அரும்பு அம்புகள் - பாகம் 1
வரலாற்று நாவல்கள்
Back
அரும்பு அம்புகள் (நாவல்) - பாகம் 1
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
-
Source:
அரும்பு அம்புகள் அமரர் கல்கி
இது வரை வெளிவராத நாவல்.
கல்கி சிறப்பிதழில் 18.4.76 சித்திரை ஆரம்பித்து தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
–----------
அரும்பு அம்புகள் - அமரர் கல்கி
அத்தியாயங்கள் | அத்தியாயங்கள் |
அத். 1 : கமலாவின் மனோரதம் | அத். 17 : "உனக்கும் காதலா? |
அத். 2 : வசீகரப் பார்வை | அத். 18 : அந்தப்புரத்தில் அரசிளங்குமரிகள் |
அத். 3 : மர்ம மங்கை | அத். 19 : இன்னொருவர் ரகசியம் |
அத். 4 : பவானி மந்திரம் | அத். 20 : இரக்கமற்ற இரவுகள் |
அத். 5 : பூட்டு திறந்தது! | அத். 21. பயங்கரக் கனவு |
அத். 6 : கோபம் தணிந்தது | அத். 22. கிணற்றில் கமலா! |
அத். 7 : பிரமிக்க வைத்த பவானி | அத். 23. கமலாவின் கள்ளம்! |
அத். 8 : காதலை வளர்த்த கார்! | அத். 24. "வேறு நல்ல வரன்!" |
அத். 9 : நெருப்பாக ஒரு நெடுமூச்சு | அத். 25. விசித்திர வரவேற்பு |
அத். 10 : தலைகீழ் உலகம்! | அத். 26. நீரில் மிதந்த விழிகள் |
அத். 11 : சிலிர்ப்பும் சினமும் | அத். 27. செல்வம் பேசுகிறது! |
அத். 12 : யாரை நம்புவது? | அத். 28. வளமான வாழ்வா? வறுமையா? |
அத். 13 : மலைப் பாதை | அத். 29. சிறைக் கைதியும் வீட்டுக் கைதியும் |
அத். 14 : ஹிமகிரி எஸ்டேட் | அத். 30. துயர அலைகள்! |
அத். 15 : பிரியா விடை! | அத். 31 : மனையாள் ஆட்சி |
அத். 16 : ஜின்னா தோற்றார்! | அத். 32 : கமலாவின் கடிதம் |
அரும்பு அம்புகள்.
புதையல் கிடைத்தது!
என் வீட்டில் சோதனை நடந்தது! ஏக அமர்க்களம்!
அமரர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைத் திரு சுந்தா எழுதத் தொடங்கிய போது என் தகப்பனார் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் கொண்டு வந்து தருமாறு கோரினார்.
அவ்வளவுதான். பலமாகச் சோதனை நடத்தினேன். சுவர்களில் ஏதாவது ரகசிய அறைகள் உள்ளனவா என்றுகூடத் தட்டிக் கொட்டிப் பார்த்தேன். தோட்டத்தைக் கொத்தியதில் எடை சற்று குறைந்தது!
அலமாரிகள், மேஜை இழுப்பறைகள் எல்லாவற்றையும் குடைந்து பார்த்ததில் புத்தகங்கள், குறிப்புக்கள், கடிதங்கள், புகைப்படங்கள், நாளிதழ் செய்தித் தொகுப்புக்கள் என்று பலப்பல கிடைத்தன. அவற்றுடன் ஒரு புதையலும் அகப்பட்டது! சோதனை மாபெரும் வெற்றி!
திரைப்படம் ஒன்றுக்காக அமரர் கல்கி அவர்கள் தமது இரு சிறுகதைகளை இணைத்து நாவல் உருக்கொடுத்து எழுதியிருந்த மூன்று நோட்டுப் புத்தகங்களே அந்தப் புதையல். முதலில் நாற்பது பக்கங்களில் எழுதிய கதையை இரண்டாவது முறையாக மேலும் விரிவுபடுத்தி 185 பக்கங்களில் வளர்த்திருந்தார்.
அதைக் கண்டதும் படித்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் கல்கி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாகக் கதையைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
இந்த நாவல் உங்களுக்கு அளிக்கப்போகிற ஆனந்தத்துக்குக் கல்கியை வாழ்த்துங்கள். குறைகள் ஏதும் தென்பட்டால் அது என்னைச் சேர்ந்தது; மன்னித்துவிடுங்கள்.
கி. ராஜேந்திரன் இணை ஆசிரியர், கல்கி.
-----------------
அத்தியாயம் 1 -- கமலாவின் மனோரதம்
"இப்படிப் பயந்து ஓடுவது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை" என்றாள் கமலா."என் மனசை இந்தப் பஸ் கூடப் புரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இப்படி நடு வழியில் நின்று தகறாறு பண்ணுகிறது."
"இந்தா! கமலா, வாயைக் காட்டாதே,அடங்கி இரு" என்று அதட்டினாள் தாயார் காமாட்சி.
"எதற்குக் குழந்தையை அதட்டுகிறாய்?எதோ மனத்தில் பட்டதைச் சொல்கிறாள். விளக்கினால் புரிந்து கொள்கிறாள்" என்றார் மசிலாமணி. "நன்றாக விளக்குங்கள். ஆனால் துடைப்பக் கட்டையைத்தான் எடுத்து வரவில்லை.மற்றச் சாமானன்களோடு அறையில் வைத்துப் பூட்டியாகி விட்டது. அது சரி, ஏங்க எல்லாச் சாமான்களும் பத்திரமாக இருக்கும் இல்லையா...?"
"சரிதான்" என்றாள் கமலா சிரித்துக் கொண்டே. "ஜப்பான்காரனுக்குப் பயந்து சென்னையைவிட்டு வெளியேறி வந்தோம். இப்போ திருடனுக்குப் பயந்து மறுபடியும் சென்னைக்கே போவோம். அங்கே எல்லாச் சாமான்களும் பத்திரமாக இருப்பதைத் தெரிந்து கொண்டு மறுபடியும் ஜப்பான்காரனுக்குப் பயந்து கொண்டு பஸ் ஏறுவோம். மறுபடியும் திருட்டுப் போகுமோ என்ற கவலையில்..."
"ஏண்டி என்னைக் கிண்டலா பண்ணறே?" என்று தாயார் காமாட்சி கோபத்துடன் எழுந்தாள்.
"உஷ்!உட்காரு" என்று அவள் கையைப் பற்றி அமர்த்திய மாசிலாமணி "கமலா நாம் ஜப்பான்காரனுக்குப் பயந்து வெளியேறுவதாக நீ ஏன் நினைக்கிறாய்?" என்றார்."யுத்த முயற்சிகளுக்கு நாம் உதவுகிறோம்.அவ்வளவுதான். ஜப்பான்காரன் வந்தால் பட்டினத்தைப் பாதுகாப்பது மிக முக்கியமான காரியமாகிவிடும். அப்போது போரில் உதவக்கூடியவர்கள் தவிர மற்றவர்கள் நகரத்தைவிட்டு வெளியேறியிருப்பதுதான் அரசாங்கத்துக்கு வசதி. ஜப்பானிய விமானங்கள் வரும்போது அவற்றைச் சுட்டு வீழ்த்துவதா? அல்லது ஊரில் இருக்கிற கிழம் கட்டைகளைக் குண்டு வீச்சிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருப்பதா? அடிபட்ட சோல்ஜர்களுக்குச் சிகித்சை செய்வதா? அல்லது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாண்டேஜ் போட்டு அவர்கள் அழுகையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருப்பதா? அதனால்தான் அரசாங்கமே நகரைக் காலி செய்யுமாறு எல்லாரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. யுத்த முயற்சிக்கு உதவ முடியாதவர்கள் முட்டுக்கட்டை போடாமல் இருப்பதே பெரிய உபகாரம்தான்!"
"அப்பா! நீங்கள் சொல்வது ரொம்ப நியாயம்! கிழங் கட்டைகள், குழந்தைகள் நகரைவிட்டு வெளியேற வேண்டியதுதான். ஆனால் என்னைப் போல் இளம் வயதுக்காரி உடம்பில் சக்தி உள்ளவள் யுத்த முயற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு உதவ வேண்டுமே தவிர ஒதுங்கிக் கொண்டா உதவுவது?"
" நீ என்னத்தையடி கிழிக்கப் போகிறாய்?" என்றாள் காமாட்சி.
"ஏன் கிழிக்க மாட்டேன்? வேறு எதுவும் இல்லையானால் பாண்டேஜ் துணியையாவது நுனியில் கிழிச்சுக் கட்டுப் போடுவேன். அடிபட்ட சோல்ஜர்களுக்கு நர்ஸாயிருந்து சேவை புரிவேன்.ஏர் ரெயிட் வார்டனாக இருந்து பணியாற்றுவேன். இன்னும் எத்தனையோ விதங்களில் உதவலாம். மனசு வைக்கணும்.தைரியமும் இருக்கணும்.அவ்வளவுதான்." "சிவ சிவா, வெள்ளைக்கார சோல்ஜர்களைத் தொட்டுக் கட்டுப் போடவா? புத்தி போகிறதே, உனக்கு?"
"வெள்ளைக்காரா மட்டும்தானா அம்மா? எத்தனையோ இந்திய சிப்பாய்கள் உயிரைத் திரணமாக மதித்து யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்களே, அவர்களுக்கு உதவிவிட்டுப் போகிறேன்."
"கமலா! நீ சொல்வது ஒருவிதத்தில் சரிதான். ஆனால் யோசித்துப் பார். நம்மை அடிமைப்படுத்தியிருக்கிற ஆட்சிக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்?" என்றார் தந்தை மாசிலாமணி.
"உஷ்! மெள்ளப் பேசுங்க.பஸ் பிரயாணிகளிலேயே யாராவது சி.ஐ. டி.இருந்து வைக்கப் போகிறான்" என்ற காமாட்சி அம்மாள், நாலா புறமும் மிரள மிரளப் பார்வையைச் செலுத்தினாள்.
"அப்படி நீங்கள் நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் அப்பா. இப்போது உத்தரவு கொடுங்கள். எப்படியாவது இந்த நாட்டை விட்டுத் தப்பித்துக் கொண்டு போய் சுபாஷ்சந்திரபோஸ் படையிலே சேர்ந்து விடுகிறேன். அவர் என்னைப் பட்டாளத்திலே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றாள் கெஞ்சிக் கூத்தாடி நர்ஸாக ஊழியம் செய்யவாவது அனுமதி வாங்கிக் கொள்கிறேன்."
காமாட்சி அம்மாள் இப்போது ஓரேயடியாகப் பயந்து போய்க் கமலாவின் வாயைத் தன் வலக் கரத்தினால் பொத்தினாள்."காலம் கெட்டுக் கிடக்குடி. கதர்ச்சட்டை போட்டுக்கொண்டுகூட, சி.ஐ.டி.கள் உலவி வருகிறார்களாம். ஊர் போய்ச் சேருகிற வரையில் ஒரு வார்த்தை பேசப்படாது நீ ! புரிந்ததா? உம்!" என்று ரகசியக் குரலில் மிரட்டினாள்.
" பேச வேண்டாம் என்றாள் பேசாமல் இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் நாம் பயந்து கொண்டுதான் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைமட்டும் என்னிடம் மறைக்கப் பார்க்க வேண்டாம். நான் ஒன்றும் விசுவைப் போல் குழந்தை இல்லை."
"காமாட்சி! கமலாவை என்னவோன்னு நினைத்தேன். எப்படிப் பேசுகிறாள் பார்த்தாயா? இனிமேல் இவளைக் குழந்தையாக நினைக்கக் கூடாது. எல்லா விஷயங்களையும் இவளுக்கும் தெரியப்படுத்தி மனம் விட்டுப் பேச வேண்டியது தான்."
"யார் நினைத்தார்கள், குழந்தை என்று? இரண்டு வருஷமாகச் சொல்லிக்கொண் டிருக்கிறேன். நல்ல வரனாகப் பாருங்கள் என்று. நீங்கதான் எப்ப கேட்டாலும் அவள் என்ன குழந்தைதானே இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் என்று தட்டிக் கழித்துக் கொண்ட்டிருந்தீங்க."
"கமலா! அம்மா சொல்வதைக் கேட்டாயா? அதையும் உத்தேசம் பண்ணித்தான் இப்போ கிராமத்துக்குக் கிளம்பியிருக்கோம். என் அண்ணா வேதாசலத்தை உனக்கு ஞாபகம் இருக்கோ. என்னமோ? ரொம்ப நாளாச்சு அவன் பட்டினத்துக்கு வந்து. அவன் வீட்டிலே போய் இந்த யுத்தம் முடிகிற வரை இருந்து கொண்டு அப்படியே உனக்கும் ஒரு நல்ல வரனைப் பார்த்து அங்கேயே கல்யாணத்தை முடித்துவிடப் போகிறேன்."
"அப்பா, ஏன் அதோடு நிறுத்தி விட்டீர்கள்? அப்புறம் எனக்கு வளைகாப்பு சீமந்தம் நடந்து, எனக்குப் பெண் குழந்தை பிறப்பதைக் கண் குளிரப் பார்த்து, அவளுக்கு ஆண்டு நிறைவு நடத்தி அட்சராப்பியாசம் செய்து, அப்புறம் பெண்கள் ஆறு கிளாஸுக்கு மேல் படிக்கக் கூடாதென்று சொல்லிப் படிப்பை நிறுத்தி, அவளை யார் தலையிலாவது கட்டி, அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து......"
"என்னம்மா அடுக்கிக் கொண்டே போகிறாய்?"
"பின்னே? பெண் ஜன்மத்துக்கு வேறு வேலை என்னப்பா? அடுப்பை ஊதுவதும் குழந்தை பெறுவதும் தானே?"
"கமலா! உன் மனம் இப்போது சரியில்லை. உன்னுடைய ஆசைப் பூனை மாலுவை விட்டுப் பிரிஞ்சு வந்த துக்கத்திலே என்னென்னவோ பேசுகிறாய்" என்றார் மாசிலாமணி.
"இந்தச் சமயத்தில் அதோ பாருங்க, அதோ!" என்றாள் காமாட்சி.
"என்ன? என்ன?" என்றனர் மற்ற இருவரும் ஏக காலத்தில். காமாட்சி அம்மாள் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்கள். ஏழெட்டுக் குரங்குகள் நெடுஞ்சாலையில் ஒரு பக்கத்து மரத்திலிருந்து இறங்கிச் சாலையைக் கடந்து எதிர்ப் பக்கம் சென்றன. அங்கே ஒரு மரத்தின் மேல் ஏறத் தொடங்கின. அந்த மரத்தில் இருந்த பறவை இனங்கள் தங்கள் அமைதிக்குப் பங்கம் வந்து விட்டதாக ஏக காலத்தில் கிறீச்சிட்டு அலறின. அந்தக் குரங்குகளுள் சில தாய்க் குரங்குகள், அவற்றின் வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைக் கவனித்த கமலா, "என்னைப் போன்ற பெண்களுக்கும் அந்தக் குரங்குகளுக்கும் என்ன வித்தியாசம்?" என்று முணுமுணுத்தாள்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல், "அந்த இரட்டை வால் எங்கே?" என்று சத்தம் போட்டார் மாசிலாமணி.
குரங்குகளைப் பார்த்ததும்தான் பிள்ளை ஞாபகம் வந்ததாக்கும்?" என்று முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டாள் காமாட்சி.
"பஸ்ஸைவிட்டு இரங்காதேடா என்று அடித்துக் கொண்டேன். கேட்டானா? இப்போ பஸ் திடீரென்று கிளம்பி ஓட ஆரம்பித்து விட்டால் என்ன பண்ணுவது?" என்று அங்கலாய்த்தாள்.
"நான் பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறிப் பெற்றோர் தடை ஏதும் விதிப்பதற்கு முன்னால் 'சரேல்' என்று எழுந்து இறங்கி விட்டாள் கமலா. அவளுக்கு உடலும் உள்ளமும் வேக வேக உள்ளே அமர்ந்திருப்பது வேதனையாக இருந்தது.
வெளியே சென்று பார்த்தவள் முகத்தில் புன்னகை அரும்பியது. சில நிமிஷங்களுக்குப் பிறகு மறுபடியும் பஸ்ஸுக்குள் ஏறி வந்து, "அப்பா தம்பி விசு குறைச்சலா மார்க் வாங்கும் போதெல்லாம் ஒன்றுக்கும் பிரயோசனமில்லை; உருப்படாத கழுதை என்று திட்டுவீர்களே, நீங்க நினைத்தது தப்பு. அவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான். கரி பஸ்தானே இது? பின்னாலே இருக்கிற இஞ்சினின் பிடியைப் பற்றிச் சுழற்றிக் கொண்டிருக்கிறான். 'ஙொய், ஙொய்' என்று சத்தம் கேட்கிறதே அது தான். கண்டக்டருக்குக் கை வலி எடுத்து விட்டதாம். இவன் தன் கை வரிசையைக் காட்டுகிறான்.
"இப்படி எதையாவது பண்ணிவிட்டு இராத்திரி முழுவதும் கைவலி, கால் வலி என்று அழுது என் பிராணனை வாங்கப் போகிறான்" என்று காமாட்சி அம்மாள் அலுத்துக் கொண்டாள். "அது கிடக்கட்டும், இப்போ நிலைமை என்ன? பஸ் புறப்படுமா, இல்லையா?"
அவர் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல் பஸ் கண்டக்டர் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு பஸ்ஸுக்குள் ஏறி வந்தார். "ஸார்! இஞ்சின் ரிப்பேர். அவங்கவங்க பஸ் டிக்கட்டை எடுத்துக் கொடுத்தீங்கன்னா பாக்கிப் பணம் வாபஸ் பண்ணுகிறேன். அல்லது அடுத்த பஸ் வரும் வரை காத்திருங்க. இடமிருந்தால் ஏறிக் கொள்ளலாம்" என்றார்.
"அட கடவுளே!" என்று மாசிலாமணி, "இந்த இழவுக்காகத்தானா அத்தனை பாடுபட்டு கறுப்பு மார்க்கெட்டில் இரண்டு மடங்கு தொகை கொடுத்து டிக்கெட் வாங்கினேன்!"
"அது என்ன கல்யாணம்? என்னிடம் சொல்லவே யில்லையே?" என்றாள் காமாட்சி அம்மாள்.
"சொன்னால் நீ எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சம்பாதித்துத் தந்து விடப் போகிறாயாக்கும்" என்று கடுகடுத்தார் மாசிலாமணி. ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை. 'உட்கார இடமிருந்தால் போதும்' என்றேன். 'ஒண்டிக் கொள்ளக் கூட இடம் கிடையாது' என்று சொல்லிட்டான். அப்புறம்தான் இந்த பஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கித் தொலைச்சேன், அதுவும் பிளாக்கிலே."
"எந்த வேளையில் வீட்டை விட்டுப் புறப்பட்டோமோ?" என்றாள் காமாட்சி. "பஞ் சாங்கத்தைப் பார்த்தீங்களா?"
"பார்க்காமல் என்ன? வீட்டை விட்டுக் கிளம்பியது நல்ல நேரம் தான். ஆனால் பஸ் புறப்பட்டது சரியான ராகு காலத்தில். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார் மாசிலாமணி.
---------------------------
அத்தியாயம் 2 -- வசீகரப் பார்வை
மாசிலாமணி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடக்குமென்றாலும் ஒருவரோடு ஒருவர் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப் பட்டிருந்தனர். கமலாவின் ஆசைகள் லட்சியங்கள் வேறாக இருந்தாலும் பெற்றோரை எதிர்த்துக் கொண்டு எதையும் செய்யக் கூடிய பெண் அல்ல அவள்.
சென்னையில் அவர்கள் குடித்தனத்தைக் காலி செய்துவிட்டு நாலு வீடுகளுக்கு அப்பால் ஓர் இல்லத்தில் ஓர் அறையை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் எல்லாச் சாமான்களையும் போட்டுப் பூட்டி விட்டு, அத்தியாவசியமானதும் விலையுயர்ந்ததுமான உடைமைகளுடன் மட்டும் புறப்பட்டிருந்தார்கள்.
அவர்களைப் போலவே ஏராளமான குடும்பங்கள் பட்டணத்தை விட்டுக் கிளம்பியிருந்தன. எனவேதான் பஸ், ரயில் முதலியவற்றில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது. ஜப்பானியர் குண்டு வீசப் போகிறார்கள் என்ற பீதியில் பஸ், ரயிலில் மட்டுமின்றிக் குதிரை வண்டியிலும் ரேக்ளாவிலும் ஏன் கால்நடையாகக் கூடச் சென்றவர் உண்டு.
'வருகிறேன்' என்று அண்ணா வேதாசலத்துக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டு விட்டுப் புறப்பட்டு விட்டார் மாசிலாமணி. ஆனாலும் உள்ளூர அவருக்குக் கவலைதான். கிராமத்தில் வரவேற்பு எப்படி இருக்குமோ? குடும்பத்தோடு போய் டேரா போட்டால் மன்னி என்ன சொல்லுவாளோ? நாலு நாளா, ஒரு வாரமா, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட ஆகலாம், யுத்தம் முடிவதற்கு. ஏதோ சேமித்து வைத்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அண்ணா முதலில், 'இதெல்லாம் எதுக்குடா' என்று மறுதளித்தாலும் பின்னர் மன்னியின் போதனைக்கு இணங்கப் பணத்தை வாங்கிக் கொள்வார். நிச்சயம். ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கு வரும்? கமலாவின் கல்யாணத்தைப் பற்றிச் சற்று முன் பேசினேனே, அதை எப்படி நடத்தப் போகிறேன்?
இப்படி எத்தனையோ பெரிய கவலைகள் அவரை ஆட்கொண்டிருந்த போதிலும் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இப்போது ஓர் உடனடிக் கவலை முதல் கவலையாக விசுவரூபம் எடுத்தது. இரவு எங்கே தங்குவது என்ற பிரச்னைதான் அது. பஸ் மேலே நகராது. அடுத்த பஸ் எப்போது வருமோ தெரியாது. வந்தாலும் அதில் இடமிருக்காது. நிற்பதோ நெடுஞ்சாலை. நேரமோ பிற்பகல்.
"அப்பா, 'குடும்பம் திண்டாடித் தெருவில் நிற்கிறது' என்பார்களே, அது என்ன என்பது புரிந்து விட்டது" என்றாள் கமலா சிரித்துக் கொண்டே.
அதைக் கேட்டு விட்டு, இவர்களைப் போலவே குழப்பத்தில் ஆழ்ந்திருந்த பயணியர் சிலரும் சிரித்தார்கள். ஆனால் காமாட்சி அம்மாளுக்குக் கோபம்தான் பொத்துக் கொண்டு வந்தது.
"பேச்சுதான் வாய் கிழியும். உருப்படியா ஒரு யோசனை தேறாது" என்றாள்.
"சாதாரணமாக என் யோசனையை யாரும் கேட்பதோ, மதிப்பதோ இல்லை. அதனால் நானும் சொல்வதில்லை. ஆனால் இப்போ நீயே கேட்பதால் சொல்கிறேன்" என்றாள் கமலா. "அப்பா! இப்படி வாங்களேன்" என்று பெற்றோரைச் சற்று ஒதுக்குப் புறமாக அழைத்துப் போனாள்.
அவள் பேசியதைக் கேட்டு விட்டு, "அடி என் தங்கமே! முதல் தடவையாக ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கே" என்றாள் காமாட்சி.
மாசிலாமணி விசுவை அழைத்துக் காதோடு ஏதோ கூறினார். விசு, விடுவிடென்று அவர்கள் வந்த வழியாகவே திரும்பி நடக்கலானான்.
சற்று நேரம் கழித்து அவன் ஒரு கட்டைமாட்டு வண்டியில் வந்தான். அதில் மாசிலாமணி குடும்பம் ஏறிக் கொண்டது. ரிப்பேரான பஸ்ஸினால் நிர்க்கதியாக விடப்பட்ட பயணிகள் சிலர் பொறாமைக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்க அந்தக் குடும்பம் மாட்டு வண்டியில் பயணத்தைத் தொடர்ந்தது.
"எப்படி என் யோசனை?" என்றாள் கமலா. அவள் வருகிற வழியில் ஒரு கட்டை வண்டியைப் பஸ் கடந்து செல்வதைக் கவனித்திருந்தாள். அதில் சுமை ஏதும் ஏற்றி இருக்க வில்லை. அது பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு கிராமம் அல்லது நகரத்துக்குத்தான் போய்க் கொண்டிருக்க வேண்டும். பஸ் ரிப்பேராகிக் காத்திருந்த நேர்ந்த சமயத்தில் அது அவர்களை நோக்கிக் கணிசமாக முன்னேறி இருக்கும். கிட்டத்தில் வந்து விட்டால் பஸ்ஸில் வந்த பயணிகளுக்கிடையில் அதில் ஏறுவதற்கு ஏகப் போட்டி இருக்கும். எனவே தம்பி விசுவைத் தாங்கள் வந்த பாதையிலேயே திரும்பிப் போகச் சொல்லிச் சாலையில் ஒரு வளைவுக்கு அப்பால் அந்த வண்டியைப் பிடித்து முன்பணமும் கொடுத்து அதில் ஏறிவரச் சொல்லலாம் என்பதுதான் கமலாவின் யோசனை. அந்த வண்டி போய்ச் சேர்கிற கிராமம் அல்லது நகரத்தில் இரவுப் பொழுதைக் கழித்து விட்டால் பிறகு மறுநாள் பயணத்தைத் தொடர வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
கமலா திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. கட்டை வண்டிப் பயணம் வசதிக் குறைவாக இருந்தாலும் விசுவுக்கும் கமலாவுக்கும் புதிய அனுபவமாக, உற்சாகமளிப்பதா யிருந்தது. மாலை நேரத்துச் சூரியன் செக்கச் சிவந்த பந்தாகச் சுற்றிலும் மஞ்சள் நிற ஒளி வட்டத்துடன் தகதகக்கும் அழகைக் கமலா ரசித்தாள். இருபுறமும் வயல்களில் நடவு முடிந்து சிறிது காலமே ஆகியிருந்ததால் இளம் பச்சை நிறப் பயிர் பூங்காற்றில் அலைஅலையாக அசைவது மனோரம்மியமான காட்சியாக விளங்கியது. ஆங்காங்கே மூன்று நான்கு வெண் நாரைகள் ஜிவ்வென்று சேர்ந்தாற் போல் பறந்து வந்து ஒய்யார அழகுடன் வயல்களில் இறங்கின
"டைவ் பாம்பர் மாதிரி இறங்குகிறது பார்த்தியாடா" என்றார் கமலா தம்பி விசுவிடம். அவன் அவளை லட்சியம் பண்ணாமல் வண்டிக்காரனிடம், "நான் கொஞ்ச தூரம் ஓட்டி வருகிறேனே" என்று கயிற்றைப் பிடித்துக் கொள்ள அனுமதி கோரி கெஞ்சிக் கொண்டிருந்தான்.
மகிழ்ச்சிக் கிளுகிளுப்பெல்லாம் ராம பட்டணம் எல்லையை நெருங்கியதும் முடிந்து போயிற்று. துரதிருஷ்டவசமாக வண்டி மாடுகளில் ஒன்று படுத்துக் கொண்டு விட்டது. வண்டிக்காரன் மாட்டை எழுப்பப் பார்த்தான். முடியவில்லை.
"சாமி! மாடு இனிமேல் நடக்காது! அதோ இருக்கிறது ஊர். கூப்பிடு தூரம் தான். வாடகையை முழுசாகக் கொடுத்து விட்டு, இறங்கிப் போங்க" என்றான்.
"இறங்கி நடப்பது பெரிய காரியம் இல்லையப்பா. இத்தனை சாமான்களையும் எப்படிச் சுமப்பது?" என்றார் மாசிலாமணி. "இங்கே ஜாகை வசதியெல்லாம் எப்படி? சத்திரம் சாவடி, ஓட்டல் கீட்டல் ஏதாவது உண்டா?"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஊருக்கு வரணும்னு சொன்னீங்க. ஏத்திக் கிட்டு வந்தேன். இப்ப இறங்குங்க. இந்தப் பக்கமா முதலாளி ஐயா வந்தால் கோவிப்பார்" என்றான் வண்டிக்காரன்.
காமாட்சி அம்மாள் எல்லோருக்கும் முன்னதாக இறங்கி சாலையோரம் நின்றாள். சாமான்களைத் தகப்பனார் வண்டியிலிருந்தபடி எடுத்துத் தர கமலாவும் விசுவுமாகப் பிடித்து மெல்லக் கீழே இறக்கி வைத்தார்கள்.
வண்டிக்காரன், "தே, ஏ, உம், தே! எளூந்திருங்கறேன்!" என்று மாட்டை அதட்டியும் தாஜா பண்ணியும் பார்த்துக் கொண்டிருந்தான்.
காமாட்சி அம்மாளைத் தவிர மற்றவர்கள் காரியமாக இருந்ததால் நவநாகரிகமாக உடையணிந்த ஒரு பெண்மணி அந்த வழியாகப் போவதை அவர்கள் பார்க்கவில்லை. காமாட்சி அம்மாள் மட்டும் அவளை நிறுத்தி, "ஏண்டி பெண்ணே! இந்த ஊரில் இராத் தங்க இடம் கிடைக்குமா?" என்று கேட்டாள்.
அவள் குரல் ஒலித்ததும் மற்ற மூவரும் திரும்பிப் பார்த்தனர்.
அந்தப் பெண் மிகவும் அழகான யௌவன மங்கை என்பதை முதல் பார்வையிலேயே கண்டாள் கமலா. அடக்கமான ஆனால் நாகரிகமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்து தொங்கிய 'ஹாண்ட் பாக்' மடித்து வைத்திருந்த சிறு குடை, நீரோட்டம் போன்று நெளிநெளியான பட்டைக் கோடுகளை உடைய மெல்லிய ஆறு கெஜ சேலை. சிறிதளவு குதிகாலை உயுர்த்திக் காட்டிய ஸாண்டல்ஸ். இடது கரத்தில் கைக்கடிகாரம். வலக் கரத்தில் ஒரே ஒரு தங்க வளையல். கழுத்தில் டாலருடன் ஒற்றை வடச் சங்கிலி. காதில் நவீன மோஸ்தர் தோடு, பின்னிப் பிச்சோடா போட்ட கேசம். காதருகே சுருண்டு தொங்கிய மயிரிழைகள், பவுடர் பூசிப் பளிச்சென்ற முகம், நெற்றித் திலகம், மைதீட்டிய விழிகள், எடுப்பும் எழிலும் மிக்க தோற்றம் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்ட கமலா, தன்னுடைய பயணக் களைப்பு மிக்க கசங்கிய கோலத்தையும் கர்நாடக பாணியையும் கூடவே எண்ணிப் பொருமினாள்.
'இவள் ஏதோ உத்தியோகத்தில் இருக்கிறாள்' என்பது உடனே புரிந்து போயிற்று கமலாவுக்கு. கரத்தில் அவள் மடித்துப் போட்டிருந்த கறுப்புக் கோட்டு அவளை ஒரு வக்கீல் என்று காட்டிக் கொடுத்து விட்டது.
'அடேயப்பா! இந்த முகம்தான் எத்தனை களையானது! இந்த விழிகள்தாம் எவ்வளவு வசீகரமானவை! இவள் வழக்காடவே வேண்டாம். கோர்ட்டுக்குள் வந்து நின்று கண்களைச் சுழற்றி நாலு புறமும் ஒரு பார்வை பார்த்தால் போதும். கேஸ் ஜெயம்தான்!" என்று எண்ணினாள் கமலா.
'ஆனால் அப்படிப்பட்ட வெற்றியை விரும்புகிறவளாகவும் இவள் தோன்றவில்லை. அறிவுக் களையும் இந்த முகத்தில் விகசிக்கிறது. இந்தக் கண்களின் பிரகாசமும் ஒளிரும் நெற்றியும் தேர்ந்த ஞானத்தின் விளைவுகள்.'
இவ்வாறு முடிவு கட்டிய கணத்தில் தான் எப்படியெல்லாம் சுதந்திரமாக இருக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும் என்று விரும்பினாளோ அப்படியெல்லாமும் அதற்கு மேலும் தன் எதிரே நிற்கும் இந்தப் பெண் விளங்குகிறாள் என்று கமலாவுக்கு நிதர்சன மாகப் புரிந்தது. அதனால் மகிழ்ச்சியும் பொறாமையும் ஒரே சமயத்தில் தன் நெஞ்சை நிரப்புவதை அவள் உணர்ந்தாள். அந்தப் பெண்ணுடன் இன்னும் நெருங்கிப் பழகி, நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. கூடவே, 'இவளுடன் என்ன பேச்சு' என்று மனம் வினவியது.
"அம்மா, என் பெயர், 'ஏண்டி பெண்ணே'யில்லை. பவானி. இந்த ஊரில் இராத் தங்க இடம் வேண்டுமென்றால் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் வீட்டுக்குப் போங்கள்" என்றாள் அந்தப் பெண்.
"ரொம்பப் பரோபகாரியோ?"
"அவர் பராபகாரியோ என்னமோ, அவர் மகன் கல்யாணசுந்தரம் ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்லவர். பிறருக்கு உதவவென்றே பிறந்தவர். நிச்சயம் உங்களுக்கு இடம் தேடிக் கொடுப்பார்" என்ற பவானி கமலாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.
அந்தப் புன்னகை நட்பின் அறிகுறியாகவும் தோன்றியது. ஏளனமாகவும் பட்டது கமலாவுக்கு. (தொடரும்)
------------
அத்தியாயம் 3 -- மர்ம மங்கை
ராமப்பட்டணம் அனுமார் வீதியில் ஒரு கட்டிடத்தின் வாசலில் 'சமூக சேவா சங்கம்' என்று தமிழிலும் அதற்கு மேலே 'Social Service Club' என்று ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை எழுதி மாட்டி யிருந்தது.
பவானி இந்த இடத்துக்கு வந்ததும் சுற்றுச் சுவர் கேட்டருகே தயங்கி நின்றாள். கட்டிடத்தின் முன்புறம் டென்னீஸ் கோர்ட் டில் ஆடி விட்டு வியர்வையை ஒரு டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டே அப்பால் புல்வெளியில் போட்டிருந்த சாய்வு நாற்காலிகளை நோக்கி நடந்தார் மாஜிஸ்திரேட் கோவர்த்தனன்.
அப்போது அவர் பார்வை வீதி ஓரமாய் நின்று பெயர்ப் பலகையை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்த பவானி பேரில் விழுந்தது. உடனே, "உள்ளே வரலாமே?" என்றார். "அங்கத்தினர்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டோ என்னமோ என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன்." பவானி பேசியபடியே முன்னேறி அவரை நோக்கி நடந்தாள்.
நாற்காலி ஒன்றை அவளுக்காக இழுத்துப் போட்டு விட்டு, "அதற்கென்ன நீங்களும் அங்கத்தினராகி விட்டால் போகிறது" என்றார் கோவர்த்தனன்.
பையனை ஜாடை காட்டி அழைத்து, இரண்டு ஸ்பென்ஸர் லெமனேட் கொண்டுவரச் சொன்னார். கூடவே, "ஐஸ் போடலாமல்லவா?" என்று பவானியைக் கேட்டார்.
"எனக்குப் போடலாம்; உங்களுக்கு வேண்டாம்" என்றாள் பவானி. "இன்னும் வியர்வை கூட அடங்க வில்லையே?"
அந்தக் கரிசனம் அவரை ஒரு வினாடி திகைக்க வைத்தது. "தாங்க்ஸ்" என்றார் புன்னகையுடன். அவர் அவளை அப்போது பார்த்த பார்வையில் நன்றி உணர்ச்சிக்கும் அதிகமாக ஏதோ ஒன்று இருந்தது. அவள் யோசனைப்படியே பையனுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
"பெண்களை இந்தக் கிளப்பில் சேர்த்துக் கொள்கிறீர்களா?" என்று பவானி உரையாடலில் விட்டுப் போன இடத்துக்குத் திரும்ப வந்து சேர்ந்தாள்.
"இதுவரை சேர்த்துக் கொண்டதில்லை. ஏனெனில் எந்தப் பெண்ணூம் சேர முன்வர வில்லை."
"க்ளப்பின் விதிமுறைகளில் அதற்கு இடையூறு ஏதுமில்லையே?"
"இடையூறாக இருந்தால் விதிமுறைகளை மாற்றி விடுகிறோம்."
"என்ன அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டீர்கள்? மற்றவர்கள் சம்மதிக்க வேண்டாமா?"
"பவானிக்காக யாரும் எதையும் செய்வார்கள்!"
"இப்படிப் பேசினால் எனக்குக் கவலை அதிகரிக்கிறது."
"என்ன கவலை?"
"இத்தனை மதிப்பு என் மீது இந்த ஊர்க்காரர்கள் வைப்பதென்றால் அதற்குத் தகுதியுள்ளவளாக நான் விளங்க வேண்டுமே என்றுதான்."
"உங்கள் தகுதிக்கு என்ன குறைச்சல்? பி.ஏ.பி.எல். படித்திருக்கிறீர்கள். கோர்ட்டில் எல்லோரும் பிரமிக்கும்படி வாதாடுகிறீர்கள். சகஜமாக எல்லாருடனும் பழகுகிறீர்கள். அதேசமயம் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்கிறீர்கள். இவ்வளவும் போதாதென்று பார்ப்பதற்கும் அழகா யிருக்கிறீர்கள்!"
பவானி தன் முகம் சிவக்காமல் இருக்க ரொம்பவும் பிரயாசைப்பட்டுத் தோற்றுப் போனாள். "இப்படிப் புகழ ஆரம்பித்தால் சகஜமாகப் பழக வேண்டாம் என்றே தோன்றிவிடும். இந்தக் கிளப்பில் சேர்வது பற்றியும் புனராலோசனை செய்ய வேண்டியதுதான்."
"புகழ்ச்சி பிடிக்காத ஒரு நபரை என் வாழ்க்கையில் இப்போதுதான் நான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். அது உங்கள் மதிப்பை மேலும் உயர்த்துகிறது" என்று கூறிய மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் 'லெமனே'டைத் தட்டிலிருந்து எடுத்து பவானியின் கரத்தில் கொடுத்தார். பிறகு, "நானும் இனி உங்களைப் புகழவில்லை; மற்ற அங்கத்தினர்களையும் எச்சரித்து வைக்கிறேன். கிளப்பில் சேராமல் இருந்து விடாதீர்கள். இந்தச் சூழ்நிலை கொஞ்சம் 'கலர்ஃபுல்' ஆக இருக்கட்டும்" என்றார்.
"இன்னும் ஒரு நிபந்தனை."
"என்ன அது?"
"நீங்கள், போங்கள், வாருங்கள் என்று மற்றவர்கள் என்னிடம் பேசட்டும். ஆனால் உங்களைப் பொறுத்தவரை அந்த மரியாதையெல்லாம் என்னிடம் கூடாது." மாஜிஸ்திரேட் சிரித்தபடியே, "இது என் வயதுக்கு நீங்கள் தரும் சலுகையா? அல்லது பதவிக்கா?" என்று கேட்டார். "இரண்டுக்கும் மேலே நம் நட்புக்கு ஓர் அடையாளமாக!" கோவர்த்தனன் தாம் உறிஞ்சிக் கொண்டிருந்த லெமனேடை மேஜையின்மேல் வைத்து விட்டு, அவளை நேருக்கு நேர் பார்த்து, "உன்னை ஒரு மர்மமான பெண் என்று பலர் என் காதுபடக் கூறுவதில் உண்மை இருக்கிறது" என்றார். "உன் பேச்சிலும் மர்மம் இழையோடுகிறது." "அட ஆண்டவனே! நான் மர்மங்களை விடுவிக்கவே கல்வி கற்றேன். தொழிலும் பயிலுகிறேன். மர்மங்களை சிருஷ்டிக்க அல்ல. உங்களுக்குத் தெரியாததா?" "அது சரி, ஆனால் நீ திடுதிப்பென்று ராமபட்டணத்தில் எப்படி முளைத்தாய்? எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய்? முதலிய பல விவரங்கள் மர்மமாகத்தானே உள்ளன?"
"யாருக்கும் ஒரு மர்மமும் இதில் தேவையில்லை. ஒரு பொதுக்கூட்டம் போட்டு வேண்டுமானால் பேசி விடுகிறேன்."
"பொதுக்கூட்டம் எதற்கு? ராமப் பட்டணம் அப்படியொன்றும் பெரிய ஊர் இல்லை. இங்கே வருகிறானே கல்யாணசுந்தரம் என்று ஒரு பையன் அவனிடம் சொன்னால் போதும். ஊர் முழுவதும் தமுக்கு அடித்து விட்டு வந்து விடுவான்."
பவானி மெளனமானாள். கல்யாணத்தை அவர் சற்று அலட்சிய பாவத்துடன் ஏளனமாகப் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை.
"மர்மமான மெளனம்" என்றார் கோவர்த்தனன்.
"மெளனத்தில் மர்மம் இருக்கலாம். ஆனால் என்னைப்பற்றி ஒரு மர்மமும் இல்லை. நான் கல்கத்தாவிலிருந்து வந்தேன். இங்கே என் தாய்மாமனுடன் தங்கியிருக்கிறேன். அவர் ரிடையரானவர். மாமி காலமாகி இரண்டு வருஷங்களாகின்றன. சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டு காலம் தள்ளுகிறார். என் தகப்பனார் பாதுகாப்புத் துறையில் உயர் அதிகாரி. என்னையும் என் தாயாரையும் யுத்தத்தை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து இங்கே அனுப்பிவிடத் தீர்மானித்தார். ஆனால் என் தாயார் அவரை விட்டு வரப் பிடிவாதமாக மறுத்து விட்டாள். என்னை மட்டும் இருவரும் சேர்ந்து வற்புறுத்தி ரயிலேற்றி விட்டார்கள்."
இந்தச் சமயத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. பக்க வாத்தியங்களின் ஓசையும் எழுந்தது. பவானி புருவங்களை உயர்த்தி, "ஏக அமர்க்களமாய் இருக்கிறதே?" என்றாள். "ஆமாம், இந்தக் கல்யாணம் வந்து சேர்ந்ததிலிருந்து ஒரே பாட்டும் கூத்தும் தான். ஏதோ நாடகம் நடத்தப் போகிறார்களாம்; பண வசூல் செய்து ஏழைகளுக்கு உதவப் போகிறார்களாம். பேசாமல் பிரிட்ஜோ டென்னிஸோ ஆடி விட்டுப் போகாமல் இதெல்லாம் என்ன வேண்டிக் கிடக்கிறது?" "சமூக சேவா சங்கம் என்ற பெயருக்கு ஏற்பக் கல்யாணம் ஏதாவது செய்ய நினைத்திருப்பார். நியாயம் தானே?" என்ற பவானி, "உண்மையில் நான்கூட அவரைத் தேடிக் கொண்டுதான் இங்கு வந்தேன். உங்களைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததில் வந்த காரியமே மறந்து விட்டது. இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்று கூறி வீட்டுக் கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.
கோவர்த்தனன் அவள் போவதை முகம் சிணுங்கப் பார்த்தாலும் அந்த நடையழகை ரசித்துக் கொண்டுமிருந்தார்.
------------------
அத்தியாயம் 4 - பவானி மந்திரம்!
மாடு படுத்துக் கொண்ட இடம் சாலையில் ஒரு மதகடியில். பின்னால் ஒரு பாரின் கார் வந்து நின்றது. அதை நம் கதாநாயகன்
கல்யாண சுந்தரம் பி.ஏ.பி.எல். ஓட்டிக் கொண்டு வந்தான். மாட்டு வண்டிக்குப் பின்னால் வந்து கார் நின்றது. மேலே முன்னேற முடியாததால் கோபத்துடன் 'ஹாரனை' அழுத்தினான் கல்யாண சுந்தரம். வண்டி நகருகிற வழியாக இல்லை.
"கொஞ்சம் கூட 'ரோட் சென்ஸே' கிடாயாது. எல்லாம் 'நான் சென்ஸ்' தான்" என்று உரக்கக் கூறியபடியே இறங்கி வண்டியை நோக்கி நடந்து வந்தான்.
"தமிழிலே திட்டுங்க சாமி" என்றான் வண்டிக்காரன்.
அவன் நிலைமையை உணர்ந்து பரிதாபப்பட்ட கல்யாணம், "ஏம்பா, மாடு படுத்துக்க இங்கேதான் இடம் பார்த்துதா?" என்றான்.
