உமார் கயாம்
வரலாற்று நாவல்கள்
Back
உமார் கயாம்
வரலாற்று நாவல்
பாவலர் நாரா. நாச்சியப்பன்
தயாரிப்பு: ரவி ராமநாதன்
எழுதியவர்: நாரா. நாச்சியப்பன்
பிரேமாTM பிரசுரம்
59, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024.
தொலைபேசி : 24800325, 24833180,
* * *
Tele Fax: 044-24811755
E-mail : aruram &md2.vsnl.net.in
பிரேமா பிரகரம் - 380
முதற் பதிப்பு: டிசம்பர் 2006
பதிப்புரிமை வாய்ந்தது
Tamil - Umar Kayam - Rs. 78.00
நூல் வெளியிடு விவரணம்
நூலின் பெயர் : உமார் கயாம்
எழுதியவர் : நாரா. நாச்சியப்பன்
பதிப்பாண்டு : முதற் பதிப்பு டிசம்பர் 2006
பொருள் : நாவல்
உரிமை : பதிப்பகத்தாருக்கு
தாள் : 11.6 கி.கி. வெள்ளைத் தாள்
நூலின் அளவு : 1X8 கிரவுன்
பக்கங்கள் : 368
எழுத்து : 10.5 புள்ளி
கட்டு : கார்டுபோர்டு / பர்பெக்ட் பைண்டிங்
வெளியீடு : பிரேமா பிரசுரம் 59, ஆற்காடு சாலை, சென்னை - 24.
கணிப்பொறி வடிவமைப்பு : ஏ.ஆர். எண்டர்பிரைசஸ், சென்னை - 24.
அச்சிட்டோர் : காரிஸ் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 24
விலை : ரூ. 78/
பதிப்புரை....
உலகமகா கவிகளுள் ஒருவரான உமார் கயாமின் இளமைக் கால காதல் வாழ்வை, சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தொடர் கதையாக “காதல்” மாத இதழில் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் (தற்பொழுதைய ஈரான்) பிறந்தவர் உமார் கயாம். பழைமைவாத மதத் தலைவர்களின் பல வகையான எதிர்ப்புகளுக்குமிடையே, ராஜவமிச ஆதரவினால் உமார் கயாம் மேற்கொண்ட வான் மண்டல ஆராய்வுகளும், கணித தெளிவு முறைகளும் பிற்கால வளர்ச்சிகளுக்கு பெரிதும் உதவின. அரசியல் மாற்றங்களினால் அவருடைய வாழ்வு நிலை அவ்வப்பொழுது பாதிப்புக்கு உள்ளாயினும், அவரது நான்கு வரிப் பாடல்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. வாசகர்களின் பேராதரவைப் பெற்ற அந்த வரலாற்று நாவலை இப்பொழுது புத்தகமாக வெளியிடுவதில் பெரிதும் உவகை அடைகின்றோம்.
நன்றி பிரேமா பிரசுரம்
உள்ளடக்கம்
1. புத்தகப் பித்தனிடம் பூங்கொடியின் உள்ளம்
2. காரிருளில் போர் அழைப்பு
3. முக்காட்டுச் சிறைக்குள்ளே மூடி வைத்த கட்டழகி!
4. அறியாமல் சொன்ன ஆபத்தான சோதிடம்!
5. ஆருயிர்த் தோழனின் ஆவி பிரிந்தது!
6. பகைவனுக்கருளும் பண்புள்ள சுல்தான்!
7. அடிமைக்கும் கவலைகள் ஆயிரம் உண்டு!
8. கணிதம் கற்க வந்தவன் ஒற்றனா? திருடனா?
9. எதிலும் ஐயமே; இதயம் குழம்புதே.
10. அதிசயத் திறமைக்கு அத்தாட்சிக் கடிதம்!
11. காத்திருந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது!
12. இடு காட்டின் பக்கம் பூத்துக் குலுங்கிய மணம்!
13. குறிபார்த்த சுல்தான் கொல்லப்பட்டார்!
14. ஆசைக்கனவுகள் யாவும் பலித்தன.
15. உதட்டோரம் மதுவோடவே உளம் நாடும் கவி பாடுவேன்
16. எங்கு போனாளே என்னுயிர்க் காதலி!
17. தேடித் தேடிக் காணாமல் திரும்பி வந்து சேர்ந்தானே!
18. கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்
19. அவமதிக்க வந்தவன் சவமாகிப் போனான்!
20. நள்ளிருளில் ஒருவன் நட்பு வேண்டுமென்றான்!
21. புதிய மதம் பரப்பப் புறப்பட்ட ஒரு கூட்டம்
22. அனாதைகளின் கூட்டத்தில் ஆருயிரின் மாதரசி
23. இதயந்தாங்காத இன்ப வேதனை
24. பேகம் பொற்சித்திரமும் பினமாகிப் போனதுவே
25. எழுதினபடிதான் எதுவும் நடக்கும்!
26. ஆராய்ச்சியில் நேர்ந்த அதிசயத் தவறு
27. பழைய மது! புதிய கிண்ணம்!
28. மரணக்கொடி பறக்குதென்று மத குருக்கள் ஒலமிட்டார்!
29. ஏலத்தில் எடுத்த இசைக் குயில் ஆயிஷா!
30. மாய இரவில் மயக்கும் மோகினி!
31. பாய்ந்தோடும் குதிரையும் பறந்தோடும் செய்தியும்
32. வாளாயுதம் நீதி வழங்கிய காட்சி!
33. திடுக்கிடும் கழுகுக்கூடு
34. கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட புலிகள்!
35. சொர்க்கத்திலே ஒரு சுந்தரி
36. எதற்கும் துணிந்த புது மதத்தலைவன்
37. சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை
38. பாடும் புறா பறந்துவிட்டது!
39. "தப்பி ஓடிய பாதையில்!"
40. “உனக்கும் எனக்கும் ஒத்து வராது!”
41. குத்துக் கத்தியும் சுட்ட ரொட்டியும்
42. செத்தவன் பேசினான்! பேசினவன் செத்தான்!
43. தலையிட்டால் கொலை நடக்கும்!
44. உலகம் சுற்றவில்லை; உமார், உளறாதே!
45. எரியும் நெருப்பைத் தனிப்பது மதுவே!
46. அடிமைப் பெண்ணின் ஆசைத் திட்டம்!
47. தரகன் வந்து கூவுகிறான்
1. புத்தகப் பித்தனிடம் பூங்கொடியின் உள்ளம்
பழைய நிஜாப்பூர் நகரத்தில், பழைய புத்தகக் கடைகள் நிறைந்த ஒரு பஜார். புத்தக வியாபாரிகள் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். வீதியில் பெண்கள் தங்க வாத்துகளைப் போல, தண்ணிர் ஜாடிகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு பழைய புத்தகக் கடையில் ரோஜா மொட்டைப் போல யாஸ்மி உட்கார்ந்திருந்தாள்.
யாஸ்மி ஒரு சின்னப் பெண். வயது பனிரெண்டிருக்கும். தலையில் ஒரு சின்ன முக்காட்டைப் போட்டுக் கொண்டு அவளுடைய தகப்பனாருடைய புத்தகக் கடையில் உட்கார்ந்திருப்பாள்.
அவளுக்கு ஓர் ஏக்கம். வீதியில் போகிற ஒரு பையன் கூடத் தன்னைக் கவனிப்பதில்லையே என்பதுதான் அது. சில சமயம் அவளுக்குத் தன் வீட்டில் உள்ளவர்கள் மேலேயே கோபம் கோபமாக வரும். வீட்டில் ஏதாவது வேலையாயிருந்தால்தான் அவளைப் பற்றி நினைப்பார்கள். இல்லாவிட்டால் கவனிப்பதேயில்லை. தகப்பனாருக்குப் புத்தகங்களும் அவற்றின் விலை மதிப்பும்தான் பெரிது. பெண் பெரிதல்ல.
எல்லோரும் தன்னை அலட்சியப் படுத்துவதற்கு என்ன காரணம்? அவள் அழகாக இல்லையா? இல்லை. அவள் இன்னும் பெரியவள் ஆகவில்லையாம்.
அவள் மட்டும் பெரிய முக்காடாகப் போட்டுக் கொண்டு, பெண்கள் வசிக்கும் அந்தப்புரப் பகுதியிலேயே யிருந்தால் அவளை எட்டிப் பார்க்க எத்தனை பையன்கள் ஆசைப்படுவார்கள். இப்பொழுது அவள் தகப்பனாருடைய புத்தகக் கடையில் இருந்துகொண்டு அவருக்கு, அதையிதை எடுத்துக் கொடுப்பதும், உள்வீட்டுக்கும் கடைக்கும் தூது போவதற்கும் உதவியாக இருந்தாள். சும்மாயிருக்கிற நேரங்களிலே, ஏதாவது துணியை எடுத்துக் கொண்டு பூப்பின்னுவாள். அவளிடம் சாம்பல் நிறமான பூனைக்குட்டி இருந்தது. அதனுடன் விளையாடுவதும் உண்டு.
அவர்களுடைய புத்தகக் கடையில் எல்லாவிதமான பழைய புத்தகங்களும் இருக்கும். அந்த வீதியிலே புத்தக வியாபாரிகள் அதிகம். காரணம், அந்த வீதியின் கோடியில்தான் பள்ளி வாசலும், அதையடுத்து ஒரு பள்ளிக் கூடமும் இருந்தன. பள்ளிக்கூடம் விட்டதும் பையன்கள் கத்திக் கொண்டே ஓடுவார்கள். இது யாஸ்மிக்குப் பிடிக்காது. சில சிறுவர்கள் புத்தகக் கடைக்கு வருவார்கள். அவளுடைய தகப்பனார், புத்தகங்களின் முக்கியமான பகுதிகளை அவர்களுக்குப் படித்துக் காட்டுவார்.
அப்போதெல்லாம் யாஸ்மி அவற்றைக் கவனிப்பாள். ஆனால், புரிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத எவரெவரையோ பற்றியும் அவர்கள் முன்னே தொங்கும் திரையைப் பற்றியும், இரவு நேரத்திலே ஆகாயத்தில் தோன்றும், அதிசய வாத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியது, ஆடவர்களின் வேலையாக இருக்கலாம்.
ஒரு பெண்ணுக்கு அதில் என்ன அக்கறை வேண்டியிருக்கிறது? பெண்ணுக்கு ஆத்மா இல்லையென்று கருதப்படுகிறபொழுது அவள் வாழ்வு முடிந்தபின், பூனையும் குதிரையும் போகிற இடத்திற்குப் போய்ச் சேர வேண்டியது தானே? ஐந்து வேளையும் அயராமல் தொழுகை புரியும் ஆடவர்கள் போகும் இடத்துக்குப் போக முடியுமா?
அப்படி வருகிற பையன்களிலே, வயது வந்த இரண்டு பையன்கள் அடிக்கடி அவர்களுடைய புத்தகக் கடைக்கு வருவதும் ஏதாவது புத்தகங்கள் வாங்குவதும் பழக்கம். அவர்களிலே உயரமாக இருந்தவன் பெயர் ரஹீம்.
ரஹீம்சேடா என்பது அவன் முழுப் பெயர். அவனுடைய தந்தை நிஜாப்பூரிலே ஒரு நிலச்சுவான்தார். ரஹீம் அழகாக இருப்பான். அவனை யாஸ்மிக்குப் பிடித்திருந்தது. ஒரு நாள் ரஹீம் அவர்கள் கடையில் ஒரு புத்தகம் வாங்கினான். அந்த புத்தகத்தின் அட்டையில், ஒரு சுல்தான் படம் போட்டிருந்தது. சுல்தான் குதிரை மீது இருந்தபடி, வாளை வீசி, ஒரு மதவிரோதியான மேலை நாட்டானின் கழுத்தைச் சீவிக் கொண்டிருக்கிறான். அந்தப் படம் ரஹீமுக்கு அதிகம் பிடித்ததாக இருக்க வேண்டும். அந்தப் படத்துக்காகவே அவன் அதை வாங்கியிருக்கவும் கூடும்.
ஆனால், சுல்தான், சண்டை, மத விரோதி போன்றவையெல்லாம் ஆடவர் உலகத்தைச் சேர்ந்த விஷயங்கள். யாஸ்மிக்குப் புரியாதவை. புரிந்தாலும் பயனில்லாதவை.
அவள் நேருக்கு நேரே பார்த்ததெல்லாம் சில சமயங்களில் அந்த வீதி வழியாகப் போகும் ராஜ அமீர்தான்! வெள்ளைக் குதிரையொன்றின் மீது வீரவாளுடன் செல்லும் அமீரைத்தான் அவள் பார்த்திருக்கிறான். அந்த அமீர், ராஜ உடையும், வெல்வெட்டுப் பட்டயமும் அணிந்திருப்பான். அவனைத் தொடர்ந்து, பத்துப் பன்னிரெண்டு துருக்கிய வீரர்கள் தூக்கிப்பிடித்த வாளுடன் செல்வார்கள்.
யாஸ்மி, தன் கணவனாக வருபவனும் அந்த அமீரைப் போல் இருக்கவேண்டுமென்று கனவு கண்டிருக்கிறாள். என்றாவது ஒரு நாள் வீதியிலே செல்லும் இளவரசனான அவன், தன்னைப் பார்த்துத் தன் அழகில் மயங்கித் தன் தகப்பனாரிடம் வந்து பெண் கேட்பான். வெள்ளிக் காசுகளும் ஒளி வீசும் நவரத்தினக் கற்களும் அள்ளி அள்ளித் தன் தகப்பனாருடைய பையில் கொட்டி நிரப்பி விட்டுத் தன்னையும் அந்த அழகான வெள்ளைக் குதிரையிலே தூக்கி வைத்துக் கொண்டு போய்விடுவான்.
ஆற்றங்கரையின் அருகிலே உள்ள அரண்மனையொன்றிலே தன்னைக் கொண்டுபோய் ராணி போல் வைத்திருப்பான். அங்கே தெள்ளிய நீர் தடாகங்கள் இருக்கும். அவற்றிலே வெள்ளை நிற அன்னப் பறவைகள் மிதந்து வரும். வாசலுக்கு வாசல் பலகணிக்குப் பலகணி பட்டுத் திரைச் சீலைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கும். வெள்ளித் தட்டுக்களிலே விதவிதமான பழங்களைக் கொண்டு வரும் வேலைக்காரிகள் அவள் ஆணைக்குக் காத்துக் கிடப்பார்கள்.
வெள்ளைக் குதிரை வீரனான அந்த இளவசரன் உள்ளங் கொள்ளை கொண்ட தன்னையே சுற்றிச் சுற்றி ஓடி வருவான். மற்ற மனைவிகளை மதிக்க மாட்டான். தனக்குப் பிறக்கும் குழந்தைகளையே அதிகமாக நேசிப்பான். இவ்வளவிருந்தும், அவன் சிரிப்பதே கிடையாது. இளவரசர்கள் சிரிப்பதில்லை போலிருக்கிறது! வீதியில் எப்போதாவது போகும் அந்த அமீர் சிரிப்பதேயில்லையே? ஆனால் இந்த ரஹீம் மட்டும் அதிகமாகச் சிரிக்கிறானே...?
ரஹீமை அந்த அமீரோடு யாஸ்மி ஒப்பிட்டுப் பார்த்தாள். ரஹீம் ரஹீமாகவே இருந்தான். அமீர் ஆகவில்லை! இருந்தாலும் ரஹீம் நல்லவன். நல்லவன் மட்டுமல்ல, செல்வக் குடியில் பிறந்தவன். அவனுக்காக ஓடி ஒடி வேலை பார்க்க எத்தனையோ அடிமைகள் இருக்கிறார்கள்.
அவனை யாஸ்மிக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவன் கூட வருகிறானே, ஒரு நண்பன் அவனைக் கண்டால் அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அந்தப் பையன் அவளை ஏறிட்டுப் பார்ப்பதேயிலை. எப்பொழுதும் ஊமை போலவே இருப்பான். எதுவும் பேசுவதேயில்லை. அவன் இப்ரஹீமின் பிள்ளையாம். அவன் ஒரு புத்தகப் புழு. கடுகடுவென்ற முகத்தோடு எப்பொழுது பார்த்தாலும் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பான்.
அவன் ரஹீமோடு வருவான். கடையில் ரஹீமும் அப்பாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த இப்ரஹீமின் பையன் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு இருப்பான். இருட்டிக் கொண்டு வருவதுகூடத் தெரியாது. நன்றாக இருண்டு புத்தகங்களை எல்லாம் மூடி மாலைத் தொழுகைக்குப் புறப்படும் வரையில் படிப்பான். யாஸ்மியை அவன் உற்றுப் பார்ப்பதேயில்லை. வீதியில் நடக்கும்பொழுது, தோள் துண்டு காற்றில் பறந்து கொண்டிருக்கும், தலைப்பாகையை ஒழுங்காகக் கட்டியிருக்கமாட்டான்.
வீதியின் குறுக்கே நடக்கும் போதாவது பார்த்து நடந்து வருவானா? கழுதைகளை உரசிக் கொண்டும் ஒட்டகத்தின் கழுத்துகளுக்குக் கீழே நுழைந்துகொண்டும் அவசர அவசரமாக நடப்பான். அவனும் அவன் ஆடை லட்சணமும் எதுவும் இப்ராஹீமுக்குப் பிடிப்பதில்லை.
இங்கே இப்ராஹீமின் பிள்ளை ஊமைபோல் பேசாமல் இருக்கிறானே பள்ளிக் கூடத்தில் அப்படியில்லையாம். ஆசிரியர்களோடு எப்பொழுதும் தகராறாம். அவர்களைக் கேள்வி கேட்பதும் கிண்டல் செய்வதும்....! ‘உருப்படுகிறவனாகத் தோன்ற வில்லை’ என்று அப்பாவே ஒரு நாள் சொன்னார். இந்த ரஹீம் ஏன்தான் அந்தப் பையனோடு சேர்கிறானோ தெரியவில்லை!
இப்படியாக, யாஸ்மியின் எண்ணத்திலே இப்ராஹீம் மகன் வெறுப்புக் குரியவனாகவும் ரஹீம் விருப்புக்குரியவனாகவும் இருந்து வந்தார்கள். ஆனால் அவள் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படியான நிகழ்ச்சியொன்று நடந்தது.
ஒரு நாள் யாஸ்மி தன்னுடைய ஆசைப் பூனைக்குட்டியைத் தேடிக் கொண்டு திரிந்தாள். அது அவளுக்குத் தெரியாமல் எங்கே ஊர்வலம் போனதோ? வெளியிலே வந்து பார்த்தபொழுது, ஐந்தாறு பையன்கள் ஒரு மரத்தின் மீது கல்லெறிந்து கொண்டிருந்தார்கள். அந்த மரக்கிளையொன்றில் பயந்து நடுங்கி பதுங்கிக் கொண்டிருந்தது, அந்த சாம்பல் வண்ணப் பூனைக்குட்டி. “எரியாதீர்கள்! எரியாதீர்கள்!” என்றுக் கத்திக்கொண்டே ஓடி வந்தாள் யாஸ்மி.
ஆனால் அந்தச் சுட்டிப் பயல்கள் பூனையைக் கொல்லும் வரை நிறுத்தமாட்டார்கள் போலிருந்தது. யாஸ்மி விறுவிறுவென்று மரத்தின் மேல் ஏறினாள். அவள் பூனைக்குட்டியைப் பிடித்துத், தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள். அதன் பிறகுதான் கல்லெறி நின்றது. அந்தப் போக்கிரிகளும் ஓடி விட்டார்கள். பூனைக்குட்டியை அணைத்தபடி யாஸ்மி மெதுவாக ஒவ்வொரு கிளையாக மாறி ஆகக் கீழேயிருந்த கிளைக்கு வந்து சேர்ந்தாள்.
பூனைக் குட்டியையும், வைத்துக் கொண்டு இறங்குவது முடியாத காரியம். குதிக்கலாமென்றாலோ, அந்தக் கிளை மிக உயரமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் யாஸ்மி திருதிருவென விழித்தாள். வீதியில் போகும் யாரும் அவளைக் கவனிக்கவேயில்லை. சிறிது நேரத்தில் கீழேயிருந்து “குதி!” என்ற ஒரு குரல் கேட்டது. ஒரு பையன் இரு கைகளையும் நீட்டிக் கொண்டு மேலே பார்த்து அவளைக் குதிக்கச் சொன்னான்.
அவன் யாரென்று பார்த்தாள். அவன் ரஹீம் கூட வருவானே, இப்ராஹீம் மகன் அவனேதான்! அவன் கையில் குதிக்க அவள் விரும்பவில்லை. “முடியாது” என்று சொல்லித் தலையை ஆட்டி விட்டாள்.
இப்ரஹீமின் பையன் விறுவிறுவென்று மரத்தின் மேல் ஏறினான். அவள் பக்கத்திலே வந்தான். அவளை ஒரு கையில் இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு, மறு கையால் மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு கால்களைத் தளர்த்திக் கீழே தொங்கினான். யாஸ்மியின் நெஞ்சு துடித்தது. அவளுடைய பூனைக்குட்டி கால்களை நீட்டிப் பாதத்தில் புதைந்திருக்கும் நகங்களை வெளிப்படுத்தி அவன் தலைப் பாகையைப் பற்றிக் கொண்டது. அப்படியே தரையில் குதித்தான். யாஸ்மியின் முகம் அவனுடைய தலையில் இடித்தது.
கரிய கண்களிரண்டும் விரிய அந்தக் குறும்புக்காரன் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவளை விடுவித்து விட்டு, “நீயும் உன் பூனைக் குட்டியும், ஆளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டீர்களே!” என்று அவன் சிரித்தான்.
“ஐயோ, கேலிபண்ணாதே!” என்று கூவிக் கொண்டே யாஸ்மி ஒடி ஒளிந்து விட்டாள். அன்று மாலை நேரம் முழுவதும், தன்னைப் பரிவுடன் பிடித்த அந்தக் கையையும் புன்சிரிப்புடன் தன்னைப் பார்த்த அந்தக் கரிய விழிகளையுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.
அன்று முதல் யாஸ்மிக்கு, இப்ராஹீம் மகனைத் தவிர வேறு நினைவேயில்லை! எப்பொழுதும் வீதியிலே பூங்காவனத்தை நோக்கிப் போகும் பிரயாணிகளைப் பார்த்தபடி உட்காரும் அவள், அன்று முதல் பள்ளிக்கூட வாசல் தன் கண்ணுக்குத் தெரியும்படியாகப் புத்தகக் கடையின் முன்பக்கத்திலே வந்து உட்கார்ந்து கொண்டான்.
எப்பொழுது பள்ளிக் கூடம் விட்டுக் கதவு திறப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பாள். விரைந்து நடந்து வரும் பையன்களின் மத்தியிலே, இப்ரஹீமின் மகனின் அந்த அலங்கோலமான உருவம் வந்தவுடனே அவள் உள்ளம் துள்ளிக் குதிக்கும் கன்னஞ் சிவக்கும். நாணத்துடன் திரும்பிக் கொள்வாள். பிறகு கடைக்கண்ணால் திரும்பிப் பார்ப்பாள். நிமிர்ந்து நிற்கும் அந்தக் குறும்புக்காரனுடைய தோற்றத்தையும், உறுதியாகக் கால் வைத்து நடக்கும் அவனுடைய நடையழகையும் வியப்புடன் அவள் பார்த்துக் கொண்டேயிருப்பாள்.
அவனுடைய கரிய உதடுகளும் கண்களும் அவளைக் கண்டதும் விரியும். அவன் அவளைப் பார்த்துப் புன்சிரிப்புக் காட்டும்போது, அவனுடைய கடுகடுப்பான முகத்திலும் ஒருவித மென்மையுண்டாவதை யாஸ்மி கண்டு உள்ளம் பூரிப்பாள். அவன் கவனத்தைத் தன்னிடத்தில் திருப்புவதற்காக அவள் என்னென்னவெல்லாமோ செய்தாள். அழகான ஆடைகளை அணிந்துகொண்டாள். கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கும் புருவத்துக்கும் மைதீட்டிக் கொண்டாள்.
கடையிருகில் அவன் வரும்போது தன் கையிலுள்ள ரோஜாப் பூவை நழுவவிட்டுப் பார்த்தாள். தனக்குத் தெரிந்த பெண்மணிகள் இதற்கு முன்னே, தங்கள் காதலர் கவனத்தைத் திருப்ப என்னென்ன செய்தார்களென்று எண்ணிப் பார்த்து, அதையெல்லாம் தானும் செய்து பார்த்தாள். ஆனால் அவனோ, அவள் நழுவ விட்ட பூவை எடுத்து, அவள் மடியிலே போட்டுவிட்டுப் போய் விடுவான். அவளுக்கோ வெட்கம், பயம், அதிகப் பிரசங்கித்தனமாகச் செய்து விட்டோமே என்ற எண்ணம் எல்லாம் உண்டாகிவிடும்.
யார் கண்ணுக்கும் தெரியாமல் மணிக்கணக்கில் போய் ஒளிந்துகொண்டு விடுவாள். தன் தாயாருடைய வெண்கலக் கண்ணாடியிலே, அடிக்கடி முகம் பார்த்துக் கொண்டு தான் மிக அழகாக இருப்பதாக முடிவு செய்து கொள்ளுவாள். பெரிய பெண்ணாகவும், கவர்ச்சியும், அழகும் பொருந்தியவளாகவும் இருக்கும் தன்னை ஓர் இளவரசி என்றே எண்ணிப்.பல மனிதர்கள் தேடி வருவதாகக் கற்பனை செய்து கொள்வாள்.
வீட்டுப் பெண்மணிகள் மூலையில் உள்ள கட்டிலில் உறங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு தாங்களும் தூங்கி விடுவார்கள். இவளோ தன் பூனைக் குட்டியிடம் தன் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பாள். இப்ராஹீம் மகன் தன்னோடு பேசமாட்டானா என்று ஏக்கமாக இருந்தது அவளுக்கு.
இப்ராஹீமின் பிள்ளை தங்கள், புத்தகக் கடைக்கு வரும்பொழுது அவனுடைய ஒவ்வொரு செய்கையையும், யாஸ்மி, உற்றுக் கவனித்தாள்.
வெளிச்சம் தெரியும் இடமாகத் தேர்ந்து அவன் உட்கார்ந்து கொள்வதும், எப்படிப்பட்ட புத்தகங்களை விருப்பத்தோடு எடுத்துப் படிக்கிறானென்பதும் எப்படி விரல்களால் வரியாகத் தடவிப் படிக்கிறானென்பதும் அவள் கவனித்தாள். அவன் எப்பொழுதும் விரும்பிப் படிக்கும் புத்தகம் இருந்தது.
யாஸ்மி மட்டுமே கடையில் தனியாக இருந்தபோது அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் அதில் பலப் பல படங்கள் இருந்தன. ஆனால் அவை யாவும், வட்டங்களாகவும் கோடுகளாகவும் விசித்திர கட்டங்களாகவும் வெட்டுப்பட்ட கோணங்களாகவும் இருந்தன. அது ஒரு ஷேத் (சேத்)திர கணித புத்தகம். அவள் படித்தறிந்து கொள்ள முடியா விட்டாலும் அதன் அடையாளம் அவளுக்கு நன்றாகத்தெரியும்.
அவள், அதை வேறு பல கையெழுத்துப் பிரதி, புத்தகங்களின் ஊடே மறைத்து வைத்தாள். அன்றைக்கு அவள் மிகக் கவர்ச்சியாகத் தோற்றமளித்தாள். ரஹீமும், இப்ராஹீம் மகனும் உள்ளே, நுழைந்தவுடன், ரஹீம் அவளைப் பார்த்து “யாஸ்மி அடேயப்பா! உன் அழகுக்கு முழு நிலவு ஈடாகுமா? இல்லை அந்த இன்பபுரி இளவரசிதான் இணையாவாளா?” என்று கேட்டான்.
இனிமையான அந்த வருணனையைக் கேட்டதும் யாஸ்மி தன் புருவத்தை உயர்த்தி மலர்ந்த பார்வையால் அவனை நோக்கினாள். “வெட்டும் அந்தப் பார்வையைத் தடுக்கும் கேடயம் என்னிடம் இல்லை. கருணை காட்டு” என்று ரஹீம் சிரித்தான்.
யாஸ்மியும் புன்சிரிப்புக் காட்டினாள். அவளுடைய பார்வை முழுவதும், இப்ராஹீமின் மகன் புத்தகத்தைத் தேடுவதையே கவனித்துக் கொண்டிருந்தது. கையெழுத்துப் பிரதிகளைக் கலைத்துத் தேடுவதுபோல் பாவனை செய்து, யாஸ்மி அந்த சிவப்புப் புத்தகத்தை எடுத்தாள். அப்படி எடுக்கும்போது அதில் ஒரு பக்கம் குறுக்குவாட்டில் கிழிந்து போய் விட்டது. அதே சமயத்தில் அவளுடைய தந்தை உள்ளேயே வந்து கொண்டிருந்தார்.
நல்ல வேளையாக, அது கிழியும் சமயத்தில் அவர் பார்க்கவில்லை. என்றாலும் உள்ளே வந்ததும், புத்தகத்தைப் பார்த்தவர், அது, கிழிந்து போயிருப்பதைக் கவனித்து விட்டார். தன்னைக் கடிந்து கொள்ளப் போகிறாரே என்று யாஸ்மி பயந்து நெஞ்சு படபடக்கத் துடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“நான்தான் தவறுதலாகக் கிழித்து விட்டேன், அதை, நானே வாங்க முடிவுகட்டி விட்டப்படியால் நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. விலை என்ன? என்று கேட்டான் இப்ராஹீம் மகன்
“எவ்வளவு நல்லவன்!” என்று வியந்தது, யாஸ்மியின் இளம் உள்ளம். விளக்கப் படங்களுடன் கூடிய இந்தக், கோண கணிதப் புத்தகத்தை இவன் எப்படி வாங்க முடியும் என்று வியப்படைந்தார். இப்ராஹீம் மகனிடம் அதை வாங்கப் போதுமான பணமில்லை, என்பது அவருக்கு மட்டுமல்ல ரஹீமுக்கும் தெரியும்.
அது மிக விலை உயர்ந்த கையெழுத்துப் பிரதியாகும். எல்லாவிதமான வரைவுப் படங்களும் கூடிய இதுபோன்றப் புத்தகம், இந்த நிஜாப்பூர்ப் புத்தக நிலையத்தில் கூட, இல்லையே என்று பேரம் பேசத் தொடங்கினார் யாஸ்மியின் தந்தை.
ரஹீம், குறுக்கிட்டு, “இந்தப் புத்தகத்தை, நானே விலைகொடுத்து வாங்குகிறேன். இப்ராஹீம் மகனான இந்த என் நண்பன் உமாருக்கு இதை நான் என் அன்புப் பரிசாகக் கொடுக்கப் போகிறேன்” என்றான்.
இப்ராஹீம் மகன் ஆவலுடன் அந்தச் சிவப்புப் புத்தகத்தைத் தன் வலிவான கரங்களால் எடுத்துக் கொண்டான்.
எடுத்துக்கொண்டே “பழைய புத்தகம்தானே கிழவரே, இதுதான் சுல்தான் முகமது தனது தங்கச் சிங்காதனத்தில் வைத்திருந்த புத்தகம் என்று கதையளக்கத் தொடங்கி விடாதீர். நெடுநாட்களுக்கு முன் இறந்து போன நம் மத விரோதியான ஒரு கிரேக்கன் எழுதியது இந்த நூல் என்பதும் பதினான்கு தீனார்கள்(பொன்கள்) தான் பெறும் என்பதும் எங்களுக்குத் தெரியும்” என்றான்.
“வரைவுப்படம் இல்லாமல் வெறும் எழுத்துடன் கூடிய புத்தகமே நீர் சொல்லும் விலையைப் போல் இரண்டு மடங்கு இருக்கும். இதில் நிறைய விளக்கப்படங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் தையலும் கட்டடமும்..” என்று இழுத்தார் யாஸ்மியின் தந்தை.
சுமார் ஒரு மணிநேரம் பேரம் நடந்தது. உமாருக்கு அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்ற ஆவல் இருந்தது. கடைசியில் தன் நண்பன் உமாருக்காக பத்தொன்பது பொன்களும் சில்லறையும் கொடுத்து ரஹீம் அந்தப் புத்தகத்தை வாங்கினான். கிழிந்தது பற்றிய பேச்சுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
கடையை விட்டு வெளியே சென்றவுடன் தன்னுடைய பையில் இருந்த பேனா வைக்கும் அழகான பெட்டியை எடுத்து ரஹீமின் கையில் திணித்து விட்டு உமார் ஓடுவதைக் கவனித்தாள் யாஸ்மி.
நண்பன் எவ்வளவு கூவியழைத்தும் உமார் நிற்கவில்லை!
2. காரிருளில் போர் அழைப்பு
உமாருக்கு அன்று மாலைப் பொழுது, மறக்க முடியாததாகும். அவசர அவசரமாக, ஊற்றுக் கேணிக்குச் சென்று கைகால் கழுவிக் கொண்டு, மாலையுணவை முடித்துக் கொண்டு கூடுதலாக ஒரு விளக்கு வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். அவனுடைய அறை, ஒரு வீட்டு உச்சியில், களிமண்ணால் கட்டப் பெற்றிருந்தது. அது, வெங்காயமும் புல்லும் காயவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இடமாகும்.
அதற்கு வாடகை சில செப்புக் காசுகள்தான். அத்துடன் நட்சத்திரங்களை அங்கிருந்து நன்றாகப் பார்க்க முடியும். இந்த இரண்டையும் எண்ணித்தான் அந்த அறையை வாடகைக்குப் பிடித்திருந்தான் உமார். இரவிலே குளிர்ந்த காற்று வீசும் பொழுது வெங்காயத் தாள்களும், புல் கட்டுகளும் உயிர் வந்தது போல சலசலக்கத் தொடங்கும். படுக்கையில் படுத்தபடியே, கூரைகளுக்கு மேல் உள்ள வானத்தையும், சுல்தானுடைய மேன்மாடச் சிகரத்தையும் உமார் பார்க்க முடியும்.
இன்று காற்றில்லை. அது அவனுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. இரண்டு விளக்குகளையும் ஏற்றிச் சுவரின் இரு பக்கத்துப் படிகளிலும் மாட்டி வைத்து விட்டுக் கோணகணிதப் புத்தகத்தை எடுத்துத் தன் மடியில் வழவழப்பான பலகையின் மேல் வைத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டலானான். பள்ளிக்கூடத்தில் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப படித்ததையே படிப்பதைக் காட்டிலும், இது எவ்வளவோ உயர்ந்த படிப்பாக இருந்தது.
கணிதத்தைப் படிக்கப் படிக்க உமாரின் ஆர்வம் அதிகமாயிற்று. பேனாவும், மையும், தாளும் அவன் கைகளில் ஏறின. அளவுகோலும், வட்டமாக்கியும் ஒரு கோணம் வரைந்தான். அதைப் பல பகுதிகளாகப் பிரித்தான். எண்களும் கோடுகளும் அவன் கைவிரல்களில் நடனமாடின. அவனுடைய மனம் கணக்கில் சுழன்றது. அவன் வேலை செய்த சுவையில், அங்கிருந்த அவனுடைய அறை விளக்குகள், புத்தகம் அத்தனையும் மறைந்து விட்டன.
ஒரு நிமிடம் உமாரின் அமைதி கலைந்தது. ஒரு பழக்கமான குரல் எழுந்தது. இரவு நேரத் தொழுகைக்காக அழைக்கும் குரல் அது. அவன் தொழுகை நடத்த வேண்டும். இந்தப் புத்தகம் மதவிரோதியொருவன் எழுதுயது. இப்படியொரு எண்ணம் அவன் மனத்திலே ஊசலாடியது. எரியும் விளக்குகளைப் பார்த்தான். எதுவும் புரியாமல் ஒரு வினாடி இருந்தான். மறுபடியும் கணக்கு வேலையில் ஆழ்ந்து விட்டான்.
நள்ளிரவுக்குக் கொஞ்சம் நேரம் இருக்கையில் மறுபடியும் அவன் அமைதி கலைந்தது. வீதியில் தடதடவென்று நடமாடும் ஓசை கேட்டது. வெளிச்சங்கள் அங்குமிங்குமாகத் தோன்றின. வீட்டின் உச்சியிலே ஓரத்திலே நின்றபடி கீழே வீதியைக் கவனித்தான்.
கருத்த, தலைப்பாகையணிந்த ஒரு பெரிய உருவத்தைச் சுற்றி ஒரு கூட்டமே திரண்டிருந்தது.
ஒரு இஸ்லாமிய செய்தியறிவிப்போன், அங்கே நின்று கூட்டத்தினரிடம் கூறிக் கொண்டிருந்தான்.
மத நம்பிக்கை உள்ளவர்களே! அமைதியும், இன்பமும் அனுபவிக்க நீங்கள் விரைவிலே, எச்சரிக்கைக்காரர் ஒருவரால் அழைக்கப்படுவீர்கள். நம்பிக்கையில்லாத, மதவிரோதிகளுக்கெதிராக வாள்பிடிக்கும் நாள் வந்ததும் முரசுகள் அதிரும்! உடனே, உங்கள் அமைதியைக் கலைத்துக்கொண்டு மதவிரோதிகளை, வெட்டி வீழ்த்துவதற்கான வீர வாள் பிடிக்க நீங்கள் போர்க்களத்திலே, குதிக்க வேண்டும். காற்று மணலை, அடித்துக் கொண்டு போவது போல, உங்கள் வீரம் எதிர்ப்பை வீழ்த்த வேண்டும். அழைப்பு வரும்! காத்திருங்கள்.
செய்தியறிவிப்போனுடைய குரல் இருட்டைத் துளைத்துக் கொண்டு எழுந்தது. அங்கே கூடியிருந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டு பிரிந்து சென்றார்கள். அவனுடைய பேச்சுத் திறமையை வியந்து கொண்டிருந்த உமாரின் எண்ணத்திலே, இன்னொரு கேள்வி உதயமாகியது. இந்த சுல்தான் எப்பொழுது பார்த்தாலும், “போர் போர்! என்று திரிகிறானே” என்பதுதான் அந்தக் கேள்வி.
செய்தியறிவிப்போனும், “மத நம்பிக்கையுள்ளவர்களே!” என்ற அழைப்பும் மறைந்த பிறகு, உமார் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான். திடீரென்று அவனுக்குக் கொட்டாவி வந்தது. விளக்குகளை அணைத்து விட்டுக் காலையும் கையையும் நீட்டிப் படுத்தான். மறுகணம் அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.
3. முக்காட்டுச் சிறைக்குள்ளே மூடி வைத்த கட்டழகி!
பள்ளி வாசலிலிருந்து புறப்பட்ட வீதியின் மறுகோடியிலே ஒரு பூங்காவனம் இருந்தது. அதில் திராட்சைக் கொடிகள் அடர்ந்து, படர்ந்து கூடாரம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நல்ல நிழல், கொஞ்ச தூரத்தில் வீதி திரும்பும் இடத்திலே ஒரு பெரிய மரமும், நீருற்று ஒன்றும் இருந்தன. இந்த நீர் ஊற்றிலேதான், நிஜாப்பூர் பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். வரும்பொழுது அந்த மரத்தடி நிழலிலே குளு குளுவென்று வீசும் காற்றிலே உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவதும் உண்டு. உமார் இங்கேதான் கால், முகம் கழுவுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் வருவது வழக்கம்.
ஒருநாள் யாஸ்மியின் தாயார் அவளைத் தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்படி அங்கே அனுப்பினாள். ஜாடியில் தண்ணீர் மொண்டு கொண்டு அதைத் தலையிலே தூக்கி வைப்பதற்காக யாஸ்மி முயற்சித்துக் கொண்டிருக்கும் போது உமார் தண்ணீர் குடிப்பதற்காக வந்து சேர்ந்தான். வழக்கத்திற்கு மாறாக அவன் கையில் எந்தவிதமான புத்தகமும் இல்லை. அவன் கூட யாரும் நண்பர்களும் இல்லை. தன்னந்தனியாக வந்திருந்தான்.
தண்ணீர் குடித்தவுடன் உமார் போய் விடுவானோ என்று நினைத்த யாஸ்மி அவனிடம் பேச்சுக்கொடுக்கத் தொடங்கினான்.
“விதண்டாவாதம் பேசுகிறவன் என்று உன்னைப்பற்றி அப்பா சொன்னார். நீ ஏன் இப்படிக் கெட்டுப் போகிறாய்?” என்று யாஸ்மி கேட்டாள்.
திடீரென்று பேசக் கற்றுக் கொண்ட பச்சைக் கிளியொன்றைப் பார்ப்பது போல் உமார் அவளைப் பார்த்தான். யாஸ்மி மேலும் பேசத் தொடங்கினாள். அவனைத் திருத்தி நல்லவழிக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ‘எதற்காக விதண்டாவாதம் பேசி பள்ளிக்கூட ஆசிரியர்களைக் கேலி செய்து கெட்டபெயர் எடுக்க வேண்டும்? பிறரோடு இனிமையாகப் பேசி நல்லவன் என்று பெயரெடுக்கக் கூடாதோ?’ என்று கேட்டுவிட்டு, “உன் வயதென்ன? பள்ளிக் கூடத்தில் படிக்காதபோதும் ரஹீமுடன் சுற்றாமல் இருக்கும்போதும், நீ என்ன செய்வாய்?” என்று கேட்டாள்.
“எனக்குப் பதினேழு வயதாகிறது. என் தந்தை கூடாரமடிப்பவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர். சில சமயம் நான் அவருடைய கடைக்குச் செல்வேன். இப்பொழுது அவர் இறந்துவிட்டார், ரஹீம்தான் துணையாக இருக்கிறான்”, என்று உமார் சொன்னான்.
ஒரு பாறையின் மீது போய் உட்கார்ந்து கொண்டு யாஸ்மி அவனையும் அதில் வந்து உட்காரச் சொன்னாள்.
வேலையே ஒன்றும் பார்க்கவேண்டியதில்லாத நேரத்திலே நீ என்ன செய்வாய்? என்ன செய்ய விரும்புவாய்?” என்று கேட்டாள். அவன் தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணித்தான், அவள் அவ்வாறு கேட்டாள். அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டு உமார் சொன்னான் “ஓர் ஆராய்ச்சிகூடம் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்றான். அது என்னவோ யாஸ்மிக்குப் புரியாத விஷயமாக இருந்தது, அப்புறம்...? என்றாள்.
“நட்சத்திர வட்டம் காட்டும்கோளம், டோலமி என்பவருடைய நட்சத்திரக் கணிதம் இதெல்லாம் வேண்டும்”: என்றான் உமார். ஆராய்ச்சிக்கூடம் என்றால் இன்னும் என்னென்ன வேண்டுமோ? தன்னுடைய இன்பக் கனவு போல, உமாருக்கும். ஏதோ இலட்சியக் கனவு இருக்கிறது என்பதை மட்டும் யாஸ்மி உணர்ந்து கொண்டாள்.
தான் எப்படி அமீரின் அரண்மனையிலே, வெள்ளிய அன்னம் மிதக்கும் தெள்ளிய நீர்த்தடாகங்களை உள்ளத்திலே எண்ணியிருந்தாளோ அதுபோல உமாரும் ஏதோ ஒரு இலட்சியத்துடன்தான் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. “தெரியும் தெரியும். நட்சத்திரங்களைக் கணக்கிட்டு விதியையறிந்து சொல்லுகிற சிதி அகமது போல நீயும் ஒரு சோதிடனாக விரும்புகிறாய். அதுதானே!” என்று யாஸ்மி கேட்டாள்.
சிதி அகமது என்பவன் பெரிய சோதிடப்புலி என்று பெரிய பெண்கள் பேசிக் கொள்வதை யாஸ்மி கேள்விப்பட்டிருந்தாள். “ஜாதகக் கட்டத்தைப் போட்டு வைத்துக் கொண்டு அர்த்தமில்லாமல் முனு முணுத்து அசைபோடும் கழுதை போன்ற அந்த முடர்களின் தலைவன் சிதி அகமது அவனைப் போல் நான் ஏன் ஆகவேண்டும்?” என்று ஆத்திரமாகப் பேசினான் உமார்.
அவனுக்கு சிதி அகமதின் பெயரும் பிடிக்கவில்லை; சோதிடத்தில் நம்பிக்கையும் இல்லை என்பதை யாஸ்மி புரிந்து கொண்டாள். ஆனால் உமார் என்ன செய்ய எண்ணுகிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை, காலத்தையும் நேரத்தையும் அளந்து கணக்கிடப் போகிறானாம்; கதிரவன் உதித்தால் காலை தோன்றுகிறது ஐந்து வேளைத் தொழுகையும் முடிந்து ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டால், இரவு வந்து விடுகிறது. மாதங்களைக் கணக்கிட நிலவு இருக்கிறது. வளர்பிறை, தேய்பிறை இரண்டும் சேர்ந்தால் ஒரு மாதம். இதுதான் கால அளவைப்பற்றி யாஸ்மி கண்டு வைத்திருந்த முடிவு.
ஆனால், உமாருக்கு மாதங்களைக் கணக்கிடும் பிறைக் கணக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஓர் ஆண்டில் பல மணி நேரங்கள் விடுபட்டுப் போகின்றன. ஏன் அப்படிப் பல மணிகளை நாம் இழக்க வேண்டும்? நிலவு ஒழுங்காக மணி காண்பிக்காவிட்டால், அதை விட்டு விட்டு வேறு வழி தேடக்கூடாதா என்ன? சரியான ஆண்டுக்கணக்கையுண்டாக்க வேண்டும் என்பது உமாரின் இலட்சியமாக இருந்தது.
யாஸ்மி அவன் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையாட்டினாள். அவள் உள்ளத்தின் உள்ளே ஓர் கற்பனைகனவு உருவாகிக் கொண்டிருந்தது. உமார் ஆராய்ச்சிக்கூடம் அமைத்துவிட்டால், யாஸ்மியிடம் தன் அன்பைச் செலுத்துவானேயானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அவனுடைய கூடம் முழுவதும் கூட்டிப்பெருக்கி, எல்லாச் சாமான்களையும் தூசி துடைத்து ஒழுங்காக வைத்து அவனுடைய ஆடைகளைத் துவைத்துக் காயப்போட்டு அவனுடைய கால் மிதியடிகளின் மேல் பகுதியில் பூ வேலை செய்து - ஆகா; அன்று முதலே அவனுக்கு அவளால் என்னென்ன உதவி செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொண்டு, அவன் கூடவே அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து விடுவாள்.
இருவரும் ஒன்றாக இருப்பதைப் போல் இன்பமான வாழ்வு வேறு எதுவும் உண்டா? அவளுடைய பெண் உள்ளத்திலே வேறு எவ்விதமான கனவுதான் தோன்ற முடியும்? நெஞ்சில் நிறைந்த அன்பனை நீங்காமல் சேர்ந்திருப்பதுதானே எந்தப் பெண்ணும், எதிர்பார்க்கும் இன்பமாக இருக்கிறது! அவளுக்கு வீட்டுக்குப் போக வேண்டுமே என்ற எண்ணம் தோன்றவேயில்லை. அப்படியே உமாரின் அருகிலேயேயிருந்து, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவன் அங்க அசைவுகளையும், முக பாவத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களையும் பார்த்துக் கொண்டேயிருந்து விடலாம் போலிருந்தது.
அவனைப் பிரிந்து அவளால் வாழ முடியுமா என்ற ஐயமே யாஸ்மியின் உள்ளத்தில் உருவாகிவிட்டது அந்தப் பிஞ்சு உள்ளத்திலே அந்த உமார் இல்லாத உலகம் வெறும் வெட்ட வெளியாய் பாலைவனமாய் வேண்டாத வெயிலாய் ஒன்றும் இல்லாத தன்மையாய்த் தோன்றியது. உமாருடன் இருப்பதைத் தவிர வேறு எதிலும் வாழ்வோ, இன்பமோ இல்லையென்று தோன்றியது. அவனுக்குச் சற்று நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். தான் சூடுவதற்காக யாஸ்மி பறித்து வைத்திருந்த ஒரு ரோஜாப்பூவை எடுத்து நீட்டி, “இது உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.
உமார், அதை வாங்கி நுகர்ந்து பார்த்துவிட்டு, “இது உன்னுடையதல்லவா? நீயே வைத்துக் கொள்” என்றான்.
“இல்லை, அதை உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். நீ அதை வைத்துக் கொள்கிறாயா?” என்று யாஸ்மி கேட்டாள். ஒருமுறை அவளுடைய அக்காள் தன்வீட்டு மாடியிலிருந்து ரோஜாப் பூவைக் கீழே போட்டாள். அவளை காதலித்த பாக்தாது நகரத்து இளைஞன் ஒருவன் அதை வாங்கித்தன் நெஞ்சில் பொருத்திக் கொண்டாள். அதுபோல உமாரும் செய்வானென்று யாஸ்மி எதிர்பார்த்தாள்.
ஆனால் உமாரின் மனமோ, பிறைக் கணக்கு மாதத்தைப் பற்றியும், பற்பல விஷயங்களைப் பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. கையிலிருந்த ரோஜாவை நோக்கிக் கொண்டிருந்த கண்களிலே அதன் உருவம் தெரியவில்லை, வேறு எவை எவையோ தோன்றி மறைந்து கொண்டிருந்தன. எங்கோ போய்க் கொண்டிருந்த உமாரின் உள்ளத்தை யாஸ்மி இந்த உலகத்திற்கு இழுத்து வந்தாள். அவன் அமைக்கப் போகும் ஆராய்ச்சிக்கூடம் ஏதோ பெரிய கோட்டைக் கோபுரத்தைப் போன்றது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.
“நீ ஆராய்ச்சிக்கூடம் அமைத்துவிட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றாள் யாஸ்மி.
உமார் புன்சிரிப்புடன் “யாஸ்மி உனக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டான்.
“கிட்டத்தட்டப் பதின்மூன்றாகிறது” என்று யாஸ்மி மெல்லியகுரலில் சொன்னாள். பதின்மூன்று வயதாகிவிட்டால் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளத் தகுதியுடையவளாகி விடுவாள் என்று தன் தாயும் மற்ற பெண் மணிகளும் பேசிக் கொண்டது அவள் நினைவுக்கு வந்தது.
உனக்குப் பதின்மூன்று வயது நிறையும் பொழுது உனக்கு நான் நிறைய ரோஜாப் பூக்கள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, உமார் எழுந்து நடந்து விட்டான். அப்படி நடந்து போகும்போது அந்தச் சிறுமியிடம் எப்படி நான் இந்த மாதிரிச் சொல்லி விட்டேன் என்று நினைத்துக் கொண்டான். வயது வந்த பெண்ணிடம் சொல்ல வேண்டிய சொற்களை அவளிடம் சொல்ல நேர்ந்துவிட்டதே என்று அபாசப்பட்டான்.
ஆனால், யாஸ்மி அசையாத சிலைபோல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தாள். அவள் கண்களிலே ஆர்வஒளி நடமாடியது. அவள் உடலெங்கும் ஏதோ ஒரு இன்ப உணர்வு பரவியது. தன்னை மறந்து இவ்வளவு நேரமும் அசைவற்றிருந்த அவள் காதுகளில் கழுதைகளின் மணியோசை விழுந்தது. தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் உருவங்கள் தெரியத் தொடங்கின. இருந்தும், அவளுடைய இன்ப எண்ணங்கள் மாறுதலடையாமலே இருந்தன. “நீருற்றின் அருகிலேயே நேரத்தைக் கழிக்கிறாயே?” என்று சில பெண்கள் வந்து சுட்டிப் பேசியதும்தான் அவளுக்கு வீட்டு நினைப்பு வந்தது.
சிறிது நேரம் சென்றதும், யாஸ்மி ஏற்கெனவே ரோஜாப்பூப் பறித்த இடத்திற்குச் சென்று, மற்றொரு பூவைப் பறித்துக் கொண்டு தன்னுடைய பூனைக்குட்டியையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய படுக்கைக்குச் சென்றாள். “நீரூற்றுக்குப் பக்கத்திலே நேற்று முழுவதும் மீசை முளைக்காத ஒரு பையனோடு திரிந்து கொண்டிருந்தாள் உன்னுடைய யாஸ்மி! இனி அவளைவிட்டு வைக்கக்கூடாது. முக்காடு போட்டு முலையில் கிடத்த வேண்டியதுதான்!” என்று தன் வீட்டுப் பெண்மணிகளில் ஒருத்தி தன் தாயிடம் சொல்வதைக் கவனித்தாள் யாஸ்மி.
“இனிமேல், அவளைக் கடைக்கும் அனுப்பக் கூடாது!” என்று தாயார் சொன்னாள்.
யாஸ்மி ஒன்றும் பேசவில்லை. இது எதிர்பார்த்ததுதான் திருமணம் செய்யத் தகுந்தவள் என்பதற்கு அடையாளமாக முக்காடு தரப்போகிறார்கள் என்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. இனிமேல் யாரும் தன்னை அலட்சியப் படுத்த மாட்டார்கள் அல்லவா?
ஆனால், அவள் உமாரைப் பார்க்க முடியாதே! ஏன் பார்க்க முடியாது? எப்படியாவது பார்க்கத்தான் வேண்டும். நான்கு சுவர்களும் பலகணித் திரைகளுமா அன்பைத் தடுத்து நிறுத்திவிடும்? எப்படியும் உமாரைப் பார்ப்பேன், என்று யாஸ்மி உறுதி கொண்டாள்.
ஆனால், உமார் ஊரைவிட்டே போய்விட்டான்!
4. அறியாமல் சொன்ன ஆபத்தான சோதிடம்!
நிஜாப்பூருக்கு மேற்கே, கொராசான் பாதையில் ஓர் ஒட்டகச்சாரி போய்க் கொண்டிருந்தது. குதிரைப் படையொன்று அதைத் தொடர்ந்தது, நெடுந்துரப் பயணத்திற்குப் பிறகு, அவ்வழியில் மலைப்பாங்கான இடத்தில் உள்ள சத்திரம் ஒன்றில் அதன் பிரயாணிகள் தங்கினார்கள். முதல்நாள் இரவு, அங்கே யாரும் தூங்கவும் முடியவில்லை.
திறந்த வெளியில், முட்செடிகளின் சுப்பிகள் எரிந்து கொண்டிருந்தன. ஒட்டகங்கள் ஒருபுறம் அசைபோட்டுக் கொண்டிருந்தன. குதிரைகள் ஒருபுறம் புல்மேய்ந்து கொண்டிருந்தன. படையாட்கள் சோற்றுப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, கடைசிப் பருக்கையைக் கூட விடாமல் வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களைச் சுற்றி ஒரே பிச்சைக்காரக் கும்பல்.
அத்தனை பேருக்கும் இல்லையென்று சொல்லாமல், செப்புக் காசுகளையும், காய்ந்த பழங்களையும் பிச்சையோடுகளிலே போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் போகும் பயணம் சாதாரணமானதல்ல. ஆபத்து நிறைந்த இடம் நோக்கிப் போகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து, வெற்றி தோல்வி பார்க்க வேண்டிய போர்க் களம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அவர்கள், தங்கள் விதி நல்லமுடிவாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலே தருமம் கொடுக்கச் சளைக்காதவர்களாக இருந்தார்கள்.
போர் அணியிலே கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டு வரும் வீரர்கள், கூட்டம் கூட்டமாகத் தினந்தோறும் வந்து கொண்டிருப்பதால், சத்திரக்காரனுக்கு நல்ல வரும்படி! பணத்தை மறைமுகமாக எண்ணி எண் பெட்டிக்குள்ளே போட்டுக் கொண்டிருந்தான் அவன். வீரர்கள் அடிக்கடி, தண்ணிர் கேட்டார்கள். இருந்த தண்ணீர் எல்லாம் தீர்ந்து போய்விட்டது, நான் என்ன மூசாநபியா நினைத்ததும், தண்ணிரைக் கொண்டுவர? என்று சத்திரக்காரன் கத்திக் கொண்டிருந்தான்.
தோலாடைகளை விரித்துப் படுக்கைகளைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தனர் சிலர். கணப்புகளை எரித்து மலைக்காற்றின் குளிர்ச்சியைத் தடுப்பதற்காக அதைச் சுற்றி இருந்தார்கள் பலர். கொரசானியர்களும் அரேபியர்களும் பாரசீகர்களும் கணப்புகளைச் சுற்றி இருக்கும்போது அந்த நெருப்பின் ஒளியிலே தாடி நிறைந்த முகங்கள் மின்னி ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. துருக்கியர்கள்தான் அந்தக் குளிர்க்காற்றைத் தாங்கும் வலுவுடையவர்களாக இருந்தார்கள். போரும் அலைச்சலும் அவர்களுக்குப் புதிதல்ல.
இப்படிப்பட்ட போர்மறவர் கூட்டத்திலே, நிஜாப்பூர் நிலச் சுவான்தார் புதல்வன் ரஹீம் சேடாவும் இருந்தான். அவன் தனக்கெனத் தனியே ஒரு கணப்புடன் தோல் அடைப்புடன் கூடிய கதகதப்பான அறையொன்றில் இருந்தான்.
நிஜாப்பூரில் ஒருநாள் இரவு, அவன் தன் அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, திராட்சை மது, குடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அந்த ஆர்வமான போரழைப்பு கூக்குரல் கேட்டது. அந்தக்குரல் போரழைப்பாக மட்டுமில்லை; எச்சரிப்பாகவும் இருந்தது. ரஹீம் சாதாரணமாக கேளிக்கைகளில் விருப்பங் கொண்டவன். மற்ற விஷயங்களில் அவன் விருப்புக் காட்டுவதே கிடையாது.
ஆனால் இந்தப் போரழைப்பில் கலந்திருந்த ஏதோ ஒரு சக்தி அவனையும் இந்தப் போரில் கலந்து கொள்ளும்படி தூண்டியது. தூரமேற்குப் பிரதேசத்திலே, சுல்தான் ஆல்ப் அர்சலான் நடத்தப்போகும், அந்தப் போரிலே, மதவிரோதிகளை எதிர்த்து முறியடிப்பதற்காக அவன் கிளம்பி வந்திருந்தான். அவனுடன் அவனுடைய உயிர்த் தோழன், உமார் கூட வந்திருந்தான். ரஹீம், இரானிய பரம்பரையிலே வந்த பாரசீகப் பெருங்குடியைச் சேர்ந்தவன். அவன் குடிமரபு கிரேக்கர்கள் மரபினும் பழமையானது.
அவனிடம் குற்றமற்ற தன்மைகளும், நற்குணங்களும் நிறைந்திருந்தன. இருந்தாலும் இனிப்புக் கலந்த மதுவிலே விருப்பமுடையவன். சிறுவயதில் போலோ முதலிய விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும், பின்னால் அவன் விளையாட்டுக்களை அதிகமாக விரும்பவில்லை. அவனுக்குப் போர் கூட ஏதோ மான்களை வேட்டையாடுவது போலத் தான் தோன்றியது, கூட இருந்த ஒருவன், குளிர்தாங்க முடியவில்லையே என்று கூறினான்.
ரஹீமுக்கும் குளிராகத்தான் இருந்தது. கொட்டாவி வந்தது. ஆனால், அவனால் அமைதியாகத் தூங்கமுடியவில்லை. தோல்படுக்கைகளின் ஊடே, மூட்டைபூச்சிகள் வேறு புகுந்து கொண்டு அவனுக்குத் தொல்லை கொடுத்தன. சத்திரக்காரன் அவன் எதிரே வந்து நின்று கொண்டு போகாமல் அங்கேயே நின்றான்.
பேச்சுக் கொடுத்த பிறகுதான் அவன் அங்கேயே நின்று கொண்டிருப்பதன் காரணம் புரிந்தது. சத்திரத்துக்குப் பின்னாலேயுள்ள வீட்டில் சில பெண் பிரயாணிகள் வந்து தங்கியிருக்கிறார்களாம். அவர்களில் சில பெண்கள் பாக்தாதிலிருந்து வந்தவர்களாம், அழகிகளாம். இரவுப் பொழுதைச் சுவையாக்கும் பயிற்சி பெற்றவர்களாம்.
ரஹீம் இரவை இன்பமாகக் கழிக்க விரும்பினால் ஏற்பாடு செய்ய அவன் ஆயத்தமாக இருக்கிறானாம். இதுதான் விடுதிக்காரன் கூறிய செய்தி. ரஹீம் இந்த மாதிரி விஷயங்களில் பின்வாங்குவது கிடையாது. உடனே எழுந்து அங்குள்ள வேலைக்காரர்களை நோக்கி, உமார் வந்தால் தான் சில நண்பர்களைக் கண்டு பேசச் சென்றிருப்பதாகச் சொல்லும்படி கூறிவிட்டுக் சத்திரக்காரனைத் தொடர்ந்து சென்றான்.
கூட இருந்த சிப்பாய்கள் ரஹீமைப் பொறாமைக் கண்களோடு பார்த்தார்கள். சாதாரண மனிதர்களாகிய அவர்கள் இந்த மாதிரியான இன்பத்தை இந்தச் சமயத்தில் அனுபவிப்பதென்பது இயலாது. ரஹீம் போன்ற செல்வந்தர்கள் தான் நினைத்ததைச் செய்யமுடியும்.
அல்லா அருள் புரிந்தால், சண்டையிலே வெற்றி பெற்றுத் திரும்பும்போது, மதவிரோதிகளின் பெண்களை அடிமைகளாகப் பிடித்துவரும் நேரத்திலே ஒவ்வொரு சாதாரணச் சிப்பாயும் கூட ஆளுக்கு ஒன்றிரண்டு பெண்களோடு மகிழலாம். ரஹீம் போன திசையைப் பார்த்து ஏங்கிவிட்டுக் கணப்பிலே கதகதப்பேற்றிக் கொண்டு சிப்பாய்கள் தூங்கத் தொடங்கினார்கள்.
ரஹீம், அலுத்துச்சலித்துப் போய் நெடுநேரத்திற்குப் பிறகு திரும்பி வந்தான். என்னவோ அவனுக்கு நாடிப்போன இடத்தில் இன்பம் இல்லை போலிருக்கிறது. சத்திரக்காரனைத் திட்டிக் கொண்டே வந்தான், படுக்கையில் இருந்த உமார் எழுந்து நின்று கணப்புத் தீயை அதிகமாக விசிறிவிட்டுத் தன் உயிர்த்தோழனுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தான். எங்கே போயிருந்தாய் என்று கேட்ட உமாருக்குப் பதில் சொல்லாமல் சத்திரக்காரனைக் கண்டபடி திட்டிக் கொண்டே அருகில் உட்கார்ந்த ரஹீம், “நீ எங்கே போயிருந்தாய்?” என்று உமாரைத் திருப்பிக் கேட்டான்.
உமார், சண்டைக் களத்திற்கே புதியவன். ஆனால் பாலைவனப் பிரதேசங்களிலே அலைந்து திரிந்து அனுபவப்பட்டவன். அதிலும் அந்தக் கொரசான் வீதி நெடுகிலும் அந்தச் சமயம் கலகலப்பாக இருந்தது.
ஆங்காங்கே நடந்துவரும் படைகளும் வழிச் சத்திரங்களில் தங்கியிருக்கும் வீரர்களும், போரிலே பங்கு கொள்ளத் தேசத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து கூடாரமடித்துக் கொண்டிருக்கும் இளவரசர்களும் இப்படியாக அந்தப் பாதை நெடுகிலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. உமாருக்கு எல்லா விஷயங்களிலும் ஆர்வமாயிருந்தது. பலப்பல பகுதிப் படைகள் தங்கியிருக்கும் இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் விசாரிப்பதும், பேசிக் கொண்டிருப்பதும், அவர்கள் கொண்டு வந்திருக்கும் சாமான்களைப் பார்வையிடுவதுமாக அவன் திரிந்தான்.
ஓர் ஆற்றைக் கடந்து செல்லும் போது உமார் கண்ட அதிசயங்கள் அபூர்வமானவை. இப்படியே அவன் அந்தச் சாலைவழிக்குப் போகும்போது தூரத்திலே ஓர் அமீரி (இளவரசனின்) கூடாரத்திற்குச் செல்லும்படி நேர்ந்தது. அந்தப் பெரிய கூடாரத்திற்குள் சென்று அந்த இளவரசனைக் கண்டு பேசும் வாய்ப்பு உமாருக்குக் கிடைத்தது. அந்த இளவரசனைச் சுற்றியிருந்த துருக்கி வீரர்கள், தங்கத் தலைக்கவசம் அணிந்திருந்தார்கள்.
கூடாரத்தின் நடுவிலே நெருப்புக் கணப்பின் அருகிலே ஒரு சிவந்த விரிப்பின் மீது அந்த இளவரசன் அமர்ந்திருந்தான். அவனோடு அவனுடைய ஆசிரியர்களான சட்டநுணுக்கக்கலை அறிஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் ரஹீமைக் காட்டிலும் இரண்டு வயது இளையவன். அவனிடம் அந்த அறிஞர்கள் அவன் கண்ணில்பட்ட அந்த நட்சத்திரம் வடமீன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் உமார் அது வடமீன் அல்லவென்றும் அந்த இடத்திலிருந்து பார்த்தால் வடமீன் தெரிவதற்கு மார்க்கமில்லையென்றும் தெரிந்து கொண்டிருந்தான். அந்த அறிஞர்கள் பெயர் அளவில் அறிஞர்களே தவிர எந்தவிதமான அறிவும் இல்லாத முட்டாள்கள். உமார் அந்த இளவரசனிடம் போய் அந்த வடமீன் நட்சத்திரத்தை இங்கிருந்து பார்க்க முடியாது என்று கூறினான். தன் ஆசிரியர்களின் பேச்சை மறுத்துச் சொல்லும் ஒருவனை செருப்பால் அடித்து விரட்டுவதை விட்டு விட்டு இளவரசன் “நட்சத்திரங்கள் மூலம், ஏதாவது, போரைப்பற்றிய செய்திகள் அறிந்து சொல்ல முடியுமா” என்று கேட்டான்.
வருங்காலத்தைப்பற்றிக் குறி சொல்ல முடிந்தால் ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கலாம். உமாருக்கு இதில் நம்பிக்கையில்லை, இருந்தாலும் இளவரசன் கேட்பதற்காகச் சொன்னான். தான் சொல்கிறபடி நடக்கும் என்பதில் அவனுக்கு நம்பிக்கையே கிடையாது. ஏதோ கேட்கிறான் சொல்லுவோம் என்ற முறையிலே சொல்லி வைத்தான்.
இரண்டு அரசர்கள் போரிடப் போவதாகவும், அந்தப் போரிலே, கீழைநாட்டைச் சேர்ந்த அரசன் மேலோங்கி வெற்றி பெறக் கூடுமென்றும், மேலைநாட்டுப் பேரரசன் தோற்றுவீழப் போவதாகவும் சொன்னான், முடிவில் அந்த இரண்டு அரசர்களுமே சாவுக்குப் பலியாவார்களென்றும் கூறினான்.
ஆனால் இதைக் கேட்ட அந்த இளவரசன் பேயையோ பூதத்தையோ கண்டு மிரண்டவன் போல விழித்தான். இந்த விபரங்களையெல்லாம் உமார் தன் உயிர்த் தோழனான ரஹீமிடம் கூறியபோது, அவன் அந்த இளவரசன் யார் என்று கேட்டான். உமார் “அதைத்தானே நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவனை எல்லோரும் இளஞ்சிங்கம், இளஞ்சிங்கம் என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்” என்றான்.
“உமார் இளஞ்சிங்கம் யார் என்று நீ கேள்விப்பட்டதே இல்லையா? அதுதான் நம் பேரரசர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களின் முத்தமகன். சுல்தானை வீரசிங்கம் என்றும் மகனை இளஞ்சிங்கம் என்றும் மக்கள் குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. நீ சோதிடம் சொல்லிவிட்டு வந்தாயே அதை கேட்டவன் நம் இளவரசன்.
அவனுடைய தந்தையின் மரணத்தைப்பற்றி அவனிடமே சொல்ல எவனுமே துணியமாட்டான். நீ துணிந்து சொல்லிருக்கிறாய் உன்னை அவன் சும்மாவிட்டதே பெரிது இருந்தாலும் அவன் ஆட்சிக்கு வருவதுபற்றி நீ குறிப்பிட்டிருக்கிறபடியால் அவன் மனதுக்குள் மகிழ்ந்திருக்கவும்கூடும். அவன் உன்னைப்பற்றி எதுவும் கேட்கவில்லையா” என்று ரஹீம் கேட்டான்.
“என் பெயரைக் கேட்டான், சொன்னேன். எங்கே வேலை செய்கிறாய் என்று கேட்டான். நிசாப்பூர் பள்ளிக்கூடத்திலே படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்” என்றான் உமார்.
“உமார், நீ சொன்ன சோதிடம் பலித்து வெற்றியும் கிடைத்துத் தந்தையும் இறந்து தான் அரசனாக வந்தால் அப்போது, நீ அந்த இளஞ்சிங்கத்திடம் சென்று கேட்டால், நிச்சயமாக உன்னை அரசாங்கச் சோதிடனாகப் பதவி கொடுத்துப் பெருமைப் படுத்துவான்.
அப்படி நடந்தால், உனக்கு சமுக்காளம் விரிக்கும் வேலைக்காரனாகவாவது என்னை ஏற்றுக் கொண்டு நல்லசம்பளம் கொடுப்பாயா?” என்று கேட்டான் ரஹீம். உமார் திரு திருவென்று விழித்துக் கொண்டு பேசாமல் இருந்தான். “உமார், நிச்சயமாக நீ ஒரு ஜோதிடனாக விளங்குவாய் ! உன்னைக் கண்ட எல்லோரும் அதை நம்புவார்கள்!” என உறுதி கூறினான்.
பிறகு அவன் அங்கு துங்கிக் கொண்டிருந்த ஒரு வேலைக்காரனை எழுப்பி தோல் பெட்டியில் இருக்கும் ஜாடியையும், கண்ணாடிக் குவளையையும் எடுத்து வரும்படி கட்டளையிட்டான். அது மது. திருமறையால் தடைசெய்யப்பட்ட பொருள். ஆனால் அந்தப் புனிதமான மகத்தான போரிலே அடையப்போகும் வெற்றிக்கு முன்னாலே, மது குடிக்கும் இந்தச் சிறிய பாவம், கடலில் கரைத்த பெருங்காயம் போல் மறைந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே அதைக் குடித்தான். உமாரும் உயிர்த் தோழனின் பாதையைப் பின்பற்றி அவனும் குடித்தான்.
“இருந்தாலும் நான் தோற்றுப்போக நேரிட்டாலும் நேரிடலாம்” என்று உமார் சொன்னதற்கு, “இல்லை, நாம் தோற்கவே மாட்டோம். நம் துருக்கிய சுல்தான் சாதாரண வீரராக இருக்கலாம். ஆனால், அவர் எந்தச் சண்டையிலும் தோற்பதேயில்லை. இது சரியான குறிச்சொல்லாகும், நாம் நிச்சயம் வெற்றியடைவோம்!” என்று கூவினான் ரஹீம்.
இனிக்கும் அந்த மது அவனுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. மறுபடியும் ஒரு குவளை ஊற்றிக் குடித்தான்.
சுல்தானுடைய செங்கொடியின் கீழே தன் அருமையான கருப்புக் குதிரையின் மேலே வீசிய வாளுடன் தான் பறந்து செல்வது போலவும், படைவீரர்களின் அணிவரிசைகளின் ஊடே, தன் குதிரை செல்வது போலவும். எதிரிகளான கிறிஸ்தவர்களின் சேனைகளை நோக்கிச் சென்று, அவர்களில் ஒரு தலைவனை நேருக்கு நேரே சந்தித்து வாளைச் சுழற்றிப் போருக்கு இழுத்து,
அந்த மாற்று மதக்காரனுடைய தலையைத் தன்னுடைய வாளால் துண்டித்து விடுவது போலவும், இஸ்லாமியப் படைகள் உடனே ஜெயபேரிகை முழக்கித் தன்னைப் புகழ்ந்து கூவித் துள்ளிக் குதிப்பது போலவும், தான் வெட்டி வீழ்த்திய அந்த வீரனின் தலை துடித்துப் பறந்து சென்று தன் சுல்தானுடைய குதிரையின் காலடியிலே போய் விழுந்து மிதிபடுவது போலவும் ஒரு கற்பனை அவன் உள்ளத்திலே உருவாகியது.
அந்தக் கற்பனை வெறியிலே தன்னை மறந்து ரஹீம் தன் வெற்றியை உயிர்த்தோழன் உமாரும் காணவேண்டும் என்று அவனைக் கூவியழைத்தான்.
ஆனால், அந்த உயிர்த்தோழன் உமாரோ, போரையும் பூசலையும் வெற்றியையும் விழாவையும் சற்றும் எண்ணாமல் ஒட்டகத்தோல் ஆடைகளின் ஊடே ஆழ்ந்து அயர்ந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்!
5. ஆருயிர்த் தோழனின் ஆவி பிரிந்தது!
கிழக்கையும், மேற்கையும் ஒருங்கே ஆண்ட பேரரசர், உலகத்தின் இறைவர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் தம்முடைய படை பயணிகளுடன் போர்க்களத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அவர்களுடைய ஒட்டகங்களும், குதிரைகளும், கழுதைகளும் அர்மீனியன் மலைப்பள்ளத்தாக்கில் உள்ள அர்சானா ஆற்றங்கரைச் சமவெளியை நோக்கி நடந்து கொண்டிருந்தன. அரசருடைய விகடனான ஜபாரக்கும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று கொண்டிருந்தான்.
குள்ளமான அவனுடைய கால்கள் இரண்டையும் இரு பக்கங்களிலும் தொங்கவிட்டுக் கொண்டு, கழுதையின் மீது உட்கார்ந்திருந்தான். குறித்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்ததும் அவனைச் சாமான்களும் மிருகங்களும் இருக்கும் இடத்திலேயே இருக்கச் சொன்னார்கள். இஸ்லாமிய மதத்தலைவர்களான முல்லாக்களும் கூட அங்கேயிருந்தார்கள். ஏனென்றால் அதுதான் போர்க்களத்தின் ஆபத்தில்லாத பகுதியாகும். ஆனால் கோமாளி ஜபாரக் சுல்தானுடைய முதுகுப்புறம்தான் ஆபத்தில்லாத இடம் என்று கூறினான்.
இஸ்லாமியர்கள் அவர் முதுகை நோக்கி அம்பு எய்ய மாட்டார்கள் என்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர் முதுகு தெரியவே தெரியாதென்றும், ஆகவே முதுகுப் புறத்தில் இருப்பவனை எந்தவிதமான அம்பும் தாக்க இடமில்லை என்றும் அவன் விளக்கம் கூறினான். சுல்தான் அவர்களுக்கு ஜபாரக்கின் இந்த அபூர்வ யோசனையைக் கேட்டதும், சிரிப்பு வந்தது. போர் பற்றிய சிந்தனை ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை ஒருமுறை கூடச் சிரித்தறியாத சுல்தான் அன்று சிரித்துவிட்டார்.
அவருடைய ஆணைப்படி, ஜபாரக் அவர் அருகிலேயே இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அடிமைகள் படைக்கலங்கள் அணிந்து, செங்கொடியும் ராஜகுடையும் பிடித்துவர சுல்தான் அவர்களின் அருகிலேயே ஜபாரக்கும் இருந்து வந்தான்.
பள்ளத்தாக்குப் பிரதேசத்தின் தொடக்கத்திலேயே மாலஸ்கர்டு பட்டணத்தின் கோட்டைச் சுவர் அருகே தம்முடைய கொடியை நாட்டச் சொன்னார். அவருக்கு எதிரிலே நீண்டு விளங்கிய வளமான அந்தப் பள்ளத்தாக்கின் மேற்பகுதியிலிருந்து கிறிஸ்துவர்களின் படை முன்னேறி வந்து கொண்டிருந்தது.
அந்த ரோமன் படைகளைத் தலைமையரசரான கான்ஸ்டான்டிநோபிள் பேரரசரே நடத்திக்கொண்டு வந்தான். கான்ஸ்டான்டிநோபிள் பேரரசரின் முன்னோர்கள், பரம்பரையாகவே கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளாகவே இஸ்லாமிய மதத்தின் நேர் எதிரிகளாக விளங்கி வந்திருக்கிறார்கள்.
சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள், அந்தப் பேரரசரின் ஆளுகைக்குட்பட்ட தேசங்களிலே அடிக்கடி தன் படைகளை அனுப்பிப் பலபகுதிகளைத் தாக்கிக் கொண்டு வந்தார். இது தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருமுறை ஆசியா தேசத்தின் ரோமாபுரி என்று பெயர் பெற்று விளங்கிய ஆசியா மைனர் வரையிலும் சென்றுகூட அவருடைய குதிரைப்படை தாக்கிவிட்டு வந்திருக்கிறது. சுல்தானின் படையினர் ரோமர்களைத் தாக்கிக் காயப்படுத்திப் பெருங்கோபம் கொள்ளும்படி செய்துவிட்டு வந்தது, கான்ஸ்டாண்டி நோபிள் பேரரசரின் பெருஞ்சினத்தைக் கிளப்பிவிட்டது.
தன்னை எதிர்த்துப் படைதிரட்டி வந்து, தம்முடைய எல்லைக்குள்ளேயே நடந்து வந்துவிட்ட இஸ்லாமியப் படைகளை எதிர்த்து முறியடிப்பதற்காக அந்தப் பேரரசர் தம் வசமுள்ள எல்லாவிதமான ஆயுதங்களையும் ஒன்று திரட்டினார். விற்பயிற்சியில் தேர்ந்த பல்கேரியப் படைகளும், வாட்போரில் இணையில்லாத ஜார்ஜிய சேனைகளும், இஸ்லாமியரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக இணைந்து வந்த ஆர்மீனியப் படைகளும்;
தன்னுடைய திறமை பெற்ற குதிரைப் படைகளும், எண்ணிக்கை மிகுந்த காலாட்படைகளும் ஒருங்குசேர ஒரு பெருஞ்சேனையையே நடத்திக்கொண்டு ரோமர்களின் பேரரசர் கான்ஸ்டாண்டி நோபிளின் கிறிஸ்தவ மன்னர், துருக்கிப் படைகளை விரட்டியடித்துக் கொண்டு முன்னேறி வந்தார். துருக்கிப் படைகளின் எண்ணிக்கை பதினையாயிரம். எதிர்த்து வந்த ரோமர் படைகளின் எண்ணிக்கையோ எழுபதினாயிரம்.
கிறிஸ்தவர்களின் பேரரசர் பேராண்மைமிக்க ஒரு வீரர். துருக்கியரின் குதிரைப் படையினர் எத்தனையோ நாட்களாகத் தனக்குக் கொடுத்து வந்த தொல்லைகளைக் கண்டு பொறுமை மீறப் போருக்குக் கிளம்பி வந்திருக்கிறார். அவருடைய ஆவேசமும் அதிகம்! படைகளும் அதைவிட அதிகம்! சுல்தான் ஆல்ப் அர்சலான், தம் படைத் தலைவர்களே வியப்படையும்படி, தரையில் தமது கொடியை ஊன்றி நட்டு, தம் படைகளை அந்தப் பள்ளத்தாக்கின் குறுக்கே அணிவகுத்து நிறுத்தினார். சீறிவரும் கிறிஸ்தவப் படைகளை எதிர்ப்பதற்காக அந்தப்படை காத்திருந்தது.
ஜபாரக்கிற்கு இது எதோ முட்டாள்தனமான காரியமாகத் தோன்றியது, பதினையாயிரம் பேர் எழுபதினாயிரம் பேரை, எதிர்த்து வெற்றி பெறுவதென்பது எளிதான செயலல்ல, விகடனைத்தவிர வேறு யாரும் கவனிக்காதபோது சில அமீர்கள் பேசிக் கொண்டார்கள். ரோமர்கள் பெரிய வேற்படையினரின் தாக்குதலை, நன்கு தேர்ச்சி பெற்ற துருக்கிக் குதிரைப்படைகூடத் தாக்குப் பிடிக்க முடியாதென்று அவர்கள் கருதினார்கள்.
போரில் வெற்றி கிடைக்குமென்பதில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை, கிறிஸ்துவப் படைகள் சேறு நிறைந்த வயல்களின் வழியாகச் சிறிது சிறிதாக முன்னேறி வந்து கொண்டிருந்தன. அஞ்சா நெஞ்சம், உறுதியும் ஆண்மையும் படைத்த சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் தம் குதிரைப்படையை அங்கே நிறுத்தி, அவர்கள் நெருங்கி வருவதற்காகக் காத்திருந்தார்.
எதிரிகளைத் தாக்கித் துரத்துவதற்கும், அதே சமயம் வேகமாய் பின்வாங்குவதற்கும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். தாங்கள் அடியுண்டு வீழ்ந்து மரணமடைய நேரிடுமோ என்று பல தலைவர்கள் பயந்து கொண்டிருப்பது ஜபாரக்கிற்குத் தெரியும்.
நாம் பின்வாங்க வேண்டியதேயில்லை. ரோமர்களின் முகாம், பள்ளத்தாக்கின் கோடியில் வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களோ, நம்மோடு பொருதுவதற்கு வெகு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள், நாம் அவர்களை எதிர்த்துத் தாக்குவதற்காகவே இங்கே காத்திருக்கிறோம். இது தான் முடிவானபேச்சு, இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது, எழுதப்பட்ட படிக்குத்தான் நடக்கப் போகிறது.
சுல்தானின் இந்தப் பேச்சு அவருடைய முத்தமகனின் முகத்தில் பயத்தையுண்டாக்கியதை ஜபாரக் கவனித்தான். சோதிடர்கள் குறிசொன்னபடியும், முல்லாக்கள் அறிவித்தபடியும் நாளைய சண்டையின் முடிவு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டபடியே நடக்கும் போலும், கிறிஸ்தவப் பேரரசனின் அவசரத் தன்மையும், சேறு குழம்பிய வயல் வெளியும், எந்தப் போரிலும் தோல்வியே கண்டறியாத துருக்கிப்படைகள் ஆடாதசையாமல் நிற்கும் வன்மையையும் பார்க்கும் பொழுது,
விகடன் ஜபாரத்திற்கு இது ஏற்கெனவே விதியால் எழுதப்பட்டபடிதான் நடந்தாலும் நடக்கும் போலவும், வெற்றி தோல்வி முன்னாலேயே நிச்சயிக்கப்பட்டது போலவும், விதியின் சொக்கட்டான் விளையாட்டில், நாளைக்கு இந்தப் படைகளெல்லாம் அங்கும் இங்கும் காய்கள் உருட்டப்படுவது போல் நகர்த்தப்படப் போவது போலவும் தோன்றியது.
சுல்தான் ஆல்ப் அர்சலான் அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை.
குளிர் நடுக்கத்தைத் தாங்க முடியாமலும், உள்ளத்திலே ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சியின் காரணமாகவும், விடிவெள்ளி தோன்றுவதற்கு முன்னாலேயே ரஹீம் எழுந்து விட்டான். யார்மார்க் என்ற வேலைக்காரனிடம் வாளைக் கொடுத்து அதைத் தீட்டிக் கூராக்கி வைக்கும்படி அடிக்கடி ஆணையிட்டான், மற்ற வேலைக்காரர்களை விட்டு அவனுடைய கருப்புக் குதிரையைத் தேய்த்துவிடச் சொன்னான்.
அவசர அவசரமாக ஊற வைத்த பார்லியையும் பேரீச்சம் பழத்தையும் கொஞ்சம் விழுங்கினான். போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், மான் வேட்டையாடுவது போல் அது தோன்றவில்லை. அல்லது அவன் எதிர்பார்த்தபடியும் இல்லை. காலை விடிந்தவுடன் போரழைப்பு வருமென்றும், வந்தவுடன் முழக்கமிட்டுக் கொண்டு கிளம்ப வேண்டுமென்றும் காத்திருந்த ரஹீம், அமைதியில்லாமல் அவனுடைய குதிரையைச்சுற்றி வந்தான்.
திரைக்கு அப்பால் அவனுடைய ஆட்கள் சொக்கட்டான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் குதிரை மேல் ஏறிய சமயம் அவனைக் கடந்து நடந்து செல்லும் ஈட்டிபிடித்த வீரர்களின் எண்ணற்ற தலைகளைக் கண்டான். சில சமயங்களில், தூரத்தில் உள்ள காட்டின் ஊடே காற்று துளைத்துக் கொண்டு அடிப்பது போன்ற ஓசை கேட்டது. நிஜாப்பூர் பகுதியில் மக்கள் கூடும்போது ஏற்படும் இரைச்சல் போலப் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இருந்து பெருங்கூச்சலும் சப்தமும் அடிக்கடி எழுந்ததையுணர்ந்தான்.
முன்பின் அறியாத ஒரு மனிதன் குதிரை மீது விரைந்து கொண்டிருந்தபோது, அவனை நிறுத்திப்போரின் விவரத்தைப்பற்றி ரஹீம் விசாரித்தான். அந்த மனிதன் ஒரு துருக்கியன். வெறுமனே ரஹீமை உற்றுப்பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான். பொறுமையில்லாத ரஹீம் அவனுடைய சேனைக் தளபதியான ஓர் அமீரிடம் சென்றான். அவனுடைய கொடியைச்சுற்றி, நிஜாப்பூர் வீரர்கள் கூடியிருந்தார்கள்.
“நாங்கள் களத்திற்குச் செல்ல ஆணையிடுங்கள், போர் துவங்கப்படுவதைப் பார்க்க வேண்டும் முதற்போரிலேயே நாம் கலந்து கொள்ள வேண்டும்” என்று ரஹீம் ஆவலோடு கூறினான்.
பள்ளத்தாக்கில் போர் தொடங்கி வெகுநேரம் ஆகிவிட்டதென்பதை அறிந்து அவன் வியப்படைந்தான். இன்னும், அங்கிருந்தவர்கள் கூறிய பல்மாதிரியான புதுமையான செய்திகளையும் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். கிறிஸ்தவர்கள் இரும்புக்கூண்டுகளில் அடைத்து வைத்திருக்கும் பூதங்களை முஸ்லிம்களின் மேல் ஏவிவிடுகிறார்களாம்.
முஸ்லிம் பட்டாளத்தின் சேனையின் ஒருபகுதி முழுவதும் அப்படியே ஆற்றுக்குள் முழுகிப் போய்விட்டதாம், ஜார்ஜியர்களும் அர்மீனியர்களும் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்களாம். பள்ளத்தாக்கு முழுவதும் வெகு தூரத்திற்கு வெறும் கிறிஸ்தவப் படைகளாகவே காட்சியளிக்கிறதாம். சுல்தானும் வலப்புறத்தில் உள்ள மலைகளின் ஊடே ஓடி ஒளிந்து விட்டாராம்.
இவ்வாறு ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, மற்றொருவன் “பொய்! பொய் ! அதோ பாருங்கள் நம் பேரரசர் சுல்தான் அதோயிருக்கிறார்!” என்று கூவினான். ரஹீம் குதிரைச் சேணத்தின் மிதியில் எழுந்து நின்றபடி உற்று நோக்கினான். அவனுக்குச் சமீபத்தில் இருந்த மணல் மேடொன்றின் மீது குதிரைப் படைவீரர்களின் கூட்டமொன்று, பாய்ந்து செல்வதைக் கண்டான்.
அந்தப் படையின் தலைவன் ஒரு வெள்ளைக் குதிரையின் மீது ஒரு வெள்ளிய தந்தக்கோலும் கடிவாளமும் பிடித்த கையுடன், முதுகுப் புறத்தில், அம்புறாத்துணியும் கொண்டிருந்தான். அவனுடைய, நெஞ்சு அகன்று தோள்பட்டைகள், புடைத்துச் சுருண்டு கட்டியாகி வீங்கியிருந்தன. கருப்புக் குல்லாயுடன் பழுப்பு நிறங்கொண்டு விளங்கிய அவன், அரண்மனைக் காவலாள் போல் தோன்றினான்.
“சுல்தான் எங்கேயிருக்கிறார்? என படைத் தலைவர்களின் பக்கம் திரும்பி கேட்டான் ரஹீம்.
“அல்லாஹீ! அதோ படைவீரர்களுக்கெல்லாம் முன்னாலே போகிறாரே அவர்தான்!”
சுல்தான் என்றால், பட்டாடை காற்றில் பறக்க பாய்ந்துவரும் குதிரைமேல் ஏறிப் பவிசாக அலங்காரத் தலைக்கவசம் அணிந்து பறக்கும் கொடிகளும் முழங்கும் முரசும் சூழ்ந்துவர வருவார் என்று ரஹீம் எண்ணிக் கொண்டிருந்தான். சாதாரண மனிதனைப் போல் தோன்றிய அந்தச் சுல்தானைப் பார்க்க அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பேசாமல் அவனுடைய இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.
நடுப்பகலிலே, அலுப்பும் பசியுமாக அவன் இருந்தபோது உமார் அவனை அழைத்தான்.
“ரஹீம் ! போர் நம்மை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் துருக்கியர்களுடன், மணல் மேட்டிலிருந்து கவனித்தேன். இங்கே வா” என்று அழைத்தான்.
அவர்கள் இருவரும், சுல்தான் கடந்துபோன அந்த மணல் மேட்டின் உச்சியில் ஏறி நின்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான தேன் கூடுகளிலிருந்து எழும் ஒசை காதில் வீழ்ந்தது. குதிரைக் குளம்படிகளின் சத்தமும், வாட்படையும், பிற படைகளும் மோதும் ஓசையும் மிக மென்மையாக இருந்தன. சூரிய வெளிச்சம் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் தெளிவாகப்பட்டு அங்கே நடந்த காட்சியை விளக்கமாக எடுத்துக் காட்டியது.
நகர்ந்து கொண்டிருக்கும் குதிரைப்படைகளும் பொருதிக் கொண்டிருக்கும் வீரர்களும், உயரத்திலிருந்து பார்ப்பதற்கு மிகமிகச் சிறிய உருவங்களாகத் தெரிந்தன. சில சமயங்களில் அவை மிக மெதுவாகவே நகர்ந்தன. ஆடு மாடுகள் புல் மேய்வதைப் போல், சாவதானமாக நகர்ந்து கொண்டிருக்கும் படைகள், சில சமயங்களில், புயல் காற்றடிப்பது போல் வெகு வேகமாகப் பாய்வதையும், ஓடுவதையும் கூடப் பார்க்க முடிந்தது.
நான்கு மணி நேரம், கிறிஸ்தவப்படைகள் துருக்கிப்படைகளின் மேல் தங்கள் அம்புகளை ஏவிப் பின்வாங்க வைத்தன. மெதுவாகப் பின்வாங்கிக் கொண்டிருந்த துருக்கிப்படைகள் திரும்பவும் சிறுகச் சிறுக முன்னேறத் தொடங்கின. துருக்க வில்லாளிகளின் அம்புகளின் ஓசை குறையவேயில்லை. இந்தத் துருக்கி தேசத்துப் பெரும் படையில் ஒரு பகுதியான அந்தக் குதிரை வீரர்கள், அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் கைப்பற்றிக் கொள்ள முடிவு செய்துவிட்டது போல் தோன்றியது.
சிறிது நேரத்தில் கொரசானியப்படைகளும் போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னேறத் தொடங்கிவிட்டன. போர் முரசுகள் பேரொலி எழுப்பிய அந்தக் காட்சியை உமார் சுட்டிக் காண்பித்தான். வேலைக்காரர்கள் இவர்களை அழைத்தார்கள்.
“அப்பா! அவர்களும் போரில் இறங்கிவிட்டார்கள்!” என்று ரஹீம் கூவினான். உமாரும், ரஹீமும் அவர்களோடு கலந்து கொள்ளப் புறப்பட்டார்கள். அப்பொழுது, நீண்ட வேல் ஒன்றை இழுத்துக் கொண்டு வந்த ஒரு பையன் ரஹீமின் குதிரைச் சேணத்து மிதியை பிடித்துக் கொண்டு, அல்லல்லா இல்லல்லா என்று கத்திக் கொண்டே குதிரையோடு தொடர்ந்து ஓடி வந்தான்.
தான் காத்துக் கொண்டிருந்த நேரம்வந்து விட்டதென்று ரஹீமுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தன் வாளை உருவினான். ஆனால், மறுகணமே, தன் வாளை உறைக்குள் போட்டு விட்டான். கூட வந்தவர்கள், கேடயத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னேறினார்களே தவிர வாளையுருவவில்லை. “கொல்லுங்கள் கொல்லுங்கள்!” என்று கூவிக்கொண்டே, இழுத்து வந்த வேலுடன் ஓடிய பையன், குதிரையோடு தொடர்ந்து ஓட முடியாமல், கீழே, தரையில் வீழ்ந்து விட்டான்.
சேறும், நீரும் நிறைந்த நிலத்தின் குறுக்கே, அவர்கள் குதிரைகள் போய்க் கொண்டிருந்தன. சுமார் ஒருமணி நேரமாக ஓடிக் கொண்டிருந்துங்கூட அவர்கள் அந்த பள்ளத்தாக்கிலேயே சென்று கொண்டிருந்தார்கள். போர் செய்யும் இடம் அவ்வளவு தூரத்தில் இருந்தது. போகும் வழிகளில், சகதிகளில், பாதிபுதைந்த உடல்களும், வெட்டுப்பட்ட முண்டங்களும் ஆங்காங்கே கிடந்தன. அவற்றைக் கண்ட குதிரைகள், மிரண்டு விலகித் திசைமாறித் திரும்பி ஓடின. ஆளில்லாத குதிரைகளும் அவர்களைப் பின்பற்றி ஓடிவரத் தொடங்கின. ஆங்காங்கே சிதறிக்கிடந்த பொருள்களை அரபியர் சிலர் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது நிச்சயமாக சுல்தான் நம்மையும் போரில் குதிக்கச் சொல்லுவார் என்று ரஹீம் எதிர்பார்த்தான். ஆனால், பொழுது சாய்ந்து இருண்டுவரும் நேரத்தில் ஒரு தோட்டத்தில் வந்து இறங்கிய துருக்கிக் குதிரைப் படைகளின் அருகே, வந்து சேர்ந்தார்கள். துருக்கிப் படைகள் எங்கோ கிடைத்த காய்ந்த சுப்பிகளைக் கொண்டுவந்து எரித்து நெருப்பு காய்ந்து கொண்டிருந்தார்கள்.
அங்கேயே, இரவு தங்கும்படி, ஆணையிடப்பட்ட கொரசானியப் படைக்கு உணவும் கிடைக்கவில்லை; குளிர்காய நெருப்பும் கிடைக்கவில்லை.
இந்த சங்கடமான சூழ்நிலையில் அன்றைய இரவைக் கழித்துக் கொண்டிருந்த அவர்கள், காலை வெளிச்சம் தோன்றிய சமயத்தில் தூரத்தில் பேரிகை முழக்கம் கேட்டு எழுந்தார்கள்.
அந்தப் பேரிகையொலி கிறிஸ்தவர்களின் முகாமிலிருந்து கிளம்பியது. இருட்டில் நடந்த ஏதோ ஒரு சூழ்ச்சியினால், கிறிஸ்தவப் பேரரசருடைய பின்னணிப்படை, வெகு தூரத்திற்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது. காலாட்படைகளோ, மலைப்புறத்திலே துண்டிக்கப்பட்டு தனியாக சுல்தானுடைய படைகளால் சூழப்பட்டுச் சரண் அடைந்துவிட்டது.
இந்த இக்கட்டான, சூழ்நிலையில் கிறிஸ்தவச் சக்கரவர்த்திக்கு, தன்னுடைய படையைச் சிறிது பின்வாங்கிக் கொள்ளும்படி நேர்ந்துவிட்டது. இப்பொழுது, பொழுது விடிந்ததும் புதிய படையெடுப்புக்குக் கிளம்பும்படி தன்னுடைய குதிரைப் படையை அழைக்கும் அடையாளமாகத்தான் பேரிகையொலி எழுப்பப்பட்டது. உமாரும், ரஹீமும், குளிர்தாங்காமல், ஒடுங்கி உறங்கிக் கிடந்தார்கள். அவர்களுக்கு இந்த விஷயங்களே அடியோடு தெரியாது.
அவர்களுடன் கூட வந்தவர்கள் அவர்களுடைய குதிரைகளுக்கும், சேணம் பூட்டி ஆயத்தம் செய்து, அவர்களையும் எழுப்பிக் கிளம்பச் செய்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமலே அவர்கள் இருவரும், பாய்ந்தோடும் குதிரைகளின் மேலே, பக்கமெல்லாம் படைவீரர்கள் சூழப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது, உமாருக்குப் பார்த்த இடமெல்லாம் குழப்பமாகவேயிருந்தது. ஒரு குதிரை வீரனின் தலைப்பாகை சரியாகக் கட்டப்படாமல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
ஒரு மனிதன் வாயைத் திறந்தபடியே, வெறுங்காலால் ஓடிக் கொண்டிருந்தான். ஒரு வண்டி கவிழ்ந்து கொண்டிருந்தது. அதன் கீழே, ஒரு குடியானவன் நசுங்கிக் கிடந்தான்.
திடீரென்று ஒரு பக்கத்திலே ஒரு மனிதன், மண்டியிட்டு ஊர்ந்து வருவது தெரிந்தது. காயமடைந்திருந்த அவன் அருகிலே குதிரையை நிறுத்தித் தன் கைவேலால் அவனைக் குத்தினான், ஒருவீரன். அந்த வேல், கவசத்தைத் துளைத்துக் கொண்டு அவனுடைய உடலிலே, ஆழப் பதிந்தது. அவன் வாய்வழியாக, குருதி கொட்டித் தலைசாய்ந்து, கீழே விழுந்தான். அப்படியிருந்துங்கூட அவன் உடல் நகர முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்படிச் செத்து வீழ்ந்த வீரனை உமார் ஆச்சரியத்தோடு உற்று நோக்கினான். அவன் ஒரு கிறிஸ்தவ வீரன் போல் இருந்தது.
ரஹீம் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காகத் திரும்பிப்பார்த்தான் உமார். தலைப்பாகை சரியாகக் கட்டாமல் வந்து கொண்டிருந்த வீரன், தன் இடுப்பிலே பாய்ந்த ஓர் அம்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வலிதாங்காமல் முனகிக் கொண்டிருந்ததைக் கண்டான்.
குதிரைகள் போய்க் கொண்டேயிருந்த பாதையில் இங்குமங்கும் கூடாரங்கன் தெரிந்தன. இரும்புகள் மோதும் சத்தமும், அலறும் ஒலியும் எழுந்தன. தன்னுடைய குதிரை நுரை தள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட உமார் தன் கடிவாளத்தைத் தளர்த்தினான்.
இவ்வளவு நேரமும் போர்க்களத்தின் உள்ளே சண்டையின் மத்தியிலே புகுந்து வந்திருக்கும் தான் அதையுணராமலும், உறையில் இருந்த வாளை உருவாமலும் இருந்தது நினைப்புக்கு வந்தபோது உமாருக்குச் சிரிப்பாய் வந்தது. ஒரு பெரிய கூடாரத்தின் அருகிலே ரஹீம் நின்று கொண்டிருந்தான். அவனைச்சுற்றி எங்கும் நிறைந்திருந்த கொரசானியர்கள் கூடாரங்களுக்குள் ஏதும் பொருள்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை எதுவும் செய்யும்படி யாரும் சொல்லவில்லை. அவர்கள் குழந்தைகளைப் போலக் கூவிக்கொண்டும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் இருந்தார்கள். ரஹீமுடன் வந்தவர்களில் மூன்று பேர் அந்தக் கூடாரத்தின் உள்ளேயிருந்து பட்டுத் துணிகளையும் வெள்ளிப் பாத்திரங்களையும் அள்ளிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒரு பெண்ணையும் இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
அவள் மருண்டவள் போல் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அவளுடைய கண்களின் இருபுறத்திலும் ஒளிவீசும் தலைமயிர்கள் சாய்ந்து விழுந்திருந்தன. காய்ந்த கோதுமைத் தாள்கள் போல் அவை பளபளத்தன. அவள் முக்காடு அணிந்திருக்கவில்லை. அவளுடைய மெல்லிய இடையில் பொன்னுடை ஒன்றை அணிந்திருந்தாள்.
அந்தக் கொரசானியர்கள் இதற்குமுன்னே இப்படிப்பட்ட ஓர் கிறிஸ்துவ இளமங்கையைப் பார்த்ததேயில்லை. எல்லோரும் அவளுடைய அழகிய உருவத்தைத் திறந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“உமார்! அல்லா நமக்கு அருள் புரிந்துவிட்டார் வெற்றி கிடைத்துவிட்டது” என்று ரஹீம் மகிழ்ச்சியுடன் கூறினான்.
வெற்றி என்று அவன் கூறிய குரலிலே விசித்திரமான ஓர் ஒலி இழைந்து கலந்திருந்தது.
‘இந்தப் புெண் கிறிஸ்துவப் பேரரசரின் அடிமைகளில் ஒருத்தியாக இருக்க வேண்டும். என் பங்குக்கு நான் ஒரு மத ரோதியான நாயைக் கொன்று விட்டேன்! வாருங்கள்; கூடாரத்திற்குள்ளே போய்ப் பார்க்கலாம்!’ என்று ரஹீம் அழைத்துக் கொண்டிருந்தபோது அவனுடைய வேலைக்காரன் யார்மார்க் ‘எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூவினான். கூடாரங்களுக்கு ஊடே சில மனிதர்கள் விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏறிவந்த குதிரைகள் வியர்த்து விறுவிறுத்து அதன் உடலெங்கும் சேறும் சகதியுமாக ஓடிவந்து கொண்டிருந்தன.
பேய் பிடித்தவர்கள் போலத் தீராத வெறியுடன் கத்திகளையும் கோடாரிகளையும் ஏந்திப் பிடித்துச் சுழற்றிக் கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தார்கள். இரும்புத் தலைக்கவசங்களின் கீழேயிருந்த அவர்களின் முகங்கள் கடு கடுத்துச் சுருங்கியிருந்தன. அந்தக் குதிரை வீரர்கள் நெருங்கி வந்ததும் யார் என்று தெரிந்தது. ஆவேசம் பிடித்துப் பாய்ந்தோடி வந்த அவர்கள், தோற்ற கிறிஸ்தவர்களிலே சிலர்!
அவர்களைக் கண்டதும், உமார் தன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துத் திருப்பினான். அந்த வீரர்கள் அவன் மேல் பாய நெருங்கும்போது, அந்தக் குதிரை திடீரென்று திரும்பிப் பின்வாங்கி உமாரைக் கீழே தள்ளிவிட்டு ஓடியது.
கீழே விழுந்த உமாரின் தோளில் ஏதோ ஒரு பொருள் இடித்தது. பாய்ந்து செல்லும் ஒரு குதிரையின் கால்கள் அவன் தலைக்கு மேலே தாவிச்சென்றன. வாயும் கண்களும் சகதியடித்து முடிப் போயிருந்தன. கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு பார்த்தபொழுது அவன் விழுந்து கிடப்பது தெரிந்தது. தள்ளாடிக் கொண்டே அவன் எழுந்து நின்றான். வேலைக்காரர்களில் ஒருவன் கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் கைகலப்பது போல் தரையின் மீது சுழன்று கொண்டிருந்தான்.
அவனுக்கருகிலே ரஹீம் தரையின் மீது கிடந்தபடி எழுந்து உட்கார முயற்சித்துக் கொண்டிருந்தான். யார்மார்க் குனிந்து அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். உமார், ஒடிப் போய் ரஹீமின் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவன் ஏதோ ஒரு புது மாதிரியாக உமாரை நோக்கி மெதுவாகச் சிரித்தான்.
“உனக்கு யார் இந்தக் கொடுமை செய்தார்கள். எப்படிக் காயம் ஏற்பட்டடது? சொல்?” என்று உமார் துடிதுடித்துக் கொண்டே கேட்டான். காயம்பட்டுக் குருதி யொழுகிச் சோர்ந்துபோன ரஹீம் ஏதும் சொல்லாதவனாக அவனையே கூர்ந்து பார்த்தான். யார்மார்க்கை ஒரு சுத்தமான துணி கொண்டு வரும்படிச் சொல்லிவிட்டு ரஹீமை மெதுவாகத் தரையிலே கிடத்தி அவனுடைய சட்டையைத் தூக்கி காயம் ஏற்பட்ட இடத்தைப் பார்த்தான்.
குருதி அவன் கைகளிலே சூடாகப் பாய்ந்து வழிந்தது. அந்தக் குருதியிலிருந்து மெல்லிய ஆவி எழுந்து காற்றிலே கலந்தது. யார்மார்க் உமார் அருகிலே வந்து நின்று கொண்டு மெல்லிய குரலிலே “தொண்டைக் குழியிலே அவனுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதை நீங்கள் பார்க்கவில்லையா? இனி, என்ன செய்யப் போகிறீர்கள்!” என்று கேட்டான். எழுந்து நின்று உமார் தன் குருதி தோய்ந்த கைகளைப் பார்த்தான்.
கதிரவனின் ஒளிக்கதிர்கள் அவன் கைகளிலும், சிதறிக்குழம்பிக் கிடந்த தரையிலும் பட்டுத் தெளித்தன. ரஹீம் முகம் வெளுத்து மூச்சு விடுவதை நிறுத்திவிட்டான். தொண்டைக் குழி சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு நின்று போய்விட்டது.
ரஹீமின் வேலைக்காரன் ஒரு மிருகம் போல் உறுமிக் கொண்டே தன் இடுப்பில் இருந்த ஒரு வளைந்த கத்தியை உருவினான். ரஹீம் செத்துக் கொண்டிருக்கும் போது அருகிலேயே நின்று கொண்டிருந்த, பிடிபட்ட அந்தக் கிறிஸ்தவப் பெண்ணின் மீது பாய்ந்தான் யார்மார்க்.
உதடு துடிக்க, “உயிருக்கு உயிர், பழிக்குப் பழி’ என்று கூவிக்கொண்டே அவளைத் தாக்கினான். அவள் பின்னுக்கு விலகிக்கொண்டாள். அவளுடைய ஆடை கத்தியால் கிழிபட்டது. அவள் ஓடிவந்து உமாரின் காலடியிலேயே வீழ்ந்து, அவன் கால்களைப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் எதுவும் பேசவில்லை. ஆனால் அவள் கண்கள் வேதனையோடும் துடிப்போடும் அவனை உற்று நோக்கின.
“முட்டாளே!” என்று கூவிக்கொண்டே உமார் யார்மார்க்கின் கையைப்பிடித்து அப்புறம் தள்ளினான். அவன் எலும்பில் வலுவில்லாததுபோல் தரையில் வீழ்ந்து “ஆய்லல்லா ஆய்லல்லா” என்று முனகினான்.
அந்த ரோமானியப் பெண்ணை, கூடாரத்திற்குள் போகும்படி உமார் சொன்னான். அவன் பேச்சு விளங்காமல் அங்கேயே நின்றாள். அவன் கூடாரத்தைச் சுட்டிக் காண்பித்ததும், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே கூடாரத்தை நோக்கி நடந்தாள். மற்ற வேலைக்காரர்களின் உதவியுடன் ரஹீமின் உடலைக் கூடாரத்திற்குள்ளே தூக்கிவந்து சமுக்காளத்தின் மேலே கிடத்தினான்.
தன் கைக்குருதியைத் துணியில் துடைத்துக் கொண்டு அவர்களை நல்ல தண்ணீர் கொண்டு வரும்படி ஏவினான். தண்ணீரில் தன் உயிர்த் தோழன் முகத்தைக் கழுவித் துடைத்தான். சிறிது நேரம் சென்றதும் அந்தப் பெண்ணும் அவன் அருகிலே வந்து உட்கார்ந்துக் கொண்டு, அவனிடமிருந்து துணியை வாங்கிக் கொண்டாள். அவள் ரஹீம் தலையிலும், தொண்டையிலும் படிந்திருந்த அழுக்கைத் துடைத்து விட்டுத் தூய்மைப் படுத்தினாள்.
அவ்வாறு செய்து உமாரின் உள்ளத்தில் நல்லஎண்ணம் உண்டாக்கலாம் என்று அவள் நம்பியது போல் இருந்தது. பிறகு அவள் அந்த உடலின் ஆடைகளை ஒழுங்கு படுத்தினாள். நானாக இருந்தால் செத்துப்போன ஒரு கிறிஸ்துவனுடைய உடலைத் தொடவே மாட்டேன் என்று உமார் எண்ணிக் கொண்டான். ரஹீமுக்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருந்தன. அவற்றில் ஒன்றுகூட விடுபட்டுப் போகாமல் செய்து முடிக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான்.
அன்று இரவு பழுத்த தாடியுடன் கூடிய முல்லா அவனைப் பார்த்து அனுதாபத்தோடு கூறினார். “மகனே! புனிதமான கிணற்றிலிருந்து வெளிவரும் தண்ணிரும், கடைசியில் தரைக்குள்ளே போய்ச்சேர வேண்டியதுதான்! அல்லாவிடமிருந்து உயிர் தோன்றுகிறது. திரும்பவும் தீர்ப்பு நாள் வரும்போது அவரிடம் இந்த ஆத்மா போய்ச்சேர வேண்டியதுதான்” என்று அந்த முல்லா கூறினார்.
அவனுடைய மனதிலே, ரஹீமின் முகம் தோன்றியது. ஈரமண்ணிலே சகதியின் நிறத்திலே அது தெரிந்தது. இப்பொழுதோ, தூய்மையான புதைகுழியிலே இருண்ட மண்ணின் அடிப்பரப்பிலே, மெக்காவை நோக்கிக் கால்களை நீட்டிக் கொண்டு அவனுடைய உடல் கிடந்தது.
வேலை முடிந்ததும் முல்லா கிளம்பிவிட்டார். அவரால் புதைக்கப்பட வேண்டிய பிணங்கள் எத்தனையோ இருந்தன. உமாரை யார்மார்க் ஒரு நாயைப்போல் பின் தொடர்ந்து வந்து, அவனருகிலே கீழே உட்கார்ந்து கொண்டான். அவன் உடல் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது. அவனுடைய தலைவன் புதைக்கப்பட்டு விட்டான், அவனுக்கு ஒரு வகையில், அது நல்லதே! இனி அவன் அடிமையாக இருக்க வேண்டியதில்லை.
ஆனால், உமாருக்கு அப்படியில்லை, ஒன்றாக வளர்ந்து அண்ணன் தம்பி போல் பழகிய அவனை இழப்பதென்றால் அது பொறுக்க முடியாத வேதனையன்றோ? அந்த இடத்தைவிட்டு அவன் போவதென்பது பெருங்கஷ்டமான காரியம்.
இந்த இடத்திலே மழையால் அரிக்கப்பட்டுப் புல் வளர்ந்து கோதுமை விதைத்து அறுக்கப்பட்டும், எத்தனையோ ஆண்டுகள், பலவிதமான செயல்களும் நடத்தப்படும் பூமியின் கீழே அவன் படுத்துக் கிடக்க வேண்டும். தீர்ப்பு நாள் வந்து ஒவ்வோர் ஆத்மாவும் அதனதன் உடலிலே சேர்ந்து கொள்ளும் வரையிலே, பார்வைக்கெட்டாத திரைமறைவிலே ரஹீம் காத்துக் கொண்டு கிடக்க வேண்டும். கன்னத்தில் கைவைத்தபடி விடியுமட்டும் உட்கார்ந்திருந்தான் உமார்.
கடந்த இரண்டு நாள் அலைச்சலும் இப்போது இல்லாமல் இருந்தது, தவிர அவன் மனம் முழுவதும் துன்பத்திலாழ்ந்திருந்தது.
“ரஹீம்! உன்னுடைய உடல் ஒரு கூடாரம் போன்றது. உன் உயிர் அதிலே வந்து சில நாள் தங்கியிருந்தது. கூடாரம் தாக்கப்பட்டுவிட்டது, தன்னுடைய நெடும் பயணத்தைத் தொடங்கிவிட்டது. அந்தப் பயணத்திலே விரைவில் நானும் கலந்து கொண்டு உன்னைக் காண வருவேன்” என்று உமார் புலம்பினான்.
“ஆமென்! அமைதியுண்டாகட்டும்!” என்று யார்மார்க் உடன் மொழிந்தான்.
கூடாரத்திற்குள்ளே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அதை விழித்துப் பார்த்துக் கொண்டு உமார் உட்கார்ந்திருந்தான். ஒரு மூலையிலே கிடந்த ஆடைகளின் மத்தியிலே தூங்கிக் கொண்டிருந்த அந்த ரோமானியப் பெண் எழுந்து ஒரு ஜாடியிலிருந்த திராட்சை மதுவை ஒரு கண்ணாடிக் குவளையிலே ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள். உமார் அதை உதறித் தரையிலே தள்ளுவதற்காகத் தன் கையை ஓங்கினான்.
நிசாப்பூர் வீதியில் உள்ள சத்திரத்தில், அவனும் ரஹீமும் ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்தபோது, ரஹீம் அவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த காட்சி நினைவுக்கு வந்தது. அவன் அவளிடமிருந்து அந்தக் குவளையை வாங்கி அதில் இருந்த மதுவைக் குடித்தான். குளிர்ந்திருந்த அவனுடைய உடலிலே ஒருவிதமான கதகதப்பு உண்டாகியது. உமார் குடிக்கக் குடிக்க அந்தப் பெண் குவளையை நிரப்பிக் கொண்டேயிருந்தாள்.
அலுப்பு மிகுதியால் பெருமூச்சு விட்டுக்கொண்டே உமார் துணிக் குவியலின் மேல்படுத்து உறங்கத் தொடங்கினான்.
மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு அவன் அருகிலே உட்கார்ந்து கொண்டு வானம் வெளுத்து வருவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். எல்லாம் தெளிவாகத் தெரியும், அளவு வெளிச்சம் வந்ததும் ஒரு வெண்கலக் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு அவள் அதில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டே தலையை வாரிவிட்டுக் கொண்டாள். ஒரே இரவிலே தன்னுடைய எஜமானர்களை மாற்றிக் கொள்ளுவது அவளுக்குப் புதிதல்ல பழக்கமான விஷயந்தான்.
6. பகைவனுக்கருளும் பண்புள்ள சுல்தான்!
அந்த மலைப் பள்ளத்தாக்கின் மறு கோடியிலே சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களுடைய கூடாரம் அடிக்கப்பட்டது.
அந்தக் கூடாரத்தின் வாசலிலே துருக்கி அமீர்கள் கூட்டங் கூட்டமாக வந்து நுழைந்தார்கள். மத்தியிலே விரிக்கப்பட்டிருந்த நடை பாதைச் சமுக்காளத்தின் இருபக்கத்திலும் பலர் குழுமியிருந்தார்கள். நடைபாதைச் சமுக்காளத்தின் ஒரு கோடியிலே இருந்த மூன்று பேரையும் பார்ப்பதற்காக அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் இடித்துக் கொண்டும் தோளுக்குமேல் எட்டிப்பார்த்துக் கொண்டும் நின்றார்கள். அந்த மூன்று பேரும் யார் என்றால், ரோமானஸ் டயஜீன்ஸ் என்ற ரோமானியர்களின் பேரரசர்.
அந்தப் பேரரசர், போர்க்களத்தில் அடிபட்டு முர்ச்சையுற்றுக் கிடந்தபோது, அவரைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து, சுல்தான் காலடியிலே ஒப்படைத்த ஒரு முஸ்லிம் அடிமை, சுல்தான் ஆல்ப் அர்சலான் ஆகியோர்தாம்.
ரோமானஸ் என்ற கிறிஸ்தவப் பேரரசன், சுல்தான் அவர்களின் முன்னாலே மண்டியிட்டு வணங்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டார். தலைகுனிந்த தன்னுடைய அரசியல் கைதியின் கழுத்தின்மேலே தன் காலடியைத் தூக்கி ஒருமுறை வைத்தெடுத்த பிறகு அவரை வலப்புறத்திலேயிருந்த ஆசனமெத்தையொன்றில் அமர வைத்தார் சுல்தான். கிழக்கையும் மேற்கையும் ஆளும் அந்தப் பேரரசர்கள் இருவரும் முதன்முதலாக நேருக்கு நேராகப் பேசிக்கொள்வதைப் பார்க்க அங்கு கூடியிருந்தவர்கள் மிக ஆவலாக இருந்தார்கள்.
சுல்தான் ஆல்ப் அர்சலான், அரசியல் கைதியான அந்தக் கிறிஸ்துவப் பேரரசர் ரோமானஸைப் பார்த்துக்கேட்டார்: “நான் உம்முடைய கைதியாக்கப்பட்டு உம் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், நீர் என்னிடம் எவ்வாறு நடந்து கொள்வீர்? சொல்லும்” . இதுதான் அவருடைய கேள்வி.
கேள்வி மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டதும் ரோமானஸ் சற்றுத் தலைநிமிர்ந்து சிரித்துவிட்டு “தங்களை மிகக் கொடுமையாக நடத்துவேன்” என்றார்.
சுல்தான் அவர்களின் இருண்ட முகத்திலே ஒரு புன்னகை மின்னியது. “இப்பொழுது நான் உம்மை என்ன செய்வேன் என்று எதிர்பார்க்கிறீர்? என்று மறுபடியும் கேட்டார்.
பிடிபட்ட அந்தக் கிறிஸ்துவச் சக்கரவர்த்தி, கூர்மையான தன் எதிரிகளின் முகங்களை ஒருமுறை கவனித்துவிட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்து பதில் கூறினார்.
“இந்த இடத்திலேயே தாங்கள் என்னை வாளால் சீவிக் கொன்றுவிடலாம், அல்லது தங்களுடைய நாட்டுக்கு என்னை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து அழைத்துக்கொண்டு போகலாம், அல்லது என்னிடமிருந்து விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு விடுவிக்கலாம். இம்மூன்றில் எதையாவது செய்வீர்களென்றுதான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
இந்தக் கிறிஸ்தவச் சக்கரவர்த்தியின் வார்த்தைகள் ஆல்ப் அர்சலான் அவர்களின் உள்ளத்திலே ஒரு விருப்பத்தை உண்டாக்கின. ஆண்மை குறையாத ஒருவனைத் தாம் அடிமைப்படுத்தியதை நினைக்க அவருக்குப் பெருமிதமாக இருந்தது. ரோமாபுரியின் சீஸர் ஒருவனுடைய கழுத்திலே தாம் காலடிவைக்க நேர்ந்தது, அவருக்குப் பெருமையாக இருந்தது.
“நான் உம்மை என்ன செய்வதென்று முடிவு செய்துவிட்டேன், என்ன தெரியுமா? என்று சுல்தான் அவர்கள் கேட்டவுடனே, தகப்பனாருக்குப் பின்னாலே வீற்றிருந்த இளஞ்சிங்கம் முன்னாலே நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கைகள் இடுப்பைத் தடவின. முஸ்லீம்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் இரண்டு அரசர்களுமே இறந்து போவார்களென்றும், சோதிடம் சொல்லப்பட்டதை அவன் மறக்கவில்லை.
சுல்தான் தான் சொல்ல வந்ததைத் தொடர்ந்து “உம்மிடமிருந்து நான் விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு, ஆண்டுதோறும் கப்பங்கட்ட வேண்டுமென்ற கட்டுப்பாட்டின் பேரில் நான் உம்மை விடுதலை செய்கிறேன். எல்லாவிதமான மரியாதைகளுடனும் படைவீரர்களுடனும் உம்முடைய தேசத்திற்கு நான் உம்மை அனுப்பி வைக்கிறேன்” என்று முடித்தார். இளஞ்சிங்கம் பெருமூச்சு விட்டுக்கொண்டே, தன் இருக்கையில் சாய்ந்தான்.
நிசாப்பூரைச் சேர்ந்த அந்த இளம் மாணவன் அவனுக்குச் சொன்ன சோதிடம் பலிக்க வேண்டுமானால் கிறிஸ்தவ அரசன் அந்த இடத்திலேயே கொலையாளியால் கொல்லப்பட்டிருக்க வேண்டாமோ?
இளஞ்சிங்கத்தின் கனவு - இப்படி ஆயிற்று.
7. அடிமைக்கும் கவலைகள் ஆயிரம் உண்டு!
உமார் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தான். உடம்பு களைத்துப் போய் இருந்தாலும்கூட மனம் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. தன் நண்பன் ரஹீம் சாகும்போது புது மாதிரியாகப் புன்னகை புரிந்த அவனுடைய முகம் உமாரின் மனக்கண்ணை விட்டு நீங்கவேயில்லை.
நண்பர்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றிலே பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல் ஒட்டிப் பழகியவர்கள். வழிநெடுக எல்லாவற்றையும் பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்தவர்கள். இப்போது தன் உடம்பில் சரிபாதி போலிருந்த நண்பன் செத்துப் போய்விட்டான்! இனி என்ன செய்வது? எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக இருந்துவந்த உமாருக்கு இப்பொழுது ரஹீமுக்குப் பதிலாக அவனுடைய பணியாட்களை நடத்தும்முறை தெரியவில்லை. ஆனால் பணியாட்களோ தங்கள் எஜமானன் இறந்துவிட்ட பிறகு உமாரிடமிருந்தே உத்தரவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
போரில் வெற்றி கண்ட அராபியர்களும் மற்றவர்களும் கொள்ளைப் பொருள்களோடும், பிடிபட்ட அடிமைகளோடும் தத்தம் பகுதிகளை நோக்கிப் பயணப்படத் தொடங்கினார்கள். உமாரும் நிஜாப்பூருக்குப் புறப்பட வேண்டிய காரியங்களில் ஈடுபட வேண்டியவனானான்.
ஆனால் உமார் போர்க்களத்திலிருந்து ஒருசிறு கத்திகூட எடுத்துக் கொண்டுபோக விரும்பவில்லை. தன் உயிர் நண்பனான ரஹீமைப் பறிகொடுத்த துயரத்தை நினைவூட்டக்கூடிய எந்தப் பொருளையுமே அவன் எடுத்துச் செல்ல விரும்பவில்லை.
ரஹீமின் பணியாளான யார்மார்க் தன் எஜமானனின் கருப்புக் குதிரைக்கு சேனங்கட்டி, இறந்துபோன தன் தலைவனுடைய ஆயுதங்களையும் பொருள்களையும் முட்டையாகச் சேணத்தின் பின்புறத்திலே கட்டினான். உமார் அந்தக் கருப்புக் குதிரையைப் பார்த்தான். வெறும் சேணத்துடன், அதைத்தன் பக்கத்தில் நடத்திக் கொண்டு வழி முழுவதும் செல்வது இயலாத காரியம் என்று தோன்றியது. ஆனால் அவற்றை ரஹீமுடைய தகப்பனாரிடத்தில் ஒப்படைக்க வேண்டிய கடமையும் அவனுக்கு இருந்தது.
“இந்த ரோமானியப் பெண்ணை அந்தக் குதிரையைச் செலுத்திக் கொண்டுவரச் செய்யலாமே! அவளைச் சுமந்து செல்ல வேறு மிருகங்களும் இல்லை” என்று யார்மார்க் சொன்னான்.
அடிமையாகப் பிடிபட்ட அந்தப் பெண் ரஹீமின் சொத்தாவாள். அவளையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும். பட்டுப் போன்ற கூந்தலும், அழகும் இளமையும் பொருந்திய அவளை, நிசாப்பூர் அடிமைச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம். ரோமானியர்களின் தேசத்தைச் சேர்ந்த அவளோடு கிரேக்க மொழியில்தான் பேசமுடியும். பள்ளிக் கூடத்தில் உமார் படிக்கும்போது, பல கிரீக் வார்த்தைகளைத் தெரிந்து கொண்டிருந்தான். அந்த அரைகுறைக் கிரேக்கச் சொற்களை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணோடு பேசி, அவளைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொண்டான்.
