தொல்காப்பியம் : பொருளதிகாரம் அகத்திணையியல் & புறத்திணையியல்
இலக்கண நூல்கள்
Back தொல்காப்பியம் : பொருளதிகாரம்
அகத்திணையியல் & புறத்திணையியல்
நச்சினார்க்கினியர் உரை
தொல்காப்பியம் : பொருளதிகாரம்
அகத்திணையியல் & புறத்திணையியல்
நச்சினார்க்கினியர் உரை
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், லிமிடெட், திருநெல்வேலி, சென்னை - 1
First Edition: March, 1947. Second Edition: 1955.
(All Rights Reserved)
Published By
The South Indian Saiva Siddhantha Works Publishing Sociey, Ltd
1140 Broadway, Madras-1
Head Office: 24, East Car Street, Thirunelveli
Appar Achakam, Madras - 1 . II Ed. C. 1020.
---------------
முன்னுரை
தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ்மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழைமையும் பெருமையும் வாய்ந்த இயல் நூலாகும். பண்டைக்காலத்து தமிழ்ப் பழங் குடிகளுள் ஒன்றான காப்பியக்குடியிற் பிறந்து சிறந்தோர் ஒருவராற் செய்யப்பட்டமையின், இஃது இப்பெயர் பெற்றது. காப்பியஞ் சேந்தனார் என்று பெயர்கொண்ட ஒரு புலவர் நற்றிணையில் ஒரு செய்யுளைப் பாடினோராகக் காணப்படுகின்றார். காப்பியாற்றுக் காப்பியனார் என்பது பதிற்றுப்பத்துள் ஒரு பத்தைப் பாடிய புலவர் பெயர். இவற்றாலும் காப்பியம் என்பது தமிழ்நாட்டோடே தொடர்புற்றுத் தமிழ்க்குடியைக் குறிப்பதாகவே அறியப்படும். தொல்காப்பியர் தமிழ்முனியாகிய அகத் தியர் இயற்றிய அகத்தியத்தை நிலைகண்டுணர்ந்தே இந்நூலைச் செய்தனர். இதை,
"ஆனாப் பெருமை அகத்திய னென்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல்
பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்."
எனப் பன்னிருபடலப் பாயிரம் கூறுமாற்றால் தெளிக. இவர் சங்கம் வளத்த முதற்குடியிற் றோன்றிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து இந்நூலை அரங்கேற்றின ரென்பதும், அதங்கோட்டாசான் என்ற புலவர்பெருமான் முன் அது நிகழ்ந்த தென்பதும் இந்நூற் பாயிரத்தால் தெள்ளிதின் உணரப்படும்.
இவர் காலம் வடமொழி வியாகரணம் இயற்றிய பாணினியின் காலத்துக்கு முற்பட்ட தென்பது பெரிதும் கருதத் தக்கது. தொல்காப்பியப் பாயிரத்திலேயே "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என இவர் சிறப்பிக்கப்படுகின்றார். வட மொழிக்கு ஐந்திரம் என்ற இலக்கணமே முற்பட்டிருந்த தென்பதும், அதற்குப் பின்னேயே பாணினீயம் தோன்றிய தென்பதும் வடநூலாரும் ஒப்பும் உண்மையாகும். ஆதலின் தொல்காப்பியம் பாணினியின் வடமொழி வியாகரணத்துக்கு மிகவும் முற்பட்ட தென்பது தெளிந்த துணிபன்றே? "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என இவர் சிறப்பிக்கப்படுதற்குக் காரணம் என்னை எனின், தமிழ்மொழிக்குப் பேரிலக்கணம் செய்யப் புகுந்த இவர், அக்காலத்துச் சிறந்து விளங்கியிருந்த மற்றொருமொழியான வடமொழி இலக்கண வமைதியையும் நிலைகண்டுணர்ந்து இருமொழி அமைதியையும் அறிந்தமைந்த உரவோர் ஆயதைத் தெரிவிக்கவேண்டி என்க. மற்று இவர் வடமொழி இலக்கண மறிந்தமை கூறப்பட்டதன்றி, அகத்தியம் முதலிய தமிழிலக்கண நூலுணர்ச்சி பாயிரத்தில் குறிக்கப்பட வில்லையெனின், அப் பாயிரமே முற்பகுதியில் 'முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப்- புலந்தொகுத்தோனே போக்கறு பனுவல்' எனத் தெள்ளிதின் உரைத்தமையால், தங்காலத்துக்கு முற்பட்ட தமிழிலக்கண நூல் முழுவதும் அவர் கண்டவர் என்பதும், அந் நூற்பொருள் முழுவதையும் தாம் முறைப்படுத்தினர் என்பதும், விரிந்து கிடந்த அந்நூற்பொருளை எல்லாம் தம் அஃகியகன்ற அறிவால் தொகுத்துக் கூறினர் என்பதும், ஆதலின் இங்ஙனம் செய்த நூல் எவ்வகைக் குற்றமுமற்று விளங்குவதென்பதும் தெளிய உணர்த்தப்பட்டன.
நூல் என்பது இக்காலத்து இலக்கண இலக்கியங்களை யெல்லாம் குறிப்பினும், முற்காலத்து இலக்கண நூலையே வரைந்து குறித்ததாகும். நச்சினார்க்கினியரும் 'முதுநூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசைநுணுக்கமும்" என உணர்த்தியமை காண்க. பிற்காலத்துப் பவணந்தியால் செய்யப்பட்ட நன்னூலின் சிறப்புப் பாயிரத்தில்
".......முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்."
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
என இலக்கியங்க ளெல்லாம் செய்யுள் என்று குறிக்கப்பட்டுப் போந்தமையால், நூல்என்பது இலக்கணத்தையே வரைந்துணர்த்திற்றென்பது தெளிவு.
ஆகவே, உலக வழக்கை யுணர்ந்து, பண்டைத் தமிழிலக்கியங்களை யாராய்ந்து, எழுத்து, சொல், பொருள் என்பவற்றின் அமைதிகளை யுணர்ந்து, சிறந்த அகத்திய முதலாய இலக்கணங்களையும் தெளிந்து, இந்நூலைச் செய்தனர் தொல்காப்பியர் என்பது தெளியப்பட்ட உண்மையாம்,.
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றும் மூன்றதிகாரத்தால் கூறப்படுகின்றன. எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் அமைதியை விளக்குவன. பொருள் அத்தமிழ்
மொழி வழக்கிற்கு நிலைக்களனாயுள்ள தமிழரது ஒழுக்கத்தை எடுத்துக் காட்டுவதாகும்.
இப்பொருளதிகாரம், தமிழரே உலகத்தோற்றத்தில் முதற்கண் நிலைபெற்ற பண்டைப் பெருங்குடியின ராவரென்பதைத் தெளிய உணருமாறு உரைத்துச் செல்கிறது. குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலப்பகுப்பு மக்கள் வாழ்க்கையிடம் படிப்படியாக மாறிய முறையையே தெரிவிப்ப தாகுமன்றே? உலகத்தே முதலில் மக்கள் மரஞ் செறிந்த மலையிடத்தேயே தோன்றி, எதிர்ப்பட்ட விலங்குகளைக் கொன்றுண்டு வாழ்க்கை நடாத்திப், பின் காலப்போக்கில் முல்லை நிலத்தே வந்து தங்கி, வரகு முதலியன வித்திப் பயன்கொண்டு வாழ்ந்து பின் மருத நிலத்தே ஆற்று நீரைத் தேக்கிப் பயன் கொண்டு, மேம்பட்ட உழுதொழில் செய்து வாழ்ந்து, பின் பல்வகைத் தொழிலும் பெருக்கி, நெய்த னிலத்தே பட்டின மமைத்துக் கடல் கடந்து நாவாய் மூலம் சென்று வாணிகம் புரிந்து மேம்பாடுற்றமை வரலாற்றுண்மையன்றே?
கல்தோன்று மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி. (புற-வெ-2-14) என்று கூறிக் குறிஞ்சி நிலத்தையே மக்கட்டோற்றத்திற்கான முதலிடமாகக் குறிப்பிட்டமையும் காண்க.
மக்கட்பெருக்கத்துக்குக் காரணமாயிருந்த இத் தமிழ்க் குடியினரிடத்தே, அத்தன்மைக் கேற்பக் காதலும் வீரமும் சிறந்திருந்தமையும், அவ்விரண்டையும் நுனித்தறிந்து
வரையறை செய்து நன்முறையில் ஒழுகிவந்ததையுமே பொருளதிகாரம் விரித்துப் பேசுவதாகும்.
காதலொழுக்கத்தை நுனித்தறிந்த தமிழர், அதைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்றே வகையாக வகுத்துரைத்தனர். இவை எந்நிலத்தும் நிகழுமாயினும் நாடகவழக்கினும் உலகியல்வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கத்தால், இடம் காலம் முதலியவற்றுட்படுத்துக் கூறப்பட்டன.
வீரவுணர்வு மிகுந்த தமிழர், அவ்வீரத்தை அறநெறி வழுவாது ஓம்பிப் போற்றிய வகையும், அவர்கள் வீரத்தின் மேம்பாடும் வகைப்படுத்தி உரைக்கப்பட்டன.
பொருளதிகாரம் இவற்றை அகவொழுக்கம், புறவொழுக்கம் என்று கூறுகிறது. இவற்றைச் சிறந்தெடுத் துணர்த்துவதே அகத்திணை இயல், புறத்திணை இயல் என்ற இரண்டுமான இப் பொருளதிகாரப் பகுதியாம். அகவொழுக்கமாயிற்று, இரு பாலாருள் ஒருவரோடொருவர் மனமொன்றிய காதலொழுக்க மாதலின். புறவொழுக்கமாயிற்றுச், சிறப்பாகப் பிறரின் மாறு பாட்டு அறமும் பொருளும் கருதித் தோன்றும் போரொழுக்க மாதலின். அகவொழுக்கமல்லாத பிறவொல்லாம் இப்புறவொழுக்கத்தில் அடங்கும்.
அகத்திணை இயல், தமிழர் வாழும் நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் (பாலை) எனப் பகுக்கப்படு மென்பதும் அவ்வந்நிலத்தில் இன்னின்ன காலங்கள் சிறந்தன வென்பதும், அவ்வந்நிலத்து வாழ் மக்கள் குறவர், இடையர், உழவர், பரதவர், எயினர் எனப்படுவர் என்பதும். அவ்வந்நிலத்துத் தெய்வம், உணவு, விலங்கு, பறவை, மரம், பறை, செய்தி, யாழ் முதலியன வேறுவே றென்பதும், மக்கள் காதலொழுக்கத்தில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னுமைந்தும் நிகழுமென்பதும், மக்கள் கல்வி, பகை தூது, பொருள் என்பன பற்றில் காதலியைப் பிரிவரென்பதும், பிரிவின்கண் நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன் என்போர் கூறுமுறை இவை என்பதும், காமஞ்சாலா இளமையோள் மாட்டுக் காதல்புரியும் கைக்கிளையினியல்பு, கழிபெருங் காமுகராய் ஒழுகும் பெருந்திணை இயல்பு இவை என்பதும் கூறுகின்றது.
இனிப் புறத்திணை இயல், பகையரசர் நாட்டிலுள்ள பசுக்களுக்குத் தீங்குவராமற் காத்தல் அறமெனக் கருதிப், போர் கொண்டெழுதற்கு முன் வெட்சிப்பூச் சூடிச் சென்று, அப்பசுக்களுக்கு ஓரிடையூறும் உண்டாகாவண்ணம் கவர்ந்து வரும் முறைகளும், பகைவர் அரணை அடைந்து உழிஞைப்பூச் சூடி அவ்வரணிடத்து நின்று போருடற்றி, அரணைத் தம் வசப்படுத்தும் முறைகளும், மாற்றாரும் எதிர்ந்து வந்துழித், தும்பைப்பூச் சூடி அவரோடு போர்புரியும் முறைகளும், வென்றவழி வாகைப் பூச் சூடி வெற்றியைக் கொண்டாடும் முறைகளும் இவையன்றிப் பார்ப்பார், அரசர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் என்போர் சிறந்து மேம்படும் முறைகளும், நிலையா உலகத்தியல்பும், பிறர் மேம்பாட்டைப் புகழ்ந்து பாடும் முறையும் கூறுகின்றது.
காதலைத் தூயமுறையில் நுனித்தறியும் பேருணர்வுடன் உலகில் தோன்றிய பழங்கால மக்கட் கூட்டத்தினரிடையே மேம்பட்டுத் தோன்றுதற்கான குணமாய வீரவுணர்வும் வாய்ந்த நனிநாகரிகர் தமிழ்மக்கள் என்பதை யுணர்த்தும் இத் தொல்காப்பியம், தமிழரின் பழம் பண்பாட்டை யுணர்த்திய ஒரு தனிப்பெரு நூலாயது பெரிதும் உணரத்தக்கது.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
---------------------
தொல்காப்பியம் : நச்சினார்க்கினியம்
பொருளதிகாரம்:
முதலாவது - அகத்திணையியல்
1.
- கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.
என்பது சூத்திரம்.
நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த்தினமையின் இது பொருளதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. இது நாண்மீனின் பெயர் நாளிற்குப் பெயராயினாற் போலவதோர் ஆகுபெயர். பொருளாவன:-- அறம் பொரு ளின்பமும், அவற்றது நிலையின்மையும், அவற்றினீங்கிய வீடுபேறுமாம். பொருளெனப் பொதுப்படக் கூறவே, அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரியும், காட்சிப்பொருளும், கருத்துப்பொருளும், அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும் பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்குதிணையும் நிலத்திணையும், பிறவும் பொருளாம்.
எழுத்துஞ் சொல்லும் உணர்த்தி அச்சொற்றொடர் கருவியாக உணரும் பொருள் உணர்த்தலின், மேலதிகாரத்தோடு இயைபுடைத்தாயிற்று. அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. இது வழக்கு நூலாதலிற் பெரும்பான்மையும் நால்வகை வருணத்தார்க்கும் உரிய இல்லறம் உணர்த்திப் பின் துறவறமுஞ் சிறுபான்மை கூறுப. அப்பொருள்கள் இவ்வதிகரத்துட் காண்க.
பிரிதனிமித்தங் கூறவே, இன்ப நிலையின்மையுங் கூறிக், 'காமஞ் சான்ற' என்னுங் கற்பியற் சூத்திரத்தால் துறவறமுங் கூறினார். வெட்சிமுதலா வாகையீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' *என்னுஞ் சூத்திரத்தான் இல்லற முந் துறவறமுங் கூறினார். இந்நிலையாமையானும் பிறவாற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே, இவ்வாசிரியர் பெரிதும் பயன் றருவதோர் இலக்கணமே கூறினாராயிற்று; இதனாற் செய்த புலனெறி வழக்கினை யுணர்ந்தோர் இம்மை மறுமை வழுவாமற் செம்மை நெறியால் துறைபோவராதலின்,.
இப்பொருளை எட்டுவகையான் ஆராய்ந்தாரென்ப; அவை அகத்திணை புறத்திணையென இரண்டு 1திணைவகுத்து அதன்கட் கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவா யேழுமாகப் பதினான்கு 2பால் வகுத்து, ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலி பரிபாடல் மருட்பா வென அறுவகைச் 3செய்யுள் வகுத்து, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென நால்வகை 4நிலன் இயற்றிச் சிறு பொழுதாறும் பெரும் பொழு தாறுமாகப் பன்னிரண்டு 5 காலம் வகுத்து, அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமெனப் பதினான்கு 6 வழு வமைத்து, நாடக வழக்கும் உலகியல் வழக்குமென இருவகை 7வழக்கு வகுத்து, வழக்கிடமுஞ் செய்யுளிடமுமென இரண்டு 8இடத்தான் ஆராய்ந்தாராதலின். எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்பார் முதல் கரு உரியுந், திணைதொறு மரீஇய பெயருந், திணைநிலைப் பெயரும், இருவகைக் கைகோளும், பன்னிருவகைக் கூற்றும் பத்துவகைக் கேட்போரும், எட்டுவகை மெய்ப்பாடும், நால்வகை உவமமும், ஐவகை மரபு மென்பர்
இனி, இவ்வோத்து அகத்திணைக்கெல்லாம் பொது இலக்கண முணர்த்துதலின் அகத்திணையிய லென்னும் பெயர்த்தாயிற்று; என்னை? எழுவகை யகத்திணையுள் உரிமைவகையால் நிலம்பெறுவன இவையெனவும் அந்நிலத்திடைப் பொது வகையால் நிகழ்வன கைக்கிளை பெருந்திணை பாலை யெனவுங் கூறலானும், அவற்றுட் பாலைத்திணை சில்வகையால் நடுவண தெனப்பட்டு நால்வகை யொழுக்கம் நிகழாநின்றுழி அந்நான்கனுள்ளும் பிரிதற்பொருட்டாய்த் தான் பொதுவாய் நிற்ககுமெனக் கூறலானும், முதல் கரு உரிப்பொருளும் உவமங்களும் மரபும் பொதுவகையாற் கூறப்படுதலானும் பிறவும் இன்னோரன்ன பொதுப் பொருண்மைகள் கூறலானு மென்பது. இங்ஙனம் ஓதிய அகத்திணைக்குச் சிறப்பிலக்கணம் ஏனை ஓத்துக்களாற் கூறுப.
- ---------------
*தொல். புறத். 75
ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்ப
முறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார். எனவே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்.
இதனை ஒழிந்தன, ஒத்த அன்படையார்தாமே யன்றி எல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும், இவை இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், அவை புறமெனவேபடும். இன்பமே யன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாலெனின், அதுவும் காமங் கண்ணிற்றேல் இன்பத்துள் அடங்கும். ஒழிந்த துன்பம் புறத்தார்க்குப் புலனாகாமை மறைக்கப்படாமையிற் புறத்திணைப்பாலதாம். காம நிலையின்மையான் வருந் துன்ப முந் 'தாபதநிலை' 'தபுதாரநிலை' *யென வேறாம். திணையாவது ஒழுக்கம்; இயல்: இலக்கணம்; எனவே, அகத்திணை யியலென்றது இன்பமாகிய ஒழுக்கத்தினது இலக்கணமென்றவா றாயிற்று இவ்வோத்துக்கள் ஒன்றற்கொன்று இயைபடைமை அவ்வவ்வோத்துகளுட் கூறுதும்.
இனி, இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனிற் கூறக் கருதிய பொருளெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று
இதன் பொருள்:-- கைக்கிளை முதலா- கைக்கிளை யெனப்பட்ட ஒழுக்கம் முதலாக; பெருந்திணை இறுவாய்- பெருந்திணையென்னும் ஒழுக்கத்தினை இறுதியாகவுடைய ஏழனையும்; முற்படக் கிளந்த எழுதிணை என்ப- முற்படக் கூறப்பட்ட அகத்திணை யேழென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு,
எனவே, பிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுளவென்றவாறாயிற்று. எனவே, இப்பதினான்கு மல்லது வேறு பொருளின்றென வரையறுத்தா ராயிற்று. அகப்புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று. முதலும் ஈறும் கூறித் திணையேழெனவே 'நடுவ ணைந்திணை' ‡ உளவாதல் பெறுதும் ; அவை மேற் கூறுப.
- ----------------------
*தொல். பறம். 79 ‡ தொல். அகம். 2
கைக்கிளை யென்பது ஒருமருங்கு பற்றிய கேண்மை. இஃது ஏழாவதன் தொகை. எனவே, ஒருதலைக் காமமாயிற்று. எல்லாவற்றினும் பெரிதாகிய திணையாதலிற் பெருந்திணையாயிற்று. என்னை? எண்வகை மணத்தினுள்ளும் கைக்கிளை முதல் ஆறு திணையும் நான்கு மணம் பெறத், தானொன்றுமே நான்குமணம்பெற்று நடத்தலின். பெருந்துணையிறுவாய் -பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. முற்படக் கிளந்தவென எடுத்த லோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த ஏழுதிணை யுளவாயிற்று. அவை விட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என வரும்.
ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணையேழென்ற தென்னையெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறுபோல, அகத்திணை யேழற்குப் புறத்திணை யேழென்றலே பொருத்தமுடைத்தாயிற்று. எனவே, அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந் நிலத்து மக்கள்வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமையாதவா றாயிற்று. கரந்தை அவ் வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின், வேறு திணையாகாது. எண்வகை மணனும் எதிர்சென்று கூறுவதாகலானுங், காமஞ் சாலா விளமைப்பருவம் அதன்கண்ண தாகலானுங் கைக்கிளையை முற்கூறினார். என்ப வென்றது அகத்தியனாரை. இக்குறியீடுகளும் அகத்தியனாரிட்ட வென்றுணர்க. (1)
------
2.
- அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.
இது முற்கூறிய ஏழனுள் தமக்கென நிலம் பெறுவனவும் நிலம் பெறாதனவுங் கூறுகின்றது.
(இ-ள்) அவற்றுள்- முற்கூறிய ஏழு திணையுள்; நடுவண் ஐந்திணை- கைக்கிளை பெருந்திணைக்கு நடுவுநின்ற ஐந்தொழுக்கத்தினை; படு திரை வையம பாத்திய பண்பே- ஒலிக்குந் திரைசூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக் கொடுத்த இலக்கணத்தை; நடுவணது ஒழிய- நடுவணதாகிய பாலையை அவ்வுலகம் பெறாதே நிற்கும்படியாகச் செய்தார் எ-று.
எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வ லென்றார்.
உலகத்தைப் படைக்கின்ற காலத்துக் காடும் மலையும் நாடுங் கடற்கரையுமாகப் படைத்து, இந்நால்வகை நிலத்திற்கு ஆசிரியன் தான் படைத்த ஐவகை ஒழுக்கத்திற் பாலை யொழிந்தனவற்றைப் பகுத்துக் கொடுத்தான். அப்பாலை ஏனையபோல ஒருபாற் படாது நால்வகை நிலத்திற்கும் உரியவாகப் புலனெறி வழக்கஞ்செய்து வருதல்பற்றிப் பாலைக்கு நடுவணதென்னும் பெயர் ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர். 'நடுவு நிலைத்திணையே நண்பகல் வேனில்'* என ஆள்ப. புணர்தல் இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும், நால்வகை யுலகத்திற்கிடையிடையே,
"முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்"
(சிலப். காடு. 64-66)
என, முதற்பொருள் பற்றிப் பாலை நிகழ்தலானும், நடுவணதாகிய நண்பகற்காலந் தனக்குக் காலமாகலானும், புணர்தற்கும் இருத்தற்கும் இடையே பிரிவு வைத்தலானும், உலகியற் பொருளான அறம்பொரு ளின்பங்களுள் நடுவணதாய பொருட்குத்தான் காரணமாகலானும், நடுவணதெனக் குணங் காரணமாயிற்று.
பாயிரத்துள் எல்லை கூறியதன்றி ஈண்டும் எல்லை கூறினார், புறநாட்டிருந்து தமிழ்ச்செய்யுள் செய்வார்க்கும் இதுவே இலக்கணமாமென்றற்கு.
இவ்விலக்கணம் மக்கள் நுதலிய அகனைந்திணைக்கே யாதலின் இன்பமே நிகழுந் தேவர்க்காகா.
'காமப் பகுதி கடவுளும் வரையார்' (தொல். பொருள்- 83)
நடுவணாற்றிணை யென்னாது ஐந்திணை யென்றார். பாலையும் அவற்றோ டொப்பச் சேறற்கு. இத்திணையை மூன்றாக மேற்பகுப்பர். (2)
-----------
3.
- முதல்கரு வுரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை
இது நடுவணைந் திணையைப் பகுக்கின்றது.
(இ-ள்) பாடலுள் பயின்றவை நாடும் காலை- புலனெறி வழக்கிடைப் பயின்ற பொருட்களை ஆராயுங் காலத்து; முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே- முதலுங் கருவும் உரிப்பொருளும் என்ற மூன்றேயாம்; நுவலுங் காலை முறை சிறந்தனவே- அவைதாம் செய்யுள் செய்யுங்கால் ஒன்று ஒன்றனிற் சிறந்து வருதலுடைய என்றவாறு.
- -------------
*தொல். அகத். 9
இங்ஙனம் படலுட் பயின்ற பொருண்முறை மூன்றெனவே, இம் மூன்றும் புறத்திணைக்கும் உரியவென்பது பெறுதும். அது புறத்திணைச் சூத்திரங்களுள் 'வெட்சி தானே குறிஞ்சியது புறனே' (56) என்பன முதலியவற்றாற் கூறுப.
முதலிற் கருவும், கருவில் உரிப்பொருளுஞ் சிறந்துவரும்,. இம்மூன்றும் பாடலுட் பயின்று வருமெனவே வழக்கினுள் வேறு வேறு வருவதன்றி ஒருங்கு நிகழாவென்பதூஉம், நாடுங் காலை யெனவே புலனெறிவழக்கிற் பயின்றவாற்றான் இம்மூன்றனையும் வரையறுத்துக் கூறுவதன்றி வழக்குநோக்கி இலக் கணங் கூறப்படாதென்பதூவும் பெறுதும்; 'நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின்' (தொல். பாயிரம். ) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டினாலும் ஆராய்தல் வேண்டுதலின்.,
இஃது இல்லதெனப்படாது, உலகியலேயாம். உலகியலின்றேல், ஆகாயப்பூ நாறிற்றென்றுழி அது சூடக் கருதுவாருமின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும். இச் செய்யுள்வழக்கினை நாடக வழக்கென மேற்கூறினார், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தன் முதலாகப் புனைந்துரைவகையாற் கூறும் நாடக இலக்கணம்போல யாதானுமொரோவழி ஒரு சாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமுங் காலமும் நியமித்துச் செய்யுட்செய்த ஒப்புமை நோக்கி. மற்று இல்லோன் தலைவனாக இல்லது புணர்க்கும் நாடக வழக்குப்போல் ஈண்டுக் கொள்ளாமை 'நாடக வழக்கு' என்னுஞ் சூத்திரத்துட் (53) கூறுதும்.
"கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாட னல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலுங் கூம்புங்
காலை வரினுங் களைஞரோ விலரே" (ஐங்குறுநூறு-183)
என இவ் ஐங்குறுநூற்றுள் இடம் நியமித்துக் கூறியது செய்யுள் வழக்கு.
இனி, அவை முறையே சிறந்து வருமாறு:-
"முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புறக் கொடுப்பக்
கருவி வானங் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானங்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே" (அகம். 4)
இது குறித்த காலம் வந்தது, அவரும் வந்தாரென ஆற்றுவித்தது. இக்களிற்றியானை நிரையுண், முல்லைக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
"கிளைபா ராட்டுங் கடுநடை வயக்களிறு
முளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த
வாணிற வுருவின் ஒளிறுபு மின்னிப்
பரூஉவுறைப் பஃறுளி சிதறிவான் நவின்று
பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப்
புயலே றுரைஇய வியலிருள் நடுநாள்
விறலிழைப் பொலிந்த காண்பின் சாயற்
றடைஇத் திரண்டநின் றோள்சேர் பல்லதைப்
படாஅ வாகுமெங் கண்ணென நீயும்
இருண்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி
வரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வரவரி தென்னாய்
வரவெளி தாக வெண்ணுதி யதனான்
நுண்ணிதிற் கூட்டிய பன்மா ணாரந்
தண்ணிது கமழு நின்மார் பொருநாள்
அடைய முயங்கே மாயின் யாமும்
விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவே
அன்னை யறியினு மறிக அலர்வாய்
அம்பன் மூதூர் கேட்பினுங் கேட்க
வண்டிறை கொண்ட வெரிமருள் தோன்றியொடு
ஒண்பூ வேங்கை கமழுந்
தண்பெருஞ் சாரற் பகல்வந் தீமே" (அகம்-218)
இஃது இடத்துய்த்துப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் வரைவுகடாயது. இம் மணிமிடைபவளத்துட், குறிஞ்சிக்கு முதலுங்கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
"வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவே ளாவி
அறுகோட் டியானைப் பொதினி* யாங்கண்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியலம் என்ற சொற்றாம்
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்
நிழல்தேய்ந் துலறிய மரத்த அறைகாய்
பறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெற் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியச்
சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை
நாரின் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி எடுப்ப ஆருற
றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன்
கடல்போல் தோன்றல காடிறந் தோரே" (அகம்.-1)
இது பிரிவிடையாற்றாது தோழிக்குக் கூறியது. இக் களிற்றியானை நிரையுட், பாலைக்கு முதலுங் கருவும்வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
"சேற்றுநிலை முனைஇய‡ செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரு மூர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்று
உறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல்
பிறரும் ஒருத்தியை நம்மனைத் தந்து
வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறுடை அருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லி னள்ளூ ரன்னஎம்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ" (அகம். 46)
----------
*'பொதினி' என்பது ஒரு மலை
(பாடம்) ‡ 'ழணைஇய'
இது வாயின் மறுத்தது. இக் களிற்றியானைநிரையுண், மருதத்திற்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. 'வண்டூது பனிமல' ரெனவே வைகறையும் வந்தது.
"கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர
அசைவண் டார்க்கும் அல்குறு காலைத்
தாழை தளரத் தூங்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சங் கையறு பினையத்
துயரஞ் செய்துநம் அருளா ராயினும்
அறாஅ லியரோ அவருடைக் கேண்மை
அளியின் மையின் அவணுறைவு முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்புந்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை
அகமடற் சேக்குந் துறைவன்
இன்றுயின் மார்பிற் சென்றஎன் நெஞ்சே" (அகம். 40)
இது பொருட் பிரிவிடைத் தோழிக்கு உரைத்தது. இக் களிற்றியானை நிரையுள், நெய்தற்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. இச்சிறப்பானே முதலின்றிக் கருவும் உரிப்பொருளும் பெறுவனவும், முதலுங் கருவு
மின்றி உரிப்பொருளே பெறுவனவுங் கொள்க.
"திருநகர் விளங்கு மாசில் கற்பி
னரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு
நின்னுடைக் கேண்மை யெவனோ முல்லை
யிரும்பல் கூந்த னாற்றமு
முருந்தேர் வெண்ப லொளியுநீ பெறவே"
இது பொருள்வயிற் பிரிந்தோன் சுரத்து நினைந்து உரைத்தது. இது முதற்பொருளின்றி வந்த முல்லை.
"கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி
யிளைய ரேவ வியங்குபரி கடைஇப்
பகைமுனை வலிக்குந் தேரொடு
வினைமுடித் தனர்நங் காத லோரே"
இது வந்தாரென் றாற்றுவித்தது. இது முதலுங் கருவுமின்றி வந்த முல்லை.
"நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற்-பிறையெதிர்ந்த
தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
வேமரை போந்தன வீண்டு ." (திணைமாலை. நூற். 1)
இது மதியுடம்படுத்தது. இது முதற் பொருளின்றி வந்த குறிஞ்சி.
"முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே,"
இஃது இளையள் விளைவிலளென்றது. முதலுங் கருவுமின்றிவந்த குறிஞ்சி. இது நாணநாட்டம்.
"நாளு நாளு மாள்வினை யழுங்க
வில்லிருந்து மகிழ்வோருக் கில்லையாற் புகழென
வொண்பொருட் ககல்வர்நங் காதலர்
கன்பனி துடையினித் தோழி நீயே." (சிற்றெட்டகம்.)
இது வற்புறுத்தாற்றியது, இஃது உரிப்பொருளொன்றுமே வந்த பாலை.
"பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை
முன்னும் பின்னு மாகி
யின்னும் பாண னெம்வயி னானே,"
இது வாயின் மறுத்தது. இஃது உரிப்பொருளொன்றுமே வந்த மருதம்
"அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
யேதின் மாக்களு நோவர் தோழி
யொன்று நோவா ரில்லைத்
தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே."
இது கழிபடர். இது பேரானும் உரிப்பொருளானும் நெய்தலாயிற்று.
இங்ஙனங் கூறவே உரிப்பொருளின்றேற் பொருட் பயனின் றென்பது பெற்றாம். இதனானே முதல் கரு வுரிப்பொருள் கொண்டே வருவது திணையாயிற்று. இவை பாடலுட் பயின்ற வழக்கே இலக்கணமாதலின் இயற்கையாம். அல்லாத சிறு
பான்மை வழக்கினைச் செயற்கையென மேற்பகுப்பர். (3)
------------
4.
- முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.
இது நிறுத்தமுறையானே முதல் உணர்த்துவான் அதன் பகுதியும் அவற்றுட் சிறப்புடையனவும் இல்லனவுங் கூறுகின்றது.
(இ -ள்.) முதல் எனப்படுவது - முதலெனச் சிறப்பித்துக் கூறப்படுவது; நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப - நிலனும் பொழுதும் என்னும் இரண்டினது இயற்கை
நிலனும் இயற்கைப் பொழுது மென்று கூறுப; இயல்பு உணர்ந்தோரே - இடமுங் காலமும் இயல்பாக உணர்ந்த ஆசிரியர் என்றவாறு.
இயற்கையெனவே செயற்கை நிலனுஞ் செயற்கைப் பொழுதும் உளவாயிற்று. மேற் 'பாத்திய' (2) நான்கு நிலனும் இயற்கை நிலனாம்.
ஐந்திணைக்கு வகுத்த பொழுதெல்லாம் இயற்கையாம்; செயற்கை நிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும்.
முதல் இயற்கைய வென்றதானாற் கருப்பொருளும் உரிப் பொருளும் இயற்கையுஞ் செயற்கையுமாகிய சிறப்புஞ் சிறப் பின்மையும் உடையவாய்ச் சிறுவரவினவென மயக்கவகையாற் கூறுமாறு மேலே கொள்க. இனி நிலத்தொடு காலத்தினையும் முதலென்றலிற் காலம்பெற்று நிலம்பெறாத பாலைக்கும் அக் காலமே முதலாக அக்காலத்து நிகழுங் கருப்பொருளுங்கொள்க. அது முன்னர்க் காட்டிய உதாரணத்துட் காண்க. (4)
--------------------
5.
- மாயோன் மேய காடுறை உலகமுஞ்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.
இது 'நடுவணது' (2) ஒழிந்த நான்கானும் அவ் 'வைய'த்தைப் பகுக்கின்றது.
(இ - ள்.) மாயோன் மேய காடு உறை உலகமும், சேயோன் மேய மை வரை உலகமும், வேந்தன் மேய தீம் புனல் உலகமும், வருணன் மேய பெரு மணல் உலகமும் - கடல்வண்ணன் காதலித்த காடுறையுலகமுஞ், செங்கேழ் முருகன் காதலித்த வான் தங்கிய வரைசுழுலகமும், இந்திரன் காதலித்த தண்புன னாடுங், கருங்கடற் கடவுள் காதலித்த நெடுங்கோட்டெக்கர் நிலனும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படுமே - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென ஒழுக்கங் கூறிய முறையானே சொல்லவும் படும் என்றவாறு.
இந்நான்கு பெயரும் எண்ணும்மையோடு நின்று எழுவாயாகிச் சொல்லவும்படும் என்னுந் தொழிற்பயனிலை கொண்டன. என்றது இவ்வொழுக்கம் நான்கானும் அந்நான்கு நிலத்தையும் நிரனிறை வகையாற் பெயர் கூறப்படுமென்றவாறு. எனவே, ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடமாயிற்று.
உம்மை எதிர்மறையாகலின், இம்முறையின்றிச் சொல்லவும் படுமென்பது பொருளாயிற்று. அது தொகைகளினுங் கீழ்க்ககணக்குகளினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க.
முல்லை நிலத்துக் கோவலர், பல்லா பயன் தருதற்கு
மாயோன் ஆகுதி பயக்கும் ஆபல காக்கவெனக் குரவை தழீஇ
மடைபல கொடுத்தலின், ஆண்டு அவன் வெளிப்படுமென்றார்.
