நேமிநாதம் - மூலம் உரையுடன்


இலக்கண நூல்கள்

Back

நேமிநாதம்
மூலம் உரையுடன்



குணவீரபண்டிதர் இயற்றிய "நேமிநாதம்"
மூலம் உரையுடன்


Source:
குணவீர பண்டிதர் இயற்றிய நேமிநாதம்
சென்னை பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராயிருந்த
திரு கா.ர. கோவிந்தராச முதலியார் அவர்கள் எழுதிய குறிப்புரைகளுடன்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை
பதிப்புரிமை, முதல் பதிப்பு 1945
--------------------

உள்ளடக்கம்
    உள்ளுறை
    சிறப்புப் பாயிரம்
    முன்னுரை
    பாயிரம்
    எழுத்து அதிகாரம்
    சொல் அதிகாரம்
    மொழி ஆக்க மரபு       வேற்றுமை மரபு
    உருபு மயங்கியல்       விளி மரபு
    பெயர் மரபு       வினை மரபு
    இடைச் சொல் மரபு       உரிச்சொல் மரபு
    எச்ச மரபு
    சூத்திரமுதற்குறிப்பு அகராதி
    ------------


நேமிநாதம் :சிறப்புப் பாயிரம்


எழுத்து அதிகாரம்
    எண்ணும் பெயரு முறையும் இயன்றதற்பின்
    நண்ணிவரு மாத்திரையு நற்பிறப்பும் -கண்ணா
    வடிவும் புணர்ச்சியும் ஆயவோர் ஏழும்
    கடியமரும் கூந்தலாய் காண்.

சொல் அதிகாரம்
    தொல்காப் பியக்கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்
    பல்காற்கொண் டோடும் படகென்ப -பல்கோட்டுக்
    கோமிகா மற்புலனை வெல்லும் குணவீர
    நேமிநா தத்தி னெறி.
---------

முன்னுரை


    "ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய முன்னுரை
    உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே
    இருப்பளிங்கு வாரா திடர்."

அருந்தமிழ்மொழிக்கடலின் துறைகளைக் காணுதற்குப் புணைகளாய் இருப்பன எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்னும் ஐந்து இலக்கணங்கள் ஆகும்.

நேமிநாதம் என்னும் இந்நூல் எழுத்து இலக்கணத்தையும் சொல் இலக்கணத்தையும் சுருக்கிக் கூறும் நூல் ஆகும். அதனால், இதனைச் சின்னூல் என்று கூறலாயினர். இஃது எழுத்து அதிகாரம் சொல் அதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களை உடையது. இது தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் ஆகும். அதனை இந்நூலின் இரண்டாம் அதிகாரமாகிய சொல் அதிகாரம், தொல்காப்பியச் சொல் அதிகாரம் போல ஒன்பது இயல்களாக அமைக்கப்பட்டிருப்பதனாலும் அதன் இயல்களின் பெயர்களே சிறிது சிறிது மாற்றி இதன் சொல் அதிகார இயல்களின் பெயர்கள் ஆக அமைக்கப்பட்டிருப்பதனாலும் அறிதலாகும். அவை வருமாறு:

    தொல். சொல். நேமி. சொல்.
    1 கிளவி ஆக்கம் மொழி ஆக்கம்
    2 வேற்றுமை இயல் வேற்றுமை மரபு
    3 வேற்றுமை மயங்கியல் உருபுமயங்கியல்
    4 விளி மரபு விளி மரபு
    5 பெயரியல் பெயர் மரபு
    6 வினை இயல் வினை மரபு
    7 இடைச்சொல் இயல் இடைச்சொல் மரபு
    8 உரிச்சொல் இயல் உரிச்சொல் மரபு
    9 எச்ச இயல் எச்ச மரபு

இந்நூலின் முதல் அதிகாரம் ஆகிய எழுத்ததிகாரம் இயல்கள் என்னும் உட்பிரிவுகள் இன்றி ஒன்றாகவே இருக்கின்றது.

இந்நூலின் சூத்திரங்கள் யாவும் வெண்பாவினால் இயற்றப் பட்டிருக்கின்றன. சூத்திரங்கள் வெண்பாவினாலும் இயற்றப்படலாம் எனப் பேராசிரியர் கூறினர். அதனைத் தொல். பொருள். மரபியல், 'மேற்கிளந் தெடுத்த' என்னும் 100 -ஆம் சூத்திரத்தின் விசேட உரையில் அவர், செய்யுள் என்றான், அடிவகைச் செய்யுளின் வேறுபட்ட பொருட்பாட்டிற்று ஆகிய அடிவரைப்பாட்டினுட் சிறப்பு உடைய ஆசிரியத்தானும் வெண்பாவானும் செய்யப்படும் சூத்திரம் என்றற்கு என்பது. என்னை ? மண்டிலப்பாட்டின் உடம்பொடு புணர்த்துச் சூத்திரம் செய்தமையானும், சின்மென் மொழியிற்று ஆய பனுவல் வெண்பாட்டாகி வருதலானும் என்பது என்று கூறியதனால் அறிக. இந்நூலின்கண் எழுத்து அதிகாரத்தின் முன்னே சிறப்புப்பாயிர வெண்பாக்கள் இரண்டு இருக்கின்றன. அவற்றை அடுத்துத் தற்சிறப்புப் பாயிர வெண்பா ஒன்றும், அவையடக்கங் கூறும் வெண்பா ஒன்றும் இருக்கின்றன. இவை பாயிரம் என்னும் பெயராற் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலின் எழுத்ததிகாரத்தின் வெண்பாக்கள் இருபத்து நான்கு; சொல்லதிகாரத்தின் முன்னே தற்சிறப்புப்பாயிர வெண்பா ஒன்று இருக்கின்றது. அது நீங்கலாகச் சொல்லதிகாரத்தின் வெண்பாக்கள் எழுபது ஆகும். ஆகமொத்தம் இந்நூலின் வெண்பாக்கள் தொண்ணூற்றொன்பது ஆகும்.

நன்னூல் தோன்றுதற்குமுன் தொல்காப்பியம் கற்பவர் முதலில் இந்நூலைக் கற்றுப் பின்னரே தொல்காப்பியம் கற்று வந்தனர் என்ப.

இந்நூலின் ஆசிரியர் களந்தைப்பதிக் குணவீர பண்டிதர் என்பவர் என்க. வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலை இயற்றியவரும் இவரே. இவ்விரு நூற்களையும் இயற்றியவர் இவரே என்பதனை,

    "இந்நூல் செய்தார் யாரோ? எனின்,
    உளமலி பேரருள் உயிர்மிசை வைத்த
    வளமலி களந்தை வச்சணந்தி முனிவரன்
    கொள்கையின் வழாஅக் குணவீர பண்டிதன்
    செய்து அமைத்தான்"

என்பது என இந்நூலின் பாயிர உரையினும்,

அவற்றுள், ஆக்கியோன் பெயர் என்பது நூல் செய்த ஆசிரியன் பெயர். இந்நூல் யாராற் செய்யப்பட்டதோ? எனின்,

    "கற்றவர் புகழும் களந்தையென் பெரும்பதி
    குற்றமில் வாய்மைக் குணவீர பண்டிதன்"

என்னும் ஆசிரியனாற் செய்யப்பட்டது என வெண்பாப் பாட்டியலின் பாயிர உரையினும் கூறியவற்றான் அறிக. இந்நூலாசிரியருடைய ஆசிரியர் வச்சணந்தி முனிவர் என்பவர். அதனை, உளமலி பேரருள் உயிர்மிசை வைத்த, வளமலி களந்தை வச்சணந்தி முனிவரன், கொள்கையின் வழாஅக் குணவீர பண்டிதன் என்பதனால் அறிக.

இந்நூலின் ஆசிரியர் சமண மதத்தினர். அதனை இவர் இந்நூலினது எழுத்து அதிகாரத்தின் முதலினும், சொல் அதிகாரத்தின் முதலினும், வெண்பாப் பாட்டியலின் முதலினும் கூறிய கடவுள் வாழ்த்துக்களாலும் இந்நூலுக்கு இவர் வைத்த பெயரானும் அறிதலாகும்.

"இந்நூல் என்ன பெயர்த்தோ? எனின், இந்நூல் எய்திய சிறப்பின் எழுத்தையும் சொல்லையும் மெய்தெரிவகையின் விளங்க நாடித் தேனிமிர் பைம்பொழில் தென் மயிலாபுரி நீல்நிறக் கடவுள் நேமி நாதர்தம் திருப்பெயராற் செய்தமையின் நேமிநாதம் என்னும் பெயர்த்து" என இந்நூலின் உரைப்பாயிரத்திற் கூறியதனை ஈண்டு நோக்குக.

நேமிநாதர் என்பவர் ஜைந மதத்தினர்கள் இனிது போற்றி வணங்கும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களுள், இருபத்து இரண்டாம் தீர்த்தங்கரர் எனவும், இவர் கண்ணனுக்குத் தாயாதி முறையின் வந்த தம்பியார் எனவும், ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் பலராமர், வாசுதேவர், பிரதி வாசுதேவர் என்பவர்கள் இருக்கின்றார்கள் எனவும், மயிலையில் முன்னே ஜைனக் கோயில்கள் ஐந்து இருந்தன எனவும், அவற்றுள் நேமிநாதர் கோயிலும் ஒன்று எனவும், மயிலையில் இருந்த ஜைனக் கோயில்களின் சம்பந்தமான பாடல்கள் பல இருக்கின்றன எனவும், அவற்றுட் பல அச்சிடப்பட்டிருக்கின்றன; சில
அச்சிடப்படாமல் இருக்கின்றன எனவும், நேமிநாதர் வரலாறுகள் ஸ்ரீ புராணம், ஜைந ஹரிவம்சம் என்னும் நூற்களில் கூறப்பட்டுள்ளன எனவும், ஜீவபந்து T. S. ஸ்ரீபால் அவர்கள் கூறி, அச்சிடாமல் இருக்கும் பாடல்களுள் நேமி நாதரைப்பற்றிய பதிகம் ஒன்றை என்னிடம் தந்தனர். நான் அப்பதிகத்தின் முதற் செய்யுளை எழுதிக்கொண்டு அப்பதிகத்தை அவரிடம் தந்துவிட்டேன். அச்செய்யுள்:

    "பெருகலர் மாமழை பெய்தொரு சுரர்முகில்
           : பெயர்வது போலிமையோர்
    அருமலர் தூவிய அலைகடல் மேல்வரு
           : அரிகுல நாயகனூர்
    கருமலி ஆலய மொடுமணி மாளிகை
           : கடியிதழ் தாதெனவத்
    திருமலி தாமரை கருமலி பொன்மலி
           : திருமயி லாபுரியே".
என்பது.

அன்றியும் மேற்படி ஸ்ரீபால் அவர்கள் நேமிநாதர் கண்ணனுக்குத் தாயாதி முறையின் வந்த தம்பியார் என்பதை நேமிநாதரைப்பற்றித் திருநூற்றந்தாதி என்னும் நூலை இயற்றிய அவிரோதி ஆழ்வார் என்பவரால் இயற்றப்பட்ட ‘திருவெம்பாவை' என்னும் நூலின் பதினாறாஞ்செய்யுளானும் அறிதலாம் என்று கூறி அந்நூலை என்னிடம் தந்தனர். அச்செய்யுள்:

    "பிறவிப் பெருங்கடலை நீந்திய பெய்வளையாய்
    உறவுத் தமர்வா ழுச்சந்த வாழ்மலைமேல்
    அறமிக வுஞ்செய்யும் அம்மை அடியிணைகள்
    நறைமிக்க பூவணையால் நல்கிப் பொழிந்தேத்திக்
    கறவைத் திரள்காத்த கார்வண்ண னுக்கிளையான்
    நிறமிக்க நேமிசிநன் நீள்பதங்கள் தான்பாடித்
    திறமுற்ற மாமுனிவன் சீரருளா லெங்கும்
    நிறையப் பொழியு மழையேலோ ரெம்பாவாய்"
என்பது ஆகும். அத்திருவெம்பாவையில் இருபது செய்யுட்கள் இருக்கின்றன.

தேனிமிர் பைம் பொழில் தென்மயிலாபுரி, நீல்நிறக்கடவுள் நேமிநாதர்தம் திருப்பெயராற் செய்தமையால், ‘நேமிநாதம்' என்னும் பெயர்த்து என இந்நூற்பாயிரம் கூறுதலான், இந்நூல் ஆசிரியர் காலத்து மயிலையில் இருந்த அக்கோயில் ஜைநர்களால் நன்கு போற்றப்பட்டிருந்தது என்பது இனிது விளங்குதல் அறிக.

இந்நூல் ஆசிரியர்காலம் திரிபுவன தேவன் என்னும் வேந்தன்காலம் ஆகும். "அதனைக் காலம் என்பது இன்னார் காலத்து இந்நூல் செய்தது என்றல். இந்நூல் யார் காலத்துச் செய்ததோ ? எனின், குருத்தவா மணிமுடிக் கொற்றவர் கோமான் திருத்தகு மணிமுடித் திரிபுவன தேவன் என்னும் அரசன் காலத்திற் செய்தது என்று உணர்க" என வெண்பாப் பாட்டியலின் உரைப்பாயிரத்திற் கூறியதனான் அறிக.

திரிபுவன தேவன் என்பது குலோத்துங்கன் என்னும் பெயரை உடைய சோழர்களுள் ஒருவன் பெயர் என்பதும், திரிபுவன தேவன் என்னும் பெயர் கொண்ட குலோத்துங்கச்சோழன் காலம் எண்ணூறு வருடங்கட்கு முற்பட்டதாம் என்பதும் இராமநாதபுரம் சமத்தான மகா வித்துவான் பாஷா கவிசேகரர் உ.வே.ரா. இராகவ ஐயங்கார் அவர்கள் தாம் பார்வையிட்டு வெளியிட்ட நேமிநாதத்தின் முக உரையில் "இவருடைய காலம் இற்றைக்கு 800 வருடங்கட்கு முன் இருந்த திரிபுவன தேவன் எனப் பெயரிய குலோத்துங்க சோழன் காலம் ஆகும்" எனக் கூறியிருப்பதனால் தெரிகின்றன. அவற்றை ஆய்ந்து கொள்க.

இந் நூலாசிரியரின் ஊராகிய களந்தைப்பதி என்பது,

    தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்தன்
    நன்னூல் உரைத்த பவணந்தி மாமுனி நற்பதியும்
    சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியும்
    மன்னூ புரத்திரு அன்னமின் னேதொண்டை மண்டலமே.
           : - தொண்டைமண்டல சதகம், செ.32.

என்னும் தொண்டைமண்டல சதகச் செய்யுளால் தொண்டை மண்டலத்தின்கண் இருப்பதாகத் தெரிகின்றது. அது ‘களத்தூர்' என்பதன் மரூஉ மொழி எனத் தோன்றுகின்றது. களத்தூர் என்பது தொண்டைமண்டலத்துக் கோட்டங்கள் இருபத்து நான்கனுள் ஒன்று என்பதும், காஞ்சிபுரத்திற்குத் தென்கிழக்கில் முப்பது மைல் தூரத்தில் இருக்கின்றது என்பதும் தொண்டைமண்டல சதக உரையினால்
தெரிகின்றன.

இந்நூலின் உரை, கருத்துரையும், பொழிப்புரையும், உதாரணமும், வினாவிடைகளும், சூத்திரத்தின் பொருள் நன்கு விளங்குதற்கு உரிய உரைகளும், மேற்கோள்களும் உடையதாய் இருத்தலின், விருத்தி உரை என்பதில் ஐயுறவில்லை.

இவ்வுரையில் தொல்காப்பியத்தினின்றும், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் தொகை நூற்களினின்றும், சிந்தாமணி, மணிமேகலை, திருவாசகம், காரிகை முதலிய நூற்களினின்றும் மேற்கோள்களும் உதாரணங்களும் காட்டப்பட்டிருத்தலின், இவ்வுரை யாசிரியர் பண்டைய இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்ற புலமை உடையார் என்பது இனிது விளங்குகின்றது; ஆயினும் அவர் இன்னார் என்பது விளங்கவில்லை.

இந்நூல் இப்பொழுது கிடைத்தல் அருமையாய் இருத்தலின், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இதனைப் பரிசோதித்துத் தரவேண்டும் என என்னைக் கேட்டுக்கொண்டு இதன் பிரதி ஒன்றை என்னிடம் தந்தனர்.

அது, இராமநாதபுரம் சமத்தான மகாவித்துவான், பாஷா கவிசேகரர். உ.வே.ரா. இராகவ ஐயங்கார் அவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பிற் பார்வையிட்டு வெளியிட்ட இரண்டாம் பதிப்புப் பிரதியாகும். இது 1923 -ஆம் ஆண்டில் வெளிவந்தது.

சென்னைப் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியரும், அக்கலாசாலையின் வெர்னாகுலர் சூபர்இன்டெண்டும் ஆகிய திருவாளர் மோசூர். கந்தசாமி முதலியார் B.A., அவர்களை நேமிநாதப் பிரதி ஒன்று தரவேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பிரதி தந்தனர். அதுவும் மேற்கூறிய இரண்டாம் பதிப்புப் பிரதியே. இப்பிரதியின் ஈற்றில், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நூற் பரிசோதகராய் விளங்கிய திரு ரா. சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் சில இருக்கின்றன.

மேற்கண்ட இரு பிரதிகளையும் வைத்துக்கொண்டு இந்நூலைப் பரிசோதித்துப் பதிப்பிக்கத் தொடங்கினேன். இப்பதிப்பில் இந் நூலின் மூல பாடத்தையும் உரையையும் முன் பிரதியில் இருந்தபடியே வைத்துக்கொண்டு, சூத்திரங்களையும் உரைகளையும் நோக்கி, ஒவ்வொரு சூத்திரத்திற்கும் தலைப்பு எழுதி அந்த அந்தச் சூத்திரத்தின் முன்னே சேர்த்திருக்கின்றேன். வேண்டும் இடங்களிற் குறிப்புரைகள் எழுதி ஆங்காங்கு அடிக்குறிப்பில் அமைத்திருக்கின்றேன். இந்நூலின் உரையிற் சில பிறழ்வுகள் காணப்படுகின்றன. அவற்றை விளக்குதற்கு உரிய குறிப்புக்கள் எழுதி ஆங்காங்கு அடிக்குறிப்பிற் சேர்த்திருக்கின்றேன். செய்யுள் இன்பம் கெடாத வகையில் சூத்திரங்களின் சந்திகளைப் பிரித்திருக்கின்றேன். உரையினும் கற்பார்க்கு உரை இனிது விளங்குதற்பொருட்டுச் சந்திகளைப் பிரித்திருக்கின்றேன்.

இத்தமிழ்த் தொண்டை எனக்கு அளித்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு என் அன்போடு கூடிய நன்றியைச் செலுத்துகின்றேன்.

இதிற் காணப்படும் பிழைகளுக்காக என்னை மன்னிக்க என அறிஞர்களை வேண்டுகின்றேன்.

எனது இம்முயற்சியை இடையூறு இன்றி இனிது முடியத் திருவருள் புரிந்த திருமகள் நாதன் திருவடித் தாமரைகளை வழுத்தி வாழ்த்துகின்றேன்.

    வியனருவித் தண்பொழில்சூழ் வேங்கடமே ஐந்தாம்
    இயலமைந்த தண்டமிழுக் கேய்ந்தாங்-கியலெல்லை
    ஆர்ந்த வடபாலென் றாய்ந்துரைத்தார் அவ்வரைமால்
    ஆர்ந்திருப்பன் எம்முளன் பார்ந்து.

சென்னை         இங்ஙனம்,
22-4-45         கா.ர.கோ,
---------------


குணவீர பண்டிதர் இயற்றிய நேமிநாதம் உரையும்

பாயிரம்


    பூவின்மேல் வந்தருளும் புங்கவன்றன் பொற்பாதம்
    நாவினால் நாளும் நவின்றேத்தி - மேவுமுடி
    பெல்லா முணர எழுத்தின் இலக்கணத்தைச்
    சொல்லால் உரைப்பன் தொகுத்து.         (1)

உரை: எந்நூலுரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்தே நூலுரைக்க என்பது மரபாகலின் பாயிரமுரைத்தே நூலுரைக்கப்படும் என்க. பாயிரம் என்பது முகவுரை.

அப்பாயிரந்தான், பொதுவும், சிறப்பும் என இருவகைப்படும். அவற்றுட் பொதுப்பாயிரம் என்பது எல்லா நூன்முகத்தும் இன்றியமையாதது..

    ஈவோன் றன்மை யீத லியற்கை
    கொள்வோன் றன்மை கோடன் மரபென
    ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே
என்பவாகலின்.

இனிச், சிறப்புப்பாயிரம் ஆவது பலவற்றுட் சிலவருமாறு:

    [1]"பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்
    துன்னு பயனளவும் சொல்லினான் - முன்னைச்
    சிறப்பா மவற்றுட் சிலவேறி னாலும்
    பெறப்படுமாம் முன்னைப் பெயர்".
என்பவாகலின்.
-----
[1]. வச்சணந்திமாலை, பொதுவியல், சூ. 21.

இந்நூல் என்ன பெயர்த்தோ ? எனின், இந்நூல், எய்திய சிறப்பின் எழுத்தையும் சொல்லையும் மெய்தெரி வகையின் விளங்க நாடித், தேனிமிர் பைம்பொழிற் றென்மயி லாபுரி, நீனிறக் கடவுள் நேமி நாதர், தந்திருப்பெயராற் செய்தமையான் நேமிநாதம் என்னும் பெயர்த்து.

இந்நூல் செய்தார் யாரோ ? எனின், உளமலி பேரரு ளுயிர்மிசை வைத்த வளமலி களந்தை வச்சணந்தி முனிவரன் கொள்கையின் வழாஅக் குணவீரபண்டிதன் செய்தமைத்தான் என்பது.

இந்நூல் செய்தற்குக் காரணம் யாதோ ? எனின், விரிந்த நூல் உணரா மேதினியோர்க்குச் சுருங்கச் செய்தான், அந்நூல் தெரிவது காரணமாக என்பது.

இந்நூலாற் பயன் யாதோ ? எனின், எழுத்தும் சொல்லும் இயல்பு உணராதோர் வழுத்தீர்விப்பது பயன் எனக் கொள்க.

இந்நூல் எவ்வளவினதாகச் செய்யப்பட்டதோ ? எனின், தொகுத்துச் செய்தலும், விரித்துச் செய்தலும், தொகை விரிப்படுத்துச் செய்தலும், மொழிபெயர்த்துச் செய்தலும் என்பன. அவற்றுள் இந்நூல் தொகுத்து உரைக்கப்பட்டது.

அற்றேல், இவ்வதிகாரம் என்னுதலிய எடுத்துக் கொள்ளப்பட்டதோ ? எனின், அதிகார நுதலியதூஉம் அதிகாரத்தின் பெயர் உரைப்பவே விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ ? எனின், எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து, எழுத்திலக்கணம் உணர்த்தினமையான்.

எழுத்து எனைத்து வகையான் உணர்த்தினானோ ? எனின், எழுவகையான் உணர்த்தினான் என்பது. எழுவகையாவன : (1) எழுத்து இனைத்து என்றலும், (2) இன்ன பெரியன என்றலும், (3) இன்ன முறையின என்றலும், (4) இன்ன பிறப்பின என்றலும், (5) இன்ன மாத்திரையின என்றலும், (6) இன்னவடிவின என்றலும், (7) இன்ன புணர்ச்சியின என்றலுமாம். அவ்வேழும் இந்நூலுள்ளே கண்டுகொள்க.

எட்டுவகையும், எட்டிறந்த பல்வகையும் என்ன வேண்டுவாருமுளராக, இந்நூலுடையார் எழுவகைய என்று சொல்லவேண்டிற்று என்னையோ ? எனின், அவையெல்லாம் இவ்வேழினுள்ளே அடங்கும் ஆகலான் என்பது. அன்றியும்,

    "எண்பெயர் முறைபிறப் பளவியல் வடிவு
    புணர்தலோ டேழும் பொருந்திய வழக்கே"

என்றார் அவிநயனார்.

‘பூவின்...தொகுத்து' என்பது சிறப்புப்பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று;

    வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச்
    சிறப்பென்னும் பாயிரமாஞ் சீர்
என்றாராகலின்.

இதன் பொருள்: ஆயிரத்தெட்டு இதழுடைய அரவிந்த நாண்மலர்மேல் எழுந்தருளியிருக்கும் ஆதிநாதன் அடி துதித்து, யாவரும் உணர எப்பெற்றிப்பட்ட எழுத்து முடிபுகளும் சுருங்கும் வகையாற் சொல்லுவன் என்றவாறு.

இது பொழிப்புரை எனக் கொள்க.

    பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப்
    பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே.
‘சொல்லால் உரைப்பன்' என்றது என்னை? பிறவாற்றானும் உரைக்குமாறு உண்டோ? எனின், உண்மை சொல்லுதல் குற்றம் அன்று; கண்ணாற் பார்த்தான் வாயாற் சொன்னான் என்றாற்போல என்க. அன்றியும், எழுத்திலக்கணத்தைச் சொல்லால் உரைப்பது என்னாதபொழுது சொல்லிலக்கணத்தைச் சொல்லால் உணர்த்தி, எழுத்திலக்கணத்தை எழுத்தான் உணர்த்துபவோ? என்று கருதுவார்க்குச் சொல்லிலக்கணஞ் சொல்லால் உணர்த்தி, எழுத்திலக்கணமுஞ் சொல்லால் உணர்த்துப என்றற்கு இங்ஙனம் சொல்லப்பட்டது. என் போல எனின், இரும்பினான் மரத்தொடக்கத்தனவற்றை அறுப்பார் அவ்விரும்புதன்னையும் இரும்பினால் அறுப்பார்! அது போல எனக் கொள்க.[1]
------
    [1]. வயிர வூசியும் மயன்வினை இரும்பும்
    செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்
    தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல்
    உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே.
என்னும் ஆசிரியர் அகத்தியனார் சூத்திரத்தையும் ஈண்டு நோக்குக.
-------

அவையடக்கம்

    உண்ண முடியாத ஓதநீர் வான்வாய்ப்பட்
    டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல்
    நல்லாரைச் சேர்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
    எல்லாருங் கைக்கொள்வர் ஈங்கு.         (2)

என்பது அவையடக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: உலகத்து யாவர்க்கும் உண்ண முடியாத ஓதநீர், மேகத்தின் வாய்ப்படுதலான் அமுதமானாற்போல, என்னால் உரைக்கப்பட்ட புன்சொல்லும் நல்லோர் செவிப்படுதலால் யாவருங் கைக்கொள்வர் எ-று.

பாயிரம் முற்றிற்று.
---------

எழுத்ததிகாரம்


1. முதல் வைப்பாகிய முதல் எழுத்துக்களின் பெயரும், முறையும், தொகையும் [1]

    ஆவி அகரமுதல் ஆறிரண்டாம் ஆய்தமிடை
    மேவுங் ககரமுதன் மெய்களாம் - மூவாறுங்
    கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
    நண்ணுமுதல் வைப்பாகு நன்கு.         (1)
என்பது சூத்திரம் [2]. என்னுதலிற்றோ? எனின்: முதல் வைப்பாகிய முப்பத்தோரெழுத்தும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: அகரமுதல் ஒளகார மீறாய்க் கிடந்த பன்னிரண்டும் உயிர் எனப்படும;் அதன் இடையிற் கிடந்த எழுத்து ஆய்தம் எனப்படும்; ககரமுதல் னகரமீறாய்க் கிடந்த பதினெட்டும் மெய் எனப்படும் என்பது. என்னை?

    அகர முதலாக ஆய்தம் இடையா
    னகரமீ றாகுமுதல் வைப்பு
என்றாராகலின்.
------------
[1]. தொல். எழுத்ததிகாரத்தில் உள்ள ‘எழுத்தெனப்படுப' என்னும் சூத்திரத்தின் கருத்துரையில் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் ‘இத்தலைச் சூத்திரம் என்நுதலிற்றோ? எனின், எழுத்துக்களது பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் நுதலிற்று' என்று கூறியதை ஈண்டு நோக்குக.

[2]. சூத்திரம், நூற்பாவானே யன்றி, ஆசிரியத்தானும், வெண்பாவானும் இயற்றப்படும் என்றார் பேராசிரியர். அதனை, தொல். பொருள். மரபியல்.100-ஆம் சூத்திர விசேட உரையில். அவர் செய்யுள் என்றான். அடிவரைச் செய்யுளின் வேறுபட்ட பொருட்பாட்டிற்றாகிய அடிவரைப்பாட்டினுட் சிறப்புடைய ஆசிரியத்தானும், வெண்பாவானும் செய்யப்படும் சூத்திரம் என்றற்கு என்பது என்றதனால் அறிக.
--------------

2. முதல் எழுத்துக்களின் வகை

    ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்
    ஏன்றமெய்ம் மூவாறும் எண்ணுங்கால்.......ஊன்றிய
    வன்மையே மென்மை இடைமையாம் வாட்கண்ணாய்
    தொன்மை முயற்சியாற் றொக்கு.         (2)

எ-ன்: உயிரையும் மெய்யையும் வகுத்துணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: உயிர் பன்னிரண்டனுள்ளும் அ இ உ எ ஒ என்ற ஐந்தும் குற்றெழுத்தாம்; ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழும் நெட்டெழுத்தாம்; மெய் பதினெட்டனுள்ளும், க ச ட த ப ற என்பன வல்லினமும், ங ஞ ண ந ம ன என்பன மெல்லினமும், ய ர ல வ ழ ள என்பன இடையினமுமாம் எ-று.

என்னை? வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற இத்துணை அல்லது அவை இவை உவை என்றதில்லையோ? எனின், உரையிற் கோடல் என்னுந் தந்திரவுத்தியாற் பெறப்பட்டவாறு; அன்றியும், தொன்மை முயற்சியாற் றொக்கு என்பதனாலும் பெறப்பட்டவாறு. என்னை? ‘பணி செய்தார்க்குக் கூலி கொடு' என்றாற் பணி கண்டு கூலி கொடுப்பர்; அது போல எனக்கொள்க. வல்லினம் கன்மேல் விரல் இட்டாற் போலவும், மெல்லினம் மணன்மேல் விரல் இட்டாற் போலவும், இடையினம் மண்மேல் விரல் இட்டாற் போலவும் எனக் கொள்க. (2)
--------

3.இரண்டாம் வைப்பாகிய சார்பெழுத்துக்களின்பெயரும், முறையும், தொகையும், வகையும்[1]

    ஓங்குயிர்கள் ஒற்றின்மேல் ஏறி உயிர்மெய்யாய்
    ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும் - பாங்குடைய
    வல்லொற்று மெல்லொற்று வர்க்கம்[2] அளபெடைகள்
    சொல்லொற்றி நீட்டத் தொகும்.         (3)
    -------------
[1]. தொல். எழு. 2-ஆம் சூத்திரக் கருத்துரையிலே இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் கூறியவற்றை ஈண்டு நோக்குக.
[2]. ஈண்டு வருக்கம் என்று தற்பவமாகக் கூறின் தளை கெடுதல் நோக்கி வர்க்கம் எனத் தற்சமமாகக் கூறினார். இந்நூலின் உரை ஆசிரியர் இதனை வருக்கம் எனத் தற்பவமாகவே கூறினார். பிரயோக விவேக நூலாசிரியர்,‘நேமிநாதத்தார், வருக்கத்தொற்று, வருக்க மளபெடைகள் என்னாது;வடமொழியிற் பிறந்தவண்ணமே வர்க்கத்தொற்று, வர்க்கமளபெடைகள் என்றாற்போல யாமும் கருமதாரயன் என்னாது, கர்மதாரயன் எனத் தற்சமமாகக் கூறினாம்' என்றது ஈண்டு நோக்கற்கு உரியது.
--------

எ-ன்: இரண்டாம் வைப்பாகிய உயிர்மெய் எழுத்தும், அவற்றுள், குற்றெழுத்தும் நெட்டெழுத்தும், வருக்கத் தொற்றுக்கள் ஆமாறும், ஒற்றளபெடைகள் உயிரளபெடைகள் ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: பதினெட்டு ஒற்றுக்களின்மேலும் பன்னிரண்டு உயிர்களும் ஏற அவை இருநூற்றொருபத்தாறும் உயிர்மெய் எனப்படும். என்னை?

    உயிரீ ராறே மெய்ம்மூ வாறே
    அம்மூ வாறு முயிரோ டுயிர்ப்ப
    இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே
என்றாராகலின்.

இனிக் கவ்வுக்கு ஙவ்வும், சவ்வுக்கு ஞவ்வும், டவ்வுக்கு ணவ்வும், தவ்வுக்கு நவ்வும், பவ்வுக்கு மவ்வும், றவ்வுக்கு னவ்வும் இவை வருக்கத் தொற்றாம்.

ஒற்றுக்கள் ஊன்றிச் சொல்ல அளபெழும்; அவை ஒற்றளபெடையாம். நெட்டெழுத்தை நீட்டிச் சொல்ல அளபெழும்; அவை உயிரளபெடையாம்.

அ இ உ எ ஒ என்பன குற்றுயிர்; க கி கு கெ கொ என்பன உயிர்மெய்க்குற்றெழுத்து. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்பன நெட்டுயிர்; கா கீ கூ கே கை கோ கௌ என்பன உயிர்மெய் நெட்டெழுத்து.

ங ஞ ண ந ம ன வ ய ல ள ஃ என்னும் பதினொரு புள்ளியும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெழும் எ-று.

என்னை?

    வன்மையொடு ரஃகான் ழஃகா னொழித்தாங்
    கல்மெய் யாய்தமொ டளபெழு மொரோவழி.
என்பவாகலின்.

வரலாறு: மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், மெய்ய்யர், வெல்ல்க, கொள்ள்க, எஃஃகு இவை குறிற்கீழ் அளபெழுந்தன.

அரங்ங்கம், முழஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று, குரவ்வ்வை, அரய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள் வரஃஃகு இவை குறிலிணைக்கீழ் அளபெழுந்தன.

இனி, உயிரளபெடையாவன, உயிருள் நெட்டெழுத்தேழும் அளபெடுக்கும் அவை அளபெடுக்குமிடத்துத் தனிநிலை, முதனிலை,இடைநிலை, இறுதிநிலை யென்னும் நான்கனோடும் உறழ இருபத்தெட்டாம்.
என்னை?

    குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
    நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே (தொல்.மொழிமரபு. 8.)

    ஐ ஒள வென்னு மாயீ ரெழுத்திற்
    கிகர வுகர மிசைநிறை வாகும் (தொல்.மொழிமரபு. 9.)
என்றாகலின்.

வ - று: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பன தனிநிலை அளபெடை.

மாஅரி, வீஇரம், கூஉரை ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஒளஉவை இவை முதனிலை அளபெடை.

படாஅகை, பரீஇயம், கழூஉமணி, பரேஎரம், வளைஇயம், உரோஒசம், அநௌஉகம் இவை இடைநிலை அளபெடை.

பலாஅ, குரீஇ, கழூஉ, விலேஎ, விரைஇ, உலோஒ, அநௌஉ இவை இறுதிநிலை அளபெடை. பிறவும் அன்ன. (3)
----------------------

4. குற்றியலுகரமும், குற்றியலிகரமும், ஐகாரக்குறுக்கமும், ஒளகாரக்குறுக்கமும், நிலைமொழியீற்று மெய்யின்பின் உயிர்வரின் ஏறி முடியும் என்பதும்

    தொடர்நெடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்
    படைய வருமிகர மன்றி---மடநல்லாய்
    மும்மையிடத் தையௌவுங் குன்றுமுன் னொற்றுண்டேற்
    செம்மையுயிர் ஏறுஞ் செறிந்து.         (4)

என்பது குற்றியலுகரமும், குற்றியலிகரமும், ஐகாரக்குறுக்கமும், ஒளகாரக்குறுக்கமும் ஆமாறும், புள்ளியீற்று நிலைமொழியின்பின் உயிர்வரின் ஏறி முடியும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: தொடர்மொழி என்பது மூன்றெழுத்து முதலாய்க் கிடந்த மொழி என்று அறிக. என்னை?

    ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி
    யிரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட
    மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (தொல். மொழிமரபு.12.)
என்பவாகலின்.

வல்லொற்றுத் தொடர்மொழி, மெல்லொற்றுத் தொடர்மொழி, இடையொற்றுத் தொடர்மொழி, ஆய்தத் தொடர்மொழி, உயிர்த்தொடர்மொழி, நெடிற்கீழ் என்று சொல்லப்பட்ட சொற்களின் ஈற்றில் நின்ற வல்லெழுத்தின்மேல் ஏறிய உகரம் குறுகும் என்க. அக்குற்றுகரத்தின்பின் யகரம் வந்துழி அக்குற்றுகரம் அழிந்து இகரமாய்க் குறுகும் என்க. மொழிக்கு மூன்று இடத்தும் வந்த ஐகார ஒளகாரங்கள் குறுகும். ஒற்றெழுத்தின்பின் வந்த உயிர் தனி நில்லாது ஏறி முடியும்.
என்னை?

    நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங்
    குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே. (தொல். மொழிமரபு.3.)
எனவும் கூறினாராகலின்.[1]
--------------
[1] ‘எனவும் கூறினார் ஆகலின்' என்றிருத்தலான், ஈண்டு மற்றும் சில சூத்திரங்கள் இருத்தல் வேண்டும் என்றும், அவை விடுபட்டன என்றும் தோன்றுகின்றன.

வ - று: சுக்கு, கொங்கு, தெள்கு, எஃகு, வரகு, நாகு என்பனககரம் ஊர்ந்து வந்த குற்றியலுகரம். ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.

    இனிக் குற்றியலிகரம் வருமாறு:
    யகரம் வருவழி யிகரங் குறுகும்
    உகரக் கிளவி துவரத் தோன்றாது. [தொல். குற்.5.]
என்பவாகலின்.

வ - று: சுக்கியாது, கொங்கியாது, தெள்கியாது, எஃகியாது, வரகியாது, நாகியாது எனக் கண்டுகொள்க. பிறவும் அன்ன.

இனி ஐகாரக் குறுக்கம் வருமாறு: ஐப்பசி, மைப்புறம், உடைவாள், மடையன், குவளை, தவளை, தினை, பனை என முதலும், இடையும், கடையும் குறுகியவாறு.

ஒளகாரக்குறுக்கம் வருமாறு: ஒளவை, பௌவம் என முதற்கட் குறுகிற்று. இடையும் ஈறும் வந்தவழிக் கண்டுகொள்க.

‘ஐஒளவுங் குன்றும்' என்று ஓரிடத்தே கூறினாராயினும் இறுதி விளக்காக கொண்டு, ‘தொடர்நெடிற்கீழ் வன்மைமேல் உகரம்' குன்றும் ‘யப்பின்பு அடையவரும் இகரம்' குன்றும், ‘மும்மை இடத்தும் ஐஒளவுங் குன்றும்' என எங்கும் ஒட்டிக்கொள்க.
என்னை?

    புனையுறு செய்யுட் பொருளை யொருவழி
    வினைநின்று விளக்கினது விளக்கெனப் படுமே.

    முதலிடை கடையென மூவகை யான.
என்பன அணியியல் ஆகலின்,

இனிப் புள்ளியீற்றுமுன் உயிர் தனித்தியலாது, வந்தேறி முடியுமாறு: தூண் என நிறுத்தி, அழகிது என உயிர் முதலாகிய வருமொழிகளை வருவித்து, முன் னொற்றுண்டேற் செம்மையுயி ரேறுஞ் செறிந்து என்பதனால் தூணழகிது என முடிக்க. நிலமழகிது, வானழகிது என்பன முதலாயினவும் ஒட்டிக் கண்டுகொள்க.
என்னை?

    புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலாது
    மெய்யொடு சிவணு மவ்வியல் கெடுத்தே தொல். புணரி. 36
என்பவாகலின்.
----------------

5. மாத்திரை

    குறினெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாம்
    குறுகுமவ் வாய்தம் உயிர்மெய்--பெறுமுயிரே
    மெய்யாய்தம் இஉக் குறுக்கமரை மென்மொழியாய்
    ஐஒள அளவொன் றரை.         (5)

எ - ன்: மேற்கூறிய எழுத்துக்களுக்கு மாத்திரை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: குற்றெழுத்திற்கு ஒரு மாத்திரை; நெட்டெழுத்திற்கு இரண்டு மாத்திரை; அளபெடைக்கு மூன்று மாத்திரை; மகரக்குறுக்கத்திற்கும் ஆய்தக்குறுக்கத்திற்கும் ஒரோவொன்று கான்மாத்திரை; ஏறிய உயிரின் மாத்திரையே உயிர்மெய்க்கும் மாத்திரை என வறிக; ஒற்றிற்கும், ஆய்தத்திற்கும், குற்றியலிகரத்திற்கும், குற்றியலுகரத்திற்கும் ஒரோவொன்று அரைமாத்திரை; ஐகாரக்குறுக்கத்திற்கும் ஒளகாரக் குறுக்கத்திற்கும் ஒரோவொன்று ஒன்றரை மாத்திரை எனக் கொள்க.

‘பெறுமுயிர்' என்றதனால் ஒற்றளபெழுந்தால் இரண்டொற்றுமாக ஒரு மாத்திரை பெறும். அளபெழாதவழி இரண்டொற்றுக்கூடி நிற்பினும் மாத்திரை பெறா. என்னை?