அவளுடைய பெயர் அழகி ஸோயி என்பது. கான்ஸ்டான்டிநோபிள் நகரில் அவள் எப்போதும் அடிமைப் பெண்ணாகவே இருந்து வந்ததால் அவளுக்கு வேறு உறவு எதுவும் கிடையாது. ரோமானியச் சக்கரவர்த்தியைப் போலவே, இஸ்லாமியர்களை எளிதாக அடித்து விரட்டி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த கிறிஸ்துவ இராணுவ அதிகாரி ஒருவர் அவளைத் தன் அடிமைப் பெண்ணாகப் போர்க்களத்திற்குக் கூட்டி வந்திருந்தார். அந்த அதிகாரி முறியடிக்கப்பட்டு அவரிடமிருந்து அழகி ஸோயி பறிக்கப்பட்டு எதிரிகளின் கையில் சிக்கிக் கொண்டு விட்டாள். இவ்வளவுதான் அவளுடைய கதை!
‘நான் அந்தக் கறுப்பு குதிரையில் ஏறி வருகிறேன். அழகி ஸோயிக்கு என்னுடைய குதிரையைக் கொடுங்கள்!’ என்றான் உமார். வீர மரணம் அடைந்த, செல்வனான தன் நண்பனின் கறுப்பு குதிரையில் ஓர் அடிமைப்பெண் ஏறிவரக் கூடாதென்று நினைத்தான் போலும்.
அழகி ஸோயி முக்காடு போட்டுக் கொண்டு, உமாருக்குப் பின்னாலே வந்துங்கூட, வழியில் கண்டவர் எல்லாம், அவளுடைய உடையையும், பழுப்பான கூந்தலையும் பார்த்து, அவள் போரிலே பிடிபட்ட ஓர் அடிமைப்பெண் என்றும் அவள் அருகில் தனியாகவும் அமைதியாகவும் வரும் வீரனுடைய உடைமை என்றும் எண்ணிக் கொண்டார்கள்.
நீண்டவழிப் பயணத்தின்போது, முதன்முதலாக இரவிலே தங்குவதற்காக அவர்கள் பிடித்த இடம் மிகவும் வசதிக் குறைவாக இருந்தது. ஒட்டகப்பாதை முழுவதும் ஒரே கூட்டம்! ஏராளமான படைகளோடு முகாமிட்டிருந்த ஒர் அமீரின் கூடாரத்திற்கு அருகில், ஒரு சுனை நீர்க்கிணற்றின் பக்கத்தில் உமார் தன்னுடைய கூடாரத்தை அமைக்கும்படி நேரிட்டது. அவனுடன் வந்த வேலைக்காரர்களோ, எந்த விஷயத்தையும் சொல்லாமல் செய்வதேயில்லை என்றிருந்தது.
குதிரைகளை எங்கு கட்டவேண்டுமென்றும், அமீருடைய ஆட்களிடம், பேரம் பேசி ரொட்டியும் பார்லியும் வாங்கி வருவது எப்படி என்றும் அவன் ஒவ்வொன்றும் அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது. அந்த இரவில் உமார் படுத்துறங்கப் போகும் சமயத்தில் ரஹீமின் நினைவு அவன் மனத்திலே வந்து நிறைந்து கொண்டது.
கூடாரம் நட்டு வைத்திருந்த கம்பின் அருகிலே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அது அடங்கிச் சாம்பலாகும் வரையில், படுக்கையில் உட்கார்ந்தபடி உமார் விழித்துக் கொண்டேயிருந்தான். முதல் நாள் காலையில் குடித்த மது சிலமணி நேரங்கள் அவனைத் தன்னை மறக்கச் செய்திருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் இப்பொழுது மதுக்குவளைதான் இருந்தது;
மது இல்லை! மது ஜாடியில் கொஞ்ச நஞ்சமாவது மீதியிருக்காதா என்ற ஆவலோடு மூட்டையை அவிழ்த்து, அதில் இருந்த வெள்ளி ஜாடியைக் கையில் எடுத்துப் பார்த்தான். ரஹீமின் வாழ்வு என்னும் மது இருந்த கோப்பை அதிவிரைவில் காலியாகிவிட்டது அவன் இப்பொழுது சாவைத் தழுவிக் கொண்டு புதை குழியிலே கிடக்கிறான்.
அந்தத் துயர நினைவைக் கலைப்பது போல் அவனருகில் ஓர் ஒசை உண்டாயிற்று. படுக்கையறை உடைகளுடன் அவனருகில் தூங்கிக் கொண்டிருந்த அடிமைப்பெண் ஸோயி புரண்டு படுத்துப் பெருமூச்சு விட்டாள். உமார் குனிந்து அவள் கண்களை மூடிக் கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவளுடைய அழகிய கண்கள் இருண்டு நனைந்து போய் இருந்தன. ஏதோ கவலையின் மிகுதியால் அந்தப் பெண் தனக்குத்தானே அழுது கொண்டு இருந்திருக்கிறாள்.
அவளை எழுப்பியபடி, “என்ன ஸோயி? என்று மிருதுவாக உமார் கேட்டான்.
கண்விழித்த அழகிஸோயி தன் உதடுகளை விரித்து உமாரை நோக்கிச் சிறிய புன்னகையொன்றை நெளியவிட்டாள். தான் கண்ணிர் விட்டதாக உமார் அறிந்து கொள்ளக் கூடாதென்று அவள் எண்ணினாள்.
தன் சொந்த தேசத்தை விட்டுப் புறப்படும் இந்த நீண்ட பயணத்தில், இந்தப்பெண் எதைப்பற்றி நினைத்துக் கொண்டு இருந்திருப்பாள் என்று உமார் வியந்தான். இப்படி, அவளைப்பற்றி அவன் சிந்தித்தது இதுதான் முதல் தடவை. ஓர் அடிமைப் பெண்ணுக்கும் பேரரசனாகிய சுல்தானுக்கு இருப்பது போல் கவலைகள் உண்டு. ஆனால் அதை வெளியே சொல்லிக் குறைப்படுவதற்குத்தான் அனுமதிக்கப் படுவதில்லை!
உமார், அழகி ஸோயியை நெருங்கி அவளுடைய கூந்தலைப் பரிவோடு ஒதுக்கிவிட்டான். அழகி வியப்போடும் ஆவலோடும் உமாரை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு அவனுக்குத் தன் பக்கத்தில் இடம் கொடுப்பதற்காக கொஞ்சம் பின்னுக்கு நகர்ந்து படுத்துக் கொண்டாள்.
இப்பொழுது அவள் அழுகையெல்லாம் எங்கேயோ போய்விட்டது. உமாரின் கைபட்டதும் அழகியின் நாடித் துடிப்பு அதிகமாகியது. அவளை உமார் தன் கைகளுக்குள்ளே வாஞ்சையோடு அணைத்துக் கொண்டான். தான் போர்த்தியிருந்த துணியை எடுத்து இருவருக்கும் சேர்த்துப் போர்த்திக் கொண்டான். குழம்பிய சததியும், இராக்காற்றும், ரஹீமின் சாவுப் புன்னகையும் தன் நினைவைவிட்டு இப்பொழுதாவது அகலும் என்று எதிர்பார்த்தான்.
தன் தோளுக்குக் கீழே புரண்டு கொண்டிருந்த தலை மயிரை ஒதுக்கிவிட்டுக் கொள்வதற்காக அழகி ஸோயி அசைந்தாள். உமாரின் பக்கமாகப் புரண்டாள். அப்பொழுது உமாரின் உதடுகள் அழகியின் கழுத்தில் பதிந்தன. தேகத்தின் கதகதப்பும் கூந்தலின் மணமும் உமாருக்கு இதமாக இருந்தன. அந்தக் கதகதப்பே ஒரு வேட்கையாக மாறி உமாரின் களைப்பையெல்லாம் மறக்கடித்தது.
அழகி ஸோயியின் ஒவ்வொரு அசைவும் உமாரிடம் தன்னை மறந்த ஒரு நிலையையுண்டாக்கின.
அந்த இரவிலே அழகியின் கையணைப்பிலே, போர்க்களச் சகதியும், நண்பனின் சாவும் உமாருக்கு மறந்து போய்விட்டன. அமைதியாக மூச்சுவிட்டுக் கொண்டு உலக நினைவு எதுவுமில்லாமல் உமார் அயர்ந்து உறங்கினான்!
8. கணிதம் கற்க வந்தவன் ஒற்றனா? திருடனா?
உமார் தன் தந்தை இறந்த பிறகு தன் நண்பன் ரஹீமின் வீட்டிலே உல்லாசமாக வாழ்ந்தவன். ஆனால் போர்க்களத்திலிருந்து அவன் திரும்பி வந்ததும், ரஹீமின் சாவுச் செய்தியைக் கொண்டுவந்த அவனை ரஹீமின் பெற்றோர்கள் துர்க்குறியென்றே நினைத்துக் கடுமையாக நடத்தினார்கள்.
அவன் அழைத்து வந்த அழகி ஸோயியையும் அடிமைச் சந்தையிலே விற்பதற்காகப் பறித்துக் கொண்டு போய்விட்டார்கள். உமார் தங்குவதற்கு இடமில்லாமல் நிஜாப்பூர் பட்டணத்தின் தெருக்களில் சில நாட்கள் அலைந்தான்.
ஒரு காலத்தில் தன் உயிர் நண்பனோடு உல்லாசமாகத் திரிந்த வீதிகளில் இப்போது நடமாடுவதுகூட அவனுக்குப் பொறுக்க முடியாத துயரமாக இருந்தது. அதை மறப்பதற்காகத் தன் கவனத்தை வேறுவழியில் திருப்ப வேண்டுமென்று நினைத்துக் கணிதப் பேராசிரியர் அலி அவர்களிடம் வந்து அவருடைய மாணவனாக அவருடைய மாளிகையிலே தங்கியிருந்தான்.
பேராசிரியர் அலி அவர்களுக்கு எழுபத்து மூன்று வயதாகிவிட்டது. பழுத்த கிழவர், “ஞானக்கண்ணாடி’ என்ற பட்டப் பெயரால் பலராலும் சிறப்பிக்கப்படுபவர். சுல்தான் அரண்மனையிலுள்ள அமைச்சர்கள் ஆதரவால் அவர் வாழ்ந்து வந்தார்.
புனித நூலாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக, அவர் மனப்பூர்வமாகவும் உயிருக்குயிராகவும் விரும்புவது கணிதநூல் ஆகும். அவருடைய வீட்டில் எல்லாச்செயல்களும் மணிப்படிதான் நடக்கும். மணி அறிந்து கொள்வதற்காக முன் கூடத்தில் மீன் தொட்டிக்கு அருகில் ஒரு நீர்க்கடிகாரம் அமைக்கப்பட்டிருந்தது.
அவருடைய உதவியாட்கள், அவருடைய வேலைகளை நேரத்தைப் பார்த்தே கணக்குச் செய்து விடுவார்கள். இத்தனை மணியாகியதால் ஆசிரியர் குளித்துக் கொண்டிருப்பார்; இப்பொழுது படித்துக் கொண்டிருப்பார், இந்நேரம் எழுதிக் கொண்டிருப்பார், இந்தச்சமயம் சாப்பாடு நடந்து, கொண்டிருக்கும் என்று கணக்காகச் சொல்லிவிடுவார்கள்.
வானவெளியிலுள்ள கோளங்கள் கணக்காகச் சுழல்வது போல் பேராசிரியர் அலி அவர்களின் வீட்டில் நீர்க்கடிகாரப்படி, ஜந்து வேளைத் தொழுகையும், இரண்டு வேளைச் சாப்பாடும். பனிரெண்டு மணிநேர வேலையும் மாறிமாறி நடந்து கொண்டிருக்கும்.
அவர் தம் மாணவர்களுக்குப் போடும் சாப்பாட்டில்கூட எந்தவிதமான மாற்றமும் கிடையாது. எப்படித் தினந்தினமும் ஒரே கதிரவன் உதிக்கிறானோ, அது போலவே தினந்தினமும் ஒரேவிதமான சாப்பாடும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்!
பேராசிரியர் அலி சில சமயங்களில் நிஜாப்பூர் பட்டணத்திற்குக் கிளம்பிப்போவதுண்டு. அப்பொழுது அவர்தம் பதவிக்குத் தகுந்த ஆடம்பரமான பழுப்புநிற உடையணிந்து கொண்டிருப்பார். ஒரு மட்டக் குதிரையின்மேல் சவாரி செய்து கொண்டு போவார்.
சின்னப் பட்டுக் குடையொன்று வெயிலை மறைப்பதற்காகவும், கரிய அடிமைப் பையன் ஒருவன், குதிரையை அடித்து நடத்துவதற்காகவும் அவர் உடன் கொண்டு செல்வது வழக்கம். அவருடைய வீடு நிஜாப்பூருக்குத் தெற்கே, விளைநிலங்களுக்கெல்லாம் அப்பால், பாலைவனத்தின் உப்புப் படுகைகளின் அருகிலே தனியாக இருந்தது. இது தொந்தரவு எதுவுமில்லாமல் நிம்மதியாகக் கணித ஆராய்ச்சியும் கல்வி போதனையும் செய்வதற்கு வசதியாக இருந்தது.
சுல்தான் அவர்களின் அமைச்சர், பல ஆண்டுகளுக்கு முன், பேராசிரியர் அலியை, கணிதநூல் ஒன்று, புது முறையிலே ஆக்கும்படி பணித்தார். அதற்கிணங்க அடையாள எழுத்துக்களின் மூலமாகவே எண்களின் நுட்பத்தன்மையைக் கணிக்கும் (அல்ஜீப்ரா) நூலொன்றை அலி எழுதி முடித்திருந்தார்.
அவருடைய மாணவர்களின் வேலை என்னவென்றால், அவர் கூறும் விஷயங்களைக் குறிப்பெடுப்பதும், அவர் கட்டளையிடும்போது, கணக்குகளைப் போட்டுக் காண்பிப்பதும், பழைய நூல்களிலிருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தேவையான விஷயங்களைத் திரட்டிக் கொடுப்பதுமாகும்.
அதற்குப் பதிலாக, அந்தப் பேராசிரியர் அலி பிற்பகலில் மூன்று மணிநேரம் கணித விஞ்ஞானக்கலை நுட்பம் பற்றி விரிவுரை நிகழ்த்துவார். தம் செலவில் சாப்பாடும்போட்டு அவர்களை ஆதரித்தும் வந்தார்.
அவருடைய மாளிகையில் எட்டு மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கணித விஞ்ஞானக்கலையை, அவர்கள் ஒவ்வொருவரும் கசடறக் கற்றுத் தெளியவேண்டுமென்று அவர் அரும்பாடுபட்டு வந்தார். அவருடைய மரணத்திற்குப்பிறகு அல்லாவை வணங்கும் உலகப் பகுதியிலே கணித விஞ்ஞானம் அழிந்து போய்விடக் கூடாதென்பதற்காகவும், தம்முடைய ஆராய்ச்சி நூல்கள் பிற்கால உலகிற்குப் பயன்பட வேண்டுமென்பதற்காகவும், அவர் ஆர்வத்துடன் போதித்து வந்தார்.
அந்த எட்டுப்பேரிலும் உமார் மீதுதான் அவருக்கு நம்பிக்கையில்லை. பத்து மாதங்களுக்கு முன்வந்து அவரிடம் அண்டிய உமார் எதிர்காலத்தில் எப்படியிருக்கப் போகிறான் என்பது ஆசிரியருக்குப் புரியவேயில்லை. சிக்கலான கணித பிரச்சினைகளை எளிதாகக் கண்டு பிடிக்கும் சக்தியும் ஆபத்தைத் தரக்கூடிய கற்பனைத் திறமையும் உமாரிடம் மிதமாக இருப்பதாக ஆசிரியர் எண்ணினார்.
“கணிதம் என்பது, அஞ்ஞானத்திலிருந்து, அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாலம் போன்றது, அஞ்ஞானத்தைக் கடப்பதற்குக் கணிதத்தைவிடச் சரியான பாலம் வேறு எதுவுமில்லை” என்று பேராசிரியர் அலி அடிக்கடி தம் மாணவர்களுக்குச் சொல்வது வழக்கம்.
மத நம்பிக்கையற்ற கிரேக்கர்களின் கணித ஆராய்ச்சியை அவர் அடியோடு வெறுத்தார். எண்களைத் தங்கள் அடிமைகளாக்கிய முதல் கணிதநூல் ஆசிரியர்களான பழங்காலத்து எகிப்தியர்களின் கணிதக் கலைகளை அவர் மனதாரப் பாராட்டினார். எகிப்தியரின் கணித வேலைகள் பலப்பல பெரிய கட்டிடங்களை எழுப்பப் பயன்பட்டு வந்தது.
ஒருநாள் மாணவர்களில் ஒருவன் ஆசிரியர் அலியை நோக்கி, “குவாஜா இமாம் அவர்களே! நமக்கு மாதங்களைக் கணக்கிடுவதற்கு தீர்க்கதரிசி முகமது நபியவர்கள் ஏற்பாடு செய்த பிறைக்கணக்கு இருக்கிறது, ஒளி வருவதற்குக் கதிரவன் இருக்கிறான். அப்படியிருக்கும்போது, நட்சத்திரங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது என்ன பயன் தரும்? என்று கேட்டான்.
பேராசிரியர் அலி அவர்கள், மெக்காவுக்குப் போய் வந்தவர். புனிதமான ஹஜ்யாத்திரை செய்து வந்ததற்கு அடையாளமாக அவர் ஒரு பச்சைத் தலைப்பாகை அணிந்திருப்பார். அவருக்கு நட்சத்திரப் பலன்களிலோ சோதிடத்திலோ சிறிதுகூட நம்பிக்கை கிடையாது.
ஆனால் சுல்தானும், பெரிய பெரிய பிரபுக்களும் சோதிடத்திலே நீங்காத நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினால், ஆந்த நம்பிக்கைக்குப் பாதகமான தம்முடைய கருத்தை அவர் வெளியிடுவதில்லை.
சுல்தானின் அமைச்சர், தம் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு, யாரேனும் உளவாளிகளை அடிக்கடி அனுப்பி வைக்கக்கூடும் என்ற சந்தேகம் வேறு இருந்தது.
அப்படி அனுப்பி வைக்கப்பட்ட உளவாளியாக உமார் இருக்கக்கூடும் என்றும் எண்ணினார். அப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இல்லாமலும் இல்லை. உமார் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லையென்று சொல்லியிருக்கிறான். இது உண்மையாக இருக்காது. நிஜாப்பூருக்கு வெளியே, பல நாட்கள் சுற்றியலைந்துவிட்டுத் தன்னந்தனியாகத் தன்னிடம் வந்து, கணிதப் பேராசிரியரிடம் பாடம் கேட்க ஆவலுடன் வந்திருப்பதாகத் தெரிவித்தான்.
பார்ப்பதற்கு ஒரு போர் வீரனைப் போலவும், பசியெடுத்து இரைதேடிக் கொண்டிருக்கும் சிங்கத்தைப் போன்ற உடற்கட்டும் கொண்டிருக்கும் இவன் படித்துவிட்டுப் பள்ளியாசிரியனாகவா வரப்போகிறான்? பின் எதற்காக இவன் என்னிடம் பாடம் கற்க வரவேண்டும்? நிச்சயமாக இவன் உளவாளிதான்!” என்று அவனைப்பற்றி ஆசிரியர் அலி தீர்மானித்து வைத்திருந்தார். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.
“கற்றறிந்த மேதையான அபூரயான் பிருனி என்ற நூலாசிரியர் தம்முடைய சோதிடக்கலை நூலின் முதல் அதிகாரத்திலே, நட்சத்திரங்களைப்பற்றிய அறிவு ஒரு விஞ்ஞானம் என்றும், அந்த அறிவிருந்தால், அதன் உதவியால், மனிதர்கள், அரசர்கள், நகரங்கள், அரசியல் இவற்றிலே ஏற்படக்கூடிய மாறுதல்களைப்பற்றி முன்கூட்டியே அறிந்துசொல்ல முடியுமென்றும் கூறியிருக்கிறார்.
சோதிடநூல் அறியாமலேயே ஒருவன் வானநூலில் தேர்ச்சி பெற்ற அறிவுடையவனாயிருக்கலாம். ஆனால் வானநூல் அறியாதவன் சோதிடம் சொல்லுவதென்பது முடியாத காரியம். ஆகவே நட்சத்திரங்களைப் பற்றிய ஆராய்ச்சி சோதிடக்கலைக்கு முக்கியம்” என்று ஆசிரியர் பதில் கூறியார்.
கேள்விகேட்ட மாணவனுக்கு ஒரு நப்பாசையிருந்தது. தங்கம் செய்யக்கூடிய முறைகள் ஏதாவது தென்படுமா என்று பேராசிரியருடைய புத்தகங்களிலே புரட்டிப்புரட்டி ஆராய்ச்சி செய்து பார்த்தான். ஆனால், அவன் கண்ணுக்கு அது அகப்படவேயில்லை அடுத்தபடியாக அவன் ஒரு கேள்வி கேட்டான்.
“பழையநூல் ஒன்றிலே பொன்னின் தன்மை சூரியனிடம் இருக்கிறதென்று எழுதியிருக்கிறது. சூரியனுடைய சத்து நெருப்பு. நெருப்பின் மூலமாக நாம் பொன்னைப் பெறலாம், நெருப்பின் சத்தை நாம் கண்டுபிடித்துவிட்டால் தங்கம் பெறலாம். நெருப்பின் சத்தை நாம்பெறுவதற்கு... வழி... எதுவும் இருக்கிறதா?” என்று ஐயம் கேட்பவன்போல் கேட்டான். பக்கத்திலேயிருந்த மாணவன் வேடிக்கையாக “அடுப்பின் மூலம் அடையலாமே!” என்றான்.
பேராசிரியர் அலி பேசத் தொடங்கினார்! “எல்லாம்வல்ல அல்லா அவர்கள் தங்கத்தை மண்ணின் கீழிருந்துதான் பெற வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள். உண்மையான அறிவுள்ளவர்கள், இது போன்ற வீணான ஆராய்ச்சிகளில் இறங்கக்கூடாது” - இதைச் சொல்வதற்கு முன் பேராசிரியர் தம் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
சுல்தான் போன்றவர்கள், தங்கம் செய்யும் வித்தை தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்களை நம்பிப் பலமுறை ஏமாந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஏமாந்ததன் மூலமாக, யாராலும் தங்கம் செய்யமுடியாது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை மனத்தில் இருத்திக் கொண்டுதான் அவர், தம் கருத்தைத் தைரியமாகச் சொன்னார்.
இருந்தாலும் உளவாளி என்று கருதப்படுகிற உமார் தம்மைக் கவனிக்கிறானா, என்ன நினைக்கிறான் என்று அவன் முகத்தை லேசாகப் பார்த்துக் கொண்டார். உமாரோ ஒரு தாளில் இறகு பேனாவில் ஏதோ வரைந்து கொண்டிருந்தான்.
பேராசிரியர் விரிவுரையாற்றும் போதும் உமார் அடிக்கடி இந்த மாதிரிப் பேனாவினால் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதை அவர் கவனித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவன் தன்னுடைய உரைகளைக் குறிப்பெடுக்கிறான் என்று அசட்டையாக இருந்தார்.
அவன் அமைச்சருடைய ஒற்றனாக இருப்பானோ என்ற எண்ணம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் குறிப்புகளை அவன் அமைச்சரிடம் கொண்டு போய்க் காண்பிப்பதற்கு அத்தாட்சியாகப் பயன்படுத்தக்கூடுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் இப்படி அவன் எழுதும் தாள்களை அவனுடைய படுக்கைக்குப் பக்கத்திலேயுள்ள மரப்பெட்டியில் பூட்டி வைத்துக் கொள்ளும் வழக்கமும் வைத்திருந்தான். ஆகவே, ஆசிரியரின் சந்தேகம் உறுதிப்பட்டது.
அன்று பேராசிரியர் திடீரென்று எழுந்து உமாரின் அருகிலே வந்து அவன் எழுதிக் கொண்டிருந்த தாளை கவனித்தார். ஒரு கனஅளவைக் காட்டும் படம் வரைந்து, பல கோடுகளால் பிரிக்கப்பட்டிருந்ததையும் அவற்றின் இடையே எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் அந்தத் தாளிலே கண்டார். வியப்புடன் “இது என்ன?” என்றார்.
“கனஅளவின் மூலங்களின் கணக்கு” என்று பதில் சொன்னான் உமார்.
கனஅளவு மூலங்களைப்பற்றிய கஷ்டமான கணக்கொன்றை அவனுக்குக் கொடுத்திருந்தது அவருக்கு நினைவுவந்தது.
“எவ்வளவு தூரம் செய்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
“முடிந்து விட்டது” என்றான்.
அவரால் நம்ப முடியவில்லை. அந்தக் கணக்கை அவரால் செய்ய முடியவில்லை. கிரேக்கர்கள் அந்த மாதிரியான கணக்கிற்கு விடைகண்டு பிடித்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் உமார் அதற்கு விடைகண்டு பிடித்திருக்கிறான் என்பது அவருக்குச் சந்தேகமான விஷயமாகயிருந்தது, ஆகவே, வகுப்பைக் கலைத்துவிட்டு, உமாரைத் தம்முடன் தனிஅறைக்கு அழைத்துச்சென்று அந்தத்தாளில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தார்.
“இந்த விஷயம் என்னால் புரிந்துகொள்ள இயலாததாயிருக்கிறது. கனஅளவைச் சிறுசிறு கோள அளவுகளாகப் பிரித்திருக்கிறாய் அல்லவா? கிரேக்கர்களின் விடையை நீயும் தெரிந்து கொண்டிருக்கிறாய்!” என்றார் அலி.
“அவர்கள் எப்படி இதன் விடையைக் கணக்கிட்டார்கள்? என்று உமார் கேட்டான்.
“இதுவரை நான் அதை அறிந்து கொள்ளவில்லை”
உமாருக்குக் கணக்குக் கொடுக்கும் போது, அதன் விடையைச் சொல்லவில்லை என்பது பேராசிரியருக்கு நினைவு இருந்தது. அவருடைய குறிப்புத் தாள்களுக்கிடையே, அந்தக் கணக்கைப்பற்றிய குறிப்பும் விடையும் வைத்திருந்தார். அவருடைய ஆசனத்தின் அருகிலே இருந்த திருக்குர்ஆன் புத்தகத்துக்குள்ளே அந்தக் குறிப்பைத் திணித்து வைத்திருந்தார். அவருடைய அறையைத் தவிர்த்து அந்தப் புத்தகத்தை அவர் வெளியில் எடுத்து வருவது கிடையாது.
தம் மாணவர்களையும் அறைக்குள் தாம் இல்லாதபோது வரக்கூடாதென்று கட்டுப்படுத்தி வைத்திருந்தார். ஆகவே ஒன்று உமார் அதைத் திருடிப்பார்த்து விடையைத் தெரிந்து கொண்டு கணக்கைச் செய்திருக்க வேண்டும் அல்லது அவன் இந்தக் கற்பனைக் கோடுகளின் உதவியால் தானாகவே செய்திருக்க வேண்டும்.
“இந்த முழுச்சதுரங்களின் அளவுகளைக் கொண்டு கனஅளவு மூலங்களைக்காட்டி வரைந்திருக்கிறாய், ஆனால் விடையை எந்த வழியாகக் கண்டு பிடித்தாய்? என்று அலி கேட்டார்.
உமார் குனிந்து வரைவுப் படத்தில் கைவைத்துக் காட்டியபடி “இந்தப் பகுதியைக் கழித்து இதையும் இதையும் கூட்டிப் பாருங்கள். விடைகிடைத்து விடுகிறது!” என்று காண்பித்தான்.
“என்னைக் குருடனென்றா நினைத்துக் கொண்டாய்? இது நான் உனக்குச் சொல்லிக் கொடுத்த அடையாளமுறைக் கணிதம் (அல்ஜிப்ரா) அல்லவே. மதநம்பிக்கை அற்ற கிரேக்கர்கள் கையாளுகின்ற இடைவெளிக் (ஜியோமிதி) கணிதம் அல்லவா இது.”
“இருக்கலாம், ஆனாலும் விடை கிடைத்து விட்டதல்லவா? எனக்கு அடையாள முறைக் கணிதத்தின் மூலம் செய்வது எளிமையாகத் தோன்றவில்லை.”
“இருந்தாலும் நான் கொடுத்தது அடையாள முறைக் கணிதம்தானே!”
“ஆம்! இப்பொழுது வழி கண்டுபிடித்து விட்டபடியால் அந்த முறையில் மாற்றிச் செய்வதும் கஷ்டமல்ல, எளிது தான்!” என்று சொல்லிக் கொண்டே உமார் அந்தக் கனஅளவு பார்த்துக் கொண்டே அடையாளக் கணித முறையின்படி அந்தக் கணக்கைச் செய்து காண்பித்தான். பேராசிரியர் அலி, உமாரின் திறமையைத் தெரிந்து கொண்டதுடன், அந்தக் கணித முறையையும் தம் நூலிலே சேர்த்துக் கொண்டார்.
இந்தக் கணிதத்தைச் செய்வதற்கு காரெஸ்மி என்ற கணிதப் பேராசிரியர் கூட முடியாதென்று சொல்லி முயற்சிக்காமலே போய்விட்டார். பாக்தாத் கல்லூரியில் இருந்த பேராசிரியர் உஸ்தாத், இம்மாதிரிக் கணக்குகளைச் செய்யப் பல்லைக் கடித்துக் கொண்டு முயற்சி செய்தும் பலன் ஏற்படவில்லை. “இது மாதிரியே வேறு கணக்குகளையும் செய்ய முயற்சிக்கிறாயா?” என்று பேராசிரியர் அலி வியப்போடு கேட்டார்.
“எத்தனையோ தடவை செய்திருக்கிறேன்” என்றான் உமார்.
“விடைகள் கிடைத்தனவா?”
“கிடைத்தன, ஆனால் ஒவ்வொரு முறை கிடைக்காமலும் போயிருக்கின்றன!”
“நீ செய்திருக்கும் மற்ற கணிதங்களையும் நான் பார்வையிடலாமா” என்று குழைந்து கொண்டே கேட்டார் அலி.
உமார் சற்று நிதானித்து ‘ஐயா நான் உங்கள் உப்பைத் தின்று வருகிறேன். உங்கள் காலடியில் இருந்து எத்தனையோ அறிய முடியாத விவரங்களை அறிந்திருக்கிறேன். நீங்கள் செய்யச் சொன்ன வேலைகளை நான் செய்து வந்திருக்கிறேன். ஆனால் இந்தக் கணித முறைகளெல்லாம், நான் சொந்தமாகக் கண்டு பிடித்தவை. அவற்றை உங்களுக்குக் காண்பிக்க இயலாதவனாக இருக்கிறேன். மன்னிக்க வேண்டும்” என்றான்.
பேராசிரியர் அலியின் கண்களிலே கடுகடுப்பு மிதந்தது. “அவற்றை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”
“இன்னும் நான் அதைப்பற்றி ஒன்றும் முடிவு செய்யவில்லை” என்று கொஞ்சங்கூட அஞ்சாமல் உமார் பதில் கூறினான்.
“நீ செய்த கணிதங்களை யெல்லாம் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறாய் அல்லவா?” என்று கேட்டார் அலி.
“ஆம்” என்றான் உமார்.
அவனை அனுப்பிவிட்டுப் பேராசிரியர் அலி, கன அளவுகளைப்பற்றிய கணக்குகளிலேயே தம் நினைவுகளை செலுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அன்று பிற்பகல் வகுப்பு நடத்த வேண்டியதையும் மறந்து விட்டார். உமார் செய்தது போலவே, மற்றொரு கணக்கைச் செய்து பார்த்தார்.
வெற்றி கிடைக்கவில்லை. அடையாள முறை மூலம் செய்ய வேண்டிய கணிதத்தை இடைவெளிக்கணித முறையில் செய்யலாம் என்பதை அவரால் நம்பக்கூட முடியவில்லை. செய்யமுடியும் என்று உமார் செய்து காண்பித்துவிட்டான். இருந்தாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சலிப்போடு தன் பேனாவையும் தாளையும் வீசி எறிந்தார்.
9. எதிலும் ஐயமே; இதயம் குழம்புதே.
கிழவர் அலி மறுபடியும் தம் மாணவன் உமாரைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம், ஒரு வாரத்திற்குப் பிறகு தற்செயலாக ஏற்பட்டது. அன்று மாலையில் அவருடைய வாசலில் ஒரு குதிரை வந்து நின்றது. ஒரு குதிரையுடன் கூட வந்த பனிரெண்டு பேர்களிலே, ஓர் அடிமை குதிரை நின்ற இடத்திலிருந்து பேராசிரியரின் வீட்டு வாசல் வரையில் ஒரு நடைமிதியை விரித்தான். மற்றொருவன் உள்ளே நுழைந்து “பேராசிரியர் அலியைப் பார்ப்பதற்காக டுன்டுஷ் வந்திருக்கிறார்” என்று கட்டியம் கூறினான்.
பட்டாடைகளுக்குள்ளே உருண்டு திரண்ட உடலும் நீலக்கல் பதித்த பெரிய தலைப்பாகையும் கம்பீரமான குரலும் கொண்ட டுன்டுஷ் உள்ளே நுழைந்து பேராசிரியரைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
“ஆண்டவன் அருள் புரிவாராக! ஞானக் கண்ணாடியில் வாழ்வு நலம் சிறப்பதாக! இன்னும் பல்லாண்டு பல நூற்றாண்டுகள் வாழ்ந்து அறியாமை மிக்க ஏழைகளுக்கு அறிவொளியைக் கொடுத்து வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்துக் கூறினான் டுன்டுஷ்.
“என்னை அளவுக்கு மிஞ்சி உயர்த்திப் பேசுகிறாய்!” என்று பேராசிரியர் அலி கூற, “நிஜாப்பூர் நகர் முழுவதும் உங்கள் புகழ் ஓங்கி விளங்குகிறது. பேராசிரியர் காரெஸ்மியும், பாக்தாதுக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் அந்த முட்டாள் உஸ்தாத்தும் உங்களுக்கு இணையாவார்களா? என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்! அறிஞர் அலிசென்னா கூட விஞ்ஞான அறிவில் தங்களைக் காட்டிலும் உயர்ந்தவரல்ல” என்று இன்னும் அதிகமாகப் புகழ்ந்தான் டுன்டுஷ்.
இரத்தினக் கம்பளமொன்றில் இருவரும் உட்கார்ந்து, பழங்களும் சர்பத்தும் அருந்தத் தொடங்கினார்கள். டுன்டுஷைப் பற்றி அலிக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. அமைச்சருடைய பிரதிநிதிதான் டுன்டுஷ் என்றும், முத்துக்களையும், அழகிய வேலைப்பாடுள்ள பீங்கான் சாமான்களையும், பழைய கையெழுத்துப் பிரதிகளையும் அவன் சேகரித்து வருகிறான் என்றும் அவர் கேள்விப் பட்டிருந்தார். ஆனால் டுன்டுஷ் என்ன பதவியில் இருக்கிறான் என்பதோ, எங்கு குடியிருக்கிறான் என்பதோ அவருக்குத் தெரியாது.
அலி அவர்களின் கணித நூல் எவ்வளவு தூரம் பூர்த்தியாகியிருக்கிறது என்பதைப் பற்றிச் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, உமார்கயாம் என்ற மாணவன் ஒருவனைப் பார்க்க வேண்டுமென்று டுன்டுஷ் சொன்னான். தோட்டத்திலிருந்து உமார் அழைத்து வரப்பட்டான். உள்ளே நுழைந்த உமார் அந்த அறையின் ஒரு மூலையிலே, கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தான். பேராசிரியர் அலி காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, டுன்டுஷையும், உமாரையும் சந்தேகத்தோடும் கலவரத்தோடும் கவனித்துக் கொண்டிருந்தார்.
டுன்டுஷ் அழுத்தம் திருத்தமான குரலில், “கடந்த மாதம் ஒரு விசித்திரமான செய்தி வந்தது. கிறிஸ்துவர்களின் பேரரசனான ரோமானஸ் யாஜீன்ஸ், தன் நாட்டு மக்களாலேயே பிடித்துத் தாக்கப்பட்டுக் கண் பிடுங்கப்பட்டு கொடுரமாகக் கொல்லப் பட்டானாம்!” என்று கூறினான். உமாரின் முகம் சுருங்கியது. போரும் போரில் இறந்த அவன் உயிர்த் தோழனின் நினைவும் மனதில் தோன்றியது.
“போரில் பிடிபட்ட அந்தப் பகையரசனை நமது சுல்தான் அவர்கள் உயிரோடு விட்டதே அதிசயம், அதைக் காட்டிலும் அதிசயம், அந்த அரசன் தன் மக்களாலேயே கொல்லப்படுவது. இப்படிப்பட்ட ஒன்றை முன்னதாகவே தெரிந்து சொல்ல யாரால் முடியும்” என்று டுன்டுஷ் கேட்டுவிட்டு உமாரை நோக்கினான்.
தன்னிடமிருந்து, பதிலை எதிர்பார்க்கிறான் என்று உணர்ந்த உமார் “ஒருவராலும் முடியாது” என்று கூறினான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு உமார் கயாமை வெளியே அனுப்பிவிட்டார்கள். அவன் போன பின், டுன்டுஷ் மெல்லப் பேராசிரியர் அலியை நோக்கி, “சோதிடக் கலையை நீங்கள் நம்புகிறீர்களா? பின்னால் நடக்கப் போவதை யாராலும் முன்னால் சொல்லி விட முடியுமா?” என்று கேட்டான். “எல்லாம் அல்லாவினால்தான் முடியும் என்பது என் நம்பிக்கை, என்னுடைய சிற்றறிவு, கணித நூல் ஆராய்ச்சியைச் செய்து முடிப்பதிலேதான் ஈடுபட்டிருக்கிறது” என்று மழுப்பினார் ஆசிரியர்.
“நடக்கப் போகும் மூன்று விஷயங்களைப் பற்றி ஒருவன் முன்கூட்டியே சோதிடத்தின் மூலம் குறி சொல்கிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த மூன்று விஷயங்களும் தற்செயலாகவே நிறைவேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? உங்கள் அறிவுக்கு என்ன தோன்றுகிறது என்பதையே அறிய விரும்புகிறேன்” என்றான் டுன்டுஷ்.
“மூன்று விஷயங்களில் இரண்டு தற்செயலாக நடந்து விடலாம். ஆனால் மூன்றாவது நடக்கவே நடக்காது. எந்தச் சோதிடனும் மூன்று விஷயங்களைச் சேர்த்து முட்டாள் தனமாகச் சொல்லவே மாட்டான்” என்றார் அலி.
“அப்படிப்பட்ட சோதிடன் உங்கள் மாணவர்களிலேயே ஒருவன் இருக்கிறானே! சற்றுமுன் நாம் பேசிக் கொண்டிருந்தோமே; அவன்தான்” என்று டுன்டுஷ் கூறியதும், “உமாரா? அவன் செய்ய வேண்டியது அது ஒன்றுதான் பாக்கியிருக்கிறது” என்றார் அலி.
“அட; கடவுளே! வேறு என்ன என்ன செய்கிறான்? என்று டுன்டுஷ் கேட்டான்.
“பட்டு நூல்களில் கோர்த்த தந்த மணிகளை உன் விரல்களினால் எவ்வளவு எளிதாகத் தள்ளுகிறாயோ அவ்வளவு எளிதாக அவன் கன அளவுக் கணிதங்களைச் செய்து விடுகிறான்”.
“அப்படியானால் அவனிடம் ஏதோ ஒரு திறமையிருக்கிறது. ஓய்வு நேரத்தில் அவன் என்ன செய்கிறான்?”
“என் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்கிறான். பாலைவனத்தின் ஓரத்திலேதான் தன்னந் தனியாகச் சுற்றுகிறான். பழங்கள் சாப்பிடுகிறான்; சொக்கட்டான் ஆடுகிறான். தான் செய்யும் கணிதங்களை ஒரு பெட்டிக்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறான்!” என்று வேண்டா வெறுப்புடன் அடுக்கிக் கொண்டே போனார் ஆசிரியர்.
“பாலைவனத்தில் தனியாக ஒருவன் ஏன் நடந்து செல்ல வேண்டும்? உங்கள் பகுதியிலே யாரும் அழகிய, பெண்கள் மேல் மையல் கொண்டு சுற்றுகிறானா?”
“சொறி பிடித்த சலவைக்காரிகளைத் தவிர வேறு பெண்கள் இந்த பகுதியில் கிடையாது”.
உங்கள் மாணவன் உமார் கயாம் ஒரு விசித்திரமான ஆள்தான்! அவனுடைய ஆற்றல் கண்ணுக்குத் தெரியாத தேவதூதர்களின் சக்தியால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது பேய், பிசாசுகளின் செயலாக இருக்க வேண்டும். பேய்களின் கலையை மறைமுகமாகப் பயில்கின்ற அந்தப் பையனைத் தாங்கள் கவனித்து வரவேண்டும்.
அவனைப் பற்றிய விஷயங்களைக் குறித்து, ஒரு மாதம் ஆன பிறகு, குறிப்புகள் உள்ள தங்கள் தாள்களை உறையிலிட்டு மூடி முத்திரை வைத்து, அவன் கையிலே கொடுத்து, நிசாப்பூரிலுள்ள தாக்கின் வாசலில் வெள்ளிக்கிழமை மாலை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த டுன்டுஷ், “அறிவைத் தேடிக் கொண்டிருக்கும் நான் அறிவின் இருப்பிடமாகிய தங்களை விட்டுப் பிரிய நேரிடுவதற்காக வருந்துகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியேறினான்.
10. அதிசயத் திறமைக்கு அத்தாட்சிக் கடிதம்!
ஒரு மாதம் ஆன பிறகும்கூட உமாரைப் பற்றிய எந்த விதமான இரகசியத்தையும் பேராசிரியரால் கண்டு பிடிக்க முடியவில்லை. தம் மாணவன் அடையாள முறைக் கணிதத்திற்கு மாறுபாடாக இருப்பதன் காரணமும், புதுவிதமான கணக்குகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள காரணமும் என்னவென்பது அவருக்குப் புரியவில்லை.
எந்தவிதமான குறளி வித்தையையும் கையாண்டு, அவன் கணிதங்களைச் செய்யவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பேயோ, பிசாசோ, கண்ணுக்குத் தெரியாத எந்தப் பொருளோ, அவனுக்கு உதவி செய்யவில்லை என்பதிலும் அவனுடைய சொந்த மூளையைப் பயன்படுத்தியே கணித முறைகளைக் கண்டு பிடித்து விடை காண்கிறான் என்பதிலும் அவர் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தார். எந்தவிதமான முடிவுக்கும் அவரால் வர முடியவில்லை.
திடீரென்று ஒருநாள், உமாரை அவர் சோதிக்கத் தொடங்கினார். “அமைச்சரிடம் நீ எப்பொழுது திரும்பிச்செல்லப் போகிறாய்?” என்று அவர் கேட்டார்.
“திரும்பிச் செல்வதா? அமைச்சரிடமா? நான் அவரைப் பார்த்ததேயில்லையே!” என்று விழித்துக் கொண்டிருந்தான் உமார்.
“அல்லாவின் ஆணையாகக் கேட்கிறேன், எதற்காக என்னிடம் இத்தனை நாட்களாகத் தங்கியிருந்தாய்?”
“என் நண்பன் ரஹீம் போர்க்களத்தில் மாண்டு விட்டான், அவனுடைய பிரிவை மறப்பதற்காக ஒரு வேலையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்துடன் நிஜாப்பூரை விட்டுப் புறப்பட்டு தங்களிடம் படிக்கவந்தேன்” என்றான் உமார்.
“எந்த விஷயத்தைப் படித்து எப்படிப்பட்ட வேலையில் ஈடுபட நீ எண்ணியிருக்கிறாய்?” என்ற பேராசிரியர் ஒரு நீண்ட பிரசங்கமே செய்யத் தொடங்கிவிட்டார்.
“முதலில் அறிவு எப்படி உண்டாகிறது என்று பார்க்கவேண்டும். தீர்க்க தரிசிகளின் மூலமாக அறிவு இந்தச் சிறிய உலகத்திற்கு இறக்கிகொண்டு வரப்பட்டது. தீர்க்க தரிசிகளிடம் இயற்கையாகவே இருந்து விளங்கிய உள்ளொளியின் உதவியால்தான் காணாத உலகத்திலிருந்து அறிவைக் கல்லும் மண்ணும் நிறைந்த இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தார்கள்.
இந்த உலகில் அறிவை உண்டாக்கியவர்கள் தீர்க்கதரிசிகள் என்றால் அதை வளர்த்தவர்கள் தத்துவஞானிகள். தத்துவஞானிகள் தீர்க்கதரிசிகளின் வேத வாக்குகளை ஆராய்ந்து, விஞ்ஞானங்களில் திறமைபெற்று, சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி போதித்தார்கள்.
அவர்கள் இல்லாவிட்டால் அறிவுக் கலைகள் அனைத்தும் மக்களுக்குத் தெரியாமல் மறைந்து போயிருக்கும். மிக உயர்ந்து விளங்கிய அந்த தீர்க்கதரிசிகளைக் காலவரிசை முறைப்படி பார்க்கும்போது முதலாவதாக மூசாநபியும், அடுத்ததாக நாசரி ஈசாநபியும், மூன்றாவதாக முகமது நபி அவர்களும் வருகிறார்கள். தத்துவ ஞானிகளைப் பற்றிப்பேசும்போது அறிஞர்களுக்குள்ளே வேற்றுமையான கருத்துக்கள் நிலவுகின்றன. நான் அறிந்த வரையிலும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும், நமது பேரறிஞர் அலி சென்னாவும் மக்கள் உள்ளத்திலே அறிவு விளக்கை ஏற்றி வைத்தவர்கள் ஆவார்கள்.
தத்துவஞானிகளை அடுத்துக் கவிஞர்கள் வருகிறார்கள், கவிஞர்களின் திறமையோ ஆபத்தானதாகும். அவர்கள் தங்கள் அபூர்வமான கற்பனையைப் பயன்படுத்திப் பெரியனவற்றைச் சிறியதாகவும் சிறியனவற்றைப் பெரியனவாகவும் மாற்றியமைத்து விடுவார்கள். கோபத்தையோ, காதல் உணர்ச்சியையோ தூண்டி விடுவதன் மூலம் விருப்பையும் வெறுப்பையும் வளர்த்து உலகில் பெரியனவும் சிறியனவுமான பொருள்களைப் படைத்து விடுவார்கள்.
கவிஞன் கற்பனையைத் தூண்டி விடுவானே தவிர, அறிவைப் பாகுபடுத்தி விளக்க இயலாதவனாக இருக்கிறான். அதனால் தத்துவவாதியின் திறமையைக் காட்டிலும் அவன் கலை தாழ்ந்திராதுதான். ஆனால் கணித விஞ்ஞானிகள் உழைப்பின் பலனோ அழிவில்லாதது.
ஆண்டவன் ஒருவனே உண்மையான நிலையை அடைகிறான். அறியாமை யுலகத்திலிருந்து, அறிவுலகத்திற்குப் போகக்கூடிய பாலத்தைக் கட்டுபவன் கணிதமேதையே! அப்படிப்பட்ட கணிதக் கலையிலே அடையாள முறைக்கணிதமே மிகவும் நன்மை பயப்பது, சிறந்தது, உன்னுடைய திறமை முழுவதையும் நீ அக்கணித முறையில் தேர்ச்சி பெறுவதற்காகப் பயன்படுத்து வாயென்று எதிர்பார்க்கிறேன்.” என்று கூறிமுடித்தார்.
அவர் தன்னிடத்துக் காட்டிய அக்கறை, உமாரின் உள்ளத்தைத் தொட்டது. தன்னுடைய எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தக்கூடிய சொற்களைத் தட்டுத் தடுமாறி நினைவுக்குக் கொண்டு வந்து, “நட்சத்திரங்களின் போக்கை அறிந்து, ஆராய்ந்து விடை காண வேண்டுமென்பது என் ஆசை!” என்று கூறினான்.
“நட்சத்திரங்களைப் பற்றியா? அது சோதிடக்கலையைச் சேர்ந்ததல்லவா? சோதிடமென்பது, கோளங்களுக்கும், மனித காரியங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியதல்லவா? அதற்கும் கணிதத்திற்கும் சம்பந்தம் இல்லையே!” என்றார் ஆசிரியர்.
“இருந்தாலும் விஷயம் ஒன்றுதானே!”
“என்ன சொன்னாய்! என் புத்தகத்தில் உள்ள விஷயமும், ராஜ சோதிடனின் கூற்றும் ஒன்றா? அது தவறு. இன்னொரு முறை அதை என் காதில் படும்படி சொல்லாதே”.
“இருந்தாலும், ஒரு கலையின் மூலம் பெறப்படும் உண்மையும், வேறொரு கலையின் மூலம் பெறப்படும் உண்மையும் ஒன்றுதானே?”
“அப்படியல்ல மகனே; இந்த மாதிரியான வீணான எண்ணங்களை யெல்லாம் கொண்டு அவதிப்படாதே. நீ இளைஞன். காலம் வரும்போது அனுபவத்தின் மூலம், ஒரு கலை, மற்றொரு கலையின் பகுதியல்ல என்பதை உணர்ந்து கொள்வாய். கணிதக் கலையொன்றுதான் உண்மையான அறிவையுண்டாக்கக் கூடியது.
உன்னுடைய கவனமெல்லாம் அதிலேயே செலுத்தப்பட வேண்டுமென்பதுதான் என் விருப்பம். நாளைக் காலையில் நான் உனக்கொரு கடிதம் தருகிறேன். அதையெடுத்துக் கொண்டு நிஜாப்பூருக்குச் சென்றால், அங்கே உன்னை ஆதரிக்கக்கூடிய ஒருவரைச் சந்திப்பாய். உன் பயணம் வெற்றி பெறுவதாக!” என்று வாழ்த்தினார். உமார், ஆசிரியரிடம் எவ்வளவோ பேச வேண்டுமென்று எண்ணினான். ஆனால், தன் கருத்தை அவரிடம் முழுவதும் விளக்க முடியவில்லையே என்று வருந்தினான்.
அவரை விட்டு எழுந்து செல்லும் போது, தன் வாழ்வின் மற்றொரு கதவும் அடைப்பட்டுவிட்டதாகத் தோன்றியது. அவன் சென்ற பிறகு பேராசிரியர் அலி, பேனாவும் வெள்ளைத் தாளையும் எடுத்து எழுதத் தொடங்கினார்.
“என்னுடைய மாணவன் உமார்கயாம் பாக்தாதுக் கல்லூரிப் பேராசிரியர் உஸ்தாது அவர்களுக்குச் சமமான திறமையுள்ளவன் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். எந்த விதமான கணித பிரச்சனைகளுக்கும் விடைகாணக்கூடிய அபூர்வ சக்தியொன்று அவனிடம் இருக்கிறது. ஆனால் அது எது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அபூர்வத் திறமையைக் கொண்டு அவன் என்ன செய்வானென்று கூற முடியவில்லை. ஏனெனில் அவன் இன்னும் தன் கற்பனைக்கு அடிமையாகவே இருக்கிறான்.
என் வீட்டிலே வளர்ந்த அவனுடைய இந்த அறிவுத் திறனை தாங்கள் அறிந்த ஆதரவாளராக ஏற்றுக் கொள்ளும்படி செய்யுமாறு வேண்டுகிறேன். மேற்படி ஆதரவாளர்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவன் அடியவன் அலி.”
மை உலர்ந்த பிறகு, கடிதத்தை மடித்து தன்னுடைய முத்திரையைப் பதித்து “டுன்டுஷ் பெருமகனார், தாக்கின் வாசல், நிஜாப்பூர்” என்று முகவரி எழுதினார்.
11. காத்திருந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது!
அடுத்தநாள் வெள்ளிக்கிழமை அன்று காலையில், பேராசிரியர் அலி அவர்கள் கொடுத்த கடிதத்தை வாங்கிக் கொண்டு நிஜாப்பூரை நோக்கிப் பயணம் புறப்பட்டான். கால்நடையாகவே போய்க் கொண்டிருந்த உமார் வழியில் உப்பு ஏற்றிக் கொண்டு போகும் ஒட்டகச் சாரி ஒன்றைக் கண்டான்.
ஒட்டகங்களை நடத்திக்கொண்டு சென்ற அந்த மனிதர்கள் இரக்கப்பட்டு, உமாரைத் தங்கள் கழுதைகளில் ஒன்றின்மேல் ஏறி வரச் சொன்னார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டும் அவர்கள் பாடிய தில்லானாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டும், சென்றபடியால் கொளுத்தும் வெயிலின் கொடுமையையும் பொறுத்துக் கொண்டு போக முடிந்தது.
நிஜாப்பூருக்கு வந்தவுடன் அவன், நேரே தக்கின் வாசல் என்கிற இடத்திற்குப் போனான். ஒரு மசூதிக்கும் தக்கின் வாசலுக்கும் இடையேயுள்ள சந்தில் வரிசையாக உள்ள இறைச்சிக் கடைகளில் ஒன்றில் உட்கார்ந்து உமார் வறுத்தக்கறியும் கவாபும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
காலை முதல் வெயிலில் பிராயணம் செய்து, அலுத்துப் பசியோடிருந்த அவனுடைய உடல் தளர்ச்சி, சாப்பிட்டவுடன் குறைந்தது. அந்தச் சந்தில் வெயில் குறைந்து நிழலும் வரத்தொடங்கியது, மாலை பொழுது நெருங்கிக் கொண்டிருந்த படியால் பள்ளிக்குத் தொழுவதற்காக மக்கள் வரத் தொடங்கினார்கள்.
ஒல்லியான உருவமொன்று உமாரைக் கடந்து, மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. முக்காட்டுக்கு மடிப்புகளுக்கிடையே தோன்றிய அந்தப் பெண்ணின் கரிய விழிகளை உமார் உற்று நோக்கினான். முக்காட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டு வளைந்திருந்த அவளுடைய பழுப்பு நிறக் கூந்தலின் சுருளும் அந்தக் கடைக்கண்பார்வையும் உமாருக்கு எங்கோ முன் பழக்கமான மாதிரியாகத் தோன்றியது.
போர்க்ளத்திலே கண்ட அந்த அடிமைப் பெண் ஸோயியின் நினைவு அவனுக்கு ஏற்பட்டது. கடையிலிருந்த அவன் விரைவாக எழுந்து, தன் புத்தகங்களையும் கையில் எடுத்துக் கொண்டு, திரும்பிப் பார்த்த அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து சென்றான்.
அவள் மசூதிக்குள்ளே நுழைந்து விட்டாள். பின் தொடர்ந்து சென்ற உமாரின் காதுகளிலே, “நம்பிக்கையுள்ளவர்களே! தொழுகைக்கு வாருங்கள்! எல்லாம் வல்ல அல்லாவை ஏற்றிப் பணிவதற்கு வாருங்கள்!” என்ற அழைப்பு விழுந்தது. உள்ளே நுழைந்து ஓரிடத்தில் மண்டியிடுவதும், பிறகு எழுந்திருந்து மற்றோர் இடத்திற்கு நகருவதும் அந்த இடத்தில் மண்டியிடுவதும் இப்படியாக உமார் முன்னேறிக் கொண்டிருந்தான்.
அவனைச் சுற்றி எல்லோரும் வாய் முணுமுணுத்துக் கொண்டே தொழத்தொடங்கியதும் அவனும், தன்னுடைய செயலை விட்டு விட்டு மண்டியிட்டபடியே தொழுகையில் ஈடுபட்டான். தொழுகை முடிந்ததும் எல்லோரும் எழுந்து செல்ல வெளியே கிளம்பினார்கள். அவன் பெண்கள் பக்கம் தன் கண்களைச் செலுத்தினான்.
நீல முக்காட்டுக் காரியான அந்தப் பெண், மற்ற பெண்களுக்குப் பின்னே நிற்பதும், வேலைக்காரி யொருத்தியுடன் வெளியே புறப்படுவதையும் கண்டு பின்தொடர்ந்தான். வெளி முற்றத்தில் வந்து தன் கால் மிதியடியை மாட்டிக் கொண்ட அவள், அதைச் சரியாக மாட்டிக் கொள்ளாததால் சிறிது நடந்தவுடன் ஒரு மிதியடி சிதறிக் காலிலிருந்து நழுவிச் சிறிது தூரத்தில் விழுந்தது. அதை எடுப்பதற்காக குனிந்த அவள் அருகில் நிற்கும் உமாரைக் கண்டாள்.
“உமார்! என் பிறந்த தினத்தன்று நீ ரோஜாப் பூ அனுப்பி வைக்கவில்லையே? ஏன்?” என்று கேட்டு விட்டு, அவன் பதில் கூறுவதற்கு முன்னாலேயே, நழுவிபோய் வேலைக்காரியுடன் சேர்ந்து நடை கட்டி விட்டாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலே சிறுமியாயிருந்த யாஸ்மி தனக்கொரு ரோஜாப் பூக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.
பிறகு அவன் இறைச்சிக் கடைகளைக் கடந்து தாக்கின் வாசலுக்கு வந்தபோது, அந்த வாசல் கதவுகள் மூடப்பட்டிருந்தன. துருக்கிய வீரர் ஈட்டிகளுடன் அங்கே காவல் செய்து கொண்டிருந்தார்கள்.
“கயாம்! ஏன் இவ்வளவு காலந் தாழ்ந்து வருகிறாய்?” என்ற கரகரத்த குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். குதிரை மீது வந்து நின்று கொண்டிருந்த டுன்டுஷை அவன் அடையாளங் கண்டுகொண்டான்.
பேராசிரியர் கொடுத்த கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினான். அவன் அதை உடைத்து அருகில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் படித்துப் பார்த்தான்.
பிறகு அதை மடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டான். ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அவன் உமாரிடம் கொடுத்தான். பேராசிரியர் கடிதம் அவன் உள்ளத்தில் விருப்பம் உண்டாக்கியதா இல்லையா என்பது உமாருக்குப் புரியவில்லை. பேராசிரியரோ, அவன் உமாரிடம் அன்பாக நடந்து கொள்வான் என்றுதான் கூறியிருந்தார்.
“நிசாப்பூரில் உன் வீடு எங்கேயிருக்கிறது?” என்று டுன்டுஷ் உமாரைக் கேட்டான்.
“குவாஜா அலி அவர்களின் நட்புக்குரிய பெரியவரே! தற்சமயம் எனக்கென்று ஒரு வீடும் கிடையாது”
“அப்படியானால் எனக்குத் தெரிந்த குதிரைச் சேணம் செய்பவன் ஒருவன் இருக்கிறான். உன்னை ஆதரித்துக் காப்பாற்றும்படி அவனிடம் சொல்லுகிறேன். நீ அதற்குப் பதிலாக அவனுடைய எட்டு குழந்தைகட்டும் புனிதமான கொரான் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.
அவன் பேசிய போக்கும் அலட்சியமான பார்வையும் ஏதோ நாய்க்கு ரொட்டித் துண்டை விண்டுத் தூக்கி எறிவது போல் இருந்தது. உமாரை அவமதிப்பதற்காகவே அவன் பேசியது போலிருந்தது.
உமாருக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “இந்த மாதிரியான ஆதரவை எழுதப் படிக்கத் தெரிந்த யாராவது ஒரு காஜாப் பையனுக்குக் கொடுங்கள். ஏழைகளைக் காப்பாற்றும் இதயம் வாய்ந்தவரே! நான் விடைப் பெற்றுக் கொள்ளுகிறேன்” என்று எரிச்சலோடு கூறினான்.
“தாராளமாக” என்று கூறிவிட்டுத் தன் குதிரையைத் தட்டிவிட்ட டுன்டுஷ், வழியில் பழங்கந்தைகளுக்குள்ளே நெளிந்து கொண்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரன் அருகில் நின்று, அவன் பாத்திரத்தில் ஒரு நாணயத்தைப் போட்டான்.
“பழுப்புநிற உடையணிந்த அந்த இளைஞனைப் பின்பற்றிச் செல். அவன் என்ன செய்கிறான் என்பதையும் எங்கு தங்குகிறான் என்பதையும் கண்டு அறிந்து வந்து எனக்குச் சொல்” என்று வேறு யாருக்கும் கேட்காமல், பிச்சைக்காரன் காதில் மட்டும் படும்படியாக மெல்லிய குரலில் கூறினான்.
“உத்திரவு” என்று வணங்கிக் கூறிய அந்தப் பிச்சைக்காரன், அன்று கிடைத்த பெரும் வரும்படியை எண்ணிச் சந்தோஷப்பட்டான்.
உமாரோ, பல நிழல்களுக்கிடையே ஒரு நிழல்போல் அங்கிருந்து நடந்து செல்லத் தொடங்கினான். டுன்டுஷ் தன்னை அப்படி ஏளனப்படுத்தியதை நினைக்க அவனுக்குப் பொறுக்க முடியாமல் வந்தது. அவன் ஆதரிக்காவிட்டால் பிழைக்க முடியாதா என்ன? தன் கையிலே உள்ள இரண்டு நாணயங்களையும் எடுத்துப் பார்த்துக் கொண்டான்.
அவை உள்ள வரையிலே அவன் தனக்குத்தானே ஒரு ராஜாதான்! மேலும், முன் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, புல்காயும் அந்த மொட்டை மாடியிலே படுத்துக் கொள்ளலாம். ஏதாவது உலகச் செய்திகளை உரைத்தால் அங்குள்ளவர்கள் தாமாகவே அவனுக்கு உணவு படைக்கத் தொடங்குவார்கள். சாப்பிட்டு விட்டு மேலே படுத்துக் கொள்ளலாம். ஆனால் ரஹீம் மட்டும் அங்கேயிருந்தால்...? எந்தவிதமான கவலையும் பட்டிருக்க வேண்டாமே!
நடந்து கொண்டே வந்தவன் புத்தகக் கடை வீதி வழியாக வந்து அந்த நீருற்றின் அருகிலே நின்றான். தண்ணீர் பானையுடன் அங்கு வந்து சேர்ந்த அந்தப்பெண், குனிந்து பானையில் தண்ணீர் எடுக்க வளைந்தாள். பானையை அமிழ்த்திப் பிடித்துத் தண்ணீர் மொண்டு கொண்டிருந்தாள். அவன், பக்கத்திலேயிருந்த பாறையில் போய் உட்கார்ந்தான். அவள், அவனைக் கவனிக்கவில்லை.
“யாஸ்மி” என்று அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.
அந்தப் பெரிய மரத்தடியிலே இருட்டின் ஊடேயும், முக்காட்டுத் துணிக்கு ஊடேயிருந்த அவளுடைய கண்கள், அவனுடைய கண்களைச் சந்தித்தன.
நெற்றியிலே புரண்டு கொண்டிருந்த கூந்தலின் சிறு கற்றையை ஒதுக்கி விட்ட அவளுடைய மெல்லிய மூச்சு வேகமாக ஓடிக் கொண்டிருப்பது அவன் செவிகளில் தெளிவாகக் கேட்டது.
இருட்டிலே நிற்கும் அந்த யாஸ்மி, புதுமையானவள், முன்போல் சிறுமியல்ல, அழகுவந்த பருவமங்கை. பன்னீர் மணம் கமழும் ஆடைகளும், முக்காடும் அணிந்து அமைதியே உருவமாக நிற்கிறாள். அவளுடைய கையிலிருந்த பானை ஒரு பக்கமாகச் சாய்ந்து அதில் இருந்த தண்ணீர் கீழே வழிந்து கொண்டிருந்தது. இருந்தும் அவள் அசையவில்லை.
“யாஸ்மி யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று மெல்லிய குரலிலே உமார் ஆசை பொங்கக் கேட்டான்.
“முட்டாளே! பெரிய அடி முட்டாளே! நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை” என்று குறும்புச் சிரிப்புடன் கூறிவிட்டுக் கையிலிருந்த பானை நழுவிக் கீழே விழுந்ததையும் கவனியாமல் ஓடினாள். பைத்தியம் பிடித்தவள் போல் ஓடினாள். ஓடி மறைந்தே போய் விட்டாள். 500px
அவன் திரும்பி வருவான் வருவான் என்று ஒவ்வொரு நாளும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தது மூன்று வருடங்கள்! காத்துக் காத்திருந்து, அலுத்துச் சலித்துப்போன உள்ளம் பித்துப் பிடித்துப் போன்தில் வியப்பில்லை.
உமாரோ ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
மரத்தின் அடியிலிருந்து, கந்தையுடை பூண்ட ஓர் உருவம், நொண்டிக் கொண்டே அவன் அருகில் வந்தது அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தது.
பிறகு, “ஐயா! ஏழை, அருள் புரியுங்கள்! ஆண்டவனின் பெயரால் யாசிக்கிறேன், அருள் புரியுங்கள்!” என்று அந்தப் பிச்சைக்காரன் கெஞ்சினான்!
12. இடு காட்டின் பக்கம் பூத்துக் குலுங்கிய மணம்!
அன்று வெள்ளிக் கிழமை; சாந்தி தரும் நாள். கல்லறைகளே எங்கும் நிறைந்த அந்த இடுகாட்டை நோக்கிப் பெண்கள் கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். இறந்து போனவர்கள் சாந்தியடையப் பிரார்த்திப்பதற்காக அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
இடுகாடு முழுவதும், இடிந்து கிடக்கும் கல்லறைகளின் மீதுங் கூட, என்னென்னவோ மாதிரியான பூஞ்செடிகள் எப்படியோ முளைத்துப் பூப்பூத்து அந்த இடுகாடு முழுவதும் ஒரு விநோதக் கம்பளம் விரித்து வைத்தது போல் காட்சியளித்தது. ஆண்களின் கல்லறைகளின் மீது தலைப்பாகை உருவமும் பெண்களின் கல்லறைகள் மீது மலர்க் கொத்துகளின் உருவமும் பொறிக்கப் பட்டிருந்தன.
அவற்றின் மீது சூரிய ஒளி பட்டுத் தகதகத்தது, மரங்களின் நிழலிலே, முக்காடிட்ட வனிதாமணிரத்தினங்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் கல்லறைகளைச் சுற்றி வட்ட வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் செம்மலர் வாயிதழ்கள் அசைந்து கொண்டிருந்தன. அதாவது பேசிக் கொண்டிருந்தன. சிறு குழந்தைகள் புற்றரையிலே தவழ்ந்து கொண்டிருந்தன. பிரார்த்திப்படைவிடப் பேசிக் கொண்டிருப்பதில் அவர்களுடைய உற்சாகம் அதிகமாயிருந்தது.
சில பெரிய பெண்கள் ஒரு வட்டத்திலிருந்து ஒரு வட்டத்திற்கு மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தங்களைப் பார்க்காத போது மரங்களினூடே மறைந்து போனார்கள். பெண்கள் பிரார்த்தனை செய்யும் நேரத்திலே ஆண்கள் அங்கே நுழைவது கிடையாது.
அந்தக் கூட்டத்தின் கண்களுக்குத் தப்பி வந்த யாஸ்மி, மரங்களினூடே புகுந்து ஆற்றங்கரையோரமாக வெகுதூரம் வந்து விட்டாள். கடைசியில் அலுத்துப் போய் ஒரு கற்பாறையின் மேலே கால் நீட்டியபடி உட்கார்ந்தாள். அவள் தலைக்கு மேலே புறாக்கள் வட்டமிட்டன.
அந்தப் புறாக்கள் பக்கத்திலே பாதியிடிந்து கிடந்த சுவர்களையே தங்கள் இருப்பிடமாகக் கொண்டிருந்தன. அந்தச் சுவருக்கு மேலே கூரை கிடையாது. ஏனெனில் அது அந்தச் சுவருக்குள்ளே உயர்ந்து விளங்கிய பாழடைந்த கோபுரத்தின் சுற்றுச் சுவராகும். ஆற்றையும் இடுகாட்டுக்கப்பால் இருந்த வெளியையும் கண்காணித்துக் காவல் செய்வதற்காகக் கட்டப்பட்ட கோபுரம் அது.
ஆனால், இப்பொழுது பல ஆண்டுகளாக நாட்டிலே அமைதியே நிலவி வருவதால், காவல் தேவையில்லையென்று கை விடப்பட்டது. கோபுரமும் ஓரளவு பாழாகி விட்டது. இப்பொழுது அந்தக் கோபுரத்திலே புறாக்கள் குடியிருக்கின்றன. உமாரைப் போல் அலைந்து திரிபவர்க்கும் சமயா சமயங்களில் அது பயன்பட்டு வந்தது. இரவில் நட்சத்திரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு, அது உமாருக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தது.
உமாரும், யாஸ்மி அருகில் வந்து சேர்ந்தான். கதிரவனுக்கெதிரே புறாக்கள் வட்டமிட வட்டமிட, புறாவின் இதயம் போல வெண்மையான யாஸ்மியின் ஆசை எண்ணங்களும், சுழன்று சுழன்று எழுந்தன. இந்த மாதிரியான நேரத்தில் என்ன செய்வதென்று யோசித்தாள்.
தன் அக்காள் செய்தது போல, பக்கத்தில் இருந்தவன் மீது பார்வையை வீசி, அவன் தன்னை முழுமையாக மறந்து, தன்மேல் மாறாக்காதல் மயக்கங் கொள்ளும்படி ஆசை மொழிகளை அடுக்கிப்பேச எண்ணினாள். ஆனால் அவளுடைய கைகள் நடுங்கின. வார்த்தைகள் தடுமாறின. அவனோ நெடுநேரத்திற்குப் பேசாமலே உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்களிலே ஒரு பசியிருந்தது.
“ஏதாவது பேசு!” என்றாள் அவள் ஆசையோடு.
“எதைப்பற்றிப் பேசுவது? யாஸ்மி” என்று முகத்தைக் கூடத் திருப்பாமல் உமார் பதில் சொன்னான்.
“நீ போருக்குப் போயிருந்தாயே, அங்கே சுல்தானைப் பார்த்தாயா? பல நகரங்களிலும் பல பெண்களைப் பார்த்திருப்பாயே? வேறு என்ன என்ன பார்த்தாய்! அவர்கள் எப்படி எல்லாம் இருந்தார்கள்? அவற்றை யெல்லாம் சொல்லு” என்றாள். அந்த நீண்ட கொரசான் வீதியும், ருஸாவும் அவன் நினைவுக்கு முன்னே தோன்றக் கண்டான்.
“அதுவா? விஷயம் ஒன்றுமில்லை, சொக்கட்டான் காய்களைப்போல அங்குமிங்கும் நாங்கள் உருட்டப்பட்டோம். கடைசியில் பெட்டிக்குள் அள்ளிப் போட்டு மூடப்பட்டவர்களாகி விட்டோம். போரைப் பற்றி யாரால் விளக்கிப் பேச முடியும்?" யாஸ்மி, தன்னுடைய இள வயதுக் கனவையும், வெள்ளைக் குதிரையில் ஏறி வரும் இளவரசனையும், அவன் தன்னை அழைத்துச் சென்று இருக்க வைக்கும் அன்னத் தடாகமுள்ள அரண்மனையையும் நினைத்துக் கொண்டாள்.
“நீ நிசாப்பூரிலே என்ன செய்யப் போகிறாய்?”
“யாருக்குத் தெரியும்?
“நீ திரும்பவும் போய்விடப் போகிறாயா?”
உமார் தலையை “இல்லை” என்பது போல ஆட்டினான். அவனுக்கு நிசாப்பூரை விட்டுப் போகவே மனமில்லை. யாஸ்மியைத் தவிர வேறு எதையும் நினைக்கக்கூட அவனால் முடியவில்லை. யாஸ்மிதான் எவ்வளவு தூரம் மாறிவிட்டாள்? சின்னஞ்சிறு சிறுமியாக இருந்த அவள், கருத்தைக் கலைக்கக் கூடிய அழகிய வெளவன மங்கையாக மாறிவிட்டாள். இருந்தும் அவள் மாறி விடவில்லை.
கன்னத்திலே கை வைத்தபடி தூரத்திலே இடுகாட்டிலிருந்து வெளிக்கிளம்பி நகரத்தை நோக்கி நகரும் பெண்களின் சிறிய உருவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஞானக்கண்ணாடிப் பேராசிரியரின் அன்புக்குரிய மாணவன் நீயென்றும், நீயே ஒரு பேராசிரியராகப் போகிறாயென்றும் பேசி கொள்கிறார்களே, அது உண்மைதானா?”
உமார் இதைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட இந்த வதந்தி, அந்தத் தெருவில் உள்ள புத்தகக் கடைக்காரர்களிடமெல்லாம் பரவிவிட்டது. அதையே யாஸ்மியும் கேள்விப்பட்டிருக்கிறாள். புன்சிரிப்புடன் அவன் சொன்னான்.
“எனக்கு வேலை செய்வதற்கு ஓர் இடமும் கிடைக்கவில்லை; என்னை ஆதரித்துக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை; எனக்குச் சொந்தமாக எதுவுமே இல்லை. ஆசிரியருக்கு அவர் தொழில் பிழைப்பைத் தருகிறது. மதவாதிக்கு அவனுடைய சூழ்ச்சிகள் வாழ்வைத் தருகிறது.
எனக்கு என்ன இருக்கிறது?" யாஸ்மி மகிழ்ச்சியுடன் நெருங்கி வந்து நின்று கொண்டாள். உமார் உண்மையாகவே பிச்சைக்காரனாகவே இருந்தாலும் நல்லதுதான். தன்னிடமிருந்து பிரிந்து போகமாட்டான் அல்லவா? அந்த அளவிற்கு அது நல்லது தான் “உனக்கு புத்தியே இல்லை. சோதிடம் சொல்லும் அகமதை விட நீ பெரிய முட்டாள்தான்! அவன் நட்சத்திரங்களைப் பார்த்துக் குறி சொல்வதற்காக நிறையப் பணம் பெறுகிறான்.
அவனுக்கு ஒரு கருப்பு அடிமையும் பட்டுச் சால்வையும் கூடக் கிடைத்தன. உனக்கு என்ன கிடைத்தன? அதோ பார்! கூட்டம் முழுவதும் கலைந்து விட்டது. பெண்களின் கடைசிக் கும்பல் கூடப் புறப்படத் தொடங்கி விட்டது. நான் போக வேண்டும்” என்றாள் யாஸ்மி.
யாஸ்மியின் பசுமை பொருந்திய கையை உமார் பிடித்துக் கொண்டான். இறுகிய அந்தப் பிடியிலிருந்து அவளுக்கு எழுந்து செல்ல மனம் வரவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தாள். வானத்திலே வட்டமிட்டுக் கொண்டிருந்த புறாக்கள் அந்தப் பாழடைந்த காவல் கோபுரத்தில் அடைந்து விட்டன. வானம் வெறும் வெளியாகக் காட்சியளித்தது. சிறிது நேரம் சென்றதும் இருண்ட வானிலே பிறை நிலா எழுந்து தோன்றியது.
“அதோ பிறை தோன்றி விட்டது. நான் போகிறேன்” என்றாள் யாஸ்மி தீனமாக.
“அந்தப் புது நிலவின் இரு கொம்புகளுக்கும் ஊடே ஒரு நட்சத்திரமும் விரைவில் தோன்றப் போகிறது யாஸ்மி” என்றான் உமார் மெதுவாக ஆசை பொங்கும் குரலில்.
“நான் அதைப் பார்க்கப் போவதில்லை. உன்னுடைய அந்தப் பெரிய கோபுரத்திலே அடைந்து கொண்டு, நீ மட்டும் தன்னந்தனியாகப் பார்! அந்த ஒரு நட்சத்திரத்தை மட்டும் என்ன. எல்லா நட்சத்திரங்களையுமே பார்த்துக் கொண்டிரு! ஆமாம், இரவில் புதை குழிகளிலிருந்து வெளிக்கிளம்பி வரும் பிசாசுகளுக்கு நீ பயப்படுவத்தில்லையா?”
“அந்தப் பேய்கள் என்னுடைய நண்பர்கள், தெரியுமா? அளவுக் கருவிகளையும், நட்சத்திர விளக்குகளையும், கொண்டுவந்து, அவை எனக்கு நட்சத்திரங்களைப்பற்றிய எல்லா ஷயங்களையும் சொல்லித் தரும்!” என்று வேடிக்கையாக யாஸ்மியிடம் உமார் கூறினான்.
ஆனால் யாஸ்மியின் கண்கள் பயத்தால் விரிந்தன. பல அதிசயமான விஷயங்களைத் தெரிவிக்கக்கூடிய விசேஷ அறிவு ஒன்று உமாரிடம் இருப்பதாக ஊரில் பேசிக் கொண்டார்களே, அது நினைவுக்கு வந்தது. இறந்து போனவர்களின் ஆவிகளோடு அவன் பேசுவது உண்டு போலிருக்கிறது என்பதை கலவரத்தோடு நிச்சயப் படுத்திக் கொண்டாள்.
“அந்தப் பேய்களோடு நீ எப்படிப் பேசுவாய்? எந்த மொழியில் பேசுவாய்?” என்று கேட்டாள் குழந்தைத் தனமாக.
“கண்ணுக்குத் தெரியாத வானதேவதையொன்று, இந்தக் கோபுரச் சுவரிலே இரவில் தினமும் வந்து உட்காருவது வழக்கம். ஆவிகள் பேசுகிற எல்லா விஷயங்களையும் அது தான் எனக்குச் சொல்லும், அதற்கு உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும்!”
“சும்மா புளுகாதே! தேவதைகளைப் பற்றிப் புளுகுவது சரியல்ல! உண்மையில் பேய்கள் இங்கே வருமா? அதை மட்டும் எனக்குச் சொல்லு.”
தேவதையைப் பற்றி அவன் கூறியது புளுகென்று நினைத்த யாஸ்மிக்குப் பேய்களைப் பற்றிச் சொன்னது மட்டும். ஏதோ உண்மையாகத் தோன்றியது. இருளில் அரைகுரையாகத் தெரியும் கல்லறைகளின் பக்கம் சென்ற கண்ணைத் திருப்பவும் முடியாமல், பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாமல், ஓரக் கண்ணாலே பார்த்துக் கொண்டே, பயந்தபடி அவனை ஒட்டி உரசி உட்கார்ந்து கொண்டாள்.
உமார் தன் கைகளால் அவளை வளைத்து இறுக அனைத்துக் கொள்ளத் தொடங்கியபோது, பயந்து நடு நடுங்கி விடுவித்துக் கொள்ள முயன்றாள். உடலெல்லாம் வியர்த்தது. அவளுடைய நிலை தாழ்ந்தது. கண்கள் மூடிக் கொண்டன. பயத்தால் அவள் நெஞ்சு பட படவென்று துடித்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். அவள் உதடுகள் வேகமாகத் துடித்தன. “பயமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது” என்ற மெல்லிய ஒலி அவள் உதடுகளிலே பிறந்தது.
அவனுக்கோ விரகதாபத்தால் ஏற்பட்ட உள்ளத் துடிப்பு, அவளுக்கோ கன்னி பயம், பயத் துடிப்பு முனு முணுக்கும் குரலிலே இருவரும் பேசிக் கொண்டார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவனுடைய கைகள் அவள் உடலைத் தழுவியபடியே ஊர்ந்து வந்து அவள் கன்னங்களைப் பிடித்துக் கொண்டன. அவளுடைய முகத்தைத் திருப்பியபடியே தன் முகத்தின் எதிரே வைத்தபடி “என்னைப் பார்!” என்றான். ஆனால், அவளுடைய கண்கள் மூடிய படியே இருந்தன. இன்னும் பயம் போகவில்லை.
வெள்ளி நிலவின் வளைவு சிறிது மங்கியது. அதன் நடுவிலே, ஒரு நட்சத்திரம் தோன்றி ஒளி விட்டது. இருண்டவானத் திரையிலே எழுதி வைத்தது போல அது தோன்றியது. உமாரின் உள்ளத்தில் ஒரு விசித்திரமான ஆசையும் உடலெங்கும் தினுசான வேதனையின் துடிப்பும் தோன்றின. துடிக்கும் அவளுடைய வாயிதழ்கள் அவனுடைய உதடுகளிலே பொருந்திய அந்தக் கணத்திலேயே அந்தப் பசி அடங்கியது. அந்த வேதனை தீர்ந்தது!
இறுக்கி அவளை அணைத்துக்கொண்டான். “போதும்! வலிக்கிறது” என்று கூறிய யாஸ்மி பெருமூச்சு விட்டாள். நட்சத்திர வெளிச்சத்திலே அவளுடைய தோள்களிலே ஒளிபட்டுத் தெறித்தது. அவன் கழுத்தைக்கட்டிப் பிடித்திருந்த அவள் கைகள் அவனுக்கருகிலே அவளுடைய உதடுகளைக் கொண்டுவந்து நிறுத்தின.
அந்த அழகிய உதடுகளின் கதகதப்பும், தன் நெஞ்சோடு ஒட்டியிருந்த அவளுடைய நெஞ்சின் ஓட்டமும், கண் பார்வையிலே தோன்றிய அவளுடைய காதல் நெருப்பின் வேகமும், அவனுடைய பசியை அடக்கி விட்டன. உலகை மறந்து, ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒருவர் அணைப்பிலே மற்றொருவர் பிணைந்து நெடுநேரம் அங்கேயே அவர்கள் கிடந்தார்கள்!
இரவு தொழுகை நேரம் கழிந்து வெகுநேரத்திற்குப் பிறகு அவர்கள் நகரத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். விஷந் தோய்ந்த வாள் போன்ற பிறை மதி விளங்க, தங்கள் காலடியின் கீழே தரையிருப்பது கூடத் தெரியாமல், கனவுலகில் மிதந்து செல்பவர்களைப் போல அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
புத்தகக்கடை வீதியின் அருகிலே அந்தப் பெரிய மரத்தடியின் கீழேயுள்ள நீருற்றின் பக்கத்திலே வந்ததும், யாஸ்மி அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “என் இதயத்தில் வீற்றிருக்கும் இதயமே! உன்னை எப்படிப் பிரிந்து செல்வேன்?” என்று ஆசைப் பொங்கத் தவிப்போடு கேட்டாள்.
அவளுடைய காதலும் ஒன்றேதான். காதலனும் அவன் ஒருவனேதான். பிரிவின் வேதனை அவளைப் பெரிதும் வருத்தியது. கோபுரச் சுவருக்கு வான தேவதை வருவது உண்மைதான். கண்ணுக்குத் தெரியாத அந்த வான தேவதை பாழடைந்த கோபுரத்திற்கு வந்து அவளுடைய ஆத்மாவைத் தொட்டிழுத்து அவள் உடலில் உள்ள ரத்தம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போனது உண்மைதான், என்று அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன!
13. குறிபார்த்த சுல்தான் கொல்லப்பட்டார்!
உமாருக்கு அசதியாக இருந்தது. எனினும் அவனால் தூங்க முடியவில்லை. எதுவும் சாப்பிடவும் அவன் விரும்பவில்லை. அந்த இரவின் மாயாஜாலத்திலேயே அவனுடைய புத்தி லயித்திருந்தது. தன் இருப்பிடத்தின் வாசலிலே சுருட்டிக் கொண்டு கிடந்த அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து உமார் புன்னகை புரிந்தான்.
அந்தப் பிச்சைக்காரன் இரவு வெகு நேரத்திற்குப் பின்னும் விதிகளிலே நொண்டிக் கொண்டு திரிவதை உமார் கவனித்திருக்கிறான். சும்மா இருக்க முடியாமல் அவனுடைய கால்கள் அவனைப் பூந்தோட்டத்திற்கு இழுத்துச் சென்றன. காவற்காரர்கள் தங்கள் கைகளில் விளக்குகளுடன் அல்லாவின் பெயரால் ஒவ்வொரு மணி நேரத்தையும் கூறிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு உள்ளுணர்வு, அந்த இரவின் விசித்திரக் காட்சிகளைப் பற்றி அவனை எச்சரிக்கையாக இருக்கச் செய்தது.
அவனுக்குப் பின்னாலே ஒரு நிழல் மரங்களின் ஊடே நுழைந்து செல்வதும், அந்த உருவம் அனாதைகள் படுத்துத் தூங்கும் ஒரு குளக்கரையை நோக்கி விரைவதும் போலத் தெரிந்தது. இரவின் மாயா ஜாலங்களைப் பற்றி எதுவுமே உணராமல் அந்த அனாதைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கூனன் அருகிலே வெள்ளைக் கழுதையொன்று தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையோரத்திலே ஒரு துணியை இழுத்துப் போர்த்திக் கொண்டு அந்தக் கூணன் முடங்கி கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்தக் கூனனையும், கழுதையையும் எங்கோ கனவில் கண்டது போல் இருந்தது உமாருக்கு. இப்போதிருக்கும் நிலையில் அப்பொழுது அந்த இரண்டு உருவங்களும் இருக்கவில்லை என்பதும் தெரிந்தது. ஆனால், எங்கே என்றுதான் நினைவில்லை.
உமார் அந்தக் கூனன் அருகிலே போய் உட்கார்ந்தான். அந்தக் கூனன் தண்ணீரைச் சுட்டிக் காண்பித்து, “கண்ணிர்க் கடலிலே மூழ்கிக்கிடக்கும் இந்த நிலாவைப் பார்த்தாயா அண்ணே!” என்று கேட்டான்.
அந்தக்குளத்தின் பரப்பிலே தோன்றிய பிறை நிலவின் உருவத்தை உமார் குனிந்து கவனித்தான். துன்பம் என்பது இந்த இரவிலே அவனுக்குப் பொருளற்ற ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் அந்தக் கூணன், துன்பப்படுவதை அவன் உணர்ந்தான்.
ஆதரவான குரலில் கூனனை நோக்கி, “நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான் உமார்.
“நான் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். இதோ பார்; மற்றவர்களெல்லாம் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். ஆனால், நான் அமிழ்ந்து போன அந்த நிலவுக்குக் காவலாக இருக்கிறேன். ஏனென்றால், அதுதான் உண்மையான நிலவு. ஆகாயத்திலே இருக்கும் அந்த நிலவு உண்மையானதல்ல; ஏனென்றால் அது மாறுவதில்லை; அழிவதுமில்லை இந்த இரவைப் போலவே எல்லா இரவுகளையும் நினைத்துக் கொண்டு, அது மறைவதும் தோன்றுவதுமாக இருக்கும்” என்று அந்தக் கூனன் விசித்திர விளக்கம் கொடுத்தான்.
உமார், “உண்மை, உண்மை” என்று ஒத்துதினான்.
தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரர்களைச் சுட்டிக் காட்டிய அந்தக் கூனன், “இதோ, இதோ, இவர்களுக்கெல்லாம் புதிய தலைவன் இருக்கிறான். ஆனால், எனக்கு யாருமில்லை. என்னுடைய தலைவரை நான் இழந்து விட்டேன். என் தலைவர் கருணைக் கதிரவன்; அதிர்ஷ்டமில்லாத அனாதைகளின் ஆதரவாளர்; அடிமையிலே மிகத் தாழ்ந்தவனான, அங்க ஹீனனான இந்த ஜபாரக்கை, அவர் அன்பாக நடத்தினார். கதிரவனின் உலகமான இதை விட்டுக் கதிரவன் பிரிந்து விட்டான்;
நம்பிக்கையுள்ளவர்களை விட்டுப் பாதுகாப்பு விலகி விட்டது; ஜபாரக்கிடமிருந்து அவனுடைய உயிருக்கு உயிராய் இருந்தவர் போய் விட்டார். ஆய்லல்லா அல்லல்லா! சுல்தான் ஆல்ப் அர்சலான் கொலை செய்யப்பட்டு விட்டார்!” என்று மிக உருக்கமாகக் கதறினான்.
நீரில் ஆடி அலையும் நிலவின் சிதறிய ஒளியைக் கவனித்துக் கொண்டிருந்த உமார் அவன் சொன்னதை மனதுக்குள் வாங்காமலே, “எனக்குத் தெரியாதே!” என்றுரைத்தான்.
“நிசாப்பூர் முழுவதும் தெரியும் இன்றுதானே சாமர்க்கண்டிலிருந்து அவருடைய உடலைத் தூக்கிக் கொண்டு திரும்பி வந்தோம். அவருடைய விதி அவ்வளவுதான்! அண்ணே! அவருடைய ஆட்சியில் அவர் பலமும் உறுதியும் வாய்ந்தவராகத்தான் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்புப் படையே இருந்தது.
இருந்தாலும் விதியின் செயலிலிருந்து விடுபட முடியவில்லை. சாமர்க்கண்டில் ஒரு பிடிபட்ட நாயை அவர் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் எதிரிலே அந்தக் கைதியைக் கொண்டு வரும்போது, வாள் பிடித்த இரண்டு வீரர்கள் இவனைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த நாய் நம் பேரரசரைப் பார்த்து இகழ்ந்து பேசியது. அதனால் சுல்தான் உள்ளத்திலே கோபம் கொழுந்து விட்டெரிந்தது.
தன் கையிலே வில்லையும் அம்பையும் எடுத்து அந்த நாயின் நெஞ்சுக்கு நேரே குறி வைத்தார். அந்த நாயைப் பிடித்துக் கொண்டிருந்த வாள் வீரர்களை விலகி இருக்கச் சொல்லி விட்டு, நாணை இழுத்து விட்டார். ஒரே அம்பிலே கொல்லப்பட்டிருக்க வேண்டிய அந்தக் கைதியின் மேல் அந்த அம்பு படவில்லை. என்றும் குறி தவறாத இயல்புடைய எம் தலைவர் குறி அன்று எப்படியோ தவறி விட்டது.
உடனே அந்த நாய் தன் இடுப்பிலே மறைத்து வைத்திருந்த இரு கத்திகளையும் உருவிக் கொண்டு, சுல்தான் அவர்கள் நெஞ்சிலே திடீரென்று பாய்ந்து மூன்று முறை குத்தி விட்டான். நான்கு நாட்கள் கழிந்த பிறகு அவர் அல்லாவின் திருவருளில் கலந்து விட்டார்” என்று கூறி முடித்த அந்த விகடன் ஜபாரக்கின் கன்னங்கள் கண்ணிரில் ஊறிப் போயிருந்தன.
“ஆமென்! சாந்தியுண்டாகட்டும் சாந்தி! சாந்தி!” என்று உமார் முணுமுணுத்தான். அந்தக் கரிய இருளிலே தூரத்துக்கப்பால், ரஹீமின் புதைகுழியும், அதன் அருகிலே பொருமிக் கொண்டிருக்கும் அவனுடைய வேலைக்காரனும் தோற்றமளிப்பதை உமார் கண்டான்!
14. ஆசைக்கனவுகள் யாவும் பலித்தன.
“அவள் யார் அடிமைப் பெண்ணா? திருமணமானவளா? எப்படியிருப்பாள்?’ என்று டுன்டுஷ் கேட்டான். டுன்டுஷக்கு விவரம் சொன்ன அந்தப் பிச்சைக்காரன் “இருட்டிலே எதைச் சரியாகப் பார்க்க முடிகிறது. அவனோ இளைஞன், இரவும் பகலும் தொடர்ந்து விழித்துக் கொண்டேயிருப்பான் போலிருக்கிறது. எனக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்துங்கூட, வெள்ளிக்கிழமை இரவு விடாமல் தொடர்ந்து சுற்றினேன்.
அந்தப் பெண்தான் வீட்டு வேலைகளைப் பார்க்கும்படி ஏவப்படுகிறாள். கடுமையான வேலைகள் எல்லாம் கூடச் செய்கிறாள். ஆனால் அடிமைப் பெண் அல்ல. கலியாணமும் இன்னும் ஆகவில்லை” என்று சொல்லிக் கொண்டு வந்தான்.
“அவள் பெயர் என்ன?”
“யாஸ்மி, அப்துல் சாயித் என்ற மீஷத் நகரத்துத் துணி வியாபாரி அந்தக் கிழட்டுப் புத்தகக் கடைக் காரனிடம், அவன் மகள் யாஸ்மியைத் தனக்கு மணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறான்!”
“அப்துல் சாயித்! ஆம், அவன் ஒரு பெரிய கூடாரமும் ஏராளமான ஒட்டகங்களும் வைத்திருக்கிறான்” என்று டுன்டுஷ் தனக்குத்தானே பேசிக் கொண்டான். அந்தப் பிச்சைக்காரன் கூலியை எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தெரிந்து கொண்ட டுன்டுஷ் அவனைப் பார்த்து, “அப்படியானால், அந்தக் கூடாரம் செய்பவனின் மகன் புத்தகக் கடை வீதியை விட்டுப் போக மாட்டான். அங்கேதான் சுற்றிக் கொண்டிருப்பான். என்னிடமிருந்து செய்தி கிடைக்கும் வரை அவளைத் தொடர்ந்து கவனித்து வா. போ” என்றான்.
“செய்தி கொண்டு வருபவன் உங்களுடைய ஆள்தான் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது பிரபுவே?" "உன்னை இந்த மாதிரி காலால் உதைத்து, “கூடாரம் செய்பவன் எங்கேயிருக்கிறான்? என்று கேட்பவன் என்னுடைய ஆளென்று தெரிந்து கொள்.
அதுவரையிலே தூங்காமல் அவளைத் தொடர்ந்து திரி தெரிகிறதா! நீ தூங்கினால் அதைப் பார்ப்பதற்கும், உன் குறட்டையைக் கேட்பதற்கும் வேறு ஆட்களுக்குக் கண்ணும் காதும் இருக்கின்றன என்பதை மறவாதே’ என்று சொல்லிக் கைநிறைய செப்புக் காசுகளை அள்ளித் தரையிலே கொட்டினான். வீதியில் திரிந்தவர்கள் அதை அள்ளிக் கொள்ளுவதற்குள் பிச்சைக்காரன் குனிந்து புழுதியிலே கிடந்த அந்தக் காசுகளை அவசர அவரசமாகப் பொறுக்கினான்.
பொறுக்கும் பொழுதே வாயினால் அவற்றை எண்ணிக் கொண்டே வந்து “ஒரு வெள்ளி நாணயத்தின் அளவு மதிப்புக் கூட இல்லையே, உன்மையான உழைப்புக்குக் கிடைத்த பணம்! - பிரபுக்களின் கைப்பிடி தண்ணீர்போன்ற தாராளத்தன்மையாக இருக்கும்!” - என்று முனகி வைது கொண்டிருந்தான். இருப்பினும் டுன்டுஷக்கு அவன் மிக மிகப் பயந்தான். அவன் எந்த மனிதனிடம் வேலை செய்கிறான் என்பது அவனுக்குத் தெரியாமலிருந்தது. அந்த பெரிய மரத்தடியில் இருந்த நீருற்றுக்கு விரைந்து சென்று அங்கே உள்ள கல்லில் உட்கார்ந்து கொண்டான்.
அங்கிருந்தவாறே அவன் பள்ளிக்கூட வாசல் புறத்தில் நடந்த செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். நீண்ட தாடியுடைய பெரிய மனிதர்கள், தங்கள் வேலைக்காரர்களுடன், அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். பூங்காவனத்தின் வேலி ஓரத்திலே, வீதியின் வழியாக குதிரைப் படைகள் போய்க் கொண்டிருந்தன. விதியின் சக்கரம் சுழலுவதால் ஏற்பட்ட விந்தை மாற்றத்தின் காரணமாகச் சிந்தனையும் பரபரப்பும் கொண்டவர்களாக நிசாப்பூர்வாசிகள் இருந்தார்கள்.
சுல்தான் இறந்ததால், நகரமக்கள் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்பொழுது மசூதிகளில் தொழுகை நடத்துவார்கள். பிரார்த்தனையின் மத்தியிலே புதிய சுல்தானின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்கள்.
அழகும், இளமையும் பொருந்திய சுல்தானின் பெயர் மாலிக்ஷா, மக்கள் அவரை இளஞ்சிங்கம் என்று அழைத்து வந்தார்கள்! புத்தகங்களையும் ஆசிரியர்களையும், போலோ விளையாடும் மைதானத்தையும் விட்டு விட்டு விரைந்து வந்த அந்த மாலிக்ஷா முகத்தில் முழுவதும் தாடிவளராத - மத நம்பிக்கையுள்ளவர்களின் காவலனாகவும், கிழக்குக்கும் மேற்குக்கும் பேரரசராகவும் உலகத்தின் இறைவனாகவும், கதிரவனின் உலகமான கொரசான் தேசத்து அமீர்கள் அனைவரும் அடிபணியும் தலைவராகவும் இப்பொழுது விளங்குகிறார்.
இந்த விஷயங்களையெல்லாம் அந்தப் பிச்சைக்காரன் அரைகுறையாகவே தன் காதில் போட்டுக் கொண்டான். அவன் முழுக் கவனமும் உமார் - யாஸ்மி இவர்கள் மேலேயே பதிந்திருந்தது. பகல் நேரத்திலே அவர்கள் இருவரையும் பார்ப்பது அரிதாகவே இருந்தது. இருள் என்னும் திரையுலகத்தை வரைந்த பிறகு, இருளில் உலவும் இரு நிழல்கள் போல அவர்கள் நீருற்று அருகிலே சந்தித்தார்கள். சந்தித்த பிறகு, அவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகை மறந்தார்கள். வீதியிலே விரைந்து செல்லும் பலவகையான மக்களின் காலடியோசையையும் கூட அவர்கள் கவனிப்பதில்லை.
அந்தப் பெண் போட்டிருக்கும் அந்த கனத்த முக்காடு, அவளுடைய அளவை மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தையும் மறைத்தது.
அந்த முக்காடு மட்டும் இல்லையானால் அவளுடைய அழகை மட்டும் வெளியுலகம் அறியுமானால், எத்தனை பேர் அவளைச் சுற்றி வருவார்கள்; எத்தனை பேர் அவளைப் பற்றிப் பேசுவார், எவ்வளவு அதிர்ஷ்டம் வரும்! அவளைப் பற்றிப் பிச்சைக்காரன் கொண்டிருந்த கருத்து இது. உமாரைப் பற்றியும் அவன் உள்ளத்திலே ஒரு கருத்து உருவாகியிருந்தது.
படித்த மனிதனான இவனுக்குப் பார்வையும் பழுது, சாப்பாடைப் பற்றிய நினைவே இந்தப் பைத்தியக்காரனுக்குக் கிடையாது. எப்பொழுதாவது மசூதிக்கு அருகிலே உள்ள இறைச்சிக் கடையிலே யாத்திரீகர்களுடன் சாப்பிட்டு விட்டு வருவான். நீரூற்றுக்கு வந்ததும் தண்ணிரைக் குடிப்பான்.
யாருடனும் பேசுவதில்லை. வெறுந் தண்ணீரைக் குடித்து விட்டுப் பெரிய குடிகாரனைப் போல் திரிவான். பெரிய தோல் பையில் அடைத்து வைத்திருக்கும் மது முழுவதையும் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்ட குடிகாரன் போல் காணப்படுவான். இந்தக் குடிகாரத் தன்மையை அடைவதற்கு அந்தப் பைத்தியக்காரனுக்கு ஒரு செல்லாத செப்புக் காசுகூடச் செலவானதில்லை. இதுதான் உமாரைப் பற்றி அவன் உருவாக்கியிருந்த குணச் சித்திரம்.
அடுத்த நாள் காலையில் ஒரு காவற்காரன் வந்து அந்தப் பிச்சைக்காரன் இடுப்பில் தன் செருப்புக் காலால் ஒரு உதைகொடுத்தான். “அழுக்குமுட்டையின் அரசே, தங்களின் பைத்தியக்காரக் கூடாரமடிப்பவன் எங்கே திரிகிறான்?” என்று கேட்டான்.
எரித்து விடுவது போல் அவனைப் பார்த்த பிச்சைக்காரன், உயர்ந்த பதவியில்லாத ஒரு சாதாரண வேலைக்காரன் அவன் என்பதைத் தெரிந்து கொண்டு “மதம் பிடித்த உளறு வாயனே! உன்னையனுப்பியவன் யார்?” என்று பதிலுக்குக் கேட்டான்.
“உன்னுடைய பிணத்தைக் கோட்டை வாசலிலே தொங்கவிட்டுக் காக்கைகள் கொத்தித் தின்னும்படி செய்யக் கூடியவர் யாரோ, அவர்தாம் என்னை அனுப்பினார்” என்று கூறி மற்றும் ஓர் உதை விட்டான்.
“என் கூலி?” என்று அந்த உதையையும் வாங்கிக் கொண்டு பிச்சைக்காரன் கேட்டான். ஒரு வெள்ளி நாணயம் அவன் கைக்கு மாறியது. நீருற்றின் பக்கம் கையைக் காட்டி விட்டு அவன் சென்றவுடன், “உன்னுடைய புதை குழியிலே நாய்கள் வந்து மலங்கழிக்கட்டும்! கழுகுகள் உன் எலும்பைக் கவ்விக் கொண்டு போகட்டும்! ஏழு நரகத்து நெருப்புகளும் உன் உடலை எரித்துச் சாம்பலாக்கட்டும்!” என்று அந்தக் காவற்காரனைச் சபித்தான்!
நீருற்றின் அருகிலமர்ந்திருந்த உமாரை கவனித்துவிட்ட அந்த காவற்காரன், அவனருகில் சென்று, “கோட்டையிலிருக்கும் அதிகாரி உன்னை அழைக்கிறார். உடனே என் பின்னால் வரவும்” என்று உரத்த குரலில் கூறினான்.
அந்தக் காவற்காரனைத் தொடர்ந்து உமார் கோட்டையில் உள்ள முதல் முற்றத்திற்கு வந்தான். அங்கே சேணம் பூட்டிய குதிரைகளின் அருகிலே ஆயுதமணிந்த ஆறு பிரபுக்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே டுன்டுஷ் காவற்காரர்களுக்கு ஆணையிட்டபடி, இரைந்து கத்திக்கொண்டு உமாரின் கையைப் பிடித்து வெகுவேகமாகக் காவல்களைக் கடந்து அழைத்துக் கொண்டு, ஆசனங்கள் எதுவும் இல்லாத ஒரு சிறிய அறைக்குள்ளே போய்ச் சேர்ந்தான்.
“அட கடவுளே! குறிப்பிட்ட நேரம் கடந்து எவ்வளவு நேரமாகிவிட்டது. உன்னை அழைத்து வரச் சொன்னது யார் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே, ஒரு மாதிரியாக உமாரைப் பார்த்துக்கொண்டு, “அமைச்சர் நிசாம் அல்முல்க்” என்று கூறினான் டுன்டுஷ்.
உமாருடைய நாடித்துடிப்பு அதிகமாகியது. பெரும் வியப்பாக இருந்தது. உலக அமைப்பாளர் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற நிசாம் அல்முல்க் அவர்கள் இறந்துபோன சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களின் அமைச்சர். சுல்தானுடைய மகன் மாலிக்ஷாவுக்கும் அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர். சுல்தானுடைய அதிகாரத்தின் கீழே, சர்வாதிகாரியாக விளங்குபவர் என்று கூடச் சொல்லலாம்.
கற்றறிந்த மேதை அறிவுப்பெருங்கடல் - அவர் ஒரு பெர்ஷியக்காரர். படை தவிர மற்றுமுள்ள அதிகாரம் அனைத்தும் தன்வசப்படுத்திக் கொண்டவர். மாணவனான தன்னை அவர் அழைக்க வேண்டிய காரணம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.
“தாக்கின் கோட்டை வாசலில் நான் உன்னிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டேன். அது ஒரு சோதனைக்காக நடத்தியதே. நிசாம் அல்முல்க் அவர்களின் உத்திரவுப்படி உன்னைத் தொடர்ந்து கவனித்து பாதுகாவலும் செய்து வந்தேன்.
நீ இளைஞனாகவும் கவலையற்றவனாகவும் இருக்கிறாய். ஆனால் இந்த நேரத்தில் உன்னுடைய முடிவு ஊசலாட்டத்தில் இருக்கிறது. நிசாம் அவர்களே உன்னைச் சோதிக்கப்போகிறார்கள். ஆகையால் நீ கவனமாக இரு” என்று டுன்டுஷ் உபதேசம் செய்தான். அவன் இவ்வளவு பேசியும் உமாருக்குப் புதிர் விளங்கவில்லை. தன்னை அழைத்திருப்பது தேவையற்ற ஓர் விஷயமாகவே அவனுக்குப் பட்டது.
இப்பொழுது சுல்தானாக இருக்கும் இளஞ்சிங்கம் தன்னை, அழைத்திருந்தால் அதில் பொருள் உண்டு. அவனுடைய எண்ணப் பாதையிலே இளஞ்சிங்கம் எங்கோ தூரத்தில் இருந்தார். யாஸ்மியின் அந்த அழகிய கண்கள்தான் அருகில் இருந்தன.
இப்படி அவன் எண்ணத்தை ஓட விட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஓர் அடிமை எதிரே இருந்த கனமான திரையை அகற்றினான். அவர்கள் நின்றிருந்த அறை உண்மையில் நீண்ட சபா மண்டபம் ஒன்றின் நடுப் பகுதியேயாகும். ரோஜாப்பூவின் நிறமுள்ள ஒரு கனத்த திரையால் அது அறையாகத் தடுக்கப்பெற்றிருந்தது.
சபா மண்டபத்தின், நடுச்சுவரின் எதிரில் ஒரு மேசையின் முன்னே அறுபது வயது மதிக்கத்தகுந்த ஒருமனிதர் ஏதோ, வேலை செய்து கொண்டிருந்தார். கவனமாகச் சீவி விடப்பட்ட மெல்லிய பழுப்பு நிறத்தாடி அவர் மேலில் அணிந்திருந்த பட்டாடையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அங்கு நின்ற சில மனிதர்களிடம் சுருக்கமாக ஏதோ பேசிவிட்டுக் கையில் இருந்த தாள்களைப் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் நீட்டினார். அவருடைய செயலாளர் போல் தோன்றிய அவர் அவற்றை வாங்கிக் கொண்டார்.
பிறகு எல்லோரும் அவருக்கு சலாமிட்டுவிட்டுக் குனிந்தபடி தூரத்தில் இருந்த கதவை நோக்கி நடந்தனர்.
டுன்டுஷ் உமாரை அழைத்துக் கொண்டு அவர் அருகில் போனான். எதிரில் சென்றதும், இருவரும் நிசாம் அல்முல்க் அவர்களின் முன்னே இருந்த கம்பளத்தில், மண்டியிட்டுச் சலாமிட்டு எழுந்தனர். அடர்த்தியான புருவங்களுக்குக் கீழேயிருந்த அவருடைய கண்கள் சில வினாடிகள் உமாரை ஆராய்ந்தன.
பிறகு எதிரில் இருந்த சில தாள்களை விரல்களால் எடுத்து ஒரு பார்வை பார்த்தார்.
கூடாரம் அடிப்பவனான இப்ராகீம் மகனும் பேராசிரியர் அலியின் மாணவனும் கணித நூல் பயில்பவனும் ஆகிய உமார்கயாம் என்பது நீதானே! நீ சிறுவனாக இருந்தபோது அபி இமாம் முபாரக் என்பவரிடம் தத்துவ நூல் பயின்றிருக்கிறாயா?” என்று அவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் சொல்லிக் கேட்டார். அவருடைய குரல், பொதுக் கூட்டங்களிலே நீண்ட நேரம் சொற்பொழிவாற்றக் கூடிய, ஒரு சொற்பொழிவாளருடையதைப் போலப் பெருமிதமானதாகவும், கவனத்தைத் தன்பால் இழுக்கக் கூடியதாகவும் இருந்தது.
டுன்டுஷ் உமாரை விட்டு விலகியிருந்தான். எதுவுமே பேசவில்லை.
“பேராசிரியர் அலி, உன்னிடம் ஏதோ விசித்திர ஆற்றல் இருப்பதாக எழுதியிருக்கிறார். அல்லாவின் ஆற்றலைத் தவிர வேறு எவ்விதமான ஆற்றலும் இந்த உலகத்திலே கிடையாது. ஆனால், நீ எந்த விதமான தெய்வீக சக்தியைக் கொண்டு, முன்பு இளவரசராயிருந்த நம் சுல்தான் அவர்களுக்குச் சோதிடம் சொன்னாய் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
மாலங்கார்டில் நடந்த போரின் முடிவைப் பற்றியும், கிறிஸ்தவப் பேரரசரின் சாவைப் பற்றியும், புகழுக்குரிய நம் பெரிய அரசருடைய முடிவைப் பற்றியும் நீ எவ்வாறு முன்கூட்டியே சொன்னாய்? சொல்” என்றார். உமாரின் முகம் குருதியோடிச் சிவந்தது. ஏதாவது பொருத்தமான கற்பனை யொன்றைக் கூறினால் என்று யோசித்தான். கூரிய பார்வையும் கடிய குரலும் கொண்ட அவர் எந்த விதமான ஏமாற்றுதலையும் எளிதில் உடைத்துவிடுவார் என்பது தெரிந்தது.
“மேன்மை தங்கிய அமைச்சர் அவர்களே, உண்மையாகச் சொல்லப் போனால், அது அர்த்தமற்றது.”
“எது அர்த்தமற்றது? விளக்கமாகக் சொல் - அது அர்த்தமற்றதாக இருக்க முடியாது” என்று தன் பொறுமையிழந்து நிசாம் பொங்கினார்.
உமார் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். பிறகு மெதுவாக தன் திடமான குரலில் “உள்ளபடியே அது அர்த்தமற்றதுதான்! அன்றைய இரவில், படைவீரர்களின் கூடாரங்களைப் பார்வையிட்டுக் கொண்டே நடந்து சென்றேன். அப்படிச் செல்லும்போது, துருக்கிய வீரர்கள் காவல் புரிந்த ஒரு கூடாரத்திற்குச் செல்ல நேரிட்டது. அவர்களுடைய பேச்சும் எனக்குப் பெரும்பாலும் புரியவில்லை; அங்கிருந்தவர் இளவரசர் என்றும் எனக்குத் தெரியாது.
அவருடன் கூட இருந்த அறிஞர்கள், மூடத் தனமான ஒருதவறு செய்தார்கள். ஏதோ ஒரு நட்சத்திரத்தைக் காண்பித்து இதுதான் வடமீன் என்றார்கள். அவர்கள் கூறியது தவறு என்ற விளக்கப் போன என்னைக் குறி கேட்டதினால் திடீரென்று என் உள்ளத்தில் தோன்றிய கற்பனையை அவர்களுடைய ஆடம்பரப் போக்கிற்குத் தகுந்தபடி நான் அளந்து விட வேண்டியதாயிற்று. அதுவே நான் கூறிய அர்த்தமில்லாத ஜோதிடம்! வேறு ஒன்றுமில்லை!”.
“அர்த்தமில்லாத சோதிடம் எப்படி மூன்று விஷயங்களிலும் பலிக்க முடியும்? போரின் முடிவும், இரண்டு பேரரசர்களின் சாவும், கற்பனை ஜோதிடத்தின் மூலம் எப்படி நிறைவேறும். நீ இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறாய்?”
உமார் சிறிது நேரம் சிந்தித்தான். “மேன்மையுள்ள பெரியவரே; நான் எப்படி இதற்குக் காரணம் கூற முடியும் அல்லாவின் விருப்பம் இல்லாமல் எந்தவிதமான செயலும் நடப்பதில்லை. இருந்தும் இது நடந்திருக்கிறது. நான் என்ன செய்வேன்?”
உண்மை. அல்லாவின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை! ஆனால் உன்னை அவ்வாறு குறி சொல்லத் தூண்டியது எது என்பதையே நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ரோமானியப் பேரரசர் பிறந்த தேதியும் நேரமும் உனக்குத் தெரிந்திருக்க முடியாது என்பது உண்மைதான்! அவர் பிறந்த ஜாதகத்தை நீ குறித்திருக்கவோ, சோதிடம் கணித்திருக்கவோ முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நம் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களுடைய ஜாதகத்தை நீ எப்படிக் கணித்தாய்?”
நிசாம் அவர்களுடைய பேச்சு உமாரை ஒரு பரிசோதனைக்குரிய உயிரற்ற பொருளாக மதித்துப் பேசுவது போலிருந்தது. சுற்றி வளைத்து தப்பித்துக் கொள்ள முடியாதபடி பேசும் அவருடைய ஆற்றலை வியந்தபடி டுன்டுஷ் வாயைப் பிளந்து கொண்டிருந்தான்.
“நான் அதைக் கணிக்கவில்லையே!” என்று உமார் அழுத்தந்திருத்தமாகக் கூறினான்.
“ஆனால் அப்படிப் பட்டவற்றைக் கணிக்கக்கூடிய ஆற்றல் உன்னிடம் இருக்கிறதல்லவா? "உண்மை! இதே ஆற்றலுடன் இன்னும் ஐநூறு பேர் இருக்கிறார்கள்!”
“இருக்கலாம், ஒரே ஜோதிடத்தில் மூன்றுகுறிகள் கூறியவர்களைப் பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மேலும் பேராசிரியர் அலி உன்னிடம் ஓர் அதிசய ஆற்றல் இருப்பதாக எழுதியிருக்கிறார்”.
டுன்டுஷ் அதை அமோதிப்பவன் போல் தலையை ஆட்டினான். உமார் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான்.
“இப்ராஹீம் மகனே! உன் சுல்தான் மாலிக்ஷா அவர்கள் தன் தந்தை இறந்ததிலிருந்து, உன்னைக் காணவேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறாரே! அது உனக்குத் தெரியாதா?”
“தெரியாது!”
அவர்கள் இருவரும் உமாரைக் கவனித்தார்கள். நிசாம், அவனைப் பரிசோதனை செய்ததில் திருப்தி அடைந்தவர் போல் காணப்பட்டார். ஆனால் அதைப்பற்றி எதுவும் வெளிக்காட்டிப் பேசவில்லை.
“உமார்! அரச சபையில் இருக்க வேண்டிய வயது இன்னும் உனக்கு வரவில்லை, அதுவும் உன்னுடைய சோதிடமானது அர்த்தமற்றதாக இருப்பதால் சபையின் முன்னாலே நீ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். சுல்தான் மாலிக்ஷா அவர்கள் உன்னை அன்போடு வரவேற்பார் என்பதில் ஐயமில்லை.
அதை நான் உன்னிடம் மறைக்கவும் விரும்பவில்லை. ஆனால் என்னிடம் பேசியதைப் போல், ஒரு வார்த்தை அவருடைய சபையில் நீ சொல்லிவிட்டாலும், நீ அவமானப் படுத்தப் படுவாய் அல்லது துன்பப்படுத்தப்படுவாய். உன்னுடைய இந்த விசித்திர சோதிடத்திற்காக, நீ சுல்தான் அவர்களிடம் என்ன வெகுமதி கேட்கப் போகிறாய்?”
நிசாம் இந்தக் கேள்வியை திடீரென்று கேட்டதும் உமார் திகைத்துப் போனான். வாய்க்கு வந்தபடி சொல்லி வைத்த அந்தச் சோதிடம் தலையின் மேல் வீழக் காத்திருக்கும் அரவைக் கல்லாக மாறி விட்டதே! என்று வருந்தினான். “அரச சபையில் நான் என்ன செய்வதற்கிருக்கிறது? எனக்கு வெகுமதி எதுவும் வேண்டாமென்று கதறினான்.
“சரி உனக்கு வெகுமதி எதுவும் தேவையில்லை என்றால் அதைப்பற்றிக் கவலையில்லை. உன் உடலுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவும், உன் ஆராய்ச்சிக்கு ஆதரவு கொடுக்கவும், என்னை ஆதரவாளனாக ஏற்றுக் கொள்கிறாயா” என்று தொடர்ந்து கேட்டார் அமைச்சர் நிசாம்.
“நன்றாக ஒப்புக் கொள்கிறேன்” என்றான் உமார். அவன் கண்களிலே மகிழ்ச்சியின் ஒளி மலர்ந்தது. அந்தக் கிழவனுக்கு அவனுடைய உள்ளம் நன்றி கூறியது. ஞானக் கண்ணாடியின் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, கடந்த சில தினங்களாக அவன் பிச்சைக்கார வாழ்க்கை நடத்தி விட்டான். அது போதுமென்று தோன்றியது எப்படியாவது யாஸ்மியுடன் இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்து விட்டால் நல்லது என்று கூடத் தோன்றியது.
“உனக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவற்றையெல்லாம் சொல்”
“ஓர் ஆராய்ச்சிக் கூடம், வான கோளங்களை அளக்கும் கருவி ஒன்றும், அறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையும் வேண்டும்.”
“இன்னும் வேறு என்னென்ன வேண்டும்?”
“மெருகு தீட்டிய வெண்கல பூகோள வட்டம்; அதைத்தொட்டுக் கொண்டிருக்கும் வளையம்; நட்சத்திரம் பார்க்கும் விளக்கு; இவற்றுடன் ஒரு நீர்க்கடிகாரம்.”
“சரி, இந்த ஆராய்ச்சிக் கூடத்தை எந்த இடத்திலே வைத்துக் கொள்ளப் போகிறாய்?”
“அறிவும் மேன்மையும் மிக்கவரே! பழங்காத்தில் நிசாப்பூர் நகரைச் சுற்றிப் பல காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பல வீதியோரங்களிலே இன்னும் கவனிப்பாரற்று நிற்கின்றன. ஆற்றங்கரையோரத்திலே, இடுகாட்டின் ஓரத்திலே அம்மாதிரியான காவல் கோபுரம் ஒன்று இருக்கிறது.
அதைப் பல இரவுகள் நான் பயன்படுத்தியிருக்கிறேன். அதைச் சிறிது பழுது பார்த்து அதற்கொரு பூட்டுஞ்சாவியும் கொடுக்க வேண்டுகிறேன். சிலநல்ல ஜமுக்காளங்களும், தலையணைகளும், சீனத்துப் பட்டுத் திரையொன்று, வெள்ளித் தண்ணீர் குடம் ஒன்றும் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று உமார் கூறினான்.
“வல்லாஹி! வான நூல் ஆராய்ச்சிக்கு இத்தனை பொருள்கள் தேவைப்படுவது இல்லையே. இவையெல்லாவற்றையும் உனக்குக் கொடுக்கிறேன். ஆனால், அதற்கொரு கட்டுப்பாடு இருக்கிறது. அது என்னவென்றால், உன்னுடைய மாலஸ்கார்டு சோதிடம் அர்த்தமற்றது என்று யாருக்குமே நீ சொல்லக்கூடாது.
“நான் சொல்லவில்லை?”
“அப்படி யாரும் கேட்டு நீ சொல்ல வேண்டி நடந்து விட்டால், அது கடவுளின் அருள் வாக்கு என்று சொல்லிக் கொள்ளலாம்” என்று டுன்டுஷ் கூறினான்.
“அப்படியே! நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்று உமார் மகிழ்ச்சி பொங்கக் கூவினான்.
“ஆமாம், பட்டுத் திரையும், வெள்ளித் தண்ணிர்ப் பானையும் கேட்டாய், உணவைப் பற்றியும் வேலையாட்களைப் பற்றியும் கேட்கவில்லையே. சரி! இந்தா இதை வைத்துக் கொள்” என்று பணம் அடங்கிய சிறுபையொன்றைக் கொடுத்து, டுன்டுஷை உமாருக்காக இரண்டு வேலைக்காரர்கள் சேர்த்துக் கொடுக்கும்படி கூறினார்.
உண்மையில் உமார் தன்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பூப் போட்ட அந்தப் பணப்பையை ஒருமுறை புரட்டிப் பார்த்தான். இதுவரை அவன் இவ்வளவு பணம் கண்டதில்லை. அவனுக்கு ஒரு விதமான இன்ப உணர்வு பெருக்கெடுத்தது.
“அந்தக் கோபுரம் என்வசம் எப்பொழுது கிடைக்குமென்று அறிந்து கொள்ளலாமா?” என்று உமார் கேட்டான்.
நிசாம் டுன்டுஷைத் திரும்பிப் பார்க்க, “நாளை நடுப்பகல் நேரத்துக்குள் எல்லாம் தயார் செய்து விடுகிறேன்” என்றான்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யக்கூடிய அதிசய வித்தையின் தன்மையை உமார் உணர்ந்து கொண்டான். “அருளாளனாகிய அல்லாவின் புகழ் ஓங்குக!” என்று கூவித் தலைகுனிந்து நிசாமை வணங்கிச் சலாமிட்டு விட்டு உமார் வெளியே கிளம்பினான்.
“பணப் பையை மறந்து விட்டாயே!” என்று டுன்டுஷ் குசுகுசுவென்று கூறியதும் திரும்பவும் போய் அதைக் கையில் எடுத்துக் கொண்டு கதவருகிலே சென்றதும் டுன்டுஷ் சொல்லிக் கொடுத்தபடி, மறுபடித் திரும்பி சலாம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.
டுன்டுஷம் நிசாமும் மட்டும் தனியே யிருந்தார்கள்.
“ஐயா, இவன் தங்கள் கைக்கருவியாக உபயோகப் படுத்துவதற்க்கு சரியான ஆள். இந்த நிசாப்பூர் முழுவதும் தேடினாலும் இவனைபோல ஒருவன் கிடைப்பது அபூர்வம். அதிசயமான அவனுடைய ஆற்றலும், விசித்திரமானமுறையில் உண்மையை ஒப்புக் கொள்ளும் களங்கமற்ற மனப்பான்மையும், வான நூல் ஈடுபாடுள்ள அவன் போக்கும் நமக்கு மிக மிகப் பயன் படக்கூடியன” என்று டுன்டுஷ் கூறினான்.
“அவனுடைய இரகசியத்தை அறிந்து கொள்ளவே நான் விரும்பினேன். ஆவனிடம் எந்த விதமான இரகசியமோ, அதை மறைக்கக்கூடிய தன்மையோ கிடையாது” என்று அமைச்சர் நிசாம் தம்முடைய சிந்தனையின் முடிவைத் தெரிவித்தார்.
“இரகசியமா? அப்படி எதுவும் அவனிடம் கிடையாது. அவன்பேசும் ஒவ்வொரு சொல்லும் உண்மை அவன் சொல் ஒவ்வொன்றும் உண்மையின் ஆதாரங்கள்! அவனை உண்மையின் அத்தாட்சி, என்றே அழைக்கலாம். அவனுக்கு ஒரு பேராசிரியருடைய உடுப்புக்களை அணிவியுங்கள். தெய்வீக அருள் வாய்த்தவர் போல் நடந்துகொள்ளும்படி அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அதிகம் பேசாத அமைதி உடையவனாக நடந்து கொள்ளும்படி கூறுங்கள்! இந்தப் பாடங்கள் அனைத்திலும் அவன் தேர்ச்சியடைந்த பிறகு சுல்தான் மாலிக்ஷா அவர்களிடம் அழைத்துச் சென்று “மாலஸ்கார்டு போர்க்களத்தில் குறிசொல்லிக் கூடார மடிப்பவர் உமார் இதோ இருக்கிறார். அல்லாவின் அருட்பெருங்கருணையினால், யான் அரும்பாடுப் பட்டுத் தேடிக் கொண்டு வந்த செல்வம் இதோ இருக்கிறது” என்று கூறுங்கள்.
ஆடும் அழகு மங்கையின், பூவினும்மெல்லிய பொற்பாதங்களுக்குப் போடக் கிடைத்த பொருத்தமான மிதியடி போல இவன் நமக்குக் கிடைத்திருக்கிறான்” என்று நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவனான தந்திரம் வல்ல டுன்டுஷ் தெளிவு படக் கூறினான்.
“இருந்தாலும் அந்த இரகசியம், கண்ணுக்குத் தெரியாத ஒரு தேவதையின் அருளாக இருக்கலாம். இது போன்ற மனிதர்களுக்கு யாவும் தெரியும். ஆனால் தங்களுக்கு எப்படி அது தெரியவருகிறது என்ற விஷயம் மட்டும் தெரியாமல் இருக்கும்” என்றார் அமைச்சர் நிசாம்.
“உண்மை! உண்மை! தேவதைகளும் அல்லாவின் ஆணைக்கு அடங்கியவைதானே?”
“அவனுடைய அற்புதச் செயலான சோதிடத்திற்கு வேறு எந்தக் காரணமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று மீண்டும் நிசாம் அழுத்தந் திருத்தமாகக் கூறினார்.
