கபாடபுரம்
வரலாற்று நாவல்கள்
Backகபாடபுரம் (சரித்திர நாவல்)
உள்ளடக்கம்
கதை முகம் 16. எயினர் நாடு
1. நகரணி மங்கல நாள் 17. வலிய எயினன் வரவேற்பு
2. கண்ணுக்கினியாள் 18. நாதகம்பீரம்
3. தேர்க்கோட்டம் 19. கலஞ்செய் நீர்க்களம்
4. கடற்கரைப் புன்னைத் தோட்டம் 20. சந்தேகமும் தெளிவும்
5. தென்பழந்தீவுக் கடற்கொலைஞர் 21. ஒரு சோதனை
6. கபாடத்தில் ஒரு களவு 22. மொழி காப்பாற்றியது
7. அவுணர் வீதி முரச மேடை 23. கொடுந்தீவுக் கொலைமறவர்
8. கண்ணுக்கினியாள் கருத்தில் கலந்தாள் 24. புதிய இசையிலக்கணம்
9. முதியவர் முன்னிலையில் 25. மீண்டும் கபாடம் நோக்கி
10. பெரியவர் கட்டளை 26. சிகண்டியாசிரியர் மனக்கிளர்ச்சி
11. முரசமேடை முடிவுகள் 27. பெரியபாண்டியரின் சோதனை
12. அந்த ஒளிக்கீற்று 28. கலைமானும் அரிமாவும்
13. நெய்தற்பண் 29. இசைநுணுக்க இலக்கணம்
14. எளிமையும் அருமையும் 30. அரங்கேற்றம்
15. பழந்தீவுப் பயணம் 31. யாழ் நழுவியது
கதை முகம்
இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே 'கதை முகம்' என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன்.
'முகஞ் செய்தல்' - என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து வளரும் நிலை, என்றெல்லாம் பொருள் விரியும். இந்த மாபெரும் வரலாற்று ஓவியத்தை இங்கு முகம் செய்யும் கால தேச இடச் சூழ்நிலைகளைக் கதை தொடங்கும் முன் சுருக்கமாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுவது அவசியமென்று கருதுவதால் தான் இதை இப்போது எழுதுகிறேன்.
இனி இங்கு அறிமுகம் செய்யப் போகின்ற காலத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி - வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது.
தமிழ் மக்கள் தங்களுடைய கடந்த காலத்தின் பெருமைகுரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம். ஏக்கத்தை மறுபுறமாகக் கொள்ளாத தனிப் பெருமிதம் தான் உலக வரலாற்றில் ஏது?
சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப் பூம்பட்டினத்தைப் போன்றதும் - அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரான கபாடபுரத்தைப் பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம், திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்த வகையில் பாண்டியர்கள் ஆண்டு அமைத்து வளர்த்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்துவிட்டது. இதன் பின்பே பாண்டியர்களின் தலைநகர் மதுரைக்கு மாறியது. கபாடபுரம் அழிந்த பின்னரும் சோழர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே இருந்தனர். ஏனென்றால் கபாடபுர நகரம் கடல் கொள்ளப்பட்ட பல தலை முறைகளுக்கும் பற்பல ஆண்டுகளுக்கும் பின்பு கடைச் சங்க காலத்திற்கும் கூடக் காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டுப் புலவர்கள் பாடும் இலக்கிய நகராக இருந்தது.
பாண்டியர்களின் பொன் மயமான - பொலிவு மிகுந்த இராச கம்பீரம் நிறைந்த கபாடபுரமோ இடைச் சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப் பாலையும், சிலப்பதிகாரமும், காவிரிப்பூம்பட்டினத்தைச் சித்தரிப்பது போலக் கபாடபுரத்தைச் சித்தரித்துச் சொல்ல இன்று நமக்கு இலக்கியமில்லை. தமிழரசர்களின் அழிந்த கோடி நகரங்களை என்னுடைய எளிய எழுது கோலினால் மறுபடி வரைந்து உருவாக்கிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரு நியாயமான ஆசை உண்டு.
அந்த இலக்கிய ஆசையின் விளைவாகச் சோழர்களின் கோநகராயிருந்து கடல் கொள்ளப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி ஏற்கெனவே 'மணிபல்லவம்' - என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பின்னணியுடைய நாவல் புனைந்து விட்டேன். இப்போது பாண்டியர்களின் கபாடபுரத்தைப் புனையும் பணியில் இதை எழுத முனைந்திருக்கிறேன். கால முறைப்படிப் பார்த்தால் கபாடபுரத்தைத் தான் நான் முன்னால் எழுதியிருக்க வேண்டும்.
ஆயினும் கபாடபுரத்தை விடக் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி அறிய வரலாறும் இலக்கியங்களும் நிறைய இருந்ததனாலும், கபாடபுரத்தைப் பற்றிய ஓர் இலக்கிய அநுமான ஓவியம் என் மனதில் வரையப் பெற்று முற்றுப் பெற சிறிது அதிக காலம் பிடித்ததனாலுமே இவ்வளவு காலந்தாழ்ந்தது. இம்முறையே சேரர் கோநகரை விளக்கி அணி செய்தும் இனி ஒன்று பின்னர் எழுத எண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தக் கதையின் முகத்திற்கு வருவோம்.
முதலூழிக் காலத்தில் குமரிக் கண்டத்தில் குமரியாற்றங்கரையில் இருந்த தென்மதுரைத் தமிழ்ச் சங்கமும் பாண்டியர் கோநகரமும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாய் அரசாண்டு கடல் கொள்ளப்பட்டு அழிந்த பின் பொருநையாறு கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் கபாடபுரம் என்ற புதிய கோநகரைச் சமைத்து ஆளத் தொடங்கினார்கள் பாண்டியர்கள்.
முத்தும் இரத்தினமும் ஏற்றுமதி செய்து - அற்புதமான பலவகைத் தேர்களைச் சமைத்து - இலக்கண இலக்கியங்களைப் பெருக்கி இந்த நகரை உலகெலாம் புகழ் பெறச் செய்த முதல் பாண்டிய மன்னன் வெண்தேர்ச் செழியன். பாண்டியர்களின் தேர்ப்படை, இவன் காலத்தில் அற்புதமாக வளர்ந்து உருவாக்கப்பட்டது. கபாடபுரத்தின் பெயர் பெற்ற வெண்முத்துக்கள் பதித்த பல அழகிய இரதங்கள் இவனுக்குரியனவாயிருந்தன என்று தெரிகிறது.
வெண்முத்துக்கள் பதிக்கப் பெற்று ஒளி வீசும் பிரகாசமான ரதங்களில் வெள்ளை மின்னல்கள் போலும் ஒளிமயமான பல புரவிகளைப் பூட்டி இவன் அமைத்திருந்த தேர்ப்படையே இவனுக்குப் பின்னாளில் இலக்கிய ஆசிரியர்கள் 'வெண்தேர்ச் செழியன்' என்று சிறப்புப் பெயரளிக்கக் காரணமாயிருந்தது. கபாடபுரம் என்ற நகரைப் பொருத்தமான இடத்தில் உருவாக்கிய பெருமையும் தேர்ப்படையை வளர்த்த பெருமையும் வெண்தேர்ச் செழியனையே சேரும்.
இவ்வரசன் கபாடபுரத்தில் அமைத்த தமிழ்ச் சங்கமாகிய இடைச் சங்கத்தில் ஐம்பத்தொன்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் இருந்தனர். நூலாராய்ந்தனர். கவியரங்கேறினர்.
வெண்தேர்ச் செழியன் அழகிய பொருநை நதி நகரைத் தழுவினாற் போல வந்து கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் இந்த நகர் மிகப் பொலிவாக அமையும்படி உருவாக்கியிருந்தான். இன்றைய ஹாங்காங், சிங்கப்பூர், பம்பாய், கொச்சி போன்ற கடற்கரை நகரங்களை விடப் பெரியதும் கம்பீரமானதுமான கபாடபுரத்தில் முத்துக் குளித்தலும் இரத்தினம் முதலிய மணிகளை எடுத்துப் பட்டை தீட்டி உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தலும் நிகழ்ந்து வாணிகத்தைப் பெருக்கின.
ஹாங்காங்கையோ, சிங்கப்பூரையோ, பம்பாயையோ, மனக்கண்ணில் நினைத்துக் கொண்டு அவற்றை விடப் பெரியதும், பொலிவு நிறைந்ததும் ஆனதோர் சரித்திர காலப் பெருநகரைக் கற்பனை செய்ய முயலுங்கள்! உங்கள் கற்பனை மனக் கண்ணில் வெற்றிகரமாக உருவானால் அந்தப் பெரிய கற்பனை தான் அன்று கபாடபுரமாயிருந்தது.
அத்தகைய பெருமை வாய்ந்த கபாடபுரத்தில் இரத்தினக் கற்களைத் தோண்டி எடுக்கும் இரத்தினாகரங்களில் (இரத்தினச் சுரங்கம்) பல நாட்டினர் வந்து உழைத்தனர். எக்காலமும் ஆண்களும், பெண்களுமாக அந்த இரத்தினாகரங்களைப் பார்க்க வருவோர் கூட்டம் மிகுந்திருக்கும். முத்துக்குளிக்கும் துறைகளிலும் அதே கூட்டமிருக்கும்.
கூடை கூடையாகப் பட்டை தீட்ட அள்ளிக் கொண்டு போகப்படும் இரத்தினக் கற்களைப் பார்ப்போர் மனம் ஆசைப்படும் - தன் நாட்டில் விளைபவை அவை என்று பெருமையும்படும். கபாடபுரத்தின் துறைமுகத்தில் பல நாட்டுக் கப்பல்கள் வருவதும் போவதுமாக எப்போதும் பெருங் கலகலப்பு நிறைந்திருக்கும். சுங்கச் சாவடிகளில் அடல்வாள் யவனர் காவலுக்கு நின்றிருப்பர்.
இசை மண்டபங்களிலே பண்ணொலிக்கும். ஆடலரங்குகளிலே அவிநயம் அழகு பரப்பும். சங்கங்களிலே தமிழிலக்கண இலக்கிய ஆராய்ச்சிகள் நிகழும். இத்தகைய வெற்றித் திருநகரை உருவாக்கிய வெண்தேர்ச் செழியனின் தள்ளாத முதுமைக் காலத்தில் அவன் மகன் அநாகுல பாண்டியன் பட்டத்துக்கு வந்த பின் இந்தக் கதை தொடங்குகிறது.
இந்தக் கதை தொடங்கும் காலத்தில் அநாகுல பாண்டியனின் ஒரே மகனும் பாண்டிய நாட்டுக் கபாடபுரத்து இளவரசனும், வெண்தேர்ச் செழியனின் பேரனுமாகிய சாரகுமாரன் மாறோக மண்டலத்துக் கொற்கையிலும் பூழியிலும் மணலூரிலுமாகத் தமிழ்ப் புலவர்களிடம் சில ஆண்டுகள் குருகுல வாசம் செய்துவிட்டு நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரத்துக்குத் திரும்புகிறான்.
அந்த ஒரு நன்னாளில் இங்கே அவனைச் சந்திக்கிறோம் நாம். ஆண்டுதோறும் வசந்த காலத்தில் சித்திரைத் திங்கள் சித்திரை நாளன்று கபாடபுரத்தை நிறுவிய வெண்தேர்ச் செழிய மாமன்னர் அந்த மாநகர் உருவான ஞாபகத்தைக் கொண்டாட விரும்பி ஒரு நகர்மங்கல விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆண்டுதோறும் அவர் நிகழ்த்தியதைவிட நன்றாக - அவர் கண்காணவே இன்னும் சிறப்பாக - இந்த நகர்மங்கலத்தைக் கொண்டாடி வந்தான் அநாகுலன். முத்துக் குளியலும், இரத்தினாகரங்களில் மணி குவித்தலும் சிறப்பாக நடைபெறும் காலமும் இந்த வசந்த காலமேயாகையினால் கபாடபுரத்தில் பல நாட்டு மக்களும் கூடுகிற மாபெரும் விழாக்காலம் இதுதான். இனி வாருங்கள் கபாடபுரத்தின் இந்த நகரணி மங்கல நாளில் நாமும் அங்கு போகலாம். கபாடபுரத்தைக் கண் குளிரக் கண்டு மகிழலாம்.
----------
1. நகரணி மங்கல நாள்
வசீகர சக்தி வாய்ந்தவனும் பேரழகனுமான இளவரசன் சாரகுமாரனைக் காணப் பாண்டியர் கோநகரத்துக்கு வடபால் சிறிது தொலைவில் அமைந்திருக்கும் மணிபுரம் எனப்படும் மணலூர்புரத்துக்கு முதலில் போகலாம், வாருங்கள்.
மாறோக மண்டலத்துக் கொற்கையினருகே - பொருநை நதிக் கரையிலே பசுஞ்சோலைகளிடையே - ஊரிருப்பதே வெளியே உருத்தெரியாத பசுமையில் மறைந்திருக்கும் இந்த மணலூரின் அமைதி கபாடபுரத்தில் இராது. நாளைக்கு விடிந்தால் கபாடபுரத்தில் நகரணி மங்கல நாள். கோநகரத்தில் எங்கு நோக்கினும் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்.
பெரிய மாமன்னர் வெண்தேர்ச் செழியரின் தேர்க்கோட்டத்திலிருந்து அவருடைய மூவாயிரம் முத்துத் தேர்களும் அலங்கரிக்கப் பெற்றுச் சித்திரா பௌர்ணமி நிலவொளியில் மின்னி மின்னிப் பல்லாயிரம் எதிர் நிலவுகள் நிலவை நோக்கிப் பிறந்து வருவன போல் கபாடபுரத்தின் அரசவீதிகளில் உலாவரும். இந்த ஆண்டின் சிறந்த முத்துக்களும், இரத்தினாகரங்களில் எடுத்துக் குவித்துப் பட்டை தீட்டிய மணிகளும் கடை வீதிகளில் வந்து குவிந்து கிடக்கும்.
நகரின் குமரி வாயிலாகிய முதன்மைக் கோட்டை வாயிலில் பெரிய மன்னர் காலத்தில் முதல் முதலாக நிறுவி நிலைவைக்கப்பட்ட இரண்டு பெரும் பனையுயரமும் - இரண்டு பெரும் பனையகலமுமுள்ள தெய்வீகச் செம்பொற் கபாடங்களில் முத்துச்சரங்களைத் தொங்கவிட்டுத் தீபாலங்காரம் செய்ததுபோல் பிரகாசம் உண்டாக்கியிருப்பார்கள்.
மறுபடி கடல் பொங்கி வந்தாலும் தாங்க வேண்டும் என்பது போல் இந்த வலிமையான கபாடங்களையும் கோட்டைமதிற் சுவர்களையும் வெண்தேர்ச் செழியர் - பெருமுயற்சி செய்து அமைந்திருந்தார். கோநகரத்தை நெருங்கும் வெளியூர்ச் சாலைகளிலிருந்தும், கடல் - வழிகளிலிருந்தும் நீண்ட தொலைவிலிலேயே இந்த ஒளிமயமான கபாடங்கள் வானளாவிய கோட்டை மதில்களுடன் கம்பீரமாய்த் தெரியும்.
இந்தக் கபாடங்களின் நெருப்பு நிறம் அருணோதயத்தின் பொன் வெயில் பட்டுத் தகதக வென்று மின்னும் போது தொலைவிலிருந்து காண்பதற்குப் பேரழகு நிறைந்ததாயிருக்கும். மணலூர் புரத்துச் சோலைகளில் நாணி வெட்கி நகுவது போல் அழகாயிருக்கும் பொருநை நதிப் பூவை கபாடபுரத்தைச் சுற்றித் தழுவி மணப்பதுபோல் வந்து பெருமிதமாகக் கடலில் கலக்கிறாள்.
சில காதப் பரப்புக்கு விரிந்து பரந்திருந்த கபாடபுர நகரில் ஒரு மருங்கில் பொருநையும் - மறு மருங்கில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நீலநெடுங்கடலுமாக அமைந்திருந்தபடியால் - மிக ஆழமாயிருந்த பொருநை முகத்துவாரத்தின் வழியே சிறு கப்பல்களும் பாய்மரப் படகுகளும் வந்து நிற்கும் துறை ஒன்றும் மறுபுறம் கடலில் மாபெரும் வெளிநாட்டு மரக்கலங்கள் வந்து நிற்கும் பெருந்துறைமுகம் ஒன்றுமாக இருந்தன.
தென்கடலிலும், கீழ், மேல் கடல்களிலும் அங்கங்கே இருந்த சிறு தீவுகள் பெருந்தீவுகளுக்குப் போகும் பயண மரக்கலங்கள் எல்லாம் பொருநை முகத்துவாரவழியே வந்து போகும். அவற்றுக்குச் சுங்கச் சாவடிகள் முதலியன இல்லை.
கடல் முகத்துறையிலோ - பல சுங்கச்சாவடிகளும் காவலர்களும் உண்டு. கிழக்கே பொருநையும், தெற்கும், மேற்கும், கடலும் இயற்கை அகழிகளாக இருந்ததனால் வடக்கு நோக்கி விரியும் நிலவெல்லையில் ஒரு பகுதி மட்டும் பொருநைக் கால்வாய் ஒன்றின் மூலம் சிறிது தொலைவு ஆழமான அகழி வெட்டி நீர் நிரப்பப்பட்டிருந்தது.
சுற்றிலும் அகழிக்கரையில் அடர்த்தியாக ஞாழல் மரங்கள் - குங்கும நிறத்தில் சரம் சரமாகப் பூத்திருப்பதைக் காணக் கண்கோடி வேண்டும் போலத் தோன்றும். நகரத்தின் ஒரு பெரும் பகுதியை இயற்கையே பெருவிருப்பத்தோடு மலர்ச்சரங்களால் அலங்கரிந்திருப்பது போல இந்த ஞாழல் மரங்கள் தோற்றமளிக்கும்.
கபாடபுரத்தில் கிடைத்த முத்துக்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே ஒளியினாலும், தரத்தினாலும், சிறந்திருந்ததன் காரணமாக நல்ல முத்துக்களுக்குப் பெயரே 'கபாடம்' - என்று வைத்திருந்தனர் வெளிநாட்டு வாணிகர். 'பாண்டியர் கபாடம்' - என்றே வெளிநாட்டுக் கவிஞர் யாவரும் இந்நகருக்கு இலக்கியப் புகழ் தந்தனர்.
மிக நீண்ட காலமாகத் தலைநகருக்கு வரவே வாய்ப்பின்றி மணலூரில் பெரும் புலவர்களான அவிநயனாரிடமும், சிகண்டியாரிடமும் இலக்கண இலக்கியங்களைப் பாடங் கேட்டுக் குருகுலவாசம் செய்து வந்த சாரகுமாரன் - இவ்வாண்டு எப்படியும் நிச்சயமாக நகரணி மங்கல நாளில் கோ நகருக்கு வந்துவிட வேண்டுமென்று அன்பாகக் கட்டளையிட்டிருந்தார் பாட்டனார் வெண்தேர்ச் செழியர்.
பாட்டனாருக்கு இந்தப் பேரப்பிள்ளையின் மேல் கொள்ளை ஆசை. ஒளிநாட்டைச் சேர்ந்த பேரழகி ஒருத்தியைக் காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்ட அநாகுல பாண்டியனுக்கு மிக இளம் பருவத்தில் பிறந்த செல்வமகன் சாரகுமாரன்.
பெற்றோர்க்கு மிக இளம் பருவத்தில் பிறந்ததனாலும், பெற்றோர் இருவரும் பேரழகு வாய்ந்தவர்களாகவும் கலையுள்ளம் படைத்தவர்களாகவும் இருந்ததனாலும், சாரகுமாரன் குழந்தையிலேயே மிகவும் வசீகரமானவனாகவும், பொலிவுடையவனாகவும் இருந்தான்.
அவனுடைய குழந்தைப் பருவத்தில் அரச குடும்ப வழக்கப்படி அவனுக்கு ஐம்படைத்தாலி அணிவித்து நாண்மங்கலம் கொண்டாடியபோது அதனைப் புகழ்ந்து கவி பாடி வாழ்த்த வந்திருந்த புலவர்களுக்கு எல்லாம் நடுவே, "இதுவரை இந்தக் கபாடத்தில் விளைந்த முத்துக்களில் எல்லாம் சிறந்த முத்து இதுதான்" - என்று குழந்தையைக் கையிலெடுத்துக் கொஞ்சியபடியே பாட்டனார் வெண்தேர்ச் செழியர் கூறிய அந்த ஒரு வாக்கியத்துக்கு ஈடான பொருட்செறிவுள்ள கவிதையை இன்னும் இயற்ற முடியவில்லையே என்று நீண்டகாலமாக ஏங்கியிருந்தார்கள் பாண்டிய நாட்டுப் புலவர்கள்.
சாரகுமாரனுக்கு இந்த அழகிய பெயரைச் சூட்டியவர் கூடப் பாட்டனார் வெண்தேர்ச் செழியர் தான். இந்தப் பெயரைச் சூட்டியதற்குக் காரணமாக மருமகள் (சாரகுமாரனின் தாய்) திலோத்தமையிடமும், மகன் (சாரகுமாரனின் தந்தை) அநாகுலனிடமும், பாண்டிய நாட்டுப் புலவர்களிடமும் முதியவர் வெண்தேர்ச் செழியர் கூறிய விளக்கம் பலமுறை நினைத்து நினைத்து இரசிக்கத் தக்கதாயிருந்தது. தேர்களைக் கட்டி வளர்த்த முதிய செழியரின் சிந்தனை சொற்களைக் கட்டி வளர்த்ததை அவர்கள் வியந்தனர்.
"இந்தச் சிறுவனைத் தொட்டுத் தழுவி உச்சி மோந்து பார்த்தால் கூட இவன் உடம்பு நமது மலய மலைச் சந்தனம் போல் மணக்கிறது. இவன் நிறமும் சந்தன நிறமாயிருக்கிறது. சந்தன மணத்தில் மிக உயர்ந்த பக்குவமான மணத்துக்குச் 'சாரகந்தம்' என்று பெயர். சாரம் என்பதற்கு 'மிக இனியது' - என்றும் ஒரு பொருள் உண்டு. இவனோ, தேனிற் செய்தாற் போன்ற இனிய குரலை உடையவனாயிருக்கிறான்.
பால் பசித்து அழுதால் கூட இனிய குரலில் அழுகிறான். இந்தத் தேசத்துக்கு எதிர்காலத்தில் இவன் மிகவும் பயன்படப் போகிறான். எனவேதான் இவையெல்லாவற்றையும் இணைத்து மனத்தில் கொண்டு இவனுக்குச் 'சாரகுமாரன்' என்று பெயரிட்டேன்" - எனச் சமயம் நேரும் போதெல்லாம் மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வார் முதிய செழிய மன்னர்.
புலவர் பெருமக்கள் இந்தப் பெயர் விளக்கத்தை உணர்ச்சி பூர்வமாக இரசித்துக் கேட்பதுண்டு. பெரிய மன்னரின் மொழி நுட்பத்திறனை வியந்து பாராட்டுவதும் உண்டு. ஒளி நாட்டு மருமகள் திலோத்தமை - மாமனாரின் இந்தப் பெயர் விளக்கத்தைக் கேட்கும் போதெல்லாம் சாரகுமாரனின் தாய் என்ற முறையில் மனம் பூரித்திருக்கிறாள். அநாகுலனுக்கும் இதில் மகிழ்ச்சிதான்.
ஆனால் அந்த மகிழ்ச்சியை அவன் வெளியிற் காட்டிக் கொள்வதில்லை. முதிய செழியர் இப்போதெல்லாம் அதிகமாக வெளியே வருவதும் போவதும் - தேர்க்கோட்டத்தில் போய்ச் சுற்றுவதும் கூட நின்றுவிட்டது. முதுமைத் தளர்ச்சியின் காரணமாகப் பள்ளிமாடத்திலேயே ஒடுங்கிவிட்டார். இந்த ஒடுக்கமும், தளர்ச்சியுமே, மணலூரிலிருந்து பேரப்பிள்ளையை வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையையும் பாசத்தையும் அவருள் வளர்த்து விட்டிருந்தன.
மணலூர் கொற்கை - பூழி முதலிய பாண்டிய நாட்டின் வடகிழக்குப் பகுதி ஊர்களிலேயே அகத்தியரிடம் நேர்முகமாகக் கற்றுப் புலமைபெற்ற சிகண்டி, அவிநயனார், போன்ற பெரும் பெரும் புலவர்கள் எல்லாரும் இருந்ததனால் இளையபாண்டியனான சாரகுமாரனை மணலூரில் தங்கிக் குருகுலவாசம் செய்விக்க விரும்பிய அநாகுலன் அவ்வாறே செய்திருந்தான்.
தந்தை முதிய செழியரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி நகர் மங்கல விழாவன்று இளைய பாண்டியன் சாரகுமாரனையும் அவனுக்கு ஆசிரியர்களான சிகண்டியாரையும் அவிநயனாரையும் கோநகருக்கு அழைத்து வருமாறு மணலூருக்கு விரைந்து சென்று அழைத்து வர வல்ல பரிகள் பூட்டிய தேர் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
மறுநாள் நகரணி மங்கல நாளாகையினால் கபாடபுரத்திலிருந்து மணலூர் வரை பொருநை நதிக்கரையை ஒட்டினாற் போலவே செல்லும் பெரும் பாண்டிய ராஜபாட்டையில் எங்கு பார்த்தாலும் திருவிழாக் கூட்டமாயிருந்தது. கடலொடு கலப்பதற்காகப் பெருகி விரையும் பொருநையைப் போலவே கபாடபுரத்தின் விழாக்கோலத்தோடு போய்க் கலப்பதற்காக மக்கள் வெள்ளம் பெருகி ஓடிக் கொண்டிருந்த இந்தப் பெருவழிகளில் கவனமாக முயன்று எவ்வளவு வேகமாகச் செலுத்தியும் அந்தி மயங்குகிற நேரத்துக்குத் தான் தேர்ப்பாகனால் மணலூரில் சிகண்டியாரும் அவிநயனாரும் வாழ்ந்து வந்த நதிக்கரைத் தோட்டத்தை அடைய முடிந்தது.
மணிகள் ஒலிக்கத் தோட்ட முகப்பில் வந்து நின்ற தேரை வரவேற்றவனே இளைய பாண்டியன் சாரகுமாரன் தான். ஆசிரியர் பாடஞ் சொல்லுமுன் மூல நூலை மனனஞ் செய்துவிட வேண்டு மென்கிற முறைப்படி 'அகத்தியப் பேரிலக்கணத்தின்' - எழுத்ததிகார நூற்பாக்களை மெல்ல வாய்விட்டுச் சொல்லித் தனக்குத் தானே கேட்கும் ஆத்மார்த்த சுகம் நாடும் இனிய குரலில் மனனம் செய்து கொண்டிருந்த சாரகுமாரன், பாட்டனாரின் முத்துப் பதித்த அலங்காரத் தேர் மணிகள் ஒலிக்க வந்து நின்றதைக் கண்டதும் மகிழ்ச்சி பிடிபடாத மனத்துடன் தேரருகே எழுந்து ஓடினான். தேர்ப்பாகன் முடிநாகன் தேரை நிறுத்தித் தேர்த்தட்டிலிருந்து கீழிறங்கித் தானிருக்குமிடம் வரும் வரையிற்கூடச் சாரகுமாரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
"முடிநாகா! தாத்தா நலமாயிருக்கிறாரா? நகர் மங்கல விழாவில் ஓடியாடித் திரியும் பழைய உற்சாகம் தாத்தாவுக்கு இப்போது இருக்கிறதா? என்னைப் பற்றி அவர் ஞாபகம் வைத்திருந்து அடிக்கடி பேசுகிறாரா?"
"ஆகா! கேட்க வேண்டுமா? தங்கள் தாத்தாவுக்கு இப்போதெல்லாம் அவருடைய தேர்க் கோட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் முத்துத் தேர்களைப் பற்றிக் கூட மறந்து போய்விட்டது. எக்காலமும் உங்கள் ஞாபகம் தான்! நாள் தவறாமல் இளையபாண்டியருக்குப் பேர் வைத்த பெருமையை யாரிடமாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். 'முடி நாகா! அநாகுலன் மட்டும் என் பிள்ளையில்லை! இந்த மூவாயிரம் முத்துத் தேர்களும் என் செல்வப் பிள்ளைகள் தான்.
இவைகளில் ஏதாவதொன்று சட்டம் முறிந்தாலோ சகடம் உடைந்தாலோ என் குழந்தையின் கையொடிந்தாற் போல நான் உணர்ந்து மனம் நோவேன் என்பதை மறந்து விடாதே' - என்று தம்முடைய தேர்ச் செல்வங்களைப் பற்றி ஒரு காலத்தில் என்னிடம் மனம் உருகியிருக்கிற உங்கள் தாத்தாவுக்கு இப்போது ஒரே ஞாபகம் நீங்கள் ஒருவர் தான் இளைய பாண்டியரே!" - என்றான் தேர்ப்பாகன் முடிநாகன்.
தாத்தாவைப் பற்றிப் பிரியமாக விசாரித்த பின்பே தாய் தந்தையரைப் பற்றி விசாரிக்க ஞாபகம் வந்தது சாரகுமாரனுக்கு. அநுபவமும் முதுமையும் நிறைந்த பழைய தேர்ப்பாகனாகிய முடிநாகன் தாத்தா வெண்தேர்ச் செழியருக்கு மிகவும் வேண்டியவன். அந்த வேளையில் அவனுடைய ஆசிரியப் பெருமக்களாகிய சிகண்டியாரும், அவிநயனாரும், பொருநையாற்றிற்கு மாலை நீராடச் சென்றிருந்தனர்.
ஒவ்வொரு முறையும் இத்தகைய விழாக்காலங்களில் புலவர்களுக்குச் செய்யும் இராசகௌரவங்களைப் போல் இம்முறையும் புத்தாடைகள் - முத்துக்கள் - பழங்கள் ஆகிய பரிசுப் பொருள்களை அரண்மனையிலிருந்து கொண்டு வந்திருந்த தேர்ப்பாகன் முடிநாகன், "புலவர் பெருமக்களைக் காணவில்லையே? எங்கே போயிருக்கிறார்கள் இளையபாண்டியரே? வழக்கம்போல் அவர்களுக்கு இராசகௌரவங்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.
அவற்றை அளிப்பதுடன் அவர்களையும் தங்களோடு கோநகரத்த்துக்கு அழைத்து வரச்சொல்லித் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார். மறுக்காமல் அவர்களும் உடன் நம்மோடு கோநகருக்குப் புறப்படும்படி செய்ய வேண்டியது இளையபாண்டியரின் பொறுப்பு" - என்று விநயமாக வேண்டினான்.
"அதற்கென்ன? என் ஆசிரியப் பெருமக்களும் கோநகருக்கு வந்து இந்த மங்கல நாளில் தாத்தாவைப் பார்த்து அளவளாவ மிகவும் ஆவலாயிருக்கிறார்கள். மறுக்காமல் அவசியம் வருவார்கள். அவர்களுடைய வரவைப் பற்றி உனக்குச் சிறிதும் கவலை வேண்டாம் முடிநாகா" என்று இளைய பாண்டியன் சாரகுமாரன் மறுமொழி கூறியபோது மீண்டும் மீண்டும் எதையாவது கேள்வி கேட்டு இளைய பாண்டியருடைய இனிய குரலைக் செவிமடுத்து மகிழ வேண்டும் போல ஆசையாயிருந்தது முடிநாகனுக்கு.
இந்தக் குரலையும் இந்தப் புன்முறுவல் பொலியும் பொன் முகத்தையும் கண்டு கேட்டு மகிழ்வதற்காகத்தானே பெரிய பாண்டியர் உருகி உருகி உயிர் விடுகிறார்? என்றெண்ணி உள்ளூர வியந்து கொண்டிருந்தான் அவன். இப்போது பட்டத்திலிருக்கும் - இளைய பாண்டியர் சாரகுமாரரின் தந்தையாரான அநாகுல பாண்டியரிடமுள்ள தொடர்பை விட, முதிய பாண்டியரிடம் தான் முடிநாகனுக்கு அதிகத் தொடர்பு இருந்தது.
முதியவராகிய பெரிய பாண்டியரின் ஆட்சிக் காலத்து இறுதியில்தான் - தேர்க் கோட்டத்தையும் - அதன் உடைமையான மூவாயிரம் முத்துத் தேர்களையும் மேற்கொண்டு கண்காணித்துக் கொள்வதற்காக அவன் நாக நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தான். இதனால் பெரிய பாண்டியரிடம் அவனுக்கு அளவற்ற விசுவாசமும் நன்றியும் அந்தரங்கமான பக்தியுமே ஏற்பட்டிருந்தன.
பெரியவரின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமான பேரப்பிள்ளை என்பதனால் அதே விசுவாசமும் அன்பும் இளைய பாண்டியர் சாரகுமாரனிடமும் முடிநாகனுக்கு உண்டு. தேனிற் செய்தது போன்று சன்னமாக இழையும் இனிய குரலில் வார்த்தைகளைத் தொடுத்துத் தொடுத்து அழகாகச் சாரகுமாரன் உரையாடுவதைக் கேட்டு அந்தக் குரலிலேயே மெய் மறந்து போகிறவன் முடிநாகன்.
"எதிர்காலத்தில் இந்தக் குரல் பாண்டிய நாட்டின் பல்லாயிரம் பல்லாயிரம் மக்கள் கூட்டத்தையெல்லாம் வசியப்படுத்தி மயக்கப் போகிறது" என்று தனக்குள் பலமுறை நினைத்து நினைத்துக் கற்பனை கூடச் செய்திருக்கிறான் முடிநாகன்.
யௌவனப் பருவத்துக் கந்தருவ இளைஞனைப் போல் கண்களும், தோற்றமும் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கின்றனவோ என்றெண்ணும்படி பொலிவான முகத்தோடு - பொன் வடிந்து வார்ந்ததையொத்த தோள்களுமாக விளங்கும் சாரகுமார பாண்டியரை இன்றெல்லாம் கொலுவிருக்கச் செய்து பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றும்.
பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர் மட்டுமின்றிச் சாதாரணமான அரண்மனை மெய்க் காவல் வீரர் முதல் தேர்க்கோட்டத்து மேற்பார்வைக்காரனான முடிநாகன் வரை எவர் இளைய பாண்டியர் சார குமாரனை எதிரே கண்டாலும் முகம் மலர இளமை பொங்க அவர் நின்று பேசுவதை இரண்டு கணம் செவியாரக் கேட்டு மகிழ்ந்துவிட்டே அப்பால் நகர வேண்டுமென்பது போல் ஓர் இனிய வசீகரம் அல்லது முகராசி சாரகுமாரனுக்கு இருந்தது.
சாரகுமாரனின் தாய் திலோத்தமைக்கு இப்படி ஒரு முகவசீகரம் உண்டு. அதுவாவது பெண்மையின் இயல்பான பொலிவு என்று தோன்றி அமைதி பெறும். ஆனால் சாரகுமாரனின் அழகோ, பொலிவோ, நிறமோ, தந்தையின் கம்பீரமும் தாயின் எழிலும் கலந்த அற்புதத் தோற்றத்தோடு கூடியனவாயிருந்தன.
தந்தை அநாகுல பாண்டியரின் ஆஜானுபாகுவான உயரமும் காம்பீர்யமும் தாய் திலோத்தமையின் அழகும் நிறமுமாகச் சாரகுமாரன் நடந்து வரும் போது அவனுடைய பாட்டனார் வெண்தேர்ச் செழியர் அரும்பாடுபட்டு உருவாக்கிய சிறந்த முதல் தரமான முத்துத் தேர் ஒன்று பொன்னிறம் பெற்று நடந்து வருவது போல் ஒரு வசீகரத் தோற்றம் உண்டாகும்.
அதுவும் இப்போது இந்த இருள் மயங்கும் அந்தி வேளையில் எளிமையான குருகுல வாசத்துக் கோலத்தில் மிக வனப்பான சிகண்டியாரின் நதிக்கரைப் பொழில் வீட்டின் சூழ்நிலையில் கையில் ஏடுகளுடனும் முகத்தில் புன்னகையுடனும் கந்தர்வ இளைஞனைப் போலவே தோற்றமளித்தான் சாரகுமாரன்.
இளைய பாண்டியரின் பேரழகை - வியந்த நிலையில் பரிகளைத் தேர்ப்பூட்டிலிருந்து - ஓய்வு கொள்ளப் பிரித்துத் தனியே விட்டுவிட்டு முடிநாகனின் பார்வை நதிக்கரைப் பக்கமாகத் திரும்பியபோது சிகண்டியாரும், அவிநயனாரும், பேசியபடியே வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
முது பெரும் புலவர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கினான் தேர்ப்பாகன் முடிநாகன். புலவர்கள் அரண்மனையிலுள்ள அனைவரின் நலனையும் அன்போடு அவனிடம் கேட்டறிந்தனர். "குமார பாண்டியரோடு தாங்களிருவரும் கூட நகரணி மங்கலத்துக்கு எழுந்தருள வேண்டுமென்று முதிய செழியர் சொல்லியனுப்பியிருக்கிறார். முதிய செழியர் தங்களிருவரையும் பார்த்து நீண்ட நாளாயிற்றாம். அதனால் அவசியம் தங்களிருவர் வரவையும் எதிர்பார்க்கிறார். மற்ற சங்கப் புலவர்கள் ஐம்பத்தெழுபதின்மருக்கும் தூது சொல்லி அழைப்பனுப்பியிருக்கிறார் பெரியவர்.
அனைவருமே நகரணி மங்கல நன்னாளில் கபாடபுரத்துக்கு வந்து சங்கமிருந்து தமிழாராய வேண்டுமென்று மக்களெல்லாம் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்" - என்று பணிவாகத் தெரிவித்த முடிநாகனை நோக்கிப் புலவர்கள் இருவரும் புன்முறுவல் பூத்தனர். "கபாடபுரத்திலிருந்து அழைத்துச் செல்வதற்குத் தேர் வந்திருக்கிறதென்றவுடன் நம் சாரகுமாரனின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி பொலிகிறது பார்த்தீர்களா அவிநயனாரே?" என்று சிரித்தபடியே சாரகுமாரனைச் சுட்டிக் காட்டி அவிநயனாரிடம் கூறினார் சிகண்டியாசிரியர்.
அதைச் செவியுற்றபடியே அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சாரகுமாரன் "அந்த மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் ஆசிரியர்பிரான்களாகிய தாங்களும் அடியேனுடன் கோநகரத்துக்கு வந்தருளப் போகிறீர்கள் என்பதுதான் சுவாமீ!" என்று சாதுரியமாக அவர்களுக்கு மறுமொழி கூறினான்.
கீழ்த்திசை வானில் நிலா எழுந்து நதிக்கரைச் சோலையைப் பால் முழுக்காட்டினாற்போல இரம்மியமாக்கியது. ஆசிரியர்களும், சாரகுமாரனும், இரவு உணவை மணலூர்ப் பொழில் மாளிகையிலேயே முடித்துக் கொண்டனர். முடிநாகனும் அங்கேயே உண்டான்.
உணவுக்குப் பின்னர் இளைய பாண்டியன் சாரகுமாரனும், புலவர் பெருமக்களும் புறப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பின் பாட்டனாரின் முத்துத் தேரையும் முதன்மையான வேகம் பொருந்திய தேர்ப்புரவிகளையும் பார்த்துச் சாரகுமாரனுக்குத் தேர் செலுத்திச் செல்லும் ஆசை மேலிட்டது. புலவர்களைத் தேரினுள் இருக்கைகளில் அமரச் செய்து முடிநாகனைத் தன்னருகே தேர்தட்டுச் சட்டத்தில் இருத்திக் கொண்டு நிலா ஒளி நிரம்பித் தெளிவாயிருந்த பெரும்பாண்டிய இராஜபாட்டையில் தேரைச் செலுத்தினான் சாரகுமாரன்.
குதிரைகள் தாவிப் பறந்தன. மறுநாள் நகரணி மங்கல விழா இருந்ததனால், இரவையும் அகாலத்தையும் பொருட்படுத்தாமல், நிலா ஒளி பகல் போலக் காய்ந்து கொண்டிருந்த கபாடபுரப் பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாகவும் மூட்டை முடிப்புக்களுடனும், கரி, பரி, தேர்களுடனும் மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பொருநரும், பாணரும், கூத்தரும், விறலியரும் ஆகிய கலைஞர்கள் வழிப் பயணத்தின் களைப்புத் தெரியாமலிருப்பதற்காகப் பாடல்களையும் வரிக்கூத்துச் செய்யுள்களையும் இரைந்து பாடி இசைத்துக் கொண்டு சென்றனர்.
புலவர் பெருமக்கள் அங்கங்கே இடைவழியில் சிகண்டியாரும், அவிநயனாரும் தேரில் பயணம் செய்து விரைந்து கொண்டிருப்பதையும், இளைய பாண்டியர் சாரகுமாரர் அந்தத் தேரைச் செலுத்திச் செல்வதையும் கண்டு ஆரவாரமிட்டு வாழ்த்தொலி முழக்கினர்.
இரவிலும் கபாடபுரத்துக்குச் செல்லும் அந்த அரசவீதி திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. இருமருங்கும் பெரிய பெரிய ஆலமரங்கள் செறிந்ததும் - வழிப்போக்கர் தங்கிச் செல்லும் வழிப்போக்கர் மாடங்களும், அறக்கோட்டங்களும், நிறைந்ததுமான அந்தப் பெரும் பாண்டிய இராஜபாட்டை - கபாடபுரத்தையும் அந்தக் கோநகரத்தைப் போலவே வடகிழக்கே - பாண்டிய நாட்டின் மற்றொரு கடல் வாணிக நகரமான கொற்கையையும் இணைத்தது. இடையே மணலூர், பூழி, முதலிய பேரூர்கள் அமைந்திருந்தன.
சாலையின் இருபுறமும் ஆலமரங்களுக்கப்பால் தோட்டங்களும், நெல் வயல்களுமாக வளம் பொங்கிய சூழ்நிலைகள் தோன்றின. மெல்லிய காற்று நிலா இரவின் தண்மையோடு வீசிக் கொண்டிருந்தது. சிகண்டியார் இளைய பாண்டியனுக்கு இசையும் கற்பித்து வந்தாராகையினால் அந்த நேரத்துக்குப் பாட ஏற்ற பண் ஒன்றைக் கூறி இளைய பாண்டியனைப் பாடுமாறு வேண்டிக் கொண்டார்.
இளைய பாண்டியனும் ஆசிரியருடைய வேண்டுகோளின்படி தன் அமுதக்குரலில் தேனிசை பொழிந்து கொண்டே தேரின் வேகத்தைக் குறைத்துப் பரிகளைச் சற்றே மெல்லச் செலுத்தினான். தக்கராகப் பண்ணில் சிகண்டியார் கற்பித்த பாடலொன்றினைப் பாடி முடித்தபின் கேட்பவர்களை உருக்கிச் சுழன்று துவளச் செய்யும் இரங்கற் பண்ணாகிய விளரியை இளைய பாண்டியன் தொடங்கிய போது சிகண்டியார் அது முடிகிறவரை தேரைச் சாலையோரமாக நிறுத்தி விடுமாறு சொல்லிவிட்டார்.
தேரை நிறுத்திவிட்டுச் செவிமடுத்து மகிழுமளவுக்கு ஒன்றரை நாழிகை நேரம் விளரியை இழைத்து இழைத்துப் பாடினான் சாரகுமாரன். நடுநடுவே சிகண்டியார் அவனுக்குச் சில திருத்தங்கள் கூறித் தாமே பாடிக் காட்டினார்.
சிகண்டியார் இசைப் புலமையில் நிறைகுடமாயினும் முதுமை அவருடைய குரலைத் தளர்த்தியிருந்தது. சாரகுமாரனோ கனிந்த குரலில் இனிமை பிழியும் இரங்கற் பண்ணாகிய விளரியைப் பொழிந்து தன் ஆசிரியர்களையும், சாலைகளையும், சோலைகளையும், மரங்களையும், மண்ணையும், விண்ணையும் உருக்கினாற் போன்றதொரு பிரமையை உண்டாக்கினான்.
"குழந்தாய்! உன்னுடைய குரலிலும் நாவிலும் தெய்வம் குடிகொண்டிருக்கிறது. என்னுடைய இசை ஞானத்தையெல்லாம் கொண்டு நீ பாடும் குரலுக்காகவும் முறைக்காகவுமே ஒரு புதிய மாபெரும் இசையிலக்கணத்தைப் படைக்கலாம் போலத் தோன்றுகிறது.
உன் குரல் பாடி முடிப்பதற்கு உலகம் இதுவரை படைத்துள்ள இசை வரம்புகள் சிறியவையாகவே எனக்குத் தோன்றுகின்றன" என்று சாரகுமாரனை வியந்து வாழ்த்தினார் சிகண்டியார். அவிநயனாரும் பாராட்டினார். முடிநாகனோ மெற்மறந்து போனான்.
"சுவாமீ! தங்கள் வாழ்த்துக்கும் புகழுக்கும் தகுதியானவனாக இந்தச் சிறுவனை இறைவன் என்றும் வைத்திருக்க வேண்டும்" - என்று அவரைப் பணிந்து வணங்கினான் சாரகுமாரன். தேர் புறப்பட்டது. சிறிது தொலைவு சென்றதும் சாரகுமாரனின் மற்றோர் ஆசிரியராகிய அவிநயனார் அவனுடைய இயற்றமிழ்ப் புலமையை உறைத்துப் பார்க்க விரும்பியவராய் ஒரு சோதனை வைத்தார். "சாரகுமாரா! இப்போது உனக்கு நான் ஓர் ஈற்றடி கொடுக்கிறேன்.
தேர் இந்தச் சமயத்தில் சென்று கொண்டிருக்கும் இதே இடத்திலிருந்து இன்னும் கால் நாழிகைத் தொலைவை அடைவதற்குள் என்னுடைய ஈற்றடியை நான் சொல்லுகிற பொருள் அமையும்படி நீ தேரை நிறுத்திவிட்டுச் சிந்திக்காமல் தேரையும் செலுத்திக் கொண்டே சிந்தித்து முடிக்க வேண்டும்."
"ஈற்றடியைச் சொல்லியருள வேண்டும் சுவாமீ! தாங்கள் கற்பித்த யாப்பும் செய்யுட் கோப்பும் இந்தச் சோதனையில் அடியேனைக் காப்பாற்றி வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையோடு தங்களை வணங்கி இந்த ஈற்றடியை ஏற்று முயல்வேன்" என்றான் சாரகுமாரன்.
உடனே அவிநயனார் தேர் ஓடும் ஓசையின் விரைவில் தன் குரல் காற்றில் போய்விடாதபடி நிறுத்தி நிதானமாக இரைந்து "காயும் நிலவுக் கனல்" - என்று முன்புறம் தேர்த்தட்டிலிருந்த சாரகுமாரனுக்குக் கேட்கும்படி கூறிவிட்டு, தலைவி தலைவனது பிரிவை நினைந்துருகி நிலவையும், கடலையும், தென்றலையும், மாலை வேளையையும் எண்ணி அவை தன்னை வாட்டி வருத்துவதாகச் சொல்லுவது போல் உன்னுடைய வெண்பா நிறைய வேண்டும்" என்று பொருளும் பாட்டெல்லையும் வகுத்து விளக்கிச் சொன்னார்.
"மாணவனை அதிகமாகச் சோதிக்கிறீர்கள் அவிநயனாரே" என்று சிரித்தபடி கூறினார் சிகண்டியார்.
"விளரிப்பண் பாடியதை விட இது ஒன்றும் பெரிய சோதனை அல்லவே?" என்று மறுமொழி கூறிச் சிகண்டியாரைப் பேச்சில் மடக்கினார் அவிநயனார். ஆசிரியர்கள் இருவரும் இப்படித் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, "சுவாமீ! வெண்பா என் மனத்தில் உருவாகி விட்டது. கூறட்டுமா?" என்று முன்புறம் தேர்த்தட்டிலிருந்து சாரகுமாரன் வினாவினான்.
"குழந்தாய்! கவனம். அவசரத்தில் சீர், தளை கெட்டுப் போய் விடப் போகிறது. நன்றாக நினைத்துப் பார்த்து எல்லாம் ஒழுங்காயிருப்பதாக நீயே மன நிறைவு அடைந்த பின்பு சொல். இன்னும் கால் நாழிகை தொலைவு வரவில்லையே? அதற்குள் உனக்கென்ன அவசரம்?"
"அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் பாட்டுக் கனிந்துவிட்டது. சொல்லலாம்."
"எங்கே சொல், பார்க்கலாம்."
"நீலக் குறிஞ்சி நெடுவரை நீழலிற்
சாலப் பலசொல்லி நீத்தனர் - வேலவர்
பாயும் திரையாழி தென்றலுடன் மாலையெல்லாம்
காயும் நிலவுக் கனல்"
என்று சாரகுமாரன் நிறுத்தி நிறுத்தி ஒவ்வோரடியாகக் கூறி முடித்ததும் வியப்படைந்த அவிநயனார், "வாழ்க! இறையருளும் கலைமகளருளும் உனக்கு நிறைவாகத் துணை நிற்கின்றன. வெண்பா மிக நன்றாக வந்திருக்கிறது. உன் பாட்டனார் கேட்டால் பெருமைப்படுவார். கபாடபுரத்தையடைந்ததும் முதல் வேலையாக உன் பாட்டனார் வெண் தேர்ச்செழியரிடம் நீ இயற்றிய இந்த வெண்பாவைத்தான் சொல்லப்போகிறேன் நான்" என்றார்.
"ஐயோ! வேண்டவே வேண்டாம் சுவாமீ! பெரியவருக்கு உடனே கோபம் வந்துவிடும். இத்தனை சிறிய வயதில், அகப்பொருள் தொடர்புடைய காதற் பாடலைப் பாடி முடிக்குமாறு இந்தப் பசலைப் பிள்ளைக்கு நீங்கள் எப்படி இத்தகையதோர் ஈற்றடியைக் கொடுக்கலாமென்று உங்களிடம் பாட்டனார் சொற் போருக்கே வந்துவிடுவார்" - என்று இளையபாண்டியனுக்காகப் பரிந்து முடிநாகன் கூறியதும் புலவர்கள் பாட்டனாரிடம் அவனுக்குள்ள பயத்தைக் கண்டு புன்முறுவல் பூத்தனர்.
தேர் விரைந்து கொண்டிருந்தது. நிலவோ உச்சி வானத்தையும் கடந்து விட்டது. சாலையில் இப்போது கூட்டம் குறையலாயிற்று. யாத்திரிகர்கள் அங்கங்கே தங்கி அதிகாலையில் புறப்படலாமென்று ஒடுங்கியிருக்க வேண்டும். ஆயினும் சில சில இடங்களில் கூட்டமாகப் பொருநரும், விறலியரும் மட்டும் இசைப் பாட்டுக்களைப் பாடியபடி சென்று கொண்டிருந்தனர். கபாடபுரத்தின் மாபெரும் கபாடங்கள் நிலா ஒளியில் தெரிகிற எல்லைவரை அவர்களுடைய தேர் ஊரருகில் வந்துவிட்டது.
அந்த வேளையில் அந்த இடத்தில் சாலையை மறைத்தாற் போலப் பத்து பன்னிரண்டு பேர்களடங்கிய ஒரு பொருநர் கூட்டம் நின்றிருந்தது. கூட்டத்தில் ஆடவரும் பெண்டிருமாகச் சிலர் கதறியழுவதும் கேட்டது. நெஞ்சைத் தொட்டு உருக்கும் அந்த அழுகை, இளையபாண்டியன் தேரை நிறுத்திவிட்டுக் கீழிறங்கும்படி செய்தது.
பரிகளின் கடிவாளக் கயிற்றை அருகிலிருந்த முடிநாகனிடம் கொடுத்துவிட்டு ஆசிரியரிடம் சொல்வதற்காகத் திரும்பியபோது அவர்கள் தேரிலிருந்தபடியே சிறிது கண்ணயர்ந்திருப்பது போல் தோன்றவே சாரகுமாரன் அவர்களை உரத்த குரலில் கூவியெழுப்பிச் சிரமப்படுத்த விரும்பாமல் தேர்தட்டிலிருந்து கீழிறங்கி அந்தப் பொருநர் கூட்டத்தை நோக்கி விரைந்து நடக்கலானான். ஒருவிதமான ஆவலால் உந்தப்பட்டுக் கடிகயிற்றைச் சட்டத்தில் கட்டிவிட்டு முடிநாகனும் விரைந்து இளையபாண்டியரைப் பின்பற்றி அந்த இடத்திற்குச் சென்றான்.
--------
2. கண்ணுக்கினியாள்
இசைக் கருவிகளின் பல்வேறு வகைகளையும், பல்வேறு வடிவங்களையும் சுமந்து நின்ற பொருநரும், பாணரும், விறலியருமாகக் கூடியிருந்த அந்தக் கூட்டம், தன்னை இன்னாரென்று இனங் காண்பித்துக் கொள்ளாது அமைதியாக நுழைந்த இளையபாண்டியரைக் கண்டதும் மௌனமாக விலகி வழி விட்டது. கூட்டத்தினிடையே பொன்னிறப் பூமாலை ஒன்று சரிந்து தளர்ந்து விழுந்து கிடப்பதுபோல் இளம்பாண் மகள் ஒருத்தி விழுந்திருந்தாள்.
அவளருகே யாழ் ஒன்றும் விழுந்து கிடந்தது. மயங்கி விழுந்தவளைக் கண்ட இளைய பாண்டியரின் விழிகள் 'இவள் யார்? ஏன் இப்படி விழுந்து கிடக்கிறாள்?' - என்று வினாவுவது போன்ற பாவனையில் சுற்றி நின்றவர்களைத் துழாவின. புதிதாக வந்த அவனைக் கண்டதும் அவர்கள் அழுகையும் கண்ணீரும் நின்றன.
"எல்லாரோடும் உடன் நடந்து வந்து கொண்டிருந்தவள் திடீரென்று நடைதளர்ந்து மயங்கி விழுந்துவிட்டாள்" - என்று ஒரே சமயத்தில் பல குரல்கள் இளைய பாண்டியரின் செவியில் ஒலித்தன.
துயரமும், சோர்வும், பயமும் கொண்ட அந்தக் கூட்டத்தில் மலர்ந்த முகமும், புன்சிரிப்பும் ஒளிர இளையபாண்டியர் புகுந்தது இருளில் மின்னல் தோன்றிப் பொலிவது போலிருந்தது. இளையபாண்டியரைப் பின் தொடர்ந்து வந்திருந்த முடிநாகன் குறிப்பறிந்து செய்ய வேண்டியதை உணர்ந்தவனாகச் சாலையோரமாய் மரக் கூட்டத்திற்கு அப்பாலிருந்த நெற்கழனிகளுக்கு நீர்பாயும் வாய்க்காலைத் தேடி ஓடினான்.
பக்கத்திலிருந்த மரங்களில் இலைகள் பெரிதாயிருந்த மரமொன்றிலிருந்து நாலைந்து இலைமடல்களை இணைத்துப் பேழைபோற் செய்து நீர்முகந்து கொண்டு விரைந்தான் அவன். தண்ணென்று குளிர்ந்த வாய்க்கால் நீரை ஒரு கை அள்ளி அவள் முகத்தில் தெளித்தபோது - தண்ணீரின் குணத்தினாலோ அதைத் தெளித்த சாரகுமாரனின் மனத்தில் நிரம்பியிருந்த கருணையினாலோ அங்கு மயங்கிக் கிடந்தவளின் உடலில் அசைவுகள் புலப்படலாயின.
அல்லி மலர்வது போல் அவள் விழிகளில் மலர்ச்சியும் தெரிந்தது. அவள் பருகுவற்கு வசதியாக இலைப் பேழையிலிருந்த நீரை வாயிதழ்களினருகே சாய்த்த இளையபாண்டியனை நோக்கி அவள் கண்களில் நன்றி சுரந்தது.
உடலிலே சிறிது தெம்பு வந்ததும், கூடியிருந்த கூட்டத்தினரையும், அருகே அமர்ந்து நீரையும், குளிர்ந்த பார்வையையும் சேர்த்தே பொழியும் சுந்தர இளைஞனையும் கண்டு அவள் நாணியபடியே எழுந்து நிற்க முயன்றாள். மின்னல் பாய்வதுபோல் விரைந்து தெரிந்த அந்த நாணம் அவளுக்கு மிகமிக அழகைக் கொடுத்தது.
"உண்ணாமல் வயிற்றுப் பசியோடும் களைப்போடும் நெடுந்தூரம் நடந்து வந்தாள் போலிருக்கிறது. சோர்வுக்கும் மயக்கத்துக்கும் அதுதான் காரணம்" - என்று சுற்றியிருந்தவர்களிடம் கூறினார் இளையபாண்டியர்.
"ஆர்வத்தின் காரணமாக இவளே உண்டாக்கிக் கொண்ட சோர்வுதான் ஐயா இது! வயது முதிர்ந்த பெற்றோர்கள் பின்னால் வருகிற கூட்டத்தோடு வந்து கொண்டிருக்கிறார்கள். மணிபுரத்திலிருந்து இன்றிரவு இளையபாண்டியர் கோநகருக்கு வருகிறாராம். நகரின் முதற்கோட்டை வாயிலிலேயே அவரைப் பார்த்துவிட வேண்டுமென்று இவளுக்கு ஆசை.
அதனால் முதுமையின் காரணமாக விரைந்து நடக்க முடியாத பெற்றோர்களை அவர்கள் ஏற்கனவே வந்து கொண்டிருந்த கூட்டத்தினரோடு விட்டு விட்டு இவள் முன்னால் விரைகிறாள். கபாடபுரத்தை அடைந்து இளையபாண்டியரின் சுந்தரத் தோற்றத்தைக் கண்டு மயங்க வேண்டியவள்; பாவம்! இங்கேயே அவசரப்பட்டு மயங்கி விழுந்துவிட்டாள்" - என்று கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவர் - முதுமை தமக்களித்திருக்கும் உரிமையோடும் துணிவோடும் கூறியபோது கூட்டத்தில் சிரிப்பொலி அலை அலையாக எழுந்தது.
சிரிப்புக்குக் காரணமாயிருந்தவளோ நாணித் தலை கவிழ்ந்தாள். இந்த நிலையில் உடனிருந்த முடிநாகனுக்கோ தன் ஆவலைச் சிறிதும் அடக்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தினரையும், விண்மீன்களுக்கிடையே முழுநிலவு தளர்ந்து கிடப்பது போல் துவண்டு நிற்கும் அந்தப் பெண்ணையும் நோக்கி, "பாண் மக்களே! விறலியர்களே! பேரழகு வாய்ந்த இசைச் செல்வியே!
நீங்கள் எல்லோரும் காணத் தவித்துக் கொண்டிருக்கும் இளைய பாண்டியர் சாரகுமாரரைத்தான் இப்போது உங்களருகே காண்கிறீர்கள்" - என்று சொல்லி அவர்களுடைய முக மலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும், அன்பையும் அந்தக் கணமே இளையபாண்டியர் நேருக்கு நேராகப் பெறும்படி செய்துவிட வேண்டும் போல முடிநாகனின் நாவும் இதழ்களும் முந்தின.
ஆனால் முடிநாகனுக்கு அந்த வேளையில் அந்தச் சூழ்நிலையில் அப்படி ஓர் ஆவல் வருவது இயல்பு என்பதை முன்பே அநுமானித்திருந்த இளையபாண்டியர், 'அதைச் சொல்ல வேண்டாம்' - என்ற பாவனையில் சைகை செய்து அவனது ஆவலை அடக்கிவிட்டார்.