    "ஒற்றள பெழாவழிப் பெற்றவல கிலவே."
என்பவாகலின். ஐகாரம் ஒரு மாத்திரையுமாம்,

    "குறுமை யெழுத்தி னளவேயை கார
    நெடுமையி னீங்கியக் கால்".
என்பவாகலின். மாத்திரைக்களவு,

    கண்ணிமை கைந்நொடி யவ்வே மாத்திரை
    நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே. (தொ. நூன். 7)
என்பவாகலின். அதன் பகுப்பு எவ்வாறெனில்,

    உன்னல் காலே யூன்ற லரையே
    முறுக்கன் முக்கால் விடுத்த லொன்றே.
எனக் கண்டுகொள்க. ஒன்றரை அறிவது எற்றாலோ? எனிற் கட என்புழி டகர அகரம் ஒரு மாத்திரை ஆயவாறும், கடா எனபுழி டகர ஆகாரம் இரண்டு மாத்திரை ஆயவாறும், கடை என்புழி டகர ஐகாரம் ஒரு மாத்திரையில் ஏறி இரண்டு மாத்திரையிற் குறைந்தவாறும் கண்டுகொள்க. அவற்றுள், ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.
----------

6. பிறப்பு

    உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து
    கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து -- வந்தபின்
    ஆசில் அண்ணம் இதழெயிறு மூக்கெனப் [1]
    பேசும் எழுத்தின் பிறப்பு.         (6)

எ - ன்: எழுத்துக்கட்குப் பிறப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
----------
[1] இவர் மூக்கைத் துணைஇடம் எனக் கூறியது ‘உந்திமுதலா' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தை நோக்கியாம் என்க. நன்னூலார் இதனை முதலிடமாகக் கூறினார். அன்றியும் நன்னூலார், இதழ், நா, பல், அண்ணம் என்பவற்றை முயற்சிக்கு உரியன என்றார்.

இ - ள்: கொப்பூழ் முதலாகத் தோன்றும் உதானவாயுவினிடத்தே தோன்றி, நெஞ்சும் தலையும், மிடறும் என்னும் முதல் இடவகையினும்; நாவும், அண்ணமும், இதழும் எயிறும், மூக்கும் என்னும் துணைஇட வகையினும் புலப்படும் எழுத்து எ - று.
என்னை?

    "உந்தி முதலா முந்துவளி தோன்றித்
    தலையின மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
    பல்லு மிதழு நாவு மூக்கு
    மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா
    னுறுப்புற் றமைய நெறிப்பட நாடி
    யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
    பிறப்பி னாக்கம் வேறுவே றியல
    திறப்படத் தெரியுங் காட்சி யான. " (தொல். பிறப். 1.)

    "அவ்வழிப்
    பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
    மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்" (தொல். பிறப். 2.)

    "அவற்றுள்,
    அ ஆ வாயிரண் டங்காந் தியலும்." (தொல். பிறப். 3.)

    "இஈ எஏ ஐயென விசைக்கு
    மப்பா லைந்து மவற்றோ ரன்ன
    வவைதா,
    மண்பன் முதனா விளிம்புற லுடைய." (தொல்.பிறப். 4.)
    "உஊ ஒஓ ஒளவென விசைக்கு
    மப்பா லைந்து மிதழ்குவிந் தியலும். " (தொல்.பிறப். 5.)

    "தத்தந் திரிபே சிறிய வென்ப." (தொல்.பிறப். 6)

    "ககார ஙகார முதனா வண்ணம்". (தொல்.பிறப். 7.)

    "சகார ஞகார மிடைநா வண்ணம்." (தொல்.பிறப். 8.)

    "டகார ணகார நுனிநாவண்ணம்." (தொல்.பிறப். 9.)

    "அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின". (தொல்.பிறப். 10.)

    "அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின்
    நாநுனி பரந்து மெய்யுற வொற்றத்
    தாமினிது பிறக்குந் தகார நகாரம்." (தொல்.பிறப். 11.)

    "அணரி நுணிநா வண்ண மொற்ற
    றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும்." (தொல்.பிறப். 12.)

    "நுனிநா வணரி யண்ணம் வருட
    ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்". (தொல்.பிறப். 13.)

    "நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
    ஆவயி னண்ண மொற்றவும் வருடவும்
    லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்." (தொல்.பிறப். 14.)

    "இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்." (தொல்.பிறப். 15.)

    "பல்லித ழியைய வகாரம் பிறக்கும். " (தொல்.பிறப். 16.)

    "அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
    கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்." (தொல்.பிறப். 17.)

    "மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ்
    சொல்லிய பள்ளி நிலையின வாயினு
    மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்." (தொல்.பிறப். 18.)

    "சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
    தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றுந்
    தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
    யொத்த காட்சியிற் றம்மியல் பியலும். " (தொல்.பிறப். 19.)
என்றார் தொல்காப்பியனார். இவைகளை விரித்துரைத்துக் கொள்க.
---------

7. முதனிலை

    காட்டும் உயிரும் கசதநப மவ்வரியும்
    ஈட்டிய வவ்வரியின் எட்டெழுத்து--மீட்டு
    ஞயவின்கண் மும்மூன்று நன்மொழிக்கு முன்னென்
    றயர்விலார் கட்டுரைத்தார் ஆய்ந்து.         (7)

எ - ன்: மொழிக்கு முதலாம் எழுத்துக்களைத் தெரிந்து உணர்த்துதல் நுதலிற்று,

இ - ள்: உயிர் பன்னிரண்டும், ககரவருக்கம் பன்னிரண்டும், சகரவருக்கம் பன்னிரண்டும்,[1] தகரவருக்கம் பன்னிரண்டும், நகரவருக்கம் பன்னிரண்டும், பகரவருக்கம் பன்னிரண்டும், மகரவருக்கம் பன்னிரண்டும், வகரவருக்கத்தில் எட்டும், ஞகரவருக்கத்தில் மூன்றும், யகரவருக்கத்தில் மூன்றும் [2] ஆக இத்தொண்ணூற்றெட்டு எழுத்தும் மொழிக்கு முதலாம் எ-று.

-------------
[1]. ஆசிரியர் தொல்காப்பியனார், சகரம், அ, ஐ, ஒள என்னு மூன்றுயிர் நீங்கிய ஏனை உயிர்களோடு மொழிக்கு முதல் ஆம் என்றார். (தொல். மொழி மரபு. சூ.29.)
பிற்காலத்தில் தமிழில் சட்டி, சமழ்ப்பு என்பன முதலிய சொற்கள் தோன்றினமையின், புதியன புகுதலாகச் சகரம் அகரத்துடனும் மொழி முதல் வரும் எனக் கொள்ளுதலாம். இலக்கண விளக்க நூலாசிரியர் ஐ ஒள அலவொடு சகரமும் (இல. எழு. அ. எழு, இயல். சூ,27.) என்றதனை ஈண்டு நோக்குக. இந் நூலாசிரியரும், வீரசோழிய நூலாசிரியரும், நன்னூலாசிரியரும் தமிழிற் பயின்று வழங்கும் வட மொழியின் சொற்களை நோக்கிச் சகரம் பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாம் என்றார்கள்.

[2]. ஆசிரியர் தொல்காப்பியனார், யகரம், ஆகாரம் ஒன்று நீங்கிய ஏனை உயிர்களோடு மொழிக்கு முதலாகாது என்றார். (தொல். எழு. மொழி. மரபு. சூ.32.)
இலக்கண விளக்க நூலாசிரியரும் இங்ஙனமே கூறினார். (இல. எழு. அ.எழு. இயல். சூ.27.)
இந் நூலாசிரியர் மூன்று உயிரோடு யகரம் மொழிக்கு முதலாம் என்றார். அம்மூன்று உயிர் ஆ, ஊ, ஓ என்பன என்பது உரையாசிரியர் காட்டிய உதாரணங்களால் விளங்குகின்றது. வீரசோழிய நூலாசிரியரும், நன்னூலாசிரியரும் யகரம் அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள என்னும் ஆறு உயிரோடும் மொழிக்கு முதலாம் என்றார்கள். இந்நூலாசிரியர் முதலியோர் யகரமொழி முதலாதலைப்பற்றி இங்ஙனம் கூறியதற்கும் தமிழில் பயின்று வழங்கும் வடமொழியின் சொற்களே காரணம் என்க.
----------

உ - ம். அறம், ஆடை, இகல், ஈகை, உடம்பு, ஊழி, எண்கு, ஏகம், ஐயம், ஒக்கல், ஓங்கல், ஒளவியம் எனவும்;

கட்சி, காடு, கிடங்கு, கீரி, குன்று, கூதிர், கெண்டை, கேதகை, கைதை, கொங்கு, கோங்கு, கௌவை எனவும்;

சகடம், சாகாடு, சிரல், சீர்மை, சுவல், சூது, செறல், சேறல், சையம், சொன்றி, சோறு, சௌரியம் எனவும்;
தந்தை, தாதை, திரு, தீமை, துத்தி, தூது, தெங்கு, தேயம், தையல், தொன்மை, தோல், தௌவை எனவும்;

நடம், நாட்டம், நிறம், நீர்மை, நுகம், நூழில், நெஞ்சு, நேயம், நைவு, நொசிவு, நோக்கு, நௌவி எனவும்;

படை, பாடி, பிறை, பீரம், புறம், பூமி, பெற்றம், பேதை, பைதல், பொத்தகம், போதம், பௌவம் எனவும்;

மல்லல், மாமை, மிடல், மீளி, முடி, மூங்கை, மென்மை, மேன்மை, மையல், மொட்டு, மோத்தை,[1] மௌவல் எனவும்;

வங்கம், வாளி, விளக்கு, வீரம், வென்றி, வேழம், வையம், வௌவினார் எனவும்; ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று எனவும்;

யானை, யூகம், யோகி எனவும்;

இத்தொண்ணூற்றெட்டு எழுத்தும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. ஏனை எழுத்தும் தம்மைக் கூறும் இடத்துத் தாம் முதலாய் நிற்கும்.
---------
[1]. தொல். பொருள். மரபியல். 45-ஆம் சூத்திரத்தில் மொத்தை என்று பாடம் காணப்படுகின்றது.

    "ரஃகா னொற்றும் பகர விறுதியு
    மாரைக் கிளவி யுளப்பட மூன்று
    நேரத் தோன்றும் பலரறி சொல்லே. " ( தொல். கிளவி. 7)
என்னும் இந்நிலைமண்டில ஆசிரியப்பாவின்கண் ரகரம் முதலாக உச்சரித்தவாறு கண்டுகொள்க; ரகரம் தன்னைச் சொல்லுதலால் என அறிக.
என்னை?

    "முதலா வேன தம்பெயர் முதலும்" (தொல். மொழிம.33)
என்ப ஆகலின்.

ஒற்றெழுத்தை முதலாக உச்சரித்தவாறு என்னையோ? எனின், ஒற்றுத் தன்னைச் சொல்லுதலான் முதலாகக் கொண்டு உச்சரித்தான், அகரமேற்றி எனக் கொள்க.
என்னை?

    "மெய்யி னியக்க மகரமொடு சிவணும்" [1] (தொல். மொழி ம. 13.)
என்ப ஆகலின். மற்றுஞ் சில உயிரை ஏற்றி, உச்சரிக்கவும் ஆமோ? எனின், ஆகாது, அவை கொம்பும், காலும், கட்டும், வீச்சும் வேறுபடுதலின், வடிவு வேறுபடுமாதலான் என்க.
------
[1]. ‘நிலையல்' எனவும் பாடம்.

8. இறுதி நிலை

    உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை யின்மூன்
    றயர்வில் இடையினங்கள் ஆறு நயனுணர்ந்து
    நன்மொழிகட் கீற்றெழுத்தாம் என்றுரைப்பர் ஞாலத்துச்
    சொன்முடிவு கண்டோர் துணிந்து.         (8)

எ - ன்: மொழிக்கு ஈறாம் எழுத்துக்களது பெயர் வேறுபாடு தெரிந்துணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ என்னும் உயிரொன்பதும், [2] ணகர, னகர, மகர மென்னும் மெல்லினம் மூன்றும், ய, ர, ல, வ, ழ, ள என்னும் இடையின மாறும் மொழிக்கு ஈற்றெழுத்தாம் எ - று.
------
[2]. ஆசிரியர் தொல்காப்பியனார் பன்னிரண்டு உயிரும் ஈற்றிலே வரும் என்றார் அதனை,

    ‘உயிர்ஒள எஞ்சிய இறுதி ஆகும்' (தொல். மொழிமரபு. 36.)
எனவும்,
    ‘கவயோ டியையின் ஒளவும் ஆகும்'
எனவும் கூறியவற்றான் அறிக.

நன்னூலாரும், இலக்கணவிளக்க நூலாசிரியரும் அங்ஙனமே கூறினர். வீரசோழிய நூலாசிரியர் ‘ஈரைந்துயிர் ஈறாம்' என்றார். அதன் உரையாசிரியர் அவ்வீரைந்துயிர் எகர ஒகரம் ஒழிந்தன என்று கூறினார். இந்நூலின் உரையாசிரியர், நன்மொழி என்று மிகுத்துச் சொல்லியவதனால் ஒகரம் ஈறாம் இடமும் உண்டு்; அது ‘நொ' எனக் காண்க என்றார், ஆசிரியர் தொல்காப்பியனார், பதினொரு மெய்கள் ஈறாம் என்றார். அதனை,

    ஞணநமன யரல வழள என்னும்
    அப்பதி னொற்றே புள்ளி இறுதி (தொல். மொழிமரபு. 45.)
என்றதனால் அறிக.

நன்னூலாசிரியரும் இலக்கண விளக்க நூலாசிரியரும் அங்ஙனமே கூறினர். வீரசோழிய நூலாசிரியர், இந்நூலாசிரியரைப்போலவே மெல்லினத்துள் ணகர னகர மகரங்கள் ஈற்றில் வரும் என்றார். ஆயினும், இடையினத்துள் வகரம் ஒழிந்த ஐந்துமே ஈற்றில் வரும் என்றார். இந்நூலாசிரியரும் வீரசோழிய ஆசிரியரும் குற்றியலுகரம் ஈறாதலைக் கூறிற்றிலராயினும் குற்றியலுகரம் கொண்டனராகலின் அஃது ஈறாதலையும் உடன்பட்டார் ஆவர்.
---------

வ - று: விள, பலா, கிளி, தீ, வேந்து, பூ, சே, பனை, கோ என்பன உயிரீறு; இவற்றை உயிர்மெய்யீறு என்னாது உயிரீறு என்றது என்னையோ? வெனின், மொழிகளின் ஈற்றிலே நின்ற உயிர்மெய்யை உயிரீறு என்னலாம்; என்னை?

    "மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. " (தொல். நூன். 18)
என்றார் ஆகலின்.

    "உயிர்மெய் யீறும் உயிரீ றியற்றே." (தொல். புணரி. 4)

என்பதனாற் பிரித்தால் உடல்முன் உயிர்பின்ஆம் ஆதலால் எனக் கொள்க. அன்றியும், வாளும் கூடும் இருப்பின் வாளைக் கொடுவா என்னும் அத்துணை அல்லது கூட்டைக் கொடுவா என்பது இல்லை ஆதலான் இங்ஙனம் சொல்லப்பட்டது.

வ - று: மண், மரம், பொன், மெய், தார், மால், தெவ், புகழ், வாள் எனவும் கண்டுகொள்க. ‘நன்மொழி' என்று மிகுத்துச் சொல்லியவதனால் ஒகரம் ஈறாம் இடமும் உண்டு; அது நொ எனக் காண்க.
---------------------

9. எழுத்துப் போலியும், உருவமும்

    [1]ஆதியுயிர் வவ்வியையின் ஒளவாம் அஃதன்றி
    நீதியினால் யவ்வியையின் ஐயாகும் - ஏதமிலா
    எஒமெய் புள்ளிபெறும் என்ப சஞயமுன்
    அஐயாம் ஆதி யிடை.         (9)
--------
[1]. இச்சூத்திரத்து ‘எ ஒ மெய் புள்ளிபெறும்' என்றது எழுத்துக்களின் உருவங் கூறியதாம், மற்றவை எழுத்துப் போலி கூறியனவாம் என்க

எ - ன்: சில எழுத்துப் போலியும், சில எழுத்து வடிவு வேற்றுமையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: அகரமும் வகரவொற்றும் கூடி ஒளகாரத்தின் பயத்த ஆகலும், அகரமும் யகரவொற்றும் கூடி ஐகாரத்தின் பயத்த ஆகலும், எகர ஒகரங்கள் மெய்கள் புள்ளி பெற்று நிற்றலும், சகர ஞகர யகரங்களின் முன்னாய் மொழிக்கு முதலாய் நின்ற அகரமும் இடை நின்ற அகரமும் ஐகாரம் ஆகலும் ஆம் எ-று.

வ - று: அவ்வை, ஒளவை, எனவும், அய்யர், ஐயர் எனவும் வரும்,

எரி, ஒதி, மென்மை, கொங்கு என எகர ஒகரங்களும் மெய்களும் புள்ளி பெற்றவாறு.

தச்சு தைச்சு, மஞ்சு மைஞ்சு, தய்யல் தையல் என மொழிக்கு முதலாய் அகரம் ஐகாரம் ஒத்தவாறு.

அரசு அரைசு, இலஞ்சி இலைஞ்சி, அரயர் அரையர் என மொழியிடையின் நின்ற அகரம் ஐகாரம் ஒத்தவாறு. இவற்றுள், ஒன்றும் சிறந்ததில்லை. என்னை?

    "அ ஐ முதலிடை யொக்கு மொரோவழி."
என்பவாகலின்.
-------

10. வடமொழி தமிழில் ஆகும் வகை

    அகரத்திற் காவும் இகரத்திற் கையும்
    உகரத்திற் கௌவும் இருவிற் - ககல்வரிய
    ஆருமாம் ஏயாம் இகரத்திற் கோவாகிச்
    சேருமுக ரத்தின் றிறம்.         (10)

எ - ன்: ஒருசார் வடமொழி முடிபு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: அகரம் ஆகாரமாயும், இகரம் ஐகாரமாயும், உகரம் ஒளகாரமாயும், இரு என்பது ஆராயும் வரும் ஒரு சொல்லிடத்து; இனி இரு சொல்லிடத்து இகரம் ஏகாரமாயும் உகரம் ஓகாரமாயும் வரும் எ - று.

வ - று: அருகன் என நிறுத்தி இவனைத் தெய்வம் ஆக உடையான் யாவன்? எனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, ‘ஒற்று மிகும்' [1] என்பதனாற் ககரவொன்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, ‘சுட்டு மிகும்' [2] என்பதனால் அகரச்சுட்டை மிகுத்து, முன்னொற்றுண்டேற் செம்மையுயி ரேறுஞ் செறிந்து' [3] என்பதனால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என முடிக்க.
----------
[1]. இந்நூலின் இவ்வதிகாரம், சூ. 24
[2]. இந்நூலின் இவ்வதிகாரம், சூ. 22
[3]. இந்நூலின் இவ்வதிகாரம், சூ. 4
-------

தசரதன் மகன் தாசரதி என்புழி நிலைமொழி ஈற்றில் நின்ற அன்என்னும் பதத்தைக் கெடுத்து, இகரச்சுட்டை மிகுத்துத், தகரவொற்றிலே உயிரை ஏற்றி, முதல் நின்ற தகர அகரத்தை ஆகாரமாக்கித் தாசரதி என முடிக்க.

சிவ என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன்? எனக் கருதிய பொழுது, இகரத்தை ஐகாரமாக்கிச் சைவன் என முடிக்க.

புத்தன் என நிறுத்தி, இவனைத் தெய்வமாக உடையான் யாவன்? எனக் கருதிய போது, உகரத்தை ஒளகாரம் ஆக்கிப் பௌத்தன் என முடிக்க.

இருடிகள் என நிறுத்தி, இவர்களாற் செய்யப்பட்டது யாது? எனக் கருதிய பொழுது இரு வென்பதனை ஆர் ஆக்கி, இகரச்சுட்டை மிகுத்து, ரகர ஒற்றிலே உயிரையேற்றி, ‘கடைக்குறைத்தல்' என்பதனாலும் ‘ஓரோர் மறுவில் பதங்கெட்டு வரும்' [1 என்பதனாலும் இகள் என்னும் பதத்தைக் கெடுத்து, அம் என்னும் பதத்தை மிகுத்து ஆரிடம் என முடிக்க.

இருசொல்லிடத்து [2] நரன் என நிறுத்தி, இந்திரன் என வருவித்து, நிலைமொழி இறுதியில் நின்ற அன் என்னும் பதத்தைக் கெடுத்து, 'ஏயா மிகரத்திற்கு'[3] என்பதனான் இகரத்தை ஏகாரமாக்கி, ரகரவொற்றின்மேல் உயிரை ஏற்றி நரேந்திரன் என முடிக்க. ‘ஏயா மிகரத்திற்கு' என்று சிறப்பித்தவதனான் அமரேசன் என்னும் ஈகார பதமும் இவ்வாறே முடிக்க.
---------
[1]. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 16
[2]. ஆருகதன், தாசரதி, ஆரிடம் என்பன ஒவ்வொரு மொழிகளாகவே நிற்றலான, அவற்றை ஒரு மொழி எனக்கொண்டு, நரேந்திரன் என்பது முதலியவை ஒரு பொருள் குறித்து நின்றன வெனினும் இருசொற்கள் கூடி நிற்றலான், அவற்றை இருசொல் என்றார் என்றுணர்க.
[3]. இந்நூல் இவ்வதிகாரம், சூ. 10.

குலம் என நிறுத்தி, உத்துங்கன் என வருவித்து, நிலைமொழி ஈற்றில் நின்ற அம் என்னும் பதத்தைக் கெடுத்து, உகரத்தை ஓகாரமாக்கி, லகர வொற்றின்மேல் உயிரை ஏற்றிக் குலோத்துங்கன் என முடிக்க. கூப+உதகம்=கூபோதகம் என்பதும் அது. பிறவும் அன்ன.
----------------------

11. சில வடமொழிகளின் முடிபு

    நேர்ந்த மொழிப்பொருளை நீக்க வருநகரஞ்
    சார்ந்த துடலாயிற் றன்னுடல்போஞ் - சார்ந்ததுதான்
    ஆவியேற் றன்னாவி முன்னாகும் ஐஒளவா
    மேவிய ஏ ஓவும் விரைந்து.         (11)

எ - ன்: இதுவும் ஒருசார் வடமொழி முடிபு கூறுகின்றது.

இ - ள்: நின்ற மொழியின் பொருளை மாற்றுதற்கு முதல் நிறுத்திய நகர உயிர்மெய் அப்பொருண் மொழியின் முதல் எழுத்து உயிர்மெய் ஆகில் அவ்வுயிர் ஒழிய உடல் போம்; அஃது உயிர் ஆயின் நகரவுயிர்மெய் பிரிந்து உயிர் முன்னும் உடல் பின்னும் ஆம்; என்னை?

"மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே." (தொல். நூன்ம.18)

என்பதனாற் பிரிந்தால் உயிர் பின்னாம் என்க. மொழி முதல் நின்ற ஏகாரம் ஐகாரமாம்; ஓகாரம் ஒளகாரமாம் எ-று.

வ - று: [1]சஞ்சலம் என நிறுத்தி, இதனை இல்லாதான் யாவன் எனக் கருதியவிடத்து நகரவுயிர்மெய்யை முன்னே வருவித்துச் ‘சார்ந்த துடலாயிற் றன்னுடல்போம்' என்பதனாற் பிரித்து, நகரவொற்றைக் கெடுத்து, அசஞ்சலன் என முடிக்க. பயம், களங்கம் என இவையும் அவ்விலக்கணத்தான் அபயன், அகளங்கன் என முடிக்க. உபமன் என நிறுத்தி, இதனை இல்லாதான் யாவன்? எனக் கருதியவிடத்து நகரவுயிர்மெய்யை முன்னர் நிறுத்தி, ‘சார்ந்ததுதான் ஆவியேற் றன்னாவி முன்னாகும்' என்பதனாற் பிரித்து அகரத்தை முன்னர் நிறுத்தி, நகரவொற்றின்மேல் உயிரை ஏற்றி அநுபமன் என முடிக்க. அகம் என்பது பாவம்; இதனை இல்லாதான் யாவன்? எனக் கருதிய பொழுது இவ்விலக்கணத்தால் அநகன் என்க. உசிதம் என்பது யோக்கியம்; அஃது இல்லாதது அநுசிதம் என முடிக்க. வேரம் என நிறுத்தி, இதன் முதிர்ச்சி யாது? எனக் கருதிய விடத்து ஏகாரத்தை ஐகாரமாக்கி வைரம் என முடிக்க. கேவலம் கைவலம் என்று ஆயிற்று. வேதிகன் வைதிகன் என்பதும் அது. கோசலை என நிறுத்தி, இதனுட் பிறந்தாள் யாவள்? எனக் கருதிய விடத்து ஓகாரத்தை ஒளகாரமாக்கிக் கௌசலை என முடிக்க. சோமபுத்திரன் சௌமியன் என முடிக்க; சௌமியனாவான் புதன். பிறவும் அன்ன.
---------
[1. பிரயோக விவேகம், சமரசப்படலம், 4-ஆம் சூத்திர உரையில் அந்நூலாசிரியர், இச்சூத்திரத்தின்,

    ‘நேர்ந்த மொழிப்பொருளை நீக்க வருநகரம்
    சார்ந்த துடலாயிற் றன்னுடல்போம் - சார்ந்ததுதான்
    ஆவியேற் றன்னாவி மூன்னாகும்'

என்னும் பகுதியை எடுத்துக் காட்டி, என்பதனான் அகளங்கன், அநங்கன் எனவும், அப்பிரமணன், அநச்சுவன் எனவும், அதன்மம் எனவும் முறையே இன்மை, அன்மை, எதிர்மறை மூன்றினும் நஞ்ஞு வரும்' என்றதனை ஈண்டு நோக்குக.
--------

12. புணர்ச்சியின் பொது இலக்கணம்

    மெய்யீ றுயிரீ றுயிர்முதன் மெய்ம்முதலா
    எய்தும் பெயர்வினையும் இவ்வகையே - செய்தமைத்தாற்
    றோன்றல் திரிதல் கெடுதலெனத் தூமொழியாய்
    மூன்றென்ப சந்தி முடிவு.         (12)

எ - ன்: சந்தி முடிக்கப்படாநின்ற சொற்கள் இப்பகுதி எனப் பொது இலக்கண-முணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: சந்தி முடியுமிடத்து, மெய்யீறாய் மெய்ம் முதலாய் வருவனவும், மெய்யீறாய் உயிர் முதலாய் வருவனவும், உயிரீறாய் உயிர் முதலாய் வருவனவும், உயிரீறாய் மெய்ம்முதலாய் வருவனவும் என இந்நான்கும்; பெயரீறாய்ப் பெயர் முதலாய் வருவனவும், பெயரீறாய் வினை முதலாய் வருவனவும், வினையீறாய் வினை முதலாய் வருவனவும், வினையீறாய்ப் பெயர்முதலாய் வருவனவும் என இப்பகுதியாற் பிரித்தால், எழுத்துத் தோன்றி முடிவனவும், திரிந்து முடிவனவும், கெட்டு முடிவனவும் என மூன்று வகையான் முடிக்கப்படும் எ - று.

சொல்லுத் தோன்றியும், சொல்லுத் திரிந்தும், சொல்லுக் கெட்டும் முடிவனவும் உளவெனக் கொள்க.

வ - று: பொற்குடம் என்பது மெய்யீறாய் மெய்ம்முதலாய் வந்து பெயரீறாய்ப் பெயர்முதலாயிற்று. பொன்னழகிது என்பது மெய்யீறாய் உயிர்முதலாய் வந்து பெயர்முதலாய் வினையீறாயிற்று. உண்டோது என்பது உயிரீறாய் உயிர்முதலாய் வந்து வினையீறாய் வினைமுதலாயிற்று. உண்டகை என்பது உயிரீறாய் மெய்ம்முதலாய் வந்து வினைமுதலாய்ப் பெயரீறாயிற்று.

‘எய்தும் பெயர்' என்று மிகுத்துச் சொல்லியவதனாற் சொற்கள் நிலைமொழி வருமொழி செய்தால் முன்மொழியிலே பொருள் நிற்பனவும், பின்மொழியிலே பொருள் நிற்பனவும், இருமொழியினும் பொருள் நிற்பனவும், இருமொழியும் ஒழிய வேறொரு மொழியிலே பொருள் நிற்பனவும் என நான்கு வகைப்படும். அவை வருமாறு: அரைக்கழஞ்சு என்புழி முன்மொழியிற் பொருள் நின்றது; வேங்கைப்பூ என்புழிப் பின்மொழியிற் பொருள் நின்றது; தூணிப்பதக்கு என்புழி இருமொழியினும் பொருள் நின்றது; பொற்றொடி என்புழி இருமொழியினும் பொருள் இன்றி இவற்றை உடையாள் என்னும் வேறொரு மொழியிலே பொருள் நின்றது.

இனித் தோன்றிய சந்தியும், திரிந்த சந்தியும், கெட்ட சந்தியும் ஆவன: யானைக்கோடு என்பது தோன்றிய சந்தி, மட்குடம் என்பது திரிந்த சந்தி, மரவேர் என்பது கெட்ட சந்தி எனக் கொள்க.

சந்தியினை நாலென இயல்பு சந்தியுங்கூட்டிச் சிலர் சொல்ல இந் நூலுடையார் இயல்பு சந்தியை நீக்கியது என்னையோ? எனின், இயல்பு சந்திகளின் மிக்கும் திரிந்தும் கெட்டும் வருவன இல்லையாதலான், முடிக்க வேண்டுஞ் சந்திகள் இல்லாமலே நீக்கினார் எனக்கொள்க.

‘செய்தமைத்தால்' என்றமையாற் சந்திகள் மும்மொழிக் கூட்டமாய் இரண்டு சந்தி படுவனவும், இருமொழியாற் பொருள் வேறுபட்டு இரண்டு மூன்று சந்தி படுவனவும் உளவாதலான், அவை, படும்பகுதி அறி்ந்து ஒருவன் கேட்ட சந்தியை நீ கருதிற்றியாது? எனக் கேட்டு முடிக்கப்படும் எனக் கொள்க.

சிறுவழுதுணங்காய் என்புழிச் சிறுமை என நிறுத்தி, வழுதுணங்காய் என வருவித்து முடித்தல் செய்க. சிறுவழுதுணை என நிறுத்திக், காய் என வருவித்து முடித்தல் செய்யற்க. செம்பொன் பதின்பலம், பொன்னாழி, பெண்ணீத்தார் என்பன. பலபொருள[1] வாதலான், அவன் [2] கருத்து அறிந்து முடிக்க. பிறவும் அன்ன.
------------
[1] ‘செம்பொன்பதின்பலம் என்பது: சொம்பொன்+பதின்பலம், செம்பு+ஒன்பதின் பலம் எனவும்; பொன்னாழி என்பது: பொன்+நாழி, பொன்+ஆழி, எனவும்; பெண்ணீத்தார் என்பது; பெண்+ஈத்தார், பெண்+நீத்தார் எனவும் பிரிக்கப்பட்டுப் பொருள் வேறுபடுதலின், ‘பல பொருள் ஆதலான்' என்றார் என்க. [2] அவன்-கேட்டவன்.
--------

13. உடம்படு மெய்கள்


    மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
    ஆன்ற உயிர்ப்பின்னும் ஆவிவரிற் - றோன்றும்
    யகர வகரம் இறுதியிடத் தோரோர்
    மகரங் கெடவகரம் ஆம்.         (13)

எ - ன்: உடம்படுமெய் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: இகர, ஈகார, ஐகாரம் என்னும் இம்மூன்றுயிரும் நிலைமொழி ஈற்றில் நிற்க, வருமொழிக்கு முதலாக யாதானும் ஓருயிர் வரின், நடுவு யகர வொற்றுத் தோன்றும்; அகர, ஆகார, உகர, ஊகார, ஏகார, ஓகாரம் என்னும் இவ்வாறுயிரும் நிலைமொழி ஈற்றில் நிற்க, வருமொழிக்கு முதலாக யாதானும் ஓருயிர் வரின், நடுவு வகரவொற்றுத் தோன்றும்; உயிர் வரின் நிலைமொழி இறுதியில் நின்ற மகரம் ஒரோவிடத்து அழிந்து வகரந் தோன்றுதலும் உண்டு எ - று.

வ - று: மணி, தீ, கதை என நிறுத்தி, அழகிது என உயிர் முதலாகிய சொற்களை வருவித்து, இவ்விலக்கணத்தான் யகரவொற்றை நடுவு மிகுத்து, ‘முன்னொற்றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் செறிந்து' [1] என்பதனான் ஒற்றின்மேல் உயிரை ஏற்றி மணியழகிது, தீயழகிது, கதை யழகிது, என முடிக்க.

அல்லாத உயிர்கள் வருமாறு: விள, பலா, கடு, பூ, சே, கோ என நிறுத்தி, உயிர்முதலாகிய சொற்களை வருவித்து இவ்விலக்கணத்தான் நடுவு வகரவொற்றை மிகுத்து, உயிரை ஏற்றி விளவழகிது, பலாவழகிது, கடுவழகிது, பூவழகிது, சேவழகிது, கோவழகிது என முடிக்க.

மரம் என நிறுத்தி, உயிர் முதலாகிய சொற்களை வருவித்து, இவ்விலக்கணத்தான் மகரவொற்றைக் கெடுத்து, வகர வொற்றை மிகுத்து, உயிரை யேற்றி மரவடி என முடிக்க. குண்டல வொளி, வெண்கலவோசை என்பனவும் அது. பிறவும் அன்ன.
-----
[1]. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 4.
----------

14. குற்றுகர முற்றுகர ஈற்று முடிபு

    குற்றுகரம் ஆவி வரிற்சிதையும் கூறியவல்
    லொற்றுமுன் றோன்றுதலும் உண்டாகு - முற்றோன்று
    மேன்மையதன் வல்லெழுத்தாம் வேற்கண்ணுய் முற்றுகரத்
    தன்மையும்போம் ஆவியினைச் சார்ந்து.         (14)

எ - ன் : குற்று கரவீற்று நிலைமொழியும் முற்று கர வீற்று கிலேமொழியும் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் குற்றுகர ஈற்று நிலைமொழியின்பின் யாதா அனும் ஒருயிர் வந்தால் உகரம் அழிந்து வந்த உயிர் ஏறி முடி யும் _முன் ஒற்று இல்லாத குற்றுகரத்தின்பின் யாதானும் ஒரு சொல் வந்தால், அவ்வுகரம் ஏறின ஒற்றின் முன்பே, தனக்குப் பொருந்திய வல்லொற்றுத் தோன்றி முடிதலும் உண்டு; குற்றியலுகரத்தின்முன் ஒரு மெல்லொற்று நின் முல் அது வல்லொற்ருய் முடியவும் பெறும் ; உயிர் வந்தால் முற்றுகரம் அழிந்து முடியவும் பெறும் எ-று.

* முன்னின்ற வல்லொற்று" என்னது தோன்றும் " என்று மிகுத்துச் சொல்லியவதனன், வல்லொற்றுத் தோன்றுவதும், மெல் லொற்று வல்லொற்முவதும் பெயர் வந்துழி அன்றி, விஜனவரின் இயல்பாய் முடியும் எனக் கொள்க.

வ - று: நாகு என நிறுத்தி, அழகிது என உயிர் முதலாகிய சொற்களை வருவித்து, இவ்விலக்கணத்தால் உகாத்தை அழித்து, அகரத்தை ஏற்றி நாகழகிது என முடிக்க. அல்லாத குற்றுகாமும் இவ்வாறே முடிக்க.

காடு, பகடு, யாறு, கவறு என நிறுத்தி, ஏற்ற சொற்களை வரு வித்து, இவ்விலக்கணத்தாற் காட்டுவழி, பகட்டுநிலை, யாற்றுவரவு, சுவற்றுக்கை, காட்டிடம், பகட்டேர், யாற்றூறல், கவற்றுப்பால் என முடிக்க. அவைதாம் வினைச்சொல் வந்தவிடத்து யாறு வந்தது, யாடு வந்தது, பகடு வந்தது, கவறு வந்தது என இயல்பாய் முடிந்த வாறு கண்டுகொள்க. வழி என்பது பெயர்ச்சொல்; வந்தது என்பது வினைச்சொல் என அறிக.

வல்லொற்றுமுன்றோன்றுதலும் உண்டாகும் " என்ற உம்மை யாற்பெயர்ச்சொல் வருவித்தாலும் வல்லொற்றுத் தோன்முச் சொற் களும் உள; அவை காசு கிழி, பொதி, பயறு, துவரை இவை முதலாயின எனக் கொள்க.

இனிக் குரங்கு, கழஞ்சு, நஞ்சு, எண்கு, மருந்து, கரும்பு, அன்பு என நிறுத்தி, ஏற்ற சொற்களை வருவித்துக், குரக்குவிரல், கழச்சுக்கோல், நச்சுக்குழல், எட்குக்குட்டி, மருத்துப்பை, கருப்பு வேலி, அற்புத்தளை, குரக்கிறைச்சி, கழச்சிற்பாதி, நச்சறை, எட்கீரல், நத்தின்கோடு, கருப்பிலை, அற்புறுத்தல் என வரும். பிறவும் அன்ன.

அவையே வினைச்சொல் வந்தால் குரங்கு வந்தது, கழஞ்சு கொண்டார், எண்கு கரிது, மருந்து பறித்தது, கரும்பு கிழித்தது, அன்பு பெரிது என இயல்பாயினவாறு கண்டுகொள்க.

கதவு என முற்றுகரத்தை நிறுத்தி, உயிர் முதலாகிய சொல்லை வருவித்து, இவ்விலக்கணத்தான் உகரத்தை அழித்து, உயிரை ஏற்றிக் கதவழகிது என முடிக்க. பிறவும் அன்ன.
-----------------

15. சில ஒற்றுஈற்றுப் புணர்ச்சியும், இயல்பு புணர்ச்சியும்

    குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கள்
    நிற்கப்பின் வல்லெழுத்து நேருமேல் -- ஒற்றாம்
    பிணைந்த வருக்கம் பெயர்த்தியல்பு சந்தி
    இணைந்தபடி யேமுடியு மேய்ந்து.         (15)

எ - ன்: ஒரு சார் ஒற்றீறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: தனிக் குற்றெழுத்தின்பின் நின்ற ஒற்றுக்கள் வருமொழிக்கு முதலாக யாதானும் ஓருயிர் வரின், அவ்வொற்றிரட்டித்து, வந்த உயிர் ஏறி முடியும்; நிலை மொழி இறுதியில் நின்ற யரழ ஒற்றுக்குப் பின்னாக வல்லெழுத்து வரின், தன் வர்க்கத்து வல்லொற்றாதல் மெல்லொற்றாதல் மிக்கு ஈரொற்றுடனிலையாய் முடியும் என்க; இயல்புசந்திகள் விகாரப்படாது நிலைமொழியும் வருமொழியும் நிறுத்தியபடியே நின்று முடியும் எ - று.

வ - று: மண், கம், பொன், மெய், சொல், தெவ், முள், என நிறுத்தி, அழகிது என உயிர் முதலாகிய சொற்களை வருவித்துக், ‘குற்றொற்றிரட்டு முயிர்வந்தால்' என்பதனான் ஒற்றை இரட்டித்துச், ‘செம்மை உயிரேறுஞ் செறிந்து' [1] என்பதனான் மெய்யொடு உயிரைக் கூட்டி, மண்ணழகிது, கம்மழகிது, டொன்னழகிது, மெய்யழகிது, சொல்லழகிது, தெவ்வழகிது, முள்ளழகிது என முடிக்க. பிறவும் அன்ன. வேய், உகாய், கதிர், சேர், பாழ், யாழ் என நிறுத்தி, வல்லெழுத்து முதலாகிய சொற்களை வருவித்து வேய்த்தோள், உகாய்ப்பழம், கதிர்ச்செந்நெல், சேர்ம்பழம், பாழ்ங்குடில், யாழ்க்கோடு என முடிக்க.
----------
1, இந்நூலின் இவ்வதிகாரம், சூ, 4.

வேய், உகாய், கதிர், சேர், பாழ், யாழ் என நிறுத்தி, வல்லெழுத்து முதலாகிய சொற்களை வருவித்து வேய்த்தோள், உகாய்ப் பழம், கதிர்ச்சென் நெல், சேர்ம்பழம், பாழ்ங்குடில், யாழ்க்கோடு என முடிக்க.
என்னை?

    "யரழ வென்னும் மூன்று மொற்றக்
    கசதப ஙஞநம வீரொற் றாகும்." (தொல். மொழிம. 15)
என்பவாகலின்.

‘பெயர்த்து' என்று மிகுத்துச் சொல்லியவதனான் வினைச் சொல் வந்தவிடத்து யரழ ஒற்றுக்கள் இயல்பாய் முடியும். அவை வருமாறு: செய்காத்தான், நீர்கொண்டான் என வரும்.
‘பெயர்த்து' என்று மிகுத்துச் சொல்லியவதனாற் போலும், மருளும் என்னும் இருமொழிகளினும் லகர ளகரங்களின் ஏறி நின்ற உகர உயிர் கெட்டு, இறுதியில் நின்ற மகரவொற்றானே, லகர ளகரங்கள் னகர ணகரங்களாய்ப் போன்ம், மருண்ம் என ஈரொற்றாய் நிற்கும்; இவ்விடம் மகரக்குறுக்கம் என அறிக.

    "ணனவின் முன்னர் மகரங் குறுகும்"
என்பவாகலின்.

‘பின்' என்ற மிகையான், யரழக்கள் வல்லெழுத்து வாராதே மெல்லெழுத்து வந்து ஈரொற்றாவனவும் உள; அவை மெய்ம்மொழி, பொய்ம்மதி, செய்ந்நீண்டது [1] என ஆம்.

