அரும்பு அம்புகள் - பாகம் 2
வரலாற்று நாவல்கள்
Back
அரும்பு அம்புகள் (நாவல்) / பாகம் 2
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
-
Source:
அரும்பு அம்புகள் அமரர் கல்கி
இது வரை வெளிவராத நாவல்.
–----------
அரும்பு அம்புகள் - அமரர் கல்கி
அத்தியாயங்கள் | அத்தியாயங்கள் |
அத். 33 : "சம்மதம்"; "சம்மதம்!" | அத். 50 : பவானியின் காதலன் |
அத். 34 : திருமண அழைப்பிதழ் | அத். 51. அடிபடாத மான்! |
அத். 35 : இருள் நிலவாகுமா? | அத். 52. அடிபட்ட புலி! |
அத். 36 : பாங்குக் கொள்ளை! | அத். 53. கொடூரப் புன்னகை |
அத். 37 : கப்பல் போன்ற கார் | அத். 54. "பவானியின் காதலன்" |
அத். 38 : படை கிளம்பியது! | அத். 55. யாரை நம்புவது? |
அத். 39 : தந்திரம்! | அத். 56. கைதியின் கதை |
அத். 40 : எதிர்த் தந்திரம்! | அத். 57. பவானியின் கட்டளை |
அத். 41 : கல்யாணத்தில் கலாட்டா! | அத். 58. ரங்கநாதன் மனமாற்றம். |
அத். 42 : "பழிக்குப் பழி!" | அத். 59. கல்யாணத்துக்கு அவமானம். |
அத். 43 : நீதிமன்றம் | அத். 59. கல்யாணத்துக்கு அவமானம். |
அத். 44 : வழக்கு | அத். 60. தப்பியோடத் திட்டம் |
அத். 45 : கமலாவின் கல்யாணம் | அத். 61 -- பயணம் முடிந்தது! |
அத். 46 : பவானியின் பதில் | அத். 62 -- லட்சிய வெறி |
அத். 47 : அவமானத்தின் எதிரொலி | அத். 63 -- உல்லாச வேளை |
அத். 48 : வேதனையில் ஒரு வாலிபன். | அத். 64 -- கடைசி பானம்! |
அத். 49 : தப்பியோடிய கைதி. | அத். 65 -- மலர் அம்புகள் |
அத்தியாயம் 33 -- "சம்மதம்"; "சம்மதம்!"
கமலாவின் உடல் வெட வெட வென்று நடுங்குவதைப் பார்த்த மறு கணமே ரங்கநாதனுக்குப் புரிந்து போயிற்று; 'அவள், அந்தக் கடிதத்தைத் தான் படித்துப் பார்த்துவிடக்கூடாதே என்ற கவலையில் தான் பயப்படுகிறாள்!' அவர் புன்னகையுடன் கடித்தத்தை இரண்டாகவும் பிறகு நான்காகவும் மடித்தார்.
"கமலா! உன் உடம்புக்கு என்ன? ஏன் இப்படி நடுங்குகிறது?" என்றார்.
அவருக்குக் கடிதத்தைப் படிக்கும் உத்தேசம் இல்லை என்பதை அவர் அதை மடித்த விதத்திலிருந்தே உணர்ந்துவிட்ட கமலாவின் நடுக்கம் குறைந்து விரைவில் நின்றும் விட்டது.
"ஒன்றுமில்லை" என்று தலைகுனிந்து முணுமுணுத்தாள் அவள்.
"உடம்புக்கு ஒன்றுமில்லையா? அப்படியானால் என்னைக் கண்டு பயந்துபோய்த்தான் நடுங்கினாயா? நான் என்ன பார்ப்பதற்கு அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்?"
"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றாள் கமலா.
"உடம்புக்கும் ஒன்றுமில்லை. என்னைப் பார்த்தாலும் பயமா யில்லை. பிறகு உடல் நடுங்குவானேன்? ஒருவேளை இந்தக் கடிதத்தை நான் படித்து விடுவேன் என்ற பயத்தால் உன் உடல் அப்படிப் பதறியதா? கவலைப்படாதே கமலா! பிறர் கடிதங்களைப் படித்துப் பார்க்கும் கெட்ட பழக்கம் எனக்குக் கிடையாது!"
கமலாவுக்குத் திடீரென்று துணிச்சல் எப்படித்தான் வந்ததோ? கிண்டலும் கேலியும் கோபமும் ஆங்காரமும் கொப்பளிக்க, "அடடா, அது எனக்குத் தெரியாதா? நீங்கள் எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்! எவ்வளவு பெரிய பணக்காரர்! உங்களுக்கெல்லாம் அற்பத்தனமான கெட்ட பழக்கங்கள் இருக்குமா என்ன?" என்றாள்.
ரங்கநாதன் சிரித்தார். "புரிகிறது கமலா, நையாண்டி நன்றாகப் புரிகிறது. பிறர் கடிதத்தைப் படிக்கும் கெட்ட பழக்கம் எனக்கு இல்லை என்றுதான் சொன்னேனே யொழிய என்னைப் பரம உத்தமமான, தெய்வீக புருஷனாக நான் வர்ணித்துக் கொள்ளவில்லை. நான் சாமானிய மனிதன் தான். பலவித ஆசாபாசங்களும் பலவீனங்களும் உடையவன் தான். அதே சமயம் பிறர் கடிதத்தைப் படிப்பது போன்ற சில கெட்ட பழக்கங்களை அண்ட விடாமல் என்னை நானே காத்துக் கொள்ளும் மனோபலமும் பெற்றவன். கமலா நீயே யோசித்துப் பார். எனக்கு இருக்கிற செல்வத்துக்கு நான் எவ்வளவோ தீய பழக் கங்களுக்கு அடிமையாகிக் கெட்டலையலாம். என்னைக் கேட்பார் இல்லை. ஆனாலும் நான் இந்த ஊரில் நற்பெயர் எடுத்துக் கௌரவமாக வாழவில்லையா? என்னை யாரேனும் வெறுக்கும்படியோ இழித்துரைக்கும்படியோ நடந்து கொண்டிருக்கிறேனா? சொல்!"
கமலாவுக்கு அவர் கூறுவதில் உள்ள நியாயம் புரிந்தபோது ஆங்காரத்துடன் அவரைக் கிண்டல் பண்ணுவது போலத் தான் பேசியது தவறு என்று உணர்ந்து வருந்தினாள். ரங்கநாதனிடம் கெட்ட பழக்கங்கள் ஏதும் கிடையாது என்பதுடன் பரோபகாரி என்றும் ஊரில் நற்பெயர் எடுத்திருந்தார். 'லக்ஷ்மிகடாச்சத்தைப் பெற்றவர், செல்வம் ஈட்டும் ஆற்றலை உடையவர் என்பதற்காகவே ஒருவரை வெறுப்பது அநியாயமல்லவா? தமது சொத்துக்கெல்லாம் ஒரு வாரிசு வேண்டும் என்று ஆசையால் அவர் என்னை மணந்துகொள்ள விரும்பியதில் என்ன தவறு? அவர் இஷ்டத்துக்குப் பணியுமாறு அவர் என்னையோ அல்லது அப்பா-அம்மாவையோ வற்புறுத்தவில்லையே? இவர்கள்தாமே அந்தச் சம்பத்துக்களை யெல்லாம் பார்த்து மலைத்துப் போய்ப் பேராசைப்பட்டு இராப் பகலாக அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்?'
அவளுடைய மனம் இளகியுள்ளதைப் படித்துவிட்டவராக அவர் தொடர்ந்தார். "உன் பெற்றோரை நான் என் பங்களாவுக்கு வரச் சொல்லி என் ஐசுவரியத்தைக் காட்டியது கூடத் தவறோ என்று என் மனத்தில் ஓர் உறுத்தல் கமலா? இரண்டு நாட்களாக அந்த உறுத்தலை அனுபவித்துவிட்டு இனியும் தாளாது என்ற நிலையில்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். நீ வீட்டில் தனியாக இருப்பதே ஒரு விதத்தில் அனுகூலமாய்ப் போயிற்று. உன் பெற்றொர் இருந்தால் உன் னைப் பேசவே விடமாட்டார்கள்.
'அவளுக்கு என்ன தெரியும்? பெரியவர்கள் பார்த்துச் சொன்னால் சரி என்று கூறிவிட்டுப் போகிறாள்.' என்பது போல் எதையாவது சொல்லியே என்னைச் சரிகட்டிவிடுவார்கள். ஆனால் எனக்கு உன்னுடைய மனப்பூர்வமான சம்மதம் இந்தத் திருமணத்துக்கு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது உன்னுடைய சுதந்திரமான முடிவாகவும் இருக்க வேண்டும். அப்படித் தெரிந்து கொண்ட பிறகுதான் இந்தக் கல்யாணம் நடக்கும். இல்லாதபோனால் அச்சடித்த திருமண அழைப்பிதழ்களை அடுப்பிலே போட்டுவிட்டுச் சிவனே என்று இருந்து விடுகிறேன்."
கமலாவின் மனம் கரைந்துருகிற்று. 'மெய்யாலுமே பெரிய மனிதர் என்றால் இவர்தாம் பெரிய மனிதர்' என்று எண்ணினாள். ஆனால் அவருக்கு என்ன பதில் கூறுவது என்பதொன்றும் அவளுக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. 'திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டால் மட்டும் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? கல்யாணம் கையில் தாலியுடன் ஓடி வரப் போகிறாரா? அல்லது இந்தக் குடும்பத்தில் தரித்திரம் நீங்கிவிடப் போகிறதா? நான் தான் பெரிய படிப்புப் படித்து உத்தியோகத்தில் அமர்ந்துவிடப் போகிறேனா? அல்லது அம்மா என்னைத் தரித்திரப் பீடை என்று கரித்துக் கொட்டுவதை நிறுத்திவிடப் போகிறாளா? வசவும் திட்டும் அதிகரிக்கப் போகிறது. அவ்வளவுதான். வலிய வந்த ஸ்ரீதேவியை உதைத்துத் தள்ளினேன் என்பதாக அப்பாவுக்குக்கூட என் மீது ஆதங்கம் உண்டாகி வெறுத்துப் பேசலாம்.'
"நான்... நான்" என்று தட்டுத் தடுமாறித் தயங்கினாள் கமலா.
"வேண்டாம் கமலா, அவசரமில்லை. நீ இன்னும் கொஞ்சம் யோசித்துவிட்டே வேணுமானாலும் பதில் சொல்லு. பாதகமில்லை." என்றார் ரங்கநாதன். தொடர்ந்து, "இதோ பார், நீ பதிலே கூற வேண்டாம். இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தால் உன் மனம் எனக்கு உடனே தெரிந்து போய்விடும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. ஆனால் நான் அப்படிச் செய்யப் போவதில்லை. கடிதத்தை இதோ மேஜையில் மேல் வைத்து அது மறுபடியும் பறந்துவிடாமலிருக்க இந்தப் புத்தகத்தையும் அதன் மேல் வைக்கிறேன். இதை மறந்து விடுவோம். என்னையும் என் ஆசைகளையும்கூட சிறிது நேரம் மறந்துவிடுவோம். உன் வாழ்க்கை, உன் எதிர்காலம் இவற்றைப் பற்றிச் சிந்திப்போம். நான் உனக்கு வழங்க எண்ணுகிற எதிர்காலத்தில் வாலிப மிடுக்குடைய கணவன் என்ற ஓர் அம்சத்தைத் தவிர உனக்குச் சகலத்தையும் என்னால் கொடுக்க முடியும். அன்பும் ஐசுவரியமும் சாதிக்கக்கூடிய சகலத்தையும் நீ பெற லாம். யௌவனம் என்னிடமிருந்து விடை பெற்றுவிட்டதேயொழிய நான் இன்னமும் திடகாத்திரமாகவே இருக்கிறேன். ஊர் ஊராகப் போக வேண்டுமா? உல்லாசமாக உலகைச் சுற்றி வர வேண்டுமா? நகை நட்டு பூண வேண்டுமா? எதுவானாலும் சொல். உன் ஆசைகளையெல்லாம் கட்டளை களாக மதித்து நிறைவேற்றுவேன். இதற்கெல்லாம் பிரதியாக நான் உன்னிடம் கேட்பது மனைவி என்ற ஸ்தானத்தில் அமர்ந்து அன்பையும் தோழமையையும் எனக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றுதான் கமலா! அபரிமிதச் செல்வம் என்ற கடலுக்கு மத்தியில் தனிமை என்ற ஏகாந்தத் தீவில் இருக்கிறேன் நான். என்னிடம் கொஞ்சம் இரக்கம் காட்டுவாயா?"
கமலாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்களில் கருணை பொங்கியது. அதே நேரத்தில் தன்னால்கூட ஒருவருக்கு உதவ முடியும். தன்னிடம்கூடக் கெஞ்சிக் கேட்கிற மாதிரியாக ஏதோ ஓர் அம்சம் இருக்கிறது என்ற எண்ணத்தில் கர்வம் எட்டிப் பார்த்தது!
'முடியாது என்று முகத்தில் அடித்ததுபோல் இவருக்குப் பதில் கூறி விடுவது பெரிய காரியம் இல்லை. பிறகு அம்மா அப்பாவின் கோப தாபங்களுக்கு ஆளாகாதிருக்க வீட்டை விட்டு ஓடிவிடுவதும் பெரிய விஷயமல்ல.
அப்படி ஓடிச் சென்ற பிறகு பிச்சை எடுப்பதோ அல்லது வேலை செய்து பிழைப்பதோ கூடச் சிரமமில்லை. ஆனால் அப்படித் தன்னந்தனியாகப் பாதுகாப்பின்றி உலகில் வாழும் போது தன்னைப் புதிய ஆபத்துக்கள் சூழாது என்பது என்ன நிச்சயம்? இந்த யுத்த காலத்தில் உணவுக்குத்தான் பஞ்சமே யொழியக் கயவர்களுக்கா பஞ்சம்? இந்தப் பாழும் உலகையே துறந்து செத்தொழியலாம்தான் ஆனால் அதனால் என்னத்தைச் சாதித்ததாகும். எதை நிரூபித்ததாகும்? அதைவிட....அதைவிட....'
ஒரு முடிவுக்கு வந்தவளாக ரங்கநாத முதலியாரை நிமிர்ந்து பார்த்தாள் கமலா.
"நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்வீர்கள் என்றால் நான் இந்தத் திருமணத்துக்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறேன்" என்றாள்.
"என்ன?" என்று கேட்டார் முதலியார்.
"என்னைப் படிக்க வைக்க வேண்டும். எஸ். எஸ். எல். ஸி மட்டுமில்லை. அதற்கு மேலே கல்லுரிப் படிப்பும் நான் பெற வேண்டும். டாக்டராக அல்லது வக்கீலாக என்னை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த ராமப்பட்டணத்திலேயே எல்லோரும் அதிசயிக்க நான் தொழில் நடத்த வேண்டும். செய்வீர்களா?"
ரங்கநாத முதலியார் தாம் சற்றும் எதிர் பார்க்காத இந்தக் கோரிக்கையைக் கேட்டுச் சில விநாடிகள் பிரமித்துப் போனார். பிறகு பெரிதாகச் சிரித்தார்.
"எதற்குச் சிரிக்கிறீர்கள்? பைத்தியக்கார ஆசை என்றா?"
"சேச்சே! அதெல்லாம் இல்லை, கமலா. நீ கோரிக்கை என்றதும் நான் ஏதேதோ அபத்தமான கற்பனைகளில் இறங்கிவிட்டேன். உன்னுடைய பரிசுத்தமான மனத்தை உணராத மூடனாக, சொத்தையெல்லாம் உன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று நீ கேட்கப் போகிறாய் என்று நினைத்து விட்டேன். என்னை மன்னித்துவிடு, கமலா. இத்தனை எளிய, சாமானியக் கோரிக்கை என்றதும் மகிழ்ச்சி தாங்கவில்லை எனக்கு. கமலா! டாக்டருக்கு உன்னைப் படிக்க வைப்பது மட்டுமில்லை. நீ பட்டம் பெற்று வந்ததும் தலைவியாக விளங்கிப் பணியாற்ற இந்த ராமப்பட்டணத்தில் ஒரு தர்ம ஆஸ்பத்திரியே கட்டித் தருகிறேன். போதுமா?"
கமலா சட்டென்று கிழக்கு முகமாக அவர் முன் விழுந்து வணங்கினாள். அவள் நிமிர்ந்த போது அவரது வலக்கரம் அவள் சிரத்தைத் தொட்டு ஆசிர்வதித்தது.
-----------------
அத்தியாயம் 34 -- திருமண அழைப்பிதழ்
வாசலில் விளக்கு ஏற்றிவிட்டு வந்த கமலா வெகு உற்சாகமாகச் சமையல் காரியங்களில் ஈடுபட்டாள். அடுப்பு மூட்டத் தான் கடைசியாக எழுதிய கடிதத்தையும் அதற்கு முன்பாக அரைகுறையாக எழுதிக் கிழித்துப் போட்ட கடிதங்களையும் பயன்படுத்திக் கொண்டாள்.
புகையில் கண்ணைக் கரித்தபோது 'சனியன்' என்று வையவில்லை. 'பெண்ணாய்ப் பிறந்தேனே' என்று அலுத்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, 'இன்னும் கொஞ்ச நாட்கள்தான் அடுப்பு ஊதுகிற வாழ்க்கை' என்று எண்ணிக் கொண்டாள். ரங்கநாதமுதலியார் பங்களாவில் பட்டுப் புடவை சரசரக்க இடுப்பில் சாவிக் கொத்து கலகலக்கத் தான் வளைய வருவதைக் கற்பனை செய்து கொண்டாள். சாதம் வெந்து இறங்குவதற்குள் கமலா மெட்ரிக் எழுதித் தேறிவிட்டாள். சாம்பார் கொதி வந்து இறங்குவதற்கு முன் அவள் பட்டணத்தில் ஜாகை வைத்துக் கல்லூரியில் சேர்ந்து எஃப். ஏ. படித்து முடித்தாகிவிட்டது. தயிர் கடைந்து முடிப்பதற்குள் அவள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டமும் பெற்று விட்டாள். அப்பா, அம்மா, விசுவுக்குச் சாப்பிடத் தயாராகத் தட்டு போட்டு தண்ணீர் எடுத்து வைப்ப தற்குள் மேநாடுகளுக்குப் போய் எம். டி. பட்டமும் பெற்றுத் திரும்பி விட்டாள். கடைசியாக அப்பளாம் சுட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்காக ராமப்பட்டணத்தில் பெரிய ஆஸ்பத்திரி உருவாகிவிட்டது! அதில் அவள் மிடுக்குக் குறையாத பரிவுடன் வளைய வந்து நற்பணியாற்றும் நேர்த்தியைக் கண்டு பவானி பிரமித்துப் போனாள். கல்யாணம் ஆனந்தக் கண்ணீர் தளும்ப நின்றான்.
குமட்டித் தணலில் கையைச் சுட்டுவிட்டது. கமலா உதறிக் கொண்டே நிமிர்ந்தபோது வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கருகிய அப்பளம் காமாட்சி அம்மாள் கண்ணில் படாதவாறு அடுப்புக்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு, சூடு பட்ட விரலை உதடுகளுக்கிடையில் வைத்துச் சப்பிக் கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்று கதவைத் திறந்தாள்.
விசுப் பயல் புதுச் சட்டை, டிராயர் அணிந்த கோலத்தில் முதலில் உள்ளே நுழைந்தான். "என்னடா, இது, ஜவுளிக் கடையிலேயே டிரஸ் பண்ணிக் கொண்டாயா?" என்று கமலா புன்னகையுடன் கேட்டாள்.
பெரிய பெரிய பொட்டலங்களுடன் உள்ளே நுழைந்த காமாட்சி அம்மாள், "அளவு பார்க்கிறேன்னு பழைய துணிக்கு மேலேயே போட்டுக் கொண்டான். அப்புறம் கழற்ற மனசு வரலை. குழந்தைதானே?" என்றாள்.
மாசிலாமணி குதிரை வண்டிக்குக் கூலி கொடுத்துவிட்டுப் படியேறி வந்தார்.
"ஏண்டா, அக்காவுடைய கல்யாணத்துக்கு போட்டுக்க டிரஸ் வாங்கிவிட்டு இப்பவே அழுக்கா அடிக்கலாமா?" என்றாள் கமலா.
"சேச்சே! இதுவா கல்யாண டிரஸ்? அதற்கு ஸூட் தைக்கக் கொடுத்திருக்கு. இது சும்மா பள்ளிக்கூடத்துக்குப் போட்டுக் கொண்டு போகத்தான்" என்றான் விசு.
"கடைத் தெருவையே உன் அம்மா விலைக்கு வாங்கியாச்சு" என்றார் மாசிலாமணீ.
காமாட்சி அம்மாள் கூடத்தின் மையத்தில் அமர்ந்து துணி மூட்டையை அவிழ்த்துத் தன் பட்டுப் புடவையை எடுத்து நெஞ்சோடு வைத்துக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டாள்.
"இந்த மாதிரி அழகு பார்க்க உள்ளங்கை அகலக் கண்ணாடி போதாது. ஆளுயர நிலைக் கண்ணாடி தேவை" என்றார் மாசிலாமணி.
"அதுக்கென்ன. மாப்பிள்ளை வீட்டில் இல்லாத கண்ணாடிகளா?"
அவிழ்ந்த மூட்டையில் கூரைப் புடவை தெரிந்தது. பக்கத்தில் ஒரு சிறு நகைக் கடைப் பெட்டியும் இருந்தது. தாலியாகத்தான் இருக்கும். தனது அர்த்தமுள்ள எதிர்காலத்தின் அழகுமிக்க சின்னங்கள் என எண்ணினாள் கமலா.
"கமலா! உட்கார்ந்து பாரேன். உனக்குப் பிடிச்சிருக்கா என்று" - மாசிலாமணி தூண்டவே கமலா அமர்ந்து புடவையைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். "ரொம்ப பிடிச்சிருக்கு அப்பா. அம்மா தேர்ந்தெடுத்தால் குறை இருக்குமா என்ன?"
அவள் குரலில் தொனித்த திருப்தி மாசிலா மணியைத் துணுக்குற வைத்தது. 'இது என்ன, இந்தப் பெண் சிறுமியாக இருந்த போது கல்யாண விளையாட்டு விளையாடினாளே, அதுதான் இதுவும் என்று நினைக்கிறாளா? அல்லது காணாததைக் கண்ட மகிழ்ச்சியில் பேசுகிறாளா?'
"வீட்டுக்காரர் வந்துவிட்டுப் போனார், அப்பா!"
"படிப்புத்தான் வரலையே தவிர கமலா கெட்டிக்காரிதான். 'வீட்டுக்காரர்' என்று இரண்டு அர்த்தம் தொனிக்கப் பேசுகிறாள் பாருங்க" என்றாள் காமாட்சி.
"கல்யாண அழைப்பிதழ்களை அச்சடித்து விட்டாராம். கொண்டு வந்து கொடுக்க வந்தாராம். நீங்கள் இல்லாததால் என்னிடம் தந்து விட்டுப் போனார். - சொல்லிக்கொண்டே கட்டோடு அவற்றை எடுத்து வந்தாள் கமலா. "அளவாகத்தான் அச்சடித்தாராம். அதுவும் இந்த ஊரில் இல்லை. மெட்ராஸுக்கு எழுதி அச்சடித்துத் தபாலில் அனுப்பச் சொல்லியிருக்கிறார். இந்த ஊரில் யாருக்கும் அழைப்பிதழ் தர வேண்டாம் என்று சொல்லச் சொன்னார். வெளியூரில் இருக்கிற நெருங்கிய உறவுக்காரர்களுக்கும் முக்கிய நண்பர்களுக்கும் மட்டும் அனுப்பச் சொன்னார். இல்லாத போனால் ஊர் வம்பை விலைக்கு வாங்கியதாகும் என்றார்."
"ரொம்ப சரி, யாரைத் தெரியும் நமக்கு இந்த ஊரிலே? எஞ்சி மிஞ்சிப் போனால் அந்த ராங்கிக்காரி பவானி; அவளைவிட்டால் அந்தப் பிள்ளையாண்டான் கல்யாணம். இவர்களுக்குத் தெரிவிக்கலைன்னா என்ன குடிமுழுகிப் போயிடும்? டேய், விசு! நாளைக்குப் பள்ளிக் கூடத்தில் போய் என் அக்காவுக்குக் கல்யாணம் என்று டமாரம் அடித்து வைக்காதே! பிச்சு இழுத்துப்பிடுவேன். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கல்யாணம் நடந்து முடியணும்" என்றாள் காமாட்சி.
இதற்குள் கட்டைப் பிரித்து ஓர் அழைப்பிதழை எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பித்திருந்தார் மாசிலாமணி.
"......திருநீர் மலை க்ஷேத்திரத்தில் நடக்கிறபடியால், தாங்கள் இஷ்டமித்திர பந்துக்களுடன் வந்திருந்து......"
"அப்பா, தேதி என்ன என்று படித்தீர்கள்?" என்று கேட்டான் விசு. "நாடகம் நடக்கிற அதே தேதியா?"
"ஆமாம், அதனால் என்னடா? டிக்கெட்தான் கிழிந்து போய்விட்டதே!"
"அந்த ஓசி டிக்கெட் கிழிந்தால் என்ன? நாலு டிக்கெட் காசு கொடுத்து வாங்கிக்க நமக்குத் தெரியாதாக்கும்" என்றாள் காமாட்சி.
அவள் அப்போது பாக்கிப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள்.
நாடகம் நடக்கும் தினமே நல்ல முகூர்த்த நாளாக அமைந்தது ரொம்ப வசதி என்று ரங்கநாத முதலியார் கருதியிருப்பார் என்பது கமலாவுக்குப் புரிந்தது. ராமப்பட்டணம் ஊரே நாடக அரங்கேற்றம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும். இளைஞர்களின் சிந்தனையெல்லாம் அங்கே ஒருமுகப்பட்டிருக்கும் போது இவர்கள் முதல்நாள் திருநீர் மலைக்குக் கிளம்பிச் செல்வதை யாரும் கவனிக்கமாட்டார்கள். வாலிப மிடுக்குடைய சீர்திருத்தவாதிகளின் முட்டுக்கட்டை ஏதுமின்றித் திருமணம் 'ஜாம்ஜாம்' என்று நடந்தேறும்!
"என்னடா, பிரமாத நாடகம்? கமலாவின் கல்யாணம் நடந்து முடியட்டும். தினம் ஒரு நாடகம் அல்லது சினிமா பார்க்கலாம்" என்றாள் காமாட்சி.
"என்ன தான் இருந்தாலும் 'கணையாழியின் கனவு' நாடகம் போல் ஆகுமா அப்பா? இவர் இரண்டாவது முறை நாடகம் போடறாளோ இல்லையோ? கல்யாணம் மாமாவும் பவானி அக்காவும் சேர்ந்து நடிக்கறதை மறுபடியும் பார்க்க முடியுமோ என்னவோ?"
அந்த விநாடியில் கமலாவின் நெஞ்சில் ஒரு வேதனை ஏற்பட்டது. 'தனக்குத் திருமணம் நிச்சயமாகி பிடித்தமான ஓர் எதிர்காலமும் உறுதியான பிறகும் தன் மனம் இவ்வாறு சங்கடப்படக் கூடாது; பவானி அக்காவும் கல்யாணம் மாமாவும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்று தம்பி கூறியதுமே ஒரு துன்பம் இதயத்தை ஊடுருவக் கூடாது; இது தவறு' என்று அவள் நினைத்தாள். ஆயினும் அவள் அறிவு கூறியதை மனம் ஏற்காமல் தொடர்ந்து துயரப்பட்டுக் கொண்டுதான் இருந்தது!
(தொடரும்)
-------------
அத்தியாயம் 35 -- இருள் நிலவாகுமா?
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் தமது பங்களா வாசல் போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே வந்தார். டென்னிஸ் டிரெஸ்ஸில் இருந்தவர் நேராக மாடியில் தமது படுக்கை அறைக்குப் போய் அவற்றைக் களைந்துவிட்டு ஹவுஸ் கோட் ஒன்றை அணிந்து இடுப்பில் நாடாவை முடிந்தபடியே மீண்டும் கீழே இறங்கி வந்தார். வரவேற்பு அறையில் இருந்த அலங்காரமான அலமாரி யொன்றைத் திறந்தார். உள்ளே நோட்டம் விட்டு விட்டு, "மணி! மணி!" என்று உரக்க அழைத்தார்.
"ஸார்! வந்துட்டேன்" என்று பதில் கொடுத்தபடியே சமையலறையிலிருந்து வந்த மணி, தோளிலிருந்து தொங்கிய அழுக்குத் துண்டில் கையைத் துடைத்தபடி நின்றார்.
"சோடா இருக்கான்னு பார்த்து வாங்கிக் கொண்டு வந்து வைக்கப்படாது? தினமும் அதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டுமா நான்?"
"சோடாதானே? ரெடியா இருக்கே? மார்க்கெட்டுக்குப் போய் வாங்கி வந்த சாமான்களோடு அடுப்பங்கரையிலேயே வைச்சுட்டேன். சமையலுக்கு நேரமாகி விடவே அதில் கவனம் போய்விட்டது."
"சரி, சரி! சீக்கிரம் கொண்டுவந்து இங்கே அடுக்கு. ஒவ்வொரு தடவையும் நான் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார வியாபாரி மாதிரி சோடா சோடான்னு அலற வேண்டியிருக்கு!"
மணி சமையலறைக்குச் சென்று ஒரு பெரிய துணிப் பையுடன் திரும்பினார். அதிலிருந்து ஸ்பென்ஸர் சோடாக்களை எடுத்து அலமாரியில் வரிசையாக அடுக்கினார். கூடவே, "ஸார்! நான் சொல்றேன்னு கோபிக்கப் படாது. நீங்க இங்கே உத்தியோகத்தை ஏற்று வந்தபோதே உங்க அப்பா என்னிடம் சொல்லி அனுப்பினார்...." என்று இழுத்தார்.
"ஷட் அப்!"
"நான் வாயை மூடிக் கொண்டு போய்விட்டால் உங்க அப்பாவுக்குத் துரோகம் செய்தவனாவேன்."
"அவரா உனக்குச் சம்பளம் தருகிறார்? நகரு!"
மணி அப்பால் சென்று துணிப் பையை மடித்துக் கொண்டே பேசினார். "இன்று நீங்கதான் சம்பளம் கொடுக்கிறீங்க. ஆனா என் பன்னிரண்டாவது வயதிலிருந்தே உங்க அப்பாகிட்டே வேலை செய்து வந்தவன் நான். 'மணி! கோவர்த்தனன் தெற்கே துணையில்லாமல் போகக் கூடாது என்பதற்காகத்தான் உன்னையும் பின்னோடு அனுப்பறேன். எவ்வளவு நல்லவனானாலும் தனியே இருக்கும்போது மனசு சில சமயம் தடுமாறிப் போய்விடும். அவன் பிறந்த தினத்திலிருந்தே அவனை உனக்குத் தெரியும். அவனுக்குச் சமைத்துப் போடுவது மட்டும் உன் வேலை இல்லை. என் ஸ்தானத்திலிருந்து அவனை நீ கவனித்துக் கொள்ளணும்' என்றார்.
"லெக்சர் முடிந்ததா?" - கேட்டுக் கொண்டே அலமாரிக்குள்ளிருந்து ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்துத் தன் நெஞ் சுயரத்துக்கு வந்த அலமாரியின் மேல் பரப்பில் வைத்தார் கோவர்த்தனன். அடுத்து விஸ்கி பாட்டிலையும் எடுத்து வைத்துவிட்டு, சோடா ஒன்றை உடைத்தார்.
"எனக்கு இங்கே சில வார்த்தைகளைக் கூறச் சந்தர்ப்பம் அளித்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன், வணக்கம்" என்று சொற்பொழிவை முடித்தார் மணி.
கோவர்த்தனன் சிரித்தார்.
"குளிக்க வெந்நீர் ரெடி; சாப்பாடும் தயார்!"
"வெந்நீரில் நீ குளி. உனக்குத்தான் பச்சைத் தண்ணீர் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. வெய்யில் காலத்திலும் வெந்நீர் வேண்டும். எனக்கு எதற்கு? இப்பத்தான் டென்னிஸ் ஆடிட்டு வந்தேன். வியர்வை அடங்கியதும் குளித்துவிட்டுச் சாப்பிட வரேன். நீ போய் டேபிளை 'அரேஞ்ச்' பண்ணு." மணி சென்றதும், கோவர்த்தனன் மீண்டும் அலமாரிக்குள் கண்ணோட்டம் விடக் குனிந்தார். அதில் ஃபிரேம் போட்டு நிமிர்த்தி வைத்திருந்த பவானியின் இரு படங்களையும் எடுத்து அலமாரி மீது பார்வையாக வைத்தார். மதுவை அருந்தியபடியே அவற்றை மாறி மாறிப் பார்த்தார். ஒன்றில் அவள் வக்கீல் உடையில் இருந்தாள்; மற்றொன்றில் டென்னிஸ் உடையில் கையில் மட்டை ஏந்தி நின்றாள். உதடுகளைக் குவித்து இரு படங்களையும் நோக்கிக் காற்றை முத்தமிட்டார்.
கோவர்த்தனன். பிறகு டென்னிஸ் உடையிலிருந்த பவானி படத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மற்றொரு கரத்தில் மதுக் கோப் பையுடன் நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்.
அந்தப் படங்களைத் தருமாறு அவர் முதலில் பவானியைத்தான் கேட்டார். அவள் கண்டிப்பாக மறுத்துவிடவே அவர் வேறு வழியை நாட வேண்டியதாயிற்று. கிளப் ஸூவனியரில் போடுவதற்காக எடுக்கப் பட்ட படங்கள் அவை என்பது கோவர்த்தனனுக்குத் தெரியும். அவற்றை எடுத்த ஸ்டூடியோ சொந்தக்காரரையும் தெரியும். வெகு சுலபமாக, பவானிக்குத் தேவை என்று கூறியே அவற்றுக்கு மறு பிரதிகள் போட்டுக் காசு கொடுத்து வாங்கி வந்து விட்டார். ஃபிரேம் போட்டும் வைத்துக் கொண்டார்.
பவானி இப்போதெல்லாம் அடிக்கடி டென்னிஸ் ஆட வருவதில்லை. ஒரு நாள் வந்தால் இரண்டு தினங்கள் நாடக ஒத்திகையின் தீவிரத்தைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொண்டாள். மாஜிஸ்டிரேட் வேறு யாருடனாவது ஆடிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருந்தது. அவளுடன் ஆடும்போது ஏற்படாத சோர்வு வேறு யாருடனாவது ஆடி விட்டு வந்தால் உண்டாயிற்று. எதையோ பறிகொடுத்து விட்டுத் திரும்புவது போல் காணப்படுவார் கோவர்த்தனன். பவானி கல்யாணத்தைக் காதலிக்கிறாள் என்பதற்கோ அல்லது தம்மை வெறுக்கிறாள் என்பதற்கோ எந்த விதமான சாட்சியமும் மாஜிஸ்டிரேட் டுக்குப் புலப்படவில்லை. என்றாலும் அவள் தம்மை விட்டு விலகி விலகிப் போவதுபோல் கோவர்த்தனனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. இந்த இழப்பை மறக்கத்தான் அவர் மதுவின் துணையை நாடினார். கிளப்பில் ஆரம்பித்த பழக்கம் வீட்டுக்கே குடிவந்து விட்டது. மணியை விட்டே சோடாவும் ஸ்காச் விஸ்கியும் வாங்கிக் கொண்டு வந்து வைக்கச் சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.
அந்தப் பெரிய வீட்டில் தாம் தன்னந் தனியாக இருக்க நேரிட்டதை ஏதோ பெரிய துர்ப்பாக்கியமாகக் கருதினார் கோவர்த்தனன். பவானி மட்டும் இங்கே தம்முடன் இருக்குமாறு வந்துவிடக் கூடுமானால் இந்தப் பெரிய வீட்டில் தனிமை அவரைத் திரும்பிய பக்கமெல்லாம் தாக்காது. வீடு மட்டுமல்ல; வாழ்க்கையே வெறுமையும் வெற்றிடமு மாகத் தோன்றும் நிலை வினாடிப் போதில் மாறிவிடும். பவானியின் வெள்ளி மணி நாதச் சிரிப்பொலி இவற்றில் நிரம்பி மங்களகரமாகி விடும். சூன்யங்கள் ஓவியங்களாகும், வறட்சிகள் அருவிகளாகும்; இருள்கள் நிலவுகளாகும்; வெம்மைகள் தண் புலன்களாகும்!
எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு, ஏதோ சதி செய்கிறார்கள். தமக்குத் துரோகம் இழைக்கிறார்கள். நியாயமாகவும் இயல்பாகவும் தமக்குக் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சிகளை இல்லாமல் செய்து நெஞ்சில் அடிக்கிறார்கள்!
அவர் மதுவை இன்னும் ஒரு மிடறு விழுங்கினார்.
"வெறும் வயிற்றில் அதைக் குடிக்க வேண்டாம். கெடுதல்; சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றால் இதை அவ்வப்போது கொரித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி ஓர் அகன்ற கிண்ணத்தில் மிக்சர் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனார் மணி. நெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்த முந்திரிப் பருப்புக்களைத் தாராளமாகவே அதில் கலந்திருந்தார்.
பெரிய வெள்ளி ஸ்பூனில் அதைச் சிறிது அள்ளி வாயில் போட்டுக் கொண்ட கோவர்த்தனன் நெஞ்சோடு அணைத்திருந்த பவானி யின் படத்தை எதிரே பிடித்துப் பார்த்தார். 'பவானி! ஏன் என்னை இப்படிச் சித்திரவதை செய்கிறாய்? உன் மனம் கொஞ்சம் இரங்கினால் போதும். என் வாழ்க்கை எத்தனை ஆனந்த மயமாகி விடும்! உன் கண்கள் தரும் போதைக் கிறக்கம் இருக்கும்போது மதுவை நான் ஏன் நாடப் போகிறேன்? மணிக்கு என்னைக் கோபித்துக் கொள்ளக் காரணமே அகப்படாமல் தவிப்பான், பவானி!"
வாசலில், "ஸார்!" என்று குரல் கேட்டது.
கோவர்த்தனன் கோப்பையைக் காலி செய்து வைத்து விட்டு, "யார் அது?" என்று கேட்டவாறே எழுந்தார்.
------------------
அத்தியாயம் 36 -- பாங்குக் கொள்ளை!
போர்ட்டிகோவில் காருக்குப் பக்கத்தில் நின்ற இருவரும் கோவர்த்தனனுக்கு சல்யூட் செய்தனர்.
"என்ன விஷயம்?" என்றார் கோவர்த்தனன் வராந்தாவில் நின்று.
இருவரும் பாக்கெட்டுகளிலிருந்து அடையாளச் சீட்டுக்களை எடுத்து நீட்டியவாறே "ஸி.ஐ.டி." என்றனர்.
அடையாளச் சீட்டுக்களைப் பார்க்க அவசியமில்லை என்பது போல் கரம் அசைத்துவிட்டு, "என்ன வேணும்?" என்றார் கோவர்த்தனன்.
"கல்கத்தா சென்ட்ரல் ஜெயில்லேயிருந்து ஒரு கைதி 'எஸ்கேப்' ஆகிவிட்டான் ஸார்! சென்னைக்கு அவன் வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஃபோட்டோவும் மெஸ்ஸேஜும் அனுப்பி வைச்சாங்க. மெட்ராஸில் அலர்ட்டாகி அலசியதிலே இந்தப் பக்கம் அவன் வந்து தலைமறைவாகி யிருக்கலாம்னு துப்புக் கிடைச்சுது.
"ஸோ? அரெஸ்ட் வாரண்ட் வேணுமா? நாளைக்கு கோர்ட்டுக்கு வாங்க."
"நோ ஸார். ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறோம்."
"பின்னே? ஆசாமியைக் கண்டுபிடிச்சீங்களா இல்லையா?
" இன்னும் இல்லை ஸார். போட்டோவைக் காட்டி விசாரிச்சுக்கிட்டு வருகிறோம். அவர்களில் சிலர்...."
"என்ன சொல்றாங்க?"
"அந்தப் படத்தைப் பார்த்தால் உங்களைப் போலவே இருப்பதாகச் சொன்னாங்க."
"நான்ஸென்ஸ்! என்ன விளையாடறீங்களா? இல்லே குடிச்சுட்டு வந்தீங்களா? என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. கெட் அவுட்!"
"எக்ஸ்கியூஸ் மி ஸார்! கோபப்படாதீங்க. அவங்க பேச்சுக்கு நாங்க மதிப்புக் கொடுக்கலைதான். ஆனாலும் டியூட்டியைச் செய்தாகணுமே!"
கோவர்த்தனனுக்கு எரிச்சலாக வந்தது. இன்று ஒரே கடமை வீரர்கள் மயம். பவானி நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதால் ஒத்திகைக்குப் போக வேண்டியது தன் கடமை என்கிறாள். வீட்டுக்கு வந்தால் மணி குடிக்கக் கூடாது என்று எச்சரிப்பது தன் கடமை என்கிறான். போதாக் குறைக்கு இந்த ஸி.ஐ.டி.க்கள் வேறு கடமையைச் செய்ய வந்து விட்டார்கள்! "சரி, டியூட்டியைச் செய்தாச்சுல்ல? என்னைப் பார்த்தாச்சு. நான் அவனைப் போலில்லை யல்லவா? நீங்கள் கிளம்பலாம். எனக்கு வேலை இருக்கு."
"ஸாரி ஸார். அவங்க சொன்னதிலே அவ்வளவா தப்பில்லைன்னுதான் உங்களைப் பார்த்ததும் தோன்றுகிறது. அந்த ஃபோட்டோ கிட்டத்தட்ட உங்களைப் போலவேதான் இருக்கு. உங்களுக்கு மீசை இல்லை, கண்ணாடி போட்டிருக்கிங்க, கொஞ்சம் 'யங்' காத் தெரியறீங்க. ஆனால் இவற்றால் ஒற்றுமைகளை மறைக்க முடியவில்லையே?"
கோவர்த்தனனுக்குத் திடும்மென்று உடல் நெடுக ஒரு மின்னல் பாய்ந்தது போல் இருந்தது. நிலை வாசலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, "எங்கே கொடுங்கள் அந்தப் படத்தை" என்று கேட்டு வாங்கிப் பார்த்தார். அவர் கரம் லேசாக நடுங்கியது. தலையைச் சுற்றவும் ஆரம்பித்தது. அது மது அருந்தியதன் விளைவா அல்லது இந்தப் படத்தைப் பார்த்ததனால் உண்டான கலக்கமா? உடலின் பதற்றத்தையோ மனத்தின் உளைச்சலையோ அவர்களிடம் காட்டிக் கொள்ளாதிருக்கப் பெரு முயற்சி செய்து இயல்பாக நடப்பது போல் அடியெடுத்து வைத்து, அவர் வராந்தாவில் இருந்த பிரம்பு நாற்காலிகளுள் ஒன்றில் அமர்ந்தார். படத்தை ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்ப்பது போலும் யோசிப்பது போலும் சற்று நேரத்தைக் கடத்தினார். பிறகு "பாங்க் ராபரியா?" என்றார்.
ஸி.ஐ.டி.க்கள் வியப்படைந்தனர். "ஆமாம் ஸார்! பாங்குக் கொள்ளைதான். உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார் அவர்களில் ஒருவர்.
"நான் சம்பவம் நிகழ்ந்தபோது கல்கத்தாவில்தானே இருந்தேன்?" என்றார் கோவர்த்தனன் "எனக்கு இந்தக் கேஸ் நன்றாகத் தெரியும். நான் லா பிராக்டிஸ் ஆரம்பித்து நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த சமயம். எங்கள் வக்கீல்கள் வட்டாரத்திலே ஒரே ஸென்ஸேஷன். இவன் கொள்ளையடிச்சான், அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணினான் என்பதால் இல்லை. அது சகஜம். இந்தப் பயலோட அப்பா ஊரிலே பெரிய மனுஷன். செல்வாக்குள்ளவன். பொது ஜனங்களுக்கு ஒரு விவரமும் தெரிய வராதபடி நியூஸ் பேப்பர் ஆபிஸ் முதலாளிங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி விஷயத்தை அப்படியே அமுக்கிட்டான். அதுதான் எங்களைப் பொறுத்த மட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. புரியுதா?"
"எஸ் ஸார்!"
"வழக்கறிஞர் வட்டாரத்திலே அதிகமாக இவனைப் பற்றிப் பேச மற்றொரு காரணம் இவன் ஒரு தீவிர சோஷலிஸ்டு, புரட்சி இயக்கத்துக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே பாங்கைக் கொள்ளையடித்தான் என்பது என்ன நான் சொல்ற்து சரிதானா?"
ஆமாம் ஸார். மெட்ராஸுக்கு வந்த மெஸ்ஸேஜிலே அப்படித்தான் கண்டிருக்கிறது." "பெரிய கிரிமினல் அப்பா இவன். எப்பேர்ப்பட்ட கில்லாடியா யிருந்தால் சிறையிலிருந்து தப்பி வந்திருப்பான்! சீக்கிரமே பிடிச்சு மறுபடியும் உள்ளே தள்ளலேன்னா சமூகத்துக்கே ஆபத்து. அண்டர் கிரௌண்ட் இயக்கத்துக்கு ஆதரவா இவன் என்ன வேணுமானாலும் செய்வான். கொலைக்குக் கூடத் தயங்க மாட்டான். நீங்க என்ன இப்படி அலட்சியமா இருக்கீங்க?"
"இல்லை ஸார்! எங்களால் முடிந்த்ததையெல்லாம் செய்துக்கிட்டுத்தான் இருக்கிறோம்."
"அப்படிச் சொல்லிப் பிரயோஜனமில்லே! இப்ப எங்கிட்ட எதுக்கு வந்தீங்க? இவனைக் கண்டு பிடிக்க முடியல்லேன்னு ஒப்பாரி வைக்கவா? யூ மஸ்ட் ஃபைண்ட் ஹிம். அதுவும் சீக்கிரமாப் பிடிக்கணும். இல்லேன்னா போலிஸ் இலாகாவுக்கே அவமானம். நானே உங்களைப் பற்றி புகார் பண்ணும்படி யிருக்கும். இப்போ யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தெரியுமல்லவா? யுத்த முயற்சிக்கு இந்த அண்டர் கிரௌண்ட் பேர்வழிங்க பெரிய முட்டுக்கட்டை என்பதைப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்களா!"
"ஆமாம் ஸார்; தெரியும் ஸார்."
"என்னய்யா தலையாட்டிப் பொம்மை மாதிரி எதைச் சொன்னாலும் 'ஆமாம் ஸார், எஸ் ஸார்'னு பேசறீங்களே யொழிய காரியத்திலே ஒண்ணையும் காணோம்?" படத்தை அவர்கள் பக்கமாகக் கோபத்துடன் வீசினார் கோவர்த்தனன். ஒருவர் குனிந்து பொறுக்கிக் கொண்டார்.
"இன்னும் ஒரு வாரத்துக்குள் எனக்கு நிலைமை பற்றி ரிப்போர்ட் பண்ணுங்க. இல்லாத போனால் நான் கவர்னருக்கு இதுபற்றி எழுதும்படி இருக்கும்."
"அதற்கு அவசியம் நேராது ஸார். அவசரப்படாதீங்க. நாங்க எப்படியும் கண்டு பிடிச்சுடறோம்."
"யாரோ உளறினான் என்பதற்காக நான்தான் இந்தக் கைதியா என்று சோதித்துப் பார்க்க வந்தீங்களா?அப்படி நீங்க வந்ததும் ஒரு விதத்தில் நல்லதாப் போச்சு. டிபார்ட்மெண்ட் எவ்வளவு மோசமா செயல்படுகிறது என்பதை எனக்குப் புரிய வைச்சீங்க. ஏம்பா அசப்பிலே பார்த்தா ஒரே மாதிரியா அமையறது ஆண்டவன் படைப்பிலே உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா? எத்தனை வருஷ சர்வீஸ் உங்களுக்கு?"
"பதினைஞ்சு வருஷம்."