“உண்மை! உண்மையிலும் உண்மை” என்று ஒத்துப் பாடினான் டுன்டுஷ். அவனுக்கு அற்புதச் செயல்களில் எந்த விதமான நம்பிக்கையும் கிடையாது. நடந்ததாகச் சொல்லப்படுகின்ற அற்புதச் செயல்கள் அனைத்தும் வெறும் கட்டுக் கதைகள் என்பது அவனுடைய முடிவு.
உமார் மீண்டும் சோதிடம் கூறத் தொடங்கி, அந்தச் சோதிடமும் பலிக்குமானால் என்ன ஆகும் என்று சிறிது நேரம் சிந்தித்தான். என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது! அவன் என்ன சொன்னாலும் இன்னொருமுறை பலிக்கப் போவதேயில்லை. உமார் கூட அப்படி எதுவும் பலிக்காது என்று உறுதியாகக் கூறிவிட்டான். கொஞ்ச நஞ்சம் அற்புதச் செயல்களில் அரைகுறை நம்பிக்கை வைத்திருக்கும் நிசாம் கூடப் பாதியளவு நம்பிக்கை யற்றவராகவேயிருக்கிறார்.
சே! சே! இந்த மாதிரியான விஷயங்களுக்கும் அதிசய நம்பிக்கைகளுக்கும் நம் வேலைக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லை; என்று டுன்டுஷ் தனக்குள் முடிவுகட்டிக்கொண்டான். தனக்கு உளவு கூறிய அந்தப் பிச்சைக்காரனையனுப்பி, எச்சரிப்பாக இருக்கக் கூடியவர்களாகவும், நம்பிக்கையான ஒற்றுச் சொல்லும் உளவாளிகளாகவும், கணவன் மனைவியாக உள்ளவர்களாகவும் உள்ள இரண்டு வேலைக்காரர்களை, உமாரின் கோபுரத்தில் வேலை செய்வதற்கு அமர்த்திவரும்படி அனுப்பினான்.
நிருற்றிலே, தன் தண்ணிர்ப் பானையை நிரப்பிக் கொண்டிருந்த யாஸ்மியின் காதிலே ஓர் இன்பகீதம் இசைத்தது. ஆம் உமார் தன் உள்ளத்தில் எழுந்த ஆர்வத்தை அவளிடம் கூறிக் கொண்டிருந்தான்.
“என் இதயப் பூவில் வீற்றிருக்கும் இன்பமங்கையே, உனக்கு இடமளிக்கக் கூடிய இடம் ஒன்று எனக்குக் கிடைத்து விட்டது. மதுவினும் இனிய உன் உதடுகளுக்கு மதுவில் ஊறிய திராட்சைப் பழங்களும், பசியைத் தணிக்கப் பலவிதமான உண்டிகளும், கிடைக்கும்! அவை மட்டுமல்ல, என்னருகிலேயே நீ என்றும் இருப்பாய்!”
“அது பாழடைந்த கோபுரம், ஆயிற்றே?” என்றாள் யாஸ்மி.
“பாழடைந்த மண்டபமானாலும் நீ பக்கத்திலே யிருந்தால், பாதி ரொட்டிதான் கிடைக்கு மென்றாலும் கூட, அரண்மனைச் சுல்தானைக் காட்டிலும் நான் அதிக இன்பம் அடைவேன்” என்றான் உமார்.
15. உதட்டோரம் மதுவோடவே உளம் நாடும் கவி பாடுவேன்
டுன்டுஷ் தன் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான். ஆற்றங்கரையில், புதைகுழிகள் நிறைந்த அந்த இடுகாட்டின் அருகிலே இருந்த அந்தப் பழங்காலத்துப் பாழடைந்த கோபுரம் பழுது பார்க்கப்பட்டது. உமாரின் கையில் சாவி மறுநாள் மாலை ஒப்படைக்கப் பட்டது. அதன் பிறகும், பல நாட்கள் பழுதுபார்க்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. தச்சு வேலைக்காரர்களும் கொத்துவேலைக்காரர்களும், கோபுரத்தை அழகுறச் செய்தார்கள்.
சுவர்களுக்கெல்லாம் வெள்ளையடிக்கப்பட்டது. கீழ்த் தளத்தின் தரையிலே ஒரு பெரிய மிதியிருப்பு ஒன்றை விரிக்கும்படி உமார் ஆணையிட்டான். அந்தக் கீழ்த் தளம்தான் விருந்தினரை வரவேற்கப்படும் கூடமாக உபயோகிக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தான்! இரண்டாவது தளத்தில் மிக அழகான தரை ரிப்பு ஒன்றை விரிக்கச் செய்தான். சீனத்து வண்ணப் பட்டுத்திரை யொன்றை அந்தக் கூடத்தின் இடையிலே தொங்கவிட்டான்.
அதிலே பறக்கும் நாகத்தின் படம் நடுவில் கொடுக்கப்பட்டிருந்தது. மின்னி யொளிவிடும் தங்கச் சரிகைக் கரையுடைய அந்தப் பட்டுத் திரையின் பின்னாலே அவனுடைய படுக்கையும் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய, சந்தனக் கட்டையால் செய்யப்பட்ட அலமாரி ஒன்றும் வைக்கப்பட்டன. அந்த அலமாரியிலே அவனுடைய ஆடைகளையும் பிற பொருள்களையும் வைத்துக் கொண்டான்.
மூன்றாவது தளத்தில், சில மேசைகளும், புறாக் கூடுகள் போன்ற அமைப்புள்ள அலமாரிகளும், இருந்தன. இந்தத் தளமே அவனுடைய ஆராய்ச்சிக்கூடமாக விளங்கும். மேசைகளில் வேலைகள் நடக்கும். கூடுள்ள அலமாரியில் கையெழுத்துப் படிகள் வைக்கப் பெறும்.
அவன் கேட்டிருந்த கருவிகள் முழுவதும் வந்து சேரவில்லை. ஏனெனில் அவை நிசாப்பூரில் கிடைக்கக்கூடிய சாதாரணக் கருவிகள் அல்ல. பாக்தாது தேசத்திலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்திருப்பதாக டுன்டுஷ் கூறினான். நிசாம் அல்முல்க்கின் அன்பளிப்பாக ஏராளமான புத்தகங்களை டுன்டுஷ் கொண்டு வந்திருந்தான்; அவை யாவும் அலமாரிகளில் வைக்கப்பட்டன.
ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற எண்ணமே உமாருக்கு அப்பொழுது ஏற்படவில்லை, யாருமில்லாத போது யாஸ்மியை அழைத்து வந்து அவளை ஆச்சரியத்தால் திணறடிக்க வேண்டும் என்ற எண்ணமே எழுந்தது. பெரும்பாலும் கோபுரத்து வாசல் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு நிசாப்பூர்க் கடைத் தெருக்களையும் அங்காடிகளையும் சுற்றிவந்தான்.
கையிலிருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் கடைகளிலே அள்ளியள்ளிக் கொடுத்தான். அதற்குப் பதிலாக, தன்னை மணம்புரிந்த பிறகு, யாஸ்மி உடுத்திக் கொள்வதற்காகப் பலவிதமான பட்டாடைகளை வாங்கினான். அவளுக்கு மிகவும் பிடித்தமான துல்லியமான வெண்பட்டுத் துகில்களை ஏராளமாக வாங்கினான். சீனியில் பதஞ்செய்யப்பட்ட பழங்கள் அடங்கிய பீங்கான் சாடிகளை வாங்கினான்.
மணங்கமழும் புகை எழுப்பும் பலவிதப் பொடிகளையும், தெளிந்த வானம் போன்ற நிறமுடைய நீலமணிக் கற்கள் அடங்கிய வெள்ளிப் பெட்டியொன்றும் வாங்கினான். கடைசியாக யாஸ்மியை அழைத்து வந்து இந்த வெகுமதிகளையெல்லாம் காண்பித்த போது, “ஆ! எல்லாம் மாய வித்தையாக இருக்கிறதே! இவ்வளவும் எனக்கா?” என்று யாஸ்மி பூரித்துப் போனாள்:
“அப்படியானால் நீ பெரிய மாயக்காரிதான். என் இதயத்தைக் கவர்ந்து விட்டாயே!”
யாஸ்மியின் மெல்லிய கரங்களைப் பிடித்து அவற்றிலே அவளுக்காக வாங்கிவைத்த வளையல்களை உமார் மாட்டினான். தரையில் விரிக்கப் பட்டிருந்த அந்தப் பெரிய விரிப்பையும், பட்டுப்படுதாவையும் அதிலேயிருந்த பறக்கும் நாகப்பாம்பையும் அகன்று விரிந்த தன் அழகிய கண்களால் ஆச்சரியத்துடன் யாஸ்மி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அவிழ்த்துவிட்ட கூந்தல் மார்பிலே புரண்டு கொண்டிருந்தது.
உமார் தன் முரட்டுக் கைகளால், அந்த மெல்லிய கரிய மென்மையான கூந்தலை ஒதுக்கிவிட்டான். அப்படி ஒதுக்கிவிடும் போது அவனுடைய கைவிரல்கள் அவள் கழுத்தோரத்திலே நகர்ந்துவர, தொண்டையிலே துடித்துக் கொண்டிருக்கும் நாடியோட்டத்தை யுணர்ந்தன. திடுமென்று தோன்றிய இந்த இன்பமான காட்சிகளின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவளுடைய மனம் வேதனையடைவது போல் இருந்தது.
கூடத்திலேயிருந்த அத்தனை புத்தகங்களையும் பார்த்துவிட்டு, “இத்தனை புத்தகங்களும் நீ படிக்கிற புத்தகங்களா? நான் இல்லாத போது, இவற்றைத்தாம் படித்துக் கொண்டிருப்பாயா?” என்று கேட்டாள். அவளுக்கு அவனைப் பிரியும் போதெல்லாம் பயமாக இருந்தது.
அவனைப் பிரிந்திருக்கும் போது, நீண்டு தோன்றும் காலமும், சிந்தனையில் மூழ்கி அமைதியான சூழ்நிலையில் இருக்கும் மனமும், எப்பொழுது அவனோடு என்றும் அருகில் இருக்கக்கூடிய காலம் வருமோ என்ற ஏக்கமும் எல்லாம் சேர்ந்து அவளை அப்படியொரு காலம் விரைவில் வந்து விடுமா என்று சற்று ஐயத்தோடு நினைக்கும்போது அவளுக்குப் பயமாகவே யிருந்தது! தான் அவனருகில் இல்லாத போது அவன் என்னென்ன செய்கிறான் என்பதையறிய அவளுக்கு ஆவலாயிருந்தது. "அத்தனை புத்தகங்களும் படித்து விடமுடியுமா? கவிதைகள் நிறைந்த ஒரு சிறு புத்தகம் மட்டும் நான் படித்து முடித்திருக்கிறேன்” என்றான் உமார்.
கவிதைகள் என்றதும் யாஸ்மிக்குப் பழைய காலத்துக் காவியங்களும் அவற்றிலே கவிஞ்ர்கள் பண்டைக்கால அரசர்களைப் பற்றியும், குதிரைகளைப் பற்றியும் போர்களைப் பற்றியும் பாடி வைத்திருப்பதாகக் கேள்விப் பட்டது நினைவுக்கு வந்தது.
“அந்தக் கவிதைகளிலே காதலைப் பற்றி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“என் இதயத்தின் மூலையிலே இருக்கின்ற ஒரு சிறு குண்டுமணி அளவு காதலுக்குக்கூட அந்தப் புத்தகத்திலேயுள்ள காதல் ஈடாகாது” என்று கூறிய உமார், அவளைத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பி அவளுடைய கண்களுக்குள்ளே, தன் கண்களைச் சொருகினான், அந்தக் காட்சி அவளுக்கு நினைக்கும் போதெல்லாம் இன்பவேதனையை யுண்டாக்கிக் கொண்டேயிருந்தது.
“வெட்கமா யிருக்கிறது” என்று கூறி விலகிக் கொண்டாள்!
“யாஸ்மி! தோழிமார்களால் அழகு செய்யப்பட்டிருக்கும் பட்டத்து ராணியைக் காட்டிலும் நீ அழகாக இருக்கிறாய்”
“அதுகூடப் புத்தகத்தில் இருக்கிறதா?”
“இல்லை! என் இதயப் புத்தகத்திலேதான் அப்படி எழுதியிருக்கிறது”
“சரி! என் இதயத்திலே என்ன இருக்கிறது? சொல் பார்க்கலாம்?”
“உன் இதயத்திலா? இந்த உமாரின் வேதனைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத, அலட்சிய மனப்பான்மையும் கொடுந்தன்மையும்தான் இருக்கின்றன”
யாஸ்மிக்கு உமாரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருந்தது. தன் காதலனுக்கு உலகத்தில் மற்ற எவருக்கும் இல்லாத ஒரு பேராற்றலும், அறிவும் இருப்பதை எண்ணி அவள் பெருமைப் பட்டாள்.
பண்டைக்காலத்து ஞானிகளின் அறிவும் அவர்களின் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் சக்தியும் அந்தக் கவிதைகளைக் காட்டிலும் அதிக இனிமையுள்ள இசையுடன் அவன்பேசும் தன்மையும் எண்ண எண்ண அவளுக்குப் பெருமையாக இருந்தது. பாழடைந்து கிடந்த ஒரு கோபுரத்தை அவளுக்காக அவன் சொர்க்கமாக மாற்றியமைத்து விட்டான்.
ஆனால், பெருமைக்குரிய இந்த எல்லா விஷயங்களைக் காட்டிலும் அவன் சாதாரண உமாராக, அவளைக் காதலிக்கும் உமாராக இருப்பதுதான் அவளுக்கு அதிகமான பெருமையைக் கொடுத்தது. கைகளை அகலமாக விரித்தபடி அருகில் இருந்த சாய்மான நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி, அவனைத்தன் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே, “உண்மையாகச் சொல்! நான் கொடுமைக்காரியா? உன்னை அலட்சிப் படுத்துகிறேனா?” என்று கேட்டாள்.
அவள் பார்வையால் உண்டாகிய மயக்கத்தில் குடிகாரனைப் போல், அவளைப் பிடித்துக் கொண்டு அவள் மேல் சாய்ந்தான் உமார்.
அந்தக் காதல் கோபுரத்துக்கு ஏதாவது பெயர் வைக்க வேண்டுமென்பது மிக முக்கியமாக யாஸ்மிக்குத் தோன்றியது. புதை குழிகளில் உள்ள ஆவிகளெல்லாம் அந்தக் கோபுரத்தில் வந்து கூடுவதாக நிசாப்பூரிலே மக்கள் பேசிக் கொண்டார்கள்.
தன் காதலன் அருகில் இருக்கும் போது எந்தவிதமான ஆவிகளுக்கும் யாஸ்மி சுண்டு விரல் முனையளவுகூடக் கவலைப்பட்வில்லை பயப்படவுமில்லை. அதற்கு ஏதாவது பெயர். நல்ல பொருத்தமான பெயர் வைக்க வேண்டுமென்பது அவளுடைய ஆவலாக இருந்தது. உமார் ஒவ்வொரு பெயராகச் சொல்லி வந்தான், அவளுக்கு ஒன்றுகூடப் பிடிக்கவில்லை.
“அருளின் இருப்பிடம்”
“சொர்க்க மகால்”
“தேவதையின் முகாம்”
இந்தப் பெயர்கள் எதுவும் யாஸ்மிக்குப் பிடிக்கவில்லை. நல்லதேவதையொன்று அங்கே இறங்கி வந்து, அவர்களிடையிலே காதலை உண்டாக்கி அருள்புரிந்தது என்று யாஸ்மி நம்பினாலும்கூட அவளுக்கு இந்தப் பெயர்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை.
“நீ நட்சத்திரங்களின் தன்மையை ஆராய்ந்து மற்றவர்களின் விதிப்போக்கை அறிவதற்குச் சோதிடம் பார்க்கத்தானே போகிறாய்! ஆகையால், இதற்கு “விண்மீன் வீடு” என்று பெயர் வைக்கலாம்” என்றாள் யாஸ்மி.
உமார் உன்னிப்பாக அவளைக் கவனித்தபடி “நான் சோதிடம் சொல்கிறேனா? யார் உனக்குச் சொன்னார்கள்?” என்று கேட்டான்.
“சுல்தான் மாலிக்ஷா அரசாட்சிக்கு வருவார் என்று சோதிடம் சொன்னது நீதானாமே?” உனக்கு எல்லாம் தெரியுமாமே... நிசாப்பூர் தெருக்கள் எல்லாம், இந்த நாடெல்லாம் தான் பேசிக் கொள்கிறார்கள்!” என்று யாஸ்மி சொன்னாள்.
ராஜாக்களின் விதியைக்கூட அறியும் ஆற்றல் உள்ளவன் அவன் என்பதில் யாஸ்மிக்குப் பெருமையாக இருந்தது. இந்தக் கோபுரத்தில் அவன் இடம் பிடித்தது கூட, சோதிடத்தின் மூலம் மக்களின் தலைவிதியை அறிந்து கொள்வதற்காகத்தான் என்றும் அவள் எண்ணினாள். வானநூல் ஆராய்ச்சி செய்பவன் சோதிடம் கூறுவதில் தேர்ச்சி பெறுவான் என்பது அவள் கொண்டிருந்த முடிவு ஆகும்.
“எனக்குத் தெரியும்! அதனாலென்ன?” என்று கேட்டான் உமார்.
“அதனால் என்னவா? அடுத்த மாதத்திற்குள்ளே நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்யும் கருவிகள் எல்லாம் உனக்கு வந்துவிடும். நீயும் வேலை தொடங்கிவிடுவாய் பிறகு, பணம் நிறையக்கிடைக்கும் கிடைத்தவுடன் என் தந்தையிடம் வந்து எனக்குள்ள பெறுமதிப் பணத்தைக் கொடுத்துப் பெண் கேட்டாய், அதன்பிறகு நாம் மணக்கோலத்தில் சாட்சிகளின் முன்னே வீற்றிருப்போம்!”
நிசாமிடம் வாங்கிய பணம் முழுவதையும் பொருள்கள் வாங்குவதில் செலவழித்துவிட்டோமே. இல்லாவிட்டால், இப்பொழுதே பெண் கேட்டிருக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது உமாருக்கு. “இந்தப் பெண்ணின் பெறுமதி எவ்வளவோ? அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியுமோ முடியாதோ?”
“முட்டாளே! நிசாம் அல்முல்க் அவர்களுடைய வானநூல் சாஸ்திரியிடம், பணத்துக்காகவா பேரம் பேசுவார்கள், நீ வந்து கேட்டாலே போதும். நல்ல சம்பந்தம் என்று கொடுத்ததை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொடுப்பார்கள். அது நடக்க வேண்டும். என்னுடைய இந்த வீட்டிலே நான் வந்து தங்கவேண்டும். உன்னுடனேயே நான் எப்பொழுதும் இருக்கவேண்டும். இது நடக்காவிட்டால் என்னால் உயிர்வாழ முடியாது” என்றாள் யாஸ்மி.
“அப்படியானால், இப்பொழுது முதலே இங்கேயே இருந்துவிடு”
“அது எப்படி முடியும்? திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணையடைவது திருட்டுக்குச் சமமாயிற்றே! அவ்வாறு பெண்ணைக் கடத்திவருவது பெரும் பாவமாயிற்றே! திருமணத்தின் மூலமாகத்தான் நீ என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அந்த நிலை வெகுவிரைவில் வரவேண்டுமென்று அளவற்ற அருளாளனும் அன்பின் இருப்பிடமுமான அல்லாவின் கருணையை நாடித்தினமும் வேண்டித்தொழுது வருவேன். இதுவே என் இன்பம். இதைத்தவிர வேறு இன்பம் எதுவும் எனக்குத் தேவையில்லை!
மறுநாள் யாஸ்மி வரவில்லை பச்சைப் புல்வெளியும், கல்லறைகளின் மேல் பூத்திருந்த காட்டுமலர்ச் செடிகளும் காலைக் கதிரவன் ஒளியில் அழகுடன் விளங்கின. உள்ளத்தில் அமைதியில்லாமல், கையில் கவிதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை எடுத்துப்படிக்க முயற்சித்தான்.
பச்சைப் புல்வெளியிலே பூத்தமலர்ச் செடிகளைப்போல, புத்தகத்திலே நான்கு நான்கு வரிகளாகக் காட்சி தந்த அந்தக் கவிதைகள் தோன்றின. ஒரு வெள்ளைத் தாளிலே, அவன் உள்ளத்திலேயிருந்து புறப்பட்ட கீழ்க்கண்ட வரிகளை அவன் எழுதினான். இளவேனில் ஒளிமாயமே
இன்பப்புயல் வெளிமீலே.
விளையாடும் திரு நாளிலே
விழைவோ டென் மனமோகினி.
உளம் நாடும் கவி பாடுவேன்
உதட்டோரம் மது வோடவே.
இளந் தெய்வ அருள் யாதுதான்
என்னின்ப உலகாகுமே!
அன்புக்குரிய யாஸ்மியைப் பற்றி அவன் இதயத்தின் அடித்தளத்திலேயிருந்து கிளம்பிய இந்தப் பாடலை அவள் படித்தால் எத்தனை மகிழ்ச்சியடைவாள்! அவளைப் பற்றியே அவளுக்காகவே பாடப்பட்ட இந்தக் கவிதை சாதாரணமானதுதான்.
காதலைப்பற்றிய அழகு வருணனை யாதும் அவன் எழுதிவிடவில்லை. அவனுடைய எண்ணத்தில் எழுந்த கருத்தைத்தான் நான்கு அடிகளாக எழுதி வைத்திருந்தான். இருந்தாலும் யாஸ்மிக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும், அடுத்த நாள்வரும்போது அவளிடம் காண்பிக்க வேண்டுமென்று இருந்தான்.
ஆனால், யாஸ்மி, அடுத்த நாளும் வரவில்லை; அதற்கடுத்த நாளும் வரவில்லை!
16. எங்கு போனாளே என்னுயிர்க் காதலி!
தொடர்ந்து யாஸ்மி வராமல் போகவும் பித்துப் பிடித்தவன் போலானான் உமார். நீருற்றுக்குப் பக்கத்திலே போய் நெடுநேரம் காத்திருப்பான். அவள் தண்ணிர் எடுக்க வருவதேயில்லை. தொழுகை நேரத்திலே மசூதிப்பக்கம் போய், வாசலின் உட்புறத்து ஓரத்திலே நின்று கொண்டு, பெண்கள் போகும் திசையிலே ஆராய்ந்து கொண்டிருப்பான். ஒன்றும் பயன்படவில்லை. பிற்பகல் நேரத்திலே, ஒருவேளை அவள் தன்னைத்தேடி விண்மீன் வீட்டுக்கு வந்திருக்கக்கூடும் என்று அவசர அவசரமாகக் கோபுரத்தை நோக்கி ஓடி விடுவான்.
அறைகளில் யாருமே இருக்க மாட்டார்கள். அவள் ஏன் வரவில்லை? நோயாகப் படுத்து விட்டாளோ? நோயாக இருந்தால் தகவல் சொல்லி விடலாமே! தகவல் சொல்லக்கூடிய அளவுக்கு மேல் நோய் வாட்டுகிறதோ என்னவோ? சேதியறிந்துவரச் சொல்வதற்கும் ஆள் இல்லை.
வேலைக்கு ஆள்வைத்துக் கொள்ளும்படி டுன்டுஷ் சொன்னபோது மறுத்துவிட்டது எவ்வளவு கெடுதல் ஆகிவிட்டது என்று தோன்றியது. யாராவது பெண்கள் இருந்தாலும் புத்தகக் கடைக்காரர் வீட்டுக்குப் போய் விசாரித்துக் கொண்டுவரச சொல்லலாம். அப்படியாரும் கிடையாது!
இவ்வாறு குழம்பியபடி, மசூதியை நோக்கிக் கடைத்தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, அம்மைத் தழும்புடன் கூடிய பழக்கமான ஒரு முகத்தைப் பார்க்க நேர்ந்தது.
சிறிது யோசித்துப் பார்த்ததும், புத்தகக்கடை வீதியில் தன்னைத் தொடர்ந்து உளவறிந்த பிச்சைக்காரன் அவன் என்பது நினைவுக்கு வந்ததது. அவனோ, உமாரைக் கண்டவுடன், ஒளிந்து கொள்வதற்காக விரைந்து நடக்கத் தொடங்கிவிட்டான் கவனிக்காதவன் போல.
உமார் விரைந்து சென்று, அவனுடைய தோளையழுத்திப் பிடித்துக் கொண்டான்.
“நீருற்றுக்குப் பக்கத்திலே என்னுடன் வந்து பேசிக் கொண்டிருப்பாளே; அவளை நீ பார்த்தாயா?” என்று ஆவலோடு கேட்டான், உமார்.
உமாரை உற்று விழித்துக் கொண்டே, “அவளை நான் பார்க்கவில்லையே! அவள் இங்கே இல்லையே போய்விட்டாளே!” என்று விட்டுவிட்டுச் சொன்னான்.
“போய் விட்டாளா? எங்கே?” என்று உமாரின் கேள்வியிலேயிருந்த ஆவலையும் அவசரத்தையும் அந்தப் பிச்சைக்காரன் கவனித்தான், யாருடைய முகத்தையும் பார்த்தவுடன் அவர்களுடைய மனவியல்பை எளிதாக அறிந்து கொள்ளக்கூடிய அந்தப் பிச்சைக்காரன், உமாரிடமிருந்து நன்றாகப் பணம் கறக்கலாம் என்று தெரிந்து கொண்டான்.
“நான் கேள்விப்பட்ட விஷயமிருக்கிறதே. அதைச் சொல்லத்தடையில்லை, ஆனால், மூன்று நாளாகப் பட்டினி கிடக்கிறேன், பசி பொறுக்க முடியவில்லை” என்று இழுத்த மாதிரியாகப் பேசினான். இயந்திரம் போல உமாரின் கைகள் தன் மடியைத் துழாவின, தன் மடியில் ஒரு செப்பு நாணயங்கூட இல்லையென்பதை உணர்ந்து கொண்டான்.
பிச்சைக்காரனைத் தன்னைத் தொடர்ந்து வரும்படி கூறிச் சைகை காண்பித்துவிட்டு தான் சிறுவயது முதல் அறிந்து வைத்திருந்த ஒரு வட்டிக் கடைக்காரனிடம் சென்றான். கிரேக்க நாணயங்களும், பாக்தாது நாணயங்களும், வட்டமும் சதுரமுமான பல தேசத்து நாணயங்களும் அவனிடம் இருந்தன.
“ஒருமாதத் தவணையில் எனக்கு ஒரு பொன் வேண்டும்” என்றான் உமார்.
“ஒரு மாதத்துக்கு ஒரு வெள்ளிவட்டி கொடுக்க வேண்டும். தெரியுமா?. இது வட்டிக்கடைக்காரனின் வாடிக்கைப் பேச்சு.
“பேச்சை நிறுத்து, பணத்தைச் சீக்கிரம் கொடு” என்று ஒரு பொன்னைச் சட்டென்று வாங்கிப் பிச்சைக்காரன் கையில் கொடுத்து, உனக்கு என்ன தெரியும்? சொல்! சொல்வது உண்மையாக இருக்க வேண்டும்! தெரிகிறதா?” என்று பிச்சைக்காரனை வெளியில் இழுத்துக் கொண்டுவந்தே கேட்டான்.
“நான் பொய் சொன்னால் என் தலையில் இடிவிழட்டும்! மூன்று நான்கு நாட்களுக்கு முன்னாலே அந்தப்பெண், அந்தப்புரத்தில் இருக்காமல் வெளியே போய்ச் சுற்றுவதைக் கண்டித்து வீட்டில் உள்ளவர்கள் அவளை அடித்திருக்கிறார்கள். இப்படித்தான் தண்ணிர் எடுக்க வந்த பெண்கள் பேசிக் கொண்டார்கள். அவளுடைய சிற்றப்பன்தான் அந்த வீட்டில் அதிகாரத்தில் பெரியவன். அவனுக்குக் கோபம் அதிகம்! அவள் அடிபட்ட மறுநாள் அப்துல்சைத் என்ற துணி வியாபாரியிடமிருந்து பெண்கேட்டு ஆள்வந்தது.
பிறகு, சிற்றப்பன் அப்துல் சைதுக்கும், சாட்சிகளுக்கும், சாதிக்கும் ஆள் அனுப்பி வரவழைத்தான். எல்லோரும் வீட்டுக்குள் நுழைவதை என் கண்களால் பார்த்தேன். நண்பர்களும் சுற்றத்தார்களும் கூடினார்கள். திருமண விருந்துச் சாப்பாடும் இனிய சர்பத்தும் எல்லோருக்கும் வழங்கினார்கள். எனக்கும் கூடக்கொஞ்சம் கிடைத்தது”
உமாருக்கோ, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “சரி, அவள் என்ன ஆனாள்?” என்று கேட்டான்.
“வேலைக்காரர்கள் பேசிக் கொண்டார்கள். அந்தப்பெண் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாளாம். எங்கேயோ வெளியிலிருந்து அவளை இரண்டுபேர் பிடித்துக் கொண்டு வந்தார்களாம். எங்கேயும் ஓடிப்போக முயற்சித்திருப்பாள். பிடிபட்டுவிட்டாள்.
எப்படியோ, அப்துல்சைத் என்ற துணி வியாபாரி அவள் அழகைக் கேள்விப்பட்டு, நல்லவிலை கொடுத்திருக்கிறான். அவனுக்கென்ன, எத்தனையோ கூடாரங்களுக்கும், குதிரைகளுக்கும் அதிபதி!” என்று பேசிக் கொண்டிருந்த பிச்சைக்காரன் நிறுத்திவிட்டுத் தன் கண்களை ஓடவிட்டான். ஏனெனில் உமார் ஓடினான்.
குருடனைப் போலக் கூட்டத்திலே இடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்தான் உமார். பித்து பிடித்தவன் போல் ஓடிய அவனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டுத் தன்கையில் இருந்த தங்க நாணயத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான் பிச்சைக்காரன். பக்கத்தில் இருந்த ஒரு கல்லில் உரசிப்பார்த்து, நல்ல மாற்று என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.
மூன்று நாளைக்கு முன்னால், யாஸ்மி உமாரைப்போய்ச் சந்திப்பதைப்பற்றி அவளுடைய சிற்றப்பனிடம் கோள் சொல்லியதற்காகக் கிடைத்த வெள்ளி நாணயங்களுடன் பொன்னையும் சேர்த்து வைத்துக் கொண்டான், அந்த அம்மைத் தழும்பு மூஞ்சிப் பிச்சைக்காரன். உமார், அப்துல்சைத் இவர்கள் இருவரிடம் கறப்பதைக் காட்டிலும் அந்தச் சிற்றப்பனிடம், அதிகப் பணம் கறப்பது எளிது என்று பிச்சைக்காரன் முதலில் எண்ணியிருந்தான்.
ஆனால், உமார் தங்க நாணயமாகவே கொடுத்ததும் அவன் புத்தியில் கொஞ்சம் சபலமுண்டாகியது. நேரே வட்டிக்கடைக்காரனிடம் சென்று, “தெருவிலே சுற்றித்திரியும் அந்த அனாதைப் பயலுக்கு நம்பிப்பணம் கொடுத்தாயே! என்ன பிடித்து வைத்துக் கொண்டு கொடுத்தாய், முட்டாள்” என்றான்.
“ டேய் திருட்டுப்பயலே, உள்ளேவராதே ! பிச்சைக்காரப்பயல் நீ அவனை அனாதையென்கிறாயோ! அவன் யார் தெரியுமா? நிசாம் அல்முல்க் அவர்களின் அபிமானத்தைப் பெற்றவன்!” என்றான்.
இதைக்கேட்ட பிச்சைக்காரனுக்கு, யாரோ தன் சதையை வெட்டியெடுப்பது போல் வேதனையாக இருந்தது. இந்த விஷயம் மட்டும் முதலிலேயே தெரிந்திருந்தால், இந்த இரகசியத்தை அந்தப் பெண் வீட்டிலே சொல்லாமலேயே, சொல்லப் போவதாகப் பணம் கறந்திருக்கலாமே! முதலில் தெரியாமல் போய்விட்டதே!” என்று கவலையில் மூழ்கினான்.
உமாருக்கு ஆத்திரம் ஆத்திரமாகவந்தது. எல்லா விஷயங்களையும் அரைகுறையாகவே பார்த்தான் அரைகுறையாகவே தெரிந்து கொண்டான். எப்படியோ, தெருவீதிக்கு வந்து, நீருற்றின் அருகிலேயுள்ள யாஸ்மியின் வீட்டுக்குச்சென்று, அவளுடைய சிற்றப்பனைப் பார்க்க வேண்டுமென்று கூறினான். ஒரு மாதிரியான ஆள் உள்ளேயிருந்து வந்தான். எதற்காக வந்தான் என்று தெரிந்து கொண்டதும் எரிந்து விழுந்தான்.
இரைந்து கத்தினான். “திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிக் கேட்கிறாயே! உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா? முட்டாளே! பெயர் சொல்லி எங்கள்வீட்டுப் பெண்ணை நீ எப்படி அழைக்கலாம்? அவர்கள் என்ன ஆடுமாடுகளா?” என்று பலப்பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே பெரும் சத்தமிட்டான். யாஸ்மியின் தகப்பனும், புத்தகக் குவியலின் மத்தியிலிருந்து எழுந்து வெளியே வந்தான். கண் தெரியாமல் முகம் வெளுத்து, முதுமையடைந்து காணப்பட்ட அவன் எதுவும் பேசவில்லை.
“அந்த வெட்கங்கெட்ட திருட்டுப்பயலை எச்சரித்து அனுப்பு! திருட்டுப்பயல்! இங்கேயே ஓடிவந்து விட்டானே! அவனைத் தூண்களில் கட்டியடி! கால் மணிக்கட்டை பெயர்த்தெடு” என்று உள்ளேயிருந்து ஒரு பெண்குரல் ஆணையிட்டது.
ஆனால், பித்துப் பிடித்தவனைப் போல் இருந்த உமார் மீது கைவைக்கக்கூடிய தெம்பு, தைரியம் அந்த வீட்டிலேயிருந்த ஆண்களில் யாருக்கும் உண்டாகவில்லை. பெண்கள் மட்டும் வாயினால் கண்டபடி ஏசினார்கள். கடைசியாக உமார், தானாகவே அந்த ஏச்சுக்களைத் தாங்க முடியாமலோ என்னவோ, அந்த விட்டு வாசலைவிட்டு வெளியேறினான்.
எங்கெங்கோ சுற்றிவிட்டு நெடு நேரத்திற்குப் பிறகு, இரத்தினக்கடை ஒன்றிலே நீலக்கற்களை ஆராய்ந்து விலைபேசிக் கொண்டிருந்த டுண்டுஷ் உருவத்தைக் கண்டான் உமார். தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு டுண்டுஷ் இருந்த இடத்திற்கு வந்தான்.
தன்னுடைய கதையையும் தன் மனமுடைந்த நிலையையும் உடைந்த சொற்களால் அவனிடம் தெரிவித்தான். நீலக்கல்லை ஆராய்பவன் போலத் தோன்றினாலும், டுண்டுஷ் விஷயத்தை ஊன்றிக் கவனித்தான். அந்தப்பெண் சாதாரணப் பாடகியாகவோ, அடிமையாகவோ இருந்திருந்தால், தன் அதிகாரம், சூழ்ச்சி யெல்லாவற்றையும் பயன்படுத்தி அவளைத் தூக்கிக் கொண்டுவந்து உமாரிடம் ஒப்படைத்து விடுவான்.
ஆனால் அவளோ இஸ்லாமியன் ஒருவன் வீட்டின் அந்தப்புரத்தில் வசிப்பவள்! அவள் தன் கணவனுடைய சொத்து! திரைக்குப் பின்னாலே இருக்கும் முக்காட்டுப் பெண்கள் விஷயத்திலே தலையிடுவதென்பது நிசாம் அவர்களுக்கே பிடிக்காத விஷயம்! பெண்களைத் திரைக்குப் பின்னால் வைத்துப் பாதுகாப்பது இஸ்லாமிய மதச்சட்டம். அந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதென்பது யாரும் கனவில் கூடக்காண முடியாத விஷயம்! அதுவும் தவிர, யாஸ்மி உமாரைத் தன் அன்புத் தளையிலே சிக்க வைத்திருக்கிறாள்.
தன் ஆதரவில் வாழும் உமார் ஒரு பெண்ணுக்கு ஆட்பட்டு நடப்பதையும் டுண்டுஷ் விரும்பவில்லை! பல பெண்களோடு, அவன் தொடர்பு கொண்டிருந்தாலும்கூட அதனால் கெடுதல் இல்லை. மேற்கொண்டு அவர்களை ஒற்றர்களாகவும் வசப்படுத்திக் கொண்டு பலன் பெறலாம். ஆனால், யாஸ்மி போன்ற ஓர் இளம்பெண், முற்றிலும் காதல் வசப்பட்ட ஒரு பெண் எப்போதும் தன் நோக்கங்களுக்கு ஆபத்தானவளாக இருப்பாள்.
ஆகவே அவளுடைய தொடர்பு உமாருக்கு இருப்பது என்பது தன்னைப் பொறுத்தமட்டில் கூடாத ஒரு காரியமே! இத்தனை விஷயங்களையும் எண்ணித் தெளிந்து கொண்ட டுண்டுஷ், அவள் விஷயத்தில் தான் தலையிடக் கூடாதென்ற முடிவுடன் ஆதரவான, இரக்கத்துடன் கூடிய தொனியில், ஆறுதல் கூறத் தொடங்கினான்.
“ஆ! அப்படியா நேர்ந்துவிட்டது. எனக்கு மட்டும், கொஞ்ச நாட்கள் முன்பாகவே இந்த விஷயம் தெரிந்திருந்தால், உனக்கே திருமணம் செய்து முடித்து விட்டிருப்பேன். சாட்சிகள் எதிரில் நடந்து முடிந்துவிட்ட இந்தத் திருமணத்தால், உன்னுடைய காதலி இரும்புச் சங்கிலியில் கட்டப்பட்டவள் போல் ஆகிவிட்டாள். இனி யாரால் என்ன செய்யமுடியும் ஏதாவது செய்யமுடியுமா? என்று யோசித்துப் பார்க்கலாம்!” என்றான் டுண்டுஷ்.
“ஆனால், அவள் எங்கேயிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களால் முடியாத காரியமல்ல, அடுத்த மாதத்தில் நான் அவளைப் பெண் கேட்பதாக இருந்தேன்.”
“உம் விதி அப்படி! அதை யாரால் மாற்ற முடியும்!”
“எங்கேயிருக்கிறாள் என்று மட்டும் கண்டு சொல்லுங்கள். நான் அவளைப்பார்க்க வேண்டும்.”
“அது சரி, உடனே இன்று இரவே அங்காடிக் கட்டிடங்களுக்கு என்ஆட்களை அனுப்புகிறேன். நாளைப் பொழுதுக்குள் அவர்கள் அவள் இருப்பிடத்தைக் கண்டுவந்து சொல்லி விடுவார்கள். அதுவரையில் நீ என்கூடவே இரு” என்றான் டுண்டுஷ்.
அடுத்த நாட்காலையில் டுண்டுஷ் அனுப்பிய ஆட்கள் திரும்பி வந்தார்கள். துணி வியாபாரி அப்துல்சைத் என்பவன் நிசாப்பூரில் தற்பொழுது இல்லை என்றும், தன்னுடைய புது மனைவியையும் வேலைக்காரர்களையும் அழைத்துக் கொண்டு நகரைவிட்டு வெளியேறி விட்டானென்றும் ஆனால், எந்த ஊருக்கு எந்தத்திசையில் போனானென்பது தெரிந்து கொள்ள முடியவில்லையென்றும் கூறினார்கள்.
தினந்தினம் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நகரில் இருந்து வெளியூர் செல்லும் பாதைகளும் எத்தனையோ இருக்கின்றன. அதனால், அந்த ஒரு வியாபாரி வெளியேறிய விவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.
இருப்பினும் ஒவ்வொரு பாதையையும் கவனித்துத் தகவல் தெரிவிப்பதாக உறுதி கூறினார்கள் அவர்கள் கூறிய விதத்திலிருந்து, அந்த வியாபாரி திரும்பவும் எப்பொழுதாவது வியாபார நிமித்தம் நிசாப்பூர் வரநேரிடக் கூடுமென்றும் அப்பொழுது கண்டுபிடித்து விடலாமென்றும் தோன்றியது!
இந்த விவரங்களால் உமார் மனஅமைதி பெற்று விடுவானென்று டுன்டுஷ் எண்ணியிருந்தான். ஆனால், அவன் எண்ணியது தவறாகிவிட்டது. உமார் தன்னுடைய பழைய பழுப்பு நிறமேலாடையுடன் அங்காடிப் பக்கமாகப் போனான். அங்கேயுள்ள பல கட்டடங்களிலும் உள்ள வியாபாரிகளுடனும், ஒட்டகக்காரர்களுடனும் பேசிக் கொண்டிருந்தான். பிறகு ஆளே நகரத்தை விட்டு மறைந்துவிட்டான்.
டுன்டுவினுடைய வல்லமையும் திறமையும்மிக்க ஒற்றர்களால் உமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல்நாள் அப்துல்சையித் என்ற வியாபாரியைத் தேடியதைக் காட்டிலும் அதிக அக்கறையோடு உமாரைத் தேடினார்கள். பயன்தான் ஏற்படவில்லை.
உமார் ஒட்டகக்காரர்களுடன் கிளம்பிப்போய் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான். நல்ல தூக்கம் வந்து கண்ணைச் சுழற்றும் அதிகாலை வேளையிலே எழுந்திருப்பதும், ஒட்டகக்காரர்கள் தங்கும் கூடாரங்களிலும், வியாபாரிகள் தங்கும் சத்திரங்களிலும் நுழைந்து நுழைந்து வெளிவருவதும், கண்ணெதிரில் தோன்றிய மனிதர்களையெல்லாம்.
மீஷிட் நகரைச்சேர்ந்த அப்துல்சைத் என்ற துணிவியாபாரியைச் சந்தித்ததுண்டா என்று விசாரிப்பதும் இப்படியாக ஒரே வெறியாக ஊர் ஊராகப் பாலைவனம் பாலைவனமாக எங்கும் தேடிக் கொண்டிருந்தான். சந்தையிரைச்சலின் ஊடேயும், புழுதிபடிந்த பாதைகளிலும், தன்னுடைய கேள்விகளைத் துணையாகக் கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.
காய்ச்சலால் உடல் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்திலும், உள்ளத்தின் காய்ச்சல் அதிகமாக உந்தித்தள்ள மீஷித் நகரத்தின் தங்கும் விடுதிகளையும், யாத்திரிகர்கள்கூடும் புண்ணியத் தலங்களையும் தேடிச் சென்றான்.
செப்ஸிவார் நகரில் உள்ள கற்றூண் அடியிலும், பூஸ்தான் நகரத்து ஒட்டக நிலையத்திலும் நெடுநேரம் உட்கார்ந்திருந்தான். ஒருமுறை அப்துல்சைத் என்ற ஒரு வணிகனைப் பின்தொடர்ந்து வடமலைத் தொடர்வரையிலும் சென்று, கடைசியாக அவன் போகாத சந்தையிலே பழைய துணிவிற்கின்ற ஒரு கந்தல் வியாபாரி என்பதைத் தெரிந்து கொண்டான்.
இடைவிடாத அவனுடைய உடல்வேதனை அவனை ஓரிடத்தில் கூடத்துங்க முடியாமல் செய்தது. சுமைகளுடன் நீண்டதுரம் போகும் ஒட்டகங்களுடன் கூடவிரைந்து ஓடும்போது, அவனுக்கு உடல் வேதனை குறைவாகத் தோன்றியது. “யாஸ்மி என்ன வேதனைப்படுவாளோ? ஓர் அடிமையைப்போல விற்கப்பட்டு, ஓர் அடிமையைப் போலவே அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் அவளுடைய உள்ளம் எவ்வளவு துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும்? அன்றைக்கு அடித்த அடியில் அவள் எவ்வளவு துடித்துப் போயிருப்பாள்.
இப்பொழுது எந்த இடத்திலே, எந்தப் பாதையிலே சென்று கொண்டிருக்கிறாளோ? உன்னுடன்கூட இருப்பதைக் காட்டிலும் வேறு வாழ்வு எனக்குக் கிடையாது என்றாளே!” என்று நினைக்க நினைக்க அவன் உள்ளம் வேதனையால் வெடித்துவிடும் போல் இருந்தது. நாட்கள் வாரங்களாயின வாரங்கள் மாதங்களாயின.
இளவேனிற் காலத்தின் சிலுசிலுப்பைக் கோடைகாலத்துச் சூரியன் உறிஞ்சிவிட்டது. குழகுழவென்று இருந்த சேறுஞ்சகதியும் இறுகிய இரும்பு வார்ப்புப்போல கட்டித் தன்மையடைந்து விட்டது. பச்சைப்புல் தரைகள் பழுப்பு நிறமடைந்தன.
கோடை வெயிலின் கொடுமையும், இடைவிடாத அலைச்சலின் அயர்ச்சியும் சேர்த்து அவனை நோயில் கிடத்திவிட்டன. காய்ச்சலும் சள்ளைக்கடுப்பும் சேர்ந்து இரண்டு வாரங்கள்வரை அவனைப் படுத்த படுக்கையாகக் கிடத்திவிட்டன இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவன் எழுந்திருக்க முடிந்தபோது, அவனுடைய கால்களைத் தரையில் ஊன்றுவதற்குப் போதிய வலிவுகூட இல்லாதவனாக இருந்தான், மீஷித் நகரத்தைச் சேர்ந்த கருணையுள்ளம் படைத்த ஒருவன், அவனைத் தன் கழுதையின்மேல் ஏற்றி நிசாப்பூரில் கொண்டுவந்து விடுவதாகக் கூறினான்.
நோய் வந்துகிடந்து எழுந்தபிறகு அவன் மூளையில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இந்த மாதிரி ஊருக்கு ஊர் அலைந்து திரிவது உபயோகமற்றது என்பதை அவன் தெரிந்து கொண்டான். தன் உள்ளத்துக்குள்ளேயே வீற்றிருக்கும் அந்த வேதனையிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஊர் ஊராக ஓடியலைந்ததாக அவனுக்குத் தோன்றியது. எங்கு ஓடினாலும் இருக்கிற வேதனையும் கூடவேதானே வருகிறது என்பது இப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது.
இவ்வளவு நாட்களுக்குள் யாஸ்மியிடமிருந்து ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும். தன் கோபுரத்திற்கு அவள் நிச்சயம் செய்தி யனுப்பியிருப்பாள். டுன்டுஷ் உடைய ஒற்றர்கள்கூட ஏதாவது கண்டு பிடித்திருக்கலாம். அங்கிருந்து வெளியேறியது எவ்வளவு முட்டாள் தனமாகிவிட்டது. இப்பொழுது திரும்ப நினைத்தாலும் உடனே திரும்ப முடியவில்லை. தேறுவதற்காகச் சிலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
17. தேடித் தேடிக் காணாமல் திரும்பி வந்து சேர்ந்தானே!
பலநாள் கழுதையின் மீது பயணம் செய்து கடைசியாக ஒருநாள் மாலையில் நிசாப்பூருக்கு வந்து சேர்ந்தான் உமார். இடுகாட்டுக்குப் போகும் பாதையில் இறங்கிக் கொண்டு அந்தக் கழுதைக் காரனுக்கு நன்றி கூறினான். பூட்டிக்கொண்டு வந்த தன்னுடைய கோபுரம் எப்படியிருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டே அதை நோக்கி நடந்தான். எங்கு யாரும் இருக்க மாட்டார்கள், என்று எண்ணினானோ அங்கு அவன் பலப்பல மாறுதல்களையும், பலப்பல புதிய ஆட்களையும் கண்டு வியப்படைந்தான்.
கோபுரத்தைச் சுற்றியிருந்த சுவருக்குள்ளே புதுப்புதுக் கட்டிடங்கள் காட்சியளித்தன. அழகான பல பூஞ்செடிகள் நிறைந்து ஒரு தோட்டம் உருவாகியிருந்தது. இரண்டு தோட்டக்காரர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். கோபுரத்தின் மேலேயிருந்த வரந்தைச் சுவர் ஓரமாக வெண்கலக் கருவிகள் பல ஒளிவீசிக் கொண்டிருந்தன. இன்னும் பலப்பல மாறுதல்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டு வெளியே நின்று கொண்டிருந்த உமாரிடம், தாடி வைத்திருந்த வேலைக்காரன் ஒருவன் மரியாதையாக வந்து நின்று சலாம் வைத்தான்.
“தலைவரே! தங்கள் வரவு நல்வரவாகுக! தங்கள் வேலையைத் தொடங்குவதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து வைத்திருக்கிறோம். தயவுசெய்து உள்ளே வருகிறீர்களா?” என்று மிக வினயத்தோடு வரவேற்றான். தூசிபடிந்த மேனியும், அழுக்கடைந்த உடையும், பித்துப் பிடித்தவன் போன்ற தோற்றமும் உடைய உமாரை அந்த வேலைக்காரன் ஏதோ ஒரு விசித்திரமான பிராணியைப் பார்ப்பது போல் பார்த்தான்.
“சரி” என்று சொல்லிவிட்டு உமார் உள்ளே சென்றான். நேராகத் தன்னுடைய பொருள்கள் இருக்கும் கூடத்திற்குச் சென்றான். அங்கேயிருந்த பொருள்கள் அனைத்தும் வைத்தது வைத்தபடியேயிருந்தன. யாரும் எதையும் தொடவேயில்லை. பட்டுத்திரையும் அதில் பொறிக்கப்பட்ட பறக்கும் பாம்பும் அப்படியே முன்போலவே தொங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய படுக்கையின் ஒரு புறமாகத் தலையணிகள் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன.
“ஏதாவது செய்திகள் கிடைத்தனவா? எனக்காக அனுப்பப்பட்ட ஒருசெய்தி வந்து சேர்ந்ததா?” என்று அந்த வேலைக்காரனை உமார் கேட்டான்.
“தலைவரே! தினந்தினமும் டுன்டுஷ் பிரபு அவர்களிடமிருந்து ஒரு செய்திவரும்.தாங்கள் வருகை புரிந்துவிட்டீர்களா? என்ற கேள்வியாகத்தான் அந்தச் செய்தியிருக்கும்! இதோ, இப்பொழுது கூடத்தாங்கள் வந்துவிட்டீர்கள் என்ற செய்தியை, நிசாம்பூரில் தெரிவிப்பதற்காக ஒரு பையனை அனுப்பிவிட்டேன்” என்றான்.
“வேறு எந்தவிதமான செய்தியும் இல்லையா? ஏதாவது கடிதம் கொடுக்கப் படவில்லையா?”
“இல்லை, வேறு எந்தவிதமான செய்தியும் கிடையாது! எந்தக் கடிதமும் இங்குக் கிடைக்கவில்லை.”
பலகணிக்கருகிலே போய், ஒரு தாழ்ந்த நாற்காலியிலே உமார் உட்கார்ந்தான். வேலைக்காரன் ஒரு வெள்ளிக் கூசாவிலே தெளிந்த தண்ணீர் கொண்டுவந்து அவனுடைய பாதங்களைக் கழுவினான். அப்பொழுது நல்வாழ்த்துக் கூறியபடி ஒரு மனிதன் உள்ளே வந்தான். வெள்ளிய தாடியுடன் கூடிய அந்த மனிதன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.
மேன்மைக்குரிய நிசாம் அவர்களால், பாக்தாது நகரத்திலே ஏற்படுத்தப்பட்ட பாக்தாது நிசாமியா என்ற ஆராய்ச்சிக் கழகத்திலே, கணிதப் பேராசிரியராக இருப்பவன் தான் என்றும், தன் பெயர் மைமன் இபின்நஜிப் ஆல்வாஸிட்டி என்றும் கூறினான். உமார் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவனுடைய அமைதியைக் கண்ட மைமன் வியப்புடன் மீண்டும் கரகரத்த குரலிலே பேசத் தொடங்கினான்.
“பேரறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையும், அறிஞர் அலிசென்னா அவர்கள் பயன்படுத்தி வந்த வெண்கலப் பூகோள உருண்டையும் நிசாம் அவர்கள் ஆணையிட்டபடி கொண்டு வந்திருக்கிறேன்” என்றான்.
“நல்லது” என்று உமார் எங்கோ கவனமாகப் பதில் சொன்னான். வெயிலின் வெப்பமும், பாலைவனத்து மணற்குடும் உடலின் காய்ச்சலும் வாட்டியபின் இங்கு வந்ததும் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் இடையே மைமன் கரகரத்தகுரல் என்னவோ மாதிரியிருந்தது.
ஆமையின் முதுகோட்டிலே தவறுதலாக ஏறிவிட்ட நாரைபோல, வெகு வேகமாகப் பின்வாங்கி அந்த இடத்தைவிட்டுச் சென்றான் மைமன் என்ற அந்தக்கணிதப் பேராசிரியன். ஆனால், இரவு நெடுநேரத்திற்குப்பிறகு, கோபுரத்தின் உச்சியிலேயிருந்த தளத்தில் உமார் உலவிக் கொண்டிருந்தபொழுது, அந்த முதிய பேராசிரியன் மைமன் தான் கொண்டு வந்த கருவிகளை நோக்கிச் செல்லாமல் இருக்க முடியவில்லை.
அங்கே சென்று, உமார் கவனிக்காமல் இருக்கும்போதே, அந்தப் பூகோள உருண்டையின் நான்கு புறமும் இருந்த விளக்குகளை ஏற்றினான். அந்த உருண்டையின் மேல்பாதியில் வெளிச்சம் படும்படிக்கு அந்த விளக்குகளை ஒழுங்குபடுத்தினான்.
அப்பொழுது, உலாவிக் கொண்டிருந்த உமார் திரும்பிப் பார்த்தான். மெருகேறிய அந்த வெண்கல உருண்டையின் மீது அவன் கண்கள் பதிந்தன. அருகில் வந்து அதை நன்றாக உற்றுக் கவனித்தான். நட்சத்திரங்கள் இருக்கும் இடங்களின் எடுத்துக்காட்டுக்கள் அதில்வலை பின்னியது போல் சிறுசிறு உருவங்களில் வரையப்பட்டிருந்தன.
எத்தனையோ பேர் அந்த உருண்டையைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். பழைய கோடுகளையும், புதிதாக அதில் சேர்க்கப்பட்டிருந்த கோடுகளையும் உமார் கவனித்தான். அடிவானத்தை நோக்கி வலப்புறத்தையும், இடப்புறத்தையும் கவனித்துவிட்டு உமார், பூகோள உருண்டையை மெதுவாகச் சுற்றிக்கொண்டு வந்து, தன் தலைக்கு நேரே உள்ள வானத்தோடு பொருந்தும் நிலைமையில் அதை நிறுத்தினான்.
பொத்தானைத் தடவி, அழுத்தி அந்த நிலையில் அதை நிலைபெறும்படி செய்தான். பெரும் பேராசிரியர்கள் கண்டுபிடித்த கருவிகளும், பாக்தாது நகரத்துக் கணிதப் பேராசிரியன் ஒருவனும், அறிஞர் அலிசென்னாவின் ஆராய்ச்சிகளின் பலனும், அனைத்தும் உமாரின் கையிலே இப்பொழுது சேர்ந்திருக்கின்றன. இருப்பினும் அவன் அதனால் கர்வமடையவில்லை.
வேகமாக உள்ளே நுழைந்த டுன்டுஷ் “அடேயப்பா! மிருக ராஜ்யத்திலிருந்து வந்த முனிபுங்கவர் மாதிரியிருக்கிறாயே! உன்னை எங்கெங்கே தேடுவது? நெருப்புப்போல பறக்கும் நிசாம் அவர்களின் கோபத்தை நீ எப்படித் தவிர்க்கப் போகிறாய்? என்ன பதில் சொல்லப் போகிறாய்? சரி, சரி இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தாயே, அதுவே பெரிது!” என்றான்.
“நான் வெளியேறிச் சென்றிருந்தபோது, யாஸ்மி எதாவது செய்தி அல்லது அடையாளம் அனுப்பியிருந்தாளா?” என்று உமார் அவனை வினவினான்.
ஒற்றர்களின் தலைவனான அந்த டுன்டுஷ் விழிக் கோணத்தாலேயே சிரித்தபடி, “ஓ அந்தப் பெண்ணா, அவளைப்பற்றி நான் ஒன்றும் கேள்விப்படவில்லையே!” என்றான்.
“உன்னுடைய ஆட்களுக்கு ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டுமே!”
டுன்டுஷ் தலையை அசைத்துக் கொண்டே, ‘ஊஹாம்! ஒரு தகவலும் இல்லை. என்னுடைய ஆட்கள் எவ்வளவோ முயற்சிசெய்து தேடிப்பார்த்தார்கள் பயனில்லை. நீ ஏன் இதற்காக இத்தனை கவலைப்படுகின்றாய்? அவள் போய்விட்டால் இந்த உலகத்திலே பெண்களே இல்லாமலா போய்விட்டார்கள்? பாரசீகத்துப் பைங்கிளிகளும் சீனத்துச் சிங்காரிகளும் எத்தனையோ பெண்கள் அடிமைச் சந்தையிலே இருக்கின்றார்கள்.
எடுப்பும் அழகும் வாய்ந்த ஒருத்தியை எளிதில் தேர்ந்தெடுத்து உன்னுடையவள் ஆக்கிக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய ஏற்பாட்டை நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால், நிசாம் இப்பொழுது கோபமாக இருக்கிறார். அவரைச் சமாதானப் படுத்துவதற்கு ஏதாவது இங்கு வேலை நடந்ததாக நீ காண்பித்துக் கொள்ள வேண்டும்.
அவர் எதிரிலே ஏதாவது ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும். என்ன செய்யப் போகிறாய்?” என்று டுன்டுஷ் உமாரைக் குடைந்தான். உமார் பேசாமலிருந்தான் அவனிடம் எந்த விதமான திட்டமோ அதைப்பற்றிய எண்ணமோ கிடையாது.
“அவர் உன் ஆதரவாளர் என்பதை மறந்துவிடாதே! அவர் மனம் சமாதானம் அடையத் தக்கசெயல் ஏதாவது நீ செய்திருக்க வேண்டும். உன்னால் ஏதாவது பயன் இருப்பதாக அவர் கருத வேண்டும். உன்னுடைய அறிவினால், அறிவின் திறமையால் செய்யக்கூடிய ஒரு திட்டத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் உன்னைப் பயன் உள்ளவனென்று கருதுவார்.”
“சரி! ஒரு புதிய பஞ்சாங்கம் அமைக்கப் போவதாக அவரிடம் அறிவிப்போம்!” என்றான் உமார். “என்ன? என்ன சொல்கிறாய்?” என்று தன்னையே நம்பமுடியாத குரலில் அதிர்ந்து போய்க் கேட்டான் டுன்டுஷ்.
“இப்பொழுதுள்ள பஞ்சாங்கத்தின்படி நாம் பலமணி நேரங்களை இழந்து வருகிறோம். தவறுதல் எதுவும் இல்லாமல் காலத்தைக் கணக்கிடுவதற்குரிய ஒரு முறையை நாம் ஏற்படுத்துவோம் என்று நான் சொல்கிறேன்” என்று சொன்னான் உமார் கம்பீரமாக.
டுன்டுஷ் அச்சங்கலந்த உள்ளத்துடன் உமாரை நோக்கினான். ஏற்கெனவே, வேலைக்காரர்கள் தங்கள் தலைவரின் விசித்திரப் போக்கைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது உமாரின் விசித்திரப் போக்கைத் தானே நேரில் காண நேர்ந்ததும் அவனுக்குப் பயமாயிருந்தது. அவனுடைய பேச்சு பைத்தியக்காரத்தனம்ாக அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும் சிரித்துக் கொண்டே, “நான் பேசுவதில் ஏதும் தவறிருந்தால், கருணைகாட்டி மன்னித்து விடு.
அல்லாவினால் படைக்கப்பட்ட நிலவு நமக்கிருக்கிறது. ஒவ்வொரு முறையும் முதற் பிறையுடன் அது வெளித் தோன்றும்பொழுது நம்முடைய மாதத்தின் முதல் நாள் தொடங்குகிறது. நிலவைக் காட்டிலும் சிறந்த காலத்தை அளக்கும் கருவியை எந்த மனிதனாலும் செய்யமுடியாதல்லவா? என்று கேட்டான் டுன்டுஷ்.
“ஏன் செய்ய முடியாது? எகிப்தியர்கள் செய்திருக்கிறார்கள்! கிறிஸ்துவர்களும் கூடச் செய்திருக்கிறார்களே! இதோ நீ இங்கே ஊன்றி வைத்திருக்கிறாயே, மரத்துண், அது ஓடும் காலத்தை அளப்பதற்கு உதவாது. விளையாடும் சிறுவர்க்கு வேண்டுமானால் பயன்படும்! வந்து பார்” என்று ஆத்திரமாகக் கூறிவிட்டு, டுன்டுஷை இழுத்துக் கொண்டு போனான்.
வெயிலின் மூலமாக நேரத்தை அறிந்து கொள்வதற்காகப் பூசிமெழுகிய தரையின் நடுவிலே டுன்டுஷ் மிகுந்த முயற்சிகொண்டு ஓர் அழகிய மரக்கம்பத்தை நட்டு வைத்திருந்தான். வெயில் பட்டு விழும் கம்பத்தின் நிழல் மூலமாக நேரத்தையறியலாம் என்பது டுன்டுஷ் நினைப்பு.
பழங்காலத்தில் மக்கள் அவ்வாறே நேரத்தை அளந்து வந்தார்கள். கோபத்துடன் அவனை இழுத்துச் சென்ற உமார், தன் தோளை அந்தக் கம்பத்தின் மீது மோதி, இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒரே மூச்சில் பிடுங்கிக் கீழே சாய்த்தான். அந்தப் பாலைவனத்துப் பறவையின் உள்ளத்திலே கோபத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.
“இந்தக் கம்பம் காற்றிலே வளைந்து வெயிலில் சுருங்கி உருமாறிப் போய்விடுமே! நாம் என்ன விளையாட்டுப் பிள்ளைகளா? கண்டதையெல்லாம் நம்புவதற்கு? மத விரோதிகளான கிறிஸ்துவர்கள் வைத்திருப்பதைப் போன்ற தூண் இருக்க வேண்டும்.
ஐந்து ஆள் உயரமுள்ள பளிங்குக்கல் தூண்வேண்டும். அது கை நகத்தைப் போல் சுற்றிலும் சம வளைவுள்ளதாகவும், தேய்த்து மெருகு தீட்டப் பெற்றதாகவும், நீர் மட்டத்தோடு பொருந்தியதாகவும், செப்பினால் நேராகப் பொருத்தப்பட்டும் இருக்கவேண்டும்.
பருவ மாறுதல்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் அந்தப் பளிங்குத் தூண்! அதன் பக்கத்திலே ஒரு நீர்க்கடிகாரமும் இருக்கவேண்டும். கொத்தர்களையும் தச்சர்களையும் என்னிடம் அனுப்பு. எப்படிச் செய்யவேண்டுமென்று நான் அவர்களிடம் விளக்குகிறேன்” என்று கடகடவென்று பேசினான் உமார்.
“மதத் துரோகத்தின் சின்னத்தை நிலைநாட்டுவதுபோல் இது எனக்குத் தோற்றமளிக்கிறது. ஆகவே நிசாம் அவர்களின் ஒப்புதலை முதலில் பெற்றுக் கொள்ளவேண்டுமென்று நினைக்கிறேன்” என்று முணுமுணுத்த குரலில் டுன்டுஷ் கூறினான்.
“நிழலின் மூலமாக ஒரு மயிரிழையளவு காலத்தையும் கணக்கிடுவதற்குரிய ஒரே வழி அதுதான்!” “மயிரிழையளவு காலத்தையும்” டுன்டுவின் வாய் முணுமுணுத்தது. அவனால் இதை நம்ப முடியவில்லை. அருகில் நின்ற குவஜா மைமன் பக்கம் திரும்பி நோக்கினான்.
அவன் இதை நம்புகிறானா என்ற கேள்வி அவன் கண்களிலே தோன்றியது. இவன் கருத்தைப் புரிந்துகொண்ட அந்தக் கணிதப் பேராசிரியன், மைமன் “அவர் குழப்பத்துடன்தான் பேசுகிறாரோ என்னவோ, அது தெரியவில்லை. ஆனால், அவர் கணிதங்களைச் செய்வதிலே மூடரல்ல. அவர் விளக்குகிறபடியான கால அளவுத் தூண் நிச்சயமாகச் சரியானதாகவேயிருக்கும்.
சரியான முறையில் அவர் கூறுகிறபடி தூண் அமைக்கப்பட்டால் அறிஞர் அலி சென்னாவின் பூகோள உருண்டை எவ்வளவு சரியானதோ, அவ்வளவு சரியாக அந்தத் தூணும் இருக்கும். இதில் ஐயமில்லை!” என்றான். எந்த முடிவுக்கும் வரத் தோன்றாது அவ்விடத்தைவிட்டு அகன்றான் டுன்டுஷ்.
டுன்டுஷ் கூறிய இந்தக் குழப்பமான கதையை நிசாம், வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். உமாரை வைத்துக்கொண்டு செய்வதற்கிருந்த அவருடைய திட்டங்களெல்லாம்கூட அவன் மறைவினால் தவிடு பொடியாகியிருந்தன. அந்தக் கோபத்துடன் குவாஜா மைமன் வேறு, உமாரின் இந்தப் புதிய பஞ்சாங்க முறையை ஒப்புக்கொள்கிறான் என்பதும் சிந்திக்கவேண்டிய விஷயமாக இருந்தது.
“புதுப் பஞ்சாங்கமா? அது நம் பழக்க வழக்கத்திற்கு மாறுபட்டதாயிற்றே! மதத் தலைவர்களின் உலோமா சபை எதிர்க்குமே! - கிறிஸ்துவர்களுக்கு எனத் தனியே ஒரு பஞ்சாங்கம் இருக்கிறது! காத்தாணியர்களுக்கு வட்டப் பஞ்சாங்கம் இருக்கிறது. பாரசீகர்களாகிய நமக்கு, இஸ்லாமிய ஆட்சிக்கு முன்னிருந்தே இந்தப் பஞ்சாங்க முறையிருந்து வருகிறது இதில் மாறுதல் செய்வதென்பது ஆபத்தாயிற்றே!”
நிசாமின் இந்த ஆராய்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த டுன்டுஷ் கண்களை முடிப் பெருமூச்சு விட்டபடியே “உமார் காலம் ஒன்றே ஒன்றுதான் என்று கூறுகிறான். நாட்டின் காவலராகிய தாங்களோ, நான்கு காலங்களைப் பற்றிக் கூறுகிறீர்கள் எனக்கு மூளை குழம்புகிறது.” "நான்கு காலங்கள் அல்ல; நான்கு பஞ்சாங்கங்கள்! சுல்தான் மாலிக்ஷா இவனைக் கொண்டு வரச் சொல்லி இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறாறே!”
“மாலிக்ஷா இவனைக் கொண்டுவா என்கிறார். இவன் காலத்தை அளக்கப் புதிய கருவியைக் கொண்டு வா என்கிறான். இந்தக் கருவியை வைத்துக் கொண்டு என்னதான் செய்வதோ தெரியவில்லை. விழித்தெழுந்ததிலிருந்து தூக்கம் வரும்வரை ஒவ்வொரு வினாடியையும் அளந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது” என்று டுன்டுஷ் சலித்துக் கொண்டான்.
“இல்லையில்லை இளவேனிற் காலத்திலும் முன்பனிக் காலத்திலும் இரவும் பகலும் சரி சமமாக இருக்கும் ஒரு நாளை அவன் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பெருந்துணின் துணையால் கதிரவனின் நிழல் மிக மிக நீண்டு விழும். குளிர் காலத்தின் ஒரு நாளில் நிழல் மிக மிகக் குறுகி விழும். கோடைகாலத்தின் ஒரு நாளையும் அவன் முடிவு செய்ய முடியும்.
இந்த ஆராய்ச்சிகளையும், விண்மீன்களின் இயக்கத்தைப் பற்றி அவன் செய்திருக்கும் ஆராய்ச்சிகளையும் பயன்படுத்தி அவன் புதுமையான ஒரு காலக் கணித முறையை ஏற்படுத்த முடியும். அவன் என்ன செய்வானென்பது எனக்குப் புரிகிறது” என்று நிசாம் ஓர் ஆராய்ச்சியே நடத்தினார்.
“அல்லல்லா! ஆண்டவன் அருள் பாலிப்பானாக!” என்றான் டுன்டுஷ்.
“ஆண்டவன் அருள் பாலித்தால், மாலிக் ஷா அவர்களின் ஆட்சியில் நாம் ஒரு புதிய பஞ்சாங்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.”
இது ஓர் அருமையான ஏற்பாடாக நிசாம் அவர்களின் மூளையில் தோன்றியது. மாலிக் ஷாவின் ஆட்சியில் அவருக்கே சொந்தமான ஒரு பஞ்சாங்க முறை அமுலுக்கு வந்தால், அவருக்குப் பெருமையாக இருக்கும். பெருமையின் பூரிப்பால் அவர் முதன் முதலாக அரசாங்க வானநூல் கலைஞராக அமர்த்திக் கொள்வார்.
இது சரியான ஏற்பாடு என்று தோன்றியது. “அவன் கேட்டபடியே காலம் அளக்கும் கருவியை அமைத்துக் கொடுப்போம். ஆனால், அவன் ஏன் அப்படி அலைந்து சுற்றிக் கொண்டிருந்தான்!” என்று நிசாம் கேட்டார்.
“அது ஆண்டவனுக்குத்தான் தெரியும் ! தங்கள் அடியவனுக்கு எதுவும் தெரியாது!” என்று உள்ளத்தை மறைக்கும் ஒரு புன்சிரிப்புடன் டுன்டுஷ் கூறினான்.
“அவன் மறுபடியும் சுற்றியலையாமல் பார்த்துக் கொள்வதை உன் வேலையாக வைத்துக் கொள். அவன் இங்கேயிருக்க வேண்டியது இன்றியமையாதது” என்று ஆணையிட்டு, அவனுக்கு விடைகொடுத்தார் நிசாம்.
தன் வீட்டுக்குச் சென்ற டுன்டுஷ் அங்கிருந்து ஓரிடத்திற்குச் சென்றான். அந்த இடம் ஒரு பழைய கிட்டங்கி. அது கடைத் தெருவை நோக்கிக் கொண்டிருந்தது. தான் மறைந்து கொள்வதற்காகவும், தன் வசம் கிடைத்த பிறர் பார்க்கக் கூடாத பொருள்களை மறைத்து வைப்பதற்காகவும் அந்தக் கிட்டங்கியை அவன் பயன்படுத்தி வந்தான். எகிப்திய ஊமையொருவன் அதைக் காவல் புரிவதற்காக வைக்கப்பட்டிருந்தான்.
அவன், தானே அந்தக் கிட்டங்கிக்கு உரிமையாளன்போல நடித்து வந்தான். அங்கே சென்ற டுன்டுஷ், ஒரு மூலையிலேயிருந்த பெட்டகத்தின் மூன்று பூட்டுக்களையும் திறந்து உள்ளேயிருந்து ஒரு பொருளையெடுத்தான். நீலக்கல் பதித்த ஒரு சோடி வெள்ளி வளையலே அது. அந்த வளையலை ஒரு கூனன் கொண்டு வந்து கொடுத்தாள். அவன், இறந்துபோன சுல்தானின் அன்புக்குரிய விகடனாக இருந்தவன், மேற்குத் திசையில் அலப்போ நகரை நோக்கிச் செல்லும் சாலை வழியில், கொண்டு செல்லப்பட்ட யாஸ்மி என்ற பெண்,
அன்பின் அடையாளமாக உமார் என்பவனுக்கு அனுப்பிய பொருளே இந்த வளையல் என்று அந்தக் கூனன் கூறினான். இந்த வளையல் மட்டும் உமார் கையில் கிடைத்தால், அலெப்போ நகர் நோக்கிப் பறந்து விடுவான். பிறகு நிசாம் அவர்கள் பெருங் கோப்த்திற்குத் தான் ஆளாக நேரிடும். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த டுன்டுஷ், அந்த வளையல்களைத் தன் மடிக்குள்ளே எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு ஓர் ஊற்றுக்கிணற்றை நோக்கி வந்தான்.
யாரும் கவனியாத சமயம் பார்த்து, அந்த வளையல்களை கிணற்றுக்குள்ளே போட்டு விட்டுப் பட்படவென்று நடந்து அந்த இடத்தை விட்டுச் சென்றான். ஆராய்ச்சிக் கூடத்தில் வேலைகள் சுறுசுறுப்பாய் நடப்பதைக் கண்டு நிசாம் அல்முல்க் மிக மகிழ்ச்சியடைந்தார்.
கோடைக்காலம் முடியும் தருவாயில் நீர்க்கடிகாரமும் பளிங்குக்கல் தூணும் அமைக்கப் பெற்றுவிட்டன. நீர்க் கடிகாரத்தில், மணிக்கு அறுபது முறை சுற்றுகிற ஒரு சிறு சக்கரம் அமைக்கப் பெற்றிருந்தது. மணிக்கு ஒரு முறை அசைகின்ற ஒரு பெரிய சக்கரமும் அதில் பொருத்தப் பெற்றிருந்தது. ஈட்டி முனை போன்ற ஒரு வெள்ளி முனை அளவு படுத்தப்பட்ட ஒரு கோட்டின் மீது ஒவ்வொரு மத்தியானத்திற்கு ஒரு முறை நகர்ந்து சென்றது.
ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப அந்தக் கோட்டின் மீது நகர்ந்து கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்த டுன்டுஷ் எவ்வளவு சரியாக எவ்வளவு போற்றத்தக்கதாக இருக்கிறது என்று வியப்படைந்தான். ஆனால், கணிதப் பேராசிரியன் மைமன், ஓர் ஆண்டின் முடிவில்தான் உண்மை நேரத்திற்கும், இதற்கும் உள்ள வேற்றுமை தெளிவுபடும் என்று விளக்கினான்.
கோட்டையில் நாளைக் கணக்கிடுவதற்கு, வேல்பிடித்தவீரன் ஒருவன் இருப்பதுபோல், இங்கேயும் ஒருவன் இல்லாததுதான் பெருங்குறையென்று டுன்டுஷ் கருதினான். அவனுடைய அறியாமைக்காகப் பேராசிரியன் மைமன் இரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தான்.
எல்லாம் ஆயத்தமான பிறகு, ஆராய்ச்சியாளர் நால்வர் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். தங்கள் வேலையைத் தொடங்குவதற்கு எல்லோரும் ஆயத்தமாகினர். ஏழெட்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகே இதன் முடிவு தெரியும் என்று மைமன் கருதினான். நான்கைந்து ஆண்டுகள் போதுமென்று உமார் கூறினான்.
“அடேயப்பா! நாலைந்து வாரத்தில் ஒரு பெரிய அரண்மனையே கட்டிவிடலாமே! இந்த வேலைக்கு வருடக் கணக்கில் ஆகுமா? என்ன பயன்?” என்றான் டுன்டுஷ்.
“உன்னுடைய அரண்மனை காலப்போக்கில் மண்ணோடு மண்ணாகப் போய்விடும். என்னுடைய பஞ்சாங்கம் என்றென்றும் பயன்படும். போபோ!” என்று உறுமினான் உமார்.
சூரியனுக்கு நேராய் பூமி இருக்கக்கூடிய முன்பனிக்காலத்தில் ஒரு நாள் தங்கள் வேலையைத் தொடங்க ஆறு வான நூல் ஆராய்ச்சியாளர்கள் ஆயத்தமாக இருப்பதாக ஒரு வாரம் முன்பாகவே உமார், நிசாம் அவர்களுக்குத் தெரிவித்தான்.
பேரரசர் சுல்தான் அவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிடுவதற்கு வேண்டிய வேலைகளையும், அவர் எதிரில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் நாடகம் போல் நடத்திக் காட்ட நிசாம் ஏற்பாடு செய்தார்.
18. கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்
சுல்தான் மாலிக்ஷா அவர்கள் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிட வருவதாக இருந்த அன்று, அவர் காலையில் முதலில் மான்வேட்டை முடிந்தபிறகு மாலையில் அங்கே நேரே வருவதாக இருந்தது. மத்தியானத்துக்குப் பிறகு அந்த ஆராய்ச்சிக்கூடம் பார்ப்பதற்கு ஒரு கேளிக்கைக்கூடாரம் போல் காட்சியளித்தது. புதிதாக அமைக்கப்பட்டிருந்த தோட்டம் முழுவதும் தரையில் ரத்னக் கம்பளங்கள் விரிக்கப் பட்டிருந்தன. மரத்தடிகளிலே, பலவிதமான கோப்பைகளிலே விதவிதமான கறிவகைகளும், சர்பத்தும், பிற உணவுப் பொருள்களும் வைத்துக்கொண்டு வேலையாட்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அடையாள முறைக் கணிதப் பேராசிரியரும், உமாரின் கணித ஆசிரியருமான அலி அவர்களும், பல்வேறு கலைக் கழகங்களின் பேராசிரியர்களும் தங்கள் அரசாங்க உடைகளையணிந்துகொண்டு அங்கு வந்து கூடினார்கள். பள்ளி வாசலிலிருந்து வந்த மதத் தலைவர்களான முல்லாக்களும் வந்தார்கள். அவர்கள் அனைவரும் எதுவும் பேசாமலும், எவருடன் கலவாமலும் தனியே ஒரு புறத்தில் இருந்தார்கள்.
முல்லாக்களையெல்லாம் அவரவர்களுக்குரிய மரியாதையுடன் நிசாம் அவர்களே வரவேற்று, சுல்தான் அவர்களின் ஆஸ்தான மேடையின் அருகிலே உள்ள ஆசனங்களில் அமர வைத்தார். நாட்டிலே முழு ஆற்றலும் வாய்ந்த சமயப் பேரவையின் உறுப்பினர்களான அவர்களுடைய கருணை நிறைந்த ஆதரவு இருந்தால்தானே விஞ்ஞானம் பிழைக்க முடியும். அதற்காகவேதான் நிசாம் அவர்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்தினார்.
அவர்களோடு பேசும்போது, நேர் எதிராக நின்று பேசுவது கூடாதென்றும், அது மரியாதைக் குறைவு ஆகுமென்றும், அவர்களின் பின் பக்கமாக நின்றுபேசவேண்டுமென்றும் உமாருக்கும் எச்ரிக்கை செய்தார். ஆனால், அவர்கள் அங்கே கருணை உள்ளத்தோடு வரவில்லை.
உமார் எதுவும் பேசக் கூடியவனாக இல்லை. யாரோ நடத்துகிற விருந்தில் கலந்து கொள்ள வந்த ஒருவனாகவே அவன் அங்கு நடமாடினான். வெளியிலே குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டதும் எல்லோருடைய கண்களும் தலைவாசல் புறம் திரும்பின. சுல்தான் வருவதை அறிந்ததும் உமாருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.
அவர் குதிரையிலிருந்து இறங்கியதும் வேலைக்காரர்கள் அவசர அவசரமாக அரசர் எதிரில் ஒரு நடைவிரிப்பை விரித்தார்கள். தன்னுடைய வேட்டையாடும ஈட்டியை அருகில் இருந்த அடிமை ஒருவனிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கிய சுல்தான் மாலிக்ஷா உள்ளே வந்தார்.
அவர் உடல் முழுவதும் தூசி படிந்திருந்தது. களைப்பாக இருந்தாலும் அவர் களிப்பாக இருந்தார். இருப்பினும், இந்த நிசாமையும் வயது முதிர்ந்த முல்லாக்களையும் பார்க்க நேர்ந்ததில் அவர் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார் என்றே உமார் நினைத்தான். ஒரு மிருகம் நடப்பதுபோல் நடந்து வந்த மாலிக்ஷா தாம் பேசும்போது கைகளை அசைக்கவும் இல்லை. குரலை உயர்த்தவும் இல்லை.
அவருக்கு வணக்கம் கூறுவதற்காக நிசாம் உமாரை அழைத்து வந்தபோது, சுல்தான் அவனை உற்றுநோக்கிவிட்டு, ‘ஆம்! இவனேதான்!” என்று மெல்லிய குரலில் கூறினார்.
“இந்த உலகத்தையாளும் இறைவரே! தங்களின் வேலைக்காரன் நான்” என்று கூறி உமார் அடி வணங்கினான்.
“கொராசன் பாதையிலே, நான் தங்கியிருந்த இடத்திற்கு நீ வந்தாய்! என்னைப் பற்றிய ஒரு குறி கூறினாய். நீ கூறியபடி அது நிறைவேறி விட்டது. அதை நான் மறக்க வில்லை; என்றும் மறக்கவும் முடியாது. இப்பொழுது நீ என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்!” என்று அவனை சுல்தான் மாலிக்ஷா கேட்டார்.
“அரசே! தங்கள் பணியாளாக என்னை அமர்த்திக் கொள்ளும்படி வேண்டுகிறேன்!” என்றான் உமார். "அப்படியே ஆகட்டும்! சரி, இப்பொழுது நீ இங்கே என்ன செய்து வைத்திருக்கிறாய்? காட்டு!” என்றார் சுல்தான்.
உயர்ந்த பளிங்குத் தூண் கருவியையும், அங்கிருந்த வேறு விஞ்ஞானக் கருவிகளையும் அக்கறையோடு கவனித்தார். வயது முதிர்ந்த கணிதப் பேராசிரியனாகிய மைமன், அரசன் முன்னிலையில் நிற்கிறோமே என்ற பயத்தில் கை நடுங்கி, மெய்நடுங்கி, வாய் குளறி விளக்கம் சொன்னதைக் கேட்கப் பொறுக்காமல், சுல்தான் உமார் பக்கம் திரும்பி ‘நீயே விளக்கிக் கூறு’ என்றார்.
அந்த இளம் வானநூல் ஆசிரியரான உமாரின் தெளிவான சொற்களை அவர் பெரிதும் விரும்பினார். உமாருக்கு அப்பொழுது வயது இருபத்திரண்டு. சுல்தான் மாலிக்ஷாவுக்கோ இருபதுதான். அவர் உமாரின் ஆற்றலைக் கண்டு வியந்தார்.
விஞ்ஞானக் கருவிகளை சுல்தான் கருத்தோடு கவனிப்பதைக் கண்டு பொறுக்காத பெரிய முல்லா, தம்முடைய தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் மதவாதத்தை நிலைநிறுத்துவதற்காகவும் முன்வந்தார்.
“கவனியுங்கள், நீங்கள் ஆண்டவனின் தொண்டர்களாய் இருந்தால் அவன் ஒருவனுக்கே அடிபணியுங்கள்! அவரால் படைக்கப்பட்ட கதிரவனையும் நிலாவையும் போற்றி வணங்காதீர்கள் என்று புனிதத் திருமறை புகல்கிறது” என்று கூவினார் பெரியமுல்லா.
திருக்குரானில் உள்ள இந்த வாக்கியங்களைக் கேட்டதும் வழக்கம்போல மற்ற முல்லாக்களும், தங்கள் ஒப்புதலை ஒத்த குரலிலே தெரிவித்தார்கள்.
“இரவும் பகலும் கதிரும் நிலவும் எல்லாம் ஆண்டவனின் படைப்புகளே! அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் தெளிவாக்கப்படாவிட்டால், அவற்றை (அவற்றின் பயனை) நாம் பெறமுடியுமா? இப்படியும் கூடத்தான் திருமுறை கூறுகிறது” என்று உமார் கூறினான்.
மாலிக்ஷா எதுவும் கூறவில்லை. அவரும் மத நம்பிக்கையுள்ள நிசாம் போலவே, மதப்பெரியோர்க்கு மிகவும் மரியாதை செலுத்துபவர். இந்த விஷயத்தில் அவர் எதுவும் பேசுகின்றாற்போல இல்லை. பெரியமுல்லா அவர்களிடம் சென்று மரியாதை செலுத்தி விடைபெற்றுக் கொண்டு குதிரையேறப் போனார்.
குதிரையில் ஏறி உட்கார்ந்ததும் உமாரை அருகில் அழைத்து, “அரசாங்க வானநூல் கலைஞராக உன்னையேற்றுக் கொள்ளும்படி அமைச்சர் நிசாம் வேண்டிக் கொண்டார். அவ்வாறே ஆணையிட்டிருக்கிறேன். நாளைக் கூடும் சபையில், உனக்கு அரசாங்க மரியாதையுடன் பதவி வழங்கப்படும். அடிக்கடி சபைக்குவா. என் அருகில் அடிக்கடி வந்து இரு. உண்மையான குறிகளை அவ்வப்பொழுது உணர்ந்து கொள்வதற்கு நீ என் அருகில் இருப்பது இன்றியமையாதது” என்று கூறிவிட்டு, கடிவாளத்தை ஒரு சுண்டு சுண்டிக் குதிரையைத் தட்டிவிட்டார்.
அவருடன் கூடவந்த, அலுவலர்களும், வேலையாட்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். குதிரையின் காலடி கிளப்பிய தூசியிலே அவர்கள் மறைந்து சென்றார்கள். ஆனால் நிசாம்தான் மனம் வருந்தினார்!
மறுநாள் நிசாம் உமாரைத் தனியாகச் சந்தித்தபோது, “நேற்று நீ மோசமாக நடந்து கொண்டாய். உலேமா முல்லாக்களுடன் இவ்வாறு எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாது. உன்னுடைய பாதையில் அவர்கள் அடிக்கடி தடையெழுப்புவதற்கு வாய்ப்பளித்து விட்டாயே!” என்று வருந்தினார்.
“தந்தையே! என் வேலைக்கும் உலேமாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என்று உமார் கேட்டான்.
“அவர்களுடைய ஆதரவில்லாத எந்தக் காரியமும் வெற்றிபெற முடியாது. நீ தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இப்பொழுது, அரச சபையில் நீ பதவியேற்கப் போகிறாய். வருடத்திற்குப் பனிரெண்டாயிரம் மிஸ்கல் நாணயங்கள்-வரியைக் கழிக்காமல் உனக்குச் சம்பளமாகக் கிடைக்கும். மாலிக்ஷா பிரியப்படுகிற போதெல்லாம் உனக்குப் பொன்னாக வாரிக் கொட்டுவார். அந்த வரும்படி வேறு கிடைக்கும்” என்று நிசாம் சொல்லிக்கொண்டு வரும்போதே உமார் அதிசயித்தான். இத்தனை பெரிய தொகையை அவன் எண்ணிக் கூடப் பார்த்ததேயில்லை.
“அவருடைய ஆதரவு உனக்கு இருக்கும்வரையிலே, வெகுமதிகளும் பரிசுகளும் விரும்பியபோதெல்லாம் கொடுப்பார். ஆனால் அவர் ஒருவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையுமானால், கொல்லும் கத்தி முனையைக் காட்டிலும் கொடுரமாக மாறிவிடுவார். அரசர்களின் போக்கே இதுதான். அன்பிருந்தால் ஒரேயடியாகத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். வெறுப்பிருந்தால் உயிருக்கு உலை வைக்கும் ஆயுதமாக அவர்களே மாறிவிடுவார்கள்.
அவருடைய கருணை உன்மீது என்றும் இருக்குமென்றே எண்ணுகிறேன். அப்படியே அல்லா அருள் புரிவாராக! ஆயினும் அவருடைய அரண்மனை முழுவதும் அவருடைய உளவாளிகள் தேனடையை மொய்க்கும் தேனீக்களைப் போல - எங்கும் சுற்றிக் கொண்டே யிருப்பார்கள். அவர்களுடைய கண்களுக்கு எந்த விஷயமும் தப்பாது, உன்மீது வெறுப்பூட்டுவதற்குப் பலர் முயல்வார்கள்.
அவருடைய ஆதரவு இருக்கும் வரை உன் வாழ்வு இன்ப வாழ்வுதான். அது நீங்கியதோ, உன்னுடைய வாழ்வு பெருமை, செல்வம், உயிர் எல்லாம் அழிந்து போக வேண்டியதுதாம். என்னுடைய ஆதரவு உனக்கு எப்போதும் உண்டு. ஆண்டவன் அருளால் என்னை நேரடியாக எதிர்ப்பவர்கள் யாருமே இப்போது இல்லை. மேலும் என்னுடைய அரசியல் செல்வாக்கிற்குக் காரணம் என்னுடைய பெரும் உழைப்புத்தான். இந்த சாம்ராஜ்யத்தை அமைப்பதில் நான் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.”
இவ்வாறு பலவிதமான உபதேசங்களைச் செய்து வந்த நிசாம், தமக்கு அந்த சாம்ராஜ்யத்தை படைப்பதில் நெடுநாளாக இருந்து வந்த பெரும் பங்கையும், தன் உழைப்பையும், அரசுக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
அவருடைய விளக்கத்திலே மூன்று தலைமுறைகள் சரித்திரமே அடங்கி யிருந்தது. பழைய சுல்தான் ஆல்ப் அர்சலான் புயல் போலப் புகுந்து பல நாடுகளை வென்று பாக்தாதிலே வெற்றிக்கொடி நாட்டியதையும், அலெப்போ நகரையும் மெக்காவையும், மெதினாவையும் கைப்பற்றியதையும் சாமர்கண்டிலிருந்து, கான்ஸ்டாண்டி நோபில் வரை பரந்து கிடக்கும் அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தையும் அதன் ஏகபோகச் சக்ரவர்த்தியாக இப்போது விளங்கும் இளஞ் சிங்கம் சுல்தான் மாலிக்ஷாவின் நிலைமையையும் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினான்.
உமார், இப்படிப்பட்ட ஓர் அரசனுக்குச் சேவை செய்வதில் பெருமை இருப்பதாகக் கருதினான். “அடிக்கடி தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் எகிப்து தேசத்தின் காலிப்பிடமிருந்து மூன்றாவது புண்ணியஸ்தலமாகிய ஜெருசலத்தைக் கைப்பற்றிக்கொள்ள சுல்தான் மாலிக்ஷா திட்டமிட்டிருக்கின்றார். வருகின்ற வாடைக் காலத்தில் அலெப்போ வழியாக நமது படைகள் ஜெருசலத்தின் மீது படையெடுக்கப் போகின்றன.” என்று நிசாம் கூறினார்.
நினைத்தவுடன் திட்டமிட்டு இப்படிப்பட்ட அழகிய நகரங்களைத் தம் சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடிய இந்தச் செல்வ நிலையை, அந்த நிலையின் வியத்தகு ஆற்றலை எண்ணி வியந்தான் உமார். நிசாம் அவர்கள் உமாரைத் தினந் தினமும் அழைத்து அவனுக்கு அரசாங்க விஷயங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சட்டங்களை அமுல் நடத்துவதும், வரி வசூலிப்பதும், படையமைப்பதும், ஒற்று ஆடலும் பற்றிய எல்லா விவரங்களையும் எடுத்தெடுத்துக் கூறினார்.
சுல்தான் மாலிக்ஷாவுக்கிருந்த ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றியும் நிசாம் தெளிவாகக் கூறினார். “வேட்டையாடுவதில் சுல்தானுக்கு விருப்பம் அதிகம். பெண்களை இதயமில்லாத அடிமைகளாக எண்ணி நடத்துவது அவருடைய வழக்கம். தெய்வீகத்திலும், அருள் வாக்குகளிலும் மூட நம்பிக்கை அதிகம் கொண்டவர். அவருடைய பாட்டன் அநாகரீகமான குடியைச் சேர்ந்தவன்.
சுல்தான் மாலிக்ஷா அவர்களின் பக்கத்தில் எவனாவது சோதிடர்களைக் கொண்டுவந்து எதிரிகள் வைத்து விட்டால் போதும், அந்தத் தெய்வீக நம்பிக்கையைக் கொண்டே அவரை அழித்து விட முடியும். அவ்வளவு தூரம் தெய்வீக விஷயங்களிலே மூட நம்பிக்கை கொண்டவர். இதை நினைவிலே வைத்துக் கொள்! உன்னுடைய செயல் மிகவும் கஷ்டமானது. ஜாதகங்களிலோ சோதிடத்திலோ உனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கையில்லையென்றே தோன்றுகிறது.
என்னைப் பொறுத்த வரையில் நட்சத்திரங்களின் ஒழுங்கான இயக்கமே, கடவுளின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு என்று நம்புகிறேன். சுல்தான் மாலிக்ஷா-ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றியோ, ஏதாவது காரியம் மேற்கொள்ளுவதற்குரிய நல்ல நேரத்தைப்பற்றியோ, அந்தச் செயலால் ஏற்படும் வெற்றி தோல்வியைப் பற்றியோ உன்னுடைய யோசனையைக் கேட்டால், அவருடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டு உண்மையான கணிதமுறையால் பலாபலன்களை வகுத்துச் சொல்லு.
வேறொருவன், அவரைத் தன் வசப்படுத்தும்படி விட்டு விடாதே, உன்னையும் உன் செயலையும் பொறாமைக் கண்களுடன் கவனித்து வருபவர் ஏராளம் என்பதை எப்பொழுதும் மறந்து விடாதே.” இவ்வாறு நிசாம் அவனுக்குச் சொல்லி அவன் நிலையையும், வேலையையும் அதன் பொறுப்பையும் உணர்த்தினார்.
உமார் அவர் கூறியவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டான். மாலிக்ஷா ஏதாவது தெய்வீகக் குறிகளின் விளக்கத்தைக் கேட்டால், அதற்கு விடையிறுப்பது மிக எளியதே ! பழங்காலத்துச் சோதிடக் கலைஞர்கள் வகுத்து வைத்த விதிமுறைகளின்படி கணக்கிட்டு, அவற்றிற்கு குறிப்பிடப் பற்றுள்ள பலன்களை அப்படியப்படியே ஒப்பிக்க வேண்டியதுதான்.
அப்படிப்பட்ட குறிகளில் அர்த்தமில்லை என்றால் அதனால் என்ன வந்து விட்டது. நம்புகிறவர் நம்பிக் கொண்டிருக்கட்டும். நமக்கென்ன நட்டம்? என்று நினைத்தான்.
“இன்னொன்று கூறுகிறேன். அரசாங்க விஷயமாக ஏதாவது ஆருடம் கேட்டால், நீ எனக்கு ஆளனுப்பு! விவரத்தைத் தெரிந்துகொண்டு அதற்குக் கூறவேண்டிய சரியான பதிலை நான் உனக்குத் தெரிவிக்கிறேன். ஏனெனில், அரசியல் போக்குப் பற்றி ஆருடம் கூறுவது முடியாத காரியம். அது, அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து சொல்ல வேண்டியது. அது என் ஒருவனால்தான் முடியும். ஏனெனில், அரசியல் முறையை வகுப்பதும் நடத்துவதும் என் கையிலேயிருக்கிறது. ஆகவே அந்த விஷயங்களில் என்னைக் கலந்துகொண்டு நீ சோதிடம் கூறலாம்” என்றார் நிசாம்.
உமார் அவரை வியப்புடன் நோக்கினான்.
“ஆண்டவன் அருளின் உதவியால், இரண்டு கைகள் இந்தப் பேரரசை ஆளுகின்றன. முடிபுனைந்த பேரரசின் கையொன்று; தலைப்பாகையணிந்த இந்த அமைச்சனின் கையொன்று, போரும் வெற்றியும் தண்டனையும் வெகுமதியும் அரசரின் கையால் ஆக்கப்பெறுவன. ஒழுங்கும், வரிமுறையும், அரசியல் கொள்கையும் அமைச்சரின் கையால் படைக்கப்படுவன. நான் சுல்தான் மாலிக்ஷா அவர்களுக்கு உண்மையாகவே உழைக்கிறேன்.
என் உழைப்பின் பயனாகப் புதியதொரு சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைக்கப் பாடுபடுகிறேன். ஆகவேதான், அரசியல் கொள்கை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்போது மட்டும் நீ என்னைக் கலந்து கொள்ள வேண்டும் என்கிறேன், புரிகிறதா?” என்று கேட்டார் நிசாம்.
“அப்படியே!” என்று உமார் ஒப்புக் கொண்டான். கண்டிப்பு நிறைந்த இந்த மனிதருடைய முழு நம்பிக்கைக்குரியவனாகத் தான் மாறி விட்டதையுணர்ந்தான். தன்னைக் காட்டிலும், சுல்தான் மாலிக்ஷாவைக் காட்டிலும் இன்னும் சொல்லப் போனால் மதத் தலைவர்களான உலேமா சபையினரில் யாரையும் காட்டிலும் அறிவாளியான இவருடைய நம்பிக்கைக்குரியவனாகத் தான் ஆகியதை எண்ணி மகிழ்ந்தான். நிசாமும், தன்னுடைய நெடுநாளைய திட்டம், நிறைவேறியதையெண்ணி மகிழ்ந்தார்.
உமாரின் ஒப்புதல் கிடைத்த மகிழ்ச்சியில், நிசாம் டுன்டுஷ் பக்கம் திரும்பி, “இவனுடைய செல்வாக்கைக் கொண்டு நாம் மாலிக்ஷாவை வசப்படுத்திக் கொள்ளலாம்” என்றான். ஆனால், உமார் அடுத்துக் கூறிய விஷயம் அவருடைய மனக்கோட்டையைத் தகர்த்தது.
“இப்பொழுது ஒரு வருட காலத்திற்கு நான் இங்கே யிருக்கத் தேவையில்லை. ஏனெனில் தினந்தோறும், கால அளவைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க வேண்டிய வேலைதான். அதைப் பேராசிரியர் மைமனும், மற்றவர்களும் கவனித்துக் கொள்ளுவார்கள். இந்த இடைக் காலத்தில், படையெடுத்துச் செல்லும் சுல்தான் மாலிக்ஷாவுடன், நான் மேற்குத் திசையிலே ஒரு பயணம் போய் வரப்போகிறேன். சுல்தானும், தன்னுடன் வரவேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.” என்று வான சாஸ்திரியான உமார் பதில் உரைத்தான்.
உண்மையில் உமார்தான் சுல்தான் மாலிக்ஷாவுக்கு மேற்றிசைப் படையெடுப்புப் பற்றிய எண்ணத்தை உண்டாக்கினான். ஏனெனில், மேற்றிசையில் பயணம் செல்லும் சாக்கில் தன் அன்புக்குரியவளான யாஸ்மியைத் தேடிப் பிடிக்கலாமல்லவா? இப்பொழுது அவள் எங்கிருந்தாலும், தேடிப்பிடித்து வரக்கூடிய நிலை அவனிடம் இருந்தது. பொருளும், ஆட்களும், அதிகாரமும், பலமிகுந்த சக்கரவர்த்தி ஒருவரின் பக்க பலமும் எல்லாம் அவனிடம் இருந்தன.
டுன்டுஷ், உமார் மேற்றிசை செல்வதன் நோக்கத்தை உடனே புரிந்து கொண்டான். யாஸ்மி என்ற அந்தச் சிறுமிக்காகத்தான் என்பது ஒற்றர் தலைவனாகிய அவனுக்கு எட்டாத விஷயமல்ல.
“இதே உமார், தப்பியோடியதற்காக என்னைக் கண்டித்தாயே, நாய் போல் அலையவிட்டாயே, கிழவா! இப்பொழுது, நீயே அவனை நழுவ விடப் போகிறாய்!” என்று தன் மனத்திற்குள்ளேயே நினைத்துக் கொண்ட அவன், வெளியில் கேட்கும்படி, பணிவுடன் “எழுதியபடிதானே நடக்கும்” என்று ஒரு மத நம்பிக்கையுள்ளவனுடைய குரலில் கூறினான்.
19. அவமதிக்க வந்தவன் சவமாகிப் போனான்!
அலையடித்து நுரையடித்துப் பொங்கிச் சீறிக்கொண்டிருந்தது அந்த ஏபிரேட்ஸ் ஆறு. அந்த ஆற்றைக் கடப்பதற்காக அதன் கரையிலேயிருந்த பாழடைந்த பாபிலோன் நகரத்தின் ஒரு பகுதியிலே சுல்தானின் படைகள் காத்துக் கொண்டிருந்தன. சுல்தானைத் தொடர்ந்து உமாரும் பிரபுக்களும் பேரீச்சம் பழக்காடுகளைக் கடந்து அந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்களுக்குப் பின்னால் கட்டிடங்கள் இடிந்து குவிந்து கிடந்த கற்களும், மணற் குன்றுகளும் காட்சியளித்தன. அழிந்துபோன அந்தக் குட்டிச் சுவர்களின் ஊடே சுற்றிக் கொண்டிருந்தான் உமார். வேட்டையாடாத நேரத்திலே, நடனங்களும் கண்கட்டு வித்தைகளும் காண்பதிலே சுல்தானுக்கு விருப்பம் அதிகம்.
பாழடைந்து போன ஒரு ராஜசபா மண்டபத்திலே சுற்றிலும் வண்ணத் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டன. பளிங்குப் படிகக் கற்களின் மேலே விரிப்புகள் விரிக்கப் பட்டன. அரசனுக்கும் அந்தக் கேளிக்கைக்காரர்களுக்கும், அரங்கம் அமைக்கப்பட்டது. இதிலே தினமும் நடனங்களும், வித்தைகளும் நடைபெற்றன. ஒரு நாள் மாலை உமாரும் அங்கு அழைக்கப்பட்டான். “நட்சத்திரங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் வானசாஸ்திரியாரே, என்னுடைய இந்த நாய்களின் ஆட்டத்தையும் கொஞ்சம் பாரும்” என்று சுல்தான் அவனை அமர்ந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
இரத்தினக் கம்பளத்திலே, உமாருக்காக ஓரிடம் ஒதுக்கிக் கொடுக்கப் பெற்றது. அவன் எதிரே, நடனக்காரர்கள் சுழன்று சுழன்று வந்தார்கள், வேடிக்கைக் காரர்களின் தலைவன் தானே ஓர் இசை கருவி போலக் காட்சியளித்தான். அவனுடைய இடுப்பிலே பிணைத்துக் கட்டப் பட்டிருந்த ஒரு முரசத்தில் அவனுடைய விரல்கள் ஒலியெழுப்பின. அதே சமயத்தில் அவனுடைய தோள்களில் கட்டப்பட்டிருந்த சிறு மணிகள் குலுங்கி இசைத்தன. அவன் சுழன்று ஆடும்போது அவனுடைய தலைமுடியவிழ்ந்து சுழன்றது.
ஆடிக் கொண்டிருந்த அந்தக் கேளிக்கைக் காரர்களின் தலைவன் சட்டென்று நின்று, உமாரின் எதிரிலே மண்டியிட்டுத் தன் கையை நீட்டி வெகுமதி கேட்டான். அவிழ்ந்து முன் தொங்கிய முடிக்கற்றையின் ஊடாக அவனுடைய விழிகள் உமாரைக் கூர்ந்து நோக்கின. உமாரும் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, தன் விரல் நுனியில் வைத்துக் கொண்டே, ஒரு நாணயத்தை வெகு திறமையாகச் சுண்டிச் சுண்டிச் சுழற்றி விட்டான்.
“கண்கட்டு வித்தையில் தேர்ந்த கலைஞரே! இது என்ன பிரமாதம்! வானத்துப் பனிக்கட்டிகளை (ஆலங்கட்டிகளை) கீழே வரவழைப்பேன். மணற்புயலையும் எழுப்பி வீசச் செய்வேன்! இன்னும் உங்கள் எண்ணத்தில் இருப்பதையும் எடுத்துரைப்பேன்!”
அவன் தன்னை ஆபத்தில் மாட்டிவிட முயலுகிறான் என்பதை யறியாத உமார் “அப்படியானால், நீ பெரிய வித்தைக்காரன்தான்!” என்றான்.
“வானநூற்கலைஞரே நான் ஒரு மோசமான அயோக்கியன் என்று தாங்கள் எண்ணுகிறீர்கள். இருப்பினும் எனக்குப் பயப்படுகிறீர்கள்!” என்றான். அவனுடைய கூரிய பார்வை உமாரின் மேலேயே பதிந்திருந்தது. சுல்தானுக்கு இது ஒரு வேடிக்கையாக இருந்தது. ஆவலுடன் அவனைக் கவனித்தார். “வானநூற்கலைஞரே! என் மனத்தில் இருப்பதைத் தாங்கள் கூறுங்கள்! தங்களால் முடியவில்லை என்றால் பரவாயில்லை.
முடியாது என்று சொல்லி விட்டால் போதும்!” என்றான். அவனுடைய பரந்த தலையை யாட்டிக் கொண்டே, “எங்கே, நான் எந்த வாசல் வழியாகப் போகப் போகிறேன். சொல்லுங்கள் பார்க்கலாம்! கிழக்கா, வடக்கா, மேற்கா அல்லது தெற்கா? எது வழியே நான் வெளியேறப் போகிறேன். தீர்க்கதரிசியாரே! சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றான் அவன். அது உமாருக்கு ஒரு சவால் போலவே இருந்தது!
உமாருக்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது. ஒருவன் வெளியே செல்வதையும் விண்மீனையும் சம்மந்தப்படுத்துகின்ற பேதைமையை எண்ண எண்ணச் சிரிப்புதான் வந்தது. ஆனால் அவன் சிரிக்கவில்லை. காரணம் மாலிக்ஷா அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரோ, இந்த மாதிரி விஷயங்களிலே நம்பிக்கையுள்ளவர். கத்திச் சண்டைக்குத் தயாராக இருக்கும் வீரர்களைப் பார்க்கும் அதே ஆர்வத்தோடு, அவர் உமாரையும், நாடகத் தலைவனையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
“இது மிகச் சாதாரண விஷயம்..” என்று இழுத்தான் உமார். “மக்கள் பேசிக் கொள்கிறார்கள். தாங்கள் பெருந் திறமை வாய்ந்தவர் என்று. அப்படிப்பட்டவர் ஏன் பின் வாங்குகிறீர்கள். இப்பொழுது நான் எந்த வாசல், வழியாகப் போவேன் என்று சொல்லுங்கள், பார்ப்போம்!” என்றான் அவன்.
மற்ற ஆட்டக் காரர்களும் அவனைச் சுற்றிலும் வந்து நின்று கொண்டார்கள். சுல்தானுடைய ஆட்கள், நெருங்கி வந்து நின்று கொண்டார்கள், நன்றாகக் கேட்பதற்காக. மாலிக்ஷா உமாரின் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். நட்சத்திரங்களை ஆராய்வதற்கும் இந்த மாதிரி சம்பந்தமும் இல்லை என்று சொல்ல எண்ணினான் உமார். ஆனால், வாய் திறக்க வரவில்லை. உதடுகள் அசையவில்லை.
சுல்தானோ, அந்த மனிதன் எண்ணுவதைத் தன்னால் சொல்ல முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கிறார். எந்தக் காரணம் காட்டி எவ்வளவு விளக்கினாலும், மாலிக்ஷாவின் மூட நம்பிக்கையைப் போக்குவது முடியாத காரியம் என்பதை உணர்ந்து கொண்டான் உமார். இந்த ஆட்டக்காரன் தன்னைக் கவிழ்த்து விட வேலை செய்கிறானென்பதை, நெடுநேரத்திற்குப் பிறகு அவன் புரிந்து கொண்டான். இந்தச் சூழ்ச்சியைத் தகர்க்கத் தன்னுடைய புத்திசாலித் தனத்தைப் பயன்படுத்தியே வெற்றி காண முடியும் என்று முடிவு கட்டினான்.
“பேனாவும் தாளும் கொண்டு வாருங்கள்” என்று உமார் கட்டளையிட்டான்.
அரசரின் செயலாளர் ஒருவர், அவன் முன் வந்து மண்டியிட்டு ஒரு சிறு காகிதச் சுருளும், சிறகு பேனாவும் கொடுத்துவிட்டு போனார். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால்தான் பாராட முடியும் என்ற எண்ணத்துடன் அவற்றை வாங்கிக் கொண்டான் உமார். அரசரின் வானசாஸ்திரியின் கடமை இதுதான் போலும் என்று எண்ணிக்கொண்டே, யோசித்தான்.
தான்சொல்லுவது தவறாகிவிட்டால் மாலிக்ஷா மதிக்கவும் மாட்டார், இந்த நிகழ்ச்சியை மறக்கவும் மாட்டார். சொல்லுவது மட்டும் சரியாக இருந்துவிட்டால்...? நான்கு கதவுகள், கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு... ஏதோ முடிவுக்கு வந்து, தாளில் என்னவோ சில சொற்களை எழுதி முடித்தான் உமார். தாளை மடித்தான், எழுந்தான், மாலிக்ஷாவின் அனுமதியுடன் முன் நடந்து, படிக்கட்டுகளின் பக்கத்திலேயிருந்த பளிங்குக் கல்லின் மேலேயிருந்த படிவத்தின் கீழே அதைச் செருகி வைத்துவிட்டு மீண்டும் தானிருந்த இடத்தில் வந்து உட்கார்ந்தான்.
ஆட்டக்காரனைப் பார்த்து, “இனிமேல் நீ போகலாம்!” என்றான்.
ஆட்டக்காரனின் கண்கள் ஒளி வீசின. தன் சூழ்ச்சி பலிக்கப் போகிறதென்ற எண்ணத்திலே அவன் உள்ளம் பூரித்தது. முன்னுக்குச் சில அடிகள் நடந்து வந்தவன், கீழ்த்திசை வாசலை நோக்கி ஓடினான். அவன் தோள் மணிகள் குலுங்கியொலித்தன. பிறகு, வெற்றிக் குரல் எழுப்பிக் கொண்டே, பக்கத்திலேயிருந்த சுவரை நோக்கிப் பாய்ந்தான்.
பூவேலையுடன் தொங்கிய திரைச் சீலையைத் தூக்கிச் சுற்றியபடி, சுவரின் நடுவில் இருந்த சிறு கதவைத் திறந்து கொண்டே “இந்த வழியாக நான் வெளியே பாகிறேன்!” என்று சொல்லி விட்டுப் போனான். அவன் சென்றதும், தூக்கிய திரைச்சீலை கீழே விழுந்தது. பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாலிக்ஷா, அந்தத் தாளை எடுத்து வரும்படி தன்னுடைய செயலாளரைப் பணித்தார்.
அவர் கொண்டு வந்து கொடுத்ததும், பிரித்துப் படித்தார். அவருடைய கண்கள் வியப்பால் விரிந்தன. எழுதியிருந்ததை இரைந்து படித்தார்.
“ஐந்தாவது கதவு வழியாக!”
“யா அல்லா தேவதைகளின் பேராசானே! உண்மையில் நீ ஒருவனின் எண்ணங்களைத் தெரிந்து கொள்கிறாய்!” என்று பாராட்டினார்.
உமார் ஒன்றும் சோதிடக் கணக்குப் பார்க்கவில்லை. அந்தப் பயலின் சூழ்ச்சியைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்த்தான். நான்கு திசைக் கதவுகளில் ஏதாவது ஒன்றின் வழியாக அவன் போவதாக இருந்து, தானும் ஒரு திசையைக் குறிப்பிட்டால், தன் அதிர்ஷ்டவசமாகத் தான் குறிப்பிடும் திசையும் அவன் வெளியேறும் திசையும் ஒன்றாகவே இருந்து விடவும் கூடும்.
ஆனால், தன்னை நிச்சயமாக மோசம் செய்ய நினைத்த அந்தப் பயல், அதிர்ஷ்டம் விளையாடுவதற்குரிய வாய்ப்பைக் கூட தனக்குக் கொடுக்க மாட்டான். உமார் நிச்சயமாகத் தோல்வியடைவதையே விரும்புவான்.
ஆகவே, உமார் நான்கில் எதையாவது சொல்லுவதை எதிர்பார்த்து, இங்குள்ள யாருக்கும் தெரியாத வேறொரு தனிக் கதவு ஒன்றின் வழியாக, அவன் போவதற்குத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று சூழ்ச்சியின் போக்கையாராய்ந்து முடிவு செய்தானே தவிர வேறில்லை.
மாலிக்ஷா அவனருகில் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு அவன் தோளிலே தட்டிக் கொடுத்தார். ‘நீ தான் இரண்டாவது அறிஞர் அலி சென்னா’ என்று மனமாரப் பாராட்டினார். தன் செயலாளரைக் கூப்பிட்டு, “உமாரின் வாய் நிறையத் தங்க நாணயங்களை அள்ளிக் கொட்டு. இந்தப் பொன்னான வாயை பொன்னாலேயே நிரப்பு” என்றார் உட்னே அந்தச் செயலாளன், சுல்தான் அருகில் இருந்த பெட்டியைத் திறந்து, உமாரின் வாயிலே பொன் நாணயங்களைத் திணிக்கத் தொடங்கிவிட்டான்.
“சரி, எழுந்து போய், அந்த ஆட்டக்கார நாயைத் தேடிப் பிடித்து, வயிறு நிறையும் வரை வாயிலே மணலைக் கொட்டி நிரப்பு. நம் அறிவுலக மேதையை அவமதித்த குற்றத்திற்கு அதுதான் தண்டணை” என்றான். அரசர் ஆணையை நிறைவேற்றச் சில ஏவலர் வெளியில் சென்றார்கள்.
உமார் தப்பினான். அவன் வாயிலே எல்லா நாணயத்தையும் திணிக்காமல், பெட்டியோடு கொடுத்தார்கள். விடைபெற்றுக் கொண்டு உமார் வெளியேறினான். அடிமையொருவன், பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவன் கூடப் போனான்.
வழியிலே ஒரே கூட்டமாக இருந்தது. சிப்பாய்கள் இரண்டு பேர் பிடியிலே சிக்கித் துடித்துக் கொண்டிருந்தான் ஆட்டக்காரன். மூன்றாவது ஆள் வாளால் அவன் வாயைக் கிழித்து, சாக்கு மணலை அதில் சாய்த்துக் கொண்டிருந்தான். பாவம்! அவன் அழுகுரலைக் கேட்டுக் கொண்டே உமார் அங்கிருந்து தன் கூடாரம் சென்றான்.
20. நள்ளிருளில் ஒருவன் நட்பு வேண்டுமென்றான்!
அன்று இரவு உமார் வெகுநேரம் வரை தன் புத்தகங்களிலேயே ஆழ்ந்திருந்தான். தன்னுடன், பணப்பெட்டி தூக்கிக்கொண்டு கூட வந்த அந்தக் கரிய அடிமை வழக்கம்போலத் தூங்கவில்லை என்பதைக் கவனித்தான். அவன் முணுமுணுத்துக்கொண்டே முடங்கிக் கிடந்தான்.
இரண்டாவது நிழலுருவம் ஒன்று அந்த அடிமையின் அருகிலே வந்ததும், இரண்டு பேரும் மெல்லிய குரலிலே பேசிக்கொண்டிருந்தார்கள். உமாருக்கு அதன் பிறகு வேலை ஒடவில்லை. தன் இருக்கையிலிருந்து எழுந்தான். அதைக் கண்ட அந்த அடிமை.
“யா! சூலாஜா அவர்களே! இன்றைய இரவு, பெரிய மாயத்தன்மையுடையதாக இருக்கிறது. தங்கள் அடிமை நாய் அச்சங் கொள்கிறது” என்றான்.
மற்றொருவன், “தயவுசெய்து, தங்கள் காலடியின் அருகிலேயே எங்களையமர்ந்திருக்க அனுமதியுங்கள். இரவு எங்களைப் பயமுறுத்துகிறது.” என்றான். எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகிலே நகர்ந்து வந்து, அந்தப் புதிய வேலைக்காரன் சொல்லத் தொடங்கினான். கடைத் தொழுகைக்குப் பிறகு அவன் பாழடைந்து கிடந்த இடங்களின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தானாம்.
ஒரு மேட்டின் மீது பெரும் வெளிச்சமாயிருந்ததாம். அது நிலவின் வெளிச்சம் அல்ல. ஏனெனில் நிலவு அன்று கிடையாது அமாவாசை அந்த வெளிச்ச வட்டத்தின் மத்தியிலே ஒரு மனித உருவம் தோன்றியது அருகில் நெருங்கிப் பார்த்தபொழுது வேறு இரு உருவங்கள் தெரிந்தன.
அரை நிர்வாணமாக இருந்த ஒரு மனித உடல், நெளியும் பாம்பைப் போல் தரையில் நகர்ந்து கொண்டிருந்தது. பழுப்பு நிறமுடைய பெரிய கழுகு ஒன்று அந்த ஒளி வட்டத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே, வந்ததாம். இவ்வாறு அவன் சொல்லி வரும்பொழுதே, அதைக் கண்ணால் பாராத அந்த அடிமை தொடர்ந்து சொல்லத் தொடங்கினான். நேரே அவன் பார்க்காவிட்டாலும், அந்தப் புதிய வேலைக்காரன் ஏற்கெனவே கூறியதை அவன் திருப்பிச் சொன்னான்.
“அந்தப் பெரிய மேட்டிலே இருந்த அந்த வெள்ளைப் பிசாசு, கழுகுடன் பேசியது. அது பேசிக்கொண்டிருந்த போதே கீழே கிடந்த அரை நிர்வாணஉருவம் ஒரு பாம்பாக மாறிவிட்டது. அங்கே ஒரு கத்தியும் இருந்தது. இது ஓர் அதிசய மாய வித்தையல்லவா? நினைக்கும்போதே பயமாயிருக்கிறது” என்றான் நீக்ரோ அடிமை,
வேலைக்காரன் தொடர்ந்தான்; “நகர்ந்து வந்து கொண்டிருந்ததே உருவம், அதுதான் வயிறு நிறைய மண்ணுண்ட ஆட்டக்காரன். அறிவின் ஆசானே! தங்கள் பெயர் அங்கு பேசப்படுவதையும் கேட்டோம். எத்தனை பெரிய மாயவித்தை அவர்களுடையது? என்றான்.
“எங்கே?
“அதோ அங்கே, அத்தப் பெரிய மணல் மேட்டிலே!”
“ஒரு விளக்கெடுத்துவா. எனக்கு வழிகாட்டு. அங்கே போகவேண்டும்” என்றான் உமார். யாரோ, அந்த மணல் மேடுகளின் ஊடே அந்த ஆட்டக் காரனைப் புதைத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு ஏதோ உளறுகிறான் வேலைக்காரன் என்று உமார் எண்ணினான். ஆனால் பயப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு அடிமைகளையும் தன்னோடு ஓர் இரவு முழுவதும் வைத்துக் கொண்டிருக்க உமார் விரும்பவில்லை.
அவர்களுக்கு வேலைக்கொடுக்க தீர்மானித்தான். அந்த வேலைக்காரன், உமார் கூறியபடி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு வந்தான். உமார் அவனைப் பின்தொடர்ந்தான். மற்றொரு அடிமை பயத்தால் உடம்பு கிடுகிடுக்க, உமாரையொட்டிய படியே தொடர்ந்து சென்றான்.
சிறிது தூரம் சென்ற பிறகு, ஓரிடத்தில் வளைந்து, குட்டிச் சுவர்களின் ஊடாகச் சென்று ஏற்கெனவே ஒரு பெரிய தெருவாக இருந்திருக்க வேண்டிய ஒரு பாதையில் வந்து நின்றார்கள். அங்கே நின்றதும், வேலைக்காரன் தன் கைவிளக்கை ஆட்டினான். அப்படி ஆட்டினால் அது இன்னும் நன்றாக எரியும் என்பதற்காக ஆட்டுபவன் போல் ஆட்டினான்.
“இன்னுங் கொஞ்ச தூரம்தான். சிறிது தூரம் சென்று வலது புறமாகத் திரும்பிப் போக வேண்டியதுதான். நான் இங்கேயே.... நிற்கிறேனே!” என்றான் விளக்கு வைத்திருந்த அந்தப் புதிய வேலைக்காரன். அவன் கையில் இருந்த விளக்கை வாங்கிக் கொண்டு உமார் நடந்தான்.
அதே சமயத்தில் பின்னால், அந்த இரண்டு வேலைக்காரர்களும் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது. பக்கத்துக்குப் பக்கம் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே அவன் தன்னந்தனியாகச் சென்றான். அவ்வாறு செல்லும்போது தனக்கு நேரே உயரத்தில் மங்கலாக வெளிச்சம் ஒன்று தெரிந்ததைக் கண்டான்.
அந்த வெளிச்சம்! ஏற்கெனவே இருந்த ஒரு கோயிலின் இடிந்த குவியலின் மேல் தெரிந்தது. பகல் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த உமார் இந்தப் பகுதியில் சுற்றியிருந்தபடியால் அதன் உயரப் போவதற்குரிய வழியைத் தேடுவது எளிதாக இருந்தது.
அந்தக் குவியலின் உச்சியை அவன் அடைந்தபொழுது ஒரு சுவரின் வெடிப்பின் ஊடாக அந்த வெளிச்சம் வருவதைக் கண்டான். சாதாரண எண்ணெய் விளக்கின் ஒளியைக் காட்டிலும் அந்த வெளிச்சம் மிகுந்த ஒளிப்படைத்ததாயிருந்தது. அந்த ஒளிவட்டத்தின் இடையே உட்கார்ந்திருந்த அந்த மனிதன், உமாரின் வருகைக்காகக் காத்திருந்தவன் போல் எழுந்து நின்றான்.
“ஒருவன் போகிறான்! மற்றொருவன் வருகிறான்!” என்று அந்த மனிதன் கூறினான். உமாரைக் காட்டிலும் குட்டையாகவும், அடர்ந்த புருவமும், சுருண்ட மழித்த தாடியும் உடையவனாகவும் ளங்கிய அந்த மனிதன் அரபிக் காரர்களைப்போல் அவனுடைய அகன்ற தோள்களிலே ஒரு சால்வை போர்த்தியிருந்தான். ஆனால் அவனைப் பார்த்தால் ஓர் அராபியனைப் போல் தோன்றவில்லை.
தரையை நோக்கிக் குனிந்த அவன் கீழே கிடந்த அந்த ஆட்டக்காரனின் பிணத்தின் மேல் உமாரின் பார்வை படும்படி செய்தான். மார்பின் நடுவே பாய்ந்திருந்த ஒரு கத்தியின் பிடி மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. “அவனுடைய வேதனையைப் பொறுக்க முடியாமல் நான்தான் குத்தித் தீர்த்தேன்” என்றான் அந்த மனிதன்.
மேலே ஒரு கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உமார் அதைக் கவனித்தான். “அது என்னுடைய கூட்டாளி உயர்ந்த இடங்களிலே அது என்னோடு வந்து சேர்ந்து கொள்ளும்” என்றான் அந்தக் குட்டை மனிதன்.
“நீ யார்?’ என்று கேட்டான் உமார்.
“மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தவன். ரே நகரவாசி” என்று பதில் கூறினான். அப்படிக் கூறும்பொழுது அவனுடைய ஒளி மிகுந்த கண்களிலே புது மின்னல் தோன்றியதுபோல் இருந்தது.
ரே என்பது பாரசீகத்தின் பனிமலைச் சிகரங்களின் ஊடே உள்ள மலைப்பிரதேசத்திலே யிருந்த ஒரு நகரம். இந்த மனிதன் ஒரு பாரசீகத்தவனாக இருக்கலாம். எனினும் அவனுடைய மொழி உச்சரிப்பு எகிப்தியர்களுடையதைப் போல் தோன்றியது. பல மொழிகளையும் இயல்பாகப் பேசக்கூடிய பயிற்சியுடையவனென்பதும் அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.
“கூடார மடிப்பவனாயிருந்து, அரசரின் வானநூற்கலைஞனாகி இருப்பவன் நீ, அல்லவா? இப்பொழுது, இஸ்டாரின் கோயிலிலே நின்றுகொண்டு பலரும் பைத்தியம்
21. புதிய மதம் பரப்பப் புறப்பட்ட ஒரு கூட்டம்
நிசாம் அல்முல்க் அவர்கள் வெகு தூரத்தில் இருந்து கொண்டே தன்னைக் கண்காணித்து வருவதை உமார் புரிந்து கொண்டான். மறுபடியும், நாடோடிகளான ஆட்டக்காரர்கள் தன் பாதையில் குறுக்கிடவில்லை; குறுக்கிடும்படி விடப்படவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான்.
