சுகுணசுந்தரி சரித்திரம்
வரலாற்று நாவல்கள்
Backசுகுணசுந்தரி சரித்திரம்
(நாவல்/புதுமைக் கதை- புதிய பதிப்பு)
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
-
Source:
சுகுணசுந்தரி சரித்திரம்
(நாவல்/புதுமைக் கதை- புதிய பதிப்பு)
முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்கள்
கழக வெளியீடு 537
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், லிமிடெட், திருநெல்வேலி. :: சென்னை , 1,
First Edition : April, 1950
(Rights reserved)
Published by : The South India Saiva Siddhanta Works Publishing Society, Tinnevelly Ltd, 1/140, Broadway :: Madras, 1.
Head Ofice: 24, East Car Street, Thirunelveli.
அப்பர் அச்சகம், சென்னை , 1.
-------------
வேதநாயகம் பிள்ளை (1826-1889)
பதிப்புரை
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதுமைக் கதையை எழுதிய வேதநாயகம் பிள்ளையே சுகுணசுந்தரி என்னும் இப் புதுமைக் கதையின் ஆசிரியரும் ஆவர். பிரதாப முதலியார் சரித்திரத்தில் கூறப்பெறாது விடுபட்ட பல அறநெறிகளையும் அறிவுரைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறுதல் வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடன் தான் ஆசிரியர் இப்புதுமைக் கதையினை எழுதப் புகுந்திருக்கிறார்.
இக்கதை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் அமைந்தது அன்று. மக்களுக்கு இன்றியமையாத பல செய்திகளையும் எடுத்துக் கூறுவதில் ஆசிரியர் அளவு கடந்த ஊக்கங் காட்டியுள்ளார். நாம் வேறு எந்தக் கதைகளிலும், இவ்வளவு அறவுரைகளையும் ஒழுக்க முறைகளையும் உடல்நல முறைகளையும் பிற அரிய செய்திகளையும் ஒருங்கே காணுதல் இயலாது. மக்கட்குக் கட்டாயம் கற்பிக்கப்பெற வேண்டுவனவாகிய அறம், ஒழுக்கம், உடல் நலம் ஆகிய செய்திகள் தனித்தனியே அமைந்த நூலினைப் படிக்க எவரும் மிகுதியாக விரும்புவது இல்லை. விரும்புவார் சிலரும் மனக்கிளர்ச்சி இன்றித் தளர்ச்சியுடனேயே படிப்பர். ஒழுக்கமுறை நூல்களைப் படிப்பதில் எவரும் ஊக்கங் காட்டுவதே இல்லை. எல்லோரும் ஊக்கத்துடனும் களிப்புடனும் நல்ல செய்திகள் எல்லாவற்றையும் ஒருங்கே உணர்ந்து கொள்ளும் பொருட்டே இக்கதையினுள் ஆசிரியர் அவற்றை இடம் நோக்கி அமைத்துள்ளார். மேலும், இக்கதையின் கருத்தும், பொருளும், நடையும் சிறக்கும்படி நூற்றுக்கணக்கான பழமொழிகளும், உவமைகளும், திருக்குறள் முதலிய நீதிநூற் கருத்துக்களும் எடுத்தாண்டிருப்பது கற்பார்க்குக் கழிபேருவகையினை ஊட்டுவதாகும்.
இந்நூலின்கண், "ஒவ்வொருவரும் தத்தமக்குரிய காரியங்களைத் தாங்களே செய்து கொள்வது மிகவுஞ் சிறந்தது ; சோம்பலுக்கு இடங்கொடுத்தால் உடல்நலம் கெடும். மக்கள் பழவினைப் பயனாகவே நல்லவர்களாகவோ அன்றிக் கெட்டவர்களாகவோ பிறக்கிறார்கள். தீயவர்களை எவராலும் திருத்துதல் இயலாது. நல்லவர்கள் பிறருக்கு நன்மை செய்தலையே தமது பிறவிப் பயனாகக் கொள்வர். தீயவர்களோ பிறருக்குத் தீமை புரிதலையே தமது பிறவிப் பயனாகக் கொள்வர்; தீயவர்கள் எக்காரணமும் இல்லாமலே பிறருக்குக் கேடு செய்வர். ஆண்மையும் பிறருக்குதவுதலும் நன்மக்கட்கு இயற்கைக் குணங்களாகும். பிறரை இழித்துரைத்தல் பொய் பேசுதல் முதலியன இழிவைத் தரும். இயற்கையாய் உலகில் நிகழுந் தீமைகள் மக்கட்குக் கடவுளால் அளிக்கப்பெறும் தண்டனைகளாகும்.
"நாம் நம்முடைய உடலைப் பாதுகாத்துக்கொள்ளுதல் வேண்டும். உடல் நலத்துக்கு இன்றியமையாதனவாகிய காற்று நீர் முதலியன தூய்மையுடையனவாக இருத்தல் வேண்டும். உடல்நலம் இன்றேல் ஒருநலமும் இல்லை. சிற்றூர் மக்கள் தண்ணீரைக் கெடுத்துப் பயன்படுத்துதல் தக்கதன்று. எளியவர்களுக்குப் பேருலகமே வீடு வாசலாக அமைந்திருக்கிறது. திக்கற்றவர்களுக்குத் தெய்வந்தான் துணை. நம் நாட்டில் இகழும் இளமை மணம் நல்லதன்று. அதனால் பல தீமைகள் ஏற்படுகின்றன. நம் நாட்டு மங்கையர் தாய் தந்தையர்களின் குறிப்பு வழியே நடப்பவர்கள், நேர்மை உள்ளவர்கள்; எக்காலத்தினும் நேர்மை உள்ளவர்களாகவே நடந்து கொள்வார்கள். உலகில் ஆண் பெண் இருவரும் ஒரே படியாகச் சிறப்பினை அடைதற்கு உரியவர் ஆவர். பிறப்பினால் மக்களுக்கு உயர்வு தாழ்வு இல்லை." என்பன போன்ற அரிய செய்திகள் பல ஆங்காங்கு நிறைந்துள்ளன. கதையின் பொருட்டு இந்நூலைப் படிக்காமல், நல்லொழுக்க முறைகளை உணர்ந்து கொள்ளும் பொருட்டே படித்துப் பயனடைதல் வேண்டும்.
படிப்பவர்கட்கு எளிதில் பொருள் விளங்காமல் எழுதப்பெற்றிருந்த அகத்தியம், அதிலிருஷ்டி, அத்தி யந்தம், ஆபாசம், ஆஸ்பதம், ஆகாத்தியம், இராஜகிருஹம், உச்சிஷ்டம், உஜ்ஜீவித்தல், குலாங்ஷம், சிரேஷ்டர், க்ஷாத்திரம், நிர்த்தோஷம், நிக்ஷேபம், நிஷித்தம், சிந்தாக் கிராந்தன், ஸ்கந்தம், சந்துஷ்டி, துர்ப்பிக்ஷம், வாசா மகோசரம், பிரசக்தி முதலிய எண்ணற்ற வடசொற்கள் இப்பதிப்பில் முற்றும் நீக்கப்பெற்று அவைகட்கு ஏற்ற தூய தமிழ்ச்சொற்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு காலப்போக்கிற்கு ஏற்றவாறு சீர்திருத்தம் செய்து உரைநடை நூல்களை வெளியிடாமற் போனால் நூல்கள் அடியோடு அழிந்து ஒழிந்து போகும். இத் திருத்தமுறை ஆசிரியருக்குப் புகழைத் தருமேயன்றித் தீமை செய்வதாகாது. ஆகவே, இத்தகைய மாறுபாடுகளை அனைவரும் முழுமனதுடன் வரவேற்பார்கள் என்பது திண்ணம். ஒவ்வோர் அதிகாரத்தின் தலைப்பும் அதிகாரப் பொருளைப் பெயராகப் பெற்றிருக்கிறது. இப்புதுப் பதிப்புத் தன் அகத்துட்கொண்ட செய்திக்குத் தக்கவாறு உயரிய முறையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளதென்பதை, இதனைக் கற்பவர் எளிதில் உணர்ந்து மகிழ்வர் என்பது திண்ணம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
-------------------
Preface To The First Edition
The favourable reception of my first Tamil Novel « Prathapa Mudaliar" has encouraged me to write and publish this second novel, which, although not as large as the former, contains a sufficient variety of scenes and incidents to exhibit human nature in its various phases and to illustrate different principles of morality. I have also taken occasion to touch upon Hygiene and to expose the Evils of some Social Customs, such as Early Marriages, etc. It is hoped that this work and the Appendix will be found useful at a time like the present, when the necessity of Imparting Moral Instruction to the Hindu Youths is universally acknowledged.
I refrain from saying more in this preface, bearing in mind the maxim, 'That Silence is sometimes Golden'. In acting on this maxim, I follow the example of a Turkish Preacher, who one day ascended the pulpit of the mosque, and thus addressed the congregation: “Oh true believers, do you know what I am going to say to you ?” “No," responded the congregation. “Well, then," said he, “there is no use of my speaking to you,” and he came down from the pulpit. He went to preach a second time, and asked the congregation, “Oh, true believers, do you know what I am going to say to you?" "We know," replied the audience. “Ah, as you know," said he quitting the pulpit, “why should I take the trouble of telling you?” When next he came to preach, the congregation resolved to try his powers; and when he asked his usual question, they replied, “Some of us know, and some of us do not know.” “Very well,” said he, "Let those who know tell those who do not know."
(Sd.) S. VEDANAYAKAM.
---------------------
முதற்பதிப்பின் முன்னுரை
எனது முதற் புதினமாகிய 'பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு அளிக்கப்பட்ட நல்வரவேற்பே எனது இவ் இரண்டாவது புனிதத்தை எழுதுவதற்கும் என்னை ஊக்குகின்றது. இது முந்திய தவ்வளவு நீண்ட நூலன்றாயினும், இதிலும் மனித வாழ்க்கைப் பண்பின் பல்வேறு கோணங்களும் பல்வகைப்பட்ட நிகழ்ச்சிகளும் சூழல்களும் இடம் பெறுவதுடன், பல்வேறுபட்ட வாழ்க்கைத் தத்துவங்களையும் இது விளக்குவதாயுள்ளது. மேலும் உடல்நல நூலடிப்படையிலேயே குழந்தை மணம் முதலிய சில பல சமூகப் பழக்க வழக்கங்களின் தீமைகளையும் பிறவற்றையும் இதில் நான் விளக்கியுள்ளேன். இந்து இளைஞர்களுக்கு வாழ்க்கை ஒழுங்கு பற்றிய கல்விப் பயிற்சியளிப்பது மிகவும் இன்றியமையாத தென்பதனை எங்கும் யாவரும் வற்புறுத்தி வரும். இந்நாட்களில், இந் நூலும் இதனுடன் இணைக்கப் பட்டிருக்கும் பிற்சேர்க்கையும் மிகவும் பயனுடையதா- யிருக்குமென்று நம்புகிறோம்.
'மோனமே பொன்னான ஞானம்' என்ற மேற்கோளுரையை மனத்துட்கொண்டு இம் முன்னுரையில் இதனினும் விளக்கமாக எதனையும் விளக்காது விடுக்கின்றேன். இத் தத்துவத்தை நான் பின்பற்றுகையில் துருக்கிய சமய உரையாளர் காட்டிய முறை எனக்கு ஒரு முன்மாதிரியாய் அமைய வல்லது. திருப்பள்ளியின் மேடையேறி அடியார் குழுவை நோக்கி அவர், "மெய்ம்மையிலூன்றிய மெய்யன்பர்களே! நான் உங்களிடம் என்ன கூறப்போகிறேன் என்பதனை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டாராம். அனைவரும் "அறியோம்" என்று கூறியதுமே அவர் "சரி, அப்படியானால் உங்களிடம் கூறுவதில் பயனிருக்க மாட்டாது" என்று கூறிவாளா இறங்கிவிட்டாராம். மற்றொரு நாள் இதே மாதிரி அவர் "மெய்யன்பர்களே, நான் என்ன கூற இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர் களா?" என்று கேட்டதும், கேட்போர் "ஆம், அறிவோம்" என்றனர். அப்போது அவர் "சரி, அப்படியானால் அறிந்தவரிடம் எதுவும் கூறத் தேவையில்லை," என்று கூறி முன் போல் இறங்கிவிட்டார். அடுத்த தடவை எப்படியாவது அவரைத் தம் திறமையால் பேசவைத்து விட வேண்டும் என்று திருக் கூட்டத்தார் உறுதி செய்து கொண்டனர். ஆகவே மறு தடவை அவர் பேருரையாற்ற முன்வந்து வழக்கமான அவர் கேள்வியைக் கேட்டபோது அவர்கள், "எங்களில் சிலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது," என்றார்கள். அப்போது அவர் "சரி, தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளுங்கள்," என்று கூறினாராம்.
(ஒப்பம்) S. வேதநாயகம்.
----------------
வேதநாயகம் பிள்ளை வரலாறு
பிறப்பு
செந்தமிழ் நாடும், பைந்தமிழ் மொழியும், நந்தம் நனி நகரிக மும் சீரும் சிறப்பும் பெற்று முந்துநிலை எய்த அருளால் வந்து தோன்றிய மாபெரும் புலவர்கள் பலர். அவர்களுள் இப் பெரியாரும் ஒருவர்.
இவர் பிறந்த திருவூர், திருச்சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள குளத்தூர். அங்கு வேளாண் வாழ்க்கையும், தாளாண்மையும், நற்குடிப் பிறப்பும், பழியஞ்சிப் பாத்துண்டலும், வடுவஞ்சி வாய் மொழிதலும், நடுநிலை கோடாமையும், அன்பும் அறனும், இன்பு மீகையும் ஒருங்கமைந்த சவரிமுத்துப் பிள்ளை யென்னும் தக்கார் ஒருவர்க்கும், அவர்தம் கற்பிற் சிறந்த வளத்தக்க வாழ்க்கைத் துணையும், மனைமாண்பும், சோர்வின்மையும், தெய்வ நாட்டமும் வாய்ந்த ஆரோக்கிய மரியம்மாள் என்பவருக்கும் தவப்பேற்றால் உலகுய்ய அருளால் ஓர் ஆண்மகவு தோன்றிற்று. அம்மகவுதான் நம் அருமை வேதநாயகம் பிள்ளை யென்னும் செம்புலச் செல்வர். அவர் தோன்றிய நன்னாள், ஆயிரத்து எண்ணூற்றிருபத்தாறாம் ஆண்டு, அக்டோபர் பதினான்காம் நாள்.
கல்வி
இவர்கள் முன்னோர் கிறித்துவ நெறியைப் பின்பற்றுபவர்கள். ஆயினும், நம் பிள்ளையவர்கள் நெறிப் பிணக்கின்றி, 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்,' என்னும் திருமுறைக் கிணங்கப் பொது நோக்கு மிக்குடையவர். பழம்பிறப்பின் தொடர்ச்சியால் தம் பதினொன்றாம் அகவைக்குள், தமிழ் நூற்கள் பெரும்பான்மையும் கற்று வல்லாராயினர். இஃது,
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து "
என்னும் பொதுமறை அருண்மொழியை விளங்கச் செய்கின்றது. பின் ஆங்கிலம் கற்க அளவிறந்த அவாக் கொண்டனர்.
அஞ்ஞான்று ஆங்கிலம் எல்லா ஊர்களிலும் பள்ளிகளமைத்துமிக்குப் பயிற்றுவிக்க-வில்லை. ஆங்கிலம் கற்றார் தொகையும் மிகக் குறைவு. அப்படியிருந்தும், வழக்குமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு. தியாகப்பிள்ளை என்பவர்களிடம் ஆங்கிலம் முறையாகக் கற்றுத் தேர்ந்தார். திரு. தியாகப் பிள்ளையவர்கள் தமிழிலும் வல்லவராக இருந்தமையால் மற்றும் பல தமிழ் நூல்களும் கற்றுத் தேர்ந்தார்.
அலுவல்
பிள்ளையவர்களின் நற்பண்பும், நுண்மாண் நுழைபுலமும், விடா முயற்சியும், முறையறிந்து ஒழுகும் திறமையும், 'நகையீகை இன் சொல் இகழாமை முதலிய சீலமும், பணிவும் இன்சொல்லும், வாய்மையும், தூய்மையும், உலகினருள்ளத்தைக் கொள்ளை கொண்ட டன. அவ்வாறே அரசினர் மனத்தையும் கவர்ந்தன. அதனால், அரசினர் திருச்சிராப்பள்ளி வழக்குமன்றம் ஒன்றில் 1848 - ஆம் ஆண்டில் பதிவுப் பொறுப்பாளர் (Record Keeper) என்னும் அலுவலில் அமர்த்தினர். அவ்வேலையைத் திறம்பட இரண்டாண்டுகள் செய்துவந்தனர். பின் மொழிபெயர்ப்பாளராம் விழுமியநிலை எய்தினர். 1857 - ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் முறைமன்றத் தலைவர் (முனிசீப்) என்னும் நிறைபெறுநிலை எய்தினர். அவ் வேலையை நடுநிலை பிறழா நயத்துடன் உரை முடிவு கண்டு ஊரும் உலகமும் ஒப்ப, வழக்காளர் உளமும் நிறைய முறை செய்து வருவாராயினர். அங்கு நின்றும் சீகாழிக்கு மாற்றப்பெற்றனர்.
நல்லார் நட்பு
அப்பொழுது இயற்றமிழ் வல்லவராய்ச், செந்நாப்புலவராய் நூலாசிரியராய், உளங்கொள நுவலும் ஆசிரியராய்ப், பாவன்மையும் நாவன்மையும் ஒருங்கமைந்தவராய்க், காட்சிக்கெளிமையும் கடுஞ்சொல்லின்மையும், கைம்மாறு கருதாச் செம்மையும், தோலா நாவின் மேலாம் பண்பும் வாய்ந்தவராய்ச் , செம்பொருட்டுணிவும், சிவநெறி மாண்பும் தம் பெரும் தவமாக் கொண்டொழுகும் சீலராய், மாணாக்கர்களுக்கு உண்டி உறையுள் உடையும் நல்கிக் கற்பிக்கு நடையினராய்த் திகழ்ந்த மாபெரும்புலவர் திருசிரபுரம் மகாவித்துவான் திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சீகாழிக்கு எழுந்தருளினர். இருவரும் பொருவரிய நண்பராயினர்.
நீதி நூல்
வேதநாயகம் பிள்ளையவர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடன் 'உணர்ச்சி-யொத்த' நண்பினராயின்மையின், பிள்ளையவர்களைக் கொண்டு சீகாழிக்கு ஒரு கோவை பாடுவித்தனர். அக்கோவை நூல் மிக்கார் கூடிய அவைக்கண் 1858-ஆம் ஆண்டில் அரங்கேற்றமும் செய்யப்பட்டது.
வேதநாயகம் பிள்ளையவர்கள் தாம் பாடிய எளிமையும், தெளிவும், இனிமையும், செறிவும், அறிவும், திட்ப நுட்பமும் ஒருங்கு திகழும் 'நீதி நூலை'ப் பிள்ளையவர்களைக் கொண்டு பார்வையிடச்செய்து, அவர்கள் சாற்றுக் கவியுடன் அரங்கேற்றுவித்தனர்.
சோறு வழங்கல்
பின்பு, திருமயிலாடுதுறை யென்னும் மாயூரத்துக்கு மாற்றப் பட்டனர். அங்கு அமர்ந்திருக்கும் நாளில் கொடிய வற்கடம் வந்தது. வற்கடமாகிய பஞ்சத்தால் மக்கள் உணவின்றி மாண்டனர். அருளுடையார் உள்ளம் மக்கள் உணவின்றி மாள்வதைக் கண்டு வாளாவிராது, மக்களுக்கு எந்த வகையிலும் உணவளித்து மாளாது வாழவைக்க வேண்டுமென்றே துணியும். அம்முறையில் வேத நாயகம் பிள்ளையவர்களும் பெருமுயற்சி செய்து, 'சொல்லாற் சாற்றிச் சோறு' வழங்கி மக்களை உய்வித்தனர். இச்செயல் திருவீழிமிழலையில் அரசும் பிள்ளையாரும் ஆண்டவன் அருளிய படிக்காசால் பஞ்ச காலத்து உணவூட்டி மக்களை உய்வித்த திருவருட் செயலை நினைவூட்டும்.
பெண்மதிமாலை
அகத்து வாழ் பெண்கள் அறிவு நிரம்பியவர்களாக இருந்தா லன்றிப், புறத்துச் செல்லும் ஆடவர்கள் புலமையும் ஆண்மையும் பொருளீட்டலும் அருள் கூட்டலும் நாடும் மொழியும் பீடுற வோங்கப் பாடுபடலும் பிறவும் வாய்ந்து திகழ்தல் முடியாதென்பது ஒருதலை. பட்டறை வாய்த்தாலன்றிப் பணி வாயாதல்லவா? துணை வாய்த்தாலன்றிச் சிறப்பு அணையாதல்லவா?
அதனால், பெண்கள் கற்று அகக்கண்கள் உடையராய்த் திகழ வேண்டுமென்னும் சீரிய நன்னோக்கம் கொண்டு பெண்மதிமாலை' யென்னும் நூலொன்று "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக" இயற்றி, 1869-ஆம் ஆண்டில் வெளியிட்டனர். அதன் பின்னரே பெண்ணுலகம் விழித்தெழுந்து நண்ணுங் கல்வி கற்று நலமுற்றது.
பிரதாப முதலியார் சரித்திரம்
1876- ஆம் ஆண்டில் கற்பனை நுட்பங்கள் பொற்புற அமைய, உலகியல் முறைகள் உள்ளங்கை நெல்லியென நிலவ, அறிவு ஆண்மை முறைமை உதவிசெய்தல் நன்றியறிதல் வறுமையிற் செம்மை கற்பு முதலிய பலவும் திகழ, கிளைக்கதைகள் பல செறிய, இன்சுவை நடைத்தாய்ப் பிரதாப முதலியார் என்னும் பெயர் பொறித்துக் கதை நூல் ஒன்று வெளிப்படுத்தினர். அந்நூல் அனைவர்களாலும் எந்நாளும் போற்றப்பட்டு வருகின்றது. இதன் சிறப்பு புணர்ந்த பலர் வேண்டுகோளின்படி இதனை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.
சுகுணசுந்தரி சரித்திரம்
இவர் தம் முதற் புதினமாகிய 'பிரதாப முதலியார் சரித்திரத் திற்கு நாட்டிலளிக்கப்பட்ட நல் வரவேற்பின் பயனாக, சுகுணசுந்தரி சரித்திரம் என்னும் விழுமிய இவ்விரண்டாவது புதினத்தை எழுதி வெளியிட்டனர். முதற்கண் வரைந்த புதினத்தில் கூறப் பெறாது விடுபட்ட பல அறநெறிகளையும், அறிவுரைகளையும் இந்நூற்கண் சேர்த்துள்ளார். அன்றியும் உடலோம்பல் குழந்தை மணம் முதலிய வற்றின் நன்மை தீமைகளை இந்நூற்கண் இனிது விளக்கி, சமூகப் பழக்க வழக்கங்களின் தீமைகளையும், பிறவற்றையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கற்பார்க்குக் கழிபேருவகையினை ஊட்டும் சிறப்புடைத்தென்று யாவராலும் இந்நூல் கருதப்படுகிறது.
தக்காரினத்தராதல்
மாபெரும் புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சி. வை. தாமோதரம் பிள்ளை, கோபாலகிருட்டின் பாரதியார், சென்னைச சுப்பராயச் செட்டியார், புதுவை வித்துவான் சவரிராயலு நாயகர் முதலிய தவலருந் தொல் கேள்வித் தன்மையுடைய தக்காரினத்தராய்த் தாம் ஒழுகினர். இக்காலத்தே மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வேதநாயகம் பிள்ளையவர்கள் மீது குளத்தூர்க் கோவை என்னும் ஒரு நூல் பாடி நல்கினர்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர், அவர்கள் குடும்பத்தார் வறுமையுற்று வாடி நலிந்தமை கண்டு மனம் பொறாராய்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அவர்கள் அருட்கொடையால் அவ் வறுமையைப் போக்கி நலமுற்று வாழ வழிசெய்தனர்.
வேலை விடுதியும் பொது நலப் பணியும்
1872- ஆம் ஆண்டில் வேலை விடுதி பெற்றுப் பொதுநலப் பணியில் ஈடுபாடுற்றுத் தமிழப்பாய்த் தொண்டு பல புரிந்தனர். மாயூரம் நகராண்மைக் கழகத் தலைவராய் அமர்ந்து செயற்கருஞ் செயல் பல புரிந்தனர்.
பேராவியற்கை பெறுதல்
1881- ஆம் ஆண்டு, சூலைத்திங்கள் 21- ஆம் நாள் இரவு இறுதிக்காலத்து எய்தும் அலமரல் ஏதுமின்றி, இறை நினைவுடன் இவ்வுலக வாழ்வை நீத்துச் செம்பொருளின் திருவடியிணையைச் சேர்ந்தின்புற்றார்.
மாணவர் நண்பர் புலவர் உலகோர் அனைவரும் சொல்லொணாக் கையறுநிலை எய்திப் பாவாலும் நாவாலும் பாடியுரைத்து வருந்தினர். பின்பு, பிள்ளையவர்களின் ஆருயிர் இன்புற எண்ணி இறைவனை வழுத்தி அமைந்தனர்.
இயற்றிய நூல்கள்
இவர் இயற்றிய நூல்கள் :
1. நீதி நூல் | 2. பெண்மதிமாலை |
3. பிரதாப முதலியார் சரித்திரம், | 4. சுகுணசுந்தரி சரித்திரம் |
5. தேவமாதா அந்தாதி | 6. திருவருள் அந்தாதி |
7. திருவருள் மாலை | 8. சத்திய வேதக் கீர்த்தனை |
9. சருவசமய சமரசக் கீர்த்தனை | 10. தேவ தோத்திரமாலை |
11. சித்தாந்த சங்கிரகம் | 12. பெரிய நாயகி அம்மன் பதிகம் |
13. பொம்மைக் கலியாணம் |
இவையன்றியும், காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு அவ்வப்பொழுது ஆக்கிய அளவில்லாத சுவை மிக்க தனிப்பாடல்களும் சிறுசிறு நூல்களும் பலவாம்.
----------------
பொருளடக்கம்
1. சுகுணசுந்தரியும் புவனேந்திரனும் | 12. பழியும் சூழ்ச்சியும் |
2. மது ரேசனும் புவனேந்திரனும் | 13. முயற்சியும் சூழ்ச்சியும் |
3. பொறாமையும் சூழ்ச்சியும் | 14. சுகுணசுந்தரியின் சொற்பொழிவு |
4. சூழ்ச்சியும் கலக்கமும் | 15. சூழ்ச்சியின் வெற்றி |
5. புறங்கூறலும் கதைகளும் | 16. இன்பமும் துன்பமும் |
6. புன்மையும் பொய்ம்மையும் | 17. துன்பம் வந்தால் தொடர்ந்துவரும் |
7. உடல்நலம் ஓம்பல் | 18. பெருமக்கள் குழுவின் முடிவு |
8. புவனேந்திரன் பொன்மொழிகள் | 19. போரும் வெற்றியும் |
9. திருமணப் பேச்சுகள் | 20. ஆரியநாட்டு அரசர் |
10. எதிர்பாராத நிகழ்ச்சிகள் | 21. முடிசூட்டு விழாவும் திருமணமும் |
11. மணமறுப்பும் சிறை இருப்பும் |
உவமைகளும் பழமொழிகளும்
இந்த நாவலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உவமைகளும் பழமொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
அக அழகை முக அழகு காட்டும்
அடுத்தது காட்டும் பளிங்குபோல்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
ஆசை வெட்கம் அறியாது
ஆய்ந்தோய்ந்து பாராதான் தான் சாகக்கடவன்
ஆயுதத்தைத் செலுத்தியவனைச் சினக்காமல் ஆயுதத்தைச் சினப்பதற் கொப்ப
ஆழம் அறியாமல் ஆற்றில் இறங்குவது போல
இஞ்சி தின்ற குரங்குபோல் இருப்புத் தூணைச் செலெரிக்குமா?
இரைக்காக விண்ணிற் பருந்து வட்டமிடுவது போல்
இறந்த உயிர் மீண்டதுபோல
உடலுக்குள் உயிர்போல
உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்
உள்ளங்கை நெல்லிக்கனிபோல
ஊமை கண்ட கனவுபோல .
ஊர் வாயை மூட உலைமூடி உண்டா ?
எள்ளுக்குள் எண்ணெய் போல
கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே ?
கடல் நீர் முழுவதையும் நண்டு வளையில் அடைப்பதுபோல
கரும்புக்குள் சாறு போல
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப் பூண் கட்டினது போல
கன்றை யிழந்த ஆன்போல
கீரியும் பாம்பும் போல
குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகாதது போல
குருடன் முன் பந்தம் பிடித்தது போல்
குருவியின் தலைமேலே பனங்காயைக் கட்டி வைப்பது போல
கூட்டத்தைப் பிரிந்த மான்போல
கட்டிலடைபட்ட பஞ்சவர்ண கிளியைப்போல
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்
கொள்ளித் தேளுக்கு மணியங் கொடுத்தது போல
கோபம் பாபம் சண்டாளம் சாட்சிக்காரன்
காலில் விழுவதைப் பார்க்கிலும் சண்டைக்காரன்
காலில் விழுவது நலம் சுவரை வைத்துக் கொண்டல்லவோ
சித்திரம் வரைய வேண்டும்
சுழற்காற்றிலகப்பட்ட துரும்பு போல
செவிடன் காதில் இன்னிசை பாடினதுபோல
சென்ம குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது
தலைமயிரை எண்ணினாலும் குற்றங்களை எண்ணமுடியுமா ?
தானே வருகிற செல்வத்தைத் தள்ளிவிடலாமா?
திக்கற்ற பிள்ளைக்குத் தெய்வமே தந்தை
திங்களைக் கண்ட கடல் போல
தீமலைமேலே கற்பூரக் கணையைச் செலுத்தியது போல
நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்து குறுக்கே போட்டது போல
நீர்மேல் எழுதிய எழுத்துப்போல
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
பட்டப்பகல் போல
பதறாத காரியம் சிதறாது
பாம்பைத் தீண்டியவள் போல
புலிவாயிலகப்பட்ட மான்போல
பூனை வாயி லகப்பட்ட கிளிபோல
பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ
பொன்மலையைச் சேர்ந்த காகமும்
பொன்னிறம் ஆவது போல
மலையும் மலையும் தாக்கியது போல்
மாணிக்க ஏனத்தில் வைக்கவேண்டிய தேவாமிருதத்தை
மண் ஏனத்தில் வைக்க விரும்புவது போல
முள்ளிலே சேலை மாட்டிக்கொண்டால் மெள்ள மெள்ள எடுக்க வேண்டும்
விண்ணில் வில் தோன்றி மறைவதுபோல
வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல
-------------------
சுகுணசுந்தரி சரித்திரம்
1. சுகுணசுந்தரியும் புவனேந்திரனும்
1. சுகுண சுந்தரியின் பிறப்பு
கடலை மேகலையாக உடுத்த நிலமகளின் திருமுக மண்டலம் போன்ற புவனசேகரம் என்னும் நகரத்தைத் தலை நகராக உடைய தமிழ்நாடு முழுமையையும் நராதிபன் என்னும் அரசன் தீயவர்களை அழித்தும், நல்லவர்களைப் பாதுகாத்தும் அறநெறி தவறாமல் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு வெகு காலம் பிள்ளை-யில்லாமல் இருந்தது. பிறகு கடவுளுடைய அருளினால் பேரழகு வாய்ந்த ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகுதானே ஒரு பெண்ணாக வந்து வடிவெடுத்தாற்போல் மிக வியக்கத் தக்க அழகும் அதற்கேற்ற நல்லியல்புகளும் பொருந்தி யிருந்தமையால் அந்தக் குழந்தைக்குச் சுகுணசுந்தரி என் னும் பெயரிடப்பெற்றது. அரசனும் அரசியும் அந்தக் குழந்தையை மிக அருமை பெருமையாக வளர்த்துக் கல்வி கற்கத்தக்க பருவம் வந்தவுடனே கல்விப்பயிற்சி செய்வித்து எல்லா நூலறிவுகளையும் கற்பித்தார்கள்,
2. சுகுண சுந்தரியின் கல்விப்பயிற்சி
அரசனுக்கு வேறே ஆண் குழந்தை இல்லாதபடியால் அவனுக்குப் பிற்காலம் அந்தப்பெண்ணே முடிசூடுதலுக்குத் தகுதியாகும்படி அவளுக்கு எல்லாவிதமான அரசியல் அறங்களும் அற நூல்களும் நடுவுநிலை அளவைகளும், நல்லொழுக்க முறைமைகளும் கற்பிக்கப்பட்டன. அவள் கல்வியைக் கற்கண்டினும் இனிதாக விரும்பி, ஒருகணப் பொழுதாயினும் வறிதேயிராமல் எப்பொழுதும் ஒதிய வாயும் எழுதிய கையுமாயிருப்பாள். நாள்தோறும் படிக்கும் பாடங்களை முற்றிலும் உணருமுன், அவளுடைய மனம் வேறொன்றையும் நாடாது.
அவள் நாள்தோறும் மாலையில் தன்னுடைய படிப்பைத் தானே ஆராய்வாள். முந்திய நாளினும் அந்த நாளில் கல்வியில் வளர்ச்சியடையாமலிருந்தால், அவள் ஒருநாளை இழந்துவிட்டோமே என்று வருந்தி, மறுபடியும் விளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்துத் தனக்குள்ள குறைவை நீக்குவாள். அவள் இவ்வாறு கல்வியில் முயன்று, தன்னைக் கலைமகள் இருக்கை என்று யாவரும் சொல்லும்படி எல்லாக் கலையறிவுகளையும் ஐயந்திரிபற அதிவிரைவில் கற்றுக்கொண்டாள். சுகுணசுந்தரி குழந்தைப் பருவமாக இருக்கும்போதே அவளுடைய தாய் இறந்து போய்விட்டதால் அவளுடைய தந்தை மிகுந்த அன்போடும் உருக்கத்தோடும் மக்களைப் பாதுகாத்து வந்தார்.
3. சோம்பலே உடல் நலத்திற்குக் கேடு
அவளுக்கு வேலை செய்யப் பல தாதிமார்கள் இருந்தாலும், அவள் தன்னைச் சேர்ந்த வேலைகளையெல்லாம் தானே செய்து கொள்ளுகிறதே யல்லாது, பிறருக்குத் தொல்லை கொடுக்கிறதில்லை. கல்வி அறிவில் அவளுக்குத் தெரியாத செய்தி எப்படி இல்லையோ, அப்படியே வீட்டு வேலைகளிலும் அவளுக்குத் தெரியாத வேலை ஒன்றும் இல்லை. அவள் கையாலே வேலை செய்கிறதைப் பார்த்துப் பொறுக்காமல் தாதிமார்கள் ஓடிவந்து அந்த வேலையைத் தாங்கள் செய்ய முயலுவார்கள். அப்பொழுது சுகுண சுந்தரி அவர்களை நோக்கி, "வேலை செய்யக் கைகால் முதலிய உறுப்புக்கள் உங்களுக்கிருப்பது போலவே எனக்கும் இருக்கின்றன. வேலை செய்தற் பொருட்டே அந்த உறுப்புக்களைக் கடவுள் கொடுத்திருப்பதால், அவருடைய உள்ளக் கோட்பாட்டிற்கு மாறுபாடாக நான் வேலை செய்யாமல் இருப்பேனானால், அந்த உறுப்புக்கள் மரத்து விறைத்துப் பயனில்லாமற் போவதோடல்லாமல் உடல் நலமும் கெட்டுப் போகாதா ? நாற்காலிகள், இருக்கைகள், ஊர்திகள், மற்றைய ஏனங்கள் முதலியவைகள் எந்தப் பயனுக்காகச் செய்யப்பட்டனவோ அந்தப் பயன் இல்லாமல் இருக்குமானால் அவைகள் துருவேறிக் கெட்டுப் போவன போல், வேலை செய்வதற்காக உண்டாக்கப் பட்டடிருக்கிற நமது உடல், ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் கெட்டுப் போகாதா? யானை முதல் எறும்பு கடையாகவுள்ள எல்லா உயிர்த்தொகைகளையும் பாருங்கள். அவற்றுள் எந்த உயிராவது தன்னுடைய உயிர் வாழ்க்கைக்காகப் பாடுபடாமல் இருக்கின்றதா? நான் மட்டும் உடல் அசையாமல் சும்மா விருப்பது ஒழுங்காகுமா? சோம்பலே பல நோய்களுக்கும் தீய நடவடிக்கை-களுக்கும் புகலிடம் அல்லவா?" என்பாள்.
4. ஆசிரியப் பெரியாரின் இல்லற இயல்பு
சுகுணசுந்தரி பல ஆசிரியர்கள் இடத்தில் பல நூற் பொருள்களைக் கற்றுக் கொண்டாலும் முதன்மையாய் அரசனுடைய குல குருவாகிய ஆசிரியப் பெரியார் என்பவர் இடத்தில் பல நல்லொழுக்க முறைமைகளையும், அறங்களையும் அறிவு நூல்களையும் உள்ளங்கை நெல்லிக் சனிபோலக் கற்றுக்கொண்டாள். அறிவு வடிவராகிய அந்த ஆசிரியப் பெரியார் இல்வாழ்க்கையிலே ஒழுகி, இல்லறம் துறவறம் என்னும் இரண்டு அறங்களையும் வழுவாது நடத்திவந்தார். அவரும் அவருடைய மனைவியும் பிள்ளைப் பேறில்லாத ஒரு பெருங்குறையுடையவர்களாக இருந்தமையால், அந்தக் குறையை நீக்கிக்கொள்வதற்காக அடிக்கடி கடவுள் வழிபாடுகளும் அறங்களும் செய்துவந்தார்கள். ஆயினும் அவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டாக வில்லை. அந்த ஆசிரியப் பெரியார் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் வெளியே உலாவப்போகிற வழக்கப்படி, ஒரு நாள் வைகறையில் எழுந்து நகரத்தை விட்டுப் புறப்பட்டுக் கால்நடையாய் மேற்குப் பாதை வழியாகச் சென்றார். அப்பொழுது பிறநாட்டான் ஒருவன், ஓர் அழகான ஆண் குழந்தையைக் கையிலே ஏந்திக்கொண்டு அவருக்கு எதிரே வந்தான். அப்போது கீழ்த்திக்கில் கதிரவன் தோன்றுகிற சமயம் ஆகையால், அதற்கு நேராக மேற்குத் திக்கில் ஓர் இளங்கதிரவன் தோன்றியது போல அந்தக் குழவி விளங்கிற்று.
5. புவனேந்திரன் என்னும் ஒரு திக்கற்ற பிள்ளையின் வரலாறு
அந்தப் பிறநாட்டான் ஆசிரியப் பெரியாரை நோக்கி, "ஐயா! இஃது ஒரு பெரிய அரசனுடைய குழந்தை. சில தீயவர்கள் இந்தச் சிறுவனையும் என்னையும் வருத்துவதற்காகத் தொடர்ந்து வருகிறார்கள். இந்தக் குழந்தை இரவு முழுவதும் தாய்ப்பால் குடிக்காமல் மிகுந்த பசிக்களையா யிருக்கிறது; இந்தப் பாலனுக்கு எவ்வகையிலாவது தாங்கள் உடனே தாய்ப்பால் குடிப்பதற்கு வழி செய்தல் வேண்டும். நான் சிறிது போது கண்மறைவாயிருந்து, பின்பு தங்களிடம் வந்து இந்தக் குழந்தையின் வரலாற்றை விளக்கமாகத் தெரிவிக்கிறேன்." என்றான்.