இயல்பு சந்தியாவன: குவளை தவளை என நிறுத்தி, மலர், வாய் என வருவித்துக் குவளை மலர், தவளைவாய் என முடிக்க.
-----
[1] ஈண்டு யகரத்தின்முன் மெல்லெழுத்து மிகுதற்குக் காட்டப்பட்ட உதாரணங்கள் நன்னூல் உயிரீற்றுப் புணரியல் 8 ஆஞ் சூத்திரதிற் கூறப்பட்ட ‘குறில் வழி யவ்வின் முன் மெலி மிகலுமாம்' என்னும் விதியின் அமைவனவாகும். ஈண்டு ரகர ழகரங்களின் முன் மெலி மிகுதற்கு உதாரணங்கள் காட்டப்பட்டில. அவற்றிற்குத் தொல். எழு. தொகை மரபு. 3-ஆம் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் காட்டிய கதிர்+ஞெரி=கதிர்ஞ்ஞெரி, இதழ்+ஞெரி=இதழ்ஞ்ஞெரி என்பவற்றை உதாரணமாகக் கொள்க.
இளம்பூரணர் இவற்றுள் முன்னதனை மாத்திரம் உதாரணமாகக் காட்டினார்.
-------------

16. சில உயிரீற்றுச் சந்திகளும் சில ஒற்றீற்றுச் சந்திகளும்

    வாய்ந்த உயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
    றேய்ந்து புகுதும் இயல்புமாம் -- ஆய்ந்த
    இறுதி வருமெழுத்தாம் ஈறராம் ஓரோர்
    மறுவில்பதங் கெட்டு வரும்.         (16)

எ - ன்: இதுவும் சில உயிரீற்றுச் சந்திகளும் ஒற்றீற்றுச் சந்திகளும் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: உயிரீற்று நிலைமொழியின்பின் யாதானும் ஒரு சொல் வருமாயின் வந்த வெழுத்தின் ஒற்றாதல், வர்க்கத் தொற்றாதல் மிக்கு முடிவனவும், இயல்பாய் நின்று முடிவனவும் உள; நிலைமொழி ஈற்றினின்ற னகரவொற்று வருமொழிமுதல் வந்த எழுத்தின் ஒற்றாய்த் திரியும்; மகரமாய்த் திரிதலும் உண்டு;[1] நிலைமொழி இறுதியில் நின்ற அன் ஆர் ஆகத் திரிதலும் உண்டு. நிலைமொழி ஈற்றில் நின்ற சொற்கள் கெட்டு முடிவனவும் உள எ - று.

வ - று: பலா, மா, சுறா, விளா, படை, ஆ, பூ, பை, வை, கை

என நிறுத்தி, ஏற்ற சொற்களை வருவித்துப், பலாக்காய், மாங்காய், சுறாத்தலை, விளாம்பழம், படைத்தொழில், ஆந்தளிர், பூம்பொழில், பைந்நாகம், வைந்நுதி, கைம்மணி என வரும்; அம்மணி, அவ்விரல், அஞ்ஞாலம் இவை சுட்டின்முன் மிக்கவை. பிறவும் அன்ன.

‘இயல்புமாம்' என்பதனான் ஆகொண்டார், மாகொண்டார், நகைமதி, வைவேல்
என்பன இயல்பாய் முடிந்தன.

‘வாய்ந்த வுயிர்' என்ற மிகையான் இவ்விரண்டு முடிவும் பெற்று முடிவனவும் உள. அவை கிளிகடிந்தார், கிளிக்கடிந்தார்; பனைபிளந்தார், பனைப்பிளந்தார் என வரும். பிறவும் அன்ன.
------------
[1.] இதற்குத் தட்டான் என நிறுத்தித் தட்டாங்குளம் என உதாரணம் கொள்க. (இதனை உலக வழக்கிற் காண்க.)
தொல், எழுத்து. புள்ளிமயங்கியல். 55-ஆம் சூத்திர உரையில் உரையாசிரியர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் காட்டிய ‘சாத்தங் கொற்றன், கொற்றங் கொற்றன்' ‘சாத்தங்குடி கொற்றங்குடி' என்னும் உதாரணங்களையும் ஈண்டு நோக்குக. இவற்றுள் ‘அன்' என்னும் ஈறுகெட அம் என்னும் சாரியை தோன்றிற்று என அறிக. ஈண்டு அச்சூத்திர உரையையும் நோக்குக.
----------

சாலியன், கோலிகன், தேன் என நிறுத்தி ஏற்ற சொற்களை வருவித்துச் சாலியத்தறி, கோலிகத்தறி, தேத்தடம் என இறுதி னகர வொற்று வருமெழுத்தாம் என்பதனான் முடிக்க.

முக்குடை, முச்சந்தி, முத்தொகை, முப்புவனம் என்பன எல்லாம் செய்கை செய்து நிறுத்தி முடிக்க. செய்கையாவது: மூன்று என நிறுத்திக், குடை என வருவித்து, ‘ஆங்குயிர்மெய் போம்' என்பதனான் றகர உயிர்மெய்யை அழித்து ‘திருந்தும் விகாரங்கடேர்ந்தாறு மூன்றும், பொருந்துமிடங் கண்டு புகல்' [1] என்பதனான் மூன்றென்பதனைக், ‘குறுக்கும்வழிக் குறுக்கல், [2 என்னும் விகாரத்தான் முன் என நிறுத்தி, ‘இறுதி வருமெழுத்தாம்' என்பதனான் னகரத்தை வருமெழுத்தின் ஒற்றாய்த் திரித்து முக்குடை எனக் காண்டலாம்.

ஈறு அர் ஆம், என்பதனாற் சாலியன், கோலிகன் என நிறுத்திச் சாலியர் குளம், கோலிகர் குளம் என முடிக்க. இது னகரம் ரகரமாய்த் திரிந்தது.

இனி ‘ஓரோர் மறுவில் பதங்கெட்டுவரும்' என்பதனால் சோழன் என நிறுத்தி, நாடு என வருவித்து, அன் என்னும் பதத்தைக் கெடுத்துச், சோழநாடு என முடிக்க. பாண்டியன் என நிறுத்தி, நாடு என வருவித்து, அன் என்னும் பதத்தைக் கெடுத்து, ‘ஒற்றுப்போம்' [3] என்பதனான் யகரவொற்றை அழித்துப் பாண்டி நாடு என முடிக்க. பல்லவத்தின் சந்தம் [4] என்புழிப் பல்லவம் என நிறுத்திச், சந்தம் என வருவித்து, அத்தும், இன்னும் என்னும் இரண்டிடைச் சொற்களை நிறுத்தி, நிலைமொழி ஈற்றினின்ற அம்மென்னும் பதத்தைக் கெடுத்து, ‘முன் னொற்றுண்டேற், செம்மையுயி ரேறுஞ் செறிந்து' [5] என்பதனான் வகர ஒற்றின்மேல் அகர உயிரை ஏற்றிப் பல்லவத்தின் சந்தம் என முடிக்க.
-----------
[1] இந் நூலின் இவ்வதிகாரம். சூ. 19. [2] தொல். சொல். எச்சவியல். சூ. 7.
[3] இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 22.
[4]இத்தொடர் யாப்பருங்கலக் காரிகையின் முதற் சூத்திரத்தில் வந்துள்ளது.
[5] இந் நூலின் இவ்வதிகாரம். சூ. 4.
---------------------

17. ளணலன மெய்களின் முடிபு

    வன்மை வரினே ளணலன மாண்டறவாம்
    மென்மை வரினே ளலணனவாம் -- தந்நக்கள்
    முன்பின்னாந் தப்பி னணவியல்பாத் தட்டறவா
    மொன்றழிந்து போதலு முண்டு.         (17)

எ - ன்: ளண லன மெய்கள் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: நிலைமொழி யிறுதியி னின்ற ளகார ணகார லகார னகாரங்கள் இயல்பாய் நிற்க, வருமொழிக்கு முதலாக வல்லெழுத்து வந்தால் ளகார ணகாரங்கள் டகாரமாம்; லகார னகாரங்கள் றகாரமாம். நிலைமொழி யிறுதியினின்ற ளகார லகாரங்கள், வருமொழிக்கு முதலாக மெல்லெழுத்து வந்தால் ளகாரம் ணகாரமாம்; லகாரம் னகாரமாம். இவை நிரனிறை எனக் கொள்க. தந்நக்கள் முன் பின்னாம் என்பது டகாரங்களின் பின் வந்த தகாரமும் டகாரமாம்; றகாரங்களின் பின்வந்த தகாரமும் றகாரமாம். ணகாரங்களின் பின்வந்த நகாரமும் ணகாரமாம்; னகாரங்களின் பின்வந்த நகாரமும் னகாரமாம். ‘தப்பி னணவியல் பாத் தட்டறவாம்' என்பது நிலைமொழி யிறுதியினின்ற ணகார னகாரங்கள் இயல்பாய் நிற்க வருமொழிக்கு முதலாகத் தகாரம் வந்தால் ணகாரத்தின் பின் வந்த தகாரமும் டகாரமாம்; னகாரத்தின் பின்வந்த தகாரமும் றகாரமாம். ‘ஒன்றழிந்து போதல்' என்பது, நிலைமொழியீற்றி னின்ற ளகார லகாரம் இயல்பாய் நிற்க வருமொழிக்கு முதலாக வல்லெழுத்து வந்தால் நிலைமொழி யீற்றி னின்ற ளகார லகாரம் அழிந்து முடியவும் பெறும் எ - று.

வ - று: முள், மண், கல், பொன் என நிறுத்தி ஏற்ற சொற்களை வருவித்து இவ்விலக்கணத்தான் முட்கூரிது, மட்கலம், கற்பெரிது, பொற்பூண் என முடிக்க. ‘மென்மை வரினே ள ல ண ன வாம்' என்பது முள், சொல் என நிறுத்தி, மெல்லெழுத்து வருவித்து, முண் முரிந்தது, சொன் முரண் என முடிக்க.

‘தந்நக்கள் முன்பின்னாம்' என்பது வல்லெழுத்தாகிய தகாரமும் மெல்லெழுத்தாகிய நகாரமும் வருமொழிக்கு முதலாக வரின், டகார றகாரங்களின் பின் வந்த தகாரத்தை அழித்து டகார றகாரமாக்கி, முட்டாமரை கற்றாமரை எனவும் னகார ணகாரங்களின் பின் வந்த நகாரத்தை னகார ணகாரமாக்கி வின்னன்று, பொன்னன்று, விண்ணீண்டது, கண்ணொந்தான் எனவும் முடிக்க.

இனித் ‘தப்பி னணவியல்பாத் தட்டறவாம்' என்பது மண், பொன் என நிறுத்தித் தண்ணிதெனத் தகர முதலாகிய சொற்களை வருவித்து மண்டண்ணிது, பொன்றண்ணிது என முடிக்க.

இனி ‘ஒன்றழிந்து போதலுமுண்டு' என்பதனான் வாள், வேல் என நிறுத்தி வருமொழியினின்ற தகாரத்தை டகார றகாரமாக்கி இவ் விலக்கணத்தால் நிலைமொழி ஒற்றை அழித்து வாடோய்ந்தது, வேறோய்ந்தது என முடிக்க.

‘ஒன்றழிந்து போதலுமுண்டு' என்ற உம்மையால் அழியாமையுமுண்டு; அது வாட்டடங்கண், கோற்றொடி என வரும்.

தொடர்மொழிப் பின்னும் நெடிற்பின்னும் வந்தால் ஒன்றழிகை னகாரத்துக்கும் ணகாரத்துக்கும் ஒக்குமெனவறிக. வரலாறு: தூணன்று, அரணன்று, சாணன்று, மானன்று, வானன்று, அகனன்று என வரும்.

‘உண்டு' என்ற மிகையால், தனிக் குற் றெழுத்தின்கீழ் ளகார லகாரங்கள் நிற்க ஒன்றழியில், இடையே ஆய்தமும் புகுந்து முடியும்; அவை ஆய்தகுறுக்கம் என உணர்க. வரலாறு: முள், கல் என நிறுத்தித் தீது என வருவித்து முஃடீது, கஃறீது எனவும்; அல், பல் என நிறுத்தித், திணை, தொடை என வருவித்து, அஃறிணை, பஃறொடை எனவும் முடிக்க. பிறவும் அன்ன.
---------------

18. மகரவீற்று முடிவு

    மகரந்தான் வன்மைவரின் வர்க்கத்தொற் றாகும்
    புகரிலா மென்மைவரிற் பொன்று - நிகரில்
    வகரம்வந் தாற்குறுகும் வவ்வழிந்து மவ்வா
    மகரந் தவயவாம் வந்து.         (18)

எ - ன்: மகரவீற்று நிலைமொழி, முடிபு பெறுமாறுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: நிலைமொழி யீற்றினின்ற மகரம், வருமொழிக்கு முதலாக வல்லெழுத்து வந்தால் வந்த வல்லெழுத்தின் வர்க்கத்தொற்றாய்த் திரியும்; மெல்லெழுத்து வந்தால் மகரம் அழிந்து முடியும்; நிலைமொழி யீற்றினின்ற மகரம் வருமொழிக்கு முதலாக வகரம் வரின் மகரங் கான்மாத்திரையாய்க குறுகும்; நிலைமொழி இறுதியினின்ற வகரந்திரிந்து மகரமாகவும் பெறும்; பண்பான சொற்களின் பின்னின்ற மகரந் திரிந்து தகர, வகர, யகரமாகவும் பெறும் எ - று.

வ - று: மரம் என நிறுத்திக், கலம், குறிது, சிறிது, செதிள், தூண், தடிந்தார், பாவை என வல்லெழுத்து முதலான சொற்களை வருவித்து, மரக்கலம், மரங்குறிது, மரஞ்சிறிது, மரச்செதிள், மரத்தூண், மரந் தடிந்தார், மரப்பாவை என முடிக்க.

மரம் என நிறுத்தி, ஞான்றது, நீண்டது, மாண்டது என வருவித்து, மகாரத்தை அழித்து, மரஞான்றது, மரநீண்டது, மரமாண்டது என முடிக்க.

காலம் என நிறுத்தி, வந்தது என வருவித்துக், காலம் வந்தது என முடிக்க. இவ்விடத்தில் மகரங் கான் மாத்திரையாய்க் குறுகிற்று. ஞாலம் விளங்கிற்று என்பதும் அது.

தெவ் என நிறுத்தி, முனை என வருவித்து, இவ்விலக்கணத்தால் தெம்முனை என முடிக்க.

மகரத்தினது திரிபு உணர்த்திய எடுத்துக்கொண்டு, வகரத் திரிபு காட்டிய தென்னையோ? வெனின், மகரத்தை விட்டு மற்றொரு முடிபு சொல்லிற்றில்லை. மகரத்தையே சொல்லுதலாற் பெறும்; என்னை? ‘ஒப்பின் முடித்தல்' என்பது தந்திரவுத்தியாதலால் என்பது.

இனிச் செம்மை என நிறுத்தி, ஆம்பல் என்பது வருவித்து, ‘ஆங்குயிர்மெய் போம்' [1] என்பதனால் மகர ஐகாரத்தை அழித்து, ‘மகரந் தவயவாம்' என்பதனால் மகரவொற்றைத் தகரமாக்கி, முதல் உயிரை நீட்டிச், ‘செம்மையுயி ரேறுஞ் செறிந்து,' [2] என்பதனால் தகர வொற்றிலே உயிரை ஏற்றிச் சேதாம்பல் என முடிக்க. செம்மை என நிறுத்தி அலரி, ஆடை என வருவித்து, மகர ஐகாரத்தை அழித்து, முன்னின்ற மகரவொற்றை வகரம் ஆக்கிக், ‘குற்றொற்றிரட்டும்' என்பதனால் வகர வொற்றை இரட்டித்து, ‘ஒற்றுண்டேற் செம்மையுயி ரேறுஞ் செறிந்து' என்பதனால் வகர வொற்றில் உயிரை ஏற்றிச் செவ்வலரி, செவ்வாடை, என முடிக்க. ஐம்மை என நிறுத்தி, அரி என வருவித்து, மகர ஐகாரத்தை அழித்து, மகர வொற்றை யகரமாக்கி, ‘முன் னொற்றுண்டேற் செம்மையுயி ரேறுஞ் செறிந்து' என்பதனால் ஐயரி என முடிக்க.
--------
[1]. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 22.
[2]. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 4
-------

பண்பீற்று நிலைமொழியில் மகரம், தகர, வகர, யகரமாவது வருமொழிக்கு முதலாக உயிர்வரின் என அறிக. பிறவும் அன்ன.

‘நிகரில் வகரம் வந்தால்' என்று மிகுத்துச் சொல்லியவனதால் வகரத்தைக் கண்டு மகரங் கெடும் இடமும் உள. அவை மரவேர், சுர வழி என அறிக.

19. சில அளவுப் பெயர்களின் முடிவு

    உரிவரி னாழியி னீற்றுயிர்மெய் ஐந்தாம் [1]
    வருமுயிரொன் றொன்பான் மயங்குந் - தெரியத்
    திரிந்தும் [2] விகாரங்க டேர்ந்தாறு மூன்றும் [3]
    பொருந்துமிடங் கண்டு புகல்.         (19)
--------
[1]. நாழியின் ஈற்றுயிர்மெய் ஐந்தாம் என்பதற்கு நாழி என்பதன் ஈற்றில் உள்ள ‘ழி' என்பது நீங்க, ஆங்கு ஐந்தாம் மெய்யாகிய டகரமெய் வந்து பொருந்தும் என்பது கருத்தாகக் கொள்க, ‘ழி' டகர மெய்யாகத் திரியாதாதலின்.
நாழியின் ஈற்றுயிர் மெய்யாகிய ‘ழி' ஐந்தாம் மெய்யாகிய டகரமெய்யாம் என்பது, அதன் பொருளாம் எனினும், முன் கூறியதே அதன் கருத்தாம் எனக் கொள்க.

[2]. வரும் உயிர் ஒன்று ஒன்பான் தெரியத் திரிந்தும் மயங்கும் என இயைக்க. ஒன்றும் ஒன்பானும் என உம்மை கொடுக்க. உயிர் ஒன்று அகரமாம் எனவும், உயிர் ஒன்பான் ஐகாரமாம் எனவும் அறிக. தெரிய - விளங்க. திரிந்தும் மயங்கும் என்ற உம்மையினால், திரியாமலும் மயங்கும் என்று பொருள் கொள்ளுதலுமாம்; இஃது எதிர்மறைப் பொருள். திரியாமல் மயங்குதலாவது நின்ற முறையே அகரம் உள்ள இடத்தில் ஐகாரம் வந்து பொருந்துதல். திரிந்து மயங்குதலாவது அம்முறை மாறி ஐகாரம் உள்ள இடத்தில் அகரம் வந்து பொருந்துதல்.

[3]. விகாரங்கள் ஆறும், மூன்றும் ஆவன; செய்யுள் விகாரங்களாகிய வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்னும் ஆறு விகாரங்களும்; முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்னும் மூன்று விகாரங்களுமாம்.
இந்நூலாசி்ரியர் செம்மை முதலிய பண்புப் பெயர்கள் அடையும் விகாரங்களைச் செய்யுள் விகாரம் எனக் கொண்டனர்; சங்கர நமச்சிவாயப் புலவர் முதலிய நன்னூல் உரையாசிரியர்கள் புணர்ச்சி விகாரம் எனக்கொண்டார்கள். அவர்கள் இவற்றைப் புணர்ச்சி விகாரம் எனக்கொண்டார்கள் என்பதை எங்ஙனம் பெறுதும் எனின், ‘ஈறு போதல்' என்னும் சூத்திர உரையில், அவர்கள் பெயர் விகுதியோடும், வினை விகுதியோடும், பதங்களோடும் புணரினும் ஒருவழி இவ்விகாரப்படும் என்பார். பகுதிக்கென்னாது, பொதுமையிற் ‘பண்பிற் கியல்பே' என்றும் கூறினார் என்றும், பதப்புணர்ச்சிக்கும் ஈண்டுக் கூறுதல் ஒப்பின் முடித்தல் என்னும் உத்தி என்றும் கூறுதலாற் பெறுதும் என்றுணர்க.
செம்மை என்னும் சொல், விகுதியோடும், பதத்தோடும் கூடுகையில் ஈற்று மை கெட்டுச் செய்ய, செவ்வி எனவும் செவ்வானம் எனவும் ஆகும் மகர மெய்யின் திரிபு செய்யுள் விகாரங்களுள் அடங்காமையானும், புணர்ச்சி விகாரங்கள் மூன்றனுள் ஒன்றாகிய திரிபு விகாரத்தினுள் அடங்குதலானும் நன்னூல் உரையாசிரியர்கள் கொள்கையே ஏற்புடையதாம் என்க.
------

எ - ன்: இதுவுஞ் சில உயிரீற்றளவுப் பெயர் முடிபு பெறுமாறும், விகாரங்களாமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: நாழியென்னுஞ் சொல்லின்பின் உரியென்னுஞ் சொல் வந்தால் நிலைமொழி இறுதியினின்ற ழகர இகரம் அழிந்தும், டகரமாய் உகரம் ஏறி முடியவும் பெறும்; சில சந்திகள் அகர நின்றனவும் திரிந்து ஐகாரமாம்; ஐகார நின்றனவுந் திரிந்து அகரமாம். அறுவகைப்பட்ட விகாரமும் மூன்று வகைப்பட்ட விகாரமும் வந்தால் விகாரப்படுமிட மறிந்து முடிக்க. எ - று.

வ - று: நாழி என நிறுத்தி, உரி என வருவித்து, நிலை மொழி ஈற்றி னின்ற ழகர இகரத்தை அழித்து, ழகரத்தை டகரமாக்கி, உகரத்தை ஏற்றி, நாடுரி, இரு நாடுரி என முடிக்க.

பசுமை என நிறுத்திக் கிளி, சுனை, தளிர், பொழில் என வல்லெழுத்து முதலான சொற்களை வருவித்து, ‘ஓரோர் மறுவில் பதங்கெட்டு வரும்' [1] என்பதனாற் சுமை என்னும் பதத்தைக் கெடுத்து, பகரவெற்றில் அகரத்தைப் பிரித்து, ஐகாரமாக்கி, ‘வாய்ந்த வுயிர்ப் பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற் றேய்ந்து புகுதுமியல்புமாம்' என்பதனால் வர்க்கத்தொற்றை மிகுத்துப் பைங்கிளி, பைஞ்சுனை, பைந்தளிர், பைம்பொழி்ல் என முடிக்க. பசுங்கிளி என்ற பொழுது நிலை மொழி இறுதியினின்ற உயிர்மெய்யைக் கெடுத்து, இவ்விடத்து ‘வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத் தொற்றேய்ந்து புகுதுமியல்புமாம்' என்பதனால் ஙகரவொற்றை மிகுத்து முடிக்க. இனிப்பாசிழை என்றாம் பொழுது உமை என்னும் பதத்தைக் கெடுத்து, ‘நீட்டும்வழி நீட்டல்' என்னும் விகாரத்தாற் பகரத்தில் அகரத்தைப் பிரித்து நெட்டெழுத்தாக்கிச் சகார ஒற்றிலே உயிரை ஏற்றிப் பாசிழை என முடிக்க. பனை, ஆவிரை, கூவிளை, வழுதுணை என நிறுத்தி, வல்லெழுத்து முதலான சொற்களை வருவித்து, ஐகாரத்தைப் பிரித்து, அகரமாக்கி, ‘வர்க்கத் தொற்றேய்ந்து புகுதும்' [2] என்பதனால் பொருந்திய ஒற்றை மிகுத்துப் பனங்காய், பனஞ்சோறு, ஆவிரம்பூ, கூவிளந்தளிர், வழுதுணங்காய் என முடிக்க.
---------
[1]. இந்நூலின் இவ்வதிகாரம் சூ. 6.
[2]. இந்நூலின் இவ்வதிகாரம் சூ. 16.
----------

‘வருமுயிர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் ஐகாரம் அகாரமாம் பொழுது, வல்லெழுத்து வந்தாலன்றி ஆகாது. [1] ஒழிந்த மெல்லினமும், இடையினமும், உயிரும் வந்தால் இயல்பேயாம். அவை வருமாறு: - முறி, வேர், இலை என்பன வந்தாற் பனைமுறி, கூவிளைவேர், கூவிளையிலை என முடிக்க.
------
[1]. இதற்கு வருமொழியின் முதலில் வல்லினம் வந்தால்தான் ஐகாரம் அகரமாம் என்பது கருத்தாம் என்றறிக.

இன்னும் அவ் விதப்பினான் வினைச்சொல் வந்தாலும் ஐகாரம் திரியாது நிற்கும்; பனைகுறிது, ஆவிரைசிறிது, கூவிளைசிறிது என முடிக்க.

இனி விகாரங்கள் ஆறு மூன்றுமாவன:

    "அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை
    வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
    விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும்
    நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்
    நாட்டல் வலிய வென்மனார் புலவர்" (தொல். சொல். எச். 7)

    "குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்" (தொல். சொல். எச். 57)

    "குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல" (தொல். சொல். எச். 58)
என்பன விரித்துக்கொள்க.

அவை வருமாறு: குன்றியலுகரம் என்பது மெலிக்கும்வழி மெலித்தல்; குறுத்தாட் பூதம் என்பது வலிக்கும்வழி வலித்தல்; தண்ணந் துறைவன் என்பது விரிக்கும்வழி விரித்தல்; ‘நீலுண் டுகிலிகை' என்பது தொகுக்கும்வழித் தொகுத்தல்; பாசிழை என்பது நீட்டும் வழி நீட்டல்: ‘திருத்தார் நன்றென்றேன் றியேன்' என்பது குறுக்கும்வழிக் குறுக்கல்; மரையிதழ் என்பது தலைக்குறைத்தல்; ‘வேதிநவெரிநி னோதிமுது போத்து' என்பது இடைக் குறைத்தல்; ஆல் என்பது கடைக் குறைத்தல்; இதை ஏற்புழிக் கோடல் என்பதனால் அறிந்து கொள்க.
-------------

20. சில எண்ணுப் பெயர்களின் முடிபு

    நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான்
    குன்றும் உயிருயிர்மெய் கூடுமேல் - ஒன்றியஎண்
    பத்தினிடை ஆய்தமுமாம் பந்நீண்டும் நீளாதும் [2]
    மற்றவைபோய் ஈறு வரும்.         (20)

எ - ன்: சில எண்மொழிகள் முடிபு பெறுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: நிலைமொழியின் முதல் நின்ற உயிர் குற்றுயிராயின், வருமொழிக்கு முதலாக உயிர் வந்தால் முன்னின்ற குற்றுயிர் நெட்டுயிராம்; முதல் நின்ற உயிர் நெட்டுயிராயின், வருமொழிக்கு முதல் உயிர்மெய் வந்தால் முன்னின்ற நெட்டுயிர் குற்றுயிராம். பத்து என்பது வருமொழியாயின் அதன் இடையினின்ற ஒற்று ஆய்தம் ஆகவும் பெறும்; உம்மையால் ஆய்த மாகாது ஏய்ந்த ஒற்றுக்கெட்டு முடியவும் பெறும். இன்னும் பத்து என்பது வருமொழியாயும் நிலைமொழியாயும் வரில், அம்முறையே பகரத்தில் அகரம் நீண்டும் நீளாதேயும் இடையும் இறுதியுங் கெட்டு ஈற்றொற்றாகிய னகர மிகும் எனவறிக. எ - று.
------
[2]. பந்நீண்டும் நீளாதும் - பகரம் நீண்டும், நீளாதும்.
------
எண் என்பது மத்திம தீபம். என்னை?

    "புனையுறு செய்யுட் பொருளை யொருவழி
    வினைநின்று விளக்கினது விளக்கப் படுமே."
    "முதலிடை கடையென மூவகை யாயின"
என்பது அணியியல் ஆகலின்.

வ - று: இரண்டு என நிறுத்தி, ஒன்று என வருவித்து, அண்டென்னும் பதத்தைக் கெடுத்து, ரகர வொற்றிலே உயிரை ஏற்றி முதல் உயிரை நீட்டி, ஈரொன்று, ஈராயிரம் என முடிக்க.

ஆறு என நிறுத்தி, மூன்று நான்கு என வருவித்து, முதலுயிரைக் குறுக்கி, அறு மூன்று, அறு நான்கு என முடிக்க. அறுபது என்பதும் அது. இவை நீளுவதும் குறுகுவதும், ஐந்தும் எட்டும் ஒன்பதும் ஒழிய எனக் கொள்க.

ஏழு என நிறுத்திப் பத்து என வருவித்தால் எழுபஃது என்றுமாம்; ஒருபஃது, முப்பஃது என்பனவும் அது.

ஆய்தமாகாது அவ் வொற்றுக் கெட்டு, எழுபது என இயல்பாய் நிற்கவும் பெறும். அது பெறுமா றென்னையோ? எனின், ஆய்தமுமாம் என்றதனால் ஆகாமையும் பெறப்பட்டது. பத்து என நிறுத்திப் பத்து என வருவித்து, இன்சாரியை கொடுத்துப் பதின் பத்து என முடிக்க. பதிற்றுப் பத்து என்பதும் அது. இவையும் ஞாபகத்தாலே [1] பெற்றன. ஆறு என நிறுத்திப் பத்து என வருவித்தால் பந்நீண்டு இடையும் இறுதியும் கெட்டு னகர மிகுந்து, அறுபான் என்றாகும். பத்து என நிறுத்தி, இரண்டென வருவித்தாற் பந்நீளாது இடையும் இறுதியும் கெட்டு, னகர மிகுந்து, பன்னிரண்டு என முடியவும் பெறும். மற்று என்ற மிகையாற் பத்து என நிறுத்தி, மூன்று என வருவித்தால் இன்சாரியை பெற்று, பதின் மூன்று எனவும், பன்மூன்று எனவும் முடிந்தவாறு கண்டுகொள்க. இவையும் பத்து என்று நின்ற எண் முடிவு பெற்றவாறு.
-------
[1]. ஞாபகம் ஆவது இன்னது என்பதனைப் பேராசிரியர் தொல். பொருள். மரபியல். 110-ஆம் சூத்திர உரையில், ‘ஞாபகங்கூறல், சூத்திரஞ் செய்யுங்கால், அதற்கு ஓதின இலக்கண வகையானே சில்வகை எழுத்தின் செய்யுட்டாகவும், நாடுதலின்றிப் பொருள் நனி விளங்கவும் செய்யாது, அரிதும், பெரிதுமாக நலிந்து செய்து மற்று அதனானே வேறு பல பொருள் உணர்த்தல், என்றதனாலே அறிக.
------------

21. இதுவும் அது

    ஒன்பா னொடுபத்து நூறதனை ஓதுங்கால்
    முன்பாந் தகரணள முன்பிரட்டும் - பின்பான
    எல்லாங்கெட் டாறிரண் டாவி [2] யின்பின் வல்லுகரம் [3]
    நல்லாய் [4] இரமீறாய் நாட்டு.         (21)

எ-ன்; இதுவுஞ் சில வெண் முடிபு பெறுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்; தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணைச் சொல்லுமிடத்து, ஒன்பானுடன் பத்தும் நூறும் புணருங்கால் ஒன்பான் என்னும் எண்ணின் முதனின்ற ஒகரம் தகர ஒகரமாம்; இடை நின்ற னகர ஒற்று ணகர ளகரமாய் இரட்டும்; பின் முன்னின்ற எழுத்தெல்லாங் கெட்டு, ஊகாரமும் ஆகாரமும் பெற்று, றகர உகரமும் இகரமும் ஈராய் முடியும் எ - று.

வ - று: ஒன்பான் என நிறுத்தி, பத்து என வருவித்து, ஒகரத்தைத் தகர ஒகரமாகத் தொ என நிறுத்தி, இடை நின்ற னகர ஒற்றை ணகர ஒற்றாய் இரட்டித்துப், பின்னின்ற பான் பத்து என்னும் பதத்தைக் கெடுத்து, ணகர ஒற்றிலே ஊகார உயிரை ஏற்றி, றகர உகரத்தை ஈற்றிலே வருவித்துத் தொண்ணூறு என முடிக்க.
------
[2]. ஆறு இரண்டு ஆவி - ஆறாம் உயிராகிய ஊகாரமும்,இரண்டாம் உயிராகிய ஆகாரமும் ஆம் என்று கொள்க.
[3]. வல் உகரம் என்றது ஈண்டு ஏற்புழிக் கோடலால், றகர உகரமாம் என்று கொள்க.
[4]. ‘ நல்லாய்' என்பது மகடூஉ முன்னிலை.
-------

தொள்ளாயிரம் என்றாம் பொழுது ஒன்பான் என நிறுத்தி, நூறு என வருவித்து, முன்போலத் தகர ஒகரத்தை நிறுத்தி, ணகர ஒற்றை ளகர ஒற்றா யிரட்டித்து, பான் நூறு என்னும் பதத்தைக் கெடுத்து, ஆகார உயிரை ஏற்றி இரம் என்னும் பதத்தை வருவித்து, தோன்றும் யகர வகரம் [1] என்பதனால் யகர உடம்படு மெய்யை வருவித்துச் செம்மை யுயிரேறுஞ் செறிந்து [2] என்பதனால் இகரத்தை ஏற்றித் தொள்ளாயிரம் என முடிக்க.
-----------
[1]. இந்நூலின் இவ்வதிகாரம் சூ. 13.
[2]. இந்நூலின் இவ்வதிகாரம் சூ. 4
----------

22. சில தொடர்மொழிகளின் முடிபு

    மேய இருசொற் பொருள்தோன்ற வேறிருத்தி
    ஆய இடைச்சொல் அடைவித்தால் - தூயசீர்
    ஆவிபோம் ஒற்றுப்போம் ஆங்குயிர்மெய் போமன்றி
    மேவியசுட் டாங்கே மிகும்.         (22)

எ-ன்: சொற்கள் பகுதி விகுதி செய்யுமாறும், சாரியைச் சொற்கள் முடியுமாறும் உணர்த்துதல் நுதலி்ற்று.

இ-ள்: பொருந்தி இருந்தன இரண்டு சொல்லை முடித்துக் காட்டுக என்றால், அச் சொற்கள் இரண்டையும் பொருள் தோன்ற வேறே இருத்தி, அவ்விடத்துக்கு ஏற்ற இடைச்சொற்களை வருவித்து முடிக்குமிடத்து, உயிர் அழிந்து முடிவனவும், மெய் அழிந்து முடிவனவும், உயிர் மெய் அழிந்து முடிவனவும், சுட்டுமிக்கு முடிவனவும் உள. சுட்டாவன: அ இ உ என்பன. இவை வேண்டும் இடங்களிலே தோன்றி முடியவும் பெறும் எ - று.

அவற்றுட் சில வருமாறு: வேணவா என்பதனைப் பிரிக்குமிடத்து, வேட்கை என நிறுத்தி, அவா என வருவித்து முடிக்க.

மூவாறு என்புழி மூன்று என நிறுத்தி, ஆறு என வருவிக்க.

வெள்ளாடை என்றால் வெண்மை என நிறுத்தி, ஆடை எனவருவிக்க.

சேயிழை என்றால் செம்மை என நிறுத்தி, இழை என வருவிக்க. இவை, இவ்வகை நிறுத்திப் படும் பகுதி அறிந்து முடிக்க.

அன்றியும், வெண் என நிறுத்தி, அவா எனவும் ஆகாது; மூ என நிறுத்தி, ஆறு எனவும் ஆகாது; வெள் என நிறுத்தி, ஆடை எனவும் ஆகாது; சேய் என நிறுத்தி இழை எனவும் ஆகாது. என்னை?

    "இருபொரு ளியைதலி னப்பொருள் படுமொழி
    யிதுவென வேறுவைத்தி சைத்தல் வேண்டும்"
என்றாராகலின்.

இடைச்சொல் வருமாறு:

    "அவைதாம்
    இன்னே அற்றே அத்தே அம்மே
    ஒன்னே யானே அக்கே இக்கே
    அன்னென் கிளவி யுளப்படப் பிறவும்
    அன்ன என்ப சாரியை மொழியே." (தொல். புணரி. 17)

எனக் காண்க. அவை சில வருமாறு: பதினெண்கணம் என்பது இன் சாரியை வந்தது. பலவற்றுக்கோடு என்பது வற்றுச் சாரியை வந்தது. வெயிலத்துச் சென்றார் என்பது அத்துச் சாரியை வந்தது. புளியங்காய் என்பது அம்முச் சாரியை வந்தது. ஆறன் மருங்கு என்பது அன் சாரியை வந்தது. தாழக்கோல் என்பது அக்குச் சாரியை வந்தது. கழச்சிக் கோல் என்பது இக்குச் சாரியை வந்தது. பதிற்றுப்பத்து என்பது இற்றுச் சாரியை வந்தது. கலனே தூணிப் பதக்கு என்பது ஏ என்னுஞ் சாரியை வந்தது.
பிறவும் அன்ன,

தோழியுங் கலுழ்மே என்புழிக் கலுழுமே என்ற ழகரத்தி்ல் உகர உயிர் கெட்டு முடிந்தது. பிலத்துவாய் என்பது பிலவாய் என ஒற்றும் உயிர் மெய்யும் கெட்டுமுடிந்தது. யாம் போகும் புழை என்பது போம் புழை என்று உயிர்மெய் கெட்டது. அரியும் வாள் என்பது அரிவாள் என உயிர்மெய்யும் ஒற்றும் கெட்டது. [1]
-------
[1]. ஈண்டு மேவியசுட் டாங்கே மிகும். என்றதற்கு உதாரணம் காட்டப்படவில்லை. அன்றியும் இந் நூலின் உரையாசிரியர் இச்சூத்திரத்தின் கருத்துரையில் சொற்கள் பகுதி விகுதி செய்யுமாறுமாம் என்றார். ஈண்டு அதற்கும் உதாரணம் காட்டப்படவில்லை. ‘வேணவா' என்பது முதலியன தொடர்மொழிகள் ஆதலின், அவற்றைப் பிரித்துக் காட்டியது அவற்றுள், நிலைமொழி, வருமொழிகளைப் பிரித்துக் காட்டியதாம் அன்றிப் பகுதி விகுதிகளைப் பிரித்துக் காட்டியது ஆகாது. இவ்வுரையாசிரியர் நிலைமொழி வருமொழிகளையே பகுதி விகுதி என்கின்றார் போலும்.
-----

23. சில உயிரீறும் மெய்யீறுமாகிய சொற்களின் முடிபு

    உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம்
    பெற்றிடுநீ ஆமாவின் பின்னிறுதி - ஒற்றணையும்
    சாவவகம் என்புழிச் சார்ந்த இறுதியிடைப்
    போவதுயிர் மெய்யென்றே போற்று.         (23)

எ-ன்: ஒருசார் உயிரீறும் மெய்யீறும் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: ஆகார உயிரீறாய் நின்ற சொற்கள், அகர வீறாய்ப் பின்னே ஒரு உகரம் வந்து வகர உடம்படுமெய் மிக்கு முடியும். நீ, ஆ, மா என்னுஞ் சொற்கள் இறுதி னகர வொற்றுப் பெற்று முடியும். சாவ, அகம் என நின்ற சொற்களின்பின் ஏற்ற சொல் வந்தால், சாவ என்பதன் இறுதியில் நின்ற வகர உயிர் மெய்யும், அகம் என்னும் சொல்லிடையினின்ற ககர உயிர்மெய்யும் அழிந்து முடியும் எ - று.

வ - று: இரா, நிலா, சுறா, புறா என்னுஞ் சொற்களின் இறுதியில் நின்ற ஆகாரத்தை அகரமாக்கிப் பின்னே உகரத்தை மிகுத்து,

    " அல்லாத வான்ற உயிர்ப்பின்னு மாவிவரில்
    வகரந் தோன்றும்" (நேமி. எழுத்து சூ.17)

என்பதனால் வகர ஒற்றை மிகுத்து உகரத்தை ஏற்றி ‘இரவு மனையிறந்த' எனவும், ‘நிலவுக் குவித்த' எனவும், ‘சுறவுத்தலை பேயக்கும்' எனவும், ‘புறவுத்துயர்' எனவும் வரும். பிறவும் அன்ன.

இனி நீ யென்பது குறுகி நின் கை, நின் செவி, நின் புறம், நின் வாய் என்றாயிற்று.

    "நீயென் றொருபெயர் நெடுமுதல் குறுகு
    மாவயி னகர மொற்றா கும்மே." (தொல். உருபி. சூ.7)
என்றாராகலின்.

ஆ என நிறுத்திக், கோடு, செவி, தலை, புறம் என வருவித்து, ஆன்கோடு, ஆன்செவி, ஆன்றலை, ஆன்புறம் என முடிக்க. மாவென நிறுத்திக் கோடு, செவி, தோல், புறம் என வருவித்து மான்கோடு, மான்செவி, மான்றோல், மான்புறம் என முடிக்க.

‘உற்ற' என்று மிகுத்துச் சொல்லியவதனால் ஆவென்றும் மாவென்றும் வரும் சொற்களின் இயங்கு திணையைப்பற்றிச் சொன்னார்; நிலைத்திணையல்ல என்க. நிலைத்திணையாயின் ஆங்கோடு, மாங்கோடு என்றல்ல தாகாது.

    "வெறிகமழ் தண்சிலம்பின் வேட்டமே யன்றிப்
    பிரிதுங் குறையுடையான் போலுஞ் - செறிதொடீஇ
    தேமான் இதணத்தேம் யாமாக நம்புனத்து
    வாமான்பின் வந்த மகன்."

இதனுள் ‘தேமான் இதணத்தேம்' என்று நிலைத்திணையிலே னகரத்தை மிகுத்த விடத்து மரபு வழுவாயிற்று என்றறிக. என்னை?

    "முன்னிலை நெடிலு மாவு மின்மிகப்
    புணரு மியங்குதிணை யான"
என்றாராகலின்.