இராச கம்பீரத்துக்குரிய பொற்கோலங்களும், அலங்காரப் புனைவுகளுமின்றித் தென்பாண்டி நாட்டின் பல்லாயிரம் க்ஷத்திரிய இளைஞர்களில் சற்றே அழகு மிகுந்த ஓர் இளைஞனைப் போலவே அந்தக் குருகுலவாசத் தோற்றத்தில் இளைய பாண்டியர் இருந்ததனால் அவர்களாலும் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை. தன்னைக் காட்டிலும் பருவத்தில் மிக மிக இளையவளாகத் தோன்றிய அந்தப் பெண்ணை நோக்கி, "உன் பெயர் என்னவென்று எனக்கு சொல்வாயா பெண்ணே?" - என்று உரிமையோடும் பாசத்தோடும் கனிவாய் வினவினான் சாரகுமாரன்.
நாணம் நாவை அடைக்கும் காதல் மழலையாக ஒலித்தது அவள் குரல்: "கண்ணுக்கினியாள்." செவிக்கினிதாக ஒலித்த இந்த மறுமொழி சாரகுமாரனின் நெஞ்சைத் தொட்டது. பெண்ணின் குரலுக்கு வசீகரமான அழகு வருகிற இடம் நாவில் சொல் பிறக்கும் நிலையும் - அதே கணத்தில் அந்தச் சொல்லை உடைக்கும் நாணமுமாகத் தடுமாறி வெளி வருகிற குதலைச் சொல்தான். பெண்ணின் உணர்ச்சிகளில் மிக நளினமான உணர்ச்சி இந்தக் குதலைச் சொல்தான். பெண்ணோடு உடன் பிறந்த அந்தரங்க சங்கீதமே இந்தக் குதலை மொழிதான் என்று சொல்ல வேண்டும்.
மலரக் காத்திருந்து மலர்ந்ததும் 'கம்'மென்று மணம் விரியும் நறுமணம் மிகுந்த பூவைப் போல ஒவ்வொரு பெண்ணிடமும் அவள் மலரும்போது நாணமும் சொல்லுமாகத் தடுமாறிப்பிரியும் இந்த அழகிய மொழி பிறக்கிறது. இன்னொரு முறை அவள் குரலிலேயே அந்தப் பெயரைக் கேட்க வேண்டும் போல ஆசையாயிருந்தது சாரகுமாரனுக்கு. உலகத்தின் முதற் பண்ணைப் பெண்ணின் குதலையிலிருந்து தான் மனிதன் கண்டு பிடித்திருக்க வேண்டுமென்று அப்போது தோன்றியது அவனுக்கு.
அவள் பேசினாளா அல்லது தளர்ச்சியினால் அவளிடமிருந்து கீழே பிரிந்து கிடந்த யாழ் அவளுக்காகப் பேசியதா என்று பிரமையடையும்படி இன்னும் அவன் செவிகளிலேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது அந்த ஒரு பெயர்.
"என்ன இருந்தாலும் நீ செய்தது தவறுதான் பெண்ணே! முதுமையினால் தளர்ந்த பெற்றோர்களை வழி நடையாளர்களோடு பின் தங்க விட்டு விட்டு நீ மட்டும் இப்படித் தனியே வரலாமா?"
சாரகுமாரனின் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறாமல் கீழே கிடந்த தன் யாழைப் பார்த்தபடி மௌனமாக வெட்கம் சிவக்கும் முகம் அழகு பொழிய நின்றாள் அவள்.
"அப்படியென்ன அவசரம் உனக்கு? இளையபாண்டியர் எங்கே ஓடிப் போகிறார்? நகரணி விழா நாட்களில் என்றாவது ஒரு நாள் நீ அவரைப் பார்க்க முடியாமலா போய் விடப் போகிறது?"
நாணத்தினால் அவள் முகம் இன்னும் அழகாக இன்னும் அதிகமாகச் சிவந்தது. இளையபாண்டியரின் நடிப்பைக் கண்டு தனக்குள் பொங்கிக் கொண்டு வந்த சிரிப்பை முயன்று அடக்கிக் கொண்டான் முடிநாகன். சாரகுமாரனின் கேள்விக்கு அவள் மறுமொழி கூறாவிட்டாலும் கூட்டத்திலிருந்த அந்தப் பெரியவர் மறுமொழி கூறினார்.
"நீங்கள் சொல்வது போல் இளையபாண்டியரைப் பார்ப்பது அவ்வளவு எளிமையான காரியமாயிருந்தால் நாங்கள் ஏன் இத்தனை அவசரப்படப் போகிறோம் ஐயா? அவர் தான் தலைநகரத்திலேயே இருப்பதில்லையாமே? ஆசிரியர்களிடம் குருகுலவாசம் செய்து வருவதனால் எப்போதாவது அத்தி பூத்தாற் போலத்தான் அவர் கபாடபுரத்துக்கு வருகிறாரென்று கேள்விப்படுகிறோம்."
"இருக்கலாம்! இளையபாண்டியரைப் பார்ப்பதில் இவ்வளவு பரபரப்பும் அவசரமும் ஏன் என்பதுதான் என் கேள்வி. ஓர் அரசகுமாரரிடம் உடனே பார்த்துத் தீர வேண்டுமென்று தவிப்பதற்கு அப்படி என்ன பெரிய சிறப்பு இருந்து விடப் போகிறது? கலைஞர்கள் இன்னொருவரைப் பார்ப்பதற்கு ஏங்குபவர்களாக இருத்தல் கூடாது. இன்னொருவர் தங்களைப் பார்க்க ஏங்கச் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
பார்க்கப் போனால் அரசகுடும்பத்துப் பிள்ளைகளுக்கு என்ன இருக்கிறது? பதவியும் கடமைகளும் சாகிறவரை நெஞ்சில் மிகப் பெரிய சுமைகளாக இருக்கிற வாழ்க்கை அரச வாழ்க்கை. குடிப்பெருமை - கடமை - என்ற எல்லைகளைத் துணிந்து உலகத்தைச் சுதந்திரமாக அநுபவிக்கும் வாழ்வு கூட அவர்களுக்கு இல்லை. கலைஞர்கள் தங்கள் உயிர் நாடியாகிய கலைக்கருவிகளும் கீழே தவறி விழும்படி அத்தனை வேகமாக இதுபோல் யாரையும் தேடி ஓடக்கூடாது.
இதோ இந்த அருமையான யாழை இவள் ஒருகணம் கீழே மண்ணில் தவற விட்டிருப்பதைக் கூட இப்போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை" - என்று கூறிக்கொண்டே கீழே குனிந்து நல்ல வேளையாக எதுவும் பழுதுபடாமலிருந்த அந்த யாழைக் கையிலெடுத்து - அதில் மண் படிந்திருந்த இடங்களை மேலாடையால் தூய்மை செய்தபின், எந்த நிலையிலும் இதைக் கீழே தவற விட்டு விடாதே பெண்ணே!
கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் - வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து கீழே நழுவவே கூடாது. வாழ்க்கையின் சோர்வுகள் கலையை ஆள்பவனைக் கீழே தள்ளலாம். ஆனால் அவனுடைய கலையையே கீழே தள்ளிவிடக்கூடாது" - என்று புன்முறுவல் செய்தவாறு கூறி அவளிடம் யாழைக் கொடுத்தான் சாரகுமாரன்.
யாழை வாங்கிக் கொள்ளும்போது அவள் கைகளையும், விரல்களையும் பார்த்த சாரகுமாரனின் மகிழ்ச்சி மேலும் அதிகமாகியது. தாமரை இதழ்களை நீட்டிச் சுருட்டிப் பவழ நகங்கள் பதித்தாற் போன்ற அந்த நீண்ட நளின விரல்கள் யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பெற்றவைபோல் தோன்றின.
ஒருமுறை பார்த்தாலும் மறந்து விட முடியாத அத்தனை அழகிய விரல்கள் அவை. யாழை அவனிடமிருந்து பெற்றுக் கொண்ட அவள் நன்றியோடு சில வார்த்தைகள் தயங்கித் தயங்கிப் பேசினாள்.
"ஐயா உங்களைப் போல் உதவி செய்யும் மனமும் கருணையும் நிறைந்தவர்கள் நிரம்பிக்கிடக்கிற இந்தப் பாண்டி நன்னாட்டின் வழிகளில் கலைஞர்கள் எந்த இடத்தில் சோர்ந்து விழுந்தாலும் நிச்சயமாக அவர்களுக்குக் கவலை இருக்க முடியாது. அவர்களுடைய யாழ் கீழே விழும்போதெல்லாம் அதை நினைவூட்டி மறுபடியும் எடுத்தளிக்க உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது கலைஞர்களுக்கென்ன கவலை."
"என்னிடம், நீ சொல்வது போல் ஏதாவது நல்ல குணம் இருக்குமானால், அதற்காகக் கடவுளை வாழ்த்து பெண்ணே! என்னை வாழ்த்துவதும் வியப்பதுமே ஒரு நாள் நான் இவற்றை மறப்பதற்கோ இழந்து விடுவதற்கோ காரணமான அகங்காரத்தை என்னுள் உண்டாக்கி விடலாம்."
"ஐயா! எளிமையாகத் தோன்றினாலும் தாங்கள் பெருஞ் செல்வக் குடியைச் சேர்ந்தவர் போல் தெரிகிறீர்கள். தயை செய்து தாங்கள் யாரென்பதை எங்களுக்குக் கூறலாமா?"
"என்னைப் பற்றிக் கூறுவதற்கு அப்படிப் பெரிதாக ஒன்றுமில்லை பெண்ணே! இந்தப் பாண்டி நாட்டின் கோநகரமாகிய கபாடபுரத்தில் நிரம்பியிருக்கும் மிகப்பெரிய முத்து வணிகர்களில் ஒருவன் நான்..."
"இவ்வளவு பெருந்தன்மையும் கருணையும் காட்சிக்கு எளிமையும் நிரம்பிய தாங்கள் விற்கும் முத்துக்களெல்லாம் சிறப்பாயிருக்குமென்பதில் ஐயமேயில்லை ஐயா!"
இதைக் கேட்டுச் சாரகுமாரன் புன்னகை பூத்த முகத்தோடு மௌனமாயிருந்தான். முடிநாகனால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அவன் அந்தக் கூட்டத்திலிருந்து சிறிது தொலைவு விலகிச் சென்று நின்று கொண்டான்.
சாரகுமாரனோ கண்ணுக்கினியாள் பேசப் பேச அவளுடைய குரலினிமையையும் அதில் நிரம்பியிருக்கும் குதலைத் தன்மையையும் கேட்டு இரசிக்க விரும்பியவன் போல் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் உடனிருந்த பாணர்கள் வழிநடையைத் தொடர முற்படவே மற்றவர்களோடு அவளும் அவனிடம் விடை பெற்றுக் கை கூப்பினாள்.
"நல்லது! போய் வா! உன் பெயர் என்றும் என் நினைவிலிருக்கும் பெண்ணே! இவ்வளவு அழகிய சொற்களை இணைத்துச் சூட்டப்பட்ட ஒரு பெயரை நான் இதுவரை கேட்டதேயில்லை" - என்று அவளுக்கு விடை கொடுத்த சாரகுமாரன் அவள் நடை பின்னித் தளர்வதைக் கண்டதும் தன் முடிவை மாற்றிக் கொண்டு, "பெண்ணே! உன்னால் இந்த நிலையில் நடக்க முடியாதென்று அல்லவா தோன்றுகிறது.
நீ சம்மதித்தால் உனக்கு இன்னும் ஒரு சிறிய உதவியையும் இப்போது செய்யச் சித்தமாயிருக்கிறேன் நான். எங்களுடைய தேரில் நீயும் ஏறிக்கொள்வாயானால் ஒரு தளர்ச்சியுமின்றி இன்னும் சிறிது நேரத்தில் கபாடபுரத்தை அடைந்து விடலாம். இளையபாண்டியரைப் பார்க்க வேண்டுமென்ற உன் விருப்பமும் நிறைவேறிவிடும். உரிய நேரத்தில் உன்னைக் கபாடபுரத்தின் முதற்கோட்டை வாயிலில் இறக்கிவிட்டு விடுகிறேன்" - என்று கனிவாக வேண்டினான்.
இந்த வேண்டுகோளைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் தயங்கினாள். முன்னாள் கூட்டமாக விரைந்து கொண்டிருக்கும் தன்னுடன் வந்த மற்றப் பாணர்களையும் - இப்பால் நின்று தன்னைத் தேருக்கு அழைக்கும் சாரகுமாரனையும் மாறி மாறிப் பார்த்து ஒரு முடிவுக்கும் வர இயலாமல் அவள் தடுமாறுவது போல் தோன்றியது. சிறிது நேரச் சிந்தனைக்குப் பின், "எனக்குச் சம்மதமானாலும் உங்களுக்கு அந்தச் சிரமத்தைத் தரலாமா என்றுதான் நான் தயங்குகிறேன் ஐயா" - என்றாள் அவள்.
"இதில் சிரமம் ஒன்றுமில்லை பெண்ணே! துன்பப்படுகிறவர்களுக்கு உதவுவதைக் கருணையென்றும் மென்மையென்றும் கவிகள் போற்றும்போது அதை ஒரு சிரமமாக மட்டும் நான் நினைக்க முடியுமா?"
"நல்லது! உங்கள் பெருந்தன்மை குணத்தை வியக்கிறேன். இளையபாண்டியர் கோநகருக்கு வருவதற்குள் நாம் அங்கே போய் விடலாமல்லவா?" - என்று அவள் நாணமும் புன்னகையுமாக அவன் முகத்தை ஏறிட்டுப் பாராமல் பூமியைப் பார்த்துக் கொண்டே வினாவிய போது அவளுள்ளே நிறைந்திருக்கும் ஆவல் சாரகுமாரனுக்குப் புரிந்தது.
"பெண்ணே! உனக்கு நான் உறுதியே கூறமுடியும், எங்களுடைய இந்தத் தேர் கபாடபுரத்தின் கோட்டை வாயிலில் நுழைவதற்கு முன் இளையபாண்டியர் அங்கு வந்திருப்பதற்கு வழியே இல்லை. என்னை நீ நம்புவதோடு இப்போதே இந்தக் கணமே, இளையபாண்டியரைப் பார்த்ததாகவே வைத்துக் கொள்ளலாம்."
இந்த உறுதி மொழியைக் கேட்டு அவள் அவனுடன் நடந்தாள். முடிநாகன் முன்பே தேருக்குச் சென்று ஆயத்தமாக இருந்தான். தேரை அவன் செலுத்தவே சாரகுமாரனும் அந்தப் பெண்ணும் தேரின் பின்புறச் சட்டத்தில் அமர்ந்து கொண்டனர்.
முன்புறம் உறங்கித் தளர்ந்திருந்த புலவர் பெருமக்களுக்கு இடையூறின்றித் தாங்கள் பின்புறம் அமர்வது நல்லதென்று அங்கே தானும் அந்தப் பெண்ணும் இருக்க வசதி செய்து கொண்டான் சாரகுமாரன். வழியில் அவளிடம் பல செய்திகளைப் பேசினான் அவன். இசை நுணுக்கங்கள், செவ்வழி, பாலைப்பண், யாழ் நரம்புகள், திவவு என்னும் யாழ்க்கட்டு உறுப்பு எல்லாவற்றையும் பற்றி அவளிடம் நிறைய விவாதித்தான்.
"ஏதேது? வணிகராகிய உங்களுக்குக் கூட இவ்வளவு இசை நுணுக்கங்கள் தெரிந்திருக்கின்றனவே?" என்று அவள் தன் குதலைச் சொற்களில் தேனிழைத்து அவனை வியந்து பேசிக் கொண்டிருந்தபோதே தேர் கபாடபுரத்தை நெருங்கிவிட்டது.
அருகே நடந்து சென்று கொண்டிருந்த வேறோர் பாணர் கூட்டத்தோடு தானும் இறங்கிக் கொள்வதாக அவள் கூறவே தேரை நிறுத்தச் செய்து அவளை இறக்கிவிட்ட பின் தேரிலிருந்த அவளது யாழையும் ஞாபகமாக அவள் கையில் எடுத்துக் கொடுத்து "எந்த நிலையிலும் இதைக் கீழே தவற விட்டுவிடாதே பெண்ணே! கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து கீழே நழுவக்கூடாது" என்று சிரித்துக் கொண்டே கூறினான் சாரகுமாரன். அவள் நன்றியோடு கை கூப்பினாள்.
அவ்வளவில் கோட்டை வாயிலினருகே சுற்றிலும் இளையபாண்டியர் சாரகுமாரனுக்கு வாழ்த்துக் கூறும் குரலொலிகள் எழுந்தன. அந்த ஆரவாரத்தில் தடுமாறித் தவித்த கண்ணுக்கினியாள், "எங்கே? எங்கே?" - என்று பரபரப்புடன் அருகே நின்ற பாண்டிய நாட்டுக் காவற்படை வீரன் ஒருவனை அணுகி வினாவியபோது அவன் முன்னே சென்று கொண்டிருந்த தேரையும் அதில் புன்முறுவல் மலர நின்று கொண்டிருந்த இளையபாண்டியரையும் காண்பித்தான்.
"அவரா? அவர் கபாடபுரத்து முத்து வணிகரல்லவா?" என்று அவள் அப்போது வியந்த வியப்புக்குரல் மற்றவர்களின் கடலலை போன்ற வாழ்த்தொலியில் கலந்து கரைந்துவிட்டது.
-----------
3. தேர்க்கோட்டம்
பேரப் பிள்ளையாண்டான் வரப் போகிறான் என்ற மகிழ்ச்சியினாலும் ஆவலினாலும் அந்த அகாலத்திலும் உறங்காதபடி விழித்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர். தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் பார்த்து வணங்கி நலம் கேட்டறிந்த சுவட்டோடு,
அவனிடம் நிறையப் பேச வேண்டுமென்கிற ஆவலோடு இருந்த தாயையும் ஏமாறச் செய்து சாரகுமாரன் பெரிய பாண்டியரிடம் செல்ல வேண்டியதாயிற்று. "குழந்தை வந்ததும் இங்கே அழைத்து வந்துவிடுங்கள்" என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டுக் காத்திருந்தார் முதிய செழியர்.
அநாகுலன், திலோத்தமை, பெரிய பாண்டியர் எல்லாரையும் பார்த்து நலமறிந்த சுவட்டோடு உறங்கச் சென்று விட்டார்கள் அவிநயனாரும், சிகண்டியாரும். சாரகுமாரன் பாட்டனாரை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு உறங்கப் போகலாமென்று நினைத்திருந்தான்.
பாட்டனாரோ அவனிடம் - அவனுடைய குருகுலவாசத்தைப் பரிசோதனை செய்து பரீட்சை வைப்பது போன்ற கேள்விகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கிவிட்டார். சந்ததிகளைப் பற்றிக் கிழவர்களுக்கே இயல்பாக முதுமையில் ஏற்படும் கவலையும் அக்கறையும் பாசமும் அந்த முதியவரைப் பற்றியிருந்தன. பேரப் பிள்ளையை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தவர் கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் கேட்டுப் பரிசோதித்து விட்டார்.
"குழந்தாய்! தேரில் நீ வருகிறபோது வழியில் ஏதாவது விசேஷமுண்டா? இடைநிலத்து ஊர்கள் எல்லாம் செழிப்பாயிருக்கின்றனவா? பயிர் பச்சைகள் எல்லாம் வளமாகத் தெரிகின்றனவா? அரச குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இவற்றில் எல்லாம் பொதுவாக ஒரு கவனம் வேண்டும்.
அரச குடும்பத்தைச் சேர்ந்தவனின் கவனத்துக்கும் கருணைக்கும் எல்லை மிகமிகப் பெரியது, பொதுவானது, பரவலானது! அந்த ஞாபகத்தோடு உலகைப் பார்க்கிற ஞானம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு இளமையிலேயே வந்துவிட வேண்டும்."
"வருகிற வழியில் பொருநரும் பாணரும், விறலியருமாயிருந்த ஒரு பாணர் கூட்டத்தைப் பார்த்தேன் தாத்தா! அந்தக் கூட்டத்தில் சிலர் கலங்கி அழுது கொண்டிருந்தனர். என்னவென்று அருகில் போய்ப் பார்த்தபோது ஓர் இளம் பெண் மயங்கி விழுந்திருந்தாள். அவளுடைய மயக்கத்தை நீக்கி அந்தக் கூட்டத்தினரின் கலக்கத்தைத் தவிர்த்தேன்... அதோடு..."
"அதோடு என்ன?"
இளையபாண்டியன் மேலே சொல்லத் தயங்கினான். முதிய பாண்டியர் அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு மீண்டும், "அதோடு என்னவென்பதைத்தான் சொல்லேன்?" என்று அழுத்தமாக வினாவினார்.
"ஒன்றுமில்லை! அந்தப் பெண்ணை மட்டும் என்னுடன் தேரில் அழைத்து வந்து நமது நகரெல்லையில் இறக்கி விட்டேன். பாவம்! மிகமிகத் தளர்ந்து போயிருந்தாள்..."
"துன்புறுகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஆண்கள் பெண்கள் என்று பிரிவோ, பேதமோ இல்லை. ஆனாலும் இளம் பெண்களுக்கு உதவி செய்வதில் கவனமாயிருக்க வேண்டும். உன் உதவி அவர்கள் மனத்தை நெகிழச் செய்யும். முதலில் நன்றி தெரிவிப்பார்கள்.
அப்புறம் புன்னகை செய்வார்கள். நிறையப் பேசுவார்கள். உன் மனமும் நெகிழும். போகப் போக வேறுவிதமாக ஆனாலும் ஆகிவிடும். இதில் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும். எல்லாருக்குமே இதில் விழுப்புத் தேவை.
அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கோ அதிகமான விழிப்பும் முன்னெச்சரிக்கையும் வேண்டும். எந்தப் பெண்ணும் ஓர் அரச குமாரனிடம் மயங்குவதற்குச் சாத்தியம் உண்டு. அரச குமாரனோ யாரிடமும் மயங்காத - தயங்காத கடமை வீரனாயிருக்க வேண்டும்."
தாத்தாவிடம் அந்த நிகழ்ச்சியைத் தான் சொல்லியிருக்கக் கூடாதென்று அப்போதுதான் இளையபாண்டியன் உணர்ந்தான். அவரோ விடாமல் அதைப் பற்றியே அப்புறம் அவனைத் துளைத்தெடுக்கத் தொடங்கிவிட்டார்.
"அந்த இளம் பெண் யார் என்று கேட்டறிந்தாயா? அவள் எங்கிருந்து வந்தாளாம்? யாராம்? எந்த ஊராம்? என்ன பெயராம்?"
"அவள் கையில் யாழுடன் வந்ததிலிருந்து பாண்குடியைச் சேர்ந்தவளென்று தோன்றியது தாத்தா. அவள் பெயர் 'கண்ணுக்கினியாள்' என்று கூறினாள். மிகவும் அழகான பெயரென்று நான்கூடப் பாராட்டினேன்."
"பாராட்டுவதற்கு அதில் அப்படி என்ன இருக்கிறது குழந்தாய்? எந்தப் பெண் பிள்ளைக்கு அந்தப் பெயரை வைத்தாலும்தான் பொருத்தமாயிருக்கும். உனக்கு நான் பெயர் சூட்டியதை விடவா அது அழகு?"
"இல்லை தாத்தா! அவள் உண்மையிலேயே அந்தப் பெயருக்காகவே பிறந்து வந்தவள் போலத் தோன்றினாள்."
"பார்த்தாயா? பார்த்தாயா? என்னிடமே அவள் புகழைப் பாடத் தொடங்கிவிட்டாயே? பெயரில் அழகைக் கண்டு மயங்கிவிடாதே. அதிர்ஷ்டவசமாக நமது மொழியில் உள்ள சொற்கள் எல்லாமே பொருத்தமாக இணையும்போது அழகாகத்தான் இருக்கின்றன.
பதங்கள் இணையும்போது இணைக்கிறவனின் திறனால் - அவற்றுக்கும் உயிர், பொலிவு, கவர்ச்சி, வனப்பு எல்லாம் வந்து சேரும். அந்தப் பெருமையை மொழிக்குக் கொடு அப்பா! வெறும் பெண்ணுக்கு மனம் தடுமாறாதே. சொல்லின் பிரதிபிம்பம்தான் பொருள். சொல்லை மறந்து பொருளுக்காகப் பெருமைப்படுவது கூடாது."
தாத்தா அவனை வகையாகப் பிடித்துக் கொண்டார். வேண்டிய அறிவுரையையும் வழங்கத் தொடங்கிவிட்டார். 'சொல்லின் பிரதிபிம்பம்தான் பொருள். சொல்லை மறந்து பொருளுக்காகப் பெருமைப்படாதே' - என்ற தாத்தாவின் வாதம் பிழையானதென்றும் அதைப் பொருத்தமான தர்க்க நியாய மேற்கோள்களுடன் மறுக்க முடியும் என்றும் அப்போது அவனுக்குத் தோன்றினாலும் அதைப் பொறுத்துக் கொண்டான். பெரியவரை எதிர்த்து வாதிடத் துணியவில்லை அவன்.
மறுநாள் நகரணி மங்கலத்தைக் கொண்டாடு முகத்தால் கூடிய அரசவையில் பாண்டிய நாட்டுப் பெரும் புலவர்களும், பாணரும், பொருநரும், விறலியரும், யாழ் வல்லோரும், குழல் வல்லோரும், முழுவு வல்லோரும் பாண்டிய மன்னரின் பெருமையையும், கோநகராகிய கபாடபுரத்தின் பெருமையையும் புகழ்ந்து பாடியும், இசைத்தும், அவிநயமாடியும், பரிசில் பெற்றுச் சென்றனர்.
அவையில் பாட்டனார் வெண்தேர்ச் செழியருக்கு அருகே கொலுவமர்ந்திருந்த இளையபாண்டியன் அரங்கில் குழுமியிருந்த கூட்டத்தினரை உற்றுக் கவனித்தபோது முதிய பெற்றோர்களோடு கையில் யாழுடன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளும் காணப்பட்டாள்.
தான் அவளை நோக்கிய அதே வேளையில் அவள் தன்னுடைய பெற்றோரிடம் தன்னைச் சுட்டிக் காண்பித்து ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.
அரியணையில் கொலுவிருந்த தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் புகழ்ந்து பாடிய புலவர்கள் சிலர் தன்னையும் சேர்த்துப் புகழ்ந்திருப்பதைக் கேட்டுக் கூசினான் சாரகுமாரன். அவனே கேட்டு வெட்கப்படும்படி அவனுடைய அழகையும், வசீகரத்தையும், குரலினிமையையும், வண்ண வனப்பையும் புலவர்கள் வருணித்துப் புகழ்ந்திருந்தார்கள்.
'பாண்டி நாட்டுப் பேதைப் பெண்கள் எல்லாம் இளையபாண்டியர் உலா வரும்போது வளை சோர நின்று பந்தையும் கழங்கையும், அம்மானைக் காய்களையும், பிற விளையாட்டு ஆயங்களையும் அன்றே மறந்தனர்' - என்ற பொருள்படப் புனைந்து சிங்காரரசம் பொங்கி வழிய வழியப் பாடினார் ஒரு புலவர்.
முதிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர் முகம் சிவக்க மீசை துடிதுடிக்கக் கடுமையாக உறுத்துப் பார்த்தாரோ இல்லையோ அந்தப் புலவர் பயந்துபோய் அடுத்தப் பாடலை வேறுவிதமாக மாற்றி, "பேதைப் பெண்களே! நீங்களெல்லாம் இப்படி உருகிப் பயனில்லை! ஏனெனில் இளையபாண்டியருக்குப் போர்க்களங்களிலும், அறிவாராய்ச்சியிலும் நேரம் போவது தவிர உங்கள் புறம் திரும்பிப் பார்க்கவும் வேண்டாம்" - என்று பொருள்படும்படி வேறுவிதமாகப் பாடி முதிய பாண்டியரின் கோபத்தைத் தணித்தார்.
இன்னொரு புலவர் 'இளையபாண்டியரைக் காண முடியாமல் கடலருகே நீங்கள் நெஞ்சழிந்து இரங்கி உகுத்தக் கண்ணீர்த் துளிகள் எல்லாம் அல்லவா இப்படி இந்தக் கபாடத்தின் விலை மதிப்பற்ற முத்துக்களாக விளைந்தன' என்று பொருள்படும்படி பேதைப் பெண்களை விளித்துக் கற்பனை செய்வதுபோல் ஒரு வெண்பா இயற்றிப் பாடினார்.
"ஐயா புலவரே! பேரப் பிள்ளையாண்டானுக்குக் கல்வியும், வீரமும், கலைகளும், பெருக வேண்டுமென்று ஏதாவது நன்றாக வாழ்த்துக் கூறிப் பாடுங்கள்; உமக்கு இந்த ஆகாத கற்பனைகள் எல்லாம் எதற்கு? முக்கால்வாசி அரச குடும்பத்துப் பிள்ளைகள் உங்களைப் போன்ற புலவர்களின் புகழ் மயக்கில்தான் கெட்டுப் போகிறார்கள் தெரியுமா?" என்று முதிய பாண்டியர் அந்தப் புலவரை வாய் திறந்து பேசியே சாடிவிட்டார். புலவர் கூனிக் குறுகிப் போய் அப்படியே அமர்ந்து விட்டார்.
நகரணி மங்கல நாளன்று மாலையில் நகருக்குச் சிறிது தொலைவிலிருந்த மாபெரும் தோட்டத்தில் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்களுடனும் மிகப் பெரிய நுழைவாயில்களுடனும் அமைக்கப்பட்டிருந்த தேர்க் கோட்டத்துக்குப் பாட்டனாருடனே சென்றிருந்தான் சாரகுமாரன்.
அன்றிரவு அந்தத் தேர்க் கோட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் முத்துத் தேர்களும் நிலவில் உலா வந்து திரும்புவது வழக்கமான விழா மரபாக இருந்தது. முதல் தேரில் அநாகுல பாண்டியனும் அவனுடைய பட்டத்தரசியும், அடுத்தத் தேரில் முதியவர் வெண்தேர்ச் செழியரும், அதற்கடுத்த தேரில் இளையபாண்டியன் சாரகுமாரனும், ஏனைய தேர்களில் அரணமனை அதிகாரிகளும், அமைச்சர்களும், புலவர் பெருமக்களுமாக உலா வருவது வழக்கம்.
கடல் கொண்ட பழம் பாண்டி நாட்டிற்குப் பிறகு தரைப் பகுதி அதிகமுள்ள வடதிசை நோக்கிப் பாண்டியர் கோநகரம் பரந்திருந்ததால், நகர நீரில் ஓடும் மரக்கலங்களைக் காட்டிலும் தரையில் ஓடும் தேர்ப்படைகளை அதிகமாக்கிப் பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பல்லாயிரம் யவனத் தச்சர்களை வரவழைத்துப் பணிக்கமர்த்தி நிருதர் நாட்டுக் காடுகளிலுள்ள வைரம் பாய்ந்த மரங்களைக் கலங்கள் மூலமாகக் கொணர்ந்து இந்தத் தேர்களைச் சமைத்திருந்தார் வெண்தேர்ச் செழியர்.
நகரணி மங்கல நாளன்று நடைபெறும் இந்தத் தேர் உலாவைப் பார்ப்பதற்காகப் பாண்டி நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுவதுண்டு. கோட்டையைச் சுற்றியிருக்கும் நான்கு பெரும் இராச பாட்டைகளிலும் இந்தத் தேர்கள் வரும்போது எள் விழ இடமின்றி மக்கள் திரண்டிருப்பார்கள்.
நல்லவேளையாக அன்று தேருலாவின் போதும் உடனிருந்த பேரப் பிள்ளையாண்டானைத் தம்முடைய அதிக அன்பினாலே பயமுறுத்தாமல் தம்முடைய தனித்தேருக்குப் போய்விட்டார் பாட்டனார். ஆசிரியர் பிரான்களாகிய அவிநயனாரும், சிகண்டியாரும் கூடத் தங்களுக்கென்று அலங்கரிக்கப்பட்டிருந்த தனித்தனித் தேர்களுக்குப் போய்விட்டார்கள்.
இளையபாண்டியருடைய தேரை முடிநாகன் செலுத்தி வந்தான். நிலவொளியில் தேர்களில் பதிக்கப் பெற்றிருந்த முத்துக்கள் அற்புதமாக மின்னி நகைத்தன. தேர் புறப்படுமுன் முடிநாகன் இளையபாண்டியரிடம் ஒரு செய்தி கூறினான்.
அன்று பகலில் பாட்டனார் முடிநாகனைத் தனியே அழைத்து "இளையபாண்டியன் மணலூரிலிருந்து தேரில் இங்கு புறப்பட்டு வரும் போது ஏதோ ஒரு நிகழ்ச்சி நடுவழியில் நடந்ததாமே? யாரோ பாண்மகள் ஒருத்தி மயங்கி விழுந்திருந்தாளாம். உடனே இவன் கருணை மிகுந்து ஓடிப்போய் அவளுக்கு மயக்கம் தெளிவித்தானாமே? அது என்ன கூத்து?" - என்று வினவினாராம்.
"அது ஒன்றுமில்லை! கூடியிருந்தவர்களின் அழுகை ஒலி கேட்டு வெறும் இரக்கத்தினால் மட்டும் வலிந்து சென்று உதவி செய்தார். அந்தப் பெண் நடக்க முடியாமல் சிரமப்பட்டதனால் தேரில் அழைத்து வந்து நகர் எல்லையில் இறக்கிவிட்டார்.
இதில் குறிப்பிடத் தகுந்த விதத்தில் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால், அந்தப் பெண்ணிடமோ கூட்டத்தினரிடமோ தான் அரச குமாரர் என்பதைக் கூட இளையபாண்டியர் காண்பித்துக் கொள்ளவில்லை. 'யாரோ முத்து வணிகன்' என்று பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டார்" என்று அவர் மனம் சிறிதும் ஐயுறாதவாறு தான் அவருக்கு மறுமொழி கூறிவிட்டதாகத் தெரிவித்தான் முடிநாகன்.
பாட்டனாரின் எச்சரிக்கையை எண்ணி இளையபாண்டியன் தனக்குள் சிரித்துக் கொண்டான். நிலா உதயத்துக்குப் பின் ஓரிரு நாழிகைகளில் தேர் உலாப் புறப்பட்டது! முதலில் செல்ல வேண்டிய தேர்கள் எல்லாம் சென்ற பின் இளையபாண்டியருடைய தேர் புறப்பட வேண்டிய முறைப்படி அதைப் புறப்படச் செய்து ஓட்டிக் கொண்டு நுழைவாயிலுக்குக் கொண்டு வந்தான் முடிநாகன்.
அன்றைக்குக் கூடியிருந்த கூட்டத்தினரில் பெரும் பகுதியினர் இளைய பாண்டியர் சாரகுமாரரைக் காண்பதற்காகவே இடித்து நெருக்கிக் கொண்டு கூடியிருந்தார்கள். ஆதலால் அவருடைய தேர், கோட்டத்தின் நுழைவாயில் வழியே வெளியே வர இருப்பதைப் பல்லாயிரக் கணக்கான விழிகள் ஆவலோடு எதிர்பார்த்த வண்ணமாக இருந்தன.
அப்படி ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களில் இளைஞர்களும் இருந்தார்கள். முதியவர்களும் இருந்தார்கள். பெண்களும் இருந்தார்கள். ஆண்களும் இருந்தார்கள். இளம் பெண்களும் இருந்தார்கள். முதிய தாய்மார்களும் இருந்தார்கள். நடுத்தர வயதினரும் இருந்தார்கள். காளைகளும் இருந்தார்கள்.
தளர்ந்து முதிர்ந்த கிழவர்களுமிருந்தார்கள். இளம் பெண்கள் இளையபாண்டியரின் பேரழகைக் கேள்விப்பட்டுக் கூடியிருந்தார்கள் என்றால் இப்படி அந்த இளம் பெண்களின் ஆவலுக்கெல்லாம் காரணமென்ன என்ற இரகசியத்தை அறியக் கூடியிருந்தார்கள் முதியவர்கள். அந்த முதியவர்களே எப்போதோ வாய் தவறி 'நமது இளவரசர் சாரகுமாரரைப் போல் சுந்தர வாலிபர் ஈரேழு பதினான்கு புவனங்களிலும் இல்லை' - என்று புகழ்ந்ததை ஞாபகமாக நினைவு வைத்திருந்துதான் இத்தனை இளம் பெண்களும் இங்கே கூடினார்கள் என்ற இரகசியத்தை முதியவர்கள் அத்தனை பேரும் இப்போது மறந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.
இது தவிர இளைய பாண்டியரின் இசைக் கலைத்திறனைக் கேள்விப்பட்டுக் கூடியவர்கள் பலர். அவருடைய இலக்கிய இலக்கணப் பயிற்சியைக் கேள்விப்பட்டுக் கூடியவர்கள் சிலர். உருண்டு திரண்ட அவருடைய புஜங்கள் மல்யுத்த வீரர்களுக்கே உரிய செழிப்பு அமையப் பெற்றவை எனக் கேள்விப்பட்டதால் மல்யுத்தத்தில் ஆசை கொண்ட காளையர்களெல்லாம் அந்தப் பரந்த பொன் மார்பையும் எடுப்பான தடந்தோள்களையும் காணக் கூடியிருந்தனர்.
அப்படிக் கூடியிருந்த பல்லாயிரவரின் ஆவலையும் நிறைத்துக் கொண்டு நுழைவாயிலில் தென்பட்டு வெளிவந்த இளைய பாண்டியரின் தேர் கோலாகலமான பேராரவாரத்தோடு வரவேற்கப்பட்டது. கூட்டத்தினர் சாரகுமாரனைக் கண்கள் நிறைய ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டி ஒருவரை ஒருவர் இடித்து நெருக்கிக் கொண்டு முந்தினர்.
இளையபாண்டியரின் தேருக்குப் பின்னாலும் வேறுபல தேர்கள் அடுத்தடுத்து வரவேண்டியிருந்ததனால் இளையபாண்டியரின் தேர் ஒரு கணம் கூட நிற்காது, பின்னால் வருகிற தேர்களுக்கு வழி அமைவதற்காகவாவது விரைய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத பேரதிசயமாக இளைய பாண்டியரின் தேர் நுழைவாயிலருகே ஓரிரு கணங்களுக்கும் மேலாக நின்றது. தானாக நிற்கவில்லை கூட்டத்தில் எதையோ பார்த்துவிட்டு இளைய பாண்டியரே முடிநாகனின் தோளைத் தொட்டு அவனுக்கு உணர்த்தித் தேரை நிறுத்தச் செய்திருந்ததையும் முன்வரிசையில் நின்ற சிலர் கண்டிருந்தனர்.
தேர் நிறுத்தப்பட்டதோடு போகாமல் - யாரும் எதிர்பாராத வண்ணம் அழகுக்கெல்லாம் இலட்சிய எல்லையான காமதேவனே கீழறங்கி வருவதுபோல் இளையபாண்டியர் சாரகுமாரரே தேரிலிருந்து கீழிறங்கிக் கூட்டத்தை நோக்கி ஓரிலக்கைக் குறிவைத்து விரைந்தார். 'ஏன்? ஏன்? அங்கே என்ன? அங்கே என்ன? எதற்காக இளையபாண்டியர் கீழிறங்கிப் போகிறார்?' என்ற கேள்வி தேர்ப்பாகன் முடிநாகன் முதல் அங்கு கூடியிருந்த பல்லாயிரவர் மனத்திலும் ஒருங்கே ஏற்பட்டது.
-------------
4. கடற்கரைப் புன்னைத் தோட்டம்
இளையபாண்டியருடைய தேர் திடீரென்று அங்கு நின்றது எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. முன்னால் சென்ற தேர்கள் வெகுதூரம் போய்விட்டன. பின்னால் வர வேண்டிய தேர்கள் வரமுடியாமல் இளையபாண்டியருடைய தேர், கோட்டத்தின் வாயிலிலேயே வழிமறித்து நின்று கொண்டது. நூலிழை கோத்தாற்போல் வரிசையாக இடைவெளி விடாமல் வீதியில் செல்ல வேண்டிய தேர் உலாவில் இதனால் இடைவெளி உண்டாகி அணிவகுப்புக் குலைந்தது.
'அத்தனை அவசரம் என்னவாயிருக்கும்?' என்று எல்லாருடைய கண்களுக்கும் தேரிலிருந்து கீழிறங்கி இளையபாண்டியர் சென்ற திசையையே நோக்கின. அங்கே அவர்களுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. தேர் உலாக்கோலத்தில் இளையபாண்டியர் மிக மிகக் கவர்ச்சி நிறைந்து தோன்றினார்.
சொந்த தேசத்தில் விளைந்த முத்துக்களும், இரத்தினங்களும் பதித்த கிரீடத்தினோடு சுருண்ட கருங்குஞ்சி பிடரியில் கற்றை கற்றையாய் அலையிட ஆண் சிங்கம் போல அவர் நடந்து சென்ற அழகைக் கண்டு மயங்காதவர்களில்லை. அவருடைய அழகிலே பெண்மையின் கனிவு இருந்தது என்றால் நடையிலே ஆண்மையின் கம்பீரம் இருந்தது. பெருமிதமும் இருந்தது. தேரிலிருந்து கீழிறங்கி நடந்து போய் அவர் செய்த காரியத்தைப் பார்த்த போது தோற்றத்தில் மயங்கியவர்களே மறுபடியும் அவருடைய தொண்டினால் மயங்கினார்கள்.
கூட்டத்தில் இடியுண்டு நெருக்கப்பட்டதன் காரணமாக இளம் பாண்மகள் ஒருத்தியின் கைகளிலிருந்து கீழே நழுவி விழுந்துவிட்ட யாழை அவள் கைகளில் எடுத்துக் கொடுத்த இளையபாண்டியரின் அந்தக் கருணையைக் கண்டு வியந்தனர் யாவரும். 'அந்தப் பெண் யார்? இளையபாண்டியரின் கருணையையும், கண்ணோட்டத்தையும் அடைய அவள் கொடுத்து வைத்தவளாயிருக்க வேண்டும்! அவளுடைய பாக்கியமே பாக்கியம்' - என்றெல்லாம் கூட்டத்தினர் அந்தப் பாண் மகளைக் கண்டு வியந்ததுபோல் முடிநாகன் வியக்கவில்லை.
மணிபுரத்திலிருந்து நகரணி மங்கல விழாவிற்காகக் கபாடபுரத்திற்கு வருகிற வழியில் இளையபாண்டியரோடு தேரில் இடம்பெற்ற பெண்தான் அவள். மனத்தில் ஒருவிதமான பயத்தோடு முன்னால் தேர்கள் செல்லும் வீதியைப் பார்த்தான் முடிநாகன். நல்ல வேளையாகப் பாட்டனாருடைய தேர் முன்னால் வெகுதூரம் போய்விட்டது. ஆனால் கோட்டத்தினுள்ளிருந்து வெளியே வரவேண்டிய மற்ற இரதங்கள் ஏன் பின் தங்கின என்ற சந்தேகம் முன்னால் போய்விட்ட அவருக்கு வரக்கூடாதே என்பது முடிநாகனின் பயமாயிருந்தது.
இளையபாண்டியரைக் காண்பதிலுள்ள ஆவல் அடங்காமல் கோநகரின் விழா நாளில் அவரைக் காணமுடிந்த ஒவ்வோரிடத்திற்கும் அந்த பாண்மகள் வருவதைக் கவனித்திருந்தான் முடிநாகன். பகலில் நகரணி மங்கலத்துக்காக அரசவை கூடியிருந்த போதும் அங்கு இதே பெண்ணைப் பார்த்ததாக ஞாபகமிருந்தது அவனுக்கு. இப்போதும் இளையபாண்டியர் கீழே நழுவி விழுந்திருந்த யாழை அவள் கைகளில் எடுத்தளித்துவிட்டு ஏதோ கூறவே முடிநாகன் அதைச் செவிகொடுத்துக் கேட்கலானான்.
"மறுபடியும் உன் யாழைக் கீழே தவற விட்டு விட்டாயே பெண்ணே? அதற்குள் நான் கூறியதை மறந்து விட்டாயா? 'கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவர்களிடமிருந்து கீழே நழுவி விடக்கூடாது' என்று நான் கூறியது இனிமேலாவது உனக்கு நினைவிருக்கும் அல்லவா?"
"அவர்களுடைய எழுத்தாணியும், யாழும் கீழே விழும் போதெல்லாம் - அதை நினைவூட்டி மறுபடியும் எடுத்தளிக்க உங்களைப் போன்ற 'முத்துவணிகர்கள்' இருக்கும்போது கவலை எதற்கு?" - என்று குனிந்த தலை நிமிராமல் அவள் கூறிய பதில் வார்த்தைகளில் 'முத்து வணிகர்களிருக்கும் போது' - என்ற இடத்தில் மட்டும் குரலை நிறுத்தி வார்த்தைகளை அழுத்தி 'நீங்கள் ஒரு முத்து வணிகர்' - என்பதாக என்னிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள், ஞாபகமிருக்கட்டும் - என்பது போல் பேசினாள்.
"அதில் சந்தேகமென்ன? இந்தப் பாண்டி நாட்டுக் கபாடத்தின் புகழ்பெற்ற முத்துக்களுக்கெல்லாம் சொந்தக்காரர்கள் நாங்களே அல்லவா?" - என்று அவள் கேள்வியிலே குத்திக் காட்டப்பட்ட குறிப்புக்கும் சேர்த்தே மறுமொழி கூறினான் இளையபாண்டியன். அவளும் விடவில்லை. மேலும் அவனை வம்புக்கிழுத்தாள்.
"கபாடபுரத்து முத்து வணிகர்கள் முத்துக்களோடு பொய்யையும் விலைபேசுவார்கள் போலிருக்கிறதே?"
"வாணிகத்துக்குப் பொய் பாவமில்லை!..."
"ஆனால் பொய்யே ஒரு வாணிகமாகி விடக்கூடாது..."
இதற்கு மறுமொழி கூறாமல் அவளை நோக்கிப் புன்னகை பூத்த சாரகுமாரன்... "கண்ணுக்கினியாள்! நீயும் உன் பெற்றோர்களும் இங்கு எங்கே தங்கியிருக்கிறீர்கள்?" என்று அவளைப் பரிவுடன் வினாவினான்.
"கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் எல்லாப் பாணர்களோடும் தங்கியிருக்கிறோம்" - என்று அவளிடமிருந்து மறுமொழி கிடைத்தது. இந்த விஷயத்தில் இளையபாண்டியனைக் கண்காணித்துக் கொள்ள வேண்டிய அந்தரங்க ஒற்றனாகவும் முதியபாண்டியர் வெண்தேர்ச் செழியர் அவனை நியமித்து வைத்திருந்ததனால் முடிநாகன் இவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
மேலே என்ன பேசுகிறார்கள் என்று முடிநாகன் கவனிக்க அவசியமில்லாமல் இளையபாண்டியன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளிடம் விடை பெற்றுக் கொண்டு தேருக்கு வந்துவிட்டான். எனவே முடிநாகனும் தேரை விரைவாக முன்னே விரிந்து கிடந்த வீதியில் செலுத்த வேண்டியதாயிற்று.
பின்னால் தங்கிய தேர்களும் அடுத்தடுத்து விரையலாயின. இளையபாண்டியர் வலுவில் வந்து பேசிவிட்டுச் சென்ற பேறு பெற்றவள் என்பதனால் அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த இளம்பெண்களுக்கு எல்லாம் கண்ணுக்கினியாள் மேல் பொறாமையாயிருந்தது. கண்ணுக்கினியாளோ மதுவுண்ட வண்டு போன்ற மயக்க நிலையிலிருந்தாள். யாழில் மீட்டத் தெரிந்த பண்களை எல்லாம் அப்போது தன் நெஞ்சில் மீட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
தேர்க்கோட்டத்திலிருந்து புறப்பட்ட தேருலா நகரை வளைத்துக் கிடந்த பெருவீதியைச் சுற்றிக் கொண்டு மறுபடி தேர்க்கோட்டத்தின் வாயிலுக்கு வந்து சேருவதற்குள் விடிந்தாலும் விடிந்துவிடுமென்று தோன்றியது.
கூட்டத்தில் பலர் தேர்க் கோட்டத்தின் மதிற்புறத்து மேடைகளிலும், மணல் வெளியிலும், மரக் கூட்டங்களின் கீழும் அமர்ந்துவிட்டனர். நகரம் சோதி மயமான தீபாலங்காரங்களினால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எங்கே திரும்பினாலும் ஒளி. எங்கே செவி கொடுத்தாலும் இசைகளின் இனிய ஒலி. எங்கே கண்டாலும் அலங்காரம். எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். நிலா ஒளியில் கடலும் நீலமாகப் பொங்கி மின்னிக் கொண்டிருந்தது. மரக்கலங்களிலும் சிறு படகுகளிலும் கூட விளக்குகள் மின்னிக் கடலிலும் ஒரு பெருநகரம் உருவாகி விட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
இந்த நகரணி மங்கல விழா நாளில் மட்டும் தேச தேசாந்திரங்களிலிருந்து வரும் யாத்திரீகர்களுக்கும், வணிகர்களுக்கும், தென்பழந்தீவுகளிலிருந்து வரும் கடற் குறும்பர்களுக்கும் கூடச் சுங்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. பிற நாடுகளிலிருந்து பண்டங்களைக் கொண்டு வந்து விற்போருக்கும் கபாடபுரத்திலிருந்து முத்துக்களையும், இரத்தினங்களையும் கொள்முதல் செய்து கொண்டு போகிறவர்களுக்கும் இந்த விழா நாட்களில் வாணிகம் செய்வதற்கு வசதிகள் அதிகமாயிருந்தன.
தென் பழந்தீவுகளில் வசித்துவந்த முரட்டுக் குடிமக்களான கடற் குறும்பர்கள் குருதிவெறி பிடித்தவர்களாயிருந்தும் ஒவ்வோராண்டும் கபாடபுரத்து நகரணி மங்கல விழாவில் ஏதாவது கலகமூட்டிவிட்டுச் செல்லும் வழக்கத்தை அவர்கள் மேற் கொண்டிருந்தும், அவர்களுக்குத் தடைவிதிக்காது விட்டிருந்ததற்குக் காரணம் பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியரின் பெருந்தன்மையும் அநாகுல பாண்டியரின் துணிவுமே என்று கபாடபுரத்து மக்கள் அறிந்திருந்தனர்.
வேறு நாடுகளிலிருந்து கபாடபுரத்துக்கு வரும் கப்பல்களுக்கும், கபாடபுரத்திலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கும் தென் பழந்தீவுகளைக் கடக்க நேரும் போது இந்தக் கடற் குறும்பர்களால் விளையும் தொல்லைகளும் வேதனைகளும் நீண்ட காலமாகத் தவிர்க்க முடியாதபடி இருந்தன. வெண்தேர்ச்செழிய மாமன்னர் காலத்திலும் அநாகுல பாண்டியர் காலத்திலும் ஓரளவு அடக்கி ஒடுக்கப்பட்ட பின்பும் இவர்களுடைய கொலை வெறியோ, கொள்ளை வெறியோ தணியாமல் அவ்வப்போது தலையெடுப்பதும் மறைவதுமாக இருந்தன.
இந்தத் தென்பழந்தீவுக் கடற் கொலைஞர்களின் இனத்தில் பெண்கள் குறைவாகவும், ஆண்கள் அதிகமாகவும் இருந்ததனால் - கப்பல்களைக் கொள்ளையடிக்கும் காலங்களிலும், தரைப்பகுதி நகரங்களில் புகுந்து கொள்ளையிடும் காலங்களிலும் பொன்னையும், மணியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும் கொள்ளையிடுவதை விட அழகிய பெண்களைக் கொள்ளையிடுவதில்தான் இவர்கள் வெறிபிடித்து அலைந்தனர்.
இரத்தம் உமிழ்வதுபோல் உருண்டு அலைபாயும் சிவந்த விழிகளும், உயரமும் பருமனானத் தோற்றமும், உடலில் அருகம்புல் போல் விகாரமாகச் செழித்த ரோம அடர்த்தியும், செந்தீப்போல் சடையிட்டுத் திரிந்த கலைமுடியுமாகக் கொலையரக்கர்களெனத் தோன்றுவார்கள் குறும்பர்கள். ஊன் தின்பதிலும், மதுவருந்துவதிலும் அளவற்ற ஆவலும் பசியுமுள்ள இந்தக் கொலை வெறியர்களுக்கும், கபாடபுரத்துக்கும், பழம் பகைகள் நிரம்ப இருந்தன.
அரச நீதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்காகப் பாண்டிய மரபினர் இவர்களைப் பண்படுத்த முயன்ற முயற்சிகள் எல்லாம் தங்களுடைய சுதந்திர உணர்வையும், கொள்ளையிட்டுத் திரியும் தொழிலையும், கட்டுப்படுத்தி ஒடுக்கும் ஏற்பாடுகளாகவே இவர்கள் புரிந்து கொண்டதுதான் இதற்குக் காரணம்.
தென் பழந்தீவுகளில் அங்கங்கே சிறு சிறு குழுக்களாகத் திரிந்து வந்த இவர்கள் தொகை எண்ணிக்கையிற் சிறிது என்றாலும் இவர்களிடம் வலிமையும், சூழ்ச்சியும், கொடுமையும் மிகுதியாயிருந்தன. பாண்டி நாட்டின் வலிமை மிகுந்த கடற்படை மரக்கலங்களையும், வில் வீரர்களையும் பெருந் தொகையினராக அனுப்பி இந்தத் தென் பழந்தீவுக் கடற் கொலைஞர்களின் இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது சாத்தியமென்று தோன்றினாலும் அப்படிச் செய்து தீர்த்துவிடுவது இராசதந்திரமாகாது என்று விட்டிருந்தார் வெண்தேர்ச் செழியர்.
கடல் வழியாக வேறு நாட்டினர் எவரேனும் கபாடபுரத்தின் மேலோ பாண்டிய நாட்டின் வேறு கடலோரப் பகுதிகளின் மேலோ படையெடுத்து வருவதாயிருந்தால் முதலில் இந்தக் கடற்கொலைஞர்களின் தீவுகளைக் கடந்தே வரவேண்டும். பிறவிக் கலகக்காரர்களும், கொள்ளைக் கூட்டத்தினரும் ஆகிய கடற் குறும்பர்கள் தங்களைக் கடந்து யார் எங்கு போக முயன்றாலும் வழிமறித்து தொல்லை தருவது இயல்பாக இருக்கும்.
இந்தக் காரணத்தை அந்தரங்கமாகச் சிந்தித்துப் பார்த்த பின்பே அவர்களை அடக்குவதுபோல அடக்கிவிட்டுக் கபாடபுரத்துக்கோ மற்ற நகரங்களுக்கோ விழாவணி நாட்களில் அவர்கள் வருவதையோ போவதையோ தடுத்து ஒடுக்காமல் விட்டிருந்தார் பெரிய பாண்டியர். அநாகுலனுக்கும் தந்தையாரின் இந்த இராசதந்திர ஏற்பாடு பிடித்திருந்தது. இந்த ஏற்பாட்டிற்குப் பின்னரும் கடற் கொலைஞர்களின் சிறு சிறு தொல்லைகள் அங்கங்கே எழுவதுண்டாயினும் அவற்றைச் சாதுரியமாகவும், பெரும் பகை மூளாத வகையிலும் பாண்டி நாட்டார் எதிர்கொண்டு ஒடுக்கி வந்தனர்.
இப்படிப்பட்ட கடற் கொலைஞர்கள் சிலரை நகரணி விழாவன்று இரவில் தேருலா முடிந்ததும் சாரகுமாரனும், முடிநாகனும் சந்திக்க நேர்ந்தது. தேருலா முடிந்ததும் பழையபடி தேர்களைத் தேர்க்கோட்டத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் பட்டினப் பிரவேசத்துக்காகப் புனைந்து கொண்ட அலங்காரக் கோலங்களையும் களைந்துவிட்டு உறக்கம் வராத காரணத்தினால் பரிகளில் முடிநாகனும் சாரகுமாரனும், கோட்டைக்கு வெளியே புறப்பட்டிருந்தார்கள்.
கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சற்றே தள்ளி வடபுறமுள்ள சிறு சிறு குன்றுகளில், கபாடபுரத்தின் புகழ் பெற்ற இரத்தினச் சுரங்கங்கள் இருந்தன. இந்த இரத்தினாகரங்கள் அமைந்திருந்த குன்றுப் பகுதி முழுதும் 'முகவசீகரம்' - எனப்படும் ஒருவகை விசேடமான எலுமிச்சை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.
பொன்னிறத்திற்குத் தளதளவென்று பருமன் பருமனான எலுமிச்சைக் கனிகள் மரகதப் பசுமை போர்த்த இலைகளின் அடர்த்தியிலே நிலவொளியில் செய்து தொங்கவிட்ட தங்கப் பழங்களைப் போல் மிக அழகாகத் தோன்றும். குன்றுகளில் சாலைகளும், கிளைச் சாலைகளுமாக அங்கங்கேயிருந்த பல இரத்தினாகரங்களுக்குப் பிரியும் சிறு வழிகளுமாக இருக்கும்.
குன்றுகள் யாவற்றுக்கும் உயரமான இடத்திற்கு மகேந்திரமலை என்று பெயர் வழங்கி வந்தது. மணிமலை என்றும் மக்கள் அதைச் சொல்லி வந்தார்கள். மணிமலையில் சுற்றுப்புற மண்ணே சிவப்புப் பொடியாகவும், நீலப் பொடியாகவும், பச்சைப் பொடியாகவும் செய்து தூவினாற்போல இரத்தினங்களில் நிறக்கலவையும் ஒளி வண்ணமும் செறிந்து தோன்றும்.
மணிமலை உச்சியிலிருந்து கீழே பார்த்தால் முதலில் கரையோரத்துப் புன்னைத் தோட்டமும், அப்புறம் நகரமும் கடலும் நிலவொளியில் மிகமிக அழகாகத் தோன்றும்.
அந்தக் காட்சியைப் பார்த்து நீண்ட நாளாகிவிட்டபடியால் குருகுலவாசத்திலிருந்து கோநகருக்கு வந்து தங்கியிருக்கும் இந்த வேளையில் ஆவலோடு புறப்பட்டிருந்தான் சாரகுமாரன். முடிநாகனுக்கோ இளையபாண்டியனுக்குத் துணையாகச் செல்ல வேண்டிய கடமையைத் தவிர பெரிய பாண்டியருக்காக இளையபாண்டியனோடு சென்று அவனைக் கண்காணிக்க வேண்டிய இரகசியப் பொறுப்பும் இருந்தது. எனவே முடிநாகனும் களைப்பைப் பொருட்படுத்தாமல் உடன் புறப்பட்டிருந்தான். அரச குடும்பத்தார் வழக்கமாக நகர் பரிசோதனைக்குப் போவது போன்ற எளிய கோலத்தில் அவர்கள் இருவரும் புறப்பட்டிருந்தனர். விழா இரவின் அமைதியிலும் நகர் பொலிவு மிகுந்திருந்தது.
-----------
5. தென்பழந்தீவுக் கடற்கொலைஞர்
நகரணி மங்கலத்தில் பல்வேறு விதமான ஆரவார நிகழ்ச்சிகளில் எல்லாம் ஓடியாடிக் களைத்த மக்கள் கூடாரங்களிலும் அறக்கோட்டங்களிலும் தெருத் திண்ணைகளிலும் மேடைகளிலுமாக முடங்கிவிட்டனர்.
சாமக் கோழி கூவுகிற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலே கடல் அலைகளின் ஓசை கரையோடு மோதும் நேரத்திலே பெரிதாகியும், மற்ற வேளைகளில் அடங்கியும் ஒலித்துக் கொண்டிருந்தது. பின்னிரவின் இதமான மென் காற்றுக் குளிரையும் மென்மையையும் இலேசாகப் பூசிக் கொண்டு உலா வந்தது. புட்பகத்திலிருந்தும், சாவகத்திலிருந்தும், தருவித்துப் பயிர் செய்து வளர்க்கப்பட்ட முகவர்ணம், முகவசீகரம் ஆகிய சாதி எலுமிச்சை மரங்களின் பூக்கள் கம்மென்று மணம் பரப்பி அந்த மகேந்திர மலைக் குன்றுகளைச் சொப்பன புரியாக்கிக் கொண்டிருந்தன.