"அது மதகைக் கண்டுதா? பிளஷரைக் கண்டுதா? கொஞ்சம் மாட்டைத் தூக்கி விடுங்க சாமி" என்றான் வண்டிக்காரன்.
"தூக்கி விட்டுடுவேன். ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஸில்க் சட்டை அழுக்காகி விடுமோன்னுதான் பாக்கிறேன். இன்றைக்குத்தான் சலவை பண்ணி வந்தது."
"அது சரி" என்று அலுத்துக் கொண்டே வண்டிக்காரன் மாட்டை அவிழ்க்க ஆரம்பித்தான்.
இதற்குள் மாசிலாமணி கல்யாணத்தை நெருங்கி, "ஏன் ஸார்? ஹோம்ரூல் கல்யாணசுந்தரத்தின் மகன் கோபாலகிருஷ்ணன் வீடு இந்த ஊரில் எங்கே இருக்கிறது தெரியுமோ?" என்று கேட்டார்.
"தெரியாதே" என்றான் கல்யாணம்.
"அப்பா! மாற்றிச் சொல்லி விட்டீர்கள், 'கல்யாண சுந்தரத்தின் அப்பா கோபால கிருஷ்ணன் வீடு' என்று விசாரியுங்கள்" என்றாள் கமலா.
கல்யாணம் கமலாவைப் பார்த்தான். அவள் தன் தாயாருக்குப் பின்னால் மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய அழகிய, பெரிய, கரிய நயனங்கள் அவனுடைய சுந்தரமான முகத்தை வட்டமிடத் தவறவில்லை.
கல்யாணசுந்தரம் அந்தப் பார்வையில் சில விநாடிகள் கட்டுண்டவனாக நின்றான். பிறகு, "எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றான்.
"மதராஸிலிருந்து வருகிறோம். இந்த ஊரில் முன் பின் யாரையும் தெரியாது. அவரும் அவர் மகனும் ரொம்பப் பரோபகாரிகள் என்று கேள்விப்பட்டோம். அவர் வீட்டிலே இன்று இரவு தங்கிவிட்டு..."
"அவர் வீட்டிலே ஏற்கனவே நாலு குடும்பங்கள் வந்து தங்கியுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரி ஆறு பேர். வக்கீல் கோபாலகிருஷ்ணன் தம்முடைய கேஸ் கட்டுக்களை வைக்கக் கூட இடமில்லாமல் திண்டாடுகிறார்."
இதற்குள் காமாட்சி அம்மாள் ஓர் அடி முன்னால் வந்து, "ஏண்டாப்பா நீ யாரு?" என்றாள்.
"நான் தான் ஹோம்ருல் கோபாலகிருஷ்ணன் மகன் கல்யாண சுந்தரம்."
"நினைச்சேன். முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது."
"என்ன தெரிந்தது?"
"நல்ல பிள்ளை, உபகாரி என்று தெரிந்தது. என்னமோ அப்பா நீதான் கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கணும். வயசுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டோம். இன்று இராத்திரி தங்க இடம் பார்த்துக் கொடுத்தாலும் போதும்."
காமாட்சி அம்மாளுக்குப் பின்னால் மறைவாக நிற்பது போல் பாவனை செய்தபடி அதன் மூலமே தன்பால் கவனத்தை ஈர்த்த கமலாவை இரண்டாவது தடவையாகப் பார்த்தான், கல்யாணம். கொஞ்சம் யோசித்தான்.
"இந்த ஊரிலே இப்போது வேறு எது கிடைத்தாலும் கிடைக்கும். தங்க இடம்தான் கிடைக்காது. மதராஸ்காரர்களில் பாதிப் பேர் இந்தச் சின்னப் பட்டணத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்."
"அப்படிச் சொல்லக் கூடாது அப்பா! நீதான் ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும்."
"ஆகட்டும் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த சிநேகிதர் ஒருவர் வீடு காலியாக இருக்கிறது. வடக்கு வீதியிலே தேரடி சமீபமாக வந்து சேருங்கள். அங்கே சந்திக்கிறேன்" என்று கூறிய கல்யாணம் காரை நோக்கி நடந்தான்.
"பவானி அக்கா சொன்னது சரியாகத்தான் இருக்கு. ரொம்பப் பரோபகாரிதான்" என்றாள் கமலா.
"என்னது! பவானி சொன்னாளா?" சட்டென்று திரும்பிக் கமலாவைப் பார்த்துக் கேட்டான் கல்யாணம்.
கமலா திடுதிப்பென்று அவன் நேருக்கு நேர் தன்னிடம் பேசவே பதறியவளாகத் தாயாரின் பின்னால் மறைந்து கொண்டாள்.
"ஆமாம், அந்தப் பெண் பவானிதான் சொன்னாள். அதனால்தான் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது" என்றார் மாசிலாமணி.
"ஏன் ஸார்! அதை முன்னாலேயே சொல்லக் கூடாது! வாங்க, வாங்க! வந்து காரிலே ஏறுங்க" என்று உபசாரம் செய்தான் கல்யாணம்.
"நடந்தே போயிடலாமே, அம்மா. எதுக்காக அவருக்குச் சிரமம்?" என்றாள் கமலா. பவானியின் பெயரைக் கேட்டதுமே கல்யாணத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை அவளால் ரசிக்க முடியவில்லை.
"பேசாமே அந்த கறுவடக டின்னைத் தூக்கிக் கொண்டு வா, கமலா! இருட்டிக் கொண்டு வருகிறது பார்" என்று உத்தர விட்டாள் காமாட்சி.
ஆளுக்கொரு பொருளாகச் சுமந்து கொண்டு போய்க் கார் டிக்கியிலும் கூரைக் காரியர் மேலும் ஏற்றினார்கள். காருக்குள் அமர்ந்து கொண்டார்கள்.
வண்டிக்காரன் இதற்குள் மாட்டை அவிழ்த்து வண்டியை நகர்த்திச் சாலையோரம் விட்டிருந்தான்.
கல்யாணசுந்தரம் டிரைவர் ஆசனத்தில் அமரக் கதவைத் திறக்கப் போனபோது, அவன், "சாமி சாமி! வாடகை!" என்று கத்தினான்.
கல்யாணசுந்தரம் ஐந்து ரூபாய் நோட்டை அலட்சியமாய் எடுத்துக் கொடுத்துப் "போ" என்றான்.
காருக்குள்ளிருந்தபடி இதைப் பார்த்த காமாட்சி அம்மாள், "இது என்ன இந்தப் பிள்ளை இப்படி ஊதாரிச் செலவு பண்ணுகிறானே" என்று கமலாவிடம் கிசுகிசுத்தாள்.
"மாமா பெரிய பணக்காரர் போலிருக்கு" என்றான் விசுவம்.
'பணக்காரனா இருந்தால் போதுமா? இப்படி வாரி வழங்க மனசு வந்து விடுமா என்ன? எல்லாம் பவானி என்கிற அந்தப் பெயர் செய்கிற மாயா ஜாலவேலை என்று கமலாவின் அந்தராத்மா கூறியது.
(தொடரும்)
------------------
அத்தியாயம் 5 - பூட்டு திறந்தது!
பூட்டிக் கிடந்த ஒரு பழைய வீட்டின் வாசலுக்கு வந்து சேர்ந்ததும் கல்யாணசுந்தரம் காரை சாலை ஓரமாய் நிறுத்தினான். "இதுதான் வீடு. ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி யிருக்கிறது. மதராஸ்காரர்கள் வந்து தங்குவது என்றால் சாமானியமா?" என்றான்.
"ராமப்பட்டணமே அதிர்ஷ்டம் பண்ணியிருப்பதாகச் சொல்லுங்கள். சென்னையிலே யிருந்து இந்த ஊருக்கு ஏகப்பட்ட பேர் வந்து டேரா போட்டிருப்பதாகக் கூறினீர்களே!" என்ற மாசிலாமணி, கார்க் கதவைத் திறக்கத் தெரியாமல் தவித்தார். அதே போல் பின் ஸீட்டில் காமாட்சி அம்மாளும் யாரேனும் கதவைத் திறந்துவிடக் காத்திருந்தாள். விசு, "கார்க் கதவைத் திறக்கக் கூடவா தெரியாது?" என்று பெரிய மனுஷ தோரணையில் கேட்டு விட்டுச் சட்டென்று இறங்கி, படீரென்று தன் பக்கத்துக் கதவைச் சாத்தினான்.
கல்யாணத்தின் காதில் அந்த ஓசை நாராசமாக விழுந்தது. முகத்தைச் சுளுக்கிக் காதுகளைப் பொத்திக் கொண்டு, "அப்பனே, உனக்குக் கார் கதவைத் திறக்கத் தெரிகிறது; ஆனால் சாத்தத் தெரியவில்லை. கொஞ்சம் மெதுவா மூடு. என்னதான் வெள்ளைக்காரர் தயாரித்த காரானாலும் இந்தப் போடு போட்டால் தாங்காது" என்று கூறியபடியே இறங்கினான். இதற்குள் விசு மற்றவர்கள் இறங்கக் கதவுகளைத் திறந்தான். கல்யாணம் டிக்கியைத் திறந்து விட்டு விட்டுக் காரின் கூரைமேல், காரியரில் இருந்த சாமான்களை இறக்க ஆரம்பித்தான்.
மாஜி சென்னைவாசிகள் ரொம்பக் கரிசனத்தோடு, "நீங்கள் சிரமப்பட வேண்டாம். நாங்க இறக்கிக் கொண்டு போய் வைக்கிறோம்" என்று உபசாரமாகச் சொன்னார்களே ஒழிய கல்யாணசுந்தரம் காரியம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. பெட்டியை ஒரு கையிலும் ஒரு பெரிய கூடையை மற்றொரு கையிலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்த கல்யாணம், பளு தாங்காததால் கூடையை திண்ணையின் மேல் 'ணங்' கென்று வைத்தான்.
"ஐயோ போச்சு! போச்சு! ஊறுகாய் ஜாடி யெல்லாம் உடைஞ்சிருக்கும். இதற்குத்தான் அவரைத் தூக்கச் சொல்லாதே. நீ எடுத்துக்கோ என்று சொன்னேன், கேட்டியா?" என்றாள் காமாட்சி அம்மாள் கமலாவைப் பார்த்து.
"பாதகம் இல்லை அம்மா! இவர் கார்க் கதவை விசு உடைத்ததற்கும் இவர் நம் ஊறுகாய் ஜாடிகளை உடைத்ததற்கும் சரியாய்ப் போய் விட்டது" என்றாள் கமலா.
அவள் ஒரு பெட்டியையும் படுக்கையையும் தூக்கிக் கொண்டு வாசல் பக்கம் வந்து கொண்டிருந்தாள்.
"இப்படிக் கொடு" என்று கை நீட்டினான் கல்யாணம். "படுக்கையை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். பெட்டி என்ன தான் சீமையிலே தயாரானதானாலும் உங்களுடைய தகலடித் தாக்குதலைத் தாங்காது" என்றாள் கமலா.
அவன் சிரித்துக் கொண்டே படுக்கையை வாங்கிக் கொண்டு போய்ப் படியேறித் திண்ணையில் தொப்பென்று போட்டுவிட்டு வேகமாய்த் திரும்பிய சமயம் கமலா கடைசிப்படி ஏறிக் கொண்டிருந்தாள். அவன் மீது இடித்து விடாதிருக்க அவள் இப்பால் நகர அவனும் அதே நேரத்தில் அதே திசையில் நகர, இவள் உடனே எதிர்ப் பக்கம் பாய அவனும் அதையே செய்ய... இப்படி மூன்று நாலு தடவைகள் தடுமாறும்படியாகிவிட்டது.
"இது என்ன, இவா இரண்டு பேரும் வீட்டு வாசல்லே பால்ரூம் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டா?" என்றான் விசு, தான் பார்த்த ஓர் ஆங்கிலப் படத்தை நினைவுக்குக் கொணர்ந்தவனாக.
"அசடு! தத்துப் பித்தென்று பேத்தாதே" என்று காமாட்சி அம்மாள் அதட்டினாள்.
கமலா வெட்கமடைந்தவளாகப் படிகளை விட்டு இறங்கி ஓரமாய் ஒதுங்கி நின்றாள்.
"சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்திருங்கள். வீட்டுச் சொந்தக்காரரிடம் சாவி வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கல்யாணம் மறுபடி காரில் ஏறி அதைக் கிளப்பிக் கொண்டு போனான்.
"ரொம்பப் பழங்காலத்து வீடு" என்றாள் காமாட்சி அம்மாள்.
"வீடு என்று கிடைத்தால் போதாதா? இதுவே சைதாப்பேட்டையில் இருந்தால் ஐம்பது ரூபாய் வாடகை கேட்பார்கள்." என்றார் மாசிலாமணி முதலியார்.
"இப்போது யார் வாடகை கொடுக்கிறார்கள். எல்லாரும்தான் ஜப்பான்காரனுக்குப் பயந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறார்களே" என்றாள் கமலா.
"நாம் மட்டும் பயப்படாமல் என்ன செய்தோமாம்?" என்றான் விசு.
"நாம் எங்கேடா பயந்தோம்? பீதியல்லவா அடைந்தோம். ஒரே கிலி!" என்றாள் கமலா.
விசுவினால் சும்மா உட்கார்ந்திருக்க முடிய வில்லை. கதவருகே போய்ப் பூட்டைப் பிடித்து இழுத்தான். பூட்டு திறந்து கொண்டது.
"பார்த்தீர்களா! ஒரு 'மாஜிக்' செய்தேன். பூட்டுத் திறந்து கொண்டது. வாருங்கள்! வாருங்கள்!" என்றான் விசு.
எல்லோரும் உள்ளே போனார்கள். காமாட்சி அம்மாள் விடுவிடு என்று வீட்டைச் சோதித்து விட்டு வந்து, "சமையலறை கொஞ்சம் கூட வசதியாய் இல்லை. அம்மி, கல்லுரல் ஒன்றும் கிடையாது. அடுப்பு இடிந்து கிடக்கிறது. நான்தான் சொன்னேனே ரொம்பப் பழங்காலத்து வீடு" என்றாள்.
கமலா கணப்பொழுதும் வீணாக்காமல் பின்கட்டில் அகப்பட்ட ஒரு துடைப்பத்தைக் கொணர்ந்து முற்றத்தை ஒட்டினாற்போலிருந்த இடத்தைத் துப்புரவாகப் பெருக்கினாள். மேஜை நாற்காலிகளைத் துடைத்தாள். சாமான்களை அவளும் விசுவுமாக உள்ளே எடுத்து வந்து வைத்தார்கள்.
இன்னும் சில நிமிஷங்களில் நன்றாக இருட்டிவிடும் என்று உணர்ந்தவளாக அவசரம் அவசரமாகக் கொல்லைப்புறம் சென்று கிணற்றிலிருந்து ஒரு குடம் நீர் இழுத்து முகம் கழுவினாள். மறுபடியும் உள்ளே வந்து முகத்தைத் துடைத்துப்பவுடர் போட்டுக் கொண்டாள். முற்றத்தில் மட்டுமே இருந்த வெளிச்சத்தில் நெற்றிக்கு இட்டுக் கொண்டாள்.
ஸ்விட்ச் இருக்கிற இடமே தெரியவில்லையே?" என்று காமாட்சி அம்மாள் சுவர்களில் தேடினாள்.
"விளக்கு இருந்தால்தானே ஸ்விட்ச் இருக்கும்? வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது" என்றார் மாசிலாமணி.
"அட கடவுளே! போயும் போயும் இப்படிப்பட்ட வீடுதானா கிடைத்தது உங்களுக்கு?"
"வாயை மூடிக் கொண்டு இரு. இன்று ராத்திரி தங்குதற்கு இடம் கிடைத்ததே அதைப் பார்க்கலை? புகார்களை அடுக்க ஆரம்பித்து விட்டாள்!" என்றார் மாசிலாமணி.
"நீங்கள் எதற்கு என்மேல் எரிஞ்சு விழறேள்? அந்தப் பிள்ளையாண்டான் நல்ல மாதிரியா இருக்கான். அவனிடத்திலே சொன்னால் எல்லாம் சரிப்படுத்தித் தருவான். ஒரு நாள் இரண்டு நாள் இருந்தாலும் எதற்காக அசௌகரியப்பட்டுக் கொண்டு இருக்கணும்?"
"ஆமாம்! இரண்டு நாட்களுக்காக விளக்கு மட்டுமா போட்டுத் தருவா? வெள்ளை அடிச்சு, ரிப்பேர் பார்த்தும் தருவா. கேட்டுப் பாரு" என்றார் மாசிலாமணி.
"ஏன் இரண்டு நாட்களோடு போவானேன்? ஊருக்கு ஒரு கடிதாசு எழுதிப் போட்டால்போச்சு. உங்க அண்ணா, 'தம்பி வரக் காணுமே' ன்னு உருகவா போகிறார்?"
மாசிலாமணியும் ஏறத்தாழ அவளைப் போலவேதான் அப்போது சிந்தித்துக்கொண் டிருந்தார். 'கிராமத்துக்குப் போய் அண்ணாவுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்பதற்காகவே கடவுள் இங்கே நம்மைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாரோ?" என்று நினைக்கத் தொடங்கி யிருந்தார். என்றாலும், "அதையெல்லாம் போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே அவர்களைப் பயமுறுத்தி விடாதே" என்று மனைவியை எச்சரித்து வைத்தார். "இரவு தங்குவதற்கு மட்டும்தான் இடம் கேட்டு இங்கே வந்திருக்கிறோம். அதை மறந்து விடாதே" என்றார்.
----------------------------
அத்தியாயம் 6 -- கோபம் தணிந்தது
விசுவும் கமலாவிடம் தலைவாரிக் கொள்ளச் சீப்புக் கேட்டான். அவள், "இப்போ கொடுக்க முடியாது" என்றாள். "அப்புறம் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்!" "சீ பேசாமலிருடா." "அம்மா! கமலா அதற்குள் அலங்காரம் பண்ணிக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். எதற்காகத் தெரியுமா?"
"சீ, சும்மா இருடா!" என்றாள் கமலா கையை ஓங்கிச் சீப்பை அவன் மேல் கோபத்தில் விட்டெறிந்தாள்.
விசுவம் அதை லாகவமாகப் பிடித்துக் கொண்டு, "கொடுத்துட்டியே, எனக்குக் கிடைச்சுடுத்தே" என்றான். அவள் அவனைத் தாவிப் பிடிக்க வந்தபோது நழுவி வாசல் புறம் ஓடினான்.
அங்கே கல்யாணசுந்தரமும் வீட்டுச் சொந்தக்காரர் ரங்கநாதனும் வந்து கொண்டிருந்தனர். விசு ரங்கநாதன் மீது முட்டிக் கொண்டான்.
அவர், "இது என்ன அக்கிரமம்? வீடு திறந்திருக்கிறது; என் உத்தரவின்றி யாரோ என் வீட்டை ஆக்கிரமித்தது மட்டுமின்றி இப்படி என்னையே உள்ளே வர விடாமல் மோதி வதைக்கிறார்களே" என்றார்.
கல்யாணமும் வியப்படைந்தவனாக விசுவைப் பிடித்து நிறுத்திக் கொண்டு, "கதவு எப்படித் திறந்தது?" என்று கேட்டான்.
"எனக்கு மந்திரம் தெரியும் மாமா! 'ஓபன் ஸீஸேம்' என்றேன்! கதவு திறந்து கொண்டது."
"பார்த்தீர்களா பையனின் கெட்டிக்காரத்தனத்தை" என்று கல்யாணம் மெச்சிக் கொண்டான்.
"மாஜிக்காவது, மேதாவிலாசமாவது. சுத்தப் போக்கிரித்தனமா இருக்கிறதே. சொந்தக்காரன் அனுமதியின்றிப் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே போவதா? இதைச் சும்மா விடக் கூடாது! கேஸ் போடப் போகிறேன்."
"கண்டிப்பாகச் செய்யுங்கள். ஆனால் ஒன்று. வக்காலத்து என்னிடமே வர வேண்டும். உங்களுக்குத் தான் தெரியுமே. இந்த ஊருக்குப் பவானி வந்ததிலிருந்து மற்ற வக்கீல்களுக்குக் கேஸ் கிடைப்பதென்பதே குதிரைக் கொம்பாகி விட்டது."
"ஸார்! ஸார்! அதோ பாருங்கள். வாசற்படிக்கு மேல் என்ன எழுதியிருக்கிறது?" என்று விசுவநாதன் கை காண்பித்தான்.
அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் "வெல்கம்" என்று எழுதியிருந்தது. "இப்படி, 'நல்வரவு' என்று எழுதிவிட்டுத் தாத்தா கோபித்துக்கொள்ளலாமா?"
"ஏண்டா பயலே! என்னைப் பார்த்தால் உனக்குத் தாத்தாவாகத் தோன்றுகிறதா?"
"இல்லை, இல்லவே இல்லை. கொள்ளுத் தாத்தாவாகத்தான் தோன்றுகிறது."
"பையன் சுத்த வாலாக இருக்கிறான். குடும்பத்தில் மற்றவர்களும் இப்படித்தான் இருப்பார்கள். இவர்களை ஒருநாளும் குடி வைக்க முடியாது. இப்போதே கிளப்பிவிட்டு மறு காரியம் பார்க்கவேண்டும்" என்று கூறியவாறே உள்ளே நுழைந்தார் ரங்கநாதன்.
அவர் கால் நிலைப்படியில் தடுக்க, விழப் போனார். கல்யாணம் சட்டென்று அவரைத் தாங்கிக் கொண்டான்.
"பார்த்தீரா? இதற்குத்தான் வீட்டுக்கு எலெக்ட்ரிக் லைட் போடும் என்றேன். கேட்டீரா?" என்றான் கல்யாணம். "கொஞ்சம் இருங்கள். ஓர் அரிக்கேன் லாந்தர் இரவல் வாங்கிக்கொண்டு வருகிறேன்."
"வேண்டாம். இங்கேயே ஒரு லாந்தர் காமிரா அறையில் இருந்தது" என்று காமாட்சி அம்மாள் குரல் கேட்டது. "டேய் விசு! வந்து விளக்கை வாங்கிண்டு போடா."
"வேண்டாம், வேண்டாம். நான் வந்த வழியே திரும்பப் போகிறவன்தான். கல்யாணம், நீ இருந்து இவர்களைக் கிளப்பி விட்டு வந்து சேர்."
"அப்படிச் சொல்லாதீர்கள் சுவாமி. இந்தப் பையன் கொஞ்சம் துடுக்கு. இவன் தாயார் தகப்பனார் ரொம்ப நல்லவர்கள். இவனுக்கு அக்கா ஒருத்தி இருக்கிறாள். கல்யாணம் ஆக வேண்டிய பெண். அவளைப் பார்த்தால் உங்களுக்கே மனம் இளகிப் போகும்."
"எனக்கே மனம் இளகிப் போகும் என்றால் என்ன அர்த்தம்? நான் அவ்வளவு கல் நெஞ்சக்காரன் என்கிறாயா?"
"இல்லை இல்லை. எதைச் சொன்னாலும் தப்பாக எடுத்துக் கொள்கிறீர்களே?"
"தப்பும் எடுக்கலை. தாரையும் எடுக்கலை. இன்னும் அதற்குக் காலம் வரவில்லை."
இரண்டு பேரும் உள்ளே போனார்கள். "தாத்தா நல்ல சுபமான வார்த்தையாச் சொல்லிண்டு உள்ளே நுழையறார்" என்றான் விசு.
மாசிலாமணி முற்றத்தின் பக்கத்திலிருந்த பழைய சாய்வு நாற்காலியில் விச்ராந்தியாக விசிறிக் கொண்டு அமர்ந்திருந்தார். "வாருங்கள், வாருங்கள்" என்றார்.
"இது வேறேயா? என் வீட்டுக்குள்ளே நான் வருவதற்கு 'வாருங்கள் வாருங்கள்' என்று எனக்கே உபசாரமா?"
"வந்தவர்களை வாருங்கள் என்று அழைப்பது நம் நாட்டுப் பண்பாடு. அதனால்..."
"சொந்தக்காரர் அனுமதி இல்லாமல் பூட்டை உடைச்சு வீட்டுக்குள் நுழையறதும் நம் நாட்டுப் பண்பாடோ?"
கல்யாணம் இப்போது குறுக்கிட்டு, "இந்தவீட்டின் சொந்தக்காரர் ரங்கநாத முதலியார் என்று சொன்னேனே இவர்தான்... ரொம்ப நல்ல மனிதர் பரோபகாரி...." என்றான்.
"நிறுத்தப்பா உன் வர்ணனையை. நான் நல்லவனுமில்லை. பரோபகாரியு மில்லை! நல்லவர்களுக்கு நல்லவன்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவன்!"
"மன்னிக்கணும். சத்தியமா நாங்க பூட்டை உடைக்கலை. இந்தப் பயல் போய்ப் பூட்டைத் தொட்டான்..."
"நான் தொடக்கூட இல்லை. கிட்டப் போனேன். அது தானாகத் திறந்துகொண்டது" என்றான் விசு.
காமாட்சி அம்மாள் தூண் மறைவிலிருந்தபடியே பேசினாள்: "அஸ்தமிக்கிற வேளையிலே நாங்க இந்த ஊரிலே வந்து அகப்பட்டுக் கொண்டோம். கல்யாணம் ஆக வேண்டிய வயசிலே இந்தப் பெண் வேறே இருக்கிறாள். இவளையும் அழைத்துக்கொண்டு இனிமேல் இந்த இருட்டிலே நாங்கள் எங்கே போகிறது? அடி பெண்ணே, கமலா! மாமாவுக்கு நமஸ்காரம் பண்ணடி!"
"வேண்டாம்; வேண்டாம்! நமஸ்காரமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு ரங்கநாதன் கமலாவை பார்த்தார்.
பிறகு, கல்யாணத்தை நோக்கி, "என்னமோ வந்து விட்டார்கள். இரவு நேரத்தில் இவர்களை வீட்டை விட்டுப் போகச் சொல்ல மனமில்லை" என்றார்.
"இப்படி நீங்கள் சொல்வீர்கள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். இல்லா விட்டால் இவர்களை இவ்வளவு நம்பிக்கையுடன் இங்கே அழைத்து வந்திருப்பேனா? உங்களுடைய பரோபகார குணம்...."
"சரி! சரி! இப்படியே முகஸ்துதி பண்ணி வாடகைக்கு நாமத்தைப் போட்டு விடப் பார்க்காதே. ஒரு நாள் தங்கினாலும் ஒரு மாத வாடகை!"
"ஒரு மாத வாடகை என்ன? மூன்று மாத வாடகையே வாங்கிக் கொள்ளுங்கள். இவர்களும் அவ்வளவு அவசரமாகக் கிளம்பப் போவதாகத் தெரியவில்லை."
"மாதம் எழுபத்தைந்து ரூபாய். காலணா குறைக்க முடியாது. சுவரிலே ஆணி கீணி அடிக்கக் கூடாது. சிம்னி விளக்கை எரிய விட்டு புகை அடையச் செய்யக் கூடாது. அடிக்கடி ஒட்டடை அடித்துச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்."
"அதற்கெல்லாம் நான் பொறுப்பு; வாருங்கள் போகலாம்" என்று கல்யாணம் ரங்கநாதனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
கமலா விசுவிடம், "அந்த மாமாவுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லுடா" என்றாள்.
விசு வாய் திறப்பதற்குள்ளாகக் கல்யாணம் கமலாவைத் திரும்பிப் பார்த்து, "இப்படிப் போகிற போக்கில் தாங்க்ஸ் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பெரியவரை அவர் வீட்டில் இறக்கி விட்டுத் திரும்பி வந்து சாவகாசமாகக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன்" என்றான்.
கமலாவின் நெஞ்சு கிளுகிளுத்தது.
(தொடரும்)
------------------
அத்தியாயம் 7 --- பிரமிக்க வைத்த பவானி
சமூக சேவா சங்கத்தின் கட்டிடத்துக்குள் இரண்டு மூன்று அறைகள் இருந்தன. பெரிய கூடம் ஒன்றில் சீட்டாடுவதற்காகப் பல மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஓர் அறையில் புத்தக அலமாரிகள், சில மேஜை நாற்காலிகள், வேறு ஒரு அறையில் பிலியர்ட்ஸ் டேபிளைச் சுற்றிச் சிலர் ஜோக் அடித்துச் சிரித்தபடியே பந்துகளைக் குச்சியால் தட்டிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாகப் பின்புறம் இருந்த ஓர் அறைதான் மிக முக்கியமானது. அதுதான் அங்கத்தினர்களுக்கு டிபன், காப்பி தயாராகும் சமையலறை. ராமப்பட்டணம் சோஷியல் சர்வீஸ் கிளப்பின் ரவா கேசரியும் உருளைக்கிழங்கு போண்டாவும் சுற்று வட்டாரத்தில் ஏழெட்டு மைல்களுக்கு ரொம்பப் பிரசித்தி. சோஷியல் சர்வீஸ் கிளப் என்பதில் 'சர்வீஸ்' என்ற பதத்தை மறந்து விட்டு சோஷியல் கிளப்பாக அது பிரமாதமாக நடந்து வந்தது.
கல்யாணசுந்தரம் அதில் சேர்ந்த பிறகு சமீப காலமாகப் புரட்சி கரமான சில மாறுதல்களைப் புகுத்தி யிருந்தான். அவனுக்கு இளம் அங்கத்தினர்களிடையே ஆதரவும் இருந்ததால் நூலகத்தில் ஆங்கில நாவல்களுடன் பல தமிழ்ப் புத்தகங்களும் வந்து சேர்ந்தன. அவற்றில் சில துப்பறியும் அல்லது சமூக நாவல்கள். வேறு பல 'இந்தப் புரட்சி', 'ஏழை அழுத கண்ணீர்', 'உலகம் உருப்படுவது எப்படி?', 'எரிமலை', 'அக்னி ஆறு' முதலிய பல பயங்கரப் பெயர்களைக் கொண்டிருந்தன.
இவற்றுள் ஒன்றைப் பாதி படித்துக் கொண்டிருந்த வாலிபன் ஒருவன் பட்டென்று அதை மூடிவிட்டு, "இந்த உலகம் ஒருநாளும் உருப்படப் போவதில்லை" என்ற மகத்தான உண்மையைப் பளிச்சென்று சொன்னான்.
"உலகத்தின் பேரிலே உனக்கு என்னப்பா அவ்வளவு கோபம்?" என்றான் இன்னொருவன்.
"எனக்கு என்ன கோபம்? எனக்குக் கோபமே வராது. உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த உலகத்திலே ஏழை- பணக்காரன், முதலாளி - தொழிலாளி; மேல்சாதி - கீழ்சாதி, ஆண்சாதி - பெண்சாதி இப்படிப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிற வரையில் இந்த உலகம் உருப்படப் போகிறதே இல்லை."
"அது சரிதானப்பா, இந்த வித்தியாசங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? அதை நீ சிந்தனை செய்து பார்த்தாயா?" என்று மூன்றாவதாக ஒருவன் கேட்டான்.
"சிந்திப்பது என்பதுதான் நம்மில் யாரிடமுமே கிடையாதே? அதனால் தானே இந்தக் கதிக்கு வந்திருக்கிறோம்."
"அடிப்படையான காரணம்தான் என்ன? சிந்தித்திருக்கிற நீதான் சொல்லேன்."
"மதந்தான் அப்பா, காரணம்! மதந்தான். ஹிந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம். இவற்றுக்குள்ளே குட்டி குட்டி மதங்கள்! சைவம் - வைஷ்ணவம் - புரோடஸ்டண்ட் - ரோமன் கத்தோலிக். இப்படி மத வேறுபாடுகளாலேதான் இந்த உலகம் நாசமாய்ப் போகிறது!"
"மதத்தைச் சொல்லப் போய்விட்டாயே? அதற்கும் அடிப்படையான காரணம் என்ன என்பதை நீ சிந்தித்தாயா?"
"நீ தான் சொல்லு!"
"கடவுள் அப்பா, கடவுள்! இந்த உலகத்திலிருந்து கடவுளையே ஒழித்துக் கட்டிவிட்டால் இந்த உலகத்தில் மதம் இல்லை, சாதி இல்லை, ஏழை பணக்காரன் இல்லை....."
"நீ இல்லை, நான் இல்லை, உலகமே இல்லை! ஏதோ உன்னுடைய மூளையிலேதான் முதன் முதலில் இந்த அபூர்வமான யோசனை உதித்திருக்கிறது என்று நினைக்காதே! இரணிய கசிபு காலத்திலிருந்து எத்தனையோ பேர் கடவுளை ஒழித்துக் கட்டியாகி விட்டது."
"நிறுத்துங்க அப்பா, உங்கள் வெறும் பேச்சை! பேசிப் பேசி என்ன பிரயோஜனம்? பேச்சைக் குறையுங்கள்; காரியத்தில் செய்து காட்டுங்கள்!"
"நாங்களா வேண்டாம் என்கிறோம்? காரியத்தில் ஏதாவது செய்து காட்டத்தான் இங்கே கூடியிருக்கிறோம். அந்தக் கல்யாண சுந்தரம் இன்னும் வந்து தொலையலையே?"
"கல்யாணம் வரும் வரை நாம் காத்திருப்பானேன்! நாம் ஆரம்பித்தால் அவன் வருகிற போது வந்து சேர்ந்து கொள்கிறான்."
"சரி, ஆரம்பித்து விடுவோம்."
சிலர் தபலா, ஆர்மோனியம் முதலிய வாத்தியக் கருவிகளைக் கொணர்ந்தார்கள். சுருதி கூட்டிக் கொண்டு கடவுள் வணக்கப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்கள்.
திடீரென்று ஒருவன் பெஞ்சு மீது ஏறி நின்று கொண்டு, "ஆ! ஏழைகள்! ஏழைகள்! ஏழைகள் படும் பாட்டை நினைத்து என் ரத்தம் கொதிக்கிறது! இதயம் வெடிக்கிறது! என் தொண்டை காய்கிறது! அடே, பையா! ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா!" என்றான்.
"அடசீ! கேட்டதுதான் கேட்டாய். சோடாவாகக் கேட்கக்கூடாதோ? நாடக ஒத்திகைக்கென்று வாங்கி வைத்திருக்கிற சோடாக் கலரை யார் குடிச்சுத் தீர்ப்பது?"
இந்தச் சந்தர்ப்பத்தில் அறை வாசலில் வந்து நின்ற பவானி, "நாடக ஒத்திகை ரொம்பத் தீவிரமாக நடக்கிறது போலிருக்கிறதே" என்றாள்.
அறையிலிருந்த வாலிபர்கள் அனைவரும் அழுத்தம் திருத்தமாய் ஒலித்த அந்தப் பெண் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பவானியைப் பார்த்ததும் பிரமித்துப் போய் நின்றார்கள்.
------------------------
அத்தியாயம் 8 -- காதலை வளர்த்த கார்!
பவானியைத் தெரியாதவர்கள் ராமப்பட்டணத்தில் யாரும் கிடையாது. அவளிடம் பேசிப் பழகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவளை, அவள் அங்கு வந்த நாளிலிருந்தே அனைவரும் அறிவார்கள்.
எனவே அந்த வாலிபர்களுக்கு வாயடைத்துப் போயிற்றென்றால் அது, 'யார் இந்தப் பெண்? என்று புரியாததால் அல்ல. 'பவானி இங்கே எப்படி வந்தாள்? எதற்காக? என்று புரியாதது ஒரு காரணம். 'எவ்வளவு நேரமாக இங்கு நிற்கிறாள். தாங்கள் தர்க்கம் புரிந்ததையும் நாடக ஒத்திகை நடத்தியதையும் எவ்வளவு தூரம் பார்த்திருப்பாள்? அப்படி பார்த்திருந்தால் தங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருப்பாள்?' என்றெல்லாம் சிந்தனைகள் அடுக்கடுக்காக எழுந்ததால் வியப்பும் வெட்கமும் ஒருங்கே அடைந்தது மற்றொரு காரணம்.
சில வினாடிகள் பொறுத்துப் பிரமிப்பிலிருந்து விடுபட்ட ஒருவன், "வாருங்கள், உட்காருங்கள்" என்று ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அதனைக் கைக்குட்டையால் துடைத்தான். அவ்வளவுதான். அத்தனை இளைஞர்களும் திக்பிரமையிலிருந்து விடுபட்டவர்களாக அவளை உபசரிக்கத் தொடங்கினார்கள்.
"டேய் பையா! காண்டீனில் பாதம் அல்வா பாக்கியிருக்கா? இல்லை எல்லாவற்றையும் விழுங்கித் தொலைத்து விட்டார்களா? போய்ப்பாரு!" என்று அதட்டல் போட்டான் ஒருவன். இன்னொருவன், "இழவு இந்த அறையில் ஃபானே இல்லை. வெந்து புழுங்குகிறது. அந்தக் கிழம் கட்டைகள் சீட்டாடுவதற்கு எதற்கு டேபிள் ஃபான்? சீட்டுப் பறக்கும். அதைப் போய் எடுத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு விரைந்தான். மூன்றாவதாக ஒருவன் ஆரஞ்சு கலர் ஒன்றை உடைத்துக் கண்ணாடி டம்ளரில் ஊற்றினான்.
நாற்காலியில் அமர்ந்த பவானி, "உங்கள் உபசரிப்புக்கெல்லாம் ரொம்ப தாங்ஸ். ஆனால் நீங்கள் சிரமப்பட வேண்டாம். எனக்கு ஒரு சின்ன உதவிதான் தேவை. மிஸ்டர் கல்யாண சுந்தரத்தைப் பார்க்க வந்தேன். அவர் இங்கே இல்லை என்று தெரிகிறது. அவர் வந்தால் ஒரு செய்தி சொல்லி விட்டால் போதும்" என்றாள்.
அவன் வந்தால் சொல்வது என்ன. அவனே வந்தாச்சு! வாடாப்பா கல்யாணம்! உன்னைத் தேடிக் கொண்டு அதிர்ஷ்ட தேவதையே வந்திருக்கிறது!" என்று சுரம் இறங்கிய குரல் ஒன்று ஒலித்தது.
பவானி திரும்பிப் பார்த்தாள். "என் பாக்கியம்! என்னைத் தேடி வந்தீர்களா?" என்று கல்யாணம் கேட்டபடியே அவளை நெருங்கினான்.
"உங்களைப் போன்ற ஒரு பரோபகாரி நண்பராகக் கிடைத்தது என் பாக்கியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.
"மிஸ்டர் கல்யாணம்! இப்போது கூட ஓர் உதவி கோரித்தான் வந்தேன். எனக்காக அல்ல. இந்த ஊருக்குப் புதிதாக ஒரு குடும்பம் வந்திருக்கிறது. ஊர் எல்லையில் மதகடியில் அவர்கள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். 'கல்யாண சுந்தரம் என்று இந்த ஊரில் இருக்கிறார். ரொம்ப நல்லவர். உங்களுக்கு நிச்சயம் உதவுவார். நான் போய் அவரை அனுப்புகிறேன்' என்று சொல்லி விட்டு வந்தேன். மாலை நேரத்தில் இங்கே தான் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை. வாசலில் மாஜிஸ்திரேட்டைப் பார்த்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் வந்த காரியம் மறந்து தாமதமாகி விட்டது. நன்றாக இருட்டியும் விட்டதே! அவர்கள் அங்கே தவித்துக் கொண்டிருப்பார்கள்!"
"தவிப்பதா? நான் இருக்கும் போதா? அதுவும் நீங்கள் பிரியப்பட்டுச் சொன்ன பிறகா? நோ, நோ! அவர்களுக்கு ஜாகை பார்த்துக் கொடுத்து விட்டுத்தான் வருகிறேன்!"
"நிஜமாகவா? ஆல்ரெடி?"
"எஸ், உங்கள் விஷயத்தில் நீங்கள் 'எள்' என்பதற்கு முன் எண்ணெயுடன் நான் நிற்பேன்."
"என்னால் நம்பவே முடியவில்லையே?"
"நம்பிக்கை பிறக்கணும்னா என்னுடன் வாங்க. அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறேன். இங்கே ஒத்திகைக்கு எல்லாரும் காத்திருப்பார்கள். சொல்லி விட்டுப் போகலாம் என்று தான் வந்தேன். திரும்பி அவர்கள் தேவைகளை விசாரிக்க வருவதாகக் கூறிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். கம், லெட் அஸ் கோ!"
"ஓ.கே." என்றாள் பவானி மகிழ்ச்சியுடன். "ஒத்திகை நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் குறுக்கிட்டதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று தன்னைச் சுற்றிக் குழுமி நின்ற வாலிபர்களிடம் கூறி, கரம் கூப்பி விட்டு வாசலை நோக்கி நடந்தாள்.
"நீங்கள் ஒத்திகையைத் தொடர்ந்து நடத்துங்க. நான் நாளைக்கு வந்து சேர்ந்து கொள்கிறேன்" என்று கல்யாணமும் நண்பர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
"ஆமாம், கல்யாணம் இப்போ வேறு ஒரு நாடகத்துக்கு ஒத்திகை பார்க்க வேண்டியிருக்கு. 'காதல் கல்யாண நாடகம்!" என்று ஒருவன் கூறியதும் மற்றவர் கொல்லென்று சிரித்ததும் கல்யாணத்தின் காதுகளுக்கு எட்டியது.
'முட்டாள்! காதல் கல்யாண நாடகமா இது? வாழ்க்கையே அல்லவா?' என்று தனக்குள் நண்பனைக் கடிந்துரைத்து முணுமுணுத்தவாறே பவானியைப் பின் தொடர்ந்தான் கல்யாணம்.
காரில் அவளுக்கு பின் கதவைத் திறந்து விடுவதா? முன் கதவையா? என்று கல்யாணம் சற்றுத் தயங்குவதற்குள் பவானிதானாகவே முன்கதவைத் திறந்து அமர்ந்து கொண்டாள். கார் கிளம்பி வாசல்கேட்டை நோக்கிச் சென்ற போது மாஜிஸ்திரேட் இன்னும் அதே இடத்தில் அதே நாற்காலியில் அமர்ந்திருக்கக் கண்டாள் பவானி. காரிலிருந்தபடியே, "வருகிறேன் ஸார்! குட் நைட்" என்று கூறி விடை பெற்றாள். கோவர்த்தனன் கரம் அசைத்தாரேயொழிய அவ்விருவரும் சேர்ந்து போவதைப் பார்க்க அவர் மனம் எரிமலையாகக் கொந்தளித்தது.
இந்தப் பயணத்துக்குச் சீக்கிரம் முடிவு ஏற்பட வேண்டாம் என்று கருதியவனாகக் கல்யாணம் மெல்ல காரை ஓட்டினான். மாசிலாமணி குடும்பத்தைச் சந்தித்துக் குடிவைத்த விவரங்களையெல்லாம் சாங்கோ பாங்கமாகக் கூறினான்.
அவனுடைய பிறருக்கு உதவுகிற குணத்தைப் போற்றிய பவானி, "இந்த நாடகத்தைக்கூட ஏழை எளியோருக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நடத்தப் போகிறீர்களாமே? என்று அரங்கேறுகிறது? தேதி நிச்சயமாகி விட்டதா?" என்று கேட்டாள்.
"தேதி என்னமோ நிச்சயித்து விட்டோம். ஆனால் கதாநாயகி வேஷத்துக்குத்தான் ஆள் இல்லை. ஆண் பிள்ளையைப் பெண் வேஷம் போட்டுக் கொள்ளச் சொல்வது முட்டாள்தனம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதில் 'ரியாலிடி' கொஞ்சமும் இருப்பதில்லை. உருக்கமாக அமைய வேண்டிய காட்சிகூட நகைச்சுவையாகி விடுகிறது. கதாநாயகி வேஷம் ஏற்க யாராவது ஒரு பெண்மணி முன்வந்தால் நாடகம் 'ஸக்ஸஸ்'; இல்லையேல் 'ஃபெய்லியர்'!"
"மேடை ஏறி நடிக்க இந்த ஊரில் எந்தப் பெண் முன்வருவாள்? வீண் ஆசை" என்றாள் பவானி.
"அதனால்தான் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாயிராமல் பெரிய நகரத்திலிருந்து வந்தவர்களாகப் பிடித்துப் போடலாம் என்று யோசனை பண்ணுகிறேன். சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களே என்பதால் உடனே இல்லா விட்டாலும் இரண்டு நாட்கள் கழித்துக் கேட்டுப் பார்க்க உத்தேசம். அந்தப் பெண் கமலாவும் பார்க்கச் சுமாராக இருக்கிறாள். மேடை ஏறி நடிக்கச் சம்மதிப்பாள் என்று தோன்றுகிறதா உங்களுக்கு?"