சாவ, அகம் என்புழி ஏற்றசொல் வந்து வகரமும் ககரமும் கெட்டுச் சாக்குத்தினான், அங்கை என்றாயின.
-------------

24. சில ஒற்றுக்களின் புணர்ச்சி முடிபும், புணர்ச்சிக்குப் புறனடையும்

    ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும்
    வந்துறழும் அன்ன வயனலக்கள் - சந்திகளின்
    அல்லா தனவும் அடக்குவாய் கண்டடக்க
    எல்லா முடியும் இனிது.         (24)

எ - ன்: இதுவுஞ் சில ஒற்றுச்சந்திகள் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: ஐந்தா முடலாகிய டகாரம் ஆறா முடலாகிய ணகாரமாம்; ஆறா முடலாகிய ணகாரம் பதினாறா முடலாகிய ளகாரமாம்; ஒற்று மிகும், என்பது எச்சவும்மை ஆதலால் ஒற்றும் மிகும், உயிரும் மிகும், உயிர்மெய்யும் மிகும், மகரமும் னகரமும் தம்மில் ஒன்றாய் மயங்கவும் பெறும்; வகரமும் யகரமும் தம்மில் ஒன்றாய் மயங்கவும் பெறும்; னகாரமும் லகாரமும் தம்மில் ஒன்றாய் மயங்கவும் பெறும்; அடக்கும் வாயறிந் தடக்கி முடிக்க முடியாதன வில்லை எ - று.
வ - று: வேட்கை என நிறுத்தி, அவா என வருவித்து, ‘ஆங்குயிர் மெய்போம்' [1] என்பதனால் ககர ஐகாரத்தை அழித்து, டகாரத்தை ணகாரமாக்கி, உயிரை ஏற்றி வேணவா என முடிக்க.

வெண்மை என நிறுத்தி, அலரி என வருவித்து, மகர ஐகாரத்தை அழித்து, ணகாரத்தை ளகாரமாக்கிக், ‘குற்றொற்றிரட்டு முயிர்வந்தால்' [2] என்பதனால் ஒற்றை இரட்டித்து, உயிரை ஏற்றி வெள்ளலரி என முடிக்க.

வெள்ளோலை என்பதும் அது.

மூன்று என நிறுத்தி, காதம் என வருவித்துத், தகரத்துக்கு முன்னே வகர உயிர்மெய்யை மிகுத்து மூன்று காவதம் என முடிக்க.

‘வந்துறழு மன்ன வயன லக்கள்' என்பதனான், தொல்காப்பியன் என நிறுத்தி, இவனாற் செய்யப்பட்டது யாது எனக் கருதின பொழுது தொல்காப்பியம் என முடிக்க. அவிநய மென்பதும் அது.

கலம் கலன், புலம் புலன், நிலம் நிலன் இவை னகரமு மகரமும்
மயங்கின.

கோயில் கோவில் இவை யகரமும் வகரமும் மயங்கின.

மென்மை என நிறுத்தி, இயல் என வருவித்து மகர ஐகாரத்தை அழித்து னகரத்தை லகரமாக்கி குற்றொற் றிரட்டு முயிர்வந்தால் [3] என்பதனால் ஒற்றை இரட்டித்து, இகரத்தை ஏற்றி மெல்லியல் என முடிக்க.

'எல்லா முடியும்' என்பதனால் முன் என நிறுத்தி, இல் என வருவித்து, நடுவு றகர வொற்றை மிகுத்து முன்றில் என முடிக்க. பொன்னந்தார் பொலந்தார் என்பதும் நலங்கிள்ளி என்பதும் அது. பிறவும் அன்ன.
-------
[1]. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 22.
[2]. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 15.
[3]. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 15.
-----
எழுத்ததிகாரம் முற்றும்.

2. சொல்லதிகாரம்

மொழியாக்க மரபு

1. தற்சிறப்புப் பாயிரம்

    தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
    போதார் நறுந்தெரியற் போர் வேற்கட் - பேதாய்
    விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
    தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.         (1)

என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்னுதலிற்றோ? எனின், அதிகார நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ? எனின், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து, சொல்லினது இலக்கணம் உணர்த்தினமையான். போக பூமியான காலத்து எழுத்து இன்றிக், கன்ம பூமியான காலத்து எழுத்துத்தோன்றின; இத்துணையல்லது, சொற்போல எக்காலத்துந் தொடர்ந்து வாராத எழுத்தினை முன்வைத்தல் பிழை; சொல்லையே முன்வைக்கற்பாலது எனின், அற்றன்று; எழுத்தாலே வந்த சொல்லாதலால், ஆக்குவதனை முன் உணர்த்தி, அதனாலாயதனைப் பின் உணர்த்தினாற் பிழையன்று; மரபு என்க. இஃது எழுத்ததிகாரத்தோ டியைபு.

அஃதாக, இதன் முதல் அடையக்கிடந்த ஓத்து என்ன பெயர்த்தோ? எனின், மொழியாக்க மரபு என்னும் பெயர்த்து. என்னை? ஒருவன் மேல் ஆமாறு இது, ஒருத்தி மேல் ஆமாறு இது, பலர் மேல் ஆமாறு இது, ஒன்றன் மேல் ஆமாறு இது, பலவற்றின் மேல் ஆமாறு இது, வழுவாமாறு இது, வழுவமையுமாறு இது, என மொழிகள் மேலாமாறு உணர்த்தினமையின். அஃதேல், இவ்வோத்தினுள் இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின்? சிறப்புப் பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று. சிறப்புப் பாயிரமும் பொதுப் பாயிரமும் முன் பகர்ந்த எல்லாம் உரைத்துக் கொள்க.

இ - ள்: பழையவாய்ப் பரந்து கிடந்த நூல்களினும், புதியவாய் நல்லோராற் சொல்லப்பட்டு நடைபெற்றுவருஞ்சொற்களினும் வேண்டுவன கொண்டு சொல்லினை ஆராய்ந்து கூறு படுத்துச் சொல்லுவன் எ-று.

புதியவாய சொற்கள் பெற்றவாறு என்னையோ? வெனின், நூல்களிலும் என்ற உம்மை எதிரது போற்றல் என்னும் எச்ச உம்மை யாதலாற் பெறப்பட்டது.

சொல் எனைத்து வகையான் ஆராய்ந்தானோ? எனின், எட்டு வகையான் ஆராய்ந்தான். அவை மேலைச் சூத்திரத்திற் சொல்லுதும்.

போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் பேதாய் என்பது மகடூஉ முன்னிலை.
--------------

2. இத்துணை வகையாற் சொல் ஆராயப்படும் என்பது

    ஏற்ற திணையிரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
    வேற்றுமை எட்டும் தொகையாறும் - மாற்றரிய
    மூன்றிடமும் காலங்கண் மூன்றும் இரண்டிடத்தாற்
    றோன்ற உரைப்பதாஞ் சொல்.         (2)

எ - ன்: ஆராயப்பட்ட சொல் இனைத்து வகைப்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: இரண்டு திணை வகுத்தும், அத் திணைக்கண் ஐந்து பால் வகுத்தும், ஏழு வழு வகுத்தும், எட்டு வகைப்பட்ட வேற்றுமை வகுத்தும், ஆறு தொகை வகுத்தும், மூன்று இடம் வகுத்தும், மூன்று காலம் வகுத்தும், இரண்டிடத்தான் ஆராயப்பட்டது சொல் எ-று.

அவற்றுள், இரண்டு திணையாவன: உயர்திணை, அஃறிணை என்பன. ஐந்து பாலாவன: ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்பன, ஏழு வழுவாவன: திணைவழு, பால்வழு, மரபுவழு, வினாவழு, செப்புவழு, காலவழு, இடவழு என்பன. என்னை?

    " திணைபான் மரபு வினாச்செப்புக் கால
    மிடனோடே ழாகு மிழுக்கு"
என்றாராகலின். வேறறுமை யெட்டாவன: பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி என்பன. தொகை ஆறாவன: வேற்றுமைத்தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமத்தொகை, அன்மொழித்தொகை என்பன. என்னை?

    "வேற்றுமை யும்மை வினைபண் புவமை
    யன்மொழி யென்றிவை தொகையா றாமே"
என்றாராகலின், மூன்றிடமாவன: தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன. முக்காலமாவன: இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பன. இரண்டிடமாவன: வழக்கு, செய்யுள் என்பன. இவ்வெட்டு முகத்தானும் ஆராயப்பட்டது சொல் என்றவாறு.

இவ் வெட்டினையுஞ் சொல்ல ஒன்பதோத்தும், எழுபது சூத்திரமும் வேண்டிற்றோ, எனின், வேண்டிற்று. எட்டின் புடை பெயர்ச்சிகளையும் போக்கற ஆராய வேண்டுதலின் என்க.
------------------

3. திணை

    மக்கள் நரகரே வானோர் எனும்பொருள்கள்
    தொக்க உயர்திணையாம் தூமொழியாய் - மிக்க
    உயிருள் ளனவும் உயிரில் லனவும்
    செயிரில் அஃறிணையாம் சென்று.         (3)

எ - ன்: உயர்திணைப் பொருளும் அஃறிணைப்பொருளும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: மக்கள் என்றும், நரகர் என்றும், தேவர் என்றும் சொல்லப்பட்டன உயர்திணைப் பொருளாம். இம்மூன்றினையுஞ் சொல்லும் சொல் உயர்திணைச் சொல்லாம். இவர்கள் ஒழியக் கிடந்த உயிருள்ளனவும், உயிரில்லனவும் அஃறிணைப் பொருளாம். இவ்விரண்டனையுஞ் சொல்லுஞ்சொல் அஃறிணைச் சொல்லாம் எ-று.

எனவே, உயர்திணைப் பொருளும், உயர்திணைச் சொல்லும், அஃறிணைப் பொருளும், அஃறிணைச் சொல்லும் எனச் சொல்லும் பொருளும் வரையறுத்தானாம்.
-----------------

4. பால்

    ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல என்று
    மருவியபால் ஐந்தும் வகுப்பின் - பொருவிலா
    ஓங்கு திணைப்பால் ஒருமூன் றொழிந்தவை
    பாங்கில் அஃறிணைப்பா லாம்.         (4)

எ - ன்: உயர்திணை முப்பாலும் அஃறிணை யிருபாலும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று;

இ - ள்: ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்று சொல்லப்பட்ட ஐந்து பாலினும், உயர்திணை: ஒருவன், ஒருத்தி, பலர் என மூன்று பாற்படும்; அஃறிணை: ஒன்று பல என இரண்டு பாற்படும் எ-று.

இவ்வாறு பால் விளங்கி நிற்பன படர்க்கைக்கண் என்றவாறு. என்னை?

    "ஒருவன் ஒருத்தி பலரென்று மூன்றே
    உயர்திணை மருங்கிற் படர்க்கைப் பாலே
    யொன்றன் படர்க்கை பலவற்றுப் படர்க்கை
    யன்றி யனைத்தும் அஃறிணைப் பால. "
என்றார் அவிநயனார்.

ஒரு சாராசிரியர் இருதிணை ஐம்பாலைச் சொல்லுமாறு:

    "உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
    அஃறிணை யென்மனார் அவரல பிறவே
    ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே." (தொல்.கிளவி. சூ. 1)

    "ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
    பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
    யம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே." (தொல்.கிளவி. சூ. 2)

    "ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
    றாயிரு பாற்சொ லஃறிணை யவ்வே" (தொல்.கிளவி. சூ. 3)

    பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
    ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந்
    தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
    இவ்வென வறியு மந்தந் தமக்கிலவே
    வுயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். (தொல்.கிளவி. சூ. 4)
என்றாராகலின்.
-----------------

5. ஐம்பால்களின் இறுதி நிலைகள்

    அன்ஆனும் அள்ஆளும் அர்ஆர்பவ் வீறுமாம்
    முன்னை உயர்திணைப்பான் மூன்றற்கும் - தன்வினைகொண்டு
    ஆய்ந்த துறுடுவும் அஆவவ் வீறுமாம்
    ஏய்ந்த அஃறிணைப்பாற் கீங்கு.         (5)

எ - ன்: திணைகளின்கண் ஐந்து பாலும் அறியும் சொற்களின் ஈற்றெழுத்து இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: தத்தமக்குப் பொருந்திய வினையையும், வினைக்குறிப்பையும் கொண்டு, உயர்திணைக்கு, அன் ஆன், இறுதியாய் வருவன ஆடூஉ வறிசொல்; அள் ஆள் இறுதியாய் வருவன மகடூஉ வறிச்சொல்; அர், ஆர், ப இறுதியாய் வருவன பலரறி சொல்; அவ்வண்ணமே, அஃறிணைக்கும், வினையையும் வினைக்குறிப்பையும் கொண்டு, துவ்வும், றுவ்வும், டுவ்வும் இறுதியாய் வருவன ஒன்றறி சொல்; அவ்வும், ஆவும், வவ்வும் இறுதியாய் வருவன பலவறி சொல் எ - று.

தன்வினை கொண்டு என்பது மத்திம தீபம்.

வினைக்குறிப்பு என்பது பெற்றவாறு என்னையோ? எனின், வினைக் குறிப்பும் வினையின் வேறல்ல; ஆதலாற் பெறும்.

வ - று: அன் - உண்டனன், உண்ணா நின்றனன், உண்குவன் எனவும்; ஆன் - உண்டான், உண்ணாநின்றான், உண்பான் எனவும், இவை, காலத்தியறலான் வினை.

கரியன், செய்யன், கரியான், செய்யான் இவை காலந் தோன்றாமையான் வினைக் குறிப்பு.

அள் - உண்டனள், உண்ணாநின்றனள், உண்குவள் எனவும்; ஆள் - உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் எனவும் இவை வினை.

கரியள், செய்யள், கரியாள், செய்யாள் இவை வினைக் குறிப்பு.

அர் - உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர் எனவும்; ஆர் - உண்டார், உண்ணா நின்றார், உண்பார் எனவும் இவை வினை.

கரியர், செய்யர், கரியார், செய்யார் இவை வினைக் குறிப்பு.

ப - உண்ப, தின்ப எனவும் இவை வினை. உயர்திணை முப்பாலும் அடைவே கண்டுகொள்க.

து - உண்டது, உண்ணாநின்றது, உண்பது இவை வினை. கரியது, செய்யது இவை வினைக் குறிப்பு.

று - கூயிற்று, தாயிற்று இவை வினை.

கோடின்று, குளம்பின்று இவை வினைக்குறிப்பு.

டு - குண்டு கட்டு, குறுந்தாட்டு என்பனவும் அவை.

அ - உண்டன, உண்ணாநின்றன, உண்பன இவை வினை.
கரிய, செய்ய இவை வினைக்குறிப்பு.

ஆ - உண்ணா, தின்னா என்பன எதிர்மறுத்து வந்தனவாயினும்,
வினை.
வ - உண்குவ, தின்குவ இவை வினை. அஃறிணை யிருபாலும் அடைவே கண்டுகொள்க.

‘முன்னை' என்று மிகுத்துச் சொல்லியவதனால், பெயரொடு வந்தாலும், பால் தோன்றுவனவும் உள. அவை: யாவன், யாவள், யாவர், யாது, யாவை, அவன், அவள், அவர், அது, அவை எனவும், ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல எனவுங் கண்டுகொள்க.
--------------------

6. வழு

    பாலே திணையே வினாவே பகர்மரபே
    காலமே செப்பே கருதிடமே - போலும்
    பிறழ்வுஞ் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்
    உறழ்வுஞ் சிதைந்த உரை.         (6)

எ - ன்: வழுச்சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: பால் மயக்கம், திணை மயக்கம், வினாமயக்கம், மரபு மயக்கம், கால மயக்கம், செப்பு மயக்கம், இட மயக்கம் என்று சொல்லப்பட்ட ஏழு மயக்கமும் படாமற் சொல்லுக. மயங்கில் வழுவாம். சினைச்சொல்லும் முதற் சொல்லும் தம்மில் ஒத்த பொருளை உவமியா தொழியினும் வழுவாம் எ-று.

திணை வழு ஆவன: அவன் வந்தது என உயர்திணை ஆண் பால் ஒருமை அஃறிணை ஒருமைப்பாலில் வழுவிற்று. அவன் வந்தன என உயர்திணை ஆண்பால் ஒருமை அஃறிணைப் பன்மைப் பாலில் வழுவிற்று. அவள் வந்தது என உயர்திணைப் பெண்பால் ஒருமை யஃறிணை யொருமைப் பாலில் வழுவிற்று. அவள் வந்தன என உயர் திணைப் பெண்பால் ஒருமை அஃறிணைப் பன்மைப் பாலில் வழுவிற்று. அவர் வந்தது என உயர்திணைப் பன்மை அஃறிணை ஒருமையில் வழுவிற்று. அவர் வந்தன என உயர்திணைப் பன்மை அஃறிணைப் பன்மையில் வழுவிற்று என உயர்திணை யஃறிணைமேற் சென்று வழுவினவாறு கண்டு கொள்க. அது வந்தான் என அஃறிணை ஒருமை உயர்திணை ஆண்பால் ஒருமையில் வழுவிற்று. அது வந்தாள் என அஃறிணை ஒருமை உயர்திணைப் பெண்பால் ஒருமையில் வழுவிற்று. அது வந்தார் என அஃறிணை ஒருமை உயர்திணைப் பன்மையில் வழுவிற்று. அவை வந்தான் என அஃறிணைப் பன்மை உயர்திணை ஆண்பால் ஒருமையில் வழுவிற்று. அவை வந்தாள் என அஃறிணைப் பன்மை உயர்திணைப் பெண்பால் ஒருமையில் வழுவிற்று. அவை வந்தார் என அஃறிணைப் பன்மை உயர்திணைப் பன்மையில் வழுவிற்று. என இவை அஃறிணை உயர்திணைமேற் சென்று வழுவினவாறு கண்டு கொள்க. இவை பன்னிரண்டும் திணை வழு.

பால் வழு ஆவன: அவன் வந்தாள் என ஆண்பால் பெண் பாலில் வழுவிற்று. அவன் வந்தார் என ஆண்பால்ஒருமை பன்மையில் வழுவிற்று. அவள் வந்தான் என உயர்திணைப் பெண்பால் ஆண் பாலில் வழுவிற்று. அவள் வந்தார் எனப் பெண்பால்ஒருமை பன்மைப் பாலில் வழுவிற்று. அவர் வந்தான் என உயர்திணைப் பன்மை ஆண்பால் ஒருமையில் வழுவிற்று, அவர் வந்தாள் என உயர்திணைப் பன்மை பெண்மைப் பால் ஒருமையில் வழுவிற்று. அது வந்தன என அஃறிணைஒருமை பன்மையில் வழுவிற்று. அவை வந்தது என அஃறிணைப்பன்மை ஒருமையில் வழுவிற்று. என இவை இருபதுங்கண்டுகொள்க.

இனி, வினை நிற்பப் பெயர்மேல் வந்து வழுவின இருபதும் வருமாறு: வந்தது அவன், வந்தன அவன், வந்தது அவள், வந்தன அவள். வந்தது அவர், வந்தன அவர் என அஃறிணை வினை நிற்ப உயர்திணைப் பெயர்மேல் வழுவிற்று.

வந்தான் அது, வந்தாள் அது, வந்தார் அது, வந்தான் அவை, வந்தாள் அவை, வந்தார் அவை என உயர்திணை வினை நிற்ப அஃறிணைப் பெயர்மேல் வழுவிற்று.

வந்தான் அவள், வந்தான் அவர், வந்தாள் அவன், வந்தாள் அவர், வந்தார் அவன், வந்தார் அவள், வந்தன அது, வந்தது அவை என வினை நிற்பப் பெயர்மேல் வந்து பால்வழுவினவாறு கண்டு கொள்க.

வினாவழு ஆவது: கறக்கின்ற எருமை சினையோ பாலோ வென்றல்.

மரபு வழு ஆவது: யானை மேய்ப்பானை இடையனென்றும். பசு மேய்ப்பானைப் பாகன் என்றும் சொல்லுதல்.

காலவழு ஆவது: செத்தானைச் சாம் என்றல், [1] குளம் நீர் புகுந்து நிறைந்தது எனற்பாலதனை நிறையும் என்றும் சொல்லுதல். நீர் புகுத நிறையும் என்னாமையான் வழுவாயிற்று.
-----------
[1]. ஈண்டு 'என்றும்' என்றிருத்தல் வேண்டும்.

செப்புவழு ஆவது: கடம்பூர்க்கு வழி யாதோ? என்றால் இடம்பூணி என் ஆவின்கன்று என்றல்.

இடவழு ஆவது: உண்டேன் நீ, உண்டான் யான், உண்டேன் அவன் என்பன.

இவ்வேழும் பிறழாமற் சொல்லுமாறு: உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது அது, உண்டன அவை இவை திணையும் பாலும் வழுவாது வந்தன.

நுந்நா டியாது என்றால், தமிழ் நாடு என்றல் வினாவாலுஞ் செப்பாலும்
வழுவாமல் வந்தது.

யாட்டுமறி, யானைக்கன்று என்பன மரபு வழுவாமல் வந்தன.

யான் உண்டேன், நீ உண்டாய், அவன் உண்டான் என்பன இடமூன்றும் வழுவாமல் வந்தன. பிறவும் அன்ன.

சினையும் முதலும் தம்மில் ஒவ்வாதனவற்றைப் பிறழ உவமிக்குமாறு: சாத்தன் நல்லனோ? கொற்றன் றோள் நல்லவோ? என்றல், இது முதலுஞ் சினையும் பிறழ உறழ்ந்தது.

சாத்தன்கண் நல்லவோ, கொற்றன் செவி நல்லவோ என்றல், இது சினையும் சினையும் பிறழ உறழ்ந்தது.

நும்மூர் அரசன் நல்லனோ எம்மூர்க் கோலிக னல்லனோ என்றல், இது முதலும் முதலும் பிறழ உறழ்ந்தது.

இவை சினையும் முதலும் தம்மில் ஒவ்வாத சொற்கள் வந்து பிறழ்ந்தன கண்டுகொள்க.

இனிப் பிறழாது வருமாறு: கொற்றன் றோள் நல்லவோ? சாத்தன் றோள் நல்லவோ? என்றால், கொற்றன் றோளிற் சாத்தன் றோள்நல்ல சாத்தன் றோளிற் கொற்றன் றோள் நல்ல என்றலும், எம்மூர் அரசன் நல்லனோ? நும்மூர் அரசன் நல்லனோ? என்றால்,

எம்மூர் அரசனினும் நும்மூர் அரசன் நல்லன், நும்மூர் அரசனினும் எம்மூர் அரசன் நல்லன் என்றலும் இவை வினாவாலும் விடையாலும் வழுவாமல் வந்தன.

    "மேற்றா னிருந்த உயர்சினை கொன்றானிற்
    றேற்றா வொழுக்கம் படுவகொன் - மாற்றார்
    உறுமுரண் சாய்த்தா னுயர்குடந்தை யாட்டி
    சிறுமருங்குல் செற்ற முலை."
எனவும்,

    "உப்பக்க நோக்கி உபகேசி தோண்மணந்தான்
    உத்தர மாமதுரைக் கச்சென்ப - விப்பக்க
    மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
    போதார் புனற்கூடற் கச்சு." (திருவள்ளுமாலை, செ. 21)
எனவும்

    "நறுநீல நெய்தலும் கொட்டியுந் தீண்டிப்
    பிறர்நாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
    பறநாட்டுப் பெண்டி ரடி."
எனவும் இவை பிறழ்வல்ல என வறிக.

உபகேசி ஆவாள், நப்பின்னைப் பிராட்டியார் மாதாநுபங்கி ஆவார், திருவள்ளுவதேவர்.

‘பகர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், வினா ஐந்து வகைப்படும்; அறியான் வினாதல், அறிவொப்புக் காண்டல், ஐய மறுத்தல், அவனறிவு தான்கோடல், மெய்யவற்குக் காட்டல் என.

அவற்றுள், அறியான் வினாதல் என்பது இச்சூத்திரத்துக்குப் பொருளென்னையோ? என்றல். அறிவொப்புக் காண்டல் என்பது இச் சூத்திரத்துப் பொருள் யான் அறிந்தபடி அறிந்தானோ? வேறுபட அறிந்தானோ? என வினாதல். ஐயமறுத்தல் என்பது இச் சூத்திரத்துக்குப் பொருள் தெளியாது நின்றான் ஐயந்தீர வினாதல். அவனறிவு தான் கோடல் என்பது இச் சூத்திரத்துக்குப் பொருள் இவன் உரைக்குமாறு காண்டும் என்று வினாதல். மெய்யவற்குக் காட்டல் என்பது இச் சூத்திரத்துக்குப் பொருள் வழுவ உணர்ந்தான் என்று அவனைப் பிழைப்புத் தெருட்டி, நன்குணர்த்துவான் வினாதல் எனக் கொள்க. என்னை?

    ''அறியான் வினாத லறிவொப்புக் காண்டல்
    ஐய மறுத்தல் அவனறிவு தான்கோடல்
    மெய்யவற்குக் காட்டலோடு ஐவகை வினாவே.''
என்றார் ஆகலின்.

‘கருது' என்று மிகுத்துச் சொல்லியவதனால், உவமை நான்கு வகைப்படும்; அவையாவன: வினை, பயன், மெய், உரு என. அவற்றுள், வினையுவமையாவது புலிபாய்ந் தாங்குப் பாய்ந்தான் என்றல். பயனுவமை ஆவது மழைபோன்ற வண்கை என்றல். மெய் உவமை ஆவது துடியிடை யென்றல். உருவுவமை ஆவது பொன்மேனி என்றல். என்னை?

    "வினைபயன் மெய்யுரு வென்ற நான்கே
    வகைபெற வந்த வுவமத் தோற்றம்." (தொல்.உவம. 1)
என்றார் ஆகலின்.
-----------------------

7. விடையின் வழுவமைதி

    ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும்
    ஏவல் உறுவதுகூற் றிந்நான்கும் - பேதாய்
    மறுத்தல் உடன்படுதல் அன்றெனினு மன்ற
    இறுத்தலே போலும் இவை.         (7)

எ - ன்: வழுவமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: வினாவெதிர் வினாதலும், உற்றதுரைத்தலும், ஏவுதலும், உறுவது கூறலும் என நான்கும் உடன்படுதலும் மறுத்தலுமே ஆயினும், வினாவிற்கு இறைபட வருதலால் வழு அன்று என்க.

அவை வருமாறு: சாத்தா கருவூர்க்குச் செல்லாயோ? என்றால், செல்லேனோ? என்றல் வினாவெதிர் வினாதல். இது செல்வேன் என்னும் பொருள் பட்டது; ஆதலால் உடம்பாடாயிற்று. சாத்தா கருவூர்க்குச் செல்லாயோ? என்றால் என் கால் முட்குத்திற்று என்றல் உற்றதுரைத்தல். சாத்தா கருவூர்க்குச் செல்லாயோ என்றால், நீ செல் என்றல் ஏவுதல். சாத்தா கருவூர்க்குச் செல்லாயோ என்றால் பகைவர் எறிவர் என்றல் உறுவது கூறல். இவை மூன்றும் செல்லேன் என்னும் பொருள் பட்டன; ஆதலால் உடம்பாடு அன்றாயிற்று; ஆதலால். உடன்படுதலும் மறுத்தலுமேயாய் அடங்கிற்று எனக் கொள்க.
------

8. திணை பால்களின் வழு வமைதி

    ஐயம் திணைபாலிற் றோன்றுமேல் அவ்விரண்டும்
    எய்தும் பொதுமொழியால் ஈண்டுரைக்க - மெய்தெரிந்தால்
    அன்மை துணிபொருண்மேல் வைக்கஒரு பேர்ப்பொதுச்சொல்
    பன்மைசிறப் பாலுரைத்தல் பண்பு.         (8)

எ - ன்: திணை ஐயமும் பால் ஐயமும் தோன்றினவழிச் சொல் நிகழுமாறும், ஐயந் தீர்ந்தாற் சொல் நிகழுமாறும், ஒருபெயர்ப் பொதுச்சொல் ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: உயர்திணையோ? அஃறிணையோ? என்று ஐயம் தோன்றிய இடத்தும், ஒருவனோ? ஒருத்தியோ? என்று ஐயந் தோன்றிய இடத்தும், ஒன்றோ? பலவோ? என்று ஐயம் தோன்றின இடத்தும், ஐயப்பட்ட பொருள் இரண்டிற்கும் உரித்தாகச் சொல்லுக; இவ்வையந் தீர்ந்த வழிப் பிறக்கும் அன்மைச் சொல்லைத் துணிந்த பொருள் மேல் ஏற்றிச் சொல்லுக. ஒரு பெயர்ப் பொதுச்சொற்களைப் பன்மையாலும் தலைமையாலும் பெயர் கொடுத்துச் சொல்லுக எ - று.

அவை வருமாறு: குற்றி கொல்லோ? மகன் கொல்லோ தோன்றுகின்ற உரு என்றும், ஒருவன் கொல்லோ? ஒருத்தி கொல்லோ? தோன்றுகின்ற அவர் என்றும், ஒன்று கொல்லோ? பல கொல்லோ? பைங்கூழ் மேய்ந்த பெற்றம் என்றும் உரைக்க. அவை துணிந்தாற் குற்றியல்லன் மகன் என்றும், மகன் அன்று குற்றி என்றும், ஒருவன் அல்லள் ஒருத்தி என்றும், ஒருத்தி யல்லன் ஒருவன் என்றும், ஒன்றல்ல பல என்றும், பல அன்று ஒன்று என்றும் உரைக்க. என்னை?

    " தன்மை சுட்டலும் உரித்தென மொழிப
    அன்மைக் கிளவி வேறிடத் தான." (தொல். கிளவி.25)
என்றாராகலின்.

ஒரு பெயர்ப் பொதுச்சொல்லாவன: தோட்டம், சேரி, காடு, நாடு முதலியன. இஞ்சித் தோட்டம் மஞ்சள் தோட்டம் என்பன பன்மையாற் பெயர் பெற்றன. மாந்தோட்டம், பலாத்தோட்டம் என்பன தலைமையாற் பெயர் பெற்றன. கமுகந்தோட்டம், தெங்கந் தோட்டம் என்பன பன்மையாலும், தலைமையாலும் பெயர் பெற்றன. இடைச்சேரி, வாணிகச்சேரி என்பன பன்மையாற் பெயர் பெற்றன. செங்கோன் சேரி, செவ்வண்ணச் சேரி என்பன தலைமையாற் பெயர் பெற்றன. காரைக் காடு என்பது பன்மையாற் பெயர் பெற்றது. ஆலங்காடு என்பது தலைமையாற் பெயர் பெற்றது. எயினர் நாடு என்பது பன்மையாற் பெயர் பெற்றது. பாண்டி நாடு என்பது தலைமையாற் பெயர் பெற்றது. பிறவும் அன்ன. என்னை?

    "ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
    தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
    உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். " (தொல். கிளவி. 49)
எனக்கொள்க.
-------------------

9. திணைவழு வமைதி

    குழுஅடிமை வேந்து குழவி விருந்து
    வழுவுறுப்புத் திங்கள் மகவும் - பழுதில்
    உயர்திணைப் பண்போ டுயிருறுப்பு மெய்யும்
    அயர்வில் அஃறிணையே ஆம்.         (9)

எ - ன்: உயர்திணையை அஃறிணைபோற் சொல்லுதல் வழுவே ஆயினும் அமைக்க என்பதனை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: குழுமுதலாய்க் கிடந்த பன்னிரண்டும் உயர்திணைப் பெயராயினும் அஃறிணையாகச் சொல்லுதல் வழு அன்று என்க எ-று.

அவை வருமாறு: குழு இருந்தது, அடிமை வந்தது, வேந்து எழுந்தது, குழவி அழுதது, விருந்து வந்தது எனவும்; வழுவுறுப்பு; குருடு வந்தது, செவிடு போயிற்று, அலி நின்றது எனவும்; திங்கள் எழுந்தது, மகவு கிடந்தது எனவும்; உயர்திணைப் பண்புகளிற் குடிமை நன்று, ஆண்மை நன்று, கல்வி நன்று எனவும்; உயிர் போயிற்று எனவும்; உறுப்பு: கண் கெட்டது எனவும்; மெய்: உடம்பு நலிந்தது எனவும் அடைவே கண்டு கொள்க. என்னை?

    "குடிமை யாண்மை யிளமை மூப்பே
    யடிமை வன்மை விருந்தே குழுவே
    பெண்மை யரசே மகவே குழவி
    தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
    காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று
    ஆவறு மூன்று முளப்படத் தொகைஇ
    யன்ன பிறவு மவற்றெடு சிவணி
    முன்னத்தி னுணருங் கிளவி யெல்லா
    முயர்திணை மருங்கி னிலையின வாயினும்
    அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும் (தொல்.கிளவி. 56)
என்றார் ஆகலின். பிறவும் அன்ன.

‘அயர்வி லஃறிணை' என்று மிகுத்துச் சொல்லியவதனால் இவற்றுள்,
உயர்திணையாய் நடப்பனவும் உள. அவை: வேந்து நல்லன், குடிமை நல்லன், உடம்பு மெலிந்தான் எனவுங் கொள்க. பிறவும் அன்ன.
----------------

10. திணைவழுவமையும் அருத்தாபத்தியும்
(அருத்தாபத்தி மரபு வழுவமைதியின்பால் அடங்கும்)

    எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையா
    எண்ணிவியங் கொள்க இருதிணையும் - எண்ணினாற்
    றன்மையாம் அஃறிணையும் சொன்னமொழி தன்னினத்தை
    உன்னி முடித்தலும் உண்டு.         (10)

எ - ன்: வழு வமைத்தலும் அருத்தாபத்தியும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: உயர்திணையையும் அஃறிணையையும் கூட எண்ணி அஃறிணையாலே முடித்தலும், இரு திணையையும் கூட எண்ணி ஒக்க வியங்கொள்கையும், அஃறிணையையும் தன்மைச் சொல்லோடே கூட எண்ணித் தன்மைச் சொல்லாலே முடித்தலும், எடுத்த மொழி தன்னினத்துப் பொருளைக் காட்டலும் உடைய எ-று.

அவை வருமாறு:

    "வடுக ரருவாளர் வான்கரு நாடர்
    சுடுகாடு பேயெருமை என்றிவை யாறுங்
    குறுகார் அறிவுடை யார்"
எனவும்,
    "கொடிறும் பேதையுங் கொண்டது விடா" [1]
எனவும், இவை உயர்திணையையும் அஃறிணையையுங்கூட எண்ணி அஃறிணையாலே முடிந்தன.
-------
[1]. திருவாசகம். போற்றி. அடி. 63.
--------

    "பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெயர்
    அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே" (தொல்.கிளவி. 51)
என்றாராகலின்.

இனி, ஆவும் ஆயனுஞ் செல்க, யானையும் பாகனும் வருக என இருதிணையும் எண்ணி வியங்கோளிடத் தொத்தன. வியங்கோளாதல், ஏவுதல், என்னை?

"வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார" (தொல்.கிளவி. 45)
என்றாராகலின்.

    "யானுமென் னெஃகமுஞ் சாரு மவனுடைய
    யானைக்குஞ் சேனைக்கு நேர்"
எனவும்,

    "ஆழியா யானா வநங்கனா யென்னுடைய
    தோழியா யூர்கா வலன்றுடியாய் - வாழி
    புறங்காவ லாகும் புனலே சூழ்நாட்டில்
    உறங்கா தமைவே முளேம்"
எனவும், அஃறிணையையும் உயர்திணையையும் தன்மையோடே கூட்டித் தன்மையாயினவாறு கண்டுகொள்க. என்னை?

    தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென்
    றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார் (தொல். கிளவி.43)
என்றாராகலின்.

    "தன்மையோ டிசைந்தன தன்மை யாகும்
    முன்னிலை மொழியொடு படர்க்கையு மற்றே"

அவை வருமாறு: நீயு நின் படைக்கலமுஞ் சாரீர்; அவனுந் தன் களிறுஞ் சாரும்.

மேலைச்சேரி வென்ற தென்றாற் கீழைச்சேரி தோற்றதென்பது சொல்லாமல் முடிந்தது. இது அருத்தாபத்தி.

முடித்தலும் என்ற உம்மையான் முடியாதனவும் உள, அவை வருமாறு:
ஆவாழ்க என்றால் அந்தணர் கெடுக என்றாகாது.

அருத்தாபத்தியாவது,
    "எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே," (தொல். கிளவி. 60)

இனி, ‘உன்னிய' என்று மிகுத்துச் சொல்லியவனதால் உயர்திணையையும் அஃறிணையையும் கூட எண்ணி உயர்திணையாலே முடிவனவும் உள. அவை,
    "அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்
    திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள்
    மறுவாற்றுஞ் சான்றோ ரஃதாற்றார் தெருமந்து
    தேய்வ ரொருமா சுறின் " (நாலடி. மேன். 1)
எனவும்,

    "தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னும்
    இன்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலாம்
    நன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பா
    ரென்பாரை யோம்பே னெனில்யா னவனாக வென்றான்." (சீவக. கோவி. 17)

அவனென்றது கட்டியங்காரனை; எனவும்,

    "தம்முடைய தண்ணளியுந் தாமுந்த மான்றேரும்
    எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க
    வம்மெ னிணர வடும்புகா ளன்னங்காள்
    நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்." (சிலப். கானல். 32)
எனவும் இவை இருதிணையும் எண்ணி உயர்திணையான் முடிந்தன. பிறவும் அன்ன.
---------------

11. திணை பால் மரபுகளின் வழுவமைதி

    உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
    அயர்வில் திணைபால் மயங்கும் - செயிரில்
    வழக்கும் தகுதியுமாய் வந்தொழுகும் சொற்கள்
    இழுக்கல்ல முன்னை இயல்பு.         (11)

எ - ன்: இதுவும் வழு அமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: ஒரு பொருளை உயர்த்தும், இழித்தும், உவந்தும், சிறப்பித்தும் சொல்லும் பொழுது, திணையும் பாலும் மயங்கி வரப்பெறும்; வழக்கினானும் தகுதியானும் நடக்கும் சொற்கள் வழுவல்ல; தொன்று தொட்டு வருதலால் எ-று,

தகுதி மூன்று வகைப்படும்; குழுவின் வந்த குறுநிலை வழக்கும், இடக்கரடக்கிக் கூறுதலும், மங்கல மரபினாற் கூறுதலும் என.

அவை வருமாறு: குரிசில் வந்தது, பெருவிறல் வந்தது இவை உயர்வுபற்றி வந்தன.

பொறியறை வந்தது, குருடு வந்தது என இரண்டும் இழிவுபற்றி வந்தன.

என் யானை வந்தது என்ப ஒருவனை; என் பாவை வந்தது என்ப ஒருத்தியை; எந்தை வந்தா னென்ப ஓர் எருத்தினை; என் அன்னை வந்தாள் என்ப ஓர் பசுவினை; இவை உவப்புப்பற்றி வந்தன. பெருவிறல் வந்தது, கூற்று வந்தது இவையும் உவப்பு.

சாத்தனார் வந்தார், நரியார் வந்தார் என இவை சிறப்புப்பற்றி வந்தன. என இவை பாலும் திணையும் மயங்கினவாறு கண்டுகொள்க. என்னை?

    "உவப்பினு முயர்வினு மிழிப்பினுஞ் சிறப்பினும்
    பாலுந் திணையு மயங்குதல் வரையார் "
என்பவாகலின்.

சிறிது பெரிது என்கையும், கிழக்கு மேற்கு என்கையும், வெள்ளாடு என்கையும் இவை வழக்கால் நடைபெற்றன.

யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும், வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும் இவை குழுவின் வந்த குறுநிலை வழக்கு.

கான்மேல் நீர்பெய்து வருதும், கண்கழீஇ வருதும், கைகுறியாயிருந்தார், இது தீண்டாத பொழுது, பிள்ளைப்பேறு, பொறையுயிர்த்தார் என்பன இடக்கரடக்கிக் கூறுதல்.

ஓலையைத் திருமுகம் என்றலும், செத்தாரைத் துஞ்சினார் என்றலும், விளக்குப் பெருகிற்று என்றலும் இவை மங்கலமரபினாற் சொல்லின வெனக் கொள்க. என்னை?

    " தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும்
    பகுதிக் கிளவி வரைநிலை யிலவே." (தொல். கிளவி. 17)
என்றாராகலின். ‘செயிர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், ஒருவன் ஒன்று குறித்துச் சொன்னாற் றெரித்துச் சொல்லுக என்றவாறு. என்னை?

    "குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி" (தொல். கிளவி. 55)
என்றாராகலின். அது வருமாறு:

    "ஒல்லேங் குவளை புலாஅன் மகன்மார்பிற்
    புல்லெருக்கங் கண்ணி நறிது" (தொல். கிளவி. 55, உரை)[1]
என்னற்க.