அந்தக் குழந்தை பசிக்களையினால் கண்மூடிக் கொண்டு, இளங்கொடி போலத் துவண்டு, அசைவற்றிருந்தது, ஆசிரியப் பெரியாருக்கு இரக்கத்தை உண்டாக்கியது. அந்தக் குழந்தையைக் கையிலே வாங்கிக்கொண்டு உடனே தம்முடைய அரண்மனைக்குத் திரும்பிப் போனார். சில முலைத்தாயர்களைக் கொண்டு அதற்குப்பால் ஊட்டுவித்தார். அது பிழைக்கும்படியான பல மருத்துவங்களையும் செய்தார். அது சிறிது சிறிதாகப் பால் அருந்தி, வெகு நேரத்திற்குப் பின்பே பசிக்களை தீர்ந்து கண்ணை விழித்துப் பார்த்தது. செந்தாமரை மலர் மலர்ந்தது போல அந்தக் குழந்தை கண்ணைத் திறந்தவுடனே, அதனுடைய அழகைப் பார்த்து எல்லாரும் அகமகிழ்ச்சி யடைந்தார்கள். அந்தப் பாலனுடைய வரலாற்றைக் கேட்டறியும் பொருட்டு, அதைக் கொண்டுவந்தவன் தமது அரண்மனையில் வந்திருக்கிறானா என்று ஆசிரியப் பெரியார் உசாவினார். அவன் வரவில்லை என்று தெரிந்த உடனே, பல இடங்களுக்கும் ஆள் அனுப்பித் தேடியும் அவன் அகப்படவில்லை. அவன் எப்படியும் வருவான் என்று பல நாள் எதிர்பார்த்தும், அவன் வராதபடியால் அந்தக் குழந்தையினுடைய வரலாற்றை அறிவதற்கு வழியில்லாமற் போய் விட்டது.
குழந்தையின் இயல்பும் பெயர் இடுதலும்
அந்தப் பாலன் மிகவுஞ் சிறந்த ஆடை அணி கலன்களை அணிந்து கொண்டிருக்கிற-வர்கள் இடத்தில் போவதற்கு விரும்புகிறதே அல்லாமல் பொதுவான மக்களிடத்திற் போகிறதில்லை. தாய்ப்பால் கொடுப்பவர்கள் கூடத் தூய்மையான ஆடைகளை அணிந்து கொண்டு ஒழுங்காக இருந்தால் மட்டும் அவர்களிடத்தில் போகிறதே அல்லாமல், அழுக்குடன் இருக்கிறவர்கள் இடத்தில் போகிறதே இல்லை. இப்படிப்பட்ட பல செய்கைகளால் அஃது அரண்மனையில் இருந்த குழந்தை என்று எண்ணும் படியாக இருந்தது. அந்தப் பிள்ளையைக் கொண்டு வந்தவன் பெரிய அரசனுடைய பிள்ளை என்று சொன்னதாலும், எல்லா அரசியல் அடையாளங்களும் பொருந்தி உலகம் முழுவதையும் ஆளத்தக்க பிள்ளையாக இருந்த தாலும், அந்தப் பிள்ளைக்குப் புவனேந்திரன் என்னும் பெயரிடப் பெற்றது.
குழந்தையைப் போற்றுதல்
மக்கட்பேறில்லாத ஆசிரியப் பெரியாரும் அவர் மனைவியும் அந்தப் பிள்ளையைக் கண்டவுடனே பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போலவும், மிக்க வறியவனுக்குப் புதையல் அகப்பட்டது போலவும் பேரின்பம் அடைந்து, தங்கள் வயிற்றிற் பிறந்த பிள்ளையைப் போலவே மிகுந்த பற்றுடனும் விருப்பத்துடனும் வளர்த்தார்கள். அவர்கள் அந்தப் பிள்ளையை வளர்த்த அருமையினாலும், அவனுடைய நற்குண நற்செய்கைகளினாலும் அவனை எல்லாரும் ஆசிரியப் பெரியாருடைய சொந்தப் பிள்ளையாகப் பாவித்தார்களே யொழிய, அவன் திக்கற்ற பிள்ளை என்பதைப் பலர் அடியோடு மறந்துவிட்டார்கள். அந்த உண்மை தெரிந்தவர்கள் கூட அதைப்பற்றிப் பேசினால் ஆசிரியப் பெரியாருக்கு மனவருத்தமாக இருக்கும் என்று எண்ணி, ஒருவரும் அதைப்பற்றிப் பேசுகிறதில்லை. புவனேந்திரன் ஆசிரியப் பெரியாரைத் தன்னுடைய சொந்தத் தந்தை என்றே நினைத்து, அவரிடத்தில் முழு நம்பிக்கையும் அன்பும் பாராட்டி வந்தான். சுகுணா சுந்தரியும் அவனை ஆசிரியருடைய மகன் என்றே நினைத்து அவன் தனக்கு மூத்தவனானதால் அவன் தமையனும் தான் தங்கையும் போல் மிகுந்த நட்புடன் நடந்து வந்தாள்.
புவனேந்திரனும் சுகுணசுந்தரியும்
புவனேந்திரன் மற்றைக் கலைகளோடுகூட விற்பயிற்சி முதலிய போர்ப்பயிற்சிக் குரியவைகளையும் ஆசிரியப் பெரியாரிடத்தில் சிறப்பாகக் கற்றுக்கொண்டான். மற்றும் கல்வியிலும் அறிவிலும் குணத்திலும் அழகிலும் புவனேந்திரனும் சுகுணசுந்தரியும் ஒருவருக்கொருவர் ஏற்றத் தாழ்வில்லாமல் சரிசமானமா யிருந்தார்கள். கடவுள் தனது படைப்புத் தொழிலின் ஆற்றலைக் காட்டுவதற் காகவும், ஆணுக்குரிய அழகு இவ்வளவென்றும், பெண்ணுக்குரிய அழகு இவ்வளவென்றும் வரையறுத்துக் காட்டுவதற்காகவும், புவனேந்திரனையும் சுகுண சுந்தரியையும் நிலவுலகில் உண்டாக்கினதாகக் காணப் பட்டது.
-----------------
2. மதுரேசனும் புவனேந்திரனும்
[மதுரேசனுடைய தீய வரலாறும் புவனேந்திரனுடைய தூய வரலாறும்; இளமைப் பருவத்திலே புவனேந்திரனுடைய ஆண்மையும் பிறருக்குதவுதலும்; சுகுண சுந்தரியின் வியத்தகு குணங்கள்; ஓர் எளிய பிள்ளை கல்வி கற்ற வரலாறு]
1. மதுரேசனுடைய தீய வரலாறும் புவனேந்திரனுடைய தூயவரலாறும்
புவனேந்திரனோடு கூட அரசனுடைய முதல் அமைச்சன் மகனாகிய மதுரேசன் என்பவனும் ஆசிரியப் பெரியாரிடத்தில் கல்வி கற்று வந்தான். அவனும் புவனேந்திரனும் சற்றேறக்குறைய ஒப்பான அகவை உடையவர்களாக இருந்தார்கள். அகவை ஒன்றைத் தவிர மற்றவைகளில் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த ஏற்றத் தாழ்வோடு கூடிய மாறுபாடுகள் உள்ளவர்களாக இருந்தார்கள். ஒளிக்கும் இருளுக்கும், நல்வினைக்கும் தீவினைக்கும் எவ்வளவு வேறுபாடோ அவ்வளவு வேறுபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். வாய்மை, பொறை, ஈகை, உயிர்களிடத்தில் அருள், பிறருக்குதவி புரிதல் முதலிய நல் இயல்புகளுக்குப் புவனேந்திரன் உறையுளாய் இருந்தது போல், அவைகளுக்கு எதிரிடை யான தீக்குணங்களெல்லாம் மது ரேசனிடத்தில் குடி கொண்டிருந்தன. அவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வருவதற்கு ஆசிரியப் பெரியார் அவரால் இயன்ற மட்டும் முயன்றும் பயன்படவில்லை. "சென்ம குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது" என்கிற பழமொழிக் கேற்க அவன் திருந்தாமலே இருந்து விட்டான். புவனேந்திரன் பிறருக்கு உதவி செய்வதில் எப்படி முயற்சி யுள்ளவனாக இருந்தானோ அப்படியே மதுரேசன் பிறருக்குத் தீங்கு செய்வதிலே நோக்கம் உள்ளவனாக இருந்தான். தீய பிள்ளைகள் மனிதர்களைத் துன்பஞ் செய்யக் கற்றுக் கொள்ளுமுன் வாயில்லாப் பூச்சிகளையும், பறவை, விலங்கு ஆகியவைகளையும் பிடித்துத் துன்பப்படுத்திக் கொடிய குணத்தைப் பயில்வது போலவே, மதுரேசன் இளமைப் பருவத்திலே பூச்சிகளைப் பிடித்துக் கொல்லுகிறதும், குருவிக் கூண்டுகளைக் கோலாலே கலைக்கிறதும், பறவை களையும் ஆடு மாடுகளையும் அவற்றின் கன்றுகளையும் கல்லாலும் வில்லாலும் அடிக்கிறதும், ஆகிய பல வகையான கொடுஞ் செய்கைகளைச் செய்து வருவான். அந்தச் செய்கைகளைப் புவனேந்திரன் காணும்போதெல்லாம் அந்தப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தான் ஒரு காவலனைப்போல் இருந்து அவைகளைக் காப்பாற்றுவான். மதுரேசன் பறவைகளைக் கல்லாலும் வில்லுண்டை யாலும் அடிக்க முயலும்போது, புவனேந்திரன் கையைக் கொட்டிக் கொட்டி ஒலியுண்டாக்கி, அவைகளைத் துரத்தி விடுவான். அப்படியே தெருவில் விளையாடுகிற பிள்ளைகளையும் மதுரேசன் துன்பப்படுத்தாதபடி புவனேந்திரன் எப்பொழுதும் அவர்களுக்கு உதவியாக இருப்பான். இத்தன்மையான பல காரணங்களால் மதுரேசன் புவனேந்திரனைத் தன்னுடைய பிறவிப் பகைவனாக எண்ணத் தொடங்கினான். அவனுக்குப் புவனேந்திரன் மீது எவ்வளவு பகையிருந்தாலும், அவன் ஆசிரியருடைய மகன் என்கிற எண்ணத்தாலும், அவன் தன்னிலும் மிகுந்த ஆற்றலுடையவனாக இருப்பதாலும், அவனுக்கு யாதொரு தீங்குஞ் செய்ய மதுரேசன் துணியவில்லை.
2. இளமைப் பருவத்திலே புவனேந்திரனுடைய ஆண்மையும் பிறருக்குதவுதலும்
இளமைப் பருவத்திலே புவனேந்திரனுடைய ஆண்மையும் ஆற்றலும் தெரியும் பொருட்டு உண்மையாய் நடந்த ஒரு செய்தியை விளக்கிக் கூறுவோம். புவனேந்திரனும் சுகுணசுந்தரியும் யானையேற்றம் குதிரையேற்றம் முதலிய ஊர்திப் பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவதற்காக அவர்கள் அடிக்கடி யானையின் மீதும் குதிரையின் மீதும் ஏறிச் செல்வது வழக்கமாக இருந்தது. அந்த வழக்கப்படி ஒரு நாள் புவனேந்திரனும் சுகுணசுந்தரியும் ஒரு யானையின் மேல் அம்பாரி வைத்து, அதன் மேல் ஏறிக்கொண்டு தெருவிற் சென்றார்கள். செல்லும் போது அந்த யானை திடீரென்று மதங்கொண்டு, தன் பிடரியின் மேல் இருந்த பாகனைத் துதிக்கையால் பற்றி இழுத்துக் கீழே தள்ளித் தன் காலின் கீழ் வைத்துத் தேய்த்தது. மேலும் அம்பாரியில் இருந்தவர்களையும் தன்கையினால் இழுக்கத் தொடங்கியது. அவர்கள் தன் கைக்கு எட்டாமையினால் அம்பாரியைத் தெருவிலுள்ள ஒரு பெரிய கல்மண்டபத்தோடு சேர்த்து மோதி உடைக்க முயன்றது. அந்தச் சமயத்தில் புவனேந்திரன் சுகுணசுந்தரியை எளிதாகத் தூக்கி, அந்த மண்டபத்தின் மேல் வைத்துவிட்டுத் தானும் ஒரே தாண்டாகத் தாண்டி, அந்த மண்டபத்தின் மேல் ஏறித் தப்பித்துக் கொண்டான். அப்படி அவன் செய்திராவிட்டால், அவர்கள் இருவரும் யானையின் கையில் அகப்பட்டு மாண்டு போயிருப்பார்கள். இந்த ஆண்மைச் செய்கையைக் கேள்வியுற்ற அரசன் தன் மகளைக் காப்பாற்றிய புவனேந்திரனிடத்தில் அளவற்ற அன்பும் நம்பிக்கையும் உள்ளவனாக இருந்தான்.
ஆற்றில் விழுந்தவனைக் காப்பாற்றுதல்
மற்றொரு சமயத்தில் புவனேந்திரனும் வேறு சிலரும் ஒரு பெரிய ஆற்றின் கரையில் ஆற்று நீர் முழுப் பெருக்காக வருதலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அக்கரையிலிருந்து இக்கரைக்கு நீந்திவந்த ஓர் எளியவன் நடு ஆற்றிலே கைசோர்ந்து போனான். அவன் நீர்ப்பெருக்கிலே மூழ்கி இறக்கிற சமயமாக இருந்தது. அப்பொழுது அவனைக் காப்பாற்றுகிறதற்குச் சிறுவனாக இருந்த புவனேந்திரனுக்கு ஆற்றல் இல்லை. அவன் தன் கூட இருந்தவர்களைப் பார்த்து, ஆற்றில் இறங்கி அந்த மனிதனைக் கரையேற்றும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவர்கள், "இழிந்தவனாகிய அவனை நாங்கள் தொடமாட்டோம்," என்று சும்மா இருந்தார்கள். உடனே புவனேந்திரன் தன்னுடைய உயிரைப் பொருட் படுத்தாமல் அந்த ஏழையைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் விழ ஓடினான். அப்போது கூட இருந்தவர்கள், இந்தச் செய்தியை அரசனும் ஆசிரியப் பெரியாரும் கேள்விப்பட்டால் தங்கள் தலையை வாங்கி விடுவார்கள் என்று அச்சங்கொண்டு, புவனேந்திரனை ஆற்றில் விழாத படி தடுத்துத் தாங்களே ஆற்றில் குதித்து அந்த ஏழையைக் கரையேற்றிக் காப்பாற்றினார்கள். அவர்களுக்குப் புவனேந்திரன் தகுந்த நன்கொடைகள் வழங்கிக் களிப்பூட்டினான். இவ்வாறு புவனேந்திரன் தன்னால் இயன்ற மட்டும் பிறருக்கு உடலுறவியாவது பொருளுதவியாவது அல்லது சொல்லுதவியாவது செய்துவருவான்.
3. சுகுணசுந்தரியின் வியத்தகு குணங்கள்
புவனேந்திரனுக்கு ஒப்பான ஆண்கள் எப்படியில்லையோ, அப்படியே சுகுணசுந்தரிக்கு ஒப்பான பெண்கள் ஒருவரும் இல்லை. அவள் நல்லியல்புகளை யெல்லாம் அணிகலன்களாக உடையவள். அவளுடைய கற்பு நெறியும், நல்லியல்பும், அடக்கமும், பொறுமையும், வாய்மையும், தூய்மையும் சொல்லுதற்கரியன். அவள் அரசனுடைய மகளாக இருந்தும் எளியவர்களுடைய பெருந்துன்பங்களை யெல்லாம் அறிவாள். அழுவாரோடு அழுவாள். துன்பப் படுவாரோடு துன்பப்படுவாள். மன்னுயிர்களை யெல்லாந் தன்னுயிர் போல் எண்ணுவாள். யாருக்காவது மகிழ்ச்சி நேரிட்டால் தனக்கே நேரிட்டது போல் மகிழ்வாள். யாருக்கு ஒரு வருத்தம் நேரிட்டாலும் அது தனக்கு நேரிட்டது போல் எண்ணி அதனை உடனே நீக்குவாள். அவள் அழகு குடிகொண்ட முகத்தை உடையவள். அருள் குடிகொண்ட கண்களை உடையவள். உண்மையும் இன் சொல்லும் குடிகொண்ட நாவை உடையவள். ஈகை குடி கொண்ட கையை உடையவள். கடவுளன்பு குடி கொண்ட மனத்தை உடையவள். அவளுடைய அக அழகை முக அழகு காட்டும். அவளுடைய உள்ளத் தூய்மையை உடலின் தூய்மை காட்டும். அவளுடைய மங்கள குணங்களை அழகுபெறக் கூறுவது முடியாதாகையால் இவ்வளவோடே நிறுத்தினோம்.
4. ஓர் எளிய பிள்ளை கல்வி கற்ற வரலாறு
ஒருநாள் அரசனுடைய இரண்டாவது அமைச்சர், ஏதோ அரசியல் அலுவலின் பொருட்டு அரண்மனைக்கு வந்திருந்தார். அவர் எல்லா நூல்களிலும் அறிஞராயும் நல்லொழுக்கம் உடையவராயும் இருந்தார். அவர் வந்த காரியம் முடிந்தவுடனே, அரண்மனையிற் பாடம் படித்துக் கொண்டிருந்த புவனேந்திரனையும் மதுரேசனையும் கலை யறிவுகளில் ஆராய்ச்சி செய்து புவனேந்திரனுடைய கல்வித் திறமையை வியந்து கொண்டார். மதுரேசன் கல்வியில் குறைவாயிருக்கக் கண்டு அவனுக்கு அறிவு வரும்படி அவர் சொன்னதாவது: "சில பிள்ளைகள் எவ்வளவோ முயற்சி செய்து கல்வி சுற்றுக் கொள்கிறார்கள். உனக்குக் கலைமகள் இருக்கைசையாகிய ஆசிரியப் பெரியாரே ஆசிரியராகக் கிடைத்திருந்தும் நீ கல்வியிற் குறைவாயிருப்பது மிகுந்த வியப்பாக இருக்கின்றது. இன்றைக்கு ஐம்பது ஆண்டுகட்கு முன் வறிஞனான ஒரு சிறுவன் எவ்வளவு தொல்லைப்பட்டுக் கல்வியைக் கற்றுக்கொண்டான் என்பதை உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அவன் மிக வறியவனாக இருந்தாலும் கல்வியைக் கற்கவேண்டும் என்று அளவற்ற அவா உள்ளவனாக இருந்தான். அவனுடைய தகப்பன் கைப்பாடுபட்டுத் தொல்லையான வாழ்க்கையை நடத்துகிறவனாக இருந்ததால், ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தான்.
அந்தச் சிறுவன் ஆசிரியர்களுக்குத் தொண்டு செய்தாவது கல்வி கற்கலாம் என்று முயற்சி செய்தான். அவன் மிக இளைஞனாக இருந்தபடியால் அவனை ஒருவரும் வேலையில் வைத்துச் கொள்ள இணங்கவில்லை. அப்போது ஓர் ஆசிரியருக்குப் பொன்னாங்காணிக் கீரையின் மேல் விருப்பம் என்றும், அது சில நாளாய் அகப்படாமையினால் அவர் மனக்குறை உடையவராக இருப்பதாகவும் கேள்விப்பட்டான். அந்தக் கீரையை எப்படியாவது தேடிக் கொடுத்து அந்த ஆசிரியருடைய அன்பை அடைய வேண்டும் என்று அந்தப் பையன் முடிவு செய்து கொண்டான். அவன் வெகு தொலை அலைந்து தேடி அந்தக் கீரையைப் பறித்துக் கொண்டுவந்து சில நாள் வரையில் அந்த ஆசிரியருடைய மனைவியின் கையிலே கொடுத்துக் கொண்டு வந்தான். அதற்கு அவள் விலை கொடுப்பதாகச் சொல்லியும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஆசிரியர் தம் மனைவியை நோக்கி, ”இந்தக் காலத்தில் நம்முடைய ஊரில் இந்தக் கீரை அகப்படாதே. இஃது எப்படிக் கிடைத்தது?" என்று வினவினார். அவள் அந்தப் பையனுடைய செய்தியைக் குறித்துக் கணவனுக்குத் தெரிவித்தாள்.
மறுநாள் அந்தப் பையன் வந்த உடனே ஆசிரியர் அவனைக் கண்டு, 'இந்தக் கீரைக்கு ஏன் நீ விலை வாங்க மாட்டேன் என்கிறாய்?' என்றார். உடனே அந்தப் பையன் ஆசிரியருடைய அடிகளில் எண் வகை உறுப்புக்களும் தோயுமாறு விழுந்து, ”ஐயா! நான் வறியவனினும் வறியவன். என்னைப்போல் வறியவர்கள் எங்கும் இரார்கள். நான் கல்வி கற்க வேண்டும் மென்று அளவற்ற அவா உள்ளவனாக இருக்கிறேன். ஆனால் பொருள் கொடுத்துப் படிப்பதற்கு வழியில்லை. என்ன செய்வேன்?" என்று சொல்லி அழுதான். உடனே ஆசிரியருக்கு முழு அருளும் உண்டாகி, அவனுக்குப் பொருள் பெறாமலே கல்வி கற்பிக்கத் தொடங்கினார். அந்தப் பையன் இராப்பகல் கல்வியில் முயன்று, பல கல்விச் சிறப்புகள் பெற்று ஓர் அரசருடைய அருளைப் பெற்றான். அந்த அரசர் அவனுக்குப் பல அலுவல்கள் கொடுத்துக் கடைசியாய் அவனுக்கு அமைச்சு வேலை கொடுத்தார். அந்தப் பையன் யார் என்றால் நான் தான். நம்முடைய நராதிய மாவேந்தரின் தகப்பனார் தாம் எனக்கு அமைச்சு வேலை கொடுத்தவர் என்றார். இப்பொழுது மிகச் சிறந்த நிலைமையில் இருக்கிற அந்த இரண்டாவது அமைச்சர் தம்முடைய முன்னைய வறிய நிலைமையைக் குறித்து வெளிப் படையாய்ப் பேசினவுடனே அதனைக் கேட்ட எல்லாரும் அவருடைய அருமையான அடக்கத்தையும் பொறுமையையும் புகழ்ந்து கொண்டாடினார்கள். ஆனால், மதுரேசனுக்கு மட்டும் யாதொரு பயனும் இல்லாமற் போய்விட்டது,
---------------
3. பொறாமையும் சூழ்ச்சியும்
1. மதுரேசனுடைய பொறாமைக் குணம்
புவனேந்திரனுக்கு உலகத்தில் வெளிப்படையான புகழும் தனக்கு எங்கும் பழிப்பும் உண்டாயிருப்பதற்கும், அரசன் சுகுண சுந்தரி முதலானவர்களுக்குப் புவனேந்திரன் இடத்தில் மிகுந்த விருப்பமும் தன்னிடத்தில் வெறுப்பும் உண்டாவதற்கும் தன்னுடைய செய்கையே காரணம் என்று மதுரேசன் எண்ணாமல், அதற்காகப் புவனேந்திரனை மிகுதியாக மனதிற்குள்ளே பகைத்து வந்தான். அதை அறிந்த ஆசிரியப் பெரியார் பொறாமையைப் பற்றிப் பின்வருமாறு சொற்பொழிவு செய்தார்.
2. பொறாமையைப்பற்றி ஒரு சொற்பொழிவு
பொறாமையானது இம்மை மறுமை இரண்டையுங் கெடுக்கிற கொடிய தீவினையாயிருக்கிறது. எல்லோரும் நலத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஒருவருந் துன்பப்படக் கூடாதென்றும் விரும்ப வேண்டியது நம்முடைய கடைமையாயிருக்க, அதற்கு மாறுபாடாகத் தான் ஒருவன் மட்டும் நன்மையுடன் இருக்கவேண்டும் என்றும், மற்றை யாவரும் கெட்டுப்போகவேண்டும் என்றும் நினைக்கச் செய்கிற பொறாமையைப் போலக் கொடிய குணம் வேறொன்றும் இல்லை. பிறருடைய நல்வாழ்வைக் கண்டு நாம் மகிழ்வதை விட்டு, அதற்காக நாம் துன்பப் படுவதும், பிறருடைய துன்பத்தைக் கண்டு நாம் களிப்பை அடைவதும் எவ்வளவு கொடிய செய்கையாய் இருக்கின்றன? அழுக்காறானது பொய், பிறரை இகழ்தல், பிறரை வருத்துதல் முதலிய கொடுங்குணங்களை விளைவிக்கின்ற விதையாயிருக்கின்றது. எப்படியென்றால், அழுக்காறுள் எவன் நல்லவர்களிடத்திலே கூடக் குற்றம் இருப்பதால் எப்போதும் குறை கூறுவான். பிறருடைய நல்வாழ்வை கெடுக்கத் தன்னாலே முடிந்தமட்டும் முயற்சி செய்வான் பிறருக்கு உண்டாகிற நன்மைகளை யெல்லாந் தனக்குக் கேடாக நினைப்பான். அவர்களுக்குண்டாகிற தீங்குகளை யெல்லாம் தனக்கு நன்மையாக நினைப்பான். உலகத்தில் நடக்கிற பல ஒழுங்கின்மைகளுக்கும் அவதூறுகளுக்கும் அழுக்காறே முதன்மையான காரணமாயிருக்கின்றது எந்தத் தீக்குணத்தை ஒப்புக்கொண்டாலும், அழுக்காறு தன்னிடத்தில் இருப்பதாக ஒப்புக்கொள்ளுகிறவன் ஒருவனும் இலன். அதைக் கொண்டே அஃது எவ்வளவு இழிவான தீக்குணம் என்று நன்றாய் விளங்குகிறது. அழுக்கா றுள்ளவன் வயிற்று வலியை விலைக்கு வாங்கினது போலவும், கொள்ளித்தேளை மடியில் வைத்துக் கட்டிக்கொண் டது போலவும் தானே எப்பொழுதும் துன்பப்படுவான். அவனுக்குச் சிறிது நேரங்கூட ஆறுதலுக்கு இடம் இல்லை. நாம் பிறர் மேலே செலுத்துகிற குண்டுகள் சில சமயங்களில் நம்முடைய உடலின் மேலே பாய்ந்து காயப்படுத்துவது போலப் பொறாமை நம்மைத்தானே துன்பப்படுத்து கின்றது.
-
*அழுக்கா றுடையார்க்கது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது. [* திருக்குறள், அதிகாரம் 17, பா. 5.]
பொறாமையும் சூழ்ச்சியும் பார்த்துங் கல்விமான்களைப் பார்த்தும் நாமும், அவர்கள் போல் ஆகவேண்டும் என்று முயற்சி செய்வது நல்லது தான். அவ்வாறு முயற்சி செய்யாமல் அவர்களையும் செல்வர்களையும் பார்த்துப் பார்த்து நாம் ஆண்டு முழுமையும் பொறாமைப்பட்டாலும் நம்முடைய மனம் வேகிறதே யன்றி வேறு பயன் யாது?' என்று சொற்பொழிவு செய்தார்.
3. பாசாங்குக்காரப் படுநீலி
மதுரேசனுக்கு நல்லறிவு உண்டாவதற்காகவே ஆசிரியப்பெரியார் இவ்வாறு சொற்பொழிவு செய்தார். குருடனுக்கு முன் பந்தம் பிடித்தது போலவும், செவிடன் காதில் இன்னிசை பாடினது போலவும் அந்தச் சொற்பொழிவு பயன் இல்லாமற் போய்விட்டது. மதுரேசன் பொறாமைக் குணத்தை விடவே இல்லை. இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் புவனேந்திரன் காற்றுக்காகத் தெருவில் உலாவிக் கொண்டிருக்கும்பொழுது பொதுவான தோற்றம் உள்ள ஓர் எளிய பெண் ஓடிவந்து புவனேந்திரனைக் கட்டித் தழுவிக்கொண்டு, 'அப்பா மகனே ! இதுகாறும் என்னை விட்டுப் பிரிந்திருந்தாயே! உன்னை நான் ஊர்கள் தோறும் தேடிக்கொண்டு திரிந்தேனே! இப்போது கடவுளுடைய அருளால் அகப்பட்டாயே!' என்று பலவிதமாகச் சொல்லி அழுதாள்.
அவள் பித்துக்கொண்டவள் என்று புவனேந்திரன் எண்ணினான். அவள் பிடித்த பிடியைத் திமிறிக்கொண்டு அப்பால் விலகினான். அப்போது கூட இருந்தவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி, 'எங்கள் ஆசிரியப் பெரியாருடைய நன் மகனை இழிகுல மாதாகிய நீ உன் பிள்ளை என்று சொல்ல எப்படித் துணிந்தாய்?' என்று சொல்லி அவளைப் பிடித்து அடிக்கத் தொடங்கினார்கள். அப்பொழுது புவனேந்திரன் அவர்களைத் தடுத்து, 'அந்தப் பெண், மனமயக்கங் கொண்டவள் போல் தோன்று-கின்றாள். அவளை ஒருவரும் அடிக்கவேண்டாம்,' என்று விலக்கினான். உடனே அவள் அவர்களை நோக்கி, 'உங்களுடைய ஆசிரியப் பெரியாரிடத்திலே என்னுடைய முறைமையைச் சொல்லுகிறேன். அவரே உண்மையை விளக்கட்டும்,' என்று சொல்லி, ஆசிரியப் பெரியாரிடம் சென்றாள். அவள் பித்துக்கொண்டவள் என்று எல்லாரும் அவளைப் பின்தொடர்ந்தார்கள்.
அவள் ஆசிரியப் பெரியாருடைய அரண்மனையை அடைந்து, அவரை நோக்கி, 'ஐயா! இந்தப் பிள்ளை என்னுடைய பிள்ளை. என்னுடைய இருப்பிடம் மதுராபுரி. என்னுடைய கணவன் சிறிது முதற்பொருள் வைத்துக் கொண்டு வாணிகஞ் செய்து வந்தார். இந்தக் குழந்தை மிக இளமையாக இருக்கும்போது நாங்கள் அழகர்கோவில் திருவிழாப் பார்க்கப் போயிருந்தோம். அங்கே திரளான மக்கள் கூட்டத்தில் இவன் கைதப்பிப் போய்விட்டான். இவனைப் பல இடங்களில் தேடியும் அகப்படவில்லை. என் கணவர் வருந்தி அந்த வருத்தத்தினால் இறந்து போய் விட்டார். நானும் இவ்வளவு காலமாய் இவனை ஊர் ஊராகத் தேடிக்கொண்டு திரிந்தேன். இப்பொழுதுதான் அகப் பட்டான். இந்தச் செய்தி மதுரையில் உள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்,' என்றாள். அவளுடைய மொழிகள் முற்றிலும் முடியுமுன் அவளைப் பேச வேண்டாம் என்று கையமர்த்தி, ஆசிரியப் பெரியார் அவளை ஒரு தனி அறைக்குள்ளே அழைத்துக் கொண்டுபோய், உசாவத் தொடங்கினார். இதைப் பார்த்தவுடனே மக்கள் வியப்படைந்தனர். அவர்கள், 'இஃதென்ன வியப்பாய் இருக்கிறது! இந்தப் பித்துக்கொள்ளியை அடித்துத் துரத்தாமல், அவள் தாறு மாறாகப் பிதற்றுவதை ஆசிரியப் பெரியார் மிகவுங் கருத்தாய்க் காது கொடுத்துக் கேட்கிறாரே! அவளைப் பிடித்த பித்து ஆசிரியப் பெரியாரையும் பிடித்துக் கொண்டதாய்க் காணப்படுகிறது. அவர் பிள்ளையை அந்த இழிந்த பெண் தன் பிள்ளை என்று பித்தினால் உளறினால் அதையும் அவர் காது கொடுத்துக் கேட்கலாமா?' என்று பலவாறு பேசிக் கொண்டார்கள். புவனேந்திரன் ஆசிரியப் பெரியாருடைய சொந்தப் பிள்ளை அல்ல என்று உண்மை தெரிந்தவர்கள், ஒருகால் அந்தப் பெண்ணே அவனுக்குத் தாயாக இருந்தாலும் இருக்கலாம் என்று ஐயப்பட்டு ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஐயம் கடுகளவும் இல்லாதபடியால், ஆசிரியப் பெரியார் அந்தப் பெண்ணினுடைய பித்து எத்தன்மையதென்று உறுதி செய்யும் பொருட்டு அவளிடத்திலே தனியே உரையாடுகிறார் என எண்ணிக்கொண்டு புவனேந்திரன் யாதொரு கவலையும் இல்லாமல் தன்பாட்டில் படித்துக் கொண்டிருந்தான்.
4. வீம்பு வெளியாதல்
ஆசிரியப் பெரியார் அந்தப் பெண்ணினுடைய ஊர், பெயர், அவளுடைய கணவன் பெயர், குலம், மதம், தொழில், அவர்கள் குடியிருந்த தெருப்பெயர், வீட்டின் இலக்கம், அண்டை அயல் வீட்டுக்காரர்களுடைய பெயர் முதலிய விவரங்களையெல்லாம், அவள் மூலமாய் மறைமுகத்தில் தெரிந்து கொண்டு, அவளைப் பார்த்து, " நீ இந்தச் செய்திகளைக் குறித்து இனிமேல் ஒருவர் இடத்திலும் ஒரு மொழிகூடப் பேச வேண்டாம். நம்முடைய அறவுணவுச் சாலையில் சாப்பிட்டுக்கொண்டு சும்மா இரு. ஒரு கிழமைக்குள் உனக்கு முடிவு சொல்லுகிறோம் ; இப்போது நீ ஒருவருங் காணாதபடி கொல்லை வழியாய்ப் போய்விடு, என்று மறைமுகமாகச் சொல்லி அவளை அனுப்பி விட்டார்
பிறகு ஆசிரியப் பெரியார் மதுரையில் தமக்குப் பழக்கமான ஊர் அலுவலாளர்களுக்கு மேற்படி செய்திகளைக் குறித்து, நன்றாக உசாவி உண்மையைத் தெரிவிக்கும்படி மறைமுகமாகக் கடிதம் அனுப்பினார். அவர்கள் மறைமுகமாக உசாவி, அந்தப் பெண் சொல்லுகிற பெயருள்ள ஆணாவது பெண்ணாவது, அந்த இலக்கமுள்ள வீடாவது, அயல் வீடுகளாவது அந்தத் தெருவிலே இல்லை என்றும், அவள் சொல்வது முற்றிலும் பொய்யென்றும் மறுமொழி அனுப்பினார்கள். புவனேந்திரன் அரசன் வீட்டுப் பிள்ளையாய் இருக்க வேண்டுமேயல்லாது, பொதுவான ஒரு பிள்ளையாய் இருக்க-முடியாதென்பது ஆசிரியப் பெரியாருடைய முடிவாக இருந்தபோதினும், அவர் ஒழுங்குடையவராதலால், ஒருகால் அந்தப் பெண் பிள்ளை சொல்வது உண்மையா யிருக்குமோ என்னவோ என்று ஐயப்பட்டு மேலே கூறியபடி ஆராய்ச்சி செய்தார். அவளுடைய வாக்குமூலம் முழுப்பொய் என்று தெரிந்த அளவில் ஆசிரியப் பெரியாருக்கு உண்டான மகிழ்ச்சி இவ்வளவென்று விரித்துரைக்க ஒருவராலும் முடியாது. உடனே அவர் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுவரும்படி ஏவலாளர்களை அனுப் பினார். அவள் ஒருவருக்கும் அகப்படாமல் ஊரைவிட்டு ஓடிப்போய் விட்டாள்.
--------------
4. சூழ்ச்சியும் கலக்கமும்
புவனேந்திரன் தன்னைத் தான் உணர்ந்து வருந்துதல்; ஆசிரியப் பெரியார் ஆறுதல் சொல்லல்.]
1. முதல் அமைச்சனின் வீண் அவாவும் இழிந்த அறிவுரையும்
சிலருடைய தீய அறிவுரையினால் இப்படிப்பட்ட நம்பத்தகாத கட்டுக்கதையை அந்தப் பெண் உண்டு பண்ணிக்கொண்டு வந்திருக்க வேண்டுமேயல்லாமல், அவள் தன்னுடைய மனம் போல் உண்டு பண்ணிக்கொண்டு வந்தவள் அல்லள் என்றும், புவனேந்திரனுக்கு மதுரேசனையும் அவனுடைய தந்தையாகிய முதல் அமைச்சனையும் தவிர வேறு பகைவர்கள் இல்லாதபடியால் அவர்களே அந்தப் பெண்ணை ஏவி விட்டிருக்க வேண்டும் என்றும், ஆசிரியப் பெரியார் எண்ணினார். அவர் எண்ணிய செய்தி உண்மையே! ஏன் என்றால், அரசனுக்கு ஆண்பிள்ளை இல்லாத படியால் சுகுணசுந்தரியைத் தன் மகனுக்கு மணஞ் செய்வித்து நாட்டின் தலைமைப்பதவியும் அவனுக்கு வாய்க்கும் படி செய்யவேண்டும் என்கிற ஒரு பெரிய தீய அவாவை முதல் அமைச்சன் தன்னுள்ளத்திற் கொண்டிருந்தான். மதுரேசனுடைய தீக்குணத்தால் அவனிடத்தில் சுகுண சுந்தரி வெறுப்பும் புவனேந்திரனிடத்தில் விருப்பமும் உள்ளவளாயிருப்பதால் புவனேந்திரன் ஓர் எளிய மனிதன் என்று நிலைநாட்டி அவனிடத்தில் அரசனுக்கும் சுகுண சுந்தரிக்கும் உள்ள மதிப்பைக் கெடுக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன், முதல் அமைச்சனும் அவனுடைய மகனும் அந்தப் பெரும் பொய்யை அந்தப் பெண்பிள்ளைக்கு மறைமுகமாகக் கற்பித்து அவளை ஏவி விட்டார்கள்.
ஆசிரியப் பெரியார் எவ்வகையான உசாவலுஞ் செய்யாமல் அவளுடைய மொழியை நம்பினாலும் நம்புவார், அல்லது அவர் நம்பாவிட்டாலும் புவனேந்திரன் அவருடைய மகன் அல்லன் என்கிற உண்மையாவது எல்லாருக்கும் வெளி யாகட்டும் என்கிற நோக்கத்துடன் அந்தக் கட்டுக் கதையைக் கட்டிவிட்டார்கள். புவனேந்திரன் தாய் தகப்பன் அற்ற, திக்கற்ற பிள்ளை என்கிற உண்மையை மறந்திருந்தவர்கள் கூட இப்போது நினைவுபடுத்திக் கொள்ளவும், அதைப்பற்றி ஒருவருக்கொருவர் காசு சென்று மறைமுகமாகப் பேசிக்கொள்ளவும் இடம் உண்டாயிற்று. அந்த இழிந்த பெண்பிள்ளைக்கு எட்டு நாள் தவணை கொடுத்து அனுப்பினதும், அவள் மொழி உண்மையா பொய்யா என்று அவர் மதுரையில் மறைமுகமாக உசாவல் செய்வித்ததும் புவனேந்திரனுக்கு அப்போது தெரியாமல் இருந்து பிறகு சிலர் மூலமாய் நாளடைவில் அவனுக்கு வெளியாயிற்று. அந்த நீலிப் பெண்ணினுடைய தகுதியற்ற வாய்மொழியைக் குறித்து, ஆசிரியப் பெரியார் அவ்வளவு கருத்துடன் உசாவ வேண்டிய காரணம் என்னவென்று புவனேந்திரன் மனம் மயங்கிக் கொண்டிருந்தான். அப்போது எழுதினவன் இன்னான் என்று தெரியாத பெயரற்ற கடிதம் ஒன்று அஞ்சல் வழியாய் அவனிடம் வந்து சேர்ந்தது. அது வருமாறு:-
2. பேர் இல்லாத கடிதம்
"புவனேந்திரனுக்கு : நீ ஆசிரியப் பெரியாருடைய வளர்ப்பு மகனே அல்லது சொந்தப்பிள்ளை அல்லன் என்பது உறுதி. அவ்வாறாக, நீ அவருடைய மகன் என்றெண்ணி வீண் கற்பனை செய்வது தகுமா? எளிய தாய் தந்தையரைக் கைவிட்டுவிட்டுச் செல்வர்களைத் தாய் தந்தையர்கள் என்று சொல்லிக்கொள்வது வெட்கப்படக் கூடிய செய்கை அல்லவா? நல்ல பிள்ளைகளாய் இருக்கிறவர்கள் நாடுகள் தோறுந் திரிந்து, தங்கள் தாய் தந்தையர்கள் இன்னாரென்று அறிந்து கொள்வதற்கு முயல்வார்கள். நீ அவ்வாறு முயலாமல் வாளா இருப்பதால், தாய் தந்தை யாருக்குத் தீமை செய்பவன் என்கிற காரணப்பெயர் உனக்குக் கிடைத்திருக்கிறது," என்று வரையப்பட்டிருந்தது.