"சிவசிவா! அவள் பெண் ஜன்மமாகிய என் முன்னால் நின்றே இரண்டு வார்த்தை பேச வில்லையே. அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவளாவது, மேடை ஏறி நடிக்கவாவது?"
இந்தப் பதிலையே பவானி கூற வேண்டும் என்று எதிர்பார்த்த கல்யாணம் திருப்தி அடைந்தவனாக, "அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; நீங்களே கதாநாயகி பாகத்தை ஏற்று நடித்து விடுங்கள்" என்றான்.
"அதற்கென்ன? செய்து விட்டால் போகிறது!" என்றாள் பவானி.
இவ்வளவு சுலபமாக அவள் சம்மதித்து விடுவாள் என்று எதிர்பாராத கல்யாணம் திடுக்கிட்டதால் கார் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. பவானி பதற்றமடைந்து "ஸ்டெடி, ஸ்டெடி" என்று எச்சரித்தபடியே ஸ்டியரிங்கைப் பற்றக் கரத்தை நீட்டினாள். அவள் சாய்ந்த போது அவள் தோள்கள் கல்யாணத்தின் தோள்களை உரசின. அவளுடைய நீண்ட அழகிய விரல்கள் கல்யாணத்தின் விரல்களைத் தீண்டியதில் அவற்றின் மிருதுத் தன்மையை அவன் உணர்ந்தான்.
அவ்வளவுதான்! கல்யாணத்தின் உடம்பெல்லாம் சிலிர்த்து நெளிந்தது. ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த அவன் கரங்கள் மட்டும் நிதானத்துடன் இருக்குமா என்ன?
கார் பாம்புப் பாதை வகுத்து பிறகு அதிலிருந்து பிரிந்து போய்ச் சாலையோரக் குப்பைத் தொட்டி ஒன்றின் மீது 'ணங்' என்று மோதிக் கொண்டு நின்றது.
"ஐயோ!" என்று அலறியபடியே கரங்களில் முகம் புதைத்துக் குனிந்து கொண்டாள் பவானி.
அவள் மறுபடியும் கண் திறந்து நிமிர்ந்து பார்த்த போது, தெரு விளக்கின் மங்கிய ஒளியில் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டாள். கல்யாணம் கீழே இறங்கிக் கார் எந்த அளவுக்குச் சேதம் அடைந்திருக்கிறது என்று பார்த்துத் திருப்தியுடன் தலையசைத்து விட்டு அதன் 'பானெட்' டின் மேல்குனிந்து அதனை முத்தமிட்டான்.
பிறகு திரும்பி வந்து மீண்டும் பவானிக்குப் பக்கத்தில் அமர்ந்தான். "ஒண்டர்ஃபுல், ஒண்டர்ஃபுல்! நாடகத்தில் நான்தான் கதா நாயகன்! வேறு யார் போட்டிக்கு வந்தாலும் விடப் போவதில்லை" என்றான்.
"காருக்கு ரொம்ப சேதமோ?" என்று கவலையுடன் கேட்டாள் பவானி.
இடது பக்க மட்கார்டில் பலத்த சேதம். சொட்டை விழுந்திருக்கிறது. பெரிதாக. ஆனால் நான் அதை ரிப்பேர் செய்யவே போவதில்லை. திஸ் இஸ் மை லக்கி டே!
அதன் நினைவாக அந்தப் 'பெண்' டை அப்படியே வைத்திருக்கப் போகிறேன்.
பவானி குபீரென்று அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
வான வில்லின் வண்ணங்களையும் மல்லிகை மணத்தையும் பட்டின் மென்மையையும் ஜல தரங்க நாதத்தையும் ஒருங்கே ஒரே சமயத் தில் உணர்ந்தான் கல்யாணம்.
(தொடரும்)
-------------
அத்தியாயம் 9 -- நெருப்பாக ஒரு நெடுமூச்சு
மாசிலாமணி முதலியார் தம் மனைவியிடம், "இந்த வீட்டுக்காரர் என்ன, நாம் ஒரு நாள் தங்கினாலும் ஒரு மாதத்து வாடகை கொடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டுப் போகிறாரே, இது என்ன அநியாயம்?" என்று அலுத்துக் கொண்டார்.
"அந்தப் பிள்ளை அவரைத் தூக்கி அடிப்பது போல் பேசுகிறான். 'ஒரு மாதமென்ன மூணு மாத வாடகை வேணுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்கிறான். இந்த மாதிரி ஊதாரியை நான் பார்த்ததே இல்லை" என்றாள் காமாட்சி.
"அவர் விளையாட்டுக்காக அப்படிச் சொன்னார் அம்மா!" என்றாள் கமலா.
இதற்குள் முன் பக்கம் சற்று நசுங்கிப் போன கோலத்தில் வாசலில் கார் வந்து நின்றது. கல்யாணமும் பவானியும் இறங்கி உள்ளே வந்தார்கள்.
"ஆமாம்; விளையாட்டாகத்தான் சொன்னேன்" என்றான் கமலா கூறியதைக் கேட்டுக் கொண்டே வந்த கல்யாணம். "ரங்கநாத முதலியார் கடுமையாகப் பேசுகிறாரே ஒழிய ரொம்ப நல்லவர். நீங்கள் இருக்கிற நாளைக்கு வாடகை கொடுங்கள் வாங்கிக் கொள்வார்."
பவானி, "உங்களுக்கு இங்கே எல்லாம் வசதியாக இருக்கிறதா?" என்று கேட்டாள். கல்யாணத்தைத் தேடிப் பிடித்து உங்களிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டு வந்தேன். ஆனால் இவரை நான் காண்பதற்கு முன் இவரே உங்களைப் பார்த்து விட்டார்."
"அப்படியொன்றும் வசதியான வீடு என்று சொல்வதற்கில்லை" என்றாள் காமாட்சி.
"இந்தப் பழைய வீட்டுக்கு எழுபத்தைந்து ரூபாய் வாடகையாமே?"
"அப்படித்தான் சொல்வார். கொடுத்ததை வாங்கிக்கொள்வார்" என்றான் கல்யாணம்.
"ஏன் மாமா! சுவரிலே ஆணியே அடிக்கப் படாதோ? அக்காவின் கண்ணாடியை மாட்டுவதற்குக்கூட ஆணி அடிக்கக் கூடாதோ?" என்றான் விசு.
"அதிகமாக அடிக்கக் கூடாது. ஒன்றிரண்டு அடித்தால் பாதகமில்லை."
"என்னமோப்பா நீ நல்ல பிள்ளையாய் இருக்கிறாய். நாங்கள் இந்த ஊரிலே இருக்கும் வரையில் நீதான் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்."
"ஆகட்டும். உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் இந்தப் பையனை அனுப்புங்கள். ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் வீடு என்று கேட்டால் சொல்லுவார்கள்."
"பிரமாதமா ஒண்ணும் வேண்டாம். நாலு எலெக்ட்ரிக் லைட் போட்டுக் கொடுத்து அம்மி, கல்லுரலுக்கு ஏற்பாடு பண்ணி, சமையல் அறையில் அடுப்பைக் கொஞ்சம் சரிப்படுத்தி விட்டால் போதும்."
"செய்துவிடலாம். நான் ரங்கநாதனிடம் பேசுகிறேன். முடித்துத் தருவார். தங்கமான மனுஷன்."
"அம்மா பசிக்கிறது" என்றான் விசு.
காமாட்சி மாசிலாமணி இருந்த பக்கம் திரும்பினாள். "ஏங்க, மார்க்கெட்டுக்குப் போய் ஏதாவது காய்கறி வாங்கிக்கொண்டு வருவதுதானே?" என்றாள். பிறகு, "அடி கமலா! ஏன் சும்மா நிற்கிறாய்? உள்ளே போய் அடுப்பு மூட்டு!" என்று அதட்டினாள்.
"விறகு இல்லையே அம்மா!" என்று நினை வூட்டினான் விசு.
கல்யாணம், "இன்று ராத்திரி சமையல் வைத்துக் கொள்ள வேண்டாம். ஹோட்டலிலிருந்து சாப்பாடு அனுப்பி விடுகிறேன்" என்றான்.
"நீ மகராஜனாய் இருப்பாய். அடி கமலா! காரியரைத் தேய்ச்சு வைச்சயா இல்லையா? எடுத்துக் கொடேன்."
பவானியும் கல்யாணமும் விடைபெற்றுப் போனார்கள். "ரொம்ப நல்ல பிள்ளை. இந்த மாதிரி நமக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கக்கூடாதோ?" என்றாள் காமாட்சி.
"கிடைப்பான், கிடைப்பான். இவன் அப்பா இந்த ஊரிலேயே பெரிய வக்கீலாம்" என்றார் மாசிலாமணி.
இந்தச் சமயத்தில் கமலா மெல்ல நழுவிக் காமிரா உள்ளில் இருந்தபடி ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். கல்யாணமும் பவானியும் சிரித்துப் பேசியபடி காரின் முன்புறம் அருகருகே அமர்வதைக் கண்டாள். கார் கிளம்பி விரைந்தது. நெடுமூச்சு ஒன்று அவள் நெஞ்சிலிருந்து அவளையும் அறியாமல் எழுந்தது. நெருப்பாக அவளைத் தகித்தது அது.
"இவன் தகப்பனார் பெரிய வக்கீலா யிருந்தால் என்ன? என் அப்பா கூடத்தான் தாசில்தார்" என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"போதும்; போதும்! உன் பிறந்த வீட்டுப் பெருமையை ஆரம்பித்து விடாதே! அவ்வளவு லஞ்சம் வாங்கிச் சேர்த்தாரே காலணா மிச்சம் வைத்து விட்டுப் போனாரா? அத்தனையையும் அழிச்சு ஒழிச்சார்."
"ஐயய்யோ, அந்த உத்தமரைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள். பணம் காசைக் கையாலும் தொட மாட்டாரே!"
"லஞ்சம் வாங்குகிற எந்தப் பேர்வழி ஒத்துக் கொள்வான். தான் பணம் காசுக்கு ஆசைப்படுவதாக? அகப்பட்டுக் கொண்டால் வழக்காடக்கூட உண்டியல்தான் குலுக்குவான்."
"போதுமே அம்மா உன் பேச்சு! பேசாமல் படுத்துக் கொள்ளேன்" என்றாள் கமலா.
"இன்னும் சாப்பாட்டுக் கடையே முடியலையேடி?"
"அப்படியாவது அவா வாங்கி அனுப்பிச் சாப்பிடணுமா? அவரிடம் காசையாவது கொடுத்திருக்கக் கூடாதா? எனக்கு வேண்டாம் சாப்பாடு. எனக்குப் பிடிக்கவுமில்லை. பசிக்கவுமில்லை. போய்ப் படுத்துக்கறேன்" என்றாள் கமலா.
'இது என்ன இந்தப் பெண்ணுக்குத் திடீரென்று அலுப்பு வந்து விட்டது?' என்று புரியாமல் கணவனைப் பார்த்தாள் காமாட்சி.
----------------
அத்தியாயம் 10 -- தலைகீழ் உலகம்!
ராமப்பட்டணம் அட்வொகேட், 'ஹோம் ரூல்' கோபாலகிருஷ்ணன் வீடு ஜே ஜே என்று இருந்தது. சென்னையிலிருந்து வந்த உற்றார் உறவினரும் தெரிந்த மனிதர்களும் மட்டுமின்றி முன் பின் தெரியாதவர்கள் கூட ஒருசிலர் அந்தப் பெரிய வீட்டில் முகாமிட்டிருந்தனர். முற்றத்தின் இரு புறமும் இருந்த நாலு பெரிய அறைகள் இவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன.
பின்பக்கம் கிணற்றில் வாளியில் நீர் இழுத்துக் கொட்டிக் கொண்டு குளித்தபிறகு தலையைத் துவட்டியபடியே அப்போது மிகப் பிரபலமா யிருந்த தியாகராஜ பாகவதர் பாடல் ஒன்றைப் பாடியவாறு முற்றத்துக்கு வந்தான் கல்யாணசுந்தரம். முற்றத்தின் இரு பக்கமும் இருந்த நாலு அறைகளையும் நோட்டம் விட்டான். அவற்றின் வாசலில் ஜப்பான் அறை, ஜெர்மன் அறை, அமெரிக்கா அறை, பிரிட்டிஷ் அறை என்று பெயர்கள் வர்ண சாக்பீஸால் எழுதப் பட்டிருந்தன. இவர்களுள் யாரை அழைத்துக் குசலம் விசாரிக்கலாம் என்று சற்று நேரம் யோசித்தவனாக நின்ற கல்யாணம், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக, "ஜப்பான் மாமா! பொழுது விடிந்து எழுந்தாச்சா? ராத்திரி நன்றாகத் தூங்கினீர்களா?" என்று குரல் கொடுத்தான். முற்றத்தின் இடது பக்க அறை ஒன்றிலிருந்து குள்ளமாக ஒருவர் வெளிப்பட் டார். "ஆகா! ஆனந்தமாகத் தூங்கினேன். லோகோபகாரிகளாக நீயும் உன் அப்பாவும் இருக்கிறபோது எனக்கு என்ன கவலை? கவலையே இல்லாததாலே தூக்கத்துக்கும் குறைவில்லை. ஆனா... ஒரு விஷயம் மட்டும் உன் காதிலே போட்டு வைக்கணும். கல்யாணம்! பக்கத்து அறையிலே இருக்கே ஒரு கடுவன் பூனை. அவன் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு!"
"ஏன்? என்ன நடந்தது?"
"நேற்று இரண்டணா கொடுத்து ஒரு வாரப் பத்திரிகை வாங்கிக் கொண்டு வந்து வைத்தேன். இன்று காலையில் காணோம். அவன்தான் எடுத்திருக்கணும். ஏன்னா அதிலிருந்த ஒரு விகடத் துணுக்கை இவன் பெண்டாட்டி கிட்டச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான். விடுவேனா பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்."
"ஏன் ஜப்பான் மாமா, ஜெர்மன் மாமாவே அதைக் காசு கொடுத்து வாங்கி யிருக்கக் கூடாதா?"
"அந்தக் கஞ்ச மகாபிரபுவா வாங்குவான்? நேற்று சாயந்திரம் ஹோட்டலுக்குள் நுழையறான்; எதிரேயே நான் நிக்கறேன். உபசாரத்துக்குக்கூட 'வா'ன்னு சொல்லலையே!"
"இதோ பாருங்க, நீங்க சண்டை போடறது பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் ஜப்பான் மாமாவாகிய நீங்கள் பக்கத்து அறைவாசியான ஜெர்மன் மாமாவோடு சண்டை பிடிக்கக் கூடாது. இரண்டு பேருமா சேர்ந்து கொண்டு எதிரே இருக்கும் பிரிட்டிஷ் அமெரிக்க அறைகளில் உள்ளவர்களோடு யுத்தம் பண்ணுங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சரித்திரத்தையே மாற்றி விடாதீர்கள்! என்ன, புரிந்ததா?"
ஜப்பான் அறை விருந்தினரைத் திரு திருவென்று விழிக்க வைத்து விட்டுக் கல்யாணசுந்தரம் ரேழிக்குப் பக்கத்தில் தன் தகப்பனாரின் காரியாலய அறையை அடைந்தான்.
அலமாரியைத் திறந்து சட்டையை மாட்டிக்கொண்டே, "அப்பா! உலகமே தலைகீழாக மாறிப் போச்சு" என்றான்.
காலைப் பத்திரிகையைச் சாவகாசமாக ராகம் போட்டுப் படித்துக் கொண்டிருந்த "ஹோம்ரூல்' கோபாலகிருஷ்ணன் சாய்வு நாற்காலியில் சற்று நிமிர்ந்து, "கவனித்தேன், காதில் விழுந்தது" என்றார்.
"அதைச் சொல்லவில்லை அப்பா. அலமாரிக்கு மேலே பாருங்கள்" என்றான் கல்யாணம்.
மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பத்திரிகையை ஒரு உதறு உதறிவிட்டு, அண்ணாந்து நோக்கினார், கோபாலகிருஷ்ணன். அங்கே மெய்யாலுமே உலகம் தலைகீழாக இருந்தது."சே! அந்தக் 'குளோ'பைச் சரியாக நிமிர்த்தி வைடா. யார் செய்த விஷமம் இது?" என்றார் தந்தை.
"ஒருவரும் விஷமம் பண்ணவில்லை. அம்மா நேற்று ஒட்டடை அடித்தாள்.அப்போ அந்த ஒட்டடைக் காம்பு பட்டுக் கீழே விழுந்திருக்கும்.திருப்பி வைக்கிறப்போ உலக்கத்தையே கவிழ்த்து விட்டாள்! இதனால் என்ன விபரீதம் எல்லாம் நேரப் போகிறதோ?"
"இதோ இப்போதே விபரீதம் வந்து கொண்டே இருக்கிறது" என்றார் தம் மனைவி அறைக்குள் நுழைவதைக் கடைக் கண்ணால் நோக்கி விட்ட கோபாலகிருஷ்ணன்.
"விபரீதம் என்ன, பிரளயமே வந்தாலும் நீங்கள் மாற மாட்டேள், உங்கள் பிள்ளையும் மாற மாட்டான். நானும்தான் கேட்கிறேன்.இது என்ன வீடா,ஸவலை ராமசாஅமி முதலியார் சத்திரமா? வீட்டில் கால் வைக்க இடமில்லையே?இப்படி உங்கள் பிள்ளை அக்கிரமம் பண்ணுகிறான். நீங்களும் தட்டிக் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்."
"ஏன் உன் பிள்ளை இல்லையா? நீதான் கேளேன்!"
"நீங்கள்தான் அவனுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டீர்கள்."
" நான் செல்லம் கொடுத்தேனா? உன் பேரே செல்லம். என் பேரில் பழியைப் போடுகிறாயே!"
"ஆமாம், எல்லாம் நான் சொல்கிறபடிதான் நடக்கிறதாக்கும்?"
"பின்னே, அப்பாவுக்கு 'ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன்'னு பேர் வந்ததே அதனால்தானே அம்மா?"
"நீ சும்மா இருடா. எனக்கு இன்றைக்கு இரண்டிலொன்று தெரிந்தாக வேண்டும். இங்கே டேராப் போட்டிருக்கிறார்களே இவர்களெல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் இங்கே இருக்கப் போகிறார்கள்?"
"யுத்தம் முடிகிற மட்டும்."
"யுத்தம் எப்போ முடியும்?"
"ஹிட்லருக்குப் போன் போட்டுக் கேட்டுச் சொல்கிறேன்" என்றார் கோபாலகிருஷ்ணன்.தந்தை மகன் இருவர் முகங்களிலும் புன்னகை அரும்பியது.
"கேட்கிறதை உடனே கேளுங்களேன். அதுக்குக் கூட வேளை லக்னம் எல்லாம் பார்க்கணுமா என்ன?" என்று மேஜை மீது இருந்த போன் ரிஸீவரை எடுத்துக் கொடுத்தாள் செல்லம்.
கல்யாணம் குபீரென்று சிரித்தான்.ஆனால் அவன் தந்தைக்கு தம் மனைவியின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் எண்ணியபோது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.
'ஹோம் ரூல்' என்று சொல்கிறோம். இயக்கம் கூட நடத்துகிறோம்.ஆனால் சராசரி இந்திய மக்கள் இப்படி அறியாமையில் மூழ்கி இருக்கும்போது வெள்ளைக்காரன் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்து விட்டு எப்படி வெளியேறுவான்? அப்படியே அவன் வெளியேறினாலும் கிடைக்கும் சுதந்திரத்தை மக்கள் எப்படிப் போற்றிக் காப்பாற்றப் போகிறார்கள்?' என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.
"அப்பா! அம்மாவுக்கு எல்லாம் விவரமாக விளக்கிச் சொல்லுங்கள். சாயந்திரம்வரை பொழுது போய் விடும். அதற்குள் நான் கிளப்புக்குப் போய் வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் கல்யாண சுந்தரம்.
"காலை வேளையில் என்னடா கிளப்?" என்றாள் செல்லம்.
"ஞாயிற்றுக் கிழமைதானே அம்மா? நாள் முழுவதும் நாடக ஒத்திகை நடக்கிறது. வரட்டுமா?"
அவள் பதிலுக்குக் காத்திராமல் அவன் புறப்பட்டு விட்டான்.
சமூக சேவா சங்கம் இயங்கிய கட்டடத்தின் வாசலில் காரை நிறுத்திவிட்டுக் கல்யாணம் கீழே இறங்கியதும் இறங்காததுமாக ஒரு பையன் ஓடோடி வந்தான். "ஸார்! மாஜிஸ்டிரேட்டுக்கு உங்களை ஒரு நிமிஷம் பார்க்க வேண்டுமாம்" என்றான்.
"அப்படியா? இதோ!" என்று கல்யாணம் கூறிவிட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடி நாற்காலியில் அமர்ந்திருந்த கோவர்த்தனனை நோக்கி நடந்தான். "குட் மார்னிங்" என்றதும், அவர், "உட்காருங்கள் மிஸ்டர் கல்யாணம். நாடகமெல்லாம் எந்த மட்டில் இருக்கிறது?" என்று விசாரித்தார்.
"ஐந்தாறு நாட்கள்தானே ஒத்திகை நடந்திருக்கிறது? இன்னும் ஒரு மாதமாவது ஆகும் அரங்கேற."
"கல்யாணம்! ஐ லைக் யூ. உங்க பரோபகார குணமும் ஊரு முழுக்கப் பிரசித்தி. அதை நான் வரவேற்கிறேன். சந்தோஷப் படறேன். இப்பக்கூடப் பர்மா அகதிகளுக்காக நிதி திரட்ட நாடகம் போடுகிறீர்கள். ரொம்ப 'நோபிள் மைண்ட்' இருந்தாத்தான் அப்படி யெல்லாம் உதவத் தோன்றும். அதை நான் பாராட்டறேன். நானே உங்க நாடகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தித் தரதாக்கூட முடிவு செய்திருக்கேன். என்னால் எவ்வளவு முடியுமோ ஹெல்ப் பண்ணறேன்."
"தாங்க்யூ ஸார்! தாங்க்யூ!" என்று கல்யாணம் குதூகலத்துடன் சொன்னான். "உங்க ஒத்துழைப்பு இருந்தால் எங்களுக்குப் பெரிய பலம்."
"ஆனா ஒண்ணு, மிஸ்டர் கல்யாணம்! கொஞ்சம் யோசித்துப் பாருங்க. இருபது ஆண்பிள்ளைத் தடியன்களுக்கு மத்தியிலே ஒரு பெண்ணை இழுத்து நிற்க வைச்சு, நடிக்கச் சொல்றது நல்லா இருக்கா? இட் இஸ் நாட் கரெக்ட். அது மட்டும் எனக்குப் பிடிக்கலை!"
"அழகுதான் போங்கள்!" என்று சிரித்தான் கல்யாணம். எங்க நாடகக் குழுவிலே இருபதே பேர் தான். ஆனா இந்தக் கிளப்பிலே இருநூறு பேர் அங்கத்தினர்கள். இருநூறு தடியன்களுக்கு மத்தியில் அவளை இந்தக் கிளப்பில் சேர அழைப்பு விடுத்த நீங்களே இருபது தடியன்களுக்கு மத்தியில் அவள் நடிக்கக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? நீங்கள் தினம் அவளுடன் டென்னிஸ் ஆடலாம். நான் தினம் அவளுடன் சேர்ந்து நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கக் கூடாதா?"
"கல்யாணம்! புரியாதது மாதிரி நடிக்காதீர்கள். நடிப்பெல்லாம் நாடகத்தோடு நிற்கட்டும். என்னுடன் அவள் டென்னிஸ் ஆடுவது வேறு; உங்கள் காதலியாக அவள் மேடை ஏறி நடிப்பது வேறு!"
"எப்படி வேறாக முடியும்? இரண்டும் இருவித விளையாட்டுத்தான். பொழுது போக்குத்தான்."
"கல்யாணம் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை. நீங்க செய்வது நன்றாயில்லை. எச்சரிக்கிறேன். அப்புறம் உங்க இஷ்டம்!"
அவர் தம் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை விளையாட்டாக உதறினார். அதில் மறைவாகப் பொருத்தப் பட்டிருந்த விசை காரணமாக மேலுறை கழன்று எட்டப் போய் விழ இதுகாறும் உள்ளே மறைந்திருந்த மிகக் கூர்மையான ஒரு நீண்ட கத்தி பளபளத்தது.
அதன் முனையை ஒரு விரலால் கூர் பார்த்த கோவர்த்தனன், "என்ன அப்படி வியப்புடன் பார்க்கிறீர்கள் கல்யாணம்? நான் துப்பாக்கிகூட வைத்திருக்கிறேன். கைத்துப்பாக்கி, வேட்டைத் துப்பாக்கி எல்லாமே இருக்கின்றன. அவற்றுக்கு லைசென்ஸ்களும் வாங்கி வைத்திருக்கிறேன்!" என்றார்.
கல்யாணம் விருட்டென்று எழுந்தான். "மிஸ்டர் கோவர்த்தனன்! உங்களிடம் எனக்குள்ள மதிப்புக் குறையும்படி நடந்து கொள்ளாதீர்கள். ப்ளீஸ்!" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தான்.
அவனை முந்திக் கொண்டு, காலைச் சூரிய ஒளியில் பளபளத்தவாறு கத்தி பாய்ந்து சென்று அவனுக்கு முன்னாலிருந்த ஒரு மரத்தில் பதிந்து அதிர்ந்தது! குறி அரையங்குலம் பிசகி யிருந்தாலும் கத்தி அவனைத் தாக்கியிருக்கும். கல்யாணம் பிரமித்துப் போனான்.
பின்னால் கோவர்த்தனன் கலகலவென்று சிரிப்பது அவன் காதில் விழுந்தது!
(தொடரும்)
-------------------------
அத்தியாயம் 11 -- சிலிர்ப்பும் சினமும்
ஞாயிற்றுக் கிழமை முழுவதும் சமூக சேவா சங்கக் கட்டடம் திமிலோகப் பட்டது. ஒத்திகை நடந்த நேரம் பாதி. அரட்டையிலும் தமாஷ் பேச்சிலும் கழிந்த நேரம் பாதி. பவானி தங்களுடன் வந்து சகஜமாகப் பழகி நாடகத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டதில் அனைவருக்கும் ஒரே ஆனந்தம். பதினெட்டு மணி நேரம் இருந்த இடத்தை விட்டு நகராமல், சீட்டாடி 'ரிக்கார்டு' ஏற்படுத்தியிருந்த பத்மனாபன் கூடச் சீட்டாட் டத்தைச் சற்று மறந்து நாடக ஒத்திகையைப் பார்க்க வந்து விட்டாரென்றால் அதற்குப் பவானியின் தோற்றத்திலும் சுபாவத்திலும் இருந்த வசீகர சக்திதான் காரணம். அந்தச் சங்கத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஏதோ தேவேந்திர பதவி கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்து கொண்டிருக்க, கோவர்த்தனன் மட்டும் இருக்கிற பதவியையும் இழந்து விட்டவர் போல் முகத்தைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
அந்தப் பக்கமாகப் போன ஒரு வழக்கறிஞரை அழைத்து, "என்ன மிஸ்டர் சேஷாசலம்! என்னமோ நாடகமாமே? நல்ல தங்காள் கதையா? அரிச்சந்திரன் வரலாறா?" என்று கேட்டார்.
"சே! அதெல்லாம் பழம் காலம்னா! இப்பல்லாம் சமூகக் கதைதான் எடுக்கும்" என்றார் சேஷாசலம்.
"ஓகோ! காதலித்த கமலாசினியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாத கதாநாயகன் ஒப்பாரி பாட்டுப் பாடியபடியே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகிறானா?" என்றார் ஏளனமாக, கோவர்த்தனன்.
மாஜிஸ்திரேட்டின் மனநிலையை அவரது பேச்சின் தோரணையிலிருந்து புரிந்து கொண்டுவிட்ட சேஷாசலம், அவர் போக்கிலேயே பேசி நல்ல பெயர் தட்டிக் கொள்ளப் பார்த்தார்.
"அப்படி ஏதாவது நவீனக் காதல் கதையாக இருந்தாலும் தேவலாமே. இவர்கள் காந்தி பக்தர்களோல்லியோ? அதனால் சமூக சேவை பற்றிய இலட்சிய நாடகம் போடுகிறார்கள்."
"பலே, பலே! சமூக சேவையா? விதவைகளுக்கெல்லாம் பொட்டு வைத்து விபசாரிகளுக்கெல்லாம் பூச்சுட்டி அழகு பார்க்கப் போகிறானா கல்யாணம்?"
"ஹூம்! அப்படி ஏதாவது இருந்தாலும் தேவலாம். நாடகத்தைப் பார்க்க அருவருப்பாயிராது. இங்கே ஆளுக்கொரு துடைப்பக் கட்டையைத் தூக்கிக் கொண்டு கூத்தடிக்கிறா!"
"அதென்ன கண்ணறாவி?"
"ராமப்பட்டணம் போன்ற ஒரு சிறு பட்டணத்தில் படித்த வாலிபர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் வேலை நேரம் போகப் பாக்கியை வெட்டிப் பொழுதாய்ப் போக்குகிறார்கள். சீட்டாட்டம், சில்லறைப் பேச்சு. இந்தச் சமயம் கல்கத்தாவிலிருந்து ஒரு பெண் வருகிறாள். அந்த பட்டணத்தில் குடியேறுகிறாள். அவள் மாலை நேரத்தில் ஊரில் உள்ள ஏழைக் குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு படிப்பு, பாட்டு, டான்ஸ், தையல் வேலை என்று சொல்லித் தருகிறாள். இதைப் பார்த்த அந்த ஊர் வாலிபர்களிடம் மனமாற்றம் உண்டாகிறது. அவர்களும் உபயோகமாக ஏதும் செய்ய நினைக்கிறார்கள். ஊர் சுத்தமாகிறது. குளம் ஒன்று வெட்டியாகிறது. சேரிக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடம் ஒன்று கட்டுகிறார்கள்..."
"இது என்ன பிதற்றல்? வாழ்க்கைக்கு ஒத்து வராத கதை?"
"வாழ்க்கையில்தான் சமூக சேவை என்றால் உடம்பு வணங்கவில்லை. நாடகத்திலாவது செய்து பார்த்து விடுவோமே என்பதால் இருக்கும்!" என்று கூறி சேஷாசலம் பெரிதாகச் சிரித்தார்.
ஒரு போடு!" என்று கூறியபடி கோவர்த்தன்னன் அவர் முதுகில் ஒரு போடு போட்டதும் அவருக்கு அந்தக் கடும் வெய்யிலிலும் உச்சி குளிர்ந்து விட்டது.
அன்று மாலை பவானி ஒத்திகை முடித்து புறப்பட்டபோது, டென்னிஸ் மட்டையை விர்ரென்று சுற்றிக் கொண்டு அவளெதிரே நின்றார் கோவர்த்தனன். "என்ன ஒத்திகை ஒரு வழியாக முடிந்ததா? ஒரு ஸெட் ஆடுவோமா?"
"இல்லை ஸார், ரொம்ப 'டயர்ட்'" என்று கூறியபடியே பவானி கைக்குட்டையால் முகத்தை ஒற்றிக் கொண்டாள். "நாளைக் காலை வேணுமானால் சந்திப்போம்."
"ஆல்ரைட்" என்றார் கோவர்த்தனன். "சீக்கிரம் வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக்கொள். கார் தயாராக இருக்கிறது. போவோமா?"
"வேண்டாம். வேண்டாம். எனக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கிளம்புவானேன்? இருந்து டென்னிஸ் ஆடிவிட்டு வாருங்கள். கல்யாணாம் என்னைப் போகும் வழியில் வீட்டில் இறக்கி விடுவார்" என்றாள் பவானி.
கோவர்த்தனன் தாம் ஆட விரும்பவில்லை என்று கூற முடியாதவராக அவ்விருவரும் இணை சேர்ந்து நடப்பதைப் பார்த்துச் சீற்றப் பெருமூச்சு விட்டபடி நின்றார்.
காரில் போகும்போது, "சுத்த ஃபிராட்" என்றான் கல்யாணம்.
"யாரை இத்தனை நல்ல வார்த்தை கூறி வாழ்த்துகிறீர்கள்?" என்றாள் பவானி.
"எல்லாம் இந்த மாஜிஸ்திரேட்டைத்தான்."
"ஏன், அவருக்கென்ன? மிஸ்டர் கல்யாணம், நீங்கள் அவரை மதிக்காவிட்டாலும் அவர் பதவிக்கு மதிப்புத்தர மறுக்கக்கூடாது" என்றாள் பவானி.
"சரி, உன்னதமான, மதிப்புக்குரிய, அரிய பெரிய, உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஃப்ராட் கோவர்த்தனன்! - போதுமா?"
பவானி சிரித்தாள். "என்ன கோபம் அவர்மீது உங்களுக்கு?"
"சொன்னால் நம்புவது கூடக் கஷ்டமாயிருக்கும். ஆனால் நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அந்த மனுஷன் உங்களை விலைக்கு வாங்கி விட்டதாகவே நினைக்கிறார். அவருடன் மட்டும் தான் நீங்கள் பேசிப் பழக லாம், விளையாடலாம். வேறு யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணுகிறார். உங்களை நாடகத்தில் கதாநாயகியாகப் போட்டதற்காக என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டவே செய்தார்!"
"இஸ் இட்? நிஜமாகவா?"
"ஆமாம். ஆனால் நான் அதை லட்சியம் பண்ணவே இல்லை. அவருக்குப் பயப்படவும் இல்லை. அவர் அதிகாரம் எல்லாம் கோர்ட் வரைதான். வெளியே வந்தால் அவர் மாஜிஸ்திரேட் இல்லை. கோவர்த்தனன்."
"அதெல்லாம் சரி. ஒப்புக் கொள்கிறேன். என்றாலும் அவர் என்னிடம் ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறீர்களே! அதுவும் உங்களுடன் நான் நெருங்கிப் பழகினால் பொறாமைப்படும் அளவுக்கு! ஐ ஆம் த்ரில்ட்!"
அவள் சிலிர்ப்பு அவன் சினத்தைத் தூண்டியது. "வண்டியைத் திருப்பட்டுமா?" என்றான் கல்யாணம் கோபமாக.
"எதற்கு?"
"பாவம்! அவருடன் டென்னிஸ் ஆடாமல் வந்து விட்டீர்களே!"
"ஆமாம், பாவம்!" என்றாள் பவானி. கூடவே, "பரவாயில்லை. இன்றைய ஏமாற்றத்தின் நினைவோடு நாளை விளையாடும் போது அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்" என்றாள்.
கல்யாணம் பொங்கிய கோபத்தைக் கார் மீது காட்டினான். அது தன் சக்தியை யெல்லாம் திரட்டிக் கொண்டு அதிகபட்ச வேகத்தில் பாய்ந்தது.
"மெதுவாக ஓட்டுங்கள், குப்பைத் தொட்டியைக் கண்டால் உங்கள் காருக்குக் காதல் பிறந்து விடுகிறது" என்று பவானி கூறியதை அவன் காதில் விழுந்ததாகக் காட்டிக் கொள்ளவே யில்லை.
-------------------------
அத்தியாயம் 12 -- யாரை நம்புவது?
பவானியை அவள் வீட்டில் இறக்கிவிட்ட கல்யாணம், நேரே தன் இல்லத்துக்குத் திரும்ப மனம் இல்லாமல் மாசிலாமணி குடும்பம் இறங்கியிருந்த ஜாகைக்குப் போனான்.
ரங்கநாத முதலியாரின் அந்தப் பழைய வீட்டில் கமலா சுவரில் ஆணி அடிக்க முயன்று கொண்டிருந்தாள். விசுவம் சில படங்களை வைத்துக் கொண்டு நின்றான்.
கல்யாணத்தைப் பார்த்ததும் சற்று பயந்து போன விசு, "பாருங்கள் மாமா! ஆணி அடிக்கக் கூடாது என்று இந்த வீட்டுக்காரர் சொன்னாரில்லையா? அக்கா கேட்ககே மாட்டேனென்கிறாள்" என்றான்.
"ஒன்றிரண்டு ஆணிகள் அடித்தால் பாதகமில்லை. அவர் வந்து கேட்டால் என்பேரில்பழியைப் போடு. நான் தான் ஆணி அடித்ததாகச் சொல்லிவிடு.
"பொய்யா சொல்லச் சொல்கிறீர்கள்?"
"வேண்டாம். அதையே நிஜமாக்கிவிட்டால் போச்சு" என்றான் கல்யாணம்.
"நல்ல காரியம். நீங்களே ஆணி அடித்து விடுங்கள். அக்கா அப்பவே பிடித்து ஆணி அடிக்கிறாள், அடிக்கிறாள், இன்னும் ஒரு ஆணி கூட அடித்தபாடில்லை."
"இங்கே வா, உன் முதுகிலே நாலு அடி அடிக்கிறேன்" என்றால் கமலா.
கல்யாணம் அவளிடமிருந்து சுத்தியையும் ஆணிகளையும் வாங்கிக் கொண்டான். "உன்னால் முடியாது, நான் அடித்துத் தருகிறேன்" என்றான். ஸ்டூல் மீது ஏறி, "இதோ பார்த் தீர்களா? இப்படிப் பிடித்துக் கொண்டு இப்படி அடிக்க வேண்டும்" என்று கூறிய படியே அடிக்க ஆரம்பித்தான்.
பிறகு ஒவ்வொரு முறை அடிக்கும்போதும், 'இது மாஜிஸ்திரேட் பதவிக்கு விழும் அடி, இது அவருடைய மேனாட்டு மோகத்துக்கு விழும் அடி, இது அவர் பொறாமை மீது விழும் அடி. இது அவர் காதல் மேல் விழும் அடி' என்று மனசுக்குள் கூறிக் கொண்டே போடு போடென்று போட்டான். கடைசியில், 'இது அவர் தலைமீதே விழும் பலத்த அடி' என்று எண்ணியவாரு சுத்தியை வீசியபோது அது ஆணியைத் தாக்காமல், அவன் விரலை நன்றாகப் பதம் பார்த்து விட்டது.
கல்யாணம், 'ஆ' வென்று அலறியபடி கையை உதறினான்.
"ஐயோ! விரலில் ரத்தம்" என்றான் விசு. கல்யாணம் பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொன்டு "பாதகமில்லை, வீடு போய்ச் சேர்ந்து மருந்து போட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒரு வெள்ளைத் துணி இருந்தால் தண்ணீரில் நனைத்துக் கட்டலாம்" என்றான்.
கதிகலங்கிப் பிரமித்துப் போய் நின்ற கமலா சுய நினைவு பெற்றவளாக நடுங்கும் குரலில் "இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறி ஓடிச் சென்று தனக்குப் பிடித்தமான பூப்போட்ட கைக்குட்டை ஒன்றை நனைத்து எடுத்து வந்தாள்.
"இங்கே கொடுங்கள். நானே கட்டிக் கொள்கிறேன்" என்றான் கல்யாணம்.
"இல்லை. ஒற்றைக் கையால் கட்டிக் கொள்ள வராது. நானே கட்டி விடுகிறேன்"என்றால் கமலா.
அவள் கட்டுப் போட்ட போது தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள். கல்யாணமும் பரிவு மேலோங்க அவளைக் குனிந்து நோக்கினான்.
அந்தக் கண்களை அதிக நேரம் உரையாட அனுமதியாமல், விசுவம், "அழகாய்த்தானிருக்கிறது. காயம் பட்டது இடது கை, அக்கா வலது கையைப் பிடித்துக் கொண்டு கட்டுப் போடுகிறாளே" என்றான்.
"அடேடே! நான் கூட கவனிக்கவில்லை" என்றான் கல்யாணம்.
கமலா வெட்கமடைந்து நாணியவளாக அதே சமயம் இன்னொரு கரத்தையும் பற்ற வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ந்தவளாக, நிஜமாகவே காயம் பட்டிருந்த இடத்தில் கட்டுப் போட்டாள்.
இதையெல்லாம் அவள் பெற்றோர் சமையலறைக் கதவு ஓரமாக நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
மாசிலாமணி கனைத்துக் கொண்டே வந்து, "அடடா, மாப்பிள்ளை கையிலே என்ன?"என்றார், ஒன்றும் அறியாதவர் போல.
"அதற்குள் அவரை மாப்பிள்ளையாக்கி விட்டீர்களா? நன்றா யிருக்கிறதே" என்றாள்காமாட்சி அம்மாள்.
"அடேடே தவறிச் சொல்லி விட்டேன்."
"பரவாயில்லை. நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா?" என்றான் கல்யாணம்.
"அதற்கில்லை தம்பி; இந்தப் பெண்ணுக்கோ கல்யாண வயதாகி விட்டது. இந்தக் காலத்தில் பெண்களை அதிக நாட்கள் கல்யாணம் இல்லாமல் வைத்துக் கொள்ளக் கூடாது. இந்த வருஷமே எப்படியும் கல்யாணம் செய்துவிட நினைத்தோம். அதற்குள் இந்தப் பாழும் ஜப்பான் யுத்தம் வந்து எங்களை ஊரை விட்டே கிளப்பி விட்டது."
"அதனால் என்ன? கமலாவுக்கு மாப்பிள்ளை அகப்படுவதுதானா கஷ்டம்? அவளுடைய குணத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும்...."
"அழகுக்கும்" என்று விசு எடுத்துக் கொடுத்தான். கல்யாணம் தொடர்ந்து: ".....எத்தனையோ பேர் நான் நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். உங்களுக்குக் கவலையே வேண்டாம். கமலாவுக்கு நல்ல வரனாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பது என் பொறுப்பு."
கமலா அவனைப் பார்த்த பார்வையில் கோபம் மேலோங்கி யிருந்ததா? துயரம் பொங்கி வந்ததா என்று கூற முடியாது. ஆனால் ஓரிரு கணங்களே நீடித்த அந்தப் பார்வை கல்யாணத்தின் அந்தராத்மாவையே ஊடுருவி ஒரு குலுக்குக் குலுக்கி விட்டதென்னவோ உண்மை. அவள் 'விருட்'டென்று திரும்பி உள்ளே சென்றாள்.
"கல்யாணப் பேச்செடுத்தாலே இந்தப் பெண்ணுக்கு ஒரே சங்கோஜம்" என்று காமாட்சி கூறியது கல்யாணத்துக்கு ஏதோ கனவில் கேட்பது போலிருந்தது.
மறுநாள் காலை பவானி டென்னிஸ் உடையில் மாஜிஸ்திரேட்டைச் சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாள். "என்ன சரித்திரக் கதைகளில் வருகிற கதாநாயகன் மாதிரி எனக்காக வாளேந்திப் போரிடவே ஆரம்பித்து விட்டீர்களாமே?" என்றாள்.
"என்ன சொல்கிறாய் நீ?" என்று கோவர்த்தனன் ஒன்றும் தெரியாதவர் போல் வினவினார்.
கல்யாணம் கூறியதை யெல்லாம் பவானி விவரித்ததும், "அடப் பாவமே! அந்தத் தறுதலை அப்படியா சொன்னான்? பெரிய கில்லாடி தான்!" என்றார்.
"சே! அவரை அப்படி யெல்லாம் ஏசாதீர்கள்" என்றாள் பவானி.
"பின்னே கதையை அப்படியே தலை கீழாக மாற்றிவிட்டால் என்ன அர்த்தம்? பவானி! அவன் நேற்று மாலை என்னிடம் வந்து என்ன சொன்னான் தெரியுமா? நீ தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாய் என்றால் சொல்கிறேன்."
"பாதகமில்லை சொல்லுங்கள்."
"அவனுக்கு உன்மீது காதலாம். ஆனால் நீயோ என்மீது உயிரையே வைத்திருக்கிறாயாம். அதனால் அவனை லட்சியம் பண்ணவே மாட்டேன் என்கிறாயாம். ஆக, அவன் கண்களுக்கு நான் பெரிய வில்லனாகக் காட்சியளிக்கிறேன்!"
"அழகுதான்!" என்று கூறிச் சிரித்தாள் பவானி. "அப்புறம்?"
"இவன் அப்பாவுக்கு இங்கே பக்கத்தில் உள்ள ஏலமலையில் ஹிமகிரி எஸ்டேட் என்று இருக்கிறது. அங்கே வேலை செய்கிற ஆட்களை விட்டு என் கையைக் காலை முறித்துப் போட்டு விடப் போவதாக மிரட்டினான்!"
"ஐயைய்யோ!"