உதாரணம்:-- "அரைசுபடக் கடந்தட்டு" என்னு முல்லைக் கலியுட்,
"பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய
வாடுகொ ணேமியாற் பரவுதும்.' (கலி-105)
எனவரும்,
படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும்
பாலொடு கோட்டம் புகின்." (கலி-109)
என அவன் மகனாகிய காமனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல் 'அவ்வகை பிறவுங் கருவென மொழிப,' (18) என்புழி வகையென்றதனாற் கொள்க.
இனிக் குறிஞ்சி நிலத்திற்குக் குறவர் முதலியோர் குழீஇ வெறியயர்தற்கு வேண்டும் பொருள்கொண்டு வெறியயர்பவாகலின், ஆண்டு முருகன் வெளிப்படுமென்றார்.
அஃது, "அணங்குடை நெடுவரை" என்னும் அகப் பாட்டினுட்,
"படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவ ளிவள்." (அகம்-22)
எனவரும். "சூரர மகளிரொ டுற்ற சூளே"* என்புழிச் சூரர மகளிர் அதன் வகை.
- -----------------
*குறுந்தொகை-53.
இனி ஊடலுங் கூடலுமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்கு மருத நிலத்திற்குத் தெய்வமாக "ஆடலும் பாடலு மூடலு முணர்தலும்" உள்ளிட்ட இன்ப விளையாட்டு இனிதினுகரும் இமையோர்க்கும் இன்குரலெழிலிக்கும் இறைவனாகிய இந்திரனை ஆண்டையோர் விழவு செய்து அழைத்தலின், அவன் வெளிப்படு மென்றார்.
அது,
"வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை
தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு." (கலி-98)
என, இந்திரனைத் தெய்வமென்றதனானும், இந்திர விழவூரெடுத்த காதையானும் உணர்க.
இனி நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந் தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக் கோடு நட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார். அவை,
"சினச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்," (பத்து-பட்டின 16-7)
எனவும்,
"கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி." (அகம்-110)
எனவும்,
"அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி
யாயு மாயமொ டயரும்" (அகம்-240)
எனவும் வரும்.
இனிப் பாலைக்குக்குச்,
"சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியை காமுற லியைவதோ." (கலி-16)
எனவும்,
"வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ." (கலி-16)
எனவும் ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற் றோன்றிய மழையினையுங் காற்றினயும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுப வாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவி கொடுக்குங்கால் அங்கி ஆதித்தன்கட் கொடுக்குமென்பது வேதமுடிபாகலின், ஆதித்தன் எல்லா நிலத்திற்கும் பொது வென மறுக்க. இவ்வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத் திணை முதற் பொருளோடு கூட்டிக் கூறியது தெய்வவழிபாட்டு மரபிதுவே, ஒழிந்தது மரபன்றென்றற்கு எனவே அவ்வந் நிலத்தின் தெய்வங்களே பாலைக்குந் தெய்வமாயிற்று.
உறையுலகென்றார், ஆவும் எருமையும் ஆடும் இன்புறு மாற்றால் நிலைபெறும் அக்காட்டின் கடவுளென்றற்கு. மைவரை எனவே மழைவளந் தருவிக்கும் முருகவேளென்றார். இந்திரன் யாற்றுவளனும் மழைவளனுந் தருமென்றற்குத் தீம்புனலென்றார். திரைபொருது கரை கரையாமல் எக்கர் செய்தல் கடவுட்கருத்தென்றற்குப் பெருமணலென்றார்.
இனி முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற முறை யென்னை? யெனின், இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின், கற்பொடு பொருந்தி கணவன் சொற்பிழை யாது இல்லிருந்து நல்லறஞ்செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது. எனவே முல்லை யென்ற சொல்லிற்குப் பொருள் இருத்தலாயிற்று. "முல்லை சான்ற முல்லையம் புறவின் "* என்பவாகலின், புணர்தலின்றி இல்லறம் நிகழாமையிற் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன் பின் வைத்தார். இதற்குதாரணம் இறந்தது. "கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிந்து" $ என்பது கரு. புணர்ச்சிப் பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். "மருதஞ்சான்ற மருதத் தண்பணை"# என்புழி மருதமென்றது ஊடியுங் கூடியும் போகம் நுகர்தலை பரத்தையிற் பிரிவுபோலப் பிரிவொப்புமை நோக்கி நெய்தலை ஈற்றின்கண் வைத்தார், நெற்தற் பறையாவது இரங்கற் பறையாதலின், நெய்தல் இரக்கமாம்.
"ஐதக லல்குன் மகளிர்
நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே." (புறம்-389)
என வரும்.
இனி, இவ்வாறின்றி முல்லை முதலிய பூவாற் பெயர் பெற்றன இவ்வொழுக்கங்களெனின், அவ்வந்நிலங்கட்கு ஏனைப்பூக்களும் உரியவாகலின் அவற்றாற் பெயர் கூறலும் உரியவெனக் கடாயி னாற்கு விடையின்மை உணர்க
இதனானே நடுவுநிலைத்திணையொழிந்த நான்கற்கும் பெயரும் முறையுங் கூறினான். இந்நான்கும் உரிப்பொருளாதல் 'புணர்தல் பிரிதல்'& என்புழிக் கூறுதும். கருப்பொருளாகிய தெய்வத்தை முதற்பொருளோடு கூறியது, அவை 'வந்த நிலத்தின் பயத்த'* மயங்குமாறு போல மயங்காது இது வென்றற்குங் கருப்பொருளுடைத் தெனப்பட்ட பாலைக்குத் தெயவத்தை விலக்குதற்குமென் றுணர்க.
- -------
* பத்து-சிறுபாண்-169. $ பத்து-மதுரை-300.
# பத்து-சிறுபாண்-186. & தொல்-பொருள்-14
உதாரணம்.
"வன்புலக் காட்டுநாட் டதுவே" (நற்றிணை-59)
எனவும்
"இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்
கன்மிசைச் சிறுநெறி." (அகம்-128)
எனவும்,
"அவ்வய னண்ணிய வளங்கே ழூரன்." (அகம்-26)
எனவும்,
"கானலுங் கழறாது ***** மொழியாது." (அகம்-170)
எனவும் நால்வகை யொழுக்கத்திற்கு நால்வகை நிலனும்உரியவாயின வாறு காண்க. (5)
-----------
6.
- காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
இது முதலிரண்டனுள் நிலங்கூறிக் காலங்கூறுவான் முல்லைக்குங் குறிஞ்சிக்கும் பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுங் கூறுதனுதலிற்று.
(இ-ள்.) காரும் மாலையும் முல்லை- பெரும் பொழுதினுட் கார்காலமுஞ் சிறு பொழுதினுள் அக்காலத்து மாலையும் முல்லை யெனப்படும்; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்- பெரும்பொழுதினுட் கூதிர்க்காலமுஞ் சிறுபொழுதினுள் அதனிடை யாமமுங் குறிஞ்சி யெனப்படும் என்றவாறு.
முதல் கரு உரிப்பொருளென்னும் மூன்றுபாலுங்கொண்டு ஓர் திணையாமென்று கூறினாரேனும் ஒரு பாலினையுந் திணை யென்று அப்பெயரானே கூறினார்; வந்தான் என்பது உயர் திணை என்றாற்போல. இது மேலானவற்றிற்கும் ஒக்கும். இக் காலங்கட்கு விதந்து ஓர் பெயர் கூறாது வாளா கூறினார், அப் பெயர் உலகவழக்கமாய் அப்பொருள் உணரநிற்றலின், கால வுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரியச கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின், அதனை இம்முறையானே அறுவகைப் படுத்து இரண்டு திங்கள் ஒரு கால மாக்கினார். இனி ஒரு நாளினைப் படுசுடரமையந் தொடங்கி மாலையெனவும் அதன்பின் இடையாமமெனவும், அதன்பின் விடிய லெனவும், அதன்பின் காலையெனவும் அதன்பின் நண்பக லெனவும், அதன்பின் எற் பாடெனவும் ஆறாகப் பகுத்தார். அவை ஒரோவொன்று பத்து நாழிகையாக. இம்முறையே சூத்திரங்களுட் சிறுபொழுது வைப் பர். பின்பனியும் நண்பகலும் பிற்கூறிய காரணம் அச்சூத்திரத் துக் கூறுதும்.
- --------------
* தொல்-பொருள்.19
முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குக் காரண மென்னை? யெனின், பிரிந்து மீளுந் தலைவன்றி றமெல்லாம் பிரிந் திருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின்றான் திறங்கூறுவனவெல்லாம் பாலையாகவும் வருதலின், அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்குந் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம். என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன் விரைபரித் தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉங் காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆதலின், அவை வெப்பமுந் தட்பமும் மிகாது இடை நிகர்த்த வாகி ஏவல் செய்துவரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்த லானும், ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலிற் களிசிறந்து மாவும் புள்ளுந் துணையோ டின்புற்று விளையாடுவனகண்டு தலைவற்குந் தலைவிக்குங் காமக்குறிப்பு மிகுதலானுமென்பது. புல்லை மேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவுந் தீங்குழ லிசைப்பவும் பந்தர்முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்குங் காமக்குறிப்புச் சிறத்தலின், அக்காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று.
இனிக் குறிஞ்சியாவது புணரற்பொருட்டு. அஃது இயற் கைப் புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின் களவு நீட்டிப்பக் கருதுந் தலைவற்குக் களவினைச் சிறப்பிக் குங்கால், தலைவி அரியளாகவேண்டுமாகவே அவ்வருமையை ஆக்குவது ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிரும் அதன் இடையாமமுமென்பது. என்னை? இருள் தூங்கித் துளி மிகு தலிற் சேறல் அரிதாதலானும், பானாட் கங்குலிற் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளுந் துணையுடன் இன்புற்று வதிதலிற் காமக்குறிப்புக் கழியவே பெருகுதலானுங், காவன்மிகுதி நோக்காது வருந்தலைவனைக் குறிக்கண்ணெதிர்ப்பட்டுப் புணருங் கால் இன்பம் பெருகுதலின், இந்நிலத்திற்குக் கூதிர்க்காலஞ் சிறந்ததெனப்படும்.
உதாரணம்:--
"விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப
வேந்தனும் வெம்பகை தணிந்தனன் றீம்பெயற்
காரு மார்கலி தலையின்று தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்
வள்வாய் ஆழி உள்ளுறு புருளக்
கடவிக் காண்குவம் பாக மதவுநடைத்
தாம்பசை குழவி வீங்குசுரை மடியக்
கனையலங் குரல காற்பரி பயிற்றிப்
படுமணி மிடற்ற பயநிறை யாயங்
கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்
கொன்றையங் குழலா பின்றைத் தூங்க
மனைமனைப் படரு நனைநகு மாலைத்
*தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி
முகிழ்நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பாலென
விலங்கமர்க் கண்ணன் விரல்விளி பயிற்றித்
திதலை யல்குலெங் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே" (அகம். -54)
இது பாகற்குரைத்தது. இது முல்லைக்கட் காரும் மாலையும் வந்தது. அகம்,
"மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரிற் கனைஇக் காமங்
கடலினு முரைஇக் கரைபொழி யும்மே
யெவன்கொல் வாழி தோழி மயங்கி
இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்
கிறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கானக நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்பு
இட்டருங் கண்ண படுகுழி யியவின
இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே" (அகம்- 128)
-----------------
* இவ்வடியே மணிமேகலை 5-ஆவது காதையில் 73-ஆவதுஅடியாக அமைந்துள்ளது.
இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகத் தோழிக்கு உரைப்பாளாக உரைத்தது. இது குறிஞ்சிக்கு கூதிரும் யாமமும் வந்தது
நிலனும் பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண்டும்; வே்ண்டவே, அதற்கிடையின்றிக் கூறிய மாலையும் அதன் சினையாமாதலிற், கார்காலத்து மாலையென்பது பெற்றாம். இது கூதிர்யாமம் என்பதற்கும் ஒக்கும். (6)
-----------
7.
- பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.
இஃது எய்தியதன்மேல் சிறப்புவிதி; முற்கூறிய குறிஞ்சிக்கு முன்பனியும் உரித்தென்றலின்.
(இ-ள்) பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப - பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சி யொன்றற்கு உரித்தென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு.
எதிர்தலென்பது முன்னாதல்; என்வே, முன்பனியாயிற்று; அது ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின். உரித்தென்றதனாற் கூதிர்பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும் எனக்கொள்ள.
உதாரணம் :-
" ........
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலை
...... (அகம் - கஉரு)
என முன்பனியாமங் குறிஞ்சிக் கண் வந்தது. (7)
-----------
8.
- வைகுறு விடியன் மருதம் ஏற்பாடு
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.
இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது.
(இ-ள்) வைகுறு விடியல் மருதம் - வைகறையும் விடியற் காலமும் மருதமாதலும்; ஏற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் - எற்படுகாலம் நெய்தலாதலும் பொருள்பெற்த் தோன்றும் என்றவாறு.
வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்கு நின்றது. செவியறிவுறுத்தலைச் செவியறிவுறுாஉ என்றாற்போல வைகுறுதலை வைகுறு என்றார். அது மாலையாமமும் இடை யாமமும் கழியுந்துணை அக்கங்குல் வைகுறுதல்; அது கங்குல் வைகிய அறுதியாதனோக்கி வைகறை யெனவுங் கூறுப. அது வும் பாடம். நாள் வெயிற் காலையை விடியலென்றார். "விடியல் வெங் கதிர்காயும் வேயம லகலறை"* என்ப. "விடியல் வைகறை யென உருபுதொக்கு முன்மொழி நிலையலாயிற்று,. பரத்தையிற் பிரிந்த தலைவன் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் பொழுது கழிப்பிப் பிறர்க்குப் புலனாகாமல் மீளுங்காலம் அதுவாதலா னுந், தலைவிக்குக் கங்குல் யாமங் கழியாது நெஞ்சழிந்து ஆற் றாமை மிகுதலான் ஊட லுணர்த்தற் கெளிதாவதோர் உபகார முடைத்தாதலானும் வைகறை கூறினார். இனித் தலைவி விடியற்காலஞ் சிறுவரைத்தாதலின் இதனாற் பெறும் பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடனீட்டிப்பவே அவ் வைகறை வழித்தோன்றிய விடியற்கண்ணும் அவன் மெய்வேறு பாடு விளங்கக்கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின் விடியல் கூறினார்,
"வீங்குநீர்" என்னும் மருதக்கலியுள்,
"அணைமென்றோள் யாம்வாட அமர்துணைப் புணர்ந்துநீ
மணமனையா யெனவந்த மல்லலின் மாண்பன்றோ
பொதுக்கொண்ட கௌவையிற் பூவணைப் பொலிந்தநின்
வதுவையங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை" (கலி.-66)
"விரிகதிர் மண்டிலம்" என்னும் மருதக்கலியுள்,
"தணந்தனை யெனக்கேட்டுத் தவறோரா தெமக்குநின்
குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல்
கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி
யணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய" (கலி-71)
என மருதத்துக் காலை வந்தது.
"காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி"‡ என்பதும் அது.
இனி வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ணறுஞ் சோலை தாழ்ந்து நீழற் செய்யவுந், தண்பதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல் வேறு வகைப்பட்ட புள்ளெல்லாங் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும், புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று கஞற்றவும், நெடுந்திரை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவுங் காதல் கைமிக்குக் கடற்கானுங் கானற்கானும் நிறைகடந்து வேட்கைபுலப்பட உரைத்தலின், ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள் சிறத்தலின் எற்பாடு நெய்தற்கு வந்தது,
- ------------------
* கலித்தொகை-45. † அகம் -196 ‡ குறுந்தொகை - 5
உதாரணம்:--
"நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும்
பைங்காற் கொக்கின *நிரைபறை யுகப்ப
எல்லை பைப்பையக் கழிப்பிக் குடவயின்
கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு
மதரெழில் மழைக்கண் கலுழ இவளே
பெருநாண் அணிந்த சிறுமென் சாயல்
மாணலஞ் சிதைய ஏங்கி யானாது
அழல்தொடங் கினளே பெரும அதனால்
கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ
வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே" (அகம்.-120)
பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது. நெய்தற்கு எற்பாடு வந்தது.
'கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப'† என்பதனுள் மாலையும் வந்தது. கலியுண் மாலைக்காலம் நெய்தலின்கண் வந்தவாறு காண்க. இதுமேல் 'நிலனொருங்கு மயங்குத லின்று'‡ என்பதனாற் பெருதும்.
இவற்றிற்கு அறுவகை இருதுவும் உரிய வென்பதன்றிக்காரும் இளவேனிலும் வேனிலும் பெரும்பொழுதாகக் கொள்ப என்றற்குப் பொருள் பெறத் தோன்றும் என்றார்,
இனி நெய்தற்கு ஒழிந்த மூன்று காலமும் பற்றிவரச் சான்றோர் செய்யுட் செய்திலர்.; அக்காலத்துத், தலைவி புறம் போந்து விளையாடாமையின். அங்ஙனம் வந்த செய்யுளுளவேல் அவற்றையுங் கொள்க.
"கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே." (குறு-8)
---------
(பாடம்) *கொக்கின். † அகம் 40. ‡ தொல். அகம்.-12
புறனுரைத்தானெனக்கேட்ட பரத்தை தலைவனை நெருங்கித் தலைவன்; பாங்காயினார் கேட்ப உரைத்தது. இது முதுவேனில் வந்தது.
"அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை
இழையணி பணைத்தோ ளையை தந்தை
மழைவளந் தரூஉ மாவண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங்
குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு
வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
கயநா டியானையின் முகனமர்ந் தாஅங்
கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய
நெருந லாடினை புனலே யின்றுவந்
தாக வனமுலை யரும்பிய சுணங்கின்
மாசில் கற்பிற் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல
சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்
தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்
பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம்
இளமை சென்று தவத்தொல் லஃதே
இனியெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே" (அகம்.-6)
பரத்தையொடு புனலாடி வந்தமைகேட்டுத் தலைவி புலந்தது. இது இளவேனில் வந்தது. ஏனைய வந்தவழிக் காண்க.
நாடகவழக்கானன்றி உலகியல் வழக்கானும் அச் சிறுபொழுதும் பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றற்குத்தோன்று மென்றார். இதன் பயன் இவ்விரண்டு நிலத்துக்கு
மற்றை மூன்று காலமும் பெரும்பான்மை வாராதென்றலாம்.
---------
9.
- நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.
இது நிலனுடைய நான்கற்குங் காலங் கூறி அந்நான்கிற்கும் பொதுவாகிய பாலைக்குக் காலங் கூறுகின்றது.
(இ-ள்) நடுவு நிலைத்திணையே- பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு- எற்பாடுங் காலையும் என்னும் இரு கூற்றிற்கு நடுவணதாகிய ஒரு கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும்பகலோடும் இளவேனிலும் வேனிலும் என்னும் இரண்டினோடும்; முடிவு நிலை மருங்கின்- பிரிவெனப்படுதற்கு முடிவுடைத்தாகிய குறிஞ்சியும் முல்லையுமாகிய ஒரு மருங்கின் கண்ணே; முன்னிய நெறித்து- ஆசிரியன் மனங்கொள்ளப் படும் நெறிமைத்து என்றவாறு.
நிலை யென்றது நிலத்தினை. முடிவுநிலைப்பகுதிக்கண் முன்னப் படுமெனவே அத்துணை யாக்கமின்றி ஒழிந்த மருத மும் நெய்தலும் முடியாநிலமாய் அத்துணை முன்னப்படா தாயிற்று. இது பாலைக்கென்பதாம். பிரிவின்கண் முடிய வருவன வெல்லாம் இவ்விரண்டற்கும் முடியவருதலும் ஒழிந்த இரண்டற் கும் அவை குறுகி வருதலும் முறையாற் கொள்க. என்னை? சுரத்தருமை அறியின், இவள், ஆற்றாளாமெனத் தலைவன் செல வழுங்குதலுந் துணிந்துபோதலும், உடன்போவலெனத் தலைவி கூறுதலும், அதனை அவன் விலக்கலும், இருந்திரங்கலும் போல் வன பலவும் முடியவரும் நிலங் குறிஞ்சியும் முல்லையுமாகலின் சுரத்தருமை முதலியன நிகழாமையின் மருதமும் நெய்தலும் அப்பொருண்முடிய வாராவாயின.
"நன்றே காதலர் சென்ற ஆறே
அணிநிற இரும்பொறை மீமிசை*
மணிநிற வுருவின தோகையு† முடைத்தே" (ஐங்குறு-431)
இது சுரத்தருமை நினைந்து வருந்தினேனென்ற தலைவிக்கு அவ் வருமை நீங்கக் கார்கால மாயிற்றென்று ஆற்றுவித்தது. இப்பாட்டு முதலிய பத்தும் முல்லையுட் பாலை.
"கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது
மாற்றருந் தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே" (ஐங்குறு-451)
இது பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது.
மேற்கூறிய பருவங்கண்டு கிழத்தியுரைத்த இப்பத்தும் முல்லையுட் பாலை.
"கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ
இருங்கல் வியலறை வருப்பத் தாஅம்
நன்மலை நாடன் பிரிந்தென
ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய்" (ஐங்குறு-219)
------------------------
(பாடம்) *'இரும்புற மீமிசை' எனவும், 'அரும்பொறை மீமிசை'
† 'உருவின்றோகை'
இது வரைவிடைவைத்துப் பிரிந்துழித் தலைவி யாற்றாமை கண்டு தோழி கூறியது. இது குறிஞ்சியுட் பாலை.
"எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்டுளி வீசிப்
பசலை செய்தன பனிபடு துறையே." (ஐங்குறு - 141)
இது வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்குந் தோழிக்குத் துறையின்ப-முடைத்தாகலான் வருத்திற்றெனத் தலைவி கூறியது. இது சுரத்தருமை முதலியனவின்றி நெய்தற் குட் பாலை வந்தது. ஏனைய வந்துழிக் காண்க.
முந்நீர் வழக்கஞ் சிறுபான்மையாகலின் செய்தற்கு முடிய வாராதாயிற்று. இக்கருத்தானே பிரிவொழுக்கம் மருதத்திற்கும் நெய்தற்குஞ் சிறுபான்மையாகப் புலனெறிவழக்கஞ் செய்யப்படும்.
எற்பாட்டுக்கு முன்னர்த்தாகிய நண்பகலைப் பாலைக்குக் கூற வேண்டிப் பின் வைத்தாரேனும் பெரும்பொழுதிற்கு முற் கூறுதலின் ஒருவாற்றாற் சிறுபொழுதாறும் முறையே வைத்தாராயிற்று. காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமைகூரச் சோலைதேம்பிக் கூவன் மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம் பயந் துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின், இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலுஞ் சிறப்புடைத்தாயிற்று.
தெள்ளறல் யாற்றுத் திரைமணல் அடைகரை
வண்டு வரிபாடத் தண்போ தலர்ந்து
தாதுந் தளிரு மேதகத் துவன்றிப்
பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்றமொடு
செவ்விதிற் றென்றல் ஒவ்விதிற் றாகிக்
குயில்கூஉக் குரலும் பயில
அதன்மேலும்
நிலவுஞ் சாந்தும் பயில்வுறு முத்தும்
இன்பம் விளைக்கு நன்பொருள் பிறவும்
பண்டைய போலாது, இன்பம் மிகத்தரும் இளவேனிற் காலத்துப், பொழில் விளையாடியும், புதுப்பூக் கொய்தும், அருவியாடியும் முன்னர் விளையாட்டு நிகழ்ந்தமைபற்றிப் பிரிந்த கிழத்தி மெலிந்துரைக்குங் கிளவி பயின்று வருதலானும், உடன்போக்கின்கண் அக்காலம் இன்பம் பயக்குமாதலானும், இளவேனிலோடு நண்பகல் சிறந்த தெனப்பட்டது. பிரிந்த கிழத்தி இருந்து கூறுவன கார்கால மன்மையின் முல்லையாகா.
உதாரணம்:-
"கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை
வறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்து
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
இரவுக்குறும் பலற நூறி நிரைபகுத்
திருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலைவில் ஆடவர் போலப் பலவுடன்
பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திறுக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க் கல்கலும்
இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்த
நுணங்குகண் சிறுகோல் வணங்கிறை மகளிரொ
டகவுநர்ப் புரந்த வன்பின் கழல்தொடி
நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்னநின்
அலர்முலை யாகம் புலம்பப் பல நினைந்
தாழேல் என்றி தோழி யாழவென்
கண்பனி நிறுத்தல் எளிதோ குரவுமலர்ந்
தற்சிர நீங்கிய வரும்பவிழ் வேனில்
அறலவிர் வார்மணல் அகல்யாற் றடைகரைத்
துறையணி மருதோ டிகல்கொள வோங்கிக்
கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்
திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ் சூர
நுகர்குயில் அகவுங் குரல்கேட் போர்க்கே." (அகம்-97)
இது வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.
இக் களிற்றியானை நிரையுள் இருவகை வேனிலும் பாலைக்கண் வந்தன. நண்பகலோடுவருவன வந்துழிக் காண்க. (9)
-----------
10
- பின்பனி தானும் உரித்தென மொழிப.
இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி.
(இ-ள்.) நடுவு நிலைத்திணைக்கு முற்கூறிய வேனிலன்றிப் பின்பனிக்காலமும் உரித்து என்றவாறு.
இது கூதிரை, முன்பனியாகிய மர்கழியுந் தையுந் தொடர்ந்தாற் போல, வேனிலாகிய சித்திரை முதலிய நான்கற்கு முன்பின் பனியாகிய மாசியும் பங்குனியுந் தொடர்ந்ததென்று கூறினார்.
உதாரணம் :-
"பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ
புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட்கட் பொதி செய்யா
முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும் பனி." (கலி-31)
இது தனித்தோர்க்குப் பின்பனி ஆற்றற்கு அரிது, இஃதெவர்க்கும் ஏதமாம் எனவும், இதனான் இறந்துபடுவேனெனவுங் கூறிற்று.
"அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
தளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியு நாளும் பலவா கவ்வே." (குறு-104)
தலைவி தோழிக்கு உரைத்தது.
இதுவும் அது.
பின்பனிக்கு நண்பகல் துன்பஞ்செய்யா தென்பதூஉம் அதற்குச் சிறுபொழுது வரைவில வென்பதூஉங் கூறிற்று; என்னை? சூத்திரத்துத் தான் எனத் தனித்து வாங்கிக் கூறினமையின். (10)
----------
11.
- இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்
உரியதாகும் என்மனார் புலவர்.
இது பாலைப் பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும் பின்பனி உரித்தெனவுங் கூறுகின்றது.
(இ-ன்.) இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும் - நான்கு வருணத்தாருக்கும் காலிற் பிரிவும் வேளாளர்க்குக் கலத் திற் பிரிவுந் தத்தம் நிலைமைக்கேற்பத் தோன்றினும்; உரியது ஆகும் என்மனார் புலவர்- பின்பனிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமைபூண்டு நிற்குமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
கடலினை நிலமென்னாமையிற் கலத்திற் பிரிவு முன்பகுத்த நிலத்துள் அடங்காதென்று, அதுவும் அடங்குதற்கு, 'இருவகைப் பிரிவும்' என்னும் முற்றும்மை கொடுத்துக், காலிற் பிரிவோடு கூட்டிக் கூறினார். கலத்திற் பிரிவு அந்தணர் முதலிய செந்தீவாழ்நர்க்கு ஆகாமையின் வேளாளர்க்கே உரித் தென்றார். வேத வணிகரல்லாதார் கலத்திற் பிரிவு வேத நெறியன்மையின் ஆராய்ச்சியின்று. இக்கருத்தானே இருவகை வேனிலும் நண்பகலும் இருவகைப் பிறிவிற்கும் ஒப்ப உரியவன்றிக், காலிற் பிரிவுக்குச் சிறத்தலுங், கலத்திற் பிரிவிற்கு இளவேனி லொன்றுங் காற்றுமிகாத முற்பக்கத்துச் சிறுவர விற்றாய் வருதலுங் கொள்க. ஒழிந்த உரிப்பொருள்களிலும் பாலை இடை நிகழுமென்றலிற் பிரியவேண்டியவழி அவற்றிற்கு ஓதிய காலங்கள் கலத்திற் பிரிவிற்கும் வந்தால் இழுக்கின்று.
என்னை? கார்காலத்துக் கலத்திற்பிரிவும் உலகியலாய்ப் பாடலுட் பயின்று வருமாயினென்க தோன்றினும் என்ற உம்மை சிறப்பும்மை. ; இரண்டு பிரிவிற்கும் பின்பனி உரித்தென்றலின்.
இனிக் கலத்திற்பிரிவிற்கு உதாரணம்:--
"உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரைசெல லியற்கை வங்கூ ழாட்டக்
கோடுயர் திணிமண லகன்றுறை நீகான்
மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய
ஆள்வினைப் புரிந்த காதலர் நாள்பல
கழியா மையி னழிபட ரகல
வருவர் மன்னாற் றோழி தண்பணைப்
பொருபுனல் வைப்பின் நம்மூ ராங்கட்
கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப்
பெருவள மலர அல்லி தீண்டிப்
பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க
அறனின் றலைக்கு மானா வாடை
கடிமனை மாடத்துக் கங்குல் வீசத்
திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிரைவளை யூருந் தோளென
உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே" (அகம்-255)
இது தோழி தூதுவிடுவது காரணமாக உரைத்தது. இம் மணிமிடைபவளத்துப் பின்பனி வந்தவாறும் நண்பகல் கூறாமையும் அவர் குறித்தகாலம் இதுவென்பது தோன்றிய
வாறுங் காண்க.
"குன்ற வெண்மண லேறி நின்றுநின்று
இன்னுங் காண்கம் வம்மோ தோழி
களிறுங் கந்தும் போல நளிகடற்
கூம்புங் கலனுந் தோன்றுந்
தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே"
வருகின்றாரெனக்கேட்ட தலைவி தோழிக்கு உரைத்தது.
இது பின்பனிநின்றகாலம் வரைவின்றி வந்தது. கடலிடைக் கலத்தைச் செலுத்துதற்கு உரிய காற்றொடுபட்ட காலம் யாதானுங் கொள்க. ஆகுமென்றதனால் வேதவணிகரும் பொருளின்றி இல்லறம் நிகழாத காலத்தாயிற் செந்தீவழிபடுதற்கு உரியோரை நாட்டிக் கலத்திற் பிரிதற்கு உரியரென்று கொள்க. (11)
--------------
12.
- திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப
புலனன் குணர்ந்த புலமை யோரே.
இஃது உரிப்பொருள் மயங்கு மென்றலின் மேலனவற்றிற்குப் புறனடை.
(இ-ள்) திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே- 'மாயோன்மேய' (5) என்பதனுள் ஒரு நிலத்து ஓரொழுக்கம் நிகழுமென நிரனிறுத்துக் கூறிய ஒழுக்கம் அவ்வந்நிலத்திற்கே உரித்தா யொழுகாது தம்முண் மயங்கிவருதலும் நீக்கப்படா; நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிப- அங்ஙனம் ஒரு நிலத்து இரண்டொழுக்கந் தம்முண் மயங்குதலன்றி இரண்டுநிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதலில்லை யென்று கூறுவர்; புலன் நன்கு உணர்ந்த புலமையோர்- அங்ஙனம் நிலனும் ஒழுக்கமும் இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி வழக்கத்தினை மெய்பெற உணர்ந்த அறிவினையுடையோர்
என்றவாறு.
என்றது, ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கி வருமென்பதூஉம், நிலன் இரண்டு மயங்காதெனவே காலம் இரண்டுந் தம்முள் மயங்குமென்பதூஉங் கூறினாராயிற்று. எனவே, ஒரு நிலமே மயங்குமாறாயிற்று. உரிப்பொருண் மயக் குறுதல் என்னாது திணை மயக்குறுதலும் என்றார், ஓர் உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருண் மயங்குதலும், ஓர் உரிப் பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்குதலும், கருப்பொருண் மயங்குதலும் பெறுமென்றற்கு;திணையென்றது அம்மூன்றனையங் கொண்டே நிற்றலின்.
உதாரணம்:--
"அறியே மல்லே மறிந்தன மாதோ
பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச்
சாந்த நாறு நறியோள்
கூந்த னாறுநின் *மார்பே தெய்யோ" (ஐங்குறு-240)
இது புறத்தொழுக்க மின்றென்றாற்குத் தோழி கூறியது.
- ----------------
(பாடம்) * 'மார்பேஎ'
புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை
வளைவெண் மருப்பிற் கேழல் புரக்குங்
குன்றுகெழு நாடன் மன்றதன்
பொன்போல்புதல்வனோ டென்னீத் தோனே" (ஐங்குறு- 265)
இது வாயில்களுக்குத் தலைவி கூறியது.
"வன்கட் கானவன் மென்சொன் மடமகள்
புன்புல மயக்கத் துழுத வேனற்
பைம்புறச் சிறுகிளி கடியு நாட
பெரிய கூறி நீப்பினும்
பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே" (ஐங்குறு-283)
இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளியிடத்துச் சென்ற தோழி கூறியது.
இவை குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன.; இவை ஓரொழுக்கம் நிகழ்தற்கு உரியவிடத்தே ஓரொழுக்ம் நிகழ்ந்தன.
"அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி யாயி னென்னதூஉ
மறிய வாகுமோ மற்றே
முறியிணர்க் கோங்கம் பயந்த மாறே" (ஐங்குறு- 366)
இஃது இவ் வேறுபாடென்னென்ற செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்.
இது பாலையிற் குறிஞ்சி. இஃது உரிப்பொருளொடு உரிப்பொருண் மயங்கிற்று. மேல் வருவனவற்றிற்கும் இவ்வாறு உய்த்துணர்ந்துகொள்க.
"வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின்
முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற்
குறிநீ செய்தனை யென்ப வலரே
குரவ நீள்சினை யுறையும்
பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே." (ஐங்குறு- 369)
இது பொழிலிடத்து ஒருத்தியொடு தங்கிவந்தும் யான் பரத்தையை அறியேனென்றாற்குத் தோழி கூறியது.
"வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை.
யிருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப
நீநயந் துறையப் பட்டோள்
யாவ ளோவெம் மறையா தீமே." (ஐங்குறு-370)
இது பரத்தையர்க்குப் பூவணிந்தமை கேட்ட தலைவி அஃதின்றென்றாற்குக் கூறியது. இவை பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன. "அருந்தவ மாற்றியார்"* என்னும் பாலைக்கலியும் அது.
- ---------
*கலித்தொகை- 30
"அன்னை வாழிவேண் டன்னை யுவக்கா
ணேர்கொடிப் பாசடம்பு பரியவூர் பிழியூஉ
நெய்தன் மயக்கிவந் தன்று நின்மகள்
பூப்போ லுண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் றேரே" (ஐங்குறு-101)
இஃது அறத்தொடு நின்றபின் வரைதற்குப்பிரிந்தான் வரைவொடு வந்தமை தோழி செவிலிக்ஞகுக் காட்டியது. இது நெய்தலிற் குறிஞ்சி.
"கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
யொள்ளிழை யுய்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே" (ஐங்குறு- 122)
"கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
வுண்ணாப் பாவை யூட்டு வோளே" (ஐங்குறு-128)
இவை பெதும்பைப் பருவத்தாள் ஓர் தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித் தலைவன் குறிப்புணர்ந்தது.
"யானெவன் செய்கோ பாண வானாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனவென் புரிவளைத் தோளே." (ஐங்குறு-133)
இது தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றாயாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது.
இப் பத்தும் நெய்தற்கண் மருதம்.
"வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப நெக்க கண்போ னெய்தல்
கட்கமழ்ந் தானாத் துறைவற்கு
நெக்க நெஞ்ச நேர்கல் லேனே" (ஐங்குறு-151)
இது வாயில்வேண்டிய தோழிக்குத் தலைவி வாயின் மறுத்தது. இப் பத்தும் நெய்தற்கண் மருதம்.
"இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி
முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே
புலம்புகொண் மாலை மறைய
நலங்கே ழாக நல்குவ ளெனக்கே" (ஐங்குறு-197)
இடந்தலைப்பாட்டிற் றலைவி நிலைகண்டு கூறியது. இது நெய்தலிற் புணர்த னிமித்தம்.
"வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்
றன்னக மண்ணளை நிறைய நெல்லி
னிரும்பூ வுறைக்கு மூரற்கிவள்
பெருங்கவி னிழப்ப தெவன்கொ லன்னாய்" (ஐங்குறு- 30)
இது தோழி அறத்தொடு நின்றது.
"பழனங் கம்புள் பயிர்ப்பெடை யகவுங்
கழனி யூரநின் மொழிவ லென்றுந்
துஞ்சுமனை நெடுநகர் வருதி
யஞ்சா யோவிவ டந்தகை வேலே" (ஐங்குறு-60)
இது தோழி இரவுக்குறி மறுத்தது.
"நெறிமருப் பெருமை நீலவிரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங்
கழனி யூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே" (ஐங்குறு-91)
இஃது இளையள் விளைவில ளென்றது.
"கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக்
காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு
நுந்தை நும்மூர் வருது
மொண்டொடு மடந்தை நின்னையாம் பெறினே" (ஐங்குறு-92)
இது நின் தமர் வாராமையின் எமர் வரைவு நேர்ந்திலரென்று தோழி கூறக்கேட்ட தலைவன் தலைவிக்குக் கூறியது.
இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன.
இக் காட்டியவெல்லாம் ஐங்குறுநூறு. "புனையிழை நோக்கியும்"* என்னும் மருதக் கலியும் அது.
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு
மூட்டுறு கவரி தூக்கி யன்ன
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர்
மூதா தின்றல் அஞ்சிக் காவலர்
பாக லாய்கொடிப் பகன்றையொடு பரீஇக்
காஞ்சியி னகத்துக் கரும்பருத்தி யாக்குந்
தீம்புன லூர திறவ தாகக்
குவளை யுண்க ணிவளும் யானுங்
கழுநீ ராம்பல் முழுநெறிப் பைந்தழை
காயா ஞாயிற் றாகத் தலைப்பப்
பொய்த லாடிப் பொலிகென வந்து
நின்னகாப் பிழைத்த தவறோ பெரும
கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட் குளப்பட வோச்சித்
தணிமருங் கறியாள் யாயழ
மணிமருண் மேனி பொன்னிறங் கொளலே" (அகம். -156)
----------------------
*கலித்தொகை-76.
இது தோழியிடத்துய்த்துத் தலைவனை வரைவு கடாயது. இவ்வகப்பாட்டும் அது.
இன்னும், மயக்குறுதலும் என்றதனான் அவ்வந் நிலங்கட்கு உரிய முதலுங் கருவும் வந்து உரிப்பொருள் வேறாதலன்றி அவ் வந்நிலங்கட்கு உரியவல்லாத முதலுங் கருவும் வந்து உரிப் பொருண் மயங்குவனவுங் கொள்க அஃது "அயந்திகழ் நறுங் கொன்றை"* என்னும் நெய்தற் கலியுட் காண்க இக்கருத்தானே நக்கீரரும் ஐந்திணையுள்ளுங் களவு நிகழுமென்று கொண்டவாறுணர்க.
இனிக் காலம் ஒருங்கு மயங்குங்காற் பெரும்பொழுது இரண்டும் பெரும்பான்மையுஞ் சிறுபொழுதும் மயங்குதலுங் கொள்க.
"மழையில் வான மீனணிந் தன்ன
குழையமன் முசுண்டை வாலிய மலர
வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப்
பெரிய சூடிய கவர்கோற் கோவலர்
எல்லுப் பெயலுழந்த பல்லா நிரையொடு
நீர்திகழ் கண்ணியர் ஊர்வயிற் பெயர்தர
நளிசேட் பட்ட மாரி தளிசிறந்
தேர்தரு கடுநீர் தெருவுதொ றொழுகப்
பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக்
கூதிர்நின் றன்றாற் பொழுதே காதலர்
நந்நிலை யறியா ராயினுந் தந்திலை
யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக்
காய்சின யானைக் கங்குற் சூழ
அஞ்சுவர விறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே." (அகம் -264)
இது தோழிக்குத் தலைவி கூறியது.
இம் மணிமிடை பவளத்துண் முல்லையுட் கூதிர் வந்தது.
"மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித்
துள்ளுப்பெயல் கழிந்த பின்றைப் புகையுறப்
புள்ளிநுண் துவலை பூவகம் நிறையக்
காதலாப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத்
துய்த்தலைப் பூவின் புதலிவர் ஈங்கை
நெய்த்தோய்த் தன்ன நீர்நனை யந்தளிர்
இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரைப் பைம்பூப் பயில அகல்வயற்
கதிர்வார் காய்நெல் கட்கினி திறைஞ்சச்
--------
* ‘கலித்தொகை - 150.| ‘ஐந்திணையுள்ளும் களவு வேறன்று’என்பது, இறையனாரகப்பொருள் 1-ஆம் சூத்திரவுரை.
சிதர்சினைத் தூங்கும் அற்சிர அரைநாட்
காய்சின வேந்தன் பாசறை நீடி
நந்தோ யறியா அறனி லாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல்லென
ஆனா தெறிதரும் வாடையொடு
நோனேன் தோழியென் தனிமை யானே." (அகம்-194)
இது பருவ வரவின்கண் வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.
இம் பணிமிடை பவளத்து முல்லையுண் முன்பனி வந்தது. நிலமுங் கருவும் மயங்கிற்று.
"கருங்கால் வேங்கை வீயுகு துறுக
லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
யெல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே." (குறுந்-47)
இஃது இராவந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழி
யாக நிலாவிற்கு உரைப்பாளாய் உரைத்தது.
இக் குறுந்தொகையுட் குறிஞ்சியுள் வேனில் வந்தது.
*"விருந்தின் மன்னர் * * *."
என்பது கார்காலத்து மீள்கின்றான் முகிழ்நிலாத் திகழ்தற்குச் சிறந்த வேனிலிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது.
இது முல்லைக்கண் வேனில் வந்தது.
துஞ்சுவது போல விருளி விண்பக
இமைப்பது போல மின்னி யுறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடுசிறந் துரைஇ
நிலம்நெஞ் சுட்க ஒவாது சிலைதாங்
கார்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்
ஈன்றுநா ளுலந்த வாலா வெண்மழை
வான்றோ யுயர்வரை யாடும் வைகறைப்
புதலொளி சிறந்த காண்பின் காலைத்
தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து
வெண்புறக் குடைய திரிமருப் பிரலை
வார்மண லொருசிறைப் பிடவவிழ் கொழுநிழற்
காமர் துணையொ டேமுற வதிய
அரக்குநிற யுருவின் ஈயல் மூதாய்
பரப்பி யவைபோற் பாஅய்ப் பலவுடன்
நீர்வார் மருங்கி னீரணி திகழ
இன்னும் வாரா ராயின் நன்னுதல்
யாதுகொல் மற்றவர் நிலையே காதலர்
கருவிக் காரிடி யிரீஇய
பருவ மன்னவர் வருதுமென் றதுவே." (அகம்-139)
------------------
* அகம் - 54. இச் செய்யுளை 17ஆம் பக்கத்திற் காண்க.
இது பிரிவிடையாற்றாது தோழிக்கு உரைத்தது.
இம் மணிமிடை பவளத்துப் பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன.
"தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி
னல்லாந்த ரலவுற லீன்றவள் கிடக்கைபோற்
பல்பய முதவிய பசுமைதீ ரகன்ஞாலம்
புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர
வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள
விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார
மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ
லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர
மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதி்கண் ;
இது தரவு.
சேயார்கட் சென்றவென் னெஞ்சினைச் சின்மொழி
நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி
வாய்விரிபு பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி
நோய்சேர்ந்த வைகலான்வாடைவந் தலைத்தரூஉம்;
போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச்
சூழ்பாங்கே சுடரிழாய் காப்பென்மற் கைநீவி
வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணு மிருந்தும்பி
யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்;
தொடிநிலை நெகழ்த்தார்கட் டோயுமென் னாருயிர்
வடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு
நெடுநிலாத் திறந்துண்ண நிரையிதழ் வாய்விட்ட
கடிமலர் கமழ்நாற்றங் கங்குல்வந் தலைத்தரூஉம்;
இவை மூன்றுந் தாழிசை.
எனவாங்கு,
இதுதனிச்சொல்.
வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப்
பிரிந்துசெய் பொருட்பிணி பின்னோக்கா தேகிநம்
அருந்துயர் களைஞர் வந்தனர்
திருந்தெயி றிலங்குநின் றேமொழி படர்ந்தே." (கலி-21)
இது சுரிதகம்.
இஃது ஒத்தாழிசை
வந்தாரென ஆற்றுவித்தது.
இதில் வேனிலும் வாடையுங் கங்குலும் மாலையும் வந்தன.
"அம்ம வாழி தோழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீஇய
வாவ லுகக்கு மாலையு
மின்றுகொல் காதலர் சென்ற நாட்டே." (ஐங்குறு-339)
இவ் ஐங்குறுநூறு பாலைக்கண் மாலை வந்தது.
"தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
மாலை நெய்தலுங் கூம்பக்
கால வரினுங் களைஞரோ விலரே." (ஐங்குறு - 183)
பருவ வரவின்கண் மாலைப்பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது.
இவ் ஐங்குறுநூறு நெய்தற்கண் மாலை வந்தது.
"தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற்
பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயரர்ப்பான்போ
லெல்லுறு தெறுகதிர் மடங்கிததன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ யலகாண்ட வரசன்பி
னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போன் மயங்கிரு டலைவர
வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை
.... .... .... ....
பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ
லினிவரி லுயருமற் பழியெனக் கலங்கிய
தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல
வினியசெய் தகன்றாரை யுடையை யோநீ." (கலி-129)
என நெய்தற்கலியுட் கங்குலும் மாலையும் முன்பனியும் வந்தன. ஒழிந்தனவும் மயங்குமாறு வந்துழிக் காண்க. (12)
---------------
13.
- உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே.
இஃது எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்.) உரிப்பொருள் அல்லன – உரிப்பொருளென்று ஓதப்படும் ஐந்தணையும் அல்லாத கைக்கிளையும் பெருந்திணையும் ; மயங்கவும் பெறும் - நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும் என்றவாறு.
உம்மை, எச்சவும்மை யாதலின், உரிப்பொருளாக எடுத்த பாலையும் நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும் என்றவாறாம். பாலையென்பது ஒன்று பிரிந்து பலவாகிய கூற்றின் மேற்றாதலின், ஒற்றுமைப்பட்டு நிகழ்கின்றார் இருவர் பிரிந்துவரலும் பாலையாமன்றே? அதனால், அதுவுங் குணங் காரணமாய்ச் செம்பால் செம்பாலையினாற்போல நின்றது.
"ஊர்க்கா னிவந்த" என்னுங் குறிஞ்சிக்கலியுள்,
"ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினல
மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ." (கலி-56)
என்பது நிலம் வரையாது வந்த கைக்கிளை. இதனைக் குறிஞ்சியுட் கோத்தார்; புணர்ச்சி யெதிர்ப்பாடாகலின்.
"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே யாய மகள்." (கலி-133)
"வளியா வறியா வுயிர்காவல் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற்
கெளியவோ வாய மக டோள்." (கலி-103)
"............... முள்ளெயிற் றேஎ ரிவளைப் பெறுமிதோர்
வெள்ளேற் றெருத்த டங்குவான்;
ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற்
காரி கதனஞ்சான் கொள்பவன் .............." (கலி-104)
என்றாற்போல ஏறுதழுவினாற்கு உரியள் இவளென வந்த கைக்கிளைகளெல்லாம் முல்லைக்கலி பலவற்றுள்ளுங் காண்க.
'முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே'* என்பதனான் அவை கைக்கிளையாயின.
இனி "எழின்மருப் பெழில்வேழம்"# என்றது முதலிய நாலு பாட்டும் ஏறிய மடற்றிறமான பெருந்திணை. என்னை?
"மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்
தேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு" (கலி-139)
என்றாற் போல்வன வருதலின்.
"புரிவுண்ட புணர்ச்சி"$ என்றது முதலிய ஆறுபாட்டுந் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந்திணை. இவற்றை நெய்தலுட் கோத்தார்; சாக்காடு குறித்த இரங்கற் பொருட்டாகலின். கூனுங் குறளும் மூகுஞ் செவிடும் உறழ்ந்து
கூறும் பெருந்திணயும் ஊடற்பகுதியவாகலின் மருதத்துட் கோத்தார்.
"கல்லாப் பொதுவனை நீமாறு." (கலி. 112)
எனப் பொதுவியர் கூறலும்,
-------
*தொல்-பொருள்-105. #கலி- 138. $கலி- 142
"நாடாஅக் கரும்பமன்ற தோளாரைக் காணின்
விடாஅலோம் பென்றா ரெமர்" (கலி-112)
எனப் பொதுவர் கூறலும் மிக்க காமத்து மிடலாகிய பெருந்திணையாகலின் முல்லையுட் கோத்தார்.
"நறவினை வரைந்தார்"& "ஈண்டு நீர்மிசை"# என்னுங் கலிகளுங் காமத்து மிகுதிறத்தான் அரசனை நோக்கிச் சென்றோர் கூறியவாகலின் மருதத்துக் கோத்தார்.
இனி,
"வானமூர்ந்த வயங்கொளி மண்டில
நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட்டு." (அகம்-111)
எனக் காடுறை யுலகத்துப் பாலை வந்தது.
"தொடங்கற்கட் டோன்றிய* முதியவன் முதலாக
வடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முககண்ணான் மூவெயிலு
முடன்றக்கான் முகம்போல வொண்கதிர் தெறுதலிற்
சீறருங் கணிச்சியோன் சினவலி னவ்வெயி
லேறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந் தியங்குந
ராறுகெட விலங்கிய வழலவி ராரிடை
மறப்பருங் காத லிவளீண் டொழிய
விறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய." (கலி-2)
இது மைவரையுலகத்துப் பாலை வந்தது.
"மறந்தவ ணமையா ராயினும்"$ என்னும் அகப்பாட்டுத் தீம்புனலுகத்துப் பாலை வந்தது. "அருளிலாளர் பொருள் வயினகறல்"+ என்னும் பாட்டினுட் பெருமணலுலகத்துப் பாலை வந்தது.
இன்னும் பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண்ணே உரிப் பொருண் மயங்கியுங் காலங்கண் மயங்கியும் வருவனவெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. (13)
--------------
14.
- புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.
இதுவும் மேனிறுத்த முறையானன்றியும் அதிகாரப் பட்டடமைகொண்டு உரிப்பொருள் கூறுகின்றது; உரிப்பொருள் உணர்ந்தல்லது உரிப்பொருளல்லன உணரலாகாமையின்.
- -----------
& கலி-99. #கலி-100. $ அகம்-37. +அகம்-305.
(இ-ள்) புணர்தலும் புணர்தனிமித்தமும்; பிரிதலும் பிரிதனிமித்தமும்; இருத்தலும் இருத்தனிமித்தமும்; இரங்கலும் இரங்கனிமித்தமும்; ஊடலும் ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்காலை ஐந்திணைக்கும் உரிப்பொருளாம் என்றவாறு.
தேருங்காலை என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வந்நிமித்தங்களும் உரித்தென்று ஆராய்ந்துணர்க. இக்கருத்தே பற்றி 'மாயோன்மேய'* என்பதனுள் விரித்துரைத்தவாறுணர்க.
அகப்பொருளாவது புணர்ச்சியாகலானும் அஃது இருவர்க்கும் ஒப்ப நிகழ்தலானும் புணர்ச்சியை முற்கூறிப், புணர்ந்துழியல்லது, பிரிவின்மையானும் அது தலைவன் கண்ணதாகிய சிறப் பானுந் தலைவி பிரிவிற்குப் புலனெறி வழக்கின்மையானும் பிரி வினை அதன் பிற்கூறிப், பிரிந்துழித் தலைவி ஆற்றியிருப்பது முல்லையாகலின் இருத்தலை அதன்பிற் கூறி, அங்ஙனம் ஆற்றியிராது தலைவனேவலிற் சிறிது வேறுபட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை தலைமகளதே யாதலின் அவ் விரங்கற்பொருளை அதன்பிற் கூறி, இந்நான்கு பொருட்கும் பொதுவாதலானுங் காமத்திற்குச் சிறத்தலானும் ஊடலை அதன்பிற் கூறி இங்ஙனம் முறைப்படுத்தினார்.
நான்கு நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் முற்பட்ட புணர்ச்சியே புணர்தற் சிறப்புடைமையிற் குறிஞ்சியென்று அதனை முற்கூறினார். அவை இயற்கைப் புணர்ச்சியும் இடந் தலைப்பாடும் பாங்கற் கூட்டமுந் தோழியிற்கூட்டமும் அதன் பகுதியாகிய இருவகைக் குறிக்கண் எதிர்ப்பாடும் போல்வன. தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும் ஆண்டுத் தோழி கூறுவனவுங் குறைநேர்தலும் மறுத்தலும் முதலியன புணர்ச்சி நிமித்தம்.
இனி, ஓதலுந் தூதும் பகையும் அவற்றின் பகுதியும் பொருட்பிரிவும் உடன்போக்கும் பிரிவு. 'ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்துந்'† தோழியொடு வலித்தன் முதலியன பிரிதனிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்துவனவுந் தோழி யாற்றுவித்தனவும் பாலையாதலிற் பின்னொருகாற் பிரிதற்கும் நிமித்தமாம்; அவை பின்னர்ப் பிரியும் பிரிவிற்கு முன்னிகழ்தலின்.
இனித் தலைவி, பிரிவுணர்த்தியவழிப் பிரியாரென்றிருத்தலும், பிரிந்துழிக் குறித்தபருவ மன்றென்று தானே கூறுதலும், பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவனவும் போல்வன இருத்தல். அப் பருவம் வருவதற்கு முன்னர்க் கூறுவன முல்லைசான்ற கற்பன்மையிற் பாலையாம். இனிப் பருவங்கண்டு ஆற்றாது தோழி கூறுவனவும், பருவமன்றென்று வற்புறுத்தினவும், வருவரென்று வற்புறுத்தினவுந், தலைவன் பாசறைக்கண் இருந்து உரைத்தனவும், அவைபோல்வனவும்
நிமித்தமாதலின் இருத்த னிமித்தமெனப்படும்.
- ----------------
*தொல்-பொருள். 5. † தொல்-பொருள்- 41
இனிக் கடலுங் கானலுங் கழியுங் காண்டொறும் இரங்கலும், தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புண்துணைப் புள்ளுங் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல் முதலியனவுந், தலைவன் நீங்குவனவு மெல்லாம் நிமித்தமாம்.
புலவி முதலியன ஊடலாம். பரத்தையும் பாணனும் முதலியோர் ஊடனிமித்தமாம்.
ஏனையவும் வழக்கியலான் நால்வகை நிலத்துஞ் சிறுபான்மை வருமேனும், பெரும்பான்மை இவை உரியவென்றற்குத் 'திணைக்குரிப்பொருளே' யென்றார்.
உரிமை குணமாதலின் உரிப்பொருள் பண்புத்தொகை.
உதாரணம்;:--
"கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிணர்க் குவளையோ டிடைப்பட விரைஇ
யைதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோண் மேனி
முறியினும் வாயது முயங்கற்கு மினிதே" (குறு-62)
இக் குறுந்தொகை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது.
"அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட்
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற்
றிருமணி புரையு மேனி மடவோ
ளியார்மகள் கொல்லிவ டந்தை வாழியர்
துயர முறீஇயின ளெம்மே யகல்வய
லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந்
தண்சேறு தாய மதனுடை நோன்றாட்
கண்போ னெய்தல் போர்விற் பூக்குந்
திண்டேர்ப் பொறையன் றொண்டி
தன்றிறம் பெறுகவிவ ளீன்ற தாயே" (நற்றிணை-8)
இந் நற்றிணையும், "முலையே முகிழ்முகிழ்த் தனவே"* என்னுங் குறுந்தொகையும் புணர்தனிமித்தம்.
- ------------------
* குறுந்தொகை-336.
"அன்றவண் ஒழிந்தன்றும் இலையே வந்துநனி
வருந்தினை வாழியெ னெஞ்சே பருந்திருந்
துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை
உருள்துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்குங்
கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்
எம்மொ டிறத்தலுஞ் செல்லாய் பின்னின்
றொழியச் சூழ்ந்தனை யாயிற் றவிராது
செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே
மறவல் ஓம்புமதி எம்மே நறவின்
சேயிதழ் அனைய வாகிக் குவளை
மாயிதழ் புரையு மலிகொள் ஈரிமை
உள்ளகங் கனல உள்ளுதொ றுலறிப்
பழங்கண் கொண்ட கதழ்ந்துவீழ் அவிரறல்
வெய்ய வுகுதர வெரீஇப் பையெனச்
சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கைப்
பூவீ கொடியிற் புல்லெனப் போகி
யடர்செய் ஆயகல் சுடர்துணை யாக
இயங்காது வதிந்தநங் காதலி
யுயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே" (அகம் 19)
இது மறவலோம்புமதி யெனப் பிரிவு கூறிற்று.
"அறியாய் வாழி தோழி யிருளற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய
நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய்
நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும்
இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலைப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்
அருளே காதல ரென்றி நீயே" (அகம்- 53)
இது பிரிதனிமித்தம். வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.
"வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே" (குறு-21)
இது பருவங்கண்டுழியும் பொய் கூறாரென்று ஆற்றி யிருந்தது.
"அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை யிடைமகன் சென்னி
சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே" (குறு-221)
இது பருவங்கண்டாற்றாது கூறியது. இது முல்லைசான்ற கற்பாயிற்று; அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின்.
"மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிண ரூழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே" (குறு-66)
இது பருவமன்றென்று வற்புறுத்தலின் இருத்தனிமித்தமாயிற்று. "தேம்படு சிமய"* என்னுங் களிற்றியானை நிரையும் இருத்தனிமித்தமாம்; இக்காலம் வருந்துணையும் ஆற்றினானெனத் தான் வருந்துதலின்.
"கானலுங் கழறாது கழியுங் கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியா
தொருநின் னல்லது பிறிதியாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல்
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்
தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து
பறைஇய தளருந் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல்காற்
கைதையம் படுசினை யெவ்வமொ டசாஅங்
கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து
நின்னுறு விழுமங் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே" (அகம்-170)
இவ் அகப்பாட்டு நெய்தல் இரங்கலுரிப்பொருட்டாயிற்று.
"ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
விரைகொண் டவையும் விரையுமாற் செலவே" (குறு-92)
இஃது இரங்கனிமித்தம்.
--------------
* அகநானூறு- 94.
"தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது
சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பற்றக் கால்" (கலி-69)
இஃது ஊடல்.
*"பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடைகரை வேழம் வெண்பூப் பகருந்
தண்டுரை யூரன் பெண்டிர்
†துஞ்சும் யாமத்துந் துயிலறி யலரே" (ஐங்குறு-13)
இஃது ஊடனிமித்தம்.
பிறவும் வேறுபட வருவனெல்லாம் அறிந்து இதன்கண் அடக்கிக்கொள்க. (14)
-------------
15
- கொண்டுதலைக் கழியினும் பிரிந்தவ ணிரங்கினும்
உண்டென மொழிப ஓரிடத் தான.
இது முற்கூறிய ஐந்தனுட் பாலைக்கட் குறிஞ்சி மயங்குமாறும் நெய்தன்மயங்குமாறுங் கூறுகின்றது.
(இ-ள்) கொண்டு தலைக்கழியினும்- தலைவன் தலைவியை உடன்கொண்டு அவள் தமரிடத்து நின்று பிரியினும்; பிரிந்து அவண் இரங்கினும்- தலைவன் உடன்கொண்டு போகாது தானே போதலில் தலைவி மனையின்கண் இருந்து இரங்கினும்; ஓரிடத்தான- இவ்விரண்டும் ஓரிடத்தின் கண்ணே ஓரொழுக்கமாயின; உண்டென மொழிப- இவ்வொழுக்கந்தான் நான்கு வருணத்திலும் வேளாண் வருணத்திற்கு உண்டென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
கொண்டு தலைக்கழிதலால் இடையூரின்றிப் புணர்ச்சி நிகழுமெனினும், பிரிவு நிகழ்ந்தவா றென்னையெனின்,
"இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்தி" (தொல்-பொருள்-41)
என மேலே கூறுவாராதலிற் றந்தையுந் தன்னையருந் தேடிப் பின் வந்து இவரொழுக்கத்திற்கு இடையூறு செய்வரென்னுங் கருத்தே இருவருள்ளத்தும் பெரும்பான்மை நிகழ்தலிற் பிரிவுநிகழ்ந்த வாறாயிற்று. ஆகவே பாலைக்கண்ணே குறிஞ்சி நிகழ்ந்ததாயிற்ற.
------------------
(பாடம்) * 'புரியுடை', 'புரிவுடை' † 'துஞ்சூர் யாமத்தும்'
உதாரணம்:--
"வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
நறைவாய் வாடல் நாறு நாட்சுரம்.
அரியார் சிலம்பிற் சீறடி சிவப்ப
எம்மொ டொராறு படீஇயர் யாழநின்
பொம்ம லோதி பொதுள வாரி
அரும்பற மலர்ந்த வாய்பூ மராஅத்துச்
சுரும்புசூ ழலரி தைஇ வேய்ந்தநின்
தேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக்கும்
வண்டுகடிந் தோம்பல் தேற்றாய் அணிகொள
நுண்கோ லெல்வளை தெளிர்க்கும் முன்கை
மெல்லிறைப் பணைத்தோள் விளங்க வீசி
வல்லுவை மன்னால் நடையே கள்வர்
பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார்
மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்து
நாரரை மருங்கின் நீர்வரப் பொளித்துக்
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட் டாகுந்
துன்புறு தகுந ஆங்கண் புன்கோட்டு
அரிலிவர் புற்றத் தல்கிரை நசைஇ
வெள்ளரா மிளிர வாங்கும்
பிள்ளை யெண்கின் மலைவயி னானே" (அகம்- 257)
இது கொண்டு தலைக்கழிதற்கண் தலைவன் நடையை வியந்தது. இஃது அகம். "அழிவிலர் முயலும்"* என்பது பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது.
இனித் தலைவி பிரிந்திருந்து மிகவும் இரங்குதலின் இரங்கினுமெனச் சூத்திரஞ்செய்தான், அதனானே பாலைப்பொருட்கண் இரங்கற்பொருள் நிகழுமென்றான்,
உதாரணம்:--
"ஓங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன
ஊன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை
மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்
பொறிகிள ருழுவைப் பேழ்வா யேற்றை
யறுகோட் டுழைமான் ஆண்குர லோர்க்கும்
நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே பலபுலந்
துண்ணா வுயக்கமொ டுயிர்செலச் சாஅய்த்
தோளுந் தொல்கவின் றொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி
மருந்துபிறி தின்மையின் இருந்துவினை யிலனே" (அகம்-147)
----------------
* நற்றிணை-9
இதனுள் வெள்ளிவீதியைப்போலச் செல்லத்துணிந்தியான் பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்து ஓரிடத்தினின்றும் பிரிந்த பெயர்வுக்குத் தோணலந்தொலைய உயிர்செலச் சாஅய் இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடுபற்றி யுணர்க. இஃதும் அகம்.
"வானமூர்ந்த'* என்னும் அகப்பாட்டினுண் "மெய்புகுவன்ன கைகவர் முயக்க-மவரும் பெறுகுவர் மன்னே" எனக் கூறி, அழுதன் மேவாவாய்க் கண்ணுந் துயிலுமென இரக்கமீக் கூறியாவாறு முணர்க. "குன்றியன்ன' + என்னும் அகப்பாட்டும் அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன. இங்ஙனம் இச்சூத்திரவிதி உண்மையிற் சான்றோர் அகத்தினுங் கலியினும் ஐங்குறு நூற்றினும் பாலைக்கண்ணே உடன்போக்கு நிகழ்ந்த செய்யுட்களைக் கோத்தாரென் றுணர்க.
இல்லிருந்து செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற் கொண்டுதலைக்கழிதல் அவர்க்கு உரியதாயிற்று. ஒழிந்த மூன்று வருணத்தோருந் தமக்கு உரிய பிரிவின்கட் செந்தீயோம்புவாரை நாட்டிப் பிரிப; ஆகலான், அவர்க்கு ஏனைப் பிரிவுகள் அமைந்தன. இதனைக் "கொடுப்போ ரின்றியுங் கரணமுண்டே" ++ எனக் கற்பியலிற் கரணம் வேறாகக் கூறுமாறு ஆண்டுணர்க. "வேர் முழுதுலறிநின்ற"& என்னும் மணிமிடைபவளத்துட் "கூழுடைத் தந்தை யிடனுடை வரைப்பி, னூழடி யொதுங்கினு முயங்கும்" எனவுங் "கிளியும்பந்தும்"@ என்னும் களிற்றியானை நிரையுள் $ "அல்குபத மிகுத்த கடியுடை வியனகர்" எனவும், நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண் வருணமென்பது
பெற்றாம். (15)
-----------
16.
- கலந்த பொழுதும் காட்சியும் அன்ன.
இதுவும் பாலைக்கட் குறிஞ்சி மயங்கு மென்கின்றது.
(இ - ள்.) கலந்த பொழுதும் காட்சியும் - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலமும் அதன் முன்னர்த்தாகிய வழிநிலைக் காட்சி நிகழ்ந்த காலமும்; அன்ன - முன்னர்ச்சூத்திரத்துட் கொண்டுதலைக் கழிந்த காலத்தை உடைய என்றவாறு.
என்றது, முன்னர்க் குறிஞ்சி பாலைக்குரிய இருவகை வேனிற்கண் நிகழ்ந்தாற்போல இவையும் இருவகை வேனிற் கண் நிகழுமென்றவாறு. மழைகூர் காலத்துப் புறம்போந்து வினையாடுதலின்மையின் எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாகல.ானும், அதுதான் இன்பஞ் செய்யாமையானும் இருவகை வேனிற் காலத்தும் இயற்கைப்புணர்ச்சி நிகழுமென்றது இச்சூத்திரம்.
-----------------------
* அகம் - 11. + அகம்-133. ++ தொல்-பொருள்-143.
& அகம்-145. @ அகம்-46. $ (பாடம்) 'மல்குபதம்.'
முன்னர்க் கூதிரும் யாமமும் முன்பனியுஞ் சிறந்ததென்றது, இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்க் களவொழுக்கம் நிகழ்தற்குக் கால மென்றுணர்க.
அது,
"பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே" (குறு- 72)
என வரும்.
இக்குறுந்தொகையுட் குரீஇயோப்புவாள் கண்ணென வழி நிலைக் காட்சியைப் பாங்கற்குக் கூறினமையின் அத்தினைக்கதிர் முற்றுதற்கு உரிய இளவேனிலும் பகற்பொழுதுங் காட்சிக்கண் வந்தன. "கொங்குதேர் வாழ்க்கை" * என்பதும் இளவேனிலாயிற்று; தும்பி கொங்கு தேருங் காலம் அதுவாகலின். கலத்தலுங் காட்சியும் உடனிகழுமென் றுணர்க; கலத்தலின்றிக் காட்சி நிகழ்ந்ததேல், உள்ளப் புணர்ச்சியேயாய் மெய்யுறு புணர்ச்சியின்றி வரைந்துகொள்ளுமென்றுணர்க. (16)
----------
17
- முதலெனப் படுவ தாயிரு வகைத்தே.
இது முற்கூறிய முதற்பகுதியைத் தொகுத்து எழுதிணையும் இவ்வாற்றானுரிய வென்கின்றது.
(இ-ள்) முதல் எனப் படுவது-- முதலென்று கூறப்படும் நிலனும் பொழுதும்; அ இரு வகைத்து--அக்கூறியவாற்றான் இருவகைப்படும் யாண்டும் என்றவாறு.
இது 'கூறிற்றென்ற'† லென்னும் உத்திவகை. இதன்பயன் முதல் இரண்டுவகை என்றவாறாம். தமக்கென நிலனும் பொழுதும் இல்லாத கைக்கிளையும் பெருந்திணையும் நிலனில்லாத பாலையும் பிறமுதலொடு மயங்கிற்றேனும் அவை மயங்கிய நிலனும் பொழுதும் அவ்வத்திணைக்கு முதலெனப்படுமென்பதாம். இது முன்னின்ற சூத்திரத்திற்கும் ஒக்கும். (17)
---------------
* குறுந்தொகை- 2. † தொல்- பொருள்- 665
----------------
18
- தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவுங் கருவென மொழிப.
இது நிறுத்தமுறையானேயன்றி அதிகாரப்பட்டமையின் உரிப்பொருள் கூறி ஒழிந்த கருப்பொருள் கூறுதனுதலிற்று.
(இ-ள்) தெய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ-- எல்லாத் திணைக்குந் தெய்வம் உணா விலங்கு மரம் புள்ளுப் பறை தொழிலென்று இவற்றை யாழின் கூற்றோடே கூட்டி; அவ்வகை பிறவும் கரு என மொழிப-- அவைபோல்வன பிறவுங் கருவென்று கூறுவா ஆசிரியர் எ-று.
யாழின்பகுதிஎன்றதனான் மற்றையபோலாது பாலைக்குப் பாலை யாழென வேறு வருதல் கொள்க. 'அவ்வகை பிறவும்' என்றதனான் எடுத்தோதிய தெய்வம் ஒழிய அவற்று உட் பகுதியாகிய தெய்வமும் உள; அவை 'மாயோன்மேய'* என் புழிக் காட்டினாம். இதனானே பாலைக்குத் தெய்வமும் இன்றாயிற்று. இன்னும் 'அவ்வகை' என்றதனானே பாலைக்கு நிலம் பற்றாது காலம்பற்றிக் கருப்பொருள் வருங்காற் றம்மியல்பு திரியவருவனவும் வருமென்று கொள்க. 'எந்நில மருங்கிற் பூ' என்பதனாற் பூவும் பள்ளும் வரைவின்றி மயங்குமெனவே ஒழிந்த கருவும் மயங்குமென்பது 'சூத்திரத்துப் பொருளன்றியும்'† என்பதனான் உரையிற்கொள்க. அது "அலர்ந்திகழ் நறுங்கொன்றை"‡ என்னும் நெய்தற்கலியுட் காண்க.
முல்லைக்கு உணா, வரகுஞ் சாமையும் முதிரையும்; மா, உழையும் புல்வாயும் முயலும்; மரம், கொன்றையுங் குருந்தும்; புள், கானக்கோழியுஞ் சிவலும்; பறை, ஏறுகோட்பறை; செய்தி, நிரை மேய்த்தலும் வரகுமுதலியன களைகட்டலும் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ். பிறவுமென்றதனால், பூ, முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும்; நீர் கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும்.
குறிஞ்சிக்கு உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யானையுங் கரடியும் பன்றியும்; மரம் அகிலும் ஆர முந் தேக்குந் திமிசும் வேங்கையும் ; புள் கிளியும் மயிலும்; பறை முருகியமுந் தொண்டகப்பறையும்; செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினைமுதலியன விளைத்தலுங் கிளிகடிதலும்; யாழ், குறிஞ்சியாழ். பிறவுமென்றதனால், பூ காந்தளும் வேங் கையுஞ் சுனைக்குவளையும்; நீர், அருவியுஞ் சுனையும்; ஊர், சிறு குடியுங் குறிச்சியும்.