3. புவனேந்திரன் தன்னைத் தான் உணர்ந்து வருந்துதல்
இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே புவனேந்திரனுக்கு உண்டான மலைப்பும் திகைப்பும் மனவருத்தமும் இவ்வளவென்று விவரிக்க நாம் ஆற்றலுடையேம் அல்லேம். சில நாட்களாக அவனுடைய மனதிலே இருந்து வாளாயுதம் போல் அறுத்துக்கொண்டு வந்த ஐயத்தை அந்தக் கடிதம் அதிகரிக்கச் செய்தது. அதனோடு இன்னொரு காரணமுங்கூடச் சேர்ந்தது. அஃது யாதென்றால் எத்தகைய நிகழ்ச்சி நிகழ்ந்தாலும் அதை ஆசிரியப் பெரியார் புவனேந்திரனுக்குச் சொல்லாமல் மறைக்கிற வழக்கம் இல்லை. அந்தப் பெண்பிள்ளை செய்தியைப்பற்றி மட்டும் அவர், தன்னிடத்தில் ஒன்றுங் கலந்து பேசாமல் மௌனமாய் இருந்ததைக்கொண்டு அவனுடைய ஐயம் பலங்கொண்டு வேரூன்ற இடமாயிற்று. இப்படிப்பட்ட பல காரணங்களால் தான் தாய் தகப்பன் அற்ற திக்கற்ற பிள்ளையென்று புவனேந்திரன் உறுதி செய்து கொண் டான். அது முதல் சரியான உணவும் உறக்கமும் மகிழ்ச்சியும் உரையாடலும் இல்லாமல் நாளுக்கு நாள் உடல் மெலியத் தொடங்கினான். ஆசிரியப் பெரியார் அவனுடைய முகவாட்டத்தையும் உடல் மெலிவையுங் கண்டு வியப்படைந்து அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார்.
"அப்பா! குழந்தாய்! நீ சில காலமாய் ஏதோ மனவருத்தத்தைக் கொண்டிருப்பதாக எனக்கும் உன் தாயாருக்கும் விளங்குகிறது. அதற்குக் காரணம் இன்னதென்று தெரிவிக்க வேண்டும்," என்றார். அவன் அதற்குச் சரியான மறுமொழி சொல்லாமல் தப்பித்துக்கொள்ள முயன்றான். ஆசிரியப் பெரியார் விடாதபடியால் அவன் அழுது கொண்டு தன் சட்டைப்பையிலிருந்த பெயரற்ற கடிதத்தை எடுத்து அவர் கையிலே கொடுத்தான். அவர் அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடனே திடுக்கிட்டுத், திகைத்துச் சிறிது நேரம் கல் போல் அசைவற் றிருந்தார்.
4. ஆசிரியப் பெரியார் ஆறுதல் சொல்லல்
பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு புவனேந்திரனுடைய கண்ணீரைத் துடைத்து, "அப்பா! யாரோ தீயவர்கள் கெட்ட எண்ணத்துடன் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்கள். நீ அதற்காக மனம் வருந்த வேண்டாம்," என்றார். உடனே புவனேந்திரன், "அவர்கள் எந்த எண்ணத்துடன் எழுதியிருந்தாலும் அவர்கள் எழுதிய செய்தி உண்மையாகத் தோன்றுகிறதே!" என்றான். பொய் என்பதையே அறியாத உண்மையாளரான ஆசிரியப் பெரியார் இவ்வளவு நடந்த பிறகு இனி உண்மையை மறைக்கிறது சரியல்லவென்று நினைத்து, முதலில் புவனேந்திரன் குழந்தைப் பருவமாய் இருக்கும்போது அவனைப் பிறன் ஒருவன் கொண்டுவந்து கொடுத்ததையும், அதுமுதல் தாம் வளர்த்தது முதலான விவரங்களையும் அவனுக்குத் தெரிவித்தார். மறுபடியும் அவர், "அந்த மனிதன் உன்னை அரசனுடைய மகன் என்று சொன்னதால் புவனேந்திரன் என்று உனக்குப் பெயரிட்டோம். அவன் சொன்னது உண்மை தான் என்று பலவகையான அநுமானப் பிரமாணங்களாலும், காட்சிப் பிரமாணங்களாலும் அறிந்து கொண்டோம். உன்னுடைய வியத்தகு குணங்களை எண்ணு மிடத்தில் உன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்களுக்கு எவ்வளவோ பெரிய மேன்மை,
-
'மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.' (குறள் - 44)
இனதக் கேட்டவுடனே புவனேந்திரன் ஆசிரியப் பெரியாரை நோக்கி, "ஐயா! எவ்வளவுதான் தவஞ் செய்தாலும் உங்களுக்கு ஒப்பான தந்தை தாயார்கள் யாருக்காவது கிடைப்பார்களா? அந்தப் பெருமைக்கு நான் கொடுத்து வைக்காமற் போனது எனக்கு எவ்வளவோ பெரிய மனவருத்தமாக இருக்கிறது. அல்லாமலும் பால் குடிக்கிற பிள்ளையைக் கைவிடுகிற தாய் தகப்பன்மார்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது எனக்கு அளவற்ற மனத்துன்பமாக இருக்கின்றது," என்றான். உடனே ஆசிரியப் பெரியார், "உலகத்தில் எத்தனையோ வியத்தகு செயல்கள் நடக்கின்றன. காரணம் இல்லாமல் ஒரு காரியமும் நடவாது. அப்படியே இதற்குத் தகுந்த காரணம் இருக்கவேண்டும். எல்லாம் விரைவில் வெளியாகும். நீ வீணாய் வருத்தப்படாதே அப்பா!" என்றார்.
-------------
5. புறங்கூறலும் கதைகளும்
1. சுகுண சுந்தரி அவதூறு பேசிய தன் தாதியைக் கண்டித்தல்
ஆசிரியப் பெரியார் புவனேந்திரனுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லியும், நீர் மேல் எழுதிய எழுத்துப்போல் ஒன்றும் பயன் இல்லாமற் போய்விட்டது. சுகுணசுந்தரி தன்னைப்பற்றி என்ன நினைப்பாளோ! அவள் முகத்தில் எப்படி விழிக்கிறது என்கிற நாணத்தினால் அவளைச் சில காலமாய்ப் பாராமலே இருந்து விட்டான். அவர்கள் இருவருக்கும் முகப்பார்வை இல்லாமல் செய்யவேண்டும் என்கிற மதுரேசனுடைய விருப்பம் இப்போது நிறை வேறியதால் அவனும் அவனுடைய தகப்பனும் மிகுந்த மகிழ்ச்சி உள்ளவர்களானார்கள். அவர்கள் இது தான் தக்க சமயம் என்று நினைத்து, அந்த எளிய பெண் பிள்ளை புவனேந்திரனைத் தன் பிள்ளை யென்று சொன்னது உண்மைதான் என்றும், அதை நன்றாய் உணர்ந்து கொள்ளாமல் ஆசிரியப் பெரியார் அவளை ஒழுங்கற்ற முறையில் துரத்திவிட்டார் என்றும் சுகுணசுந்தரியின் காதிலே விழும்படி செய்வித்தார்கள். சுகுணசுந்தரி அப்படிப் பேசிய தன் தாதியை நோக்கிச் சொல்லுகிறாள்.
2. அவ தூற்றைப்பற்றி ஒரு சொற்பொழிவு
ஆசிரியப் பெரியார் ஒழுங்குமுறை தவறி நடந்தார் என்று சொல்வது, அறமே தீவினை செய்தது என்று சொல்வதற்கு ஒப்பாக இருக்கிறது. குற்றம் அற்ற பெரியோர்கள் மேலே இழிவுரை கூறுவது எத்தன்மைய தென்றால், கதிரவன் ஒளியைத் திரட்டி அதன் மேலே கரியைப் பூச முயல்வது போலும். உலகத்தில் யாராக இருந்தாலும் ஒருவர் மேலும் இழிவுரை கூறப்படாது. ஏனென்றால், சில சமயங்களில் நல்லவர்களும் தீயவர்கள் போலத் தோன்றுகிறார்கள். அவர்களுடைய உள்ளம் கடவுளுக்குத் தெரியுமேயல்லாது மக்களுக்குத் தெரியாது. ஒருவன் செய்த குற்றத்தை அவனுக்கு நேரே தெரிவித்தாலுந் தெரிவிக்கலாமே அல்லாமல் அவன் இல்லாத இடத்தில் பறை சாற்றுதல் கூடாது. பலர் தங்களுடைய உயிரைப் பார்க்கிலும் பெருமையைப் பெரியதாக எண்ணுகிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு நாம் இழிவை உண்டு பண்ணுவது எவ்வளவு பெரிய தீமை? பலர் தங்களுடைய நற்புகழைக் கொண்டு உயிர் வாழ்கிறார்கள். அவர்களுடைய நற்புகழுக்குப் பழுது சொல்வது அவர்களுடைய வாழ்க்கையைக் கெடுப்பதற்கு ஒப்பான தன்றோ ?
ஒருவனுடைய வாய்ப்பிறப்பைக் கொண்டே, அவன் நல்லவன் என்றும் கெட்டவன் என்றும் அறிந்து கொள்ளலாம். எப்படியென்றால், மணந் தங்கிய பொருள்களில் இருந்து நன்மணம் உண்டாவது போல, நல்லவர்கள் எப்போதும் நன்மையைப் பேசுவார்களே யல்லாமல் ஒருவர் மீதும் இழிவுரை கூறார்கள். சாக்கடையில் இருந்து தீநாற்றம் வெளிப்படுவதைப் போலத், தீயவர்களே தீமையான மொழிகளைப் பேசுவார்கள். கடுங்காற்றுக்கு நேராக நின்று நாம் காறி உமிழ்கிற எச்சில் நம் மேலே திரும்பி விழுகிறதைப்போல நாம் பிறர்மேற் சொல்லும் இழிவுரையானது நம்மையே சாருகின்றது. களவுப் பொருளை வாங்குகிறவன் இல்லாவிட்டால் ஒருவனும் களவு செய்யமாட்டான்.
அப்படியே கோளைக் கேட்கிறவன் இல்லாவிட்டால் ஒருவனுங் கோள் சொல்ல மாட்டான். ஆகையால், கோள் சொல்லுகிறவனைப்போலவே கோளைக் காது கொடுத்துக் கேட்கிறவனும் குற்றம் உடையவனாகிறான். ஒருவனுடைய தீய நடத்தையைப்பற்றி நாம் முறை மன்றத்திலே சான்று பகரும் போது மட்டும் உண்மையைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். அல்லது ஒருவன் தீயவன் என்று தெரியாமல் அவனை ஒருவன் நம்பி மோசம் போகிற சமயமாயிருந்தால், அப்போது அவனுக்கு மட்டும் நமக்குத் தெரிந்த உண்மையை அறிவிக்கலாம். இப்படிப்பட்ட சமயங்கள் தவிர, மற்ற எந்தச் சமயங்களிலும் நாம் பிறர் மேல் இழிவுரை கூறுதல் கூடாது. ஒருவனுடைய செய்கைக்கு நமக்குக் காரணம் தெரியாமல் இருக்குமானால், அவன் நல்ல எண்ணத்துடனே அந்தச் செய்கையைச் செய்திருப்பான் என்று நாம் உள்ளுற உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவனுடைய செய்கை முன்னர் நமக்கு மாறுபாடாகக் காணப்பட்டாலும், பிறகு அது குற்றம் அற்றதென்று பல சமயங்களில் கண்டுபிடித்திருக்கிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக ஓர் ஊரில் நடந்த செய்தியை விரித்துரைக்கிறேன்.
3. ஒரு துரைசானி கதை
சில ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத பல பேர்கள் ஓர் அஞ்சல் வண்டியில் ஏறிக் கொண்டு பல ஊர்களுக்குப் பயணம் போனார்கள். வழியில் இராக்காலம் நெருங்கியபடியால் கள்ளர்களுடைய அச்சத்தைக் குறித்துப் பேசிக்கொண்டு போனார்கள். அப்போது ஒரு செல்வன் தன் கையில் இருந்த பத்துத் தங்க நாணயங்களை எப்படிப் பாதுகாப்பதென்று மற்றவர்களைப் பார்த்துக் கேட்டான். அவனுக்கு அண்மையில் இருந்த ஒரு துரைசானி, 'அவைகளை உம்முடைய மிதியடிக்குள் (பாதரட்சைக்குள்) வைத்துப் பாதுகாக்கலாமே,' என்றாள். அவன் அப்படியே அந்தத் தங்க நாணயங்களை மிதியடிக்குள் வைத்து மறைத்தான். பிறகு, சிறிது நேரத்துக்குள் ஒரு கள்ளன் வந்து பணப்பைகளைக் கொடுக்கும்படி கேட்டான். அப்போது அந்தத் துரைசானி, "என்னிடத்திற் பணம் இல்லை; அதோ அந்தத் துரையினுடைய மிதியடிகளை ஆராய்ந்து பார்த்தால் பத்துத் தங்க நாணயங்கள் அகப்படும்," என்றாள். அவன் அப்படியே ஆராய்ந்து அகப்பட்ட தங்க நாணயங்களைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.
அவன் போன பிறகு, அந்தத் துரைசானியை அந்தச் செல்வன் வாயில் வந்தபடி வைத்தான். உடனே அந்தத் துரைசானி, அச்செல்வனையும் மற்றவர்களையும் பார்த்து, "நீங்கள் அன்புகூர்ந்து நாளைக்கு என் வீட்டில் விருந்து சாப்பிடுவீர்களானால், உங்கட்கு உண்மையைத் தெரிவிக்கிறேன்," என்றாள். அவ்வாறே மறுநாள் மனக்களிப்புடன் அவர்கள் எல்லோரும் விருந்துண்ட பிறகு, அந்தத் துரைசானி தன் கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிப், "பல ஆயிரம் தங்க நாணயம் மதிப்புள்ள கடித நாணயங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. அந்தக் கள்ளனுக்கு இந்தத் துரையினிடம் இருந்த தங்க நாணயங்களை நான் தெரிவிக்காமல் இருந்தால் அவன் இந்தப் புத்தகத்தில் உள்ள கடித நாணயங்களையெல்லாம் கவர்ந்து கொண்டு போயிருப்பான். இந்தத் துரை என்னாலே இழந்த பத்துத் தங்க நாணயங்களுக்குப் பதிலாக நூறு தங்க நாணயங்கள் கொடுக்கிறேன். அவர் வேண்டாம் என்றாலும் நான் விட மாட்டேன்," என்று சொல்லி, நூறு தங்க நாணயங்களை அவருக்குக் கொடுத்தாள். உடனே எல்லோரும் மிகுந்த களிப்படைந்து, அந்தப் பெண்ணினுடைய ஆற்றலையும் நல்லியல்பையும் புகழ்ந்து கொண்டாடினார்கள்.
4. பாம்பின் கதை
மறுபடியும் சுகுணசுந்தரி அந்தத் தோழியை நோக்கிப், புறங்கூறலைப்பற்றி ஒரு சிறிய கதை சொல்லுகிறேன் கேள்,' என்றாள்.
ஒரு காலத்தில் ஒரு மனிதனைக் கடிக்க ஒரு பாம்பு துரத்திற்று. அந்த மனிதன் அந்தப் பாம்பைப் பார்த்துப், 'பாம்பே! உனக்கு நான் ஒரு தீமையுஞ் செய்த தில்லையே ! என்னைக் கடித்துக் கொல்வதனால் உனக்கு வரும் பயன் யாது? சிங்கம் புலி முதலிய தீய விலங்குகள் ஊன் உண்பவைகளாகையால் அவைகள் மனிதர்களைக் கொல்ல நேர்மை இருக்கிறது. அப்படிப்பட்ட நேர்மை இல்லாமல் வீணாக என்னை ஏன் கொல்லத் துரத்துகிறாய்?' என்றான்.
அதற்குப் பாம்பு, 'இந்தக் கேள்வி என்னைக் கேட்க வேண்டாம்; உன்னுடைய கூட்டத்தாரையே கேள். உங்களுக்கு யாதொரு தீங்குஞ் செய்யாதவர்கள் மேலே நீங்களே அவதூறு பேசி ஒருவரை ஒருவர் கெடுத்துக்கொள்ள வில்லையா? அந்தக் குணம் உங்களிடத்தில் இருக்கிறவரையில் என்னுடைய குணத்தை நானும் விடேன்' என்றது.
சுகுணசுந்தரி அவதூறு பேசின தன் தாதியைக் கண்டித்ததைக் குறித்து, ஆசிரியப் பெரியாரும் புவனேந்திரனுங் கேள்விப்பட்டுக் களிகூர்ந்தார்கள். பிறகு, ஆசிரியப் பெரியார் புவனேந்திரனை நோக்கிப் , "பாம்பு முதலிய நஞ்சுடைய உயிர்களும், தீய விலங்குகளும், இடி, பெருங் காற்று, பெருமழை, பஞ்சம், படை, நோய் முதலியவை களும் மனிதனை ஒறுக்கின்ற ஆயுதங்களாக இருக்கின்றன. உலகத்தில் தோட்டி முதல் தொண்டைமான் வரையில் எல்லோரும் முறைகேடான செய்கைகளைப் புரிகிறார்கள். 'இப்படிப்பட்ட மனிதர்களுக்கு எப்படி வெயில் எறிக்கிறது; எப்படி மழை பெய்கிறது' என்று ஓர் ஆப்பிரிக்க நாட்டான் வியப்படைந்தது போல் நாமும் வியப்படைய வேண்டியதாக இருக்கிறது.
5. உலகத்தில் நடக்கின்ற ஒழுங்கின்மைகள்
பெருமையிற் சிறந்த அலெக்சான்றர் (Alexander the Great) என்னும் அரசர் திக்குகள் தோறும் வெற்றி யுடன் சென்றபோது, ஆப்பிரிக்கா நாட்டிலே ஒரு தொலை வான ஊரில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடஞ் சென்றார். அவர்கள் அந்த அரசரைத் தங்களுடைய தலைவன் குடிசைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அந்தத் தலைவன் அலெக்சான்றருக்கு மிகுந்த வழிபாடுகள் செய்தான். தங்கத்தினாலே செய்யப்பட்ட சில பழவகைகளையும் தங்கத்தினாலே செய்யப்பட்ட உணவையும் அவர் முன்பாகக் கொண்டுவந்து வைத்தான். " நீங்கள் இந்த ஊரில் தங்கம் சாப்பிடுகிறது வழக்கமா?" என்று அலெக்சான்றர் கேட்டார். அந்தத் தலைவன், "நாங்கள் தங்கம் சாப்பிடுகிற வழக்கம் இல்லை. நீங்கள் எதற்காக இவ்வளவு தொலை வந்தீர்கள்?" என்றான். அலெக் சான்றர், "உங்களுடைய நாட்டின் ஒழுக்கங்களையும் வழக்கங்களையும் அறிய வந்தேன்," என்றார். "அப்படியானால் உங்களுக்கு விருப்பம் உள்ள காலம் வரையில் இவ் விடத்தில் இருக்கலாம்," என்று அந்த ஊர்த் தலைவன் சொன்னான்.
ஒரு வழக்கு முடிவு
அப்படி அவர்கள் பேசி முடிந்த உடனே, இரண்டு வழக்காளிகள் அந்தத் தலைவன் இடத்துக்கு வந்தார்கள். அவர்களில் வழக்காளி தலைவனை நோக்கி, "ஐயா! நான் எதிர் வழக்காளியிடத்தில் சில நிலம் விலைக்கு வாங்கினேன். அதில் ஆழமாய் நான் வடிகால் வெட்டின் போது ஒரு பெரும் புதையல் அகப்பட்டது. அந்தப் புதையலுக்கு நான் உரியவன் அல்லன். ஏன் என்றால் எதிர்வழக்காளி இடத்தில் நான் நிலம் மட்டும் வாங்கினேனே தவிரப் புதை யலுக்கு விலைகொடுத்து வாங்கவில்லை. அப்படியிருக்கப் புதையலை எதிர்வழக்காளி ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறான்," என்றான்.
உடனே எதிர்வழக்காளி, "முறைமன்றத் தலைவரே! வழக்காளியைப் போலவே எனக்கும் மனச்சான்று இருக்கின்றது. நிலத்தையும் அதிலுள்ள எல்லாப் பொருள்களை யும் நான் வழக்காளிக்கு விற்றுப்போட்டதால் இந்தப் புதையலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை," என்றான். அந்தத் தலைவன் இருவருடைய சொற்களையும் நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு, இரு வழக்காளிகளையும் பார்த்து, "உங்களில் வழக்காளிக்கு ஒரு மகனும் எதிர் வழக்காளிக்கு ஒரு மகளும் இருப்பதால், அவர்கள் இருவருக்குத் திருமணஞ் செய்வித்து அந்தப் பொருளை அவர்களுக்கு நன்கொடைப் பொருளாகக் கொடுத்துவிடுங்கள்," என்று முடிவு செய்தான். அந்த நேர்மையான முடிவைக் கேட்டு வியப்படைந்து கொண்டிருந்த அலெக்சான்றர் அரசனை அந்தத் தலைவன் நோக்கி, "உங்களுடைய ஊரில் இந்த வழக்கு எப்படி முடிவு செய்யப்படும்?" என்று கேட்டான். "எங்களுடைய ஊரில் உண்மையாகவே இரண்டு வழக்காளிகளையும் பிடித்துக் காவற்கிடங்கில் வைத்துவிட்டுப் புதையலை அரசன் பிடுங்கிக்கொள்ளுகிறது வழக்கம்," என்று அலெக்சான்றர் மறுமொழி சொன்னார். உடனே அந்தத் தலைவன் மிகவும் வியப்படைந்தான். "ஐயா! உங்கள் ஊரில் வெயில் எறிக்கிறதா? மழை பெய்கிறதா?" என்றான். அலெக்சான்றர், "ஆம் ஆம்" என்றார். அப்படியானால் உங்கள் ஊரிலுள்ள ஆடு மாடுகளுக்குப் புல் பூண்டுகள் வேண்டுமே, அதற்காக மழை பெய்கிறதும் வெயில் எறிக்கிறதுமே அல்லாமல் உங்களுக்காக அல்ல," என்று அந்தத் தலைவன் சொன்னான். அலெக்சான்றர் நாணங் கொண்டு எழுந்து போய்விட்டார்.
------------
6. புன்மையும் பொய்ம்மையும்
1. மதுரேசன் பெருமையைக் காட்டப்போய்ச் சிறுமையடைந்தது
புவனேந்திரன் ஆசிரியப் பெரியாருடைய மகன் அல்லன் என்று தெரிந்தவுடனே சுகுணசுந்தரிக்குப் பெரிய வியப்புண்டாயிற்று. ஆயினும், மனிதர்களுடைய மேன்மையும் தாழ்மையும் அவரவர்களது ஒழுங்கு முறையைப் பொறுத்ததே அல்லாமல் பிறப்பினால் ஒன்றும் இல்லை; என்பது அவளுடைய முடிவாகையால் அவளுக்குப் புவனேந் திரன் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் எவ்வளவுங் குறையவில்லை. முதல் அமைச்சனும் அவனுடைய மகனும் புவனேந்திரனுக்குப் பலவகையில் தீங்கு தேடுகிறார்கள் என்று தெரிந்து, அவர்களைச் சுகுணசுந்தரி மிகுதியாக மனதுக்குள்ளே வெறுக்கலானாள். அவளுடைய காட்சியையும் அளவளாவுதலையும் அடியோடு மதுரேசன் இழந்து விட்டதால், அவளுடைய அன்பைத் தேடிக்கொள்வதற்கு என்ன சூழ்ச்சி செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய தகப்பன் மகனை நோக்கி, "ஆடவர்கள் தங்களுடைய கல்வியினாலாவது அழகினா லாவது ஆண்மையினாலாவது பெண்களைத் தம் வழிப் படுத்தவேண்டும். கல்வியும் அழகும் உன்னிடத்தில் குறைவாக இருப்பதால் நீ உன்னுடைய ஆண்மையைக் காட்டிச் சுகுணசுந்தரியை உன் வழிப்படுத்தவேண்டும்," என்றான்.
மதுரேசன் இது நல்ல சூழ்ச்சி என்று எண்ணி அதற்குத் தக்க சமயத் தேடிக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சமயம் வாய்க்காமையால் தானே ஒரு சமயத்தை உண்டு பண்ணிக்கொள்ளத் தொடங்கினான்.
2. பொய்க்கொள்ளை மெய்க் கொள்ளையானது
எப்படியெனில், உள்ளூரிலும் பிற ஊர்களிலும் உள்ளவறியவர்களையும் பிணியாளர்களையும் உசாவச் சுகுணசுந்தரி சில சமயங்களில் வெளியே போகிறது வழக்கம். அப்படிப்பட்ட சமயங்களில் வண்டிக்காரனையும் தன்னுடைய உயிர்த்தோழியையும் தவிர வேறொருவரையும் அவள் கூட அழைத்துக்கொண்டு போகிற வழக்கமில்லை. அங்ஙனம் அவள் பிற ஊர்களுக்குப் போகிற சமயத்தில் மதுரேசன் சில தீயவர்களை ஏவிவிட்டு, அவளை வழியில் வளைத்துக்கொண்டு வழிப்பறி செய்வது போல் பாவனை பாண்ணும்படியாகவும், அந்தச் சமயத்தில் தான் வந்து அவர்களை அடித்துத் துரத்தி, அவளுக்குத் தன் ஆற்றலைக் காட்டுகிறதென்றும் தனக்குள்ளே உறுதி செய்து கொண்டு, தன் கருத்தைச் சில தீயவர்களுக்குத் தெரிய வித்தான். எல்லா மக்களாலும் விரும்பப் பெறும் சுகுணசுந்தரியைப் போலியாகத் துன்பஞ் செய்யக்கூட ஒருவரும் உடன்படவில்லை. ஆனால், இரக்கம் என்பதை எள்ளளவும் அறியாத சில கொடியவர்கள் பொருள் விருப்பத்தினால் அந்தக் கொடிய செய்கைக்கு உடன் பட்டார்கள். ஒருநாள் சுகுணசுந்தரி அடுத்த சிற்றார் ஒன்றுக்குப் போய்த் திரும்பி வருகிற சமயத்தில் நடுவழியில் அவளை வளைத்துக் கொண்டார்கள். அவளும் அவளுடைய தோழியும் அணிந்து கொண்டிருந்த விலை மதிக்கக் கூடாத அணிகலன்களைப் பார்த்தவுடனே , விளையாட்டுச் சண்டை வினைச்சண்டையானது போல், அந்தத் தீயவர்கள் போலித்தன்மையை விட்டுவிட்டு மெய்யாகவே வழிப்பறி செய்யத் தொடங்கினார்கள். அந்தச் சமயத்தில் மதுரேசன் ஒரு குதிரையின் மேல் ஏறிக்கொண்டுவந்து, அவர்களைக் கழியினால் ஓங்கி ஓங்கி அடித்தான். அந்தக் கொடியவர்களுக்கு உண்மையாகவே முரட்டு வெறி உண்டாகி அவன் மேற் பாய்ந்து, குதிரையில் நின்றும் அவனைக் கீழே தள்ளிக் கையாலும் கழிகளாலும் மிகப் பலமாகப் புடைத்தார்கள். அவன் சிறிது நேரத்தில் போன இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டான். பிறகு அந்தத் தீயவர்கள் சுகுணசுந்தரியின் அணிகலன்களைக் கழற்ற முயலும்போது புவனேந்திரன் நாள்தோறும் குதிரையின் மேல் ஏறிச் சாரிபோகிற வழக்கப்படி, அந்த வழியாய்த் தன் பாட்டில் சாரிபோய்க் கொண்டிருந்தான்.
3. புவனேந்திரனுடைய ஆற்றல்
அப்பொழுது அவன் சுகுணசுந்தரிக்கு நேரிட்ட இடுக்கண்ணைக் கண்டு அந்தத் தீயவர்களின் மேற் பாய்ந்தான். தன்னுடைய போர்ப் பயிற்சியின் ஆண்மைத் தொழிலை அவர்களிடத்தில் முழுதும் பயன்படுத்தினான். அவர்கள் அவனோடு எதிர்த்து நிற்கமாட்டாமல் ஓடிப் போய்விட்டார்கள். சுகுணசுந்தரி அச்சத்தினால் மெய் சோர்ந்து நினைவிழந்திருந்தமையால் தன்னுடைய துன்பத்தைத் தீர்த்துக் காப்பாற்றியவர்கள் இன்னாரென்று அப்போது அவளுக்குத் தெரியாது. பிறகு புவனேந்திரன் சுகுணசுந்தரியின் வண்டியை நடத்தும்படி வண்டியோட்டிக்குக் கட்டளை செய்து, தானுங் கூடச் சென்றான். வண்டி நகரத்திற்குள் நுழைந்தவுடனே தன் வீட்டிற்குப் போய்விட்டான். சுகுணசுந்தரி தன்னுடைய அரண்மனைக்குட் சென்று மூர்ச்சை தெளிந்தவுடனே புவனேந்திரனுடைய ஆண்மைச் செய்கையைத் தோழி மூலமாகக் கேள்விப்பட்டு மிகுந்த வியப்பும் களிப்பும் அடைந்தாள். அரசனும் அதைக் கேள்வியுற்று மிகுந்த வியப்புடனே ஆசிரியப் பெரியாரை நோக்கி, "புவனேந்திரன் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்; இந்த உலகம் முழுமையையும் அவனுக்கு நன்கொடையாகக் கொடுத்தாலும் போதாதே!" என்று மிகவும் புகழ்ந்து கொண்டாடினான்.
தீயவர்களும் மதுரேசனும்
சுகுணசுந்தரியை வழிப்பறி செய்ய முயன்ற அந்தத் தீயவர்கள் மதுரேசன் முதலில் ஒப்புக்கொண்டபடி தங்களுக்குப் பரிசளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவன் அவர்களை நோக்கி, "நீங்கள் போலிக் கொள்ளையை விட்டுவிட்டு, உண்மையான கொள்ளையில் நுழைந்ததும் அல்லாமல் என்னையும் அடித்துத் துன்பம் செய்தமையால் நான் உங்களுக்கு ஒன்றுங் கொடேன்," என்றான். அவர்கள், "நீ தகுந்த நன்கொடை அளிக்காவிட்டால் அந்த வழிப்பறிக்கு நீ தான் காரணம் என்று அரசனுக்குத் தெரிவிப்போம்," என்று அச்சுறுத்தினார்கள். அவன் அச்சம் அடைந்து அவர்கள் கேட்டுக்கொண்டபடி மிகுந்த பொருள் கொடுத்து அவர்களைச் சரிப்படுத்தினான். அவர்கள் மறுபடியும் அவர்களுக்குப் பணம் வேண்டும் போதெலாம் அவனை அச்சுறுத்திப் பணம் பிடுங்கிக்கொண்டு வந்தார்கள். இவ்வாறு அவனுடைய தீய முயற்சி அவனுக்குத் துன்பத்தையும் இழிவையும் பணச் செலவையும் உண்டு பண்ணியதும் அன்றிப், புவனேந்திரனுக்குப் புகழாய் முடிந்தது.
புகழ்பாடக் கூலியாள்
அந்தத் தீயவர்கள் சுகுணசுந்தரியை வழியில் வளைத்துக் கொண்டபோது மதுரேசனும் தனக்கு உதவியாக வந்து அடிபட்டான் என்று கேள்விப்பட்டுச், சுகுணசுந்தரி அவனிடத்தில் சிறிது இரக்கம் உள்ளவளாக இருந்தாள். இதை மதுரேசன் கேள்வியுற்று, அந்தச் சமயத்தில் அவளுடைய தோழிகளிற் சிலரைப் பொருள் மூலமாகத் தன்வழிப்படுத்திக் கொண்டு, தன்னைப்பற்றிச் சுகுண சுந்தரி இடத்தில் அவர்கள் எப்போதும் புகழ்ச்சியாய்ப் பேசும்படி திட்டம் செய்தான். அங்ஙனம் ஒருநாள் ஒரு தோழி அவனைக் குறித்து அளவுகடந்து புகழ்ந்து பேசியபோது, அது பொய்யென்று தெரிந்து கொண்டு, சுகுணசுந்தரி பொய்யைப் பற்றிப் பின் வருமாறு பேசினாள்.
4. பொய்யைப்பற்றி ஒரு சொற்பொழிவு
பொய் பொய்யாகப் போம்
"எல்லாத் தீக்குணங்கட்கும் பொய்யே அடிப்படையாக இருக்கின்றது. எப்படியெனில், ஒரு குற்றத்தைப் பொய் சொல்லி மறைத்துவிடலாம் என்னுந் துணிவாற் செய்கிற-படியால், கொலை, களவு, வஞ்சகம், காமம் முதலிய எல்லாக் குற்றங்களுக்கும் பொய்யே மூலகாரணமாக இருக்கின்றது. ஆகையால், ஒருவன் பொய்யை விட்டு விட்டால் அந்தத் தீக்குணங்களும் நாளுக்கு நாள் குறைந்துவிடும் என்பதற்கு ஐயம் இல்லை.
நம்முடைய உண்மையான கருத்தை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தி நன்மையடையும் பொருட்டே கடவுள் நமக்கு வாக்கைத் தந்தருளினார். நம்முடைய நன்மைக்காகக் கடவுள் தந்த வாக்கை நாம் நல்வழியில் பயன்படுத்தாமல், பொய், மோசம் முதலிய கெட்ட செயல்களில் பயன் படுத்துவது எவ்வளவு பெரிய ஒழுங்கின்மையாக இருக்கின்றது? விலங்குகளுக்கும் நமக்கும் உள்ள வேறு பாடுகள் எல்லாம் வாக்கு ஒன்றினாலேதான். நாம் பொய் சொல்லி நமது வாக்கைக் கெடுத்துக் கொள்ளுவோமானால், நாம் விலங்குகளினுங் கடை கெட்டவர்களாகிறோம். இந்த வீட்டுக்கு முட்டுக் கொடுப்பது போல் நாம் ஒரு பொய் சொன்னால், அதை நிலைநிறுத்தப் பல பொய்களின் உதவி வேண்டியிருக்கின்றது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பதுபோல் என்றைக்கிருந்தாலும் பொய் வெளியாகாமற் போகிற தில்லை.
வழக்கமாய்ப் பொய் சொல்லுகிறவன், ஒரு மெய் சொன்னாலுங்கூட அதை ஒருவரும் நம்பமாட்டார்கள். அவன் என்ன துன்பம் அடைந்தாலும் அவனுக்காக, ஒருவரும் இரங்கார்கள். அவனுக்குச் சிறிய தொகை கூட ஒருவருங் கடன் கொடார்கள். அவனுக்கு எத்தகைய பிழைப்பு அகப்படுவதும் மிகத் தொல்லை. அவனுடைய மனைவி மக்களே அவனை இகழ்வார்கள். பொய்யரைப் பொய்யரும் நம்பார்கள். பொய்யன் என்று பெயர் எடுத்தவன் எவ்வாறு ஆணையிட்டாலும் அவனுடைய மொழியை முறைமன்றத்தார் தள்ளிவிடுவார்கள். உலகத்தில் மனிதர்களுக்கு உண்டாகிற பல துன்பங்களுக்கும் பெரும்பாலும் பொய்யே பிறப்பிடமாக இருக்கின்றது. தான் செய்த குற்றத்தைப் பொய் சொல்லி மறைக்கிறவன் இரண்டு குற்றம் செய்கிறான். எப்படியென்றால், தான் செய்த குற்றம் ஒன்று ; அதை மறைக்க முயன்ற பொய்க் குற்றம் ஒன்று. ஆக இரண்டு விதமான குற்றவாளியாகிறான்.
நாம் வாயாலே பொய் சொல்லாவிட்டாலும், கண் சாடை, கைச்சாடை தலையசைவு முதலிய குறிப்புகளால், பொய்யை மெய்யென்று தோன்றும்படி செய்வோமானால் அவைகளும் பொய்தானே. இருபொருள் படுமாறு பேசி உண்மையை மறைப்பதும் பெரும் பொய்யன்றோ? உலகமானது உண்மையிலே வாழ்கின்றது. உண்மை என்பது அடியோடு இல்லாவிட்டால் நாடாட்சியும் முறையோம்புத் லும், குடும்பக் காரியங்களும் மற்றைத் தொழில்களும் எப் படி ஒழுங்காய் நடக்கும்? அந்தச் செயல்களில் இப்பொழுது நடக்கிற ஒழுங்கின்மைகளுக்குப் பொய்யே முதன்மையான காரணமாயிருப்பதால், பொய்யை முழு மனதுடன் வெறுக்க வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கின்றது.
வேறு ஒரு முயற்சி
இந்தச் சொற்பொழிவைக் கேட்டவுடனே அந்தத் தோழி நாணம் அடைந்து மதுரேசனைக் குறித்துத் தவறாகப் புகழ்கிற பழக்கத்தை விட்டுவிட்டாள். இதைக் கேள்வியுற்ற மதுரேசன் மனம் மயங்கிக்கொண்டிருக்கையில், அவனுக்கு நண்பனும் அரைப்படிப்பைக் கொண்டு அம்பலத்தில் ஏறினவனும் ஆன அறிவற்ற பாவாணன் ஒருவன் அவனை நோக்கி, 'புகழ்ச்சியினால் கவர்ச்சி அடையாத பெண்கள் ஒருவரும் இலர். அவர்களுடைய அழகையார் மிகுதியாகப் புகழ்கிறார்களோ அவர்கள் மேலே அவர்களுக்கு மிகுந்த அன்பும் இரக்கமும் உண்டாகின்றது. நான் கல்லையும் கரைக்கும்படியான ஒரு செய்யுள் பாடித் தருகிறேன்; அதை நீ அவளிடம் அனுப்பினால் உடனே அவள் உன் வழிக்கு வருவாள்,' என்று சொல்லி, ஒரு செய்யுள் பாடிக் கொடுத்தான். இலக்கணவழுக்கள் நிறைந்த அந்தச் செய்யுளை வெளிப்படுத்த நமக்கு விருப்பம் இல்லாதபடியால், அதன் பொருளை மட்டும் ஒருவாறு சுருக்கிச் சொல்லுவோம்.
5. சுகுண சுந்தரியின் அழகைக் குறித்து அறிவற்ற பாவாணன் ஒருவன் பாடிய பாட்டின் பொருள்
"பெருமை தங்கிய புகழ் விளங்கிய சுகுணா சுந்தரி காண்க!