அடி வயிற்றின் உள் மண்ணில் இரத்தினக் கற்களை விளைவிக்கும் அதே நிலவளம் மேலே பொற்கனிகளாக மின்னும் எலுமிச்சைப் பழங்களைக் கொத்துக் கொத்தாகக் கனிய வைத்திருந்தன. பூக்களின் வாசனையோடு பழங்களின் வாசனையும் விரவி வந்து அந்தப் பகுதியில் நடந்து செல்வதையே போதையுண்டாக்கும் ஒரு காரியமாகச் செய்து கொண்டிருந்தன.
அங்கங்கே இரத்தினக் கற்களை எடுப்பதற்காக அகழ்ந்து தோண்டப்பட்டிருந்த பெருங்குழிகளில் நீர் தேங்கியிருந்து கண்ணாடியாய் மின்னியது. குழிகளின் அருகே குவிக்கப்பட்டிருந்த கற்களில் பட்டைத் திட்டப்பட்டும், இரத்தினமாகியும் பெருமை பெறாது கழிக்கப்பட்ட சாதாரணக் கற்கள் கூடத் தங்களிடமிருந்த ஏதோ ஒரு நிறச் சிறப்பாலும் வடிவின் தனித் தன்மையாலும் நிலவொளியில் பிரகாசமாகத் தோன்றின.
மகேந்திர மலைக் குன்றுகளில் நீர்வளம் அதிகம். ஈரப்பாங்கான அந்த மண்ணில் கைகளால் அகழ்ந்து சிறுகுழி தோண்டினால் கூட நீர் பெருகிவிடும். கிணறுகள் போல் வெட்டப்பட்ட குழிகளில் விரைந்து ஊறும் நீரை உடனுக்குடன் மேலே இறைத்துக் கொட்டினால்தான் தோண்டுகிறவர்களுக்கும் கற்களை வாரிப் பெரிது சிறிதாகச் சலித்து எடுக்கிறவர்களுக்கும் வசதியாயிருக்கும். அவ்வாறு நீர் இறைத்துக் கொட்டுவதற்காக மிடா மிடாவாய்க் கவிழ்த்துக் கிடந்த செப்புச் சால்கள் அங்கங்கே தோன்றின.
கீழே கோ நகரில் விழா நிகழும் காலமாகையினால் இரத்தினாகரங்கள் எனப்படும் இரத்தினச் சுரங்கங்கள் இருந்த மகேந்திர மலைக் குன்றுகள் வெறிச்சோடியிருந்தன. உடம்பில் மண்ணும் சேறும் படக் குழிகளில் இறங்கி வேலை செய்யும் பணியாளர்களின் கூட்டமும் அவரவர்களுக்குக் கட்டளையிடும் இரத்தின வணிகர்களாகிய சீமான்களின் கூட்டமுமின்றி மகேந்திர மலையே வறுமையாகிப் போய்விட்டது போலிருந்தது.
அந்த இரவின் ஒடுக்கத்தில் குன்றுப் பகுதிகளில் எங்கோ நரிகள் ஊளையிடும் ஓசையையும் கீழே கடலலையோசையையும் தவிர வேறு ஆரவாரங்கள் இல்லை.
சிறிது நேரம் மகேந்திரமலைக் குன்றுகளில் சுற்றிவிட்டு அப்புறம் கடற்கரைப் புன்னைமரத் தோட்டத்தின் பக்கமாகச் சென்று அங்குத் தங்கியிருக்கும் பாணர்களும் விறலியர்களும், ஒருவிதமான குறைவுமின்றித் தங்கியிருக்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு அப்புறம் கோட்டைக்குள் போய் அகநகரில் அரண்மனையை அடையலாம் என்று புறப்படும்போது எண்ணியிருந்தான் இளையபாண்டியன்.
ஆனால், மகேந்திர மலைக் குன்றுகளில் சுற்றிவிட்டுத் திரும்பும் போதே அதிக நேரமாகிவிட்டது. திரும்பி வரும் போது தற்செயலாக முடிநாகனிடம் வினாவினான் சாரகுமாரன்:
"கோ நகரிலோ நமது கடற்பகுதிகளிலோ குறும்பர்களின் தொல்லைகள் இப்போதும் இருக்கின்றனவா? அல்லது அவர்கள் அடங்கி வழிக்கு வந்து விட்டார்களா?"
"முழுமையாக அடங்கி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. அவ்வப்போது கடற் குறும்பர்களின் தொல்லைகள் ஏற்படத்தான் செய்கின்றன. கடற்பகுதிகளைத் தவிரக் கோ நகரிலும் குறும்பர்களின் இரகசியக் குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களாலும் அவ்வப்போது கலகங்கள் வரும்."
"பாட்டனாரும், என் தந்தையும் மனம் வைத்தால் இவர்களை ஒரு நொடியில் அழித்தொழித்து விடலாம். ஏன் கோ நகருக்குள்ளேயே இவர்களைக் கலகக் குழுக்களாகவும், கொள்ளையிடுவோர்களாகவும் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களென்று தெரியவில்லை..."
"காரணமில்லாமல் பெரியவர் எதையும் செய்ய மாட்டார். தவிரவும் இந்தக் குறும்பர்களைப் பூண்டோடு அழிப்பதென்பது அறவே சாத்தியமில்லாத காரியம். கோரைப் புற்களைப் போல் அழித்து விட்டோமென்று நாம் நினைக்கும் போதே தலையெடுத்து முளைக்கக் கூடியவர்கள் இவர்கள்.
இவர்களுடைய ஆணிவேரும், மூலமும் எங்கெங்கே ஊன்றியிருக்கின்றன என்பதைக் கண்டு தீர்க்க முடியாது. ஒருவன் அழிந்தால் பலர் எந்தெந்த தீவுகளிலிருந்தோ வருவார்கள். குமாரபாண்டியர் நினைப்பதுபோல் இவர்களை அவ்வளவு எளிதாக அழித்தொழித்து விட முடியாது..." என்றான் முடிநாகன்.
பேசிக்கொண்டே அருகருகே வந்ததனால் இருவரும் தத்தம் குதிரைகளை விரைந்து செலுத்துவதற்கு முயலவில்லை. கடற்கரைப் புன்னைத் தோட்டத்தை அவர்கள் சுற்றியபோது அங்கே தங்கியிருந்த கலைஞர்களின் கூடாரங்கள் அமைதியில் ஆழ்ந்து போயிருந்தன.
"அந்தப் பெண் கண்ணுக்கினியாளும் தன் பெற்றோர்களுடன் இங்கேதான் தங்கியிருப்பதாய்க் கூறினாள்" என்று ஏதோ நினைவு வந்தவனாக முடிநாகனிடம் கூறினான் சாரகுமாரன். புன்னைத் தோட்டத்துக்கு அப்பால் கடலோரத்து நீர்க்கழிகளின் கரையிலே வரிசையாக அடர்ந்து செழித்திருந்த தாழம் புதரில் பூக்கள் நிறைய மடலவிழ்ந்ததன் காரணமாகவோ என்னவோ, மணம் காற்றில் மிதந்து வந்து புன்னைத் தோட்டத்தை நிறைத்தது.
அந்தப் பெண்ணைப் பற்றி நினைவு கூர்ந்த வேளையும் இந்தத் தாழம்பூ நறுமணத்தை உணர்ந்த வேளையும் ஒன்றாயிருந்த மங்கலத்தை எண்ணிச் சாரகுமாரன் தனக்குள் வியந்து கொண்டான்.
அதையடுத்துப் புறநகரில் கடைசியாக அவர்கள் புகுந்த பகுதி கடலிற் குளித்த முத்துக்களைப் பல்வேறு வணிகர்கள் திரட்டி வைத்திருந்த கிடங்குகளாகிய பண்டசாலைகள் நிறைந்த வீதியாகும். ஒவ்வொரு பண்டசாலையும் முன்புறம் வீதியை நோக்கிய வாயிலும், பின்புறம் பள்ளத்தில் படியிறங்கினால் அப்படியே கடலில் படகுகள் மூலம் மரக்கலங்களுக்கு ஏற்றி அனுப்ப வசதியுள்ளதாகவும் அமைந்திருந்தன.
நகரணி விழாவுக்காகப் பண்டசாலைகள் மூடப்பெற்றுக் கலகலப்பின்றி இருந்ததனால் அப்பகுதி இரண்டு கிடந்தது. புறப்படும்போது, 'இளையபாண்டியர் நகர் பரிசோதனைக்குப் போய் வர ஆசைப்படுகிறார். நானும் உடன் போய் வருகிறேன்' - என்று பெரியவரிடம் சொல்லிக் கொண்டு அவர் அனுமதியுடன் தான் புறப்பட்டிருந்தான் முடிநாகன். அதனால் அவன் நேரமாவதைப் பற்றிக் கவலைப்படாமல் சாரகுமாரன் போகிற இடங்களுக்கெல்லாம் உடன் போனான்.
'அரசகுடும்பத்துக் கடமைகளைப் பழகிக் கொள்வது போன்ற எந்தச் செயலை' இளையபாண்டியர் செய்தாலும் பெரியவர் அதைத் தடுக்கமாட்டாரென்பது முடிநாகனுக்குத் தெரியும். விலையுயர்ந்தவையும், பெருமதிப்புள்ளவையுமான முத்துக்களடங்கிய பண்ட சாலைகள் உள்ள வீதியில் அவர்கள் செல்லும்போது சற்று முன் அவர்களிருவரும் எந்தக் கடற்கொலைஞர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களோ, அதே கடற் கொலைஞர்கள் சிலரைச் சந்தேகத்துக்குரிய சூழ்நிலையில் சந்திக்க நேர்ந்தது.
ஒரு பெரிய முத்துப் பண்ட சாலையின் வாயிலில் அவர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். இளையபாண்டியரும், முடிநாகனும், இருளோடு இருளாக அவர்கள் முத்துப் பண்டசாலையின் வாயிற்கதவருகே ஒதுங்கி நிற்பதைப் பார்த்தும் பார்க்காதவர்களைப் போல் குதிரைகளை விரைவாகச் செலுத்திக் கொண்டு தெருவின் மறுகோடிக்கு வந்துவிட்டார்கள் என்றாலும் - தெருக்கோடியில் ஓர் ஓரமாகச் சிறிது நேரம் நின்றுகொண்டு அதைப்பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
"கோ நகரத்தின் இந்த மங்கல விழா குறும்பர்களின் கொலையோ கொள்ளையோ இல்லாமல் நிறைவடைய முடியாதென்று சொல்லுகிற அளவுக்கு இது ஒரு வழக்கமாகி விட்டது. புறவீதியின் இந்தப் பண்டசாலையினுள்ளே கொள்ளையிட இவர்களுக்கிருக்கும் வசதிகள் போல் வேறு வசதிகள் எங்கும் கிடைக்காது. கொள்ளையிட்ட பண்டங்களை அப்படியே பின்புறம் கொண்டு வந்து நிறுத்திய படகில் ஏற்றிக் கொண்டு கடலுக்குள் போய்விடலாம்" - என்று முடிநாகன் கூறியதைக் கேட்டு இளையபாண்டியருக்கு நெஞ்சம் கொதித்தது. முடிநாகன் அப்படிப் பேசியதும் அவனுடைய மனத்துக்குப் பிடிக்கவில்லை.
"இதென்ன முடிநாகா? இந்தச் சமயத்தில் கதை சொல்லுவதைப் போல் இந்த அரக்கர்களைப் பற்றி எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாயே நீ? இவர்களைத் தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டாமா? கண்ணால் கண்ட பின்பும் வாளா போவது நல்லதல்லவே? 'இவர்களுடைய கொலையோ, கொள்ளையோ இல்லாமல் விழாவே நிறைவடையாது' - என்று நீ சொல்வது போல் நாம் நினைத்துக்கொண்டு பேசாமல் போய்விட முடியுமா?"
"முடியாதென்றாலும் வேறென்ன செய்யலாம் குமார பாண்டியரே? குறும்பர்களுடைய உடலில் ஓடும் குருதியின் ஒவ்வோரணுவிலும் கொலை வெறி கலந்திருக்கும். யார் இன்னார் என்று பார்க்காமல் நெஞ்சுக் குழியை நோக்கி வாளைப் பிடிப்பது அவர்கள் இயல்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளோ கருவிகளோ இன்றி வந்திருக்கும் நாம் இருவரும் பலராகக் கூடி நிற்கும் அவர்களிடம் போய்ச் சிக்கிக் கொள்வது நல்லதென்றா நினைக்கிறீர்கள்?"
"எப்படி இருந்தாலும் இதைத் தடுத்தாக வேண்டும். அதற்கு வழி சொல்! எந்த வணிகரின் முத்துக்களாயினும் அவை நமது கடலில் விளைந்தவை. அவற்றை நாம் கொள்ளை போகவிடக்கூடாது" - என்று மனம் குமுறிப் பிடிவாதமாகப் பேசினான் சாரகுமாரன்.
"இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! இந்த இடத்தில் அதற்கு வாய்ப்பு உண்டா இல்லையா என்பதை இதோ பார்த்துச் சொல்லிவிடுகிறேன்" - என்று வீதியின் எதிர்ச் சாரியில் வானளாவ மறித்துக் கொண்டிருந்த கோட்டை மதிற்சுவரை நிமிர்ந்து பார்த்தான் முடிநாகன். அப்படிப் பார்த்த மறுகணமே அவன் முகம் மலர்ந்தது. கண்களிலும் நம்பிக்கை ஒளி வந்து நிறைந்தது. மேலே கோட்டைப்புற மதிற்சுவரின் உச்சியைப் பார்த்தபின் திருப்தியோடும் நம்பிக்கை நிறைந்த குரலிலும் இளையபாண்டியரை நோக்கிக் கூறலானான் முடிநாகன்:
"ஒரு வழி இருக்கிறது குமாரபாண்டியரே! இந்த இடத்தில் இப்போது இந்த அகால வேளையிலே நமக்குப் பயன்படக்கூடிய உதவி அது ஒன்று தான். நாம் அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமலே அவர்கள் நம்மிடம் பயந்து ஓடும்படி செய்ய வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை. என்னோடு தயை செய்து தாமதமின்றி உடனே நான் கூப்பிடுகிற இடத்துக்கு குமாரபாண்டியரும் வரவேண்டும்."
"இத்தனை அவசரமாக என்னை எங்கே அழைக்கிறாய் முடிநாகா?"
"அவற்றை எல்லாம் விவரம் சொல்லி விவாதிக்க இப்போது நேரமில்லை. புறநகரிலிருந்து கோட்டை மதில்மேல் ஏறுவதற்குள்ள வழிகளில் ஒன்று இந்த இடத்திலிருந்து மிக அருகிலுள்ள மதிற்சுவர்ப் பகுதியில் உள்ளது. இப்படிப் புற நகரிலிருந்து மதில் மேல் ஏறுவதற்குள்ள வழிகளுக்குப் பெருங்கதவும் - அந்தப் பெருங்கதவினூடே அமைந்த சிறிய திட்டவாயில் கதவும் அவற்றிற்குக் காவலாக ஆயுதந்தாங்கிய யவனக் காவல் வீரனும் உண்டு என்றாலும், நாம் எப்படியும் அவற்றைக் கடந்து மதில் மேல் ஏறியாக வேண்டும்."
"ஏறி என்ன சாதித்துவிட முடியும்."
"முடிகிறதா இல்லையா என்றுதான் பாருங்களேன்?"
இருவரும் தத்தம் குதிரைகளை விரைந்து செலுத்திச் சென்று அந்த இடத்தை அடைந்தனர். குதிரைகளிலிருந்து கீழிறங்கி படிவழிக்கு நுழைவாயிலான செப்புத்திட்டி வாயிற் கதவை தட்டியதும் பூதாகாரமான தோற்றத்தையுடைய கருங்குன்று போன்ற யவனக் காவல் வீரன் ஒருவன் வந்து கதவைத் திறந்தான் அவன் கையிலிருந்த தீப்பந்தத்தின் ஒளியில் இளைய பாண்டியர் தனது வலது கரத்தை முன் நீட்டி முத்திரை மோதிரத்தைக் காண்பித்த போது பயபக்தியுடன் கைகூப்பி வணங்கி வழிவிட்டான் அவன்.
இளைய பாண்டியனும், முடிநாகனும் உள்ளே நுழைந்து கொண்டு திட்டவாயிற் கதவை மறுபடியும் அடைத்துத் தாழிட்டு விடுமாறு அவனுக்குச் சைகை காட்டினர்.
அவன் வெளியே நின்ற குதிரைகளைச் சுட்டிக் காண்பித்துச் சைகையால் முடிநாகனிடம் ஏதோ வினவினான். 'குதிரைகள் அங்கு நின்றால் நின்றுவிட்டுப் போகட்டும்! நீ கதவை அடைத்து உடனே உட்புறமாகத் தாழிடு' என்று முடிநாகன் கடுமையாய முகக்குறிப்போடு விளக்கியவுடன் அவன் கனமான செப்புத்திட்ட வாயிற்கதவை உட்புறமாகத் தாழிட்டான்.
அவனை அங்கே நின்று கொள்ளச் சொல்லியதுமில்லாமல், "நாங்கள் சொல்லுகிறவரை வேறு யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்கவேண்டாம்" - என்பதையும் உணர்த்தியபின் இருவரும் மதில் மீதேறி அங்கு வீரர்கள் நின்று போர் புரிவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறு மேடை போன்ற நீண்ட தளத்தில் பதுங்கிப் பதுங்கி நடந்து கடற்குறும்பர்கள் கூட்டமாக நின்ற முத்துப் பண்டசாலை இருந்த பகுதிக்கு நேர் எதிரே மேலே இருந்த சுவர்ப் பகுதியை அடைந்தார்கள். நேர் எதிரே கீழே சாலையில் கொலைஞர்கள் நிற்பது மேலிருந்து நன்றாகத் தெரிந்தது.
---------
6. கபாடத்தில் ஒரு களவு
மதில் மேல் அந்த இடத்திற்கு வந்த பின்புதான் முடிநாகன் செய்த சமயோசிதமான யோசனையின் சிறப்பு இளையபாண்டியனுக்குப் புரிந்தது. முடிநாகனின் அனுபவ அறிவையும், கபாடபுரத்தின் கோட்டை மதிற்சுவர்களில் எங்கெங்கு எந்தெந்த நுணுக்கங்கள் அமைந்திருக்கின்றன என்பது பற்றி அவனுக்கிருந்த ஞாபகத்தையும் பெரிதும் வியந்தான் சாரகுமாரன்.
நூற்றுக்கணக்கான கடற்குறும்பர்கள் எதிர்த்து நின்றாலும் தாக்கி அழிப்பதற்கு வேண்டிய வசதிகள் அப்போது அந்த இடத்தில் இருந்தன. பாட்டனார் அந்த மதிலையும், கோட்டையையும் அமைத்திருக்கும் விதத்தையும் நுணுக்கத்தையும் இளையபாண்டியனான சாரகுமாரன் வியந்து கொண்டிருக்கும்போதே கீழே குனிந்து அமர்ந்த முடிநாகன் அந்த இடத்தில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த மாபெரும் மர உருளை ஒன்றைக் குறித்து,
"இதோ பார்த்தீர்களா?" என்று வியப்பு நிறைந்த குரலில் கூறிக்கொண்டே சுட்டிக் காண்பித்தான். அந்த உருளையைப் பிணைத்திருந்த கயிறுகளைச் சுழற்றி முடிநாகன் வேகமாக அவற்றை இயக்கியபோது மிக விரைவாக அடுத்தடுத்துப் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
இயந்திரப் பொறிகளால் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அந்த இடத்து மதிற்சுவரிலிருந்து அடுக்கடுக்காக அம்புகள் பாயத் தொடங்கியபோது கீழே முத்துப் பண்ட சாலையைக் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த கடற்கொலைஞர்கள் திகைத்துப் பதுங்கலாயினர். கூரிய முனையுடன் கூடிய அம்பு மழையிலிருந்து தப்புவதற்காகப் பண்டசாலையின் சுவரோடு சுவராக ஒண்டிக் கொள்வதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
வில்லெறி வியன்பொறி - கல்லிடு கூடை போன்ற பல்வகை இயந்திரப் பொறிகள் அந்த மதிலில் அங்கங்கே அமைக்கப்பட்டிருந்ததைத் தக்க சமயத்தில் நினைவூட்டியதற்காக முடிநாகனைப் பாராட்டினான் சாரகுமாரன். இந்தச் சமயோசிதமான காரியத்தினால் முத்துப் பண்டசாலை கொள்ளை போகாமல் காப்பாற்றிய அவர்கள் அதே சமயத்தில் தங்கள் குதிரைகளைக் கொள்ளைபோக விடும்படி நேர்ந்தது.
மதிலிலிருந்து எதிர்பாராத தாக்குதலைக் கண்ட கொலைஞர்களில் சிலர் பின்பக்கமாகக் கடலில் நிறுத்தியிருந்த படகுகளில் ஏறித் தப்பினர். வேறு சிலர் வீதிவழியே ஓடிவந்த போது மதிற் சுவரருகே நிறுத்தப்பட்டிருந்த இவர்களுடைய குதிரைகளில் ஏறித் தப்பிவிட்டனர். முத்துப் பண்டசாலையைக் காப்பாற்றிய பெருமையோடு தங்கள் பரிகளை இழந்து நடந்தே அரண்மனைக்குத் திரும்பினார்கள் முடிநாகனும் சாரகுமாரனும்.
மறுநாள் காலையில் விடிந்ததும் பாட்டனார் வெண்தேர்ச் செழியர் இளையபாண்டியனைச் சந்தித்த போது கேட்ட முதல் கேள்வி, "இரவில் நகருலா முடிந்த பின்பும் நெடுநேரம் நீ திரும்பிவரவில்லையே? உன்னுடைய பள்ளியறையில் கூட உன்னைக் காணமுடியவில்லை. அவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?" - என்பதுதான்.
இளையபாண்டியனிடம் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, தேர்ப்பாகன் முடிநாகனும் அங்கு உடனிருந்ததனால் அவனே பாட்டனாருக்கு மறுமொழி கூறிவிட்டான். "இளைய பாண்டியர் நகர் பரிசோதனைக்குப் போக வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
மகேந்திரமலைக் குன்றுகளிலுள்ள இரத்தினாகரங்களையும் கடற்கரையோரத்துப் புறவீதியிலுள்ள முத்துப் பண்ட சாலைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினோம்" - என்று முடிநாகன் கூறியவுடனே, "குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள் எவையேனும் உண்டா?" - என்று அவனையே மேலும் கேட்டார் பெரியவர்.
முடிநாகன் உடனே முத்துப் பண்டசாலை நிகழ்ச்சியை விவரித்தான். அப்படி விவரித்துச் சொல்லும் போது தான் பாட்டனாரிடம் அதைப்பற்றிச் சொல்லுவதை இளைய பாண்டியர் விரும்புகிறாரா, விரும்பவில்லையா, என்பதை அறிய இடையிடையே அவருடைய முகபாவத்தையும் கவனித்துக் கொண்டான். அவன் எல்லாவற்றையும் கூறி முடித்ததும் முத்துப் பண்டசாலையிற் கொள்ளை போகாமல் காப்பாற்றியதற்காக அவர்களிருவரையும் மனமாரப் பாராட்டினார் வெண்தேர்ச் செழியர்.
"இப்படிக் காரியங்கள்தான் அரச குடும்பத்தின் சிறப்பையும், குடிப்பெருமையையும் காப்பாற்றக் கூடியவை. 'நாடு எங்கும் வாழ கேடு ஒன்றுமில்லை' - என்று வசனமே சொல்வார்கள். நாடு எங்கும் கொலை களவு பொய் வஞ்சகமின்றிக் காப்பது நமது கடமை. கபாடபுரம் கோ நகராக அமைந்ததிலிருந்து ஒவ்வோர் நகரணி மங்கல நாளிலும் இந்தக் கடற்குறும்பர்கள் இப்படி ஏதாவது சிறிதாகவோ, பெரியதாகவோ கலகம் செய்யத் தவறுவதே இல்லை.
இவர்களுக்கு ஒரு கண் நம் நகரத்து விலைமதிப்பற்ற முத்துப் பண்டசாலைகளின் மீதென்றால் இன்னொரு கண் நமது மாபெரும் கபாடங்களின் உச்சியில் பதித்துள்ள இரத்தினங்களின் மீது இருக்கிறது. அவுணர் வீதியிலுள்ள முரச மேடைக்கருகே இந்தக் கடற்குறும்பர்களுக்கு ஒற்றுச் சொல்லும் துரோகிகள் சிலரும் இருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். அந்தக் கயவர்கள் யாரென்றும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை..."
"முயன்றால் அதையும் கண்டு பிடித்து விடலாம்" என்று பாட்டனாருக்குப் பயந்து கொண்டே அவருடைய முகத்தைப் பார்க்கத் தயங்கியவனாக முடிநாகனிடம் சொல்லுவதுபோல் கூறினான் சாரகுமாரன். அதைக் கேட்ட பாட்டனாரிடமிருந்து அவனுக்கு நீண்டதோர் அறிவுரையே கிடைத்தது.
"கண்டுபிடிக்க முடியுமென்பதில் எனக்கும் ஐயமில்லை குழந்தாய்! ஆனால் இதில் சிறிது இராஜதந்திரமும் வேண்டியிருக்கிறது. இங்கிருக்கும் முரட்டு அவுணர்களில் பலர் புதிதாக இந்த நகரை அமைக்கும்போது நமது மாபெரும் கோட்டை மதில்களை உருவாக்கவும், அகழிகளை வெட்டவும், தேர்க் கோட்டம் சமைக்கவும் பணியாட்களாக வந்து பின் இங்கேயே தங்கிவிட்டவர்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து தங்கித் தங்கள் குடியிருப்பு வீதியையே இந்நகரின் புறத்தே அமைத்துக் கொண்டவர்கள்.
கோ நகருக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் இருக்கும் தீவுகளில் அங்கங்கே கூட்டம் கூட்டமாக வாழும் இந்த இராட்சசக் குழுவினர்களை முழுமையாகப் பகைத்துக் கொள்வதில் கேடு உண்டு. பகை நெஞ்சமுள்ள இவர்கள் கெடுதல்களை இப்படியே வளர விடுவதிலும் கேடு உண்டு. பிற்காலத்தில் இந்த நாட்டை ஆளும் பொறுப்பு உன் கைக்கு வரும்போது இவற்றை எல்லாம் பற்றி நீ இன்னும் மிக அதிகமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். பகைவர்களை விடக் கெட்டவர்கள் நண்பர்களைப் போல் திரியும் பகைவர்கள்தான்" - என்றார் அவனுடைய பாட்டனார்.
அப்போது அவருடைய நரைத்த மீசையும் - சுருக்கம் விழுந்த முகமும் குழிந்த கண்களும் எத்தனைக்கெத்தனை முதுமையாகத் தளர்ந்து தோன்றினவோ அத்தனைக்கத்தனை அநுபவச்சாயலை நிறைத்துக் கொண்டனவாகவும் இளைய பாண்டியனின் கண்களுக்குத் தோன்றின. கபாடபுரம் என்னும் பொன்மயமான புதுக் கோ நகரை இத்தகையதொரு கம்பீரம் வாய்ந்த தலைநகரமாக உருவாக்கப் பாட்டனார் பட்ட சிரமங்களையும், துன்பங்களையும் பற்றிப் பிள்ளைப் பருவத்திலிருந்து கதை கதையாகக் கேள்விப்பட்டிருந்தான் அவன்.
ஒருகணம் அந்த முடியவர் தன் பாட்டனார் என்ற உறவை மறந்து, கபாடபுரத்தை எண்ணத்தில் உருவாக்கிப் பின் இயல்பிலும் உருவாக்கியவர் என்ற வியப்புடன் ஏறிட்டுப் பார்த்த போது அந்தச் சாதனையைச் செய்தவரைப் பற்றிய ஞாபகம் மலைப்பூட்டுவதாயிருந்தது அவனுக்கு. அவரோ அவனிடம் மேலும் மேலும் உற்சாகமாகப் பல செய்திகளைக் கூறத் தொடங்கிவிட்டார்.
"இந்த நகரத்தை உருவாக்கிய புதிதில் எத்தனை இரவுகள் எத்தனை விதமான கோலங்களில் உறக்கமின்றி நகர் பரிசோதனைக்காக நான் அலைந்திருக்கிறேன் தெரியுமா? திருடர்களும், காமுகர்களும்தான் எந்தக் காலத்தும் ஆட்சியின் எதிரிகள். இவர்கள் விழித்திருக்கும் நேரமோ இரவு. இவர்களைத் திருத்தக் காவல் வீரர்களையும் நீதியையுமே நம்பி இராமல் நானே சுற்றி அலைய விரும்புவேன் குழந்தாய்!"
"மாபெரும் துறைமுகத்தில் தென்கடல் வழி வரும் பல நாட்டுக் கப்பல்களும் நின்று போவதால் இங்கு நாலா தேசத்து மக்களும் திரிகின்றனர். அவர்களை அறிவதும், உணர்வதும் அரசனுக்குப் பயன்படும் என்பதை நீயும் ஒப்புக் கொள்வாய்! அவிநயனாரும் சிகண்டியாரும், உனக்கு நூலறிவைக் கற்பிக்கலாம்.
உலகியலை நீயே கற்றுத்தான் அறிய வேண்டும். அநுபவம் மட்டும் தேடி அலைந்தே அடைய முடிந்தது. 'இரவில் கால்கடுக்க நகர் சுற்றுவதா' என்று தயங்கக் கூடாது. குறும்பர்களும், அவுணர்களுமாகத் திரியும் கடற்கொலைஞர்கள் ஒருவகையில் நமக்குப் பாதுகாப்பு. வேறொரு வகையில் அந்தரங்கமாக நமக்குப் பகை."
"மார்பின் மேல் விழுந்துவிட்ட பாம்பை வாளால் வெட்ட முடியாது. வெட்டினால் நம் மார்பிலும் வெட்டுப்படும். இந்தக் கடற்கொலைஞர்களின் பகையும் ஒருவிதத்தில் அப்படிப்பட்டது. இவர்களை ஒடுக்கும்போது மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். அவர்கள் நம்மை அழிக்க விட்டுவிடக் கூடாது. அவர்களை அழிப்பதாக எண்ணி நாமே நம்மை அழித்துக் கொண்டு விடவும் கூடாது.
நேற்று நீ முடிநாகனோடு நகர் பரிசோதனைக்குச் சென்றதை நான் மனமாரப் பாராட்டுகிறேன் குழந்தாய்! மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. போகப் போக நீயாகவே எல்லாம் தெரிந்து கொள்ள நேரிடும். உனக்கே எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் வரும்" என்றார் பெரிய பாண்டியர்.
பாட்டனாரிடம் விடைபெற்றுச் சென்று அன்று பகலில் தாய் திலோத்தமையாருடன் நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தான் சாரகுமாரன். இசைத் துறையிற் பெருவல்லமை படைத்த அவன் தாய் அன்பாகவும் கனிவுடனும் அவனுடைய இசைத்திறமையைப் பரிசோதித்தாள்.
குருகுல வாசத்துச் செய்திகளைப் பற்றியும் அவனுடைய தாய் அவனிடம் ஆவலோடு ஒவ்வொன்றாகக் கேட்டாள். பிற்பகலில் முடிநாகனுடன் தேர்க்கோட்டத்திற்குப் போயிருந்தான் இளையபாண்டியன். தேர்க்கோட்டத்திலிருந்து முன்னிரவில் அரண்மனைக்குத் திரும்பிய பின்னர் முதல்நாள் போலவே, 'நள்ளிரவில் இன்றும் நகர் பரிசோதனைக்குப் போகலாம்' என்ற இளையபாண்டியனின் விருப்பத்திற்கு முடிநாகனும் இணங்கினான்.
தொடர்ந்து ஒரே விதமாகப் போவதும், வருவதும் சந்தேகத்துக்கு இடம் தரும் என்பதினால் அன்றிரவு குதிரைகளில் செல்லாமல் நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் அவர்கள். தேசாந்திரிகளாக யாத்திரை செல்லும் யாத்ரீகர்களைப் போன்ற கோலத்தில் புறப்பட்ட அவர்களிருவரும் கோட்டைக்கு வெளியே புறவீதிக்கு வந்து சுற்றினர். அவர்கள் புறவீதிக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் புறநகரையும் அகநகரையும் பிரிக்கும் கோட்டைக் கபாடங்களை அடைத்து விட்டனர்.
இரண்டு கபாடங்களிலுமாகச் சேர்த்து ஈராயிரம் வெண்கல மணிகளுக்கு மேல் உள்ள அந்தக் கபாடங்களை இழுத்தடைக்கும்போது கபாடபுர நகரின் சுற்றுப்புறத்தில் சில கல் தொலைவு வரை கணீர் கணீர் என்று மணிகளின் ஒலி எழுந்து கேட்பது வழக்கம். பல்லாயிரம் மணி நாக்குகள் கலீர் கலீரென்று ஒலித்துச் சிதறும் அந்த ஓசையைச் செவியுற்றுத் 'தலைநகரில் கோட்டைக் கதவை அடைத்து விட்டார்கள்' - என்று அக்கம்பக்கத்துச் சிற்றூர்களில் உள்ளவர்கள் பேசிக் கொள்வதுண்டு.
அன்றும் நகர் பரிசோதனைக்காகப் புறநகருக்கு வெளியே வந்துவிட்டபின் இளையபாண்டியரும், முடிநாகனும், இந்த ஓசையைக் கேட்டே கபாடங்கள் அடைக்கப்படுவதை உணர்ந்தனர். முதல் கபாடத்தை அடைக்கும் மணியோசையைக் கேட்டே, வெளியே வந்திருந்தவர்களில் கோட்டைக்குள் காரியமுள்ளவர்கள் விரைந்து உள்ளே போய்விட முடியும். அதற்கு வாய்ப்பாகவே முதல் கபாடத்தை அடைப்பதற்கும் இரண்டாவது கபாடத்தை அடைப்பதற்கும் நடுவே அரை நாழிகைப்போது இடை நேரம் கொடுத்து வழக்கமாக அடைத்தனர்.
முதல் நாள் தேருலாவின் காரணமாகக் கபாடங்கள் அடைக்கப்படவில்லை. நகரின் பெயரையே தங்கள் பெயராகக் கொண்டிருக்கும் அந்தக் புகழ் வாய்ந்த கபாடங்கள் ஆண்டின் நாட்களில் அடைக்கப்பெறாத ஒரே தினம் இந்த நகரணி மங்கல நாள் மட்டும் தான். கபாடங்களின் பல பகுதிகளில் விலையுயர்ந்த முத்துக்களும் உச்சியிலுள்ள குமிழ்களில் விலை மதிப்பு அற்ற பெரிய பெரிய சிவப்பு இரத்தினக்கற்களும் பதிக்கப் பெற்றிருந்தன.
அவற்றைத் திருடும் நோக்குடனோ, பெயர்த்து எடுக்கும் ஆசையுடனோ எவராவது இந்தக் கபாடங்களில் ஏறினால் அப்படி ஏறும்போது உண்டாகிற மணிகளின் ஓசை அருகிலுள்ள காவல் வீரர்களையும் நகரையும் எழுப்பி விட்டுவிடும். மணிகள் கபாடங்களில் பொருத்தப்பட்டதன் அந்தரங்க நோக்கங்களில் இதுவும் ஒன்று.
கோ நகரத்தின் அந்தத் தெய்வீகக் கபாடங்களின் மேல் செந்நெருப்புத் தகதகப்பதுபோல் தெரியும் அந்த இரத்தினங்கள் உலகில் வேறெந்த இரத்தினாகரங்களிலும் கிடைக்காதவையும் சிறப்பு மிக்கவையும் ஆகும். இளையபாண்டியனும் தேசாந்திரிகளின் கோலத்தோடு புறநகருக்கு வந்து அங்கிருந்த புன்னை மரங்களில் ஒன்றினடியில் போய் அமர்ந்தபோது கபாடங்கள் இரண்டையுமே அடைத்து முடித்திருந்தார்கள்.
புன்னை மரத்தடியில் அமர்ந்தவர்கள் அதிக நேரம் பேசிக் கொண்டேயிருந்து விட்டதனால் போது கழிந்தது தெரியவேயில்லை. மறுபடி அவர்கள் புன்னை மரத்தடியிலிருந்து எழுந்தபோது மேற்குத் திசையிலிருந்து - பொதிகள் போன்ற சில மூட்டைகளை சுமந்து கொண்டு நான்கு ஐந்து முரட்டு அவுணர்கள் கபாடங்களை நோக்கிச் செல்வதைக் கண்டு - மறைந்து நின்று கவனித்தனர்.
தற்செயலாகத் தென்பட்ட அந்தக் காட்சியை அவர்கள் சிரத்தையோடு கவனித்ததால் அன்றிரவு கபாடத்தில் நிகழ இருந்த களவு ஒன்று தடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அவர்களிருவரும் கவனிக்க நேராமலிருந்திருந்தால் குறைந்தபட்சம் கபாடத்திலிருந்து அன்றிரவு சில முத்துக்களாவது பெயர்த்துக் கொண்டு போகப்பட்டிருக்கும்.
-------------
7. அவுணர் வீதி முரச மேடை
கருமசிரத்தையோடு எந்தப் பொருளையோ பொதி பொதியாகச் சுமந்தெடுத்துப் போவதுபோல் அந்த முரட்டு அவுணர்கள் சுமந்து சென்ற பொதிகள் என்னவாயிருக்கும் என்று இளையபாண்டியனால் அநுமானிக்கக்கூட முடியவில்லை. அந்த இரவில் புறவீதி வழியே வானளாவி நிற்கும் கபாடங்களை நோக்கி அவர்கள் நடந்து சென்ற காட்சி பெருமலையை எதிர்த்துச் சிறு கருங்குன்றுகள் விரைவாக உருண்டு செல்வது போலிருந்தது.
"எதைச் சுமந்து கொண்டு இப்படி கபாடங்களை நோக்கிப் போகிறார்கள் இவர்கள்? அடைத்துவிட்ட கபாடங்களை இவர்களுக்காக இனி யார் திறக்கப் போகிறார்கள்? உன்னால் ஏதாவது அநுமானம் செய்ய முடிகிறதா?" என்று முடிநாகனைக் கேட்டான் இளையபாண்டியன்.
உடனே பதில் கூற முடியாமல் சில விநாடிகள் சிந்தனையோடு தயங்கிய பின் "முன்பும் இப்படி நடந்திருக்கிறது. ஒரு வேளை இன்றும் அப்படி ஒரு முயற்சி செய்கிறார்களோ என்னவோ? எதையும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும். என் அநுமானம் சரியாகவும் இருக்கலாம். முற்றிலும் பிழையாகவும் போய்விடலாம்..." என்றான் முடிநாகன்.
"எந்த அநுமானம்?"
"தயை செய்து சில விநாடிகள் பொறுத்திருங்கள் இளையபாண்டியரே! நேருக்கு நேர் யாவற்றையும் பார்த்து விடலாம்."
"ஆவலை அடக்க முடியவில்லை! ஆத்திரமும் வருகிறது..."
"ஆவல் காரியத்தைக் கெடுத்துவிடும்! ஆத்திரம் இப்போது இந்த இடத்தில் பயன்படாது."
"இந்த தடியர்களுக்கு இரவு வேளையில் கூட உறக்கம், களைப்பு, சோர்வு எதுவுமே கிடையாதா?"
"அதுதான் திருடனும், காமுகனும், மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் கூட உறங்குவதில்லை என்று காலையில் உங்கள் பாட்டனார் அழகாகச் சொன்னாரே!"
"அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நம்மையுமல்லவா உறக்கமிழக்கச் செய்கிறார்கள்?" என்று இளையபாண்டியர் சலிப்பும், கோபமுமாகப் பதிலுரைத்த போது, கபாடத்தின் பக்கமே வைத்த கண் மாறாமல் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த முடிநாகன், "இப்போது பாருங்கள்! அங்கே என்ன நடக்கிறது தெரிகிறதா?" - என்று சுட்டிக் காட்டினான். கொண்டு சென்ற பொதிகளிலிருந்து கபாடத்துக்கு முன்னால் வெண் மேகம் போல் எதையோ கொட்டிக் குவித்தார்கள் அந்த அவுணர்கள்.
"என்ன அது?"
"பஞ்சு இழைகள்."
"பஞ்சைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் இங்கே?"
"என்ன செய்கிறார்கள் என்றுதான் பாருங்களேன்?"
முடிநாகனோடு இளையபாண்டியனும் அவர்களுடைய விசித்திரச் செயலைக் கூர்ந்து கவனிக்கலானான். பொதிகளை எல்லாம் அவிழ்த்து உதறிய பின் கபாடங்களில் கீழிருந்து வரிசை வரிசையாகக் குமிழ்களில் இணைந்து தொங்கிய வெண்கல மணிகளைப் பக்கத்துக்கு இருவர் வீதம் நிமிர்த்திப் பிடித்து உள்புறமிருந்த நாக்குகளையும் மணிகளின் உடல்களையும் நடுவே பஞ்சு இட்டுத் திணித்து ஓசையெழாதபடி செய்தனர் அவர்கள்.
நாக்குகள் அடித்துக் கொண்டு மணியோசை எழுப்பா வண்ணம் உள்ளே பஞ்சு இட்டுத் திணித்த பின் மணிகள் எவ்வளவு ஆடினாலும் ஒலி எழாது. ஒலி எழாவிட்டால் கதவுகளின் குமிழ்களைப் பற்றிப் பயமின்றி மேலே ஏறி முத்துக்களையோ இரத்தினங்களையோ பெயர்க்கலாம். மிகவும் தந்திரமாக இந்த ஏற்பாட்டைச் செய்யலாயினர் அவுணர்கள்.
இதைக் கண்டு பரபரப்பும் ஆத்திரமும் அடைந்த இளையபாண்டியன், "இதென்ன முடிநாகா! நாம் ஏன் இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்? இரண்டு கதவுகளிலும் முதல் வரிசை மணிகளை முழுவதும் பஞ்சிட்டு அடைத்து ஊமையாக்கிவிட்டார்களே?
இன்னும் பத்து வரிசையும் இப்படிச் செய்துவிட்டால் சுலபமாகக் கதவில் ஏறி முத்துக்களைப் பெயர்க்கலாமே? இருபது வரிசை பஞ்சு திணித்துவிட்டால் மேலேயிருக்கும் இரத்தினங்களைக்கூடப் பெயர்த்து விடலாம்! இந்த நிலையில் கதவுகளின் அருகேயுள்ள காவல் மாடங்களிலிருக்கும் வீரர்களையாவது நாம் கூக்குரலிட்டு எழுப்பலாமே?" என்று பதறினான். முடிநாகனோ மிகவும் நிதானமாக இளையபாண்டியனுக்கு மறுமொழி கூறினான்.
"இப்படிப் பலமுறை செய்து தோற்றும் இவர்கள் இதில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதுதான் எனக்கு வியப்பை அளிக்கிறது. கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடித்து விடலாமென்பது போன்ற முயற்சி இது! இதில் அவர்கள் காரியம் ஒருபோதும் நிறைவேறாது" என்ற முடிநாகனின் வார்த்தைகளைக் கேட்டு இளையபாண்டியனுக்கு கோபமே வந்துவிட்டது.
"இன்னும் நாம் வாளாவிருந்தால் நகரின் உடைமைகள் கொள்ளை போய்விடும்! உன் நிதானம் என் பொறுமையைச் சோதிக்கிறது."
"ஒரு கொள்ளையும் போகாது! பதறாமலிருங்கள்! இந்த இடத்தில் இயற்கை நமக்கு அற்புதமானதொரு வசதியைச் செய்து கொடுத்திருக்கிறது. இப்போது நாம் மனம் வைத்தால் இந்த இடத்திலிருந்தே அத்தனை கபாடத்து மணிகளையும் ஊரே எழுந்திருக்கும்படி ஒலிக்கச் செய்துவிட முடியும்..."
"நீ பேசுவது கதை! காரியத்தில் நடப்பதைச் சொல்! சாத்தியமானதை விட்டுவிட்டுக் கற்பனையில் மூழ்காதே... முடிநாகா!"
"நான் சொல்வது எதுவும் கற்பனையில்லை! எத்தனையோ முறை தங்கள் பாட்டனாருடனும், தந்தையாருடனும் நகர் பரிசோதனைக்கு வந்திருக்கிறேன் நான். உலகியலனுபவத்தில் தங்கள் பாட்டனாரைவிடச் சாமார்த்தியசாலி இனிமேல் பிறந்து வந்தால் தான் உண்டு. சமயோசித ஞானத்தில் அவருக்கு இணை அவர் தான். அவரிடமிருந்து நான் கற்ற எதுவும் பயன்படாத கற்பனையாயிருந்து விடமுடியாது இளையபாண்டியரே!"
"அதெல்லாம் உன் சொந்தப் பெருமை! அந்தப் பெருமை இப்போது இங்கு எப்படிப் பயன்படுமென்பதுதான் எனக்குப் புரியவில்லை?"
"இதில் பெருமை எதுவுமில்லை! எல்லாமே அனுபவமும் ஞாபகமும் தான்! நாலைந்து தடியர்களாக இருக்கும் அவர்களை அருகிற்போய் எதிர்க்க இப்போது நம்மால் ஆகாது. தேசாந்திரிகளாகத் தோன்றும் நம்மை ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டாலும் போட்டுவிடுவார்கள் பாவிகள்!
காவலர்களை எழுப்ப நீங்கள் இங்கிருந்து கூக்குரலிடுவதும் பயன்படாது. எனவேதான் நான் இந்த யோசனையைச் செய்தேன்!" - என்று கூறிக்கொண்டே கீழே குனிந்து பருமன் பருமனான புன்னைக் காய்கள் ஐந்தாறைப் பொறுக்கிய முடிநாகன் அவற்றைக் கனவேகமாக அருகிலிருந்த புன்னை மரங்களையெல்லாம் நோக்கி ஓசையெழும்படி வீசினான்.
காய்களை வீசியதும் அந்தப் புன்னை மரங்களிலிருந்து பேரோசையோடு புயலெழும்பியது போல் கத்தியபடி பறவைகள் மேலெழும்பின. பெரிய பெரிய சிறகுகளையுடைய அந்த கடற்பறவைகள் பெரும் கூட்டமாகப் பறந்து போய் எதிரே இருந்த கபாடங்களின் குமிழ்களில் அமர்ந்ததும் கணீர் கணீரென்று நகரையே எழுப்புவது போன்ற மணி ஒலிப் பிரளயம் அதிசயமாய் நிகழ்ந்தது. கீழே சிலவரிசை மணிகளில் மட்டுமே அவர்கள் பஞ்சு திணித்திருந்தனர்.
பஞ்சு திணிக்காத மேல் வரிசையின் மற்ற மணிகளில் எழும்பிய ஒலியே செவிகளை அதிரச் செய்தது. கொலைஞர்கள் பஞ்சுப் பொதிகளைப் போட்டுவிட்டு ஓட்டமெடுத்தனர். மணியோசையோ நிற்காமல் அவர்களைத் துரத்தியது.
"இந்தக் கடற்பறவைகள் பகலில் மதிலிலும் கதவுக் குமிழ்களிலும்தான் அமர்வது வழக்கம். இரவில் மரத்திலிருந்து இவற்றைக் கிளப்பிவிட்டால் எப்போதும் உடன் இரை தேடும் வழக்கமான மாற்றிடமாக எதிரே மிக அருகிலிருப்பவை மதிற்சுவரும் கபாடங்களுமே.
இவை கபாடங்களின் குமிழ்களில் அமர்ந்தால் மணிஓசை கிளர்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதுதான் இதன் நுணுக்கமே தவிர இவற்றிற்கு நான் இப்படிச் செய்யும்படி மந்திரம் எதுவும் போடவில்லை இளையபாண்டியரே!" என்று முடிநாகன் அதைச் சாதாரணமாக விளக்கினாலும் - மந்திரம் போட்டு அனுப்பியதால்தான் அந்தப் பறவைகள் அப்படிச் செய்தன போல் இளையபாண்டியனுக்கு அது ஓர் அற்புதமாகவே தோன்றியது.
இந்தச் சாதுரியமான சிந்தனைக்காக முடிநாகனைத் திரும்பத் திரும்பப் பாராட்டினான் அவன். ஆனால் முடிநாகனோ அந்தப் பாராட்டெல்லாம் பெரிய பாண்டியருக்குரியவை என்று பணிந்து விநயமாகத் தெரிவித்தான்.
பறவைகள் மணியொலி எழுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் கோட்டைக் காவல் வீரர்கள் வந்து கூடிவிட்டதனால் கபாடங்களைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு ஓடிய அவுணர்களின் வழியில் அவர்களைப் பின்பற்றி மறைந்து மறைந்து நடந்தனர் இளையபாண்டியனும், முடிநாகனும். புறவீதியில் தாங்கள் குடியிருப்பிற்கு அண்மையில் இருந்த முரச மேடையினருகே சென்றதும் - அங்கே இந்த அவுணர்களை எதிர் பார்த்து வேறு சிலரும் காத்திருப்பதைத் தொலைவிலிருந்த படியே கண்ட முடிநாகன் இளையபாண்டியருக்கு அதனைச் சுட்டிக் காட்டினான்.
இருவரும் மறைந்து நின்று அங்கு மேலே நடப்பதைக் கவனித்தனர். வீதியின் முகப்பில் மாபெரும் மேடையிட்டு மிகப் பெரியதாக அந்த முரசத்தைக் கட்டி நிறுத்தியிருந்த அவுணர்கள் அதை எந்த நோக்கத்தோடு அங்கே அமைத்திருக்கிறார்கள் என்ற ரகசியமும் அன்று இளையபாண்டியனுக்கும் முடிநாகனுக்கும் தெரிய நேர்ந்தது.
அவர்கள் பார்த்துக் கொண்டு நின்றபோதே முரச மேடையின் அருகே நின்ற அவுணர்கள் நிலவொளியில் திடீர் திடீரென்று மாயமாக மறையலாயினர். கூர்ந்து நோக்கியபோது முக்கால் பனை உயரத்திற்கிருந்த அந்த முரசத்தின் கீழ்ப்பக்கத்தில் அது பிறருக்குத் தெரியாத வண்ணம் சாதுரியமாக ஒரு சிறு நுழைவாயிலிருப்பதும் தெரிந்தது.
-----------
8. கண்ணுக்கினியாள் கருத்தில் கலந்தாள்
அவுணர் வீதி முரச மேடையிலிருந்து நுணுக்கமான உள் வழியில் புகுந்து காணவேண்டுமென்று இளையபாண்டியன் விரும்பியும் முடிநாகன் அப்போது அதற்கு இணங்கவில்லை. 'இளங்கன்று பயமறியாது' - என்பதுபோல் பேசினான் சாரகுமாரன்.
"கொள்ளையிடுவதும் ஊனுண்ணுவதுமாகத் திரிந்த இந்த இராட்சதக் கூட்டத்திற்கு நாகரிக வாழ்வு கொடுத்தாரே பாட்டனார்; அவருக்காவது நன்றி செலுத்த வேண்டாமா இவர்கள்? இந்தக் கூட்டத்தினரால் எப்படித்தான் இவ்வளவு நன்றி விசுவாசமில்லாமல் வாழ முடிகிறதோ?"
"மனம் பண்படப் பண்படத்தான் நன்றியைப் போன்ற உயர்ந்த குணங்கள் எல்லாம் வருமென்று தங்கள் பாட்டனார் அடிக்கடி கூறுவார். எத்தனை காலம் நீரினுள் கிடந்தாலும் கல் இளகவோ மென்மை பெறவோ முடியாது. இந்தக் குறும்பர்கள் குணமும் அப்படித்தான்..."
"இருக்கலாம்! ஆனால் இவர்களை அப்படியே விட்டுவிட முடியாது. 'ஓர் குறிக்கோளுடன் வாழ்கின்ற பெருங்குடி மக்களின் நகரமிது' என்பதுபோல் தெய்வீகக் கபாடங்களுக்கு நிலை வைத்துப் பாட்டனார் படைத்த நகரமிது. இந்தக் கபாடங்களுக்கு வெளியே யார் எப்படி வாழ்ந்தாலும் கவலைப்படாமல் விட்டுவிடலாம். உள்ளே இருக்கிறவர்களின் தகுதியையும் ஒழுக்கத்தையும் பற்றி நாம் கவலைப்பட்டுத்தான் ஆகவேண்டும்."
"இளையபாண்டியர் கவலைப்படுவதிலும், இந்த உட்பகையை நீக்குவதற்கான வழிவகைகளைச் சிந்திப்பதிலும் கவனம் செலுத்துவதும் சரிதான்! ஆனால் ஒன்றில் மட்டும் அவசரப்படக்கூடாது. சற்றே வயது முதிர்ந்தவன் என்ற முறையில் என் அறிவுரையைச் செவிசாய்த்துக் கேட்க வேண்டும். இந்த அகாலத்தில் முரசமேடைக்குக் கீழே உள்ள சுருங்கை வழியை ஆராயும் முயற்சி மட்டும் வேண்டாம். அதனாற் சில பல அசம்பாவிதங்கள் நேரிடலாமென்று தோன்றுகிறது."
"சம்பவிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் நாம் நினைக்கிறபடி தான் நடக்க வேண்டுமா என்ன? அசம்பாவிதங்கள் நேருமென்பதையே ஒரு பெரிய பயமுறுத்தலைப் போலத் தெரிவிக்கிறாயே முடிநாகா?"
"பயமுறுத்தல் அல்ல! வெறும் வேண்டுகோள்தான்! நகர் பரிசோதனைக்காக அழைத்து வந்த தங்களை பத்திரமாகப் பாட்டனாரிடம் கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டுமென்பது என் விருப்பம். தயைகூர்ந்து இதற்குமட்டும் இளையபாண்டியர் செவி சாய்க்க வேண்டும்."
முடிநாகனின் வேண்டுகோளுக்கு இணங்கினான் இளையபாண்டியன். அவுணர் வீதி முரசமேடையிலுள்ள இரகசியங்களை அறிந்து கொள்ளத் துடிக்கும் துடிப்பும், துணிவும், ஆவலும், அதிகமாயிருந்தும் அவற்றை அடக்கிக் கொண்டு இருவரும் புறநகரிலுள்ள கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றனர். குளிர்ந்த காற்று வீசும் மரங்களடர்ந்த புறநகர் வீதிகள் இரவில் மிக வனப்பாயிருந்தன.
யாருக்காகவோ உரத்த குரலில் அலைகளை எற்றி எற்றி அரற்றுவதுபோல் கடல் ஓசை தொலைவில் கேட்டுக் கொண்டிருந்தது! கடற்கரைக் கோடியில் உயரமான பாறை ஒன்றின் மேல் அமைந்திருந்த கலங்கரை விளக்கின் உச்சியில் விறகுகள் தீக்கொழுந்துகள் எழ எரிந்து கொண்டிருந்த காட்சியானது அந்தரத்தில் பற்றி எரியும் செந்தீப்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்தது.
புறநகரப் புன்னைத் தோட்டத்தில் நிலா ஒளியிலும், கடற்காற்றிலும் உற்சாகமடைந்ததாலோ என்னவோ அங்குவந்து தங்கியிருந்த பாணர்களும், விறலியர்களும், இசையிலும், கூத்திலுமாக உறங்காமல் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். யாழொலியும், இசைக் குரலொலியும், ஆடும் பாதங்களின் அழகு ஒலியும் நிறைந்து கடற்கரைப் புன்னைத் தோட்டம் கந்தர்வலோகமாயிருந்தது.
நகர் பரிசோதனைக்காகப் புனைந்து கொண்ட மாறு வேடங்களில் இருந்த காரணத்தால் கூட்டத்தோடு கூட்டமாக ஒதுங்கி நின்று சாரகுமாரனும், முடிநாகனும் அவற்றை எல்லாம் காண வாய்ப்பிருந்தது. நகரணி மங்கல நாளுக்காகக் கோ நகருக்கு வந்திருந்த கலைஞர்கள் வந்த இடத்தில் தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகத் தங்களுக்குள்ளேயே பாடிய பாடல்களும், இசைத்த இசைகளும், ஆடிய ஆட்டங்களும், இணையற்ற தரத்திலிருந்தன.
"நோக்கமும் பயனும் எதிர்பாராத எல்லையில் கலைகள் தான் எத்தனை அழகாயிருக்கின்றன பார்த்தாயா முடிநாகா! பரிசிலை எதிர்பார்த்து அரண்மனைக் கொலு மண்டபத்துக்கு வரும் போது இவர்களில் பலர் தரமிழந்து விடுகிறார்கள்.
சொந்த மனத்தின் திருப்தியை ஒரு சித்தியாக எதிர்பார்த்து அதற்காக ஏங்கிக் கொண்டே படைக்கும்போது அந்தக் கலைத்திறனுக்கு இணை சொல்ல முடியாமல் அது உயர்ந்துவிடுகிறது பார்!" என்று முடிநாகனின் காதருகே மெல்லக் கூறினான் இளையபாண்டியன்.
முடிநாகனும் அந்தக் கருத்தை வரவேற்றுப் பாராட்டுவது போல் இளையபாண்டியரை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். மணிபுரத்திலிருந்து இளையபாண்டியரைக் கோ நகருக்கு அழைத்து வரும்போது - இடைவழியில் உதவி பெற்ற அந்தப் பெண்ணும் தன் பெற்றோர்களுடன் அதே கூட்டத்தில் இருந்தாள். அவள் அங்கே கூட்டத்தினிடையே அமர்ந்திருப்பதை முடிநாகன் பார்த்தான்.
சாரகுமாரனும் அவளைப் பார்த்திருக்க முடியுமென்று முடிநாகனால் அநுமானம் செய்ய முடிந்தது. அவளைப் பார்த்துவிட்டதன் காரணமாக - அவள் அக்கூட்டத்தில் பாடும் முறை வந்து அதையும் கேட்டுவிட்டுப் போகவேண்டுமென்ற ஆவலிலேயே இளையபாண்டியன் அங்கே தாமதம் செய்வதாக முடிநாகன் உய்த்துணர்ந்து கொண்டாலும் அதை இளையபாண்டியர் வாயிலாகவே வரவழைக்க விரும்பி அவரைப் பேச்சுக்கு இழுத்தான் அவன்.
"அரண்மனைக்குத் திரும்பலாமா? நேரமாகிறதே? பாட்டனார் ஒருவேளை நம்மை நினைத்து உறங்காமல் காத்துக் கொண்டிருப்பாரோ என்னவோ?"
"போகலாம்! இன்னும் சிறிது நேரம் பொறுமையாக இரு" என்றான் இளையபாண்டியன். அவனுடைய கண்கள் அந்தக் கூட்டத்தினிடையே விண்மீன்களுக்கு நடுவே முழு மதிபோல் வீற்றிருந்த கண்ணுக்கினியாளைச் சுற்றிச் சுற்றி மீள்வதை முடிநாகன் கவனித்தும் கவனியாததுபோல் உள்ளூற நகைத்துக் கொண்டான். 'காதல் குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பது கூடாது' என்று கருதியவனைப் போல் வாளாவிருந்தான் அவன்.
அந்தக் கூட்டத்தில் 'கண்ணுக்கினியாள்' பாடும் முறை வந்தது. அமுதமாரி பொழிந்தாற்போல அவள் பாடிய போது இளையபாண்டியன் சிரக்கம்பம் செய்து இரசித்துக் கொண்டிருந்தான். அவள் கூத்திலும் வல்லவளாக இருந்ததனாலோ என்னவோ அக்கூட்டத்திலிருந்த முதியபாணரும், பொருநரும், அவள் சிறிது நேரம் ஆடவும் வேண்டினர்.