    "பல்லார்தோள் தோய்ந்து வருதலாற் பாய்புனல்
    நல்வய லூரநின் றார்புலால் - புல்லெருக்க
    மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையாற்
    காதற்றாய் நாறு மெமக்கு"
எனத் தெரித்துச் சொல்லுக. உலற்ற மின்றிப் பயின்றார் ஒரு சான்றார் மயிர்நீட்டி உலறி நின்றாரைக் கண்டு [2] ஒருவன், எம்பெருமான், உலறி நின்றீரால் என்றக்கால் வாளாதே உலறி நின்றேன் என்னற்க. தனக்கு உற்றதுரைத்து இது காரணத்தால் உலறி நின்றேன் என்க. பிறவும் அன்ன.
-------
[1]. மேற்படிச் சூத்திரத்தின் உரையில் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் ‘ஒல்லேம்' என்று பாடங்காட்டி இருக்கின்றனர். அவர்கள் முறையே, ஒல்லேம்........நறிது' என்புழிக் குவளை புலால்நாறுதற்கும், எருக்கம் கண்ணி நறிது ஆதற்கும் காரணம் கூறாமையின் வழுஆம் பிற எளின், புதல்வற் பயந்த பூங்குழல் மடந்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனொடு புலந்து உரைக்கின்றாள் ஆதலின், குவளை புலால்நாறுதற்கு அவன் தவற்றோடுகூடிய அவள் காதல் காரணம் என்பதூஉம், எருக்கம் கண்ணி நறிது ஆதற்கு மகிழ்நன் செய்த துனிகூர் வெப்பம் முகிழ் நகை முகத்தால் தணிக்கும் புதல்வன்மேல் ஒருகாலைக்கு ஒருகால் பெருகும் அன்பு காரணம் என்பதூஉம் பெறப்படுதலின், வழு ஆகாது என்பது எனவும்; ஒல்லேம்......நறிது, எனத் தெரித்து மொழியாது ஆயிற்று ஆயினும். தலைவன் தவறும், புதல்வன்மேல் அன்பும் காரணமாகக் கூறலும் வழு அன்று என்றலும் ஒன்று. எனவும் கூறியவற்றை ஈண்டு நோக்குக.
[2]. ‘ஒரு சான்றார் மயிர் நீட்டி உலறிநின்றாரைக் கண்டு.' என்பதனை மயிர் நீட்டி உலறி நின்றாராகிய ஒரு சான்றாரைக் கண்டு என இயைக்க.
-------

12. மரபு வழுவமைதியும் மரபு வழுவாமற் காத்தலும்

    பெண்ணாண் ஒழிந்த பெயர்தொழில் ஆகியசொல்
    உண்மை இருதிணைமேல் உய்த்தறிக - எண்ணி
    இனைத்தென் றறிந்த சினைமுதற்பேர்க் கெல்லாம்
    வினைப்படுப்பின் உம்மை மிகும். (12)

எ - ன்: பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகு சொல்லும்,உம்மை யிடைச்சொல் மிகுவதோர் இடமும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: பெண்ணொழி மிகுசொல், ஆணொழி மிகுசொல் என்பனவற்றைப் பெயரானும் தொழிலானும் உறழ நான்காம். இவற்றை உயர்திணை அஃறிணையான் உறழ எட்டாம். அவையாவன: உயர்திணையிடத்துப் பெயரிற் றோன்றும் பெண்ணொழி மிகுசொல்லும், தொழிலிற்றோன்றும் பெண்ணொழி மிகுசொல்லும், பெயரிற்றோன்றும் ஆணொழி மிகுசொல்லும், தொழிலிற்றோன்றும் ஆணொழி மிகுசொல்லும் என நான்கு வகைப்படும் என நான்கு காட்டியவழி, அஃறிணைமேலும் இந் நான்கும் வர எட்டாம். எண்ணி வரையறுக்கப்பட்ட சினைச்சொல்லும் முதற்சொல்லும் வினைப்படுத்துச் சொல்லும்பொழுது, உம்மை கொடுத்துச் சொல்லுக எ-று.

அவை வருமாறு: அரசன் நூறு மக்களொடும் வந்தான் என்றல், உயர்திணையிடத்துப் பெயரிற் றோன்றும் பெண்ணொழி மிகு சொல். கீழைச் சேரியாரும் மேலைச் சேரியாரும் பொருவர் என்றல், உயர்திணையிடத்துத் தொழிலிற் றோன்றும் பெண்ணொழி மிகு சொல். பெருந்தேவி பொறை யுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர்மக்கள் உளர் என்றல், உயர்திணையிடத்துப் பெயரிற்றோன்றும் ஆணொழி மிகுசொல். இன்று இச்சேரியார் தை நீராடுவர் என்றல், உயர்திணையிடத்துத் தொழிலிற்றோன்றும் ஆணொழி மிகுசொல். இவை நான்கும் உயர்திணை எனக் கொள்க.

அரசன் நூறியானை உடையன் என்றல், அஃறிணையிடத்துப் பெயரிற்றோன்றும் பெண்ணொழி மிகுசொல். இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம் உழவொழிந்தன என்றல், அஃறிணையிடத்துத் தொழிலிற் றோன்றும் பெண்ணொழி மிகுசொல். நம்பி நூறு எருமை உடையன் என்றல், அஃறிணையிடத்துப் பெயரிற் றோன்றும் ஆணொழி மிகுசொல். இன்று இவ்வூரிற் பெற்றமெல்லாம் அறத்திற்குக் கறக்கும் என்றல், அஃறிணையிடத்துத் தொழிலிற் றோன்றும் ஆணொழி மிகுசொல். இவை நான்கும் அஃறிணை எனக் கொள்க.

நங்கை முலையிரண்டும் வீங்கின; நம்பி தோளிரண்டும் வீங்கின என்பன சினைச்சொல் உம்மை பெற்றன. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்; தேவர் முப்பத்து மூவரும் வந்தார் என்பன முதற்சொல் உம்மை பெற்றன.

    "கண்களியாச் சென்றமர்ப்பக் கைநாஞ்சின் மேலசைஇ
    ஒண்குழையொன் றொல்கி யெருத்தலைப்ப - ஒண்சுடர்ப்பூண்
    நேர்மலர்த்தார் ஐவர் நீர்மை யுடைத்தரோ
    நீர்மணிப்பூண் வெள்ளை நிலை "
எனவும்,
"எருமை நாற்கா னீர்க்கீ ழவ்வே"
எனவும் உம்மை யில்லை; செய்யுளாதலால் தொக்கு நின்றது என்று அறிக.

‘எல்லாம்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், இல்லாப் பொருளைச் சொல்லுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்லுக. என்னை?

    "இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு
    வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்" (தொல். கிளவி. 33)

    " மன்னாப் பொருளு மன்ன வியற்றே" (தொல். கிளவி. 34)

என்பவாகலின். அவை வருமாறு: பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை. அம்மிப் பித்தும் துன்னூசிக் குடரும் சக்கிரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை. இவை என்றும் இல்லை எனவும் உரைக்க.
---------------

13. மரபு வழுவாமற் காத்தல்

    பொதுப்பிரிபால் என்ணொருமைக் கண்ணன்றிப் போகா
    பொதுத்தொழிலை ஒன்றாற் புகலார் - மதித்த
    ஒருபொருண்மேற் பல்பெயருண் டானால் அவற்றிற்கு
    ஒருவினையே சொல்லுக ஓர்ந்து. (13)

எ - ன்: வழுவமைக்கின்றது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: உயர்திணைப் பாற்குப் பொது, ஒருவர் இருவர் என்றல். அது பிரிதலாவது ஒருவன் ஒருத்தி என்றல். அது பொதுப் பிரிந்தபொழுது, ஒருமை மாத்திரமே யல்லது எண்ணோடாது; எனவே, பொதுப் பிரியாது நின்ற பொழுது, எவ்வளவும் எண்ணோடும் எனக் கொள்க. பொதுத் தொழிலை யுடையவற்றை ஒன்றன் தொழிலாற் சொல்லா தொழிக. ஒரு பொருட்குப் பல பெயர் உண்டானவிடத்துத் தொழில் கொடுக்கும் பொழுது, அப்பெயர்களை எல்லாம் எண்ணி ஒரு தொழிலாற் சொல்லுவது. பெயர்த்தோறும் வேறு தொழில் கொடுக்கிற் பொருளும் வேறுபட்டதாம்; ஆதலால் ஆகாது எ-று.

அவை வருமாறு: ஒருவன் என நின்ற பின்பு, இருவன், மூவன் எனலாகாது. ஒருத்தி என நின்றபின்பு, இருத்தி முத்தி எனலாகாது. இது பொதுப் பிரிந்த சொல்லாதலால், ஒருமைக்கண்ணே எண்ணோடினவாறு கண்டுகொள்க. ஒருவர் என நின்றவிடத்து இருவர் மூவர் நால்வர் என்று எங்கும் ஒட்டிக்கொள்க. என்னை?

    "ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
    ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லா" (தொல். கிளவி. 44)
என்றாராகலின். இது [1] பொதுப் பிரியாத சொல்லாதலால் எவ்வளவும்
எண்ணோடினபடி கண்டுகொள்க.
----------
1. இது என்றது ஒருவர் என்பதனை.
------

பொதுத் தொழில் என்றது ஆகுபெயர். பலபெயர்ப் பொதுத்தொழில் உடையனவற்றை ஒன்றன் றொழிலாற் சொல்லார்; எனவே எல்லாப் பெயர்களையுஞ் சொல்லிப் பொதுத் தொழிலாலே முடித்தல்; பொதுப் பெயரைச் சொல்லிப் பொதுத் தொழிலாலே முடித்தல் செய்வது. அவை வருமாறு: முடியுங் கடகமும் குழையும் நெடுநாணும் அணிந்தார். இது எல்லாப் பேர்களையும் எண்ணிப் பொதுத் தொழிலான் முடிந்தவாறு கண்டுகொள்க. அணிகலம் அணிந்தார், இயமரம் இயம்பினார், அடிசில் அயின்றார் என்று சொல்வன பொதுப்பெயரைச் சொல்லிப் பொதுத் தொழிலாலே முடிந்தவாறு. என்னை?

    "வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்." (தொல். கிளவி. 46)

    "எண்ணுங் காலை யதுவதன் மரபே" (தொல். கிளவி.47)
என்றாராகலின்.

இனி, ஒரு பொருண்மேற் பலபெயர் வருமாறு: ஆசிரியன் பேரூர் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் வந்தான் என்றுமாம்; அன்றி, ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் வந்தான், செயிற்றியன் வந்தான், இளங்கண்ணன் வந்தான் என்றுமாம். இவ்வாறன்றி, ஆசிரியன் வந்தான், பேரூர் கிழான் இருந்தான், செயிற்றியன் கிடந்தான், இளங் கண்ணன் நின்றான் என்று பலவினை கொடுத்து உரையற்க. என்னை?

    "ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
    தொழில்வேறு கிளப்பின் ஒன்றிட னிலவே" (தொல். கிளவி. 42)
என்றாராகலின்.

செக்கினுள் எள்பெய்து ஆட்டுவா ரில்லா மோட்டுமுது கிழவி மன்றத்து இருந்த வன்றிறல் இளைஞரைச் சென்று கைப்பற்றி, எந்தை வருக, எம்மான் வருக, மைந்தன் வருக, மணாளன் வருக என்றால் இது வழுவாகற் பாலதோ எனின், அறியாது சொன்னாய்; ஒரு பொருண்மேற் பல பெயர் அல்லாமையால் ஆகாது.

தேமல ரலங்கற் றிருவே புகுதுக; மாமலர்க் கோதை மணாளன் புகுதுக; காமன் புகுதுக; காளை புகுதுக; நாம எழில் விஞ்சை நம்பி புகுதுக என்பன உவப்பினால் அமைக்க.
--------------

14. மரபு வழுவாமற் காத்தல்

    ஒப்பிகந்த பல்பொருண்மேற் சொல்லும் ஒருசொல்லைத்
    தப்பா வினையினஞ் சார்பினாற் - செப்புக
    சாதி முதலாஞ் சிறப்புப்பேர் தன்முன்னர்
    ஓதார் இயற்பெயரை உய்த்து. (14)

எ - ன்: வினை வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும், ஒருவர்க்குச் சிறப்புப் பெயரும் இயற்பெயரும் உண்டான விடத்துச் சொல்லக் கடவ முறையும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: ஒவ்வாத பல பொருண்மேற் சொல்லும் ஒரு சொல்லை வினையினானும், இனத்தினானும், சார்பினானும் அறியப்படும். ஒருவர்க்குச் சிறப்புப் பெயரும் இயற்பெயரும் உண்டானவிடத்துச் சிறப்புப் பெயரை முன்வைத்து இயற்பெயரைப் பின் வைத்துச் சொல்லுக எ-று.

அவை வருமாறு: மா கோல் வாள் என்றாற் பொருள் அறிய ஒண்ணாதன. இவற்றை வினையினானும் இனத்தினானும் சார்பினானும் அறியுமாறு மாப்பூத்தது என்றால் மாமரத்தின்மேல் நிற்கும், இது வினை. மாவும் பலாவும் ஓங்கின என்றால் இனத்தினால் அறியப்பட்டது. விற் பற்றி நின்று கோல் தா என்பதும், பலகை [1] பற்றி நின்று வாள் தா என்பதும் சார்பினான் அறியப்பட்டன.

தப்பா என்று மிகுத்துச் சொல்லியவதனால் இம் மூன்றினானும் அறியப்படாத பல பொருள் ஒரு சொற்களைக் கிளந்தறிக. அவை பலகன்று ஓரிடத்து உளவான பொழுது நீரூட்டுக என்ற பொழுது இன்னகன்று நீரூட்டுக என்று தெரித்துச் சொல்லுக எ-று.

    "வினைவே றுபடாஅப் பலபொரு ளொருசொல்
    நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்" (தொல். கிளவி. 54)

இனி: சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் மாறன், சேரமான் சேரலாதன் எனவும், படைத்தலைவன் கொற்றன் எனவும் சிறப்புப் பெயரின்பின் இயற்பெயர் வந்தவாறு. இவை மறுக்கில் வழுவா மென்று அறிக.

    "சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
    இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்" (தொல். கிளவி.41)

‘உய்த்து' என்று மிகுத்துச் சொல்லியவதனால் இயற்பெயர் முன்வரிற் பண்பு ஒட்டி வலித்தல்லது வாராது. [2] அவை நலங்கிள்ளிச் சோழன், கொற்றப் படைத்தலைவன் எனக் கொள்க.
------
[1]. பலகை - கேடகம்.
[2]. இது மரபு வழுவமைதி என்க.
--------

15. பண்புகொள் பெயர்க்கு மரபு வமைதியும், மரபு வழுவற்க என்றலும், அடையும் சினையும் முதலுமாகிய இவற்றிற்கு மரபு வழுவாமற் காத்தலும்

    இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுள் வழக்கேல்
    இனமுண்டாய்ப் பண்புவந் தெய்தும் - புனையிழாய்
    திண்ணம் அடையுஞ் சினையும் முதலுமாய்
    வண்ணச் சினைச்சொல் வரும். (15)

எ - ன்: செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் பண்புச்சொற்பெயர் பெறுமாறும், அடைச்சொற் பெயர்பெறுமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: சொற்கட்குப் பண்பு கொடுக்கும்பொழுது செய்யுளிடத்து இனமின்றியே பண்பு கொண்டு வரப்பெறும். வழக்கினிடத்து இனமுண்டாய்ப் பண்பு கொண்டு வரப் பெறும். அடையும் சினையும் முதலும் பற்றி இவ் வடைவே வருஞ் சொற்கள் வண்ணச் சினைச்சொல் என்று பெயராம் எ-று.

அவை வருமாறு: ‘செஞ்ஞாயிற்றுக் கவினை' என்றும், ‘வெண் கோட்டியானை' [1] என்றும், ‘நெடுவெண் டிங்கள்' என்றும் இவை இனமின்றிப் பண்பு முதலிய கொண்டு செய்யுளிடத்து வந்தன.

செய்ய தேவன் என்றும், நெடிய கூத்தன் என்றும், சிறு நாதன் என்றும் இனமுண்டாய்ப் பண்பு கொண்டு வழக்கிடத்து வந்தன.
-------------
[1]. நற்றிணை செய். 10, அடி 7.

குறுஞ்சூலி, நெடுந்தடி என்பனவும், பெருவண்ணான் என்பதும் இனமின்றிப் பண்பு கொண்டு வழக்கிடத்து வந்தன எனின்; அறியாது கூறினாய்; பண்புகொள் பெயரல்ல, குறுமையைப் பிரித்தாற் சூலி என்றும், நெடுமையைப் பிரித்தாற் றடி என்றும் பெயர் ஆகாமையின் சிறப்பினாற் பெருவண்ணான் என்றாயிற்று. இவை இனஞ்சுட்டி வந்தனவல்ல என்றறிக.

செங்கால் நாரை, செங்கால் அன்னம், செங்கண் வரால், நெட்டிலைத் தெங்கு, நெட்டிலை இருப்பை, தடமருப் பெருமை, தடங்கோட் டியானை, பெருந்தோண் மன்னவன் என்பன வண்ணச் சினைச் சொல். என்னை?

    "அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
    நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்" (தொல். கிளவி. 26)

அடை என்பது பண்பு. பண்பு எனினும், குணம் எனினும், விசேடம் எனினும் ஒக்கும். இவை குணம் இரண்டடுக்கி முதலொடும் வரும் வழக்கினுள்; செய்யுளுட் குண மிரண்டடு்க்கிச் சினையொடு வரவும் பெறும். அவை சிறுகருஞ் சாத்தன், இது வழக்கு. சிறு பைந்தூவி இது செய்யுள்.
என்னை?

    "முதலொடு குணமிரண் டடுக்குதல் வழக்கியல்
    சினையோ டடுக்குதல் செய்யு ளாறே."

திண்ணம் என்று மிகுத்துச் சொல்லியவதனால் செல்லும், கொடுக்கும், வரும், தரும் என்பன பெயர்க்கு உரியவாம்பொழுது செல்லும் கொடுக்கும் என்பன படர்க்கைக்கு உரியன. வரும், தரும் என்பன தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய; ஆயினும், விரவி வரவும் பெறும். என்னை?

    "செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
    நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லும்
    தன்மை முன்னிலை படர்க்கை யென்னும்
    அம்மூ விடத்து முரிய வென்ப." (தொல். கிளவி. 28)

    "அவற்றுள்
    தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
    தன்மை முன்னிலை யாயீ ரிடத்த
    ஏனை யிரண்டு மேனை யிடத்த" (தொல். கிளவி. 29)

என்றா ராகலின். அவை வருமாறு: அவர்க்குச் செல்லும், அவர்க்குக் கொடுக்குங் காணம் என்பன படர்க்கையிடத்து வந்தன. எனக்கு வருங் காணம், எனக்குத் தருங் காணம், நினக்கு வருங் காணம், நினக்குத் தருங் காணம் என்பன தன்மையினும் முன்னிலையினும் வந்தன. இவை விரவி வருமாறு: தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது [1] எனவும், ‘புனறரு பசுங்காய்' [2] எனவும் இவை விரவி வந்தன. பிறவு மன்ன.
-----------------
[1]. அகம், செய். 36. அடி. 6. [2]. குறுந்தொகை செய். 292. அடி. 2.

மொழியாக்க மரபு முற்றும்.

இரண்டாவது வேற்றுமை மரபு


16. வேற்றுமைகளின் பெயரும் முறையும் தொகையும்

    காண்டகுபேர் ஐஒடுகு இன்அது கண்விளியென்
    றீண்டுரைப்பின் வேற்றுமை எட்டாகும் - மூண்டவைதாம்
    தோற்றும் பெயர்முன்னர் ஏழுந் தொடர்ந்தியலும்
    ஏற்ற பொருள்செய் யிடத்து. (16)

எ - சூ. இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், வேற்றுமை மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ? எனின், வேற்றுமைகட்குப் பெயரும் முறையும் தொகையும் பொது இலக்கண மாமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: பெயரும் முறையும் தொகையும் அவை தாமே; வேற்றுமைகளிற் பெயர்வேற்றுமையின்பின் பெயர் ஒழிந்த ஏழும் தமக்கேற்ற பொருட்கு ஈடாக வரும் எ - று.

‘தோற்றும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் வேற்றுமைகளை ஏலாத
பெயரும் திரிந்தேர்க்கும் என்றவாறு.

    எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றிய
    யவ்விய நிலையல் செவ்வி தென்ப. (தொல். வேற். எ.)

வ - று: யான் என்பது என்னை என்னொடு எனக்கு எனவும், யாம் என்பது எம்மை எம்மொடு எமக்கு எனவும், நாம் என்பது நம்மை நம்மொடு நமக்கு எனவும் இவை தன்மை; நீ என்பது நின்னை நின்னொடு நினக்கு எனவும், நீர் என்பது நும்மை நும்மொடு நுமக்கு எனவும் இவை முன்னிலை; தான் என்பது தன்னை தன்னொடு தனக்கு எனவும், தாம் என்பது தம்மை தம்மொடு தமக்கு எனவும் இவை படர்க்கை; இவ்வாறு தன்மையினும், முன்னிலையினும், படர்க்கையினும் இவை திரிந்து ஏற்றபடி அடைவே கண்டுகொள்க.
---------

17. முதல் வேற்றுமை

    பெயர்எழுவாய் வேற்றுமையாம் பின்பதுதான் ஆறு
    பயனிலையும் ஏற்கப் படுதல் - கயல்விழியாய்
    ஈற்றின் உருபாறும் ஏற்றல்முக் காலமும்
    தோற்றாமை நிற்றல் துண்பு. (17)

எ - ன்: எழுவாய் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: எழுவாய் வேற்றுமை என்பது பெயர்; அதுதான் பொருண்மை சுட்டல் வியங்கோள் வருதல், வினைநிலை உரைத்தல், வினாவிற் கேற்றல், பண்பு கொள வருதல், பெயர் கொள வருதல் என்னும் ஆறு பயனிலையும் ஏற்றலும், இறுதியில் ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் ஆறுருபும் ஏற்றலும், காலம் மூன்றுந் தோன்றாமையும் என்னும் இலக்கணத்தை யுடைத்து எ-று.

வ - று: அது பயனிலை ஆறும் ஏற்கப்படுதலாவது; பொருண்மை சுட்டல், ஆ உண்டு என்றல்; வியங்கோள் வருதல், ஆ செல்க என்றல்; வினை நிலை உரைத்தல், ஆ கிடந்தது என்றல்; வினாவிற்கேற்றல், ஆவோ என்றல்; பண்புகொள வருதல், ஆ கரிது என்றல்; பெயர்கொள வருதல், ஆ ஒன்று என்றல். என்னை?

    "பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
    வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல்
    பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று
    அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே." (தொல், வேற். 5.)
என்றாராகலின்.

இனி, உருபு ஆறும் ஏற்றலாவது; ஆவை, ஆவொடு, ஆவிற்கு, ஆவின், ஆவினது, ஆவின்கண் என உருபு ஏற்றல். என்னை?

    "கூறிய முறையி னுருபுநிலை திரியா
    தீறுபெயர்க் காகு மியற்கைய வென்ப." (தொல். வேற். 8)
என்றாராகலின்.

‘பின்பு' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், தொகைச் சொற்களும், பயனிலையும் உருபும் ஏற்று எழுவாய் வேற்றுமையாய் நடக்கும் எனக் கொள்க. அவை வருமாறு: யானைக்கோடு உண்டு, யானைக்கோடு செல்க, யானைக்கோடு வீழ்ந்தது, யானைக் கோடோ? யானைக்கோடு வெளிது, யானைக்கோடு இரண்டு என்பன பயனிலை [1] பெற்றவாறு.
-----------
1. ஈண்டுப் பயனிலை என்றது பொருண்மைசுட்டல் முதலிய ஆறு பயனிலைகளை என்க.

இனி, யானைக்கோட்டை, யானைக்கோட்டொடு, யானைக் கோட்டிற்கு, யானைக்கோட்டின், யானைக்கோட்டது, யானைக் கோட்டின்கண் என உருபேற்றவாறு கண்டுகொள்க.

    "பெயரி னாகிய தொகையுமா ருளவே
    யவ்வு முரிய வப்பா லான." (தொல். வேற். 6)

    "பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
    தொழினிலை யொட்டு மொன்றலங் கடை" (தொல். வேற். 9)
-----------

18. இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும்

    ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்
    எய்தும் குறிப்பும் இயலவரும் - தையலாய்
    ஆனொடு மூன்றா வதுதான் வினைமுதலும்
    ஏனைக் கருவியுமாம் ஈங்கு. (18)

எ - ன்: இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: ஐ என்பது இரண்டாம் வேற்றுமை; அது வினையையும், வினைக்-குறிப்பையும் பற்றி வரும்; ஆன், ஆல், ஒடு என்பன மூன்றாம் வேற்றுமை; அது வினைமுதலும் கருவிமுதலுமாய் வரும் எ - று.

வ - று: ஊரைக் காக்கும், அறத்தை நோக்கும், அரிசியை அளக்கும், அடைக்காயை எண்ணும் இவை வினை. [1] குழையையுடையன், பொருளை இலன் இவை வினைக்குறிப்பு. [2] பிறவும் அன்ன.

ஆல் - தச்சனாற் செய்யப்பட்டது சிறுமா வையம் கபிலராற் பாடப்பட்டது கவி; இவை வினைமுதல். ஆன் - வாணிகத்தான் ஆயினான், காணத்தாற் கொண்ட அரிசி; இவை கருவிமுதல்,

இனி, ஒடு - புலியொடு பொருத புன்கண்கூர் யானை . நெய்யொடு விராய குய்யுடை யடிசில் எனக் கொள்க. ஆல் என்னும் உருபு ஆனாய்த் திரிந்தது ஒக்கும். பிறவும் அன்ன.
------
[1], [2]. ஈண்டு வினை என்றது தெரிநிலைவினையை எனவும், வினைக் குறிப்பு என்றது குறிப்புவினையை எனவும் கொள்க. பின்னும் வினை, வினைக்குறிப்பு என வருவனவற்றையும் இங்ஙனமே கொள்க.
----

19. நான்காம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும்

    ஓதுங் குகர உருபுநான் காவதஃ
    தியாதிடத்தும் ஈபொருளை ஏற்குமாம் - கோதிலா
    தின்னுருபைந் தாவ திதனினித் தன்மைத்தி
    தென்னு மொருநான் கிடத்து. (19)

எ-ன்: நான்காம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: குகர உருபு நான்காம் வேற்றுமை: அஃது எவ்விடத்தும் ஈ பொருளை ஏற்று நிற்கும்: இன் உருபு ஐந்தாம் வேற்றுமை; அதுதான் இதனின் இத்தன்மைத்து இது என்னும் உவமம், நீக்கம், எல்லை, ஏது என்னும் நான் கிடத்தும் வரும் எ-று.

வ-று: கரும்பிற்கு வேலி, சாத்தற்கு மக்க ளுடம்பட்டார், கடி சூத்திரதிற்குப் பொன், வரிசைக்கு உழும் என்பன. பிறவும் அன்ன.

ஊரிற் றீர்ந்தான், பனையின் வீழ் பழம் இவை நீக்கத்தின்கண் வந்தன. கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு இவை எல்லைக்கண் வந்தன. காக்கையிற் கரிது களம்பழம், இதனின் இற்று இது இவை உவமைக்கண் வந்தன. முயற்சி இறத்தலின் இசை நிலையாது, தவத்திற் பெற்றான் வீடு இவை ஏதுப் பொருட்கண் வந்தன என்னை?

    "உவம நீக்க மெல்லை யேதுவென்
    றவைநான் கென்ப வைந்தா முருபே"
என்றா ராகலின்.

‘கோதிலா' என்று மிகுத்துச் சொல்லியவதனால், ஏதுப் பொருளிடத்து மூன்றாம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும் ஒக்கும். அவை:

    "வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
    கோனோக்கி வாழுங் குடி ." (குறள், 542)

என்புழி, வானோக்கி வாழு மென்றால் வானானாய பயனோக்கி வாழும், வானினாய பயனோக்கி வாழும் எனக் கொள்க. பிறவும் அன்ன.
-----

20. ஆறாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும்

    அதுஎன்ப தாறாம் உருபாம் இதன
    திதுவென் கிழமையிரண் டெய்தும் - விதிமுறையாற்
    கண்ணென்ப தேழாம் உருபாகுங் காலநில
    நண்ணும் வினையிடத்து நன்கு. (20)

எ - ன்: ஆறாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: அது என்பது ஆறாம் வேற்றுமை; அது தான் தற்கிழமையினும் பிறிதின்கிழமையினும் இதனது இது என்று நிற்கும். கண் என்பது ஏழாம் வேற்றுமை: அது காலத்தையும், வினைசெய் இடத்தையும், நிலத்தையும் பற்றி வரும் எ - று.

வ - று: சாத்தனது வாள், கொற்றனது வேல்; இவை பிறிதின்கிழமை.

தற்கிழமை ஐந்து வகைப்படும், ஒன்று பல குழீஇய தற்கிழமையும், வேறு பல குழீஇய தற்கிழமையும், ஒன்றிய தற்கிழமையும், உறுப்பின் தற்கிழமையும், மெய்திரிந்தாகிய தற்கிழமையும் என. அவை வருமாறு: ஒன்று பல குழீஇய தற்கிழமை, எள்ளது குப்பை. வேறு பல குழீஇய தற்கிழமை, படையது குழாம். ஒன்றிய தற்கிழமை, நிலத்தது அகலம். உறுப்பின் தற்கிழமை, யானையது கோடு. மெய்திரிந்தாகிய தற்கிழமை, எள்ளது சாந்து. பிறவும் அன்ன.

‘விதிமுறையால்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் அது என்பது விகாரப்பட்டு ஆது என்று நின்று நினது குதிரை, நினாது குதிரை, எனது வேல், எனாது வேல் என வரும். ஆறாம் வேற்றுமை அகரமாய் நிற்கவும் பெறும். அது வறுமாறு: உத்திய கண் கரிய, கோளரிய கண் பெரிய, யானைய கோடு பெரிய, ஆனேற்ற கோடு கூரிய என்பன. பிறவும் அன்ன.

ஏழாம் வேற்றுமை உருபு கண் என்றாராயினும், பலவும் இடப் பொருளைப் பற்றி வரும். அவை: கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், பின், சார், அயல், புடை, தேவகை, முள், இடைகடை, தலை, வலம், இடம் இவை முதலாயின. அவை வருமாறு: ஊர்க்கண் இருந்தான், ஊர்க்கால் இருந்தான், ஊர்ப்புறத்திருந்தான், கையகத்துள்ளது கொடுத்தான், ஊருள் இருந்தான், சான்றோருழை இருந்தான், மாளிகைக்கீழ் இருந்தான், மாளிகை மேல் இருந்தான், ஏர்ப்பின் சென்றான், காட்டுச்சார் ஓடுங் களிறு, சான்றோரயல் இருந்தான், தேர்ப்புடை வந்தான் (தேவகை [1] என்பது திசைக் கூற்று) தேர்முன் சென்றான், வேந்தரிடை இருந்தான், கோயிற் கடை சென்றான், தந்தைதலைச் சென்றான், கைவலத்துள்ளது வேல், பூசலிடத்து வென்றான் இவை இடத்தில் வந்தன.
---------
[1]. தேவகை என்பதற்கு ஈண்டு உதாரணம் காட்டப்படவில்லை, இதற்குச் சேனாவரையர், ‘வடபால வேங்கடம்' ‘தென்பால் குமரி' என்பவற்றையும், நச்சினார்க்கினியர் ‘வடக்கண் வேங்கடம்' என்பதனையும் உதாரணமாகக் காட்டினார். இதற்கு அவற்றை உதாரணமாகக் கொள்க.

மாரியுள் வந்தான் என்பது காலம்பற்றி வந்தது.

வாசினையில் வந்தான் என்பது வினையிடம்பற்றி வந்தது. பிறவும் அன்ன. என்னை?

    "ஏழாகுவதே,
    கண்ணெனப் பெரிய வேற்றுமைக் கிளவி
    வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தி
    னனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே" (தொல். வேற். 20)

    "கண்கால் பறமக முள்ளுழை கீழ்மேல்
    பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ
    முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ
    அன்ன பிறவு மதன்பால வென்மனார் " (தொல். வேற். 21)
என்றாராகலின்.

வேற்றுமை மரபு முற்றும்
----------

மூன்றாவது உருபு மயங்கியல்


21. வேற்றுமைகளின் சிறப்பிலக்கணம்

    வேற்றுமை ஒன்றன் உரிமைக்கண் வேறொன்று
    தோற்றல் உருபுதொக வருதல் - ஏற்றபொருள்
    மாறினும் தானிற்றல் வந்தொன்றின் ஒன்றேற்றல்
    தேறவரு மெய்ந்நூற் றெளிவு. (21)

எ-சூ: இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், உருபு மயங்கியல் என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அவ்வேற்றுமைகட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: ஒரு வேற்றுமைக்கு உரிய இடத்தே, பிறிதொரு வேற்றுமை தோற்றவும் பெறும்; வேற்றுமையுருபு தொக்கு நிற்கவும் பெறும்; வேற்றுமைப் பொருளை எதிர் மறுத்துச் சொன்னாலும், அவ் வேற்றுமையாயே நிற்கவும் பெறும்; ஆறாம் வேற்றுமையானது தன்னை யொழியப் பிறிதினை ஏற்கவும் பெறும் எ-று.

அவற்றுட் சில வருமாறு: தூணைச் சார்ந்தான் என்புழித், தூணின்கட் சார்ந்தான் என்றும், அரசரைச் சார்ந்தான் என்புழி, அரசர்கட் சார்ந்தான் என்றும், வாணிகத்தின் ஆயினான் என்புழி, வாணிகத்தான் ஆயினான் என்றுமாம். காட்டது யானை என்புழி, காட்டுள் யானை என்றும், நாகரது பலி என்புழி, நாகர்க்குப் பலி என்றுமாம். கள்ளரின் அஞ்சும் என்புழிக் கள்ளரை அஞ்சும் என்றுமாம். பிறவும் அன்ன.

இனி உருபு தொக்கது; நிலத்தைக் கடந்தான் என்புழி, நிலங்கடந்தான் என்றும், தாயொடு மூவர் என்புழித் தாய் மூவர் என்றும், நாகர்க்குப் பலி என்புழி நாகர் பலி என்றும், வரையின் வீழருவி என்புழி வரை வீழருவி என்றும், தேங்கினது காய் என்புழித் தேங்காய் என்றும், குன்றத்துக்கட் கூகை என்புழிக், குன்றத்துக் கூகை என்றும் அடைவே ஆறுருபும் தொக்கவாறு கண்டுகொள்க.

அறத்தை நோக்கும் என்புழி அறத்தை நோக்கான் என்றும், கோலால் அளக்கும் என்புழிக் கோலால் அளவான் என்றும், சாத்தற்குக் கொடுக்கும் என்புழிச் சாத்தற்குக் கொடான் என்றும், கள்ளரின் அஞ்சும் என்புழிச் கள்ளரின் அஞ்சான் என்றும், கொற்றனது வேலாம் என்புழிக் கொற்றனது வேலன்று என்றும், மன்னர்கட் செல்லும் என்புழி மன்னர்கட் செல்லான் என்றும் வேற்றுமைப்பொருளை எதிர் மறுத்துச் சொன்னவிடத்தும் வேற்றுமை அழியாது ஏற்றவாறு அடைவே கண்டுகொள்க.

சாத்தனது என்புழிச் சாத்தனதனை என்றும், சாத்தனதனான் என்றும், சாத்தனதற்கு என்றும், சாத்தனதனின் என்றும், சாத்தனதன்கண் என்றும் இவை ஆறாம் வேற்றுமையிற் பிறிது வேற்றுமை ஏற்றவாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன.

‘தேறவரும்' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், இரண்டு பொருளை ஒக்க வினைகொடுத்துச் சொல்லுமிடத்து, ஒடுச் சொல்லினை உயர்ச்சியின் பின் வைத்துச் சொல்லுக. என்னை?

    "ஒருவினை யொடுச்சொ லுயர்பின் வழித்தே" (தொல். வேற். மய. 8)
என்றாராகலின், அரசரொடு வந்தார் சேவகர், தாயொடு வந்தாள் மகள் என இவை உயர்பின் வழி வந்தவாறு. நாயொடு வந்தான் நம்பி என இது உபகார உயர்ச்சிபற்றி வந்தது. பிறவும் அன்ன.
-----------

22. இதுவும் அது

    இருசொல் இறுதி இரண்டேழ் அலாத
    உருபு தொகாதென் றுரைப்ப - உருபுதான்
    தொக்க விடத்துடனே தொக்கும் விரியுமிடத்
    தொக்கவிரி சொல்லும் உள. (22)

எ-ன்: இதுவும் அப்பொருண்மேல் நின்றது.

இ-ள்: இரண்டு சொல்லின் இடையின் எல்லா உருபும் தொக்கும் விரிந்தும் நிற்கும் என்றார். இனி இரு சொல் இறுதி இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஒழிய அல்லாத வேற்றுமைகள் விரிந்து நிற்கும் தொகப் பெறா; வேற்றுமைகள் தொகும் இடத்துச் சில சொற்களுடனே தொக்கும், விரியும் இடத்துக் கூட விரிந்தும் நிற்குஞ் சொற்களும் உள என்றவாறு எ-று.

வ-று: கடந்தான் நிலம், கடந்தான் நிலத்தை என்றும், இருந்தான் குன்றத்து, இருந்தான் குன்றத்துக்கண் என்றும், இருசொல் இறுதி இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் தொக்கும் விரிந்தும் நின்றன. இனிக் குறைத்தான் மழுவினால், வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், ஆடை சாத்தனது என நான்கு வேற்றுமையும் இருசொல் இறுதியிற் றொகப் பெறாது விரிந்து நின்றவாறு. தொகிற் பொருள் வேறுபட்டுக் கெடும்.

இனிக் குதிரைத்தேர் என்புழி மூன்றாம் வேற்றுமை தொக்கது. அது விரியு மிடத்துக், குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என்று சில சொல்லோடே விரிந்தது. கருப்புவேலி என்பதும் அது. பிறவும் அன்ன.
------

23. ஆகுபெயர்

    23. ஒன்றன்பேர் ஒன்றற் குரைப்பதாம் ஆகுபெயர்
    சென்றவைதாந் தம்முதலிற் சேர்தலோ - டொன்றாத
    வேறொன்றிற் சேர்தல் என இரண்டாம் வேற்கண்ணாய்
    ஈறு திரிதலுமுண் டீண்டு.

எ - ன்: ஆகுபெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: ஆகுபெயராவது ஒன்றன் பெயரை ஒன்றற்கு இட்டுச் சொல்லுமது; அதுதான் தன்னொடு தொடுத்த பொருண்மேல் வருதலும் தனக்கு எவ்வியைபும் இல்லாத தன்மேல் வருதலும் என இரண்டாம், அவைதாம் ஈறு திரிந்து நிற்கவும் பெறும் எ-று.

அவை வருமாறு: கடுவினது காய் தின்றானைக் கடுத்தின்றான் என்றும், புளியினது பழம் தின்றானைப் புளித் தின்றான் என்றும் இவை தம்முதலோடு சார்ந்த ஆகுபெயர். பூ நட்டு வாழும், இலை நட்டு வாழும் இவை சினையாகு பெயர். நீலம் அடுத்ததனை நீலம் என்றும், சிவப்பு அடுத்ததனைச் சிவப்பு என்றும், ஏறுபட்ட இடத்தை ஏறு என்றும், அடி பட்டதனை அடி என்றும், வெள்ளாளர் காணியிற் பிறந்ததனை வெள்ளாளர் காணி என்றும், சாலியனாற் செய்யப் பட்டதனைச் சாலியன் என்றும், நாழியால் அளக்கப்பட்டதனை நாழி என்றும், துலாத்தால் எடுக்கப்பட்டதனைத் துலாம் என்றும் வருவன தம்முதலுக்கு அடையாய் வரும் ஆகுபெயர். இனித் தொல்காப்பியம், அவிநயம், வில்லி, வாளி என்பன ஈறு திரிந்து வந்தன. பிறவும் அன்ன.

'சென்று' என்று மிகுத்துச் சொல்லியவதனால், இருபெயரொட்டாய்வரும் ஆகுபெயரும் உள. அவை பொற்றொடி, வெள்ளாடை, கனங்குழை என்பன; அன்மொழித் தொகையாய்க் காட்டப் பட்டனவாயினும், ஆகுபெயர்த்தன்மைக்கு ஈங்குப்பெறும். என்னை?

    "முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ்
    சினையிற் கூறு முதலறி கிளவியுஞ்
    பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
    இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும்
    வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ
    யனைய மரபினவே யாகுபெயர்க் கிளவி." (தொல். வேற். மய.31)
என்றாராகலின்.

உருபு மயங்கியல் முற்றும்.
--------

நான்காவது விளி மரபு


24. விளிவேற்றுமையின் பொது இலக்கணம்

    ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
    வேறு வருதலு மெய்யியல்பும் - கூறும்
    இரண்டீற்று மூவகைப்பேர் முன்னிலைக்கண் என்றும்
    திரண்டுவிளி யேற்கும் திறம். (24)

என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், விளி மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ? எனின், விளிவேற்றுமையது பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: உயிர் இறுதியும் ஒற்று இறுதியும் ஆகிய உயர்திணைப்பெயரும் அஃறிணைப்பெயரும், விரவுப்பெயரும் முன்னிலைக் கண் விளியேற்கு மிடத்து ஈறு திரிதலும், ஈற்றயல் நீடலும், பிரிது வந் தடைதலும், இயல்பாதலும் என நான்கு வகைப்படும் எ-று. அவை மேற் சொல்லுதும்.
----------

25. இ, ஐ, உ, ஓ என்னும் உயிர்ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்கும் வகை

    இகரமீ காரமாம் ஐஆய்ஆம் ஏஆம்
    உகரஓ கார உயிர்கள் - பகர்விளிகள்
    அண்மை இடத்தும் அளபெடைப் பேர்க்கண்ணும்
    உண்மை இயல்பாய் உறும். (25)

எ - ன்: இ, ஐ, உ, ஓ என்னும் நான்கு வகைப்பட்ட உயிரீற்றுப் பெயரும் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: இகர ஈற்றுப் பெயர் ஈகாரமாய் விளியேற்கும்; ஐகார ஈற்றுப்பெயர் ஆய் ஆய் விளியேற்கும்; உகர ஈற்றுப் பெயரும் ஓகார ஈற்றுப் பெயரும் ஏகாரமாய் விளியேற்கும், இவை நான்கும் அணியாரைக் கூவும்
இடத்து இயல்பாய் விளியேற்கும். உயிரீற்று அளபெடைப் பெயரும் அவ்வள பெடுத்தபடியே விளியேற்கும் [1] எ-று.

அவை வருமாறு: நம்பி நம்பீ எனவும், நங்கை நங்காய் எனவும், வேந்து வேந்தே எனவும், கோ கோவே எனவும் விளியேற்றன.

இவை அணியாரைக் கூவுமிடத்து, நம்பி வருக, நங்கை வருக, வேந்து வருக, கோ வருக என்று இயல்பாய் விளியேற்றன. தொழீஇஇ [2] என்னும் அளபெடைப் பெயரும் அளபெடுத்த படியே இயல்பாய் விளியேற்றது எனக் கொள்க. பிறவும் அன்ன.