சிலநாளாய் உன்னுடைய காட்சி எனக்குக் கிடைக்காமல் இருந்தபோதிலும் உன்னுடைய முகமாகிய திங்கள் என்னுடைய உள்ளமாகிய விண்ணில் எப்பொழுதும் விளங்கிக்கொண்டிருக்கின்றது. உன்னுடைய அழகை எடுத்துப் பேச ஆயிரம் நாவுடைய ஆதிசேடனாலும் கூடுமா? உன்னுடைய திருமுகத்துக்குத் தோற்றுப் போய்த் திங்கள் உடல் வெளுத்து, உள்ளங் கறுத்து, நாள் தோறுந் தேய்ந்து போகிறான். அவ்வாறிருக்கச் சேற்றிலே பிறந்து வண்டுகளால் சுவைக்கப்பட்டு, இரவிலே குவிந்து வாடிப்போகிற தாமரை மலர் உன் முகத்துக்கு எவ்வாறு ஒப்பாகும்? முகில்கள் உன்னுடைய கூந்தலுக்கு ஒப்பாகாமையால் தண்ணீர்ப் பெருக்காய்க் கண்ணீர் வடித்து அழுது கொண்டு விண்ணிலே திரிந்து கொண்டிருக்கின்றன. நான்கு காலோடும் ஒரு வாலோடுங் கூடிய விலங்காகிய மானையும், தீய நாற்றம் உள்ள மீனையும் உன் கண்ணுக்கு எப்படி ஒப்புச் சொல்லுவேன் ? நாட்டிலே சுற்றிக்கொண்டிருந்த அன்னமும் மயிலுங் குயிலும் கிளியும் பூவையும் உன்னுடைய நடைக்குஞ் சாயலுக்கும் மொழிக்கும் தோற்றுப்போய்க் காட்டிலே சுற்றிக் கொண்டிருக்கின்றன். முத்துக்கள் உன்னுடைய பற்களுக்கு அஞ்சிச் சிப்பிக்குட் புகுந்து, கடலில் ஒளிந்து கொண்டே இருக்கின்றன. எல்லாருந் , 'துப்புதுப்பு' என்று சொல்லுகிற பவளத்தை உன்னுடைய இதழுக்கு நான் எப்படி ஒப்புரைப்பேன்? நான்முகன் உனக்கு எல்லா உறுப்புக் களையும் படைத்து இடையைப் படைக்காமல் விட்டு விட்டது மறதியினாலோ அல்லது பார்வைக்குற்ற நீக்கத்திற்காகவோ தெரியவில்லை," என்பது தான்.
மதுரேசன் அந்தப் பாட்டை ஒரு தோழி மூலமாகச் சுகுணசுந்தரியிடம் அனுப்பினான். அதைப் பார்த்த உடனே சினம் என்பதை அறியாத சுகுண சுந்தரிக்குப் பெருஞ்சினம் உண்டாகி, அந்தப் பாட்டைக் கிழித்து, அதனைக் கொணர்ந்தவள் தலைமேலே விட்டெறிந்தாள். ஒரு துண்டுத் தாளில், "நான்முகன் எனக்கு இடையைப் படைக்க மறந்துவிட்டது போல உனக்கு அறிவைப் படைக்க மறந்துவிட்டான்," என்று எழுதி அத்தோழி கையிலே கொடுத்தனுப்பினாள். அந்தத் தாளைக் கண் ணுற்ற பின்பு மதுரேசன் தான் செய்தது தவறென் றுணர்ந்து மனவருத்தம் அடைந்தான்.
------------
7. உடல்நலம் ஓம்பல்
1. உடல்நல முறைகள்
சுகுணசுந்தரிக்குப் பல தோழிகளிருந்தும் அவள் தன்னுடைய வேலைகளைத் தன் கையாலே செய்துகொள்வதைக் குறித்து, அரசன் ஆசிரியப் பெரியாரிடத்தில் முறையிட்டான். ஆசிரியப் பெரியார் அரசனை நோக்கி, "சுகுணசுந்தரி செய்வது மிக நல்ல காரியம். நமக்கு உடல்நலம் வேண்டியிருந்தால் உடல் முயற்சி செய்ய வேண்டியது முதன்மையானது," என்று உடல்நல முறைகளைப்பற்றிப் பின்வருமாறு சொற்பொழிவு செய்தார்.
2. அளவான உணவும், தூய்மையான நீரும், தூய்மையான காற்றும், உடல் முயற்சியும் உடல் நலத்திற்கு இன்றியமையா முதன்மையான கருவிகள்.
இவ்வுலகத் தொடர்பான எல்லாவகையான செல்வங்களிலும் உடல் நலமே முதன்மையான தாயிருக்கின்றது. ஏனென்றால், சுவரை வைத்துக்கொண்டல்லவோ சித்திரம் எழுதவேண்டும் என்கிற பழமொழிப்படி உடல்நலம் இருந்தல்லவோ பிற செல்வங்களை நுகருதல் வேண்டும். உடல் நலம் இல்லாவிட்டால் பலவகைப்பட்ட பொருள்களைப் பெற்றிருப்பதனாலே பயன் என்ன? ஆனது பற்றியே நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமுமாய் இருக்கவேண்டும் என்று சிறுவர்களைப் பெரியவர்கள் வாழ்த்துகிறார்கள். நாம் உண்ணும் உணவும் குடிக்கிற நீரும் உட்கொள்ளும் காற்றும் உடல் நலத்திற்கு முதன்மையான கருவிகளா யிருக்கின்றன. மனிதனுடைய முகங்களையும் குணங்களையும் குரல்களையும் கடவுள் வேறுபடுத்தி யிருப்பது போலவே அவர்களுடைய உடல்களின் இயல்பையும் வேறுபடுத்தி-யிருக்கிறார் என்பது நடைமுறையில் நன்றாகத் தோன்றுகிறது. எப்படி என்றால் சிலருக்குப் பித்தவுடலும், சிலருக்குக் காற்று உடலும் (வாயு தேகம்) சிலருக்குச் சூட்டு உடலுமாக மாறியிருக்கின்றன. நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் சில பித்தம் உடையவையாயும், சில சூடு உடையவையாயும்; சில காற்றுத் தொடர்பு உடையவை-யாயும் இருக்கின்றன. சில வாதத்தைப் போக்குபவையாயும் இருக்கின்றன. கடவுளுடைய அருளால் நாம் சாப்பிடும் உணவுப்பொருளே ஒன்றும் கொன்று உறவும் பகையுமாய் இருக்கிறபடியால், நாம் சமயம் உணர்ந்து தகுந்த உணவுகளை அருந்துதல் வேண்டும். எந்தப் பொருள்கள் நம்முடைய உடலுக்கு ஒத்திருக்கிறதென்றும், எது ஒத்துக்கொள்ளவில்லை என் றும், இன்ன உணவு சாப்பிட்டதினால் உடலில் இன்ன நன்மை அல்லது தீமைகள் உண்டாயிற்றென்றும் நாம் எப்போதும் கருத்துச் செலுத்த வேண்டும்.
3. அளவோடு கூடிய உணவின் பெருமை
நாம் அருந்தும் பொருள்களின் நன்மை தீமைகளை அறிவதற்கு நம்முடைய நடைமுறை உணர்ச்சியே போது மானதாயிருக்கின்றது. நாம் நலமற்ற உணவுகளை உண்ணும்போது செரியாமை மந்தம் தலைவலி முதலிய சிறிய துன்பங்களை உண்டாக்கிக் கடவுள் நம்மைக் கருத்துடன் இருக்கும்படியாகச் செய்கிறார். கடவுளுடைய முன்னறிவிப்பை நாம் கருத்தில் வைத்து, அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுதல் வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். ஆனதால் நாம் எப்போதும் அளவாகவே உண்ணுதல் வேண்டும் உணவு சிறிது குறைந்தாலும் குற்றம் இல்லை. மிகுதியான உணவு உடல்நலம் இன்மையை உண்டுபண்ணும். நம்மைச் சுமக்கவேண்டிய ஊர்தியை நாமே தூக்கிச் சுமப்பது போல, நம்மைத் தாங்க வேண்டிய உணவை நாம் மிகுதியாக உண்டால், நமக்கு அந்த உணவே சுமையாக முடிகின்றது.
இரண்டு பார்ப்பனர்கள் கதை
ஒருநாள் இரண்டு பார்ப்பனர்கள் அளவுக்கு மிஞ்சின உணவு அருந்தினதால், கீழே குனிய முடியாமல் அண்ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவிற் போகும்போது அவர்களில் ஒருவனுக்குக் காலில் மிதியடி இருக்கிறதா இல்லையா என்கிற ஐயம் உண்டாகி, மற்றொருவனை நோக்கி, "தம்பி, சுப்பு ! என் காலில் மிதியடி இருக்கிறதா பார்," என்றானாம். மற்றைப் பார்ப்பனனும் குனிய முடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால், "அண்ணா! விண்ணுலகம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணேன்," என்றானாம். இப்படிப் பட்ட பேருண்டிக்காரர்களுக்கு எப்படி உடல் நலத்துடன் விளங்கும் ? நம்முடைய உணவு பொதுவான தாக இருக்க வேண்டுமே அல்லாமல் பல சாமான்களையும் வாசனைப் பண்டங்களையும் சேர்த்துச் சமையல் செய்யக் கூடாது. விலங்கு பறவைகளில் ஒவ்வோர் இனம் ஒவ்வொரு-விதமான இரையைத்தான் புசிக்கின்றது. அப்படியே ஆடு மாடு முதலியன புல் பூண்டு முதலியவைகளை மட்டும் உண்ணுகின்றன. சில விலங்குகளும், சில பறவைகளும் ஊன் முதலியவைகளை மட்டும் உண்ணுகின்றன. சில பறவைகள் கூலங்களை மட்டும் உண்ணு கின்றன. மனிதன் உலகத்தில் சாப்பிடாத பொருள் ஒன்றும் இல்லை. எல்லாக் கூலவகைகளும் எல்லா மரக் கறிப் பொருள்களும், எல்லாவிதமான ஊன்களும் உண்ணுகிறான். அவைகளின் நன்மை தீமைகளைக் குறித்து நாம் எப்போதும் கருத்தூன்றி நன்மையற்ற பொருள்களை அருந்தாமல் தள்ளிவிடுதல் வேண்டும்.
4. தண்ணீரின் அருமை பெருமை
நாம் குடிக்கிற தண்ணீரும் தூய்மையானதாக இருத்தல் வேண்டும். உலகத்திலுள்ள அழுக்குகளை யெல்லாம் போக்கி, நமக்கு உணவு முதலானவைகளை உண்டாக்கித் தானும் நமக்கு உணவாயிருக்கிற தண்ணீருக்கு ஒப்பான பொருள் வேறொன்றும் இல்லை. நாம் நுகரவேண்டிய எல்லாப் பொருள்களையும் உண்டாக்கி உலகத்திலே வைத்துவிட்ட கடவுள் தண்ணீரை மட்டும் நம்முடைய பொறுப்பில் விடாமல் விண்ணில் முகில் வடிவமாய் வைத்துக்கொண்டு வேண்டும்போது மழை பெய்வித்து நம்முடைய உணவு முதலியவைகளை அடிக்கடி புதுப்பித் துக்கொண்டு வருகிறார். அதைக் கொண்டே தண்ணீருடைய அருமை பெருமை நன்றாய் விளங்குகிறது. கடவுள் அவ்வளவு அருமையாய்க் கொடுக்கிற தண்ணீரை நாம் தூய்மையான ஆறுகளிலும் ஏரிகளிலும் குளங்களிலும் துரவுகளிலும் தேக்கிவைத்துக்கொண்டு எவ்வகையான அழுக்குஞ் சேராதபடி முழுக் கருத்துடன் பாதுகாக்க வேண்டும். குடிதண்ணீர்க் குளத்தைக் குடிக்கிறதற்கு மட்டும் பயன்படுத்தவேண்டுமே தவிர, அதில் ஒருவரும் துணி தோய்க்காமலும், குளிக்காமலும், கால் கழுவாமலும், பல்விளக்காமலும், சொத்தை குப்பைகள் விழாமலும், இன்னும் வேறு அழுக்குகளைச் செய்யாமலும் பாதுகாக்கவேண்டும். அன்றியும், குடிதண்ணீர்க்குளம் கிணறு முதலானவைகளுக்கு அண்மையில் சாக்கடை நீர்த் தாரை முதலிய அழுக்குகள் இருந்தால் அவைகள் மண் ணிற் சுவறிக் குடிதண்ணீரின் குணத்தைக் கெடுக்குமாதலால், அவைகள் அண்மையில் இல்லாதபடி ஒழுங்கு செய்ய வேண்டும்.
5. தூய்மையான காற்றை இழுத்தல்
அப்படியே காற்றும் நாம் உயிர் வாழ்வதற்கு இன்றி யமையாத முதன்மையான கருவியாக இருப்பதால், அதுவும் மிகவும் தூய்மையாக இருத்தல் வேண்டும். நாம் நீரை எப்படி உட்கொள்ளுகிறோமோ அப்படியே காற்றையும் நாம் இழுத்து உட்கொள்ளுகிறபடியால் அதில் அழுக்கில்லாமல் காற்றுந் தூய்மையுடன் இருக்கவேண்டும். மனிதர்களுக்குள்ளே சிலர் தீயவர்களுடைய கூட்டுறவால் கெட்டுப் போவது போல், நீரும் காற்றும் எந்தப் பொருளோடு கூடுகின்றனவோ, அந்தப் பொருளின் குணத்தைத் தாம் இழுத்துக்கொள்ளுகின்றன. அவைகள் கெட்ட பொருள்களோடு கூடினால் தாங்கள் கெட்டுப்போவதும் அல்லாமல், அவைகளைப் பயன்படுத்துகிற நமக்குத் தீங்கை விளை விக்கின்றன. அழுக்குடைய பொருளோடு கூடும்போது அதன் தீய மணத்தை நமக்குக் காட்டி விடுகின்றன. ஆகையால், நாம் வாழும் வீடுகள் சிறிதும் அழுக்கில்லாமல் எப்போதும் தூய்மையாக இருத்தல் வேண்டும். உடலுக்கும் உயிருக்கும் எவ்வளவு தொடர்போ , அதைப் பார்க்கிலும் நமது உயிர்க்காற்றுக்கும் வெளிக்காற்றுக்கும் மிகுந்த தொடர்பிருப்பதால் தூய்மையுள்ள காற்று நம்முடைய நல்வாழ்வுக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.
நாம் நஞ்சை உண்ண எப்படி அஞ்சுவோமோ, அவ்வாறே கெட்ட நீரையும் கெட்ட காற்றையும் உட்கொள்ள அஞ்ச வேண்டும். மீனுக்கு நீர் எப்படிக் கட்டாயமோ, அப்படியே நாம் பிழைப்பதற்கு நல்ல காற்றுக் கட்டாயமாகையால், எப்போதும் நம்முடைய வீடுகளில் தாராளமாய் நல்ல காற்று நடமாடும்படி பலகணிகள் வைத்தல் வேண்டும். பலருடைய மூச்சுக் காற்றுகளினாலும் அழுக்குகளினாலும் வீட்டுக்குள்ளிருக்குங் காற்று நச்சுக்காற்றாக மாறுகிற படியால் அதை மாற்றுவதற்கு, வெளிக்காற்று வீட்டுக்குள் வந்து உலாவ வேண்டியது இன்றியமையாததாய் இருக்கின்றது. ஆகையால், பலகணிகள் இல்லாமல் அடைப்பாய் இருக்கிற வீடுகளில் குடியிருத்தல் கூடாது. தீயநாற்றத்தைக் காட்டநம்முடைய மூக்கே போதுமானதா-யிருந்தாலும், சிலர் அழுக்குகளில் பழகிப்போனதினால் நன்மணம் இன்னதென்றும், கெட்ட மணம் இன்னதென் றும் அறியாமல் இருக்கிறார்கள்.
ஒருமாதின் கதை
அதற்கு எடுத்துக்காட்டாக இங்கு ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறோம். ஒரு செல்வன் வீட்டிலே பிறந்து, துய்மையான இடத்திலே வாழ்ந்திருந்த ஒரு பெண், ஒரு வறியவனைத் திருமணஞ் செய்து கொண்டு அழுக்கு மிகுந்த ஒரு வீட்டிலே வாழும்படியாக நேரிட்டது. அவள் கணவனுடைய வீட்டுக்குப் போனவுடனே அந்த அழுகரையும் கெட்ட நாற்றத்தையும் பொறுக்கமாட்டாமல் மூக்கைப் பொத்திக் கொண்டே யிருப்பாள். அவள் சில காலத்துக்குள் அழுக்கிலே பழகிப்போனதால், நான் வந்த பிறகல்லவோ என் மாமியார் வீட்டு நாற்றம் போய் விட்டது,' என்று பெருமையாய்ப் பேசிக்கொண்டாளாம். அழுக்கிலே சிறிது பழகினாலும் அது நாளடைவில் உடல் நலனைக் கெடுக்காமல் இருக்கமாட்டாது. அழுக்குகளையும் கெட்ட நாற்றத்தையும் காட்டுவதற்கு, நம்முடைய கண்களும் மூக்குகளுமே போதுமான கருவிகளாயிருக்கின்றன. உட்சுவர் இருக்கப் புறச்சுவர் தீற்றுதல் போலச் சிலர் பிறர். புகழ வீட்டின் வெளிப் பக்கங்களை மட்டும் ஒழுங்கு செய்து விட்டு, வீட்டுக்குள் எல்லா அழுக்குகளையும் வைத்துக் கொள்ளுகிறார்கள். இஃது உடலுக்குப் பால் வார்த்துண்ணாமல் ஊருக்குப் பால் வார்த்துண்பதற்கு ஒப்பாக இருக்கின்றது. எப்படி வீடு தூய்மையாயிருக்கவேண்டியதோ, அப்படியே நமது உடலும் வேட்டி முதலானவைகளும் எப்போதுந் தூய்மையாக இருத்தல் வேண்டும். வெப்பம் பொருந்திய இந்த நாட்டில் நாம் ஒரு நாளாவது எல்லா உறுப்புக்களும் நனையுமாறு நீராடாமல் இருத்தல் கூடாது,
உடல் நலத்திற்கும் உளநலத்திற்கும் ஒற்றுமைத் தொடர்பு இருப்பதால் உடல் தூய்மை இல்லாதவன் உளத்தூய்மை உடையவனாக இருப்பது மிகவும் அருமை.
5. உடல் முயற்சியின் இன்றியமையாமை
நாம் உடல் முயற்சியுடன் உழைக்கும் பொருட்டே கடவுள் நமக்கு எல்லா உறுப்புக்களையும் கொடுத்திருக்கிறார். வறியவர்கள் உடல் முயற்சி செய்வதினால் அவர்கள் பெரும்பாலும் நோய் இல்லாமல் இருக்கிறார்கள். செல்வர்களுக்கும் அவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் உடல் உழைப்பு இல்லாமையால் நோய்களால் பீடிக்கப் பட்டு அவர்களிற் பலர் வாணாள் குறைந்து மாண்டு போகிறார்கள். செல்வர்கள் கைப்பாடு படாவிட்டபோதி லும் உடல் முழுவதும் அசைந்து வியர்க்கும்படியான ஏதாவதொரு உடல் உழைப்பை நாடோறும் மேற்கொள்ள வேண்டும். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஊருக்கு வெளியே நல்ல காற்று வீசுகிற இடத்தில் கால் நடையாய் உலாவுவது நல்ல வழக்கம். அந்த வழக்கத் தினால் உண்டாகும் நன்மை எல்லோருக்கும் தெரியும் பொருட்டு ஓர் ஊரில் நடந்த உண்மையான செய்தியைத் தெரிவிக்கிறேன்.
ஒரு கதை
ஆங்கில நாட்டில் ஓர் ஊரில் செரியாமை நோயைத் தீர்ப்பதில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் அந்த நோய் உள்ளவர்களைக் குறைவாக உணவு உண்ணும்படியாகவும் வெளியிலே உடல் உழைப்பை மேற்கொள்ளும்படியாகவும் சொல்வதைத் தவிர, வேறு மருந்துகள் கொடுப்பதில்லை. உணவில் மிகுந்த விருப்பம் உடையவனும், பருத்த உடலை உடையவனுமான் ஒரு செல்வன். அந்த மருத்துவர் இடத்தில் வந்து, தான் மிகவும் உடல்நலக் குறைவாக இருப்பதாய்த் தெரிவித்தான். அந்தச் செல்வன் எப்போதும் ஊர்தியின் மேல் செல்லுவதே அல்லாமல் காலால் நடந்து அறியான். அவனைப் பட்டணத்துக்கு வெளியே தன்னோடு கூட வண்டியில் வரும்படி மருத்துவர் சொன்னதினால் அவன் அவ்வாறே வண்டியில் ஏறிக்கொண்டு சென்றான். அவர்கள் பட்டணத்துக்கு வெளியே ஐந்து மைல் தொலை சென்ற வுடனே, மருத்துவர் குதிரைச் சவுக்கைக் கீழே போட்டு விட்டு அதை எடுத்துக் கொடுக்கும்படி செல்வனைக் கேட்டுக்கொண்டார். அதை எடுப்பதற்காகச் செல்வன் வண்டியை விட்டு இறங்கியவுடனே மருத்துவர் அவனை மறுபடியும் வண்டியில் ஏற்றிக்கொள்ளாமல், திடீரென்று வண்டியைத் திருப்பிப் பட்டணத்துக்குப் போகத் தொடங்கினார். அவர் போகும்போது நகைத்துக்கொண்டு, அந்தச் செல்வனைப் பார்த்து, "ஊருக்கு நடந்துவந்தால் உமக்கு நல்ல பசியுண்டாகும்," என்று சொல்லிப் போய் விட்டார். அவன் அவ்வாறே ஊருக்கு நடந்து போனதும் அல்லாமல், அன்று முதல் நாள்தோறும் நடக்கிற பழக்கத்தை மேற்கொண்டிருந்ததால் அவனுக்கு உடல் நலம் முழுதும் உண்டாயிற்று.
வேறொரு புகழ்பெற்ற அறுவை மருத்துவர் (இரண வைத்தியர்) அதேவிதமான நோயுள்ள ஒரு செல்வனைப் பார்த்து, "நீ நாள்தோறும் நான்கு அணாவுக்குள் வாழ்தல் வேண்டும். அந்தத் தொகையை நீயே உடல் முயற்சி செய்து தேடுதல் வேண்டும்," என்றார். இதைக் கொண்டு அதிகச் செலவில்லாத பொதுவான உணவும் உடல் முயற்சியும் இன்ப வாழ்வுக்கு முதன்மையானதென்று தோன்றுகின்றது. இந்த நாட்டில் செல்வர் வீட்டுப் பெண்கள் ஆடவர்களைப்போல் அடிக்கடி வெளியே போய் உலாவக்கூடாமல் இருப்பதால், அவர்கள் வீட்டிற்குள்ளே தூய்மையான காற்றுள்ள இடத்தில் நாள்தோறும் உடல் முயற்சி செய்யும்படி ஏற்பாடு செய்யவேண்டும். அவர்கள் வீட்டு வேலைகளை எல்லாம் தங்கள் கையாலே செய்து, வீட்டிற் குள்ளேயாவது எப்போதும் நடமாடிக்கொண்டிருப்பது மிகவும் நலம்.
ஆணவம், சினம், பகை, சோம்பல், அழுக்காறு , கட்குடித்தல், பிற மாதர்களைப் பார்த்தல், பேரவா, பேருண்டி, நெடுந்துயில் முதலிய தீக்குணங்கள் உடல் நலத்துக்குக் கேடு செய்பவைகளாக இருக்கின்றபடியால், அந்தத் தீக்குணங்கட்கு இடங் கொடாமல், கூடியமட்டும் தூய்மையான உள்ளத்துடன் இருத்தல் வேண்டும். எந்தச் செயலிலும் அதிக மனக்கவலைக்கு இடம் கொடுக்கக் கூடாது. சிலர் தாய் தந்தையர்கள் இடத்திலிருந்து அடைகிற வழிவழி நோய்களும், சில தொத்து நோய்களும் தவிர, மற்றைய நோய்களுக்கெல்லாம் நம்முடைய அறி யாமையும் கருத்துச் செலுத்தாமையுமே முதன்மையான காரணங்களாயிருக்கின்றன. நாம் மேலே விரித்துக் கூறிய உடல்நல முறைகளைப் பின்பற்றினால், நாம் கூடிய வரையில் நோயற்ற வலிய உடல் உடையவர்களாக இருப் போம் என்பதற்கு ஐயம் இல்லை.
---------------
8. புவனேந்திரன் பொன் மொழிகள்
1. மதுரேசனுடைய அரண்மனையும், புவனேந்திரனுடைய அரண்மனையும்
மதுரேசனுக்குக் குணம், கல்வி முதலிய இயற்கைகள் இல்லாவிட்டாலும், கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப் பூன் கட்டினதுபோல் உயர்வான ஆடை அணிகல அழகுகளினாலும், மற்ற இடம் பொருள் ஏவல் முதலிய பொருள் களினாலும் அவனை அவன் தகப்பன் மேன்மைப்படுத்தி வைத்திருந்தான். அவனுக்காக அவன் தகப்பன் ஒரு பெரிய அரண்மனை கட்டுவித்தான். அதன் புதுமனை புகுதலுக்காக ஒருநாள் பல செல்வர்களை வரவழைத்தான். அப்போது ஆசிரியப் பெரியார் முதலானவர்களும் போயிருந்தார்கள். புதுமனை புகுதலுக்குப் பிற்பாடு , மதுரேசன் புவனேந்திரனையும் பின்னுஞ் சில பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டுபோய், அந்த அரண்மனையின் பலவகை அழகுகளையும், சுவரில் தீட்டப்பெற்றுள்ள ஓவியங்களையும் காட்டிக் கொண்டு வந்தான். பிறகு புவனேந்திரனை இழிவு படுத்தவேண்டும் என்கிற எண்ணத்துடன், மதுரேசன் புவனேந்திரனை நோக்கி, "என் தகப்பனார் எனக்காக இப்படிப்பட்ட அரண்மனையைக் கட்டியிருக்கிறார்; உன் தகப்பனார் உனக்கு என்ன செய்தார்?" என்றான். புவனேந்திரன் அதற்கு மறுமொழி சொல்லாமல் இருப்பதே தகுதி என்று நினைத்துப் பேசாமல் இருந்தான். மதுரேசன் சும்மா இராமல் அலட்டி அலட்டிக் கேட்டதினால், புவனேந்திரனுக்குச் சிறிது கடுஞ்சினம் உண்டாகி, மதுரேசனை நோக்கிச் சொல்லுகிறான்.
2. அனைத்துலகத் தந்தையின் செய்தி ; திக்கற்ற பிள்ளைக்குத் தெய்வமே தந்தை
"என் தகப்பனும் எனக்காக மிகப் பெரிய ஓர் அரண்மனையைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அதற்கு நிலமே கீழ் எல்லை; வானமே மேல் எல்லை ; எட்டுத் திக்குகளுமே சுற்று எல்லைகள். அந்த அரண்மனைக்கு முன் இந்த அரண்மனை ஓர் எறும்புவளைக்கும் ஒப்பானதன்று. அந்த அரண்மனையில் இருக்கிற பொருள்களைக் கொண்டுதான், எல்லா அரண்மனைகளும் கட்டப்படுகின்றன. என்னுடைய தகப்பன் அரசர்களுக்கெல்லாம் அரசன் ; கடவுளர்களுக்கெல்லாம் கடவுள். என் தகப்பனுக்கு ஒப்பாரும் இல்லை, மிக்காரும் இல்லை. எல்லா அரசர்களும் அமைச்சர்கள் முதலானவர்களும் என் தந்தையின் இடத்தில் பிச்சை வாங்கிப் பிழைக்கிறார்கள். உன்னுடைய அரண்மனையைக் கட்டிய சிற்பர்களும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கற்கள், மரங்கள் முதலிய தளவாடங்களும் கீழ்மனையும், மற்றைச் சாமான்களும் உன் தகப்பனாருக்கு என் தகப்பனார் பிச்சை கொடுத்தவைகள்.
"இந்த அரண்மனைச் சுவரில் மனிதர்கள் போலவும், விலங்குகள் போலவும், மரவகைகளைப் போலவும் எழுதப் பட்டிருக்கிற ஓவியங்கள் என் தகப்பனாருடைய கைவேலையின் பாவனையே அல்லாமல் உண்மையல்லவே. இந்த ஓவியங் கட்கு உயிர் உண்டா ? இவைகள் பேசுமா? நடக்குமா? ஓடுமா? உண்ணுமா ? மற்றைய இன்பங்களை நுகருமா? இந்த ஓவிய மரங்கள் வளருமா? தளிர்க்குமா? பூக்குமா? காய்க்குமா? பழுக்குமா? இல்லையே! என் தகப்பனார் வரைந்த ஓவியங்கள் மேற்சொல்லிய செய்கைகள் எல்லாம் செய்யுமே; இவ்வளவு குறுகலான இடத்தில் உன் தகப்பன் எண்ணிக்கை இல்லாத விளக்குகளை வைத்து, எவ்வளவோ செலவு செய்தும் போதுமான ஒளி இல்லையே! என் தகப்பன் செப்பில்லாமல், திரியில்லாமல், எண்ணெய் இல்லாமல் தூண்டுகோல் இல்லாமல் ஒரே விளக்கேற்றி எல்லா உலகங்களுக்கும் ஒளி கொடுக்கிறாரே! இந்தச் சிறிய இடத்தில் எத்தனையோ பங்காக்களை மாட்டிப், பலர் ஓயாமல் இழுத்தும் போதுமான காற்று இல்லையே! என் தகப்பன் எல்லா உலகங்களுக்கும் வாயு ஆகிய ஒரே பங்காக்காரனையும், தேயு ஆகிய ஒரே சமையற்காரனையும், அப்பு ஆகிய ஒரே தண்ணீர்க்காரனையும் ஏற்படுத்தி யிருக்கிறாரே! அந்த வேலைக்காரர்களுடைய உதவி இல்லா விட்டால் உனக்கு எண்ணிறந்த ஊழியர்கள் இருந்தும் பயன் என்ன?
"என்னுடைய தகப்பன் வடிவம் அற்றவர், ஆனதால் முகக்கண்ணுக்குப் பார்க்க முடியாதவராக இருக்கிறார். அவருக்கு உடல் இல்லாமல் இருந்தும் உயிர்த் தொகைகளுக்கு உடல்களைக் கொடுத்துக் காப்பாற்றுகிறார். அவர் கண் இல்லாமல் பார்க்கிறார். காது இல்லாமல் கேட்கிறார் ; கால் இல்லாமல் நடக்கிறார் ; கை இல்லாமல் எல்லாச் செயல்களையுஞ் செய்கிறார். அன்றியும், அவர் நமக்குக் கண்ணாயிருந்து எல்லாப் பொருள்களையும் காட்டுகிறார்; மற்றைப் பொறிகளின் இன்பங்களை யெல்லாம் நமக்கு ஊட்டுகிறார். அவர் ஒரே காலத்தில் இங்கும் இருப்பார்; அங்கும் இருப்பார்; எங்கும் இருப்பார்; எள்ளுக்குள் எண்ணெய் போலவும், கரும்புக்குள் சாறு போலவும், உடலுக்குள் உயிர் போலவும் அவர் எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கிறார். அவர் அவ்வாறு இல்லாவிட்டால் எந்தப் பொருளாவது உயிர் வாழுமா?
அவர் முகிலில் இல்லாவிடில் முகிலுக்கு மழை ஏது? அவர் ஐம்பெரும் பூதங்களிலும் இல்லாவிடில் அந்தப் பூதங்களுக்குத் தொழில் ஏது ? அவர் நிலைபெற்ற எல்லா உயிர்களுக்குள்ளும் பொருந்தி நிறைந்திராவிடில் அவைகளுக்குப் பிழைப்பு ஏது? இந்த நிலவுலகின் பல பக்கங்களிலும் சரியான ஒளியும் சூடும் தாக்கும்படி, என் தகப்பனார் இந்நிலவுலகைக் கதிரவனுக்கு நேராக ஓயாமல் உருட்டிக் கொண்டே இருக்கிறார். பிறகு மன்னுயிர்கள் எல்லாம் தூங்கி இளைப்பாறும் பொருட்டு, முப்பது நாழிகைக்கு ஒருமுறை இருளாகிற போர்வையினால் இந்நிலவுலகை மூடி வைக்கிறார். இப்படியே எண்ணிக்கை இல்லாத உலகங் களைக் கயிறு இல்லாப் பம்பரம் போல் ஆட்டுகிறார். விண் மீன்களை எண்ணினாலும், ஆற்றின் மணலை எண்ணினாலும், என் தகப்பன் எனக்கும் உனக்கும் மற்றவர்களுக்கும் செய்திருக்கிற நன்மைகளை எண்ணக்கூடுமா? கடல் நீர் முழுவதையும் ஒரு நண்டு வளையில் அடைக்க முயல்வது போல், என் தகப்பனுடைய பெருமையைச் சொல்ல ஒரு வராலும் முடியாது," என்று வேதாந்தக் கருத்தாய்க் கடவுளைக் குறித்துப் புவனேந்திரன் பேசினான்.
அதைக் கேட்டவுடனே மதுரேசன் திகைத்து, இஞ்சி தின்ற குரங்கு போல் ஏமாறியிருந்தான். புவனேந்திரன் முதலானவர்கள் போனபின்பு, மதுரேசன் தன் தகப்பனிடம் போய், "புவனேந்திரனுடைய தகப்பன் இடத்தில் எல்லா அரசர்களும் பிச்சை வாங்கிப் பிழைக்கிறார்கள் என்றும், இன்னும் பலவிதமாகவும் புவனேந்திரன் இகழ்ந்தான்" என்று முறையிட்டான். அதை மதுரேசன் தகப்பன் அரசனுக்குத் தெரிவித்தான். அரசன் ஆசிரியப் பெரியாருக்குத் தெரியப்படுத்தினான். பிறகு அரசன் ஆசிரியப் பெரியார் மூலமாய் நடந்த உண்மையை அறிந்து, மிகுந்த மகிழ்ச்சி-யடைந்தான்.
----------
9. திருமணப் பேச்சுகள்
1. பிற அரசர்களின் மணத்தூது
மிக உயர்ந்த விண்ணில் தோன்றுகின்ற ஞாயிறு திங்கள்களின் ஒளி, நிலவுலகெங்கும் நிறைவது போலவும், நன்மண மலர்களின் மணம் வெகு தொலைவரையில் மணப்பது போலவும், சுகுண சுந்தரியின் புகழ்ப் பெருமை பல நாடுகளிலும் பரவியதால் அவளை மணஞ் செய்ய விரும்பாத அரசர்கள் ஒருவரும் இலர். ஆனால், அந்தப் பெரும் பேறு தங்களுக்குக் கிட்டாதென்று எண்ணிப், பல அரசர்கள் அவளுக்கு மணத்தூது அனுப்பத் துணியவில்லை. இரண்டோர் அரசர்கள் மட்டும், 'ஆசை வெட்கம் அறியாது' என்கிற பழமொழிக்கு ஏற்ப, சுகுண சுந்தரியைத் தங்களுக்குத் திருமணஞ் செய்து தரும்படி அவளுடைய தந்தையிடந் தூது அனுப்பினார்கள். அந்தத் தூதர்கள் தங்கள் தங்கள் அரசர்களுடைய பெருஞ்செல்வத்தையும் வியக்கத்தக்க குணங்களையும் விரிவாகப் புகழ்ததும் அல்லாமல் பின்னுஞ் சொல்லுகிறார்கள். "எங்களுடைய அரசருக்கு உள்ளத்திற்கு உகந்த இன்ப விலையாட்டுப் பெண்கள் பலர் இருந்தாலும், அரச குடும்பத்தின் மக்கட்பேற்றிற்குத் தகுதிவாய்ந்த ஒரு பட்டத்தரசி இருக்க வேண்டியது கட்டாயம். ஆகையால், அதற்காகத் தங்களுடைய செல்வப் புதல்வியைத் திருமணம் பேச வந்திருக்கிறோம்," என்றார்கள்.
இதைக் கேட்டவுடனே அரசனுக்கு அடக்கக்கூடாத இனம் உண்டாகியபோதிலும், கரை கடவாத கடலை போலத் தனக்குண்டாகிய சீற்றத்தை அடக்கிக்கொண்டு, அந்தத் தூதர்களை நோக்கி, "பல இன்பவிளையாட்டுப் பெண்களுடனே ஒப்பான இன்பவாழ்வு பெற்ற என்னுடைய மகளின் செல்வமே செல்வம் ! ஆனால் அந்தச் செல்வத்துக்கு என் மகள் தகுதி உடையவள் அல்லள். ஆகையால், நீங்கள் உடனே ஊருக்குப் போகலாம்," என்று அவர்களுக்குக் கட்டளை கொடுத்துவிட்டுப் பிறகு, அரசன் ஆசிரியப் பெரியாரை வரவழைத்துத் தூதர்கள் சொன்ன மொழிகளை அவருக்குத் தெரிவித்தான்.
2. கணவன் மனைவியர் இயல்பு
ஆசிரியப் பெரியார் அரசனை நோக்கித் திருமணத்துக்குப் பிறகு அடைய வேண்டிய பலனை, அதற்கு முன்னமே அந்த அரசர்கள் அடைந்துவிட்டதாகத் தோன்றுகின்றது. அரசனாயிருந்தாலும் யாராயிருந்தாலும் ஒரு கணவனுக்கு ஒரே மனைவி இருக்க வேண்டியது முறையே தவிர, ஒருவன் திருமணம் இல்லாத பல பெண்களைச் சேர்த்து வைத்துக்கொண்டிருப்பது இயற்கை முறைக்கும் அறநெறிக்கும் முற்றிலும் மாறுபாடாக இருக்கின்றது. கணவனும் மனைவியும் ஒரே உடல் ஆனதால், கணவனுடைய இன்ப துன்பங்களுக்கு மனைவியும், மனைவியினுடைய இன்ப துன்பங்களுக்குக் கணவனும் சரிபங்கு உடையவர்களே தவிர அவர்களுக்குள் எவ்வகையான மாறுபாடும் இருக்கக்கூடாது.
"கணவனும் மனைவியும் ஓர் உடல் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திருமால் சிவன் நான்முகன் முதலானவர்கள் அவர்களுடைய மனைவிகளைத் தனியே விடாமல், தங்களுடைய உடல்களிலே வைத்துக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. 'கணவன் பாதி , மனைவி பாதி ஆக இருவருங்கூடி , ஒர் உடல்' என்று மநுவின் அற நூலினுஞ் சொல்லப்பெறுகின்றது. கடவுள் முதல் மனிதனுடைய விலா எலும்பில் இருந்து பெண்ணை உண்டு பண்ணினதால், அவர்கள் இருவரும் ஒப்பானவர்கள் என்று கிறித்துவர்களுஞ் சொல்லுகிறார்கள். கடவுளுக்குப் பிறகு கணவனே தனக்கு எல்லாச் சிறப்பும் என்று பெண் எப்படி எண்ண வேண்டியது ஒழுங்கோ, அப்படியே மனைவி தனக்கு எல்லாச் சிறப்பும் என்று கணவன் கருதக் கடமைப்பட்டிருக்கிறான்.
'ஆடு மாடுகளின் மந்தை சேர்த்து வைப்பது போலப் பல பெண்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் அரசன், அந்தப் பெண்களுக்கும் தன் மனைவிக்கும் பெரிய தீமை செய்கிறான். 'பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ' என்கிற பழ மொழிப்படி, பெண்ணைத் தகுந்த இடம் தேடித் திருமணஞ் செய்துவைக்க வேண்டியது பெற்றோர்களுடைய முதன்மையான கடமையாக இருக்கின்றது. பொறை, நிறை, உண்மை, அமைதி முதலிய நல்லியல்புகளுக்கு இருப்பிடமாயிருக்கிற சுகுணசுந்தரிக்கு ஒப்பான பெண்கள் உலகத்தில் யார் இருக்கிறார்கள்? அவளுக்குத் தக்க மாப்பிள்ளை ஒருவனே அன்றி வேறொருவரும் இலர். ஆனால், அவன் இப்போது இருக்கிற நிலைமையில் அவனுக்குப் பெண் கொடுக்க உடன்பட மாட்டீர்கள். அவனுங் கொள்வதற்கு உடன்படான்," என்றார்.