"எனவேதான் கத்தியை உருவிக் காட்டியும், துப்பாக்கி லைசென்ஸ்கூட இருப்பதாகக் கூறியும் அவனை நான் பயமுறுத்தி வைக்க வேண்டியதாயிற்று" என்றார் கோவர்த்தனன்.
"சேச்சே! அவ்வளவு மோசமானவரா கல்யாணம்? பார்த்தால் சாது போல் இருக்கிறாரே?"
"அவன் வெறும் பயந்தாங்குளிதான்... ஆனால் பணத் திமிர் படைத்தவன். காசை விட்டெறிந்தால் அடியாட்கள் பக்க பலமாக நிற்பார்கள் என்ற தைரியம்" என்றார் கோவர்த்தனன்.
பவானி அங்கு வந்தபோது அவளுக்கிருந்த உற்சாகம் இதற்குள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது. மிகச் சுலபமாக அவள் டென்னிஸில் கோவர்த்தனனிடம் தோற்றுப் போனாள்.
(தொடரும்)
----------------
அத்தியாயம் 13 -- மலைப் பாதை
ராமப்பட்டணத்திலிருந்து ஏல மலையின் உச்சி இருபது மைல் தூரம் தான். மொத்தம் மூவாயிரத்து ஐந்நூறு அடி உயரம் தான். ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியாரின் ஹிமகிரி காப்பி எஸ்டேட் இன்னும் கிட்டத்திலேயே மூவாயிரத்து இருநூறு அடி உயரத்தில் அமைந்திருந்தது. அந்த எஸ்டேட்டை நோக்கிக் கல்யாணம் உற்சாகமாகக் காரோட்டிப் போய்க் கொண்டிருந்தான்.
சாலையின் இருபுறமும் காப்பிச் செடிகளில் வேணி தொடுத்தாற் போல் வெண்மை நிறத்தில் காப்பிப் பூக்கள் மலர்ந்திருந்தன. காலைச் சூரியனின் ஒளியில் வெள்ளித் தகடுகளாக ஸில்வர் ஓக் மரங்களின் இலைகள் தகதகத்து மலையமாருதத்தில் சலசலத்தன. அவை காப்பிச் செடிகளுக்கு நிழல் கொடுத்தன. ஆனால் குடை விரிந்தாற்போன்று சூரிய ஒளியை மறைத்து விடாமல் தேவையான அளவில் வடிகட்டிக் கொடுத்தன. இப்படி ஒரு தாயின் பரிவுடன் காப்பிச் செடிகளைக் கவனித்துக் கொள்ளும் பணியைக் காப்பித் தோட்டங்களின் இதர சில பகுதிகளில் ஆரஞ்சு, பேரி, கொய்யா போன்ற வேறு சில மரங்கள் செய்து பழங்களும் ஈந்து கொண்டிருந்தன. உயரமான மரங்களில் உருவாகியிருந்த தேன் கூடுகளின் மணமும் பல்வேறு மலர்களின் நறுமணங்களும் பட்சி ஜாலங்களின் இனிய கானங்களும் காற்றில் கலந்து வந்து மலை வாசஸ்தலம் உடலுக்குத் தந்த குளுகுளுப்புடன் மனத்துக்குக் கிளுகிளுப்பையும் ஊட்டின.
கல்யாணம் அடிக்கடி பார்த்துப் பழகிய காட்சிகள்தாம் இவை என்றாலும் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் புதுப்புது குதூகல உணர்வுகளை அவன் அடைவது வழக்கம். இன்றோ இந்த எழிலையெல்லாம் தன்னுடன் சேர்ந்து பவானியும் அனுபவிக்கிறாள் என்ற எண்ணமானது அவனை எங்கோ சொர்க்க வானில் உயரே உயரே கொண்டு சென்றது! அந்த அளப்பரிய ஆனந்தத்தைக் காரின் பின் ஸீட்டில் பவானியின் மாமா குணசேகரன் உட்கார்ந்திருக்கிறார் என்ற நினைப்பு கூடக் குறைத்துவிடவில்லை.
குணசேகரன், "பவானி! இத்தனை வருஷமா நான் ராமப் பட்டணத்தில்தானே இருக்கேன். இவ்வளவு அழகான மலைகளும் நந்தவனங்களும் இங்கே இருப்பதை அறியாமலேயே காலத்தை ஓட்டியிருக்கிறேன்! கல்கத்தாவிலிருந்து நீ வந்து அழைத்துப் போய்க் காட்டுகிறாய்! நல்ல வேடிக்கை" என்றார்.
"ஆமாம், சென்னையிலேயே இருப்பவர்கள் மகாபலிபுரம் போயிருக்க மாட்டார்கள்; ஏன், லைட் ஹவுஸ்கூட ஏறியிருக்க மாட்டார்கள்" என்றான் கல்யாணம்.
"நான் அப்படியில்லை; எல்லா இடங்களையும் பார்க்க ஆசைப்படுவேன். சந்தர்ப்பம் கிடைக்கா விட்டால் ஏற்படுத்திக் கொள்ளவாவது செய்வேன்" என்றாள் பவானி.
இந்தப் பயணத்தைக்கூட மேற்கொள்ள அவள் தானாகவேதான் முயற்சி எடுத்துக் கொண்டாள். மாஜிஸ்திரேட் கோவர்த்தனன், 'ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணனுக்கு ஏலமலையில் எஸ்டேட் உண்டு. அங்கிருந்து சில குண்டர்களை அனுப்பி என்னைத் தாக்கப் போவதாகக் கல்யாணம் மிரட்டினான்' என்று சொன்னதிலிருந்து இங்கே மலை ஏறிப் பார்த்துவிட அவள் ஆவலா யிருந்தாள். அதோடு மாஜிஸ்திரேட்டின் குற்றச்சாட்டைச் சற்று ஆராய்ந்து பார்த்து வரும் எண்ணமும் ஏற்பட்டிருந்தது.
எனவே இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு சமயம் கல்யாணம் வழக்கம்போல் அவளுக்குத் தன் காரில் லிஃப்ட் தருவதாகக் கூறியபோது, அவள் இனியும் ஆவலை அடக்க முடியாதவளாக, "நான் உங்கள் காரில் இன்று முதல் ஏறப் போவதில்லை; உங்கள் மேல் எனக்குக் கோபம்" என்று பேச்சை ஆரம்பித்தாள்.
"அடடா! நான் என்ன தப்பு பண்ணி விட்டேன்?" என்றான் கல்யாணம்.
"உங்களுக்கு இங்கே ஏலமலையில் எஸ்டேட் இருப்பதாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்றாள் பவானி.
"சொல்லிக் கொண்டிருப்பார்களா? அழைத்துப் போக வேண்டும். கோடை விடுமுறையில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று எங்கள் குடும்பம் அங்கே போய்த் தங்குவதுண்டு. ஆனால் இந்தத் தடவை அப்பா அம்மாவை மட்டும் அனுப்பி விட்டு நான் இங்கேயே இருக்கத் தீர்மானித்துவிட்டேன்."
"ஏன்? நாடக ஒத்திகை, சமூக சேவை எல்லாம் தடைப்படுமே என்றா?"
"அப்படி யொன்றும் இல்லை. ராமப் பட்டணமே மலை வாசஸ்தலம் போல் குளிர்ந்து காணப்படுகிறது எனக்கு. நீங்கள் இங்கு குடியேறிய பிறகு!"
"அழகுதான், எனக்கு மலைச் சாரல்களையெல்லாம் பார்க்க ரொம்பப் பிடிக்கும். உங்கள் பெற்றோர் எப்போது புறப்படுகிறார்கள், சொல்லுங்கள். அவர்களுடன் நான் போகிறேன்; நீங்கள் வேணுமானால் இங்கேயே இருந்து சமூகப் பணிகளைச் சிரத்தையாகக் கவனித்துக்கொண்டிருங்கள்!"
"சரி, அப்படியே செய்வோம்! அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டியாகி விட்டது. இப்போது காரில் ஏறலாம் அல்லவா?" என்றான் கல்யாணம்.
பவானி சிரித்துக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள். "நானும் சீக்கிரத்தில் ஒரு கார் வாங்கப் போகிறேன்" என்றாள்.
"போச்சுடா! உங்களுக்கு அவ்வப்போது ஒரு லிஃப்ட் தருகிற திருப்தியாவது எனக்கு இருந்தது. அதற்கும் ஆபத்து வந்து விட்டதா?" என்றான் கல்யாணம்.
"நீங்கள் தாராள மனமுடையவராக இருப்பதால் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்ளலாமா நான்? கடைசியில் நான் காரில் ஏறுவதே பெரிய தொந்தரவாக நீங்கள் எண்ணும் காலம் வந்துவிடும்."
"நீங்கள் புதுக் கார் வாங்கின மறு நாளே இந்தக் கார் ரிப்பேராகிவிடும் பாருங்கள். அப்புறம் நான் உங்களிடம் அடிக்கடி லிஃப்ட் கேட்பேன். அப்போது என்ன பண்ணுவீர்கள்? இது ஏதடா பெரிய தொந்தரவாப் போச்சு என்று நினைப்பீர்களா?"
பவானி கலகல வென்று சிரித்தாள். "உங்கள் தகப்பனார் இந்த வட்டாரத்திலேயே பெரிய வழக்கறிஞர் என்று பெயர் வாங்கியதில் அதிசயமில்லை. நீங்களே இந்தப் போடுபோடும்போது அவர் எதிர்த்தரப்பு வக்கில்களை என்ன பாடு படுத்துவார் என்று ஊகிக்க முடிகிறது."
"அப்பா, இப்போதெல்லாம் கேஸ்களை ரொம்பக் குறைத்துக் கொண்டுவிட்டார். எஸ்டேட் விவகாரம் எல்லாம் கூட என் தலையில் கட்டிவிட்டார். மாசத்தில் இரண்டு மூன்று தடவையாவது மலை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். அடுத்த முறை நான் போகும்போது நீங்களும் வரலாமே?"
"ஆகட்டும், மாமாவைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" என்றாள் பவானி.
"அவரையும் அழைத்து வாருங்கள். அவருக்கும் ஒரு மாறுதல் வேண்டாமா?"
இந்த உரையாடலின் விளைவுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை நாடக ஒத்திகையை ஒத்திப் போட்டுவிட்டு அவர்கள் கிளம்பி யிருந்தார்கள். கல்யாணம் ஒரே குஷியான மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் காருக்கு அது பிடிக்கவில்லை. அவன் கவனம் முழுவதும் தன்னிடமே திருப்பப்பட வேண்டும்; பவானிக்கு அதில் பங்கு சேரக் கூடாது என்று கருதியது போல் அது 'மக்கர்' செய்து நின்று விட்டது. காரின் முன்புறமிருந்து குபுகுபு என்று ஆவி அடித்தது.
"பார்த்தீர்களா? இதற்குத்தான் நான் புதுக் கார் வாங்குகிறேன் என்றேன். பாதி தூரமாவது வந்திருப்போமா?"
"முக்கால் திட்டத்துக்கு மேலேயே வந்தாகிவிட்டது. இங்கேயே இருங்கள். ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்ற கல்யாணம் தொலைவில் தெரிந்த சில பண்ணை யாட்களின் குடிசைகளை நோக்கி நடந்தான் தண்ணீர் பெற்று வர.
பவானி காரைவிட்டு இறங்கினாள். காலாற நடந்தாள். அவள் கரத்தில் ஒரு பைனாகுலர் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு மரத்தின் நிழலில் சாலை ஓரமாக நின்று பைனாகுலர் வழியே சுற்று வட்டாரத்தை நோட்டம் விட்டாள்.
"ரொம்ப ஓரமாகப் போகாதே அம்மா! கிடுகிடு பள்ளம்!" என்று காரினுள்ளேயிருந்து மாமா குணசேகரன் குரல் கொடுத்தார்.
"ஜாக்கிரதையாக இருக்கிறேன், மாமா!" என்று கூறிய பவானி பைனாகுலர் வழியே தொலைவில் பட்சிகள், மிருகங்கள் ஏதும் தெரிகின்றனவா என்று பார்த்தாள்.
அவ்விதம் நோக்கியபோது அவள் திகைப்பும் வியப்பும் அளிப்பதான ஒரு காட்சியைக் கண்டாள்.
கீழே வெகு தூரத்தில் ஒரு மொட்டைப் பாறை மேல் பெண் ஒருத்தி நிற்பது தெரிந்தது. அவள் புடவைத் தலைப்பை நெஞ்சோடுகொணர்ந்து பின்னால் தொங்கவிடாமல் இடக் கரத்தால் ஒரு முனையை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். மலைக்காற்றில் அந்தத் தலைப்பு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
பவானி வைத்த கண் வாங்காமல் அவளைச் சற்று நேரம் பார்த்தாள். அவள் ஆத்மப் பிரதட்சணம் செய்வது போல் மெல்லத் திரும்பி நாலாபுறமும் பார்வையைச் செலுத்துவதைக் கண்டாள்.
ஏதோ கிட்டாத விடுதலைக்காக அவள் ஏங்குவது போலவும் அங்கே வந்து நின்று போலியான ஒரு சுதந்திரத்தைச் சற்று நேரம் அனுபவித்துவிட்டுத் திரும்ப எண்ணுவது போலும் பவானிக்குத் தோன்றியது. அப்படி சுதந்திரப் பறவையாயத் தன்னைச் சற்று நேரம் பாவித்துக் கொண்டு தாற்காலிக மன ஆறுதலையேனும் அடைய எண்ணும் அந்தப் பெண் யார்? பைனாகுலர் வழியாகப் பார்த்தாலும்கூட இத்தனை தூரத்திலிருந்து இன்னார் என்று இனம் கண்டு கொள்வது கஷ்டம். 'ஆயினும்.....அவள்........ஒரு வேளை கமலாவாக இருக்கலாமோ? என்று பவானிக்குத் தோன்றியது.
உடனேயே அப்படி இராது என்றும் நினைத்தாள். 'கமலா தன்னந் தனியாக இப்படிக் கிளம்பி வருவாளா?.....ஏன் வர முடியாது? பஸ் ஏறி மலைப் பாதையில் சற்றுத் தூரம் வந்த பிறகு இறங்கிக் கொண்டிருக்கலாம் இல்லையா? ஆனால் பார்க்கப் பழக அவள் அத்தனை கட்டுப்பெட்டியாக இருக்கிறாளே.....? இருந்தாலென்ன? அப்படிப் பட்டவர்கள்தான் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளுகிற நெஞ்சழுத்தம் உள்ளவர்களாகவும் விளங்குவார்கள். யாரும் எதிர் பார்க்க முடியாத காரியங்களைத் திடும்மென்று செய்து வைப்பார்கள்....... சேச்சே, இது கமலாவாக இருக்க முடியாது.......ஆனால் இல்லை......ஏன், கீழே திரும்பவும் இறங்கிச் சென்றதும் அவளையே கேட்டுவிட்டால் போகிறது. அவளிடம் பேசி அவள் மனத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும்.'
பவானி பார்த்துக் கொண்டே இருக்கையில் அந்தப் பெண் நாலு பாறைகளை நாலு எட்டில் தாண்டி மலைப் பாதையை அடைந்தாள். பஸ் வரும் சத்தம் அவள் காதில் விழுந்திருக்க வேண்டும். ஒரு வளைவில் திரும்பி இப்போது கண்ணுக்குப் புலப்பட்ட பஸ்ஸை நிறுத்தி அவள் ஏறிக் கொண்டாள். சற்று நேரத்தில் பஸ் பவானியின் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.
---------------------
அத்தியாயம் 14 -- ஹிமகிரி எஸ்டேட்
ஏலமலையில் கோபாலகிருஷ்ண முதலியாரின் எஸ்டேட் பங்களா மிகவும் வசதியாக இருந்தது. சாப்பாட்டுக் கூடம் தவிர, இரண்டு மூன்று பெரிய அறைகள், பங்களாவைச் சுற்றிப் பெரிய தோட்டம் எல்லாம் இருந்தன.
கையோடு டிபன் காரியரில் கொண்டு வந்திருந்த இட்டிலி தோசைகளையெல்லாம் ஒரு கை பார்த்து விட்டுக் குணசேகரன் கட்டிலில் கட்டையைக் கிடத்திக் குறட்டைவிடத் தொடங்கி விட்டார். உண்ட மயக்கம்.
கல்யாணம் எஸ்டேட் விவகாரங்களில் மூழ்கி மேஸ்திரிகள் மூன்று நான்கு பேர்களை விசாரிப்பதும் கட்டளைகள் இடுவதும் கணக்குப் பார்ப்பதும் பணத்தை எண்ணுவதுமாக இருந்தான்.
பவானி தோட்டத்தில் மெள்ள வளைய வந்தாள். அதில் ஒரு பக்கமாகக் கல்யாணத்தின் 'டப்பா' கார் நின்றது. 'இது இத்தனை உயரம் ஏறி வந்ததே அதிசயம்தான்' என்று எண்ணினாள் பவானி. 'இவ்வளவு பெரிய எஸ்டேட்டுக்கும் பங்களாவுக்கும் சொந்தம் கொண்டாடுகிற செல்வந்தர்கள் அந்தப் பழைய மாடல் காரை விற்க மனமின்றி வைத்திருப்பது விசித்திரம் தான். உயிரற்ற பொருள்களிடம் கூட நாளடைவில் சில சமயம் பாசம் வளர்ந்து விடும் போலும். ஜடப் பொருள்களிடம் கூட அன்பு செலுத் தும் கல்யாணமா அடியாட்கள் அனுப்பிக் கையைக் காலை முறித்துவிடுவதாக மாஜிஸ்டிரேட் கோவர்த்தனனை மிரட்டி யிருப்பார்? நம்பவே முடியவில்லையே! என்றாலும் காதல் கீதல் என்று அசட்டுத்தனமாக ஏதாவது எண்ணிக் கொண்டால் சில அபத்தக் காரியங்களையும் அதன் விளைவாகச் செய்யலாம்தான். யோசித்தபடியே நடந்து தோட்டத்தைக் கடந்து பிரதான சாலைக்கு வந்துவிட்ட பவானி திரும்பிப் பங்களாவை நோக்கினாள். கல்யாணம் காரியங்களை முடித்துக் கொண்டுபடி இறங்கித் தன்னை இங்குமங்கும் திரும்பித் தேடுவதைக் கண்டாள். அவன் பார்வையில் படுமாறு நின்று கரம் அசைத்தாள். பங்களா வாசலில் நின்ற காரைத் தட்டிக் கொடுத்துவிட்டு அவன் இவளை நோக்கி நடந்தான். எப்படியோ இரண்டு மூன்று தடவை குளிர்ந்த நீரைக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்ட அது, கடமை முடிந்த திருப்தியுடன் நிற்பதாகத் தோன்றியது.
"என்ன யோசனை? இங்கு வந்து நிற்கிறீர்கள்?" என்றான் கல்யாணம் நெருங்கி வந்து.
"உங்களைக் கணவனாக அடையப் போகிறவள் பாக்கியசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் பழைய காரிடம் இத்தனை அன்பு செலுத்துகிறவர் மனைவியை எவ்வளவு பிரியமாக நடத்துவீர்கள்?"
"மனைவி பழகிப் பழசான பிறகு அவளிடம் எனக்கு அன்பு பெருக்கெடுக்கும் என்கிறீர்களா? அல்லது ஒரு கிழவியைப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள் என்கிறீர்களா?"
"இரண்டுமில்லை. இத்தனை பெரிய எஸ்டேட்டை நன்றாகக் கட்டி ஆளக் கூடிய திறன் படைத்தவளாகத் தேடிப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்கிறேன்.
"எஸ்டேட்டுக்கு எஜமானியாவதா முக்கியம்? கணவனின் மனத்தை அன்பினால் ஆளும் சாமர்த்தியமுள்ளவளாக இருப்பதல்லவா விசேஷம்?"
"ஆளுநரையே ஆள்வதற்கு அபாரத் திறமை வேண்டும். நீங்கள் கலகலப்பாகப் பேசும்போதே காரியவாதியாகவும் இருக்கிறீர்கள். இங்கே வந்ததும் வராததுமாக எஸ்டேட் விவகாரங்களில் இறங்கி விட்டீர்களே!"
"இல்லாதபோனால் இங்கே சில ஆசாமிகள் நம்மையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள். எஸ்டேட்டில் வேலை செய்பவர்களில் நல்ல மாதிரியானவர்களும் உண்டு. பொல்லாதவர்களும் உண்டு.
"பொல்லாதவர்களை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வேலைக்கு?"
"அப்படிப்பட்ட சிலரும் நிர்வாகத்துக்குத் தேவைதான். மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். ஒழுங்காக வேலை செய்வார்கள். ஆனால் அந்தக் குண்டர்களிடம் நாம் ஏமாந்து விடக் கூடாது. தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள்."
"குண்டர்கள் என்றால்....?"
"ஆயிரம் ரூபாய்க்காக ஆறு தலைகளைச் சீவிவிடக்கூடிய முரடர்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள்!"
"அப்படியானால் மாஜிஸ்டிரேட் சொன்னதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம் என்று சொல்லுங்கள்!"
"கோவர்த்தனனா? என்ன சொன்னார்?"
"'எஸ்டேட்டில் உள்ள ஆட்களை அனுப்பிக் கையைக் காலை முறித்துப் போட்டுவிடுவேன்' என்று அவரை மிரட்டினீர்களாமே?"
"அடப் பாவமே! அப்படியா சொன்னார்? பெரிய கஜப் போக்கிரியாக இருக்கிறாரே? இவனுக்கெல்லாம் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் வேறு தருகிறார்களே அதைச் சொல்லுங்கள்!"
"மிஸ்டர் கல்யாணம்! நீங்கள் கோவர்த்தனனையோ அவர் வகிக்கிற பதிவியையோ இளக்காரமாகப் பேசுவது தவறு. ஏற்கெனவே ஒரு தடவை உங்களை எச்சரித்திருக்கிறேன். அவரும் மனிதர்தாம். சில குறைகள் அவரிடமும் இருக்கலாம். ஆனால் அதனால் அவர் தம் பதவிப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற மாட்டார் என்று நினைப்பதற்கில்லை."
"நான் எதுவும் சொல்லவே வேண்டாம். கூடிய சீக்கிரம் அவர் சாயம் தானாக வெளுத்து விடும். அப்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்."
"நீங்கள் இருவருமே ஏதோ அசட்டுப் பொறாமைக்கு ஆளாகி ஒருவரை யொருவர் ஏசிக்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது."
"அவருக்கு என்மீது பொறாமையோ என்னவோ எனக்குத் தெரியாது. அதனால்தான் ஒருவேளை என்மீது வீண்பழிகள் சுமத்துகிறார் போலிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி நான் ஏற்கனவே உங்களிடம் கூறியது - அதாவது கத்தியைக் காட்டி விரட்டினார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதோடு வேறு ஒரு விஷயமும் எனக்கு இப்போது தெரிய வந்திருக்கிறது."
"ஆரம்பித்து விட்டீர்களா? புதிதாக ஒரு கதையை?"
"நீங்கள் நம்ப மாட்டீர்கள்; வேண்டுமென்றே நான் மீண்டும் வீண் பழி சுமத்துவதாகக் கருதுவீர்கள். அதனால் உங்களிடம் அது பற்றிப் பேசவே வேண்டாம் என்றுதான் சற்று முன்வரை கூட எண்ணினேன். ஆனால் இப்போது 'என்னிடம் உங்களுக்கு மதிப்புக் குறைந்து போனாலும் பாதகமில்லை; உங்களை அவரிடமிருந்து காப்பாற்றி எச்சரிக்க வேண்டியது என் கடமை' என்று தோன்றுகிறது. நான் ரேடியேட்டருக்குத் தண்ணீர் தேடி வழியில் தென்பட்ட ஒரு கிராமத்துக்குள் நுழைந்தேன் அல்லவா? அப்போது..."
"அப்போது...." பவானியால் ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
"அங்கே இரண்டு ஸி.ஐ.டி. க்கள் கிராம மக்களிடம் ஒரு ஃபோட்டோவைக் காட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிறையிலிருந்து தப்பியோடிய கைதியாம். இந்தப் பக்கம் வந்து தலைமறைவாய் இருக்கலாம் என்று சந்தேகப் படுகிறார்களாம்."
"அந்தப் ஃபோட்டோவை நீங்களும் பார்த்தீர்களா?"
"பார்த்தேன். அந்தப் படத்தில் இருந்தவன் ஏறத்தாழ நம் மாஜிஸ்டிரேட் போலவேதான் இருந்தான். கோவர்த்தனன் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளும் வேறு சில ஜாடை மாற்றங்களைச் செய்துகொண்டு மிருக்கிறார். ஆனால் நான் ஏமாறவில்லை. அந்தப் படத்தில் இருந்தது அவரேதான்!"
"இல்லை. இவ்வளவு நெருக்கத்தில் வந்துவிட்டார்கள்; அவர்களாகவே தெரிந்து கொண்டு விடுவார்கள் என்று எண்ணினேன். இன்னொரு காரணமும் உண்டு." "என்ன?"
"மாஜிஸ்திரேட் உங்கள் நண்பர். உங்கள் மதிப்பில் இன்னமும் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்பவர். எனவே உங்களையும் கலந்தாலோசித்துக் கொண்டு....."
"மிஸ்டர் கல்யாணம்! எனக்கு நீங்கள் பெரிய உபகாரம் செய்ய வேண்டும்" என்றாள் பவானி பரபரப்புடன்.
"சொல்லுங்கள், காத்திருக்கிறேன்" என்றான் கல்யாணம்.
"இந்த விஷயத்தை ஒரு ஜீவனிடமும் நீங்கள் பிரஸ்தாபிக்கக் கூடாது. கையடித்துச் சத்தியம் செய்வீர்களா?"
"உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் இதோ இப்போதே செய்கிறேன்" என்று கல்யாணம் அவள் வலக் கரத்தைத் தன் இடக் கையால் பற்றிப் பின்னர் தன் வலக்கரத்தையும் அவள் உள்ளங்கையோடு இணைத்தான். இணைத்த கரத்தை எடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. பவானிக்கு தன்னை விடுவித்துக் கொள்ளச் சக்தி இல்லை. "தாங்க்யூ மிஸ்டர் கல்யாணம், தாங்க்யூ" என்றபோது அவள் குரல் கரகரத்தது. உடல் துவண்டது.
(தொடரும்)
--------------------
அத்தியாயம் 15 -- பிரியா விடை!
பவானிக்குப் புதிதாகக் கார் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது. அவள் ஏற்கனவே கார் ஓட்டப் பழகி லைசென்ஸும் பெற்றிருந்தாளாதலால் அது வந்து சேர்ந்ததுமே எங்கேயாவது புறப்படத் தீர்மானித்தாள். எங்கே போவது என்று எண்ணிய மாத்திரத்தில் ஏலமலைப் பாதையில் மறுபடியும் உயரே ஏறிச் செல்ல வேண்டும் என்று தோன்றியது.
அந்த மலையில் ஆங்காங்கே உள்ள குக்கிராமங்களில் இன்னமும் சி.ஐ.டி.க்கள் வந்து விசாரிக்கிறார்களா? அவர்கள் தேடும் நபர் இன்னார் என்று கண்டுபிடித்து விட்டார்களா? தோல்வி அடைந்து திரும்பி விட்டார்களா? அல்லது ஒருவேளை தாங்கள் தேடும் நபர் மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் தான் என்று முடிவுக்கு வந்து அவரைக் கைது செய்யத் தயங்கி மேலிடத்து உத்தரவு பெறத் திரும்பி யிருக்கிறார்களா? இப்படியெல்லாம் பலவிதக் கேள்விகள் பவானியின் உள்ளத்தில் எழுந்தன. அவற்றுக்கு விடையை அந்தக் கிராமங்களில் விசாரித்தால் அறியலாம் எனவும் எண்ணினாள். பதில்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் அவளால் முடியவில்லை.
கல்யாணத்தையும் பின்னோடு அழைத்துச் சென்றால் நல்லது. பேச்சுத் துணையாக இருக்கும். ஆனால் கல்யாணம் ஹைகோர்ட்டில் நடந்து வந்த ஒரு வழக்கு விஷயமாக அவன் அப்பாவின் ஆணையை ஏற்றுச் சென்னை சென்றிருந்தான். புறப்படுவதற்கு முன் பவானியிடம் வந்து விடைபெற்றுக் கொண்ட காட்சியை இப்போது எண்ணினாலும் பவானிக்குச் சிரிப்பு வந்தது.
பிரிவாற்றாமையால் காதலி வருந்துவாளோ என்று கலங்கிய காதலன் போல, "கவலைப் படாதீர்கள், இரண்டே நாட்கள்தான். உடனே திரும்பி விடுவேன். உங்கள் நினைவாகவே இருப்பேன்" என்று அவன் திரும்பத் திரும்பக் கூறினான்.
பவானி, "எதற்கு இத்தனை சமாதானம் சொல்கிறீர்கள்? நான் உங்களைப் பிரிந்து தவித்து உருகிவிடப் போவதில்லை" என்றாள்.
கல்யாணத்துக்கு முகம் வாடிவிட்டது. "சேச்சே, நான் அதற்குச் சொல்லவில்லை. நாடக ஒத்திகையெல்லாம் தாமதமாகிறதே, அதை எண்ணித்தான் கவலைப் பட்டேன்" என்று சமாளித்தான்.
பவானிக்குப் பாவமாக இருந்தது. ஆறுதலாகப் பேசினாள். "பாதகமில்லை, நீங்கள் இல்லாவிட்டாலும் இருப்பதாகவே பாவித்து ஒத்திகைகளைச் சரியாக நடத்துகிறோம். அரங்கேற்றம் குறித்த நாளில் ஜாம் ஜாம் என்று நடக்கும். ஒரு குறையும் வராது."
"சரி. அப்போ நான் போய் வரட்டுமா? உம்... வருகிறேன்....சீக்கிரம் திரும்பிவிடுகிறேன்..... வரட்டுமா?" தயங்கித் தயங்கி நின்றான் கல்யாணம். லேசில் கிளம்ப மாட்டான் போலிருந்தது.
"சென்று வாருங்கள்! வென்று திரும்புங்கள். வெற்றித் திலகமாக நெற்றித் திலகமிட்டு அனுப்பி வைக்கட்டுமா?" என்றாள் பவானி நாடக பாணியில். டயலாக் குக்கு ஏற்ப நடிக்கவும் செய்தாள் வேடிக்கையாக.
கல்யாணத்துக்குச் சற்று முன் ஏற்பட்ட தாபம் தீர்ந்து உச்சி குளிர்ந்து விட்டது. "சாமானிய கேஸ் இல்லை இது. பெறப் போவது மாபெரும் வெற்றி. உங்கள் வாழ்த்து என் நெஞ்சுடன் இருக்குமாதலால் நான் வெல்வதும் உறுதி" என்று உற்சாகமாகக் கூறிச் சென்றான்.
அதையெல்லாம் இப்போது நினைத்துச் சிரித்துக் கொண்டாள் பவானி. 'கல்யாணம்தான் ஊரில் இல்லை. அவர் அப்பாவையாவது பார்த்து வைத்தால் என்ன?' என்று அவளுக்குத் திடும்மென்று தோன்றியது. 'அவர் வீட்டுக்கு இதுவரையில் போனதே இல்லையே நான். இந்த ஊருக்கே பெரிய மனிதர்; பிரசித்தி பெற்ற வழக்கறிஞர். மரியாதைக்காகவாவது ஒரு தடவை போய்ப் பார்க்க வேண்டாமா? ஏலமலைக்கு இன்னொரு சமயம் போய்க் கொண்டால் போகிறது. இருள் கவிகிற நேரத்தில் மலை ஏறுவதை விடப் பகல் போதில் செல்வது நல்லது. தக்க துணையுடன் போவதும் உசிதம்தான். கோர்ட் விடுமுறை நாளில் மாமாவையும் அழைத்துக்கொண்டு போகலாம். இப்போது ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியாருக்கு நமது மரியாதைகளைச் சமர்ப்பித்து விட்டு வருவோம்.'
எண்ணத்தை உடனே செயலாக்கத் துணிந்து கிளம்பினாள் பவானி. புது கார் பாங்காக ஓடியது. உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்த கவலைகலை மீறி ஓர் உற்சாகம் பிறந்தது அவளுக்கு.
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் தம் ஆபீஸ் அறையில் உட்கார்ந்து கேஸ் கட்டுக்களைப் படித்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் உன்னிப்பாகப் படித்த பிறகு அந்தத் தாள்களை முன்னும் பின்னுமாகப் புரட்டி நோட்டம் விட்டபடியே தமக்குத் தாமே பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தார்.
"சட்டம் ஒரு கழுதை என்று சொல்கிறது சரியாகத்தான் இருக்கிறது. கீழ்க் கோர்ட்டு தீர்ப்பு இரண்டு வருடக் கடுங்காவல். அப்பீல் கோர்ட்டிலே தீர்ப்பு குற்றமே ருசுவாக வில்லை; கேஸ் டிஸ்மிஸ்! ஹைகோர்ட்டிலே தீர்ப்பு மறுபடியும் அடியிலிருந்து விசாரணை நடத்தணும்! எப்படி இருக்கிறது. கதை? சட்டத்தைக் கழுதை என்று சொல்வதிலே என்ன தப்பு?..."
இத்தருணத்தில் காலடி ஓசை கேட்கவே நிமிர்ந்த கோபாலகிருஷ்ணன், "அடேடே! நீயா, பூஜை வேளையிலே கரடி நுழைந்த மாதிரி...." என்றார்.
அவர் மனைவி அழைக்குள் முன்னேறியவாறே, "ஆமாம், கழுதை, கரடி, குரங்கு இன்னும் என்னென்ன சொல்லணுமோ சொல்லுங்கள்....." என்றாள்.
"அடேடே உன்னைச் சொல்லலேடி பழ மொழியைச் சொன்னேன்.....இருக்கட்டும். இப்போ நீ எதற்காக வந்தே? நான்தான் ரொம்ப வேலையாக இருக்கேன்னு தெரியுமே? உன் பிள்ளையானால் டிராமா, காலட்சேபம்னு போயிடறான். ஒரு நிமிஷம் வீட்டிலே இருந்து உதவ மாட்டேன் என்கிறான். அவனை ஹைகோர்ட் கேஸ் விஷயமாக மெட்ராஸுக்கு அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆயிரம் சால்ஜாப்பு சொன்னான். எனக்கு மெட்ராஸுக்கும் ராமப்பட்டணத்துக்குமாக அலைய முடிகிறதா சொல்லு. ஏதுடா அப்பாவுக்கு வயதாகி விட்டதே. நாம் கொஞ்சம் கேஸ்களைப் பார்த்து உதவி பண்ணுவோம் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை."
"உங்களுக்கு என்ன அப்படி வயதாகி விட்டது?" என்றாள் செல்லம்.
"போன வருஷம் ஐம்பது; இந்த வருஷம் நாற்பத்தொன்பது அவ்வளவுதான். உன் இளமைத் தோற்றத்துக்கு ஏற்ப நான் வருஷா வருஷம் வயசைக் குறைச்சுண்டுதானே வரணும்?"
"போதும் பரிகாசம்! கல்யாணம் என்றைக்குத் திரும்பி வருகிறான் என்று கேட்கத்தான் வந்தேன். இனிமேல் இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட என்னால் இருக்க முடியாது. வந்திருக்கிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியவில்லை. உங்கள் பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தையாவது இதற்குள் பண்ணி வைத்திருந்தால்..."
"வைத்திருந்தால் என்ன? மாமியாரும் மருமகளும் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்கள் கேஸிலே வாதாடறதுக்குத்தான் அப்பா பிள்ளை இரண்டு பேருக்கும் பொழுது சரியாக இருக்கும்."
"இப்போ மாத்திரம் புரட்டி விடுகிறீர்களாக்கும்? பொழுது விடிந்துஒரு கட்சிக்காரனைக் கூடக் காணோம்."
"நீயே போய் ஊரெல்லாம் சொல்லி விட்டு வருவாய் போலிருக்கே? என்றாவது ஒரு நாள் இப்படித்தான் இருக்கும்."
இத்தருணத்தில் வாசலில் ஹாரன் சத்தமும் தொடர்ந்து கார் என்ஜின் ஒரு முறை உறுமிவிட்டு ஓயும் சத்தமும் கேட்டது.
"பார்த்தாயா? நீ சொல்லி வாய் மூடுவதற்குள் கட்சிக்காரர் யாரோ வருகிறார்!"
வாசலிலிருந்து "ஸார்!" என்று குரல் கேட்டது.
"நீ உள்ளே போ சீக்கிரம்" என்றார் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன். "காரிலே யாரோ பெரிய மனிதர்கள் வந்து இறங்கியிருக்கிறார்கள்"
"எதற்கு இப்படி விரட்டறேள்? பெண் பிள்ளைக் குரல் மாதிரி இருக்கே!"
"இருக்கட்டுமே! அதனால் என்ன? பெண்ணுக்கு வக்கீலை நாட வேண்டிய பிரமேயமே இருக்காதா? இடத்தைக் காலி பண்ணு. சீக்கிரம். உம்!"
செல்லம்மாள் திரும்பித் திரும்பி இரண்டு தடவை பார்த்துக் கொண்டே வேண்டா வெறுப்பாக உள்ளே போனாள். முதலியார் மிகக் கவனமாகக் கேஸ் கட்டைப் படிக்கத் தொடங்கினார்!
----------------
அத்தியாயம் 16 -- ஜின்னா தோற்றார்!
வந்தவள் பவானி. அவள் சற்று நின்று பார்த்துவிட்டுப் பெஞ்சில் அமர்ந்தாள். அப்படியும் முதலியார் தலை நிமிரவில்லை. தொண்டையைக் கனைத்துக் கொண்டு "வக்கீல் ஸார் ரொம்பப் பிஸியாக இருக்கறாப் போலிருக்கு" என்றாள் பவானி.
முதலியார் நிமிர்ந்து பார்த்துத் திடுக்கிட்டார்.
எழுந்து நின்று, "வரணும் வரணும்... நீங்க வந்ததை நான் பார்க்கவே இல்லை. என்ன சேதி? எப்போ வந்தீங்க? அடே நாற் காலி! பியூனைக் கொண்டாடா! சேச்சே! அடே பியூன் நாற்காலி கொண்டாடா!"
"வேண்டாம். பெஞ்சே சௌகரியமாயிருக்கு" என்றாள் பவானி.
"அந்த மடையன் பியூன் யாராவது வருகிற சமயம் பார்த்து எங்கேயாவது தொலைஞ்சு போயிடறான். குமாஸ்தாவுக்கு இன்றுதான் திவசம். அவனும் வரவில்லை.
"குமாஸ்தாவுக்கா ஸார் திவசம்? காலமாகி ரொம்ப நாள் ஆச்சோ?"
"இல்லை; இல்லை. குமாஸ்தாவின் தாயாருக்குத் திவசம். அது போனால் போகட்டும். எங்கே வந்தீர்கள்? என்ன விஷயம்?"
"ஒன்றுமில்லை ஸார்! சும்மாத்தான். புது கார் இப்பத்தான் வந்தது. ஒரு டிரைவ் போகலாம் என்று கிளம்பினேன். இந்த ஊரில் என்ன மெரீனாவா? மவுண்ட் ரோடா? என்ன இருக்கிறது. புதுக் காரைப் பெருமையுடன் ஓட்டிப் போக? பெரும்பாலும் கூடைப் புழுதி எழுப்புகிற கப்பி ரோடுதான். ஆகவே ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஜம்பம் அடித்துக்கொண்டு வரலாமே என்று தோன்றியது. புறப்பட்டு விட்டேன். உங்க மகன் கல்யாணத்திடமும் சொல்லியிருந்தேன். புதுக்கார் வரப்போகிறதென்று." "ஐஸீ." அவன் மெட்ராஸ் போயிருக்கான்."
"தெரியுமே! என்னிடம் சொல்லிக் கொண்டு தான் கிளம்பினார். அவரைப் பார்க்க நான் வரவுமில்லை. உங்க ஆசிர்வாதத்தைக் கோரித்தான் வந்திருக்கேன். இந்தப் பக்கத்தில் லீடிங் லாயர் நீங்க. இந்த ஊருக்கு வந்ததிலிருந்து நான் உங்களைச் சந்தித்துப் பேசினதே இல்லை. மரியாதைக்காவது வந்து பார்க்கணும் என்று ரொம்ப நாட்களாய் எண்ணம். இன்று புதுக் காரும் வரவே...."
"எதற்காக என்னைப் போய்ப் பிரமாதமாகப் புகழ்கிறீர்கள்?" என்றார் கோபால கிருஷ்ணன். "ஊர் முழுதும் பவானி என்ற பெயரைக் கேட்டாலே 'ஓஹோஹோ' என்கிறார்கள். கோர்ட்டுக்கு நான் வரும் போது சில சமயம் உங்களைச் சுட்டிக் காட்டி இன்னாரென்று என்னிடம் சக வக்கீல்கள் சொல்லியிருக்கிறார்கள்."
"நல்ல வார்த்தைகளாகத்தானே ஸார் பேசினார்கள் என்னைப் பற்றி? குற்றம் குறை ஒன்றும் கூறவில்லையே?"
"கிராஸ் எக்ஸாமினேஷனைக் கிளாஸா நீங்க நடத்தறதாக் கேள்விப் பட்டேன். அப்படிப்பட்டவர் என்னைத் தேடி வருவதென்றால் அது என் பாக்கியம்தான்" என்றார் கோபாலகிருஷ்ணன்.
"விளையாட்டுக்குக்கூட இப்படி நீங்க உங்களையே குறைத்துப் பேசிக் கொள்ளக் கூடாது. அனாவசியமாக என்னைத் தூக்கி வைக்கவும் வேண்டியதில்லை. நான் இந்தத் தொழிலுக்குப் புதுசு. உங்களைப் போன்றவர்கள் என்னை 'கைட்' பண்ணனும். அடிக்கடி ஏதாவது சந்தேகங்கள் சட்டப் பாயிண்டிலே தோன்றும். நீங்க கிளியர் பண்ணனும். உங்கள் மகளைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள். என்ன சரிதானா?"
"அதற்கு என்ன ரொம்ப சரி!"
"இப்போ கூடப் பாருங்க. உங்க அட்வைஸ்ஸைக் கேட்டுக் கொண்டு போகலாம் என்று தான் வந்தேன். ஒரு விஷயமா."
"சொல்லுங்கள்."
"'ஏ' வந்து 'பி' யைக் கத்தியால் குத்தினால் அது கொலை முயற்சி. ஆனால் சும்மா கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினால்...?"
"சட்டப்படி அதுவும் தப்புத்தான். ஆனால் 'மோடிவ்' நிரூபிக்கப்படணும். சும்மா விளையாட்டாப் பேசிக்கிட்டிருந்தோம்னு சொல்லி 'ஏ' தப்பிக்கப் பார்க்கலாம். கத்தியால் மிரட்டி விரும்பத் தகாத இன்ன காரியத்தை 'ஏ' சாதித்துக் கொண்டான் என்பதாக நிரூபிக்கணும்."
"'ஏ' சொல்கிறார், ''பி' என்னை எஸ்டேட் ஆட்களை விட்டு அடிக்கப் போவதாகப் பயமுறுத்தினான். அதனால் தான் நான் கத்தியைக் காட்டி அவனை மிரட்டினேன்' என்று."
"என்ன இதெல்லாம்? உங்க நாடகத்திலே வருகிற காட்சியா? கல்யாணம் எழுதின நாடகத்திலே நீங்க சஸ்பென்ஸ் சேர்க்கறீங்களா?"
"இல்லை சார்! என் வாழ்க்கையே ஒரு பெரிய சஸ்பென்ஸாக இருக்கு."
"யார் உங்களை மிரட்டுகிறார்கள்? என்ன விஷயம்?"
"எதுவுமே எனக்கு நிச்சயமாகத் தெரியலே. உறுதிப்படுத்திக் கொள்ள முடியாததால் எந்த ஒரு நபர் மீதும் குற்றம் சுமத்தவும் தயக்கமாயிருக்கு. ஆனால் மனம் மட்டும் கிடந்து அடித்துக் கொள்கிறது. ஏதோ விபரீதம் நேரப் போகிறது அதுவும் என் காரணமாக நிகழப் போகிறது என்று.."
ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் அவளை உற்றுப் பார்த்தார். "நீ ரொம்பக் குழப்பம் அடைந்திருக்கிறாய்" என்றார்.