-------
[1]. அளபெடைப் பெயர்க் கண்ணும், உண்மை இயல்பாய் உறும் என இந் நூலாசிரியரும், உயிரீற்று அளபெடைப் பெயரும் அளபெடுத்தபடியே விளி ஏற்கும் என இந்நூலின் உரையாசிரியரும் பொதுவாகக் கூறினார்கள். எனினும் ‘ஏற்பழிக் கோடல்' என்னும் உத்தியான். இ, ஐ, உ, ஓ என்னும் இந் நான்கு உயிரீற்றுப் பெயர்களுள் இகர உயிரீற்றுப் பெயர்க்கே இவ்விதி உரியதாம் என்று கொள்க; என்னெனின், ஆசிரியர் தொல்காப்பியனார்.
    "அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
    இயற்கைய ஆகும் செயற்கைய என்ப" (தொல். விளிமரபு. சூ.8.)
என அந்நான்கு உயிரீற்றுள் இகர உயிரீற்றுக்கே அவ்விதி கூறுதலின் என்க.
ஆசிரியர் தொல்காப்பியருக்குப் பிற்காலத்து மேற்குறித்த உயிர்களுள் இகரம் ஒழிந்த மற்றை உயிரீற்றினும் இங்ஙனம் அளபெடை மிக்கு இயல்பாம் பெயர் உண்டாயினமையை நோக்கி இந்நூலாசிரியரும், இந்நூலின் உரையாசிரியரும் அங்ஙனம் பொதுவாகக் கூறினார்கள் என்னலாகாதோ? எனின் பின்னர் இகர ஈற்றுப் பெயரன்றி, வேறு உயிரீற்றுப் பெயர் இதற்கு உதாரணமாகக் காட்டப்படாமையானும் இச்சூத்திரத்தினும் அந்நான்கு ஈற்றிற்குமே விதி கூறி இருத்தலானும் அங்ஙனம் கொள்ளலாகாது என்க.

[2]. ஈண்டு இது ‘தொழீஇஇ' என்று காட்டப்பட்டிருக்கின்றது. இஃது ஏடு எழுதுவோரால் நேர்ந்த பிழையாகும். தோழீஇ, என்பது அளபெடையை உடையதாய் அது மிக்கு இகர இறுதியாகி நிற்கும் பெயரன்று. அது ‘தோழி' என இயல்பினாகிய இகர இறுதியைக் கொண்டு நிற்கும் பெயராகும். ஈண்டுக் கூறப்பட்டது 'ஆடூஉ', ‘மகடூஉ' என்பனபோல இயற்கைஅள பெடையை உடையதாய் அது மிக்கு வரும் பெயராகும். அங்ஙனமாகிய பெயர் ‘தொழீஇ' என்பதேயாம். அதனைத் ‘தொழீஇயட உண்ணார்' எனச்சிறுபஞ்சமூலத்தின் 38 - ஆம் செய்யுளில் வந்திருப்பதனால் அறிதலாகும். இதன் அளபெடை மிக்கு நான்கு மாத்திரையாய் நிற்கும், தொழீஇஇஇ என ஐந்து மாத்திரையைக் கொண்டு நிற்றலும் உண்டு. இஃது இங்ஙனமாதலை முன்பு காட்டிய ‘அளபெடை மிகூஉம்' என்னம் சூத்திரத்திற்கு அளபெடை தன்னியல்பு மாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் இகர ஈற்றுப் பெயர் இ ஈ ஆகாது இயல்பாய் விளியேற்கும் செயற்கையை உடையவாம் என்று கூறிய சேனாவரையர் உரையினானும், அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் - அளபெடை தன் இயல்பு மாத்திரையின் மிக்கு நான்கு மாத்திரை பெற்று நிற்கும். இகர ஈற்றுப் பெயர், இயற்கைய ஆகும் செயற்கைய என்ப - இ, ஈ ஆகாது இயல்பாய் விளி ஏற்கும் செயற்கையை உடைய என்று கூறுவர் ஆசிரியர் என நச்சினார்க்கினியர் கூறிய உரையினானும் அறிக. இது, தொழில் செய்கின்றவள் என்னும் பொருள்தரும் சொல் என்பர் நச்சினார்க்கினியர். ஈண்டுக் கலித்தொகை முல்லைக்கலி 3- ஆம் செய்யுளின் 44-ஆம் அடியில் வந்துள்ள தொழீஇஇ என்பதற்கு, (644-ஆம் பக்கத்தில்) சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராய் இருந்த அனந்த ராமய்யர் அவர்கள் எழுதிய அடிக்குறிப்பையும், மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் தாம் பரிசோதித்துப் பதிப்பித்த நச்சினார்க்கினியர் உரையோடு கூடிய சொல்லதிகாரத்தின் மேற்படி சூத்திர உரையின்பின் (135 ஆம் பக்கத்தில்) அவர்கள் எழுதிய அடிக்குறிப்பையும் ஈண்டு நோக்குக.
-----

‘உண்மை' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், ஐகார ஈற்றுப் பெயர்களில் ஆண்டை என்னும் சொல் ஈறாம் பெயர்களும், முறைப் பெயர்களில் அத்தை அம்மை என்னும் பெயர்களும் ஏகாரம் பெற்றே விளியேற்கும் எனக் கொள்க. அவை வருமாறு: கூத்தாண்டை கூத்தாண்டே என்றும், அத்தை அத்தே என்றும், அம்மை அம்மே என்றும் விளியேற்கும் எனக் கொள்க. பிறவும் அன்ன.
----------------

26. னகர ஈற்றுப் பெயர் விளியேற்கும் ஆறு

    அன்இறுதி ஆவாகும் அண்மைக் ககரமாம்
    இன்னு முறைப்பெயரேல் ஏஆகும் - முன்னியல்பாம்
    ஆனும் அளபெடையும் ஆன் ஈற்றுப் பண்புதொழில்
    மான்விழி ஆய்ஆய் வரும். (26)

எ - ன்: ஒற்றீற்றுப் பெயர்களுள், னகர ஈற்றுப் பெயர் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: அன் இறுதிப் பெயர் ஆ ஆய் விளியேற்கும்; அவை அணியாரைக் கூவுமிடத்து அகரமாய் விளியேற்கும்; அவை முறைப்பெயராயின் ஏகாரம் பெற்று விளியேற்கும்; ஆன் ஈற்றுப் பெயர் இயல்பாய் விளியேற்கும்; அளபெடைப்பெயர் அளபெடுத்தபடியே இயல்பாய் விளியேற்கும்; ஆன் ஈற்றுப் பண்புப் பெயரும் தொழிற் பெயரும் ஆய்ஆய் விளியேற்கும் எ-று.

அவை வருமாறு: சாத்தன் சாத்தா என்றும், கொற்றன் கொற்றா என்றும் அன் இறுதி ஆஆய் விளியேற்றது. சாத்த, கொற்ற என்று அணியாரைக் கூவுமிடத்து அகரமாய் விளியேற்றது. மகன், மருமகன் என்னும் முறைப்பெயர் மகனே, மருமகனே என ஏகாரம் பெற்று விளியேற்றன. சேரமான், மலையமான் என்னும் ஆன் ஈற்றுப் பெயர்கள் இயல்பாய் நின்று விளியேற்றன. அழாஅன் புழாஅன் என்னும் அளபெடைப் பெயர்கள் இயல்பாய் நின்று விளியேற்றன. கரியான், செய்யான் என்னும் ஆன் ஈற்றுப் பண்புப் பெயர் கரியாய், செய்யாய் என ஆய்ஆய் விளியேற்றன. உண்டான், தின்றான் என்னும் ஆன் ஈற்றுத் தொழிற்பெயர் உண்டாய், தின்றாய் என ஆய்ஆய் விளியேற்றன.

‘ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்' என்பதனால், அன் என்னும் இறுதியும் ஆய்ஆய் விளியேற்கும். பண்பினும் தொழிலினும் கரியன் - கரியாய், உடையன் - உடையாய் என வரும்.

‘முன்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், இரண்டு குறிற்கீழ் வரும் அன் ஈற்றுப் பெயர்கள் விளியேற்குமிடத்து ஏகாரம் பெற்று விளியேற்கும் என்றவாறு. அவை வருமாறு: அயன்-அயனே, சிவன்-சிவனே, நளன்-நளனே, தரன்-தரனே, பரன்-பரனே என விளியேற்றன.

மகன்-மகனே என்று விளியேற்கு முடிவே இவற்றிற்கும் அமையாதோ எனின், அமையாது; அது முறைப்பெயர் ஆதலானும், முறைப்பெயர் இரண்டு குறிற்கீழல்லது வாராது என்னும் யாப்புறவு இன்மையானும் ஈண்டுச் சொல்லவேண்டிற்று. பிறவும் அன்ன.
----------------

27. ரகர ஈற்றுப் பெயர் விளிஏற்கும் வகை

    ஈராகும் அர்ஆர் இதன்மேலும் ஏகாரம்
    ஓரோ விடத்துளதாம் ஓங்களபரம் - பேர்கள்
    இயல்பாம் விளியேலா எவ்வீற்றுப் பேரும்
    புயல்போலுங் கூந்தலாய் போற்று. (27)

எ - ன்: ரகாரவீற்றுப் பெயர் விளியேற்குமாறும், விளியேலாப் பெயரும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: அர் ஆர் என்னும் பெயர்கள் ஈராய் விளியேற்கும்; அவற்றுட் சிலசொல் ஈரோடு ஏகாரம் பெற்று விளியேற்கும்; ரகார ஈற்று அளபெடைப்பெயர்கள் இயல்பாய் விளியேற்கும். சொல்லப்பட்ட எவ்வீற்றுப் பெயர்களினும் விளியேலாதனவும் உள எ-று.

அவை வருமாறு: அந்தணர் - அந்தணீர் என்றும், குறவர் - குறவீர் என்றும் அர் ஈராய் விளியேற்றது. சான்றார் - சான்றீர் என்றும், மூத்தார் - மூத்தீர் என்றும், பெரியார் - பெரியீர் என்றும், ஆர் ஈராய் விளியேற்றது. செட்டியார் - செட்டியீரே என்றும், கணியார் - கணியீரே என்றும் ஈரோடு ஏகாரம் பெற்று விளியேற்றன.

‘ஓங்கு' என்று மிகுத்துச் சொல்லியவதனால், பண்பும் தொழிலும் ஆர் ஈறாயின், ஈரோடு ஏகாரம் பெற்று விளியேற்கும் எனக் கொள்க. கரியார் - கரியீரே, உண்டார் - உண்டீரே எனப் பண்பும் தொழிலும் ஈரோடு ஏகாரம் பெற்று விளியேற்றன.

மகாஅர், சிறாஅர் என்பன அளபெடுத்தபடியே இயல்பாய் விளியேற்றன. பிறவும் அன்ன.

தான், அவன், இவன், உவன், யான், எவன், யாவன், எனவும்; அவர், இவர், உவர், எவர், யாவர் எனவும்; அவள், இவள், உவள், எவள், யாவள் எனவும்; நீ, நீர், எனவும் இவை விளியேலாத பெயர் என்றறிக. பிறவும் அன்ன.
---------------

28. லகர ளகர ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்கும் வகை

    ஈற்றயல் நீடும் லளக்கள்தாம் ஏகாரம்
    தோற்று முறைப்பெயர்கள் துன்னுங்கால் - ஆற்ற
    அயல்நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும்
    இயல்பாம் விளிக்கு மிடத்து. (28)

எ - ன்: லகாரவீற்றுப் பெயரும், ளகாரவீற்றுப் பெயரும் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: லகார ஈறும், ளகார ஈறும் விளியேற்குமிடத்து ஈற்று எழுத்தின் அயல் எழுத்தாகிய குற்றுயிர் நெட்டுயிராய் விளியேற்கும்; அவை முறைப்பெயராயின் ஏகாரம் பெற்று விளியேற்கும்; முன்பே அயல் நெடிதாம் பெயராயின் இயல்பாய் விளியேற்கும்; அளபெடைப் பெயராயின் அளபெடுத்தபடியே இயல்பாய் நின்று விளியேற்கும் எ-று.

அவை வருமாறு: குரிசில்-குரிசீல், தோன்றல்-தோன்றால், மக்கள்- மக்காள் என ஈற்றயல் நீண்டு விளியேற்றன. மகள்-மகளே, மருமகள்- மருமகளே என முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்றன. திருமால், கருமால், சிறியாள், பெரியாள் இவை முன்பே அயல் நெடிலாய் நிற்றலால், இயல்பாய் விளியேற்றன.

துன்னும் என்று மிகுத்துச் சொல்லியவதனால், தொழிலும், பண்பும் ளகார ஈறாயின், இயல்பாய் நின்று வெளியேற்கும் என்றவாறு. அவையாவன: துணையிருந்தாள், வைய மளந்தாள், செய்யாள், கரியாள் என்பன. அளபெடைப் பெயர்,

    "மாஅ னிறம்போல மழையிருட் பட்டதே
    கோஒன் குலக்கோடு கொண்டு. "
என அளபெடை அளபெடுத்தபடியே நின்று விளியேற்றது.

ஆற்ற என்று மிகுத்துச் சொல்லியவதனால், உயர்திணையிடத்து யகாரமாய் விளியேற்பனவும் உள. விளங்குமணிக்கொடும்பூணாய் [1] என விளியேற்றது. பிறவும் அன்ன.
------
[1]. புறம். செ. 130.
"விளங்குமணிக் கொடும்பூணாஅய் என்பது புறநானூற்றுப் பாடம். அஃது ஈண்டு அளபெடை நீக்கி ளகர மெய்யீறு யகரமெய்யீறு ஆதற்குக் காட்டப்பட்டது.
-------

29. விரவுப்பெயரும் அஃறிணைப் பெயரும் விளி ஏற்கும் வகையும், சேய்மை விளியில் மூவகைப் பெயரும் மாத்திரை மிகும் வகையும்

    விரவுப்பேர் எல்லாம் விளிக்குங்கால் முன்னை
    மரபிற்றாம் அஃறிணைப்பேர் வந்தால் - மரபிற்
    கொளவருமே காரமும் கூவுங்காற் சேய்மைக்
    களவிறப்ப நீளும் அவை. (29)

எ - ன்: விரவுப்பெயரும், அஃறிணைப்பெயரும் விளி ஏற்குமாறும், மூன்றுவகைப் பெயரும் சேய்மைவிளி ஏற்குமிடத்து மாத்திரை மிகும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: எல்லா ஈற்று விரவுப் பெயரும் விளி ஏற்குமிடத்து முன்பு உயர்திணைக்குச் சொன்னபடியே விளி ஏற்கும்; அஃறிணைப்பெயர் விளி ஏற்குமிடத்து ஏகாரமும் பெற்று விளி ஏற்கும்; ‘ஏகாரமும்' என்ற உம்மையால், உயர்திணைக்குச் சொன்னபடியே விளி ஏற்பனவும் உள; உயிரீற்றுப் பெயரும் ஒற்றீற்றுப் பெயரும் சேய்மை நிலத்தாரைக் கூவுமிடத்து, உயிர் பன்னிரண்டு மாத்திரையும் ஒற்றுப் பதினொரு மாத்திரையும் நீளும் என உணர்க எ-று.

அவை வருமாறு: சாத்தன்-சாத்தா, சாத்தி-சாத்தீ, தந்தை-தந்தாய் என விரவுப் பெயர் மேலே வந்து விளி ஏற்றன. பொன்-பொன்னே, கார்-காரே, அணில்-அணிலே, தேன்-தேனே என ஏகாரம் பெற்றும் அஃறிணை விளி ஏற்றன. தென்றல்-தென்றால், முல்லை-முல்லாய் என அஃறிணை உயர்திணை போல விளி ஏற்றன. பிறவும் என்ன.

விளி மரபு முற்றும்
-----

ஐந்தாவது பெயர் மரபு


30

    பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
    இயற்சொன் முதனான்கும் எய்தும் - பெயர்ச்சொல்
    உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண்விரவுற்
    றியலும் எனவுரைப்பர் ஈங்கு. (30)

எ - ன்: இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், பெயர்மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள் இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ? எனின், பெயர்ச் சொற்களது பகுதி உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நான்கினையும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கனோடும் உறழப் பதினாறாம்; அவை, பெயரியற்சொல், வினையியற்சொல், இடையியற்சொல், உரியியற்சொல் எனவும்; பெயர்த்திரிசொல், வினைத்திரிசொல், இடைத்திரிசொல், உரித்திரிசொல் எனவும்; பெயர்த்திசைச்சொல், வினைத் திசைச்சொல், இடைத்திசைச்சொல், உரித்திசைச்சொல் எனவும்; பெயர்வடசொல் வினைவடசொல், இடைவடசொல், உரிவடசொல் எனவும் வரும். இவற்றுட் பெயர்ச்சொல் உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர், விரவுப்பெயர் என மூன்று கூறாம் எ-று.

என்னை?
    "இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொலென்
    றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே" (தொல். எச். 1)

    "அவற்றுள்
    இயற்சொற் றாமே
    செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
    தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே" (தொல். எச். 2)

    "ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
    வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியும்
    இருபாற் றென்ப திரிசொற் கிளவி. " (தொல். எச். 3)

    "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்
    தங்குறிப் பினவே திசைசொற் கிளவி" (தொல். எச். 4)

    "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
    எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" (தொல். எச். 5)

    "சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்" (தொல். எச். 6)

என்பனவற்றான் இயற்சொன் முதல் நான்கும் ஆமாறு உணர்ந்து கொள்க.

    "பெயரெனப் படுபவை தெரியுங் காலை
    உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும்
    ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும்
    அம்மூ வுருபின தோன்ற லாறே" (தொல். பெய. 6)
என்பவாகலின்.

‘ஒண்விரவுப் பெயர்' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், இடைச்சொல்லும் உரிச்சொல்லும் தனித்து நடவா, பெயரொடும் வினையொடும் கூடி நடக்கும் என்றறிக.

    "சொல்லெனப் படுப பெயரே வினையென்
    றாயிரண் டென்ப வறிந்திசி னோரே" (தொல். பெய. 4)

    "இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு
    மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப" (தொல். பெய. 5)
என்பவாகலின்.

வரலாறு: அதுமன் - இது பெயரொடு வந்த இடைச்சொல். உறுகால் - இது பெயரொடு வந்த உரிச்சொல். கொன்னே வந்தான் - இது வினையொடு வந்த இடைச்சொல். நாமவருந் துறைபோதல் இது வினையொடு வந்த உரிச்சொல். இவை பெயரொடும் வினையொடும் நடைபெற்றவாறு. பிறவும் அன்ன.
---------------

31. உயர்திணைப் பெயர் ஆமாறு

    சுட்டே வினாவொப்பே பண்பே தொகு னளர
    ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர் - இட்டிடையாய்
    கூடியற்பேர் காலங் குலந்தொழிலின் பேர்மகடூஉ
    ஆடூஉ உயர்திணைப்பேர் ஆம். (31)

எ - ன்: உயர்திணைப்பேர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: சுட்டுப்பெயர்களும், வினாப்பெயர்களும், உவமைப் பெயர்களும், பண்பின்பெயர்களும் என்று இச்சொல்லப்பட்ட ன ள ர ஈறாகிய பெயர்களும், எண்ணியற் பெயர்களும், நிலப்பெயர்களும், கூடியற்பெயர்களும், காலப்பெயர்களும், குலப்பெயர்களும், தொழிற் பெயர்களும், ஆடூஉ, மகடூஉ என்னும் பெயர்களும் உயர்திணைப் பெயராம் எ-று.

அவை வருமாறு: அவன், அவள், அவர், இவன், இவள், இவர், உவன், உவள், உவர் என இவை சுட்டுப்பெயர்.

எவன், எவள், எவர், யாவன், யாவர் என இவை வினாப்பெயர்.

பொன்னனான், பொன்னனாள், பொன்னனார் என இவை உவமைப்பெயர்.

கரியான், கரியாள், கரியார், நெடியான், நெடியாள், நெடியார் என இவை பண்புப்பெயர்.

இவை ன, ள, ர ஈறாகிய நான்கு வகைப் பெயருமெனக் கொள்க.

இனி எண்ணியற் பெயர் - ஒருவர், இருவர், மூவர், நால்வர் என இவை முதலானவை.

அம்பர்கிழான், வல்லங்கிழான் என இவை நிலப்பெயர்.

அவையகத்தார், அத்திகோசத்தார், மணிக்கிராமத்தார் என இவை கூடியற்பெயர்.

மகத்தான், மகத்தாள், மகத்தார், நாலாண்டையான், நாலாண்டையாள், நாலாண்டையார் என இவை காலப்பெயர்.

செங்கோன், செவ்வண்ணன் என இவை குலப்பெயர்.

உண்டான், உண்டாள், உண்டார் என இவை தொழிற்பெயர்.

ஆடூஉ மகடூஉ என்பன உயர்திணைப்படர்க்கைப் பெயர் என அறிக.
---------------

32. இதுவும் அது

    பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த
    இகரஐ கார இறுதி - இகரமிறுஞ்
    சாதிப்பெண் பேர்மாந்தர் மக்களுந் தன்மையுடன்
    ஆதி உயர்திணைப்பேர் ஆம். (32)

எ - ன்: உயர்திணைப் பெயர் ஒழிவு கூறுதலை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள்: பல்லோரைக் குறி்த்துவரும் முறைப்பெயரும், சினைப்பெயரும், நம்மூர்ந்து வரும் இகர ஐகார ஈற்றுப்பெயரும், இகர ஈற்றுச் சாதிப் பெண்பெயரும், மாந்தர் மக்கள் என்னும் பெயரும், தன்மைப் பெயரும், உயர்திணைப் பெயராம் எ-று.

அவை வருமாறு:
    தந்தையர், தாயார், இவை முறைப்பெயர்.
    பெருங்காலர், பெருங்கையர் இவை சினைப்பெயர்.
    நம்பி, நங்கை இவை நம்மூர்ந்து வந்த இகர ஐகாரப்பெயர்.
    பார்ப்பனி, குறத்தி, மறத்தி இவை இகர ஈற்றுச் சாதிப் பெண் பெயர்.
    மாந்தர், மக்கள் என்பன அவை.
    யான், யாம், நாம் இவை தன்மைப்பெயர்.
    இவை உயர்திணைப் பெயராம் என்றவாறு.

------------------

33. அஃறிணைப்பேர் ஆமாறு

    ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர்
    ஓதியஎண் ணின்பேர் உவமைப்பேர் - தீதிலாச்
    சாதிப்பேர் சார்ந்த வினாஉறுப்பின் பேர்தலத்தோர்
    ஓதிய அஃறிணைக்காம் உற்று. (33)

எ - ன்: அஃறிணைப்பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: சுட்டு முதலாகிய உகர ஐகார ஈற்றுப் பெயரும், எண்ணின் பெயரும், உவமைப் பெயரும், சாதிப் பெயரும், வினாப் பெயரும், உறுப்பின் பெயரும் இவை அஃறிணைப்பெயராம் எ-று.

அவை வருமாறு: அது, இது, உது, அவை, இவை, உவை, இவை உகர
ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர்.

ஒன்று, இரண்டு, மூன்று இவை எண்ணின் பெயர்.

பொன்னன்னது, பொன்னன்னவை இவை உவமைப்பெயர்.

நாய், நரி, புல்வாய் இவை சாதிப் பெயர்.

எது, எவை, யாது, யாவை இவை வினாப்பெயர்.

பெருங்கோட்டது, பெருங்கோட்டவை இவை உறுப்பின் பெயர்.
இவை அஃறிணைப் படர்க்கைப் பெயராமாறு அடைவே கண்டு கொள்க.
------

34. விரவுப்பேர் ஆமாறு

    இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
    மயக்கிலா மூன்றனையும் வைத்துக் - கயற்கண்ணாய்
    பெண்ணானே பன்மை ஒருமையொடு பேர்த்துறழ
    நண்ணும் விரவுப்பேர் நன்கு. (34)

எ - ன்: விரவுப்பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: பெண், ஆண், பன்மை, ஒருமை என்னும் நான்கனோடும்
இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் என்னும் மூன்றனையும்
உறழப் பன்னிரண்டும் விரவுப் பெயராம் எ-று.

வரலாறு: பெண்மை இயற்பெயர், பெண்மைச் சினைப்பெயர், பெண்மைசுட்டிய சினைமுதற்பெயர் எனவும்: ஆண்மை இயற்பெயர், ஆண்மைச் சினைப் பெயர், ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர்: எனவும்: பன்மை யியற்பெயர், பன்மைச் சினைப்பெயர், பன்மை சுட்டிய சினைமுதற்பெயர் எனவும்; ஒருமை யியற்பெயர், ஒருமைச் சினைப்பெயர், ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் எனவும் இவை பன்னிரண்டும்விரவுப்பெயராம் என்றவாறு.

அவை வருமாறு: சாத்தி - இயற்பெயர்: முடத்தி - சினைப்பெயர்: முடக்கொற்றி - சினைமுதற்பெயர் என்னும் பெண்மைப் பெயர், வந்தாள் என்றும் வந்தது என்றுமாம். என்னை?

    "பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
    ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே" (தொல். பெய. 26)
என்றாராகலின்.

சாத்தன் - இயற்பெயர், முடவன் - சினைப்பெயர், முடக் கொற்றன் - சினைமுதற்பெயர் என்னும் ஆண்மைப் பெயர், வந்தான் என்றும் வந்தது என்றுமாம். என்னை?

    "ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
    ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே" (தொல். பெய. 27)
என்றாராகலின்.

யானை - இயற்பெயர், நெடுங்கழுத்தல் - சினைப்பெயர், நெடுந்தாள்யானை - சினைமுதற்பெயர் என்னும் பன்மைப்பெயர் வந்தான், வந்தாள், வந்தன, வந்தது என்றுமாம். என்னை?

    "பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
    ஒன்றே பலவே ஒருவ ரென்னும்
    என்றிப் பாற்கு மோரன் னவ்வே (தொல். பெய. 28)
என்றாராகலின்.

கோதை - இயற்பெயர், செவியிலி - சினைப்பெயர், கொடும்புறமருதி - சினைமுதற்பெயர் என்னும் ஒருமைப்பெயர் வந்தான், வந்தாள், வந்தது என்றாம். என்னை?

    "ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
    ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே (தொல். பெய. 29)
என்றாராகலின்.
----------------

35. இதுவும் அது

    தந்தைதாய் என்பனவும் சார்ந்த முறைமையால்
    வந்த மகன் மகளோ டாங்கவையு - முந்திய
    தாந்தானு நீநீயி ரென்பனவும் தாழ்குழலாய்
    ஆய்ந்த விரவுப்பேர் ஆம். (35)

எ - ன்: இதுவும் விரவுப் பெயர் ஒழிபு கூறுதலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: தந்தை, தாய் என்பனவும்; முறைமைக்கண் வந்த மகன், மகள் என்பனவும்; தாம் தான் என்பனவும்; நீ நீயிர் என்பனவும் விரவுப்பெயராம் எ-று.

அவை வருமாறு: தந்தை வந்தான், தந்தை வந்தது; தாய் வந்தாள், தாய் வந்தது; சாத்தி மகன் வந்தான்; சாத்தி மகன் வந்தது; சாத்தி மகள் வந்தாள்; சாத்தி மகள் வந்தது; தாம் வந்தார், தாம் வந்தன; தான் வந்தான், தான் வந்தது என. என்னை?

    "பெண்மை முறைப்பெய ராண்மை முறைப்பெயரென்
    றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே." (தொல். பெய. 25)

    "தாமென் கிளவி பன்மைக் குரித்தே (தொல். பெய. 30)
    தானென் கிளவி யொருமைக் குரித்தே" (தொல். பெய. 31)
என்றாராகலின்.

நீ வந்தாய் என்பது ஒருவனையும், ஒருத்தியையும், ஒன்றனையும்; நீயிர் வந்தீர் என்பது பலரையும், பலவற்றையும் விளக்கும். என்னை?

    "நீயிர் நீயென வரூஉங் கிளவி
    பால்தெரி பிலவே யுடன்மொழிப் பொருள" (தொல். பெய. 34)

    "அவற்றுள்,
    "நீயென் கிளவி யொருமைக் குரித்தே (தொல். பெய. 35)

    "ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே." (தொல். பெய. 36)

பிறவும் அன்ன, நீ, நீயிர் என்பன முன்னிலையாகவும், அல்லாதன படர்க்கையாகவுங் கொள்க.
------------------

36. பெயர்கள் திரிந்து வருமாறு

    பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுஓடாம்
    நீராகு நீயிர் எவனென்ப - தோருங்கால்
    என்என்னை என்றாகும் யாமுதற்பேர் ஆமுதலாம்
    அன்ன பொழுதுபோ தாம். (36)

எ - ன்: பழையவாய் நடைபெற்றுவருஞ் சொற்களிற் றிரிந்து நடப்பனவற்றை வழுவல்ல என்று அமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: பெயர் என்னுஞ் சொல் பேர் என்றும், பெயர்த்து என்னுஞ் சொல் பேர்த்து என்றும், ஒடு என்னுஞ் சொல் ஓடு என்றும், நீயிர் என்னுஞ் சொல் நீர் என்றும், எவன் என்னுஞ் சொல் என் என்றும் என்னை என்றும், பொழுது என்னுஞ் சொல் போது என்றும் திரிந்தன; யா முதற் பெயர் ஆ முதலாயும் வரும் எ-று.

அவை வருமாறு: யானை, யாறு, யாமை, யாடு, யார், யார்த்தல் என்பன யா முதல் திரிந்து ஆனை, ஆறு, ஆமை, ஆடு, ஆர்த்தல் என ஆ முதலாயின. இவை வழுவல்ல என்க. பிறவும் அன்ன.

‘ஓரும்' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், காலங்களைப் பற்றித் திரிந்து வருஞ் சொற்களே அன்றித் தோன்றுவனவும், கெடுவனவும், இயல்பாவனவும் உள. அவையாவன: சகர முதலாய சொற்கள் முற்காலத்தின்றிப் பின்பு தோன்றின; அழாஅன், புழாஅன், குயின், வயின் என்பன முற்காலத்து நடந்து இக்காலத்துக் கெட்டன. சோறு, கூறை, பால், பழம் என்பன இயல்பாயின. நிலம், நீர், தீ, வளி, வான் என்பனவும் அது. பிறவும் அன்ன.
-------------

37. மூவகைப் பெயர்க்கும் ஆவதோர் இலக்கணம்

    பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
    ஆங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் - ஓங்கிய
    கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால்
    ஒள்ளிழையாய் தோன்றலும் உண்டு. (37)

எ - ன்: மூன்று பகுதிப் பெயர்க்கும் தோன்றுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: விரவுப் பெயரும், அஃறிணைப் பெயரும், பெயரையும் வினையையும் கொண்டன்றிப் பால் தோன்றா: அஃறிணைப் பெயர் கள்ளொடு வந்தாற் பன்மைப்பால் தோன்றும்; உயர்திணை ஒருமைப் பெயரும் ஒரோவழிக் கள்ளொடு வந்தாற் பன்மைப்பால் தோன்றுவனவும் உள எ-று.

அவை வருமாறு: சாத்தன் என்றால் இன்னபால் என்று அறியலாகாது; அதனை வினை தலைப்பெய்து வந்தான், வந்தது என்றறிக; வினை தலைப்பெய்து அறிந்தவாறு. சாத்தன் - ஒருவன், ஒன்று எனப் பெயர் தலைப்பெய்து அறிந்தவாறு. இனி, வினை தலைப்பெய்தும் பெயர் தலைப்பெய்தும் சாத்தி என்பதையும் இவ்வண்ணமே அறிந்துகொள்க. இவை விரவுப்பெயர்.

இனிப், பசு என்றாற் பால் தோன்றாது; அதனை வினை தலைப்பெய்து வந்தது, வந்தன என ஒருமை பன்மை யறிக. இனிப் பசு - ஒன்று, பல என்று பெயர் தலைப்பெய்தும் அறிக. என்னை?

    " திணையும் பாலுந் தெரியா நின்றுழி
    வினையும் பெயரும் வேற்றுமை விளக்கும்"
என்றாராகலின்.

பசுக்கள், மரங்கள், கற்கள் எனக் கள்ளொடு வந்து அஃறிணைப் பன்மைப்பால் தோன்றின. ஆண், பெண், என்பன உயர்திணை, ஒருமையே யாயினும் ஆண்கள் பெண்கள் என உயர்திணைப் பன்மையாயின. பிறவும் அன்ன. என்னை?

    "கள்ளென் னிறுதி யிருதிணைப் பன்மையுங்
    கொள்ளும் பகர வகரமு மற்றே"
என்றாராகலின்.

தோன்றலும் உண்டு என்ற உம்மையால் தோன்றாமையும் உண்டோ? எனின்; உண்டு. அது உயர்திணையிடத்து அடிகள், முனிகள் எனக்கள்ளொடும் வந்து உயர்திணை ஒருமையாயிற்று.
--------------

38. உயர்திணைப் பெயர்க்கு ஆவது ஓர் இலக்கணம்

    ஆய்ந்த உயர்திணைப்பேர் ஆஓவாஞ் செய்யுளிடை
    ஏய்ந்தநிகழ் காலத் தியல்வினையால் - வாய்ந்த
    உயர்திணைப் பாலொருமை தோன்றும்விர வுப்பேர்
    இயலும் வழக்கி னிடத்து. (38)

எ - ன்: உயர்திணைப் பெயர்க்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: உயர்திணைப் பெயர் செய்யுளிடத்து ஆகாரம் ஓகாரமாய் நடக்கும்; விரவுப்பெயர் நிகழ்காலத்து வினையாற் சொன்னாற் பொதுப்பட்டு நில்லாதே உயர்திணை யொருமை தோன்றுவனவும் உள எ-று.

அவை வருமாறு: வில்லான், வில்லோன், தொடியாள், தொடியோள்; சான்றார், சான்றோர்; என ஆ ஓ ஆனவாறு கண்டு கொள்க. என்னை?

    "ஆவோ வாகும் பெயருமா ருளவே
    யாயிட னறிதல் செய்யு ளுள்ளே" (தொல். பெயர். 41)

என்றாராகலின்.

சாத்தன் உழும், சாத்தி கறக்கும் என்றாற் பாலறிய வாரா; அவை சாத்தன் எழுதும், வாசிக்கும்; சாத்தி சாந்தரைக்கும், பூத்தொடுக்கும் என உயர்திணை யொருமை தோன்றினவாறு கண்டு கொள்க.

    "நிகழூஉ நின்ற பால்வரை கிளவியி
    னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே
    யன்ன மரபின் வினைவயி னான" (தொல். பெயர். 19)
என்றாராகலின்.

பெயர் மரபு முற்றும்
-----

ஆறாவது வினை மரபு


39. வினைச் சொல்லின் பொது இலக்கணம்

    இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்கள் ஏற்றும்
    குறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய்
    முற்றெச்ச மென்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து
    நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து. (39)

என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின்? வினைமரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ? எனின்; வினைச்சொற்களுக்குப் பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்னும் காலங்களை ஏற்றுவரும் வினைச்சொல்லாகியும், காலம் விளங்காது நிற்கும் வினைக்குறிப்புச் சொல்லாகியும் உருபேலாத தன்மையவாகியும், வினைமுற்றுச் சொல்லும் வினையெச்சச் சொல்லும் என்று சொல்லப்பட்ட உயர்திணைவினையும் அஃறிணைவினையும் விரவுவினையுமாகித், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தும் நடக்கும் வினைச்சொல் எ-று.
என்னை?

    "வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
    நினையுங் காலைக் காலமொடு தோன்றும்" (தொல். வினை. 1)

    "காலந் தாமே மூன்றென மொழிப" (தொல். வினை. 2)

    "இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா
    வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்
    மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே" (தொல். வினை. 3)

    "குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக்
    காலமொடு வரூஉம் வினைச்சொல் லெல்லாம்
    உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
    ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும்
    அம்மூ வுருபின தோன்ற லாறே" (தொல். வினை. 4)
என்றாராகலின்,
---------------

40.

    அம் ஆம் எம் ஏமுங் கடதறமேல் ஆங்கணைந்த
    உம்மும் உளப்பாட்டுத் தன்மையாம் - தம்மொடு
    புல்லுங் குடுதுறுவும் என்ஏனும் பொற்றொடியாய்
    அல்லும் தனித்தன்மை யாம். (40)

எ-ன்: உளப்பாட்டுத்தன்மையும், தனித்தன்மையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: அம், ஆம், எம், ஏம் என்னும் இறுதி வினைச்சொல்லும், கடதறக்களை ஊர்ந்து வந்த உம்மை இறுதியாகிய வினைச்சொல்லும், தன்னையும் பிறரையும் உளப்படுக்கும் உளப்பாட்டுத் தன்மைச்சொல்லாம்; குடுதுறு என்னும் நான்கும் இறுதியாகிய குற்றியலுகரமும், என், ஏன், அல் என்பன இறுதியாய் வரும் வினைச் சொல்லும் தனித்தன்மையாம் எ-று.

அவை வருமாறு: அம்: உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம்; ஆம்: உண்டாம், உண்ணாநின்றாம், உண்பாம்; எம்; உண்டனெம், உண்ணாநின்றனெம், உண்குவெம்; ஏம்; உண்டேம். உண்ணாநின்றேம், உண்பேம் எனவும்; உம்மொடு வரூஉம் கடதறக்கள்; உண்கும், உண்டும், வருதும், சேறும் எனவும் வருவன, தன்னையும் முன்னின்றாரையும் படர்க்கையாரையும் உளப்படுக்கும் உளப்பாட்டுத் தன்மை என அறிக.

உண்குயான், உண்டுயான், வருதுயான், சேறுயான் எனவும்; என்: உண்டனென் உண்ணாநின்றனென், உண்குவென் எனவும்; ஏன்; உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன் எனவும்; அல்; உண்பல், தின்பல் எனவும் இவை தனித்தன்மை.

கூறுவன் என்று தனித்தன்மை சொன்னாரும் உளராலோ வெனின்; இக்காலத்து அல்வினை, அன்னாய் நடக்கவும் பெறும்; என்னை?

    [1] "அல்வினை அன்ஆய்த் திரியவும் பெறுமே "
உ-ம். கூறுவன் [2] என்றார் அமுதசாகரர்.
-------------
[1]. அல் ஈற்று வினை எதிர்காலத்தில் மாத்திரமே வரும்; அன் ஈற்று வினை முக்காலத்தினும் வரும்; ஆதலின், அதனை அல் ஈற்றின் திரிபு எனல் ஏற்புடையதாகாது.
[ 2.] யாப்பருங்கலக் காரிகை, தற்சிறப்புப் பாயிரம். 1.
-------

41. படர்க்கை வினைமுற்றும் யார், ஒருவர் என்னும் சொற்களும்

    ஆங்குரைத்த அன்ஆனும் அள்ஆளும் அர்ஆர்ப
    பாங்குடைய முப்பாற் படர்க்கையாம் - தேங்குழலாய்
    யார்எனுஞ்சொல் முப்பாற்கும் எய்தும் ஒருவரென்ப
    தோரும் இருபாற் குரித்து. (41)

எ - ன்: உயர்திணைப் படர்க்கை முப்பாலாமாறும், யார் என்னும சொல்லும் ஒருவர் என்னும் சொல்லும் நடைபெறுமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: முன் சொல்லிப் போந்த அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப என்னும் ஈறுடைய வினைச்சொற்கள் உயர்திணை முப்பாற் படர்க்கைக்கும் அடைவே உரிய; யார் என்னும் சொல் அம்முப்பாற்கும் உரித்து; ஒருவர் என்னும் சொல் ஒருவன் ஒருத்தி என்னும் இரண்டு பாற்கும் உரித்து எ-று.

அவை வருமாறு: அன்: உண்டனன், உண்ணாநின்றனன், உண்குவன்; ஆன்: உண்டான், உண்ணாநின்றான், உண்பான்; கரியன், செய்யன், கரியான், செய்யான் எனவும் அன்னும் ஆனும் ஒருவன் படர்க்கையாயின.

இனி, அள்: உண்டனள், உண்ணாநின்றனள், உண்குவள்; ஆள்; உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள்; கரியள் செய்யள், கரியாள் செய்யாள் எனவும் அள்ஆள் ஒருத்திப் படர்க்கையாயின.

அர்: உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர்; ஆர்: உண்டார், உண்ணா நின்றார், உண்பார்; கரியர் செய்யர், கரியார் செய்யார்; உண்ப தின்ப என அர் ஆர் ப பல்லோர் படர்க்கையாயின.

யார் அவன்? யார் அவள்? யார் அவர்? என யார் என்னும் சொல் மூன்று பாற்கும் ஏற்றவாறு கண்டுகொள்க.

    "யாஅ ரென்னும் வினாவின் கிளவி
    அத்திணை மருங்கின் முப்பாற்கு முரி்த்தே" (தொல். வினை. 13)
என்றாராகலின்.

ஒருவனையும் ஒருவர் வந்தா ரென்ப; ஒருத்தியையும் ஒருவர் வந்தா ரென்ப; அதனால் ஒருவர் என்பது இருபாற்கும் உரித்தானவாறு கண்டு கொள்க. என்னை?

    "ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி
    யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை
    தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும்" (தொல். பெய. 36, 37)
என்றாராகலின்.

வினைச்சொல் அதிகாரத்தே பெயர்ச்சொல் ஆராய்ந்தது என்னையோ? எனின், முப்பாற்கும் உரிய சொல்லாய்ந்த அடைவே இருபாற்கும் உரியசொல் ஆராய்ந்தான்; அது

    "ஒப்பின் முடித்த லப்பொரு ளாகும்"
என்னும் தந்திரவுத்தியாற் பெறும் என்றவாறு.

உயர்திணைத் தன்மைவினையைச் சொல்லி முன்னிலைவினையைச் சொல்லாதே படர்க்கைவினையைச் சொல்லியது என்னையோ? எனின், அவை இரண்டு திணைக்கும் விரவுவினை ஆதலாற் போக்கிச் சொல்லுதும்.

படர்க்கை வினைமுற்று
--------------

42.