எப்பொழுதும் புன்சிரிப்புடன் கூடிய இந்து மதத்தினனான ஒரு கடிதம் எழுதுபவன், உமார் தன் கூடாரத்தில் தனியாக இருக்கும்பொழுது வந்து சாமர்கண்டிலும், பால்க் நகரிலும் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியும் வதந்திகளைப் பற்றியும் சுல்தான் மாலிக்ஷா அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றியும் அடிக்கடி சொல்லுவான்.
வாரந்தோறும், நிசாம் அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள் அவனுக்கு மிகமிகப் பயன்பட்டன. பெரும்பாலும், இந்தக் கடிதங்களில் நிசாம் அவர்களின் வேலைத் திட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தன. வரக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்து, பிறகு கொள்ளப்பட வேண்டிய கொள்கைகளைப் பற்றி அவை கூறின.
இவ்வாறாக, மாலிக்ஷாவின் படைகள் புனித ஸ்தலமான ஜெருசலத்தைக் கைப்பற்ற வேண்டியது எவ்வளவு இன்றியமையாதது என்பதை உமார் உணர்ந்து கொண்டான்.
கோடிக்கணக்கான மத நம்பிக்கையுள்ளவர்களால், இஸ்லாத்தின் தலைவராகவும், பாக்தாது தேசத்தின் காலிப்பாகவும் கருதப்படும் அளவுக்கு மாலிக்ஷா மதிப்புடையவராகி விட்டார். ஏற்கெனவே மெக்கா மெதினா என்ற இரு புண்ணிய ஸ்தலங்களையும் துருக்கியர்கள் கைப் பற்றியாகி விட்டது. முறை கெட்ட அரசு செய்யும் கெய்ரோவின் காலிப் கையிலிருந்து மூன்றாவது புண்ணிய ஸ்தலமான ஜெருசலத்தையும் கைப்பற்றி மாலிக்ஷா அவர்களின் பெரிய சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட வேண்டியது மிக முக்கியமானது.
இதன் காரணமாகவே, மாலிக்ஷா அவர்கள் வடக்கேயுள்ள மதவிரோத்திகளான பைசாந்தியர்களை எதிர்த்தும் தம் படைகளைச் செலுத்த வேண்டியிருந்தது. புனிதமான இந்தப் போராட்டத்திலே இஸ்லாத்தின் மாபெரும் தலைவரான சுல்தான் அவர்கள் ஈடுபடும் வரையில், அவருடைய கொடியின் கீழ் படை திரண்டு கொண்டேயிருக்குமே தவிரக் குறையாது. சமவெளிப் பிரதேசங்களிலிருந்து, புதிது புதிதாகத் துருக்கிப் போர் வீரர்கள் வந்து கொண்டேயிருந்தனர். படையில் சேருவதற்காக மேற்கு நோக்கி மீண்டும் மீண்டும் நிசாம் வீரர்களை அனுப்பிக் கொண்டேயிருந்தார்.
உருவமில்லாத கம்பளி மயிர்களின் குவியல்களைச் சேர்த்து நூலாக்கித் தறியின் முன்னேயிருந்து கொண்டு துணிகளை நய்யும் நெசவாளியைப் போல், நிசாம் அவர்கள், இருந்த இடத்தில் இருந்து கொண்டே, இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருப்பதை உமார் மிக மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.
“ஜெருசலத்தில் படையெடுக்கலாமா? நல்ல காலம்தானா?” என்று மாலிக்ஷா அவர்கள் கேட்டபொழுது, ‘ஆகா! இந்த மாதம் மிகப் பொருத்தமாக இருக்கிறது. தங்கள் கிரகத்தின் அருகிலேயே செவ்வாயும் வந்து நெருங்கியிருப்பதால், உடனே படையெடுக்க வேண்டியதுதான்” என்று சோதிடம் சொன்னான் உமார்.
அவன் கூறிய சோதிடம் உண்மை என்பதை மாலிக்ஷா நன்றாக அறிவார். இருப்பினும் உமார் படையெடுப்பை மறுத்திருந்தால் தன்னுடைய வான நூற் கலைஞரின் மேல் மிகமிக மதிப்பு வைத்திருந்த சுல்தான், நிச்சயமாகத் தன்னுடைய போர்த் திட்டத்தை மாற்றிக் கொண்டிருப்பார். அவ்வளவு தூரம் அவருக்கு உமார் மீது நம்பிக்கை யிருந்தது.
சுல்தானின் படைகள் அப்பொழுது அலெப்போ நகரின் செம்மண் வெளிப் பிரதேசத்தில் முகாமிட்டிருந்தன. ஜெருசெலத்தைக் கைப்பற்றுவதற்காகச் செல்லவிருந்த தளபதி அமீர் அஜீஸின் படைகளோடு தானும் செல்வதெனத் தீர்மானித்தான் உமார்.
அவன் மேற்குக் கடலைப் பார்க்க வேண்டுமென்று விரும்புவதாகவும் அதற்கு முன் எந்தக் கடற்கரையையும் அவன் பார்த்ததேயில்லையென்றும், மேலும் ஜெரூசலத்தில் உள்ள மசூதிக்கு யாத்திரிகனாகப் போகவேண்டுமென்றும் விரும்புவதாகவும் சுல்தான் மாலிக்ஷாவிடம் அவன் தெரிவித்தான். உண்மையில் அவன் நோக்கம் அவையல்ல. வழியில் கடந்து வந்த நகரங்கள் முழுவதும், அப்பொழுது தங்கியிருந்த அலெப்போ நகர் முழுவதும், சந்தை கூடுமிடம் எங்கும் அவன் விசாரித்துப் பார்த்தும் யாஸ்மியைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்க வில்லை.
மீஷித் நகரிலிருந்து ஓர் இளம் மனைவியுடன் வந்த துணி வியாபாரியைப் பார்த்ததாக அடையாளம் சொல்லக் கூடியவர் யாரையும் அவன் காணவில்லை. ஆகவே மேலும், ஜெருசலம் வரை சென்று அவளைத் தேட வேண்டுமென்பதே அவனுடைய நோக்கம்.
அலெப்போவிலிருந்து, தென்முகமாகச் செல்லும் பாதையிலே சென்றால், டமாஸ்கஸ் பட்டணத்திற்கும், பாலைவனத்தைக் கடந்தால் எகிப்துக்கும் போகலாம். இந்தத் தென் திசைப் பாதையில் சென்றால், யாஸ்மியைப் பற்றிச் செய்தி எதுவும் அறியலாம். இதுவே அவனுடைய திட்டம், டுன்டுஷைப் போல் செய்திகளைச் சேகரிக்கும் ஆற்றல் தனக்கில்லையே என்று வருந்தினான்.
“உன்னுடைய புனித யாத்திரை தொடங்கட்டும்! நீ அங்கு செல்லும் பொழுது, துரத்தில் இருக்கும் அந்த மசூதியின் தொழுகை மண்டபத்தில், என் சார்பாக ஒன்பது முறை தொழுகை நடத்தி ஆண்டவன் அருளைப் பெற்றுவா !” என்று அனுமதித்தார் மாலிக்ஷா.
கூடார மடிப்பவனின் மகனாகப் பிறந்த உமார், கடவுளின் அருளால் அரும்பெரும் ஞானம் பெற்றவனாக விளங்கும் உமார், தன் படையெடுப்பு நடைபெறும் பொழுதே இப்படிப்பட்டதொரு புனித யாத்திரையை முடிப்பது மிகப் பொருத்தமானதேயென்று அந்த இளந் துருக்கியரான சுல்தான் மாலிக்ஷா எண்ணினார்.
ஆனால், உமார் தன்னைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய அந்த இடைக்காலத்திலேயுள்ள ஒவ்வொரு நாளிலும், அதிர்ஷ்டந்தரக் கூடிய நல்ல நாட்களையும், வேண்டாத நாட்களையும், பற்றிய பட்டியல் ஒன்றைக் குறித்து வாங்கிக் கொள்ள அவர் தவறவில்லை. சுல்தானின் ஜாதகத்தில் செவ்வாய் சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்த்துக் காணப்படுவதால், திடீர் சம்பவங்கள் ஏற்படக் கூடுமென்பது ஜாதகப் பலனாகக் காணப்பட்டதால் சுல்தான் இதிலே மிகக் கவனமாக இருந்தார்.
சுல்தான் தம் வானநூல் கலைஞருக்கு ராஜாங்கக் கொடி பிடிக்கும் ஒரு குழுத்தலைவனையும், காத்தாயானி வகுப்பைச் சேர்ந்த கரிய நிறம்படைத்த குதிரை வீரர்கள் பன்னிருவரையும், பிரயாணத்தின் பாதுகாப்பாளராக நியமித்து அனுப்பினார். உமார் விழித்திருந்தாலும், தூங்கினாலும் அவன் மேல் கண் வைத்தபடி எப்பொழுதும் இரண்டு வீரர்கள் இருந்தபடி இருக்கவேண்டும் என்று அந்தக் குழுத் தலைவனுக்கு ஆணையிட்டார்.
அதன்படியே, உமார் எங்கு சென்றாலும், வாய்பேசாது இருவீரர்கள் எப்பொழுதும், தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். உமாரைக் கண்காணிக்காமல் தன்பார்வையிலிருந்து தப்பிச் செல்லும்படி எவன் விடுகிறானோ அவன் தலை தரையில் உருள்வது உறுதி என்று அவ்வீரர்களுக்குக் குழுத் தலைவன் எச்சரிக்கை கொடுத்திருந்தான்.
உமார் அவர்களை, எதிர்பாராத எந்தெந்தப் பாதைகளிலோ இழுத்துக் கொண்டு சுற்றினான். டமாஸ்கஸ் பட்டணத்துச் சந்தை கூடுமிடங்களிலும், பைன் மரக்காடுகள் நிறைந்த லெபனானிலும், பனிமலைச் சிகரத்தை யுடைய ஹெர்மான் மலைப் பிரதேசத்திலும் கடற்கரை வெளிகளிலும் அவர்களை அலைக்கழித்துக் கொண்டு திரிந்தான். சிப்பித் தூண்கள் நிறைந்த கடற்கரை ஓரத்தில், மணல் வெளியில் வீசும் காற்றின் ஊடே அலைந்து கொண்டிருந்தான்.
கிரேக்கர்களும், ரோமானியர்களும் தங்கள் மரக்கலங்களிலே வந்திறங்கித் துறை முகங்களும் பளிங்குக் கட்டிடங்களும் அமைந்த பெருங்கடலின் கரையிதுதான். இப்பொழுது அந்தக் கட்டிடங்களெல்லாம் பாழடைந்து கிடந்தன. ஆழ்கடலின் நெடுந்துரம் வரையிலே சிறந்து விளங்கிய டைர் நகரமும், கடலின் அடித்தளத்திலே, தன் அஸ்திவாரமும் அமிழ்ந்து போய் விளங்கும் சீடான் நகரமும் இருந்த இடம் சிறந்து விளங்கிய பிரதேசம் இதுதான்.
அபூர்வமான கிருஸ்தவ ஞானிகள் வாழ்ந்து மறைந்த இடமான கார்மல் குன்றின்மேலேயும் உமார் ஏறித்திரிந்தான். பிறகு உள்நாட்டு பிரதேசமான ஆழ்ந்து கிடந்த காலிலீ ஏரிப் பிரதேசத்துச் சரிவிலே இறங்கினான்.
பூமாதேவியின் அடிவயிறுபோல் விளங்கிய இந்தப் பள்ளத்தாக்குப் பிரதேசத்திலும், அதன் கந்தகக்குழம்பு ஊற்றுக்களிலும், மறக்கப்பட்டு மறைந்துபோன அரண்மனைகளின் விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கற்பதிப்புக்கல்களிலும் அங்கு வாழ்ந்த பரிதாபத்திற்குரிய, தாடி வளர்ந்த பெரிய மனிதர்களான யூதர்களின் வாழ்க்கை நிலையிலும் தங்கள் கவனத்தைச் செலுத்திய உமாரின் கூடவந்த காத்தாயனிய வீரர்களுக்கு இந்தப் பிரதேசங்களில் பேய்கள் குடிகொண்டது போலத் தோன்றியது. அந்தப் பகுதியிலே அப்படிப்பட்ட சுடு காட்டுத் தன்மை நிலவியது.
ஆனால், ஜெருசலத்தை நோக்கித் தங்கள் வழியைத் திருப்பிக் கொண்ட பிறகு, அவர்கள் தங்களுக்குப் பழக்கமான ஒரு சூழ்நிலையைக் கண்டார்கள். சுல்தானுடைய படைகள் ஜெருசலத்தைக் கைப்பற்றிய பிறகு நாட்டுப் புறத்திலே இருந்த மத விரோதிகளான எதிரிகளின் சொத்துக்களையெல்லாம் கொள்ளையடித்தனர்.
தானியங்கள் நிறைந்த வயல்களின் வழியாக குதிரைகளைச் செலுத்தி அவ்வயல்களின் விளைவுகளை அழித்துக்கொண்டும், பாதிரி மடங்களைச் சோதனையிட்டுப் பொருள்களை அள்ளிக்கொண்டும் சென்றார்கள். தலைப்பாகையணியாத மனிதர்களும், இடுப்பில் குழந்தைகளுடன், முக்காடு கூடப் போடாத பெண்களும், குவிந்து கிடக்கும் பிணக் குவியல்களுக்குச் சவக்குழிதோண்டும் வேலையில் ஈடுபட்டிருப்பதையும் கண்டார்கள்.
பெருஞ்சாலை வழியாக உமாரும் பாதுகாப்புப் படை வீரர்களான காத்தாயனியர்களும் போகும்போது, எதிரிலே அடிமைகள் வரிசை வரிசையாகச் செல்வதைக் கவனித்தார்கள். துருக்கிய வீரர்களிடமிருந்து, அடிமை வியாபாரிகளால் விலைக்கு வாங்கப்பட்ட, இந்த ஜெருசலத்து அடிமைகள் டமாஸ்கஸ் பட்டணத்தில் லாபத்துடன் விற்கப்படுவதற்காக நடத்திச் செல்லப்பட்டார்கள். இந்த அடிமைகளைக் கண்டபோது, உமாருக்குக் கொரசான் போர்க்களமும் அங்கே தான் சந்திக்க நேர்ந்த அடிமைகளான யார்மார்க்கும், ஸோயி என்ற பெண்ணும் நினைவுக்கு வந்தார்கள்.
ஜெருசலத்தை நோக்கிச் சென்ற அவன், இரவு நெருங்கி வரவே, நகருக்கு வெளியில், மாலிக்ஷாவின் தளபதியான அமீர் அஜீஸின் கூடாரத்தில் தங்கினான். ஏனெனில் கூட வந்த பாதுகாப்புக் குழுத் தலைவன் இரவில் நகருக்குள் இருப்பது பாதுகாப்பானதல்ல என்று கூறிவிட்டான். மறுநாள் காலையில், ஜெருசலம் நகருக்குள் சென்று, இஸ்லாமியப் புனிதப் பள்ளிக்குச் சென்றான். அங்கு எந்தவிதமான போரும் நடக்கவில்லை. பட்டாளத்துடன் கூடவே வந்த முல்லாக்கள், பளிங்கினால் கட்டப்பட்ட இந்தப் பள்ளி வாசலுக்குள்ளே கூடியிருந்தார்கள். அகிஸா மசூதியையும் அவர்கள் உரிமைப் படுத்திக் கொண்டார்கள்.
வேதமோதும் மேடையிலிருந்தபடி பிரார்த்தனையை நடத்தி வைத்த இமாம் அவர்கள், பாக்தாது காலிப்பின் பெயராலும், சுல்தான் மாலிக்ஷாவின் பெயராலும் தொழுகையைத் தொடங்கி வைத்தார். இதற்கு முன் பிரார்த்தனையை நடத்தி வைத்த எகிப்தியர்கள் ஊரை விட்டே ஓடிவிட்டார்கள். கூட்டத்தின் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக, உமார், பாறையினாலான வட்டக் கோபுரத்தின் உள்ளே நுழைந்து கொண்டான்.
அரை யிருட்டாக இருந்த அதன் உட்பகுதியில் அமைதி நிலவியது. அங்கே அவன் மண்டியிட்டு, அங்கிருந்த புனிதமான சாம்பல் நிறப்பாறையைத் தொட்டுக் கொண்டே தொழுகை நடத்தினான். மெக்காவில் உள்ள பள்ளியின் கருங்கல்லின் அளவு புனிதம் வாய்ந்ததல்ல இந்தச் சாம்பல் நிறப் பாறை. அதற்கு அடுத்தபடியாகத்தான் கொள்ள வேண்டும்.
எந்த மதத்திலும் சேராத இரண்டும் கெட்டான்களான அந்த காத்தயானிய வீரர்களும் அவன் கூடவே மண்டியிட்டார்கள். தொழுவதற்குப் பதிலாக அழகிய பளிங்குத் தூண்களையும், தங்கத் தோரணங்களையும் கண்டு வியப்படைந்தார்கள்.
தொழுது முடிந்து உமார் எழுந்திருந்தபோது, மரியாதை பொருந்திய மெல்லிய குரல் ஒன்று அவனுக்கு வாழ்த்துக் கூறியது.
“மோட்சத்தைத் தேடுபவரே; சாந்தியுண்டாகட்டும்! என்று அந்தக் குரல் வாழ்த்தியது.
“சாந்தி, உமக்கும் உண்டாகட்டும் என்று பதிலுக்கு வாழ்த்தினான் உமார். திரும்பிப் பார்த்தால், அவன் அருகிலேயே ஹாஸான் இபின் சாபா என்ற அந்தக் குட்டை மனிதன் நின்றான். அவனுடன் மற்றொருவனும் கூட வந்திருந்தான். ஹாஸான், ஓர் யாத்திரிகனுடைய உடையில் இருந்தான். அரபு மொழியிலே பேசினான். முன் சந்தித்த போது பாரசீக மொழியிலே எவ்வளவு இயற்கையாகப் பேசினானோ அவ்வளவு இயற்கையாகத் தன் சொந்தமொழிபோலவே, இப்பொழுது அரபு மொழியிலே பேசினான்.
அவன் புன்சிரிப்புடன், “அல்லாவின் அருள் நிலைபெறுவதாக! நான் என் நண்பனை மீண்டும் சந்திக்கும்படி கூட்டி வைத்த அல்லாவின் புகழ் நிலைபெறுவதாக!” என்று கூறிவிட்டு, “இந்தப் பாறைக் கோபுரத்தின் உள்ளே என்ன இருக்கிறது தெரியுமா? பாறையைத் தவிர வேறு என்ன இருக்கிறது தெரியுமா? என்று கேட்டான். உமார் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான். கூட இருந்தவர்களும் அயர்ந்து போனார்கள்!
சுற்றிலும் இருந்தவர்கள், திரும்பி ஹாசன் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினார்கள். எவரையும், தன் பேச்சினால் கவர்ச்சி செய்யும் சக்தி ஹாஸனுக்கு இருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் நெருங்கி வந்ததும் அவன் சொல்லத் தொடங்கினான். ‘இதோ இந்தச் சாம்பல் நிறக்கல்லிலே ஓர் அடையாளம் காணப்படுகிறதே; இது என்ன தெரியுமா? தீர்க்கதரிசியான முகமது நபியவர்கள் இந்த இடத்திலே நின்றபடிதான் சுவர்க்கத்துக்கு எழும்பிப் போனார்.
அவருடைய காலடி பதிந்த இடந்தான் இந்த குறி. அப்படி அவர் எழும்பிப் போனபோது, அவர் கூடவே இந்த பாறையும் போய்விடாமல் தடுப்பதற்காக கபீரியல் தேவதை இந்தப் பாறையை அழுத்திப் பிடித்துக் கொண்டது. அதன் கைவிரல்கள் பதிந்த இடங்கள்தாம் இந்தப் பாறையின் விளிம்பிலே உள்ள துவாரங்கள்!” இந்த மாதிரியான அதிசயத் தெய்வீகச் சம்பவங்களை ஹாசன் எடுத்துக் கூறத் தொடங்கியதும், ஆச்சரியத்துடன், நெருங்கி வந்தார்கள் அந்தக் காத்தயானியர்கள்.
“இதன் அடியிலே ஒரு குகையிருக்கிறது. காத்திருக்கும் உயிர் ஆவிகளெல்லாம் தீர்ப்புநாள் அன்று அந்தக் குகையிலேதான் ஒன்று கூடும். என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூறி முன் நடந்தான். அந்த இடம் முழுவதும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவன் போல் அவன் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அங்கிருந்த முல்லா ஒருவரை ஏவிப் பாறையின் அடிப்புறத்தில் உள்ள குகை வழியாக அனைவரையும் அழைத்து வரச் செய்தான்.
வழியில் சில சில குறியீடுகளைக் காட்டி அவற்றின் தெய்வீகத் தன்மையைப் பற்றி விவரித்தான். அந்த விவரங்களைக் கேட்க, செப்புத் தலைக் கலசமும், தோல் உடைக்கவசமும் அணிந்த வீர்களான காத்தயானியர்கள் பயந்து போனார்கள். ஹாஸானுடன் கூட வந்த அந்தத் தடிமனிதன் உமாரின் காதில், “உலகத்தின் ஆவிகளெல்லாம் தீர்ப்பு நாளன்று ஒன்று கூடும் இடமாக இந்தச் சிறு குகை இருக்குமானால், அத்தனை ஆவிகளும், அணுவினும் சிறியதாக மாறினாலன்றி முடியாது” என்று தன் தெய்வீக அவநம்பிக்கையை எடுத்துரைத்தான்.
புனிதம் நிறைந்த இடமான வட்ட அரங்கத்தின் மேல் ஏறி நின்று கொண்டு தன் கையில் இருந்த மெழுகுவர்த்தியை ஓர் உத்தரத்தின் அருகிலே தூக்கிப் பிடித்தான். “திருத்தூதர் முகமது நபியவர்கள், விண்ணுலகம் ஏறிய பிறகு, நீண்ட நாட்களுக்கு முன் இருந்த இஸ்லாமிய காலிப் ஒருவர் இதில் உள்ள வாக்கியங்களைப் பொன்னால் எழுதி வைக்கும்படி உத்தரவிட்டார். இதோ பாருங்கள்” என்று ஹாஸான் காண்பித்தான். உமாரால் அந்த எழுத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஹாஸான் அவற்றை எளிதாக வாசித்தான்.
“ஆண்டவனைத் தவிர வேறு கடவுள் எதுவும் கிடையாது. அவருக்குப் பங்காளியும் கிடையாது. மேரியின் திருமகனான இயேசுநாதர், கடவுளின் செய்திகளை நமக்குத் தெரிவிக்கும் தூதுவரேயாவார். கடவுளையும் அவருடைய தூதுவர்களையும் நம்புங்கள். மூன்று கடவுள் இருப்பதாக மொழியாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லதாகும்”
ஹஸான் உமாரின் கையைப் பிடித்துக் கொண்டு, “இந்தத் திருவாக்கியங்கள் எழுதப்பெற்ற பின்னர் இதைக் கண்டவர்கள் சிலரே! இதைப் படித்தவர்கள் மிகமிகச்சிலரே! ஆனால் புரிந்து கொண்டவர் யார் இருக்கிறார்கள்? ஆனால், நீ நிச்சயமாகப் புரிந்து கொள்வாய் என்றே எண்ணுகிறேன்” என்றான்.
சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்தின் நெருக்கடியைப் பொறுக்க முடியாதவனைப்போல, உமாரை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஹாஸான், அந்த நகரின் சந்து பொந்தெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு சென்று, மற்றவர்கள் கவனிக்கத் தவறிய பல விஷயங்களைக் காண்பித்தான். கூடவந்த அந்த மனிதன் இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனிக்கவில்லை. ஏதோ சொந்த யோசனைகளிலே மூழ்கியவனாக ஒன்றும் பேசாமல் இவர்களைத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.
“அதோ அந்த இடத்தைப் பார். அங்கேயிருக்கிறதே வளைவு அருகிலே ஜன்னல், அங்கேயிருந்து கொண்டுதான் பொண்டியால் பைலேட் என்ற ரோமானிய அரசப் பிரதிநிதி யூதமதக் குருக்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அதே கிறிஸ்துவரான அரசப் பிரதிநிதி சிலுவையில் வைத்துக் கொல்லப்படுவதற்காகப் பட்டாளத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டான். இப்பொழுது அந்தச் சிலுவையைத் தாங்கியிருக்கும் பாறை கிறிஸ்துவர்களால் மறக்கப்பட்ட இடமாகி விட்டது”
தெருக்களிலே இடிந்து கிடந்த குவியல்களின் மேல் உட்கார்ந்து, வம்பளந்து சிரித்துக் கொண்டிருந்த துருக்கியப் போர் வீரர்களைக் கடந்து உமாரைத் தள்ளிக் கொண்டு போன ஹாஸான் மேலும் பேசினான்.
“ஜெருசலத்தின் கதை இப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சுவர்கள் இடிக்கப்படுவதும், அரசர்களாலும், படைவீரர்களாலும் மக்கள் கொல்லப்படுவதும், வழக்கமாகிவிட்டது. திருத்துதுவர் முகமது நபியின் கடைசிக் காலத்திலே சோஸ்ரேஸ் என்ற பாரசீக நாட்டான் யூதர்களால் துரத்தப்பட்டான். நகர் பாழாகியது. பிறகு ஹெராகளிட்டஸ் என்ற ரோமானியச் சக்ரவர்த்தியின் வாள்வலி யூதர்களிடமிருந்து இந்த நகரைப் பிடித்துக் கொண்டது.
யூதர்கள் கிறிஸ்தவர்களால் வெட்டித் தள்ளப்பட்டார்கள். நம்முடைய காலிப் அவர்கள் ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக இந்த நகரைக் கைப்பற்றினார். இரத்தம் சிந்தப்படவில்லை. அங்கே உள்ள புனிதப் பாறையில் படிந்திருந்த பாவக் கறைகளையும், அழுக்குகளையும் நீக்கித் தூய்மைப்படுத்தினார். சோலோமன் டேவிட் ஆகியவர்களின் புனிதமான பாறையைப் புனிதமாகவே வைத்திருந்தார்.
ஆனால், இப்பொழுது இந்தத் துருக்கியர்கள் அறியாமையால் இரத்தம் சிந்தும்படி செய்துவிட்டார்கள். அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு வாழ முடியாது. விரைவில் இந்த நகரம் புதிய எதிரிகளால் கைப்பற்றிக் கொள்ளப்படும்” என்றான் ஹாஸான்.
“யார் அந்தப் புதிய எதிரிகள்?’ என்று உமார் கேட்டான்.
“அது யாருக்குத் தெரியும்? கண்ணுக்குத் தெரியாத அந்த தெய்வீகத் திரைக்கு அப்பால் இருக்கும் விஷயத்தை நான் எப்படிச் சொல்லிக் காட்ட முடியும்? முஸ்லீம்கள் ஜெருசலத்தை இழப்பார்கள் என்பது மட்டுமே நான் சொல்லுகிறேன். புதிய பயங்கரமான எதிரிகள் யாரோ கைப்பற்றிக் கொள்வார்கள்.”
“கடவுளையும் அவருடைய துதர்களையும் நம்புங்கள். மூன்று கடவுள் இருப்பதாக மொழியாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லதாகும் என்ற இந்தத் திருமொழியின் உண்மையை அறியாதவர்கள் எப்படி இங்கு அமைதியாக வாழ முடியும்” என்று ஹாசான் கேட்டான்.
உமாரின் சிந்தனை வேலை செய்தது. சாம்ராஜ்யமென்னும் ஒரு பெரிய ஆடையை நெய்து கொண்டிருக்கும் நிசாமையும், மாலிக்ஷாவையும் பற்றி நினைத்தான். அவர்கள் இருவரும் எங்கெங்கோ இருக்கிறார்கள். தீக்கிறையாகிக் கருகிய திருமடங்களையும், இறந்துபோன சுற்றத்தாரை எடுத்துப் புதைத்துக் கொண்டு இருக்கும் ஏழை மக்களை காணும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஹாஸானின் உணர்ச்சிகரமான பேச்சு உமாரின் உள்ளத்தைக் கலக்கியது.
“மக்களின் மனத்திலே மூன்று கடவுள்கள் பதிந்திருக்கின்றன என்பதைத்தான் நாம் அறிவோமே! யூதர்களின் யஹோலா ஒரு கடவுள்; கிறிஸ்தவர்களின் ஆண்டவர் ஒரு கடவுள்; குர் ஆன் கூறும் அல்லா ஒரு கடவுள்; என்றான் ஹாசானின் கூட வந்த அந்த மனிதன்.
“நன்றாகச் சிந்தித்துப் பார். மூன்று முறையும் நீ என்ன கூறினாய்? ஒரு கடவுள் என்ற சொல்லைத்தானே மூன்று முறையும் கூறினாய். இந்தக் கிறிஸ்தவர்களும், யூதர்களும், இஸ்லாமியர்களும் எல்லோரும் உண்மையைக் கொஞ்சம் உள்ளத்தால் ஆராய்ந்து பார்த்தால் என்ன? அல்லா என்று சொல்வதைக் காட்டிலும் “ஒரு கடவுள்” என்ற கொள்கையை ஏன் பெரிதாகக் கொள்ளக் கூடாது?” பேசிக்கொண்டே வந்த ஹாசான், திடீரென்று நிறுத்திக் கொண்டான்.
அவர்கள் இருவரையும் தன்னைத் தொடரும்படி கண் காட்டினான். புனிதமான பள்ளியைநோக்கி கூட்டிச் சென்ற அவன் அதற்குச் செல்லாமல் கிழக்குப் புறத்தில் திறந்திருந்த கோட்டை வாசல் வழியாக அழைத்துச் சென்றான். முஸ்லீம்களின் இடுகாட்டுப் புதை குழிகளின் ஊடாகச் சென்றார்கள். அந்த இடுகாடு நகரக் கோட்டைச் சுவர் வரையிலே பரந்து கிடந்தது.
அவர்கள் சென்ற பாதை வரண்டு கிடந்த ஓர் ஓடைப் படுகை வழியாகச் சென்றது. களிமண்ணும், கூழாங்கற்களும் நிறைந்து கிடந்த அந்தக் குறுகிய பாதை வழியாக, கரிய நிறமுடைய வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் ஒட்டிக்கொண்டு சில வேடுவர்கள் குதிரை மீது சென்றார்கள். உமாருக்கு அந்த ஆட்டு மந்தையின் இடையே புகுந்து நடப்பதற்கு ஆசையாயிருந்தது.
அவன் ஆடுகளின் நடுவே நடக்க முயல்வதைக் கண்ட, காத்தயானிய வீரர்கள் இருவரும், விரைந்து அந்த ஆடுகளை விலக்கி நடுவிலே ஒரு பாதை ஏற்படுத்திக் கொண்டு சென்றார்கள். போர் வீரர்களின் உடையைக் கண்டதும் அந்த வேடர்களும், விரைந்து, ஆடுகளை விலக்கி உதவினார்கள்.
ஹாஸானின் கூட வந்த அந்த மனிதன், மிகவும் பருமனாயிருந்தபடியால் மெதுவாகக் காலடியெடுத்து வைத்து ஆடி அசைந்து நடந்து வந்தான். அவனுடயை கண்கள் அலை பாய்ந்து, களைத்துப்போய் இருந்தாலும், கூரிய தன்மை மாறாமல் இருந்தது. அவன் அதிகமாகப் பேசாவிட்டாலும், பேசும் சில சில சொற்களும் குத்தலாக இருந்தன. அவனுடைய பேச்சைக் கொண்டு, அவனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள இயலாமல் இருந்தது. அவன் பெயர் அக்ரோனோஸ் என்றும், எல்லா வியாபாரிகளுக்கும் பாட்டன் போன்றவன் என்றும் அவனைப் பற்றி ஹாஸான் கூறினான்.
அந்த அக்ரோனாஸ், உமாரை நோக்கி, “இந்தப் போர் வீரர்களைப் பார்த்தால் உன்னுடைய வேலைக்காரர்கள் போல் தோன்றுகிறதே!” என்று கேட்டான்.
“சந்தேகம் என்ன? போர் வீரர்கள் சுல்தானின் ஆணைக்குக் கட்டுபட்டவர்கள். சுல்தானின் ஆணையை உருவாக்குபவர் ஆசிரியர் உமார் அவர்கள்தானே! உமார், ஆஸ்தானத்துச் சோதிடர் மட்டுமல்ல. தீர்க்க தரிசியும் கூட! இன்னும் குறிப்பாகச் சொன்னால் இளஞ் சுல்தான் அவர்களின் தீர்க்கதரிசி!” என்று ஹாஸான் விளங்கக் கூறினான்.
அக்ரோனோஸ், தன் உணர்ச்சிகள் எதையும் வெளிக்குக் காட்டாமல், உமாரைத் தன் பார்வையால் அளவிடுவது போல் நோக்கினான். அப்பொழுது அவர்கள் ஆலிவ் மரக்காடுகள் அடர்ந்த ஒரு பகுதியைக் கடந்து ஒரு சரிவின் மேல் ஏறிக் கொண்டிருந்தார்கள்.
அந்த மரங்களுக்குப் பின்னால் ஒரு சிலுவையில், இரண்டு கைகளையும் விரித்தபடி ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. கரிய மேலங்கியணிந்த அந்த உருவம் ஒரு துறவியினுடையது. வழித்துவிடப்பட்டிருந்த அந்தப் பிணத்தின் தலை, சாம்பல் நிறமுடைய அந்தக் கற்களின் இடையிலே, ஒரு வெள்ளைக் கல் போலத் தெரிந்தது. “இது கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலம். நாம் எறிக் கொண்டிருக்கும் இந்த இடத்தை ஆலிவ் மூடி ... என்று அழைக்கிறார்கள் என்று ஹாஸான் கூறினான்.
இறங்கிக் கொண்டிருக்கும் மாலைக் கதிரவனின் ஒளிக்கதிர்கள் அந்தக் குன்றின் மேல் சாய்ந்து கொண்டிருந்தன. அவர்கள் மூவரும் அங்கே அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். கீழேயுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் சின்னஞ்சிறிய மனித உருவங்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தன. தூரத்திலே உள்ள பாறைக் கோபுரத்தில் மாலைக் கதிரவன் தங்க முலாம் பூசிக் கொண்டிருந்தான்.
உமாருக்கு அந்தப் பள்ளத்தாக்கின் பெயர் தெரியும். அதன் பெயர் வாடி ஜெகனம் என்பதாகும். அதாவது பாவிகளின் பள்ளத்தாக்கு என்று பொருள்! எல்லா ஆவிகளையும் அழைத்துத் தீர்ப்பு வழங்கும் நாளன்று எடைபோட்டுப் பார்க்கும் பொழுது, பாவம் செய்தவர்கள் என்று தீர்மானிக்கப்படும் ஆட்களின் ஆவிகள், இந்தப் பள்ளத்தாக்கின் வழியாகத்தான் செல்லும் என்று இஸ்லாமிய முல்லாக்கள் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கீழேயுள்ள சரிவில் விசித்திரமான தோற்றமுடைய கல்லறைகள் பல இருந்தன. கதிரவன் நெருப்புப் பந்துபோல் மாறி செக்கச் சிவந்து விளங்கியது. அதன் செவ்வொளி அந்தப் புனித நகரத்தின் கோபுரங்களில் எல்லாம் சாய்ந்து அழகைப் பெருக்கியது.
அவர்களின் அருகிலே, வரிசை வரிசையாகக் கிழவர்கள் நடந்து செல்லும் காட்சி ஒன்று தோன்றியது. அந்தக் கிழவர்கள் ஒருவர் முதுகை ஒருவர் பிடித்துக் கொண்டபடி, தட்டுத் தடுமாறி மேலும் கீழும் தலையைத் திருப்பிக் கொண்டு, கீழேயுள்ள பள்ளத்தாக்கை நோக்கி வரிசையாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் குருடர்கள்.
ஹாஸான் திடீரென்று பேசத் தொடங்கினான். “இதோ கவனியுங்கள். நாம் வானத்தை உற்று நோக்குகிறோம். பூமியை ஆராய்கிறோம். நம் குருட்டுக் கண்களால் இவ்வளவு உண்மையை அறிந்து கொள்ளுவதில்லை”.
“ஏன்? போதுமான அளவு, உண்மைகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமே!”என்றான் அக்ரோனோஸ். “இல்லை. நாம் குருடர்களாகத்தான் இருக்கிறோம். புதையுண்ட எலும்புகளையும் பழைய கற்களையும்தான் நாம் புனிதமாகக் கருதுகிறோம்.
திருக்குரானிலே அல்லாவே பெரிய கடவுள் என்று கூறப்பட்டுள்ளது. அவரைக் காட்டிலும் பெரிய ஒகு கடவுள் இருந்தால் என்ன வந்துவிட்டது? என்று ஹாஸான் கேட்டான். அக்ரோனோஸ், தன் விரல்களால் தாடியைத் தடவிக் கொண்டே, பேசாமல் இருந்தான்.
உமார், நெருப்புப் பிழம்பாக மாறி மறைந்து கொண்டிருக்கும் கதிர்ப்பந்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஹாஸான், புதுமாதிரியான ஒரு பேச்சைத் தொடக்கிக் கொண்டிந்தான்.
இதுவரை மனித அறிவினால் ஆராய்ந்து காணப்படாத ஒரு புதிய கடவுளைப் பெரிதும் நம்பினான். இதுவரை உண்டான மதங்களெல்லாம், முடிவான ஒரு முடிவை எட்டிப் பிடிக்கப் பயன்பட்ட ஏணிப்படிகளே என்று கூறினான்.
அந்த மதங்களெல்லாம், மனிதனின் அறிவைக் குறிப்பிட்ட அளவுதாம் ஒளி பெறச் செய்தன என்றும், ஆதம், நோவா, இப்ராகிம், மூசா, இயேசு, முகமது என்ற ஆறு தீர்க்க தரிசிகளும் காட்டாத ஒரு பேருண்மையை, முடிவான அசல் உண்மையைக் காட்ட ஏழாவது தீர்க்கதரிசி ஒருவர் நிச்சயமாகப் பிறந்து வருவார் என்றும் கூறினான்.
“அந்த ஏழாவது தீர்க்க தரிசியை நாம் அறிந்து கொள்ளும் வழி எது?” என்று அக்ரோனோஸ் கேட்டான்.
“அந்தத் தீர்க்கதரிசி தாம் தோன்ற வேண்டிய காலம் வருவதற்கு முன்னும் நம் கூடவேயிருந்து வந்திருக்கிறபடியால், நாம் அவரைத் தெரிந்து கொள்வோம். அலி அவர்களின் இனத்தில் ஏழாவது இமாமாகவும் அலி அவர்களின் ஆவியின் வாரிசுதாரராகவும் அவர் விளங்கியிருக்கிறார். சிலருக்கு அவர் ஏழாவது இமாமாகவும் சிலருக்கு மூடிமறைக்கப் பட்டவராகவும் அவர் காணப்படுகிறார்.
பெயரைப் பற்றி என்ன? அவரே மாதி! அவரே நாம் அறியாமலே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேவதூதர் மாதி! மாதி என்ற அந்தப் புனிதமான தீர்க்கதரிசி, மூசா நபியவர்களின் வெள்ளிய கை மரக் கிளையிலிருந்து வளியில் நீட்டிக் கொண்டு வந்த காலத்திலும், பிறகு இயேசுநாதர் இந்த உலகத்திலே உயிர் வாழ்ந்த காலத்திலும் கூட இருந்திருக்கிறார். ஆனால், அவர் திரும்பவும் தோன்றுவார்” என்று ஹாஸான் மிகுந்த உணர்ச்சியுடன் பேசினான்.
அந்தப் புனித நகரத்தின் கோபுரத்திற்கும் கோட்டைச் சுவருக்கும் அப்பால் கதிரவன் சென்று மறைந்தான். அவர்களின் பின்னே யாரோ வந்து நிற்பது போல் காலடிச் சத்தம் கேட்டதும், அவ்வளவு நேரமும், இவர்கள் பேச்சைக் கவனியாமலே அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்த காத்தயானியக் காவல் வீரர்களிலே ஒருவன் வந்து நின்று, “நேரமாகிவிட்டது, கூடாரத்திற்குத் திரும்ப வேண்டும்” என்று உமாரை அழைத்தான்.
தன் கூடாரத்திலே உணவு உண்டு ஓய்ந்திருந்த அந்த வேளையிலும், உமாரின் நினைவிலே ஆலிவ் முடியில் உடகார்ந்து கொண்டிருக்கையிலே கண்ட அந்த அந்திவானத்தின் அழகு நின்று கொண்டிருந்தது. அந்த அழகுக் காட்சியை மனத்திரையிலே கண்டு கண்டு ஆனந்தங் கொண்டிருக்கும் அந்த வேளையிலே, அக்ரோனோஸ் என்ற அந்த ஆள் வந்தான். அவன் கூட வந்த ஒரு பையன் தான் தூக்கி வந்த ஒரு வெள்ளைப் பட்டுத் துணி முட்டையை உமாரின் காலடியில் வைத்து விட்டுப்போனான்.
“என்ன இது?” என்று கேட்பது போல் உமார் அவனை நோக்கினான்.
“நம்முடைய சந்திப்பின் அடையாளமாக இந்தச் சிறிய பரிசைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். தங்களுக்கு இந்த வியாபாரியின் உதவி தேவைப்படும் போது...காத்திருக்கிறேன்!” என்று குழைந்தான்.
“ஹாஸானைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று உமார் கேட்டான்.
அக்ரோனோஸ், நரைத்த தன் தாடியைத் தடவிக் கொண்டே, “அவன் பைத்தியம் போல் உளறலாம்; ஆனால், நான் சந்தித்த பல மனிதர்களிலே, மற்றவர்கள் யாரையும் காட்டிலும், பல விஷயங்கள் தெரிந்தவனாக இருக்கிறான் ஹாஸான்! அவனுடைய இந்தச் செய்தியை நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். அது இருக்கட்டும். ஒட்டக விடுதிகளிலே எனக்கொரு செய்தி கிடைத்தது. தாங்கள் எதோ ஒரு செய்தியை எதிர்பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான்.
“ஆம்”
“மீஷித் நகரத்துத் துணி வியாபாரி அப்துல் சையித் என்பவன், நிசாப்பூரிலே, வேறொரு மனைவியைத் தேடிக் கொண்டதாகப் பல மாதங்களுக்கு முன் நான் கேள்விப் படநேர்ந்தது.” என்று கூறிவிட்டு உமாரை நோக்கினான்.
“அப்புறம்?”
“அலெப்போ நகரில் சில நாட்கள் இருந்துவிட்டு வடதிசை நோக்கிச் சென்றுவிட்டான். இது பல மாதங்களுக்கு முன்னால் நடந்தது.”
இதைக் கேட்ட உமார் ஆழ்ந்த பெருமூச்சொன்று விட்டான். அப்படியானால், யாஸ்மி அலெப்போ நகரில் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அவளைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளவாவது முடியும்!
“நீ எனக்கு இரண்டு பரிசுகள்_கொண்டு வந்திருக்கிறாய், என்னிடமிருந்து உனக்கு என்ன கிடைக்கவேண்டும். சொல்” என்று ஆவலோடு உமார் கேட்டான்.
ஆனால் பின்னர் அவன் சொன்ன பதில் உமாரைத் திகைப்பூட்டியது.
“எனக்கு ஒன்றும் தேவையில்லை. ஆனால், ஹாஸானைப் பற்றிக் கொஞ்சம் நல்ல எண்ணத்தோடு எண்ணிப் பாருங்கள். அவன் தங்கள் நண்பனாக இருக்கக் கூடியவன். அவன் தங்கள் கருணைக்காகப் பிரார்த்திக்கும் காலம் ஒன்று வரக்கூடும். அப்பொழுது நீங்கள் அவனிடம் அன்பு காட்டவேண்டும்” என்று கூறினான். பிறகு, சலாம் செய்துவிட்டு வெளியேறினான்.
திடீரென்று ஏதோ நினைவு வந்தவன்போல, உமார் தனக்கு நிசாமிடமிருந்து வந்த கடிதங்கள் வைத்திருக்கும் பெட்டியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தான். அதை நன்றாக கவனத்துடன் படித்தான். கடவுள் நம்பிக்கையற்ற முலாஹித்துக்கள் என்ற ஒரு புதிய கூட்டத்தாரைப் பற்றி எச்சரித்து நிசாம் எழுதியிருந்தார்.
மாதி என்ற ஒரு புதிய தேவதூதர் பிறக்கப் போவதாகவும், அவர், இஸ்லாமிய மதக் கோட்பாடுகளையும் அரசுகளையும் அகற்றிவிடுவாரென்றும், அவர்களுடைய அந்தப் புதிய மதம் உலகத்தின் ஏழாவது மதமாகவும், கடைசி மதமாகவும் விளங்குமென்றும் அந்தக் கூட்டத்தில் பிரசாரம் செய்து வருவதைச் சுட்டிக் காட்டியிருந்தார்.
கொரசானிய பூமியிலே மறைந்து கிடக்கும் அந்தப் புதிய தீர்க்கதரிசி என்று சொல்லப்படும் மாதியைப் பின்பற்றுவோர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அந்தக் கூட்டத்தார் மக்களிடையே மறைமுகமாகப் பிரச்சாரம் செய்து வருவதையும், அவர்கள் பிரார்த்தனை நடத்தும்போதும், பொய்யான விஷயங்களைப் பற்றிப் போதிக்கும்போதும், வெள்ளை அங்கி அணிந்திருப்பார்களென்றும், அல்லா இவர்களை மீளாத நரகத்தில் ஆழ்த்த வேண்டுமென்றும் குறிப்பிட்டு நிசாம் அந்தக் கடிதத்தை எழுதி, உமாருக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.
இதைப் படித்து முடித்த உமார் தன் எதிரில் இருந்த வெண்பட்டு முட்டையை பார்த்தான். சிரிப்பு வந்தது. நிசாம் மட்டும் இதைக் கண்டால், இது யாரிடமிருந்து கிடைத்ததென்று தெரிந்தால், வருகிற கோபத்தில் அப்படியே எரிகிற நெருப்பில் போட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கியிருப்பார். ஆனால், அந்த வெண்பட்டிலே ஓர் அழகான மேலங்கி தைத்துக் கொள்ள வேண்டுமென்று உமார் நினைத்துக் கொண்டான்.
22. அனாதைகளின் கூட்டத்தில் ஆருயிரின் மாதரசி
அலெப்பா நகரில் உள்ள ஜம்மீ மசூதியின் அருகே இருந்தக் குளத்தின் அருகிலே, மாலைத் தொழுகை நேரத்திலே, ஆறு பிச்சைக்காரச் சாமியார்களும் ஒரு கூனனும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் பழைய போர்வைகளைக் கொண்டு தங்கள் உடலைச் சுற்றியிருந்தார்கள். பிச்சைக்காரர்களுக்கே உரிய கந்தைத் துணிகளை உடுத்தியிருந்தார்கள்.
அந்தக் கூணன், ஒரு கைத்தடியின்மேல் சாய்ந்து கொண்டு, தன்னுடைய வளைந்த கைகளை நீட்டி, வழியில் வருவோர் போவோரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அந்த வழியாகப் பலப்பல விதமான மனிதர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.
படோடோபமான உடையணிந்தவர்களும், முக்காடிட்ட முகங்களுடன் அருகே நெருங்கி ஒருவரோடொருவர் பேசிக்கொண்டும், தாங்கள் வாங்கியுள்ள சாமான்களைப் பற்றியும், துணிமணிகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டு செல்லும் பெண்களும், தங்கள் தம்பிமார்களை முதுகிலும் இடுப்பிலும் தூக்கிக்கொண்டு கிடுகிடுவென்று ஓடும் சிறுமிகளும் இப்படிப் பலப் பலர் சென்றனர். கழுத்தில் மணி கட்டிய ஒரு கழுதையுடன் தொழுகைக்கு வந்த ஒரு பணக்கார அராபியன்தன் கையில் இருந்த பணத்தை ஒவ்வொன்றாக எண்ணி மற்றொரு பையில்போட்டுக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்துவிட்ட கூணன், “ஏழைகள்! ஏழைகள் கருணைக்காக ஏங்குகிறார்கள். ஆண்டவன் பெயரால் அருள் காட்டுங்கள்! அன்பு காட்டுங்கள்! ஆதரவு தாருங்கள்!” என்று கூவினான்.
“இழவு பிடித்தவர்கள்” என்று முணுமுணுத்துக் கொண்டே, எண்ணிய பணத்தை ஒரு பெரிய பையில் போட்டு அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான் அந்தப் பணக்கார அராபியன்.
“கருணை காட்டுங்கள்! அல்லாவின் பெயரால் ஆதரவில்லாத ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு அருள் புரியுங்கள்! என்று மீண்டும் கத்தினான் கூனன்.
தன்னுடைய நீண்ட அங்கி தரையிலே உள்ள தூசியிலே புரண்டு வர நடந்து வந்த ஒரு முல்லா “மசூதிக்கு வா, ஏதாவது உண்ணக் கொடுக்கிறேன்.” என்றார்.
“எனக்கல்ல, பசியோடிருக்கும் இன்னோர் ஆத்மாவுக்கு ஏதாவது வேண்டும்” என்றான் கூனன். முல்லா போய்விட்டார். அந்த வழியாக இதைக் கவனித்து கொண்டே வந்த பெண்மணியொருத்தி, அங்கே நின்று, அவனைக் கூப்பிட்டு, “உலகத்துப் பாவங்கள் அனைத்தும் ஒழிவதற்காக கண்ணிர் விடும் அந்தப் புனிதமான ஏழைக்கு இதைக் கொடு” என்று தான் வாங்கிக் கொண்டு சென்ற பொட்டலத்தை அவிழ்த்து ஒரு ரொட்டியைக் கொடுத்து விட்டுப் போனாள். இந்த உலகத்தின் பாவங்களை கழுவுவதற்காகவே ஏழைகள் கண்ணிர் விடுகிறார்கள் என்று அந்தப் பெண்மணிக்கு தெரிந்திருந்தது.
அதை வாங்கிக் கொண்ட கூணன், “அம்மா, இது சாதாரண ஆளுக்கல்ல, இரத்தக்கண்ணிர் விட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஏழைக்கு உதவியாகும்” என்று நன்றியுடன் கூறினான். அந்த வழியாக, கம்பீரமான ஒரு குதிரையிலே, வெள்ளிச் சரிகையிட்ட கெளரமான ஆடையணிந்து உமார் வந்தான். உமாரைக் கண்டதும், கூனன் ஓடோடி வந்து, “தலைவரே! நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று சொல்லியபடியே குதிரையின் சேணத்து மிதியை நடுங்கும் தன் கைகளினால் பிடித்துக் கொண்டான். “இரண்டு வருடம் பத்து மாதங்களாகத் தங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
உமார் அந்தக் கூனனுடைய ஆவல் நிறைந்த முகத்தை உற்றுப் பார்த்தான். முன் ஒரு நாள் நள்ளிரவிலே, ஒரு குளத்திற்குள்ளே நிலவு முழுகிக் கொண்டிருப்பதைக் கண்டு அழுது கொண்டிருந்த அந்தக் கூணன், பழைய சுல்தானுடைய விகடன் என்ற விவரங்கள் அவன் நினைவுக்கு வந்தன. அன்று கூட இருந்த வெள்ளைக் கழுதையை விட்டுப் பிரிந்து கிழிந்த கந்தலாடையுடுத்திப் பிச்சைக்காரனாகத் திரியும் அந்தக் கூனனைக் கண்டு வியந்தபடி, “ஜபாராக்” என்று கூவினான்.
“ஜபாரக்! ஏன் இப்படி ஏழைகளுக்கும் சாமியார்களுக்கும் இடையே கிடந்து அவதிப்படுகிறாய்? எனக்குச் சொல்லியனுப்பக்கூடாதா?” என்று உமார் கேட்டான்.
“சொல்லி அனுப்புவதா? நான்தான் தங்கள் வீட்டுக்கு வெள்ளி வளையல்களைக் கொண்டு வந்தேனே! தங்களைப் பார்க்க முடியவில்லை. பிறகு அலெப்பா நகருக்கு வந்தேன். ஒவ்வொரு பிறையாகத் தாங்கள் வருவீர்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். முதலில் அவளுக்குத் தங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் அதிகமாக இருந்தது. தங்களை நினைத்து அடிக்கடி பைத்தியம் போல் சிரிப்பாள்.
தங்கள் வீட்டுக்கே அவளை அழைத்துக்கொண்டு வரலாமென்று எண்ணினேன். ஆனால், ஓர் அழகான பெண்ணோடு முழு முட்டாளான நான் வழிப் பயணம் செய்வது ஆபத்தென்று பட்டது. எங்களிடம் பணமும் இல்லை. நீங்கள் எப்படியும் வந்து விடுவீர்கள் என்றே அவள் சொல்லிக் கொண்டிருப்பாள். தாங்கள் அவளை மறந்து விட்டீர்களா? யாஸ்மியைப் பற்றிய நினைப்பே இல்லையா? என்று கூனன் கேட்டதும், உமார் அவனுடைய மெலிந்த கைகளைப் பிடித்துக் கொண்டு, “இங்கே யிருக்கிறாளா? இப்பொழுது இருக்கிறாளா?” என்று படபடப்புடன் கேட்டான்.
ஜபாரக் என்ற அந்தக் கூனன், தன் கையிடுக்கில் வைத்திருந்த அந்த ரொட்டியைக் காட்டி, “நான் பிச்சையெடுத்து அவளைக் காப்பாற்றி வருகிறேன். ஒவ்வொரு நாள் மாலையிலும், தங்களிடமிருந்து ஏதாவது செய்தி கிடைத்ததா என்று கேட்டுக் கொண்டேயிருகிறாள்” என்று பதில் கூறினான்.
“இப்பொழுதே நான் அவளைப் பார்க்கவேண்டும். அவள் எங்கே இருக்கிறாள்?” என்று உமார் பறந்தான்.
முன் கடிவாளத்தைப் பிடித்துக் குதிரையை நடத்திக் கொண்டு ஒரு சந்து வழியாகச் சென்றான் ஜபாரக் கூனிக் கூனித் தவளை போல் நடந்த அவன், தன் கையில் இருந்த ரொட்டியை விடவில்லை. அந்தச் சந்திலே ஓரிடத்தில் குதிரையை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து உமாரை நோக்கி, - ‘அவ்ளை நோய் அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். தாங்கள் சற்று இங்கே காத்திருங்கள்.
நான் போய், அவளிடம் அல்லா அருள் புரிந்து விட்டார் என்ற விஷயத்தைக் கூறிவிட்டு வந்து விடுகிறேன்.” என்று சொல்லிவிட்டு, எதிரில் இருந்த ஒரு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். உமார், குதிரையை விட்டுக் கீழே இறங்கி அதன் முதுகிலே தன் தலையைச் சாய்த்தபடி, யாஸ்மியின் நினைப்புடன் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில், புன்னகையுடனும் பூரிப்புடனும் ஜபாரக் வெளியில் வந்தான்.
“என்ன ஆர்வம்! எத்தனை உணர்ச்சி! இவ்வளவு நாளும், கூட்டுப் புறாப்போல் அடைந்து கிடந்தவள், இப்பொழுது ஆடுவதும், பறப்பதும், வண்ணப் பூச்சைத் தேடுவதும் கண்ணுக்கு மை போடுவதுமாக இருக்கிறாள். உடுத்திக் கொள்ளப் பட்டாடையில்லை என்று தங்களுக்கு எச்சரிக்கை செய்யும்படி கூறினாள்”.
“அவள் என்னைப் பார்க்கத் தயாராக இருக்கிறாளா? நான் மேலே போகலாமா?” என்று உமார் கேட்டான். கேட்டுக் கொண்டே கதவை நோக்கிச் சென்றான்.
இருள் நிறைந்த பாதை வழியே, கற்படிகளின்மேல் தட்டுத் தடுமாறி ஏறிச் சென்று, வீட்டின் உச்சிக்குச் சென்றான். வழியிலே ருந்த தளங்களிலே, மங்கலான உருவங்கள் அவனைக் கூர்ந்து நோக்கின. ஈரத் துணிகளும், நார்த்தங் காய்களும் காயவைக்கப் பட்டிருந்த உச்சித் தளத்திலே, ஒரு மூலையிலே ஒரு கூரையின் அடியிலே, கறை பிடித்த ஒரு படுக்கையிலே யாஸ்மி படுத்துக் கிடந்தாள். அவன் அவளுடைய உருவத்தைக் காணவில்லை, அவள் இருந்த நிலையைப் பார்க்கவில்லை. ஆவல் ததும்பும் அவளுடைய கண்களை மட்டுமே பார்த்தான்.
அவள் அருகிலே சென்று மண்டியிட்டு அமர்ந்து, “என் உள்ளத்தின் உள்ளமே.” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.
“பெருமை மிகுந்த என் பிரபுவே! தங்களுக்கு ஒரு கந்தைத் துணிகூடக் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லாத ஏழை நான்” என்று கூறியவள் அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். சூடேறிப் போயிருந்த அவளுடைய கன்னங்களின் மேலே, கண்ணிர் ஓடுவதை அவனுடைய கைகள் தெரிந்து கொண்டன.
அழுது ஓய்ந்த பிறகு, அவன் அருகிலே நெருங்கி வந்தாள். அவளுடைய முகம் வெளுத்து, ஒளியிழந்து மெலிந்து காணப்பட்டது. ஆளே மாறியிருந்தாள். அவளுடைய காதல் பொருந்திய கரிய விழிகளும், இருண்ட மணம் பொருந்திய கூந்தலும் மட்டுமே முன்போல இருந்தன.
“நான் இங்கே நோயாகக் கிடக்கும்பொழுது, இரவு நேரத்தில் உச்சியில் தெரியும் விண்மீன்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஏனென்றால், அவைதாம், தங்கள் நட்சத்திர வீட்டுக்கு மேலேயும் தெரியும். தாங்களும் அவற்றையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்! அங்கே பட்டுத் திரையிலே பறக்கும் பாம்பு இருந்ததே; அது அப்படியே இருக்கிறதா? உயிருக்குயிரானவரே! என் மனக் கண்முன்னே, அந்த நட்சத்திர விடும், தங்கள் அறையும், அதில் இருந்த பொருள்களும் அப்படியப்படியே இருக்கின்றனவா? நான் பார்த்தபொழுது இருந்தபடியே இப்பொழுதும் இருக்கின்றனவா?”
“அப்படியே இருக்கின்றன அன்பே ! அவை உன் வரவுக்காகக் காத்திருக்கின்றன!” யாஸ்மி நிம்மதியான ஒரு பெருமூச்சு விட்டாள். “அப்படித்தான் நினைத்தேன்! நட்சத்திரங்களின் பெயரையெல்லாம் என்னால் நினைவு வைத்திருக்க முடியவில்லை. இரண்டொன்றின் பெயர்தான் எனக்குத் தெரியும்.
ஜபாரக் சில நட்சத்திரங்களின் பெயர்களைச் சொல்வான். நட்சத்திரங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் தங்கள் உருவம் தோன்றும். சுல்தான் அவர்களின் சபையிலே தாங்கள் மிகப் பெரியவராக வந்து விட்டீர்களாமே! இந்த அங்கியில் உள்ள ஜரிகை எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று அன்பு மொழிகளை அள்ளி வீசினாள்.
“நான் உனக்கு காத்தயானியப் பட்டாடையும், பூ வேலை செய்த நடையனும் வாங்கி வருகிறேன்” என்றான் உமார்.
“சர்க்கரைப் போட்ட சுக்குத் தண்ணிரும் வாங்கி வாருங்கள்” என்று கூறிச் சிரித்தாள். “நாம் விருந்து சாப்பிடவேண்டும். அந்த விருந்திலே குடிப்பதற்குச் சர்பத்தும் இருக்க வேண்டும்” என்றாள். “உன்னுடைய உதட்டு மதுவும் இருக்குமல்லவா?” என்று உமார் கேட்டான். வெட்கத்துடன் அவள் அவனுடைய அழகிய கன்னத்தைத் தொட்டாள். அவனுடைய அழகிய கால் சோடுகளை ஆவலோடு பார்த்தாள். “எனக்குப் பலமில்லை! இன்பத்தால் இதயம் வேகமாகத் துடிக்கும் போது வேதனையாக இருக்கிறது. தங்கள் அடிமையான நான், அழகையும் இழந்து விட்டேன்!” என்றாள்.
“அன்பே என் கண்ணுக்கு நீ அதிகமான அழகுடன் தோன்றுகிறாய்!” என்று அவளை மகிழ்வித்தான் உமார். அவள் அவன் உதடுகளில் தன் மெல்லிய விரல்களை வைத்தாள். அவன் அவற்றிற்கு முத்தம் கொடுத்து “இதோ என்னைப் பாருங்கள்! உண்மையாகச் சொல்லுங்கள்! நட்சத்திர வீட்டில் என்னுடைய அறையில், தங்களின் வேறொரு மனைவியிருக்கிறாளா?” என்று கேட்டாள்.
உமார் இல்லை என்பதற்கடையாளமாகத் தலையை அசைத்தான். அவள் அமைதியடைந்தாள்.
“எனக்குத் திருமணம் நடந்தபொழுது, என் உள்ளத்திலே கொள்ளி வைத்ததுபோல் இருந்தது. ஓடி விட முயற்சித்தேன். அப்துல் சையிது என்னை அணைக்கும் பொழுதெல்லாம் எனக்கு வேதனையாக இருந்தது. பிறகு இந்தக் காய்ச்சல் நோய் வந்தது. ஒட்டகத்தின் மேல் வைக்கும் பிரம்புக் கூடைகளில் வைத்து என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றார்கள். சில சமயம் எந்த ஊருக்குப் போகிறோம் என்றே தெரியாது.
மலைப் பிரதேசத்திலே இருந்த ஒரு விடுதியிலே, இந்தக் கூனன் ஜபாரக்கைச் சந்தித்தேன். அவன் என் மீது இரக்கம் காட்டினான். உடனே அவசர அவசரமாக என்னுடைய நீலக்கல் பதித்த வெள்ளி வளையல்களைக் கழட்டி அவனிடம் கொடுத்தேன். நிசாப்பூருக்குச் செல்வதாக இருந்த அவனிடம் அதைக் கொடுத்து தங்களிடம் என்னைப் பற்றிக்கூறும்படி கேட்டுக் கொண்டேன்.
இங்கு அலெப்போ வந்ததும், என் கணவனுக்கு என் மேல் கோபம் கோபமாக வந்தது. தனக்கு இணங்காமல் இருப்பதால், நான் அவனைப் பழிப்பதாக முடிவு கட்டினான். வெளியில் சென்று சாட்சிகளைக் கூட்டி வந்து, என்னை மணவிலக்குச் செய்து விட்டதாக அறிவித்து விட்டான். நான் பெருநோய் பிடித்தவளென்றும், கொடுமனம் படைத்தவளென்றும் சாட்சிகளிடம் காரணம் கூறினான். என்னை இங்கே அனாதையாக விட்டு விட்டு அவன் போய்விட்டான்” என்று யாஸ்மி தன் கதையைக் கூறினாள்.
“வளையலைப் பற்றியும் உன் செய்தியைப் பற்றியும் எனக்கு ஒன்றுமே தெரிவிக்கப்படவில்லை” என்று வருந்தினான் உமார்.
“நான் இப்பொழுது மணவிலக்குச் செய்யப்பட்டவள்!”
“இல்லை. நீ மணப்பெண். இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் உன்னை என்னுடைய மனைவியாக்கிக் கொள்ளப்போகிறேன். புதுப் பெண்ணே உனக்கு இது சம்மதமா?”
“இந்த மணப்பெண்ணுக்கு அழகும் இல்லை. வரதட்சயணையளிக்கப் பொருளும் இல்லை” என்று வருத்தத்தோடு பரிகாசமாகப் பேசினாலும், யாஸ்மியின் கன்னக் கதுப்புகளில் சூடான இரத்தம் பரவிச் சிவந்து விளங்கின. கண்கள் புதிய ஒளி பெற்றன. அந்த மகிழ்ச்சியில் எழுந்து உட்கார்ந்த யாஸ்மி தன் வேதனையை மறந்து உமார் எழுந்து செல்லும் வரை உட்கார்ந்தேயிருந்தாள். அவன் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் வலி தோன்றியது; படுக்கையில் சாய்ந்தாள்.
ஜபாரக் குதிரையைப் பார்த்துக் கொண்டு கீழே நின்றிருந்தான். கடிவாளத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, குதிரையின் மேல் ஏறியுட்கார்ந்து கொண்டு ஜபாரக்கோடு பேசினான் உமார். “இன்று மாலை நான் யாஸ்மியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். காஜீயொருவரையும் சாட்சிகளையும் அழைத்து வரச் சொல்லுகிறேன்.
நீ ரொட்டிக் கிடங்கிற்கு சென்று, இனிய கேக்குகளும், அரிசிக் கூழும் இனிப்பான ஷெல்லிப் பழங்களும், சிவந்த திராட்சை மதுவும் மற்ற பொருள்களும் வாங்கி வா. இந்தத் தெருவில் உள்ள மக்களையெல்லாம், மணவிழாவில் பங்கெடுத்துக் கொள்ளும்படி அழைத்து வா! குழல் ஊதுபவன் ஒருவனையும், மெழுகுவர்த்திகளையும் கொண்டுவர மறந்து விடாதே!” என்று கூறிவிட்டு, குதிரையைத் திருப்பிக் கொண்டு சென்றான். அதிசயத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டு, ஏந்திய கைகளுடன் நின்ற பிச்சைக் காரர்களைக் கவனிக்க அவனுக்கு அப்போது நேரமில்லை.
சாக்கு முட்டை நிறையச் சாமான்களுடன் வந்த ஜபாரக் வழி நெடுகிலும், “நம்பிக்கையுள்ளவர்களே! ஓ! மத நம்பிக்கை உள்ளவர்களே! திருவிழாக் கதவு திறந்திருக்கிறது! எல்லோரும் வாருங்கள்!” என்று அழைப்பு விடுத்துக் கொண்டே வந்தான்.
திருமணச் சடங்கு தொடங்கியது. முக்காடுடன் ஒரு மூலையிலே இருக்கும் யாஸ்மியைப் பற்றியே உமார் நினைத்துக் கொண்டிருந்தான். அவனருகிலே விரிப்பில் உட்கார்ந்திருந்த காதியின் கர கரத்த குரல் கேட்டது. “புத்தக வியாபாரி ஒருவரின் மகள். சரி, அவள் வரதட்சணையாக என்ன தருகிறாள்? அதாவது அவள் உனக்கு என்ன சொத்து தரப் போகிறாள் என்று கேட்கிறேன்” என்று காதி திரும்பத் திரும்பக் கேட்டார்.
நீதிபதியின் பின்னால், ஒரு குறிப்பெடுக்கும் எழுத்தாளர், திருமண ஒப்பந்தத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்.
“சொத்துத்தானே! புயற்காற்றைப் போன்ற கருத்த கூந்தலும், பூங்கொடி போன்ற அவளுடைய மெல்லிய இடையும், காதல் ஒன்றைத் தவிர வேறு எதையும் அறியாத அவள் இதயமும், இவை போதுமே! வேறு சொத்து எதுவும் அவள் தர வேண்டியதில்லை. விரைவில் மணத்தை முடியுங்கள்!” என்றான் உமார்.
“விலைமதிப்புள்ள பொருள் எதுவும் இல்லை என்று எழுது” என்று குறிப்புக்காரனிடம் கூறிவிட்டு உமாரை நோக்கி, “தாங்கள் அவள் பெயரில் என்ன சொத்துக்களை எழுதி வைக்கப் போகிறீர்கள்?” என்று காதி கேட்டார். அவன் சொன்னதைக் கேட்டதும் அவருக்கு சிரிப்புதான் வந்தது. “என்னிடம் இருக்கும் எல்லாப் பொருள்களையுமே எழுதி வைக்கிறேன்” என்றான் உமார்.
காதி தன் கைகளைக் கட்டிக் கொண்டார். சங்கடமான குரலில் குமுறியெழும் கோபத்தை வெளிக்காட்டாமல் மிக மரியாதையுடன் உமாரிடம் கூறினார். “நாம் இப்பொழுது, சட்டப்படி ஓர் ஒப்பந்தம் செய்கிறோம். காரணத்திற்கு உட்பட்ட வார்த்தைகளைக் கொண்டு பத்திரம் எழுதப்படவேண்டும். எல்லாம் என்பது எதையும் குறிப்பிடக்கூடிய சொல் அல்ல. சட்டத்தின் முன் அது பயனற்றதாகும், விவரத்துடன் ஒவ்வொரு பொருளாகக் குறிப்பிட்டு எழுதவேண்டும்.
எத்தனை ஏக்கர் நிலம் என்பதும் அது இருக்கும் இடமும், எல்லைகளும் அதில் இருக்கும் அசையும் பொருள், அசையாப் பொருள்களைப் பற்றிய விவரங்களும், நீர்க்குளங்களும், குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையும், நிலத்தின் ரொக்க மதிப்பும் குறிப்பிடப்பட வேண்டும். அடுத்துக் கொடுக்கும் பொருள்களைப் பற்றிய விவரங்கள், ஆடைகள், துணிகள் கஜக்கணக்கு,
கம்பளிகள் பட்டாடைகள் பற்றிய கணக்கு, ஒட்டகங்கள், ஆடு மாடுகள், பறவைகள் எத்தனையெத்தனை என்ற விவரம், தந்தம், மான்கொம்பு, மீன் எலும்பு, இரத்தினம், வைரம், நீலம், பச்சைக் கற்களின் விவரங்கள், எத்தனை அடிமைகள் கொடுக்கிறீர்கள். இவைகளின் தனித்தனி விலைமதிப்பு...” என்று காதி அடுக்கிக் கொண்டு போனார்.
“விலை மதிப்புள்ள எல்லாப் பொருள்களுமே கொடுக்கப்படுகின்றன என்று எழுதிக்கொள்” என்று உமார், நீதிபதியின் தோளுக்கு மேலே எட்டிக் குறிப்பாளனிடம் கூறினான். ஏற்கெனவே கட்டிக் கொண்ட தன் கைகளைத் தளர்த்திக் கொண்டே காதி ஆயாசத்துடன்,
“ஆண்டவனே! அல்லா! திருமண ஒப்பந்தப் பத்திரத்தில் இப்படிப்பட்ட சொற்களை இதற்கு முன் யாரேனும் கேட்டதுன்டா? இப்படிப்பட்ட அறிவிப்பு இதுவே முதன் முறையாகும். மேலும் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டால் இதற்குமுன் மணம் செய்து கொண்ட அத்தனை மனைவியரின் உரிமைகளையும் பாதிக்காதா?” என்று அந்த நீதிபதி விவகாரம் பேசிக்கொண்டிருந்தார். உமார் எழுந்து சென்று கை நிறையத் தங்கநாணயங்களை அள்ளிக் கொண்டு வந்தான்.
தன் அடிமைகளையும் அள்ளி வரச் செய்தான். நீதிபதி பேசுவதற்காக வாயைத் திறந்த போதெல்லாம், அவருடைய தாடியின் மத்தியில் இருந்த உதடுகள் விரிந்த போதெல்லாம் ஒவ்வொரு தங்க நாணயத்தை வாயினுள் போட்டு அவர் பேச்சை ஒரு வழியாக நிறுத்தினான். சுற்றியிருந்த சாட்சிகள் மடியில் எல்லாம் கை நிறையப் பொன் நாணயங்களை அள்ளிக் கொட்டினான். குறிப்பாளனிடமிருந்து காகிதச் சுருளைப் பறித்துச் சாட்சிகளைக் கையெழுத்திடும்படி ஆணையிட்டான்.
குறிப்பாளனின் எதிரேயிருந்த கோப்பையிலே நல்ல மதுவைக் கொண்டுவந்து ஜபாரக் ஊற்றினான். மதுவின் ஊடே, தன்னுடைய அருமையான வைர மோதிரமொன்றை நழுவ விட்டான் உமார். காதியைப் பார்த்து “தங்கள் சொற்களெல்லாம் பொன் மொழிகள்” என்று உமார் கூறினான்.
கூட்டத்தினர் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் ஆடும் பொம்மைபோல அந்தக் காதியாகிய நீதிபதி விளங்கினார். திருமணம் முடிந்து “உங்கள் அனைவரின் சாட்சியாக இன்று இந்தப்பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். மறந்து விடாதீர்கள். விருந்து காத்திருக்கிறது. குழல் வாத்தியம் வாசியுங்கள்! விருந்து சாப்பிடுங்கள்!” என்று உமார் எல்லோரையும் கேட்டுக் கொண்டான்.
எழுந்து சென்று, வராந்தா ஓரமாக நின்று தெருவைப் பார்த்தான். அங்கே எரியும் விளக்குகளின் பிரகாசமான வெளிச்சத்திலே இருக்கும் ஏழை மக்களையும், பிச்சைக்காரர்களையும் குழந்தைகளையும் குட்டிகளையும் கண்டான்.
குழல் வாசிப்பவன் காதல் கீதம் ஒன்றை அருமையான ராகத்திலே ஆலாபனம் செய்தான். உமார் அங்கே கூடியிருந்த அனைவரையும் நோக்கி, “நன்றாக உண்ணுங்கள்! உண்ணுவதற்குப் போதுமான அளவு கேக்குகள் இல்லாமல் இருந்தால், கேக்குக் கிடங்கிலிருப்பவைகள் அனைத்தையுமே உண்டு விடுங்கள். சர்பத்தும், மதுவும், மாமிசமும் அரிசிக் கூழும் எல்லாம் வயிறு நிறைய உண்ணுங்கள்.
மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியில்லாதவர் யாருமே இங்கு இருக்கக் கூடாது. அப்படி யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்டான். “இல்லை! இல்லை! அல்லாவின் அருளால் எல்லோரும் இன்பமாகவே இருக்கிறோம்!” என்று பதில் குரல்கள் பலப்பல ஒலித்தன.
உமாருக்கு மகிழ்ச்சி பொங்கியது. “எல்லாரும் மட்டற்ற மகிழ்ச்சியடைய வேண்டும். என் அன்புக்குரிய யாஸ்மியை நான் அடையும் இந்தத் திருமண நன்னாளிலே யாவரும் இன்பமாக இருக்க வேண்டும்!” என்று விரும்பினான். அவன் பார்வை பக்கத்திலே, இருந்த கணக்கனின் கைகளிலே இருந்த பணப் பெட்டியின் மேல் விழுந்தது. “அந்தப் பணப்பெட்டியை வெளியே தூக்கியெறி!” என்றான்.
“தலைவரே! இது பணப்பெட்டி” என்றான் அவன்.
“தெரியுமடா தெரியும் ! இந்தப் பணம் போனால் எனக்கென்ன பணமா இல்லை. என்னைப்போல் பணக்காரன் எவனடா இருக்கிறான்? இன்ப சொர்க்கத்தின் மதுவை குடித்துவிட்ட என்னைக் காட்டிலும் எவனடா பணக்காரன் இருக்கிறான்? என்று சொல்லிக் கொண்டே பணப் பெட்டியைப் பறித்து மேலேயிருந்தவாறு திறந்து தெருவிலே கொட்டினான்.
ஏழைகளும் பிச்சைக்காரர்களும், குழந்தைகளும், குட்டிகளும், ஆடவரும், பெண்டிரும், இளைஞர்களும் முதியவர்களும் எல்லோரும் விழுந்த பொன் நாணயங்களின் மேலே விழுந்து விழுந்து பொறுக்கினார்கள். வயிறாற உண்டறியாத அந்த வறுமையாளர் கூட்டம் அன்று வயிறாற உண்டதுடன் மின்னும் பொற்காசுகளும் கிடைத்த மிக்க மகிழ்ச்சியிலே ஆடிப்பாடிக் கொண்டு சென்றது. இவ்வாறு சீரும் சிறப்பும் பாட்டு, கூத்தும் கேளிக்கையும் வேடிக்கையுமாக உமார் கயாம்-யாஸ்மி திருமணம் நடைபெற்று முடிந்தது;
23. இதயந்தாங்காத இன்ப வேதனை
உமார் யாஸ்மியைத் தன்னுடைய கைகளிலே தூக்கிக் கொண்டான். அவள் நோயினால் நடுங்கிக் கொண்டே அவனுடைய கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவளை அப்படியே தெருவுக்குக் கொண்டு வந்தான். அங்கே தயாராகக் காத்திருந்த பல்லக்கின் உள்ளே, விரித்திருந்த பஞ்சு மெத்தையிலே மெதுவாக அவளை வைத்தான். அமீர் அஜீஸ் என்ற உமாரின் நண்பனிடமிருந்து, தற்சமயத்திற்காக வாங்கப்பட்ட பல்லக்கு அது. அதற்குக் காவலுக்கு இரண்டு வீரர்களையும் அமீர் அஜீஸ் அனுப்பியிருந்தார்.
“என் அருமை மணப் பெண்ணே! இனி நீ என்றென்றும் என்னுடைய கைகளிலேயே இருப்பாய்!” என்று அவள் காதில் மட்டும் விழும்படியாக உமார் கூறினான்.
பாதுகாப்பு வீரர்கள் பல்லக்குத் திரைகளை இழுத்து மூடினார்கள். அதுவரையில் அனாதையாகக் கிடந்த யாஸ்மியோடு ஒன்றாக வாழ்ந்த பிச்சைக் காரர்கள் எல்லாரும் விலகி வழிவிட்டார்கள்.
“அல்லாவின் புகழ் நிலைப்பதாக! பொன் நாணயங்களை அள்ளி வழங்கும் அருளாளன்; அறிவாளன் புகழ் ஓங்குவதாக!” “கூடாரமடிப்பவன் புகழ் வளர்வதாக!” என்று வாழ்த்தினார்கள்.
“இந்த மணமக்கள் வாழ்வில் இன்பம் நிறைவதாக!” என்று கூவினார்கள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்த ஒரு சிறுமி தன் கையில் இருந்த கூடையில் நிறைந்திருந்த ரோஜாப்பூ இதழ்களை உமாரின் குதிரையின் மீது கொட்டினாள்.
“தலைவரே! நாங்கள் எங்கு செல்ல வேண்டும்? கட்டளைக்குக் காத்திருக்கிறோம்!” என்று வீரன் ஒருவன் கேட்டான்.
“அங்காடிச் சந்தைக்கு செல்” என்று ஆணையிட்டான் உமார்.
“அங்காடி இந்நேரம் மூடப்பட்டிருக்குமே? பிற்பகல் தொழுகைக்குப் பிறகு அடைத்துவிடுவது வழக்கமாயிற்றே!”
“இருக்கட்டும்! நீ அங்கே செல்! விரைந்து செல்!” என்று மீண்டும் கூறினான் உமார்.
கரிய நிறமுடைய அடிமைகள் பல்லக்கைத் தூக்கினார்கள். பல்லக்கு நகர்ந்தது. அதன் பக்கத்திலேயே குதிரையை மெல்ல நகர்த்திக் கொண்டு சென்றான் உமார். பாதுகாப்பு வீரர்களும் உடன் நடந்தார்கள். அந்த வீரர்களில் ஒருவன் ஜபாரக்கிடம் மெதுவாக, “உங்கள் தலைவர் குடி மயக்கத்தில் இருக்கிறாரோ?” என்று கேட்டான். “அவர் குடித்திருப்பது போன்ற மதுவை உன் ஆயுள் முழுவதுமே குடிக்க முடியாது. பேசாமல் வா!” என்று அதட்டினான் அந்த விகடன்.
அங்காடிச் சந்தையின் தெருவாசல் அருகிலே, இராவிளக் கொன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே ஈட்டி தாங்கிய வீரர்கள் அறுவரும், காவல் தலைவன் ஒருவனும் காவல் செய்து கொண்டிருந்தார்கள். காவல் தலைவன், பல்லக்கையும், பல்லக்குடன் வரும் அரசாங்க உடுப்பணிந்த பாதுகாப்பு வீரர் இருவரையும், பக்கத்திலே வரும் உமாரையும் கண்டான். உமாரின் தோற்றத்தைக் கண்டதும் ஏற்பட்ட ஒரு மரியாதையுணர்ச்சியால் எதிரில் சடக்கென்று நின்று சலாம் வைத்தான்.
“தலைவரே! பேரரசர் சுல்தான் அவர்களின் ஆணைப்படி இந்தக் கதவுகள் இரவு நேரங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதைத் திறப்பதோ, கடப்பதோ இயலாத செயல்” என்று பணிவாகவும், சட்டத்தின் பிடிப்பை விட்டுக் கொடுக்காமலும் அந்தக் காவல் தலைவன் கூறினான்.
“சுல்தான் அவர்களின் அன்பைப் பெற்ற எனக்கு இன்றிரவு எதுவுமே அடைக்கப்படக் கூடாது. நீ இதைத் திறப்பதற்கு அனுமதிப்பதன் அடையாளமாக இந்த மோதிரத்தை வைத்துக் கொள். சீக்கிரம் கதவுகளைத் திற!” என்று கட்டளையிட்டான் உமார்.
“ஆஸ்தான சோதிடரை இவ்வளவு நேரமா காக்க வைப்பது? திற திற!” என்று உறுமினான் ஜபாரக்.
காவல் தலைவன், மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு சந்தேகம் கலந்த பார்வையுடன் தலையை அசைத்தான். வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வாசலின் இரட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்து விட்டான். தன்னுடைய வீரர்களை விலகி விடும்படி கூறினான். உமாரும், பல்லக்கும் உள்ளே நுழைந்தனர். பல்லக்குக்குப் பின்னாடியே ஒரு தாடிக்காரக் கிழவன் ஒட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டான்.
வீரர்கள் கண்ணுக்கும் காதுக்கும் எட்டாத தொலை உள்ளே நுழைந்ததும், அந்தத் தாடிக் காரக் கிழவன், உமாரின் குதிரைச் சேணத்தைப் பிடித்துக் கொண்டு, “குவாஜா அவர்களே, இந்த வழியே வாருங்கள். இந்த ஏழை எலிராக்கின் கடைக்கு வாருங்கள். பட்டுத் துணிகளும் பவழக் கற்களும் முத்து வைரமும் எத்தனையோ வகைகள் என் கடையில் இருக்கின்றன. தங்கள் மணப் பெண்ணின் சிவந்த உதட்டுக்குக் பொருத்தமான முத்துப் பதித்த தங்கப் புல்லாக்கும் இன்னும் வகை வகையான நகைகளும் இருக்கின்றன” என்றான்.
அதற்குள்ளே, மற்றொரு தாடிக்காரன் வந்து, “ஏழைகளின் பாதுகாவலரே! எங்கள் சுல்தானின் தோழரே! இந்தப் புறம் வாருங்கள். ஸீராக்கிற்கு வைரக் கல்லுக்கும் படிகாரத்துக்கும் உள்ள வேறுற்றுமை கூடத் தெரியாது. அவனுடைய கடைப்பொருள்கள் எல்லாம் போலி. எல்லாம் இந்த அலெப்போவிலேயே செய்யப்பட்டவை. என் கடைக்கு வாருங்கள். தங்க நூல் இழைத்து நெய்யப்பட்டப் பட்டுத் துணி வகைகள் கட்டுகட்டாக இருக்கின்றன.
பவழம் பதித்த வண்ணத் துணிகள், டமாஸ்கஸ் பட்டணத்திலிருந்து வரவழைக்கப் பட்டவை. எத்தனையோ விதங்கள்” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே இன்னொருவன் வந்து உமாரின் சேணத்தைப் பிடித்துக் கொண்டான்.
“தலைவரே! மதவிரோதிகளான இந்த நாய்களுடன் ஏன் பேரம் செய்கிறீர்கள்! அழுக்குப் பிண்டங்களே, எங்கள் தலைவரின் தோழியான மங்கையின் வெள்ளிக் கழுத்துக்குப் பொருத்தமான ஒளி வீசும் மணிக் கற்கள் வேண்டும் என்ப்து உங்கட்குத் தெரியவில்லையா? ஒடுங்கள்! ஒடுங்கள்! தலைவரே! உண்மையான மத நம்பிக்கையுடையவனும், சையத்தின் பேரனுமாகிய என் கடைக்கு அருள் கூர்ந்து வருகை புரியுங்கள். அழகான பொருள்கள் அனைத்தும் தங்கள் விருப்பப்படி வாங்கிக் கொள்ளலாம்” என்று, குதிரையை இழுத்தான்.
“இருட்டில் வழி மறிக்கும் குருடர்களே! உங்களிடம் எல்லாப் பொருள்களையும் நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், அவற்றின் விலையை சுல்தான் அவர்களே கொடுப்பார்கள். தெரிகிறதா? இந்த இரவு மீண்டும் வரப்போவதில்லை. உம் கடைகளை எல்லாம் திறவுங்கள்” என்று உமார் அவசரப் படுத்தினான்.
அன்று இரவு, ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமாகப் பறந்தது. கோடைக் காலமாகவும், புழுக்கமாகவும் இருந்ததால், உமார் தன் கூடார வாசலில் படுக்கையைப் போட்டிருந்தான். யாஸ்மி அதில் சாய்ந்து கிடந்தாள். அருகிலே படுத்திருந்த உமார் அவளுடைய கூந்தலின் கற்றையின் டையே தன் விரல்களை நுழைத்து கோதிவிட்டான். நீண்ட நாளைக்குப் பிறகு இப்பொழுதுதான் அவனுக்கு மறுபடி உயிர் வந்தது போலிருந்தது.
அன்றைய இரவு அழுத்தம் நிறைந்ததாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளின் துன்பப் பொழுதுகள் எல்லாம் தொலைந்து போய் விட்டன. கடலின் மேல் தோன்றிய தீய தோற்றம் கடலுக்குள்ளேயே மீண்டும் மறைந்தது. போல், அந்த நாட்கள் மறைந்து போய் விட்டன. விண்மீன் வெளிச்சத்தின் ஒளிப்பெருக்கு, அவனருகில் இருந்த யாஸ்மியின் சிவந்த கைகளைக் கோடிட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது.
அவள் மூச்சு விடும்போதெல்லாம் அவள் மேல் போர்வை ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. வெளியிலே, மணல் வெளியில் முளைத்திருந்த பச்சைப் பூண்டுகளின் காய்ந்த வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து வந்து கொண்டிருந்தது.
“அன்பே, இனியும் தூங்காமல் இருக்கிறாயே” என்று உமார் யாஸ்மியைக் கேட்டான்.
“எனக்கு மகிழ்ச்சி பொறுக்க முடியவில்லை. அது உடலைத் துன்புறுத்துகிறது. என் இன்பத்தின் அளவை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது தவறானதா?” என்று யாஸ்மி சோகம் பொருந்திய புன்முறுவலுடன் கேட்டாள்.
“அது தவறாக இருந்தால், நான் பெரும் பாவியாக இருக்க வேண்டும்!” என்றான் உமார்.
யாஸ்மி தன் விரல்களால் உமார் உதடுகளை மூடினாள். “உஷ் அப்படிச் சொல்லாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது. உங்கள் அன்பை நினைத்து ஏங்கி ஏங்கி நட்சத்திரங்கள் தோன்றியதிலிருந்து மறையும் வரை காத்திருந்தும், பார்த்துக் கொண்டே நடந்துமாய் கழித்த இரவுகள் எத்தனையோ! இப்பொழுது நம் காதல் நிேைவறி விட்டது. இனி.
இனிமேல், தங்களைப் பிரிந்திருப்பதென்பது என்றால் நினைக்கக் கூட முடியவில்லை. அப்படிப் பிரிந்து விட்டால் அதைப்போல் கொடுமையானது வேறில்லை. தங்களைப் பிரிந்து விடும்படி மீண்டும் எதுவும் நேரிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. மிகப் மிகப் பயமாக இருக்கிறது.”
“பயப்படாதே! நாம் இருவருமே, நிசாப்பூருக்குச் சென்று விண்மீன் வீட்டிலே போய் இருப்போம். நான், சுல்தானிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வருகிறேன்.”
“தங்களால் அது முடியாதா என்ன? தங்களுக்குள்ள சக்தியை நான் மறந்து விட்டேனே. ஆமாம்! எனக்காக அங்காடியிலே எத்தனை எத்தனை பொருள் வாங்கி விட்டீர்கள்! அப்படியானால் இனிமேல் நான் பிச்சைக்காரியில்லை; அல்லவா?”
“நீ என்னுடைய உயிர். மூன்று வருடங்களாக என் ஆவி நோய்ப் பட்டிருந்தது. இப்பொழுதுதான் என் நோய் தீர்ந்தது.
“நினைத்துப் பார்த்தாலே நம் வாழ்க்கை பெரும் அதிசயமாக இருக்கிறது! இல்லையா? எத்தனையோ தடவை நான் இதை எண்ணியெண்ணி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். முதலில் புத்தகக் கடை வீதியில் தங்களைக் கண்ட பொழுதே காதல் கொண்டு விட்டேன்.
பிறகு, தங்களைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாத மனவுறுதி பெற்றேன். தங்கள் அருகில் இருப்பதே பேரின்பம் என்று நினைத்தேன். ஏதோ மாயவுலகில் இருப்பது போல் மகிழ்ந்தேன். தங்களைப் பிரிந்திருந்தபொழுது என் உடலின் ஒவ்வோர் அங்கமும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.”
“இப்பொழுது எல்லாம் போய் விட்டது. அப்படித்தானே?” என்று முடித்தான் உமார்.
“ஆம்! துன்பம் எல்லாம் போய் விட்டது. ஆனால், உடல் வலி போகவில்லையே!”
“என்ன,” என்று திடுக்கிட்டபடி உமார் தலையைத் தூக்கினான். கிழக்கில், இருட்டின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. “கண்ணே நீ என்ன சொன்னாய்! பார், இரவு முடிந்து பகல் தோன்றுகிறது.
இரவு முழுவதும் உறங்காமல் இருந்து விட்டோமே, வருந்தாதே! இது நமக்கு விடிவுகாலம். இன்றைய விடிவு போல் என்றைய விடிவும் இருக்கப் போவதில்லை.
“ஆம்! இருக்கப் போவதில்லை!” என்று சொல்லி அவள் சிரித்தாள்! அது என்ன சிரிப்பு?
“இதோ, சுல்தான் கூடாரத்தில் மணியடித்து விட்டார்கள். இப்பொழுது, நான் குளித்துக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சுல்தானைப் போய் பார்க்க வேண்டும். அவரிடம் நாம் ஊர் திரும்புவதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு வரவேண்டும்; யாஸ்மி!”
“போய் அனுமதி பெற்றுக்கொண்டு விரைவில் வாருங்கள்! ஒரு சிறிது நேரமே தங்களைப் பிரிவதென்றாலும் எனக்குப் பொறுக்க முடியாது. ஆகவே, விரைவில் திரும்பி வாருங்கள்!” என்று யாஸ்மி விடை கொடுத்தாள்.
ஆனால் அவள் கொடுத்த விடை ஜன்மாந்திர விடை போலத் தோன்றியது.
24. பேகம் பொற்சித்திரமும் பினமாகிப் போனதுவே
சுல்தான் மாலிக்ஷா அவர்கள், அவன் செல்வதற்கு அனுமதியளித்து விட்டார். அவனுடைய காதல் நெஞ்சில் களிப்பு நிறைந்திருந்தது. பயணத்திற்குப் பாதுகாப்பு வீரர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டான். அடிமைகள் அவனுடைய சாமான்களை மூட்டைக் கட்டினார்கள். இரண்டு குதிரைகளுக்கிடையே கட்டிப் பொருத்தப்படக்கூடிய முறையிலே மூடப்பட்ட ஒரு பிரம்புத் தொட்டில் ஒன்றை வாங்கினான். அதிலே யாஸ்மியைப் படுக்க வைத்துக் கொள்ளலாம். ஜபாரக்கிற்காக ஒரு புதிய கழுதை வாங்கினான்.
“ஜபராக், திரும்பவும் பிச்சை யெடுக்கவே வேண்டியதில்லை” என்று சொல்லி சிரித்தான்.
அந்தக் கூன விகடன் அவனைக் கலவரத்தோடு பார்த்தான். “தலைவரே! ஒரு விஷயம் தங்களுக்கு எச்சரிக்க விரும்புகிறேன். தாங்கள் மிகவும் பலமுள்ளவர். ஆனால், யாஸ்மி மிகப் பலவீனமாக இருக்கிறாள். மகிழ்ச்சியைத் தாங்க முடியாத அளவு பலவீனமாக இருக்கிறாள்” என்றான்.
“நீ ஒரு புத்தியுள்ள முட்டாள்!”
“இல்லை, அங்கஹlனன்! வேதனையை அனுபவித்திருந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் தெரியும்!” என்று சொன்னான் ஜபாரக்.
பிற்பகலில், உமாரை வழியனுப்புவதற்காக பெரிய அமீர்கள் வந்து சேர்ந்தார்கள். குளிர்ச்சியான மாலை நேரத்திலே ஜபாரக் தன் கழுதையின்மேல் ஏறி வழிகாட்டிக் கொண்டு முன் செல்ல உமாரின் பயணம் தொடங்கியது.
அன்று இரவு யாஸ்மிக்குக் குளிர் பிடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. அவள் எந்தவிதமான உணவையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஆவலோடு உமார் அருகில் வந்தபொழுது அவள் புன்சிரிப்புடன் இருந்தாள்.
“நான் மிக அதிகமான மகிழ்ச்சியை அடைந்துவிட்டேன்! இனி அது நிச்சயமாகப் போய்விடும்” என்றாள்.
இரண்டாவது நாள் இரவு. அவர்கள் எபிரேட்ஸ் ஆற்றங்கரையிலே தங்கள் கூடாரத்தை அமைத்தார்கள். அடுத்த நாள் காலையில் பிரயாணிகளுக்காக விடப்படும் மிதப்புத் தோணிகளிலே ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். யாஸ்மி கூடாரத்திற்குள்ளே, ஏழெட்டுப் போர்வைகளால் மூடப்பட்டுக் கிடந்தாள். அவளுடைய கன்னங்களில் மகிழ்ச்சியொளி பாய்ந்து விளங்கியது. உமார் கூடாரத்திற்குள்ளே நடையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் சென்ற திசையெல்லாம் அவள் கண்களும் சென்றன. ஆனால், கழுத்தை மட்டும் அவளால் திருப்ப முடியவில்லை.
“நான் பாக்கியமில்லாத மனைவி, என் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டியதிருக்க, எனக்குத் தாங்கள் பணிவிடை செய்யும்படியான நிலையில் இருக்கிறேன். என் திருமணத்திற்காக வாங்கிய விலையுயர்ந்த சில சாமான்களைப் பார்க்கலாமா?” என்று கேட்டாள் பிரமையோடு.
அவளைச் சந்தோஷப்படுத்துவதக்ாக, பூவேலை செய்யப் பெற்ற பொன்னாடைகளையும், முத்துப் பதித்த மேலாடைகளையும் எடுத்துக் காட்டினான். தன்னை மறந்தவளாக அவள் அவற்றை விரல்களால் தடவித் தடவிப் பார்த்தாள். ஒற்றை நீலமணிக்கல் பதித்த வெள்ளித் தலைமுடியொன்றை யெடுத்துக் காண்பித்தான்.
“ஆ! இது மிக அழகாக இருக்கிறது. நாளைக் காலையில் எழுந்து தலைவாரிக் கொண்டு இந்த முடியை நான் அணிந்து கொள்வேன். பிறகு ஒருநாள் நாம் ஆற்றங்கரை அரண்மனையில் இந்த இடத்தில் அல்ல. நம்முடைய சொந்த அரண்மனையில்வெண்மையான அன்னங்கள் நீந்திச் செல்லும் அழகான ஆற்றங்கரையில் உள்ள நம் சொந்த அரண்மனையில் இருப்போம், அல்லவா?”
இப்படிப் பேசிக் கொண்டிருந்த யாஸ்மி திடீரென்று ஜன்னி கண்டவள்போல் பிதற்றத் தொடங்கினாள். நோயின் கடுமை அதிகமாகியது. அவளுடைய கண்கள் இருண்டன. உமார் பயந்து ஜபாரக்கை அழைத்தான். அவன் வந்து பார்த்தவுடனேயே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“பிளேக் வியாதி (கொள்ளைநோய்) போல் தோன்றுகிறது” என்றான் ஜபாரக்.
“இல்லை. அது ஒரு விதமான காய்ச்சல். கடவுளைப் பிரார்த்திப்போம்! பொழுது விடிவதற்குமுன் வியாதி நின்று போகும்படி வேண்டுவோம்” என்றான் உமார்.
“தொழுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை!” என்று முடித்தான் விகடன்.
குளிர் நீங்குவதற்காக ஜபாரக் கூடாரத்தைச் சுற்றி நெருப்பு எரிக்கப் பெற்றது. துணியினால் ஆன கூடாரச் சுவர்களில் நெருப்பின் செவ்வொளிப்பட்டு விளங்கிக்கொண்டிருந்தது. யாஸ்மி வேதனையால் முனகிக்கொண்டு பக்கத்துக்குப் பக்கம் புரண்டுக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் உமார் மண்டியிட்டுக் கொண்டிருப்பதும், கூடாரத்தின் ஒருமூலையிலே ஜபாரக் உட் கார்ந்து கொண்டு கடவுளின் புனிதமான பெயர்களையெல்லாம் உச்சரித்துக் கொண்டு இருப்பதெல்லாம் அவள் அறிவதற்கு அப்பாற்பட்ட விஷயங்களாகிவிட்டன. நெருப்பு அமர்ந்து சாம்பலாகி விட்டது. கூடாரத்துச் சுவர்களில் ஆடி ஒளி வீசிக்கொண்டிருந்த செந்நிறமும் மறைந்து விட்டது.
திடீரென்று உமார் ஜபாரக்கை அழைத்தான். “விளக்குளை ஏற்று. அவள் பேசிவிட்டாள். இதோ என்னைத் தொட்டுக் கொண்டிருக்கிறாள் காய்ச்சல் விட்டுவிட்டது” என்றான். விளக்கைப் பிடித்துக்கொண்டு அவர்கள் அருகிலே வந்து நின்றான் ஜபாரக், யாஸ்மியைக் கவனித்தான். அவள் அசையாமல் படுத்திருந்தாள். அவளுடைய கண்கள் முடியிருந்தன. அவளுடைய ஒரு கை உமாரின் கழுத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவள் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன.
“என் உயிரே! என் உயிரே!” அசையும் உதடுகளிலிருந்து வந்த சொற்கள் நின்றன. அவள் கழுத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜபாரக் விளக்கைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். உமார் அவளைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அவன் நினைத்தான்.
யாஸ்மி, மூச்சு விடுவதை நிறுத்திவிட்டாள். ஆனால் உமார் அவளையே கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்கு என்னவோ மாதிரியிருந்தது. விளக்கைக் கீழே வைத்துவிட்டு, உமாரின் தோள்களைத் தொட்டான்.
உமாரினுடைய ஆட்கள் எல்லோரும் கூடாரத்திற்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். திடீரென்று எழுந்த காற்று தூசியைக் கிளப்பி திரையிட்டு கொண்டிருந்தது. அந்தத் தூசித் திரையின் ஊடே சூரியன் ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஜபாரக் உள்ளும் புறமும் வருவதும் போவதுமாக இருந்தான். உமாரின் நிலையை வெளியே யிருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். “அவர் இன்னும் பேசமாட்டேன் என்கிறார். அவளுடைய முடிய கண்களில் பன்னீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்”.
“அவள் என்ன பிளேக் நோயினால்தானே இறந்துபோனாள்!” என்று ஒரு சிப்பாய் கேட்டான்.
“அவள் இறந்துபோனாள் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. இல்லாவிட்டால், திருமண நகைகளெல்லாம் எடுத்து அவளுக்கு அணிவித்துக் கொண்டிருப்பாரா?” என்று ஜபாரக் அவர்களுக்குக் கூறினான்.
“ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, வருத்தியழுதால்தான் சாகக் கொடுத்தவனுக்கு நிம்மதி ஏற்படும்.” என்றான் ஒருவன்.
“அதெல்லாம் அழுது விட்டார். இனி அவர் அழப் போவதில்லை. மழை பெய்தபின் பூத்த பாலைவனத்துப் பூப்ப்ோல் இருந்த அவள் அடுத்த நாளே அடிபட்டதுபோல் போய்விட்டாள். வெள்ளிய பூப்போல அவள் தரையில் கிடக்கிறாள். இவ்வளவு இளமையான காலத்தில் இறந்துபோகும்படி நேர்ந்ததே!” என்று ஜபாரக் வருந்தினான்.
அந்த மனிதர்கள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயிருந்த மரத்தடியில் ஒரு மேட்டிலே பெரிய புதை யான்ற்ை வெட்ட நேர்ந்ததும், சாவுக் கூடாரத்திற்கு மூடப்பட்ட அந்தத் தொட்டிலைத் தூக்கிவரத் நேர்ந்ததும் என்றுமில்லாத வழக்கமாக அவர்களுக்குத் தோன்றியது. சிறுபெண்கள் பிரசவத்தின் போதும் நோயினாலும் இறந்துபோவது எதிர்பார்க்கக் கூடியதே! தலையில் அப்படி எழுதப்பட்டிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? கரையிலே, ஆய்த்தமாக இருக்கும் தெப்பத்தை அவர்கள் சங்கடத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அவன் பித்துப் பிடித்தவன்போல் இருக்கிறான்” என்று ஒருவன் வருந்தினான்.
“இதற்குப் போய் இவ்வளவு வருந்துகிறாரே! எண்ப வெள்ளிகள் கொடுத்தால் பாக்தாதிலே எத்தனையோ பெண்கள் வாங்கலாம்!” என்றான் ஒருவன்.
“சீ நாயே! உனக்கென்ன தெரியும்? காதலின் தன்மையும் ஆற்றலும் உனக்கு எப்படித் தெரியும்?” என்று ஜபாரக் சீறினான்.
அவன் உள்ளே சென்று நெடு நேரங்கழித்துத் திரும்பி வந்தான். அடிமைகளை அழைத்து, குன்றின் உச்சியில் தோண்டப்பட்டுள்ள புதை குழிக்குத் தொட்டிலை எடுத்துச் செல்லும்படி கூறினான்.
“தலைவர், அவளைத் தொட்டிலில் வைத்து, அவளுடைய வெகுமதிப் பொருளையும்கூடவே வைத்துவிட்டார். அவருடைய கையாலேயே எல்லாம் செய்து விட்டார்.
அவளைப் பிரிந்து விட வேண்டிய நேரம் வந்து விட்டதென்று எண்ணுகிறார். அவர் கீழே படுத்திருக்கிறார். சீக்கிரம் போய்த் தொட்டிலைத் தூக்கிக்கொண்டு வாருங்கள், சீக்கிரம்!” என்று அடிமைகளை ஏவினான் ஜபாரக்.
ஒட்டகக் காரர்கள், “நாங்கள் பிணத்தைத் தூக்கிச் செல்ல மாட்டோம், மிதப்புத் தோணியிலும் ஏற்றமாட்டார்கள்” என்று கத்தினார்கள்.
“புதை குழிக்குத்தான் தூக்கிச் செல்லவேண்டும். பயணத்திற்கல்ல, புதைகுழிதான் ஏற்கெனவே தோண்டப் பெற்றிருக்கிறதே! சீக்கிரம்!” என்றான் ஜபாரக்.
பயந்துகொண்டிருந்த அவர்களை விரட்டியடித்து, பிணத் தொட்டிலைத் தூக்கும்படி செய்தான். அவர்கள் பயத்துடனும் அவசரமாகவும், மேட்டின்மேல் அந்தக் கனமான தொட்டிலைத் தூக்கிச் சென்றார்கள். மெதுவாகக் கீழே இறங்கிப் புதைகுழிக்குள்ளே வைத்துவிட்டு, மண்ணை வாரிக் கொட்டி மூடினார்கள்.
அதன் மேல் ஏற்கெனவே சேர்த்து வைத்திருந்த கற்களைக் குவித்து வைத்து விட்டு வேகவேகமாகக் கூடாரத்தை நோக்கி ஓடிவந்தார்கள். ஒட்டகக் காரர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளையும் சாமான்களையும் ஒட்டகங்களிலே ஏற்றிக்கொண்டிருந்தார்கள். சிப்பாய்கள் குதிரைகளிலே சேணம் பூட்டித் தயாராக நின்றார்கள்.
“தலைவரே! எல்லா வேலையும் முடிந்து ஆயத்தமாக நிற்கிறோம். புறப்படவேண்டியதுதான்” என்று உமாரை நோக்கி ஜபாரக் கூறினான்.
வாயில் வழியாக வெளியில் வந்த உமாரின் தலைப்பாகையின் வால் நுனி அவனுடைய வாயிதழ்களில் ஊடே பறந்து வந்து சிக்கிக் கொண்டது. வெளியில் சுழன்று கொண்டிருக்கும் தூசிக் காற்றையும் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கலங்கிய நீரையும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றான். புறப்படுவதற்குத் தயாராக நின்ற அந்த மனிதர்களைப் பார்த்து,
“இந்தக் கூடாரத்தைக் கொளுத்தி விடுங்கள். உங்களிடம் உள்ள பொருள்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எங்காவது ஓடித் தொலையுங்கள் மீண்டும் என் கன்முன்னே உங்கள் முகத்தைக் காட்டாதீர்கள். மீண்டும் நீங்கள் என்முன்னே வருவீர்களானால், உங்கள் முகங்கள் என் நினைவுகளைக் கிளறிவிடும். அதை என்னால் பொறுக்க முடியாது. போய்விடுங்கள்!” என்றான்.
“தலைவரே!” என்று ஜபாரக் மறுத்துக் கூற முன் வந்தான்.
“உன்னையும்தான். நீயும் போய்விடு. இந்த இடத்தில் பிளேக் வியாதி (கொள்ளை நோய்) இருக்கிறதென்பது உனக்குத் தெரியவில்லையா? போ! போ” என்று விரட்டினான்.
மிதப்புத் தோணி ஆற்றைக் கடந்து சென்றது. உமார் அதிலிருந்து கவனித்தான். மனிதர்களும், ஒட்டகங்களும், மிருகங்களும் கண்ணுக்கு மறைந்து விட்டார்கள். அவன் தங்கியிருந்த கூடாரம் எரியும் புகை மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. வளையம் வளையமாக எழுந்த அந்தப் புகை, பாலைவனத்துத் தூசித் திரையை இருளச் செய்தது. கதிரவன் உச்சிக்கு ஏறியதும் அதுவும் மறைந்து விட்டது.
கதிரவன் ஒரு பெரிய விளக்குபோலத் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. அதைச் சுற்றி மேகங்கள் வானத்தை அலங்கரிக்கும் கொடிகள் போல விளங்கின. ஆற்றின் இருபுறமும் தெரிந்த சாம்பல் நிறமான மணல்வெளி ஒரே வெட்டவெளியாக, ஒன்றுமில்லாத தன்மையுடன் காட்சியளித்தது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலே எதுவும் இல்லை. அவனுடன் கூட வந்த கூட்டம் வெட்ட வெளியிலே கலந்து மறைந்துவிட்டது. கூடாரத்தை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அவன் உள்ளத்திலே, உடலிலே எரிந்து கொண்டிருந்தது.
ஆற்றின் அக்கரை சேர்ந்ததும், உமார் தண்ணிர் குடிப்பதற்காக ஆற்றிற்குள்ளே இறங்கப் போனான். கூடவே வந்த ஜபாரக் அவன் தோள்களைப் பிடித்து நிறுத்தினான். “தலைவரே! அது ஆறு! இறங்காதீர்கள்! சாவு நேரிடலாம்!” என்று தடுத்தான்.
இறங்கிய அவன் கால்களை அடித்துத் தள்ளிக் கொண்டு அந்த ஆறு பெருக்கெடுத்தோடியது. கரையோரத்துக் களிமண் சிறுசிறு துண்டுகளாக ஓடும் நீரில் விழுந்து கரைந்து மறைந்து கொண்டிருந்தது. கரைக்கு இழுத்து வரப்பட்ட உமார். தரையிலே உட்கார்ந்து கொண்டு ஓடும் வெள்ளத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்திலே ஒட்டகச் சாரியின் மணியோசை அவன் காதுகளிலே ஒலித்தது.
கரையில் இருந்த தங்கும் இடத்தில் அந்தப் புதிய வியாபாரிகளின் கூட்டம் வந்து முகாமிட்டது. மிதப்புத் தோணி மீண்டும் ஆற்றைக் கடந்து செல்லத் தொடங்கியது. புதிய மனிதர்கள் தங்கள் குதிரைகளை நீர் குடிப்பதற்காக ஆற்றுக்குக் கொண்டு வந்தார்கள்.
“இல்லை, இது பிளேக் நோய் அல்ல. இவருக்குக் காய்ச்சலேயில்லை. நோய் இவர் உடம்பிலே இல்லை; மனதிலேதான் இருக்கிறது. இவ்வளவு தூரம் கவலைப் படுவாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏதாவது இவருக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். தங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று அருகிலிருந்த யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஜபாரக் கேட்டான்.
அப்பொழுது இன்னொரு மனிதன் அருகிலே வந்தான். உமாரின் கையில் ஒரு கனத்த குவளையைக் கொடுத்தான். அதிலே இரத்தம் போல் சிவந்த நிறமுடைய திராட்சை மதுவை ஊற்றினான். “ஆற்று நீர் நல்லதல்ல; இது மிக மிக நல்லது. குடியுங்கள்” என்று கூறினான். அந்தக் குரல் எங்கோ முன்பு கேட்ட குரல் போல் இருந்தது. ஆம்! அது வியாபாரி அக்ரோனோஸின் குரல்தான்.
அக்ரோனோஸின் கை, குவளையைப் பிடித்து உமாரின் உதட்டருகிலே நகர்த்தியது. உமார் சிறிது குடித்தான். இப்படியே குவளை காலியாகும் வரை குடித்தான். அவன் குடிக்கக் குடிக்க அக்ரோனோஸ் ஊற்றிக்கொண்டேயிருந்தான். அவன் ஊற்ற ஊற்ற உமார் குடித்துக் கொண்டே யிருந்தான்.
பிறகு இன்னும் சிறிது குடித்தான். அந்த மது கெட்டியாகவும் நல்ல மணம் பொருந்தியதாகவும் இருந்தது. உமாரின் மூளையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைத் தணித்தது.
25. எழுதினபடிதான் எதுவும் நடக்கும்!
கொரசான் பாதையிலே, கூர்டிஸ்தான் மலைப்பிரதேசத்தின் வழியாக அந்த ஒட்டச்சாரி சென்று கொண்டிருந்தது. ஒட்டகங்களின் மணியோசை இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பயணம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. கதிரவனின் வெப்பத்துடன், மண்ணிலிருந்து கிளம்பிய குடும் ஆட்களை அயரச் செய்து கொண்டிருந்தது. ஒரு மட்டக்குதிரையில் சென்று கொண்டிருந்த உமார் அரை குறையாகத் தூங்கிவிழுந்து கொண்டே சென்றான்.
இரவு நேரத்தில் தூக்கம் வராத பொழுது, அவன் அக்ரோனோசிடமிருந்து மதுவை வாங்கிக்குடிப்பான். காவல்காரர்களுடன் சென்று பேசிக்கொண்டிருப்பான். இவனைப் பைத்தியம் என்று எண்ணிக்கொண்டிருந்த அவர்கள், மிக மரியாதையாகப் பதில் சொல்லுவார்கள். பேசிக்கொண்டிருக்க வாய்ப்பில்லாத நேரங்களிலே, தூரத்திலே ஆற்றங்கரை மேட்டிலே அடக்கமாகிக் கிடக்கும் யாஸ்மியின் நினைவு-புதை குழியிலே முக்காட்டுத் துணியுடன் பூப்போல் கிடக்கும் அந்த அன்புடையாளின் தோற்றம் அவன் உள்ளத்திலே உருவாகும்.
அந்த எண்ணம் தோன்றியவுடனே இதயத்திலே நெருப்பு எரியத் தொடங்கிவிடும். அந்த நெருப்பை அணைப்பதற்காக அவன் மதுச்சாடியின் அருகிலே சென்று சிறிது நேரத்திற்கொருமுறையாக விட்டுவிட்டுக் குடித்துகொண்டேயிருப்பான். சமயா சமயங்களில் ஏற்படும் மனக்கவலைக்கு மதுவே மாற்று மருந்தாகப் பயன்பட்டது அவனுக்கு.
“அவர் குடித்துக்குடித்து மிகவும்,மெலிந்து போய்விட்டார்” என்று ஜபாரக் அக்ரோனோசிடம் கூறுவான். “தாகத்தோடு இருப்பதை காட்டிலும் குடிப்பது நல்லது” என்று அக்ரோனோஸ் பதில் கூறுவான்.
“ஆனால், நாளைக்கு என்ன செய்வது? அதைத் தொடர்ந்து வரும் நாட்களுக்கெல்லாம் வழி என்ன?”
“அவை வரும்பொழுது, நாம் அவற்றைப் பற்றிச் சிந்திக்கலாம். இப்பொழுது அந்தக் கவலை தேவையில்லை”.
இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டதும் உமார் தன் இருக்கையிலிருந்து, எழுந்து அவர்களைக் கவனிப்பான். “நேற்று என்பதும் நாளை என்பதும் இல்லாவிட்டால் வாழ்வு என்பது எவ்வளவு நன்றாகவும் எளியதாகவும் இருக்கும். நேற்று என்பதிலே போடப்பட்ட மறதி என்ற முக்காடு போட்டபடியே இருந்தால், வருங்காலம் என்பதனை மறைத்துக் கொண்டிருக்கும் திரை தூக்கப்படாமலே யிருந்தால், இன்றையபொழுது என்பது என்றும் மாறாமலே இருக்கும்” என்று எண்ணுவான்.
“சாந்தி! உனக்கு சாந்தியுண்டாக்கும்!” என்று ஜபாரக் முணுமுணுத்தான்.
ஒட்டகச்சாரி, பாலைவனத்து மணல் வெளியைவிட்டுக் கூர்டிய மலைப் பள்ளத்தாக்கின் சிவந்த மண் பூமி வழியாகப் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் பிற்பகலில், அந்த வியாபாரிகள் கூட்டம், ஓரிடத்திலே நின்றது. அந்த இடத்தில், மனிதனின் இடையளவு உயரமுள்ள கற்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. சில கற்களின் தோற்றம் மனிதனின் முகத்தைப்போன்ற அமைப்புடன் விளங்கியது. அந்த வியாபாரிகள் கீழே இறங்கி அந்தக் கற்களை நோக்கிச் சென்றார்கள். தள்ளியும் உருட்டியும் பாதையிலே சிறிது தூரத்திற்கு அவற்றைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.
“மலைகளிலிருந்து உருட்டிக் கொண்டுவரப்பட்ட இந்தக் கற்களுக்குப் பயணக் கற்கள் என்று பெயர். அந்தப் பாதை வழியாக வருகின்ற வியாபாரிகள், பிரயாணிகள் அனைவரும், தங்கள் தங்களால் முடிந்த அளவு, அந்தக் கற்களை மெக்காவை நோக்கிச் செல்லும் பாதையில் தள்ளி விடுவார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் அந்தப் பயணக் கற்கள் புனித நகரமான மெக்காவை அடைவதற்கு உதவிசெய்யக் கடமைப்பட்டிருக்கிறான்.
நான் சிறுவனாக இருந்தபோது இந்தக் கற்கள் ஷிரின் கோட்டை அங்காடித் தெருவில் காணப்பட்டன. இப்பொழுது, கூர்டியர் மலைக்கணவாய்ப் பாதையில் கிடக்கின்றன. இவை மெக்கா போய்ச்சேர இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?” என்று ஜபாரக் அந்தப் பயணக் கற்களின் கதையைக் கூறினான்.
அவை, மற்ற கற்களைப்போல் சாதாரணமாகத் தோன்றின. இருப்பினும், அவை நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு, இப்படிப் பாதைகளிலேயே சென்று கொண்டிருப்பதும் நின்றுகொண்டிருப்பதும் விந்தைதான்! வியாபாரிகள் அன்று மாலை மிக நீண்ட நேரத்திற்கு, தங்கள் வேண்டுகோள்களையெல்லாம் உரக்கச் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். ஏற்கெனவே அந்தப் பாதையில் சென்று பழக்கப்பட்ட பழைய வியாபாரிகள் அன்று இரவு எந்தவிதமான துன்பமும் ஏற்படாதிருக்க பிரார்த்தனையும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொண்டார்கள். ஏனெனில், மலையில் உள்ள கூர்டியர்கள் திடீரென்று இறங்கி வந்து ஒட்டகச் சாரிகளைக் கொள்ளையடிப்பது அந்தப் பாதையிலே வழக்கமான ஒரு நிகழ்ச்சி.
இரவு எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் கழிந்தது. எல்லா வியாபாரிகளும் அல்லாவுக்கு நன்றி கூறி மறுபடியும் ஒருமுறை பயணக் கற்களைச் சிறிது தூரம் தள்ளிவிட்டார்கள்.
பிறகு அவர்கள் பயணத்தைத் தொடங்கு முன்னரே, தங்கள் கூட்டத்திலே வந்த மது வியாபாரி ஒருவனை அழைத்து, தங்களுடைய ஒட்டகச்சாரி கண்ணுக்கு மறையுந் தூரம் வரை கடந்து போன பிறகு தொடர்ந்து வரச்சொன்னார்கள். தங்களுடன் கூட வரக் கூடாதென்று கூறிவிட்டார்கள்.
திருக்குரானிலே பாவம் என்று வகுக்கப்பட்ட பொருள்களிலே மது ஒன்று. அந்த மதுவைக் கொண்டுவரும் அவன் தங்கள் கூட்டத்திலே இருந்தால், அல்லாவின் கோபத்திற்கு ஆளாகும்படி நேரிடும். கொள்ளைக்காரனிடம் மாட்டிக்கொள்ளும்படி நேரிட்டாலும் நேரிடலாம். ஆகையால், தாங்கள் நெடுந்துரம் போனபிறகே, அவன் தன்னுடைய ஒட்டகங்களுடன் வரலாமென்று சொல்லிவிட்டார்கள்.
மத பக்தியுடைய அவர்கள் அக்ரோனோஸையும் தங்கள் கூட வருவதற்கு அனுமதிக்கவில்லை. “நீ ஒரு கிரேக்கன். மத விரோதி.நீயும் மது வியாபாரியுடன் சேர்ந்து வா” என்று கூறினார்கள். அதற்கு அக்ரோனோஸ், “நான் கிரேக்கனல்ல; ஆர்மீனியன்” என்றான். “அதுவும் ஒன்றுதான். பன்றிக் கறியைத் தின்னும் நீ மத விரோதிதான். நீ எங்களுடன் இருந்தால், உனக்காக வரும் தீமை எங்களையும் பாதிக்கும். எங்களோடு வராதே!” என்று கூறிவிட்டார்கள். அவன் பதில் பேசாமல் நின்றுவிட்டான்.
அக்ரோனோசையும், மது வியாபாரியையும் விட்டுவிட்டு, மற்றவர்கள் அனைவரும் தங்கள் குதிரைகளிலும், ஒட்டகங்களிலும் சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். உமார் அவர்களுடன் புறப்படாமல் தன்னுடைய மட்டக்குதிரையைப் பிடித்துக்கொண்டு, பயணக் கற்களில் ஒன்றின்மேல் உட்கார்ந்திருந்தான். அதைக் கவனித்த வியாபாரிகள் அவனை வரும்படி அழைத்தார்கள். “நான் வரவில்லை. மதுவில்லாமல் நீங்கள் போகிறீர்கள்! நான் மதுவில்லாமல் இருக்கமுடியாது! போங்கள்” என்று விடை கொடுத்துவிட்டான். ஜபாரக்கும் அவனுடன் தங்கிவிட்டான்.
அந்த மது வியாபாரி, மற்ற வியாபாரிகளின் பேச்சை, மறுத்துப் பேசவில்லை. அவர்களுடைய ஒட்டகச்சாரி கண்ணுக்கு மறையும் வரை காத்திருந்து பிறகு புறப்படும்படி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான்.
“இன்றையப் பொழுதில் என்ன நடக்க வேண்டுமென்று ஆண்டவன் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறான். அவன் எப்படி எழுதி வைத்திருக்கிறானோ அப்படித்தான் நடக்கும். அதைத் தடுக்கமுடியாது. ஒரு முட்டாள், ஒரு குடிகாரன், ஓர் அர்மீனியன் இவர்களோடு நான் பிரயாணம் செய்ய வேண்டுமென்று என் தலையில் எழுதியிருக்கிறது. அதை நான் எப்படித் தவிர்க்கமுடியும்?” என்று வேதாந்தம் பேசத் தொடங்கினான்.
மற்ற வியாபாரிகள் கூட்டத்தின் கடைப்பகுதி, தூரத்து மேட்டுக்கப்பால் மறைந்த பிறகு, மது வியாபாரி தன்னுடைய ஒட்டகங்களைக் கிளப்பினான். அவனுடைய வேலையாட்கள் தங்கள் கைக் கம்புகளை எடுத்துக்கொண்டார்கள். ஜபாரக், தன் கழுதையின்மேல் ஏறிக்கொண்டான். கண்ணைக் கூசவைக்கும் கதிரொளியில் அவர்கள் கணவாய்ப் பாதை வழியாக முன்னேறினார்கள்.
ஒரு மேட்டுச் சரிவில் அவர்கள் ரைவாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது, ஒட்டகக்காரர்கள் தங்கள் ஒட்டகங்களைச் சடக்கென்று நிறுத்தினார்கள். குதிரைக் குளம்புகளின் படபடப்பான ஓசையின் எதிரொலி அந்தப்பள்ளத்தாக்கு முழுவதும் நிறைந்தது. எங்கோ, மனிதர்களின் கூப்பாடு கேட்டது . கூர்டியர்கள் வந்து கொல்லப்போகிறார்கள் என்று மது வியாபாரி பயந்து துடித்தான். சற்றுமுன் அவன் பேசிய வேதாந்தமெல்லாம் மறந்துபோய் விட்டது.
“நாம் ஒடித் தப்பிப்பது கடினம். ஆகையால் மிருகங்களை எங்காவது மறைத்து வைப்போம்” என்று அக்ரோனோஸ் ஆலோசனை கூறினான். பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஒடைப்படுகையின் வற்றிக்கிடந்த இடைவெளியில், ஒட்டகங்களை அவற்றின் சுமையுடன் ஒட்டிச்சென்று நிறுத்தினார்கள். பக்கத்தில் வளர்ந்திருந்த செடிகளின் மறைவிலே மனிதர்கள் பதுங்கிக் கொண்டார்கள்.
“அவனுடைய விதியின் பிடியிலிருந்து யாரும் தப்பு முடியாது!” என்று அழுதுகொண்டே மது வியாபாரியும் ஒளிந்துகொண்டான். பக்கத்தில் உயர்ந்து விளங்கிய மேட்டின் உச்சியிலே வான்முகட்டிலே ஈட்டி பிடித்த குதிரைக்காரர்கள் பாய்ந்து சென்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். குதிரைக்கால்கள் சிதறி எறிந்த சிறுசிறு கற்கள் உருண்டு விழும் ஓசையையும் கேட்டார்கள்.
“இந்தக் குன்றுகளின் வயிற்றிலிருந்து திடீரென்று மனிதர்கள் பிறந்துவிட்டார்கள்! வேடிக்கைதான்” என்று ஜபாரக் மெல்லிய குரலிலே தன் விகடத்திறமையைக் காட்டினான்.
அந்தக் குதிரைகளிலே வந்த கூர்டியர்கள் வளைந்து வளைந்து விரைந்து வந்ததைப் பார்த்தால், ஒளிந்திருக்கும் இவர்களைச் சுற்றி வளைத்துக்கொள்ள வருவதுபோலிருந்தது. அக்ரோனோசின் தோள்கள் பயத்தால் ஆடின. மூச்சைப் பிடித்துக்கொண்டு இருந்தான். கடைசியாக அமைதி நிலவியது. நெடுநேரத்திற்குப் பின்னர் ஜபாரக்தான் முதன் முதலில் பேசத் தொடங்கினான்.