இவ்வாறு புவனேந்திரனைக் குறித்து ஆசிரிப்பெரியார் பேசுகிறார் என்பதை அரசன் கண்டுகொண்டான். அவன் ஆசிரியப் பெரியாரைப் பார்த்துப் "புவனேந்திரனைப்-போல் நல்லியல்பு உடையவர் ஒருவரும் இலர் என்பது உறுதியே. அவன் இருக்கும்போது வேறு மாப்பிள்ளை தேடுவது கையிலே வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு நிகராகும். ஆனால், நான் என்ன செய்வேன்? தாய் தகப்பன் இன்னார் என்று தெரியாத பிள்ளைக்குப் பெண் கொடுத்தால் உலகம் இகழுமே ! ஊர் வாயை மூட உலை முடி உண்டா? அவனுடைய பழைய வரலாறு தெரியாமல் இருக்கும்போது என்ன செய்யலாம்?" என்று நராதிபன் சொன்னான். ஆசிரியப் பெரியார் ஒன்றுஞ் சொல்லாமல் பெருமூச்செறிந்து கொண்டு பேசாமல் இருந்தார்.
3. போர்
மேற்கூறியபடி பிற அரசரிடத்திலிருந்து திருமணத் தூது கொணர்ந்தவர்கள் திரும்பிப் போய்த் தங்களுடைய தூது பலிக்காமற்போனதை, அந்த அரசர்களுக்குத் தெரிவித்தவுடனே அவர்கள் மிகுந்த சினங்கொண்டார்கள். நராதிபன் மேற்படை யெடுத்துச்சென்று, அவனை வென்று சுகுணசுந்தரியைச் சிறை எடுத்துக்கொண்டு போவ தென்று முடிவு செய்துகொண்டார்கள். அந்தப் பகைவர்களால் அனுப்பப் பெற்ற நால்வகைப் படைகளையும் நராதி பன்படைகள் எதிர்த்துக் கொடிய போர் செய்து அழித்தார்கள். அப்போது புவனேந்திரனும் போர்க்கோலம் பூண்டு மாற்றார் படைகளை எதிரிட்டு அவர்களைச் சின்னா பின்னமாகச் சிதறச்செய்து, வெற்றிக்கொடி நாட்டினான். அதனால், நராதிபன் மனம் மகிழ்ந்து புவனேந்திரனுடைய பேராண்மைச் செயல்களைப் பெரிதுங் கொண்டாடினான்.
4. ஆசிரியப் பெரியார் புவனேந்திரனுடைய மன நிலையை அறிதல்
இவ்வாறு நிகழுங் காலத்தில் ஒருநாள் ஆசிரியப் பெரியார் புவனேந்திரனுடைய எண்ணத்தை அறியும் பொருட்டு அவனை நோக்கி, "அப்பா! என் ஆசைமிக்க பிள்ளைப் பெருமானே! சுகுணசுந்தரிக்கு நேரிட்ட இடை யூறுகளெல்லாம் உன்னால் ஒழிந்து போனமையின் நராதி பன் உன்னிடத்தில் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் உள்ளவராக இருக்கிறார். இந்தச் சமயத்தில் நீ எதை விரும்பிக் கேட்டாலும் உடனே தருவார்," என்றார்.
உடனே புவனேந்திரன், "ஐயா! எனக்குத் தாயுந் தகப்பனும் ஆசிரியருமாகிய நீங்கள் எனக்கு என்ன குறைவு வைத்திருக்கிறீர்கள் ? ஆகையால் எனக்கு ஒரு வகையான விருப்பமும் இல்லை," என்றான். ஆசிரியப் பெரியார், அவனை நோக்கி, "அப்பா கண்மணியே ! எப்படிப்பட்ட மனவெறுப்புள்ளவர்களையும், மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்கிற மூவாசையின் மயக்கம் விடாது. ஆகையால், உனக்கு வேண்டுவனவற்றைத் தெரிவி," என்றார்.
உடனே புவனேந்திரன், 'ஐயா! தங்களது அருளால் எனக்கு மண்ணாசையும் இல்லை; பொன்னாசையும் இல்லை; ஆனால், பெண்ணாசையும் இல்லை என்று சொல்வேனானால் அது பொய்ம் மொழியாக முடியும். அந்தப் பெண்ணும் ஒரு பெண்ணே அன்றிப் பலர் அல்ல. இப்போது அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் எவ்வளவு ஏற்றத்தாழ்வு என்றால் விண்ணுக்கும் மண்ணுக்கும் எவ்வளவு தொலையோ, மலைக்கும் அணுவுக்கும் எவ்வளவு தொலையோ அவ்வளவு ஏற்றத் தாழ்வில் இருக்கிறோம். மாணிக்க ஏனத்தில் வைக்க வேண்டிய தேவாமிருதத்தை மண் ஏனத்தில் வைக்க விரும்புவது போலப், பெரிய பேரரசர்களுக்குத் தகுதி வாய்ந்த அப்பெண்மணிக்கு நான் ஏற்றவன் அல்லன். ஆகையால், அந்தப் பெண்ணாசையை என்னாற் கூடியமட்டும் விலக்குவதற்கு முயற்சி செய்கிறேன்," என்று கூறிப் பெருமூச்சு விட்டு வருந்தினான்.
ஆசிரியப் பெரியாரும் அவனோடுகூடக் கண்ணீர் சொரிந்து, "ஐயோ! நல்லியல்பு பொருந்திய இந்தப் பிள்ளையாண்டானுக்கு வீணே மனவருத்தத்தை உண்டு பண்ணினோமே," என்று அவர் தம்மைத்தாமே நொந்து கொண்டு, அவனுக்கு ஆறுதல் உண்டாகும்படி பல நன்னய மொழி களை நவின்றார்.
5. சுகுண சுந்தரியின் மனவடக்கம்
புவனேந்திரனுடைய மொழிகளால் அவனுடைய மனப்போக்கு இன்னதென்று தெரிந்து கொண்டோம். பெண்பால் ஆகிய சுகுணசுந்தரியின் மனநிலை யாது என்று அறியோம். ஊமை கண்ட கனவு போல் அவள் உள்ளக் கருத்தை ஒருவருக்கும் வெளியிடா விட்டாலும், அடுத்த பொருளைக் காட்டும் பளிங்கு போல், அவள் மனக்கருத்தை அவளுடைய முகக்குறி காட்டிவிட்டது. எப்படி என்றால், பெருங்காற்றினால் அசைவுற்று வீழ்கிற மரத்தோடு, அதன் மேற் படர்ந்த கொடியும் குலைந்து வீழ்வது போல், புவ னேந்திரனைப்போலவே சுகுணசுந்தரியும் மனவருத்தம் உடையவள் ஆனாள். ஆயினுங் கதிரவன் எந்தப்பக்கம் திரும்புகிறதோ, அந்தப் பக்கத்தில் தானுந் திரும்புகிற சூரியகாந்திப் பூவைப்போல் சுகுணசுந்தரி தன் தகப்பனுடைய எண்ணம் எப்படியோ அந்தப்படி நடக்கிறவ ளானதால், தன்னுடைய மனமாகிய யானை வரம்பு தப்பிச் செல்லாதபடி, அறிவாகிய தோட்டியினால் அடக்கிக் சொண்டு வந்தாள்.
-----------
10. எதிர்பாராத நிகழ்ச்சிகள்
1. பெரு மழை நீர்ப்பெருக்கால் அழிவு
உலகத்தில் நடக்கிற ஒழுங்கின்மைகளுக்குத் தக்கபடி, வேண்டுங் காலத்திலே மழை பெய்யாமலும் வேண்டாத காலத்திலே அளவுகடந்து பெய்தும் கெடுப்பது போல், நராதிபனுடைய நாட்டில் ஒரு காலத்தில் மிகுந்த மழை பெய்து, பெரிய அழிவை உண்டுபண்ணிற்று. எப்படி யென்றால் தீயர்களுடைய நெஞ்சம் போல் வானங் கறுத்தது. அவர்களுடைய சினத்தீயைப்போல் மின்னல் மின்னியது. அவர்களுடைய கொடுஞ்சொற்களைப் போல இடி குமுறி இடித்தது. ஒரே நீர்ப்பெருக்காய் மழை பொழிந்து உலக முடிவு காலத்துப் பெரும் நீர்ப்பெருக்கைப்போல் எங்கும் நீர் பெருகி, ஆறுகள், குளங்கள், ஏரிகள் எல்லாம் உடைப் பெடுத்து விளைவுகளை எல்லாம் அழித்துவிட்டது. அதனாற் பெரும் பஞ்சம் உண்டாகியது. மக்கள் எல்லாரும் வருந்தினார்கள்.
அக்காலத்தில் நராதிபன் தன் பண்டசாலைகளை யெல்லாம் திறந்து, நகரத்திலுள்ள மக்களுக்கு வேண்டுந் தானி யங்களைக் கொடுத்துக் காப்பாற்றினான். வெளியூர் மக்களுக்கு உணவுப் பொருள்கள் அனுப்புவதற்குப் பாதைகள் எல்லாம் நீர்ப் பெருக்கினால் இடிந்து, பள்ளமும் படுகுழியுமாய்ப் போய் விட்டதால், வண்டிகள் போக வழியில்லாமல் பலர் பசியினால் மடிந்து போனார்கள். அந்தச் சமயத்தில் சில பிரெஞ்சுக்காரர்கள் பலூன் (Balloon) என்கிற ஆகாய விமானங் கொண்டுவந்து, அதன் வழியாய் உணவுப் பொருள்கள் கொண்டுபோவதாக ஒப்புக் கொண்டார்கள். அரசன் கட்டளைப்படி பல ஊர்களுக்கு உணவுப் பொருள்கள் கொண்டு போனார்கள். சில சமயங்களில் அரசனும் அந்த விமானத்தில் ஏறிப் பல ஊர்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவான். தலைநகருக்கு ஐங்காதவழி தொலைவிலுள்ள நவநீதபுரி என்னும் ஊரானது தன்னுடைய நாட்டிற்கு நடுவிடமாயும் நல்ல விளைவுள்ள தாயும் இருந்தமையால், அந்த ஊரில் அரசன் சில திங்கள் தங்கியிருந்தான். பல ஊர்களுக்கு விண்வழியாய்த் தானி யங்கள் அனுப்பிக்கொண்டு வந்தான்.
2. விண்வழியாகச் செல்லுதல்; சுகுணசுந்தரியை ஓர் அரசன் சிறையெடுப்பித்தல்
தன் தந்தையை ஒருநாளும் பிரியாத சுகுணசுந்தரி இப்போது சில காலம் பிரிந்திருக்கும்படி நேரிட்டதால், நவநீதபுரிக்குப் போய்த் தந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் உடையவள் ஆனாள். நீர்ப்பெருக்கால் வழிகளெல்லாம் அழிந்து வண்டி முதலிய ஊர்திகள் செல்வதற்குத் தடையாய் இருந்தமையால், நவநீதபுரிக்கு எப்படிப் போவதென்று சுகுணசுந்தரி மயங்கிக் கொண்டிருக்கையில், அந்தப் பிரெஞ்சுக்காரன் தன்னுடைய விண்ணூர்தியில் ஏற்றி மிக விரைவிற் கொண்டுபோய் விடுவதாக ஒப்புக்கொண்டான். உடனே சுகுணசுந்தரியும் அவளுடைய உயிர்ப் பாங்கியும் விண்ணூர்தியில் ஏறிப் புறப்பட்டார்கள். அந்தப் பிரெஞ்சுக்காரனும் அவனுடைய ஊழியர் சிலரும் கதிரவன் மறைவதற்கு முன் நவநீதபுரியிற் கொண்டுபோய் விடுவதாக வாக்களித்து மிக விரைவாக விண்ணில் விமானத்தை நடத்திக்கொண்டு சென்றார்கள். மனத்தின் விரைவிலும் மிக விரைவாய் விண்ணிற் சென்ற அந்த விமானம், கதிரவன் மறைந்து நீண்ட நேரம் ஆகியும் நவநீதபுரியிலே சேராமையால் அதற்குக் காரணம் என்ன என்று சுகுணசுந்தரி வினவினாள். அந்த விமான ஓட்டி, "இன்னுஞ் சிறிது நேரத்துக்குள்ளே கொண்டுபோய் விடுகிறேன்; அஞ்ச வேண்டாம்," என்று சொல்லிக்கொண்டு போனான்.
பெருங்காற்றும் மழைக்கால் இருட்டுமாய் இருந்த படியால் ஊர்தி இன்ன திக்கை நோக்கிச் செல்லுகிற தென்று சுகுணசுந்தரிக்குத் தெரியவில்லை. நள்ளிரவாகியும் குறித்த இடத்தில் வந்து சேரவில்லை. விமானம் செல்லுகிற விரைவைப் பார்த்தால் நராதிபனுடைய நாட்டு எல்லையைக் கடந்து பிற அரசர்களுடைய நாட்டிற் புகுந்து வெகு தொலை போயிருக்கலாம் என்று நினைக்கும்படியாயிருந்தது. இஃது ஏதோ கபடவழி என்று சுகுணசுந்தரிக்கு அச்சமும் ஐயமும் தோன்றின. அந்த வெள்ளை மனிதனை நோக்கி, "இன்னமும் ஊர் வந்து சேரவில்லையா?' என்று வினவினாள். அவன் எத்தகைய பதிலுஞ் சொல்லாமலே விமானத்தை நடத்தினான். சுகுணசுந்தரியும் அவளுடைய பாங்கியும் இன்னது செய்வதென்று தோன்றாமல் மலைத்துத் தளர்ந்து மனம் மறுகலுற்றார்கள்.
3. கன்னியர் மடத்தில் சுகுண சுந்தரி அடைக்கலம் புகுதல்
விடியற்காலம் வெள்ளி முளைப்பதற்கு முன், மலையையும் பெயர்க்கும்படியான பெருங்காற்று நான்கு பக்கமும் ஒங்கி வீசத் தொடங்கியது. இதுவரையில் ஒரே வழியில் ஒழுங்காய்ச் சென்றுகொண்டிருந்த விமானமானது, இப்போது சுழல்காற்றில் சிக்கிப், பெருங் குடியர்கள் கட்குடி மயக்கத்தினால் தள்ளாடித் தள்ளாடி விழுவதுபோல் நாற்பக்கத்திலும் சுழன்று தத்தளிக்கத் தொடங்கியது. அதை ஒரே வழியிற் செலுத்த அந்தப் பிரெஞ்சுக்காரனும் அவனுடைய ஊழியர்களும் எவ்வளவோ முயன்ற போதிலும், பாகனுக்கு அடங்காத மதயானை போல் அந்த விமானம் அசைந்தாடிக் கொண்டு நிலத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. சுகுணசுந்தரியும் அவளுடைய தோழியும், அந்தப் பிரெஞ்சுக்காரனுடைய வஞ்சகக் கருத்து நிறைவேறுவதைப் பார்க்கினும், விண்ணூர்தியோடு நிலத்தில் விழுந்து சாகிறது நலம் என்று நினைத்துச் சாக்காட்டிற்குத் தோதாக இருந்தார்கள்.
ஆயினும், அந்தப் பிரெஞ்சுக்காரனுடைய விடா முயற்சியினால் யாதோர் இடையூற்றுக்கும் இடம் இல்லாமல் விமானம் சிறிது சிறிதாய்க் கீழே இறங்கிக் கடைசியாய் ஓர் ஊரில் கிறித்து வேதக் கன்னிப் பெண்களுடைய மணிமாடத்தின் மேலே தங்கிநின்றது. அப்பொழுது அந்தக் கன்னிப்பெண்கள், மேல் மாடியில் கடவுளை நோக்கிக் காலை வணக்கஞ் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன் விமானம் திடீரென்று இறங்கியவுடனே அவர்கள் திடுக்கிட்டுத் திகைத்துப், பூதமோ பேயோ என்று அச்சமும் மயக்கமுங் கொண்டார்கள். அதில் இருந்து சுகுணசுந்தரி இறங்கியது எப்படி இருந்ததென்றால், இந்திர விமானத்தில் இருந்து ஒரு தெய்வப் பெண் இறங்கியதுபோற் காணப்பட்டது.
உடனே சுகுணசுந்தரி அந்தக் கன்னிப்பெண்களுக்கு வணக்கஞ்செய்து, "தாய்மார்களே! நான் தமிழ்நாட்டு அரசனாகிய நராதிப் மன்னனுடைய மகள். என்னை இந்த மனிதன் வஞ்சனையாகக் கொண்டு வந்திருக்கிறான். நான் உங்களுக்கு அடைக்கலம். என்னைக் காப்பாற்ற வேண்டும்," என்று வேண்டிக்கொண்டாள். அவளுடைய மொழி முடியும் முன், அந்தக் கொடியவன் கன்னிப் பெண்களை நோக்கி, "தென்னாட்டு அரசராகிய நம்முடைய மகாராசா இந்த மாதரசியைத் திருமணஞ் செய்வதற்காகக் கொண்டு வரும்படி கட்டளையிட்டவாறு நான் கொண்டுவந்தேன்; நாங்கள் ஏறிவந்த விமானம் பெருங் காற்றினால் அலைப்புண்டு அரசனுடைய ஊரை அடையாமல் இவ்விடத்திலே தங்கிவிட்டது. இந்தப் பெண்ணை நான் அரசரிடம் கொண்டு போகும்படி நீங்கள் கட்டளை கொடுக்கவேண்டும்," என்றான்.
உடனே அவர்கள் சுகுணசுந்தரியை நடந்தது என்ன என்று உசாவினார்கள். அவள் தன்னுடைய வரலாற்றைச் சுருக்கமாய்த் தெரிவித்ததும் அல்லாமல், தன்னுடைய தந்தையைப் பார்க்க நவநீதபுரிக்குத் தான் புறப்பட்டதும், அந்த ஊருக்கு விமானத்தைக் கொண்டுபோவதாக ஒப்புக்கொண்டவன் இவ்வளவு தொலை தன்னையுந் தோழியையும் வஞ்சகமாய்க் கொண்டுவந்தது முதலான எல்லா விவரங்களையும் விளக்கமாகத் தெரிவித்தாள். அவர்கள் அந்தப் பெரும் புளுகனைப் பார்த்து, "எங்கள் இடத்தில் அடைக்கலம் புகுந்த பெண்ணை உன்னிடத்தில் விடோம்," என்றார்கள். அவன் அவர்களை நோக்கி, "அரசனுடைய கட்டளையை நீங்கள் இகழ்ந்து, இந்தப் பெண்ணை விடோம் என்கிறீர்கள். உங்களுடைய தில்லுமல்லை அரசனுக்குத் தெரிவிக்கிறேன்," என்று சொல்லிச் சினவெறியுடன் சென்றான்.
-------------
11. மண மறுப்பும் சிறை இருப்பும்
1. தென்னாட்டரசனின் தூதிகளுக்கும் சுகுணசுந்தரிக்கும் சொற்போர்
அந்தப் பிரெஞ்சுக்காரன் மூலமாய் நடந்த காரியங்களைக் கேள்வியுற்ற அரசன், ஒளியப்போயுந் தலையாரி வீட்டில் ஒளிந்ததுபோல் இப்படி வந்து நேரிட்டதே என்று வியப்பெய்தினான். சாட்சிக்காரன் காலில் விழுவதைப் பார்க்கிலும் சண்டைக்காரன் காலில் விழுவது நலம் என்கிற பழமொழிப்படி சுகுணசுந்தரியை மனநிறைவு செய்வித்து அழைத்து வரும்படி சொல்லாற்றலும் திறமையும் உள்ள சில தூதிகளை அனுப்பினான். அவர்கள் பொய்க்கலைகளை எல்லாம் கற்றவர்கள், கல்லிலும் நார் உரிப்பார்கள். இரும்பையும் இளகச் செய்வார்கள்.
அவர்கள் சுகுணசுந்தரியிடம் வந்து, "அம்மா! உம்முடைய அழகைப் பார்த்தவுடனே நீர் மானிடப் பெண்ணா அல்லது தெய்வப் பெண்ணா என்று ஐயப்பட்டுத் திகைக்கிறோம். உம்மைப் போலப் பெண்களான எங்களுடைய தன்மையே இப்படி யிருக்குமானால் ஆடவர்களுடைய தன்மையை எப்படிச் சொல்லப்போகிறோம். திருமகள் இப்போதுதான் மலர் இருக்கையை விட்டு நில உலகிலே அடிதோயப் புறப்பட்டது போலத் தோன்றுகிறீர் ! இப்படிப்பட்ட உமக்குத் திருப்பாற்கடலில் அறிதுயில் விட்டு எழுந்த திருமால் போல் விளங்காநின்ற எங்களுடைய அரசரே தகுந்த மணவாளர். அவருடைய அழகும் குணமும், கல்வியும் அறிவும், நீதியும் நெறியும் எடுத்துரைப்பதற்கு அருமையாக அமைந்துள்ளன. அவர் உம்மைத் திரு மணஞ் செய்து கொள்ள விரும்புகிறாரே அல்லாமல் வேறு கெட்டவழியை எண்ணவில்லை. இழிதொழிலும் அன்று. நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டதுபோல், தானே வருகிற செல்வத்தை நீர் தள்ளி விடலாமா?" என்றார்கள்.
2. திருமண உடன்படிக்கையைப்பற்றி ஒரு சொற்பொழிவு ; அரக்கர் மண மறுப்பு
உடனே சுகுணசுந்தரி அந்தத் தீய மாதர்களைப் பார்த்து, "திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் உடன்பட்டுச் செய்து கொள்கிற இருவர் உடன் படிக்கையே அல்லாமல், ஒருவருடைய உடன்பாட் டின் பேரில் மட்டும் நடக்கிற காரியம் அன்று. அவர்கள் இருவரும் தக்க பருவம் இல்லாத சிறுவர்களா யிருப்பார்களாயின், அவர்களுடைய திருமணத்திற்கு உற்றார் பெற்றார்களுடைய உடன்பாடு இன்றியமையாததாக இருக்கின்றது. சிறு செயலாகிய அசையும் பொருள் அசை யாப் பொருள்களைப்பற்றி இருவர் செய்து கொள்ளுகிற உடன்படிக்கைக்கு, ஒருவர் உடன்பட்டு ஒருவர் உடன் படாவிட்டால், அந்த உடன்படிக்கை உறுதிப்படுமா? அப்படியிருக்க, ஆடவர் பெண்டிருடைய வாணாள் இறுதி வரைக்கும், அதற்குப்பிறகு தலைமுறை தலைமுறையாயும் நீடித்திருக்க வேண்டியதும், இம்மை மறுமைத் தொடர் புள்ளதும், தாய் தந்தையர், மற்றைய உறவினர்கள், விருப்பம் உள்ள நண்பர்கள், கோயிலார் குருக்கள் முதலானவர்களுடைய உடன்பாட்டின் பேரில் நடக்க வேண்டியதுமான திருமண உடன்படிக்கைக்கு, ஆடவன் மட்டும் உடன் பட்டுப் பெண்ணும் அவளுடைய கூட்டத்தாரும் உடன் படாவிட்டால் அந்த உடன்படிக்கை செல்லுமா?
"உங்கள் அரசர் அனுப்பின மணத் தூதுக்கு நானும் உடன்படாமல் என்னுடைய தந்தையும் உடன்படாமல் ஒதுக்கிய பிறகு, அவர் எங்கள் மேலே படை எடுத்துப் போர் செய்தும் அவருடைய எண்ணம் பலிக்காமல் இருக்க, என்னை இவ்வாறு சூழ்ச்சி செய்து சிறையெடுப்பித்தது ஒழுங்கற்ற முறைமையல்லவா? இப்படிப்பட்ட ஒழுங்கற்ற முறையை வேறொருவன் செய்தால் அவனை ஒறுத்தற்குக் கடமைப்பட்டுள்ள அரசர், தாமே இந்த நேர்மையற்ற செயலைச் செய்தால் தெய்வம் தண்டியாமல் விடுமா? நீங்கள் சொல்லுகிறபடி, உங்களுடைய அரசர் நேர்மையுள்ளவராக இருந்தால் அரக்கர் மணம் என்றும், பேய் மணம் என்றும் நூல்களால் விலக்கப்பட்ட மணத்துக்கு அவர் உடன் படலாமா? ஓர் அரசரை முழுமனதுடன் மணஞ்செய்து கொள்ள எத்தனையோ பெண்கள் காத்திருப்பார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு உடன்பாடு இல்லாத பெண்ணை விரும்புவது அரசர்களுக்கு அழகாகுமா? என் தந்தை முதலானவர்கள் என்னைக் காணாமையால் இப்போது என்ன நிலைமையில் இருப்பார்களோ என்று நினைக்கும்போது என் உடலெல்லாம் பதைக்கின்றது. உங்களுடைய அரசர் எண்ணம் இல்லாமல் இப்படிப்பட்ட ஒழுங்கற்ற செய்கையை ஒருகால் செய்துவிட்டாலும் கூட, என்னை மறுபடியும் என் தந்தையாரிடம் அனுப்பி விடுவாரானால், அஃதாவது சிறிது பரிகாரமாய் இருக்கும். மங்கிப் போன அவருடைய புகழ் மறுபடியும் ஒளிவிடும்," என்றாள்.
சுகுணசுந்தரி சொன்ன ஒவ்வொரு ஒழுங்குமுறையும் தகுதியாயும் மறுக்கக் கூடாததாயும் இருந்ததால், அதற்கு மறுமொழி சொல்ல வாயில்லாமல் அந்தத் தூதிகள் போய்விட்டார்கள். கன்னிப்பெண்கள் சுகுணசுந்தரியின் அறிவுநலத்தை வியந்து கொண்டார்கள்.
3. சுகுணசுந்தரி கன்னியர் மாடத்தில் சிறையிருத்தல்
சுகுணசுந்தரி சொன்ன நேர்மைகளை அரசன் கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவனுக்குச் சிறிது நல்லறிவு தோன்றி, அவளை அவளுடைய ஊருக்கு அனுப்பி விடலாமா என்று எண்ணமிட்டான். அவன் மறுபடியும் அவளது மிகுந்த பேரழகின் மேன்மையை அந்தத் தூதிகள் சொல்லக் கேள்வியுற்று, மதிமயங்கி, அவளை அனுப்பக் கூடாதென்று உறுதி செய்துகொண்டான். அவள் இப்போது இருக்கிற இடத்தவிர, வேறெங்காயினும் இருப்பாளானால் அவளைப் பலவந்தமாய்க் கொண்டு போயிருப்பான். அவள் பிரெஞ்சு அரசாட்சியாரால் ஏற்படுத்தப் பெற்ற தவப்பெண்களுடைய இருப்பிடத்தில் அடைக்கலம் புகுந்திருப்பதாலும், அந்த இடத்தில் தான் ஒரு காலத்திலும் ஒழுங்கற்ற முறையில் நுழைகிறது இல்லை யென்றும், அந்த மடாதிபதிகளுடைய விருப்பத்துக்கு மாறுபாடாக நடக்கிறது இல்லை என்றும், அவன் பிரெஞ்சு அரசினருடன் உடன்படிக்கை செய்திருப்பதாலும், அந்த உடன்படிக்கையை மீறி நடக்க அவன் துணியவில்லை. காலஞ் செல்லச் செல்ல, சுகுணசுந்தரி மனந் திரும்பித் திருமணத்துக்கு இசைவாள் என்றும், அதுவரையில் அவளை அவளுடைய ஊருக்கு அனுப்பாமல் அந்த மடத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்றும், அரசன் மடத் தலைவர்களுக்குச் செய்தி அனுப்பினான்.
அந்தச் செய்தி மடத்தலைவர்களுக்கு வெறுப்பாயும் உடன்பாடு இல்லாமலும் இருந்தாலும், அதைத் தட்ட முடியாதவர்களாய் அவர்கள் சுகுணசுந்தரியை நோக்கி, "உம்மை அரசன் இடத்தில் அனுப்ப நாங்கள் மறுத்ததின் பொருட்டு அவன் முனிவுற்று என்ன இடையூறு செய்வானோ என்று நாங்கள் அச்சம் உள்ளவர்களாய் இருந்தோம். தெய்வத் திருவருளால் அரசன் இவ்வளவு பொறுமைக் குணத்துடன் இருப்பது உம்முடைய நல்வினையின் சிறப்பு என்று நினைக்கிறோம். இப்போது அவன் விரும்புவதெல்லாங்கூடி , நீர் ஊருக்குப் போகாமல், இன்னுஞ் சிலகாலம் எங்களுடன் தங்கியிருக்க வேண்டும் என் பதுதான். இதையும் நாங்கள் மறுப்பது அறிவுடைமை-யாகத் தோன்றவில்லை. ஏனென்றால், கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே என்பது போல், அரசன் சினமுற்றுத் தீமை செய்யத் தொடங்கினால் அதை யாரால் தடுக்கமுடியும்? நாங்கள் பிரெஞ்சு நாட்டிற்கு எழுதிப் பரிகாரத் தேடுமுன் இவ்விடத்தில் காரியங்கள் எல்லாம் சீர்கெட்டுத் தலைகீழாய் மாறிப் போகும் அல்லவா? பதறாத காரியம் சிதறாது. ஆசையால், நீர் விரைந்து செல்ல முயலாமல், இன்னுஞ் சிலகாலம் எங்களுடன் தங்கியிருக்க வேண்டியது கட்டாயம்," என்றார்கள்.
உடனே சுகுணசுந்தரி கன்னிப்பெண்களை நோக்கி, "நீங்கள் எனக்கு நன்மையான காரியத்தைச் சொல்லும் பொழுது நான் அதை மறுக்கலாமா? எனக்கு இவ்வளவு பேருதவி செய்த உங்களுக்குத்தான் என்னாலே யாதேனும் ஒரு தீங்கும் உண்டாக நான் உடன்படுவேனோ? இப்போது நான் வேண்டிக் கொள்வதெல்லாங்கூடி , என் தாய் தகப்பனையும் எல்லாச் செல்வங்களையும் நான் இழந்தாலும் என் உயிரையுமே இழந்தாலும் என்னுடைய கற்புக்கு மட்டும் ஒரு குறைவும் வராதபடி , எனக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றவேண்டும்," என்று இருகைகளையும் கூப்பிக் கும்பிட்டு மன்றாடினாள். அவர்கள் அதற்குடன்பட்டு எல்லா உதவிகளையுஞ் செய்துவந்தார்கள். இவ்வாறு கூட்டில் அடைக்கப்பட்ட பஞ்ச வர்ணக்கிளியைப் போலச் சுகுணசுந்தரி சிறையிருக்கலுற்றாள்.
-----------
12. பழியும் சூழ்ச்சியும்
1. நராதிப மகாராசாவின் படைவீரர்கள் சுகுணசுந்தரியைத் தேடல்
சுகுணசுந்தரி காணாமற்போன செய்தி தெரிந்தவுடனே அவளுடைய தந்தைக்கும் மற்ற மக்களுக்கும் உண்டான துன்பத்தை விவரிக்கக் கம்பன் காளிதாசன் முதலிய பெரும்பாவாணர்கள் வல்லவர்களேயல்லாமல் நாம் சிறிதும் ஆற்றல் உடையேம் அல்லேம். கன்றை இழந்த ஆன் போலக் கதறினார்கள்; பார்ப்பை இழந்த பறவை போலப் பதறினார்கள்; கண்ணை இழந்த குருடன் போலக் கலங்கினார்கள்; மண்ணை இழந்த அரசன் போல மயங்கினார்கள். கடலிலே கப்பல் சென்ற வழியையும், விண்ணிலே பறவைகள் பறந்து போன வழியையும் கண்டு பிடிப்பது எப்படி முடியாதோ, அப்படியே இரவில் சுகுணசுந்தரி ஏறிப்போன விமானம் இன்ன வழியாய்ச் சென்றதென்று தெரியாமையினால் பல ஊர்களுக்குப் படை வீரர்களை அனுப்பித் தேடினார்கள். எங்கும் சுகுணா சுந்தரியைக் காணாமையால் அரசன் முதலியோர் துன்பக்கடலில் அமிழ்ந்தினார்கள்.
2. புவனேந்திரன் வெளிப்பட்டதனால் உண்டான வீண் பழியுரை
அந்தச் சமயத்தில் புவனேந்திரனும் போன இடம் தெரியாமல் நீங்கிவிட்டதால், ஆசிரியப் பெரியார் முதலியோர் பலநாள் தேடியும் அவனும் அகப்படவில்லை. மதுரேசனும் அவன் தகப்பனும் இதுதான் சமயம் என்று எண்ணி, தீ மலைமேலே கற்பூரக்கணையைச் செலுத்தியது போல், புவனேந்திரன் மேலே ஒரு பெரும்பழிச்சொல்லை உண்டாக்கினார்கள். எப்படி என்றால், புவனேந்திரனே சுகுணசுந்தரியை வஞ்சகமாய்க் கலைத்து, முன்பின் தெரியாத நாட்டிற்குக் கொண்டுபோய் விட்டதாக ஒரு பெரும் புரளியைக் கட்டிவிட்டார்கள். அரசன் அந்தப் புரளியை முதலில் நம்பாவிட்டாலும், ஒரே காலத்தில் அவர்கள் இருவரையுங் காணாமையினால் நாள் செல்லச் செல்ல, அந்தப் புரளி உண்மையாய் இருக்கலாம் என்று அரசனும் ஐயப் படத் தொடங்கினான். ஐயம் மிகுதிப்பட மிகுதிப்பட, அரசனுக்கும் புவனேந்திரன் மீது சினம் அதிகரித்து வளர்ந்தது.
3. ஆசிரியப் பெரியார் அரசனுக்கு ஐயத் தீர்த்தல்
ஆசிரியப் பெரியாருக்கு அது தெரிந்து அவர் அரசனை நோக்கி, "புவனேந்திரன் மேலே குற்றம் நினைப்பது, கதிரவனுக்குக் குளிர் காய்ச்சல் என்றும், திங்களுக்குச் சூட்டுக் காய்ச்சல் என்றும் சொல்வதற்கு ஒப்பாய் இருக்கின்றது. இருப்புத் துணைச் செல்லரிக்குமா? ஆடவர்களிற் சிறந்தவனாகிய புவனேந்திரன் இப்படிப்பட்ட தீய காரியத்தைச் செய்திருப்பான் என்று எப்படி நம்பக்கூடும்? சுகுணா சுந்தரியும் அவளுடைய தோழியும் மட்டும் விமானத்தில் ஏறிச் சென்றதும், அதற்கு மறு நாள் புவனேந்திரன் இவ்விடம் இருந்ததும் வெளிப்படையாய் எல்லாருக்குந் தெரிந்த செய்தி. அப்படி இருக்க, அவன் சுகுணசுந்தரியை அழைத்துக்கொண்டு போய்விட்டான் என்று எப்படிச் சொல்லலாம்? நடந்தது தெரியாமல் நாம் சினத்திற்கு இடங்கொடுக்கக்கூடாது. "கோபம் பாபம் சண்டாளம் " என்று சொல்லப்படுகிறது. பித்துப்பிடித்தவன் எப்படிச் செய்யக்கூடியதையும், செய்யக் கூடாததையும் எண்ணாமல் நடக்கிறானோ, அப்படியே சினங்கொண்டவனும் அந்தச் சமயத்தில் தாறுமாறாக நடந்து தீவினைகளையும் பழிகளையும் பலருடைய பகைகளையும் தேடிக் கொள்ளுகிறாள். பகைவர்களை வெல்லுகிறவனைப் பார்க்கிலும் தன்னைத் தானே வெல்லுகிறவன் பேராற்றல் படைத்தவன். "ஆய்ந்தோய்ந்து பாராதான் தான் சாகக் கடவன்" என்று பெரியோர் மொழியும் இருக்கின்றதே! ஆராய்ந்து பாராமையினால் உலகத்தில் எத்தனையோ மாறுபாடுகள் உண்டாகி யிருக்கின்றன. தகுந்த சான்று ஏற்படுகிறவரையில், பெருங்குற்றவாளியைக் கூடக் குற்றம் அற்றவன் என்று எண்ண வேண்டும் என்று அற நூல்கள் சொல்லுகின்றன அன்றோ ? சுகுணசுந்தரியைப் பலருந் தேடிப்போனது போல் புவனேந்திரனுந் தேடிப் பார்ப்பதற்காகப் போயிருக்கலாம் என்று தோன்றுகின்றது. அவ்வாறிருக்க வீணான ஐயத்துக்கு இடங்கொடுப்பது ஒழுங்கல்ல. நல்வினை யாட்டியாகிய சுகுணசுந்தரி மேலேதான் குற்றம் சொன்னால் வாய் வேகாதா? நெருப்பைப் புழுப் பற்றுமா?" என்று பலவாறாக அரசனுடைய ஐயமுஞ் சினமும் அகலுமாறு ஆசிரியப் பெரியார் நல்லுரை கூறினார்.
4. மாறுபாடான இறப்புத் தண்டனை
பாசி நீங்கியவுடனே தண்ணீர் தெளிவது போல் ஆசிரியப் பெரியாருடைய அருளுரையால் அரசனுடைய மனந் தெளிவுற்றாலும், கரைப்பார் கரைத்தால் கல்லுங் கரையும் என்றபடி முதல் அமைச்சனுடைய தீய உரையால் உள்ளம் மாறுபட்டது. தன்னுடைய நாட்டு எல்லைக்குள் புவனேந்திரன் எங்கே எதிர்ப்பட்டாலும் அவனைப்
பிடித்துக் கொள்ளுகிறது என்று எல்லா அதிகாரிகளுக்கும் முடங்கல்கள் அனுப்பும்படி முதல் அமைச்சனுக்குக் கட்டளையிட்டான். அந்தத் தீய அமைச்சன் 'புவனேந்திரனைப் பிடித்துக் கொள்ளுகிறது" என்கிற மொழிகளுக்குப் பதிலாய், "பிடித்துக் கொல்லுகிறது" என்று மொழியைப் புரட்டி எழுதி மிக மறைமுகமாகப் பல அதிகாரிகளுக்கும் கட்டளை அனுப்பினான். அப்படிப்பட்ட கட்டளை அனுப்பினதே ஆசிரியப் பெரியாருக்காவது மற்ற மக்களுக்காவது சிறிதும் தெரியாது. இது நிற்க:
சுகுணசுந்தரி காணாமற்போன செய்தி தெரிந்த வுடனே புவனேந்திரன் திடுக்கிட்டுத் திகைத்து மன வருத்தம் உடையவனானான். கற்புக்கு அணிகலமாயும், மணம் ஆகா மங்கையர்க்கு முடிமணியாயும் விளங்காநின்ற சுகுணசுந்தரி, பூனை வாயில் அகப்பட்ட கிளிபோலும், புலி வாயில் அகப்பட்ட மான் போலும் எந்தத் தீயவன் கையில் அகப்பட்டு வருந்துகிறாளோ என்று, புவனேந்திரன் மன வருத்தம் உடையவனாய்த் தானும் அவளைத் தேடிப் போவது என்று முடிவு செய்து கொண்டான். ஆனால், தன் கருத்தை ஆசிரியப் பெரியார் அறிந்தால், அவர் தனக்குக் கட்டளை கொடுக்கமாட்டார் என்று நினைத்து, அவரிடத்திலும் சொல்லாமல் ஒரு குதிரையின் மேல் ஏறிக் கொண்டு புறப்பட்டு, நராதிபனுடைய அரசாட்சிக்கு உட் பட்ட பல ஊர்களைத் தேடி ஆராய்ந்தும் சுகுணசுந்தரி அகப்படாமையால் வேறு எந்த இடத்தில் தேடுகிறது என்று புவனேந்திரன் மயங்கிக்கொண்டிருந்தான். திடீர் என்று ஒரு செய்தி அவனுடைய நினைவுக்கு வந்தது. அஃ தென்னவென்றால், முதலில் அந்தப் பிரெஞ்சுக்காரன் ஆகாய விமானத்தைக் கொண்டுவந்த காலத்தில், அவனை, 'எந்த ஊரில் இருந்து வந்தாய்?' என்று உசாவியபோது, அவன் தென்னாட்டில் இருந்து வந்ததாகவும், அங்கே ஓர் அரசனுடைய காப்பாற்றுதலுக்குள் தான் இருப்பதாகவும் அவன் சொன்னது புவனேந்திரனுடைய நினைவுக்கு வந்தது. அந்த அரசனுடைய பெயரும் ஊரும் புவனேந்திரனுக்குத் தெரியாவிட்டாலும் அவன் தென்னாட்டை நோக்கிப் புறப்பட்டான். பல ஊர்களிலும் உசாவிக் கொண்டு, பிறகு தெய்வத்திருவருளால் சுகுணசுந்தரி இருக்கிற ஊரில் வந்து சேர்ந்தான்.