--------------------
* தொல்-பொருள்-5. † தொல்-பொருள்- 658. ‡ கலித்தொகை- 150
மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்; மா, எருமையும் நீர்நாயும்; மரம் வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள் தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுழவும் நெல்லரிகிணையும்; செய்தி, நடுதலுங் களைகட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ், மருதயாழ் பிறவுமென்றதனால், பூ, தாமரையுங் கழுநீரும்; நீர், யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், ஊர்க ளென்பனவேயாம்.
நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண் பகடு போல்வன; முதலையுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று. மரம், புன்னையும் ஞாழலுங் கண்டலும்; புள், அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன்கோட்பறை; செய்தி, மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும் அவை விற்றலும்; யாழ், நெய்தல்யாழ்; பிறவுமென்றதனால், பூ, கைதையும் நெய்தலும்; நீர், மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும்.
இனிப் பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறை கொண்டனவும்; மா, வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றின இருப்பையும் ஓமையும் உழிஞையும் ஞெமையும்; புள், கழுகும், பருந்தும் புறாவும்; பறை, சூறைகோட்பறையும் நிரை கோட்பறையும்; செய்தி, ஆறலைத்தலுஞ் சூறைகோடலும்; யாழ், பாலையாழ். பிறவுமென்றதனால்; பூ, மராவுங் குராவும் பாதிரியும்; நீர், அறுநீர்க்கூவலுஞ் சுனையும்; ஊர், பறந்தலை.
இன்னும் பிறவு மென்றதனானே இக் கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. 'அவை பெயரும் வினையும்'* என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். பிறவு மென்றதனாற் கொள்வன, சிறுபான்மை திரிவுபடுதலிற், பிறவுமென்று அடக்கினார். (18)
- --------------
* தொல்-பொருள்- 20
---------
19
- எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்.
இது முற்கூறிய கருப்பொருட்குப் புறனடை.
(இ-ள்.) எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் - எழுதிணை நிகழ்ச்சியவாகிய நால்வகை நிலத்துப் பயின்ற பூவும் புள்ளும்; அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் - தத்தமக்கு உரியவாகக் கூறிய நிலத்தொடுங் காலத்தொடும் நடவாமற் பிற நிலத் தொடுங் காலத்தொடும் நடப்பினும்; வந்த நிலத்தின் பயத்த ஆகும் - அவை வந்த நிலத்திற்குக் கருப்பொருளாம். எ-று.
ஒடு அதனோடியைந்த ஒருவினைக்கிளவியாதலின் உடன் சேறல் பெரும்பான்மையாயிற்று. 'வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தின்'@ என்பதனான் நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலமென்று அடக்கினார். பூவைக் கருவென ஓதிற்றிலரேனும் முற்கூறிய மரத்திற்குச் சினையாய் அடங்கிற்று. ஒன்றென முடித்தலான் நீர்ப்பூ முதலியனவும் அடங்கும். இங்ஙனம் வருமிடஞ் செய்யுளிடமாயிற்று.
உதாரணம்:-
"தாமரைக் கண்ணியைத் தண்ணநறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்," (கலி-52)
இது மருதத்துப்பூ, குறிஞ்சிக்கண் வந்தது.
"'உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல
விடைகொண்டி யாமிரப்பவு மெமகொள்ளா யாயினை
கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை
யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன." (கலி-3)
இது மருதத்துப்பூ, பாலைக்கண் வந்தது.
"கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத்
தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க
வொன்னாதார்க் கடந்து அடூஉ முரவுநீர் மாகொன்ற
வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்" (கலி-27)
இது குறிஞ்சிக்குப் பயின்ற மயில் பாலைக்கண் இளவேனிற் கண் வருதலிற் பொழுதொடு புள்ளு மயங்கிற்று. கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியில் (பத்- குறிஞ்சிப்பாட்டு) வரைவின்றிப் பூமயங்கியவாறு காண்க. பிறவும் இவ்வாறு மயங்குதல் காண்க. ஒன்றென முடித்தலாற் பிற கருப்பொருண் மயங்குவன உளவேனுங் கொள்க. (19)
---------------
@தொல்-சொல்-81.
20.
- பெயரும் வினையுமென் றாயிரு வகைய
திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே.
இது 'பிறவு'* மென்றதனாற் றழுவிய பெயர்ப்பகுதி கூறுகின்றது.
(இ - ள்.) திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயர் - நால்வகை நிலத்தும் மரீஇப்போந்த குலப்பெயருந் திணைநிலைப் பெயரும் உரிப்பொருளிலே நிற்றலையுடைய பெயரும் வினைப்பெயருமென்று அவ்விரண்டு கூற்றையுடையவாம் எ - று.
நால்வகை நிலத்தும் மருவிய குலப்பெயராவன் :- குறிஞ்சிக்குக் கானவர் வேட்டுவர் இறவுளர் குன்றுவர் வேட்டுவித்தியர் குறத்தியர் குன்றுவித்தியர்; ஏனைப் பெண்பெயர் வருமேனும் உணர்க. முல்லைக்குக் கோவலர் இடையர் ஆயர் பொதுவர் இடைச்சியர் கோவித்தியர் ஆய்ச்சியர் பொதுவியர். நெய்தற்கு நுளையர் திமிலர் பரதவர் நுளைத்தியர் பரத்தியர்; ஏனைப் பெண் பெயர் வருமேனும் உணர்க. மருதத்திற்குக் களமர் உழவர் கடையர் உழத்தியர் கடைச்சியர்; ஏனைப் பெண்பெயர் வருமேனும் உணர்க.
முன்னர் 'வந்த நிலத்தின்பயத்த'+ என்புழிக் காலத்தையும் உடன்கோடலின் ஈண்டுந் திணைதொறு மருவுதலும் பொழு தொடு மருவுதலும் பெறப்படுதலிற் பொழுது முதலாக் வரும் பாலைக்குத் திணைதொறு மரீஇய பெயருந் திணைநிலைப்பெயருங் கொள்க. எயினர் எயிற்றியர் மறவர் மறத்தியர் எனவும் மீளிவிடலை காளை எனவும் வரும்.
இனி, உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயராவன, பெயர்ப் பெயரும் நாட்டாட்சிபற்றிவரும் பெயருமாம். குறிச்சிக்கு வெற்பன் சிலம்பன் பொருப்பன், கொடிச்சி; இஃது ஆண்பாற் கேலாத பெயராயினும் நிலை யென்றதனாற் கொள்க. முல்லைக்கு அண்ணல் தோன்றல் குறும்பொறைநாடன், மனைவி. நெய்தற்குக் கொண்கன் துறைவன் சேர்ப்பன் மெல்லம்புலம்பன். தலைவிபெயர் வந்துழிக் காண்க. மருதத்திற்கு மகிழ்நன் ஊரன், மனையோள் எனவரும். இக் காட்டிய இருவகையினும் பெயர்ப் பெயரும் வினைப்பெயரும் பாடலுட் பயின்ற வகையாற் பொருணோக்கியுணர்க.
ஈண்டுக் கூறிய திணைநிலைப்பெயரை 'ஏவன் மரபின்'++ என்னுஞ் சூத்திரத்து அறுவகையரெனப் பகுப்புமாறு ஆண்டுணர்க. (20)
- -----------------
* தொல்-பொருள்-19. + தொல்-பொருள்-24. ++ தொல்-புருள்-18.
21.
- ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉங் கிழவரும் உளரே.
இது முன்னர் திணைதொறுமரீஇய பெயருடையோரிலுந் திணைநிலைப்பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரென முல்லைக்குங் குறிஞ்சிக்கும் எய்தாத-தெய்துவித்தது.
(இ - ள்.) ஆடூஉத் திணைப்பெயர் - முற்கூறிய ஆண்மக்களாகிய திணைதொறு மரீஇய பெயர்களுள்; ஆயர் வேட்டுவர் வரூஉங் கியவரும் உளர் - ஆயரிலும் வேட்டுவரிலும் வருங்கியவரும் உளர்; ஆ வயின் (வரூஉங் கிழவியிரும் உளர்)-அவுவிடத்து வருந் தலைவியரும் உளர் எ-று.
ஆயர் வேட்டுவரென்உம் இரண்டு பெயரே எடுத்தோதினாரேனும் ஒன்றென முடித்தலான் அந்நிலங்கட்கு உரிய ஏனைய பெயர்களான் வருவனுவுங் கொள்க.
"தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந்
தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த
பூங்கரை நிலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு
முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம்
புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா
மொருங்கு விளையாட வவ்வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன் மற்றென்னை
முற்றிழை யேஏர் மடநல்லாய் நீயாடுஞ்
சிற்றில் புனைகோ சிறிதென்ற னெல்லாநீ
பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய்
கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய்
தாதுசூழ் கூந்த றகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ
யேதிலார் தந்தபூக் கொள்வாய் * நனிமிகப்
பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா
யைய பிதிர்ந்த சுணங்ஙணி மென்முலைமேற்
றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர்
செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது
மையலை மாதோ விடுகென்றேன் றையலாய்
சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப
வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ
யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும்
யாயு மறிய வுரைத்தியின் யானுற்ற
நோயுங் களைகுவை மன்." (கலி-111)
"ஆயர் மகனையுங் காதலை கைம்மிக
ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ
நீயுற்ற நோய்க்கு மருந்து." (கலி-107)
-------------------
(பாடம்) * 'இனிமிக.'
"தோழிநாங்
காணாமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர
நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக்
கரந்தூஉங் கைகொடு கோட்பட்டாங் கண்டாய்நம்
புல்லினத் தாயர் மகன்." (கலி-115)
என்றாற் போல்வன பிறவும் வருவன கொள்க.
இன்னும் "ஏனலு மிறங்குகதி ரிறுத்தன" * என்னும் அகப் பாட்டினுள் "வானிணப் புகவிற் கானவர் தங்கை" எனவும், "மெய்யிற்றீரா" + என்பதனுள் "வேட்டுவற் பெறலோடமைந்தனை" எனவும் வருவனவும் பிறவுங் கொள்க; வேட்டு என்னுந் தொழிலூடையானை வேட்டுவனென்றலிற் குறிப்பு வினைப் பெயர்.
"குன்றக் குறவன் காதன் மடமகள்
வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி
வளையண் ++ முலைவா ளெயிற்ற
ளிளைய ளாயினு $மாரணங் கினளே." (ஐங்குறு-256)
இது வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது. இப்பத்தினுட் 'குறவன் மகள்' எனக் கூறுவன பல பாட்டுக்கள் உள; அவையுங் கொள்க. இவ்வாற்றான் இந் நிலத்து மக்கள்பெயரும் பெற்றாம். ஏனைய பெயர்களில் வந்தனவுளவேற் கொள்க. (21)
-------------
22.
- ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை
ஆனா வகைய திணை நிலைப் பெயரே.
இது முல்லையுங் குறிஞ்சியும் ஒழிந்தவற்றுள் திணைதொறு மரீஇய பெயருடையோரிலுந் திணை நிலைப் பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரென எய்தாத தெய்துவித்தது.
(இ - ள்.) ஏனோர் பாங்கினுந் திணை நிலைப்பெயர் எண்ணுங் காலை-ஒழிந்த பாலைக்கும் நெய்தற்கும் உரியராகக் கூறிய மக்கள் கூற்றினும் வருந் தலைமக்கள் பெயரை ஆராயுங்காலத்து; ஆனா வகைய-அவை பெரும்பான்மையாகிய கூறுபாட்டினையுடைய என்றவாறு.
----------------------
(பாடம்) * அகம்-131. 'ஏனலு மிறங்கு குரலிறுத்தன.'
+ அகம்-28. ++ 'முளைவாய் வாளெயிற் றிளையள்' எனவும் 'முளைவா யெயிற்றள்.' $ 'மன்னணங்கினளே.'
உதாரணம் :-
"சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
@கொலைவி லெயினர் தங்கைநின் முலைய
சுணங்கென *நினைதி நீயே
யணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே." (ஐங்குறு- 393)
@'கொலைவல் லெயினர்.'
இவ் வைங்குறுநூறு உடன்போகின்றான் நலம்பாராட்டிய கூற்றாம்.
"முளவுமா வல்சி யெயினர் தங்கை
யிளமா வெயிற்றிக்கு #நின்னிலை யறியச்
சொல்லினே னிரக்கு மளவை
வென்வேல் விடலை விரையா தீமே."(ஐங்குறு- 394)
இவ் வைங்குறுநூறு கொண்டுபோங் காலத்திற்குக் கொண்டுடன்போக் கொருப்படுத்துவ லென்றது.
"கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
$நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பு
&நலமா ணெயிற்றி போலப் பலமிக
நன்னல நயவர வுடையை
யென்னோற் றனையோ மாவின் றளிரே." (ஐங்குறு- 395)
இவ் வைங்குறுநூறு வரைவிடைவைத்துப்போகின்றான் மாவினை நோக்கிக் கூறியது. +ஏனைப்பெயர்களில் வருவன வந்துழிக் காண்க.
"முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ்கழி யிறவன்
கணங்கொள் குப்பை யுணங்குதிற நோக்கிப்
புன்னையங் கொழுநிழன் முன்னுய்த்துப் பரப்புந்
துறைகனி யிருந்த பாக்கமு முறைநனி
யினிதும னளிதோ தானே துனிதீர்ந்
தகன்ற வல்கு லைதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகண்
மானேர் நோக்கங் காணா வூங்கே." (நற்றிணை -101)
இது வரைதற் பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி சிறைப்புறமாகக் கூறியது.
"அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
யிதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச
மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉங் கான லானே." (குறுந் -184)
-----------
(பாடம்) *’நினைத்தி.’ #‘மிநநிலை.’ $‘நிணவூண்வல்சி.’
&‘அலமர லெயிற்றி போல நலமிக.’
+‘ஏனைப் பெயர்க்கண்.’
இது கழறிய பாங்கற்குக் கூறியது.
"கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும்
.... ..... .....
என்னென நினையுங்கொல் பரதவர் மகளே" (நற்றிணை-349)
என வரும். இது நற்றிணை.
"இவளே- கான நண்ணிய"* என்னும் நற்றிணைப் பாட்டினுட் "கடுந்தேர்ச் செல்வர் காதன் மகனே."† என்று அவனருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக்குறிப்பாற்
றலைமையாகக் கூறினான். ‡ஏனைப் பெண்பெயர்க்கண் வருவனவும் வந்துழிக் காண்க.
"ஏனோர் பாங்கினும்" எனப் பொதுப்படக்கூறிய அதனான் மருத நிலத்து மக்களுட் டலைமக்கள் உளராகப் புலனெறி வழக்கஞ் செய்த செய்யுட்கள் வந்தன உளவேற் கண்டு கொள்க. (22)
-------------
23
- அடியோர் பாங்கினும் வினைவல பாங்கினுங்
கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்.
இது மேல் நால்வகை நிலத்து மக்களுந் தலைமக்களாகப் பெறுவரென்றார். அவரேயன்றி இவருந் தலைமக்களாகுப கைக்கிளை பெருந்திணைக்க ணென்கின்றது.
(இ-ள்) அடியோர் பாங்கினும்- பிறர்க்குக் குற்றேவல் செய்வோரிடத்தும்; வினை வல பாங்கினும்- பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோரிடத்தும்; கடி வரையில புறத்து என்மனார் புலவர்- தலைமக்களாக நாட்டிச் செய்யுட்செய்தல் நீக்கப் படாது நடுவணைந்திணைப் புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் என்றவாறு,
கூன்பாட்டினுள்,
"நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா
முசாவுவங் கோனடி தொட் டேன்" (கலி-94)
எனவும்,.
-------------
(பாடம்) *நற்றிணை- 45. † 'என்றது அருமைசெய் தயர்த்தலின்' ‡ 'எனைப் பெயர்க்கண்'
"பேயும் பேயுந் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டோர் நகாமை வேண்டுவல்" (கலி-94)
எனவும் பெருந்திணைக்கண் அடியோர் தலைவராக வந்தது. என்னை? கோன் அடிதொட்டேன் என்றமையானும் கோயில் என்றமையானும் இவர்கள் குற்றேவன்மாக்க ளாயிற்று.
"ஏஎயிஃதொத்தன் " என்னும் குறிஞ்சிக்கலியுள்,
"போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயி னல்லது நீர்க்கினிதென்
றுண்பவோ நீருண் பவர்" (கலி-62)
தீயகாமம் இழிந்தோர்க்குரிமையின், இதுவும் அடியோர் தலைவராக வந்த கைக்கிளை. அடியோரெனவே இருபாற்றலைமக்களும் அடங்கிற்று. கடிவரையில என்றதனான் அவருட்பரத்தையரும் உளரென்று கொள்க.
"இகல்வேந்தன்" என்னும் முல்லைக்கலியுள்,
"மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ
ராயனை யல்லை *பிறவோ வமரருண்
ஞாயிற்றுப் புத்தேண் மகன்" (கலி.-108)
என்பதனாற் றலைவன் வினைவல †பாங்கனாயினவாறு காண்க. இதனுள்,
"புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ
வினத்துளா ‡னெந்தைக்குக் கலத்தொடு செல்வதோ
தினைக்காலுள் யாய்வி்ட்ட கன்றுமேய்க் கிற்பதோ" (கலி-108)
என்றவழி எமரேவலான் யாஞ் செய்வதன்றி யாங்கள் ஏவ நென்னெஞ்சம் இத்தொழில்கள் செய்கின்றனவில்லை என்றலின் வினைவல பாங்கினாளாய தலைவிகூற்றாயிற்று.
"யாரிவன்" என்னும் முல்லைக்கலியுள்,
"வழங்காப் பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போல்
வழங்க லறிவா ருரையாரே லெம்மை
யிகழ்ந்தாரே யன்றோ வெமர்" (கலி-112)
இதுவும் வினைவலபாங்கினளாய தலைவியை நோக்கி அத்தலைவன் கூறினது.
---------
(பாடம்) * பிறவோரமரருள் † 'பாங்காயினவாறு' ‡ 'என்னைக்கு'
"நலமிக நந்திய" என்னும் முல்லைக்கலியுள்,
"பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழி
லல்க லகலறை யாயமொ டாடி
முல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்லை
யிரவுற்ற தின்னுங் கழிப்பி.
யரவுற்றுருமி னதிருங் குரல்போற் பொருமுர
ணல்லேறு நாகுட னின்றன
பல்லா னினநிரை நாமுடன் செலற்கே." (கலி-113)
இது தாழ்த்துப் போதற்குத் தலைமையின்றிக் கடிதிற் போகல் வேண்டுமென்றமையானும், நல்லேறும் நாகும்போல் நாமுங் கூடப் போகல் வேண்டுமென்றமையானுந், தலைவன் வினைவல பாங்கினனாயிற்றென்க. வினைவல்லானென்னாது பாங்கி னென்றதனாற் றமரேவல் செய்வது பெறுதும். இஃது அவ்வந் நிலத்து இழிந்தோர்க்கு எஞ்ஞான்றுந் தொழிலேயாய் நிகழு மென்றும், புனங்காவலும் படுபுள்ளோப்புதலும் இவ்வாறன்றி உயர்ந்தோர் விளையாட்டாகி இயற்கைப்புணர்ச்சிப்பின்னர்ச் சின்னாளிற் றவிர்வரென்றும் வேறுபாடுணர்க,. இக்கூறிய இருதிறத்தோருந் தமக்கு உரியரன்மையான் அறம்பொருளின்பம் வழாமை நிகழ்த்துதல் அவர்க்கரிதென்பது பற்றி இவற்றை அகப்புறமென்றார். (23)
---------------
24
- ஏவல் மரபின் ஏனோரும் உரியர்
ஆகிய நிலைமை யவரும் அன்னர்.
இது முன்னர்ப் 'பெயரும் வினையும்' என்பதனுள் திணை தொறுமரீஇய பெயருந் திணைநிலைப்பெயருமெனப் பகுத்த இரண்டனுள் திணைதொறுமரீஇய பெயருட் டலைவராதற் குரியாரை அதிகாரப்பட்டமையிற் கூறி, அங்ஙனந் தலைவராதற் குரிமையின் அடியோரையும் வினைவலபாங்கினோரையும் அதன்பிற்கூறிப், பின்னர்நின்ற திணைநிலைப்பெயராதற்குச் சிறந்தார் அறுவகையரெனப் பகுக்கின்றது.
(இ-ள்) மரபின்- வேதநூலுட்கூறிய இலக்கணத்தானே; ஏவல் ஆகிய நிலைமையவரும்- பிறரை ஏவிக்கொள்ளுந் தொழில் தமக்குளதாகிய தன்மையையுடைய அந்தணர் அரசர் வாணி கரும்; அன்னர் ஆகிய அவரும்- அம்மூவரையும்போற் பிறரை ஏவிக்கொள்ளுந் தன்மையராகிய குறுநிலமன்னரும் அரசராற் சிறப்புப்பெற்றோரும்; ஏனோரும் - நால்வகை வருணமென்று *எண்ணிய வகையினால் ஒழிந்து நின்ற வேளாளரும்; உரியர்- உரிப்பொருட் டலைவராதற்கு உரியர் என்றவாறு.
ஆகிய என்பதனை ஏவலொடும் அன்னரொடுங் கூட்டுக.
எனவே, திணைநிலைப் பெயர் அறுவகையாயிற்று. † வேந்து விடு தொழிலிற்....பொருள்' என்பதனான் வேளாளரே அரசராற் சிறப்புச்செய்யப் பெறுவரென்றுணர்க. இனி ‡ வில்லும் வேலுங் கழலு..................முரிய" என்பதனான் என்னோருஞ் சிறுபான்மை சிறப்புப் பெறுவரென் றுணர்க. உரிப்பொருட்டலைவர் இவரேயாதலைத் தான் மேற் பிரிவிற்குக் கூறுகின்றவற்றானும் உணர்க.
------------
(பாடம்) * 'எண்ணி யொழிந்து நின்ற' † தொல்-பொருள்-மர-81.
‡ தொல்-பொருள்-மர-83
"தாமரைக் கண்ணியைத் தண் ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
'மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ
மணங்கு எனஅஞ்சுவர் சிறுகுடி யோரே;
ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை." (கலி-52)
என வரும்.
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டலி
னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே." (குறுந்-167)
இது குறுந்தொகை. இது பார்ப்பானையும் பார்ப்பினியையுந் தலைவராகக் கூறியது, கடிமனைச் சென்ற செவிலி கூற்றுவாயினேர் வித்தலுமாம்.
"வருதும் என்ற நாளும் பொய்த்தன
அரியே ருண்கண் நீரும் நில்லா
தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை
பெய்வனப் பிழந்த கதுப்பும் உள்ளார்
அருள்கண் மாறலோ மாறுக அந்தில்
அறனஞ் சலரே ஆயிழை நமரெனச்
சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும்
பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு
துனிதீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குவள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறெழுந்து முழங்கினு மாறெழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்
போர்வேட் டெழுந்த மன்னர் கையதை
கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி
மானடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப
அமரோர்த் # தட்ட செல்வந்
தமர்விரைந் துரைப்பக் கேட்கும் ஞான்றே." (அகம்.144)
மீண்டவன் நெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது. இம் மணிமிடைபவளத்து வேந்தன் தலைவனாயின வாறுந்தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்க செல்வமாகக் கருதுதற்குரியாள் அரசவருணத்திற் றலைவியே என்பதூஉம் உணர்க.
------
(பாடம்) # 'அமரொறுத்தட்ட.' 'அமரேர்த்தட்ட'
"பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ." (கலி-31)
இதனுள் வேந்தன் தலைவனாயினவாறும் பகைகொண்ட தலைமையின் அழகை நுகர விரும்பினாள் என்றலிற் றலைவியும் அவ்வருணத்தாளாயவாறும் உணர்க. "உலகுகிளர்ந்தன்ன"* என்னும் அகப்பாட்டுள் வாணிகன் தலவனாகவுங் கொள்ளக் கிடத்தலிற் றலைவியும் அவ்வருணத் தலைவியா மென்றுணர்க.
"தடமருப் பெருமை மடநடைக் குழவி
தூண்டோறும் யாத்த காண்டகு நல்லிற்
கொடுங்குழை பெய்த† செழுஞ்செய் பேதை
சிறுதாட் செறித்த மெல்விரல் சேப்ப
வாழை‡ யீர்ந் தடி வல்லிதின் வகைஇப்
புகையுண் டமர்த்த கண்ண டகைபெறப்
பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்விய
ரந்துகிற் றலையிற் றுடையின ணப்புலந்
தட்டிலோளே யம்மா வரிவை
யெமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று
சிறியமுள் ளெயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே." (நற்றினை-120)
விருந்தொடு புக்கோன் கூற்று. செவிலிகூற்றுமாம். இந்நற்றிணை வாழை§ யீர்ந்தடிவகைஇ என்றலின் வேளான்வருணமாயிற்று.
"மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய வேமுறு காலை
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந் திருந்த அருமுனை இயவில்
சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த வலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்
அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே." (அகம்-84)
------------
*அகம்-255 . (பாடம்) †கொழுஞ்செம்பேழை." ‡வாளை . §வாளை.
இது தூதுகண்டு வருந்திக் கூறியது. இக் களிற்றியானை நிரையுட் டன்னூரும் அருமுனையியவிற் சீறூர் என்றலிற் றான் குறுநில மன்னனென்பது பெற்றாம்.
"அகலிருவிசும்பகம்" என்னும் அகப்பாட்டும் பொருணோக்கினால் இதுவேயாமா றுணர்க.
"இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்
தொருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ்
செல்வ முடையோர்க்கு நின்றன்று விறலெனப்
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வே மாதல் அறியாள் முல்லை
நேர்கால் முதுகொடி குழைப்ப நீர்சொரிந்து
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறுங் கையற் றொடுங்கிநப் புலந்து
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்கா குவள்கொ றானே வேங்கை
ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள
ஆகத் தரும்பிய மாசறு சுணங்கினள்
நன்மணல் வியலிடை நடந்த
சின்மெல் லொதுக்கின் மாஅ யோளே." (அகம்- 174)
இது மீள்வான் நெஞ்சிற் குரைத்தது.
இதனுட் "பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வே" மென்றலின் அரசனாற் சிறப்புப்பெற்ற தலைவனாயிற்று, இன்னுஞ் சான்றோர் செய்யுட்களுள் இங்ஙனம் வருவனவற்றை அவற்றின் பொருணோக்கி உணர்க. (24)
------------
25.
- ஓதல் பகையே தூதிவை பிரிவே.
இத் துணையும் அகத்திற்குப் பொதுவாகிய முதல் கரு வுரிப்பொருளே கூறி இனி இருவகைக் கைகோளுக்கும் பொதுவாகிய பாலைத்திணை கூறிய †எழீஇயது.
(இ-ள்.) பிரிவே- பாலையென்னும் பிரிதற் பொருண்மை;
ஓதல் பகையே தூது இவை--ஓதற் பிரிதலும், பகைமேற்
பிரிதலும், பகைவரைச் சந்துசெய்தன் முதலிய தூதுற்றுப்
பிரிதலுமென மூன்றுவகைப்படும் என்றவாறு.
ஒரோவொன்றே அறமுந் துறக்கமும் பொருளும் பயத்தற் சிறப்புநோக்கி இவற்றை விதந்தோதினார். இவை யென்றதனை எடுத்தலோசையாற் கூறவே அறங்கருதாது அரசரேவலால் தூதிற்பிரிதலும்‡ போர்த்தொழில் புரியாது திறைகோடற்கு இடைநிலத்துப் பிரிதலுஞ் சிறப்பின்மை பெறுதும். அறங் கருதாது பொருள் ஈட்டுதற்குப் பிரிதலும் பொருள்வயிற் பிரிவிற்கு உண்மையின் இவற்றோடு ஓதாது பிற்
கூறினார். அந்தணர்க்குரிய ஓதலுந் தூதும் உடன்கூறிற்றிலர், பகைபிறந்தவழித் தூதுநிகழ்தலின். (25)
- ------------
*அகம்-214. (பாடம்) †'எழுந்தார்.' ‡ 'போர்த்தொழிற்குப் பிரியாது.'
-----------
26.
- அவற்றுள்
ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன.
இது முற்கூறியவற்றுள் அந்தணர் முதலிய மூவர்க்கும் இரண்டு பிரிவு *உரித்தென்கிறது.
(இ-ள்.) அவற்றுள்- அம்மூன்றனுள்; ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன - ஓதற்பிரிவுந் தூதிற்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன என்றவாறு.
எனவே ஒழிந்த பகைவயிற்பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.
உதாரணம் :--
"அரம்போ ழவ்வளை தோணிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங்கா ழன்ன அரும்புமுதி ரீங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவா லோதி மையணல் ஏய்ப்பத்
தாதுறு குவளைப் போது பிணியவிழப்
படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்
பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப்
பனியஅடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலைக்
கைதொழு மரபிற் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையு நன்பக லொழித்த
பீடில் மன்னர் போல
ஓடுவை மன்னால் வாடை நீ யெமக்கே." (அகம்-125)
---------
(பாடம்) *'உணர்த்துகின்றது.'
இதனுட் பலருங் கைதொழும் மரபினையுடைய கடவுட்டன்மை யமைந்த செய்வினையெனவே ஓதற்பிரிதலென்பது பெற்றாம். "சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே"* என்பதினாற் கிழவனுங் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றாக் கால் இறந்ததனாற் பயனின்றாதலின், இல்லறம் நிரம்பாதென்றற்கு நிரம்பாவாழ்க்கை யென்றார். இல்லறம் நிகழ்கின்ற காலத்தே மேல்வருந் துறவறம் நிகழ்த்துதற்காக அவற்றைக் கூறும் நூல்களையும் †கற்று அவற்றின் பின்னர்த் தத்துவங்களையுமுணர்ந்து மெய்யுணர்தல் அந்தணர் முதலிய மூவர்க்கும் வேண்டுதலின் ஓதற்பிரிவு அந்தணர் முதலியோர்க்கே சிறந்ததென்றார்.
"பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ" (கலி-15)
என்பதும் அது; மையற்ற படிவம் அந்தணர் முதலியோர் கண்ணதாதலின். "விருந்தின் மன்னர்" ‡என்னும் அகப்பாட்டில் வேந்தன் பகைமையைத் தான் தணிவித்தமை கூறலின் அந்தணன் தூதிற் பிரிந்தமை பெற்றாம். "வயலைக்கொடியின் வாடியமருங்குல்"§ என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூது சென்றவாறுணர்க. §§ அரசன் தூதுசேறல் பாரதத்து வாசுதேவன் தூதுசென்றவாற்றானுணர்க.
அது,
"படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே"
(சிலப். ஆய்ச்சியர்குரவை)
என்பதனானுணர்க. வாணிகன்சென்ற தூதும் வந்துழிக் காண்க. (26)
------------------
27
- தானே சேறலும் தன்னொடு சிவணிய
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.
இது பகைவயிற் பிரிவு அரசர்க்கே உரித்தென்கின்றது.
(இ-ள்) தானே சேறலும்- தன்பகைக்குத் தானே செல்லுதலும்; தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும்- அவனொடு நட்புக்கொண்ட ஒழிந்தோர் அவற்குத் துணையாகிச்
செல்லுதலுமாகிய இருபகுதியும்; வேந்தன் மேற்று- அரசன் கண்ணது என்றவாறு.
- ----------
(பாடம்) * தொல்-பொருள்-கற்பி-51. † 'கற்றபின்னர்'
‡ அகம் 54. § புறம். -305. §§ 'காண்க'
எனவே, வாணிகர்க்கு உரித்தன்றாயிற்று. தானேயென்று ஒருமை கூறிய அதனானே முடியுடைவேந்தர் தாமே சேறலும் ஏனோரெனப் பன்மைகூறிய அதனானே *பெரும்பான்மையுங் குறுநிலமன்னர் அவர்க்காகச் சேறலும், முடியுடைவேந்தர் அவர்க்காகச் சிறுபான்மை சேறலும் உணர்க. முடியுடை வேந்தர் உள்வழிக் குறுநில மன்னர் தாமே செல்லாமையுணர்க. இதனை " வேந்தற்குற்றுழி"† யென்ப ஏனையார். அவ்வேந்தர் இல்வழிக் குறுநிலம,ன்னருந் தாமே சேறல் "வேந்து வினையியற்கை"‡ என்பதன்கட் கூறுப இதனானே தன்பகைமேலும் பிறர் பகை மேலும் ஒருகாலத்திற் சேறலின்றென்றார்.
"கடும்புனல் கால்பட்டு" என்னும் பாலைக்கலியுண்,
"மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர்
தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ" (கலி-31)
எனவும்,
"பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்" (கலி-31)
எனவும் மண்கோடலுந் திறைகோடலும் அரசர்க்கே உரித்தாகக் கூறியது.
"நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே" (கலி-31)
எனச் சுரிதகத்துக் கூறியவாற்றா னுணர்க.
"பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி
யொருபெருங் காதலர் சென்றார்- வருவது
காணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கா
னீணகர் முன்றின்மே னின்று"
இது வேந்தர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது.
"கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் §பேஎர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே" (நற்றிணை-10)
-------------
- (பாடம்) * 'குறுநில மன்னர் அவர்க்காகச் சேறல் பெரும்பான்மையும் முடியுடை வேந்தர் அவர்க்காகச் சேறல் சிறுபான்மையு மெனவுணர்க.'
† இறையனாரகப்பொருள் சூத்திரம் 39: "வேந்தர்க் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென், றாங்க விரண்டு மிழிந்தோர்க் குரிய"
‡ தொல்-பொருள்- அகத்- 32
§ 'பழையன் காவிரி வைப்பிற் போஒர் அன்ன' என்றார் அகப்பாட்டினும் (186)
இது குறுநிலமன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது. "மலைமிசைக் குலைஇய"* என்பதும் அது.
இனி வேட்டை மேற் சேறலும் நாடுகாணச் சேறன் முதலியனவும் பாலையாகப் புலனெறி வழக்கஞ் செய்யாமை உணர்க. வேந்தனென்று ஒருமையாற் கூறினார், "மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவும்"† என்னும் விதிபற்றி. சிவணிய வென்பதனை வினையெச்சமாக்கி நட்பாடல் வேண்டியென்றுமாம். (27)
-------------
28
- மேவிய சிறப்பி னேனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.
இது முறையானே தன் பகைமேற்சென்ற அரசன் திறை பெற்ற நாடுகாத்து அதன்கண் ‡ தன்னெறி முறை அடிப்படுத்துதற்குப் பிரிதலும் ஏனை வணிகர்பொருட்குப் பிரிதலுங் கூறுகின்றது.
(இ-ள்) முல்லை முதலாகச் சொல்லிய மேவிய சிறப்பின்- தானே சென்ற வேந்தன் தனக்கு முல்லை முதலாக முற்கூறப் பட்ட நால்வகைநிலனுந் திறையாக வந்துபொருந்திய தலைமையானே; பிழைத்தது- முன்னர் 'ஆள்பவர் கலக்குறுத்த அலை பெற்று'§ நெறிமுறைமை தப்பிய அந்நாடு; முறையாற் பிழையாதாகல் வேண்டியும், பிரிவே- தனது பழையநாடுகளை ஆளும் நெறிமுறைமையினாலே தப்பாமல் ஆக்கம்பெறக் காத்தலை விரும்பிப் பிரிதலும் பிரிவே; ஏனோர் படிமைய இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே- முற்கூறிய அந்தணர் அரசரை ஒழிந்த வணிகர் தமக்கு விரதங்களுடையவாக வேதநூலிற் கூறிய ஒள்ளிய பொருள் தேடி முடியும்படி பிரிதலும் பிரிவே என்றவாறு.