“அவர்கள் நம்மைக் கவனிக்கவில்லை” என்று அவன் கூவினான். அவன் கூவி ஒரு மணிநேரம் சென்ற பிறகு, தொடர்ந்து அமைதி நிலவியதை மனமாற அறிந்த பிறகுதான் மது வியாபாரி, மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியில் வந்தான்.
மீண்டும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். சிறிது தூரம் சென்றவுடனேயே அவர்கள் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து தங்கள் மிருகங்களை நிறுத்தினார்கள். அவர்களின் எதிரில், சமதளமான ஓரிடத்திலே, தங்களுக்கு முன் போன வியாபாரிகள் கூட்டத்தின் தேவையற்ற பொருள்கள் பல சிதறிக்கிடந்தன. கயிறுகளும், சாக்குகளும், உடைந்த பெட்டிகளும் அங்கங்கே சிதறிக் கிடந்தன.
ஒரு நொண்டிக் கழுதையும் சில நாய்களும் தவிர வேறு மிருகங்களோ, பொருள்களோ, அவற்றுடன் வந்த வியாபாரிகளோ யாரும் தட்டுப்படவில்லை. சிதறிக் கிடந்த அந்தப் பொருள்களுடன் நாலைந்து ஒட்டகக்காரர்கள் வாடிய முகத்துடன் குந்திக்கொண்டிருந்தார்கள். அவ்வளவுதான்.
எந்த விதமான ஆயுதமும் காணப்படவில்லை. ஆயுதந்தாங்கிய காவல் வீரர்கள் காற்றோடு காற்றாக மறைந்துவிட்டார்கள். பலப்பல வழிப்பறிக் கொள்ளைகளைப் பார்த்து அனுபவப்பட்ட அக்ரோனோஸ் வருத்தத்துடன் பேசினான்.
“நம் பாக்தாத் சகோதரர்கள் கூர்டியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தின்பதற்குரிய பறவையைப் பிடித்துச் சிறகுகளைப் பிய்த்தெரிந்து விட்டு உடலைக் கொண்டுபோனது போல வியாபாரிகளைக் கொண்டு போய்விட்டார்கள். வேகமாக ஓடும் குதிரைகளைப் பெற்றிருந்தவர்கள் சிலர் மட்டும் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் பிடிபட்டிருக்கிறார்கள்.
இனி அவர்களை விலைகொடுத்துதான் திரும்ப மீட்கவேண்டும். அவர்களோடு வந்த வீரர்கள் அவர்களைக் காக்கப் பயன்படவில்லை. பாவம், கூர்டியர்களின் அடிமைகளாகி விட்டார்கள் அருமை சகோதரர்கள்!” என்று வருந்தினான்.
அந்த வியாபாரிகள் கூட்டத்தோடு தான் செல்வதை அவர்கள் மறுத்தபோது அக்ரோனோஸ் தான் மட்டும் பின் தங்கிவிட்டான். ஆனால், தன்னுடைய பட்டுத் துணி முட்டைகளைச் சுமந்து வந்த ஒட்டகங்களை அந்தக் கூட்டத்தோடேயே அனுப்பி வைத்திருந்தான். அவையெல்லாம் கொள்ளையிலே போய்விட்டான, ஆனால், அவன் தப்பிப் பிழைத்தானே, அந்த வரையிலே சந்தோஷந்தான்.
மது வியாபாரி, பெருமூச்சு விட்டுக்கொண்டே, “உம்! எழுதியபடி நடந்து விட்டது” என்றான்.
ஆனால், உமார் சிரித்தான். மேலும் உரக்கச் சிரித்தான். “நம்மிடம் அருமையான மது இருக்கிறது. அந்த வியாபாரிகள் இழந்த சொத்துக்கள் முழுவதும் சேர்த்தால்கூட இந்த மதுவின் மதிப்பில் பாதிக்குக்கூடச் சமமாகாது. தெரியுமா! ஹி!...” என்று உரக்கச் சிரித்தான்.
அங்கு குந்தியிருந்த ஆட்களையும் நாய்களையும் தங்களுடன் கூட்டிக்கொண்டு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். ஓரிடத்திலும் தங்காமல், வேகமாகத் தங்கள் ஒட்டகங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும் செலுத்திக்கொண்டு சென்றார்கள்.
கூர்டியர்கள் மறுபடியும் வந்து தாக்கக்கூடும் என்று பயப்பட்டதால், அன்று இரவு எங்கும் தங்காமல், தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒளி வீசி ஒளிவீசி ஓய்ந்து காணப்பட்ட பழைய கிழவியான அந்த நிலவின் அடியிலே மலைமுகடுகளிலும் மேடுகளிலும் ஏறி இறங்கி அவர்கள் பயணம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.
இறந்துபோன மனிதர்கள் தங்கள் புதை குழியைத் தேடிக்கொண்டு செல்வதுபோல் சுரத்தில்லாமல், உற்சாகமில்லாமல், இந்தப் பயணம் இருப்பதாக ஜபாரக் கூறினான்.
“இருந்தாலும், காற்று நிறைந்த இந்த வெட்டவெளிப் பிரயாணம் உமாருக்குப் பிடித்தமாக இருப்பது போலத் தோன்றுகிறது” என்று அக்ரோனோஸ் கூறினான்.
அக்ரோனோஸ், ஜபாரக்கைப் பார்த்துக் கேட்டான். “இதோ, இங்கே பார், எனக்கு ஒரு விஷயம் தெரியவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலே, நீ யாஸ்மி என்ற அந்தப் பெண்ணிடமிருந்து ஏதோ செய்தியுடன் இவரைத்தேடி, இவர் வீட்டுக்கு வந்ததாகச் சொன்னாய் அல்லவா? ஆனால், அவர் உன்னை அலெப்போ நகரில் பிச்சைக்காரர் கூட்டத்தில் பார்க்கும் வரையிலே எதுவும் தெரியாதென்று சொன்னாரே அதன் விவரம் என்ன? என்றான்.
“ஏனய்யா, நான் பொய் சொல்கிறேனென்றா நினைத்தாய்? அல்லாவே நீர்தாம் சாட்சி சொல்ல வேண்டும். ஆண்டவன் அறிய நான் அவரைத் தேடி, விண்மீன் வீட்டிற்குச் சென்றேன். ஆனால், அவர் அப்பொழுது ஊரில் இல்லை. வந்தவுடன் தகவல் சொல்லும்படி, கூறி அடையாளப் பொருளும் கொடுத்துவிட்டு வந்தேன்.”
“ஆனால், அவருக்குச் செய்தியே சொல்லப்படவில்லையே! அது எப்படி? வா! அவரிடம் வந்து சொல்லு’ என்று அவனை வற்புறுத்தினான். அக்ரோனோஸ்.
“முடியாது. அவர் அந்தப் பெண்ணின் ஏக்கமாகவே இருக்கிறார். அவளைப் பற்றி நினைவுபடுத்தினால் கெடுதலாக முடியும். பயமாக இருக்கிறது” என்று ஜபாரக் மறுத்துவிட்டான்.
“அதெல்லாம் ஒன்றும் நடக்காது. வா” என்று கூறி அந்த ஆர்மீனியன், விகடனின் கழுதையுடைய மூக்கணாங்கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டே தன் குதிரையைத் தட்டிவிட்டு, முன்னால் சென்று கொண்டிருந்த உமாருக்குப் பக்கத்திலே, வந்து குதிரையைச் செலுத்திக் கொண்டே பேசினான். “மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ஜபாரக் யாஸ்மியிடமிருந்து ஓர் அடையாளம் கொண்டு வந்தானாமே அதை மறந்து விட்டீர்களா?” என்று கேட்டான்.
உமார் தன் குதிரையை நிறுத்தி, அவர்களை நோக்கினான்.
“தலைவரே! நான்செய்தி தெரிவித்து விட்டு வந்தபிறகு கூட, மாதக் கணக்காக தாங்கள் தேடி வரவில்லையே, காரணம் என்னவென்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்” என்றான் ஜபாரக்.
“என்ன அடையாளப் பொருள்? என்ன செய்தி?”
“நீலக்கல் பதித்த வெள்ளி வளையல் ஒன்று கொண்டு வந்தேன். யாஸ்மி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். மேற்குத் திசையில் உள்ள அலெப்போ நகருக்குக் கொண்டு செல்லப் படுகிறாள் என்ற செய்தியைக் கொண்டு வந்தேன்.”
யாஸ்மியின் கைகளில், தான் அந்த வளையல்களை அணிவித்தது உமாருக்கு நன்றாக நினைவு இருந்தது. அந்த நினைவு வந்ததும், குதிரையின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தான்.
“எனக்குத் தெரியாது. நீ யாருடன் பேசினாய். வேலைக்காரனுடனா அல்லது பேராசிரியர் குவாஜா மைமனிடமா” என்று உமார் கேட்டான்.
“இல்லை, அவன் பெயர் எனக்குத் தெரியாது. பருமனாக இருந்தான். மணி போன்ற குரல், வானத்தையொத்த நீல நிறத் தலைப்பாகை அணிந்திருந்தான். நான் தகவல் சொல்லத் தொடங்கும் முன்பாகவே, “யாஸ்மிக்கு நோயாமே? என்று கேட்டான்” என்று ஜபாரக் சொல்லிக் கொண்டு, வரும்போதே, “நிறுத்து அவன்தான் டுன்டுஷ் என்னை ஏமாற்றிவிட்டான். என்னிடம் பொய் சொல்லியிருக்கிறான்” என்று வெறிபிடித்தவன் போல் கூவினான்.
பிறகு எதுவுமே பேசாமல் இருந்தான். பிரயாணம் தொடர்ந்து நடந்தது. ஜபாரக்கும் அக்ரோனோசும் பின் தங்கிச் செல்லும்போது, “உனக்கு இதனால் என்ன இலாபம்? இதனால் என்ன பயன், வீணாக, அவருக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும்படி செய்து விட்டாயே!” என்றான்.
“நேற்றுக் கொள்ளை கொடுத்தேனே பட்டுத் துணி மூட்டைகள் அவற்றின் விலைமதிப்புக்குச் சமமானது இந்த செயல்” என்றான் அந்த அர்மீனியன். அவனுடைய புன்சிரிப்பும், மேற்கண்ட சொற்களும் ஜபாரக்கிற்கு எதையும் புரிய வைக்கவில்லை. நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவன் டுன்டுஷை உமாரின் நேரடி எதிரியாக நிறுத்தவே இந்த வேலையைச் செய்கிறான் என்று யூகிக்க முடிந்ததே தவிர, இவனுக்கும் டுன்டுஷுக்கும் என்ன பகை என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
26. ஆராய்ச்சியில் நேர்ந்த அதிசயத் தவறு
நிசாப்பூர் ஆற்றங்கரையில் இருந்த விண்மீன் வீட்டிலே பேராசிரியர் குவாஜா மைமன் இபின் நஜீப் ஆலவைஸ்தி என்ற பாக்தாது தேசத்துக் கணிதப் பேராசிரியன் ஆராய்ச்சிக் கூடத்திலே உட்கார்ந்திருந்தான். அந்தக் கிழவனுக்குப் பக்கத்திலே உர்கண்டு ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்த முசாபர் அல் இஸ்பிகாரி என்ற பேராசிரியன் ஒருவனும், கடந்த ஓராண்டு காலமாக அவர்களுடன் கூட வேலை செய்த மற்ற அறுவரும் உட்கார்ந்திருந்தார்கள்.
ஓராண்டு காலமாக அவர்கள் செய்து வந்த ஆராய்ச்சியின் பலன் எதிரிலே இருந்த மேசைமேல், எழுதப் பெற்ற காகிதங்களாகக் கிடந்தது. அவற்றிலே, குறிப்பிடப் பட்டிருந்த கணக்கு விவரங்கள் அவர்களுடைய தினசரி ஆராய்ச்சிக் குறிப்புகளாகும். பேராசிரியர் மைமன், தங்கள் வேலையின் பயனைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கு முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமார் அங்கு கிடந்த மெத்தை தைத்த நாற்காலியில் கையையும் காலையும் நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தான். மேலைத் தேயத்திலிருந்து திரும்பிய அவனைப் பார்த்த மைமனும் மற்றவர்களும், அவன் குடிமயக்கத்தில் இருக்கிறான் என்று எண்ணினார்கள்.
அவன் குடிக்காத போதும் கூடக் குடிகாரனைப்போலவே தோன்றினான். சுற்றிலும் ஆட்க்ள் இருக்கும்பொழுதே, தனக்குள்ளே மெல்லிய குரலிலே ஏதோ பாட்டை இராகம் இழுத்துக் கொண்டிருந்தான்.
மேலும் அவனுக்குப் பின்னாலே அருவருப்பான உடலமைப்புடைய விகடன் ஒருவனும், நரைத்த தாடிக்காரன் ஒருவனும் இருந்தார்கள். விஞ்ஞான மேதைகளின் இடையிலே ஒரு முழு முடனான விகடனைக் கொண்டுவந்து வைத்திருப்பதன் மூலம், உமார், தன் மதிப்பை இழக்கின்றான் என்று மைமன் நினைத்தான்.
அருவருப்பான குரலில், மைமன் தன்னுடைய அறிக்கையை உமாரின் முன் வைத்தான். அந்த அறிக்கையிலே, ஓராண்டின், மணிக்கணக்கும், கதிரவன் நேரத்தின் கணக்கும் இருந்தன.
பூமத்திய ரேகைச் சூரியோதயக் கணக்கு, ஏற்கெனவே நிலைநிறுத்தப்பெற்ற காலக்கணக்கிற்கு, மூன்று மணி ஒன்பது நிமிடம் வேற்றுமைப்படுகிறது” என்று மைமன் தன் கணக்கின் முடிவைத் தெரிவித்தான்.
“என்ன, ஒருமுறை பூமத்திய ரேகையிலிருந்து புறப்பட்டு, மறுபடி சூரியன் அங்கு வந்து சேர்வதற்கு, மூன்று மணி ஒன்பது நிமிடம் தாமதமாக வருகிறதா?” என்று உமார் விளக்கமாகக் கேட்டான்.
“ஆம்” என்று உறுதியான குரலில் மைமன் கூறினான். உமார் இல்லாத போது சூரியோதயக்கணக்கை தான் மிக அக்கறையாகவும் ஆழ்ந்தும் கவனித்திருப்பதைச் சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பெருமையாக் இருந்தது. உமார் இல்லாதபோது தானே செய்ததால், பெருமை தனக்கேயுரியது என்று நினைத்துப் பூரித்தான்.
“இருக்க முடியாது. உன்னுடையூ_நீர்க் கடிகாரம்தான் தவறானது. அதை உடைத்து எறிந்துவிடு” என்றான் உமார்.
அதற்குள்ளே, இஸ்பிகாரி என்ற இன்னொரு பேராசிரியன், “தலைவரே! நீர்க்கடிகாரத்திலே அப்படி ஒன்றும் தவறு இல்லை. அதற்கும் சூரியோதயத்திற்கும் ஏறக்குறையப் பதினேழு நிமிடங்கள்தான் வேற்றுமையிருக்கிறது, அது அப்படி ஒன்றும் பெரிய வேற்றுமையல்ல!” என்றான்.
“அட கடவுளே! அவ்வளவு சரியாக வேலை செய்கிறதா அந்தக் கடிகாரம்? அப்படிச் சரியாக இருந்து ஆண்டொன்றில் மணி பதினெட்டு நிமிடங்கள் கணக்கு வித்தியாசப்படுகிறதா?” என்று கேட்டான். “அதற்கு நாங்கள் என்ன செய்வோம் நம்முடைய் விதி” என்று இழுத்தான் அவன். “மடையர்களே! என்ன செய்வதாம் என்ன செய்வது! போங்கள். அங்காடிச் சந்தையிலே அழகான ஆட்டக்காரிகள் நிற்பார்கள். போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து விட்டுத் திரும்பி வாருங்கள்.
நீே வித்தியாசப்படுகின்ற மணிக்கணக்கு ஓடி மறைந்துவிடும். பெரிய கணிதப் பேராசிரியர்கள் ஆராய்ச்சிசெய்ய வந்து விட்டார்கள்! எங்கேயாவது பள்ளிக்கூடத்திலே போய்ப் பாடம் நடத்துவதை விட்டு விட்டு, ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டார்கள்! போங்கள், போங்கள்! உபயோகமற்றவர்கள்!” என்று பொரிந்து தள்ளினான் உமார். இஸ்பிகாரியும் மற்ற ஆராய்ச்சியாளர்களும், வாயை முடிக்கொண்டு வெளியேறி விட்டார்கள். மைமன் மட்டும் ஆடாமல் அசையாமல் அச்சடித்த பதுமைபோல நின்றுகொண்டிருந்தான்.
500px
“தலைவரே! ஆறுமணி நேரம் என்பது அப்படி என்ன பெரியது? ஒரு வெள்ளரிப் பழத்தைத் தின்றுவிட்டுக் குறட்டைவிட்டால் எழுந்திருக்கும் போது மணி சரியாக வந்துவிடும்!” என்று ஜபாரக் கூறினான்.
“ஆகா! நீயும் வானசாஸ்திரிதான்! பலே, பலே! அவர்களுக்கு நீ ஒன்றும் குறைச்சலில்லை” என்று கோபத்துடன் வேடிக்கையாகக் குமுறிவிட்டு, “அரக்கு வைத்து மூடியிருக்கும் அந்தச் சாடியைத் திறந்து - மது ஊற்றிக் கொண்டுவா” என்று உமார் கட்டளையிட்டான்.
அவன் குவளையில் ஊற்ற ஊற்ற உமார் குடித்துக் கொண்டிருந்தான். இந்தக் கூடாரம் அடிப்பவன் உடலுக்குள்ளே - ஏதோ பேய் குடிகொண்டிருப்பதாகவே மைமன் நினைத்தான். தன்னுடைய மனது தெளியும்வரை அந்த இடத்தை விட்டுப் போகக் கூடாதென்று அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
ஏனெனில் அவன் அதுவரை குறித்து வைத்திருந்த கணக்குகள் அனைத்தும் ஒழுங்காக ஒருநாள் கூடத் தவறாமல், மிகக் கவனமாக எடுக்கப்பட்ட குறிப்புகளாகும். சிறிது நேரம் சென்றதும் உமார், மேசைமேல் கிடந்த குறிப்புத் தாள்களைக் கைகளில் எடுத்துக் கொண்டே, “இந்தக் குறிப்பெல்லாம் யார் எடுத்தது? என்று கேட்டான்.
“தலைவரே! நானே எடுத்த குறிப்புகள்! பலமுறை சரிபார்த்துவிட்டேன்! தாங்கள் அதில் ஏதும் தவறு காணமுடியாது” என்று மைமன் உறுதியளித்தான்.
உமார், முதல் காகிதத்தில் இருந்த அந்தக் குறிப்புகளை ஒரு பார்வை பார்த்தான். அடுத்த காகிதத்தை எடுத்தான். ஆழ்ந்த கவனம் செலுத்தி அதைப் பார்த்தான். பிறகு மைமனை நோக்கி “நீ உன்னுடைய குறிப்புகள் எல்லாம் சரியானவை என்று அடித்துப் பேசுகிறாய். இஸ்பிகாரி, அவனுடைய கடிகாரத்தில் தவறு கிடையாதென்று உறுதி சொல்லுகிறான். ஆக, உங்களில் எவனோ ஒருவன் தவறு செய்திருக்கிறீர்கள்? அது யார்? அதுதான் தெரியவேண்டும்!” என்று கேட்டான்.
“நீர்க்கடிகாரம் சரியாகவே வேலை செய்கிறது. அதை நானும் உறுதியாகச் சொல்லமுடியும். ஏனெனில் அதை ஒரு மாதம் முடிந்தவுடனேயே சரிபார்த்துக் கொண்டுதான் தொடர்ந்து வேலைக்குப் பயன்படுத்தினோம். காயாவின் ஆணையாக நான் செய்துவைத்த குறிப்புகள் என் கையாலேயே தவறு இல்லாமல் குறிக்கப்பட்டவை என்று உறுதியாக நான் கூற முடியும்”.
“அறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையின் உதவியைக் கொண்டுதானே இதைக் கணக்குச்செய்து எழுதினாய்?”
“ஆம்!”
“டோலமி அவர்கள் தன் ஆராய்ச்சியை அலெக்சாண்டிரியா நகரத்தில் இருந்து செய்தார். நீ இப்பொழுது நிசாப்பூரிலிருந்து செய்கிறாய். இரண்டும் வேறு வேறு பூரேகைகளில் உள்ள இடங்கள். அவற்றின் கால வித்தியாசத்தைக் கணக்கில் சேர்த்துக்கொண்டாயா?
“அப்படியேதான் செய்தேன். இதோ கடந்தமாதத்தின் நட்சத்திர அட்டவணை. தாங்களே இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.”
பேனாவை எடுத்து உமார் ஒரு சிறு கணக்குப் போட்டுப்பார்த்தான். நட்சத்திர அட்டவணையில் ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, அதிலிருந்த இட வித்தியாசத்தைக் கணக்குச்செய்து, மைமன் தயாரித்திருந்த குறிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தான். கணக்குச் சரியாகவே இருந்தது.
உமார் ஒன்றும் புரியாமல் முகத்தைச் சுளித்துக்கொண்டான். என்னடா இது! கணக்கில் தவறில்லை. நட்சத்திரங்களின் நிலையில் வேற்றுமையில்லை. கடிகாரமும் தவறானதல்ல. இருந்தும் ஆறு மணிநேரம் வித்தியாசம் என்றால் ஒன்றும் புரியவில்லையே! உனக்கு ஏதாவது படுகிறதா?” என்று மைமனைக் கேட்டான்.
“எனக்கும் அதுதானே விளங்கவில்லை”
“டோலமியின் நட்சத்திர அட்டவணையைக் கொண்டு வா!” என்று கேட்டுப் பெற்று, அதை மேசைமேல் விரித்து வைத்துக் கொண்டான். மைமன் குறிப்புகளின் முதல் காகிதத்தையும் எடுத்துக் கொண்டான். குனிந்த தலையுடன். தன் வேலையைத் தொடங்கினான். விளக்கு எரிந்து கொண்டிருக்க, நேரங்கடந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸ் தன் படுக்கையில் போய் சாய்ந்தான். குறட்டை விடத்தொடங்கி விட்டான்.
ஜபாரக் ஒரு மூலையிலே கந்தைத் துணியை விரித்துப் படுத்துக் கொண்டான். மைமன் மட்டும் ஆந்தையைப் போல் விழித்துக் கொண்டு உமார் வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டேயிருந்தான். எரியும் விளக்கில் எண்ணெய் குறையும் போதெல்லாம், மேலும் மேலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான்.
“இப்படி யிருக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு காகிதமாக எடுத்துக் கணக்குச் செய்து கொண்டே இருந்தான். காலைப்பொழுது விடியும் நேரத்தில்தான், மைமனின் குறிப்புகளின் கடைசித் தாளைப் பரிசோதனை செய்து முடித்தான் உமார்.
“என்னுடைய எண்கள். சரியாக இருக்கின்றனவா?” என்று தயங்கிக் கொண்டே மைமன் கேட்டான்.
சிறிது நேரம், டோலமியின் அட்டவணையின் முதல் பக்கத்தையும் கடைசிப் பக்கத்தையும் ஆழ்ந்து கவனித்தான் உமார். “உன்னுடைய கணக்குக் குறிப்பில் எந்தவிதமான பிழையும் இல்லை. ஆறு மணி பதினெட்டு நிமிடம் என்ற தவறு நிலையான தவறு.
இதோ பார், முதல் எண்ணும் ஒரே மாதிரியாக ஆறு மணி பதினெட்டு நிமிடங்கள் வேற்றுமைப் படுகின்றன. முதலிலிருந்து கடைசி வரை அந்தத் தவறு நிலையாக இருக்கிறது!”
தன்னுடைய கணக்கு முழுவதுமே தவறு என்று கூறுகிறாரே என்று மனம் வருந்தி விழித்துக் கொண்டு நின்றான் மைமன். “புரியாத விஷயமாக இருக்கிறது. அதை ஒப்புக் கொள்வதைத் தவிர! வேறு வழி என்ன இருக்கிறது? என்று வருந்தினான். ஆனால் அந்த சமயத்தில், உமார் “இதோ பார்! தவறு இங்கே இருக்கிறது!” என்று கூறி டோலமியின் கையெழுத்துப் பிரதியைக் காட்டினான்.
“கடவுளே என்ன சொல்கிறீர்கள். அதிலேயே பிழை? இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளாகப் பயன்பட்டு வந்திருக்கும் இந்த அட்டவணையில் பிழையிருக்க முடியாது.” என்று மைமன் குளறினான். தன்னுடைய கணக்குத் தவறு என்பதை ஒப்புக் கொள்ள அவன் தயாராக இருந்தான். ஆனால் அறிஞர் டோலமியின் ஆராய்ச்சி முடிவைத் தவறு என்று கூற அவனுக்கு அச்சமாயிருந்தது.
“ஆம்! அந்த நிலையான தவறு இங்கேதான் இருக்கிறது!” என்று மறுபடியும் உமார் கூறினான்.
“அது எப்படி இருக்க முடியும் அப்படிப்பட்ட பெரிய ஆராய்ச்சியாளர் தவறு செய்வாரா? இருக்க முடியாது!” என்றான் மைமன்.
இரவு முழுவதும் விழித்து அயர்ந்த கண்களில் சிந்தனையின் அறிகுறியைக் காட்டியபடி மைமனை நோக்கி உமார் கூறினான்.” அந்தத் தவறு எப்படி நேர்ந்தது என்பது தெரிந்தால் நாம் அவரையே திருத்தலாம். ஆனால், அலெக்சாண்டரியாவைச் சேர்ந்த அந்த மனிதன் புதைகுழியில் போய் வெகு நாட்களாகி விட்டனவே!”
அந்தக் கிழட்டுப் பேராசிரியன் உமாரின் இந்தக் கூற்றை நம்பவில்லை. இஸ்லாமிய விஞ்ஞானிகளால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரப்படும் டோலமி அட்டவணையைத் தவறு என்று சொன்னால், நிசாப்பூர் மசூதியின் தூண்கள் ஆடி விழுந்துவிடும், உலகமே அழிந்து விடும் என்பது திண்ணம்.
“நாம் இவ்வளவு நாளும் செய்த ஆராய்ச்சிகள் வீணானவை, பயனற்றவை. பேராசிரியர் காரெஸ்மியின் உழைப்பும், மற்றவர்களின் பணியும் வீணானவை. நம்முடைய குறிப்புக்களே தவறானவை, பொய்யானவை” என்று திரும்பத் திரும்பக் கூறினான். அவன் மூளை குழம்பியது. தரையே உயரக் கிளம்பினாலும் அவன் ஆச்சரியப் படமாட்டான். ஆனால் டோலமியின் அட்டவணை தவறு என்பதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் உமாரின் கரிய கண்களிலே உறுதியான பார்வையிருந்தது.
“மைமன், கொஞ்சம் பொறு. தவறு சாதாரணமானது தான். ஆனால் நிலையானது. முதல் குறிப்பிலும் தவறு இருக்கிறது. கடைசிக் குறிப்பிலும் தவறு இருக்கிறது. நீயோ, உண்மையான குறிப்புகளையே எடுத்துக் கணக்குச் செய்து போட்டிருக்கிறாய்.
ஆனால் அது தவறாக இருக்கிறது. உண்மையே தவறாக இருக்க முடியாது. ஆனால் அந்த இடத்திலே அப்படித் தோற்றமளிக்கிறது. இந்த இரகசியத்தை முடியிருக்கும் முக்காட்டைக் கிழித்து எறிந்து விட்டோமானால், பயன் கிடைக்கும்.” மைமன் தலையாட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்யக்கூடிய நிலையில் இல்லை. “ஆ! அந்தச் சாவியை மட்டும் தேடி எடுத்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று கூறிய உமார்,
“என்னிடம் சொல். டோலமியின் கீழ்மேல் ரேகைகளும், தென் வட ரேகைகளும் சரியானவை அல்லவா? என்று மைமனைக் கேட்டான்.
“சரியானவைதான்! இதில் சந்தேகமென்ன? முப்பது தலைமுறைகளாக அதைப் பின்பற்றி வருகிறோமே!” என்றான்.
“அப்படியானால், இந்த நட்சத்திர அட்டவணையைப் பயன்படுத்துவதற்குரிய வழி அவருக்கு (டோலமிக்கு)த் தெரிந்திருக்கத்தான் வேண்டும். அவரால், இந்த அட்டவணைகளைச் சரியாகப் பயன்படுத்தமுடியும். ஆனால், நம்மைப் போல் வழி தெரியாமல் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் தவறும்படியே நேரிடும்.
ஆனால், இப்பொழுது நாம் இந்த அட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாம் மட்டுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று கூறி உமார் அந்த அட்டவணையின் மீது தன் கையை வைத்துக்காண்பித்தான்.
“உண்மையிலிருந்து பொய்யை ஒரு சின்னஞ்சிறிய மயிரே பிரித்துக் காண்பிக்க முடியுமானால், பொய் உண்மையாகி விடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று மைமன் வேதாந்தம் பேசினான்.
உமார் மைமனைக் கூர்ந்து நோக்கினான். “மைமன், நீ வயது முதிர்ந்தவன், என்னை மன்னித்து விடு. பொய்யே உண்மையாக மாறக்கூடிய வழியை நீ எனக்குக் காட்டி இருப்பது தெரிகிறது; நன்றாகத் தெரிகிறது” என்றான்.
“யா அல்லா அதை யாராலும் பார்க்க முடியாது!”
“அப்படிச் சொல்லாதே! வழி மிக எளிமையானதுதான். நான் கேட்பதற்குப் பதில் சொல். இந்த அட்டவணையை நிசாப்பூரின் ரேகைக்குச் சரியாக மாற்றித் திருத்தினாய் அல்லவா? ஏன் அதை அப்படித் திருத்தினாய்?
இந்தக் கேள்வி, மைமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகச் சாதாரணமாக இந்தக் கேள்வியை, ஏதோ ஒன்றும் தெரியாதவனைக் கேட்பது போல உமார் கேட்டான். இருப்பினும் மைமன் பதில் கூறினான். “விண் மீன்கள் நிலையாக இருக்கின்றன.
நிசாப்பூரிலிருந்து நாம் அவற்றைப் பார்க்கும் கோணத்திற்கும், டோலமி ஆராய்ச்சி செய்த இடமான அலெக்சாண்டரியாவிலிருந்து பார்க்கும் கோணத்திற்கும் வேற்றுமையுண்டு. அந்த வேற்றுமையின் அளவுக்கு, அந்த அட்டவணையை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.”
“சரி, அலெக்சாண்டிரியாவிலிருந்து அவை பார்க்கப்படவில்லை; ஆராய்ச்சி செய்யப் படவில்லை என்று இருந்தால்...!
“அது எப்படி? அறிஞர் டோலமியின் ஆராய்ச்சிக்கூடம் அலெக்சாண்டிரியாவில்தானே இருந்தது?”
“ஆம்! அந்த விஷயத்தில்தான் நாம் தவறு செய்திருக்கிறோம்!”
பொறுமையிழந்தவனாகவும், புரிந்து கொள்ள முடியாதவனாகவும் இருந்த மைமன், உமாரை நோக்கி, “தங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று மெதுவாகக் கூறினான்.
“இல்லை, கவனி. அலெக்சாண்டிரியாவில் ஆராய்ச்சி செய்த அறிஞர் டோலமி இந்த அட்டவணையைத் தயாரிக்கவில்லை. இது வேறோர் இடத்திலே, எப்பொழுதோயிருந்த யாரோ ஒருவரால், அவருடைய, காலத்துக்கு முன்னாலேயே தயாரிக்கப் பட்டிருக்கிறது.
இதை இன்று நாம் பயன்படுத்துவது போல - அவரும் பயன்படுத்தி வந்திருக்கிறார். நாம் இது டோலமியின் அட்டவணை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம் . ஆனால், அவருக்கு இது யாரால், எந்த இடத்தில் தயாரிக்கப்பட்டதென்பது நன்றாகத் தெரியும். ஆகவேதான் அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றன.”
மைமனுடைய கண்களிலே புதிய ஒளி பிறந்தது. இப்பொழுதுதான் அவனுடைய குழப்பம் தெளிந்தது. திடீரென்று அவன் பிரச்சினையின் உண்மையைப் புரிந்து கொண்டான். ஒன்பது நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த உண்மையை இப்படி ஆராய்ந்து கண்டு பிடிப்பதென்றால், உமாருக்கு ஏதோ விசேஷ சக்தியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
“உமாரிடம் ஓர் அபூர்வ ஆற்றல் இருக்கிறதென்று நிசாம் முன்பே சொல்லியிருக்கிறாரே!” அப்படித்தான் இருக்க வேண்டும், இருப்பினும், யார் இந்த அட்டவணையைத் தயாரித்தவர் என்பதும் எந்த ஊரில் என்பதும் நமக்குத் தெரியவில்லையே! இதைத் தயாரித்தவன் பாபிலோனைச் சேர்ந்த ஒரு சாலடியவனாகவோ, இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு ஹிந்துவாகவோ, மேலை நாட்டைச் சேர்ந்த ஒரு கிரேக்கனாகவோ இருக்கலாம். யாருக்குத் தெரியும்?” என்று பெருமூச்சு விட்டான் மைமன்.
எந்த இடத்திலிருந்து ஆராய்ச்சி செய்து இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது என்பது தெரியும் வரை அதைப் பயன்படுத்துவது முடியாத செயல். அதைக் கொண்டு மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வது கடினம். அறிஞர் டோலமிக்கு அதன் மர்மம் தெரிந்திருந்தது.
ஆனால், முதலில் கண்டு பிடித்த ஆராய்ச்சியாளனின் பெயரையும் ஊரையும் மர்மமாகவே விட்டு விட்டுச் செத்து விட்டார் டோலமி.
“இன்னும் சில நாட்களில், ஆராய்ச்சி செய்த இடத்தை இந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட இடத்தை - நான் கண்டு பிடித்துச் சொல்கிறேன். இப்பொழுது நான் தூங்க வேண்டும்” என்று சொல்லி விட்டு உமார் தன் அறைக்குச் சென்றான்.
ஒரு முறை அதிசயச் செயல் புரிந்தவன் மறுபடியும் செய்வானென்று எதிர்பார்க்கலாம். ஆனால், கணித விஷயத்தில் இப்படி ஓர் ஆபூர்வக் கண்டுபிடிப்பை மைமன் இது வரை பார்த்ததுமில்லை. கேள்விப் பட்டதுமில்லை.
மைமனுடன் கூட வேலை செய்த மற்றவர்கள் அனைவரும், காலைத் தொழுகையை முடித்து விட்டு, உமாருடன் பேசிக் கொண்டிருக்கும் மைமனுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெருமித உணர்ச்சியுடனும், நிமிர்ந்த தலையுடனும், ராஜநடை போட்டு வந்த மைமன் அவர்கள் எதிரே நின்று கொண்டு கம்பீரமாகப் பேசினான்.
“சிறுவர்களே! பேராசிரியர் குவாஜா உமார் அவர்களும், நானும் சேர்ந்து ஒரு பிழையைக் கண்டு பிடித்தோம். பூமி சாஸ்திர நிபுணராகிய அறிஞர் டோலமியின் நட்சத்திர அட்டவணையில் தொளாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு பிழையை நான் கண்டு பிடித்தேன்.
இன்னும் சிறிது காலத்தில் நாங்கள் அதனைத் திருத்தி அமைத்து விடுவோம். இப்பொழுது மிக அலுப்பாக இருக்கிறது. நான் தூங்கச் செல்கிறேன்” என்று கூறிவிட்டுத் தன் மேல் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு தன்னுடைய பகுதிக்குச் சென்றான்.
தன்னுடைய பெருமையை அவர்கள் அறியும்படி சொல்லிவிட்ட மகிழ்ச்சியிலே அவன் இருந்தான்.
அவன் அகன்ற பிறகு சிறிது நேரம் அந்த உதவியாட்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு அவர்களிலே ஒருவன் “யா அல்லா இல்லல்லா! இந்தக் கிழடும் அவரோடு சேர்ந்து குடிகாரனாக மாறிவிட்டதே!” என்று சொல்லி வருத்தப்பட்டான்.
27. பழைய மது! புதிய கிண்ணம்!
ஆராய்ச்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த பளிங்குத் தூணின் நிழலைக் கொண்டு, குர்யோதயத்தையும் மறைவையும் நீர்க்கடிகாரத்தின் உதவியால் கணக்கிடுவதும், அவற்றைக் குறித்துவைப்பதும் தவிர வேறு வேலைகள் எதுவும் நடைபெறவில்லை.
உமார் மட்டும், தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தான். முதலில் நூல் நிலையத்திலிருந்து அறிஞர் டோலமியின் பூமிநூல் புத்தகம் ஒன்றை வாங்கிவரச் சொன்னான். பிறகு, முற்காலத்தில் இருந்த கிரேக்க விஞ்ஞானிகளின் பட்டியல் ஒன்று தயாரித்துக்கொண்டு வரும்படி கூறினான்.
பெரும்பாலும், அமைதியாக உட்கார்ந்து, அவன் வேலையைக் கவனித்து வந்தான். மேசையில் நிறையத் தாள்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துக் கணக்குப் போட்டுப் பார்த்துக்கொண்டேயிருந்தான். தான் போட்ட கணக்குகள் சரியா என்று மீண்டும் பார்க்கும்படி அருகில் இருந்த மைமனிடம்கொடுத்தான்.
மைமன் எதோ தெரியாத விஷயத்தைப்பற்றி ஒன்றும் புரியாமல் செய்யும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபாடு கொள்ளவில்லை. இது பெரும் பாலும் பயனளிக்காதென்பதே என்னுடைய எண்ணம். ஆனால், உமார் எந்த அடிப்படையிலே வேலை செய்கிறான் என்பதை அவன் போகப் போகப் புரிந்துகொண்டான்.
வித்தியாசப்படும் மணிக்கணக்கை அடிப்படையாகக் கொண்டு, அந்த வித்தியாசப்படும் மணியளவுக்கு, எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதைக் கண்டு பிடித்துவிட்டால், அந்த இடைவெளித்துரத்தில் இருக்கும் ஊர் ஒன்றைத் தெற்கு அல்லது வடக்குத் திசையில் கண்டுபிடிக்க வேண்டும். இதிலிருந்து அந்த இடத்தை உத்தேசமாகத்தான் சொல்ல முடியும். உறுதிப்படுத்த முடியாது, அவர்களுடைய கணக்கு வேலையிலிருந்து, அந்த இடம் கீழ்மேல் ரேகையின் ஐந்தாவது டிகிரிக் கோட்டில் ஓரிடத்தில் இருக்க வேண்டுமென்ற அளவுக்குத் தெரிந்தது.
“நாம் அறியாத அந்த ஆராய்ச்சிக் கூடம் அலெக்சாண்டிரியா நகரின் வடக்கில் ஐந்தாவது டிகிரியில் இருக்கவேண்டும்” என்று உமார் கூறினான்.
“தெற்கில் ஐந்தாவது டிகிரியிலும் இருக்கலாமே?” என்று மைமன் தன் ஐயப்பாட்டைக் கூறினான்.
உண்மையில் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் தென்பகுதியில், பாலைவனங்களும், யாருக்கும் தெரியாத மலைப்பிரதேசங்களும் இருப்பதாகத்தான் பூகோளப் படம் காட்டியது. உமார் பூகோளப் படங்களை நம்பிக் கொண்டிருப்பவனல்ல.
ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்கள் அலெக்சாண்டிரியாவின் தென் பகுதியிலிருந்து பார்த்தால் தென்படாது, ஆகவேதான் வடபகுதியில் இருக்கும் என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறினான். “அந்த டிகிரிக் கோட்டில் நிசாப்பூர் கூடத்தான் இருக்கிறது இன்னும் அலெப்போ, பார்க் முதலிய எத்தனையோ பட்டணங்கள் இருக்கின்றன?” என்று மைமன் விளக்கினான்.
அவர்கள் தேடும் அந்த இடம், இந்தியாவில் இருக்க முடியாதென்றும் நிசாப்பூருக்கும் மேற்கேதான் இருக்க வண்டுமென்றும் தீர்மானித்தார்கள். அலப்போ நகருக்கும் மேற்கே கூட இருக்கலாமென்று உமார் எண்ணினான். ஆனால், அப்படிப் பார்க்கும்பொழுது, ஆராய்ந்து முடிவு காண்பது என்பது எளிதாகத் தோன்றவில்லை. ஏனெனில் மேலைத் திசையில் உள்ள பட்டணங்களின் பெயரெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.
அதுவும், அந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட காலத்திலே, முப்பது தலைமுறைகளுக்கும் முன்னே எப்பொழுதோ இருந்த ஒரு பட்டணத்தைப்பற்றிய தகவல் தெரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து ஆராய்வதும் ஆலோசனை புரிவதுமாக இருந்தார்கள்.
ஒருநாள் மாலை அவர்கள் இருவரும் தங்களுடைய ஆராய்ச்சி வேலையில் ஆழ்ந்து இருந்தபொழுது, வாசலில் இருந்தவாறே பழக்கமான ஒரு குரல் வணக்கம் தெரிவித்தது.
“ஞானமண்டபத்தின் இரண்டு தூண்களுக்கும் நலம் வருவதாக! உங்கள் உழைப்பு பலன் தருவதாக!” என்று வாழ்த்திக்கொண்டே, நீலத்தலைப்பாகையின் கீழே இருந்த முகத்தில் நிலவிய புன்சிரிப்புடன், நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவன் டுன்டுஷ் வருவதை மைமன் கண்டான். அவன் குரலைக்கேட்டதும், ஈட்டியால் குத்துப்பட்டது போன்ற எரிச்சலுடன் உமார் திரும்பிப்பார்த்தான். அவன் உள்ளத்திலே கோபம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. தடுக்க முடியாத ஆத்திரம் குமுறிக்கொண்டிருந்தது.
“நட்சத்திர வீட்டிலே ஒரு பெரிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அங்காடியில் பேசிக்கொள்கிறார்களே! உண்மையா? அது என்ன?” என்று கேட்டான் டுன்டுஷ்.
உமார் கையிலிருந்த பேனாவைக் கீழே போட்டுவிட்டு எழுந்திருந்தான். “நான் வருகின்றபொழுது, வழியிலேதான் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தேன். நீதான் அதன் உண்மையை எனக்குத் தெரிவிக்கவேண்டும்” என்றான் உமார்.
“அடிமையாகிய நான் தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறேன். மேலும் நீண்டநாள் நண்பனாகவும் இருந்த என்னை நீங்கள் கேட்டால், உடனே எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்” என்று டுன்டுஷ் வணக்கத்துடன் கூறினான்.
“நீலக்கல் பதித்த வளையலை எந்த இடத்திலே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதையும் அந்த வளையலுடன் கூறப்பட்ட சங்கதி எது என்பதையும் நான் இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டும். சொல்!” என்றான்.
ஒற்றர் தலைவனான டுன்டுஷுக்கு மூளை வேகமாக வேலைசெய்யும் சக்தி வாய்ந்தது. இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அவனுக்கு உடனே, தான் ஊற்றுக் கிணற்றுக்குள்ளே தூக்கி எறிந்த வளையல் நினைவுக்கு வந்தது.
எப்படி, அந்த விஷயம் இவனுக்குத் தெரியவந்தது என்று ஆச்சரியப்பட்டு முதலில் விழித்தான். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டான்.
“தங்களுக்கு நீலக்கல் பதித்த வளையல்தானே வேண்டும்? எத்தனை இலட்சம் வேண்டும் சொல்லுங்கள்; இப்பொழுதே கொண்டு வருகிறேன்” என்று விஷயத்தைப் புரியாதவன் போல் பேசினான்.
“இந்த இடத்திலே, ஒரு விகடன் வந்து உன்னிடம் ஒரு செய்தி கூறி அந்த வளையலைக் கொடுத்தான். அந்தச் செய்தியை நான் தெரிந்துகொள்ளாதபடி நீ மறைத்து வைத்துவிட்டாய். இப்பொழுது செய்தியனுப்பிய அந்தப் பெண் இறந்து போய்விட்டாள். அவளுடைய சாவு என்னுடைய உயிரை வாட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவளைத்தான்... அந்த ஒருத்தியைத்தான் நான் காதலித்தேன். அது உனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும், நீ என்னிடம் பொய்கூறியிருக்கிறாய் என்னை ஏமாற்றியிருக்கிறாய் - உண்மைதானே? ஏன் விழிக்கிறாய்?”
உமாரின் குரல் கடுகடுத்தது. முகம் கோபத்தால் சிவந்தது. கைகளை இடுப்பில் பிடித்தபடியே, கொல்லவரும் மதயானையைப்போல உமார் டுன்டுஷை நோக்கி நடந்தான். தன் உயிரைப் பறிக்கவரும் கொள்ளியைப்போல் எரியும் அந்தக் கண்களையும் தன் உள்ளத்தை ஊடுருவிச்செல்லும் நஞ்சு தோய்ந்த அந்த அம்புபோன்ற பார்வையையும் பார்த்த டுன்டுஷ் பயந்துவிட்டான், அவனுடைய உள்ளத்தின் நினைவுகளையும், பயத்தின் பொருளையும் உமாரும் அறிந்து கொண்டான்.
“ஆண்டவனின் தொண்ணுற்றொன்பது பெயர்களின் ஆணையாகவும் கூறுகிறேன். எனக்கு இந்த விஷயமே தெரியாது. தங்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பெண்ணையும் நான் பார்த்ததுகூடக் கிடையாது. ஐயோ! மைமன்; உதவி உதவி!” என்று டுன்டுஷ் கத்தினான்.
உமாரின் கைகள் அவனுடைய கழுத்தை இறுக்கிப் பிடித்தன. அவனை ஓர் ஆட்டு ஆட்டினான். டுன்டுஷ் வலையில் சிக்கிய மிருகம்போலத் திணறினான். உமாரின் கை விரல்கள், அவனுடைய சதைக்குள்ளே கத்தி பாய்வதைப்போல ஆழப் பதித்தன. அவனுடைய கண்கள் எரியும் நெருப்புப்போல இருந்தன. மைமன் உதவிக்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான் டுன்டுஷ்.
டுன்டுஷ் அடைந்த அதிகமான பயத்தின் காரணமாக, தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எப்படியோ உருவிக்கொண்டு, கண்மூடித்தனமாக உமாரைக்குத்தினான். கத்தியின் முனைஉமாரின் துணியைக் கிழித்து, சதையைக் கீறி எலும்பையும் தாக்கிவிட்டது. இரத்தம் ஒழுகியது. ஆட்கள் வந்து அவனை விடுவித்துத் தரையில் தள்ளினார்கள். அங்கே நீட்டிப்படுத்துப் பெருமூச்சு வாங்கிக்கொண்டு கிடந்தான்.
அவனுடைய கலங்கிய கண்களிலே மங்கிய தோற்றத்தில் ஐந்தாறு பேர், பாயும் வேங்கையைப் போல் நின்ற உமாரைச் சுற்றிவளைத்துப் பிடித்துக்கொண்டு நிற்பதையும், கிழிந்த துணியின் கீழே வெட்டுப் பட்ட தோளிலிருந்து வடியும் குருதி நெஞ்சில் வழிவதையும் தெரியக் கண்டான்.
“நாயே! நமக்கிடையிலே இரத்தப் பகை தோன்றிவிட்டது. தெரிந்துகொள். ஆனால், இப்பொழுது சிந்துகிறேனே; இந்த இரத்தத்தினால் அந்தப் பகை வரவில்லை. தெரிந்து கொள்; அந்த இரத்தம் எனக்குள்ளேயே நாளுக்குநாள் சிந்திக்கொண்டு வருகிறது.
அது இப்படி வழியவிடமாட்டேன். போ! என் எதிரில் மீண்டும் தோன்றாதே! அப்படி வருவாயானால் நீ செத்துப் போவாய்!” என்று கொஞ்சங்கூடப் பதட்டமில்லாமல் அமைதியாகவும் அழுத்தமாகவும் கூறினான் உமார்.
வேலைக்காரர்கள் மூலமாக நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜபாரக், அன்று இரவு, தாக்கின் வாசல் அருகிலே வியாபாரி அக்ரோனோசைச் சந்திக்க நேர்ந்தபோது, அவனிடம் கூறினான். பிறகு ஜபாரக் பிரிந்து சென்ற பின், அங்கே அங்காடிச் சந்தையிலே, கூலிக்குச் செய்தி கொண்டுபோகும் ஒருவனைக் கூப்பிட்டு, ஒரு தாளிலே, இரண்டுசொற்களை எழுதி, அதை ஒட்டி, முத்திரை வைக்காமல் அவனிடம் கொடுத்து, “இதை ரே நகருக்கு எடுத்துச்செல்.
அங்கே பிரயாணிகள் தங்கும் சத்திரத்திலே சென்று, மண்டபத்திலே நின்றுகொள், ஏழின் இறையவருக்கு ஒரு கடிதம் கொண்டுவந்திருப்பதாகக் கூறவும். அவர் உன்னை நோக்கி வருவார். அவரிடம் கொடு” என்றான்.
“ஐயா! அந்த ஆள்தான் ஏழின் இறையவர் என்று நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்? பெயரும் புதுமாதிரியாக இருக்கிறதே?” என்று அந்த அடிமை ஐயங் கிளப்பினான்.
“அவரே உன்னிடம் வந்து கூறுவார்!”
“ஆ! இது என்ன விந்தையோ?” என்று ஆச்சரியப்பட்டுவிட்டு, அந்தச் செய்தியை வாங்கிக் கொண்டு போனான். அவ்விடத்தை விட்டு அகன்றதும் - அதைப் பிரித்துப் பார்த்தான். படிக்கத் தெரியா விட்டாலும் அது சாதாரணச் சொற்களைப் போலவே தோன்றியது, அதனால் தனக்கு ஏதேனும் ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே என்பதற்காக, ஒரு முல்லாவிடம் போய் அதைப் படித்துத் தெரிந்து கொள்ள விரும்பினான்.
அவர் உரக்கப் படித்தார். காலம் வந்து விட்டது என்று இருந்தது. இதிலே பயப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று மனம் தெளிந்து அந்த அடிமை ரே நகர் நோக்கிச் சென்றான்.
தோள் காயத்திற்குக் கட்டுப் போட்ட பிறகு உமார் தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். கதவு வழியாக அவனைக் கவனித்த இஸ்பிகாரி, அவன் ஏதோ சிறு சிறு துண்டுத் தாள்களிலே என்னவோ எழுதிக் கொண்டிருப்பதாகவும், அந்தத் தாள்களிலே சில தரையிலே விழுந்து கிடப்பதாகவும் கூறினான்.
ஆராய்ச்சிக் கூடத்தில், முடிக்கப்படாது, கண்டு பிடிக்காமல் பாக்கியிருந்த விஷயங்களை மேற்கொண்டு கணக்குச் செய்து கண்டு பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் மைமன் என்ற கிழப் பேராசிரியன், உமார் இல்லாமல், எதையும் செய்ய முடியவில்லை அவனால், பூகோளப் படம் சரியானதல்ல. கிரேக்க வான நூலாசிரியர்களின் பெயர்கள் அவனுக்கு வாய்க்குள் நுழையாதவையாக இருந்தன.
சிலச் சில வழிகளில் ஆராய்ச்சி செய்த பிறகு, பலன் எதுவும் ஏற்படாததால், தன் வேலையை முடிந்துக் கொண்டு, ஆராய்ச்சிக் கூடத்தைவிட்டு வெளியேறினான் மைமன். நகரத்திற்குப்போன அவன் திரும்பவும் இரவில்தான் வந்தான். வந்ததும் இஸ்பிகாரி அவனிடம் மேலே ஆராய்ச்சிக் கூடாரத்தில் ளக்கு எரிவதாகவும், உதவியாளர்கள் ஒருவரும் அங்கே இல்லை என்றும் கூறினான்.
உமார்தான் அங்கே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே, அங்கே சென்றான் மைமன். தாழ்ந்த ஒரு மேசையின் மேல் சாய்ந்து விரித்து வைத்திருந்த டோலமியின் கையெழுத்துப் பிரதியை உமார் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
“நாம் தேடும் அந்த இடம் ஆசியா மைனருக்கு மேற்கே இருக்கிறது!” என்றான்.
“ஆசியாமைனருக்கு மேற்கே வெறுங் கடல்தான் இருக்கிறது. உம், இத்தனை நாள் ஆராய்ச்சியும் பயனில்லாமல் போய் விட்டதே!” என்று மைமன் வருந்தினான்.
“இல்லை, பலன் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது. முன் காலத்தில், பூபாகத்தில் பலப் பல நகரங்கள் இருந்தன. கடலின் இடையேயும் சிலச் சில நகரங்கள் இருந்திருக்கின்றன” என்று சொல்லிக் கொண்டே வந்தவன், தன் எதிரில் இருந்த வான சாஸ்திரிகளின் பட்டியலில் இருந்த பெயரை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே வந்தான். பெயர்களின் கீழே ஒடிக் கொண்டிருந்த அவனுடைய பேனா ஓரிடத்திலே நின்றது.
“ரோட்ஸ் தீவுதான் நாம் தேடிய இடம். ரோட்ஸ் தீவில் இருந்த ஹிப்பார்க்கஸ் என்ற வான நூற்கலைஞன் ஆயிரம் நட்சத்திரங்களின் இடங்களைப் பற்றிக் குறிப்பு எடுத்திருக்கிறான். அவன் தயாரித்த அட்டவணையாகத்தான் இருக்க வேண்டும் இது.”
மைமன் என்ற அந்தக் கிழட்டு வான சாஸ்திரியின் உதடுகள் ஒலியில்லாமல் அசைந்தன. பெரும் பசியாளன் அல்லது பேராசை பிடித்த கருமியைப் போல் அவனுடைய நாடி நரம்புகளிலெல்லாம் ஒரு பேராசை யோட்டமெடுத்தது. ஒன்பது நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த ஒரு விஞ்ஞான இரகசியத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய ஒரு பெருஞ் செயலும் இதன் பலனாகக் கிடைக்கக் கூடிய பெரும் புகழும் அவர்கள் எதிரிலே காத்துக் கொண்டிருக்கிறது.
“ஆம்! ஆம்! டோலமியே, அவருடைய வானநூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலே, ஹிப்பார்க்கஸ் கண்டு பிடித்த ஆயிரத்து எண்பது நட்சத்திரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது மட்டும் உண்மையாக இருந்தால்...” தன் மதிப்பு உயரும், புகழும் உயரும் என்ற இன்பக் கனவு மைமன் உள்ளத்திலே எழுந்து அவனை மெய்மறக்கச் செய்தது.
“அது உண்மையாகத்தான் இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இயேசுநாதர் பிறப்பதற்கு நூற்றி முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், ரோட்ஸ் தீவின் கோணத்திற்குச் சரியாக இருக்கிறதா என்று இந்த அட்டவணையைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்”.
“நாம் இரண்டுபேரும் தனித்தனியாகக் கணக்குச்செய்து பார்ப்போம், அப்பொழுதுதான், தவறு ஏற்படாமல் செய்யமுடியும்!” என்று கூறினான் மைமன். மறுபடியும் தவறு வந்து வேலை பயனற்றுப் போய்விடக் கூடாது என்று பயப்பட்டான். கண்டுபிடிப்பு பெருமையிலும், புகழிலும் தனக்கும் பங்கிருக்க வேண்டும் என்ற பேராசையும் அவனுக்கு இருந்தது. புகழ் என்றால் உயிரையும் கொடுக்கும் பேரார்வம் அவன் குருதியிலே ஓடிக் கொண்டிருந்தது.
மூன்று நாட்கள் அவர்கள் வேலை செய்தார்கள். அரை குறையாகத் தூங்கினார்கள். இரவில் வெகுநேரம் கழித்தே படுக்கச் சென்றார்கள். காலையில் விடிவதற்கு நெடுநேரம் முன்பே எழுந்தார்கள். எதிரில் இருக்கும் தாள்களிலே இரண்டு கண்களும் மொய்த்த வண்ணம், மைமன் வேலையை விடாமல் செய்தான்.
அசதியாக இருப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்தக் கிழவன் வேலையிலே ஈடுபட்டிருந்தான். உமார் வாய் முணமுணவென்று பெருக்குவதும் கூட்டுவதும் கழிப்பதும் வகுப்பதும் சரிபார்ப்பதுமாக இருந்தான். கடைசியாகச் சிரித்துக் கொண்டே, “போதும் போதும்! அந்த இடமேதான், எல்லாம் அதற்குச் சரியாக இருக்கின்றன!” என்றான்.
“இரு, இரு இன்னும் சிறிதுதான்” என்று கூறிக்கொண்டே, மைமன் தன்னுடைய வேலையைச் சுறுசுறுப்பாகப் பார்க்கத் தொடங்கினான். அவன் கணக்குகளெல்லாம் செய்து சரிபார்த்து, மனஅமைதியடைந்த பிறகுதான், அதை ஒப்புக் கொண்டான்.
“சரியாக இருக்கிறது. சரியாக இருக்கிறது. அட்டவணை சரியாகவே இருக்கிறது. அறிஞர் அலிசென்னாவும் இதைச் சரியென்றே ஒப்புக் கொள்வார். பேராசிரியர் உமார் அவர்களே, அறிஞர் டோலமியைப் போலவே, நாமும் ரோட்ஸ் தீவின் விஞ்ஞானி வானநூல் அறிஞன் ஹிப்பார்க்கஸ் வகுத்த இந்த அட்டவணையை இனி எளிதாகப் பயன்படுத்தலாம்” என்றான், மைமன்.
மைமனுக்கு உடனே ஆஸ்தான மண்டபத்திலேபோய் உட்கார வேண்டும்போல் இருந்தது. தன்னுடைய மாணவர்களுக்கெல்லாம் இந்தப் புதிய உண்மையைப் போதிக்க வேண்டும்போல் இருந்தது. நிசாப்பூர் கலைக் கழகத்திலே உள்ள ஆசிரியர்களுக்கெல்லாம் இந்தப் புதிய உண்மையைப் போதிக்க வேண்டும்போல் இருந்தது. நிசாப்பூர் கலைக் கழகத்திலே உள்ள ஆசிரியர்களுக்கெல்லாம் அரிய ஆராய்ச்சியைப்பற்றிக் கூறவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், உமார் அவனைத் தடுத்துவிட்டான்.
“ஏற்கெனவே, உலேமாத் தலைவர்கள் காலத்தை அளப்பது புனித மறையால் தடுக்கப்பட்ட செயல் என்றும், நமக்கு இந்த விண் மீன் வீட்டில் தீய ஆவிகள் உதவிசெய்கின்றன என்றும் கூறி வருகிறார்கள். மத விரோதியான ஒரு கிரேக்கனுடைய அட்டவணையை நாம் உபயோகிக்கிறோம் என்று தெரிந்தால் என்ன சொல்லுவார்களோ, என்ன செய்வார்களோ? பொறுத்திருந்து, எல்லா வேலைகளும் பூர்த்தியான பிறகு, முதலில் நம் ஆராய்ச்சியின் பலனை சுல்தான் முன்னிலையில் சமர்ப்பிப்போம். அதுவரை எதுவும் பேசக்கூடாது” என்றான் உமார்.
“உண்மைதான்! ஒருமுறை மதவெறி பிடித்தவர்கள் சிலர் நம்முடைய கோபுரத்தின்மேல் எரிகிற தீவட்டியைத் தூக்கி எறிந்தார்கள். தாங்கள் அலெப்போவில் இருந்த சமயம், நிழற்குறிகாட்டும் பளிங்குக் கம்பத்தின்மேல் கற்களை வீசியெறிந்தார்கள்.
மசூதியிலிருந்து கூட்டங் கூட்டமாக வந்த அவர்கள் செய்த அட்டகாசங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது இந்த விஷயங்களையறிந்தால், மதவாதிகள் என்ன செய்வார்களோ, சொல்ல முடியாது, நம் சிந்தனை முடிவுகளைச் சிறிது காலத்திற்கு முத்திரையிட்டு மூடிவைக்க வேண்டியதுதான். உதடுகளுக்கும் பூட்டுப்போட்டு வைக்க வேண்டியதுதான்” என்றான்.
உமார் திடீரென்று புதுப்புது வேலைகளில் ஈடுபடுவதன் இரகசியமும் மைமனுக்குப் புரியவில்லை. ஆராய்ச்சி வேலையிலிருந்து சிந்தனை அதை மறந்து வேறு எங்கோ தாவுவதன் காரணமும் அவனுக்குப் புரியவில்லை, தூரத்திலே உள்ள ஊரிலே, ஓர் அழகிய இளம்பெண் அழுது வாடுவதும், உமாரின் தோளிலே தொத்திக்கொள்வதும், தோற்றமளிக்கும் போது உமார் தன் இருப்பிடத்தையும் வேலையையும் எல்லாவற்றையும் மறந்து விடுவான். யாஸ்மியின் நினைவு வந்ததும் பித்துப் பிடித்தவன் போல் மாறிவிடுவான். இது மைமனுக்குத் தெரியாத விஷயம்!
பெருக்கெடுத்தோடும் ஆற்றின் அருகிலே எரிக்கும் வெயில் ரேன் நரகத்தைப்போல் தோன்றிய் அந்தக் கூடாரம் அவன் நினைவுக்கு வரும். சில சமயம் பிரகாசமான கண்களுடன் கூந்தல் கற்றை ஆடி அசைந்துவரப் புன்சிரிப்புடன் துள்ளி ஓடிவரும் யாஸ்மியின் அழகுருவம் தோன்றும். இப்படி மாறி மாறி இன்பக்காட்சிகளும் துன்பத் தோற்றமும் தோன்றுமாயினும், பெரும்பாலும், அவளுடைய நோய் வலியும், மரண வேதனையும்தான் அடிக்கடி தோற்றமளிக்கும்.
“இவருடைய போக்கே புரிபடவில்லையே. வேலை செய்தால், ஒரேயடியாக அதிலேயே ஆழ்ந்துவிடுகிறார். “இல்லாவிட்டால் மதுக் குவளையுடன் மனம் பேதலித்தவர்போல் தனியே உட்கார்ந்திருக்கிறார்” என்று இஸ்பிகாரி ஒருநாள் ஆச்சரியத்துடன் கூறினான்.
அவரைப்பற்றி அதிகம் தெரிந்தவர் போல், மைமன் “அவரிடம் ஓர் அதிசய சக்தியிருக்கிறது; ஆனால், அவர் போக்கு இப்படி யிருக்கிறது. மனத் தளர்ச்சி மட்டும் ஏற்படாவிட்டால், டோலமியைக் காட்டிலும் உமார் சிறந்து விளங்க முடியும்!” என்றான்.
ஆனால், கல்வியறிவில்லாத அங்க ஹீனனான ஜபாரக் மட்டும், உமாரின் நிலைமையை நன்கு உணர்ந்தவனாக இருந்ததால், இரவு நேரங்களில் எல்லாம் அவன் கூடவே உட்கார்ந்திருப்பான். தன் நண்பன் அருகிலே முடங்கிப் படுத்துக்கொண்டு, அல்லது உட்கார்ந்து கொண்டு, விளக்கு நாக்கு ஆடும்போதெல்லாம் உண்டாகும் நிழல் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே இருப்பான்.
அந்த மாதிரியான நேரங்களில் வேடிக்கைபேசுவது கிடையாது. “என் தலைவர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் இறந்தபோது, கடல்போல் கண்ணிர் பெருக்கி என் துன்பத்தைக் கழுவிக்கொண்டு விட்டேன். ஆனால் கூடாரமடிப்பவரே! நீங்கள் குடிக்கும் அந்தக் கோப்பை மது, அது உங்களை அழுது கண்ணிர் விடச் செய்யும் ஆற்றல் இல்லாததாக இருக்கிறதே! அழுது தீர்த்தால் அல்லவா துன்பம் ஆறும்? என்று சொல்லுவார்கள்.”
அப்படிச் சொன்னபொழுது, உமார் அந்தக் கோப்பையை உற்று நோக்கினான். “துங்கும் பொழுது துன்பத்தை மறக்கலாம். தூங்கமுடியாத பொழுது குடித்து மயங்கலாம். அதனால் மறதி ஏற்படும். நீ யார் என்றும், எதற்காக இந்த உலகத்திலே பிறந்தாய் என்றும் நீ உன்னையே தேடித் திரிவதைக் காட்டிலும் குடிப்பது சிறந்தது அல்லவா?
“ஆனால், அது அமைதியைத் தருவதில்லையே!”
“மறதியைக் கொண்டு வருகிறதல்லவா? ஜபாரக், இதோ கவனி. இந்த கோப்பையிலே இரசாயன சாஸ்திரத்தின் இரகசியம் எப்படி அடங்கியிருக்கிறதென்று பார். குறிப்பிட்ட ஓர் அளவு குடித்து விட்டாயானால் உலகக்கவலைகள் ஆயிரத்தையும் ஒரு நொடியிலே மறக்கலாம்.
கோப்பை மது முழுவதையும் குடித்து விட்டால், மாமூது அரசரின் தங்கச் சிங்காதனத்திலே இருந்து இந்தத் தரணியையே அரசாளலாம்; தாவூதின் இதழ்கள் அசையப் பிறக்கும் இசையைக்காட்டிலும் மேலான இனிய சங்கீதத்தைக் கேட்கலாம். சொலு இந்தக் கோப்பையைச் செய்தவன் இதைத் தரையிலே தூக்கியெறிந்து துண்டு துண்டாய் உடையச் செய்வானா?”
“செய்ய மாட்டான்!”
“அப்படியானால் அழகிய மனித உடலை உருவாக்கும் அன்பும் இருக்கிறது; அதை அழிக்கும் சினமும் இருக்கிறதே! இது ஏன்?”
தரையில் கிடந்த கசங்கிய தாள் ஒன்றை எடுத்து உமார் ஜபாரக்கின் கையில் கொடுத்தான். அவன் அதை விளக்கின் அருகிலே கொண்டு போய் விரித்துப் படித்தான். உமாரின் அழகிய கையெழுத்தில், பாரசீகமொழியில் நான்கு அடிகள் கொண்டு கவிதை ஒன்று எழுதப் பெற்றிருந்தது.
புதிரான பாதையிலே
போகுமிந்தப் பயணமே
இதில் இன்பம் இல்லையே
என்றுந் துன்பம் துன்பமே!
மதுக் கிண்ணம் கொண்டு நீ
மகிழ வைப்பாய் இரவிலே!
எதிர் கால எண்ணமே
ஏதும் வேண்டாம் அன்னமே!
இதைப் படித்துவிட்டு “ஐயோ!” என்று பெருமூச்சு விட்டான் ஜபாரக் பிறகு திடீரென்று சுருங்கியிருந்த அவன் முகம் மலர்ந்து விரிந்தது. “எழுதும்! எழுதும் அதிகமான கவிதைகளை எழுதும்! அவையே உம் கண்ணின் பரிசாக இருக்கட்டும்” என்று கூறினான்.
28. மரணக்கொடி பறக்குதென்று மத குருக்கள் ஒலமிட்டார்!
ஓராண்டுகாலம் கழிந்தது. விண்மீன் வீட்டில் இருந்த ஆராய்ச்சியாளர்கள், தங்களுடைய புதிய கண்டுபிடிப்புடன், தினசரி மணிக்கணக்கை ஒப்பிட்டுப் பார்த்து மன நிறைவு பெற்றார்கள். மைமனுக்கும் இஸ்பிகாரிக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நட்சத்திரங்களின் இருப்பிடத்தைக் கொண்டு, நீர்க்கடிகாரத்தால் அளக்கப்படும் மணிக்கணக்கும், சூரியனுடைய நிழலின் மூலம் அளக்கப்படும் மணிக் கணக்கும் ஒன்றுக்கொன்று ஒத்து வந்தன.
இவ்வாறு ஆராய்ச்சி செய்ததன் பலனாக, ஓர் ஆண்டில், 365 நாட்களும் ஐந்து அல்லது ஆறுமணி நேரமும் அடங்கியிருக்கின்றன என்று உறுதியாயிற்று. 354 நாட்களே கொண்ட பிறைக்கணக்கைக் காட்டிலும் இது நிச்சயமாகச் சரியானதென்றே தெரிந்தது. பிறைக் கணக்கில் உள்ள பிழையை உணர்ந்த எகிப்து தேசத்துப் பழங்கால வானநூல் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆண்டுக்கு 30 நாட்கள் கொண்ட 12 மாதங்களை வகுத்துக் கொண்டு, ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்களைத் திருவிழாவாகக் கொண்டாடி 365 நாட்கள் கொண்ட ஆண்டுக் கணக்கை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள்.
“அந்தக் கணக்கிலும், ஓர் ஆண்டில் கால் நாள் பொழுது விடுபட்டுப் போகிறது. நாம் ஓர் ஆண்டுக்குக் கால்நாள் கூட்டவேண்டும். அதை ஒரேயடியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முழு நாளாகக் கூட்டிவிட்டால் என்ன?” என்று இஸ்பிகாரி கேட்டான்.
“நான்கு வருடங்களுக்கோ, அல்லது நாற்பது வருடங்களுக்கோ மட்டும் பயன்படக்கூடிய பஞ்சாங்கத்தை நாம் தயாரிக்கவில்லை. வரப்போகின்ற நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும், உலகம் உள்ள அளவும் ஓடுகின்ற காலத்திற்கும் ஓர் அளவு கருவியாகப் பயன்படும்படி இருக்க வேண்டும் நம்முடைய பஞ்சாங்கம்! அதற்கு இது வரையில் நாம் செய்த ஆராய்ச்சிகள் போதாது. இன்னும் துல்லியமாகக் கணக்குச் செய்யவேண்டும்.
மீண்டும், நாம் மனநிறைவு பெறுகிற வரையிலே தினந்தோறும், கால அளவுகளைக் கவனித்துக் குறித்துக்கொண்டு வர வேண்டும்” என்று உமார் கூற, மைமனும் அதை ஆதரித்தான். அதன்படியே, அவர்கள் மீண்டும் ஒருவருடம், காலங்காட்டும் கருவிகளையும், காலம் அளக்கும் கருவிகளையும் பயன்படுத்தி ஆராய்ச்சிக்குறிப்புகள் எடுத்து, முந்திய குறிப்புகளுடனும், திருத்தப்பட்ட நட்சத்திர அட்டவணையுடனும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு வந்தார்கள்.
விண்ணின் மீன்களை ஆராய்ச்சி செய்யும் இந்த மனிதர்கள், இடுகாட்டுப் புதைகுழியில் கிடக்கும் பிணங்களின் ஆவியோடு பேசியும், மத நம்பிக்கையற்றவர்களின் விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தியும் வருவதாக எதிர்ப் பிரசாரம் செய்து வந்த நிசாப்பூர் முல்லாக்களுக்கு, இவர்கள் ஆராய்ச்சியின் வெற்றிச் செய்தி, வதந்தி வடிவாகப்போய்ச் சேர்ந்தது. இவர்களுடைய கூக்குரலைப்பற்றி உமாரும் மைமனும் சிறிதும் கவலைப்படவில்லை.
ஆனால், உமார் மீண்டும் இயற்கையின் தன்மையைப்பற்றி ஏதேர் ஆராய்ச்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதை மைமன் உணர்ந்தான். அவன் எந்த விஷயத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுப்ட்டிருக்கிறான் என்று மைமனால் யூகிக்க முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அறிஞர் டோல்மியின் ஆராய்ச்சி முழுவதும், அவர் காலத்துக்கு முந்திய ஹிப்பார்க்கஸ் என்ற விஞ்ஞான மேதையின் ஞானத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்டவையே என்பதை உமார் உணர்ந்து கொண்டதால்,
அவனும், அறிஞர், டோலமியைப் போலவே, ரோட்ஸ் தீவின் விஞ்ஞானப் பேராசிரியனின் புத்தகங்களிலே தன் கருத்தைச் செலுத்தி வருவது மட்டும் தெரிந்தது. ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில், ஹிப்பார்க்கஸ் நூல்களைப் பயன்படுத்த உமார் முயற்சிக்கிறான் என்பதை மட்டும் அவர் யூகித்துக்கொண்டார். எந்த விஷயம்? அதுதான் புரியவில்லை.
“என்ன ஒரேயடியாக ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டார்?” என்று இஸ்பிகாரி ஒருநாள் கேட்டான்.
“இதுதான் புரியவில்லை. கிரகணத்தில் ஏற்படும் நிழலின் வடிவத்தைப் பற்றியதா இருக்குமோ என்று நினைக்கிறேன். எல்லையில்லாது செல்லும் எண்களைப் பயன்படுத்தித் தீர்க்க வேண்டிய வளைவுகளைப்பற்றிய பிரச்சினைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் என்றுதான் எண்ணுகிறேன்!” என்று மைமன் சொன்னான்.
“அருளாளனாகிய அல்லா அவரைக் காப்பாற்றுவாராக. சாதாரண எண்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளே என் மூளையைச் சிதற வைக்கின்றன. அவர் மூளை என்ன வாகுமோ” என்று கூறி இஸ்பிகாரி சிரித்தான். இஸ்பிகாரி மைமனிலும் இளமையும் தைரியமும் உள்ளவன்.
“சைபர் வட்டத்துக் கணக்குகளை அவர் போட்டுக் கொண்டிருக்கிறான்.”
“சைபர் என்றால்தான் ஒன்றுமில்லையே. அப்புறம் அதில் என்ன கணக்கு இருக்கிறது?’ என்று இஸ்பிகாரி கேட்டான். பழைய இஸ்லாமிய முறைப்படி, சைபருக்குக் கீழே ஒன்றுமில்லை என்ற முடிவு அந்தக் காலத்தில் இருந்தது.
“சைபருக்கப்பால் ஒன்றுமில்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால், கிரேக்கர்கள் இதே சைபரை சீரோ என்று அழைக்கிறார்கள். அந்த சீரோவுக்கு அப்பால் எத்தனை பெரிய பெரிய எண்கள் எல்லாம் இருக்கின்றன!” இஸ்பிகாரிக்கோ, இது ஏதோ பெரிய நம்ப முடியாத விஷயமாகவும், மாயவித்தை போலவும் தோன்றியது.
“நீ சொல்வது, ஏதோ கிரேக்கர்கள் காணும் கனவு போல இருக்கிறது. கிரேக்கர்கள் இந்த மாதிரியான வீண் கனவு காண்பதில் பெரிய ஆட்கள்தான். இப்படிப்பட்ட கனவுகளைக் கண்டு அவர்கள் வெளியிலும் சொல்லுவார்கள். ஆனால், இதனால், அவர்களுக்காவது, வேறு யாருக்காவது ஏதாவது நன்மையுண்டா என்றால் கிடையாது. ஏதாவது நிறைவேறக்கூடிய சங்கதியுண்டா என்றால் கிடையாது.
அவர்களாவது, நல்ல நிலையில் இருந்தார்களா என்றால் அதுவும் கிடையாது. ஒரு கிரேக்க விஞ்ஞானி, அவன் பெயர் எனக்கு நினைவு வரவில்லை. இப்படித்தான் ஒரு அபூர்வக் கனவு கண்டு அதை வெளியிட்டான். இந்தப் பூமிக்கு அப்பால் ஏதாவது ஒரு பொருளை நிறுத்தி விட்டால், அதைக் கொண்டு இந்தப்பூமியை, இடம் மாற்றி விடலாம் அல்லது நகர்த்தி விடலாம் என்று கண்டு பிடித்தான்.
இப்படிப்பட்ட கற்பனையில் ஈடுபட்டிருந்த அவன், ஒரு போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு சாதாரணச் சிப்பாயால் கொல்லப் பட்டான். அவர்களுடைய பெரும் பேரரசர் இஸ்கந்தர் (அலெக்சாண்டர்) என்பவன் ஒரு பெரிய கனவு கண்டான். ஆசியா முழுவதையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்தில் உலகம் முழுவதும் தன் ஆட்சியைப் பரப்ப வேண்டுமென்று மனக் கோட்டை கட்டினான்.
ஆனால் நம் பேராசிரியர் உமாரை விடக் கொஞ்சம் கூடுதலான வயதாகும் பொழுது, இளமைக் காலத்திலேயே அதிகமான குடிமயக்கத்தில் செத்துப்போனான். அவனுடைய அமீர்கள், தங்களுக்குள்ளேயே அந்தத் தேசங்களைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒருவரோடொருவர் பொருதி, அந்த சாம்ராஜ்யத்தைச் சின்னாபின்னமாக்கிக் கெடுத்தார்கள். இப்பொழுது, அந்தக் கிரேக்கர்களையெல்லாம் சாய்த்து விட்டு நம்முடைய இஸ்லாமியப் பெரும் வீரர்கள் வந்து விட்டார்கள். கிரேக்கர்களின் கற்பனைகளால் சிறிதும் பயனில்லை” என்று இஸ்பிகாரி ஒரு பெரிய சொற்பொழிவே நிகழ்த்தினான்.
“ஒன்றுமில்லாத சைபருக்கப்பால் பெரிய பெரிய எண்கள் இருப்பதாக உமார் சொல்லுகிறாரே! அவரே, அந்த எண்களைப் பயன்படுத்திக் கணக்குகள் செய்கிறாரே!” என்று மைமன் விளக்கினான்.
“பெரிய முல்லாக்களின் காதிலே இந்த விஷயம் எட்டிவிடாமல் அல்லாதான் அருள் புரிய வேண்டும்” என்று கூறிவிட்டுப் போன இஸ்பிகாரி, தன் உதவியாளர் குறுக்கே வந்ததுமே, “உண்மையின் அத்தாட்சி மறுபடியும் குடிமயக்கத்தில் ஆழ்ந்து விட்டது! நட்சத்திரங்களின் மத்தியிலே ஒரு வளைவிலே ஏறிச் சென்று, செத்துக் கிடக்கும் எண்களின் ஆவிகளை ஆட்சி செலுத்துகிறார் ஆசிரியர் உமார்” என்று கூறினான்.
“ஆம் ஒருநாள் இரவு, புதைகுழிகளின் நடுவே சென்று அவர் உட்கார்ந்ததை நான் பார்த்தேன்” என்று அவர்களிலே ஒருவன் கூறினான். அந்த ஆண்டும் இறுதிக் கட்டத்தை அடைந்தது. கடைசிக் குறிப்புகள் முழுவதும் பதியப் பெற்ற பிறகு, உமாரும், மைமனும் உட்கார்ந்து, முடிவான, துல்லியமான, மிகமிகச் சரியான பஞ்சாங்கம் ஒன்றைக் கணக்குச் செய்து தயாரித்தார்கள்! அவர்களுடைய கண்டுபிடிப்பின்படி,
ஓர் ஆண்டுக்கு 365 நாட்களுடன் 5 மணி 48 நிமிடம் 45 நொடி கால அளவு காணப் பட்டது. இன்று நாம் பயன்படுத்துகிற பஞ்சாங்கத்தைக் காட்டிலும் இது சரியான, கணக்கேயாகும். இதன்படி, 365 நாட்களுடன், 33 ஆண்டுகளுக்கொருமுறை 8 நாட்கள் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது, சூரிய வட்டக் கணக்கும், கடிகாரக் கணக்கும் மிகத் துல்லியமான முறையில் சரியாக இருக்க முடியும்.
இத்துடன், ஆண்டுகளின் அட்டவணையொன்றும், தயாரித்துப் பஞ்சாங்கத்தைப் பூர்த்தி செய்து, இவர்களுடைய முடிவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிசாம் அல் முல்க் அவர்களிடம் சமர்ப்பிக்கத் தயாரானார்கள்.
நிசாப்பூர்க் கோட்டையிலே யிருந்த உலக அமைப்பாளர் ஆகிய நிசாம் அல் முல்க் அவர்களின் திருமுன் தங்கள் புதிய பஞ்சாங்கத்தைச் சேர்ப்பதற்கு, பாக்தாத் கணிதப் பேராசிரியர் மைமன் அவர்களும், உர்கண்டு ஆராய்ச்சிக் கழகத்துப் பேராசிரியர் முசாபர் அல் இஸ்பிகாரி அவர்களும், தங்களுடைய பட்டங்களுக்குத் தகுந்த அரசியல் உடையலங்காரத்துடன் சென்றார்கள்.
தங்க முலாம் பூசிய எழுத்துக்களால் மினுமினுக்கும் பஞ்சாங்கப் பிரதி யொன்றைப் பறக்கும் நாகப் படம் பின்னப்பட்ட பட்டுத் துணிப் பைக்குள்ளே வைத்து நிசாம் அவர்களிடம் கொடுத்தார்கள். இதைத் தானே நேரடியாக சுல்தான் மாலிக்ஷாவிடம் அளிப்பதற்காக நிசாம் புறப்பட்டுச் சென்றார்.
“கீழ் நாடுகளுக்கும் மேல்நாடுகளுக்கும் தலைவரான எம் பேரரசரே! தங்களுடைய திருக் கட்டளையின் படி, தங்கள் பணியாளர்கள், காலத்தை அளந்து விட்டார்கள். இதுவரை உலகத்திலே கணிக்கப்பட்டு வந்த பஞ்சாங்கங்கள் எல்லாம் பிழையுடையன என்றும், தங்களுடைய சீரிய ஆட்சியிலே நிலைநிறுத்தப் படுகின்ற இந்தப் பஞ்சாங்கம் ஒன்றே சரியானதென்றும், நிலை நிறுத்தப் பெற்றது! அளவற்ற அருளாளரான அல்லா,
உலகத்திலே மனித இனத்தை உலவ விடும், எல்லையில்லாத காலம் வரையிலே, என்றென்றும் சரியான அளவினைக் காண்பிக்கும் இந்தப் புதிய பஞ்சாங்கத்தை - தங்கள் திருவுளத்தின் பெரு விருப்பத்திற்கிணங்கத் தயாரிக்கப்பட்ட இந்தச் சரியான அளவு முறையை - வழக்காற்றில் கொண்டு வரக்கூடிய உரிமையுடைய தங்கள் திருமுன் படைக்கிறேன்!” என்று கூறி நிசாம் அல் முல்க் அவர்கள் சுல்தான் மாலிக்ஷா அவர்களின் கைகளிலே அதை அளித்தார்.
சுல்தான் மாலிக்ஷா, அதை ஆவலுடன் வாங்கிப் பார்த்தார். பஞ்சாங்கம், அவருடைய புரியும் தன்மைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தாலும், அதைச் சுற்றிக் கொண்டு வந்த பட்டுத் துணியில் பின்னப்பட்டிருந்த பறக்கும் பாம்பின் அழகிய உருவம் அவரைப் பெரிதும் கவர்ந்தது.
பறக்கும் பாம்பு, அவருடைய பரம்பரைச் சின்னமாகும். மேலும், விண்ணின் குறிகளை விளக்கும் ஆற்றல் படைத்த உமார் கயாம் தயாரித்த இந்தப் பஞ்சாங்கம், அவருடைய தொடர்ந்த ஆட்சியை அதிர்ஷ்டமுடைய தாக்கும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. தன் ஆட்சியில் ஒரு புதிய பஞ்சாங்க முறை ஏற்படுத்துவது அவருக்குப் பெருமையாகவும் இருந்தது.
“விண்மீண் வீட்டிலே ஆராய்ச்சி செய்த கல்வி வல்ல மேதைகளுக்குச் சிறப்புப் பட்டங்களும், பொற்கிழிகளும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். என்னுடைய அரசவை வான நூல் அறிஞருக்குக் குன்றின் மேல் உள்ள காசர் குச்சிக் என்ற சிறிய அரண்மனையை வெகுமதியாகக் கொடுங்கள்” என்று சுல்தான் ஆணையிட்டார்.
அவருடைய பெருங் கொடையளிப்புக்கு வியந்து, அதை நிறைவேற்றுவதற்கு அடையாளமாகத் தலை குனிந்து நிசாம், சுல்தான் மாலிக்ஷா காதில் விழும்படியான குரலில் பணிவுடன், “வரும் இளவேனிற் காலத்திலே, கதிரவன் பூமத்திய ரேகைக் கோட்டிலே செல்லும் சரியான நாள் வருகிறது.
அன்று மாலையுடன், பழைய பஞ்சாங்க வழக்கு நிறுத்தப் பட்டு, புதிய சகாப்தத்தின் ஆரம்ப விழா நடத்தப் படுவதற்கும், புதிய சகாப்தத்திற்குத் தங்கள் பெயரால், “ஜல்லாலியன் சகாப்தம்” என்ற பெயர் வைப்பதற்கும், தங்கள் பேராணைக்குக் காத்திருக்கிறேன்” என்று நிசாம் கூறினார். சுல்தானும், அதற்குச் சரியென்று கூறினார்.
அந்த இளவேனிற் காலத்தில், சூரியன் பூமத்தியரேகைக் கோட்டில் பவனி வரும் அந்த நாளில், இரவும் பகலும் சரிசமமாக இருக்கும் அந்த நாள் மாலையில், தன்னுடைய பிரபுக்கள் புடைசூழ, அரண்மனைக் கோட்டைக் கோபுரத்தின் உச்சியிலே, சுல்தான் மாலிக்ஷா ஏறி நின்றார்.
தூரத்துச் சமவெளியின் ஓரத்திலே, கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். வீட்டில் மேல்மொட்டை மாடிகளிலேயும் வெளி வராந்தாக்களிலேயும், நிசாப்பூர் மக்கள் இரத்தினக் கம்பளங்கள் விரித்துத் திருவிளக்குகள் ஏற்றி வைத்திருந்தார்கள்.
வீணையின் இசையும், மாதர்களின் சிரிப்பொலியும் மயங்கிய வெளிச்சத்தின் இடையிலே எழுந்து வீதியெங்கும் இன்பம் நிறைந்தன. வீதியின் வழியாக அரசாங்க அறிவிப்பாளர்கள், புதிய சகாப்தத்தின் முதல் நாளின் முதல் மணி தொடங்கி விட்டது என்று கூவிக் கொண்டு சென்றார்கள். தங்கச் சரிகையிட்ட அங்கியணிந்து, இளைஞரான சுல்தானின் தோளோடு தோளாக அருகிலே நின்றார் உமார். நிலப் பகுதியின் இருட் கோட்டிலே.
பழைய சகாப்தத்தின் கதிரவன் மூழ்கி மறைவதை சுல்தான் பார்த்துக் கொண்டிருந்தார். வானம் தெளிவாக இருந்தது. சூரியன் மறைந்த அந்த இடத்திற்கு மேலே மட்டும் சிறிய மேகக் கூட்டம் ஒன்று இருந்தது. மறைந்த கதிரவனின் ஒளிக் கரங்கள் அந்த மேகங்களிலே பட்டுச் செம்மை படரச் செய்தன.
தாடி நரைத்த முல்லா ஒருவர் “அதோ பாருங்கள், வானத்திலே அல்லா சாவுக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார்!” என்று கூறிக் கொண்டிருந்தார். சுற்றிலும் இருந்தவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர்கள் கவனம் முல்லாவிடம் ஈடுபடும் முன்னாலே “காணுங்கள்! காணுங்கள்! உலகத்தின் தலைவரே! பேரரசே! வெற்றி வீரரே! தங்கள் சகாப்தம் தொடங்கி விட்டது” என்று கூவினான். மக்கள் கவனம் அவன் பக்கம் திரும்பி விட்டது.
கதிரவனின் கடைசி ஒளியும் மறைந்து விட்டது. உலகத்தில் இருளும், வானில் வெறுமையும் நிலவியது. வீதிகளிலே, சேர்ந்து பாடிக் கொண்டு போகும் கூட்டத்தினரின் பாட்டொலியும், அரண்மனையின் சபா மண்டபத்திலே பேரிகைகளின் ஒலியும் எழுந்தன.
எங்கும் திருவிழாக் கோலமாக இருந்தது. உமார் வராந்தா ஓரத்துக்கு வந்து கீழே நோக்கினான். மங்கலான அந்த அரைகுறை வெளிச்சத்திலே, நீர்க் கடிகாரம் ஒன்று புதிய சகாப்தத்தின் மணிக் கணக்குகளை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். “உமார் காலத்தை மாற்றியமைத்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். முல்லாக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், காலம் மாறியா போய் விட்டது? இல்லை, கதிரவன்தான் மாறி விட்டானா?” என்று எண்ணி வியப்படைந்தான்.
“நாளைக் காலையில் நல்ல நேரந்தானோ? நான் மான் வேட்டைக்குப் போக வேண்டும்” என்று உமாரின் காதருகிலே வந்து சுல்தான் கேட்டார்.
உமார் புன்சிரிப்புடன், “நான் இங்கிருந்து செல்வதற்கு அனுமதியுங்கள். கிரக நிலைகளை ஆராய்ந்து சொல்கிறேன்” என்றான்.
அரண்மனையிலிருந்து தப்பி வந்தது உமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. விகடன் ஜபாரக், அவனை எங்கும் தேடி விட்டு, இங்கே வந்த பொழுது, விண்மீன் வீட்டிலே ஆராய்ச்சிக் கூடத்திலே விளக்கேற்றி வைத்துக் கொண்டு, மேசையிலே வேலை செய்து கொண்டிருந்தான். நிசாப்பூரிலே, ஆட்டமும் பாட்டுமாக இருந்தது. இங்கே உடைகளைக் கூடக் கழட்டாமல் வேலையில் ஈடுபட்டிருந்தான் உமார்.
“வேட்டையாடப் போவதன் குறிகளைத் தெரிந்துவரும்படி வேந்தர் கூறினார்” என்றான் ஜபாரக்.
பொறுமையிழந்த உமார் அவனை நோக்கி, “காற்று எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.
“தென் திசையிலிருந்து அமைதியாக வீசிக்கொண்டிருக்கிறது.”
“சரி, எங்கு அவருக்கு விருப்பமோ, அங்கு வேட்டையாடலாம். பயப்பட வேண்டியதில்லை என்று சொல்” என்றார் உமார்.
“வானத்தில் சாவுக்கொடி தொங்க விடப் பட்டிருக்கிறது என்று முல்லாக்கள் சொல்கிறார்களே?”
“மதக்குருக்கள்தானே! அவர்களுக்குப் புதிய பஞ்சாங்கம் அமுலுக்கு வந்ததால் கோபம் உண்டாகியிருக்கிறது. அதனால் சபிக்கிறார்கள். நேற்று எப்படி யிருந்தாரோ, அப்படியே நாளையும் மாலிக் ஷாவுக்கு இருக்கும் என்றும் எவ்விதத் துன்பமும் வராது என்றும் சொல்.”
“உறுதியாகவா?”
“ஆம் ஆம்!” என்று அலுப்புடன் கூறினான் உமார். அப்படி யிருந்தும் மீண்டும், “சரி. நான் போகிறேன். சிரிப்பும், பாட்டும் நிறைந்திருக்கும் அரண்மனைக்கு நீங்களும் வந்தால் என்ன? அங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றான் ஜபாரக்.
“என்னுடைய நண்பனே, நீ பார்த்திருக்கும் எந்த மனிதனையும் காட்டிலும், அதிகமான இன்பத்துடன் நான் இங்கே இருப்பேன். நீ கவலைப் படாதே!” என்று ஜபாரக்கை அடக்கினான், உமார்.
ஜபாரக் உமார் எதிரில் சரி சரி என்று கூறினாலும், அவன் கூற்றை நம்பவில்லை. தனியாக இருக்கும் சமயத்தில், அமைதியான சூழ்நிலையில் உமார் மகிழ்ச்சியாக இருந்ததே கிடையாது என்பது அவனுக்குத் தெரியும், விகடனுக்கு அரண்மனைக்குச் செல்ல வேண்டுமென்று இருந்தாலும் உமாரை உத்தேசித்து அங்கேயே தங்கிவிட்டான்.
தன்னுடைய, இறுக்கிக் கொண்டிருக்கும் அரசாங்க உடையைக் களையவேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் உமார் மேல் நோக்கிப் போகும் படிக் கட்டுகளிலே ஏறினான். அவர்கள் இருவரும், சூழ்ந்திருக்கும் இருட்டிலே தட்டித் தடவிக் கொண்டு ஏறி உச்சிக்குச் சென்றார்கள். அங்கே அவர்களின் அருகிலே பெரிய வெண்கலப் பூகோள உருண்டை இருந்தது.
“ஜபாரக்! அதோ மேலே பார். என்ன தெரிகிறது?”
“நட்சத்திரங்கள். தெளிவான வானத்தில் நட்சத்திரங்கள் தெரிகின்றன!”
“அவைகள் நகருகின்றனவா?”
அந்த விகடன், தலையை ஒருக்கணித்துக் கூர்ந்து கவனித்தான். உண்மையில், அந்த நட்சத்திரக் கூட்டங்கள் நகருவதை அவனால் காணமுடியவில்லை. இருப்பினும், கதிரும் நிலவும்போல அவைகளும் தோன்றுவதையும் மறைவதையும் அவன் கவனித்து வந்திருக்கிறான். நட்சத்திர வீட்டில் இத்தனை நாட்களாக இருக்கும் அவன் இவற்றைக் கவனிக்காமல் இருக்கவில்லை. நட்சத்திரங்களின் இடத்தையும் ஒளியையும்கொண்டு, இரவு நேரத்தைக் கணித்துச் சொல்லக் கூடிய சக்தியும் அவனுக்கு உண்டு.
“இப்பொழுது சுற்றுவதுபோல தெரியவில்லை, ஆனால், அவை மிக மிக மெதுவாகச் சுற்றுகின்றன. ஒவ்வொரு நாளும் அவை பூமியைச் சுற்றுகின்றன. அதைநான் முன்பு கவனித்திருக்கிறேன்!” என்று கூறினான்.
“சரி, நம்முடைய பூமி, என்ன செய்கிறது? இதைப்பற்றி நீ என்ன தெரிந்து வைத்திருக்கிறாய்?”
“இதோ இந்தப் பூகோள உருண்டைபோல, இது, ஒருபந்து, எல்லாக் கோளங்களுக்கும் மத்தியில் இது இருக்கிற்து. அல்லாவின் ஆணைப்படி, இது ஒன்றே அசையாமல் இருக்கிறது, மைமன் எனக்குச் சொல்லி யிருக்கிறார்.”
உமார் இதைக் கேட்டான், கீழே ஆற்றோரத்தில், இரவுப் பறவைகள் இறக்கையடித்துப் பறந்து கொண்டிருந்தன. ஓர் ஆந்தை, அமைதியாக அவர்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று அவர்களுடைய முகத்தில் சிலு சிலுப்பை உண்டாக்கி வீசிக்கொண்டிருந்தது.
“ஜபாரக், இரண்டு வருடங்களாக இவற்றைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உழைத்தேன். அந்த ஆராய்ச்சியின் பலனாக நான் அறிந்து கொண்ட விஷயத்தைச் சொல்கிறேன், கேள்.
அதோ அங்கே சிறுசிறு புள்ளிகளாகத் தெரிகின்றனவே, நட்சத்திரங்கள்! அவை இருந்த இடத்திலேயேதான் இருக்கின்றன. அவை அசைவதேயில்லை. எத்தனையோ ஆண்டுகளாக அவை அங்கேயே தூரத்திலேயே நிலையாக இருக்கின்றன. என் அன்புக்குரிய மூடனே, கேள். இந்தப் பூமிதான், நாம் நிற்கிறோமே இந்தப் பூமிதான் ஓர் இரவும் பகலும் சேர்ந்த ஒருநாளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. மேலே பார், அந்த நட்சத்திரங்கள் சுற்றுவதேயில்லை!”
திடீரென்று ஜபாரக் உடலிலே நடுக்கங்கண்டது. அவனுடைய தலை ஒரு மாதிரியாகச் சாய்ந்தது. “தலைவரே! எனக்குப் பயமாக இருக்கிறது” என்று கூவினான்!
“எதற்காகப் பயப்படவேண்டும் ! எதைக் கண்டு பயப்படுகிறாய்?” என்று கேட்டான் உமார்.
“தலைவரே! வலு மிக்கச் சொற்களைக் கூறிவிட்டீர்கள். இதோ, இந்த இரவில் எத்தனை மாற்றங்கள். இந்தக் கோபுரம் அசைகிறதே!” என்று கூறிக்கொண்டே, வரந்தைக் கைப்பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். “தலைவரே! உடனே தங்கள் சாபத்தை மாற்றுங்கள். இல்லாவிட்டால் நாம் விழுந்து விடுவோம்! இந்தக் கோபுரம் சுற்றுவதுபோல இருக்கிறது. நாம் கீழே விழப் போகிறோம். ஐயோ, ஐயோ!” என்று கத்தினான் ஜபாரக்.
“முட்டாளே, நாம் விழமாட்டோம். பூமி சுற்றினாலும், நாம் பத்திரமாகவே இருக்கிறோம். அந்த உலகங்களின் ஊடே, சூரியனைப் போல் பெரியபெரிய நிலையான அந்தக் கோளங்களின் ஊடே, வானவெளி வழியாக நாம் போய்க் கொண்டே இருக்கிறோம். நாம் நகருகிறோமே தவிர, அவை நகருவதில்லை. இது உனக்குத் தெரியவில்லையா, புரியவில்லையா? என்று ஒருவித வேகத்தோடு கேட்டான்.
“அல்லா என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கூவிக் கொண்டே ஜபாரக், தன் இரு கைகளாலும் தன் தலையைப் பிடித்துக் கொண்டே அழுதான். தன் அருமைத் தலைவனான உமாருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவன் நிச்சயமாக நினைத்துக் கொண்டான்.
“சுல்தானிடம் வேட்டையாடுவது பற்றி சொல்ல வேண்டும்! நான் போகிறேன்” என்று பதிலை எதிர்பார்க்காமல் கூவிக்கொண்டே எழுந்திருந்தான். உமாரின் அருகில் இருக்க விகடனுக்குப் பயமாக இருந்தது. பைத்தியத்தில் உமார் என்ன செய்வானோ என்று எண்ணிப் பயந்து, இருட்டிலே தட்டி முட்டிக் கொண்டு படிகளின் வழியாகக் கீழே இறங்கிப்போக ஆரம்பித்தான்.
29. ஏலத்தில் எடுத்த இசைக் குயில் ஆயிஷா!
அப்பொழுது ஜல்லாலியன் சகாப்தத்தின் ஏழாவது ஆண்டு நடந்து கொண்டிருந்தது. சிரியா தேசத்திலே படையெடுத்துச்சென்ற சுல்தான் மாலிக்ஷா, வெற்றியின் பெருமிதத்துடன் திரும்பி வந்திருந்தார். அந்தப் போரிலே தோற்றுப்போய் பிடிபட்ட அடிமைகளை நிசாப்பூர் அங்காடிச் சந்தையில் அடிமை ஏலம் போடும் கம்பத்தின் அருகில் அடிமை வியாபாரி ஒருவன் ஏலம் போட்டுக் கொண்டிருந்தான். ஏலங் கூவுகிறவன், வெண்கல மணியொன்றை அடித்துக் கொண்டே கூவினான்.
“பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம் - அன்பும் அருளும் உடைய ஆண்டவனின் பெயரால் ஏலம் ஆரம்பிக்கப்படுகிறது. குடிமக்களே, கோமான்களே சீமான்களே!” என்று தொண்டை கிழியக்கூவினான். அவன் குரலில் ஒருவேகம் சிறகடித்தது! மானை விலைகூறும் திறமை அது!
பிரபுக்களும், வியாபாரிகளும், கனவான்களும் தனவான்களும் உழவர்களும் குடிமக்களும் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்காக அடிமைகளையும், ஆசைக்கிளிகளைத் தேடும் பருவமான்களைப் பிடிக்கக் கோமான்களும் ஏலம் எடுக்க அங்கே வந்து கூடினார்கள். கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு கூடியிருந்ததால், ஏலம்போடும் கம்பத்தின் அருகிலே, இடம் ஒதுக்குவது அந்த அடிமை வியாபாரிக்குக் கஷ்டமாக இருந்தது. கம்பத்துக்குப் பின்னாலே அவன் கொண்டு வந்திருந்த அடிமை ஆண்களும் பெண்களும் குழுமி இருந்தார்கள்.
கம்பத்தின் முன்னேயிருந்தமேடையின்மேல் முதல் ஏலப்பொருளாக ஒரு சிறுவனைக் கொண்டுவந்து நிறுத்தினான்.
“பிரபுக்களே! இதோ இந்தக் கிரேக்கப் பையனுக்குப் பதினான்கு வயாதாகிறது. பலம்பொருந்திய உடற்கட்டுள்ளவன். எல்லாப் பற்களும் இருக்கின்றன. நோயும் காயமும் இல்லாத அழகிய உடல், வீணை வாசிக்கப் பழகியவன். இஸ்லாத்திலே சேர்க்கப்பட்டிருக்கிறான். இவனுடைய விலை முப்பது பொன்கள்! யாருக்கு வேண்டும்?” என்று கூவினான்.
யாரும் பதில் சொல்லவில்லை.
“இருபத்தைந்து”
எவரும் கேட்கவில்லை.
“இருபது பொன்கள்!”
“இந்த விலைக்குக் கூர்டியக் குதிரை கூடக் கிடைக்காது” என்று கூறி, அசையாமல் நின்ற அந்தப் பையனின் ஒரு கையைத் தூக்கிக் காண்பித்தான். அவனுடைய இடுப்பிலே சிறிய துணி கட்டப்பட்டிருந்தது. அவனை அப்படியே முதுகுப்புறம் திருப்பிக் காண்பித்தான். உடலிலே எந்தவிதமான பழுதும் இல்லை என்பதைக் கூட்டத்தினருக்குத் தெரியப்படுத்தினான்.
ஆனால், ஏராளமான அடிமைகள் கொண்டு வந்து சந்தையிலே அடிக்கடி விற்கப்படுவதால் விலை குறைந்திருந்தது. இன்னும் போர்க்களத்திலிருந்து வழியில் வந்து கொண்டிருக்கும் அடிமைகள் வந்து சேர்வதற்கு முன்னால், கையிருப்பை விற்றுத்தீரவேண்டிய நிலைமையும் இருந்தது. அந்தக் கிரேக்க அடிமையின் வெள்ளிய தோலின் ஊடே அவனுடைய எலும்பு வரிசை காட்சியளித்தது. அரைப் பட்டினி யாகக்கிடந்த அவன் அவ்வளவு தூரம் மெலிந்திருந்தான். யார் என்ன விலைக்கு வாங்கினாலும் உடனடியாக ஏதாவது தின்னக் கிடைத்தால் போதும் என்றிருந்தது அவனுக்கு.
“குதிரையை இதைக் காட்டிலும் அதிகமான விலைக்கு வாங்கினாலும் பலனுண்டு. இந்தப் பலமில்லாத இளைஞன் எதற்குப் பயன் படுவான்? அவனுக்கு நம் மொழியும் தெரியாது. எடுபிடி வேலைக்குக்கூட இந்த வயதில் இவன் பயன்பட மாட்டானே? பதினொரு பொன் தருகிறேன்” என்று ஒரு பருமனான பாரசீகன் கூட்டத்திலிருந்து முன்வந்தான்.
“பதினொன்றா? ஐயோ அல்லா இந்த மத விரோதி இல்லையில்லை - இந்த முஸ்லிம் இளைஞனுடைய உடலில் நல்ல இளம் ரத்தம் ஓடுகிறது. ஒரு மாட்டின் மதிப்புக்கூட இவனுக்கு இல்லையா? கனவான்களே, வெறும் பதினொரு பான்னுக்கு இவன் விலையாவது உங்களுக்குச் சம்மதந்தானா?”
“இந்தக் கிரேக்கச் சிறுவனைக் காவலுக்கு வைத்துக் கொள்ளலாமென்றால் ஈட்டியைத் தூக்கக்கூடிய பலம்கூட இருக்காது போலிருக்கிறதே! சரி பரவாயில்லை, பனிரெண்டு பொன்கள்!” என்றான் மற்றொரு வியாபாரி.
“பனிரெண்டு பொன் - இரண்டு பணம்” என்று குறுக்கிட்டது இன்னொருவன்.
தன்னுடைய முதல் ஏலமே இவ்வளவு மோசமாகப் போவதை எண்ணி ஏலவியாபாரி எரிச்சல் பட்டான். “நீங்கள் என்ன ஏலம் எடுக்கிறீர்கள்? எனக்குப் பிச்சை போடுகிறீர்களா? என்று ஆத்திரத்துடன் கேட்டான்.”
“பாக்தாதிலே இது மாதிரிச் சிறுவர்கள் பத்துப் பொன்னுக்கும் குறைவாகவே கிடைப்பார்கள். உனக்குத் தானம் கொடுப்பதாகவே நினைத்துக்கொள். பனிரெண்டு பொன் நான்கு பணம்” என்றான் முதலில் கேட்ட பாரசீகத்தான்.
கடைசியாக ஒரு வியாபாரி அந்தச் சிறுவனைப் பதின்மூன்று பொன்னும் மூன்று பணமும் கொடுத்துவிட்டுக் கூட்டிக் கொண்டு போனான். அடிமைகள் வரிசையிலே உட்கார்ந்திருந்த கொலுசு அணிந்திருந்த அபிசீனியாக்காரி, பக்கத்தில் இருந்த பெண்ணிடம், தாங்களும், மிகக் குறைந்த விலைக்கே விற்கப்படக் கூடும் என்று கூறினாள்.
“இப்பொழுது விலை மிகக்குறைந்து போய்விட்டது. ஒரு தடவை சய்யித் என்பவர் என்னை முந்நூறு பொன் கொடுத்து வாங்கினார்” என்றாள் அவள்!
“அம்மா தாயே! அது நீ என்னைப் போல் சிறுமியாக இருந்த காலத்தில் இருந்திருக்கலாம்!” என்று அந்தச் சிறுமி கூறினாள்.
“இந்த ஊர்க்காரர்களைக் காட்டிலும் துருக்கியர்கள் பரவாயில்லை. பேரீச்சம் பழ வியாபாரம் செய்தாலும் இப்படிக் கருமிகளாக இருக்க மாட்டார்கள்” என்று அபிசீனியாக்காரி கூறிவிட்டு, “நூறு பொன்னுக்குக்கூட நீ விலைபோக மாட்டாய்!” என்றாள் கேலியாக.
அயீஷா என்ற அந்தப் பெண் தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு யோசித்தாள். அப்படி அவள் கால்களை மடித்து உட்கார்ந்து இருந்ததே ஒரு கவர்ச்சியாக இருந்தது. அவளுக்கு முத்துப்பற்களும் இளமையின் கட்டும் இருந்தது. பாரசீகத்தார் கண்களுக்கு வத்தலாகத் தெரியும் படியான உடல்தான்! இருந்தாலும், அதிகம் மெலிவல்ல; புதுமாதுள மொக்குபோல. அவள் ஹவுரானிலுள்ள பானுசாபா நகரத்தைச் சேர்ந்த அரபியப் பெண்.
அவளுடைய நிறம் பாரசீகத்துப் பெண்களின் நிறம்போன்ற வெளுப்பில்லாவிட்டாலும் அபிசீனியாக்காரியின் உடையதைப் போலக் கருப்பும் அல்ல. இந்தச் சந்தை ஏலத்துக்கு வராமல் தனி ஏலத்தில் விடப்படுவதாக இருந்தால் யாராவது ஒரு பிரபு அவளை விரும்பி வாங்கலாம். ஆனால்,
அபிசீனியாக்காரி தன் இளம் வயதிலிருந்தே அடிமையாக இருந்தே பழக்கப்பட்டவள். இந்த புத்திளம் அயிஷாவோ அப்படியல்ல. எவனாவது ரொட்டிக் கடைக்காரன் அவளை ஏலத்துக்கு எடுத்து அவளைத் தினசரி ரொட்டி அவிக்கச் சொல்லியும், கடினமான வேலைகளைக் கொடுத்தும் கஷ்டப்படுத்தி, விட்டு அதன் பிறகும் தன் ஆசைக்கிழத்தியாகவும் வைத்துக்கொள்ள நேர்ந்தால்.... அவளுக்கு வருத்தமாக இருந்தது.
“ஆண்டவனே, என்னை அப்படி விட்டுவிடாதே” என்று வேண்டிக் கொண்டாள்.
“பெண்ணே நீ வருத்தப்பட்டு என்ன செய்வது? உன் உடல் உழைப்பை வைத்துத்தான் உனக்கு விலையை வைப்பார்களே தவிர உன் அழகை வைத்து அல்ல. உழைப்புக்கு எந்த விலை மதிப்பு உனக்கு ஏற்படுமோ அதற்கு விற்கப்படப்போகிறாய்.
இதிலே எந்த விலைக்குப் போனால் என்ன? அடிமை அடிமைதான். காய்ந்த மரத்திலிருந்து கனியா கிடைக்கும்? என்று கூறி ஆயிஷாவின் நெற்றியில் ஆடிக்கொண்டிருந்த குட்டை மயிர்களை ஒதுக்கிவிட்டடாள். “இதோ பார்! அர்மேனியர்கள் இருவரும் இருபது பொன்னுக்குப் போயிருக்கிறார்கள். இது என்ன காலமோ?” என்று வியப்படைந்தாள்.
அயீஷா, முன்னொருமுறை பாக்தாதிலே விற்கப்பட்டிருக்கிறாள். இருப்பினும் பாலைவனப் பகுதியிலே பிறந்த அவளுடைய கடுமையான சுதந்திர வேட்கை அவள் உள்ளத்தைத் துன்புறுத்தியது. தன் முக்காட்டுத் துணியின் ஒரத்தின் வழியாக சுற்றிலும் கூடியுள்ள வாங்குவோர் கூட்டத்தைப் பார்த்தாள். தெருவில் பிறந்த வெறி நாய்கள் என்று வைதாள். பிறகு, எதுவும் பேசாமலே உட்கார்ந்திருந்தாள்.
குதிரையின்மேல் வந்த ஒருவன் கூட்டத்தின் கடைசியில் வந்து நின்றான். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் அவனுக்கும் வேற்றுமையிருந்தது. அவனுடைய பாகையின் மத்தியில் பச்சைக்கல் ஒன்று ஒளி வீசிக் கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் அவன் நன்றாகத் தெரிந்தவனே . மிகுந்த புகழ்வாய்ந்தவனே என்பது அந்தக் கூட்டத்தினர் அனைவரும் மரியாதையுடன் அவனைத் திரும்பிப் பார்த்ததிலிருந்து தெரிய வந்தது. அரசரின் வானநூல் ஆராய்ச்சியாளராகிய நம் உமார்தான்!
அயீஷா அவனைக் கண்டதும், அவன் மிகுந்த அதிகாரமுள்ள அரசாங்கத்து உத்தியோகஸ்தன் என்று எண்ணினாள். அடத்தியான புருவங்களின் கீழே கழுகுப் பார்வையுடைய இரு கண்களும் கடுமையான முகமும் உடைய அவனுக்கு வயது சுமார் முப்பது இருக்கலாம். அயீஷா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே, எழுந்திருந்தாள்.
“ஏ, பெண்ணே! உட்கார். உன் முறை இன்னும் வரவில்லை!” என்று காவற்காரன் கடுமையாக அதட்டினான். ஆனால், அயீஷாவோ அவன் கைக்குக் கீழே குனிந்து திடீரென்று பாய்ந்து வழியில் இருந்த மனிதர்களை விலக்கிக்கொண்டு மருண்டோடும் மான்போல விரைந்தோடி அந்தக் குதிரை வீரனின் அருகிலே சென்று அவனுடைய குதிரைச் சேணத்தைப் பிடித்துக் கொண்டாள்.
“ஏழைகளின் பாதுகாவலனே! என்னைக் காப்பாற்றுங்கள் நான் பானு சாபா நகரத் தலைவனுடைய மகள். பாருங்கள் என்னை இந்தப் பொதுச் சந்தையிலே கொண்டு வந்து சாதாரண அடிமைச் சிறுவர் சிறுமிகளோடு ஏலம் போடுகிறார்கள். என்னைத் தாங்கள்தான் காத்து, அருள் புரிய வேண்டும்” என்று அடிபட்ட கிளிபோல விம்மினாள்.
தான் பேசிய அராபிய மொழியை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டுமே என்ற வேட்கையோடு அவனைப் பார்த்தாள். முக்காடு கீழே விலகி விழும்படி நழுவ விட்டாள். அவள் உதடுகள் அவனுடைய கருணைக்காக ஏங்கித் துடிதுடிப்போடு அசைந்தன. வேண்டுகோளும் உணர்ச்சியும் கலந்த அவளுடைய கரிய விழிகளை உமார் கண்டான். அவளுடைய அழகிய கழுத்தின் வளைவையும், மெல்லிய தோளின் சதைப் பிடிப்பையும் அளவிட்டான்.
உமார் அவளுடைய மொழியைப் புரிந்து கொண்டான். ஆனால், அந்தக் கன்னங்கரிய விழிகளைக் காணும் போது. அவனுக்கு பத்தாண்டுகளுக்கு முன் இறந்த தன் ஆசைக் காதலி யாஸ்மியின் நினைவு வந்தது, அந்தக் கருவிழிகளில் தன்னுடைய யாஸ்மியின் விழிகளைக் கண்டான். அப்படியே தன்னை மறந்து பித்துப் பிடித்தவனைப்போல் ஆகிவிட்டான்.
ஏல வியாபாரி, கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்தான். அவளுடைய தோளை உலுக்கிக் கொண்டே, “பெட்டைச் சிறுக்கியே; போ! உன் இடத்துக்கு” என்று எரிந்து விழுந்தான். பிறகு, உமாருக்குச் சலாம் இட்டு, “குவாஜா அவர்களே, தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் இந்தச் சிறுக்கியின் குணம் அப்படி” என்றான் ஒருவிதத் தாழ்மையோடு.
அயீஷா, இன்னும் குதிரைச் சேணத்தை விடாமல் பிடித்த பிடியாக நின்று, தன் வழுவழு கன்னத்தை உமாரின் முழங்காலிலே, தேய்த்துச் சாய்த்துக் கொண்டிருந்தாள்.
“அவளுடைய விலை என்ன? எதுவாக இருந்தாலும் அவளுக்காக நான் நூறு பொன் தருகிறேன்!” என்றான் உமார். ஒருவித ஆசைக் கிறுகிறுப்போடு.
ஏல வியாபாரி, குவாஜாவின் பலவீனத்தைப் புரிந்து கொண்டான். இந்த விலையைக் கேட்டதும், மனங்குளிர்ந்து போய் விட்டது. இந்த விலைக்கு எந்த அழகுப் பெண்ணையும் விற்கக்கூடிய சந்தை நிலவரமில்லை என்பதையும் அவன் அறிவான். அப்படியிருக்க இந்தச் சோனியை இந்த லாபத்தோடு நிறைவு காண அவன் மனம் எண்ணவில்லை. பலவீனத்தைப் புரிந்த அவன் லாபம் அடைய வேண்டும் என்ற பேராசை கொண்டான்.
மேடையைச் சுற்றியிருந்த கும்பல் உமாரைச் சுற்றிக் கொண்டது. அந்தக் கும்பலிலே இருந்த தன்னுடைய கையாள்களுக்கு, ஏல வியாபாரி கண்சாடை காட்டினான். கண் சாடையைக் காட்டி அவர்களை விலையை உயர்த்தும்படி உணர்த்திவிட்டுக் கும்பலைப் பார்த்துப் பேசத் தொடங்கினான்.
“அல்லாவின் திருவருளில் அழியாத நம்பிக்கை கொண்டவர்களே! அழகில் ஒப்பும் உயர்வுமற்ற இந்த இளம் பருவப் பெண்ணுக்கு நூறு பொன்தான் விலையா? மின்னல் கொடி போன்ற இடையும் புள்ளிமான்போல் மருண்டு நிற்க இந்தப்புது மானின் அள்ளும் பார்வையையும் குயில் போன்ற குரலும், புல்புல் பாடகி போன்ற இசை நுட்பம் கொண்டு, துன்பம் நேர்கையில் பூங்கொடியான அவளுக்கு நூறு பொன்தான் பெறுமதியா” என்று நீதிபதியிடம் நியாயம் கேட்பவன் போலப் பொதுமக்களை நோக்கிக் கேட்டான். “இதற்கு மேல் யாரும் கேட்கவில்லையா?” என்று கூறித் தன்னுடைய கையாளை நொக்கினான்.
விலையை உயர்த்தி விடுவதற்காகவே கூட்டத்தின் இடையில் இருந்த அந்த மனிதன், நூற்றுப்பத்துப் பொன்” என்று கூவினான்.
நெடுநேரம் அங்கே நிற்கவும், ஏலம் கேட்டுக் கொண்டிருக்கவும் விரும்பாத உமார் கயாம், “சரி இரு நூறு பொன் தருகிறேன்! பிறகு என் வீட்டிலே வந்து வாங்கிக் கொள். நான் இவளைக் கூட்டிக் கொண்டு போகிறேன்” என்று ஆவேசத்தோடு கூறினான்.
எழுபது பொன்னுக்கு ஏலத்தில் விடுவதே அரிய காரியம். அந்தப் பெண்ணுக்கு இருநூறு பொன் விலை கிடைக்கிறது என்றவுடன், ஏலவியாபாரி திடுக்கிட்டுப் போனான். “மத நம்பிக்கையுள்ள மக்களே நம்முடைய அரும் பெரும் தலைவரான இந்த கனவானுக்கு எவ்வளவு தாராள மனப்பான்மை! எத்தனை தேர்ச்சி எவ்வளவு கலை ஞானம் மிகுந்தவர் என்று பார்த்தீர்களா? இப்பொழுது, பாடும் குயிலான அயீஷா என்ற அடிமைப் பெண்ணை குவாஜா உமார் அவர்களுக்கு இரு நூற்றி.
என்று இழுத்தவன் “மீண்டும் கூட இருபது பொன் கொடுத்தால் மசூதிக்கு ஐந்து பொன்னும் மீதிப் பதினைந்து பொன் எனக்கு ஏதாவது சில்லறைச் செலவுக்கும் பயன்படும். தாராள மனப்பான்மையுள்ள பிரபுவே, “இந்தப் பாடும் அழகியைக் கொண்டு செல்லப் பல்லக்கு வேண்டுமா? பாதுகாவலுக்கு ஆப்பிரிக்க அடிமைப் பையன் வேண்டுமா?’ என்று தன் வியாபாரத் புத்தியைக் காட்டத் தொடங்கினான்.
உமார், இவனுடைய பேச்சுக்கெல்லாம் காது கொடுக்காமல் தன் பின்னால் வேறொரு குதிரையில் தொடர்ந்து வந்த வேலைக்காரனைக் கீழே இறங்கச் சொன்னான். அவன் இறங்கியதும், அந்தக் குதிரையின் மேல் அயீஷா ஏறிக் கொண்டாள். சேணத்தில் உட்கார்ந்த பிறகுதான் பிழைத்தோம் என்ற மன அமைதி ஏற்பட்டது.
கடைசியில் பேரம் பேசுகையில் ஏதாவது தகராறு வந்து வேறு எவனுக்காவது விற்கப்பட்டு விடுவோமோ என்று கலவரத்தோடு பயந்திருந்தாள். அவள் முகந்தெரியும்படி திறந்திருந்த முக்காட்டை உமார் இழுத்து முடினான்.
அவள், மிகுந்த மரியாதையுடன் தலை குனிந்து கொடுத்தாள். இப்பொழுது, அவள் உமாரின் முழு உடைமையாகி விட்டாள். குதிரைகள் நடக்கத் தொடங்கிய பொழுது, பெருமிதத்துடன் திரும்பி அந்தக் கால் கொலுசு போட்ட அபிசீனியாக் காரியைப் பார்த்துக் கொண்டே சென்றாள் அயீஷா.
“பெண்ணே! நிஜமாகவே, நீ பானுசாபா நகரத் தலைவனுடைய மகள்தானா?” என்று உமார் திரும்பவும் கேட்டான்.
குழைவுடன், தன் பவழ உதடுகளிலே ஒரு சிறு குறுநகையைத் தவழவிட்டபடி அவள் நன்றியுள்ள நாயொன்று தன் தலைவனைப் பார்க்கும் வாஞ்சையுள்ள பார்வையுடன் கொஞ்சலாக உமாரை நோக்கி, “ஐயா, தங்கள் கருணையைப் பெறுவதற்காகப் பொய் கூறினேன். மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையாக நான் நன்றாகப் பாடுவேன்!” என்று விம்மும் குரலில் கூறினாள்.
உமார் ஒன்றும் பேசாமல் தனக்குள் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.
அழகிய இந்தச் சிறு பெண் நெஞ்சின் ஆழத்திலிருந்து உண்மை பேசுவதைக் கண்டு ஆனந்தங்கொள்ளும் மகிழ்ச்சிப் புன்னகை புரிந்தான். அதைக் கண்டு அழகி அயீஷாவின் மனம் ஆயிரம் முறை நன்றி கூறிக்கொண்டிருந்தது!
நிசாப்பூரிலிருந்து இரண்டு நாள் பயணம் செல்ல வேண்டிய தூரத்திலே, குன்றுப் பிரதேசத்திலே காசர் குச்சிக் அரண்மனை யிருந்தது. அந்த அரண்மனை மிகச் சிறியதாக இருந்தது. என்றாலும் அழகிய தோற்றத்துடன் விளங்கியது. ஒரு மலைத் தோட்டத்தின் நடுவிலே அமைக்கப் பட்டிருந்த அந்த அரண்மனையின் எதிரில் சமவெளி பரவிக் கிடந்தது. அழகிய நீல ஓடுகள் வேய்ந்த அந்த அரண்மனையில், அயீஷாவுக்கு என்று தனியாக ஓர் அறை கொடுக்கப்பட்டது.
அந்த அறையில் இருந்தபடி உப்பரிகைக்குப் போவதற்கும் வழியிருந்தது. அயீஷா அங்கு வந்ததற்கப்புறம் தனிப் பறவையான தன்னிடம் தன்னை விலைக்கு வாங்கிய நாள் முதல் இன்று வரை தன்னுடன் ஒருநாள் கூட இன்பம் அனுபவிக்க வரவில்லையே என்று வியப்பாயிருந்தது!
அதன் காரணமும் அவளுக்குப் புரியவில்லை ஆனால், பிறகு, பரம்பரை வழக்கப்படி ஒரு மாதம் கடந்த பிறகு, அவன் தன்னை அணுகலாமென்று எண்ணி மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டாள். அந்தக் காலத்தில் அந்தப் பகுதியில் ஒரு அடிமைப் பெண்ணைக் கூடுவதற்குச் சில மதச் சடங்குகள் செய்து ஒரு மாதத்திற்குப் பிறகே கூடுவது வழக்கமாயிருந்தது.
ஆனால், படைவீரர்கள் தங்களிடம் பிடிபடும் பெண்களை அவ்வப்பொழுதே அனுபவித்துப் போரினால் எற்பட்ட இரத்தக் கொதிப்பைத் தணித்துக் கொள்வதும் உண்டு. ஒரு மாதம் வரையில் அவர்களால் காதல் வேகம் தாங்கமுடியாது! வைதிக நம்பிக்கையுடையவர்கள் மட்டும் ஒரு மாதம் சென்ற பிறகே அந்தப் பெண்களோடு சேருவார்கள். உமாரும் அதற்காகத்தான் தன்னிடம் நெருங்கவில்லை என்று அயீஷா எண்ணிக் கொண்டாள்.
முதன் முதலிலே, அரண்மனை முழுதும் சுற்றிப்பார்த்த அயீஷா, அங்கு தன்னைப்போல் வேறு பெண்கள் யாருமே இல்லை என்று தெரிந்து கொண்டு சந்தோஷப்பட்டாள். சுலெய்க்கா என்ற சமையல்காரியை விசாரித்தபொழுது அவள் “தலைவருக்கு வேறு மனைவிகள் யாருமே கிடையாது” என்று சொன்னாள்.
