை நின்று புணரும்.; எ-று

மகர ஈற்றினை மேல் வற்றின்மிசை யொற்றெனக் கெடுத்த அதிகாரத்தாற் கெடுக்க. எல்லா நம்மையும் எல்லா நம்மினும் எல்லா நங்கணும் என உகரம் பெற்றும் எல்லா நம்மொடும் எல்லா நமக்கும் எல்லா நமதும் என உகரங் கெட்டும் மகரம் நிற்கும். இவற்றிற்கு எல்லாரையும் எல்லாரொடும் என்பது பொருளாக ஒட்டுக.2 இதற்கு நம்முவகுத்ததே வேறுபாடு. ஈறாகு புள்ளி அகரமொடு நிற்றல் (எழு-161) நான்காவதற்கும் ஆறாவதற்குங் கொள்க (18)
------
2 எல்லாம் என்பதில் "ஆம்" ஈறு தன்மைப் பன்மை யாதலாலும் , அடுத்த நூற்பாவில் எல்லாரும் எல்லீரும் என்னும் படர்க்கை முன்னிலைப் பெயர்கள் முறையே தம் நும் என்னும் சாரியை பெறுமென்று கூறியிருப்பதாலும் எல்லா நம்மையும் எல்லா நம்மொடும் என்பவற்றிற்கு நம்மெல்லாரையும் நம்மெல்லாரோடும் என்று தன்மைப்பொருள் கொள்ளாது எல்லாரையும் எல்லாரொடும் என்று படாக்கைப் பொருள் கொள்வது பொருந்தாது.
--------------

'எல்லரும்' 'எல்லீரும்' என்னும் மகர ஈறுகளின் முடிபு.
191. எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும்
எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும்
ஒற்றும் உகரமுங் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையும் இறுதி யான
தம்மிடை வரூஉம் படர்க்கை மேள
நும்மிடை வரூஉம் முன்னிலை மொழிக்கே.

இது மகர ஈற்று உயர்திணைப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது.

இ - ள்: எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் – எல்லாரு மென்னும் மகர ஈற்று உயர்திணைப் படர்க்கைப் பெயரும், எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும் - எல்லீரு மென்னும் மகர ஈற்று உயர்திணை முன்னிலைப் பெயரும், ஒற்றும் உகரமுங் கெடுமென மொழிப - மகர வொற்றும் அதன்முன் னின்ற உகரமுங் கெட்டுமுடியு மென்று சொல்லுவர் புலவர், ரகரப்புள்ளி நிற்றல் வேண்டும்- அவ் வுகரம் ஏறி நின்ற ரகர ஒற்றுக் கெடாது நிற்றலை விரும்பும் ஆசிரியன், இறுதியான உம்மை நிலையும் - அவ்விரு மொழி யிறுதிக்கண்ணும் உம்மென்னுஞ் சாரியை நிலைபெறும், படரக்கை மேன தம் இடை வரூஉம் - படர்க்கைச் சொல்லிடத்துத் தம்முச்சாரியை இடைவரும், முன்னிலை மொழிக்கு நும் இடை வரூஉம் - முன்னலைச் சொற்கு நும்முச்சாரியை இடை வரும்; எ - று.

எ - டு : எல்லார்தம்மையும் எல்லார்தம்மினும் எல்லார்தங்கணும் என உகரம் பெற்றும், எல்லார்தம்மொடும் எல்லார்தமக்கும் எல்லார்தமதும் என உகரங் கெட்டும், மகரம் நிற்கும். எல்லீர்நும்மையும் எல்லீர்நும்மினும் எல்லீர்நுங்கணும் என உகரம் பெற்றும், எல்லீர்நும்மொடும் எல்லீர்நுமக்கும் எல்லீர்நுமதும் என உகரங் கெட்டும், மகரம் நிற்கும்.

முன்னர் 'மெய்' (எழு - 188) என்ற இலேசாற் கொண்ட மகரக்கேடு இவற்றிற்கும் மேல்வருவனவற்றிற்குங் கொள்க.