பிரிவை இரண்டற்குங் கூட்டுக. சிறப்பிற் பிரிதலும் எனச் சேர்க்க. சொல்லியவென்பதும் பிழைத்ததென்பதுந் தொழிற் பெயர். முறையாற் காக்கவென முடிக்க. விரதமாவன 'கொள்வ தூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசன்'§§ முதலியன.
- ----------
* அகம் -84. † தொல்-சொல்-449
(பாடம்) ‡ 'தன்னெறி முறைப்படுத்துதற்கு'
§ "ஆள்பவர் கலக்குற வலைபெற்ற நாடு என்பது, கலித்தொகை,
5-ஆம் பாட்டில் வருவது. §§ பட்டினப்பாலை அடி-210-211.
உதாரணம்:--
"ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியு
மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியு
மேனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞழலு
மானேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும்
ஆங்கத்
தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப்
போதவிழ் மரத்தோடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றா லிளவேனின் மேதக;
பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத்
தொல்கவின் றொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவா
ரொல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்;
திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை
வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த
மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்.;
அறல்சாயப் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித்
திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவா
ரூறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
யாறின்றிப் பொருள்வெஃகி யகன்றநாட் டுறைபவர்;;
எனநீ,
தெருமரல் வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்
செருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே" (கலி-26)
இதனுள் 'ஒல்குபு நிழல்சேர்ந்தார்க்கு' எனவே, முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலைபெற்றுப் பின் தன்னை நிழலாகச் சேர்ந்தாரென்பதூஉம், அவர்க்குப் பின்னர் உலைவு பிறவாமற் பேணிக் காத்தானென்பதூஉம், 'விருந்துநாட்டு' என்பதனால் திறைபெற்ற புதிய நாடென்பதூஉம் பெற்றாம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே கூறிக்கொள்க.
ஏதினாடு- புதிய நாடு. ஆறின்றிப் பகைவர் பொருளை விரும்பின நாட்டென்றும் அவரை யகன்ற நாட்டென்றும் பொருள் கூறுக. செருவின் மேம்பட்ட என்றது நாடுகளை. அதனாற் பெற்ற வென்றியெனவே நாடு திறைபெற்றமை கூறிற்று.
"படைபண்ணிப் புனையவும்"* என்னும் பாலைக்கலியுள் "வல்வினை வயக்குதல் வலித்திமன்" என்பதற்கு வலிய போர் செய்து அப்பகைவர் தந்த நாட்டை விளக்குதற்கு வலித்தி யெனவுந், "தோற்றஞ்சா றொகுபொருள்" என்பதற்குத் தோற்றம் அமைந்த திரண்ட பொருளாவன அந் நாடுகாத்துப் பெற்ற அறம்பொருளின்பம் எனவும், "பகையறு பயவினை" என்பதற்குப் பகையறுதற்குக் காரணமாகிய நாடாகிய பயனைத் தரும் வினையெனவும், "வேட்டபொருள்" என்பதற்கு அறம் பொருளின்பமெனவும் பொருளுரைத்துக்கொள்க.
- --------------
* கலி-17
பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து பொருள் கூறுக.
இனிக்,
"கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங்
கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு
மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து" (அகம்-93)
என வாணிகர் பொருள்வயிற் பிரிந்தவா றுணர்க.*
"நட்டோ ராக்கம் வேண்டியு மொட்டிய
நின்றோ ளணிபெற வரற்கு
மன்றோ தோழியவர் சென்ற திறமே" (நற்றிணை-286)
என்பதனுள் அணியென்றது பூணினை.
பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்துகொள்க. (28)
------------
29
- மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே.
இஃது எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்) மேலோர் முறைமை- மேல் அதிகாரப்பட்டு நின்ற வாணிகர்க்கு ஓதிய அறந்தலைப் பிரியாப் பொருள் செயல் வகை; நால்வர்க்கும் உரித்து - அந்தணர்க்கும் அரசர்க்கும் இருவகை வேளாளர்க்கும் உரித்து என்றவாறு.
இதற்கு வாணிகர்க்கு வேதநூலுள் இழைத்த பொருண் முடிவானே இந்நால்வரும் பொருண்முடிப்பரெனிற் பிரிவொன்றாகி மயங்கக் கூறலென்னுங் குற்றந் தங்குமாகலின் அது கருத்தன்று; இந்நால்வருள் அந்தணர் ஓதலுந் தூதும்பற்றிப் பொருண்முடித்தலும், அரசர் பகைவயிற் பிரிவு பற்றிப் பொருண்முடித்தலும், உயர்ந்த வேளாளர் பகைவயிற் பிரிவு பற்றிப் பொருண்முடித்தலும் உழுதுண்பார் வாணிகத்தாற் பொருண்முடித்தலுங் கருத்து.
- --------------
(பாடம்) * 'காண்க'
இற்றுள் வேள்விக்குப் பிரிந்து சடங்கிற்கு உறுப்பாகியும் அதற்குக் *குரவனாகியும் நிற்றல் உரிமையின் ஆண்டு வேள்வி செய்தான் கொடுத்த பொருள்கோடல் வேண்டுதலானும் அறங் கருதித் தூதிற்பிரியினும் அவர் செய்த பூசனை கோடல் வேண்டுமாகலானும் அவை அந்தணர்க்குப் †பொருள் வருவாயாயிற்று. வேள்விக்குப் பிரிதல் ஓதற்பிரிவின் பகுதியாயிற்று.
உதாரணம்:--
- "நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா
மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ
லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள்
புதுவது பன்னாளும் பாராட்ட யானு
மிதுவொன் றுடைத்தென வெண்ணி யதுதேர
மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட்
பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற்
றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ
விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு
நெடுமலை ‡வெஞ்சுரம் போகி நடுநின் றெஞ்
செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய்
தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி
யாமுயிர் வாழு மதுகை யிலமாயிற்
றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி
னொய்யார் நுவலும் பழிநற்பத் தம்மொடு
போயின்று சொல்லென் னுயிர்" (கலி-24)
இதனுள் 'நடுநின்' றென்றதனான் இரு பெரு வேந்ரையுஞ்சந்து செய்வித்தற்கு யான நடுவே நிற்பலென்றும், 'எஞ் செய்பொருள் முற்றுமள' வென்றதனான் அது முடித்தபின்னர் யாம் பெறுதற்குரியவாய் அவர் செய்யும் பூசனையாகிய பொருண் முடியு மளவுமென்றும், அந்தணன் பொருள்வயிற் பிரியக் கருதிக் கூறிய கூற்றினை அவன் தலைவி கூறியவாறுணர்க. இதனுட் 'கடிமனைகாத்' தென்றதனை இல்லறமாகவும்', 'ஓம்ப' வென்றதனைச் செந்தீயோம்பவென்றுங் கொள்க.
"நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி
வந்து திறைகொடுத்து வணங்கினர் வழிமொழிந்து" (அகம்-124)
என்புழி, நன்கலந் திறைகொடுத்தோ ரென்றலிற் பகைவயிற் பிரிவே பொருள்வருவாயாயிற்று. ஒழிந்தனவும் இவ்வாறே உய்த்துணர்க.
- -----------
(பாடம்) * 'களவனாகியும்' † 'பொருள் வரவாயிற்று' ‡ 'அத்தம்'
மேலோர் முறைமை ஏனோர்க்கு முரித்தே என்னாது நால்வர்க்கு முரித்தே என்றது முற்கூறிய வணிகரையொழிந்த இருவகை வேளாளரையும் கூட்டியென் றுணர்க. அவர் பொருள்வயிற் பிரிந்தனவுஞ் சான்றோர் செய்யுட்களை நோக்கி உய்த்துணர்ந்துகொள்க. அவர்களுள் உழுதுண்பார்க்குக் கலத் திற்பிரிவும் உரித்து. ஏனையோர்க்குக் காலிற்பிரிவே உரித்தென்றுணர்க. (29)
--------------
30.
- மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப.
இஃது இறுதிநின்ற வேளாளர்க்கு இன்னுமோர் பிரிவு விகற்பங் கூறுகின்றது.
(இ.ள்.)மன்னர் பாங்கின் - அரசரைச் சார்ந்து வாழும் பக்கத்தாராகி நிற்றல் காரணமாக; பின்னோர் ஆகுப - பின்னோரெனப்பட்ட வேளாளர் வரையறையின்றி வேந்தன்
ஏவிய *திறமெல்லாவற்றினும் பிரிதற்கு ஆக்கமுடையராகுப என்றவாறு.
மன்னர் பின்னோரென்ற பன்மையான் முடியுடையோரும், முடியில்லாதோரும், உழுவித்து உண்போரும், உழுது உண் போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார். †'வேளாண் மாந்தர்க்கு' ‡'வேந்துவிடுதொழிலில்' என்னும் மரபியற் சூத்திரங்களான் வேளாளர் இருவகையரென்ப. அரசரேவுந்திறமாவன பகைவர்மேலும் நாடுகாத்தன்மேலுஞ் சந்து செய் வித்தன்மேலும் பொருள்வருவாய் மேலுமாம்.
அவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோருங், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகுப.§"இருங்கோ வேண்மா னருங்கடிப் பிடவூர்" எனவும், "ஆலஞ்
- -------
(பாடம்) * 'நிலமெல்லாவற்றினும்.' †தொல்-பொ-மர-80.
‡ தொல்-பொ-மர-81. §புறநானூறு-395.
"காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி
வேலையுங் குளனும் வெடிபடச் சுவறித்
தந்தையர் மக்கண் முகங்கா ணாமல்
வெந்த சாகம் வேறுவே றருந்திக்
குணனுள தனையுங் கொடுத்து வாழ்ந்த
கணவனை மகளிர் கண்பா ராமல்
விழித்தவிழி யெல்லாம் வேற்றுவிழி யாகி
யறவுரை யின்றி மறவுரை பெருகி
யுறைமறந் தொழிந்த வூழிக் காலத்துத்
தாயில் லவர்க்குத் தாயே யாகவுந்
தந்தையில் லவர்க்குத் தந்தையே யாகவும்
இந்த ஞாலத் திடுக்கண் தீர
வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன்
நீலஞ் சேரு நெடுமால் போல்வான்
ஆலஞ் சேரி மயிர்த னென்பான்
ஊருண் கேணி நீரொப் போனே
தன்குறை சொல்லான் பிறன்பழி யுரையான்
மறந்தும் பொய்யான் வாய்மையுங் குன்றான்
வருந்த வேண்டா வழுதி
இருந்தன னிருந்தன மிடர்கெடுத் தனமே"
இது தமிழ் நாவலர் சரிதையிற் கண்டது.
(சோழமண்டல சதகம்-30 மேற்கோள்)
சேரி மயிந்த னூருண்கேணிநீ ரொப்போன்" எனவுஞ் சான்றோர் செய்யுட்செய்தார். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர்வேளிடை மகட்கோடலும் அவன் மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர்வேளிடை மகட்கோடலுங் கூறுவார்,.
இதனானே,
"பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்" (புறநா-35)
எனவும்,
- "ஞாலத்துக், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பார மோம்பி" (பதிற்று-13)
எனவுஞ் சான்றோர் கூறியவா றுணர்க.
உதாரணம்:--
"வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார்
தாந்தங் குறிப்பின ரல்லரா- லேந்திழாய்
கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ
தண்பனி நாளே தனித்து. (30)
எனவரும்.
-----------
31.
- உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான.
இது நான்கு வருணத்தோர்க்கும் எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்) ஓத்தின் ஆன -வேதத்தினாற் பிறந்த வட நூல்களுந் தமிழ் நூல்களும்; உயர்ந்தோர்க்கு உரிய- அந்தணர் அரசர் வணிகர்க்கும், உயர்ந்த வேளாளர்க்கும் உரிய என்றவாறு.
அவை சமயநூல்களும் ஒன்றற்கொன்று மாறுபாடுகூறுந் தருக்கநூல்களுந் தருமநூல்களும் சோதிடமும் வியாகரணம் முதலியனவும் அகத்தியம் முதலாகத் தோன்றிய தமிழ் நூல்களுமாம். வேதந்தோன்றிய பின்னர் அது கூறியபொருள்களை இவையும் ஆராய்தலின் ஓத்தினானவென்று அவற்றிற்குப் பெயர் கூறினார்; ஓத்தென்பது வேதத்தையே யாதலின். (31)
------------
32
- வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய
ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே.
இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன்றொழில் உரித்தென்கிறது.
(இ-ள்) வேந்து வினை இயற்கை- முடியுடைவேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள்; வேந்தனின் ஒரீஇய ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்து- அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறுநிலமன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது என்றவாறு.
அவர்க்குரிய இலக்கணமாவன, தன்பகைவயிற் றானே சேறலுந் தான் திறைபெற்ற நாடுகாக்கப் பிரிதலும் மன்னர் பாங்கிற் பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம்.
உதாரணம்:--
"விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர்
வேறுபன் மொழிய தேஎ முன்னி
வினைநசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு
புனைமா ணெஃகம் வலவயி னேந்திச்
செலன்மாண் புற்ற" (அகம்-215)
என்புழி வேறு பன்மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப் போர்த்தொழிலைச் செலுத்தும் உரன்மிக்க நெஞ்ச மென்றலின், இது குறுநிலமன்னன் தன்பகைவயின் நாடு கொள்ளச் சென்றதாம்; *வேந்தனெனப் பெயர் கூறாமையின். † "பசைபடு பச்சை நெய்தோய்த்து" என்னும் அகப்பாட்டி னுண் "முடிந்தன் றம்மநா முன்னிய வினையே" என்றலிற்றானே குறுநிலமன்னன் சென்றதாம். ஏனைய வந்துழிக் காண்க. (32)
- ------
(பாடம்) *'வேந்தன் பகை கூறாமையின்' † அகம்-244
33
- பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான.
இஃது அக் குறுநிலமன்னர்க்குப் பொருள்வயிற் பிரிதலும் ஓதற் பிரிதலும் உரிய வென்கின்றது.
(இ-ள்.) பொருள் வயினும்- தமக்குரிய திறையாகப் பெறும் பொருளிடத்தும்; உயர்ந்தோர் ஒழுக்கத்துக்கு ஆன பொருள் வயினும்- உயர்ந்த நால்வகை வருணத்தார்க்குரிய ஒழுக்கத்திலேயான ஒத்திடத்தும்; பிரிதல் அவர்வயின் உரித்து- பிரிந்துசேறல் அக் குறுநிலமன்னரிடத்து உரித்து என்றவாறு.
பொருள்வயிற்பிரிதல் பொருள்தேடுகின்ற இடத்தின்கண் ணென வினைசெய்யிடமாய் நின்றது.@'உயர்ந்தோர்க் குரிய வோத் தினான' என்று அவ்வோத்தினை அவரொழுக்கத்திலேயான பொருளென்றார். அச் சூத்திரத்திற் கூறிய ஓதற்பிரிவே இவர்க் கும் உரித்தென்று கொள்க. இவற்றுக்குச் சான்றோர் செய் யுட்க ளுளவழிப் பொருள்படுமாறு உய்த்துணர்ந்துகொள்க. (33)
--------------
34
- முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை.
இது முற்கூறிய ஓதல் பகை தூது காவல் பொருள் என்ற ஐந்தனுட் பகையுங் காவலும் ஒழிந்தவற்றிற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) ஓதலுந் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று என்றவாறு.
தலைவியை உடன்கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங்களிலும் ஒழிந்த சான்றோர் செய்யுட்களுள்ளுங் காண்க. இதுவே அசிரியர்க்குக் கருத்தாதல் தலைவியோடுகூடச் சென்றாராகச் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்யாமையான் உணர்க.
இனித், தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மினெனக் கூறுவனவுந் தோழி கூறுவனவுஞ் செலவழுங்குவித்தற்குக் கூறுவனவென்று உணர்க. அக்கூற்றுத் தலைவன் மரபு அன்றென்று மறுப்பன $'மரபுநிலை திரியா' என்பதனுள் அமைந்தது.
- -------------
@தொல்-பொரு-அகத்-31. $ தொல்-பொருள்-அகத்-45.
இனி, இச் சூத்திரத்திற்குப், 'பொருள்வயிற் பிரிவின்கட் கலத்திற்பிரிவு தலைவியுடன் சேறலில்லை; எனவே, காலிற் பிரிவு தலைவியுடன் சேறல் உண்டு' என்று பொருள் கூறுவார்க்குச் சான்றோர் செய்த புலனெறிவழக்கம் இன்மை உணர்க. இனி,
உடன்கொண்டு போகுழிக் கலத்திற் பிரிவின்று; காலிற்பிரிவே யுளதென்பாரும் உளர். (34)
-----------
35
- எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற்
பொற்புடை நெறிமை இன்மை யான.
இஃது இத்துணையும் #பாலைக்கு உரிய இலக்கணங் கூறி, மகடூஉ அதிகாரப்படுதலிற் பெருந்திணைக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) எத்திணை மருங்கினும் - கைக்கிளைமுதற் பெருந்திணையிறுவாய் ஏழன்கண்ணும்; மகடூஉ மடல்மேல் நெறிமை- தலைவி மடலேறினாளாகக் கூறும் புலனெறிவழக்கம்; பொற்புடைமை இன்மையான- பொலிவுடைமையின்று; ஆதலான் அது கூறப்படாது எ-று.
"கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். " (குறள்-1137)
என வரும்.
"கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர்
மடலூரார் மைந்தர்மே லென்ப - மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான்
வேட்டமா மேல்கொண்ட போழ்து."
என்றாராலோவெனின், இது மடலேற்றன்று; ஏறுவலெனக் கூறியதுணையேயாம். (35)
- --------
(பாடம்) # 'ஐம்பாற்குமுரிய.'
----------
36.
- தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி
மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை யச்சஞ் சார்தலென்
றன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித்
தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய.
இது பிரிவிலக்கணம் அதிகாரப்பட்டு வருதலிற் கொண்டு தலைக்கழிந்துழி வருந்துவோர் தாயரென்பதூஉம் அதனது பகுதியுங் கூறுகின்றது.
(இ-ள்) போகிய திறத்து நற்றாய்;- தலைவியுந் தலைவனும் உடன்போய காலத்து அம்மகட் பயந்த நற்றாய், தன்னும் அவனும் அவளுஞ் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பலும்- தன்னையுந் தலைவனையுந் தன் மகளையுங் குறித்துக் காலம் மூன்றுடன் நிலைபெற்று வரும் *நல்வினை தீவினைக்குரிய காரியங்களைத் தன் நெஞ்சிற்கு விளக்கி வருந்திக் கூறுதலும்; அச்சஞ் சார்தல் என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் அவற்றொடு தொகைஇப் புலம்பலும்- அச்சஞ் சார்தலென்று கூறப்பட்டவற்றையும் அவைபோல்வன பிறவற்றையும் பல்லி முதலியசொல் நற்சொல் தெய்வங் கட்டினுங் கழங்கினும் இட்டு உரைக்கும் அத்தெய்வப் பகுதியென்றவற்றோடு கூட்டி வருந்திக் கூறலும்; தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் புலம்பலும்- தோழியது ஆற்றாமையைக் கண்டுழியுந் தலைவியைத் தேடிப்போய்க் காணாது வந்தாரைக் கண்டுழியும் வருந்திக் கூறலும்; அவ்வழி ஆகிய கிளவியும்- அவ்வுடன்போக்கிடத்துச் சான்றோர் புலனெறி வழக்கஞ் செய்தற்குரியவாய் வருங் கிளவிகளும்; உரிய- உடன் போகிய திறத்து உரிய எ-று.
நற்றாய் புலம்பலலுங் கிளவியும் போகியதிறத்து உரிய வென முடிக்க. என்றென்பதனையும் புலம்பலென்பதனையும் யாண்டுங் கூட்டுக. இங்ஙனம் உடன்போக்கி வருந்துதல் நோக்கித் தாயை முற்கூறித் தலைவன் கொண்டுபோயினமை நோக்கித் தலைவிமுன்னர் அவனைக் கூறினார். அவளும் அவனும் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
உதாரணம்:--
"மள்ளர் †கொட்டின் மஞ்ஞை யாலும்
உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி யினிய வாகுக தில்ல
அறநெறி யிதுவெனத் தெளிந்தவென்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே" (ஐங்- 371)
இதனுள் 'அறநெறி இதுவெனத் தெளிந்த என்மக' ளென்று தாய் கூறவே உடன்போக்குத் தருமமென்று மகிழ்ந்து கூறி அங்ஙனங் கூட்டிய நல்வினையைத் தன் நெஞ்சிற்கு விளக்கிப் புலம்பியவாறு காண்க.
-------------
(பாடம்) * 'நல்வினை தீவினை கருதிய' † 'கொட்டு மஞ்ஞை'
"நாடொறுங் கலுழு மென்னினு மிடைநின்று
காடுபடு தீயிற் கனலியர் மாதோ
நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்
பூப்புரை யுண்கண் மடவரற்
போக்கிய புணர்ந்த வறனில் பாலே" (ஐங்-376)
இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால், பழவினை. இவ ஐங்குறுநூறு.
இனி, அச்சம் இருவகைத்து; தலைவி ஆண்டை விலங்கும் புள்ளும் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சும் அச்சமுந், தந்தை தன்னையர் பின்சென்றவர் இஃதறமென்னாது தீங்கு செய்கின்றாரோ என்று அஞ்சும் அச்சமுமென.
"நினைத்தொறுங் கலுழு மிடும்பை யெய்துக
புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை
மான்பிணை யணைதர வாண்குரல் விளிக்கும்
வெஞ்சுர மென்மக ளுய்த்த
வம்பமை வல்வில் விடலை தாயே" (ஐங்-373)
இதுவும் ஐங்குறுநூறு.
- "கேளாய் வாழியோ மகளைநின் தோழி
திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு
பெருமலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி
முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி
பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக்
கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்
கனறுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து
மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை
மடமயி லன்னஎன் நடைமெலி பேதை
தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையுந் தண்ணுமை
கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே" (அகம்-63)
இவை அச்சங் கூறின.
தந்தை தன்னையர் சென்றாரென்று சான்றோர் செய்யுட் செய்திலர்; அது புலனெறி வழக்கம் அன்மையின்.
இனிச் சார்தலும் இருவகைத்து: தலைவி சென்று சாரும் இடனும், மீண்டு வந்து சாரும் இடனுமென.
உதாரணம்:----
"எம்வெங் காமம் இயைவ தாயின்
மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசா
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாக லார்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநா டன்ன
வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட் டாகுக தில்ல
தோழி மாரும் யானும் புலம்பச்
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி யன்ன கடியுடை வியன் நகர்ச்
செறிந்த காப்பிகந் தவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய துகள்நிலம் பரப்பக்
கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி
வன்கை யெண்கின் வயநிரை பரக்கும்
இன்றுணைப் பிரிந்த கொள்கையொ டொராங்குக்
குன்ற வேயில் திரண்டஎன்
மென்றோள் அஞ்ஞை சென்ற ஆறே" (அகம்-15)
"அருஞ்சுரம இறந்தவென் பெருந்தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே
பனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனைமணல் அடுத்து மாலை நாற்றி
உவந்தினி தயரு மென்ப யானு
மான்பிணை நோக்கின் மடநல் லாளை
யீன்ற நட்பிற் கருளான் ஆயினும்
இன்னகை முறுவல் ஏழையைப் பன்னாட்
கூந்தல் வாரி நுசுப்பிவர்ந் தோம்பிய
நலம்பனை *யுதவியும் உடையன் மன்னே
அஃதறி †கிற்பினோ நன்றுமற் றில்ல
அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச்
சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல்
ஆகுவ தறியும் முதுவாய் வேல
கூறுக மாதோநின் கழங்கின் றிட்பம்
மாறாது வருபனி கலுழுங் கங்குலின்
ஆனாது துயருமென் கண்ணினிது படீஇயர்
எம்மனை முந்துறத் தருமோ
தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே." (அகம்-195)
இவ் வகப்பாட்டு இரண்டும் தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது.
----
(பாடம்) *'உதவியோ' †கற்பினன்று.
"இல்லெழும் வயலை யிலையு மூழ்த்தன
செல்வ மாக்களிற் செல்லு மஃகின
மயிலடி யிலைய மாக்குரல் நொச்சிப்
பயிலிணர் நறும்பொழிற் பாவையுந் தமியள்
ஏதி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு
பேதை போயினள் பிறங்குமலை யிறந்தென
மான்ற மாலை மனையொடு புலம்ப
ஈன்ற தாயு மிடும்பைய ளெனநினைந்து
அங்கண் வானத் தகடூர்ந்து திரிதருந்
திங்களங் கடவுள் தெளித்துநீ பெயர்த்தரிற்
கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய
குடுமியஞ் செல்வங் குன்றினுங் குன்றாய்
தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை
ஒண்புகழ்த் தந்தைக் குறுதி வேண்டித்
தயங்குநடை முதுமை தாங்கித் தான்றனி
யியங்குநடை யிளமை யின்புற்; றீந்த
மான்றே ரண்ண றோன்றுபுகழ் போலத்
துளங்கிரு ளிரவினு மன்றி
விளங்குவை மன்னாலிவ் வியலிடத் தானே" (தகடூர் யாத்திரை)
இது தெய்வத்தை நோக்கிக் கூறியது.
"மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
யன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த *பைந்தினை வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின †விறல்வேல் விடலையோ
டஞ்சி லோதியை ‡வரக்கரைந் தீமே" (ஐங்குறு-391)
இவ் வைங்குறுநூறு நிமித்தத்தொடுபடுத்துப் புலம்பியது. நற்சொல்லொடுபடுத்தன வந்துழிக் காண்க.
இனி 'அன்ன பிறவுமென்றதனால்'
"ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி இரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் §துடிபடுத்துத்
தோப்பிக் களளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந்
தார்வ நெஞ்சமொ டாய்நலன் அளைஇத்தன்
மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கு
நெறியிருங் கதுப்பினென் பேதைக்
கறியாத் தேஎத் தாற்றிய துணையே" (அகம்-35)
-------------
(பாடம்) * 'பைந்நிண வல்சி.' † 'விறல்வேற் காளையோ.'
‡ 'வரக்கரைந் திடுமே.' §'துடிப்படத்.'
இவ்வகம் தலைவன் மிகவும் அன்புசெய்கவென்று தெய்வத்திற்குப் பராஅயது.
"நீர்நசைக் கூக்கிய வுயவல் யானை
யியம்புணர் தூம்பி னுயிர்க்குமத்தஞ்
சென்றனண் மன்றவென் மகளே
*பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே" (ஐங்குறு-377)
இவ் வைங்குறுநூறு யாம் இவற்றைக்கண்டு வருந்த இவற்றை எமக்கு ஒழித்துத் தான் நீரிலா ஆரிடைப் போயினாளென்றது,
"என்னு முள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையோ
†டழுங்கன் மூது ரலரெழச்
செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே" (ஐங்குறு-372)
இஃது என்னை நினைப்பாளோவென்றது.
இன்னும் இதனானே செய்யுட்களுள் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் அமைத்துக் கொள்க.
"சொல்லிய ‡முயலிற் பாஅய சிறகர்
வாவ §லுகக்கு மாலையாம் புலம்பப்
போகிய வவட்கோ நோவேன் றேமொழித்
துணையிலள் கலுழு நெஞ்சின்
இணைபே ருண்க ணிவட்குநோ வதுவே" (ஐங்குறு-378)
இது தோழி தேஎத்துப் புலம்பல். இஃது ஐங்குறுநூறு. தோழி தேஎத்துமெனப் பொதுப்படக் கூறியவதனால் தோழியை வெகுண்டு கூறுவனவுங் கொள்க,.
"வரியணி பந்தும் வாடிய வயலையு
மயிலடி யன்ன மாக்குர னொச்சியுங்
கடியுடை வியனகர்க் காண்வரத் தோன்றத்
தமியேன் கண்டதண் டலையுந் தெறுவர
நோயா கின்றே மகளை நின்றோழி
யெரிசினந் ¶தணிந்த இலையி லஞ்சினை
வருப்புறப் புறவின் புலம்புகொ டெள்விளி
யுருப்பவி ரமையத் தமர்ப்பன ணோக்கி
யிலங்கிலை வெள்வேல் விடலையை
விலங்குமலை யாரிடை நலியுங்கொ லெனவே" (நற்றிணை-305)
என வரும்.
-------------
(பாடம்) * 'பந்து பாவையம்' † 'அழுங்கின் மூதூர்'
‡ 'முயலின்' § 'உவக்குமாலை' 'தவிர்ந்த'
*"இதுவென் பாவைக் கினியநன் பாவை
யிதுவென் பைங்கிளி யெடுத்த பைங்கிளி
யிதுவென் பூவைக் கினியசொற் பூவையென்
றலம்வரு நோக்கி னலம்வருஞ் சுடர்நுதல்
காண்டொறுங் காண்டொறுங் கலங்க
நீங்கின ளோவென் பூங்க ணோளே" (ஐங்குறு-375)
இவ்வைங்குறுநூறு தேடிக்காணாது வந்தாரைக்கண்டு புலம்பியது.
இனி அவ்வழியாகிய கிளவிகளுட்சில வருமாறு:--
"ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ்
செருமிகு மொய்ம்பிற் கூர்வெற் காளையொடு
பெருமலை யருஞ்சுர நெருநற் சென்றனள்
இனியே,
தாங்குநி னவல மென்றனி ரதுமற்
றியாங்கன மொல்லுமோ வறிவுடை யீரே
யுள்ளி னுள்ளம் வேமே யுண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னவென்
அணியியற் குறுமக ளாடிய
மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே" (நற்றிணை-184)
இந் நற்றிணை தெருட்டும் அயலில்லாட்டியர்க் குரைத்தது.
"கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி
தாதெரு மறுகின் மூதூ ராங்கண்
எருமை நல்லான் பெருமுலை மாந்தும்
நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு
ஆயமும் அணியிழந் தழுங்கின்று தாயும்
இன்றோள் தாராய் இறீஇயரென் னுயிரெனக்
கண்ணு நுதலு நீவித் தண்ணெனத்
தடவுநிலை நொச்சி வரிநிழ லசைஇத்
தாழிக் குவளை வாடுமலர் சூடித்
தருமணங் கிடந்த பாவையென்
அருமக ளேயென முயங்கின ளழுமே" (அகம்-165)
----------------
- (பாடம்) *'இதுவென் பாவை பாவை யிதுவென்
னலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற்
பைங்களி யெடுத்த பைங்கிளி யென்றிவை
காண்டொறுங் காண்டெறூங் கலங்க
நீங்கின ளோவென் பூங்க ணோளே'
இம் மணிமிடை பவளத்துத் தாய் நிலையும் ஆயத்து நிலையுங் கண்டோர் கூறியவா றுணர்க.
"மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த
வன்பி லறனு *மருளிற்று மன்ற
வெஞ்சுர மிறந்த அஞ்சி லோதி
பெருமட மான்பிணை யலைத்த
சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே" (ஐங்குறு-394)
இவ் வைங்குறுநூறு தலைவி மீண்டு வந்துழித் தாய் சுற்றத்தார்க்குக் காட்டியது.
"நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினு
மெம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லி னெவனோ †மற்றே வென்வேன்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே" (ஐங்குறு-399)
இவ் வைங்குறுநூறு தலைவன் மீண்டு தலைவியைத் தன்மனைக்கட் கொண்டுவந்துழி அவன் தாய் சிலம்புகழி நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க் குக் கூறியது.
இன்னுஞ் சான்றோர் செய்யுட்களுள் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (36)
---------------
37
- ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்
தாமே செல்லுந் தாயரும் உளரே.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி.
(இ-ள்) ஏமப்பேர் ஊர்ச்சேரியும் சுரத்தும்- பதியெழு வறியாப் பேரூரிற் றெருவின்கண்ணும் அருவழிக்கண்ணும்; தாமே செல்லும் தாயரும் உளர்- தந்தையுந் தன்னையரும் உணரா முன்னம் எதிர்ப்பட்டு மீட்டற்குத் தாமே போகுந் தாயரும் உளர் என்றவாறு.
உம்மை எண்ணும்மை. தாயரெனப் பன்மை கூறித் தாமேயெனப் பிரித்ததனாற் சேரிக்கு நற்றாய் சேறலுஞ், சுரத்திற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்ததென் றுணர்க.
- -----------
(பாடம்) * 'அருளின்று' † 'தோழி'
உதாரணம்:--
"வெம்மலை யருஞ்சுர நம்மிவ ணொழிய
விருநில முயிர்க்கு மின்னாக் கான
நெருநற் போகிய பெருமடத் தகுவி
யைதக லல்குற் றழையணிக் கூட்டுங்
கூழை நொச்சிக் கீழ தென்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலுங் *காணிரோ கண்ணுடை யீரே" (அகம்-275)
வண்டலைக் காணார் தேஎத்து நின்று காணில் ஆற்றீரெனக் கூறினமையின் ஆயத்தினையகன்று இற்புறஞ் சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று.
"நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
பிறங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார்
நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காத லோரே" (குறு-130)
இது செவிலி தேடத் துணிந்தது. இக் குறுந்தொகையுள் நம்மாற் காதலிக்கப்பட்டா ரென்றது அவ்விருவரையும் தாயருமுளரென்றதனாற் றந்தையுந் தன்னையரும் வந்தால் இன்னது செய்வலென்றலும் உளவென்று கொள்க.
"நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின்
முந்நீ்ர் மண்டில முழுவது மற்றாது"
என்றாற் போல்வன. அடி புறத்திடாதாள் புறம்போதலும் பிரிவென்றற்குச் சேரியுங் கூறினார்; அஃது †ஏம இல் இருக்கையன்றாதலின். (37)
-------------
38
- அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே.
இதுவும் பாலைக்கு ஓர் வேறுபாடு கூறுகின்றது.
(இ-ள்) அயலோர் ஆயினும்- முற்கூறிய சேரியினுஞ் சுரத்தினுமன்றித் தம் மனைக்கு அயலே பிரிந்தாராயினும்; அகற்சிமேற்று- அதுவும் பிரிவின்கண்ணதாம் என்றவாறு.
எனவே நற்றாய் தலைவியைத் தேர்ந்து ‡இல்லிற் கூறுவனவுஞ் சேரியிற் கூறுவனவும் பிரிந்தாரைப் பின்சென்றதேயாயிற்று. இக் கருத்தான் "ஏமப்பேரூர்" என்றார். இதனானே மனையயற்கட் பரத்தையிற் பிரிவும் பாலையென்று உய்த்துணர்க. (38)
-----------
(பாடம்) * 'காண்டிரோ' † 'ஏமமிலிருக்கை யென்றாகலின்'
‡ 'இல்லறங் கூறுவனவும்'
------
39
- தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோளை
யழிந்தது களைஇய வொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோ
டென்றிவை யெல்லா மியல்புற நாடின்
ஒன்றித் தோன்றுந் தோழி மேன.
தாயர்க்கு உரியனகூறி இது தோழிக்குக் கூற்று நிகழுமாறு கூறுகின்றது.