மேலும் “அவர் ஏற்கெனவே திருமணம் செய்து ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வரும்பொழுது, அவள் வழியிலேயே கொள்ளை நோயால் இறந்து போய்விட்டாள்” என்றும், “சில சமயங்களில் ஆட்டக்காரிகளான பொது மகளிர் சிலரைக் கூட்டிக் கொண்டு வருவார். பிறகு பிடிக்காமல் சிறிது நேரத்திலேயே ஏதாவது பொருள் கொடுத்து வெளியில் விரட்டி விடுவார்!” என்றும் சில சில விவரங்கள் கொடுத்தாள்.
தன்னைப் பொருள் கொடுத்தோ, கொடுக்காமலோ விரட்டிவிடக்கூடாதென்று அயீஷா மனதிற்குள்ளேயே ஆண்டவனைப் பிரார்த்தித்தாள். உண்மையில் அவர் தன்மீது கருணை வைத்தே தன்னை விலைக்கு வாங்கினாராகையால் அந்த ஆடல் மங்கையரின் கதி தனக்கு வராதென்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அரண்மனையை அவளுக்கு மிக மிகப் பிடித்திருந்தது.
உண்மையில் உமார் தன் பழைய காதலியின் நினைவின் ஏக்கப் பிரமையிலேயே அன்போடு வாங்கியிருப்பதை அவள் எப்படி அறிவாள்?
அயீஷாவுக்கு அந்த அரண்மனை மிகவும் பிடித்துவிட்டது. உமாரையும் அவளுக்குப் பிடித்து விட்டதால், அந்த அரண்மனையும் அவளுக்குப் பிடித்துவிட்டது.
அந்த அரண்மனைப் புறத்தில் இருந்த தோட்டத்தில், குளிர்ந்த நிழல் மரங்களின் ஊடே வளைந்து வளைந்து ஓர் ஒடை சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை, சற்றுத் தூரத்தில் இருந்த சிறு குட்டையில் போய் விழுந்தது. எங்கும் வெள்ளை ரோஜாக் கொடிகள் எழும்பிப் படர்ந்திருந்தன. சுவர்களின் மேல் கூட அவை சுற்றிப் படர்ந்திருந்தன.
தோட்டத்தின் ஒரு மூலையிலே, வனதேவதையின் வஸந்த விஹாரம் போல் ஒரு சிறு கட்டிடம் இருந்தது. ஆயீஷா அங்கே சென்று, பட்டு மெத்தை தைத்த நாற்காலிகளிலே உட்கார்ந்தும், உல்லாசமாக ராணிபோல சாய்ந்து கொண்டும், மனசுக்குப் பிடித்த இனிப்புப் பலகாரங்களைத் தின்றுகொண்டும், வேடிக்கையாக நீருற்றின் நீர்ச் சிதறல்களைக் கவனித்துக் கொண்டும்,
ஆசைப் பெருமூச்சோடு தன் நகங்களுக்கு மருதோன்றிச்சாயம் பூசிக்கொண்டும் தன்னுடைய பொழுதைக் கழித்து வந்தாள். தான் என்றென்றும் காசர் குச்சிக் அரண்மனையிலேயே இன்பமாக இருக்கலாம் என்றுதான் ஆயீஷா எண்ணிக் கொள்வாள்.
“இந்த அரண்மனை அவருக்குச் சொந்தமான எத்தனையோ அரண்மனைகளில் ஒன்று. நம் தலைவருக்கு, நிசாப்பூரிலேயும், மெரில் நகரத்திலேயும், சுல்தானின் அரண்மனைக்கு அருகிலேயும் அரண்மனைகள் இருக்கின்றன. இவை தவிர, விஞ்ஞான ஆராய்ச்சிக்காக விண் மீன் வீடு என்ற ஆராய்ச்சி வீடு ஒன்றும் இருக்கிறது.
அங்கே, தாடி நரைத்த பெரிய பெரிய படிப்பாளிகளிலெல்லாம் தன் தலைவருக்குக் கீழே வேலை செய்கிறார்கள். இவருடைய மேற்பார்வையில் அவர்கள் பெரிய பெரிய புத்தகங்களை உண்டாக்குகிறார்கள்” என்று கலெய்க்கா அபூர்வமாகச் சொன்னாள்.
“ஆ! என்ன, புத்தகங்களா!”
“ஆம்! புத்தகம் என்றால் நம் தலைவருக்குப் பேரீச்சம் பழம் மாதிரி மிகச் சாதாரணம்! அவ்வளவு இஷ்டம். சுல்தானுக்காக அவர் செய்த புத்தகங்களிலே ஒன்று அடையாள முறைக் கணிதம்.”
“அப்படி யென்றால்...?
“அடையாளமுறைக் கணிதம் என்றால் அது ஒரு மாயக் கணக்கு. மேலும், இதுவரை நடந்த விஷயங்களும், இனிமேல் நடக்கப்போகிற விஷயங்களும், ஆண்டவன் மனத்திலே இருக்கிற அத்தனை விஷயங்களும் அறிந்துசொல்லக்கூடிய அறிவு நம் தலைவருக்கு இருக்கிறது. முதிர்ந்த அனுபவமும் வயதும் உடைய உலக அமைப்பாளரான முதல் அமைச்சருக்கிருக்கக்கூடிய அத்தனை அதிகாரங்களும் நம் தலைவருக்கும் உண்டு! நம் சுல்தான் அவர்களுக்குப் படை வீரர்கள் என்றால் மிகப்பிரியம்.
அதற்கும் மேலாக அவர் விரும்புவது வேட்டையாடுவது. ஆனால், நம் தலைவரிடம் மிகமிக அதிகமான பிரியம் வைத்திருக்கிறார். ராஜாங்க விருந்துகளிலே, படைத் தலைவர்களுக்கும், மேலான இடத்தில் இவருக்கு இடங்கொடுத்துச் சிறப்புச் செய்கிறார்கள்.
போர் படையெடுப்பு, வேட்டை இவற்றிலே ஈடுபடும் மனிதர்கள் மிகுந்த தேகபலம் வாய்ந்தவர்களாயிருப்பார்கள். அவர்கள் பெண்களைத் தங்கள் பொழுது போக்குக்காகவும், பிள்ளை பெறுவதற்காகவுமே பயன்படுத்திக்கொள்வார்கள். அதிகாரம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு அழகான மனைவிகளும் அதிகமான மனைவிகளும் அந்த மனிதனிடம் நிறைந்திருப்பார்கள்!
இப்படியாக ஆயிஷா எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது சுலெய்க்கா மேலும் அரசாங்க விருந்துகளைப்பற்றிக் கூறத் தொடங்கினாள். ஆயிஷா, தன் அடுப்படி விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாத அவள், வந்தது முதல் அடுப்படியில் தலையிட நினைக்கவில்லை என்று அறிந்து கொண்டபடியால், இப்பொழுது மிக தாராளமாகப் பேசத்தொடங்கினாள்.
“இதோ பார், சின்ன எறும்பின் புற்றிலே ஒரு நீர்த்துளி விழுந்தாலும், அது வெள்ளப் பெருக்காகத் தோற்றமளிக்கும். ஆனால், அங்கே அரண்மனையிலே விருந்து நடக்கும் பொழுது இராட்சதர்களுக்காகப் போவதுபோல மது குடங்குடமாகப் போகும் வறுத்த புறாக்கறியும், மான்கறியும், சோறும், கூழும், பழவகைகளும் அதுவும் இதுவும் எத்தனை எத்தனையோ? அரண்மனை விருந்தென்றால் சொல்லவா முடியும்? எவ்வளவு போனாலும்,
அங்கே சிறுதுளிபோலத்தான்! நன்றாக விருந்து சாப்பிட்டுவிட்டு, இரவிலே பேசத் தொடங்குகிறவர்கள் விடிந்து நட்சத்திரங்கள் மறைகிற வரையிலே பேசிக் கொண்டே யிருப்பார்கள்!”
“ஆமாம்! பெண்களை விருந்துக்கு அழைக்கமாட்டார்களே? பெண்கள் இல்லாவிட்டால் என்னதான் அப்படி விடிய விடியப் பேசுவார்கள்?”
“அதென்ன அப்படிக் கேட்கிறாய்? பேசுவதற்கா அவர்களுக்கு விஷயமில்லை? என்னென்னவோ கொள்கைகள், கோளங்கள், கீளங்கள் என்று பேசுவார்கள். அதெல்லாம் மிகச் சக்தியுள்ள சொற்கள். என் மூளைக்கு எட்டாத விஷயம்!”
சுலெய்க்கா சொல்லும் இந்த அதிசயமான விஷயங்களெல்லாம் தனக்குப் புரியவில்லை என்கிறபோது, அரசாங்க விஷயங்கள் மூளையைக் குழப்பத்தான் செய்யும் என்று அயீஷா நினைத்தாள்!
பொதுவாகத் தன் இனத்துக்கும்; இந்தப் பாரசீகர்களுக்கும் மிகுந்த வேற்றுமை இருக்கிறதென்பதைத் தெரிந்துகொண்டாள். பாரசீகர்கள் எல்லோருமே அரைக் குருடாக இருக்கும் அரண்மனை வாசல் காவல்காரன் முதல் - அடிக்கடி வெள்ளைக் கழுதையின்மேல் ஏறிவரும் கூனல் முதுகன் வரை - அனைவரும் தாங்கள் வேலை செய்வதைக் காட்டிலும் அதிகமாகத் தூங்குகிறார்கள் - தூங்குவதைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகிறார்கள் - அந்த வகையிலே இந்த சுலெய்க்காவும் சேர்ந்தவள்தான் - இவர்களையெல்லாம் சவுக்கடி கொடுத்து வேலை வாங்குவதற்கு ஒரு கண்காணி இருந்தால் தேவலை என்று அயீஷா எண்ணினாள்.
அந்தத் தோட்டத்தில் வேலைசெய்வதற்குத் தோட்டக்காரர்கள் மட்டும் இருபதுபேர் இருந்தார்கள்! இருந்தும் அவர்கள் பெரும்பாலும் கூட்டமாக உட்கார்ந்து தோட்ட வேலைகளைப் பற்றியும் தங்களைப்பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, வேலை பார்ப்பது இல்லை.
அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்பார்கள். ஒருவன் அந்த இடத்தைக் கொத்திப்போடு என்பான், மற்றொருவன் அது என் வேலையல்ல. அகமதுவின் வேலை என்பான். அகமது எங்கே என்றால், உடம்புக்கு முடியவில்லை, வேலைக்கு வரவில்லை என்பான். கொத்திப் போடாவிட்டால், தலைவர் கோபப்படுவாரே என்றால், நானே கொத்துகிறேன், இன்று என்னைத் தொந்தரவு செய்யாதே நாளைக்குச் செய்து விடுகிறேன் என்பான். ஆனால், நாளை அவன் வந்து வேறொருவனை ஏவுவான்.
இப்படியாகப் பேசிப் பேசிக் கழித்துவிட்டுக் கடைசியாகச் சிறிது நேரம் ஏதாவது வேலைசெய்வார்கள். உடனே களைப்பு வந்து விடும். ஒடைக்கரையில் உள்ள குளிர்ந்த மரநிழலில் துண்டை விரித்துப் போட்டுத் தலைக்குக் கையை வைத்துக்கொண்டு தூங்குவார்கள்.
இவற்றையெல்லாம் இந்தச் சிறுத்தைக் குட்டி உப்பரிகை மேலேயிருந்து பார்த்துக்கொண்டேயிருப்பாள். அயீஷாவை அடிமைச் சந்தையிலிருந்து, அரண்மனைக்குக் கூட்டி வந்த வேலைக்காரன் அவளுக்குச் சிறுத்தைக்குட்டி என்று பெயர் வைத்தான்! ஆகவே வேலைக்காரர்கள் அவளைக் குறிப்பிடும்போது சிறுத்தைக்குட்டி என்றே கூறுவார்கள்.
கவனிக்காமல் கிடந்தாலும் தோட்டத்திலே ரோஜாச்செடி நன்றாக அடர்ந்து படர்ந்து கிடந்தது. அந்தப் படுகையின் நிழலிலே படுத்து அறைகுறையாகத் தூங்குவதிலே அவளுக்கு ஓர் ஆனந்தம். உமார் இல்லாத பொழுது ஆயீஷாவுக்கு இதுவே பொழுது போக்கு:
ஒருநாள், உமாரின் குதிரை தூரத்தில் வரும் பொழுதே, காவல்காரன் தன்னுடைய உத்தியோக உடையையணிந்துகொண்டு, தன் வேலையில் அதிக அக்கறையுடன் நிமிர்ந்து நிற்பதையும், தோட்டக்காரர்கள் அனைவரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு இருப்பதுபோல் பாசாங்கு செய்வதையும், நோய்வாய்ப் பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட அகமது என்பவன் கூட, வேலைசெய்து கொண்டிருப்பதையும், உப்பரிகைமேல் இருந்தபடியே அயீஷா கவனித்தாள்.
கலெய்க்காவும், அடுக்களை அறைக்குள்ளே, குழப்பத்துடன் ஒடியாடி வேலைகளைக் கவனித்தாள். உமார் இல்லாதபொழுது சோம்பிக் கிடக்கும் அந்த வேலைக்காரர்களின் கூட்டம், அவன் இருக்கும்பொழுது, இயந்திரங்கள்போல் ஆடுவதையும் ஓடுவதையும் எண்ணி உலகின் வெளிப்பகட்டான தன்மையைப் பற்றி சிந்தனைசெய்து கொண்டிருந்தாள் அயீஷா உமார் வந்த பிறகு அயீஷாவினால் தோட்டத்திற்குள்ளே போக முடியவில்லை.
தன் அறையிலேயும், உப்பரிகையிலும்தான் அவளால் நடமாட முடிந்தது. அப்படி உப்பரிகைக்குப் போகும் பொழுதும், தன் முக்காட்டுத் துணியை முழுக்க முழுக்க இழுத்து முகத்தை முடிக்கொள்ள வேண்டியதாயிருந்தது.
ஏனெனில், உமார் தனியாக வரவில்லை. அவனுடன் ஆறு ஏழு விருந்தாளிகளும் வந்திருந்தார்கள். சிலர் விடை பெற்றுக் கொண்டு போனதும் புதிய சில விருந்தாளிகள் வந்தார்கள். இப்படியாகப் பல வாரங்களுக்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கவும் பேசிக்கொண்டிருக்கவுமே சரியாக இருந்தது உமாருக்கு நாட்கள் பலப்பல கடந்து சென்று கொண்டிருந்தன. உமார் தன்னைப்பற்றியே அடியோடு மறந்து போய்விட்டானோ என்று கூட அயீஷா ஐயப்பட்டாள்.
தன்னுடைய அந்தப் புரத்திற்கு அப்பால் புதுப்புது மனிதர்களுடன் அவன் இருக்கும்பொழுது அவள் அவனுடன் வந்து பேசுவது என்பது இயலாத காரியம்! இஸ்லாமிய பண்பாட்டின்படி அந்தப்புரத்தில் இருக்க வேண்டிய பெண்கள் வேற்று ஆடவர் மத்தியில் வரக்கூடாது. அப்படியே அவசியம் வரவேண்டியதாயிருந்தாலும் சொந்தக்காரியாகவோ உரிமையும் திருமண உறவும் உள்ள பெண்ணாகவோ இருந்தால் தவறில்லை. அயீஷா பாவம், விலைக்கு வாங்கப்பட்ட அடிமைதானே!
கலெய்க்கா மூலம் செய்தியனுப்பித் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ளவும் தைரியம் உண்டாகவில்லை. அவர் குதிரையின்மீது வரும் பொழுது உப்பரிகை மேலே நின்று கொண்டிருந்த தன்னைப் பார்த்திருக்கத்தான் வேண்டும்.
அப்படிப் பார்த்திருந்தாலும் இவ்வளவு நாட்கள் தன்னைப்பற்றி ஏன் ஒன்றும் விசாரித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை, ஏன் வாங்கினோம் என்று இவளை எண்ணிவிட்டாரோ? மறுபடியும் திருப்பி யாரிடமாவது விற்றுவிட முடிவுசெய்து விட்டாரோ? இப்படி நினைத்துப் பார்க்கிறபொழுது ஆயீஷாவின் நெஞ்செல்லாம் குமுறியது! தன் தலைவிதி எப்படியெப்படி மாறுமோ? யாராரிடம் எல்லாம் மாறிமாறி அடிமையாகச்செல்ல நேரிடுமோ என்று எண்ணுவாள்.
அப்பொழுது, ஏன் பிறந்தேன் என்று கூட நினைப்பாள். கூண்டுக் கிளிபோன்ற அந்தப்பெண்ணழகி, குளிக்கும்பொழுதும் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் போதும், நகத்துக்கு சாயம் பூசும் பொழுதும், தனக்குள்ளே ஆயிரமாயிரம் எண்ணிப் புழுங்குவாள்.
உமாரைப் பார்க்கும்பொழுது அவளுக்கு ஏனோ ஒரு வித பயம் உண்டாகியது. அவனுடைய உயர்ந்த நிலையும், அதிகாரத்தின் பெருமையும், அலட்சியப் போக்கும் இதெல்லாம் சேர்ந்து அவளைப் பயமுறுத்தியதோ என்னவோ? என்னதான் நடுக்கம் ஏற்பட்டாலும், மீண்டும் விற்கப்படுவதை அவள் விரும்பவில்லை. தான் முக்காடில்லாமல் இருக்கும்பொழுது, உமார் மட்டும் அவளுக்கு நேருக்கு நேர் எதிரே வரக்கூடிய நிலைமை ஏற்பட்டால்.
ஒரு நிமிடநேரம் கிடைத்தாலும் போதும், அவன் தன்னைக் கழித்துக்கட்ட நினைக்க முடியாதபடி செய்துவிட முடியும் என்று மனத்தை தேற்றிக்கொள்வாள். தன்னுடைய அழகிலே அவ்வளவு நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
தோட்டத்தில் உட்கார்ந்து, விருந்தாளிகளும் மற்றவர்களும் பேசிக்கொள்ளுவதையும் இரவு விளக்கேற்றிய பிறகு கூடத்திலே உட்கார்ந்து விருந்துண்ணும் பொழுது பேசுகிற எல்லா விஷயங்களையும், காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு அயீஷா கேட்டாள். தன்னுடைய அந்தப்புரச் சிறைக்குள்ளிருந்தபடியே, சிறுத்தைப் புலியின் காதுகளைப் பான்ற கூர்மையான தன் காதுகளில் படும் விஷயங்களையெல்லாம் மறவாமல் நினைவு வைத்துக்கொள்வாள். நடு நடுவே வந்திருக்கிற ஆட்களின் தோற்றத்தையும் கவனித்துக் கொண்டு, அவர்களுடைய இயல்புகளைப்பற்றி ஆராய்வாள்.
உமாரிடம் வந்தவர்களிலே, தலைநரைத்த அர்மீனிய, வியாபாரி ஒருவன். அவன் பெயர் அக்ரேனோஸ். அவனை, அயீஷா நல்லவனென்று மதித்தாள். அவன் உமாரிடம் தனித்திருந்து பேசும்போதெல்லாம், சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் நீலக்கற்களைப் பற்றியும், வைரம் வைடுரியம் ஆகியவற்றைப்பற்றியும், ஒட்டகச் சாரிகளிலே ஏற்றிவரும் யானைத் தந்தங்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான பொன் இலாபம் கிடைக்கும் நூறாயிரம் வியாபாரங்களைப் பற்றியும் கூறுவான்.
உமாரின் வியாபார நண்பன் அக்ரோனோஸ் என்றும், விற்பனைசெய்ய வேண்டிய பெருஞ்சொத்துக்கள் பல உமாரிடம் இருக்கின்றன என்றும் அவர்கள் பேச்சிலிருந்து அயீஷா தெரிந்துகொண்டாள். அவளுக்காக அவன் கொடுத்த விலை, பிச்சைக்காரனுக்குக் கொடுத்த செப்புக் காசுக்குச் சமம் என்றும், அவன் செல்வநிலை அவ்வளவு உயர்ந்தது என்றும் அறிந்து கொண்டாள்.
உமாருடைய நண்பர்களிலே இன்னொருவன் ஒரு கவிஞன். இஸ்லி என்ற அவன் நேருக்கு நேர் ஒருவரைப் புகழ்ந்து பேசுவதிலே நிபுணன். அவன் உமாரை எல்லையில்லாமல் புகழ்வான். அரசரின் வான நூல் ஆராய்ச்சியாளர், கணிதம், விண்மீன் ஆராய்ச்சி, இசைக்கலை ஆகிய முத்துறையிலும் ற்றக் கற்றவர் என்றும் பள்ளிக்கூடங்களிலே பயிலும் இஸ்லாமியக் குழந்தைகளெல்லாம் உமாரின் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கின்றனவென்றும் கூறுவான். அவனுடைய வாய்ப் பேச்செல்லாம் உள்ளத்திலிருந்து வராதவை என்றே அயீஷா எண்ணினாள்.
ஒருமுறை மூஇஸ்ளலி, தானே எழுதிய செய்யுள் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான்!
அழகோவியம் நீ என்
அருகிலே வந்தாலே
அறையில் இன்பம் சேருதே - இந்த
அறையும் சொர்க்கம் ஆகுதே - நல்ல
அழகுக் காஷ்மீர் போலவே!
எழில்மதி முகத்தின்
எதிரில் வராமல் -
இருக்கும் கரிய கூந்தலே - அது
என்ன பாவம் செய்ததே - அது
ஏனோ வெட்கம் கொண்டதே!
பாவிகள் எல்லாம்
பாழ்நர கடைதல்
பாரில் இயற்கையல்லவோ? - இன்பப்
பால்மதி முகத்தின் பக்கமே . அந்தப்
பாவக் கூந்தல் இருப்பதேன்?
அழகோவியம் நீ என்...
இந்தப் பாட்டு அழகாக இருப்பதாகவே ஆயீஷா கருதினாள். மூஇஸ்ளலி ஆவலுடன் உமாரிடம் தன் பாடலைப் பற்றிக் கருத்தைக் கேட்டபொழுது, காசர் குச்சிக் அரண்மனையின் தலைவனான அவன் “சுல்தானின் ஆஸ்தான கவியாக இருக்க நீ தகுதியுள்ளவன்தான் என்பதை இப்பாட்டு எடுத்துக் கூறுகிறது” என்று பதில் கூறினாள்.
கவிஞன் மூஇஸ்ளலி அன்று இரவு அதிகம் குடித்து விட்டு, அருகில் இருந்த வேதாந்தி ஒருவனிடம் கரிய கூந்தல் என்பதற்குப் பதில் சுருண்ட கூந்தல் என்று போட்டிருக்கலாமா என்று தன் கவியைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான்.
அந்த வேதாந்தி இருப்பது இல்லாதது உலக அன்பு என்று என்னென்னவோ புதிய புதிய சொற்களையெல்லாம் பயன்படுத்திப் பேசிக்கொண்டிருந்தபடியால் அவன் பேச்சு விளங்கவில்லை. குடித்திருந்த கவிஞன் மூஇஸ்ளலி, ஏதோ வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு ஆபாசமான கதைகளை யெல்லாம் கூறினான்.
ஆயீஷாவுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. உமார் பக்கம் திரும்பிக் கவனித்தாள். அவன் இந்த வேடிக்கைகளுக்காகச் சிரிக்கவும் இல்லை; அதை விரும்பிக் கேட்டதாகவும் தெரியவில்லை. வெறுத்ததாகவும் தெரியவில்லை. மூஇஸ்ளலியை அவள் மனதார வெறுத்துச் சபித்தாள்.
அங்கு அடிக்கடி வரும் மற்றொருவன் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அவன் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. நிழலைப் போன்ற அமைதியான போக்குடையவன். உமாருக்கு உயிர் போன்ற நட்புடையவன் அந்த இந்தியன் என்று ஆயீஷா அறிந்து கொண்டாள். அஞ்சாத பார்வையுடைய அந்த இளைஞன், தன் தோளிலே ஒட்டக மயிர்க்கம்பளித் துண்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு, எப்பொழுதும் கால்நடையாக அரண்மனைக்கு வருவான்.
அவனை அங்குள்ளவர்கள் வேதாந்தி காசாலி என்று கூறுவார்கள். காசாலி என்ற பெயருடைய அவன் ஒருநாள் அருகில் இருந்தவனிடம், உமாருக்கு இருந்த அந்தரங்க ஞானமானது, அவனுடைய பழம்பிறப்பின் காரணமாகத் தொடர்ந்து வந்ததென்றும். தன்னை அறியாமலே உமார் அந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறானென்றும் கூறினான். காசாலியும் உமாரும் பேசும்போது, இருவரும் தோட்டத்தில் உலவிக்கொண்டே பேசுவார்கள்.
ஆகையால், அவர்கள் பேச்சு முழுவதும் ஆயீஷாவுக்குக் கேட்காது! அரைகுறையாக ஒரு நாள் அவர்கள் பேச்சு காதில் விழுந்தது இதுதான். உமார் சொர்க்கத்தை நாம் அப்படியே பார்க்க முடிந்தால் புதியதோர் உலகத்தை அங்கே காணலாம். இல்லையா? நமது பழைய உலகத்தை உதறித் தள்ளிவிட்டு, இதயம் விரும்பும் அந்தப் புதிய உலகத்தைக் காணலாம்.
காசாலி:- ஆண்டவனுடைய பக்தியில் நாம் முழுக்க முழுக்க ஈடுபடு முன்பே சொர்க்கத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மாயத்திரை விலகாது! நாம் சொர்க்கத்தைக் காணவேண்டுமானால், பக்தியில் மூழ்க வேண்டும்.
இப்படி அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே உமார் ஒரு மதுக்குவளையை எடுத்துக் குடிப்பதற்காக வாய் அருகிலே கொண்டு போனான்.
“ஆண்டவனால் பழிக்கப்பட்ட இந்தக் காரியத்தைச் செய்யாதீர்கள்” என்று அந்த இந்து தடுத்தான்.
உமார் அந்த ஒரு குவளை மதுவையும் குடித்து விட்டுத்தான் கீழே வைத்தான். உமார் சிரித்துக்கொண்டே, “நண்பா, மதுவைப் பழிக்காதே! அது ஒன்றுதான் எனக்கு உயிர்; அதுவே எனக்கு நலங்கொடுப்பது” என்றான் உத்வேகத்தோடு.
ஏற்கெனவே, உமார், இந்தக் காசாலி என்ற இந்துவுடன் இப்படி உயிராய்ப் பழகுகிறானே. நம்மைக் கவனிக்காமல் என்று அயீஷா அந்த இந்தியன் மீது பொறாமை கொண்டிருந்தாள். இப்போது உமார், “மதுவே என் உயிர்” என்கிறான். இனி அடுத்து என்ன வருமோ? தனக்குப் போட்டியாக என்று வியப்படைந்தாள்.
காசாலி அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து மதங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினான். ஏராளமானவை அவற்றில் இருந்தாலும், கடவுள் ஒருவரே! உலகனைத்தையும் உண்டாக்கிக் காத்து அழித்து நடத்தி வரும் இறைவன் ஒருவனே, என்ற கருத்தை வலியுறுத்தியே காசாலி பேசினான்.
“இஸ்லாத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை விதமான பிரிவுகள். மத நம்பிக்கையுடைய வைதிகமுஸ்லிம்கள் ஒரு புறம் வைதிகத்தை எதிர்த்துப் போராடுகின்ற அலி என்று சொல்லப் படுகின்ற வேதாந்திகள் ஒரு புறம்; அல் என்பவருடைய மதவாதத்தைப் பின்பற்றுகின்ற அலியாக்கள் ஒரு புறம்; இவர்களெல்லாம் போக ஏழாவது மாதி என்ற ஒரு தேவதூதர் வருவார் என்று எதிர்பார்க்கின்றவர்கள் வேறு இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், வேறு வேறு பாதையிலே செல்லுகிறார்கள். இந்துக்களிலே ஒரு கதையுண்டு. ஓரிடத்திலே இருட்டறையிலே யானையைக் கட்டி வைத்திருந்தார்கள். அந்த ஊர் மக்களெல்லாம் இருட்டறையில் கட்டி வைக்கப் பட்டிருந்த அந்த யானையைப் பார்க்க வந்தார்கள். அதைத் தடவித் தடவித்தான் பார்க்க முடிந்தது. துதிக்கையைத் தொட்டுப் பார்த்து விட்டு ஒருவன், இது தண்ணிர்க் குழாய் என்றான்.
இனனொருவன் காது ஒன்றைத் தடவிப் பார்த்துவிட்டு யானை என்றால் விசிறிதான் என்றான். மூன்றாவது ஆள் காலைத் தடவி விட்டுத் துணுக்குத்தான் யானையென்று பெயர் என்று கூறினான். யாராவது ஒருவன் ஒரு விளக்கைக் கொண்டு வந்திருந்தால் உண்மையான யானையை எல்லோரும் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கலாம்” என்று காசாலி கூறிக் கொண்டிருந்தான்.
“இந்த உலகத்தைச் சூழ்ந்துள்ள அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி பரவச் செய்யும் விளக்க எங்கேயிருக்கிறது?” என்று உமார் கேட்டான்.
“வேதாந்திகள் கையில்தான் இருக்கிறது. இருளின் பின் கிடப்பது என்ன என்பதை அவர்களால்தான் காண முடியும்!”
“அந்த வேதாந்திகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நான் அவர்களைத் தேடிப் பார்த்து விட்டேன். அவர்கள் உலகத்தின் இருளைப் போக்குவதற்குத் தங்கள் படுக்கையை விட்டு வெளியில் எழுந்து வருவதாகவே தெரியவில்லை.
அப்படியே வெளியில் வந்தாலும் ஒரு பழைய கதையைச் சொல்லிவிட்டு மறுபடியும் தூங்கப் போய்விடுகிறார்கள். “அவர்களால் உலகுக்கு என்ன பயன்” என்று உமார் தொடர்ந்து கேள்வி கேட்டான். காசாலி பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்!
30. மாய இரவில் மயக்கும் மோகினி!
ஒரு விஷயத்தில் ஆயீஷா காசாலிக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருந்தாள். ஏனெனில், அவன் இருந்தவரை தான், மற்றவர்களும் அங்கு இருக்க முடிந்தது. அந்த இந்து வேதாந்தியின் பேச்சுக்களிலே ஆழ்ந்த கவனிப்புச் செலுத்திய உமார், மற்றவர்களைப் பற்றி இலட்சியம் செய்யவில்லை.
ஆனால், அவன் விடைபெற்றுக் கொண்டு சென்ற பிறகு, மற்ற கூட்டாளிகளின் பேச்சு அவனுக்கு அலுப்புத் தட்டும்படி செய்தது. ஒரு நாள் மாலை, ஏதோ வேண்டாத விஷயத்தைப் பற்றிப் பிரமாதமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். உமாருக்குத் தலைவலி தாங்க முடியவில்லை. ஜபாரக்கினுடைய வெள்ளைக் கழுதையை நடுக் கூடத்துக்குள்ளே ஓட்டிக் கொண்டு வந்து, தன் நண்பர்கள் மத்தியிலே நிற்க வைத்தான்.
அவர்களெல்லாம் அவனுடைய பைத்தியக்காரச் செயலைப் பார்த்து வியந்து பேச்சை நிறுத்திவிட்டு அவன் மீது கவனம் செலுத்தினார்கள். “அன்பர்களே! இந்தக் கழுதை உங்களுக்கு எச்சரிக்கையாக விளங்குகிறது. ஏனென்றால், முந்திய பிறப்பிலே, ஒரு பல்கலைக் கழகத்துப் பேராசிரியராக இருந்து, உங்களைப் போல பல விஷயங்களை விவாதித்ததன் பயனாக இது இந்தப் பிறப்பிலே கழுதையாகப் பிறந்து விட்டது.
” என்று கூறி அவர்களை அவமானப் படுத்தி விட்டான். அதனால் அவர்கள் எல்லோரும் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்கள். தோட்டத்திலே, விண்மீனின் ஒளிவீசும் இரவு நேரத்திலே, உமார் உலவிக் கொண்டிருந்தான். தன்னந்தனியாக இருந்த அவனை நோக்கி அன்னநடை போட்டு வந்தாள் ஆயீஷா!
அவன் எதிரிலே அவள் மண்டிபோட்டு, அவன் கையைப் பிடித்துத்தன் நெற்றியிலே ஒற்றிக் காண்டு, “தலைவரே! தங்களுக்குச் சாந்தியுண்டாவதாக!” என்று வாழ்த்தி வணங்கினாள்.
“சாந்தி! சாந்தி! உனக்கும் சாந்தி உண்டாகட்டும்!” என்று உமார் பதிலுக்கு வாழ்த்தினான்.
“தலைவரே! சற்றுமுன் தரையோடு தரையாக நகர்ந்து வந்து ஒருவன் தங்கள் நடவடிக்கைகளை உளவு பார்த்தான். அதோ அந்த ரோஜாச்செடிகளுக்குப் பின்னால் அவன் ஒளிந்திருந்தான். இப்பொழுது அவன் திரும்பவும் மறைந்து சென்றுவிட்டான். அவன் முகத்தையும் நான் கவனித்தேன்” என்று அயீஷா கூறினாள்.
“அது யார்? தோட்டக்காரன் அகமதுதானே?”
“ஆம் அகமதுதான்; அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்!” என்றாள்.
பாலைவனக் குடிமக்களிடையே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் அயீஷாவுக்கு, உளவு பார்ப்பவர்கள் என்றாலே பிடிக்காது. அவர்களைப் போல் பகைவர் உலகில் வேறு யாரும் இல்லை என்பதும், அவர்களைக் கண்டால் நச்சுப்பாம்பைக் கொல்வது போல், தண்டித்து அனுப்ப வேண்டும் என்பதும் அவளுடைய எண்ணம்!
ஆனால், உமார், “அவன் பிழைத்துப் போகட்டும். அவனை யார் அனுப்பினார்களோ, அவர்களிடம் சென்று கழுதை விஷயத்தைச் சொல்லட்டும். நான் இன்று அவனை அடித்துத் துரத்தி விட்டால் அவர்கள் மறுபடியும் அகமதை விட ஆபத்தான மற்றொருவனை அனுப்பக்கூடும்” என்று சொன்னான்.
அயீஷாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. தான் சொல்லுவதற்கு முன்னாலேயே, அவன் அகமது உளவு பார்ப்பதைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறான். தான் அவனிடம் பானு சாபாத் தலைவன் மகள் என்று கூறியதைக் கூடப் பொய்யென்று, தெரிந்து கொண்டு விட்டானே? அவனுடைய மாயவித்தை பெரியதுதான். தான் அவனருகில் மண்டியிட்டு, அவன் தன் தலையில் கைவைத்த பொழுதுகூட, அவன் தன் எண்ணத்தைத் தெரிந்து கொண்டுதான் இருக்கவேண்டும் என்று அயீஷா எண்ணினாள்.
ஆனால், உமார் தன் போக்கிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தான். “அவர்கள் சொர்க்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் நொடி நேர இன்பத்தைத் தவிர வேறு சொர்க்கம் என்று என்ன இருக்கிறது?” அவனுடைய மெளனத்தின் காரணம் தெரியாமல் ஆயீஷா தானும் பேசாமல் நின்றாள்.
“இந்தத் தோட்டம் அமைதியாகவேயிருக்கிறது. ஆனால் இங்கும் தேடிக்கொண்டு வருபவர்களும், பேச வருபவர்களும், வேவு பார்ப்பவர்களும் வந்து அமைதியைக் குலைத்து விடுகிறார்கள் ஆயீஷா! உன்னிடம் என் வேலைக்காரர்கள் அன்பாக நடந்து கொள்கிறார்களா?”
“ஆம்! தலைவரே. வீணையை எடுத்துக் கொண்டு வந்து நான் பாடவா? தாங்கள் என் பாட்டைக் கேட்கிறீர்களா?”
“மிக நேரமாகி விட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பொழுது விடியத் தொடங்கி விடும்! நீ போய்த் தூங்கு.”
பணிவுடன் ஆயீஷா தன் அறைக்குச் சென்றாள். இத்தனை நடவடிக்கைகளுக்கிடையில் அவர் தன்னை எங்கே கவனிக்கப் போகிறார் என்று தோன்றியது.
ஒரு பெண்ணிடம் பழகுகிற மாதிரியாகவா இருக்கிறது அவர் போக்கு? ஏதோ குதிரையைத் தட்டிக் கொடுப்பதுபோல் தலையிலே கைவைத்தார். இப்பொழுது, குழந்தைக்குச் சொல்வது போல் தூங்கப் போகச் சொல்லுகிறார் என்று எண்ணி ஏங்கினாள்.
உமார், தனியாக அந்தக் குட்டையின் அருகிலே உட்கார்ந்துகொண்டு, தன் சிந்தனையை ஓட விட்டான். அவன் நினைப்பிலே முதலில் வந்து நின்றவன், காசாலிதான். காசாலி, வேதாந்தி - ஆனால் இளைஞன்.
உமார், ரஹீமுடன் போர்க் களத்திற்குச் சென்ற போதும், யாஸ்மியிடம் ரோஜாப்பூ வாங்கிய போதும் எத்தனை வயதுடையவனாக் இருந்தானோ அத்தனை வயதுதான் இப்பொழுது காசாலிக்கு இருக்கும்! காசாலியின் வயதுக்கு அவனிடம் இளமை பொங்கிப் பூரித்து நிற்கிறது. ஆனால், அந்த இளமை ஏன் வீணடிக்கப்பட வேண்டும்? உமாருக்கு இப்பொழுது வயது முப்பத்தினான்குதான் இருக்கும்.
ஆனால், அவனிடமிருந்து இளமை பறிபோய் விட்டதாகத் தோன்றியது. இளமையின் இன்ப வாழ்வு என்ற அந்தப் புத்தகம் அவனைப் பொறுத்த வரையில் மூடப்பட்டதாகி விட்டது. இப்பொழுது வேறு புதிய புத்தகம் திறக்கப்பட்டிருக்கிறது.
காசாலிக்கு வாழ்க்கை உறுதி பயப்பதாயிருக்கிறது; ஆனால் உமாருக்கோ நிலைகுலைந்து போயிருக்கிறது. புலனடக்கம் உள்ள அந்த வேதாந்திக்கு வாழ்க்கை விரித்து வைக்கப்பட்ட தேசப்படம் போல் விரிந்து காணப்படுகிறது. ஆனால், தன்னைப் போன்ற வான நூற்கலைஞனுக்கு, வாழ்வில் தடைக்கு மேல் தடை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
காசாலி, பெரிய ஆசிரியராகத் திகழ முடியும், என்னால் அப்படியிருக்க முடியாது.
இப்படி ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவன் திடீரென்று, கைதட்டி ஓர் ஆளைக் கூப்பிட்டான். வேலைக்காரன் ஒருவன் வேகமாக ஓடி வந்து சிறிது தூரத்தில் மரியாதையுடன் நின்றான். “என்னுடைய அறைக்குள்ளே பட்டுத் துணிகள் அடுக்கி வைத்திருக்கும் இடத்திற்குப் பக்கத்திலே என்னுடைய ரத்தினப் பெட்டியிருக்கிறது. அதை எடுத்துவா” என்றான். அந்த ஆள் போகுமுன் அவனை நிமிர்ந்து பார்த்த உமார் திடுக்கிட்டான். அவன் அகமது!
அவன் பெட்டியைக் கொண்டு வந்தான். அதன் பூட்டைத் திறந்து அதில் உள்ள பொருள்களைப் பார்வையிட்டான். “வேறு எதுவும் வேண்டுமா?’ என்று அகமது கேட்டான். “இல்லை நீ போகலாம்” என்று சொல்லிவிட்டு, அதிலே இருந்த பழைய நாணயங்களைப் பார்த்தான், உமார். அவ்வப்போது தனக்குக் கிடைத்த பழைய நாணயங்களை அதில் சேர்த்து வைத்திருந்தான். அவைதாம் எத்தனையெத்தனை சரித்திர நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகின்றன.
அந்த நாணயங்களிலே காணப்பட்ட உருவங்களையுடைய அரசர்களெல்லாம், இப்பொழுது செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டிருப்பார்கள். சிலச் சிலருடைய அரசாட்சி ஆட்டங்கண்டு விட்டது. சில தேசங்கள், பெருமைக்குரிய நம் பேரரசரான மாலிக்ஷாவின் ஆட்சியில் வந்து சேர்ந்திருக்கின்றன. வெற்றி முழக்கமிட்டு வரும் இஸ்லாமியப் பேரரசின் ஆட்சியிலே தடைபட்டுக்கிடக்கும் மேல்நாடுகள் எத்தனை?
அவருடைய ஆட்சியிலே, நிசாம் அல்முல்க் அவர்களின் ஆணைப்படி, இதுவரை அவன் ஒரே சமயத்தில் மூன்றுபேர் செய்யக் கூடிய வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறான். இன்னும், முன்னைக் காட்டிலும் அதிகமான உழைப்பை அவர் எதிர்பார்க்கிறார். நிசாம் நினைவு வந்ததும், அவனுக்கு இந்தப் பெட்டியை அகமது தூக்கி வர நேர்ந்தது பற்றி வருத்தம் தோன்றியது. அகமதுவின் தோற்றம், அவன் தன்னை வேவுபார்க்கிறான் என்ற எண்ணத்தை உண்டாக்கியது.
இந்த வேவு பார்ப்பதிலிருந்து விடுதலை பெற முடியாதா? ஒரு பக்கம் நிசாமின் ஒற்றர்கள் மற்றொரு பக்கம் அவருடைய எதிரிகளின் உளவாளிகள். இப்படித் தன்னைச் சுற்றி எப்பொழுதும் உளவாளிகளே உலாவிக் கொண்டிருந்தால், தான் எப்படிச் சுதந்திரமாக இருக்க முடியும்? என்றெல்லாம் உமாரின் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும்போது,
மற்றொரு வேலைக்காரன் வந்து ஏதோ கேட்டான்.
“இப்பொழுது, எந்தக் கடிதமும் பார்க்க முடியாது, எனக்கு எந்த விதமான உணவும் இப்போது தேவையில்லை. இஷாக், இந்தப் பெட்டியைக் கொண்டு போய் உள்ளேவை. தோட்டத்துக்குள்ளே யாரும் வராமல் பாதுகாத்துக்கொள்!”
“ஆனால...”
“ஒரு நாய் கூட உள்ளே வரக்கூடாது. மீறி வந்ததோ, உன் கால்களுக்குச் சவுக்கடி கிடைக்கும். போ. நிற்காதே!”
“ஆனாலும், தலைவரே ஒருவர்.”
“அட கடவுளே! நீ போகிறாயா, இல்லையா? என்று உமார் உறுமினான். அவன் ஓடி விட்டான். இருளின் இடையே வானில் மின்னும் நட்சத்திரங்களின் சிறிய ஒளி, தரையில் மரங்களின் ஊடே பரவிக்கிடந்தது. மெல்ல எழுந்த காற்று, குளத்தின் ஒரு சிறு அசைவை உண்டாக்கியது. உமாரின் சிந்தனை மீண்டும் வேலை செய்தது. நகரை நோக்கிச் செல்லும் மலைப் பதையிலே நடந்து செல்லும் காசாலி, தன்னந்தனியாக இருக்கும் நிலையிலும் மகிழ்ச்சி கண்டான்.
பலபேருக்கு மத்தியிலே வேலை செய்தாலும், உமாருக்கு எந்த வேதாந்தியைக் காட்டிலும் அதிகமான தனிமைநிலை இருப்பதாகத் தோன்றியது. காசாலி, தன்னுடைய கருத்துக்களைச் சீடர்களிடம் கூறி மகிழ முடியும். ஆனால், உமாருக்குத் தன் எண்ணங்களில் பங்கு கொள்ளக் கூடிய ஆள் யாரும் இல்லை.
இருளின் ஊடே இனிய வீணையின் நாதம் எழுந்தது. அத்துடன் ஒரு பெண்ணின் குரலும் இழைந்து வந்தது. பாலைவனத்துப் பாதையிலே போர்க்களத்திலிருந்து திரும்பி வரும் படைவீரர்கள் பாடுவது போன்ற கருத்துடைய பாடல் அது. அரபிமொழியிலே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்த அந்த ஆள், தனக்கு மிக அருகாமையிலேயே வீணையை மீட்டிக் கொண்டிருப்பதை உமார் உணர்ந்து கொண்டான்.
“என்ன இது? என்று உமார் கோபத்துடன் கேட்டான். இருள் நிறைந்த இடத்தை விட்டு ஆயீஷா வெளியே வந்தாள். மானைப்போன்று நடந்து வந்து அவனருகிலே உட்கார்ந்து கொண்டு, அவள் தன் மடியில் இருந்த வீணையை மீட்டத் தொடங்கினாள். முன்னேற்பாடாக, முகத்தை மறைத்திருந்த முக்காட்டை முழுக்க முழுக்க விலக்கி விட்டிருந்தாள். “பானு சாபா நகரத்தின் கீதத்தை நீங்கள் கேட்டதில்லையே? இதோ தொடர்ந்து பாடுகிறேன் தலைவரே கேளுங்கள்” என்று இனிய குரலில் நரம்புகளை அதிர வைத்துத் தன் குரலுக்கு மெருகு சேர்த்தாள்.
படிமம்:Page245 உமார் கயாம் (புதினம்).jpg
“ சற்று மு ன், யாரும் தோட்டத்திற்குள்ளே வரக் கூடாதென்று கட்டளையிட்டேன். நீ எப்படி உள்ளே வந்தாய்? யார் உன்னை அனுமதித்தது? என்று கடுமையான குரலில் உமார் கேட்டான். தன்னுடைய தனிமையக் குலைப்பதற்கு ஏதாவது ஒரு சனியன் வந்து கொண்டே யிருக்கிறதே என்ற கோபம் உமாருக்கு.
“தாங்கள் கட்டளையிடும் நேரத்தில் நான் தோட்டத்திற்குள்ளேயேதான் இருந்தேன். ஆகையால், நான் தங்கள் உத்தரவை மீறி வரவில்லை” என்று ஆயிஷா கூறினாள்.
“சரி, சரி. பேசாமல் இரு” என்று எரிந்து விழுந்தான் உமார். பணிவுடன், வீணையைத் தூக்கி அப்புறம் வைத்து விட்டுக் கால்களை மடக்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்தாள். சிறிது கூட ஓசையெழுப்பாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அவள் உட்கார்ந்திருந்தாள். பிறகு, பேசாமலும், ஒசைப் படாமலும் தன்னுடைய கூந்தலை அவிழ்த்து விட்டாள். தோளிலும், முதுகிலும் விரிந்து கிடந்த அந்தக் கூந்தலின் மெல்லியமணம் எங்கும் பறந்தது.
பிறகு சிறிது நேரம் தன் தலையை நிமிர்த்தி அண்ணாந்து விண்ணின் மீன்களை நோக்கினாள். அதன்பிறகு, தன்னுடைய காலில் அணிந்திருந்த வெள்ளித் தண்டைகளை ஒவ்வொன்றாகக் கழட்டி எடுத்தாள். அப்படி ஒவ்வொன்றையும் கழட்டும்போதெல்லாம் வெடுக்கு வெடுக்கென்று திருப்பி உமாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். தன்னுடைய ஏகாந்த சிந்தைனையைத் தொடர்ந்து நடத்த முடியாத உமார், அவளுடைய செய்கைகளைக் கவனித்துக் கொண்டே இருந்தான்.
அயீஷாவினுடைய அந்த அழகான கைகள், கழட்டிய வளையல்களை, மடியில் கோபுரம் போல் அடுக்கிக் கொண்டிருந்தன. உயர்ந்து கொண்டே வந்த கோபுரம் திடுமென்று சரிந்து விழுந்து ஓசை எழும்பியது. துஷ்டத் தனமுள்ள குறும்புக்காரச் சிறுமி பதறுவது போல, அவள் மூச்சையிறுக்கிப் பிடித்துக் கொண்டாள். மெல்ல அவளுடைய தோள் உமாரின் உதட்டிலே உராய்ந்தது. பட்டுத் துணிக்குக் கீழேயிருந்த அந்தத் தோளின் கதகதப்பு அவனுடைய உதடுகளுக்கு உணர்வூட்டியது. எந்தப் பொருளையும் பார்க்க முடியாத அளவு இருள் சூழ்ந்திருந்தது அந்தச் சமயத்திலே.
உட்கார்ந்திருந்த அவள் தன் கைகளைத் தூக்கிக் கூந்தலைக் கோதிவிட்டுக் கொண்டாள். அவளுடைய உடலிலிருந்து கிளம்பிய மெல்லிய மணம் உமார் உணர்வில் கலக்கத் தொடங்கியது. அவள் எதுவுமே பேசாவிட்டாலும், அன்று இரவில் அந்த நேரத்தில் உமாருக்கு அவளே எல்லாமாக இருந்தாள். உலகத்தின் நினைவுகள் அனைத்தையும் மறந்து அவள் ஒருத்தியையே கருதும் நிலையில் அவன் இருந்தான்.
சிறிது நேரத்திற்கு முன் அவனுடைய சிந்தனை, பேச்சு அனைத்தும் முக்கியம் வாய்ந்த பெரிய விஷயங்களில் ஈடுபட்டிருந்தன. இப்பொழுதோ அந்தப் பெண்ணின் சிறு சிறு அங்க அசைவுகளே பெரிய விஷயமாகத் தோன்றின. அவனுடைய கைகள் அவளுடைய இடையைத் தொட்ட போது, அவை நடுங்கிக் கொண்டிருந்தன.
தலையைக் கோதிக் கொண்டிருந்த தன் கைகளை இறக்காமலே, அவள் தலையை அவன் பக்கம் திருப்பினாள். அவனைப் பார்த்துக் குறுநகை காட்டினாள். அவளை முத்தமிடுவதற்காக அவன் குனிந்தான். அவள் வெடுக்கென்று நழுவிக் கொண்டு எழுந்தோடினாள்.
“அயீஷா !” என்று மெல்லிய குரலிலே அவன் அழைத்துக்கொண்டே அவளைத் தொடர்ந்தான். அவள் விண்மீன் வெளிச்சங்கூடத் தெரியாத மரநிழலுக்குள்ளே ஓடினாள். பதில் பேசாத அந்தப் பெண், அற்புதமாக மாறி விட்டாள். அவள் இப்பொழுது விலைக்கு வாங்கப்பட்ட அடிமையாக இல்லை. உமாரின் கடுகடுத்த முகத்தைக் கண்டு கலங்கும் நிலையில் இல்லை. அவனையே ஆட்டிப் படைக்கும் அன்பரசி ஆகிவிட்டாள்.
ஒடிக் கொண்டிருந்த உமாரின் கைப்பிடியில் ஒரு தடவை எதிர்பாராமல் அவள் சிக்கிக்கொண்டாள். அவனுடைய கைகள் அவளுடைய நெஞ்சு மேட்டின் பஞ்சு போன்ற இடத்திலே பட்டபோது சிட்டுக்குருவி போல பறந்து போய் விட்டாள். தன்னை விடுவித்துக் கொண்டு ஓடிய அவள், காலில் எதுவும் அணியாமல் போனதால் எந்தப் பக்கம் போனாளென்றே தெரியவில்லை. முத்தமிட முயன்ற உமாருக்கு முத்தமிட வேண்டுமென்ற எண்ணம் மறந்து போய் விட்டது.
இப்பொழுது அவளைப் பிடிக்கவேண்டும் என்ற மனநிலையே இருந்தது. அவளைத் தேடி இருட்டிலே விரட்டிக் கொண்டு அவன் ஓட ஓட அவன் நரம்புகளிலே ஓடும் இரத்தமும் வேகமாக ஓடத் தொடங்கியது.
அயிஷா போனதிசை தெரியாமல், சிறிதுநேரம் நின்றான். சற்று தூரத்தில் மெல்லிய சிரிப்பொலி கேட்டது. ஆவலுடன் அந்த திசையில் பாய்ந்தவன் ஒரு மரத்தின் மீது முட்டிக் கொண்டான். மறுபடி கேலியான அவளுடைய சிரிப்பொலியைக் கேட்டு, அவன் ஓசைப்படாமல் அவளை நோக்கி விரித்த கைகளுடன் சென்றான்.
அவள் பாய்ந்து தப்புவதற்காக முயன்றபொழுது அவனுடைய விரித்த இரு கைகளுக்கிடையேயும், வகையாகச் சிக்கிக்கொண்டாள். அவனிடமிருந்து விடுவித்துக் கொள்வதற்காகத் திமிறினாள். ஆனால் வலிமை மிகுந்த அவனிடம் அவள் அடங்கிப்போக நேர்ந்தது. அவளை இறுக்கியணைத்தபடியே உதட்டுடன் உதட்டைப் பொருத்தினாள். கதகதப்பான அவளுடைய உதடுகள் அவனுடைய உதடுகளில் அழுந்திக் கொண்டன.
அவளுடைய விரிந்த கூந்தல் அவன் தோளிலும் மார்பிலும் புரண்டது. அவளை அப்படியே தூக்கி மெதுவாகத் தரையில் படுக்க வைத்தான். அவள் அசையவில்லை. எழுந்து தப்பித்து ஓடவில்லை. பேச்சு மூச்சில்லாமல் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கிடந்தாள். அவள் உள்ளத்துக்குள்ளே எழுந்து எரிந்துகொண்டிருந்த ஆசைத்தீ, அவளை மீறிக் கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்துவிட்டது. அவளுடைய இதயம் வேகவேகமாக அடித்துக் கொண்டது.
அப்படியே ஒருவருடன் ஒருவர் ஒன்றிக்கிடந்த அமைதியான நிலையில் அரைமணி நேரம் கழிந்தது. அதன் பிறகு, மனநிறைவு பெற்ற உமார், அவளுடைய இதயம் இன்னும் படபடத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.
இப்படியே, அரை குறையான தன்வசமிழந்த நிலையில் கிடக்கும் இந்தப் பெண்ணைப்போல் வேறு ஒருபெண் இருந்ததில்லை; உமார் எத்தனையோ, ஆட்டக்காரப் பெண்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் இந்த அரபியப் பெண்ணைப்போல் அவனை நேசித்தவர்கள் யாருமில்லை!
அயீஷாவைப் பொறுத்த வரையில் இந்த மாய இரவு, அவளுடைய குணசித்திரத்தையே மாற்றியமைத்து விட்டது. உறவற்ற நிலையில் பேசாமல் அமைதியாக இருந்துவந்த நிலை அடியோடு மாறிவிட்டது.
இந்தத் திடீர் மாறுதலால், அவள் ஒரு சிறு குழந்தைபோலத் தன் கைகளால் தாளம் போட்டுக்கொண்டு, இனிமையாகப் பாடத் தொடங்கினாள். சிரித்துக்கொண்டே, அவனுடைய கையைப்பிடித்து இழுத்துக் குளத்தில் குளிக்க வரும்படி கேட்டுக் கொண்டாள். அவள் தன்னுடைய கூந்தலை அள்ளி முடிந்து கொண்டிருக்கும் போது நட்சத்திர வெளிச்சத்தில் அவளுடைய மென்மையான உருவ அமைப்பையும் அதன் அழகையும் அவன் தெளிவாகக் காணமுடிந்தது.
கதகதப்பாக இருந்த அந்த நீருக்குள்ளே அவனுடன் இறங்கிய அவள், மகிழ்ச்சியுடன் அவன்மேல் தண்ணீரை வாரியிறைத்தாள். அவள் அந்தக் குளத்திற்குள்ளே இறங்கியதும் அந்தக் குளமே உயிர்பெற்றது போல் இருந்தது. அந்த இரவும் - குளத்து நீரும் - ரோஜாப்பூக்களின் மணமும் எல்லாம் அவளுடையதாகி விட்டன. எல்லாம் அவளால் உயிர்பெற்றன.
“எத்தனை இன்பம் ஒ அல்லாவே! என் தலைவருடன் இருப்பதில் எத்தனை இன்பம்!” என்று மெதுவாகக் கூறினாள்.
ஆனால் கரையில் ஏறி, ஈரத்தைத் துடைத்துக் கொண்டு, உடையணிந்து கொண்டதும், அயீஷா ஏதோ ஒரு மாதிரியாக மாறிவிட்டாள். ஏதோ ஒன்றைக் கவனித்துப் பயந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறிக் கொண்டிருந்தாள்.
வந்துவிட்டாயா? என்று சீறிக்கொண்டே, பக்கத்தில் இருந்த்வ்ன் கையில் இருந்த வாளை யுருவித் திருப்பிப் பிடித்துக்கொண்டு அவன் முதுகிலே, இரத்தக்காயம் ஏற்படும் வரை அடி அடியென்று அடித்து விட்டான். முக்கி முனகிக்கொண்டே, இஷாக் பொறுமையுடன் அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டான். ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் நேரத்தில் அவன் குறுக்கிட்டது தவறு என்பதை அவன் உணர்ந்தான்.
அவன் பொறுமைக்கு இது ஒரு காரணம். மற்றொரு காரணம், இப்பொழுது, அடிக்கிற தலைவர், ஒரேயடியாக அடித்துவிட்டால் பின்னால் தன்னை மன்னித்துத் தன் காலை வாங்கும்படி உத்தரவிட மாட்டார் அல்லவா? தங்களுடைய ஆயுதங்களை ஒளித்து மறைத்துக் கொண்ட மற்ற காவல்காரர்கள், இஷாக் நன்றாக அடிபடட்டும் என்று மகிழ்ச்சியடைந்தார்கள்.
இஷாக்கை அடிக்கிற நினைப்பில், தங்களை அடிப்பதை மறந்துவிடுவார் என்பது அவர்கள் எண்ணம். அவர் அடித்தாலும் கூடத் தாங்கள் வந்து பார்த்தது தங்கள் கடமை என்றும் சரியானதே யென்றும் நினைத்தார்கள். ஆனால், சொல்லவில்லை.
சிறிது நேரத்தில், தன் கத்தியைக் கீழே இறக்கிவிட்டுச் சிரித்தபடியே, “மூளையில்லாத மடையர்களே, இனிமேல் இந்தத் தோட்டமும் அந்தப்புரமாகிவிட்டது. ஆண்கள் யாரும் நுழையக்கூடாது. நினைவு வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.
இஷாக் தன் உதட்டில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே, “தலைவரே, அப்படியானால், ஹீசேன், அலி, அகமது முதலிய தோட்டக்காரர்கள் என்ன செய்வது? தோட்டவேலை பார்க்க வேண்டுமே!” என்று நடுங்கியபடி கேட்டான்.
“அவர்கள் இல்லாமலே, தோட்டம் நன்றாக இருக்கும். அவர்களை குதிரை லாயத்தில் ஈயடிக்கச் சொல்லு” என்றான் உமார்.
அவர்கள் சென்று மறைந்தவுடன், தான் மறைந்திருந்த இடத்தைவிட்டு அயீஷா வெளியே வந்தாள். “உங்கள் வேலைக்காரர்கள் சோம்பேறிகளாயிருந்தது நல்லதாய்ப் போயிற்று. சுறுசுறுப்பானவர்களாயிருந்து, கொஞ்சம் முன்னதாகவே வந்திருந்தார்களானால்... என்று கூறிச்சிரித்தாள் அயீஷா.
31. பாய்ந்தோடும் குதிரையும் பறந்தோடும் செய்தியும்
கடிதங்கள் பல எழுதவேண்டியிருப்பதைப்பற்றி உமார் மறந்து பல வாரங்களாகிவிட்டன. உண்மையில் அவன் அயீஷாவைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை. அவள் இப்பொழுது முக்காடு இல்லாமலே தோட்டம் முழுவதும் சுற்றித்திரியலாம். ஒவ்வொருநாள் மாலையும் அவள் எந்த விதமாகவோ புதுமையாகத் தென்படுவாள்.
உமாருடைய சிந்தனைகளைப்பற்றி அவள் ஒன்றுந் தெரியாதவளாக இருந்தாள். அதுவே அவர்கள் இரண்டு பேரையும் பிணைக்கும் வாய்ப்பாயிருந்தது. உமார், தன் சிந்தனைகளிலிருந்து விடுபடுவதையே பெரிதும் விரும்பினான். இதை ஆயிஷா புரிந்துகொண்டாள். சில விஷயங்களில் அவள் அவனைக் காட்டிலும் புத்திசாலியாக இருந்தாள். அவள் அமைதியாக இருக்கும்போது எல்லோருக்கும் பெரிய புத்திசாலியாக இருந்தாள்.
அவளுடைய அன்பு கட்டுப்பாடில்லாத கடும்வேகம் உடையதாக இருந்தது. அந்த அன்பிலே, தாய்மையுணர்ச்சியும் கலந்திருந்தது. அயீஷா, உமாருக்கு வேண்டிய உணவுகளைத் தானே தன் கையால் தயாரிக்கத் தொடங்கினாள். முதன் முறையாக அடுக்களையில் நுழைந்த அவளை சுலெய்க்கா தடுத்து, அங்கே தனக்குத்தான் உரிமை உண்டென்பது போல் பேசினாள்.
“உன் மாமன் - மைத்துனர்கள் வந்து சட்டைப் பைக்குள்ளே கசாப்பை மறைத்துக் கொண்டு போவதும், பிள்ளை குட்டிகளுக்கு அள்ளிக் கொடுப்பதும் எனக்குத் தெரியும்.
எல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தலைவருக்கு, உணவு சமைத்தாவது, உன்னுடைய இந்த அற்பச் செயலை மறந்துவிடலாமென்றுதான் பார்க்கிறேன்” என்று சொல்லி அவளை அடக்கிவிட்டாள்.
அதன் பிறகு, கலெய்க்கா, மணல் காட்டிலே பிறந்த இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ஏற்றமா என்று முணுமுணுத்துக் கொண்டே அடங்கிப்போனாள். அரண்மனையில் உள்ள அனைவருக்கும் இல்லத்தலைவருடைய இதயத்தரசி யாகிவிட்டாள் அயீஷா என்ற விஷயம் உணர்த்தப்பட்டது. எல்லோரும் அவளிடம் மரியாதையாக நடக்கத் தொடங்கினார்கள்.
மற்றவர்களுடைய விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடாமல் ஒதுங்கிப்போகும் அவளுடைய தன்மை உமாருக்கு மிகப் பிடித்திருந்தது. அவன் அங்கே இருந்தால் தான், அவளுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் அடைகிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட உமார், அவள் தன்னிடம் கொண்டிருக்கும் அளவற்ற அன்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.
அவளுடைய மெல்லிய கழுத்தின் ஒவ்வொரு வளைவையும், அவளுடைய உடலின் ஒவ்வொரு நெளிவு சுளிவுகளையும் தெரிந்து வைத்திருந்த உமாருக்கு, அவள் உள்ளத்தின் உள்ளே என்ன இருக்கிறதென்றுமட்டும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அவனுடைய பக்கத்திலே படுத்துக்கொண்டு கண்களை அரைப்பார்வையாக முடிக்கொண்டு, அவன் மூச்சுடன் தன் மூச்சைக் கலந்து விட்டுக் கொண்டு இருக்கும் அவள், எங்கோ தூரத்திலே, அவன் காதுகளுக்கு எட்டாத எதையோ கவனித்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கும்.
அவன் அவளைப்பார்த்து அதிசயப் படும்படியாகவே எப்பொழுதும் அவள் நடந்துகொள்வாள், அவனை ஒருநாள், அமைதியாக, “என்னுடைய அந்தப்புரத்துக்குக் காவலாள் வைக்க வேண்டுமென்று தாங்கள் எண்ணுகிறீர்களா?” என்று கேட்டாள்.
“இல்லை” என்று மறுத்தான்.
“இதோ அங்கே நடைபாதையில் ஒருவன் உட்கார்ந்திருக்கிறானே!” என்றாள். இஸ்லாமியக் கனவான்கள் வீடுகளிலே, அந்தப்புரத்திற்குக் காவலாள் வைப்பது வழக்கமென்றும் அது ஒருவகையில் நல்லதுதானென்றும் அவள் அறிவாள்.
இருந்தாலும் நாள் முழுவதும் தன்னை ஒரு பிராணி கவனித்துக்கொண்டே இருப்பதென்பது அவளுக்குப் பிடிக்காத செயலாகவும், அருவருப்பான செயலாகவும் இருந்தது. வெளியில், நடைபாதையில் வந்து பார்த்த உமார் யாரோ ஒரு புதிய ஆசாமி, கதவின் ஓரத்தில் சுவர் அருகிலே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவன் கரிய உருவமும் சிவப்பு ஆடையும் அணிந்திருந்தான். உமாரைக் கண்டதும் எழுந்து மரியாதையுடன் சலாம் செய்தான்.
“நீ யார்?”
“ஏழைகளின் பாதுகாவலரே! என் பெயர் சாம்பல் ஆகா. இங்கு பணி செய்வதற்காக இஷாக் என்னை அனுப்பினார்.”
தடித்த குரலும் அருவருக்கத்தக்க பார்வையும் உடைய அவனைக் கண்டதும், அயீஷாவின் வெறுப்புக்குக் காரணத்தைப் புரிந்துகொண்டான் உமார்.
“என்னோடு வா” என்று அவனை அழைத்துக் கொண்டு, வெளிவாசலுக்கு வந்தான். அங்கே நின்ற இஷாக்கை அருகில் அழைத்தான். அவன் அன்று வாங்கிய அடிகாயத்துக்குப் போட்ட கட்ட கட்டு அப்படியே இருந்தது.
“அந்தப்புரத்திற்குக் காவலாள் வைக்க வேண்டுமென்று நான் உனக்கு எப்பொழுது கட்டளையிட்டேன்?”
“தலைவர் அவர்களுடைய கவனம் வேறு எங்கோ இருப்பதை அறிந்து கொண்ட நான், அவசரத் தேவையை முன்னிட்டு, இவனைக் கொண்டு வந்து வேலையில் சேர்த்தேன்!”
“சரி, இவனைத் திருப்பியனுப்பிவிடு”.
“தலைவரே! மன்னிக்க வேண்டும். தோட்டம் பெரியது. தோட்டம் முழுவதையும் அரண்மனையில் இருந்த படியே பார்த்துக் கொள்ள முடியாது.”
“நீ அவனை வெளியேற்று!”
சாம்பல் ஆகா என்ற அந்த மனிதன் தன் தோட்டத்தில் காவல் இருப்பது என்பதை நினைக்கவே உமாருக்கு அருவருப்பாக இருந்தது. மேலும் ஆயீஷா காவல் வைத்துக் கொள்ளக்கூடிய உயர்ந்த வகுப்பிலே பிறந்து வளர்ந்த்வ்ஸ் அல்ல. சுதந்திரப் பறவையாக இருக்க வேண்டிய அவளை உளவு பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஓர் ஆள் வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.
சாம்பல் ஆகாவுக்கு முன்னால் அவமானப் படுத்தப் பட்டோமே என்று நினைத்த இஷாக், தன்னுடைய தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக “நிசாம் அல்முல்க் அவர்களுடைய கடிதம் வந்து இருபது நாட்கள் ஆகின்றன. அது மிகவும் அவசரமானதென்று நான் தங்களுக்குப் பல முறை நினைவுபடுத்தியும் இன்னும் தாங்கள் பதில் எழுதவில்லை. நிசாம் அல்முக் அவர்கள், அரசாங்கம் சம்பந்தமான முக்கிய விஷயம் இருந்தால்தான் எழுதுவார். ஒரு தபால் குதிரை வீரன் அதைக் கொண்டு வந்தான், நான் அதைக் கொண்டு வரவா?” என்று பேச்சை மாற்றினான்.
உமார் கடிதம் வந்த விஷயத்தையே மறந்து விட்டான். உறையைக் கிழித்துப் படித்துப் பார்த்து விட்டு, அவன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.
“பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம். அளவற்ற அருளாளனும், நிகரற்ற கருணையும் உடைய அல்லாவின் பெயரால் சுல்தான் மாலிக்ஷா அவர்களுக்கு, தற்பொழுது கிரகநிலை சரியில்லாத காரணத்தால் நிசாப்பூருக்குத் திரும்பி வருவது நல்லதல்ல என்று ஒரு மணிநேரம் கூடச் சுணங்காமல் உடனே எழுதியனுப்பு. சாமர்க்ண்டுக்கும் வடக்கே தொடர்ந்து போர் நடத்திப் பெற வேண்டுவது இன்றியமையாததென்று நான் கருதுகிறேன்.
அவர் கொராசனுக்குத் திரும்பி வரவும், குளிர்காலத்தைக் கருதித் தம் படையில் பாதியைக் கலைத்து விடவும் எண்ணியிருப்பதாக அவருடைய முகாமிலிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. உடனே எழுதவும்.”
மறுபடியும் உமார் கடிதம் முழுவதையும் படித்துப் பார்த்தான். படித்துவிட்டு உடனே அதைச் சுக்கு சுக்காகக் கிழித்தான். இது போன்ற ஒரு செய்தியை, எழுத்து மூலமாக அனுப்புவது எத்தனை தீமை விளைவிப்பது என்ப்து நிசாமுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நிசாமின் ஆணைப்படி பொய்யான ஒரு குறி சொல்லுவதை அவன் விரும்பவில்லை. நிசாம் அரசாங்கத்துக்காக உண்மையாக உழைக்கிறார் என்றாலும் கூட, மாலிக்ஷா அவசரமாக இருக்கும் போது, அவரை ஏமாற்றுவது ராஜத் துரோகம், சுல்தான் அவர்கள் கடந்த பல ஆண்டுகளைப் படையெடுப்பிலேயே செலவழித்திருக்கிறார். குளிர்காலத்தில் சற்று அமைதியாகவும் ஓய்வாகவும் இருக்க அவர் விரும்பினால், அதை ஏன் தடுக்க வேண்டும்?
நிசாப்பூரில் இருந்தால் உமார், இந்தப் பிரச்சினையில் வேறுவிதமான முடிவு கட்டும்படி நேர்ந்திருக்கும். ஆனால் அவன் காசாலியுடன், வேதாந்த விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறான். அயீஷாவுடன் இன்பம் அனுபவித்திருக்கிறான்.
இந்தச் சூழ்நிலையில் அவன் நிசாம் அவர்களின் திட்டத்தை ஒப்புக் கொள்ளுவதாக இல்லை. தாளும், அரக்கும் கொண்டு வரச் சொல்லி, உமார் அதில் ஒரே சொல்லில் “முடியாது” என்று பதில் எழுதி அதன் கீழே “கயாம்” என்று கையெழுத்திட்டு, மடித்து, அரக்கு முத்திரையிட்டு, அதை இஷாக்கிடம் கொடுத்து “ஒரு குதிரையில் உடனே நிசாப்பூரில் இருக்கும் நிசாமுக்கு இதையனுப்பு” என்றான்.
“முதல் அமைச்சர், ஒரு மதக் கலகத்தை அடக்குவதற்காக ரே நகருக்குப் போயிருக்கிறார்” என்று சாம்பல் ஆகா கூறினான்.
“அவர் எங்கேயிருக்கிறாரென்று கண்டு பிடித்து அங்கே அனுப்பு” என்று சொல்லிவிட்டுத் திரும்பியவன், மறுபடியும் நினைவு வந்து, “அகமதை அனுப்பாதே, வேறு யாரையும் அனுப்பு” என்று கூறிவிட்டுச் சென்றான். வீட்டை நோக்கி நடந்தவன்,
அங்கே வாசல் புறத்திலே எரிந்து கொண்டிருந்த நெருப்பின் பக்கமாகப்போனான். ஹசேன், அலி, அகமது ஆகிய மூவரும் அதைச்சுற்றியுட்கார்ந்திருந்தார்கள். உமார் வருவதைப் பார்த்ததும் எழுந்து நின்று சலாம் செய்தார்கள். உமார் தன் கையில் இருந்த கடிதத் துண்டுகளை நெருப்பில் போட்டு விட்டு, அவை யாவும் எரிந்து முடியும்வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வீட்டுக்குள்ளே சென்றான்.
மூன்று தோட்டக்காரர்களும் இதை ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்துவிட்டுக் கீழே உட்கார்ந்து அந்தப் புதிய விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.
“சந்தேகமில்லாமல் இது மிக மிக முக்கியமான செய்தியாகத்தான் இருக்க வேண்டும். என்ன அழகான கையெழுத்து!” என்று ஹசேன் கூறினான்.
“அந்த முத்திரை என்ன சிவப்பாக இருந்தது! நிசாம் அல்முக் அவர்கள் இது போன்ற முத்திரையைத்தான் உபயோகிப்பது வழக்கம். அது இரத்தத் துளிபோல் உருகியோடிக்கொண்டிருப்பதைப் பார்” என்றான் அலி.
சாம்பல்களுக்கிடையே அந்தச் சிவந்த அரக்குத் துளிகள் உருகிமறைவதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். சிறிதுநேரத்திற்குப் பிறகு அகமது அங்கிருந்து, முட்டை கட்டிக் கொண்டிருந்த சாம்பல் ஆகாவிடம் போய்ச் சேர்ந்தான்.
ஆயீஷாவுக்கு எந்த விதமான குறையும் இல்லை. அவளுக்கு ஏதாவது வேண்டுமா என்று உமார் கேட்டபொழுது. சிறிது நேரம் சிந்தித்து விட்டு, உடை தைப்பதற்காகப் புதியபட்டுத் துணி கொஞ்சமும், அதிலே பின்னுவதற்காக வெள்ளிச் சரிகை கொஞ்சமும் புனுகும், அம்பரும் கூந்தல் எண்ணையும். வேண்டுமென்றாள். அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. மெருகு தீட்டிய தங்கத் தலைச் சரம் ஒன்றை அவன் அவளுக்குக் கொடுத்ததும்,
ஆனந்தத்தால் குதித்தாள். பிறகு அதைத் தலையிலே அணிந்து கொண்டும், கூந்தலை அதற்குத் தகுந்தபடி முடிந்து கொண்டை போட்டுக் கொண்டும். நெடுநேரம் வெள்ளிக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். சில சமயங்களில் அவனுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதே, அப்படியே அவனருகில் சமுக்காளத்தில் காலை நீட்டிப் படுத்துக் கொண்டு தூங்கத் தொடங்கி விடுவாள். வீட்டிலேயிருந்த வேலைக்காரர்களான பாரசீகர்களைப் பற்றி அவள் சிறிது தாழ்ந்த கருத்தே கொண்டிருந்தாள்.
“எதைச் சொன்னாலும் நாளைக்கு நாளைக்கு என்றுதான் சொல்லுகிறார்கள். நேற்று நடந்ததைப் பற்றிப் பேசுவார்கள். வேலைகளை நாளைக்கு ஒத்திப் போடுவார்கள்” என்று உமாரிடம் கூறினாள்.
“இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அல்லவா?”
அயீஷா அதை நினைத்துப் பார்க்கவில்லை. அது உண்மைதான்! அவர்கள் எளிதில் அழுது விடுகிறார்கள். அதுபோலவே விரைவில் சிரித்தும் விடுகிறார்கள். அது ஒரு நல்ல தன்மைதான்.
“அயீஷா! நீ நேற்றைப் பற்றியும் எண்ணுவதில்லை; இன்றையப் பொழுதிலேயே எப்பொழுதும் வாழுகிறாய்!”
“நீங்கள் இருக்கும்போது நான் வேறு எதையும் நினைப்பதில்லை” என்று கூறி அவனுடைய கண்களைக் கூர்ந்து நோக்கினான்.
இந்த மாதிரி, அவள் கூர்ந்து பார்க்கும் போதெல்லாம், யாஸ்மியைப் பற்றிய எண்ணம் உமார் மனத்தைக் கலங்கச் செய்துவிடும், அயீஷாவின் கண்களும், அவள் தலையை வேகமாகத் திருப்புகின்ற பாவமும் யாஸ்மியினுடையதைப் போலவேயிருந்தன. இத்தனையாண்டுகளும் தான் காரண மில்லாமல் யாஸ்மியைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை உமார் புரிந்து கொண்டான். அவள் திடீரென்று இறந்து விட்டாள்.
அவளுடைய மரண வேதனை. அதைப் பற்றி அவன் ஜபாரக்குடன் கூடப் பேசவில்லை. இந்த வேதனைக் காட்சிதான் அவனை நெருப்புப் போல் எரித்துக் கொண்டிருந்தது. அதெல்லாம் விழித்துக் கொண்டிருக்கும் உண்மையான நிலையான இந்தச் சூழ்நிலையில் ஒரு பழங்கனவு போல விலகிப் போய் விட்டது.
யாஸ்மியின் கரங்களிலே அவன் அனுபவித்த இன்பம் வேதனை கலந்ததாக இருந்தது. ஆனால், அயீஷாவுடன் இருப்பது அமைதியைக் கொடுத்தது. சுற்றிலும் சுவர் எடுக்கப்பட்ட தோட்டத்தில் மலர்ந்திருக்கும் ரோஜாப்பூக்களின் இதழ்கள், எங்கும் பரந்து கிடப்பது போன்ற இன்பம் நிறைந்தது அயீஷாவின் அன்பு. இந்த இன்பத்திற்கு மணிக்கணக்கும் இல்லை, மனிதர்களின் குறுக்கீடும் இல்லை.
இருப்பினும், இந்த இன்பத் தோட்டத்துக்குள்ளே இடையிடையே யாஸ்மியின் எண்ணமும் படர்ந்து வந்தது. சில சமயங்களில், அவள் களைத்துப் போய்க் கிடக்கும் போது, தலையைச் சிறிது தூக்கினால், விண்மீன் வீட்டை நோக்கி முக்காட்டுத் துணி காற்றில் பறக்க யாஸ்மி நடந்து வருவதைப் பார்க்கலாம் போல் தோன்றும்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, களைத்துப் போன ஒரு குதிரையிலே வந்த அவசரச் செய்தியாள் ஒருவன், நிசாம் அவர்களிடமிருந்து அழைப்புக் கொண்டு வந்தான். உடனே புறப்பட்டு எவ்வளவு சீக்கிரமாக வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாகவே நகருக்கு வரும்படி நிசாம் அறிவித்திருந்தார்.
மறுநாள் காலை உமார் அயீஷாவிடம் விடை பெற்றுக் கொண்டபோது அவள் கண்களில் நீர் நிறைந்து காணப்பட்டாள். தன்னையும் உடன் அழைத்துச் செல்லும்படி மணிக்கணக்காக மன்றாடினாள். “தங்களை அல்லா பாதுகாப்பாராக” என்று கூறி அவன் காதுக்குள்ளே, “அயலாருடன் செல்ல நேரும் போது ஆயுதம் இல்லாமல் போகாதீர்கள்” என்று எச்சரித்தாள்.
வாசலில், இஷாக், உமாருக்குச் சலாம் செய்வதற்காக வந்தான். நெடு நாளைக்கு முன் விலக்கப்பட்ட சாம்பல் ஆகா என்பவன் மூலையிலே ஒளிவது போல உமாருக்குத் தோன்றியது. குதிரையை நிறுத்திக் கொண்டு, “என்ன இஷாக், அந்தக் கடை கட்ட கருப்பன் இன்னும் இங்கேயா சுற்றிக் கொண்டு திரிகிறான்?” என்று கேட்டான்.
இஷாக் பணிவுடன் வணங்கி, “தலைவரே! நேற்று இரவு தொழுகைக்குப் பிறகு தாங்கள் ரே நகருக்குப் பயணப்படப் போவதாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் எப்பொழுது திரும்புவீர்கள் என்பது இறைவனைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்? இந்த அரண்மனை என்னுடைய பொறுப்பில் விடப்பட்டிருக்கிற காரணத்தால்...”
“அதற்காக...?”
“எல்லாப் பெண்களையுமே கண்காணிக்க வேண்டியது இன்றியமையாதது. இத்தனை பெரிய தோட்டத்தில் ஓர் இளம் பெண் தனியாகத் திரிவது அவ்வளவு நல்லதல்ல. சாம்பல் ஆகாவும் அருகில் உள்ள ஊரிலேயே இருந்தான். ஆகவே, நான்தான்...”
உமார், தன் பின்னால் இருந்த படைவீரர்களின் பக்கம் திரும்பி, “உங்களிலே ஒருவன், அந்தக் கருப்பனைப் பிடித்துக் குதிரையிலே ஏற்றி வைத்துக் கொண்டு, நிசாப்பூரிலே கொண்டு போய் அங்குள்ள சந்தையிலே அவிழ்த்து விடுங்கள். அவன் மறுபடியும் இந்த வாசல்படி ஏறக்கூடாது. இது என் கட்டளை” என்றான்.
தன் அன்புக்குரிய அயீஷாவைத் தன் தோட்டத்திலே, இன்னொருவன் கண்காணிக்கும்படி சிறைவைத்து விட்டுப் போக உமார் விரும்பவில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து உமார் ரே நகரம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தான். இடையிடையே தூங்குவதற்காக விடுதிகளிலே தங்கிச் சென்றான். நிசாப்பூர் ஊருக்குள்ளே சென்றால் மக்கள் குழுமி வரவேற்பதும் வாழ்த்துரைப்பதுமாக நேரம் வீணாகி விடுமென்று அவன் ஊரைவிட்டு விலகியே சென்றான். இருப்பினும் கொரசான் மக்கள், கூட்டங்கூட்டமாக அவனைப் பார்க்க வந்து கூடினார்கள்.
மூன்றாவது நாள் இரவு தங்குவதற்காக வழியில் ஒரு விடுதியில் பயணத்தை நிறுத்தியபோது, கையில் பருந்துடன் வந்த ஒரு குதிரைவீரன் உமாரையணுகி சலாம் செய்தான்.
“குவாஜா அவர்களே, தங்கள் பயணம் வெற்றியடைவதாக! இதோ ஒரு முன்னறிவிப்புக் குறிப்பு இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே, தன்னுடைய இடுப்பில் சொசுகியிருந்த ஒரு வெள்ளிக் குழாயை எடுத்தான். அந்தக் குழாய் ஒரு பேனா அளவே இருந்தது. ஒரு மணிநேரத்திற்கு முன்னால் நான் என்னுடைய பருந்தைப் பறக்கவிட்டேன். ஆற்றை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு நாரையைப் பிடிப்பதற்காக நான் அதைப் பறக்கவிட்டேன்.
ஆனால் அது மேற்றிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு புறாவைப் பிடித்துக்கொண்டு வந்தது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் தங்களுக்குத் துன்பந் தர வேண்டுமென்று செய்தி கொண்டுபோன அந்தப் புறாவைப் பிடிக்கவில்லை. இந்தப் பருந்தைக் கொண்டு வேட்டையாடுவது என் தொழில். தங்கள் செய்தி தடைப்படுத்தப் பெற்றதற்கு என்னை மன்னிக்கவேண்டும்.
அதன் காலிலே கட்டியிருந்த குழாயும், அந்தக் குழாயில் வைத்திருந்த செய்தியும் இதோ இருக்கின்றன” என்று சொல்லி அந்தக் குழாய்க்குள் இருந்த இரண்டு விரற்கிடையளவுள்ள சிறுதாள் ஒன்றை எடுத்து உமாரிடம் கொடுத்தான். அதில் ஒரே ஒருவரி எழுதியிருந்தது. அது இதுதான்.
“கூடார மடிப்பவன் உமார் ரே நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.”
அதன் கீழே கையெழுத்துப் பதிலாக ஓர் எண் குறிப்பிடப் பட்டிருந்தது.
“இதனால் ஒன்றும் கெடுதலில்லை. நீ போகலாம்” என்று, என்ன சொல்வானோ என்று நின்றுகொண்டிருந்த பருந்துக்காரனிடம் கூறினான். “ஆம்! அந்தப் புறா மேற்குத் திசை நோக்கியா சென்று கொண்டிருந்தது?” என்று கேட்டான்.
“மறைந்து கொண்டிருக்கும் கதிரவனை நோக்கி அம்புபோல் பறந்து கொண்டிருந்தது. அந்தச் செய்தியைப் பார்த்தவுடன், தாங்களும் இங்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அல்லாவின் திருவுள்ளப் படியே எல்லாம் நடக்குமென்று எண்ணிக்கொண்டு தங்களிடம் வந்தேன்” என்று அவன் பதில் கூறினான்.
அந்தச் சிறிய வெள்ளிக் குழாயைத் தன் விரல்களினால் திருப்பிப் பார்த்துக்கொண்டே யார் இந்தச் செய்தியை அனுப்பி ருக்கலாம் என்று உமார் யோசித்தான். யாருக்காக அனுப்பப்பட்ட செய்தியாக இருக்கும் என்றும் தெரியவில்லை. அந்தப் புறாவிற்குத் தான் புறப்பட்ட இடமும், போய்ச் சேரவேண்டிய இடமும் நன்றாகத் தெரியும்.
ஆனால், அது பேசமுடியாது! அந்தக் குழாயிலிருந்து மிக மெல்லிய புனுகு நெடி வீசியது. அவன் ரே நகருக்குப் போவது, காசர்குச்சிக் அரண்மனை வாசிகளுக்கு மட்டுமே தெரியும். நிசாப்பூரில் அவன் நுழையாத படியால், அங்கு யாருக்கும் தெரியாது. நிசாம் அவர்களுடைய உளவாளிகள் முன் கூட்டியே அவருக்கு அறிவிக்கப் புறாவின்மூலம் செய்தியனுப்பியிருக்கலாம்.
எழுதியவன் முக்கிய எழுத்தைக் கொண்டே யார் எழுதியது என்றோ அதன் அடியில் உள்ள எண்ணைக்கொண்டோ, பெறுபவன் அவனை இன்னார் என்ற அடையாளங் கண்டு கொள்வான். எந்த வழியில் யோசித்தாலும், அதன் உண்மையை, அந்தச் செய்தியின் பொருளை உமார் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஏதோ ஒரு உணர்ச்சியில், அந்தக் குழாயையும் தாளையும், தன்னுடைய தோற்பைக்குள்ளே வைத்துக் கொண்டான் உமார். எங்கோபோய்க் கொண்டிருந்த தன்னைப்பற்றிய செய்தியைத் தன்னிடமே அந்தப் பருந்து கொண்டுவந்து சேர்த்தது நூற்றில் ஒரு நிகழ்ச்சியாகவே பட்டது. அதை எண்ணி அவன் யப்படையவில்லை. ஆனால் அதன் கருத்தை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தான்!
32. வாளாயுதம் நீதி வழங்கிய காட்சி!
நிசாம் அல்முல்க் அவர்களுக்கு நேர் எதிராக ரத்தினக்கம்பளத்தில் உமார் உட்கார்ந்திருந்தான். அரசருடைய வானநூற் கலைஞன், உலக அமைப்பாளரான நிசாமிடம் எதிர்த்துப் பேசியது இதுதான் முதல் தடவை. அந்த வியப்பிலிருந்து அவர் இன்னும் மாறுதல் அடையவில்லை.
“நம்முடைய முன்னேற்றப் பாதையிலே நீ ஏன் மறுப்பு என்கிற கல்லைத் தூக்கி யெறிந்தாய்?” என்று நிசாம் திரும்பத் திரும்பக் கேட்டார்.
விஷயத்தை அறிந்து கொள்வதில் அவசரப்பட்டாலும் நிசாம் அமைதியாகவே விளங்கினார். சேல்ஜக் சாம்ராஜ்யத்தைக் கிட்டத்தட்ட இரண்டு தலை முறைகளாக அவர் பொறுப்புடன் நிர்வகித்து வளர்த்து வருகிறார். பாலைவனப் பிரதேசத்திலிருந்து தொடங்கிச் சீனத்துப் பெருஞ்சுவர் வரையிலும், கான்ஸ்டான்டிநோபிள் கோட்டை கண்ணுக் கெட்டுந்துரம் வரையில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கால்வாயின் குறுக்காக அவருடைய உழைப்பின் பயனாக உருவான சாம்ராஜ்யம் பரந்து கிடந்தது. வடக்குப் பனிப் பிரதேசத்திலிருந்து தெற்குப் பாலைவனப் பிரதேசமான அரேபிய நாடு வரை யிருந்தது.
மெலிந்த தன் விரலில் இருந்த முத்திரை மோதிரத்தைச் சுற்றித் திருப்பிக்கொண்டே நிசாம் பேசினார். அரசர் உலகமென்னும் குடும்பத்தின் தந்தை போன்ற நிலையில் இருப்பவர். அவருடைய செயல்கள் அவருடைய பதவிக்குத் தகுந்தபடி இருக்க வேண்டும். அவருடைய போராடுந் திறமை வேற்று மதத்தைச் சேர்ந்த மக்களினங்களையும் அவர்களுடைய நாடுகளையும் இஸ்லாமியக்கொடியின் கீழ்க் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
அவரடைந்த வெற்றிகள் தாய்நாட்டில், அவருடைய நிலையை உயர்த்தியிருக்கின்றன. இவ்வளவு இருப்பினும், சுல்தான் மாலிக்ஷா நாகரிக மில்லாத துருக்கியன் ஒருவனின் பேரனே. அவருடைய நாற்பது லட்சம் படைவீரர்கள் படைகள், அமைதி தவழும் இந்தக் கொரசான் நாட்டு நகரங்களிலே தங்குமானால், மக்கள் அவர்களால் துன்புறும்படி நேரிடும். மேலும், போர்க்களத்திலே பயன்பட்ட முரட்டு வீரம், நாட்டுப்புறத்து மக்களைத் துன்புறுத்தத் தொடங்கிவிடும்.
இந்தப் பட்டாளம் என்பது என்ன? வடக்கில் உள்ள துருக்கியர்களும், போருக்காகவே அடிமைகளாக வளர்க்கப்பட்ட துருக்கியருக்குப் பிறந்த கெளலாமியர்களும் ஜார்ஜியர்களும், துருக்கோமியரும், காட்டுமிராண்டி அரபியரும் ஆகியோர் அடங்கிய கூட்டமே நம்முடைய சேனைப்பட்டாளம். இதிலே கொரசானியர் சிலரும், மிகக் குறைந்த அளவு பாரசீகர்க அல்லது பாக்தாது அராபியர்கள் கலந்திருக்கிறார்கள்.
போர் நிறுத்தம் ஏற்பட்டு, இந்தச் சேனைகளெல்லாம் வந்து வேலையில்லாமல் நம்மிடையே தங்கநேரிட்டால் வெறிபிடித்த அவர்களால் சும்மாயிருக்க முடியாது. உள்நாட்டுக் குழப்பம் உண்டாகி, நாடு பாழடைந்துவிடும். ஆகவேதான் அவர்களை எப்பொழுதும் போரிலேயே ஈடுபடுத்தி வைக்க வேண்டும். கீழ்த் திசையில் போர் முடிவுபெற்று விடுமானால், மேற்றிசையில் தொடங்கவேண்டும்.
அல்லா அருள்புரிந்தால் மேற்கேயுள்ள இரண்டு அருமையான பரிசுகள் நடிக்குக் கிடைக்கும். அந்தக் கான்ஸ்டாண்டி நோபிலும், எகிப்தும் ஆகிய இரு தேசங்களும் நம் வசமாகிவிட்டால் எவ்வளவு பெருமையாக இருக்கும்?
நிசாமின் கூர்மையான அறிவினால் தீட்டப்பெற்ற இந்தத் திட்டம் உமாரைத் திடுக்கிட வைத்தது. இஸ்லாத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த காலிப்பின் நாட்டையும், சீசர்களின் கடைசிப் பாதுகாப்புக் கோட்டையாக விளங்கும் ஓரிடத்தையும் வளைத்துக் கொள்ள ஒரு புனிதப்போர். இதே புனிதப் போரினால், தன் கண் முன்னே ஜெருசலம் வீழ்த்தப் பட்டதை உமார் பார்த்திருக்கிறான்.
காய்ந்து போன தோலுடன் கூடிய உருவம்போலத் தளர்ந்து காணப்பட்ட நிசாம், வெல்லப்பட முடியாத அதிகாரத்தின் ரசவாதியாக மனிதர்களின் விதிகளையெல்லாம் அடக்கியாளும் மாயவித்தைக்காரராகத் தோற்றமளித்தார். இந்தத் தோற்றம் சற்று நேரமே இருந்தது. பிறகு மாறிவிட்டது. ஒவ்வொரு படையெடுப்பிலும் ஏற்படக்கூடிய உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் ஈடுகட்டுவதற்கு மறுபடியும் ஒரு படையெடுப்பு நடத்தித் தீரவேண்டும்.
வெற்றியைத் தேடித்தரும் அமைப்பான செல்ஜுக் சேனைக்கு நிசாம் அவர்களுடைய புதிய சாம்ராஜ்யத்திலே இடமில்லை. அப்படியானால், போரிட்டுக் கொள்ளையடித்தே வாழ்க்கை நடத்தும் ஆயிரக் கணக்கான துருக்கியப் படைத்தலைவர்களுக்கும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட போர் யானைகளுக்கும் வழி என்ன?
“ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைத் தாங்கள் சேனாபலத்தின் உதவியால் உண்டாக்கி விட்டீர்கள். ஆனால், அந்த சாம்ராஜ்யத்தை நிலைக்கவைத்துக் காப்பாற்றுவ்தற்கு, இன்னும் பெரிய சேனை தேவைப்படுகிறது. அந்தப் புதிய சேனைக்குத் தீனிபோடப் புதிய புதிய நாடுகளைப் பிடிக்கவேண்டியிருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் இதன் முடிவுதான் என்ன?”
உமார் இந்தக் கேள்வியைக் கேட்டதும் நிசாம் அவனைத் திடுமென்று நிமிர்ந்து பார்த்தார். தன்னுடைய வான்நிலை ஆராய்ச்சியையும், எப்பொழுதாவது, எவளாவது ஒரு பெண்ணையும் திராட்சை மதுவையும் தவிர வேறு எதையும்பற்றி உமார் சிந்திப்பதில்லை என்று நிசாம் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தார். உமாரும், மாலிக் ஷாவும் ஒத்து வருகிறவரையிலே நிசாமின் திட்டங்கள் எந்தவிதமான இடையூறுமின்றி நடக்கமுடியும்.
ஆனால் மாலிக் ஷா, போர்க்களத்திலிருந்து கொரசானுக்குத் திரும்பி வந்தால் அவர் ஆட்சிப் பொறுப்பைத் தானே நடத்தத் தொடங்கிவிடுவார். அப்படி நேர்ந்தால் நிசாமின் அதிகாரம் குறைய நேர்ந்துவிடும். ஆகவேதான், அவர் அந்த சாம்ராஜ்யத்தின் நிர்வாகப் பொறுப்பு என்றென்றும் தன்கையிலேயே இருக்க வேண்டுமென்றும், சுல்தான் மாலிக்ஷா தொடர்ந்து படையெடுப்பு நடத்திக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார். அவ்வாறே தன் விருப்பப்படியே நடக்கவேண்டும் என்றும், அவ்வாறு நடக்குமென்றே ஆண்டவன் விதித்திருப்பதாகவும் அவர் உறுதியாக நம்பினார்.
“சுல்தான் அவர்கள் இந்தப் படையெடுப்புகளை நடத்த வேண்டுமென்பதும் நாம் இந்த நாடுகளை ஆளவேண்டு மென்பதும் ஆண்டவனுடைய திருவுள்ளப்படி நிச்சயிக்கப் பட்ட கட்டளையாகும்” என்று நிசாம் கூறினார்.
தன் கீழேயிருந்த இரத்தினக் கம்பளத்தின் நெசவமைப்பைப் பார்த்துக் கொண்டே “கிரகங்களின் பலனைப் பற்றி நான் சுல்தானுக்குப் பொய் கூறவேண்டு மென்பதும் திருவுள்ளக் கட்டளைதானோ?” என்று உமார் கேட்டான். அவனுடைய மனதில் ஒரு குழப்பம் இருந்தது. ஆனால் அதோடு தனக்கு என்று ஒரு திடமும் கூடவே வந்ததை உமார் அறிந்து கொண்டான்!
உமாருடைய கேள்விக்கு பதிலுக்குத் தானே ஒரு கேள்வி கேட்டார் அவர்.
“நட்சத்திரங்களைக் கொண்டு ஒரு மனிதனின் விதியையறிந்து கொள்ளலாம் என்பதை நீ நம்புகிறாயா?” என்றார் நிஜாம்.
“இல்லை.” என்றான் உமார்.
“நானும்தான் நம்பவில்லை” என்று புன்சிரிப்புடன் கூறிய நிசாம் இனிமேலாவது உமார் தன் ஏற்பாட்டுக்கு ஒத்து வருவானா என்று எண்ணினார். “நட்சத்திரங்களால் காணப்படும் பலன் பொய்யாக இருக்குமானால் சுல்தான் மாலிக்ஷா அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரு நல்ல பலனை நீ ஏன் கூறக்கூடாது? அவருக்கு எழுத நீ ஏன் மறுக்கவேண்டும்?” இப்படிக் கேட்ட நிசாமுக்கு, சில நாட்களாக அவரைக் குழப்பி வந்த ஒருவிஷயம் நினைவுக்கு வந்தது. உடனே அதையும் கேட்டார்.
“காசார்குச்சிக்கிலிருந்து நீ அனுப்பிய கடிதம் என் கைக்குக் கிடைப்பதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, ஹசைன் இபின் சாபா என்ற ஒரு மனிதன் என்னிடம் வந்தான். வருங்காலத்தையறிந்து சொல்லக் கூடிய திறமையுள்ளவன் என்று கூறி, இன்னும் சிலநாட்களில் தங்களுக்கு, அரசருடைய வானநூற் கலைஞரிடமிருந்து “முடியாது” என்ற ஒரே சொல்லுடன் ஒரு கடிதம் வரும் என்று கூறினான். இந்த ஹாஸான் என்பவன் யார்? அவனிடம் நீ இரகசியங்களைக் கூறவேண்டிய காரணம் என்ன?
“அவன் ஒரு புதிய மதபோதகன்! ஜெருசலத்தில் அவன் என்னுடன் பேசினான். ஆனால் அந்தச் செய்தி அனுப்பப்படுவதற்கு முன்னால், நான் யாரிடமும் அதைப்பற்றிக் கூறவில்லை” என்று உமார் கூறினான்.
“இருக்கமுடியாது காசர் குச்சிக்கிலிருந்து இங்கு கடிதம் கொண்டு வந்த குதிரை வீரன் இங்குவந்து சேர எட்டுநாள் ஆயிற்று. ஆனால் அவன் வருவதற்கு நான்கு நாட்கள் முன்னாலேயே ஹாசானுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது”.
யாரேனும், ஒவ்வோர் இடத்திலும் வேறுவேறு குதிரைகளைப் புதிது புதிதாக மாற்றிக்கொண்டு வெகு வேகமாக வந்தால் கூட நான்கு நாட்களில் அவ்வளவுதூரம் வருவ தென்பது முடியாத காரியம். தான் செய்தியனுப்பிய ஆள் ரே நகரம் வந்து சேருவதற்கு முன்னாலே அந்நகரிலேயுள்ள யாருக்கும் தன்னுடைய செய்தியைப்பற்றித் தெரிந்துவிடும் என்று நினைக்கவே முடியாது. தன்னுடைய செய்தி காற்றிலே பறந்து வந்திருந்தால் ஒழிய, அது அவ்வளவு சீக்கிரம் இங்கே தெரியும் என்பதில் பொருள் இல்லை.
உமார் தன் இடுப்பில் இருந்த வெள்ளிக் குழாயை நினைத்துக் கொண்டான். இந்தக் குழாயை ஒரு புறா கொண்டு வந்திருக்கிறது. அது போலவே, தான் நிசாமுக்கு அனுப்பிய செய்தியை ஒரு புறாதான், நான்கே நாட்களில் காசர்கச்சிக்கிலிருந்து ரே நகருக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.
அப்படியானால் யாரோ தன்னுடைய வீட்டிலே தன்னை உளவு பார்த்திருக்கிறார்கள். உளவறிந்து இரண்டு முறையும் ரே நகருக்குச் செய்தியனுப்பி யிருக்கிறார்கள். அயீஷா வாக இருக்குமா? அல்லது இஷாக்கா? அவர்கள் இரண்டு பேருமே எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று சொல்லியிருக்கிறார்களே!
“இவ்வளவு தூரத்தை முன்றே நாட்களில் ஒரு புறா கடந்து வர முடியும்!” என்று உமார் கூறினான்.
உமார் எதைப்பற்றிக் கூறுகிறான் என்பதைக் கவனித்துணராத நிசாம், தன் திட்டத்திலேயே குறியாக, “அப்படியானால், உமார்! இப்பொழுதே சுல்தானுக்கு எழுது. போரை நிறுத்திவிட்டு வந்தால் ஆபத்து நேரிடும் என்று உடனே எழுதிக்கொடு. சாமர்கண்டிற்கு, ஒரு புறாவின் மூலம் இந்தச் செய்தியை அனுப்புவோம்.”
“ஆபத்து ஒன்றுமில்லையே! போர் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று நிசாம் விரும்புகிறார் என்று எழுதுகிறேனே!” என்றான் உமார் புன்சிரிப்புடன்!
“அட, ஆண்டவனே! உமார் நீ என்ன குழந்தை மாதிரி விளையாடுகிறாய்?”
“அப்படியானால், நான் உண்மையாகச் சொல்கிறேன். அப்படியும் எழுத மாட்டேன். இப்படியும் எழுத மாட்டேன். உண்மையையும் எழுத மாட்டேன்; பொய்யையும் எழுத மாட்டேன்; எதையுமே நான் எழுதப் போவதில்லை”.
அந்தக் கடைசி வாக்கியம் நிசாமின் காதில் அறைவதுபோல விழுந்தது. வலைபோல் பின்னிக் கிடந்த அவருடைய முகச் சுருக்கங்களுக்கு மத்தியின் இருந்த கண்களால் அவனை உற்று நாக்கினார். தன் கைகளால் முழங்கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, “என்னிடமா இப்படிச் சொல்லுகின்றாய்?” என்று கூவினார்.
“சொன்னது சொன்னதுதான்; சொல்லாமல் இருக்கப் போவதில்லை” என்று அமைதியாக உமார் பதில் அளித்தான்.
சிறிதுநேரம் நிசாம் பேசாமல் இருந்தார். “சாதாரண கந்தைத் துணியுடன் திரிந்த மாணவனான உன்னை இந்த சாம்ராஜ்யத்தின் சிறப்புக்குரிய மூன்றாவது தகுதிக்கு நான் உயர்த்திவிட்டேன். புதிய பஞ்சாங்கம் அமைத்தபோது, முல்லாக்கள் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்லாமல் காத்தவன் நான்! உன்னுடைய ஆராய்ச்சியிலே உதவி செய்வதற்குப் பெரும் பெரும் பேராசிரியர்களையெல்லாம் கொடுத்தேன்.
இப்பொழுது உனக்குச் சொந்தமாக எத்தனை அரண்மனைகள், எவ்வளவு சொத்துக்கள்! எவ்வளவு பொன் நாணயங்கள் இருக்கின்றன. அத்தனையும் யாரால் வந்தன? இப்பொழுது நீ உண்மையே பேசுவேன் என்கிறாயே, இதற்குமுன் சுல்தான் மாலிக்ஷாவிடம் எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா? அதெல்லாம் போகட்டும், நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உண்மையாகப் பதில் சொல். என்னுடைய திட்டங்களைச் சிதைக்க வேண்டும் என்று நீ எண்ணுவதற்குக் காரணம் என்ன?”
“மாலிக்ஷா அவர்களைப் புதியபுதிய படை யெடுப்புகளில் ஈடுபடுத்தி, அவரை ஒரு படைத் தளபதியின் நிலையில் வெகு தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டால் தாங்களே இந்த சாம்ராஜ்யத்தை அரசாளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இதுதான் உண்மை!”
நிசாம் ஒரு துணியை யெடுத்துத் தன் உதடுகளைத் துடைத்துக் கொண்டார். அவருடைய கை விரல்கள் நடுநடுவென்று நடுங்கின.
“உன்னைப்போல் இரண்டு மடங்கு வயதுடைய நான், என்னுடைய ஆயுள்காலத்திலே எனக்காக உழைக்கவில்லை யென்பதையும் இஸ்லாத்திற்க்காகவே பணிசெய்து வருகிறேன் என்பதையும் நீ மறுக்கிறாயா?”
“அது எனக்குத் தெரியும்” என்று உமார் கூறினான்.
“உன்னுடைய நோக்கம் எனக்குப் புரிகிறது. அரசாங்க நிதியிலிருந்து உனக்குப் பதினாயிரம் பொன்கொடுக்கச் சொல்கிறேன். அது போதுமா!” என்று நிசாம் கேட்டார்.
“அது போதாது! சுல்தான் முகமதுவின் தங்கச் சிங்காதனத்தைக் கொடுத்தாலும் எனக்குப் போதாது”
“பதினையாயிரம் பொன் தரச் சொல்கிறேன்.”
எதிரேயிருந்த வயது முதிர்ந்த அந்த மனிதனை உமார் நிமிர்ந்து பார்த்தான். இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துத் தன்னை வசப்படுத்த எண்ணும் சிறு மதியையும் நினைத்துப் பார்த்தான். “நிசாம் அவர்களே! இது நாள் வரையிலும் தாங்கள் எனக்கு உதவி செய்து வந்திருக்கிறீர்கள் என்பதை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், தாங்கள் என்னை விலைக்கு வாங்கி விடவில்லை என்பதையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். என்னை நானே விற்றுவிடவும் நான் எண்ணவில்லை.”
“அப்படியானால் அக்ரோனோசிடம் போ! மத விரோதிகளிடம் போ! எங்கேயாவது நீ விரும்புகிற இடத்துக்குப் போ! என்னுடைய ஆதரவை இனிமேல் எதிர்பார்க்காதே! என்னுடைய உப்பைத் தின்பவர்கள் என்னைப் போலவே இஸ்லாத்திற்குப் பணி செய்பவர்களாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் விரோதிகள் என் முகத்திலே விழிக்கக் கூடாது” என்று சொல்லிக் கதவை நோக்கி கையைக்காட்டினார். உமார் எழுந்து, திரும்பிச் சென்றான்.
அவன் கதவின் அருகில் செல்லும்போது, நிசாம். ஏதோ சொல்வது போலிருந்தது. ஆனால் அவர் அவனைத் திரும்ப வரும்படி கூப்பிடவில்லை. தொழுகை விரிப்பின்மேல் மண்டியிட்டு மெக்காவை நோக்கித் திரும்பி, அல்லாவின் பெயர்கள் அத்தனையையும் கூறித் தொழுது கொண்டிருந்தார்.
“சாந்தி உண்டாகட்டும்” என்று கூறிக் கொண்டே உமார் வெளியேறினான்.
தன் வாழ்வுப் பாதைக்கு வழியாயிருந்த மற்றொரு கதவும் முடிக்கொண்டதை உமார் உணர்ந்தான். மீண்டும் திறக்க முடியாதபடி அந்தக் கதவு முடிக் கொண்டு விட்டது.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காமல் நாற்சந்தி வழியாக நடந்து கொண்டிருந்தான் உமார். அவனுக்கருகிலே ஒரு மனிதன் கூப்பாடு போட்டான். திடுமென்று ஏற்பட்ட அந்தக் குழப்பத்தில் உடல்கள் உருண்டன.
வளைந்த வாள்களின் ஒளி வெயிலில் தகதகத்தது. “மூலாஹித்துக்கள்! மத மறுப்புக்காரர்கள்!அடி, கொல்லு!” குரல்கள் கூக்குரலிட்டன. வெள்ளையங்கியும், சிவப்புக் கால்சட்டையும் அணிந்திருந்த ஓர் உருவம் தன் எதிரிலே வீரர்களின் மத்தியிலே சிக்கிக் கொண்டிருப்பதையும், அந்த மனிதனின் கழுத்திலேயிருந்து ரத்தம் பொங்கி வழிவதையும், வலையில் பிடிபட்ட மிருகம் போல அவன் வாய் திறந்து மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதையும் கண்டான்.
ஒரு கை அவன் முகத்தை நோக்கி வந்தது. விரல்கள் முக்கைப்பிடித்து ஆட்டிப் பின்னுக்குத் தள்ளின. வளைந்த கத்தியொன்று மறுபடியும் அவன் கழுத்தில் பாய்ந்து தலையை வேறுபடுத்தியது. துண்டுபட்ட அந்தத் தலை எல்லோருக்கும் தெரியும்படி உயரத்தில் தூக்கிக் காண்பிக்கப்பேட்டது.
இன்னொரு வெள்ளை உருவம் சந்தியின் குறுக்கே ஓடியது. தடுமாறிய அந்த உருவத்தை விரட்டிச் சென்றவர்கள் சூழ்ந்து, கொண்டார்கள். வாட்கள் அந்த உருவத்தின் மேல் பாய்ந்தன. அதன் வெள்ளை யாடைகள் செந்நிறமாக மாறின.
கொல்லுவதற்காகவே திடுமென்று கூடிய அந்தக் கூட்டத்தின் மத்தியிலே தாடியுடன் நின்ற முல்லா ஒருவர் தன் கைகளை யுயர்த்தி “மதமறுப்புக் காரர்கள் ஒழிக!” என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுவிட்டு ஒரு பத்து வயதுச் சிறுவன் அழத் தொடங்கினான். அந்த இஸ்லாமிய மதகுரு அந்தச் சிறுவன் இருந்த பக்கம் திரும்பி, “மதநம்பிக்கையுள்ளவர்களே, ஏழாவது கொள்கைக் காரர்களின் வாரிசு ஒன்று இதோ இருக்கிறது” என்றார்.
பயந்து கத்திக் கொண்டே, அந்தப் பையன் ஓடினான். உமாரைக் கண்டவுடன், அங்கே பாய்ந்து வந்து, அவனுடைய அங்கியைப் பிடித்துக் கொண்டு, “குவாஜா அவர்களே! இளவரசே! அவர்கள் என்னைத் துன்புறுத்தாமல் காப்பாற்றுங்கள்!” என்றான்.
கையில் கத்தியுடன் பாய்ந்து வந்த அரைத்தாடி வளர்ந்த இளைஞன் ஒருவன் அழுது கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பிடித்தான். உமார் அவனை அப்புறத்திலே தள்ளிவிட்டு, “என்ன இது? ரே நகரத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளையா வேட்டையாடுகிறீர்கள்! எட்டி நில்!” என்று உமார் அதட்டினான்.
கத்தியுடன் நின்ற அந்த இளைஞனின் பக்கத்திலே கோபத்தால் முகத்தில் சிவப்பேறிய அந்த முல்லா தோன்றினார். “குவாஜா உமார் இபின் இப்ராஹீம் அவர்களே! அமைச்சர் நிசாம் அல்முல்க் அவர்களின் ஆணைப்படிதான், மத விரோதிகளான இந்த ஏழாவது கொள்கைக் காரர்கள் மரண மடைகிறார்கள். வாளாயுதம் என்னும் நீதி, மதமறுப்பு என்னும் நூலைத் துண்டிக்கிறது. இதிலே நீங்கள் தலையிடாதீர்கள்!” இவ்வாறு அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த இளைஞன் தன் கத்தியால் பயந்து கொண்டிருந்த அந்தப் பையனைத் தாக்கினான்.
அதே சமயத்தில், உமாரின் பின்னாலிருந்து அவன் இடுப்பைச் சுற்றிக் கொண்ட இரண்டு வலியகைகள் அவனைப் பின்னுக்கு இழுத்தன. “வந்துவிடு அல்லது உன்னுடைய உயிரும் பறிக்கப்பட்டுவிடும், விரைவில் வா” என்று அக்ரோனோஸ் அவன் காதுக்குள்ளே சொல்லிக்கொண்டிருந்தான். இதற்குள் அந்தப் பையன் வயிற்றிலே பலமுறை குத்தப்பட்டு, அவனுடைய அழுகுரல் படிப்படியாகக் குறைந்துபோயிருந்தது. அக்ரோனோஸ் அவனை இழுத்துக் கொண்டே, மெதுவாக நடந்து கொண்டே “என்னிடம் வியாபார விஷயமாகப் பேசுவதாக நடித்துக் கொண்டு வா” என்றான்.
உமாருக்கு, நாற்சந்தியிலே நடக்கும் குழப்பத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இடையே குதிரையின்மேல் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒரு பருத்த மனிதனைக் கவனித்தான்.
அவ்வளவு தூரத்தில் இருந்தும் கூட, நீலத் தலைப்பாகையுடன் இருந்த நிசாமின் ஒற்றர் தலைவன் டுன்டுஷ் அவன் என்பதை உமார் அறிந்து கொண்டான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சந்திலே தான் நிற்பதை உமார் கண்டான். அவனுக்கு எதிரே சற்று தூரத்தில், ஒரு குயவன் சக்கரத்தில் பானைகள் செய்து கொண்டிருந்தான். மீண்டும், மீண்டும், தன் கைகளுக்கிடையே இருந்த களிமண்ணுக்கு அந்தக் குயவன் உயிர் கொடுத்துப் பாண்டமாக உருவாக்கிக் கொண்டிருந்தான்.
ஆனால், அந்த நாற்சந்தியிலே மனிதப் பாண்டங்களை ஒளிவீசும் உருக்குக் கத்திகள் உடைத்துக் கொண்டிருப்பதையும் புழுதி மண்ணிலே குருதி விழுந்து கலப்பதையும் உமார் கண்டான்.
“என்னோடு, மெதுவாக நடந்து வாருங்கள் ஒற்றர் தலைவன் நம்மைத் தொடர்ந்து வருகிறான்” என்று அக்ரோனோஸ் கூறினான்.
அவர்களுக்குப் பின்னாலே ஒரு குதிரை, மேலே போகாமல், சண்டித்தனம் செய்து கொண்டு நின்றது. அதன் கடிவாளச் சங்கிலிகளின் ஓசை கேட்டது. கடைகளில் இருந்த மனிதர்கள், கூட்டங் கூட்டமாக நாற்சந்தியை நோக்கி ஓடினார்கள். “அந்த நாய்!” என்று உமார் கத்தினான்.
“மெதுவாகப் பேசுங்கள்! அந்த நாய் நிசாமின் நாய் தாங்கள் நிசாமின் ஆதரவை இழந்து விட்டீர்கள்” என்று அக்ரோனோஸ் எச்சரித்தான்.
“நாங்கள் சச்சரவிட்டுக் கொண்டால் என்ன? நான் அவருடைய பகைவன் அல்ல. நான் இந்த நாய்க்குப் பயப்பட வேண்டியதில்லை.”
“ஆனால், நான் இந்தக் கும்பலுக்குப் பயப்பட வேண்டியருக்கிறதே! இப்படியொரு கும்பல் முல்லாக்களால் தூண்டிவிடப்பட்டு, இரத்த வெறி பிடித்துத் திரிவதை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?”
கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களின் முதுகுப்புறமாகக் குனிந்தபடி, உமாரை இழுத்துக் கொண்டு சென்ற அக்ரோனோஸ் ஒரு கம்பளி வியாபாரியின் கடைக்குள்ளே நுழைந்தான்.
அந்த வியாபாரி, வெளியில் நடக்கும் குழப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அங்கிருந்த ஒரு முட்டையைச் சுட்டிக் காட்டிய அக்ரோனோஸ், “ஹபி, எங்களுக்கு ஏழு வேண்டும்” என்றான்.
எவ்விதமான பதிலும் பேசாமல் கடைக்காரன் அவர்களைப் பின்புறத்திற்கு அழைத்துச் சென்றான்.
ஒரு குறுகிய கதவை மறைத்துக் கொண்டிருந்த ஒரு திரையை இழுத்து, “ஏழு பொருளுக்குரியவர்கள் இந்த நேரத்தில் மதுவருந்தி மகிழ்ந்திருப்பார்கள்” என்று சொன்னான். அவர்கள் உள்ளே நுழைந்ததும் மறுபடி அந்தத் திரையையிழுத்து மறைத்து விட்டான்.
“என் இடுப்பைப் பிடித்துக் கொண்டு இறங்குங்கள். வளைந்து செல்லக்கூடிய படிகள் கிட்டத்தட்ட இருபது இருக்கின்றன” என்று கூறிக்கொண்டு அக்ரோனோஸ் கீழே இறங்கினான். இருளிலே, உமாரும் அவன் பின்னே இறங்கிச் சென்றான். சிறிது தூரம் இறங்கிய பின், அந்த படிகள் வளையும் ஓரிடத்திலே, வெளிச்சம் தெரிந்தது. சுவர் மாடக்குழி ஒன்றிலே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸ் அதை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்குப் பலமுறை வந்து போன பழக்கமுடையவன் போல முன்னே நடந்தான்.
குவித்து வைத்திருந்த பொருள்களுக்கிடையேயும், குப்பைக் கூளங்களுக் கிடையேயும், உமாரை அழைத்துச்சென்ற அவன், ஒரு பெரிய கம்பளி முட்டையருகிலே வந்தவுடன், “கொஞ்சம் இதை நகர்த்துவதற்கு உதவி செய்யுங்கள். சிறிது தூரம் நகர்த்தினால் போதும் நாம் என்ன ஒற்றர் தலைவன் போல் பருமனாகவா இருக்கிறோம்?” என்றான்.
“நீதான் என்னோடு இருந்தால் எவ்விதமான ஆபத்தும் இல்லையே! ஏன் இந்த எலி வளைக்குள்ளே போய் ஒளிய வேண்டும்?” என்று உமார் கேட்டான்.
அக்ரோனோஸ் பொறுமையில்லாமல் நிலவறைப் படிகளை நோக்கினான். தான் மட்டுமே அந்த முட்டையை நகர்த்த வேண்டியிருந்தது.
அந்தக் கனத்தைத் தன்னால் தள்ள முடியாது என்றதும் அக்ரோனோஸ் தொடர்ந்து, “குவாஜா உமார் அவர்களே, ஒரு வேளை உங்கள் வீட்டிலேயிருந்தால், நான் பத்திரமாக இருக்கலாம்! ஆனால் சற்று முன்னே உங்கள் காலடியிலே சரணமடைந்தானே அந்தச் சிறுவன் தப்பினானா?” மதக் கலகத்திலிருந்து தப்பியோடுவது என் வாழ்வில் இது முதன் முறையல்ல. மேலும், டுன்டுஷ் என்னை எப்படியாவது பிடித்துவிடவும் என் மீது ஏதாவது குற்றம் சுமத்தி உடனடியாகக் கொன்று விடவும் காத்துக் கொண்டிருக்கிறான்.
இதை நான் உறுதியாகச் சொல்லமுடியும். என்னைக் கொன்று விட்டு என்னுடைய கடையில் உள்ள பொருள்களையெல்லாம் கொள்ளையடித்து விடுவான். தங்கள் பொருள்களும் அங்கேதான் இருக்கின்றன. தாங்கள் தயவுசெய்து என் பின்னே வாருங்கள்! இப்பொழுது இந்த மூட்டையை, இந்தக் கயிற்றைக் கொண்டு சுவர் அருகில் இழுத்து மறைக்க உதவி செய்யுங்கள்” என்றான்.
கம்பளி மூட்டை மறைத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சென்ற ஒரு குறுகிய வழியில் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நின்று கவனித்த பிறகு அக்ரோனோஸ் உமாரை அழைத்துக் கொண்டு சிறுக சிறுக உயர்ந்து கொண்டே சென்ற அந்தப் பாதை வழியாக மூடப்பட்டிருந்த கதவுக்கு வந்து சேர்ந்தான்.
உடனே, கொஞ்சம் கூடத் தயங்காமல் அந்தக் கதவைத் திறந்து அதன் அருகில் இருந்த ஒரு பரணில் மெழுகுவர்த்தியை வைத்தான்.
இதமான குளிர்ச்சியும், மதுவின் மணமும் பொருந்திய ஒரு நிலவறைக் குள்ளே தாங்கள் செல்வதை உமார் உணர்ந்தான். சுவர் ஒரமெல்லாம் சிறிய பீப்பாய்களும், பெரிய பீப்பாய்களுமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நடுவில் இருந்த இடத்தில் ஒரு விரிப்பின் மேல் ஆறு மனிதர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவிர்கள் அருகிலே விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸின் பக்கம் சாதாரணப்பார்வையுடன் திரும்பிய அவர்களின் கண்கள், உமாரைக் கருத்துடன் ஆராய்ந்து பார்க்கத் தொடங்கின.
நீண்ட சலாம் ஒன்று செய்து விட்டு பணிவுடன், அக்ரோனோஸ் விலகிக் கொண்டான், கல்லூரிப் பேராசிரியர் போலத் தோன்றிய ஒருவர் உமாரை வரவேற்க முன்வந்தார்.
“வருக! வருக! நட்சத்திரங்களின் தலைவரே! அழித்து ஒதுக்கப் பெற்ற இந்த ஆத்மாக்களின் கூட்டத்திற்கு வருக!
“இன்று எங்கள் ஒவ்வொருவருடைய தலைக்கும் விலை கூறப்பட்டிருக்கிறது” என்று இன்னொருவன் விளக்கங் கூறினான்.
உமார் அவர்களை வியப்புடன் ஆழ்ந்து கவனித்தான். ஒருவன், எகிப்திய மொழியின் மிகக் கனமான உச்சரிப்புடன் பேசினான்; ஒருவன் கிழிந்த மேலங்கியணிந்து கையில் ஒரு தடியும் சாமியார்கள் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரமும் வைத்திருந்தான். மற்றவர்கள், நல்ல பணம் படைத்த வணிகர்கள் போல் தோன்றினார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரியாகக் காணப்பட்டார்கள்.
அவர்கள் கண்கள், அவர்களுடைய அறிவின் திறத்தையும் நல்ல மனப்பான்மையையும் காட்டுவனவாயிருந்தன. எதையும் செய்து முடிக்கக்கூடிய காரியவாதிகளாகவும் அவர்கள் தோன்றினார்கள்.
“குவாஜா உமார் அவர்களே, வாளாயுதத்திற்குப் பயந்து தற்காலிகமாக மறைந்திருக்கும் இந்த நல்ல கூட்டாளிகளைப் பற்றி தங்களுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன். நான் ஒரு பேராசிரியன். அதோ அங்கே இருக்கிறாரே, அவர் உலகச்சுற்றுப் பிரயாணம் செய்து வருபவர். அவருடைய கதைகளிலே மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவர். அந்த அடுத்த ஆள் சாமியார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
நான்காவதாக இருப்பவர் பருமனாக இருக்கிறாரே அவர்தான் எள்ளு வியாபாரி - அழிக்கப்பட்ட ஆனால் இனிமையான சரக்குகளையும் அவர் வியாபாரம் செய்கிறார். அப்புறத்தில் இருக்கும் இரட்டையர்கள் இஸ்கானிலிருந்து ஓய்வுக்காக வந்திருக்கும் கனவான்கள். சூதாட்டத்தில் மட்டும் அவர்களை நம்பக்கூடாது. அன்பர்களே! இப்பொழுது, உமார் அவர்களைச் சேர்த்து நாம் ஏழு பேராகி விட்டோம். நட்சத்திரப் பேராசிரியர் அவர்கள் நம்முடன் சேர்ந்து, பெருமைப் படுத்துவார்களானால் நாம் இப்பொழுதே புறப்படலாம்.”
“தங்களுடைய பண்பினால் நான் பெருமைப் படுத்தப் படுகிறேன்” என்று உமார் புன்சிரிப்புடன் கூறினான்.
கொரசான் நாட்டிலே, ஒரு புதிய மதத்தைப் போதிக்கக் கிளம்பியிருக்கும் ஏழாவது கொள்கைக்காரர்களைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் கேள்விப்பட்ட கதைகள் ஒன்றுக்கொன்று முரணாயிருந்தன. ஏழாவது நபி ஒருவர் வருவார் என்று எதிர்பார்க்கும் நம்பிக்கை யுடையவர்கள் என்று அவர்களைப் பற்றிச் சிலர் கூறினார்கள். புதிய மதத்தைப் போதித்து, இஸ்லாமிய மதத்தை மறுப்பவர்கள் என்று சிலர் கருதினார்கள்.