யாழைப் பெற்றோர்பால் கொடுத்துவிட்டுப் பொற்கொடி மின்னலென அவள் பதம் பெயர்த்து ஆடியபோது சாரகுமாரன் அந்த எழிலின் வசப்பட்டு மனம் பறிகொடுத்தான். அவனுடைய இதயத்தில் பதியும் அன்பின் முதல் மலர்ச்சியாக இருந்தது அது.
சிகண்டியாரும், அவிநயனாரும் அவனுக்கு நூல்களையும் கலைகளையும் கற்பித்திருந்தார்கள். அவற்றின் காரணமாக அவன் பெற்றிருந்த நுண்ணுணர்வுகள் எல்லாம் இந்தப் பேதைப் பெண்ணுக்குத் தோற்றுப் போய் விட்டாற் போலிருந்தது இப்போது.
உலகில் சில அழகுகள் கவனத்தைக் கவரும். இன்னும் சில அழகுகள் இதயத்தில் பதியும். மிகச் சில அழகுகளோ இதயத்தையே பறித்துக் கொண்டு போய் மறுபடி வந்து இதயமாக உள்ளே உறையும். இந்த மூன்றாவது வகை அழகுணர்ச்சி உயிரோடு இரண்டறக் கலந்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. கண்ணுக்கினியாளின் அழகும் கலையும் அவனை அந்த நிலைக்கு ஆளாக்கியிருந்தன.
தாமரைப் பூப்போன்ற அவள் கைகளும், பாதங்களும், செதுக்கி நிறுத்தினாற் போன்ற மின்னலிடையும், கலைவளர்ச்சியின் நிறைவைப் போலவே வஞ்சகமின்றிச் செழித்திருந்த அவள் உடல் வனப்பும், அங்கங்களின் செழுமையும், கூத்தின் போது உணர்வுகளை ஏந்தி விரையும் விழிகளின் நயமும், மலரும் சிரிப்பின் கவர்ச்சியும் அவன் மீது மாரவேள் கணைகளைத் தொடுத்தன.
"அழகை நிரூபிப்பதற்காகவே ஒரு காப்புக் கட்டிக் கொண்டு இந்தப் பெண்ணைப் படைத்திருக்கிறான் இறைவன்..."
"இந்தப் பெண்ணை மட்டுமென்ன? எல்லாப் பெண்களளயும் இறைவன் அதே காரியத்திற்காகத்தான் படைத்திருக்க வேண்டும்!" என்று முடிநாகன் அதைப் பொதுப் பேச்சாக்கிய போது இளையபாண்டியனுக்கு அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் அந்தக் கோபத்தை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை.
இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் அருகே நின்ற முதியவர் ஒருவர், "உருகுவதற்காக ஆண்பிள்ளைகளையும் உருக்குலைப்பதற்காகப் பெண்களின் அழகையும் படைத்திருக்கிறான் கடவுள்" என்று எங்கோ பாராக்குப் பார்த்தபடியே சொல்லிவிட்டு நகர்ந்தார். அவரை வாதுக்கழைத்துக் கோபமாக உரையாட எண்ணினான் சாரகுமாரன். ஆனால் அவரோ இதைச் சொல்லிவிட்டு அவசர அவசரமாகப் போய்விட்டார்.
மேலும் அரை நாழிகைப் போதுக்கு மேல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் கழித்த பின்பே முடிநாகனும், இளையபாண்டியனும் அரண்மனைக்குத் திரும்பினர். வழியில் அந்தப் பெண்ணின் அழகை வியந்தபடியே பேசி வந்தான் இளையபாண்டியன். முடிநாகன் ஒன்றும் மறுத்துச் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் உறங்கச் செல்வதற்காக எந்தப் பள்ளி மாடத்துக்குப் போக வேண்டுமோ அந்தப் பள்ளிமாடத்தின் வாயிலில் கவலையோடு அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பெரியபாண்டியர் வெண்தேர்ச்செழியர்.
-----------
9. முதியவர் முன்னிலையில்
அந்த நேரத்தில் பெரிய பாண்டியரை அங்கே எதிர்பாராத காரணத்தால் முடிநாகனும், இளையபாண்டியனும் சிறிது திகைத்தனர். ஆனாலும் பெரியவர் அப்படிக் கவலைப்பட்டுக் கண் விழித்திருப்பதை முடிநாகன் வியக்கவில்லை. அவரெதிரில் இருவரும் அடக்க ஒடுக்கமாகச் சென்று நின்றார்கள். பெரியவர் இருவரையும் நன்றாக ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார்.
"நகர் பரிசோதனையை மிகவும் சுறுசுறுப்பாகச் செய்து வருவதாகத் தெரிகிறது."
"இளையபாண்டியர் விரும்பினார்! அழைத்துச் சென்றேன்."
"எங்கெங்கே சென்றிருந்தீர்கள்? என்னென்ன நிகழ்ந்தது? என்பதையெல்லாம் நான் அறிந்து கொள்ளலாமா முடிநாகா! இந்தக் கிழவனுக்கு இன்றென்னவோ உறக்கம் வரவே மறுக்கிறது" என்றார் பெரியவர். அப்போது இளையபாண்டியரின் விழிகள், 'தயைசெய்து கடற்கரைப் புன்னைத் தோட்டத்து நிகழ்ச்சியை மட்டும் சொல்லி விடாதே' - என்பது போல் முடிநாகனைக் கெஞ்சின.
முடிநாகனும் அந்தக் குறிப்பை ஏற்றுக் கொண்டான். பெரியவரிடம் அவன் மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் கூறினாலும் இளையபாண்டியனுடைய விருப்பத்தை மீறாமல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றதைப் பற்றி மட்டும் கூறாமல் மறைத்து விட்டான்.
பெரியவரோ முடிநாகன் கூறியவற்றை எல்லாம் கேட்டுவிட்டுப் புன்முறுவல் பூத்தார். அடர்ந்த மீசையினிடையே தெரிந்த அந்தத் தளர்ந்த பற்களின் சிரிப்பு வழக்கத்தை மீறியதாகவும் புதுமையாகவும் இருந்தது. "முடிநாகா! உங்கள் இருவரிடமும் நான் ஒன்று கேட்க வேண்டும்? ஏன் கோட்டை மதிற்பக்கத்தோடு நகர் பரிசோதனையை முடித்துக் கொண்டு திரும்பி விட்டீர்கள்? கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கமும் போயிருக்கலாமே?"
"இன்றென்னவோ அங்கே போக நேரிடவில்லை... பெரியபாண்டியர் கட்டளையிட்டால் நாளை அவசியம் அங்கே சென்று வருவோம்..."
"ஆம்! ஆம்! அவசியம் சென்று வர வேண்டும். ஏனென்றால் அந்தப் புன்னைத் தோட்டத்துப் பகுதிகளில் தங்கியிருக்கும் பாணரும், பொருநரும், விறலியரும், இரவில் நெடுநேரம் இசையும் கூத்துமாகப் பொழுது கழிக்கின்றார்களென்று கேள்வி. நகர் பரிசோதனை செய்து அலைந்து திரிந்து களைத்த பின் அங்கே போய்வருவது உங்களுக்கும் ஆறுதலாக இருக்குமல்லவா?"
பெரியவரின் இந்தச் சொற்களைக் கேட்டு முடிநாகனுக்கு உள்ளே குறுகுறுத்தது. பொதுவாகத்தான் இவர் இப்படிக் கேட்கிறாரா அல்லது ஏதாவது உட்பொருள் வைத்துக் கேட்கிறாரா என்று புரிந்து கொள்வது அரிதாயிருந்தது. பெரியவரோ அவர்களிருவரின் முகபாவங்களையும் இமையாமல் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். தங்கள் முகங்களில் ஏற்படும் சிறுமாறுதல் கூட அப்போது அவர் பார்வையிலிருந்து தப்ப முடியாதென்று தோன்றியதனால் இருவரும் ஆடாது அசையாது சிலைகளாய் சபிக்கப் பட்டாற்போல் நின்றனர்.
எதிராளியின் தீர்க்கமான கண்பார்வைக்கு முன்னால் உணர்வுகள் மாறி முகத்தில் சலனம் தோன்றினால் கூட அகப்பட்டுக் கொள்ள நேரிடும். இப்படி நிலைமை உடைமைக்குரியவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் பொருளைத் திருடத் துணிவதைப் போன்றது.
அரச தந்திரத் துறையில் பயிற்சியும் பழக்கமும் மிகுந்தவர்களின் கண்களே மாபெரும் படைகளுக்குச் சமமானவை. தங்களின் கண்பார்வையிலேயே பல வெற்றி தோல்விகலை நிர்ணயிக்க அப்படிப்பட்டவர்களால் முடியும். பெரியபாண்டியருடைய கண்களுக்கே அவருடைய வெற்றிகளை நிர்ணயிக்கும் ஆற்றல் உண்டு என்பதை முடிநாகன் அறிவான். எதிரி பலவீனமாயிருக்கும் நேரத்தை அறிந்து கொண்டே மேலும் பலவீனப்படுத்துவது போல் பெரியவர் தொடர்ந்தார்.
"நான் சொல்வதெல்லாம் உங்கள் நன்மைக்குத்தான் முடிநாகா! ஏனென்றால் புன்னைத்தோட்டத்தில் தங்கியிருக்கும் கலைஞர்கள் தங்களுக்குள் பொழுது போக்குவதற்காக ஒரு நோக்கமும், பயனும் இன்றி நிகழ்த்துகிற கலைகள் அதிக அழகுடனிருக்க முடியும். 'சொந்த மனத்தின் திருப்தியையே ஒரு சித்தியாக எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டே படைக்கும்போது அந்தக் கலைத்திறனுக்கு இணை சொல்லமுடியாமல் அது உயர்ந்துவிடும்!' இல்லையா?"
முடிநாகன் வாய்திறக்கவில்லை. பெரியவர் வகையாகப் பிடித்துக் கொண்டு விட்டார். அவரிடம் பொய் கூறியதை எண்ணி அவன் மனம் தவித்து மெய் நடுநடுங்கி நின்றான். அந்தச் சமயத்தில் அவருக்கு இவையெல்லாம் எப்படித் தெரியவந்தன என்பதும் அவன் மனத்தில் குழப்பமாயிருந்தன. அவரோ சொற்களாலும், பார்வையாலும் அவர்களை ஊடுருவினார். உறுத்தும் பார்த்தார்.
-----------
10. பெரியவர் கட்டளை
பெரிய பாண்டியருடைய சாதுரியமான பேச்சுக்கு முன் குமாரபாண்டியனும் முடிநாகனும் திறனிழந்து நிற்க நேர்ந்தது. அவரோ மேலும் தொடர்ந்தார்.
"அழகை நிரூபிப்பதற்காக ஒரு காப்புக் கட்டிக் கொண்டது போல் கடவுள் சில பெண்களைப் படைப்பதும் உண்டு அல்லவா?"
முடிநாகனும், இளையபாண்டியனும் இதைச் செவியுற்றுத் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டாற்போலத் தலைகுனிந்தார்கள்.
"ஏன் இருவரும் தலை குனிகிறீர்கள்? உங்களைப் போன்றவர்கள் உருக்குலைவதற்காகப் பெண்களையும் உருவாக்கியிருக்கிறானே இறைவன்?" என்று மேலும் அவர் வினவியபோது தான் இதே சொற்களை இதே கடுமையான குரலில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் கேட்டது நினைவு வந்தது இளையபாண்டியனுக்கு.
பெரியவர் மாறுவேடத்தில் அங்கு வந்ததோடு அமையாமல் தனக்கும் முடிநாகனுக்கும் மிக அருகிலே நின்று இருவர் பேச்சையும் ஒட்டுக் கேட்டிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. விருப்பமானது, அறியும் திறனை மங்கச் செய்து விடுகிறது என்பதை இப்போது நன்றாக உணர்ந்தான் இளையபாண்டியன்.
கண்ணுக்கினியாளின் ஆடல் பாடல்களில் திளைத்த தனது விருப்பம் தனது அருகில் வந்து நின்ற முதியவரை உணரும் ஆற்றலை இழக்கச் செய்திருக்க வேண்டுமென்று இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் மேலும் தலைகுனிந்தான்.
"அரசகுமாரர்கள் தெருவில் திரியும் பொதுமக்கள் போல் தங்கள் விருப்பு வெறுப்புக்களைத் தெரிவிப்பதும் பேசித் திரிவதும் விந்தைதான். 'எதை விரும்புகிறோம், எதை வெறுக்கிறோம்' என்பதை அருகிருக்கும் அமைச்சர்கள் கூட உணர்வதற்கோ கண்டுபிடிப்பதற்கோ அரிதாக வைத்துக் கொள்ளவேண்டுமென்று அரச இலட்சணம் பற்றி அரசியல் நூல்கள் கூறுகின்றன. நீயோ பரிசுக்குப் பாடும் பாண்மகளைப் படைத்த இறைவனை வியந்து உருகுகிறாய்."
"தவறு என்னுடையதுதான். இளையபாண்டியரை அரண்மனைக்கு அழைத்து வராமல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்குப் போவதற்குத் துணை நின்றிருக்கக் கூடாது" என்று முடிநாகன் வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பயந்தபடி வெளியிடலானான். அதைக் கேட்டு அவன் மேற் சீறினார் பெரியவர்.
"நீ என்னிடம் கூறிய கூற்றுப்படி நீங்களிருவரும்தான் புன்னைத் தோட்டத்திற்கே போகவில்லையே? முதலில் பொய் கூறிவிட்டு அப்புறம் ஏன் தடுமாறுகிறாய்? சாதித்த பொய்க்கு ஏற்பப் பேசத்தெரிய வேண்டும். அல்லது பேசியதற்கு ஏற்பச் சாதிக்கத் தெரியவேண்டும். உங்களுக்கோ இரண்டு வகையிலுமே தேர்ச்சியில்லை" என்று வஞ்சப் புகழ்ச்சியில் இறங்கினார் பெரியவர். முடிநாகன் அவருக்கு மறுமொழி கூறும் சக்தி இழந்தான்.
"கடமையும், ஆண்மையுமே, அரச குடும்பத்தின் பெருநிதிகள். அவற்றை மறந்தோ, இழந்தோ உருகுவதும், நெகிழ்வதும் தலைமேலுள்ள பொறுப்புக்களைப் பாழாக்கிவிடும். இதை நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நகரத்தைப் பரிசோதிக்க நீங்கள் புறப்பட்டுச் சென்றால் உங்களைப் பரிசோதிக்க நான் பின் தொடர்ந்ததில் தவறென்ன?" - என்று பெரியவர் சிறிது கடுமை குறைந்து ஆறுதலாகப் பேசத் தொடங்கிய பின்பே இருவரும் தலை நிமிர்ந்தனர்.
"தவறு உன்னுடையதில்லை குழந்தாய்! அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அளவு மீறிய கலை உணர்வு ஆகாது! உன் தாய் வழிவந்த இசை ஞானமும், நம் புலவர் பெருமக்கள் கடமையைக் கற்பிப்பதை விட கலையை உனக்கு அதிகமாகக் கற்பித்திருப்பதுமே இதற்குக் காரணம். இசையும் கூத்தும் காமத்தின் இரு கதவுகள். அவற்றைக் கேட்கலாம். காணலாம். கதவுகளை உடைத்துக் கொண்டு புக முயலாதார் மிகவும் குறைவு.
உன்னைக் காண நான் நாணப்படுகிறேன். இனி நீ இலக்கண இலக்கியங்களைக் கற்றதை விட அதிகமாக அரச தந்திரங்களையும், போர்த்துறை நுணுக்கங்களையும் கற்க வேண்டும். உன்னுடைய கல்வியில் விரைவாக ஒரு மாறுதல் வேண்டும். இல்லாவிட்டால் நீ ஆட்சிக்குப் பயன்படாதவனாகி விடுவாய்" என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார் பெரியவர். முடிநாகன் ஏதோ பதில் கூறுவதற்கு முயன்றான். அவர் அவனைப் பேச விடவில்லை.
"இசையினால் விருப்பம் மிகுகிறது. விருப்பம் மிகுந்தால் கடமையுணர்வு குன்றுகிறது. கடமையுணர்வு குன்றினால் ஆசை பிறக்கும். ஆசையின் முடிவில் பொறுப்புக்கள் மறந்து போகும். அரச குடும்பத்துப் பிள்ளைகள் நல்ல விதை நெல்லைப் போன்றவர்கள்.
அவர்களிலிருந்து எவ்வளவோ கடமைகள் பயிராகி வளர வேண்டும். அவர்கள் சரிதத்தில் நிற்கக் கூடியவர்கள். சரிதம் அவர்களை ஒரு மூலையில் நிறுத்திவிட்டுப் போய்விடும்படி ஆகிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு மேலே ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார் பெரியவர். அவர்களிருவரும் தயங்கித் தயங்கி நடந்தபடியே சிந்தனையோடு பள்ளிமாடத்திற்குள் நுழைந்தனர். இருவருமே அன்றிரவு உறங்கவில்லை.
மறுநாள் காலையிலும் விடிந்ததும் விடியாததுமாக பெரியபாண்டியரே அவர்களை எதிர்கொண்டு முதல் நாளிரவு அரைகுறையாக விட்ட உரையாடலைத் தொடரத் தொடங்கிவிட்டார்.
"நேற்றிரவு புன்னைத் தோட்டத்திற்குச் செல்லுமுன் நீங்களிருவரும் ஏதோ அவுணர் வீதி முரசமேடைப் பக்கம் போயிருந்ததாகக் கூறினீர்களே. அந்த நிகழ்ச்சியைப் பற்றி எனக்குச் சிறிது தெளிவாகத் தெரிய வேண்டும்."
இந்தக் கேள்விக்கு இளையபாண்டியனான சாரகுமாரன் மறுமொழி கூறத் தயங்கினான். அருகிலிருந்து முடிநாகன் சற்றே துணிவோடு விரிவாக மறுமொழி கூறலானான்.
"முரசமேடைக்குக் கீழே அவுணர்களின் இரகசிய படைக்கலச்சாலை ஒன்றிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது" - என்பதாக ஏதோ பெரிய அந்தரங்கத்தைக் கண்டுபிடித்துச் சொல்பவன் போல முடிநாகன் கூறியும் பெரியவர் அதைக் கேட்டுச் சிறிதும் அயரவில்லை.
"இருக்கலாம்; அப்புறம்?"
"அதன் மூலம்தான் இடையிடையே அவுணர்கள் கொலை, கொள்ளை, கலகங்களில், ஈடுபடவும் மறையவும், மீண்டும் வெளிவரவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றுகின்றன."
"ஒற்றன் வேறு; அரச குடும்பத்தினன் வேறு. ஒற்றன் அறிந்து கூறுவதைப் போன்ற சாதாரணப் புறச் செய்திகளை அறிவதற்கே அரச குடும்பத்து மதி நுட்பமும் பயன்பட்டால் அப்புறம் அந்த மதிநுட்பத்திற்கு ஒரு பயனுமில்லை. தோற்றம், அதன் பின்னுள்ள கருத்து, கருத்தின் பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து - இறுதியாக அவை பற்றிய நம் அநுமானங்கள் - என்று எல்லாவற்றையும் தொகுத்துணரும் ஞானம் நமக்கு வேண்டும்.
உண்மையிலேயே உங்களுடைய தொகுத்துணரும் அறிவை நான் சோதனை செய்வதற்கு ஆசைப்படுகிறேன். இப்போது பரிசோதனைக்காக நான் சொல்லப் போகும் காரியத்தை நீங்கள் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள், எவ்வாறு அநுமானங்களைத் தொகுக்கப் போகிறீர்கள் என்பவற்றை எல்லாம் பார்த்த பின்பே உங்களுடைய அரசதந்திரத் திறமைப்பற்றி நான் கூறமுடியும்."
"முரசமேடைப் பற்றியோ, அதிலுள்ள இரகசியங்களைப் பற்றியோ முதல்முதலாக இன்றுதான் நான் கேள்விப்படுகிறேன் என்று நீங்கள் நினைப்பதாயிருந்தால் உங்கள் பேதமையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்த முரசமேடையில் தொடங்கும் சுருங்கை வழி எங்கே போகிறது எங்கே முடிகிறதென்று நீங்கள் அறிந்துகொண்டால் என்னைவிட ஒரு வேளை உங்களுக்கு அதிக வியப்பு ஏற்படலாம்."
"நான் வியக்கவில்லை என்பது பொருளல்ல. என்னுடைய வியப்புக்கும் காரணமிருக்கும். வியப்பின்மைக்கும் காரணமிருக்கும். அதைப் பின்னால் சொல்லுகிறேன். இன்றிரவே அவுணர்வீதி முரசமேடை பற்றி நீங்களே உங்கள் சொந்த அறிவுத்திறன் கொண்டும், சாம, தான, பேத, தண்ட, முயற்சிகள் கொண்டும் என்னென்ன தெரிந்துவர முடியுமோ, அவற்றைத் தெரிந்துவர உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறேன். இந்த முயற்சியில் உயிர்ப் பயம், பகை, குரோதம் எல்லாமே உண்டு. கரணம் தப்பினால் மரணம்தான்! ஆயினும் அரச தந்திரமுள்ளவனுக்குத் தூசு மாத்திரமே ஆகும் இது."
"நாங்களிருவரும் இந்தக் கட்டளையைச் சிரமேற் கொண்டு இன்றிரவே முயல்கிறோம். பெரியபாண்டியர் இந்தக் காரியத்தில் எங்களை ஈடுபடுத்துவதற்கு முழுமையாக நம்பலாம்" என்று முடிநாகனும் குமாரபாண்டியனும் ஒரே சுருதியில் இணைந்து ஒலிக்கும் குரலில் பெரிய பாண்டியருக்கு உறுதிமொழி கூறியும் அவர் அதற்காகப் பெரிதாக முகமலர்ந்து மகிழ்ச்சி காண்பித்து விடவில்லை.
"இதில் நீங்கள் காட்டும் தைரியத்தையும், ஆர்வத்தையும் பார்த்தே நான் அவசரப்பட்டு வியப்படைந்து விடுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. விளைவைக் கொண்டே என் முடிவுகள் எனக்குள் உருவாகும்..." என்று அழுத்தமாகக் கூறினார் பெரியபாண்டியர். அன்று பகலில் புலவர் பெருமக்களான அவிநயனாரும், சிகண்டியாரும் பெரியபாண்டியரைச் சந்திக்க வந்தபோது கூடச் சாரகுமாரனும், முடிநாகனும் உடனிருந்தனர். அப்போதும் பெரியவர் காலையிலிருந்த அதே மனநிலையில்தான் பேசினார்.
"புலவர்களே! பேரப்பிள்ளையாண்டானுக்கு அறிவிலும், கலையிலும், இலக்கியம், இலக்கணங்களிலும் ஞானமுண்டாக்குவதற்கு நீங்கள் படுகிற பாட்டைவிட அரசதந்திர ஞானத்தை மட்டும் உண்டாக்குவதற்கே நான் அதிகமாகப் பாடுபட வேண்டும் போலிருக்கிறதே? உங்களுக்காவது ஏடுகளும், சுவடிகளும், இலக்கண இலக்கிய நூல்களும் இருக்கின்றன.
அவற்றை விவரித்துக் கற்பித்துவிடலாம். அரச தந்திரமோ நூல்கள் எவ்வளவு கூறினாலும் அதற்கப்புறமும், நிறைவடையாது மீதமிருக்கும் ஒரு துறை. மனிதனின் அறிவிலுள்ள நேரிய மாறுபட்ட எல்லா நுனிகளுக்குமேற்ற அத்தனை பேதங்களும் அரசதந்திரத்தில் உண்டு."
"மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுவதில்லை. தங்கள் பேரப் பிள்ளையாண்டானுக்கு இவையெல்லாம் தானாகவே வரும்."
"பழமொழி நன்றாக இருக்கிறது" என்று மட்டும் சுருக்கமாக மறுமொழி கூறிச் சிரித்தார் முதியபாண்டியர் வெண்தேர்ச்செழியர். பெரியவரின் இந்தப் பேச்சுக்களையும், செயல்களையும் பார்க்கப் பார்க்க இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும், இரவு எப்போது வரப்போகிறதென்று இருந்தது. இரவு வந்தால் நகர் பரிசோதனைக்குப் புறப்படலாம். நகர் பரிசோதனைக்குப் புறப்பட்டால் முரசமேடை இரகசியங்களை அறிந்து பெரியவரிடம் விவரித்தபின் அவர் வாயால் பாராட்டப்படலாம் என்ற ஆர்வமே அவர்களுக்கு அப்போது இருந்த விருப்பமாகும்.
பெரியவருடைய கட்டளையை ஒப்புக்கொண்ட போதும், அதை நிறைவேற்றி நல்ல பெயரெடுக்க இரவை எதிர்பார்த்துக் காத்திருந்தபோதும் இந்த ஆவலே அவர்கள் இருவர் உள்ளத்தில் இருந்தது. தங்கள் திறமையிலும் ஒற்றறிதல் சூழ்ச்சியிலும் அவர்களுக்குப் பெரிதும் தன்னம்பிக்கை விளைந்திருந்தது.
மிகக் குறைந்த வியப்புக்களையே அவர்கள் எதிர்பார்த்தனர். அவுணர்வீதி முரசமேடையைப் பொறுத்த மட்டும் தங்களுடைய முந்தையநாள் அநுமானங்களுக்கு மேல் புதிய உண்மைகள் எவற்றையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் அதைப்பற்றி எளிதாகவும், கவலையற்றும், அவர்கள் எண்ணமுடிந்தது. முடிநாகன் மட்டும் உள்ளூரச் சிறிது தயங்கினான். பெரியவர் காரணமின்றி ஒரு கட்டளையை இடமாட்டார் என்பது பலமுறை அவன் அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.
பிறர் எளிதாக நினைப்பதை அவர் மறுக்காமல் விடுவதில் கூட ஒரு சாமர்த்தியம் உண்டு. அவுணர்வீதி முரசமேடை பற்றி அவர் எளிதாக எண்ணித் தங்களுக்குக் கட்டளை இடுவதாகமட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. எனவேதான் அந்தரங்கமாக அவன் தயங்கினான். அந்தரங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இளையபாண்டியர் போல் அவனும் திடமாகவே புறத்தோற்றத்தில் அப்போது விளங்கினான்.
-------------
11. முரசமேடை முடிவுகள்
அன்றிரவு நடுயாமத்திற்குச் சற்று முன்பாக இளைய பாண்டியனான சாரகுமாரனும், தேர்ப்பாகன் முடிநாகனும் மாறுவேடத்தில் முரசமேடைக்குப் புறப்பட்டார்கள். "போய் வருக! வெற்றி உங்கள் பக்கமாவதற்கு இப்போதே நான் நல்வாழ்த்துக் கூறுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார் முதிய பாண்டியர்.
அவருடைய வாழ்த்தினால் முடிநாகன் பெருமையடைந்து விடவில்லை என்றாலும், தங்களை முழுமையாக உறைத்துப் பார்ப்பதற்கு அவர் துணிந்துவிட்டார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தச் சோதனையில் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவன் கபாடபுரத்தின் காவல் தெய்வங்களையும், வழிபடு கடவுளர்களையும் மனமார வேண்டிக் கொண்டிருந்தான்.
செய்ய வேண்டிய சோதனைகளையும், ஒற்றறிதல் வேலைகளையும் அவுணர் வீதியைச் சார்ந்த இடங்களிலும் சுரங்கப் பகுதியிலுமே நிகழ்த்த வேண்டியிருந்ததனால் அவுணர்கள் போன்றதொரு கோலத்தையே அவர்களிருவரும் மாறுவேடமாகப் புனைந்து கொண்டிருந்தனர். கோட்டைப் புறமதில்களைக் கடந்து அவுணர்வீதியை அடைந்தபோது வீதி பேய் அமைதியில் மூழ்கியிருந்தது. வானில் மேகம் கவிந்திருந்ததனால் இருட்டும் அதிகமாக இருந்தது. முரசமேடையைச் சுற்றி யாரும் தென்படவில்லை. சூனியமானதொரு பயங்கர நிலை நிலவியது அங்கே.
முடிநாகன் வலது புறமும், இளையபாண்டியன் இடது புறமுமாக முரசமேடையைச் சூழ்ந்து கீழே இறங்குவதற்கான சுரங்க வழி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்கள் மேடையும் பக்கச் சுவர்களும், மேலே மலையைக் கவிழ்த்து நிறுத்தி வைத்தாற் போன்ற மாபெரும் முரசமுமாக இருந்த அந்த இடத்தில் முந்திய இரவு மனிதர்கள் திடீர் திடீர் என்று அங்கு வந்ததுமே முரசடியில் மறைவதைக் கண்ணுக்கெதிரில் கண்டிருந்தும் இன்று அந்த ரகசிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள் அவர்கள்.
அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது பாட்டனார் சிரித்த சிரிப்பும், வாழ்த்திய வாழ்த்தும் நினைவு வந்தன. எதையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினால் அதைப் போல் பெரிய தோல்வி வேறெதுவும் இருக்க முடியாது. நீண்ட நேரம் முரசமேடையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாலும் வேற்றவர் எவரேனும் சந்தேகக் கண்ணோடு காண நேரிட்டும் விடும். இந்த மனவேதனையில் இருள் வேறு அவர்களுக்கு எதிரியாகி இருந்தது. ஒரு விதத்தில் அந்த இருளே துணையாகவும் இருந்தது. இறுதியில் முடிநாகன் தான் அந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தான்.
முரசமேடையின் பக்கச் சுவர்களிலே அவர்கள் தேடிய வழி அகப்படவில்லை. கீழே தரையில் வெண்கலத்தை மிதிப்பது போலத் திமுதிமு வென்று ஒலி அதிரவே முடிநாகன் கையால் கீழே தொட்டுத் தடவிப் பார்த்தபோது மணலுக்கு அடியில் கனமான மரப்பலகை தளமாக இருந்தது. அந்தப் பலகையை ஒவ்வொரு நுனியாகத் தொட்டுப் பார்த்தபோது நடுவில் ஐந்தாறு விரற்கடை இடைவெளியோடு பக்கத்துக்கு ஒன்றாய் இரண்டிடங்களில் மேலே தூக்குவதற்கு வாய்ப்பாக இரும்பு வளையங்கள் இடப்பட்டிருந்தன.
பக்கத்தில் மேடையருகே மணற் குவியலொன்றும் நிரந்தரமாக இருந்தது. ஒவ்வொரு முறை திறந்து மூடியபின்பும் அந்த இடம் தரைபோல் தெரிய வேண்டுமென்பதற்காக மேலே மணலை இட்டு நிரப்பிவிடுவார்கள் போலும் என்று அநுமானம் செய்ய முடிந்தது. மணலை இட்டு நிரப்பினாலும் தரைமேல் நடக்கும் போது இருக்கும் ஓசைக்கும் இந்த மரப்பலகைக்கு மேல் மணல் மூடிய இடத்தில் நடக்கும்போது இருக்கும் ஓசைக்கும் வேறுபாடு இருந்தது. இதில் நடக்கும்போது ஓசை அதிர்ந்தது.
"வழி தெரிந்துவிட்டது" - என்ற முடிநாகனுடைய காதருகில் உற்சாகமாகக் குரல் கொடுத்தான் சாரகுமாரன்.
"இருளில் மெல்லப் பேச வேண்டும். முடியுமானால் பேசாமலே காரியங்களைத் தொடர்வதும் நல்லது. இந்த விதமான வேளைகளில் மௌனமும் குறிப்பறிதலுமே பெரிய துணைகள். இருளுக்குள் ஆயிரம் செவிகள் இருக்கலாம். பதினாயிரம் கண்கள் இருக்கலாம்.
எனவே கவனமும் விழிப்புமாகக் காரியத்தை நிறைவேற்ற வேண்டும்" - என்று இளையபாண்டியனிடம் மிக மெல்லிய குரலில் காதருகே கூறி எச்சரித்து விட்டு இரும்பு வளையத்தைப் பற்றிப் பலகையைத் தூக்கத் தொடங்கினான். மற்றொரு பக்க வளையத்தைக் குறிப்பறிந்து சாரகுமாரன் மேலே தூக்கலானான். கீழே இருளில் படிகளைப் போல் மங்கலாகத் தெரிந்தன.
இருவரும் ஆவலோடு கீழிறங்கினர். பத்துப் படிகள் வரை வழி கீழே இறங்கியது. பதினோறாவது படியே இல்லை. கீழே பாறை இடறியது. பக்கவாட்டில் சுவர்போல் பெரிய கல் வழி மறித்தது. இருள் வேறு செறிந்திருந்தது. எனவே இருவரும் திகிலுடனும், பரபரப்புடனும் மேலே ஏறிவந்து அவசர அவசரமாகப் பலகையிட்டு அந்த வழியை மூடி மணலும் இட்டு நிரப்பினர். அது வழியாக இருக்க முடியாதென்று அவர்கள் இருவருக்கும் தோன்றியது.
சுரங்கங்களிலும், இரகசிய வழிகளிலும் - மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமலிருப்பதற்கென்று உண்மையான வழியை மறைப்பதற்காக, வழிகள் போன்று தெரியும் ஆனால் வழிகளாகாத பல போலி வழிகளை உண்டாக்கியிருப்பார்கள் என்பதை முடிநாகன் அறிவான்.
முரசமேடையின் நான்கு பக்கச் சுவர்களில் எந்தச் சுவர் அருகிலும் வழி இருக்கலாம். எந்தச் சுவர் அருகில் - எந்தச் சுவருக்கு கீழேயிருந்து வழி தொடங்குகிறதென்று காண மருளும்படியும் மயங்கும்படியும் - ஒவ்வொரு சுவரருகிலிருந்துமே உண்மையான வழி தொடங்குவது போல் பாவனை ஒன்று கட்டப்பட்டிருந்தது.
ஒரு நாழிகைப் போதுக்கு மேல் சோதித்துப் பார்த்த பின்பே உண்மைச் சுரங்க வழி தொடங்குமிடம் தெரிந்தது. தெற்குப் பக்கத்துச் சுவரையொட்டி முரசமேடையின் கீழே உண்மையான படி வழிகள் தொடங்கின. பலகையைத் தூக்கியதும், இரண்டு மூன்று வௌவால்கள் சிறகடித்து மேலே வந்தன. கீழேயும் படிகள் பெரிதாக நீண்டு கிடந்தன.
"மற்ற எல்லாப் பக்கமும் மயக்கு வழிகளாயிருந்து விட்டதனால் இதுவே உண்மை வழியாயிருக்க வேண்டும் இளையபாண்டியரே! அடிக்கடி திறந்து மூடுவதால்தான் இதில் வௌவாலாவது உயிர் வாழ்கிறது. மற்ற வழிகளில் இவை கூடப் பறக்கவில்லையே?" என்று கூறிக்கொண்டே படிகளில் இறங்கினான் முடிநாகன். சாரகுமாரனும் அவனைப் பின் தொடர்ந்தான். சிறிது தொலைவு சென்றதும் உண்மை வழி அதுவே என்பது முடிவாயிற்று.
"மேலே போய் - உட்புறம் நின்றபடியே பலகையை மூடிவிட வேண்டும். இல்லாவிட்டால் திறந்த வழியைப் பார்த்தே சந்தேகப்பட்டு யாராவது நம்மைப் பின் தொடரக்கூடும்" - என்று கூறிய முடிநாகன் மேலே வந்து உட்புறத்தில் நின்றபடியே பலகையை இழுத்துப் பொருத்தினான். பலகை மேற்புறமும் நன்றாகப் பொருத்திக் கொண்டதற்கு அடையாளமாக உள்ளே இருள் மேலும் கனத்துச் செறிந்தது. தடுக்கி விழாமல் கீழே இறங்கப் படிகளில் கவனமாக அடி பெயர்த்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது உள்ளே வௌவால் நாற்றமும், காற்றுப் புகாத இறுக்கமுமாக இருந்தன.
"இந்த முரசமேடையிலிருந்து நகரில் எந்தெந்த பகுதிகளுக்குப் போவதற்கெல்லாம் சுரங்க வழிகள் குடைந்திருக்கிறார்களோ? இந்த அரக்கர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்?" என்று சாரகுமாரன் கூறியபோது, "செய்தால் என்ன? அவர்கள் இரகசியம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அவர்களுக்கு முன்பாகவே உங்கள் பாட்டனார் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பார்.
எதிராளி 'நாம் அவனைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறோம்' - என்பதை உணரவோ, புரிந்து கொள்ளவோ விடாமல் - அவனைப் பற்றி நிறைய அறிந்து கொண்டு அமைதியாயிருப்பது தான் மிகப் பெரிய அரச தந்திரம். அதில் தங்கள் பாட்டனார் வல்லவராயிருக்கும் போது யார் எது செய்தால் தான் என்ன" என்று திடமாக மறுமொழி கூறினான் முடிநாகன்.
அந்தச் சுரங்க வழியில் வழிபோகும் திக்கையே குறியாக வைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறியபோது சில இடங்களில் கீழே பாறை போலிருந்தது. இன்னும் சில இடங்களில் மணற்பாங்காயிருந்தது. மேலும் சில பகுதிகளில் கற்படிகளே செதுக்கப்பட்டிருந்தன.
'வழி எங்கே போய் மேலே ஏறுகிறது? எங்கே போய் முடிகிறது?' என்று தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிய காரியமாயில்லை. எப்படியும் பொழுது புலர்வதற்குள் அந்த இருட்குகைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணமும் அவசரமும் அவர்களுக்கு இருந்தன.
அயலவர்களோ, பிறரோ ஒற்றறியும் எண்ணத்துடனோ, இரகசியங்களை அறிந்து சென்று வெளிப்படுத்தும் எண்ணத்துடனோ - இந்தச் சுரங்கங்களுக்குள் வந்தால் தெளிவாக எதையும் வெளிபடுத்த முடியாது குழப்பமடைய வேண்டும் என்பதற்காகவே, முடிவது போலவும் வெளியேறுவதற்கான வாயில் இருப்பது போலவும் தோன்றுமாறு, முடியாததும் வெளியேறுவதற்கான வாயில் இல்லாததுமான குழப்ப வழிகள் பல அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன.
மிகவும் ஆவலோடும், பரபரப்போடும் அருகில் போய் நிற்கும்போதுதான் அதற்கு மேல் அந்த வழி தொடரவில்லை என்பது தெரியவரும். இருளும், காற்று அதிகமின்மையும் இடர் தந்த சூழ்நிலையில் குழப்பம் விளைவிக்கும் போலி வழிகளை ஒவ்வொன்றாகத் தவிர்த்து முன்னேறினார்கள் அவர்கள்.
"புறநகரிலே எங்காவதொரு பகுதியில் போய் இந்த வழியின் மற்றொரு நுனி முடியுமென்று தோன்றுகிறது!" என்பதாக முடிநாகன் தெரிவித்தான்.
"நிச்சயமாக எனக்குத் தோன்றுகிறது - இங்கிருந்து வெளியேறிச் செல்லுகிற வழிகள் இரண்டாக இருக்கும். பல காரணங்களை உத்தேசித்து இத்தகைய அந்தரங்கச் சுரங்கங்களில் வெளியேறுகிற வழிகளை மட்டும் இரண்டாக அமைத்திருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது. ஆகையால் இத்தகைய பொய்வழிகளுக்கும் நடுவே எங்கோ இரண்டு உண்மையான வழிகளும் இருக்க வேண்டுமென்பது என் அநுமானம்.
இந்த இரவு விடிவதற்குள்ளேயே அந்த இரண்டு வழிகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியுமா, முடியாதா என்பதை மட்டுமே நாம் சிந்தித்தாக வேண்டும்" என்று சாரகுமாரன் உறுதியாகத் தெரிவித்தான். இன்றே இறுதிவரை முயன்று முடிவு தெரிந்து கொண்டு போவதா, அல்லது நாளை மறுபடியும் மேலே தொடர்வதா? என்பதுபற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு சிறிய விவாதம் மூண்டது.
"இப்போது திரும்ப எண்ணினாலும் மீண்டும் வழி தொடங்கிய இடத்தை அடைந்து மேலே முரசமேடைக்குக் கொண்டு போய்விடும் உண்மை வழியைக் கண்டுபிடிக்கச் சில நாழிகைகள் ஆகும். இவ்வளவு நேரம் முயன்ற முயற்சியும் வீண். வந்த வழியே திரும்புவதால் ஒரு பயனுமில்லை. மறுபடியும் நாளைக்குத் தேடத் தொடங்கும்போது - புதிதாகத் தேடுகிறவர்களைப் போலவே முதலிலிருந்து தேட வேண்டும்."
"எல்லாவற்றையும் சிந்திக்கும்போது வந்த வழியில் திரும்பி வெளியேறுவதைவிட இன்னும் சில நாழிகைகள் செலவழித்தாலும் எதிர் வருகிற புதுவழியில் திரும்புவதுதான் நல்லது. வந்த வழியே திரும்பி வெளியேறுகிற நேரத்தில் நாம் எதிர்பாராதபடி இருள் பிரிந்து விடிகிற வேளையாயிருந்துவிட்டாலோ அவுணர் வீதி நடுவில் முரசமேடைக்கருகே யாரிடமாவது நாம் அகப்பட்டுக் கொள்ள நேரிடும்.
இந்த இருட்குகைக்குள் இரவும் தெரியவில்லை. பகல் வந்துவிட்டதா இல்லையா, என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. உறுதியாக எதிரிகளின் கேந்திரத்திலிருக்கிறதென்று நமக்கே தெரிந்த அவுணர்வீதியைத் திரும்ப வெளியேறுமிடமாகத் தேர்ந்தெடுப்பதைவிட, எங்கிருக்கிறதென்று நமக்கே தெரியாத புதிய வெளியேறும் வழியைக் குறிக்கோளாகக் கொண்டு நாம் முன்னேறுவது நல்லது" என்று சாரகுமாரன் பிடிவாதமாகக் கூறவே முடிநாகனும் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று.
தேடிக்கொண்டிருந்த பகுதியில் வெளியேறுகிற மறுவழி மிக அருகிலிருப்பது போல இருவர் மனத்திலும் ஒரு நம்பிக்கை உணர்வு வேறு தோன்றத் தொடங்கியது. பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைகள் பொய்த்துப் போவதில்லை. துன்பங்களின் நீண்ட வரிசைக்குப் பின்னால் நம்பிக்கை மயமாக எண்ணம் வருகிறபோதே வெற்றியும் வருகிறதென்று ஒப்புக் கொள்ளலாம். அவர்களுடைய நம்பிக்கைக்குக் காரணமுமிருந்தது.
அதுவரை காற்றே நுழையக் காணாத சுரங்கப் பகுதியில் இலேசாக ஒரு நூலிழை காற்றுச் சிலுசிலுத்தது. அந்தப் புதிய காற்று நுழைந்த வழியை ஆவலோடு தேடினார்கள் அவர்கள். அப்படித் தேடியபோது வெற்றியின் மற்றொரு நல்வரவாக ஒரு நூலிழை ஒளிக்கதிரும் எதிரே திசை தெரியாத எங்கோ ஒரு பகுதியிலிருந்து அவர்களை நோக்கி நீண்டது. இருவருக்கும் நம்பிக்கை வந்தது.
-----------
12. அந்த ஒளிக்கீற்று
இருளில் எங்கிருந்தோ எதிர்வந்த அந்த ஒற்றை ஒளிக்கீற்றே கரைகாணாப் பேரிருளுக்குப் பின் விடிந்து விட்டாற் போன்ற பிரமையை உண்டாக்கிற்று அவர்களுக்கு.
"மற்றொருவருடைய ஆட்சிக்குட்பட்ட கோ நகரத்தில் இப்படியொரு இருட்குகை வழியைப் படைக்கும் துணிவு வர வேண்டுமானால் இந்த அவுணர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்க வேண்டும்!" என்று வினாவிய இளையபாண்டியனுக்கு முடிநாகனிடமிருந்து விளக்கமான மறுமொழி கிடைத்தது.
"தங்கள் பாட்டனார் இந்த அழகிய புதுக் கோ நகரத்தைப் படைக்கும் போது - கட்டிடங்களைக் கட்டுவதற்கும், வானளாவிய மதிற்சுவர்களை மேலெழுப்புவதற்கும், அகழிகளைத் தோன்றுவதற்கும் - உடல் வலிமைமிக்க பணியாட்களாகக் கிடைத்தவர்கள் இந்த முரட்டு அவுணர்களும், குறும்பர்களும், கடம்பர்களுமாகத்தான் இருந்தனர். அந்த நிலையில் இவர்களை நம்பியும் ஆக வேண்டியிருந்தது. முழுமையாக நம்பவும் முடியவில்லை.
உடனிருப்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகத் தோன்றவில்லை. என்றாலும் மற்றவர்கள் எல்லாரும் அறிய அவர்களை விரோதிகளாகக் கருதுவதோ, பகைவர்களாக நிரூபித்து முடிவு கற்பிப்பதோ அரச தந்திரமாகாது."
"'நம்மை எதிர்க்கும் ஒரு விரோதிக்கு நம்முடைய - மற்ற விரோதிகள் எல்லாம் யார் யாராக இருப்பார்கள் என்று அநுமானம் செய்யும் வாய்ப்பைக் கூடக் கொடுக்கலாகாது' என்றெண்ணும் இயல்புடையவர் தங்கள் பாட்டனார். அதனால் தான் கோ நகரத்தை அமைக்கும் பணியை இவர்களிடம் விட்டிருந்தார்.
ஆனால் இவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு - இப்படி இரகசிய வழிகளையும் கரந்து படைகளையும் சுருங்கை மார்க்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எங்கெங்கே என்னென்ன செய்திருப்பார்கள் என்பதெல்லாம் அவருக்கு மிக நன்றாகத் தெரியும்."
பேசிக் கொண்டே அவர்களிருவரும் அந்த ஒளிக் கீற்றுப் புறப்பட்ட இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்கிப் பார்த்ததும் தான் அந்த இடத்தில் அவர்கள் அடைந்த வழியின் மற்றொரு நுனி தேர்க்கோட்டத்தின் உள்ளே மரங்களடர்ந்த புதர் ஒன்றினருகே கொண்டு போய்விடுகிறது என்பது தெரிந்தது.
சிலுசிலுவென்று உள்ளே நுழைந்துவந்த காற்றும் அந்த இடத்திலிருந்து புறப்பட்டதுதான் என்று தெரிந்தது. வழியின் முடிவில் தேர்க்கோட்டத்துப் புதரருகே மதிற்சுவரை ஒட்டினாற்போல - மேலே ஏறி நின்றபோது இன்னும் பொழுது புலரவில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.
'வழியைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் விடிந்துவிடுமோ' - என்று உள்ளே இருள்வழியில் தோன்றிய பரபரப்பும் பயமும் வீண் பிரமையே என்பதனை இப்போது அவர்கள் இருவரும் உணர்ந்தனர். உள்ளே இறங்கி, அந்தச் சுரங்கவழி போய் முடிகிற மற்றோர் இடத்தையும் கண்டுபிடிக்கப் போதுமான காலமும் வாய்ப்பும் இருக்குமென்று தோன்றியது. எஞ்சியுள்ள காலத்தை வீணாக்காமல் செயல்படலாமென்று இளையபாண்டியனும் முடிநாகனும் எண்ணினர்.
"எதற்கும் இந்தப் புதரருகே இந்தப் பகுதி எங்கிருக்கிறதென்று அடையாளம் தெரிகிறார் போல எதிர்புறமுள்ள மதிற்சுவரில் ஒரு குறியீடு செய்து வைப்பது நல்லது. முரசமேடை வழியிலிருந்து இங்கே புறப்பட்டு வராமல் - இங்கிருந்து முரசமேடைப் பகுதிக்குப் போக வேண்டிய அவசியம் என்றாவது வருமானால், இங்கு இந்த மதிற்சுவரில் உள்ள குறியீட்டைப் பார்த்து வழி தொடங்குமிடத்தை அறிய முடியும்" என்று முடிநாகன் கூறிய யோசனையை அப்படியே ஏற்றுச் செயல்புரிந்தான் இளையபாண்டியன்.
அந்தப் புதருக்கு நேர் எதிரே மதிற்சுவரில் 'வழி இங்கே விளங்கும்' - என்பதை மிகவும் குறிப்பாக உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற முறையில் விளக்குப் போல் உருத்தோன்றக் கோடுகள் கீறிவைத்தான். பெரும் பரப்பாக விரிந்துகிடந்த தேர்க்கோட்டப் பகுதியில் அது எந்த இடம் என்பதையும் நன்றாகச் சுற்றிப் பார்த்துத் தெளிவாக நினைவு வைத்துக் கொண்டார்கள் அவர்கள்.
முரசமேடை வழியின் மற்றோர் நுனியைக் காண்பதற்காக அவர்கள் மீண்டும் அந்த வழியே உள்ளே இறங்கிய போது, "எனக்கொரு சந்தேகம் முடிநாகா! இருளோ இன்னும் புலரவில்லை. வழி முடிகிற இந்த இடத்திலோ செடியும், கொடியும், புதருமாயிருக்கிறது. அப்படியிருக்கையில் நாம் உள்ளே கண்ட ஒளிக்கீற்று எங்கிருந்து வந்திருக்க முடியும்? அவ்வளவு தெளிவான ஒளி இந்த இருளில் எங்கிருந்தும், எப்படியும் வருவதற்குச் சாத்தியமில்லையே?" - என்று ஒரு ஐயப்பாட்டைத் தெரிவித்தான் இளையபாண்டியன். இது நியாயமான சந்தேகமென்றே முடிநாகனுக்கும் தோன்றியது.
விளக்காகவோ, சுரங்கத்தின் மேற்புறத்தில் எங்கிருந்தாவது வருகிற ஒளியாகவோ அது இருந்திருக்க முடியாது என்று அவர்களுக்குள் ஓர் உறுதி ஏற்பட்ட பின், முன்பு நம்பிக்கை ஒளியாகத் தோன்றியிருந்த அதே ஒளியைப் பற்றி இப்போது சிந்தனையும், சந்தேகமும், கற்பனைகளும் எழுந்தன. இப்படி அந்த ஒளியைப் பற்றிய சந்தேகத்தோடும் சிந்தனைக் கலவரங்களுடனும் - கீழே இறங்கிச் சென்றதும், மறுபடி திரும்பிச் செல்லுகிற வழியில் ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை போய் நின்று கொண்டு திரும்பிப் பார்த்தார்கள் அவர்கள்.
மீண்டும் அந்த ஒளி சுடரிட்டது. இருவரும் உடனே விரைந்து திரும்பி அந்த ஒளி வந்த இலக்கைக் குறிவைத்து நடந்தார்கள். முரசமேடையிலிருந்து தேர்க்கோட்டத்துக்குப் போய் மேலேறுகிற வழியில் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைவரைதான் அந்த ஒளி தெரிந்தது. அதற்குப் பின் அந்த ஒளியைப் பற்றி நினைக்கவே வழியின்றி மேலேறிச் செல்லும் படிகளைக் கால்கள் நன்றாக உணர முடிந்தது.
'சுரங்க வழி முடிந்து மேலே ஏறிச் செல்லும் வழி இந்தப் பகுதியில்தான் இருக்கிறது' - என்பதை உள்ளே நடந்து வருகிறவர்கள் இருளிலும் தடுமாறாமல் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு என்பதாக நன்றாக உய்த்துணர முடிந்தது. முடிநாகனும் இளையபாண்டியனும் அந்த ஒளிக்கீற்று எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விரைந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட அநுபவம் விந்தையானதாக இருந்தது.
அதை அறிந்து கொள்ளும் ஆவல் குறைவதாய் இல்லை. 'இதோ அருகில் நெருங்கிவிட்டோம். இன்னும் நொடிப் பொழுதில் இந்த ஒளியைப் பற்றிய உண்மை நமக்கு விளங்கிவிடும்' - என்று நினைத்த கணத்திற்கு அடுத்த கணமே அந்த ஒளி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தோ திசை தப்பியோ போய்க் கொண்டிருந்தது. நீண்ட நேரத் தடுமாற்றத்திற்குப் பின் மிக எளிமையான அந்த உண்மையை முடிநாகன் தான் கண்டுபிடித்தான்.
கபாடபுரத்தின் பெயர்பெற்ற இரத்தினாகரங்களில் எடுத்த ஒளி நிறைந்த மணி ஒன்றை அந்த இடத்தில் சுவரில் பதித்திருந்தார்கள் அவுணர்கள். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் குறிப்பிட்ட தொலைவுவரை 'பளிச்சிடும்'படி அந்தக் கல் பதிக்கப்பட்டிருந்தது. அவுணர்களின் சாதுரியமான இந்த வேலைப்பாட்டை இளையபாண்டியன் மிகவும் வியந்தான். அந்த மணி பதித்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது. கண்டுபிடித்து முடித்ததும் வெற்றிப் பெருமிதத்தோடு அடுத்த வழியைத் தேடிப் புறப்பட்டார்கள் அவர்கள்.
அடுத்த வழி பிரிகிற இடத்திலும் இதைப் போல் ஒரு மணி சுடர் பரப்பியது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடும் இருந்தது. தேர்க்கோட்டத்து வழியில் பதிக்கப்பட்டிருந்த மணி சிவப்புக் கலந்த ஒளிச் சுடரை உமிழ்ந்தது என்றால் - மற்றொரு வழித் தொடக்கத்தில் பதிக்கப்பட்டிருந்த மணி நீலங் கலந்த ஒளிச் சுடரை உமிழ்ந்து கொண்டிருந்தது. அந்த இரண்டாவது வழி புறம்போய் முடிகிற இடம் எது என்பதை அறிந்து கொள்வதிலும் அவர்கள் அதிக ஆவல் காட்டினார்கள்.
முதல் வழி தேர்க்கோட்டத்துப் புதரில் மதிலருகே வெளியேறுவதாய் அமைந்திருப்பதனால் இரண்டாவது வழி வேறு திசையில் வேறு பகுதியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்பதை அநுமானம் செய்ய முடிந்தாலும் பிரத்யட்சமாகக் கண்டு முடிவு தெரிந்து கொள்கிறவரை அந்த ஆவல் அடங்கிவிடாது போலிருந்தது.
"அசுர சாதுரியம் என்பார்களே; அதற்கு ஏற்றாற் போலல்லவோ காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள்?" என்று அந்த உள் வழிகளையும் அவற்றின் பிரிவுகளையும் வியந்தான் சாரகுமாரன். மற்றோர் வழி பிரிகிற இடத்தில் மிக அருகே கடல் அலைகளின் ஓசையைக் கேட்டு அந்த இடம் கடற்கரைக்குச் சமீபமாக இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. உப்புக் காற்றும் மெல்ல மெல்ல உட்புகுந்து அலைவதை அவர்கள் உணர்ந்தனர்.
இறுதியில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு பாறைச் சரிவில் வெளியேறுகிறாற் போல் அமைந்திருந்தது அந்த வழி. உள்ளேயிருந்து வருகிறவனுக்குத்தான் வெளியேறியாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் அதன் வழியே வெளியேற முடியுமென்பது தெரியுமே ஒழியப் புன்னைத் தோட்டத்தின் பக்கமிருந்தோ, வெளியே கடற்புறத்திலிருந்தோ பார்க்கிறவனுக்கு அந்தப் பாறையருகிலிருந்து அவுணர் வீதி முரசமேடைவரை போய்ச் சேருவதற்கேற்ற சுரங்க வழி ஒன்று உள்முகமாகச் செல்லும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாதபடி இருந்தது.
பாறைக்கு மிக அருகே கடலில் படகுகள் நிற்கவும் புறப்படவுமான சிறு துறை ஒன்றிருந்தது. தென்பழந்தீவுகளிலிருந்து இரகசியமாகத் தேடி வருகிறவர்களை அவுணர் வீதிக்கு அழைத்துச் செல்லவும், அதே போல அவுணர் வீதியிலிருந்து தென்பழந்தீவுகளுக்குக் கடத்திக் கொண்டுபோக வேண்டியவற்றைக் கடத்திக் கொண்டு போகவும் இந்த இரண்டாவது வழி பெரிதும் பயன்படும் என்று தோன்றியது.
பொருத்தமறிந்து இடமறிந்து அவுணர்கள் இந்த வழியை அமைத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சியை வியப்பதைத் தவிர வேறொன்றுமே செய்யத் தோன்றவில்லை. படிகளில் ஏறி வெளியே பாறைச் சரிவில் கால் வைத்ததும் எதிரே பேயறைந்தாற் போலக் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் தெரிந்தது. முன்பின் அந்த வழிகளில் வந்து பழகாத புதியவர்களுக்குத் திடீரென்று கடல் அந்தப் பாறையையும் அதில் நிற்கும் தன்னையும் விழுங்க வருவதுபோல் அச்சம் தோன்றும்படி செய்யவல்லது அந்த இடம்.
விடியல் வேளை நெருங்கிக் கொண்டிருந்ததனால் சாரகுமாரனும், முடிநாகனும், அரண்மனைக்குத் திரும்ப எண்ணினர். அந்த வைகறையின் சுகமான சீதளக் காற்றில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் பூத்திருந்த புன்னைப் பூக்களின் நறுமணம் எல்லாம் கலந்து வீசியது.
எங்கோ ஓரிரு காகங்கள் கரையத் தொடங்கியிருந்தன. அந்தக் காற்று, அதில் கலந்திருந்த புன்னைப் பூ வாசனை, எல்லாம் சேர்ந்து கண்ணுக்கினியாளை நினைவூட்டின. நகர் பரிசோதனைக்காகப் புறப்பட்ட மாறுகோலத்திலிருப்பதே தனக்கும் முடிநாகனுக்கும் அப்போது ஒரு நன்மையாயிருப்பதை இளையபாண்டியன் உணர்ந்தான். முடிநாகனோடு அவன் புன்னைத் தோட்டத்திற்குள் புகுந்த போது மெல்ல மெல்ல விடியத் தொடங்கியிருந்தது.
-----------
13. நெய்தற்பண்
புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு - தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து - யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற்பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஓர் ஒலி ஒற்றுமை இருக்கும் போலும்.
கவிகளின் சிந்தனையில் கடல் அலையொலி சோகத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றியிருக்கிறது. குழலிசையிலும், கடலலையிலும், மாலை வானின் செக்கர் நிறவொளியிலும், உலகில் முதல் கவிஞனே சோகத்தைத்தான் கண்டிருக்க முடியும் போலிருக்கிறது. அதனால்தான் நெஞ்சின் சோகத்துக்கு எதிரொலிகளாக அமைய முடிந்தவற்றை வரிசைப்படுத்தும் போதெல்லாம் இவற்றையே ஒன்று சேர்த்துத் தொகுத்து வரிசைப் படுத்தியிருக்கிறார்கள்.
சுவை, ஒளி, உறு, ஓசை, மணம் இவற்றிற்கும், மனிதனுடைய சிந்தனைக்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டும். ஒரு சுவையோடு உறவு கொள்ளும் போதுகளில் எல்லாம் முதன் முதலாக அந்தச் சுவையைக் கண்ட வேளையின் நினைவுகள் வருகின்றன. ஓர் ஓசை, ஒரு மணம், ஓர் உணர்வு, எல்லாமே அதன் முதல் அநுபவத்தைச் சார்ந்த முதல் நினைவுகளுடனேயே வருகின்றன.
புன்னை மரத் தோட்டத்தின் நறுமணம் அதே சூழ்நிலையில் அதே இடத்தில் முன்பு கண்ட கண்ணுக்கினியாளின் - ஆடல் பாடலை நினைவூட்டியது. இப்போது வெகு தொலைவிலிருந்து செவியை அணுகும் அந்த நெய்தற்பண்ணும் அவளுடைய குரலைப் போலவே இருந்தது.