------------
13. முயற்சியும் சூழ்ச்சியும்
1. புவனேந்திரன் பெண் கோலம் பூண்டு சுகுணசுந்தரியைக் காணல்
ஒவ்வோர் ஊரிலும் புவனேந்திரன் ஏதாவது புதுமை உண்டா என்று உசாவுகிற வழக்கப்படி அந்த ஊரிலும் உசாவத் தொடங்கினான். அந்த நாட்டு அரசன், ஒரு பிற நாட்டு அரசனுடைய மகளை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்திருப்பதாகவும், அவள் அவனைத் திருமணஞ்செய்து கொள்ள உடன்படாதபடியால், அவளைத் தவப்பெண்களின் மடத்தில் கடுஞ்சிறையில் வைத்திருப்பதாகவும், அந்தமடத்துக்குள் ஆடவர்கள் ஒருநாளும் போகக்கூடா தென்றும் புவனேந்திரன் சிலர் மூலமாகக் கேள்வியுற்றான். சிறையில் இருக்கிற அந்தப் பெண்ணினுடைய ஊர் பெயர் முதலிய விவரங்கள் ஒருவருக்கும் தெரியாமையினாலும் அவள் சுகுணசுந்தரியா அல்லவா என்று உறுதி செய்வதற்கு, ஆடவர்கள் அந்த மடத்துக்குள் நுழையக்கூடாமல் இருப்பதாலும் மறைமுகத்தில் உண்மையை அறிவதற்கு என்ன சூழ்ச்சி செய்யலாம் என்று புவனேந்திரன் பல வகையிலும் எண்ணம் இட்டான்.
அந்தச் சிறைப்பெண், கிழமையில் ஒருமுறை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பல எளிய பெண்களுக்கு, ஆடை, பொருள் முதலியன நன்கொடை வழங்குகிற வழக்கம் என்று புவனேந்திரன் கேள்வியுற்றான். தான் ஒரு பிச்சைக்காரியைப்போலக் கோலம் பூண்டு கொண்டு மற்றவர்களுடன் போய் உண்மையை அறிகிறதென்று உறுதி செய்து கொண்டான். தன்னுடைய ஆடையைத் தாறுமாறாகக் கிழித்துக் கந்தையாக்கினான். அதனை இடையில் கட்டிக்கொண்டு பிச்சைக்காரிபோல் மாறுகோலம் பூண்டான். குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகாததுபோல் புவனேந்திரன் தன்னை எவ்வளவு விகாரப் படுத்திக் கொண்டாலும் அவனுடைய உடல் ஒளியும் அழகும் மறையவில்லை. கந்தைத் துணியானது அவனுடைய உடலைச் சேர்ந்தவுடனே பட்டாடைபோல் விளங்கிற்று .
அவன் பிச்சைக்காரிபோலக் கோலம் பூண்டு கொண்டு மற்றைய எளிய பெண்களை நெருங்கியவுடனே அவர்கள் அனைவரும் வியப்புக்கொண்டு ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியவாறு பேசத் தொடங்கினார்கள். "ஐயோ அம்மா! உன்னைப் பார்த்தால் பெரிய அரசனுடைய மகள் போலத் தோன்றுகிறதே! உன் தலையெழுத்துப் பிச்சை எடுக்கும்படியாகவா வந்துவிட்டது?" என்று சிலரும், "கையில் உள்ள பொருள்களை-யெல்லாம் மறைத்து வைத்துக்கொண்டு பிச்சை எடுக்க வந்து விட்டாயோ? உனக்கு நாணம் இல்லையா?' என்று சிலரும், "உன்னுடைய அழகிற்கு ஆடவர்கள் அனைவரும் ஆசைப்படுவார்களே! யாராவது ஆடவர்களை அண்டிப் பிழைக்காமல் பிச்சைத் தொழிலுக்கு ஏற்பட்டாயே" என்று சிலரும், "பெரிய தடிச்சியாகிய நீ நாள் ஒன்றுக்குக் கல நெல் குற்றலாமே. நீயும் பிச்சைக்கு வரலாமா?" என்று சிலரும் வாயில் வந்தபடி இகழ்ந்து பேசினார்கள்.
சுகுணசுந்தரி சிறையிருக்கிற அறைவீட்டின் பின் புறத்தில் இருக்கிற பெரிய பூஞ்சோலையின் வழியாய்ப் பிச்சைக்காரிகள் அனைவருஞ் சென்று, அந்த அறையின் பலகணி வழியாய்ச் சுகுணசுந்தரி கொடுத்த ஆடை பணம் முதலியவற்றைக் கையேந்தி வாங்கினார்கள். புவனேந்திரன் அந்தப் பிச்சைக்காரிகளுடைய வாய்க்கு அஞ்சிக் கொண்டு அவர்களுடன் சேராமல் தொலைவில் தனியே நின்றான். மற்றைய பிச்சைக்காரிகள் எல்லாரும் போன பிறகு, சுகுணசுந்தரி தொலைவில் நின்ற புவனேந்திரனைத் தன்னுடைய தோழிக்குக் காண்பித்து, "அதோ அங்கே நிற்கிற எளிய பெண் மானம் உடையவள் போல் காணப்படுகிறாள். அவளுக்கு ஐயம் இட, அவளை இங்கே அழைத்துவா," என்று கட்டளையிட்டாள்.
அந்தத் தோழி தன்னிடத்தில் நெருங்கினவுடனே, புவனேந்திரன் அவளுக்குத் தன்னை இன்னான் என்று தெரிவித்து, "சுகுணசுந்தரி அறையில் தனிமையாய் இருக்கிறாளா? அல்லது வேறே யாராவது கூட இருக்கிறார்களா?" என்று உசாவினான். அவள் தனிமையாய் இருப்பதாகத் தெரிந்து புவனேந்திரன் பலகணிக்கு நேரே சென்றான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவுடனே அவர்களுக்கு உண்டான அழுகையும் துன்பமும் அங்கலாய்ப்பும் இவ்வளவென்று யாரால் விரித்துரைக்கக் கூடும்? அவர்கள் சிறிது மனந் தேறினவுடனே, தான் விமானத்தில் ஏறின து முதல் தற் காலம் நடந்ததுவரையில் ஒவ்வொரு செய்தியையும் பல கணி வழியாய்ப் புவனேந்திரனுக்குத் தெரியப்படுத்தினாள். புவனேந்திரனும் தான் வந்த வரலாறுகளை யெல்லாம் சுகுணசுந்தரிக்கு அறிவித்ததும் அல்லாமல் மீளவும் அவளை நோக்கி, "நான் முடிவாக ஆராய்ந்து உன்னைச் சிறை மீட்க வேண்டிய சூழ்ச்சியைத் தேடுகிறேன். ஆனால், காலம் தாழ்த்தலுக்கு இடம் ஆகும் என்று தோன்றுகிறது அதற்காக நீ அணுவளவும் எண்ணமிட்வேண்டாம். உட்கார்ந்து படுக்கவேண்டுமே யல்லாது நின்ற நிலையிலே விழுந்தால் இடுப்பொடிந்து போகாதா? முள்ளிலே சேலை மாட்டிக்கொண்டால் மெள்ள மெள்ள எடுக்கவேண்டும் அல்லவா? ஆகையால் பதறுவதால் பயன் யாது?" என்றான்.
உடனே சுகுணசுந்தரி புவனேந்திரனை நோக்கி, "உங்கள் கட்டளைப்படி நடக்கக் காத்திருக்கிறேன். எனக்கு எப்படி விடுதலையாகப் போகிறதென்று நான் இதுகாறும் ஏங்கிக்கொண்டிருந்தேன். கடலில் விழுந்து தவிக்கிறவனுக்குக் கப்பல் அகப்பட்டது போலவும், சாகப் போகிறவனுக்கு இறவா மருந்து கிடைத்தது போலவும் வந்து சேர்ந்தீர்கள். இனி எனக்கு என்ன கவலை இருக்கிறது? ஆனால் நீங்கள் பிச்சைக்காரி-போல் கோலம் பூண்பது எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. இனிமேல் நாம் அடிக்கடி பார்ப்பது கூடாதாகையால் நீங்கள் குறிக்கும் இடத்துக்குத் தோழியை அனுப்புவேன். நாம் அவள் மூலமாக எல்லாச் செய்திகளையும் அப்போதைக்கப்போது தெரிந்து கொள்ளலாம்," என்றாள். புவனேந்திரன் சரி என்று ஒப்புக்கொண்டு, தோழி தன்னைக் காண வேண்டிய கிழமை பொழுது இடம் முதலியவைகளைச் சொல்லிய பின்பு, விடை பெற்றுக்கொண்டு போய்விட்டான்.
2. புவனேந்திரன் இனிய சூழ்ச்சியை மேற்கொள்ளல்
புவனேந்திரன் வெளியே போனபின்பு, சுகுண சுந்தரியைச் சிறை மீட்சத் தக்க சூழ்ச்சி என்னவென்று நெடும்பொழுது எண்ணமிட்டான். தான் தன்னந்தனியே அந்த அரசனுடன் அமர் செய்து சிறை மீட்பது முடியாத செயல். அல்லது தான் திரும்பிப் போய்ப் படை சேர்த்துக் கொண்டு வந்து போர் செய்யத் தொடங்கினால் அந்தப் போர் முடிவதற்கு முன் அந்தத் தீய அரசன் சுகுணசுந்தரியைக் கொலை செய்தாவது கற்பழித்தாவது விடுவான்; ஆகையால் என்ன செய்கிறதென்று தோன்றாமல் புவனேந்திரன் மயங்கிக்கொண்டிருந்தான்.
அரண்மனைப் போர் மறவர்கள் சிலர், "அரசவையிலே சில அலுவல்கள் காலியாய் இருப்பதால் வேண்டியவர்கள் வந்து தேர்ச்சி கொடுத்தால் அவரவர்களுக்குத் தகுதியான அலுவல்கள் கொடுக்கப்படும்," என்று பேரிகை முழக்கி எல்லாருக்குத் தெரியப்படுத்தினார்கள். அதைக் கேட்ட உடனே புவனேந்திரனுக்குக் களிப்பு உண்டாகியது. தன்னை ஆராய்ந்து கொண்டு தனக்குத் தகுதியான அலுவல் கொடுக்கவேண்டும் என்று அரசன் முன்னிலையில் விண்ணப்பஞ் செய்து கொண்டான்.
3. புவனேந்திரனுடைய அலுவல் திறமையும் புகழும்
அரசனுடைய கட்டளைப்படி சில அதிகாரிகள் புவனேந்திரனுடைய திறமையை ஆராயத் தொடங்கினார்கள். அந்த ஆராய்வு எப்படி இருந்ததென்றால் கதிரவனை ஒரு மின்மினிப் பூச்சி ஆராயத் தொடங்கியது போல் இருந்தது. ஏனென்றால், புவனேந்திரனுக்குத் தெரிந்த செய்திகளில் பதினாயிரத்தில் ஒரு பங்கு கூட அந்த ஆராய்ச்சியாளர்கள் அறியார்கள். அவனுடைய பேராற்றலை ஆராய்ச்சி யாளர்கள் அரசனுக்குத் தெரிவித்தார்கள். உடனே அரசன் இப்படிப்பட்ட பேரறிஞனை விடக் கூடாது என்று கருதினான். புவனேந்திரனுக்கு ஒரு மேலான அலுவல் கொடுத்தான். எந்த அலுவலும் அவனுக்கு மிக எளிதாக இருந்தது. அவனை அரசன் நாளுக்குநாள் அலுவல் வரிசையில் உயர்த்தினான். சில திங்களுக்குள் அவனுக்கு அமைச்சு வேலையுங் கொடுத்தான். அந்த அரசனுடைய குணம் எத்தன்மையதென்றால், தனக்கு அண்மையில் உள்ளவர்களுடைய குணம் எப்படியோ அப்படியே அவனுடைய குணமும் மாறுவது வழக்கம். ஆதலால், பொன்மலையைச் சேர்ந்த காகமும் பொன் நிறம் ஆவது போல் புவனேந்திரனுடைய கூட்டுறவின் சிறப்பால், அரசனும் நாளுக்குநாள் நன்னெறியில் செல்லத் தொடங்கினான்.
புவனேந்திரனுடைய சூழ்ச்சித்திறனானது அரசனுக்கு நன்மையாயும் எல்லா மக்களுக்கும் உடன்பாடாயும் இருந்தபடியால், புவனேந்திரனுடைய புகழ் நாடெங்குஞ் செழித்தோங்கி வளர்ந்தது. கதிரவனுடைய ஒளி திங்கள் இடத்திலும் எதிர் நிழலாய்த் தோன்றுவது போல், புவனேந்திரனுடைய புகழும் நன்மையும் அரசனிடத்தி லும் காணலாயின். புவனேந்திரனுடைய கட்டளை இன்றி , அரசன் ஒரு காரியமும் செய்வதில்லை. தன்னுடைய உள்ளக்கிடக்கையையும் மறைவுகளையுங்கூட அரசன் புவனேந்திரனுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை.
------------
14. சுகுணசுந்தரியின் சொற்பொழிவு
1. தவப்பெண்களுடைய மடத்தின் ஒழுங்குகளும்
சட்ட திட்டங்களும் தவப் பெண்களுடைய மடத்தில் சிறையிருக்கலுற்ற சுகுணசுந்தரி அந்த மடத்தின் ஒழுங்குகளையும், சட்ட திட்டங்களையும், அவர்களுடைய கடவுள் அன்பு, நல்லொழுக்கம், அடக்கம், பொறுமை, அமைதி, உயிர்களிடத்தில் இரக்கம் முதலிய நற்குணங்களையும்; அவர்கள் உலக வாழ்க்கையை வெறுத்து வீடு பேறடைவதற்காகப் படும் முயற்சியையுங் கண்டு, 'புதுமை புதுமை' என்று வியந்து கொண்டாள். அந்தத் தவப்பெண்களிலே சிலர் தமிழ் படிக்க விரும்பினமையால் அவர்களுக்குத் தமிழைக் கற்பித்துத் தான் அவர்களிடத்திலே பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொண்டாள்.
2. சிறுமிகள் பாடசாலையின் ஆண்டுவிழா
அந்தத் தவப்பெண்கள், இந்த நாட்டுச் சிறுமிகளுக்காக ஒரு சிறுமிகள் பாடசாலையை ஏற்படுத்தி நடத்தி வந்தார்கள். அப் பாடசாலையில் இரண்டு ஆண்டு அகவை உள்ள பார்ப்பனப் பெண்களும், பிறவகுப்புப் பெண்களும் கல்வி கற்றுக்கொண்டு வந்தார்கள். பல சிறு பெண்கள் ளுடைய கழுத்தில் தாலி இருக்கக் கண்டு அவர்கள் எல்லாரும் திருமணம் ஆன பெண்கள் என்று சுகுணசுந்தரி அறிந்து கொண்டாள். அந்தப் பாடசாலையின் ஆண்டுவிழா நாளில் ஊரில் உள்ள பெண்கள் எல்லாரும் வந்து கூட்டங்கூடினார்கள். மிக இளமையில் மணஞ்செய்தல் வெறுக்கத்தக்கது என்று சொற்பொழிவு செய்யும்படி சுகுணசுந்தரியை அந்த மடத்தின் தலைவி கேட்டுக்கொண் பதினால், அவ்வாறே சுகுணசுந்தரி பின்வருமாறு சொற் பொழிவு செய்தாள்.
3. மிகு இளமை மண மறுப்பு
"இந்த நாட்டில் பார்ப்பனர் முதலானவர்களுக் குள்ளாக நடக்கும் மிகு இளமை மணமானது மிகவும் வெறுக்கத் தக்கதாய் இருக்கின்றது. சிறு பிள்ளைகள் பொம்மை மணஞ் செய்து விளையாடுவது போல், பெரிய பிள்ளைகளாகிய தாய் தந்தையர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு மிக இளமையிலே திருமணஞ் செய்து வேடிக்கை பார்த்து மகிழ்வதாகக் காணப்பெறுகின்றது. சிறு பிள்ளைகள் பொம்மைகளைப் போல அசையாப் பொருள்களாய் இருந்தால், தாய் தகப்பன்மார்கள் குழந்தை மணஞ் செய்து வேடிக்கை பார்ப்பதில் தடை இராது. உயிர் தங்கிய உடலோடு கூடிய பிள்ளைகளுக்கு மிக இளமையில் மணஞ் செய்வதினால் பல கெடுதல்களுக்கு இடம் உண்டாகிறது.
"இந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் மிக இளமையில் மணஞ்செய்கிற வழக்கமே இல்லை. ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா முதலிய நாடுகளில் பக்குவகாலம் வந்த பிறகு திருமணஞ் செய்கிறார்களே அல்லாமல், மிகு இளமை மணம் என்கிற பேச்சே இல்லை. இந்த நாட்டிலும் பார்ப்பனர் முதலிய சிலரைத்தவிர மற்றை எந்தப் பிரிவினரிலும் மிகு இளமை மணமே இல்லை. இந்த நாட்டிலே கிறித்துவர்களும் மகமதியர்களும் இன்னும் பல பிரிவினரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தகுந்த காலம் வந்த பிறகுதான் திருமணஞ் செய்கிறார்கள்.
"அறநூலில் மிக இளமையில் மணஞ் செய்யும்படி கூறப்படவில்லை. முன்னாளில் முனிவர்களும் மன்னர்களும் மற்றவர்களும் ஆண் பெண்களுக்குப் பக்குவ காலம் வந்த பிறகே, திருமணஞ்செய்ததாகத் தெரியவருகிறது. கிருட்டிணனுடைய மனைவி ருக்மணி, இராமருடைய மனைவி சீதை, நளனுடைய மனைவி தமயந்தி, தருமருடைய மனைவி திரௌபதி, அரிச்சந்திரனுடைய மனைவி சந்திரமதி முதலியவர்கள் பக்குவகாலம் வந்த பிறகு தங்களுடைய தலைவர்களைத் தாங்களே விரும்பித் தானே தலைவனைத் தேர்ந்தெடுக்கும் மணம் (சுயம்வரம்) செய்து கொண்டதாகப் புராணங்களிலே சொல்லப்படுகிறது. ஆகையால், முன்னாளிலே இல்லாத வழக்கம் இப்போது பார்ப்பனர்களுக் குள்ளாக மட்டும் எப்படி வந்து நுழைந்தது என்று கண்டு பிடிப்பது முடியாததாக இருக்கின்றது. மிகு இளமை மணத்தினால் உண்டாகுந் தீமைகளை ஒவ்வொன்றாக அடி யில் விவரிப்போம்.
4. இளமை மணத்தினால் உண்டாகுந் தீமை
"ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈடும் எடுப்பும் பார்த்துத் திருமணஞ் செய்யவேண்டியது எவ்வளவோ முதன்மையானதாக இருக்கின்றது. இளமைப் பருவத்தில் ஈடும் எடுப்பும் எப்படிக் கண்டுபிடிக்கக்கூடும்? இளமையில் நெட்டையாய்த் தோன்றுகிற பிள்ளைகள் பிறகு குட்டை யாய்ப் போகின்றனர். இளமையில் குட்டையாய் இருக்கிற பிள்ளைகள், பிறகு நெட்டையாய்விடுகின்றனர். இளமையில் அழகாயும் உடல் நலத்துடனும் தோன்றுகிற பிள்ளைகள் பிறகு விகாரமாய்ப் போகின்றனர். ஆனது பற்றியே, மிகு இளமையில் திருமணம் ஆகிற சில பெண்கள் கணவனுக்கு அக்காள் அல்லது தாய் என்று சொல்லும்படியாக மிகு நெட்டையாய் வளர்ந்துவிடுகிறார்கள். அவர்களுக்குக் கணவன் முத்தங்கொடுக்க வேண்டியிருந்தால், பலகை அல்லது நாற்காலியின் மேல் ஏறி நின்று கொண்டு முத்தங் கொடுக்கவேண்டும். சில சமயங்களில் மனைவிக்குத் தமையன் அல்லது தகப்பன் என்று சொல்லும்படியாகக் கணவன் மிகுதியாய் வளர்ந்து விடுகிறான். சில சமயங்களில் பெண்களுக்குப் பக்குவகாலம் முந்தி வந்துவிடுகிறது. கணவர்களுக்குப் பக்குவ காலம் வரத் தாழ்க்கிறபடியால் பெண்கள் சில காலம் காத்திருக்கும்படி நேரிடுகின்றது. அல்லது கணவர்களுக்குப் பக்குவகாலம் முந்தி வருவதால், அவர்களாவது சில காலம் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்தக் காலத்தில் ஆடவர்கள் பிறமாதர் இடத்திற் செல்லுதல் முதலிய கெட்ட வழிகளில் நுழைய இடம் உண்டாகிறது.
"ஆடவனுடைய குணம், கல்வி, அறிவு முதலிய தகுதியைத் தெரிந்து கொண்டு பெண் கொடுக்க வேண்டியதும், அப்படியே திருமணத்துக்கு முன் பெண்களுடைய குணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியதும், எவ்வளவு முதன்மையான தென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளுவார்கள். அகவை முதிர்ந்த பிள்ளைகளுடைய இயல்புகளை மட் டும் உறுதிப்படுத்தலாமே அல்லாமல், மிகு இளமையில் பிள்ளைகளுடைய நற்குணம் தீக்குணங்களை அறிவது முடியாதல்லவா? ஏனென்றால், சிறு பிள்ளைகளுடைய குணங்களும் உடல் நிலை முதலியவைகளும் நாளுக்கு நாள் மாறிப்போகின்றன. ஆகையால், ஆண் பெண்ணினுடைய குணங்களையும், உடல் நிலை முதலியவைகளையும் அறியாமல் மிகு இளமையில் திருமணஞ் செய்வது, ஆழம் அறியாமல் ஆற்றில் இறங்குவது போலும், கண்ணை மூடிக்கொண்டு காட்டில் நடப்பது போலும் இருக்கின்றது. ஆனது பற் றியே, சில பெண் ஆண்களுடைய குணங்கள் ஒன்றுக் கொன்று ஒவ்வாமல், அவர்கள் கீரியும் பாம்பும் போல் அடிக்கடி போரிட்டுக் கொள்வதைக் காண்கிறோம்.
"இளமைப்பருவமே அம்மை, மாந்தம், கணம் முதலிய நோய்களுக்கு உரிய காலம். ஆகையால், அந்தக் காலம் கடக்குமுன் மிகு இளமையில் திருமணஞ் செய்வது இடுக் கணை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பாய் இருக்கின்றது. மிகு இளமையில் திருமணம் ஆகிற ஆண்களுக்கும் பெண்களுக்கும் பக்குவ காலம் வரக் குறைந்தது பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் செல்லுதல் வேண்டும். அவ்வளவு காலஞ்சென்ற பிறகுதான் அவர்கள் திருமணத்தின் பயனை அடையவேண்டியதாய் இருக்கின்றது. அவ்வளவு காலத்துக்குள்ளாகப் பெண்ணுக்கும் ஆணுக்கும் எவ்வளவோ இடுக்கண்கள் நேரும் படியாயிருக்குமே! அந்த இடுக்கண்களுக் கெல்லாம் தப்பி இருப்பார்கள் என்பது என்ன உறுதி? அந்தக் காரணத்தைப்பற்றியே குழந்தை மணஞ் செய்யும் வழக்கமுள்ள பார்ப்பனர் முதலானவர்களுக்குள் இளம் அறுதலிகளும், மனைவி இழந்தவர்களும் மிகுதியாய் இருக்கிறார்கள்.
"மேலே சொல்லியபடி பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவேண்டிய காரியத்திற்கு இப்போது தானே ஏன் பரபரப்படையவேண்டும்? ஆடு மாடு முதலிய விலங்குகளைக் கூட நமக்கு வேண்டும்போது விலைக்கு வாங்குவோமே தவிரப் பத்து ஆண்டுகளுக்குமுன் அவைகள் சிறிய கன்றுகளாய் இருக்கும் போது விலை கொடுத்து வாங்குவோமா ? அப்படி வாங்கினாலும் கூட, அவைகள் பத்து ஆண்டுகள் வரையில் சாவாமல் இருந்து, பிறகு நமக்குப் பயன்படும் என்பதை நாம் எப்படி உறுதி செய்யக்கூடும்? இளங்கன்றுகள் பெரியவைகள் ஆன பின்பு, நமக்கு உதவும் உதவா என்பதை எப்படி முந்தி உறுதி செய்யக்கூடாதோ, அப்படியே மிகு இளமையில் திருமணம் ஆகிற பிள்ளைகள் தகுந்த காலத்தில் எப்படி இருக்கும் என்று முந்தியே உறுதி செய்வது கூடாதகாரிய மாக இருக்கிறது. அகவை முதிர்ந்த பின் திருமணஞ் செய்வதாயிருந்தால் கூடியவரையில் குணம், கல்வி, அறிவு, உடல் நிலைமை முதலியவைகளை அறிந்து கொள்வது எளிதாய் இருக்கும்.
"சில குழந்தைகள் மிக இளமையில் நோயற்ற உடல் வலிமை உள்ளவர்களாய்த் தோன்றியபோதிலும், தகுந்த காலத்தில் கடுமையான நோயாளர்கள் ஆகிக் குடும்ப வாழ்க்கைக்குப் பயன்படாமல் போகிறார்கள். மிக இளமையில் திருமணமான சில பெண்கள், பிற்காலத்தில் ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் அலியாய்ப் போயிருக்கிறார்கள். சில பெண்கள் வெகுகாலம் வரையில் பக்குவம் ஆகாமலே இருந்து விடுகிறார்கள். கூடியவரையில் அகவை அதிகரித்த பின்பு திருமணம் ஆகுமானால் இப்படிப்பட்ட மாறுபாடுகளுக்கு இடம் இல்லையே!
"இந்த நாட்டில் சில பெண்கள் பிஞ்சிலே பழுப்பது போல, மிகு விரைவில் பக்குவமாகிக் கணவன் வீட்டிற்குப் போய்விடுகிறார்கள். அகவை மிகுந்து உடல் உறுதிப் படுவதற்கு முன் அவர்கள் குடும்ப வாழ்க்கையிலே நுழைந்து பிள்ளைகளைப் பெறத் தொடங்குகிற படியால், அவர்கள் வயிற்றிலே பிறக்கிற பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாய் உடல் வலிவு அற்றவர்களாக இருப்பார்கள் என்று மருத்துவ நூல் அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அஃது உண்மை என்று வழக்கத்தினாலும் தெரிய வருகிறது. தாங்களே தாய் தகப்பன்மார்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டிய சிறு அகவை உள்ள பெண்கள், பிள்ளைகளைப் பெற்றுப் பாதுகாக்கும்படி செய்வது குருவியின் தலைமேலே பனங்காயைக் கட்டிவைப்பதற்கு ஒப்பாய் இருக்கின்றது.
"திருமணச் செயலிலே முதன்மையான ஒரு பெருங் காரியத்தை நாம் கருத்தூன்றிப் பார்க்கவேண்டியது இன்றியமையாததாய் இருக்கின்றது. அஃதென்ன வெனின், திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து செய்து கொள்ளுகிற உடன்படிக்கையே அல்லாமல் வேறன்று. அப்போது நடக்கிற சடங்குகளும் செய்கைகளும் மறைகளும் ஆண் பெண்கள் இனிமேல் நடக்கவேண்டிய ஒழுங்குகளைப்பற்றி, அவர்கள் செய்து கொள்ளும் கட்டுப்பாடுகளாய் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகளின் கருத்தையும் திருமணத்தினுடைய சிறப்பையும் மணமகனும் மணமகளும் கூடியவரையில் அறிந்திருக்கவேண்டியது இன்றியமையாததாய் இருக்கின்றது. மிக இளமையில் திருமணம் ஆகிற பிள்ளைகளுக்குத் திருமணத்தின் தன்மை இன்னதென்று எப்படித் தெரியும்? அப்படிப்பட்ட பகுத்தறிவு இல்லாத பிள்ளைகளைத் திருமணக் கட்டுப்பாடுகள் எப்படிக் கட்டுப்படுத்தும்?
5. இளமை மணத்தில் பெண்ணுக்கும் தாய்க்கும் நடந்த உரையாடல்
"ஒர் ஊரில் மூன்று ஆண்டுள்ள ஒரு பெண் குழந்தைக்குத் திருமணஞ் செய்வதாக உறுதி செய்து, அதற்காகப் பந்தல் முதலிய திருமண முன் ஏற்பாடுகள் செய்தார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கும் தாய்க்கும் நடந்த உரையாடலாவது :
மகள் : நம்முடைய வீட்டில் இவ்வளவு அமர்க்களமாய்க் கிடக்கிறதே! ஏதுக்கடி அம்மா?
தாய் : நாளைக்கு உனக்குத் திருமணம் அடி அம்மா ?
மகள் : திருமணம் என்றால் என்ன ?
தாய் : திருமணம் என்றால் தாலி கட்டுவது.
மகள் : தாலி என்றால் என்ன ?
தாய் : இதோ என் கழுத்தில் தாலி இருக்கிறது பார் ; இந்த மாதிரியாய் உன் கழுத்திலே கட்டுவது.
மகள் : உன் கழுத்தில் இருக்கிற தாலியை எடுத்து என் கழுத்தில் உடனே நீயே கட்டிவிடலாமே! இதற்கு இவ்வளவு ஆரவாரம் என்ன?
தாய் : நான் கட்டக்கூடாது; ஆடவர்கள் கட்ட வேண்டும்.
மகள் : அப்படியானால், அப்பா எனக்குத் தாலி கட்டட்டும்! அண்ணா கட்டட்டும்! சமையல்கார சுப்பு கட்டட்டுமே!
தாய் : அவர்கள் எல்லாரும் கட்டக்கூடாது. வேறே கணவன் தான் உனக்குத் தாலி கட்ட வேண்டும்.
மகள் : எந்தப் பயல் எனக்குத் தாலி கட்டுவான் ? ஒரு பயல் என்னைத் தொடுவானா?
தாய் : அப்படியெல்லாம் இகழாதே ! கணவன் மேலே நீ அன்பாய் இருக்கவேண்டும். எத்தனையோ பெண்கள் கணவனோடு உடன்கட்டை ஏறியிருக்கிறார்களே!
மகள் : 'உடன்கட்டை' என்றால் என்ன பொருள்? தாய் : கணவன் இறந்து போனால் அவனோடுகூட மனைவியும் தீயில் பாய்வது. இது தான் உடன்கட்டை ஏறுதல்.
மகள் : அப்பப்பா! இஃது என்னாலே ஆகாது! எனக்குத் திருமணமே வேண்டாம்.
தாய் : நீ உடன்கட்டை ஏறவேண்டியது இல்லை. நீ கணவன் மேல் அவ்வளவு அன்பாய் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னேன்.
மகள் : கணவன் மேலே நான் மட்டும் அன்பாய் இருக்க வேண்டியதா? கணவனும் என் மேலே அன்பாய் இருக்கவேண்டியதா இல்லையா?
தாய் : கணவனும் உன் மேலே அன்பாய் இருக்க வேண்டியதுதான்.
மகள்: அப்படியானால் நான் முந்தி இறந்து போனால் கணவனும் என்னோடுகூட உடன்கட்டை ஏறுவானா?
தாய் : இப்போது ஒருவரும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை. உன்னுடைய அலப்புவாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கமாட்டாயா?
மகள் : நான் சும்மா இருக்கமாட்டேன். கணவன் என்னோடுகூட உடன்கட்டை ஏற உடன்பட்டால் தான் நான் தாலி கட்டிக்கொள்வேன். அல்லாது போனால் தாலி கட்டிக்கொள்ள மாட்டவேமாட் டேன். அவன் கட்டினாலும் அறுத்து எறிந்துவிடுவேன்.
இவ்வகையாகச் சொல்லித் தாலி கட்டிக்கொள்ளவே மாட்டேன் என்று அந்தப் பெண் குழந்தை பிடிவாதஞ் செய்ததாம்.
"சில சமயங்களில், பால் குடிக்கிற குழந்தைகளுக்குக் கூடத் திருமணஞ் செய்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்குத் திருமணத்துக்கு அணிகலன்கள் பூட்டி அழகு செய்யும் பொழுது அந்தத் துன்பம் பொறுக்கமாட்டாமல், திருமணத் தொடக்கம் முதல் முடிவு வரையில் அந்தக் குழந்தைகள் அழுதவண்ணமாய் இருக்கின்றன. தாலி கட்டும் நேரத்தில் அழுகையை நிறுத்துவதற்காகத் தாய் மார்கள் பெண் குழந்தைகளை மடியில் வைத்துப் பால் கொடுத்துக்கொண்டு மணவறையில் உட்காருகிறார்கள். மாப்பிள்ளையும் சிறு குழந்தையானதால் இன்னாருக்குத் தாலி கட்டுகிறதென்று தெரியாமல், சில சமயங்களில் மாமியார் கழுத்திலே தாலிகட்டிவிடுகிறான். இது வேடிக்கையும் விளையாட்டும் அல்லவா ?
" நான் மேலே சொன்ன ஒழுங்குமுறைகளை எல்லாம் அறிவாளிகள் நன்கு எண்ணி மிகு இளமையில் திருமணஞ் செய்கிற வழக்கத்தை நிறுத்த முயற்சி செய்வார்கள். என்று நம்புகிறேன்" என்றாள் சுகுணசுந்தரி.
இந்தச் சொற்பொழிவைக் கேட்ட பெண்கள் எல்லாரும் தலையை ஆட்டிப் புகழ்ந்து கொண்டார்கள். அதைத் தங்களுடைய தலைவர்களுக்குக் காண்பிக்கும் பொருட்டு எழுத்து வடிவமாகப் பல படிகள் வாங்கிக்கொண்டு அவர்களுடைய இல்லத்திற்குச் சென்றார்கள்.
--------------
15. சூழ்ச்சியின் வெற்றி
1. அரசன் தனது உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தல்
ஒருநாள் அரசன் புவனேந்திரனை நோக்கி, "உம்மை அமைச்சனாகப் பெற்ற எனக்கு எல்லாச் செல்வங்களும் குறைவு இல்லாமல் இருந்தபோதிலும் பெண்ணைப்பற்றிய ஒரு பெருங்குறையை உடையவனாக இருக்கிறேன். அந்தக் குறையைப் போக்க வழி தெரியாமல் மயங்கிக் கொண்டிருக்கிறேன்," என்றான். புவனேந்திரன் ஒன்றும் அறியாதவன் போல், "அந்தப் பெண் யார்?" என்று வினவினான். உடனே அரசன் சுகுணசுந்தரியினுடைய ஊர் பெயர் முதலிய விவரங்களைத் தெரிவித்து, அவள் பொருட்டுத் தான் நடத்திய எல்லாச் செய்கைகளையும் விளம்பினான். புவனேந்திரன் இப்படிப்பட்ட சமயத்திற்காக நெடுங்காலங் காத்திருந்தவன் ஆதலால், அரசன் செய்த ஒழுங்கின்மைகளை அவனே உணரும்படி நயமாயும் இனிமையாயும் பின்வருமாறு நல்வழி நெறிகளை அவனுக்கு உரைத்தான்.
2. அரசனுக்குப் புவனேந்திரன் அறிவுரை கூறுதல்
"திருமணத்திற்கு உடன்படாத பெண்களைச் சிறை எடுப்பது போன்ற ஒழுங்கின்மை வேறொன்றும் இல்லை. எல்லா வஞ்சனைகளிலும் பெண் வஞ்சனை பொல்லாது. அதனால் உலகத்தில் நடக்கிற கொலைகளுந் தீமைகளும் அளவற்றவைகளாக இருக்கின்றன. எந்த ஒழுங்கின்மைக்குத் தண்டனை இல்லாவிட்டாலும் பெண்ணுக்குச் செய்யும் வஞ்சனைக்குத் தண்டனை இல்லாமற் போகிறதில்லை. உங்களுடைய வாய்ப்பிறப்பைக் கொண்டே இப்போது சிறையில் இருக்கிற அந்தப் பெண்ணினுடைய தகப்பன் சிறந்த பலவான் என்று தோன்றுகின்றது. அவன் உண்மை தெரிந்த உடனே நம்மீது படை எடுத்து வருவான் என்பதற்கு ஐயம் இல்லை. அவனுக்குப் பக்கத் துணையாகப் பல அரசர்கள் சேர்ந்து வருவார்கள் என்பதும் உறுதியே. ஒரு பெண்ணின் பொருட்டுக் கோடிக் கணக்கான மக்கள் மடிவதும் அல்லாமல்; இன்னும் அரசியல் நடவடிக்கையில் என்னென்ன மாறுபாடுகளும் கலகங்களும் நடக்குமோ என்று நினைக்கும்போது, என்னுடைய உடல் எல்லாம் நடுநடுங்கிப் போகின்றது. இராவணன் இந்திரன் சந்திரன் முதலியோர் பட்ட பாடுகள் யாவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தவையல்லவா?
"இந்தக் காலத்தில் நாம் ஒரு காரியத்தை முதன்மையாக எண்ண வேண்டி யிருக்கிறது. இரைக்காக விண்ணிற் பருந்து வட்டம் இடுவது போல், சில ஐரோப்பிய அரசர்கள் இந்த ஆசியாக்கண்டத்தில் எந்த அரசன் ஒழுங் கின்றி நடப்பான்; யாருடைய நாட்டைக் கட்டிக்கொள்ளலாம் என்று எப்பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் தீமைகளைச் செய்தாலும் செய்வார்களே அல்லாமல் மற்றவர்கள் தீமைகளைச் செய்யப் பொறுக்கமாட்டார்கள். ஆகையால், அந்தக் காரியத்தில் நாம் எப்போதும் முன்கூட்டியே பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். ஒரு சிறிய மனிதன் செய்கிற தீமையையாவது மறைக்கலாம். அரசன் முதலிய பெரியோர்கள் செய்கிற தீமைகள் திங்களிடம் உள்ள மறுவைப்போல் எல்லா உலகங்களும் அறியும்படியாக விளங்குகின்றன. அரசன் எப்படியோ அப்படியே குடிகளும் ஆகையால், அரசனைப் பார்த்துக் குடிகளும் தீமைகளைச் செய்யக் கற்றுக்கொள்வார்கள். ஆகையால், அரசனே எல்லாருடைய தீவினைகளுக்கும் பழிகளுக்கும் பொறுப்பாளியாகிறான். பிற பெண்களை நாம் பெருநஞ்சாகப் பாவித்தல் வேண்டும். நஞ்சானது உண்கிறவனை மட்டும் கொல்லும். பிறமாதாகிய நஞ்சு பார்த்தவர்கள் நினைத்தவர்கள் எல்லாரையும் கொல்லும். ஆகையால், பிற மாதர்களைப் பாராமலும் நினையாமலும் இருத்தல் வேண்டும்.