"எனக்குப் பன்னிரண்டு."
"அவ்வளவு சர்வீஸ் ஆனவங்க மாதிரி தெரியலையே. நடத்தையிலே அனுபவத்தின் சுருசுருப்போ திறமையோ காணுமே."
"இன்னும் கஷ்டப்பட்டுத் தேடறோம் ஸார்!" செய்யுங்க. உங்கள் முயற்சியின் பலனை எனக்கு ஒரு வாரத்துக்குப் பிறகு வந்து சொல்லுங்க."
அவர்கள் போன பிறகு உள்ளே வந்த கோவர்த்தனன் சோடா கலப்பதற்காக விஸ்கியைக் கோப்பையில் ஊற்றப்போனார். சட்டென்று மனம் மாறியவராக ஒரு வாய் பாட்டிலோடு கவிழ்த்துக் கொண்டார் எரிச்சலுடன் தொண்டையில் மது இறங்கியபோதிலும் அவரது மன எரிச்சலை விட அது அதிகமாகத் தெரியவில்லை.
(தொடரும்)
-----------------
அத்தியாயம் 37 -- கப்பல் போன்ற கார்
கல்யாணம் தனது காரின் ஹாரனை அழுத்தினான். இஞ்சின் போட்ட கடபுடா சத்தத்துக்கும் மேலாக அது, "பாம்! பபாம்! பாம்" என்று ஒலித்தது. அப்படி அவன் ஹாரனை உற்சாகமாக முழக்கியதற்குக் காரணம், சாலையின் குறுக்கே மாட்டு மந்தையோ அல்லது அதிகமான மனித நடமாட்டமோ இருந்ததால் அல்ல, தெரு ஓரத்தில் சென்று கொண்டிருந்த விசுவின் கவனத்தைக் கவரவே.
விசு ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டிருந்தான். அது கல்யாணத்தை வியப்பில் ஆழ்த்தியது. வழக்கமாகக் கல்யாணம் காரில் செல்வதைப் பார்த்தால், கை காட்டி நிறுத்தி, "மாமா! மாமா! லிஃப்ட் மாமா? பள்ளிக்கூட வாசலில் விட வேண்டாம். அந்தத் தெரு முனையில் நிறுத்திண்டால் இறங்கிக்கறேன். நீங்க நேரே கோர்ட்டுக்கோ, கிளப்புக்கோ போய் விடலாம்" என்று கெஞ்சுவான் விசு. கல்யாணம் சும்மாவாவது சற்று நேரம் பிகு பண்ணிக் கொண்டிருந்து விட்டுப் பிறகு ஏற்றிக் கொள்வான். ஆனால் இன்று விசு வண்டியை நிறுத்தாததுடன், கல்யாணம் அழைத்தும் திரும்பிப் பார்க்கவில்லை. 'என்ன திடீர் கர்வம் வந்து விட்டது இந்தப் பயலுக்கு? அல்லது யாரேனும் என்னைப் பற்றி ஏதாவது தாறுமாறாகக் கூறிப் பேசிப் பழகுவதற்குத் தடை உத்தரவு போட்டிருக்கிறார்களா?' தெரிந்து கொள்ளாமல் மேலே செல்வதற்குப் பிடிக்கவில்லை கல்யாணத்துக்கு. சிறுவன் தானே என்று அலட்சியப்படுத்த அவன் சுபாவம் இடம் தரவில்லை.
காரைச் சாலை ஓரமாகச் செலுத்தி நிறுத்தினான். இடப் பக்கத்துக் கதவைத் திறந்து விட்டு, "ஏறிக்கொள் விசு" என்றான்.
"வேண்டாம் மாமா! எனக்கு டப்பா கார் பிடிக்காது! நீங்க போங்க!" என்றான் விசு.
"ஆமாம், நீ பெரிய கோமகன் பாரு! உனக்கு முன்னால் ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்துநிற்கும்!"
"ரோல்ஸ் ராய்ஸ் இல்லே மாமா; பிளிமத்! பெரிய்ய்ய்ய கார்! கப்பலத்தனை பெரிசு! அதிலேதான் இனிமேல் போவேன்!"
கல்யாணம் துணுக்குற்றான். 'என்ன சொல்கிறான் இவன்? திடீரென்று அத்தனை ஐசுவரியம் இந்தக் குடும்பத்துக்கு எப்படிக்கிடைத்தது?'
"பலே! லேட்டஸ்ட் மாடலா? ஸ்டீரிங் கீரா?" விசுவிடம பேச்சை வளர்க்க அவனுக்குப் பிடிச்ச திசையிலேயே உரையாடலைத் தொடர்ந்தான் கல்யாணம்.
"ஆமாம் மாமா! மாக்ஸிமம் ஸ்பீட் மணிக்கு 120 மைல். ஆனால் இந்த ஊருக்குள் அத்தனை வேகமாகப் போக முடியாது. இங்கே எருமை மாடுகளுடனும் கழுதைகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு மனுஷாளும் நடு ரோட்டுக்குச் சொந்தம் கொண்டாடறாளே. மெட்ராஸ் ட்ரங்க் ரோடிலே ஓட்டி னால் நூறுமைல் வேகத்திலே பிய்ச்சுக்கும் கார்! மலை மேலே எல்லாம் 'அலாக்கா' ஏறும். உங்க டப்பாக் கார் மாதிரி இஞ்சின் ஹீட் ஆகி ரேடியேட்டர் கொதிக்காது."
கல்யாணத்துக்குச் சந்தேகம் தட்டியது. 'ராமப்பட்டணத்திலே பெரிய கார் வைத்திருப்பவர்கள் எண்ணி இரண்டோ மூன்றோ பேர்கள்தாம். அவர்களில் பிளிமத் சொந்தக்காரர் ரங்கநாத முதலியார்!'
"நீலக் கலரா?"
"இல்லை, பச்சை! லைட் கிரீன்."
'சந்தேகமே யில்லை. ரங்கநாத முதலியார் காரைத்தான் குறிப்பிடுகிறான், விசு!'
"ரங்கநாதன் ஜாலி ரைட் அழைச்சுண்டு போனாரா?"
"இல்லையே. கடைத் தெருவுக்குப் போகக் கார் வேணும்னு கேட்டோம். அனுப்பிச்சார். அப்புறம் திருநீர்மலைக்குப் போகப் போகிறோம்."
'ரங்கநாதனா கார் அனுப்பினார்! அழுக்காகி விடும் என்று தாமே அதில் ஏறத் தயங்குபவ ராயிற்றே! ராமப்பட்டணத்துக்குள் முக்கால் வாசி இடங்களுக்கு நடந்தே போய் விடுவாரே! அவர் இவர்களுக்குக் கார் தருவவாவது? அதுவும் திருநீர்மலைக்குப் போக?'
"அங்கே என்னடா விசேஷம்?"
"அதை மட்டும் கேட்காதீங்க மாமா! அது டாப் ஸீக்ரெட்!"
"டேய், டேய்! நேக்கு மட்டும் சொல்லுடா!"
கல்யாணம் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டான். அவனுக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. ஆனால் உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது.
"ஐயோ, அம்மா என் முதுகிலே தோசை வார்த்துடுவா!"
"டேய்! நான் பிராமிஸ் பண்ணறேன். சத்தியமா ஒருத்தரிடமும் கூறமாட்டேன்."
"ரகசியத்தைச் சொன்னால் எனக்கு என்ன தருவே?"
"சாக்லேட்!"
"பூ! எங்க வீட்டிலே நேற்றுதான் பெரிய டப்பா நிறையச் சாக்லேட் வாங்கி இருக்கா அம்மா!"
'ஆமாம், ஆமாம்! பிளிமத் காரிலே போகிறவனுக்கு சாக்லேட் என்ன பிரமாதம்! ரங்கநாதன் சாக்லேட் தொழிற்சாலையையே வாங்கிக் கொடுத்து விடுவாரே! அவரால் கொடுக்க முடியாத விஷயமாச் சொல்லி இவனுக்கு ஆசை காட்ட வேண்டும்.'
"உன் பள்ளிக்கூடம் இருக்கிற தெரு முனை வரையில் இந்தக் காரை நீ ஓட்டி வரலாம்" என்றான் கல்யாணம்.
விசுவின் முகம் உடனே பிரகாசமடைந்தது. "கியர் போடலாமா?"
"ஓ எஸ்! ஆனா நான் சொன்னபடி கேட்டுச் சமர்த்தா நடக்கணும். இல்லாதபோனால் ஆக்ஸிடெண்ட் ஆயிடும்."
"சேச்சே! ஐயா ஓட்டும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிறதாவது! எத்தனை வருஷ சர்வீஸ் எனக்கு? ஹூம்" என்று பெரிய மனித தோரணையில் பேசியவாறு காரில் ஏறிக் கல்யாணத்துக்கு மிக அருகே இடப்புறமாக மண்டியிட்டு அமர்ந்தான் விசு. "கிளட்ச்சை அழுத்துங்க மாமா! காரை ஸ்டார்ட் பண்ணி கியர் போடறேன்" என்றான், வலக்கரத்தால் ஸ்டியரிங்கைப் பற்றியபடி.
'பிள்ளையாரப்பா! ஆபத்து ஒன்றும் நேராமல் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டான் கல்யாணம்.
-----------------
அத்தியாயம் 38 -- படை கிளம்பியது!
இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணம் சமூக சேவா சங்கக் கட்டிட வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனபோது அவன் முகம் பேயறைந்த மாதிரி இல்லை; அதைவிட மோசமாக இருந்தது.
"என்ன ஆயிற்று உங்களுக்கு? இன்று ஃபைனல் டிரெஸ் ரிகர்சல் என்று தெரிந்து தாமதமாக வந்தீர்கள். எதையோ பறி கொடுத்துவிட்டது போல் நிற்கிறீர்கள். டயலாக்கை உளறிக் கொட்டுகிறீர்கள்!" என்றாள் பவானி.
"ஆமாம். எனக்கு மனமே சரியில்லை" என்றான் கல்யாணம். "உங்களுக்கெல்லாம் நான் எடுத்திருக்கிற முடிவை எப்படி விவரிக்கிறது; அதை நீங்கள் எந்த விதமாக ஏற்றுக் கொள்ளப் போறீங்க என்பதை எண்ணினால் ஒரே குழப்பமா யிருக்கு."
"போச்சுடா! ஸ்குரூ லூஸா? திருப்புளி கொண்டு வரட்டுமா?"
"பழுதுபார்க்கப்பட வேண்டிய மூளை ரங்கநாதனுடையது" என்றான் கல்யாணம்.
"புரியும்படிதான் சொல்லுங்களேன். சுற்றி வளைப்பானேன்?" என்றாள் பவானி.
"ஆமாம் பவானி, சொல்லத்தான் வேண்டும்! சொல்ல வேண்டிய நேரம் வந்தும் விட்டது. விசுவிடம் ரகசியத்தை வெளியிடுவதில்லை என்று சத்தியம் செய்து தந்தேன். ஆனால் அதைக் காப்பாற்றப் போனால் என் மனச்சாட்சி என்னைச் சும்மா விடாது; வதைத்துவிடும். மாசிலாமணி குடும்பத்தை ரங்கநாதன் வீட்டிலே குடி வைத்ததே நான்தான் என்பதால் எனக்கு இதில் ரொம்பவும் பொறுப்பு உண்டு. நண்பர்களே கேளுங்கள்! பவானி! நீங்களும் கேளுங்கள்!
"ரங்கநாதன் அந்த ஏழைக் குடும்பத்தின் அநாதரவான நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை விலைக்கு வாங்கி விட்டார்! அந்தப் பெண் கமலாவை மணந்து கொள்ளப் போகிறார். அறுபது வயதுக் கிழவனுக்கும் பதினெட்டு வயதுக் குமரிக்கும் திருமணம்!"
"ஆ! அக்கிரமம், அநியாயம். இதை அநுமதிக்கவே கூடாது" என்பது போல் பல குரல்கள் பரபரப்புடன் எழுந்தன. பவானி மட்டும் அமைதியாக இருந்தாள்.
"திருநீர்மலையில் இரகசியமாகத் திருமணத்தை நடத்தத் திட்டம். அதுவும் நமது நாடகம் இங்கு அரங்கேறும் அதே தினத்தில் கல்யாணத்தை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த கிழக் கோட்டான்! ஏன் தெரியுமா? எல்லோருடைய கவனமும் நாடகத்தில் இருக்கும். கல்யாணப் பார்ட்டி கிளம்பிப் போவதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் தான்! ஆனால் நாம் ஏமாந்துபோகப் போவதில்லை. இந்த நீசத்தனமான காரியத்தைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்!"
"ஆமாம்! கிளம்பலாம்! போகலாம்! உடனே புறப்படு!" என்று குரல்கள்எழுந்தன.
"பவானி! நீங்களும் வருகிறீர்களல்லவா?" என்றான் கல்யாணம்.
"நான் வருவதும் வராததும் என் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்திருக்கிறது!"
"இதில் கேட்க இன்னும் என்ன இருக்கிறது?"
"எவ்வளவோ இருக்கிறது. கமலாவை நீங்கள் காதலிக்கவில்லை என்று முன்பு நீங்கள் சொன்னீர்கள். இப்போது உங்கள் மனம் மாறிவிட்டதா என்று தெரிய வேண்டும். அப்படி யென்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம். ரங்கநாத முதலியாரை அவள் மணந்து கொள்ளக் கூடாதென்றால் நீங்கள் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாரா யிருக்கிறீர்கள் என்று நான் நம்பலாமா? திருநீர்மலைக்கு எப்படி போகப் போகிறீர்கள்? எப்போது உங்களுக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது? இந்தச் சந்தேகங்க ளெல்லாம் நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும். கடைசியாக, இந்தத் திருமணத்தை எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறீர்கள் என்பதையும் யோசிப்பது நல்லது!"
"பவானி! எளிதான ஒரு பிரச்னையை நீங்கள் சிக்கலுள்ளதாக்குகிறீர்கள். கமலாவை நான் முன்பும் காதலிக்கவில்லை, இப்போதும் காதலிக்கவில்லை. ஆனால் அதற்காக ஒரு கிழக்கோட்டான் ஒரு பச்சைக் கிளியைக் கொத்திக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மாயிருக்க முடியாது. இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சில லட்சியங்கள் உண்டு. அந்த லட்சியங்களுக்கு மாறாகக் காரியங்கள் நடக்கும்போது கை கட்டிச் சும்மா நிற்பது கோழைத்தனம். திருநீர்மலைக்குப் போக ஒரு பஸ்ஸுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்தச் சங்கத்தின் வாசலுக்கு வந்துவிடும். இரவோடு இரவாகப் புறப்பட்டால் திருநீர்மலைக்கு அதிகாலையில் முகூர்த்த நேரத்துக்கு முன்பாகவே போய்ச் சேர்ந்து விடலாம். திருமணப் பந்தலில் நாம் அனைவரும் போய் நின்று, தேவையானால் சத்தியாக்கிரகமே செய்து கமலாவைக் காப்பாற்றலாம். எனக்கு எப்போது இந்தச் செய்தி தெரியவந்தது என்று கேட்டீர்கள். இரண்டு தினங்களுக்கு முன்பாகத் தான் தெரிந்து கொண்டேன்.
இந்தக் கல்யாணத்தை எப்படித் தடுப்பது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னர் உங்கள் எல்லோரிடமும் பேச நினைத்தேன். இடையில் பஸ்ஸுக்கும் ஏற்பாடு பண்ணினேன். ரங்கநாத முதலியாரும் மாசிலாமணி குடும்பமும் மெய்யாலுமே கிளம்பிச் செல்கின்றனரா என்று கண்காணிக்கவும் செய்தேன். இன்று பிற்பகல் அவர்கள் புறப் பட்டுச் சென்று விட்டார்கள். விசுவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியும் என்னை உடனே பேச விடாமல் தடுத்தது. போதுமா பவானி? திருப்திதானா? இப்போதாவது நாம் புறப்படலாமா?"
பவானி சிரித்தாள். "கல்யாணம்! அரும் பெரும் சாதனைகளைப் புரிந்த வீரனைப் போல் பேசுகிறீர்களே! உம்? உங்களைப் பற்றி நான் எவ்வளவோ உயர்வாக எண்ணி வந்தேன். இன்று எனக்குப் பெரிய ஏமாற்றம் அளித்து விட்டீர்கள்!"
"எந்த விதத்தில்? நான் என்ன தவறு செய்தேன்? தயவுசெய்து விளக்கினால் நல்லது" என்று சற்று விரைப்புடன் வினவினான் கல்யாணம்.
"சத்தியாக்கிரகம் என்ற சொல்லை உபயோகித்தீர்கள். ஆனால் நீங்கள் செய்ய எண்ணியுள்ள காரியம் துராக்கிரகம்தான். இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு இந்த விவரம் தெரியுமென்றால் நீங்கள் உடனே ரங்கநாத முதலியாரை அணுகி நயமாகப் பேசி அவர் மனத்தை மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை. திருமண தினத்தன்று கல்யாணப் பந்தலில் கலாட்டா செய்து ஒரு பரபரப்பை ஏற்படுத்த ஆசைப்படுகிறீர்கள். ரங்கநாத முதலியாரை அப்போதுதான் நன்றாக அவமானப்படுத்தியதாகும். வெட்கித் தலை குனிய வைத்ததாகும் என்று திட்டம் போட்டிருக்கிறீர்கள்."
"ரங்கநாத முதலியாரிடம் நான் நயமாகப் பேசியிருந்தால் அவர் உடனே என் சொற்படி கேட்டு நடந்து கொண்டிருப்பாராக்கும்? பவானி! ரங்கநாத முதலியாரை உங்களைவிட நான் நன்றாக அறிவேன். அவர் உடனே போலீஸ் பாதுகாப்பை நாடியிருப்பார். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் போயிருக்கும்."
"அப்படி நீங்கள் கருதுவதா யிருந்தால் சத்தியத்தின் வெற்றியில், தார்மிக வற் புறுத்தலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்" என்றாள் பவானி. "கமலா, அவள் பெற்றோர், ரங்கநாதன், உங்கள் தகப்பனார், அவசியமானால் ஊரிலுள்ள மற்றப் பெரியவர்கள் எல்லாரிடமுமே நாம் பேசியிருக்கலாம். இப்படி ஒரு திருமணம் நடக்க அனுமதிப்பது தவறு என்று ஆரோக்கியமான ஓர் எதிர்ப்புணர்ச்சியை வளர்த்திருக்கலாம்."
"போகாத ஊருக்கு வழி சொல்லுகிறீர்கள். இரண்டு நாட்களில் நடக்கக் கூடிய காரியமா, வெகுஜன அபிப்பிராயத்தை வளர்ப்பது என்பது?"
"நாளைக்கு நாடகம் என்று அறிவித்திருக்கிறீர்களே; டிக்கட் விற்றிருக்கிறீர்களே; காசு கொடுத்தவர்களுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்?"
"நாடகத்தை ஒரு வாரம் ஒத்திப் போடுவதில் ஒன்றும் குடிமூழ்கிப் போய் விடாது. இப்போது வாங்கியிருக்கிற டிக்கெட்டை வைத்துக் கொண்டே எல்லோரும் அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரலாம் என்று அறிவித்து விடலாம். ஆனால் கல்யாணத்தை நாளைக்கு நிறுத்தாமல் போனால் போனதுதான். அந்த அநீதியை அப்புறம் நேராக்கவே முடியாது."
"அநீதி என்று எப்படித் தீர்மானித்தீர்கள்? கமலாவே இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதித்திருந்தால்?"
"ஏது, நீங்களே பக்கத்திலிருந்து நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தது மாதிரிப் பேசுகிறீர்களே?"
"இல்லை. ஆனால் ஒரு பெண்ணின் மனத்தை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் கமலாவின் மனம் எப்படிச் செயல்படும் என்பதை நான் நன்றாக உணர முடியும்."
"அப்படியே அவள் சம்மதித்திருந்தாலும் அது பெற்றோரின் வற்புறுத்தலால் அல்லது ஒரு வீம்புக்காகத்தான் இருக்கும். பின்னால் அதற்காக அவள் ரொம்ப வருத்தப் படுவாள்."
"மிஸ்டர் கல்யாணம்! முடிவாகச் சொல்கிறேன். நீங்கள் செய்யப் போகும் காரியம் அநாகரிகமானது. எனக்குச் சம்மத மில்லை. சட்ட ரீதியிலோ அல்லது தார்மீக ரீதியிலோகூட உங்களுக்கு இதைச் செய்ய அருகதை இல்லை. நான் போய் வருகிறேன். நாடக ஒத்திகையைத் தொடர்வதானால் என் வீட்டுக்குச் சொல்லி அனுப்புங்கள்."
பவானி விடுவிடுவென்று நடந்து சங்கக் கட்டிடத்தின் வாசலுக்கு வந்து காரில் ஏறினாள்.
அவள் சென்ற பிறகு கல்யாணம் தன் நண்பர்களைப் பார்த்து, "என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டான்.
அவன் குரலில் இப்போது முன்பிருந்த வேகம், உறுதி ஏதுமில்லை. பவானிக்கு இந்தக் காரியம் பிடிக்கவில்லை. கோபித்துக் கொண்டு போய் விட்டாள் என்றதும் அவனுக்கு உற்சாகம் குறைந்து விட்டது. அவள் பிரமாதமாகத் தன் ஏற்பாடுகளைப் பாராட்டுவாள் என்று எதிர்பார்த்து வந்ததற்கும் அவள் உண்மையில் நடந்து கொண்ட விதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! "நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். நான் யாரையும் வற் புறுத்தத் தயாராயில்லை. நாம்பாட்டுக்கு இந்தத் திருமணத்தைப் பற்றிய விவரம் ஒன்றுமே தெரியாதது போல இருந்து விடலாம். நாடகத்தைத் தொடர்ந்து நடத்தலாம்"என்றான்.
ஓரிரு விநாடிகள் மௌனம் நிலவியது. அதையடுத்து ஒரு தீவிரவாதி, கணீரென்று பேசினான். "ஏன் தயங்குகிறீர்கள்? உங்களை யெல்லாம் பார்த்துத்தான் மகாகவி பாரதி, 'வாய்ச் சொல்லில் வீரரடி' என்று பாடினான். 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி' என்றான். கமலாவுக்கு இப்படி நீங்கள் வஞ்சனை செய்யலாமா? முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? அந்தப் பவானி, தானே கமலாவின் கழுத்தில் கல்லைக் கட்டிக் கடலிலும் தள்ளுவாள் போல் இருக்கிறது. அவள் பேச்சைக் கேட்டு மயங்கி விடாதீர்கள். ஒரு பெரிய அக்கிரமம் நமக்குத் தெரிந்து நடக்கும்போது சும்மா இருப்பது பேடித்தனம்" என்று ஆவேசத்துடன் சொன்னான்.
"ஆமாம். புறப்படுங்கள், போகலாம்" என்றான் இன்னொருவன். உடனே அதைத் தொடர்ந்து, "பஸ் வந்து விட்டதா? கிளம்பலாமா? முகூர்த்தம் எத்தனை மணிக்கு? நாடகம் ஒத்திப் போடப்பட்டிருப்பதாகத் தண்டோராப் போடச் சொல்லுவோமா? அவரவர் வீட்டுக்குப் போய் ஒரு 'ஸெட்' துணி மணிகளுடன் அரை மணி நேரத்தில் இங்கு திரும்பி வந்து விடுவோம்" என்றெல்லாம் பலவாறாகப் பேசி முடிவுகளுக்கு வந்தார்கள்.
கல்யாணம் இனி நான் நினைத்தாலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்ந்தான். தான் அணையை உடைத்து விட்டது போலவும் அந்த வெள்ளம் தன்னையே அடித்துச் செல்வது போலவும் அவனுக்குத் தோன்றியது!
(தொடரும்)
-----------
அத்தியாயம் 39 -- தந்திரம்!
பவானி வீடு திரும்பும் நோக்கில் காரில் ஏறிப் புறப்பட்டவள், பாதி தூரம் போன உடனேயே மனம் மாறியவளாக ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் இல்லத்துக்குச்சென்றாள்.
பவானியைப் பார்த்ததுமே அவர், "வாங்க, வாங்க! ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே" என்றார்.
"அழகுதான் நீங்கள் எவ்வளவு பெரிய ஸீனியர் லாயர்! உங்களை நான் கூப்பிட்டுஅனுப்புவதா?"
"வயதால் பெரியவனாக இருந்தால் போதுமா? செல்வாக்கு என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதோடு பெண்மைக்குரிய சலுகைகளும் உங்களுக்கு உண்டு. அதை மதிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது."
"உங்கள் வாதம் இரண்டையும் நான் ஏற்பதற்கில்லை. இந்த ஊரில் உங்களுக்கு இல்லாத செல்வாக்கு நேற்று வந்த எனக்கு என்ன இருக்கிறது?" என்றாள் பவானி. "இரண்டாவது, ஆண்களோடு சரிநிகர் சமானமாகக் கருதப்பட வேண்டும் என்றுதான் என்போன்றவர்கள் ஆசைப்படுவோமே யன்றிப் பெண் என்பதற்காகத் தனிச் சலுகை காண்பிப்பதை விரும்ப மாட்டோம்."
"சரி, உங்கள் விஜயம் அடியேனுக்கு நீங்கள் அளித்த கௌரவமாகவே இருக்கட்டும். என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பி, டீ,ஓவல்டின்...."
உள்ளே செல்லத்தின் குரல் உரக்கக் கேட்டது. "நானும் இரண்டு நாட்களாக முட்டிக் கொண்டிருக்கிறேன். 'காப்பிக் கொட்டை வாங்கணும்' என்று. யாராவது காதில் போட்டுக் கொண்டால்தானே? ஒருத்தர் சட்டப் புத்தகமே சரணாகதின்னு அடைஞ்சு கிடக்கிறார். இன்னொருத்தன் 'நாடகம், நாடகம்' என்று கூத்தடிக்கிறான். இந்த லட்சணத்தில் வரவங்க போறவங்க எல்லோருக்கும் எப்படியாவது நான் காப்பி போட்டுக் கொடுத்தாக வேண்டும்! நான் என்ன மந்திரக்கோல் வைச்சுக்கிட்டிருக்கேனா, இல்லை, குழாயைத் திறந்தால் காப்பியா கொட்டுமா?"
பவானி கலவரம் அடைந்தவளாக, "நோ, நோ! எனக்கு ஒன்றுமே வேண்டாம் ஸார்!"என்றாள்.
"காப்பி வேண்டாம். மோர்? சாத்தீர்த்தம்? தண்ணீர்?"
"எதுவும் வேண்டாம். நான் இப்பத்தான் நம்முடைய சங்கத்தில் டிபன், காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தேன்."
"நாடக ஒத்திகை நடக்கிறதோ இல்லையோ, டிபன் காப்பியை எல்லாரும் கச்சிதமாக முடித்துக் கொள்வீர்கள் போலிருக்கு."
"நேற்று வரை ஒத்திகை சரியாகத்தான் சார் நடந்தது. இன்றுதான் தகராறாகிவிட்டது. நானும் கிளம்பி வந்துவிட்டேன்."
"ஏன் என்ன விஷயம்?"
"கல்யாண விஷயம்தான்."
"என்ன பண்ணினான் அவன்? வர வர அவன் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை. ரொம்ப அதிகப்பிரசங்கியாக இருக்கிறான். பாருங்க, 'ஏண்டா, நாடகத்தில் எனக்கு ஒரு சான்ஸ் தர வேண்டாமா? என்றால் சிரிக்கிறான். எனக்கு நடிக்கத் தெரியாதாம். நீங்க பார்த்திருக்கிறீங்களா? ஹாம்லெட்.... 'டு பீ ஆர் நாட் டு பீ'....ன்னு நான் ஆரம்பிச்சா....."
"அடடா! நான் உங்க மகன் கல்யாணத்தைக் குறிப்பிடவில்லை. அவர் 'அக்கிரமக் கல்யாணம்' என்று கருதுகிற ஒரு திருமணத்தைப் பற்றிப் பேச வந்தேன்."
"அதென்ன புது மாதிரி கல்யாணம்? வைதிகக் கல்யாணம், சீர்திருத்தக் கல்யாணம் என்றெல்லாம் தான் உண்டு. அக்கிரமக் கல்யாணம் என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறதா?"
"ஸார்! வேடிக்கைக்கு இது நேரமில்லை. ரங்கநாத முதலியார் உங்க 'கிளையண்ட்' தானே? அதனால் உங்களிடம் பேசிவிட்டுப் போவது நல்லது என்று நினைத்தேன். அவர் கமலாவை மணந்துகொள்ளப் போகிறார். நாளைக்குத் திருநீர்மலையில் யாரும் அறியாமல் தாலி கட்டிவிட ஏற்பாடு. ஆனால் இந்த விஷயம் உங்கள் பிள்ளைக்குத் தெரிந்துவிட் டது. தமது நண்பர்களோடு பெருங்கூட்டமாகப் பஸ்ஸில் புறப்பட்டுப் போய்க் கல்யாணத்தை நிறுத்திவிடத் தீர்மானித்திருக்கிறார்."
"நிறுத்திவிட்டுப் போகட்டுமே, உங்களுக்கு அதனால் என்ன நஷ்டம்?"
"ரங்கநாதனுக்கு நீங்கள்தானே வக்கீல்?"
"ஆமாம், அதனால் அவர் செய்கிற அக்கிரமத்துக்கெல்லாம் பக்கபலமாக நிற்க வேண்டுமா?"
"நான் அப்படிச் சொல்லவில்லை."
"மிஸ் பவானி, உங்களுக்குக் கமலா மீது என்ன கோபம்? அவள் அந்தக் கிழவருக்கு வாழ்க்கைப்பட்டுவிட வேண்டும் என்பதில் உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"
"நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கமலாவின் உள்ளம் எனக்கு நன்றாகத் தெரியும். அவளிடம் எனக்குள்ள அக்கறையால்தான் நான் வாதாடுகிறேன். அவள் முழுச் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடக்கிறது என்றே நான் நம்புகிறேன். அப்படியானால் இவர்கள் போய்க் கல்யாணத்தை நிறுத்த என்ன உரிமை பெற்றிருக்கிறார்கள்? மேலும் ரங்கநாதமுதலியாரின் வக்கீல் என்ற முறையில் அவருக்கு மணப் பந்தலில் நேரக்கூடிய அவமானத்தை நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ என் நோக்கத்தையே சந்தேகிக்கிறீர்கள்."
"கல்யாணம் வரட்டும். விசாரிக்கிறேன்" என்றார் கோபால கிருஷ்ணன். "உங்களுக்குப் பழமொழி தெரியும் இல்லையா? 'குரைக்கும் நாய் கடிக்காது' என்று. இவர்கள் வாய்ச் சொல் வீரர்கள்."
"அப்படித் தோன்றவில்லை. தீவிரமாய் இருக்கிறார்கள். இவர்கள் ரத்தம் கொதிக்கிறதாம்."
'அடடா! அது ஆபத்தாயிற்றே! ஆற வைத்துவிட வேண்டியதுதான்."
"ஆறாதாம்! இவர்கள் உடலில் ஓடுவது தமிழ் ரத்தமாம்!"
"அடேடே! அப்படியானால் மற்றவர் உடம்பில் ஓடுவது இங்கிலீஷ் ரத்தமோ?"
"இன்று மாலையே அவர்கள் பஸ்ஸில் புறப்படுகிறார்கள். விடிவதற்குமுன் திருநீர்மலை போய்ச் சேர்ந்துவிட உத்தேசம்."
"நானும் போகிறேன். பின்னோடு."
"அவர்கள் கல்யாணத்தைத் தாலி கட்டும் சமயத்தில் நிறுத்திவிடப் போவதாகச் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஊரில் இரண்டாம் பேர் அறியாமல் திருமணத்தை முடித்துக் கொள்ளத் தீர்மானித்த ரங்கநாதனை வியப்பில் ஆழ்த்தவே போவதாகப் பாவனை செய்வார்கள். போய், 'அத்தனை பேருக்கும் கல்யாண விருந்து ஏற்பாடு செய்தால்தான் ஆச்சு' என்று பிடிவாதம் பிடிக்கப் போவதாகச் சொல்வார்கள்."
"நியாயம்தானே! அவருடைய வக்கீலான எனக்கே விஷயம் தெரிவிக்கவில்லையே அவர். நானும் இவர்களோடு போய் நிற்கத்தான் போகிறேன். தாலி கட்டி முடிந்த பிறகு இரண்டு தொன்னை பாயசமாவது உறிஞ்சிக் குடிக்காமல் ஊர் திரும்பப் போவதில்லை."
பவானி புன்னகையுடன், "பெஸ்ட் ஆஃப் லக், நான் வரட்டுமா?" என்றாள்.
"சீக்கிரம் கிளம்புங்கள். கல்யாணம் வரும் போது நீங்கள் இங்கிருப்பது நல்லதில்லை."
பவானி வாசலுக்கு வந்தபோது உள்ளேசெல்லத்தின் குரல் பெரிதாக ஒலித்தது.
"அந்த ராங்கிக்காரி மினுக்கிக் கொண்டு வந்து நம்ம குழந்தையைப் பற்றி என்னென்னமோ பழி சுமத்திட்டுப் போறா. நீங்களும் பல்லை இளிச்சுக்கிட்டுக் கேட்டுக்கிட்டிருக்கீங்களே!"
"இந்தா, வாயை மூடு!" என்று அவளுக்கும் மேலே குரலை உயர்த்தி அதட்டினார் கோபாலகிருஷ்ணன். "உன் பிள்ளைக்கு ஏகமாய்ச் செல்லம் கொடுக்கப் போக இப்போ அவன், நான் வெளியே தலைகாட்டவே முடியாதபடி செய்துவிடுவான் போலிருக்கு. இங்கே பவானி வந்து போனதைப் பற்றி நீ மூச்சு விடப்படாது. மீறி வாயைத் திறந்தே உன்னைத் தள்ளி வைச்சுட்டு அந்தப் பவானி யையே இரண்டாம்தாரமாய்க் கல்யாணம் செய்து கொண்டுவிடுவேன்! தெரிந்ததா? உம்!"
பவானி காரியசித்தியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் காரில் ஏறினாள். 'இப்பத்தான் உண்மையான ஹோம்ரூல் - வீட்டை ஆளும் - கோபாலகிருஷ்ணன்!" என்று அவள் வாய் முணுமுணுத்தது.
----------------
அத்தியாயம் 40 -- எதிர்த் தந்திரம்!
ராமப்பட்டணத்திலிருந்து பஸ் புழுதியைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டது. ஆனால் கிளம்பிய வேகத்தில் அதனால் வெகுதூரம் போய்விட முடியவில்லை. ஊர் எல்லையைத் தாண்டியதுமே உள்ள குறுகிய பாலத்தைக் கடக்க முடியாமல் நின்றுவிட்டது. காரணம் பாலத்தில் ஒரு மாட்டு வண்டி மையத்தில் நின்றிருந்ததுதான். அதிலிருந்து கோபாலகிருஷ்ணன் ஒரு பெட்டி, கூஜா சகிதம் இறங்கினார்.
பஸ்ஸைநோக்கி நடந்து வந்து அதில் ஏறியபடியே, "என்னை ஏமாற்றிவிட்டுப் புறப்படலாம் என்று பார்த்தீர்களா? அதெல்லாம் இந்த ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனிடம் பலிக்காது. தம்பிங்களா!" என்றார்.
அப்புறம் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி,"ஆறுமுகம்! வண்டியை வீட்டுக்குத் திருப்பி ஓட்டுடா! பஸ் போகட்டும்!" என்று உரக்கக் கத்தினார்.
"அம்மாவிடம் கல்யாணமும் நானும் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவோம்னு சொல்லு..... துணைக்கு வேணும்னா மதுரவல்லி வீட்டோடு வந்து இருக்கட்டும்."
"சரிங்க" என்றான் ஆறுமுகம். பஸ் தொலைவில் வருவதைப் பார்த்துவிட்டுப் பாலத்தை அடைத்துச் சற்றுமுன் வண்டியை நிறுத்தியவன், இப்போது பஸ்ஸுக்கு வழி விட்டு 'ஜல் ஜல்' என்று சதங்கை ஒலிக்கச் சென்றான்.
"போகட்டும், போகட்டும்! ரைட்!" என்றார் கோபாலகிருஷ்ணன். பஸ் மீண்டும் நகரத் தொடங்கியதும், "ஏண்டா, கல்யாணம்! நல்ல பிள்ளைக்கு அடையாளமா சொல்லிக்காமல் கிளம்பி விட்டாயாக்கும்"என்றார்.
"எப்படிப்பா, உங்களுக்கு விஷயம்தெரிஞ்சுது?"
"நீதான் சங்கத்தின் காண்டீன் பையனை உன் அம்மாவிடம் ரகசியமா அனுப்பி வைச்சியே? அவன் உன் அம்மாவின் உருட்டல், மிரட்டல் பேச்சு காதில் விழுந்தவுடனே அவள் தான் வீட்டு எஜமானனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, உன் உத்தரவுப்படி எஜமானியம்மாளைத் தேடி நேரே என்னிடம் வந்துவிட்டான்! ஒரு பெட்டியிலே உனக்கு இரண்டு சட்டை வேஷ்டி வைத்துக் கொடுக்குமாறு கேட்டான். 'எதுக்குடா' என்றேன்."
"உடனே எல்லாவற்றையும் உளறிக் கொட்டி விட்டானா?" என்று கல்யாணம் பதற்றமும் கோபமுமாகக் கேட்டான்.
"பின்னே? ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணனின் குறுக்கு விசாரணையில் யாராவது தப்ப முடியுமா, என்ன? அவன் காப்பி ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த போதுதான் நீங்க உங்க திட்டத்தை உருவாக்கினீங்களாம்!"
"என்னப்பா, சொன்னான்?"
"நீங்க இப்போ செய்து கொண்டிருக்கும் காரியத்தைத்தான் விவரித்தான். 'திருநீர்மலையில் ரங்கநாத முதலியார் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கிறார். ஆனால் கல்யாணம் ஸாருக்கு எப்படியோ விஷயம் அம்பலமாகி விட்டது. நண்பர்களோடு போய் அவரை அதிசயத்தில் ஆழ்த்தப் போகிறார்' என்றான்."
"அவ்வளவுதானா, அப்பா?"
"இவ்வளவு போதாதா? இன்னும் என்ன? ரங்கநாத முதலியார் என் ஆப்த நண்பர். அவருக்கு நான்தான் வக்கீல். அப்படியிருந்தும் அவர்தான் எனக்கு விஷயத்தைத் தெரிவிக்காமல் ஏமாற்றினார் என்றால் நீயுமா அப்பாவுக்குத் தெரியாமல் கம்பி நீட்டப் பார்க்கணும்?"
நிம்மதிப் பெருமூச்சு விட்டான் கல்யாணம். "அதற்கில்லை, அப்பா! உங்க நன்மையை உத்தேசித்துத்தான் நான் கூற வில்லை. உங்களுக்கு விஷயம் தெரியவந்தால் வராமலிருக்க உங்க மனசு கேட்காது. ஆனால் பஸ் பயணம் சிரமம். உட்கார்ந்தபடியே போகணும். அதுவும் இரவு நேரம். கண் விழித்தால் உடம்புக்கு ஆகுமா?"
"உன் கரிசனம் கிடக்கட்டும். கல்யாணம். சரீரத்துக்காகப் பார்த்துச் சிநேகத்தை விட்டு விட முடியுமா? எத்தனை வருஷப் பழக்கம் எனக்கும் ரங்கநாதனுக்கும்!"
"நீங்க வந்ததே நல்லதாப் போச்சுப்பா" என்றான் கல்யாணம், ஈனஸ்வரத்தில்.
"ஆமாம். எல்லோருமே திடும்மென்று போய் நிற்கிறோம். அதனால் மத்தியானச் சாப்பாடு எப்படியானாலும் இரவு விருந்து பிரமாதமாய் அமையணும்னு போனதுமே சொல்லிவிடலாம். லட்டு மலை, பாதாம்கீர் ஆறு, சாம்பார் சமுத்திரம்! கல்யாணம் உனக்குப் பாதாம்கீர் ரொம்பப் பிடிக்குமே!" என்று கூறிச் சிரித்தார் கோபாலகிருஷ்ணன்.
கல்யாணத்துக்கு அப்போதே விளக்கெண்ணெயை விழுங்கியது போலிருந்தது. அவன் நண்பர்கள் யாரும் பேசவில்லை. என்ன செய்வது? எப்படி நடந்து கொள்வது என்ப தொன்றும் புரியாமல் யோசித்துக் களைத்துப் போய் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு, கோபாலகிருஷ்ணன் தலையும் ஆடிவிழ ஆரம்பித்தது. மனம் பதைக்கக் கண் விழித்து அமர்ந்திருந்தவன் கல்யாணம் ஒருவன்தான்.
நண்பர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் தான் ஒரு கையாலாகாதவனாக அவமானப்பட்டு நிற்பது போல் உணர்ந்தான். 'நினைத்த காரியம் என்ன? நடப்பது என்ன? அப்பாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவது எப்படிச் சாத்தியம்? அவர் அதட்டலுக்கு எல்லோரும் அடங்கிப் போய் விட வேண்டியதுதான். யாருக்குமே தைரியம் வராது! அப்புறம் அப்பாவே குறிப்பிட்டது போல் லட்டு மலைக்கும், பாதாம்கீர் ஆறுக்காகவுமே ஆசைப் பட்டு இந்த இளைஞர் பட்டாளம் கல்யாணத்துக்குச் சென்றதாகும். பின்னால் இந்தத் தோல்வியைச் சுட்டிக் காட்டி நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்யும்போது அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? அதுதான் போகட்டும், அத்தனை தூரம் மார் தட்டிப் பேசிவிட்டு வந்தாயே, பவானியிடம்! அவள் முகத்தில் இனி எப்படி விழிப்பது?' நினைக்க நினைக்கக் கல்யாணத்தின் மனம் பதறியது.
மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ஒரு சின்ன ஊரில் பஸ் நின்றது. டிரைவரும் கண்டக்டரும் டீ சாப்பிட்டு வர இறங்கினார்கள். கல்யாணம் பஸ்ஸுக்குள் நோட் டம் விட்டான். கோபாலகிருஷ்ண முதலியார் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். கல்யாணம் பஸ்ஸை விட்டு இறங்கி டிரைவர், கண்டக்டரைப் பின்தொடர்ந்தபோது அவனுடன் அவன் நண்பர்கள் இருவர் மட்டுமே வந்தார்கள். மற்றவர்கள் அரைத் தூக்கத்திலோ ஆழ்ந்த உறக்கத்திலோ இருந்தனர்.
டீ அருந்திக் கொண்டிருந்த டிரைவர், கண்டக்டரைத் தனியே அழைத்தான் கல்யாணம். அவர்களிடம் அந்தரங்கமாகச் சில வார்த்தைகள் பேசினான் இரு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து இருவர் பாக் கெட்டிலும் மடித்துச் செருகினான். பஸ்ஸுக்கு அனைவரும் திரும்பிய பின்னர் இளைஞர்களிடையே சங்கிலித் தொடர்போல் ஒரு செய்தி அந்தரங்கமாகப் பரவியது.
திருநீர்மலையை அடைய இன்னும் பதினைந்து மைல் தூரம் இருக்கும்போது பஸ் 'திடும்' மென்று நின்று விட்டது. டிரைவர் கிளப்பிக் கிளப்பிப் பார்த்தார். ஊஹூம்! அவர் ஜம்பம் சாயவில்லை.
"எல்லோரும் கொஞ்சம் கீழே இறங்கித் தள்ளறீங்களா?" என்றார் திரும்பிப் பார்த்து.
"அப்பா! நீங்கள் இறங்க வேண்டாம். நாங்கள் வாலிபர்கள் இறங்கித் தள்ளுகிறோம்"என்றான் கல்யாணம்.
"அழகுதான்! எனக்கு அப்படி என்ன வயசாகி விட்டது? நானும் ஒரு கை கொடுக்கிறேன்" என்று கொட்டாவி விட்டுக் கொண்டே இறங்கினார் கோபாலகிருஷ்ணன்.
எல்லோரும் பஸ்ஸை தள்ளினார்கள். பஸ் புறப்பட்டது. நகர்ந்தது! "ஸ்டாப்! ஸ்டாப்!" என்று கத்திக் கொண்டே இளை ஞர்கள் அதன் பின்னால் ஓடினார்கள். பஸ் நகர்ந்து கொண்டிருக்கும்போதே அதில் தொத்திக் கொண்டு ஏறினார்கள். பஸ் நிற்கவே யில்லை. வாலிபர்கள் ஓடி வந்து ஏறிக் கொள்ளும் வேகத்தில் நகர்ந்துக் கொண்டே யிருந்தது. "அப்பா சீக்கிரம் வாங்க! சீக்கிரம்!" என்று கூறியபடி கல்யாணமும் ஓடினான். பஸ்ஸில் பாய்ந்து ஏறிக் கொண்டான்.
கோபாலகிருஷ்ண முதலியார் பத்தடி ஓடினார். அதற்கு மேல் அவரால் முடியவில்லை; இரைத்தது."ஹோல்டான்! ஹோல்டான்!" என்று கத்தினார். பஸ் டிரைவர் அவர் கூச்சலை லட்சியம் செய்யாமல் வேகத்தை அதி கரித்தார். வாலிபர்கள் அனைவரும் பஸ்ஸில் இருந்தார்கள். வயோதிகர் மட்டும் வீதியில் நின்றார்!
(தொடரும்)
--------------
அத்தியாயம் 41 -- கல்யாணத்தில் கலாட்டா!
கமலாவைப் பாயில் அமரச் செய்து தலைவாரத் தொடங்கினாள் காமாட்சி அம்மாள்.
"அநாவசியமா உனக்குச் சிரமம். தலை சாமானெல்லாம் வைத்துப் பின்ன வேண்டி யிருக்கு. இல்லாத போனால் நானே பின்னிக் கொண்டுவிடுவேன்" என்றாள் கமலா.
"சரி, சரி! ரொம்பத்தான் பிகு பண்ணிக் கொள்ளாதே! நாளைக்குத் தலைவாரிப் பின்ன ஒருத்தி, புடவை கட்டிவிட ஒருத்தின்னு வேலைக்காரிகளை நியமித்துக் கொள்வாய். நான் பின்னுவது இதுதானே கடைசித் தடவை?" என்றாள் காமாட்சி.
'முதல் தடவையும் இதுதானே' என்று கூற நினைத்தாள் கமலா. ஆனால் சொல்ல வில்லை. அவளுக்கு நினைவு தெரிந்து காமாட்சி அம்மாள் அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விட்டதோ தலைவாரிப் பின்னியதோ எதுவும் கிடையாது. எனவே இன்றைய திடீர்க் கரிசனம் அவளுக்குப் புரியவும் இல்லை; பிடிக்கவும் இல்லை.
"இந்தா, இப்படிக் குனிஞ்சுண்டா எப்படிப் பின்னுகிறது? தலையை நிமிர்த்து. மணையில் உட்கார்ந்த பிறகு வெட்கப்பட்டுக் கொள்ளலாம்" என்ற காமாட்சி, கமலாவின் முதுகிலே உள்ளங்கையை வைத்து ஓர் அழுத்து அழுத்தினாள். விடுபட்ட ஸ்பிரிங் சுருள் போல் 'விண்'ணென்று நிமிர்ந்தாள் கமலா. எதிரே யிருந்த கண்ணாடியில் அவள் முகம் காமாட்சிக்குத் தெரிந்தது.
"அடி பாவி! நல்ல நாளும் அதுவுமா எதுக்குடி இப்படி அழறே? கண்ணீரை மறைக்கத்தான் அப்படிக் குனிந்த தலை நிமிராமல் இருந்தாயா? அங்கே போய் மணையில் உட்கார்ந்த பிறகு இப்படிக் கண்ணீர் விட்டுக் கலங்கினாயோ தெரியும் சேதி! எதற்கு இப்படி எதையோ பறி கொடுத்து விட்டது போல் முகத்தை வைத்துக் கொள்கிறாய்? உனக்கு என்ன கேடு வந்துவிட்டது? கோடீசுவரன் வந்து குப்பையிலே கிடந்த உன்னை அரண்மனையிலே வைக்கிறேன் என்கிறான். அதற்குக் கசக்கிறதோ? நாளைக்கு அந்த மாளிகையின் எசமானியாக இருக்கும்போது என்னைத் திரும்பிகூடப் பார்க்க மாட்டாய்!"