"அப்பாடா, புரிந்து கொண்டுவிட்டீர்களே" என்றாள் பவானி. "என் மனசோடு ஒப்பிடும்போது ஜின்னாவின் முஸ்லீம் லீக் கொள்கைகள் கூட ரொம்பத் தெளிவானதாகத் தோன்றும். அத்தனை குழப்பம்!"
"ஐயோ பாவம்."
"ஆமாம், ஸார்! ஜின்னாவை நினைச்சாலே ரொம்பப் பரிதாபமாகத்தான் இருக்கு" என்று சிரித்துக் கொண்டே கூறிய பவானி.
கோபாலகிருஷ்ணனை நோக்கி அடுத்த கேள்விக் கணையை வீசினாள்; "ஸார்! இன்னொன்று கேட்கிறேன். ஒரு நபரை உத்தமர் என்று நமக்கு மிக நன்றாக, உறுதியாகத் தெரியும். ஆனால் அவர் பெரிய குற்றம் புரிந்து விட்டதாக நிதர்சனமாகச் சாட்சியம் இருக்கிறது. அந்தச் சமயத்தில் ஒரு வக்கீலின் கடமை என்ன? சாட்சியத்தின்படி நடப்பதா? அல்லது மனச்சாட்சிப்படி நடப்பதா?"
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் தலையைச் சொறிந்து கொண்டார். "நடந்ததை நடந்தபடி விவரித்தால் தேவலாம். இப்படி மர்மமாகக் கேட்டால் என்ன பதில் சொல்வது?"
"சரி, அது வேண்டாம். இதற்குப் பதில் கூறுங்கள். ஒரு மனுஷன் அவ்வளவாக நல்ல சுபாவம் உள்ளவன் இல்லை. அவனோடு பழக வேண்டாம் என்று அறிவு எச்சரிக்கிறது. ஆனால் மனம் அறிவுக்குக் கட்டுப் படாமல் எதனாலோ அவன்பால் ஈர்க்கப் படுகிறது. ஆனால் அதைக் காதல் என்றும் கூறுவதற்கில்லை. ஏதோ போன ஜன்மத்தில் விட்டுப்போன தொடர்பு இப்போது புதுப்பிக்கப்படுவது போல் ஒரு பிரமை. இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஒரு பெண் எப்படி நடந்து கொள்வது?"
"'த்சொ. த்சொ த்சொ" என்று சத்தம் எழுப்பியபடி தலையை அசைத்தார் கோபால கிருஷ்ணன். "உனக்காக நான் ரொம்பப் பரிதாபப்படுகிறேன் பவானி!"
"ஏன் ஸார்? எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. பைத்தியம் பிடிக்காமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் வந்து சற்று நேரம் பேசினேன். பெரிய கிரிமினல் லாயர் என்று பெயரெடுத்தவர் ஆயிற்றே. எனக்குத் தெளிவு பிறக்கிற மாதிரி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். கடைசியில் பார்த்தால் உங்கள் மூளையையும் குழப்பியதுதான் மிச்சம் என்று தோன்றுகிறது.
"உன்னை என் மகள் போல் நினைத்துக் கொள்ளச் சொன்னாய். சரி என்றேன். வார்த்தை மீற மாட்டேன். ஆனால் உனக்கு என்னைத் தகப்பனாக ஏற்கும் மனப் பக்குவம் இன்னும் வரவில்லை. அதனால்தான் குறிப்பிட்டுக் கூறாமல் குயுக்தியாகப் பேசுகிறாய். உனக்கு எப்பொது மனம் விட்டுப் பேசத் தோன்றுகிறதோ சொல்லு. கேட்கிறேன். என்னால் முடிந்த யோசனைகளைக் கூறி உதவிகளையும் செய்கிறேன். இதற்கு அதிகமாக நான் என்ன சொல்ல முடியும்?"
"அது போதும் ஸார் எனக்கு" என்ற பவானி எழுந்து விடை பெற்றுக்கொண்டாள். அவள் நன்றி கூறவில்லை. ஆனால் கலங்கி நீர் ததும்ப நின்ற கண்களை அவரிடமிருந்து மறைத்துக்கொள்ள அவள் பிரயாசைப் படாததே நன்றியை உணர்த்தியது.
பவானி சென்றதும் செல்லம்மாள் மறுபடியும் தன் கணவன் அறைக்குள் நுழைந்து, "என்னங்க, யாரோ ஒருத்தி வந்திருந்தாளே அவள் பெண்தானே?" என்றாள்.
"ஏன், அதிலே உனக்கு என்ன சந்தேகம்?"
"அந்தப் போடு போட்டாளே! பெண் என்றால் இப்படியா இருப்பார்கள்?"
"பின்னே எப்படி இருப்பாள்? அவளுக்கு என்ன குறை? அழகாய், இலட்சணமாய் நாகரிகமாய் இருக்கிறாள். படித்து பி.ஏ. பி. எல். பட்டமும் வாங்கி யிருக்கிறாள். எல்லோரும் உன்னைப்போல் கர்நாடகமாக இருக்கணுமா என்ன?"
"சரியாய்ப் போச்சு; நீங்க பேசறதைப் பார்த்தால் இந்த வீட்டிலேயே அவளைத் தங்கவைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!"
"ஏன், அப்படிச் செய்தால் என்ன? அவள் கூட 'என்னை உங்கள் பெண்ணாகப் பாவித்துக் கொள்ளுங்கள்' என்றுதான் சொன்னாள். மருமகப் பெண்ணாகக்கூட ஏற்கலாம். ஆனால்....."
"போதும், வேறெ வினையே வேண்டாம். ஏற்கனவே இந்த வீட்டில் நீங்க அப்பா பிள்ளை இரண்டு பேர் வக்கீல் வேலை பார்த்து என்னைப் பேச விடாமல் அடிக்கிறீங்க. மருமகளும் வக்கீலாக வந்து விட்டால் நான் ஊமையாகி விடவேண்டியதுதான்."
"அப்படி நடந்தால் தேவலாமே. ஆனால் என் கவலை வேறு. ஏற்கனவே அவள் இந்த ஊருக்கு வந்த பிறகு அநேகமாக எல்லாக் கட்சிக்காரங்களும் அவகிட்டதான் போறாங்க. இந்த வீட்டுக்கே அவள் வந்து குடியேறி தன் பெயரையும் எழுதித் தொங்க விட்டால் இப்போ எனக்கு வந்துகொண்டிருக்கிற ஒன்றிரண்டு கேஸ்களும் அவகிட்டத்தான் போகும்" என்று கூறி ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் இடி இடியென்று சிரித்தார்.
"என்ன சிரிப்பு? எனக்குப் பிடிக்கவேயில்லை!" என்று தோளில் முகவாயை இடித்துக்கொண்டு உள்ளே போனாள் செல்லம்.
(தொடரும்)
---------------------
அத்தியாயம் 17 -- "உனக்கும் காதலா?
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து பவானி வெளியே வந்தபோது தன் காரில் டிரைவர் ஆசனத்தில் யாரோ உட்கார்ந்திருப்பது சாலை விளக்கின் மங்கிய ஒளியில் அவளுக்குத் தெரிந்தது. காரைப் பூட்டாமல் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு போனது தவறு என்று தோன்றியது. கூடவே அனுமதி இன்றிக் காருக்குள் ஏறி அமர்ந்திருக்கும் நபர்மீது கோபமும் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு வக்கீலின் வாதத் திறமைகளை யெல்லாம் காட்டி அவனுடன் சண்டை பிடிக்கும் நோக்கத்துடன் அவள் பரபரப்பாக அடியெடுத்து வைத்தாள். ஆனால் காரை நெருங்கியபோது அது சிறுவன் விசு என்பதையும் அவன் புதுக் காரைத் தான் ஓட்டுவதாகக் கற்பனை செய்து கொண்டு "டிர்ர்ர்....டிர்ர்!" என்று சத்தப்படுத்தியபடியே ஸ்டியரிங்கை அசைப்பதையும் கண்டாள். அவளுக்குக் கோபிக்க மனம் வரவில்லை. என்றாலும் விளையாட்டாக "யாருடா அவன், காரிலே விஷமம் பண்ணுகிறது! போலீஸைக் கூப்பிடட்டுமா?" என்று அதட்டினாள்.
"ஓ, பேஷாகக் கூப்பிடு, பவானி அக்கா! சாலையின் வலது பக்கம் வண்டியை நிறுத்தியிருக்கிறாயே, வந்து பார்க்கட்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர். பத்து ரூபாய்தான் ஃபைன். பவானி பி.ஏ. பி.எல். லின் வாதத் திறமை ஒன்றும் அங்கே பலிக்காது!" என்றான் விசு.
"அட போக்கிரி! ரூல்ஸ்ஸெல்லாம் நல்லாத் தெரிந்து வைத்திருக்கிறாயே!" என்றாள் பவானி.
"அது மட்டுமில்லே. கார் ஓட்டவே எனக்குத் தெரியும். ஆனால் சாலை தெரிந்தால் கால் எட்டாது. மற்றப்படி கியர், பிரேக், கிளச் சப் ஜாடா கச்சிதமா எனக்குத் தெரியும்."
"பலே பேஷ்! கெட்டிக்காரன் தான். நகரு சொல்கிறேன். உன்னை வீட்டில் விட்டு விட்டுப் போகட்டுமா?"
"சரி அக்கா." அவன் நகர்ந்து கொண்டான். "ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு வரட்டுமா?"
"ஐய்யய்யோ! புது கார்! எங்கேயாவது மோதிவிட்டால்?"
"ஒன்றும் ஆகாது பவானி அக்கா! நீயும் பிடிச்சுக்கோ, நானும் பிடிச்சுக்கிறேன். கொஞ்ச தூரம், என்ன? ப்ளீஸ்!"
"ஆல்ரைட், அதோ அந்த இரண்டாவது விளக்குக் கம்பம் வரைதான்" என்ற பவானி காரைக் கிளப்பினாள். விசு அவள் அருகே] ஆசனத்தின் மீதே மண்டியிட்டு ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டான்.
"அது சரி, நீ இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்?" - பவானி கேட்டாள்.
"கல்யாணம் மாமாதான் என்ன உதவி வேண்டுமானாலும் தம்மை வந்து பார்க்கும்படி சொல்லியிருக்கிறாரே. அதனால் தான் வந்தேன். "நீங்க காரை விட்டு இறங்கி உள்ளே போவதைப் பார்த்தேன். புதுக் கார் ஜோரா இருக்கு அக்கா."
"என்ன உதவி இப்போ தேவைப்பட்டது கல்யாணத்திடம்?"
"கிணற்று ஜகடைக்கு கிரீஸ் போடணுமாம். கீங் கீங் என்று சத்தம் போடறதாம். அக்காவுக்கோ எனக்கோ எட்டலை. கிணற்று மதில் மேல் ஏறி நிற்கப் பயம். அதனால் கல்யாணம் மாமாவை அழைத்துக்கொண்டு வருமாறு கமலாக்கா சொன்னாள். இங்கே வந்தா அந்தச் செல்லம் மாமி வள்ளுன்னுவிழுந்து விரட்டறா. பேர்தான் செல்லம் வெல்லம் என்று."
"இன்னும் இரண்டு நாட்களிலே வந்துவிடுவார் கல்யாணம் மெட்ராஸிலேருந்து, சொல்லி அனுபறேன்" என்றாள் பவானி.
"இரண்டு நாளென்ன இருபது நாட்கள் கழித்து வேணுமானாலும் வரட்டும், ஒன்றும் அவசரமில்லை" என்றான் விசு. "கிணற்று ஜகடை கீங் கீங் என்று கத்தினால் கத்திட்டுப் போகட்டும். யாருக்கு நஷ்டம் அல்லது கஷ்டம்?"
"அது சரி" என்று சிரித்தாள் பவானி. "சரியாக உட்கார், ஊர்வலம் போனது போதும். வேகமாய் விடலாம் வண்டியை."
விசு ஸ்டீரிங்கிலிருந்து கரத்தை எடுத்து விட்டு அமர்ந்தான்.
"கஷ்டமோ நஷ்டமோ இல்லை என்றால் கிரீஸ் போட எதற்குக் கல்யாணம் மாமாவைக் கூப்பிட வந்தாய்?" என்றாள் பவானி.
"ஐய்யய்யே இதுகூடப் புரியலையா உனக்கு? கமலா அக்காவுக்குக் கல்யாணம் மாமா மேலே லவ்! அவரை அடிக்கடி பார்க்கலைன்னா இவளுக்குப் பித்துப் பிடித்த மாதிரி ஆயிடும். அதனால் தான். ஆணி அடிக்கணுமா கல்யாணம் மாமாவைக் கூப்பிடு. துணி உலர்த்தக் கம்பி கட்டணுமா கல்யாணம் மாமாவைக் கூப்பிடுன்னு என் பிராணனை வாங்கறா."
பவானிக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. வியப்பாகவும் இருந்தது. "இந்தா விசு! நீ சின்னப் பையன். இப்படி யெல்லாம் பேசக் கூடாது" என்றாள்.
"கமலா அக்காவுக்குக் கல்யாணம் மாமா மேலே லவ் என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வரது? உங்களுக் கும் கல்யாணம் மாமா மேலே லவ்வா?" என்றான் விசு.
"ஏய், அசடு! சினிமா டிராமாவிலே எதையாவது பார்த்துவிட்டு உளறாதே! சமர்த்தா இருக்கணும், புரிந்ததா?"
"சரி" என்றான் விசு.
இதற்குள் வீடு வந்து விட்டது. விசு கீழே இறங்கிக் கோபத்தோடு வேகமாகப் படாரென்று கதவைச் சாத்தினான். பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது! அவனை அதட்டியதற்குப் பழி வாங்கி விட்டானே! புத்தம் புதுக் கார். கதவு கழன்று விழாததே அதிசயம்தான்.
ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் அவன் போக்கிரித்தனத்தை நினைத்துச் சிரிப்பும் பொங்க அவள் கீழே இறங்கினாள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் இம்முறை கார் இடதுபுறமாக நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டு சரியாகப் பூட்டிக் கொள்ளவும் செய்தாள்.
–----------------
அத்தியாயம் 18 -- அந்தப்புரத்தில் அரசிளங்குமரிகள்
"வாம்மா பவானி! இந்த ஊர் எல்லைக்குள் நுழைந்ததுமே மகா லட்சுமி மாதிரி எதிரே வந்து நின்றாய். உடனேயே ஜாகை வசதி கிடைத்தது. அந்தப் பிள்ளை கல்யாணம் தங்கக் கம்பி. ரொம்ப ஒத்தாசையாக இருக் கிறான்" என்று கூறிப் பவானியை வர வேற்றாள் காமாட்சி.
"இன்னும் உங்களுக்கு என்னென்ன உதவி வேணுமோ எல்லாவற்றையும் அவரையே கேளுங்கள்" என்றாள் பவானி.
"அப்படி ஒண்ணும் அதிகமாக உபகாரம் தேவையில்லை. விசுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, 'அவன் அப்பாவுக்கு ஓர் உத்தியோகத்தைப் பார்த்துக் கொடுத்து, இந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வைச்சுட்டாப் போதும்."
"முதல் இரண்டு காரியங்களும் கஷ்டப் படலாம். மூன்றாவது முடிந்த மாதிரிதான். கட்டாயம் சுலபமாக நடந்துவிடும். கல்யாண சுந்தரம் இருக்கிறாரே அவரே பிரும்மச்சாரி தான். உங்கள் பெண்ணுக்குத் தகுந்த வரன்."
"ஆனால் அவர்கள் குடும்பம் பணக்காரக் குடும்பம் அது இது என்கிறார்களே."
"அதனால் என்ன? மிஸ்டர் கல்யாணசுந்தரத்துக்கு ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமே கிடையாது. தீவிர சோஷலிஸ்ட் அவர் அப்பா மட்டும் தடுக்கவில்லை என்றால் சொத்தை யெல்லாம் தானம் பண்ணி விடுவார். நாட்டில் ஏழைகள், பரம ஏழைகள் என்ற இரண்டே வகுப்பார்தாம் இருக்க வேண்டும் என்பது அவர் சித்தாந்தம். அந்த அளவுக்குச் சமூக சீர்திருத்த ஆர்வம் கொண்டவர். உங்கள் பெண்தான் என்ன சாமானியப்பட்டவளா, அவள், அழகு, சமர்த்து, அறிவு, படிப்பு..."
"கடைசியாகச் சொன்னது மட்டும் அக்காவிடம் கிடையாது. பூஜ்யம்" என்றான் விசு.
"தடிப்பயலே! சும்மா இரு. நீ ஒருத்தன் படித்துக் குப்பை கொட்டினால் போதும்" என்றார் மாசிலாமணி.
"உண்மையைச் சொன்னாலே எல்லோருக்கும் கோபம்தான் வரும்" என்றான் விசு.
"விசு! அக்கா எதுவரை படித்திருக்கிறாள்?"- பவானி கேட்டாள்.
"எட்டாவதோடு படிப்புக்குக் கொட்டாவி விட்டுவிட்டாள்."
"அதற்கு மேல் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று நிறுத்தி விட்டோம்" என்றார் மாசிலாமணி.
"நீ என்ன நினைச்சுண்டாலும் சரி பவானி. அந்த விஷயத்திலே நாங்க கொஞ்சம் கர் நாடகம்தான்" என்றாள் காமாட்சி.
"நினைக்கிறது என்ன? இதெல்லாம் அவரவர் மனசையும் சூழ்நிலை சந்தர்ப்பங்களையும் பொறுத்தது. கால மாறுத லுக்கு ஏற்ப நாளடைவில் மன மாற்றங்களும் நடக்கும். நிதானமாகப் படிப்படியாகத் தான் ஏற்படும். ஒரு விதத்தில் பார்த்தால் நீங்க கமலாவின் படிப்பை எட்டாவதோடு நிறுத்தியதே நல்லதுதான்"
"ஏன், எப்படி?" என்று மாசிலாமணி தம்பதி ஏகோபித்துக் கேட்டனர்.
"கல்யாணசுந்தரத்தின் தாயாருக்குப் படித்த பெண்களைக் கண்டாலே பிடிக்காது! அதிகம் படிக்காது, குடித்தனப் பாங்காக இருக்கும் நாட்டுப் பெண்ணாகத் தனக்கு வர வேண்டும் என்று அந்த அம்மாவுக்கு ஆசை."
இதைக் கேட்டுக் கொண்டே யிருந்த கமலாவின் மேனி சிலிர்ப்பதைப் பவானி ஓரக் கண்ணால் பார்த்துப் புன்னகை பூத்தாள். அவள் விடைபெற்றுச் செல்ல முற்பட்டபோது, "குங்குமம் கொடேன் கமலா!" என்றாள் காமாட்சி. ஏதோ கனவுலகிலிருந்து விடுபட்டவள் போல் திடுக்கிட்டுக் கமலா அவசரம் அவசரமாக எழுந்து போய்க் குங்குமச் சிழிழை எடுத்து வந்து நீட்டினாள்.
பவானி நெற்றிக்கு இட்டுக் கொண்டு புறப்பட்டபோது வாசல்வரையில் வழியனுப்ப வந்த கமலா, "அடிக்கடி வந்து கொண்டிருங்கள் அக்கா!" என்றாள்.
"வருகிறேன். ஆனால் இங்கே வரலாமா அல்லது ஏலமலைப் பாதையில் பத்தாவது மைல் கல்லில் மொட்டைப் பாறை ஒன்று இருக்கிறதே அங்கே சந்திப்போமா?" என்றாள் பவானி. "அங்கே யென்றால் மனம் விட்டுப் பேசலாம் இல்லையா?"
கமலா அதிர்ச்சி அடைந்தவளாக, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றாள்.
"அடி கள்ளி! எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறாயா? பூனை போலிருந்து கொண்டு புலி போல் பாய்கிறவளாயிற்றே நீ. நானே காரில்கூடத் தனியாகப் போகத் தயங்குகிறேன். அம்மாதிரி ஏகாந்தமான இடங்களுக்கு நீ பஸ்ஸில் ஒருவருக்கும் தெரியாமல் போய் விட்டு வருகிறாய்!"
"அக்கா! மெதுவாகப் பேசுங்கள். அம்மா காதில் விழுந்தால் தோலை உரித்து விடுவாள்."
குரலைச் சற்றுத் தாழ்த்திக் கொண்ட பவானி, "அடுத்த தடவை இரண்டு பேரும் இந்தக் காரில் சேர்ந்தே போவோம். பொழுதோடு போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவோம். என்ன சொல்கிறாய்?" என்றாள்.
"சொல்ல என்ன இருக்கிறது? நான் எப்போதும் தயார். எனக்கென்ன கோர்ட்டா, ஆபீஸா? வெட்டிப் போது போக்கிக் கொண்டிருக்கிறேன்" என்று சற்றே ஆதங்கம் குரலில் எட்டிப் பார்க்கப் பேசினாள் கமலா. "ஆனால் அப்பா, அம்மா தான் சம்மதிப்பார்களோ என்னவோ?"
"நான் அழைத்துப் போகிறேன் என்றால் மறுக்க மாட்டார்கள். வரட்டுமா?" என்ற பவானி ஆயிரமாயிரம் வண்ணக் கனவுகள் காணக் கமலாவுக்கு வழிவகுத்து விட்டுக் காரில் ஏறிச் சென்றாள்.
மலை அரசனுடைய ராஜ்யத்தின் தலைநகர் போல விளங்கியது அந்தப் பகுதி. காப்பித் தோட்டங்களின் செயற்கை எழில் பல இடங்களில் மனோரம்மியமாக இருந்தது என்றால் அந்தப் பகுதிகளின் இயற்கை அழகு கொழித்துக் கொஞ்சியது. தலைநகரின் மையமான இடத்தில் ஓங்கி நின்ற அரண்மனையாக ஒரு மொட்டைப் பாறை. அரண்மனையா அது? இல்லை. அங்கு இப்போது குடியேறியிருந்த அரசிளங்குமரிகள் அந்தப்புரமாகவே மாற்றி விட்டிருந்தனர்! சரக்கொன்றை மரம் ஒன்று அவர்கள் மீது பொன் விதானம் விரித்திருந்தது. திரண்டு கொண்டிருந்த கரிய மேகங்கள் காரணமாய் வீரியம் குன்றிய மாலை நேரத்து வெய்யிலையும் அந்த விதானம் வடிகட்டி அனுப்பி அதே காரணத்தால் தனது தங்கத் தோற்றம் மேலும் தகதகக்கக் கண்டது.
அருகிலேயே ஓர் அர்ச மரம் சாமரம் வீசுவதுபோல் அசைந்தாடிச் சலசலத்தது. ராமப்பட்டணத்தை யொட்டியிருந்த பெரியதோர் ஏரி மீதாகத் தவழ்ந்து வந்த மலையமாருதம் இருவர் மேனியையும் குளிர்வித்தது. அடிமரத்தில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்த அவ்விருவரும் அரசிளங்குமரிகளா அல்லது வனதேவதைகளேதானா? கமலா தன்னிடமிருந்த சொற்ப ஆடைகளிலேயே மிகவும் புதிதான ஒன்றை அணிந்திருந்தாள். இதை ஒரு விசேஷதினமாகக் கருதி வழக்கத்தை விடச் சிரத்தையுடன் ஒப்பனைகளையும் கவனித்துச் செய்துகொண்டிருந்தாள். பவானி இந்தப் பயணத்துக்காக விசேஷ சிரத்தை ஏதும் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் காட்டவில்லை என்றாலும் சாதாரணமாகவே அவள் நவீன நாகரிகங்களிலும் அன்றைய நாகரிகத்தை அறிந்தவள். ஒன்று பச்சைக் கிளி என்றால் மற்றது மாடப் புறா. ஒன்று மஞ்சள் சாமந்தி, மற்றது இளஞ்சிவப்பு ரோஜா. ஒன்று கும்மிக் கீதம், மற்றது இங்கிலீஷ் டியூன்! ஒருத்தி அல்லி ராணி, மற்றொருத்தி கிளியோபாத்ரா! ஏகந்தச் சூழல் அளித்த சுதந்திர உணர்வு அவர்களை ஏதோதோ மனோராஜ்யங்களில் பறக்கச் செய்தது. அதே சமயத்தில் ஒருவித நெருக்கத்தையும் பிணைப்பையும் அவ்விருவரிடமும் உண்டாக்கி அடிமைப்படுத்தவும் செய்தது.
"மழை வருமோ?" என்றாள் கமலா.
"வரலாம். இம்மாதிரி சில்லென்று காற்று வீசும்போது உன் பக்கத்தில் நான் இருந்து என்ன பிரயோசனம்? கல்யாணம் அல்லவா இருக்க வேண்டும்?" என்றாள் பவானி.
"அக்கா! உண்மையாகத்தான் பேசுகிறீர்களா? அல்லது என்னை ஏமாற்றுகிறீர்களா? அனாவசியமாக என் ஆசைகளை வளர்த்து விட்டால் அது மோதிச் சிதறும்போது என் இதயமும் சுக்கு நூறாக உடைந்து போகும்.
"கமலா! கல்யாணம் உன்னை ஏற்றுக் கொள்வார் என்று என்னால் சத்தியம் செய்து தரவா முடியும்? ஆனால் கல்யாணம் உன்னை மனைவியாக அடையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பேன். அவர் உன்னை மறுக்க எந்தக் காரணமும் எனக்குத் தோன்றவில்லை.
நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்கள் இல்வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இனிமையாகத் தங்கு தடையின்றி ஓடும். உங்களை இணைத்து வைக்க நான் என்னால் முடிந்ததை யெல்லாம் செய்வேன்."
"அன்று நீங்கள் வீட்டுக்கு வந்து என் ஆசைக்குத் தூபம் போட்டுவிட்டுப் போனதிலிருந்து நான் இந்த உலகத்திலேயே இல்லை,அக்கா!"
"கல்யாணத்துடன் கரம் கோத்துக் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாயாக்கும்! என்னவெல்லாம் விளையாடினீர்கள்? எல்லாவற்றையும் ஒன்று விடாமல் இப்போது சொல்லியாக வேண்டும் எனக்கு!"
"மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன். திடீரென்று அதுவே துயரக் கடலாகவும் மாறியது. அதில் மூழ்கிப் போனேன்."
"துயரமா? என்ன துயரம் உனக்கு?"
"இத்தனை அன்பான ஓர் அக்காவைத் தெய்வமாகப் பார்த்து என்னிடம் அனுப்பி வைத்திருக்கும்போது அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவள் மீது சந்தேகித்துக் கோபதாபப் பட்டும் பொறாமையால் வெந்துருகியும் பலவிதமாகச் சபித்தோமே என்று என்னை நானே நொந்து கொண்டு அழுது தீர்த்தேன்!"
இப்படிக் கூறி வரும்போதே கமலா மீண்டும் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தாள்.
"அசடே! எதற்கு என்னைச் சபித்தாய்? ஏன் இப்போது அழுகிறாய்? நிறுத்து, சொல்கிறேன்" என்று அதட்டும் பாவனையில் பேசிய பவானி தன் புடவைத் தலைப்பால் கமலாவின் முகத்தை ஒற்றினாள்.
"நீங்களும் அவரும் சேர்ந்து சேர்ந்து காரில் போவது வருவதைப் பார்த்தும் பேசிப் பழகுவதைக் கண்டும் பொறாமைப் பட்டேன். அக்கா! என் நல்வாழ்வைப் பறித்துக்கொண்டு போக வந்த பரம விரோதியாக உங்களை எண்ணினேன். மனசுக்குள் உங்களைச் சபித்தேன். தாறுமாறாகத் திட்டினேன். அக்கா! என்னை மன்னிப்பீர்களா?" என்று கேட்ட கமலா பவானியின் மடியில் விழுந்து முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழலானாள்.
(தொடரும்)
-------------
அத்தியாயம் 19 -- இன்னொருவர் ரகசியம்
கமலாவை அவள் இல்லத்தில் விட்டு விட்டுப் பவானி வீடு திரும்பியபோது இருட்டி வெகு நேரமாகி விட்டிருந்தது. பவானியின் மாமா குணசேகரன் கவலையோடு வாசலிலேயே காத்திருந்தார். "என்னம்மா, கால தாமதமாகுமென்றால் வழக்கமாய்ச் சொல்லி விட்டுப் போவாயே? நெஞ்சைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறேன். பெற்றோரை விட்டு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு இப்பால் என் பொறுப்பில் வந்து சேர்ந்திருக்கிறாயே?" என்றார்.
"எதிர்பாராமல் தாமதமாகி விட்டது, மாமா! அந்தப் பெண் கமலா இருக்கிறாளே, அவளோடு மலைச்சாரலுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு சுவாரசியத்தில் பொழுது போனதே தெரியவில்லை. இருள்கிறது, கிளம்பலாம் என்று நான் எண்ணிய சமயம் அந்தப் பெண் 'ஓ' வென்று அழ ஆரம்பித்து விட்டாள். அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது."
"அட பாவமே! எதற்கு அழுதாள் குழந்தை?"
"குழந்தையா? நாலு குழந்தைகளுக்கு அவளே தாயாக இருக்கக் கூடிய வயசு!"
"இருக்கட்டுமே. பெற்றோருக்கு அவள் எப்போதும் குழந்தைதான். நீகூடத்தான் இருக்கிறாய். கல்யாண வயதாகவில்லையா உனக்கு? எனக்கு என்னமோ இன்னமும் குழந்தையாகவே தோன்றுகிறாய். அதனால் தான் உனக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஞாபகமே இன்று மாலை வரையில் ஏற்படவில்லை.
"அடடே! இன்று சாயந்திரம் மட்டும் போதி மரத்தின் அடியில் போய் அமர்ந்தீர்களாக்கும்!" என்று கூறிய பவானி சிரித்தாள்.
"ஞானோதயம் என்னை நாடி வந்தது. பவானி! மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் உருவில் வந்தது!"
"அதுதானே பார்த்தேன். இல்லாத போனால் உங்கள் தங்கமான மனத்தில் அசட்டு யோசனைகள் எல்லாம் உதயமாகுமா என்ன?"
"எது அம்மா அசட்டுத்தனம்? உன் திரு மணத்தைப் பற்றி நினைத்துப் பாராமலேயே கல்கத்தாவில் உன் பெற்றோரும் இங்கே நானும் காலத்தை ஓட்டுகிறோமே, அதுவல்லவா அசட்டுத்தனம்? அதைச் சுட்டிக் காட்டி மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் பொறுப்பை உணர்த்தியது எவ்வளவு புத்திசாலித்தனம்!"
"பலே! என் கல்யாணத்தில் அத்தனை அக்கறையா அவருக்கு! உம்... இன்னும் என்ன சொன்னார்?" உணர்ச்சிகளை மறைத்துக்கொள்ள முயன்ற பவானி, தோற்றுப் போனாள். அவள் முகம் 'ஜிவ்' வென்று சிவந்து போனது.
"சொல்ல வேண்டியதை யெல்லாம்தான் சொன்னார். 'பவானியின் படிப்புக்கும் ஆற்றலுக்கும் அறிவுக்கும் அழகுக்கும் யௌவனத்துக்கும் சாமர்த்தியத்துக்கும் ஏற்ற வரனாகப் பார்க்க வேண்டும்' என்றார். அதைவிட முக்கியம் வழக்கறிஞராகத் தொழில் நடத்தும் உனக்கு அந்தத் தொழிலில் தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டக் கூடிய கணவனாக அமைவது என்பதை ஞாபகப்படுத்தினார்."
"பவானிக்கு வரப் போகும் கணவன் குறைந்த பட்சம் ஒரு மாஜிஸ்திரேட்டாக இருக்க வேண்டும். அவன் வாலிப மிடுக்குடன், அழகனாக, அறிவாளியாக, அனுசரித்துப் போகிறவனாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருபாரே?"
"சொன்னார் பவானி."
"அதாவது..."
"அதாவது தன்னையே மாப்பிள்ளையாக ஏற்கலாம் என்று சங்கோஜத்தை விட்டுக் கூறினார் பவானி. ஏனம்மா உன் அபிப்பிராயம் என்ன?"
"நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்? வாக்குக் கொடுத்துவிடவில்லையே?" என்று கலவரமடைந்தவளாகக் கேட்டாள் பவானி.
"அப்படியெல்லாம் செய்வேனா பவானி? நீ என்ன பட்டிக்காட்டுப் பெண்ணா? உன் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளாமல் ஒப்புதல் அளிப்பேனா?"
"நல்ல வேளை!" என்று பெருமூச்செறிந்தாள் அவள்.
"நல்ல நாளும் வேளையும் பார்க்க வேண்டியதுதான்" என்றார் குணசேகரன். "மாஜிஸ்திரேட் ரொம்ப நல்லவர். கௌரவமான உத்தியோகம். ஹைகோர்ட் ஜட்ஜ் வரை பதவி உயரலாம். உன்னை மனமார விரும்புகிறார் என்று நிதரிசனமாய்த் தெரிகிறது. நிச்சயமாய் நீ தொழில் நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட மாட்டார். இதைவிட நல்ல வரன் எங்கே கிடைப்பான்? ஒவ்வொருத்தர் பெண்ணைப் பெற்று விட்டு மாப்பிள்ளை தேடி நாயாய் அலைகிறார்கள். இங்கேயோ முதல்தர மாப்பிள்ளை நம் வீடு தேடி வந்திருக்கிறார். ஒரு வார்த்தை "சரி" என்று சொல். உடனே உன் பெற்றோருக்குத் தந்தி அடித்து வரவழைக்கிறேன்."
"மாமா! மேன்மைதங்கிய பிரிட்டிஷ் அரசரின் மகத்தான தபால் தந்தி இலாகாவுக்கு ஒன்றே முக்கால் ரூபாய் நஷ்டம். நீங்கள் தந்தி அனுப்பப் போவதில்லை" என்றாள் பவானி.
"ஏன் அம்மா? மாஜிஸ்திரேட் கோவர்த்தனனிடம் என்ன குறையைக் கண்டாய்?"
"அவருக்கு ஒரு குறையும் இல்லை. மன்மதன் போலிருக்கிறார் என்று சர்ட்டிபி கேட் வழங்க வேண்டுமா? நான் தயார். ஆனால் எனக்குத்தான் திருமணத்தில் நாட்டம் இல்லை."
"ஏன் அப்படிச் சொல்கிறாய் பவானி? ஒரு வேளை.... அந்தப் பையன் கல்யாணம்."
"மாமா! கல்யாணத்தையும் என்னையும் சம்பந்தப்படுத்திக் கோவர்த்தனன் ஏதாவது பிதற்றியிருந்தால் அதை மறந்து விடுங்கள். எனக்கும் அவருக்கும் இடையே தொழில் ரீதியாகவும் சமூகப் பணியாற்றுவதிலும் உள்ள தொடர்பு தவிர வேறு பிணைப்பு எதுவும் கிடையாது. நீங்கள் ஏதாவது கூறப்போக அது அந்தப் பெண் கமலாவின் காதில் விழுந்து விட்டால் போதும். மேலே பாய்ந்து பிடுங்கிவிடுவாள் உங்களை."
"அவள் என்ன நாயா? புலியா?"
"இரண்டும்தான். கல்யாணம் அவளை ஏற்றால் நன்றியுள்ள நாயாக வாழ்நாளையெல்லாம் அவனுக்கு அர்ப்பணிப்பாள். கல்யாணத்தை அவளிடமிருந்து பிரிக்க முயல்கிறவர் மீது புலியாகப் பாய்வாள். கல்யாணமே அவளை வெறுத்து ஒதுக்கி விட்டால் தற்கொலை செய்து கொண்டு சாவாள்?
"சற்றுமுன் சொன்னேனே. என் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள் என்று. அதற்குக் காரணம் அவளுக்குக் கல்யாணசுந்தரத்தின் மீதுள்ள ஆசைதான். அவர் என்னடா என்றால் அவளை லட்சியம் பண்ணுவதே கிடையாது. சதா நாடகம், சமூக சேவை என்று அலைகிறார்."
"நாடகம், சமூக சேவை என்று மட்டும்தான் அலைகிறானா கல்யாணம்? உன் பின்னாலும் சுற்றுகிறான். இல்லையா?" என்றார் குணசேகரன்.
"மாமா! நீங்கள் பொல்லாதவர்! எல்லோரையும் சரியாக அளந்து வைத்திருக்கிறீர்கள். அந்தக் கணிப்பு எனக்குக் கல்யாணத்தினிடம் ஈடுபாடு இல்லை என்பதையும் உங்களுக்கு உணர்த்தியிருக்குமே?"
"அதைப் புரிந்து கொண்டிருக்கிறேன் பவானி. அதனால் தான் கோவர்த்தனன் இங்கு வந்து என்னிடம் பேசிவிட்டுப் போனதிலிருந்து நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாக நீ வீடு திரும்பக் காத்திருந்தேன். ஆனால் அந்த ஆசைக்கு நீ அணை போடுகிறாய். இன்னும் ஒரு தடவை யோசித்துப் பார் பவானி. கோவர்த்தனன் உன்மீது உயிரையே வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. டென்னிஸ் ஆட வழக்கம்போல் நீ வரவில்லை என்றதும் உனக்கு என்னவோ ஏதோ என்று பதறித் துடித்துக் கொண்டு வீடு தேடி விசாரிக்க வந்துவிட்டார் என்றால் அவர் அன்பு எத்தனை ஆழமானதாக இருக்க வேண்டும்?"
"சேலம் மாவட்டக் கேணியைத் தோற்கடிப்பதாக அத்தனை ஆழம் இருக்குமா?" என்றாள் பவானி சிரித்துக் கொண்டே. குணசேகரன் அவள் ஹாஸ்யத்தை ரசிக்காதது கண்டு, "எனக்குக் கோவர்த்தனன் பேரில் கோபதாபமோ வெறுப்போ ஏதும் இல்லை, மாமா! எனக்குத் திருமணத்தில் இப்போதைக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான். ஒன்று மட்டும் உங்கள் திருப்திக்காகச் சொல்லி வைக்கிறேன். என்றைக்காவது நான் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்று தீர்மானித்தால் கோவர்த்தனன் போன்ற ஒருவரைத்தான் மணந்து கொள்வேன். சரிதானா?"
"ஊஹூம், எனக்குப் புரியவில்லை, பவானி!" என்றார் குணசேகரன். "கோவர்த்தனனே 'இதோ நான் தயார்' என்னும்போது கோவர்த்தனன் போன்ற வேறு ஒருவரைத் தேடுவானேன்?"
"அதைப் பற்றிப் பேச எனக்கு உரிமை இல்லை, மாமா! அது இன்னொருவர் ரகசியம்!" என்றாள் பவானி.
--------------------
அத்தியாயம் 20 -- இரக்கமற்ற இரவுகள்
அன்றிரவு பவானிக்குத் தூக்கமே வரவில்லை. அன்று மட்டும்தானா? இது போன்ற எத்தனையோ இரவுகள் அவளிடம் இரக்கமின்றி நடந்து கொண்டு வதைத்திருக்கின்றன.
மாறனின் மலர்க் கணைகளால் தாக்குண்டவர்கள் இப்படி உரக்கமின்றித் தவிப்பது சகஜம் என்று அவள் படித்திருக்கிறாள். அது உண்மைதான். அவள் விஷயத்தில். உமாகாந்தனும் இப்போது எங்கோ கண்காணாத இடத்தில் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால் வியப்பில்லை.
ஆயினும் அதே மன்மதன் பல சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டு மலர்க் கணைகளுக்குப் பதில் அரும்பு அம்புகளை ஏவிவிடுவதாக அவளுக்குப்பட்டது. அதுதான் ஒருதலைப்பட்சமான காதலாகப் பரிணமித்துப் பல குழப்பங்களுக்கும் துயரங்களுக்கும் மக்களை ஆளாக்குவதாக அவள் தர்க்கரீதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னைச் சுற்றியுள்ளவர்களையே அவள் எண்ணிப் பார்த்தாள். 'எவ்வளவு விசித்திரமான நிலை! கமலாவுக்குக் கல்யாணத்தின் மீது காதல். கல்யாணமோ என்னை அடைய ஆசைப்படுகிறார். மாமா குணசேகரன் தன் மருமாள் மாஜிஸ்திரேட்டைத் திருமணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். கோவர்த்தனனுக்குக் கொஞ்சம் இடமளித்தால் போதும். அவர் என்னை விழுங்கி ஏப்பம்கூட விட்டு விடுவார்! அத்தனை மோகம் அவருக்கு என் மீது! ஆனால் நான் மனமார நேசிப்பதோ உமாகாந்தனை. அவரோ எங்கே இருக்கிறார், என்று திரும்புவார் என்பதொன்றும் தெரியவில்லை!'
இந்தச் சிக்கல்கள் எப்படித் தீரப் போகின்றன என்று நினைத்தபோது பவானிக்குச் சிரிப்பு வந்தது. கூடவே உமாகாந்த் இந்த நிமிஷத்தில் எங்கு, எத்தனை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணத்தில் மனம் வேதனைப்பட்டது.
உள்ளத்தை முறுக்கிப் பிழியும் இந்தத் துயரத்தை யாரிடமாவது சொல்லிக்கொண்டு ஆறுதல் பெறக்கூட அவளால் முடியவில்லை. 'கமலாவுக்கும் எனக்குமிடையே இது விஷயத்தில் எவ்வளவு வித்தியாசம்! கமலா கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் மனம் விட்டு வாய்விட்டுத் தன் ஆசைகளை என்னிடம் வெளியிட்டாளே. அப்படி என்றால் யாரிடமாவது பேச முடிந்ததா? பதிலுக்குக் கமலா விடம் என் அந்தரங்கங்களைச் சொன்னேனா? கல்லூரிப் படிப்பும் வழக்கறிஞராகத் தொழில் நடத்துவதும் அந்த அளவுக்கு ஒரு போலி கௌரவத்தை வளர்த்து வார்த்தைகளுக்கு வரம்பு கட்டுகின்றன!
'கமலாவைப் போலவே நானும் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியிருக்கலாமோ?
சேச்சே! கல்லூரிப் படிப்பு இல்லாதிருந்தால் உமாகாந்தை என்னால் எப்படி சந்தித்திருக்க முடியும்? அவர் காதலைப் பெறும் பாக்கியத்தை எப்படி அடைந்திருக்க முடியும்? அந்த ஆனந்தமான ஆண்டுகளை எண்ணும் போதே மேனி சிலிர்க்கிறதே! இப்போது அவரைப் பிரிந்து துயருற்றாலும் என்றாவது ஒரு நாள் அவரை மீண்டும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையே எத்தனை இனிமையான ஓர் அனுபவமாகவும் இருக்கிறது! கல்கத்தாவில் அவருடன் நெருங்கிப் பழகிய அந்த இரண்டு ஆண்டுகளைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொணர்ந்தே இருபது வருஷங்களை ஓட்டி விடலாமே!'
இத்தனைக்கும் அவள் பி.ஏ. படித்த அந்த இரண்டு ஆண்டுகளிலும் உமாகாந்துடன் அடிக்கடி கொஞ்சிக் குலவி மகிழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவன் அருகில் இருக்கிறான். அதே கல்லூரியில்ல் எம்.ஏ. வகுப்பில் சரித் திரப் பிரிவில் படிக்கிறான். தன்னை விரும்புகிறான். தன்னைச் சந்திக்க நேரும்போதெல்லாம் சிரித்துப் பேசுகிறான் என்ற சூழலே போதுமானதா யிருந்தது.
அன்றைக்கே அவன் லட்சியவாதி. கதர் தான் உடுத்துவான். சுதந்திர இயக்கத்தில் இயன்ற அளவில் பங்கேற்பான். "படிப்புக்குக் குந்தகம் ஏற்படாத அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று அவனது பெற்றோர்களுக்கு மேலாக அவளும் வற்புறுத்துவாள்.
"பொய்யான சரித்திரத்தை எழுதி வைத்திருக்கிறார்கள் ஆங்கிலேயர். இதைப் படித்துப் பட்டம் பெற்றுத்தான் என்ன லாபம்?" என்று கேட்பான் உமாகாந்த். "சரித்திரத்தை ஒரு நாள் நான் மாற்றி எழுதிக் காட்டுகிறேன், பார்!" என்பான்.