"எல்லா வெற்றிகளிலும் பொறிகளை வெல்லுதலே சிறந்த வெற்றியாகும். பகைவர்களுடைய போர்க்களத்திலே யார் எதிர்த்து நிற்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி. பெண்களின் செயலிலோ என்றால், அவர்களைப் பாராமல் யார் முதுகு காட்டி ஓடுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி. உங்களுடைய உணவினைச் சாப்பிடுகிற நான், உங்களுக்கு நன்மையான காரியத்தைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். வாய்க்கு இனிப்பாகத் தோன்றிப் பிறகு நோய்களை விளைவிக்கிற சில உணவுகளைப்போலப், பின் வருங் காரியத்தை எண்ணாமல் அரசனுக்குக் களிப்பு வரும்படியாகச் சிலர் வெல்லப்பேச்சுப் பேசுவார்கள், அதற்கு நான் அருகன் அல்லன். முந்திக் கசப்பாகத் தோன்றிப் பிறகு உடல் நலத்தைக் கொடுக்கிற மருந்து களைப்போல உங்களுக்கு இம்மை மறுமைக்கு உதவி யான மொழிகளை நான் பேசாவிட்டால், உங்களுடைய ஊழியத்துக்கு நான் எவ்வளவும் உரியவன் அல்லன். ஓர் ஒழுங்கற்ற செய்கையை நாம் தெரியாமல் செய்து விட்டபோதிலும் பிறகு அதற்குத் தக்க கழுவாய் தேட வேண்டியது முதன்மையானது. சுகுணசுந்தரி இவ்விடம் இருக்கிறவரையில் நமக்குத் துன்பத்துக்கு இடமாகை யால் அவளை அவளுடைய சொந்த ஊருக்கு அனுப்பி விடுவது எல்லாவற்றிற்கும் நன்மையாய்க் காணப்படுகிறது," என்றான் புவனேந்திரன்.
மறுபடியும் புவனேந்திரன் அரசனை நோக்கிப், "பெண்களிடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டவர்களைச் சில அரசர்கள் எவ்வளவோ கொடுமையாய் ஒறுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வரலாற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள்," என்று சொல்ல லுற்றான்.
3. பெண்கள் இடத்தில் தீமை செய்தவனை ஒறுத்த அரசன் கதை
"சில காலத்திற்கு முன் ஓர் அரசனுடைய படை வீரர்களில் ஒருவன், பிறன் ஒருவனுடைய வீட்டிற்குள் வலுக்கட்டாயமாய் நுழைந்து, அங்கிருந்த வேலைக்காரியைக் கட்டிப் பிடித்துத் தழுவ முயன்றான். அதைக் குறித்து அந்த வீட்டின் தலைவன் அரசன் இடத்தில் முறையிட்டான். அரசன் அவனை நோக்கி, 'அத்தீயவன் மறுபடியும் உன் வீட்டுக்கு எப்போது வருகிறானோ, அந்தக் கணமே எனக்கு அறிவி, என்றான். அவ்வாறே மறுநாள் இரவு அந்தப் படைவீரன் தன் வீட்டிற்குள் பந்திருந்த சமயத்தில் அந்த மனிதன் அரசனுக்கு அறிக்கையிட்டான். உடனே அரசன் ஒரு கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தான். முந்தி விளக்கை அணைத்துவிட்டு அந்தத் தீயனைக் கொன்றான். பிறகு மறுபடியும் விளக்குக் கொண்டு வரச் சொல்லிக் கொலையுண்டவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். உடனே கடவுளுக்கு வணக்கஞ் செய்தான். பிறகு அரசன் அந்த வீட்டுத் தலைவனைப் பார்த்து, 'ஏதாவது சாப்பாடு இருந்தால் கொண்டு வா,' என்றான். அவன் கொண்டுவந்த உணவை அரசன் விருப்பத்துடன் உண்டான். அரசனுடைய அந்தச் செய்கைகளைப் பார்த்து வீட்டுத்தலைவன் வியப் படைந்தான். அவைகளின் காரணத்தைத் தெரிவிக்கவேண்டும் என்று அரசனை இரந்து மன்றாடினான்.
"அரசன் சொன்ன மறுமொழியாவது : இப்படிப் பட்ட தீய செய்கையை என்னுடைய மகனைத் தவிர, வேறொருவனுஞ் செய்யத் துணியான் என்று நினைத்து, அவனுடைய முகத்தைப் பார்த்தால், அவனைக் கொல்ல எனக்கு மனம் வராதென்று அஞ்சி, முந்தி விளக்கை நிறுத்தி, அவனைப் பாராமலே கொன்றேன். பிறகு, விளக்குக் கொளுத்தி அவனுடைய முகத்தைப் பார்த்த போது என்னுடைய மகன் அல்லன் என்று தெரிந்து அதனால் கடவுளுக்கு நன்றியறிந்த வணக்கஞ் செய்தேன். முறை செய்ய வேண்டும் என்று நீ என்னிடத்தில் வேண்டிக் கொண்டபோது, அந்தக் குற்றவாளியைப் பிடித்துக் கொல்லுகிறவரையில் நான் சாப்பிடுகிறது இல்லை என்று உறுதி செய்து கொண்டு பட்டினியாய் இருந்தபடியால், உன்னுடைய வீட்டில் விருப்பத்துடன் காலம் அல்லாத காலத்தில் உணவு கொண்டேன்."
மோக இருளில் மூழ்கிப்போயிருந்த அந்த அரசனுக்குப் புவனேந்திரன் சொன்ன அறிவுரைகள் அறிவு விளக்குப் போல் விளங்கினமையால், அவன் தன்னுடைய ஒழுங்கின்மையைத் தானே உணர்ந்து சொல்லுகிறான். உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்பது போல் சுகுணசுந்தரியை நாம் அனுப்பிவிட்டாலும் அவள் நடந்த காரியங்களைத் தெரிவிக்கும் பொழுது, அவளுடைய தகப்பனுக்கு நம்மிடத்தில் வெறுப்புண்டாகி, அப்பொழுதும் நம்மைப் பழிவாங்கத் தொடங்குவானே ! இந்த அறக்கேட்டிற்கு (தருமசங்கடத்திற்கு) என்ன செய்கிறது?" என்றான்.
புவனேந்திரன், "அவளுடைய தகப்பனுக்கு முந்திச் சினம் உண்டானாலும் நாம் செய்த முறைகேட்டிற்கு நாமே தக்க நீக்கமும் செய்துவிட்டதால் அவனுடைய சினம் தணிந்துவிடும். நாமும் தகுந்த அறிவாளிகளைச் சுகுண சுந்தரிக்குத் துணையாய் அனுப்பி அவனிடத்தில் உடன் பாடு பேசும்படி செய்விக்கலாம்," என்றான்.
4. அறிவுரை பயன் அளித்தல்
அரசன் : அதற்குத் தக்க ஆண்மையாளர்கள் உம்மைத் தவிர ஒருவரும் இல்லை. ஆனால், உம்மைப் பிரிய எனக்கு மனம் இல்லை. அன்றியும், உமது நோக்கம் எப்படியோ அறியேன்.
புவனே : நான் போகத் தடையில்லை. என்னாற் கூடியமட்டும் அந்த அரசனை அமைதிப்படுத்த முயலுவேன்.
அரசன்: நீர் போவதுதான் நன்மையாகக் காணப்படுகிறது. நீர் போவதில் இன்னொரு பெரிய நன்மையும் இருக்கிறது. வியக்கத்தக்க உம்முடைய மொழித் திறமையால், அந்த அரசனை என்னுடைய திருமணத்துக்கு இசையச் செய்தாலும் செய்யலாம்.
புவனே: அந்தச் செய்தியில் நான் உங்களுக்கு யாதோர் உறுதிமொழியும் கூறமாட்டேன். ஆனால், உங்களுடைய உள்ளக்கிடக்கையை அந்த அரசனுக்குத் தெரிவிப்பேன். அவனுடைய உள்ளம் எப்படியோ? "
அரசன்: உம்முடைய நாவசைந்தால் நாடு அசையுமே ! நீர் எனக்காகப் பேசினால் அதுவே போதும்.
பின்னர் அரசன், சுகுணசுந்தரியும் அவளுடைய தாழியும் ஊருக்குப் போக முன்னேற்பாடு செய்யும்படி தூதிகள் மூலமாய்ச் சொல்லி அனுப்பினான்.
-----------
16. இன்பமும் துன்பமும்
1. சுகுணசுந்தரியின் சிறைமீட்சி ; ஊருக்குத் திரும்புதல்
புவனேந்திரனுடைய முயற்சியால் இவ்வளவு உதவி கிடைத்தது என்று சுகுணசுந்தரி உள்ளங் களித்தாள் கடவுளுக்கு நன்றியறிந்த வணக்கஞ் செய்தாள். மண மாகாப் பெண்மடத்தில் தவஞ் செய்பவர்கள் எல்லாரும் இச்செய்தியைக் கேள்வியுற்றுக் களிப்படைந்தார்கள். புவனேந்திரனுக்கு உதவியாய்ச் சில படைவீரர்களை அனுப்புவதாக அரசன் சொல்லப், பிற அரசர்களுடைய நாட்டில் படைவீரர்களுடன் செல்வது தகுதி அன்று என்று புவனேந்திரன் மறுத்துவிட்டான். புவனேந்திரனும் சுகுணசுந்தரியும் அவளுடைய தோழியும் வெவ்வேறான ஊர்திகளில் ஏறிக்கொண்டு பயணப் பாதுகாப்புடன் புறப்பட்டார்கள்.
சில நாட்களுக்குள் அந்த அரசனுடைய நாட்டு எல்லையைக் கடந்து, தங்களுடைய நாட்டு எல்லைக்குள் நுழைந்தார்கள். நுழைந்த உடனே அந்த ஊர் அதிகாரிகள் நராதிபனுடைய கட்டளைப்படி புவனேந்திரனைப் பிடிக்க முயன்றார்கள். புவனேந்திரன் பிடிபடாமல் அவர்களை எதிர்க்கத் தொடங்கியபோது, அவர்கள் "அரசனுடைய கட்டளைப்படி பிடிக்கிறோம்," என்று சொன்னதினால் அரசனுடைய ஆணையை இகழக்கூடாது என்று புவனேந்திரன் அவர்களுடைய கையில் சிக்கினான். உடனே அந்த அதிகாரிகள் புவனேந்திரனைக் கடுமையான சிறையில் வைத்தார்கள். சுகுணசுந்தரி கூட்டத்தைப் பிரிந்த மான் போலவும், மயில் போலவும் திகைப்புற்று, மிகு விரைவாக அரசனிடம் போய்த் தெரிவித்துப் புவனேந்திரனை விடுவிக்கவேண்டும் என்று பயணப்பட்டாள்.
அவள் வழியிற் செல்லும் போது எண்ணிறந்த மக்கள் அவளைச் சூழ்ந்து கொண்டு, "எங்களுடைய மனோன்மணி வந்து விட்டாள்," என்று வாழ்த்திக்கொண்டு மிகுந்த களிப்புக் கூச்சலுடன் அவளுடைய ஊர்திக்கு முன்னும் பின்னுஞ் சென்றார்கள்.
சுகுணசுந்தரி பலநாள் இரவும் பகலுஞ் சென்று புவனசேகரபுரியை அணுகினாள். அவளுடைய தந்தை முதலியோர் வழியில் வெகு தொலை எதிர்கொண்டுவந்து மிகுந்த சிறப்புடன் நகரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள். அந்நகரத்து மக்கள், வாழை கமுகுகள் நாட்டி, மகர தோரணங்கள் கட்டித் தெருக்களை அழகு செய்தார்கள். பலவகை வாத்திய முழக்கங்களுடன், சுகுணசுந்தரி நலத்துடன் வந்து சேர்ந்ததற்காக இன்பத் திருவிழாக் கொண்டாடினார்கள். மக்களுடைய மகிழ்ச்சியே இப்படி யானால், அவளுடைய தந்தை முதலானவர்களின் களிப்பு மிகுதியை எவ்வாறு விரித்துரைக்கப் போகிறோம்? இறந்து போன உயிர் மீண்டது போலவும், பசியினால் வருந்துகிற வனுக்குத் தேன், நெய், பால், வாழைக்கனி முதலியவை களுடன் சிறந்த உணவு கிடைத்தது போலவும் இன்பக் கடலில் மூழ்கினார்கள்.
2. முறையற்ற கொலை; ஆசிரியப் பெரியாருடைய துன்பம்
அந்தக் களிப்பு ஆரவாரம் சிறிது தணிந்தவுடனே, சுகுணசுந்தரியினுடைய வரலாறுகளைத் தெரிவிக்கும்படி அரசன் கட்டளையிட்டான். அவள் எல்லாச் செய்திகளையும் மிக விளக்கமாகத் தெரிவித்ததும் அல்லாமல் கடைசியாய்ப் புவனேந்திரனுடைய அறிவுத் திறமையினாலும், தளரா முயற்சியினாலும் தான் தப்பிவந்த செய்தியை விரித்துரைத்தாள். அதைக் கேட்டவுடனே அரசன் தாரை தாரையாய்க் கண்ணீர் சொரிந்து, தன் தலையிலே அடித்துக் கொண்டான். "ஐயோ மகளே! நான் தீமை செய்து விட்டேனே! நீ காணாமற்போனவுடனே புவனேந்திரன் மேலே ஐயப்பட்டேன். அவனை எங்கே கண்டாலும் பிடித்துக் கொல்லும்படி கட்டளை அனுப்பினேன். அவ்வாறே உன் முன்பாகவே அவன் பிடிபட்டதாகவும், நீ வந்தபிறகு அவனைக் கொன்று விட்டதாகவும் இன்று காலை யில் அறிக்கைத்தாள் வந்து சேர்ந்தது. அந்தக் கொலைக்கு நான் பொறுப்பாளி அல்லன். எழுத்துக்காரனுடைய கைப்பிசகினால் இவ்வளவு பெருந்தொல்லை நடந்துவிட்டது. இந்த முறைகேட்டிற்கு நான் என்ன செய்வேன்?" என்று தேம்பித் தேம்பி அழுதான்.
அதைக் கேட்டவுடனே சுகுணசுந்தரி மூர்ச்சை யானாள். உயிரற்ற உடல் போல் கீழே விழுந்து விட்டாள். ஏனென்றால், உலகத்தில் யார் துன்பப்பட்டாலும் பொறுக்காத இரக்கத்தன்மை உள்ள சுகுணசுந்தரி , தனக்கு இவ்வளவு உதவி செய்த புவனேந்திரன் தன் பொருட்டாகவே கொலை செய்யப்பட்டான் என்று கேட்க எப்படிப் பொறுப்பாள்? அப்போது ஆசிரியப் பெரியாரும் கூட இருந்தார். அரசன் அந்தக் கொடிய கட்டளையை அனுப்பினதும், புவனேந்திரன் கொலையுண்டதும் அதுவரையிலும் அவருக்குத் தெரியாது. மலை கலங்கினாலும் மனங் கலங்காத திட உள்ளம் படைத்த ஆசிரியப் பெரியார் திடீர் என்று அந்தச் செய்தியைக் கேட்ட உடனே மனம் மயங்கிக் கீழே விழுந்து, புரண்டு புரண்டு அழுதார். அரண்மனை முழுவதும் அழுகைக் குரல் எழுந்தது.
3. மக்களின் புலம்பல்
இந்தச் செய்தி நகரம் முழுதும் ஒரு கணத்திற் பரவி யது. திரும்பிவந்த உயிர் மறுபடியும் போய்விட்டது போல, எங்கே பார்த்தாலும் அழுகையும் புலம்பலும் நிறைந்தன. ஏனென்றால், புவனேந்திரனுடைய நற்குணத்தை அறியாதவர்கள் ஒருவரும் இலர். "ஐயோ! அப்பா ! நீ யார் பெற்ற பிள்ளையோ ! குறைந்த வாணாளில் இறந்து போனாயே.!' என்பாரும், "இவ்வளவு குறைந்த வாணாள் உள்ள உனக்குப் பேரறிவையும் ஆற்றலையும் அழகையும் கல்வியையும் கடவுள் ஏன் கொடுத்தார்?" என்பாரும், விண்ணில் இந்திராவில் அழகாகத் தோன்றி, ஒரு கணத்தில் மறைவது போல் மறைந்து போனாயே !" என்பாரும், மரம் வைத்து வளர்ந்து பலன் கொடுக்கிற காலத்தில் வெட்டுண்டது போல் நல்ல இளமைப் பருவத்தில் மாண்டாயே!" என்பாரும், பெரும் பஞ்ச காலத்திலே எத்தனையோ குடும்பங்களைக் காப்பாற்றினாயே! இனி அப்படிப்பட்ட காலத்தில் யாரை அடுப்போம்?" என்பாரும், சுகுணசுந்தரியாவது தப்பியிருந்தால் அவள் எங்களைச் சமயத்தில் காப்பாற்றுவாளே ! நீ போன பிறகு அவள் உயிரை வைத்திருப்பாளா?" என்பாரும், "எங்களுடைய துன்பமே இவ்வளவு பெரிதாய் இருக்கும்போது, உன்னைத் தொட்டு வளர்த்து எல்லா நன்மைகளையும் நுகர்ந்த ஆசிரியப் பெரியாரும் அவருடைய மனைவியும் இனிமேல் உயிரை வைத்திருப்பார்களா?" என்பாரும், "உதவிக்குத் தீமை செய்த இந்த அரசனைப் போலக் கொடுங்கோலர்கள் உலகத்தில் இருப்பார்களா?" என்பாரும், "இராவணனுக்கு மகோதரனும், துரியோதன னுக்குச் சகுனியும் வாய்த்தது போல் எங்கள் அரசனுக்குக் கொடிய அமைச்சன் வாய்த்தானே என்பாரும், "இனிமேல் இந்த ஊரில் தீ மழை பெய்யும்" என்பாரும் இவ்வாறு பலரும் பலவகையாய்ச் சொல்லிப் புலம்பினார்கள்.
4. நராதிபனுடைய மனநோயும் சாக்காடும்
ஆசிரியப் பெரியார் மயக்கந் தெளிந்து எழுந்த உடனே, "இனி ஒருநாளும் இந்தத் தீய அரசனுடைய முகத்தில் விழியேன்" என்று உறுதி செய்து கொண்டு தமது அரண்மனைக்குப் போய்விட்டார். சுகுணசுந்தரி மூர்ச்சை தெளிந்து பிழைத்தது மறுபிறப்பாயிற்று. நராதிபன் மகளைப் பிரிந்திருந்த ஏக்கத்தினால் தகுந்த உணவும் இல்லாமல் நோய் மேலிட்டு, முன்னமே துரும்பு போல் இளைப்புற்றிருந்தான். இப்பொழுது தன் மகளுக்குப் பேருதவி செய்து சிறைமீட்டு வந்த புவனேந்திரனை முறையில்லாமற் கொலை செய்வித்தும், பொறுமை வடிவினராகிய ஆசிரியப் பெரியாருடைய பகையைத் தேடிக் கொண்டோமே என்கிற மனநோயினால் அவனுக்கு உடல் நோய் மிகுந்து, சில திங்கள் படுத்த படுக்கையிலே இருந்தான். அந்தக் காலத்தில் சுகுணசுந்தரி தந்தைக்காகப் பட்ட பாடுகள் சிறிதல்ல. எண்ணிக்கை இல்லாத ஊழியக் காரர்கள் இருந்தாலும் அவளே தன் கையால் மருந்துணாச் சமையல்களும் (பத்திய பாகம்) எல்லாப் பக்குவங்களும் பணிவிடைகளுஞ் செய்து வந்தாள்.
மருத்துவத்தினால் ஒன்றுங் குணம் ஆகாமல் அரசன் இறந்து போனான். அதற்காகச் சிலர் வருந்திய போதிலும் பல மக்கள், "புவனேந்திரனை முறை இல்லாமற் கொலை செய்த அரசன் இருந்தென்ன? போய் என்ன ? இனி நம்மைக் காப்பாற்றச் சுகுணசுந்தரி இருக்கும்போது நமக்கு யாதுகுறை?" என்று கவலையற்றிருந்தார்கள்.
-----------
17. துன்பம் வந்தால் தொடர்ந்துவரும்
1. முறையற்ற சாக்காட்டு உறுதிமுறி
இறந்துபோன அரசனுக்கு இறுதிச் சடங்குகள் யாவும் முடிந்தபிறகு, முதல் அமைச்சன் சுகுணசுந்தரியை நோக்கி, "இனி நடக்கவேண்டிய ஏற்பாடுகளைப்பற்றி அரசர் அவர்கள் எழுத்தாளனைக்கொண்டு சாக்காட்டு உறுதி முறி (மரண சாசனம்) ஒன்று எழுதுவித்து, அதில் தமது கையெழுத்தும் முத்திரையும் வைத்து எழுத்துப் பெட்டிக்குள் வைத்திருப்பதாகச் சிலர் மூலமாக நான் கேள்விப்பட்டேன். அந்த உறுதி முறியின் உட்பொருள் இன்னதென்று எனக்குத் தெரியாது. எழுத்துப் பெட்டியைத் திறந்து பார்க்கவேண்டும்," என்றான்.
உடனே சுகுணசுந்தரி வியப்படைந்து, "என் தந்தை யார் நான் நடக்கவேண்டிய முறைகளைப்பற்றி எனக்கு வாய்மொழியாகக் கட்டளை கொடுத்தாரே யல்லாமல் யாதோர் உறுதிமொழித்தாளும் எழுதி வைத்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கவில்லை. ஆயினும், எழுத்துப் பெட்டியைத் திறந்து பார்ப்போம்," என்று சொல்லி அவ்வாறே திறந்து பார்க்க, ஒரு சாக்காட்டு உறுதிமுறி அகப்பட்டது. அதன் சுருக்கம் என்ன என்றால், சுகுணசுந்தரியை மணஞ் செய்யத்தக்க மன்னர்கள் ஒருவரும் இல்லாத படியால், அவள் முதலாவது அமைச்சன் மகனாகிய மதுரேசனை மணஞ் செய்து கொண்டு, அவர்கள் இருவரும் நாடு ஆளவேண்டும் என்றும், அவளுக்கு அவனை மணஞ்செய்து கொள்ள உடன்பாடு இல்லாதவரையில் மதுரேசன் மட்டும் முடிசூடுதலுக்குத் தகுந்தவனே அல்லாமல், சுகுணசுந்தரி நாட்டின் அதிகார உரிமையை இழந்துவிடவேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்ணுற்ற உடனே சுகுணசுந்தரி பாம்பைத் தீண்டினவள்போல் மயங்கித் திகைத்து உள்ளஞ் சுழன்றாள்.
உடனே முதல் அமைச்சன், "உறுதிமுறியில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?" என்று வினவ, "அதை நீங்களே பார்த்துக்கொள்ளலாம்," என்று அவன் கையிலே கொடுத்தாள். முதல் அமைச்சன் அதைப் படித்துப் பார்த்து, "அரசர் பெருமான் செய்திருக்கிற ஏற்பாடு நல்ல ஏற்பாடு," என்றான். சுகுணசுந்தரி, "அஃது அரசர் பெருமான் செய்த ஏற்பாடு என்பதும், அல்ல என்பதும் கடவுளுக்குத்தான் தெரியும். அஃது உண்மையாய் இருந்தாலுங்கூட, அரசர் பெருமான் அவருடைய நாட்டை யாருக்கு வேண்டுமானாலும் விருப்பம் போல் கொடுக்கலாமே அல்லாமல், என்னுடைய உடலையும் அவர் விருப்பப்படி யாருக்காவது கொடுக்க அவருக்கு யாதோர் அதிகாரமும் இல்லை. இந்த நாட்டின் அதிகாரத்தை யார் வேண்டு மானாலும் கைக்கொள்ளட்டும்," என்று சொல்லித் திடீர் என்று எழுந்து உறுதிமுறியையும் தன் கையில் வாங்கிக் கொண்டு அந்தப்புரத்திற்குப் போய்விட்டாள். சுகுண சுந்தரியை இனிக் காணச் சமயம் வாய்க்காது என்று முதல் அமைச்சன் கேள்வியுற்று, அவனுடைய வீட்டிற்குத் திரும்பிப் போய்விட்டான்.
3. சுகுணசுந்தரியின் முடிசூட்டு விழாவுக்குத் தடை : மக்கள் புலம்பல்
உறுதிமுறியின் செய்தி ஊரெங்கும் தெரிந்தது. உடனே பட்டணம் பேராரவாரமாய்ப் போய்விட்டது. ஏன் என்றால், சுகுணசுந்தரிக்கு முடிசூட்டு விழா ஆகும் என்றும், அவளால் பல நன்மைகளைப் பெறலாம் என்றும் எதிர்பார்த்த மக்கள், இப்போது அந்த முடிசூட்டு விழாவுக்கு இடையூறு நேர்ந்தது என்று கேள்விப்பட்ட அளவில் அதை எவ்வாறு பொறுப்பார்கள்? ஊரில் வாணிகங்கள் எல்லாம் நின்று போயின. கடைகள் எல்லாங் கதவடைத்துப் பூட்டப்பெற்றன. கோயில்களில் வழிபாடு, இறைவனைப் போற்றுதல் முதலியன இல்லாமற் போயின. அறமன்றங்களில் அறமுறைப் பாதுகாப்பு நடைபெறவில்லை. கலைக்கழகங்களில் கல்விப் பயிற்சி இல்லாமற் போயிற்று. வீடுகளில் மங்கலங்கள் நிகழ வில்லை. எல்லாம் தீமைகளாய்ப் போய்விட்டன. எல்லா இடங்களிலும் துன்பமும் புலம்பலுமே அல்லாமல் மகிழ்ச்சி என்பதை எல்லோரும் கைவிட்டார்கள்.
"புவனேந்திரனும் அரசனும் இறந்துபோன துன்பமே நமக்கு மாறவில்லையே! அதுவும் போதாதென்று சுகுணசுந்தரியும் பட்டத்தை இழக்க வேண்டுமா? இடி மேல் இடி இடித்தது போல் இஃது என்ன முறைகேடு?', என்பாரும், 'கொள்ளித்தேளுக்கு மணியங் கொடுத்தது போல் மதுகேசன் பட்டத்திற்குத் தகுதிவாய்ந்தவனா?" என்பாரும், "இப்படிப்பட்ட தீய உறுதிமுறியை எழுதி வைக்க அச்சன் அறிவு கெட்டுப் போனானே" என்பாரும், "அரசன் என்ன செய்வான்? எல்லாம் அமைச்சனுடைய பொய்வேலை" என்பாரும், "சுகுணசுந்தரி பட்டத்தை இழந்து வேறு நாட்டிற்குப் போய்விட்டால், திருமகளும் குடி போய் விடுவாள். பிறகு அவளுடைய அக்காள் தான் இந்த ஊரில் வாழ்ந்திருப்பாள்" என்பாரும், "நாம் எல்லோரும் சுகுணசுந்தரியுடனே போய்விட்டால் பிறகு மதுரேசனும் அவனுடைய அப்பனும் யாரை ஆள்வார்கள்?" என்பாரும், "மதுரேசன் முடிபுனைவதற்கு முன் பல உயிர்கள் அழியும்" என்பாரும், அவனுடைய முடிசூட்டு நீராட்டலுக்கு இப்போது போர்க்களத்தில் சிந்தப்போகிற குருதியே உரியது" என்பாரும், இவ்வாறு பலவிதமாய்ச் சொல்லி வருந்தினார்கள்.
புவனேந்திரனுடைய காலம் அல்லாத காலத்தின் சாவால் வருத்தமுற்று, வெளிக்காரியங்களிலே செல்லாமல் இருந்த ஆசிரியப் பெரியார் ஊரில் உண்டாகிய அமளியைக் கேள்வியுற்று அதன் உண்மையை அறிவதற்காக அரசனுடைய அரண்மனைக்குச் சென்றார். அங்கே துன் பமே உருவெடுத்து இருப்பதைப்போல் இருந்த சுகுணசுந்தரியைக் கண்டார். என்ன நிகழ்ந்தது?' என்று உசாவினார். அவள் அந்த உறுதிமுறியை அவருடைய கையிலே கொடுத்தாள். ஆசிரியப் பெரியார் அந்த உறுதி முறியை மிகுந்த கருத்துடன் படித்துப் பார்த்துத் திகைப் படைந்தார். அதன் உண்மையை மறைமுகமாக உசாவு வதற்காக அதை எழுதின எழுத்தாளனை அழைத்து வரும் படி சில ஆட்களை அனுப்பினார். அவர்கள் போய் உசாவி அந்த எழுத்தாளன் வேறு நாட்டிற்குப் போய்விட்டதாகவும், அவன் போன இடம் தெரியவில்லை என்றும் அறிவித்தார்கள்.
உடனே ஆசிரியப் பெரியார் சுகுணசுந்தரியைப் பார்த்து, "இந்த உறுதிமுறி முழுதுங் கற்பனை என்று பல வகையான காரணங்களால் தோன்றுகிறது. ஓர் அரசன் இறந்து போய் மறு அரசனுக்கு முடிசூட்டு விழா ஆவதற்கு முன் ஏதேனும் ஒரு தொல்லை நேரிட்டால், அதை அரசனுடைய குலத்து ஆசிரியன் நன்றாக ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும் என்று இன்ன சட்டத்தில் சொல்லப் படுகிறது. நான் அவ்வாறே எல்லோரையும் அவை கூட்டு தித்து, இந்தச் செய்தியை உசாவப்போகிறேன்," என்று சொல்லி அமைச்சர்கள், மேல் அலுவலாளர்கள், அறமன்ரத் தலைவர்கள், மற்றைய அதிகாரிகள், பொதுமக்கள், சங்கத் தலைவர்கள் முதலிய யாவரும் இன்ன கிழமையில் இன்ன நேரத்தில் கொலுமண்டபத்தில் வந்து கூடவேண்டும் என்று கட்டளை அனுப்பினார்.
---------
18. பெருமக்கள் குழுவின் முடிவு
1. எல்லாப் பெரு மக்களும் அடங்கிய எழிலரங்கில் அவைத் தலைவருடைய வழக்குச் சொற்போர் ஆசிரியப் பெரியாருடைய கட்டளைப்படி முதல் அமைச்சன் ஒருவன் தவிர மற்றை யாவரும் வந்து அவை கூடினார்கள். அவர்களுடைய அவைநடுவில் அவைத் தலைவரராக வீற்றிருந்த ஆசிரியப் பெரியார் எழுந்து நின்று கொண்டு, அந்த உறுதி முறித்தாளை யாவரும் அறியும்படி படித்துக் காட்டினார். அதைக்கேட்ட உடனே அவையோரிற் பலர், "அது முழுத்தவறா யிருக்கவேண்டும்," என்று மொழிந்து மறுபடியும் உட்கார்ந்தார்கள்.
ஆசிரியப் பெரியார் அவையோரை நோக்கி, "உலகத்தில் பல புதுமைகளைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த உறுதிமுறித் தாளைப்போன்ற புதுமையை நாம் எங்குங் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. திருமணத்துக்கும் முடி சூட்டுதலுக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதிருக்க, அவைகள் இரண்டையும் தொடர்புபடுத்தி, ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டிருக்கும்படியாக இந்த உறுதிமுறித் தாளில் எங்கும் இல்லாத கட்டுப்பாடு கண்டிருக்கின் றது. நராதிப அரசர் பெருமான் தம்முடைய ஒரே மகளிடத்தில் எவ்வளவோ அன்பும் விருப்பமும் வைத்திருந்தார் என்பதும், அவளைச் சிலநாள் பிரிந்திருந்ததனால் அவருடைய உடல் எவ்வளவோ இளைத்துப்போய்விட்ட தென்பதும் நமக்குத் தெரியுமே! அப்படிப்பட்ட அன்புள்ள தகப்பனார், தம்முடைய மகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு மாப்பிள்ளையைத் திருமணஞ் செய்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அவள் ஒப்பாத வரையில் நாட்டின் அதிகாரத்தை இழந்து போக வேண்டியது என்றும், இப்படிப்பட்ட கொடுமையான கண்டிப்புடன் உறுதிமுறி எழுதிவைத்திருப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ("நாங்கள் நம்பவில்லை, நம்பவில்லை" என்று நடுவில் அவையோர் கூவினார்கள்.)
"இப்படிப்பட்ட உறுதிமுறித்தாளை நீங்கள் நம்புவதாயிருந்தால், உலகத்தில் உள்ள தாய் தகப்பன்மார் எல்லாரும் தங்களுடைய பிள்ளைகளை நஞ்சு வைத்துக் கொல்லுவார்கள் என்னும் மொழியையும் நீங்கள் நம்ப வேண்டியதாய் இருக்கும். சிறு செயல்களில் பிறக்கிற ஆதரவுகள் கூடத் தக்க சான்றுகள் முன்னிலையில் பிறப்பது வழக்கமாய் இருக்கிறது. பெரிய நாட்டுத் தலைமையைப்பற்றிப் பிறந்ததாகச் சொல்லப்பட்ட இந்த முதன்மையான ஆதரவு நம்மவர்களில் ஒருவருக்கும் தெரிய பாமல் மறைமுகத்தில் பிறந்திருக்கக்கூடுமா? அதை எழு தின எழுத்தாளனைத் தவிர அதற்கு வேறே சான்று இல்லை. அந்த எழுத்தாளனும் போன இடந்தெரியாமல் எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டான். அவனுடைய மனச்சான்றே அவனை ஒருவர் கண்ணிலும் படாமல் இழுத்துக்கொண்டு ஒடியதாகத் தெரியவருகிறது. "புவனேந்திரனைப் பிடித்துக் கொள்ளுகிறது" என்று அரசர் பெருமான் சொன்ன மொழியைப் புரட்டிப் ' பிடித்துக் கொல்லுகிறது" என்று எழுதிய பெருந்தீவினையாளன் இந்த எழுத்தாளனே. இவனுடைய எழுத்து எவ்வளவு நம்பிக்கைக்கு உரியது என்பதை நீங்களே கருத்தூன்றிப் பார்க்க வேண்டும்.
"இந்த உறுதிமுறியைப்பற்றி முதல் அமைச்சர் தாம் கேள்விப்பட்டதாகச் சுகுணசுந்தரிக்குச் சொன்னாராம். அப்படியிருந்தால் முதல் அமைச்சர் இந்த அவையிலே வந்து இன்னார் மூலமாய்த் தாம் கேள்விப்பட்டார் என்பதை அவர்களைக்கொண்டு மெய்ப்பித்திருக்கலாம். அப்படி அவர் மெய்ப்பித்தாலுங்கூட அவருடைய மகன் தொடர்புபட்டுள்ள இந்தச் செய்தியில் அவருடைய மொழியை நம்பும் படியாய் இராது. இந்த அவையிலே வராதபடி அவரது மனச்சான்றே தடுத்துவிட்டதாகக் காணப்படுகின்றது.
"இந்த உறுதிமுறித்தாளில் அரசர் பெருமானுடைய கையெழுத்தும் முத்திரையும் எப்படி வந்திருக்கக்கூடும் என்று நீங்கள் மலைப்பீர்கள். அந்த எழுத்தாளன் எல்லா உலகத்தையும் புரட்டக்கூடிய பெரும் புரட்டன் என்றும், அவன் எல்லாருடைய கையெழுத்தைப் போலவும் எழுத வல்லவன் என்றும் நான் பலர் மூலமாய்க் கேள்விப்பட்ட டிருக்கின்றேன். அவன் அரசர் பெருமானுடைய கையெழுத்தைப் போல் அடியில் எழுதியிருக்கின்றான் என் பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. அவன் அந்த உறுதி முறி முழுமையையும் அரசர் பெருமான் எழுதினது போல எழுதாமல் இவ்வளவோடே விட்டதற்காக நாம் களிப்படைய வேண்டியதாயிருக்கிறது.
"எழுத்து மூலமான பல கட்டளைகளில் அரசருடைய முத்திரை பதிப்பிக்க வேண்டியதற்காகப் பகல் முழுதும் முத்திரைக்கோல் அந்த எழுத்தாளன் கையில் இருப்பது வழக்கமாய் இருக்கின்றது. ஆகையால், இந்த உறுதி முறித்தாளில் அரசருடைய முத்திரை இருப்பதற்காக நாம் வியப்படைய வேண்டியதில்லை. இனி அந்த எழுத்தாளனுக்கு, 'சமஸ்தானப் புரட்டன்' என்னும் பட்டப் பெயரே தகுதியானது. பதுமைக் கூத்தைப் போல அவனை உள்ளே இருந்து ஆட்டிவைத்த, 'கபட நாடக சூத்திரதாரிகள் இன்னார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ("ஆம் அறிவோம் அறிவோம்" என்று அவையார் ஆரவாரித்தார்கள்.) இந்த உறுதிமுறித்தாள் பொய் என்பதற்கு இன்னும் பல் எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றுள், முதன்மையான இரண்டோர் எடுத்துக்காட்டுகளை விளம்புவேன். அரசர் பெருமான் கடுமையான நோயாய் இருந்த காலத் தில் நான் வருத்தமாய் இருக்கிறேன் என்று நினைத்து, என்னை இணக்கப்படுத்துவதற்காக அவர் என்னைத் தம் மிடத்திற்கு வரவழைத்தார். எனக்கு முதலில் அவரிடத் தில் இருந்த மனவருத்தம் மாறி விட்டதென்று இனிமை யான மொழிகளை நான் கூறியபோது, தாம் இறந்த பிறகு விரைவில் சுகுணசுந்தரிக்கு முடிசூட்டுதல் வேண் டும் என்றும், தகுந்த கணவனைத் தேடித் திருமணஞ் செய்துவைக்கவேண்டும் என்றும் அவர் என்னைக் கேட்டுக்கொண்டாரே அல்லாமல், மதுரேசனைப்பற்றி யாதொரு மொழியும் சொல்லவில்லை. அவ்வண்ணமே சுகுணசுந்தரி தன்னிடத்திலும் அரசியல் அறங்களைப்பற்றி அரசர் பெருமான் அடிக்கடி பேசினாரே அல்லாமல், மதுரேசனைக் குறித்து ஒரு மொழியுஞ் சொல்லவில்லை என்று சொல்லுகிறாள். எங்கள் இருவருடைய மொழிகளையும் நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையா? (அவையோர் ' நம்புகிறோம்; நம்புகிறோம்" என்றார்கள்.)
"இப்போது நான் எடுத்துக் காட்டிய ஒழுங்குகளினாலும், இன்னும் பல காரணங்களினாலும் இந்தச் சாக்காட்டு உறுதிமுறி முழுப்பொய் என்று பட்டப்பகல் போல வெட்ட வெளியாய்த் தோன்றுகின்றது. ஆகையால், இன்னும் பதினைந்து நாட்களுக்குள் சுகுணசுந்தரிக்கு முடி சூட்டு விழாச் செய்விக்க எண்ணியிருக்கிறேன். உங்களுடைய உடன்பாடு தெரியவேண்டும்," என்றார். உடனே அவையோர்கள் அனைவரும், "முழு உடன்பாடு உடன்பாடு" என்று கைகொட்டிக் களிப்புடன் ஆரவாரஞ் செய்தார்கள். திங்களின் தோற்றத்தைக் கண்ட கடல்போல இந்தச் செய்தியைக் கேட்ட எல்லா மக்களும் மகிழ்ந்து உடல் புளகித்தார்கள்.
----------
19. போரும் வெற்றியும்
க. முதல் அமைச்சன் கோட்டையை வளைத்து முற்றுகை போடல்
முழுப் பொய்யான சாக்காட்டு உறுதிமுறித்தாளை உண்டுபண்ணிய முதல் அமைச்சனையும், அவனுடைய மகனையும் எங்கே பார்த்தாலும் மக்கள் இகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். இனிமேல் நகரத்துக்குள் இருந்தால் தனக்கு இழிவு நேரிடும் என்று நினைத்து முதல் அமைச்சன், இராக்காலத்தில் குடும்பத்துடன் புறப்பட்டு நகரத்துக்கு வெளியே போர்ப்படைகள் இருக்கிற இடத்துக்குப் போய்விட்டான். சுகுணசுந்தரிக்கு முடி முழுக்கு ஆகாதபடி முதல் அமைச்சனும் அவனுடைய மகனும் பல் போர் மறவர்களைத் தம் வழிப்படுத்திக்கொண்டு கோட்டையை வளைத்து முற்றுகை போடும்படி முன் ஏற்பாடு செய்தார்கள். உடனே கோட்டை வாயில்கள் எல்லாம் மூடப்பட்டபடியால், உள்ளே இருக்கிற மக்கள் வெளியே போகக்கூடாமலும், வெளியே இருக்கிறவர்கள் உள்ளே வரக்கூடாமலும் எல்லாருடைய போக்கு வரவுகளும் நின்று போய்விட்டன.