"நான் ஒன்றும் அப்படி நன்றி கெட்டவள் இல்லை, அம்மா! நாளைக்கு நீங்களே தெரிந்து கொள்வீர்கள்."
"நாளைக்கு எங்களுக்கு நீ சாதிக்கப் போவது கிடக்கட்டும்; இன்றைக்கு எங்கள் மானத்தைக் காப்பாற்று. ஏதாவது ஏறுமாறாக நீ செய்து விட்டால் உன் அப்பாவும் நானும் கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழ வேண்டியதுதான். அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளாதே! மாலை மாற்றும் போதிலிருந்தே சிரித்த முகமாகச் சந்தோஷமாக இருக்க வேண்டும். புரிந்ததா?"
"சரியம்மா" என்றாள் கமலா.
கல்யாணப் பந்தலில் ரங்கநாதனும் கமலாவும் பட்டுப் பாயில் உட்கார்ந்திருந்தார்கள். மேளம் முழங்கிற்று. புரோகிதர் உரக்க மந்திரம் சொன்னார்.
"என்னய்யா, கல்யாணப் பெண்ணுக்குமேல் நீர் வெட்கப்படுகிறீரே! நிமிர்ந்து ஜம் மென்று உட்காருமேன்" என்றார் ரங்கநாதனின் நெருங்கிய உறவினர் ஒருவர், உரிமையோடு. "விரைப்பாக உட்காருகிற ஜோரிலேயே ஒரு பத்து வயசைக் குறைச்சுடலாங்கிறேன்!"
ரங்கநாதன் முகத்தில் வாட்டம் படர்ந்தது. 'வயது விஷயத்தை இத்தருணத்தில் அந்த உறவினர் வேண்டும் என்றே நினை வூட்டினாரா அல்லது மனப்பூர்வமான நல் லெண்ணத்தில் பேசினாரா? இந்தச் சொல்லம்பு கமலாவை எப்படிப் பாதித்திருக்குமோ? அவர் கவலையோடு கமலாவை ஒரு முறை திரும்பிப் பார்த்தார். அவள் தலை குனிந்திருந்ததால் முகத்தைப் பார்க்க முடியவில்லை. என்றாலும் அவள் அமர்ந்திருந்த நிலையிலும் அழகை ரசிக்க முடிந்தது. தலைகொள்ளாத ஆபரணங்கள். புஷ்பம்; புதுப் பட்டு ரவிக்கையின் 'பஃப்' மடிப்புக்குக் கீழிருந்து புறப்பட்டு முழங்காலைச் சுற்றி வளைத்த வாழைத் தண்டுக் கரங்கள். புடவைக் கொசுவங்களுக்கு இடையிலிருந்து நீண்ட செம் பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்கள். அவற்றின் ஐந்து விரல்களையும் தனித் தனியே தொட்டுப் பார்த்து அவற்றின் மென்மையை ரசிக்க வேண்டும் என்று எண்ணினார் ரங்கநாதன். 'விரல்களை மட்டும்தானா?' என்று எண்ணியபோது அவருக்கு மேனி சிலிர்த்தது. கமலா தன்னிடம் மனப்பூர்வமாகத் திருமணத்துக் குச்சம்மதம் தெரிவித்த தினத்தை எண்ணிப் பார்த்தார் அவர்.
"ஒட்டும் தையலுமாக இருந்த அந்தப் பழம் புடவையிலேயே அவள் எத்தனை அழகாகக் காட்சி அளித்தாள்! இனி அவளை எப்படியெல்லாம் அலங்கரித்து ஆசை தீரப் பார்க்கலாம்!"
"திருமாங்கல்யதாரணம் ஆகலாமா?" என்று மாப்பிள்ளையையும் அருகிலிருந்த வேறு இரு பெரியவர்களையும் கேட்டு அனுமதி பெற் றுக் கெண்டார் புரோகிதர். அச்சமயத்தில் சத்திரத்தின் வாசலில் பஸ் வந்து நின்றது. கல்யாணமும் அவர் நண்பர்களும் இறங்கித் திபுதிபுவென்று ஓடி வந்தார்கள். சிலர் நேரே மேளகாரரிடம் போய் நாயனத்தையும் தவிலையும் பிடுங்கிக் கொண்டு தெருப்பக்கம் சென்றார்கள். ஒருவன் சர்க்கரைத் தட்டை எடுத்துத் தரையில் சிதறினான். இன்னொருவன் சந்தனக் கிண்ணத்தைக் கவிழ்த்தான். வேறு ஒரு திடகாத்திர தேகம் உள்ளவன் புரோகிதரைத் தூக்கி நிறுத்தி மண்டபத்துக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனான். ஒருவன் ரங்கநாதன் கரத்திலிருந்த தாலியை வெடுக் கென்று பிடுங்கிக்கொண்டான். மற்றொருவன் விரித்திருந்த ஜமக்காளம் ஒன்றை இழுத்து ரங்கநாதனின் மீது போட்டான்.
பந்தலில் இருந்தவர்கள் எழுந்து இரைச்சலும் கூச்சலும் இட்டுக் கொண்டு அங்குமிங் கும் ஓடினார்கள். பந்தல் ஒரு மூலையில் சரிந்து விழுந்தது. ஒருவன் "நெருப்பு! நெருப்பு!" என்று கத்தினான். "ஜப்பான்காரன் வந்து விட்டான்" என்றுகூட ஒரு கேலிக் குரல் எழுந்தது! ஜப்பான்காரன் வந்து விட்டதாக நம்பினார்களோ இல்லையோ, வாலிபர்கள் சிலர் 'ரௌடி' களாக மாறிக் கல்யாணத்தைக் கலைப்பதை எல்லாரும் புரிந்து கொண்டார்கள். ரங்கநாத முதலியாரின் அழைப்பை ஏற்று வந்திருந்த சொற்ப விருந்தினரும் பரபரப்படைந்து கிளம்பினார்கள். அந்த வாலிபக் கூட்டத்தை எதிர்க்கவும் அச்சம்; அங்கே இருக்கவும் பயம். தப்பினால் போதும் என்று சத்திரத்தைவிட்டு, வாசல் பந்தலைவிட்டு தெருவைவிட்டு, ஊரைவிட்டேகூட ஓடினார்கள். ஊர் எல்லை தாண்டிய பிறகுதான் நின்று திரும்பிப் பார்த்தார்கள்.
அமர்ந்த நிலையில் இருந்த, ரங்கநாத முதலியார் மீது விழுந்த ஜமக்காளம் அவரை நாலா புறமும் நன்றாக மூடியது. நாலு பேராகச் சேர்ந்து அவரைக் குண்டுக் கட்டாக மூட்டை தூக்குவதுபோல் தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போனார்கள். பஸ்ஸின் உள்ளே உருட்டி விட்டார்கள். பின்னோடு தாங்களும் ஏறிக்கொண்டு ஜமக்காளத்தின் முடிச்சை இறுக்கினார்கள்.
காமாட்சி அம்மாள் கமலாவைத் தோளில் சார்த்தியபடி ஒரு மூலையில் பயந்து நடுங்கியவாறு நின்றாள். கமலா விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். விசு, "அப்பா! எனக்குப் பயமாக இருக்கு, அப்பா!" என்று திரும்பத் திரும்பக் கூறியபடி மாசிலாமணியின் கால்களைக் கட்டிக் கொண்டு நின்றான். அவரோ ஏதொன்றும் புரியாமல் பிரமித்துப் போயிருந்தார்.
கல்யாணம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் திட்டம் சரி வர நிறைவேறியதைத் தெரிந்து கொண்டு மூலையில் இருந்த கமலாவையும் அவள் தாயாரையும் நெருங்கினான்.
"கமலா! நான் இப்போது இங்கே தாமதிப்பதற்கில்லை. உடனே ராமப்பட்டணம் திரும்ப வேண்டும். இன்னும் சற்று நேரத்தில் என் அப்பா இங்கே வருவார். உங்களையெல்லாம் பத்திரமாக ஊருக்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பார். நீ கவலைப் படாதே! உனக்கு இனி அந்தக் கிழக் கோட் டான் ரங்கநாதன் ஒரு தொந்தரவும் தராது. நன்றாக அவருக்குப் பாடம் கற்பித்து விட்டோம்!"
விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த கமலாவுக்குத் திடீரென்று எங்கிருந்துதான் அத்தனை துணிச்சலும் ஆவேசமும் வந்ததோ தெரியாது. கண்ணீர் வடிந்து கரை படிந் திருந்த முகத்தை விருட்டென்று நிமிர்த்தினாள். கோபமும் தாபமும், ஏக்கமும் ஏமாற்றமும் பிரதிபலிக்கக் கல்யாணத்தை நேருக்கு நேர் பார்த்தாள். பிறகு, "சீ! நீயும் ஓர் ஆண்பிள்ளையா?" என்றாள்.
கல்யாணத்துக்குத் தன் தலையில் இடியே விழுந்துவிட்டது போல் இருந்தது. அவன் என்ன பதில் சொல்வது. எப்படி நடந்து கொள்வது என்று புரியாமல் திகைத்தான்.
இதற்குள் வாசலில் பஸ் ஹாரன் ஒலி கேட்டது. பஸ்ஸில் ஏறாமல் அவனுடன் நின்ற வாலிப நண்பர்கள் ஓரிருவர், "கல்யாணம்! சீக்கிரம் வாப்பா! விளக்க உரையெல்லாம் அப்புறம் நடக்கலாம்" என்று துரிதப் படுத்தினார்கள். அங்கே காலதாமதம் செய்வது ஆபத்து என்று நினைவூட்டினார்கள்.
கல்யாணம், கமலாவை, 'என்னை மன்னித்துவிடு' என்பது போல் ஒரு முறை பார்த்தான். "எல்லாம் உன்னுடைய நன்மைக்குத்தான் செய்தேன், கமலா! இப்போதில்லை யானாலும் என்றாவது ஒருநாள் இதை நீ புரிந்து கொள்வாய்" என்றான். பிறகு 'விருட்டென்று திரும்பிச் சென்று வாசலில் புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டான்.
திருநீர்மலையிலிருந்து கிளம்பி ராமப்பட்டினம் நோக்கிச் சுமார் அரை மணி நேரம் பயணப்பட்ட பிறகுதான் பஸ்ஸுக்குள் இருந்த மூட்டையை இளைஞர்கள் அவிழ்த்தார்கள். ரங்கநாத முதலியார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மெல்ல எழுந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை அவர். அவர் கோபமாய்ச் சீறியிருந்தால் வாலிபர்களுக்கும் பதிலுக்கு ஏச வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், அவரோ பாய்வதற்கு முன் பதுங்கும் புலியாகக் காணப்பட்டார். 'கிழட்டுப் புலியானாலும் புலி புலிதான்' என்பது போல் இருந்தது அவர் நடந்து கொண்டவிதம்.
------------
அத்தியாயம் 42 -- "பழிக்குப் பழி!"
"ரங்கநாத முதலியாரா? என்னைத் தேடி வந்திருக்கிறாரா? இதோ வந்து விட்டேன்" என்றாள் பவானி.
மாடியில் அவள் தன் தனி அறையில் உள் பக்கம் கதவைத் தாளிட்டுக் கொண்டு உமாகாந்துடன் உரையாடிக் கொண்டிருந்தாள். ஏன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தாள் என்று கூடச் சொல்லலாம்! அவள் கட்டிலில் குப்புறப் படுத்திருக்க எதிரே தலையணை மீது உமாகாந்தின் படம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருசமயம் அவள் பவானியாக இருந்து கோபிப்பாள். உடனே உமாகாந்தாக மாறிச் சமாதானம் கூறுவாள். மீண்டும் பவானியாக மாறி வம்புக்கு இழுப்பாள். அல்லது அந்தரங்கங்களைப் பறிமாறிக் கொள்வாள்.
பவானியாகவும் உமாகாந்தாகவும் மாறிமாறி விளங்கிய நிலை மாறி ஒரே தருணத்தில் அவளே இருவராகவும் இருப்பாள். அப்புறம் நீ, நான் என்ற பேதமின்றி உமாகாந்தின் நினைவில் தன்னை அடியோடு கரைத்துக் கொண்டுவிடுவாள்.
இப்படி அவள் ஏதோ ஓர் இனம் புரியாத இன்ப உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோதுதான் அவள் மாமா குணசேகரன் கதவைத் தட்டி ரங்கநாதமுதலியார் வந்திருக்கும் விஷயத்தைக் கூறினார்.
பவானிக்கு உடனே அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று புரிந்துவிட்டது. ஏனெனில் அவர் அவள் வீடு தேடி வருவதற்கு முன்பாகவே திருநீர்மலையில் நடந்த கலாட்டா பற்றிய விவரங்கள் எல்லாம் அவளை நாடி வந்து விட்டன. அவளை மட்டுமா? ராமப்பட்டணம் ஊர் முழுவதுமே அதுபற்றித்தான் பேச்சு. எனவே, ரங்கநாத முதலியார் எதற்காக வந்திருக்கிறார் என்பது புரிந்தாலும் அவர் தன்னைத் தேடி வந்தது பவானிக்கு வியப்பாக இருந்தது. 'நியாயமாக அவர் தமது வக்கீல் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனையல்லவா நாடிப் போயிருக்க வேண்டும்? கோபாலகிருஷ்ணனிடம் தான் கூறி எச்சரித்து அனுப்பியது என்னவாயிற்று? ஏன் அவரால் தமது மகனின் போக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை?' இந்தக் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக மனத்தில் எழ அவள் உமாகாந்தின் படத்தில் அப்போதைக்கு கடைசி முறையாகக் காதல் முத்திரை பதித்துவிட்டு அதனை மேஜையின் இழுப்பறையில் துணிமணிக்கு அடியில் மறைவாக வைத்தாள். கீழே இறங்கி வந்தாள்.
"வாருங்கள், வாருங்கள்!" என்று ரங்கநாத முதலியாரை வரவேற்று ஃபானை இயக்கி விட்டுவிட்டு அவர் எதிரே அமர்ந்தாள் பவானி. அவர் எப்படி ஆரம்பிப்பது, என்ன பேசுவது என்று தயங்குவார் என எதிர்பார்த்தவளாகத்தானே வழிவகுத்துத் தந்தாள். "ரங்கநாதன் ஸார்! திருநீர்மலையில் ஏதேதோ அனுசிதமான காரியங்கள் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாஸ்தவம்தானா? என்னை உங்கள் மகள் போல் பாவித்துக் கொண்டு சொல்லுங்கள். பாரம் குறையும்" என்றாள்.
இதற்காகவே காத்திருந்தவர் போல் ரங்கநாத முதலியார் மடை திறந்தவெள்ளமாக அங்கு நடந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்தார். முறையீடுகளுக்கிடையில் கல்யாணத்தையும் அவன் தோழர்களையும் ஐந்தாறு முறை வைது வைத்தார். "அந்த விடலைகள் உங்களைக்கூடப் பின்னோடு வருமாறு அழைத்தார்களாமே? கேள்விப்பட்டேன். ஆனால் இது தகாத செயல் என்று கூறி அவர்களுடன் போக மறுத்து விட்டீர்களாம். அதற்காக உங்களைப் பாராட்டிவிட்டு அப்படியே எனக்காக நீங்கள் கேஸ் நடத்தி என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் வந்தேன்" என்று முடித்தார் ரங்கநாதன்.
"அது எப்படி சாத்தியம், மிஸ்டர் ரங்கநாதன்? நேற்று வரை ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் தாமே உங்களுக்கு வக்கீல்! அவரையே கேஸ் நடத்தச் சொல்லலாமே? அவர் மகன்தான் இந்தக் கலாட்டாவில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்றாலும் கோபாலகிருஷ்ணன் நேர்மையானவர். சொந்த விருப்பு வெறுப்புக்கள், பாசங்கள் தமது தொழிலைப் பாதிக்க விடமாட்டார்."
"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று பவானியின் கருத்தை மறுத்தார் ரங்கநாதன். "அவரே இவர்களைக் கிளப்பி விட்டுவிட்டுப் பின்னணியில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறார். பஸ்ஸில் அவரும் கூடவே ஏறி வந்தாராம். ஆனால் திருநீர்மலையை நெருங்கியதும், 'நான் வந்தால் நன்றாயிராது. ரங்கநாதன் என் நெருங்கிய நண்பன். அதனால் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்ல். நீங்கள் போய்க் காரியத்தை முடியுங்கள்' என்றாராம்.
"அப்புறம் இவர் வேறு பஸ் பிடித்துப் போயிருக்கிறார். அதற்குள் இந்தக் கலாட்டா வெல்லாம் நடந்து முடிந்து விட்டது. கோபால கிருஷ்ணன், மாசிலாமணி குடும்பத்தை ராமப் பட்டணத்துக்குப் பத்திரமாகத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்."
"என்னால் இதை நம்பவே முடியவில்லை" என்றாள் பவானி. "கோபாலகிருஷ்ணனுக்கு இவர்கள் திட்டத்தைப் பற்றி நான்தான் கூறினேன். 'இந்த வாலிபர்களின் விபரீதப் போக்கைத் தடுத்து நிறுத்த உங்களால்தான் முடியும்' என்றேன். அவரும் அவர்களோடு கல்யாணத்துக்குக் கிளம்புவது போல் சென்று கண்காணித்துக் கொள்வதாக வாக்களித்தார்."
"அப்படிக் கூறி உங்களை ஏமாற்றினாரோ அல்லது வழியில் மனம் மாறி அந்த உதவாக்கரைகளுடன் சேர்ந்து கொண்டாரோ, எப்படியானாலும் அவர் கலாட்ட நடந்த சமயம் திருமண மண்டபத்துக்கு வரவேயில்லையே. ஏன்? என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே தகம்பனாரும் மகனும் எத்தனை காலமாகத் திட்டம் போட்டிருந்தார்களோ, எனக்குப் பழிக்குப் பழி வாங்கியாக வேண்டும்" என்றார் ரங்கநாதன்.
பவானி சற்று நேரம் யோசித்துவிட்டு, "நீங்கள் கேஸ் போடுவதற்குப் பதிலாக கமலா வீட்டார் போட்டால் நன்றாயிருக்குமே" என்றாள்.
"எப்படியோ பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தாகி விட்டது" என்று தீர்மானமாகச் சொன்னார் ரங்கநாத முதலியார்.
(தொடரும்)
-----------
அத்தியாயம் 43 -- நீதிமன்றம்
கோர்ட்டு வாசலில் பவானியின் பளபளவென்று பாலிஷ் ஏறிய கார் வந்து நின்றது. வக்கீல் உடையிலேயே பவானி இறங்கினாள். அங்கு மிங்குமாக நின்று பேசிக் கொண்டிருந்த கட்சிக்காரர்களும் கோர்ட் சேவகர்களும் விடுவிடுவென்று காரை நோக்கி வந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுள் ரங்கநாத முதலியாரின் கணக்குப் பிள்ளையும் ஒருவர். கைப்பெட்டியை ஒருவர், தஸ்தாவேஜுக் கட்டுகளை ஒருவர், சட்டப் புத்தகங்களை ஒருவர் என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டார்கள். பவானி நடக்கத் தொடங்கியபோது கூட்டம் விலகி வழி விட்டது. ஓர் அரசி ராஜ பரிவாரங்களுடன் செல்வது போல் பவானி கம்பீரமாக நடக்க, மற்றவர்கள் அவளைப் பின் தொடர்ந்தனர்.
"பார்த்தீராங்காணும், அம்மாவுக்கு நடக்கிற உபசாரத்தை?" என்று தாழ்வாரத்தில் நின்ற வக்கீல்களுள் ஒருவர் கூறினார்.
"பிறந்தால் பெண்ணாய்ப் பிறக்க வேண்டும்" என்றார் இன்னொருவர்.
"பெண்ணாய்ப் பிறந்தால் மட்டும் போதுமா? எல்லாப் பெண்களுக்கும் இப்படி குவீன் விக்டோரியா மாதிரி ராஜமரியாதை நடக்கிறதா? பிறந்தால் பவானி என்கிற பெண்ணாய்ப் பிறக்கணும் என்று சொல்லும்" என்றார் மூன்றாமவர்.
"கட்சிக்காரர்கள் எத்தனை பேர் மிட்டாய்க் கடையில் ஈ மொய்ப்பதுபோல் அவளைச் சுற்றி வருகிறார்கள் பார்த்தீரா? வாதி, பிரதிவாதி இரண்டு பேருமே பவானியிடம் கேஸைக் கொடுத்து விடுவார்கள் போலிருக்கு. வயிற்றெரிச்சல்!"
இதற்குள் படியேறித் தாழ்வாரத்தை அடைந்துவிட்ட பவானி, அங்கு நின்று கொண்டிருந்த வக்கீல்களைப் பார்த்து, "குட் மார்னிங்! எல்லாரும் ஏன் வராந்தாவில் நிற்கிறீர்கள்?" என்றாள்.
"நீங்கள் விஜயம் பண்ணுகிற வைபவத்தைப் பார்க்கத்தான் நிற்கிறோம்" என்றார் ஒருவர்.
"தாங்கள் மட்டும்தானா? மாஜிஸ்திரேட் கூடத்தான் வந்து சேம்பர்ஸில் காத்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு முதல் கேஸ் தங்களுடையதுதான். தெரியுமல்லவா?" என்று கேட்டார் மற்றொருவர்.
"வெரி ஸாரி, ஆனால் என்னால் ஒன்றும் தாமதமாகாது. இன்னும் ஐந்தே நிமிஷங்களில் நான் கோர்ட்டில் ஆஜராகி விடுவேன்" என்ற பவானி விரைவாகத் தன் அறையை நோக்கி நடந்தாள்.
அவள் அப்பால் சென்றதும், "இன்றைக்கு என்ன கல்யாணசுந்தரத்தைக் காணோம்?" என்ற சந்தேகத்தைக் கிளப்பினார் ஒரு வம்பு விரும்பி. "வழக்கமாய்ப் பவானி வரும்போது அவளை 'ரிஸீவ்' பண்ணத் தயாராக முன்னால் வந்து நின்று கொண்டிருப்பானே?"
"மதராஸிலிருந்து 'எவாகுவீ' குடும்பம் ஒன்று வந்திருக்கிறதல்லவா? அவர்கள் வீட்டுக்குக் காய்கறி, உப்பு-புளி வாங்கிக் கொடுக்க மார்க்கெட்டுக்குப் போயிருப்பான்" என்று ஏளனமாய்க் கூறிச் சிரித்தார் இன்னொருவர்.
"நீர் என்னங்காணும் பழங் கதை பேசிக் கொண்டிருக்கிறீர்? அவர்களுக்கும் கல்யாணத்துக்கும்தான் ஒத்துக் கொள்ளாமல் போய் விட்டதே! அவர்கள் இவன் பேரில் கேஸ் போட்டிருக்கிறார்களே. பவானிதானே அந்தக் குடும்பத்தின் சார்பில் ஆஜராகிறாள். உமக்கு ஒன்றுமே தெரியாதா?"
"ஓ, ஆமாம், ஆமாம். நான் கொஞ்ச நாட்களாய் ஊரில் இல்லை. மறந்து போச்சு." "என்ன மறந்து போச்சு? வழக்கு விஷயமாகக் கேள்விப்பட்டதா? அல்லது நீர் ஊரில் இல்லை என்பதா?"
"இரண்டுமேதான்!"
"ஆமாம், ஆமாம். பவானியைப் பார்த்தால் சிலருக்கு எல்லாமே மறந்து விடுகிறது. இது பூலோகமா சொர்க்கமா என்பது கூட மறந்து விடுகிறது. நாலு நாட்கள் சிரமப்பட்டுத் தயாரித்துக் கொண்டு வந்திருந்த முக்கியமான சட்டப் பாயிண்டுகளை யெல்லாம் மறந்து விட்டுத் தடுமாறத் தொடங்குகிறார்கள்!"
"ஓய், நீர் என்ன பொதுப்படையாகப் பேசுகிறீரா? உம்ம அனுபவத்தைச் சொல்கிறீரா?" என்ற கேள்வி பிறக்கக் குபீரென்ற சிரிப்பொலி கோர்ட் கட்டிடத்தைக் கிடு கிடுக்கச் செய்தது.
"உஷ்! கோர்ட் கூடுகிற நேரம்!" என்று எச்சரித்தார் ஒருவர்.
"அது சரி, ரங்கநாத முதலியார் அல்லவா கோபாலகிருஷ்ணன் மீதும் அவர் மகன் மீதும் கேஸ் போட்டிருப்பதாகச் சொன்னார்கள்?" என்று மீண்டும் ஆரம்பித்தார் மறதிப் பேர்வழி.
"நாசமாய்ப் போச்சு! திருநீர்மலையில் கல்யாணம் நின்றுபோனதில் ஆரம்பித்து இவருக்கு மறுபடியும் எல்லாவற்றையும் ஆதியோடு அந்தமாக விளக்க வேண்டும் போலிருக்கிறதே!"
"வேண்டாம் ஐயா! எதற்கு வீண் சிரமம்? அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் அவர் மறுபடியும் எல்லாவற்றையும் மறந்துவிடப் போகிறார். இதற்கு விவரிப்பானேன்?"
"அகதிகள் நிவாரணத்துக்கு நாடகம் நடத்தறேன் என்று ஊரிலே இருக்கிறவன் தலையிலெல்லாம் டிக்கெட்டை வலுக் கட்டாயமாகக் கட்டறது. அப்புறம் நாடகத் தேதியன்று கல்யாணத்தை நிறுத்தத் திருநீர்மலைக்குப் போய்விடுகிறது. இது என்ன நியாயங்கறேன்?"
"அதையும் ஒரு பாயிண்ட்டாகப் பவானி சேர்த்துக் கொண்டிருக்கிறாள், சுவாமி! மோசடிக் குற்றச்சாட்டு, கல்யாணத்தை நிறுத்துவதற்காக அந்த வாலிபக் கும்பல்மேல் தாம் கேஸ் போட்டால் நன்றாயிராது என்பதால் கமலாவின் குடும்பத்தைப் போடச் சொல்லியிருக்கிறார் ரங்கநாதன். ஆனால் பவானிக்கு ஃபீஸ் அவர்தான் தருகிறார். எவ்வளவு தெரியுமா?"
"எவ்வளவு?"
"ஐந்து இலக்கம்!"
"என்ன, என்ன? எனக்கு மூர்ச்சை போட்டு விழணும் போலிருக்கு!"
"எங்களுக்காகப் பார்க்க வேண்டாம். கோர்ட் தாழ்வாரமாச்சேன்னு யோசிக்க வேண்டாம். மூர்ச்சை போட்டு விழுணும்னா தாராளமாய் நீர் விழலாம்! கோலி சோடாவுக்கு நான் கோர்ட் பியூனிடம் காசு தருகிறேன்!"
இந்தச் சமயத்தில் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் கேஸ் கட்டுகளுடன் வியர்க்க விருவிருக்க வந்தார். அங்கே நின்றவர்களைப் பார்த்து, "கல்யாணம் வந்து விட்டானா?" என்றார்.
"இல்லையே?"
"அவனுக்காகக் காத்திருந்ததில் எனக்கும் 'டிலே' ஆகிவிட்டது" என்று சொல்லிவிட்டு வேகமாய் மேலே நடந்தார் கோபாலகிருஷ்ணன்.
----------------
அத்தியாயம் 44 -- வழக்கு
நீதி மன்றத்தினுள்ளே எல்லோரும் கூடினார்கள்.
"மாஜிஸ்திரேட் வருகிறார்; சைலன்ஸ்!" என்று டபேதார் கத்தினார்.
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் கம்பீரமாக வந்து ஆசனத்தில் அமர்ந்தார். பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்து, "கேஸ் எடுத்துக்கொள்ளலாமா?" என்றார்.
"எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் கேஸில் பிரதிவாதிகளுள் ஒருவரான கல்யாணத்தைக் காணோம்."
"என்ன கல்யாணம் வரவில்லையா? கோர்ட் உத்தரவை மீறுவதா? ஆயிரம் ரூபாய் அபராதம்!" என்றார் கோவர்த்தனன். இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகவே ஆவலுடன் காத்திருந்தவராயிற்றே!
"யுவர் ஆனர்! யுவர் ஆனர்!" என்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தார் கோபாலகிருஷ்ணன். "தாங்கள் தயவு செய்து தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவன் எனக்கு முன்பே வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான். ஏன் தாமதம் என்று புரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் மீதும் கல்யாணத்தின் மீதும் இன்னும் பத்து இளைஞர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லோர் சார்பிலும் நான்தான் ஆஜராகிறேன்.
எனவே கல்யாணம் வருவதற்குத் தாமதமானதைப் பொருட்படுத்தாமல் வழக்கை நடத்தலாம். நான் தயாராக இருக்கிறேன்."
இந்தச் சயயம் கல்யாணம் விடுவிடுவென்று நடந்து வந்து தந்தைக்கு அருகில் அமர்ந்து கொண்டான். அவன் வந்துவிட்டதைக் கவனியாதவர் போல் கோவர்த்தனன் கூறினார். "நீர் தயாராய் இருப்பதால் உமது மகன் செய்யும் தவறு சரியாகி விடாது. 'கன்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்' மிகப் பெரிய குற்றம் என்பது உமக்கா தெரியாது? சரி, தண்டனையைக் கோர்ட் கலையும் வரை 'சஸ் பெண்ட்' பண்ணி வைத்திருக்கிறேன்.
அதற்குள் அவன் வந்து சேர்ந்தால் பார்க்கலாம். எதற்கும் இந்த எச்சரிக்கையைச் சொல்லும்; 'கோர்ட் உத்தரவை இடியே விழுந்தாலும் மீறக் கூடாது' வக்கீலாகப் பிராக்டீஸ் செய்ய நினைக்கும் இளைஞன் சட்டப் படிப்பின் அரிச்சுவடியையே மறப்பதா?"
"எஸ் யுவர் ஆனார்!... அதாவது நோ யுவர் ஆனார்.... அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், உங்கள் எச்சரிக்கையைக் கல்யாணத்திடம் கூறுகிறேன். 'அரிச்சுவடியை மறக்கலாகாது' என்றும் சொல்லி வைக்கிறேன்."
கோவர்த்தனன் புன்னகையை மறைத்துக்கொண்டு, பவானி பக்கம் திரும்பி, "யு மே புரொஸீட்" என்றார்.
அவரை வெறித்துப் பார்த்துக் கல்யாணம் நறநறவென்று பற்களைக் கடித்துக்கொண்டது வேறு யாருக்கும் கேட்கா விட்டாலும் அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது.
வழக்கில் சாட்சியங்களின் விசாரணைகளெல்லம் முடிந்த பிறகு, 'ஸம்மிங் அப்பில்' ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் வாதித்தார்.
"இந்தக் கல்யாணத்தை நிறுத்திய இளைஞர்கள் பெரியதொரு சமூக சேவை செய்திருக்கிறார்கள். சின்னஞ் சிறு பெண்ணைத் தலை நரைத்த கிழவருக்குக் கல்யாணம் செய்து தருவது தருமமா? முறையா? அழகிய கிளியை வளர்த்துப் பூனையிடம் ஒப்படைப்பதா? அறியாப் பெண்ணைப் பலவந்தமாக ஒரு கிழவனுக்குக் கட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் அவளுடைய கழுத்தில் கல்லைக் கட்டிக் கடலில் தள்ளி விடலாம் அல்லவா? இப்படிப்பட்ட அக்கிரமத்தைத் தடுத்த இளைஞர்களுக்குச் சமூகம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும் அது குற்றமாகாது.
"என்னையும் ஒரு பிரதிவாதியாக்கி யிருந்த போதிலும் 'இளைஞர்கள் ஆற்றிய சமூகப்பணி' என்று என்னை உட்படுத்திக்கொள்ளாமலே பேசுகிறேன்.
காரணம், நான் இதில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதைச் சாட்சிகள் உங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் நான் பஸ்ஸைத் தவற விடாமல் அவர்களுடனேயே சென்றிருந்தாலும் இளைஞர்களைத் தடுத்திருக்க மாட்டேன். திருமணத்தை நிறுத்தத்தான் நானும் முயன்றிருப்பேன். ஒருவேளை நான் அந்த இளைஞர்களைப் போல் அமர்க்களப்படுத்தி யிருக்கமாட்டேன். மாசிலாமணியிடமும் ரங்கநாத முதலியாரிடமும் நல்லபடியாகப் பேசி அமைதியான முறையில் திருமணத்தை நிறுத்த முயன்றிருப்பேன்.
"நேற்றுவரையில் ஏன், இன்றுகூட - இந்த ஒரு கேஸில் தவிர - நான் ரங்கநாதனின் வக்கீல் என்பதைக் கனம் கோர்ட்டார் யோசித்துப் பார்க்க வேண்டும். அவருக்கு வக்கீல் என்பதை விட அவருக்கு ஆருயிர் நண்பன் என்பதில் அதிகமாக மகிழ்ச்சி அடைபவன் நான். நண்பன் தவறு செய்தால் சுட்டிக் காட்டுவது என் கடமை அல்லவா? எனவே ரங்கநாத முதலியார் செய்த ஒரு காரியத்துக்கு எதிராக இந்த வழக்கில் நான் பேச நேர்ந்ததற்கு அவர் வக்கீல் என்ற முறையில் வருத்தப்பட்டாலும் அவர் நண்பன், அவர் நலனை நாடுகிறவன் என்ற முறையில் மகிழ்கிறேன். மீண்டும் சொல்கிறேன், இந்த இளைஞர்கள் பெண் குலத்துக்கு அரிய பெரிய பணியாற்றியுள்ளனர். காலம் வேகமாக மாறி வருகிறது. பெண்களின் சம உரிமைகள் மதிக்கப்படுகின்றன. ஒரு கட்டாயக் கல்யாணத்தை நிறுத்திய தீரர்கள் போற்றுதலுக்கு உள்ளாகாமல் தண்டனை பெற்றால் பிற்போக்காளர்களாவோம். சட்டரீதியாக மட்டுமன்றி, சமூகப் பிரக்ஞையுடன் இந்த வழக்கை அணுகுவோம். தேசத்துக்கே வழிகாட்டும் புரட்சிகரமான தீர்ப்பு இங்கே உருவாகட்டும்!"
மாறாத புன்னகையுடன் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பவானி இப்போது பேச எழுந்தாள்.
"எனது சகோதரர் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன்.... அடேயப்பா! அபாரமாகப் பேசினார். பெண்களின் சம உரிமைகளை மதிப்பதில் நான் கோபாலகிருஷ்ணனுக்குச் சிறிதும் சளைத்தவள் அல்ல. அதனால் அவர் பேச்சை நான் ரொம்பவும் ரசித்தேன். ஆனால் அவர் பேச்சில் ஆவேசம் இருந்ததேயன்றி விஷயம் ஒன்றுமில்லை. அவர் பேச்சு காங்கிரஸ் கூட்டத்தில் கதர் சட்டையணிந்து மேடை ஏறி ஆற்ற வேண்டிய சொற்பொழிவு. கோர்ட்டில் பேசுகிற வார்த்தைகள் அல்ல.
"கல்யாணம் என்பது தனிப்பட்டவர்களைப் பொறுத்த விஷயம். மணமகனும் மணமகளும் சம்மதித்து மணம் புரிந்துகொண்டால் அதில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. இந்த வழக்கில் அறியாப் பெண்ணைப் பலவந்தம் செய்தார்கள் என்று சொல்வது முழுத் தவறு. சற்று முன் கமலா சாட்சிக் கூண்டில் சாட்சியம் சொன்னதை எல்லோரும் கேட்டோம். தன்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என்று சொன்னாள். தானே விருப்பப்பட்டு ரங்கநாத முதலியாரை மணந்து கொள்ளச் சம்மதித்ததாகக் கூறினாள். தன்னைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றாள்......"
"அவள் சொன்னது சரிதான்" என்று குறுக்கிட்டார் கோபால கிருஷ்ணன். "ஆனால் அதையெல்லாம் அவள் தானே சொன்னாளா அல்லது யாரோ சொல்லிக் கொடுத்ததைப் பயத்தில் அப்படியே ஒப்பித்தாளா என்பதுதான் கேள்வி!"
"கமலாவுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு என் மதிப்பிற்குரிய நண்பர் கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். வேறு விதமாக அவளைப் பேசும்படி அவர் செய்து விட்டால் நான் இந்த வக்கீல் தொழிலையே விட்டு விடுகிறேன். உண்மையில் கமலாவின் தகப்பனார், திருமணம் நின்றதால் பட்ட அவமானம் போதும், கோர்ட்டுக்கு வேறு போய் ஊர் சிரிக்க வேண்டாம் என்று யோசித்தார். ஆனால் இந்தப் பெண்தான் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்லத் தான் தயார் என்று முன் வந்தாள். அதைக் கேட்ட பிறகுதான் இவள் பெற்றோருக்கும் சூடு பிடித்து என்னை அணுகினார்கள். கமலாவுக்கு அதிக வயதாகா விட்டாலும் அவள் பச்சைக் குழந்தையல்ல. உலக இயல்பை நன்கு அறிந்தவள். சமூக சேவா சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைப் போல் நமது நாட்டில் பிறருக்கு வாத்தியாராக இருக்க விரும்புகிறவர்கள் ஏராளமாக உண்டு. ஆனால் தங்களுக்கு என்று வரும்போது சுயநலமிகளாகி விடுகிறார்கள். இந்தத் திருமணத்தைச் சட்ட விரோதமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து தடுத்து விட இவ்வளவு வாலிபர்கள் வேலைமெனக் கெட்டு பஸ் வைத்துக்கொண்டு போனார்களே - இவர்கள் நாடகத்துக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக் கணக்கானவர்களை மோசடி செய்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் கிளம்பிச் சென்றார்களே - கிழவனுக்கும் குமரிக்கும் திருமணமா என்று சீறுகிறார்களே இவர்களில் யாராவது ஒருவர் இந்த ஏழைப் பெண்ணை மணப்பதற்கு முன்வருவாரா? மாட்டார்! அப்போது பணம், பதவி, சொத்து, அந்தஸ்து, ஜாதி எல்லாம் குறுகிட்டு விடும்!...."
கல்யாண சுந்தரம் எழுந்து நிற்க முயன்றான். ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார்.
பவானி, "மிஸ்டர் கல்யாண சுந்தரம் ஏதோ கூற ஆசைப்படுகிறார் போலிருக்கிறதே!" என்றாள்.
(தொடரும்)
-----------
அத்தியாயம் 45 -- கமலாவின் கல்யாணம்
திருநீர்மலையிலிருந்து கிளம்பிய நாளாகக் கல்யாணத்தின் மனம் நிலை கொள்ளாமல் தவி்த்தது.சதா சர்வ காலமும் இரவும் பகலும், தூக்கத்திலும் விழிப்பிலும் ஒரு முகம் அவன் மனக்கண் எதிரே தோன்றி அவனை அலைக்கழித்தது. ஒரு வேலையும் செய்யாமல் ஒன்றிலும் ஈடுபடாமல் அந்த ஒரு முகத்தை அகக் கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே காரியமாகக் காலத்தை ஓட்டினான் அவன்.
அந்த ஒரு முகம் பவானியின் அறிவொளி வீசும் அழகிய முகமாக இருந்திருந்தால் அவன் அதிசயப்பட்டிருக்கமாட்டான். ஆனால் அந்த முகம் கமலாவின் முகமாக இருந்ததுதான் அவனை வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியது. அதிலும் வேதனையும் கோபமும் தாபமும் மிக அவனைப் பார்த்து, "சீ! நீயும் ஓர் ஆண்பிள்ளையா?" என்று கேட்டாளே அப்போது அவள் எப்படித் தோற்றமளித்தாளோ அதே பாவத்துடன் கூடிய வதனம்!
'கமலாவின் முகம் என்னை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறதென்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்னுடைய குற்ற உணர்ச்சியின் பிரதி பலிப்பா? அவளிடம் ஏற்பட்ட கருணையா அல்லது அதற்குப் பெயர்தான் காதலா?
'அப்படியானால் பவானியைத் தான் இத்தனை நாட்களாக விரும்புவதாக எண்ணிக் கொண்டிருந்தேனே? அது தவறா? வெறும் மோகம்தானா அது, காதல் என்பது வேறா? கல்யாணம் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தான்.
இரண்டு தினங்களாக நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தபோதெல்லாம் அவன் இதயத்தில் இதே போராட்டம்தான். மூன்றாவது தினம்--ஸம்மிங் அப் நடந்த அன்று காலை அவனால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கமலாவை அவள் வீட்டில் போய்ப் பார்த்து இரண்டு வார்த்தைகளாவது பேசாவிட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.
ஆனால் கமலாவின் பெற்றோர் அவனிடம் முகம் கொடுத்துப் பேசாதது மட்டுமல்ல; 'எதற்கு வந்தாய்?' என்பது போல் கேட்டும் விட்டார் மாசிலாமணி. உள்ளே சமையலறையில் இருந்த கமலாவை அவனால் பார்க்கக் கூட முடியவில்லை.
ஏமாற்றமும் வெட்கமும் அவமானமும் பொங்க அவன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான். காரில் ஏறி அதனைக் கிளப்பினான். கை போன போக்கில் கார் திரும்பிச் சென்றது. வெகு நேரத்துக்குப் பிறகு அப்புறம்தான் அவனுக்கு ஏலமலை எஸ்டேடேடுக்குப் போகும் மலைப்பாதையில் கார் ஏறிக்கொண்டிருப்பது அறிவுக்கு எட்டியது.
கமலாவும் தானும் அடிக்கடி சந்தித்து உரையாடும் பாறையை பவானி ஒரு சமயம் அவனுக்குச் சுட்டிக் காட்டி யிருந்தாள். பவானியும் கமலாவும் தனித் தனியேயும் அங்கு வருவதுண்டாம்; சேர்ந்தும் வருவார்களாம்: தனித் தனியே வந்த பிறகு ஒருவர், மற்றவர் அங்கே ஏற்கனவே இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைவதுண்டாம். 'அந்தப் பெண்ணை அவ்வளவு தூரம் கவரும்படி இங்கே என்னதான் இருக்கிறது, பார்த்துவிடுவோமே' என்று தீர்மானித்துக் காரை விட்டு இறங்கினான் கல்யாணம். குடை விரித்தாற்போல் நிழல் பரப்பிய சரக்கொன்றை மரம். பாறையின் மேல் பரப்பு தண்ணென்று இருந்தது. காலைச் சூரியனின் ஒளியில் கொன்றைப் பூக்கள் சிறிய சிறிய பசும்பொன் மணிகளாக ஜொலித்தன. மரத்தின் அடியில் பாறை மேல் அமர்ந்தான் கல்யாணம்.
'புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டதாம். எனக்கு இந்தச் சரக் கொன்றை மரத்தடியில் தெளிவு பிறக்கக் கூடாதோ?'
எத்தனை நேரம் அப்படி அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தானோ? சூரியன் உச்சி் வானத்தை நெருங்கியபோது கிளைகளினூடே இருந்த இடைவெளியில் ஒரு கிரணம் இடம் மாறிப் புகுந்து நேராக அவன் முகத்தைத் தாக்கிக் கண்களைக் கூசவைத்தது. சட்டென்று நகர்ந்துகொண்ட அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து ஐம்பது! ' அடடா இன்னும் பத்து நிமிஷங்களுக்குள் கோர்ட்டில் இருக்க வேண்டுமே.
இல்லாத போனால் நீதிமன்றத்தை அவமதித்ததாகி விடுமே' என்று எண்ணியவனாகப் பரபரப்புடன் எழுந்து ஆடையிலிருந்து தூசி, இலைச் சருகுகளைத் தட்டினான். கைக்குட்டை, கார் சாவி எதையாவது விட்டு விட்டுப் போய்விடப் போகிறோம் என்று சுற்று முற்றும் நோக்கிய சமயம் ஓர் எழுத்து பாறையோரமாகத் தென் பட்டது. 'பாறையின் மேற்குப் பக்கம் சட்டென்று யார் கண்ணிலும் படாதபடிக்கு யாரோ என்னமோ செதுக்கி யிருக்கிறார்கள்.அது என்னவாக இருக்கும்!"
கல்யாணம் இரண்டடி எடுத்து வைத்துப் பாறையின் மறைவான பக்கத்தை அடைந்தான். இப்போது எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. இரண்டே வார்த்தைகள்தாம். கமலாவின் கல்யாணம்.
கல்யாணத்தின் மேனி சிலிர்த்தது. அவளைத் தான் விரும்புவதாகக் கொஞ்சம் கூடக் காட்டிக் கொள்ளாத போதிலும் பவானியிடம் தன் மனம் ஈடுபட்டிருப்பதை அவளிட மிருந்து மறைக்காத போதிலும் இப்படி அழுத்தம் திருத்தமாகப் பாறையில் செதுக்குவதென்றால் அவள் எவ்வளவு உறுதியோடு இருந்திருக்க வேண்டும்? எத்தனை ஆசைகள் எத்தனை எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு அவள் நாள் கணக்கில் செயல்பட்டுக் கூரிய கல்லால் அந்தப் பாறையில் ஆழச் செதுக்கியிருக்க வேண்டும்! அழியாத் தன்மை எழுத்தில் மட்டுமா இருந்தது? அதன் அர்த்தத்திலும் அல்லவா தொனிக்கிறது! 'கமலாவின் கல்யாணம்.' 'வின்' என்ற விகுதியிலே எத்தனை உறுதி!
அத்தனை உறுதியோடு இருந்தவள் கிழவனை மணக்கச் சம்மதிப்பானேன்? தற்கொலை செய்து கொள்வது பாபம் என்பது மட்டுமல்ல அதனால் கல்யாணத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்ற காரணமாகத்தான் இருக்கும். 'கல்யாணத்தை நம்பி மோசம் போனாள்' உயிரை விட்டாள்' என்று ஊரார் கதை பேசாமலா இருப்பார்கள்?
கல்யாணத்தைக் கரம் பிடிக்கவும் முடியாது; தற்கொலையும் சாத்தியமில்லை என்று நிச்சயமாகி விட்டபிறகு அவள் தன் எதிர்காலப் பாதுகாப்புக்காக மட்டுமே திருமணம் புரிந்து கொள்ளச் சம்மதித்திருக்கிறாள். மனத்தால் கல்யாணத்தை வரித்த பின்னர் அவள் வேறு ஓர் இளைஞனுடன் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? அதைவிட ரங்கநாத முதலியாரை மணப்பதே மேலல்லவா?
இதையெல்லாம் உத்தேசித்தே 'கமலா மனப்பூர்வமாகச் சம்மதித்துத்தான் இந்தக் கல்யாணம் நடக்கிறது' என்று பவானியும் தன்னிடம் கூறியிருக்கிறாள். தனக்குத்தான் புரியாமல் போய்விட்டது.
திருமணத்தை நிறுத்தியபோது கமலாவின் நன்றிக்குப் பாத்திரமாவதற்குப் பதில் கோபத்துக்குத் தான் உள்ளானதற்குக் காரணம் தெளிவாயிற்று கல்யாணத்துக்கு. கடந்த இரண்டு மூன்று தினங்களாகத் தன்னைச் சதா சர்வ காலமும் வட்டமிட்டு வந்தமுகத்தின் பாவம் அர்த்தமாயிற்று.
ஒரு முடிவுக்கு வந்தவனாகத் திரும்பிக் காரில் ஏறினான் கல்யாணம். கார் வேகமாக நீதிமன்றத்தை நோக்கி விரைந்தது என்றாலும் காலதாமதமாகித்தான் விட்டது. அவன் நீதிபதி கோவர்த்தனன் தன்னைக் கண்டிப்பதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்து தன் தகப்பனார் அருகே அமர்ந்தான்.