மற்றும் சிலரோ, அவர்கள், தேவதைகளின் அருளாலோ, அல்லது துர் ஆவிகள், குட்டிச்சாத்தான் இவற்றின் உதவியாலோ மாயவித்தைகள் செய்பவர்கள் என்று கூறினார்கள். அருகிலே உள்ள நாற்சந்தியிலே தங்களைச் சேர்ந்தவர்கள் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும்பொழுது, இங்கே உட்கார்ந்து வேடிக்கை பேசிக் கொண்டிருக்கக்கூடிய இவர்களின் மனிதத் தன்மையைப் பற்றி உமார் வேறு விதமாக நினைத்தான். இருப்பினும், இந்தச் சமயத்தில் அவர்களுடைய போர்வையைக் கிழித்தெறிய முயற்சிப்பது முட்டாள் தனமாகிவிடும் என்று பேசாமல், இருந்தான்.
“ஹாசான் இபின் சாபா உங்களுடன் இருக்கிறானா? நான் அவனைப் பார்க்க வேண்டும்” என்று உமார் கேட்டான். அந்த ஆறு பேரும் ஒரே மாதிரியாக, அவன் பக்கம் திரும்பினார்கள். அந்தப் பேராசிரியர் கூடப்பேசாமல் இருந்தார். பிறகு, அக்ரோனோஸ்தான் முதலில் பேசினான்.
“குவாஜா உமார்! தங்களைப் பார்ப்பதற்காக ஹாசான் மாதக் கணக்காக காத்துக் கொண்டிருக்கிறான்” என்றான் அக்ரோனோஸ்.
அவர்களுடைய பயம் தளர்ந்தது. பேராசிரியர் பேசத் தொடங்கினார். “ஹாசான் இங்கு இல்லை. சில நாளைக்கு முன் அவன் நிசாமைப் பார்க்கச் சென்றான். ஆனால் இப்பொழுது மலைக்குப் போய்விட்டான்!”
நீண்ட நாளைக்கு முன் கேள்விப்பட்ட ஒரு விஷயம், சட்டென்று உமாரின் உள்ளத்தில் பளிச்சிட்டது. முதன் முதலில் பாபிலோன் மணல் மேட்டிலே ஹாசானைச் சந்திக்க நேர்ந்தபோது, அவன் தான் என்றும் உயரமான இடங்களிலேயே உலவுபவன் என்று கூறியிருக்கிறான். ரே நகருக்குப் பின்னால் உள்ள மலைப் பிரதேசத்தில்தான் ஹாசான் பிறந்து வளர்ந்தவன். ஏழாவது கொள்கைக் காரர்களின் தலைவன் பெயர் ஷேக் அல்ஜெபலா என்றும், மலைத்தலைவன் என்றும் மக்கள் பேசிக் கொள்வதையும் கேட்டிருக்கிறான். அப்படியானால் ஹாஸானும், மலைத் தலைவனும்...? உமாருக்கு விஷயம் ஒருவாறு புரிவது போலத் தோன்றியது.
ஹாஸானை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று உமார் விரும்பினான். சந்தித்து, தன்னைப் பற்றிய செய்திகளை, காசா குச்சிக்கில் வேவு பார்த்த ஒருவனிடமிருந்து, தபால் புறாவின் மூலம் அவன் தெரிந்து கொண்டது ஏன் என்று கேட்க வேண்டும். தன்னை அவன் உளவு பார்க்க வேண்டிய காரணத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், டுன்டுஷ் உடைய கண்களின் எதிரில் ரே நகரில் இருந்து வருவது அவனுக்குப் பிரியமில்லை. மீண்டும் தன்னை நிசாம் அழைக்கும்படி ஏற்பட்டு விடுவதையும் உமார் விரும்பவில்லை.
அக்ரோனோஸ், உமார் அருகிலே நெருங்கி வந்து சாய்ந்துகொண்டு, மெல்லிய குரலிலே, ஹாஸான் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். தங்களுடைய கண்ணைக் கவர்ந்த அழகி ஒருத்தி அவனிடம் இருக்கிறாள்” என்றான்.
அற்ப நேரத்துக்குத் தன் கண்களுக்கு அழகாகத் தோன்றிய பெண்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களில் இவள் யாரோ? என்று நினைத்த உமாருக்கு, அயீஷாவின் நினைவு வந்து இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டது.
“சரி நீ என்னை ஹாஸானிடம் அழைத்துச் செல்கிறாயா?” என்று கேட்டான்.
அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்த பேராசிரியரின் பக்கம் திரும்பினான் அக்ரோனோஸ் “நாங்கள் அங்கேதான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறிய அவர்கள் பேச்சில் துன்பம் தொனித்தது. “இருப்பினும், முற்றிலும் புதியவரான தங்களுக்கு அது எளிதான வழியல்ல; பாதுகாப்பானதுமல்ல. அரசரின் வானநூற்கலைஞர், நிசாப்பூர் நகரத்து குவாஜா உமார் என்ற உயர்ந்த நிலையில் இருந்தாலும்கூட அது தங்களை அழைத்துச் செல்ல உகந்த வழியல்ல.”
“நாங்கள் ஒரு புதிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அளவுக்குத் தங்களுக்கு எங்களைப்பற்றி நன்றாகத் தெரியும். அதைத் தெரிந்து கொண்டு, நாங்கள் இங்கே இருப்பதையும் பார்த்துவிட்டு, தாங்கள் வெளியிலே சென்று வீதியிலே திரியும் ஓர் ஒற்றனிடமோ, அல்லது ஒரு முல்லாவிடமோ இபின்கு ஷாக்கின் நிலவறையில், ஏழாவது கொள்கைக்காரர்களின் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று சொன்னாலே போதும், எங்கள் உடல்களிலிருந்து எங்கள் தலைகள் உடனே துண்டித்து விடப்படும். அத்தனை ஆபத்தானது இந்த விஷயம்!”
“உண்மைதான்” என்று விரக்தியுடன் உமார் ஒப்புக்கொண்டான்.
“மிக மிக உண்மை! எங்களைப் பொறுத்தவரையில் தாங்கள் இஸ்லாத்தை மூடநம்பிக்கையுடன் பின்பற்றுகிறவர் அல்ல என்பது நன்றாகத் தெரியும். இன்னும் தாங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதி சொன்னால் அந்த உறுதி குலையாமல் காப்பாற்றுவீர்கள் என்பதையும் அறிவோம். ஆகவே, தாங்கள் இங்கே கண்டதையோ, ஹாஸனைப் பார்க்கப்போகும் வழிகளில் காணப் போவதையோ, தாங்கள் யாரிடமும் கூறமாட்டீர்கள் என்று உறுதிகூற வேண்டு மென்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
உமார் சிறிதுநேரம் யோசித்து விட்டு, “சரி நான் உறுதி கூறுகிறேன்” என்றான்.
“நன்று! நன்று!” என்று ஆமோதித்த அந்த சாமியார், “திருக்குரான் மீது ஆணையிட்டு நாம் சத்திம் செய்யவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், உண்மைவாதிகள்! இந்த உலக இயந்திரத்தில் கடவுளை எதிர்பார்ப்பதை நாங்கள் நிறுத்தி வெகு நாட்களாகின்றன. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த நாங்களும் தங்களை மோசம் செய்ய மாட்டோம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எங்களிலே யாரும் இதுவரை வாக்குமாறியதில்லை. எங்களிலே சிலர், இரகசியத்தை வெளியிடச் செய்வதற்காக உயிருடன் தோலுரிக்கப் பட்டிருக்கிறார்கள். உயிர்போயிருக்கிறதே தவிர, இரகசியம் போனதில்லை!”
அதிகம் பேசாத அர்மீனியனான அக்ரோனோஸ், கண்ணாடிக் குவளைகளை எடுத்து, ஒரு சிறிய பீப்பாயிலிருந்து வெள்ளை மதுவை யூற்றி ஏழுபேருக்கும் கொண்டு வந்து கொடுப்பதை உமார் வியப்புடன் கவனித்தான்.
“காவல்காரர்களை ஏமாற்றுவதற்காக நாம், திருமறையால் பழிக்கப்பட்ட மதுவை மறைவாகக் குடித்துவிட்டுப் பிதற்றுகிற குடிகாரக்கும்பலைப்போல் நடிக்க வேண்டும். நகர்க்காவலர்கள், இதுபோன்ற சிறிய பாவங்களையும் அதற்காகக் கிடைக்கும் சிறிய கைக்கூலியையும் நம்பித்தான் வாழ்கிறார்கள்! இப்பொழுது உங்கள் குவளைகளைத் தூக்கிக்கொள்ளுங்கள். எங்கே போகிறோம் என்றோ எதற்குப் போகிறோம் என்றோ நமக்குத் தெரியாது” என்று கூறிக் கொண்டே பேராசிரியர் உமாரை உற்று நோக்கினார்! தத்தம் குவளைகளை உயரத்துக்கி அனைவரும் மதுவைக் குடித்தார்கள்.
இரண்டுநாள் பயணத் தொலைவில் மலைப்பிரதேசத்தில் உள்ள ஓரிடத்தில் அனைவரும் சந்திக்க வேண்டுமென்று குறிப்பிட்டு விட்டு ஒவ்வொருவராக நிலவறையை விட்டு வெளிக்கிளம்பினார்கள். உமாருடன் கூடவே செல்ல வேண்டிய அக்ரோனோஸ், உமாரை யாரும் எளிதில் தெரிந்துகொள்வார்கள். ஆகையால், அவன் மாறுவேடம் போட்டுக் கொள்ளவேண்டும் என்றான்.
அதன்படி உமாரை மது வியாபாரி ஒருவனுடைய கடையின் மேல் அறையொன்றுக்கு கூட்டிச் சென்றான். அங்கேயிருந்த ஒருபெண், உமாரினுடைய தாடியைச் சிறிது வெட்டி யெடுத்து அதற்குச் சாயம் பூசி மாற்றினாள். பிறகு, அவன் முகத்தையும் கழுத்தையும் தாடியைக் காட்டிலும் கருப்பாக வரும்படி ஆளிவிதைச் சாற்றைத் தடவினாள்.
“தேசாந்திரம் பயணம் செல்லும் எல்லா மனிதர்களையும் செல்மாவுக்குத் தெரியும். இந்துப்பக்கிரி யொருவரை ஆப்பிரிக்கா தேசத்துக் கொக்காக மாற்றிவிடக் கூடிய திறமை அவளுக்கு இருக்கிறது” என்று அவளைப் பாராட்டிப் பேசினான் அக்ரோனோஸ்.
செல்மா அசடுபோல் சிரித்தாள். அவள் உமார் போன்ற அழகிய கனவான் யாருடனும் இதுவரை பழகியதில்லை. அவளுடைய கணவனும் பாராட்டுத்தலைக் கேட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தான்.
செல்மா அவளுடைய ஒப்பனை வேலையை முடித்ததும் உமார் எழுந்து நின்றான். மிருதுவான பட்டுச் சட்டையுடன் அகன்ற தோல்கால் சராய் அணிந்து, விரல்களுக்குமேலே வளைந்து செல்லும் மிதியடியுடன் நின்றான். “இவர்தான் போக்கரானிய குதிரை வியாபாரி மட்டக்குதிரைகள் வாங்குவதற்காக மலைப் பிரதேசத்திற்குச் செல்கிறார்” என்றான், அக்ரோனோஸ். “அப்படியானால், துருக்கிய மொழியில் பேசுங்கள்.
அடிக்கடி எச்சில் துப்பிக்கொண்டிருங்கள். இரண்டு கைகளாலும் சாப்பிடவேண்டும. இதோ இப்படி மூச்சுவிட வேண்டும்” என்று வேகமாக மூச்சுவிட்டுக் காண்பித்த செல்மா, ஒருமாதிரியாக நடந்து காண்பித்து, “இப்படிலேசாக முழங்காலை வளைத்து நடக்கவேண்டும். அப்பொழுதுதான், இடைவிடாமல் குதிரையில் உட்கார்ந்ததால் இந்த போக்கரானியனுக்கு முழங்கால் வளைந்துவிட்டது என்று தோன்றும்.
எல்லோருக்கும் எதிரில் கழுதைப் பாலைக் குடிக்கவேண்டும். இப்படியெல்லாம், வேஷத்துக்குத் தகுந்தபடி நடந்தால் உங்கள் சொந்த மனைவிகூட உங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாது” என்று செல்மா யோசனை கூறினாள்.
33. திடுக்கிடும் கழுகுக்கூடு
அக்ரோனோஸும், உமாரும் தங்கள் குதிரைகளிலே சென்று கொண்டிருந்தார்கள். மூன்றாவது நாள் கதிரவன் மறைந்த பிறகு, அக்ரோனோஸ், உமாரை நிறுத்தி “மன்னிக்கவேண்டும். இனிமேல் செல்லக்கூடிய பாதையை வெளி ஆட்கள் தெரிந்து கொள்வது தடுக்கப் பெற்றிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே, உமாருடைய கண்களைத் துணியால் கட்டினான்.
அவர்களுடைய குதிரைகள் காஸ்வின் பிரதேசத்திற்கு மேலேயுள்ள குன்றுப் பிரதேசத்திலே நுழைந்து போய்க் கொண்டிருந்தன. உமார் கடைசியாகப் பார்த்தது, பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்குப் பிரதேசமும் அதற்கப்பால் இருந்த மரங்கள் அடர்ந்த குன்றுகளும்தாம்!
“நீயும் ஏழாவது கொள்கைக்காரர்களைச் சேர்ந்தவன் தானா?” என்று உமார் கேட்டான்.
அதற்கு அக்ரோனோஸ், அந்தப் பாதையிலே யாருமே இல்லாவிட்டாலும் கூட, உமாரின் அருகிலே நெருங்கி வந்து மெல்லிய குரலிலே, “நான் மலைத்தலைவருக்குத் தொண்டு செய்கிறேன். இந்தக் குன்றுகளிலே, ஹாசான் இபின் சாபா என்ற பெயரில் அவர் அழைக்கப்படுவதில்லை. தங்களுக்குத் தெரிந்த ஹாஸான், பாபிலோன், கெய்ரோ, ஜெருசலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவன்.
அவனை இனிமேல் மறந்துவிடுங்கள். இப்பொழுது நாம் காணப்போகிறவர் மலைத்தலைவர். கொரசான் தேசத்திலே மட்டும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவர்கள் பதினாயிரம் பேர் இருக்கிறார்கள். அவருடைய ஆற்றல் பூமியை ஆளுகின்ற அரசர்களுக்கும் மேற்பட்டது.
பாபிலோனிய, புழுதி மண்ணில் கிடந்த பிணத்தின் அருகில் நடந்து சென்ற கழுகையும், வானத்தில் பறந்துசென்ற தபால் புறாவையும் நினைத்துப் பார்த்துக் கொண்டு உமார் பேசாமல் இருந்தான்.
“கடந்தவாரம் ரே நகரத்தில், நிசாம் அல்முல்க் அவர்களைப் பார்த்துவிட்டு வந்த மலைத்தலைவர் ஒரு விடுதிக்குள்ளே நுழைந்தார். அதை வீரர்களால் வளைத்துக் கொண்டு, உள்ளே நுழைந்து, ஒவ்வொரு அலமாரியையும் முட்டையையும் அவிழ்த்துப் பார்த்து மூலை முடுக்குகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்தும் கூட, அவ்ரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மலைத்தலைவர் கழுகுக் கூட்டுக்குப் புறப்பட்டு வந்ததை யூாருமே பார்க்கவில்லை. இருப்பினும், நம்மை எதிர்பார்த்துக் கொண்டு அவர் அங்கேயே இருக்கிறார்.”
“எங்கே!”
“கழுகுக்கூடு. அங்கேதான்! எல்லோருக்கும் இந்தப் பெயர் தெரியும். ஆனால் வழிதான் தெரியாது!”
“உனக்கு நன்றாகத் தெரியுமா”
“ஆம்! ஒருமுறைதான் கழுகுக்கூட்டின் வாசலைப் பார்த்திருக்கிறேன்” என்று அக்ரோனோஸ் ஒப்புக்கொண்டான்.
“என்னை அழைத்துவரச் சொல்லி, இந்த மலைத்தலைவன் உனக்கு ஆணையிட்டு ஒருவாரம் ஆகிறதா?”
“இல்லை. இரண்டு வருடங்கள் ஆகின்றன. உமார் கயாமுக்கும், நிசாம் அல்முல்க் அவர்களுக்கும் இடையே சச்சரவுப் புகையெழும்பும் நேரம் நெருங்கி வருகிறது. அது ஏற்பட்டதும், அவரைத்தேடி என்னிடம் அழைத்துவா. இங்கே அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்” என்றார்.
“ஆ! அப்படியானால், இந்த மலைத் தலைவனுக்கு மாயவித்தை தெரியும் என்று சொல்” என்று ஆச்சரியத்தோடு சொன்னான் உமார்.
“எனக்குத் தெரிந்த எந்த மனிதனைக் காட்டிலும், அவர் அதிக அறிவுள்ளவர். ஆற்றலின் இரகசியம் அவரிடம் அடங்கிக்கிடக்கிறது. அவருக்குப் பணியாமல் இருப்பதைவிடக் கீழ்ப்படிந்து நடப்பது நல்லது. நிசாம் அவர்கள் அவருடைய புத்தகத்தில் இவரைப் பற்றி எச்சரித்துச் சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். தான் சாகும் வரையில் வெளிப்படாமல் இருக்கும்படி அந்த அத்தியாயங்களை மூடி முத்திரையிட்டு வைத்திருக்கிறோம். அது யாருக்குத்தெரியும்? ஆனாலும், அவர் இவருக்குப் பயப்படுகிறார் என்பது உண்மை.”
“நீ?’ என்று உமார் கேட்டதும் அக்ரோனோஸ் பதில் சொல்லாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். “அதோ கீழேயுள்ள சமவெளிப் பிரதேசத்திலே நடமாடும், வரி விதிப்பு என்னும் வாளுக்கும், மதகுருக்கள் என்னும் கொடுமைக்கும் தப்பி வந்துவிட்டோம்.
அரசரின் ஆதரவுபெற்ற குவாஜா உமார் அவர்களுக்கு அவை அற்ப விஷயங்களாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற முஸ்லிம் அல்லாத வியாபரிகளுக்கு அவை விலங்கு போன்றவைதாம். அர்மீனியர்களாகிய நாங்கள் அடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறோம். ஆனால் இங்கே, இந்த இடத்திலே சுதந்திரம் இருக்கிறது!”
அவனுடைய குரலிலே ஒரு புதுமை ஆர்வம் தொனித்தது. அந்த மலைப் பிரதேசத்திலே சந்திக்கவேண்டிய இடம் நெருங்கி வரவர அவனுக்கு மகிழ்ச்சி பெருகியது. அடிக்கடி தன்னுடைய குதிரையை அடித்துக்கொண்டும் உமாருடைய குதிரையை நிற்கும்போதெல்லாம் இழுத்துக்கொண்டும் போனான். அந்தப் பாதை வழியாக வேறு குதிரைகளும் மனிதர்களும் போய் வந்து கொண்டிருந்தார்கள். மெதுவான குரலில் வரவேற்புகளும், அடங்கிய சிரிப்பொலியும் உமாரின் காதில் விழுந்தன. ஆனால், யாரும் ஒரு விளக்குக் கூட எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை.
கண்ணுக்குத் தெரியாத காவல் வீரர்களால் அவர்கள் சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டபொழுது, கீழே ஓர் ஆற்றின் ஓசையைக் கவனித்தான். குளிர்ந்த காற்று அவர்களை உலுக்கிக்கொண்டு வீசியது. பைன்மரங்களின் வாசத்தை உமார் கவனித்துக் கொண்டான். உடைந்த கற்களின்மேல், மட்டக் குதிரைகள் ஏறிக்கொண்டிருந்தன.
கடைசியில் ஒரு குரல் அவர்களை நிறுத்தியது.
“நில்லுங்கள்! இருட்டில் சுற்றுகின்ற நீங்கள் யார்!”
“ஏழு கூட்டாளிகள்” என்று அக்ரோனோஸ் கூறினான்.
“என்ன தேடுகிறீர்கள்?”
“இன்னும் வராத அந்தநாளை!” அதற்குப் பின் தொடர்ந்து, கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை! மறுபடியும் குதிரைகள் முன்னோக்கிச் சென்றன. அவற்றின் காற் குழம்புகள், திடமான கற்களின்மேல் ஒலி யெழுப்பிக்கொண்டு சென்றன. அவர்களுடைய பாதை திடுமென்று திரும்பியது, செங்குத்தான ஒரு பாறையின் குறுக்காக ஏறிச்செல்வதுபோல் தோன்றியது. கீழே வெகுதூரத்திலே, பாறைகளின்மேல் அந்த ஆறு பாய்ந்து செல்லும் பேரோசை பேட்டது. கனமான காற்றுச்சூழல்கள், உமாரின் தளர்ந்த கால் சாராய்க்குள்ளே புகுந்து வீசின.
உமார் தன் முழங்கால்களை நெருக்கிக் கொண்டு குதிரையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். ஒன்றுமில்லாத வெட்ட வெளியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. அவனைச்சுற்றி விளக்குகள் பளிச்சிட்டன. அவனுடைய குதிரை தடுமாறி நின்றது. ஒரு பெரிய கதவின் இருப்பு முட்டுக்கள் கிரீச்சிட்டன. அவனுடைய பின்புறத்திலே, இரும்பு அடிக்கிற சத்தம்கேட்டது. அவனுடைய கண்கட்டை ஒரு கை அவிழ்த்து விட்டது.
சிறிதுநேரம், விளக்கின் வெளிச்சம் அவன் கண்ணைக் கூசச் செய்தது. பிறகு தன் தலைக்குமேலே நட்சத்திரங்கள் இருப்பதையும், தன்னைச் சுற்றிக் கோட்டைச் சுவர் இருப்பதையும் கண்டான். அக்ரோனோகம், வழியில் அவனுடன் வந்தவர்களும் மறைந்து போய்விட்டார்கள். சிரித்த முகத்துடன் ஒரு கரிய சிறுவன், குதிரைக் கடிவாளத்தைப் பிடித்திருந்தான். சிவந்த பட்டுச்சட்டை அணிந்திருந்த ஒரு சிறிய மனிதன் அவனுக்கு சலாம் செய்தான்.
“தலைவரே! தங்கள் வருகை அதிர்ஷ்டம் உடையதாகுக! நான் கெய்ரோ ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்தவன். ரக்கின உட்டின் என்பது என்பெயர். அறியாமை மிக்க நான், தங்கள் அறிவுநூல்களைக்கற்று மகிழ்ந்திருக்கிறேன். தயவு செய்து கீழே இறங்கித் தங்கள் அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்!” என்று அந்தச் சிறிய மனிதன் வரவேற்றான்.
களைத்துச் சோர்ந்துபோய் இருந்த உமார், தனக்கு வழிகாட்டிச்சென்ற அவன் பின்னால், ஒரு சிறு கதவு வழியாக, கல்பதித்த நடைபாதை வழியாகச் செல்லவேண்டியிருந்தது. இரவுநேரம் ஆகையால் ஆள் நடமாட்டமற்று அந்தப் பாதை விளங்கியது. கடைசியில் ஒரு படுக்கையறையை அடைந்தார்கள். அங்கு படுக்கையின் அருகிலே குளிர் போக்குவதற்காகக் கணப்பு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த தட்டுகளிலே, பழங்களும், கேக்குகளும், ஒரு கண்ணாடிக் கூஜாவிலே திராட்சை மதுவும் இருந்தன.
ரக்கின் உட்டின் கூடவந்த கரிய பையனைக் காட்டி, “இதோ இவன் தங்களை அடிமை. ஆபத்திலிருந்து தாங்கள் தப்பி வந்துவிட்டபடியால், அமைதியாக நீங்கள் தூங்கலாம். தங்கள் கனவுகள் இன்பமாக இருப்பதாக!” என்று கூறி விடைப்பெற்றுச் சென்றுவிட்டான்.
பிறகு, உமார் சிறிதளவு சாப்பிட்டு விட்டு தட்டை அந்த அடிமைப்பையனிடம் கொடுத்தான். அந்த மதுவில் ஒரு குவளை குடித்தான். அது காரமாகவும் மணமாகவும் இருந்தது. துப்பாக்கியால் வெளிநோக்கிச் சுடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சுவர்த்துவாரத்தின் வழியாக வெளியில் நோக்கினான் உமார்.
மலைக்காற்று மிகக் குளுமையாக வீசியது. எனவே போர்வைகளை எடுத்துத் தன் உடலைச் சுற்றி மூடிக்கொண்டு எரிந்து கொண்டிருக்கும் கணப்பில் இருந்த சிவந்த தணலைப் பார்த்துக்கொண்டிருந்தான். தூக்கம் கண்ணைச் சுற்றிக்கொண்டு வந்தது. நெருப்பின் சிவப்பு நிறம் நீலநிறமாக மாறியது. கதவுக்கருகே சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அடிமைச் சிறுவனைக் கவனித்தான்.
அவனுடைய கரியநிறம் இலேசான வெள்ளை நிறமாக மாறியிருந்தது. அந்த அறையும் முன்னிருந்ததைக் காட்டிலும் பெரிதாகியிருந்தது. உயரம்கூட அதிகரித்திருந்தது.
ஆனால், உமார் தன்னுடைய உடல் நல நிலையும், அறிவு நிலையும் மாறவில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து காண்டான். கண்களை மூடிக்கொண்டே, “இந்த மலைப்பிரதேசத்துக்குத் தூக்கமே புதுமையானது” என்று எண்ணினான்.
கழுகுக்கூடு என்ற அந்தக் கோட்டை செங்குத்தான இரண்டு பள்ளத்தாக்குகளுக்கு ஊடே இருந்த ஒரு மலையின் உச்சியில் இருந்தது என்பதை மறுநாள் காலையில்தான் உமார் தெரிந்து கொண்டான்! தான் இருந்த இடத்திலிருந்து முன்னிரவு அவர்கள் வந்த பாதை எதுவென்று பார்த்துக் கண்டுகொள்ள முடியவில்லை.
ஏனெனில், கீழேயுள்ள வெள்ளிமயமான ஆற்றின் படுகை வரையிலே அந்தப் பாதை ஒரே செங்குத்தாக இருந்தது. அதற்கப்பால், பாறைகள் ஏறி ஏறி இறங்கி வரிசைபடிக்கு உள்ள கூரைக் கோபுரங்கள் போலக் காட்சியளித்தன.
அந்தக் கழுகுக்கூட்டில் அவர்கள், இயற்கையான மலைப் பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்டிருந்த படியால், மற்றொரு பள்ளத்தாக்கின் பக்கத்திலிருந்து அதைப் பார்த்தால், ஏதோ மலையின் உச்சி என்று தோன்றுமே தவிர, அங்கே ஒரு கோட்டை இருக்கிறதென்று தெரியாது. அதற்கு மேலே வட்டமிட்டுப் பறக்கும் கழுகுகளைத் தவிர, வேறு யாருக்கும், அங்கு ஒரு கோட்டை இருக்கிறது என்ற விஷயம் தெரியப் போவதில்லை. அந்தக் கோட்டையும் அதன் சுற்றுப்புறச் சுவர்களும், மலைமுடியில் உள்ள இடம் முழுவதும் பரந்து இருக்க வில்லை என்பதையும் அவன் தெரிந்து கொண்டான்.
கோட்டையின் குறுக்காக நடுமத்தியில் ஒரு சுவர் இருந்தது. அதற்கப்பால், மரங்களின் உச்சிப் பகுதிகள் தலைநீட்டிக் கொண்டிருந்தன. “அதோ அங்கே ஒரு தோட்டம் இருக்கிறது. தாங்கள் அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று ரக்கின் உட்டின் கூறினான்.
சில சமயம் சுவர்களின் மேல் காவல் வீரர்கள் இருப்பதையும் உமார் கவனித்தான். ரே நகரத்து நாற்சந்தியில் கொல்லப்பட்ட ஏழாவது கொள்கைக்காரர்களைப் போலவே அவர்களும், வெள்ளை மேல் சட்டையும் சிவப்புக் கால்சராயும் சிவப்பு மிதியடிகளும் அணிந்திருந்தார்கள்.
அங்கு ஏராளமாக வேலைக்காரர்கள் இருந்தார்கள். அவர்களிற் பெரும்பாலோர், எகிப்தியர்களும், கருப்பர்களுமே! சீன உடையில் இருந்த ரக்கின் உட்டின் போன்ற சிலரைத் தவிர அங்கு அதிகார அந்தஸ்துள்ள மனிதர்களையோ, பெண்களையோ ஒருவரைக் கூடக் காணோம். அவர்கள் ஒருவரோடொருவர் பேசும் பொழுது, வாய்க்கு வந்த எதாவது ஒரு மொழியில் பேசினார்களோ, என்று தோன்றியது.
“நாங்கள் வெறும் பிரசாரகர்கள் என்றுதான் தாங்கள் கருதுவீர்கள்!” என்று சிரித்துக் கொண்டே, கூறிய ரக்கின் உட்டின் “நாங்கள் வெகுதூரத்தில் உள்ள வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்களாகவும், அடிக்கடி பலப்பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதாலும் பல மொழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. நான் கெய்ரோவைச் சேர்ந்தவன்.
ஆனால், பாரசீக மொழியிலும் நன்றாகப் பேசுகிறேன்! இதை நீங்கள் கவனித்திருக்கலாம் நூல்நிலையத்திற்குச் செல்வது உங்களுக்கு விருப்பமாயிருக்குமோ? வந்து எங்கள் நூல் நிலையத்தைப் பாருங்களேன்” என்று அழைத்தான்.
நடுவில் இருந்த படிக்கட்டுப் பாதையின் வழியாக அவன் உமாரை யழைத்துக் கொண்டு சென்றான். முதல் தளத்தில் இறங்கியதுமே அவர்கள் ஒரு பெரிய கூடத்தின் உள்ளே நுழைந்து சென்றார்கள். அந்தக் கூடம் பலப்பல சிறுசிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறைகளுக்குள்ளே எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே படிக்கும் மேசைகளுக்கெதிரே பலவித மனிதர்கள், புத்தகங்களிலே ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்கள். கிரேக்க மொழிக்கையெழுத்துப் பிரதி நூல்கள் இருந்த அலமாரிகளை, அதிசயத்துடன் உமார் நின்று கவனித்தான்.
வரைவுப் படங்களைக் கொண்டு அவற்றில் ஒரு புத்தகம், அறிஞர் அரிஸ்டார்ச்சஸ் எழுதிய “நிலவு வழியும் கிரகணங்களும்” என்ற ஆராய்ச்சி நூலொன்று தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றொன்று அறிஞர் பிளேட்டின்ஸ் அவர்களின் பெரும் நூல்.
“நான் இந்த நூல்களை இதற்கு முன் பார்த்ததில்லை” என்று உமார் கூறினான்.
“ஆம்! அலெக்சாண்டிரியா நகரத்து நூல் நிலையத்திலே நெருப்பு வைத்தபோது, நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட புத்தகங்கள் இவை. இவற்றை எகிப்திலிருந்து இங்கு கொண்டு வந்தோம். தப்பிப்பிழைத்த சில புத்தகங்களையும், அவர்கள் அடுப்பெறிக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கதை வழங்குகிறது. இருப்பினும் பலநூல்கள் முஸ்லிம்கள் கையில் அகப்படாமல் காப்பாற்றப்பட்டன. எங்கள் தலைவர் அவற்றைக் கண்டுபிடித்தார்.
எங்களிடம் பூகோளப்படங்களும் இருக்கின்றன. அறிவுச் செல்வங்கள் பல எங்களிடம் இருக்கின்றன. பைசாண்டின் நகரைச்சேர்ந்த இரு பிரசாரகர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பினால் கிரேக்க நூல்களை அவர்கள் தங்களுக்குப் பாரசீகமொழியில் மொழிபெயர்த்துக் கொடுப்பார்கள்” என்று ரக்கின் உட்டின் கூறினான்.
பிளோட்டினஸ் எழுதிய நூலைக் கண்ட ஆச்சரியநிலையில் இருந்த போதும்கூட ரக்கின் உட்டின் பேசும் பொழுது முஸ்லிம்களை, அவர்கள் வேறு ஏதோ மதத்தைச்சேர்ந்த அந்நியர்கள் என்பதுபோல் பிரித்துப் பேசுவதைக் கவனித்தான் உமார்.
அவன் சிரித்துக்கொண்டே, “இது ஒரு பல்கலைக் கழகமா? அல்லது பாதுகாப்புக் கோட்டையா” என்று கேட்டான்.
“இரண்டும்தான்! இன்னும் சொல்லப்போனால் அதற்கு மேலும்கூட என்னலாம்! மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் எந்த விதமான எண்ணங்களும் இடையூறு செய்யாத முறையிலே இங்கு நாங்கள் அறிவைத் தேடுகிறோம். இதோ பாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே அந்தச் சிறிய பிரசாரகன் அங்கிருந்த நூல்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக் காண்பித்தான்.
“இதோ, இதுதான் அடையாள முறைக் கணிதநூல் அடுத்தது, மூன்றாவது டிகிரியின் சரியளவுக் கணித நூல், அடுத்திருப்பது கிரகண ஆராய்ச்சிகளின் தொகுப்புநூல், அதற்கும் அடுத்தது, உமார்கயாம் அவர்களின் வான ஆராய்ச்சி. எல்லாம் கிடைத்தற்கரிய புத்தகங்கள். நான் தங்களுடைய கணித நூல்களைப் படித்திருக்கிறேன். மற்ற நூல்கள் எல்லாம் என்னுடைய புரியுந்தன்மைக்கு அப்பாற்பட்டவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், எங்கள் தலைவர் இந்நூல்கள் அனைத்தையும் கற்றிருக்கிறார்.”
“உங்கள் தலைவர் ஷேக் அல்ஜெபலா, அனைத்தும் படித்திருக்கிறாரா?”
“வேறு யார்? அவரேதான்! அடிப்படை விஞ்ஞானங்களான தருக்கனூல், கணிதம், இசை, இடைவெளிக் கணிதம், வானியல், பொருளியல், மனோவியல் ஆகிய ஏழிலும் எனக்கு ஓரளவு பயிற்சியும் திறமையும் உண்டு. ஆனால், எங்கள் தலைவர் இவற்றோடு, எல்லாவிதமான மதங்களிலும், யூதர்களின் வழிவழி வாய்மொழிக் கொள்கையிலும், கண்கட்டு வித்தையிலும் கூட நல்ல தேர்ச்சி பெற்றவர். அவர் நிறையறிவுடையவராக இருப்பதால், நாங்கள் மகிழ்ச்சியுடன் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோம்.”
பிளேட்டினஸ் நூலின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த உமாரின் காதில் கடைசியில் அவன் சொன்ன விஷயம் படவில்லை. ஒரு முக்கோணப் பெருக்கலின் அடிப்படைபற்றிய பிரச்சினையில் அவன் மனம் ஈடுபட்டிருந்தது.
கழுகுக் கூட்டிலே, காலம் அலகிடப்படாமலே கழிந்துகொண்டிருந்தது. அந்த நிலையத்தில் உள்ள அரும்பெருஞ் செல்வங்களானவைகளில் ஆழ்ந்து ஈடுபட்டிருப்பதும், மற்ற நேரங்களில், வெளியுலகில் பல இடங்களிலும் சுற்றித் திரிந்துவிட்டு நிறைந்த அனுபவத்துடன் திரும்பி வந்துள்ள பிரசாரகர்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாகக் கொண்டான் உமார். அவர்கள், சீனதேசத்து விஞ்ஞானத்தின் பெருமையைப்பற்றியும் பைசான்டின நகரத்து இசைக்கலையின் அருமையைப் பற்றியும் விவாதித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ரக்கின் உட்டின், அதிசயக் கணக்குகளிலே தன் அறிவைச் செலுத்திவந்தான். எப்படி யெப்படியோ எண்களைப்போட்டுக் கூட்டுவதால் வரும் ஒரே விடையைப்பற்றியும் இன்னும் பல மாதிரியாகவும் வியப்பதற்குரிய வகையில் விடைவரும் கணக்குகளைப் பற்றியும் பேசினான், அவன். சில சமயம் செய்தும் காண்பித்தான். இதையெல்லாம் கண்ட உமார், “உன் கணக்குகள் அதிசயமானவைதாம்! ஆனால் அழுத்தமில்லாதவை” என்று கூறிவிட்டான்.
“சாதாரண மக்களுக்கு, அவை அழுத்தமில்லாதவையாகத் தோன்றுவதில்லை; தெய்வீகமாகத் தோன்றும்!” என்று கூறினான் ரக்கின். ஒவ்வொரு நாள் இரவிலும் உமார் தூங்கும்போது, அறைகுறையான விசித்திரக் கனவுகள், முந்திய மாலையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட கனவுகள் தோன்றின. அவனுடைய அறையின் சுவர் விசித்திரமான புதிய புதிய நிறங்களில் தோன்றின. இருப்பினும் தான் நல்ல உடல் நலம் மனநலத்துடன் இருப்பதாகவே தெரிந்து கொண்டான். ஒருவேளை மலைக்காற்றின் தன்மையாலும், தான் குடிக்கும் காரமான மதுவின் தன்மையாலும் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாமென எண்ணினான்.
இருப்பினும் வானில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக கூடுதலாக அந்தக் கனவுகள் வரவில்லை, நிசாப்பூரிலே தோன்றாத சிலಶ್ಗ வடக்குத் திசையின் அடிவானத்தின் ஓரத்திலே தோன்றியிருப்பதை அவன், அந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. ஒருநாள் பின் மாலைப் பொழுதிலே ஒரு கோபுரத்தின் மேலே நின்று வானை நோக்கிக் கொண்டிருந்த உமாரிடம் ரக்கின் உட்டின் வந்தான். ஆர்வமும் உணர்ச்சியும் கலந்த குரலில், “எங்கள் தலைவர், தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் விரைந்து செல்ல வேண்டும்” எனறான்.
உமார் தான் எழுதிக் கொண்டிருந்த வரைவு படத்தை அங்கேயே வைத்துவிட்டு, ரக்கின் உட்டினைப் பின் தொடர்ந்து போனான். போகும் வழியிலேயே “இந்தக் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள எந்த மனிதனும் பாராத விஷயங்களைத் தாங்கள் பார்க்கப் போகிறீர்கள். என்னைத் தொடர்ந்து வாருங்கள். காணும் விஷயங்களைப் பற்றி எதுவும் சொல்ல நினைத்தால் என்னிடம் சொல்லுங்கள் வேறு யாரிடமும் சொல்லாதீர்கள்” என்று அவன் குறிப்பாகச் சொன்னான்.
ஓடுவது போன்ற வேகத்துடன், அவன் உமாரை அழைத்துக் கொண்டு கோபுரத்திலிருந்து இறங்கி வந்து, நடுக்கூடத்தைக் கடந்து, புத்தக நிலையத்திற்குச் சென்றான். அங்கிருந்த வேறொரு கதவைத் திறந்து கொண்டு, பாதையில் செதுக்கிய படிக்கட்டின் வழியாக இறங்கிச் சென்றார்கள். படிக்கட்டின் பக்கங்களிலே திரும்பி எதையும் பார்க்க முடியவில்லை. குளிர்ந்த காற்று ஜில்லென்று மேல் நோக்கி வீசியது. படிகள் கீழே போய்க் கொண்டே இருந்தன. உமார் ஒரு குறுகிய மலைக் குகை பாதை வழியாகப் போவதாக அறிந்தான்.
படிகள் சில இடங்களில் சிதைந்திருந்தன. அந்தமாதிரிச் சந்தர்ப்பங்களில், தடுமாறும்படி நேரிட்டால் பக்கத்துச் சுவரைப் பிடித்துக் கொண்டான். ரக்கின் உட்டுக்கோ, அந்தப் பாதை சர்வசாதாரணமாக இருந்தது. கையில் உள்ள விளக்கைப் பிடித்தபடியே தாவித் தாவிச் சென்றது வேடிக்கையாக இருந்தது.
34. கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட புலிகள்!
கடைசியாக அந்தக் குறுகிய பாதையின் அடித்தளத்திலே நின்ற போது, இந்தப் படிக்கட்டுகள் எந்தக் காலத்தில் செதுக்கப் பெற்றனவோ? இது என்ன சுரங்கமா? என்று உமார் கேட்டான் ஆச்சரியத்தோடு.
“தாங்கள்தான் முதன் முதலில் இந்த இடத்திற்கு வந்து இது மாதிரியான கேள்வியைக் கேட்கிறீர்கள். கதிரவனையும், நெருப்பையும் மனிதர்கள் கடவுளாக வணங்கிக் கொண்டிருந்த காலத்திலே கட்டப்பட்டவைதான் இந்தப்படிக்கட்டுகள். இங்கு அவர்கள் தங்கத்தைத் தேடவில்லை. அதைக் காட்டிலும் பெரு மதிப்புள்ள அறிவுப் பொருளைத் தேடினார்கள், சரி. இப்பொழுது கவனியுங்கள், மீண்டும் பேசாதீர்கள்” என்று எச்சரித்தான் அந்தக்குள்ள அறிஞன்.
ஒரு நடைபாதை வழியாகத் திரும்பி அது ஒர் இயற்கையான குகை என்ற நினைப்பில் கடைசி வரை உமார் ஓடினான். கடைசியிலே, ஒரு தாழ்ந்த மரக்கதவின் அருகிலே ஒரு வேலின் மேல் சாய்ந்தபடி இருந்த ஒரு காவல் வீரனுடைய உருவம் அந்த இருளின் இடையிலும் தெரிந்தது ரக்கின் உட்டின் கதவைத் திறந்தான்.
அந்தக் காவல் வீரன் இவர்களைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அந்தக் குள்ளனைத் தொடர்ந்து, அந்தத் தாழ்ந்த கதவின் கீழே குனிந்து சென்ற உமார் உள்புறம் வந்து நிமிர்ந்து பார்த்த பொழுது, ஒரு பரந்த வெளியிலே, பல நபர்களின் இடையே தானும் இருப்பதை அறிந்தான். உட்கார்ந்திருந்த மனிதர்களுக்கு முன்னால், ரக்கின் உட்டின் உமாரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். குறுக்கில் இவர்கள் போவதைக் கண்டு மற்றவர்கள் முணுமுணுத்தார்கள். ஓர் இடத்திலே அவன் உமாரை உட்காரவைத்தான்.
எங்கும் இருள் நிறைந்திருந்தது. உமாருக்கு முன்னும் பின்னும் பலர் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் தெரிந்த தலைகளுக்கும் அப்பால் ஓர் இடத்திலே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பு அல்ல. உற்று நோக்கியதில். கீழே உள்ள பாறை வெடிப்புகளின் இடையிலிருந்து நெருப்பு நாக்குகள் மட்டும் வெளியிலே தோன்றியது. அந்த நாக்குகள் அசல் நெருப்புப் போல சிவப்பாக இல்லை, ஒரு வித நீல நிறத்துடன் விளங்கின.
அந்த நெருப்பு நாக்குகளின் ஆட்டத்திற்குத் தகுந்தாற்போல் ஓர் இசை யெழுந்தது. அந்த இசை, முதலில் குழலிசை போலத் தோன்றியது. பிறகு அதற்கிடையிடையே தாளத்தின் சத்தமும், குகையின் மேல் பகுதிகளிலே ஆடிக்கொண்டிருந்த மணிகளின் எதிரொலியும் கூட அந்த இசையுடன் கலந்து வருவது தெரிந்தது.
முன் புறத்தில் இருந்தவர்கள், தூரத்திலிருந்து வந்த இசையோசைக்குத் தகுந்தாற்போல் தம் தலைகளை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டிருந்தாலும், எரியும் நாக்குகளுக்கு அப்பால் இருந்த இடைவெளியை நோக்கியபடியே இருந்தன.
சிறிது நேரம் உமார் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கினான். அங்கு இருந்த அவர்கள் அனைவரும் இளம் வயதினராகவும் வெள்ளை மேலாடையும் - சிவப்புக் கால்சராயும் அணிந்த கழுகுக் கோட்டைக் காவலர்களைப் போல உடையணிந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்! அரபியர்களைப் போல் மெலிந்த உடலும் கருந்தலையும் உடைய சில உருவங்களும், இந்துக்கள் அல்லது சீனர்கள் போன்ற பிற பல வகைகளும் தென்பட்டன.
“இவர்களெல்லாம் புதிய கொள்கைக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். இன்று இரவு இவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடுதலைத் திருநாள். பிறப்பு இறப்புத் தலைவரின் திருமுகத்தை இவர்கள் விரைவில் காணப் போகிறார்கள்” என்று ரக்கின் உட்டின் உமாரின் காதுக்குள்ளே ரகசியமாகச் சொன்னான். தீநாக்குகளுக்கப்பால் நடக்கப் போகும் அற்புதம் எதையோ அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒரு நாட்டியம் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டியமென்றால் பெண்கள் நடனமல்ல, நட்ட நடுவிலே இடுப்பில் மட்டும் உடை தரித்த ஒருவன் தன் கைகளை உயரே தூக்கிக் கூப்பியபடி நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றிப் பலர் கத்திகளைச் சுழற்றிக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தார்கள். அவன் தன் குதிகாலை உயர்த்தியபடியே மெதுவாகத் திரும்பியபடி,
“அல்லா இல்லாஹி அல்லல்லாகி இல்லாகி...”
என்று ஓதிக் கொண்டிருந்தான்.
இசையும், மணியோசையும், சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கத்தி நடனக்காரர்களின் இல்லாஹி இல்லாஹி என்ற ஒலியும் எங்கும் நிறைந்திருந்தது, கத்திகள் மின்வெட்டுப் போல் சுழன்றனவே தவிர ஒன்றுடன் ஒன்று மோதவில்லை. ஒவ்வொருவரும் இரு கரங்களிலும் இரண்டிரண்டு கத்தி வைத்துக் கொண்டு சுழற்றி ஆடிய வேகத்தில் அடுத்தவனின் உடல் துண்டித்து விழுந்து விடுமோ என்று பயப்படும்படியாக வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் உடல்களிலிருந்து வியர்வை முத்து முத்தாக அரும்பி வழிந்து கொண்டிருந்தது. இல்லாஹி இல்லாஹி என்ற தொழுகை ஓசை இடைவிடாது கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
எவ்வளவு நேரம் இப்படியே கத்தி நடனம் நடந்துகொண்டிருந்ததோ தெரியாது. ஆனால், முடியப்போகிற மாதிரி இருந்தது. ரக்கின் உட்டின் உமாரின் கையைப் பிடித்துக் கொண்டே மிக்சிரமத்தோடு, மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு மறுபக்கத்தில் ஒரு பையன் அழுதுகொண்டிருந்தான்.
திடீரென்று, ஒரு குரல் கிரீச்சிட்டது. “நேரம் வந்துவிட்டது. அவனைச் சொர்க்கத்துக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. சொர்க்கம் சொர்க்கம்” என்று கூவியது அந்தக் குரல்.
இன்னும் கைகளை மேலே தூக்கிக் கொண்டிருந்த அந்த அரை ஆடை மனிதன் பின்னுக்குத் தொங்கிய தன் தலையைத் திருப்பிச் சுழலும் கத்திகளைப் பார்த்தான்.
நடனக்காரர்களின் பின்புறத்தில் ஏதோ ஒன்றை உமார் கண்டான். ஆம், கொழுந்துவிட்டெரியும் நெருப்புக்கு ஊடே, ஓர் உருவம் தோற்ற மெடுத்தது. புலிநகப் பாதங்களும், சிங்கக்கால்களும், காளை மாட்டின் உடலும் சுருண்டு கிடக்கும் முடியுடன் கூடிய மனிதத் தலையும் கொண்ட பயங்கரமான ஒரு பிராணியின் உருவம் தோன்றியது. அதன் தலையின் இருபுறமும் இறக்கைகள் தோன்றின.
அது கல்லால் ஆகிய உருவமாக இருந்துங்கூட, மங்கலாகத் தோன்றிய வெளிச்சம் அதற்கு உயிர் இருப்பதுபோல் தோன்றச் செய்தது. “இதோ, இப்பொழுது அவன் சொர்க்கத்திற்குப் போகிறான்” என்று ரக்கின் உட்டின் கூவினான்.
கத்திகள் சுழன்ற பக்கமெல்லாம் கழுத்தைத் திருப்பிக் குதிகாலால் சுழன்றுகொண்டிருந்த அந்த அரை ஆடை மனிதன், அசையாமல் நின்றான். கத்தி முனைகள் அவன் உடலைத் தீண்டின. சதையைக் கிழித்தன. சிவந்த குருதி அவன் அரையில் கட்டியிருந்த வெள்ளை ஆடையின் மீது பாய்ந்து ஓடியது. பெருத்த வேதனையுடன் அவன் கதறிக் கொண்டிருக்க இரத்தக் கறை எங்கும் படிந்தது. அவனுடைய தூக்கியிருந்த கைகள் பக்கவாட்டில் தொங்கி விழுந்தன.
அவனுடைய தோளுக்கு மேலே பாய்ந்து சென்ற ஒரு வாள் அவனுடைய தலையைத் துண்டித்தது. சிறிது நேரம் உடல் துடி துடித்தது; கைகள் ஆடின; பிறகு தரையிலே விழுந்து பட்டது.
அந்த உடல் துடித்து விழுந்த உடனே அங்கு ஒலித்துக் கொண்டிருந்த இசையும் இல்லாஹி என்ற ஓசையும் நின்றன. உமாரும் ரக்கின் உட்டினும் தவிர மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்புறம் நோக்கிப்பாய்ந்து சென்றார்கள்.
அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் “பிறப்பிறப்புப் பெருந்தலைவர்” என்று கூவியது.
தாடிக்காரன் காளை உருவத்தின் கால் நகங்களுக்கு இடையேயுள்ள இடத்திலிருந்து மின்னும் வெள்ளாடையணிந்த ஒரு நீண்ட உருவம் அடியெடுத்து வைத்து வெளியில் வந்தது. கைமணிக் கட்டிலிருந்து கழுத்து வரைக்கும், சவத்துக்குச் சுற்றியதுபோல அந்த உடல் சுற்றப்பட்டிருந்தது. ஆனால், அந்த உடலின்மேல் தோன்றிய தலை ஹாஸான் இபின் சாபாவினுடையதாக இருந்தது. காலடியில் கிடந்த செத்த மனிதனின் உடலை அவன் குனிந்து மேலே தூக்கினான்.
“அர்ப்பணம் செய்தவர்களே! இதோ பாருங்கள், இந்த மனிதன் சொர்க்கத்துக்குப் போய்விட்டான்” என்று அவன் கூறினான்.
உமாரைச்சுற்றிலும் இருந்தவர்கள் எழுந்திருந்தார்கள். கல் மிருகத்தின் கால் நகத்திற்கிடையிலே நின்ற ஹாஸானை அவர்கள் பார்த்தார்கள். முண்டமான அந்த உடலை அவன் தன் கைகளிலே பிடித்திருந்தான். ஆனால், அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தினரிடையே வியப்புப் பெருமூச்சு ஒன்று எழும்பியது.
அந்த முண்டத்தின் உடலிலே கத்திக்காயம் எதுவும் காணப்படவில்லை. அதன் ஆடையில் இரத்தக் கறை எதுவும் தென்படவில்லை. அணுவுக்கு அணு, வரிக்கு வரி, மயிரிழைக்கு மயிரிழை அது கத்திகளுக்கிடையே சற்றுமுன் சுழன்று கொண்டு நின்று சவமான அதே மனிதனுடைய உடல்தான்!
அந்த உடலைத் தூக்கிக்கொண்டே, அந்தக் கல் மிருகத்தின் கால்களுக்கிடையிலே சென்று நிழலிலே மறைந்து பின் சென்றுவிட்டான் ஹாஸாள்!
“வைபவம் நிறைவேறி விட்டது” என்று கூட்டத்தினர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். கத்தி நடனக்காரர்களும் கூட்டத்தினருடன் கலந்து கொள்வதற்காக நெருப்பைச் சுற்றிக் கொண்டு வந்தார்கள். வெள்ளாடையணிந்த அந்தக் கூட்டத்தின் ஊடே சிறுவர்கள், மது ஊற்றி நிறைந்த சடடிகளை ஒவ்வொருவருக்காக கொடுத்துக் கொண்டு வந்தார்கள். ஆவல் அதிகமுள்ள சிலர், பிறரை முந்திக்கொண்டு, கைநீட்டிக் கேட்டார்கள்.
“எல்லாக் கடவுள்களின் சாட்சியாகவும் கூறுகிறேன், இப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கண்ட பிறகு மது குடிப்பது நல்லது. எதையும் இறைந்து பேசாதீர்கள். இப்பொழுது அந்தக் கத்தி வீரர்கள் அந்தக் கல் எருதைக் கூட வெட்டி வீழ்த்திவிடக்கூடிய வெறியில் இருக்கிறார்கள், தாங்கள் சிறப்புக்குரியவர் என்பது அவர்களுக்குத் தெரியாது” என்று ஹாஸான் மெதுவாகக் கூறினான்.
அந்தக்குள்ள மனிதன் நடுங்கும் கரங்களுடன், ஒரு மதுச் சட்டியை வாங்கி, இருந்த மது முழுவதும் குடித்து விட்டான், அந்தச் சமயத்தில் அவர்கள் அருகிலே இருந்த ஒரு கத்தி நடனக்காரன். ஒரு துணியை எடுத்து, அந்தக் கத்தியில் படிந்திருந்த இரத்தக் கறையைத் துடைத்தான்.
‘அது உண்மையான இரத்தந்தானே?” என்று உமார் கேட்டதும், அந்த வீரன் உறுமிக் கொண்டே, அந்தக் கொடுவாளை உமார் கண்ணுக்கு முன்னாலே நீட்டி, தொட்டுப் பார்; நுகர்ந்து பார்! அதற்கும் மேலாக நீ சந்தேகப்பட்டால் உன்னுடைய சொந்த இரத்தத்தையே, உண்மையானதா? பொய்யானதா? என்று பரிசோதித்துப் பார்ப்பதற்குத் தருவேன்.” என்று கூவியபடி நின்றான்.
மற்றவர்களும் இதைக் கேட்டுவிட்டுத் தங்கள் கொடுமையான பார்வைகளை உமாரின் பக்கம் திருப்பினார்கள்! அந்த நடனமும், அவர்களுடைய உணர்ச்சியும், அப்பொழுது ஏதாவது கொடுஞ் செயல் புரியக்கூடிய பீதியான ஒரு மனோ நிலையை அவர்களுக்கு உண்டாக்கியிருந்தன.
“யா, அல்லா! அவன் யார்? எப்படி நம்மிடையே வந்தான்? யார் அவனை அழைத்து வந்தது? என்ற கேள்வி எழுந்தது!
ரக்கின் உட்டின் அவசர அவசரமாக அருகில் இருந்த ஒரு சட்டிமதுவை வாங்கி உமாரிடம் கொடுத்து’ “இதைக் குடியுங்கள்! கூண்டிலிருந்து திறந்துவிடப்பட்ட புலிகளைக் காட்டிலும் கொடுமையானவர்கள் இவர்கள்” என்று உமாரிடம் கூறிவிட்டு, கூட்டத்தை நோக்கி, “இவர் நம்முடைய விருந்தாளி. நம் தலைவரின் திருமுகத்தைக் காண இவன் வரவேண்டுமென்பது அவருடைய உத்தரவு” என்றான்.
“அவனுக்காகப் பதில் பேசுவது யார்?” என்று மறுபடியும் ஒருவன் கேட்டான்.
உமாரைச் சுற்றிக் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஒரு இளைஞன் முன்னுக்கு வந்தான். உமாரின் எதிரே வந்து நின்று கொண்டு இடுப்பில் சொருகியிருந்த குத்துக் கத்தி யொன்றைக் கையில் பிடித்துக் கொண்டு, “இப்பொழுது சொல்லுங்கள் யார் இவனுக்காகப் பேசுவது?” என்று கூவினான், அவனுடைய வாய் அகன்று கண்கள் தன்னைச் சுற்றியிருந்தவர்களின் ஊடே பார்த்துக் கொண்டிருந்தது.
“நான்தான்!” என்று கூறிக் கொண்டே, அந்த இளைஞனை அப்பால் தள்ள முயற்சித்தான் ரக்கின் உட்டின். ஆனால் அவனால் முடியவில்லை. “அவன் நம் மலையைச் சேர்ந்தவன் அல்ல. இதோ பாருங்கள்; அவன் தாடியிலே சாயம், கைகளிலே வெள்ளைத் தோல். நம் தலைவரின் தொண்டர்களே, நம்மிடையிலே, இந்த மனிதன் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறான்” என்று அந்த இளைஞன் மீண்டும் கூவினான், பயங்கரமாக.
உறுமும் முகங்கள் உமாரை நோக்கி நெருங்கின. குமுறும் இதயங்கள், கொதிக்கும் கண்கள் அவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. அவர்களுடைய கத்தியின் இரத்த நாற்றமும், வியர்வை நாற்றமும் அவன் மூக்கைத் துளைத்தன.
உமாரின் மூளையிலே திடீரென்று ஒரு கதகதப்பு உணர்ச்சி பெருகியது. அந்தக் குகையின் பக்கங்கள் அகன்று கொண்டு சென்றன, இடைவெளி அதிகமாகியது பூமியின் அடித்தளமான இந்த இடத்திலே தொடக்க காலமுதல் பிரார்த்தனை மேடையில் பணிபுரிந்து வரும் மத குருக்கள் பல பேர் இருப்பதைக் கண்டான். அந்தக் கல் மிருகம் மிகமிகப் பெரியதாக வளர்ந்திருந்தது. அந்தக்கல் இறக்கைகள் ஆடி அசைந்தன.
அந்த மிருகத்தின் கால் நகங்களுக்கிடையே அந்த மேடையிருந்தது. அந்தப் பழங்காலத்துத் தெய்வத்தின் மேடையிலே என்றும் அழியாத நெருப்பின் இருப்பிடத்திலே தான் எல்லா உடல்களும் வந்து சேரவேண்டும். அந்தப் பெரிய மிருகத்தின் பேராற்றலை எதிர்த்து, அவன் தன்னுடைய எளிய உடலைக் காப்பாற்றுவதென்று நினைப்பது முட்டாள் தனமானது.
“வழிவிடுங்கள், வழி!” கனமான காலடி ஓசைகள் கேட்டன. அருகில் வந்து கொண்டிருந்தன. அணியணியாகப் பல கரிய நிறமுள்ள அடிமைகள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, உமாரை நோக்கி வந்தார்கள்! உமாரின் அருகில் நெருங்க முயன்ற கத்தி வீரர்கள் அடிமைகளால் அடித்துத் தள்ளப்பட்டார்கள்.
பலமான கைகளால் அவன் தூக்கப்பட்டு, அந்த நெருப்பிருக்கும் இடத்தை விட்டு அகற்றிக் கொண்டு போகப்பட்டான். முணுமுணுக்கும் குரல்களின் ஓசை குறைந்து, கரிய அடிமைகளின் காலடி ஓசை பலத்தது, அவர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு இருண்ட நடைபாதை வழியாகச் சென்றார்கள். தாங்க முடியாத சோர்வு உமாரைத் தழுவிக்கொண்டு வந்தது.
சந்தடிகள் எல்லாம் நின்ற பிறகு, ஏதோ கனமான புகைநாற்றம் ஏற்பட்டது. உமார் மிகுந்த முயற்சியுடன் தன் கண்களைத் திறந்தான்.
தன் தலையைத் திருப்பிப் பார்த்த போது, கணப்பிலே சிவந்த கரித்தணல் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்தக் கணப்பிலிருந்து எழுந்த புகை தன் முதத்திலே வந்து படுவதையும் அறிந்தான். அந்தப் புகையிலே நல்ல வாசம் கலந்திருந்தது. அவனுடைய நெற்றியின் குறுக்காக ஒரு கை வந்து தன்னைத் தொடுவதைக் கண்டு திரும்பிய உமார், ஹாஸான் தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஹாஸனுடைய வாய் “சொர்க்கத்திற்கு, சொர்க்கத்திற்கு” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தன!
35. சொர்க்கத்திலே ஒரு சுந்தரி
தூரத்திலே நட்சத்திரங்கள் ஒரே கூட்டமாக இருந்தன. அவற்றிற்கிடையிலே ஒளி மயமான இரட்டைத் தலைகள் தோன்றின. முதலில் ஒரு நண்டு தன் கால்களை விரிப்பது போலிருந்த அந்த இரட்டை ஒளிக்கோடுகள் பிறகு நிலவாக உருவெடுத்தன. உமார் தன்னுடைய தலையைத் திருப்பிப் பார்த்தான். வானிலே அவையவையிருக்க வேண்டிய இடத்திலே இருந்தன.
ஆனால், அடிவானத்தின் மேலே தங்க மயமாகத் தோன்றிய அந்த நிலவு மட்டும் இங்கே இருக்க வேண்டாததாகத் தோன்றியது. மேலும் தன் கையை நீட்டினால் எட்டிப் பிடித்து விடக்கூடிய அவ்வளவு அருகிலேயே அந்த நிலவு ஒளிவீசிக் கொண்டிருந்தது. இது நம்ப முடியாததாக இருந்தது.
படுத்திருந்த அவன் எழுந்து உட்கார்ந்தபொழுது, தன் உடல் சிறிது கூடக் கனமில்லாமல் நினைத்த போது முயற்சியில்லாமலே அசைவது போலத் தெரிந்தது. எழுந்து நின்றான்.
ஒரு பழமரம் அவனைக் கவர்ந்தது. அந்த மரம் முழுவதும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பூக்களிலே நிலவொளி பலவிதமான வண்ணங்களைப் பரப்பி யிருந்தது, திரும்பிப்பார்த்தால் அந்த நிலவைக் காணவில்லை. உமார் அதை நன்றாக அறிந்து கொண்டான். தன்னுடைய காலடியிலே பசும் புல்தரை யிருப்பதை உணர்ந்தான். அவன் தன் கைகளை நீட்டினான். அந்தக் கைகளிலே பட்டுச் சட்டையின் மிருதுவான துணி பளபளத்தது. தன்னுடைய உடலில் தோன்றிய இந்த எதிர்பாராத அழகுக் காட்சி அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அடுத்து, ஒடிக் கொண்டிருக்கும் தண்ணிர் அவன் உணர்ச்சியிற் கலந்தது. அவனுடைய கால்கள் அவன் நினைக்கும் திசையில் செல்ல மறுத்தன மிகுந்த கஷ்டத்துடன், தண்ணீர் தொடங்கும் இடத்திற்கு வந்தான். அது ஒர் ஊற்று அது ஒரு பாறையின் இடையிலிருந்து ஓடியது. அவன் அதிலே இறங்கி நீரைக் குடிக்கச்சென்றான். அதன் சுவையையறிந்த பிறகு நீண்ட நேரத்திற்கு ஏராளமாக அள்ளியள்ளிக் குடித்தான். வரண்டுகிடந்த தன் நாவை நனைத்த அந்த நீர் வெறும் தண்ணிர் அல்ல. அருமையான திராட்சை மது என்பதை அறிந்தான்.
நல்ல மது என்று கூறிக்கொண்டே நிமிர்ந்தவன் எதிரில் நிமிர்ந்து நிற்கும் சிங்கம் ஒன்றைக் கண்டான். அந்தச் சிங்கத்தை நோக்கி நேராக நடந்தான். அதன் தலையைத் தொட்டான். அது கடினமாக இருந்தது. சீனத்துப் பீங்கானில் செய்த அது, வேறு எப்படியிருக்கும்? எப்படியும் அது அசையவில்லை. உமார் அதனுடைய முதுகிலே ஏறி உட்கார்ந்து கொண்ட பிறகு கூட அது நகரவில்லை. கொஞ்சங்கூட ஐயத்திற் கிடமில்லாமல் இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவன் நினைத்தான். இந்தத் தோட்டத்தைப் பற்றியும் சந்திரனைப்பற்றியும் மூன்று விஷயங்களைக் கண்டு பிடித்தான்.
முதலாவது, அந்த நிலவு உண்மையான நிலவல்ல, இரண்டாவது, அந்தத் தண்ணீர் தண்ணீர் அல்ல; திராட்சை மது, மூன்றாவது அந்த மிருகங்களின் அரசனாகிய சிங்கம் சீனத்துப் பீங்கானால் செய்யப்பட்டது.
இவ்வளவு தூரம் வந்து தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த தன் புத்திசாலித்தனத்தைப் பற்றித் தானே பெருமைப்பட்டுக் கொண்டான். ஆனால், அவனுடைய மனம் இந்தத் தர்க்கவாத நிலையிலிருந்து திடீரென்று அலுத்துக் கொள்ளத் தொடங்கியது. அவன் தன் விருப்பம் இல்லாமலே, சிங்கத்தின் அருகில் நிற்பதைவிட்டுக் கிளம்பி, ஒரு நீர்க்குளத்தை நோக்கிச் சென்றது. வெள்ளிய தாமரைப் பூக்கள் அதன் மேற்பரப்பை மறைத்துக் கொண்டிருந்தன.
ஒரு வெள்ளை நிறம் கொண்ட அன்னம் தூரத்திலே நீந்திக் கொண்டிருந்தது. அது, தன் தலையை இறக்கைக்குள்ளே வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது.
பிறகு, தோட்டத்திற்குள்ளே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்தான். நிலவுத் தோட்டத்திலே வானம்பாடி புகுந்து பாடுவதுபோல் இருந்தது. ஆனால் அது வானம்பாடியல்ல ஓர் இளம்பெண்தான் பாடிக்கொண்டிருந்தாள். அவள் பாட்டோடு வீணையின் ஒலியும் இழைந்து வந்தது.
அவனை உண்மையில் வரவேற்றது நீரின்மேல் இருந்த வீடுதான். ஒரு வேளை அது மிதக்கிறதோ அல்லது நீர்க்குளம் ஏற்படும்போதே கட்டப்பட்டு விளங்குகிறதோ தெரியவில்லை. எப்படியிருந்தால் என்ன? அதோ அழகாக இருக்கிறது. அதற்குப் போகும் வழிமட்டும் தெரியுமானால்...!
கொடிகள் அவன் காலைப் பின்னிக் கொண்டு தடுமாறச்செய்தன. அவன் கீழே விழுந்தான். அதோ மரங்களுக்கெல்லாம் கீழே ஒரு விந்தையான ஒளியில்லாத நிலவு ஒன்று இருக்கிறது. கொடிகள் அவன் காலைப் பின்னிக்கொண்டன. அவன் சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் அங்கேயே கிடந்தான்.
அவன் தன்னைச் சுற்றியுள்ள கொடிகளை அகற்றிக்கொண்டு நீர்க்கரையோரமாக வந்தான். ஒரு சிறிய குறுக்குப் பாலம் இருக்கக் கண்டான். அந்தப் பாலத்தின் மறுமுனையில், அந்த வீடு அல்லது படகு இருந்தது. நீர் நடுவில் கவர்ச்சிகரமாக விளங்கிய அந்த வீட்டுக்குச் செல்ல அவன் விரும்பினான். விஞ்ஞான ஆராய்ச்சிக்காகப் போகாவிட்டாலும், தன் மன எழுச்சிக்காக அவன் அங்கே போவதை முக்கியமாகக் கொண்டான்.
பாலத்தின் மீது செல்லும்போது பாதிவழியில் அவன் கீழே குனிந்து பார்த்தான். தன் நிழல் தண்ணின் மேல் நடந்து வருவதுபோல் இருந்தது நின்று கவனித்தான். அந்த நிழலும் நின்றது, நல்ல வேடிக்கை என்று அவன் சிரித்தான்.
அவன் ஆந்த விட்டுக்குள்ளே நுழைந்ததும், அது மெதுவாக ஆடியது. எதிரில் இருந்த திரையை இழுத்துவிட்டு உள்ளே பார்த்தான், இரத்தினக் கம்பள விரிப்பின்மீது இன்னொரு வெள்ளி நிலாவைக் கண்டான், அவன் அதைத் தொட்டுப் பார்த்தான். அ கதகதப்பான ஒளிப்பந்து போன்ற வட்டவிளக்காக இருந்தது. ஆனால் அவனால் அதை எடுக்க முடியவில்லை, அதன் பின்னால் ஏதோ அசைந்தது. ஒரு குரல் மல்லிய குரலிலே அவனை அழைத்தது.
“இபுராகீம் மகனே!” அந்தக் குரலைக் கேட்ட உமார் கீழே உட்கார்ந்து, சிந்திக்கத் தொடங்கினான்.
“இல்லை இப்ராகீம் மகன் இல்லை, இப்பொழுது நான் யார் தெரியுமா? நட்சத்திரப் பேராசிரியரும், அரசசபை வான நூற்கலைஞரும் ஆகிய மேன்மை பொருந்திய குவாஜா இமாம் உமார் அவர்கள், தெரிகிறதா? இருட்டில் இருக்கும் சிறு பிராணியே; சலாம் செய்!” என்றான்.
“இதோ நான் சலாம் செய்கிறேன். தங்கள் அடிமையிடம் கருணை காட்டுங்கள்.”
அந்த சொர்க்கத்தின் அழகு தேவதையின் குரல் தாழ்ந்ததாகவும் விசித்திரமாகவும் இருந்தது. கனவிலே தோன்றும் பிராணிகள், அரபியிலோ, பாரசீகத்திலோ பேசுவதில்லை. ஆனால், இந்த அழகி பேசுகிறாள். பேசுவதும் புரிகிறது. அவன் காலிலே விழுந்து வணங்கிய அவளுடைய தங்கமயமான நீண்ட கூந்தலை அவனுடைய விரல்கள் தடவின. அது பட்டுப் போல் மிருதுவாக இருந்தது.
“இந்தப் படகு எல்லையில்லாத இரவின் வழியாக மிதந்து செல்லுமா!”
“ஓர் இரவு மற்றோர் இரவு போலவேதான் இருக்கும்.”
“ஆனால், இந்த நிலவு மாறாது போலிருக்கிறது. அது தோன்றுவதுமில்லை மறைவதுமில்லை; வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை; வேதாளங்கள் அதன் அருகிலே இருந்துபாடும் போதும்.” படிமம்:Page299 உமார் கயாம்
பிறகு, அவன் அவள் முகத்தைத் திருப்பிப் பார்த்தான். அது வெளுத்துப் போய் இருந்தது. அந்தக் கண்கள் அர்த்தமில்லாமல் அவனை நோக்கின. உதடுகள் உணர்ச்சியற்று இருந்தன.
அது, உமாரின் நினைவைக் குழப்பியது.
கடைசியாக நினைவு வந்து விட்டது. “ஸோயி, நீ ஸோயி தானே! அன்று கொரசான் பாதையிலே, என் நண்பனுக்காக நான் அழுதேனே. அப்பொழுது, நான் சாதாரண உமாராக, இபுராகீம் மகனாக இருந்தேன் உன்னை என்னிடமிருந்து அழைத்துச் சென்று விட்டார்கள்.” என்று கூறினான்.
வெள்ளி மயமான அந்த ஒளியிலே அசையாமல் கிடக்கும் ஸோயினுடைய உடல் சில்லிட்டு இருந்தது. அவன் கட்டியணைத்து முத்தமிட்ட போது அவளுடைய உதடுகளும் குளிர்ச்சியாக இருந்தன. அவளுடைய கையிலே தலையை வைத்துப் படுத்திருந்த அவன், அவனைப் பயமுறுத்தியதும் ஆடைகளை அகற்றியதும் எதுவென்று தெரியாமல் அதிசயப்பட்டான். ஆனால் எல்லையில்லாத இந்த இரவிலே, மிதந்து செல்லும் படகிலே, செத்தவள் போல் கிடந்தாலும், ஸோயி அழகாகவே இருந்தாள்.
“நான் உன்னை என்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தேன்” என்று அவன் தன் எண்ணத்தை வெளியிட்டு விட்டுச் சிரித்துக் கொண்டே “நான் பழைய உமார்தான். இபுராகீம் மகன்தான்! வேறு யாருமல்ல!” என்று கூறினான்.
அவள் கண்களில் கவிந்திருந்த பயம் அகன்றது. உதடுகள் குவிந்தன. அவனுடைய முகத்தைத் தன் முகத்தோடு அழுத்திக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான். படகு மிதந்து கொண்டே யிருந்தது. சிங்க உருவத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
36. எதற்கும் துணிந்த புது மதத்தலைவன்
இரண்டாவது நாள் காலையில் உமார் விழித்து எழுந்திருக்கும் போது, அவனைச் சந்திப்பதற்கென்று ஹாஸான் சென்றான். முன்னாலேயே அறிவிக்காமல், அவன் திடுமென்று அந்த அறைக்குள்ளே நுழைந்ததும் அந்தக் கரிய அடிமைப் பையன் பயந்து ஓடிப் போனான். கவனமாகக் கதவை முடிக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த உமாரின் பக்கத்திலே விரிப்பில் உட்கார்ந்து கொண்டான். மெல்லிய குரலிலே அவனுடன் பேச்சுக் கொடுத்தான். உமார் புரண்டு படுத்தான்.
“நீ எங்கே போயிருந்தாய்? சொல்!”
சிறிது நேரம் உமார் அறையின் மேற்பகுதியைப் பார்த்தான். அவனுடைய கண்ணுக்குக் கீழே இருண்ட நிழல் உருவங்கள் இருந்தன. ‘தூங்கிக் கனவு கண்டு கொண்டிருந்தேன்!”
“அது ஒரு கனவா?”
“இல்லை, ஓரளவு கனவுதான்.ஆனால் எல்லாம் கனவென்று சொல்ல முடியாது.”
“அப்படியானால் நீ எங்கே போயிருந்தாய்?” - இது போன்ற மாயமான தூக்கத்திலிருந்து எழும் மனிதர்களிடம் ஹாஸான் இதுவரை நூற்றுக் கணக்கான தடவைகள் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறான். அந்த நூற்றுக் கணக்கானவர்களும் கூறிய அதே பதில்தான் கிடைக்குமென்று நம்பிக்கையுடன் அவன் உமார் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
“அதுவா? அது ஒரு குறிப்பிடத் தகுந்த செயற்கை சொர்க்கம்” என்று உமார் சிந்தித்துப் பதில் கூறினான். தன்னுடைய பார்வையிலோ, குரலிலோ வியப்புச் சற்றும் வெளிப்படாதபடி, “செயற்கையா? என்று ஹாஸான் கேட்டான்.
“ஆம்! நிலவு வானிலே மிகமிகத் தாழ்ந்து இருந்தது.”
“அப்புறம்?”
உமார் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டான். இப்பொழுது அவனுடைய அரைகுறைத் தூக்கமும் போய் முழு விழிப்பு ஏற்பட்டு விட்டது. ‘உன்னுடைய சொர்க்கத்திலே இருந்த அந்த அழகு தேவதை ஏற்கெனவே எனக்குத் தெரிந்த பெண்.’,
“இருக்க முடியாதே! அந்தப் பெண் யார்?”
“ஏரியிலே மிதந்த படகிலே இருந்தவள், பைஸாஸ்டின் நகரத்து ஸோயி என்பவள்.”
சாதாரணமாக எந்த மனிதரிடமும் இல்லாத ஒரு திறமை ஹாஸானிடம் இருந்தது. அவன் தன்னுடைய திட்டத்தை உடனுக்குடன் மாற்றிக் கொள்வான். தன்னுடைய நோக்கம் வெளித் தோற்றத்தில் தெரியாதபடியே நடந்து கொள்வதில் சமர்த்தன். அவனுடைய ஒற்றர்கள் மிகத் திறமையும் முன்யோசனையும் வாய்ந்தவர்கள். அவர்கள், மதுவும் மங்கையரும் இருந்தால், உமார் மனத்தை அடிமைப் படுத்துவது மிக எளிதென்று உறுதியாகக் கூறியிருந்தார்கள்.
இனி, அவற்றை நம்பிப் பயனில்லை என்று ஹாஸான் தெரிந்து கொண்டான். அவன் புன்சிரிப்புடன்
“என்னுடைய சுவர்க்கத்தில் மது எப்படியிருந்தது? உனக்குப் பிடித்திருக்குமே?”
“ஆகா! மிக நன்றாக இருந்தது!”
“வான நூல் சாஸ்திரியான உனக்கு நிலவு மனதுக்குப் பிடித்தமாயில்லை என்பதைக் காண வருந்துகிறேன். துரதிர்ஷ்டவசமாகப் பகல் வெளிச்சம் தன் ஒளியை அதற்குக் கடன் கொடுக்க முடியாது போய்விட்டது. ஆனால் என்னுடைய “அர்ப்பணம் செய்தோர்” யாரும் அதைப்பற்றி ஐயப்பட்டதில்லை.
ஒருமுறை சொர்க்கம் சென்றவர்கள், மறுபடியும் செல்லும் சந்தர்ப்பம் வருமா என்றே எதிர்பார்த்து நிற்பார்கள். அவர்கள் அனைவரும் இளைஞர்கள், அதை விரும்புவதும் இயற்கையேதான். என்னைப் பின்பற்றுவோரும் அதற்காக ஏங்குகிறார்கள். ரே நகரிலே சந்தித்தாயே, கூட்டாளிகள் சிலர், அவர்கள் வான அமைப்பைப்பற் ஐயப்பட்டாலும்கூட, அந்த சொர்க்க போகத்தை அனுபவிப்பதில் மற்றவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.”
“ரக்கின் உட்டினும் அவனைச் சேர்ந்த பிரசாரகர்களும் எப்படி? அவர்கள் உன் சொர்க்கத்திற்குப் போவதுண்டா?”
“இல்லை, என்றுமே செல்வதில்லை. அவர்கள் அனைவரும் அறிவு வேலைக்காரர்கள், நூல் நிலையமும், ஆராய்ச்சிக்கூடமுமே அவர்களுடைய கேந்திரங்கள். அவர்கள் தங்கள் நோக்கத்திற்குத் தகுந்த இன்பங்களைக் காணுகிறார்கள். என்னுடைய வேலைக்காரர்கள் பல பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டிருப்பதை நீ புரிந்து கொண்டிருக்கலாமே!”
‘ஆம்! அர்ப்பணம் செய்தவர்கள் என்ற காவற்படைகளும், பின்பற்றுவோர் என்ற தொண்டர் கூட்டமும், கூட்டாளிகள் என்ற தலைவர்களும், அறிஞர்களும் ஆக நான்கு வகையான பிரிவுகளைக் கூறினாய்!”
“ஐந்தாவது பிரிவிலே வெளிப்புறத்தார். அதாவது அக்ரோனோஸ் போன்ற வியாபாரிகள் அடங்குவார்கள். அவர்கள் வெளியுலகத்திலிருந்து பொருள்கள் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறிவுக் கோட்டையின் வாசலுக்கு அப்பால் நுழைய விடப்படுவதில்லை.”
அக்ரோனோஸ், ஒருமுறை கழுகுக் கூட்டின் வாசல்வரை வந்திருப்பதாகக் கூறியது உமாருக்கு நினைவு வந்தது.
“ஹாஸான், உனக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றனவே!”
“ஏன் இருக்காது? வெளிப்புறத்தாருக்கும் அர்ப்பணம் செய்தோருக்கும் உண்மையில் பிறப்பிறப்புப் பெருந்தலைவன் நானே! நீ அதிலே ஐயங்கொண்டால், விரைவில் அதற்கு ஆதாரங்காணலாம். அவர்கள் என்னை மலைத்தலைவன் என்று அழைப்பதன் காரணம் என்னவென்றால், எங்களுடைய பலம் பொருந்திய கோட்டைகளெல்லாம், இந்தக் கழுகுக் கூட்டைப்போல மலையுச்சிகளிலேயே கட்டப் பெறுகின்றன. இது போன்ற இடங்களிலிருந்து சிலரே பல பகைவர்களை எளிதில் கொல்ல முடியும்” என்று உஷாராகச் சொன்னான் அவன்.
“கூட்டாளிகள் என்ற அவர்கள் உன்னை எப்படி அழைக்கிறார்கள்?”
“அவர்கள், இந்தப் புதிய மதத்தை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அவர்களே என் மதவாதிகள், அவர்களே தலைவர்கள். அவர்கள் என்னை மாதியின் தூதன் என்று எண்ணுகிறார்கள், மாதியைப்பற்றிய செய்தியறிவிப்பவன் என்று. ஜெருசலத்தில் நான் உனக்குக் கூறவில்லையா, அது போல. அவர்கள் என்னைக் கருதுகிறார்கள்.
“ஆனால், இப்பொழுதும் நான் உன்னை அப்படி (மாதியின் தூதர் என்று) நினைக்கவில்லை. சரி, வேறு இரண்டு பிரிவினரும் உன்னை எப்படி நம்புகிறார்கள்?”
“வேறு இரண்டு பிரிவா? ஐந்தும்தான் கூறிவிட்டேனே!”
“ஐந்துடன் எப்படி முடியும்? மொத்தம் ஏழு பிரிவுகள் அல்லவா?”
ஹாஸானுடைய கரிய கண்களிலே வியப்புப் படர்ந்தது. “நீ கணிதப் பேராசிரியன் என்பதை நான் மறந்துவிட்டேன். கொஞ்சம் எனக்குப் புரியும்படி கேள். நீ ஏன் ஏழு பிரிவுகள் என்று சொல்கிறாய்?”
“ஏழாவது கொள்கைக்காரர் என்று உங்களைப்பற்றிக் கூறுகிறார்கள். மேலும் உங்கள் பிரசாரர்கள், பாமர மக்களிடம், வாரத்தில் ஏழு நாட்கள் இருப்பது போலவும் வானத்தில் ஏழு கிரகங்கள் இருப்பது போலவும் உலகத்தில் ஏழு கொள்கைகள் இருக்கின்றன என்று பிரசாரம் செய்கிறார்கள். அது போலவே உங்களிலேயும் ஏழு பிரிவுகள் இருக்குமென்று நான் எதிர்பார்த்தேன்.”
“நன்று நன்று!” என்று சிரித்துக் கொண்டே பாராட்டிப் பேசிய ஹாஸான், “நீ இரும்பைப் பிளக்கும் கூரிய பதமுள்ள உருக்குக் கத்தி போன்றவன். நீ மிகப் புகழ் அடைவாய் என்று அக்ரோனோஸ் கூறுவான். ஆனால் நீ புகழுக்கும் மேலான மதிப்புக்குரியவன் என்றே நான் கூறுவேன். கழுகுக்கூட்டில் வேறு என்ன இரகசியங்களை நீ கண்டு பிடித்தாய்? என்று மெதுவாகப் பதம் பார்க்கத் தொடங்கினான்.
ஹாஸானை நேரடியாக எதிர்த்துக் கொள்வதா அல்லது, அவனை நயந்து பேசுவதா என்று சற்றுநேரமே உமார் யோசித்தான். தன்னுடைய பலக்குறைவைக் காண்பித்துக் கொள்வதற்கு அந்தக் கழுகுக்கூடு ஏற்றதல்ல என்று முடிவுக்கு வந்தான்.
“குதிரைத் தபாலில் செய்தி வந்து சேருவதற்கு முன்பாகவே, அந்தச் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் உன் இரகசியத்தை நான் தெரிந்து கொண்டேன்” என்றான் உமார்.
“நான் தந்திரங்களைக் கையாளுகிறேன் என்று எந்த நாய் சொன்னது? இது என்ன பொய்?” என்று கேட்டான். அவனுடைய கண்கள் நம்பிக்கையில்லாமல் உமாரை நோக்கின.
“எந்த நாயும் இல்லை! ஒரு பருந்து இதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தது. அபபொழுது நான் ரே நகருக்குச் சென்று கொண்டிருந்தேன்” என்று கூறித் தன் இடுப்பில் இருந்த குழாயை எடுத்து அவன் கையில் கொடுத்தான்.
ஹாஸான் அதை வாங்கி விரைவாகப் படித்தான். உமார் ரே நகருக்குச் செல்வதாக அதன் உள் இருந்த கடிதத்தில் எழுதியிருந்தது. அவனுடைய கோபத்தை வியப்பு பறக்கடித்தது.
“அல்லா அல்லா! ஆனால் நீ அதிர்ஷ்டக்காரன்தான். நினைக்க முடியாத அதிர்ஷ்டம் உன்னைச் சேர்ந்திருக்கிறது. தபால் புறாவைப் பிடித்து வருவதற்குப் பருந்தைத் தவிர வேறு எதனாலும் முடியாது” என்று கூறிக்கொண்டே, தனக்குள்ளே வேறோரு திட்டம் போட்டுக் கொண்டு, “உலகத்துச் செய்திகளை அறிந்து கொள்வதற்காக நான் சில சமயங்களில் தபால் புறாக்களைப் பயன்படுத்துவதுண்டு. என்னுடைய பிரசாரகர்களுக்குக்கூட இந்த விஷயம் தெரியாது.
ஏனெனில் அந்தப் புறாக்கள் கோட்டைக்கு வருவதில்லை. பக்கத்துக் கிராமத்துக்கே வரும் சரி. நமது பகைமை உணர்ச்சி என்ற கத்திப் பிடியிலிருந்து நம் கைகளை அகற்றி விடுவோம்; நமக்கிடையேயுள்ள கருத்து வேற்றுமை என்ற திரையைக் கிழித்து விடுவோம்” என்றான், ஹாஸான் விசித்திர தொனியில்.
பிறகு, உமாரின் அருகிலே நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு அவனுடைய தோளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, “ஹாஸான் என்றால் யார்?” என்று நீயே உன்னைக் கேட்டுக் கொண்டிருப்பாய். அப்படியானால் கேள். நான் யார் என்பதைக் கூறுகிறேன். ஒரு காலத்திலே, மாணவனாக இருந்த நேரத்திலே கீழ்த்தரமான ஓர் உயிர்ப்பிராணியாக அனாதையாக இருந்தவன்தான் இந்த ஹாஸான்.
அரசர்களும் அமைச்சர்களும் இருந்து நம் உடல்களையும் ஆத்மாக்களையும் ஆளுகின்ற இடத்திலே அறிவைத் தேடுகின்றவனுக்கு என்ன நன்மையிருக்கிறது? கெய்ரோ நகரத்தில் ஆயுதந்தாங்கிய காவற்படை வீரர்களால் தெரு நாயைப் போல் அடிக்கப் பெற்றேன்! அந்த இளம் பருவத்திலே அவமானப் படுத்தப்பட்டு - ஏழ்மையின் காரணமாக ஏளனஞ்செய்யப்பட்டு வாழ்விலே நொந்து போயிருக்கிறேன்.
கெய்ரோவிலே உள்ள பேராசிரியர் சிலரிடமும், கடல் கடந்து சென்று திபேரியர்களின் முதுகுரவர்களான கபாலியரிடமும் நான் பற்பல நூல்களைக் கற்றேன். பலப்பல வார்த்தைகளைச் சொல்லி நான் உன்னைக் குழப்ப விரும்பவில்லை.
கற்பனையான சொப்பன உலகில் நட்சத்திரங்கள் மங்கிய மாயாஜாலத்தை நீயே கண்டிருக்கிறாய். அறிவு என்கிற பழத்தின் கசப்பான பருப்பை நான் சுவை பார்த்திருக்கிறேன். என் முடிவு இதுதான் கடவுள் என்பதாக ஒன்று இல்லை.
உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் வயது முதிர்ந்துவரும் பெண்களைப் போன்றவையே. அவற்றின் அழகும் பயனும் மறைந்துவிட்டன. அவை, மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக நம்பிக்கை என்னும் காய்ந்துபோன எலும்புக் கூட்டிலேயே ஒட்டிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அவை அழிந்து, ஒன்றும் மிஞ்சாமல் போய்விடும்! கோயில்களிலும் மட்ங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற மகான்களின் எலும்புகள், மயிர்கள், பற்கள்போல், மதங்களின் சிற்சில பகுதிகளே மிஞ்சும்.
பூமியில் இருக்கும் மதவாதிகள் அனைவருக்கும் நான் ஒரு செய்தி கூற முடியுமானால், நான் என்ன சொல்லுவேன் தெரியுமா! கோயில்களையும், தொழுகை மடங்களையும், சிங்காதனங்களையும் தூக்கி எறியுங்கள். சிங்காதனங்களின் மேல் இருப்பவர்களும், மதங்களின் வணங்கு நிலையங்களைக் காத்துக் கொண்டு கிடப்பவர்களும் சாதாரண மனிதர்களே!
பொய்யுரைகளின் பின்னாலே மறைந்து கொண்டு சக்திவாய்ந்தவர்களாகக் காட்சியளிக்கிறார்கள் தொடக்க காலத்தில் சூரிய தேவனுக்குப் படையலிட்ட காட்டுமிராண்டிகளைக் காட்டிலும் இறையைத் தொழும் மக்களும் உயர்ந்தவர்கள் அல்ல என்றே நான் கூறுவேன். இது உண்மையல்லவா?”
“சுல்தான் மாலிக்ஷா சாதாரண மனிதர்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவரைச் சிங்காதனத்திலிருந்து அப்புறப் படுத்திவிட்டால், அவருடைய இடத்தில் நீ எதை உட்காரவைப்பாய்? அந்தக் கடமையைச் செய்ய ஏதாவது ஒன்று வேண்டுமே!” என்று அறிஞன் உமார் கேட்டான்.
“முதல் வேலை, சிங்காதனத்தையும் அதனைச் சேர்ந்த ஆட்சிக்குழுக்களையும் ஒழிப்பதாகும். உனக்கு நான்கு மாலிக்ஷா காட்டிலும் அதிகமான அறிவு இருக்கிறது. நாம் ஏன் அரச வணக்கத்திற்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்? அறியாமை சூழ்ந்திருந்த அந்தக் காலத்திலிருந்து மனிதர்கள் காரண ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
முடிவில் மனிதர்கள் பூரணமான காரண அறிவைப் பெறுவார்கள், அவை இருக்கட்டும், இப்பொழுது நான் என்ன செய்திருக்கிறேன். பலரை மதமாற்றம் செய்திருக்கிறேன். பலரைக் கூட்டாளிகளாக்கியிருக்கிறேன். அவர்கள் பழைய மதத்தில் அதிருப்தி அடைந்தவர்கள். இரகசியமாக நாங்கள் புதிய பிரசாரத்தை போதித்து வருகிறோம்.”
ஹாசான், இந்த இடத்தில், சிறிது நேரம் பேசாமலிருந்து, மறுபடியும் தொடர்ந்து பேசினான். “நீ நூல் நிலையத்தைப் பார்த்தாய், பிரசாரகர்களுடன் பேசினாய். நாங்கள் எல்லா விஷயங்களைப் பற்றியும் எங்கள் அறிவை முழுமையடைய முயல்கிறோம் என்பதை நீ அறிந்திருக்கக்கூடும். ஆனால், பாரசீகர்கள், மறையில் உள்ளது தவிர வேறு எதையும் கண் கொடுத்துப் பார்க்கவோ.
காது கொடுத்துக் கேட்கவோ மாட்டார்கள் என்பதை நீ அறிவாய். அதை மறுக்க முடியாது, ஒன்றுமே அறியாத பாமரர் பலர் எங்களிடையே தேவைப் படுகிறது. கூட்டத்தைப் பெருக்குவதற்கும் உயிர் கொடுத்துப் போராடுவதற்கும் எந்தவிதமான அறிவும் இல்லாத அந்தக் கூட்டத்தின் உதவி தேவைப்படுகிற காரணத்தால், அறிவில்லாத மக்களிடையே, ஏழாவது மாதி ஒருவர் வருவார் என்று பிரசாரம் செய்கிறோம்.
இது வழக்கத்திலே இருந்து வருகிற ஒரு இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பிரசாரமே. அறிவுள்ளவர்களுக்கு, நாங்கள் விஞ்ஞானப் புதுப்பேரொளியை அடையுமாறு போதிக்கிறோம்” உறுதியான தவிர்க்க முடியாத ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கிக் கூறுபவன் போல் தோளைக் குலுக்கிக் கொண்டான் ஹாஸான்.
“உயிர்ப் பிறப்பின் அடிப்படையே இந்த முறையில் தானே அமைக்கப்பட்டிருக்கிறது? உன்னிடம் தன் தனியறையில் பேசுகிற விஷயங்களை நிசாம் முல்லாக்களிடம் பேசுகிறாரா?” என்று கேட்டான்.
“அந்த மாதிரி நடந்து விடாமல் அவர் கவனமாக இருக்கிறார்” என்றான் உமார்.
“அது போலத்தான் நாங்கள் பாமரருக்கொரு பழங் கொள்கையும், பகுத்தறிவாளர்க்கொரு விஞ்ஞான முறையும் வைத்திருக்கிறோம். பிளாட்டோவின் அறிவு விளக்க நூலிலே கூறப்படுகிற விஷயம் உனக்குத் தெரிந்திருக்கும். அதுதான் உலகங்களின் அமைப்பு.
வெளிச்சம் இருந்தால் இருட்டும் இருக்கும். மனிதன் இருந்தால் அவனுக்குத் துணையாகப் பெண்ணும் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்று சேரும்போதுதான் குறிக்கோள் நிறைவேற முடியும். அதுபோலவே, எங்களுடைய அமைப்பு இந்த மாற்றத்தின் மூலம் ஒன்று படுகிறது. எல்லாவிதமான இனத்தாரிடமிருந்தும் மதமாறிய உண்மையானவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.” “நீ ஏன் மாய வித்தையைப் பயன்படுத்துகிறாய்?”
“ஏன் கூடாது? அதுதான் மிக உயர்ந்த ஞானம்!”
“சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அது உயர்ந்த ஞானமாக இருக்கலாம். உன்னுடைய தபால் புறாக்களும், பழக்கப்பட்ட கழுகும் பாமர மனிதனுக்கு வீதி வித்தையாகத் தோன்றலாம்.”
“புத்திசாலிகளுக்கும், அதைக் காட்டிலும் உயர்ந்த கண்கட்டுவித்தை என்னிடம் இருக்கிறது. எகிப்து தேசத்திலே நான் பயின்ற சில மாய வித்தைகள் இருக்கின்றன” என் சடக்கென்று தன் பேச்சை நிறுத்திய ஹாஸான், உமாரை நோக்கி, “பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலே ரோமானியப் பேரரசனும், சுல்தான் ஆல்ப் அர்சலானும் இறந்து போவார்கள் என்று மாலிக்ஷாவுக்குச் சோதிடம் கூறினாயே, அது எந்தவிதமான கலை?” என்று கேட்டான்.
பதில் கூறப்போகும் சமயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஓர் உள் உணர்வு உண்டாகவே, உமார், கவனத்துடன் அமைதியாக, “அது ஓர் அற்புத சக்தி, அது என்னுடைய இரகசியம்” என்று கூறினான்.
“நான் உன்னிடம் என்னுடைய இரகசியங்கள் அனைத்தையும் உடைத்துப் பேசி விட்டேன். ஆனால்... நீ...?” என்று ஹாசான் கேட்டான்.
“எல்லாம் சொன்னாய். ஆனால், ஒன்று சொல்லவில்லை.”
அவனைக் குறிப்பாகப் பார்த்த ஹாஸான் “அது என்ன?” என்று கேட்டான்.
“உன்னுடைய மதத்திலே உள்ள அந்த உயர்ந்த இரு பிரிவினரும் எதை நம்புகிறார்கள்? உன்னுடைய பிரசாரங்களுக்கும் உயர்ந்த தகுதியுடைய அவர்கள். எகிப்திலே உள்ளவர்கள் எதை நம்புகிறார்கள் என்று நீ கூறவில்லையே.”
“பிஸ்மில்லா!... நான் அவர்கள் எகிப்திலே இருக்கிறார்கள் என்று சொல்லவில்லையே!”
“நீ சொல்லவில்லை. ஆனால் நான் அங்கே அவர்கள் இருக்கலாமென்று எண்ணினேன்.” “நீ நினைத்தாயா? அது ஒரு வீண் நினைப்பாக இருக்குமானால், அந்த நினைப்புக்கு நீ என்ன காரணம் கூறப் போகிறாய்?” என்று கேட்ட ஹாஸான், எழுந்து அந்த அறையில் அங்குமிங்கும் நடந்து கொண்டே, “குவாஜா, உமார்! பாபிலோனில் உன்னைப் பார்த்த பொழுது நான் புகழ்ந்தேன். ஜெருசலத்திலே சந்தித்தபோது உன்னைக் கூட்டாளியாகப் பெற வேண்டுமென்று விரும்பினேன்.
ஆண்டுகள் கடந்து கொண்டு போகும்போது, காலப்போக்கில் நான் எத்தனையோ விஷயங்களைக் கற்றேன். ஆனால், உமார், நீ அப்படியே இருக்கிறாய். உன் அறிவு விசாலமடையவில்லை. உன்னுடைய முட்டாள்தனமான ஜோதிடங்கள் இனிப் பலிக்கப்போவதில்லை.”
“உலக அமைப்பாளருடன் தொடர்ந்து இருப்பதற்கு, இனிமேல் உனக்குச் சரிப்பட்டு வராது. மேலும் நிசாமின் ஆதரவை நீ இழந்து விட்டாய் என்று எண்ணுகிறேன், புதிய மத அமைப்பாளராகிய நாங்கள் உனக்காகச் செய்திருப்பதை நீ நினைத்துப்பார். நான் அக்ரோனோசிடம் உன்னுடைய எதிர்காலத்திற்குப் பொருள் பெருக்கி உதவும்படி கூறினேன். அவன் அவ்வாறே உனக்குப் பலவித உதவிகள் உள்ளத்தின் உண்மையாகச் செய்திருக்கிறான்.
பாலைவனப் பிரதேசத்திலே எபிரேட்ஸ் ஆற்றிலே விழுந்து இறக்கப் போன உன்னை, துன்பத்தால் செத்துப்போகக்கூடிய உன்னை அக்ரோனோஸ் காப்பாற்றி இருக்கிறான். அவன் உன்னுடைய அரண்மனைகளில், நாகரிகப் பொருள்கள் பலவற்றைக் கொண்டு வந்து நிரப்பி உன்னை உல்லாச வாழ்க்கை வாழச் செய்திருக்கிறான். நீ எங்களிடம் திரும்ப வேண்டுமென்று அவனும் நானும் காத்திருந்தோம்.”
“நான் உன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்திருக்கிறேன் என்று நீ சொல்லக்கூடும். அப்படியே நான் எதிர்பார்த்து உனக்கு நன்மை செய்வதாக ஒப்புக் கொண்டாலும்கூட, நண்பன் ஒருவன் உன் நட்பை எதிர்பார்க்கும் முறையிலேதான் இவற்றைச் செய்தேன். உன்னுடைய புதிய பஞ்சாங்கம், உன்னுடைய புத்தகங்கள், நிசாப்பூரிலேயுள்ள உன்னுடைய ஆராய்ச்சிக்கூடம் இவை ஒவ்வொன்றையும் நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.
இதுபோல, இஸ்லாத்தின் தலைவர்கள் உனக்குத் தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா? உன்னை நேசிக்கும் மாலிக்ஷா கூட நான் உன்னை உணர்ந்திருக்கும் அளவு தெரிந்து வைத்திருக்கிறாரா? ஒரு வினாடியில் ஏற்படும் கோபத்தாலோ மன மாற்றத்தாலோ, சுல்தான் உன்னை ராஜ சபையிலிருந்து வெளியேற்றி விட முடியும்.
இதை நினைவிலே வைத்துக் கொள். என்னைப் பொறுத்தவரை, நான் உன்னை வெளியேற்றவே முடியாத ஆளாகிவிட்டாய்! இதையும் எண்ணிப் பார். நீ என்னிடமே வந்துவிடு. இந்தக் கழுகுக் கூட்டின் பலத்தை எண்ணிப்பார். இதுவரையிலே இங்குள்ள விஷயங்களை என்னைப் பின்தொடருவோரின் மனப்போக்கின்படி அவர்களுடைய பார்வையில் கவனித்தாய். இப்பொழுது என் கண்களின் மூலமாகவே கவனித்துப் பார்” என்று ஹாஸான் பேச்சு முடிந்தது.
உமாருக்கு உடனே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவனுக்குத் தலைவலியாக இருந்தது. சுவர்த் துவாரத்திலிருந்து வந்த சூரிய வெளிச்சம்வேறு அவன் கண்ணுக்கு முன்னால் ஆடிக் கொண்டிருந்தது.
ஹாஸனுடன் போட்டியாகப் பேசுவது என்பது சாதாரணமானதல்ல; பயங்கரமான போட்டியாகி விடும். அவன் யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் கொடுப்பவனாகவும் தோன்றவில்லை. உமார் அமைதியாகிவிடவே, ஹாஸான் அவனை அழைத்துக்கொண்டு மலைப் பிரதேசத்தின் அடிப்பாகத்திற்குச் சென்றான்.
சுண்ணாம்புக் கல்லிலே இழைத்த நடைபாதை வழியாக அவன் ஒரு குகைப்புறமாக அழைத்துச் சென்றான். அந்தக் குகைக்குள்ளே மனிதர்கள் பட்டறைகளிலே வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு புறத்திலே, பெரிய பெரிய நெருப்பு அடுப்புகளும், அவற்றின் மேலே உருகிக் குழம்பாக இருந்த கண்ணாடி, கொதித்துக் குமிழி விட்டுக்கொண்டிருந்ததையும், அங்கு பலர் வேலை செய்து கொண்டிருந்ததையும் உமார் கண்டான்.
“இந்தக் கண்ணாடித் தொழிற்சாலையின் இரகசியங்களை எகிப்து தேசத்திலிருந்து தெரிந்துகொண்டு வந்தார்கள். இதுவரையிலே, கண்ணாடிச் சாமான்கள் சுல்தானின் அரண்மனையிலே மட்டும்தான் காணப்பட்டன. அவருடைய அரண்மனைச் சுவர்களிலே மட்டும்தான் பதிக்கப் பெற்றிருந்தன. நவீன வசதிகளை சுல்தான் மட்டுந்தான் அனுபவிக்க வேண்டுமா?
இப்போது, என்னுடைய வியாபாரிகள், ஊர் ஊராக அங்காடிச் சந்தைதோறும் இந்தக் கண்ணாடிப் பொருள்களை விற்று வருகிறார்கள். எல்லாவிதமான கண்ணாடிப் பொருள்களும் எல்லாவிதமான மக்களுக்கும் எளிய விலையில் ஏராளமாகக் கிடைக்க முடிகிறது” என்று கூறித் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து, சரக்கறைக்குக் கூட்டிச் சென்றான்.
அங்கே மதுச்சாடிகளும், கோப்பைகளும், தேன் வைக்கும் போத்தல்களும், தட்டுகளும், குவளைகளும் மற்றும் பலப்பல விதமான கண்ணாடிச் சாமான்களையும் உமார் கண்டான். ஓர் அடிமையை விளக்குக் கொண்டு வரும்படி கூறி, அது வந்ததும், வேறோர் அகன்ற அறைக்குள்ளே கூட்டிச் சென்ற ஹாசான், விளக்கின் ஒளியிலே அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி முட்டைகளைக் காண்பித்தான்.
“இந்தக் குகைகளிலே என்னைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் இரண்டு வருடங்களுக்குப் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வேளை பகைவர்களால் முற்றுகை நேரிடுமாயின் அப்பொழுது நாங்கள் உணவுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறினான்.
அந்த நிலவறைகளின் கீழேயுள்ள தாழ்ந்த பாகத்திற்கு வந்தார்கள். அங்கே சில மரப்பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலே ஒரு பாறையின் இடையிலே, கரிய துவாரம் ஒன்று இருந்தது. அந்தத் துவாரத்திலிருந்து, வெகு வேகமாகப் பீறிக் கொண்டு வந்த தண்ணி, சிறிது தூரத்திலே இருந்த குட்டையிலே விழுந்தது.
“வெகு காலத்துக்கு முன்னாலே, இந்த ஓடை ஓர் ஆறாக இருந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் உயர்ந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். அது, இந்தச் சுண்ணாம்புக் கற்களின் வழியாகத் தன் வழியை அறுத்துக் கொண்டு வந்து, இந்த மலையின் ஊடே பெரிய பெரிய பாதைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நீ இதுவரை பார்த்த நிலவறைகளும், குகைகளும் அந்த ஆறு அறுத்துக் கொண்டுபோன பாதையேயாகும்.
பிற்காலத்திலே பூமியில் ஏற்பட்ட ஏதோ மாறுபட்டால், ஆற்றின் உற்பத்தியிடமான இந்த ஊற்றுத் தாழ்ந்த இடத்திற்கு மாறியிருக்கிறது. ஆற்றின் படுகை காய்ந்து, குகையாக மாறிப் போயிருக்கிறது. நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே, சில மனிதர்கள் மலையின் மேற்புறத்திலேயுள்ள குகைகளையடைந்து, படிக்கட்டுகளும் நடைபாதைகளும் அமைந்திருக்கிறார்கள். மலையின் அடித்தளத்திலே, நடு மையத்திலே அவர்கள் ஒரு கோயில் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அவர்கள் தொழுகை செய்த இடத்திற்குப் போவோம், வா” என்று உமாரை அழைத்துச் சென்றான்.
மலையின்மேல் உள்ள இந்தக் கழுகுக்கூடு என்ற கோட்டை, மற்ற எந்தக் கோட்டைகளைக் காட்டிலும் பெரிதாக இருக்க முடியாதென்றே எண்ணியிருந்தான். ஆனால், பாறைகளின் ஆழத்திலே, பலப்பல வழிகளையுடைய ஒரு பெருங்குகையாக இருப்பதைக் கண்டான். அந்த மலையின் உட்புறத்திலே இருக்கும் எந்த இரகசியத்தையும் வெளியில் செல்வோர் எத்தனை தலைமுறையானாலும் அறிய முடியாதபடி அமைந்திருந்தது, அந்தக் குகைக்கோட்டை. வெளியுலகம் அறியாமல் ஆயிரக்கணக்கான மனிதர்கள் அங்கே வாழ்ந்து வரமுடியும்.
அவர்கள் சென்ற வழியில் ஒரு கரியகாவற்காரன் நின்று கொண்டிருந்தான். இவர்கள் கடந்து சென்ற பொழுது, ஹாஸானைப் பார்த்துவிட்டு அவன் தரையில் விழுந்து வணங்கினான். அந்தக் குறுகிய வழியின் மூலையில் உள்ள ஒரு கதவை ஹாஸான் இழுத்துத் திறந்ததும், உமார், அந்தக்கல் மிருகம் இருக்கும் குகைக்கூடத்திலே மீண்டும் தான் வந்து சேர்ந்திருப்பதையறிந்தான்.
ஆனால், அந்தக்கூடம் இப்பொழுது சங்கீதம் நடனம் போன்ற எவ்வித ஒலியுமின்றி அமைதியாக இருந்தது. அங்கு அர்ப்பணம் செய்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், நடனக்காரர்கள் ஆடிக் கொண்டிருந்த இடத்திலே மட்டும், கற்பாறைகளின் வெடிப்பிலிருந்து வெளிவந்த நெருப்பு நாக்குகள் இன்னும் எரிந்து கொண்டே யிருந்தன. நெருப்பு நாக்குகள் ஓங்கி எரிகின்றபொழுது, கல்மிருகம் விளக்கமாகத் தெரிந்தது.
அவை சற்று மறைந்து காணப்படும் போது அந்தக்கூடம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அங்கு வந்திருந்தபோது கவனிக்காத இரண்டு புது விஷயங்களை உமார் அப்பொழுது கவனித்தான். அந்தக் கூடத்தின் காற்று கதகதப்பாக இருந்தது ஒன்று ஒருவிதமான எண்ணெய் நாற்றம் மற்றொன்று.
உள்ளே நுழைந்த ஹாஸான் என்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த நெருப்பைப் பார்த்தபடியே சற்றுநேரம் பேசாமல் இருந்தான்.
“இதன் இரகசியம் யாருக்குத் தெரியுமோ?” என்று ஆரம்பித்த ஹாஸான், “இதோ, இந்தப் பாறை வெடிப்புக்களுக்குக் கீழே எங்கோ ஒருவிதமான எண்ணெய் ஊற்று இருக்கவேண்டும். ஆனால், முதலில் நெருப்பு எப்படி இங்கு வந்தது என்பதும், அது எவ்வாறு இடைவிடாமல் எரிகிறது என்பதும்தான் புரியாத விஷயமாக இருக்கிறது. இதுமிகப் பழமையான காலத்திலிருந்து தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது என்பது மட்டும் உறுதி.
எகிப்தியர்கள் ராதேவனை வழிபடும் வழக்கம் தொடங்குவதற்கும் முன்னால், சாரதுஸ்திரியர்களுக்கும் முன்னால், சூரியதேவனை வழிபாடு நடத்தும் வழக்கம் தொடங்கப் பெறுவதற்கும் முன்னால் இந்த நெருப்பு வணக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், இது பழங்காலத்து மக்களுக்குப் பெரிய மாயமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையில் மாயமான நிகழ்ச்சிதான்.”
“இந்த இறக்கை படைத்த எருதை அந்தப் பழங்காலத்து மக்கள் செய்திருக்க மாட்டார்கள், இல்லையா?” என்று உமார் கேட்டான்.
“இல்லை, இது பழைய பாரசீகத்தாரால் ஏற்படுத்தப் பெற்றது. பாரசீகத்தாரும் முற்காலத்தில் நெருப்பு வணக்கம் செய்திருக்கிறார்கள். பாரசீகர்கள், இந்த இடத்தைப் புனிதமான இடமென்று நினைத்து வந்ததற்குக் காரணம் என்னவென்றால், தங்கள் மூதாதையர்களின் கோயிலாக இது இருந்திருப்பதும், இடைவிடாது தொழுகை நடந்து வந்திருப்பதுமே ஆகும். புனிதமான நெருப்புக் கடவுளுக்குத் தங்கள் மரியாதையைக் காட்டுவதற்காக, அவர்கள் இந்த மிருகத்தைச் செய்து இங்கே நிறுத்தி இருக்கிறார்கள்.
இது போன்ற பழைய உருவங்களை, இஸ்பாஹாளிலேயுள்ள பாழடைந்த அரண்மனைகளிலே நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது என்னுடைய “அர்ப்பணம் செய்தவர்கள்” கூட்டத்தின் பக்தியை வளர்ப்பதற்காக, இந்த இடத்திலே இஸ்லாமியத் தொழுகை முறையைச் சில புதிய மாறுதல்களுடன் வகுத்து நடத்துகிறேன்.”
இந்த இடத்திலே ஹாஸான் குரலிலே ஒரு மாற்றம் ஏற்பட்டது!
“ஏன் கூடாது? ஜெருசலத்தில் யூத அரசன் டேவிட் ஒரு பாறையருகிலே படுத்துக் கனவு கண்டான் என்பதற்காக அந்த இடத்தில் இருந்து ரோமானிய மத குருக்கள் பக்திசெய்து வந்தார்கள். அதே ஜெருசலத்துப் பாறை உள்ள இடத்தை முகமது புனித ஸ்தலமாக ஆக்கவில்லையா? யூத அரசன் கனவு காண்பதற்கு முன்னாலே அந்தப்பாறை எதுவாக இருந்திருக்கும்? ஒரு சாதாரணக் கல்லாக அல்லது பழங்காலத்து அநாகரிக மக்கள் வழிபட்டுவந்த உருவமாகவோதான் இருந்திருக்க வேண்டும்.”
இந்த இரண்டு நிமிட நேரமும் புது மனிதனாக மாறிக் கேள்விகளை அள்ளிப் பொழிந்த ஹாஸான் ஓர் இருண்ட பாதை வழியாக உமாரை அழைத்துக் கொண்டு சென்றான். கதகதப்பான காற்று அவர்களைத் தள்ளிக் கொண்டு போனது. இந்த வெளிக்காற்று குகையின் பகுதிகளில் எல்லாம் புகுந்து வீசியதால்தான், மனிதர்கள் மூச்சுவிட முடிகிற தென்பதையும், நெருப்பு எரிய முடிகிறதென்பதையும் உமார் உணர்ந்து கொண்டான்.
இருண்ட வழியாகப் பல திருப்பங்களிலும் திரும்பித் திரும்பிக் கடைசியாக அவர்கள், வெளிப்புறத்திற்கு வந்தார்கள், நீலவானும் நிறைந்த வெளிச்சமும் மலையின் வெளிப்புறத்திலே வந்ததும், சிதறிக்கிடந்த பாறைத் துண்டுகளின்மேல் ஏறிச்சென்று ஒரு செங்குத்தான பாறையுச்சிக்கு வந்து நின்றார்கள். அங்கே நின்று கொண்டிருந்த ஹாஸான், தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டு, “ஓ! என் அர்ப்பணம் செய்தவர்களே! சொர்க்கபோகம் உங்களை வந்து சேர்வதாகுக! அல்லாவின் ஆற்றல் உங்கள் கரங்களை ஆற்றலுடையதாக்குக?” என்று கூவினான்.
அவர்கள் நின்று கொண்டிருந்த பாறையுச்சி, இயற்கையாக அமைந்த ஒரு மேடைபோல் இருந்தது. அதன் எதிரில் இருந்த சமதளத்திலே, அன்று கத்தி நடனத்தின்போது கூடியிருந்த கூட்டத்தார் அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குரலிலே “எங்கள் தலைவரே! தங்களுக்கு சாந்தியுண்டாவதாக!” என்று கூவினார்கள்.
உயர்த்திய குரலிலே, அந்தப்பாறை மேட்டின் உச்சியிலே, கீழே நின்றுகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு நேரே நின்ற ஹாஸ்ான் பார்ப்பதற்கு ஒரு தேவதூதன் போல காட்சியளித்தான். கீழே கூடியிருக்கும் அறிவற்ற மக்களுக்கு, அவன் தங்களை எந்த சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியவன் என்ற நம்பிக்கையை அந்தத் தோற்றம் அளித்தது. அங்கே தொடர்ந்து நின்று கொண்டிருந்து தன் மகத்துவத்தை வீண் ஆக்காமல், சட்டென்று திரும்பிப் பாறையைவிட்டுக் கீழே உமாரையும் இழுத்துக் கொண்டு இறங்கினான்.
பிறகு அவர்கள் கோட்டைச் சுவற்றின்மீது காவலுக்காக உள்ள அகன்ற இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது கதிரவன் மறைந்து கொண்டிருந்தது. அர்ப்பணம் செய்தவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அங்கே காவல் காத்துக்கொண்டு நின்றவர்கள், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு மாலைத் தொழுகை நடத்துவதற்காக ஆயத்தமானார்கள்.
“நீ இதற்கு முன்னால், அதிசய சம்பவங்கள் நடந்ததைக்கண்டிருக்க மாட்டாயே! இதோ பார்!” என்று உமாரிடம் கூறிய ஹாஸான் மண்டியிட்டிருந்த அந்த இளைஞர்களின் பின்புறமாகச் சென்று, வணங்கிக் குனிந்த அவர்களின் தோள்களிலே தன் கைகளை வைத்தான். அவர்கள் நிமிர்ந்து பார்த்து, அவர்களுடைய தலைவனின் முகத்தை ரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களுடைய கண்கள் ஹாஸானுடைய கண்களில் பிணிப்புண்டு கிடந்தன.
“ஊய்! உங்களுடைய காலம் நெருங்கிவிட்டது. சொர்க்கம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான் உங்களை விடுவிக்கிறேன்! பாய்ந்து செல்லுங்கள்!” என்றான். கடைசிச் சொற்கள் சவுக்கு வீச்சுப்போல வெளிப்பட்டதும், மூன்று மெல்லிய உருவங்கள் நடுங்கித் துடித்துக் கொண்டே கோட்டைச் சுவர் வரந்தையை விட்டு குதித்தன.
ஒரு முகத்திலே, சொர்க்கத்தைக் காணவேண்டும் என்கிற ஆவல் உணர்ச்சியும், மற்றொரு முகத்திலே பயத்தின் குறிகளும் தோன்றியிருப்பதைக் கண்டான். எந்த உணர்ச்சிகள் இருப்பினும் அந்த இரண்டு உருவங்களும் குதித்த குதியிலே, சுவர் வரந்தையைத் தாண்டி அப்பால் மறைந்து போயின. மூன்றாவது உருவம் வரந்தை ஓரத்திலே நின்று தடுமாறிக் கொண்டிருந்தது. “உன்னையும்தான் சொர்க்கம் அழைக்கிறது” என்று அமைதியாக ஆனால் அவசரமாகக் கூறினான் ஹாஸான்.
வரந்தை யோரத்திலே தடுமாறி நின்று கொண்டிருந்த அந்த மூன்றாவது ஆளும், வெளிப்புறத்திலே சாய்ந்து கீழே விழுந்தான். உமார் சுவர் ஓரத்தைக் கெட்டியாகப் பிடித்தபடியே வெளிப்புறத்திலே கீழ்நோக்கி எட்டிப்பார்த்தான். முன்னால் குதித்த இருவருக்கும் பின்னால் மூன்றாவது ஆளும் கீழே விழுந்து கொண்டிருந்தான்.
ஆடைகள் காற்றில் பறக்க ஆடிக்கொண்டே செல்லும் மூன்று பந்துகள்போல், அந்த மலையுச்சியிலிருந்து கீழேயுள்ள செங்குத்தான, ஆழமான பள்ளத்தாக்கிலே நூற்றுக் கணக்கான அடிகளுக்குக் கீழே உள்ள மரக்கூட்டத்தின் இடையிலே அந்த உருவங்கள் விழுந்து கொண்டிருந்தன. அடிவாரத்திலே உள்ள பாறைகளிலே விழுந்து எலும்பு நொறுங்கி மண்டையுடைந்து, சதை கிழிந்து, குருதியொழுகிச் செத்துத் தொலைவதற்காகச் சென்றுகொண்டிருந்த அந்த உருவங்களைப் பார்த்த உமார் ஹாஸானைத் திரும்பிப் பார்த்தான்.
ஹாஸான், தன் கண்களிலே பிரகாசத்துடன், “பார்த்தாயா? அவர்கள் எனக்கு எவ்வளவு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்? யாராவது மாலிக்ஷாவிற்கு இவ்வளவு உண்மையாகக் கீழ்ப்படிந்து நடந்ததுண்டா?” என்று உமாரை நோக்கிக் கேட்டான்.
அவன் அருகிலே வந்த உமார், “எந்தவிதமான பயனுமில்லாமல், மூன்று உயிர்கள் வீணாகச் சாகடிக்கப்பட்டதைதான் நான் கண்டேன்” என்றான்.
“இல்லை, உனக்கு என்னுடைய சக்தியைக் காட்டுவதற்கு ஆதாரமாக அவை சாகடிக்கப்பட்டன. இந்த மூன்று உயிர்கள் போய்விட்டதனால் என்ன நஷ்டம் வந்துவிட்டது? அவையிருந்து என்ன சாதிக்கப்போகின்றது? இதோ மறைந்து கொண்டிருக்கும் கதிரவன், மீண்டும் கீழ்த்திசையிலே தோன்றுவதற்கு முன்னால் உள்ள இடை நேரத்திலே எத்தனையோ ஆயிரம் மனிதப் பூச்சிகள் இறந்து மறைந்து, இந்த உலக மென்றும் சாணிமேட்டிலே இன்னும் ஆயிரக்கணக்கான பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இத்தனை வெள்ளத்திலே இந்த மூன்று உயிர்களும் மூன்று துளிகளே! இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இப்பொழுது நீ என்னுடைய சக்தியின் ஒரு சிறுபாகத்தை ஓரளவு தெரிந்து கொண்டிருக்கிறாய். இதிலிருந்து என்னுடைய சக்தி எவ்வளவு பெரியதென்று நீ தெரிந்து கொள்ளலாம். நீ என்னுடைய கூட்டாளியாக என்னுடைய அறிஞர்களின் கூட்டத்திலே இருக்கலாமல்லவா? உன்னுடைய வேலை இப்பொழுது உள்ளதுபோலவே வானநூல், கணிதநூல் ஆராய்ச்சியாகவே இருக்கும்.”
“இங்கேயா? இந்தக் கழுகுக் கூட்டிலா?”
“இல்லை, இந்த உலகத்திலேயே. நீ முன் இருந்ததுபோலவே முழு உரிமையுடன் இருக்கலாம். உனக்கு என்ன வேண்டுமோ கேள். ஸோயி என்ற அந்த அழகிய பெண் வேண்டுமா? அலெக்ஸாண்டிரியா தேசத்து ஆராய்ச்சி நூல்கள் வேண்டுமா? எது வேண்டுமானாலும் கொண்டு வந்து கொடுப்பதாக உறுதியளிக்கிறேன். என் சொல்லுறுதி எப்பொழுதும் மாறியதில்லை. இப்பொழுது உனக்கிருக்கும் செல்வமும் செல்வாக்கும் என்னிடமிருந்து நீ பெறப்போகின்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகச் சாதாரணமாகிவிடும்.”
இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஆழமான பள்ளத்தாக்கை உமார் உற்று நோக்கினான். ஹாஸானை நோக்கி, “நான் ஒப்புக் கொள்ளாவிட்டால்?” என்று கேட்டான்.
“இப்பொழுதே உன்னை நிசாப்பூருக்குத் திருப்பியனுப்பிவிட மாட்டேன். சில காரியங்கள் நடந்து முடியும் வரையிலே, நீ இப்பொழுதிருப்பது போலவே இங்கேயே தங்கியிருக்க வேண்டியதுதான் அதன்பிறகு, நீ விரும்பினால் பிரிந்து செல்லலாம்.”
சிறிது நேரம் உமார் அமைதியாக நின்றான். பிறகு “நான் யோசித்து முடிவு செய்வதற்கு ஒரு வாரம் தவணைகொடு” என்று கேட்டான்.
“நிச்சயமாக இந்தவார முடிவில் நீ கூறும் பதிலுக்காகக் காத்திருப்பேன். அதுவரையிலே இந்தக் கோட்டைக்குள்ளே உள்ள என்னுடைய அடிமைகள் அனைவரும் என் ஆணைக்குக் காத்திருப்பார்கள்” என்று ஹாஸான் கூறினான்.
37. சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை
தன்னுடைய அறைக்குள் வந்து உட்கார்ந்த உமார் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டான். இவ்வளவு விந்தையான விஷயங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, அவன் தனியாக இருப்பது நல்லதென்று தோன்றியது. அந்தக் கழுகுக் கூட்டுக்கு வந்த பிறகு அவன் தனியாக இருப்பது இதுவே முதல் தடவை. ஹாஸானுடைய அதிசயிக்கத்தக்க அறிவாற்றலைக் கண்டு அவன் வியப்படைந்தான்.
இந்தப் புதிய மதத்தைத் தோற்றுவித்த தலைவனுக்குத் தன்னைப் பின்பற்றுவோரையெல்லாம் காப்பாற்றி ஆதரிக்கக்கூடிய அளவு செல்வம் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. அதுபற்றிய ரகசியத்தை அவன் வெளியிடவுமில்லை.
ஹாஸானுடைய பேச்சுக்களையும், அவன் தன் சக்தியின் பெருமையைப்பற்றிக் கூறியதையும் நினைக்கிறபொழுது, அவனுக்கு வேதாந்தி காசாலி கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. “தன்னைத்தானே போற்றிப் பெருமையாகப் பூசித்துக் கொள்வதைவிட வேறு எதையாவது ஒரு பொருளைத் தொழுவது உயர்ந்தது” என்ற பொன்மொழிதான் அது. ஹாஸானுடைய திட்டப்படி பார்த்தால், பலப்பல பள்ளி ஆசிரியர்களின் மகிழ்ச்சியைப்பற்றிய விவாதங்களும், அறிஞர் பிளாட்டோவின் குடியாட்சித் திட்டமும் முட்டாள் தனமாகி விடுகின்றன.
உண்மையில், புத்தியுள்ள மிருகங்கள் என்ற நிலையைக் காட்டிலும் மனிதப் பிராணிகள் உயர்ந்தவையல்ல என்ற நிலையிருக்குமானால், ஹாஸ்ானுடைய புது மதத்தை மிக உயர்ந்ததென்று கூறலாம். ஆனால் மனிதர்கள் புத்தியினால் மட்டும் மிருகங்களிலிருந்து வேறுபடவில்லையே, அவர்களுக்கென்று சுதந்திரமான எண்ணங்களும், கொள்கைகளும் இருக்கின்றன.
தன் ஒரு குறிக்கோளுக்காகப் பலதரப்பட்ட விஞ்ஞானிகளின் மனத்தையும் அடக்கியாளும் ஒரே தலைவனாக ஹாஸான் இருக்கிறான். அவனுடைய இந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்காக மற்றவர்கள் மனசாட்சியை இழந்து வேலைசெய்ய வேண்டியிருக்கிறதே?