உணவுக்கு உரிய ஒன்பது வகைக்கூலங்களும், காய்கறிப் பொருள்களும், இன்னும் மற்றைச் சரக்குகளும், வெளியே இருந்து வராமல் நின்றுவிட்டமையால் நகர மக்கள் உணவு முதலியவைகளுக்கு வழியில்லாமல் துன்பப்படும்படியாக நேரிட்டது. சுகுணசுந்தரியின் முடி அணி விழாவுக்கு வேண்டிய பொருள்களும் இல்லாமையால் முடிசூட்டு விழாவையும் நிறுத்தும்படி நேரிட்டது. ஆகவே, நகரத்தார்களுக்கும், நகரத்தில் இருந்த போர் மறவர்களுக்கும் கடுஞ்சினம் உண்டாகிக் கோட்டையை வளைத்துக்கொண்ட வெளிப் படைகளோடு போர் செய்ய முயன்றார்கள். போரில் எண்ணிக்கை இல்லாத மக்கள் மடிவார்களே என்று ஆசிரியப் பெரியார் வருத்தப்பட்டு முதல் அமைச்சனோடு சந்திசெய்து உடன்படிக்கை பேசுவதற்காகச் சில அதிகாரிகளை அனுப்பினார். அவன் உடன்படிக்கைக்கு இசையாமையினால் போர்புரிவதைத் தவிர வேறு வழி யில்லாமற் போய்விட்டது.
2. பெரும் போர்
கோட்டைக்குள் இருந்த போர் மறவர்களும் மேன்மையிற் சிறந்தவர்களும் சுகுணசுந்தரி பக்கத்திற் சேர்ந்தனர். பெண்டுகளும் பிள்ளைகளுங்கூடச் சுகுணசுந்தரிக்காக உயிரைக் கொடுக்க மனமுள்ளவர்களாய் இருந்தார்கள். வெளியே இருந்த படைகளை எல்லாம் முதல் அமைச்சன் தன்வழிப்படுத்திக் கொண்டான். அவ்விரு படைகளும் உள்நாட்டுப் படைகள் ஆதலால், தகப்பன் ஒரு படையிலும், பிள்ளை ஒரு படையிலும், தமையன் ஒரு படை யிலும் தம்பி ஒரு படையிலும், மாமன் ஒரு படையிலும், மருமகன் ஒரு படையிலும் சேர்ந்தார்கள்.
அந்த இரண்டு படைகளும் பெரும் நஞ்சைப்போல் சீறிக்கொண்டு, கோடையிடிபோல் முழங்கிக்கொண்டு ஒருவரோடு ஒருவர் போர் செய்தார்கள். மலையும் மலையும் தாக்கியது போலும், முகிலும் முகிலும் பொருத்து போலும், கடலும் கடலும் எதிர்த்தது போலும், யானைப் படைகளோடு யானைப் படைகளும், குதிரைப் படைக் ளோடு குதிரைப் படைகளும், காலாட்படைகளோடு காலாட்படைகளும் கலந்து போர் செய்தார்கள். தலை அற்றவர்களும், தோள் அற்றவர்களும், இடை அற்றவர்களும், தொடை அற்றவர்களும், இவ்வாறு கண்ட கண்ட துண்டமாய்ப் போர்க்களம் எங்கும் பிணமலைகள் குவிந்தன. உதிரப்பெருக்குக் கடல் பெருக்கைப்போல ஒடியது. கழுகு, காகம் முதலிய பறவைகள் விண்ணிடம் எங்கும் பந்தல் இட்டது போல் வட்டம் இட்டுப் பறந்தன. இவ்வாறு பத்துநாள் வரையில் ஒரு பக்கத்திலும் வெற்றி இல்லாமல் கொடிய போர் நடந்தது.
3. மாண்டவன் மீண்டான்; அறமே வெற்றி
பத்து நாளைக்கு மேல் போர் செய்யப் போதுமான பொருள்கள், சுகுணசுந்தரியின் படைகளுக்குக் குறைவாக இருந்தபடியால், அவர்கள் சோர்வடைந்து தோல்வி அடைகிற சமயமாய் இருந்தது. அந்தச் சமயத்தில் மேற்குத் திக்கில் இருந்து எழுகடல்களும் கரைபுரண்டு வருவது போல் எண்ணிக்கை இல்லாத தேர் யானை குதிரை காலாட்களுடன் புவனேந்திரன் வந்து முதல் அமைச்சன் படையை எதிர்த்துப் போர் செய்தான். அந்தப் படைகளுடன் எதிர்த்து நிற்கமாட்டாமல், இராமாயணப் போரில் மூலபலங்களைக் கண்டவுடனே குரங்குப்படைகள் ஒடினது போல் முதல் அமைச்சன் படைகள் பின்னிட்டு ஓடத் தொடங்கின. அவர்களை வெகு தொலை வரையில் புவனேந்திரன் துரத்திக்கொண்டு போய்க், கொக்குக் கூட்டங்களை இராசாளி அடித்தது போல் அடித்தான்.
புவனேந்திரனைக் கண்டவுடனே முதல் அமைச்சன் படைகள் படைக்கலங்களை எறிந்துவிட்டு, "இனி நாங்கள் போர் செய்கிறதில்லை. எங்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்துக் காப்பாற்றவேண்டும்," என்று இரந்து மன்றாடினார்கள். உடனே, "சுகுணசுந்தரி பக்கம் வெற்றி வெற்றி, என்று வெற்றி முரசு முழக்கப்பட்டது. முதல் அமைச்சனும் அவனுடைய மகனும் போன இடந்தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
புவனேந்திரனைக் கண்டவர்கள், "இஃதென்ன புதுமையாக இருக்கின்றது? இறந்து போனவன் தேவலோகம் போய்த் தேவர்களைப் படை சேர்த்துக்கொண்டு வந்தான் போலும்!" என்று வியப்படைந்தார்கள். இந்தச் செய்திகளை எல்லாம் கோட்டைக்குள் அரண்மனையில் இருந்த ஆசிரியப் பெரியாரும் சுகுணசுந்தரியும் கேள்வியுற்று, உடனே கடவுளுக்கு நன்றி செலுத்திப் புகழ்ந்தார்கள். புவனேந்திரனுடைய வரலாறுகளை அறிவதற்காக அளவற்ற விருப்பத்துடன் காத்திருந்தார்கள். புவனேந்திரனும் அவனைப் போல் முகச்சாயலை உடைய வேறொரு முதிய அரசரும் தங்களுடைய படைகளை எல்லாம் கோட்டைக்கு வெளியே பாசறைகளில் தங்கும்படி கட்டளை கொடுத்துவிட்டு, ஊர்தியின்மேல் சுகுணசுந்தரியின் திருமாளிகையை
அடைந்தார்கள்.
புவனேந்திரனைக் கண்டவுடனே ஆசிரியப் பெரியார் அவனைக் கட்டித் தழுவி முத்தம் இட்டு, மிக்க அங்கலாய்ப்புடனே இன்பக் கண்ணீர் சொரிந்தார். சுகுண சுந்தரியும் முத்து முத்தாய்க் கண்ணீர் வடித்துக் களிப்பு மேலீட்டினால் உடல் பூரித்துத் தன்னை மறந்தாள். பிறகு, ஆசிரியப் பெரியாரும் சுகுணசுந்தரியும் அவர்கள் இருவருக்கும் தகுந்த வழிபாடுகள் செய்து, உயர்ந்த இருக்கைகள் அளித்து அதில் அமருமாறு செய்தார்கள். புவனேந்திரனோடு வந்த பெரிய அரசர் ஆசிரியப் பெரியாரைப் பார்ததுத் தம்முடைய வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.
-------------
20. ஆரிய நாட்டு அரசர்
1. ஆரிய நாட்டு அரசன் வரலாறு
"நான் சீரிய வளங்களை உடைய ஆரியநாட்டின் அரசன். தங்களால் அருமையாய் வளர்க்கப்பட்ட புவனேந்திரன் என்னுடைய தவமகன். இவனை நான் இளமையிலே பிரியும்படி நேரிட்ட காரணம் மிகத் துன்பத்திற்கு உரியது. என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டவர்களில் சரிபாதி மக்கள் இந்துக்களாயும்; மற்றொரு பாதிமக்கள் மகமது மதத்தின ராயும் இருக்கிறார்கள். என்னுடைய படை வீரர்களில் பலர் மகமதியர்களாய் இருந்தார்கள். நான் இந்துமதத்தைப் போற்றுபவன். ஆயினும், என்னுடைய மக்களுக்குள் உண்டாகும் மதத்தொடர்புள்ள கலகங்களை நான் முறைமையாயும் ஒருபக்கஞ் சாராமலும் தீர்த்துவந்ததால், மகமது மதத்தினரும் மனக் குறைவு இல்லாமல் என்னுடைய கோலின் கீழ் அமைந்து வாழ்ந்தார்கள். பகைவர்கள் என்கிற பேச்சே இல்லாமல் என்னுடைய நாடு எங்கும் அமைதியை விரும்பியிருந்தது.
"நான் ஐரோப்பாக் கண்டத்துக்குப்போய் அவ்விடத்தில் உள்ள முன்னேற்றச் சிறப்புக்களையும், அரசியல் அறங்களையும் நானே கண்டறிந்து, அவ்வாறே என்னுடைய நாட்டிலும் கடைப்பிடிக்கவேண்டும் என்பது என்னுடைய மிகுந்த விருப்பமாய் இருந்தது. புவனேந்திரன் ஆறு திங்கட் குழந்தையாய் இருக்கும்போது, அவனுடைய தாயும் என்னுடைய ஒரே மனைவியும் ஆன கோகிலாம்பாள் நாட்டை அரசாட்சி புரிவதில் ஆற்றல் உள்ளவளாய் இருந்தாள். அவளை எனக்குப் பதிலாக ஏற்படுத்தி விட்டு, அவளுடைய கட்டளைப்படி அமைச்சர் முதலானவர்கள் நடக்குமாறு கூறிவிட்டு, நான் என்னுடைய உறுதிச்சுற்றத்துடன் (பரிவாரம்) ஐரோப்பாவுக்குக் கடல் வழியாகப் புறப்பட்டேன். அந்தக் காலத்தில் நீராவிக் கப்பல், கம்பித் தபால் (தந்தி) முதலிய நன்மைகள் இல்லாமல் இருந்தமையால் பொதுவான மரக்கலத்தில் பயணஞ் செய்து பல திங்களுக்குப் பிறகு ஐரோப்பாவை அடைந்தேன். அங்கே பிரெஞ்சு, இங்கிலாந்து, இத்தாலி, செர்மனி முதலிய நாடுகளைச் சுற்றிக்கொண்டு ஒவ்வொரு நாட் டின் தலைநகரிலும் சில திங்கள் தங்கியிருந்து, ஆங்காங்குள்ள புதுமைகளைப் பார்த்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்தேன்.
"நான் இல்லாத காலத்தில் என்னுடைய நாட்டில் நடந்த மாறுபாடுகளை, நான் கேள்விப்பட்டவாறு தெரியப் படுத்துகிறேன். மகமதியர்களுக்குள் வழக்கப்படி ஒரு பெரிய ஆண்டு விழா நடந்தபோது, ஆப்கனிஸ்தான், (Afghanistan) பெர்சியா (Persia) முதலான நாடுகளில் இருந்து எண்ணிக்கை இல்லாத மகமதியர்கள் திருவிழாப் பார்க்க வந்திருந்தார்கள். அப்போது இந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் பெருங்கலகம் உண்டாகியது. இரு பக்கத்தாரும் ஒருவரை ஒருவர் தாக்கித் துன்பம் செய்யத் தொடங்கினார்கள். காபூல் (Kabul) காந்தகார் (Kandahar) முதலிய ஊர்களில் இருந்து வந்த மகமதியர்கள் மிகக் கொடியவர்களும் மதவெறி பிடித்தவர்களும் ஆகையால், என்னுடைய நாட்டில் இந்து அரசியலை ஒழித்து, மகமது மதத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்து, இந்துக்களைக் கண்ட இடங்களில் எல்லாம் அழிக்கத் தொடங்கினார்கள். இந்து அரசாங்கப் பூண்டு என்பதே இல்லாதபடி என்னுடைய பிள்ளையைக் கொல்வதற்காக அந்த மூர்க்கர்கள் அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார்கள். பிள்ளையைக் காப்பாற்றுவதற்கு வேறே வழி இல்லாதபடியால், அந்தப் பிள்ளையின் பாற்காரி தான் மறைமுகமாகக் கொண்டுபோய்க் காப்பாற்றுவதாகச் சொல்லி, பிள்ளையை வாங்கிக்கொண்டு போய்விட்டாள்.
"என்னுடைய மனைவியும் சில தோழிகளுடன் இராக் காலத்தில் அரண்மனையை விட்டு வெளிப்பட்டுப் போய் விட்டாள். அதற்குப் பின்பு அந்தக் கொடியவர்கள் அரண்மனையில் நுழைந்து, பிள்ளையைக் காணாமையால் எப்படி யாயினும் பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்துக் கொலை செய்யவேண்டும் என்று காப்புக் கட்டிக் கொண்டார்களாம். அந்தக் கலக்கத்தை அடக்க அமைச்சர்கள் முதலானவர்கள், அவர்களால் கூடியமட்டும் முயன்று தொல்லைப் பட்டும் பயன்படாமல் மகமதியர் பக்கமே தலை தூக்கியது. பழைய நவாபு வழியில் ஒருவனுக்குப் பட்டமாகி இந்து
ஆட்சி மகம்மதிய ஆட்சியாக மாறிவிட்டது.
"இந்தச் செய்திகளைக் குறித்து என்னுடைய மனைவி முதலானவர்கள் ஐரோப்பாவில் இருந்த எனக்குப் பல கடிதங்கள் அனுப்பினார்கள். நான் மேலே சொல்லியபடி , நீராவிக் கப்பல், கம்பித் தபால் முதலிய கருவிகள் இல்லாமையால் அந்தக் கடிதங்கள் என் கையில் வந்து சேர மிகுந்த காலம் ஆகிவிட்டது. அந்தக் கடிதங்களைப் பார்த்த உடனே அளவற்ற மனக்கவலையோடு நான் ஐரோப்பாவை விட்டுப் புறப்பட்டுப் பல திங்கள்கள் கடற்பயணம் செய்து இந்தியா வந்து சேர்ந்தேன். இந்தியாவில் நாடு நகரங்களை எல்லாம் இழந்து, மனைவி மக்களையும் இழந்து, இருக்க இடம் இல்லாமல், சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போலவும், விண்ணில் அலையும் பறவை போலவும், பல நாள் அலைந்து திரிந்து பின்பு ஆங்கிலேயர் ஆட்சிக்குட் பட்ட இடங்களில் சில காலம் தங்கியிருந்தேன். என் னுடைய அமைச்சன் தலைமைக் காரியக்காரன் முதலிய பழைய அலுவலாளர்களில் பிழைத்திருந்தவர்கள், நான் ஐரோப்பாவைவிட்டுத் திரும்பிவந்த செய்தியைக் கேள்வி யுற்று, ஒவ்வொருவராய் வந்து என்னைக் கண்டு கொண்டார்கள்.
"என்னுடைய மனைவி தொலைவில் உள்ள நாட்டில், ஓர் எளிய குடியானவன் வீட்டில் நீண்டநாள் ஒளிந்திருந்து, பிறகு என்னிடம் வந்து சேர்ந்தாள். என்னுடைய பிள்ளையும் பாற்காரியும் அவள் கணவனும் போன இடம் தெரியாமையால், அம்மூவரும் மகமதியர் கத்திக்கு இரையாய் விட்டார்கள் என்று நினைத்து நினைத்து நெஞ்சம் புண்ணாகி உலை மெழுகு போல் உருகினோம். என்னுடைய நாட்டு மக்களான இந்துக்கள் பலர், எனக்காக மகமதியர்களோடு போர் செய்ய மனம் உடையவர்களாக இருந்தார்கள். ஆங் கில அரசினரும் பலபடைகளை எனக்குப் பக்கத் துணையாகக் கொடுத்தபடியால் நாங்கள் எல்லோரும் மகமதிய ரோடு வெகுகாலம் பெரும் போர் செய்தோம். ஆறு ஆண்டுகள் போர் செய்த பிறகு, என் பக்கத்தில் வெற்றி உண்டாகி, ஆங்கில அரசினருடைய உதவியால் என் னுடைய நாட்டுத் தலைமை மறுபடியும் எனக்கு உண் டாகியது. அவ்வாறு உண்டாகிய சில ஆண்டுகளுக்குப் பிறகு தொலை நாட்டில் ஒளிந்திருந்த பாற்காரி கணவன் என்னிடம் வந்து, புவனேந்திரனுடைய வரலாறுகளை எல் லாம் எனக்குத் தெரிவித்தான்.
"இதற்கு இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன், குழந்தைப் பருவத்தில் புவனேந்திரனை இந்த நகரத்துக்கு வெளியே ஒருநாள் அதிகாலையில் உங்கள் கையிலே கொடுத்தவன், அந்தப் பாற்காரி கணவனே. பிள்ளையைக் கொல்வதற்காக அத்தீயவர்கள், எங்கெங்குந் தேடிக் கொண்டு திரிந்ததால், அத்தீயவர்களுக்கு அஞ்சிப் பாற் காரியும் அவள் கணவனும் பிள்ளையைத் தொலைவான இடத்திற்குக் கொண்டுவந்து விட்டார்கள்; பிறகு அதை வளர்ப்பதற்கு வகையில்லாமையால், தகுந்த செல்வர்கள் இடத்திலே கொடுத்து, வளர்ப்பிக்கவேண்டும் என்று நினைத்து, இந்த ஊர்வழியாய்ப் பாற்காரி கணவன் பிள்ளையைக்கொண்டு செல்லும்பொழுது, தங்களை வழியிலே கண்டு பிள்ளையைத் தங்கள் கையிலே கொடுத்து விட்டானாம்.
"இதற்கு ஐங்காதவழி தொலைவில் உள்ள அவனுடைய மாமனார் வீட்டில் அவனும் அவனுடைய மனைவியும் தங்கியிருந்தபோதிலும்; புவனேந்திரனைத் தாங்கள் அருமையாய் வளர்த்ததையும், கல்விப் பயிற்சி செய்வித்தது முதலான எல்லாச் செய்திகளையும் பாற்காரியும் அவள் கணவனும் மறைமுகமாக உசாவித் தெரிந்து கொண்டே இருந்தார்களாம். எனக்கு மறுபடியும் நாடு கிடைத்து எல்லாக் கலகங்களும் தீர்ந்த பிறகுதான், பாற் காரியும் அவள் கணவனும் என்னிடம் வந்து புவனேந்திரனைப்பற்றிய எல்லாச் செய்திகளையும் முதலிலிருந்து முடிவுவரை தெரிவித்தார்கள். அப்போது சுகுணசுந்தரியும் புவனேந்திரனும் காணாமற்போயிருக்கிற செய்தி எனக்குத் தெரிந்தது. அவர்களைப் பலவிடங்களிலும் தேடிப் பார்க்கும்படி படைவீரர்களைப் பாற்காரி கணவனோடு அனுப்பினேன்.
"சுகுணசுந்தரியைச் சிறைமீட்டுக்கொண்டு வந்த புவனேந்திரனை, நராதிப அரசர் கட்டளைப்படி எல்லைப்புற அதிகாரிகள் பிடித்துச் சிறையில் வைத்தபோதிலும், பிறகு அவன் குற்றம் அற்றவன் என்று தெரிந்து அவனைக் கொல்லாமல் பிறநாட்டிற் போய்த் தப்பித்துக் கொள்ளும்படி அவர்கள் விட்டு விட்டார்கள். அவ்வாறே அவன் பிறநாட்டிற்குச் செல்லும்பொழுதுதான் என்னுடைய படைவீரர்களும் பாற்காரி கணவனும் புவனேந்திரனைக் கண்டார்கள். முதல் அமைச்சனுடைய கட்டளைக்கு அஞ்சிப் புவனேந்திரனைக் கொன்றுவிட்டதாக நராதிப அரசருக்கு எல்லை அதிகாரிகள் எழுதிய போதிலும், கடவுளுடைய பேரருளால் அவனைக் கொல்லாமலே விட்டு விட்டார்கள்.
"அவன் வழியிலே செல்லும்பொழுது என்னுடைய படைவீரர்களும் பாற்காரி கணவனும் அவனைக் கண்டு என்னிடம் அழைத்து வந்தார்கள். என் பிள்ளையைக் கண்ட உடனே, எனக்கும் என் மனைவிக்கும் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகி இருக்கும் என்று மனச்சான்றாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமே அல்லாமல், நான் அதை விரித்துரைக்கும் ஆற்றல் உடையவன் அல்லன். நான் இழந்து போன என்னுடைய அரசாட்சி முதலிய செல்வங்கள் மறுபடியும் எனக்குக் கிடைத்தவுடனே எனக்குண்டான களிப்பைப் பார்க்கிலும், என் பிள்ளையைக் கண்டபோது எனக்குண்டான களிப்பு ஆயிரம் பங்கு மிகுதியாக இருந்தது. ஆனால் எல்லாம் தங்களால் வந்த சிறப்பே அல்லாமல் என்னாலே யாதொன்றும் இல்லை. என் பிள்ளையை இளம்பருவம் முதல் வளர்த்து அவனை எல்லாக் கலைகளிலும் அறிஞனாகவும் அறநெறி யாளனாகவும் ஆக்கிவிட்ட தங்களுடைய ஒப்பற்ற பேருதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? கடவுள் கட்டளைப்படி மன்னுயிர்களை எல்லாம் தாங்கிக் காப்பாற்றாநின்ற நிலத்திற்கும், மழை பொழிந்து நம்மைக் காப்பாற்றுகின்ற முகிலுக்கும் நாம் செய்யத்தக்க கைம்மாறு யாது?
"புவனேந்திரன் என்னிடம் வந்து சேர்ந்த பிறகு, இந்த நகரத்தில் என்ன நிகழ்கிறதென்று அப் போதைக்கப்போது தூதர்களை வைத்து உசாவிக்கொண்டு வந்தோம். நராதிப அரசர் பெருமான் இறந்துபோனதும், சுகுணசுந்தரியின் முடிசூட்டு விழாவுக்கு முதல் அமைச்சன் இடையூறு செய்து போருக்கு முயற்சி செய்ததும், நாங்கள் வேவுகாரர் மூலமாய் அறிந்தோம். சமயத்தில் உங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு நாங்கள் விரைவாகப் படைகளைச் சேர்த்துக்கொண்டு இவ்விடத் திற்கு வந்தோம். இது தான் எங்களுடைய வரலாறு," என்று ஆரியநாட்டு அரசர் சொல்லி முடித்தார்.
---------------
21. முடிசூட்டு விழாவும் திருமணமும்
1. முடிசூட்டு விழா
பிறகு ஆரியநாட்டு அரசர் தம்மோடு வந்திருந்த பாற்காரி கணவனை ஆசிரியப் பெரியார் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தி, "இவனை இன்னான் என்று தெரிகிறதா? பாருங்கள்" என்றார். ஆசிரியப் பெரியார் அவனை உற்றுப் பார்த்தார். "ஆம் ஆம்; இந்த மனிதன் தான் முன்னாளில் புவனேந்திரனை என் கையிலே கொடுத்து விட்டுக் கம்பி நீட்டிவிட்டான். இப்போது மிகுந்த அகவை சென்றவனாகி இருந்த போதிலும், இவன் தான் ஐயம் இல்லை," என்றார்.
பிறகு ஆசிரியப் பெரியார் ஆரியநாட்டு அரசரை நோக்கி, "புவனேந்திரன் உங்கள் பிள்ளை என்பதற்கு வேறு சான்று வேண்டுவதில்லை. நீங்கள் இருவரும் ஒரே வடிவமான தன்மையுடையவர்களாக இருக்கிறீர்கள்; உங்களை அறியாதவர்கள் கூட உங்களைப் பார்த்த உடனே தகப்பனும் பிள்ளையும் என்று ஐயம் இல்லாமல் சொல்லுவார்கள். இப்படிப்பட்ட கண்கூடான பற்றுக்கோடு இல்லாவிட்டால், நான் வளர்த்த உரிமையைக் கொண்டு புவனேந்திரனை என் பிள்ளை என்றே நிலைநாட்டி அவனை விடமாட்டேன். இப்படிப்பட்ட நன் மகப்பேறு யாருக்கு வாய்க்கும்? உங்களைத் தந்தையாக உடைய புவனேந்திரனும் பெருஞ்சிறப்புடையவனே! சுடச்சுட ஒளிவிடும் தங்கம் போல் கடவுள் உங்கள் இருவருக்கும் துன்பத்தின் மேல் துன்பத்தைக் கொடுத்து, உங்களை மேன்மைப் படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு ஒருவருக்கும் எய்த மாட்டாது. உங்கள் மூலமாய்க் கடவுள் எங்களுக்கும் பெரிய உதவி செய்திருக்கிறார். நீங்கள் படை சேர்த்துக்கொண்டு தகுந்த சமயத்தில் வந்து எங்கட்கு உதவி செய்யாவிட்டால், நாங்கள் இந்நேரம் தோல்வி அடைந்திருப்போம் ஆகையால் உங்களுடைய பேருதவிக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்?" என்றார்.
பிறகு எல்லாரும் நீராடி நாட்கடன்களை முடித்தனர். சாப்பாடான பிறகு சுகுணசுந்தரியின் முடிசூட்டு விழாவுக்காக ஒரு நன்னாள் குறிப்பிடப்பட்டது. அந்த நாளுக்குமுன் தங்கட்கு நட்புள்ள அரசர்களுக்கெல்லாம் திருமுகம் அனுப்பி வரவழைத்தார்கள். கதிரவனும் நாணும்படி அரண்மனையை மிக ஒளியுடன் அழகு படுத்தினார்கள். ஊர் முழுவதையும் தெய்வலோகத்தைப்போல விளங்கச் செய்தார்கள். எல்லா மக்களுடைய கண்ணும் மனமுங் களிக்க, சுகுணசுந்தரியின் முடிசூட்டு விழா நிறைவேறியது.
முடிசூட்டு விழா நிறைவேறிய நாளில் எல்லோரும் கேட்டுக்கொண்டபடி, சுகுணசுந்தரி அரியணையில் அமர்ந்திருந்து அரசியல் நடத்தி அறமுறை செய்தலைத் தொடங்கினாள். அப்பொழுது பல பெண்கள் அழுதகண்ணும் சிந்திய மூக்குமாய் வந்து, "பேருலகத்து இறைவியே ! எங்களுக்குத் தாலிப்பிச்சை தருதல் வேண்டும்," என்று வேண்டிக்கொண்டார்கள். அவர்கள் யார் என்று சுகுண சுந்தரி வினவினாள். அவர்கள், " அம்மணி ! உண்மையை உணராத அறிவினால், உங்களுடன் எதிர்த்துப் போர் செய்த படைவீரர்களின் மனைவியர்கள் நாங்கள். எங்களுடைய தலைவர்கள் முதல் அமைச்சனுடைய தீய அறிவைக் கேட்டுக் கெட்டுப்போனார்கள். அவர்கள் தங்களுடைய தவற்றினை இப்போது நன்குணர்ந்து மனவருத்தப் படுகிறார்கள். நீங்கள் ஒறுப்பீர்கள் என்று அஞ்சிப் பலர் வேறு நாட்டிற்குப் போக ஏற்பாடு செய்து கொண்டிருக்கி றார்கள். எங்களுடைய கணவர்கள் பிற நாட்டிற்குப் போய்விட்டால், நாங்களும் எங்களுடைய பிள்ளைகளும் என்ன செய்வோம்?" என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார்கள்.
உடனே சுகுணசுந்தரி, "உங்களுடைய கணவர்கள் செய்த குற்றத்தை இந்தத் தடவை மன்னித் திருக்கிறோம். அவ்வாறு ஊர் எங்கும் விளம்பரப் பத்திரிகை மூலமாய் வெளிப்படுத்த எண்ணியிருக்கிறோம். ஆகையால் உங்களுடைய தலைவர்கள் வேறு நாட்டிற்குப் போகவேண்டியதில்லை. யாராவது முன்னமே போயிருந்தால் அவர்களை நீங்கள் வரவழைத்துக் கொள்ளலாம்" என்றாள். இதைக்கேட்ட உடனே அந்தப் பெண்கள் இன்பக் கண்ணீர் சொரிந்து அரியணையின் அடியில் விழுந்து வணங்கினார்கள்.
மற்றைய அமைச்சர்கள் தலைமை அலுவலாளர்கள் முதலானவர்கள், "இஃது என்ன எங்கும் இல்லாத வியப்பாக இருக்கிறது? மன்னருடன் எதிர்த்தவர்களை எப்படி மன்னிக்கலாம்?" என்றார்கள்.
சுகுணசுந்தரி அவர்களைப் பார்த்து, "அவர்கள் மன்னருடன் எதிர்க்கவில்லை. என்னுடைய தந்தை இறந்து போய் வேறொருவருக்கும் பட்டம் ஆகாமல் அரசன் இல்லாமல் இருந்த காலத்தில் அவர்கள் போர் செய்தார்களே அல்லாமல் வேறொன்றும் அன்று. அவர்களுக்குத் தீய அறிவைக் கற்பித்துப் போரைத் தூண்டிவிட்டவர்கள் ஐயம் இல்லாமல் தண்டனைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு இவர்களைத் தண்டிப்பது ஆயுதத்தைச் செலுத்தியவனைச் சினக்காமல் ஆயுதத்தைச் சினப்பதற்கு ஒப்பாக இருக் கிறது. இந்தப் பெண்களுடைய கணவர்கள் குற்றம் உள்ளவர்களாக இருந்தாலுங்கூட அவர்களை மன்னிக்கும் படியான அரசியல் உரிமை எப்பொழுதும் எனக்கு இயல்பாகவே உரிமையாக இருக்கிறது. இந்தக் குற்றத்தில் ஒருவர் அல்லர் இருவர் அல்லர்; பல பெயர்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு பெயர்களையும் ஒரே காலத்தில் தண்டிப்பது முறைமையாய்க் தோன்றவில்லை. அவர்களைத் தண்டிப்பது அவர்களுடைய மனைவி மக்களையும் தண்டிப்பதற்கு ஒப்பல்லவா? அவர்கள் தாம் நமக்குக் குற்றம் செய்தார்கள். அவர்களுடைய மனைவி மக்கள் என்ன குற்றஞ் செய்தார்கள் ? கடவுள் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் குற்றத்தினால் பற்றப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
"நம்முடைய மனதினாலும், மொழியினாலும், செய்கையினாலும் நாம் நாள்தோறும் செய்கிற குற்றங்களுக்குக் கணக்குண்டா? நம்முடைய தலைமயிர்களை எண்ணினாலும் நம்முடைய குற்றங்களை எண்ணிமுடியுமா? அவ்வளவு குற்றங்களையும் இந்த உலகத்தில் கடவுள் பொறுக்கவில்லையா? நல்லவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் பொதுவாக மழைபெய்யவும், கதிரவன் ஒளிசெய்யவும், ஐம்பெரும் முதற் பொருள்கள் (பூதங்கள் ) தொழில்களைச் செய்யவும் கடவுள் அருள் செய்யவில்லையா? நம்மாற் கூடியமட்டும் கடவுளுடைய அருளையும், இரக்கத்தையும் உயிர்களிடத்தில் அருள் உடைமையையும் பின்பற்றி நடக்கவேண்டாமா? நாம் பிறருடைய குற்றங்களைப் பொறுக்காவிட்டால், கடவுள் நம்முடைய குற்றங்களை எப்படிப் பொறுப்பார்? நாம் நாள் தோறும் கடவுளுடைய அருட்பேற்றிற்காகக் கையேந்தி வேண்டிக் கொள்ளுகிறோம். நாம் ஒருவருக்கு கொருவர் அருள் செய்து கொள்ளாவிட்டால், கடவுளுடைய அருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? ஒரு தீயவன் நமக்குத் தீங்கு செய்தான் என்று அவனுக்கு நாமும் தீங்கு செய்வோமானால், அவனுக்கு நாமும் ஒப்பாகிறோமே அல்லாமல், அவனுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
"எனவே ஒருவன் நமக்குச் செய்த தீங்கை உடனே நாம் பொறுத்துக்கொள்வோ-மானால், அது நமக்கே நன்மையாய் முடியும். அப்படி இல்லாமல் அவன் செய்த தீங்குக்குப் பதிலாக நாமும் தீங்கு செய்வோமானால், அதற்குமேல் அவன் ஒன்று செய்ய, நாம் ஒன்று செய்ய இவ்வாறு தீங்குகளும் துன்பங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும். இதனை நான் எல்லா மக்களுக்கும் பொது வாகச் சொல்லுகிறேனே அல்லாமல் அரசியல் ஒன்றிற்காக மட்டும் சொல்லவில்லை. ஏனென்றால், தீயவர்களைத் தண்டித்து நல்லவர்களைப் பாதுகாக்கவேண்டியது அரசர்களுடைய கடமையாக இருக்கிறது. இந்தப் பெண்களுடைய கணவர்கள் எனக்குச் செய்ததுபோல் மற்றவர்களுக்கு இடுக்கண் செய்திருப்பார்களானால், அவர்களை நான் மன்னிக்க முடியாது. அவர்கள் எனக்கு மட்டும் குற்றம் செய்திருப்பதால் அந்தக் குற்றத்தை இந்தத் தடவை பொறுக்கிறேன். முடிசூடல் திருமணம் முதலிய மகிழ்ச்சிமிக்க காலங்களில் எப்படிப்பட்ட குற்றவாளிகளையும் மன்னிப்பது எந்த அரசாட்சியிலும் வழக்கமாய் இருக்கிறது. அப்படியே நானும் மன்னிக்கிறேன்," என்றாள்.
இதைக்கேட்ட உடனே அந்தப் பெண்களும் மற்றைய மக்களும் பேரின்பம் அடைந்து, "அறமே வடிவெடுத்து வந்தது போன்ற சுகுணசுந்தரி, நீடூழி காலம் நீண்ட வாணாளுடன் இருக்கவேண்டும்," என்று கோயிலுக்குக் கோயில் கும்பிட்டு வணக்கஞ் செய்தார்கள்.
ஆரிய நாட்டு அரசர் வேண்டுகோள்
நாட்கள் சில சென்றன. ஆரியநாட்டு அரசர், ஆசிரியப் பெரியாரை நோக்கி, "ஐயா! இந்த ஆசியாக் (Asia) கண்டத்திலும், ஐரோப்பாக் (Europe) கண்டத்திலும் பல பெண்களை நேரே நான் பார்த்தும் இருக்கிறேன்; கேள்விப்பட்டும் இருக்கிறேன்; அழகு இருந்தால் கல்வி இல்லை. குணம் இருந்தால் அழகு இல்லை. இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எல்லா நல்லியல்புகளும், சிறந்த அழகும், கல்வியும், அறிவும் முழுநிறைவாய் அமைந்த சுகுணசுந்தரியைப் போன்ற பெண்களை நான் எங்கும் காணவில்லை. இப்படிப்பட்ட பெருங்குணம் அமைந்த நல்லாளை எனக்கு மருமகள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிற அவா அளவற்றதாய் இருக்கிறது. சுகுணசுந்தரிக்கும் புவனேந்திரனுக்கும் தந்தையின் நிலைமையில் இருக்கும் நீங்கள் என் அவாவின்படி நிறைவேற்றி வைக்கவேண்டும்," என்று வேண்டிக்கொண்டார்.
உடனே, ஆசிரியப் பெரியார், ஆரியநாட்டு அரசரை நோக்கி, "இன்று நேற்று அல்ல; நெடுநாளாய் எனக்கு உண்டாகியுள்ள விருப்பமும் அதுவே. சுகுணசுந்தரிக்கு ஒப்பான பெண்கள் எப்படி இல்லையோ? அப்படியே புவனேந்திரனுக்கு ஒப்பான ஆடவர்களும் இல்லை. அவர்கள் இருவரையும், ஒருவருக்காக ஒருவரை இந்த உலகத்தில் கடவுள் அமைத்திருக்கிறார் என்பது என்னுடைய முடிவு. அவர்கள் இருவரையும் நாம் ஒன்று சேர்க்காவிட்டால், அது தெய்வத்திற்கு உடன்பாடாய் இராது. ஊராருக்கும் மனநிறைவாய் இராது," என்றார்.
2. திருமணம்
பிறகு ஆசிரியப் பெரியாரும் ஆரியநாட்டு அரசரும் புவனேந்திரனைப் பார்த்துத் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தார்கள். உடனே புவனேந்திரன் அவர்களை நோக்கி, "என் அன்புக்குரிய தந்தைமார்களே! எண்ணியவைகளை எல்லாம் இனிதளிக்கும் சிந்தாமணி, யாருக்காவது கிடைத்தால், அதை வேண்டாம் என்பார்களா? அப்படியே சுகுணசுந்தரியை வேண்டாம் என்கிற ஆடவர்கள் உலகத்தில் இருப்பார்களா? ஆனால் எனக்கு ஒரு பெருந் தடை இருக்கிறது. நான் தென்னாட்டு அரசன் இடத்தில் இருந்து சுகுணசுந்தரியைச் சிறைமீட்டுக் கொண்டுவந்தபோது, அந்த அரசர் தமக்காக நராதிப அரசர் இடத்தில் திருமணம் பேசும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் அதற்கு உடன்பட்டேன். நராதிப அரசர் இறந்துபோய்விட்டதால், இப்போது இன்னது செய்கிறது என்று தெரியாமல் மயங்கிக் கொண்டிருக்கிறேன்," என்றான்.
உடனே ஆசிரியப் பெரியார் புவனேந்திரனை நோக்கி, " நீ நராதிப மன்னர் இடத்தில் மணத்தூது பேசுவதாக ஒப்புக் கொண்டபடியால், அந்த அரசர் இறந்தபோதே உன்னுடைய கடமை நீங்கிவிட்டது. தென்னாட்டு அரசன் முதலில் மணத்தூது அனுப்பியபோது நராதிப மன்னர். இசையாமையினால், அவரோடு போர் செய்து பார்த்தான். அதனாலும் பயன் இல்லாமையினால் அந்த அரசன் சுகுணா சுந்தரியை வஞ்சகமாய்ச் சிறை எடுத்துக்கொண்டு போனான். அப்பொழுதும் சுகுணசுந்தரி முடியாதென்று மறுத்துவிட்டாள். இவ்வளவு நடந்த பிறகு அவன் மறுபடியும் தூது பேசும்படி உன்னைக் கேட்டுக்கொள்ள என்ன முறைமை இருக்கின்றது?" என்றார்.
புவனேந்திரன் ஆசிரியப் பெரியார் சொன்ன முறைமைகளை ஒப்புக்கொண்டதால், ஆசிரியப் பெரியார் சுகுணசுந்தரியினுடைய உள்ளக் கிடக்கையை அறியத் தக்க முயற்சிகள் செய்தார். அவள் தன்னுடைய உடன் பாட்டை வாயால் தெரிவிக்காவிட்டாலும் அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்பது போல அவளுடைய உடன்பாட்டை அவளுடைய முகமலர்ச்சியே வெளிப் படுத்தியபடியால், புவனேந்திரனுக்கும் சுகுணசுந்தரிக்கும் திருமணப் பெருவிழா மிகச் சிறப்புடன் நிறைவேறியது.
-----------
கருத்துகள்
கருத்துரையிடுக