-------------
அத்தியாயம் 46 -- பவானியின் பதில்
பவானி தனது கட்சியின் வாதங்களைக் கோவையாக எடுத்துரைத்து, "இங்குள்ள இத்தனை இளைஞர்கள் சட்டவிரோதமாகக் கமலாவின் திரு மணத்தை நிறுத்துவதில் அத்தனை தீவிரம் காட்டினார்களே, அவர்களில் யாரேனும் இந்த ஏழைப் பெண்ணை மணக்க முன் வருவாரா? அப்போது சுயநலம்தான் முன் நிற்கும்; பணம் பதவி சொத்து அந்தஸ்து எல்லாம் குறுக்கிடும்" என்று குத்தலாகப் பேசிய போது கல்யாணத்தின் உள்ளத்தில் ஓர் உண்மை பளிச்சிட்டது.
கமலாவின் திருமணத்தைத் தான் நிறுத்தியது அவள் பேரிலுள்ள கருணையினால் மட்டுமல்ல. அவனைத் தவிர வேறு யாரும் அவளை அடைவதைத் தன்னால் சகித்துக் கொள்ள முடியாததாலும்தான்! இதை அவன் மனம் புரிந்து கொண்ட மறு வினாடி அவன் ஏதோ கூற எழுந்து நின்றான். தகப்பனார் கோபால கிருஷ்ணன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து விட்டார்.
ஆனால் பவானி விடவில்லை. "மிஸ்டர். கல்யாணசுந்தரம்! ஏன் எழுந்து நின்று விட்டுச் சும்மா உட்காருகிறீர்? கோர்ட்டாரிடம் ஏதாவது கூற விரும்பினால் தாராளமாகச் சொல்லலாம். நீரும் பிரம்மச்சாரிதானே? கமலாவின் கல்யாணத்தைத் தடுக்க முன் வந்தீரே? இப்போது கமலாவின் கல்யாணமாவதற்கும் முன் வருவீரா?" என்றாள்.
கல்யாணசுந்தரம் தகப்பனார் சட்டையைப் பிடித்து இழுப்பதைப் பொருட்படுத்தாமல் மறுபடியும் எழுந்து நின்றான். "பேஷாக முன் வருவேன். முன் வைத்த காலைப் பின் வைக்கும் வழக்கம் எனக்கு இல்லை. கமலா சம்மதித்தால் அவளை மணந்து கொள்ள நான் தயார்" என்றான்.
கோர்ட்டில் ஒரே ஆரவாரம், கரகோஷம், "ஹியர்! ஹியர்!" என்ற ஆமோதிப்பு; ஹிப் ஹிப் ஹுரே!" என்று இளைஞர்களின் கூப்பாடு!
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் மணி அடித்தார். கோர்ட் சேவகன், "ஸைலன்ஸ்! ஸைலன்ஸ்!" என்று தொண்டை கிழியக் கத்தினான்.
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் எழுந்து, "யுவர் ஆனர்! இப்போது கல்யாணம் சொன்னதைத் தாங்கள் பதிவு செய்யக் கூடாது. அதற்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. ஏதோ தெரியாத்தனமாக உளறுகிறான்" என்றார்.
"நான் ஒன்றும் உளறவில்லை" என்றான் கல்யாணம்.
"தெரிந்துதான் பேசினான். சரியாகத்தான் சொன்னான்" என்றார் ஒரு ஜூனியர் வக்கீல்.
"நீங்கள் சும்மா இருங்கள். ஊருக்கு இளைத்தவன் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் என்ற எண்ணம் போலிருக்கு எல்லாருக்கும்" என்று படபடத்த தன் தகப்பனார் காதில் கல்யாணம் எழுந்து நின்று ஏதோ சொன்னான்.
அவர் கோப மிகுதியில் உரத்த சத்தமாக, "என் வாயை மூடப் பார்க்கறாயேடா, வீட்டிலே உன் அம்மாவாயை யாரடா மூடறது?" என்று கேட்டது கோர்ட்டில் எல்லார் காதிலும் விழுந்து பலத்த சிரிப்பொலியை எழுப்பியது.
மாஜிஸ்திரேட் மணி அடித்து, "பவானி! மேல் உங்கள் விசாரணை நடக்கட்டும்!" என்றார்.
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன், "யுவர் ஆனர்! இதெல்லாம் ஏதோ சூழ்ச்சியாகத் தோன்றுகிறது. நான் பலமாக ஆட்சேபிக்கிறேன்" என்றார்.
பவானி மாசிலாமணி முதலியாரிடம் கலந்து பேசிவிட்டு, "யுவர் ஆனர்! வழக்கை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையில் இரு கட்சியும் சமரசமாய்ப் போவதற்கு வழி இருக்கிறதா என்று பார்க்கலாம். மாசிலாமணி வழக்கை வாபஸ் பெறுவது கூடச் சாத்தியமாகலாம்" என்றாள்.
வழக்கை ஒத்திவைத்து அறிவித்துவிட்டு மாஜிஸ்ட்திரேட் எழுந்து தம் அறைக்குச் சென்றார்.
கோர்ட் கலைந்து நீண்ட நேரமான பிறகும் கமலா பவானியின் தோளில் முகம் புதைத்து விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். பவானி எவ்வளவு சமாதானப்படுத்தியும் ஓயவில்லை. "அசடே! எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கிறது, பார். இன்னும் ஏன் அழுகிறாய்?" என்றாள் பவானி.
"இது ஆனந்தக் கண்ணீர் அக்கா!" என்று தட்டுத் தடுமாறி சொன்னாள் கமலா.
---- ----- ----------------- ------------
அன்றிரவு பவானி ரங்கநாத முதலியாரை அவர் வீட்டில் சந்தித்து நீதிமன்றத்தில் நடந்தனவற்றை யெல்லாம் விவரித்தாள். "ஏதோ தவறு நேர்ந்துவிட்டது; போனதை யெல்லாம் மறந்துவிடுங்கள். கமலாவுக்கும் கல்யாணசுந்தரத்துக்கும் திருமணம் நடப்பதுதான் பொருத்தமாய் இருக்கும். அவர்களை ஆசீர்வதியுங்கள்" என்றாள்.
அந்தப் பெண்ணையே கேட்டேன்; அவளே என்னை மணந்து கொள்ளச் சம்மதம் என்றாளே? ஏன் அப்படிச் சொன்னாள்? அதை விசாரித்துவிட வேண்டும்" என்றார் ரங்கநாதன்.
"அதைப் போய் அந்தச் சிறு பெண்ணிடம் கேட்டு அவளை மேலும் குழப்பி மனத் துயருக்கு உள்ளாக்கலாமா? கல்யாணம் அவளை உதாசீனம் செய்ததால் ஏற்பட்ட ஏமாற்றம். பெற்றோரின் வற்புறுத்தல் எல்லாமாகச் சேர்ந்து அவளைச் சம்மதிக்க வைத்திருக்கும்" என்றாள் பவானி.
இருந்தாலும் என்னை இப்படி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். போகட்டும், கொஞ்ச நாள் யாத்திரை போய்விட்டு வருகிறேன். அது வரை என் சொத்துக்களை யெல்லாம் நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்" என்றார் ரங்கநாதன்.
அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பவானி வீடு திரும்பியபோது மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் அவள் மாமா குணசேகனுடன் தோட்டத்தில் நாற்காலிகள் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
"வாம்மா, பவானி! மாஜிஸ்திரேட் புறப்படுவதாகச் சொன்னார். நான்தான் 'சற்று இருங்கள். பவானி வந்துவிடுவாள்' என்று கூறி உட்கார்த்தி வைத்தேன்" என்றார் குணசேகரன்.
"ரொம்ப நல்லதாய்ப் போயிற்று" என்றாள் பவானி. "மாசிலாமணி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வது நிச்சயம் என்பதை மாஜிஸ்திரேட்டுக்கு இப்போதே தெரிவித்துவிடுகிறேன்."
"வழக்கில் பிரமாதமாக வாதாடினாய். கங்கிராஜுலேஷன்ஸ்" என்றார் கோவர்த்தனன்.
"கல்யாணத்தைப் பார்த்து 'நீயும் ஒரு பிரமச்சாரிதானே? கமலாவின் கல்யாணமாகத் தயாரா' என்று ஒரு போடு போட்டாயே! அது எனக்குக் கூடப் பொருந்தும். நானும் ஒரு பிரமச்சாரிதான்!"
"அடேடே! கமலாவுக்கு இத்தனை போட்டியா? அதுவும் இத்தனை பெரிய இடங்களிலிருந்து, 'கமலா சுயம்வரம்' என்றுகூட வைத்துவிடலாம் போலிருக்கிறதே!" என்றாள் பவானி.
"நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. கமலாவின் கல்யாணம் என்பதுதான் முடிவாகிவிட்டதே. நானும் ஒரு பிரமச்சாரிதான் என்பதைக் கமலாவின் வக்கீலுக்கு நினைவுபடுத்துகிறேன்!" என்றார் கோவர்த்தனன்.
"அம்மா, பவானி! நல்ல பதிலாகச் சொல்லம்மா. நான்தான் ஏற்கனவே உன்னிடம் கோவர்த்தனனின் விருப்பத்தைத் தெரியப்படுத்திப் பேசி யிருக்கிறேனே!" என்றார் குணசேகரன்.
"ஒருவேளை உனக்கும் கல்யாணத்துக்கும் இடையில் அன்பு வளர்ந்திருக்கிறதோ என்ற சந்தேகத்தில் நான் இது நாள் வரை ரொம்ப வற்புறுத்தாமல் இருந்தேன். ஆனால் இப்போதுதான் அவன் கமலாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்வது நிச்சயமாகிவிட்டதே. அதனால் இனி மேல் உன்னை நான் இலேசில் விடமாட்டேன்" என்று கூறிவிட்டுக் கோவர்த்தனன் தமது ஹாஸ்யத்தைத் தாமே ரசித்துச் சிரித்தார்.
"யுவர் ஆனர்! இந்தக் கேஸையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள்; இரண்டு வாரம் தவணை கொடுங்கள்" என்றாள் பவானி.
"ஆல்ரைட்! இரண்டு வாரம். சரியாகப் பதினைந்தாம் நாள் நான் மறுபடியும் இங்கே வருவேன். நல்ல பதிலை எதிர்பார்த்து வருவேன்" என்றார் கோவர்த்தனன்.
அவர் போன பிறகு மாமா குணசேகரன் பவானியைப் பார்த்து, "நீ இப்படி அடம் பிடிப்பது நன்றாயில்லை. உன்னால் அந்த மனுஷன் வாழ்க்கையே பாழாகிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டைவிட்டு வீட்டுக்குத் திரும்பினால் சதா உன் படத்தைப் பார்த்துக் கொண்டு பித்துப் பிடித்தவர் போல் உட்கார்ந்திருக்கிறாராம். ஏக்கத்தை மறக்கக் குடியிலும் இறங்கி விட்டாராம். அவரிடம் வேலை பார்க்கும் சமையல்காரன் மணி நேற்று வந்து ஒரு குரல் அழுதுவிட்டுப் போனான். பாவம், அவன் கோவர்த்தனன் பேரில் உயிரையே வைத்திருக்கிறான். அவரைக் காப்பாற்றிக் கரையேற்றும்படி மன்றாடினான். நீ கோவர்த்தனனை ஏற்க மறுத்துவிட்டால் அவர் எதிர்காலமே கெட்டுக் குட்டிச்சுவராகிவிடும்போலிருக்கிறது" என்றார்.
"அவருடைய எதிர்காலத்தில் அத்தனை அக்கறை காட்டுகிறீர்களே, என் எதிர்காலம் பாழானால் பாதகமில்லையாக்கும்" என்றாள் பவானி.
"அப்படி நான் எண்ணுவேனா, பவானி. கோவர்த்தனனை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் உன் மனத்தில் வேறு யாரையாவது வரித்திருக்கிறாயா? அதையாவது சொல். கல்கத்தாவில் இருக்கும்போது ஏதாவது நடந்ததா? உன் பெற்றோர் சம்மதம் கிடைக்கவில்லையா? விவரமாகச் சொன்னால் உனக்காக அவர்களிடம் நான் வாதாடிப் பார்க்கிறேன்."
"என் காதலருக்கு வேறு ஒருத்தியுடன் திருமணமாகிவிட்டது, மாமா! நாட்டுப்பற்று என்னும் நங்கையை மணந்துகொண்டு நாலு வருஷங்கள் மாமியார் வீடே கதி என்று இருக்கிறார். விடுதலை பெற்று வர இன்னும் இரண்டு ஆண்டுகள் பாக்கியிருக்கின்றன" என்று கூறி குணசேகரனைத் திகைப்பு கலந்த மௌனத்தில் ஆழ்த்திவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள் பவானி.
(தொடரும்)
------------------
அத்தியாயம் 47 -- அவமானத்தின் எதிரொலி
ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனுக்கும் கல்யாணத்துக்கும் வீட்டிலே மண்டகப்படி நடந்தது.
"பேர்தான் ஊரெல்லாம் அமர்களப்படுகிறது. 'வக்கீல் திலகம்' 'குறுக்கு விசாரணை மன்னன்' என்றெல்லாம் வர்ணிக்கிறார்கள். ஆனால் தனக்கென்று வரும்போது ஒரு சின்னக் கேஸை ஜெயிக்கத் தெரியலையே" என்றாள் செல்லம், தன் கணவரைப் பார்த்து. "கேவலம் ஒரு பெண்பிள்ளையிடம் தோற்றுவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!"
"இது அப்பாவுக்குத் தோல்வி இல்லை, அம்மா" என்றான் கல்யாணம். "மாசிலாமணி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார். ஒரு விதத்தில் அப்பாவுக்கு இது வெற்றி என்றே வைத்துக் கொள்ளலாம்.."
"போதுண்டா, சமர்த்து வழியறது" என்றாள் செல்லம். "அதுதான் அந்தப் பெண்ணை நீயே கல்யாணம் செய்து கொள்கிறரதாகக் கோர்ட்டில் சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாயே. வாக்குறுதியை வாங்கிக் கொண்ட பிறகுதானே அவர்கள் ராஜியாகப் போகச் சம்மதித்த்தார்கள். இதற்குப் பெயர் வெற்றியா? வெட்கக்கேடு!"
"ஏன் அப்படி வெறுத்துக் கொள்கிறாய் அம்மா? நீதானே வீட்டுக்குப் பதவிசாக, அடக்கமாக ஒரு நாடுப் பெண் வர வேண்டும் என்று ஆசைப் பட்டுக் கொண்டிருந்தாய்? பவானி பற்றி நானோ அப்பாவோ பிரஸ்தாபித்த போதெல்லாம் பயந்து போய் 'வேண்டாம், வேண்டாம்' என்று பதறினாயே. இப்போ உன் ஆசைப்படி அடக்கமான பெண்ணை மணந்துகொள்ளச் சம்மதித்திருக்கிறேன்."
செல்லம், " கஷ்டம், கஷ்டம்" என்று நெற்றியில் தட்டிக் கொண்டாள். "குடும்பப் பாங்கான பெண் வேண்டும் என்று நான் சொன்னது வாஸ்தவம். அதற்காக இரண்டாந்தரச் சரக்கையா ஏற்பேன்? அவள் எவனுக்கோ கழுத்தை நீட்டிவிட்டு வந்தவள், இந்த வீட்டில் அடியெடுத்து வைப்பதா? அவள் ஜாதகத்தில் என்ன தோஷமோ, சரியாக முகூர்த்த சமயத்தில் கல்யாணம் நின்று போச்சு. அவளைப் போய் இங்கே குடியேற்றுவதா?"
கல்யாணம் திகைத்துப் போனான். தன் தாயார் திடும்மென்று இப்படி ஒரு புதிய நோக்கில் கமலாவைப் பார்ப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே யில்லை. 'கமலாவின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருந்தால் அது கல்யாணமாகிய தான்தான்' என்று தன் தாயாருக்கு எப்படி எடுத்துக் கூறிப் புரிய வைப்பது? தோஷம், கல்யாணத்தின் வடிவிலே தோன்றித்தானே திருமணத்தை நிறுத்தியது?
"கேட்டியாடா?" என்றார் கோபாலகிருஷ்ணன். "இதையெல்லாம் யோசித்துத்தான் நான் கோர்ட்டிலேயே உன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கப் பார்த்தேன். நீ என்னடாவென்றால் வீராதி வீரனாக உன்னைக் காட்டிக் கொள்ள என்னவெல்லாமோ உளறி வைத்தாய்."
"நான் ஒன்றும் உளறவில்லை, அப்பா!நன்றாக யோசித்து, இதுதான் சரியானமுடிவு என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். உங்களுக்காகவோ அல்லது அம்மாவுக்காகவோ நான் இனி மாறப் போவதில்லை. உங்களுக்குக் கமலாவைப் பிடிக்கவில்லையென்றால் நான் தனிக் குடித்தனம் வைத்துக் கொள்ளத் தயார்." என்று உறுதியாகக் கூறிய கல்யாணம், கோபம் கலந்த வேகத்தோடு சட்டையை மாட்டிக் கொண்டு விடுவிடென்று புறப்பட்டான். நாடகத்துக்கு மாற்றுத் தேதி நிர்ணயித்துச் சமூக சேவா சங்கத்தில் மறுபடியும் ஒத்திகைகள் ஆரம்பமாகி யிருந்தன.
"ஐயோ! இப்படிப் பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டுப் போறானே! நீங்களும் கேட்டுண்டு சும்மா இருக்கிறீர்களே!" என்று புலம்பினாள் செல்லம். கோபாலகிருஷ்ணன், வீட்டு யுத்தம் எப்படியாவது போகட்டும்; உலக யுத்தத்தைக் கவனிப்போம் என்று எண்ணியவராக அன்றைய நாளிதழில் ஆழ்ந்தார். - - - - - -
மாசிலாமணி முதலியார் வீட்டில் காமாட்சி அம்மாள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்: "வீடாவது, வீடு! அரண்மனை மாதிரி இருந்ததே! மூன்று அலமாரிகள் நிறைய வெள்ளிச் சாமான். ஒரே ஒரு வெள்ளிக் கூஜாவைத் தூக்கிப் பார்த்தேன்; கனமாவது கனம்! இந்தக் கையாலேயே இரும்பு அலமாரி பூட்டி இருக்கிறதா என்று அழுத்திப் பார்த்து விட்டு வந்தேனே! எல்லாம் போச்சு. அதை யெல்லாம் ஆள இந்தத் துக்கிரிப் பெண்ணுக்குக் கொடுத்து வைக்கவில்லை."
"அதைப் பற்றி இப்போ பேசி என்ன செய்ய? எல்லாமே நன்மைக்குத்தான் என்று வைத்துக் கொள். மாப்பிள்ளை என்று பார்த்தாள் கல்யாணசுந்தரம் எவ்வளவோ உசத்தி. இளம் வயசு, நல்ல படிப்பு, பார்க்கவும் இலட்சணமாய் இருக்கிறான். பணம் காசு, சொத்து சுதந்திரம் எதற்கும் குறைவில்லை: ஒரே பையன்.... "
"இத்தனை இருந்தும் என்ன புண்ணியம்? அம்மா கோண்டுவாக அல்லவா இருப்பான் போலிருக்கிறது? புருஷப் பிள்ளைகளுக்குச் சுயபுத்தி வேண்டாமோ?
"சுய புத்தி இல்லாமலா அவ்வளவு பேர் நடுவில் கோர்ட்டில் 'நான் கமலாவைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்;" என்றான்.
"அவன் சமர்த்தை நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும். நாளைக்கு அவனே வந்து நின்று 'எங்கம்மா இந்தக் கல்யாணம் வேண்டாமென்கிறாள், நான் என்ன பண்ணறது?" என்று கையை விரித்தாலும் விரிப்பான்.
அப்போது ரங்கநாதனின் நகைப் பெட்டி யொன்றை எடுத்து வந்து தகப்பனாரிடம் நீட்டி "இதைக் கொண்டுபோய் கொடுத்து விடுங்கள், அப்பா!" என்றாள் கமலா.
காமாட்சி அம்மாள் சரேலென்று இடையில் பாய்ந்து அதைப் பிடுங்கிக் கொண்டாள். "இப்போ ஒண்ணும் அவசரமில்லை; எங்கே ஓடிப் போறது? பார்த்துக் கொள்ளலாம்." என்றாள். "மூதேவிக்கு அதிர்ஷ்டம் வந்தால் மூன்று நாளைக்கு நிலைக்கும் என்பார்கள். உனக்கு ஒரு நாள்கூட நிக்கலையே."
"அப்பா! வெறுமனே அம்மா என்னை வையறாளே? நான் என்ன தப்பு செய்தேன்?" என்று விசும்பினாள் கமலா.
"முகூர்த்த வேளை பார்த்துக் கண்ணால் ஜலம் விட்டுக் கொண்டு நின்றாயே, அது போதாதா?" என்றாள் காமாட்சி.
இந்தச் சமயம் வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்டது.
"இந்தா, காமாட்சி வாயை அடக்கு! யாரோ வருகிறார்கள்" என்றார் மாசிலாமணி. " அப்புறமா உன் பிரலாபத்தை வைத்துக் கொள்ளலாம்."
"யார் வந்தால் எனக்கு என்ன? எதற்கு நான் பயப்பட வேண்டும்?"
"நன்றாயிருக்கிறது; உங்களுக்கு என்ன பயம்? நீங்கள்தான் மானம், வெட்கம் எல்லாத்தையும் விட்டவர்கள் ஆச்சே!" என்று கூறிக் கொண்டே செல்லம் உள்ளே நுழைந்தாள்.
"பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாய்ப் போச்சா?" என்றாள் காமாட்சி.
"நீ என்ன சொன்னாய்?" என்றார் மாசிலாமணி.
"சொன்னேன் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று! ஏண்டி கமலா, நீதான் சொல்லேன். இல்லே உனக்கும் மறந்து போச்சா?' அம்மாவின் தலைப்பைப் பிடித்துக் கொண்டு வளைய வருகிற அந்தப் பிள்ளை, கோர்ட்டிலே சவடாலாகப் பேசினதுதான் மிச்சம்; காரியத்தில் உறுதியாக இருக்கமாட்டான்'னு சொன்னேனா இல்லையா?"
"அவன் எதற்காக உறுதியாக நிற்கணும்? ஊரிலே உங்களைப் பற்றி நாலு பேர் நல்லவிதமாகப் பேசினால் அவனும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கான்.
ஆனால் காது கொடுத்துக் கேட்க முடியாத விஷயமெல்லாம் உங்களைப் பற்றி அடிபடுகிறதே!" "அப்படி என்னமா சொல்றா, எங்களைப் பற்றி?" என்று மாசிலாமணி சற்றுக் கோபமாகவே கேட்டார்.
'அதை என் வாயாலே சொல்லித்தான் ஆகணும் என்கிறீர்களாக்கும்; சொல்றேன். நீங்கள் இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகப் போகிறது: அங்கங்கே யாராவது ஒரு கிழவனை மயக்கி இவளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கிறது; அவனிடத்தில் பணமும் நகையுமாகப் பறித்துக் கொண்டு இன்னோர் ஊரைப் பார்க்கப் போய்விடுகிற்து.இதுவே உங்கள் தொழில் என்று பேசிக் கொள்கிறார்கள், போதுமா?"
"சிவ சிவா!" என்று காதுகளைப் பொத்திக் கொண்டார் மாசிலாமணி.
"சிவனையும் விஷ்ணுவையும் கூப்பிடுவானேன்? இதோ, உங்க பெண்டாட்டி கையிலே இருக்கே, நகைப் பெட்டி அது யாருடையது? எங்கிருந்து வந்தது? அது ஏன் இன்னும் அதன் சொந்தக்காரரிடம் போய்ச் சேரவில்லை?"
"ஐயையோ! இதென்ன அபாண்டம்" என்றார் மாசிலாமணி.
"அபாண்டமோ பிரும்மாண்டமோ, எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளை. கோர்ட்டிலே அவன் ஏதோ க்ஷண நேர வேகத்திலே ஏதோ சொல்லிவிட்டான் என்பதற்காக அவன் கழுத்திலே இந்தப் பென்னை கட்டி விடலாம் என்று பார்க்காதீகள். என் உடம்பில் உயிர் உள்ளவரை அது நடக்காது. நாங்கள் ரொம்ப ஆசாரம் பார்க்கிறதில்லை; என் வீட்டுக்காரர் முற்போக்குக் கொள்கைகளை உடையவர்தான்; அதற்காக எச்சில் பண்டங்களைத் தொட்டுக் கொண்டாடுகிற்தில்லை!" செல்லம்மாள் படபடவென்று இப்படிப் பொரிந்து தள்ளிவிட்டுத் திரும்பி விடுவிடு என்று நடந்துவிட்டாள்.
மாசிலாமணி அவமானம் தாங்காமல் மேல் துண்டால் முகத்தை மூடிக் கொண்டார்.
நகைப் பெட்டியை அப்போதும் விட மனமில்லாமல் இறுக அணைத்துக் கொண்ட காமாட்சி, "கிணற்றிலே விழுந்தியே - அப்பவே போயிருக்கக்கூடாதா நீ! இன்னும் என்னவெல்லாம் அவமானங்களை எங்களுக்குத் தேடி வைக்கப்போகிறாயோ? நானாக இருந்தால் மலையிலேயிருந்து குதித்துப் பிராணனை விட்டு விடுவேன்" என்று கூறிக் கமலாவின் கன்னத்தில் ஒரு முறை குத்தி நிமிண்டிவிட்டு உள்ளே சென்றாள்.
கமலா அழவில்லை. அழுது அழுது கண்ணீரெல்லாம் வற்றி வறண்டுவிட்டது போல் நின்றாள். 'நானாக இருந்தால், மலையிலேறிக் குதித்தாவது பிராணனை விட்டுவிடுவேன்' என்று காமாட்சி கூறியது திரும்பத் திரும்ப அவள் மனத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
------------
அத்தியாயம் 48. -- வேதனையில் ஒரு வாலிபன்.
மறுநாள் காலை தீப்பெட்டியில் பாக்கியிருந்த நாலு குச்சிகளை கமலா யாரும் அறியாமல் குப்பையில் போட்டுவிட்டு, நெருப்புப் பெட்டி வாங்கி வருவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டாள். "விசுவை அனுப்பேன்" என்றாள் காமாட்சி. "வீட்டில் தலைக்கு மேல் காரியம் இருக்கே."
"எனக்கு ஹோம் ஒர்க் இருக்கு" என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தான் விசு.
"சமர்த்து" என்று தனக்குள் அவளை வாழ்த்தினாள் கமலா. கண்ணாடியில் தன் அழகை இன்னொரு தடவை பார்த்துக்கொண்டாள். சாகும்போது பிரமாதமாகத் தன்னை அலங்காரம் பண்ணிக்கொண்டு இறக்க வேண்டும் என்று அவள் இரவெல்லாம் யோசனை செய்து தீர்மானித்துருந்தாள். எனவேதான் இன்று காலை குளித்துவிட்டுத் தனக்குச் சமீபத்தில் வாங்கப்பட்ட புதிய புடவைகளுள் அதிக ஆடம்பரம் இல்லாத ஒன்றைப் பார்த்து உடுத்திக் கொண்டாள். வழக்கத்தைவிட அதிகமாகவே இரண்டாவது முறையாகப் பவுடரைப் போட்டுக்கொண்டு அப்புறம் விகாரமாகிவிட்டது என்று துண்டால் ஒற்றி எடுத்தாள். குங்குமம் 'பளிச்'சென்று நெற்றியில் இலங்கியது. மை தீட்டிய விழிகள் மானின் பார்வையை வென்றன. செண்ட் மணம் கமகமத்தது!
இரவு படுத்திருக்கும்போது ஒரு தீர்மானத்துக்கு வரத்தான் தாமதமாயிற்று. தீர்மானத்துக்கு வந்த பிறகு அவள் அமைதியாக உறங்கினாள். இப்போது உற்சாகமாகக் கிளம்பினாள். அவள் நடையிலே எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறப் போகிற உல்லாசத் துள்ளல் இருந்தது. இந்த உலகை, அதன் அழகுகளை முதல் தடவையாகப் பார்ப்பவள் போல் அகன்று விரிந்த கண்களால் நோக்கி ரசித்தாள். சூரியோதயம், பட்சிகளின் கானம், சற்றுத் தூரத்தில் தெரிந்த மலைகள், அவற்றின் பசுமை, மலை முகடுகளில் சிரமப் பரிகாரம் செய்ய அமரும் மேகக் குவியல்கள் எல்லாவற்றையும் 'இதுதான் கடைசித் தடவை' என்று எண்ணியபடியே பார்த்தாள். கூடவே, மனத் திரையில் கல்யாணத்தின் சுந்தரமான வதனம் தெரிந்தது. அதனையும் உள்ளத்தின் கள்ளத்தால் அள்ளி விழுங்குபவளாகப் பார்த்தாள். "போய் வருகிறேன்" என்று அவனிடம் விடைபெற்றுக் கொண்டாள்.
மலைப் பாதையில் சற்றுத் தூரம் ஏறிய பஸ், ஒரு குக்கிராமத்தில் நின்றது. அங்கேதான் வழக்கமாகக் கமலா இறங்கிக் கொள்வாள். அங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் அவளும் பவானியும் அடிக்கடி சந்திக்கும் இரகசிய இடமான அந்த மொட்டைப் பாறையை அடையலாம். அந்த இடத்திலிருந்து அவள் தொலைவில் தெரிந்த ராமப்பட்டண வீதிகளையும் பெட்டி பெட்டியான வீடுகளையும் நோக்கினாள். அதோ, கல்யாணத்தின் வீடு அதுதானா? அல்லது இதுவா? இப்பால் பெரிய ஏரி தகதகத்துக் கொண்டிருந்தது. அருகே அவள் எத்தனையோ தடவை ரசித்து மகிழ்ந்திருந்த சரக்கொன்றை மரம். இந்தப் பக்கம் மொட்டைப் பாறையில் அவள் ஆசையோடு செதுக்கிய வார்த்தைகள்: "கமலாவின் கல்யாணம்!" அவற்றை அவள் ஒருமுறை தடவிக் கொடுத்துவிட்டுப் பாறை மீது ஏறினாள். 'பகவானே, இரண்டு முறை உயிரை விட முயன்ற என்னைக் காப்பாற்றி அருளினாய். இந்தத் தடவை அப்படி ஏதும் செய்துவிடாதே! முதல் தடவை கல்யாணத்தையும் இரண்டாவது முறை பவானியையும் அனுப்பி என்னை மரணத்தின் வாயிலிருந்து காத்தது போல் இப்போதும் யாரையாவது அனுப்பிவிடாதே! இன்று எனக்குத்தான் வெற்றி கிட்ட வேண்டும்!' இப்படி எண்ணியவாறு கமலா பாறையிலிருந்து பாய்வதற்குத் தயாரானாள். கல்யாணத்தின் உருவம் மனமெல்லாம் நிறைந்திருக்க அதனை அகக் கண்ணால் பார்த்தபடியே குதிக்கத் தீர்மானித்தாள்.
அந்தச் சமயம் அவள் காதுகளில் அந்த முனகல் சத்தம் கேட்டது. "ஹூம், ஹூம்" என்று தாங்க முடியாத வேதனையை வெளிப்படுத்தும் முனகல் ஒலி.
கமலா பரபரப்புடன் இப்படியும் அப்படியும் பார்த்தாள். பிறகு பாறையிலிருந்து கீழே இறங்கிச் சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தாள்.
அங்கே மற்றொரு சிறிய பாறைக்குப் பின்னால் அவள் கண்ட காட்சி அவளைத் திகைக்க வைத்தது!
கதர் ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்த ஒரு வாலிபன் அங்கே ஒரு கல்லின் மீது தலை வைத்துக்கண்களை மூடி முனகிக் கொண்டிருந்தான். அவன் வ்லது தோளில் இரத்தம் கசிந்தும் உறைந்தும் ஜிப்பா சிவந்து காணப்பட்டது. அதோடு கடுமையான் ஜுரமும் அவனுக்கு இருப்பதாகத் தோன்றியது. கமலா தயங்கி அவன் நெற்றியில் உள்ளங்கையை வைத்துப் பார்த்தாள். அனலாகச் சுட்டது.
கமலாவின் உள்ளத்தில் பச்சாத்தாபம் பெருகியது,பயமாகவும் இருந்தது. சுந்தரமான களையான முகம் இப்படி வாடி விட்டதே' என்று எண்ணி இறங்கினாள். காயத்திலிருந்து ரத்தம் பெருகி ஜிப்பா நனைந்திருப்பதைப் பார்த்துக் கலக்கம் அடைந்தாள்.
கமலாவின் கரம் நெற்றியைத் தொட்டு வருடியதும் அந்த வாலிபனின் கண்கள் மிகுந்த பிரயாசைப்பட்டு மெல்ல மெல்லத் திறந்தன.
(தொடரும்)
-------------
அத்தியாயம் 49. -- தப்பியோடிய கைதி.
'நமக்குத் துன்பம் நேரும்போதெல்லம் நம்மைவிட அதிகத் துயரத்தில் ஆழ்ந்திருப்போரைப் பற்றிச் சில கணங்கள் நினைத்துப் பார்த்தால் போதும், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது உடனே புரியும். இவ்விதம் எண்ணாமல் நமது துயரம்தான் உலகிலேயே மிகப் பெரிது என்பதாகக் கருதிக் கொண்டு அதைப் பொறுக்கவோ சகிக்கவோ திராணியின்றி உயிரை மாய்த்துக் கொள்ள முற்படுவது எவ்வளவு அபத்தம்?' - வேதனையுடன் முனகிக் கொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்ததும் இவ்வாறு நினைத்தாள் கமலா.
அவன் அருகில் அமர்ந்து. "நீ யார்? எப்படி இவ்வளவு பலமான காயம் பட்டது உனக்கு? ஒரு டாக்டரைத் தேடிப் போகாமல் ஏன் இங்கே முனகியபடி படுத்திருக்கிறாய்?" என்றெல்லாம் வினவினாள்.
"நீ யார்? அதை முதலில் சொல்லு" என்றான் அந்த வாலிபன் ஈனசுவரத்தில். "உன்னை நான் நம்பலாமா என்பது முதலில் எனக்குத் தெரிய வேண்டும்."
"பேஷாக நம்பலாம். ஏனென்றால் நானும் உன்னைப் போல் மரணத்தின் வாயிலில் நிற்பவள்தான். அதோ அந்த மொட்டைப் பாறையிலிருந்து பள்ளத்தாக்கில் குதிக்கவிருந்த என்னை உன்னுடைய முனகல் சத்தம் தான் தடுத்து நிறுத்தியது!"
எதுற்காக அப்படி ஒரு கோரமான முடிவைத் தேடிக்கொள்ள எண்ணினாய், பெண்ணே?"
"எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது!"
அவன் வேதனையையும் மறந்து புன்னகை புரிந்தான். "வாழ்க்கையில் வெறுப்பா? அப்படி என்ன பெரிதாகத் துன்பம் அனுபவித்துவிட்டாய் நீ? இதோ, என்னைப் பார்! நாலு வருஷங்கள் சிறைக் கைதியாகப் படாத பாடுபட்டேன். சுதந்திர ஆர்வத்தால் தப்பிக்கொண்டும் வந்தேன். சதா ஸி. ஐ. டி. களால் பின் தொடரப்பட்டு ஓடுகிறேன். இதைவிட உன் துன்பங்கள் பெரிதா? என் தோளில் ஒரு ஸி.ஐ.டி.யின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அடிபட்டு ரத்தமிழந்து தவிக்கும் போதும்கூட எனக்கு உயிரின் மேல் ஆசை விடவில்லையே!"
"நீ என்ன திருடனா? எதற்குச் சிறை சென்றாய்? ஏன் தப்பித்து ஓடி வந்தாய்?"
"பெண்ணே, அதெல்லாம் பெரிய கதை. கூற எனக்குச் சக்தியில்லை."
"வேண்டாம், வேண்டாம்! நீ பேசவே வேண்டாம்!" என்று பயந்து பதறினாள் கமலா.
"பெண்ணே, பிறருக்கு உபகாரம் பண்ணக் கற்றுக் கொள். வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் மறைந்து இதயத்தில் மகிழ்ச்சி நிரம்ப அதுதான் வழி!"
"சரி, அப்படியே செய்கிறேன். உன்னால் நான் அடைந்த விவேகத்தை முதலில் உனக்கே பயன்படுத்துகிறேன். உனக்கு உதவ ஓடிப் போய் ஒரு டாக்டரை அழைத்து வருகிறேன்."
அவன் முகத்தில் கலவரம் தோன்றியது. "கூடவே கூடாது! டாக்டர் வந்து என்னைப் பரிசோதித்தால் முதலில் போலீசுக்குத்தான் தகவல் தெரிவிப்பார்."
"பின்னே, டாக்டரை அழைக்காமல் இருந்துவிட்டால் நீ சாகத்தான் போகிறாய். எம தூதர்களா, அல்லது போலீஸா? இருவரில் யார் தேவலாம் என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும். உனக்குத்தான் இது விஷயங்களில் அனுபவம் அதிகமாயிருக்கிறது!"
"பெண்ணே வலி, என் தோளைக் கடப்பாறையால் தாக்குவது போல் வேதனை தரவில்லையானால் நான் உன் பேச்சை ரசித்துச் சிரிப்பேன்."
"நான் பேசவும் வேண்டாம்; நீ ரசிக்கவும் வேண்டாம்! நான் என்ன செய்யட்டும்? உனக்கு எப்படி உதவட்டும்? அதைச் சொன்னால் போதும்."
"என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாயல்லவா?"
"சத்தியமாகத் துரோகம் பண்ண மாட்டேன். தெய்வமே, நம் இருவரையும் இங்கே ஒரே சமயத்தில் ஒருவருக்குக்கு ஒருவர் உதவ அனுப்பியதாய் எண்ணுகிறேன். இல்லாத போனால் அத்தனை நேரம் நினைவிழந்து கிடந்த நீ, நான் பாறையிலிருந்து விழப்போன தருணத்தில் மயக்கம் தெளிந்து முனகி என் கவனத்தைக் கவருவானேன்? சொல்லு! நான் என்ன செய்யட்டும்?"
"பெண்ணே! நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்? ராமப்பட்டணமா?"
"அங்கேதான் இப்போது குடியிருக்கிறோம்."
"அந்த ஊரில் பவானி என்று ஒரு பெண் வக்கீல் இருக்கிறாளாமே, தெரியுமா?"
கமலா அளவிடமுடியாத ஆச்சரியத்துடன், " ஆமாம், நன்றாகத் தெரியுமே, பவானி அக்காவை!" என்றாள்.
"அக்கா என்று அழைக்கும் அளவு சிநேகமா?" என்று கேட்ட அந்த வாலிபனின் முகம் மலர்ந்தது. இந்தப் பெண் தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற உறுதியும் பிறந்தது.
"அவளிடம் போய் உனக்கு உமாகாந்தனை நினைவிருக்கிறதா?" என்று கேள். 'நினைவிருக்கிறது ' என்று அவள் சொன்னால் , 'அவன் ஒரு நிமிஷம் உன்னைப் பார்க்க விரும்புகிறான்' என்று கூறி இங்கே அழைத்து வா. ஆனால் யாருக்கும் தெரியவே கூடாது விஷயம்!"
"பவானி உனக்கு உறவா?"
"இதுவரை இல்லை" என்று சோகப் புன்னகை புரிந்தான் உமாகாந்தன். "சிநேகம்தான். நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவள் உன்னுடன் இங்கே வரவில்லை என்றால் என்னைப் பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை என்று புரிந்து கொண்டு என் வழியே போவேன்" என்று கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.
"ஒரு வழியும் போக வேண்டாம். இங்கேயே இரு. அக்காவைக் கண்டிப்பாக அழைத்து வருகிறேன்."
"பவானியை வற்புறுத்த வேண்டாம், நீ" என்றான் உமாகாந்தன். "என்ன இருந்தாலும் நான் சிறைவாசம் செய்தவன் அல்லவா?" என்ற போது அவன் விழிகளில் அத்தனை உடல் வேதனையிலும் தோன்றாத கண்ணீர் தளும்பி நினறது.
"இல்லை, இல்லை! பவானி அக்கா அப்படி ஒரு நாளும் நினைக்கவேமாட்டாள். இந்தப் பக்கம் தப்பி ஓடிய கைதி ஒருவன் வளைய வருவதகாவும் ஸி. ஐ. டி. கள் அவனைத் தேடுவதாகவும் கேள்விப்பட்டு அக்காவே என்னிடம் கூறியிருக்கிறாள். அது மட்டுமில்லை; ஒரு வேளை அக்கைதியை நான் காண நேர்ந்தால் உடனே தன்னிடம் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வக்கீல் என்ற முறையில் தன்னால் இயன்ற உதவியைச் செய்வதாகவும் சொன்னாள். அதனால் நான் போய்ச் சொன்னவுடனே அவள் ஓடோடி வருவாள். ஆனால் ஒன்று வக்கீல் என்ற முறையில் மட்டும் அவள் உனக்கு உதவப் போவதாக நான் கருதவில்லை. இன்னுயிர்க் காதலி என்ற உரிமையோடும் உதவப் போகிறதாக எண்ணுகிறேன். என்ன நான் சொல்வது சரிதானா?"
உமாகாந்தன் பலவீனமாகப் புன்னகை புரிந்து கண் சிமிட்டினான். பிறகு பேசவும் சக்தி இழந்தவனாய் இமைகளை மூடிக் கொண்டான்.
கமலா அவன் அருகே குனிந்து, "கொஞ்சம் தாமதமானாலும் கவலைப் படாதே. தைரியமாக இரு!" என்று கூறிவிட்டு மலைப்பாதையை நாலே எட்டில் அடைந்து ஓட்டமும் நடையுமாகக் கீழே இறங்க ஆரம்பித்தாள். பஸ் வரத் தாமதமானால் வேறு யாராவது காரிலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ அந்தப் பக்கமாக வர மாட்டார்களா? ராமப்பட்டணம் வரை தன்னை ஏற்றிக் கொண்டு போக மாட்டார்களா?" என்று ஏங்கினாள். அதே சமயம் தன் அவசரத்துக்கு அவர்களிடம் என்ன காரணம் கூறுவது என்றும் குழம்பினாள்.
நல்ல வேளையாக அவளை அதிகம் தவிக்க விடாமல் பஸ் ஒன்று இறக்கத்தில் வந்தது. அதிர்ஷ்ட வசமாக அதில் இடமிருந்து அவள் ஏறிக் கொள்ளவும் முடிந்தது.
------------------
அத்தியாயம் 50 -- பவானியின் காதலன்
உமாகாந்தனுக்குத் தோளில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டு விட்டு நிமிர்ந்த டாக்டர், பவானியைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தார். "உயிருக்கு ஆபத்தில்லை" என்றார்.
"என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள்" என்று கூறிப் பவானி விழியோரம் துளிர்த்திருந்த கண்ணீரை நடு விரலால் துடைத்துக் கொண்டாள்.
"ஓய்வு தேவை; ஒரு வாரம் பத்து நாட்கள் ஆகும் உடம்பு நடமாடுகிற அளவில் தெம்பு பெற. ஏராளமாய் இரத்தம் இழந்திருக்கிறான் அல்லவா?" என்றார் டாக்டர். "ரொம்ப தாங்ஸ்" என்ற பவானி, கைப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு மணிபர்ஸை எடுத்தாள்.
"இருக்கட்டும். ஃபீஸ் ஒன்றும் இப்போ தேவையில்லை" என்றார் டாக்டர். "நாளைக்குப் போலிசார் என் மீது வழக்குத் தொடுத்தால் நீங்கள் என் சார்பில் வந்து இலவசமாக வாதாடுங்கள் போதும்."
பவானி புரியாதது போல் நடித்து, "கேஸா, உங்கள் மீதா? எதற்கு?" என்றாள். டாக்டர் சிரித்தார். "பவானி! எனக்கு வயது நாற்பத்தைந்து ஆகிறது. இருபத்திரண்டு வருஷசங்களாக பிராக்டிஸ் பண்ணுகிறேன். கல் குத்தியதால் ஏற்பட்ட காயத்துக்கும் துப்பாக்கி தோட்டா கிழித்துச் சென்ற காயத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போகுமா? மலைச் சரிவில் சறுக்கி விழுந்து கூரிய பாறை குத்திக்காயம் பட்டு விட்டது இவனுக்கு என்கிறாய். இவன் யார்? திடுமென்று ராமப் பட்டணத்தில் எப்படி முளைத்தான்? உனக்கு எவ்வாறு சிநேகமானான்? கமலாவும் நீயும் இவனுமாக ஏலமலைச் சரிவில் எதற்காக ஏறிப் போக வேண்டும்?
அங்கே இவன் எதற்காக விழுந்து தொலைக்க வேண்டும்? அப்படியே விழுந்து தொலைத்தாலும் இயற்கையான விதத்தில் தலையிலோ முழங்கை முழங்காலிலோ அடிபட்டிருக்கக் கூடாதா? வலது தோளில் சற்றும் பொருந்தாத விதமாக எதற்கு அடிபட்டுக் கொள்ள வேண்டும்? பவானி! இதையெல்லாம் கேட்க வக்கீலுக்குப் படிக்க வேண்டியதில்லை. டாக்டருக்குக் கூட எழக் கூடிய சந்தேகங்கள்தாம்."
பவானி, "டாக்டர் ... வந்து ...." என்று ஏதோ கூற ஆரம்பித்தாள். அவள் மேலே பேசுவதற்கு முன் உள்ளங்கையைக் காட்டி நிறுத்தச் சொன்னார்.
"இதோ பார்! நான் கேள்வியும் கேட்க வேண்டாம்; நீ பதிலும் கூற வேண்டாம்! அது மேலும் மேலும் என்னை இந்தக் கேஸில் சிக்க வைத்துப் போலீஸாரின் அதிருப்தியையும் சம்பாதித்துத் தரும்! பவானி! நான் போலீஸுக்கு உடனே தகவல் கொடுக்கக் கடமைப் பட்டவன்.நியாயமாக அவர்களிடம் சொல்லாமல் இவனுக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பித்ததே தவறு. ஆனால் இந்த ஊரில் அநேகமாக எல்லாருமே பவானியிடம் உள்ள ஒரு வசீகர சக்திக்கு அடிமையாவது போல் நானும் வசப்பட்டிருக்கிறேன். அதனால்தான் உன் கோரிக்கைக்கு இணங்கினேன். இங்கு நான் வந்து போனதை யாருக்கும் சொல்ல மாட்டேன்; நீயும் மறந்து விடு. இல்லாத போனால் எனக்கு மட்டுமில்லை. உன் பராமரிப்பில் உள்ள இவனுக்கும் ஆபத்து.
"ஜுரம் வரும் இவனுக்கு. நூற்றிரண்டுக்கு மேல் போனால் இந்த முதல் மருந்தைக் கொடுத்துக் குறைக்க வேண்டும். இரண்டாவது மருந்தை நாளைக்கு மூன்று வேளை ஒரு வாரத்துக்குச் சாப்பிட வேண்டும்."
"ஆகட்டும் டாக்டர்" என்றாள் பவானி, "பூர்வ ஜன்ம பூஜாப் பலனாகத்தாத்தான் எனக்குக் கமலாவும் நீங்களும் ஆபத்பாந்தவர்களாக உதவ வந்தீர்கள்." மேலே பேச முடியாமல் அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
அவர் அப்பால் போனதும் அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டு எழ, அவள் உமாகாந்தின் கட்டிலருகே மண்டியிட்டு அமர்ந்து தலையணையில் அவன் முகத்துக்கு அருகே தன் வதனத்தையும் வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழலானாள்.