எதிரே தீயணைந்து வெறும் புகைமட்டும் எழும் கலங்கரைவிளக்கத்துப் பாறையில் அந்தப் புகை எழுச்சியும் கூட ஒரு மோனமான சோகத்தைக் குறிக்கும் அடையாளம் போல் தோன்றியது. நெஞ்சின் இரங்கலைத் தத்ரூபமாக எடுத்தியம்ப நெய்தற்பண்ணைவிட வேறு சிறந்த இசையில்லை. இப்போது இந்த வைகறையில் எங்கிருந்தோ தொலைதூரத்துக் கந்தர்வ உலகிலிருந்து வருவதைப் போன்று மெல்லிய ஒலியலைகளாக வரும் இந்தக் குரலோ - 'இது நெய்தற்பண்' - என்று கண்டுபிடிக்க முடிந்ததை விட 'நெய்தற்பண் இப்படித்தான் இருக்க வேண்டும்' - என்று வரையறுக்கும் அழகிய எல்லையாகவே கொள்ளத்தக்கதாயிருந்தது.
அருங்காலையில் மங்கலான ஒளியில் கடலருகே புன்னைப் பூ மணக்கும் சூழலில் வந்த இசைக் குரலில் மனமுருகி நடந்து கொண்டிருந்த சாரகுமாரனுக்கு வேறு கடமைகளை நினைவூட்டலானான் முடிநாகன்.
"முரசமேடைக் கரந்து படையிலிருந்து செல்லும் இரகசிய வழிகள் எங்கெங்கே போய் முடிகின்றன என்று கண்டு பிடித்துவிட்டதற்காக மட்டுமே முதிய பாண்டியர் நம்மைப் பாராட்டிவிடமாட்டார்.
அரச குடும்பத்து மதிநுட்பம் சாதாரண ஒற்றர்களைப் போல் புறச் செய்திகளை அறிவதற்காக மட்டும் பயன்படக்கூடாது. 'தோற்றம் அதன் பின்னுள்ள கருத்து கருத்தின் பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து - இறுதியாக அவை பற்றிய நம் அநுமானங்கள் - எல்லாவற்றிற்கும் மேலாகத் தொகுத்துணரும் ஞானம்' - ஆகிய அனைத்தும் வேண்டுமென்று கூறியிருக்கிறார் பெரியவர்.
வெறும் தைரியத்தையும் ஆர்வத்தையும் கண்டு அவர் ஏமாறமாட்டார். ஆகவே இந்த முரசமேடைக்குக் கீழே உள்ள வழிகள் பற்றி இன்னும் அதிக நுணுக்கமான உண்மைகள் எவையேனும் நம் கவனத்திலிருந்தோ, சிந்தனையிலிருந்தோ தப்பியிருந்தால் அவற்றையும் கவனித்துச் சிந்திக்க வேண்டும் இளையபாண்டியரே!" என்று காதில் வந்து இழையும் நெஞ்தற்பண்ணை இரசிக்க முடியாமல் உடன் பேசிக் கொண்டே வந்த முடிநாகனின் பேச்சு சாரகுமாரனுக்கு வெறுப்பூட்டினாலும் கேட்டுத் தீர வேண்டியிருந்தது.
சிகண்டியாரின் இசைக்கலையின் மிக உயரிய நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்தவனும், அந்தக் கலையை உயிரினும் மேலானதாக மதிப்பவனும் ஆகிய சாரகுமாரனோ நெய்தற் பண்ணை இதுவரை வேறெவரும் இத்தனை நெஞ்சுருகப் பாடிக் கேட்டதில்லை. நேரம் வேறு பொருத்தமாக அமைந்து விட்டது. அதனாலும் அந்த இசையின் மதிப்புப் பன்மடங்காகப் பெருகிவிட்டது.
அருகில் நெருங்க நெருங்க அவனுடைய சந்தேகத்துக்குத் தெளிவு கிடைப்பதுபோல் அந்தக் குரல் அவளுடையது என்றே தெரிந்தது. இனிமையின் நீரொழுக்குப் போன்ற இடையறாத அந்தச் சொல் மதுரம் அவளுக்கே சொந்தமானதல்லவா? இடமும் பாணர்கள் தங்கியிருந்த புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியாயிருக்கவே அவன் தன் அநுமானத்தில் அதிக நம்பிக்கை கொள்ள வாய்ப்பிருந்தது.
அப்போது குரலுக்குரியவளின் பொலிவு நிறைந்த முகமும் அவனுள் நினைவில் தோன்றியது. முகத்தின் அழகைக் குரலும், குரலின் அழகை முகமும் மிகுவிப்பனவாயிருந்தன.
"ஏதேது? இசை, நாடகம், போன்ற கலைகள் வெறும் விருப்பத்தைத்தான் பெருக்கும் என்று தங்கள் பாட்டனார் கூறியது பொய்யாயிராது போலிருக்கிறதே?" என்று குறும்புச் சிரிப்போடு மறுபடி முடிநாகன் குறுக்கிட்ட போது இளையபாண்டியனுக்குக் கோபமே வந்துவிட்டது.
ஒரு கணம் ஒன்றும் மறுமொழி கூறாமல் மௌனமாக திரும்பி முடிநாகனை உறுத்துப் பார்த்தான் சாரகுமாரன். முடிநாகனின் பேச்சு அவ்வளவில் நின்று போயிற்று. அமைதியாக இளைய பாண்டியரைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. அவன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் - இசைக்குரல் மிக அருகே ஒலிப்பது போல் தோன்றவே தயங்கி நின்று அந்தப் புன்னைமரக் கூட்டத்தில் சுற்றும் முற்றும் கவனிக்கலானாளன் சாரகுமாரன்.
அங்கே சிறிது தொலைவில் ஒரு புன்னை மரத்தினடியில் வெண்பட்டு விரித்தாற் போன்ற மணற்பரப்பில் அந்தக் காட்சி தெரிந்தது. கண்ணுக்கினியாள் தான் மணற்பரப்பில் ஒசிந்தாற் போல அமர்ந்து வேறு யாரோ இரண்டு பெண்களுக்குப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கருகே நீர் தேங்கியிருந்த சிறு பள்ளம் ஒன்றில் நெய்தல் பூக்கள் நிறையப் பூத்திருந்தன. அந்தப் பள்ளத்திற்கு அப்பால் பசுமைச் சுவரெடுத்தது போல் தாழை மரங்கள் புதராய் மண்டி வளர்ந்திருந்தன. மணற் பரப்பில் முத்துதிர்த்தாற் போலவும் தற்செயலாய் நேர்ந்த அவளுடைய அந்த இசையரங்கிற்கு ஓர் அலங்காரம் செய்தாற் போலவும் புன்னைப் பூக்கள் நிறைய உதிர்ந்திருந்தன.
தங்களுடைய திடும்பிரவேசத்தினால் அவள் தனது பாடலை நிறுத்திவிடக்கூடுமோ என்றஞ்சிய சாரகுமாரன் - நின்ற இடத்திலிருந்தே மறைந்து கேட்கலானான். தனிமையையும், தான் எக்காரணத்தைக் கொண்டும் தயங்கவோ தளரவோ, அவசியமில்லாதவர்களுக்கு முன் பாடுகிறோம் என்ற உணர்வையும் ஒரு விநாடி மாற்றிவிட்டால் கூட அந்தப் பெண்ணின் அழகும் மாறிவிடும்.
அது தெரிந்துதான் அவள் பாடி முடிகின்றவரை மறைந்து நின்று செவிமடுத்த பின்பு நேரில் எதிரே போய் நின்று பாராட்டலாமெனக் கருதியிருந்தான் இளையபாண்டியன். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் நகரணி மங்கல நாளுக்காக வந்து பாணர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து தன் தோழிகளோடு சிறிது தொலைவு விலகி வந்து இருந்து பாடும் காரணத்தாலேயே அவள் தனிமையை நாடி வந்திருப்பதை உணர முடிந்தது.
பாடி முடிந்தபின் அவள் மணற்பரப்பில் உதிர்ந்திருந்த புன்னைப் பூக்களைத் தொகுக்கத் தொடங்கினாள். அவள் தோழிகளோ நீரில் இறங்கி நெய்தற் பூக்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.
குனிந்து புன்னைப் பூக்களைத் தொகுத்துப் பொறுக்கிக் கொண்டிருந்தவள் அருகே மணற் பரப்பில் இலேசாகத் தெரியத் தொடங்கியிருந்த நிழலைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்த போது சாரகுமாரன் எதிரே புன்னகை பூத்தபடி நின்றான். முதலில் அவளுக்குத் திகைப்பாயிருந்தது. அவனுடைய நகர் பரிசோதனைக் கோலத்தைப் பிரித்துக் கணித்துத் தனியாக அவனை மட்டும் அவள் உணர்ந்து கொள்ளச் சிறிது நேரம் ஆயிற்று.
"ஓ! கபாடபுரத்து முத்து வணிகர் அல்லவா நீங்கள்?" என்று அவள் வினாவிய குரலில் குறும்பு நிறைந்திருந்தது.
"இந்த அதிகாலையில் இப்படி நெஞ்சு நெகிழ நெய்தற் பண் பாடும்படி அத்தனை பேரிரக்கம் என்னவோ தெரியவில்லையே?" என்று சாரகுமாரனும் குறும்புடனேயே வினாவினான்.
"உணர வேண்டியவர்களுக்குக் கூடப் புரியாத இரக்கத்தினால் பயன் தான் என்ன?"
"புரியவில்லை என்று நீ எப்படி சொல்ல முடியும் பெண்ணே?"
"புரிந்திருந்தால் வினாவியிருக்கக் கூடாது."
"வினவினால் சம்பந்தப்பட்டவர்கள் வாய்மொழியாலேயே மெய்யைத் தெரிந்து கொள்ளலாம் என்று நோக்கமாயிருக்கலாம்..."
"யார் கண்டார்கள்? கூசாமல் பொய் சொல்லுகிறவர்களுக்கும் கல்நெஞ்சுக்காரர்களுக்கும் எந்த நோக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்!"
"கல்நெஞ்சாயிருந்தால் உன்னுடைய நெய்தற் பண்ணும் உருக்க முடியாமல் அல்லவா போயிருக்கும்?"
"உருக்கியிருக்கிறது என்பதுதான் என்ன நிச்சயம்?" என்று கேட்டுவிட்டு ஆவலோடு அவன் முகத்தை ஏறிட்டு நோக்கினாள் கண்ணுக்கினியாள்.
அவள் தோழிகள் இன்னும் நெய்தற்பூப் பறிப்பதிலிருந்து மீளவில்லை. முடிநாகனும் முன்பு இருவரும் நின்ற இடத்திலேயே பின் தங்கிவிட்டான்.
"உன்னுடைய இசை ஏழுலகையும் வெற்றி கொள்கிற போது நான் எம்மாத்திரம்?" என்று அவளருகே நெருங்கி நாத்தழுதழுக்கக் கூறினான் சாரகுமாரன். அவள் முகத்தில் நாணமும் புன்னகையும் கலந்ததிலே பெருமிதம் இடம் தெரியாது கரைந்தது.
--------------
14. எளிமையும் அருமையும்
அந்த வைகறை வேளையில் புன்னைத் தோட்டத்தின் குளிர்ந்த சூழ்நிலையில் கண்ணுக்கினியாள் ஓர் அழகிய தேவதைபோற் காட்சியளித்தாள். அவளுக்கு இயற்கையாகவே நிரம்பியிருந்த பேரழகு போதாதென்றோ என்னவோ அவனைக் கண்டு நாணிய நாணம் அவள் அழகை இன்னும் சிறிது அலங்காரம் செய்தது.
பெண்ணுக்கு அவள் தேடி எடுத்து அணியாமல் தானாகவே அவள் மேல் படர்ந்து அலங்கரிக்கும் அழகு ஒன்று பருவகாலத்தில் வருவதுண்டு. அதுதான் நாணம். அதுதான் பிறக்கும்போது அவளால் தனக்குத்தானே சூட்டப்பட்டுக் கொண்டு வரப்படுகிற பிறவி அணிகலன்.
பிறந்த பிறகு கற்பிக்கப்படாமல் உயிரோடு ஒட்டிக் கொண்டு வரும் உணர்வுகள் எல்லாவற்றிலுமே அழகு உண்டுதான். அந்த அழகையும் - அவளையும் தொடர்புபடுத்தி அப்போது சிந்தித்தான் சாரகுமாரன். அவனுடைய சிந்தனை அவளை வியக்கும் சொற்களாக வெளிப்பட்டது.
"எல்லா நாட்களும் பொழுது புலர்ந்தாலும் மிகச் சில நாட்கள் யாரோ மிகச் சிலருக்குப் பாக்கியத்தோடு பொழுதுகள் புலர்கின்றன. என்னுடைய நாள் இன்று பாக்கியத்தோடு விடிந்திருப்பதாக நான் நினைக்கிறேன் பெண்ணே! நான் இப்போது சற்றுமுன் கேட்டதும் அழகு. இதோ என் முன் காண்பதும் அழகு."
இப்படி அவன் கூறிக்கொண்டே வந்தபோது கடற்புரத்திலிருந்து பலமாக வீசிய காற்றினால் மேலே இருந்த புன்னை மரக்கிளைகள் ஆடி அசைந்ததன் காரணமாகக் கொட்டினாற் போல ஒரு கொத்துப் பூக்கள் கண்ணுக்கினியாள் மேல் உதிர்ந்தன. பூக்கள் வேகமாக உதிர்ந்ததற்கே வருந்தினாற்போல் காற்றைக் கடிந்து கூறியவாறே விலகினாள் அவள்.
"ஏன் விலகுகிறாய்? மலரை நோக்கி மலர்கள் உதிர்வதுதானே இயல்பு?"
"ஆகா! கேட்பானேன்? கபாடபுரத்து முத்து வணிகர்களுக்கு எது வருகிறதோ, வரவில்லையோ, நன்றாகப் புகழ வருகிறது. இனிமேல் உங்களை முத்து வணிகரென்று சொல்வது கூடத் தவறு. அன்று முத்து வணிகரென்று சொல்லிக் கொண்டீர்கள். அதற்குப்பின் ஒருநாள் அரண்மனைக் கொலுமண்டபத்தில் பார்த்தேன். பின்னொரு சமயம் தேர்க்கோட்டத்துக் கூட்டத்தில் உலாவில் பெரிய பாண்டியருடைய தேருக்கு அடுத்த அலங்காரத் தேரிலிருந்து இறங்கி வந்தீர்கள்.
இன்று காலையிலோ - அவையெல்லாம் பொய்யாக இப்போது இப்படிப் பழந்தீவுக் கொலை மறவர்களான அவுணர்களைப் போல் கோலத்தில் வந்து நிற்கிறீர்கள்... நீங்கள் யாரோ ஒரு மாயா விநோத மனிதராயிருக்க வேண்டும்... நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்பவை பொய்கள். அந்தப் பொய்கள் உங்களைப் பற்றிய உண்மையைத் தெரிவித்துவிடும் அளவுக்குப் பலவீனமான பொய்களாயிருக்கின்றன."
"நீ குற்றம் சுமத்துவது போல் பொய்கள் எவற்றையும் நான் கூறவில்லை என்பதை மறுபடியும் வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன் பெண்ணே..."
"அப்படியானால் பொய்க்கும், மெய்க்கும், இலக்கணமோ வேறுபாடோ தாங்கள் தான் இனிமேல் எனக்குச் சொல்ல வேண்டும். உண்மை அல்லாதது பொய்யென்றும் பொய் அல்லாதது உண்மை என்றும்தான் உலகியல் ரீதியாக என் பெற்றோர்களிடமிருந்து நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்."
"நீ தெரிந்து கொண்டிருப்பது வாதத்திற்குப் பொருந்தலாம்; ஆனால் நியாயத்திற்குப் பொருந்தாது. உண்மையைப் போல் தோன்றும் பொய்களும் உண்டு. பொய்யைப் போல் தோன்றிவிடுகிற உண்மைகளும் உண்டு."
"இதில் நீங்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் போலிருக்கிறது."
"நீ எப்படி வைத்துக் கொண்டாலும் அதை நான் மறுக்கத் துணியவில்லை. நான் கூறியதில்தான் என்ன தவறு? இந்தக் கபாடத்தின் விலையுயர்ந்த முத்துக்களை எல்லாம் உலகத்துக்கு அளிப்பவர்கள் நாங்களே அல்லவா?"
"வணிகரைப் போல் சாதுரியமாகப் பேசுகிறீர்கள். கலைஞரைப் போல் இசையை அதன் நுணுக்கமறிந்து புகழ்கிறீர்கள். அரசரைப் போல் முகக்குறியுடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறீர்கள். புலவரைப் போல் சொற்போருக்கு வருகிறீர்கள்...! இதில் எது உண்மையென்றுதான் விளங்கவில்லை?"
"ஏன்? எல்லாவற்றிலுமே சிறிது சிறிது உண்மையிருக்கலாம்! ஒன்று மட்டும்தான் உண்மையாயிருக்க வேண்டுமென்பது என்ன அவசியம்?"
"அந்தக் கற்பனைகள் எல்லாம் இனிமேல் என்னிடம் பலிக்காது ஐயா! நீங்கள் யாரென்ற உண்மையை நான் எப்போதோ தெரிந்து கொண்டாகிவிட்டது. என்னென்ன தன்மைகள் பொருந்தியவர் என்ற உண்மைதான் இன்னும் எனக்குத் தெரியவில்லை என்று இப்போது கூறினேன்."
"தன்மைகளை உணர முயலவேண்டும். ஆராய்வதற்கு ஆசைப்படக்கூடாது..."
"உணர்வது வேறு; ஆராய்வது வேறு என்றா நினைக்கிறீர்கள்?"
"சந்தேகமென்ன? உணர்ச்சிக்கு முடிவில்லை. ஆராய்ச்சிக்கு முடிவுண்டு! நீ என்னை உணர வேண்டுமென்றுதான் நான் ஆசைப்படுவேனே ஒழிய ஆராய வேண்டுமென்று நான் ஒரு போதும் ஆசைப்படமாட்டேன்."
"அப்படியல்ல! மனிதர்களை ஆராய்ந்து உணர வேண்டுமென்பார் என் தந்தை..."
"உணர்ந்தவர்களையே ஆராயவேண்டுமென்று சொல்லவில்லையே அவர்? உணராதவர்களைத்தானே ஆராய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்? தெரிந்த பின்பு தெளியலாம். தெளிந்த பின்பும் தெரிய முயல்வது குறும்பு, அல்லது அநீதி..."
"நீதி எது அநீதி எது என்பதை உங்களைப் போல் அரச குடும்பத்தார் அறிந்திருப்பது நியாயமே! இப்படித் தர்க்கம் செய்பவர்கள் எப்போதும் அறிவுக்கு மதிப்பளிக்கிற அளவு உணர்ச்சிக்கு மதிப்பளிப்பதில்லை..."
"அறிவும் உணர்வும் வேறுவேறென்று நினைப்பதால் தான் உனக்கு இப்படிப் பேசத் தோன்றுகிறது. அறிவும், உணர்வும் உள்ளங்கையும் புறங்கையும் போன்றவை! கலைஞனிலிருந்து அரசன் வரை இதில் மாறுதல் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை."
"அப்படியே இருக்கட்டும்! தயைசெய்து என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் சொற்களால் ஏழை; என்னிடமிருப்பவை ஆடம்பரமில்லாத எளிய சொற்கள். அவை தருக்க ஞானத்தாலோ, விவகார ஞானத்தாலோ கூராக்கப்படாதவை..."
"போதும்! அதோ பூக்கொய்யச் சென்ற என் தோழிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதோ உங்கள் பின்புறம் மரத்திற்கு அப்பால் பதுங்கி நிற்கிற உங்கள் நண்பரும் அதிசயத்தைப் பார்ப்பதுபோல் எட்டி எட்டிப் பார்க்கிறார். முடியுமானால் அருகிலிருக்கும் எங்கள் கூடாரத்திற்கு வரவேண்டுகிறேன். என் பெற்றோர் வழிப்பயணத்தில் என்னைக் காப்பாற்றிக் கபாடபுரம்வரை தேரில் கொண்டு வந்து சேர்த்ததற்காக உங்களுக்கு நன்றி கூற ஆர்வத்தோடிருக்கிறார்கள்.
அரண்மனைக்குத் தேடிவந்து அவர்கள் அதைக் கூற இயலாது. நாங்கள் ஏழைகள், அரண்மனைக்கு வருகிற தகுதியோ, பெருமிதமோ இல்லாதவர்கள். தயை செய்து எங்கள் குடிசையில் உங்கள் பொன்னடிகள் ஒருமுறை நடக்கும்படி செய்தால் பாக்கியமுள்ளவர்களாவோம்..."
"எளிமையில்தான் அருமை இருக்கிறது. அந்த அருமையை விட வேறு பெருமிதம் எளிமைக்கு எதற்கு? நீங்கள் இன்னும் சிறிது காலம் கபாடபுரத்தில் தங்கியிருப்பீர்கள் அல்லவா? இன்னொருநாள் நானே உங்கள் கூடாரத்திற்கு வருகிறேன் பெண்ணே! இன்று எனக்கு விடைகொடு! என்னால் இயலுமானால் உன்னுடைய குரலுக்காகவே தனியாய்ப் புதிதாய் ஒரு பெரிய இசையிலக்கணமே படைக்கும்படி செய்வேன். அப்படி ஒரு காலம் வந்தாலும் வரலாம்."
"ஏதோ நாங்கள் எங்களுடைய எளிய கலையைப் பெரிய பற்றுடன் ஆண்டு வருகிறோம். உங்களுடைய ஓயாப் புகழ்ச்சியைக் கேட்டால் எனக்குப் பயமாயிருக்கிறது. கலைஞர்களுக்குப் போதாத காலம் சில வேளைகளில் அவர்களை வந்தடைகிற புகழோடு சேர்ந்து வருமென்பார் எங்கள் தந்தை."
"நீ கூறுவதை எல்லாம் கேட்டால் உங்கள் தந்தையை உடனே பார்க்கவும் பேசவும் வேண்டும்போல் ஆசையாயிருக்கிறது எனக்கு. ஆனால் அதுவும் இப்போது இயலாமலிருக்கிறது. அரசியல் கடமையாக வந்தவனுக்கு வேண்டிய போது நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்கிறது? உயர்ந்த இசையைக் கேட்க நேரும்போதெல்லாம் பொற்பூவும், பொன்னாரமும் அளிப்பது எங்கள் குடிவழக்கம்.
ஆனால் இப்போது இந்த விநாடியில் இந்த இடத்தில் என்னிடம் பொற் பூ இல்லாத காரணத்தால் உன்னைப் போலவே நானும் ஏழைதான். மறுக்காமல் இதைப் பொற் பூக்களாக ஏற்றுக் கொள் பெண்ணே..." என்று உணர்வு பொங்கக் கூறியபடியே கிளையை வளைத்து இரண்டு பெரிய புன்னைப் பூக்களைக் கொய்து அவளிடம் நீட்டினான் சாரகுமாரன்.
அவள் நாணத்தோடு அவற்றை வாங்கிக் கொண்டு வணங்கினாள். அவன் முடிநாகனை நோக்கி விரைந்தான். அவள் தோழிகளும் அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தனர். அந்தப் பூக்களை நுகர்ந்தபோது அவை மட்டும் தனியே நிறைய மணப்பது போல உணர்ந்தாள் கண்ணுக்கினியாள்.
------------
15. பழந்தீவுப் பயணம்
இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குத் திரும்பிய போது நன்றாக விடிந்து வெயிலேறியிருந்தது. நீராடிக் காலைக் கடன்களை முடித்த பின்னர் இருவரும் பெரிய பாண்டியரைச் சந்திக்கச் சென்றார்கள். முடிநாகன் மட்டும் உற்சாகமின்றி இருந்தான்.
"பெரிய பாண்டியரிடம் நமது சாதனைகளாகவோ, வெற்றிகளாகவோ, கூறுவதற்கு ஒன்றுமில்லாமல் போகிறோம் சாரகுமாரரே! 'சுரங்கப் பாதைகள் தொடங்குமிடத்தையும், முடியுமிடத்தையும் கண்டுபிடித்து அறிந்து கொண்டோம்' என்று நான் கூறுவதை அவர் பொருட்படுத்தி மதிக்கவே மாட்டார். ஏற்கனவே உங்கள் மேல் அவருக்கு ஒரு குறை இருக்கிறது.
அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கலை ஆர்வமோ, முனைப்போ அளவுக்கதிகமாக இருப்பதை - மறுக்கிற மனம் அவருடையது. கலைகளில் ஆர்வம் காண்கிறவன் விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற மெல்லிய மனப்பான்மையை அடைந்து விடுகிறான்.
இந்த மெல்லிய மனப்பான்மை அரச தந்திரத்துக்கு இடையூறானது. பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாத சூழ்ச்சித் திறனும், நுணுக்கமும் உள்ள வலிய மனமே அரசனுக்கு வேண்டுமென்பவர் அவர். எனவே, அவரால் நம்முடைய அனுபவங்களை வெற்றிகளாக ஒப்புக் கொள்ள முடியாது என்று அஞ்சித் தயங்கியபடியே அவருக்கு முன் போக வேண்டியவர்களாயிருக்கிறோம் நாம்" என்றான் அவன்.
முடிநாகன் கூறியபடியேதான் ஆயிற்று. அவர்கள் கூறியவற்றை எல்லாம் மிக அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முடிவில் அந்த அலட்சியத்திற்கு ஒரு முத்திரை வைப்பது போல் புன்முறுவல் பூத்தார் வெண்தேர்ச்செழிய மாமன்னர்.
"இப்படிச் சுரங்கங்களும், சூழ்ச்சிகளும் செய்து கொண்டு வாழ்கிற அவுணர்களை நம்பித் தேர்க்கோட்டத்தை ஒப்படைத்திருக்கிறீர்களே; அது என்ன நம்பிக்கையோ?" என்று சிறிது துணிவுடனேயே அவரிடம் நேருக்கு நேர் வினாவினான் இளையபாண்டியன்.
அவனுக்கு உடன் மறுமொழி கூறாமல் - அவன் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்து நோக்கினார் பெரிய பாண்டியர். பின்பு நிதானமாகவும் சுருக்கமாகவும் அவனை நோக்கிச் சில வார்த்தைகளைக் கூறலானார்.
"உன்னுடைய கேள்விக்கு விடை இங்கே இல்லை. இந்தப் புதிய கோ நகரத்தின் தென்பகுதிக் கடலுக்குள் அங்கங்கே காடுகளாகவும், மலைகளாகவும், சிதறிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பழந்தீவுகளில் இருக்கிறது அந்த விடை."
"இருக்கட்டும்! அந்தப் பழந்தீவுகள் எல்லாம் கபாடபுரக் கோ நகரத்தின் ஆணைகளுக்கு உட்பட்ட சிற்றரசுகளல்லவா? அவைகளை நம் பகைகளாகக் கருத நேர்வது எப்படி?" என்று மேலும் விடாமல் வினாவினான் சாரகுமாரன்.
"நீதி, அநீதிகளும், நியாய அநியாயங்களும் தெரியாத அந்தக் காட்டு மனிதர்களிடம் நட்பு இருப்பது போல் பாவனை செய்து நமது அரச தந்திரத்தால் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறோமே ஒழிய வேறு பொருள் அந்த உறவுக்கு இல்லை."
"அது உறவா, பகையா, என்பதே இன்னும் விளக்கப்படவில்லையே?"
"விளக்கப்படாமலிருக்கிறவரை தான் சில நிலைமைகளுக்குப் பாதுகாப்பு அதிகம். சில வேளைகளில் அவசரப்பட்டு அவற்றை விளக்கி முடிவு கண்டுவிடுவது கூடச் சிறுபிள்ளைத் தனமாக முடிந்து விடும்! பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் நமது தேர்க்கோட்டத்தில் அடிமைகளைப் போல் பணிபுரிகிறார்கள். தென்பழந்தீவுகளிலுள்ள வானளாவிய மரங்களிலிருந்து வைரம் பாய்ந்த அடிமரப் பகுதிகளும், பிற சட்டங்களும், நமது தேர்க் கோட்டத்திற்காகக் கிடைக்கின்றன.
கபாடபுரத்திற்கும், அந்நிய தேசங்களுக்கும் இடையே இராஜபாட்டையைப் போல பயன்படும் கடல்வழிகள் எல்லாம் இந்தத் தென்பழந்தீவுகளை ஊடறுத்துக் கொண்டே செல்கின்றன. அப்படி இருக்கும்போது இந்தப் பழந்தீவுகளின் அவுணர்களோடு நாம் கொண்டிருப்பது பகையா, உறவா என்பதை அழுத்தி உறைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முயல்வதுகூட அவசியம்தானா என்பதையும் அதன் பலாபலன்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்."
"இப்படியே தொடரவிடுவதிலுள்ள பயன் என்னவாக இருக்குமென்று புரியவில்லை."
"பெரிய நன்மைகள் இல்லாவிட்டாலும், தீமைகள் எவையும் இல்லை. நமக்கு வேண்டிய மரங்களும், காய், கனி, கிழங்குகள், அபூர்வ மூலிகைகள் முதலியனவுமெல்லாம் இந்தப் பழந்தீவுகளிலிருந்து கிடைத்துவிடுகின்றன. அவர்களும் எப்போதாவது கபாடத்திலிருந்து முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு போகிறார்கள்.
கடல் கோளுக்குப் பின் இந்தப் புதிய கோ நகரத்தையும் தேர்க்கோட்டத்தையும், நான் சமைக்க முயன்றபோது பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களோ, அவர்களுடைய வழிமுறையினரோ தான் இப்போது இங்கு நம்மைச் சுற்றி இருக்கும் அவுணர்களாவர்."
"காரணம் கருதியே அவர்களை நான் பொதுவாக விட்டு வைத்திருக்கிறேன். விரோதிகளாக ஏற்றுக்கொண்டு அழிக்க முயலவுமில்லை. நண்பர்களாக ஏற்றுக்கொண்டு கொண்டாடவுமில்லை. மனம் இடைவிடாமல் நினைப்பதற்கும், பாவிப்பதற்கும் விளைவுகள் கூட நாளடைவில் ஏற்பட்டுவிடுமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
சிலரைக் காரணமின்றி பகைவர்களாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டோமென்றால் நாளடைவில் நாம் அவர்களிடமிருந்து பகைத்தன்மைக்குரிய தீவிர விளைவுகளையே எதிர்பார்க்கலாம். அவுணர்களை நான் அப்படிக் கருதாததற்கு இதுதான் காரணம்.
வெறும் சுரங்கங்களால் என்ன செய்து விட முடியும்? எங்காவது உயர்ந்த இடங்களில் கொள்ளையடிக்கிற முத்துக்களையும், இரத்தினங்களையும் தங்கள் தீவுகளுக்குக் கடத்திக் கொண்டு போக முடியும். தேர்களை - ஓர் அணுவளவு கூட அசைக்க முடியாது. கடல் நீரில் தேர்களை ஓட்டிக் கொண்டு போய் அவர்களுடைய தீவுகளில் நிறுத்திவிட முடியாது. ஆகவே தான் இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்தி நான் கவலைப்படவில்லை."
"ஆனால் என்னுடைய கவனம் ஒரு பகுதியில் மட்டும் கூர்மையாக இருக்கிறது. இந்த அவுணர்களில் சிலர் நமது கோ நகரத்தின் தெய்வீகக் கபாடங்களிலுள்ள இரத்தினங்களைப் பெயர்த்துக் கொண்டு போய்விடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகக் கேள்விப்படுவதை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
அவர்கள் இங்கு குளித்தெடுக்கப்படும் முத்துக்களையும், நமது மகேந்திரமலை இரத்தினாகரங்களில் விளையும் இரத்தினங்களையும் வாரிக் கொண்டு போனால் கூட ஓரளவு அவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம்.
கபாடங்களை நெருங்கினால் அவர்கள் தங்களுக்கே அழிவு தேடிக் கொள்கிறார்கள் என்றாகிறது... நீ ஒரு காரியம் செய்ய வேண்டும் சாரகுமாரா! உன்னுடன் நகரணி மங்கலத்துக்காக இங்கு நம் கோ நகரத்துக்கு வந்திருக்கும் அவிநயனாரும், சிகண்டியாசிரியரும் ஏனைய சங்கப் புலவர்களும் சிறிது காலம் இங்கேதான் தங்கியிருப்பார்கள். அவர்களைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம்."
"முடிநாகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பழந்தீவுகளில் பயணம் செய்து திரும்பி வரவேண்டும் நீ. அப்படிப் பயணம் புறப்படும்போது உனக்கு நினைவிருக்க வேண்டியதெல்லாம் இது ஓர் இராஜதந்திரச் சுற்றுப் பயணம் என்பதுதான்.
ஒவ்வொரு விநாடியும் இது உனக்கு நினைவிருக்க வேண்டும். இதற்குப் பழுது உண்டாக்கும் முறையில் முடிநாகனோ, நீயோ, உங்களை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட அதே நிலைகள் தான் இன்றும் தென்பழந்தீவுகளில் இருக்கின்றனவா அல்லது மாறுதல் ஏதேனும் உண்டா - என்பது எனக்குத் தெரிய வேண்டும். நானே நேரில் போய்ச் சுற்றியறிந்து வருவதற்கு என் முதுமை இடங்கொடாது.
உன் தந்தையைப் போகச் சொல்லலாம் என்பதற்கும் வழியில்லை. கோ நகரத்து அரசியற் கடமைகளை அவன் கவனிக்க வேண்டும். ஆகவே தவிர்க்க முடியாத காரணத்தால் உன்னையும் முடிநாகனையும் பழந்தீவுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன் குழந்தாய்!"
"நான் கூறுகின்றவைகளைக் கவனமாகக் கேட்டுக் கொள். கொற்கையிலும், மணலூரிலும் தங்கி இலக்கண இலக்கியங்களைக் கற்று அறிவது போல் இது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
நீயோ அரசியலின் பாலபாடத்தைக் கூட இன்னும் கற்கவில்லை. அரசியல் ஞானமும், சூழ்ச்சித் திறன்களும், படிப்படியாய் அனுபவங்களின் மூலமே கிடைக்க வேண்டும். சில அனுபவங்கள் நமக்குப் பாதகமாய் முடியலாம். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம். இன்னும் சில அனுபவங்கள் நமக்குச் சாதகமாய் முடியும். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம்.
வேறு சில அனுபவங்களோ சாதகமாக முடியுமா, பாதகமாக முடியுமா என்பதை இனங்காண முடியாமல் அரைகுறையாக நிற்கும். அவற்றிலிருந்து படிப்பினைகளைத் தேடும் வேளைகளில் மட்டும் அவசரப்பட்டுவிடக் கூடாது. பழந்தீவுகளில் பயணம் செய்யும் போது தேசாந்திரிகளைப் போல் சுற்றித்திரிய வேண்டுமே ஒழியக் கபாடபுரத்து அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் அவர்கள் சந்தேகப்படும்படி நடந்து கொள்ளக்கூடாது.
அவ்வாறு சந்தேகப்பட இடங்கொடுத்து விட்டீர்களானால் நீங்கள் அவர்களைச் சுற்றிப் பார்த்து அறிந்து கொள்ள முடியாமல் அவர்கள் உங்களைச் சுற்றிப் பின்தொடர ஆரம்பித்து விடுவார்கள். இதில் பலவற்றை முடிநாகன் நன்றாக அறிந்திருப்பதால்தான் அவனை உன்னோடு துணைக்கு அனுப்புகிறேன்" என்றார் பெரியபாண்டியர்.
பழந்தீவுப் பயணத்துக்கு முழுமனத்தோடு இணங்கினான் சாரகுமாரன். பெற்றோர்களிடம் விடைபெற்று வருமாறு அவனை அனுப்பினார் பெரியபாண்டியர். தந்தை அநாகுல பாண்டியர், "போய் வரவேண்டியது அவசியம் தான். போய்வா! ஆனால் உன்னோடு பரிசாகக் கொடுப்பதற்கேற்ற முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு செல். பல வேளைகளில் அது உன்னைக் காப்பாற்றும்படி நேரிடலாம்" என்று குறிப்பாக ஒன்றைக் கூறினார்.
தாய் திலோத்தமையோ அவனுடைய அந்தப் பயணத்தையே மறுத்தாள். அவளுக்குச் சீற்றமே வந்துவிட்டது. "உன் பாட்டனாருக்கு ஏன் தான் இப்படிக் கொடுமையான எண்ணம் வந்ததோ, தெரியவில்லையே? பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீதானா அகப்பட வேண்டும். முடியாதென்று மறுத்துவிடு குழந்தாய்" - என்று சீறினாள் அவள்.
"மறுப்பதற்கில்லை அம்மா! நான் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து ஒப்புக் கொண்டுவிட்டேன். பெரியபாண்டியருடைய கட்டளையை மறுக்கவேண்டுமென்று என்னால் நினைக்கவும்கூட முடியாது. எனக்கு அரசதந்திர நெறிகளையும் சூழ்ச்சித் திறனையும் கற்பிப்பதற்காக அவர் செய்யும் ஏற்பாட்டை நான் எப்படி மறுக்க முடியும்? தவறாமல் நானும் முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் போயே ஆகவேண்டும். அதனால் எனக்கும் சில அரசதந்திரப் பயன்கள் உண்டு" என்று புன்சிரிப்போடு அன்னைக்கு மறுமொழி கூறினான் அவன்.
------------
16. எயினர் நாடு
தன் தாய் திலோத்தமையாருக்குச் சாரகுமாரன் நிறைய ஆறுதல் கூற வேண்டியிருந்தது. எவ்வளவு ஆறுதல் கூறியும் பழந்தீவுகளில் அவன் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்பதை மகனிடம் கவலையோடும், பாசத்தோடும் வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவள்.
அறிவுக்கும் அன்புக்குமிடையே இளையபாண்டியனின் உள்ளம் சில நாழிகை நேரம் ஊசலாடியது. பாசம் என்னும் மெல்லிய உணர்வும், அறிவு என்னும் தீவிரமான கடமையும் போராடின. தான் ஆறுதல் கூறியது போதாதென்று முடிநாகனைக் கொண்டும் தாய்க்கு ஆறுதல் கூறச் செய்தான் இளையபாண்டியன்.
"இளையபாண்டியருக்குத் துணையாக அடியேனும் உடன் செல்லுவதால் கோப்பெருந்தேவி - இவ்வளவு மிகையாகக் கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாக அரசகுமாரர்கள் பட்டத்துக்கு வருமுன் தன் நாட்டிற்கு நான்கு புறத்துமுள்ள கடல் எல்லை, நிலவெல்லைகளிலுள்ள பகுதிகளை அரசதந்திர முறையில் சுற்றிப் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு என்பதனாலேயே பெரியபாண்டியர் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
பட்டத்திற்கு வந்தபின் இத்தகைய சுற்றுப் பயணங்களைச் செய்ய முடியாது போகும். செய்ய முடிந்தாலும் அது தன்னிச்சையானதாகவும், சுதந்திரமானதாகவும் இராது. இவற்றையெல்லாம் புரிந்து கொண்டால் கோப்பெருந்தேவி இளையபாண்டியருக்கு முழு மனத்துடன் விடை கொடுக்க முடியும்" என்று முடிநாகன் எடுத்துக் கூறியபோதும் கூடக் கோப்பெருந்தேவி அரைகுறை மனநிலையில் தான் இருந்தாள். அவளுடைய மனநிலையை மகன் சாரகுமாரன் மூலமாகக் கேள்விப்பட்டு அநாகுலபாண்டியன் வந்து கடுமையாக எடுத்துக் கூறியபின்பே அவள் இணங்கினாள்.
"மகனிடம் உனக்குப் பாசமும், அன்பும், இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்காக கடமையை மறந்துவிடலாகாது. அரச குடும்பத்துப் பிள்ளையைச் செல்லமாக வளர்க்க நினைப்பதை விட அதிகமாக ஒரு தாய் அவனுக்கும், அவன் பிறந்த நாட்டிற்கும் வேறெந்தக் கெடுதலையும் செய்துவிட முடியாது என்பதை நினைவு வைத்துக் கொள். நீ இன்று உன் மகன் மேல் மட்டும் பாசம் காண்பிக்கிறாய்! அந்த மகனோ நாளை இந்த நாட்டின் உயிர்க்குலத்தின்மேல் எல்லாம் பாசம் காண்பித்து ஆள வேண்டியவன்.
நாளைப் பரந்த பாசத்தைக் காண்பிக்க வேண்டியவர்களை இன்று நாம் குறுகிய பாசத்தால் வளர்ப்பது கூடத் தவறு."
"குறுகிய பாசத்தால் பேணப்பட்டுச் செல்வப் பிள்ளைகளாகவும், சவலைப் பிள்ளைகளாகவும் வளர்க்கப் படுகிறவர்கள் நாளை பரந்த அன்பையும், பாசத்தையும், செலுத்த முடியாதவர்களாகிவிடுவார்கள். இளைய பாண்டியனைப் பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீ இணங்கவில்லை என்பது தெரிந்தால் பெரியபாண்டியரே உன்னிடம் பேசவருவார். அவர் எதிரே வந்து நின்றால் உனக்குக் கைகால் பதறும்.
பேசுவதற்குச் சொற்கள் வராமற் போய்விடும்" என்று அநாகுலபாண்டியன் இவ்வளவெல்லாம் எடுத்துக் கூறிய பின்பே திலோத்தமை இதற்கு இணங்கினாள். பெரியபாண்டியர் தன் எதிரில் வந்துநின்று கடுமையான சொற்களில் திடமாக விவாதிப்பார் என்பதைக் கேள்விப்பட்டதும் அந்நிலை வரை போகவிடுவதில் பயனில்லை என்று தோன்றியது அவளுக்கு.
"நான் பெண்! இதற்கு மேல் அரசியல் காரணங்களின் விளைவுகளை மறுக்கச் சக்தியில்லாதவள். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்" என்று சோகம் இடறும் இனிய குரலில் கணவனுக்குப் பதிலிறுத்தாள் திலோத்தமை.
இளையபாண்டியனும், முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் பயணம் செய்வது உறுதியாயிற்று. சிகண்டியார், அவிநயனார் ஆகிய ஆசிரியர்களிடம் கூறி விடைபெறுவதற்காக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பேரப்பிள்ளையாண்டானாகிய சாரகுமாரனை அழைத்துக் கொண்டு போனார் பாட்டனார் வெண்தேர்ச் செழியர்.
"புலவர் பெருமக்களே! இலக்கண இலக்கியங்களையும் இசைக்கலையையும் நீங்கள் கற்பித்து விட்டீர்கள்! பரம்பரை பரம்பரையாக வரவேண்டிய அரசதந்திர முறைகளை இவனுக்குக் கற்பிப்பதற்காக நான் சில காரியங்களைச் செய்யப் போகிறேன்.
இந்த மாபெரும் பாண்டியர் மரபில் அரச குடும்பத்துச் சூழ்ச்சித்திறன் குறைவாகவும், ஒரு கலைஞனைப் போன்ற மென்மையும், இங்கிதமும், அதிகமாகவும் கொண்டு பிறந்திருப்பவன் இவன் தான். ஆகவே இவனைப்பற்றி மட்டும் நான் சற்றே அதிகமாகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. உங்களுடைய நூல்கள் கற்றுத்தரமுடியாத பல கடுமையான அனுபவ பாடங்களைக் கற்றுத்தர நான் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது.
இதை நீங்கள் எந்த விதத்திலும் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டீர்களென்று எனக்குத் தெரியும். ஆயினும் முறை கருதியும், நாகரிகம் நோக்கியும் உங்களிடம் விடைபெற இவனை அழைத்து வந்தேன்" என்று அவர்களிடம் பேச்சைத் தொடங்கினார் வெண்தேர்ச் செழிய மாமன்னர்.
"நமக்கெல்லாம் நிகழ்காலத்தைப் பற்றிய கவலைகள் என்றால் பெரியபாண்டியருக்கு எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள்தான்..." என்று சிகண்டியாரிடம் சிரித்துக் கொண்டே விளையாட்டாகக் கூறினார் அவிநயனார்.
பெரியவர் விடவில்லை. "ஆம்! ஆம்! எனக்கு எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய கவலைதான். நிகழ்காலத்தைப் பற்றி நான் நினைத்துத் தயங்கிக் கொண்டிருக்கும்போதே அது கரைந்து போய்விடுகிறது. இறந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை. நிச்சயமாக எனக்கு முன் நான் நினைக்கவும் திட்டமிடவும் முடிந்த காலமாக எதிரே மீதமிருப்பது எதிர்காலம் ஒன்றுதான்.
ஆகவே அதைப் பற்றி மட்டும் நான் நிறையக் கவலைப்படுவது நியாயம்தானே அவிநயனாரே?" என்று அவிநயனாரை மடக்கினார். இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் பெரியபாண்டியரை நோக்கிப் புன்முறுவல் பூத்தார் அவிநயனார். பெரியவர்களும் மூத்தவர்களும் பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பேச்சில் இடையே தான் குறுக்கிடுவது கூடாது என்று கருதியது போல் அடக்கமாகவும் விநயமாகவும் ஒதுங்கி நின்றான் சாரகுமாரன்.
"பழந்தீவுகளுக்குப் பயணம் செல்லுமுன் இளையபாண்டியனை அரச கம்பீர மரியாதைகளுடன் இந்தக் கபாடபுரத்தின் பிரதான வீதிகளில் நகருலா வரச் செய்ய வேண்டுமென்பது என் ஆசை. வசந்தகாலத்தின் செழிப்பான மலரைப் போல் இளமை அரும்பி நிற்கும் நம் சாரகுமாரனைக் கோ நகரில் யாவரும் காண ஆவலாயிருப்பார்கள் அல்லவா?" என்று ஒரு விநோதமான ஆசையை வெளியிட்டார் சிகண்டியார். ஆனால் என்ன காரணத்தாலோ, 'அப்படிச் செய்ய முடியாது செய்யவும் கூடாது' என்று பெரிய பாண்டியர் அதை உடனே மறுத்துவிட்டார்.
"நகரணி மங்கல நாளன்றுதான் எங்களோடு இவனும் தேருலா வந்திருந்தானே? இப்போது மறுபடியும் தனியாக இன்னொரு நகருலாவுக்கு அவசியமென்ன?"
"அது பொதுவாக நிகழ்ந்த தேருலா. மூவாயிரம் முத்துத் தேர்கள் தேர்க்கோட்டத்திலிருந்து புறப்பட்டன. அதில் ஏதோ ஒரு தேரில் இளையபாண்டியனும் வந்தான். நீண்ட நாள் குருகுலவாசத்துக்குப் பின் சாரகுமாரன் கோ நகரத்துக்கு வந்திருப்பதால் அவன் மட்டுமே சிறப்பாகவும், தனியாகவும் ஒரு தேருலா வருதல் வேண்டும்."
"இவ் வேளையில் அப்படிச் செய்வது நல்லதில்லை. இவன் பழந்தீவுகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான் என்ற செய்திப் புறத்தார்க்கு அதிகம் தெரியக்கூடாதென்று கருதுகிறேன் நான். 'தேருலா' நிகழச் செய்வது இந்தப் பயணத்தை ஊரறிய முரசறைவது போலாகும். பல்வேறு தீவுகளின் ஒற்றர்களும் நிரம்பியுள்ள நம் கோ நகரத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படிச் செய்வது சாத்தியமில்லை" என்று பெரியவர் தீர்மானமாக மறுத்த பின்பே சிகண்டியாசிரியர் அடங்கினார்.
இளையபாண்டியனும், முடிநாகனும், பழந்தீவுகளில் சுற்றுப் பயணம் செய்யும் செய்தி அரண்மனை வட்டத்தினரிலும் அரசகுடும்பத்தோடு பொறுப்பான தொடர்புள்ள சிலருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாகப் பட்டத்து அரசர்களோ, அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களோ கடற்பயணம் புறப்படும்போது பெரிய துறைமுகத்தில் கோலாகலமாகவும் அலங்காரமாகவும் வழியனுப்பும் வைபவம் நடைபெறுவதுண்டு.
இந்த முறை அந்த அலங்கார வைபவங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. பயணமே பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போல் கடலிற் கலக்கும் சிறு துறைமுகத்தின் வழியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணம் புறப்படுமுன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளை ஒரு முறை பார்த்துச் சொல்லிவிட்டு வரவேண்டும் என்று இளையபாண்டியன் எண்ணியிருந்தும் அது இயலாமல் போயிற்று. கடைசி விநாடிவரை பெரியபாண்டியர் பல எச்சரிக்கைகளையும் செய்திகளையும் அவனுக்குக் கூறிக் கொண்டே இருந்தார்.
சிறுதூறலாக மழை பெய்து கொண்டிருந்த மங்கலான நண்பகல் வேளை ஒன்றில் அவனும் முடிநாகனும், தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். பாட்டனாரும், தந்தை அநாகுலபாண்டியரும், அரசகுடும்பத்தினரும், சில புலவர்களும் வழியனுப்ப வந்திருந்தார்கள்.
அவர்களுடைய பாய் மரக்கப்பல் பொருநை முகத்துவாரத்திலிருந்து திருப்பத்தைக் கடந்து தென்பெருங்கடலில் பிரவேசித்தபோது காற்று அவர்கள் செல்ல வேண்டிய திசைக்கு ஏற்றதாக வாய்த்திருந்தது.
கப்பல் கடலுக்குள் வந்ததும் தற்செயலாகத் தொலைவிலே தென்பட்ட புன்னைத் தோட்டமும் அதன் சுற்றுப் புறங்களும் இளையபாண்டியனின் கண்களிலே தெரிந்து கண்ணுக்கினியாளை நினைவூட்டின. அந்த நினைவோடு கப்பல் தளத்தில் நின்று கொண்டிருந்த இளையபாண்டியனை அணுகித் தென்பழந்தீவுகள் பற்றிய திசை விவரங்களும், குறிப்புகளும், வரையப்பட்டிருந்த திரைச்சீலையைப் பிரித்துக் காண்பிக்கலானான் முடிநாகன்.
இளையபாண்டியனுடைய கவனமும் அப்போது அதில் சென்றது. போது இருட்டுவதற்குள் எயினர் தீவுகளின் ஒரு முனையான மரங்கள் அடர்ந்த மலைப் பகுதியை அடையலாம் என்று திரைச்சீலையிற் கண்ட விவரங்களிலிருந்து தெரியவந்தது.
"நம்முடைய கபாடபுரத்துத் தேர்க்கோட்டத்தில் உருவாகும் தேர்களுக்கு வேண்டிய வைரம் பாய்ந்த தேர்ச் சட்டங்களும், மரங்களும், இந்தத் தீவிலிருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன" என்று அந்தத் தீவைப் பற்றி விளக்கத் தொடங்கினான் முடிநாகன்.
பயணத்தின் உற்சாகமும், கடற்பரப்பின் கருநீல அழகும், வெயிலே தெரியாத மங்கலான வானமும், இளையபாண்டியனின் உள்ளத்தில் களிப்பு நிறையச் செய்திருந்தன. அவனுடைய இதழ்களில் மனத்தின் களிப்பை வெளிக்காட்டுவது போல் இசை பிறந்தது. அந்த இசையால் கப்பல் ஊழியர்கள் களைப்பை எல்லாம் மறந்தனர். முடிநாகனும் அதை இரசிக்கலானான்.
--------------
17. வலிய எயினன் வரவேற்பு
அந்தி மயங்குகிற வேளையில் - எதிரே தொடுவானமும் கடற்பரப்பும் சந்திக்கிற விளிம்பில் கருங்கோடு போல் ஒரு வரைவு தெரிந்தது. அருகில் நெருங்க நெருங்க, மரங்களின் வடிவமும் மலையும் மெல்லத் தெரியலாயின.
தூரதிருஷ்டிக் கண்ணாடி பதித்த கருவியினால் பார்த்துவிட்டு "தீவு நெருங்குகிறது" என்று அறிவித்தான் முடிநாகன். இளையபாண்டியன் அந்தக் கருவியை வாங்கித் தொலைவில் தெரிவதைப் பார்த்தபோது, வானளாவிய மரங்கள் செறிந்த மலை ஒன்று கண்களில் தெரிந்தது. அவ்வளவு உயரமாகவும், பருமனாகவும், செழிப்பாகவும், அடர்த்தியாகவும் மரங்கள் செறிந்திருந்த மலையைப் பார்ப்பதே மகிழ்ச்சியாயிருந்தது.
அந்தத் தீவின் நடைமுறைகளையும் ஒழுகலாறுகளையும் பழக்கவழக்கங்களையும் இளையபாண்டியனுக்குச் சொல்லத் தொடங்கினான் முடிநாகன்.
"யாத்ரிகர்கள் என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட நாம் அங்கே தெரிவிக்கலாகாது. அப்படித் தெரிவிப்பதனால் பெரிய பெரிய கெடுதல்கள் சம்பவிக்கலாம்" என்று முடிநாகன் எச்சரிக்கையாக முன்பே கூறி வைத்தான்.
இந்த எச்சரிக்கை கப்பல் ஊழியர்களுக்கும் ஒரு முறைக்கு இரு முறையாக வற்புறுத்தித் தெரிவிக்கப்பட்டது. பாய்மரங்களிலும், கப்பலின் பிற்பகுதிகளிலுமிருந்த அரசியல் அடையாளச் சின்னங்கள் மறைக்கப்பட்டன. தீவினர்களுக்குக் கொடுப்பதற்கான அன்பளிப்புப் பொருள்களாக - யானைத் தந்தங்களும், முத்துக்களும், இரத்தினங்களும் எடுத்து வைக்கப்பட்டன.
"இந்தவிதமான தீவுகளில் மென்மையும், நாகரிகமும் பொருந்திய பண்பட்ட இராசநீதி முறைகள் எவையும் கிடையாது. இறங்கியதும் தீவுத்தலைவனைச் சந்தித்து யாத்ரீகர்களாக வந்திருப்பதாய்த் தெரிவித்து அன்பளிப்புக்களை வழங்கிவிட வேண்டும்.
மனிதர்களைப் பிடிக்கவில்லை என்றால் உடனே அவர்களைக் கொலை செய்வதற்குக் குறைவான வேறெந்தச் சிறிய தண்டனையையும் வழங்கத் தெரியாது இவர்களுக்கு" என்றான் முடிநாகன்.
"இயல்புதான்! நாகரிகம் அடையமுடியாத தொடக்க நிலையில் எல்லாக் குடிமக்களும் இப்படித்தான் இருக்க முடியும். மொழியும், பேச்சும், இலக்கணமும், இலக்கியமும், இசையும், நாடகமும், கலையும், காவியமும் தோன்றித்தான் மனிதனின் தொடக்கக்கால மிருகத்தன்மைகளைப் படிப்படியாகக் கரைத்து அவனை மென்மையாக்கியிருக்கின்றன. அந்தக் கலை நாகரிகமும் மொழி நாகரிகமும் தோன்றாத இப்பகுதிகளில் கொடிய நீதிமுறைகள் தான் நிலவமுடியும்" என்று முடிநாகனுக்கு விளக்கம் கூறினான் இளையபாண்டியன்.
நீலக்கடலினிடையே அந்தத் தீவும் - அதிக உயரமில்லாத குன்றுகளும் மனோரம்மியமாகக் காட்சியளித்தன. மரங்களும், இலை தழைகளும், செடி கொடிகளும், நெய் பூசித் துடைத்துப் பளபளப்பாக வைத்தவை போல் பசுமை மின்னின. தரைப்பகுதி மரங்களின் பசுமைக்கும் இந்தத் தீவுப் பகுதித் தாவரங்களின் பசுமைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இந்தப் பசுமையில் ஒருவிதமான செழிப்பும், அடர்த்தியும் மதம் பிடித்ததுபோல் பற்றியிருந்தன.
மனிதர்களும் அதேபோல் வலிமை மதம் பிடித்தவர்களாய்த் தோன்றினார்கள். வலிமையையும், திடனையும் காட்டுவதுபோல் கரிய நிறம், வளையம் வளையமாகச் சுருண்ட செம்பட்டை முடி, ஒளி மின்னும் சிறிய கூர்மையான கண்கள், அதிக உயரமில்லாத தோற்றம், சதைப் பிடிப்பு வாய்ந்த திரண்ட தோள்கள், பரந்த மார்பு, வேகமாக ஓடுவதற்கும், துரத்துவதற்கும் ஏற்ப வாய்ந்தவைபோல் இறுக்கமான குதிகால்கள், அத்தீவின் மனிதர்களான எயினர்கள் பார்ப்பதற்கு விநோதமாயிருந்தார்கள். இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்பு நிற மரப்பட்டையைக் கச்சையாக அணிந்திருந்தார்கள்.
இளையபாண்டியனும், முடிநாகனும் தங்கள் பாய்மரக் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தச் செய்தனர். பாய்களும் கீழே இறக்கிச் சுருட்டி முடியப்பட்டன. கரையில் குன்றினருகே ஒட்டினாற்போலக் கப்பலைக் கொண்டுபோய் நிறுத்த முடியாமையினால் சிறிது தள்ளியே நிறுத்த வேண்டியதாயிற்று. கப்பல் நிறுத்தப்படுவதைப் பார்த்ததும் அதிலிருந்த இளையபாண்டியனோ, முடிநாகனோ கூப்பிடாமல் தாங்களாகவே இரண்டு குரூரமான தோற்றத்தையுடைய குள்ள எயினர்கள் ஓர் சிறு படகில் அதை நோக்கி வந்தனர்.
எயினர்கள் பேசிய தமிழில் வல்லின ஒலி அதிகமாயிருந்தது. படுத்த குரலில் சொல்ல வேண்டிய சொற்களைக் கூட எடுத்த குரலில் வலித்துப் பேசினார்கள். சொற்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு வெளியிடுவதுபோல் வெளியிடும் சமயங்களில் அவர்களுடைய முகத்தில் பளீரென்று மின்னும் சிறிய கண்கள் பார்ப்பவர்களுக்குப் பயமூட்டுகின்றனவையாய் இருந்தன.
கரையிலிருந்து கொண்டுவந்த அந்தச் சிறிய படகைக் காண்பித்து, "கீழே இறங்கி இந்தப் படகுக்கு வாருங்கள்" என்பதுபோல் இளையபாண்டியனையும், முடிநாகனையும் நோக்கி அந்தக் குள்ளர்கள் சைகையால் அழைத்தார்கள். தோற்றத்தைக் கண்டு ஏளனமாக எண்ணி அந்தக் குள்ளர்களை அலட்சியம் செய்யவோ அவர்கள் வேண்டுகோளை மறுக்கவோ, கூடாதென்பதுபோல் இளையபாண்டியனுக்குக் குறிப்பாக உணர்த்தினான் முடிநாகன்.
"இவர்கள் இந்தத் தீவிற்குத் தலைவனான வலிய எயினனின் பணியாளர்கள். வலிய எயினனுடைய வார்த்தைக்குத் தீவிலுள்ள பெருமக்கள் அடங்கிக் கட்டுப்படுவார்கள். வலிய எயினர்கள் அரசகுடும்பத்தினரைப் போல் பரம்பரையாகப் பட்டத்துக்கு வந்து தீவின் ஆட்சி உரிமையைப் பெறுகிறவர்கள்.
தீவுக்கு வருகிற பிற நாட்டினரை இவர்கள் முதலில் வலிய எயினனிடம் அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள். பாட்டனார் நம்மிடம் கொடுத்து அனுப்பியிருக்கும் அன்பளிப்புப் பொருள்களில் ஒரு பகுதியை இப்போது நம்முடன் எடுத்துக் கொண்டுவிட வேண்டும்.
மற்றெந்த நாட்டினர் எந்த எந்த அன்பளிப்பைக் கொண்டு வந்து கொடுத்தாலும் கபாடத்து முத்துக்களை அன்பளிப்பாகக் கொண்டு தருகிறவர்களிடம் இவர்கள் தனிப்பிரியம் காட்டுவார்கள் என்று தங்கள் பாட்டனார் கூறியிருக்கிறார் அல்லவா? அந்த உபாயம் இப்போது நமக்குப் பயன்படும் வேளை வந்திருக்கிறது" என்று இளையபாண்டியனின் செவியருகே நெருங்கி மேலும் கூறினான் முடிநாகன்.