    சொன்ன அ ஆவத் துடுறுவும் அஃறிணையின்
    பன்மை ஒருமைப் படர்க்கையாம் - பின்னை
    எவன்என் வினாவவ் விருபாற் பொருட்குஞ்
    சிவணுதலாம் தொன்னூற் றெளிவு. (42)

எ - ன்: உயர்திணைத்தன்மையும் படர்க்கையும் உணர்த்தி, அஃறிணைப் படர்க்கைவினை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: சொல்லப்பட்ட அ, ஆ, வ இறுதியாகிய வினைச்சொல்லும், துடுறு இறுதியாகிய வினைச்சொல்லும் அஃறிணைப் பன்மைப் படர்க்கையும், ஒருமைப் படர்க்கையும் ஆம்; எவன் என்னும் சொல் அவ்விருபாற்கும் உரித்து எ-று.

அவை வருமாறு: அ: உண்டன, உண்ணாநின்றன, உண்பன, கரிய, செய்ய; ஆ: உண்ணா, தின்னா; வ: உண்குவ, தின்குவ என அ, ஆ, வக்கள் அஃறிணைப் படர்க்கைப் பன்மை யாயின.

து: உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கரிது, செய்து; று: கூயிற்று, தாயிற்று; டு: குண்டுகட்டு, குறுந்தாட்டு எனத் துறுடுக்கள் அஃறிணை ஒருமைப் படர்க்கையாயின.

எவன் அது, எவன் அவை என எவன் என்னும் வினாஅவ்விருபாற்கும் ஏற்றவாறு கண்டுகொள்க. என்னை?

"அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கும்
ஒக்கு மென்ப வெவனென் வினாவே" (தொல். வினை. 22)
என்றாராகலின்.

முன்னிலை வினைமுற்று
------------------

43.

    மின்னும் இர்ஈரும் விளம்பும் இருதிணையின்
    முன்னிலைப் பன்மைக்கா மொய்குழலாய் - சொன்ன
    ஒருமைக்கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண்சேர்
    பொருஎன் பனவும் புகல். (43)

எ - ன்: உயர்திணை வினையும் அஃறிணை வினையும் உணர்த்திய முறையே விரவுவினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள், இச்சூத்திரம் முன்னிலைப் பன்மையும் முன்னிலையொருமையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: மின், இர், ஈர், இறுதியாய் வரும் வினைச் சொற்கள் இருதிணைக்கு முன்னிலைப் பன்மையாம்; இ, ஐ, ஆய் இறுதியாய் வரும் வினைச்சொற்கள் முன்னிலை ஒருமையாம்: உண், சேர், பொரு என்பனவும் முன்னிலை ஒருமையாம் எ-று.

அவை வருமாறு: மின்: உண்மின், தின்மின் என்றும்; இர்: உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவிர் என்றும், ஈர்: உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர் உன்றும், மின், இர், ஈர் இறுதியாய் வரும் வினைச்சொற்கள் இரண்டு திணைக்கும் முன்னிலைப்பன்மையாயினவாறு கண்டுகொள்க. இ: உண்டி, தின்றி, வருதி, சேறி என்றும்; ஐ: உண்டனை உண்ணாநின்றனை, உண்குவை என்றும்; ஆய்: உண்டாய், உண்ணா நின்றாய், உண்பாய் என்றும்; உண், சேர், பொரு என்றும்; இ, ஐ, ஆய், உண், சேர், பொரு என்பன இருதிணைக்கும் முன்னிலை ஒருமை விரவுவினையாயிற்று. பிறவும் அன்ன.

‘விளம்பு மிருதிணை' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், இருதிணை வினைகளும் பல பொருள்கள் ஏற்று வரும்; என்னை?

    "வினையே செய்வது செயப்படு பொருளே
    நிலனே காலங் கருவி யென்றா
    இன்னதற் கிதுபய னாக வென்னும்
    அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
    யாயெட் டென்ப தொழின்முத னிலையே" (தொல். வேற். மய. 29)
என்றா ராகலின்.

வரலாறு: வனைந்தான் என்புழி, வனைதற்றொழிலும் செய்வானும் செயப்படுபொருளும் செய்யுமிடமும் காலமும் கருவியும் இன்னதற்கு என்றும் இன்னபயனுக்கு என்றும் இவ்வெட்டுப் பொருளும் நடைபெற்றன. இவ் வெட்டிற் சில குறைந்து வருவனவும் உள. என்னை?

"வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும்" (தொல். வேற். மய. 30)
என்றாராகலின், கொடியாடிற்று என்றாற் சில குறைந்தன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
-------

44. வினை எச்சம்

    செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்
    [*] செய்பு செயின்செயற் கென்பனவும் - மொய்குழலாய்
    பின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்
    சொன்முன் வகுத்தோர் துணிவு. (44)
--------
[*] செய்புசெ யின்செ யியர்செ யற்கும் எனவும் பாடம்.

எ - ன்: வினையெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இதுவும் விரவுவினை என்க.)

இ - ள்: செய்து என்றும், செய என்றும், செய்யா என்றும், செய்யிய என்றும், செய்தென என்றும், செய்பு என்றும், செயின் என்றும், செயற்கு என்றும், பின் முன்பான் பாக்கு என்றும் வருவனவும், பிறவும் இருதிணைக்கும் வினையெச்சமாம் எ-று.

‘துணிவு' என்று மிகுத்துச் சொல்லியவதனால், செய்து என்னும் வினையெச்சமும் செய்யா என்னும் வினையெச்சமும் செய்பு என்னும் வினையெச்சமும் முதல்வினை கொண்டன்றி முடியா; ஏனை யெச்சங்கள் வினைமுதலானும் வந்தியையும் வினைநிலையானும் முடியும் எனக் கொள்க.

அவை வருமாறு: செய்து என்னும் எச்சம் உழுது வந்தான், செய்யா என்னும் எச்சம் உண்ணா வந்தான், செய்பு என்னும் எச்சம் உண்குபு வந்தான் இவை வினைமுதல் கொண்டு வந்தன.

அன்றியும், இவை மூன்றும் சினைவினை தோன்றின விடத்துச் சினையொடு முடியாது முதலொடு முடியினும் அமையும்; முதலொடு முடியாது சினையொடு முடியினும் அமையும்.

அவை: கையிற்று வீழ்ந்தது என்பது கையிற்று வீழ்ந்தான் என்றுமாம். கையிறா வீ்ழ்ந்தது என்பது கையிறா வீழ்ந்தான் என்றுமாம். கையிறுபு வீழ்ந்தது என்பது கையிறுபு வீழ்ந்தான் என்றுமாம்.

ஏனை எச்சங்கள் வருமாறு: மழை பெய்தென அறம் பெற்றது; இதற்கு வினைமுதல் மழை என்க, இது வினைமுதல் கொண்டு முடிந்தது. மழை பெய்தென உலகம் ஆர்த்தது; இது பிறவினை கொண்டு முடிந்தது. பிறவும் இம்முடிவு காட்டி முடிக்க. தேடின பின் சென்றான், தேடினமுன் வந்தான், உண்பான் வந்தான், உண்பாக்கு வந்தான் எனப் பின், முன், பான், பாக்கு வந்தவாறு. ‘செய்பாக்கறிந்து' என்றார் பிறரும் எனக் கொள்க.

    "செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
    செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
    அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி"

    "பின்முன் கால்கடை வழியிடத் தென்னு
    மன்ன மரபிற் காலங் கண்ணிய
    வென்ன கிளவியு மவற்றியல் பினவே"

    "அவற்றுள்,
    முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின"

    "அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற்
    சினையொடு முடியா முதலொடு முடியினும்
    வினையோ ரனைய வென்மனார் புலவர்"

    "ஏனை யெச்சம் வினைமுத லானு
    மான்வந் தியையும் வினைநிலை யானுந்
    தாமியன் மருங்கின் முடியு மென்ப" (தொல். வினை. 31-35)

[1]ஒரு வினையெச்சம் மற்றொரு வினையெச்சங் கொண்டு முடிவனவும் உள. அவை, கோழி கூவிப் பொழுது புலர்ந்தது என்னும் செய்தென்னும் எச்சம் கோழி கூவப் பொழுது புலர்ந்தது என்று செய் என்னும் எச்சமாகத் திரித்துச் சொல்லுக. ஞாயிறு பட்டு வந்தான் என்பது ஞாயிறு பட வந்தான் என்று அறிக.

    "உரற்கால் யானை யொடித்துண் டெஞ்திய யா" (குறுந். 232)
    ஒடித்துண்ண என்க என்பதும் அது.

    "வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய" (தொல். எச். 61)

பிறவும் அன்ன.
------------
[1]. ஒரு வினையெச்சம் மற்றொரு வினையெச்சமாகத் திரிந்து நிற்றலும் உண்டு என்பது இதன் கருத்தாம் எனக் கொள்க.
---

45.

    ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
    வேறில்லை யுண்டு வியங்கோளுந் - தேறும்
    இடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும்
    உடனொன்றிச் சேறலும் உண்டு. (45)

எ - ன்: இதுவும் விரவுவினையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: நிலமும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதலும் வினையும் என்னும் ஆறிடத்தும் நடக்கும், செய்யும் செய்த என்னும் பெயரெச்சம் இரண்டும். என்னை?

    "நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
    வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட
    வவ்வறு பொருட்கு மோரன்ன வுரிமைய
    செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே" (தொல். வினை. 37)
என்றாராகலின்.

அன்று, அல்ல, வேறு, இல்லை, உண்டு, வியங்கோள் என்று சொல்லப்பட்ட ஆறும் தன்மை, முன்னிலை, படர்க்கை யென்னும் மூன்றிடத்தும் இருதிணை ஐம்பாலோடு்ம் நடைபெற்றுச் செல்லும் எ-று.

அவற்றுள், செய்யும் என்னும் பெயரெச்சம் வருமாறு: நிலம் - யான் உண்ணும் இல், யாம் உண்ணும் இல், நாம் உண்ணும் இல், நீ உண்ணும் இல், நீயிர் உண்ணும் இல், அவன் உண்ணும் இல், அவள் உண்ணும் இல், அவர் உண்ணும் இல், அஃது உண்ணும் இல், அவை உண்ணும் இல் எனவும்;

பொருள் - யான் செய்யும் பொருள், யாம் செய்யும் பொருள், நாம் செய்யும் பொருள், நீ செய்யும் பொருள், நீயிர் செய்யும் பொருள், அவன் செய்யும் பொருள், அவள் செய்யும் பொருள், அவர் செய்யும் பொருள், அது செய்யும் பொருள், அவை செய்யும் பொருள், எனவும்:

காலம் - யான் வருங் காலை, யாம் வருங் காலை, நாம் வருங் காலை, நீ வருங் காலை, நீயிர் வருங் காலை, அவன் வருங் காலை, அவள் வருங் காலை, அவர் வருங் காலை, அது வருங் காலை, அவை வருங் காலை எனவும்;

கருவி - யான் எறியுங் கல், யாம் எறியுங் கல், நாம் எறியுங் கல், நீ எறியுங் கல், நீயிர் எறியுங் கல், அவன் எறியுங் கல், அவள் எறியுங் கல், அவர் எறியுங் கல், அஃது எறியுங் கல், அவை எறியுங் கல், எனவும்;

வினை முதல் - உண்ணும் யான், உண்ணும் யாம், உண்ணும் நாம், உண்ணும் நீ, உண்ணும் நீயிர், உண்ணும் அவன், உண்ணும் அவள், உண்ணும் அவர், உண்ணும் அது, உண்ணும் அவை எனவும்;

வினை - யான் உண்ணும் ஊண், யாம் உண்ணும் ஊண், நாம் உண்ணும் ஊண், நீ உண்ணும் ஊண், நீயிர் உண்ணும் ஊண், அவன் உண்ணும் ஊண், அவள் உண்ணும் ஊண், அவர் உண்ணும் ஊண், அஃது உண்ணும் ஊண், அவை உண்ணும் ஊண் எனவும் இவை அறுபதும் செய்யும் என்னும் பெயரெச்சம்.

இனிச், செய்த என்னும் பெயரெச்சம் வருமாறு: நிலம் - யான் உண்ட இல், யாம் உண்ட இல், நாம் உண்ட இல், நீ உண்ட இல், நீயிர் உண்ட இல், அவன் உண்ட இல், அவள் உண்ட இல், அவர் உண்ட இல், அஃது உண்ட இல், அவை உண்ட இல் எனவும்;

பொருள் - யான் செய்த பொருள், யாம் செய்த பொருள், நாம் செய்த பொருள், நீ செய்த பொருள், நீயிர் செய்த பொருள், அவன் செய்த பொருள், அவள் செய்த பொருள், அவர் செய்த பொருள், அது செய்த பொருள், அவை செய்த பொருள் எனவும்;

காலம் - யான் வந்த காலை, யாம் வந்த காலை, நாம் வந்த காலை, நீ வந்த காலை, நீயிர் வந்த காலை, அவன் வந்த காலை, அவள் வந்த காலை, அவர் வந்த காலை, அது வந்த காலை, அவை வந்த காலை, எனவும்;

கருவி - யான் எறிந்த கல், யாம் எறிந்த கல், நாம் எறிந்த கல், நீ எறிந்த கல், நீயிர் எறிந்த கல், அவன் எறிந்த கல், அவர் எறிந்த கல், அஃது எறிந்த கல், அவை எறிந்த கல் எனவும்;

வினை முதல் - உண்ட யான், உண்ட யாம், உண்ட நாம், உண்ட நீ, உண்ட நீயிர், உண்ட அவன், உண்ட அவள், உண்ட அவர், உண்ட அது, உண்ட அவை எனவும்;

வினை - யான் உண்ட ஊண், யாம் உண்ட ஊண், நாம் உண்ட ஊண், நீ உண்ட ஊண், நீயிர் உண்ட ஊண், அவன் உண்ட ஊண், அவள் உண்ட ஊண், அஃது உண்ட ஊண், அவை உண்ட ஊண் எனவும் இவை அறுபதும் செய்த என்னும் பெயரெச்சம்.

இனி வினைக்குறிப்பு வருமாறு: யான் அன்று, யாம் அன்று, நாம் அன்று, நீ அன்று, நீயிர் அன்று, அவன் அன்று, அவள் அன்று, அவர் அன்று, அஃது அன்று, அவை அன்று எனவும்;

யான் அல்ல, யாம் அல்ல, நாம் அல்ல, நீ அல்ல, நீயிர் அல்ல, அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அஃது அல்ல, அவை அல்ல, எனவும்;

யான் வேறு, யாம் வேறு, நாம் வேறு, நீ வேறு, நீயிர் வேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு எனவும்;

யான் இல்லை, யாம் இல்லை, நாம் இல்லை, நீ இல்லை, நீயிர் இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அஃது இல்லை, அவை இல்லை, எனவும்;

யான் உண்டு, யாம் உண்டு, நாம் உண்டு, நீ உண்டு, நீயிர் உண்டு, அவன் உண்டு, அவள் உண்டு, அவர் உண்டு, அஃது உண்டு, அவை உண்டு, எனவும்;

வியங்கோள் - யான் செல்க, யாம் செல்க, நாம் செல்க, நீ செல்க, நீயிர் செல்க, அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க, எனவும் இவை தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தும் இருதிணை ஐம்பாலினும் சென்றவாறு கண்டுகொள்க.

‘உடனொன்றிச் சேறலு முண்டு' என்றது என்னை? செல்லாமையும் உண்டோ? எனின்; உண்டு. அவை யாவையோ? எனின், நிகழ்காலத்துச் செய்யும் என்னும் சொல் [*] பல்லோர் படர்க்கையினும் முன்னிலயினும் தன்மயினும் செல்லா; ஒழிந்த ஒருவன் ஒருத்தி ஒன்று பல என்னும் பொருள்கண் மற் செல்லும் அத்ண என்றவாறு. என்ன?
------
[*] ஈண்டு நிகழ் காலத்துச் செய்யும் என்னும் சொல் என்றது செய்யும் வினைமுற்றை என்று கொள்க. எச்சங்களின் ஈறுகள் திணை, பால், இடங்களைக் காட்டுவன அல்ல; ஆகலின், அவை யாவும் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவேயாம் என்று உணர்க. நன்னூல் வினையியலில் உள்ள பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற் செல்லா தாகும் செய்யுமென் முற்றே என்னும் சூத்திரத்தையும் ஈண்டு நோக்குக.
------

    "பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
    யவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச்
    செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா" (தொல். வினை. 30)
என்பதாகலின்

அவை வருமாறு: அவன் உண்ணும், அவள் உண்ணும், அஃது உண்ணும், அவை உண்ணும் எனக் கொள்க. அன்றி அவர் உண்ணும், நீ உண்ணும், யான் உண்ணும் என்றால், ஆகாது எனக் கொள்க. பிறவும் அன்ன.
----------------

46. பெயரெச்ச வினையெச்சங்களின் சிறப்பிலக்கணம்

    சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாம்அடுக்கித்
    தோற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் - ஏற்றபொருள்
    குன்றாச் சிலசொல் லிடைவந்து கூடியுடன்
    நின்றாதல் மெய்ந்நூல் நெறி. (46)

எ - ன்: பெயரெச்சத்திற்கும் வினையெச்சத்திற்கும் எய்துவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: பெயரெச்சமும் வினையெச்சமும் ஒரு சொல்லின்பின் முற்றாதே பலசொல் உடன் அடுக்கி வந்து முற்றவும் பெறும்; அவை இரண்டும் எதிர் மறுத்துச் சொன்னாலும் பெயரெச்சமும் வினையெச்சமுமாந் தன்மை திரியாது தமக்கேற்ற சொல் இடை வந்து நிற்க முடியவும் பெறும் எ-று.

‘கூடியுட னின்றாதல்' என்பதனால் பொருத்தமுடைய சொல் இடைநிற்கப் பெறும்; அல்லாதன பெறா எனக் கொள்க.

அவை வருமாறு:
    "மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத்
    தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி
    யோவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப
    தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே."
    (சீவக சிந்தாமணி, கடவுள் வாழ்த்து)
என்றும்,

‘புரைதீரா மன்னா விளமை' [*]என்றும் இவை பெயரெச்சம் உடன் அடுக்கி வந்து முடிந்தன.
-------
[*] நாலடியார் செ. 11.
-------

    "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
    ஒண்டொடி கண்ணே யுள. " (குறள், 1101)
என இது வினையெச்சம் உடனடுக்கி வந்து முடிந்தது. என்னை?

    "வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
    பலபல வடுக்கினு முற்றுமொழிப் படிய"
என்றாராகலின்.

உண்ணாத சாத்தன், உறங்காத வில்லி என எதிர்மறுத்த விடத்தும் பெயரெச்சமாந் தன்மை திரியாதவாறு கண்டுகொள்க.

உண்ணாது உறங்கினான், ஓதாது உணர்ந்தான் என்பன எதிர் மறுத்துச் சொன்ன விடத்தும் வினையெச்சமாந் தன்மை திரியாதவாறு அடைவே கண்டுகொள்க.

    "பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
    எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா" (தொல். வினை. 39)

இனி, எச்சங்களிடையே சில சொல் நின்று முடியுமாறு: அடுஞ் செந்நெற் சோறு, அட்ட செந்நெற்சோறு; இவை பொருத்தமுடையனவாய் வருதலாலே செந்நெல் என்ற சொல் இடைநின்ற பெயரெச்சம்.

    "உப்பின்று புற்கை யுண்கமாதோ கொற்கை யானே"
இது பொருத்த முடைத்தாய் வருதலாற் ‘புற்கை' என்னும் சொல் இடைநின்ற வினையெச்சம்.

    "தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பின்
    எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்" (தொல். வினை. 40)

இனிப் பொருத்த மில்லாதன களையுமாறு: வல்லம் எறிந்த நல விளங்கோசர் மகன் பெருவழுதி என்றால் வல்லம் எறிதல் பெருவழுதிமேற் செல்லாமையின் நல்லிளங் கோசரை இடை நிறுவற்க. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
---------------

47. உயர்திணைக் குறிப்புவினை முற்றுக்கள்

    நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
    கடியன் மகத்தன் கரியன் - தொடியனென
    ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின்
    நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு. (47)

எ - ன்: உயர்திணை வினைக்குறிப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: அவை ஆண்பாலில் ஒட்டினபடியே பெண்பாலினும், பன்மைப் பாலினும் செலுத்த உயர்திணை வினைக்குறிப்பாம் எ-று.

அவை வருமாறு: நெடியன், நெடியள், நெடியர், உடையன், உடையள், உடையர்; நிலத்தன், நிலத்தள், நிலத்தர்; இளையன், இளையள், இளையர்; கடியன், கடியள், கடியர்; மகத்தன், மகத்தள், மகத்தர்; கரியன், கரியள், கரியர்; தொடியன், தொடியள், தொடியர் என்பன உயர்திணை வினைக்குறிப்பு. பிறவும் அன்ன.
-------------------

48. அஃறிணைக் குறிப்புவினை முற்றுக்கள்

    கரிதரிது தீது கடிது நெடிது
    பெரிதுடைத்து வெய்து பிறிது - பரிதென்ப
    ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின்
    மேய வினைக்குறிப்பா மி்க்கு. (48)

எ - ன்: அஃறிணை வினைக்குறிப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: இச் சொல்லப்பட்டவை அஃறிணை வினைக்குறிப்பாம் எ-று.

அவை வருமாறு: கரிது, கரிய; அரிது, அரிய; தீது, தீய; கடிது, கடிய; நெடிது, நெடிய; பெரிது, பெரிய; உடைத்து, உடைய; வெய்து, வெய்ய; பிறிது, பிற; இவையும் பிறவும் அஃறிணை வினைக்குறிப்பாம்.
---------

49. சில வினையெச்சங்களின் முடிபும், சிலசொற்கள் செய்யுளில் ஈறுதிரிதலும், எண்கள் தொகை பெறுதலும்

    சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்
    அன்றிஆ ஓவாகி ஆய்ஓய் - நின்றனவு
    மொய்குழலாய் முன்னிலைமுன் ஈ ஏயும் எண்தொகையும்
    எய்துங் கடப்பாட் டின. (49)

எ - ன்: வினைச்சொல் ஒழிவும், எண்சொல் ஒழிவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: பன்மைச் சினைவினை சினையோடு முடியாது முதலோடு முடியவும் பெறும்; உயர்திணை முப்பாற்கும் ஈறான ஆனும், ஆளும், ஆரும், விரவுவினைக் கீறான ஆயும், இவை ஓவும் ஓயும் ஆய்வரப் பெறும்; முன்னிலை முன்னர் ஈகார ஏகாரங்கள் வினைப்படுத்துச் சொல்லும் பொழுது இடைச்சொல்லாய் நிற்கவும் பெறும்; சொல்லப்பட்ட எண்கள் எல்லாம் தொகை பெற்று முடியவும் பெறும். எ-று.

அவை வருமாறு: கண் ணொந்தன, முலை வீங்கின எனற் பாலவை, கண்ணொந்தாள், முலை வீங்கினாள் என்றுமாம்; மூக்கு நன்று, கொப்பூழ் நன்று எனற்பாலவை, மூக்கு நல்லன், கொப்பூழ் நல்லன் என்றுமாம். என்னை?

    "கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
    பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
    பன்மை கூறுங் கடப்பா டிலவே
    தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே" (தொல். கிளவி. 62)
என்பவாகலின்.

உண்டான், உண்டாள், உண்டார், உண்டாய் என்பன உண்டோன், உண்டோள், உண்டோர், உண்டோய் என்றுமாம்; இவை செய்யுளிடத்தன்றி ஆகா என்றறிக. என்னை?

    "பாலறி மரபி னம்மூ வீற்றும்
    ஆவோ வாகுஞ் செய்யு ளுள்ளே" (தொல். வினை. 14)
    "ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும்" (தொல். வினை.15)
என்பவாகலின்.

சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே எனச் செல் என்பது சென்றீ என ஈகார இடைச்சொன் மிக்கது. அட்டிலோலை தொட்டனை நின்மே [*]என நில் என்பது நின்மே என ஏகார விடைச்சொன் மிக்கது.

    "முன்னிலை முன்ன ரீயு மேயு
    மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே" (தொல். எச்ச. 55)
என்றாராகலின்.

எண்டொகை பெறுதலாவது: என என்றும், என்று என்றும், ஒடு என்றும் தொகை யிடுதல்.

    "என்று மெனவு மொடுவுந் தோன்றி
    யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே" (தொல். இடை. 46)

அவை வருமாறு:

    ‘கண்ணிமை கைந்நொடி யெனவே'
இஃது என என்று தொகை பெற்றது.

    "குன்று கூதிர் பண்பு தோழி
    விளி யிசை முத்துற ழென்றிவை யெல்லாந்
    தெளிய வந்த செந்துறைச் செந்துறை"
இஃது என்று எனத் தொகை பெற்றது.

    ‘நிலனே நீரே தீயே வளியே,
    யாகா யத்தொ டைந்தும் பூதம்'
இதனுள் ஒடு எனத் தொகை பெற்றது. [+]

இரண்டு பெயரெச்சமும், எட்டு வினையெச்சமும் ஒழித்து ஒழிந்த வினைச்சொற்கள் எல்லாம் வினைமுற்றுச்சொல் என்றறிக.

வினைமுற்றுச் சொற்களும் பெயரெச்சச் சொற்கள் போலப் பெயர்கொண்டு முடியவும் பெறும்.
--------
[*] நற்றிணை, செ.300. அடி 12.
[+] யாப்பருங்கலக் காரிகை 9-ஆம் சூத்திர உரையில் காட்டப்பெற்ற மேற்கோள்.

வரலாறு: உண்டான் சாத்தன், சாத்தன் உண்டான் எனப்பெயர் முன்னும் வினை பின்னுங் கொண்டு முடிந்தன; முடிந்தனவே யாயினும் எச்சச்சொல்லாகாது முற்றுச்சொல்லாம். பாலும் திணையும் இடமும் காலமும் தோன்றி நிற்றல் அம் முற்றுச்சொற்குச் சிறப்புடைத்து. என்னை?


    "பாலுந் திணையு மிடத்தொடு விளக்குங்
    காலக் கிளவி முற்றென மொழிப"

    "இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்ற
    சிறப்புடை மரபி னம்முக் காலமுந்
    தன்மை முன்னிலை படர்க்கை யென்னு
    மம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு
    மெய்ம்மை யானு மீரிரண் டாகு
    மவ்வா றென்ப முற்றியன் மொழியே." (தொல். எச்ச. 31)
    "எவ்வயின் வினையு மவ்வயி னிலையும்" (தொல். எச்ச. 32)
    "அவைதாம்,
    தத்தங் கிளவி யடுக்குந வரினு
    மெத்திறத் தானும் பெயர்முடி பினவே" (தொல். எச்ச. 33)
என்பவாகலின்.

‘எய்தும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், வினைச்சொல் உம்மை பெற்று வரவும் பெறும் என்றறிக.

அவை வருமாறு: அறுத்துங் குறைத்துஞ் சுகிர்ந்தும் வகிர்ந்தும் என்றாற் போல்வன எனக்கொள்க. பிறவும் அன்ன.
-------------

50. சொற்கள் அடுக்கி வருமாறு

    இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
    வசையிலா மூன்று வரம்பா - மசைநிலை
    ஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம்பிரியா
    ஏந்திரட்டைச் சொற்கள் இரட்டு. (50)

எ - ன்: ஒரு சொல் அடுக்கி வருமிடம் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: ஒரு சொல் அடுக்கி வருமிடத்து இசை நிறை நான்களவும் அடுக்கி வரப்பெறும்; விரைசொல் மூன்றளவும் அடுக்கி வரப்பெறும். உயர்ச்சி சொல்லுதலாலே இவையிற்றின் இழிந்து வரவும் பெறும்; அசைநிலை இரண்டளவும் அடுக்கி வரப்பெறும்; இரட்டைச் சொற்கள் அவ்விரட்டுதலிற் குறைத்துச் சொல்லப்படா எ-று.

அவை வருமாறு:

    "பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
    பாவீற் றிருந்த புலவிர்காள் பாடுகோ
    ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையர்தங்
    கோவீற் றிருந்த குடை "
இது நான்கு வரம்படுக்கின இசைநிறை.

"இசைப்படு பொருளே நான்குவரம் பாகும்" (தொல். எச். 27)
என்பதாகலின்.

    ‘இதுவே, சிறுபுன்மாலை சிறுபுன்மாலை'
என இரண்டு வரம்படுக்கி வந்தது. கள்ளர் கள்ளர் கள்ளர்! படை படை படை! பாம்பு பாம்பு பாம்பு! தீத் தீத் தீ ! என மூன்று வரம்படுக்கி வந்த விரைசொல்.

    ‘விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும்' (தொல். எச். 28)
என்பதாகலின்.

கள்ளர் கள்ளர், படை படை, பாம்பு பாம்பு, தீத்தீ எனவும் வரும்.

அசைநிலையடுக்கும் ஒரு கட்டுரைத் தொடர்பினல்லது வாரா; கண்டீரே கண்டீரே, கேட்டீரே கேட்டீரே, நன்று நன்று. இவை இரண்டிற் றாழ்ந்து வாரா.

    ‘அசைநிலை யடுக்கே இரண்டுவரம் பாகும்'

திடுதிடென்றது, மொடுமொடென்றது, சரசரென்றது, கொறுகொறுத்தார், மொடுமொடுத்தார் இவை யிரட்டைக் கிளவி.

    "கொறுகொறுத்தா ரென்றொருவர் கூவுங்கா லுள்ளந்
    துடிதுடித்துத் துள்ளி விழும்"
எனச் செய்யுளிடத்து வந்தவாறு. பிறவும் அன்ன.

வினைமரபு முற்றும்
------------

ஏழாவது இடைச்சொல் மரபு


51

    சாரியையாய் ஒன்றல் உருபாதல் தங்குறிப்பில்
    நேரும் பொருளாதல் நின்றசையாய்ப் - போதல்
    வினைச்சொற்கீ றாதல் இசைநிறைத்து மேவல்
    இனைத்தே இடைச்சொல் அளவு. (51)

என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், இடைச்சொன் மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ? எனின், இடைச்சொற்களுக்கெல்லாம் பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: இடைச்சொல்லாவன: சொற் புணருமிடத்துச் சாரியையாய் நின்றும், உருபாய் நின்றும், தத்தங் குறிப்பிற் பொருள் செய்ய நின்றும், அசைச்சொல்லாய் நின்றும், வினைச்சொற்கு ஈறாய் நின்றும், இசைநிறையாய் நின்றும் நடைபெறுவதல்லது தனித்து நடைபெறுவனவல்ல எ-று.

சாரியை யாவன: அல், அத்து, அன், அம், அக்கு, இக்கு, கெழு, நம், தம், ஆன், உம், வற்று, ஞான்று, இன். இற்று. என். எம். நும். தம் என்பன முதலியன.

உருபாவன: ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்பன முதலாயன. தத்தங் குறிப்பிற் பொருள் செய்வன மேலே சொல்லுதும்.

அசைச்சொல்லாவன :யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, மியா, இக, மோ, மதி, இகும் சின் என்பன முதலாயின.

இனி, வினைச்சொற்கு ஈறாவன: அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப என்பன முதலாயின.

இசைநிறையாவன: பாடுகோ பாடுகோ என்பன முதலாயின எனக் கொள்க.

பிறர், இடைச்சொல் வரும்வழி ஏழென்று சொல்ல, இந்நூலுடையார் ஒப்பில் போலியை நீக்கியது என்னையோ எனின்,

    'ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்' (தொல். இடை. 30)

என்றதனால், அஃது அசைநிலையுள்ளே யடங்கும் ஆதலான் இங்குக் கொண்டதில்லை.
-------

52.

    தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்ச முற்றெண்
    அரிதா மெதிர்மறையே யையந் - தருமும்மை
    தேற்றம் வினாவெண் ணெதிர்மறையுந் தேமொழியாய்
    ஈற்றிசையு மேகார மென். (52)

எ - ன்: உம்மை யிடைச்சொல்லும் ஏகார [*] இடைச்சொல்லும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: தெரிநிலையிடத்தும், ஆக்கத்திடத்தும், சிறப்பிடத்தும், எச்சத்திடத்தும், முற்றிடத்தும், எண்ணிடத்தும், எதிர்மறையிடத்தும், ஐயத்திடத்தும் என இவ்வெட்டிடத்தும் உம்மை இடைச்சொல் வரும். தேற்றத்தினும், வினாவினும், எண்ணினும், எதிர்மறையினும், ஈற்றசையினும் ஏகார இடைச்சொல் வரும் எ-று.
--------
[*] முன்னே ஈண்டு ‘எதிர்மறை இடைச்சொல்' என்று இருந்தது. ஈண்டு ஏகார இடைச்சொல்லின் தேற்ற முதலிய பொருள்களுள் எதிர்மறைப் பொருளும் கூறப்பெற்றிருக்கின்றதே அன்றி எதிர்மறை இடைச்சொல் என ஒன்று கூறப்பெற்றிலது. இப்பிழை ஏடு எழுதுவோரால் நேர்ந்ததாகும்.
---------
அவை வருமாறு: நன்றும் அன்று, தீதும் அன்று - இது தெரிநிலையும்மை. நெடியனும் ஆயினான், வலியனும் ஆயினான் - இவை ஆக்கவும்மை. ‘கைக்குமாந் தேவரே தின்னினும் வேம்பு' - இஃது இழிவு சிறப்பும்மை. ‘அமிழ்தினு மாற்ற வினிது' - இஃது உயர்வு சிறப்பும்மை. எச்சவும்மை இரண்டு வகைப்படும். இறந்தது காட்டலும் எதிரது போற்றலும் என. சாத்தனும் வந்தான் என்றால் இவனொத்த பிறனொரு-வனையும் விளக்கினமையின் இறந்தது காட்டும் எச்சவும்மை. சாத்தனும் வருவன் என்றால் பின்னும் ஒருவன் வருவது காட்டுதலால் எதிரது போற்றல் என்னும் எச்சவும்மை. ‘மூவாமுதலா வுலகமொரு மூன்றும்' என்பது முற்றும்மை. நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் என்பன எண்ணும்மை. வருதற்கும் உரியன் என்பது வாராமைக்கும் உரியன் என்னும் பொருள் பட்டமையான் எதிர்மறையும்மை. எட்டானும் பத்தானும் உடையன் என்பது துணியாமை நின்றமையான் ஐயவும்மை.

‘அரிதா மெதிர்மறை' என்ற வியப்பினால், உம்மை அசைநிலை யாகவும் பெறும். அவன் மிகவும் நல்லன், அறவும் தீயன், ‘அவருள்ளும் பொன்னோடை நன்றென்றா ணல்லளே' என்பன அசைநிலை. பிறவும் அன்ன.

இனி, ஏகாரம் வருமாறு: அவனே கொண்டான் என்பது தேற்றேகாரம். நீயே கொண்டாய் என்பது வினா ஏகாரம். நிலனே நீரே தீயே என்பது எண்ணேகாரம். ‘தூற்றாதே தூரவிடல்' - தூற்று என்னும் பொருள் பட்டமையான் எதிர்மறை ஏகாரம். ‘அடியான் மருட்டிய தாழ்குழலே' எனவும், ‘ஏமாங்கதமென் றிசையாற்றிசை போயதுண்டே' எனவும் இவை ஈற்றசை யேகாரம். தேற்றேகாரத்துள்ளே அடங்குமாதலாற் பிரிநிலை யேகாரம் வேண்டிற்றிலர் என்றறிக. இவை ஏகார இடைச்சொல்.

    "தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
    யீற்றிசை யெனவைந் தேகா ரம்மே" (தொல். இடை. 9)

-------------

53. மன், கொன், தில் என்னும் இடைச்சொற்கள்

    காண்டகுமன் னாக்கங் கழிவே யொழியிசைகொன்
    னாண்டறிகா லம்பெருமை யச்சமே - நீண்ட
    பயனின்மை தில்லை பருவம் விழைவு
    நயனி லொழியிசையு நாட்டு. (53)

எ - ன்: மன்னை யிடைச்சொல்லும், கொன்னையிடைச்சொல்லும், தில்லை யிடைச்சொல்லும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: மன் என்னும் இடைச்சொல் ஆக்கத்தினும், கழிவினும், ஒழியிசையினும் வரும்; கொன் என்னும் இடைச்சொல் காலத்தினும், பெருமையினும், அச்சத்தினும், பயனின்மையினும் வரும்; தில் என்னும் இடைச்சொல் பருவத்தினும், விழைவினும், ஒழியிசையினும் வரும் எ-று.

அவை வருமாறு: ‘பண்டுகாடுமன்' என்றது இன்று வயலாயிற்று என்னும் பொருள்பட்டமையான் ஆக்கத்தின்கண் வந்தது. ‘ஈன விழிவினான் வாழ்வேன்மன்' என்பது கழிவின்கண் வந்தது. ‘பண்டு கூரியதோர் வாண்மன்' என்பது இன்று முறிந்தது என்றும், இந் நீர்மைத்தாயிற்று என்றும் பொருள்பட்டமையான் ஒழியிசையாயிற்று; என இவை மன்னை இடைச்சொல்.

‘கொன்வரல் வாடை நன்றெனக் கொண்டேனோ? என்பது; கலியுங் காலம் அறிந்துவந்த வாடை என்றவாறு. இது காலத்தின் கண் வந்தது. ‘கொன்னூர் துஞ்சினும் யான்துஞ் சலனே' என்பது பெருமைக்கண் வந்தது. ‘கொன்முனை யிரவூர் போல' என்பது அச்சத்தின்கண் வந்தது. ‘கொன்னே வழங்கான்' என்பது பயனின் மைக்கண் வந்தது. இவை நான்கும் கொன்னையிடைச்சொல்.

‘பெற்றாங் கறிகதில் லம்மவிவ்வூரே' என்பது பெற்ற பருவத் தறிக என்றது. இது காலம்.

    ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சினமொழி
    யரிவையைப் பெறுகதில் லம்ம யானே'
என்பது விழைவின் கண் வந்தது. ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர' என்பது வந்தால் இன்னது செய்வன் என்னும் பொருள்பட்டமையான் ஒழியிசை யாயிற்று. இவை தில்லை யிடைச்சொல். பிறவும் அன்ன.

‘ஆண்டறி காலம்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், தில்லை இடைச்சொல் விழைவின்கண் வரும்பொழுது தன்மையில் அன்றி வாராது என்றறிக. என்னை?

    "விழைவின் றில்லை தன்னிடத் தியலும்" (தொல். இடை. 12)
என்றா ராகலின்.
-----------------

54. என, என்று என்னும் இடைச்சொற்களும் தத்தம் குறிப்பிற் பொருள்படும் இடைச்சொற்களும்

    வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
    எனஎன் றிரண்டும் இயலும் - நிலையுங்கால்
    மன்றவெனுஞ் சொற்றேற்றந் தஞ்சம் எளிமையாம்
    என்றா எனாவிரண்டும் எண். (54)

எ - ன்: என என்னும் இடைச்சொல்லும், என்று என்னும் இடைச்சொல்லும் தததங் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொல்லும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: வினையினும், பெயரினும், எண்ணினும், இசையினும், குறிப்பினும், பண்பினும் என என் இடைச்சொல்லும், என்று என் இடைச்சொல்லும் வரும். மன்ற என்னும் சொல் தேற்றத்தைச் சொல்லும். தஞ்சம் என்னும் சொல் எளிமையைச் சொல்லும், என்றா, எனா என்னும் இரண்டும் எண்ணைக் காட்டும் எ-று.

அவை வருமாறு: கொள்ளெனக் கொண்டான் என்பது வினை. ஊரெனப்படுவது உறையூர் என்பது பெயர். நிலனென நீரென என்பது எண். ஒல்லென ஒலித்தல் என்பது இசை. விண்ணென விசைத்தல் என்பது குறிப்பு. வெள்ளென விளர்த்தல் என்பது பண்பு. இவை என என்னும் இடைச்சொல். என்று என்பதனையும் இவ்வாறே எங்கும் ஒட்டிக்கொள்க. ‘வல்ல மன்ற' என்பது தேற்றத்தின்கண் வந்தது. ‘முரசுகெழு தாயத் தரசே தஞ்சம்' [1] என்பது எளிமைக்கண் வந்தது.
----------
[1]. புறம். 73.
-------

    "ஈனோரே தஞ்ச மிருபிறப்பி னோர்வெகுளின்
    வானோர்க்கும் வாழ்த லரிது"
என்பது மது.

    "மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்
    தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே" (தொல். இடை. 17, 18)

    " உயிரே மெய்யே யுயிர்மெய் யென்றா
    குறிலே நெடிலே யளபெடை யென்றா
    வன்மை மென்மை யிடைமை யென்றா
    சார்பிற் றோன்றுந் தன்மைய வென்றா" (யாப். விருத். 2)
என என்றா வந்தவாறு.

    "பின்சா ரயல்புடை தேவகை யெனா
    முன்னிடை கடைதலை வலமிட மெனா"
என எனா வந்தவாறு.
------------------

55. ஓகார இடைச்சொல்லும் இவ்வியலுக்குப் புறனடையும்

    சிறப்பும் வினாவுந் தெரிநிலையு மெண்ணும்
    உறப்பின் எதிர்மறையி னோடும் - வெறுத்த
    ஒழியிசையும் ஈற்றசையும் ஓகாரஞ் சொல்லா
    ஒழிபொருளுஞ் சார்த்தி உணர். (55)

எ - ன்: ஓகார விடைச்சொல்லா மாறும், இவ்வோத்துக்குப் புறனடை ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: சிறப்பினும், வினாவினும், தெரிநிலையினும், எண்ணினும், எதிர்மறையினும், ஒழியிசையினும், ஈற்றசையினும் ஓகாரம் வரும். இவ்வோத்தின் முடியாதன முன்பு சொன்ன பகுதிகளிற் சார்த்தி உணர்க எ-று.

அவை வருமாறு:

    "ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
    டாஅ மிதற்பட்டது."
இது சிறப்பு ஓகாரம். என்னை !

    "தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு
    மளவி னெடுத்த விசைய வென்ப" (தொல். இடை. 13)
என்றாராகலின். அவனோ, வல்லனோ என்பது வினா ஓகாரம். நன்றோ அன்று, தீதோ அன்று என்பது தெரிநிலை ஓகாரம்.