கமலா பதறிக் கொண்டு தன்னைத் தேடி வந்தது, அவள் கூறியதைக் கேட்டுத் தான் துடிதுடித்தது, அவசரம் அவசரமாகக் காரை ஓட்டிக் கொண்டு சென்றது, அரை மயக்க நிலையில் இருந்த உமாகாந்தை இருவரும் இருபுறமும் தாங்கிக் கொண்டு மெல்ல நடத்திக் காருக்கு அழைத்து வந்தது, காரில் படுக்க வைத்தது, பிறகு வீடு சேர்ந்ததும் மாமா உதவியுடன் உமாகாந்தை மாடிக்குத் தூக்கிச் சென்றது, தன் அறையில் தன் கட்டிலிலேயே அவனைப் படுக்க வைத்தது. அங்கே அவன் நினைவிழந்து மூர்ச்சையானதும் உள்ளமெல்லாம் பதற, ஊனெல்லாம் நெக்குருக டாக்டருக்குப் போன் செய்தது, அவர் வந்து பார்த்துவிட்டுத் திரும்பியது எல்லாம் கனவில் நடந்தவை போலிருந்தன. ஆனால் அவை கனவல்ல, உண்மையே என்பதற்குச் சாட்சியமாய் உமாகாந்தன் அவள் படுக்கையிலே சயனித்திருந்தான். 'எப்படி இருந்த செழுமையான மேனி எப்படி உருத் தெரியமல் மெலிந்து வாடியிருக்கிறது? எப்படி இருந்த சிவந்த எழில் வதனம் இன்று வெளிறிக் கிடக்கிறது!'
அந்த வினாடி வரையில் கடமையில் கண்னும் கருத்துமாயிருந்த பவானி இனி செய்ய ஒன்றுமில்லை. உமாகாந்தன் கண்விழிக்கக் கடவுளைப் பிரார்த்தித்தப்படி காத்திருக்க வேண்டியதுதான் என்ற நிலையில் கண்ணீர் பெருகுவதற்கு இடம் அளித்தாள். அது கரை உடைத்துப் பொங்கியது.
கமலா அவளை நெருங்கி மெல்ல அவள் தோளில் கரம் வைத்தாள்.
"இல்லை கமலா! என்னைச் சமாதானப்படுத்த முயலாதே! அழவிடு. இது நாலு வருஷங்களாக நான் தேக்கி வைத்திருக்கும் பிரிவுத் துயர்" என்றாள் பவானி.
"அதுதான் வந்துவிட்டாரே அக்கா!"
"ஆமாம். வந்துதான் விட்டார் கமலா. நாலு ஆண்டுகளுக்குப் பிறகு ஞாபகமாக என்னைத் தேடிக் கொண்டு வந்தவர் எப்படி வந்து சேர்ந்திருக்கிறார் பார்த்தாயா? ஸி.ஐ.டி.களால் துரத்தப்பட்டு, வெய்யிலில் காய்ந்து, மழையில் நனைந்து, நாயாக அலைந்து, மறைந்து திரிந்து, மெலிந்து தேய்ந்து, கடைசியில் அவர்கள் துப்பாக்கிக் குண்டின் தாக்குதலுக்கும் ஆளாகி, மயங்கிய நிலையில் எனக்குத் திரும்பிக் கிடைத்திருக்கிறார் கமலா! அப்போதும்கூட எத்தனை களையாக இருக்கிறது பார்த்தாயா, இவர் முகம்!" என்ற பவானி உமாகாந்தின் கன்னங்களை மெல்ல வருடினாள். தொடர்ந்து கண்ணீரைப் பெருக்கி விசித்து விசித்து அழுதாள்.
சற்றுநேரம் பொறுத்துக் கமலா, "அக்கா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களை இந்த நிலையில் விட்டு விட்டுப் போக எனக்கு மனமில்லை. ஆனால் எனக்கு ரொம்ப நேரமாகிறது. 'தீப்பெட்டி வாங்கி வருவதாகக் கூறிப் புறப்பட்ட பெண் என்ன ஆனாள், எங்கே போனாள்?' என்று புரியாமல் அம்மா என்னைச் சபித்துக் கொண்டிருப்பாள். எனக்குச் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும். வரட்டுமா?"
"நானும் வருகிறேன் கமலா. உன்னைக் காரில் வீட்டில் இறக்கி விட்டு விட்டு வந்து விடுகிறேன்."
"வேண்டாம் அக்கா! இவரைக் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் முதல் பொறுப்பு. நான் போய்க் கொள்கிறேன்."
"இவரைத் எனக்குத் தேடித் தந்த உன்னைக் கவனித்துக் கொள்வதும் என் பொறுப்புத் தான். மாமா இவரைச் சற்று நேரம் பார்த்துக் கொள்வார். மேலும் இவருக்கு நான் மருந்து வாங்கி வரவும் வேண்டும். வா, போகலாம்" என்ற பவானி முகத்தைத் துடைத்துக் கொண்டு வீட்டிலிருந்த பிரிக்கப்படாத இரண்டு நெருப்புப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
கமலாவின் வீட்டை அடைவதற்கு முன்பு உமாகாந்த் பற்றிய ரகசியத்தைக் காப்பதாக அவளிடம் உறுதி மொழி பெற்றுக் கொண்டாள் பவானி. அவ்வாறே வாக்களித்த கமலா, "அக்கா! இந்தப் பக்கம் தப்பியோடிய கைதி உலாவுவதாகவும் ஸி.ஐ.டி.கள் அவனைத் தேடுவதாகவும் பேச்சு வந்தபோது, 'சட்டரீதியாக அந்தக் கைதிக்கு உதவ முடியுமா என்று பார்ப்பேன்' என்றுதான் சொன்னீர்களே யொழிய அந்தக் கைதி உங்கள் காதலனாகவும் இருகக் கூடும் என்பதாகப் பிரஸ்தாபிக்கவே யில்லையே? அப்படி நீங்கள் சந்தேகித்ததை என்னிடம் மறைத்துத்தானே விட்டீர்கள்" என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.
"உண்மைதான் கமலா. எங்கள் காதல் விவகாரம் ஒரு பெரிய கதை. ஒரு நாள் சாவகாசமாகச் சொல்கிறேன்" என்றாள் பவானி.
"உங்கள் காதலனும் இப்படியேதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்! தம் தேகத்தில் சக்தி திரும்பியதும் தம்மைப் பற்றிய விவரங்களை ஆதியோடு அந்தமாக விவரிப்பதாய்க் கூறினார். அதன் பிறகுதான் உங்களை அழைத்துப் போக நான் வந்தேன்."
"அவர் வாழ்வின் சமீப நிகழ்ச்சிகளில் எனக்கே புரியாத சில மர்மங்கள் இருக்கின்றன கமலா. கொஞ்சம் தெம்பு பெற்று அவர் அந்தப் புதிர்களை விடுவிக்க வேண்டும் என்றுதான் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றாள் பவானி.
(தொடரும்)
-------------
அத்தியாயம் 51 -- அடிபடாத மான்!
கமலாவின் வீட்டைப் பவானியின் கார் நெருங்க நெருங்க உள்ளே அமர்ந்திருந்த பெண்கள் இருவரும் மனத்தால் நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருந்தார்கள். ஒருவர் மனம் மற்றொருவருக்கு ஒளிவு மறைவு ஏதுமின்றிப் புலனாகி விட்டதால் ஏற்பட்ட புதியதொரு பந்த பாசத்துடன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"சீக்கிரமே உமாகாந்த் சுகமடைந்து உங்கள் இருவரையும் மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது அக்கா!" என்றாள் கமலா.
"அது சுலப சாத்தியமாகத் தோன்றவில்லையே?" என்று பவானி சொன்னபோது குரலில் ஏக்கத்தை விடக் கவலை அதிகமாகத் தொனித்தது. "ஸி.ஐ.டி.கள் இருவர் இவரைத் தேடிக் கொண்டே இருக்கும்போது ஊரறிய எப்படித் திருமணம் நடக்கமுடியும்?"
"அப்படியானால் ரகசியமாக ஒரு கோயிலில் விவாகம் பண்ணிக் கொள்ளுங்கள்! சுவாமி சந்நிதி முன் மாலை மாற்றிக் கொள்ளுங்கள். சாட்சிக்கு என்னை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். நாத்தனார் ஸ்தானத்திலிருந்து மூன்றாவது முடிச்சை நான் அழுத்தமாகப் போடுகிறேன்!"
"ரகசியமாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடலாம். ஆனால் ரகசியமாக இல்வாழ்க்கை எத்தனை காலம் நடத்த முடியும்? வீட்டிலேயே சதா ஒளிந்திருந்து உமா காந்த் என் சம்பாத்தியத்தில் வாழ விரும்புவாரா என்பது தெரிய வேண்டும்."
"அப்படியானால் நம் இருவருக்கு மிடையில் கல்யாண விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை அக்கா. இருவருக்குமே திருமணம் நடக்கவே போகிறதில்லை!"
"ஏன் கமலா அப்படிச் சொல்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு? கல்யாணம் உன்னை மணப்பதாகக் கோர்ட்டிலேயே உறுதி கூறினாரே!"
"அவர் தயாராக இருக்கலாம். அவர் தாயார் குறுக்கே நிற்கிறாரே! ஊரார் இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அந்த அம்மாள் எங்கள் வீட்டுக்கு வந்து ரொம்பவும் அவமானப் படுத்தி ஏசிப் பேசிவிட்டார் அக்கா!"
கமலா தொடர்ந்து விவரித்ததை யெல்லாம் கேட்ட பவானி, கடைசியில், "அடி அசடே! இதற்காக நீ உயிரை விட நினைத்தது சுத்த தப்பு. கல்யாணம் உண்மையில் உன்னிடம் ரொம்ப ஆசையாக இருக்கிறார். அவர் அம்மாவை நீ கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லையே? அவள் ஏதோ உளறியதற்காக நீ ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள்.
"அக்கா! உங்கள் சமாதானம் கொஞ்சம் கூட அர்த்தமுள்ளதாகவோ ஏற்கக் கூடிய தாகவோ இல்லை. ஆனாலும் நீங்கள் எனக்குச் சமாதானம் சொல்கிறீர்களே, அதுவே எனக்குப் பெரிய ஆறுதல். எது எப்படிப் போனாலும் உங்கள் அன்பும் நட்பும் எனக்குக் கிடைக்குமென்றால் அதற்காகவே எத்தனை ஜன்மா வேணுமானாலும் எடுத்து அவற்றில் எத்தனை துன்பங்கள் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். அப்படிப் பார்க்கும்போது நான் உயிரை விட நினைத்தது வடிகட்டின அசட்டுத்தனம்தான்" என்றாள் கமலா.
வீட்டு வாசலில் பவானியின் கார் நின்றபோது அங்கே ஏற்கனவே கல்யாணத்தின் 'டப்பா மாடல்' கார் நின்று கொண்டிருந்தது. "அடடே! கல்யாணம் வந்திருக்கிறார் போலிருக்கிறதே" என்றாள் பவானி.
"அக்கா! தீப்பெட்டிகளுக்கு ரொம்ப நன்றி. மறக்காமல் மருந்து வாங்கிக் கொண்டு போங்கள்" என்று கூறிவிட்டு இறங்கினாள் கமலா.
ஆனால் பவானி அவளை வாசலில் இறக்கிவிட்டுப் போகத் தயாராக இல்லை. "அடி கள்ளி! காதலன் வந்தவுடன் என்னை நைஸாக அனுப்பிவிடப் பார்க்கிறாயா? முடியாது! உள்ளே வந்துவிட்டுத்தான் போவேன்" என்று கூறியபடியே இறங்கினாள் பவானி. உண்மையில் இவ்வளவு கால தாமதமாக வந்ததற்காகக் கமலாவுக்கு 'அர்ச்சனை' நடக்கப் போகிறதே என்ற கவலையில்தான் அவளைப் பின்தொடர்ந்தாள் பவானி.
* * * *
கல்யாணம் ரேழியைத் தாண்டி வந்து நின்றான்.
சாய்வு நாற்காலியில் சயனித்திருந்த மாசிலாமணி, அந்த இடத்தை விட்டு அசையாமல், "எங்கே வந்தாப்போல?" என்றார்.
"சும்மாத்தான், பார்த்து விட்டுப் போகலாம்னு..." என்றான் கல்யாணம்.
"பார்த்தாச்சுல்ல?"
கல்யாணத்துக்கு ரோஷமாக இருந்தது. 'விருட்'டென்று திரும்பிவிட வேண்டும்போல் இருந்தது. ஆனால் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டான். தன் தாயார் மீது தவறு இருக்கலாம்; தானும் அவர்களுக்கு அவமானம் தேடித் தந்தவன்தான். எனவே பல்லைக் கடித்துக் கொண்டு தன்மானத்தை மென்று விழுங்கிவிட்டுப் பேசினான்.
"இதைக் கேளுங்க, மாசிலாமணி! நீங்க வருத்தப்படறதிலே நியாயம் இருக்கு. சற்று முன்னால் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்கும் விசுவைச் சந்தித்தேன். என் அம்மா நேற்று இங்கு வந்துவிட்டுப் போனதாக அவன் சொன்னான். அவனுக்கு விஷயம் ஒன்றும் சரியாக விளங்கவில்லை. ஆனால் குரல் உயர்ந்து வாக்குவாதம் நடந்தது என்ற அளவுக்குப் புரிந்து கொண்டு சொன்னான். அப்புறம் நீங்க யாரும் இரவு சாப்பிடலை என்றும் கமலா அக்கா அழுதுகொண்டே தனக்கு மட்டும் சாதம் போட்டதாகவும் கூறினான். அதிலிருந்து ஏதோ விபரீதமாக நடந்திருப்பதாகப் புரிந்து கொண்டேன். நான் இப்போ இங்கே வந்ததற்கே அதுதான் காரணம். என்ன நடந்தது என்று நீங்கள் எனக்கு விவரம் ஏதும் சொல்ல வேண்டாம். எனக்கு அதைக் கேட்கப் பிடிக்கலை. என் தாயாரை நீங்க தூஷிக்க நான் கேட்டுக் கொண்டிருப்பது நாகரிகமாகாது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தீர்மானமாக வைத்துக் கொள்ளுங்கள். அன்றைக்குக் கோர்ட்டில் நான் கொடுத்த வாக்குறுதிப்படி நான் நடந்து கொள்ளத் தயார். என் தாயார் என்ன சொல்லி யிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் பெண்ணை நீங்கள் எனக்கு மணம் முடித்துக் கொடுப்பீர்களானால் நான் ஏற்கக் காத்திருக்கேன். அவளை நல்லபடியாக வைத்துக்கொள்வேன். இதனால் என் பெற்றோரிடம் நான் சண்டை போட்டுக் கொள்ள நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன். நாளடைவில் என் அம்மாவின் மனம் மாறிவிடும். அவளுக்கு நான் ஒரே பிள்ளை. கமலா தங்கமான பெண் என்பதையும் அவள் சீக்கிரமாகவே புரிந்து கொள்வாள்."
"தங்கமோ, வைரமோ இந்தப் பெண்ணையே காணோமே" என்று புலம்பினாள் சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட காமாட்சி. "வேலை இங்கே எனக்கு இடுப்பு ஒடியறது. அவள் என்னடா வென்றால் பொழுது புலரும்போது 'வத்திப் பெட்டி வாங்கி வருகிறேன்' என்று போனவள்தான்.
மணி பத்தரை ஆகிறது, அவளைக் காணோம். எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது, உங்க அம்மா பேசியது பொறுக்காமல் அவள் எங்கேயாவது குளம் குட்டையைத் தேடிப் போய் விட்டாளோ என்று."
"சேச்சே! அப்படி யெல்லாம் ஒன்றும் இராது. நான் போய்த் தேடிப் பார்த்து அழைத்து வருகிறேன்" என்றான் கல்யாணம்.
இந்தச் சமயத்தில் பவானியும் கமலாவும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள். வந்த இருவரையும் இந்த மூவரும் வியப்புடன் பார்த்தது பார்த்தபடி இருக்க, பவானி சொன்னாள்: "நல்லவேளையாகக் கல்யாணமும் இங்கே இருக்கிறார்! மூவரும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பெண்ணை இனிமேல் தனியாக எங்கேயும் அனுப்பாதீர்கள்! இவள் பாட்டுக்கு எதையோ குருட்டாம்போக்கில் யோசனை பண்ணிக் கொண்டு என் காரிலே வந்து முட்டிக்கொண்டு பயத்தில் மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். காயம் ஒன்றும் படாமல் கடவுள்தான் காப்பாற்றினார். நல்ல வேளை நான் காரை ரொம்ப மெதுவாக ஓட்டி வந்தேன். சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தினேன். இவளுக்கு பயம் பாதி, மனக் கிலேசம் பாதி. மயங்கி விழுந்து விட்டாள். காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் போய் ஆசுவாசப்படுத்தி அழைத்து வந்தேன். பெண்ணை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். கல்யாணம்! உங்களுக்கும்தான் சொல்கிறேன், கமலா இனி உங்கள் பொறுப்பு!"
"நான் அப்பவே போக வேண்டாம்னு முட்டிண்டேன்! 'விசுவை அனுப்புடீ'ன்னேன். கேட்டாளா? இல்லையே! இனிமேல் ஒரு நிமிஷம்கூட இவளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது!" என்றாள் காமாட்சி.
"அதற்கென்ன இனி கல்யாணம் வைச்சுச் சமாளிக்கிறார்!" என்றாள் பவானி.
----------------
அத்தியாயம் 52. -- அடிபட்ட புலி!
நிறைய இரத்தம் இழந்திருந்த போதிலும் கடுமையான ஜுரம் அடித்தபோதிலும் உமாகாந்த் இரண்டு மூன்று தினங்களில் குணமடைந்தான். டாக்டரின் மருந்தைவிடப் பவானியும் அவளிடம் மிகவும் பிரியமுள்ள மாமா குணசேகரனும் பார்த்துப் பார்த்துச் செய்த பணிவிடைகளினால்தான் பிழைத்தான் உமாகாந்த்.
முதன் முதலாக அவன் கண் இமைகள் படபடத்தபோது பவானி அருகில் இருந்தாள். அவளைக் கண்டதும் முகமலர்ச்சியுடன் எழுந்திருக்க முயன்றான். அந்த முயற்சியிலேயே அவன் மறுபடியும் பலவீனமடைந்து மூர்ச்சையானான். பவானி பதறினாள், விம்மினாள், துடித்தாள்.
மாமா குணசேகரன், "நீ இப்படித் தவிப்பதால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. எவ்வளவோ படித்த பெண்ணாகிய உனக்கு இது ஏன் புரியவில்லை?" என்று கடிந்துகொண்டார். "'நாட்டுப் பற்று என்ற நங்கையை மணந்து, மாமியார் வீடே கதி என்று இருக்கிறான் என் காதலன்' என்றாயே, இவன்தானா?" என்று கேட்படியே சிறிது தண்ணீரை உள்ளங்கையில் எடுத்து அவன் முகத்தில் தெளித்தார்.
உமாகாந்தனுக்குப் பிரக்ஞை வந்தது. பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.
பவானி அவன் மறுபடியும் மயக்கம்போட்டுவிடப் போகிறானோ என்ற கவலையுடன் சொர சொரவென்று முரட்டுத்தனமாக இருந்த அவன் கரத்தை எடுத்துத் தன் பளிங்குக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டாள். கண்ணீரால் அந்த விரல்களைக் குளிப்பாட்டினாள்.
"பவானி! உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்லிவிட்டுப் போவதற்காக வந்தேன்" என்றான் உமாகாந்தன், ஈன சுரத்தில்.
"நீங்கள் ஓர் உண்மையையும் கூற வேண்டாம். நாலு வருஷங்களுக்குப் பிறகு நீங்கள் என்னிடம் திரும்பி வந்து சேர்ந்துவிட்டீர்கள். எனக்கு இந்த உண்மை ஒன்றே போதும்!" என்றாள் பவானி.
அப்படியில்லை பவானி, என்னைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாயோ என்று எனக்கு ஒரே கவலை. இந்த நாலு ஆண்டுகளும் அதே சிந்தனை!"
"என்ன எண்ணினேன்? தேச பக்த தியாகி என்று பெருமைப்பட்டேன். படிப்பையும் பட்டத்தையும் தொடர்ந்து கிடைக்கக்கூடிய பெரிய உத்தியோகத்தையும் துரும்பாக மதித்து உதறிவிட்டுப் போன வீரர் என்று நினைத்து நினைத்துப் பூரித்தேன். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் என்னை விட்டுப் பிரிந்து போனது எனக்கு ஒரே கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் அதே சமயம் என்னிடம் சொல்லியிருந்தால் நான் உங்களைத் தடுத்திருக்க மாட்டேனா என்றும் எண்ணிப் பார்த்தேன். எனவே என்னிடம் சொல்லாமலே நீங்கள் சுதந்திர தேவிக்குப் பணிவிடை செய்ததும் நியாயமே என்ற முடிவுக்கு வந்தேன். கடமைக்காகக் காதலையும் துறந்த உங்கள் திட சித்தம் என் னைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. நீங்கள் விடுதலை பெற்றுத் திரும்பி வரும்தினத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டு பொறுமையோடும் ஆவலோடும் காத்திருந்தேன்."
பவானி பேசப் பேச உமாகாந்த் முகத்தில் ஏதோ புதிரை விடுவிக்க முடியாத பாவம் படர்ந்தது!
"பவானி! தேச பக்தத் தியாகியாக நான் சிறைசென்றதை யார் உனக்குச் சொன்னது?"
"வேறு யார்? உங்கள் தகப்பனார்தான்!" என்றாள் பவானி. "நீங்கள் கல்லூரிக்குச் சில நாட்கள் வராமலிருக்கவே என்னால தாங்கிக்கொள்ள முடியவில்லை. கூச்சத்தை விட்டு உங்கள் வீட்டில் என்னை யாராவது தப்பாக நினைத்துக் கொண்டாலும் பாதகமில்லை என்ற தீர்மானத்துடன் போய் விசாரித்தேன். உங்கள் தகப்பனார் அன்பொழுக என்னிடம் பேசினார். 'உன் கல்லூரி நண்பர்கள் எல்லாருமே பெருமைப்படக் கூடிய விஷயத்தைச் சொல்லப் போகிறேன்' என்று ஆரம்பித்து நீங்கள் கைதான விஷயத்தைச் சொன்னார். குடும்பத்தினரில் கூட யாருக்குமே தெரியாமல் நீங்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சில சதிச் செயல்களில் ஈடுபட்டிருந்தீர்களாமே! அண்டர்கிரவுண்ட் பேர்வழிகள் சிலருக்கு உதவினீர்களாமே! ஸி.ஐ.டி.கள் அதைத் தெரிந்து கொண்டு உங்களை அரெஸ்ட் செய்து ஓர் ஆங்கிலேய மாஜிஸ்டிரேட் முன் கொண்டுபோய் நிறுத்தினார்களாம். அவன் ஒரேயடியாக ஆறு ஆண்டுகள் தீட்டி விட்டான். 'அப்பீல்' செய்திருந்தால் தண்டனை குறைந்திருக்கும். ஆனால் நீங்கள் மேல் கோர்ட்டுக்குப் போவது தேச பக்தனுக்கு இழுக்கு என்று கூறிவிட்டீர்கள். எத்தனை வருஷங்களானாலும் தண்டனையை இன்முகத்துடன் ஏற்பேன் என்று அடித்துச் சொன்னீர்கள். இதையெல்லாம் விவரித்தபோது உங்கள் அப்பா கருணாகரன் கண் கலங்கி விட்டார்!"
புதிர் நீங்கிய பாவத்தில் புன்னகை மலர்ந்தது உமாகாந்தின் முகத்தில். நிம்மதி பெற்றவனாகக் கண்களை மூடிக் கொண்டான். அவன் நெற்றியை இலேசாக வருடினாள் பவானி. "எவ்வளவோ கேட்க வேண்டும்; எத்தனையோ பேச வேண்டும்" என்றான். "இப்போது என்ன அவசரம்? மெல்லப் பேசலாம்; ஓய்வாக இருங்கள்" என்று அவன் புருவங்கள் மீதாக ஒரு விரலால் கோடு இழுத்தாள். அவன் தூங்கிவிட்டதாக எண்ணி நெற்றியில் இதழ் பதித்தாள்.
"அவ்வளவுதானா? கன்னத்தில் ஒன்று?"
"அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திதிருக்க வேண்டும் நீங்கள்! முதலில் இந்த எட்டு நாள் தாடியை வழித்தெடுங்கள்! கிட்ட நெருங்க விடேன் என்கிறது" என்று கூறிச் சிரித்தாள் பவானி.
மாறாத புன்னகையுடன் கண்ணயர்ந்தான் உமாகாந்தன்.
'என்னதானிருந்தாலும் என்னிடம் மட்டுமாவது உங்கள் ரகசிய நடவடிக்கைகளை விவரித்திருக்கலாம்' என்று அவன் முகத்தைப் பார்த்தவாறே தனக்குத் தானே பேசிக் கொண்டாள் பவானி. 'எந்தச் சிறையில் இருக்கிறீர்கள் என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று உங்களைப் பார்க்க வந்திருக்க மாட்டேனா? யாரும் உங்களைச் சிறையில் வந்து பார்க்கக் கூடாது என்று கூறி விட்டீர்களாம். அப்படி வந்தால் உங்கள் மன உறுதி தளர்ந்துவிடும் என்று அஞ்சினீர்களாம். எனவே உங்கள் அப்பா நீங்கள் சிறைப் பட்டிருக்கும் ஊரைக் கூற மறுத்துவிட்டார். உங்கள் கோரிக்கைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியவளானேன் நான். நீங்கள் அடைந்து கிடக்கும் சிறைச்சாலை எது என்று கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஒரு கடிதமாவது நீங்கள் எனக்குப் போட்டிருக்கக் கூடாதா? அப்போது நீங்கள் இருக்குமிடம் எனக்குத் தெரிந்து போய்விடுமே என்றா?
'ஆனால் அப்படிப்பட்ட கடுமையான தவத்தை மேற்கொண்ட நீங்கள், பிறகு அத்தவத்தைக் காப்பாற்ற முடியாமல் தண்டனைக் காலம் முடியு முன்னரே சிறையிலிருந்து தப்பி ஓடி வருவானேன்? அது உங்கள் இயல்புக்கு ஒத்து வருவதாக இல்லையே? மகிழ்ச்சியுடன் சிறை வாசத்தை ஏற்கும் கர்ம வீரன் செய்யும் காரியமா இது? சிறையிலிருந்து தப்பி ஸி.ஐ.டி.களால் பின் துரத்தப்பட்டு, அலைந்து துப்பாக்கித் தோட்டா பாய அடிபட்டு, ஓடி ஒளிந்து சாவுடன் போராடுகிற நிலையில் என்னிடம் வந்து சேருவானேன்?
'உமாகாந்த்! உங்கள் சிறைவாசத்துக்குப் பின்னால் எனக்குத் தெரியாத விவரங்கள் ஏதேனும் இருக்கிறதா? அவை என்ன?... மெல்லத் தெரிந்து கொள்கிறேன்... அவசரமில்லை. இப்போது நீங்கள் ஆழ்ந்த நிம்மதியுடன் உறங்குங்கள். இழந்த தெம்பைப்பெறுங்கள். அதுதான் முக்கியம்.'
இத்தருணத்தில் கீழே வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. பவானி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். மாஜிஸ்டிரேட் கோவர்த்தனன் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்!
'இவர் எங்கே இப்போது வந்து சேர்ந்தார்? பூஜை வேளையில் கரடி நுழைந்த மாதிரி?' என்று நினைத்து கொண்ட பவானி அவசரம் அவசரமாகத் தன் அறைக் கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டு மாடிப்படி இறங்கிச் சென்றாள். இயல்பான் முகத் தோற்றத்தைச் சிரமப்பட்டுத் தருவித்துக் கொண்டு அவரிடம் பேசினாள்.
"வாருங்கள்! என்ன, இரண்டு வாரங்கள் கழித்து வருவதாகச் சொல்லிவிட்டு அதற்குள் வந்து நிற்கிறீர்களே? என் முடிவைத் தெரிந்து கொள்ள இவ்வளவு அவசரப்பட்டால் எப்படி?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
"நான் அதற்காக வரவில்லை, பவானி! ஒரு முக்கிய செய்தியைச் சொல்லி உன்னை எச்சரித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். அடிபட்ட புலி ஒன்று இந்த ஏலமலைச் சாரலில் உலவி வருகிறதாம். நீ அடிக்கடி அந்தப் பெண் கமலாவுடன் அங்கே யெல்லாம் போகிறாயல்லவா? அதை இனிமேல் நிறுத்திக் கொள்!" என்றார் கோவர்த்தனன்.
'அடிபட்ட புலி' என்றதுமே மாடியிலிருந்த உமாகாந்தனை நினைத்து உள்ளம் நடுங்கினாள் பவானி. இந்த மாஜிஸ்டிரேட் பொல்லாதவர். 'அடிபட்ட புலி' என்று உமாகாந்தனைத்தான் வர்ணிக்கிறார் என்று அவள் மனம் உணர்த்தியது.
(தொடரும்)
----------------
அத்தியாயம் 53 -- கொடூரப் புன்னகை
நடிப்புக் கலை சிரமமானதாக நாடக ஒத்திகைகளின் போது தோன்றவே இல்லை. சமூக சேவா சங்க அங்கத்தினர்கள் பலரும் பார்த்துப் பிரமிக்கும்படி அவள் வெகு இயல்பாகத் தான் ஏற்ற பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்தாள். ஆனால் இப்போது மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் கூறுவது ஒன்றுமே தனக்குப் புரியாததுபோல் நடிக்க நேர்ந்த போதுதான் அந்தக் கலை உண்டமையில் எவ்வளவு சிரமமான ஒன்று என்பதை அவள் உணர்ந்தாள். "நீங்கள் எங்கே, எப்போது வேட்டைக்குப் போனீர்கள்? அதிலும் ஒரு புலியைச் சுடும் அதிர்ஷ்டம் உங்களுக்கு எப்படி அடித்தது? ஏலமலைக் காட்டில் அதிகபட்சம் நரி அல்லது ஓநாய் போன்ற துஷ்ட மிருகங்கள்தாம் உண்டு என்று சொல்வார்களே?" என்றாள்.
"இது இரண்டு கால் புலி" என்றார் மாஜிஸ்திரேட், அவளைக் கூர்ந்து நோக்கியவாறு. "நாலு கால் புலியைவிடப் பயங்கரமானது! கதர்ச் சட்டை போட்டுக்கொண்டு சாது போல் ஊரை ஏமாற்றும்!"
பவானி தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?" என்றாள்.
"புரிய வைக்கிறேன், பவானி! இப்படி உட்கார்" என்று கூறி, கோவர்த்தனன் சோபா ஒன்றில் அமர்ந்து பவானியை அருகில் உட்காருமாறு ஜாடை காட்டினார்.
"எனக்கு இப்போ நேரமில்லையே? ஹைகோர்ட்டுக்குப் போக வேண்டிய ஒரு வழக்கை ஆராய்ந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்ற பவானி அவர் காட்டிய இடத்தில் அமராமல் எதிரே ஒற்றை சோபாவில் அமர்ந்தாள்.
"பாதகமில்லை. இதுவும் ரொம்ப முக்கியமான விஷயம்தான். ரொம்ப நேரம் உன்னைத் தாமதப்படுத்த மாட்டேன், சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்...பவானி! இது நாள் வரை நான் உன்னிடம் கூறத் தயங்கிக் கொண்டிருந்த விஷயங்களை இப்போது செல்லியே தீரவேண்டியிருக்கிறது. இனியும் தாமதிப்பதற்கில்லை. என்னைப் பற்றி இதுவரை உன்னிடம் ஒரு விவரமும் நான் சொன்னதில்லை அல்லவா? இப்போது கூறுகிறேன், கேள்! நானும் உன்னைப் போல் கல்கத்தாவிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவன்தான்!"
"அப்படியா!" என்று அளவற்ற ஆச்சரியத்துடன் வினவினாள் பவானி.
"ஆமாம்" என்றார் கோவர்த்தனன்.
"இன்னும் கேள்! என் தகப்பனார் பெயரைக்கூறினால் மேலும் ஆச்சரியப்படுவாய் நீ!"
"கருணாகரனா?"
"கரெக்ட்! என் தம்பி உமாகாந்தன் தான் உன் கல்லூரிக் கதாலன்!"
பவானியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. "அவர் தமக்கு ஓர் அண்ணன் இருப்பதாக என்னிடம் சொல்லவல்லையே?"
"தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவன் எங்களிடம் கூறவே இல்லையே? உங்கள் இருவர் இடையிலும் கல்லூரியில் ஏற்பட்ட சிநேகம் காதலாக மலர்ந்தது என்பதற்கு முதல் அடையாளம், நீ எங்கள் தகப்பனாரைத் தேடிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாயே, அப்போதுதான் கிடைத்தது!"
"நான் கருணாகரனைத் தேடி வந்தது உங்களுக்குத் தெரியுமா?" என்றாள் பவானி வியப்புடன்.
"அப்போது தெரியாது. அச்சமயம் நான் வெளியே போயிருந்தேன். திரும்பி வந்ததும் என் தகப்பனார் சொன்னார்."
"என்ன சொன்னார்?"
"'நல்லவன் போல் நடித்து நம்மையெல்லாம் ஏமாற்றியது போதாதென்று பாவம், இந்த இளம் பெண்ணை வேறு உமாகாந்த் ஏமாற்றியிருக்கிறான்' என்று அனுதாபப்பட்டார்."
"என்னது! ஏமாற்றுவதா?"
"ஆமாம், பவானி! என் அப்பா உமாகாந்த் பற்றி உன்னிடம் என்ன கூறினார்? தேசபக்தத் தியாகி; ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ரகசிய சதித் திட்டத்தில் ஈடுபட்டதால் உள்ளே தள்ளிவிட்டார்கள் என்றுதானே?"
"ஆமாம்."
"அதுவும் ஓர் ஏமாற்று வேலைதான்! அவர் கூறியது முழுப் பொய்!"
"பொய்யா? எதற்காகப் பொய் சொல்லி என்னை ஏமாற்ற வேண்டும்?" ------------
128.jpg "பின்னே, தம் மகன் பாங்கில் கொள்ளை அடித்துவிட்டு அகப்பட்டுக் கொண்டான்; கம்பி எண்ணுகிறான் என்று ஒரு பெண்ணிடம் ஒப்புக் கொள்ள எந்தத் தகப்பனுக்கு மனம் வரும்?"
"எனக்குத் தலையைச் சுற்றுகிறது" என்றாள் பவானி.
"ஸ்டெடி! ஸ்டெடி!" என்று அன்பும் ஆதரவுமாகக் கூறியபடியே பரிவுடன் எழுந்து வந்து தன் சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையால் அவள் நெற்றியில் முத்து முத்தாய் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்தார் கோவர்த்தனன். உரிமையோடு உள்ளே சாப்பாட்டு அறைக்குச் சென்று அங்கிருந்த மண் கூஜாவிலிருந்து ஜில்லென்ற தண்ணீர் கொண்டு வந்து உபசரித்தார்.
"இப்படி நீ கலங்கிப் போவாய் என்பதால்தான் இத்தனை நாள் வரை உன்னிடம் இதையெல்லாம் சொல்லாமலே இருந்தேன், பவானி. என் தம்பி பற்றி அவமானத்துக்குரிய விஷயங்களைப் பேச எனக்கு மனமும் வரவில்லை.
"இப்போது மட்டும் மனம் வந்ததாக்கும்" என்றாள் பவானி, கோபத்தை மறைத்துக் கொள்ளாமல்.
"வேறு வழியில்லை, பவானி! நீ கோபப் பட்டாலும் நான் கூறித்தான் ஆகவேண்டும். உமாகாந்த் ஜெயிலிலிருந்து தப்பிவிட்டான். அவனைப் பின்துரத்திக் கொண்டு இரண்டு ஸி.ஐ.டி.கள் அவன் புகைப்படத்துடன் வந்திருக்கிறார்கள். சில காலம் முன்பு எனக்கும் உமாகாந்துக்கும் இடையில் உள்ள உருவ ஒற்றுமை பற்றிக் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்தார்கள். 'பயங்கரக் குற்றவாளி அவன்; சீக்கிரம் கண்டுபிடியுங்கள்' என்று ஓர் அதட்டல் போட்டு அனுப்பி வைத்தேன். இன்று காலை அந்தக் கையாலாகாத பேர் வழிகள் மறுபடியும் என்னிடம் வந்தார்கள்."
"வந்து....?" - நெஞ்சத் துடிப்புடன், ஆனால் அமைதி இழந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் வினவினாள் பவானி.
"ஏலமலைக் காட்டில் அவன் ஒளிந்து திரிந்திருக்கிறான். இவர்களும் விடாமல் தேடியிருக்கிறார்கள். மலைச் சாரலில் உள்ள சின்னச் சின்ன கிராமங்களிலெல்லாம் விசாரித்திருக்கிறார்கள். கடைசியில் துப்பறிந்து ஒரு குடிசைக்குள் இருந்தவனைப் பிடிக்கப் போனபோது அவன் தப்பி ஓடியிருக்கிறான். ஒரு ஸி.ஐ.டி. அவனை நோக்கிக் கைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்...."
ஏற்கனவே பவானிக்குத் தெரிந்த விஷயம்தான் என்றாலும் அவளுக்கு இப்போதும் தூக்கிவாரிப் போட்டது.
"பவானி! நீ உன் காதலனாகக் கருதி வந்த ஒருவனைப் பற்றி இப்படியெல்லாம் நான் பேச நேர்ந்ததற்காக எவ்வளவு வருத்தப்படுகிறேன், தெரியுமா? என் தம்பியைக் குறித்து மட்டமாகப் பேச வேண்டியிருக்கிறதே என்பதைவிட அதிகமாக உன் காதலனைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறதே என்பதால் நான் கலங்கி நிற்கிறேன். ஆனாலும் உண்மைகளை எத்தனை நாள் மறைக்க முடியும்? மனசைக் கல்லாக்கிக் கொண்டு கூற வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீயும் உள்ளத்தைத் திடப்படுத்திக் கொண்டு கேட்டுத்தான் ஆக வேண்டும்."
"சொல்லுங்கள்! அடிபட்ட புலி என்று ஆரம்பத்திலேயே நீங்கள் குறிப்பிட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று ஊகிக்கிறேன்" என்று நாத் தழுதழுக்கப் பேசினாள் பவானி. அவள் கண்களில் தளும்பி நின்ற நீரைக் கோவர்த்தனன் துடைக்க அனுமதியாமல் ஒருபுறம் திரும்பிப் புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
கோவர்த்தனன் ஏமாற்றம் அடைந்தவராக ஒரு பெருமூச்சுடன் திரும்ப வந்து தமது இருக்கையில் அமர்ந்தார்.
"துப்பாக்கித் தோட்டா உராய்ந்து சென்ற காயத்துடனேயே அவன் தட்டுத் தடுமாறி ஓடியிருக்கிறான். ஏலமலைக் காட்டுப் பகுதிக்குள் புகுந்து இவர்களுக்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு மாயமாய் மறைந்து விட்டிருக்கிறான். இதுகள் இரண்டும் கையைப் பிசைந்து கொண்டு இன்று காலை என்னிடம் வந்து நிற்கின்றன. நன்றாக 'டோஸ்' கொடுத்து அனுப்பினேன்."
"ஏன், தம்பி தப்பி விட்டானே என்று சற்று சந்தோஷப்படக் கூடாதா?"
"அது எப்படி முடியும், பவானி? ஒரு வக்கீலாக இருந்து கொண்டு இப்படிக் கேட்கிறாயே? சட்டத்துக்குமுன் எல்லோரும் சமம் அல்லவா? என் தம்பி என்பதால் ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டதற்காக நான் சந்தோஷப்பட முடியுமா?"
"அப்புறம்?"
"அப்புறமென்ன? அவனுக்குப் பலமாக அடிபட்டிருக்கிறது; அதிக தூரம் போக முடியாது; வைத்திய உதவி இல்லாமல் அதிக நாட்கள் உயிர் தரிக்க முடியாது. எனவே இந்த வட்டாரத்திலேயே யாரிடமாவது
'தஞ்சம்' என்று வந்து சரணடைய் வேண்டியதுதான். எந்த டாக்டர் அவனைப் பரிசோதித்தாலும் குண்டு பட்ட காயம் என்று உடனே புரிந்துக் கொண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்துவிடுவார். சீக்கிரமே அவன் அகப்பட்டுக் கொள்வான். ஆனால் அடிபட்ட புலி ஆபத்தானதும்கூட. போகிற பிராணன் எப்படி இருந்தாலும் போகப் போகிறது, பின்னோடு இன்னும் நாலு பேரை எமலோகப் பட்டணத்துக்கு அழைத்துப் போகலாம் என்று பழி வாங்கும் உணர்ச்சி எழும். அதனால்தான் முக்கியமாக உன்னை எச்சரிக்க வந்தேன். அவன் இங்கே வந்தாலும் வரலாம். போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யட்டுமா?" என்ற கோவர்த்தனன் பவானியை மறுபடியும் கூர்ந்து கவனித்தார்.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். தோட்டக்காரன், சமையல்காரன் எல்லாரும் இருக்கிறார்கள். மாமா குணசேகரனும் இருக்கிறார். எனக்கென்ன கவலை, அல்லது பயம்? ஒரு ஃபோன் செய்தால் நீங்களும் ஓடி வரப் போகிறீர்கள்!"
"யோசனை பண்ணாதே, பவானி! ஏதாவது உதவி தேவை என்றால் உடனே ஃபோன் பண்ணு!" பவானி அதற்கு ஆகட்டும் என்று பதில் கூறவில்லை. அதற்கு பதிலாக, "எனக்கு இத்தனை நாட்களாகப் புரியாமலிருந்த ஒரு விஷயம் இப்போதுதான் அர்த்தமாகிறது" என்றாள்.
"என்ன அது?" "உங்களை முதன் முதலாக ராமப்பட்டணத்தில் பார்த்த போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.
என்னையும் அறியாமல் உங்களிடம் ஒரு மதிப்பும் மரியாதையும் என்னிடம் ஏற்பட்டு வளர்ந்தது. உமாகாந்தின் ஜாடைகளை உங்களிடம் நான் கண்டதால்தான் என் மனம் அப்படி உங்களிடம் கவர்ந்து இழுக்கப் பட்டிருக்கிறது."
"மதிப்பும் மரியாதையும் உருவாக்கிய கவர்ச்சி மட்டும்தானா பவானி? அதற்கு அதிகமாக ஒன்றுமில்லையா?" என்று ஏக்கத்துடன் கேட்டார் கோவர்த்தனன்.
பவானி இதற்கும் பதில் கூறாமல், "எனக்குப் புரியாமல் இருக்கும் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்" என்றாள். "உமாகாந்த் பாங்கில் கொள்ளை அடித்தார் என்பதை என்னிடம் வேணுமானால் உங்கள் அப்பா மறைக்கலாம். ஆனால் ஒரு பெரிய பாங்குக் கொள்ளையை எப்படி உலகின் பார்வையிலிருந்து மறைப்பது? பத்திரிகைகள், ரேடியோ எதிலுமே அப்படி ஒரு செய்தி இடம் பெற வில்லையே?"
"என் அப்பாவுக்குக் கல்கத்தாவில் இருந்த செல்வாக்கு உனக்குத் தெரியாது பவானி. இந்தச் செய்தி பத்திரிகைகளுக்கு எட்டவே இல்லை. போலீசுக்குச் சில பத்திரிகை நிருபர்கள் ஃபோன் செய்து கேட்டபோது அவர்கள் கேள்விப்பட்டது வதந்தியாக இருக்கும் என்று போலீஸார் கூறிவிட்டனர். ஏன் தெரியுமா? போலீஸ் ஐ.ஜி.யிடம் விஷயத்தைப் பத்திரிகைகளுக்கு வெளியிட வேண்டாம் என்று என் அப்பா கேட்டுக் கொண்டார். அவரும் சம்மதித்து அப்படியே உத்தரவு பிறப்பித்து விட்டார். பாங்கு நிர்வாகிகளும் விஷயம் வெளியாவதை விரும்ப வில்லை. அவர்களுக்கென்னவோ பணம் திரும்பக் கிடைத்து விட்டது. திருடனும் கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். பத்திரிகையில் செய்தி வெளியானால் பாங்குக்கு வீணான அவப் பெயர்தானே? எனவே, விஷயத்தை அமுக்கிவிட்டார்கள். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கேஸ் நடந்த போது கவனித்த ஓரிரு பத்திரிகை நிருபர்களை என் அப்பா விலைக்கு வாங்கிவிட்டார்!"
"எல்லாவற்றுக்கும் சரியான பதிலைத் தயாராக வைத்திருக்கிறீர்கள்!" என்றாள் பவானி.
"உண்மை எப்போதும் தெளிவானது. குழப்பம் இல்லாதது. ஒரு வக்கீலான உனக்குத் தெரியாததா?" என்றார் கோவர்த்தனன். "பவானி! உமாகாந்திடம் நீ இனியும் ஏமாந்து போகக் கூடாது. சிறையிலிருந்து தப்பி ஓடி வந்த ஒருவனுக்கு என்றுமே நிம்மதியில்லை. அவனால் எங்கும் வேலை தேடிக் கொள்ளவோ, உத்தியோகம் பார்க்கவோ முடியாது. சுதந்திரமாக நாலு பேர் அறியவளைய வருவது அவனுக்குச் சாத்தியமில்லை. யாராவது அவனுக்கு அடைக்கலம் தந்து அவனை மறைத்து வைத்து வேளா வேளைக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தால்தான் உண்டு. இதை எதிர்பார்த்து உமாகாந்தன் உன்னிடம் வருவான். சிறையிலிருந்து தப்பியதும் அவன் நேரே கல்கத்தா சென்று உன்னைப் பற்றி விசாரித்திருப்பான். நீ இங்கே சுயமாகச் சம்பாதிக்கிறாய் என்று அறிந்ததும் அது தனக்கு அனுகூலமாயிற்று என்ற எண்ணத்துடன் இந்தப் பக்கம் வந்திருக்கிறான். ஸி.ஐ.டி.கள் சதா பின் துரத்தியதால் இதுவரை உன்னை அவனால் அணுக முடியாமல் இருந்திருக்கிறது. ஆனால் எப்படியும் அவன் உன்னுடன் தொடர்பு கொள்ள முயல்வான் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீ அவனை மறைத்து வைத்துக் காப்பாற்ற மறுத்தால் அவனுக்குக் கோபம் வரும். அந்தக் கோபத்தில் அவன் என்ன செய்வான், எப்படி நடந்து கொள்வான் என்றே சொல்ல முடியாது! அதே நேரத்தில் ஒரு பாங்குக் கொள்ளைக்காரன் உன்னை மிரட்டிப் பணிய வைக்கவும் நீ அனுமதிக்க முடியாது. உன் நிலைமை தர்ம சங்கடமானதுதான். ஜாக்கிரதை!"
"என்னை எச்சரிப்பதற்காகவும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவுமேதான் நீங்கள் கல்கத்தாவிலிருந்து என்னைப் பின் தொடர்ந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்தீர்களா என்ன? நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அப்படியல்லவா நினைக்கத் தோன்றுகிறது?"
"அதுவும் வாஸ்தவம்தான், பவானி. நீ என் தகப்பனாரை வந்து பார்த்துவிட்டுப் போனாய், உமாகாந்தைப் பற்றி அன்புடன் விசாரித்தாய் என்பதை அறிந்ததிலிருந்து நீ உமாகாந்தின் காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். தகாத ஒருவன் மீது காதல் கொண்ட உன்னிடம் எனக்கு அனுதாபம் பொங்கியது. உன்னைப் பற்றி உன் கல்லூரி மாணவ மாணவியர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்துத் தெரிந்து கொண்டேன்.
அப்புறம் உன் வீட்டு வேலைக்காரன் ஒருவனை என் கைக்குள் போட்டுக் கொண்டு அவ்வப்போது அங்கு நடப்பனவற்றை அறிந்தேன். தண்டனைக் காலம் முடிந்ததும் உமாகாந்த் நேரே உன்னைப் பார்க்கத்தான் வருவான் என்று உணர்ந்திருந்தேன். அச்சமயம் என் தம்பியால் உனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்ற கவலை எனக்கு இருந்தது. உன்னைக் காப்பாற்ற வேண்டிய கடமையை நானே ஏற்றுக் கொண்டேன். நீ பி.எல். தேறியதும் தொழில் நடத்த இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தாய். ஜப்பான்காரன் வரும் போது நீ கல்கத்தாவில் இருக்க வேண்டாம் என்று உன் பெற்றோர் கருதியதுதான் முக்கிய காரணம் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே நானும் அங்கிருந்து புறப்பட்டு வந்து இங்கே எனக்கு உத்தியோகம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து கொண்டேன். உனக்காக எவ்வளவு சிரமப்படுகிறேன், பார்த்தாயா?