(இ-ள்) தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்- தலைவன் கொண்டுதலைக்கழியாவிடிற் றலைவிக்கட்டோன்றுந் துன்பநிலையைத் தலைவற்குந் தலைவிக்கும் விளங்கக் கூறினும்; போக்கற் கண்ணும்- அதுகேட்டு இருவரும் *போக்கொருப் பட்டுழித் தலைவியைப் போகவிடும் இடத்தும்; விடுத்தற்கண்ணும்- தலைவியை அவனோடு கூட்டி விடுக்குங்காற் றலைவற்குப் பாதுகாவலாகக் கூறும் இடத்தும்; நீக்கலின் வந்த தம் உறு விழுமமும்- †தாயரை நீக்குதலாற் றமக்குற்ற வருத்தத்திடத்தும்; வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்- மெய்யும் பொய்யும் உணர்ந்த அறிவரது தருமநூற் றுணிபும் இதுவெனக் கூறிப்பின் சென்று அவரை மீட்டற்கு நினைந்த தாயரது நிலைமை அறிந்து அவரை மீளாதபடி அவளை மீட்டுக்கொளினும்; நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு- தலைவி போக்கு நினைந்து நெஞ்சு மிகப் புண்ணுற்றுத் தடுமாறுந் தாயை அவ் வருத்தந் தீர்த்தல்வேண்டி உழுவலன்பு காரணத்தாற் பிரிந்தாளென்பது உணரக் கூறி அவளை நெருங்கிவந்து ஆற்றுவித்தற் கூற்றோடே; என்று இவை யெல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன- என்று இச் சொல்லப்பட்டன எல்லாவற்றுக்கண்ணும் இலக்கண வகையான் ஆராயுங் காலத்துத் தான் அவள் என்னும் வேற்றுமையின்றி ஒன்றுபடத் தோன்றும் தோழி மேன கிளவி என்றவாறு.
- ----------
* 'போகற் கொருப்பட்டுழி' † 'தமரை'
உதாரணம்:--
"வெல்போர்க் குரிசினீ வியன்சுர னிறப்பிற்
பல்காழல்கு லவ்வரி வாடக்
குழலினு மினைகுவள் பெரிதே
*விழவொலி கூந்தனின் மாஅ யோளே" (ஐங்குறு-306)
இவ் வைங்குறுநூற்றுட் குழலினும் இரங்குவளென்று பிரிந்தவள் இரங்குதற் பொருள்படத் தோழி தலைவரும் விழுமந் தலைவற்குக் கூறினாள்.
"உன்னங் கொள்கையோ டுளங்கரந் துறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவவினி வாழி தோழி யவரே
பொம்மல் ஓதி நம்மொ டொராங்குச்
செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும்
மால்கழை பிசைந்த கால்வாய் கூரெரி
மீன்கொள் பரதவர் கொடுந்திமி னளிசுடர்
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு
மேவரத் தோன்றும் யாஉயர் நனந்தலை
உயவல் யானை வெரி நுச்சென் றன்ன
கல்லூர் பிழிதரும் புலசாய் சிறுநெறிக்
காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல்
ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் பணைத்தோள்
நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை
நிறையிதழ் உண்கண் மகளிர்க்கு
அரிய வாலென அழுங்கிய செலவே" (அகம்-65)
இதனுள் அன்னைசொல்லும் பெண்டிர் கௌவையுந் தலைவரும் விழுமமென்று தலைவிக்குக் கூறினாள்.
இனிப் போக்கற்கட் கூறுவன பலவுமுள.
"இலங்குவீங் கெல்வளை யாய்நுதல் †கவின்பெறப்
பொலந்தேர்க் ‡கொண்கனும் வந்தன னினியே
யிலங்கரி §நெடுங்க ணனந்த றீர்மதி
¶நலங்கவர் பசலையை $நகுகம் யாமே" (ஐங்குறு-200)
இவ் வைங்குறுநூற்றில், கண் அனந்தறீர் என்றதனானே உடன்கொண்டு போதற்கு வந்தானெனப் பாயலுணர்த்திக் கூறிற்று.
"வேலும் விளங்கின **வினைஞரு மியன்றனர்
தாருந் தையின தழையுந் தொடுத்தன
நிலநீ ரற்ற வெம்மை நீங்கப்
பெயனீர் தலைஇ உலவையிலை நீத்துக்
குறுமுறி யீன்றன மரனே நறுமலர்
வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன்
தேம்படப் பொதுளின பொழிலே கானமும்
நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாட்
பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப்
போது வந்தன்று தூதே நீயும்
கலங்கா மனத்தை யாகி யென்சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி
தெற்றி யுலறினும் வயலை வாடினும்
நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனிநின் னயந்த
அன்னை யல்லல் தாங்கிநின் னையர்
புலிமருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே." (அகம்-259)
-----------
(பாடம்) * 'அவிழொலி' †'கவின' ‡'கொண்கன்'
§ 'நெடுங்கண் ஞெகிழ்மதி' ' நலங்கிளர்'
$ 'நகுக நாமே' ** 'வினையரும் பயின்றனர்'
இவ் வகம் போக்குதற்கண் முயங்கிக் கூறியது.
"அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்த னரையொடு முடிப்பினு
நீத்த லோம்புமதி பூக்கே ழூர
வின்கடுங் கள்ளி னிழையணி #கொடித்தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே." (நற்றிணை-10)
இது நற்றிணை தலைவியைப் பாதுகாகவெனத் தோழி கைப்படுத்துவித்தது.
"புதல்வனீன்ற" (நற்றினை-355.) என்பதும் அது.
"இவளே நின்னல திலளே யாயுங்
குவளை யுண்க ணிவளல திலளே
யானு மாயிடை யேனே
மாமலை நாட மறவா தீமே."
இதுவும் அது.
"விளம்பழங் கமழுங் கமஞ்சூற் குழிசி
பாசந் தின்ற தேய்கான் மத்த
நெய்தெரி யியக்கம் வெளின்முதன் முழங்கும்
வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கா
லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
$வரிபுனை பந்தொடு வைஇய செல்வோ
ளிவைகாண் டோறு நோவர் மாதோ
வளியரோ வளியரென் னாயத் தோரென
நும்மொடு வரவுதா னயரவுந்
தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே" (நற்றிணை-12)
--------
(பாடம்) #'நெடுந்தேர்.' $'வரிப்புனை.'
இந் நற்றிணை *போக்குதல் தவிர்ந்ததாம்.
"அவளே, யுடனம ராயமொ டோரை வேண்டாது
மடமான் பிணையின் மதர்த்த நோக்கமொ
டென்னினு நின்னினுஞ் சிறந்த மென்மொழி
யேதி லாளன் †காதலி னானாது
பால்பாற் படுப்பச் சென்றன ளதனான்
முழவிமிழ் பந்தர் வினைபுனை நல்லில்
விழவயர்ந் திருப்பி னல்லதை யினியே
நீயெவ னிரங்குதி யன்னை
யாயினுஞ் சிறந்த நோய்முந் துறுத்தே"
என்னினும் நின்னினுஞ் சிறந்தோன் தலைவ ‡னென்று தவிர்தல் தரும நூல்விதி என்பது. இனி விழவயர்ந்திருப்பினல்லதை எனவே மீட்டற்குச் சேறல் அறனன் றென்று மீட்டாளாயிற்று.
"அன்னை வாழியோ வன்னை நின்மக
ளென்னினும் யாயினு நின்னினுஞ் சிறந்த
தன்னம ரிளந்துணை மருட்டலின் முனாது
வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை
மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம்
விழைவுடை யுள்ளமொ டுழைவயிற் பிரியாது
வன்கண் செய்து சென்றனள்
புன்கண் §செய்தல் புரைவதோ வன்றே"
இது தாயை வற்புறுத்தியது,
¶இயல்புற என்றதனானே தலைவன் $கரணவகையால் வரைந்தானாக எதிர்சென்ற தோழிக்கு யான்வரைந்தமை நுமர்க்குணர்த்தல் வேண்டுமென்றார்க்கு அவள் உணர்த்தினே னென்றலுந் தலைவி மீண்டு வந்துழி **ஊரது நிலைமை கூறுதலுங் கொள்க.
"கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப்பு
இருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோன்
மதிபுடைப் பதுபோற் றோன்று நாட
வரைந்தனை நீயெனக் கேட்டியா
னுரைத்தனெ னல்லனோ வஃதென் யாய்க்கே" (ஐங்குறு-280)
---------------
(பாடம்) * 'போக்குத் தவிர்ந்ததாம்' † 'காதலிற் றனாஅது'
‡ 'என்றுதவிர்த றரும நூல்' § 'செய்து புரையில் புறவே'
'சூத்திரத்து இயல்புற என்றதனானே' என்க
$ 'காணா வகையால் வரைந்தானாக வென்று' ** 'தலைவி ஆற்றாமை'
"புள்ளு மறியாப் பல்பழம் பழுனி
மடமா னறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி யினிய வாகுக வென்று
நினைந்தொறுங் கலுழு மென்னினு
மிகப்பெரிது கலங்கின்று தோழிநம் மூரே" (ஐங்குறு-398)
இன்னும் இதனானே செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க.
"ஊஉ ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கு மறனி லன்னை
தானே யிருக்கதன் மனையே யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே" (குறுந்-262)
இது போக்கு *நேர்ந்தமை தோழி கூறியது.
பிறவுமன்ன (39)
-----------
40.
- பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி
வழுவி னாகிய குற்றங் காட்டலும்
ஊரது †சார்வுஞ் செல்லுந் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும்
புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத்
தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ்
சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினுங்
கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.
இது, கொண்டுதலைக்கழிந்துழி இடைச்சுரத்துக் கண்டோர் கூறுவன கூறுகின்றது.
(இ-ள்) பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்- உடன்போயவழி மாலைக் காலமுஞ் சேறற்கரிய வழியும் அஞ்சுவரக்கூறி அவற்றது தீங்கு காரணமாகப் போகின்றார்க்கு வரும் ஏதம் அறிவித்தலும்; ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வநெஞ்சமொடு செப்பிய கிளவியும்- எம்மூர் அணித்தெனவும் நீர் செல்லுமூர் சேய்த்தெனவும் அன்புடை நெஞ்சத்தாற் கூறுங் கூற்றுக்களும்;
புணர்ந்தோர் பாங்கில் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்து எதிர் கூறி விடுப்பினும்- புணர்ந்து உடன்போய இருவர் கண்ணுந் தணவா நெஞ்சினராகி ஆற்றாமை மீதூர ஏற்றுக்கொண்டு நின்று இனி இதின் ஊங்குப் *போதற்கரிது நும் பதிவயிற் பெயர்தல் வேண்டுமென்று உரைத்து மீட்டலும்; ஆங்கு அத் தாய்நிலைகண்டு தடுப்பினும் விடுப்பினும்- அவ்விடத்துத் தேடிச் சென்ற அச்செவிலியது நிலைகண்டு அவளைத் தடுத்து மீட்பினும் அவர் இன்னுழிச் செல்வரென விடுத்துப் போக்கினும்; சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் சேய்த்தாகிய நிலைமைக் கண்ணே நீங்கின அவ்விருவருடைய போக்கிடத்தும்; வரவினும் - செலவிலியது வரவிடத்தும்; கண்டோர் மொழிதல் கண்டது என்ப- இடைச்சுரத்துக் கண்டோர் கூறுதல் உலகியல் வழக்கினுட் காணப்பட்டதென்று கூறுவர் புலவர் என்றவாறு.
-----------
(பாடம்) * 'நேரத் தோழி கூறியது' † 'சார்பும்'
"†எம்மூ ரல்ல ‡தூர்நணித் தில்லை
வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன்
சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப
இளையண் மெல்லியண் மடந்தை
அரிய சேய பெருங்க லாறே" (சிற்றெட்டகம்)
இதனுட் கதிரும் ஊழ்த்தனனெனவே பொழுதுசேறலும் பெருங்க லாறெனவே ஆற்றதருமையும் பற்றிக் குற்றங் காட்டியவாறு காண்க. "எல்லுமெல்லின்று" என்னுங் குறுந்தொகைப் (390) பாட்டும் அது.
"நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள்
பல்கதிர்ச் செல்வன் கதிரு மூழ்ததனன்
அணித்தாத் தோன்றுவ தெம்மூர்
§மணித்தார் மார்ப சேந்தனை சென்மெ"
இஃது எம்மூர் அணித்தென்றதனாற் சார்வும் அதனானே செல்லுந் தேயஞ் சேய்ததெனவுங் கூறிற்று. மகட்பயந்து வாழ்வோர்க்கு இவளைக் கண்டு அருள் வருதலின் ஆர்வநெஞ்ச மென்றார்,.
"இதுநும் மூரே யாவருங் கேளிர்
பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டு
மீன்றோ ரெய்தாச் செய்தவம்
யாம்பெற் றனமான் மீண்டனை சென்மே"
------------------
(பாடம்) *'போக்கரிது'
† இச்செய்யுள் இறையனா ரகப்பொருள் 23-ஆவது சூத்திரவுரையுள் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது. ‡ 'ஊரணித்தில்லை' § 'மணத்தார்'
இஃது அழிந்தெதிர் கூறி விடுத்தது. இது 'கொடுப்போரின்றிக் கரண முண்மை'* கூறிற்று. மீட்டுழி இன்னுழிச்சென்று இன்னது செய்ப என்றல் புலனெறிவழக்கன்று.
"பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி
சிலம்புகெழு சீறடி சிவப்ப
விலங்குவேற் காளையோ †டிறந்தனள் சுரனே"
"சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யுந்
தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையனே" (கலி-9)
"கடன்மேய சங்கங் கழியடைந்த பெண்ணை
மடன்மேய வாழ்குர லன்றில் -கெடலருஞ்சீர்
வாமா னெடுங்கோதை வான்றீண்டு கொல்லிமேற்
றேமாவின் மேய கனி"
இவை செவிலியைத் தடுத்தன.
"சிலம்புஞ் சிறுநுதலுஞ் சில்குழலும் பல்வளையு
மொருபாற் றோன்ற
அலங்கலந் திண்டோளும் ஆடெருத்தும் ஒண்குழையு
மொருபாற் றோன்ற
விலங்க லருஞ்சுரத்து வேறுருவின் ஓருடம்பாய்
வருவார்க் கண்டே
அலங்கல் அவிர்சடையெம் அண்ணல் விளையாட்டென்
றகன்றேம் ‡பாவம்"
இது தெய்வமென யாங்கள் போந்தேம், நுமக்கெய்தச்
சேறலாமென்று விடுத்தது.
"நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக்
கருங்கால் §யாத்த வரிநிழ லசைஇச்
சிறுவரை யிறப்பிற் ¶காண்டி செறிதளிர்ப்
பொன்னேர் மேனி மடந்தையொடு
$வென்வே லண்ணல் முன்னிய சுரனே" (ஐங்குறு-388)
இவ் வைங்குறுநூறும் அது.
"அஞ்சுடர்நீள் வாண்முகத் தாயிழையு மாறிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் -டஞ்சி
யொருசுடரு மின்றி யுலகுபா ழாக
விருசுடரும் போந்தனவென் றார்" (திணைமாலை நூற்-71)
இஃது இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியது,
-------------
* தொல்-பொ.-கற்-2 (பாடம்) †'இறந்தன டானே' ‡ 'அற்றேம்'
§ 'யாத்துவரி நிழல்' 'காண்குவ செறிதொடீ' $ 'வெள்வேல் விடலை'
"அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்
தொலிவ லீந்தி னுலவை யங்காட்
டாறுசென் மாக்கள் சென்னி யெறிந்த
செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய
வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை
மரனோக்கு மீண்டிவ ரீங்கைய சுரனே
வையெயிற் றையண் மடந்தை *முன்னேற்
றெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே" (நற்றிணை-2)
"காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவாநிற்ப
நாண்பால ளாதலா னன்னுதல் கேள்வன்பின் னடவாநிற்ப
வாண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கு மஞ்சொ லாட்கும்
பாண்பாலை வண்டினமும் பாட வருஞ்சுரமும் †பதிபோன் றன்றே"
"மடக்கண் டகரக் கூந்தற் பணைத்தோள்
வார்ந்த வாலெயிற்றுச் சேர்ந்துநெறி குறங்கிற்
பிணைய லந்தழை தைஇத் துணையிலள்
விழவுக்களம் பொலிய வந்துநின் றோளே
யெழுமினோ வெழுமினங் கொழுநர்க் காக்கம்
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த வொள்வாண் மலையன
தொருவேற் கோடி யாங்குநம்
பன்மைய தெவனோவிவ ணன்மைதலைப் படினே" (நற்றிணை-170)
இஃது இடைச்சுரத்துக் குறும்பினுள்ளோர் இவரைக் கண்டு கோள்இழைப்புற்றார்க்கு அவர்பெண்டிர் கூறியது. இவை செலவின்கட் கூறியன.
"வில்லோன் காலன கழலே தொடியோண்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயி லழுவ முன்னி யோரே" (குறுந்-7)
என்பதும் அது.
"கடியான் கதிரெறிப்பக் கல்லளையில் வெம்பியவக்
கலங்கற் சின்னீ
ரடியா னுலகளந்த வாழியா னாக்கிய
வமிர்தென் றெண்ணிக்
கொடியான் கொடுப்பக் குடங்கையிடங் கொண்டிருந்து
குடித்துச் சென்ற
வடியோர் தடங்கணவ் வஞ்சிக்கொம் பீன்றாரிவ்
வருவார் போலும்"
------------
(பாடம்) * 'முன்னுற்று' † 'பதியொன் றன்றே'
"நமரே யவரெனி னண்ணினீர் சொன்மி
னமர்வி லொராவவதி யாய்நின்- றமரோ
விளக்கி னனையாளைத் தான்கண்டாள் கண்டேன்
களக்கனி வண்ணனை யான்"
"அறம்புரி யருமறை நவின்ற நாவிற்
றிறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென்
றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே
கண்டனெ மம்ம சுரத்திடை *யவளை
யின்றுணை யினிதுபா ராட்டக்
குன்றுயர் பிறங்கன் †மலையிறந் தோளே" (ஐங்குறு-387)
இவை செவிலி வரவின்கட் கூறின.
"எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்
வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை
யென்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய
ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும
காணே மல்லேங் கண்டனங் கடத்திடை
யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய
மாணிழை மடவர றாயிர்நீர் போறிர்;
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யு
நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ்
தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ்
சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
எனவாங்கு, இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றன
ளறந்தலை பிரியா வாறு மற்றதுவே" (கலி-9)
என்னும் பாலைக்கலியும் அது. இக்கூறியவாறன்றி இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இச்சூத்திரத்தான் அமைக்க. (40)
------------
(பாடம்) * 'அவளே' † 'மலையிறந் தோரே'
-----------
41.
- ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும்
ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும்
இடைச்சுர மருங்கின் அவள்தம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட
அப்பாற் பட்ட ஒருதிறத் தானும்
நாளது சின்மையு மிளமைய தருமையுந்
தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும்
இன்மையது *இளிவு முடைமைய துயர்ச்சியும்
அன்பின தகலமு மகற்சிய தருமையும்
ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்
வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு
ஊதியங் கருதிய வொருதிறத் தானும்
புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலுந்
தூதிடை யிட்ட வகையி னானும்
ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினு
மூன்றன் பகுதியு மண்டிலத் தருமையுந்
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
பாசறைப் புலம்பலு முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினுங்
காவற் பாங்கி னாங்கோர் பக்கமும்
பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி
இரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோடு
உரைத்திற நாட்டங் கிழவோன் மேன.
இஃது உடன்போக்கினுள் நற்றாயுந் தோழியுங் கண்டோருங் கூறுவன கூறித் தலைவன் ஆண்டும் பிறாண்டுங் கூறுங் கூற்றுங் கூறுகின்றது. †தமர் பருவஞ் சுரமென்னும் மூன்றற்கும் ஒன்றா வென்பதனையும் ஒன்றியவென்பதனையுங் கூட்டி ஏழனுருபு விரித்துப் பொருளுரைக்க.
(இ-ள்) ஒன்றாத் தமரினும்- உடன்போக்கிற்கு ஒன்றாத் தாயர் முதலியோர்க்கண்ணும்; பருவத்தும்- இற்செறிப்பாற் புறம்போகற்கு ஒன்றாமையானுந் தலைவனொடு கூட்டம் பெறாது ஆற்றியிருக்கும் பருவம் ‡ஒன்றாததானும் ஒன்றாப் பருவத்தின்கண்ணும்; சுரத்தும்-அரிய சேய கல்லதர் ஆகலிற் போதற்கு ஒன்றாச் சுரத்தின்கண்ணும்; ஒன்றிய தோழியொடு வலிப்பினும்-தலைவி வேண்டியதே தான் வேண்டுதலிற் பின் தமர் கூறுங் கடுஞ்சொற் கேட்டற்கும் ஒருப்பட்டு நொதுமலர் வரைவிற்காற்றாது உடன் போக்கிற்கேலாத கடுங்கோடை யெனக் கருதாது கொண்டுதலைக்கழிதற்கு ஒன்றிய தோழி யொடு தலைவன் ஆராய்ந்து உடன் போக்கினைத் துணியினும்; விடுப்பினும்-தலைவியை ஆற்றி யிருப்பளெனக் கருதி உடன் கொண்டு போகாது தலைவன் விடுப்பினும்; இடைச்சுர மருங் கின் அவள் தமர்எய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட அப் பால் பட்ட ஒரு திறத்தானும்-தந்தையுந் தன்னையரும் இடைச் சுரத்திடத்தே பின்சென்று பொருந்தித் தலைவியைப் *பெயர்த் தல் வேண்டுதலிற் றலைவி மிகவருந்தித் தமர்பாற்பட்டு உரை யாடாது தலைவன்பாற்படுதலின் அவள் கற்பொடு புணர்ந் தமை சுற்றத்தாருஞ் சுரத்திடைக்கண்டோரும் உணர்ந்த வெளிப்பாடு உளப்படக் கொண்டுதலைக்கழிதற் கூற்றின்கட் பட்ட பகுதிக் கண்ணும்,.
- --------
(பாடம்) *'இழிவும்' †'தமரினும் பருவத்துஞ் சுரத்தும்'
‡'அன்றாகலானும்'
கடைக்கொண் டெய்தியென்க. கடை- பின். தமரெனவே, தந்தை தன்னையரை உணர்த்திற்று. "முன்னர்த் தாய்நிலை கண்டு தடுப்பினு" மென்றலின், தாயர்தாமே சென்றமை முன்னத்தாற் றமர் உணர்ந்து வலிதிற்கொண்டு அகன்றானோ வென்று கருதியும் அவ்வரைவு மாட்சிமைப் படுத்தற்கும் பின் சென்று அவள் பெயராமற் கற்பொடு புணர்ந்தமை †கண்டு தலைவன் எடுத்துக்கொண்ட வினைமுடித்தலும் ஒருதலையென்றுணர்ந்து பின்னர் அவரும் போக்குடன்பட்டு மீள்பவென்று கொள்க. அவ்வெளிப்பாடு கற்பாதலிற் கற்பென்றார். ‡உளப் படவென்றதனால் வலித்தலும் விடுத்தலும் அகப்பட வென்றாராயிற்று.
நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடை மையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்- வாழ்க்கை நாள் சிலவாதல் ஏதுவாகப் பொருள்செய்தல் குறித்தாரை இளமையது அருமை இன்பத்தின் கண்ணே ஈர்த்து ஒன்றாமையும், மடியின்மை ஏதுவாகப் பொருள்செயல் குறித்தாரை யாதானும் ஓர் ஆற்றாற் பொருள் செய்யலாகாது தத்த நிலைமைக்கேற்பச் செயல்வேண்டு மென்னுந் தகுதியதமைதி ஒன்றாமையும், இன்மையான் வரும் இளிவரவு நினைத்துப் பொருள்செய்ய நினைந்தாரைப் பொருளுடைமைக் காலத்து நிகழும் உயர்ச்சி அதற்கு இடையூர்கிப் பொருணசை யுள்ளத்தைத் தடுத்து ஒன்றாமையும், பிரிந்துழி நிகழும் அன்பினது அகலங்காரணமாகப் பொருள்செய்யக் குறித்தாரைப் பிரிவாற்றாமை யிடைநின்று தடுத்து ஒன்றாமையுமாய், ஒன்று ஒன்றனோடு ஒன்றாது வரும் பொருட்டிறத்துப் பிரிதற்குத் தலைவன் உள்ளம் எடுத்த பகுதிக்கண்ணும்;
- -------
(பாடம்) *'பெயர்த்தலின்' † 'உணர்ந்து்
‡'உளப்பட வென்றது வலித்தலும் விடுத்தலும் அகப்பட என்றவாறு.'
எனவே, நாளது சின்மையுந் தாளாண் பக்கமும் இன்மையதிளிவும் அன்பின தகலமும் பொருள் செயல்வகைப்பால ஆதலும் இளமையதருமையுந் தகுதிய தமைதியும் உடைமைய துயர்ச்சியும் அகற்சிய தருமையும் இன்பத்தின்பால ஆதலுங் கூறினார். இவ்வெட்டும் பொருள்செயற்கு ஒன்றாவென்னாமோ எனின், வாழ்நாள் சிறிதென்று உணர்ந்து அதற்குள்ளே பொருள் செய்து அறமும் இன்பமும் பெறுதற்குக் கருதியவழி ஆண்டு முயற்சியும் இன்மையால்வரும் இளிவரவும் அதற்கு ஒருப்படுத்துங் கருவியாதலானும், இந்நான்கும் பொருள்செய்தற்கு வேண்டுமென மறுக்க. இவ்வெட்டற்குந் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கண்டுகொள்க.
"ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செயவினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே" (குறு-63)
இக் குறுந்தொகையுள் இன்மையதிளிவு நெஞ்சிற்குக்கூறியவாறு காண்க. பகுதியென்றதனானே, தலைவன் பிரிவலெனக் கூறுவனவும் பிறவுங் கொள்க.
"இன்றே சென்று வருது நாளைக்
குன்றிழி யருவியின்..." (குறு-189)
எனவரும்.
இது குறுந்தொகை.
இவை வாணிகர்க்கே உரியன.
இனித்தலைவன் கூற்றினைத் தலைவியுந் தோழியுங் கொண்டு கூறுவன பெரும்பான்மை. அவையெல்லாம் 'நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே' (தொல்-பொ-அக-44) என மேல்வருஞ்சூத்திரத்துட் காட்டுதும்.
வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்-உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்திடத்துங் கூறுபடுத்துக் கூறிய நூல்களாற் பெறும் பயனைக் கருதிய ஒரு கூற்றின்கண்ணும்;
என்றது, வீடுபேற்றிற்கு *உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு மென்றதாம். இதற்குத் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கொள்க.
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்-போகம் வேண்டிப் பொதுச்சொற் †பொறுத்தல் அரசியலன்றாதலிற் றமக் கேற்ற புகழும் பெருமையும் எடுத்துக்காட்டி இதனாற் பிரிதுமெனத் தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தூது இடையிட்ட வகையினானும்-இருபெரு வேந்தர் பொருவது குறித்துழி இருவரையுஞ் சந்து செய்வித்தற் பொருட்டுக் கூட்டத்திற்கு இடையிட்ட பிரிதற் பகுதிக் கண்ணும்;
‡ஒருவனுழை ஒருவன் மாற்றங்கொண்டுரைத்தலிற் றூதா யிற்று. வகையென்றார், வாணிகரில் அரசர்க்கும் அரசரில் அந்தணர்க்குந் தூது சிறந்ததென்றற்குங், குறுநிலமன்னர்க்குப் பெரும்பான்மை யென்றற்கும், வேந்தர் தம்மின் இழிந்தாருழைத் தூதுசேறல் உரித்தென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும்-§தனக்கு ஆக்கஞ் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு உற்றுழி உதவச் சேறற்கண்ணும்;
இதற்கு "மலைமிசைக் குலைஇய" (அகம்-84) என்பதூஉம் "இருபெரு வேந்தர் மாறுகொள்" (அகம்-173) என்பதூஉம் ¶முன்னர்க் காட்டினாம். அவற்றை உதாரணமாகக் கூறிக் கொள்க.
- -------
(பாடம்) *'உதவியாக நூல்களையோத.' †'போற்றுதல்.'
‡ 'ஒருவனிடை.' §'தனக்காக்கஞ் சிறந்த நட்புடையோர்க்கு.' 'தொல்-பொ-அக-24 ஆம் சூத்திரவுரையிற் காண்க.
மூன்றன் பகுதியும்- அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்; மண்டிலத்து அருமையும் - அங்ஙனம் பொருள்வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமைகூறிப் பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்- தோற்றஞ்சான்ற புகழினராகிய வேற்று வேந்தர் தமது மீக்கூற்றங் கருதிப் பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தோன்றல் சான்ற என்றதனாற் றெவ்வர் தன்னின்மிக்காரெனக் கேட்டுழி அழுக்காறு தோன்றலின் அதுவும் பிரிதற்கு ஏதுவா மென்றுணர்க. இஃது அரசர்க்கேயுரித்து.
பாசறைப் புலம்பலும்- தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத் தனிமை கூறும் இடத்தும்;
இதனைக் *'கிழவிநிலையே' (தொல்-பொ-கற்-45) என்னுஞ் சூத்திரத்தான் விலக்குவரெனின், அதற்கு †உம்மைவிரித்துக் கிழவி நிலையை வினைசெய்யாநிற்றலாகிய இடத்து நினைந்து கூறினானாகக் கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் வருத்தம் விளங்கிக்
கூற்றுத் தோன்றுமென்று பொருளாமென்றுணர்க.
முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்- வகையின் வினைத்திறமுமென மாற்றுக; வேந்தன் எடுத்துக்கொண்ட வினை முடிந்தகாலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு விரும்பிக் கூறிய வகையின்கட்டோன்றிய வேறோர் வினைத்திறத்திடத்தும்;
என்றது, அரசனுக்குப் பின்னும் ஓர் பகைமேற் சேறல் உளதாதலை.
காவற்பாங்கின் பக்கமும்- வேந்தன் றன்னாற் காக்கப்படுவன வாகிய பகுதிகளின் கூற்றிற் பிரியுமிடத்தும்;
-
-----------
* 'கிழவி நிலையே வினையிடத் துரையார், வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் ' என்பது. இதன் பொருளே ஈண்டுக் கூறினார். இதன்கட் காலத்தும் என்னும் எச்சவும்மை தொக்கு நின்றது. இது கருதியே உம்மை விரித்தென்றாரென்க.
(பாடம்) † 'உம்மை கொடுத்'
பகுதி ஆகுபெயர்; அவை யானை குதிரை முதலியவற்றைக் காத்தலும் அரசர்க்குத் தருமமாகிய வேட்டையிற்சென்று கடுமா கொன்று ஏனையவற்றைக் காத்தலும்
முதலியன;
ஆங்கோர் பக்கமும்-அவன் காத்தற்குரிய பகுதிக்கண்ணே நிற்பார் கூற்றிற் பிரியுமிடத்தும்;
அவர் தாபதர் முதலியோர் பலருமாம்.
பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட்குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு-பரத்தையிற் பிரிதல் காரணத்தாற் பரிபுலம்பெய்திய தலைவியை எய்து இரத்தலும் இரந்தபின்னர் ஊடலுணர்த்தலும் என்ற இருபகுதியோடே; உரைத்திற நாட்டம் கிழவோன் மேன-முற்கூறிய இடங்களிற் கூற்று நிகழுங் கூறுபாட்டை நிலைபெறுத்துதல் தலைமகனிடத்தனவாம் என்றவாறு.
உதாரணம்:-
"ஆறுசெலல் வருத்தவுஞ் சீறடி சிவப்பவுஞ்
சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந்
தான்வர றுணிந்த விவளினு மிவளுடன்
வேய்பயி லழுவ முவக்கும
பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே."
இது தோழியொடு வலித்தது.
அப்பாற்பட்ட ஒருதிறத்தானும் என்றதனானே, தலைவியிடத்துத் தலைவன் கூறுவன பலவுங் கொள்க.
உதாரணம்:-
"வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன
செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தாஅய் மதரெழின்
மாணிழை மகளிர் பூணுடை முலையின்
முகைபிணி அவிழ்ந்த கோங்கமொ டசைஇநனை
அதிரல் பரந்த அந்தண் பாதிரி
உதிர்வீ அஞ்சினை தாஅய் எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயவரும் அம்ம
கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பிற்
பிடிமிடை களிற்றில் தோன்றுங்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே" (அகம்-99)
இவ் வகப்பாட்டு தலைவியை மருட்டிக் கூறியது.
"*உயர்கரைக் கானியாற் றவிரற லகன்றுறை
வேனிற் பாதிரி விரைமலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரன் மகளே
கண்ணினுங் கதவநின் முலையே
முலையினுங் கதவநின் றடமென் றோளே" (ஐங்குறு-361)
இவ் வைங்குறுநூறு உடன்போயவழித் தலைவன் புகழ்ச்சிக்கு நாணித் தலைவி கண்புதைத்துழி அவன் கூறியது.
"அழிவிலர் முயலு மார்வ மாக்கள்
வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்
கலமரல் வருத்தந் தீர யாழநின்
னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற்
பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி
சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி
நிழல்காண் டோறு நெடிது வைகி
மணல்காண் டோறும் வண்ட றைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயி லாலு
நறுந்தண் பொழில கானங்
குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே" (நற்றிணை-9)
எனவரும். இது புணர்ச்சி மகிழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி வருந்தாது ஏகென்றது. இது நற்றிணை.
பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.
"இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு
நாட்டயிர் கடைகுரல் †கேட்டொறும் வெரூஉ
மாநிலைப் பள்ளி யல்க நம்மொடு
மானுண் கண்ணியும் வருமெனின்
வாரார் யாரோ பெருங்க லாறே"
இது விடுத்தற்கட் கூறியது.
"வினையமை பாவையி னியலி நுந்தை
மனைவரை யிறந்து வந்தனை யாயிற்
றலைநாட் கெதிரிய ‡தண்பத வெழிலி
யணிமிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி
யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவ
னுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே" (நற்றிணை-362)
---------
(பாடம்) * 'உயரறற் கான்யாற் றவிரறல்,' 'விரிபுனற் கான்யாற்றவிர் மணல்' † 'மீட்டொறும்' ‡ 'தண்பெயல்'
இது நற்றிணை.
"நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின்
முந்நீர் மண்டில முழுது மாற்றா
தெரிகணை விடுத்தலோ விலனே
யரிமதர் மழைக்கண் கலுழ்வகை யெவனே."
இவை தமர் வருவரென ஐயுற்றுக் கூறியன. அவர் வந்து கற்பொடு புணர்ந்தன வந்துழிக் காண்க.
"அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் *பெயர்ந்தநங் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி" (கலி-11)
இதனுள் எனவென்றதனாற் றலைவன் கூற்றுப் பெற்றாம். இது †மூன்றன் பகுதி.
"புகல்சால் சிறப்பிற் காதலி புலம்பத்
துறந்துவந் தோயே யருந்தொழிற் கட்டூர்
நல்லேறு ‡தழீஇ நாகுபெயர் காலை
யுள்ளுதொறுங் கலிழு நெஞ்சம்
வல்லே யெம்மையும் §வரவிழைத் தனையே." (ஐங்குறு-445)
இது பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பியது.
"முல்லை நாறுங் கூந்தல் கமழ்கொள
நல்ல காண்குவ மாஅ யோயே
பாசறை யருந்தொழி லுதவிநங்
காதனன் னாட்டுப் போதரும் பொழுதே." (ஐங்குறு-446)
இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவவரவின்கண் உருவு வெளிப் பட்டுழிப் புலம்பியது. உதவியென்றலின் வேந்தற்குற்றுழி யாயிற்று.
-------
(பாடம்) *'சென்ற'
†'மூன்றன் பகுதி கூறுதலாவது அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காமம் நுகர்வே னென்றலாம்' என்று இக்கலித்தொகையுரையிற் கூறியதனான் இதனைத் தெளிக. (கலி-பாலை-11)
(பாடம்) ‡'தழீஇய.' §'வர வழைத்தனையே.'
"வந்தாற்றான் செல்லாமோ வாரிடையாய் வார்கதிரால்
வெந்தாற்போற் றோன்றுநீள் வேயத்தந்-தந்தார்
தகரக் *குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு." (திணைமாலை நூற்-77)
இஃது உருவு வெளிப்பாடு. நின்னொடு போதுவே னென்றவனை ஆற்றுவித்தது, திணைமாலையிற்பாலை.