    "முத்தனென் கோமுதன் மூர்த்தியென் கோசக மூன்றினுக்கும்
    அத்தனென் கோவென்னை ஆளியென் கோவடி யேனுடைய
    சித்தனென் கோபத்தர் செல்வமென் கோவென்றுந் தேய்வொன்றில்லா
    நித்தனென் கோபிண்டி நீழலின் கோவை நிரந்தரமே"
    (திருநூற்றந்தாதி, 31)

என்றார் அவிரோதி யாழ்வார். இஃது எண் ஓகாரம். யானோ கொண்டேன் என்பது நீயன்றோ என்று பொருள்பட்டமையான் எதிர்மறை ஓகாரம். கொளலோ கொண்டான் என்பது கொண்டுய்யப் போகான் என்னும் பொருள்பட்டமையான் ஒழியிசை ஓகாரம். ‘அப்பொரு ளிம்மையு மறுமையும் பகையாவ தறியாயோ' இஃது ஈற்றசை ஓகாரம்.

புறனடையினான்

    "மியாஇக மோமதி இகுஞ்சின் னென்னு
    மாவயி னாறு முன்னிலை யசைச்சொல்"
என்பனவுங் கொள்க. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. அவற்றுட் சில வருமாறு: கேண்மியா, சென்மியா என்பன மியா என்னும் இடைச்சொல். ‘தண்டுறை யூரயாங் கண்டிக' என்பது இக என்னும் இடைச்சொல். ‘கண்டது மொழிமோ?' என்பது மோ என்னும் இடைச்சொல். ‘சென்மதி பெரும' என்பது மதி என்னும் இடைச்சொல். கண்டிகும் யாம் என்பது இகும் என்னும் இடைச் சொல். ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்' என்பது சின் என்னும் இடைச்சொல். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

இடைச்சொன் மரபு முற்றும்.
-----------

எட்டாவது உரிச்சொல் மரபு


56. உரிச்சொல்லின் பொது இலக்கணம்

    ஒண்பேர் வினையோடுந் தோன்றி உரிச்சொலிசை
    பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்
    பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்
    பலபொருட் கேற்றவும் பட்டு. (56)

என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? வெனின், உரிச்சொன் மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ? எனின், உரிச்சொற்குப் பொதுஇலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: உரிச்சொற்கள் பெயரொடும் வினையொடும் சேர்ந்து, இசையும் குறிப்பும் பண்பும் பற்றிப் பல சொல் ஒருபொருட்கு உரித்தாயும் ஒரு சொல் பல பொருட்கு உரித்தாயும் நடக்கும் எ-று.
---------------

57. உரிச்சொற்களின் பொருள் ஆமாறு

    கம்பலை சும்மை கலிஅழுங்க லார்ப்பரவம்
    நம்பொடு மேவு நசையாகும் - வம்பு
    நிலைஇன்மை பொன்மை நிறம்பசலை என்ப
    விலைநொடை வாளொளியாம் வேறு. (57)

எ - ன்: பலசொல் ஒரு பொருண்மேல் வரும் உரிச்சொல்லும், பிறவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: கம்பலை என்றும், சும்மை என்றும், கலி என்றும், அழுங்கல் என்றும், ஆர்ப்பு என்றும் இவை அரவப் பெயராம்; நம்பு, மேவு இவை நசையாகும்; வம்பு நிலையின்மை யாகும்; பொன்மை என்பது நிறமும், பசலையும் ஆகும்; நொடை விலையாம்; வாள் ஒளியாம் எ-று.

வரலாறு: ஊர்கம்பலை யுடைத்து; தள்ளாத சும்மை மிகும்; மன்றார் கலிக்கச்சி்; அழுங்கன் மூதூர்; ஆர்ப்புடை மூதூர் இவை அரவப் பொருள்.

    "நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி
    மேவுவந் தொழுகினர்"
என இவை நசைப்பொருள்;

வம்ப வடுகர், வம்ப நாரை என்பன நிலையின்மை;

    ‘பசப்பித்துச் சென்றா ருடையையோ வன்ன
    நிறத்தையாற் பீர மலர்'
இது பசலைப்பொருள்.

    ‘மருப்பு நொடைவில் வலித்து மழகளி றெய்ய'
என்பது நொடை விலையாயிற்று.

    ‘வாளார் மதிமுகம்' என்பது ஒளியாயிற்று.

‘என்ப' என்று மிகுத்துச்சொல்லியவதனால், பேம், நாம், உரும், உட்கு என்பன அச்சப்பொருள்; என்னை?

    ‘பேநா முருமென் வருஉங் கிளவி
    யாமுறை மூன்று மச்சப் பொருள' (தொல். உரி. 69)
என்றாராகலின். அவை வருமாறு:

    ‘பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை'
என்றும்,
    ‘நாமவேற் றடக்கை வேந்து'
என்றும்,
‘தீத்தும் முருமு வேலோன்'
என்றும்,
    ‘உட்கும் புனலங் கருதி'
என்றும் வருவன. இவை அச்சப்பொருள. பிறவும் அன்ன.
--------------

58. இதுவும் அது

    விரைவு விளக்க மிகுதி சிறப்பு
    வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
    கரிப்பையங் காப்பச்சந் தோற்றமீ ராறும்
    தெரிக்கிற் கடிச்சொற் றிறம். (58)
    -----

எ - ன்: ஒருசொற் பல பொருண்மேல் வரும் உரிச்சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: விரைவும், விளக்கமும், மிகுதியும், சிறப்பும், வரைவும், புதுமையும், கூர்மையும், கரிப்பும், ஐயமும், காப்பும், அச்சமும் தோற்றமும் என்னும் இப்பன்னிரண்டன் மேலும் கடிசொல் நடக்கும் எ-று.

அவை வருமாறு: ‘கடியார் கலுழி நீந்தி' என்பது விரைவு. ‘கண்ணாடி யன்ன கடிமார்பன்' என்பது விளக்கத்தின்கண் வந்தது. ‘காலெற்றலிற் கடிசிறந் துறுத்தும்' என்பதும், கடுந்தொழில் என்பதும் மிகுதி. கடிமலர் என்பது சிறப்பு. மனை கடிந்தான் என்பது வரைவு, ‘கடிமலர்ப் பிண்டி' என்பது புதுமை. ‘வாள்வாய் கடிது' என்பது கூர்மை. ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி' என்பது கரித்தற்கண் வந்தது.

    ‘போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    றேற்றுதல் யார்க்கும் அரிது' (திருக்குறள், 693)
என்பது ஐயத்தின்கண் வந்தது. கடிநகர் என்பது காப்பு. கடும் பாம்பு என்பது அச்சம். ‘கடுஞ் சூள் தருகுவன்' என்பது தெளிவு.
------------------

59. இதுவும் அது

    வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
    ஐம்மைஎய் யாமை அறியாமை - கொம்மை
    இளமை நளிசெரிவாம் ஏஏற்ற மல்லல்
    வளமை வயம்வலியாம் வந்து. (59)

எ - ன்: இதுவும் உரிச்சொற்கள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: வெம்மை என்பது விருப்பம். வியல் என்பது அகலம். அரி என்பது அழகு. எய்யாமை என்பது அறியாமை. கொம்மை என்பது இளமை. நளி என்பது செறிவு. ஏ என்பது ஏற்றம். மல்லல் என்பது வளம். வயம் என்பது வலியாம் எ-று.

அவை வருமாறு: ‘அடிநிலம் பரந்து முத்தணிந்த வெம்முலை' இது விருப்பு. ‘வியன்ஞாலம்' என்பது அகலம். ‘அரிமயிர் முன்கை' என்பது அழகு. ‘எய்யா விளஞ்சூல்' என்பது அறியாமை. ‘கொம்மை வருமுலை' என்பது இளமை. ‘நளியிரு முந்நீர்' என்பது செறிவு. ‘ஏகலடுக்கத்து' என்பது ஏற்றம். ஏக்கழுத்து என்றால் எண்ணாப்பையும் காட்டும்; ஏற்றம் உடைத் தாதல். ‘மல்லன் மாஞாலம்' இது வளம். வயப்புலி என்பது வலியாம் எனக் கொள்க.

‘வந்து' என்று மிகுத்துச் சொல்லிவதனால், நொசிவு, நுழைவு, நுணங்கும் நுண்மையாம்.

    ‘நொசிவு நுணங்கு நுழைவு நுண்மை' (தொல். உரி. 78)
என்றாராகலின். அவை வருமாறு: ‘நொசிபடு மருங்குல் என்றும், ‘நுழைமருங்குல்' என்றும், ‘நுணங்கிய கேள்வியர்' என்றும் இவை நுண்மைப் பொருளாய் வந்தன. பிறவும் அன்ன.
-------------------

60. இதுவும் அது

    புரைஉயர் பாகும் புனிறீன் றணிமை
    விரைவாங் கதழ்வும் துனைவும் - குரையொலியாஞ்
    சொல்லுங் கமமுந் துவன்றும் நிறைவாகும்
    எல்லும் விளக்கம் எனல். (60)

எ - ன்: இதுவும் உரிச்சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: புரை உயர்வு; புனிறு ஈன்றணிமை; துனைவும் கதழ்வும் விரைவு; குரை ஒலி; கமமும் துவன்றும் நிறைவு; எல் விளக்கம் எ-று.

அவை வருமாறு: ‘புரைய மன்ற புரையோர் கேண்மை' இஃது உயர்ச்சி. ‘புனி்ற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்' என்பதும், ‘புனிற்றா பாய்ந்த' என்பதும் ஈன்றணிமை. ‘துனைபுன லெக்கரிற் றொக்குடன் குழீஇ' என்பதும், ‘கதழ்பரி நெடுந்தேர்' என்பதும் விரைவு. ‘குரைகடல்' என்பது ஒலி. ‘கமஞ்சூன் மாமழை' என்பதும், ‘ஆரியர் துவன்றிய பேரிசை மூதூர்' என்பதும் நிறைவு. ‘எல்வளை' என்பது விளக்கம்.

‘சொல்லும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், தடவும் கயவும் நளியும் பெருமையைக் காட்டும்; என்னை?

    ‘தடவுங் கயவு நளியும் பெருமை' (தொல். உரி. 24)
என்றாராகலின்.

அவை வருமாறு: தடந்தோள் என்பதும், கயவா யெருமை என்பதும், நளிமலை நாடான் என்பதும் இம் மூன்றும் பெருமை.

    ‘அவற்றுள்
    தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்' (தொல். உரி. 25)
என்றாராகலின்,

அது ‘தடந்தா ணாரை' ‘தடமருப் பெருமை' ‘தடங்கோட் டியாழ்' எனக் கோட்ட முணர்த்துமாறு கண்டுகொள்க.

    ‘கயவென் கிளவி [*] மென்மையுஞ் செய்யும்' (தொல். உரி. 26)
என்றாராகலின்,

அது ‘கயந்தலைக் குழவி' என மென்மை உணர்த்துமாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன.
--------
[*] ‘மென்மையுமாகும்' என்பதும் பாடம்.
--------

உரிச்சொன்மரபு முற்றும்.
--------

ஒன்பதாவது எச்ச மரபு


61. தொகைச்சொற்களின் இலக்கணம்

    வேற்றுமை உம்மை வினைபண் புவமையும்
    தோற்றிய அன்மொழியும் தொக்கவிடத் - தேற்ற
    இருசொல்லும் ஒன்றாம் இலக்கணத்தாற் பல்சொல்
    ஒரு சொல்லாய்ச் சேறலு முண்டு். (61)

என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், எச்சமரபு என்னும் பெயர்த்து; இவ்வோத்தினுள், இத் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ? எனின், தொகைச்சொற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: வேற்றுமையும், உம்மையும், வினையும், பண்பும், உவமையும், அன்மொழியும், தொக்க விடத்து ஒரு சொற்போல நடக்கும்; பல சொல்லுடன் தொக்க விடத்தும் ஒரு சொற்போல் நடக்கும் எ-று.

அவை வருமாறு: நிலங்கடந்தான், பொற்பூண், கருப்புவேலி, வரைவீ ழருவி, யானைக்கோடு, குன்றத்துக்கூகை என வேற்றுமைத் தொகை அடைவே கண்டுகொள்க. உவாப்பதினான்கு என்பது உம்மைத்தொகை; தாழ்குழல், என்பது வினைத்தொகை; வட்டத்தடுக்கு என்பது பண்புத்தொகை; வேய்த்தோள் என்பது உவமத்தொகை; பொற்றெடி என்பது அன்மொழித்தொகை. இவை இருமொழி கூடின தொகை.

‘புலிவிற் கெண்டை' என்பதும் உம்மொழித் தொகை. இவை எல்லாம் ஒரு சொற்போல வேற்றுமை ஏற்றலும், பயனிலை கோடலும் காலம் தோன்றாமையும் கண்டுகொள்க. என்னை?

    "வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே
    வினையின் றொகையே பண்பின் றொகையே
    யும்மைத் தொகையே யன்மொழித் தொகையென்று
    அவ்வா றென்ப தொகைமொழி நிலையே." (தொல். எச். 16)

    ‘எல்லாத் தொகையும் ஒருசொல் நடைப' (தொல். எச். 24)
என்றாராகலின்.
-------------------

62. இதுவும் அது

    உருபுவமை உம்மை விரியின் அடைவே
    உருபுவமை உம்மைத் தொகையா - மொருகாலந்
    தோன்றின் வினைத்தொகையாம் பண்புமிரு பேரொட்டுந்
    தோன்றுமேற் பண்புத் தொகை. (62)

எ - ன்: முன்பு சொல்லிப் போந்த வேற்றுமைத் தொகைக்கும், உவமத் தொகைக்கும் உம்மைத் தொகைக்கும், வினைத் தொகைக்கும், பண்புத் தொகைக்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: [*] உருபு விரியின் உருபுத்தொகையாம்; உவமை விரியின் உவமத்தொகையாம்; உம்மை விரியின் உம்மைத்தொகையாம்; காலந் தோன்ற வினை விரியின் வினைத்தொகையாம்; பண்பு விரியிற் பண்புத்தொகையாம்; இருபெயரொட்டும் பண்புத்தொகை; இத்தொகைகளை அடைவே கண்டுகொள்க.
-----
[*] ஈண்டு விரியின் என்பதற்கு அத்தொடர்கள், உருபு முதலியன விரிதற்கு இடமாய் இருப்பின், என்பது கருத்தாம் என்று கொள்க.
-------

இருபெயரொட்டாவன: சுரிகைப்பத்திரம், புட்டகப் புடைவை, வேழக்கரும்பு, கேழற்பன்றி, பெருமலைச்சிலம்பு, மீமிசை இவை முதலாக வரும் பண்புத்தொகை என்றவாறு. என்னை?

    "வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல"

    "உவமத் தொகையே யுவம வியல"

    "வினையின் றொகுதி காலத் தியலும்"

    "வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென்
    றன்ன பிறவு மதன்குண நுதலி
    யின்ன திதுவென வரூஉ மியற்கை
    யென்ன கிளவியும் பண்பின் றொகையே"

    "இருபெயர் பலபெய ரளவின் பெயரே
    யெண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி
    யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங்
    கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே" (தொல். எச்ச. 17-21)
என்றாராகலின்.
--------------------

63. அன்மொழித்தொகையும் செய்யும் என்னும் சொல்ஈற்றின் முடிபும்

    ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
    ஆன பெயர்தோன்றின் அன்மொழியாம் - மானனையாய்
    செய்யுமெனும் பேரெச்சத் தீற்றின்மிசைச் சில்லுகரம்
    மெய்யொடும்போம் ஒற்றொடும்போம் வேறு. (63)

எ - ன்: அன்மொழித் தொகை, விரியுமாறும், செய்யும் என்னும் பெயரெச்சம் முடியுமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: வேற்றுமைத் தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமத்தொகை இவையிற்றின் இறுதிக்கண் வேறொரு பெயர் தோன்ற வருமாயின் அவை அன்மொழித்தொகையாம். செய்யும் என்னும் பெயரெச்சத்து இறுதியின் உகரம் கெடுதலும், உகர மும்மெய்யும் கெடுதலும், இரண்டினோடுங் கூடி இறுதியின் நின்ற மெய்யும் கெடுதலும் உண்டு எ-று.

அவை வருமாறு: பொற்றொடி என்பது, பொன்னாற் செய்த தொடி பொற்றொடி என்று கிடந்ததாயினும், இத்தொடியினையுடையாள் ஒருத்தியைக் கருதலாலே வேற்றுமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; தகரஞாழல் என்பது உம்மைதொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; திரிதாடி என்பது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; வெள்ளாடை என்பது பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை; வேய்த்தோள் என்பது உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.

இனித் ‘தோழியுங் கலுழ்மே' [*] என்புழி, உகரங் கெட்டது. வாம்புரவி என்பது உகரமும் மெய்யும் கெட்டன, அறிவாள் என்புழி உகரமும் மெய்யும் ஒற்றும் கூடக் கெட்டன. என்னை?

    "அவற்றுள்,
    செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
    மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகர
    மவ்விட னறித லென்மனார் புலவர்" (தொல். வினை. 41)
என்றாராகலின்.
---------
[*] இதில் ‘கலுழ்மே' என்பது செய்யும் என்னும் வினைமுற்று; செய்யும் பெயரெச்சம் அன்று. தொல்காப்பியத்துள் பின் காட்டப்படும் 41 ஆம் கெடும்' என்றே கூறப்பட்டது. அதன் விசேட உரையில் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடும் கெடும். எனவே செய்யும் என்னும் முற்றுச்சொற்கு ஈற்றுமிசை உகரம் மெய்யொடும் கெடும். மெய் ஒழித்தும் கெடும் என்பதாம் என்று கூறினார். ஆதலின், இந்நூலின் உரையாசிரியர், ‘செய்யும் என்னும் பெயர் எச்சத்து இறுதியின் உகரம் கெடுதலும்' என்று உரையிற் கூறியதும் அதற்குத் தோழியும் கலுழ்மே' என உதாரணம் காட்டியதும் ஏற்புடையன அல்ல என்க. நன்னூல் வினையியலில் ‘செய்யுமெ னெச்ச வீற்றுயிர்மெய் சேறலும், செய்யுளு ளும்முந் தாகலு முற்றேல், உயிருமுயிர்மெய்யு மேகலு முளவே' என்னும் சூத்திரத்தையும், அதன் உரையையும் உதாரணங்களையும் ஈண்டு நோக்குக. இந்நூலின் இச்சூத்திரத்தில் ‘செய்யுமெனும் பெயரெச்சத் தீற்றின்மிசைச் சில்லுகரம் மெய்யொடும் போம் ஒற்றொடும் போம் வெறு' என்றதற்குச் செய்யும் என்னும் பெயர் எச்சங்கள் சிலவற்றின் இறுதி்யில் உள்ள உகரம் தான் ஊர்ந்துள்ள ஒற்றொடும் கெடும்: அங்ஙனம் தான் ஊர்ந்துள்ள ஒற்றொடும் கெடுதலே யன்றி ஈற்றில் உள்ள மகரஒற்றொடும் கெடும் என்றவாறு எனப் பொருள் கூறிப் பின், ‘வேறு' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், செய்யும் என்னும் முற்றுச் சொல்லாயின் அதன் ஈற்று மிசை உகரம் மெய்யொடும், மெய் ஒழித்தும் கெடும் என்று பொருள் கூறுதலே ஏற்புடையதாகும் என்க. ‘அரிவாள்' என்பது செய்யும் என்னும் பெயர் எச்சத்தின் ஈற்று மிசை உகரம் தான் ஊர்ந்த மெய்யுடனும் மற்று மகர மெய்யுடனும் கெடுதற்கு உதாரணமாம். இதனை வினைத்தொகை எனக் கோடலே நேரிதாம் என்க.
------

64. தொகைச்சொற்கள் பொருள்படும் வகை

    முன்மொழியும் பின்மொழியு மூண்ட விருமொழியும்
    அன்மொழியும் என்றிவற்றில் ஆம்பொருள்கள் - முன்மொழிதான்
    காலம் இடத்தாற் கருத்தொடுஞ் சேர்த்தறிதல்
    மேலையோர் கண்ட விதி.

எ - ன்: சொல்லப்பட்ட தொகைச் சொற்கள் பொருள்படுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: இரண்டு சொற்கள் கூடின தொகைக்கண் முன்மொழியிலே பொருள் நிற்பனவும், பின்மொழியிலே பொருள் நிற்பனவும், இருமொழியினும் பொருள் நிற்பனவும், இருமொழியினும் பொருள் அன்றி வேறொரு மொழியிலே பொருள் நிற்பனவும் ஆம். முன்மொழிதான் காலமுன்னும் இடமுன்னும் என இரண்டாம் எ-று.

அவை வருமாறு: அரைமா என்புழி, முன்மொழியிலே பொருள் நின்றது; இஃது இடமுன். தேங்காய் என்புழிப் பின்மொழியிலே பொருள் நின்றது; இது காலமுன். இராப்பகல் என்புழி இருமொழியினும் பொருள் நின்றது. காராடை என்புழி வேறொரு மொழியிலே பொருள் நின்றது. பிறவும் அன்ன. என்னை?

    "அவை தாம்,
    முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலு
    மிருமொழி மேலு மொருங்குட னிலையலு
    மம்மொழி நிலையா தன்மொழி நிலையலு
    மந்நான் கென்ப பொருள்நிலை மரபே." (தொல். எச்ச. 23)
என்றாராகலின். (4)
--------------------

65. தொகைச்சொல் இடைச்சொற்களின் ஒழிபு இலக்கணம்

    உலைவில் உயர்திணைமேல் உம்மைத் தொகைதான்
    பலர்சொல் நடைத்தாய்ப் பயிலும் - சிலைநுதலாய்
    முற்றும்மை எச்சப் படுதலுமுண் டாமிடைச்சொல்
    நிற்றலுமுண் டீறு திரிந்து. (65)

எ - ன்: தொகைச் சொல்லினும், இடைச் சொல்லினும் ஒழி புணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: தொகைச்சொல் ஒரு சொல்லாய் நடக்கும் என்றார் ஆயினும், உயர்திணையிடத்து வந்த உம்மைத் தொகை வினைப்படுக்குமிடத்துப் பலரைச் சொல்லும் வாசகத்தாற் சொல்லப்படும். முற்றும்மை எச்சப் பொருள் பெற்று நடக்கவும் பெறும். இடைச்சொற்கள், ஈறுதிரிவனவும் உள எ-று.

வரலாறு: கபிலபரணர் வந்தார் என உம்மைத்தொகை பலர்சொன்னடைத் தானவாறு. ஒருவனை என் காணம்பத்தும் தரவேணும் என்ற விடத்துப் பத்துந் தரமுடியாது என்றால் முற்றும்மையாம். அவற்றுள் சில கொள் என்னும் பொருள் தோன்றுகையால் எச்சவும்மை. மன்னை, தில்லை, கொன்னை என ஈறு திரிந்து வந்தன.

‘உலைவில்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், உரிச்சொல்லும் ஈறு திரிவனவும் உள. அவை - கடி என்பது கடும்புனல், கடுத்தபின் எனத் திரிந்தது; பிறவும் அன்ன.
------------

66.

    இன்னரென முன்னத்தாற் சொல்லுதல் என்றசென்ற
    என்னும் அவையன்றி யிட்டுரைத்தல் - தன்வினையாற்
    செய்யப் படும்பொருளைச் செய்ததெனச் சொல்லுதலும்
    எய்தப் படும்வழக்கிற் கீங்கு. (66)

எ - ன்: வழக்கிடத்துக்காவன சில ஒழிபு கண்டு ஈங்குணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: இத்தன்மைய ரென்று சொற்குறிப்பால் அறிய வருவனவும், என்னாதவற்றை என்றன என்றும் செல்லாதனவற்றைச் சென்றன என்றும் சொல்லுதலும், சிலராற் செய்யப்பட்ட பொருளைத் தான் செய்தது போலச் சொல்லுதலும் வழக்கிற்கு உரிய எ-று.

அவை வருமாறு: வெள்ளோக்கத்தார் என்றால் வெள்ளையோக்கத்தார் என்றவாறு அன்று; கிளையுடையர் என்றவாறு. செஞ்செவியர் என்றாற் சிவந்த செவியர் என்றவாறு அன்று; பொன் பூண்ட செவியர் என்றவாறு. செங்கை என்றால் உபகரித்த கை என்றும், கருங்கை என்றாற் கொன்று வாழுங் கை என்றும் சொல்லுதல்; இவை சொற்குறிப்பால் அறிய வருவன.

கூழ் புள்ளென்றது, வெயிற் சுள்ளென்றது, நீர் தண்என்றது என்பன என்னாதவற்றை என்றனபோற் சொல்லுதல்.

வழி வந்து கிடக்கும், மலைவந்து கிடக்கும் என்பன செல்லாதனவற்றைச் சென்றனபோற் சொல்லுதல்.

திண்ணை மெழுகிற்று, சோறட்டது, கறி பொறித்தது என்பன செய்யப்படும் பொருளைச் செய்ததுபோற் சொல்லுதல்.

இவை வழக்கிற்கு ஆமென்றீர்; ‘கருங்கைக் கானவன் களிற்று நிறத் தழுத்தலின்' என்றும், ‘நள்ளென் றன்றே யாமம்' என்றும் இவை முதலாயின எல்லாம் செய்யுளுள்ளும் வந்தனவாலோ? எனின், அவை வழக்குச் சொல்லாய்ச் செய்யுளுள் வந்தன எனக்கொள்க.

‘எய்தப்படும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், ஒருபாற்கு உரித்தாகச் சொல்லப்பட்டனவேயாயினும், அவை மற்றைப் பால்களுக்கும் உரியவாய் வருவனவும் உள என்றவாறு; என்னை?

    "ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும்
    வருவகை தாமே வழக்கென மொழிய" (தொல். பொருளி. 28)
என்றாராகலின்.

அவை வருமாறு: நஞ்சுண்டான் சாம் என்றால், நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம் என்று கண்டுகொள்க.

    "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்"

இதனுள் மறுத்தானை என்றதாயினும் ஐம்பான் மேலும் ஒட்டிக் கொள்க. பிறவும் அன்ன.
--------

67. செய்யுள் விகாரங்கள்

    மெலித்தல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
    வலித்தலே நீட்டல் வரினும் - ஒலிக்கும்
    வரிவளாய் தொல்குறைச்சொல் வந்திடினும் உண்மை
    தெரிதலாம் கற்றோர் செயல். (67)

எ - ன்: அறுவகைப்பட்ட செய்யுள் விகாரமும், மூன்று வகைப்பட்ட விகாரங்களும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: மெலிக்கும் வழி மெலித்தலும், குறுக்கும் வழிக் குறுக்கலும், விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழித் தொகுத்தலும், வலிக்கும் வழி வலித்தலும், நீட்டும் வழி நீட்டலும் என்னும் அறுவகைப்பட்ட விகாரமும்; தலைக்குறைத்தல், இடைக்குறைத்தல், கடைக்குறைத்தல் என்னும் மூன்று வகைப்பட்ட விகாரமும் செய்யுளகத்து வந்தால், அவை வந்த வகை அறிந்து முடிக்க எ-று.

அவை வருமாறு: குன்றிய லுகரத் திறுதி யாகும் என்பதுமெலித்தல். ‘திருத்தார்நன் றென்னேன் றியேன்' என்பது குறுக்கல். ‘தண்ணந் துறைவன்' என்பது விரித்தல். [1] ‘நீலுண்டுகிலிகை என்பது தொகுத்தல். ‘குறுத்தாட் பூதம்' என்பது வலித்தல். ‘பாசிழை' என்பது நீட்டல். ‘மரையிதழ்' என்பது தலைக்குறைத்தல். ‘ஓதி முது போத்து' என்பது இடைக் குறைத்தல். ‘அகலிரு விசும்பி[2] னாஅல்' என்பது கடைக்குறைத்தல்.
-------------
[1]. இது தொல், சொல். எச்ச இயலில் உள்ள ‘குறைச்சொற் கிளவி குறைக்கும் வழி யறிதல்' என்னும் 57-ஆம் சூத்திரத்தின் உரையில் சேனாவரையராலும், நச்சினார்க்கினிய ராலும் கடைக்குறை விகாரத்திற்கு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றது. தொகுத்தல் விகாரம் பகுபதத்திலேதான் வரும். முதற்குறை முதலிய மூன்றுவிகாரங்களும் பகாப்பதத்தில் வரும். இது பகாப்பதத்தில் வந்ததாகலின், தொகுத்தல் விகாரம் அன்று.

[2]. இதில் ஆரல் என்பது ஆல் என இடைக்குறைக்கப்பெற்ற தாகலின் இடைக்குறை விகாரமே யாம்; கடைக்குறை விகாரம் அன்று; ஆரல் - கார்த்திகை நாள் (செவ்வாயுமாம்). இவை ஏடு எழுதுவோரால் நேர்ந்த பிழைகளாகும்.
-------

‘தொல் குறைச் சொல்' என்றவதனாற், பழையதாக விகாரம் பெற்று வரும் சொற்களல்லது தான் ஒரு சொல்லை விகாரப்படுத்தா தொழிக; விகாரப்படுத்தின் வேறொரு பொருளாம் என்றவாறு. அவை காவிரி என்றால், இதனைத் தலைக்குறைக்கில் விரியாம்; இடைக்குறைத்தால் காரியாம்; கடைக் குறைத்தால் காவியாம்; ஆன்ற பொருள் தெரியா விகாரம் பண்ணற்க என்றவாறு.
------------

68. பொருள்கோள்

    அடிமொழி சுண்ண நிரனிறை விற்பூட்
    டடிமறி யாற்று வரவும் - துடியிடையாய்
    தாப்பிசை தாவின் மொழிமாற் றளைமறி
    பாப்புப் பொருளோடொன் பான். (68)

எ - ன்: ஒன்பது வகைப்பட்ட பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: அடிமொழி மாற்றும், சுண்ணமொழி மாற்றும், நிரனிறைப் பொருள் கோளும், விற்பூட்டுப் பொருள் கோளும், அடிமறி மாற்றுப் பொருள்கோளும், புனல் யாற்று வரவுப் பொருள்கோளும், தாப்பிசைப் பொருள் கோளும், மொழிமாற்றுப் பொருள்கோளும், அளைமறிபாப்புப் பொருள்கோளும் என ஒன்பது பொருள்கோள் ஆம் எ-று.

அவையும் சொல்லின் முடிபாலே பொருள் முடிந்து கிடந்தமையின் இலக்கணஞ் சொல்ல வேண்டிற்றில்லை; என்னை?

    "சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல்"
என்பது தந்திரவுத்தியாகலான்.

அவை வருமாறு:

    "குன்றத்து மேல குவளை குளத்துள
    செங்கொடு வேரி மலர்"
என்பதனைக் குன்றத்து மேல செங்கோடு வேரிமலர் என்றும், குளத்துள குவளை என்றும் அடிதோறும் மொழிமாற்றிக் கொண்டமையான் அடிமொழி மாற்று.

    "சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
    யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
    கானக நாடன் சுனை"
என்பதனைச் சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனப் பொருள் கொண்டமையாற் சுண்ண மொழிமாற்று. நிரனிறை என்பது பலவகையாம்; அவற்றுட் சில வருமாறு:

    "கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி
    மதிபவள முத்தமுகஞ் செவ்வாய் - முறுவல்
    பிடிபிணை மஞ்ஞை நடைநோக்கஞ் சாயல்
    வடிவினளே வஞ்சி மகள்"
என்பது பெயர் நிரனிறை.

    "காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
    போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியான்
    மண்ணமிர்த மங்கையர்தோண் மாற்றாரை யேற்றார்க்கு
    நுண்ணிய வாய பொருள்"
இது வினைப்பெயர் நிரனிறை.

    "ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும்
    பாடகமு மூரகமும் பஞ்சரமா - நீடியமால்
    நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ
    மன்றார் கலிக்கச்சி மாண்பு."
இது பெயர் வினை யெதிர் நிரனிறை.

    "குன்ற வெண்மண லேறி நின்றுநின்
    றின்னங் காண்கம் வம்மோ தோழி
    களிறுங் கந்தும் போல நளிகடற்
    கூம்புங் கலனுந் தோன்றுந்
    தொன்னல மறந்தோர் துறைகெழு நாடே"
இது பெயரொடு பெயரெதிர் நிரனிறை.

    "கூற்றுவனை மன்மதனை யரக்கர் கோவைக்
    கூனிலவைக் குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை
    யேற்றுலகின் புறவுருவ மாளத் தோள்க
    ளிறவெறிப்ப விமையப்பெண் வெருவவேவக்
    காற்றொழிலா னயனத்தால் விரலாற் கற்றைக்
    கதிர்முடியாற் கரதலத்தாற் கணையாற் பின்னும்
    ஊற்றழிய உதைத் தெரிந்து நெரித்துச் சூடி
    யுரித்தெரித்தா னவனெம்மை யுடைய கோவே.
இது முறை நிரனிறை.

    "காமவிதி கண்முக மென்மருங்குல் செய்யவாய்
    தோமில் துகடினி சொல்லமிர்தந் - தேமலர்க்
    காந்தள் குரும்பை கனக மடவாள்கை
    யேந்திளங் கொங்கை யெழில்"
இஃது எழுத்து நிரனிறை.

    "ஆசை யல்குற் பெரியாரை யருளு மிடையுஞ் சிறியாரைக்
    கூசு நுதலும் புருவமுமே குடில மாகி யிருப்பாரை
    வாசக் குழலு மலர்க்கண்ணு மனமுங் கரிய மடவாரைப்
    பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே"

இது மிகை யெண்ணிரனிறை.

    "சாந்துந் தண்டழை யுஞ்சுரர் மங்கையர்க்
    கேந்தி நின்றன விம்மலை யாரமே"
இஃது அளவெண் ணிரனிறை.

    "யானுந் தோழியு மாயமும் ஆடுந் துறைநண்ணித்
    தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்
    றேனும் பாலும் போல்வன சொல்லித் திரிவானேற்
    கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே"
இது குறையெண் ணிரனிறை. பிறவும் அன்ன.

    "திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாதர்
    இறந்து படிற்பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்
    தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக்
    கண்ணாரக் காணக் கதவு "
இது பூட்டுவிற் பொருள்கோள்.

    "மாறாக் காதலர் மலைமறந் தனரே
    யாறாக் கட்பனி வரலா னாவே
    வீறா மென்றோள் வளைநெகி ழும்மே
    கூறாய் தோழி யான்வாழு மாறே".
இஃது அடிமறி மாற்றுப் பொருள்கோள்.

    "அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்
    விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றஞ்
    சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றங்
    கொலைப்பாலுங் குற்றமே யாம்"
இது புனல்யாற்றுப் பொருள்கோள்.

    "உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
    வண்ணாத்தல் செய்யா தளறு."
இது தாப்பிசைப் பொருள்கோள்.

    "தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
    வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி
    அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
    வங்கத்துச் சென்றார் வரின். "
இது மொழிமாற்றுப் பொருள்கோள்.

    "மனைக்கு விளக்கு மடவாண் மடவாள்
    தனக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய
    காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கே
    ஓதிற் புகழ்சா லுணர்வு"
இது விளக்கென்னு மதனை எங்கும் ஒட்டுதலால், அளைமறி பாப்புப் பொருள் கோள். இவையிற்றை விரித்துக் கண்டு கொள்க.
----------------

69. சொற்பொருள் வகை

    சொல்லாற் றெரிதல் குறிப்பினாற் றோன்றுதலென்
    றெல்லாப் பொருளு மிரண்டாகு - மெல்லியலாய்
    தொன்மொழியு மந்திரமுஞ் சொற்பொருள் தோன்றுதலின்
    இன்மையும் உண்மையுமாம் ஈங்கு (69)

எ - ன்: இதுவும் ஒரு பொருள் தெரியு முறைமை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: ஒரு சொல்லைச் சொன்ன மாத்திரத்திலே பொருள் தோன்றியும், குறிப்பினான் அன்றிப் பொருள்தெரியாதனவுமாம்; முது சொல்லும், மந்திரமும் பொருள் உள்ளனவும், இல்லனவுமாய் இருக்கும் எ-று.

அவை வருமாறு: இரும்பு, கரும்பு, கடல், திடல் என்பன சொன்ன மாத்திரத்திலே பொருள் தெரிந்தன. இனிக், கற்கறித்து நன்கட்டாய் எனவும், உண்டற்குக் குறைபாடுடையான், அழகிதாக உண்டேன் எனவும் [1] முதலாயின குறிப்பினாற் பொருள் தெரிந்தன.
-----
[1. ஈண்டு ‘வருகின்ற இவை' என்னும் சொற்கள் இருத்தல் வேண்டும்.
----------

‘ஆற்றிற் கெட்ட கழுதைப் பாக்கம் ஊரிலிருந்த குயவனுக் குப்பாம்' என்றால், இதனிற் பொருளில்லை. என்னை பொரு ளில்லாதவாறு எனின், பொருள்தொடர்மொழி யாயினதுணை யல்லது, பொருள் திரண்ட தின்மையிற், பொருளில் சொல்லாயிற்று. இனிக் கெட்டார்க்கு நட்டாரில்லை என்றும், செல்வர்க்குப் புல்லாரில்லை என்றும் இவை பொருள் பெற வந்தன. ‘திரிக திரிக திரிக சுவாகா' என்பதனிற் பொருளில்லை. ‘கன்று கொண்டு கறவையும் வத்திக்க சுவாகா' என்றது பொருள் உண்டு. பிறவும் அன்ன.
----------------

70. காலத்திலும் எண்ணிலும் வரும் வழுவமைதியும் வழுவும்

    முந்துரைத்த காலங்கண் மூன்று மயங்கிடினும்
    வந்தொருமை பன்மை மயங்கினும் - பைந்தொடியாய்
    சான்றோர் வழக்கினையும் செய்யுளையும் சார்த்தியலின்
    ஆன்ற மரபாம் அது. (70)

எ - ன்: காலங்களும், ஒருமை பன்மையும் வழுவமைத்துக் கொள்வனவும் உளவென்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: கால மூன்றும் தம்முண் மயங்கி வரினும், ஒருமை பன்மை மயங்கி வரினும், சான்றோர் வழக்கும் சான்றோர் செய்யுளும் தழுவுஞ் சொல்லாயிற் பெறும்; அல்லாதன வழு என்று அறிக எ-று.

அவற்றுட் சில வருமாறு: சோறு வேவா நிற்ப, அஃது உண்டு போதற் பொருட்டாக இருந்தோன் ஒருவனைப் புறத்து நின்றான் ஒருவன் இருவரும் போகவேண்டுங் குறையுடைமையின், ‘இன்னு முண்டிலையோ?' என்றால், ‘உண்டேன் உண்டேன்' என்னும்; உண்ணா நின்றானும் உண்டேன் உண்டேன் என்னும்; இவை விரைவின் எதிர்காலமும், நிகழ்காலமும் இறந்தகாலமாயின.

இக்காடு போகிற் கூறை கோட்படும் என்பதனை இக்காடு போகிற் கூறை கோட்பட்டான் என்றால், வராக் காலத்தை இறந்த காலத்திற் சொன்னவாறு.

‘யாம் பண்டு வில்லெய்தது இக்கல்லூரி என்பதனை, யாம் பண்டு வில்லெய்யும் இக்கல்லூரி என்பதும் அமையும்.

‘ஒக்கற் றலைவ ஒருவீர்' எனவும், யாம் எங்களூர் புகுவேன், நீ யுங்களூர் புகுவீர் எனவும், ‘என்னீ ரறியாதீர் போல விவைகூறின் நின்னீர வல்ல நெடுந்தகாய்' எனவும், ‘தச்சனைக் கூவி', ‘எந்திர வூர்தி இயற்றுமி னென்றான்' எனவும் இவை உயர்திணை ஒருமைப் பன்மை மயங்கினவாறு.

‘கடிய மன்றநின் றழங்குரன் முரசம்' எனவும், ‘மண்கணை முழவின் கண்போலாவே' எனவும், இவை அஃறிணை ஒருமைப்பன்மை மயங்கினவாறு கண்டுகொள்க.
-----------------

71. எழுத்தல் கிளவியும், புறனடையும்

    புல்லா எழுத்தின் கிளவிப் பொருள்படினும்
    இல்லா விலக்கணத்த தென்றொழிக - நல்லாய்
    மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியா
    தொழிந்தனவுஞ் சார்த்தி உரை (71)

எ - ன்: எழுத்தில் கிளவி பொருள்படினும் இலக்கண முடிபு அல்ல என்பதனையும், புறன் அடைத்தலையும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்: எழுத்தினாற் சொல்லல் ஆகாத முற்கும், வீளையும் முதலாயின பெயர்க்குறிகள் பொருள்பட நின்ற ஆயினும், இலக்கணம் உடைய அல்ல என ஒழிக்க. முன்பு சொல்லிப் போந்த பல வகைப்பட்ட சொல் ஆராய்ச்சிக் கண்ணே அடக்கி ஒழிந்த சொல்லினையும் உணர்க எ-று.

அவை: கை காட்டல், தலை ஆட்டுதல் முதலாயின ஆராயாதே முற்கும் வீளையும் ஆராயவேண்டிய தென்னை? இவை எழுத்துப் பிறக்கும் தான மாதலாற் கிளவி எனவும் ஆராயவேண்டிற்று; அவை எழுத்து அன்மையிற் சொல்ல முடிந்ததன இல்லை என்றவாறு.

இங்கு ஆராயப்படாத சொற்கள் வழக்கினினுள் வந்தன உளவேல் அவற்றையும் இந்நூலுள் அடங்கும் வாய் அறிந்து அடக்கிச் சொல்லுக என்றவாறு. என்னை?

    "கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்
    கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே" (தொல். வேற். மய. 34)
என்றாராகலின்
------
சொல்லதிகாரம் முற்றும்
ஆக அதிகாரம் இரண்டுக்கு வெண்பா - 97

நேமிநாத மூலமும் உரையும் முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்