"இங்கே வந்த பிறகு தொழில் முறையிலும் சமூக சேவா சங்கத்திலும் அடிக்கடி நாம் நெருங்கிப் பழக நேர்ந்தது. என் கடமை உணர்வு நாளாவட்டத்தில் காதலாகவும் அரும்பி விட்டது. மலர்ந்து மணம் பரப்பவும் அந்தக் காதல் காத்திருக்கிறது. ஆனால் பவானி என்ற வன தேவதை அந்த அரும்பு மலர அனுமதி தர மறுக்கிறாள்! என்ன செய்ய?" - ஒரு சோகமான நெடுமூச்சுடன் தாம் அமர்ந்திருந்த ஆசனத்தில் சரிந்து சாய்ந்தார் கோவர்த்தனன்.
பவானியின் நெஞ்சம் கோவர்த்தனனுக்காக நெகிழ்ந்து கொடுத்தது. மாடியில் இருக்கும் காதலனை எண்ணி அவள் மனம் பதை பதைத்தது. என்ன செய்வது, என்ன பேசுவது என்று புரியாமல் தயங்கினாள்.
கடைசியில், "இவ்வளவு தூரம் என்னிடம் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதற்காக நான் உங்களுக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி சொல் கிறேன், வந்தனம் தெரிவிக்கிறேன்! திரும்பத் திரும்ப இதுதானா? இவற்றை இவ்வளவு சுலபமாகச் சொல்கிற உன் வாயில் காதலிக்கிறேன் என்ற சொல் மட்டும் நுழையமாட்டேன் என்கிறதே, ஏன்?" - எரிச்சலும் ஆத்திரமுமாகக் கேட்டார் கோவர்த்தனன். பவானிக்கு அழுகையே வந்துவிடும் போலாகி விட்டது. அவரை எப்படியாவது அனுப்பி வைத்தால் போதும் என்கிற நிலையில்ல், "இந்தக் களேபரமெல்லாம் ஒருவாரு அடங்கட்டும். தப்பியோடிய கைதி மறுபடியும் சிறைப்படட்டும். அப்புறம் நம்மைப் பற்றி யோசிக்கலாம்" என்றாள்.
"அதுவும் சரிதான்" என்றார் கோவர்த்தனன். "இங்கு வந்துள்ள ஸி.ஐ.டிகள் வெறும் உதவாக்கரைகள். சென்னையில் கமிஷனருக்கு ஃபோன் போட்டுக் கெட்டிக்காரர்களாக இன்னும் நாலு பேரைத் தேர்ந் தெடுத்து அனுப்பச் சொல்கிறேன்" என்று கூறியவாறே எழுந்து வாசலை நோக்கி நடந்தார் கோவர்த்தனன். "நான் வரட்டுமா, பவானி? உமாகாந்த் பற்றி நான் கூறிய தெல்லாம் ஞாபகமிருக்கட்டும். ஹி இஸ் அடேன்ஜரஸ் ஃபெல்லோ! சிறைப்படுவதற்கு முன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைக் குத்திக் காயப்படுத்தியிருக்கிறான். சிறையிலிருந்து தப்பிய போதும் இரண்டு காவலர்களைத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறான். மறுபடியும் பிடிபட்டால்...." கோவர்த்தனன் காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டார்..... "எந்த ஜட்ஜானாலும் குறைந்தபட்சம் பத்து வருஷம் தீட்டி விடுவார்! விஷயம் தெரிந்து அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் யாரானாலும் அவர்கள்பாடும் அகப்பட்டுக் கொண்டால் திண்டாட்டம்தான். ஹார்பரிங் அ கிரிமினல். இரண்டு வருஷமாவது கம்பி எண்ண வேண்டியிருக்கும்!"
பவானியின் மேனி இதைக் கேட்டு நடுங்குவதைப் பார்த்தார் கோவர்த்தனன். கொடூரமான ஒரு திருப்திப் புன்னகையுடன் காரைக் கிளப்பிச் செலுத்திக் கொண்டு போனார்.
(தொடரும்)
-----------------
அத்தியாயம் 54 -- "பவானியின் காதலன்"
இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணசுந்தரம் மறுபடியும் கமலாவின் வீட்டுக்குப் போனான். கமலாவும் விசுவும் மட்டும் இருந்தார்கள். 'நல்ல வேளையாகப் போயிற்று, கமலாவுடன் சற்று மனம் விட்டுப் பேசலாம்' என்று அவன் சந்தோஷப்பட்டது தப்பாகப் போயிற்று. கமலா அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. முகம் காட்டாமல் தலை குனிந்து கொண்டோ அல்லது வெட்கப்பட்டுக் கதவுக்குப் பின் மறைந்திருந்தோ பேசினாளா என்றால் அதுவும் கிடையாது.
"அப்பாவும் அம்மாவும் கோவிலுக்குப் போயிருக்காங்களாக்கும்?" என்றான் கல்யாணம். பதில் இல்லை. "திரும்புவதற்கு நேரமாகுமோ?" என்றான். அதற்கும் பதில் இல்லை. "இப்பத்தான் போனார்களா? அல்லது கிளம்பி ரொம்ப நேரமாச்சா?" என்று மீண்டும் ஒரு கேள்வியைப் போட்டுப் பார்த்தான்.
"என்னவோ கேட்கிறாரே, பதில் சொல்லேண்டா" என்றாள் கமலா விசுவைப் பார்த்து.
"ஓ! பேச வருகிறதே! திடீரென்று ஊமையாகி விட்டாளாக்கும் உன் அக்கா என்று நினைத்தேன்!"
"ஊமையாவது, ஒண்ணாவது! கல்யாணம் மாமா! இன்னைக்குக் காலையிலே அக்கா மறுபடியும் சுத்தியைக் கையில் போட்டுக் கொண்டபோது கொடுத்த சாபங்களையும் வசவுகளையும் கேட்காமல் போயிட்டேளே! மிஷின்கன்லேருந்து குண்டுகள் பறக்கிற மாதிரி சடசடவென்று பொழிந்து தள்ளினா! அம்மாவே அசந்து போயிட்டாள்னா பார்த்துக் கொள்ளுங்களேன்!"
கல்யாணம், விசு பேசி முடிக்கும் வரை காத்திராமல், பதறி, பாய்ந்து, கமலாவின் அருகே சென்று அவள் கையைப் பிடித்துப் பார்த்து, "எங்கே காயம்? எங்கே? எங்கே?" என்று கேட்டான்.
"போதும் உங்கள் கரிசனம்" என்று கமலாகையை உதறினாள். "காயம் கையில் ஒன்றுமில்லை, நெஞ்சில்!"
"ஐயய்யோ! நெஞ்சில் எப்படி அடிபட்டது?"
"உங்களாலேதான். மனத்தில் இருப்பதை முன்னாலேயே சொல்லி யிருந்தால் இப்படி ஊர் சிரிக்கும்படி யாகியிருக்குமா?"
"ஊராரெல்லாம் எதற்குச் சிரிக்கிறார்கள்?"
"விசுவைக் கேளுங்கள்!"
"என்னடா பயலே அக்காவிடம் என்னடா உளறிக் கொட்டினாய்?"
"நான் ஒன்றும் உளரவில்லை; உண்மையைத்தான் சொன்னேன், மாமா! பள்ளிக் கூடப் பசங்கள் உங்களைத் தூரத்தில் பார்க்கிறபோதே, 'கமலாவின் கல்யாணம்' என்று கூறிச் சிரிக்கிறாங்க. அதைச் சொன்னேன். இவளுக்கு அது அவமானமாய் இருக்காம்!"
"இதிலே என்ன அவமானம்? பசங்கள் பேசறதிலேதான் என்ன தப்பு? நான் கமலாவின் கல்யாணம்தான்!"
"நீங்கள் முதலிலேயே உங்கள் மனத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு பேசியிருந்தால் இவ்வளவும் நடந்திருக்காதல்லவா? ஒன்றிலிருந்து ஒன்றாக எவ்வளவு தப்பபிப்பிராயங்கள், எவ்வளவு வேண்டாத நிகழ்ச்சிகள் எத்தனை ஏச்சுப்பேச்சுக்கள் கோபதாபங்கள்?"
"நீயும்தான் அவசரப்பட்டு அசட்டுக் காரியம் செய்தாய்! அந்தக் கிழவரைக் கல்யாணம் செய்து கொள்ள ஏன் சம்மதித்தாய்?"
"நீங்கள் அந்தப் பவானியின் மோக வலையிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தீர்கள். என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டீர்கள் என்று நினைத்தேன்."
"இதோ பார், கமலா! நீ என்ன வேணுமானாலும் சொல்லு. ஆனால் மிஸ் பவானியைப் பற்றி மட்டும் தப்பாக எதுவும் பேசாதே!"
"அடேயப்பா! பவானி என்கிற பெயரைச் சொல்வதற்குள்ளே இத்தனை கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே! நான் அப்படி என்ன தகாத வார்த்தை சொல்லிட்டேன்?"
"இன்னும் என்ன கூற வேண்டும்? மோகவலை வீசினாள், மயக்கு மொழி பேசினாள் என்றெல்லாம் ஊரிலே இருக்கிற காலிப் பசங்கள் தான் ஏதோ உளறுகிறார்கள் என்றால் அத்தகைய சொற்களை நீயும் பயன்படுத்தலாமா? என் மனத்தையே நான் சரியாகப் புரிந்து கொள்ளாதது என் தவறு. அதற்காகப் பவானியின் நடத்தைக்குக் களங்கம் கற்பிப்பது போல் எதுவும் சொல்லக் கூடாது! அது மகாபாவம்! அவளைப் போல் ஒண்டர்ஃபுல் லேடியை நான் பார்த்ததே இல்லை! என்ன படிப்பு. என்ன அறிவு! அவ்வளவு ஞானம் இருந்தும் எத்தனை அடக்கம்! எவ்வளவு இனிய சுபாவம்!"
"ஒரேயடியாக வர்ணிக்கிறீர்களே!"
"உண்மையைத்தான் கூறுகிறேன். உன்னைப் பற்றிப் பவானி எவ்வளவு உயர்வாகப் பேசுகிறாள் தெரியுமா? நீ இப்படிச் சொன்னாய் என்று தெரிந்தால் எவ்வளவு வருத்தப் படுவாள்!"
"அடடா! நான் அக்காவைப் பற்றி என்ன தகாத விஷயமாகக் கூறிவிட்டேன் என்று இப்படிப் பதறுகிறீர்கள்? உங்களைப் பற்றித்தானே நான் சொன்னேன்? நீங்கள் பவானியிடம் மோகம் கொண்டிருக்கலாம்; பவானி அக்கா வேறு ஒருவரிடம் மோகம் கொண்டிருக்கலாம்...."
வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பே, 'ஐயோ! தவறு செய்து விட்டோமே; பவானி அக்காவுக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டோமே!' என்று கமலாவுக்குத் தோன்றியது. அதே கணத்தில் சுளீரென்று அவள் கன்னத்தில் வலி தெரிந்தது!
வலியை உணர்ந்து கண்களில் கண்ணீரும் பீறிட்ட பிறகுதான் வலியின் காரணத்தை உணர்ந்தாள் கமலா. 'கல்யாணம் தன்னைக்கை நீட்டி அடித்திருக்கிறான்!' விண் விண் என்று இன்னமும் வேதனை தரும் அளவுக்குப் பலமாக விழுந்த அறை!
'தம்பி விசுவுக்கு எதிரே இப்படி அவமானப்படுத்துமளவுக்கு நாம் என்ன அப்படிப் பெரிய தவறு செய்துவிட்டோம்? உண்மை பேசியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' கமலா பிரமித்து நின்றாள்.
கல்யாணத்துக்கும் கஷ்டமாகப் போய்விட்டது. என்னதான் தனக்குப் பவானி மீது மதிப்பிருந்தாலும் கமலாவைக் கைநீட்டி அடிக்கத் தனக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்தான். "மன்னிச்சுடு, கமலா! உன்னை அடித்த இந்தக் கையை வெட்டிவிடலாம் என்று ஆத்திரமாக வருகிறது எனக்கு. இருந்தாலும் நீ மற்றவர்களைப் பற்றி, அதுவும் பவானியைப் பற்றி அவதூறாகப் பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை" என்றான்.
"நான் ஒன்றும் கற்பனை செய்து கதை அளக்கவில்லை; நிஜத்தைத்தான் கூறினேன். வேண்டுமானால் பவானியின் வீட்டுக்கே நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்றாள் கமலா. பவானியிடம் கொடுத்த வாக்கைக் காப்பதைவிடக் காதலனிடம் தான் பொய் பேசாதவள் என்பதை நிரூபித்துக் கொள்வது அவசரமாகவும் முக்கியமாகவும் பட்டது அவளுக்கு.
"என்னத்தைப் பார்க்கிறது?" என்றான் கல்யாணம், ஆத்திரத்துடன்.
"பவானியின் காதலனை" என்றாள் கமலா ரோஷத்துடன்.
"சீச்சி! பைத்தியம் முற்றிப் பிதற்றுகிறாய்! நான் வருகிறேன். உன்னை மதித்து உன் வீட்டு வாசலை மிதித்ததே தவறு!" கல்யாணம் கோபத்துடன் திரும்பி வாசல் பக்கம் போனான். கமலா ஓடிப் போய் வழி மறித்து நின்று, அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள். கண்களில் நீர் பெருகித் தாரை தாரையாகக் கன்னங்களில் வழிந்தோட, "நான் பெரிய தவறு செய்து விட்டேன்; கோபத்தில் ஏதோ பேசிவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பவானி அக்கா எனக்குத் தெய்வம் மாதிரி பல சந்தர்ப்பங்களில் உதவியிருக்கிறார்கள். அக்காவிடம் போய் எதையும் கேட்டு விடாதீர்கள்! உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.
"கண்டிப்பாக இதைப் பற்றிக் கேட்டு விட்டுத்தான் மறு காரியம் பார்க்கப் போகிறேன்! இப்போதே நேரே பவானி வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்!" என்றான் கல்யாணம்.
"ஐயோ! நான் அக்காவுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேனே; ஆத்திரத்தில் ஏதோ உளறி விட்டேன். அதை மறந்து விடுங்களேன்; பிளீஸ்!" என்றாள் கமலா.
"ஒரு நாளும் மறக்க முடியாது! எப்படி மறக்கும்? சாமானிய விஷயமா இது?"
"இதோ பாருங்கள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரகசியம் இருக்கும். அதற்காக அவர்களைத் தவறாக எண்ணக் கூடாது. இப்போ என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கையிலும் கூட ஒரு ரகசியம் இருக்கத்தான் செய்கிறது."
கல்யாணம் தூக்கிவாரிப் போட்டதுபோல் அவளைத் திரும்பிக் கூர்மையாகப் பார்த்தான். "ஆ! என் அம்மா கூறியது நிஜம்தானா? 'வாயைக் கழுவிக் கொண்டு வா' என்று அவளிடம் சீறினேனே நான்; அது தான் தப்பா?"
"ஐயோ! நான் அதைச் சொல்லவில்லை. அது முழுப் பொய்!" என்று அலறினாள் கமலா. "ஊரிலே வேலையற்ற விடலைகள் நாலு பேர் கட்டிவிட்ட கதை. என்னைப் பார்த்தால் அவ்வளவு கேவலமானவளாகவா தோன்றுகிறது, உங்களுக்கு?" நெஞ்சு வெடித்துவிடும் போல் அவன் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள் கமலா.
கல்யாணத்தின் உள்ளத்தில் கருணை பொங்கியது. "இல்லை, கமலா! நான் அதை நம்பவேயில்லை. 'பணத்துக்கு ஆசைப்பட்டு ஊர் ஊராகப் போய்க் கிழவர்களாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்வதே உனக்குக் காரியம்' என்று கடவுளே என் எதிரில் வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்." அவன் குனிந்து அவள் தோள்களைப் பற்றி எழுப்பிக் கைக் குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்தான். "கபடமில்லாத இந்தக் கண்கள், மாசு மறுவற்ற இந்த முகம், அவமானம் தாங்காமல் துவளும் இந்த உடல் எல்லாம் எனக்கு உண்மையை உணர்த்து கின்றன கமலா....ஆனால்......வேறு என்ன ரகசியம் இருக்கமுடியும் உன் வாழ்க்கையில்?"
"வந்து....வந்து...." விசும்பலுக்கிடையில் வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன.
"சொல்லு, கமலா!" அவன் ஆதரவாக அவள் முதுகைத் தடவினான்.
"நான் ....நான்....எனக்கு...."
கல்யாணத்துக்குச் சிரிப்பு வந்து விட்டது.
"நான்.... நீ...... எனக்கு.....உனக்கு! என்ன ரகசியம் பொதிந்து கிடக்கிறது இதற்குள்ளே?"
"அப்பாவும் அம்மாவும் என்... சொந்தப் பெற்றோர்கள் இல்லை.... அநாதையான என்னை எடுத்து வளர்த்தார்கள். எனக்கே இந்த விவரம் சமீபத்தில்தான் தெரியும்.
"ஓ! இவ்வளவுதானே!" என்றான் கல்யாணம். "இதை நானும் பவானியும் என் றைக்கோ ஊகித்துவிட்டோம். அவர்கள் உன்னை நடத்தும் விதத்திலிருந்து இதைத் தெரிந்து கொண்டு பல தடவை எங்களுக் குள் பேசிக் கொண்டிருக்கிறோம்."
"இதை அறிந்தால் நீங்கள் என்னை வெறுத்துவிடுவீர்களோ என்றுதான் பயந்தேன். 'யாருக்குப் பிறந்தவளோ, என்ன ஜாதியோ?' என்று அருவருப்படைவீர்களே என்று ஒரே கவலை."
"சேச்சே! அப்படியெல்லாம் எண்ணுகிறவனாயிருந்தால் சமூக சேவா சங்கம் என்று எதற்காக நடத்துகிறேன்? சீர்திருத்த நாடகம் ஏன் போடப் போகிறேன்? அசடே! அதையெல்லாம் நினைத்து நீ இனியும் கவலைப் பட்டுக் கொண்டிராதே! எங்கே, சிரி பார்க்கலாம்?" கல்யாணம் கமலாவின் முகவாயைப் பற்றினான். அவள் நாணிக் கோணித் தன் முகத்தை எங்கே புதைத்துக் கொள்வது என்று புரியாமல் 'களுக்' கென்று சிரித்தபடி அவன் நெஞ்சிலேயே சாய்ந்தாள்.
"ஆல் இஸ் வெல், தட் எண்ட்ஸ் வெல்!" என்று விசு தன் ஆங்கிலப் பாடம் ஒன்றின் கடைசி வரியைக் கூறிய போதுதான் அவன் அங்கிருப்பது அவர்கள் நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டு விலகிக் கொண்டார்கள்!
--------------------
அத்தியாயம் 55 -- யாரை நம்புவது?
தண்மதி விரித்த வெள்ளி நிலவு. இரவுக் கன்னிக்கு இதமளிக்கவென்று வீசிய தென்றல் காற்று. மொட்டை மாடியில் உமாகாந்தனும் பவானியும் அவள் மாமா குணசேகரனும் விச்ராந்தியாக அமர்ந்திருந்தார்கள். பவானி ரொம்ப உற்சாகமாக இருந்தாள். உமாகாந்த் இவ்வளவு சீக்கிரம் எழுந்து நடமாட ஆரம்பிப்பான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. டாக்டர் கொடுத்த நல்ல மருந்து உமாகாந்தின் இயற்கையான திடகாத்திரமான தேக வாகு, பவானியின் பணிவிடை எல்லாம் சேர்ந்து அவனைத் துரிதமாக உடல்தேற வைத்தன. முகம் மட்டும் சற்றே வெளிறியிருந்தாலும் அவன் வதனத்தில் அவள் முன்பு பார்த்துத் தன் மனத்தைப் பறி கொடுத்திருந்த ஜீவ களை திரும்பியிருந்தது.
"பவானி! ஏதாவது பாடேன்" என்றார் மாமா குணசேகரன். அப்படி ஓர் அழைப்புக்காகவே காத்திருந்தவள் போல் உடனே மகிழ்ச்சியோடு பாட ஆரம்பித்தாள் பவானி.
அந்தத் தோட்டத்தில் ஒரு மாமரத்தில் வாசம் புரிந்த குயில் ஏற்கனவே பகலெனக் காய்ந்த வெண்மதியால் குழப்பம் அடைந்திருந்தது. இப்போது பவானியின் இனிய சாரீரம் ஒலிக்கவே, தன் இனத்தைச் சேர்ந்த சகாக்கள் விடிந்து கூவுவதாக எண்ணி அதுவும் பதிலுக்கு குரலெடுத்துப் பாட ஆரம்பித்தது.
பாட்டு முடிந்ததும் உமாகாந்தன் நெடுமூச் செறிந்தான்.
"களைப்பாக இருக்கிறதா? பால் கொண்டு வருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ளலாமே" என்றாள் பவானி.
"இருந்த கொஞ்சநஞ்ச சோர்வையும் உன் பாட்டு போக்கிவிட்டது பவானி. ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆனந்த வாழ்க்கை எனக்குக் கிட்டப் போகிறது என்று எண்ணியபோது தான் ஏக்கத்தில் பெருமூச்சு பிறந்தது. என் உடம்பு குணமாகிவிட்டது. பவானி, உன்னிடமும் உன் மாமாவிடமும் நான் விடைபெற வேண்டிய தருணம் வந்து விட்டது!"
"இது என்ன அசட்டுத்தனம்?" என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள் பவானி.
"நான் இங்கே தொடர்ந்து இருப்பதுதான் அசட்டுத்தனம்" என்றான் உமாகாந்த். "உங்களை ஆபத்துக்குள்ளாக்க நான் விரும்பவில்லை. என்னை ஸி.ஐ.டி.கள் பின் தொடர்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் அளிப்பது தவறு என்பது எனக்குத் தெரியும்.
"சட்டத்தின் உடும்புப் பிடியிலிருந்து ஒருவனை எப்படி மீட்பது என்று பவானிக்குத் தெரியும்" என்றார் குணசேகரன். உமாகாந்த் இதைக் கேட்டுச் சிரித்துவிட்டான். பவானி அந்தச் சிரிப்பில் மகிழ்ந்து புன்னகை புரிந்தாள். பால் நிலவின் வெண் முத்துக்கள் பிரகாசித்தன.
"குணசேகரன் ஸார்! உங்கள் மருமகளின் ஆற்றலை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணாதீர்கள். ஆனால் என்னைக் காப்பாற்ற பவானியின் சட்ட ஞானம்கூடப் போதாது. அவளை ஓர் இக்கட்டான நிலையில் வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு நீங்கள் உதவியதற்கெல்லாம் நன்றி கூறிவிட்டு என் வழியே போக வேண்டியவன்தான் நான். ஆனால் அதற்கு முன்பாக என்னைப் பற்றிப் பவானி மனத்தில் ஏதும் தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்கிவிட மட்டும் விரும்புகிறேன்.
"ஆமாம், தப்பபிப்பிராயம் ஏற்பட்டுத்தான் இருக்கிறது" என்றாள் பவானி. "தண்டனைக் காலம் முடியும் முன்னர் உங்களை யார் தப்பித்துக் கொண்டு வரச் சொன்னது? இன்னும் இரண்டு வருஷங்கள் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாதா? ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லையே? சிறை புகத் தயங்காத தேச பக்தத் தியாகிக்கு முழுத் தண்டனைக் காலத்தையும் அனுபவிக்கும் நெஞ்சுரம் வேண்டாமா?"
"தேச பக்தனாகச் சிறை சென்றிருந்தால் அந்த நெஞ்சுரம் எனக்கு நிச்சயம் இருந்திருக்கும் பவானி!"
"அப்படியானால் உங்கள் தகப்பனார் என்னிடம் கூறியதெல்லாம் பொய்தானா?" திகைப்பும் வியப்புமாகக் கேட்டாள் பவானி.
"பவானி! நான் பாங்கில் கொள்ளை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பெற்றுச் சிறை சென்றேன். ஆனால் சந்தர்ப்பக் கோளாறினால் சில சமயம் குற்றமற்றவரும் சிறைபுக நேர்வதுண்டு என்பது வக்கீலாகிய உனக்குத் தெரியுமே!"
"எனக்கு ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. நீங்கள் சிறை புகக் காரணம் எதுவானாலும் சரி. அதனால் என் காதல் மாறப் போவதில்லை என்பதுதான் அது."
உமாகாந்தனின் மேனி சிலிர்த்தது. "குணசேகரன் ஸார்! என்னைப் போன்ற பாக்கியசாலி இந்த உலகில் வேறு யார் உண்டு?" என்றான்.
"எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது" என்றார் குணசேகரன். "உன் அப்பா இவளிடம் ஒன்றைச் சொல்ல, இப்போது நீ வேறு ஒரு கதை கூறப் போகிறாயா?"
"ஆமாம், ஸார்! கதை சொல்லத்தான் போகிறேன். கேட்டுவிட்டு எதை நம்புவது என்று நீங்களே தீர்மானிக்க வேண்டியதுதான். என்னிடம் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க எந்தச் சாட்சியமும் இல்லை" என்றான் உமாகாந்தன். (தொடரும்)
-------------
அத்தியாயம் 56 கைதியின் கதை
மகாலக்ஷ்மி பாங்கின் பிராஞ்சு மானேஜர் கருணாகரனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சட்டப் படிப்பு முடித்துக் கொண்டு உத்தியோகம் ஏற்கும் நிலையில் இருந்தான். இளைய பையன் உமாகாந்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் தேசபக்தி மிக்கவன். இரண்டொரு முறை மறியல் செய்து தடியடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு வந்தான். இன்னும் சிறை செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.
'பிள்ளை இப்படி நடந்து கொள்கிறானே, நாளைக்கு இவன் சிறைக்குப் போகும்படி நேர்ந்தால் என்ன செய்வது?' என்று ரொம்பவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார் கருணாகரன். அவன் சிறை சென்றால் அது தனக்குப் பெரிய அவமானம் என்று நினைத்தார். 'ஆனமட்டும், "மறியல், போராட்டம் இதெல்லாம் வேண்டாம். சிரத்தையாகப் படித்துத் தேறி நல்ல உத்தியோகத்தில் அமர்கிற வழியைப் பார்" என்று எடுத்துச் சொன்னார். ஆனால் உமாகாந்தன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே யில்லை. சுதந்திரப் போரில் தானும் இயன்றமட்டும் ஈடுபட்டதுடன் புரட்சியாளர் பலருக்கு இரகசியமாக உதவியும் வந்தான்.
அவனுடைய இந்தப் போக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கருணாகரனுக்கு இருந்த ஒரே ஆறுதல், மூத்த மகனாவது சமர்த்தா யிருக்கிறானே, சட்டப் படிப்பை முடித்துக் கொண்டு நல்ல உத்தியோகத்தில் அமரத்தயாராய் இருக்கிறானே என்பதுதான். உமாகாந்தனை உள்ளத்திலிருந்து ஒதுக்கிக் கோவர்த்தனனை அடிக்கடி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் உண்மையில் தமையன் கோவர்த்தனன் கெட்ட சகவாசங்களால் குடிப்பது, பணம் வைத்துச் சீட்டாடுவது போன்ற காரியங்களில் இறங்கி மார்வாரிகளிடம் ஏகமாகக் கடன்பட்டிருந்தான். இது தகப்பனாருக்குத் தெரியாது. ஒரு கட்டத்தில், "உடனே கடனைத் திருப்பித் தராவிட்டால் வாரண்டு" என்று மார்வாரி கடைசி எச்சரிக்கை செய்து விட்டான். 'அவன் வீட்டு வாசலுக்கே வந்து ரகளை செய்தால் என்ன நடக்கும்? என்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பா மனமுடைந்து போய் அதிர்ச்சியில் இறந்தே விடுவார். அப்படி ஒருவேளை இந்தச் செய்தி கேட்டு அவர் இதயம் நின்றுபோக வில்லை என்றாலும் ஒரு முழக் கயிறு தேடுவார். அவர் மானஸ்தர். இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது?' என்று கோவர்த்தனன் யோசித்துக் கொண்டிருந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் சற்றும் எதிர்பாராத விதமாக உமாகாந்தனுக்கும் தகப்பனார் கருணாகரனுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஒன்று நிகழ்ந்தது. அதைக் கேட்டுக் கொண்டே இருந்த கோவர்த்தனன், தான் மார்வாரியின் இரும்புப் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழி புலப்பட்டு விட்டது என்று எண்ணினான். தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையில் நடந்த சொற்போரைக் காது கொடுத்துக் கேட்டான்.
காயம் பட்ட தேசத் தொண்டர்களின் உதவி நிதிக்காகத் தன் தகப்பனாரிடம் கணிசமான தொகையை நன்கொடையாகக் கேட்டான் உமாகாந்தன்.
கருணாகரனோ, "ஊரில் இருக்கிற நன்றி கெட்ட நாய்க்கெல்லாம் சிகிச்சை பண்ண இங்கே என்ன பணம் கொட்டி வைத்திருக்கிறதா?" என்றார்.
"அப்பா! நீங்கள் தேசபக்தர்களை அவமரியாதையாகப் பேசியதை மறந்து விடுகிறேன், பணம் கொடுத்தால்!" என்று உமா காந்தன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்.
"பணத்துக்குத் திருடப் போக வேண்டியதுதான்" என்றார் கருணாகரன்.
"அதை நீங்கள் சுலபமாகச் செய்யலாமே? மகாலக்ஷ்மி பாங்கின் பிராஞ்சு மானேஜர் தானே நீங்கள்!" என்றான் உமா.
தகப்பனாருக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது. "அடப் பாவி! என்னைப் பார்த்தா அப்படிச் சொன்னாய்? நான் வேலை செய்கிற பாங்கில் நானே கொள்ளையடிக்க வேண்டும் என்று சொல்ல உனக்கு நாக்குக் கூசவில்லையா?" என்று மிகுந்த ஆத்திரத்தோடுகேட்டார்.
"கொள்ளையடித்தால் என்ன?" என்று துடுக்காகப் பேசினான் உமாகாந்தன். "பாங்கில் இருக்கும் பணமெல்லாம் எங்கேயிருந்து வந்தது? ஏழைகளைக் கொள்ளை யடித்து அடைந்த பணத்தைப் பணக்காரர்கள் பாங்கில் போட்டு வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே?" என்றான்.
உமாகாந்தன் ஒரு தீவிர சோஷலிஸவாதி. ஆகவே அவன் விளையாட்டாக இப்படிப் பேசவில்லை. இளமை வேகத்துடன் அன்று அவன் மனப்பூர்வமாக நம்பியதையே கூறினான்.
அவன் தகப்பனாரோ நன்றி விசுவாசம், தர்ம நியாயம் முதலிய பண்புகளில் ஊறித் திளைத்து வளர்ந்தவர். எனவே அவரால் தம் மகனுடைய பேச்சைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ரௌத்திராகாரமானார். "அட, சண்டாளா! நீ உருப்பட மாட்டாய் என்று நான் என்றைக்கோ தீர்மானித்து விட்டேன். உன் படிப்புக்கும் அதற்கும் இதற்குமென்று இத்தனை காலம் நான் செலவழித்ததெல்லாம் தண்டம். என் முகத்திலேயே இனி விழிக்காதே! வீட்டை விட்டு வெளியே போ!" என்று ஆவேசத்துடன் கத்தினார். அவர் மனைவியும் மூத்த மகனும் அவரைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றனர். அவர் பிடிவாதக்காரர். அந்தப் பிடி வாதத்தைக் குறையின்றி மகன் உமாகாந்தனும் பெற்றிருந்தான். எனவே அவன் வெளியேறி விட்டான்.
அன்றிரவு கருணாகரனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. யாரோ பாங்கியைக் கொள்ளை யடிப்பது போல் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்துக் கொண்டவர் பாங்கின் வாசல் சாவி, இரும்பு அறைச் சாவி எல்லாம் பத்திரமாக இருக்கின்றனவா என்று ஒரு தடவை பார்க்க நினைத்து வீட்டின் இரும்பு பீரோவைத் திறந்தார். அவருக்கு பகீரென்றது. பாங்குச் சாவி வழக்கமாக அவர் வைக்குமிடத்தில் காணோம்! அவருக்கு உடனே உமாகாந்தன் ஞாபகம்தான் வந்தது. அவன்தான் பழி வாங்கும் நோக்கத்துடன் பாங்குச் சாவியைத் தனக்குத் தெரியாமல் கொண்டு போய் விட்டான் என்று தீர்மானித்து விட்டார். பாங்கியை நோக்கிப் பரபரப்புடன் ஓடினார். அந்த இரவு நேரத்தில் வாகன வசதி ஒன்றும் கிடைக்காது. நல்ல வேளையாக பாங்கு ரொம்ப தூரத்திலும் இல்லை. கிளை அலுவலகம் அமைந்திருந்த அதே பேட்டையில் தான் அவருக்கு வீடு. என்றாலும் வயதுக் கால்த்தில் பழக்கமில்லாத விதமாக ஓட நேர்ந்ததில் அவருக்கு ஒரேயடியாக வியர்த்துக் கொட்டி, இறைக்கவும் செய்தது. அதையொன்றும் பொருட்படுத்தாமல் அவர் விரைந்தார். பாங்கியை நெருங்கிய போது யாரோ ஒருவன் சுவர் ஏறிக் குதித்து வெளியேறுவது போல் நிழலாகத் தெரிந்தது. "யார் அது?" என்று அதட்டினார். பதில் இல்லை. ஓடிப் போய்ப் பார்த்தார். பாங்கியின் இரும்பு அறை திறந்து கிடந்தது. பணப்பெட்டி காலியாக இருந்தது. நெஞ்சம் பதறித் துடிக்க அவர் வாசலுக்கு வந்தார். வாட்ச் மேன் அடிபட்டு மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்தார். 'திபுதிபு' வென்று யாரோ ஓடும் சத்தம் கேட்டது. இவர் கூடவே, "திருடன்! திருடன்! பிடி, பிடி!" என்று கத்திக்கொண்டு ஓசை கேட்ட பக்கமாகச் சாலையில் விரைந்தார்.
உமாகாந்தன் வீட்டை விட்டு வெளியேறும் போது அவன் தாயார் அவனைத் தனியே சந்தித்து அழுதாள். "அப்பாதான் கோபத்தில் ஏதாவது சொல்கிறார் என்றால் நீயும் உடனே பந்த பாசங்களை அறுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவதா?" என்று புலம்பினான். உமா காந்தன் பிடிவாதமாக இருந்தான். கடைசியில் அவள் அவனிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டாள். அன்றிரவு அவன் அப்பாவும் அண்ணாவும் தூங்கிய பிறகு அவர்களுக்குத் தெரியாமல் அவன் வீடு திரும்ப வேண்டும்; அவள் கையால் இன்னும் ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட வேண்டும்; அப்புறம் அவளிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போக வேண்டும். உமாகாந்தன் மனம் இளகி இதற்குச் சம்மதித்தான்.
தாயாருக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவன் வீட்டுக்குத் திரும் பியபோது தன் தகப்பனார் வீட்டை விட்டு எங்கோ தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்தான். அவரைப் பின்தொடர்ந்து அவர் அறியாமல் சென்றான். அவரும் அப்போதிருந்த பரபரப்பில் திரும்பிப் பார்க்கவே தோன்றாமல் ஓடிக் கொண்டிருந்தார். அவர் பாங்கை நெருங்கியபோது உமாகாந்தன் சற்றுத் தயங்கி ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான்.
அவனுக்கு அவர் போக்கு விசித்திரமாகப்பட்டது. சீக்கிரமே புதிருக்கு விடையும் கிடைத்தது. பாங்கின் உள்ளே யிருந்து ஒரு பெரிய தோல் பையுடன் மதில் ஏறிக் குதித்து வெளிப்பட்ட ஒருவன் எதிர்த் திசையில் ஓட ஆரம்பிப்பதைப் பார்த்தான் உமா காந்தன். கருணாகரனோ "யாரது!" என்று அதட்டினாரே யொழிய அவனைத் தொடராமல் பாங்கின் உள்ளே சென்றார், கவலையோடு. களவு போயிருக்கிறதா என்று பார்ப்பதே முதல் காரியமாக எண்ணினார் போலும். ஆனால் உமாகாந்தன் அந்தத் திருடனை விட வில்லை. பின் துரத்தினான். ஒரு சில வினாடிகளில் திருட்டுப் போனதைப் புரிந்து கொண்டு, வெளியே வந்த கருணாகரனும் உமாகாந்தனைப் பின் தொடர்ந்து ஓடி வந்தார்.
"திருடன்! திருடன்!" என்று அவர் போட்ட கூச்சல் ஒரு பீட் கான்ஸ்டேபிள் காதில் விழுந்தது. அவன் விசிலை ஊதிக் கொண்டு கருணாகரனையும் முந்திக்கொண்டு ஓடினான்.
உமாகாந்தனுக்கு, பின்னால் தன் தகப்பனாரும் போலீஸ்காரரும் துரத்தி வருவது புரிந்தது. தன்னையே திருடன் என்று நினைத்து விடுவார்களோ என்று உள்ளூற அவனுக்குப் பயம். இருந்தாலும் உண்மைத் திருடனைவிடக் கூடாது என்று வேகத்தை அதிகரித்தான். கடைசியில் ஒரு தாவுத் தாவித் திருடனைப் பிடித்தே விட்டான். தெரு விளக்கின் மங்கலான ஒளி அவன் மீது விழுந்தது. கோவர்த்தனன்!
"தம்பி! என்னைக் காப்பாற்று! இது வெளியே தெரிந்தால் என் வாழ்க்கை பாழாவது மட்டுமல்ல; நம் தந்தையின் இதயம் உடைந்து விடும்" என்றான் தமையன்.
உமாகாந்தனுக்கு ஒன்றும் வழி தோன்றவில்லை. பேசாமல் பணம் அடங்கிய தோல் பையையும் பாங்குச் சாவிகளையும் தான் வாங்கிக்கொண்டான். "நீ ஓடிப்போ! நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்" என்றான். அவன் சென்று மறைந்த திசைக்கு எதிர்த் திசையில் உமாகாந்தன் ஓடத் தொடங்கினான் - அண்ணனைத் தப்புவிப்பதற்காக. ஓரிரு நிமிஷங்களுக்குள் பின் துரத்தி வந்த போலீஸ்காரரின் குண்டாந்தடி பறந்து வந்து அவன் தலையின் பின்புறத்தைத் தாக்கியது. அவன் அப்படியே சுருண்டு விழுந்தான். கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் தம் மகன் உமாகாந்தன் எனக் கண்டார் கருணாகரன். அன்று மாலைதான், 'பாங்கைக் கொள்ளையடிப்பதுதானே?' என்று அவன் கேட்டது அவர் நினைவுக்கு வந்தது. "சீ! உன்னைப் பெற்ற பாபத்தைக் கழுவ ஏழு ஜன்மம் எடுத்தாலும் போதாது!" என்றார்.
தனக்கும் தகப்பனாருக்கும் இடையில் பாங்குக் கொள்ளை பற்றி வாக்குவாதம் நடந்ததும் அதைத் தொடர்ந்து தான் வீட்டை விட்டு வெளியேறியதும்தான் தன் அண்ணன் கோவர்த்தனனுக்கு பாங்கில் திருடத் தைரியம் அளித்திருக்கிறது என்பது உமாகாந்தனுக்குப் புரிந்தது. பாங்கு கொள்ளையடிக்கப் பட்டிருப்பது மறுநாள் காலை தெரிய வரும்போது உமாகாந்தன் மீதுதான் இயல்பாகத் தகப்பனாருக்குச் சந்தேகம் எழும் என்று கோவர்த்தனன் எண்ணியிருக்கிறான். ஆனால் கோவர்த்தனன் போட்ட திட்டம் திசை மாறிப் போயிற்று. உமா காந்தனை மறுநாள் காலை போலீஸார் தேடிக் கொண்டிருப்பதற்குப் பதில் அன்றிரவே கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். கோவர்த்தனன் பற்றி உமாகாந்தன் வாய் திறக்கவில்லை. தன்னையே குற்றவாளியக்கிக் கொண்டான். ஆறு வருஷங்கள் தண்டனை கிடைத்தது.
---------------
அத்தியாயம் 57 -- பவானியின் கட்டளை
தான் கைதியான கதையைக் கூறிவிட்டுக் கடைசியாக உமாகாந்தன் சொன்னான். "பவானி! நீ நம்புகிறாயோ இல்லையோ, நடந்தது இதுதான். தேசபக்தன் என்ற முறையில் ஆயுட் காலத்துக்குச் சிறையிலிருப்பேன்; ஆனால் திருடன் என்ற பட்டத்துடன் செய்யாத குற்றத்துக்குச் சிறை வாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை. வேதனை பிடுங்கித் தின்றது. அதனால் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் தப்பித்துக் கொண்டு வந்தேன். இந்த நாட்டை விட்டு வெளியேறு முன் உன்னை ஒரு தடவை பார்த்து என் கதையைக் கூறிவிட வேண்டும் என்பதுதான் எனக்கு ஒரே ஆசை. அது நிறைவேறி விட்டது. இனி நான் கள்ளத் தோணி ஏறலாம்" என்றான்.
"கள்ளத் தோணியா?' என்று வியப்புக்கு மேல் வியப்படைந்தவளாகக் கேட்டாள் பவானி.
"ஆமாம், பவானி! ரயிலேறிச் சென்று பிறகு கோடிக்கரையை அடைந்துவிட்டால் அங்கிருந்து படகில் இலங்கைக்குப் போய் விடுவேன். அப்புறம் எப்படியாவது மலாய் நாட்டை அடைந்து விடுவேன். அங்கே நேதாஜி சுதந்திரப் படை திரட்டி வருகிறார் அல்லவா? அதில் சேர்ந்து விடுவேன். நான் சிறையிலிருந்து தப்பியதே அந்த நோக்கத்தில்தான்!"
பவானியின் முகம் வெளிறிற்று. தேகம் நடுங்கியது. பதற்றத்துடன், "அழகுதான்! அத்தனை ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உடல் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?" என்று அதட்டலாகச் சொன்னாள். தவமிருந்து பெற்ற பொக்கிஷம் அது கிடைத்த கணத்திலேயே கைநழுவிப் போய்விடும் போலிருந்தது. அப்படி அதைப் பறி கொடுப்பதா? என்று தவித்தது அவள் உள்ளம்.
"பவானி! உடம்பில் பலம் சேரட்டும் என்று சொல்லிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருந்தால் மட்டும் ஆபத்து இல்லையா?" என்று கேட்டான் உமாகாந்தன். "உன்னையும் சேர்த்தல்லவா ஆபத்துக்கு உள்ளாக்கிய வனாவேன்! என்னைப் போக விடு, பவானி! அதற்கு முன் மூன்று வரங்களைக் கொடு!"
"நான் தான் என்னையே கொடுத்திருக்கிறேனே?" என்று விம்மினாள் பேதை.
அவள் கரங்களைப் பற்றி விரல்களை வருடினான். "எனக்குத் தெரியாதா அது பவானி? நான் இப்போது சொன்ன கதை உங்கள் இருவருடன் மட்டும் இருக்க வேண்டும். இது முதல் வரம். இரண்டாவது, உன் புகைப்படம் ஒன்று கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும். மூன்றாவது..... மூன்றாவது...."
"மூன்றாவது....?"
"கொஞ்சம் பணம் வேண்டும். நீண்ட தூரப் பயணம் அல்லவா?"
பவானி அழுதுகொண்டே சிரித்தாள்.
"அப்பாடா! இதைக் கேட்க நீங்கள் இவ்வளவு தயங்க வேண்டுமா? அதுவும் என்னிடம்?" என்றாள். தொடர்ந்து, "மூன்று வரங்களை நான் தருகிறேன்; பதிலுக்கு நீங்கள் எனக்கு ஒரே ஒரு வரம் கொடுங்கள்" என்றாள்.
"என்ன பவானி? திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டுப் போலீஸாருக்குப் பயந்து சதா ஓடி ஒளிந்து திரிந்து கொண்டிருக்கும் நான் உனக்கு என்ன வரம் தர முடியும்?"
"நீங்கள் போகும் இடத்துக்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள். அதுதான் நான் வேண்டும் வரம். உங்களால் முடியாத காரியமில்லையே?"
"பவானி!" என்று அதுவரையில் மௌனமாக இருந்த அவள் மாமா குணசேகரன் அதட்டினார். "இது என்ன அசட்டுத்தனம்?"
உமாகாந்தனோ தேகமெல்லாம் புல்லரித்துப்போகச் சிலிர்த்துக் கொண்டான்.
"பவானி! நிஜமாகவா சொல்கிறாய்? நான் மேற்கொள்ளப் போகும் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பது உனக்குத் தெரியாதா? தெரிந்தும் இந்தப் பரதேசியோடு புறப்பட்டு வரத் தயாராக இருக்கிறாயா? உன் காதல் அவ்வளவு ஆழமானதா? எவ்வளவு பாக்கியசாலி நான்!"
"உமாகாந்த்! நீ செய்வது கொஞ்சமும் சரியில்லை. உன் வாழ்க்கையைத்தான் ஏதோ அண்ணனுக்காகவும், தேசத்துக்காகவும் தியாகம் செய்வதாகக் கூறிக்கொண்டு பாழடித்துக் கொண்டாய். பவானியின் வாழ்க்கையையும் குட்டிச்சுவராக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கோபமாகக் கேட்டார் குணசேகரன்.
"மாமா! இது என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? ஒரு பெண் தன் மனம் விரும்பியவனுடன் இருந்து அவன் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வது தவறா? அவள் தன் மாமாவின் சொற்படி கேட்டு ஒரு கொள்ளைக்காரனை, தம்பியைக் குற்றவாளி யாக்கிய கோழையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவள் வாழ்க்கை குட்டிச்சுவராகாதா?"
"கோவர்த்தனன் அப்படிப்பட்டவர் என்பதற்கு என்ன சாட்சி? இவன் வார்த்தை தானே?"
"நீதிமன்றத்துக்குத்தான் மாமா சாட்சியங்கள் வேண்டும். உள்ளம் என்கிற நியாய ஸ்தலத்துக்கு மனச்சாட்சியே போதும்" என்றாள் பவானி நாத் தழுதழுக்க.
"கோவர்த்தனனை நீ கல்யாணம் செய்து கொள்வதா? அவன் இந்த ஊரில்தான் இருக்கிறானா?" என்று உமாகாந்த் அதிசயத்துடன் கேட்டான்.
"ஆமாம் உமா! நீங்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்றோ அல்லது தப்பித்துக் கொண்டோ வரும்போது நேரே கல்கத்தா சென்று அங்கு என்னைப் பற்றி விசாரித்து என்னைத் தேடிக் கொண்டு இங்கே தான் வருவீர்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால் இந்த ஊருக்கு வந்து சதா என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். என்னை எப்படியாவது கல்யாணம் செய்து கொண்டு விட்டால் பிறகு இந்த ஜன்மத்தில் உங்களால் அவருக்கு எந்த ஆபத்தும் நேராது அல்லவா? அந்த நிம்மதியைப் பெறுவதற்காகத் தம்மாலான முயற்சிகளை யெல்லாம் செய்து பார்க்கிறார். நானும் அவர் தாக்குதலுக்கு ஈடு கொடுத்து இதுநாள் வரை தட்டிக் கழித்துக் கொண்டே வந்திருக்கிறேன்.
"உங்களைப் பின் தொடர்ந்து காயப்படுத்திய சி.ஐ.டிக்கள் கூட அவருடன் அடிக்கடி தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களை 'அடிபட்ட புலி' என்று வர்ணித்து உங்களுக்கு அடைக்கலம் கொடுப்பது பெரிய குற்றம் என்று என்னை எச்சரித்து விட்டுப் போனார். அப்போது நீங்கள் தூக்க மருந்து சாப்பிட்டுவிட்டு மாடி அறையில்தான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்."
"நான் இங்கிருப்பது தெரிந்து விட்டதா அவனுக்கு?" கலவரத்துடன் கேட்டான் உமாகாந்தன்.
"இல்லை. ஆனால் நீங்கள் இங்கே என்னைத் தேடி வரலாம்; தஞ்சம் புகலாம் என்று சந்தேகிக்கிறார்."
"பவானி! நான் இனி இங்கே தொடர்ந்து இருப்பது ரொம்ப ஆபத்து. எனக்கு மட்டுமல்ல. உனக்கும் மாமா குணசேகரனுக்கும் கூடத்தான். எனக்கு விடை கொடு! நான் கிளம்புகிறேன்."
"நான் கேட்ட வரம்?"
"வரம் கேட்பவர் தாழ்ந்த நிலையிலும் வரம் கொடுப்பவர் உயர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும் பவானி. இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவன்."
இந்தச் சமயத்தில் வாசல் கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்டது. "பவானி, பவானி! குணசேகரன் ஸார்!" என்று கூப்பிடும் குரலும் அடுத்து ஒலித்தது.
"கல்யாணம் அல்லவா வந்திருக்கிறான்! நீங்கள் இங்கேயே பேசிக் கொண்டிருங்கள். நான் கீழே போய் என்ன விஷயம் என்று கேட்டு அவனை அனுப்பி விட்டு வருகிறேன்" என்றார் குணசேகரன்.
"நாம் அதிகாலையில் எழுந்து காரில் புறப் படலாம். இப்போது சீக்கிரம் படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பவானி உமாகாந்தனைக் கைத்தாங்கலாகப் பற்றிப் படுக்கை அறைக்கு அழைத்துப்போனாள்.
கீழே சென்ற குணசேகரனிடம் "பவானி எங்கே?" என்று வினவினான் கல்யாணம்.
"அவள் மாடியில் படுத்துக் கொண்டு விட்டாள். என்ன விஷயம்?" என்றார் குணசேகரன்.
"ரொம்ப அவசரம்! அவளை நான் உடனே பார்த்தாக வேண்டும்" என்று கூறிப் படியேறத் தொடங்கினான் கல்யாணம். தடுக்கப் போன குணசேகரனை முரட்டுத்தனமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் படிகள் மீது பாய்ந்து ஏறினான்.
(தொடரும்)
------------------
அத்தியாயம் 58. -- ரங்கநாதன் மனமாற்றம்.
கமலாவிடமும் அவள் தம்பி விசுவத்திடமும் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய கல்யாணத்தின் மனம் ஒரு நிலையில் இல்லை. 'நீங்கள் பவானியிடம் காதல் கொண்டிருக்கலாம்; பவானி அக்கா வேறு ஒருவர்மீது ஆசை வைத்திருக்கலாம்' என்று கமலா கூறியது திரும்பத் திரும்ப அவன் நினைவுக்கு வந்து அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. 'அது உண்மையாக இருக்குமா? அதனால்தான் தன் காதலை ஏற்கப் பவானி மறுத்துவிட்டாளா? கமலா கூறியது நிஜமாகத்தான் இருக்கும். இல்லாமலா 'வேண்டுமானால் அவள் வீட்டுக்கு இப்போதே போய்ப் பாருங்களேன்!' என்று கமலா ஒரு வேகத்தோடு கூறினாள்? கூடவே, 'பவானி அக்காவிடம் ஏதும் கேட்டுவிடாதீர்கள். இது பரம ரகசியம்' என்றும் கெஞ்சினாளே! சீச்சீ! இதிலெல்லாம் என்ன ஒளிவு மறைவு வேண்டிக் கிடக்கிறது? பவானி ஒருவனை விரும்பினால் அது பற்றி வெளிப்படையாகக் கூறி அவனை மணந்து கொள்வதுதானே? யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவனை வீட்டுக்குள் வைத்திருந்து உபசரிப்பதென்பது எவ்வளவு கேவலம்? இதைச் சும்மா விடக்கூடாது. பவானியைக் கேட்டுவிடத்தான் வேண்டும். ஆனால் எனக்கு எப்படி விவரம் தெரிய வந்தது என்று அவள் கேட்டால்? கமலாவை இதில் இழுப்பானேன்? வேறு ஏதோ காரணமாகப் பவானி வீட்டுக்குப் போவது போலவும் அங்கே அவள் காதலனை யதேச்சையாகச் சந்தித்துவிட்டது போலவும் நடிக்க வேண்டியதுதான்! என்னை பவானி மணந்து கொள்ளாவிட்டால் போகட்டும், பாதகம் இல்லை; அதற்காக அவள் ஓர் அந்நியனைத் தன் வீட்டில் ஒளித்து வைத்துக் கொண்டு கொஞ்சிக் குலாவுவதைச் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது!'
பவானி கல்யாணத்தின் காதலை ஏற்காததால் அவன் மனம் விகாரப்பட்டுப் போயிருந்தது. பவானியின் ரகசியக் காதலனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று துடித்தான். 'உன் ரகசியம் அம்பலமாகி விட்டது பார்' என்று காண்பித்துக்கொள்வதில் தன் பழிவாங்கும் உணர்ச்சிக்குத் தீனி போட்டுக் குரூரத் திருப்தியடைய ஆசைப் பட்டான். ஆனால் இதனை யெல்லாம் அவன் உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. வேறு ஏதோ நல்ல சமாதானங்களைக் கற்பித்துக் கொண்டது!
'என்ன காரணத்தைக் கூறிக் கொண்டு இப்போது அவள் வீட்டுக்குச் செல்வது?' என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதே போல ரங்கநாத முதலியாரிடமிருந்து அழைப்பு வந்தது! ஸ்தல யாத்திரை கிளம்பியிருந்த அவர் பாதியிலேயே திரும்பி வந்திருந்தார். வந்ததும் வராததுமாகக் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆளிடம் சொல்லி அனுப்பினார். கல்யாணமும் பரபரப்படைந்தவனாக அவர் பங்களாவுக்குப் போய்ச் சேர்ந்தான்.
ரங்கநாத முதலியாரின் மனப் போக்கில் பெரிய மாறுதல் காணப்பட்டது. அவர் இரண்டொரு க்ஷேத்திரங்களுக்குத்தான் போனாராம். அதற்குள் ஞானோதயம் ஏற்பட்டு விட்டதாம். மேலே யாத்திரையைத் தொடராமல் திருப்பி விட்டாராம். மதுரை மீனாட்சிக்குத் தீபாராதனை நடக்கும் சமயம் மனத்தில் உதித்த யோசனையை நிறைவேற்றிவிட்டுப் பிறகுதான் யாத்திரையை மீண்டும் தொடரப் போகிறாராம்!
"அப்படி என்ன புரட்சிகரமான எண்ணம் உதயமாகி விட்டது உங்களுக்கு?" என்று கேட்டான் கல்யாணம். "சொல்கிறேன் கேள். கமலா எவ்வளவு சின்னப் பெண்! எனக்குப் பெண்ணாகவே இருக்கக் கூடியவள் இல்லையா?'
"இல்லை, பேத்தியாகவே விளங்கக் கூடியவள்" என்றான் கல்யாணம்.
"ரொம்பச் சரி. அப்படித்தான் எனக்கும் தோன்றியது. என்னுடைய பேத்திக்குச் சமதையாக எண்ண வேண்டியவளை நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்தது எவ்வளவு பெரிய பாவம்! ஆனால் அதையே நான் புண்ணியமென்றுகூட நான் கருதினேன். அந்தக் குடும்பத்துக்கு நன்மை செய்யவே அவளைத் திருமணம் செய்து கொள்வதாக என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்."
"அவர்களது ஏழைமை நீங்கும் என்று கணக்குப் போட்டிருப்பீர்கள். ரொம்பப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதாக நினைத்திருப்பீர்கள்."
"அதுமட்டுமில்லை கல்யாணம்; அந்தப் பெண்ணைப் படிக்க வைப்பதாகச் சொன்னேன். டாக்டருக்குப் படித்து மேல்நாடுகளுக்குக்கூட அவள் பயற்சி பெறச் செல்லலாம் என்று ஆசை காட்டினேன். அவள் திரும்பி வந்ததும் இங்கே ஒரு தர்ம ஆஸ்பத்திரி தொடங்க உதவுவதாகவும் கூறினேன். ஆக மொத்தம் அவளை மணந்து கொள்வதன் மூலம் அவளுக்கு மட்டுமின்றி இந்த ஊருக்கே பெரிய சேவை புரிவதாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்."
"மதுரை மீனாட்சியைப் பார்த்ததும் இதெல்லாம் தப்புக் கணக்கு என்று புரிந்துவிட்டதாக்கும்!"
"அதற்கும் மேலே கூட ஓர் உண்மை பளிச்சிட்டது."
"என்ன அது?"
"உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் இந்த ஊருக்கும் நான் நன்மை புரிய விரும்பினால்..."
"விரும்பினால்....?"
"அந்த நல்ல காரியங்களைக் கமலாவை மணந்து கொள்ளாமலேயே நான் நிறைவேற்றலாமே என்று மீனாட்சி என்னிடம் சொன்னாள்!"
"தேவலாமே! கெட்டிக்காரக் கடவுள்தான்! சரியான போடு போட்டிருக்கிறாள்" என்றான் கல்யாணம்.
"ஆமாம் அப்பா, ஆமாம்! மீனாட்சியல்லவா? என் அகக் கண்களைத் திறந்து விட்டாள். எனக்குப் புத்தி வந்தது. கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டால் நல்ல காரியங்களைச் செய்வது. இல்லாத போனால் இல்லை என்று இருக்கக் கூடாது; கமலாவைக் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து கொண்டேன்!"
"பலே! பலே! ரங்கநாதன் ஸார்! நான்மட்டும் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தால் ஓர் அவசரச் சட்டம் உடனே பிறப்பிப்பேன்! இந்த நாட்டின் பணக்காரர்கள் யாரும் மதுரை மீனாட்சியைத் தரிசனம் பண்ணக் கூடாது என்று உத்தரவு போடுவேன்!"
"அடப் பாவமே! ஏனப்பா அப்படி?"
"பின்னே என்ன ஸார்? எல்லாரும் உங்களைப் போல் மீனாட்சியைத் தரிசனம் பண்ணப்போய், அவளும் எல்லாச் செல்வந்தர்களின் அகக்கண்களையும் திறந்து விட்டாளானால், அப்புறம் என்னைப் போன்ற சமூகப் பணியாற்ற ஆசைப்படுகிறவர்களின் கதி என்ன ஆவது? எங்களுக்கு வேலையே இல்லாமல் போய் விடும் அல்லவா? சமூகப் பணி, சீர்திருத்தம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, வயிற்றுப்பாட்டுக்கு ஒழுங்காகச் சம்பாதிக்கிற வழியைப் பார்க்க வேண்டிய தாகிவிடுமே!"
"விளையாட்டு இருக்கட்டும் கல்யாணம். நான் கமலாவை என் மகளாகத் தத்து எடுத்துக் கொண்டு என் செல்வத்தில் பெரும் பகுதியை அவளுக்கு எழுதி வைப்பது என்று தீர்மானித்து விட்டேன். நீ அவளை அவசியம் கல்யாணம் பண்ணிக் கொள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உடனே குழந்தை குட்டி, குடும்பக் கவலை என்று ஏற்படுத்திவிடாதே! அவளைப் படிக்க வை. என் மகள் டாக்டராகாவிட்டாலும் நாலு டாக்டர்களை வேலை வாங்குகிற அளவுக்குச் சாமர்த்தியமும் அறிவும் பெற்றாக "விளையாட்டு வேண்டாம், இதிலிருந்து விளையப் போகும் ஒரு வினையையே சொல்கிறேன். என் அம்மாவுக்கு நான் கமலாவைக் கலயாணம் பண்ணிக் கொள்வதில் விருப்பமில்லை. நூறு குற்றங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது நீங்கள் கமலாவுக்குச் சொத்து எழுதி வைத்துவிட்டதாகத் தெரிந்தால் உடனே திருமணத்துக்குச் சம்மதித்துவிடுவாள். 'கமலாவைப் போன்ற கண்ணான பெண் கிடைப்பாளோ!' என்று பெருமைப் பட்டுக்கொள்வாள். ஆனால் ஊரார் என்ன பேசுவார்கள்? பணத்துக்கு ஆசைப்பட்டுப் பண்ணிக் கொள்கிறார்கள் என்றுதானே சொல்வார்கள்?"
"ஊராருக்கு என்ன? நான் கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால் என்னைத் திட்டித் தீர்த்திருப்பார்கள். நீ பண்ணிக்கொண்டால் அதற்கும் ஓர் உள்நோக்கம் கற்பித்து உன்னை ஏசுவார்கள். நீ ஊரார் வாய்க்குப் பயந்து வாழப் போகிறாயா? ஊருக்கும் உனக்கும் உகந்தது என்று தோன்றுவதைச் செய்யப் போகிறாயா?"
"மதுரை மீனாட்சி பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு மேலே ஆகவேண்டியதைக் கவனிக்க வேண்டியதுதான்!" என்றான் கல்யாணம்.
"பலே! அப்படிச் சொல்லுடா சிங்கக் குட்டி!" என்று ஆமோதித்தார் ரங்கநாதன். "அப்படியானால் ஒன்று செய். இப்போதே போய்ப் பவானியிடம் அவளை நான் உடனே பார்க்க விரும்புவதாக்க் கூறி அழைத்து வா. சட்ட பூர்வமாக எல்லாம் ஒழுங்காக நான் செய்ய வேண்டும். நீ எனக்கு மாப்பிள்ளையாக வரப் போவதால் இந்த விஷயத்தில் உன் அப்பாவின் உதவியை நான் கோருவது சரியாகாது" என்றார் ரங்கநாதன்.
இந்தக் கோரிக்கையை அவர் வெளியிடவே காத்திருந்தவன் போல் கல்யாணம் "இதோ இப்போதே போகிறேன்; பவானியைக் கையோடு அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
-------------------
அத்தியாயம் 59 -- கல்யாணத்துக்கு அவமானம்.
பவானியின் மாம குணசேகரன் தன்னைத் தடுப்பதைப் பொருட்படுத்தாமல் தடதடவென்று மாடிப் படிகளில் ஏறினான் கல்யாணம்.
அதற்கு முன் மொட்டை மாடியிலிருந்து உமாகாந்தைக் கைத்தாங்கலாகப் பற்றிப் படுக்கை அறைக்குள் அழைத்துப் போயிருந்தாள் பவானி. கதவைச் சாத்தினாள், ஆனால் தாளிடவில்லை. மாமா குணசேகரன் கல்யாணத்தை வாசலிலேயே நிறுத்தச் சாக்குப்போக்குக் கூறி அனுப்பி விடுவார் என்ற நம்பிக்கையில் உமாகாந்தைப் படுக்கவைத்தாள். "நாளைக் காலையில் நாம் சீக்கிரமே புறப்பட்டு விடலாம். நிம்மதியாகத் தூங்குங்கள்" என்றாள். உமாகாந்தன் அவள் கரத்தை எடுத்துக் கன்னத்தில் ஒத்திக் கொண்டு உள்ளங்கையில் இதழ்களைப் பதித்தான்.
அதே சமயம், "பவானி! பவானி!" என்று அழைத்தபடியே கதவைப் 'படா' ரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தான் கல்யாணம். பவானியையும் கமலா குறிப்பிட்ட அவள் காதலனையும் ஒருசேரப் பார்த்து ஓரிரு விநாடிகள் பிரமித்து நின்றான்!
பின்னாலேயே குணசேகரன் இரைக்க இரைக்க ஓடி வந்தார். "நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் என்னை ஒதுக்கித் தள்ளி விட்டு வந்திருக்கிறான், பவானி!" என்றார்.
பவானி திகைப்பு நீங்கியவளாகக் கோபத்துடன் எழுந்து நின்றாள். "யூ ஸில்லி இடியட்! கெட் அவுட்!" என்றாள்.
"ஆமாம், நான் ஸில்லி இடியட்தான்! தெய்விகமான உன் பெயரையும் அழகான வெளித்தோற்றத்தையும் அறிவாற்றலையும் பார்த்து ஏமாந்து போனேன் அல்லவா? அத்தனைகத்தனை உன் மனம் விகாரமானது என்பது எனக்குப் புரியாமல் போய்விட்டது அல்லவா?"
"கெட் அவுட், யூ மானர்லெஸ் புரூட்!" என்று கத்தியவாறு ரௌத்திராகாரத்துடன் இரண்டு அடி முன்னால் எடுத்து வைத்தாள் பவானி.
"பேஷாகப் போகிறேன்! ஆனால் முதலில் நான் வந்த காரியத்தைக் கூறிவிட்டு..."
அவனைத் தொடர விடாமல் பவானி, "பேசாதே! நீ சொல்லும் ஒரு வார்த்தையைக்கூட நான் கேட்க விரும்பவில்லை" என்றாள். "மாமா! எதற்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? கிக் ஹிம் அவுட்!"
பவானி முன்னேற முன்னேறக் கல்யாணம் அவளுக்கு இடம் கொடுத்துப் பின்வாங்கி அறைக்கு வெளியே வந்திருந்தான். மாடிப்படிகளை நெருங்கியும் விட்டான். ஆனால் அவன் பார்வை பார்வை மட்டும் பவானியை நோக்கித்தான் இருந்தது. முதுகுப் புறம்தான் மாடிப் படிகளைப் பார்க்க இருந்தது. "பவானி!" என்று மீண்டும் ஏதோ கூற ஆரம்பித்தான் கல்யாணம். இப்போது அவனுக்குத் தான் அத்துமீறிப் பிரவேசித்தது தவறு என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தோன்றிவிட்டிருந்தது. ஆனால் பவானி எதையும் செவி மடுக்கும் மனநிலையில் இல்லை. கோபத்தின் உச்ச கட்டத்தை அடைந்திருந்தாள். "ஏனய்யா? உனக்கு வெட்கம் மானம் இல்லையா? வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினால் தான் போவாயா?" என்று கேட்டபடியே மேலும் இரண்டடி எடுத்து வைத்தாள்.அவளுக்கு வழி விட்டு ஓரடி பின்னால் நகர்ந்தான் கல்யாணம். அவ்வளவுதான், மாடிப் படியில் இசகு பிசகாகக் காலை வைத்துத் திபுதிபுவென்று உருண்டு விழுந்தான். படிக்கட்டில் இடையிலிருந்த ஒரு திருப்பத்தில்தான் அவன் சலனம் தடைப்பட்டு நின்றது.
சுவரில் மோதிக் கொண்டதில் அவன் மண்டையில் 'விண், விண்'ணென்று வலி தெறித்தது. ஆனால் அதை விடவும் அதிகமாக இருந்தது அவமானம் பிடுங்கித் தின்றதால் வேதனை. மிச்சமிருந்த படிக்கட்டில் விடுவிடென்று இறங்கி, வாசலைத் தாண்டி, தோட்டத்தைக் கடந்து, வீதியில் தான் நிறுத்தியிருந்த காரில் ஏறி, அதனைக் கிளப்பினான். அந்தச் சமயம் பார்த்து அது கிளம்ப மறுத்து அவன் பொறுமையைச் சோதித்தது. "சீ நன்றி கெட்ட ஜன்ம்மே! இப்படி கழுத்தறுப்பதற்குப் பவானியுடம் கற்றுக்கொண்டாயா?" என்று ஆவேசத்துடன் கேட்டுக் கீழே இறங்கிப் 'படா'ரென்று கதவைச் சாத்தி, போதாக் குறைக்குக் காரை ஓர் உதையும் விட்டான்!
நடக்க ஆமர்பித்த கல்யாணத்தை அவன் கால்கள் நேரே மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் வீட்டுக்கு அழைத்துப் போயின. அவர் வராந்தாவில் அமர்ந்து நிலாவை வெறித்து நோக்கியபடி எட்டாவது கோப்பை ஸ்காட்ச் விஸ்கியைக் கண்டத்தில் கவிழ்த்துக் கொண்டிருந்தார்.
'எதற்காக இங்கு வந்து சேர்ந்தோம்?' என்று அவரை நெருங்கிப் பார்த்ததும்தான் யோசித்தான் கல்யாணம். "இனம் இனத்தைச் சேரும் என்பதற்கு ஏற்பப் பவானியால் அவமதிக்கப் பட்ட நீ பவானியின் நிராகரிப்பால் குன்றிப் போயிருக்கிற கோவர்த்தனனைத் தேடி வந்திருக்கிறாய் என்று அவன் மனம் சரியாகவே பதில் கூறிற்று.
ஆனால் "என்ன கல்யாணம்? எங்கே வந்தாய்?" என்று கோவர்த்தனன் கேட்ட போது, "சும்மாத்தான் இப்படி வந்தேன்" என்றுதான் சொன்னான் கல்யாணம்.
"தமிழ் அகராதியிலிருந்தே 'சும்மா' என்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும் என்றார் கோவர்த்தனன்.
"என்ன சார் அப்படிச் சொல்லிவிட்டீர்கள்! 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கிற திறமரிது, அரிது!' என்று தாயுமானார் அலறியிருக்கிறாரே.
"அவர் சும்மா இருப்பதுதானே? எதற்காக அத்தனை பாடல்களை எழுதி வைத்து நம் பிராணனை வாங்குகிறார்? போனால் போகட்டும். நீ வந்த காரியத்தைச் சொல்லு!"
"காரியம் என்று அப்படி ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."
"பார்த்தாயிற்று அல்லவா? போகலாமே?"
"இன்றைக்கு என் ஜாதக விசேஷம் போலிருக்கிறது, எங்கே போனாலும் வரவேற்பு ஒரு மாதிரி இருக்கிறது."
இன்னும் எங்கே போயிருந்தாய்?"
"பவானி வீட்டுக்குப் போனேன்."
"எனக்குப் பிடிக்காத காரியம். தெளிவாகச் சொல்கிறேன். இனிமேல் பவானி வீட்டுக்குப் போவதை நீ நிறுத்தி விடு!"
"தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது!"
"அப்படி யென்றால்"
"இனிமேல் அவள் வீட்டுக்குப் போவதில்லை என்று நானும் சற்று முன்புதான் முடிவு செய்தேன்."
"ஓ! பவானியே வாசல் பக்கத்துக்கு வழிகாட்டி விட்டாளா? அவள் சொன்ன உடனே கிளம்பி விட்டாயா? இல்லை வேலைக்காரனைக் கூப்பிட வேண்டியிருந்ததா?"
"அவ்வளவுக்கு நான் வைத்துக் கொள்வேனா? மாடிப் படியில் பின்னங் கால்களை வைத்தேன்; நேரே கீழே வந்து சேர்ந்து விட்டேன்!"
கோவர்த்தனன் சிரித்து விட்டு "சரி, இனிமேலாவது அந்தப் பக்கம் தலை காட்ட வேண்டாம்" என்றார். பிறகு "பவானிக்கு உடம்பு எப்படி இருக்கு? தேவலமா?" என்று வினவினார்.
"உடம்பா? நான் பார்த்தவரையில் சரியாகத்தானே இருந்தாள்? என்றான் கல்யானம்.
"இல்லை, இல்லை! உனக்குத் தெரியாது. பவானிக்கு இன்ஃபுளூயென்ஸா. அதனால் கோர்ட்டுக்கு வர முடியவில்லை என்று சொல்லி அனுப்பினாள். அவள் சம்பந்தப்பட்ட கேஸைக்கூட இரண்டு வாரங்கள் ஒத்திப் போட்டிருக்கிறேன். நானே அவளைப் போய் விசாரிப்பதாக இருந்தேன். ஆனால் டாக்டர்கள் 'விசிட்டர்கள் யாரும் வராமலிருந்தால் நல்லது' என்று உத்தரவிட்டிருப்பதாக அவள் மாமா சொன்னார். அதனால்தான் போகவில்லை."
"ஆமாம், ஆமாம்! இன்ஃப்ளூயன்ஸா வந்திருக்கிறார். நானும் கூடப் பார்த்தேன்!"
"என்னப்பா கிண்டல் பண்ணுகிறாய்? 'இன்ஃப்ளூயன்ஸா வந்திருக்கிறார்' என்றால் என்ன அர்த்தம்?"
"நான் பார்த்த இன்ஃபுளூயன்சாவுக்கு இரண்டு கால், இரண்டு கை, இரண்டு கண் எல்லாம் இருக்கு என்று அர்த்தம்! மிஸ்டர் இன்ஃப்ளூயன்ஸா பவானியின் படுக்கையில் சயனித்து, அவளைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, அவள் கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டு, அவளைத் தன் இரு கண்களாலேயும் விழுங்கி விடுகிறவரைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்! மிஸ்டர் இன்புளுயன்ஸா ரொம்ப ஆபத்தான பேர்வழிதான்!"
கோவர்த்தனன் மதுக் கோப்பையை 'ஸ்டூல்' மீது வைத்து விட்டு எழுந்தார். அவருக்கு உடல் தள்ளாடியது. கல்யாணத்தை நெருங்கி அவன் சட்டையை முறுக்கிப் பிடித்துக் கொண்டார். "அடேய்! நீ சொல்வது நிஜம்தானா! பொய்யாக இருந்தால் உன்னை ஷூட் பண்ணி விடுவேன்!" என்றார்.
பிறகு மெள்ளத் திரும்பி மது போதை ஏறியதால் ஏற்பட்ட இலேசான தடுமாற்றத்துடன் நடந்து வீட்டுக்குள்ளே சென்றார். அவர் மறுபடியும் வாசலுக்கு வந்த போது அவர் கரத்தில் இருந்த துப்பாக்கி, சந்திரக் கிரணம் ஒன்று பட்டுத் தெறித்ததால் மின்னியது!
(தொடரும்.)
------------
அத்தியாயம் 60 -- தப்பியோடத் திட்டம்
பவானி பற்றி அவதூறாகப் பேசியதாகக் கருதி அதற்காகத் தன்னைச் சுடுவதற்காகத் தான் துப்பாக்கி கொண்டு வருகிறார் கோவர்த்தனன் என்று முதலில் கல்யாணம் நினைத்தான். ஆனால் அவரோ, "கல்யாணம்! இன்புளூயன்ஸாவை ஒழித்துக் கட்டினால்தான் பவானிக்கு நல்லது. ஏன், உலக மக்கள் எல்லோருக்கும் நிம்மதி. அதனாலே நான் போய் மிஸ்டர் இன்புளூயன்ஸாவை விரட்டி விட்டு வருகிறேன், ஓகே?" என்று கூறியபடியே தம் காரில் ஏற ஷெட்டை நோக்கி நடந்தார். "அவன் தகராறு பண்ணினால் ஐ வில் ஷூட் ஹிம்!"
குடிபோதையில் இருக்கும் அவரிடம் போய்த்தான் பவானி வீட்டில் பார்த்ததைக் கூறியே இருக்க வேண்டாம் என்று கல்யாணத்துக்கு இப்போது தோன்றியது. 'என்ன விபரீதம் இதனால் நிகழப் போகிறதோ?' என்று பயந்தான். 'ஏதாவது தாறுமாறாக இவர் செய்யாதிருக்க வேண்டுமே' என்று எண்ணியபோது தானும் பின்னோடு செல்வது உசிதம் என்று கருதினான்.
ஷெட் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த அவர் பின்னோடு நடந்தபடியே, "இப்போது என்ன அவசரம்? காலையில் பார்த்துக்கொள்ளலாமே?" என்றான்.
"என்ன! நீதிக்குக் குறுக்கே நிற்கிறாயா? சட்டம் தன் கடமையை ஆற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறாயா?" என்று முடிந்த மட்டில் குரலில் கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார் கோவர்த்தனன். "இதற்குத் தண்டனை என்ன தெரியுமா? ஐ வில் ஷூட் யூ!"
"அட பாவமே! எல்லாவற்றுக்கும் ஒரே தண்டனை தானா? எதற்கெடுத்தாலும் 'ஐ வில் ஷூட் யூ' தானா?" என்று முணு முணுத்துக் கொண்ட கல்யாணம், அவரைத் தனியே அனுப்ப அஞ்சியவனாக, "அப்படியானால் நானும் பின்னோடு வருகிறேன்; ஐ வில் ஹெல்ப் யூ" என்றான்.
காரோட்ட அவரை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு கட்டியவனாக, "நான் ஓட்டிக் கொண்டு வருகிறேன், நீங்கள் இப்படி உட்காருங்கள்" என்று அவர் காரின் பின் கதவைத் திறந்து பிடித்தான்.
"தாங்க் யூ மை ஃபிரண்ட்!" என்றார் கோவர்த்தனன். ஆனால் துப்பாக்கி மட்டும் கல்யாணத்தின் தலையைக் குறி பார்த்த படியே இருந்தது. "இன்னும் இரண்டே நிமிஷத்தில் நாம் பவானி வீட்டில் இருக்கணும். இல்லாதபோனால் ஐ வில் ஷூட் யூ" என்றார்!
கல்யாணம் கனத்த இதயத்துடன் கார் ஓட்டிச் சென்றான். பவானிக்கும் கமலாவுக்கும் தான் பெரிய துரோகம் இழைத்து விட்டதாக அவன் மனம் இடித்துக் காட்டியது. அதற்குப் பரிகாரமாகத் தான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தான். ஒரு வழியும் புலப்படவில்லை.
"சீக்கிரம்! சீக்கிரம்! வேகமாகப் போ!" என்று துப்பாக்கி முனையை அவன் தலையில் தட்டித் துரிதப்படுத்தினார் கோவர்த்தனன்.
பவானி வீட்டு வாசலில் கார் நின்ற சமயம் கோவர்த்தனனுக்கு முன்பாகக் கல்யாணம் பாய்ந்து ஓடினான் பவானியை எச்சரிக்க விரும்பி.
"தம்பி! இப்பத்தானே பவானியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாய்! அரை மணி கூட ஆகவில்லையே! அதற்குள் திரும்பி வந்திருக்கிறாயே?" என்றார் மாமா குணசேகரன்.
"இந்தத் தடவை உன் பாச்சா ஒன்றும் என்னிடம் பலிக்காது. அப்போ கொஞ்சம் ஏமாந்துட்டேன். மறுபடியும் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டு மாடிப் படிகளில் பாய்ந்தேறப் பார்க்காதே!
எனக்கு கொஞ்சம் மல் யுத்தப் பயிற்சி உண்டு. முறுக்கிப் பிழிந்து கொடியிலே உலர்த்திடுவேன்" என்று கோபமாகக் கூறி வந்தவர், மாஜிஸ்திரேட் கோவர்த் தனன் துப்பாக்கி சகிதம் உள்ளே வருவதைப் பார்த்து மௌனமானார்.
"பவானி எங்கே?' என்றார் கோவர்த்தனன் தடித்த குரலில்.
"தூங்குகிறாள். நான் தான் சொன்னேனே உங்களிடம். அவளுக்கு ஜுரம் என்று. அவளைத் தொந்தரவு செய்வதற்கில்லை.
"வேணாம். அவள் ஓய்வாக இருக்கட்டும். ரெஸ்ட் இஸ் குட் ஃபார் ஹர். மிஸ்டர் இன்புளூயன்ஸா எங்கே? அவனை அழைத்துவா!"
"இன்புளூயன்ஸாவாவது? இலுப்பக்காவாவது? யாரை அழைத்து வருவது? என்ன உளறுகிறீர்?" என்றார் குணசேகரன். ஆனால் மாஜிஸ்திரேட் கூறியது அவருக்குப் புரியாமல் போகவில்லை. அவர் கரத்தில் இருந்த துப்பாக்கி அவரை மிரட்டியது. கோவர்த்தனனின் பதவி அவரை அச்சுறுத்தியது.
"மிஸ்டர் குணசேகரன்! என்னை ஏமாற்றப் பார்க்காதீர்!" என்ற மாஜிஸ்திரேட் ஒவ்வொரு அறையாக நோட்டம் விட ஆரம்பித்தார். கல்யாணம் குடி போதையில் அவர் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடப்போகிறாரே என்ற கவலையில் பின்னோடு சென்றான்.
மாடியில் பவானியும் அவள் காதலனும் தங்கியிருந்த அறை காலியாக இருப்பதைப் பார்த்ததும் கல்யாணத்துக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. ஆனால் மாஜிஸ்திரேட் பவானியின் அறையை அனுபவப்பட்ட பாணியில் ஆராயத் தொடங்கினார். டிரெஸ்ஸிங் டேபில் இழுப்பறைகளைத் திறந்து பார்த்தார். மேஜை டிராயர்களைக் குடைந்தார். படுக்கையைப் புரட்டிப் போட்டார். திரைச் சீலைகளுக்குப் பின்னால் கண்ணோட்டம் செலுத்தினார். அறையின் ஒரு மூலையிலிருந்த அழுக்குத் துணிக் கூடையைக் காலால் உதைத்துத் தள்ளி உருட்டினார். திறந்து கொண்ட அதனுள்ளிருந்து பவானியின் புடவை ஒன்றுடன் வெள்ளைக் கதர்த்துணியும் எட்டிப் பார்த்தது. "ஆகா!" என்று வியப்பொலி எழுப்பியவாறு கோவர்த்தனன் அந்த கதர்த் துணியை வெளியே உருவினார். அழுக்குப் படிந்த வெள்ளைக் கதர் ஜிப்பா, பைஜாமா வெளிப் பட்டது. ஜிப்பாவின் ஒரு பக்கத் தோளில் ரத்தக் கறை படர்ந்து படிந்திருந்தது!
"தே ஹாவ் எஸ்கேப்ட்! தே ஹாவ் எஸ் கேப்ட்" என்று திரும்பத் திரும்பக் கூச்சலிட்டபடியே கீழே ஃபோன் இருந்த அறையை நோக்கி விரைந்தார் கோவர்த்தனன்.
பவானியின் புத்திசாலித்தனத்தை தமக்குள் மெச்சிக் கொண்டார் அவள் மாமா. கல்யாணம் வந்துவிட்டுப் போன மறு கணமே அவள், "மாமா! இந்த மனுஷன் ஏற்கனவே என்னிடம் காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்தவர். போதாக் குறைக்கு இங்கே இப்போது அவமானப்பட்டுத் திரும்புகிறார். அதனால் குயுக்தியாக அவருக்கு ஏதாவது செய்யத் தோன்றும். ஒரு கல்யாணத்தை நிறுத்த பஸ் ஏற்பாடு செய்துகொண்டு போன வராயிற்றே! அதனால் இப்போது என்னை வம்பில் மாட்டி வைக்க அவர் நினைத்தால் வியப்பதற்கில்லை. நானும் உமாவும் நாளைக் காலைவரையில் காத்திருக்க முடியாது. இப்போதே உடனே புறப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு மளமளவென்று ஒரு ஸூட் கேஸில் அவசியமான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டாள். வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டாள். குண சேகரனிடம் ஒரு 'செக்' எழுதித் தந்து மறுநாள் பாங்கிலிருந்து டிராஃப்ட் வாங்கி அனுப்புமாறு வெளியூர் வக்கீல் நண்பர் ஒருவரின் விலாசமும் கொடுத்தாள். உமாகாந் தனுக்காகக் குணசேகரனின் துணிமணிகள் சிலவற்றையே பெட்டிக்குள் திணித்தாள். உமாகாந்தனை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். கல்யாணம் வந்து போன பத்தாவது நிமிஷம் அவள் ஓட்டிக் கொண்டு சென்ற கார் தோட்டத்தைக் கடந்து சுற்றுச் சுவர் வாசலைத் தாண்டிச் சாலையில் ஓடத் தொடங்கிற்று.
அவளது இந்த முன்யோசனையையும் செயல் திறனையும் ஒரு பக்கம் நினைத்துப் பெருமைப் பட்டாலும் கூடவே குணசேகரனைப் பலவித அச்சங்கள் பீடித்தன. 'கோவர்த்தனன் இப்போது என்ன செய்யப் போகிறான்? பவானி போலீஸாரிடம் பிடிபட்டால் நாம் என்ன பண்ணுவது? அகப்பட்டுக் கொள்ளாமல் மலேயாவுக்குக் கப்பலேறி விட்டாளென்றாலும் அவள் பெற்றோருக்கு நாம் என்ன பதில் சொல்வது?' என்றெல்லாம் பல கேள்விகள் அவர் மனத்தைக் குடைந்தெடுத்தன.
சுமார் ஐந்தாறு மணி நேரத்துக்குப் பிறகு 'பவானி போலீஸாரிடம் அகப்பட்டுக்கொள்வாளா, மாட்டாளா?' என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. பல பலவென்று விடிந்து, சுரிய கிரணங்கள் எங்கும் பரவி இருளை விரட்டி நம்பிக்கை ஒளி பரப்பும் வேளையில், பட்சிகள் எல்லாம் மற்றொரு தினத்தை வரவேற்றுக் கீதமிசைக்கும் தருணத்தில் 'பவானியும் உமாகாந்தனும் பிடிபட்டார்கள்' என்ற செய்தி வந்து சேர்ந்தது.
ரத்தக்கறை படிந்த துணியைப் பார்த்ததும் "தப்பிவிட்டார்கள், தப்பி விட்டார்கள்" என்று கூறிக் கொண்டே கீழே ஃபோன் இருந்த இடத்தை நோக்கிச் சென்ற மாஜிஸ்திரேட் கோவர்த்தனன், தமது பதவி அளித்த செல்வாக்கைப் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பிரயோகித்ததில் அவர் விரும்பிய நல்ல பலன் கிடைத்துவிட்டது. ராமப் பட்டணத்திலிருந்து செல்லும் பிரதான சாலைகள் ஒவ்வொன்றிலும் ஆங்காங்கே உள்ள ஊர்களில் போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தகவல் கொடுத்து கார் நம்பரையும் கூறியதில், பாதைக்குக் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி, பவானியையும் உமாகாந்தனையும் பிடித்து விட்டார்கள். போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் திரும்பவும் ராமப்பட்டணத்துக்கே வந்து கொண்டிருக்கிறார்கள்!
கோவர்த்தனன் உறக்கத்தால் கனத்த கண்ணிமைகளைச் சிரமப்பட்டுத் திறந்து குணசேகரனிடம் கூறினார்;
"மிஸ்டர்! என் வேலை முடிந்தது. நான் இதோ வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு ஒரு 'டிப்' கொடுத்துவிட்டுப் போகிறேன். பவானி இரண்டு வருஷங்கள் சிறை வாசம் அனுபவிக்காமல் இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு உபாயம்தான் இருக்கிறது.
அந்தப் பயல் - அதாவது மிஸ்டர் இன்ஃபுளூயன்ஸா - ஒரு தேசத் துரோகி, சிறையிலிருந்து தப்பி வந்தவன் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றும் அவனை இதற்கு முன் தன் வாழ் நாளில் தான் பார்த்ததே இல்லை என்றும் பவானி எழுதித் தரவேண்டும். காயம் பட்டிருக்கும் ஒருவனுக்குக் கருணை காட்டும் எண்ணம் தவிர தனக்கு வேறு ஓர் உள் நோக்கமும் இல்லை என்று வாக்குமூலம் தரவேண்டும். அவன் தன்னைப் பலவந்தமாகக் கார் ஓட்டி வருமாறு பணித்தான். தப்பிக்க உதவவில்லையானால் கொன்று விடுவதாக மிரட்டினான் என்று எழுத வேண்டும். புரிந்ததா? இப்படி ஒரு 'ஸ்டேட்மெண்ட்' எழுதி மேன்மை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கோரினால் அவளை உடனே விடுவித்துவிட நான் ஏற்பாடு செய்கிறேன். அப்படி ஒரு வாக்குமூலம் எழுதி வாங்கும் பொறுப்பு உம்முடையது. இதைச் செய்யாமல் சட்டப்படி காரியம் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்தீரானால் உமது மருமகளை மறுபடியும் இரண்டோ மூணோ வருஷங்களுக்குப் பிறகுதான் கண்ணால் பார்க்க முடியும். புரிந்ததா? எவ்வளவு சீக்கிரம் அந்த வாக்குமூலத்தைப் பெற்று வருகிறீரோ, அவ்வளவுக்கு நல்லது!"
இவ்விதம் கூறிவிட்டு மாஜிஸ்திரேட் வாசலில் நின்ற தமது காரில் ஏறிச் சென்று விட்டார். வரும்போது தம்முடன் வந்த கல்யாணத்தை அவர் அடியோடு மறந்துதான் விட்டாரோ அல்லது வேண்டுமென்றே அலட்சியம் செய்தாரோ, உபசாரத்துக்குக்கூட அவன் தம்முடன் வருகிறானா என்று கேட்காமல் போய்விட்டார்.
அவர் போனதும் கல்யாணம் குணசேகரன் பக்கம் திரும்பி "ஸார்.....!" என்று ஆரம்பித்தான்.
"யூ ராஸ்கல்! நீ ஏண்டா இன்னும் இங்கே நிற்கிறாய்!" என்று எரிந்து விழுந்தார் அவர்.
கல்யாணம் பேசாமல் திரும்பி வருத்தத்தோடும் ரோஷத்தோடும் விடுவிடுவென்று நடந்து சாலைக்கு வந்து சேர்ந்தான். அங்கே அவன் விட்டுச் சென்ற டப்பாக் கார் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. உலகின்மீதே தனக்கு ஏற்பட்ட வெறுப்பையெல்லாம் ஒன்று திரட்டி அதன் மீது காட்டுகிறாற்போல 'பானெட்' மீது ஒரு குத்து விட்டான். அதில் ஒரு சொட்டை விழுந்தது. வலித்த கையைத் தடவி விட்டுக் கொண்டவன் என்ன நினைத்தானோ, ஏறி அமர்ந்து, 'ஸ்டார்ட்' செய்தான். அது 'மக்கர்' பண்ணாமல் உடனே உறுமிக்கொண்டு புறப்பட்டது!
'நல்ல சகுனம்தான்' என்று எண்ணிக் கொண்டான் கல்யாணம்.
----------------------
அத்தியாயம் 61 -- பயணம் முடிந்தது!
"இந்த ஆபத்தான பயணத்தை என்னுடன் சேர்ந்து நீயும் மேற்கொண்டிருக்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, பவானி! ஏதோ கனவு போலிருக்கிறது" என்றான் உமாகாந்தன்.
காரை வெகு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த பவானி, "கனவாகவே முடிந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்யாணம் ரொம்பக் கோபமாகத் திரும்பிப் போயிருக்கிறார். என்ன செய்வாரோ தெரியாது. கோடிக்கரையை நாம் அடைந்து உங்கள் திட்டப்படி கள்ளத்தோணியில் ஏறிய பிறகுதான் எதையும் நிச்சயமாகத் தீர்மானிக்கலாம்" என்றாள்.
"பாவம், உன் மாமா குணசேகரன் நிலைமைதான் ரொம்ப தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவரை நம்பித்தானே உன் பெற்றோர் உன்னை ராமப்பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார்கள்? பெரிய பொறுப்பு இல்லையா அவருக்கு? உன் பெற்றோருக்கு அவர் என்ன பதில் சொல்வார்?"
"ஆறு பெருகெடுத்தோடிக் கடலில் சங்கமமாகிவிட்டது என்று கூறட்டும்; மொட்டு வெடித்து மலர, மணம் காற்றோடு கலந்தது என்று சொல்லட்டும். பருவ மழை உரிய காலத்தில் பெய்தது. பூமி குளிர்ந்தது என்று விளக்கட்டும். இந்த இயற்கை நியதிகளை மாற்ற முடியுமானால்தான் நான் உங்களை அடைவதை அவர்களால் தடுக்க முடியும்."
கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆர்வத்துடன் உமாகாந்தன் பவானியின் இடக்கரத்தைப் பற்றினான்.
"உம்....உம்...! விளையாட்டெல்லாம் இப்போது வேண்டாம். 'ஸ்பீடா மீட்ட'ரைப் பாருங்கள்! என் இரண்டு கரங்களுக்கும் 'ஸ்டியரிங்'கில் வேலை இருக்கிறது" என்றாள் பவானி.
"எப்படியாவது நாம் மலேயாவை அடைந்து விடுவதாக வைத்துக் கொண்டாலும் நம் வாழ்க்கை அங்கேயும் நிம்மதியின்றித்தான் தொடரும் பவானி! "இங்கே ஸி.ஐ.டி.களுக்குப் பயந்து வாழ்ந்தோமென்றால் அங்கே ஜப்பானியர்களின் குண்டு வீச்சுக்கு அஞ்சி வாழும்படி இருக்கும்."
"இதற்கு அது எவ்வளவோ மேல். இங்கே நீங்கள் மறுபடியும் சிறைப்பட்டால் தனிமையை என்னால் தாங்கவே முடியாது. அங்கே வாழ்வோ சாவோ எதுவானாலும் நாம் சேர்ந்து அனுபவிக்கலாம் இல்லையா? சுதந்திரமாக வாழ்ந்து பாரதத்தின் சுதந்திரத்துக்கும் இயன்றவரை உழைக்கலாம் அல்லவா?"
"தேவலாமே! நீ இவ்வளவு தீவிர தேச பக்தை என்பது எனக்கு இதுவரை தெரியாமல் போயிற்றே!"
"எல்லாம் சகவாச தோஷம்தான்!"
"அப்படி எத்தனை நாள் என்னுடன் பழகி விட்டாய்? கல்லூரியில் பட்டும் படாமலும் ஏதோ நண்பர்களாகப் பழகினோம். பிறகு நான் சிறைக்குப் போய்விட்டேன். இப்போது மறுபடியும் சந்தித்து முழுசாக ஒரு வாரம்கூட ஆகவில்லையே?"
"அதென்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? யுகம் யுகமாக உங்களுடன் தானே நான் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.
"அப்பப்பா! ஒரு தடவைகூடப் பேச்சில் என்னை ஜெயிக்க விடமாட்டாய்!" என்றான் உமாகாந்தன்.
பவானி சிரித்தாள். "சிறையிலிருந்து எப்படி நீங்கள் தப்பினீர்கள்? அதைச் சொல்லுங்கள். களைப்பையும் தூக்கத்தையும் விரட்ட உதவும்."
"அதற்கும் ஜப்பான்காரன்தான் உதவினான் பவானி. ஒரு நாள் மாலை சிறைச்சாலைச் சுவர் ஓரமாக நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று அபாய அறிவிப்பு சங்கு அலறியது. அவ்வளவுதான், வார்டர்களானால் என்ன, கைதிகளானால் என்ன, உயி ருக்குப் பயப்படாதவன் யார்? அவரவரும் சிறைக்குள்ளே அமைக்கப் பட்டிருந்த 'டிரென்ச்சு'க்குள் பதுங்குவதற்காக ஓடினார்கள். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தேன் நான். முன்னேற் பாட்டின்படி நானும் வேறு மூன்று கைதிகளும் நாங்கள் உடைத்துக் கொண்டிருந்த கருங்கள் ஜல்லிக் குவியல்களுக்குப் பின்னாலேயே பதுங்கிக் கொண்டோம். வார்டர்கள் தலை மறைந்ததும் அந்த மூவரும் கோபுரம் போல் நின்று எனக்குத் தோள் கொடுத்துத் தூக்கி விட்டார்கள். பதினைந்தடிச் சுவரின் மீது அவர்கள் உதவியுடன் ஏறுவது சிரமமாக இல்லை. அந்தப் பக்கம் குதிப்பதுதான் அச்ச மளிப்பதாய் இருந்தது. வந்தது வரட்டும் என்று கண்களை மூடிக் கொண்டு குதித்தேன். நல்ல வேளை கைகால் ஏதும் முறியவில்லை.
"அப்புறம்?"
"நன்றாக இருள் கவியும்வரை ஒரு பாதாளச் சாக்கடையின் உள்ளே இடுப்பளவு நீரில் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு நின்றேன். அபாயம் நீங்கியதற்கு அறிகுறியாகச் சங்கொலிப்பதும் போலீஸார் என்னைத் தேட இங்குமங்கும் விரைவதும் இலேசாகக் கேட்டன. மனசு கிடந்து திக் திக்கென்று அடித்துக்கொண்டது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சந்தடி யெல்லாம் அடங்கி விட்டது. நன்றாக இருட்டியிருக்கும் என்று தோன்றியபோது மெல்ல வெளியே வந்து இருளில் பதுங்கிப் பதுங்கி நடந்தேன். கங்கையில் இறங்கிச் சாக்கடை அழுக்குப் போகக் குளித்தேன்.