உலகத்தின் ஆராய்ச்சிக் கூடங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தது போல் இருக்கும் இந்த இடத்தில், ஸோயி போன்ற ஓர் அழகிந பெண்ணின் துணையுடன் இருப்பது அப்படி ஒன்றும் கெடுதல் அல்ல. மேலும், நிசாம் உடனோ, காசாலியுடனோ, தன்னுடைய மனசாட்சியுடனோ விவாதித்துக் கொண்டு சங்கடப்பட வேண்டியதும் இல்லை.
நிம்மதியாகவே இருக்கலாம். ஆனால், எத்தனை செல்வம் கிடைத்தாலும், இன்பம் கிடைத்தாலும், ஹாஸானைப் போன்ற ஒருவனிடம் வேலை செய்வது கூடவே கூடாதென்று உமார் எண்ணினான். ஹாஸானிடம் வேலை செய்தால், அவனுடைய அடிமையாகிவிட வேண்டியதுதான். சுதந்திரமான எண்ணங்களுக்கும், அன்புக்கும் அருளுக்கும் அங்கே இடமில்லை.
அவனிடம் வேலை பார்த்தால், தான் செய்ய வேண்டுமென்று நினைக்கிற ஆராய்ச்சிகளைச் செய்ய முடியாது. வானுலகத்தின் மையத்திலே, பூமி அசையாமல் நிற்கவில்லை என்றும், தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வான் வெளியின் ஊடாகச் சுற்றி வந்துகொண்டிருக்கிற தென்றும் தான் கொண்ட கருத்தை நிலை நாட்டுவதற்காக உமார், ஆராய்ச்சி நடத்த வேண்டுமென்று அப்பொழுதுதான் எண்ணத் தொடங்கியிருந்தான்.
“எந்த விதத்திலும் ஹாஸான் என்னை விடுவிக்கப் போவதில்லை. இத்தனை இரகசியங்களையும் தெரிந்து கொண்டுவிட்ட நான் இங்கிருக்க முடியாதென்று கூறிவிட்டால் என்னை இங்கேயே சிறைவைத்து விடுவான். இது உறுதி. இந்த வாரம் முடிவதற்குள்ளே நான் எப்படியாவது தப்பிச்செல்ல வழிபார்க்க வேண்டும்” என்று உமார் முடிவு செய்தான்.
இந்த முடிவுக்கு வந்த பிறகு, அழகு மிகுந்த ஸோயியைப்பற்றி நினைக்கும்போது அவளை இழக்க வேண்டியிருக்கிறதே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.
38. பாடும் புறா பறந்துவிட்டது!
தன் அறிவிலே ஒருவிதமான மயக்க நிலையை ஏற்படுத்திய மருந்து எது என்பதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதே முதல் வேலை என்று உமார் தீர்மானித்துக் கொண்டான். அறிவைக் குழப்பித் தொடர்ந்து பல காட்சிகளைத் தோற்றுவித்துத் தன்னை ஏமாற்றுவதற்கு ஹாஸான் உபயோகித்த பொருள் மதுவிலே மட்டும் கலக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நன்றாக உணர்ந்தான்.
மதுவின் தன்மையை உணர்ந்த அவன், அதை நன்கு தெரிந்து கொண்டான். மதுவிலே கலக்கப்பட்டிருந்ததை விட அதிகமான காட்டமுள்ள பொருள் ஒன்றுதான் தன் மூளையைக் குழப்பியிருக்க வேண்டும். அது கணப்பிலிருந்து வந்த புகையிலே கலந்திருக்க வேண்டும். தான் குடிக்கும் மதுக்கோப்பைகளிலும் கலந்திருக்க வேண்டும். அதையகற்றினால்தான் தான் தன் உணர்வோடு இருக்கமுடியும் என்பதைத் தெரிந்து கொண்டான்.
கணப்பை அகற்றுவது மிக எளிது. தன் வேலைகளைச் செய்யவரும் அடிமையிடம், கோபமாயிருப்பது போல் நடந்து, இனிமேல் இந்த அறைக்குள்ளே கணப்பை வைக்காதே என்று கூச்சலிட்டுக் கடிந்து கொண்டால் போதும். ஆனால் மது வேண்டாம் என்று கூறினால் அந்த மயக்க மருந்தை வேறு முறையிலே உபயோகிக்க முயற்சி நடக்கும். மேலும் நம்மைப்பற்றி மிக எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கி விடுவார்கள், தான் அறியாமலே தன்னை உளவு பார்க்கிறார்களே அவர்கள், தன்னை நம்பவேண்டும்.
தினந்தோறும் தான் மது குடிப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளவேண்டும். ஆனால், தான் மதுவைக் குடிக்கக்கூடாது. இதற்கு என்னவழி? வேலைக்காரன் தினமும் கோப்பையிலே மது கொண்டு வருகிறான். அதைக் குடிக்காமல் இருக்கமுடியாது, என்ன செய்வது? அவர்கள் தினமும் நடுப்பகலிலும், இரவிலும் கொண்டுவரும் மது தனக்குப் போதவில்லை என்றும் ஒரு சாடிநிறையக் கொண்டுவந்து வைக்கும் படியும் உமார் கேட்டுக் கொண்டான்.
அதன்படி ஒது பெரிய ஜாடி நிறைய மருந்து கலந்த மதுவைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஹாஸான் இந்த ஒரு வாரமும் உமார் மதுக்குடித்து மயங்கிக் கிடந்தால் நல்லது என்று எண்ணியிருக்க வேண்டும். அந்த மதுச்சாடியைப் பார்த்து “இனி ஒவ்வொரு நாள் இரவும் உன்னிடமுள்ள மதுவை இந்தப் பள்ளத்தாக்கு தவறாமல் குடிக்கும்” என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டான்.
இருள் சூழ்ந்து கொண்டு வந்ததும், அந்த அடிமைப் பையன் வெளியில் செல்லும் தருணம் பார்த்து. ஒரு குவளை நிறைய மதுவை ஊற்றி சுவர்த் துவாரத்தின் வழியாக வெளியே ஊற்றி விட்டான். ஆனால், அவன் படுத்துக் கண்ணை மூடும்போது, தான் ஒரு கோப்பை மதுக்குடித்தால் தேவலாம் போல் இருந்தது. ஏற்கெனவே, குடித்து அனுபவப்பட்ட உள்ளம் மதுவுக்காக மயக்க மருந்து கலந்த அந்த மனோகரமான மதுவுக்காக ஏங்கியது.
உமார் மனதை அடக்கிக் கொண்டான். பக்கத்திலே ஜாடி நிறைய மதுவை வைத்துக் கொண்டு, தாகத்தோடு கிடப்பது சங்கடமாக இருந்தது. அந்த மதுவின் சுவையும் மணமும் உமாரை அழைத்துக் கொண்டிருந்தன. உமார் எழுந்து சென்றான். மதுக்குவளையைக் கையில் எடுக்கும்போதே மனசாட்சி எச்சரிக்கை செய்தது. பேசாமல் திரும்பி வந்து படுக்கையில் விழுந்து சாய்ந்து கொண்டான்.
அடுத்த நாள் இரவு குடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் சாடியைத் தொடக்கூட அவன் முயற்சிக்கவில்லை. மனத்தை அடக்கிக் கொண்டான். இப்படியாக மனத்தை அடக்கி மயக்கத்தையும் கனவையும் தவிர்த்தான். நான்காவது நாள் இரவு வந்தபோது, அவனுக்கு அந்த ஆவல் எண்ணமே அடியோடு அற்றுப்போய் விட்டது. தன்னடக்கம் கைவந்தோர்க்கு எந்த கவலையுமில்லை என்பதைப் போல அவன் பேசாமல் படுத்துக் கொண்டே, அந்த மதுவில் கலந்துள்ள மயக்க மருந்து, மனிதர்களின் உடலிலே ஏற்படுத்தும்
39. “தப்பி ஓடிய பாதையில்!"
இரவு நேரத்திலே, உமார் தன் அறையைவிட்டு வெளியேறிய போதெல்லாம், நடைபாதையிலே உள்ள காவல்காரர்கள் அவனைப் பின்தொடர்வதைப் பார்த்திருக்கிறான். ஆகவே இரவில் தப்பிப்பறப்பதென்பது இயலாத காரியம். சிறு கதவு இரவிலேதான் திறக்கப்படும். பகலில் பூட்டப்பெற்றிருக்கும். ஆகவே, பகலில் பெரிய நுழைவாசல் கதவின் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்று உமார் முடிவு செய்து கொண்டான்.
அதன் பிறகு கோட்டையின் உச்சியில் இருந்த ஓரிடத்திலிருந்து பகல் முழுவதும் தலைவாசலைக் கவனித்துக் கொண்டேயிருந்தான். அவனுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகள் எதுவுமே அகப்படவில்லை. சாதாரணமாகக் கிராமத்து மக்கள் அல்லது வியாபாரிகள், அந்த வாசலிலே கொண்டுவந்து பொருள்களை வைத்து விடுவதும், கோட்டைக்குள்ளே இருப்பவர்கள் அவற்றையுள்ளே தூக்கிவருவதும் வழக்கமாக இருந்தது.
அர்ப்பணம் செய்தவர்கள் என்ற கூட்டத்தாரில் சிலர் எப்போதாவது சிறுசிறு குழுக்களாக வெளியே செல்வதும், உள்ளே வருவதுமாக இருந்தார்கள். எப்போதாவது ஒருமுறை பிரசாரகர் ஒருவர் அல்லது இருவர் வெளியே செல்வதும் அல்லது உள்ளே வருவதும் உண்டு. அவர்கள் பிரசாரத்திற்காகவும், வெளியுலக நடப்புகளைத் தெரிந்து வருவதற்காகவும் அனுப்பப்படுவதுண்டு. ஆனால், ஹாஸானை உமார் அதன் பிறகு பார்க்கவேயில்லை.
மூன்று நாட்கள் தொடர்ந்து கவனித்ததில் ஓர் உண்மை உமாருக்குப் புலப்பட்டது. ஒருநாள் இரவு சிறுகதவு வழியாக அடையாளச் சீட்டுக் காண்பித்து வெளியேறிய அந்த நெட்டையான பிரசாரகன். பிற்பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் வெளியே செல்வதும், அரைமணி நேரம் கழித்து உள்ளே வருவதுமாக இருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் இந்தச் செயல் உமாரின் புத்திக்கு வேலை கொடுத்தது. அந்தப் பிரசாரகனின் நடையைக் கவனித்தபோது அவன் ஹாஸான் என்பது பளிச்சென்று தெரிந்தது.
சைனாக்காரனைப்போல் வேஷம் போட்டுக்கொண்டு, பிரசாரகனுடைய உடையில் ஹாஸான் தினமும் மாற்றுருவில் ஏன் வெளியே சென்று வருகிறான் என்பதையும் ரே நகரிலிருந்து யாருக்கும் தெரியாமல் கழுகுக்கூட்டுக்கு வந்துவிட்டான் என்பதையும் பொருத்திப் பார்க்கிறபோது, தன் மாயவித்தையால் தன் கூட்டத்தாரின் கண்ணுக்குப் பெரிய தேவதூதன்போல் காட்சியளிக்கும் ஹாஸான், தான் வெளியே போவதும் வருவதும் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் தன் தெய்வீகத் தன்மையை நிலை நிறுத்தவும் இந்த மாறுவேடம் போடுகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
தலைவாசலில் காவல் இருப்பவர்களான அர்ப்பணம் செய்தவர்களுக்கும் பிரசாரகர்களுக்கும் தொடர்பில்லாதபடி இரு பிரிவுகளாக அவர்கள் இருப்பதால், காவல் வீரர்களுக்கு எல்லாப் பிரசாரகர்களையும் அடையாளம் தெரியாது அவர்கள் உடையே சரியான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரசாரகர்களே ஹாஸ்ானைப் பார்க்க நேர்ந்தால் யாரோ புதிதாக மதத்திலே சேர்ந்தவர் என்றே எண்ணிக்கொள்வார்கள். அவ்வளவு திறமையாகத் தன் வேஷத்தை மாற்றிக் கொண்டிருந்தான் ஹாஸான். ஆனால், அவனுடைய நடை, உமாருக்கு அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
ஹாஸான், தனக்குப் புறாக்கள் மூலம் செய்திவரும் விஷயம் கோட்டையில் இருப்பவர்களுக்கே தெரியாதென்று ஏற்கெனவே கூறியது உமாருக்கு நினைவுவந்தது.
அப்படியானால், பக்கத்திலேயுள்ள கிராமத்துக்கு செய்தியனுப்பவும் சேகரிக்கவும் அவன் தினமும் வெளியில் சென்று வருகிறான் என்பதை எண்ணி முடிவுகட்ட முடிந்தது.
“தலைவாசல் வழியாக, ஒரு பிரசாரகனைப்போல ஹாஸானுடைய நடை நடந்து வெளியேறவேண்டும்” என்று உமார் தனக்குள் தீர்மானித்தான்.
அடுத்து, பிரசாரகனுடைய உடையை எப்படி சம்பாதிப்பது? ரக்கின் உட்டின் என்ற அந்த அறிஞன் பலமுறை சொர்க்கத்தைப் பற்றியும் சொர்க்கத்து மதுவைப் பற்றியும் அவனிடம் கேட்டிருக்கிறான். அத்தோடு முதல்நாள் கத்தி நடனத்தின்போது, நடுங்கும் கைகளுடன் ஆவலாக மதுவை அவன் ஒரே வாயில் குடித்ததையும் உமார் பார்த்திருந்தான் எனவே அவனைத் தன் அறைக்கு அழைத்து வந்தான்.
அவனைப் படுக்கையிலே உட்கார வைத்துவிட்டு ஜாடியில் இருந்த மதுவைக் கிண்ணத்தில் ஊற்றித் தன் உதட்டருகே கொண்டுபோய் வைத்துக்கொண்டு, “சொர்க்கத்தின் மது!” என்று கூறினான்.
ஹாஸான், விஞ்ஞான ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு மது கொடுத்து மயக்குவதில்லை. சொர்க்கபோகம் அவர்களுக்குத் தடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறான். ரக்கின் உட்டின் என்ற இந்த அறிஞனோ, ஒரு முறையாவது சொர்க்க போகத்தின் இன்பத்தை அனுபவித்துப் பார்க்கத் துடித்தான்.
“உண்மையாகவா? அதே மதுதானா?” என்று ஆவல் பொங்கக் கேட்டான் ரக்கின்.
“சந்தேகமாயிருந்தால் குடித்துப்பார்” என்று உமார் மதுக்கிண்ணத்தைக் கொடுத்தான். கதவு அடைத்திருக்கிறதா என்று கவனித்துவிட்டு, ரக்கின் உட்டின் அந்தக் கோப்பையைக் காலி செய்தான், கோப்பையைக் கீழே வைத்தான்.
“இன்னும் வேண்டுமா?” என்று கேட்ட உமார் அவன் பதிலுக்குக்கூடக் காத்திராமல் மற்றொரு கோப்பை ஊற்றிக் கொடுத்தான். அவனோ ஊற்ற ஊற்றக் குடித்துக் கொண்டேயிருந்தான். மருந்து வேலை செய்யத் தொடங்கியது பிதற்றத் தொடங்கினான். பிறகு மேலும் மேலும் குடிக்கப் பேச்சும் நின்று மயங்கிய நிலையில் தூங்கத்தொடங்கிவிட்டான் இனி அவன் என்ன கனவு காணுவானோ? உமார் வேலையைத் தொடங்கினான்.
அவனுடைய உடைகளை எடுத்து அணிந்து கொண்டான் ரக்கின் உட்டினுக்குத் தன் உடைகளைப் போட்டு விட்டான். மெதுவாகக் கதவைத் திறந்து வெளியேறி வந்து மீண்டும் தன் அறைக்கதவைச் சாத்திவிட்டு நடைபாதையில் நடந்தான். தூரத்தில் பேச்சுக்குரல் எங்கோ கேட்டது. நடைபாதையில் யாரும் இல்லை. கோட்டைப்புறத்துக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். தலைவாசலை நோக்கி நடந்தான். கீழேயிருந்த சுண்ணாம்புக்கல் தரையில்பட்டுப் பிரதிபலித்து சூரிய வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது.
இரண்டு அடிமைகள் சாடியிலே எதையோ தூக்கிக்கொண்டு குறுக்கே சென்றார்கள். தலைவாசலிலே இருந்த காவல் தலைவன் உமாரின் பக்கம் திரும்பிப் பார்த்தான். ஆனால் யாரும் அசையவில்லை. வாசல் இன்னும் நாலடிதுரத்தில் இருந்தது ஒன்று. இரண்டு. மன்று. என்ற எண்ணிக் கொண்டே படபடக்கும் இதயத்தோடு நெருங்கி வந்த உமாரை காவல் தலைவன், “அறிஞரே! இன்றைய அடையாளச் சொல் என்ன?” என்று கேட்டான்.
படைவீரர்களும், இரகசியக் கூட்டத்தினரும், தங்கள் ஆட்களைத் தெரிந்து கொள்வதற்கு அடையாளச்சொல் ஒன்று வைத்துக் கொள்வது வழக்கம். அதைத் தினந்தோறும் வெவ்வேறு சொல்லாக மாற்றுவார்கள். வெளியே செல்வோருக்கும் காவலர்களுக்கும், தலைவர்களுக்கும் மட்டுமே அந்தச் சொல் தெரியும். உமார் இந்த விஷயத்தை யோசித்துப்பார்க்க மறந்துவிட்டான்.
மூச்சைப் பிடித்துக்கொண்டு மிகுந்த அமைதியான குரலில், “நான் அவசரத்தில் அதை மறந்துவிட்டேன். நினைவுக்கும் வரவில்லை. நம் தலைவரே என்னை அனுப்பினார். கிராமத்திற்குப் போய்ப் புறாக்களின் மூலம் செய்தி அனுப்பவேண்டும்” என்று கூறியவன் தன் இடுப்பிலே யிருந்த, அந்தப் பழைய செய்திக் குழாயை வெளியில் எடுத்தான். காவல் இருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாத விஷயம். அவர்களுடைய தலைவன் இந்த மாதிரியான விஷயங்களை அவர்களிடம் தெரிவிப்பதேயில்லை, குழம்பிக் கொண்டிருந்தார்கள். காவல் தலைவன், ஆயுதங்களிலே பயிற்சி பெற்றவனே தவிர, அறிவை உபயோகிக்கத் தெரிந்தவன் அல்ல.
எனவே, உமார் அவனிடம் அந்தக் குழாயைக் கொடுத்து, “இதோ இதை நீ வைத்துக்கொள். நான் புறாக்கள் இருக்கும் வீட்டிற்குச் சென்று தபால் குதிரைகளைக் கொண்டு வருகிறேன். செய்திக் குழாயைத் தொலைத்துவிடாதே. தலைவர் அறிந்தால். அவருடைய கோபம் உன் தலைமேல்விழும்” என்று கூறிவிட்டு வேகமாக நடந்தான்.
அவன் அந்தக் குழாயைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டே, “சரி, சீக்கிரம் திரும்பி வா!” என்று கூறினான்.
அக்ரோனோஸ் போன்ற முகம் தெரிந்த பேர்வழிகள் எதிரில் வராமல் அருள்செய்ய வேண்டுமென்று அல்லாவை வேண்டிக் கொண்டு வைக்கோல் போர்களுக்கும், குப்பை மேடுகளுக்கும் நடுவே புகுந்து அந்தக் கிராமத்திலே புறாக்கள் இருக்கும் வீட்டைத் தேடினான். ஒரு வீட்டின் அருகிலே, வானிலே புறாக்கள் பறந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன, புறாக்கூடுகளும் இருந்தன. அங்கே முன்னால் இருந்த மனிதனிடம் “ஒரு கூண்டிலே இரண்டு புறாக்கள் போட்டுக் கொடு, சீக்கிரம்” என்று உமார் கேட்டான்.
“ஐயா, கழுகுக் கூட்டுத் தலைவரின் புறாக்களையா கேட்கிறீர்கள்?”
“வேறு என்ன? மலைத்தலைவர் ஷேக் அல் ஜெபல் அவர்களே கட்ளை யிட்டார்” என்றான் உமார் தடுமாற்றமில்லாமல். ஹாஸான் புறாக்களை வாங்கிவரச் சொல்லும் பழக்கம் இல்லையோ, அல்லது அவன் பெயர் அவனைப் பயமுறுத்தியதோ தெரியவில்லை. அந்த மனிதன் குழம்பிப் போய் நின்றான்.
பிறகு அவன் புறாக்கூட்டை நோக்கிச் செல்லும்போது, “சேணம் பூட்டிய நல்ல குதிரை ஒன்று வேண்டும். சீக்கிரம், வேறொருவனை அனுப்பு” என்றான் உமார்.
குதிரை வரும் வரையிலே உமார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் உள்ளம் பரபரத்துக் கொண்டிருந்தது. குதிரை வந்ததும், புறாக் கூண்டைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த மனிதன், “இதோ பாருங்கள் இந்தப் புறாக்களை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக உள் இறக்கை ஒன்று மடித்து வைக்கப் பட்டிருக்கிறது அதன் வால் புறத்திலே இதோ சிவப்புமை போடப் பட்டிருக்கிறது. இவைதான் மற்ற புறாக்களுக்கும் நமது புறாக்களுக்கும் உள்ள வேற்றுமை தாங்கள்...”
இப்படி அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே பின்னால் ஒரு குதிரை வரும் காலடிச் சத்தம் கேட்டது. ஏற்கெனவே பயந்து கொண்டிருந்த உமார், மிகவும் பயந்து தன் குதிரையைத் தட்டிவிட்டான்.
புறாக்கூண்டை அந்த மனிதன் கையிலிருந்து பறித்துக் கொண்டான், குதிரை பறந்தது. கிராமத்தின் நடுவிதி வழியாகச் சென்று கொண்டிருந்த அவன், ஆற்றுப் பக்கம் செல்லாமல், வலது பக்கம் செல்லும் பாதையில் தன் குதிரையைத் திருப்பிவிட்டான்.
ஆற்றுப் பக்கத்துப்பாதை வழியாகத்தான் அக்ரோனோஸ் அவனை அழைத்து வந்தான். அங்கே பாதி வழியிலே காவல்வீரர்கள் இருப்பார்கள். ஆனால், மற்றபாதை எங்கே செல்கிறதென்று அவனுக்குத் தெரியாது. எங்கு சென்றாலும், ஹாஸானுக்கும் தனக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வேகமாகச் சென்று கொண்டிருந்தான்.
ஒட்டகப்பாதை போல் தோன்றிய ஒரு சிறுபாதை வழியாகச் சென்று கொண்டிருந்த அவன் குறுகிய பள்ளத்தாக்கு ஒன்றின் வழியாகப் போகும்போது, கற்களுக்குப் பின்னாலிருந்து இருபுறமும் ஈட்டிகளுடன் கூடிய படைவீரர்கள் போன்ற மனிதர்கள் திடீரென்று தோன்றினார்கள் உமாருக்குப் பயமாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து மேல் சென்றான். அவனுடைய உடையைப் பார்த்த அவர்கள், ஈட்டிகளைத் தூக்கிக் கொண்டு, “கடவுள் காப்பாராக!” என்று கூவினார்கள்.
“கடவுள் உங்களையும் காப்பாராக!” என்று கூவியபடி பறந்தான் உமார். அவர்கள் பார்வைக்குத் தப்பிச் செல்லும் வரையிலே, குதிரையை இரத்தம் வரும்படி அடித்துப் பாய்ந்து பாய்ந்து செல்லும்படி செய்தான். பைன் மரக்காடுகளுக்கு அப்பால் வந்ததும்தான் அவனுக்கு முச்சு வந்தது.
திடீரென்று அவனுக்குச் சிரிப்பு வந்தது. கழுகுக்கூட்டுக் காவலன் கையிலேயுள்ள குழாய்ச் செய்தியில் “உமார் ரே நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்” என்று எழுதியிருந்ததை நினைத்தால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?
40. “உனக்கும் எனக்கும் ஒத்து வராது!”
இருள் சூழ்ந்துவரும் நேரத்திலே சமவெளிப் பிரதேசத்தின் வழியாக வந்து கொண்டிருந்த உமார், தூரத்திலே வயலோரத்தில் சில குடிசைகளைப் பார்த்தான். அவன் குடிசைகளின் அருகில் வந்தபோது, நன்றாக இருட்டிக்கொண்டது.
குடிசைகளில் விளக்குகள் ஏற்றப்பெற்றிருந்தன. முதல் வாசல் அருகிலே வந்ததும், குதிரையைவிட்டு இறங்கியதும் அந்தப் பண்ணையின் தலைவன் யார் என்று கேட்டதும் பண்ணைத் தலைவனிடம் உமார் அழைத்துச் செல்லப்பட்டான்.
இந்தப்பண்ணை, கழுகுக் கூட்டின் பக்கமாக இருப்பதால் இவர்கள் ஹாஸானுடைய உதவியாளர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்து தலைவனை நோக்கி, ‘ஷேக் அல் ஜெபல் அவர்களுடைய ஆணையின்படி நான் செல்லுகிறேன். எனக்கு ஒரு புதிய குதிரைவேண்டும் என்றான்.
‘யார்! மேலேயிருக்கிறாரே அவரா!’
‘ஆம்! கழுகுக் கூட்டின் தலைவர்.’
அந்தக் குடியானவர்கள் தங்களுக்குள்ளே ஏதோ, மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். பிறகு உமார் ஏறிவந்த குதிரையைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள். யாரும் கவனிக்காதபோது நிழலோடு நிழலாக மறைந்து வந்த ஒரு சிறுமி அந்தப் புறாக்கூண்டின் பக்கத்திலே வந்து உட்கார்ந்துகொண்டு, அந்தப் புதிய மனிதனான உமார் கவனிக்காத நேரம் பார்த்து கூண்டுக்குள்ளே கையைவிட்டு அந்தப் பறவைகளின் இறக்கைகளைத் தொட்டுப் பார்த்தாள்.
ஆகாரமில்லாமல் களைத்துப்போயிருந்த உமார், தன் கைகளின்மேல் தலையை வைத்துக் குந்தியபடி உட்கார்ந்திருந்தான். அவன் கழுகுக் கூட்டிலிருந்து தப்பி வந்துவிட்டான்.
ஆனால், ஹாஸானுடைய ஆட்களின் கையிலே சிக்கிக்கொள்ளாமல் தப்பமுடியும் என்ற நம்பிக்கை வரவில்லை.
‘இந்தப் பிரம்பு வீட்டுக்குள்ளே நீ எப்படி இவற்றைக் கொண்டு வந்தாய்!’ என்று அந்தச் சிறுமி கேட்டாள். திரும்பிப் பார்த்த உமார், அந்தப் பெண் பயந்து ஓடுவதைக் கண்டான், பயந்து ஒடினாலும் அந்தப் புறாக்களை விட்டுப்போக மனமில்லாமல் “நான் அவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை மேலே வானத்தில் உயர உயரப் பறக்கின்றன. சில சமயம் மரங்களின்மேல் உட்காருகின்றன நான் அருகில் போனால் பறந்து விடுகின்றன’ என்றாள்.
பிறகு வருத்தத்துடன், ‘வயலில் தானியங்களைத் தின்னமட்டும் வருகின்றன. என்னோடு விளையாடக் கூப்பிட்டுக்கொண்டே போனால் பறந்து போய்விடுகின்றன. என்மேல் அவற்றிற்கு ஏன் கோபமோ தெரியவில்லை’ என்றாள் மெல்ல.
‘அவை, உன்னருகில் வந்து, உன் கால்களைச் சுற்றிக்கொண்டு திரிய வேண்டுமா?” என்று கேலியாக உமார் கேட்டான்.
‘ஆமா ஆமா! நீ வரச் சொல்லுவாயா?’ என்று ஆவலுடன் கேட்டாள் சிறுமி.
பக்கத்தில் இருந்த குளக்கரையிலே போய் உமார் சிறிது களிமண் எடுத்து வந்தான். இரண்டு கைநிறைய இருந்த களி மண்ணையும் உருட்டிப் புறாவின் உருவம்போல, உடலும் தலையும் செய்தான். பிறகு, இரண்டு கம்புக் குச்சிகளை ஒடித்துக் காலாகச் சொருகினான், செய்து முடித்த பிறகு ஒரு புறத்திலே வைத்தான்.
‘இதோ பார் நாளைக்கு வெயிலிலே இதைக் காயவைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு அடுத்த நாள் நீ இதைத் தண்ணிருக்குப் பக்கத்திலே வை, காற்றிலே பறக்கிற புறாக்கள் எல்லாம் இதன் அருகிலே வந்து இதனோடு பேசிக் கொண்டிருக்கும். நீ கரையிலே இருந்தபடி பார்த்துக் கொண்டிரு. ஆனால், நீ அசையாமல் இருந்தால் அதிக நேரத்திற்கு அவை இங்கேயே இருக்கும். அவற்றைப் பிடிப்பதற்காக ஓடினால் அவை பறந்து போய்விடும், தெரிகிறதா?
‘இது அவற்றைப் போலவே இருக்கிறதே!’ என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அந்தச் சிறுமி.
அந்தக் குடியானவர்கள் ஒரு குதிரை கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்தால் பண்ணை வேலை செய்யும் குதிரைபோல் தோன்றவில்லை. தான் மலைத் தலைவனுடைய ஆள் என்பதற்காக நல்ல சவாரிக் குதிரையாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.
புறாக்கூண்டைத் தூக்கிக்கொண்டு குதிரையின்மேல் ஏறிக் கொண்டான்.
சேணத்துக்கால் மிதியைப் பிடித்துக்கொண்டே, பண்ணைத் தலைவன். ‘இன்னும் வராத அந்த நாள் விரைவில் வருமா?’ என்று மெதுவாகக் கேட்டாள்.
‘எனக்குத் தெரியாது, அது ஆண்டவனுக்குத் தெரியும்’. இந்தப் பதிலைக் கேட்டதும், அவன் உமாரைப் போக அனுமதித்தான்.
உமார் தொடர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அதிக தூரம் செல்லச் செல்ல ஆபத்துக் குறையும் என்பது அவன் நம்பிக்கை. இரவின் பயணம் நீண்டு கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு நகரத்தின் கோட்டைச் சுவர் அருகிலே வந்தான். அதன் சுற்றுப்புறங்களை நோக்கிய போது அது காஸ்வின் நகரம் என்பது தெரிந்தது.
நகருக்குள்ளே சென்றால், அங்குள்ள ஏழாவது கொள்கைக்காரர்களுக்குத் தன்னைப் பற்றிய செய்தி கிடைத்திருக்கலாம் என்ற பயம் இருந்தது. அத்துடன், காஸ்வின் நகரம்தான் கழுகுக் கூட்டிற்கு மிக அருகில் உள்ள நகரம். எனவே கோட்டையைச் சுற்றிக் கொண்டு மறுபுறத்திலே வந்து கொரசான் பாதையில் தன் குதிரையைத் தட்டிவிட்டான்.
துரத்து மலைகளின் வழியாக வானத்தை நோக்கிக் கிளம்பிய கதிரவ்னின் கதிர்கள் உலகத்தைச் சூழ்ந்திருந்த இருட்டை ஓடச் பதன. இரவெல்லாம் நடந்த களைப்பால், குதிரை தளிர்நடை போட்டது. உமாருக்கும் களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய சொப்பன்த்திலே ஒரு மாய உலகம் தோன்றியது. களிமண்ணாக இருந்த புறாக்கள் வானவெளியிலே பறந்தன. தபால் செய்திகளைச் சுமந்து போயின. தட் தட் என்று அவற்றின் இறக்கைகள் அடித்துக் கொண்டன.
தட் தட் என்ற சத்தம் வரவரப் பெரிதாகியது. உமார் கண்ணை விழித்துப் பார்த்தான். குதிரைகள் பல அவனைக் கடந்து சென்றன. அப்படிக் கடந்து சென்று கொண்டிருந்த ஒரு குதிரை அவன் அருகிலே நின்றது. அதிலிருந்து கீழே இறங்கி உமாரின் அருகிலே வந்த அந்தக் கூணன், ‘தலைவரே! என்னைத் தெரியவில்லையா? தங்கள் ஜபாரக்’ என்றான். அதே சம்யத்திலே, ஒட்டகத்தின் மேல் இருந்த மூடிய பிரம்புத் தொட்டிலிலிருந்து, ஒரு பெண் இறங்கி ஓடி வந்தாள்.
‘தலைவரே! நல்ல வேளை, உங்களை அல்லாதான் காப்பாற்றினார். கண்ணுக்குத் தெரியாத வேதாளங்கள் தங்களைத் தூக்கி போனதாகக் கூறினார்களே! இதென்ன உங்கள் தாடிக்கு என்ன வந்தது? என்று வரிசையாகக் கேட்டாள். முக்காட்டை விலக்கி விட்டுப் பேசிக் கொண்டிருந்த ஆயிஷாவைப் பார்த்து வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விட்டார்கள் கூட வ்ந்த மற்ற பிரயாணிகள்.
‘பெண்ணே, அதோ அந்த தூரத்து மலைகளிலே, மாயவித்தைக்காரர்களுடன்தான் இருந்தேன்’ என்றான் உமார். அந்த மாயக்காரர்களுடன் யாரும் பெண்கள் இருந்தார்களா?’ என்று அயீஷா, பெண்ணுக்கே உள்ள இயற்கையான சந்தேகத்துடன் கேட்டாள்.
‘அந்தச் சொர்க்கத்திலே ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள்.’
‘சொர்க்கமா?’
‘உண்மையான சொர்க்கமல்ல; மாயா சொர்க்கம்!’
இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அரசாங்க வீரர்கள் சிலர் வந்தார்கள். அவர்களிலே தலைவனாக உள்ளவன் உமாரை உற்று நோக்கிவிட்டு, தாங்கள் அரசாங்க வானநூற் கலைஞரா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டான்.
பிறகு சுல்தான் இஸ்பாகானுக்குச் சென்று கொண்டிருக்கிறார். தங்களைத் தேடி உடனே அழைத்துக் கொண்டு வரச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார் என்றான்.
போகும் வழியில் அயீஷா, உமாரிடம், நிசாம் அல்முல்க் அவர்கள் அரசாங்க வேலையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார் என்று கூறினாள்.
என்ன காரணம் என்று உமார் கேட்டான்.
‘சுல்தானுக்கு ஒரு கடிதம் கிடைத்ததாம். அதிலே யாரோ, “நிசாம் தங்களுடைய மந்திரியா, அல்லது தங்களுடைய சுல்தானா? என்று எழுதிக்கேட்டிருந்தார்களாம்.
போர்க்களத்திலிருந்து கோபத்துடன் திரும்பி வந்த சுல்தான், அவரை உடனே விலக்கி விட்டாராம் என்று அயீஷா கூறினாள். பாவம், அன்றே நிசாம் சொன்னபடி சுல்தானுக்குக் கடிதம் எழுதியிருந்தால் அவருடைய பதவி போயிருக்காது என்று உமார் வருத்தத்துடன் நினைத்துக் கொண்டான்.
‘அந்தக் கடிதம் எப்படி வந்தது தெரியுமா? வானத்திலே பறந்து வந்த ஒரு புறா கொண்டு வந்து கொடுத்ததாம்’ என்றாள் ஆயிஷா.
உமார் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். இஸ்பாகான் நகர் அருகிலே வந்ததும் கீழே இறங்கி, ஒருதாளும் பேனாவும் மையும் கொண்டுவரச் சொன்னான்.
‘உன்னுடைய வேண்டுகோளுக்கு நான் முடிவு கட்டிவிட்டேன். உன்னுடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு! ஆனால், நான் உன்னுடைய இடத்தில் கண்ட விஷயங்களைப் பொறுத்த வரையில் ஒன்று கூற விரும்புகிறேன். எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் உன்னால் எந்தவொரு தீங்கும் ஏற்படாதவரையில் அவை இரகசியமாகவேயிருக்கும்!”
இந்தக் கடிதத்தின் கீழே கையெழுத்தோ அடையாளமோ எதுவும் போடாமல், சுருட்டி ஒரு சிறு குழாய்க்குள்ளே போட்டான். புறாக்களில் ஒன்றைக் கூண்டிலிருந்து எடுத்து, அதன் ஒரு காலிலே அந்தக் குழாயைக் கட்டினான். அந்தப் புறாவைக் காற்றிலே தூக்கி எறிந்தான். அது தன் இறக்கைகளை விரித்துப் படபடவென்று அடித்துக் கொண்டு அந்த நகரத்தை ஒருமுறை சுற்றிவந்தது. பிறகு தூரத்து மலையை நோக்கி அம்பு போலப் பாய்ந்து பறந்தது.
அயீஷா வாயைப் பிளந்து கொண்டு அதிசயத்துடன் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘மாயக்காரர்கள் இருக்கும் இடத்திற்கு அது போகிறது’ என்று உமார் கூறினான்.
அயீஷாவுக்கு ஆச்சரியத்தால் தலை சுற்றியது.
41. குத்துக் கத்தியும் சுட்ட ரொட்டியும்
சுல்தான் மாலிக்ஷா அவர்கள் தன் சபையைவிட்டு உமார் விடுபட்டுப் போகும்படி விடுவதாக இல்லை. தன்னுடைய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியே, உமார் கூறிய சோதிடக்குறிகளின் பயனாக வந்ததென்று முழு மனதுடன் எண்ணினார். தன்னுடைய வெற்றிகளுக்கும் அதுவே காரணமென்றும் எண்ணினார். உமாரின்மேல் அவருக்கு அளவு கடந்த நம்பிக்கையிருந்தது.
ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் போது உமாரைப்பற்றி அவர் வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது பேச்சோடு பேச்சாக உமார், ‘நிசாம் அவர்கள் எந்தவிதத்திலும் தங்களுக்குத் துரோகம் செய்யவில்லை’ என்றான்.
‘நிசாம், அளவுக்குமீறிய வகையில் என்னுடைய அதிகாரங்களைக் கையாண்டார்’ என்று பதில் கூறிவிட்டு தன்னுடைய திருக்குரான் புத்தகத்திலிருந்த ஒரு சிறு தாளையெடுத்துக் கொடுத்தார். அதிலே, ‘கூடார மடிப்பவன், தேவ தூதன்போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறான். சிங்கத்தின் தோலைப் போர்த்துக்கொண்ட நாய் இதுவென்று தெரிந்து கொள்ளவும்’ என்று தெளிவான கையெழுத்தில் எழுதியிருந்தது.
‘உமார், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மாலஸ்கார்ட் போர்க்களத்திலிருந்து நம்முடைய அதிர்ஷ்டம் நம்மை ஒன்று சேர்த்திருக்கிறது. நம்மை யாராலும் பிரித்துவிட முடியாது என்று சுல்தான் உறுதி கூறினார். அவர் தன் பேச்சைத் தொடர்ந்து, இந்தக் கடிதம் அனுப்பியதெல்லாம் உளவாளிகள் இருப்பதால்தான். நிசாம் உளவு பார்க்கும் முறையை வளர்த்துவிட்டார். ஒவ்வொரு அரசாங்க உத்தியோகஸ்தனையும் சுற்றி இந்த உளவாளிகள் திரிகிறார்கள்.
எனக்கு எதிரியாக உள்ளவர்களும் இந்த உளவாளிகளைக் கைக்கூலி கொடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம் அரசாங்கத்தில் உளவு பார்க்கும் முறையையே ஒழித்துவிட வேண்டும்’ என்றார்.
‘நான் இங்கே ஒன்றுக்கும் பயனில்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நான் என் விண்மீன் வீட்டிற்குச் செல்கிறேன்’ என்று உமார் கேட்டான்.
‘அங்கே போய் என்ன செய்வாய்?’
‘ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கப் போகிறேன். அது வானவீதியைப் பற்றியது.’
‘ஆ! வானவீதியில் உள்ள ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்திருப்பாய்! அதனால் என்ன நன்மைகள் வரும்? சீக்கிரம் சொல்!’
‘நட்சத்திரமல்ல, வானவீதியிலே நாமிருக்கும் இந்த உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நகர்ந்து போகிறது என்ற விஷயம்தான்’
சுல்தான் அவனை உற்று நோக்கினார். அவன் தொடர்ந்துகூறிய விளக்கங்கள் அவருடைய புரியும் தன்மைக்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன. எதையோ நினைத்துக் கொண்ட அவர். ‘உமார், அன்றொரு நாள் நான் இதுவரை வேட்டிையாடிக் கொன்ற மிருகங்களை எண்ணிப்பார்த்தேன். மொத்தம் ஒன்பதாயிரம் உயிர்களை ஆண்டவன் படைத்த உயிர்களை, வீணாகக் கொன்றிருக்கிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக ஒன்பதாயிரம் வெள்ளிகளை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறேன். என்ன சொல்கிறாய்?’
‘ஆண்டவன் பெயரால் அப்படியே செய்யுங்கள்!’
சிறிது நேரத்திற்குப் பிறகு, சுல்தானிடம் விடைபெற்றது. அவனுடைய அந்தப்புரக் கூடத்திற்குச் சென்றான். அங்கே, ஓர் ஆட்டக்காரிபோல சலாமிட்டு வணங்கி அயீஷா அவனை வரவேற்றாள். அந்தக் கூடத்திலே, அவள் இஸ்பாகான் சந்தையிலே வாங்கி வந்த புதிய புதிய பொருள்களை ஆங்காங்கே அடுக்கி வைத்திருந்தான்.
படிமம்:Page336 உமார் கயாம் (புதினம்).jpg
அவனுக்காகப் பலவகையான பழங்களும் உணவுப் பொருள்களும் வாங்கி வைத்துக்கொண்டு அவள் காத்திருந்தாள். அவனோ, அவற்றை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், உட்கார்ந்து கவிதை எழுதத் தொடங்கினான்.
அவள் கோபத்துடன் கண்ணை மூடிக்கொண்டு அவன் அருகிலேயே நீட்டிப் படுத்துவிட்டாள். நான்கு வரிகள் எழுதிமுடித்த அவன் அவளை நோக்கினான். புதிய உடையணிந்து முகத்திற்குப் பூச்சுப்பூசி, சொர்க்கத்துப் பறவைபோலத் தோன்றினாள். அவளுடைய அதிசய அழகு அவன் உள்ளத்தை என்னவோ செய்தது, எழுதிய தாளை வைத்துவிட்டுக் குனிந்து அவளுடைய உதடுகளிலே தன் உதடுகளைப் பதித்தான். அவன் எழுப்பியது இச் என்ற ஒரே ஓர் ஒலி. ஆனால் எழுந்ததோ பலப்பல ஒலிகள். ஆம்! பதிலுக்கு முத்தமிட்டு அவள், அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
அவனும் தன்னை மறந்தான். அயீஷாவினுடைய கண்கள் தூரத்திலே காற்றிலே பறந்து படபடத்துச் சென்று கொண்டிருந்த கவிதைத் தாளை வெற்றியுடன் உற்று நோக்கின.
உமாரின் அருகிலே படுத்திருந்த அயீஷா புரண்டு படுத்தாள். ஏதோ அரவம் கேட்பதுபோல் இருந்தது. அவளுக்கு மிக அருகாமையிலே, யாரோ மூன்றாவது ஆசாமி ஒருவன் மூச்சுவிடுவது போல் இருந்தது அவளுடைய மூக்கில் ஏதோ ஒரு மாதிரியான வாசம் படுவதுபோல் இருந்தது. அவளுடைய உடல் பயத்தால் வெடவெடத்தது. புதருக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த புள்ளிமான் துள்ளிப் பாய்வதுபோல, அலறித் துடித்துக் கொண்டு எழுந்தாள். வானத்தின் குறுக்கே ஒரு கரிய உருவம் கடந்து போவதுபோல் தெரிந்தது.
அவளுடைய கூச்சலைக் கேட்டு எழுந்த உமார், படிக்கட்டு வழியாக ஓர் உருவம் நழுவிச்செல்வதைப் பார்த்தான். சத்தம் போடாமல் தொடர்ந்து சென்று கீழேயுள்ள கூடத்தில் விளக்குகளைக் கொளுத்தினான். வேலைக்காரர்களும் அதற்குள் எழுந்து வந்துவிட்டார்கள். ஆனால் அந்த ஆள் எப்படியோ தப்பிவிட்டான், வாசல் அருகிலே படுத்திருந்த இஷாக் யாருமே உள்ளே நுழையவில்லை என்று ஆயிரம் சத்தியம் செய்தான். மேலேயிருந்து அயீஷா கத்தினாள்: ‘தலைவரே! இங்கு வாருங்கள் இதைப் பாருங்கள்!’
மேலே விளக்குகளுடன் போய்ப் பார்த்தால், உமாரின் தலைமாட்டிலே, ஒரு குத்துக் கத்தியும், புதிதாகச் சுடப்பட்ட ஒரு ரொட்டியும் இருந்தன.
உமாருக்கு இது அதிசயமாக இருந்தது. இதன் பொருள் அவனுக்குப் புரியவில்லை யாரோ, உயிருக்குத் துணிந்து, இவற்றைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் என்பது மட்டும் தெரிந்தது. ‘ஒன்றும் புரியவில்லை கத்தி சாவுக்கு அடையாளம்; ரொட்டி வாழ்வுக்கு அடையாளம் என்று வைத்துக் கொண்டாலும் விஷயம் விளங்கவில்லையே’ என்று இஷாக் யோசித்தான்.
‘பகலில் பார்க்க வருவோரிடம் இலஞ்சம் வாங்க விழித்துக்கொண்டிருப்பாய், இரவில் திருடர்கள் வரும்போது குறட்டை விடுவாய் நீ என்ன காவல் காக்கிறாய்?’ என்று அயீஷா, இஷாக்மேல் எரிந்து விழுந்தாள். அதற்குள்ளே இஷாக் அங்கே கிடந்த தாள் ஒன்றையெடுத்து உமாரிடம் கொடுத்தான் அதிலே,
‘உன் நாக்குப் பற்களுக்கு இடையே இருக்கவேண்டும்’ என்று எழுதியிருந்தது.
‘அயீஷா அதிகம் பேசுகிறாள். அவளுக்குத்தான் இந்த எச்சரிக்கை என்று இஷாக் கூறினான்.
ஆனால் இது தனக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை என்று உமார் உணர்ந்தான். தான் இதுவரை, கழுகுக் கூட்டைப்பற்றி யாரிடமும் கூறாதபோது. இந்த ஹாஸான் தனக்கு ஏன் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால், இந்த எச்சரிக்கையின் முழுவிவரமும் பொழுது விடிந்த பிறகு உமாருக்குத் தெரியவந்தது.
பொழுது விடிந்து சிறிது நேரம் ஆனதும் டுன்டுவினுடைய ஒற்றன் ஒருவன், உமாரிடம் வந்து சலாம் செய்தான். ‘சுல்தானின் நிழல் போன்றவரே! அதிகாலையில் நகரைச் சுற்றி வரும்போது தங்களுடைய ஆள் ஒருவன் ஓரிடத்திலே பிணமாகிக் கிடப்பதைக் கண்டோம். இங்கே தூக்கி வந்திருக்கிறோம்’ என்றான்.
உமார் கீழே இறங்கிவந்து பிணத்தை மூடி வைத்திருந்த துணியை அகற்றினான். அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. அவனுடைய ஆருயிர்த்தோழன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு உற்ற துணைவனாக இருந்த கூணன், விகடன் ஜபாரக் கழுத்தில் வெட்டுப்பட்டுப் பிணமாகிக்கிடந்தான். அவனுடைய நாக்கு வேரோடு வெளியில் அகற்றப்பட்டிருந்தது.
‘உன்னுடைய தலைவனை உடனே இங்கு வரச்சொல்’ என்றான் உமார், சிறிது நேரத்தில் டுன்டுஷ் அங்கு வந்து சேர்ந்தான்.
‘பள்ளி வாசலுக்கு வெகுதூரத்தில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள பாதையில் பிணம் கிடந்தது. ஆனால் அந்த இடத்திலே கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை, வேறு எங்கோ கொலைசெய்து அங்கே கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவன் செத்துக்கிடந்த இடத்திலே தரையில் இரத்தக்கறையேயில்லை!’
உமாருக்கு இது ஹாஸானுடைய ஆட்களின் வேலைதான் என்று தெரிந்தது. ஏனெனில் முதல் நாள் தன்னைச் சந்தித்தபோது, ஜபாரக்கிடம், யாரோ ஒருவன் சாமியார் வேடத்தில் இருந்தவன் வந்துபேசிக் கொண்டிருந்ததாகவும், அவன், ஜம்மி மசூதிக்குப் பின்னால் உள்ள அக்கினிபுத்திரன் வீட்டிலே, செத்துச் சொர்க்கம்போன ஒரு மனிதன் பிழைத்து எழுந்து வந்து, சொர்க்கத்தின் அனுபவத்தைக் கூறியதாகவும். அது தான் கழுகுக்கூட்டிலே கண்ட காட்சியாகவே இருந்ததையும் உமார் சிந்தித்துப் பார்த்தான்.
சந்தேகமில்லாமல். ஜபாரக் அந்த வீட்டிலேதான் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான்.
‘அக்கினி புத்திரன் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?’ என்று டுன்டுவிடம் கேட்டான்.
‘நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றான் டுன்டுஷ்.
உமார் டுன்டுவிடம் முன்னிரவு தனக்குக்கிடைத்த எச்சரிக்கைக் கடிதத்தைப்பற்றிக் கூறினான். அயீஷா பின்னால் திரைமறையில் இருந்தபடியே ‘ரொட்டியையும் கத்தியையும் பற்றிக் கூறுங்கள்’ என்று ஞாபகப்படுத்தினாள்.
இதைக்கேட்ட டுன்டுஷ், ‘இது போலவே, தலைமாட்டிலே ரொட்டியும் கத்தியும் கண்ட சில மனிதர்கள் இப்போது ஆளே காணப்படாமல் போய்விட்டார்கள்’ என்றான்.
‘இது அர்ப்பணம் செய்தவர்களின் வேலையாகத்தான் இருக்கவேண்டும்’ என்றான் உமார்.
‘யார்? என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று விளக்கங் கேட்டான் டுன்டுஷ்.
‘அர்ப்பணம் செய்தவர்கள் ஏழாவது கொள்கைக்காரர்களின் தலைவனும் கழுகுக் கூட்டின் தலைவனும் பிறப்பிறப்புப் பெருந்தலைவனுமான ஹாஸான் இபின் சாபா என்பவனுடைய ஆட்கள், குத்துக்கத்தி பிடித்த கொலைக்கஞ்சாப் பாதகர்கள், மயக்க மருந்து தின்னும் மதிகெட்டவர்கள்!’ என்று உமார் அடுக்கிக் கொண்டே போனான்.
‘தலைவரே! மறுபடியும் அந்தப் பெயரைச் சொல்லாதீர்கள், பயமாக இருக்கிறது!’ என்று டுன்டுஷ் வேண்டினான்.
‘அப்படியானால், உனக்கும் அவர்களைப்பற்றித் தெரியும் என்று சொல்’ என்ற உமார். ‘உனக்குத் தெரிந்ததை என்னிடம் அஞ்சாமல் சொல்’ என்றான்.
ஆனால், டுன்டுஷ் பயந்து கொண்டே மிக மெதுவான ரலில் பேசத் தொடங்கினான். அப்படிப் பேசும்போது எதிரில் திறந்திருந்த சன்னலுக்கப்பால் சீறிவரும் பாம்புகள் நூறு இருந்தால் எப்படிப் பயப்படுவானோ, அப்படிப்பட்ட பயத்துடன் அந்தச் சன்னலைப் பார்த்துக் கொண்டே பேசினான்.
‘எகிப்து தேசத்திலிருந்து பாரசீகத்திற்குள்ளே இந்த இயக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. இவர்களைப்பற்றி நிசாம் எச்சரிக்கை செய்து தன் குறிப்புப் புத்தகத்திலே எழுதியிருக்கிறார். இவர்களுடைய தலைவன், நம்பிக்கையுள்ள முஸ்லிம்களைப் பயமுறுத்தித் தன் புது ஏற்பாட்டிலே சேர்த்துவருகிறான். வியாபாரிகளை அதட்டி மிரட்டிப்பணம் பறிக்கிறான். ஒருவனுடைய தலைமாட்டிலே குத்துக்கத்தியும் ரொட்டியும் இருந்தால், அதற்கு நீ சாகிறாயா? வாழ்கிறாயா? என்று கேட்பதாகப் பொருள். வாழ்வதாக இருந்தால், மறுநாள் வந்து அவன் விட்டு வாசலிலே நின்று ரொட்டிப்பிச்சை கேட்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு மூட்டை தங்கம் கொடுக்க வேண்டும்.
அப்படிக் கொடுக்காதவன் ஆளே காணாமல் போய்விடுவான். இதுவரை கொடுத்துத் தப்பியவர்களும் இருக்கிறார்கள், கொடுக்காமல் காணாமல் போனவர்கள் ஐந்து வியாபாரிகள். அதுபோல் இன்று உங்கள் வீட்டுக்கு எவனாவ்து பிச்சைக்காரன் வந்தால், ஏதாவது ஒரு தொகை கொடுத்து அனுப்பிவிடுங்கள். அதுதான் புத்திசாலித்தனமானது’ என்றான் டுன்டுஷ்.
‘இல்லை, அவர்கள் என்னிடம் பொன் எதிர்பார்க்க மாட்டார்கள்’ என்றான் உமார்.
‘ஓ! நான் மறந்துவிட்டேன் உங்கள் பொருள்களைத்தான். அவர்களுடைய ஆள் அக்ரோனோஸ் கடத்திக் கொண்டு போய்விட்டானே! இருந்தாலும், அவர்கள் இன்னும் எதிர் பார்க்கலாம்!”
‘இல்லை, ஜபாரக்கினுடைய சாவிற்கு அவர்கள்தான் ஈடு கொடுக்க வேண்டும்! அப்படித்தான் நடக்கப்போகிறது!’
‘தலைவரே, நீங்கள் என்ன அவர்களை எதிர்க்கப் போகிறீர்களா? நேரிலே பாயும் வேங்கைப் புலியை எதிர்க்கலாம். மறைந்து வரும் பாம்பை நாம் எப்படிக்கண்டு பிடித்துக் கொல்லமுடியும்? இந்த மருந்து தின்னும் கூட்டத்தார்.
ஒட்டகக்காரர்களாகவும், குதிரைக்காரர்களாகவும், வியர்பாரிகளாகவும், சாமியார்களாகவும் பலவிதமான உருவங்களிலே நாட்டிலே உலவுகிறார்கள்.
உங்கள் வீட்டிலேகூட, அவர்களைச் சேர்ந்தவன் ஒருவன் வேலைக்காரனாக இருக்கக்கூடும்! இந்த காணர்ம்ற்போன் ஐந்து மனிதர்கள், மக்களுக்கு நன்றாகத் தெரிந்த பிரபல் வியாபாரிகள், எப்படி மறைந்தார்கள் என்று தடங்கூடத் தெரியவில்லை. நகரத்தைவிட்டு வெளியேறவில்லை என்று நான் நிச்சயமாக கூறமுடியும். ஜபாரக்கைப்போல் அவர்கள் கொல்லப்பட்டதர்கவும் இதுவரை தெரியவில்லை. அவர்கள் என்ன ஆனார்களென்பதே மர்மமாயிருக்கிறது. மேன்மை தாங்கிய தலைவரே, இந்த மனிதர்களுடன் மோதிக் கொள்ளாதீர்கள்’ என்ற டூன்டுஷின் எச்சரிக்கைக்குப் பிறகு, உமார் கூறினான்.
‘அவர்கள் தந்திரத்தையும் மாயக்கண்கட்டு வித்தையையும் உபயோகிக்கிறார்கள் அவர்களுடைய ஆயுதமான இரகசியத்தை அடிப்பதற்கு அடித்து உடைப்பதற்கு ஒரு வழியிருக்கிறது.’
‘நீங்கள் அவர்களைத் தேடப்போகிறீர்களா?’
‘இல்லை, அவர்கள் தாங்களாகவே வெளிவரப் போகிறார்கள்.’
உமாரிடம் ஏதோ இரகசியமான சக்தியிருக்கிறது என்பதை டுன்டுஷ் நம்பினான். உமார் மாயத்தை எதிர்க்கும் மாயாவாதி என்று எண்ணினான்.
‘தலைவரே! இதுவரை நான் சொன்ன விஷயங்களுக்கே என் உயிர் அடமானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மறைந்திருக்கும் சக்திகளோடு நான் மோதிக்கொள்ள விரும்பவில்லை எனக்கு விடை கொடுங்கள்’ என்று கூறிவிட்டு வெளியேறினான்.
42. செத்தவன் பேசினான்! பேசினவன் செத்தான்!
ஜம்மி மசூதியிலே கடைசித் தொழுகை நடந்து கொண்டிருந்தது, நூற்றுக்கணக்கான மத நம்பிக்கையாளர்கள் எல்லாம் வல்ல இறைவனான அல்லாவை நோக்கித் தங்கள் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தான் ஓர் அராபியன். கூட்டம் வெளியேறியபோது, அவனும் வெளியேறினான். மசூதிக்குப் பின்புறமுள்ள வீதியில் திரும்பி மூன்றாவது வீட்டிலேபோய்க் கதவைத் தட்டினான்.
கதவோரத்திலே இருந்த ஒரு குருடன், ‘நீயார்’ என்று கேட்டான்.
‘அக்கினி புத்திரனுடைய வீடு இதுதானே?’
‘ஆம்! அக்கினி புத்திரனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?’
‘சொர்க்கத்தைக் கண்டுவந்த ஒரு மனிதன் இங்கே இருப்பதாகக் கூறினார்கள்.’
‘சொர்க்கமா, சொர்க்கமா?’ என்று கேட்ட குருடன் பேசாமல் இருந்தான். அவன் எதுவும் பேசாமல் போகவே, அராபியன் கதவைத் திறந்தான். இருட்டிலே வழி தெரியாமல் கையைநீட்டிக் கொண்டேபோன அந்த அராபியன் ஒரு திரை தட்டுப்படவே அதை இழுத்து அகற்றினான்.
உடனே அவன் முகத்துக்கு நேரே ஒரு மெழுகுவர்த்தி நீட்டப்பட்டது. அந்த மெழுகுவர்த்தியை வைத்திருந்த சாமியார் ஒருவன், அந்த அராபியனை நன்றாக உற்று நோக்கிவிட்டுத் திருப்தியடைந்தவனாக உள்ளே செல்ல அனுமதித்துவிட்டு மறுபடியும் திரையை இழுத்துவிட்டு அங்கேயே நின்று கொண்டான். அராபியன் உள்ளே சென்றான்.
அங்கே இருந்தவர்களெல்லாம் ஒரு திரையை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திலே ஒரு சாமியார் நின்று தன்மாரிலே அடித்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தான். அராபியன் வேடத்திலேயிருந்து உமார் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தான். அங்கே யாரும் ‘அர்ப்பணம் செய்தவர்கள்’ இல்லை.
எல்லோரும் நகரத்து மக்களே. அவர்களிலே ஒரு சிலர் அரசாங்கப் படைவீரர்கள் இருந்தார்கள். நாலைந்து முல்லாக்கள் கூட இருந்தார்கள். புதுமையான கருத்துக்களை வெளியிட்டால் மறுக்கும் முல்லாக்கள் இப்படிப்பட்ட மாயமான விஷயங்களை ஆலலோடு காண வந்திருக்கிறார்களே என்று எண்ணிய உமாருக்கு வருத்தமாக இருந்தது.
அந்தத் திரையோரத்திலே ஒரு சாமியார் இருந்து, மறைந்துபோன மாவீரன் ஹூசேனுக்காக மாரடித்துக் கொண்டிருந்தான்.
‘ஹுசேன் எவ்வாறு இறந்தான்? வாளால் வெட்டப்பட்டான். அவன் குருதியைத்தரை குடித்துவிட்டது. ஹூசேனுக்காக ‘அனுதாபப்படுங்கள்! இதோ நான் அவனுக்காக மாரடித்துக் கொள்ளுகிறேன்.’
இப்படி மந்திரம் கூறிக்கொண்டே மாரடித்துக் கொண்டான். கூட்டத்தில் இருந்தவர்களும் அவனோடு ஒத்து மாரடித்துக் கொண்டார்கள். அவர்களும் அந்த மந்திரத்தை உச்சரித்தார்கள். ஒரு சிறு கணப்பிலிருந்து கிளம்பியபுகை அறையிலே ஒரு விதமான வாடையையுண்டாக்கியது.
மாரடித்துச் சுற்றிக்கொண்டிருந்த சாமியார், திடீரென்று சுற்றுவதை நிறுத்திவிட்டு, ‘ஒ! செத்தவன் குரல் பேசுகிறது!’ என்று கூவிக்கொண்டே தன் பின்னால் இருந்த திரையை இழுத்து விட்டான். திரை மறைந்திருந்த இடத்தில் ஒரு சிறு அறை அவர்களுக்குத் தென்பட்டது.
அதன் நடுவிலே விளக்குகள் எரிந்தன. அந்த விளக்குகளுக்கு அப்பால் தரையிலே ஒரு பெரிய வெண்கலப் பாத்திரம் இருந்தது. அதிலே பாதிவரை இரத்தம் நிறைந்திருந்தது. அந்த இரத்தத்துக்கு மேலே ஒரு மனிதனுடைய தலை தெரிந்தது.
அந்த தலையோடு நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது. அந்த மண்டையின் கண்கள் முடியிருந்தன, இரத்தத்துக்கு மேலே வெறும் தலையை மட்டும் கண்ட மக்கள் ஆச்சரியத்தால் கூச்சலிட்டார்கள்.
‘அமைதி! அமைதி!’ என்று சாமியார் கூட்டத்தை அடக்கினான்.
அந்தத் தலையின் கண்கள் திறந்து கொண்டன. இடமிருந்து வலம் அது திரும்பிப்பார்த்தது. இந்த பயங்கரக்காட்சியைக் கண்ட கூட்டம் பேச்சு மூச்சற்றுப் பிரமித்துப்போய் இருந்தது.
அந்தத் தலையின் வாயுதடுகள் அசைந்தன. பேசத் தாடங்கின:
‘உண்மையுள்ளவர்களே! கண்ணுக்குத் தெரியாத சொர்க்கத்தின் கதையைக் கேளுங்கள்’ என்று சொல்லித் தான் சொர்க்கத்துக்குப்போன கதையை எடுத்துச் சொல்லியது.
கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் அதிசயத்தில் மூழ்கியிருந்தார்கள். ஆனால், உமார் ஆராய்ச்சிசெய்து காண்டிருந்தான். குரல், அந்தத் தலையின் தொண்டையிலிருந்துதான் வந்தது.
ஆனால், அந்தத்தலை நிச்சயமாக உயிருள்ள மனிதனுடைய தலையே என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. தந்திரமாக அந்த மனிதனுடைய உடலை மறைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.
முடிந்ததும் அந்த சாமியார் திரையை இழுத்து மறைத்து விட்டான்.
அதிசயம்! அதிசயம்! என்று ஒரு முல்லா கூவினார். அந்த சாமியார் புன்னகையுடன் கூட்டத்தை நோக்கினான்.
‘அத்தாட்சி காட்டு! இது உண்மையில் அதிசயமாக இருந்தால் அத்தாட்சி காட்டு’ என்று ஒரு சிப்பாய் கூவினான்.
‘கம்மாயிரு, அத்தாட்சி இதோ காட்டுகிறேன்!’
எல்லாருடைய கண்களும் தன்னையே நோக்கும்படி சிறிது நேரம் நின்றான். பிறகு திரையை இழுத்தான். நேராக அந்த வெண்கலச் சட்டியின் அருகேசென்று, தன் இருகைகளாலும் அந்தத் தலையின் இருகாதுகளையும் பிடித்து மேலே தூக்கினான். முன்னுக்கு வந்து எல்லோருக்கும் தெரியும்படி அதைத் திருப்பிக்காட்டிவிட்டு மறுபடி சட்டியிலே வைத்தான். அந்தத் தலையைத் தனியே பார்த்தமக்கள்
‘நம்புகிறோம் நம்புகிறோம்!’ என்றார்கள்.
உமார் எழுந்து அந்தத் திரையின் அருகிலே போய் நின்று, தன் கைகளைத் தூக்கி கூட்டத்தை அமைதிப்படுத்திப் பேசத் தொடங்கினான்.
நண்பர்களே! இது அதிசயமல்ல! வெறும் கண்கட்டு வித்தைக்காரனின் தந்திரக் காட்சிகள்! இறந்துபோன மனிதன் பேசுவதில்லை! ஆனால், சற்றுமுன் உயிருடனிருந்து பேசிய மனிதன், நமக்கு அத்தாட்சி காட்டுவதற்காகக் கொல்லப்பட்டுவிட்டான்.
பாருங்கள் என்று கூறிக்கொண்டே, அந்தச் சட்டியை அப்புறப்படுத்தினான். அந்தச் சட்டிக்குப் பக்கத்திலே தரையிலே ஓர் அகன்ற துவாரம் இருந்தது. அந்த சாமியார் கோபத்துடன் முணுமுணுத்தான், கூட்டம் தள்ளிக் கொண்டு முன்னால் வந்தது.
உமார் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒருபுறம் சுவர் ஒரத்திலே கட்டியிருந்த திரையை அகற்றினான். அந்தச் சுவர் வழியாக ஒரு பாதை தென்பட்டது. விளக்குப் பிடித்துக்கொண்டே, அந்தப்பாதை வழியாகக் கீழே இறங்கிச் ஒரு இடத்திலே கால் வழுக்கியது. கீழே குனிந்து பார்த்தால் இரத்தம்.
‘உண்மையைத்தான் கண்டுபிடித்து விட்டீர். ஒய் அராபியரே! இங்கு கொலை நடந்திருக்கிறது!’ என்று கூட வந்த அந்தச் சிப்பாய் கூவினான். இன்னும் பலர் அந்தப்பாதை வழியாக வந்தார்கள். ‘இரத்தம் இருக்கிறது; தலை இப்பொழுதுதான் வெட்டப்பட்டிருக்கிறது; ஆனால், உடலை எங்கும் காணவில்லையே’ என்று சிப்பாய் தேடினான். கையிலிருந்த விளக்கின் வெளிச்சம் ‘அர்ப்பணம் செய்தவர்கள்’ உடையில் இருந்த ஒரு முண்டத்தின் மேல்பட்டது.
அந்த முண்டம் படிக்கட்டின் கீழே கிடந்தது. உள்ளேயுள்ள நிலவறைகளிலே புகுந்து பார்த்தபோது, ஓர் அறையிலே ஐந்து முண்டங்கள் கிடந்தன. தலைகளைக் காணவில்லை. ஒரு முல்லா அந்த முண்டங்களின் ஆடையைப் பார்த்து, ‘காணாமற்போன ஐந்து, வணிகர்களின் இவை யென்று அடையாளம் கூறினார். ‘அந்தக் கொலைகார நாய்களைப் பிடியுங்கள்’ என்று கூவினார். கூட்டம் அவர்களைத் தேடியது.
ஆனால், அந்த மாயவாதிகள் இந்நேரம் எங்கே ஓடி ஒளிந்தார்களோ அந்தக் குருடன் மட்டும் ‘கூட்டாளிகளே! என்னை விட்டுவிட்டுப் போகாதீர்கள்!’ என்று கத்திக் கொண்டு வாசற்படியிலே இருந்தான்.
உமாருக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. உயிர்த்துணையாக இருந்து இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்ட அந்த ஜபாரக்கின் சாவு அவன் மனத்தைவிட்டுப் போகவில்லை.
43. தலையிட்டால் கொலை நடக்கும்!
அடுத்த நாள் காலையில் ஊர் முழுவதும் இரவு நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சாகவேயிருந்தது. உண்மையான மதப்பற்றும், அரச பக்தியும் அரசாங்க நலன் கருதும் எண்ணமுமுள்ள ஊழியரான நிசாம் அல்முல்க் அவர்கள், தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல், சுல்தான் மாலிக்ஷா அவர்களின் இருப்பிடத்திற்கு வந்தார்.
‘என் சுல்தான் அவர்களே! கட்டளையிடுங்கள்! அந்தக் கொலைகாரர்களான ஏழாவது கொள்கைக்காரர்களை வேட்டையாடி, நம் சாம்ராஜ்யத்திலேயே இல்லாமல் தொலைத்து விடுகிறேன். தங்கள் நிழலில் வாழ்வோரிடமே கப்பம் வசூலித்துக் கொண்டு, தங்களுக்கு அறைகூவும் அவர்கள் தலைவன் என்ன ஆகிறானென்று பார்க்கலாம்!’ என்று இறைஞ்சினார்.
‘நான் தொந்தரவு கொடுக்கும் ஒவ்வொரு நாயையும் விரட்டிக் கொண்டிருக்க முடியாது’ என்று சிறிதுகூட நிலைமையை உணராமல் சுல்தான் பதில் அளித்தார்.
நிசாம், அவர்களுடைய கழுகுக்கூட்டைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும், பயங்கரச் செயல்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
சுல்தானுடைய ஆட்சி வீழ்ந்து புதியஅரசு எழப்போவதாக ஹாஸான் தீர்க்கதரிசனம் கூறியிருப்பதையும் கூறினார். அதற்கு, சுல்தான் ‘ஒவ்வொரு புதிய தீர்க்கதரிசியையும் தீர்த்துக் கொண்டிருப்பதாக இருந்தால் நான் வேட்டையாடுவது எப்போது? மற்ற காரியங்களைச் செய்வது எப்போது’ என்று கேட்டார்.
நிசாம் என்ன சொல்லியும் சுல்தான் கேட்கவில்லை. ஒருமுறை சுல்தான் தன்மீது அவநம்பிக்கை கொண்டபோதே, தன்னுடைய செல்வாக்குப் போய்விட்டது என்பதைத் தெரிந்து கொண்ட நிசாம், சலாம் செய்து விடைபெற்றுத் திரும்பிவிட்டார்.
விதியின் சக்கரம் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. காற்றடித்து அணைந்து போகும் விளக்குகள் போல எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தைவிட்டுப் போயின. புதிய உயிர்கள் தோன்றின. இஸ்பகானிலிருந்த சுல்தான், நிசாப்பூர் நோக்கிப் புறப்பட்டார். நிசாம், பதவியைவிட்டு விலகிவிட்டாலும் தன் குறிப்புப் புத்தகங்களிலே பலபுதிய ஏடுகளை எழுதிக் கொண்டிருந்தார்.
நிசாப்பூருக்குச் செல்லும் வழியிலே சுல்தான் கூடாரம் அடித்திருந்தார். ஒருநாள் அந்தக் கூடாரத்திற்கு நேரே வானத்தில் ஒருவால் நட்சத்திரம் தோன்றியது. உமாரை அழைத்துவரச் சான்னார். இதன் அறிகுறி என்ன என்று கேட்டார். ஏதோ அபாயத்தின் அறிகுறி என்று உமார் சொன்னான்.
சுல்தானுக்கு அபாயமாகத் தோன்றியது ஹாஸான் ஒருவனே! வேறு எந்த அபாயமும் அந்தச்சமயத்தில் இல்லை. எனவே, ஒரு தளபதியை அழைத்து, பட்டாளத்தின் ஒரு பகுதியுடன் சென்று காஸ்வின் நகருக்கு வடக்கேயுள்ள மலைகளில் அமைந்துள்ள கழுகுக்கூடு என்ற கோட்டையை நிர்மூலமாக்கிவிட்டு வரும்படி ஆணையிட்டார்.
நிசாப்பூருக்குச் செல்ல அவருக்குப் பயமாக இருந்தது. எனவே வேட்டையாடும் சாக்கில் கூடாரத்திலேயே தங்கினார். உமாரையும் தன்னைவிட்டுப் பிரியலாகாதென்று ஆணையிட்டார்.
நள்ளிரவிலே அது நடந்தது. பிரபுக்கள் வாழும் பகுதியிலே ஓர் இளைஞன் வந்தான். நிசாம் அல்முல்க் அவர்களுடைய வீட்டைத்தேடிச் சென்று, ஏதோ வேண்டுகோள் விண்ணப்பிக்க வந்திருப்பதாகக் கூறினான். நிசாம் அவர்கள் எதிரில் வந்ததும், மற்றவர்கள் கவனித்துத் தடுக்கும் முன்பாகக் கத்தியால் குத்தி விட்டான். அந்த முதியவர், வாழ்நாளெல்லால் அக்கறை கொண்ட அந்தப்பெரிய மனிதர் வாழ்வின் கதை இவ்வாறாக முடிந்தது.
பிடிபட்ட அந்த இளைஞன் உடல், காவல்காரர்களால் பிய்த்தெறியப்பட்டது. சொர்க்கத்தைப்பற்றி ஏதோ சொல்லிக் கொண்டு அவன் உயிர் விட்டான்.
இதைக் கேள்விப்பட்ட சுல்தான், துர்க்குறியின செயல் இவ்வாறு நிறைவேறிவிட்டது என்று வருத்தத்துடன் கூறினார்.
நிசாமை நினைக்கும்போது அவருக்குத் தாங்கமுடியாத துக்கம் ஏற்பட்டது. நிசாமின் குறிப்பேடுகளைப் படித்துப் பார்த்த அவர் ஏற்கெனவே அனுப்பிய படைகளுடன், மேற்கொண்டு சில படைகளையும் கழுகுக்கூடு நோக்கியனுப்பினார்.
கொலைகாரர்களின் இருப்பிடத்தைக் குலைத்தெறியும்படி உத்தரவிட்டார் நிசாமின் குறிப்புகள் அந்தப் புதிய மதத்தின் பயங்கரத் தன்மையை அவருக்கு நன்றாக உணர்த்தின.
உமாரை நோக்கி,‘ நிசாம் அல்முல்க் உண்மையான ஊழியர். நான் இங்கேயேயிருந்து அவருக்காக ஒருமாதம் துக்கம் கொண்டாடப் போகிறேன். நீ வேண்டுமானால் நிசாப்பூருக்குப் போகலாம்’ என்று கூறிவிட்டார்.
ஹாஸானுடைய கோட்டை தொடர்ந்து தாக்கப்பட்டது. ஏதோ ஒர் இரகசிய வழியாக உள்ளுக்கும் வெளியேயும் மாறி மாறித்திரிந்தான் ஹாஸான். தான் எப்போதும் கோட்டைக்குள்ளேயே இருப்பதாக மற்றவர்களை நம்பவைத்தான். அவனுடைய ஆட்கள், நாடெங்கும், புதிய தூதர் மாறிவரும் நாள் ருங்கிவிட்டதென்று தங்கள் பொய்ப் பிரசாரங்களை நடத்தினார்கள்.
மாலிக்ஷாதான் நிசாமை ஆள் வைத்துக் கொன்றுவிட்டார் என்று சிலர் பேசினார்கள். ஏதோ தெய்வீக சக்திதான் தன் தூதனையனுப்பிக் கொன்றுவிட்டதென்று சிலர் கூறினார்கள்.
நாடெங்கும் பலப்பல வதந்திகள் உலவத் தொடங்கின.
44. உலகம் சுற்றவில்லை; உமார், உளறாதே!
விண்மீன் வீட்டிற்கு உமார் திரும்பியதைக் கண்டு, அங்கிருந்த பேராசிரியர்கள் தங்கள் தலைவன் திரும்பிவந்ததற்காக மகிழ்ந்தார்கள்.
உமார் தான் செய்யப்போகும் புதிய ஆராய்ச்சியைப்பற்றி விளக்கிக் கூறியபோது அவர்கள், ‘இது என்ன சாதாரண விஷயம்! இதிலே ஒன்றும் அதிசயமில்லை. விளையாடும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது அதிசயமாகத் தென்படலாம்’ என்று கூறினார்கள்.
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வானவெளியில் சுற்றி வருகிறது என்ற உண்மை அவர்களுக்குப் புரிவதற்கு வெகு நேரமாகவில்லை, அவர்கள் இந்த விஷயத்தைச் சிறு குழந்தைகள் கூடப்புரிந்து கொள்ளும் என்றார்கள்.
ஆனால் அதை நிரூபிக்க உமார் மிகுந்த உழைப்பைக் கைக்கொண்டான். தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தின் வட்டச் சுவரிலே, வானத்தில் உள்ள இராசிகளின் அடையாளங்களை வரிசையாக எழுதச் செய்தான். அந்தக் கூடத்தின் தளத்தைத் தோண்டியெடுத்து நட்டநடுவிலே ஒரு பெரிய மரத்துணும், அந்தத் துணோடு சேர்ந்த ஒரு வட்டமேடையும் அமைக்கச் செய்தான்.
அந்த மேடைக்குக் கீழே ஆட்கள் நின்று தூணிலே பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு சுற்றினால் அந்த வட்டமேடையும் சுற்றும்படியாக ஓர் இயந்திரம்போல அமைத்தான்.
ஆனால் வட்டமேடை புதிதாகப் பார்ப்பவர்களுக்கு, அது ஒரு மேடை என்று தெரியாதபடி, தரையோடு தரையாக அமைக்கப்பட்டது.
உமாருடைய நண்பன், இந்துவாக இருந்த வேதாத்தி காசாலி இப்போது நிசாப்பூர் கல்லூரி தலைமைப் பேராசிரியனாக இருந்தான். இஸ்லாத்திலே சேர்ந்து பெரும் பெயரும் புகழும் அடைந்து, ‘இஸ்லாத்தின் சான்று’ என்று பெரும் சிறப்புப்பெயர் எடுத்துவிட்டான். அவன் ஒரு கருத்துச் சொன்னால் இஸ்லாமிய உலகம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய அத்தனை பெரிய செல்வாக்கு அடைந்திருந்தான்.
எனவே உமார் அவனுடைய ஆதரவைத் தேடிக் கொண்டால் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு நாடெங்கும் செல்வாக்கு ஏற்பட்டு முல்லாக்களின் ஆதரவும் கிடைக்கும் என்று எண்ணினான். அதோடு அந்த வேதாந்த உண்மைகளை ஆய்ந்து ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை வாய்ந்தவன் என்று உமார் ஏற்கெனவே பழகித் தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் காலப்போக்கு அவனுக்குப் புகழளித்ததோடு மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது என்பதை உமார் அறிந்து கொள்ளவில்லை!
காசாலியின் ஆதரவைப் பெறுவதற்காக அவனுக்கு விஷயத்தை விளங்க வைப்பதற்காக உமார் காசாலியை தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அழைத்தான். ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்த பேராசிரியர்கள் காசாலியை சகல மரியாதைகளோடும் வரவேற்றார்கள்.
உமாரும் தன் கையாலேயே அந்த வேதாந்திக்கு சர்பத்தும் பழங்களும் கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தான்.
வேடிக்கை பார்த்திருந்த கூட்டம் கூடத்திலே ஒரு புறத்திலே உட்கார்ந்திருந்தது. உமார், வேதாந்தியை அழைத்துச்சென்று கூடத்தின் நடுவிலே நிறுத்தி சுவர்ப்புறத்தைக் காண்பித்தான். சுவரில் இருந்த சித்திரங்களைப் பார்த்துக்கொண்டே, அந்த மேடையில் சுற்றிவந்த காசாலி ‘இதென்ன வானவீதியின் அமைப்பு இங்கே மேஷம், ரிஷபம் முதல் மீனம் ஈறாக உள்ள பனிரென்டு இராசிகளை வரைந்திருக்கிறாய். இவற்றைக் காட்டத்தானா என்னை அழைத்து வந்தாய்?’ என்று கேட்டான்.
‘இல்லை, இதோ முதல் இராசியைப் பார்த்துக்கொண்டு நில்லுங்கள், அந்த மேஷத்தையே பார்த்துக் கொண்டு அசையாமல் நில்லுங்கள். ஓர் அடிகூட நகராதீர்கள், பயப்படாமல் நில்லுங்கள், எந்தவிதமான துன்பமும் ஏற்படாது. ஆனால் இந்த இராசிகளும் ஏன் இந்தக் கோட்டை முழுவதுமே தங்களைச் சுற்றிவரப்போகிறது’ என்று கூறிவிட்டு உமார் தன் இருக்கைக்குச் சென்றான்.
கோபுரமாவது, சுற்றுவதாவது உமார் விளையாட்டுக்குச் சொல்லுகிறான் என்று காசாலி நினைத்தான். ஆனால் உமார் தன் இருக்கையில் இருந்தபடியே கைகளைத் தட்டினான். காசாலியின் காலுக்குக் கீழே, ஏதோ கிரீச்சிட்டது. அவன் உடல் ஒரு குலுங்குக் குலுங்கியது. என்ன ஆச்சரியம், கோபுரம் அப்படியே தரையோடு சேர்ந்து சுழலத் தொடங்கியது. நேரம் ஆகஆக வேகமாகச் சுழன்றது, கோபுரத்தோடு சேர்ந்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய பன்னிரெண்டு ராசிகளும் சுழன்றன. காசாலி பயந்துபோய்க் கூச்சலிட்டான். ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. காசாலி கீழே விழுந்தான், சுற்றுவதும் நின்றது.
‘ஆய்வல்லா! ஆண்டவனே! உண்மையாகவே இந்தக் கோபுரம் சுழன்றதே!’ என்று வியந்தான்.
அவனுடைய மாணவன் ஒருவன் ‘ஆசிரியரே! கோபுரம் சுழலவில்லை. நீங்கள்தான் சுழன்றீர்கள். நாங்கள் பார்த்தோம்!’ என்று கூறினான்.
‘இல்லை, நான் நகரவேயில்லை.’
நீங்கள் நகரவேயில்லை, நீங்கள் நின்ற இடம் சுழன்றது. இத்தனை பெரிய கட்டிடம் சக்கரம்போல் சுழலுமா? சுழலும்படி செய்யத்தான் முடியுமா? என்று உமார் கூறினான்.
‘நான் நின்ற இடம் எப்படிச் சுழலும்?’
‘இதோ இந்த மரத்துணைக் கீழே இருந்தபடி சுற்றினால் நீங்கள் இருந்த இடம் சக்கரம்போல் சுழலும். நான் கையைத் தட்டியதும், கீழே இருந்த என் வேலைக்காரர்கள் இதை சுழற்றினார்கள்!’
காசாலி, அவமான உணர்ச்சியுடன், ‘நீ ஏன், என்னைக் கூட்டிவந்து இப்படிப் பிள்ளை விளையாட்டுக் காண்பித்தாய்?’ என்று கேட்டான்.
‘ஏனென்றால், இந்த நாட்டிலேயே நீங்கள்தான் பெரிய அறிவாளி. தாங்கள் கண்ணால் கண்டதை உலகத்துக்கு எடுத்துச் சொன்னால், தங்கள் பேச்சை உலகம் காது கொடுத்துக் கேட்கும். முதலில் நீங்கள் நடந்து சுற்றிப் பார்த்தீர்கள். இரண்டாவது தடவை கோபுரம் சுழல்வதுபோல் காட்சியளித்தது, எதனால்?’
‘நான் நகரவில்லை. ஆனால், தந்திரமாக எனக்குத் தெரியாமலே நான் சுழற்றப்பட்டேன். இந்தத் தந்திரம்தான் நீ மதத்துரோகிகளிடம் படித்து வந்த பாடமா?’ என்று கோபத்துடன் காசாலி கேட்டான்.
‘ஒவ்வொருநாள் இரவும், நட்சத்திரக் கூட்டங்கள் உங்களைச்சுற்றி வருவதாகத் தோன்றியது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் அசையவேயில்லை. ஆகையால், நட்சத்திரங்கள் என்னைச்சுற்றி வருகின்றன என்று சொல்கிறீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல, நட்சத்திரங்கள் அசையவில்லை. அவை இருந்த இடத்திலேயே இருக்கின்றன. நாம் இருக்கும் பூமிதான் வானவீதியில் சுழன்று வருகிறது. ஆனால், அது நமக்குத் தெரியாமல் சுழலுவதால் நாம் நட்சத்திரங்கள் சுற்றுகின்றன என்று எண்ணுகிறோம். உண்மையில் பூமிதான் சுழன்று வருகிறது என்று உமார் விளக்கினான்.
‘இல்லை, வானவெளியில் நடுமத்தியிலே, என்றும் அசையாமல் இருக்கும்படிதான் அல்லா இந்தப் பூமியை ஏற்படுத்தி யிருக்கிறார்!’ என்று காசாலி உறுதியாகக் கூறினான்.
‘இஸ்லாத்தின் சான்று - எங்கள் பேராசிரியர். அவரை உம்முன் மண்டியிடச் செய்வதற்காக நீர் தந்திரம் செய்திருக்கிறீர். வானசாஸ்திரியாரே! வேண்டாம் இந்த விபரீத புத்தி!’ என்று காசாலியின் மாணவன் ஒருவன் கத்தினான்.
‘அல்லாவின் அருளின்படிதான் எல்லாம் நடக்கும். அல்லா, பூமியைச்சுற்றி வரும்படிதான் நட்சத்திரங்களை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று மற்றொருவன் கூவினான்.
45. எரியும் நெருப்பைத் தனிப்பது மதுவே!
சாம்ராஜ்யமெங்கும் இந்தச் செய்தி பரவியது. இஸ்லாத்தின் சான்றை அரசனுடைய வானசாஸ்திரி போட்டிக்கு அழைத்ததாகவும், யாரிடம் சக்தி அதிகம் என்று பந்தயம் போட்டதாகவும், மாய தந்திரத்தினால். உமார் காசாலியை மடக்க முயற்சித்ததாகவும், ஆனால், காசாலி, திருக்குரான் வாக்கியங்களை ஓதி, உமாரை அவமானமடையச் செய்து தன் சக்தியை நிலைநாட்டி விட்டதாகவும், அங்காடிச் சந்தைகளிலே மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், உமார் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தான். இந்தச் செய்திகள் அனைத்தும் கூடுதலாகவும் குறைத்தும் இஷாக் மூலமாக அயீஷா தெரிந்து கொண்டாள்.
ஒருநாள் நிசாப்பூரிலிருந்து நாலாதிசைகளிலும் உள்ள பல நகரங்களுக்கும் தபால் குதிரைகள் கனவேகமாகப் பறந்தன. தூசி கிளப்பிக் கொண்டு பாய்ந்து செல்லும் செய்தியாளர்களை அங்கங்ளேயுள்ள மக்கள் என்ன செய்தியென்று கேட்டார்கள்.
‘சுல்தான் மாலிக்ஷா இறந்துவிட்டார்’ என்ற செய்தி சாம்ராஜ்யமெங்கும் காட்டுத் தீ போலப் பரவியது. வேட்டைக்குச் சென்ற மன்னர், நோய்வாய்ப்பட்டார். மருத்துவர்கள் முயற்சியெல்லாம் பலிக்காமல் உயிர் நீத்துவிட்டார். பால்க்கிலிருந்து பாக்தாது வரையிலே எல்லா நகரங்களிலும் பரபரப்பாயிருந்தது.
கடைகள் அடைக்கப் பெற்றன. அதிகாரமும் சக்தியும் உள்ள அமீர்கள் ராணுவ வீரர்களைத் தங்கள் கைவசப் படுத்திக் கொண்டார்கள். தத்தம் முகாம்களிலே தங்களால் முடிந்தவரை சேனைகளைத் திரட்டிக் கொண்டார்கள்.
கழுகுக் கூட்டை முற்றுகையிட்டிருந்த படைகள் மாலிக்ஷாவின் ஒரு மகனான பார்க்கியருக் என்பவனுடைய சேனையில் வந்து சேர்ந்து கொண்டன. நிசாம் அல் முல்க்கின் மக்கள் பார்க்கியருக்கை ஆதரித்தார்கள். அவனையே அரசனாக்க முயற்சித்தார்கள்.
அதே சமயத்தில், மாலிக்ஷாவின் மற்றொரு மகனான முகமதுவை பாக்தாது தேசத்து காலிப், சுல்தானாகப் பிரகடனம் செய்தார். இதனால், இரண்டு இளவரசர்களுக்கும் ஊடே, கலகம் ஏற்பட்டு உள் நாட்டுக் குழப்பம் உண்டாகியது. அதே சமயம், கழுகுக்கூட்டு முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஹாஸான், உள்நாட்டுக் குழப்பம் நடக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழி துறைகளை ஆராய்வதற்கு யாருக்கும் தெரியாமல் வெளியேறி கெய்ரோவில் உள்ள தன் எகிப்தியத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப் போய்விட்டான்.
ஆயீஷா, காசர் குச்சிக் மாளிகையைவிட்டு வெளியேறி, இஷாக்கையும், ஆயுதம் தாங்கிய பல வீரர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, உமார் இருக்கும் நிசாப்பூர் அரண்மனைக்கே வந்துவிட்டாள்.
நிசாப்பூர் அரண்மனை சிறியதாக இருந்தாலும், உமாருடன் கூடஇருக்க வேண்டுமென்று அவள் வந்து விட்டாள். உள்நாட்டுக் கலகம் தொடங்கிய பிறகு, அரசாங்கத்துப் பொருளாளன் உமாருக்குக் கொடுத்து வந்த சம்பளத்தை நிறுத்திவிட்டான்.
அந்தச் சமயத்தில் இளவரசன் பார்க்கியருக், பாக்தாதுச் சேனையை ஒரு போரிலே தோற்கடித்து விட்டான். கவிஞன் மூ இஸ்ஸி பார்க்கியருக்கின் வெற்றியைப் புகழ்ந்து பரணிபாடி, இளவரசனிடம் நிறையப் பொருள் பெற்றான். அதே சமயம் தன் வருத்தத்தைத் தெரிவித்து இரங்கற்பா ஒன்று மகமதுவுக்கு அனுப்பினான்.
ஒருவேளை, நாளையப் போரிலே, அவன் வெற்றி யடைந்துவிட்டால், அவனுடைய ஆதரவு வேண்டுமே என்று!
அயீஷா, இதைச் சுட்டிக்காட்டி, உமாரை பார்க்கியருக் முகாமிற்குச் செல்லும்படி தூண்டினாள். அங்கே சென்று சோதிடம் கூறினால், வரும்படி கிடைக்கலாமே என்று அவள் யோசனை கூறினாள். இந்த மாதிரிச் சமயத்தில்தான் சோதிடர்களுக்குக் கிராக்கியுண்டே என்று அவள் எண்ணினாள்.
ஆனால், உமார் மறுத்து விட்டான்.
மாலிக்ஷா இறந்தது முதல் அவன் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தான். ரஹீம்-யாஸ்மி-ஜபாரக் இவர்களெல்லாம் போனது போல் மாலிக்ஷாவும் போய்விட்டார்.
இப்படி துக்கம் கொண்டிருந்த அவனுக்குப் பொருள் தேடும் எண்ணம் தோன்றவில்லை.
ஒருநாள், இஸ்லாத்தின் நீதிபதிகளான காஜிகள் உமாரைத் தங்கள் சபைக்கு வரும்படி அழைத்திருந்தார்கள். அவன் புறப்படும்போது, அவனுடைய துணையாராய்ச்சியாளர்கள் ‘சாதிகளுக்குக் கோபம் வரும்படி பேசாதீர்கள்’ என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்.
நீதிபதி சபையின், சுவர்ப்புறத்து ஆசனங்களிலே வரிசை வரிசையாகக் கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
உமாருக்கு நேர் எதிரே, வெள்ளைத் தலைப்பாகைகளுடன் நீதிபதிகளான சாதிகள் அமர்ந்திருந்தார்கள். நீதிபதிகளுடன் வேதாந்தி காசாலியும் உலேமா சபையின் தலைவரும் அமர்ந்திருந்தார்கள். அவை முழுவதும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.
சபை நடுவில் தனக்காக ஒதுக்கப் பெற்ற சிறிய இடத்திலே, உமார் நீதிபதிகளின் முன்னாலே மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.
உமாரை அழைத்தபோது அவர்கள் காரணம் எதுவும் சொல்லிவிடவில்லை. ஆனால், சபைக்குள்ளே நுழைந்ததுமே அவன் தன்னை விசாரிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். அங்கு கூடியிருந்தவர்களுடைய தோற்றமே அதை எடுத்துக்கூறியது, சுற்றியிருந்தவர்களுடைய முகத்திலே அத்தனை நாளும் உள்ளத்துக்குள்ளே மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அத்தனை வெறுப்பும் வெளிப்பட்டுக் காட்சியளித்தது.
‘பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம் கருணையும் இரக்கமும் கொண்ட அல்லாவின் பெயரால்’ என்று வயது முதிர்ந்த ஒரு நீதிபதி எழுந்து கூறினார்.
அடுத்து ஒரு முல்லா, எழுந்து உமாரின்மேல் உள்ள குற்றச்சாட்டுகளைப் படித்தார்.
கேள்வி கேட்பாரற்ற முறையிலே மத விரோதிகளான கிரேக்கர்களின் போதனையின்படி, மத நம்பிக்கையில்லாத இந்த ஆசிரியரால் இயற்றப்பட்ட புத்தகங்களுக்கு முதல் நீதி வழங்கவேண்டும். ஏனெனில் அவை தற்பொழுது, இஸ்லாமிய தேசம்முழுவதும், பள்ளிகளிலே பயிலப்பட்டு வருகின்றன.
பலப்பல விஷயங்களிலே இருந்தும் இவன் மத மறுப்புவாதி என்பது தெளிவாகத் தெரிகிறது. முதலாவதாக, இஸ்லாத்தின் சரியான பஞ்சாங்கத்தை ஒதுக்கிவிட்டு, மத விரோதிகளின் மனப்போக்கின்படி காலத்தைப் புதிதாக அளந்து, புதிய பஞ்சாங்கத்தை நாட்டில் ஏற்படுத்தும்படி சுல்தானைக் கட்டாயப்படுத்தியது ஒரு குற்றம்.
அடுத்துத் தன்னுடைய ஆராய்ச்சிக்கூடத்தை இடுகாட்டின் அருகிலே வைத்துக்கொண்டு, புதைகுழிகளுக்கிடையே அடிக்கடி சென்று இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொண்டது ஒரு குற்றம்.
அடுத்து, ஆண்டவனுடைய அருள்வாக்கை மறுத்து வானவீதியின் மத்தியில் பூமி அமைந்திருக்கவில்லை என்றும், முகமது பெருமான், தோன்றி மறைவதாகக் கூறிய நட்சத்திரங்கள் அசையவேயில்லை என்று கூறிக்கடவுள் நிந்தனை செய்தது ஒரு குற்றம்.
இந்தக் குற்றங்களை விவாதிக்க வேண்டுமென்ற தேவையில்லையென்றும், இந்த மதத்துரோகி, இந்தக் குற்றங்களைச் செய்தான் என்பது நாட்டிலேயுள்ள நம்பிக்கையுள்ளவர் அனைவருக்கும் தெரிந்த விஷயமென்றும், இப்பொழுது விவாதிக்க வேண்டியதெல்லாம், இந்த மதத்துரோகியினுடைய புத்தகங்களுக்கும், இந்தப் புத்தங்களை எழுதிய ஆசிரியரான உமார்கயாமுக்கும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்பதேதான். நீதிபதிகள் ஆராய்ந்து சரியான தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்லி நிறுத்தினார் அந்த முல்லா.
முல்லா உட்கார்ந்ததும், பல்கலைக் கழகத்திலே டாக்டர் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் எழுந்து, முல்லா கூறிய குற்றச்சாட்டுகளை யாரும் மறுப்பதற்கில்லையென்றும்,
ஆனால், பலரும் அறியாத ஒரு பெருங்குற்றம் மற்றொன்று இருக்கிறதென்றும் கூறினார். எல்லோரும் ஆவலுடன் அவர் கூறப்போவதை எதிர்பார்த்தார்கள்.
‘உமார் கயாம் அவ்வப்போது நாலடிப் பாடல்கள் பல எழுதியிருககறான. அவை ஒரு புத்தகமாகத் தொகுக்கப் படவில்லை. ஆனால், மூலை முடுக்குகளிலேயுள்ள பலர் இவற்றை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். திருக்குரானுக்குச் சவால்விடும் பாடல்களாக இதைக் கையாளும் சிலரும் இருக்கிறார்கள்,
இந்தப் பாடல்கள் சிலவற்றை நான் தொகுத்து வைத்திருக்கிறேன். நம்முடைய மதம், கலாசாரம், பழக்கவழக்கம் இவற்றிற்கெல்லாம் விரோதமான முறையிலே இந்தப் பாடல்கள் எழுதப்பெற்றுள்ளன. சபையினர் அனுமதித்தால் மத விரோதமான இந்தப் பாடல்களைப் பாடிக் காண்பிக்கிறேன். அதே சமயம், திருமறை கேட்டவர்கள் செவிகளிலே படும்படி என் வாயால் இந்தத் தீயயாடல்களைப் பாடும்படி நேரிட்டதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
‘பாடு, பயப்பட வேண்டாம்’ என்று அந்த முதிய நீதிபதி கூறினார்.
அந்த டாக்டர், உமார் கயாமின் ருபாயத் பாடல்களைப் பாடிவந்தார்.
யாஸ்மியைப் பற்றியும், மதுவைப் பற்றியும், விதியைப் பற்றியும், வாழ்வின் சுகதுக்கங்களையும் தான் எழுதிய பாடல்களைக் கேட்டுக் கொண்டு, உமார் புன்சிரிப்புடன் இருந்தான்.
‘இவையெல்லாம் பழிக்கப்பட்ட பாவங்களைப் பற்றியவை; ஆனால், இதோ இது, இந்தப்பாட்டு தெய்வ நிந்தனையானது, பாருங்கள்.
‘அருள்க மன்னிப்பருள் கென்றே யாமும் கூவித் தொழுகின்றோம்! அருளும் உன்றன் மன்னிப்பே யாண்டுச் சென்று சேர்ந்திடுமோ?’
உமார் வியப்புடன் நிமிர்ந்து, ‘இந்தப் பாடல் நான் எழுதியதல்ல’ என்றான்.
ஒருவரும் பதில் பேசவில்லை. காசாலி, வெறுப்புடன் உமாரைத் திரும்பிப்பாராமலே எழுந்து, கதவு நோக்கிச் சென்று வெளியேறிவிட்டான். அவர்களுடைய தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை உமார் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
உமார் எழுந்திருந்தான். அவனை நோக்கி உலேமாத்தலைவர், ‘உமார்’ நீ எதுவும் பேசவேண்டுமா?’ என்று கேட்டார்.
‘ஆம், சற்றுமுன் பாடியது என்னுடைய பாட்டல்ல. ஆனால், படிக்கப்படாத என்னுடைய பாட்டொன்று இதோ இருக்கிறது. இதைக் கேளுங்கள்:
இறுதித் தீர்ப்பு நாளன்றே
எழுமக் காலைப் பொழுதினிலே
அருகில் உள்ள பொருளோடு
யாமும் எழுவோம் என்றிருந்தால்
நறியமதுவும் அழகுடைய
நங்கை நல்லாள் ஒருத்தியும் என்
அருகில் வைத்துப் புதைத்திடுவீர்
அதுவே விருப்பம் ஐயன்மீர்!
இது நான் முன்பே பாடிய பாட்டல்ல. ஆனால், இந்தச் சமயத்தில் என்னுள்ளத்தில் எழுந்த கவிதையிது. இதுவே நான் உங்களை வேண்டுவதும்!’
கோபம்தான் அவனுக்குப் பதிலாகக் கிடைத்தது. உலேமாத் தலைவர் அவருடைய கையை உயர்த்தி, நீ வெளியே சென்றிரு. தீர்ப்பைப் பிறகு தெரிவிக்கிறோம் என்றார். காவலர்கள் உமாரை மசூதிக்கு அழைத்துச் சென்றார்கள், போகும் வழியிலே, ஒரு சாமியார், ‘கழுகுக்கூட்டிலே பாதுகாப்பு இருக்கிறது’ என்று மெதுவாகக் கூறினான்.
உமார் அதைக் காதிலே போட்டுக் கொள்ளவில்லை. மசூதியின் உள்ளேயுள்ள ஒரு கல்லின்மேல் போய் உட்கார்ந்தான். கைதியான அவனைச் சுற்றிக் காவலர்கள் நின்றார்கள். ஒரு நாள் அவனைப் பாதுகாப்பதற்காக நின்ற காவலர்கள், இன்று அவன் பறந்தோடிவிடாமல் பார்த்துக் கொள்ளச் சுற்றி நின்றார்கள்.
தீர்ப்பின் முடிவைத் தெரிவிப்பதற்கு உலேமாத்தலைவரே வந்தார்.
‘மத நம்பிக்கையில்லாத ஒருவனால் இயற்றப்பெற்றவையாகக் கருதப்பெற்று உன்னுடைய புத்தகங்களெல்லாம் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப் பெற்றன. பள்ளிக்கூடங்களிலே அவை தவிர்க்கப்படும். மீதியுள்ளவை எரிக்கப்படும்.
‘விண்மீன் வீடு பறிமுதல் செய்யப்பெற்று நிசாப்பூர் சட்டமன்றத்துக்கு உரிமையாக்கப்பட்டது. அக்கட்டிடச் சுவரைத்தாண்டி அடியெடுத்து வைக்கவோ, நிசாப்பூர் அரசாங்க எல்லைக்குள்ளே உள்ள மக்களிடம் பேசுவதற்கோ உனக்கு உரிமைகிடையாது தடுக்கப் பெற்றிருக்கிறது.
‘சரி! எனக்கு என்ன தீர்ப்பு?’
தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே சிறிதுநேரம் யோசித்துவிட்டு, அந்த உலேமாத்தலைவர், ‘ஆண்டவனுடைய சோதனையால் துன்பமுற்றுப் பைத்தியம் பிடித்துத் திரிகறாய் என்று சில நீதிபதிகள் கருதுகிறார்கள். அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது. நீ சுதந்திரமாக எங்கும் இருக்கலாம். ஆனால், நீ நிசாப்பூரையும் இஸ்லாமியக் கல்லூரிகளையும் விட்டுவிலகிச் சென்று விடவேண்டும்.’
‘எத்தனை நாளைக்கு?’
‘என்றென்றும்!’
காவலர்கள் அவனைவிட்டுப் போய்விட்டார்கள். உமார் அங்கிருந்து எழுந்து நடந்தான்.
‘மதத்துரோகி நம்பிக்கையில்லாதவன்!’ என்று யாராரோ ஏதேதோ கூறி வைதார்கள். ஒன்றையும் கவனிக்காமல், புத்தக வியாபாரிகள் இருக்கும் வீதிவழியே சென்றான்.
ஊற்றுக்கேணியின் அருகிலே வந்தான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாலே, அந்த இடத்திலே அவன் யாஸ்மிக்காகக் காத்திருந்தான்.
அப்பொழுது, யாராரோ அந்த வழியிலே போனவர்கள் எல்லோரும் விளக்கொளியில் வந்து நகர்ந்துமறையும் வெறும் நிழல்கள்போல் தோன்றினார்கள். இன்றும் பலர் அந்தப் பாதையில் நடமாடினார்கள். இப்பொழுது அவர்கள் உண்மையாகவும் தான் எவ்விதக் குறிக்கோளும் இல்லாமல் அசையும் ஒரு நிழல் போலவும் தோன்றியது. நெடுநேரம் அங்கிருந்துவிட்டு, அயீஷாவைத் தேடிவந்தான்.
அயீஷா அழுது கொண்டிருந்தாள். அவனுக்காக அழக்கூடியவள் அவள் ஒருத்திதானே! அவளுக்குப் பயமாகவும் இருந்தது. இங்கு மூலைமுடுக்கெல்லாம் மக்கள் உமாரைப்பற்றிப் பேசிக்கொள்வதைப் பார்த்தால் எந்த நேரத்தில் என்ன நேரிடுமென்று கூறமுடியாது.
எனவே அவள், இருக்கின்ற சில பொருள்களையும் பொன்னையும் எடுத்துக் கொண்டு, தன்னோடு காசர்குச்சிக் அரண்மனைக்கு வந்து விடும்படி கேட்டுக் கொண்டாள்.
ஆனால், உமாருக்கு நிசாப்பூரை விட்டுப்போக மனமில்லை. அவன் தொடங்கி வைத்திருந்த ஆராய்ச்சிகளும், செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகளும் எராளமாக இருந்தன. எல்லாம் விண்மீன் வீட்டிலே அறைகுறையாகக் கிடந்தன.
இருட்டு வரும் நேரம், இஷாக் ஒடி வந்தான். ‘தலைவரே! ஏராளமான மக்கள் விண்மீன் வீட்டைநோக்கித் திரண்டு செல்கிறார்கள். அவர்களிலே, சிப்பாய்களும், முல்லாக்களும், இன்னும் ஒன்றுமில்லாதவர்களும் பலப்பலர்.
அவர்கள் உம்பெயரைக் கூறிப்பழித்துக் கூவிக்கொண்டே போகிறார்கள். நகரத்துக் கோட்டைக் கதவுகளை உடைப்பதற்கு முன்னால், முடிந்தவரை பொருள்களை எடுத்துக் கொண்டு காசர்குச்சிக்கு ஓடிவிடுவோம், புறப்படுங்கள்’ என்றான்.
‘ஒரு குதிரைக்குச் சேணம் பூட்டி, ஆயத்தமாக்கு’ என்றான் உமார்.
குதிரையின் மேல்ஏறி விண்மீன் வீட்டை நோக்கிப் பறந்தான். மரங்களமைந்த பகுதியைவிட்டு வெளியே வந்து நெருங்கும்போது, எதிரிலே ஒரே தீப்பிழம்பாகக் காட்சியளித்தது. அவனுடைய புத்தகங்கள், குறிப்பேடுகள், ஆராய்ச்சிக் கருவிகள் எல்லாம் நெருப்பிலே எரிபட்டுக் கொண்டிருந்தன.
அங்குமிங்குமாக, அங்கேயிருந்த பொருள்களைக் கொள்ளையிட்டுச் செல்லும் கூட்டம் வேறு.
உமார் பார்த்துக் கொண்டே இருந்தான். ஏபிரேட்ஸ் ஆற்றங்கரையிலே யாஸ்மி இறந்த பிறகு, கூடாரம் எரிந்து கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்தது.
யாஸ்மி, இந்த வீட்டுக்கு விண்மீன் வீடு என்று பெயர் வைத்தாள். இங்கே தன்னோடு இருக்க வேண்டுமென்று எவ்வளவோ ஆசைப்பட்டாள். விதி இருக்க விட்டதா? இப்பொழுது அவளும் இல்லை. விண்மீன் வீடும் இல்லை.
நெருப்பு அடங்கியது, மக்களும் கலைந்து போய்விட்டார்கள். உமார் உள்ளே சென்று பார்த்தான், ஒன்றுமில்லை. இனி அவன் அங்கிருந்து என்ன பயன்? திரும்பிச் செல்வதற்காகக் குதிரையைத் தேடினான். யாரோ அதையும் திருடிச்சென்று விட்டார்கள். அவன் நடந்து கோட்டைக் கதவின் அருகில் வந்தான். கதவு மூடப்பட்டிருந்தது. காவலர்கள் அவனை விரட்டினார்கள். இனித் திறக்கப் பட்டிருந்தாலும். அவன் உள்ளே நுழைய முடியாது. வெளியிலே கால்போன போக்கிலே நடந்து ஒரு கிராமத்திற்கு வந்தான். அங்கே ஒரு குடிசையிலே சிரிப்புச் சத்தம் கேட்டது.
உமார் சென்று கதவைத் தள்ளினான், அங்கே ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் வெளிச்சத்திலே சுவர் ஓரத்திலே அடுக்கியிருந்த சாடிகள் தெரிந்தன். கூடத்தின் மத்தியிலே ஓர் இளைஞன் வீணை வாசித்துக் கொண்டிருந்தான். முக்காடு போடாத ஒரு குடியானவப் பெண் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தாள். ஒரு கிழவன், சாடியில் இருந்த மதுவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தான்.
“கவனம், சிந்திவிடாதே?” என்று கூறிக்கொண்டே உமார் அருகில் சென்றான். அந்த மதுப்பாத்திரத்தை வாங்கிச் சுவைத்துக் குடித்தான் உமார். மூன்று பேரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘ஐயா! வழி தவறிவிட்டீரா!?’ என்று கிழவன் கேட்டான்.
உமார், மதுச்சாடியின் அருகிலே நகர்ந்து உட்கார்ந்து கொண்டான்.
படிமம்:Page363 உமார் கயாம் (புதினம்).jpg
“இதோ பாருங்கள்! என்னோடு படுத்திருந்த மதம் என்ற மனைவியையும், கல்வி என்ற கண்ணாட்டியையும் மணவிலக்குச் செய்துவிட்டேன். திராட்சைக் கொடியாளின் மகள் மதுக்குட்டியை மறுமணம் செய்து கொண்டுவிட்டேன்” என்றான்.
‘விசித்திரமான பெயருள்ள பெண்கள்!’ என்று கூறி அந்தக் குடிபானவப் பெண் சிரித்தாள்.
‘சிரிக்கும் பெண்ணே வாய் திறந்து பாடு! இது போன்ற மணவிலக்கு என்றுமே நடக்காது!’ என்று சொல்லிவிட்டு மீண்டும் மதுவையூற்றிக் குடித்தான்.
குடித்துக் கொண்டிருந்தபடியே உமார் தூங்கிவிட்டான். விளக்கையணைத்துவிட்டுப் பாடிக் கொண்டிருந்த பெண்ணும் மற்றவர்களும் வீட்டின் மறு பகுதிக்குச் சென்று படுத்துத் தூங்கிவிட்டார்கள்.
இருட்டில் ஒருமுறை விழித்தெழுந்த உமார். மதுச்சாடியைக் கவிழ்த்துப் பார்த்தான். ஒரு சொட்டு மதுக்கூட இல்லை. மறுபடியும் கீழே விழுந்து படுத்துத் தூங்கிப் போனான்.
46. அடிமைப் பெண்ணின் ஆசைத் திட்டம்!
‘தொழுகைக்கு வாருங்கள்! தொழுகைக்கு வாருங்கள்’ என்று பள்ளிவாசல் கோபுரத்திலிருந்து கூவும் ஒலி கேட்டது.
அந்தக் கிழவன், உமாரை எழுப்பினான்.
‘ஐயா! விடிந்து விட்டது, தொழுகைக்குச் செல்லவேண்டும், எழுந்திருங்கள்’ என்றான்.
‘அவனைக் கவனிக்காதே! அவன் மறைவிடத்திலிருந்து உன்னைக் கூப்பிடுகிறான். கோபுரத்தின் மறைவிலிருந்து உன்னை அழைக்கிறான். மறைந்திருக்கும் ஆபத்துக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுத் திரும்பப் படுத்துக் கொண்டான்.
குடிப்பதும், தன் உள்ளத்திலே எரியும் தீயை மதுவால் அணைப்பதும், பேசுவதும், தூங்குவதுமாக அந்தக் குடிசையிலே பல நாட்களைக் கழித்தான். நாட்கள் ஓடுவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை.
கவலையில்லாமல் குடித்துக் குடித்து நாட்களைப் போக்கிக் கொண்டிருந்த உமாருக்கு ஒருநாள் கவலைப்படும்படியான நிகழ்ச்சி ஏற்பட்டது. அயீஷாவும் இஷாக்கும் அவனைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்கள். அயீஷா கோபத்தோடு பேசினாள்.
‘இது என்ன பைத்தியக்காரத்தனம், எத்தனை வாரங்களாக உங்களைத் தேடுகிறோம்? உங்களுடைய விண்மீன் வீட்டை நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டார்கள். நிசாப்பூர் அரண்மனையைக் கடன்காரர்கள் கைவசப்படுத்திக் கொண்டு விட்டார்கள்!’ என்றாள்.
‘எல்லாம் நேற்று நடந்தசெய்தி, நெருப்பு எரிந்து தணிந்து, சாம்பலும் குளிர்ந்து போய்விட்டதே!’ என்று உமார் கவலையில்லாமல் பேசினான்.
காசர்குச்சிக் அரண்மனையையும் எடுத்துக்கொண்டு விட்டார்கள். புதிய சுல்தானுடைய சபையிலே உங்கள் பெயர் ஏளனத்துக்கு உரியதாகிவிட்டது. உங்களுடைய பஞ்சாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பழைய கணக்கை அமுல் நடத்துகிறார்கள்.’
‘என்ன, என்னுடைய பஞ்சாங்கத்தையா?’
‘ஆம்! அதை உதறித் தள்ளிவிட்டார்கள். பெண்கள் எங்கு கண்டாலும், என்னைப் பார்த்து, ‘அதோ’ பார்! ‘உமார்கயாமின் அடிமை’ என்கிறார்கள். கவிஞன் மூ இஸ்ஸியினுடைய வைப்பாட்டிகள் பல்லக்கிலே பவனி வருகிறார்கள். அவர்களுக்கு வேலை செய்ய எத்தனை அடிமைகள்.
எனக்கு, இந்த ஒரே குதிரையும், இஷாக்கும்தான் இருக்கிறார்கள். நீங்கள், இங்கே ஒரு குடியானவப் பெண்ணோடு குடியிலே புரளுகிறீர்கள்!’ என்று தன் குறைகளைக் கூறினாள்.
‘போதும், அயீஷா என் பெயருடன் சேர்த்து, இனிமேல் எந்தப் பெண்ணும் உன்னை ஏளனம் செய்ய வேண்டாம். இனிமேல், மூ இஸ்லியினுடைய மயில்களின் தோகைகள் உன்னுடைய கூந்தலைக் காட்டிலும் அழகாக இருக்கம் போவதில்லை என்று கூறிவிட்டு,
‘இஷாக், உன்னிடம் ஒரு பெட்டி நிறைய வெள்ளி நாணயங்கள் இருக்கின்றன அல்லவா?’
‘அதன் மதிப்பு அல்லா ஒருவனுக்குத்தான் தெரியும்’ என்று அயீஷா முணுமுணுத்தாள்.
‘அயீஷாவிடம், ஒரு இரும்புப்பெட்டி நிறையப் பொன்னும், மற்ற பொருள்களும் இருக்கின்றன அல்லவா?’ என்று கேட்டான்.
இஷாக்கும், அயீஷாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
தங்கள் எண்ணத்தை உமார் அறிந்துகொண்டு விடுவான் என்பது அவர்கள் எதிர்பார்த்ததே! ஆனாலும், அவன் கேட்டபோது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘ஆம்! பெட்டி நிறையப் பொன்னும், நகைகளும் அவளிடம் இருக்கின்றன.’
‘சரி! ஐயா கிழவரே! நீங்கள் சாட்சி, நிசாப்பூர் உலேமாத் தலைவரிடம் போய் நீங்கள் சாட்சி சொல்லுங்கள். என்னுடைய எல்லாச் சொத்துக்களையும், என்னுடைய அடிமைப் பெண்ணான அயீஷா வுக்கும் என் வேலைக்காரன் இஷாக்குக்கும் உடைமையாக்குகிறேன், அழைத்துச் செல்லுங்கள்’ என்றான் உமார்.
இதைக் கேட்டதும், அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். இஷாக் பரபரப்புடன், ‘தலைவரே! தங்களுக்கு?’ என்று கேட்டான்.
அவனுக்கு என்று என்ன இருக்கிறது? அவனுடைய புத்தகங்கள் தடைப்படுத்தப்பட்டுவிட்டன. அவனுடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் தீக்கிரையாகி விட்டன. அவனுடைய பஞ்சாங்கம் அகற்றப்பட்டுவிட்டது.
அவனும் இஸ்லாமியக் கல்லூரிகளிலிருந்து நாடு கடத்தப்பட்டான். அவனுக்கு என்று என்ன இருக்கிறது?
‘அந்த உலேமாத் தலைவரிடம், நான் என் ஒட்டகச்சாரியுடன் அலெப்போ நகருக்குப் போவதாகச் சொல்லுங்கள். நீங்கள் நிசாப்பூருக்குப் போங்கள். எல்லோரும் போங்கள்.’
அவர்கள் குதிரைகளிலே ஏறிக் கொண்டார்கள். அயீஷா அழுதாள்.
‘உனக்கு என்ன வந்துவிட்டது?’ என்று இஷாக் கேட்டான்.
‘தெரியவில்லை! ஆனால், அந்தப் பொன்னெல்லாம் உண்மையில் எனக்குத்தானா?’
‘உறுதியாக! தலைவர்தான் கூறிவிட்டாரே!’
பிறகு, மெதுவாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டர்ள். உலேமாத் தலைவரின் வீட்டுக்குப் போகும் வழியில், அங்காடிச் சந்தையில், பட்டுத் துண்க்கடையில் கூடிநின்ற முக்காடிட்ட பெண்களை எட்டிப் பார்க்காமல் இருக்க அவளால் முடியவில்லை.
47. தரகன் வந்து கூவுகிறான்
ஒட்டக மயிரினால் ஆன ஒரு கிழிந்த மேலங்கியைப் போட்டுக்கொண்டு வெறுங்காலால் நடந்துசென்று கொண்டிருந்த உமார், இருட்டிலே, கொரசான் பாதையிலே தட்டித் தட்விப் போய்க் கொண்டிருந்தான். வழிப்போக்கர் தங்கும் விடுதி ஒன்றின் எதிரிலே, யாரோ நெருப்புக்காய எரித்த நெருப்புக் கிடந்தது.
அந்த அமுங்கிக் கிடந்த நெருப்புக்கு நேரே தன் பாதங்களை நீட்டிக் குளிர் போக்கிக் கொண்டிருந்தான்.
சற்று சூடேறியதும் சுற்றிலும் கிடந்த காய்ந்த இலைகளைப் பொறுக்கி வந்துபேர்ட்டு, மேற்கொண்டு எரித்துக்குளிர் காய்ந்து கொண்டிருந்தான்.
காலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு குதிரை ஓடிவரும் சத்தம் கேட்டது.
விடுதியின் அருகில் சத்த்ம் கேட்டது. விடுதியின் அருகில் வந்ததும் குதிரையைவிட்டு இறங்கி, ஒரு வீரன் அவன் அருகிலே வந்தான்.
‘ஏ! காவல்காரா! இது அலெப்போ நகருக்குப் போகும் பாதைதானா?’
‘ஆம்!’
‘ஒ! அல்லா! நிசாப்பூரிலிருந்து எவ்வளவு தூரம் வருகிறது.’ குவாஜா உமார் கயாம் அவர்கள் இந்தப் பாதையாகத் தன் ஒட்டகங்களுடன் பயணம் செய்து கொண்டு இருக்கிறாரா? நீ பார்த்தாயா?’
உமார் பதில் சொல்வதற்கு யோசித்தான். அற்குள்ளே வெளியில் வந்த் விடுதிக்காரன் ‘இங்கே ஒரு வியாபாரிதான் தங்கியிருக்கிறார், அவர் குவாஜாவும் அல்ல; கயாமும் அல்ல!’ என்றான்.
‘நான்தான்’ என்றான் உமார், சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.
‘ஒ, அல்லா! ஒரு காலிப் அவர்களுடைய கடிதத்தைத் தாடி கூடவெட்டிக் கொள்ளவியலாத ஓர் ஏழைக் காவற்காரனிடம் கொடுக்க வேண்டுமா? இது என்ன தெரியுமா? கெய்ரோ நகரத்துக் காலிப் அவர்கள், தன்னுடைய சாதாத்தைக் கணிப்பதற்காக அறிஞர் உமார் கயாமை வரச்சொல்லி எழுதிய கடிதம். நான் அவரை, கெய்ரோ ராஜசபைக்குச் சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்ல வந்த தூதுவன்.’ என்றான்.
‘உண்மையாகவா?’ என்று விடுதிக்காரன் வியப்புடன் கேட்டான்.
தன் இடுப்பிலிருந்து, முத்திரையிட்ட ஓர் உறையை எடுத்துக்காட்டி, ‘பார், சந்தேகந்திரப் பார்’ என்றான் அந்த ஆள்.
‘உண்மைதான்! கழுகுக்கூட்டுத் தலைவன் ஹாஸான் உங்கள் காலிப்புடன் இருக்கிறான் என்பதும் உண்மைதானே!’ என்று உமார் கேட்டான்.
அதைத் தெரிந்துதொள்ள நீ யார்? நீ சொன்னது உண்மைதான், ஆனால்...நீ...’
பேனாவும் மையும் கொண்டு வா!’ என்று விடுதிக்காரனுக்குக் கட்டடளையிட்டான் உமார்.
‘பேனாவை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்த விடுதிக்காரன், அவனுக்கு எழுதத் தெரிந்தால் அவன் சாதாரண காவற்காரனாக இருக்க மாட்டான்’ என்று கூறினான்.
உமார் கடித உரையை வாங்கினான். அது நீளமாகவும், கனமாகவும் இருந்தது. அதைத் திருப்பி அதன்மேல் எழுதினான்.
‘ஆழ்ந்த நூலின் ஆராய்ச்சி அதனை வாழ்வாய்க் கொண்டிருந்தேன் வாழ்ந்த வாழ்க்கை நூலதனை வாளால் அறுத்துக் கெடுத்தாரே! பாழும் விதியின் செய்கையடா பாடும் மனிதப் பொம்மையடா தாழ்ந்த என்னை விற்பதற்கே தரகன் வந்து கூவுகிறான்!’
இதையெழுதி அவனிடம் கொடுத்தான்.
கடிதத்தைத் திரும்ப வாங்காமல், அந்த மனிதன், தாங்கள் கடிதத்தைப் பிரித்துப் படிக்கவில்லையே!’ என்று கேட்டான்.
‘அதில் என்ன எழுதியிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்!’ அதை அவன் வாங்கிக் கொண்டு திரும்பினான். அவன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான், ‘இவன்தான் உமாராக இருக்க வேண்டும்.
மாயவித்தையிலும், விதியையறிவதிலும் திறழையுள்ளவன் என்று சொன்னர்ர்களே! கடிதத்தைப் படிக்காமலே பதில் எழுதிக் கொடுத்து விட்டானே!’ ஆச்சரியப்பட்டுக் கொண்டே அவன் போய்விட்டான்.
காலை மலர்ந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்தன. இந்த மாதிரி நேரத்தைப்பற்றி யாஸ்மி என்ன சொன்னாள்.
‘நட்சத்திரங்கள் மறையும் நேரத்திலே உள்ளத்திலே காதலுடன் தனியாக இருப்பது மிகக் கொடுமையான துன்பம்’ என்றாள்.
யாஸ்மி இப்பொ எப்படி இருப்பாள். கண்ணுக்குத் தெரியாத திசையிலே ஒரு நிழலாக ஒட்டிக் கொண்டு இருப்பாளா? ரஹீம்! ரஹீமுடைய் ரத்தம் மண்ணுக்குள்ளே பாய்ந்து மறைந்துவிட்டது. மறுபடியும் அது ஓடிவரவா போகிறது. ஜபாரக்! மாலிக்ஷா! நிசாம்!
இவர்களைப் பற்றியெல்லாம் நினைக்கக் கூடாது. இவர்களெல்லாம் திரும்பி வரவா போகிறார்கள்? சற்று முன்னாலே,வந்தானே தூதுவன், அவனைப்போல அவர்கள் குதிரைகளிலே ஏறி இந்தக் கொரசான் பாதையிலே வரமுடியுமா?
சிந்தனையை நிறுத்திவிட்டு, உமார் எழுந்து முரசைத் தட்டினான். விடுதியில் இருந்த வியாபாரியும் ஆட்களும் எழுந்தார்கள்.
தங்கள் மிருகங்களின்மேல் முட்டை ஏற்றி ஆயத்தமானார்கள். அவர்களுடைய ஒட்டகச்சாரியின் முன்னே உமார் நடக்கத் தொடங்கினான்.
“ஓய், காவற்காரா! ஒட்டகச் சாரி எங்கே போகிறது? என்று கேட்டான் அந்த வியாபாரி.
“இரவு போன இடத்திற்குப்போகிறது.”
“அந்த இடம் எங்கே இருக்கிறது.”
“எங்கும் இல்லை.”
உமார் நடந்துகொண்டிருந்தான்.
- முற்றும் -
கருத்துகள்
கருத்துரையிடுக