ஊழியர்களை எல்லாம் கப்பலிலேயே விட்டுவிட்டு இளையபாண்டியனும், முடிநாகனும் வலிய எயினனைச் சந்திப்பதற்காகத் தீவிற்குள் அழைத்துச் செல்லவந்த படகில் புறப்பட்டனர். படகு கரையை நெருங்கியதும் - வேறு இரண்டு குள்ளர்கள் தீப்பந்தத்தோடு காத்திருப்பது தெரிந்தது.
தீவில் இருள் செறிந்திருந்தது. மேலே வானளாவிய மரங்களும் செடி கொடிகளும், அடர்ந்து படர்ந்திருந்த பகுதியில் நூலிழை ஓடுவதுபோல் ஒற்றையடிப்பாதை ஒன்று ஊடறுத்துக் கொண்டு போயிற்று. அந்தப் பசுமை அடர்த்தியினிடையே சிள் வண்டுகள் ஓசையிடும் சூழலில் ஒற்றையடிப்பாதை என்ற சிறு வழி அச்சமூட்டுவதாக இருந்தது.
குரவையிடும் ஒலி மெல்லக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆள் நடந்துவரும் ஒலியில் அமைதி கலைந்து மரங்களில் அடைந்திருந்த பறவைகள் சிறகடித்து எழுந்தன. பறந்துவிட்டு மறுபடியும் அடைந்தன.
அந்தி மயங்கும் நேரத்தின் இயல்பான இருளை மரங்களின் அடர்த்தி மிகைப்படுத்தி அதிகமாக்கி இருந்தது. தேக்கு, வெண்கடம்பு, தேவதாரு, ஆகிய மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அவற்றின் பருத்த அடிமரங்கள் இருளில் பூதாகரமாகத் தோன்றின.
இரு குள்ள எயினர்கள் தீப்பந்தத்தோடு முன்னால் வழிகாட்டி நடக்கப் பின்னால் வேறிரண்டு எயினர்கள் காவல் வர இளையபாண்டியனும், முடிநாகனும் நடந்து சென்ற வழி நீண்டு கொண்டேயிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பின் தாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த ஒற்றையடிப்பாதை ஒரு பள்ளத்தாக்கை நோக்கி இறங்குமுகமாகச் செல்வதை அவர்களால் உணர முடிந்தது. செழிப்பும், வளமும், பெருகி ஒரே பசுமை அடர்த்தியாகத் - தாவரக்குகையாக இருண்டிருந்த அந்தப் பகுதியில் மேடு பள்ளம் உணர்வதே அருமையாக இருந்தது.
ஓரளவு பொறுமையைச் சோதிக்கும் தொலைவுவரை நடந்தபின் பள்ளத்தாக்கானதொரு சமவெளியில் மரங்கள் ஆகாயத்தை மறைக்காத திறந்தவெளிக்கு வந்திருந்தார்கள் அவர்கள். திறந்த வெளியில் அங்கங்கே பரவலாகத் தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன.
எயினர்கள் கூட்டம் கூட்டமாகத் தென்பட்டார்கள். மேல் மரம் வெட்டப்பட்டதால் பத்துப் பன்னிரண்டுபேர் அமர முடிந்த வட்டவடிவமான மேடைபோல் தானே நேர்ந்திருந்த ஓர் அடிமரத்தில் வலிய எயினன் கம்பீரமாக வீற்றிருந்தான்.
அவன் கையில் நீண்ட வேல் இருந்தது. அதன் இலை போன்ற கூரிய நுனி தீப்பந்தத்தின் ஒளியில் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தது. இருளில் ஒவ்வொருவருடைய கண்களும்கூட அந்த வேல் நுனியைப் போல் பளீரென்று ஒளிர்ந்து கொண்டிருந்தன. இளையபாண்டியனும், முடிநாகனும் ஏழுகோல் தொலைவிலேயே நிற்குமாறு செய்துவிட்டு உடன் வந்த குள்ளர்கள் - வலிய எயினனைப் பயபக்தியோடு அணுகி வணங்கி ஏதோ கூறினர்.
அந்த நேரம் பார்த்துச் சமயோசிதமாகக் கபாடத்து முத்துக்களையும், சில இரத்தினங்களையும் இரு உள்ளங்கைகளிலும் ஏந்தியபடியே வலிய எயினனை நெருங்கினான் முடிநாகன். இரவில் விண்மீன்களாக மின்னும் அந்த முத்துக்களையும் இரத்தினங்களையும் கண்டவுடன் வலிய எயினனின் குரூரமான முகத்தில்கூட ஒரு மலர்ச்சி பிறந்தது. இளையபாண்டியன் ஏனோ வலிய எயினனின் அருகில் நெருங்கிச் செல்வதற்குத் தோன்றாமல் முதலில் நிறுத்தப்பட்ட இடத்திலேயே தயங்கி நின்றான்.
முடிநாகனோ தானாக எடுத்துக் கொண்ட உரிமையுடன் வலிய எயினனுக்கு அருகில் நெருங்கி முத்துக்களை வழங்கியதோடு அமையாமல், "தலைவரே! நாங்கள் பாண்டிய நாட்டு யாத்ரிகர்கள். தென்பழந் தீவுகளில் இயற்கை வளங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறோம். தங்களுக்கு அன்பளிப்பாக இந்த முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தோம்" என்று மிக விநயமாகப் பேசவும் தொடங்கிவிட்டான். வலிய எயினன் முகமலர்ச்சியோடு அவற்றைப் பெற்றுக் கொண்டான்.
"ஏன் உங்களுடன் வந்தவர் அங்கேயே தயங்கி நிற்கிறார்! அவரையும் கூப்பிடுங்கள். இருவரும் அப்படி அமர்ந்து கொள்ள வேண்டுகிறேன்" - என்று பக்கத்தில் மென்மையாக அலங்கரிக்கப்பட்டிருந்த இன்னோர் வெட்டுண்ட அடிமரப்பகுதியைக் காண்பித்தான் வலிய எயினன். இளையபாண்டியனும் முடிநாகனுக்கு அருகில் வந்து சேர வேண்டியதாயிற்று. இருவரும் வலிய எயினனுடைய வேண்டுகோளுக்கிணங்கி அமர்ந்து கொண்டனர். வலிய எயினன் அந்தத் தீவில் விளைந்த விநோதமான தோற்றங்களையுடைய பல நிறக்கனிகளை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தான்.
"இந்தத் தீவுக்கு வரும் விருந்தினர்களையும் நண்பர்களையும் நாங்கள் நேசபாசத்தோடு வரவேற்க முடிவுசெய்து விட்டோமென்றால் தான் இப்படிக் கனிகளை அளித்து உபசரிப்போம்" என்று இரைந்து சிரித்துக் கொண்டே தன் முரட்டுக் குரலில் உரத்துக் கூறினான் வலிய எயினன். முடிநாகனும், இளையபாண்டியனும் கூடப் பதிலுக்குப் புன்முறுவல் பூக்க முயன்றனர்.
--------------
18. நாதகம்பீரம்
எயினர் தலைவன் அவர்களைத் தன் விருந்தினர்களாக ஏற்று மிகவும் அன்போடும் ஆர்வத்தோடும் உபசரிக்கத் தொடங்கி விட்டான். அவர்கள் அவனுக்குப் பரிசளித்த முத்துக்களும் அவற்றைவிட நயமான வார்த்தைகளும் எயினர் தலைவனின் மனத்தில் ஒரு நன்மதிப்பை உண்டாக்கியிருக்க வேண்டுமென்பது அவனுடைய மலர்ச்சியிலிருந்தே தெரிந்தது.
இந்த முதல் இராசதந்திரச் சந்திப்பை எவ்வளவிற்கு எவ்வளவு பயணத்தைப் பற்றிய நம்பிக்கை தங்கள் மனத்தில் பெருக முடியுமென்பது இருவருடைய எண்ணமுமாக இருந்தது. கூடியவரை தங்கள் உரையாடல் பொதுவான உரையாடலாக இருக்குமாறு இருவருமே கவனம் வைத்துக் கொண்டு பேசினார்கள்.
தொன்மையான தென்பழந்தீவுகளுக்கும், கபாடபுரத்துக்கும் இடையேயுள்ள அரசியல் உறவின்மைகளையோ, உறவுகளையோ, உரையாடலுக்குப் பொருளாக்கி விடாமல் தவிர்ப்பதை இருவருமே சாதுரியமாக நிறைவேற்ற முடிந்தது.
எதை விரும்பிப் பேசுகிறோமோ 'அதையே ஏன் விரும்பிப் பேசுகிறோம்' என்ற கேள்வி எதிராளியின் மனத்தில் எழுந்துவிடாமலும், எதை விரும்பித் தவிர்க்க முயல்கிறோமோ 'அதை மட்டும் ஏன் தவிர்க்க முயல்கிறோம்?' - என்ற சந்தேகம் எதிரிக்கு ஏற்படாமலும் பேசுவதுதான் இராசதந்திரப் பேச்சு. இத்தகைய பேச்சுக்களைப் பயிலவும், பழகவுமே பெரியபாண்டியர் தங்களை இந்தச் சுற்றுப்பயணத்திற்கு அனுப்பியிருக்கிறார் என்பது இருவருடைய மனத்திலும் மேலெழுந்து நின்ற காரணத்தினால் இருவருமே அதைச் செம்மையாகச் செய்ய முடிந்தது.
பகல் நேரத்திலும் வெயில் உள்ளே நுழைய முடியாதபடி அடர்ந்து செறிந்திருந்த காடுகளாலான அந்தத் தீவில் காட்டு விலங்குகளின் தொல்லைகளிலிருந்து விடுபடக் கருதியோ, என்னவோ குடியிருப்புகளை எல்லாம் மரங்களின் உச்சியில் அமைந்திருந்த பரண்களில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
அந்தத் தீவில் செழித்து வளர்ந்திருந்த ஒருவகைப் புல்லினால் குடிசைகள் அழகுற வேயப்பட்டிருந்தன. முடிநாகனும், சாரகுமாரனும், தங்குவதற்குக்கூட அப்படி இரண்டு பரண்களிலமைந்த புல்வேய் குரம்பைகளே கிடைத்தன. உயர்ந்த மரக்கிளைகளில் வைரம் பாய்ந்த பல கைகளைப் பதித்துப் பசுமைச் சூழலில் தொங்குவதுபோல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குடிசைகளில் தங்குவதற்கு இதமாக இருந்தது. நீருள் அமிழ்ந்திருப்பதுபோன்ற தண்மை அங்கு நிலவியது. அந்தத் தண்மையின் சுகத்தினாலும், பயணம் செய்துவந்த களைப்பினாலும் முடிநாகன் நன்றாக உறங்கிவிட்டான்.
இளையபாண்டியனுக்குத்தான் உறக்கமே வரவில்லை. அந்த இயற்கையழகின் தூண்டுதலில் கண்ணுக்கினியாளின் நினைவு வந்தது அவனுக்கு. 'உண்மை அன்பிற்கும், பரிவிற்கும்தான் எத்தனை பெரிய சக்தி? நினைப்பதிலும், காண்பதிலும், சிந்திப்பதிலும், எல்லாவற்றிலும் நம்முள் பொங்குகிற பரிவின் மற்றொரு நுனியிலிருப்பவர்களே நமக்கு ஞாபகம் வருகிறார்களே?' என்றெண்ணி வியந்தான் அவன்.
மரங்களும், செடிகளும், கொடிகளுமாக ஒரே மனத்தின் பல உணர்வுகளைப் போல் நெருங்கிப் பிணைந்திருந்ததனால் அவன் அமர்ந்திருந்த பரணில் காட்டின் பசுமை மணம் கம்மென்று தொகுதியாகப் பரவியிருந்தது. 'பூக்களின் நறுமணம் நமக்குப் பிரியமானவர்களின் ஞாபகத்துக்கு ஒரு தூதுபோல வாய்க்கும்' என்று அகப்பொருள் இலக்கணத்தில் ஏதோ ஒரு துறைக்கு விளக்கம் கூறுகிறபோது ஆசிரியர் கூறியது நினைவு வந்தது அவனுக்கு.
அந்தத் தண்மை அந்த இயற்கையின் மலர்ச்சி, அந்த இரவின் ஏகாந்தம், யாவும் கண்ணுக்கினியாளையே எண்ணச் செய்தன. சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு மூலையில் இருக்கும். வேறு சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு பாதியாக இருக்கும்.
இன்னும் சிலருடைய நினைவே ஒரு ஞாபகமாக இருக்கும். மனத்தின் அந்தரங்க கீதங்களாகப் பெருகிப் பல்லாயிரம் பண்களை ஒலிக்கும் இங்கித நினைவுகள் சிலவும் இதயத்திற்கு உண்டு. அந்த நினைவுகள் குருதியும் சதையுமாக இதயத்தோடு பிணைந்தவையாக இருக்கும். கண்ணுக்கினியாளைப் பற்றிய நினைவும் அவனுள் அப்படித் தவிர்க்க முடியாததாகவே இருந்தது. இயற்கையழகு மிகுந்த அந்தக் குளிர்ந்த வனத்தில் அவளை நினைப்பதற்கு என்றே இரவெல்லாம் விழித்திருந்தாலும் தகும் என்பது போலிருந்தது அவன் நிலை.
'மனித இதயத்திற்குள் கரை கொள்ளாத் தவிப்பாக நிரம்பியிருக்கும் ஏதோ ஓர் உணர்வுதான் அவன் பாடும் இசையாகிறது' என்று இசை நுணுக்கங்களைக் கற்பிக்கும் போது ஆசிரியர் சிகண்டியார் இடைக்கிடை கூறுவதுண்டு. கண்ணுக்கினியாளின் இசையும் நளினமான குரலும் ஞாபகம் வருகிற வேளைகளில் எல்லாம் சிகண்டியார் கூறும் இந்த வாக்கியத்தையும் உடனிகழ்ச்சியாகச் சேர்த்தே நினைத்திருக்கிறான் அவன்.
'கண்ணுக்கினியாள்
செவிக்கினியாள்
பண்ணுக்கினியாள்
பலப் பலவாய் மன
எண்ணுக்கினியாள்'
என்று அவளைப் பற்றி நிறைவேறியவரை அப்படியே நின்று மேலே நிறைவேறாத கவிதையொன்றும் அவனுள் முகிழ்த்திருந்தது.
அடர்ந்த காட்டினிடையில் இடைவெளிகளில் புகமுயலும் காற்றின் உக்கிரமான ஓசையும், தொலைவில், அதிக அன்புக்குரியவரைப் பிரிய நேர்ந்துவிட்ட யாரோ வாயிலும் வயிற்றிலும் ஏற்றிக் கொண்டு கதறுவது போன்ற கடல் ஓசையும் ஒலித்த வண்ணமிருந்தன.
எப்போது உறங்கத் தொடங்கினோம் என்று தனக்கே நினைவில்லாத வேளையில் உடல் களைப்பின் காரணமாகச் சோர்ந்து இளையபாண்டியனும் உறங்கத் தொடங்கியிருந்தான். உறங்கத் தொடங்கிய உறக்கத்தையும், அதன் இனிய நினைவுகளையும், கனவுகளையும், வேகமாக யாரோ ஓடிவந்து கலைத்ததுபோல் வைகறை விரைந்து வந்து கலைத்து விட்டது.
வைரக் கற்களின் பட்டைகளில் இருந்து விதவிதமான ஒளிக்கீறல்கள் பாய்வதைப் போல் காலைக் கதிரவனின் கதிர்க்கற்றைகள் அந்த அடர்ந்த வனத்தில் நுழைய முயன்றன. இளையபாண்டியன் கண்விழித்தவுடன் அருகே பரணுக்குள் முடிநாகன் படுத்துறங்கிக் கொண்டிருந்த இடத்தைப் பார்த்தபோது அங்கே அவனைக் காணவில்லை. கீழே தரையைக் குனிந்து பார்த்தபோது அவன் அங்கே நின்று கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரையும் நீராடல் முதலிய காலைக் கடன்களை ஆற்ற அழைத்துச் செல்லுவதற்காக எயினர் தலைவனால் அனுப்பப்பட்டிருந்த பணியாளன் ஒருவனும் பரணுக்கடியில் காத்திருந்தான். ஏற்கெனவே கீழே இறங்கிவிட்ட முடிநாகன் அந்தப் பணியாளனுடன் தான் பேசிக் கொண்டிருந்தான்.
சாரகுமாரனும் கீழே இறங்கிப் போய் அவர்களோடு சேர்ந்து கொண்டான். பணியாள் அவர்கள் இருவரையும் பக்கத்துக் குன்றின் சரிவில் இருந்த ஓர் அருவிக்கு நீராட அழைத்துச் சென்றான். அந்த அருவியின் பெயர் 'நாத கம்பீரம்' என்று கூறியபோது பொருத்தமான அந்தப் பெயரை வியந்தான் சாரகுமாரன். பாறைகளிலும் கற்களிலும் துள்ளிக் குதித்து விழும் வேளையில் மத்தளம் கொட்டுவது போலிருந்தது அந்த அருவியின் நாதம்.
அருவியைக் கண்களால் அருகிலிருந்து காணாமல் சிறிது தொலைவு விலகிச் சென்று மரங்களின் மறைவிலோ, புதரிலோ, குன்றின் மறுபுறத்திலோ நின்று அந்த ஓசையை மட்டும் செவிமடுத்தால் யாரோ தொலைவிலிருந்து உரத்த குரலிலே மத்தளம் வாசிப்பது போலவே ஒலித்தது. அந்தத் தீவின் அதிசயங்களில் ஒன்றாக அதனையும் கூறினார்கள்.
'எல்லாக் கலைகளும் இயற்கையின் பல்வேறுவிதமான சங்கேதங்களிலிருந்துதான் பிறந்து விரிந்து பின் நோக்கமும், துறையும் கற்பிக்கப்பட்டனவாதல் வேண்டும்' என்று தன்னுடைய ஆசிரியர்கள் முன்பொரு சமயம் தனக்குக் கற்பித்திருந்த பிரத்யட்ச வாக்கியத்தை இப்போது நினைவு கூர்ந்தான் சாரகுமாரன்.
நாத கம்பீரத்தின் குளிர்ந்ததுவும், காட்டு மூலிகைகள், வேர்கள், பூக்கள், பச்சிலைகளின் சுகமான வாசனை நிறைந்ததுவுமாகிய நீரில் குளித்தெழுந்த போது தேவர்களின் அமுதத்தை உண்ட உற்சாகம் அவர்கள் உடலில் நிறைந்திருந்தது நீராடி உடைமாற்றிக் கொண்டு அவர்கள் மீண்டும் எயினர் தலைவனைச் சந்திக்க வேண்டியிருந்தது. "இன்றைப் பகற்பொழுதையும், இரவையும் இங்கே கழித்துவிட்டு நாளைக் காலையில் இந்தத் தீவை விட்டுப் புறப்பட்டு யாத்திரையை மேலே தொடர வேண்டும்" என்று கூறியிருந்தான் முடிநாகன்.
எயினர் தலைவனின் அரசியல் உள் நோக்கங்களைப் பொதுவாக அறிய வாய்ப்பு ஏற்படும் முறையில் அதே சமயத்தில் தாங்கள் யார் என்று எயினர் தலைவன் அறிந்து கொள்ளவும் முடியாமல் தந்திரமாகச் சில வினாக்களை வினாவிப் பார்க்க வேண்டும் என்று அன்றைக்கு அவர்கள் நினைத்திருந்தார்கள். முதல் நாள் அவர்களை வரவேற்ற அதே இடத்தில் அதே பழைய சுற்றப் பரிவாரங்களோடுதான் இன்றும் எயினர் தலைவன் அவர்களை எதிர்கொண்டான். ஆனால் அவர்கள் நினைத்தபடி ஒரு காரியம் மட்டும் முடியவில்லை.
--------
19. கலஞ்செய் நீர்க்களம்
வலிய எயினன் அப்போதிருந்த சூழ்நிலையில் அவனிடம் விரிவாக உரையாட முடியாமலிருந்தது. யானை, யானையாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்த பூதாகாரமான மல்லர்கள் இருவரை மற்போரிடச் செய்து கண்டு இரசித்துக் கொண்டிருந்தான் எயினர் தலைவன்.
"இந்தத் தீவில் தனித்து வாழும் எங்களுக்கு உடல் வலிமையைத் தவிர வேறெந்தச் செல்வங்களும் இல்லை. எங்களைச் சுற்றியிருக்கும் கடலுக்கு அப்பாலுள்ள பெரிய பெரிய தேசங்களில் நால்வகைப் படைகளும், வேறு சாதுரியங்களும் உண்டு. எங்களுக்கு அவையொன்றும் கிடையாது" என்று கூறிவிட்டு மற்போரை இரசித்துக் காணுமாறு விருந்தினர்கள் இருவரையும் வேண்டிக் கொண்டான் எயினர் தலைவன்.
அவனுடைய வேண்டுதலாலும் யாவர் கவனமும் மற்போரையே சார்ந்திருந்ததாலும் அப்போது அதிகம் பேச்சுக் கொடுத்து எயினர் தலைவனுடைய மனத்தை அவர்களால் ஆழம் பார்க்க முடியவில்லை. எயினர்களிடம் கபடு சூதுவாது இல்லையென்றாலும் அவர்கள் முரடர்களாயிருந்தார்கள். அதனால் அவர்களுடைய மனப்போக்குப்படியே போய் அதன் பின்பே எதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
"தேச தேசாந்திரங்களையும் கடலிடைத் தீவுகளையும் சுற்றிப் பார்க்கும் எண்ணத்தோடு யாத்திரிகர்களாக வந்திருக்கிறோம்" என்று வந்தவுடனே எயினர் தலைவனிடம் கூறிய கூற்றுக்கு மாறுதலின்றி நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. மற்போர் முடிந்த பின்னர் - போரில் வெற்றி பெற்ற எயின மல்லனுக்கு அவர்கள் தலைவன் பரிசளித்தான்.
அதன்பின் மற்போர் நடந்த இடத்திற்குச் சிறிது தொலைவில் அடர்த்தியான மரக் கூட்டங்களுக்கு மேலே மற்றவற்றை விடச் சற்று விசாலமாகவும், பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த எயினர் தலைவனின் பரணிற்கு அவனோடு அழைக்கப்பட்டுச் சென்றார்கள் முடிநாகனும், சாரகுமாரனும். அரண்மனையைப் போன்று செழுமையாகவும், வளமாகவும், அமைக்கப்பட்டிருந்தது அந்தப் பரண். விருந்துண்ட பின்னர் எயினர் தலைவன் பொதுவான பேச்சுக்களைத் தொடங்கினான்.
"வைரம் பாய்ந்த இந்தத் தீவின் மரங்களை எல்லாம் பாண்டி நாட்டுக்கு விற்று முத்துக்களைப் பெறுகிறோம் நாங்கள். அந்த மரங்களை அவர்கள் தேர்களாகவும், கப்பல்களாகவும் அறுத்துக் கட்டுகிறார்கள். அதன் மூலம் அவர்களுடைய படைவலிமையும் பெருகுகிறது.
தேர்களை அவர்கள் எவ்வளவு கட்டினாலும் - தேர்ப்படையை எவ்வளவு பெரியதாக வளர்த்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் எங்களுடைய மரங்களை அறுத்துக் கலங்கள் கட்டுவதை மட்டும் நாங்கள் விரும்பமாட்டோம். தேர்களால் கடல்கடந்து வந்து எங்களோடு போரிட முடியாது. ஆனால் கலங்களைச் செலுத்திக் கடல் கடந்து வந்து எங்களோடு போரிட முடியும்.
பாண்டிய நாட்டு அரச குடும்பத்தினர் தேர்ப் படையைப் பெருக்குவதற்காகவே மரங்கள் பெற்றுச் செல்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் பிறர் அறியாத வண்ணம் பொருநை முகத்துவாரத்தில் ஆற்றை ஆழமாக்கிக் கொண்டு பல்வேறு கலங்களை அவர்கள் கட்டி வருவதாக எங்களுக்குத் தெரிகிறது" - என்று எயினர் தலைவன் அவர்கள் இருவர் முகத்தையும் கூர்ந்து நோக்கிக் கொண்டே கூறியபோது, "அப்படி இருக்க நியாயமில்லை ஐயா! பாண்டிய மன்னர்கள் எதைச் செய்தாலும் பிறருக்கு வஞ்சனை புரியமாட்டார்கள்" என முடிநாகன் மறுத்துப் பார்த்தான்.
"உங்களுடைய தேசத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் நன்றியையும், நம்பிக்கையையும் பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் கூறியதை நான் அப்படியே ஒப்புக் கொண்டுவிட வேண்டுமென்று எதிர்பார்ப்பது தான் தவறு" - என்று தீர்க்கமான குரலில் எயினர் தலைவனிடமிருந்து முடிநாகனுக்கு மறுமொழி கிடைத்தது. இந்த மறுமொழியைச் செவிமடுத்தபின் முடிநாகனால் சிறிதுநேரம் எதுவுமே பேசமுடியவில்லை. சாரகுமாரனோ எயினர் தலைவனுடைய கடுமையான முகத்தையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்து எயினர் தலைவனே மீண்டும் பேசத் தொடங்கினான்.
"இப்போதெல்லாம் நாங்களும் விழித்துக் கொண்டு விட்டோம். அவர்களைப் போல் பாதுகாப்பு நலன்கள் நிறைந்த விசாலமான பூமியை நாங்கள் ஆளவில்லை. எங்களுடைய சிறிய தீவை நாங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழி கடல் வழி தான்.
தேர்களையோ, சகடங்களையோ செய்து நாங்கள் பயனடைய முடியாது. எனவே, 'நாத கம்பீரம்' அருவியாக வீழ்ந்து ஆறாகப் பெருகிக் கடலுள் கலக்கும் இடத்தில் உள்முகமாக வனத்தின் அடர்ந்த பகுதியில் ஆற்றை ஆழப்படுத்தி நாங்களே கப்பல் கட்டும் தளம் ஒன்று அமைத்திருக்கிறோம். அந்தக் கலஞ்செய் நீர்க்களத்தில் இது காறும் சில நல்ல மரக்கலங்களைக் கட்டி முடித்திருக்கிறோம். இந்தத் தீவின் கடற்காவலர்கள் அவற்றை வெள்ளோட்டமாக எடுத்துக் கொண்டு கடலின் பல பகுதிகளுக்குப் போயிருக்கிறார்கள்.
இனிமேல் இந்தத் தீவில் கிடைக்கும் வைரம் பாய்ந்த நல்ல மரங்கள் எல்லாம் முதலில் எங்கள் கலஞ்செய் நீர்க்களத்தை நாடித்தான் போகும்."
"பாராட்டத்தக்க முயற்சி தான் ஐயா! ஆனால் இத்தகைய கலங்களைக் கட்டுவதற்கு அநுபவம் வாய்ந்த வல்லுநர்கள் நிறைய வேண்டியிருப்பார்களே?" என்று பாராட்டுவது போல் எயினர் தலைவனிடம் ஒரு கேள்வியைப் போட்டான் சாரகுமாரன்.
"அதற்குப் பஞ்சம் ஒன்றுமில்லை! 'கபாடபுரம்' முதலிய கோ நகரங்களிலே தேரும், கலமும் கட்டிமுடித்து வெள்ளோட்டம் விடும் வித்தகர்களாக இருப்பவர்களே இந்தத் தீவிலிருந்து சென்ற வலிமையாளர்கள் தானே?" என்று எயினர் தலைவன் உடனே ஆத்திரத்தோடு எதிர்த்துக் கேட்ட கேள்வியிலேயே சாரகுமாரனுக்கு வேண்டிய செய்தியும் கிடைத்துவிட்டது.
சிறிது நேர மௌனத்துக்குப் பின் எயினர் தலைவனிடம் சாரகுமாரன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.
"ஐயா! நாதகம்பீர ஆற்றை ஆழப்படுத்திக் கப்பல் கட்டும் தளம் அமைத்திருக்கும் பகுதியை யாத்திரிகர்களாகிய நாங்களும் காண ஆசைப்படுகிறோம். எங்கள் ஆசை நியாயமானதென்று தாங்கள் கருதினால் மட்டுமே இந்த விருப்பத்தை ஏற்கலாம். இல்லாவிடில் நாங்களே எங்கள் விருப்பத்தை விட்டுவிடுகிறோம்."
"பொதுவில் நாங்கள் அந்நிய தேசத்து யாத்திரிகர்கள் எவரையும் அங்கு அழைத்துச் செல்வதில்லை. ஆயினும் உங்களிருவருடைய அன்பான வேண்டுகோளிலும் நியாயமிருப்பதாக எனக்குத் தோன்றுகிற காரணத்தால் நான் அதற்கு இணங்குகிறேன்.
இன்று மாலையிலேயே உங்கள் விருப்பத்தை நிறைவு செய்யப் பார்க்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். கலஞ்செய் நீர்நிலைக் களனுக்குச் செல்கிற வழியைக் கூடிய வரை வேறு தேசத்தார் அறிய விடக்கூடாது என்பது எங்கள் கருத்து.
அதனால் செல்லும் வழி முடிய உங்கள் இருவருடைய கண்களையும் மேலாடையினால் கட்டி மறைத்தே அழைத்துச் செல்ல முடியும். தளத்தை அடைந்தவுடனே நீங்கள் சுதந்திரமாகக் கண்களைத் திறந்து பார்க்கலாம். இந்தச் சிறிய கட்டுப்பாட்டை நீங்களும் ஒப்புக் கொண்டு மதிப்பீர்களென நம்புகிறேன்" என்று அந்தத் தீவின் தலைவன் நிபந்தனை கூறியபோது இருவரும் அதற்கு இணங்கினர்.
மாலையில் அவர்கள் கலங்கட்டும் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புறப்பட்ட சில நாழிகைத் தொலைவு அடர்ந்த புதர்களுக்கு நடுவே நடந்து செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாழிகைப் பயணமும் முடிந்த பின் அவர்களுடைய கண்களை மூடிக் கட்டியிருந்த மேலாடைகள் அகற்றப்பட்டன.
பார்த்தால் எதிரே கோலாகலமான வியக்கத்தக்க காட்சிகள் தென்பட்டன. அடர்ந்த நடுக் காட்டுக்குள் ஆறு ஆழப்படுத்தப்பட்டுக் கட்டிய கலங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. மரங்களை அறுப்போரும் கொல்லருமாகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர். ஆண்டுக் கணக்கில் கடலிலேயே மிதந்து கிடந்து திரிந்தாலும் அயராத தளராத கலங்களை அங்கு கண்டார்கள் அவர்கள்.
கலங்கட்டும் தளத்தை அமைத்திருந்த இடம்தான் தந்திரம் நிறைந்ததாயிருந்தது என்றால் ஏற்பாடுகளும் தந்திரம் நிறைந்தவையாயிருந்தன. காட்டுக்குள் அடர்த்தியினிடையே மறைந்திருந்ததனால் திடீரென்று கடலுக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கவும், தாக்கிய வேகத்தில் உள்வாங்கித் திரும்பி மறையவும் ஏற்ற இடத்தில் தளம் அமைந்திருந்தது. இதுபோல் சிறிய தீவின் பாதுகாப்பு அல்லது எதிரிகளைத் தாக்கும் ஏற்பாட்டிற்கு மிகமிகப் பொருத்தமான தளமாக அது இருப்பதை இருவரும் உணர்ந்தனர்.
வார்த்தைகளை நிறைய தொடுத்து அந்த தளத்தை அதிகமாகப் பாராட்டினால் கூட அந்தப் பாராட்டிலிருக்கும் மிகையான அம்சங்களைக் கண்டு உணர்ந்து வலிய எயினன் சந்தேகிக்கக் கூடுமென்று தயங்கி அளவான வார்த்தைகளில் பாராட்டினார்கள் அவர்கள். கப்பல்கள் யாவும் கபாடபுரத்துக் கலஞ்செய் கோட்டத்தில் படைக்கப் பெறுவனவற்றை விட உறுதியாகவும், உழைக்க வல்லவையாகவும் இங்கு இருப்பதையும் அவர்கள் கண்டார்கள்.
மீண்டும் கலஞ்செய் நீர்நிலைக் களத்திலிருந்து திரும்பும் போது அவர்களிருவரும் கண் கட்டியே அழைத்து வரப்பட்டார்கள். பரணுக்குத் திரும்பியதும் இரண்டாவது முறையாக மீண்டும், "உங்களைப் போன்ற யாத்திரிகர்கள் ஒரு தீவின் தந்திரமான பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்டு வியப்பது இயல்பை மீறிய காரியமாகவே எனக்குத் தோன்றுகிறது?" என்று சந்தேகம் தொனிக்க வினாவிட்டு அவர்கள் இருவருடைய முகபாவங்களையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். அவனுடைய கழுகுப் பார்வை அவர்களைத் துளைப்பது போலிருந்தது.
-------------
20. சந்தேகமும் தெளிவும்
கலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோ கூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்து கொண்ட சாரகுமாரனும், முடிநாகனும், விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். "கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா? உண்டானால் என்னென்ன கலைகளில் ஈடுபாடு உண்டு?" என்பதுபோல் உரையாடல் மாற்றப்பட்டது.
கோ நகரங்களின் அரச தந்திர நாகரிகங்களும் உரையாடல் நுணுக்கங்களும் தெரியாவிட்டாலும் நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும், உள்ளோருக்கு இயல்பாகவே வாய்க்கும் சில சந்தேகங்கள் எயினர்களுக்கும் இருந்தன.
திடீரென்று தங்களுடைய கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்க வேண்டுமென்று விருந்தினர்கள் ஆர்வம் காட்டியதும், பார்த்து முடித்ததும் - அதைப்பற்றிய பேச்சை வளர்த்தாமல் - ஒரு விதமான அவசரத்தோடு கலையைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் - எயினர் தலைவனுக்குக் கவலையை அளித்தன.
சாதுரியமாகத் தொடர்ந்து பேசிய பேச்சினால் சாரகுமாரனும், முடிநாகனும் அந்தக் கவலையை மறக்கச் செய்துவிட்டார்கள். எயினர் தலைவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனுள்ளேயே தளரும்படி செய்ய அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது.
முடிவில் அவர்கள் இருவரும் அந்தத் தீவிலிருந்து விடைபெற முயன்றபோது. "ஏன் அவசரப்படுகிறீர்கள்? இன்னும் சில தினங்கள் தங்கியிருக்கலாமே?" என்று எயினர் தலைவன் உபசாரத்துக்காகக் கூறினான். அந்த உபசார வார்த்தைகளையே ஏணியாகப் பற்றி ஏறி நின்று கொண்டு எயினர் தலைவனின் சந்தேகத்தைக் கடந்து மீண்டான் இளையபாண்டியன். ஆயினும் சந்தேகத்தை முற்றிலும் கடந்துவிட்ட உறுதி அவனுக்கு வரவில்லை.
"ஐயா! யாத்திரிகர்களாகிய நாங்கள் ஒரே இடத்தில் தங்கி நின்று என்ன பயன்? புதிய புதிய இடங்களையும், புதிய புதிய காட்சிகளையும், புதிய புதிய மனிதர்களையும் சந்திப்பதும், காண்பதுமே, எங்களுக்குப் பயன் தரும். ஆகவே தயைகூர்ந்து எங்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.
தங்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் பலகாலும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று தனக்கோ முடிநாகனுக்கோ அந்தத் தீவில் மேலும் தொடர்ந்து தங்கித் தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்பதுபோல் அசிரத்தையாகப் பேசிய பின்பே சாரகுமாரன் எயினர் தலைவனின் சந்தேகச் சிறையிலிருந்து மீள முடிந்தது.
அறிவுக்கூர்மை மிக்கவர்களின் சந்தேகங்களையாவது சொற்களால் தெளிவு செய்துவிடலாம். 'அறியாமையும் பிடிவாதமும் உள்ள நாட்டுப்புறத்து மனிதர்களின் சந்தேகங்களைச் சொற்களாலோ, சிந்தனைத் தெளிவினாலோ மட்டுமே தீர்க்க முடியாது.
சாதுரியம் மட்டுமே அப்படிப்பட்ட சந்தேகங்களைத் தீர்க்க முடியும்' என்பதைச் சாரகுமாரன் அந்த வேளையில் மிக நன்றாக உணர முடிந்தது. எயினர் தலைவன் தங்களுக்கு விடை கொடுத்து விட்டாலும் தங்களை வழியனுப்புவதிலும், தாங்கள் செல்ல வேண்டிய வேறு தீவுகளுக்கு எப்படி எப்படிப் போக வேண்டுமென்று வேறு சொல்லுவதிலும் அவன் அதிகமான சிரத்தை காண்பிக்க முன்வந்ததிலும் ஒரு சிறப்பான உள் நோக்கம் இருக்க வேண்டுமென்று தோன்றியது சாரகுமாரனுக்கு.
அதை அவன் முடிநாகனிடம் கூறி விவாதிக்கவும் விரும்பவில்லை. அந்த உள்நோக்கத்தின் விளைவு விரைவில் தெரியுமென்றும் அவனுக்குத் தோன்றியது.
தங்களுடைய மரக்கலத்துக்கு வந்து பயணத்தைத் தொடங்கிய பின்பும் இதைப்பற்றித் தனிமையில் கூட அவன் முடிநாகனிடம் எதுவும் கூறவில்லை. மரக்கலத்தைச் செலுத்தும் மீகாமனும் பிற ஊழியர்களும் முடிநாகனும் செல்ல வேண்டிய திசையைக் குறித்துத் தங்களுக்குள் உரையாடத் தொடங்கிய போதும் இளையபாண்டியன் அதில் கலந்து கொள்ளவில்லை.
'இன்ன இன்ன திசையில் இப்படி இப்படி மரக்கலத்தைச் செலுத்திக் கொண்டு சென்றால் நீங்கள் செல்ல வேண்டிய தீவுகளுக்கு ஏற்றபடி வழி அமையும்' என்று விடைபெறும் போதும் எயினர் தலைவன் கூறிய வழிகளை இப்போது முடிநாகன் பிற ஊழியர்களிடம் நம்பிக்கையோடு விவரிக்கத் தொடங்கியபோது கூட இளையபாண்டியன் அதில் தலையிடவில்லை.
எல்லாம் பேசி முடித்து ஊழியர்களுக்கு இடவேண்டிய கட்டளைகளையும் இட்டு முடிந்த பின் முடிநாகன் தனியே நின்று கொண்டிருந்த இளையபாண்டியனுக்கருகே நெருங்கி, "எந்தத் திசையில் மரக்கலத்தைச் செலுத்தச் சொல்லியிருக்கிறேன் தெரியுமா?" என்று வினாவியபோது, "எந்தத் திசையில் செலுத்திக் கொண்டு போனாலும் ஆபத்து இருக்கிறது என்பதை மறந்து விடாதே" என்று பூடகமாக மறுமொழி கிடைத்தது இளையபாண்டியனிடமிருந்து.
அந்த மறுமொழியைக் கேட்டு முடிநாகன் ஓரளவு அதிர்ச்சியடைந்தான் என்றே சொல்ல வேண்டும். மேலும் தொடர்ந்து இளைய பாண்டியன் ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்த முடிநாகனுக்கு அவனுடைய தொடர்பான நீடித்த மௌனம் திகைப்பையே அளித்தது. அந்த மௌனத்தைத் தற்செயலான அமைதியாகவோ சோர்வாகவோ கருதி விட்டுவிடவும் முடிநாகனால் இயலவில்லை. ஏதோ பெரிய காரணம் இருக்க வேண்டுமென்றும் தோன்றியது.
ஒரு காரணமும் தனியே பிரிந்து புலப்படவில்லை. அந்த நிலையில் இளையபாண்டியனின் அந்த மௌனத்தைக் கலைத்து உரையாடலை வளர்க்கவும் தயக்கமாக இருந்தது அவனுக்கு. நீண்ட நேரம் அதே நிலைமை நீடித்தது. இளையபாண்டியனிடம் ஏதாவது பேசியாக வேண்டுமென்று முடிநாகனே வாய் திறந்தபோது சிறிதும் எதிர்பாராதவிதமாக இளையபாண்டியனே பேச முன்வந்தான்.
"முடிநாகா! நாம் இந்தத் தீவில் இன்னும் சில நாட்கள் தங்கி நம்மோடு எயினர் தலைவன் சுபாவமாகப் பழகத் தொடங்கிய பின்பு கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்கும் ஆவலை வெளியிட்டிருக்க வேண்டும். அவசரப்பட்டு விட்டோம். அவசரப்படாமல் காரியங்களைச் சாதித்துக் கொள்வதிலுள்ள நீடித்த சௌகரியம் அவசரப்படுவதில் எப்போதுமே இருப்பதில்லை" என்று இளையபாண்டியன் கூறத் தொடங்கியதும் முடிநாகனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் தனக்கு ஒன்றும் புரியாத பாவனையில் திகைப்போடு சாரகுமாரனின் முகத்தைப் பார்த்தான். சாரகுமாரனோ கடலைப் பார்த்தான். நான்குபுறமும் திரும்பித் திரும்பி எதையோ எதிர்பார்ப்பதுபோல் பார்த்தான். அதிலிருந்தும் முடிநாகனால் எதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவனுடைய சந்தேகமும் தீரவில்லை. தெளிவும் பிறக்கவில்லை. அந்நிலையில் அவர்கள் மனநிலையைப் போல் இருளும் மயங்கத் தொடங்கியது.
---------
21. ஒரு சோதனை
மரக்கலத்தில் தீப்பந்தங்கள் ஏற்றிப் பொருத்தப் பெற்றன. இருட்டிவிட்டதை உணர்வுக்குக் கொணர்வதுபோல் அந்தப் பந்தங்களின் ஒளி இருளின் செறிவைக் காட்டலாயிற்று. எங்கோ தொலைவில் அதே போன்ற ஒளியின் தூரத்துப் புள்ளிகள் தென்படத் தொடங்கின.
"வேறு மரக்கலங்களும் தென்படுகின்றன. இனி பயமில்லாமல் போகலாம்" என்றான் முடிநாகன்.
"அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?" என்று பதில் வந்தது இளையபாண்டியனிடமிருந்து.
"கடற்பகுதியின் இந்த இடங்களில் முந்நீர்க் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் மிகுதியாயிருப்பதாகச் சொல்வார்கள். தனிக் கப்பல்கள் சிக்கிக் கொண்டால் கடம்பர்கள் துணிவாகக் கொள்ளைக்கு வருவார்கள். கூட்டம் கூட்டமாக மரக்கலங்கள் செல்லும்போது அவர்கள் தொல்லை இராது" என்ற முடிநாகனின் பேச்சை இடைமறித்து,
"உன் கண்ணில் இப்போது தென்படும் மரக்கலங்களின் ஒளித் தோற்றத்தைக் கொண்டு மட்டுமே அவை நமக்கு வேண்டியவர்களின் மரக்கலங்கள் என்றோ நம்மைப்போல் யாத்ரீகர்களின் மரக்கலங்கள் என்றோ எப்படிக் கொள்ள முடியும்?" என்று கேட்டான் சாரகுமாரன்.
அதை மறுத்துச் சொல்லவும் முடிநாகனால் இயலவில்லை. இளையபாண்டியனே மேலும் கூறத் தொடங்கினான். "நான் சொல்வதைக் கவனமாகக் கேள் முடிநாகா! தென்பழந்தீவுகள் பலவானாலும் - தீவுகளில் வாழ்பவர்களும், தீவுகளை ஆள்பவர்களும் கடற் கொலைஞர்களே. இனிவரப்போகும் எல்லாத் தீவுகளுக்கும் முன்வாயில் போன்ற இந்த எயினர் தீவிலேயே நாம் சந்தேகத்துக்கு ஆளாகிவிட்டோம். ஆயினும் தப்பி வந்தாயிற்று.
நாம் அரச குடும்பத்துப் பிரதிநிதிகளா, அல்லது வெறும் யாத்திரிகர்களா? என்று சந்தேகத்துடனேதான் எயினர் தீவின் தலைவன் நமக்கு விடைகொடுத்திருக்கிறான். இதை நினைவில் வைத்துக் கொண்டு பயணம் செய்தால்தான் நாம் நம்முடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிப் போக முடியும். ஆகவே இனி நாம் ஒரு காரியம் செய்ய வேண்டும்..."
"என்ன செய்ய வேண்டும் என்றுதான் கூறுங்களேன்..."
"நம்மை யாத்திரிகர்களாவே நிரூபிக்க வேண்டும். எப்படி யார் நம்முடைய பொறுமையைச் சோதித்தாலும் நமக்குக் கோபம் வரக்கூடாது. கோபம் வந்தால் தன்மான உணர்வு பெருகும். தன்மான உணர்வு பெருகினால் நம்மை வீரமரபினராக நிரூபித்துக் கொள்ளத் தோன்றும். போரிடும் உணர்வு வெளிப்படுமானால் 'உயர்ந்த அரசகுடும்பத்தைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் இவர்கள்' என்று தெளிவாக நம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.
நாம் அதற்கு இடங்கொடுக்கக் கூடாது. ஆனால் அப்படிக் கோபதாபங்களுக்கு இடங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் தான் இனி நிறைய வரும் என்று தோன்றுகிறது. வீரத்தையும் காட்டக்கூடாது. செல்வத்தையும் காட்டக்கூடாது. நம்மிடமிருக்கும் விலையுயர்ந்த கபாடத்து முத்துக்களை வலிய எயினனிடம் வழங்கியதுபோல் இனியும் தொடர்ந்து வழங்கிக் கொண்டே போகக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.
அதுவும்கூட ஒரு நிலைமைக்கு மேல் நம்மைச் சந்தேகத்துக்குரியவர்களாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும். யாத்திரிகர்களிடம் எவ்வளவு முத்துக்கள் தான் இருக்க முடியும்?"
"இதைத்தான் நான் முன்பே கூறியிருக்கிறேனே? 'யாத்திரிகர்கள்' என்ற போர்வைதான் நமக்குப் பாதுகாப்பானது. அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற நம்முடைய கபாடத்து முத்துக்களை அளிப்பது பயன்படுமானால் நாம் அதற்குத் தயங்குவானேன்?"
"தயங்க வேண்டிய அவசியம் எயினர் தீவில் இறங்கிய வேளையில் நமக்கு இல்லை முடிநாகா! ஆனால் இனி அப்படித் தயங்கி ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் சந்தேகத்திற்கு ஆளாக வேண்டியதாக நேர்ந்துவிட்ட பின் தயக்கத்துக்குக் காரணமிருக்கிறது. நம்மை வழியனுப்பிய சுவட்டோடு எயினர் தலைவனே நாத கம்பீர ஆற்றின் முகத்துவார வழியே வேறிரண்டு கப்பல்களை அனுப்பி நம்மைச் சோதிக்க நேரிடலாம். அந்தச் சோதனையின் போது நாம் ஏமாறிவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து."
"அப்படி ஒரு சோதனை நமக்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா இளையபாண்டியரே? என்று முடிநாகன் வினாவி முடிக்கவும்,
"நிச்சயமாக நினைக்கிறேன்! அதோ எதிரே பார்! புரியும்" - என்று பரபரப்போடு எதிர்புறம் சுட்டிக் காண்பித்தான் சாரகுமாரன். முடிநாகன் அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்து மலைத்தான். வழியை மறித்தாற்போல் கடலில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மரக்கலங்கள் நிற்பதும் அவற்றிலிருந்து தீப்பந்தங்களோடு சிறுசிறு படகுகளில் பிரிந்து இறங்கி ஆட்கள் வியூகம் வகுத்தாற்போல் கடலில் தென்படுவதும் நல்லதற்கு என்று படவில்லை.
"முடிந்தவரை கபாடபுரத்து அரச சின்னங்களள மறைத்துவை. முத்துக்களை மரக்கலத்தின் கீழறையில் கொட்டி ஒளித்துவிடு. ஒரு பாவமும் அறியாத யாத்திரிகர்கள் போல் நடிக்க இனி நீயும் நானும் துணிய வேண்டும். 'வலிய எயினனின் அன்பிற்குரிய விருந்தினர்களாக இருந்துவிட்டு வேறு தீவுகளுக்காகப் பயணத்தைத் தொடர்வதாக அவர்களிடம் கூறுவோம்.
வலிய எயினன் நாட்டில் இயற்கையழகு மட்டுமே நம்மைக் கவர்ந்ததாகச் சொல்வது தவிரக் கப்பல் கட்டும் தளத்தைப் பார்த்த நினைவே நமக்கு அடியோடு மறந்துவிட்டதுபோல் நடிப்போம். தப்பி மேலே செல்ல இவற்றைத் தவிர வேறு வழி இல்லை. இவற்றைக் கொண்டே தப்பி மேலே சென்றுவிடலாம் என்பதற்கும் உறுதி இல்லை" என்றான் இளையபாண்டியன்.
"இது இப்படித்தான் நடக்கும் என்று எப்படிப் பொருத்தமாக உங்களால் அநுமானம் செய்ய முடிந்தது இளையபாண்டியரே?" - என்று முடிநாகன் வியந்தான்.
"ஏதோ மனத்தில் தோன்றியது. அதற்கு விளைவு இருக்குமென்றும் நம்பமுடிந்தது. நான் நினைத்தபடியே இப்போது நடக்கிறது. வழி மறித்துக் கொண்டு நிற்கும் கலங்களை மீறி நம் மரக்கலத்தைச் செலுத்த வேண்டாம். இங்கேயே அடங்கிப் பணிவதுபோல் நிறுத்த ஏற்பாடு செய்.
நமது மரக்கலம் நின்றவுடனே அவர்களே கோபாவேசமாக வருவார்கள். பணிவாகவே பேசுவோம். வலிய எயினனின் விருந்தோம்பும் பண்பைப் புகழ்வோம்" என்று நடக்க வேண்டியவற்றில் பரபரப்புக் காட்டத் தொடங்கினான் சாரகுமாரன். முடிநாகனுக்கு அந்த முன்னெச்சரிக்கை வியப்பை அளித்தது. இளைய பாண்டியருடைய 'அரசதந்திர' மதிநுட்பம் பெருகிவருவதை உள்ளூரப் பாராட்டிப் பெருமை கொண்டான் அவன்.
அதற்குள் கடலில் நாலா திசைகளிலிருந்தும் படகுகள் அவர்கள் கலத்தை நெருங்கின. கொள்ளையிடுபவர் வழக்கமாகக் குரவையிடும் கோர ஒலிவிகற்பங்களும் காது செவிடுபடும்படி ஒலிக்கலாயின. அவர்களோ இயல்பை மீறிய நிதானத்தோடு அந்தக் கடற்கொள்ளைக்காரர்களை எதிர்கொண்டனர். தோன்றியபடி தோன்றிய இடத்தில் சட்டங்களையும் கயிறுகளையும் பற்றி அவர்கள் மரக்கலத்தில் ஏறிவந்த போது அந்த ஆத்திரமே குளிர்ந்து போகும்படி இளையபாண்டியனும், முடிநாகனும் அவர்களைப் பணிவோடும் விநயத்தோடும் வரவேற்றனர்."
"உங்களுக்கு எது வேண்டுமானாலும் தரச் சித்தமாயிருக்கிறோம். இந்த மரக்கலத்தை உங்கள் சொந்த மரக்கலம் போல் நினைத்துக் கொள்ளலாம். நாங்கள் வலிய எயினரைச் சந்தித்த மகிழ்ச்சியிலிருக்கிறோம். வலிய எயினரைப் போல் வெறும் யாத்திரிகர்களிடம் இவ்வளவு அன்பு காட்டுகிற கனிவு வேறு யாருக்கு வரும்? எயினர் தீவின் அழகையும் இயற்கை வளத்தையும் எங்களால் மறக்கவே முடியாது.
'மேலே உங்களுடைய யாத்திரையைத் தொடரும் போது கடலில் ஒரு பயமுமின்றிச் செல்லலாம்' என்று வலிய எயினர் கூறிய வார்த்தைகள் இன்னும் எங்கள் செவிகளில் ஒலித்தவண்ணமிருக்கின்றன" என்று இளையபாண்டியனும் முடிநாகனும் அன்போடு கூறிய சொற்களைக் கேட்டு வந்தவர்கள் தயங்கித் தயங்கி நிற்கவே - இவர்கள் இருவரும் மேலும் உற்சாகமாக வலிய எயினனைப் புகழலாயினர். வந்தவர்கள் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இளையபாண்டியனோ அந்தச் சோதனையிலிருந்து மீள முடிவு செய்துவிட்ட வைராக்கியத்துடன் காரியங்களைச் செய்யலானான்.
-------------
22. மொழி காப்பாற்றியது
கப்பலைச் சூழ்ந்து கொண்டவர்களோ இளையபாண்டியன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகச் சோதனை செய்தனர். வலிய எயினனின் பெருந்தன்மையைப் புகழ்ந்து கூறிய இவர்களது சொற்களினால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை.
தாங்களிருவரும், எந்தவிதமான அரச தந்திரத்திலும் அக்கறையில்லாத வெறும் யாத்திரீகர்களே என்பதை இவர்கள் நிரூபிக்க முயன்றதிலும் அவர்கள் மனநிறைவு அடைந்துவிட்டதாகத் தெரியவில்லை. அரசியல் உறவுகளில் சந்தேகம் கொண்டவர்களுக்கே உரிய பேய்ப் பிடிவாதத்தோடு சாரகுமாரனிடம் உரையாடலைத் தொடங்கித் தொடர்ந்தார்கள் அவர்கள்.
"எயினர் தீவிலேயே உங்களை வியக்கச் செய்த இடம் கலஞ்செய் நீர்க்களமாகத்தான் இருக்கும். சிறிதும் ஒளிவு மறைவின்றி அதனை உங்களுக்குச் சுற்றிக் காண்பித்ததற்காகத் தான் வலிய எயினரை நீங்கள் மனமாரப் புகழுகிறீர்கள்! பொதுவாக யாத்திரீகர்களுக்குத் தங்களுடைய பாதுகாப்புப் படைக் கோட்டங்களைச் சுற்றிக் காண்பிக்க யாரும் துணியமாட்டார்கள்.
வெள்ளை உள்ளமும், பரந்த நல்லெண்ணமும் உள்ள வலிய எயின மன்னரைப் போன்றவர்கள் சூதுவாது அறியாதவர்களாகையினால் யாருக்கும் எதையும் மறைப்பதில்லை" என்று கூறிவிட்டு உடனே சாரகுமாரனின் முகத்திலும் கண்களிலும் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளைத் தேடுபவன்போலக் கூர்ந்து நோக்கினான் வந்தவர்களில் ஒருவன்.
"தீவு தீவாகச் சுற்றித் திரியும் எங்களை ஒத்தவர்களுக்கு எந்தப் புதிய பொருளைப் பார்த்தாலும் வியப்புத்தான் ஐயா! ஆனால் அந்த வியப்பும், விந்தையும், அடுத்த புதிய பொருளைப் பார்க்கிறவரைதான் எங்கள் மனத்திலே நிலைத்திருக்கும்.
ஒவ்வொரு மலராகத் தேடிப்பறந்து திரிந்து தேனுண்ணும் வண்டுகளைப் போல் அனுபவங்களிலே மகிழ்ச்சி கொள்ள அலைபவர்கள் நாங்கள்! சொல்லப்போனால் எயினர் தீவிலே நாத கம்பீரம் என்ற அழகிய அருவியும் ஆறும் எங்களைக் கவர்ந்த அளவு கூட கலஞ்செய் நீர்க்களமும், கப்பல் கட்டும் தொழில் நுணுக்கங்களும், எங்களைக் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்" - என முகத்தில் எந்தவிதமான உணர்வுகளுமில்லாத ஒரு பாமரனைப் போல் இளையபாண்டியன் மறுமொழி கூறினான்.
அவ்வளவில் கப்பலை வழிமறித்தவர்களுக்குச் சந்தேகம் படிப்படியாகக் குறைந்திருக்க வேண்டும். சிறிது நேரம் வேறு ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுக் கொண்டு அவர்கள் போய்விட்டார்கள். போகும்போது சாரகுமாரனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தவன் ஓர் எச்சரிக்கையும் செய்துவிட்டுப் போனான்.
"உங்கள் யாத்திரையை இந்தக் கடற்பகுதியில் மிகவும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செய்ய வேண்டும். இங்கே இந்தத் தென்கடற் பகுதியில் கொடுமையான பழக்க வழக்கங்களையுடைய எத்தனை எத்தனையோ தீவுகள் இருக்கின்றன.
யாத்திரை செய்பவர்களையும் அரசதந்திர நோக்கத்தோடு சுற்றுப்பயணம் செய்பவர்களையும் கூடத் தனித்தனியே வேறுபாடு கண்டு பிரித்துணரும் ஆற்றல் குறைந்தவர்களின் முன்னால் கூட நீங்கள் போய் நிற்க நேரிடலாம்". இந்த எச்சரிக்கையை அவன் எதற்காகச் செய்துவிட்டுப் போனான் என்பதை இளையபாண்டியனால் விரைந்து புரிந்து கொள்ள முடியவில்லையாயினும் இதில் ஏதோ உட்பொருள் இருப்பதாக உய்த்துணர மட்டும் முடிந்தது.
துன்பமும் சோதனைகளும் வரும்போது மனித மனத்திற்கு இயல்பாகவே முன்னெச்சரிக்கையும் என்ன நேரப்போகிறது என்பதை உணரும் முனைப்பும் வருவதுண்டு. மழை பெய்யுமுன் இயல்பாகவே பூமியில் கிளரும் மண் வாசனையைப் போல் தற்செயலாக மனித இதயத்தில் நேரும் முன்னறிவிப்பு இது. கடலில் அவர்கள் கலத்தை வளைத்துக் கொண்டு தடுத்த கப்பல்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. விரைந்து நிகழ்ந்த ஆரவாரமும் அதைவிட விரைந்து நிகழ்ந்துவிட்ட தனிமையும் மாயங்கள் போல் தோன்றின.
இளையபாண்டியன், அதுவரை மௌனமாகவும், இனி என்னென்ன நேருமோ என்ற திகைப்புடனும் தன்னருகில் நின்று கொண்டிருந்த முடிநாகனை நோக்கிக் கூறலானான்:
"இந்தச் சோதனையில் தப்பிவிட்டோம். ஆனால் இதிலிருந்து தப்பிவிட்டதற்காக மகிழ்வதற்குக் கூட நேரமும், அமைதியும் இன்றி அடுத்த சோதனையை எதிர்பார்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் நாம். சில காரியங்களில் வென்றுவிட்டதற்காகவோ, நிறைவு பெற்றுவிட்டதற்காகவோ, அந்த வெற்றியோ, நிறைவோ, நிகழ்ந்து முடிந்துவிட்டதாக நாம் நினைத்த மறுகணமே உடன் விரைந்து மகிழ்வதோ,
பெருமிதப்படுவதோ கூட அரச தந்திரமாகாது. நம்முடைய மகிழ்ச்சியும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. நம்முடைய துயரமும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. சாதுரியத்தின் கனிந்த நிலை நமது உணர்ச்சிகளின் பலங்களையும், பலவீனங்களையும், பிறர் கணிக்கவும் முடியாமல் நம்மை அநுமானத்துக்கும் அப்பாற்பட்டவர்களாக வைத்துக் கொள்ளுவதுதான்."
"அப்படி நாம் இருக்கும் போது நம்மை உய்த்துணர முயல்கிறார்கள் இங்கிருப்பவர்கள்! அப்படியில்லாமல் நாமே பலவீனமாகவும் நம்மைப் பிறர் உணர முடிந்த வெளிப்படையான நிலையிலும் இருந்துவிட்டோமோ இன்னும் துன்பம் தான்! ஏன் தான் இந்தத் தீவுகளில் வசிக்கும் சிற்றரசர்கள் இவ்வளவு சந்தேகப்படுகிறார்களோ,
தெரியவில்லையே?" என்று வினாவினான் முடிநாகன். இளையபாண்டியன் சில விநாடிகள் அவனுக்கு மறுமொழி கூறவும் தோன்றாமல் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக இருந்தான். பின்பு முடிநாகனை நோக்கிக் கூறத் தொடங்கினான்:
"நேருக்கு நேர் நம்மை யாரென்று உறைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளத் தயங்கி இப்படித்தான் வலிய எயினன் நம்மை இனங்கண்டு கொள்ள முயல்வான் என்ற ஐயப்பாடும் அநுமானமும் என் மனத்தில் முன்பே உண்டாகிவிட்டன. அதனால்தான் நான் முன்னெச்சரிக்கை அடைய முடிந்தது. விரைந்து மகிழ்ந்திடுதலும், விரைந்து வெகுளியடைதலும் அரசர்குடிக்கு ஆகாத செயல்கள்.
வீரமரபினராகிய அரசர் குடிக்குச் சிறப்பாக உரிய தன்மானமும், கோபமும் நமக்கு இருக்கின்றனவா, இல்லையா, என்பதைத்தான் வலிய எயினன் சோதித்து அறிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறான். சொற்களின் மூலம் மனிதர்களை அறிந்து கொள்ள முயல்கிறவர்களை விட உணர்ச்சிகளின் மூலமே மனிதர்களை அநுமானம் செய்கிறவர்களிடம் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டும்."
"உண்மைதான் இளையபாண்டியரே! சிந்தனையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும், மனிதர்களை அறிந்து கொள்கிறவர்களை விட உணர்ச்சி பாவங்களின் மூலம் உய்த்துணர முயல்கிறவர்கள் குழப்பங்களையும் பயங்கர விளைவுகளையும் உண்டாக்கிவிட வல்லவர்கள். எதற்கும் நாம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்."
இவ்வளவில் அவர்களுடைய உரையாடல் நின்றது. கப்பல் ஊழியர்களைக் கூவி அழைத்து மேலே பயணத்தைத் தொடர வேண்டிக் கட்டளைகளை இட்டனர். சிறிது நேரத்தில் பயணம் தொடர்ந்தது. மேலே செல்லச் செல்ல அலைகள் சுழன்று சுழன்று புரட்டிக் கொண்டு வந்தன. அப்பகுதியில் இரண்டு மூன்று சிறுசிறு தீவுகளால் கடல் துண்டிக்கவும், பிரிக்கவும் பட்டிருந்ததனால் காற்றும், அலைகளும் அவர்களுடைய கப்பலை ஆட்டி வைக்கத் தொடங்கின.
அந்த நேரத்தில் அவ்வளவு பயங்கரமான அலைகளுக்கும் காற்றுக்கும், இடையே பயணம் செய்வதைவிட அருகிலுள்ள தீவு ஏதாவது ஒன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் பயணத்தைத் தொடர்வதுதான் பொருத்தமாக இருக்கும்போலத் தோன்றியது. இரவு நேரத்தில் இதுபோல் தீவுகளால் பிரிக்கப்பட்ட கடல் வழிகளில் காற்றுடன் அலையும் கொந்தளிப்பும் மிகுதியாயிருப்பதும் பகலில் சிறிது அமைதியடைவதும் வழக்கமென்று கப்பல் ஊழியர்களும் கூறவே தங்கிச் செல்வது என்ற முடிவை இளையபாண்டியன் உறுதிப்படுத்திக் கொண்டான்.
அதே நேரத்தில் முன் பின் தெரியாத ஒரு புதிய தீவில் இரவு நேரத்தில் போய்க் கரையிறங்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றியும் அவன் சிந்திக்கத் தவறவில்லை. இத்தகைய தீவுகளில் மனித இயல்பின் மேன்மையான நாகரிகங்களும், கருணை முறைகளும் பரவவில்லை என்பதாலும், தற்காப்பு என்ற ஒரே எண்ணத்தின் அடிப்படையில் புதியவர்கள் எவரைக் கண்டாலும் துன்புறுத்துவது இயல்பாகி விட்டமையாலும் தயங்க வேண்டியிருந்தது.
அதே சமயத்தில் கரையேறத் தயங்கிக் கடலிலேயே பயணத்தைத் தொடர்வதிலும் துன்பங்கள் இருந்தன. துணிந்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலையில் இளையபாண்டியனும், முடிநாகனும் இருந்தனர். கப்பல் போய்க்கொண்டிருந்த வழியிலோ சுற்றும் முற்றும் கடலிடை அங்கங்கே கரிய பெரிய பாறைகளும் சிறு சிறு குன்றுகளும் தென்பட்டன. நடுவாகச் செல்ல இருந்த வழியோ குறுகியது. காற்று அதிகமாக அதிகமாகக் கலம் அலைக்கழிக்கப்பட்டது.
எந்த இடத்தில் பாறைகளில் மோதுண்டு சிதற நேரிடுமோ என்ற பயமும் அதிகமாகியது. என்ன துன்பம் வருவதாயினும், அருகிலுள்ள தீவில் கரையிறங்குவது என்ற முடிவிற்கு வந்தார்கள் அவர்கள். அப்பகுதியிலுள்ள தீவுகள் மேடாகவும், பாறைகள் நிறைந்த பாங்கினதாகவும் கடல் உட்குழிந்து ஆழமானதாகவும் அமைந்திருந்ததனால் கரையோரமாக எந்த இடத்தில் கலத்தை ஒதுக்கிக் கொண்டு சென்றாலும் - குன்றுகளில் மோதாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு கரைசேருவது அரிதாயிருக்கும் போலத் தோன்றியது.
ஆயினும் திறமையாகக் கலத்தை ஒதுக்கிக் கரைசேர முயன்றார்கள். கரை நெருங்க நெருங்க அந்தக் கரைப்பகுதிப் பாறைகளிலும் குன்றுகளிலும் மங்கலாகத் தெரிந்த காட்சிகள் அவர்களைத் திடுக்கிடச் செய்வனவாக இருந்தன. எந்தத் தீவின் பெயரைச் சொன்னால் அழுத பிள்ளைகளும் வாய் மூடுமோ அத்தகைய குரூரமான தீவை அணுகியிருந்தார்கள் அவர்கள். ஆயினும அவன் அஞ்சவில்லை. தன்னிடமிருந்த மொழியறிவு தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு கரையிறங்குவதற்கான ஏற்பாடுகளிலே தயங்காமல் ஈடுபட்டான் அவன்.
--------
23. கொடுந்தீவுக் கொலைமறவர்
அப்போது தாங்கள் கரையிறங்கப் போகும் தீவு - கொடுந்தீவு என்பதையும், அங்கு வாழும் உலகத் தொடர்பில்லாத விநோதமான இனத்தைச் சேர்ந்த கொலை மறவர்கள், தங்களுடைய வழிபடு தெய்வமாகக் கருதும் ஒரு பாறைக்கு நரபலியிடும் வழக்கமுடையவர்கள் என்பதும் இளையபாண்டியன் அறியாதவை அல்ல.
கரையோரமாக ஒதுங்கியிருந்த மனிதர்களின் கோரமான கபாலங்களும், குரூரமாகச் சிதறிக்கிடந்த எலும்புகளும் இறங்கியவுடனேயே அச்சம் நிறைந்த வரவேற்பை அளித்தன. பேய்த்தீவு என்றும், பூதத்தீவு என்றும் அந்தத் தீவுக்கு வேறு பெயர்கள் வழங்கி வந்தன. நாகரிகமடைந்த ஏனைய நாடுகளிலும், தீவுகளிலும் வாழ்வோர் அந்தத் தீவுக்கு அளித்த மாற்றுப் பெயர்கள் அவை. பொதுவாக வேறு பகுதிகளிலிருந்து அந்த வழியாகப் பயணம் செய்வோர் கடல் அமைதியாயிருக்கும் பகல் வேளைகளிலேயே கடந்து மேலே சென்றுவிடுவது தான் வழக்கம்.
"இங்கே இறங்கவோ தீவுக்குள் பிரவேசிக்கவோ வேண்டாம் விடியும்வரை இப்படியே கரையோரமாகத் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் இரகசியமாக மேலே பயணத்தைத் தொடர்ந்து விடலாம்" என்றான் முடிநாகன். ஆனால் இளையபாண்டியன் அதற்கு இணங்கவில்லை. கரையோரமாக ஒதுங்கிய கப்பலைக் காற்று மாற்றத்திற்கும், அலைகளின் உயர்வு தாழ்வுக்கும் ஏற்பக் கவனித்துக் கொள்ளும் பொருட்டு ஊழியர்களை மட்டும் கப்பலிலேயே விட்டுவிட்டுத் தானும், முடிநாகனும், தீவுக்குள் போகலாம் என்றே இளையபாண்டியன் முடிவு செய்திருந்தான்.
"தீவுக்குள் போகலாமா?" என்று இளையபாண்டியன் வினாவியபோது கப்பல் ஊழியர்களுக்குக் கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்த முடிநாகன், திகைப்போடும் பயத்தோடும் பேச்சை நிறுத்திவிட்டு இளையபாண்டியனின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அந்தப் பார்வையில் பீதியும் உயிர்ப் பயமும் தெரிந்தன.
"பயப்படாதே முடிநாகா! கடலில் அரக்கனின் வாய்ப் பற்களைப் போல் துருத்திக் கொண்டிருக்கும் இந்தப் பாறைகளை விடக் கொடுந்தீவின் கொலைமறவர்கள் கெட்டவர்களாக இருந்துவிடமாட்டார்கள். எவ்வளவுதான் கொடியவர்களாக இருந்தாலும் மனிதர்களுக்குள்ளே இதயம் என்று ஒன்று இருக்கிறது. பாறைகளுக்குள்ளே அந்த இதயம் நிச்சயமாக இருக்க முடியாது.
பாறைகள் கல்லால் ஆகியவை என்பதை நினைவு வைத்துக் கொள்!" என்று காரண காரியத்தோடு சாரகுமாரன் ஆறுதல் கூறிய பின்பே முடிநாகன் தைரியமாக அவனோடு புறப்பட்டான். மனிதர்களின் குருதி பட்டுப் பட்டுச் சிவப்பேறிப் போயின போன்ற அந்தத் தீவின் பாறைகளில் தொற்றித் தொற்றி ஏறித் தட்டுத் தடுமாறிச் செல்ல வேண்டியிருந்தது.
தான் பாறைகளில் ஏறும்போது ஓர் இடத்தில் காலடியில் ஏதோ இடறி நொறுங்கிய வேளையில் பீதியோடு கீழே குனிந்து அப்படி இடறி நொறுங்கிய பொருளைத் தூக்கிப் பார்த்த முடிநாகனுக்குக் கைகள் நடுங்கின. அது ஒரு மரித்த மனிதனின் எலும்புக் கூடு. வாயில் சொற்கள் வராமல் பேசத் தடுமாறிய குரலில் 'ஊ ஊ' என்று காற்றாக வெளிப்படும் பீதி நிறைந்த குரலில் இளையபாண்டியனுக்கு அந்த எலும்புக்கூட்டைக் காண்பித்தான் முடிநாகன்.
அதைக் கண்ட இளையபாண்டியனுக்கும் நெஞ்சம் ஒரு கணம் துணுக்குற்றது என்றாலும் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, "தீவுக்குள் அடியெடுத்து வைக்கும் போதே இப்படித் தெரியக்கூடாதது தெரிந்து கெட்ட சகுனம் ஆகிறதே என்று எண்ணாதே! நிமித்தங்கள் எல்லாம் நம்முடைய மனோபாவனைக்கு ஏற்றாற்போலத்தான் நமக்குத் தோன்றும்.
நிமித்தங்கள் நல்லவையாயிருந்தால் விளைவுகளும் நல்லவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதேபோல் நிமித்தங்கள் தீயவையாயிருந்தால் விளைவுகளும் தீயவையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நிமித்தங்கள் யாவும் நமது பாவனையின் பிரதிபிம்பங்களாகவே இருக்கும். கவலைப்படாமல் தயங்காமல் முன்னேறலாம் வா!" என்று முடிநாகனுக்கு இளையபாண்டியன் உறுதி கூறியும் அவனுடைய பயமும் நடுக்கமும் குறையவில்லை.
குருதி முட்களைப் போல் காலில் கடுமையாகக் குத்தும் சிவந்த பாறைகளிலும், கற்களிலும் மிதித்து மிதித்து நடந்தார்கள் அவர்கள். தொலைவில் ஒரு காட்சி தெரிந்தது. கூட்டமாக அந்தத் தீவின் மனிதர்கள் ஒரு சிவப்பு மேடையில் எரிந்து கொண்டிருந்த தீயைச் சுற்றிக் கூத்தாடிக் கொண்டே வெறிமிகுந்த குரலில் ஏதோ பாடிக்கொண்டிருந்தார்கள்.
அந்தக் குரலிலும் கூத்திலும் பண்படையாத காட்டுக் குரூரம் மட்டுமே நிறைந்திருந்தது. தொலைவிலிருந்து அதைக் கேட்கும்போதே அருகில் செல்ல அஞ்சி நடுங்கி ஓடிவிட வேண்டும் போலிருந்தது. பண்படாமல் கரடு முரடாக இருந்த அந்தத் தீவின் காலைக்குத்தும் கற்களைப் போல் கேட்கும் செவிகளைக் குத்திக் கிழிப்பது போலிருந்தது அந்த ஓசை. அருகில் நெருங்கப் பூதாகாரமான மனிதர்களின் தடித்த உருவங்கள் கபாலங்களை அணிந்து இடுகாட்டுப் பேய்க் கணங்கள் போல் குதிக்கும் காட்சி தெளிவாகத் தெரியலாயிற்று.
அவர்களோ வெறிமயமான கூத்தில் வட்டவடிவமாகக் கைகோத்து மேடையில் எரியும் தீயைச் சுற்றி ஆடிக் கொண்டிருந்ததனால் இவர்கள் இருவரும் வந்ததைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
இளையபாண்டியன் தைரியமாகவும், துணிவாகவும், முன்னேறிக் கொண்டிருந்தாலும், அவனைப் பின் தொடர்ந்து சென்ற முடிநாகன் அதே வேகத்தில் பின் தொடராமல் தயங்கித் தயங்கித்தான் நடந்தான்.
இந்த நிலையைக் கவனித்து உணர்ந்து கொண்ட இளையபாண்டியன் முடிநாகனைத் துணிவூட்டுவதற்காகவும், பாறைக்கற்களில் நடந்து நடந்து இசிவெடுத்து வலிக்கும் கால்களுக்கு ஓய்வளிப்பதற்காகவும் ஒரு காரியம் செய்தான்.
அந்த இடத்தினருகே இலைகளே இல்லாமல் கள்ளிக் கொடி போல் படர்ந்து அடர்ந்து உயரமாகச் செழித்திருந்த ஒரு புதரருகே முடிநாகனையும் அமரச் சொல்லிக் கையால் சைகை செய்துவிட்டுத் தானும் அமர்ந்தான்.
அருகில் அமர்ந்து சுத்தமான காற்றைக் கூடச் சுவாசிக்க முடியாமல் அந்தக் கொடிக்கள்ளியைச் சுற்றிப் பொறுக்க இயலாத துர்நாற்றம் வீசியது. அவர்கள் அடக்கி முடக்கி மறைவாக உடகார முயன்றபோது அந்தக் கொடிக்கள்ளியின் பசிய காம்புகள் முறிந்து பலபலவென்று பாலும் கொட்டி நனைந்தது.
அந்தப் பால்பட்ட இடத்தில் தோல் தீய்ந்து புண்படரும். ஆகையால் இருவரும் தங்களால் இயன்றவரை அந்தக் கள்ளிப்பால் மேலே சொட்டாமல் தப்ப முயன்றார்கள். அவர்கள் முயற்சியினை மீறியும் சில இடங்களில் பால்பட்டு வேதனையளித்தது.
"செடிகள், கொடிகள், தரை எல்லாமே இங்கிருக்கிற மனிதர்களைப் போலவே வருகிறவர்களைத் துன்புறுத்தும் ஆற்றலில் சிறிதுகூடக் குறையாமல் இருக்கின்றன" என்று இளையபாண்டியனின் காதருகே முணுமுணுத்தான் முடிநாகன்.
"இவையெல்லாம் நம்மால் நிச்சயமாக மாற்றவோ, வேறாக்கவோ, திருத்தவோ முடியாது முடிநாகா! ஆனால் மனிதர்களை மாற்றவும், வேறாக்கவும், திருத்தவும் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நீ ஒரு போதும் இழந்துவிடக் கூடாது! காரணம், நமக்குள் துடித்துக் கொண்டிருப்பது போல் அவர்களுக்குள்ளும் ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்" என்று இளையபாண்டியன் மெல்லிய குரலில் தன்னம்பிக்கையோடு மறுமொழி கூறியபோதும் முடிநாகனுக்கு அதில் அவ்வளவாக நம்பிக்கை பிறக்கவில்லை.
அவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென்று அந்த வெறிக்குரலும் மனிதர்கள் திமுதிமுவென்று ஓடிவருகிற காலடி ஓசையும் தங்கள் புறமாகத் திரும்பினாற்போல் தோன்றவே அவர்கள் திடுக்கிட்டு நிமிர்ந்தனர்.
ஆம்! அவர்கள் இருவரும் அந்தப் புதரடியில் அமர்ந்திருப்பதை யாரோ ஒருவன் முதலில் பார்க்க நேர்ந்து பின் அவன் உடனே மற்றவர்களுக்கும் சொல்லியிருக்க வேண்டுமென்று தோன்றியது. ஏதோ வேட்டையாடுகிறவர்கள் தங்களுடைய ஆற்றலைவிட எளிய விலங்குகளுக்கு விரித்த வலையில் அவை தவறாமல் விழுந்து சிக்கியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஓடி வருவது போல் இருந்தது அவர்கள் வரவு.
எளிய விலங்குகளை வலிய விலங்குகள் இரைகண்டு மகிழ்ந்து தாவிப் பாய்ந்து வருவது போல் ஓர் வெறியை இவர்களுடைய பாய்தலில் அவர்கள் கண்டார்கள்.
இளையபாண்டியன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு புதரிலிருந்து எழுந்து நின்றதோடு தன்னைப் பின் தொடர்ந்து உடன் நிற்குமாறு முடிநாகனுக்கும் குறிப்பினால் உணர்த்தினான். கபால மாலைகளோடும் புலிப்பற்கள் போன்ற கோரப் பற்களைத் திறந்த வாயுடனும் அவர்கள் ஓடி வந்து சூழ்ந்து கொண்ட காட்சி மிகவும் குரூரமாக இருந்தது.
வலையிலகப்பட்ட மீன்களைப் போல் இளையபாண்டியனும், முடிநாகனும் அந்தப் பைசாசங்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். திரிசூலங்களையும், வேல்களையும், கொலைக்கருவிகளையும் ஓங்கிக் கொண்டு அந்தக் கொடிய கூட்டம் தங்கள் மேல் பாய்ந்த போது அந்தத் தீவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தபோது தன் காலில் இடறிய எலும்புக்கூடு நினைவிற்கு வரப்பெற்றவனாக நடுங்கினான் முடிநாகன்.
இளையபாண்டியனோ சிறிதும் அஞ்சாதவனாக ஏதோ ஒரு நம்பிக்கையினால் திடம் கொண்டவனைப் போல் அவர்களிடையே இருந்தான். அவர்கள் இளையபாண்டியனையும், முடிநாகனையும், வேட்டையாடிய விலங்குகளையோ, வலையில் விழுந்துவிட்ட மீன்களையோ இழுத்துச் செல்வது போலத் தங்கள் தலைவனிடம் இழுத்துச் சென்றனர்.
சுற்றிலும் கபாலங்கள் அடுக்கிய குருதிநிறப் பாறை ஒன்றில் முரட்டுச் சிங்கத்தைப் போல் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கொடுந்தீவின் தலைவன். அவனருகிலே நெருங்கி நிற்கவும் முடியாமல் முடைநாற்றமும், மாமிச வாடையும் வீசியது.
அவனுடைய கண்கள் நெருப்புக் கோளங்களைப் போல் சிவந்து உருண்டன. மீசையோடு கூடிய அந்த முகம் பயமுறுத்துவதாக இருந்தது. இளையபாண்டியனையும், முடிநாகனையும் ஏதோ குற்றம் செய்தவர்களை விசாரிக்கக் கொண்டு போய் நிறுத்துவது போல் தலைவன் முன் நிறுத்தினார்கள் கொலை மறவர்கள்.
அதற்கு முன்பு சிறிது நேரம் வரை வெறிக்குரல்களும் ஆரவாரமுமாக இருந்த அந்தக் கூட்டத்தினர் தங்கள் தலைவனுக்கு முன்னால் வந்ததும் ஏதோ கோவிலுக்கு முன் தொழ வந்தவர்கள் பயபக்தியினால் கட்டுண்டு நிற்பதுபோல் அமைதியடைந்து நின்றார்கள்.
இளையபாண்டியன் அந்த நிலையில் மிகவும் சமயோசிதமான ஒரு காரியத்தைச் செய்தான். கொலை மறவனுடைய தலைவனிடம் அவர்களுடைய மொழியில் நலம் விசாரித்தான். அந்தத் தலைவனைச் சந்திக்க நேர்ந்ததற்காகத் தான் பெரிதும் மகிழ்வதாகவும் அந்தத் தீவைக் காண கொடுத்து வைத்ததற்காகக் களிப்பதாகவும் அவர்களுடைய மொழியில் தன்னுடைய இனிய குரலில் இனிய யாழ் மிழற்றுவதுபோல் இளையபாண்டியன் பேசத் தொடங்கியதும் கொலை மறவர் தலைவனின் குரூரமான முகத்தில் சிறிதே மலர்ச்சி பிறந்தது.
கண்களில் ஒளி மின்னியது. அந்த நல்ல விளைவை உடனே மேலும் மேலும் வளர்த்து உறுதி செய்து கொள்ள விரும்புகிறவனைப் போலக் கொலைமறவர் தலைவனைப் புகழ்ந்து கூறும் பொருளமைந்த பாடல் ஒன்றை அமைத்துத் தன்னுடைய அரிய இனிய குரலில் பாடவும் தொடங்கிவிட்டான் சாரகுமாரன்.
அந்தக் குரலும், அந்த இசையமைதியும், அந்தப் பாடலும் அவர்களை வசியம் செய்வதுபோல் மயக்கின. கொலைமறவர் தலைவன் சிறு குழந்தை போல் உற்சாகமும் மயக்கமும் அடைந்தான்.
இசையில் தான் புகழப்படுவதைக் கேட்டு அவன் குழைந்து போனான். அப்படி இசையை அவனோ அல்லது அவனைச் சேர்ந்தவர்களோ அதுவரை கேட்டதே இல்லை. கல்லைப் போல் இறுகிக் கடினமாயிருந்த அவனுடைய ஈவு இரக்கமற்ற மனத்தில் அந்த இசையும், புகழ்ச்சியும், தன் மொழியில் எதிரி பேசக் கேட்ட வியப்பும் மாபெரும் மாறுதல்களை விளைவித்திருந்தன.
அடுத்தகணம் அவன் செய்த காரியம் சுற்றியிருந்த எல்லாக் கொலைமறவர்களையும் வியப்பிலாழ்த்தியது. தங்கள் தலைவனிடம் இப்படி ஒரு பெரிய மாறுதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
--------------
24. புதிய இசையிலக்கணம்
இரண்டுவிதமான இசைகளால் கொடுந்தீவுக் கொலை மறவர்களையும் அவர்கள் தலைவனையும் சாரகுமாரன் வசப்படுத்தினான். பாடலுக்கும், புகழுக்கும், சேர்த்தே இசை என்று இசைவாகத் தமிழில் பெயர் சூட்டியவர்களை வாயார வாழ்த்தினான் அவன். திரும்பத் திரும்ப மீட்டினாலும், பாடினாலும் கேட்பவனுக்குச் சோர்வு தராமல் அவனை வசீகரம் செய்யும் இசையைப் போலத் திரும்பத் திரும்பச் சொல்லிப் புகழ்ந்தாலும் சொல்லப்படுகிறவனை வசீகரிப்பது என்ற காரணத்தால் தான் புகழும் இசைப்பெயர் பெற்றிருக்க வேண்டுமென்று சிந்தித்தான் சாரகுமாரன்.
அந்த தீவின் பாறைகளில் ஏறிக் கபாலங்களையும் உடைந்த எலும்புகளையும் பார்த்துக் கொண்டே நுழைந்த போது ஏற்பட்டிருந்த திகிலும், நடுக்கமும் இப்போது முடிநாகனிடம் இல்லை. மனிதனின் கல்மனத்தையும் இளகச் செய்து கருணைமயமாகச் செய்யும் அபூர்வமான ஆற்றல் இளைய பாண்டியருடைய குரலுக்கு இருப்பதைப் பல சமயங்களில் உணர்ந்திருந்தாலும் இன்று அதை மிக அதிகமாக உணர்ந்தான்
முடிநாகன். மொழியும், பொருளும் மனிதனுக்குரிய நாகரிக உணர்வுகளும் சிறிதேனும் புரியாத ஒரு கொடிய காட்டுக் கூட்டத்தைக்கூட வசப்படுத்திவிட முடிந்த அந்தக் குரலுக்குரிய சாரகுமாரனைத் திடீரென்று அந்நியமாக விலக்கி ஒரு கலைஞனுக்குரிய உயரத்தில் வைத்துச் சிந்தித்த போது முடிநாகனின் வியப்பு எல்லையற்றதாயிருந்தது.
கொடுந்தீவு மறவர் தலைவன் தனக்குச் சமமாக இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும், அமர்வதற்கு இருக்கைகள் அளித்தான். காவியேறிய கோரப்பற்களைத் திறந்து இளையபாண்டியனை நோக்கி அவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அடையாளமாக நகைத்த நகையே பயங்கரமாக இருந்தது.
தங்கள் வழக்கப்படி ஊனும், கள்ளும் கொடுத்து இளையபாண்டியனையும், முடிநாகனையும் உபசரிக்கத் தொடங்கினான் அவன். இளையபாண்டியனும், முடிநாகனும் அவற்றை உண்ணவும் பருகவும் அருவருத்ததைக் கண்ட அவன் விதம் விதமான தோற்றங்களையும் வேறு வேறு நிறங்களையும் உடைய பல கனிகளை வரவழைத்து அவர்கள் இருவருக்கும் அளித்தான்.
"ஏதோ மந்திரத்தால் எங்களையெல்லாம் வசியப்படுத்தி விட்டாய்" என்று பண்படாத தன் மொழியில் இளையபாண்டியனைப் புகழத் தொடங்கினான் அந்தக் கொடுமறவர் தலைவன். தான் பாடியது இசை என்றும் அது ஒரு கலை என்றும் இளையபாண்டியன் அவனுக்கு விளக்க முயன்றதெல்லாம் வீணாயிற்று. அவனோ விடாப்பிடியாக அதை மந்திரம் என்றே புகழ்ந்தான்.
அந்தக் கொடிய மனிதனிடம் அவன் கூற்றை அதிகமாக முனைந்து மறுக்க முயல்வதுகூடப் பகைமையை உண்டாக்குமோ என்ற தயக்கத்தில் பேசாமலிருந்து விட்டான் இளையபாண்டியன். பரிசுகள் என்ற பெயரில் மிருகங்களின் கொம்புகளினாலும் தோலினாலும் செய்த பல விநோதமான பொருள்களை இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் அளித்தான் அந்தத் தீவின் தலைவன். அவற்றை மறுக்காமல் இருவரும் ஏற்றுக் கொண்டனர்.
கொடிய முரட்டு மனிதர்களிடம் அவர்களது அன்பையும், உபசரிப்பையும், மதியாதது போல் அசிரத்தையாக நடந்து கொண்டாலும் நல்ல விளைவு இருக்காது. அன்பைக் கூட அதிகாரத்தோடு பயமுறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்கிற மனிதர்கள் உண்டு.
அந்த அதிகாரத்தையும், பயமுறுத்தலையும் இலட்சியம் செய்யாததுபோல் இருந்தால்கூட அப்படிப்பட்டவர்களுக்கு உடனே விளைகிற கோபம் பயங்கரமானதாக இருக்கும். எதற்கும் தயங்கமாட்டார்கள் அவர்கள். அதிகாரம் செய்யாமலோ, பயமுறுத்தாமலோ அன்பைக்கூட அவர்களால் செய்ய முடியாது. இந்த இயல்பை நன்றாகப் புரிந்து கொண்டு இளையபாண்டியனும் முடிநாகனும் நடந்து கொண்டார்கள்.
அந்தக் காட்டுமனிதர்களின் உண்டியும் ஆடலும் கூத்தும், குரவையும், விடிய விடிய நடந்தன. விடிகிற நேரத்துக்கு உறக்கம் சோர்ந்த விழிகளோடு அந்தத் தீவின் தலைவனிடம் விடைபெற நின்றார்கள் அவர்கள். அவனோ தன் கூட்டத்தாரோடு கரை வரை வந்து அவர்களை வழியனுப்பச் சித்தமாயிருந்தான்.
விகாரமான கூக்குரல்களுடனும், கோலங்களுடனும் உடன் வரும் அந்தக் காட்டுக் கூட்டத்தோடு நடந்து செல்வதே விரும்பத்தகாததாக இருந்தது. இறுதியாக அவர்களுக்கு விடைகொடுக்கும் போது கூட அந்தக் காட்டுத் தீவின் தலைவன், "இங்கு வந்து உயிருடன் தப்பிச் செல்கிற மானிடர் அரிதினும் அரியவர்.
நீ ஏதோ உன் குரலினால் எங்களுக்கு மந்திரம் போட்டுவிட்டாய். அதனால் தான் உன்னைக் கொல்லத் தோன்றவில்லை" என்று மறுபடியும் கூறினான். "மறுபடி எப்போதாவது இந்தப் பக்கம் வந்தால் எங்களைப் பார்த்து மந்திரம் போட்டுவிட்டுப்போ" என்று அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டே பாறைகளில் கீழிறங்கிக் கப்பலை நோக்கி விரைந்தார்கள்.
அவர்கள் கப்பலில் ஏறினபின்பே இருவரும் சுபாவமாக மூச்சுவிட முடிந்தது. 'அந்தத் தீவிலிருந்து உயிர்தப்பிக் கப்பலேறிவிட்டோம்' என்பது அவ்வளவிற்கு நம்பமுடியாதபடி இருந்தது. கப்பல் புறப்பட்டதும் முடிநாகன் இளையபாண்டியனை வியந்து புகழ்ந்து உரைக்கலானான்:
"இளையபாண்டியரே! நீங்கள் பாடுகிற இசைக்கென்றே புதிய இலக்கணம் ஒன்று இனிமேல் உண்டாக்க வேண்டும். பழைய இசையிலக்கணம் உங்களுடைய கலையின் எல்லையற்ற நயங்களை எல்லாம் வகுத்துக் கூறுகிற அளவு விரிவானதோ வகையானதோ அன்று.
எனவே சிகண்டியாசிரியரைப் போன்ற இசை வல்லுநர்கள் உங்களை மனத்திற்கொண்டே ஒரு புதிய இசையிலக்கணம் காணவேண்டும். ஒன்றும் புரியாத காரணத்தால் இந்தக் கொடுந்தீவின் தலைவன் இதை மந்திரம் என்று புகழ்ந்தானே; அது முற்றிலும் பொருத்தமானதுதான்.
ஏனென்றால் மந்திரம் தான் இத்தகைய சாதனைகளைச் சாதிக்க முடியும். ஆயுதங்களைக் கொண்டே மனிதர்களை வெல்லமுடியும் என்று நேற்றுவரை நம்பி வந்தவன் நான். கலைகளின் உயர்ந்த பக்குவத்திலும் மனிதர்களை வெல்லமுடியுமென்பதை நேற்று நள்ளிரவு நிரூபித்துவிட்டீர்கள் நீங்கள்" என்றான் முடிநாகன்.
இளையபாண்டியனோ இந்தப் புகழ்ச்சிக்கு மறுமொழி ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்தபடி இருந்தான். கப்பல் விரைந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பகுதியை விரைந்து கடந்து மேலே சென்றுவிட வேண்டும் என்று அவர்கள் ஊழியர்களுக்குக் கட்டளை இட்டிருந்தார்கள்.
தப்பிவிட்டாலும் எங்கே எந்தத் தீமை காத்திருக்குமோ என்ற முன்னெச்சரிக்கையும் பயமும் இன்னும் அவர்களை விட்டபாடில்லை. ஐந்தாறு நாழிகைப் பயணத்திற்குப் பின் மறுபடி அவர்கள் ஒரு சிறிய தீவை அடைந்தார்கள். இறங்கிச் சுற்றிப் பார்த்ததில் அந்தத் தீவில் மனிதர்களே இல்லையென்று தெரிந்தது. "பன்னீராயிரக்கணக்கான பழந்தீவுகள் இந்தத் தென்கடலிலும், மேற்குப் பகுதியிலும் சிதறிக் கிடக்கின்றன.
இவற்றை முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று தங்கள் பாட்டனார் அடிக்கடி கூறுவார். இவை எல்லாவற்றிலுமே வளமோ வழக்காறுகளோ, வாழ்க்கையோ ஒரே விதமாக இருப்பதில்லை. இந்தத் தீவைப் போல் சிலவற்றில் வாழ்க்கையே இல்லை. ஆயினும் இவற்றைச் சுற்றிப் பார்ப்பதால் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களையே தங்கள் பாட்டனார் பெரிதாக மதிக்கிறாரென்று தெரிகிறது" என்றான் முடிநாகன்.
அன்று மாலை இருள் சூழுகிறவரை மேலும் பல தீவுகள் ஆளரவமற்ற மயானம் போல் குறுக்கிட்டுக் கழிந்தன. இருட்டுகிற வேளைக்குக் 'கற்பூரத்தீவு' எனப்படும் பசுமையான தீவுக்கு வந்து சேர்ந்தனர் அவர்கள். அந்தத் தீவின் இன்னொரு விநோதம் தீவில் ஆண்மக்களே அதிகம் இல்லை; அவ்வளவு பெரிய தீவில் இரண்டு பேரோ, மூன்று பேரோ மட்டுமே ஆண்மக்கள் இருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டனர்.
அந்த இருவரையும் அவர்கள் தங்கள் கண்களால் பார்க்கவில்லை. கற்பூரத்தீவும் ஒரு விந்தையாகவே இருந்தது. அந்தத் தீவின் பெண்மக்களே வில்லும் அம்பும் எடுத்துக் குறிபார்த்து எய்வதில் வல்லவர்களாக இருந்தனர் என்பதையும் அவர்கள் கண்டனர்.
கற்பூரத் தீவின் பெண்கள் அவர்களை ஏதோ அபூர்வ விலங்குகளைப் பார்ப்பதுபோல் வெறித்து வெறித்துப் பார்த்தனர். குறிப்பிடத்தக்க எந்தப் பயமும் அந்தத் தீவிலே இல்லை. மறுநாள் பொழுது விடிந்து அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது கரையில் அந்தத் தீவின் பெண்கள் கூட்டமெல்லாம் ஏதோ விநோதத்தைக் காண்பதுபோல் கூடிவிட்டது. மறுநாள் பயணத்தின் போது தங்கச் சுரங்கங்கள் நிறைந்த ஆடகத்தீவு குறுக்கிட்டது.
ஆனால் அந்தத் தீவில் அவர்கள் இருவரையும், அவர்கள் கப்பலையுமே அருகில் கூட வரவிடாமல் தடுத்துவிட்டார்கள். தங்கத் தீவுக்காரர்கள் அந்நியர் வரவையே தடை செய்திருந்தனர். யாரும் தீவையே நெருங்கிவிடாதபடி சுற்றிலும் போர் மரக்கலங்களை வீரர்களோடு காவலுக்கு நிறுத்தி வைத்திருந்தனர். ஆடகத் தீவில் இறங்கிப் பார்க்க வேண்டுமென்று இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் எவ்வளவோ ஆசையிருந்தும், அது முடியவில்லை. உடனே நிராசையோடு முடிநாகன் கூறலுற்றான்:
"இந்தத் தீவுகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரும் கடற்படையெடுப்பின் மூலம் இவற்றை வென்று பாண்டிய நாட்டின் கீழே அடக்கிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று தங்கள் பாட்டனாருக்கு ஆசை இருக்கிறது. அந்த ஆசை தங்கள் காலத்திலாவது நிறைவேறுமோ என்ற நம்பிக்கையில்தான் இப்படியெல்லாம் உங்களைப் பயணம் அனுப்பியிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட ஒரு முழுப் பேரரசையே வெற்றி கொண்டாலும் கொள்ளலாமே தவிர இப்படிப்பட்ட தனித்தனித் தீவுகளை வென்று சேர்ப்பது என்பது அசாத்தியமானது."
"கொடுந்தீவுத் தலைவனை இசையினால் வென்றதுபோல எல்லோரையும் வெல்ல முடியுமானால் வெல்லலாம்" என்று சிரித்துக் கொண்டே முடிநாகனுக்கு மறுமொழி கூறினான் இளையபாண்டியன். இளையபாண்டியனுடைய மனம் கலைவிநோதப் பான்மையுடையதாகவே இருப்பதை இந்த மறுமொழியின் மூலம் முடிநாகன் உணர முடிந்தது.
பெரிய பாண்டியரும், வெண்தேர்ச் செழியரும் இராஜரீக உணர்வுகளையே கலைகளாகக் கருதுகிற நிலையில் இளையபாண்டியர் இசை போன்ற கலைகளையே ஒரு தனி சாம்ராஜ்யமாகக் கருதுகிற பக்குவத்திற்கு அவருடைய ஆசிரியர்கள் அவரை வளர்த்துவிட்டிருப்பது நன்றாக விளங்கியது.
-------------
25. மீண்டும் கபாடம் நோக்கி
தொடர்ந்து ஒரு திங்கள் காலம் தென்பழந்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து பல தீவுகளையும், பலவிதமான மனிதர்களையும், பலவிதமான பழக்கவழக்கங்களையும் பலவிதமான ஒழுகலாறுகளையும் அறிந்து முடித்த பின்னர் கபாடபுரம் நோக்கிப் பயணம் திரும்ப முடிவு செய்தார்கள் அவர்கள். சில இடங்களில் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். சில தீவுகளில் சாதுரியமாகத் தங்களை யாரென்று இனங்காட்டிக் கொள்ளாமலே தப்பிக் கரைசேர வேண்டியிருந்தது.
இன்னும் சில தீவுகளில் ஒரு பற்றுமற்ற துறவிகளைப் போல நடிக்க வேண்டியிருந்தது. இப்படிப் பல துறையான அனுபவச் செல்வங்களைப் பெற்று முடிந்த மனநிறைவோடு திரும்பிய போது இளையபாண்டியனும், முடிநாகனும், கப்பல் ஊழியர்களும் கபாடபுரத்தை விரைந்து சென்று காணும் ஆர்வமும், மனவேகமும், பிரிவுணர்ச்சியும் உடையவர்களாயிருந்தனர்.
எனவே திரும்பும் காலையில் எந்தத் தீவிலும், அதிகமாகத் தங்காமல் அவசியமான சில தீவுகளில் மட்டும் தங்கி விரைந்து ஊர் திரும்பத் தொடங்கியிருந்தனர். ஒரே மூச்சாகப் பயணத்தைத் தொடர முடியாமல் அங்கங்கே அவசியமான சில இடங்களில் நிறுத்தி உணவுப் பொருள் முதலிய தேவைகளை மரக்கலத்தில் நிறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இல்லையானால் எங்கும் நிறுத்தாமலே பயணத்தைத் தொடர்ந்திருப்பார்கள்.
ஊழியர்கள் மிகவும் சோர்ந்து களைத்துப் போயிருந்தார்கள். எப்பொழுது கரைசேரப் போகிறோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் அவர்கள். முடிநாகனும் இளையபாண்டியனும் ஒருவருக்கொருவர் ஆர்வத்தை மனம் விட்டுக் கூறிக்கொள்ளவில்லை என்றாலும் ஊழியர்களை ஒத்த அதே மனநிலையில் தான் இருந்தனர். தென் பாண்டி நாட்டுக் கரை நெருங்க நெருங்க அவர்கள் ஆர்வம் அதிகமாயிற்று. "யார் யாரிடம் எந்த எந்த அனுபவத்தை விவரித்துச் சொல்ல வேண்டும் என்பதில் இளையபாண்டியருக்கு அதிகக் கவனம் வேண்டும். பாட்டனாரிடம் இசையினால் கொடுந்தீவு மறவர்களின் மனத்தை மாற்றி வெற்றி கொண்ட நிகழ்ச்சியைக் கூறக்கூடாது.
எயினர் தீவின் கலஞ்செய் நீர்க்களத்தின் நுணுக்கங்களை அறிய மேற்கொண்ட இராஜதந்திர நிகழ்ச்சிகளைப் பெரியபாண்டியரிடம் கூறினால் நாம் அவர்களை இசையால் மயக்கியது கோழைத்தனம் என்று கருதுவார் அவர். அதனால் தான் கவனமாயிருக்க வேண்டும் என்றேன்" என்றான் முடிநாகன். இளையபாண்டியனும் அவன் கூற்றை மறுக்காமல் ஒப்புக் கொண்டான்.
பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போலிருந்த சிறுதுறைமுகத்தை நெருங்கி மரக்கலம் நங்கூரம் பாய்ச்சப்படுகிற நிலையை அடைந்தபோது சொந்த மண்ணில் இறங்கப் போகிறோம் என்ற ஆர்வம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. துறையில் இருந்தவர்களும், துறை ஊழியர்களும் ஆர்வத்தோடு இளையபாண்டியரின் மரக்கலத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். செய்தியை அரணமனையிலுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஒருவன் அரண்மனைக்கு விரைந்தான்.
துறைமுகம் எங்கும் இளையபாண்டியர் திரும்பி வந்து விட்ட செய்தி ஒரு பரபரப்பையே உண்டாக்கியிருந்தது. துறையிலிருந்த வீரர்கள் ஓடோடிச் சென்று இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குச் செல்வதற்காக இரண்டு குதிரைகளை ஆயத்தம் செய்து கொண்டு வந்து நிறுத்தினர். அரண்மனை வாயிலில் தாய் திலோத்தமை இளையபாண்டியனுக்கு ஆரத்தி சுற்றித் திலகமிட்டு வரவேற்றாள்.
முதியபாண்டியர் ஆர்வத்தோடு அவனைத் தழுவிக் கொண்டு சில விநாடிகள் தன் பிடியிலிருந்து விடவே இல்லை. தந்தை அநாகுலனுக்கோ, தாய் திலோத்தமைக்கோ, மகனிடம் அளவளாவிப் பேச நேரமே அளிக்காமல் முதிய பாண்டியரே அவனைத் தம்மோடு அழைத்துக் கொண்டு போய்விட்டார். முடிநாகனும் உடன் சென்றிருந்தான். முதிய பாண்டியருடைய மந்திரக்கிருகத்தில் சிகண்டியாசிரியரும், அவிநயனாரும் கூட இருந்தனர்.
சிகண்டியாசிரியரைப் பார்த்தவுடனே அந்தக் கொடுந்தீவு அனுபவத்தைக் கூறுவதற்கு நா முந்தியது! ஆனால் பாட்டனாரும் உடனிருப்பதை எண்ணி அந்த உணர்வை அடக்கிக் கொண்டான் இளையபாண்டியன். முதிய பாண்டியருடைய வினாக்களுக்கும், குறுக்கு வினாக்களுக்கும் தடுமாறாமல் மறுமொழி கூறி அவருடைய மனத்திருப்தியைச் சம்பாதிப்பது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. நல்ல வேளையாக முடிநாகனும் உடனிருந்தது ஓரளவுக்கு உதவியாக இருந்தது.
"எந்தத் தீவிலாவது குறிப்பாகத் தென்பாண்டி நாட்டின் மேலும், கபாடபுரத்தின் மேலும் முறுகிய பகை இருக்கிறதா?"
"பகை என்பதையே வேறு விதமாகவும் சொல்லலாம். நட்பும், விருப்பமும் இல்லை என்பதே பகையின் அடையாளம்தான். அந்தத் தீவிலுள்ளவர்கள் அவரவர்கள் தலைவனையே தங்கள் கடவுளாக வீர வணக்கம் புரிகிறார்கள். ஆடகத் தீவில் எங்களைத் துறையிறங்கவே விடாமல் மறுத்துவிட்டார்கள். எயினர் தீவில் கலங்கட்டும் தளத்தைக் காண்பித்து முடித்தபின் எங்கள் மேல் கடும் சந்தேகமுற்றுப் பல சோதனைகள் வைத்தார்கள். அவர்களை மீறித் தப்பி மேலே செல்ல நாங்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது."
"நமது கடற்படையை வலிமையுடையதாக்கி எப்போதாவது இந்தத் தென்பழந்தீவுகளை எல்லாம் கைப்பற்றி அடக்கிப் பாண்டி நாட்டினோடு சேர்க்க முயன்றால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? உன் கருத்து என்ன?" என்று முதியபாண்டியர் கேட்டபோது அதற்கு இளையபாண்டியன் மறுமொழி கூறத் தயங்கி இருந்தான். ஆனால் முடிநாகன் உடனே முன் வந்து, "முதியபாண்டியர் திட்டமிட்டு யோசனை கூறிச் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று உறுதியான குரலில் கூறினான். மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு முதியபாண்டியர் விடை கொடுத்தார்.
உடனே சிகண்டியாசிரியர்பால் சென்றான் சாரகுமாரன். சிகண்டியாசிரியரிடம் கொடுந்தீவில் தனக்கு ஏற்பட்ட இசை அனுபவத்தை அவன் கூறியபோது அவர் வியந்தார். இசையின் விந்தைகளில் இது ஒரு புதிய சாதனை என்று கூறி அங்கு நிகழ்ந்ததைப் பற்றி விவரமாகக் கூறச் செய்து மீண்டும் கேட்டார். கேட்டவர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். ஏதோ பெரிய காரியத்துக்கான சிந்தனை அவர் மனத்தில் உருவாகிறது என்பதை முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
"இசைத்துறையில் ஒரு புதிய ஆராய்ச்சி செய்ய இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கம்! உன் வாழ்விலும் இதனால் ஒரு புதிய பெரும்பயன் விளையப் போகிறது பார்" என்று சிறிது நேரத்தில் வியந்து கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனுக்கு அதைக் கேட்டு மெய்சிலிர்த்தது.
"மந்திரம் என்று அந்தக் கொடுந்தீவு மறவன் உன்னுடைய இசையைப் புகழ்ந்தது ஒருநாளும் வீண்போகாது பார்!" என்று மேலும் சிகண்டியாசிரியர் உற்சாகமாகக் கூறியபோது இளையபாண்டியனுக்கு மறுபடி மெய்சிலிர்த்தது. தன் வாழ்வில் இந்த நிகழ்ச்சி ஏதோ பெரிய மாறுதலை ஏற்படுத்தப்போகிறது என்பது போல் தனக்குத்தானே ஓர் உள்ளுணர்வு அவனுள் விகசித்து மலர்ந்தது. அந்த உணர்வு ஆத்மபூர்வமானதாகவும் இருந்தது.
-------------
26. சிகண்டியாசிரியர் மனக்கிளர்ச்சி
சிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருந்த போதே சாரகுமாரனுக்குக் கண்ணுக்கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற் போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த அந்த இசைக் குடும்பம் இவ்வளவு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறதோ,
அல்லது வேறு ஊர்களுக்குப் பெயர்ந்து போய்விட்டதோ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. விழாவுக்காக வந்திருந்த பாணர்களும், விறலியர்களும், கூத்தர்களும் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா, புறப்பட்டுவிட்டார்களா என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினான் அவன். என்ன காரணத்தினாலோ சாரகுமாரனுடைய மனத்தில் இசையின் நுணுக்கங்களைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் இன்றியமையாதவளாக அவளும் நினைவு வந்தாள்.
அக்கம்பக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் வென்று பாண்டியப் பேரரசை வலிமையாக்கும் போர்வீரனாக அவனை எதிர்பார்த்தார் பாட்டனார் வெண்தேர்ச்செழியர். அவன் இதயமோ அவனை உலகறியாமல் உள்ளூறக் கலைவீரனாக இசைவீரனாக வளர்த்துக் கொண்டிருந்தது. இணையற்ற அழகியும், நவீன கலைகளில் பெருவிருப்பமுடையவளும், குரலினிமைமிக்கவளுமாகிய தன் தாய் திலோத்தமையைக் கொண்டு வளர்ந்து விட்டான் அவன்.
தந்தை அநாகுலனின் போர்வலிமையோ பாட்டனார் வெண்தேர்ச்செழியரின் அரசதந்திரச் சூழ்ச்சிகளோ அவன் இதயத்தோடு ஒட்டவேயில்லை. சிகண்டியாசிரியருக்கு இந்த உண்மை புரிந்த அளவிற்குப் பாட்டனார் வெண்தேர்ச் செழியருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வேறு யாரிடமுமே இசைக்கலையைப் பற்றிய தன் ஆர்வங்களையும், அந்தரங்கங்களையும் தெரிவிக்காத அளவு சிகண்டியாசிரியரிடம் மட்டும் தெரிவித்திருந்தான் சாரகுமாரன்.
இசைக் கலையின் மேல் அந்தரங்கமாக அவனுள் உறங்கிக் கிடந்த காதல் கண்ணுக்கினியாளைச் சந்தித்தபின் விழித்துக் கொண்டுவிட்டது. அவளைப் பார்க்கத் தவித்த போது இசையைப் பாடவும் தவிர்த்தான் அவன். இசையைப் பாடத் தவித்தபோது அவளைப் பார்க்கவும் தவித்தான்.
இசைக்கும் காதலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். இசையிலே காதல் பிறக்கிறது அல்லது காதலிலே இசை கனிகிறது. மனிதன் இன்னொன்றின் மேல் செலுத்தும் அளவற்ற பிரியத்தின் உருவகம் தான் இசையோ என்னவோ?
பழந்தீவுகளில் பயணம் செய்து திரும்பிய மறுநாள் வைகறையில் - முடிநாகனின் துணையும் கூட இல்லாமல் - உலாவச் சென்று வருவது போல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றான் சாரகுமாரன்.
இருள் பிரியாத வைகறை வேளையில் யாரையோ நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாற்போல ஓலமிடும் கடல் அலையோசையும், குளிர்ந்த காற்றும் மனத்திற்குள் ஓடும் நினைவின் விரைவிற்கேற்ப விரையும் புரவிப் பயணமும், மிகவும் இரம்மியமாயிருந்தன.
அந்த வேளையில் யாருடைய கவனத்தையும் கவராமல் தனிமையாகவும் தன்னிச்சையாகவும் அரண்மனையை விட்டுப் புறப்படுவது கூடச் சுலபமான காரியமாயிருந்தது அவனுக்கு. கடற்கரைக் காற்றில் வெண்பட்டு விரித்தாற் போன்ற மணல் வெளியில் புரவி சென்றபோது சுகமாயிருந்தது.
புன்னை மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. எப்போதாவது தற்செயலாகக் கீழே உள்ள நீரில் உதிரும் புன்னைக்காய் வாத்தியம் வாசிப்பது போன்றதொரு ஒலியை எழுப்பி ஓய்வதும் செவிக்குச் சுகமானதாயிருந்தது. இன்னும் சிறிது தொலைவு சென்றபின் அதைவிடச் சுகமான நாதம் ஒன்று உயிரின் குரலாகவே காற்றுடன் உலவி வந்து அவன் செவிகளில் எட்டலாயிற்று 'சோகத்தை இப்படியும்கூட இசையினால் பேசமுடியுமா?' என்று இளையபாண்டியனை வியக்கச் செய்யும் குரலாயிருந்தது அது.
அந்தக் குரலில் புதிது புதிதாக மெருகேறியிருந்த நுணுக்கங்களையும், அழகுகளையும், நளினங்களையும் இணைத்து எண்ணியபோது அது வேறாகத் தோன்றியதே தவிரக் கூர்ந்து செவிமடுத்தபோது குரல் அவனுக்குப் பழகியதாகவே இருந்தது.
அருகில் நெருங்க நெருங்கக் குதிரையிலிருந்து கீழே இறங்கி அந்தக் குரல் வரும் வழியிலே ஓடவேண்டும் போல் அத்தனை ஆர்வமாயிருந்தது அவனுக்கு. அப்படியே செய்தான் அவன். புன்னை மரத்தடியில் அமர்ந்து குனிந்து மணற்பரப்பை நோக்கியவாறு கண்ணுக்கினியாள் தான் பாடிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு இந்த உலக நினைவே இல்லை போல் தோன்றியது. அருகில் நெருங்கிச் சென்றால் அவளுடைய பாடலை எங்கே நிறுத்திவிடுவாளோ என்ற தயக்கத்தினால் விலகியே நின்றான் இளையபாண்டியன். நெய்தற் பண்ணை இத்தனை உருக்கமாகவும் இசைக்க முடியும் என்பதை இன்றுதான் அவனால் உணர முடிந்தது. மொழியில் இசையும் ஒரு பிரிவு என்பதைவிட இசையே ஒரு தனிமொழி என்று தனித்து பிரித்துச் சிறப்புக் கொடுத்துவிடலாமென்று இப்போது தோன்றியது அவனுக்கு.
தான் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு வைகறையில் இதே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளைச் சந்தித்த போதும் அவள் இந்த நெய்தற் பண்ணையே பாடிக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தான் அவன். அதே நெய்தற்பண் இப்போது இன்னும் நன்றாக கனிந்திருந்தது. சோகம் இசையாக வரும்போது இன்பத்தையல்லவா கொடுக்கிறதென்ற விந்தையான சிந்தனையில் ஈடுபட்டான் அவன்.
சிறிது நாழிகையில் அவளுடைய பாட்டு நிறைந்தது. நிறைந்த பின்பும் அவளுடைய குரல் செவிகளையும் காற்று வெளியையும் விட்டு அகலாமல் அப்படியே நித்திய சங்கீதமாக நிலைத்துவிட்டது போல் ஓர் இனிய பிரமையை நிலவச் செய்திருந்தது. 'சிலருடைய இசைக்காக இலக்கணங்கள் படைக்கப்பட்டுள்ளன. வேறு சிலருடைய இசையோ இலக்கணங்களையே புதிது புதிதாகப் படைக்கிறது' என்று அவளுடைய இசையைக் கேட்டு நினைத்தான் சாரகுமாரன்.
அவ்வளவில் தலை நிமிர்ந்த அவள் அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்துவிட்டாள். உடனே எழுந்து சீற்றத்தோடு முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்ட அவளை எப்படி ஆற்றுவிப்பதென்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது.
"எப்போது பாடினாலும் நெய்தற் பண்ணையே பாடுகிறாயே? அவ்வளவு பெரிய நிரந்தரமான சோகம் என்னவோ?" என்று பேச்சைத் தொடங்கினான் அவன்.
அவளிடமிருந்து மறுமொழி இல்லை. சில விநாடிகள் மௌனமாகவே நின்றாள் அவள். மறுபடியும் அவனே பேசினான்.
"சிலருடைய குரலுக்குச் சோகமே அழகாக இருக்கிறது..."
"சிலருடைய செயல்கள் சோகத்தையே பிறர்க்குத் தருவதால் தானோ என்னவோ?" என வெடுக்கென்று மறுமொழி கூறினாள் அவள்.
"நீ சீற்றமடைந்து பயனில்லை கண்ணுக்கினியாள்! எதிர்பாராதவிதமாக என் பாட்டனார் என்னைப் பழந்தீவுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டார். உன்னிடம் விடைபெறவும் முடியவில்லை. எங்கே நீயும் உன் குடும்பத்தினரும் கபாடபுரத்தை விட்டே ஊர் பெயர்ந்து போயிருப்பீர்களோ என்ற பயத்துடனேயே இப்போது இங்கு தேடி வந்தேன்..."
"பிறரைப் பயப்பட வைப்பவர்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?"
"நீ கூறுவது தவறு! நான் யாரையும் பயப்பட வைக்கிறவனில்லை..."
"இருந்தாற்போலிருந்து மறைகிறவர்களும் - இருந்தாற் போலிருந்து தோன்றுகிறவர்களும் பயப்பட வைக்கிறவர்கள் தாமே?"
"சந்தர்ப்பம் அப்படி நேர்ந்துவிட்டது! அது என் தவறில்லை" என்று கூறிய இளையபாண்டியன் எயினர் தீவின் இயற்கையழகைக் கண்ட வேளையில் அவளை நினைவு கூர்ந்ததையும், பிற பயண அநுபவங்களையும் தொடர்ந்து கூறலானான். அவன் கூறியவற்றைக் கேட்கக் கேட்க அவள் சினம் சிறிது சிறிதாக அடங்கியது.
"இன்னும் ஒரு திங்கள் காலத்தில் இங்கிருந்து புறப்பட வேண்டுமென்று என் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்" என்றாள் அவள். அவள் குரலில் கவலை ஒலித்தது.
"அதற்குள் எவ்வளவோ நடக்கும்" என்று புன்சிரிப்போடு அவளுக்கு மறுமொழி கூறினான் அவன். இப்படியே சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டுப் பிரிந்தார்கள் அவர்கள். மறுபடி அடுத்த நாள் அவளைச் சந்திப்பதாகக் கூறினான் அவன்.
அரண்மனை திரும்பியதுமே அவன் சிகண்டியாசிரியரைச் சந்தித்து அன்று வைகறையில் தான் கடற்கரையில் கேட்ட நெய்தற்பண்ணின் புது நயங்களை விவரித்தான்.
சிகண்டியாசிரியரும் அதனை ஆர்வத்தோடு கேட்டார்.
"இசையில் பல்லாயிரம் நுணுக்கங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி இயல்பை மீறிய அபூர்வத் திறமைகளை விளக்கும் புதிய இசையிலக்கணம் ஒன்றை நானே வரைவதாக இருக்கிறேன். அந்த மாபெரும் இசையிலக்கணத்தை இங்கேயே கோ நகரில் அரங்கேற்றவும் முடிவு செய்துள்ளேன்" என்று மனத்தில் ஏற்பட்ட புதுமைக் கிளர்ச்சியோடு அவனுக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனும் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.
------------
27. பெரியபாண்டியரின் சோதனை
கண்ணுக்கினியாளின் நெய்தற்பண்ணைப் பற்றிச் சாரகுமாரன் வியந்து கூறியதைக் கேட்டுச் சிகண்டியாசிரியரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவருடைய விருப்பத்தைச் சாரகுமாரனால் மறுக்க இயலவில்லை.
மறுநாள் வைகறையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான் அவன். ஆனால் முன் தினம் சென்றது போல் ஆசிரியரையும் உடன் அழைத்துக் கொண்டு அவனால் புரவியில் செல்ல முடியவில்லை.
எனவே அரண்மனை இரதம் ஒன்றில் ஆசிரியரை அழைத்துச் சென்றிருந்தான் அவன். விடிந்ததும் அரசக்கிருகத்து இரதங்களைச் சுற்றிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த வெண்தேர்ச்செழியர் ஓர் இரதம் குறைவதைக் கண்டு முடிநாகனிடம் வினாவினார்.
முடிநாகனும், இளையபாண்டியனும், சிகண்டியாசிரியரும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்கு இரதத்தில் சென்றிருக்கும் செய்தியை அவரிடம் தெரிவிக்கும்படி ஆயிற்று. தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் ஒரு பாண்மகளின் இசைக்கூத்தை இளையபாண்டியன் இரசித்து வியந்ததை மாறுவேடத்தில் சென்று கண்டிருந்த பெரியபாண்டியர் அதனால் சினமுற்றிருந்தார். இன்று சிகண்டியாசிரியரும் இளையபாண்டியனோடு சென்றிருப்பதை அறிந்து அவருடைய ஐயப்பாடு அதிகமாயிற்று.
"இவ்வைகறை வேளையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு எதற்காகச் சென்றான் சாரகுமாரன்?" என்று அவர் கடுகடுப்போடு வினாவியபோது முடிநாகன் தயங்கித் தயங்கி மறுமொழி கூறினான். ஆயினும் பெரியபாண்டியர் சந்தேகத்தோடுதான் திரும்பினார்.
"சிகண்டியாசிரியர் திரும்பியதும் அவரை நான் காணவேண்டும் என்று சொல்" எனக் கூறிவிட்டுத்தான் திரும்பினார் அவர். என்ன நேருமோ என்ற பயத்தில் முடிநாகனுக்கு நெஞ்சு படபடத்தது. இளையபாண்டியரையே கூப்பிட்டு விசாரணை செய்தாலும் ஏதாவது கூறித் தப்பித்துக் கொள்வார். சிகண்டியாசிரியரைக் கூப்பிட்டு விசாரித்தால் அவர் பெரியபாண்டியரிடம் பொய் சொல்ல மாட்டார்.
அவர் பொய் சொல்லாவிட்டால் இளையபாண்டியரின் மேல் பாட்டனாருக்குத் தாங்க முடியாத சினம் மூளுமே என்று எண்ணி அஞ்சினான் முடிநாகன். இளையபாண்டியர் அதைப் பெரியவரிடம் தான் சொன்னதற்காகத் தன்மேற் சினந்து கொள்வாரோ என்ற பயம் கூட முடிநாகனுக்கு இருந்தது. தேரில் கடற்கரைக்குச் சென்றிருந்த சிகண்டியாரும், சாரகுமாரனும் திரும்பி வருகிறவரையில் அரசகிருகத்து தேர்கள் நிறுத்தப்படுகிற இடத்திலேயே அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான் முடிநாகன்.
நன்றாக விடிந்து சில நாழிகைகள் கழிந்த பின்பே அவர்கள் சென்றிருந்த தேர் திரும்பி வந்தது. உடனே முடிநாகன் இளையபாண்டியனை மட்டும் ஒரு கணம் தனியே அழைத்துப் பெரியவர் தேர்களைப் பார்க்க வந்திருந்ததையும், நடந்த பிற விவரங்களையும் கூறினான். இளையபாண்டியனால் முடிநாகனிடம் கோபித்துக் கொள்ள முடியவில்லை. சிகண்டியாசிரியரிடம் பெரியவர் வினாவினால் அவருக்குச் சந்தேகம் வராதபடி மறுமொழி கூறுமாறு சொல்லிவிட முடிவு செய்தான் அவன்.
தேரை அரசகிருகத்தின் தேர்ச்சாலையில் விட்டு விட்டு இருவரும் அரண்மனைக்குள்ளே செல்ல இருந்த நிலையில் முடிநாகன் "பெரியபாண்டியர் தங்களைக் கண்டு பேச விரும்பினார்" என்று சிகண்டியாசிரியரிடம் தெரிவித்தான். சிகண்டியாசிரியரும் அதைக் கேட்டுத் தாமே பெரியபாண்டியரைக் காண்பதாக அவனிடம் கூறிச் சென்றார். அப்படிச் செல்லும்போது குறிப்பறிந்த சாரகுமாரன் அவருடன் செல்லவில்லை.
சிகண்டியாசிரியரைக் கண்ணுக்கினியாளின் தெய்வீக இசையைக் கேட்கச் செய்துவிட்ட பெருமையில் இருந்தான் இளையபாண்டியன். பாட்டனாரிடம் சிகண்டியார் விபரீதமாக எதுவும் கூறிவிட முடியாது என்பதில் அவனுக்கு நல்ல நம்பிக்கையும் இருந்தது.
சிகண்டியார் பெரியபாண்டியரைச் சந்திக்கச் சென்ற போது பெரியபாண்டியர் எதற்காகவுமே சிறப்பான காரணத்திற்காக அவரைக் காண விரும்பியது போல் பேசாமல் பொதுவான பல செய்திகள் பற்றிப் பேசினார். இசை நூல்கள், இளையபாண்டியனின் இசைப் பயிற்சி, குருகுலவாசத்தை முடித்து அவனுக்கு அரசியல் அனுபவங்களை உணர்த்த, எல்லாவற்றையும் பற்றிக் கூறிக் கொண்டே வந்தவர் இறுதியில் இளையபாண்டியனும் அவரும் தேரில் போயிருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டுச் சிகண்டியாரின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.
"ஓ! அதுவா? நெய்தற் பண்ணைப் புதுப்புது நுணுக்கங்களுடன் பாடும் பாண்மகள் ஒருத்தி கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் இருப்பதாக அறிந்து காண்பதற்குச் சென்றோம். அந்தப் பாண்மகளின் குரல் இலக்கணங்களை மீறிய அழகுடையதாயிருந்தது. அந்தக் குரலுக்கே ஓர் இலக்கணத்தைப் படைக்கலாம் போல அத்தனை அழகுடையதாயிருந்தது" என்று வியந்தவாறே பெரியபாண்டியருக்கு மறுமொழி கூறினார் அவர்.
"உங்களுக்கு முன்பே தெரிந்த அவளைக் காண இளையபாண்டியனை நீங்கள் அழைத்துச் சென்றீர்களா? அல்லது அவளை முன்பே அறிந்த இளையபாண்டியன் அவளைக் காண உங்களை அழைத்துச் சென்றானா?"
இதற்குச் சில கணங்கள் மறுமொழி சொல்லத் தயங்கினார் சிகண்டியார்.
"சிறப்பான காரணம் எதற்காகவும் இதை வினவவில்லை சிகண்டியாசிரியரே! அறிவதற்காகவே வினாவுகிறேன்" என்று அவரை மேலும் தூண்டினார் பெரியவர். "இளைய பாண்டியர் முன்பே பலமுறை அந்த அபூர்வ இசையைக் கேட்டு என்னிடம் பெருமையாகக் கூறியதால் தான் நானும் சென்றேன். நான் படைத்துவரும் இசை நுணுக்க நூலுக்குப் பெரிதும் பயன்படும் அனுபவம் அது" என்று நிர்விகல்பமாக மறுமொழி கூறிவிட்டார் அவர்.
"அப்படியானால் நானும் அந்தப் பாண்மகளின் இசையைக் கேட்க ஆசைப்படுகிறேன். நாளை என்னை அழைத்துச் செல்வீரா?" - என்று உள்ளடக்கமான குரலில் சிகண்டியாரைக் கேட்டார் பெரியபாண்டியர்.
சிகண்டியார் தயங்கினார். "வேறொன்றுமில்லை! நல்ல இசையை நானும் பாராட்டலாமே என்றுதான்" என மேலும் வேண்டினார் பெரியவர்.
இசைபோன்ற நுண்கலைகளில் விருப்பமே அதிகமில்லாத பெரியபாண்டியர் திடுமென்று இப்படிக் கேட்டதில் ஏதோ விபரீதமிருப்பதாக அப்போதுதான் சிகண்டியாருக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் தட்டிக் கழிக்க முயன்றார். பெரியபாண்டியரோ பிடிவாதமாக அந்தப் பாண்மகளைத் தானும் பார்த்தே தீரவேண்டுமென்றார்.
---------------
28. கலைமானும் அரிமாவும்
பெரியபாண்டியருடைய பிடிவாதத்தைச் சிகண்டியாசிரியருடைய சொற்களால் தகர்க்க முடியவில்லை. கலை காரணமாக ஏற்படும் ஆர்வத்தையும், அரசியல் காரணமாக ஏற்படும் அக்கறையையும், பகுத்து உணரமுடியாத அளவிற்குச் சிகண்டியாசிரியருடைய மதி மழுங்கியிருக்கவில்லை.
'நானும் அந்தப் பாண்மகளின் இன்னிசையைக் கேட்க ஆசைப்படுகிறேன்' என்று பெரியபாண்டியர் கூறியதைச் சிகண்டியார் நம்பவில்லை. அவருடைய வேண்டுகோளில் இயற்கையான ஆர்வமோ, கனிவோ இல்லாததை அவர் முன்பே கூர்ந்து கவனித்து உணர்ந்துவிட்டார்.
அந்த வேண்டுகோளில் யாருமே விரும்பத் தக்கதல்லாத ஒரு கடுமையான உள்நோக்கம் இருப்பதுபோல் சிகண்டியாசிரியருக்குத் தோன்றியது. அதற்கு இணங்கவும் மனமின்றி அதை மறுக்கவும் இயலாதவராய்க் குழப்பமானதொரு மனநிலையில்தான் அப்போது அவர் இருந்தார்.
கண்ணுக்கினியாளைப் பற்றிப் பெரியபாண்டியரிடம் எதுவும் கூற நேர்ந்தால் அவருக்குச் சிறிதும் சந்தேகம் வராதபடி கூறுமாறு இளையபாண்டியன் தன்னிடம் வேண்டிக் கொண்டிருந்ததை இப்போது நினைவு கூர்ந்தார் சிகண்டியாசிரியர்.
சிறிய காரணத்துக்காகவோ, பெரிய காரணத்துக்காகவோ எதற்குமே அவர் பொய் சொல்லிப் பழகியதில்லை. பொய் சொல்லக் கூடாதென்ற நோன்பை அழித்துக் கொள்ளக் காரணம் சிறிதாயிருந்தால் என்ன? பெரியதாயிருந்தால் என்ன? அது அவரால் முடியவில்லை.
பெரியபாண்டியரைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துப் போக அவர் இணங்கிவிட்டார். 'அப்படித் தம்மை அங்கு அழைத்துப் போகும் செய்தியை இளையபாண்டியனுக்குத் தெரிவிக்கலாகாது' என்றும் சாமர்த்தியமாகச் சிகண்டியாசிரியரிடம் வாக்கும் வாங்கிக் கொண்டுவிட்டார் பெரியவர். கலை உள்ளத்தின் கனிவையும், மென்மையையும் அரசியல் காரணங்களுக்காக அவற்றை அணுகுகிறவர்களால் புரிந்து கொள்ள முடியாமற் போகிறதே என்று உள்ளூற வருந்துவதைத் தவிரச் சிகண்டியாசிரியரால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை.
இளையபாண்டியன் தன்னைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துச் சென்ற அதே தினத்தின் மாலை வேளையில் பெரியவரைத் தான் அவளிடம் அழைத்துச் செல்ல வேண்டியவராக இருந்தார் சிகண்டியாசிரியர்.
காலையில் இளையபாண்டியனோடு கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்ற போதிருந்த அவ்வளவு உற்சாகம் மாலையில் வெண்தேர்ச் செழியரோடு சென்ற போது அவருக்கு இல்லை. கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது போன்ற மனநிலையோடு இருந்தார் அவர்.
கண்ணுக்கினியாள் என்ற புள்ளிமானைக் காணப் பெரியபாண்டியர் என்ற சீற்றம் நிறைந்த முதிய சிங்கத்தை அழைத்துப் போவது போன்ற அவ்வளவு வேதனை அந்த இசைப்புலவருடைய உள்ளத்திலே நிறைந்திருந்தது. சிகண்டியாசிரியர் சந்தேகப்பட்டதற்கும் வேதனைப்பட்டதற்கும் ஏற்றாற்போலவே பெரியபாண்டியரும் அங்கு நடந்து கொண்டார். சிறிது நேரம் அவளுடைய இசையைக் கேட்பதுபோல நடித்த பெரியபாண்டியர் அவளிடம் வினாவிய வினாக்களும் விசாரித்த விசாரணைகளும் சிகண்டியாசிரியரைக் கலக்கத்திற்கு உள்ளாக்கின.
"இவ்வளவு நன்றாகப் பாடும் வல்லமை வாய்ந்த நீயும் உன் பெற்றோரும் ஏன் இந்தக் கபாடபுரத்திலேயே தங்கி விட்டீர்கள்? பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள் போல் ஊரூராகச் சென்று பாடிக்கொண்டிருப்பதல்லவா சிறந்த பாண்குடியினருக்கு அழகு?" என்று முதல் வினாவிலேயே அவள் மனத்தை ஆழம் பார்த்தார் பெரியபாண்டியர்.
"நகரணி மங்கல விழாவுக்காக இங்கு வந்தோம்! அப்படியே தங்கிவிட்டோம். வந்த கலைஞர்களை எல்லாம் காலவரையறையின்றி விருந்தினராக ஏற்று உபசரிக்கும் பண்புள்ள இந்தப் பாண்டிய நாட்டில் முதல் முதலாக நீங்கள் தான் இப்படி எங்களை வினாவுகிறீர்கள்! தங்கள் நாட்டிற்கு வந்த கலைஞர்கள் வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுப் போகாமல் ஏன் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார்கள் என்று கவலைப்படும் முதல் மனிதரை நான் இன்று மாலையில் இப்போதுதான் இங்கே சந்திக்கிறேன்!" என்றாள் கண்ணுக்கினியாள்.
"நான் தவறாகக் கூறவில்லை பெண்ணே! சிறப்பாக வேறு காரணம் ஏதாவது இருந்தாலன்றிக் கலைஞர்கள் ஓரிடத்திலேயே இப்படித் தங்கமாட்டார்களே என்றுதான் வினாவினேன்..."
"இது வெறும் வினாவா? அல்லது கவலையா? என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் கேள்வி வினாவாக மட்டும் ஒலிப்பதுபோல எனக்குத் தோன்றாததுதான் காரணம். கலைஞர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று கலைஞர்களே உணராத ஒன்றை வற்புறுத்துகிறீர்கள் நீங்கள்..."
"அப்படியில்லை. இடத்தின்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். கலையின் மேல் பிரியப்பட்டு மட்டுமே ஓரிடத்தில் தங்க முடியாது...?"
"எப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன். இடத்தின் மேல் பிரியப்படுத்துவது தவிர மனிதர்கள் மேல் பிரியப்படத்தக்க அத்துணைச் சிறப்பான பண்புள்ள மனிதர்களும் இங்கு நிறைய இருக்கிறார்கள் என்று காலை வரையில் நான் எண்ணியிருந்தேன். இப்போதோ என்னுடைய அந்த இரண்டாவது எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது."
"நீ மிகவும் சினமாகப் பேசுகிறாய் பெண்ணே! பேச்சில் எப்போதுமே நிதானம் வேண்டும். அதுவும் என்னைப் போன்ற முதியவர்களிடம் உரையாடும்போது இன்னும் அதிகமான நிதானம் வேண்டும்."
மறுமொழி கூறாமல் அவரை வெறுப்பவள் போல் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள் அவள். இந்தக் கேள்விகளை விரும்பாத சிகண்டியாசிரியர் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றார். சிறிது தொலைவு விலகி நின்ற அவள் தந்தை, அருகில் வந்து பெரியபாண்டியரிடம் ஏதோ பேசத் தொடங்கினார்.
"தொடர்ந்து ஓரிடத்திலேயே தங்கிவிடாமல் பல இடங்களுக்கு மாறிமாறிச் சென்று கொண்டிருப்பதனால்தான் கலைஞர்களின் கலை வளர்ச்சியும் மெருகும் அடையும்" என்று மீண்டும் அவளுடைய தந்தையிடம் வாதிடத் தொடங்கினார் பெரியபாண்டியர்.
உடன் வந்திருந்த சிகண்டியாசிரியருக்கே வெறுப்பைத் தருவதாயிருந்தது அவர் பேச்சு. தானும், தன்னுடன் வந்தவரும் இன்னார் இன்னாரெனச் சிகண்டியாசிரியர் தெரிவிக்காததனால் புள்ளிமான் போன்ற அந்தப் பெண்ணுக்குப் பெரிய பாண்டியரிடம் பயமும் இல்லை, மதிப்பும் வரவில்லை.
சினமே மேலெழுந்து பொங்கியது. காலையில் இளையபாண்டியன் சிகண்டியாசிரியரை மாறுவேடத்தில் அழைத்து வந்திருந்ததனால் இப்போது அவரை அவளுக்கு அடையாளமும் தெரியவில்லை.
ஆனால் உடன் வந்திருந்த கிழச்சிங்கத்தை ஒத்த அந்த முதியவர் வினாவினாற் போன்ற வினாக்களையே தன்னிடம் வினவாமல் அமைதியாக இருந்ததோடல்லாமல் அந்த வினாக்களை ஓரளவு வெறுப்பதுபோன்ற முகபாவத்தையும் காண்பித்ததனால் சிகண்டியார் மேல் அவளுக்குக் கோபம் வரவில்லை. பெரியபாண்டியர் மேலேயே சினம் மூண்டது. பெரியபாண்டியரோ தான் யாரென்று அவளுக்குக் குறிப்பாகப் புரியவைத்து அவளை மேலும் பயமுறுத்தவும், திகைக்க வைக்கவும் விரும்பினார்.
அரசகுடும்பத்தினர் மட்டுமே பாணர்களுக்குப் பரிசளிக்கும் பொற்பூக்கள் சிலவற்றைத் தம்மோடு கொண்டு வந்திருந்த அவர் அந்த பொற்பூக்களில் ஒன்றை எடுத்து, "எவ்வாறாயினும் ஆகுக! உன் கலைத்திறனைப் போற்றி இவற்றை உனக்களிக்கிறேன்" என்று அவற்றை அவளிடம் நீட்டினார்.
ஆனால் அவள் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரை எள்ளி இகழ்வது போன்ற புன்னகையொன்று உடன் அவள் இதழ்களில் மின்னி மறைந்தது. "தங்களை மதியாதவர்களுடைய பரிசை ஏற்பது கலைஞர்களின் இயல்பில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?" என்று அவள் பதிலுக்குச் சீறிய போது பெரியவரின் முகத்தின் சினம் அதிகமாகியது. கடுமையும் மிகுதியாகி வளர்ந்தது.
"ஏதேது? உங்கள் சினத்தைப் பார்த்தால் எங்களை நாடுகடத்தவும் செய்வீர்கள் போலிருக்கிறதே?" என்றாள் அவள்.
"அவசியமென்று கருதினால் அதையும் செய்ய முடிந்தவன் தான் நான்" என்று கூறிவிட்டுப் "போகலாம்! புறப்படுங்கள்" என்று சிகண்டியாரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் பெரியவர். புறப்படுகிறபோது முறைக்காக ஒரு வார்த்தை கூட அவளிடமோ அவள் தந்தையிடமோ சொல்லிக் கொள்ளவில்லை. சிகண்டியார் மட்டும் சொல்லி விடைபெற்றுக் கொண்டார். இருவரும் அரண்மனையை நோக்கித் திரும்பினர்.
------------
29. இசைநுணுக்க இலக்கணம்
கண்ணுக்கினியாள் மேல் இளையபாண்டியன் சாரகுமாரனுக்கு அன்பு இருப்பதையும், அப்படி ஓர் அன்பையோ தொடர்பையோ இணைப்பையோ விரும்பாதவராகப் பெரியபாண்டியர் மனம் குமுறுவதையும் சிகண்டியாசிரியர் தெளிவாகப் புரிந்து கொண்டார்.
போகிற போக்கைப் பார்த்தால் பெரியபாண்டியர் சினவெறியில் அந்தப் பாண்மகளையும் அவள் குடும்பத்தினரையும் நாடுகடத்தினால் கூட வியப்பதற்கில்லை என்று தோன்றியது. அதற்குள் தம் கலை இலட்சியமாகிய இசைநுணுக்க இலக்கண நூலை இயற்றி அரங்கேற்றி முடித்துவிடுவதில் கவனம் செலுத்த வேண்டியவராக இருந்தார் அவர்.
இளையபாண்டியனும், கண்ணுக்கினியாளும் தத்தம் குரலினிமையின் மூலம் விளைவித்துக் காட்டிய புதுமைகளையும், நுணுக்கங்களையும், நயங்களையும் கண்டபின் அவற்றை இலட்சியங்களாகக் கொண்டே இசைநுணுக்கத்தை இயற்றத் தொடங்கியிருந்தார் அவர். கலைத்துறையைப் பொறுத்தவரையில் ஓர் சுவையின் மேலான எல்லையைத் தொடுகிறவர்கள்தான் அதுவரை அந்தத் துறைக்கு என்று அமைக்கப்பட்டிருந்த இலக்கணங்களையும் மரபுகளையுமே வளர்த்துப் புதியதாக்கி விடுகிறார்கள்.
இப்படிப் புதிய இலட்சியங்கள் பிறந்துவிட்டபின்பே அவற்றை எடுத்துக்காட்டாகக் கொண்டு புதிய இலக்கணங்களும், மரபுகளும் பிறக்கின்றன. இலட்சியங்களைப் படைக்கிற படைப்பாளியின் சாதனை எல்லை என்கிற உயரத்தை அடையமுடியாமல் சில வேளைகளில் இலட்சணங்களை வரையறுத்துச் சொல்லுகிற இலக்கண ஆசிரியரின் கீழ் எல்லையிலேயே தளர்ந்து நின்றுவிடுவதும் உண்டு.
அப்படித் தளர்ந்து நின்றுவிடுவதனால் அந்தக் கலையின் எதிர்காலத்துக்கு வளர்ந்துவரும் புதிய மரபுகள் சொல்லப்படாமலே போய்விடும். அந்த நிலை ஏற்பட்டுவிடலாகாதே என்பதற்காகத்தான் சிகண்டியாசிரியர் இசை நுணுக்க இலக்கணத்தை விரைந்து இயற்றிக் கொண்டிருந்தார். அந்த இலக்கணத்தை அவர் இயற்றுகையில் பெரும்பான்மை நேரம் சாரகுமாரனும் அவருடன் கூடவே இருந்தான்.
பெரியபாண்டியரோடு தாம் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று வந்த செய்தியைச் சிகண்டியாசிரியர் சாரகுமாரனிடம் கூறவில்லை. சாரகுமாரன் மட்டும் முடிநாகனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சில காலை வேளைகளிலும், சில மாலை வேளைகளிலும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று வந்தான். அப்படிச் சென்று கண்ணுக்கினியாளைச் சந்தித்த போதும் அவளிடம் ஆழமான மாறுதல் ஒன்றை உணர்ந்தான் அவன்.
சிரிப்பும், மகிழ்ச்சியும், கலகலப்பான உரையாடலும் அற்றுக் கவலை நிறைந்தவளாய்த் தென்பட்டாள் அவள். அந்த மாறுதலைப் புரிந்து கொள்ளவும் முடியாமல், வினாவித் தெரிந்து கொள்ளவும் இயலாமல் வேதனைப்பட்டான் சாரகுமாரன்.
கபாடபுரத்திலிருந்து தாங்கள் வேறு ஊருக்குப் புறப்படப் போவதைப் பற்றியே அவனைச் சந்திக்க நேரும் போதெல்லாம் பேசிக் கொண்டிருந்தாள் அவள். சாரகுமாரனுக்கு இது புதுமையாக இருந்ததோடல்லாமல் மனவருத்தத்தை அளிப்பதாகவும் இருந்தது. மனத்திற்குள்ளேயே துயரப்பட்டான் அவன்.
சிகண்டியாசிரியர் பெரியபாண்டியரை அவளிடம் அழைத்துச் சென்றிருந்ததையும், அவர் அவளிடம் வினாவிய வினாக்களையும் கூறியிருந்தாரானால் சாரகுமாரனுக்கு அவளுடைய இந்த மாறுதலுக்கான காரணங்கள் எல்லாம் தெளிவாகப் புரிந்திருக்கும். அதையும் அவர் கூறாததால் ஒன்றும் புரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது சாரகுமாரனுக்கு.
"கோ நகராகிய கபாடபுரத்தின் அரசவையில் பெரும் புலவர்கள் அனைவரையும் கூட்டிய அரங்கத்தில் இசை நுணுக்கத்தை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் நான். பெரியபாண்டியரிடம் இதை எடுத்துக்கூறி அவருடைய இசைவைப் பெற வேண்டும்" என்று சாரகுமாரனிடம் விளக்கினார் சிகண்டியாசிரியர்.
"நாமிருவருமாகச் சென்று பாட்டனாரிடம் கூறினால் அவர் அவசியம் இணங்குவாரென்று நம்புகிறேன்" என்று சாரகுமாரன் கூறத்தொடங்கியதை மறுத்து, "நான் ஒருவனே சென்றால் பெரியபாண்டியர் ஒரு வேளை இந்த அரங்கேற்றத்திற்கு இணங்கினாலும் இணங்கலாம். இளையபாண்டியரும் உடன் வந்தாலோ பெரியவருக்கு உலகத்தில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் வந்துவிடும். மறுத்தாலும் மறுத்துவிடுவார்" என்றார் சிகண்டியாசிரியர்.
ஆசிரியரின் இந்தக் கருத்தில் இளையபாண்டியனுக்குச் சந்தேகம் எதுவும் உண்டாகவில்லை. அதனால் அவன் அவர் விருப்பப்படியே செய்ய இணங்கினான். ஆனால் ஒன்றை மட்டும் சிகண்டியாசிரியரிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினான்.
"இசைநுணுக்கம் என்ற தங்கள் நூல் தோன்றக் காரணமாயிருந்தவளும் அந்த அரங்கேற்றம் நிகழ்கிற அன்று இந்த அரண்மனையில் வந்து இசைக்க வேண்டும் என்பது என் விருப்பம்" என்று சாரகுமாரன் ஒவ்வொருமுறை கூறும்போதும் சிகண்டியாசிரியர் உள்ளூர வருந்தினார்.
"கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பாண்மகள் வந்து பாட வேண்டும்" என்று வேண்டினால் பெரியபாண்டியர் இசைநுணுக்க நூலை அரங்கேற்றவே ஒப்புக் கொள்ளமாட்டாரென்று தோன்றியது. அதை இளையபாண்டியனிடமும் மனம் விட்டுச் சொல்ல முடியாமல் தவித்தார் அவர்.
சாரகுமாரனின் தந்தை அநாகுல பாண்டியனிடம் இந்த அரங்கேற்றத்தைப் பற்றி விவரித்துக் கூறலாம் என்றாலோ பெரியபாண்டியர் வெண்தேர்ச் செழியரின் விருப்பத்துக்கு மாறாக அநாகுலனும் ஒரு காரியத்தைச் செய்ய மாட்டான் என்பது சிகண்டியாசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
எனவே பெரிய பாண்டியரையே தேடிச் சென்றார் அவர். பெரியபாண்டியர் சிகண்டியாசிரியரை வரவேற்ற விதமே இசையைப் பற்றியோ, கலைகளைப் பற்றியோ, கடற்கரைப் புன்னை மரத்தோட்டத்தில் தங்கியிருக்கும் பாண்மகளைப் பற்றியோ எதையும் என்னிடம் சொல்லிவிடாதே என்பதுபோல் இருந்தது.
"தென்பழந்தீவுகள் அனைத்தையும் ஒரு வலிமை வாய்ந்த கடற்படையை அனுப்பி வெற்றி கொண்டு நேராகக் கபாடபுரக் கோ நகரின் ஆட்சிக்குக் கீழே கொணர்ந்து பாண்டியர் வலிமையைப் பலப்படுத்திவிட எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் ஒரு வழி புலப்படவில்லை. தென்கடலில் தனித்தனியே சிதறுண்டு கிடக்கும் அந்தத் தீவுகளை ஓரிரு நாட்களில் வெற்றி கொள்வதும் சாத்தியமென்று தோன்றவில்லை.
அதிக நாட்களும், அதிக முயற்சியும், அதிகப் பொறுமையும் அந்தக் காரியத்திற்குத் தேவைப்படும். அநாகுலனை அனுப்பலாமென்றாலோ, அவ்வளவு அதிக நாட்கள் அவன் கோ நகரத்தில் இல்லாமல் வெளியே தீவுகளுக்குப் போவது நல்லதல்ல. நானே போகலாமென்றாலோ என்னுடைய முதுமையும், தளர்ச்சியும் அதற்கு ஏற்றவையல்ல. இந்த நிலையில் இந்தப் படையெடுப்பிற்குத் தலைமையேற்கச் சாரகுமாரன் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை.
முன்பே அதை மனத்திற் கொண்டுதான் அவனையும், முடிநாகனையும் தென்பழந்தீவுகளில் ஒருமுறை சுற்றிவருமாறு செய்தேன். ஆனால் அவனோ இன்னும் அரசியற் பொறுப்புக்களில் அக்கறையற்றவனாகத் தோன்றுகிறான்."
"ஓர் அரசன் போரற்ற அமைதிக் காலங்களில் மட்டுமே கலைகளின் இரசிகனாக இருக்கலாமே அன்றிப் போர்க்காலங்களில் கலைகளை மறக்கவும் தெரிய வேண்டும். இரசிகனாக இருப்பதற்கும் மேலாக அவனே கலைஞனாக இருப்பதோ, கவிஞனாகவே வளர விரும்புவதோ அவனைப் பெற்ற அரசகுடும்பத்துக்கு எவ்வளவிற்குப் பயன்படாமல் போகுமென்பதை உங்களைப் போன்ற புலவர்களால் ஒருபோதும் உணர முடிவதில்லை.
ஆனால் என் போன்றவர்களோ ஒவ்வொரு விநாடியும் அதை மட்டுமே உணர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கலைகள் மனித இதயத்தை நெகிழச் செய்து நளினமாக்கிவிடுகின்றன. ஒரு மனம் அப்படி நெகிழ்ந்து நளினமாவதனால் அது ராஜதந்திர நினைவுகளுக்கோ,
அரசியற் சூழ்ச்சிகளுக்கோ பயன்படாமல் போகிறது" என்று கவலை தோய்ந்த குரலில் பெரியபாண்டியர் தன்னிடம் வருத்தப்பட்ட போது, தான் வந்த காரியத்தை அவரிடம் கூறுவதற்கு ஏற்ற சமயம் அதுதானா இல்லையா என்பதைக் கணிக்க முடியாமல் தயங்கியபடியே பேசாமல் இருந்தார் சிகண்டியாசிரியர். பெரியபாண்டியரோ அவருடைய தயக்கத்தைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு மேலும் தொடர்ந்து குறைபடத் தொடங்கிவிட்டார்.
"மனம் அரசதந்திரத்திற்கு ஏற்றதாக வாய்க்காத காரணத்தினாலேயே அப்படிப்பட்ட அரசகுமாரர்களைப் பெற நேர்ந்த பல அரச குடும்பங்கள் பெருமையழிந்து மரபு கெட்டிருக்கின்றன. தென்பழந்தீவுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய பின் அந்தத் தீவுகளை வென்று அடக்கி வலிமை மிக்கதொரு பாண்டியப் பேரரசை உருவாக்க வேண்டியதைப் பற்றித் தானாகவே என்னிடம் பேசவருவான் வருவானென்று சாரகுமாரனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான்.
அவனோ காலையும், மாலையும், தேரிலும் புரவியிலுமாக மாற்றி மாற்றிக் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறான். இந்த நிலையிலேயே நீங்கள் வேறு இசையிலக்கணம் ஏதோ இயற்றிக் கொண்டிருக்கிறீர்களாம்..." என்று அவர் கூறிக்கொண்டே வந்தபோது அதுதான் சமயமென்று,
"ஆம்! அந்த இசையிலக்கண நூலைக் கபாடபுரத்துப் புலவர் பெருமக்கள் கூடிய பேரவையிலேயே அரங்கேற்றுவது பற்றிப் பேசத்தான் நான் இப்போது உங்களிடம் வந்தேன். விரைவில் அதை அரங்கேற்றி முடித்துவிட்டால் அப்புறம் இளையபாண்டியருடைய கவனத்தை அரசியற் காரியங்களில் திருப்புவதற்கு மிகவும் வாய்ப்பாக இருக்கும்.
அதை அரங்கேற்றக் காலந்தாழ்த்திக் கொண்டே போனாலும் இளையபாண்டியருடைய கவனம் அந்த அரங்கேற்றத்தை எதிர்நோக்கியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். அதைத் தவிர்க்க ஒரே வழி அந்த அரங்கேற்றத்தை உடன் ஏற்பாடு செய்து முடிப்பதுதான்! தங்கள் மனக்குறிப்பை அறிந்துதான் நானும் அதனை விரைந்து அரங்கேற்றி முடிக்க விரும்பினேன்". சமயோசிதமாக அவர் மனப்போக்கினை அறிந்து இப்படிப் பேச்சைத் திசை திருப்பினார் புலவர்.
"அரங்கேற்றம் முடிந்தபின்பும் சாரகுமாரன் கலை கலை என்று திரியத் தொடங்கினால் எனக்கு உங்கள் மேல்தான் கோபம் வரும்" என்று நிபந்தனையில் இறங்கினார் பெரியவர். ஒரு வழியாக அதற்கு ஏதோ தீர் திறன் கூறி அவரை அரங்கேற்றத்துக்கு இணங்கச் செய்து அடுத்த பௌர்ணமி மாலையில் இசைநுணுக்க நூலுக்கு அரங்கேற்ற நாள் குறித்தார் சிகண்டியாசிரியர்.
"இந்த நூல் அரங்கேறிய உடனே மறுபடியும் இன்னொரு இசையிலக்கணத்தை உடனே உருவாக்கி விடமாட்டீரே?" என்று பெரியபாண்டியர் குத்தலாகக் கேட்ட போது சிகண்டியாசிரியருக்கு உள்ளூறச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு அடக்கமாகவும் நிதானமாகவும், "அப்படியெல்லாம் ஒன்றும் நேர்வதற்கில்லை" என்று பெரியவருக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர்.
-------------
30. அரங்கேற்றம்
பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது.
நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய பெருவிழா ஒன்று கோ நகரில் நிகழ இருப்பதைக் கேட்டுச் சங்கப் புலவர்களும், அறிஞர் பெருமக்களும் இரட்டை மகிழ்ச்சி அடைந்தனர். செய்தியை நகருக்கு முரசறிந்து தெரிவிக்கும் கடமையுள்ளவர்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் ஏறி வீதிவீதியாகப் பரப்பினார்கள்.
"இளையபாண்டியர் சாரகுமாரருக்குப் புதிய இசையறிவிக்கும் பொருட்டுச் சிகண்டியாசிரியர் இயற்றியிருக்கும் இசைப் பேரிலக்கணம் அரங்கேற இருக்கிறது" என்ற செய்தி நாலா திசைகளிலும் நகரில் பரவியது. பாணர்கள் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திலும் செய்தி அறிவிக்கப்பெற்றுப் பரவியிருந்ததில் வியப்பில்லை.
எல்லாப் பாணர்களுக்கும் மகிழ்ச்சியை விதைத்த இச்செய்தி ஒரே ஒருத்தியின் இதயத்தில் மட்டும் இனம்புரியாத கவலையை உண்டாக்கியது. பிறருக்கு விண்டுசொல்லி அவர்களுடன் பங்கிட்டுக் கொள்ள முடியாத வேதனையாயிருந்தது அது. விழா நிகழும் முன்பாகவே தானும் தன் பெற்றோரும் கபாடபுரத்தை விட்டுப் புறப்பட்டு விடலாமா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு.
ஆனால் கூட்டம் கூட்டமாக ஓரிடத்தை விட்டு மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்யும் வழக்கத்தையுடைய பாணர்கள் - எல்லோரும் சேர்ந்து புறப்பட்டாலொழியத் தனியே புறப்பட இயலாது. அப்படிப் புறப்படுவதனால் தனிவழிப் பயணத்தில் பல துன்பங்கள் வரும். எனவே நகரணி மங்கல விழாவுக்கு வந்து அப்படியே தொடர்ந்து தங்கிய எல்லாப் பாணர் கூட்டமும் மிகச் சில நாட்களில் நடைபெற இருக்கும் சிகண்டியாசிரியரின் இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்கும் இருந்து கண்ட பின்பே புறப்பட எண்ணினர்.
'இடத்தின் மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். மனிதர்கள்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம்' என்று பெரியபாண்டியர் தன்னிடம் இரைந்துவிட்டுப் போனதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாள்.
பல காரணங்களால் அவள் மனத்தில் நிம்மதியில்லை. இந்நிலையில் இசையிலக்கண நூலரங்கேற்ற விழாவுக்கு இரண்டு நாளிருக்கும் போது ஒருநாள் அதிகாலையில் சாரகுமாரன் கடற்கரையில் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அப்போது வெகு ஆர்வத்தோடு தேடி வந்த அவனிடம் இனிதாக முகம் கொடுத்துப் பேசாமல் தயங்கி நின்றாள் கண்ணுக்கினியாள்.
"இருந்தாற் போலிருந்து புதிராகிவிடுவதும் பெண்களுக்கு ஓரியல்பு போலிருக்கிறது" என்று குத்தலாகப் பேச்சைத் தொடங்கினான் சாரகுமாரன். அதற்கும் அவளிடமிருந்து மறுமொழி இல்லை. வேறுபுறம் திரும்பித் தலைகுனிந்தபடி நின்றாள் கண்ணுக்கினியாள்.
அவளுடைய மனமாறுதலுக்கும், மௌனத்துக்கும் காரணமாக என்ன நிகழ்ந்திருக்க முடியுமென்பதை அவனால் அநுமானிக்க முடியவில்லை. சிகண்டியாசிரியருடன் பெரியபாண்டியரும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவளை மருட்டியதும் வெருட்டியதும் அவனுக்குத் தெரியாது.
"சிகண்டியாசிரியருடைய இசையிலக்கணமே உன்னை இலட்சியமாகக் கொண்டுதான் பிறந்திருக்கிறது! இப்படியெல்லாம் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் போது நீ துயரப்படுவதன் காரணம்தான் எனக்குப் புரியவில்லை கண்ணுக்கினியாள்!" என்று மறுபடியும் அவன் அவளை அணுகிக் கேட்டபோது அவள் விழிகளில் நீர் திரளுவதைக் கண்டான். வார்த்தைகளால் விளக்கப்படாத அந்த மோனமான சோகம் அவன் இதயத்தை அறுத்தது. அழுகைக்கிடையே ஒவ்வொரு வார்த்தையாக அவள் கூறினாள்:
"இலட்சணங்கள் பிறக்கும் அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்."
"இருக்கலாம்! ஆனால் நீ பேசுகின்ற 'தொனி'யை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே?"
"இயல்புதானே? சொற்களைத்தான் விளங்கிக் கொள்ள முடியும். தொனிகளை உணரத்தான் முடியும்."
இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் சிறிது நேரம் அமைதியாயிருந்த இளையபாண்டியன், "நல்லது! இனி நான் வந்த காரியத்தைச் சொல்லிவிட்டுப் புறப்படவேண்டியதுதான். இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்காக உன்னை அழைக்க வந்தேன். சிகண்டியாசிரியர் இலக்கண நூற்பாக்களை ஒவ்வொன்றாக அவையில் கூறி விளக்கியதும் அதற்கேற்ற முறையில் நானும் நீயும் இசைபாடி இலக்கணங்களுக்கு இலட்சியம் காட்ட வேண்டும்."
"நீங்கள் அரசகுமாரர்! எதற்கும் எந்த இடத்திலும் இலட்சண இலட்சியங்கள் கூற முடியும். நாங்கள் நாடோடிப் பாண்குடி மக்கள். எங்களுடைய பெருமையும், புகழ்களும், வரையறுக்கப்பட்ட எல்லையோடு நின்றுவிடக் கூடியவை. நாங்கள் சிலவற்றை அடையமுடிந்து பலவற்றை அடைய முடியாமல் தவிக்கும் ஏழைகள்" என்று அவள் கூறியபோது அழுகையும், விம்மலும் குரலை அடைத்தன.
"உன் மனத்தை யாரோ வலிய முயன்று கெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நான் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாய். அரங்கேற்ற விழாவுக்கு வா! அங்கே சிகண்டியாசிரியர் என்னைக் கூப்பிட்டுப் பாட வேண்டும்போது மறுக்காமல் யாழுடன் வந்து பாடு..." என்று வேண்டிக் கொண்டு அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே புரவியேறிப் புறப்பட்டுவிட்டான் சாரகுமாரன்.
அவனுடைய புரவி இருந்த இடத்தைவிட்டு மறைந்த மறுகணமே அவள் கோவென்று கதறியழத் தொடங்கினாள். அவளுள்ளே குமுறிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் வெடித்துக் கிளர்ந்தது போலாயின. கடலையும், மணற்பரப்பையும், புன்னை மரங்களையும் அவற்றொடு தன்னைச் சூழ்ந்துவிட்ட தனிமையையும் உணர்ந்தவள் போல் நெடுநேரம் குமுறிக் குமுறி அழுது தீர்த்தாள் அவள்.
கடற்கரைக்கும் மனிதனுடைய சோகத்துக்கும் உலகு தொடங்கிய நாள் முதல் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் போலிருக்கிறது! இல்லையானால் இரங்கலையும், சோகத்தையும் பேசும் நெய்தல் திணையை ஏன் கடற்கரையாக அமைத்திருக்கப் போகிறார்கள்? தன் உணர்ச்சியின் வேதனைகள் எல்லாம் தீரும் வரை அங்கிருந்து அழுத பின்பே புன்னைத் தோட்டத்திற்குத் திரும்ப முடிந்தது அவளால்.
முதல் முதலாக நகரணி மங்கல விழாவிற்கு வருகிற வழியில் சாரகுமாரனைச் சந்திக்க நேர்ந்தது முதல் பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக நினைக்க முயன்றாள் அவள். அப்போது 'கபாடபுரத்து முத்து வணிகன்' என்று இளையபாண்டியன் தன்னைப் பொய்யாக அறிமுகப்படுத்திக் கொண்டது நினைவுக்கு வந்தது அவளுக்கு.
அப்போதும் அதற்குப் பின்பு சந்திக்க நேர்ந்த வேளைகளிலும் இருவருக்குமிடையே நிகழ்ந்த அழகிய உரையாடல்களை எல்லாம் தொகுத்து நினைவு கூர்ந்தாள். தேருலாவின் போது உலாக்கோலத்திலே சாரகுமாரனின் எழிற்கோலத்தைக் கண்ட காட்சி இன்னும் அவள் மனக்கண்களில் அப்படியே இருந்தது.
ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டே வந்தவளுடைய நினைவு அறுந்து சோகம் மீண்டும் தொடங்குகிற இடமாக வாய்த்தது, முதியபாண்டியரும், சிகண்டியாசிரியரும், சேர்ந்து வந்து தன்னைச் சந்தித்த சந்திப்பை நினைவு கூறுவது. அந்தச் சந்திப்பை நினைவு கூறுதலே மற்ற எல்லா இனிய நினைவுகளையும் அழிப்பதாக இருந்தது. அவளுடைய இனிய அநுராக நினைவுகளை எல்லாம் மறக்கச் செய்யும் பேரிடியாக இருந்தது பெரியபாண்டியரின் வரவும், வந்து தன்னிடம் உரையாடிய கடுமையான உரையாடலும்.
------------
31. யாழ் நழுவியது
கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட அங்கு எடுப்பாகத் தெரிய முடியாது போயிற்று.
பெரியபாண்டியருக்கும் சிகண்டியாசிரியருக்கும் நடுவே அடக்க ஒடுக்கமாகப் பணிவுடன் இளையபாண்டியன் சாரகுமாரனும் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தில் யாரையோ துழாவிக் கொண்டிருந்தன. அப்படி அவன் யாரையோ துழாவித் தேடுவதைப் பெரியபாண்டியரும் சிகண்டியாசிரியரும் அவனறியாமல் கவனித்துத் தங்களுக்குள் ஒருவர் முகத்தை மற்றொருவர் குறிப்பாகப் பார்த்துக் கொண்டார்கள்.
சிகண்டியார் ஒருவருக்கு மட்டும் அந்த நிலையில் இளையபாண்டியன் மேல் மிகவும் அநுதாபமாக இருந்தது. உள்ளூற மனத்துக்குள்ளேயே அரசகுல தர்மங்களின் கடுமையான நெறி துறைகளை வெறுத்தார் அவர். பிரியமுள்ள இருவருக்கு நடுவே ஏற்றத்தாழ்வு - பெருமை - சிறுமை கற்பிக்கும் இராசகம்பீர வாழ்வின் கொடுமையினால் இளையபாண்டியன் சாரகுமாரன் தன் இருதயத்திலே வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோகம் ஒன்றைத் தாங்க நேரிடப் போவதை எண்ணி அவர் தவித்தார்.
பாவம்! இளையபாண்டியனுக்குப் பெரியபாண்டியர் செய்திருக்கும் ஏற்பாடு தெரிந்திருக்க நியாயமில்லை. அரங்கேற்றத்திற்காகக் கூடியிருந்த அவையின் வியூகத்தில் கடைசி வரிசையாக எங்கோ ஒரு மூலையில் பாணர்கள் அமரவும், நிற்கவும் இடம் விடப்பட்டிருந்தது. விழாவில் கண்ணுக்கினியாளும் பாடுவதற்குப் பெரியபாண்டியரின் இசைவைச் சிகண்டியார் சாமர்த்தியமாகப் பெற்றிருப்பார் என்று இளையபாண்டியன் நினைத்திருந்தான்.
சிகண்டியார் நிலைமையோ இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது. பெரியபாண்டியருக்கு அஞ்சவேண்டிய நிலையில் இருந்த அவரே இளையபாண்டியனுக்கு அநுதாபப்பட வேண்டிய நிலையிலும் இருந்தார்.
முடிநாகனை அருகே கூப்பிட்டு அரங்கேற்று விழாவிற்குக் கண்ணுக்கினியாளும் அவள் பெற்றோரும் வந்திருக்கிறார்களா இல்லையா என்று பார்த்து அறிந்து வரச்சொல்லலாம் என்று இளையபாண்டியன் எண்ணினாலும் அவ்வாறு செய்ய முடியாமலிருந்தது. ஒரு புறம் சிகண்டியாரும் மறுபுறம் பெரியபாண்டியரும் அமர்ந்து அவனைச் சிறை வைத்தது போலிருந்த அந்தச் சூழ்நிலையில் முடிநாகனை அருகே கூப்பிடவும் இயலாததுபோல் தோன்றியது.
கண்ணுக்கினியாள் வந்திருக்கிறாளா இல்லையா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமோ கட்டுக்கு அடங்குவதாக இல்லை. வாழ்க்கையின் உயரத்திலிருக்கும் ஒருவன் அதன் கீழிருக்கும் தன்னுடைய அந்தரங்கமான சினேகிதனையோ, சினேகிதியையோ காணுகிற அளவு இறங்கி வரமுடியாமற் போவது போல் கொடுமை வேறொன்றுமில்லை என்று தோன்றியது இளையபாண்டியனுக்கு.
புலவர்களின் பாயிரம், சிறப்புப் பாயிரங்களுடன் நூல் அரங்கேற்றம் தொடங்கியது. சிகண்டியாசிரியர் பாண்டியர் தலைநகரையும், பெரியபாண்டியரையும், அநாகுலனையும் புகழ்ந்து பாடியபின், இளையபாண்டியர் சாரகுமாரருக்கு இசைநுணுக்கம் அறிவிப்பதன் பொருட்டு அந்நூல் இயற்றப்படுவதாகவும் தொடங்கி நூற்பாக்களை ஒவ்வொன்றாகக் கூறி விளக்கி அரங்கேற்றலானார் சில பண்வரம்புகளுக்கு ஏற்ப இளையபாண்டியனே அங்கு பாடியும் காண்பித்தான்.
புலவர் பெருமக்கள் சிகண்டியாசிரியரை நோக்கி ஐய வினாக்களையும், தடை வினாக்களையும் எழுப்பினர். அவற்றுக்கெல்லாம் சிகண்டியார் மறுமொழி கூறினார். இளையபாண்டியன் மனநிம்மதியில்லாமல் அங்கிருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தையே துழாவிக் கொண்டிருந்தன.
இறுதியில் ஒருவாறாகத் தன் மனத்துக்கு இனியவளாகிய கண்ணுக்கினியாள் நின்றுகொண்டிருந்த இடத்தையும் அவன் பார்த்துவிட்டான். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் தங்கியிருந்த பாணர்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு மூலையில் அவளும் கண் கலங்கி நின்று கொண்டிருப்பதை அவன் கண்டு கொண்டான்.
அவன் உள்ளம் பதறியது. "இசையிலக்கண நூலின் அரங்கேற்றத்தில் பாணர்களைவிட வேறு யாருக்கு உரிமை இருக்கிறது? அவர்களை எல்லாம் எங்கோ ஒரு கோடியில் இருக்கச் செய்திருப்பது ஏன்?" என்றெல்லாம் அவன் மனத்தில் சந்தேகங்களும் கொதிப்புக்களும் கிளர்ந்தன. ஆயினும் அவற்றைப் பாட்டனாரிடம் கேட்க அஞ்சினான் அவன்.
அவனுடைய பார்வை போகிற இடங்களையெல்லாம் கவனித்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த பாட்டனாரோ, "எங்கே கவனிக்கிறாய் சாரகுமாரா? ஆசிரியருக்குச் செவி கொடுத்து நூலைக் கேள். பராக்குப் பார்க்காதே!" என்றார். இதில் அவருடைய சூழ்ச்சி ஏதோ இருப்பதாகத் தோன்றினாலும் அவரைக் கேட்க முடியாமல் தவித்தான் இளையபாண்டியன்.
அரங்கேற்றத்தைப் பற்றியும் அதில் அவள் பாட வேண்டியதைப் பற்றியும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளிடம் தான் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். அவளை அரங்கிற்குள்ளேயே வரவிடாமல் ஒதுங்கி நிற்கச் செய்துவிட்ட விதியை எண்ணி நோவதைத் தவிர அப்போது அவனால் வேறெதுவுமே செய்ய முடியவில்லை. அரங்கேற்றம் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
"இலட்சணங்கள் பிறக்கிற அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது" என்பதாக அன்று அவள் கூறியது நினைவு வந்தது அவனுக்கு. அரங்கேற்றம் முடிந்த பின்பாவது அவள் நிற்கிற இடத்தைத் தேடி ஓடவேண்டுமென்பது அவன் ஆவலாயிருந்தது. தான் ஓர் அரசகுமாரனாகப் பிறந்ததற்காக அதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அன்று வருத்தப்பட்டான் அவன். ஒருவாறு அரங்கேற்றம் நிறைகிற நிலை வந்தது.
சிகண்டியாசிரியர் இலக்கண நூலின் இறுதி நூற்பாவை விளக்கிக் கொண்டிருந்தார். அரசவையைச் சேர்ந்த இசைப் புலவர்கள் அதற்கு மேற்கோள் பாடிக்காட்டத் தொடங்கினார்கள். பாடி முடிந்ததும், இளையபாண்டியன் நினைத்ததற்கு மாறாகச் சங்கப் புலவர்களும், அவையிலிருந்த அறிஞர் பெருமக்களும், அவனையும், அவனுடைய பாட்டனாரையும் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். பாட்டனார் அவன் கையை அன்பாகப் பற்றிக் கொண்டு நிற்கிற பாவனையில் அவன் எங்கும் நழுவ முடியாதபடி பிடித்துக் கொண்டு விட்டார். புலவர்களின் புகழுரைகள் அவனுடைய செவியை நிறைக்கத் தொடங்கின.
"இளையபாண்டியருடைய குரலினிமைக்காகவே இப்படியோர் இசையிலக்கணம் தோன்றியது சாலப் பொருத்தமுடையதே" என்றார் ஒரு புலவர். "சிகண்டியாசிரியர் தருணமறிந்து இந்த இசையிலக்கண நூலை அரங்கேற்றியுள்ளார்" என்று புகழ்ந்தார் வேறோர் புலவர். யாருடைய வாயால் புகழக்கேட்டு மகிழவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டானோ அந்தப் புகழுரையைக் கேட்க முடியாமலிருந்தது.
அவள் தன்னோடு வந்திருக்கும் பெற்றோர்களுடனும் பிற பாணர் கூட்டத்தினருடனும் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னராவது அவளைக் கண்டு இரண்டு வார்த்தைகள் பேசிவிட வேண்டுமென்று அவன் தவித்தான். ஆனால் முடியவில்லை.
நீண்ட நேரத்துக்குப் பின் அந்த அவையிலிருந்து அவனும், அவனைச் சுற்றிப் பெரியபாண்டியர், சிகண்டியார், தந்தை அநாகுலன், முதலியோருமாக வெளியேறியபோது, செல்லுகிற வழியில் கண்ணுக்கினியாள் நின்ற பகுதி வெறுமையாயிருந்தது. அவைக்கு வெளியே எங்குமே யாருமே இல்லை. ஆனால் இதென்ன? அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் அவளுடைய யாழ் அல்லவா கேட்பாரற்று வீழ்ந்து கிடக்கிறது?
இளையபாண்டியன் பதற்றத்தோடு தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து பிரிந்து விலகிச் சென்று அந்த யாழை எடுத்தான். அது சற்றே கீறி உடைந்திருந்தது.
"யாருடைய யாழ் கீழே விழுந்தபோதெல்லாம் அவன் விரைந்து எடுத்தளித்திருந்தானோ அந்த யாழ் இப்போது கீழே விழுந்து உடைந்தேவிட்டது" என்ற உண்மை மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது. அது அவளுடைய யாழ்தான் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை.
விரக்தியிலோ, கோபத்திலோ, அல்லது தான் பார்க்கவேண்டுமென்பதற்காகவோ அவள் அதை அப்படி அங்கே போட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவனால் அநுமானம் செய்ய முடிந்தது. இதை அநுமானம் செய்யும் போது பரிதாபத்துக்குரிய அந்த அரசகுமாரனின் கண்கள் கலங்கின. கைகள் நடுங்கின. நெஞ்சம் துடிதுடித்தது. நடுங்கும் கைகளால் அந்த யாழை எடுத்துச் சென்ற போது அவன் கால்கள் பின்னின. நடை தளர்ந்தது.
அந்த யாழ் ஒன்றாவது அவள் ஞாபகமாகத் தன்னிடமிருக்கட்டும் என்று அவன் அதை எடுத்து வருவதைக்கூடப் பொறுக்காமல், "இதென்ன உடைந்த யாழ் போலல்லவா தோன்றுகிறது? உடைந்த பொருள்கள் யாவும் அமங்கலமானவை. திருமகள் விலாசம் திகழும் அரண்மனை வாத்தியசாலையில் வைத்தற்குரிய தகுதி அமங்கலப் பொருள்களுக்கு என்றுமே இல்லை" என்று அதை இளையபாண்டியனிடமிருந்து வலியப் பறித்து அகழியில் எறிந்துவிட்டார் பெரியபாண்டியர்.
அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் சிகண்டியாசிரியர் கண்களை மூடிக்கொண்டார். இளையபாண்டியனோ பாட்டனார்மேல் வெறுப்புடனே ஒன்றும் எதிர்த்துப் பேச முடியாமல் இருந்தான். முடிந்தால் அன்றிரவோ, மறுநாள் காலையிலோ, கடற்கரைக்குச் சென்று அவளைக் கோபித்துக் கொள்ளவும் எண்ணினான்.
'கவிஞனின் எழுத்தாணியும் பாணர்களின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவர்களிடமிருந்து கீழே நழுவவிடக்கூடாது' என்று நான் முன்பு கூறியதை மறந்து விட்டாயா? கையிலிருந்த யாழ் உடைவது போல் கீழே போட உனக்கு எப்படி மனம் வந்தது பெண்ணே? - என்றெல்லாம் இடித்துரைக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் அன்று மாலையோ இரவோ, அவன் எங்கும் போக முடியாமல் சிகண்டியாசிரியரும், பெரியபாண்டியரும் அவனுடனேயே இருந்துவிட்டனர். சிகண்டியாசிரியர் ஒன்றும் பேசவில்லை.
பெரியபாண்டியர் மட்டும், "ஓர் அரசகுமாரன் மலை குலைந்தாலும் நிலைகுலையாத திடசித்தமுடையவனாக இருக்கிற மனப்பக்குவம் பெற வேண்டும். கலைகளோ, கலைத்திறனோ அவன் தொழிலல்ல! கலைகளை அவன் இரசிக்கலாம். ஆனால் ஆண்மைதான் அவன் தேசத்தைக் காக்கும்" என்றெல்லாம் சம்பந்தா சம்பந்தமின்றி உபதேசம் செய்யத் தொடங்கினார். பொறுமையாக அவற்றை அவன் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.
அன்றிரவு சாரகுமாரனுக்கு உறக்கம் கொள்ளவில்லை. எப்போது விடியும் என்ற ஆவலிலே மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தான் அவன். விடிந்ததும் பரபரப்பான மனநிலையோடு புரவியேறிக் கடற்கரைக்கு விரைந்தான் அவன். அங்கு சென்று அவன் கண்டதென்ன? கடற்கரைப் புன்னைத் தோட்டம் வெறுமையாயிருந்தது.
அங்கு பாடியிறங்கியிருந்த பாணர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போயிருந்தார்கள். அருகே இருந்த மீனவர்கள் சிலரிடம் விசாரித்ததில் முதல் நாளிரவே அவர்கள் ஒழித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. அவன் தவித்தான். மனம் பதறினான். 'இலட்சணங்கள் பிறக்கும் அவசரத்தில் இலட்சியங்கள் அழிவதும் உண்டு' என்று அவள் கூறிய சொற்களையே மீண்டும் நினைத்தான். ஏதோ ஒரு பரபரப்பில் புரவியை விரைந்து செலுத்திக் கபாடங்களைக் கடந்து புறநகருக்கு வந்தான்.
'அவளைப் பின் தொடர்ந்து பிடித்துவிடலாம்' - என்ற வெறியோடு பெரும் பாண்டிய ராஜபாட்டையில் சிறிது தொலைவு சென்றபின், 'அது சாத்தியமில்லை' என்று அவநம்பிக்கையோடு மீண்டும் தளர்ந்து திரும்பினான்.
எதிரே அவன் பாட்டனார் நிறுத்திய மாபெரும் புகழ்மிக்க செம்பொற் கபாடங்கள் வெயிலொளியில் மின்னுவது தெரிந்தது. எதிர்காலத்தில் பெயர் சொல்ல முடிந்த பல காரியங்களைச் சாதிக்க வல்ல சரித்திரத்தை உடைய அந்த இளம் ராஜகுமாரனின் இதயம் குருதிநீர் வடித்தது அந்த விநாடியில். மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு எந்த நாளும் உலகில் வடிவம் தந்து பாடமுடியாதென்று உணர்ந்தவன் போல் விரக்தியோடு அந்த வானளாவிய கபாடங்களை மீண்டும் அவன் நிமிர்ந்து பார்த்தபோது அவனது அழகிய விழிகளில் நீர் மல்கியது.
இப்போது அவனுடைய மனமும் ஒரு கபாடம் ஆகிவிட்டது. மனத்துக்கினிய ஒருத்தியின் மிக இனிய நினைவுகளை உள்ளே வைத்துப் பூட்டிக் கொள்ள வேண்டிய நிலைமையினால் அவனுடைய தலைநகரைத் தவிர அவன் மனமும் கூட ஒரு கபாடபுரம் ஆகிவிட்டது.
'எதிர்கால வரலாறு தன்னையும் - தனக்காகப் பிறந்த இசையிலக்கண நூலையும் பற்றி அறிகிற அளவு உலகம் தன் காதலின் ஏமாற்றத்தை எங்கே அறியப் போகிறது?' என்றெண்ணியவாறே குதிரையை மெல்லச் செலுத்தியபடி மீண்டும் நகருக்குள் திரும்பினான் சாரகுமாரன்.
கோ நகரத்தின் மாபெரும் கபாடங்கள் திறக்கப்பட்ட அந்த இனிய வைகறை வேளையிலே அந்த அநுதாபத்துக்குரிய இளவரசனின் மனதுக்குள்ளே இரண்டு கபாடங்கள் மூடிக்கொண்டன. அந்த மூடிய கபாடத்துக்குள்ளே ஒரு நளின சங்கீதம் இடையறாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அதற்கு மூப்பில்லை. சோர்வில்லை. ஓய்வில்லை. உலைவில்லை. ஏனென்றால் இந்த உலகில் எந்த நாளும் மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு வடிவம் தந்து பாட முடிவதில்லை.
முற்றும்
----------------
கருத்துகள்
கருத்துரையிடுக