"அந்த அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒரு பெரியவர் குளித்துவிட்டுச் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கண்களை மூடித் தியானத்தில் இருந்த சமயம் கரையில் இருந்த அவர் துணி மணிகளை எடுத்துக் கொண்டு சந்தடியின்றி ஓடிவிட்டேன். சிறிது தூரம் போய் ஒரு மரத்துக்குப் பின்னால் உடைகளை அணிந்து கொண்டு கைதி உடைகளை ஒரு பெரிய பாறாங்கல்லைச் சுற்றிக் கட்டி ஆற்றில் எறிந்து விட்டேன். மகராஜன் துணிமணிகளை எனக்குத் தந்தது மட்டுமல்ல; அதில் ஒரு மணி பர்ஸும் வைத்திருந்தான். அதிலிருந்த பணம் என் தாயாரின் சொந்தக் கிராமத்துக்கு நான் வந்து சேரும்வரை எனக்குப் போதுமானதாய் இருந்தது. நல்லவேளை! பர்ஸில் விலாசமும் இருந்தது. அம்மாவிடம் பணம் கேட்டுப் போஸ்டல் ஆர்டர் வாங்கி அனுப்பி விட்டேன்."
"உங்கள் தாயார் கல்கத்தாவிலிருந்து கிராமத்துக்கு வந்து விட்டாரா? ஏன்?"
"அது உனக்குத் தெரியாதா? ஆம்; தெரிய நியாயம் இல்லைதான். நான் கையும் களவுமாகப் பிடிபட்டதே என் தகப்பனாருக்குப் பெரிய அதிர்ச்சி. அதுவும் அவர் வேலை பார்த்து வந்த பாங்கியிலேயே அவர் மகன் கொள்ளையடித்து விட்டதை - அந்த அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. போதாக் குறைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் என் அண்ணனுக்குக் கடன் கொடுத்த மார்வாடி வீட்டுக்கு வந்து கத்தியிருக்கிறான். இந்த இரண்டாவது அதிர்ச்சி ஏற்பட்டபோது என் தகப்பனார் இதயம் பாதிக்கப்பட்டு விட்டது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தம் சேமிப்பையெல்லாம் துடைத்தெடுத்து மார்வாடியிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அப்போது படுக்கையில் விழுந்தவர் பின்னர் எழுந்திருக்கவே இல்லை. சீக்கிரமே இரண்டாவது 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு உயிர் துறந்தார். வைதவ்ய நிலை அடைந்த என் தாயார் கல்கத்தாவில் வாழப் பிடிக்காதவளாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் பெற்றோருடன் வசிக்கப் போய்விட்டாள். அங்கிருந்து அவள் தன் துயரத்தை யெல்லாம் வடித்து எழுதிய கடிதம் எனக்குச் சிறைச்சாலையில் கிடைத்தது.
"பவானி! நான் சிறையிலிருந்து தப்ப முடிவு செய்ததற்கு என் தாயாரின் கண்ணீர்க் கறை படிந்த முகம் சதா என் நினைவில் தோன்றிக் கொண்டிருந்தது ஒரு காரணம்" என்றான் உமாகாந்தன்.
"பாவம்! அவரை ஒரு தடவை சந்தித்து ஆறுதல் கூடச் சொல்லாமல் மலேயாவுக்கு உங்களுடன் கப்பலேறிவிடப் போகிறேனே என்று எண்ணினால் எனக்கே வெட்கமாக இருக்கிறது" என்றாள் பவானி. அங்கிருந்து பத்தாவது மைல் கல்லில் அவர்கள் பயணம் முடிந்துவிடப் போவதை அக்கணத்தில் அறியாதவளாக.
(தொடரும்)
------------
அத்தியாயம் 62 -- லட்சிய வெறி
பவானி தன் தாயாரைப் பற்றி நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளைக் கேட்டு உமா காந்தன் உருகிப் போனான்.
"உண்மையிலேயே அந்த ஒரு விஷயத்தில் நீ துரதிருஷ்டசாலிதான் பவானி. என் தாயாருடன் நெருங்கிப் பழக உனக்குக் கொடுத்து வைக்கவில்லை அல்லவா? இரண்டு நாட்கள்தான் இப்போது அவளுடன் இருந்தேன். அதற்கு மேல் தங்க பயம். எனக்கு, அவளுக்கு, அவள் பெற்றோருக்கு எல்லோருக்கும் ஆபத்து என்ற எண்ணத்தில் கிளம்பிவிட்டேன். ஆனால் அந்த இரண்டு நாட்களும் அவள் அள்ளிக் கையில் வைத்த பழையது சாப்பிட்ட திருப்தி என் வாழ்நாளெல்லாம் இருக்கும். அமிர்தம்தான் அது. நான் புறப்பட்ட போது அவள் பெட்டியைத் திறந்து அடியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த என் கதர் பைஜாமா ஜிப்பாக்களை எடுத்துத் தந்தாள். ' அம்மா! நான் எப்படியும் உன்னைத் தேடி வருவேன் என்று எதிர்பார்த்து இவற்றைப் பின்னோடு எடுத்து வந்தாயா?' என்று கேட்டேன். 'நீ எங்கேடா என்னை விட்டுப் பிரிந்தாய்? அண்ணன் தம்பி இரண்டு பேரும் சரி, உன் அப்பாவும் சரி. சதா என்னோடுதான் இருக்கிறீர்கள்! என்றாள்.
" 'அம்மா அண்ணாவும் நானும் இவ்வளவு பெரிய தவறுகளைச் செய்திருக்கிறோமே என்றேன்.' "
" 'தெரியுமே! என்னை இந்தக் கோலத்தில் நிறுத்தி வைத்திருப்பதே நீங்கள் இரண்டு பேரும் பண்ணின காரியங்கள் தானே' "
" 'அப்படி இருந்தும் இவ்வளவு அன்பு காட்டுகிறாயே, அம்மா' "
" ' அதற்குப் பெயர்தான் தாய்ப் பாசம் என்கிறதுடா, இது தெரியாதா?' " என்றாள்.
இதைச் சொல்லி வரும் போது உமாகாந்தனுக்குத் தொண்டை கரகரத்தது. பவானிக்கோ கண்களில் நீர் திரையிட்டு எதிரே பாதையை மறைத்தது. கண்ணீரை விரல்களால் துடைத்தவள், பொறாமை எட்டிப் பார்ப்பது போன்ற தொனியில், " என்ன இருந்தாலும் அம்மா என்றால் உசத்திதான். சிறையில் இருந்தபோது இத்தனை காலமாக எனக்கு ஒரு கடிதம்கூடப் போடாமல் இருந்துவிட்டீர்கள் அல்லவா?" என்றாள்.
" எப்படி எழுதுவேன் பவானி? என் அப்பா உன் கண்களுக்கு என்னைத் தேசபக்தனாக்கியிருந்தது எனக்குத் தெரியாது. திருட் டுப் பட்டத்துடன் கம்பி எண்ணச் சென்றவன் நான். அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு உனக்கு எப்படி எழுதுவேன்? உண்மையை வெளியிடுவதில்லை என்றும் என் அண்ணனைக் காப்பாற்றுவது என்றும் தீர்மானித்த பிறகு என் நிலைமையை ஒரு கடிதத்தில் எப்படி விளக்குவேன்?"
" என்னைப்பற்றி எப்படி அறிந்தீர்கள்? நான் ராமப்பட்டணத்தில் இருப்பது எப்படித் தெரிந்தது?"
" கல்கத்தாவிலிருந்து புறப்படுவதற்குமுன் உன் வீட்டுக்கு ஃபோன் செய்தேன். நெம்பர் நினைவிருந்தது. எப்படியாவது சில நிமிஷ மேனும் உன்னிடம் தனியாகப் பேச ஆவல். இடத்தைச் சொல்லிக் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே உன்னை வரச்சொல்லலாம் என்று எண்ணினேன். உன் பெற்றோர் பேசியிருந்தால் ஒரு வேளை சந்தேகப்பட்டு, ' நான் யார்? என்ன விஷயம்? என்றெல்லாம் கேட்டிருப்பாரகளோ என்னமோ! ஆனால் என் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வேலைக்காரன் பேசினான்: 'பவானி அம்மாவா? அவங்க ராமப்பட்டணத்தில் மாமா வீட்டுக்குப் போய் மாசக்கணக்கா ஆகிறதே' என்றான். அவ்வளவுதானே எனக்கு வேண்டியது? ஆனால் உன்னைத் தொடர்ந்து என் அண்ணாவும் ராமப் பட்டணத்துக்கே வந்திருக்கிறான் என்பது உன்னைச் சந்தித்த பிறகுதான் எனக்குத் தெரியும். என் தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது கோவர்த்தனன் பற்றி நான் எதுவுமே கேட்கவில்லை. அவளாக ஏதோ கூற வந்த போதும் நான் சுவாரசியம் காட்டவில்லை. ' அவன் கதை எனக்கு எதற்கு அம்மா?' என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். ஆனால் அவன் கதைதான் தொடர்கதையாக என்னைப் பின் தொடர்கிறது!"
பின் தொடரவில்லை. முந்திக் கொண்டே போய்விட்டது. நம் வருகைக்காகக் காத்திருக்கிறது. அதோ பாருங்கள்! சாலைக்குக் குறுக்கே தடுப்பு ஏற்படுத்திவிட்டுப் போலீஸ்காரர்கள் நிற்பதை" என்றாள் பவானி. காரின் வேகத்தைத் தணித்தவாறே.
பவானியை அவள் மாமா குணசேகரன் லாக்-அப்பில் காண வந்தார். அவளிடம் மாஜிஸ்திரெட் கோவர்த்தனன் கூறிய யோசனையை விவரித்தார். " 'உமாகாந்தன் சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி என்று எனக்குத் தெரியாது; ஏதோ மனிதாபிமானத்தால் காயம்பட்டவனுக்கு உதவ முற் பட்டேன்; பிறகு அவன் தப்பிச் செல்ல வேண்டி என்னைக் காரோட்டி வருமாறு கட்டாயப்படுத்தினான்; அதற்கு இணங்கா விட்டால் கொன்று விடுவதாக மிரட்டினான்' என்று நீ எழுதித் தரவேண்டும். நீ விடுதலை பெற அது ஒன்றுதான் வழி, பவானி!"
"அப்படிப் பொய்யான ஒரு வாக்குமூலம் எழுதித் தந்து நான் விடுதலை பெற விரும்பவில்லை, மாமா! நீங்கள் உமாவிடம் பேசுங்கள். அவர் வழக்கை நான் நடத்தச் சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துங்கள். கோர்ட்டில் அவர் உண்மைகளைக் கூற ஒப்புக் கொள்ளச் செய்யுங்கள். அதற்கு மட்டும் அவர் சம்மதித்தால் குறுக்கு விசாரணையில் மாஜிஸ்திரேட்டைச் சந்தி சிரிக்கப் பண்ணி விடுவேன் நான். உமாகாந்த் நிச்சயம் விடுதலை பெற்று விடுவார்."
குணசேகரன் உமாகாந்திடம் போய் நடந்ததையெல்லாம் விவரித்தார். மாஜிஸ்திரேட் கோவர்த்தனனின் யோசனையையும் பவானியின் பதில் யோசனையையும் கூறினார்.
"குணசேகரன் ஸார்! ஆபத்தான ஒரு கட்டத்தில் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு நாளும் மீறமாட்டேன். அப்படி நான் செய்தால் இத்தனை நாட்கள் நான் சிறையிலிருந்து பட்ட அவதிக்கெல்லாம் என்ன அர்த்தம்? அத்தனையும் வியர்த்தமாக அல்லவா முடியும்?"
"குற்றமற்றவன் சிறையில் வாடுவதும் குற்றவாளி வெளியே சுதந்திரமாக உலாவுவதும் என்ன நியாயம்?"
"தண்டிப்பது கடவுள் பொறுப்பு. மன்னிப்பது மனிதன் பாக்கியம்."
"உன் லட்சிய வெறி எனக்கொன்றும் புரியவில்லை" என்றார் குணசேகரன். "இத்தனை நாட்களாய் உன்னை நீயே வருத்திக் கொண்டாய். இப்போது உன்னைக் காதலிப்பது தவிர வேறு ஒரு தவறும் செய்தறியாத என் மருமகளையும் சிறையில் தள்ளி விடப் போகிறாய். இதொன்றுதான் எனக்குத் தெளிவாகிறது."
"நீங்கள் கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம், ஸார்! மாஜிஸ்திரேட் கேட்டது போன்ற வாக்குமூலத்தைப் பவானி எழுதாவிட்டால் என்ன? நான் எழுதித் தருகிறென். போலீஸாருக்கு அதுவே போதும். 'பவானிக்கு நான் சிறையிலிருந்து தப்பிய கைதி என்று தெரியாது; கருணையினால் உதவினாள்; நான் சற்றுக் குணமடைந்ததும் ஸி.ஐ.டிகளிடமிருந்து தப்ப அவள் காரைப் பயன் படுத்திக் கொண்டேன்; பவானியை மிரட்டிக் காரோட்டி வரச் செய்தேன்' இவ்வளவு தானே எழுத வேண்டும்? எங்கே, ஒரு பேனாவும் தாளும் கொடுங்கள்!"
"ஐயய்யோ! நான் அப்படி ஒரு கடிதத்தை உன்னிடமிருந்து எழுதி வாங்கிப் போய் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்ததாகத் தெரிந்தால் அப்புறம் பவானி என்னைச் சும்மாவிட மாட்டாள். அக்கினியாகச் சொற்களைக் கொட்டி என்னை வறுத்தெடுத்து விடுவாள். வேண்டாமப்பா, வேண்டாம்!"
"நீங்கள் வாங்கிக் கொள்ளாவிட்டால் என்ன? இங்கே வருகிற இன்ஸ்பெக்டரிடம் எழுதிக் கொடுத்து அனுப்புகிறேன். கோவர்த்தனனுக்கு"
"என்னமோ செய், என் காதில் மட்டும் போடாதே! நான் வருகிறேன்" என்றார் குணசேகரன்.
சில மணி நேரம் கழித்துப் பவானி இருந்த லாக்-அப் அறைக் கதவு திறந்தது. "நீங்கள் போகலாம்" என்றார் இன்ஸ்பெக்டர்.
பவானிக்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்று உடனே புரிந்து விட்டது. உமாகாந்தனின் வக்கீல் என்ற முறையில் அவனைப் பார்க்க அனுமதி பெற்று உடனே போனாள்.
"நீங்கள் இப்படிச் செய்தது கொஞ்சம் கூடச் சரியில்லை. இப்போதுகூட ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை. உங்கள் வக்கீலாக இருந்து வாதாட அனுமதி கொடுங்கள். கோர்ட்டில் விசாரிக்கும்போது என் கேள்விகளுக்கு உண்மைகளைப் பதிலாகச் சொல்லுங்கள். நீங்கள் நிச்சயம் விடுதலை பெறலாம்" என்றாள்.
"உன் வாதத் திறமையெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் உன் வேண்டுகோளுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்." என்றான் உமாகாந்தன்.
"உங்களுக்கு உங்களுடைய அர்த்தமற்ற, அபத்தமான வாக்குறுதிதான் முக்கியம். நான் எக்கேடு கெட்டுப்போனாலும் உங்களுக்குக் கவலை இல்லை"என்று பவானி கூறி விம்மினாள்.
"என்னை மன்னித்துவிடு, பவானி!" என்றான் உமாகாந்தன்.
"இப்போது மன்னிக்கமாட்டேன். இன்னும் நாலு வருஷமோ ஆறு வருஷமோ தண்டனை பெற்று மறுபடியும் சிறையிலிருந்து விட்டு வெளியே வரும்போது, பவானி என்ற தலை நரைத்த கிழவி ஒருத்தி உங்களுக்காக இங்கேயே காத்திருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள். அப்போதுதான் மன்னிப்பேன்" என்று அழுது கொண்டே சொன்னாள் பவானி.
உமாகாந்தன் மெய்சிலிர்த்தான். "எத்தனையோ கற்புக்கரசிகளைப் பற்றிப் புராணங்களில் படித்திருக்கிறேன். உனக்கு நிகராக யாருமில்லை" என்றான்.
" நானும் எத்தனையோ சத்தியசந்தர்களைப் பற்றிப் புராணங்களில் படித்திருக்கிறேன். உங்களைவிட அசடான ஒருத்தர் கிடையாது" என்று கூறிப் பவானி கண்ணீருக் கிடையில் புன்னகை பூத்தாள். மழை ஓய்ந்ததும் கதிரவனைப்பார்த்துச் சிரிக்கும் மலராக விளங்கியது அவள் முகம். "போகட்டும். ஒரு வாக்குறுதி கொடுங்கள்" என்றாள்.
"என்ன பவானி?"
" நாலு வருஷமோ ஆறு வருஷமோ தண்டனைக் காலம் எதுவானாலும் முழுக்க அனுபவித்துவிட்டு வாருங்கள். மறுபடியும் தப்பி ஓடி வந்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!"
உமாகாந்தன் உரக்கச் சிரித்தான். " அப்படியே ஆகட்டும், பவானி! ஆனால் இந்த முறை தண்டனையை அனுபவிப்பது எனக் கொன்றும் அவ்வளவு சிரமமாக இராது. உன் ஆழ்ந்த அசைக்க முடியாத காதலைப் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னை நீ தவறாக எண்ணவில்லை என்றும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இவை போதும். ஆறு வருஷமானாலும் ஆறு நாட்களாக ஓட்டிவிட்டு ஓடி வந்து விடுவேன்" என்றான்.
------------------
அத்தியாயம் 63 -- உல்லாச வேளை
அன்று மாலை வாங்கிய ஓர் உயர் ரக விஸ்கி பாட்டிலுடன் கோவர்த்தனனைப் பார்க்கப்போனான் கலயாணம். மல்லிகை மலர்ந்து மணம் பரப்பும் நேரம். கோவர்த்தனன் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகையுடன் நைட் குவீன் மலர்களின் மணமும் சேர்ந்து நறுமணம் கனமாகச் சூழ்ந்திருந்தது.
"எங்கேப்பா வந்தாய் மறுபடியும்?" என்றார் கோவர்த்தனன்.
"உங்கள் வெற்றியைக் கொண்டாடத்தான் ஸார்!" என்று சொல்லிக் கொண்டேதான் கொண்டு வந்திருந்த பொட்டலத்தைப் பிரித்தான் கல்யாணம்.
"எதைச் சொல்கிறாய்? என்ன வெற்றி பெற்றுவிட்டேன் நான்?" " என்ன ஸார், அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மிஸ்டர் இன்ஃபுளூவென்ஸாவைப் பிடித்து உள்ளே தள்ளவில்லையா? இனிமேல் பவானியை நீங்கள் அடையத் தடை என்ன இருக்கிறது? முகூர்த்த நாள் பார்க்க வேண்டியதுதானே பாக்கி?" என்ற கல்யாணம் பிரித்த பெட்டிக்குள்ளிருந்து மதுப் பாட்டிலை எடுத்து மேஜையின் மீது வைத்தான்.
முழுசும் புதுசுமான ஜானிவாக்கர் புட்டியைப் பார்த்ததும் கோவர்த்தனன் முகம் மலர்ந்தது.
"அதைச் சொல்கிறாயா? பவானி அந்தத் தடியனிடமிருந்து காப்பாற்றப்பட்டதற்குச் சந்தோஷப்படவேண்டியதுதான். கம் லெட் அஸ் ஸெலிபரேட்! யூ மஸ்ட் ஜாயின் மி" என்றார் கோவர்த்தனன். தோட்டக்காரனை அழைத்து வராந்தாவிலிருந்த வசதியான நாற்காலிகள் இரண்டைத் தோட்டத்தில் எடுத்துப் போடச்சொன்னார். "இந்தாப்பா! அந்தக் காஃபி டேபிளையும் இப்படி கொண்டு வந்து போடு. அப்புறம் மணியைக் கூப்பிடு" என்றார்.
"இத்தனை மல்லி மலர்களின் வாசனையும் இனி வீண்போகாது ஸார். சரம் சரமாகத் தொடுக்கச் செய்து பவானிக்குக் கொண்டையைச் சுற்றி நீங்களே உங்கள் கரத்தால் சூட்டலாம்" என்றான் கல்யாணம்.
கோவர்த்தனன் அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தார். உற்சாகமாக, " உன்னை என்னமோ என்று நினைத்தேன். ரொம்ப சாமர்த்தியமாகப் பேசுகிறாயே" என்றவர், சமையல் அறையிலிருந்து வந்து நின்ற மணியைப் பார்த்து," சோடா,ஐஸ் கொண்டு வா. அப்படியே கொரிக்க ஏதாவது வைச்சிருப்பியே, அதையும் எடுத்து வா" என்றார்.
"கூடவே கொஞ்சம் சர்க்கரையும் வேண்டும்" என்றான் கல்யாணம். மணி தன்னை அப்போது பார்த்த பார்வையில் ஒருவித எதிர்ப்பு குடிகொண்டிருப்பது கல்யாணத்துக்குப் புரிந்தது. ஆனால் ஏன், எதற்காக என்பதை அவனால் உணர முடியவில்லை.
"சர்க்கரை எதற்கு?" என்றார் கோவர்த்தனன்.
"கமலாவுக்கும் எனக்கும் கல்யாணம். பவானிக்கும் உங்களுக்கும் கல்யாணம். நீங்கள் என் வாயில் சர்க்கரை போடுங்கள். நான் பதிலுக்கு உங்கள் நாவை இனிக்கச் செய்கிறேன்"
"பேஷ், பேஷ்!" என்று தலையசைத்தார் கோவர்த்தனன்.
சில வினாடிகளில் உருளைக்கிழங்கு வறுவல்,வறுத்த முந்திரிப் பருப்பு, காரா பூந்தி, ஐஸ் சோடா, சர்க்கரை எல்லாம் வ்ந்து சேர்ந்தன.
அவற்றை வைத்துவிட்டு ஏதோ கூற விரும்பியவர் போல ஒரு கணம் தயங்கினார் மணி. அதற்குள், " நீ போகலாம்" என்று அவரை அனுப்பி விட்டார் கோவர்த்தனன்.
" இந்த சமையல்காரரை எங்கே பிடித்தீர்கள்?" என்றான் கல்யாணம்.
"ரொம்ப காலமாக எங்கள் வீட்டிலேயே இருக்கிறான். என்னைத் தூக்கி வளர்த்து எல் லாம் செய்திருக்கிறான். அதனால் அவனுக்குக் கொஞ்சம் சலுகை அதிகம். இப்போ நீ இங்கிருப்பதால் வாயை மூடிக் கொண்டு போய் விட்டான். இல்லாத போனால் நான் குடிக்கக் கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சண்டை பிடித்திருப்பான். அப்புறம் ஓர் அதட்டல் போட்டுத்தான் அவனை அடக்க வேண்டியிருக்கும். தினமும் இவனுடன் இது விஷயத்தில் ஒரு போராட்டம் நடத்துகிறேன். ஆனால் மனுஷன் ரொம்ப நல்ல மாதிரி. கமான் ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்" என்றார் கோவர்த்தனன்.
"எஸ், ஐ வில் ஹெல்ப் மை ஸெல்ஃப்" என்று கல்யாணம் தனது டிரிங்கைத் தானே தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தான். பாண்ட் பாக்கெட்டிலிருந்து இரண்டு எலுமிச்சம் பழங்கள் வெளிப்பட்டன. சாவிக்கொத்திலிருந்த பேனாக் கத்தியால் ஒரு பழத்தை வெட்டிச் சாறு பிழிந்தான், இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டுச் சோடாவைக் கலந்தான். லெமனேடைக் கரத்தில் ஏந்தி "சீர்ஸ்" என்றான்
கோவர்த்தனன் அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு "சீர்ஸ்" என்று கூறி விஸ்கியை விழுங்கினார்.
"பவானிக்கு விடுதலை கிடைக்கச் செய்து விட்டீர்களாமே, எப்படி ஸார் அதைச் சாதித்தீர்கள்? நீங்கள் விருமபியபடி அவள் வாக்குமூலம் எழுதிக் கொடுத்து விட்டாளா?"
" அவள் தரவில்லை, அதனால் என்ன? உமாகாந்தனே எழுதிக் கொடுத்துவிட்டான். அது போதாதா?"
"பேஷாகப்போதும். இப்போது உமாகாந்தன் நிலை என்ன?"
" பழைய பாக்கி இரண்டு வருஷங்கள். இப்போ தப்பி ஓடிய குற்றத்துக்காக மேலும் மூன்று வருஷங்கள்....."
" ஆக மொத்தம் ஐந்து வருஷங்கள்."
" அவசரப்படாதே, அப்பா! அவனைப் போலீஸார் பிடித்துச் சோதித்தபோது அவனிடம் நேதாஜியின் இயக்கம் பற்றிய பிரசாரப் பிரசுரங்கள் பல இருந்தன. நேதாஜியின் படங்களையும் ஏராளமாய் வைத்திருந்தாள்.
அவற்றை ரகசியமாக விநியோகிக்க எண்ணியிருக்கிறான். ராஜத்துவேஷக் குறச்சாட்டும் சேர்ந்துகொள்கிறது."
"அதற்கு மேலும் இரண்டு வருஷங்கள் தீட்டிவிட வேண்டியதுதானே! ஏழு வருஷங்களுக்குக் கவலை இல்லை" என்ற கல்யாணம் திடீரென்று நினைத்துக் கொண்டவன் போலக் கேட்டான்: "ஏன் சார், நான் கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே...... உங்களுக்கும் உமாகாந்தனுக்கும் இடையில் முக ஜாடையில் நிறைய ஒற்றுமை இருக்கிறதே?"
"அது விஷயம் தெரியாதா, உனக்கு?" என்றார் கோவர்த்தனன். "அவன் என் சொந்தத் தம்பிதான்."
"அதானே பார்த்தேன். அவனைத் தேடிக் கொண்டு ஸி.ஐ.டிகள் அவன் போட்டோவை ஒரு சமயம் என்னிடம் ஏலமலைக் கிராமம் ஒன்றில் காண்பித்தார்கள். 'இவனை எங்காவது பார்த்ததுண்டா?' என்றார்கள். எனக்கு உடனே உங்கள் ஞாபகம் வந்தது. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. 'எதற்கு வம்பு' என்ற பேசாமல் இருந்துவிட்டேன்."
அதனால் என்ன? அவர்கள் வேறு பலரிடம் விசாரித்துக் கொண்டு கடைசியில் என்னைத் தேடியே வந்துவிட்டார்கள். அப்படி வந்ததே நல்லதாயிற்று. நான் என் அதிகாரத்தைக் காட்டியதில்தான் அவர்கள் சுறுசுறுப்படைந்தார்கள். இல்லாத போனால் அந்தச் சோம்பேறிகளாவது உமாகாந்தனைப் பிடிப்பதாவது?"
அது சரி சார், சொந்தத் தம்பியைப் பிடிப்பதில் நீங்கள் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டுமா? அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்கத்தான் வேண்டுமா? தம்பியாச்சே என்று இலேசான தண்டனையுடன் விட்டுவிடக்கூடாதா?"
இப்படிக் கேட்ட கல்யாணம் கோவர்த்தனனுக்குப் பின்னால் அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்த குரோட்டன்ஸ் செடியின் மறைவில் ஏதோ அசைவது உணர்ந்து துணுக்குற்றான். அது சமையல்காரர் மணி என்பது தெரிந்ததும் அவனுக்குப் பரபரப்பு ஏற்பட்டது. 'எதற்கு அவன் இப்படி ஒளிந்திருந்து சம்பாஷணையை ஒட்டுக் கேட்கிறான்?" மணி மறைந்திருப்பதைக் கவனியாததுபோல் நடந்து கொண்டான் கல்யாணம்.
இதற்குள் இரண்டு தடவை பாட்டிலைக் கண்ணாடி டம்ளரில் கவிழ்த்த கோவர்த்தனன் கல்யாணத்தினிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் எதையும் கவனிக்கவில்லை. அவனுக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
"மிஸ்டர் கல்யாணம்! சட்டம் என்று வரும்போது அங்கே அண்ணன் தம்பி உறவுக்கு இடமேதும் இல்லை. முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் வக்கீலாகிய உனக்கு இது தெரிய வேண்டாமா?"
" வாஸ்தவம்தான் ஸார்" என்றான் கல்யாணம். அதே சமயம் மறைவிலிருந்த மணி தன் கைகளைப் பிசைவதையும் கவனித்துவிட்டான்.
(தொடரும்)
------------
அத்தியாயம் 64 -- கடைசி பானம்!
பவானிக்கும் கமலாவுக்கும் தான் இழைத்துவிட்ட நம்பிக்கை துரோகத்துக்குப் பரிகாரமாக ஏதாவது செய்ய நினைத்தான் கல்யாணம். கோவர்த்தனன் உமாகாந்திடம் காட்டும் வெறுப்புக்குப் பின்னணியில் கடமை உணர்ச்சிக்கும் மேலாக ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று அவனுக்கு. ஏற்கனவே ஸி.ஐ.டி.க்கள் உமாகாந்தின் படத்தை அவனிடம் காட்டியபோது கோவர்த்தனின் முக ஜாடையை அதில் கண்டு அவன் அதிசயித்திருந்தான். உமாகாந்தனைப் பவானி வீட்டில் நேரில் சந்தித்த பிறகு அவன் குழப்பம் அதிகரித்திருந்தது. எனவேதான் ஒரு பாட்டில் விஸ்கியுடன் கோவர்த்தனனைத் தேடி வந்தான் கல்யாணம். அவர் நாவைத் தளர்த்தி ஏதாவது பேசவைக்கலாம் என்ற அபிப்பிராயம் அவனுக்கு இருந்தது.
ஆனால் கோவர்த்தனன் நிறையப் பேசிய போதிலும் கல்யாணம் எதிர்பார்த்ததுபோல் புதிய திருப்பம் ஏதும் ஏற்படக் கூடிய தகவலாக ஒன்றும் தெரிய வரவில்லை. உமாகாந்தனைத் தன் தம்பி என்றே ஒப்புக்கொண்ட கோவர்த்தனன், அதற்காக அவனிடம் கருணை காட்ட முடியாது என்று அழுத்தமாகக் கூறினார்.
இதையெல்லாம் ஒளிந்து கேட்டுக்கொண்டிருந்த சமையல்காரர் மணி நடந்துகொண்டவிதம் மட்டும் கல்யாணத்துக்கு ஆச்சரியம் அளித்தது. 'இந்த மனுஷன் எதற்காக மறைந்திருந்து நான் கோவர்த்தனனிடம் பேசுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்? உமாகாந்தன் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் கையைப்பிசைகிறாரே எதற்கு?" என்று எண்ணினான். மணியின் கோபத்தை அல்லது தாபத்தை வேண்டுமென்றே மேலும் தூண்டிவிடத் தீர்மானித்துப் பேசினான்.
"நன்றாகச் சொன்னீர்கள் சார்! மனுநீதிச் சோழன் அல்லது சிபிச் சக்கரவர்த்தி பரம்பரையில் உதித்தவரா யிருக்க வேண்டும் நீங்கள்! சொந்தத் தம்பி என்பதற்காகச் சட்டத்தை மறந்து நீங்கள் காரியம் செய்ய முடியுமா? 'ஐயோ பாவம்! பிழைத்துப் போகட்டும்' என்று பாங்குக் கொள்ளைக் காரர்களையும், ராஜத் துரோகிகளையும் வெளியே நடமாட விட்டால் என்னவாகிறது? அராஜகம் தாண்டவமாடும்! இந்த மாதிரி ஆசாமிகளைச் சிறையில் தள்ளினால் கூடப் போதாது ஸார். நாற்சந்தியில் நிற்கவைத்துத் தண்டிக்க வேண்டும்!"
இத்தருணத்தில் கல்யாணம் எதிர்பார்த்த நற்பலன் கிடைத்தது. இதற்குமேல் பொறுத் திருக்க முடியாதவனாக மணி முன்னால் பாய்ந்து வந்தார். "வாயை மூடுய்யா! ஏதோ போகட்டும் என்று பார்த்தால் மேலே மேலே பேசிக் கொண்டே போகிறாயே!"
கோவர்த்தனன் திடுக்கிட்டார். மணி அங்கே மறைவிலிருந்து உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார் என்பது அவருக்கு அப்போதுதான் தெரிந்தது. "மணி உள்ளே போ!" என்று அதட்டினார்.
"முடியாது!" என்றார் மணி! "முடியவே முடியாது. இத்தனை நாட்களாக எனக்கு மூக்கணாங் கயிறு போட்டு வைத்திருந்தாய். இப் போது நான் அதை அறுத்துக் கொண்டு விடுதலை பெற்று விட்டேன். இனி என்னால் சும்மா இருக்க முடியாது! உமாகாந்துக்கு மறுபடியும் நீ கடுமையான தண்டனை விதிக்கப்போவதைப் பார்த்துக் கொண்டு நான் பேசாமல் இருக்க மாட்டேன்."
"மணி! நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று? சத்தியத்தை மீறலாமா நீ!"
"இத்தனை நாட்களாக அதற்குக் கட்டுப் பட்டுத்தான் இருந்தேன். ஆனால் இப் போது உன் நடத்தை எல்லை மீறிப் போகிறது. நான் பொறுமை இழந்து நிற்கிறேன்."
"அப்படியானால் சரி, நடந்ததை யெல்லாம் விவரமாகச் சொல்லு" என்று அமைதியாகக் கூறினார் கோவர்த்தனன். பிறகு கல்யாணம் பக்கம் திரும்பி, "அப்பனே! நீயும் பவானி போலவே உமாகாந்தனை விடுவிக்க மிகவும் ஆவலுள்ளவனா யிருப்பது எனக்குத் தெரியும். சற்று நேரமாகச் சும்மா என்னிடம் நடித்துக் கொண்டிருந்தாய் இல்லையா? உமாகாந்தனை விடுவிக்க ஏதாவது சாட்சியம் அகப்படுமா என்று பார்க்கத்தானே என் வாயைக் கிளறிக் கொண்டிருந்தாய்? இதோ கிடைத்து விட்டது. மணியைச் சாட்சிக் கூண்டில் ஏற்று; உமாகாந்தனை விடுவித்து விடலாம் நீ!"
அளவற்ற வியப்பும் திகைப்பும் அடைந்தவனாகக் கல்யாணம் மணியையும் கோவர்த்தன்னையும் மாறி மாறிப் பார்த்தான். கோவர்த்தனன் மணியை நோக்கி, "சொல்லேனப்பா ஏன் தயங்குகிறாய்? சொல்லு!" என்றார்.
"கூறுகிறேன்! கல்யாணம் ஸார், கேளுங்கள்!" என்ற மணி ஆவேசம் வந்தது போல் படபடவென்று பல வருஷங்களுக்கு முன் ஒரு நாள் இரவு நடந்தவற்றைச் சொல்லலானார்.
மணி ரொம்பக் காலமாகக் கருணாகரன் வீட்டில் சமையல்காரராக வேலை பார்ப்பவர். கோவர்த்தனனையும் உமாகாந்தனையும் தோளில் தூக்கி வளர்த்தவர். உமாகாந்தன் தன் தகப்பனாருடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அன்றிரவு மணிக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. புரண்டு புரண்டு படுத்தார். நள்ளிரவு சுமாருக்கு ஏதோ அரவம் கேட்க, எழுந்து போய்ப் பார்த்தார். கருணாகரன் பாங்குச் சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் தேடிவிட்டு அது காணாமல் பரக்கப் பரக்க ஓடுவதைக் கவனித்தார். உடனேயே அவர் மனமும் கருணாகரன் உள்ளத்தைப் போலவே முதலில் பாங்குச் சாவிக்கும் உமாகாந்தனுக்கும்தான் முடிச்சுப் போட்டது. என்றாலும் ஏதோ சந்தேகம் உதித்தது. கருணாகரன் வாசல் கதவைப் பரபரப்புடன் திறந்து ஓடினாரே தவிர தாழ்ப்பாளை நீக்கவில்லை. ஆகவே அவருக்கு முன்பாகவே யாரோ வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறியிருக்கிறார்கள்! யார் அது? மணி கோவர்த்தனன் அறையில் எட்டிப் பார்த்தார். அவனைக் காணோம். வீடு முழுக்கத் தேடினார். எங்கும் அவன் இல்லை. கருணாகரனின் மனைவி, தன் பிள்ளை உமாகாந்தனுக்குக் கடைசியாக ஒரு முறை தன் கையால் சாப்பாடு போடவேண்டும் என்ற ஆசைப்பட்டு அவனைத் தன் கணவருக்குத் தெரியாமல் வரச் சொல்லி யிருந்தாள். அவனுக்காகக் கொல்லைக் கதவைத் தாழ்ப்பாள் போடாமல் சாத்தி வைத்து விட்டுச் சமையலறையில் படுத்தவள் இலேசாகக் கண் அயர்ந்துவிட்டாளோ என்னமோ மணிக்குத் தெரியாது. எட்டிப் பார்ப்பதுகூட மரியாதைக் குறைவாக அவருக்குத் தோன்றியது.
கொஞ்ச நேரம் கழித்து வாசல் பக்கமாக வியர்க்க விறுவிறுக்கச் சந்தடியின்றி ஓடிவந்து தன் அறைக்குள் கோவர்த்தனன் நுழைந்து இழுத்துப் போர்த்துக் கொண்டு படுப்பதை மணி பார்த்தார். அவனை உலுக்கி எழுப்பி உட்கார வைத்து, "எங்கே போயிருந்தாய்?" என்று அதட்டலாகக் கேட்டார். கோவரத்தனன் அரண்டு போய்விட்டான். "உனக்குப் புண்ணியமாகப் போகட்டும். இன்றிரவு நான் வீட்டைவிட்டு வெளியேறியதாக யாரிடமும் சொல்லாதே" என்று கெஞ்சினான். மேலும் துருவி விசாரித்தபோது கோவர்த்தனனுக்கு உண்மையை ஒப்புக் கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. உமாகாந்தன் தக்க சமயத்தில் வந்து குற்றத்தைத் தான் ஏற்றுக் கொண்டு இவனைத் தப்புவித்ததைக் கூறினான்.
தொடர்ந்து சொன்னான். "உமாகாந்தன் எப்படியானாலும் இந்த வீட்டில் இனி அடி எடுத்து வைக்க மாட்டான். அதிலேயே அப்பா மனமுடைந்து போயிருக்கிறார். இப்போது நானும் திருட்டுப் பட்டம் சுமந்து சிறை சென்றால் அப்பாவின் இதயம் வெடித்து விடும். அவரை உயிரோடு கொன்ற பாபத்தைக் கட்டிக் கொள்ளாதே. நான் வீட்டை விட்டு வெளியேறியதை வெளிவிடாதே! எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு!"
மணி மானஸ்தரான கருணாகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடும் என்ற பயத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்தார். ஆனால் எமன் வேறு உருவத்தில் வந்து கருணாகரனை அழைத்துப் போய்விட்டான். சில நாட்களுக்குப் பிறகு கோவர்த்தனன் கடன்பட்டிருந்த மார்வாடி வந்து அட்டகாசம் செய்தபோது கருணாகரன் படுக்கையில் விழுந்தார். பிறகு அவர் எழுந்திருக்கவே யில்லை.
இந்த நிகழ்ச்சிகளை விவரித்த மணி, கடைசியில் சொன்னார்; "நாலு வருஷங்களாகப் பல்லைக் கடித்துக் கொண்டு இவனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன். இன்னும் இரண்டு வருஷங்கள்தான்; உமாகாந்தன் விடுதலை பெற்று வந்துவிடுவான் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கும் தினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சற்று முன் நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதிலிருந்து இவன் மேலும் ஏழெட்டு வருஷம் உமாவுக்குச் சிறைத் தண்டனை கொடுத்துவிட உத்தேசித்திருப்பது தெரிகிறது. இந்தச் சூழ்ச்சியை நான் முறியடித்தே ஆகவேண்டும்."
"கேட்டுக் கொண்டாயா கல்யாணம்?" என்றார் கோவர்த்தனன். இதுவரை உமா காந்தனை விடுவிக்க உனக்கோ பவானிக்கோ சாட்சியமே இல்லாதிருந்தது. இப்போது அது அகப்பட்டு விட்டது" என்று கூறிச் சிரித்தபடியே தமது சட்டைப் பையிலிருந்து இரண்டு உறைகளை எடுத்து மேஜையின் மீது போட்டார். "இவற்றை இன்றே தபாலில் சேர்க்க வேண்டும் என்று எண்ணி யிருந்தேன். ஆனால் தபாலுக்கு நேரமாகி விட்டது. உன்னிடம் ஒப்படைக்கிறேன் கல்யாணம், நீயே உரிய அதிகாரிகளிடம் சேர்ப்பித்துவிடு!"
"என்ன இவை?" என்றான் கல்யாணம் திகைப்புடன்.
"ஒன்று என் ராஜிநாமாக் கடிதம். மற்றொன்று என் குற்றத்தை நானே ஒப்புக் கொண்டு எழுதிய வாக்குமூலம்."
"மாஜிஸ்திரேட் ஸார்! இது என்ன தாக்குதலுக்கு மேல் தாக்குதலா யிருக்கிறதே!" என்றான் கல்யாணம் நாத் தழுதழுக்க.
மணி நின்றபடியே விசும்பி அழுதார்.
"கல்யாணம், நான் சொல்வதைக் கவனி. மணி, நீயும் கேட்டுக் கொள்!" என்றார் கோவர்த்தனன். "இந்த வாக்குமூலத்தையும் ராஜிநாமாக் கடிதத்தையும் கல்யாணம் இங்கு வந்த பிறகு நான் எழுதவில்லை. அதற்கு முன்பே எழுதி என் பாக்கெட்டில் வைத்திருந்தேன். அந்த மட்டில் ஒப்புக்கொள்வீர்களல்லவா?"
"உண்மைதான் ஸார், நான் இங்கே வந்த பிறகு, நீங்கள் விஸ்கி டம்ளரைத் தவிர பேனாவையோ தாளையோ கையால் தொடவில்லையே?" என்றான் கல்யாணம்.
"கரெக்ட்! ஆக, மணியின் சாட்சியம் உனக்கு அகப்பட்டு விட்டபடியால் இனி நான் தப்ப முடியாது என்ற நிலையில் இவற்றை நான் எழுதவில்லை. அதற்கு முன்பே எழுதி விட்டேன். எழுதத் தூண்டியது என்ன தெரியுமா?"
"தெரியவில்லையே ஸார்!"
"என் தம்பி உமாகாந்தனின் தியாகம்தான்! இப்போது அவன் பிடிபட்டதும் பவானி அவனை வழக்காடுமாறு வேண்டினாள். அவன் மறுத்து விட்டான். இரண்டாவது தடவையாகத் திருட்டுக் குற்றத்தைத் தன்மீதே சுமத்திக் கொண்டான். அதுமட்டுமில்லை. பவானியை விடுவிக்க வேண்டும் என்பதற்காக மறுபடியும் புதிய குற்றச்சாட்டுக்களை தன்மீதே சுமத்திக் கொண்டான். அவளுக்குத் தன்னை யார் என்று தெரியாது என்றும் தப்பிச் செல்லத் தனக்கு உதவுமாறு அவளைத் தான்தான் நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் வாக்குமூலம் எழுதிக் கொடுத்தான். இந்த வாக்குமூலம் அவனுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனையை மேலும் அதிகரிக்கும் என்பதை பவானியோ அவனுக்காகத் தன் இளமையை உணர்ந்திருந்தும் இப்படிச் செய்தான்.யெல்லாம் தியாகம் புரியத் தயாரானாள்.
சிறைத் தண்டனைகளை முழுமையாக அனுபவித்துவிட்டு அவன் திரும்பும்வரை தான் காத்திருக்கத் தீர்மானித்தாள். இந்தத் தியாகப் போட்டியை அறிய வந்தபோது எனக்கு என்னுடைய நீசத்தனத்தின் பயங்கரம் புரிந்தது. அந்தக் காதலர்களைப் பிரித்து வைப்பது மாபாதகம் என்று பட்டது. அதனால்தான் இந்தக் கடிதங்களை எழுதினேன். கல்யாணம்! இதை நன்றாக நினைவில் வைத்துக்கொள். பவானியிடமும் உமாகாந்தனிடமும் மறக்காமல் சொல்லு! என் மனம் மாறியது உமாகாந்தன் - பவானியின் பரஸ்பரத் தியாகங்களால்தான்; மணி சாட்சியம் கூற முன் வந்ததால் அல்ல."
கல்யாணம் கண் கலங்கக் கனத்த இதயத்துடன் கடிதங்களை எடுத்துப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளப் போனான்.
"என் எதிரிலேயே ஒரு முறை படித்துப்பார்த்துவிடு கல்யாணம்; அப்புறம் வேறு உறைகளில் வைத்துக்கொள்ளலாம்" என்றார் கோவர்த்தனன்.
கல்யாணம் உறைகளைக் கிழித்துப் படித்தான். சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தன இரு கடிதங்களும்.
பாக்கெட்டில் அவற்றை வைத்துக்கொண்டு கோவர்த்தனன் கரங்களைப் பற்றினான் அவன். அவரோ அவனைத் தம் மார்புற இறுகித் தழுவிக்கொண்டார். "கல்யாணம்! நான் உன்னிடம் பல தடவைகளில் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் மறந்துவிடு" என்றார்.
"ஆகட்டும் ஸார், வருகிறேன்" என்று கூறி விடைபெற்றான் கல்யாணம்.
கோவர்த்தனன், தாரை தாரையாகக் கண்ணீர் உகுத்தபடி நின்ற மணி பக்கம் திரும்பிச் சொன்னார்: "மணி! நான் குடிக்கக் கூடாது என்று அடிக்கடி வற்புறுத்தி வந்தாயல்லவா? நாளை நான் ஜெயிலுக்குப் போனால் எப்படிக் குடிக்க முடியும்? அதனால் திஸ்வில் பி மை லாஸ்ட் டிரிங். இந்தக் கடைசி பானத்தை நீயே உன் கையால் ஊற்றிக் கொடு, பிளீஸ்!" என்றார்.
கேட்டை நோக்கி நடந்த கல்யாணத்தின் காதில், "திஸ் வில் பி மை லாஸ்ட் டிரிங்" என்று கோவர்த்தனன் கூறியது விழுந்தது. ஆனால் அதை அவன் அப்போது சரியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளவில்லை. அந்தக் கடைசி மதுபானத்தை மணி ஊற்றிக் கொடுத்துவிட்டு அப்பால் போன பிறகு, கோவர்த்தனன் அதில் விஷத்தைக் கலந்த விஷயம் அவர் மூச்சுப் பிரிந்த பிறகுதான் பரவியது.
அது சம்பந்தமாகவும் யாதொரு சந்தேகமும் யாருக்கும் ஏற்படாதிருக்க மூன்றாவதாக ஒரு கடிதத்தையும் முன்னேற்பாடாக எழுதித் தமது சட்டைப் பையில் வைத்திருந்தார் கோவர்த்தனன்.
----------------
அத்தியாயம் 65 -- மலர் அம்புகள்!* ***
(அமரர் கல்கியின் கையெழுத்தில் உள்ள அத்தியாயம்)***
கல்யாணத்துக்கும் கமலாவுக்கும் பிரமாத ஆர்ப்பாட்டங்களுடன் கல்யாணம் நடந்தது.
அதற்கு பவானியும் உமாகாந்தனும் வந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிக் காரில் போகிறார்கள்.
"இந்தமாதிரியெல்லாம் வீண் ஆடம்பரம் இல்லாமல் நம் கல்யாணத்தை செய்து விட வேண்டும்" என்றான் உமா.
"நமக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே! இன்னும் என்னாத்திற்கு?" என்றாள் பவானி.
"எப்போது ஆயிற்று?"
"இதற்குமுன் எத்தனையோ ஜன்மங்களில் நமக்குக் கல்யாணம் ஆகியிருக்கிறது!" என்றாள் பவானி.
(*கடைசி அத்தியாயத்தை அமரர் கல்கியின் கையெழுத்திலேயே சுருக்கமாகக் காண்கிறோம்.)
சுபம்.
--------------------
கருத்துகள்
கருத்துரையிடுக