படர்க்கைப் பெயர் முற்கூறிய வதனானே ரகர ஈற்றுப் படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் மகர ஈற்றுத் தன்மைப் பெயரும் தம் நும் நம் என்னுஞ் சாரியை இடையே பெற்று இறுதி உம்முச்சாரியையும் பெற்று முடிவன கொள்க. கரியார்தம்மையும் சான்றோர்தம்மையும் எனவும், கரியீர் நும்மையும் சான்றீர்நும்மையும் எனவும், கரியேநம்மையும் இருவேநம்மையும் எனவும் எல்லாவருபொடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உகரமும் ஒற்றும் என்னாததனான் இக்காட்டியவற்றிக்கெல்லாம் மூன்று உருபின்கண்ணும் உம்மின் உகரங் கெடுதல் கொள்க. 'நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி' என்றதனானே தம்முப்பெறாமை வருமையுங் கொள்க. 'எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை' (குறள் - 582) என வரும். (19)
--------------

'தான்' 'யான்' என்னும் னகர ஈற்றுப் பெயர்கள் சாரியை பெறாமை
192. தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்
மேல்முப் பெயரொடும் வேறுபா டிலவே.

இது னகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள்: தான் யான் என்னும் ஆயீ ரிறுதியும் - தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு னகர ஈறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இலவே - மேல் மகர ஈற்றுட் கூறிய மூன்று பெயரொடும் வேறுபாடின்றித் தானென்பது குறுகியும் யானென் பதன்கண் ஆகாரம் எகரமாய் யகர வொற்றுக் கெட்டும் முடியும்;
எ-று.

தன்னை என்னை என எல்லாவுருபோடும் ஒட்டுக. செய்கை யறிந்து ஒற் றிரட்டுதல் 'நெடியதன் முன்னர்' என்பதனுள் இலேசாற் கொள்க. (20)
------------

'அழன்' 'புழன்' என்னும் னகர ஈறுகள் அத்தும் இன்னும் பெறுதல்
193. அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்த தென்ப உணரு மோரே.

இதுவும் அது.

இ-ள்: அழனே புழனே ஆயிரு மொழிக்கும் - அழன் புழன் ஆகிய அவ்விரு மொழிக்கும், அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்த தென்ப - அத்துச் சாரியையும் இன் சாரியையும் மாறிவரத் தோன்றுதலைப் பொருந்திற் றென்பர்,உணருமோர் - அறிவோர்; எ-று.

அழத்தை அழனினை, புழத்தை புழனினை எனச் செய்கை யறிந்து எல்லா வுருபினோடும் ஒட்டுக. னகரத்தை அத்தின்மிசை ஒற்றென்று கெடுத்து 'அத்தினகரம்' (எழு - 125) என்பதனான் முடிக்க. தோன்ற லென்றதனான் எவன் என நிறுத்தி வற்றுக்கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்து எவற்றை எவற்றோடு என முடிக்க. எல்லாவுருபினோடும் ஒட்டுக எற்றை1 என் புழி நிலைமொழி வகரம் இதனாற் கெடுக்க, இனி ஒத்த தென்றதனால் எகின் என நிறுத்தி அத்தும் இன்னுங் கொடுத்துச் செய்கை செய்து எகினத்தை எகினினை என ஒட்டுக. அத்து இனிது இசைத்தலின் முற்கூறினார். (21)
-----------
    1. எற்றை என்பது நிலைமொழி வகரங் கெட்டதாயின் பன்மையாம் (எவற்றை); வகரம்
    முன்னமே அற்றதாயின் ஒருமையாம். (எதை).
---------------

6.3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

'ஏழு என்னும் எண்ணுப்பெயர்க்கு அன் சாரியை
194. அன்னென் சாரியை ஏழ னிறுதி
முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப.

இஃது ஏழென்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெற்றுப் புணர்க
என்கிறது.

இ - ள்: அன்னென்சாரியை ஏழனிறுதி முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப -- அன்னென்னுஞ் சாரியை ஏழென்னும் எண்ணுப்பெயரின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர்; எ - று.

எ - டு: ஏழனை ஏழற்கு ஏழனின் என்க. ஏனை உருபுகளோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. சாரியை முற்கூறியவதனாற் பிறவும் அன் பெறுவன கொள்க. பூழனை யாழனை என ஏனையவற்றோடும் ஒட்டுக. மேல்வருகின்ற இன் சாரியையைச் சேரவைத்தமையான் அவையெல்லாம் இன்சாரியை பெற்று வருதலுங் கொள்க. ஏழினை பூழினை யாழினை என வரும். (22)
-------------

குற்றுகர ஈற்றிற்கு இன் சாரியை
195.
குற்றிய லுகரத் திறுதி முன்னர்
முற்றத்தோன்றும் இன்னென் சாரியை.

இது குற்றுகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ - ள்: குற்றியலுகரத்து இறுதி முன்னர் – குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னர், முற்றத்தோன்றும் இன்னென் சாரியை -- முடியத் தோன்றும் இன்னென்னுஞ் சாரியை; எ - று.