"நனிசேய்த் தென்னாது நற்றே ரேறிச்சென்
றிலங்கு நிலவி னிளம்பிறை போலக்
காணகுவெந் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல்
விண்ணுய ர ரண்பல வௌவிய
மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே." (ஐங்குறு-443)
இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் தான் குறித்த பருவத்து வினை முடியாமையிற் புலம்பியது.
"+முழங்குகுரன் முரசங் காலை யியம்பக்
கடுஞ்சின வேந்தன் றொழிதெதிர்ந் தனனே
மெல்லவன் முருங்கின் முல்லை பூப்பப்
பொங்குபெயற் கனைதுளி காரெதிர்ந் தன்றே
யஞ்சி லோதியை யுள்ளுதொறுந்
துஞ்சா தலமர னாமெதிர்ந் தனமே." (ஐங்குறு-448)
இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவம்வந்துழி மீளப்பெறாது அரசன்செய்தியும் பருவத்தின் செய்தியுந் தன் செய்தியுங் கூறிப் புலம்பியது. இப் பாசறைப் புலம்பல் பத்தினுள்ளும் வேறுபாடு காண்க. தூதிற்பிரிந்துழிப் புலம்பின வந்துழிக் காண்க.
"நீடின மென்று கொடுமை தூற்றிய
வாடிய நுதல ளாகிப் ++பிறி துநினைந்
தியாமவெங் காதலி னோய்மிகச் சாஅய்ச்
சொல்லிய துரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே." (ஐங்குறு-478)
இது தூதுகண்டு அவள் கூறிய திறங்கூறெனக் கேட்டது.
"பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலி துயரமொ டரும்பட ருழப்போள்
கையறு $நெஞ்சத் துயவுத்துணை யாகச்
சிறுவரைத் தங்குவை யாயிற்
#காண்குவை மன்னாற் பாவெந் தேரே." (ஐங்குறு-477)
இது தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடுந் தலைவன் கூறியது.
- -----------
(பாடம்) * 'குழலனைய.' + 'தழங்குரன்.' 'தழங்குகுரன்.'
++ 'பெரிது நினைத்து.' 'பெரிது நினைந்து.'
$ 'நெஞ்சிற் குயவுத்துணையாக' # 'காண்குமன்றே'.
-
"படுந்தடங்கட் பல்பணைபோல் வான்முழங்கன் மேலுங்
கொடுந்தடங்கட் கூற்றமின் னாக-நெடுந்தடங்க
ணீர்நின்ற நோக்கி னெடும்பணைமென் றோளாட்குத்
தேர்நின்ற *தென்னாய் திரிந்து" (திணைமாலை நூற்-115)
இஃது இளையோரைத் தூதுவிட்டது.
"ஐய வாயின செய்யோள் கிளவி
கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தென
நோய்நன்கு †செய்தன் றெமக்கே
யாமுறு துயரமவ ளறியினோ நன்றே" (ஐங்குறு-441)
இது வினைமுடியாமையிற் பருவங்கண்டு மீளப்பெறாத தலைவன் தூதர் வார்த்தை கேட்டு வருந்தியது. பிறவும் வேறுபட வருவன கொள்க
"முரம்புகண் ணுடையத் திரியுந் திகிரியொடு
பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே
யொண்ணுதற் காண்குவம் ‡வேந்துவினை விடினே" (ஐங்குறு-449)
இது வேந்தன் திறைகொண்டு மீள்வுழித் தானுஞ் சமைந்ததேரை அழைத்துக்கண்டு 'திண்ணிதின் மாண்டன்று தே'ரெனப் பாகனொடு கூறியவழி அவ்வேந்தன் திறைவாங்காது வினைமேற் சென்றானாகப் பாகனை நோக்கிக் கூறியது. இவை ஐங்குறுநூறு. "மலைமிசைக் குலைஇய" என்னும் (84) அகப் பாட்டும் அது. கலித்தொகையுட் "புத்தியானை வந்தது காண் பான்யான் றங்கினேன்" (மருதக்கலி-32) என்பன முதலியவற்றான் யானைமுதலியவற்றையுங் , கடவுட் பாட்டால் (மருதக் கலி-28) தாபதரையுங் காத்தற்குப் பிரிந்தே னெனக் கூறினா னென்பது பெற்றாம்.
"ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற
முடியுதிர் பூந்தாது மொய்* பின வாகத்
தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க்
கடியரோ வாற்றா தவர்;
கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மற்று;
வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின்
மாய மருள்வா ரகத்து;
ஆயிழாய் நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா
வென்க ணெவனோ தவறு;
இஃதொத்தன், புள்ளிக் கள்வன் புனல்சேர்பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவு
மொள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந்
தவறாதல் சாலாவோ கூறு;
அதுதக்கது வேற்றுமை யென்கண்ணோ வோராதி தீதின்மை
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;
இனித் தேற்றேம் யாந்
தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீயுறும் பொய்ச்சூ ளணங்காயின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு" (கலி-88)
---------
(பாடம்) *'தென்னாய் நீ சென்று.' †'செய்தன வெமக்கே.' ‡'வேந்தன் வினை.'
இதனுள் இரத்தலுந் தெளித்தலும் வந்தவாறு காண்க. பிறவும் இவ்வாறு வருவன கொள்க. (41)
-----------
42
- எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே.
இது முன்னர்க் கூற்றிற்கு உரியரெனக் கூறாதோர்க்குங்கூற்று விதித்தலின் எய்தாத தெய்துவித்தது,.
(இ-ள்) எஞ்சியோ்க்கும்- முன்னர்க் கூறாது நின்ற செவிலிக்குந் தலைவிக்கும் ஆயத்தோர்க்கும் அயலோர்க்கும்; எஞ்சுதல் இலவே- கூற்றொழித லில என்றவாறு,
செவிலிக்குக் கூற்று நிகழுமாறு:--
"கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்புஞ் சாயலும் இயல்பும்
முன்னாள் போலாள் இறீஇய ரென் உயிரெனக்
கொடுந்தடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த
கடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக்
குறுக வந்து குவவுநுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினே னாக என்மகள்
நன்னர் ஆகத் திடைமுலை வியர்ப்பப்
பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ
விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டி
வறனிழல் அசைஇ வான்புலந்து வருந்திய
மடமான் அசாவினந் *திரங்குமரல் சுவைக்குங்
காடுடன் கழிதல் அறியின் தந்தை
அல்குபத மிகுத்த கடியுடை வியனகர்ச்
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக்
கோதை யாயமோ டோரை தழீஇத்
தோடமை அரிச்சிலம் பொலிப்ப அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே" (அகம்-49)
இவ் வகப்பாட்டு உடன்போன தலைவியை நினைந்து செவிலி மனையின்கண் மயங்கியது.
-----------
(பாடம்) * 'மடமான் சாயினம்'
-
"அத்த நீளிடை யவனொடு போகிய
முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவர
*றாய ரென்னும் பெயரே வல்லா
றெடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே" (ஐங்குறு-380)
இவ் வைங்குறுநூறு செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது. "முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின" என்னும் அகப்பாட்டு (7) மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின் சென்று நவ்விப்பிணையைக் கண்டு சொற்றது. செவிலி கானவர் மகளைக்கண்டு கூறியதுமாம்.
"காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
யகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே" (குறுந்-44)
இது குறுந்தொகை. செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
"இடிதுடிக் கம்பலையு மின்னாத வோசையு மிசையி னாராக்
கடுவினை யாளர் †கடத்திடைப் பைங்குரவே கவன்று நி்ன்றாய்
நெடுவினை மேற்செய்த வெம்மேபோ னீயும்
படுசினைப் பாவை பறித்துக்கோட் பட்டாயோ பையக் கூறாய்"
இது செவிலி குரவொடு புலம்பியது.
"தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
வீன்றாய்நீ பாவை யிருங்குரவே- யீன்றாண்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டா யீதென்று வந்து" (திணைமாலை நூற்-65)
இது குரவே வழிகாட்டென்றது.
"குடம்புகாக் கூவல் குடிகாக்குஞ் சின்னீ
ரிடம்பெறா மாதிரியு ‡மேறாநீ ரத்த
முடம்புணர் காத லுவப்ப விறந்த
தடம்பெருங் கண்ணிக்கு யான்றாயை கண்டீர்"
இது நீ யாரென்று வினாயினார்க்குச் செவிலி கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க.
- ------------
(பாடம்) *'தாய ளென்னும் பெயரே னல்லாறு'
† 'கடற்றிடை' ‡'வேறா நீளத்தம்'
இனித் தலைவி கூற்று நிகழுமாறு:--
"பைபயப் பசந்தன்று நுதலுஞ் சாஅய்
ஐதா கின்றென் தளிர்புரை மேனியும்
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்
உயிர்கொடு கழியின் அல்லதை நினையின்
எவனோ வாழி தோழி பொரிகால்
பொகுட்டரை யிருப்பைக் *குவிகுலைக் கழன்ற
ஆலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ
ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரம்பல †கடந்தோர்க் கிரங்குப வென்னார்
கௌவை மேவல ராகி இவ்வூர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரையா அல்லஎன் மகட்கெனப் பரைஇ
நம்முணர்ந் தாறிய கொள்கை
யன்னை முன்னர்யாம் என்னிதற் படலே" (அகம்-95)
இது போக்குடன்பட்ட‡ தலைவி தோழிக் குரைத்தது. அகம்.
"அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
தாங்கு மளவை தாங்கிக்
காம நெரிதரக் கைநில் லாதே." (குறுந்-149)
இக் குறுந்தொகை நாண் நீங்கினமை கூறியது.
"சிலரும் பலருங் கடைக்க ணோக்கி
மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச்
சிறுகோல் வலத்த ளன்னை யலைப்ப
வலந்தனென் வாழி தோழி கானற்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற்
கடுமான் பூண்ட நெடுந்தேர் கடைஇ§
நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே." (நற்றிணை-149)
இந் நற்றிணை அலர் அச்சம் நீங்கினமை கூறியது.
"சேட்புல முன்னிய ¶வசைநடை யந்தணிர்
நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த்
தாய்நயந் தெடுத்த$ வாய்நலங் கவின்பெற**
வாரிடை யிறந்தன ளென்மி
னேரிறை முன்கையென் னாயத் தேர்க்கே." (ஐங்குறு-384)
---------
(பாடம்) *'குவிதலைக் கழன்ற.' †'கழிந்தோர்க்.' ‡'போக்குடன் பட்டமை.'
§'கடுமாண் பரீஇய கதழ்பரி கடைஇ.' 'விரைநடை.' $'ஆய்நயந் தெடுத்த.'
**'வாய்நலங் கவின.'
இவ் வைங்குறுநூறு 'யான் போகின்றமை ஆயத்திற்கு உரைமின்' என்றது.
"கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்
கோள்வல் வேங்கை மலை*பிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்†
கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க
ணற்றோ ணயந்துபா ராட்டி
யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே" (ஐங்குறு-385)
இவ் வைங்குறுநூறு இன்று யான் தேரேறி வருத்தமின்றிப் போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது.
"கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ்
சுரநனி வாரா நின்றன ளென்பது
முன்னுற விரைந்தனி ருரைமி‡
னின்னகை முறுவலென் னாயத் தோர்க்கே" (ஐங்குறு-397)
இவ் வைங்குறுநூறு மீள்கின்றாளென்று என் வரவு ஆயத்தார்க்குக் கூறுமின் என்றது.
"வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற
வாய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப்
பரியல் வாழி§ தோழி பரியி¶
னெல்லையி லிடும்பை தரூஉ
நல்வரை நாடனொடு வந்த வாறே" (ஐங்குறு-392)
இவ் வைங்குறுநூறு மீண்டு வந்த தலைவி வழிவரல் வருத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது.
"அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட்
டுவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலுழி நீரே." (ஐங்குறு-203)
இஃது உடன்போய் மீண்ட தலைவி 'நீ சென்ற நாட்டு நீர் இனியவல்ல; எங்ஙனம் நுகர்ந்தாயென்ற' தோழிக்குக் கூறியது.
"அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ
வறனுண் டாயினு மறஞ்சா லியரோ$
வாள்வனப் புற்ற வருவிக்
*கோள்வரு மென்னையை மறைத்த குன்றே" (ஐங்குறு-312)
--------------
(பாடம்) * 'வேங்கையமலை' † 'வேரன் மலருஞ் சுரமிறந் தனளென.'
‡'முன்னுறச் செல்வீ ருரைமின்.', 'முன்னுற விரைந்தனி ரன்ன சென் றுரைமின்.'
§ 'பிரியல்வாழி.' 'பிரியின்.' $ 'அறனு முண்டாயி னறஞ்சா லியரோ.'
இவ் வைங்குறுநூறு நின் ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என்னென்ற தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது. பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க.
இனி ஆயத்தார் கூற்று நிகழுமாறு:-
"மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரு மென்ப தடமென் றோளி
யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப்
பஞ்சி மெல்லடி† பரல்வடுக் கொளவே"
இனி அயலோர் கூற்று நிகழுமாறு:-
"துரந்ததற் கொண்டுந்‡ துயரடச் சாஅ
யறம்புலந்து பழிக்கு மங்க ணாட்டி§
யெவ்வு நெஞ்சிற் கேம மாக
வந்தன ளோநின் மடமகள்
வெஞ்சின வெள்வேல்¶ விடலைமுந் துறவே." (ஐங்குறு-393)
செய்யுளியலுட் 'பார்ப்பான்பாங்கன்' (தொ-பொ-செய்- 190) 'பாணன் கூத்தன்' (தொ-பொ-செய்-191) என்னுஞ் சூத்திரங்களாற் பார்ப்பான் முதலியோர் கூற்றுக் கூறுமாறு உணர்க. (42)
-----------
43.
- நிகழ்ந்தது நினைத்தற் கேதுவும் ஆகும்.
இதுவும் பாலையாவதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்) முன்னர் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்குரிய நிமித்தமாம*$ என்றவாறு.
என்றது, முன்னர்த் தலைவன்கண் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர்த் தலைவி நினைத்தற்கும் ஏதுவுமாம். முன்னர்த் தலைவி கண் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர்த் தலைவன் நினைத்தற்கும் ஏதுவுமா மென்றவாறாம்.
உம்மை எச்சவும்மையாதலிற் கூறுதற்குமாம் என்று கொள்க.
- -------
(பாடம்) *’கோள்வ லென்னையை.' †'பஞ்சின் மெல்லடி.'
‡ 'துறந்ததற்கொண்டு.' §'உண்கணாட்டி.'
'வெந்திறல் வெள்வேல்.' $'நினைத்தற்கு நிமித்தம்.'
உதாரணம்:--
"நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங்
கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென்
ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவ
ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும்" (கலி-4)
இது, தலைவன்கண் நிகழ்ந்த மிகுதித் தலையளி வஞ்சமென்று தலைவி உட்கொண்டு பிரியுங்கொல் லென நினைத்தற்கு நிமித்தமாயிற்று. இதனானே தலைவன் செய்திகளாய்ப் பின்னர்த் தலைவி கூறுவனவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாக அமைத்துக் கொள்க.
இனி,
"அளிநிலை பொறா அ* தமரிய முகத்தள்
விளிநிலை கேளாள் தமியள் மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை யொண்ணுதல்
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப்
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
விரனுதி சிதைக்கு நிரைநிலை அதர
பரன்முரம் பாகிய பயமில் கானம்
இறப்ப வெண்ணுதி ராயி னறத்தா
றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னங் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப்
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ
டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயின ளுயிர்த்த காலை மாமலர்
மணியுரு விழந்த அணியழி† தோற்றம்
கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி
யுழையம் ஆகவும் இனைவோள்‡
பிழையலள் மாதோ பிரிதுநாம் எனினே" (அகம்-5)
"இருங்கழி முதலை மேந்தோ லன்ன.....ஞான்றே" (அகம்-3)
----------
(பாடம்) * 'பெறாஅது' † 'அணியிழை.' ‡ 'இளையோள்.'
இவை அகம்.
"வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை
கந்துபிணி யானை யயாவுயிர்த் தாஅங்
கென்றூழ் நீடிய வேய்பயி லழுவத்துக்
குன்றூர் மதிய நோக்கி நின்றுநினைந்
துள்ளினெ னல்லனோ யானே முள்ளெயிற்றுத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுத
லெமது முண்டோர் மதிநாட் டிங்க
ளுரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழல்தப
வுலவை யாகிய மரத்த
கல்பிறங்கு மாமலை யும்பரஃ தெனவே" (நற்றிணை-62)
இது நற்றிணை. இவை தலைவிகண் நிகழ்ந்தனவும் அவடன்மையும் பின்னர்த் தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்த மாயவாறு காண்க. "அறியாய் வாழி தோழி யிருளற" (அகம்- 53) என்பது தலைவன்கண் நிகழ்ந்தது தலைவி நினைந்து தோழிக்குக் கூறியது. "நெஞ்சு நடுக்குற" என்னும் (23) பாலைக்கலியும் அது.
"உறலியா மொலிவாட வுயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரொடும் விளையாடு வான்மன்னோ
பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்
தறலாரும் வையையென் றறைகுந ருளராயின்" (கலி-30)
இதுவும் அது.
"ஈன்பருந் துயவும் வான்பெரு நெடுஞ்சினை
பொரியரை வேம்பின் புள்ளி நீழற்
கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துத்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த வுரன்மாய் மாலை
யுள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன வினியோண்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே" (நற்றிணை-3)
என்னும் நற்றிணையும் (3) அது. இவ்வாறன்றி வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (43)
----------
44.
- நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே
இஃது 'ஒன்றாத்தமரினும்' (தொல்-பொ-அகத்-41) என்னுஞ் சூத்திரத்திற்கோர் புறனடை கூறுகின்றது.
(இ-ள்) நிகழ்ந்தது கூறி- ஒன்றாத்தமரினும் என்னுஞ் சூத்திரத்துத் தலைவன்கண் நிகழ்ந்த கூற்றினைத் தலைவியுந் தோழியுங் கூறி, நிலையலுந் திணையே- அதன்கண் நிலைபெற்று நிற்றலும் பாலைத்திணையாம் என்றவாறு.
உதாரணம்:--
"அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப்
பிரிந்துறை சூழாதி பைய விரும்பிநீ
யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின்
மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்
சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா
தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா
ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார்
வளமை விழைதக்க துண்டோ வுளநா
ளொரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
யொன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினு
மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
சென்ற விளமை தரற்கு" (கலி-18)
இதனுள் 'உளநாள்' என்றது *நாளது சின்மை; 'அரிதரோ சென்ற இளமை தரற்கு' என்றது இளமையதருமை; 'உள்ளந் துரப்ப' என்றது உள்ளத்தான் உஞற்றுதலால் தாளாண் பக்கம்; 'சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவாது' என்றது தகுதியது அமைதி; தத்த நிலமைக்கேற்பப் பொருள் செய்ய வேண்டுதலின்; அது பாணிக்கு மென்றலின் 'ஒரோஒகை தம்முட் டழீஇ ஒரோஒகை- ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யாயினும் ' என்றது இன்மைய திளிவு; 'வளமை விழை தக்க துண்டோ' என்றது உடைமைய துயர்ச்சி; 'பிரிந்துறை சூழாதி ஐய' என்றது அன்பினதகலம், 'பிரிந்துறைந் தன்பு பெருக்கல் வேண்டா தம்முளொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' என்றலின்; 'தொய்யிலுஞ் சுணங்கு நினைத்துக்காண்' என்றது அகற்சிய தருமை. இவ் வெட்டுந் தாமேகூறல் வேண்டினமையின் முன்னொருகால் தலைவன் கூறக்கேட்டுத் தோழியுந் தலைவியும் உணர்ந்தமை கூறியவாறு காண்க.
"பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ" (கலி-15)
என்பது ஓதற்குப் பிரிவலெனத் தலைவன் கூறியது கேட்ட தோழி கூறியது.
----------------
* இது முதலாக அகற்சியதருமை யிறுதியாக வந்துள்ள எட்டும் முன்னர் 'ஒன்றாத்தமரினும்' என்னுஞ் சூத்திரத்துக் கூறியன.
"நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து
ஆழல் வாழி தோழி தாழாஅது
உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக்* கொளீஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
கழல்புனை திருந்தடிக் கள்வர்+ கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ வரிதே முனாஅது
முழவுறழ் திணிதோ ணெடுவே ளாவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே." (அகம்-61)
இவ் வகப்பாட்டின் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து# வீழ்ந்தாரே துறக்கம் பெறுவரெனத் தன் சாதிக்கேற்பத் தலைவன் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள்.
"வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார்
தாந்தங் குறிப்பின ரல்லரா-லேந்திழாய்
கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ
தண்பனி நாளே தனித்து."
இது குறைமொழிந்து வேண்டைனமை தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது. "அரிதாய வறனெய்தி" (பாலைக்கலி - 10) என்றது மூன்றன்பகுதி& தலைவன் கூறக்கேட்ட தலைவி கூறியது.
"யானெவன் செய்கோ தோழி பொறிவரி
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
உறைதுறந்@ தெழிலி நீங்கலிற் பறையுடன்
மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை
அரம்போழ நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடு மெழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய$ பிறங்குநிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்**
--------
(பாடம்) * ’வார்சிலை.’ + ‘கானவர்.’ # ‘மறக்களத்து.’
& ‘அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காமம் நுகர்வ
லென்று பிரிவது’ (தொல் - பொருள் - அகத் - 41) இக் கலித்தொகை
உரையினும் இது கூறினார். @ ‘உரையிறந்.’ $ ‘சூடிய.’ ** ‘கடந்து.’
மொழிபெயர் தேஎந் தருமார் மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவலிடு பதுக்கை* ஆளுகு பறந்தலை
உருவில் பேஎய் ஊராத் தேரொடு
நிலம்படு மின்மினி போலப் பலவுடன்
இலங்குபரல் இமைக்கும்+ என்பநம்
நலந்துறந் துறைநர் சென்ற ஆறே." (அகம் - 67)
இது மண்டிலத்தருமை தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது.
"நம்நிலை யறியா ராயினுந் தம்நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக்
காய்ச்சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர விறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே." (அகம் - 264)
இது தலைவன் பாசறைப் புலம்பினமை கூறக்கேட்ட தலைவி நம்நிலை அறியாராயினும் எனக் கூறினாள். "திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை" என்பது (பாலைக்கலி-25.) காவற் பாங்கின்கட் டலைவன் கூறியது கேட்ட தலைவி கூறியது. பிறவும் வருவனவெல்லாம் இதனான்# அமைக்க. (44)
---------
45.
- மரபுநிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விரவும் என்ப.
இது மரபியலுட் கூறப்படும் மரபன்றி அகத்திணைக்கு உரிய மரபுகள் கூறுகின்றது.
(இ-ள்.) மரபுநிலை திரியா மாட்சிய ஆகி-புலனெறி வழக்கஞ் செய்துவருகின்ற வரலாற்றுமுறைமை திரியாத மாட்சியவாய்; விரவும் பொருளும் விரவும் என்ப-பாலைத் திணைக்குங் கைக்கிளை பெருந்திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் ஏனைத் திணைக்கு உரியவாய் விரவும் பொருளும் விரவி வருமென்று கூறுவர் புலவர் எ-று.
அவை தலைவி ஆற்றாமை கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டுவந்தானெனத் தோழி கூறுவனவும், வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்திக் கூறுவனவும், உடன் போயவழி இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டு வந்துழித் தலைவன் றோழிக்குக் கூறுவனவும், யானினைத்த வெல்லை யெல்லாம் பொருள்முடித்து வாராது நின்னல நயந்து வந்தேனெனத் தலைவன் கூறலும், பொருள்வயிற் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்துவனவும், இடைச்சுரத்துத் தலைவன் செலவு கண்டோர் கூறுவனவும், மீட்சிகண்டோர் கூறுவனவும், ஊரின்கட் கண்டோர் கூறுவனவும் பிறவுமாம். அவை பாலைத் திணைக்கு விரவும் பொருளாமென்றுணர்க.
- --------
(பாடம்) * ’அழிதகு பதுக்கை.’ + ‘இலங்கு புலி யுறைக்கும்.’ # ‘இதன்கண்.’
உதாரணம்:-
"கோடுயர் பன்மலை யிறந்தன ராயினு
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து
துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி
யுடைத்தரும் வெள்ள* மாகிய கண்ணே." (ஐங்குறு-358)
இவ் வைங்குறுநூறு தலைவன் மீண்டானென்றது. "பாடின்றிப் பசந்தகண்" (பாலைக்கலி-15.) என்பதும் அது.
"வளைபடு முத்தம் பரதவர் பகருங்
கடல்கெழு கொண்கண் காதன் மடமகள்
கெடலரும் துயர நல்கிப்
படலின் பாயல் வௌவி யோளே."+ (ஐங்குறு-195)
இவ் வைங்குறுநூறு வரைவிடைவைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு வருந்திக் கூறியது.
"புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதி
னிறம்பெறு மீரிதழ்ப் பொலிந்த வுண்க
ணுள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ்
செல்ல றீர்க்குஞ் செல்வா மென்னுஞ்
செய்வினை முடியா தெவ்வஞ் செய்த
லெய்யா மையோ டிளிவுதலைத் தருமென
வுறுதி தூ*க்கத் தூங்கி யறிவே
சிறிதுநனி# விரைய லென்னு மாயிடை
யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு& போல
வீவது கொல்லென் வருந்திய உடம்பே." (நற்றிணை-284)
இந் நற்றிணையும் அது.
"கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்
சில்லைங் கூந்த லழுத்தி மெல்லிணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்
இலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்
சின்மெல் லொதுக்கமொடு மென்மெல இயலிநின்
அணிமாண் சிறுபுறங் காண்கம்@ சிறுநனி
ஏகென ஏகல் நாணி ஒய்யென
------
(பாடம்) *'உடைத்தெழு வெள்ளம்.' +'வறுவி யோளோ.'
#'சிறு நனி.' $'பருங்கயிறு.' @'காண்குதும் காண்டும்.'
-
மாகொல் நோக்கமொடு* மடங்கொளச் சாஅய
நின்றுதலை யிறைஞ்சி யோளே அதுகண்டு
யாமுந் துறுதல் செல்லேம் ஆயிடை
அருஞ்சுரத் தல்கி யேமே இரும்புலி
களிறட்டுக் குழுமும் ஓசையுங் களிபட்டு
வில்லோர் குறும்பிற் றதும்பும்
வல்வாய்க் கடுந்துடிப் பாணியுங் கேட்டே." (அகம்-261)
இது மீண்டும் வந்தோன் தோழிக்கு உரைத்தது.
"திருந்திழை யரிவை நின்னல முள்ளி
யருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச்
+சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரு
நெறிவிலங் கதர கானத் தானே."# (ஐங்குறு-355)
இவ் வைங்குறுநூறு பெற்ற பொருள்கொண்டு நின்னலம் நயந்து வந்தேன் என்றது.
"அளிதோ தானே நாணே யாள்வினை
யெளிதென லோம்பன்மி னறிவுடை யீரே
கான்கெழு செலவின் னெஞ்சுபின் வாங்கத்
தான்சென் றனனே தமிய னதாஅன்
றென்னா லதுகொ றானே பொன்னுடை
மனைமாண் டடங்கிய கற்பிற்
புனையீ ரோதி புலம்புறு நிலையே."
இது செலவுகண்டோர் கூறியது.
"மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்
தலந்தலை& ஞெமையத் திருந்த குடிஞை
பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப்
பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர்
வன்பான் முரம்பி னேமி யதிரச்
சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே@
யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற்
குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுங்கண் ணியன்கொ னோகோ யானே." (நற்றிணை-394)
இந் நற்றிணை வரவுகண்டோர் கூறியது.
"இனைந்துநொந்$ தழுதன ணினைந்துநீ டுயிர்த்தன
ளெல்லையு மிரவுங் கழிந்தன வென்றெண்ணி யெல்லிரா
நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல
மணியிற் பிறந்தநீர் போலத் துணிவாங்
கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றா
ணல்லெழின் மார்பனைச் சார்ந்து." (கலி-142)
----------
(பாடம்) *'மாதோ ணோக்கமொடு.' +'செல்லாது.' #'கானந்தானே.'
&'கானத்து வலந்தலை.' @'பனிகடி கேளே.' $'இனைந்து நைந்.'
இது பெருந்திணைக்கட் கண்டோர் கூறியது.
"குரவை தழீஇயர் மரபுளி பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது
மாசில்வான் முந்நீர் வளைஇய தொன்னிலம்
ஆளுங் கிழமையொடு புணர்ந்த
வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே." (கலி-103)
இச் சுரிதகத்துக் கரவையாடல் ஏறுகோடற் கைக்கிளையுள் விராய்வந்தவாறுங் குரவைக்குரிய தெய்வத்தையன்றி அரசனை வாழ்த்திய வாழ்த்து விராய்வந்தவாறுங் கொள்க. 'விரவும் பொருளும் விரவு' மெனவே ஆய்ச்சியர் குரவைக் கூத்தல்லது வேட்டுவவரிக்குரிய வெறியாடல்* விரவாதென்றுணர்க. இஃது எண்வகைச் சுவையான் வரும் மெய்ப்பாடுங் கூத்தோடும் படுதலின் அச்சுவை பற்றிவரும் மெய்ப்பாட்டிற்கும் உரித்தாயிற்று.
இனிக் 'காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்'திற் (தொல்- பொ-81-41) தலைவன் கூறியவற்றைக் கறுபியலுள், 'தலைவன் பகுதியினீங்கிய தகுதிக்கட்' (தொல்-பொ-கற்-6) டலைவி பரத்தையராகக் கூறுவனவும் இச்சூத்திரத்தான் அமைக்க. அவை மருதக்கலியுட் கடவுட்பாட்டு+ முதலியன. அவற்றை ஆண்டுக் காட்டுதும்; கண்டுணர்க.
இனித் தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மினென்பனவும் அவன் அவட்கு மறுத்துக் கூறுவனவும் இதனான் அமைக்க.
உதாரணம் :-
"மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த
முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா
லென்னீ ரறியாதீர் போல விவைகூறி
னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மோடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ வெமக்கு." (கலி-6)
----------
* 'வெறியாட்டு.' + மருதக்கலி-28 ஆவது செய்யுள்.
இக் கலி எம்மையும் உடன்கொண்டு சென்மினென்றது.
"செருமிகு சினவேந்தன்" என்னும் பாலைக்கலியுள்,
"எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியன் மேவந்த சீறடித் தாமரை
யல்லிசே ராயித ழரக்குததோய்ந் தவைபோலக்
கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ" (கலி-13)
இது தலைவிக்குத் தலைவன் உடன் போக்கு மறுத்துக் கூறியது. இதன் சுரிதகத்து,
"அனையவை காதலர் கூறலின் வினைவயிற்
பிரிகுவ ரெனப்பெரி தழியாதி" (கலி-13)
என வினைவயிற்பிரிவு கூறலின் இது கற்பிற் கூறியதாயிற்று.
இன்னும் இச் சூத்திரத்தான் அமைத்தற்குரிய கிளவிகளாய் வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க. (45)
-----------
46.
- உள்ளுறை உவமம் ஏனை உவமனெனத்
தள்ளா தாகும் திணையுணர் வகையே.
இஃது உவமவியலுள் அகத்திணைக் கைகோள்* இரண்டற்கும் பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது.
(இ-ள்) உள்ளுறை உவமம் ஏனை உவமம் என- மேற்கூறும் உள்ளுறையுவமந்தான் ஏனைய உவமமென்று கூறும்படி; உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் நின்றது; திணைஉணர் வகை தள்ளாது ஆகும்- அகத்திணை உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை உவமம்போல எல்லாத் திணையையும் உணருங் கூற்றைத் தள்ளாதாய் வரும். நல்லிசைப்† புலவர் செய்யுட்செய்யின் என்றவாறு.
எனவே ஏனையோர் செய்யிற் றானுணரும் வகைத்தாய் நிற்கும் என்றவாறாம்.
உதாரணம்:--
"விரிகதிர் மண்டிலம் வியல்விசும் பூர்தரப்
புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி
வரிவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுட்
டுனிசிறந் திழிதருங் கண்ணினீ ரறல்வார
வினிதமர் காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு
நனிவிரைந் தளித்தலி னகுபவண் முகம்போலப்
பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத்
தனிமலர் தளைவிடூஉந் தண்டுறை நல்லூர" (கலி-71)
---------
* 'கைகோள்-ஒழுகலாறு : களவு கற்பு எனக் கைகோளிரண்டு.
† தொல்-பொ-செய்-1
என்பது விரியுங் கதிரையுடைய இளஞாயிறு விசும்பிலே பரவாநிற்க, விடியற்காலத்தே இதழ்கண் முறுக்குண்ட தலைகள் அம்முறுக்கு நெகிழ்ந்த செவ்விப்பூவிடத்துக், கள்ளை வண்டு நுகர்ந்து விளையாடி, அதனானும் அமையாது பின்னும் நுகர்தற்கு அவ்விடத்தைச் சூழ்ந்து திரியும் அச்செல்வமிக்க பொய்கையுட், பசிய இலைகளுடனின்ற தாமரைத்தனிமலர், தனக்கு வருத்தஞ் செய்யும் பனி ஒரு கூற்றிலே வடியாநிற்கத், தான் மிகச்செவ்வியின்றி அலருந் துறையினையுடைய ஊர என்றவாறு.
இதனுள் வைகறைக்காலத்து மனைவயிற் செல்லாது, இளைய செவ்வியையுடைய பரத்தையரைப் புணர்ந்து விளையாடி, அதனானும் அமையாது, பின்னும் அவரைப் புணர்தற்குச் சூழ்ந்து திரிகின்ற இவ்வூரிடத்தே நின்னைப்பெறாது, சுற்றத் திடத்தேயிருந்து கண்ணீர் வாராநிற்க, நீ ஒருகால் அளித்தலிற், சிறிது செவ்விபெற்றாளாயிருக்கும்படி வைத்த தலைவியைப் போலே, எம்மையும் வைக்கின்றாயென்று, காமக்கிழத்தி உள்ளுறையுவமங் கூறினாள். துனிமிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயாற் சுவறி அறுதலை உடைத்தா யொழுக, அவ் வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலிற் சிறிது மகிழ்பவள் முகம்போல என்ற ஏனையுவமந், தாமரைமலர் பனிவாரத் தளைவிடுமென்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது.
இஃது,
"உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக்
கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே" (தொ-பொ-பொருளியல்-48)
என்ற பொருளியற் சூத்திரத்திற் சிறப்பென்ற உள்ளுறை, இவ் வேனையுவமம் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக்கொடுத்து உள்ளுறையுவமமபோலத் திணையுணர் தலைத் தள்ளாது நின்றவாறு காண்க.
இஃது,
"இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு
முவம மருங்கிற் றோன்று மென்ப" (தொல்-பொ-உவ-28)
என உவமப்போலிக்குக் கூறுதலின் அவ்விரண்டுந் தோன்றி நின்றது.
"ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே" (தொ-பொ-உவ-27)
என்று உவமப்போலியிற் கூறுதலாற் காமக்கிழத்தியும் உள்ளுறையுவமங் கூறினாள்.
குறிஞ்சியிலும் மருதத்திலும் நெய்தலிலும் இவ்வாறு வரும் கலிகளும்,
"யானே ஈண்டை யேனே யென்னலனே
யேனல் காவலர் கவணொடு வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே" (குறுந்-54)
என்னும் இக் குறுந்தொகைபோல வரவனவும் இச் சூத்திரத் தான் அமைக்க. பேராசிரியரும் இப்பாட்டின் 'மீனெறி தூண்டி' லென்றதனை ஏனையுவமமென்றார்.