அப்படி மெய்யாலும் ஒரு சந்தர்ப்பம் நிகழவே செய்தது! காலாண்டுப் பரீட்சையின் விடைத் தாள்களைத் திருத்திக் கொடுத்திருந்தார் பேராசிரியர். அதைக் கொண்டுவந்து பவானியிடம் காட்டினான் உமாகாந்தன். அவன் முகத்தில் குறும்புப் புன்னகை தவழ்ந்தது. பெரிய கோழி முட்டை சிவப்பு மையால் போட்டிருந்தார் பேராசிரியர். திகைத்தாள் பவானி. அவளால் நம்பவே முடியவில்லை. அறிவுச் சுடரை உள்ளடக்கியதால் ஒளிரும் நெற்றியுடன்கூடிய உமாகாந்தன் சைபர்மார்க் வாங்குவதா? இலேசாக நடுங்கிய கரங்களால் ஒரு வரி பேராசிரியர் எழுதியிருந்தார்; "எக்ஸலண்ட் இங்கிலீஷ் பட் ராங் ஹிஸ்டரி!" அவளுக்குப் புரிந்துவிட்டது! உமாகாந்தன் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்த பாடப் புத்தகங்களின்படி பரீட்சை எழுத வில்லை. உண்மைச் சரித்திரத்தை எழுதியிருக்கிறான். ஆங்கிலேயரின் ஆளுகையால் இந்தியா அடைந்த நன்மைகளை எழுதவில்லை. இந்தியா அந்த நன்மைகளை எப்படியும் காலக்கிரமத்தில் தானாகவே பெற்றிருக்கும் என்று வாதாடி யிருந்தான். அவர்கள் கொணர்ந்த சீர்திருத்தங்களில் எதுவுமே அவர்கள் இந்த நாட்டை அடிமைப்படுத்திய தீமைக்கு ஈடாகிவிடாது. ஆங்கிலேயரின் வீரத்தை அவன் வாழ்த்தவில்லை. அவர்களது ஆணவத்தையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் விவரித்திருந்தான். வியாபாரம் பண்ண வந்தவர்கள் நாடாளும் ஆசை கொண்ட விந்தையை விளக்கியிருந்தான். அவனது ஆங்கில அறிவு அத்தனையையும் பயன்படுத்தி அற்புதமாக எழுதிய கட்டுரை!
" 'பிரமாதமான ஆங்கிலம் என்று நீங்கள் தட்டிக் கொடுத்திருப்பது சரி; ஆனால் இதைத் தவறான சரித்திரம் என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? என்று பேராசிரியரிடம் வாதாடினேன். அவர் வெலவெலத்துப் போய்விட்டார் !" உமாகாந்தன் கூறி விட்டுச் சிரித்தான்.
"அவர் கடமையைச் செய்தார்" என்றாள் பவானி கலவரத்துடன். அவன் கரங்களைப் பற்றிக் கொண்டு, "காலாண்டுப் பரீட்சை இது; பாதகமில்லை. இறுதிப் பரீட்சையில் இப்படி எழுதி மோசம் போய் விடாதீர்கள். வாழ்க்கையின் இரண்டு ஆண்டுகள் வீணாகி விடும்!" என்று கெஞ்சினாள்.
"அது எனக்குத் தெரியாதா, பவானி? இதைவிடப் பிரமாதமாக ஆங்கிலேயரின் ஆற்றல்களை மெச்சி எழுதி டிஸ்டிங்க்ஷன் வாங்குவேன்! பேராசிரியரிடமும் அந்த வாக்குறுதியை அளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்!" என்றான் உமாகாந்தன் அவள் விரல்களைச் சமாதானமாக வருடியவாறு.
என்றாலும் அந்த வாக்குறுதியை நிறை வேற்ற அவனால் முடியாமலே போயிற்று!
(தொடரும்)
--------
அத்தியாயம் 21 -- பயங்கரக் கனவு
சில நாட்களாக உமாகாந்தன் கல்லூரிக்கு வரவேயில்லை. பவானி அவனை வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் காத்திருந்து காணாமல் கலங்கினாள். கல்லூரி முழுவதும் தினம் ஒரு முறை சுற்றிவந்து தனது சித்திரக் கண்களின் வட்டக் கருவிழிகளைக் கள்ளத்தனமாகச் சுழல விட்டுத் தேடினாள். அகப்படவில்லை. நெடுமூச்சுக்கள் நெஞ்சை வாட்ட அவனது வகுப்புக்கேகூடப் போய் ஜாடையாகப் பார்த்தாள். ஊஹூம், அங்கேயும் அவன் இல்லை.
'ஏதாவது அவசர காரியமாக ஊருக்குப் போக நேர்ந்திருக்கும். நாளை அல்லது மறு தினம் வந்து விடுவார்' என்று சமாதானப் படுத்திக் கொண்டாள். 'லீவு லெட்டர் ஏதாவது வந்திருக்கிறதா?' என்று கல்லூரிக் காரியாலயத்தில் விசாரிக்க அவளுக்குச் சங்கோசமாக இருந்தது. 'நீ யார்? எதற்காகக் கேட்கிறாய்?' என்ற கேள்வி பிறந்தால் என்ன பதில் சொல்வது என்று குழம்பினாள்.
'ஒருவேளை அவருக்கு ஏதாவது உடம்பு அசௌக்கியமோ? கடுமையான ஜுரம் கண்டு படுத்த படுக்கையாக இருக்கிறாரோ?' என்று இரவெல்லாம் கற்பனைகளில் ஆழ்ந்து தூக்கம் பிடிக்காமல் தவித்தாள்.
ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு இந்த நிச்சய மற்ற நிலையை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது எனத் தீர்மானித்தவளாய் நேரே உமாகாந்தின் வீட்டுக்கே போய்ச் சேர்ந்தாள்.
அங்கே அவள் கேள்விப்பட்டது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. ஆனால் வருத்தமாய் இருந்தது. அதே சமயம் பெருமையாகவும் இருந்தது. உமாகாந்தின் அப்பா அவளை வரவேற்றார். கல்லூரி முதல்வருக்கே தாம் கடிதம் எழுதியிருப்பதாகச் சொன்னார்.
"இருக்கலாம், ஸார்! ஆனால் மாணவர்களுக்கு அந்த விவரம் ஏதும் தெரியவர நியாயமில்லையே? அவர் ரொம்பப் 'பாப்புலர்'. அதனால் மாணவ மாணவியர் எல்லாருமே அவர் கல்லூரிக்கு வரக் காணோமே என்று கவலைப்படுகிறார்கள். விவரம் அறிந்துவர என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்."
"ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் எல்லோருக்கும் பெருமை தரக் கூடிய விஷயம் சொல்லப் போகிறேன். உமாகாந்த் கல்லுரிக்கு ஒழுங்காகப் போய் வந்தாலும் படிப்பில் சூரன் என்றாலும் புரட்சி உள்ளம் கொண்டவன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவன் குடும்பத்தினராகிய எங்களுக்கே தெரிவிக்காமல் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் சில ரகசிய வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறான். ஸி.ஐ.டி.க்கள் அதை அறிந்து கொண்டு விட்டனர். அவனை அரெஸ்ட் செய்து இரண்டே நாட்களில் மாஜிஸ்திரேட் முன்னால் சாட்சியங்கள் சமர்ப்பித்து உள்ளே தள்ளிவிட்டனர். ஆறு வருஷ தண்டனை. மேல் கோர்ட்டில் அப்பீலுக்குப் போகக் கூடாதென்று உமாகாந்த் என்னைத் தடுத்துவிட்டான்!" கருணாகரன் கண்களைக் கைக் குட்டையால் துடைத்துக் கொண்டார்.
"அழாதீர்கள், ஸார்! இப்படிப்பட்ட புதல்வனைப் பெற்றதற்காக ரொம்பப் பெருமைப்படலாம் நீங்கள்" என்றாள் பவானி. அவன் எழுதிய சரித்திர வியாசம் பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டு இலேசாகச் சிரித்தார் உமாகாந்தின் தகப்பனார் கருணாகரன்.
"செய்யக் கூடியவன்தான்" என்றார் பெருமிதத் தொனியில். "எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை!"
"எங்கள் நிலையும் அதுதான் ஸார். மாணவர்களுக்கு என்றுமே உமாகாந்திடம் ரொம்ப மதிப்புண்டு. அவர்கள் அவர் சிறை புகுந்ததற்காக வருந்துகிறார்கள். அதே சமயம் அவரது துணிச்சல், வீரம், லட்சியப் போக்கு எல்லாம் எங்களை மேனி சிலிர்க்க வைக்கிறது." பவானி பொங்கிக் கொண்டு வந்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
மாமா குணசேகரனிடம் தற்போது தனக்குத் திருமணத்தில் நாட்டமில்லை என்று உறுதியாகவும் இறுதியாகவும் கூறிவிட்டு மாடியில் தன் தனி அறைக்கு வந்து சேர்ந்த பவானி, உமாகாந்தனைக் குறித்த இந்தப் பழைய சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டாள்.
கூடவே சமீபத்திய மர்மமான நிகழ்ச்சிகளின் மீதும் அவள் சிந்தனை திரும்பியது. உமாகாந்தனுக்கும் மாஜிஸ்திரேட் கோவர்த்தனனுக்கும் இடையே உள்ள விசித்திரமான உருவ ஒற்றுமையை அவள் எண்ணிப் பார்த்தாள். கோவர்த்தனன் கண்ணாடி போட்டிருக்கிறார். மீசை கிடையாது. உடை, விஷயங்களில் வேற்றுமை உண்டு. எல்லாம் சரிதான் ஆனாலும் முகத்தில் உமாகாந்தனின் ஜாடை நிறைய இருக்கத்தான் செய்கிறது. கோவர்த்தனன்பால் தான் ஈர்க்கப்பட்டிருப்பதற்கும் நெருங்கிப் பழகி நட்பை வளர்த்துக் கொள்வதற்கும் அது ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
"இந்த மலைச் சாரல்களில் ஸி.ஐ.டி.கள் தப்பி ஓடிய கைதி ஒருவனைத் தேடுகிறார்கள். அவர்கள் கரத்தில் இருந்த புகைப் படத்தைப் பார்த்தேன். கோவர்த்தனன் போலவே இருந்தது. மாஜிஸ்திரேட் ஒரு வேஷதாரி. மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு மீசையையும் எடுத்துவிட்டார் என்றாலும் அந்தப் படத்தில் இருந்தது கோவர்த்தனனே தான்' என்று அழுத்தம் திருத்தமாக அன்று கல்யாணம் கூறியதை அவள் எண்ணிப் பார்த்தாள்.
அன்று அவள் எப்படிப் பதறிப் போனாள்? கோவர்த்தனனிடம் அவள் ஏற்கனவே உமாகாந்தனின் சாயலைக் கண்டிருந்தாள். ஆகவேதான் அப்படிக் கலவரம் அடைந்திருந்தாள். சிறையிலிருந்து தப்பி ஓடி வந்திருக்கும் அந்தக் கைதி உமாகாந்தனாகவே இருப்பானோ என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டது. 'அவர் ஒருவேளை நான் இங்கிருப்பதை அறிந்து கொண்டு இந்த வட்டாரத்தில் ஒளிந்து வாழ்கிறாரோ? என்னை ரகசியமாக ஓரிடத்தில் சந்திக்கச் சமயம் பார்த்திருக்கிறாரோ' என்றெல்லாம் கற்பனை செய்தாள். அதனால்தான் கல்யாணத்திடம் ஸி.ஐ.டி.க்களைச் சந்தித்து, புகைப்படத்தைப் பார்த்தது முதலான விவரங்களை யாரிடமும் கூறக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு கையடித்துச் சத்தியமும் பெற்றுக் கொண்டாள் பவானி.
இப்போது எண்ணிப் பார்த்தபோது எல்லாமே அசட்டுத்தனமான முடிவுகளாக அவளுக்குத் தோன்றியது. 'ஆறு ஆண்டு தண்டனை முடிய இன்னும் இரு ஆண்டுகள் இருக்கின்றன. இந்தச் சயமயத்தில் போய் உமாகாந்தன் சிறையிலிருந்து தப்பி ஓடி வருவாரா? அவரைப் போன்றவர்கள் சிறை செல்வதைத் தியாகம் என்றும் கௌரவம் என்றும் கருதுபவர்கள் ஆயிற்றே? திருட்டுக் குற்றம் புரிந்தவன் தப்பி வர முயலலாம். தியாக வேள்வி நடத்துபவன் சிறையின் துயரங்களுக்கு அஞ்சுவானா? கல்யாணம் பார்த்த புகைப்படம் உமாகாந்தனாய் இருக்கவே முடியாது. வேறு யாராவதுதான் இருக்க வேண்டும்.
'அப்படி ஒரு வேளை உமாகாந்தான் தப்பி வந்தது உண்மையானால் தேசபக்தர்களின் நோக்கில் அது தகாத காரியமாகிவிடுமே? அத்தகைய காரியத்தில் அவரை இறங்கத் தூண்டியது எது? சிறைச்சாலை அளித்த துயரங்களா?' அல்லது காந்தீய மார்க்கங் களில் அவர் நம்பிக்கை இழந்தது காரணமா? சிறைக்கு வெளியே இருந்தால்தான் தேசத்துக்கு அதிகமாகத் தொண்டாற்ற முடியும் என்று அவர் கருத ஆரம்பித்துவிட்டாரா? இவையெல்லாம் இல்லையென்றால் வேறு என்ன? பவானியைப் பார்க்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசையா?'
இப்படி நினைத்ததுமே பவானிக்கு மேனியெங்கும் சிலிர்த்தது. அவளுடைய வாளிப்பான உடல் நெளிந்து புரண்டதில் படுக்கை விரிப்பு கசங்கியது. நாணத்தில் சிவந்த முகத்தை மறைத்துக் கொள்ள அவள் தலையணையைத் தஞ்சம் புகுந்தபோது அது படாதபாடு பட்டது!
அவள் மெல்ல மெல்ல முகத்தைத் திருப்பிக் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிள் நிலைக் கண்ணாடியில் தன் முகத்தையும் முடிந்தவரை தன் உருவத்தையும் பெருமிதம் பொங்கப் பார்த்துக் கொண்டாள். "உமாகாந்த்! இத்தனை அழகும் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது. சீக்கிரம் வாருங்கள். அள்ளிக் கொள்ளுங்கள்" என்று மிருதுவான குரலில் சொன்னாள்.
அவள் கரம் தயக்கத்துடனேயே நீண்டு டிரஸ்ஸிங் டேபிளின் சிறிய இழுப்பறை ஒன்றைத் திறந்தது. அதில் மேலாக இருந்த கைக்குட்டைகள், உள்ளாடைகளுக்கு அடியேயிருந்த ஓர் உறையைக் கள்ளத்தனமான பாவனையோடு வெளியே எடுத்தது. மெல்ல அதனைப் பிரித்த விரல்கள் உள்ளேயிருந்த ஒரு புகைப் படத்தைச் சிறிது சிறிதாக வெளியே உறுவின. அறையின் கதவு தாளிடப்பட்டிருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டு அப்புகைப்படத்தைத் தன் அதரங்களில் ஒற்றி எடுத்தாள், பவானி. பிறகு அதனை அப்படியே தன் நெஞ்சில் தவழவிட்டுக் கொண்டு தூங்கிப் போனாள்.
தூக்கத்திலே ஒரு விசித்திரமான கனவு கண்டாள், பவானி. அந்தக் கனவிலும் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து உமாகாந்தன் நின்று, "பவானி ! பவானி !" என்று அழைத்தான். அவள் எழுந்திருக்காதது கண்டு அவனுக்குக் கோபம் வந்தது. "ஹூம், உனக்காகத்தானே, உன் பிரிவாற்றாமையால்தானே நான் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தேன். இப்படி என்னை அலட்சியம் பண்ணுகிறாயே! என்னை ஸி.ஐ.டி.க்கள் துரத்தி வருகிறார்கள். சீக்கிரம் எனக்கு அடைக்கலம் தந்து மறைத்து வைத்துக் காப்பாற்று. தூங்கியது போதும். விழித்தெழு !" என்றான்.
பவானி விழித்துக் கொண்டாள். ஆனால் எழுந்திருக்க அவளால் முடியவில்லை. இரண்டு ஸி.ஐ.டி.க்கள் சற்றுத் தொலைவில் தெரிந்தார்கள்.
அவர்கள் உமாகாந்தனைச் சுட்டிக் காட்டியபடி ஓடி வந்தார்கள். உமாகாந்தன் "பவானி! பவானி!" என்று அவள் நெஞ்சக் கதவை ஒங்கித் தட்டினான். பவானி எழுந்து இதய வாசலைத் திறக்கத்தான் முயன்றாள். முடியவில்லை! அவளை எழுந்திருக்கவே விடாமல் அவள் தோள்களை அழுத்திப் பிடித்தன இரு கரங்கள். அவள் முகத்தை இரு அகன்ற சிவந்த கண்கள் வெறித்து நோக்கின. அந்தக் கண்களும் கரங்களும் மாஜிஸ்திரேட் கோவர்த்தனனுடையவை. அந்தக் கண்கள் பெரிதாகிப் பெரிதாகி அவளையே விழுங்கப் பார்த்தன. பவானி தன்னை விடுவித்துக் கொண்டு உமாகாந்தனின் உதவிக்குப் போக முயன்று போராடினாள்; பலிக்கவில்லை. ஸி.ஐ.டி க்கள் இருவரும் விலங்குகளோடு உமாகாந்தனை அணுகி விட்டனர். "பவானி! காப்பாற்று" என்று அலறினான் உமாகாந்தன். அவள் இதய வீட்டின் வெளியே இருந்தவாறு, "உமாகாந்த்!" என்று இயலாமைக் குரலில் விளித்தாள் பவானி, உள்ளே கட்டிலில் கிடந்தவாறு. பவானி திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். அவள் மேனியெல்லாம் வியர்த்துக் கொட்டிக் காற்றில் சலசலக்கும் அரச இலை மாதிரி நடுங்கிக் கொண்டிருந்தது.
நெஞ்சின் மீதிருந்த உமாகாந்தின் படத்தை எடுத்துப் பார்த்தவாறே இரவெல்லாம் விசித்து விசித்து அழுதாள்.
-------------
அத்தியாயம் 22 -- கிணற்றில் கமலா!
கமலா அடுப்பு ஊதினாள். புகை வந்ததே தவிர நெருப்புப் பற்றவில்லை. "சனியனே! இரு, இரு! சண்டித்தனமா பண்ணுகிறாய்? என்றாவது ஒரு நாள் என்னிடம் நாலு நோட்டுக் கிடைக்காமல் போகாது. அப்போ கள்ளச் சந்தையிலே பாட்டில் கிரசின் வாங்கி அத்தனையையும் உன் தலையிலே அபிஷேகம் பண்ணி நெருப்பு வைக்கிறேன்" என்று கருவிக் கொண்டாள் கமலா, கண்களைக் கசக்கியபடியே.
"பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சே, சாப்பாடு ரெடியா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் விசு.
"விரட்டறதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லே. காலமே வந்து கொஞ்சம் கூடமாட ஒத்தாசை பண்ணப்படாதோ?" என்றாள் கமலா.
"எனக்கு 'ஹொம் ஒர்க்' இருந்தது."
"இல்லாட்டா உதவி பண்ணிக் கிழிக்கிறாயாக்கும்?"
"நான் ஏன் உதவணும்? நீ இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க நான் என்ன கல்யாணம் மாமாவா? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேனா?"
"தடி ராஸ்கல் ! உனக்குச் சோறு கிடையாது, போ! பழையதுதான்" என்று பொய்க் கோபத்துடன் சீறினாள் கமலா. அவன் கூறியதை அவள் மனம் வருடித் தந்து கொஞ்சியது.
"பழையதுதான் உடம்புக்கு நல்லது; அதோடு சட்டித் தயிரையும் வடுமாங்காயையும் எடு."
அவனை மகிழ்விக்க ஆடைத் தயிராக எடுத்துப் போட்ட கமலா, "ஏண்டா, கொஞ்ச நாளா கல்யாணம் மாமாவையே காணுமே? ஏன் வரதேயில்லை?" என்று கேட்டாள்.
"அவருக்குக் கல்யாணம்!"
"என்ன? எங்கே? எப்போது?" என்று பதறினாள் கமலா.
"நிஜக் கல்யாணம் இல்லை, அக்கா. நீ பயப்படாதே. நாடகத்திலேதான்!" என்றான் விசு.
"ஓ! ஏதோ பர்மா அகதி, அது இது என்றார்களே."
"ஆமாம், ஆமாம்! அந்த அது இதுக்காகத்தான் நாடகம்!" என்று கூறி எழுந்த விசு, புத்தகப் பையை இடது கரத்தில் தூக்கிக் கொண்டு, ஓடினான். "இரண்டு நிமிஷம் லேட்டானால்கூட அந்த இரட்டை மண்டை பெஞ்சு மேலே ஏற்றி விடுகிறது!" என்று அவன் தன் உபாத்தியாயரை முற்றத்திலிருந்து வாழ்த்துவது கமலாவின் காதுக்கு எட்டியது.
"பர்மா அகதி, பர்மா அகதி!" என்று முணு முணுத்துக் கொண்டாள் கமலா. "பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்குத் தான் மவுசு. உள்ளூர் அகதியாக இருந்தால் யார் லட்சியம் பண்ணுகிறார்கள்?" என்று தன்னைத் தானே கோபத்துடன் கேட்டுக் கொண்டு குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொல்லைப்புறம் நடந்தாள். அதைப் புளி போட்டுத் தேங்காய் நாரினால் அழுந்த அழுந்தத் தேய்த்தாள். "பர்மா அகதி களாம், நாடகமாம், நாடகத்தில் ஒரு கல்யாணமாம். இந்த ஏழையின் ஞாபகம் அவ ருக்கு எங்கே வரப் போகிறது!"
அவளுக்குக் கோபம் வந்தது. குடத்தைக் கழுவியதோடு தண்ணீர் தீர்ந்து விட்டது. தாம்புக் கயிற்றில் குடத்தை மாட்டி, விருட்டென்று சுருக்கை இழுத்து ஆத்திரத்துடன் சரேலென்று கிணற்றில் இறக்கினாள். அந்த வேகத்தைச் சமாளிக்க முடியாமல் கயிறு ஜகடையிலிருந்து நழுவிச் சிக்கிக் கொண்டது.
"தரித்திரம்! நான் பெண்ணாய்ப் பிறந்ததே அடுப்புப் புகையுடனும் கிணற்று ஜகடையுடனும் போராடத்தான்" என்று அலுத்துக் கொண்டு கயிற்றைச் சரி செய்ய முயன்றாள்; எட்டவில்லை. கிணற்று மதில்மீது ஏறினாள். சாய்ந்தாள்.
அதே சமயம் வாசலில், "ஸார்! ஸார்!" என்ற குரல் கேட்டது. அது கல்யாணத்தின் குரல்தான் !
'ஐயோ! அவர் என்னை இந்தக் கோலத்தில் பார்த்துவிடக் கூடாதே' என்று எண்ணிய மாத்திரத்தில் கமலாவின் உடல் பதறியது.
மாசிலாமணி பதில் குரல் தராதது கண்டு அடுத்தாற்போல் கல்யாணம், "கமலா!" என்று அழைத்தபடி முற்றத்தைத் தாண்டி வந்தான்.
'கமலா' என்று அவன் அழைப்பது கேட்டதோ இல்லையோ, இவள் மேனியின் மயிர்க் கால்களெல்லாம் லட்சோப லட்சம் குரல்கள் - கல்யாணத்தின் குரல்கள் - 'கமலா' என்று அன்பும் உரிமையும் ததும்ப அழைக்கும் குரல்கள் - புகுந்தன. அந்த இன்ப ஹிம்சையைத் தாள முடியாமல் அவள் நடுங்கினாள். முதலில் ஏற்பட்ட கூச்ச பயம் அடுத்து உண்டான இன்ப வேதனை இரண்டும் அவளை உலுக்கி எடுத்து உள்ளே தள்ளி விட்டன!
கமலா கிணற்றுக்குள் 'தொபீர்' என்று விழுந்தாள். "ஐயோ!" என்று அவள் அலறுவது அதற்கு முன்பாகவே கேட்டது. அப்புறம் நிசப்தம்தான் !
(தொடரும்)
------------------
அத்தியாயம் 23 -- கமலாவின் கள்ளம்!
சொட்டச் சொட்ட நனைந்திருந்த கமலா 'வெட வெட' வென்று நடுங்கிக்கொண்டு மிருந்தாள். பயத்தினால் அல்ல; அவளுக்கு நீந்தத் தெரியும். மேலும் கிணற்றில் மூழ்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது! அதிகமாக அதில் ஜலம் இல்லை. கிணற்றின் சுவரில் குடம் அடிபட்டுக் குடம் நசுங்கிப் போயிருந்தது. அதைக் கண்டு காமாட்சி அம்மாள் கூச்சல் போடத்தான் போகிறாள். ஆனால் கமலா நடுங்கியது அதற்காகவுமல்ல.
அப்படியானால் அவள் மேனியெல்லாம் குடுகுடுப்பாண்டியின் கை உடுக்கை போல் மாறிய தற்குக் காரணம் என்ன?
கல்யாணம் அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்ததுதான்!
"ஐயோ!" என்று கமலாவின் குரல் கேட்ட மறு கணம் அவன் ஓடோடி வந்து கிணற் றுக்குள் இறங்கினான். "பயப்படாதே" என்று சொல்லி அவளைப் பற்றித் தூக்கி விட்டான். கிணற்றுப் படிகளைப் பிடித்துக் கொண்டு அவள் மேலே ஏறிவர உதவினான். இருவரும் வெளியே வந்த பிறகு தாம்புக் கயிற்றைச் சரிசெய்து குடத்தையும் இழுத்து வெளியே கொணர்ந்தான்.
'ஆபத்துக்குப் பாபமில்லை' என்ற கருத்தில் கல்யாணம் சற்றும் தாமதியாமல் கமலா கரையேற உதவியபோது, அவன் கரங்கள் அவள் தேகத்தைத் தீண்டிய இடங்கள் இப்போதும் அவளுக்கு இன்பலாகிரியை அளித்துக் கொண்டிருந்தன. அந்த இன்ப வேதனையே குற்ற உணர்வுடன்கூடிய பயமாகவும் மாறி அவளை உலுக்கி எடுத்தது.
தனக்கு நீந்தத் தெரியும் என்று அவள் ஏன் கூறவில்லை? தான் பயப்படவில்லை என்று அவள் ஏன் காட்டிக் கொள்ளவில்லை? கிணற்றுப் படிகளில் கால் வைத்துத் தன்னால் அவன் உதவி இன்றியே கரையேறிவிடமுடியும் என்று அவள் ஏன் அவனுக்கு உணர்த்தவில்லை?
அவன் வந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அதற்கேற்ப நடித்தாள். அவன் தன்னைத் தொட்டுத் தூக்க அனுமதித்தாள்.
ஆண் கரம் ஒன்று அவள் மீது படுவது இதுவே முதல் முறை. நான் அவனை மன மாரக் காதலிப்பது போலவே, அவனும் தன்மீது அன்பு கொண்டிருந்தால் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள். இப்படி நடுங்கிப் பதறவும் நேர்ந்திருக்காது. கரையேறிய பிறகு அவனை ஏமாற்றி விட்டதாகக் கூறிச் சிரித்திருப்பாள். ஆனால் கல்யாணத்துக்குப் பவானியின் மீது இருந்த மோகம் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவன் தன்னைக் காப்பாற்றியது ஓர் உயிர் மற்றோர் மனித உயிரிடம் காண்பிக்கும் இயல்பான இரக்க உணர்வின் அடிப்படையில்தான். ஆனால் அவளோ அவனது ஸ்பரிசத்தை விரும்பிக் கள்ளத்தன மான முறையில் அதைப் பெற்றும் இருந்தாள். இந்தக் குற்ற உணர்வு காரணமாகத் தான் அவள் இப்போது நடுங்கிக் கொண்டிருந்தாள்!
கோயிலுக்குப் போயிருந்த காமாட்சி அம்மாளும் மாசிலாமணியும் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
"கொல்லைப்புறம் ஏதோ சத்தம் கேட்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே காமாட்சி கிணற்றடிக்கு நடந்தாள்.
கமலா வெடவெடத்து நிற்பதோ கல்யாணம் ஈரம் சொட்ட நிற்பதோ அவள் கண்ணில் படவில்லை. முதலில் குடம்தான் அவள் கவனத்தைக் கவர்ந்தது!
"அடி பாவி! குடியைக் கெடுத்தியே! வேணுமென்றே நசுக்கினாயா? படிப்புத்தான் வரலை, வீட்டுவேலைகளையாவது உருப்படியாகச் செய்வாய் என்று பார்த்தால் அதிலும் பூஜ்யம்தானா?" என்றாள். கமலா அழ ஆரம்பித்தாள்.
கல்யாணத்துக்கு கோபம் கோபமாக வந்தது. பற்களை நறநறவென்று கடித்தான்.
இதற்குள் மாசிலாமணி, "இந்தா என்ன நடந்ததென்று விசாரியாமலேயே எதற்கு இப்படி எரிந்து விழுகிறாய்?" என்று கேட்டார். "கமலா ஏன் உன் உடம்பு நனைத்திருக்கிறது? எப்படி குடம் நசுங்கியது?" என்றார்.
"கிணற்றிலே விழுந்துட்டேன் அப்பா!"
"ஐயய்யோ! கிணற்றிலே விழுந்து விட்டாயா?" என்று அலறினாள் காமாட்சி. " 'காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொடுக்காமல் பெண்ணை வீட்டிலே வைத்துக்கொண்டிருந்தார்கள். அவள் வாழ்க்கை வெறுத்துக் கிணற்றிலே விழுந்தாள்' என்று எங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தரத் திட்டம் போட்டாயா? நீயாகவே வந்து விழுந்துவிட்டாயா?"
"இல்லை! அவளாக விழவில்லை; நான்தான் பிடித்துத் தள்ளினேன்!" என்றான் கல்யாணம் ஆத்திரத்துடன்.
இது என்ன அநியாயம்?" என்று தம்பதியர் இருவரும் ஏககாலத்தில் கேட்டனர்.
"அவர் விளையாட்டுக்கு அப்படிச் சொல்கிறார் அப்பா! இவர்தான் என்னைக் கிணற்றிலிருந்து கரையேற்றிக் காப்பாற்றினார்" என்றாள் கமலா.
கல்யாணம் நடந்த கதையை விவரித்தான். எல்லாவற்றையும் கேட்டு விட்டுக் காமாட்சி அம்மாள், "நல்ல வேளை சரியான சமயத்தில் வந்து காப்பாற்றினாய். இல்லாதபோனால் எப்பேர்பட்ட அபாண்டமெல்லாம் எங்கள் மேல் ஊரார் சுமத்தி யிருப்பார்களோ! இவளுக்கு கல்யாணமாகாததால் மனக் கசப்படைந்து நானே இவளைக் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டதாகக்கூடக் கதை கட்டி விடுவார்கள்" என்றாள்.
'பெண் கிணற்றில் விழுந்து சாகாமல் பிழைத்தது பெரிதாகப் படவில்லை. தன்மீது அபவாதம் விழாமல் தப்பியதுதான் முக்கியமாகத் தோன்றுகிறது இந்த அம்மாளுக்கு!' - கல்யாணத்துக்குக் காமாட்சியின் பேச்சு வியப்பளித்தது; கமலாவின் மீது அவனுக்குப் பரிவு அதிகரித்தது.
இந்தச் சமயம் வீட்டுக்கார ரங்கநாத முதலியார் வந்து சேர்ந்தார். வரும்போதே "இரண்டு மாத வாடகை பாக்கி. கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டைக் காலி பண்ண வேண்டியதுதான்" என்று கூறியபடியே வந்தார்.
"நல்ல ஆளய்யா நீர்! கூரை பற்றி எரியும் போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதையாக இருக்கிறது உமது போக்கு" என்றான் கல்யாணம்.
"கூரை எரிகிறதோ இல்லையோ என் வயிறு பற்றித் திகுதிகுவென்று எரிகிறது, கல்யாணம்! உன் பேச்சைக் கேட்டு இவர்களை இங்கே குடி வைத்தேன் பார்!"
"முதலியார் ஸார்! நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். இந்த மனுஷனுக்கு ஒரு வாரமாக உடம்பு சரியில்லை. வேலை கிடைத்தும் கூடப் போக முடியவில்லை. இந்தப் பெண்ணோ கிணற்றில் விழுந்து விட்டாள்."
"ஐயையோ! ஏன்! ஏன்?"
"உங்களால்தான்!"
"இது என்ன வீண் பழி? நான் இந்த வீட்டுக்கு வந்தே ரொம்ப நாளாயிற்றே.இரண்டு மாசத்துக்குப் பிறகு இன்றுதானே வருகிறேன். வாடகையைக் கொடுத்து அனுப்பி யிருந்தால் இப்போதுகூட வந்திருக்க மாட்டேனே!"
"அதுதான் நீங்கள் செய்த தவறு" என்றான் கல்யாணம். "ஏதடா, அயலூரிலிருந்து மனிதர்கள் வந்து நம் வீட்டில் தங்கியிருக்கிறார்களே, அடிக்கடி வந்து பார்த்துக் கவனித்துக் கொள்வோம் என்று தோன்றாதோ ஒரு மனுஷனுக்கு?"
"நீதான் கவனித்துக் கொள்கிறாயே என்று இருந்துவிட்டேன்." "அதன் விளைவைப் பாருங்கள். பாவம், இவள் கிணற்றில் விழ நேர்ந்தது!"
"அதெப்படி நான் இங்கு வராததற்கும் அவள் கிணற்றில் விழுவதற்கும் என்ன சம்பந்தம்?"
"நீங்கள் அடிக்கடி வந்து பார்த்திருந்தால் தண்ணீர் இழுக்க இவள் படும் சிரமத்தை உணர்ந்திருப்பீர்கள். ஒரு பம்பு செட் வைத்துக் கொடுத்திருப்பீர்கள். குழாயைத் திறந்தால் ஜலம் வந்திருக்கும். இவள் கிணற்றில் நீர் இழுக்கப் போயிருக்க மாட்டாள். கிணற்றுக்குள் விழுந்திருக்கவும் மாட்டாள்!"
"வாஸ்தவம்தான். நாளைக்கே நான் ஏற்பாடு பண்ணி விடுகிறேன்" என்ற ரங்கநாதன் கமலாவைக் கனிவு ததும்பப் பார்த்தார்.
"பாவம்! கமலா ஈரத்தோடு நிற்கிறாளே! உடம்பு வெட வெடவென்று நடுங்குகிறதே. போம்மா, போ! உள்ளே போய் வேறு புடவை மாற்றிக்கொள்" என்றார். கல்யாணம் ரங்கநாத முதலியாரை அணுகி அவர் காதோடு பேசினான்: "வேறு மாற்றுப் புடவை இருக்கோ என்னமோ யார் கண்டது? இந்தச் சமயத்தில் நீர் வாடகையை வசூல் பண்ணுகிறேன் என்று வேறு வந்துவிட்டீர்."
ரங்கநாத முதலியார் உடனே மாசிலாமணியைப் பாரத்து, "பாவம், உங்கள் நிலைமையை யோசித்தாலும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. இன்னும் ஒரு மாசம் தவணை தருகிறேன். அதற்குள் மூன்று மாத வாடகையையும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள்!" என்றார்.
"அதற்கென்ன கூட இரண்டு மாச அட்வான்ஸும் சேர்த்துத் தருகிறேன்" என்றார் மாசிலாமணி தைரியம் அடைந்தவராக.
கல்யாணம் அந்தக் குடும்பத்துக்கு அடுத்தடுத்து மூன்று உதவிகளைச் செய்துவிட்ட திருப்தியுடன் புறப்பட்டான். கமலாவைக் காப்பாற்றியாகி விட்டது; பம்பு செட்டுக்கு ஏற்பாடு செய்தாகி விட்டது; வாடகை கொடுக்க ஒரு மாச அவகாசம் பெற்றுத் தந்தாகி விட்டது! "நான் வருகிறேன்; வீட்டுக்குப் போய் உடை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறிப் பிரிந்தான்.
----------------
அத்தியாயம் 24 -- "வேறு நல்ல வரன்!"
கல்யாணம் சென்ற பிறகு ரங்கநாத முதலியார் மாசிலாமணியைப் பார்த்து, "ஏன் சுவாமி, அந்தப் பிள்ளையாண்டான் சொல்லிவிட்டுப் போவது உண்மைதானா? உங்களுக்கு வேலை கிடைத்து விட்டதா?" என்றார்.
"உம்... உம்... ஐம்பது சதம் கிடைத்த மாதிரிதான்."
"அதென்ன ஓய், வாத்தியார் மாதிரி மார்க்குப் போட்டுப் பேசறீர்?"
"வாத்தியார் வேலைக்குத்தான் மனுப் போட்டேன். மனுப் போட்டதில் ஐம்பது சதவீத வேலை முடிந்தது. அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஐம்பது சதவீத வேலைதான் பாக்கி. ஆக ஐம்பது சதவீதம் வேலை கிடைத்த மாதிரிதானே?"
ரங்கநாத முதலியார் சிரித்தார்.
"இப்படிச் சிரித்து எரிச்சலைக் கிளப்புவதற்குப் பதில் சிபாரிசு செய்து என் மனசைக் குளிர்விக்கலாம்" என்றார் மாசிலாமணி. "இந்த ஊர்ப் பள்ளிக்கூட நிர்வாகக் கமிட்டியில் நீரும் அங்கத்தினராமே?"
"ஆகட்டும் சுவாமி, ஆகட்டும்! பேஷாகச் சிபாரிசு செய்கிறேன். ஆனால் பலன் இருக்குமென்று தோன்றவில்லை. சின்னப் பசங்க எத்தனையோ பேர் பி.ஏ., பி.டி. எல்லாம் பாஸ் பண்ணிட்டு மனுப் போட்டிருக்காங்க. உபாத்தியாயர் பயிற்சி பெறாத உமக்கு அதுவும் இந்த வயதில் எப்படி வேலை கிடைக்கும்? என்னைக் கேட்டால் உங்கள் கஷ்ட மெல்லாம் தீர ஒரு வழி சொல்வேன்...."
"பேஷாய்ச் சொல்லுங்கள். குருடனுக்க வேண்டியது கண்தானே. அதை யார் கொடுத்தால் என்ன?"
"ஏதோ கடவுள் உங்களுக்கு மூக்கும் முழியுமாகப் பார்க்க லட்சணமாக ஒரு பெண்ணைக் கொடுத்திருக்கிறார். அவளுக்குக் கூடிய சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்து விட்டால்.... அதுவும் நல்ல பணக்கார இடமாகப் பார்த்து விட்டால்..."
"அதைப் பற்றி நாங்க யோசிக்காமலா இருப்போம்? இப்போ வந்துவிட்டுப் போறானே கல்யாணம் அவனுக்குக் கொடுக்க லாம் என்றுகூட எண்ணி யிருந்தோம்."
"அழகுதான். கல்யாணமாவது கமலாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவாவது!"
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அந்தப் பையன் இவளிடமும் எங்களிடமும் பிரியமாகத்தானே இருக்கிறான்? இவளும்...."
"தயவுசெய்து அந்தப் பேச்சையே இனிமேல் எடுக்காதீர்கள். ஏற்கனவே ஊரெல்லாம் ஒரே வதந்தியாக இருக்கு..."
"என்ன வதந்தி?"
"ஒரு வாலிபன் அடிக்கடி ஒரு யுவதியை வந்து பார்த்துக் கொண்டிருந்தால் என்ன வதந்தி பரவும்? எல்லாம் காதல், கல்யாணம் என்கிற வதந்திதான்."
"அப்போ நாங்க போட்ட கணக்குச் சரிதானே!"
"சுத்தத் தப்பு! அவன் ஒரு நாளும் கமலாவைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதில்லை. என்னைக் கேட்டால் அவனை மறுபடியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கவே அனுமதிக்கக் கூடாது என்பேன்!"
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? இங்கே ஒரு தப்பும் நடந்துவிடவில்லை. நடப்பதற்கு நாங்கள் விடவும் மாட்டோம். நாங்கள் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்."
"அது தெரிந்துதான் நானும் சொல்கிறேன். இந்தக் கல்யாண சுந்தரம் இருக்கிறானே, சுத்தக் காலிப்பயல்! பவானி என்று ஒரு பெண் வக்கீல் வந்திருக்கிறாளே; எப்போது பார்த்தாலும் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அவள் காலாலே இட்டதைத் தலையால் செய்யக் காத்திருக்கிறான். சீக்கிரம் அவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தாலும் நடக்கும் என்று ஊரிலே பேசிக் கொள்கிறார்கள்...."
"பார்த்தீர்களா! நான் சொன்னது சரியாய்ப் போயிற்று!" என்று காமாட்சி அம்மாள் தன் புருஷனிடம் சொன்னாள்.
"நாளைக்கு சர்ச்சில் ஜெயிக்கட்டும்; ஜப்பானும் ஜெர்மனியும் தோற்கட்டும். அல்லது பிரளயம் வந்து உலகமே அழிந்து போகட்டும். அப்போதும் நீ, 'பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாப் போயிறாறா?' என்பாய். நீ சொல்லாத விஷயமே கிடையாது. அது சரியாகப் போகாத நிலைமையும் இல்லை" என்றார் மாசிலாமணி. பிறகு ரங்கநாத முதலியாரை நோக்கி, "உங்கள் யோசனை தான் என்ன?" என்று கேட்டார்.
"வேறு நல்ல வரனாகப் பார்த்துக் கமலாவுக்குக் கல்யாணம் பண்ணிவிட வேண்டியதுதான்."
"நீங்களே பார்த்து இந்தப் பெண்ணுக்கு ஒரு வழி காட்டி விடுங்களேன். உங்களுக்கு புண்ணியமா யிருக்கும்" என்றாள் காமாட்சி.
"அதற்கென்ன பண்ணி விட்டால் போகிறது. நாளைக்கே நல்ல நாள்தான். ராகுகாலம் கழித்து நம் வீட்டுக்கு வாருங்கள். சாவகாசமாகப் பேசலாம்" என்று சொல்லி விட்டு ரங்கநாத முதலியார் சென்றார்.
அவர் போனதும் மாசிலாமணி தம் மனைவியைப் பார்த்து, "அடியே இனிமேல் அந்தக் கல்யாணம் இந்த வீட்டிலே கால் வைச்சால்...." என்று கறுவினார்.
"இந்தாங்க, உங்களால் நிறைவேற்ற முடியாத சபதம் எதையும் பண்ணாதீர்கள்! கல்யாணத்தின் காலை முறிக்க உங்களால் ஆகாது. வேணுமானால் இந்த நாற்காலியின் காலை முறிச்சு அடுப்பில் வைக்கிறதா சபதம் எடுத்துக்குங்க. நாற்காலி வீட்டின் சொந்தக் காரருடையதுதான். நம்முடையதில்லே!"
ரங்கநாத முதலியாருக்கும் தன் பெற்றோருக்கும் இடையில் நடந்த உரையாடலை யெல்லாம் உள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த கமலா, முதலில் திடுக்கிட்டாள். பிறகு மௌனமாய் கண்ணீர் பெருக்கி அழத் தொடங்கினாள்.
(தொடரும்)
----------------
அத்தியாயம் 25 -- விசித்திர வரவேற்பு
சமூக சேவா சங்கத்தின் டென்னிஸ் கோர்ட்டில் பவானியும் மாஜிஸ்திரேட் கோவர்த்தனனும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
கல்யாணம் அப்போது அங்கே வந்து, "மணி ஐந்தரையாகப் போகிறதே! ஒத்திகைக்கு நேரமாகிறதே!" என்றான்.
"ஒத்திகையை யெல்லாம் நீங்கள் நடத்துங்கள். பவானி அப்புறம் வருவாள்" என்றார் கோவர்த்தனன்.
"நோ, நோ! பவானி ரொம்ப பங்ச்சுவல். ஐந்தரை மணிக்கு ஒத்திகையென்றால் டாண்ணென்று அத்தனை மணிக்கு வந்துவிடுவாள்" என்றான் கல்யாணம்.
"வாட் நான்ஸென்ஸ்! இவளுக்கு எதற்கு ஒத்திகை? நடிக்கத் தெரியாதவர்கள்தாம் திரும்பத் திரும்ப ஒத்திகை பார்த்துக்கொள்ள வேண்டும். நாடகம் என்று அரங்கேறுகிறது என்று நேரம், தேதி சொல்லிவிட்டுப் போ. பவானி பங்ச்சுவலாக வந்து சேர்வாள்!"
"நீங்க கொடுக்கிற சர்ட்டிஃபிகேட்டைக் கேட்டுத்தான் இவளுடைய நடிப்பாற்றலை நான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. எனக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இவளை நான் அழைப்பது மற்றவர் நடிப்பை அபிவிருத்தி செய்ய."
"ஓ! கதாநாயகியாக நடிக்குமாறு அழைத்துவிட்டு இப்போ டைரக்ஷன் பொறுப்பையும் இவள் தலையிலே கட்டியாகிவிட்டதா? இன்னும் கதை, வசனம், பாட்டு, இசை எல்லாம் பவானிதானா? மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து திரை தூக்கி இறக்குவீர்களாக்கும்?"
இதற்குள் பவானி குறுக்கிட்டு, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ என்னால் முடிந்த அளவு உதவுகிறேன். எல்லாருடைய ஒத்துழைப்பும் வேண்டும். நாடகம் வெற்றிபெற மாஜிஸ்திரேட் ஸாரின் ஒத்துழைப்பும் கூட அவசியம் தேவை" என்றாள்.
"நான் என்ன செய்யணும், சொல்லு" என்றார் மாஜிஸ்திரேட்.
"அபத்தமான முறையில் குற்றம் குறை சொல்லாமல், முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் அதுவே பெரிய உதவி" என்றான் கல்யாணம்.
"இப்போது நீதான் எங்கள் விளையாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டிருகிறாய்" என்றார் கோவர்த்தனன்.
"ஐ ஆம் ஸாரி கல்யாணம். இந்த ஸெட்டை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன். ஐந்தே நிமிஷம்" என்றாள் பவானி.
"சீக்கிரம் முடியணும் எனபதற்காக விட்டுக் கொடுத்து ஆடாதீர்கள்" என்றான் கல்யாணம். தொடர்ந்து அவள் பந்தைத் தட்டிய போதெல்லாம், "ஒண்டர் ஃபுல் ஷாட்", "பியூட்டி", "ஸ்பிளெண்ட்டிட்" என்றெல்லாம் உற்சாகப் படுத்தினான். மாஜிஸ்திரேட் ஆடியபோது மௌனம் சாதித்தான்.
மெய்யாலுமே பவானி பிரமாதமாகத்தான் ஆடினாள். ஆனால் எதிராளியின் பலத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. களைப்புடன் ஒரு 'ஷாட்' அடித்த சமயம் அது கோர்ட்டைவிட்டு வெகுதூரம் திசை தப்பிப் போய் விழுந்தது.
கல்யாணம் பலமாகக் கைதட்டி "எக்ஸலண்ட்" என்றான்.
"எதற்குக் கைதட்டுகிறீர்கள்? எனக்குத்தான் ஆட்டம் போய்விட்டதே" என்றாள் பவானி.
"ஆட்டமும் போய்விட்டது. அத்துடன் பந்தும் போய்விட்டது. நாம் நாடக ஒத்திகைக்குப் போகலாம்."
மாஜிஸ்திரேட் மரத்தடி நாற்காலிகளைக் காண்பித்து, "ஒரு கப் டீ சாப்பிட்டுவிட்டுப் போகலாம், பவானி!" என்றார்.
"வேண்டாம், ஸார்! 'புரொட்யூஸருக்குக் கோபம் வந்துவிடும். அப்புறம் அடுத்த நாடகத்தில் எனக்கு 'சான்ஸ்' தர மாட்டார். கதாநாயகிக்கு வேறு யாரையாவது 'புக்' பண்ணி விடுவார்" என்று சிரித்துக் கொண்டே கூறிய பவானி, டர்க்கி டவலால் முகத்தை ஒற்றிக் கொண்டு கல்யாணத்துடன் நடந்தாள்.
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் மரத்தடி நாற்காலியில் அமர்ந்தார். பையன் வந்த போது அவர் வழக்கம்போல் டீ அல்லது லெமனேட் 'ஆர்டர்' செய்யவில்லை. விஸ்கி சோடா கொண்டு வரச் சொன்னார்.
ஒத்திகை முடிந்து பவானி புறப்பட்ட போது கல்யாணம், "என்னை வீட்டில் விட்டு விட்டுப் போகிறீர்களா?" என்று கேட்டான்.
"ஏன் உங்க கார் என்ன ஆயிற்று?" என்றாள் பவானி.
"அதற்கு உங்க புதுக் கார் பக்கத்தில் வந்து நிற்க வெட்கமாயிருக்கிறதாம். காலையில் ஷெட்டை விட்டுப் புறப்படமாட்டேன் என்று ஒரே பிடிவாதம்!"
"பொய்! தனித்தனியே நாம் போனால் வம்பளக்க முடியாது. அதனால் உங்கள் காரை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள்."
"உண்மைதான் பவானி! உங்களுடன் தனியே மனம் விட்டுச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தால்தான் இரவு எனக்குத் தூக்கமே வருகிறது" என்று கூறிய கல்யாணம் காரின் முன்புறம் போய் ஏறிக் கொண்டான்.
சமூக சேவா சங்கத்தின் வெளி மதிலைத் தாண்டியதும் பவானி கேட்டாள். "அந்தப் பெண் கமலா கிணற்றில் விழுந்து விட்டாளாம். நீங்கள் காப்பாற்றினீர்களாமே?"
"ஆமாம். அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"
"மிஸ்டர் கல்யாணம், ராமப்பட்டணம் ரொம்பச் சின்ன ஊர். இங்கே நேதாஜி டில்லி செங்கோட்டையைப் பிடித்தார் என்பதாகப் பத்திரிகையில் செய்தி படிக்க நேர்ந்தால்கூட ஒருவித சலசலப்பும் இராது. கிணற்றில் விழுந்த கமலாவைக் கல்யாணம் காப்பாற்றினார் என்றால் பெரிய பரபரப்பு ஏற்படும். காட்டுத் தீ போல் அந்தச் செய்தி பரவும்!"
"அது சரி, நீங்க இப்போ எங்கே போகிறீர்கள்?" என்றான் கல்யாணம். பவானி மாற்றுத் திசையில் காரைத் திருப்புவதைப் பார்த்துவிட்டு.
"கமலாவின் வீட்டுக்குத்தான்."
"எதற்கு?"
"சரிதான். அந்தப் பெண் கிணற்றில் விழுந்து சாகப் போனவள். புனர்ஜென்மம் எடுத்திருக்கிறாள். அவளை நான் பார்த்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்ல வேண்டாமா?"
கல்யாணம் தலையாட்டிச் சம்மதித்தான்.
அங்கே அவர்களுக்கு ரொம்ப விசித்திரமான வரவேற்பு காத்திருந்தது. கமலாவைக் கண்ணிலேயே காணோம். வந்தவர்களைப் பார்த்துக் காமாட்சி அம்மாள், "என்ன இரண்டு பேருமாகச் சேர்ந்து எங்கே இப்படிக் கிளம்பினீர்கள்?" என்று பாதி கிண்டலாகவும் பாதி அலட்சியமாகவும் கேட்டாள்.
"உங்க பெண் கிணற்றில் விழுந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்...." என்று பவானி ஆரம்பிப்பதற்குள்,
"ஆமாம், விழுந்து விட்டாள். அப்படியே போயிருந்தால் தேவலாம். ஒரு கவலை விட்டிருக்கும். ஏழைகளுக்கெல்லாம் பெண்ணும் பிறக்கக் கூடாது. பிள்ளையும் இருக்கக் கூடாது" என்றாள் காமாட்சி.
"என்னடி வந்தவர்களை 'வா' என்று சொல்லாமல் ஏதேதோ உளறுகிறாய்" என்றார் மாசிலாமணி.
"கமலா எங்கே?" என்றாள் பவானி.
"உடம்பு சுகமில்லை. காமிரா அறையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறாள்."
"ஒன்றுமில்லை. தலைவலியும் குளிர் காய்ச்சலும்தான். நாளைக்குச் சரியாகிவிடும்" என்றார் மாசிலாமணி.
"டாக்டர் என்ன சொல்கிறார்?"
"டாக்டர் எங்கே வந்து பார்த்தார்? அவர் வருவதானால் சும்மா வருவாரா? பணத்துக்கு எங்கே போகிறது?"
"ஒரு வார்த்தை விசுவிடம் சொல்லி அனுப்பியிருந்தால் நான் அழைத்து வந்திருப்பேனே?" என்றான் கல்யாணம்.
"வேண்டாம், வேண்டாம்! எதற்கு உங்களுக்குச் சிரமம்? ஏற்கனவே நாங்கள் உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்து விட்டோம். எனக்குத் தெரிந்த சுக்கு திப்பிலி வைத்தியம் பண்ணுகிறேன். சரியாகிவிடும்."
"பவானி! வாருங்கள், போகலாம்" என்றான் கல்யாணம் அவன் அங்கே ஒரு வினாடி தமதிக்கவும் விரும்பவில்லை.
"ஆமாம், ஆமாம். புறப்படுங்க, உங்களுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டு, டென்னிஸ் கோர்ட்டு, நாடகக் கோர்ட்டு என்று ஏகப்பட்ட வேலை" என்றாள் காமாட்சி.
"கல்யாணம்! நீங்க காருக்குப் போங்க. நான் ஒரு நிமிஷம் கமலாவைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்றாள் பவானி. பிறகு காமாட்சியின் அனுமதிக்குக் காத்திராமல் காமிரா அறைக்குள் போய்த் தரையில் பாயில் படுத்திருந்த கமலாவை அணுகினாள்.
"கமலா, இப்போ எப்படி இருக்கிறது?"
"எனக்கு ஒன்றும் இல்லை" என்றாள் கமலா நறுக்கென்று. பவானி அவள் கழுத்தில் கரம் வைத்தாள், ஜுரம் இருக்கிறதா என்று பார்க்க. சரேலென்று அதை உதறிவிட்டுக் கமலா தலையையும் சேர்த்து இழுத்துப் போர்த்திக் கொண்டு சுவர் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
"கமலா! என்னிடம் உனக்கு என்ன கோபம், திடீரென்று?"
"எனக்கு யார் மீதும் ஒரு கோபமும் இல்லை. என்னைப் படைத்த கடவுளிடம்தான் எனக்குக் கோபம்."
"கமலா! உன் மனசை யாரோ ஏதோ சொல்லிப் புண்படுத்தியிருக்கிறார்கள். என்னுடன் உனக்குப் பேசப் பிடிக்கவில்லையானால் வேண்டாம். நான் வருகிறேன். ஆனால் நான் எப்போதும் உன் நலனை நாடுகிறவள்; என்னிடம் நீ கோபப்படுவதில் அர்த்தமில்லை. இதை இப்போது நீ புரிந்து கொள்ளா விட்டாலும் சீக்கிரமே உணர்வாய்!"
மளமளவென்று இதைச் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பிய பவானி, மாசிலாமணி தம்பதியைத் திரும்பிக்கூடப் பாராமல் வாசலுக்குச் சென்றாள். காரில் ஏறிக் கொண்டு அதைக் கிளப்பினாள்.
------------------
அத்தியாயம் 26 --- நீரில் மிதந்த விழிகள்
சற்றுத் தூரம் போகும் வரை இருவரும் பேசவில்லை. பிறகு இருவரும் ஒரே சமயத்தில், "ஏன் இவர்கள் இவ்வளவு மோசமானவர்களாக..." என்று பேச்சை ஆரம்பித்தார்கள். உடனேயே இருவரும் மற்றவர் பேச அனுமதித்து வாக்கியத்தைப் பாதியில் நிறுத்திக் கொண்டார்கள். மீண்டும் இருவரும் ஒரே சமயத்தில், "என்ன சொன்னீர்கள் ?" என்று கேட்டார்கள்.
இதையடுத்து இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. பலமாகச் சிரித்த பவானி, ஒருவாறு அது ஓய்ந்ததும், "சிரிக்கவே கூடாது, நான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் அத்தனை பரிதாபமாக இருக்கும்போது நான் சிரிப்பதே பாவம்" என்றாள். அப்புறம் முதலில் கேட்க ஆரம்பித்துப் பாதியில் நிறுத்திய கேள்வியை மீண்டும் கேட்டாள். "ஏன் இப்படி இவர்கள் இவ்வளவு மோசமாகத் திடீரென்று நடந்து கொண்டார்கள்?"
"விட்டுத் தள்ளுங்கள், அநாகரிகமான ஜனங்கள். படிப்புக் கிடையாது, நாகரிகம் கிடையாது, நல்ல மனிதர்களோடு பழக்கம் கிடையாது. தெரிந்த லட்சணம் அதுதான்" என்றான் கல்யாணம்.
"அதொன்றுமில்லை. நேற்று வரை நல்லபடியாகத்தானே நடந்து கொண்டார்கள்?"
"தரித்திரமும் கஷ்டமும் இப்போது அதிகமாகிவிட்டது. அது காரணமாயிருக்கலாம்."
"இந்தக் குடும்பத்தைப் பார்த்தால் எனக்கு 'ஐயோ பாவம்' என்றிருக்கிறது. நீங்கள் ஏதும் உதவி செய்யக் கூடாதா?"
"ஓரளவுக்குத்தான் உதவலாம். எவ்வளவுதான் செய்ய முடியும்? ஒரு குடும்பத்தை என்றென்றைக்கும் தாங்குவது சாத்தியமா? அவரவர் காரியத்தை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்."
"எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது."
"என்ன யோசனை?"
"நீங்கள் அந்தப் பெண் கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் அவர்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும்."
"என்ன விளையாடுகிறீர்கள்?"
"விளையாட்டு என்ன வந்தது? உங்களுக்கோ இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அந்தப் பெண்ணோ கஷ்டப்படுகிறாள். ஒவ்வொரு சமயம் அந்த அம்மாள் கமலாவை நடத்துவதைப் பார்த்தால் சொந்தத் தாய் இல்லையோ, மாற்றாந் தாயோ என்றுகூடத் தோன்றுகிறது."
"நானும் அப்படி நினைத்ததுண்டு. ஆனால் தரித்திரத்தின் கொடுமைதான் அப்படியெல்லாம் பேசச் சொல்கிறது என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்."
"ஏதாவது இருக்கட்டும். நான் சொன்ன படி நீங்கள் செய்தால் நல்லது. கமலாவும் ரொம்ப நல்ல பெண். கண்ணுக்கு லட்சணமாய் இருக்கிறாள். உங்கள் தாயாருக்கும் அதிகமாகப் படிக்காத, குடும்பப் பாங்கான பெண் தான் நாட்டுப் பெண்ணாக வரவேண்டும் என்று ஆசை. போதாக்குறைக்கு அவளை நீங்கள் கிணற்றிலிருந்து எடுத்துக் காப்பாற்றியிருக்கிறீர்கள்!"
"அதனாலே என்ன? ஒரு பெண்ணைக் கிணற்றிலிருந்து எடுத்துக் காப்பாற்றிய குற்றத்துக்காக நான் கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழ வேண்டுமா?"
"சேச்சே! அப்படிச் சொல்வேனா? 'சம்சார சாகரத்தில் கமலாவுடன் கரம் கோத்துக்கொண்டு இறங்குங்கள்' என்றுதான் சொல்கிறேன்."
"இதோ பாருங்கள்! கமலா வேணுமானால் மறுபடியும் என் எதிரேயே கிணற்றில் விழட்டும். நான் காப்பாற்றாமல் கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறேன். ஏதோ மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டதற்காக எனக்கு இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்காதீர்கள்!"
"கல்யாணம் என்றால் உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா? எனக்குத் தெரியாமல் போச்சே. எனக்கும் கல்யாணத்தின் பேரில் வெறுப்புத்தான்!"
"என்னது? உங்களுக்கு என் மேலே வெறுப்பா?" என்றான் கல்யாணம் பொய்க் கோபத்துடன்.
பவானி சிரித்தாள். "இல்லை, இல்லை! உங்களைப் போலவே எனக்கும் திருமணத்தின் மீது வெறுப்பு' என்று சொல்லி இருக்க வேண்டும்."
"உங்கள் நிலைமை எப்படியோ, எனக்கொன்றும் திருமணத்தின் மீது வெறுப்பில்லை. என் பெயரே கல்யாணம் என்றிருக்கும்போது தாலி கட்டத் தயங்குவேனா? என் மனசுக்கு உகந்த பெண்ணாயிருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நியாயமான நிபந்தனைதான்.... உதாரணமாய் நாம் இரண்டுபேரும்தான் இருக்கிறோம்.... சும்மா ஓர் உதாரணத்துக்கு..... பேச்சுக்குச் சொல்கிறேன்."
"பேச்சுக்குக்கூடச் சொல்ல வேண்டாம். எனக்குக் கல்யாணம் என்றால் ரொம்ப வெறுப்பு. அதை மறக்காதீர்கள்" என்றாள் பவானி.
கல்யாணம் அவள் குரலில் எட்டிப்பார்த்த கடுமையைப் புரிந்து கொண்டு மௌனமானான். இதற்குள் அவன் வீடு வந்து விட்டது. கதவைத் திறந்து கொண்டு இறங்கப் போனவனை, "மிஸ்டர் கல்யாணம்" என்ற கனிவான அழைப்பு தடுத்து நிறுத்தியது.
"என்ன சொல்லுங்கள்!"
"கமலா கிணற்றில் விழுந்தாளே, எப்படி?"
"தாம்புக் கயிறு ஜகடையில் சிக்கிக் கொண்டதாயும் அதை விடுவிக்கக் கிணற்று மதில் மீது தான் ஏறியதாகவும் தடுமாறி விழுந்ததாகவும் சொன்னாள்."
"சுத்தப் பொய்!"
"என்னது!"
"ஆமாம் அது சுத்தப் பொய்யாகத்தான் இருக்க வேண்டும். நான் சொல்கிறேன். அவள் உங்கள் குரலை வாசலில் கேட்டுவிட்டு வேண்டுமென்றே, "ஐயோ!" என்று அலறியபடி கிணற்றுக்குள் குதித்திருக்கிறாள்!"
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"பாம்பின் கால் பாம்பறியும்! பெண் மனத்தைப் பெண்ணால்தான் புரிந்து கொள்ள முடியும். உங்களால் காப்பாற்றிக் கரை சேர்க்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டு விழுந்திருக்கிறாள். கல்யாணம் உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஏமாற்றம் அளிக்காதீர்கள்!"
கல்யாணம் கீழே இறங்கிக் கதவைச் சாத்தினான். பிறகு குனிந்து ஜன்னல் வழியே பவானியைப் பார்த்தான். பூரண சந்திரனின் பாலொளி அவள் முகத்தை மற்றொரு சந்திரனாகப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த மதிவதனத்திலிருந்து தன் விழிகளைப் பெயர்க்காமல் பேசினான்: "கமலாவைப் போலவே நானும்தான் ஒருவர் மீது உயிரையே வைத்திருக்கிறேன். ஆனால் அந்த ஒருத்தி கமலாவாக இல்லையே நான் என்ன செய்ய?" என்று கேட்டான்.
நான்கு விழிகள் நீரில் மிதந்தன.
(தொடரும்)
-------------
அத்தியாயம் 27 -- செல்வம் பேசுகிறது!
ரங்கநாத முதலியார் குறிப்பிட்டிருந்த தினத்தில் அவர் சொன்னது போலவே ராகு காலம் கழித்து மாசிலாமணி முதலியாரும் மனைவி காமாட்சியும் அவர் வீட்டுக்குப் போனார்கள். அந்தப் பெரிய வீட்டையும் அதிலிருந்த ஐசுவரியத்தையும் கண்டு பிரமித்தார்கள்.
விசாலமான தோட்டத்தில் குரோட்டன்ஸ், பூகன்விலா, மல்லி, ரோஜா, செம்பருத்தி, இருவாட்சி என்று பல ரகச் செடிகளில் பூக்கள் சிரித்தன. பின்புறம் வாழை, மா, பலா, என்று பல ரக பழ மரங்கள் காட்சியளித்தன. 'போர்ட்டிகோ' வுக்கு முன்னால் வட்டமான புல்தரை. அதற்கு நீர் தெளிப்பதுபோல் அதன் மையத்தில்ல் சுழன்றது 'ஃபவுண்டன்' நான்கைந்து தோட்டக்காரர்கள் சுருசுருப்பாக இயங்கிக் கொண் டிருந்தனர். தோட்டத்தைக் கடந்து படியேறியதும் வாசல் கதவருகே இருபுறமும் பிரும்மாண்டமான இரண்டு யானைத் தந்தங்கள். உள்ளே கூடத்தின் சுவரில் புலி, மான் தலைகளும் சில புகைப்படங்களும் காணப்பட்டன. தரையில் கரடித் தோல் விரிப்பாகி யிருந்தது. அதன் பக்கத்தில் தந்தம் இழைத்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய கனமான டிபன் மேஜை. அதன் மூன்று புறங்களிலும் அமர்ந்தால் ஆள் இருக்கிற இடம் தெரியாமல் அமுங்கிவிடுகிற மாதிரியான உயர் ரக சோபாக்கள். நிலைவாசல்களில் தொங்கிய மணித் திரைகள், கூரையிலிருந்து தொங்கிய லஸ்தர் விளக்குகள்.
தங்கள் கால் பட்டுத் தரை அழுக்காகி விடுமோ என்று அஞ்சியவர்களாக வராந்தாவில் நின்றார்கள் மாசிலாமணியும் காமாட்சியும்.
"ஸார்!" என்று குரல் கொடுத்தார், மாசிலாமணி.
"யாரு?" என்று கேட்டுக் கொண்டே வந்தார் கணக்குப்பிள்ளை.
"ரங்கநாத முதலியார் இருக்கிறாரா? எங்களை இன்று இந்த நேரத்துக்கு வரச்சொன்னார்."
அவர்களை மேலும் கீழுமாகப் பார்த்த கணக்குப்பிள்ளை, "மாசிலாமணி என்று ஒருவர் வருவார்ன்னு ஐயா சொன்னார். நீர்தானா அது?" என்று கேட்டார்.
"ஆமாம்."
"நிஜமாகத்தானா? நீர்தான் மாசிலாமணியா?"
"'இவ்வளவு சாமானிய மனிதராய் இருக்கிறாரே, இவரையா வரச் சொல்லி யிருப்பார்?' என்று யோசிக்கிறீங்களா?"
"அதில்லை" என்று கணக்குப்பிள்ளை கூறிய தோரணையே, 'அதுதான்' என்று உணர்த்தியது. பிறகு அவர், "வாங்க" என்று அழைத்துச் சோபாவில் அமரச் செய்தார். அவர்கள் அதன் முனையில் பட்டும் படாமலும் தயக்கத்துடன் அமர்வதைப் பார்த்து, "சௌகரியமாக உட்காருங்க, ஐயா இப்பத்தான் தூங்கி எழுந்தாங்க, இப்ப வருவாங்க. நான் போய்ச் சொல்கிறேன்" என்றார். அப்புறம் திடுமென ஞாபகம் வந்தவர் போல, "அது சரி, நீங்கதான் ஐயாவோட புஷ்பவனம் தெரு வீட்டிலே குடியிருக்கிறதா?" என்று வினவினார்.
"ஆமாம், எதற்காகக் கேட்கிறீர்கள்?"
"இரண்டு மாதங்களாக வாடகை வரவில்லை; முன்பணமும் ஏதும் தரவில்லை..." என்று கணக்குப்பிள்ளை கூறி வரும்போதே மாசிலாமணிக்கு ஜுரம் கண்டது போலாயிற்று. அவர் எழுந்து கொண்டார்.
"ஏன் எழுந்துட்டீங்க?" என்று அதட்டலாகக் கேட்டார் கணக்குப்பிள்ளை. அந்தத் தொனியே மாசிலாமணியை மீண்டும் உட்கார வைத்து விட்டது.
"ஐயாவிடம் ஞாபகப் படுத்திவிட்டுப்போய் வாடகை வசூல் பண்ணிக் கொண்டு வருகிறேன் " என்று கிளம்பினால், ஒவ்வொரு தடவையும், 'அங்கே நீ போக வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்; மற்ற வேலைகளைக் கவனி" என்பார்.
இவராவது வசூல் செய்வாரா என்றால் அதுவும் கிடையாது. வெறும் கையோடு திரும்பி, 'மறந்துட்டேன்' என்பார்.அவருக்கு எங்கே ஞாபகம் இருக்கும் இதெல்லாம்? நான்தான் நினைவு வைத்துக் கொண்டு பிராணனை விடனும்."
"வாடகைப் பணம் ...?" என்று இழுத்துப் பறித்துக் கொண்டு ஆரம்பித்தார் மாசிலாமணி.
"அதை அவரிடமே கொடுங்கள். இல்லாத போனால் இந்த விஷயத்தைத்தான் நானே கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே. நீ ஏன் கை நீட்டினே'ன்னு எங்கிட்ட பின்னால் பாய்வார். நான் போய் ஐயாவிடம் நீங்கள் வந்தாச்சுன்னு சொல்லிவிட்டு வரேன்."
கணக்குப் பிள்ளை அப்பால் சென்றதும், மாசிலாமணி மனைவியைப் பார்த்து, "இப்படியே நழுவிடுவோமே! திரும்பத் திரும்ப வாடகை வாடகைன்னு நினைவு படுத்திக் கொல்கிறானே!" என்றார்.
"அழகுதான்" என்றாள் காமாட்சி. கணக்குப் பிள்ளைக்கு என்ன தெரியும்? அவருக்குக் கணக்குத்தான் முக்கியம். மனிதர்களா பிரதானம்? அவர் அப்படித்தான் பேசுவார்: அவருக்கு அதுதான் நியாயம். நாம் அவரையா பார்க்க வந்தோம்? ரங்கநாத முதலியார் ரொம்ப நல்ல மாதிரி. நீங்க வேணுமானால் பாருங்கள். அவர் நம்மிடம் வாடகையைப் பற்றி வாய் திறக்கமாட்டார். அப்படியே பேசினாலும் சமாதானம் சொல்லிச் சமாளிக்களாம்" என்று தைரியம் கொடுத்தாள்.
இத்தருணத்தில் கண்ணாடி மணித்திரைகள் அகன்று, கலகலவென்று சப்தப்படுத்த, "வாங்க, வாங்க!" என்று வரவேற்றபடியே கூடத்துக்குள் நுழைந்தார் ரங்கநாத முதலியார். மரியாதைக்காக எழுந்தவர்களைப் பார்த்து, "உட்காருங்க, உட்காருங்க! நமக்குள்ளே என்ன உபசாரம்? அட, உட்காருங்கோ சொல்றேன்!" என்று வற்புறுத்தி அவர்களை அமரச் செய்துவிட்டுப் பிறகுதான் தாம் உட்கார்ந்தார்.
"கணக்குப் பிள்ளை! கணக்குப் பிள்ளை" என்று அவர் அழைத்ததும் "இதோ, வரேன்!" என்று குரல் கொடுத்தபடியே ஓட்டமும் நடையுமாக வந்து துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு நின்றார் அவர்.
"எங்கேய்யா, பலகாரம்? இவர்களைச் சும்மா உட்கார வைச்சிருக்கியே?"
"இதோ வந்துகிட்டே இருக்கே. ஐயாவுக்கும் சேர்த்துக் கொண்டு வரச் சொன்னேன்." என்றார் கணக்குப்பிள்ளை. அதே சமயத்தில் தவசிப் பிள்ளைகள் இருவர் பெரிய வெள்ளித் தட்டுக்கள், வெள்ளி டம்ளர்களைத் தூக்கிக்கொண்டு வந்தனர். அடுத்தாற்போல் புட்டு, ஜாங்கிரி, தேங்காய்ப் பாலில் மிதக்கும் ஆப்பம், இட்டிலி, பொங்கல், மிக்ஸ்சர் இவற்றுகுத் தொட்டுக் கொள்ளக் கொச்சு, சாம்பார், சட்னி, மிளகாய்ப் பொடி - முதலிய எல்லாவற்றையும் வெள்ளிப் பாத்திரங்களிலேயே எடுத்து வந்து பரிமாறினர். காப்பியும் வெள்ளி டபரா டம்ளர்களிலேயே வந்தது. கடைசியில் தோல் சீவி நறுக்கிய மாம்பழம். ஆப்பிள் ஆகியன கொண்டு வந்து வைத்தனர்.கணக்குப் பிள்ளை பலமாக உபசாரம் செய்தார்.ஆனால் மாசிலாமணி தம்பதியரைப் பொறுத்தவரை அதற்கு அவசியமே இருக்கவில்லை.
"இதென்ன பெரிய விருந்துக்கே ஏற்பாடு செய்து விட்டீங்க!" என்றார் மாசிலாமணி ஏப்பத்தை அடக்க முயன்று தோல்வியுற்றவராக.
" இது என்னங்க, பிரமாதம்? 'பலகாரம் சாப்பிட வாங்க'ன்னு உங்களைக் கூப்பிட்டேன். பல-ஆகாரம் இருக்க வேணுமா இல்லையா? இந்த ஆப்பம் பாருங்கோ, இதை வெள்ளித் தட்டிலே போட்டுத் தேங்காய்ப் பால் விட்டுச் சாப்பிடலாம். ஆனால் மண் பாண்டத்திலேதான் செய்யணும்.வேறு எந்தப் பாத்திரத்தில் வார்த்தாலும் சுகப் படாது. இதற்காக நான் தனியே அளவான பாத்திரம் தயார் பண்ணச் சொல்றது. நம் வீட்டுத் தயிரும் அப்படித்தான். கட்டித் தயிராக இருந்தால் போதாது, அது சட்டித் தயிராகவும் இருக்கணும்.அதிலே ஓர் அலாதி ருசி.இந்த எண்ணெய் என்ன மணமா இருக்கு பாருங்கோ. கடையிலே வங்கினா கிடைக்குமா? நம்ம நிலத்திலே எள் பயிராகிறதில்லையா? கணக்குப் பிள்ளை போய்க் கிட்டத்திலிருந்து ஆட்டி எடுத்து வந்து விடுவார்..." என்று கூறிக் கொண்டே போனார் ரங்கநாத முதலியார்.
காப்பி ஆற்றிக் கொண்டிருந்த மாசிலாமணியின் கரம் இலேசாக நடுங்கத் தொடங்கியது. செல்வச் செழிப்பு என்று அவர் கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால் இன்றுதான் நேரில் பார்க்கிறார். அடேயப்பா, என்ன பேச்சு பேசுகிறது அது! என்ன பாடுபடுத்துகிறது!
ஒருவாறு உணவருந்தி முடிந்ததும், "வாங்களேன், வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம்" என்றார் ரங்கநாதன்.
---------
அத்தியாயம் 28 -- வளமான வாழ்வா? வறுமையா?
விருந்தினர் அறை, ஆபீஸ் அறை, சமையல் அறை, உக்கிராண அறை என்று கீழே பல அறைகளைக் காண்பித்துவிட்டு அவர்களை மாடிக்கு அழைத்துப் போனார் ரங்கநாதன். அங்கே பிரும்மாண்டமான கட்டில்கள் போடப்பட்டிருந்த இரண்டு படுக்கை அறைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில், ஓர் ஓரமாகக் கனமான எஃகு அலமாரி ஒன்று இருந்தது. 'அதைத் திறந்து காட்ட மாட்டாரா? என்ற ஆவல் குறுகுறுப்பை அடக் கிக் கொள்ள முடியாதவளாகக் காமாட்சி அம்மாள் அதன்பால் அவர் கவனத்தை ஈர்த்துப் பேசினாள். "நல்ல கனமான இரும்பு பீரோவாகவே வாங்கிட்டீங்க போலிருக்கு. அருமையான யோசனைதான். மர அலமாரி யெல்லாம் எத்தனை நாளைக்கு உழைக்கப் போகிறது?"
"உழைக்கிறதாவது, உளுக்கிறதாவது? அதுவா பிரச்னை? இரண்டு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை யாராவது மர அலமாரியில் வைத்துப் பூட்டுவாங்களா?" என்றார் ரங்கநாதன்.
காமாட்சிக்கு அப்போதே மூர்ச்சை போட்டுவிடும் போலாகிவிட்டது. நகைகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலைதான் அவளை மயங்கிச் சாயாமல் நிற்க வைத்தது.
"இருக்கும், இருக்கும். பரம்பரையாக வந்த நகைகளுக்கு அந்த மதிப்பு இருக்காதா?" என்றாள்.
"பரம்பரை நகைகளும் இருக்கின்றன. நானே செய்ததும் உண்டு. ஏதோ கல்யாணம் செய்து கொண்ட புதுசில் ஆசையாய்ப் பண்ணிப் போட்டு அழகு பார்த்தேன். அவள் என்னடா என்றால் இத்தனை ஐசுவரியத்தையும் அனுபவிக்க ஒரு வாரிசைக் கூடக் கொடுக்காமல் போய்விட்டாள். யாராவது தூரத்துத் தாயாதிக்காரர்கள்தான் வந்து அத்தனையையும் கொண்டு போவாங்க போலிருக்கு."
"என்னத்தைச் சொல்றது போங்க. ஆண்டவன் லீலையே இப்படித்தான். ஒன்று கொடுத்தா இன்னொண்ணு தரமாட்டான். சொத்து இருந்தா சந்ததி இல்லை. சந்ததி இருந்தால் சொத்து இல்லை!"
"நான் அப்படி நினைக்கவில்லை. பகவான் எனக்குச் சொத்தையும் கொடுத்து, சந்ததியையும் தரத்தான் உங்களைச் சென்னையிலிருந்து கிளப்பி ராமப்பட்டணத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தான்னு நம்பறேன்."
"நீங்க என்ன சொல்றீங்க?" என்றாள் காமாட்சி. அவளுக்கு ஆனந்தத்தில் அந்தரத்தில் மிதப்பது போல் இருந்தது. சுந்தரி கமலாவைக் கொடுத்துப் பதிலுக்கு இத்தனை சொத்துக்களை ஆண்டு அனுபவிக்கப் போகிறோமா? அப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதா மாசிலாமணி குடும்பத்துக்கு? விசுப் பயல் அவ்வளவு கொடுத்து வைத்தவனா?
"இன்னும் தெளிவா நான் எப்படிப் பேசறது? என் பெண்ஜாதி காலமாகிப் பத்து வருஷமாச்சு. அப்போ பாலியமாகத்தான் இருந்தேன். எத்தனையோ பேர் சொன் னாங்க. 'மறுபடியும் கல்யாணம் செய்து கொள்' என்று. பிடிவாதமாக மறுத்து விட்டேன். அந்த உத்தமி இருந்த இடத்திலே இன்னொருத்தியைக் கொண்டு வந்து வைக்க மாட்டேன்னு தீர்மானமா யிருந்தேன்..."
"அடடா! எத்தனை தங்கமான மனசு!" என்றாள் காமாட்சி.
"ஆனால் இப்பத்தான் கொஞ்ச நாட்களாக மனசு சஞ்சலப்படுகிறது. இவ்வளவு சொத்தையும் கட்டி ஆள ஒருத்தரும் இல்லையே என்று கவலைப்படுகிறது. தர்மத்துக்கு எழுதி வைச்சுடலாம். பெரிய காரியமில்லே. இருந்தாலும் நமக்கு வேணும்கிறவங்க நாலு பேர் இருந்து, அவங்க நாம் சம்பாதிச்சதை யெல்லாம் அனுபவித்தால் அதிலே கிடைக்கிற நிம்மதி அலாதிதான்."
"இப்போகூட உங்களுக்கு அப்படி என்ன வயசாகிவிட்டது? ஐம்பது இருக்கலாம். ஆனால் நாற்பதுதான் மதிக்கத் தோன்றும். ஜாம் ஜாம் என்று கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான்!"
"அறுபத்திரண்டு ஆகிறது. ஆனால் நீங்க சொன்ன மாதிரி நாற்பது இல்லே, முப்பத்தெட்டுன்னு மதிப்புப் போட்டவங்களும் உண்டு. அது கிடக்கக் கல்யாணம் என்ற எண்ணமே எனக்கு இதுவரையில் ஏற்பட்டதில்லை. இப்பத்தான் அதுவும் உங்க பெண் கமலாவைப் பார்த்த பிறகுதான்... மனசை விட்டுச் சொல்கிறேன்... நீங்க தப்பா நினைக்கக் கூடாது. உங்களை நான் கட்டாயப் படுத்தவில்லை. நீங்க நன்றாக யோசித்துச் சொன்னால் போதும்!"
"ஆகட்டும் யோசிக்கிறோம்" என்றார் மாசிலாமணி.
"யோசிக்கிறது என்ன, யோசிக்கிறது. சற்று முன்னால் நீங்கள் சொன்னீங்க, 'எங்களைச் சென்னையிலேயிருந்து கிளப்பி இங்கே ஆண்டவன் கொண்டு வந்து சேர்த்தான்' என்று. அது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. மெய்யாலுமே இது கடவுள் சித்தம்தான். இல்லாத போனால் எப்படி இவர் சொந்த ஊரான கிராமத்துக்குப் போய், இவர் அண்ணாவுடன் தங்க வேண்டிய வங்க இங்கே வந்து சேர்ந்திருப்போம். சொல்லி வைத்தாற் போல் இந்த ஊர் அருகில் வரும் போது பஸ் ஏன் ரிப்பேராக வேண்டும். அதுதான் போகட்டும். அந்தப் பிள்ளை கல்யாணம் எங்களைப் பார்த்து விட்டு, நேரே உங்க வீட்டிலேயே கொண்டு வந்து ஏன் இறக்கினான்?
காலியாக இருக்கிற வேறு யார் வீட்டுக்காவது அழைத்துப் போயிருக்கக் கூடாதா? இதையெல்லாம்தான் தெய்வ சங்கல்பம் என்று சொல்கிறது.
"அவசரப்பட வேண்டாம். கமலாவையும் கலந்து ஆலோசியுங்கள். கணவரையும் கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார் ரங்கநாதன். "கமலாவின் சம்மதம் இல்லாத போனால் பிரயோஜனமில்லை. அவளைக் கட்டாயப் படுத்த நான் ஒப்ப மாட்டேன். ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன். எனக்கு இந்த ஊரிலே ஆறு வீடுகள் இருக்கின்றன; நாலு காணி நன்செய் நிலம். பாங்கில் ரொக்கமாக மூன்று லட்சம். அப்புறம் இந்த வீடு, இதிலுள்ள ஐசுவரியங்கள் - இவ்வளவையும் ஆள ஒரு கிருகலட்சுமி இல்லையே என்று எனக்கு ரொம்பக் குறை. அதையும் இப்போ சமீபத்தில்தான் உணர ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் கமலாவின் சம்மதமில்லாமல் எதுவும் நடக்கக் கூடாது."
"நன்றாயிருக்கிறது. இதைப் பற்றி அவளைக் கேட்கப் போவானேன்? அவள் சிறு பெண். அவளுக்கு என்ன தெரியும். பாவம்! நாம்தான் நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் ஒரு நல்ல முடிவுக்கு வந்து விட்டால் அவளும் பேஷாகச் சரி என்கிறாள். மாட்டேன் என்றா சொல்லப் போகிறாள்?"
"அப்படி இல்லை, அம்மா. இந்தக் காலத்திலே பெண்கள் தங்கள் உரிமைகளை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியே அவர் களுக்குத் தெரியவில்லை என்றாலும் ஊரிலே இருக்கிற விடலைப் பயல்கள் - சமூக சேவை அது இது என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் - சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது கிளப்பி விட்டு அவள் மனசைக் கலைத்து வேடிக்கை பார்ப்பார்கள் .... இருக்கட்டும் வந்தது வந்தீர்கள். இந்த நகைகளை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போங்கள். நீங்க கலை உள்ளம் கொண்டவர்கள். சிறந்த வேலைப் பாட்டை ரசிக்கக் கூடியவர்கள். அதனால் காட்டுகிறேன். என் பெருமையை உணர்த்துவதற்காக இல்லை."
"ஆமாமாம். சிறந்த கலை வேலைப்பாடு என்றால் நான் உயிரையே விட்டு விடுவேன்" என்றாள் காமாட்சி.
அவர் பீரோவைத் திறந்தபடியே, "இந்தக் காலத்தில் பெண்களின் இஷ்டமின்றி ஒரு காரியமும் செய்வதற்கில்லை" என்றார்.
பீரோவுக்குள் தகதகத்த நகைகளை அகன்று விரிந்த கண்களால் பார்த்துத் திகைப்பினைமென்று விழுங்கியபடியே, "ஏன் இஷ்டமில் லாமல் இருக்கணும்? எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடுங்கள். உங்க இஷ்டம் போலவே நடத்தி விடுவோம். உங்க இஷ்டந்தான் கமலாவின் இஷ்டமும்" என்றாள் காமாட்சி.
ரத்தினமும் வைரமும் மாறி மாறிப் பதித்த ஓர் அட்டிகையை எடுத்து உள்ளங்கையில் வைத்து எடை பார்ப்பதுபோல் கரத்தை அசைத்த ரங்கநாதன், "நம்ம இஷ்டத்திலே என்ன இருக்கு? எல்லாம் ஆண்டவன் விருப்பம் எப்படியோ அப்படி நடக்கும்" என்றார்.
"உங்களைப் போன்ற நல்ல இதயம் படைத்தவர்களின் இஷ்டத்துக்கு மாறாக ஆண்டவனின் விருப்பம் இருக்குமா என்ன? ஒருநாளும் இராது!" என்றாள் காமாட்சி, வியர்த்த உள்ளங்கையைப் புடவையில் தடவியபடி.
"அடுத்த முறை நம்ம வீட்டுக்கு வரும் போது கமலாவையும் அழைத்துக் கொண்டு வாங்க. அவள் இதைப் போட்டுக் கொண்டு வரட்டும்" என்று ரங்கநாதன், தயாராக நீண்ட காமாட்சியின் கரத்தில் அட்டிகையை வைத்தார்.
இரும்புப் பீரோவைப் பூட்டியானதும், சரியாகப் பூட்டியிருக்கிறதா? என்று காமாட்சி ஒரு தடவை அழுத்திப் பார்த்தாள். ரங்கநாத முதலியாரின் சொத்தையெல்லாம் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இப் போதே வந்து விட்டது போல!
மூவரும் கீழே இறங்கிச் சென்று மாசிலாமணி தம்பதி விடை பெறும்போது "வாடகை..." என்று கணக்குப்பிள்ளை ஞாபகப்படுத்தினார். மெலிந்த குரலில், "ஆமாம், மறந்தே போய் விட்டதே. இரண்டு மாச வாடகை, இரண்டு மாத அட்வான்ஸ் ஆக, முந்நூறு ரூபாயை அனுப்பி விடுங்கள். அதை வாங்க வில்லை யென்றால் நம் கணக்குப் பிள்ளைக்குத் தூக்கமே வராது" என்றார் ரங்கநாத முதலியார்.
தலையாட்டிப் பொம்மை போல் தலையை ஆட்டி விட்டுக் கணவனும் மனைவியும் கிளம்பினர்.
---------------
அத்தியாயம் 29 -- சிறைக் கைதியும் வீட்டுக் கைதியும்
ரங்கநாதன் வீட்டில் மாசிலாமணி தம்பதிக்கு ராஜோபசாரம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பவானியும் கமலாவும் அவர்கள் வழக்கமாகப் பலமுறை அமர்ந்து அளவளாவிய அதே மொட்டைப் பாறையில் மறுபடியும் சந்தித்துக் கொண்டார்கள்.
கமலா, இரவு சமையலுக்குத் தீப்பெட்டியும் மலிவாக ஏதாவது காய்கறியும் வாங்கி வர வேண்டியிருப்பதாகத் தம்பி விசுவிடம் கூறிவிட்டுப் புறப்பட்டிருந்தாள். "வீட்டை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். உள்பக்கம் தாளிட்டுக் கொள். ஜன்னல் வழியாக வெளியே பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்ட பிறகே கதவைத் திறக்க வேண்டும். சமர்த்தாக இருந்தால் நான் வரும்போது சாக்லேட் வாங்கிக் கொண்டு வருவேன்" என்றெல்லாம் படித்துப் படித்துப் பலவிதமாகவும் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தாள்.
பவானியோ கோர்ட் முடிந்ததும் காரில் ஏறியவள், வீட்டுக்குப் போகாமல், உமாகாந்தின் நினைவு இதயத்தை முழுமையாக ஆக்கிர மித்துக் கொள்ள ஏலமலைப் பாதையில் அதனை ஓட்டிச் சென்றாள். பஸ்ஸில் வந்து சேர்ந்திருந்த கமலா அந்தப் பாறையில் ஏற்கனவே அமர்ந்திருக்கக் கண்டு, "அடடே! நீ இங்கே எப்போது எதற்காக வந்து சேர்ந்தாய்?" என்று கேட்டாள்.
"வந்து பத்து நிமிஷங்கள் ஆயிற்று. என் தலைவிதியை நினைத்து அழுவதற்குத்தான் வந்தேன்" என்றாள் கமலா. "நீங்கள் எதற்கு வந்தீர்கள்?"
"நான் தலைவிதியை நினைத்து அழுபவர்களைத் தேற்றுவதற்கு வந்தேன்!"
"குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது என்று கேள்விப்-பட்டிருக்கிறீர்களா?"
"நான் அப்படி நடந்து கொள்கிறேன் என்கிறாயா? உன் மனத்தில் யார் இந்த எண்ணங்களை விதைத்தார்கள்? உனக்காக நான் கல்யாணத்தினிடம் எவ்வளவு தூரம் வாதாடியிருக்கிறேன், தெரியுமா?"
"பெரிய வக்கீலாயிற்றே, வாதாடாமல் இருப்பீர்களா? அவரும் ரொம்பப் பெரிய வக்கீல். எனவே, உங்கள் வாதத் திறமையில் சொக்கித்தான் போயிருப்பார்."
"கமலா! நீ இப்படியெல்லாம் பேசுவதானால் நான் உடனேயே திரும்பிப் போகிறேன்."
"ரொம்ப சரி, போய் வாருங்கள். நானும் விடைபெற்றுக் கொள்கிறேன்."
"நீ எங்கே போகப் போகிறாய்?"
"எமலோகப் பட்டணத்துக்கு!"
"இது என்ன உளறல் கமலா?"
"உளறுவது என்ன, வழக்கறிஞர்களின் ஏகபோக உரிமையா? நானும்தான் உளறி விட்டுப் போகிறேனே?"
"அப்படியானால் ரொம்ப சந்தோஷம். நிறைய உளறு. ஆனால் உளறியபடியே செய்து மட்டும் விடாதே!"
"செய்து பார்த்தால் மட்டும் நினைத்தது நிறைவேறி விடுகிறதா? கிணற்றில் விழுந்து சாக நினைத்தேன். முயன்றும் பார்த்தேன். கல்யாணம் வந்து காப்பாற்றி விட்டார். இங்கே பள்ளத்தாக்கில் விழுந்தாலாவது உயிர் போகுமா என்று பரீட்சித்துப் பார்க்க எண்ணினேன். நீங்கள் தடையாக வந்து சேர்ந்து விட்டீர்கள்."
"நல்ல வேளையாகப் போயிற்று" என்றாள் பவானி. பிறகு, "கமலா, இப்படி நீ கோழையாகி விடாமல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளப் போராட வேண்டும்" என்றாள். "அர்த்தமுள்ளதாக மட்டும் இல்லை அக்கா, லட்சிய வாழ்வாகவே அமையப் போவதாகக்கூட எண்ணினேன். சிறுமியாக இருந்தபோதிலிருந்தே எது எதற்கெல்லாமோ ஆசைப்பட்டேன். எல்லாம் பகற்கனவாக முடிந்து போயிற்று."
"அந்தக் கதைகளைத்தான் சொல்லேன், கேட்போம்" என்றாள் பவானி.
"அக்கா! ஒரு நாள் நாங்கள் கடற்கரைக்குப் போயிருந்தோம். காற்று வாங்கத்தான். ஆனால் அங்கே நாங்கள் எதிர்பாராதவாறு காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரசங்கி - அவர் பெயர் கூட இந்தப் படிப்பறிவற்ற மூடத்துக்கு நினைவில்லை - சுதந்திரம் சீக்கிரமே வரும் என்றும் அதற்கு முன்பாகவே அதனை வரவேற்க நம்மை நாமே தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். சமூக மாறு தல்கள் பல ஏற்பட வேண்டும் என்றார். பெண்களுக்குச் சம உரிமைகள் தரப்பட வேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும், ஜாதி வித்தியாசங்கள் போக வேண்டும். விதவா விவாகங்கள் நடக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். அவற்றுள், 'பெண்கள் ஆண்களுக்குச் சமமாக மட்டுமின்றி அவர்களைவிடச் சிறந்தவர்களாகவே பல துறைகளில் பிரகாசிக்க வேண்டும்' என்று அவர் கூறியது என் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. சரோஜினி தேவி, விஜயலட்சுமி பண்டிட், அன்னி பெசண்ட், ராஜகுமாரி அமிர்தகௌர் என்று அவர் பல பெயர்களை அடுக்கினார்.
அந்த நிமிஷத்தில் நான் பெரிய படிப்புப் படித்து விஞ்ஞானியாகவோ, டாக்டராகவோ நாடு போற்றும் நிலையில் உயரப் போவதாகக் கற்பனை செய்து கொண்டேன். அதெல்லாம் வெறும் கற்பனையாகி விட்டது. எனக்குப் படிப்பு வரவில்லை என்பதால் எட்டாவதுடன் நிறுத்திவிட்டதாக அம்மா சொல்வாள். அது உண்மையில்லை அக்கா. நான் எல்லாவற்றிலுமே நூற்றுக்கு நூறு வாங்கி விடவில்லை. ஆனால் நான் மக்காகவும் இருந்ததில்லை. 'வயதுக்கு வந்த பெண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவ தாவது' என்று சொல்லி அம்மா தடை விதித்து விட்டாள். 'பெண்ணுக்கு எதற்குப் படிப்பு? குடும்பப் பாங்காக இருக்கத்தான் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் முக்கியம்' என்றெல்லாம் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற படி பேசுவாள். அக்கா! நீங்களே சொல்லுங்கள், நான் உங்களைப் போல் பிரகாசிக்கா விட்டாலும் படித்துப் பட்டம் பெற்றிருந்தால் அவர் என்னை இப்படி அலட்சியப்படுத்து வாரா?" கமலா நாத் தழுதழுக்கக் கேட்டாள்.
"இப்போதுகூட கல்யாணம் உன்னை அலட்சியப்படுத்தவில்லையே?" என்றாள் பவானி." நீ கல்லூரியில் படித்திருந்தால் இன்றுள்ளதை விட அதிகமாக உன்னிடம் அவருக்கு மதிப்பு உண்டாகலாம். ஆனால் காதல், கல்யாணம் என்பதெல்லாம் வேறு விஷயம் அல்லவா?"
"வாஸ்தவம்தான், அக்கா! அவரை அடைய எனக்கு இந்த ஜன்மத்தில் கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவுதான். என் தலைவிதி வேறுவிதமாக இருந்திருந்தால் நான் நிர்மூடமாக இருந்த போதிலும் அவர் என்னைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பார், இல்லையா?"
"விதி, உன் விஷயத்தில் என்ன நிர்ணயித்திருக்கிறதோ, யாருக்குத் தெரியும்? இப் போதுகூட என்ன குடிமுழுகிப் போய்விட்டது? உன் பெற்றோரிடம் வந்து உன்னை மேலே படிக்க வைக்குமாறு நான் வாதாடுகிறேன். கல்யாணத்தினிடமும் மறுபடியும் பேசிப் பார்க்கிறேன்."
"வீண் வேலை அக்கா. என் பெற்றோர் சம்மதிக்கப் போவதும் இல்லை; அவர் மனம் மாறப் போவதும் இல்லை. பேசாமல் அவரை மணக்க நீங்கள் சம்மதித்து விடுங்கள். அவர் மகிழ்ச்சியைக் கண்டாவது நான் ஆறுதல் பெறுகிறேன் !"
"அது சரி, அப்போது என் துயரத்தைக் கண்டு யார் வேதனைப்படுவது?" என்றாள் பவானி.
கமலா விரக்தியாகச் சிரித்தாள். பிறகு, "அக்கா! முதன் முதலாக நான் உங்களை ராமப்பட்டணம் வீதியில் சந்தித்தபோது என்ன நினைத்தேன், தெரியுமா?" என்று கேட்டாள்.
"என்ன எண்ணினாய்? அம்மாமி வயதாகி யும் இத்தனை அலங்காரமா என்று தானே?" என்றாள் பவானி புன்னகையுடன்.
"இல்லை, அக்கா. உங்கள் அழகையும் அலங்காரத்தையும் அப்புறம்தான் நான் கவனித்தேன். முதலில் என் நெஞ்சைக் கவர்ந்தது உங்களிடம் விகசித்த அறிவொளிதான்.
'என்னுடைய நிறைவேறாத ஆசைகள் அத்தனையையும் நிறைவேற்றிக் கொண்ட பெண்ணொருத்தி இதோ இருக்கிறாள்" என்று என் மனம் உடனே உணர்ந்தது. உங்களிடம் எனக்கு மதிப்பு மிகுந்தது. உயர்ந்த படிப்பு, நல்ல உத்தியோகம், பெரிய பெரிய வக்கீல்களுடன் துணிந்து மோதுகிற வாதத் திறன், அத்துடன் அழகு, யௌவனம், அலங்காரம் இதையெல்லாம் பார்த்தபோது எனக்குப் பொறாமையாகக் கூட இருந்தது!
"ஆனால் அக்கா உங்களிடம் வெட்கத்தை விட்டுச் சொல்வதற்கு என்ன? கல்யாணத்தைச் சந்தித்த வினாடியில், படிக்கவில்லையே, பெரிய உத்தியோகம் பார்க்கவில்லையே என்ற என் ஏக்கங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. 'படிப்பாவது, பதவியாவது? யாருக்கு வேண்டும்? இவ்ருக்குப் பணிவிடை செய்துகொண்டு இவர் காலடியிலேவிழுந்து கிடக்கிற பாக்கியம் கிடைத்தால் போதாதா?' என்று தோன்றியது. இந்த மாறுதலை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை!"
"இதில் ஒன்றும் அதிசயம் இல்லை, கமலா! காதல் இதை விடப் பெரிய தியாகங்களுக்கெல்லாம் நம்மைத் தயார்படுத்தக் கூடியதுதான்" என்றாள் பவானி.
"அது எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்களோ கல்யாணத்தை விரும்பவில்லை. அப்படியானால் வேறு யாரைக் காதலித்து அவருக்காக என்ன தியாகத்தைச் செய்தீர்கள்?"
"அதைப் பற்றி நான் பேசுவ தற்கில்லை, கமலா. அது இன்னொருவர் ரகசியம்" என்றாள் பவானி.
"அப்படியானால், அக்கா! உங்கள் நிலைமை என்னுடையதைவிட மோசமானதுதான். நானாவது மனம் விட்டுப் பேசி உங்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்களால் அதுவும் முடியவில்லையே?"
"ஆக, உன்னைவிடத் துரதிர்ஷ்டசாலிகள் உலகில் இருக்க முடியும் என்று தெரிகிறதல்லவா?
அப்படியிருக்கும்போது மனம் தளர்ந்து போய் உயிரை விடுவது பற்றியெல்லாம் யோசிக்கலாமா? வா, போகலாம்" என்று பவானி எழுந்திருந்தாள். குனிந்து கமலாவுக்குக் கைகொடுத்து அவளையும் நிற்க வைத்தாள்.
காரில் திரும்பும்போது சற்றுநேரத்துக்குப் பிறகு, திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல் பவானி கேட்டாள். "அது சரி, என் துணைகூட இல்லாமல் நீ இங்கே அடிக்கடி வருகிறாயா என்ன? ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! உனக்குத் தெரியுமோ, என்னமோ, இந்தப் பக்கத்தில் தப்பி ஓடிய கைதி ஒருவன் வளைய வருகிறானாம். சில சி.ஐ.டி.கள் அவனைத் தேடிக் கொண்டிருகிறார்களாம். கல்யாணம் அவர்களிடம் அந்தக் கைதியின் புகைப்படம் இருப்பதைக்கூடப் பார்த்திருக்கிறார். அந்தக் கைதியிடம் நீ அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆவது?...."
"ஆவது என்ன அக்கா? அந்தக் கைதியைப் பார்த்து, 'ஏ, கைதியே! உன்னைப் போல் ஓர் அசடு கிடையாது; சிறையிலிருந்து தப்பி வந்தால் சுதந்திரம் என்று நினைத்தாயா? இப்போது சி.ஐ.டி.க்களுக்குப் பயந்து பதுங்கிப் பதுங்கி வாழ்வதிலே என்ன சுதந்திரம் இருக்கிறது?' என்று கேட்பேன். பிறகு நானும் ஒரு கைதிதான் என்று என்னை அவனுக்கு அறிமுகம் செய்து வைப்பேன். 'நீ ஜெயில் கைதி, நான் வீட்டுக் கைதி. நீ அரசாங்கச் சிறையிலிருந்து தாற்காலிகமாகத் தப்பி இங்கு வந்தாய். நான் வீட்டுச் சிறையிலிருந்து தாற்காலிகமாகத் தப்பி இங்கு வந் திருக்கிறேன்' என்பேன். ஒரு கைதி மற்றொரு கைதியிடம் காண்பிக்க வேண்டிய நியாமமான பரிவையும் அன்பையும் அவனிடம் நான் காட்டுவேன்."
"அப்படியானால் போலீஸிடம் அவனைக் காட்டிக் கொடுத்துவிட மாட்டாய்?"
"சேச்சே, ஒரு நாளும் மாட்டேன். அது இனத் துரோகம்!"
"அப்படியானால் ஒன்று செய், கமலா! அந்தக் கைதியைக் காண நேர்ந்தால் அவனுக்கு உதவுவதாகச் சொல்லு. அவன் மறை விடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு என்னிடம் வா. இருவருமாக அவனுக்கு நம்மால் இயன்ற உபகாரத்தைச் செய்யலாம்."
"ஐயையோ! உங்களை வேறு இதில் எதற்கு இழுத்து மாட்டி வைக்க வேண்டும், அக்கா? கைதிக்கு உதவுவது குற்றமாயிற்றே!"
"நான் ஒரு வக்கீல் என்பதை மறந்து விட்டாயா, கமலா? சட்டபூர்வமாகவேகூட அவனுக்கு நான் உதவ முடியும். ஒருவேளை அவன் நிரபராதியாக இருந்து அவனுக்கு என்னால் விடுதலை பெற்றுத் தரவும் முடிந்தால் நான் எவ்வளவு புகழும் பிராபல்யமும் அடைவேன்! அது என் முன்னேற்றத்துக்கு ரொம்பவும் வசதி செய்யும் இல்லையா?"
"அடேடே, ஆமாம்! எனக்கு இது " என்று பதறினாள்.
பவானி சிரித்துக் கொண்டே, "பரவாயில்லை; நிதானமாக ஒவ்வொன்றாக எல்லா அசட்டுத் தனங்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டு மொத்தமாகச் சொல்லு!" என்றாள்.
கமலா, விசுவிடம் நான் மார்க்கெட்டுக்குப் போவதாகக் கூறி விட்டு வந்ததைச் சொன்னாள். "வெறும் பையை உதறிக் கொண்டு போனால் என் குட்டு வெளிப்பட்டுவிடும், அக்கா!"
பவானி காரைத் திசை திருப்பினாள். "மார்க்கெட்டுக்குப் போவோம். காய்கறி வாங்கிக் கொண்டு வா. பிறகு உன்னைத் தெரு முனையில் இறக்கி விட்டுவிட்டு நான் கம்பி நீட்டுகிறேன்" என்றாள்.
--------------
அத்தியாயம் 30 -- துயர அலைகள்!
கமலா காய்கறிப் பையுடன் வீட்டின் படியேறியபோது உள்ளே பெற்றோர் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருப்பது கேட்டது. தன் பெயரும் அடிபடவே கமலா சற்றுத் தயங்கினாள். ஒட்டுக் கேட்பது தவறு என்று மனம் இடித்துக் காட்டினாலும் அவளால் ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஜன்னல் ஓரமாக நின்றாள்.
"அந்த மனுஷன் ரங்கநாதன் பாலைக் கொடுத்துக் கோலையும் காட்டுகிற மாதிரி நடந்து கொண்டார் பார்த்தியா?" என்றார் மாசிலாமணி. "பத்தாயிரம் பெறுமானம் உள்ள அட்டிகையை உன் கரத்திலே வைத்து விட்டு, ஐந்து நிமிஷம் ஆவதற்குள் வாடகையும் முன் பணமாக முன்நூறு ரூபாய் அனுப்பச் சொன்னாரே. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?"
"தெரியாம என்ன? 'உங்க பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுத்தால் எப்பேர்ப்பட்ட ஐசுவரியங்கள் காத்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். கூடவே உங்களுடைய ஏழைமை நிலையையும் புரிந்து கொள்ளுங்கள்' என்று சுட்டிக் காட்டினார்..... வாடகை கொடுக்க வக்கில்லாமல்தானே, இருக்கிறோம்.
"என்னதான் இருந்தாலும் பதினாறு வயதுப் பெண்ணை அறுபது வயசுக் கிழவனுக்கு எப்படி மணம் செய்து கொடுக்கிறது? ஊரிலே நாலு பேர் என்ன சொல்லுவாங்க?"
"ஊர்க்காரர்களுக்கு என்ன, எதை வேணுமானாலும் பேசுவாங்க. நாம் இப்படிக் கஷ்டப்படுகிறோமே ஊர்க்காரங்க வந்து ஒத்தாசை செய்கிறதுதானே?
நான் சொல்கிறேன் கேளுங்க. மூணு வயசிலே கமலாவை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சோம். பதின்மூன்று வருஷங்களாக அவளுக்காக நாம் படாத கஷ்ட நஷ்டங்களா? இப்போது நமக்குக் கஷ்ட காலம் வந்துவிட்டது. தினம் போது விடிந்தால் இன்றையச் சாப்பாட்டுக்கு என்ன வழி என்று யோசனை. அவ கஷ்டப்படாம நாம் வளர்த்தோம். இப்போ நம் கஷ்டம் அவளால் தீரணும்னு இருந்தால் தீரட்டுமே? ஆறு வீடு, நூறு காணி நிலம். பாங்கில் ரொக்கமாக மூன்று லட்சம்..... ஏங்க பணத்தையெல்லாம் ஒரே பாங்கியிலே போட்டு வைக்கிறாரே? திடீர்னு பாங்கு மூழிகிப் போயிடுச்சுன்னா?"
"சரியாப் போச்சு. நீ இப்போ அந்தக் கவலையிலே இறங்கிட்டியா? முடிச்சுப் போடறதைப் பற்றி முதலில் யோசித்து முடிவு செய்!"
"யோசனை என்ன வந்தது, யோசனை? சரின்னு சொல்ல வேண்டியதுதான். ஆனால் பல்லைக் காட்டிக்கிட்டு ஓடாமல் கொஞ்சம் கிராக்கி செய்து கொள்ளலாம். ரொம்பவும் அலட்சியம் பண்ணினாலும் ஆபத்து. சந்தர்ப்பம் கைநழுவிப் போய்விடும்."
"கமலாவைக் கேட்க வேண்டாமா, ஒரு வார்த்தை?"
"அவளை என்ன கேட்கிறது? பதின்மூன்று வருஷங்களாக அவளைக் கேட்டுக் கொண்டா எல்லாம் செய்தோம்? அப்படிக் கேட்க வேண்டும் என்றால் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்க பேசாமல் இருங்க."
இந்தச் சம்பாஷனையை வெளித் திண்ணையில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த கமலாவுக்குத் தரையிலிருந்து பூமி நழுவிச் செல்வது போல் இருந்தது. துயரக் கடலின் ஆழம் காண முடியாத அடிவாரத்தை நோக்கி அவள் மூழ்கிச் சென்று கொண்டிருந்தாள்.
நன்றாகப் படித்துப் பெயர் பெற்ற விஞ்ஞானியாகவோ டாக்டராகவோ விளங்க வேண்டும் என்ற அவள் லட்சியக் கோட்டை அவள் எதிரேயே இடிந்து தகர்ந்து மண் மேடாகியது.
'படிப்பும் வேண்டாம். பதவியும் வேண்டாம். பணம், புகழ் எதுவும் வேண்டாம். கல்யாணத்தின் காலடியில் இருந்து அவனுக்குப் பணிவிடைகள் செய்யும் பாக்கியம் கிட்டினால் போதும்' என்ற அவளுடைய அளப்பரிய ஆசையில் கூடை கூடையாய் மண் விழுந்தது!
அம்மா தன்னிடம் சற்றுக் கடுமையாக நடந்து கொள்வதற்கு அவள் சுபாவம்தான் காரணம் என்று தான் இதுவரையில் நம்பி வந்தது அசட்டுத்தனம் என்பது புரிந்து போயிற்று. அவள் தன் அம்மாவே அல்ல; மாசிலாமணி தன் அப்பாவே அல்ல! தான் ஒரு அனாதை; கல்யாணம் ஏதோ நாடகம் நடத்துகிறாரே. பர்மா அகதிகளுக்கு நிதி திரட்ட என்று. அந்த அகதிகளைவிடக் கேவலமான ஜன்மா தன்னுடையது! 'நான் யாருக்குப் பிறந்தவளோ, எப்படிப் பிறந்தவளோ? குழந்தைப் பிராயத்தில் காணாமல் போனவளோ, அல்லது அவமானச் சின்னமேதானோ? இப்படிப்பட்ட நான், கல்யாணத்தின் கரம் பற்றுவது பற்றி நினைத்துக்கூடப் பார்த்திருக்கலாமா?
'என்னை வளர்க்கும் பணியில் கடந்த பதின் மூன்று வருஷங்களாக அடைந்து வந்த கஷ்ட நஷ்டங்களுக்குப் பிரதியாக இன்று என்னை அப்பாவும் அம்மாவும் விற்கத் தீர்மானித்து விட்டார்கள். ஆட்டைக் கொழுக்க வைத்துக் கசாப்புக் கடைக்காரனிடம் தள்ளுவதுபோல் என்னையும் ஒப்படைக்கத் தீர்மானித்துவிட்டார்கள். அவர்களை நொந்து கொண்டு என்ன பயன்? என் திருமணத்தை ஒரு வியாபாரமாகக் கருதாமல் இருக்க அம்மா என்ன, என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றவளா? இல்லையே?"
மாலை மாலையாகக் கண்ணீர் பெருக்கிப் பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்த கமலாவை விசுவின் குரல் உலுக்கி எழுப்பியது.
"அக்கா, அக்கா! உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன். கல்யாணம் மாமா கொடுத்து அனுப்பினார்!"
"என்னடா பரிசு?" கேவலுக்கிடையே வெளிப்பட்டன வார்த்தைகள்.
"முதல் நாள் அன்றே நாடகம் பார்க்க நாலு டிக்கெட்! இதோ பார்த்தியா? கணையாழியின் கனவு - அட்மிட் ஒன்! இது டிராமா நோட்டீஸ்!"
கமலா பார்த்தாள். விளம்பரத் தாளில் கல்யாணத்தின் படம். புன்னகை தவழும் சுந்தரமான முகம். அதன் அருகேயே கதாநாயகியாக நடிக்கும் பவானியின் சிரிப்புக் குமிழியிடும் அழகிய வதனம்!
அவள் மனக் கண்ணுக்கு மற்றொரு படம் தென்பட்டது. அது ஒரு திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.
மணமகள் கமலா. மணமகன் அறுபத் திரண்டே வயதான திருவாளர் ரங்கநாதன்!
கமலாவுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. நாடக டிக்கெட்டுக்களையும் நோட்டீஸையும் விசுவின் கரத்திலிருந்து சரேலென்று பிடுங்கிச் சுக்குநூறாகக் கிழித்துத் தெருவில் பறக்க விட்டாள். அடுத்த கணம் தன் சக்தியெல்லாம் இழந்தவளாகத் திண்ணையிலேயே சரிந்து விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுகைக்கும் மேலாக நாடகத்துக்குப் போகும் வாய்ப்பை இழந்த விசு, 'ஸைரன்' அலறுவது போல் ஊளையிட ஆரம்பித்தான்.
(தொடரும்)
-------------
அத்தியாயம் 31 -- மனையாள் ஆட்சி
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் தம் அறையில் உட்கார்ந்து ஹைகோர்ட் வழக்குகள் அடங்கிய தடிமனான புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சன்னக் குரலில் பலமாகத் தலையாட்டியபடி ஆபோகி ராகத்தை ஆலாபனை செய்து கொண்டும் இருந்தார்.
எதிரே ஒரு பட்டிக்காட்டான் பெஞ்சில் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். சற்று நேரம் இப்படியும் அப்படியுமாகப் புத்தகத்தைப் புரட்டிவிட்டு 'டப்'பென்று அதை மூடியதும் தூசி எழும்பி அவரைத் தும்ம வைத்தது. கைக்குட்டையைத் தேடி அது அகப்படாமல் மேல் துண்டில் மூக்கைச் சிந்தித் துடைத்துக் கொண்டார். நடுவிரலால் சரிந்திருந்த மூக்குக் கண்ணாடியைத் தூக்கி விட்டுக் கொண்டு எதிரேயிருந்த பட்டிக்காட்டானைப் நிமிர்ந்து பார்த்தார்.
"என்னங்க, சொல்லுது, புத்தகம்? நம்ம வழக்குகுச் சாதகமாகத்தானே பேசுது?" என்று கேட்டான் அவன்.
"உம்... ஒண்ணு ரெண்டு பாயிண்ட் பாதகமாக இருக்கு. மற்றப்படி பரவாயில்லை. எல்லாம் வாதாடற விதத்திலேதான் சமாளிக்கணும்."
"ஐயாவுக்குத் தெரியாதுங்களா?"
"அது சரி, நீ இந்நேரம் சொன்னதெல்லாம் சத்தியம்தானே?"
"ஆமாங்க, மாரியாத்தா மேலே ஆணையா சொல்றேன்."
"பின்னே, கேஸ் தானே ஜெயிச்சுடறது.ஏன் கவலைப்படறே?"
உள்ளே பாத்திரங்கள் 'தடார் புடார்' என்று உருளும் சத்தம் கேட்டது. ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் கண்களை மூடி ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் நெற்றி யில் வைத்துச் சதையைக் கிள்ளிப் பிடித்துக் கொண்டு பெருமூச்சுடன் கோபத்தையும் வெளியேற்றினார்.
பட்டிக்காட்டான் பேசினான். "கேஸ் தானே ஜெயிச்சுடும்னா ஜையாகிட்டே ஏனுங்க நான் வரேன்? சத்தியத்துக்கு அவ்வளவு மதிப்பு இருந்ததுன்னா கோர்ட்டு, ஜட்ஜு, வக்கீல் எல்லாரும் எதுக்குங்க? பேசப் போறயோ சாகப் போறயோ என்று சொன்னாப்பலே, வாயடி அடிக்கிறவனுக்குத்தான் இது காலமா இருக்குங்க."
"என்னப்பா, நீ அநாகரிகமாப் பேசறே! என்னுடைய பேச்சாற்றலால் வாதத் திறனால்தான் கேஸ் ஜெயிக்கணும்னு கொஞ்சம் கௌரவமா சொல்லேன். கேட்க நல்லா இருக்கும்."
"ஆமாங்க, அது தானுங்க; நீங்க நல்லா ஓங்கி அடிச்சுப் பேசணும்."
"அடிச்சும் பேசறேன். மேஜையிலே ஓங்கிக் குத்தியும் பேசறேன்."
"அந்த அம்மா பொம்பிளை வக்கீல் வாயைத் திறக்க முடியாதபடி அடிச்சுடணுங்க."
"என்ன? அட்வொகேட் பவானி வாதிக் கட்சியிலே பேசப் போகிறாளா?"
"ஆமாங்க."
"அப்படியானால் ஃபீஸ் நூறு ரூபாய் சேர்த்துத் தரணும், அப்பா! அந்த அம்மாவோடு 'ஆர்க்யூ' பண்ணினால் தொண்டைத் தண்ணி வத்திப் போயிடும். பத்துக் கேஸிலே பேசற பேச்சை ஒரு கேஸிலேயே பேசும்படியாகிவிடும்."
"அதுக்கென்ன நூறு ரூபாய் அதிகம் வாங்கிக்குங்க. கேஸ் மட்டும் ஜயிச்சால்....."
"கேஸ் ஜயிச்சால் எனக்குக் கனகாபிஷேகம் பண்ணிவிடுவாயாக்கும்? திரும்பிக் கூடப் பார்க்கமாட்டாய்...."
உள்ளே பாத்திரங்கள் உருளும் ஓசை அதிகரித்தது.
"சரி சரி, நீ போய் வா. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கறேன். நேரமாகிறது" என்றார் கோபாலகிருஷ்ணன். "இப்போ இங்கே மெய்யூர் ஜமீந்தார், பொய்யூர் மிட்டாதார், காட்டூர் பண்ணையார் எல்லாரும் வரப் போறாங்க, முக்கியமான கேஸ் விஷயமா, நீ போகலாம்." குடியானவன் எழுந்து, "நம்ம கேஸும் முக்கியம்தாங்க. அலட்சியமா இருந்துடாதீங்க" என்றான்.
"அலட்சியமா இருப்பதா? சேச்சே! உன் கேஸிலே கோர்ட்டே கிடுகிடுத்துப் போகிற மாதிரி பேசப் போகிறேன்.
"எல்லாம் இங்கிலீஷிலேயே பேசுங்க.... தமிழிலே கிமிழிலே பேசிடாதீங்க...."
"ஆகட்டும், போ!"
குடியானவன் சுவரில் கோட் ஸ்டாண்டில் இரண்டு தலைப் பாகைகள் மாட்டியிருப்பதைப் பார்த்தான். ஒன்று சாதாரணத் தலைப்பாகை; ஒன்று சரிகைத் தலைப்பாகை.
"ஏனுங்க, நம்ம கேஸுக்கு இந்த இரண்டு தலைப்பாகைகளிலே எதை வைச்சுக்கிட்டு வருவீங்க?"
"சாதா தலைப்பாகையைத்தான் வைச்சுப்பேன். ரொம்ப ஸ்பெஷல் கேஸுக்குத்தான் சரிகைத் தலைப்பாகை. அதை வைச்சுண்டு வந்து பேசணும்னா பீஸ் இன்னும் ஐம்பது ரூபாய் அதிகமாகும்!"
"என்னங்க. இப்படி ஒரே போடாகப் போடறீங்க? இருபத்தைஞ்சுகூடத் தரேன். வைச்சுக்குங்க!"
உள்ளே பாத்திரங்களின் சத்தம் இன்னும் அதிகமாகியது.
கலவரம் அடைந்த கோபாலகிருஷ்ணன், "சரி, சரி; உனக்காக ஃபீஸ் அதிகம் வாங்கா மலே சரிகைத் தலைப்பாய் வைச்சுண்டு வரேன். நீ கிளம்பு, சீக்கிரம்" என்றார்.
"சரிங்க, போய் வரேன். ஆனால் மறந்து போய்த் தலைப்பாகையை மாத்திடாதீங்க!"
குடியானவன் போனதும் ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் கல்யாணி ராகத்தைச் சித்திரவதை செய்து கொண்டே ஒரு கேஸ்கட்டை எடுத்து முடிச்சை அவிழ்க்க ஆரம்பித்தார்.
செல்லம்மாள் கரண்டிக் கரத்துடன் உள்ளே நுழைந்தவள் சற்று நேரம் அசையாமல் நின்றாள். கோபாலகிருஷ்ணன் தலையை நிமிர்த்தவில்லை.
"நான் என்ன மரமா? தூணா? மனுஷியாத் தென்படலையா?" என்றாள் செல்லம். "உங்க பேரில் தப்பில்லை. உங்களைத் தேடி வந்து எங்கப்பா என்னைக் கொடுத்தாரே அவரைச் சொல்லணும்!"
"ஓ! நீங்களா, வாங்கோ அம்மா, வாங்கோ. உட்காருங்கோ. என்ன வழக்கு. என்ன நடந்ததுன்னு விவரமா சொன்னால் சட்டப் பாயிண்ட் சாதகமா பாதகமான்னு யோசிக்கலாம்."
"எனக்கு எப்பவும் எதுவும் பாதகம்தான். இந்த வீட்டுக் குடித்தனத்தைச் சமாளிக்க இனிமேல் என்னால் முடியாது. ஐந்து குடும்பங்களும் சேர்ந்து படுத்தற பாட்டைத் தாங்காமல் தவிசுப் பிள்ளை ஓடிப் போயிட்டான். மூன்று நாளைக்கு ஒரு புது வேலைக்காரி தேட வேண்டியிருக்கு."
"அதனாலே ஓடிப் போக முடியாத வேலைக் காரியா ஒருத்தியைத் தேடறே. மகனுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகணுங்க்றே!"
"வருகிறவள் என்னை ஓட ஓட விரட்டாமல் இருந்தால் போதாதாக்கும். நீங்களும் உங்க பிள்ளையும்தான் அந்த ராங்கிக் காரியை எப்படியாவது இந்த வீட்டோடு தருவிச்சுக்கிறதுன்னு திட்டம் போட்டிருக்கேளே!"
"நான் ஒரு திட்டமும் வகுக்கலை செல்லம். கல்யாணம் ஆசைப்படறான்னு தெரியறது. மறுத்துச் சொல்ல எனக்கு மனமில்லை. உன் சம்மதமில்லாமல் நடந்துடுமா என்ன?"
இந்தச் சமயம் பார்த்துக் கல்யாணம் உள்ளே நுழைந்தான்.
"வாடாப்பா, நுறு ஆயுசு" என்றார் கோபாலகிருஷ்ணன்.
"தந்தையே! அன்னையே! இந்த அறியாச் சிறுவனைப் பற்றித் தாங்கள் யாது இயம்பிக் கொண்டிருந்தீர்கள்? யான் அறிந்து கொள்ளலாமா?"
"இது என்னடா, நாடக டயலாக்கா?"
"ஆம், எந்தையே, அடியேனுக்குத் தாங்கள் இடும் கட்டளை யாது? பகருங்கள்!"
"ஒண்ணும் பெரிய விஷயமில்லே! உன் அம்மாவைத் திருப்திப்படுத்த நீ ஒரே ஒரு கல்யாணம் பண்ணிக்கனும். அவ்வளவுதான்."
"நாடகம் முடியட்டும். அப்புறம்தான் திருமணம் பற்றிய சிந்தனை!" என்றான் கல்யாணம்.
"ஏண்டா, இன்றைக்குக் கோர்ட்டுக்காவது வருவாயா?"
"எல்லாம் நாடகம் முடிந்த பிற்பாடுதான்."
"ஏண்ட, நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?"
"கதையா? சொல்லுங்கோ. வேறு வழியில்லை. கேட்டுக்கறேன்."
"நம்ம பக்கம் பட்டிக்காட்டான் ஒருவன் ஹைகோர்டிலே அப்பீல் போட்டுவிட்டு அதற்காக ரயிலேறினானாம். ரயிலில் நிறைய இடம் இருந்ததாம்...."
"பொய்! பொய்! ரயிலிலாவது இடம் இருக்கவாவது?"
"இருந்தது என்று வைத்துக் கொள்ளேன். பட்டிக்காட்டான் நின்று கொண்டே இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு பயணி, 'ஏம்பா, நிற்கிறாய்? இடம் இருக்கே, உட்காருவது தானே' என்றான். அதற்கு அந்தப் பட்டிக் காட்டான், 'நாளைக்குப் பட்டணத்திலே கேஸு. அது முடியும் வரை உட்கார மாட்டேன்' என்றானாம்!"
"அவன் வைராக்கியத்துக்குத் திருடப் போகணும். நீங்களாயிருந்தால் இடம்தான் இருக்கேன்னு சப்ளிக்க உட்கார்ந்துடுவேள்" என்றாள் செல்லம்.
பிறகு கல்யாணத்தைப் பார்த்து, "நாடகம் என்னிக்கிடா? எங்களை அழைச்சுண்டு போவியோ இல்லியோ?" என்றாள்.
"அழைத்துப் போவதா? சரிதான்! உங்களுக்கு வர வழி தெரியாதா? ஐந்து, பத்து ரூபாய் டிக்கெட்டெல்லாம் விற்றுப் போச்சு. பதினைந்தோ இருபத்தைந்தோ கொடுத்து நாடகம் பாருங்கள். இது ஒரு நல்ல காரியத்துக்கு நிதி திரட்ட நடக்கும் நாடகம்; தெரியும் இல்லையா?"
"ஏங்க, போவோமா? ஐம்பது ரூபாய் செலவாகுமேன்னு யோசிக்காதீங்க. கல்யாணம் நடிப்பதைப் பார்க்க வேணாமா?"
"பேஷாய்ப் போய்ப் பார்; உன் பிள்ளை நடிப்பதை. நான் வரவில்லை."
"ஏன்? ஏன்?" என்று தாய், மகன் இருவரும் ஏககாலத்தில் கேட்டனர்.
"பின்னே என்ன? எனக்கும் ஒரு வேஷம் கொடுடான்னு ஆன மட்டும் கேட்டுப் பார்த்தேன். மாட்டேன்னுட்டான். எனக்கு நடிப்பு வராதாம்! நேற்றுப் பிறந்த இந்தப் பசங்களுக்குத்தான் வருமாம்!"
"அந்த வரைக்கும் கல்யாணம் புத்திசாலிதான்" என்று கூறிச் செல்லம் மகனுக்குத் திருஷ்டிகழித்தாள்.
"நீதான் மெச்சிக்கணும்! பிள்ளையாம் பிள்ளை, அணிப்பிள்ளை! தென்னம்பிள்ளை! எனக்கு நடிக்கத் தெரியாதாம்! இவன் கண்டான்! நான் மட்டும் மேடையேறி மனோஹரனா நடிக்க ஆரம்பித்தால்...."
"கொட்டகையே காலியா யிருக்கும்" என்று முடித்தான் கல்யாணம்.
கோபாலகிருஷ்ணன் சளைக்கவிள்ளை. மனோஹரன் டயலாக் பேச ஆரம்பித்தார்.
"உங்க பேரிலே யாரும் கொலைக்குற்றம் சுமத்தி கேஸ் கொண்டு வரமாட்டேங்கறாளே, அதுதான் அதிசயம்! காலையில் கர்நாடக சங்கீதக் கொலை. மத்தியானம் மனோகரா வசனக் கொலை" என்று கூறியபடியே காதைப் பொத்திக் கொண்டு உள்ளே சென்றாள் செல்லம்.
----------------
அத்தியாயம் 32 -- கமலாவின் கடிதம்
"மகாஶ்ரீஶ்ரீ கல்யாணம் அவர்களுக்கு, அடியாள் கமலா எழுதிக் கொண்டது..."
திருவாளர் கல்யாணம் அவர்களுக்கு அபாக்கியவதி கமலா அநேக கோடி நமஸ்காரங்கள்....."
"வணக்கம்... இந்தக் கடிதம் தங்களுக்கு வியப்பளிக்கலாம்..."
இப்படிப் பலவிதமாகக் கடிதம் எழுத ஆரம்பித்துக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருந்தாள் கமலா. நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் பாதித் தாள்களுக்கு மேல் அடுப்பெரிக்கக் குவிந்துவிட்டன. பாக்கிப் பத்துத் தாள்களைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, 'இதுதான் கடைசி முயற்சி' என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.
"என் இன்னுயிர்க் காதலர் கல்யாணம் அவர்களுக்கு,
ஆம், இந்தக் கடிதத்திலாவது ஒரே ஒருமுறை இப்படித் தங்களை அழைக்க அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவு செய்து இந்தக் கடிதத்தைப் படித்து முடித்த தும் உடனடியாகக் கிழித்துப் போட்டுவிடுவதுடன் என்னைப் பற்றிய நினைவுகள் தப்பித் தவறித் தங்கள் மனத்தில் ஏதும் இருந்தால் அவற்றையும் அழுத்துவிடுமாறு கோருகிறேன்.
இக்கடிதம் தபால் மூலம் தங்களுக்கு வந்துசேரும்போது நான் இந்த ஊரைவிட்டோ அல்லது உலகை விட்டோ (எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை) கிளம்பிப் போய் நீண்ட நேரமாகி விட்டிருக்கும்.
சிறு வயதிலிருந்தே பெரிய படிப்பெல்லாம் படித்து உலகம் வியக்க விளங்கப் போவதாகக் கனவு கண்டவள் நான். கடைசியில் அடுப்பு ஊதுவது தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவள் என்பதாக என் தாய் தகப்பனார் தீர்மானித்து விட்டனர். தங்களை முதன் முதலாகப் பார்த்த கணத்திலிருந்து பட்டம் பதவியெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம் தங்கள் மனைவி என்ற பட்டமும் தங்கள் இதய சிம்மாசனப் பதவியும் கிடைத்தாலே நான் பெரிய பாக்கியசாலி என்று கருதினேன். அதற்கும் நான் கொடுத்து வைக்கவில்லை.
இரண்டு ஆசைகளுமே நிறைவேறாவிட்டாலும் பாதகமில்லை. ஏதோ வீட்டோடு இருந்து பெற்றோருக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாலே, எனக்குப் போதும். ஆனால் அதுவும் முடியாது போலிருக்கிறது. அப்பாவும் அம்மாவும் என் பெற்றோர்களே இல்லை என்பதும் நான் வளர்ப்பு மகள்தான் என்பதும் சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது. அத்துடன் இவர்கள் சுயநலம் கருதி என்னைப் பெரும் பணக்காரரான ஒரு கிழக் கோட்டானுக்கு விற்றுவிடத் தீர்மானித்துவிட்டார்கள். குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்ற கதையாகி விட்டது என் வாழ்க்கை.
இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் எனக்கு இல்லை. பவானி அக்காவாக இருந்தால் பணிந்து கொடுக்கவே மாட்டாள். ஆனால் நான் பவானி இல்லையே? இந்தத் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் எனக்கு இல்லை. எனவே நான் யாருமறியாமல் ஓடிவிடப் போகிறேன். தற்கொலை செய்து கொண்டு சாவேனோ, பிச்சை எடுத்துப் பிழைப் பேனோ அல்லது எங்கோ கண் காணாத ஊரில் யார் வீட்டிலாவது பத்துப் பாத்திரம் தேய்த்துப் போட்டு வயிறு வளர்ப்பேனோ தெரியாது. இறைவன் விட்ட வழி.
உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப மனம் இடம் தரவில்லை. அதனால்தான் எழுதினேன். தவறானால் மன்னித்து விடுங்கள். என் நினைவால் தாங்கள் அல்லல் .." **** கமலா கையெழுத்துப் போடப் போன சமயம் வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பரபரப்புடன் எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்தாள். "யார் அது?"
"நான் தான் ரங்கநாதன்" என்று பதில் கிடைத்தது.
"அப்பா-அம்மா இல்லையே?"
"பரவாயில்லை. நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்."
கமலாவுக்குக் 'குப்' பென்று வியர்த்துவிட்டது. 'இப்போது என்ன செய்வது? கதவைத் திறப்பதா, கூடாதா?'
இரண்டொரு கணங்களே யோசித்த கமலா மனத்தைத் தேற்றிக் கொண்டாள். 'இந்தப் பட்டப் பகலில் என்னை என்ன செய்து விடும் அந்தக் கிழம்?' என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டு வாசல் கத வைத் திறந்தாள். 'ஏண்டி மாப்பிள்ளையை வாசலில் நிற்க வைச்சே பேசி அனுப்பிவிட்டாயா? அவர் தன்னை அவமதித்து விட்டதா எண்ணிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது?' என்று அம்மா கேட்டுத் தன்னைக் கோபித்துக் கொள்வாளே என்ற பயமும் கமலாவை இயக்கியது.
கதவைத் திறந்ததுமே சில்லென்ற வாடைக் காற்று ரங்கநாதனுக்கு முன்பாக வீட்டினுள் நுழைந்தது. மேஜை மேலிருந்து காகிதங்கள் பறந்தன. "அடடா! ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாய் போலிருக்கிறது. எல்லாம் பறந்து விட்டதே" என்ற ரங்கநாதன், ஒரு மூலையில் போய் விழுந்த, எழுதிய தாளைப் பொறுக்கி எடுக்க நடந்தார்.
"பாதகமில்லை, இருக்கட்டும். நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று பதறினாள் கமலா. வாய் குளறிப் பேசியதே தவிர உடல் செயலற்றுப் போயிற்று. ரங்கநாதன் செல்கிற அறையின் அந்த மூலைக்கு அவசரமாகத் தானும் விரைந்து அவர் மீது பட்டும் படாததுமாக நெருங்கி நின்று தாளைப் பொறுக்க அவளுக்குக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. தான் அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ள ஏதோ ஒன்றை அவரிடமிருந்து மறைக்க முயல்வதாக அவர் கருதிவிடக் கூடாதே என்ற கவலை வேறு.
அவள் நின்ற இடத்தை விட்டு நகராமலே பதறிக் கொண்டிருக்க அவர் போய் அந்தத் தாளைக் குனிந்து எடுத்து விட்டார்.
கமலாவுக்கு உள்ளமெல்லாம் வெல வெலத்துப்போக உடலும் நடுங்க ஆரம்பித்தது.
"யாருக்குக் கடிதம்?" என்று கேட்ட படியே நிமிர்ந்து அவளைப் பார்த்தார் ரங்கநாதன்.
(தொடரும்)
---------------
கருத்துகள்
கருத்துரையிடுக