எ - டு: நாகினை நாகினொடு, வரகினை வரகினொடு என வரும். ஏனையவற்றோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக.

முற்ற என்றதனானே பிற சாரியை பெறுவனவுங் கொள்க.
வழக்கத்தாற் பாட்டாராய்ந்தா னெனவுங் கரியதனை எனவும் வரும், (23)
-------------

சில குற்றுகர ஈறுகள் இரட்டி முடிதல்
196. நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்
அப்பால் மொழிக ளல்வழி யான.

இஃது அக்குற்றிய லுகரங்களுட் சிலவற்றிற்கு இனவொற்று மிகுமென்கிறது.

இ - ள்: நெட்டெழுத்திம்பர் ஒற்றுமிகத்தோன்றும் – நெட்டெழுத்தின் பின்னர் வருகின்ற குற்றுகரங்கட்கு இனவொற்று மிகத் தோன்றாநிற்கும், அப்பால் மொழிகள் அல்வழி ஆன -- ஒற்று மிகத் தோன்றாத கசதபக்கள் ஈறாகிய மொழிகள் அல்லாத இடத்து: எ - று.

எனவே, டகார றகாரங்கள் ஈறான சொல்லிடைத் தோன்றுமாயிற்று.

எ - டு: யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது யாட்டுக்கண் எனவும், யாற்றை சோற்றை எனவும் இனவொற்று மிக்கன. இவை அப்பால் மொழிகள் அல்லன.

நாகு காசு போது காபு என்றாற் போல்வன அப்பால் மொழிகள்; அவை இனவொற்று மிகாவாயின. (24)
------------

இரட்டி முடிவன சாரியை பெறாமை
197. அவைதாம்,
இயற்கைய வாகுஞ் செயற்கைய என்ப.

இஃது எய்தியது விலக்கிற்று.

இ-ள்: அவைதாம் இயற்கைய ஆகுஞ் செயற்கைய என்ப- அங்ஙனம் இனவொற்று மிகுவன தாம் இன்சாரியை பெறாது இயல்பாக முடியுஞ் செய்தியையுடைய வென்று கூறுவர் ஆசிரியர்; எ-று

எ-டு; முன்னர்க் காட்டியனவே கொள்க.

செயற்கைய என்ற மிகையானே உயிர்த்தொடர்மொழிகளில் ஏற்பன வற்றிற்கும் ஒற்று மிகத் தோன்றுதல் கொள்க. முயிற்றை முயிற்றொடு முயிற்றுக்கு முயிற்றின் முயிற்றது முயிற்றுக்கண் என வரும். இன்னும் இதனானே யாட்டினை முயிற்றினை என விலக்கிய இன் பெறுதலானுங் கொள்க.
-------------

குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர்க்கு அன் சாரியை
198. எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்

இது குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுகின்றது.

இ-ள்: எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்-எண்ணுப் பெயர்களினது குற்றுகர ஈறு அச்சாரியையோடு பொருந்தும்; எ-று

எ-டு: ஒன்றனை இரண்டனை என எல்லா எண்ணினையும் எல்லா உருபினோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. முன்னர்ச் செயற்கைய என்ற இலேசான ஒன்றினை இரண்டினை என இன் சாரியையுங் கொடுக்க. (26)
---------

ஒருபஃது முதலிய குற்றுகர ஈறுகள் ஆன் சாரியையும் பெறுதல்
199. ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே

இஃது ஒன்று முதலாக எட்டு இறுதியாக நின்ற குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் ஏழினோடும் பத்தென்னும் எண்ணுப்பெயர் வந்து புணர்ந்து ஒன்றாய் நின்ற சொற்கள் சாரியை பெற்றுத் திரியுமாறு கூறுகின்றது.

இ-ள்: ஒன்று முதலாகப் பத்து ஊர்ந்து வரூஉம் எல்லா எண்ணும்-ஒன்றுமுதலாக எட்டீறாக நின்ற எண்களின் மேலே பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வருகின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும் சொல்லுங்காலை-முடிபு கூறுங்காலத்து, ஆன் இடைவரினும் மான மில்லை-முற்கூறிய அன்சாரியையே யன்றி ஆன்சாரியை இடையே வருனுங் குற்றமில்லை. ஆவயின் அஃதென் கிளவி கெடும் -அவ் ஆன் பெற்றுழிப் பஃதென்னும்
எண்ணிடத்து அஃதென்னுஞ் சொற் கெட்டுப்போம். பஃகான்மெய் உய்தல் வேண்டும்-அவ் அகரத்தான் ஊரப்பட்ட பகரமாகிய ஒற்றுக் கெடாது நிற்றலை ஆசிரியன் விரும்பும்; எ-று

    "நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம்
    வந்திடை நிலையும்" (எழு-437)

என்பதனான் ஆய்தம் பெற்றது.

எ-டு: ஒருபஃது இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது எண்பஃது எனக் குற்றியலுகரப் புணரியலுள் விதிக்குமாறே நிறுத்தி அஃ தென்பதனைக் கெடுத்துப் பகரவொற்றை நிறுத்தி ஆன்சாரியை கொடுத்து ஒருபானை இருபானை என எல்லா எண்ணொடும் எல்லா உருபினையுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. உம்மை எதிர்மறையாதலின் ஒருபஃதனை இரு பஃதனை என எல்லாவற்றோடும் ஒட்டுக.

சொல்லுங்காலை என்றதனாற் பத்தூர் கிளவியே யன்றி "ஒன்பான் முத னிலை" (எழு-463) "ஒன்பாற் கொற்றிடை மிகுமே"1 (எழு-475)என்றாற்போல வருவனவற்றின் கண்ணும் பகரத்துள் அகரம் பிரித்து அஃதென்பது கெடுத்து ஆன் கொடுக்க. (27)
--------------
    1. ஒன்பான் என்று திரியும் ஒன்பஃது என்னும் சொல்லும் பத்தூர் கிளவியே. இதன்
    விளக்கத்தை 445-ம் நூற்பா அடிக் குறிப்பிற் காண்க.
---------

"யாது" "அஃது" என்னுங் குற்றுகர ஈறுகட்கு அன்சாரியை
200. யாதென் இறுதியுஞ் சுட்டுமுத லாகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்
ஆய்தங் கெடுதல் ஆவயி னான.

இஃது எண்ணுப் பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள்: யாது என் இறுதியும்-யாதென வருங் குற்றுகர ஈறும், சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன்னொடு சிவணும்-அன்சாரியையோடு பொருந்தும், ஆவயின் ஆன ஆய்தங் கெடுதல்-அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும்; எ-று

யாதனை யாதனொடு எனவும், அதனை அதனொடு, இதனை இதனொடு, உதனை உதனொடு எனவும் வரும் (28)
----------

குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர் ஏழனுருபிற் சாரியை பெறாமலும் வருதல்
201. ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்
சாரியைக் கிளவி இயற்கையு மாகும்
ஆவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே

இதுவுங் குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு ஏழனுருபோடு முடிபு கூறுகின்றது.

இ-ள்: திசைப்பெயர் முன்னர் ஏழனுருபிற்கு-திசைப் பெயர்களின் முன்னர் வந்த கண்ணெண்னும் உருபிற்கு முடிபு கூறுங்கால், சாரியைக் கிளவி இயற்கையு மாகும்-முன்கூறிய இன்சாரியையாகிய சொல் நின்று முடிதலேயன்றி நில்லாது இயல்பாயும் முடியும். ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடும்-அங்ஙனம் இயல்பாய வழித் திசைப்பெயரிருதிக் குற்றுகரந் தன்னான் ஊரப்பட்ட மெய்யொடுங் கெடும்; எ-று

எ-டு: வடக்கின்கண் கிழக்கின்கண் தெற்கின்கண் மேற்கின்கண் எனவும், வடக்கண் கிழக்கண் தெற்கண் மேற்கண் எனவும் வரும். இன்பெறு வழி உகரங் கெடாதென்று உணர்க.

ஆவயினென்றதனாற் கீழ்சார் கீழ்புடை, மேல்சார் மேல்புடை தென்சார் தென்புடை வடசார் வடபுடை எனச் சாரியை யின்றிப் பல விகாரப்பட்டு நிற்பனவுள் கொள்க. இன்னம் இதனானே கீழைக்குளம் மேலைக்குளம் கீழைச்சேரி மேலைச்சேரி என ஐகாரம் பெறுதலுங் கொள்க. (29)

6.4. புறனடை

இவ்வியலின் புறனடை
202. புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும்
சொல்லிய அல்ல ஏனைய வெல்லாம்
தேருங்காலை உருபொடு சிவணிச்
சாரியை நிலையுங் கடப்பா டிலவே

இஃது இவ்வோத்தினுள் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற் கெல்லாம் இதுவே ஓத்தாயதோர் புறனடை கூறுகின்றது.

இ-ள்: சொல்லிய அல்ல புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும்-முற்கூறிய புள்ளியீறும் உயிரீறும் அல்லாத புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும், ஏனையவு மெல்லாம்- முற்கூறிய ஈறுகள் தம்முளொழிந்து நின்றனவு மெல்லாம், தேருங்காலை உருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பாடு இல- ஆராயுங் காலத்து உருபுகளோடு பொருந்திச் சாரியை நின்று முடியும் முறைமையை உடைய வல்ல, நின்றும் நில்லாதும் முடியும்: எ-று

ஏனையவு மென உம்மை விரிக்க. கூறாத புள்ளியீறுகள் ஐந்து. அவை ணகர யகர ரகர லகர ளகரங்களாம். மண்ணினை மண்ணை வேயினை வேயை நாரினை நாரை கல்லினை கல்லை முள்ளினை முள்ளை என வரும். உயிரீற்றுள் ஒழிந்தது இகரம் ஒன்றுமே யாதலின், அதனைப் பிற்கூறினார். கிளியினை கிளியை என வரும்.

இனித் தான் யான் அழன் புழன் என்னும் னகர ஈற்றினும் ஏழென்னனும் ழகர ஈற்றினும் ஒழிந்தன பொன்னினை பொன்னை தாழினை தாழை என்றாற் போல வருவன பிறவுமாம். இனி ஈகார ஈற்றுள் ஒழிந்தன தீயினை தீயை ஈயினை ஈயை வீயினை வீயை என்றாற் போல்வன பிறவுமாம். ஐகார ஈற்றுள் ஒழிந்தன தினையினை தினையை, கழையினை கழையை என்றாற் போல்வன பிறவுமாம். ஏனை ஈறுகளினும் வருவன உணர்ந்துகொள்க.

மேலே பெயரீற்றுச் செய்கையெல்லாந் தத்தம் ஈற்றின்கண் முடிப்பாராதலின் அவை ஈண்டுக் கூறல் வேண்டா,.

இனித் தேருங்காலை என்றதனானே உருபுகள் நிலைமொழியாக நின்று தம்
பொருளோடு புணரும்வழி வேறுபடும் உருபீற்றுச் செய்கை யெல்லாம் ஈண்டு
முடித்துக்கொள்க.

எ-டு: நம்பியைக் கொணர்ந்தான் மண்ணினைக் கொணர்ந்தான் கொற்றனைக் கொணர்ந்தான் என மூவகைப் பொருளோடுங்1 கூடிநின்ற உருபிற்கு ஒற்றுக்கொடுக்க. மலையொடு பொருதது, மத்திகையாற் புடைத்தான், சாத்தற்குக் கொடுத்தான், ஊர்க்குச் சென்றான், காக்கையிற் கரிது, காக்கையது பலி, மடியுட் பழுக்காய், தடாவினுட் கொண்டான் என்னுந் தொடக்கத்தன உருபு காரணமாகப் பொருளோடு புணரும் வழி2 இயல்பாயும் ஈறுதிரிந்தும் ஒற்றுமிக்கும் வந்தன கொள்க.

இனிக் கண் கால் புறம் முதலியன பெயராயும் உருபாயும் நிற்குமாதலின் அவை உருபாகக் கொள்ளும்வழி வேறுபடுஞ் செய்கைகளெல்லாம் இவ்விலே சான் முடிக்க. இஃது உருபியலாதலின் உருபொடு சிவணி என வேண்டா, அம் மிகையானே உருபு புணர்ச்சிக்கட் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றுப்3 பொருண்முடிப உள்வழிப்4 பொருட் புணர்ச்சிக்குங்5 கொள்க. விளவின் கோடு கிளியின் கால் என எல்லா ஈற்றினுங் கொள்க. நம்பியை கொற்றனை என உயிரீறும் புள்ளியீருஞ் சாரியை பெறாது இயல்பாய் முடிவனவும் ஈண்டே கொள்க. (30)
----------
    1 மூவகைப் பொருளோடும்-உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் விரவுப் பெயர்
    என்ற மூவகைப் பெயரோடும்
    2. உருபு காரணமாகப் பொருளோடு புணரும்வழி-உருபோடு பொருள் தொடர் புள்ள சொற்களுடன் புணருமிடத்து.
    3 ஈற்று-பெயர்களின் ஈற்றில்
    4 பொருண்முடிபு உள்வழி-பொருளுள்ள சொற்களோடு சேர்ந்து முடிய மிடத்து.
    5. பொருட்புணர்ச்சி-உருபொடு புணராது சொல்லொடு புணரும் புணர்ச்சி.

உருபியல் முற்றிற்று.

continued in part 2


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்