இனித் தள்ளாதென்றதனானே, "பாஅ லஞ்செவி" என்னும் பாலைக்கலியுட் (4) டாழிசை மூன்றும் ஏனையுவமமாய் நின்று கருப்பொருளொடு கூடிச் சிறப்பியாது தானே திணைப் பொருள் தோன்றுவித்து நிற்பன போல்வனவுங், "கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந் துறைகே ழூரன்" (ஐங்குறு-12) என்றாற் போலக் கருப்பொருள் தானே உவமமாய் நின்று உள்ளுறைப் பொருள் தருவனவும், பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. இது புறத்திற்கும் பொது. இதனான் உள்ளுறையுவமமும் ஏனையுவமமுமென உவமம் இரண்டேயென்பது கூறினார். (46)
------------
47.
- உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே.
இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது.
(இ-ள்) உள்ளுறை- உள்ளுறை யெனப்பட்ட உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப- தெய்வ முதலிய கருப்பொருளுட் டெய்வத்தை ஒழித்து ஒழிந்த கருப்பொருள்களே தனக்குத் தோன்றும் நிலனாகக் கொண்டு புலப்படுமென்று கூறுப; குறி அறிந்தோரே- இலக்கணம் அறிந்தோர் என்றவாறு.
எனவே உணவு முதலிய பற்றிய அப்பொருணிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறையுவமமாயிற்று.
உதாரணம்:--
"ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரு நாடனொ
டொன்றேன் றோழிமற் றொன்றி னானே" (குறுந்-208)
இக் குறுந்தொகை பிறிதொன்றின் பொருட்டுப் பொருகின்ற யானையான் மிதிப்புண்ட வேங்கை நசையற உணங்காது மலர்கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடனென்றதனானே தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் நம்மை இறந்துபாடு செய்வியாது* ஆற்றுவித்துப் போயினானெனவும், அதனானே நாமும் உயிர்தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணாநின்றனம் வேங்கை மரம் போல எனவும், உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க.
ஒழிந்தனவும் வந்துழிக் காண்க.
இனி அஃது உள்ளத்தான் உய்த்துணரவேண்டுமென மேற்கூறுகின்றார். (47)
----------
48.
- உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென
உள்ளுறுத் திறுவதை யுள்ளுறை யுவமம்.
இதுவும் அங்ஙனம் பிறந்த உள்ளுறையுவமத்தினைப்† பொருட்கு உபகாரம்பட உவமங்கொள்ளுமாறு கூறுகின்றது.
(இ-ள்) இதனோடு ஒத்துப் பொருள் முடிகென உள்ளுறுத்து- யான் புலப்ெபடக் கூறுகின்ற இவ்வுவமத்தோடே புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாகவென்று புலவன் தன் உள்ளத்தே‡ கருதி; உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்- தான் அங்ஙனங் கருதும் மாத்திரையே யன்றியுங் கேட்டோர் மனத்தின்கண்ணும் அவ்வாறே நிகழ்த்துவித்து அங்ஙனம் உணர்த்துதற்கு உறுப்பாகிய சொல்லெல்லாம் நிறையக்கொண்டு முடிவது உள்ளுறையுவமம் என்றவாறு.
இதனானே புலவன் தான் கருதியது கூறாதவழியுங் கேட்டோர் இவன் குதிய பொருள் ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய சிலசொற் கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று.
- ---------
(பாடம்) * 'செய்யாது' † 'உள்ளுறையுவமம் ஐந்தினை' ‡ 'உள்ளே'
அது,
"வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில் யானைக் கனைகடாங் கமழ்நாற்ற
மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர!" (கலி-66)
இதனுள், வீங்குநீர் பரத்தையர் சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர் பரத்தையரைத் தேரேற்றிக்கொண்டு வரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம்மலரைச் சூழ்ந்த வண்டு தலை வனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுநிறைந்த வண்டுகள் வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப் பரத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர்வித்தலாகவுங், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுத லாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவம், பொருள்தந்து ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோனுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.
பிறவும் இவ்வாறு வருவனவெல்லாம் இதனான் அமைக்க. இங்ஙனங் கோடலருமைநோக்கித் 'துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே.' (தொல்-பொ-உவ-23) என்றார்.(48)
-------------
49.
- ஏனை யுவமந் தானுணர் வகைத்தே.
இஃது ஒழிந்த உவமங் கூறுகின்றது.
(இ-ள்) ஒழிந்த உவமம் உள்ளத்தான் உணர வேண்டாது சொல்லிய சொற்றொடரே பற்றுக்கோடாகத்தானே உணரநிற்குங் கூறுபாட்டிற்று என்றவாறு.
*பவளம்போலும் வாய் என்றவழிப் பவளமே கூறி வாய் கூறாவிடின் உள்ளுறையுவமமாம். †அவ்வாறின்றி உவமிக்கப்படும் பொருளாகிய வாயினையும் புலப்படக் கூறலின் ஏனையுவமமாயிற்று. அகத்திணைக்கு உரித்தல்லாத இதனையும் உடன் கூறினார்; உவமம் இரண்டல்லதில்லையென வரையறுத்தற்கும், இதுதான் உள்ளுறை தழீஇ அகத்திணைக்குப் பயம்பட்டு வருமென்றற்கும். (49)
----------
(பாடம்) *'பவழம்.' †'மற்றன்றி.'
---------
50.
- காமஞ் சாலா விளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தி
நன்மையுந் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடுந் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே.
இது முன்னர் அகத்திணை ஏழென நிறீஇ, அவற்றுள் நான்கற்கு நிலங்கூறிப், பாலையும் நான்கு நிலத்தும் வருமென்று கூறி, உரிப்பொருளல்லாக் கைக்கிளை பெருந்திணையும் அந்நிலத்து மயங்கும் மயக்கமுங் கூறிக், கருப்பொருட்பகுதியுங் கூறிப், பின்னும் பாலைப்பொருளாகிய பிரிவெல்லாங் கூறி, அப்பகுதியாகிய கொண்டுதலைக்கழிவின்கட் கண்ட கூற்றுப்பகுதியுங் கூறி, அதனோடொத்த இலக்கணம்பற்றி முல்லை முதலியவற்றிற்கு மரபுகூறி, எல்லாத்திணைக்கும் உவமம்பற்றிப் பொருள் அறியப் படுதலின் அவ்வுவமப்பகுதியுங் கூறி, இனிக் கைக்கிளையும் பெருந்திணையும் இப்பெற்றிய வென்பார், இச்சூத்திரத்தானே கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது வென்பது உணர்த்துகின்றார்.
(இ - ள்.) காமம் சாலா இளமையோள் வயின்-காமக் குறிப்பிற்கு அமைதியில்லாத * இளமைப்பிராயத்தாள் + ஒருத்தி கண்ணே; ஏமஞ்சாலா இடும்பை எய்தி-ஒருதலைவன் இவள் எனக்கு மனைக்கிழத்தியாக யான் கோடல் வேண்டுமெனக் கருதி மருந்து பிறிதில்லாப் பெருந்துய ரெய்தி; நன்மையும் தீமையும் என்று இருதிறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து-தனது நனன்மமையயுமம் அவளது தீங்கையுமென்கின்ற இரண்டு கூற்றான் மிகப்பெருக்கிய சொற்களைத் தன்னோடும் அவளோடுங் கூட்டிச்சொல்லி; சொல் எதிர்பெறாஅன் சொல்லி இன்புறல்-அச்சொல்லுதற்கு எதிர்மொழி பெறாதே பின்னுந்தானே சொல்லி இன்புறுதல்; புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே-பொருந்தித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பு என்றவாறு.
அவளுந் தமருந் தீங்குசெய்தாராக அவளோடு தீங்கைப் புணர்த்துந், தான் ஏதஞ்செய்யாது தீங்குபட்டானாகத் தன்னோடு நன்மையைப் புணர்த்தும் என நிரனிறையாக உரைக்க. இருதிறத்தாற் றருக்கிய எனக் கூட்டுக.
- ---------
(பாடம்) *'காமக்குறிப்பினமைதி.' + 'இளமைப் பருவத்தாள்.'
உதாரணம்:-
"வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றோட்
பேரெழின் மலருண்கட் பிணையெழின் மானோக்கிற்
காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற்
கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரை நுசுப்பினாய்
நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடி வீசினை
யாருயிர் வெளவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்;
உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக
விளமையா னுணராதாய் நின்றவ றில்லானுங்
களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம்
வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;
நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் னலியுநோய்
மடமையா னுணராதாய் நின்றவ றில்லானு
மிடைநில்லா தெய்க்குநின் னுருவறிந் தணிந்துதம்
உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;
அல்லல்கூர்ந் தழிபுக வணங்காகி யடருநோய்
சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானு
மொல்லையே யுயிர்வெளவு முருவறிந் தணிந்துதஞ்
செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;
எனவாங்கு,
ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய்
பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் புனையிழாய்
மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி
நிறுக்குவென் போல்வல்யா னீபடு பழியே." (கலி-58)
எனத் தான் உயிர்கொடுத்தானாகத் தனது நன்மைகூறி அவளது தீங்கெல்லாங் கூறுவான் மடலேறுவேன்போலுமென்று ஐயுற்றுக் கூறியவாறு காண்க. அவளைச் சொல்லுதலே தனக்கின்பமாதலிற் சொல்லி யின்புறலென்றார். இது புல்லித்தோன்றுங் கைக்கிளை யெனவே காமஞ்சான்ற இளமையோள்கண் நிகழுங் கைக்கிளை இத்துணைச் சிறப்பின்றாயிற்று.
அஃது, "எல்லா விஃதொத்தன்" என்னுங் குறிஞ்சிக் கலியுள்,
"இவடந்தை,
காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள்
யாதுநீ வேண்டியது;
பேதாஅய்,
பொருள்வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ
மருளின் மடநோக்கி நின்றோழி யென்னை
யருளியல் வேண்டுவல் யான்." (கலி-61)
என வரும்.
இது கைகோளிரண்டினுங் கூறத்தகாத வாய்பாட்டாற் கூறலிற் கைக்கிளையென்றார். குறிப்பென்றதனாற் சொல்லி யின்புறினுந் தலைவன்றன் குறிப்பின் நிகழ்ந்தது புறத்தார்க்குப் புலனாகாதென்பதூஉம் அகத்து நிகழ்ச்சி அறியும் மனைவியர்க்காயின் அது புலனாமென்பதூஉங் கொள்க. அது "கிழவோள் பிறள் குணம்" (தொல்-பொ-பொரு-40) என்னும் பொருளியற் சூத்திரத்து ஓதுதும்.*
காமஞ் சாலா இளமையோள்வயினெனப் பொதுப்படக் கூறிய அதனால் வினை வல பாங்காயினார்† கண்ணும் இவ்விதி கொள்க. இதனைக் 'காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்து" என்னும் (9) முல்லைக்கலியான் உணர்க. (50)
----------
51.
- ஏறிய மடற்றிய மிளமை தீர்திறந்
தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.
இது முறையானே இறுதிநின்ற பெருந்திணை யிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்) ஏறிய மடற்றிறம்- மடன்மா கூறுதலின்றி மடலேறுதலும்; இளமை தீர் திறம்- தலைவற்கு இளையளாகாது ஒத்த பருவத்தாளாதலும்; தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்- இருபத்து நான்காம் மெய்ப்பாட்டில் நிகழ்ந்து் ஏழாம் அவதிமுதலாக வரும் அறிவழிகுணன் உடையளாதலும்; மிக்க காமத்து மிடலொடு தொகைஇ- காமமிகுதியானே எதிர்ப் பட்டுழி வலிதிற்புணர்ந்த இன்பத்தோடே கூட்டப்பட்டு; செப்பிய நான்கும்- கந்தருவத்துட்பட்டு வழீஇயிற்றாகச் செப்பிய இந்நான்கும்; பெருந்திணைக் குறிப்பே- பெருந்திணைக் கருத்து என்றவாறு.
மடன்மா கூறுதல் கைக்கிளையாம். மடற்றிறமென்றதனான் அதன் திறமாகிய வரைபாய்தலுங் கொள்க. இளமைதீர்திறம் என்றதனாற் றலைவன் முதிர்ச்சியும், இருவரும் முதிர்ந்த பருவத்துந் துறவின்பாற் சேறலின்றிக் காமநுகர்தலுங் கொள்க. காமத்து மிகுதிறம் என்றதனாற் சிறிது தேறப்படுதலுங் கொள்க.
இவை கந்தருவத்துட்படாஅ வழீஇயின, இவற்றுள் ஏறிய மடற்றிறமுங் காமத்துமிகுதிறமும் புணர்ச்சிப்பின் நிகழ்வனவாம்; அது, "மடன்மா கூறு மிடனுமா ருண்டே" (தொல்- பொ-கள-11) என்பதனால் ஏறுவலெனக் கூறிவிடாதே ஏறுதலாம்.
- -------------
(பாடம்) *'ஓதுப' †'பாங்கினோர்'
உதாரணம்:-
"சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்
பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல்
சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த
சான்றீர் நுமக்கொன் றறிவுறுப்பென் மான்ற
துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி
யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென்
னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டு துஞ்சே
னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப
வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தெ னெவ்வநோய்
தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாய
வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது
பாடுவென் பாய்மா நிறுத்து;
யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப
மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்
றேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு;
உய்யா வருநோய்க் குயவாகு மைய
லுறீஇயா ளீத்தவிம் மா;
காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ
னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு
மாணிழை மாதரா ளேஎரெனக் காமன
தாணையால் வந்த படை;
காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம
மெழினுத லீத்தவிம் மா;
அகையெறி யானாதென் னாருயி ரெஞ்சும்
வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ
முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர்
தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு;
அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற
நேரிழை யீத்தவிம் மா;
ஆங்கதை,
யறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ
மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ
ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ
ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென்
றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே." (கலி-139)
இஃது ஏறிய மடற் றிறம்.
"உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லிநெஞ் சூன்றும் புறம்புல்லி
னக்குளத்துப் புல்லலு மாற்றே னருளீமோ
பக்கத்துப் புல்லல் சிறிது." (கலி-94)
இதனுட் கொக்குரித்தன்ன வென்பதனாற் றோல் திரைந்தமை கூறலின் இளமைதீர் திறமாயிற்று.
"உனைத்தவர் கூறு முரையெல்லா நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம்- விளைத்த
பழங்கள் ளனைத்தாய்ப் படுகளி செய்யு
முழங்கு புனலூரன் மூப்பு.
"அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல்- சுரும்போ
டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ
முதிரு முலையாண் முயக்கு"
என்பனவும் அது.
"புரிவுண்ட புணர்ச்சி" என்னும் (25) நெய்தற்பாட்டுக் காமத்து மிகுதிறம். இதனைப் *பொருளியலுட் காட்டுதும். ஆண்டோதும் இலக்கணங்களுந் தோன்ற இதனுட் டெளிந்து கூறுவனவும் ஆண்டுக் காண்க.
"ஏஎ யிஃதொத்த னாணிலன் றன்னொடு
மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்று
மேவினு மேவாக் கடையு மவையெல்லா
நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற
மெலலிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்
புல்லினி தாகலிற் புல்லினெனெல்லா
தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று" (கலி-62)
இது மிக்க காமத்துமிடல்.
செப்பிய நான்கெனவே செப்பாதனவாய் அத்துணைக் கந்தருவமாகக் கூறுகின்ற "பின்னர் நான்கும் பெருந்திணை பெறும்" (தொல்-பொ-கள-14) என்ற பெருந்திணையும் நான்கு உளதென்று உணர்க. குறிப்பென்றதனான் அந்நான்கும் பெருந்திணைக்குச் சிறந்தன வெனவும், ஈண்டுக் கூறியன கைக்கிளைக்குச் சிந்தனவெனவுங் கொள்க. (51)
----------
52.
- முன்னைய நான்கும் முன்னதற் கென்ப.
இது 'முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே' (தொல்- பொ-கள-14) எனக் களவியலுட் கூறுஞ் சிறப்பில்லாக் கைக்கிளைபோ லன்றிக் காமஞ்சாலா இளமையோள்வயிற் கைக்கிளைபோல் இவையுஞ் சிறந்தன எனவே எய்தாத தெய்து வித்தது
- -------------
* தொல்-பொ-பொருளியல்-42
(இ-ள்) இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமுந் தெரிதலுந் தேறலும் என்ற குறிப்பு நான்கும் நற்காமத்துக்கு இன்றியமையாது வருதலின் முற்கூறிய சிறப்
புடைக் கைக்கிளையாதற்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
களவியலுட் கூறுங் கைக்கிளை சிறப்பின்மையின் முன்னதற் குரியவெனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் 'ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப' (தொல்-பொ-கள-2) என்றது முதலாக இந்நான்குங் கூறுமாறு ஆண்டுணர்க. இவை தலைவி வேட்கைக் குறிப்புத் தன்மே னிகழ்வதனைத் தலைவன் அறிதற்கு முன்னே தன் காதன்மிகுதியாற் கூறுவனவாதலிற் கைக்கிளை யாயிற்று. இவை தலைவற்கே உரியவென்பது, 'சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப' (தொல்-பொ-கள-3) என்னும் சூத்திரத்திற் கூறுதும். இவையும் புணர்ச்சி நிமித்தமாய்க் குறிஞ்சியாகாவோ வெனின், காட்சிப்பின் தோன்றிய ஐயமும் ஆராய்ச்சியுந் துணிவும் நன்றெனக் கோடற்கும் அன்றெனக் கோடற்கும் பொதுவாகலின், அவை ஒருதலையாக நிமித்தமாகா; வழிநிலைக் காட்சியே நிமித்தமா மென்றுணர்க. (52)
--------------
53.
- நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற பிலனெறி வழக்கங்
கலியே பரிபாட் டாயிரு பாங்கினும்
உரிய தாகு மென்மனார் புலவர்.
இது புலனெறிவழக்கம் இன்னதின்பதூஉம், அது நடுவணைந்திணைக்கு உரிமையுடைத்தென்பதூஉம், இன்னசெய்யுட்கு உரித்தென்பதூஉம் உணர்த்துதனுதலிற்று.
(இ-ள்) நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும்-புனைந்துரை வகையானும், உலகவழக்கத்தானும்; பாடல் சான்ற புலனெறி வழக்கம்-புலவராற் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம்; கலியே பரிபாட்டு அ இரு பாங்கினும் உரியது ஆகும் என்மனார் புலவர்-கலியும் பரிபாடலுமென்கின்ற அவ்விரண்டு கூற்றுச் செய்யுளிடத்தும் நடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
இவற்றிற்கு உரித்தெனவே, அங்ஙனம் உரித்தன்றிப் புலனெறி வழக்கம் ஒழிந்த பாட்டிற்கும் வருதலும், புலனெறி வழக்கம் அல்லாத பொருள் இவ்விரண்டிற்கும் வாராமையுங் கூறிற்று. இவை தேவபாணிக்கு வருதலுங் கொச்சகக் கலி பொருள்வேறுபடுதலுஞ் செய்யுளியலில் வரைந்து ஓதுதும்* 'மக்கணுதலிய அகனைந்துணையு' மென (தொல்-பொ-அகத்-54) மேல்வரும் அதிகாரத்தானும், இதனை அகத்திணை யியலுள் வைத்தமையானும் அக னைந்திணையாகிய காமப்பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருளென் றுணர்க.
பாடல்சான்ற என்றதனாற் பாடலுள் அமைந்தனவெனவே, பாடலுள் அமையாதனவும் உளவென்று கொள்ளவைத்தமையிற், கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய புலனெறி வழக்காய்ச் சிறுபான்மை வருமென்றுகொள்க. செய்யு ளியலுட் கூறிய முறைமையின்றி ஈண்டுக் கலியை முன்னோதியது, கலியெல்லாம் ஐந்திணைப்பொருளாய புலனெறி வழக்கிற் காமமுங், கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலே பற்றிய புலனெறி வழக்கிற் காமமும்பற்றி வருமென்றற்கும், பரிபாடல் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றி வருமென்றற்கும் என்றுணர்க.
ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புறமென்னும் இரண்டிற்கும் பொதுவாய்வருமாறு †நெடுந்தொகையும் புறமுங் கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பனவற்றுட் காண்க. மருட்பாத் 'தானிதுவென்னுந் தனிநிலை' (தொ-பொ-செய்-85) இன்மையின் வரைநிலையின்று.
"மனைநெடு வயலை வேழஞ் சுற்றுந்
துறைகே ழூரன் கொடுமை நாணி
நல்ல னென்றும் யாமே
யல்ல னென்னுமென் றடமென் றோளே" (ஐங்குறு-11)
இதனுள் முதல் கரு வுரிப்பொருளென்ற மூன்றுங் கூறலின் நாடக வழக்குந், தலைவனைத் தலைவி கொடுமைகூறல் உலகியலாகலின் உலகியல் வழக்கும் உடன்கூறிற்று. இவ்விரண்டுங் கூடிவருதலே பாடலுட் பயின்ற புலனெறி வழக்க மெனப்படும். இவ்விரண்டினும் உலகியல் சிறத்தல் 'உயர்ந்தோர்கிளவவி' (தொ-பொ-பொரு-23) என்னும் பொருளியற் சூத்திரத்தானும் மரபியலானும் பெறுதும்.
'முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்‡
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டலி
னுண்ணிதின் மகிழ்ந் தன்றொண்ணுதன் முகனே" (குறுந்-167)
----------
(பாடம்) *'ஓதுப' †'நெடுந்தொகை.' என்பது அகநானூறு. ‡'கழாஅ துறீஇ'
இஃது உலகியலே வந்தது.
இனி அவ்வந் நிலத்து மக்களே தலைவராயக்கால் அவை உலகியலேயாம்.
இனிக் கைக்கிளையுள் அசுரமாகிய ஏறுகோடற் கைக்கிளை, காமப்பொருளாகிய புலனெறிவழக்கில் வருங்கான், முல்லை நிலத்து ஆயரும் ஆய்ச்சியருங் கந்தருவமாகிய களவொழுக்கம் ஒழுகி வரையுங்காலத்து, அந்நிலத்தியல்பு பற்றி ஏறுதழுவி வரைந்துகொள்வரெனப் புலனெறி வழக்காகச்செய்தல் இக்கலிக் குரித்தென்று கோடலும் பாடலுள் அமையாதன என்றதனாற் கொள்க. அது "மலிதிரையூர்ந்து" என்னும் (4) முல்லைக்கலியுள் "ஆங்க ணயர்வர் தழூஉ" என்னுந்துணையும் ஏறுதழுவிய வாற்றைத் தோழி தலைவிக்குக்காட்டிக் கூறிப், "பாடுகம் வம்மின்" என்பதனாற் றலைவனைப் பாடுகம் வாவென்றாட்கு, அவளும் "நெற்றிச் சிவலை***மகள்" "ஒருக்குநாமாடு***மகன்" என்பனவற்றான் அலரச்சம் நீங்கினவாறும், அவன்றான் வருத்தியவாறுங் கூறிப் பாடியபின்னர்த், தோழி,
"கோளரி தாக நிறுத்த கொலையேற்றுக்
காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரலரெடுத்த
வூராரை யுச்சி மிதித்து." (கலி-104)
என எமர்* கொடைநேர்ந்தாரெனக் கூறியவாறுங் காண்க.
இவ்வாறே இம்முல்லை நிலத்து அகப்பொருளோடு கலந்து வருங் கைக்கிளை பிறவுமுள; அவையெல்லாம் இதனான் அமைத்துக்கொள்க. புனைந்துரைவகையாற் கூறுபவென்றலிற் புலவர் இல்லனவுங் கூறுபவாலோவெனின், உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந் தொழுகுதல் அறமெனக்கருதி, அந்நல்லோர்க்குள்ளனவற்றிற் சிறிது இல்லனவுங் கூறுதலின்றி, யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறாரென்றற்கன்றே நாடகமென்னாது வழக்கென்பாராயிற்றென்பது.
இவ்வதிகாரத்து நாடகவழக்கென்பன, புணர்ச்சி உலகிற்குப் பொதுவாயினும் மலைசார்ந்து நிகழுமென்றுங், காலம் வரைந்தும், உயர்ந்தோர் காமத்திற் குரியன வரைந்தம், மெய்ப்பாடுதோன்றப் பிறவாறுங் கூறுஞ் செய்யுள் வழக்கம். இக்கருத் தானே 'முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே-நுவலுங் காலை' (தொல்-பொ-அகத்-3) என்று புகுந்தார் இவ்வாசிரியர்.
- -------------
(பாடம்) * 'நமர்'
இப் புலநெறிவழக்கினை இல்ல தினியது, புலவரா னாட்டப்பட்ட தென்னாமோவெனின், இல்லதென்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ்செய்யா தாகலானும், உடன்கூறிய உலகியல் வழக்கத்தினை ஒழித்தல்வேண்டு மாகலானும், அது பொருந்தாது. அல்லதூஉம் அங்ஙனங்கொண்ட இறையனார் களவியலுள்ளும்,
"வேந்துவினை யியற்கை பார்ப்பார்க் குரித்தே" (இறையனார்-37)
"அரச ரல்லா வேனை யோர்க்கும்
புரைவ தென்ப வோரிடத் தான." (இறையனார்-38)
எனவும்,
"வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென்
றாங்கவ் விரண்டு மிழிந்தோர்க் குரிய." (இறையனார்-39)
எனவும் நான்கு வருணமுங் கூறி, நால்வகைத் தலைமக்களையும் உணர்த்தலின் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென* மறுக்க. இக்கருத்தானே மேலும் 'மக்கணுதலிய வகனைந்திணையும்' (தொல்-பொ-அகத்-54) என்பர். (53)
-----------
54.
- மக்கள் நுதலிய அகனைந் திணையுஞ்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.
இது முற்கூறிய புலநெறிவழக்கிற்குச் சிறந்த ஐந்திணைக்காவதோர் வரையறை கூறுகின்றது.
(இ-ள்) மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்-மக்களே தலைமக்களாகக் கருதுதற்குரிய நடுவ ணைந்திணைக்கண்ணும் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார்-திணைப்பெயராற் கூறினன்றி ஒருவனையும் ஒருத்தியையும் விதந்துகூறி, அவரது இயற் பெயர் கொள்ளப்பெறார் என்றவாறு.
இது நாடக வழக்குப்பற்றி விலக்கியது. அவை வெற்பன் துறைவன் கொடிச்சி கிழத்தி யெனவரும். மக்கள் நுதலிய என்பதனானே மக்களல்லாத தேவரும் நரகருந் தலைவராகக் கூறப்படாரெனவும், அகனைந்திணையும் என்றதனானே கைக்கிளையும் பெருந்திணையுஞ் சுட்டி ஒருவர் பெயர்கொண்டுங் கொள்ளா தும் வருமெனவுங் கொள்க. அக னைந்திணையெனவே அகமென்பது நடுவுநின்ற ஐந்திணையாதலிற், கைக்கிளையும் பெருந்திணையும் அவற்றின் புறத்துநிற்றலின் அகப்புறமென்றும் பெயர் பெறுதலும் பெற்றாம்.
- -----
(பாடம்) *'தமிழ் வழக்கன்று.'
இனி, அவை வரையறையுடைமை மேலைச் சூத்திரத்தான் அறிக. "கன்று முண்ணாது கலத்தினும் படாது-நல்லான்றீம்பா நிலத்துக் ***கவினே." இது (குறுந்-27) வெள்ளி வீதியார் பாட்டு. "மள்ளர் குழீஇய விழவினாலும்*** மகனே." (குறுந்-31) இது காதலற் கெடுத்த ஆதிமந்தி* பாட்டு. அவை தத்தம் பெயர்கூறிற் புறமாமென் றஞ்சி வாளாது கூறினார். ஆதிமந்தி தன்பெயராலுங், காதலனாகிய ஆட்டனத்தி பெயராலுங் கூறிற் காஞ்சிப்பாற்படும்.
"ஆதி மந்தி போல
ஏதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே." (அகம்-236)
எனவும்,
"வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே." (அகம்-147)
எனவும், அகத்திணைக்கட் சார்த்துவகையான் வந்தன அன்றித் தலைமைவகையாக+ வந்தில என்பது.
வருகின்ற (55) சூத்திரத்துப் ‘பொருந்தின்’ என்னும் இலேசானே இச் சார்த்துவகை கோடும். அது பெயரெனப்பட்ட கருப்பொருளாதலிற் கூற்றிகு உரிய தோழியும் பாங்கநும் முதலிய வாயிலோரையும் பொதுப்பெயரானன்றி இயற் பெயர்த்தொடக்கத்தன கூறப்பெறாரென்று கொள்க.
உதாரணம்:-
"முகிழ்முகிழ்த் தேவர வாயினு முலையே
யரவெயிற் றொடுக்கமொ டஞ்சுதத் கனவே
களவறி வாரா வாயினுங் கண்ணே
நுழைநுதி வேலி னோக்கரி யவ்வே
யிளைய ளாயினு மணங்குதக் கிவளே
முளையிள நெருப்பின் முதுக்குறைந் தனளே
யதனா னோயில ளாகுக தில்ல
சாயிறைப் பணைத்தோ ளீன்ற தாயே."
இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாக் கைக்கிளை.
-----------
(பாடம்) * கலுழ்ந்த கண்ணன் காதலற் கெடுத்த, வாதி மந்திபோல’ என்பது அகம்-236. + ‘தலைவியாக.’
"ஆள்வினை முடித்த வருந்தவ முனிவன்
வேள்வி போற்றிய விராம னவனொடு
மிதிலை மூதூ ரெய்திய ஞான்றே
மதியுடம் பட்ட மடக்கட் சீதை
கடுவிசை வின்ஞா ணிடியொலி கேளாக்
கேட்ட பாம்பின் வாட்ட மெய்தித்
துயிலெழுந்து மயங்கின ளதா அன்று மயிலென
மகிழ்..........’
அது சுட்டி ஒருவர் பெயர்கொண்ட கைக்கிளை.
இஃது அசுரமாகலின், முன்னைய மூன்றுங் கைக்கிளை யென்றதனாற் கோடும். "யாமத்து மெல்லையும்" (நெய்தற்கலி-22) என்றது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளாப் பெருந்திணை.
"பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான்
பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம்
வேறு தொடங்கிய விசய னெஞ்சத்
தாரழ லாற்றா தை* ............
பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை
முத்தினு முழங்கழற் செந்தீப்
பொத்துவது போலும் புலம்புமுந் துறுத்தே."
இது சுட்டி ஒருவர் பெயர்கொண்ட பெருந்திணை.
இவை சான்றோர் செய்யுளுட் பெருவரவிற்றின்மை யினன்றே முற்சூத்திரத்து முன்னும் பின்னும் இவற்றை வைத்ததென்பது.
"முட்காற் காரை முதுகனி யேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கட் டார
நிறுத்த வாயந் தலைச்செல வுண்டு
பசசூன் றின்று பைந்நிணம் பெருத்த
வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
புலம்புக் கனனே புல்லணற் காளை
யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்குந்
தொடுத லோம்புமதி முதுகட் சாடி
யாதரக் கழுமிய துகளன்
காய்தலு முண்டக் கள்வெய் யோனே.’ (புறம்-258)
இது வெட்சித்திணை பெயர்கொள்ளாது வந்தது.
"முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப
மலர்தலை யுலக மோம்பு மென்ப
பரிநிலைத் தொண்டைப் பல்லவ னாணையின்
வெட்சித் தாயத்து வில்லே ருழவர்
பொருந்தா வடுகர் முனைச்சுரங்
கடந்து கொண்ட பல்லா னிரையே."
--------
* முன் அச்சுப் புத்தகத்திலுள்ள ‘யோகியின்’ என்பது ஏடுகளிலில்லை.
இது வேந்துவிடு தொழிற்கண் வேந்தனைப் பெயர் கூறிற்று. ஒழிந்தனவும் புறத்திணையியலுட் காண்க. (54)
------------
55.
- புறத்திணை மருங்கிற் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே.
இது புறத்திணைக்குத் தலைவர் ஒருவராதலும், பலராதலும் உரிப்பொருட்குத் தலைவர் பலராகாமையுங் கூறலின், எய்தாத தெய்வித்து எய்தியது விலக்கிற்று.
(இ - ள்.) அகத்திணைமருங்கிற் பொருந்தின்-ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறும் இயற்பெயர் அகத்திணைக் கண்ணே வந்து பொருந்துமாயின்; புறத்திணை அளவுதல் மருங்கின் அல்லது இல-ஆண்டும் புறத்திணை கலத்த லிடத்தின் அல்லது வருதலில்லை என்றவாறு.
எனவே, புறத்திணை கருப்பொருளாயும், அதுதான் உவமமாயும் அகத்திணையுட் கலக்குமென்பதூஉம் இதனானே விரித்தாராயிற்று. அளவுமெனவே ஒருசெய்யுட்கண்ணும் அப்புறத் திணையாகிய இயற்பெயர்களுஞ் சிறப்புப்பெயர்களும் ஒன்றேயன்றிப் பலவும் வருதலுங் கொள்க. ஒருவரென்பது அதிகாரப் பட்டமையின், அகத்திற்குவரும் உரிப்பொருட் பெயர் ஒன்றுதல் கொள்க.
உதாரணம் :- "வண்டுபடத் ததைந்த என்னும் (1) அகப் பாட்டினுள் "முருக னற்போர் நெடுவே ளாவி *** யாங்கண்" எனவே புறத்திணைத்தலைவன் இயற்பெயர் ஒன்றே வந்தவாறும், அவன் நிலக் கருப்பொருளாய் அகத்திற்கு வந்தவாறும், உரிப் பொருட் டலைவன் ஒருவனேயானவாறுங் காண்க. "எவ்வி யிழந்த வறுமையிர் பாணர், பூவில் வறுந்தலைபோலப் புல்லென்று" (குறந்-19) என்பது கருப்பொருளுவம்மாய் வந்தது.
"கேள்கே டூன்றவும்" என்னும் (93) அகப்பாட்டுப் புறத் திணைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவிவந்தது. புறத்திணைக்கண் இயற்பெய்ர் அளவிவரும் என்பதனானே, "முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும்" என்னும் (158) புறப்பாட்டு "எழுவர் மாய்ந்த பின்றை" எனப் புறத் திணைத் தலைவர் பலராய் வந்தது. பிறவும் இவ்வாறு வருவன இதனான் அமைக்க.
இன்னும் இதனானே அகப்புறமாகிய கைக்கிளை பெருந்திணைக்கும் இப்பன்மை * சிறுபான்மை கொள்க.
உதாரணம் :-
"ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார்
நாறிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லாரு
முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ
டெல்லாம் புணர்குறிக் கொண்டு." (கலி-101)
பொருந்தின் + எனவே, தானுந் தன்னொடு பொருந்துவ தூஉம் என இரண்டாக்கிச், சார்த்துவகையான் வரும் பெயர்க்குங்கொள்க. நாடகவழக்கினுளது முன்னர்ச் சூத்திரத்துட் காட்டினாம்.++ பெயர்கள் பலவாதலித & இல வெனப் பன்மை கூறினார். (55)
- -----------
(பாடம்) * 'இப்பான்மை.' + 'பொருந்துதல்.'
++ "அகத்திணைக்கட் சார்ந்துவகையான் வந்தனவன்றித் தலைமை வகையாக வந்தில வென்பது. வருகின்ற சூத்திரத்துப் பொருந்தின் என்ற இலேசானே இச்சார்த்துவகை கோடும்" என்றார். (தெல்-பொ- அகத்-55). & 'பலவென்பது பற்றி'
முதலாவது அகத்திணையியற்கு, ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்கினியார் செய்த காண்டிகை முடிந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக