தொல்காப்பியம் : பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை
இலக்கண நூல்கள்
Back தொல்காப்பியம் : பொருளதிகாரம்
நச்சினார்க்கினியர் உரை
தொல்காப்பியம் : பொருளதிகாரம்
அகத்திணையியல் & புறத்திணையியல்
நச்சினார்க்கினியர் உரை
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், லிமிடெட், திருநெல்வேலி, சென்னை - 1
First Edition: March, 1947. Second Edition: 1955.
(All Rights Reserved)
Published By
The South Indian Saiva Siddhantha Works Publishing Sociey, Ltd
1140 Broadway, Madras-1
Head Office: 24, East Car Street, Thirunelveli
Appar Achakam, Madras - 1 . II Ed. C. 1020.
---------------
தொல்காப்பியம் : நச்சினார்க்கினியர் உரை
பொருளதிகாரம்:
இரண்டாவது : புறத்திணையியல்
56.
- அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணந் திறப்படக் கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே.
இவ்வோத்து முற்கூறிய அகத்திணை ஏழற்கும் புறமாகிய புறத்திணையிலக்கணம் உணர்த்தினமையிற் புறத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று. புறமாகிய திணையெனப் பண்புத் தொகையாம். அதனை "முற்படக் கிளந்த' (தொல்-பொ- அகத்-1.) என்புழிப் பிற்படக் கிளந்தனவும் உளவெனத் தோற்றுவாய் செய்து போந்து, அவற்றது இலக்கணங்களும் பெயரும் முறையுந் தொகையும் வருகின்ற சூத்திரங்களால் திறப்படக் கூறுவல் என்றலின், மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் முற்கூறிய குறிஞ்சித்திணைக்குப் புறன் வெட்சித்திணை என்பதூஉம், அதுதான் இப்பகுதித்தென்பதூஉம் உணர்த்து தனுதலிற்று.
(இ-ள்.) அகத்திணை மருங்கின் அரிதல்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்-அகத்திணை யென்னும் பொருட்கட் பிணக்கற அறிந்தோர் கூறிய புறத்திணையது இலக்கணத்தைக் கூறுபட ஆராய்ந்து கூறின்; வெட்சி தானே குறிஞ்சியது புறனே - வெட்சியெனப்பட்ட புறத்திணை குறிஞ்சி யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம்; உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே - அதுதான் அஞ்சுதகத் தோன்றும் பதினான்கு துறையினையுடைத்து. எ-று.
அகத்திணைக்கண் முதல் கரு வுரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பவனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை யென்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடை யொப்புமைபற்றிச் சார்புடையவாதலும் நிலமில்லாத பாலை பெருந்திணை கைக்கிளை யென்பனவற்றிற்கு வாகையுங் காஞ்சியும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை யொப்புமைபற்றிச் சார்புடைய வாதலுங் கூறுதற்கு 'அரில்தப வுணர்ந்தோ'ரென்றார். ஒன்று ஒன்றற்குச் சார்பாமாறு அவ்வச் சூத்திரங்களுட் கூறுதும். தானே யென்றார், புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின் பாடாண்டிணை ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும் களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுந் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும்* போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புற னென்றார். வெட்சித்திணையாவது களவின்கண் நிரைகொள்ளும் ஒழுக்கம்.: இதற்கு அப்பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க. வேற்றுப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண் சேர்வதோர் உபாயமாதலின் உட்குவரத் தோன்றுமென்றார். மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்கமாதலிற் றுறையென்றார்,. எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல்போற்றினார் என்பவாகலின். எனவே திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன் முறையாற் பரந்துபட்டு† வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றதற்குச் செய்யுளியலுள் துறை யென்பது உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடைய வென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒருசெய்யுட் பலபொருள் விராஅய் வரினும், ஒரு துறையாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதியும் ஒரு துறையாதலும், ஒரு செய்யுட் பலதுறை ஒருங்குவந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியன வெல்லாம் புறத்திணைக்குங் கொள்க. (1)
------------
57
- வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்.
இது வெட்சியெனக் கூறிய புறத்திணைக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்) வேந்து விடு முனைஞர்-- வேந்தனால் விடப்பட்டுமுனைப்புலங் காத்திருந்த தண்டத்தலைவர்;‡ வேற்றுப் புலக்களவின்- பகைநிலத்தே சென்று களவினாலே; ஆ தந்தோம்பல் மேவற்றாகும்-ஆநிரையைக் கொண்டுபோந்து பாதுகாத்தலைப் பொருந்துதலை யுடைத்தாகும் வெட்சித்திணை எ-று.
- ----------
(பாடம்) * 'மீட்டலும்' † 'பரந்தனவாய்'
‡ 'தண்டலைத்தலைவர்' என்ற பாடமே பல ஏட்டுப் பிரதிகளில் உள்ளது.
களவுநிகழ்கின்ற குறிஞ்சிப்பொருளாகிய கந்தருவமணம் வேத விதியானே இல்லறமாயினாற்போல இருபெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினாற் றாமே கொண்டுவந்து பாதுகாத்தலுந் தீதெனப்படாது அறமேயாம் என்றற்கு ஆதந்தோம்ப லென்றார்.
அது,
"ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரு
மெம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
வறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்." (புறம்-9)
எனச் சான்றோர் கூறியவாற்றா னுணர்க. மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்றற்கு மேவற்றாகுமென்றார். அகநாட்டன்றிப் புறஞ்சிறைப் பாடியில் ஆநிரை காக்குங் காவலரைக் கொன்றே நிரைகொள்ள வேண்டுதலின் ஊர் கொலையுங்* கூறினார். வேந்துவிடு வினைஞர் என்னாது முனைஞர் என்றதனானே முனைப்புலங் காத்திருந்தோர்† தாமே சென்று நிரை கோடலுங், குறுநிலமன்னர் நிரைகோடலும், ஏனைமறவர் முதலியோர் நிரைகோடலுமாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலுங் கொள்க. முன்னர் (தொல்-பொ- புறத்-1) வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவுகூறிய அதனானே. அகத்திற்கு ஏனைத் திணைக்கண்ணுங் களவு நிகழ்ந்தாற்போலப் புறத்திணை யேழற்குங் களவுநிகழுங்கொ லென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணி வுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். வேந்துவிடு முனைஞர் என்றமையான், இருபெருவேந்தருந் தண்டத்தலைவரை ஏவி விடுவரென்றும், ஆதந்தோம்பும் என்றதனாற் களவின்கட் கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்புமென்றும், பொருள் கூறுமாறு சூத்திரஞ் செய்தாராகலின், இருபெருவேந்தர் தண்டத்தலைவரும் அவ ரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினார்; ஆகவே இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றாதலின், அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் 'மீட்டல் கரந்தை'* என்பரால் எனின், அதனையும் இச் சூத்திரத்தானும் வருகின் சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண் டார்,. மீட்டலை வெட்சிக்கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை யென்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனா காமை உணர்க. களவி னென்பதற்குக் களவினானெனவுங், களவின்கணெனவும் இருபொருட்டாகக் கூறுதல் உய்த்துக் கொண்டுணர்தலென்னும் உத்தியாம். புறப்பொருட்குரிய அறனும் பொருளுங் கூறத்தொடங்கி, ஈண்டு அறத்தாற் பொரு ளீட்டுமாறுங் கூறினார். (2)
- >
------------
*'ஊர்கொலையாகோள் பூசன்மாற்றே' என்ஒபுழிக் காண்க. (தொல் புறத்-3) ஊர்கொலை:-
"விரைபரி கடவி வில்லுடை மறவர்
குரையழ னடப்பக் குறும்பெறிந் தன்று"
என்பது புறப்பொருள் வெண்பாமாலை, வெட்சி -6 (பாடம்) †'முனை பார்த்திருந்தோர்.'
58
- படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்திறை முற்றிய
ஊர்கொலை யாகோள் பூசன் மாற்றே
நோயின் றுய்த்த னுவலுழித் தோற்றந்
தந்துநிறை பாதீ டுண்டாட்டுக் கொடையென
வந்த ஈரேழ் வகையிற் றாகும்.
இது முன் ஈரேழாமென்ற துறை, இருவகைப்பட்டு இருபத் தெட்டாமென்கின்றது.
(இ-ள்) படை இயங்கு அரவம்- நிரைகோடற்கு எழுந்தபடை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும், நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்;
*"வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்லுதல் வஞ்சியா-முட்கா
தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி
யதுவளைத்த லாகு முழிஞை- யதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்தி லொன்னார்
செருவென் றதுவாகை யாம்" என்பது.
உதாரணம்:-
"வெவ்வாய்@ மறவர் மிலைச்சிய வெட்சியாற்
செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா- ரெவ்வாயு
மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ
போர்க்குந் துடியொடு புக்கு."
(பெரும் பொருள் விளக்கம்-புறத்திரட்டு-752- நிரைகோடல்)
"அடியதி# ரார்ப்பின ராபெயர்த்தற் கன்னாய்
கடிய மறவர் கதழ்ந்தார - மடிநிரை
மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல்
வாளார் துடியர்$ வளம்." (763)
இவை கண்டோர் கூற்று.
பாக்கத்து விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர் போந்துவிட்ட பாக்கத்துக் கங்குலின் நல்வாய்ப்புட்& கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டலும்;
உதாரணம்:-
"திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி
நரைமுதியோ னின்றுரைத்த நற்சொ-னிரையன்றி
யெல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால்+
வல்லைநீர்$$ சென்மின் வழி"
(பெரும்பொருள் விளக்கம் - புறத்திரட்டு- 756 )
"வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த
பைந்தொடியார் கூறும் பறவாப்பு - ளுய்ந்த
நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை
வரையளவைத் தாவதா மண்."
இவை விரிச்சியை வியந்தன.
புடைகெடப் போகிய செலவே - நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டுநின்று மீண்டுபோய்ப் பற்றார் புலத்து ஒற்றர் உணராமற் பிற்றைஞான்று சேறலும், நிறைமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு ஒற்றப்படாமற் சேறலும்;
உதாரணம்:-
"பிறர்புல மென்னார்தாந் தம்புல மென்னார்
விறல்வெய்யோ ராயிருட்கட்## சென்றார்-நிறையுங்
கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப்
படாஅ முகம்படுத் தாங்கு"
(பெரும்பொருள் விளக்கம்-புறத்திரட்டு-757-நிரைகோடல்)
-----
(பாடம்) @ 'வெவ்வாள்.' #'அடியெதுர்.' $'வாளா துடியர்.' &'கங்குலின் வாய்ப்புள்.'
+'இறையோர்க் களித்தகுமால்.' $$'வல்லையே’
## 'விறல் வெய்யோர் வீங்கிருட்கண்.'
"கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை
யெங்கு மறவ ரிரைத்தெழுந்தார்- தங்கிளைக்கண்
மன்றுகாண் வேட்கை மடிசுரப்ப* வேதோன்றும்
கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு" (764)
இவை கண்டோர் கூற்று.
புடைகெட ஒற்றின் ஆகிய வேயே- நிரைகோடற்கு எழுந் தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ் வொற்றுவகையான் அவர் உணர்த்திய குறளைச்சொல்லும், நிரைமீட்டற்கு எழுந்தோர் அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச்† சொல்லும்;
உதாரணம்:--
"ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங்
கிருவரு மொப்ப விசைந்தார்- வெருவர
வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு
கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு"
"நெடுநிலையா யத்து நிரைசுவ டொற்றிப்
படுமணி யாயம் பகர்ந்தோய்-நெடிது
மனக்குரிய காதல் வயவேந்த னென்று
நினக்குரிய வாக நிர"
இவை கண்டோர் கூற்று.
வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை- நிரைகோடற்கு எழுந்தோர் வேயுரைத்தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புக்கள் முடிந்தபின்னர் உளதாகிய நிரைப்புறத்து ஒடுங்கிய இருக்கைப் பகுதியும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று விரைவொழிந்து இருக்கின்ற இருக்கையும்;
உதாரணம்:--
"கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும்
பரந்துசென் மள்ளர் பதிந்தா-ரரந்தை
விரிந்தவியு‡ மாறுபோல் விண்டோயத் தோன்றி
யெரிந்தவியும்§ போலுமிவ் வூர்"
இது கண்டோர் கூற்று.
"இருநில மருங்கி னெப்பிறப் பாயினு
மருவின் மாலையோ வினிதே யிரவி
னாகோண் மள்ளரு மருள்வரக் கானத்து
நாம்புறத் திறுத்தென மாகத் தாந்தங்
கன்றுகுரல் கேட்டன போல
நின்றுசெவி யோர்த்தன* சென்றுபடு நிரையே"
(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு -765-நிரைமீட்சி)
------------------
(பாடம்) *'மடிசுரப்பத்' † 'வந்தூதிய குறளை'
‡ 'விரித்தவியும்' §'எரித்தவியும்'
இது மறவர் கூற்று.
முற்றிய ஊர்கொலை- நிரைகோடற்கு எழுந்தோர் அவர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டுயின்ற நிரைகாவலரைக் கொன்று பகையறுத்தலும் நிரைமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரை விட்டுச் சிற்றூரைக் காத்துக்கோறலும்;
உதாரணம்:--
"அரவூர் மதியிற் கரிதூர வீம
விரவூ ரெரிகொளீஇக் கொன்று-நிரைநின்ற
பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர்
கொல்வார்ப் பெறாஅர் கொதித்து"
"சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு
நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார்- கொன்றாண்
டிகலுழந்த வல்வில் லிளையோர்புண் டீரத†
துகளெழுங்கொல் பல்லான் றொழு"
இவை கண்டோர் கூற்று.
ஆகோள்- நிரைகோடற்கு எழுந்தோர் எதிர்விலக்குவோர் இலராக‡ நிரையகப்படுத்தி மீட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை அற்றமின்றி மீட்டலும்;
உதாரணம்:--
"கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தா
னெடுவரை நீள்வேய் நரலு- நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை" (புற-வெ-மாலை-வெட்சி-9)
"கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின்
மிடல்பெரி தெய்தின மாதோ- தொடலைக்
கரந்தை மறவர்க் கருதார் குழாஅந்
துரந்து நிரைமீட்ட தோள்"
(பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு 767-நிரைமீட்சி)
இவை கண்டோர் கூற்று.
- -----
(பாடம்) *'ஏற்றின', 'ஏற்றன' †'புண்டீர்ந்து' ‡ 'இலராக்கி'
தொடலைக் கரந்தையெனக் கரந்தை சூடினமை கூறினார், தன்னுறுதொழிலான் நிரைமீட்டலின்; இது @பொதுவியற் கரந்தையிற் கூறுதும்.
பூசன் மாற்று - நிரை கொண்டுபோகின்றார் தம்பின்னே உளைத்தற்குரலோடு தொடர்ந்து சென்று ஆற்றிடைப் போர் செய்தோரை மீண்டு பூசலைமாற்றுதலும், நிரையை மீட்டுக் கொண்டு போகின்றோர் தம் பின்னர்வந்து போர்செய்தோரை மீண்டு நின்று பூசலை மாற்றுதலும்;
உதாரணம்:-
"ஒத்த வயவ றொருங்கவிய நாண்படரத்
தத்த மொலியுந் தவிர்ந்தன - வைத்தகன்றார்
தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் றாக்கினார்
வெம்பூசன் மாற்றிய வில்."
"#ஆவூ ரெறிந்து நிரையொடு பெயர்ந்த
வெட்சி மறவர் வீழவு முட்காது
கயிறியல் பாவை போல வயிறிரித்
துளைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல
முற்படு பூசல் கேட்டனர் பிற்பட
நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி
நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண்
$மாக்கட னெருப்புப் போல நோக்குபு
வெஞ்சிலை விடலை வீழ்ந்தன
னஞ்சுதக் கன்றாற் செஞ்சோற்று நிலையே."
இவை கண்டோர் கூற்று.
வெட்சிமறவர் வீழ்ந்தமை கேட்டு விடாது பின்வந்தோன்பாடு கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று.
நோய் இன்று உய்த்தல்- நிரை கொண்டோர் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாங்கொண்ட நிரையினை இன்புறுத்திக் கொண்டுபோதலும், மீட்டோரும் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாம் மீட்ட நிரையினை இன்
புறுத்திக்கொண்டு போதலும்;
உதாரணம்:-
"புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான்-றன்மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டு
நெடுவரை நீழ னிரை." (புற-வெ-மாலை-வெட்சி-11)
-----------
@'அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்' என்புழிக் காண்க.
(தொல்-பொ-புறத்-5.)
(பாடம்) #'இரவு' $'மாக்கடை நெருப்பு.'
"கல்கெழு சீறூர்க் கடைகாண் விருப்பினான்
மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத்
தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு
மள்ளர் நடவா வகை."
(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு- 763.நிரைமீட்சி)
இவை கண்டோர்கூற்று.
நுவலுழித் தோற்றம் - பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைகொண்டோர் வரவும், ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்;
உதாரணம்:-
"மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு
மையணற் காளை மகிழ்துடி - கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
வுய்த்தன் றுவகை யொருங்கு."
(புற.வெ.மாலை-வெட்சி-12)
"காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா
மீட்ட மகனை வினவுறா -னோட்டந்து
தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு
மென்னெதிர்ப் பட்டாயோ@ வென்று."
(பெரும்பொருள் விளக்கம் - புறத்திரட்டு- *766- நிரைமீட்சி)
இவை கண்டோர் கூற்று.
தந்து நிறை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத்தம் மூர்ப்புறத்துத் தந்துநிறுத்தலும், நிரைமீட்டோர் தாம் மீட்ட நிரையினைத் தந்துநிறுத்தலும்;
உதாரணம்:-
"குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங்
களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி
நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான
மெல்லாம் பெறுக விடம்,"
"கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத்#
தொழுவிடை யாயந் தொகுமி- னெழுவொழித்தாற்
போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர்
தாமேய் புலம்போலத் தந்து."
இவை கண்டோர் கூற்று.
- --------
(பாடம்) @'என்னது பட்டாயோ என்று.'
#'கவங்கள்பல் யாத்து.’
பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாதீடாயிற்று: வேந்தனேவலாற் றாங்கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும், மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும் நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக்
கொடுத்தலும்;
உதாரணம்:-
"ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற்
கூறிட்டார் கொண்ட நிரை." (புற.வெ.மாலை,வெட்சி-14)
"யாமே பகுத்திடல்# வேண்டா வினநிரை
தாமே தமரை யறிந்தனகொ - லேமுற
வன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச்
சென்றீண்டு மாங்கவர்பாற் சேர்ந்து."
(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-770 நிரைமீட்சி)
உதாரணம்:-
இவற்றுண் முன்னையது கண்டோர் கூற்று; ஏனையது மறவர் கூற்று.
உண்டாட்டு - நிரைகொண்டார் தாங்கொண்ட நிரையைப் பாத்துத் தாங்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதலும், நிரைமீட்டார் வென்று நிரைமீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும்;
உதாரணம்:-
"நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மி
னொன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையோடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே." (புறம்-262)
இது புறம்.
"பகைவர் கொண்ட படுமணி யாய
மீட்டிவட் டந்த வாட்டிறற் குரிசின்
முழவுத் துயின்மறந்த மூதூ ராங்கண்
விழவுத் தலைக்கொண்ட விளயாட் டாயத்
தூன்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர்
மீன்சுடு புகையின் விசும்புவாய்த் தன்றே
கைவல் கம்மியர் பலகூட் டாரமொடு
நெய்பிழி நறுவிரை நிலம்பரந் தன்றே
காவிற் காவிற் கணங்கொள் வண்டெனப்
பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே
சந்தியுஞ் சதுக்கமும் பந்தர் போகிய
வாடுறு நறவின் சாடி தோறுங்
கொள்வினை மாற்றாக் கொடையொடு
கள்விலை யாட்டியுங் கைதூ வாளே."
----------
(பாடம்) #'பகர்ந்திடல்.'
இவை கண்டோர் கூற்று.
கொடை-தாங்கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது கொடுத்து மனமகிழ்தலும், நிரைமீட்டோர்க்கு வென்றிப் பொருட்டு விளைந்த கொடைப்பகுதியும்;
உதாரணம்:-
"இளமா வெயிற்றி யிலைகாணின் னையர்
தலைநாளை வேட்டத்துத் தந்த நிரைகள்
கொல்லன் றுடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்த முன்றி னிறைந்தன."
(சிலப்-வேட்டுவவரி)
"கொடைத்தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே
முடித்தன னென்றிருந்த மூத்தோன்- கொடைக்கு
வரம்பில னென்றே மருண்டா னிரைகோட்
கரந்தையங் கண்ணியாற் கண்டு."
இவை கண்டோர் கூற்று.
என ஈரேழ் வந்த வகையிற்றாகும்-என்று கூறப்பட்ட பதினான்கும் மீட்டுமொருகால் விதந்த* இருகூற்றையுடைத்தாகும் வெட்சித்திணை என்றவாறு.
எனவே ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று.
இனித் துறையென முற்கூறினமையின், இது காரியமாக இதற்குக் காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவேபடும்; அவை இருபெருவேந்தரும் போர்தொடங்குங்காற் பூக்கோ ளேவி நிரைகோடல் குறித்தோன் படைத்தலைவரைத் தருக வென்றலும், அவர் வருதலும், அவர் வந்துழி இன்னது செய்க வென்றலும், அவர் வேந்தர்க்கு உரைத்தலும், அவர் படையைக் கூஉய் அறிவித்தலும், படைச்செருக்கும், அதனைக் கண்டோர் கூறலும், அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரங்கி வருந்தலும், நாட்கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும், பிறவுமாம். களவிற் செல்வோர்க்கும் அரவங் கூறினார், அவர் பாக்கத்தே தங்கி விரிச்சிபெற்றுப் போதலின்.
- ------------
(பாடம்) * ‘வந்த.’
அவற்றுட் சில வருமாறு:-
"கடிமனைச் சீறூர்க் கடுங்கட் கறவை
வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லொட்டா
னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர்
வருகமன் வாயிற் கடை."
இது படைத்தலைவர் படையாளரைக் கூயினது.
"வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலாற்
றாள்வ லிளையவர் தாஞ்செல்லி-னாளைக்
கனைகுர னல்லாத்தன் கன்றுள்ளப் பாலா
னனைவது போலும்நம் மூர்."
(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-753, நிரைமீட்சி)
இது படைச்செருக்கு; கண்டோர் கூறியது.
"வந்த நிரையி னிருப்பு மணியுட
னெந்தலை நின்றலை யாந்தருது-முந்துநீ
மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக்
கொற்றவை கொற்றங் கொடு."
(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-754, நிரைகோடல்)
இது தெய்வத்திற்குப் பராஅயாது; பிறவும் வருவனவெல்லாம் இதனான் அடக்குக.
இனிப் பாக்கத்து விரிச்சிக்குக் காரணங்களாவன, பாக்கத்துக் சென்றுழி இருப்புவகுத்தலும், பண்டத்தொடு வல்சி ஏற்றிச் சென்றோரை விடுத்தலும், விரிச்சி வேண்டாவென விலக்கிய வீரக்குறிப்பும் விரிச்சிக்கு வேண்டும் நெல்லும் மலரும் முதலியன தருதலும், பிற நிமித்தப் பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும், பிறவுமாம்.
உதாரணம்:-
"நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ
டெங்கோ னேயின னாதலின் யாமத்துச்
செங்கால்* வெட்சியுந் தினையுந் தூஉய்
மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப
விரிச்சி யோர்த்தல் வேண்டா
வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே."
(தகடூர்யாத்திரை. புறத்திரட்டு-755, நிரைகோடல்)
----------
(பாடம்) * ‘செங்கோல்.’
இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு; பிறவும் வந்துழிக் காண்க.
அரசன் ஏவலாற் போந்தோரும் விரிச்சி கேட்டார், இன்ன ஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்கு.
இனி வேய்க்குக் காரணங்களாவன; வேய்கூறினார்க்குச் சிறப்புச் செய்தல் போல்வன.
உதாரணம் :-
"மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே
யேற்ற பெருஞ்சறப் பின்றீதும்-வேற்றூரிற்
புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி *
நல்வே யுரைத்தார்க்கு நாம்."
என வரும்.
இனி ஏனைய ஒன்று பலவாய்த் துறைப்பாற் படுவன + வந்துழிக் காண்க.
இங்கனம் புறத்திணைக்குச் சிறுவரவிற்றாதலின் அன்றே 'பாடல் சான்ற புலனெறி வழக்க.' மென்று (தொல்-பொ-அகத்- 53) அகத்திற்குக் கூறியது. நிரைமீட்குங்கால் அறிந்தார் அறிந்தவாற்றானே விரைந்து சென்று மீட்பாராதலின் அரசனை உணர்த்தாதே மீட்டல் பெறுதும்: இவற்றிற்குந் துறைப்பகுதி கொள்க. (3)
------------
59.
- மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையு மத்திணைப் புறனே.
இவையும் வெட்சித்திணையா மென்கின்றது.
(இ - ள்.) மறங்கடைக் கூட்டிய துடிநிலையும்; போர்க்களத்து மறவரது மறத்தினைக் கடைக்கூட்டிய துடிநிலையும்;சிறந்த கொற்றவை நிலையும்-அத்தொழிற்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும்; அகத்திணைப்புறனே-அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாம் என்றவாறு.
"நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு
மொத்திலங்க மெய்பூசி யோர்ந்துடீஇத்-தத்தந்
துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர்
குடிநிரை பாராட்டக் கொண்டு."
--------
(பாடம்) * 'நின்றொற்றி னல்வேய்.' + 'படுமாறு.'
இஃது இருவகை வெட்சிக்கும் பொது; நிரைகொண்டோர்க்கும் மீட்டோர்க்குந் துடிகொட்டிச் சேறலொத்தலின்.
"அருமைத் தலைத்தரு* மானிரையு ளையை
யெருமைப் பலிகோ+ ளியைந்தா-ளரசனும்
வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென்
றியாந்தன்மேற் சீறாம லின்று."
இதனானே வருகின்ற வஞ்சித்திணைக்குங் கொற்றவை நிலை காரணமாயிற்று; தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும்++ மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழுபடுவராதலின்.
இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு :-
"நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை
கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொன்-மிச்சில்கூர் $
வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சார்ப்பத்
தாளின்வாய் வீழ்த்தான் றலை."
இஃது உயிர்ப்பலி. இது பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது.
"ஆடிப்பண்@பாடி யளவின்றிக் கொற்றவை
பாடினி பாடற் படுத்துவந்தா-ணாடிய
தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த
தாளுழலை யாடுவோன் றான்."
இது குருதிப்பலி: பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. (4)
-----------------
(பாடம்) * 'அருமை தலைத்தரு.' + 'எருமைத் தலைக்கோள்.'
++ 'வேண்டாதார்க்கும்.' $ 'மிச்சிலைகூர்.' @ 'ஆடினிப்பாடி.'
----------
60.
- வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும் உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே யாரென வரூஉ
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி வயவ ரேத்திய
ஓடாக் கழனிலை உளப்பட ஓடா
உடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும்
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்
ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலுஞ்
சார்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலுந்
தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்
றிருவகைப் பட்ட பிள்ளை நிலையும்
வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க
நாடவற் கருளிய பிள்ளை யாட்டுங்
காட்சி கால்கோ ணீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று* துறைத்தே.
இது முன் இருபெருவேந்தர்க்கும் போர்செயத் தொடங்குதற்குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக் கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துத னுதலிற்று; இவை வேத்தியலின் வழீஇத் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை அகத்திற்கும் பறுத்திற்கும் உரியவாய் வருவனவும் புறத்திற்கெல்லாம் பொதுவாய் வருவனவுமாதலிற் பொதுவியலுமாயின.
(இ - ள்.) வெறி அறி சிறப்பின் - தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும்; வெவ்வாய் வேலன் - உயிர்க்கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையானாகிய வேலன்; வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - தெய்வ மேறியாடுதலைச் செய்த காந்தளும்;
செவ்வேள்வேலைத் தான் ஏந்திநிற்றலின் வேலனென்றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார் வேலனைக் கூறினமையிற் கணிகாரிகையுங்+ கொள்க. காந்தளையுடையமையானும்++ பனந்தோடுடைமையானும்$ மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனானும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை. ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க.
- --------
(பாடம்) *'மூவேழ் துறைத்தே.' +'கணிக்காரி.' ++'தானையுடைமையானும்.'
$ 'வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீ
ரைதமை பாணி யிரீஇக்கை பெயராச்
செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன்
வெறியயர் வியன்களம்' (அகம்-98)
என வருதாலாற் பனந்தோ டுடைமையறிக. வெண்போழ்-பனந்தோடு.
உதரணம்:-
"அமரகத்துத் தன்னை மாறந்தாடி யாங்குந்
தமரகத்துத் தன்மறந் தாடுங்-குமரன்முன்
கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா
ரேர்க்காடுங்* காளை யிவன்."
இது சிறப்பறியா மகளிராடுதலிற் புறனாயிற்று. வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது.
உதாரணம்:-
"அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்
இதுவென அறியா மறுவரற் பொழுதில்
படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக்
களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்
ஆர நாற வருவிடர்த் ததைந்த
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளிந்தியங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப
இன்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து
நக்கனெ னல்லெனோ யானே யெய்த்த
நோய்தணி காதலர் வரவீண
டேதில் வேலற் குலந்தமை+ கண்டே." (அகம்-22)
"பனிவரை நிவந்த" என்னும் (அகம்-98) பாட்டும் அது.
இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறியாடிய காந்தள் அகத்திற்கு வந்தது, இது வேத்தியற் கூத்தன்றிக் கருங்கூத்தாதலின் வழுவுமாய் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாதலிற் பொதுவியலுமாயிற்று. "வேலன்றைஇய வெறியயர் களனும்" (பத்து-திருமுரு-222.) என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானே ஆடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங் கொள்க.
---------
(பாடம்) *'காரிகை யார்க்காடும்.' +'உலைந்தமை.'
மா வரும் புகழ் ஏந்தும் பெருந் தானையர்- மா முதலியனவற்றால் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும்படையாளர்; உறு பகை வேந்திடை தெரிதல் வேண்டிப் போந்தை வேம்பே ஆர் என மலைந்த பூவும்- அப்புகழ்தான் உறும்பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு ஆரென்று கூறிச் சூடின பூவும்;
இதன் கருத்து: ஏழகத்தகரும் யானையும் கோழியும்* பூழும் வட்டும் வல்லுஞ் சொல்லும் முதலியவாற்றால் தமக்குவரும் புகழைத் தாம் எய்துதற்குத் தத்தம் வேந்தர் அறியாமற் படைத்தலைவர் தம்முண் மாறாய் வென்று ஆடுங்கால் இன்ன அரசன் படையாளர் வென்றாரென்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பதூஉம், அக்கூத்தும் வேத்தியற்கூத்தின் வழீஇயின கருங்கூத் தென்பதூஉம், அது தன்னுறு தொழிலென்பதூஉம் உணர்த்ததியதாம். இதனை இங்ஙனந் தன்னுறுதொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனிற் பாடாண்டிணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக்கூத்திற்கும் இடையே இதனை வைத்தார் இக்கருத்தானே யென்றுணர்க.
உதாரணம்:--
"ஏழக மேற்கொண் டிளையோ னிகல்வென்றான்
வேழ மிவனேற வேந்துளவோ- வேழுலகுந்
தாந்தயங்கு நாகந் தலைதயங்க வாடாமோ
போந்தையங் கண்ணி புனைந்து. "
இது போந்தை மலைந்தாடியது.
"குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுத
லிறும்பூதென் றியாமாடல் வேண்டா- செறுங்கோன்
குலமதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு
தலைமலையற் பாலதூஉ மன்று"
இது வேம்பு மலைந்தாடியது.
"ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர்
போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர்- சீர்சால்
பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ* ரின்று
சிறைகெழு வாரணப்போர் செய்து"
-------------
(பாடம்) *'யானையும் நாயுங் கோழியும்' முன் அச்சுப்பிரதியில் உள்ளது.
இஃது ஆர்மலைந்தாடியது.
இவை தன்னுறு தொழிலாயவாறு காண்க.
வாடாவள்ளி- வாடுங் கொடியல்லாத வள்ளிக்கூத்தும்;
அஃது† இழிந்தோர் காணுங் கூத்து.
உதாரணம்:--
"மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக்
கண்ட முருகனுங் கண்களித்தான்- பண்டே
குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப்
பிறமக ணோற்றாள் பெரிது"
இது பெண்பாற்குப் பெருவரவிற்று. இதனைப் பிற்கூறினார், வெறியறி சிறப்பன்மையானும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாவதல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும்பற்றி.
வயவர் ஏத்திய ஓடாக் கழனிலை உளப்பட -முன்பு கழல்கால் யாத்தர வீரர் மழலைப்‡ பருவத்தானொருவன் களத்திடை ஓடாது நின்றமைகண்டு அவனைப்புகழ்ந்து அவற்குக் கட்டிய கழனிலைக் கூத்து;
ஓடாமையாற் கட்டின கழல், ஏத்திய நிலையாற் கட்டின கழல். இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலாரும் ஆடுதல் கொள்க. கொடி முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத்துறைப் பகுதியாம்.
உதாரணம்:--
"மீளாது பெற்ற விறற்கழலோன் வாளாட்டின்
வாளாடு கூத்திவந் தாடினாள்- வாளாட்டின்
மண்ணாளு மன்னரே பெண்ணாவார் வண்மைக்குப்
பெண்ணாடின் யாதாம் பிற"
ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்னநிலையும்- பிறக்கடியிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்னநிலையும்;
- ----------------
(பாடம்) *'பண்டிழந்தோர்' †'அதுவும்' ‡'இளமை'
என்றது, வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன் வேந்தற்கு நீ வெற்றிகொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப் பரவுதலும், எம்வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு பொதுளுக எனவும் பகைவேந்தற்குக்கேடு உளதெனில் அக்கோடு படுவதாக எனவும் நிமித்தங்கோடலும் என விரு வகைத் தெய்வத்தன்மையும்; அஃதுடைமையான்* அடுக்கிய உன்ன நிலையுமென்றார்.
உதாரணம்:--
"துயிலின் கூந்தற் றோளிணைப் பேதை
வெயினிழ லொழிய வெஞ்சுரம் படர்ந்து
செய்பொருட் டிறவீ ராகிய நும்வயி
னெனக்கொன்று மொழியின ளாகத் தனக்கே
யருநகை தோன்றிய வழுகுரற் கிளவியள்
கலுழ்கண் கரந்தன† டானே யினியே
மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ
ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇத்
தலைசாய்த் திருந்த சிலைவலம் போற்றி
வேந்து வழக்கறுத்த கான
நீந்த லொல்லுமோ பூந்தொடி யொழிந்தே"
இதனுள்,
"மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ
ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇ"
என்றது, வேந்தனைப் பரவுக்கடனாக அடுக்கிய உன்னநிலை.
"முன்னங் குழையவுங் கோடெலா மொய்தளிரீன்
றுன்னங் குழையொலித் தோங்குவாய்- மன்னரைக்
கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை
வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து"
இவை மறவர் செய்தலிற் றன்னுறு தொழிலாம்.
"பொன்னன்ன பூவிற் சிறிய விலைப்புன்கா
‡லுன்னப் பகைவனெங் கோன்"
என்பதும் அது.
இரண்டு நிலையாற் பொதுவுமாயிற்று மன்னவன் வெற்றியே கருதாது இங்ஙனம் இருநிலைமையுங் கருதலின் வழுவுமாயிற்று.
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவைநிலையும் என்றது: மாயோன் விழுப்புகழ்- மாயனுடைய காத்தற் புகழையும்; மேய பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்- ஏனோர்க்கு உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்த லென்னும் புகழ்களையும்; மன்பூவைநிலையும் - மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலையும்;
- --------
(பாடம்) *'என இருவகைத்தே அத்தன்மை யஃதுடைமையான்'
†'கலுழ் கணமர்ந்தன' ‡ உன்னத்தகைய னென்கோ.
என்றது ஒன்றனை ஒன்றுபோற்கூறுந் துறை. மன் எனப் பொதுப்படக் கூறியவதனான் நெடுநிலமன்னர்க்குங் குறுநில மன்னர் முதலியோர்க்குங் கொள்க. பெருஞ்சிறப்பு என்றதனால் படைத்தலுங் காத்தலும் அழித்தலுமன்றி அவரவர் தாமாகக் கூறலும், முருகன் இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க.
உதாரணம்:--
"ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளுங்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலி
னாங்காங் கவரவ ரொத்தலின் யாங்கு
மரியவு முளவோ நினக்கே..........." (புறம்-56)
என இதனுள் *அங்ஙனம் உவமித்தவாறு காண்க.
"குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக்
கரந்த படியெமக்குக் காட்டாய்- மரம்பெறாப்
போரிற் குருகுறங்கும் பூம்புனனீர் நாட
மார்பிற் கிடந்த மறு"
இது சோழனை மாயோனாகக் கூறிற்று.
"ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு
மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே
கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா
மாற்றல்சால் வானவன் கண்"
இது சேரனை அரனாகக் கூறிற்று.
"இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த
வந்தரத்தா னென்னிற் பிறையில்லை- யந்தரத்துக்
கோழியா னென்னின் முகனொன்றே கோதையை
யாழியா னென்றுணரற் பாற்று"
---------------
(பாடம்) *'என்பதன்கண்'
இது சேரனைப் பலதேவராகக் கூறிற்று.
"கோவா மலையாரங் கோத்த......." (சிலப்-ஆய்ச்-உள்வரி)
"முந்நீ ருள்புக்கு மூவாத.............." (சிலப்-ஆய்ச்-உள்வரி)
"பொன்னிமையக் கோட்டுப் புலி........." (சிலப்-ஆய்ச்-உள்வரி)
அவை என்பனவும்.
"தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
........சிறுகுடி யோரே" (கலி-52)
இஃது உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ஙனம் புறத்தும் அகத்தும் வருதலிற் பொதுவாயிற்று. இறப்ப உயர்ந்த தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின்
வழுவுமாயிற்று.
தாவா என்றதனானே அரசர்புகழைக் காட்டுவாழ்வோர்க்குக் கூறுதலும், அவரை அரசர் பெயராற் கூறுதலுங் கொள்க.
"வீங்குசெலற் பரிதி வெவ்வெயி லெறித்தலி
னோங்க* ணோக்கா தாங்கு நீபோ
யரசுநுகம் பூண்ட பின்னர் நின்னிலை
முரசுடை வேந்தர் முகந்திரிந் தனரே
யஃதான்
றுவவமதி நோக்குநர் போலப் பாணரொடு
வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே
யதனா
னதருங்† கோடுமுதலிய கூட்டுண்
டிகலி னிசைமேஎந் தோன்றிப்
பலவா கிய‡நில நீபெறு நாளே"
இது முடியுங் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித்துக்கூறியும் புகழ்மிகுத்தது.
"பல்லிதழ் மென்மலர்" என்னும் (109) அகப்பாட்டினுள் "அறனில்வேந்த னாளும்- வறனுறு குன்றம் பலவிலங் கினவே" எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினார்.
ஆர் அமர் ஓட்டலும்- குறுநில மன்னருங் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங் காண்டலும்;
- ---------
(பாடம்) *'ஆங்கண்' 'ஆங்குண்'
† 'அதளும்' எனவும் 'அதர்கூட் டுண்ணு மணங்குடைப்பகழி' என்பது அகம்-167.
‡ 'தீதிலவாகிய'
உதாரணம்:--
"பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை* யெஃகம்
வேந்தூர் யானை யேந்துமுகத்† ததுவே
வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
சாந்தா ரகல முளங்கழிந் தன்றே‡
யுளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிற
லோச்சினன் றுரந்த காலை மற்றவன்
புன்றலை மடப்பிடி நாணக்
குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே." (புறம்-308)
இது சீறூர்மன்னன் வேந்தனைப்புறங்கண்டது.
"கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றி
னாட்செருக் கனந்தர்த் துஞ்சு §வோனே
யவனெம் மிறைவன் யாமவன் பாணர்
நெருநை ¶வந்த விருந்திற்கு மற்றுத்தன்
னிரும்புடைப் பழவான் வைத்தன னின்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண்
டீவதி லாள னென்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச்
$சென்றுவாய் சிவந்து மேல்வருக
சிறுகம் யானை வேந்துவிழு முறவே." (புறம்-316)
இது மறவன் ஆரமரோட்டல் கூறியது.
இவை தன்னுறுதொழில் கூறியன.
இவை புறம்.
ஆரமரோட்ட லென்பது பொதுப்படக் கூறவே, வேந்தர்க்கு உதவியாகச் செல்வோரையுங் கொள்க.
- ---------
(பாடம்) * 'சீறிலை.' †'வெருவந்து முகத்ததுவே.' ‡ 'கிழித்தன்றே.'
§ 'கனந்தார்த் துஞ்சு', 'கனந்தற்ரஞ்சு.' ' நெருநல்.' $ 'செறுநர் சிவந்து',
உதாரணம்:--
"வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப்
புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர்# வீழ்துணை மகாஅர்
சிறியிலை யுடையின் சுரையுடை வான்மு
ளூக நுண்கோற் செறித்த வம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந் தழீஇய வங்குடிச் சீறூர்க்
குமிழுண் வெள்ளை மறுவாய் +பெயர்த்த
வெண்காழ் தாய& வண்காற் பந்த$
ரிடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரோ டிருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்
குலந்துழி யுலக்கு@ நெஞ்சறி துணையே." (புறம்-324)
இது புறம். வேந்தர்க்குத் துணையாகச் ##செல்வோரைக் கூறியது.
"இணைப்படைத் $$தானை யரசோ டுறினுங்
கணைத்தொடை &&நாணுங் கடுந்துடி யார்ப்பி
னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை
மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி
யுருத்த கடும்சினத் தோடா மறவர்." (கலி-15)
எனக் கலி அகத்தும் வந்தது.
"வயங்குமணி பொருத" என்னும் (167) அகப்பாட்டினுள்,
"சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்
ததர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்."
எனச் சாத்தெறிதலும் அது. இங்ஙனம் பொதுவாதலிற் ++பொதுவியலாயிற்று. வேந்தரோடு பொருதலின் வழுவுமா யிற்று.
ஆ பெயர்த்துத் தருதலும் - வெட்சிமறவர் கொண்ட நிரையைக் குறுநிலமன்னராயினுங் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத்தருதலும்;
உதாரணம்:-
"ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா
திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
வல்வின் மறவ ரொடுக்கங் காணாய்
செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ள
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கு மான்மேற்
புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே." (புறம்-259)
---------
(பாடம்) # 'வேட்டுவர்.' +'பகுவாய்.' &'காய.' $'வன்காழ்ப் பந்தர்'
@'உவந்துழி யுவக்கும்.' ##'செல்வனென்றது.' $$'முனைப்படை.'
&&'கனைத்தொடை.' ++'பொதுவிதி.'
இது குருநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது.
"வளரத்தொடினும் *வவ்வுபு திரிந்து
விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத்
தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
உளருங் கூந்த னோக்கிக் களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலைக் கசிபு கைதொழாஅக்
காணலென் கொல்லென வினவினை வரூஉம்
பாண கேண்மதி யாணரது நிலையே
புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந்
தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டுங்
கையுள போலுங் கடிதண் மையவே
முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர்
நெடுநிரை+ தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தந் துடிபுணை யாக
வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வையெயிற் துய்ந்த மதியின் மறவர்
கையகத் துய்ந்த மதியின் மறவர்
கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லா
னிரையொடு வந்த வுரைய னாகி
யுரிகளை யரவ மானத் தானே
யரிதுசெ லுலகிற் சென்றன னுடம்பே
கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக் ++
கம்பமொடு துளங்கிய விலக்கம் போல$
வம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே
உயரிசை வெறுப்பத் தோன்றிப் பெயரே
மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர்சூட்டி
யிடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்@
படசஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே." (புறம்-260)
இதனுட் டன்னூரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப்பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது.
ஏனைய வந்துழிக் காண்க.
இனிக் கண்டோரும் மறவருங் கூத்தரும் பாணரும் விறலியருங் கூறினும், அவர்தாங் கையற்றுக் கூறினும், அத்துறைப்பாற் படும்.
-----------
(பாடம்) *'வாளாத் தொடினும்.' +'நெடுவெறி.'
++'காலுற.' $'விலங்குபோல.' @'சிறுநெறி.'
உதாரணம்:-
"பெருங்களிற் றடியிற் றோன்று மொருக
ணிரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாஅது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாரே
பல்லாத் திரணிரை #பெயர்தரப் பெயர்தந்து
கல்லா மறவர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல*புனற் சிறையின் விலங்கியோன் கல்லே." (புறம்.263.)
இது கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க.
"விசும்புற நிவந்த"$ என்னும் (131) அகப்பாட்டும் அது.
இதனுள் "மறவர் நாளா வுய்த்த என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியற் கரந்தைக் கண்ணே கொள்க; இஃது ஏழற்கும் பொதுவாகலின்.
தருதலென்ற மிகையானே நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற்படும். "வலஞ்சுரி மராஅத்து" (அகம்-83) என்னுங் களிற்றியானை நிரையுள்,
"கறையடி மடப்பிடி கானத் தலறக்
களிற்றுக்கன் றொழித்த வுவகையர் கலிசிறந்து
கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து
பெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவுநொடை நல்லிற் புதவமுதற் பிணிக்குங்
கல்லா இளையர் பெருமகன் புல்லி."
என யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க.
இதுவும் வேத்தியலின் வழீஇயினவாறு காண்க.
வேந்தன் சீர் சால் சிறப்பு எடுத்து உரைத்தலும்- வேந்தற்கு உரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவற்கு உரியவாக அவன்றன் படையாளரும் பிறரும் கூறலும்;
இதுவும் வழு; வேந்தர்க் குரிய புகழைப் பிறர்க்குக் கூறினமையின்.
"அத்த நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிற்றொடு நெடுந்தேர் வேண்டினுங் கடல
வுப்பொய் சாகாட் டுமணர் காட்டக்
கழிமுரி குன்றத் தற்றே
யெள்ளமை வின்றவ னுள்ளிய பொருளே." (புறம்-313)
-------------
(பாடம்) #'பல்லானின நிரை.' $'நிமிர்ந்த.'
இது புறம். படையாளர் கூற்று.
இதற்கு முடியுடைவேந்தன் சிறப்பெடுத் துரைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகா தென்றுணர்க.
தலைத்தாள் நெடுமொழி தன்னொடுபுணர்த்தலும் - தன்னிடத்துள தாகிய போர்த்தொழிலின் முயற்சியாலே வஞ்சினங்களைத் தன்னொடு கூட்டிக் கூறலும்;
உதாரணம்:-
"தானால் விலங்காற் றனித்தாற் பிறன்வரைத்தால்
யானை யெறித லிளிவரவால்- யானை
யொருகை யுடைய தெறிவலோ யானு
மிருகை சுமந்துவாழ் வேன்."
என வரும்.
"பெருநீர் மேவற் றண்ணடை யெருமை
யிருமருப் புறழு நெடுமா நெற்றின்#
பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக்
கன்றுடை மரையா துஞ்சும் சீறூர்க்
கோளிவண் வேண்டேம்$ புரவே நாரரி&
நனைமுதிர்+ சாடி நறவின் வாழ்த்தித்
துறைநனி கெழீஇக் கம்பு ளீனுந்
தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி@
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே." (புற.297)
மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன்னொடு புணர்த்தவாறு காண்க. சீறூர் புரவாகக் கொள்ளேன்; தண்ணடை கொள்வேனெனத் தன்னுறுதொழில் கூறினான்.
இதுவும் பொது; புறம்.
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையும் - தன்மேல் வருங் கொடிப்படையினைத் தானே தாங்குதல், வாட்டொழிற்## பொய்த்தலின்றி மாற்றாரைக்கொன்று தானும் வீழ்தலென இரண்டு கூறுபட்ட போரிற் சென்றறியாத மறமக்கள் தாமே செய்யுந் தறுகணாண்மையும்;
----------
(பாடம்) #'னெற்றின்." $'கொளின்வேண்ட வேண்டேம்.' &'நாரி.' +'நிறைமுதிர்," @'வைந்நுனை.' ## 'வாட்டொழிலால்.'
வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலைவருமாகிய இளையர் செய்யினும் தன்னுறு தொழிலாதலிற் கரந்தையாம்; தும்பையாகாதென்று உணர்க.
உதாரணம்:-
"ஏற்றெறிந்தார் தார்தாங்கி வெல்வருகென் றேவினாள்
கூற்றினுந் தாயே கொடியளே- போர்க்களிறு
காணா விளமையார் கண்டிவனோ நின்றிலனேன்
மாணாருள் யார்பிழைப்பார் மற்று"
இது வருதார் தாங்கல்.
"ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல்
வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம்மகிழ்ந்தாள்- வீடுவோன்
வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே
கேளா வழுதார் கிடந்து"
இது வாள் வாய்த்துக் கவிழ்தல்.
"கெடுக சிந்தை கடிதிவ டுணிவே" என்னும் (279) புறப் பாட்டும் இதன்பாற் படும்.
இவை தன்னுறுதொழில். போரிற் சென்றறியாதவன் சேறலின் வழு.
வாண்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கு அருளிய பிள்ளையாட்டும்-வாளாற் பொருது உயர்ந்த அரசிளங்குமரனை அந் நாட்டிலுள்ளார் கொண்டுவந்து பறை தூங்கிசையாக ஒலிக்கும்படி அவற்கு அரசுகொடுத்த பிள்ளைப் பருவத்தோனைக் கொண்டாடிய ஆட்டும்;
இதுவும் நாட்டிலுள்ளார் கொடுத்தலிற் றன்னுறு தொழிலாய் வழுவுமாயிற்று.
உதாரணம்:-
"வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட
புன்றலை யொள்வாட் புதல்வற்கண்- டன்புற்றுக்
கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு
வான்கெழு நாடு வர."
என வரும்.
இதனைப் பிள்ளைத்தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியு* மென்ப.
அனைக்குரி மரபிற் கரந்தையும்- ஆரம ரோட்டல் முதலிய ஏழு துறைக்கும் உரிய மரபினையுடைய கரந்தையும்; கரந்தையாவது தன்னுறுதொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணைபோல ஒழுக்கமன்று.
"அந்தோவெந்தை" என்னும் (261) புறப்பாட்டினுள்,
"நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
விரகறி யாளர் மரபிற் சூட்ட
நிரையிவட் டந்து."
என்றவாறு காண்க.
அது அன்றி - அக் கரந்தையே அன்றி;
காட்சி- கல்கெழு சுரத்திற் சென்று கற்காண்டலும், அது கொணர்ந்து செய்வன செய்து நாட்டிப், பின்னர்க் கற்காண்டலும் என இருவகையாம்;
உதாரணம்:-
"தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை- யாழிசூழ்
மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக்
கண்டனெ னின்மாட்டோர் கல்"
இது கல் ஆராய்கின்றார் காட்சி.
"ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை
யோங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீ
போந்தையந் தோட்டிற் †புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லா யினையே கடுமான் றோன்றல்
வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க்
கடும்பகட் டியானை வேந்த
ரொடுங்கா வென்றியு நின்னொடு செலவே" (புறம்- 265)
இது கோவலர் படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது.
---------
*'பிள்ளைப் பெயர்ச்சி:- போர்தாங்கிப் புள்விலங்கியோனைத்- தார் வேந்தன் றலையளித்தன்று" என்பது புற-வெ-மாலை-கரந்தை-12.
(பாடம்) †'போந்தையந்தார்'
"கல்லாயு மேறெதிர்ந்து காண்டற் கெளிவந்த
வல்லான் படலைக்கு வம்மினோ-வெல்புகழாற்
சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத்
தூரிய மெல்லாந் தொட."
என்பதும் அது.
கால்கோள்- கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும், நாட்டிய பின்னர் அவன் ஆண்டுவருவதற்குக் கால்கோடலும் என இரு வகையாம்;
உதாரணம்:-
"வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல்
வரையறை செய்யிய வம்மோ- வரையறை
வாராப் பெரும்புகழ் வலவேல் விடலைக்கு
மோராற்றாற் செய்வ துடைத்து"
இது வரையறை செய்யிய வம்மோ என ஒருவனைத் தெய்வமாக நிறுத்துதற்கு இடங் கொள்ளப்பட்டமையானும், அவ்விடத்துக் கால் கோடலானுங் கால்கோள்.
"காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப்
பூப்பலி பெய்து புகைகொளீஇ- மீப்படர்ந்த
காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மி
னாளை வரக்கடவ *நாள்."
இது நட்டுக் கால்கொண்டது.
"இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லி னாட்பலி யூட்டி
நன்னீ ராட்டி †நெய்ந்நறைக் கொளீஇ‡
மங்குன் மாப்புகை மறுகுடன் கமழு
மருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற்
றரவுறை புற்றத் தற்றே நாளும்
புரவலர் புன்க ணோக்கா திரவலர்க்
கருகா தீயும் வண்மை
யுரைசா னெடுந்தகை யோம்பு மூரே" (புறம்-329)
இதன் கண்ணும் அது வந்தவாறு காண்க
நீர்ப்படை- கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டிய வழி நீராட்டுதலுமென இருவகையாம்;
உதாரணம்:-
"வாளமர் வீழ்ந்த மறவோன்க லீர்த்தொழுக்கிக்
கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து- நீள்விசும்பிற்
கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்க
னீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று."
-----------
(பாடம்) *'வரக்கடவா.' †'நன்ன ராட்டி.' ‡'நின்னறைக் கொளீஇ.'
இது நீர்ப்படை.
"பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன்
கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை
வான்வழங்கு நீரினுந் தூய்தே யதனாற்
கண்ணீ ரருவியுங் கழீஇத்
தெண்ணீ ராடுமின் றீர்த்தமா மதுவே."
இது நாட்டி நீராட்டியது.
நடுதல் - கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடுதலு மென இருவகையாம்;
உதாரணம்:-
"சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த
நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து
மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித*துக்#
கன்னட்டார் கல்சூழ் கடத்து."
இது கல் நாட்டியது.
"கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து
வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலாய் - நாள்வாய்த்
திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய்
மடைகொளல் வேண்டு மகிழ்ந்து."
இது மறவனை நாட்டியது.
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை - அவன் செய்த புகழைத் தகும்படி பொறித்தலும், அக்கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம்;
உதாரணம்:-
"கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்து
செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார்- மொய்போர்
மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன்
பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது."
இது பெயர் முதலியன பொறித்தது.
"அன்றுகொ ளாபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற்
கின்றுகொள் பல்லா னினமெல்லாங் - குன்றாமற்
செயம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள்
வைம்மினோ பீடம்$ வகுத்து."
இஃது அதற்குச் சிறப்புப் படைத்தது.
---------
(பாடம்) #'பெயர் பொறிப்ப’ $'கோட்டம்.'
வாழ்த்தல்- கால் கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச்செய்து வாழ்த்தலும், பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்தலுமென இருவகையாம்.
உதாரணம்:-
"ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த
நீவாழ வாழிய நின்னடுக-லோவாத
விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த
பொற்கோட் டிமயமே போன்று."
இது கல்வாழ்த்து.
"பெருங்களிற்றடியில்" என்னும் (263) புறப்பாட்டில் 'தொழாதனை கழிதலோம்புமதி' என வாழ்த்தியவாறு காண்க.*
என்று இரு மூன்றுவகையிற் கல்லொடு புணர- என்று முன்னர்க் கூறப்பட்ட அறுவகை இலக்கணத்தையுடைய கல்லொடு பின்னரும் அறுவகை இலக்கணத்தையுடைய கற் கூடச்; சொல்லப்பட்ட- இக்கூறப்பட்ட பொதுவியல்; எழு மூன்று† துறைத்து- இருபத்தொரு துறையினையுடைத்து என்றவாறு.
ஆரமரோட்டன் முதலிய எழுதுறைக்குரிய மரபினையுடைய கரந்தையும், அக் கரந்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற் கூறிய கல்லுங்கூடக், காந்தளும் பூவும் வள்ளியுங் கழனிலையும் உன்னநிலையும் பூவைநிலையும் உளப்பட இச்சொல்லப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை யுடைத்தெனக் கூட்டுக. மாயோனிறம்போலும் பூவைப் பூ நிறமென்று பொருவுதல் பூவைநிலையென்றால், ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல்வேண்டும்; ஆசிரியர் அவை கூறாமையின், அது புலனெறிவழக்க மன்மை யுணர்க. இதனுட் கரந்தைப்பகுதி ஏழும் வேறு கூறினார்; காட்டகத்து மறவர்க்குங் குறுநிலமன்னர்க்கும் அரசன் படையாளர் தாமே செய்தற்கும் உரிமையின். கற்பகுதி வேத்தியற் புறத்திணைக்கும் பொதுவாகலின் வேறுகூறினார். ஏனைய அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகலின் வேறுகூறினார்.
இனித் துறையென்றதனால் ஒன்று பலவாம். அவை, கற் காணச்சேறலும்,‡ இடைப்புலத்துச் சொல்லுவனவுங், கண்டுழியிரங்குவனவுங், கையறுநிலையும், பாணர் கூத*தர் முதலியோர்க் குரைப்பனவும், அவர் தமக்குரைப்பனவும் போல்வன கற்காண்டலின் பகுதியாய் அடங்கும்; கால் கொள்ளுங்காலத்து, மாலையும் மலரும் மதுவுஞ் சாந்தும் முதலியன கொடுத்தலும் அனையோற்கு இனைய கல் தகுமென்றலுந், தமர்பரி்ந்திரங்கலும் முதலியன கால்கோளின் பகுதியாய் அடங்கும்;
---------
(பாடம்) *'உணர்க.' † 'மூவேழ்.' ‡'காண்டற்கட் சேறலும்.'
நீர்ப்படுக்குங்கால் ஈர்த்துக்கொண்டொழுக்கலும், ஏற்றிய சகடத்தினின்று இழிந்த வழி ஆர்த்தலும், அவர் தாயங்கூறலும் முதலியன நீர்ப்படையாய் அடங்கும்; நடுதற்கண், மடையும் மலரும் மதுவும் முதலியன கொடுத்துப் பீலித்தொடையலும் மாலையும் *காற்றிப் பல்லியம் இயம்ப விழவுச் செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடங்கும்; பெயரும் பீடும் எழுதுங்காலும் இப் பகுதிகள் கொள்க; நாட்டப்படுங் கல்லிற்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைச் சிறப்புக்களும் படைத்தல் பெரும்படைப்பகுதியாய் அடங்கும்; வாழ்த்தற்கண்ணும் இதுதான் நெடிதுவாழ்கவெனவும் இதன் கண்ணே அவனின்று நிலாவுக வெனவும் பிறவுங் கூறுவனவு மெல்லாம் வாழ்த்துதலாய் அடங்கும்; ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதி கூறிக்கொள்க.
இனிப் "பரலுடைமருங்கிற் பதுக்கை" என்னும் (264) புறப்பாட்டினுள் "அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித்- தினி நட்டனரே கல்லும்" எனக் கன்னாட்டுதல் பெரும்படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டு நாட்டோர் முறைமை யென்பது சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க. "பெயரும் பீடு மெழுதி யதர்தொறும் -பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்" என அகத்திற்கும் (அகம்-131) வருதலிற் பொதுவியலாயிற்று; இவை ஒரு செய்யுட்கண் ஒன்றும் பலவும் வருதலும், அகத்தின் கண் வருதலுஞ் சுட்டி யொருவர் பெயர் கோடலுங், கொள்ளாமையும் உடையவென்று உணர்க.
இப்பொதுவியலின்பின் வஞ்சி வைத்தார், வஞ்சிக்கண்ணும் பொதுவியல் வருவனவுள என்றற்கு அது "வேந்து வினை முடித்தனன்" என்னும் (104) அகப்பாட்டினுட் சுட்டி
யொருவர் பெயர் கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க. (5)
------------
61.
- வஞ்சி தானே முல்லையது புறனே.
இது, தம்முண் மாறுபாடு கருதி வெட்சித்திணையை நிகழ்த்திய இருபெரு வேந்தருள் தோற்றோ னொருவன் ஒருவன்மேற்செல்லும் வஞ்சித்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனாமென்கின்றது. வஞ்சியென்றது ஒருவர்மே லொருவர் சேறலை.
அதற்கு வஞ்சி சூடிச் சேறலும் உலகியல்.
(இ-ள்.) வஞ்சி தானே-வஞ்சியெனப்பட்ட புறத்திணை; முல்லையது புறனே-முல்லை யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.
ஏனை உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை. பாடாண்டிணைக்குப் பிரிதலின்மையிற் 'பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே' (தொ-பொ-புற-24) என்ப. ஏனைய பிரித்துக் கூறுவர். முதலெனப்பட்ட காடுறையுலகமுங், கார் காலமும், அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும், அரசன் பாசறைக்கட் டலைவியைப் பிரிந்து இருத்தலும், அவன் தலைவி அவனைப் பிரிந்து மனைவயி னிருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒப்பச் சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர் வெப்பம் நீங்கத் தண்பெயல்பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றோடு சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம் முதல் கருவுரியும் வந்தனவாம். முல்லைப்பாட்டினுட்,
"கான்யாறு தழீஇய வகனெடும் பறவிற்
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி
வேட்டுப் புழையருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி." (பத்து-முல்லை:24-8)
என்பதனா னுணர்க. (6)
------------
62.
- எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே.
இது முல்லைக்குப் புறனென்றவஞ்சித்திணை இன்ன பொருட்டென்கின்றது.
(இ-ள்.) எஞ்சா மண் நசை-இருபெருவேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே; அஞ்சுதகத் தலைச்சென்று-ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அந் நாட்டிடத்தே சென்று; வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று - ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றங்கோடல் குறித்தன் மாத்திரைத்து வஞ்சித்திணை என்றவாறு.
ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம் மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவரென் றுணர்க.எதிர் சேறல் காஞ்சி என்பரா
லெனின், *காஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை யுணர்க
-------------
* தொல்-பொருள்-புறத்-22
ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான்* செல்வுழித் தகடூரிடை அதிகமான்+ இருந்ததாம். இங்ஙனம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற்கூறுந் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாமென்றுணர்க. (7)
-----------
63.
- இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல்
வயங்க லெய்திய பெருமை யானுங்
கொடுத்த லெய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
பொருளின் றுய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
வொருவன் றாங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வெள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக்
கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே.
இது முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்று# துறைத் தென்கின்றது.
(இ-ள்.) இயங்கு படை அரவம்-இயங்குகின்ற இரு படை யெழுச்சியின் ஆர்ப்பரவமும்;
உதாரணம்:-
"விண்ணசை இச் செல்கின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப
மண்ணாசைஇச் செல்கின்றான் வாள்வேந்த-னெண்ண
மொருபாற் படர்தரக்கண் டொன்னார்த முள்ள
மிருபாற் படுவ தெவன்."
(பெரும்பொருள் விளக்கம்-புறத்திரட்டு-774-பகைவயிற் சேறல்)
*’இவன் தகடூ ரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை’ யாவன்.
(பாடம்) + ‘அதியமான்.’ # ‘வஞ்சித்திணைத்துறை பதின் மூன்றென்கின்றது.’
"சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்" என்னும்(31) புறப்பாட்டும் அது.
"இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல்
வடிமணி யணைத்த பனைமரு# ணோன்றாட்
கடிமரத்தாற் களிறணைத்து
நெடுநீர துறைகலங்க
மூழ்த்திறுத்த வியன்றானையொடு
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து
வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற்
செவ்வா யெஃகம் வளைஇய வகழிற்$
காரிடி& யுருமி னுரறுபு முரசிற்
கால்வழங் காரெயில் கருதிற்
போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே." (பதிற்றூ-33)
இப் பதிற்றுப்பத்தும் அது.
"போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ
பார்ப்புர வெண்ணான்கொல் பார்வேந்த -னூர்ப்புறத்து
நில்லாத தானை நிலனெளிய நீளிடைப்
புல்லார்மேற் செல்லும் பொழுது."
இஃது எதிர்செல்வோன் படையரவம்.
எரிபரந்து எடுத்தல் - இருவகைப் படையாளரும் இருவகைப் பகைப்புலத்துப் பரந்து சென்று எரியை எடுத்துச் சுடுதலும்;
இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க.
உதாரணம்:-
"வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளை வயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
யெல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கஞ்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பி றானை." (புறநா-16)
எனவும்,
------------
(பாடம்) #'அலைத்தபனை.’ $'அகழிக்.' &'காரிடை.'
"களிறு கடைஇயதாட்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையால்*
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து"
என்னும் (7) புறப்பாட்டினுள்,
"எல்லையு மிரவு மெண்ணாய்† பகைவ
ரூர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"
எனவும் வரும்.
இவை கொற்றவள்ளைப் பொருண்மையவேனும் உட்பகுதி பலவுந் துறையாய் வருதலின், எரிபரந் தெடுத்தற்கும் உதாரணமாயின.
வயங்க லெய்திய பெருமையானும்- ஒருவர் ஒருவர்மேற் செல்லுங்காற் பிறவேந்தர் தத்தந் தானையோடு அவர்க்குத் துணையாயவழி அவர் விளக்கமுற்ற பெருமையும்:
உதாரணம்:-
"மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம்
பாற்செல்லச் செல்லும் பரிசினா- னாற்கடல்சூழ்
மண்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து
வெண்மதிபோன் மேம்பட்டான் வேந்து."
எனவரும்
இஃது இருவருக்கும் பொது.
கொடுத்தல் எய்திய கொடைைமயானும்- மேற்செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கல முதலியன கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்தொழிலும்;
உதாரணம்:-
"வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்
தேத்துநர்க் கீதுமென் றெண்ணுமோ-பாத்தி
யுடைக்கலி மான்றே ருடனீந்தா னீந்த
படைக்கலத்திற் சாலப் பல."
எனவரும்.
"சிறாஅர் துடியர் பாடுவன் மகாஅர்
தூவெள் ளறுவை மாயோற் குறுகி
யிரும்பூட் பூச‡ லோம்புமின் யானும்
-----------
(பாடம்) *'கணைபொருத கவின்வண்கையால்.'
†'என்னாய்.' ‡'இரும்புட்பூசல்.'
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவெ
னெம்போற் பெருவிதுப் புறுக வேந்தே
கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத்* தன்றலை
மணிமருண் மாலை சூட்டி யவன்தலை
யொருகாழ் மாலை தான்மலைந் தனனே" (புறம்-291)
என்பதும் அது.
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்- எடுத்துச் சென்ற இருபெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இரவும் பகலும் பலகாலும் தாம் ஏறி அந் நாட்டைக் காவல் புரிந்தோரைக்கொன்ற கொற்றமும்,
உதாரணம்:--
"நீணில வேந்தர் நாட்டுசெல்† விருப்பத்துத்
தோள்சுமந் திருத்த லாற்றா ராள்வினைக்
கொண்டு மாக்க ளுண்டியின் முனிந்து
முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை
வென்றியது முடித்தனர் மாதோ
யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே"
என வரும்.
"யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய‡ மதின்மர முருக்கி
நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்
பரந்தாடு கழங்கழி§ மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பி
னறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழுவிமிழ் மூதூர்" (பதிற்று-15)
என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய இடம் அப்பாற் படும்.
- ------------
(பாடம்) *'வென்றோர்க்கு' †'வேந்த ருடன்செல்'
‡ 'தைஇய' §'பரந்தாடு வழங்குவழி'
மாராயம் பெற்ற நெடுமொழியானும் - வேந்தனாற் சிறப் பெய்திய அதனாற், றானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக்கூற்றுச் சொல்லும்;
சிறப்பாவன ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படைவேண்டியவாறு செய்க என்றது. இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வரையறை செய்தது.
உதாரணம்:-
"போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாந்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே
ரேனாதிப் பட்டத் திவன்."
இது பிறர் கூறிய நெடுமொழி.
"துடியெறியும் புலைய
வெறிகோல் கொள்ளு மிழிசின
கால மாரியி னம்பு தைப்பினும்
வயற்கெண்டையின் வேல்பிறழினும்
பொலம்புனை யோடை யண்ணல் யானை
யிலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினு
மோடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுந்#
தண்ணடை பெறுதல் யாவது படினே
மாசின் மகளிர் மன்ற$ னன்று
முயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால்
வம்ப& வேந்தன் றானை
யிம்பர் நின்றுங் காண்டிரோ வரவே." (புறம்-287)
இது தண்ணடை பெறுகின்றது. சிறிது சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது. போர்க்களம் புக்கு நெடுமொழி கூறலும் ஈண்டு அடக்குக.+
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் - பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதியும்;
- ----------
(பாடம்) # 'பிறழுந்.' $ 'மண்ண.' & 'வம்பே.' + 'அடங்கும்.'
உதாரணம்;-
"மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ
னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற்
கையிகந் தமருந் தையணற் புரவித்
தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின்
விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத்
தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட்
டண்ணல் யானை யெறித லொன்றோ
மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல்
கடியமை கள்ளுண் கைவல் காட்சித்
துடிய னுண்க ணோக்கிச் சிறிய
கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன்
வேறிரித் திட்டு நகுதலு நகுமே"*
இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது.
"பல்சான் றீரே பல்சான் றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
வமரி னிட்ட வருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே
முரசு முழங்கு தானைநும்† அரசு மோம்புமி
னொளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின்
னெனைநாட் டாங்குநும்‡ போரே யனைநா
ளெறியா ரெறிதல்§ யாவண தெறிந்தோ¶
ரெதிர்சென் றெறிதலுஞ் செல்லா$ னதனா
லறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
பலமென் றிகழ்ந்த லோம்புமி னுதுக்கா
ணிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
வெல்லிடைப் படர்தந் தோனே கல்லென்
வேந்தூர் யானைக் கல்ல
தேந்துவன் போலான்ற** னிலங்கிலை வேலே" (புறம்-301)
இதுவு மது.
வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்- தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழிவிசையோடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற்போலத் தன்மேல் வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்;
- ----------
(பாடம்) *'இது தகடூர்யாத்திரை' †'தானையு' ‡'டானு' §'அறிதல்'
'அறிந்தோன்' $'சொல்லா' **'போலானி'
உதாரணம்:--
"கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன்
றார்ப்பற்றி யேர்தரு தோணோக்கித் –தார்ப்பின்னர்
ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின்
றேர்க்குழ நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த
கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக்
கிணைவனை நோக்கி நகும்."
(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு- 881)
என வரும்,
இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது.
"வேந்துடைத் தானை முனைகெட நெரிதலி
னேந்துவாள் வலத்த னொருவ னாகித்
தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்
காழி யனையன் மாதோ வென்றும்
பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப்#
புரவிற் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே." (புறம்- 330)
என்பதும் அது.
"வருகதில்வல்லே" என்னும் (287) புறப்பாட்டும் அதன் பாற்படும். முன்னர் மாராயம் பெற்றவனே பின் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க.
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் - வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று தானே போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர்$ முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக்& கொடுத்தன் மேயின பெருஞ்சோற்று நிலையும்;
உதாரணம் :-
"இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினை குருகிறை கொள்ளு
மல்குறு கானலோங் கிருமண லடைகரைத்
தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல
விலங்குநீர்+ முத்தமொடு வார்துகி ரெடுக்குந்
தண்கடற் படப்பை மென்பா லனவுங்
காந்தளங் கண்ணிக்@ கொலைவில் வேட்டுவர்
செங்கோட் டாமா னூனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங்
குன்றுதலை மணந்த புன்புல வைப்புங்
------------
(பாடம்) # 'வாடி.' $ 'போல வந்தோர்.' & ஏடுகளில் 'உண்டை' என்றுள்ளது.
+ 'விலகுகதிர்.' @ 'காந்தட் கண்ணி.'
-
கால மன்றியுங் கரும்பறுத் தொழியா
தரிகா லவித்துப்# பல்பூ விழவிற்
றேம்பாய் மருத முதல்படக் கொன்று
வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருஞ்
செழும்பல் வைப்பிற் பழனப் பாலு
மேன லுழவர் வரகுமீ திட்ட
கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலந் தழீஇய புறவணி வைப்பும்
பல்பூஞ் செம்மற் காடுபய மாறி
யரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்
டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும்
விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து
கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க$
முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
கடுஞ்சினங் கடாஅய முழங்கு மந்திரத்
தருந்தெறன் மரபிற் கடவுட் பேணிய
ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங்
கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூய நிறைமகி& ழிரும்பலி
யெறும்பு மூசா விறும்பூது மரபிற்
கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார
வோடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற்
பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவ
ருருமுநில னதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து@
பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங்
கடுஞ்சின வேந்தேநின் றழங்கு குரன்+ முரசே." (பதிற்று-30)
என வரும்.
இது பதிற்றுப் பத்து.
துறை யெனவே கள்ளும் பாகும் முதலியனவும் அப் பாற்படும்.
"வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டை##யென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே."$$ (புறம்-286.)
-----------
(பாடம்) # 'அரிகால் வித்தும்.' $ 'நடுங்கும்.' & 'நிரைமகிழ்.'
@ 'கோள் புணர்ந்து.' + 'தழங்குரன் முரசே.' ## 'எண் சிறுவனை.'
$$ "போர்ப்பித் திலவே,' 'போர்ப்பித் திலனே.'
"உண்டியின் முந்தா துடனுண்பான் றண்டேறன்
மண்டி வழங்கி வழீஇயதற்கோ- கொண்டி
மறவர் மறமிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க்
குறவிலர் கண்ணோடா தோர்ந்து"
என்பன கொள்க.
வென்றோர் விளக்கமும்- அங்ஙனம் பிண்டமேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் மிகை கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியாற் றிறைகொடுப்ப அதனை வாங்கினார்க்கு உளதாகிய விளக்கத்தைக் கூறலும்;
உதாரணம்:-
"அறா அ யாண ரகன்கட் செறுவி
னருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவினை* மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லி†
னம்பண வளவை யுறைகுவித் தாங்குக்
கடுந்தே றுறுகிளை‡ மொசிந்தன துஞ்சுந்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாஅரி
னலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே§
யூரெரி கவர வுருத்தெழுந் துரைஇப்
போர்சுடு கமழ்புகை¶ மாதிர மறைப்ப
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயி
லாரெயிற் றோட்டி வௌவினை யோற்றொடு
கன்றுடை யாயந் தரீஇப் புகல் சிறந்து
புலவுவி லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற் பொழுது நினையூஉ
வான்பயம் வாழ்நர் கழுவுடலை மடங்கப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென
வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற்
பெருங்களிற் றியானையொ டருங்கலந் $தராஅர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்;
பலிகொண்டு** பெயரும் பாசம் போலத்††
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி
யுரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி
யறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே" (பதிற்று- 71)
என வரும்.
-------------
(பாடம்) *'செறிவளை' †'செழுஞ் செந்நெல்லின்' ‡ 'கடுந்தேற் றுறுகிளை' §'உடற்றிசி னோரே' 'கமம்புகை' $'தெறாஅர்.' **'பலிகொடு'
††'பசாசம்போல'
"இருங்கண் யானையோ டருங்கலந் *தெறுத்துப்
பணிந்துகுறை மொழித லல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே"
இதுவும் அது.
இவை பதிற்றுப்பத்து.
தோற்றோர் தேய்வும்- அங்ஙனந் திறைகொடுத்தோரது குறைபாடு கூறுதலும்;
உதாரணம்:--
"வாஅன் மருப்பிற் களிற்றியானை நிரை
மாமலையிற் கணங்கொண்டவ
ரெடுத்தெறிந்த விறன்முரசங்
கார்மழையிற் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியன்மார்பிற்†
றொடிசுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வா
ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ
யிடுக திறையே புரவெதிர்ந் தோர்க்கென
வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
வனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசை
தொலையாக் கற்பநின் தெம்முனை யானே" (பதிற்று-80)
என வரும்.
இது பதிற்றுப்பத்து
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்;ளையும்- வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற்றோனை விளங்கக்கூறும் வள்ளைப்பாட்டும்:
வள்ளை, உரற்பாட்டு. ‡கொற்றவள்ளை தோற்ற கொற்றவன் கொடுக்குந் திறை என்று சொல்வாரும் உளர்.
- ----------
(பாடம்) *'துறுத்து' †'வேந்து மொய்ம்பிற்'
‡'இவ்வாக்கியம் ஏடுகளில் இல்லை'
உதாரணம்:--
"வேரறுகு பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து
ஊரறிய லாகா கிடத்தனவே-போரின்
முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்
அகையிலைவேல் காய்த்தினார் நாடு"
(முத்தொள்ளாயிரம் . புறத்திரட்டு -798 பகைப்புலம் பழித்தல்)
என வரும்,.
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ- அங்ஙனம் வென்றுந் தோற்றும் மீண்ட வேந்தர் தம்படையாளர் முன்பு போர்செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்டழிந்தவர்களைத் தாஞ் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியுந் தழுவிக்கோடலுடனே முற்கூறியவற்;றைத் தொகுத்து;
படைதட் டழிவோர் என்று மாறுக. தழிச்சுதல் தழிஞ்சியாயிற்று. ""பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின்" என்றாற் போல;
உதாரணம்:--
"தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும்
பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன்- விழிச்சிறப்பிற்
சொல்லிய சொல்லே மருந்தாகத் துகர்ந்தன.
புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்"
(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு -793-பாசறை)
என வரும்.
வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா*
இருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப்
புடைவீ ழ்ந்துகி லிடவயிற் றழீஇ
வாடோட் கோத்த வன்கட் காளை
சுவன்மிசை யசைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே(நெடுநல்வாடை 176-188)
இதுவும் அது.
கழிபெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே-மிகப்பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறைபதின்மூன்றும் என்றவாறு.
- ---------
(பாடம்) *'பாய்பரிப் புரவி'
வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்தனவெல்லாம் இருவர்க்கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ் சிறப்பென்றார்.
இனி இயங்குபடையரவமெனவே இயங்காத வின்ஞாணொலி முதலியனவுங் கொள்க.
இத்திணைக்கும் பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப் படுத்தலுங்கொள்க. அவை:--கொற்றவை நிலையுங், குடைநாட்கோளும், வாணாட்கோளும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவைபோல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும்,.
நிரைகோடற்கு ஏவிய அரசருள் நிரைகொண்டோர்க்கும் நிரைகொள்ளப்பட்டோர்க்கும் விரைந்து ஏகவேண்டுதலிற் குடைநாட்கோளும் வாணாட்கோளும் இன்றியமையாதன அன்மையின் ஈண்டுக் கூறாராயினார். அவை உழிஞைக்குக் கூறுப, அதற்கு இன்றியமையாமையின்.
இனித் துணைவந்த வேந்தருந் தாமும் பொலிவெய்திய 'பாசறைநிலை'* கூறலும், அவர் வேற்றுப்புலத்திருத்தலின் ஆண்டு வாழ்வோர் பூசலிழைத்து† இரிந்தோடப் புக்கிருந்த
நல்லிசை வஞ்சி‡ முதலியனவும் 'வயங்கலெய்திய பெருமைப்' பாற்படும்.
துணைவேண்டாச் செருவின்றி நாடகவழக்கு; துணை வேண்டுதல் உலகியல்வழக்கு. நீயே புறவினல்ல லன்றியும் பிறவும்" (46) என்னும் புறப்பாட்டும் "வள்ளியோர்ப் படர்ந்து" (47) என்னும் புறப்பாட்டும் முதலியன. 'துணைவஞ்சி' என்பார்க்கு அவை மேற்செலவின்கண் அடங்காமையிற் பாடாண்டிணை யெனப்படு மென்றுரைக்க.
இனி மேற்செல்வான் மீண்டுவந்து பரிசில் தருமென்றல் வேத்திய லென்றாகலிற் பரிசிலர்க்குக் கொடுத்தலும் படைக்கல முதலியவற்றோடு கூறினார்,.
- ---------
* பாசறைநிலை:-- "மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்துறப்பவும்- பதிபெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று" என்பது புற-வெ-மாலை-வஞ்சி-21.
(பாடம்) † 'பூசலிசைந்து'
‡ 'நல்லிசை வஞ்சி:- 'ஒன்னாதார் முனைகெடவிறுத்த வென்வேலாடவன் விறன் மிகுத்தன்று" என்பது புற-வெ-மாலை-வஞ்சி-24.
இனிக் கடிமரந்தடிதலுங், களிறும் மாவுந் துறைப்படிவனவற்றைக் கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின்பாற்படும். அவை *கருவூரிடைச் சேரமான் யானையை யெறிந்தாற் போல்வன.
இனிப் புண்பட்டோரை முன்னர்ச்செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வனபோல்வனவுந் தழிஞ்சிப் பாற்படும். 'இதனை முதுமொழிவஞ்சி'† என்பர். ஆண்டுக் கொடுத்தல்‡ முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை 'அழியுநர் புறக்கொடை அயில்வா ளோச்சாக்- கழிதறு கண்மை' (புற-வெ-மாலை-வஞ்சி-20) யெனின், அது ஒருவன் றாங்கிய பெருமைப்பாற்படு மென்றுணர்க.
இச் சூத்திரத்து ஆன் எல்லாம் இடைச்சொல். இது செவ்வெண் உம்மை எண்ணினை இடையிட்டுக்கொண்டது,.
இனி ஏனையவற்றிற்கும் ஆன் உருபுகொடுத்து அதற்கீற்பப் பொருள் கூறலும் ஒன்று. (8)
-------------
64.
- உழிஞை தானே மருதத்துப் புறனே.
இஃது உழிஞைத்திணை அகத்திணையுண் மருதத்திற்குப் புறனா மென்கின்றது.
(இ-ள்) உழிஞை தானே- உழிஞை யென்று கூறப்பட்ட புறத்திணை; மருதத்துப் புறனே- மருதமென்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.
- -------
*'தகடூர்' என்றிருத்தல் வேண்டுவது. பிரதிகளிற் 'கருவூர்' என்றே காணப்படுவது.
†'முதுமொழிவஞ்சி:-- தொன்மரபின் வாட்குடியின்-முன்னோனது நிலைகிளந்தன்று' என்பது புற-வெ-மாலை-வஞ்சி-13.
‡"குளிறு முரசம்' (புற-வெ-மாலை-வஞ்சி-13) எனவரும் வெண்பாவில் "தண்ணடை நல்கல் தகும்" என்பது பற்றி ஆண்டுக் கொடுத் தல் என்றார்,.
இருபெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர் செலற் காற்றாது போய் மதிலகத்திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும் மருதத்திடத்த தாதலானும், அம்மதிலை முற்றுவோனும் அந்நிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருந்த ஒப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம்போல் இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையானுஞ், சிறுபொழுதினும் விடியற்காலமே போர்செய்தற்குக் காலமாதலனும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று மருதநிலத்து மதிலாதல் "* அகநாடு புக்கவ ரருப்பம் வௌவி" யனப் பாட்டிற் கூறியவாற்றானும், "பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற்- றுணங்குகலனாழியிற் றோன்று மோரெயின் மன்னன்" (புறம்-338) என்றதனானுங் "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார், நிலைக் கெளிதா நீர தரண் (திருக்குறள்-அரண்-5) என்றதனானு முணர்க. மற்று எதிர்சென்றானை வஞ்சிவேந்தன் என்னு மெனின், அஃது இருவருந் தத்தம் எல்லைக்கண் எதிர்சென்றி இறுப்பரென்றலின் வஞ்சியாகாதாயிற்று. (9)
------------
65.
- முழுமுத லரண முற்றலுங் கோடலும்
அனைநெறி மரபிற் றாகு மென்ப.
இது மேற்கூறிய உழிஞைத்திணையது பதுவிலக்கணம் உணர்த்துகின்றது.
(இ-ள்) முழுமுதல் அரணம்- வேற்றுவேந்தன் குலத்துக்கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை முற்றலும் கோடலும்- சென்ற வேந்தன் வளைத்தலும் இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாகிய; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப- இரண்டு வழியாகிய இலக்கணத்தை உடைத்து அவ் வுழிஞைத்திணை என்று கூறுவர் புலவர் என்றவாறு.
முழு அரணாவது மலையுங் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில்†. அது வஞ்சனைபலவும் வாய்த்துத், தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடுபுறஞ்சூழ்ந் ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதண மும் ஏப்புழை ஞாயிலும் ஏனிய பிறவும் அமைந்து, எழுவுஞ் சீப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம்.
இனி மலையரணும் நிலவரணுஞ் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல வடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்களும் அமைந்தனவும் அன்றிக் காட்டரணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம். இங்ஙனம் அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந் தழித்தலுங் கலியூழி தோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இவை வஞ்சமுடைத்தாயிற்று.
- ---------
* மதுரைக் காஞ்சி- 149.
(பாடம்) †'செறலருமதில்' 'சேமவருமதில்'
சிறப்புடை அரசியலாவன, மடிந்த உள்ளத் தோனையும் மகப்பெறாதோனையும் மயிர்குலைந்தோனையும் அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் படையிழந் தோனையும் ஒத்தபடையெடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையுங் கொல்லாது விடுதலுங் கூறிப், பொருதலும் முதலியனவாம்
இனி ஆகுமென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க. (10)
---------------
66.
- அதுவே தானு மிருநால் வகைத்தே.
இது முற்கூறிய முற்றலுங் கோடலும் ஒருவன் தொழிலன்றென்பதூஉம் முற்கூறியபோல ஒருதுறை இருவர்க்கு முரியவாகாது, ஒருவர்க்கு நான்குநான்காக எட்டாமென்பதூஉங் கூறுகின்றது.
(இ-ள்.) அதுவே தானும்-அவ்வுழிஞைத் துறைதானும்; இருநால் வகைத்து-மதில்முற்றிய வேந்தன் கூறு நான்கும் அகத்தோன்கூறு நான்குமென எட்டு வகைத்து என்றவாறு.
அது மேற்கூறுப. (11)
----------------
67.
- கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புந்
தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமும்
அகத்தோன் செல்வமு மன்றி முரணிய
புறத்தோ னணங்கிய பக்கமுந் திறப்பட
வொருதான் மண்டிய குறுமையு முடன்றோர்
வருபகை பேணா ராரெயி லுளப்படச்
சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே.
இது முற்கூறிய நாலிருதுறைக்கும் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது.
(இ-ன்.) கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்-பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டடான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக்* குறித்த வெற்றியும்; தன்னை இகழ்ந்தோரையுந் தான் இகழ்ந்தோரையும் கொள்ளாரென்ப.
-
- --------
(பாடம்) * ‘குறியிடுதலை.’
உதாரணம்:--
"மாற்றுப் புலந்தோறு மண்டில மாக்கள்செல*
வேற்றுப் புலவேந்தர் வேல்வேந்தர்க் -கேற்ற
படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னா
ருடையன தாம்பெற் றுவந்து."
(பெரும்பொருள் விளக்கம்-புறத்திரட்டு-791-பாசறை)
"கழிந்தது பொழிந்தென" என்னும் (203) புறப்பாட்டினுள்
"ஒன்னா- ராரெயி லவர்கட் டாகவு நுமதெனப்
பாண்கட னிறுக்கும் வள்ளியோய்"
என்பதும் அது.
"ஆனாவீகை யடுபோர்" என்னும் (42) புறப்பாட்டும் அது.
இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது.
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்- அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலைவன் முதலியோரும் வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தலும்;
உதாரணம்:--
"மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந்
தெழுவாளோ னேற்றுண்ட தெல்லா- மிழுமென
மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ
விட்டெரிய விட்ட மிகை"
(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு-எயில் காத்தல்)
என வரும்.
"மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தான்முன்னிய துறைபோகலின்"
(பத்து-பட்டின-271-273)
என்பதும் அது, மாற்றார் மதிலும் அகழுஞ் சுட்டிக் கூறலின்.
----------
(பாடம்) *'போர்மண்டி மாக்களங்கொள்'
"அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந்
தண்ணான் பொருனை வெண்மணற் சிதையக்
கருங்கைக் கொல்ல னரஞ்செய் யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
வாங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே" (புறம்-36)
இது புறத்துழிஞையோன்கண் தூதன்* அவன்சிறப்பு எடுத்துரைத்தத.
"வயலைக் கொடியின் வாடிய மருங்கு†
லுயவ லூர்திப் பயலைப் பார்ப்பா
னெல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே
யேணியுஞ் சீர்ப்பு மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனவே"‡ (புறம்-305)
இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன் திறங் கண்டோர் கூறியது.
இவை புறம்.
தொல் எயிற்கு இவர்தலும்- ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப்பகலுள் அழித்துமென்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தலும்;
உதாரணம்:-
"இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப்
பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானா- லெற்றாங்கொ
லாறாத வெம்பசித்தீ யாற வுயிர்பருகி
மாறா மறலி வயிறு"
எனவரும்.
---------------
(பாடம்) *'தூதானவன்' †'மருங்கின்' ‡'களைந்தனனே'
"மறனுடை மறவர்க் கேறவிடனின்றி
நெய்யோ டையவி யப்பியெவ் வாயு
மெந்திரப் பறவை* யியற்றின நிறீஇக்
கல்லுங் கவணும் கடுவிசைப் பொறியும்
வில்லும் கணையும் பலபடப் பரப்பிப்
பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு
மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு
முந்தை மகளிரை யியற்றிப் பின்றை
யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச்
சுட்டல் போயின் றாயினும் வட்டத்†
தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந்
தாக்கருந் தானை‡ யிரும்பைறை
பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்நதே.
இப் பொன்முடியார் பாட்டும் அது.
இதனாற் பூச்சூடுதல் பெற்றாம்.
தோலின் பெருக்கமும்- அங்ஙனம் மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் குடுகுங் கேடகமும் மிடையக்§ கொண்டுசேறலும்;
உதாரணம்:-
"இருசுட ரியங்காப்¶ பெருமூ திலங்கை
நெடுந்தோ ளிராமன் கடந்த ஞான்றை
யெண்கிடை மிடைந்த பைங்ட் சேனையிற்
பச்சை போர்த்த பல்புறத் தண்டை
யெச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தலிற்
கடல்சூ ழரணம் போன்ற
துடல்சின வேந்தன் முற்றிய வூரே"
(ஆசிரியமாலை, புறத்திரட்டு, 852-எயில்கோடல்)
என வரும்.;
- "நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி
யின்றுநாம் வைக லிழிவாகும் - வென்றொளிரும்
பாண்டி னிரைதோற் பணியார் பகையரணம்
வேண்டி லெளிதென்றான் வேந்து"
(புற-வெ-மாலை-உழிஞை-12)
இதுவும் அது.
அரணத்தோர் $தத்தம் பதணத்து நிற்றலிற் றோல் கூறிற்றிலர்.
- ---------
*'ஆண்டலை யடுப்பும்..........சென்றெறி சிரலும்' எனச் சிலப்பதிகாரம் அடைக்லக்காதை 211-214 ஆவது வரிகளிற் கூறியன போல்வன.
(பாடம்) †'விட்ட' ‡'தகடூரூர்ந்த பெருஞ்சேர லிரும்பொறை.
§ 'பரிசையும் பலகையும்.' 'வழங்கா.' $'கருதின.'
இந்நான்கும் முற்றுவோர்க்கே உரியவெனக் கொள்க.
அகததோன் செல்வமும்-அகத்து உழிஞையோன் குறைவில்லாத பெருஞ்செல்வங் கூறுதலும்;
அவை படை குடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் ஏமப்பொருண் மேம்படு பண்டங்களும் முதலியவாம்.
உதாரணம்-
"பொருசின மாறாப் புலிப்போத் துறையு
மருவரை கண்டார்போ லஞ்சி-யொருவருஞ்
செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் றேர்வேந்த
னெல்லார்க்கு மெல்லாங் கொடுத்து."
(தகடூர்யாத்திரை, புறத்திரட்டு-857-எயில் காத்தல்)
"அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினு
முழவ ருழாதன நான்குபய னுடைத்தே
யொன்றே. சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றவன் சுனையே யாங்கு
மரந்தோறும் பிணித்த களீற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்
யானறி குவனது கொள்ளு மாறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
வாடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்று மொருங்கீ யும்மே." (புறம்-109)
என்னும் புறப்பாட்டும் அது.
அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்-மாறுபட்ட புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த்தொழிலான் வருத்திய கூறலும்;
உதாரணம்:-
"கலையெனப் பாய்ந்த மாவு மலையென
மயங்கம ருழந்த யானையு மியம்படச்
சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை
பலபுறங் கண்டோர் முன்னா ளினியே
யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே
மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை
மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக்
களையாக் கழற்காற் கருங்க ணாடவர்
உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப#
மிளையோ$ யின்று நாளை நாமே
யுருமிசை கொண்ட மயிர்க்கட்
டிருமுர சிரங்க வூர்கொள் குவமே." (தகடூர் யத்திரை)
என வரும்.
இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன்படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது.
திறப்பட ஒரு தான் மண்டிய குறுமையும் - அகத்திருந்தோன் தன்ன ரணழிவு தோன்றியவழிப் புறத்துப் போர்செய்யுஞ் சிறுமையும்;
உதாரணம்:-
வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக்& காலின்
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த
வொருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத்+
திரிந்த@ வாய்வா டிருத்தாத்
தனக்கிரிந் தானைப்## பெயர்புற நகுமே." (புறம்-284)
என வரும்.
உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில் உளப்பட - புறத்தோன் அக*த்தோன்மேல் வந்துழி அவன் பகையினைப் போற் றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுத லகப்பட;
உதாரணம் :-
"மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென
வையக மறிய வலிதலைக் கொண்ட
தெவ்வழி யென்றி வியன்றார் மார்ப
வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித்
திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற்
புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர்
பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை
யாண்டகை மறவர் மலிந்துபிறர்
தீண்டல் தகாது வெந்துறை யரணே" (தகடூர் யாத்திரை.)
---------
(பாடம்) # 'செறுத்தெழுந் தார்ப்ப.' $ 'ஏறுபோய்.' & 'சூட்டி.' +'பிறையாக.'
@ 'திருந்த.' ## 'தனக்கிரிந்த தானை.'
இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழுவரண் கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று.
இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது.
சொல்லப்பட்ட நாலிருவகைத்தே--மேலிருநால்வகைத்தென்று சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம் உழிஞைத்திணை என்றவாறு,.
முற்கூறிய தொகயேயன்றி ஈண்டுந் தொகைகூறினார், அந்நாலிரண்டுமேயன்றி அவைபோல்வனவும் நாலிரண்டு துறை தோன்று மென்றற்கு. அவை புறத்துவேந்தன் தன் துணையாகிய அரசனையாயினுந் தன் படைத்தலைவரையாயினும் ஏவி அகத்து வேந்தற்குத் துணையாகிய அரசரது முழுமுதலரண் முற்றலும் அவன்றா னதனைக் காவல் கோடலும் நிகழ்ந்தவிடத்தும் இவ் விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம்.
உதாரணம் முற்காட்டியவே வேறுவேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் 'படையியங்கரவ' (புறத்திணை-8) முதலியனவும் அதிகாரத்தாற் கொள்க. அது,
"இலங்குதொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சர
மெரியவிர்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி
கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ
னோன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந்
தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதத்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக்
கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப
நெடுமதி னிரைஞாயிற்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎ
நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ
யொல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே" (பதிற்றுப்பத்து)
எனவரும்.
*இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறுவராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் †'றமிழ் கூறு நல்லுலகத்'தன அல்லவென மறுக்க. இனி ‡முரசுழிஞை வேண்டுவா ருளரெனின் முரசவஞ்சியுங் கோடல் வேண்டுமென மறுக்க.
இனி §ஆரெயிலுழிஞை ¶முழுமுதலரணம் என்றதன்கண்அடங்கும்.
இனி இவற்றின் விகற்பிப்பன வெல்லாம் அத் துறைப்பாற்படுத்திக்கொள்க. (12)
------------
68
- குடையும் வாளு $நாள்கோ ளன்றி
மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச்
சுற்றம ரொழிய வென்று கைக்கொண்டு
முற்றிய முதிர்வு மன்றி முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும்
நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன்
றூர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்
அகமிசைக் கிவர்ந்தோன் பக்கமும் மிகன்மதிற்
குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்
வென்ற வாளின் மண்ணோ டொன்றத்
தொகை நிலையென்னுந் துறையொடு தொகைஇ
வகைநான் மூன்றே துறையென மொழிப.
---------
* ஐயனாரிதனார் உழிஞைப் படலத்துக் கந்தழி, முற்றுழிஞை, காந்தள் என்பனவற்றான் மணிவண்ணன், அவிர்சடையான், மாத்தடிந்தான் இவர் செயலினைக் கூறியவாற்றான் உணர்க.
†'தமிழ்கூறு நல்லுலகத்து' என்பது பாயிரம் (பனம்பாரனார்)
‡ ஐயனாரிதனார் முரசவுழிஞை கூறினார். (புறப்பொருள்-வெ-மாலை-உழிஞை-4)
§ புறப்பொருள்-வெ-மாலை-உழிஞை-11 தொல் -பொருள்-புறத்-10.
(பாடம்) $ 'நாள்கோளன்றியும்'
இஃது எய்தாத தெய்துவித்தது; உழிஞைத்திணையுள் இருபெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறை இதற்கு முன்னர்க் கூறாமையின்.
(இ-ள்.) குடையும் வாளும் நாள்கோள் அன்றி-தன் ஆக்கங்கருதிக் குடிபுறங்காத்து ஓம்பற்கெடுத்த குடை நாட்கொள்ளுதலும் அன்றிப் பிறன்கேடு கருதி வாணாட் கொள்ளுதலும் அன்றி;
புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாள்கொள்ளுமென்க. தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞையெனப் படாதாகலின். அகத்தோனும் முற்று விடல் வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித் தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும். நாள்கொளலாவது நாளும் ஓரையுந் தனக்கேற்பக்கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையா தனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல்;
உதாரணம்:-
"பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி
யிகலரணத் துள்ளவ ரெல்லா-மகநலிய
விண்டஞ்சு மென்ன விரிந்த குடைநாட்கோள்
கண்டஞ்சிச் சிம்பிளித்தார் கண்."
(பெரும்பொருள் விளக்கம்-புறத்திரட்டு - எயில்கோடல்)
இது புறத்தோன் குடை நாள்கோள்.
"குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையென்று
நின்றுயர் வாயிற் புறநிவப்ப-வொன்றார்
விளங்குருவப் பல்குடை விண்மீன்போற் றோன்றித்
துளங்கினவே தோற்றந் தொலைந்து."
(தகடூர் யாத்திரை-புறத்திரட்டு-எயில்காத்தல்)
இஃது அகத்தோன் குடை நாட்கோள்.
"தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி
யழுது விழாக்கொள்வ ரன்னோ-முழுதளிப்போன்
வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர்
நீணாட்கோ ளென்று நினைந்து."
(பெரும் பொருள்விளக்கம் - புறத்திரட்டு-எயில்கோடல்)
இது புறத்தோன் வாணாட்கோள்.
"முற்றரண மென்னு முகிலுருமுப் போற்றோன்றக்
கொற்றவன் கொற்றவா ணாட்கொண்டான்-புற்றிழிந்த
நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல்
வேகக் குழாக்களிற்று வேந்து."
(பெரும் பொருள்விளக்கம்-புறத்திரட்டு - எயில்கோடல்)
இஃது அகத்தோன் வாணாட்கோள்.
மடையமை ஏணிமிசை மயக்கமும்-மீதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசைநின்று புறத்தோரும் அகத்தோரும் போர்செய்தலும்;
உதாரணம்:-
"சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு
மேணி தவிரப்பாய்ந் தேறவும்-பாணியாப்
புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர்
கொள்ளற் கரிய குறும்பு."
இதுபுறத்தோர் ஏணிமயக்கம்.
"இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு
மடையமை யேணி மயக்கிற்-படையமைந்த
ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு
வாயி லெவனாங்கொல் மற்று."
இஃது அகத்தோர் ஏணிமயக்கம்.
இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க.
உதாரணம்:-
"பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க்
கொருவ ருடன்றெழுந்த காலை-யிருவரு
மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியயேணி
விண்ணொடு சார்த்தி விடும்."
(பெரும்பொருள் விளக்கம் - புறத்திரட்டு - எயில்கோடல்)
என வரும்.
கடைஇச் சுற்று அமர் ஒழிய வென்றி கைக்கொண்டு முற்றிய முதிர்வும்-புறத்தோன் தன்படையைச்செலுத்திப் புற மதிலிற் செய்யும் போரின்றாக, அகத்தோன்படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு உண்மதிலை வளைத்த வினை முதிர்ச்சியும், அகத்தோன் தன்படையைச் செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், *புறத்தோன் படையைத் தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த வினைமுதிர்ச்சியும்;
உதாரணம்:-
"கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர்
கொடிமதில் காத்தோரைக் கொல்லக்-கடலெதிர்
தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார்
மான்றேரான் மூதூர் வரைப்பு."
இது புறத்தோன் முற்றிய முதிர்வு.
"ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக்
கார்சூழ்குன் றன்ன கடைகடந்து-போர்மறவர்
மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன்
றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து."
இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு.
அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்-புற மதிலிலன்றி உண்மதிற்கட் புறத்தோனால் முற்றப்பட்ட அகத் தோன் விரும்பின மதில்காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்;
நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க, அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைகாத்தலுமென இருவர்க்கு மாயிற்று. இக்கருத்தானே "நொச்சி வேலித் தித்த னுறந்தை" (அகம்-122) என்றார் சான்றோரும்.
உதாரணம்:-
"இருகன்றி னொன்றிழந்த வீற்றாப்போற் சீறி
யொருதன் பதிசுற் றொழியப்-புரிசையின்
வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக்
கூற்றரணம் புக்கதுபோற் கொன்று.’
இஃது அகத்துழிஞையோன் எயிற்காத்த நொச்சி.
"தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று
பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே-வாய்வாங்கு
வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக்
கொல்படை வீட்டுங் குறிப்பு."
(பெரும் பொருள்விளக்கம் - புறத்திரட்டு - எயில்கோடல்)
இது புறத்தோன் மனங்காத்த நொச்சி.
"மணிதுணர்ந் தன்ன மாக்குர னொச்சிப்
போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த
காத னன்மர நீமற் றிசினே
கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த
தொடியணி *மகளி ரல்குலுங் கிடத்திக்
காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலி
னூர்புறங் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே." (புறம்-272.)
இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது.
மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்-இடை மதிலைக் காக்கின்ற அகத்துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக்கொண்ட புதுக்கோளும், அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத்தினைப் பின்னை யகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்;
பிற்பட்ட துறைக்குப் புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள் கொள்க. முன்னர்ப் புறமதிலின் போர்போல இடை மதிலினும் போர் கூறினார்.
உதாரணம்:-
"வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா
லஞ்சி யொதுங்காதார் யாய்யாவர்-மஞ்சுசூழ்
வான்றோய் புரிசை பொறியு மடங்கின
வான்றோ ரடக்கம்போ லாங்கு."
(பெரும் பொருள்விளக்கம்-புறத்திரட்டு-எயில்கோடல்)
இது புறத்தோன் வீழ்ந்த புதுமை.
"தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத்
தூக்க முடையோ ரொதுங்கியுங்-கார்க்க
ணிடிபுறப் பாட்டாங் கெதிரேற்றார் மாற்றா
ரடிபிறக் கீடு மரிது."
(தகடூர்யாத்திரை, புறத்திரட்டு-எயில்கோடல்)
இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை.
நீர்ச் செரு வீழ்ந்த பாசியும்-கொண்ட +மதிலகத்தை விட்டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத்தோரும் எயிற்புரத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட் போரை விரும்பின பாசியும்;
பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் பாசி யென்றார்.
- ---------
(பாடம்) *’தொடையுடை.’ +’நிலத்தை.’
உதாரணம்:-
"பொலஞ்செய் கருவிப் பொறயுமிப் பண்ணாய்
நிலந்திடர் பட்டதின் றாயிற்-கலங்கமர்மேல்
வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர்
நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று."
இஃது இருவர்க்கும் ஒக்கும்.
வேறு வேறு வருமெனினுங் காண்க.
அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்-அம்மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும்;
பாசியென்றார், நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின்.
உதாரணம்:-
"மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியும் மாதர்
பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா -ரெறிதொறும்போய்
நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா
னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு."
இது புறத்தோன் பாசிமறம்.
"தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்பவு மேல்விழுந்த
வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா-னாங்கு
மதுக்கமழுந் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற்
பதுக்கையும் வேண்டாதாம் பற்று."
இஃது அகத்தோன் *பாசிமறம்.
அகமிசைக்கு+ இவர்ந்தோன் பக்கமும்-புறஞ்சேரிமதிலும் ஊரமர்மதிலும் அல்லாத சோயிற் புரிசைகளின்மேலும் ஏறி நின்று போர்செய்தற்குப் பரந்துசென்றோன் கூறுபாடும்;
உதாரணம்:-
"வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற்
கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர்-ஞாயிற்#
கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக
நெடுமுடிதாங் கோட னினைந்து."
இது புறத்தோன் அகமிசைக்கிவர்தல்.
----------
(பாடம்) * ‘அகத்தோர்.’ + ;அகன்மிசைக்கு.’ # ‘சாயின்.’
"புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக்
கொற்றுறை வாய்த்த கொலைவேலோர்-கொற்றவ
னாரெயின்மேற் றோன்றினா ரந்தரத்துக் கூடாத
போரெயின்மேல் வாழவுணர் *போன்று."
இஃது அகத்தோன் அகமிசைக்கிவர்தல்.
இகன் மதிற் குடுமி கொண்ட மண்ணும் மங்கலமும்-- அங்ஙனம் இகல்செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியான கொண்டு, பட்ட வேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலமும்;
உதாரணம் :-
"மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற்
பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி
சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே
கூடார்நா டெல்லாங் கொடுத்து." +
இது புறத்தோன் மண்ணும் மங்கலம்.
"வென்றி பெறவந்த ++வேந்தை யிகன்மதில்வாய்க்
கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால்
விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான்
பெருந்தகையென் றார்த்தார் பிறர்."
இஃது அகத்தோன் மண்ணும் மங்கலம்.
வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற – இருபெருவேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்றவாளினைக் கொற்றவையுமே னிறுத்தி நீராட்டுதலோடே கூட;
உதாரணம் :-
"செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த
கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொன் - முற்றியோன்
பூவொடு சாந்தும் புகையவி நெய்ந்நறைத்
தேவொடு செய்தான் சிறப்பு."
இது புறத்தோன் வாண்மங்கலம்.
"வருபெரு வேந்தற்கு வான்கொடுத்து &மற்றை
யொருபெரு வேந்தற்கூ ரீந்தா - ளொருவன்வா @
ளிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர்தியா
ளவ்வுலகிற் போய்பெறுங்கொ லாங்கு."
இஃது அகத்தோன் வாண்மங்கலம்.
ஒன்றென$ முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை
மண்ணுதல் கொள்க.
---------
(பாடம்) * 'வாளவுணர்.' + 'குறித்து.' ++ 'படவந்த.' & ''ஒன்றின.'
@ 'வான்கொடுத்த.' $ 'ஒருவன்பால்.'
"பிறர்வேல் போலா தாகி யிவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே
யிரும்புற* நீறு† மாடிக் கலந் திடைக்‡
குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கு
மங்கல மகளிரொடு மாலை சூட்டி
யின்குர லிகும்பை§ யாழொடு ததும்பத்¶
தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து
மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங்$
கிருங்கடற் றானை வேந்தர்
பெருங்களிற்று முகத்திலுஞ் செலவா னாதே" (புறம்-332)
என வரும்.
தொகைநிலை என்னுந் துறையொடு தொகைஇ- அவ்வாண் மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்துபட்ட படைக்கடற் கெல்லாஞ் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னுந் துறையொடு முற் கூறியவற்றைத் தொகுத்து;
உதாரணம்:--
"கதிர்சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை
யெதிர்சுருக்கி யேந்தெயில்பா** ழாக்கிப் -பதியிற்
பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு
முயர்வான் குறித்த துலகு."
இது புறத்தோன் தொகைநிலை.
"தலைவன் மதில்சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று
வலைவன் வலைசுருக்கி யாங்கு- நிலையிருந்த
தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தா
னுண்டற்ற சோற்றா ரொழிந்து."
இஃது அகத்தோன் தொகைநிலை.
வகைநால் மூன்றே துறை என மொழிப- அங்ஙனம் ஒன்று இருவகைப்பட வந்து பன்னிரண்டேயாம் உழிஞைத்துறை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
- ----------
(பாடம்) *'இரும்புக' †'நீரு' ‡'கலத்திடை' §'இரும்பை' 'யாழெடுத் தியம்ப' $'மண்முழு திரங்கச் செல்லுங் கண்ணுறின்' **'ஏற்றெயில்'
முற்றலையுங் கோடலையும் இருவகையென்றார். துறையென்றதனான் அவற்றின் பகுதியாய் வருவனவும் அத்துறைப்பாற் படுத்துக*. உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும் அவர் அரசர்க்கு உரைப்பனவுங் குடைச்சிறப்புக் கூறுவனவும் முரசு முதலியன நாட்கோடலும் பிறவுங் குடைநாட் கோட லாய் அடங்கும். இது வாணாட் கோடற்கும் ஒக்கும். பொரு வார்க்கும் அல்லுழிப் போவார்க்குங் குடை பொதுவாகலின் முற்கூறி மேல் வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்தலின் வாளினைப் பிற் கூறினார். இவை போர்த்தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினார். எயிலுட் பொருதலும்† புட்போல உட்பாய்தலும் ஆண்டுப் பட்டோர் துறக்கம் புகுதலும் பிறவும் பாசிமறத் தின்பாற் படும். ஏறுந் தோட்டியுங் கதவும் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கத்தின்பாற்படும். படிவம்‡ முதலியன கூறல் குடுமிகொண்ட மண்ணு மங்கலத்தின்பாற் படும். புறத்தோன் இருப்பிற், றொகைநிலைப்பாற்படும்.'துறை யென மொழிப' என எல்லாவற்றையுந் துறையென்று கூறுகின்றவர் தொகைநிலை; யென்னுந் துறையெனத் தொகை நிலையை விதந்தோதினார்,. அது பலவாகாது இரண்டு துறைப் பட்டு வேறு வேறு துறையாம் என்றற்கு. அது தும்பைத் தொகைநிலைபோல் இருபெருவேந்தரும் உடன்வீழ்தலுஞ் சிறு பான்மை உளதாமென் றுணர்க. எதிர்செல்லா தடைத்திருந் தோன் புறப்பட்டுப்படுதல்சிறுபான்மையாதலின், இதனையும் வேறோர் துறையாக்கிப் பதின்மூன் றென்னாராயினார்,.
உதாரணம்:--
"அறத்துறைபோ லாரெயில் வேட்ட வரசர்
மறத்துறையு மின்னாது மன்னோ- நிறைச்சுடர்க
ளொன்றி வரப்பகல்வா யொக்க வொளிதேய்ந்தாங்
கின்றிவர் வீழ்ந்தா ரெதிர்ந்து"
எனவரும்.
இது வேறுவேறு வருதலுஞ் சிறுபான்மை. இன்னுந் துறை யென்றதனானே புறத்தோன் கவடிவித்துதலுந் தொகை நிலைப்பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க.
அது, "மதியேர்வெண்குடை" என்னும் (392) புறப்பாட்டினுள்.
"வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிதெனச்
சென்றியா னின்றென னாக"
எனவரும்.
- -----------
(பாடம்) *'படும்' †'போகுதலும்' ‡'படிமம்'
ஒன்ற வென்றதனான் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறுபான்மை என்று கொள்க.
இனி மகண்மறுத்தன் மதிலை முற்றுதன் மகட்பாற்காஞ்சிக்கண் அடங்கும். யானையுங் குதிரையும் மதிர்போர்க்குச் சிறந்தன அன்மையிற் கொள்ளாராயினர். ஈரடியிகந்து பிறக்கடி யிடுதலுங் கேடு என்று உணர்க. (13)
------------
69.
- தும்பை தானே நெய்தலது புறனே.
இது தும்பைத்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனாமென்கின்றது. இதுவும் *மைந்துபொருளாகப் பொருதலின்† மண்ணிடை யீடாகப் பொரும் வஞ்சிக்கும் ‡மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார்.
(இ-ள்) தும்பைதானே நெய்தலது புறனே- தும்பையென்னும் புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.
தும்பையென்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். நெய்தற்குரிய பெருமணலுலகம்போலக் காடும் மலையுங் கழனியு மல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுதுவரை வின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமுந் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறுபோலக் கணவனை இழந்தார்க்கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக்குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குப வாகலானும்,. ஒரு வரும் ஒழியாமற் பட்டுழிக்கண்டோர் இரங்குப வாகலானும், பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று. (14)
---------------
70.
- மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப.
இஃது அத்தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்) மைந்து பொருளாக வந்த வேந்தனை- தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறுபொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை; சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்றென்ப- அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன் கருதிய மைந்தேதான் பெறுபொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்குஞ் சிறப்பினையுடைத்து அத்தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
- ------------
* தொல்-பொ-புறத்-15 † தொ-பொ-புறத்-7 உரை.
‡ ௸-௸-௸-1 உரை.
வரல் செலவாதல் "செலவினும் வரவினும்" (தொல்- சொல்-கிளவி-28) என்பதன் பொதுவிதியாற் கொள்க. மைந்து பொருளாக என்பதனை வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக*; அஃது இருவர்க்கும் ஒத்தலின். எனவே இருவரும் ஒருகளத்தே பொருவாராயிற்று.
இது வேந்தனைத் தலைமையாற் கூறினாரேனும் ஏனையோர்க்குங் கொள்க; அவரும் அதற்குரியராதலின்.
இதனைச் சிறப்பிற் றென்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனையாற் கொல்வனவுந் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவுங் கடையூழிக்கட்டோன்றிய ஆதலிற் சிறப்பிலவாம்,. அவையுஞ் சிறுபான்மை கொள்க. (15)
---------
71
- கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற்
சென்ற வுயிரி னின்ற யாக்கை
யிருநிலந் தீண்டா வருநிலை வகையோ
டிருபாற் பட்ட வொருசிறப் பின்றே.
இது தும்பைக்காவதோர் இலக்கணங் கூறுதலின் எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
(இ-ள்) கணையும் வேலுந் துணையுற மொய்த்தலின்-- பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்று அம்பானெய்தும் வேல்கொண் டெறிந்தும் போர் செய்ய, அவ் வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின்;† சென்ற உயிரின் நின்ற யாக்கை- சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு; இருநிலந் தீண்டா யாக்கை அருநிலை வகையோடு- வாளுந் திகிரியு முதலையவற்றால் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரும் நிலையுடைத்தாகிய கூறுபாட்டோடே கூடி; இருபாற்பட்ட ஒரு சிறப்பின்று- இரண்டு கூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தை யுடைத்து முற்கூறிய தும்பைத்திணை என்றவாறு.
எனவே, முற்கூறிய மைந்துபொருளாகப் பொருதலினும் நின்ற யாக்கை சிறத்தலும் இருநிலந் தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலுங் கூறினார். இது திணைச்சிறப்புக் கூறியது. மொய்த்தலி னென்றது, யாக்க யற்றாடவேண்டுதலிற் கணையும் வேலுமன்றி வாள்முதலியன ஏதுவாகக்கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல் அலீகனிற அற்றுழியும் உடம் பாடுதலின் அட்டையாட லெனவும் இதனைக் கூறுப.
- ----------
(பாடம்) *'கூறுக' †'செறுதலின்'
இனி மேற்றுறை கூறுகின்றது மைந்துபொருளாக வந்ததுஞ் சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே என்றுணர்க. நிரை கொள்ளப்பட்டோன் பொருகளங் குறித்துப் போர்செய்தலும் அவன் களங்குறித்தது பொறாது நிரைகொண்டானுங் களங்குறித்துப் போர்செய்தலும் வெட்சிப்புறத்துத் தும்பையாம். வஞ்சியுள்ளும் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேந்தற்குப் பொறாமை நிகழ்ந்து துறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம். முற்றப்பட்டோனை முற்று விடுத்தற்கு வேறோர் வேந்தன் வந்துழி, அவன் புறம்போந்து களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும், அவன் களங்குறித் துழிப் புறத்தோனும் களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத் தும்பையாம். இவையெல்லாம் மண்ணசையும் அரண்கோடலுமன்றி மைந்துபொருளாகச் சென்று துறக்கம்வேட்டுப் பொருந் தும்பைச்சிறப்புக் கூறிற்று.
மேற்காட்டுந் துறைகளெல்லாம் இச்சூத்திரத்துக்கூறிய இரண்டற்கு மன்றி மைந்துபொருளாயதற்கேயா மென்றுணர்க.
உதாரணம்:--
"நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே" (புறம்-297)
"எய்போற் கிடந்தானென் னேறு" (புறம் பொருள்-வெ-176)
என வருவன கணையும் வேலும் மொய்த்துநின்றன.
கிடந்தானென்புழி நிலந் தீண்டாவகையின் நின்ற யாகைக்யாயிற்று.
"வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச்
சான்றுரைப்ப போன்றன தங்குறை- மான்றேர்மேல்
வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப்
பாய்ந்தன மேன்மேற் பல"
(பெரும்பொருள் விளக்கம்-புறத்திரட்டு-அமர்)
இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டாவகை.
"பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார்
குருதிவாள் கூறிரண்டு செய்ய- வொருதுணி
கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே
மண்ணதே மண்ணதே யென்று"
இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாம் இருநிலந் தீண்டாவகை.
இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற் றிணையெனவாம் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் றுறையெனவும் படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதாமென் றுணர்க. (16)
----------
72.
- தானை யானை குதிரை யென்ற
நோனா ருட்கு மூவகை நிலையும்
வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன்
தான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியும்
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்
ஒருவ னொருவனை யுடைபடை புக்குக்
கூழை தாங்கிய வெருமையும் படையறுத்துப்
பாழி கொள்ளு மேமத் தானுங்
களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு
பட்ட வேந்தனை யட்ட வேந்தன்
வாளோராடு மமலையும் வாள்வாய்த்
திருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும்
ஒருவரு மொழியாத் தொகைநிலைக் கண்ணுஞ்
செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை யொருவற் குடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலு முளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.
இது மைந்துபொருளாகிய தும்பைத்திணைக்குத் துறை இனைத்தென்கின்றது.
(இ-ள்) தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்- தானைநிலை யானைநிலை குதிரைநிலை என்று சொல்லப்பட்ட போர்செய்த்ற்கு ஆற்றா அரசர்* தலைபனிக்கும் மூன்று கூறுபாட்டின்கண்ணும்;
நோனார் உட்குவ ரெனவே நோன்றார் உட்காது நிற்பாராயிற்று. அவர் போர்கண்டு சிறப்புச்செய்யுந் தேவரும் பிணந்தின் பெண்டிரும் படையாளர் தாயரும் அவர் மனைவியருங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியருங் கண்டோரும் பிறரு மென்று கொள்க.
துறக்கம்புகு வேட்கையுடைமையிற் காலாளை முற்கூறி, அதன் பின்னர் மதத்தாற் கதஞ்சிறந்து தானும் போர்செய்யும் யானையைக் கூறி, மதஞ்சிறவாமையிற் கதஞ்சிறவாத குதிரையை அதன்பிற் கூறினார். குதிரையானன்றித் தேர் தானே செல்லாமையிற் றேர்க்கு மறமின்றென்று அது கூறாராயினார்.
நிலை யென்னாது வகை யென்றதனான் அம்மூன்று நிலையுந் தாமே மறஞ்சிறப்பப் பொருதுவீழ்தலும், அரசனேவலிற் றானை பொருது வீழ்தலும், யானையுங் குதிரையும் ஊர்ந்தாரேவலிற் பொருதலும். படையாளர் ஒருவரொருவர் நிலைகூறலும் அவர்க்கு உதவலு மென இப்பகுதியெல்லாங் கொள்க.
இனி இவைதாமே கறுவுகொண்டு பொருவுழித்+ தானை மறம் யானைமறங் குதிரைமற மென்று வெவ்வேறு பெயர்பெறு மென்று கொள்க.#
இனித் தாயர் கூறுவன மூதின் முல்லையாம்; மனைவியர் கூறுவன இல்லாண் முல்லையாம்; கண்டோர் கூறுவன வல்லாண்முல்லையாம்; பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க.
இவை கூறி ஏனைக கூத்தர்முதலியோர் கூறுவன கூறார் மன ஞெகிழ்ந்து போவாரு முளர். அவை ஓரோர் துறையாக முதனூற்கண் வழங்காமையினானும் அவற்றிற்கு வரையறை யின்மையானும் இவர் தானைநிலை யென அடக்கினார். இச்சிறப்பான் இதனை முற்கூறினார். அத் தானை சூடிய பூக்கூறலும், அதனெழுச்சியும், அரவமும், அதற்கரசன் செய்யுஞ் சிறப்பும், அதனைக் கண்டு இடைநின்றோர் போரை விலக்கலும், அவர் அதற்குடம்படாமைப் போர்துணிதலும், அத்தானையுள் ஒன்றற்கிரங்கலும், அதற்குத் தலைவரை வகுத்தலும், வேந்தன் சுற்றத்தாரையுந் துணைவந்த அரசரையும் ஏத்துவனவும், நும்போர் ஏனைநாட்டென்றலும், இருபெருவேந்தரும் இன்ன வாறு பொருதுமென்று கையெறிதலும் போல்வன வெல்லாம் இத்துறைப்பாற் படும்.
--------
(பாடம்) *‘ஆற்றாதவரை.’ +‘பெருவழி.’ # புறப்பொருள் வெண்பாமாலை, தும்பைப்படலம் 3, 6,7 பார்க்க.
உதாரணம் :-
"கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர்
வெப்புடைத் தானையெம் வேந்து."
(புற-வெ-மாலை-தும்பை-1)
இது பூக் கூறியது.
இதனைத் திணைப்பாட்டு மென்ப.
"வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையுங்
கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி
நன்மணித் திண்டோர் நயவார் தலைபனிப்பப்
பன்மணிப் பூணான் படைக்கு." (புற-வெ-மாலை-தும்பை-2)
இது சிறப்புச்செய்தது.
"வயிர்மேல் வளைநரல வைவேலும் வாளுஞ்
செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி - யுயிர்மேற்
பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்க்
குலகழியு மோர்த்துச்* செயின்." (புற-வெ-மாலை-தும்பை-4)
இது விலக்கவும் போர் துணிந்தது.
"மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை
யொன்னார் நடுங்க வுலாய்நிமிரி - னென்னாங்கொ
லாழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப்
பாழித்தோண் மன்னர் படை." (புற-வெ-மாலை-தும்பை-5)
இஃது இரண்டனுள் ஒன்றற்கு இரங்கியது.
"கங்கை சிறுவனும் காய்கதிரோன் செம்மலு
மிங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை
சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார்
மறுவந்தார் தத்த மனம். "
இது பெருந்தேவனார் பாட்டு; குருக்கள் தமக்குப் படைத் தலைவரை வகுத்தது.
- -------------
(பாடம்) * 'ஓர்ந்து.'
இனி போர்த்தொழிலாற் றானைநிலை வருமாறு :-
"குழாக்களிற் றரசர் குறித்தெழு கொலைக்களம்
விழாக்களம் போல மெய்ம்மலி யுவகையர்
ஆண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தலின்
அழுந்துபடப் புல்லி விழுந்துகளம் படுநரும்
நீர்ப்பெயற் பிறந்த மொக்குள் போலத்
தாக்கிய விசையிற் சிதர்ந்துநில் படுநருந்
தகருந் தகருந் தாக்கிய தாக்கின்
முகமுகஞ் சிதர முட்டு வோரும்
முட்டியின் முறைமுறை குத்துவோருங்
கட்டிய கையொடு கால்தட் குநருங்
கிட்டினர் கையறத் தொட்டுநிற்* போருங்
சுட்டிய பெயரற விட்டழிப் போருஞ்†
சக்கரம் போலச் சங்குவிட் டெறிநருஞ்
சிலைப்புடை முரசிற் றலைப்புடைக் குநரும்
மல்லிற் பிடித்தும் வில்லி னெற்றியும்
ஊக்கியும் உரப்பியு நோக்கியு நுவன்றும்
போக்கியும் புழுங்கியு நாக்கடை கவ்வியும்
எயிறுடன் றிருகியுங் கயிறுபல வீசியும்
இனைய செய்தியின் முனைமயங் குநரும்
பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையும்
அரசறி பெருமையு முரைசெல் லாண்மையும்
உடையோ ராகிய படைகொண் மாக்கள்
சென்றுபுகு முலக மொன்றே யாதலின்
ஒன்றுபடு மனத்தொடு கொன்றுகொன் றுவப்பச்
செஞ்சோற்று விலையுந் தீர்ந்துதம் மனைவியர்
தம்பிணந் தழீஇ நொந்து கலுழ்ந் திரங்கவும்
புதுவது வந்த மகளிர்க்கு
வதுவை சூட்டிய வான்படர்ந் தோரே"
(புறத்திரட்டு-அமர்-10)
எனவும்,
"சென்ற வுயிர்போலத் தோன்றா துடல்சிதைந்தோ
னின்ற வடிபெயரா நின்றவை- மன்ற
லரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த
மரவடியே போன்றன வந்து"
எனவும் வரும்.
- "வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக்
கண்கூ டிறுத்த‡ கடன்மருள் பாசறைக்
குமரிப் படைதழீஇக்§ கூற்றுவினை யாடவர்
தமர்பிற ரறியா வமர்¶ மயங் கழுவத்
திறையும் பெயருந் தோற்றி னுமரு
ணாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப்
போர்மலைந் தொருசிறை நிற்ப$ யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிறைதார் மார்பினின் கேள்வனைப்** பிறரே" (புறம்-294)
----------
(பாடம்) *'கையிற் றொட்டா' † 'பெயரை யிட்டிழைப்போரும்' ‡'டியாத்த'
§'தழீஇய' 'அறியாதமர்' $'ஒருதிற நிற்ப'
**'நிரைகாழ் மாலையெங் கேள்வனை'
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்." (குறள்-படைச்-4)
"நறுவிரை துறந்த நரைவெண் கூந்த
லிரங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
குடப்பாற் சில்லுறை போலப்
படைக்குநோ யெல்லாந தானா யினனே." (புறம்-276)
"தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்
கொற்கத் துதவினா னாகுமாற்* பிற்பிற்
பலர்புகழ் செல்வந் தருமாற்+ பலர்தொழ
வானக வாழ்க்கையு++ மீயுமா லன்னதோர்
மேன்மை யிழப்பப் பழிவருவ செய்பவோ
தானேயும் போகு முயிர்க்கு."
(தகடூர்யாத்திரை, புறத்திரட்டு, படைச்செருக்கு-9)
என வரும்.
"கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும்
வேட்டத்து சொல்லி வேந்தனைத் தொடுத்தலு
மொத்தன்று மாதோ விவற்கே செற்றிய
திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன்
வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி
யோம்புமி னோம்புமி னிவணென வோம்பாது
தொடர்கொள யானையிற் குடர்கா றட்பக்
கன்றமர் கறவை மான
முன்சமத் தெதிர்ந்ததன் றோழற்கு வருமே." (புறம்-275)
இஃது உதவியது.
இனி யானைநிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப்பகுதியாய் வருவனவுங் கொள்க. அஃது அரசர்மேலும் படைத்தலைவர் மேலும் ஏனையோர்மேலும் யானை சேறலுங் களிற்றின்மேலுந் தேரின்மேலுங் குதிரைசேறலுந் தன்மேலிருந்து பட்டோருடலை மோந்து நிற்றலும் பிறவுமாம்.
உதாரணம் :-
"மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற்
காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச்-சாயுந்
தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேன்
மலையுறையுந் தெய்வம்பொல் வந்து."
(பெரும் பொருள்விளக்கும். புறத்திரட்டு-யானை மறம்-14)
----------
(பாடம்) * 'துவந்தானு மாகுமால்.' + 'செம்ம லுடைத்தால்.' ++ 'வானுறை வாழ்க்கை.'
"கையது கையோ டொருதுணி *கோட்டது
மொய்யிலை வேன்மன்னர் முடித்தலை-பைய
வுயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே யெங்கோன்
வயவெம்போர் மாறன் களிறு"
இவை யானைநிலை.
"பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன்
றொல்லை யுருவிழந்த தோற்றம்போ- லெல்லா
மொருகணத்துத் தாக்கி யுருவிழந்த பாய்மாப்
பொருகளத்து வீழ்ந்து புரண்டு."
"மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன வெம்மிற்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வ னூரு மாவா ராதே
யிருபேர் யாற்ற வொருபெருங் கூடல்
விலங்கிடு †பெருமரம் போல
வுலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே" (புறம்-273)
"பருத்தி வேலிச் சீறூர் மன்ன
னுழுத்தத்* ருண்ட வோய்நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்திற்
றண்ணடை மன்னர் ‡தாருடைப் புரவி
யணங்குடை முருகன் கோட்டத்துக்
§கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின் றவ்வே" (புறம்-299)
இவை குதிரைநிலை.
"நிலம்பிறக் கிடுவது போல" என்னும் (303) புறப்பாட்டும் அது.
இவை தனித்துவாராது தொர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர்யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க. புறநானூற் றுள் தனித்து வருவனவுங்¶ கொள்க.
வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண்டெ றிந்த தார்நிலை- தன்படை போர்செய்கின்றமை கண்டு தானும் படையாளர்க்கு முன்னேசென்று வேலாற் போர்செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி அதுகண்டு வேறோரிடத்தே பொருகின்ற தன் றானைத்தலைவனாயினும் தனக்குத் துணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டுவந்து வேந்தனோடு பொருகின்றாரை எறிந்த தார்நிலைக்கண்ணும்;
- ------------
(பாடம்) *'கொண்டது' †'பெரும் பாம்பு' ‡'தாருடைக் கலிமா' §'கலங்கொடா'
'காண்க'
தாரென்பது முந்துற்றுப் பொரும்படையாதலின் இது தார்நிலையாயிற்று.
உதாரணம் :-
"வெய்யோ னெழமுன்னம் வீங்கிருள் கையகலச்
செய்யோ னொளிதிகழுஞ் செம்மற்றே - கையகன்று*
போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன்
றார்தாங்கி நின்ற தகை."
(பெரும்பொருள் விளக்கம் - புறத்திரட்டு-தானைமறம்-4)
என வரும்.
"நிரப்பாது கொடுக்கும்" என்னும் (180) புறப்பாட்டினுள்
"இறையுறு விழுமந் தாங்கி" என்பதும் அது.
"இவர்க்கீத் துண்மதி கள்ளே சினப்போ
ரினக்களிற்றி யானை யியறேர்க் குரிசி
னுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
யெடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்ச
னடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மேந்தினோ னிவனு
முறைப்புழி யோலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே." (புறம்-290)
இதுவும் அதன்பாற்படும்.
அன்றியும் இருவர் தலைவர் தபுதிப்பக்கமும்--இருபெருவேந்தர் தானைத்தலைவருந் தத்தம் வேந்தர்க்காகித் தார்தாங்கு>தலே யன்றி அத்தலைவரிருவருந் தம்மிற்பொருது வீழ்தற் கண்ணும்;
பக்கமென்றதனான் அவரு ளொருவரொருவர் வீழ்தலுங் கொள்க.
உதாரணம் :-
" ஆதி சான்ற மேதகு வேட்கையி
னாளுங் கோளு மயங்கிய ஞாட்பின்
மதியமு ஞாயிறும் பொருவன போல
வொருத்தி வேட்கையி னுடன்வயிற்+ றிருவர்
செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவு
மரவணி கொடியோற் கிளையோன் சிறுவனும்
பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு
முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா
-----------
(பாடம்) * 'கையின்று.' + 'உடல்வயிற்.'
ருடங்குவருஞ்* சீற்றத்துக் கைப்படை வழங்கி
யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித்
தேர்மிசைத் தமியர்+ தோன்றார் பார்மிசை
நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந்
தும்பியடு பிணங்கு மண்ணிற் றோற்றமொடு
கொடிகொடி பிணங்கி வீழ்வன போல
வொருவயின் வீழ்ந்தடு காலை
யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே."
இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் கண்டுகொள்க.
இனித் தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன்பாற் படுத்துக.
உடைபடை ஒருவன் புக்கு ஒருவனைக் கூழைதாங்கிய எருமையும் - தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத் தலைவன் சென்று நின்று அங்ஙனங் கெடுத்த மாற்றுவேந்தன் படைத்தலைவனை அவன் எதிர்கொண்டுநின்ற பின்னணியோடே தாங்கின கடாப்போலச் சிறக்கணித்து நிற்கு நிலைமைக் கண்ணும்;
ஒருவனொருவனைத் தாங்கின எருமையென முடிக்க.
உதாரணம் :-
"சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கா
லேற்றெருமை போன்றா னிகல்வெய்யோன்-மாற்றான்
படைவரவு காத்துத்தன்++ பல்படையைப்& பின்காத்
திடைவருங்காற் பின்வருவார் யார்."
என வரும்.
படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும்-கைப்படையைப்போக்கி மெய்யாற் போர்செய்யும் மயக்கத்தின் கண்ணும்;
பாழி, வலி; இஃது ஆகுபெயர்.
உதாரணம் :-
"கொல்லேறு பாய்ந்தழிந்த@ கோடுபோற் றண்டிறுத்து
மல்லேறு தோள்வீமன் மாமனைப் - புல்லிக்கொண்
டாறாத போர்மலைந் தாங்கரசர் கண்டார்த்தா
ரேறாட லாய ரென."
என்னும் பாரதப்பாட்டுக் கொள்க.
----------------------
(பாடம்) * 'ருட்குறும்.' + 'தழீஇயர்.' ++ 'பார்த்து.'
& 'பல்படையைக் காத்துய்த்.' @ 'பாய்ந்திழிந்த.'
நீலக் கச்சைப் பூவா ராடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே
தன்னுந் துரக்குவன் போலு மொன்னல
ரெஃகுடை வலத்த மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே" (புறம்-274)
என்பதும் அது.
களிறெறிந் தெதிர்ந்தார் பாடும்- மாற்றுவேந்தன் ஊர்ந்துவந்த களிற்றைக் கையெறிந்தானுங் கடுக்கொண்டெதிர்ந்தானும் விலக்கி அவனையும் அக்களிற்றையும் போர்செய்தோர் பெருமைக் கண்ணும்;
உதாரணம்:--
"இடியா னிருண்முகிலு மேறுண்ணு மென்னும்
படியாற் பகடொன்று மீட்டு- வடிவே
லெறிந்தார்த்தார் மள்ள ரிமையாத கண்கொண்
டறிந்தார்த்தார் வானோரு மாங்கு"
என வரும்.
"வானவர் போரிற் றானவர்க் கடந்த
மான வேந்தன் யானையிற் றனாஅது
பல்படை நெரிவ தொல்லான் வீமன்
பிறக்கிடங் கொடானதன் முகத்தெறிந் தார்த்துத்
தானெதிர் மலைந்த காலை யாங்கதன்
கோடுழக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து
போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு*
மிடைகொள லின்றிப் புடைபெயர்ந்து புரண்டு
வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன்
பெருந்தகை யாண்மையொடு பெயர்த்தலோ வரிதே"
இப் பாரதப்பாட்டும் இதன் பாற்படும்
இது களிறெறிந்தான் பெருமை கூறுதலின் யானைநிலையுள் அடங்காதாயிற்று.
களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்- அங்ஙனம் நின்று களிற்றொடுபட்ட வேந் தனைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச் சூழ்ந்துநின்று ஆடுந் திரட்சிக்கண்ணும்;
அமலுதல் நெருங்குதலாதலின், அமலை யென்பதூஉம் அப்பொருட்டாயிற்று;
------
(பாடம்) *'தோய்ந்துகள னனைத்தினும்'
உதாரணம்:--
"ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம்
கேளன்றிக் கொன்றாரே கேளாகி-வாள்வீசி
யாடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச்
சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து"
என வரும்.
"நான்மருப் பிலலாக் கானவில் யானை
வீமன் வீழ்த்திய துடன்றெதிர்ந் தாங்கு
மாமுது மதுரை மணிநிறப் பாகனோ
டாடமர் தொலைத்த லாற்றான் றேரொடு
மைத்துனன் பணியின் வலமுறை வந்து
கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந்
திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு
மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது
வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச்
சூர்மருங் கறுத்த நெடுவேள் போல
மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய*
வாளுகு களத்து வாள்பல வீசி
யொன்னா மன்னரு மாடினர் துவன்றி
யின்னா வின்ப மெய்தித்
தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே"
இப் பாரதப்பாட்டும் அது.
வாள்வாய்த்து இருபெருவேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒரு வரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்- இருபெருவேந்தர் தாமும் அவர்க்குத் துணையாகிய வேந்தருந் தானைத்தலைவருந் தானையும் வாட்டொழின்முற்றி ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்ந்த தொகைநிலைக் கண்ணும்;
உதாரணம்:--
"வருதார் தாங்கி யமர்மிகல் யாவது
பொருதாண் டொழிந்த மைந்தர்புண் டொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்த றீட்டி
நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டி
ரெடுத்தெறி யனந்தர்ப் பறைச்சீர் தூங்கப்
பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர்† வேந்தர்
தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே
யுரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே
பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞில
மிடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக்
களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவா
வுடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும்
பாசடகு* மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந்த தனரே
வாடாப் பூவி னிமையா நாட்டத்து
நாற்ற வுணவி னோரு மாற்ற
வரும்பெற லுலக நிறைய
விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே" (புறம்-62)
எனவரும்,.
---------------
(பாடம்) *கழிய' †'விறற்போர்'
செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்- போரிடத்தே தன்வேந்தன் வஞ்சத்தாற் பட்டானாகச் சினங்கொண்ட மனத்தனாய்ப் பெரும்படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப் பெற்ற நிலைமைக்கண்ணும்;
அது குருகுலவேந்தனைக் குறங்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர்மக்க ளைவரையுங் கொன்று வென்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன. தன்னரசன் அறப்போரித்துப் படாது வஞ்சனையாற் படுதலின், அவனுக்குச் சினஞ்சிறந்தது இச்சிறப்பில்லாத தம்பையும் இக்கலியூழிக்கா மென்பது 'சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று' (தொல்-பொ-புற-15) என்புழிக் கூறிற்று.
உதாரணம்:-
"மறங்கெழு† வேந்தன் குறங்கறுத் திட்டபி
னருமறை யாசா னொருமகன் வெகுண்டு
பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ
டிரவூ ரறியாது துவரை வேந்தொடு
மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக்
காவல் பூட்டி யூர்ப்புறக்‡ காவயி
னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்
கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்
றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய
தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத்
துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி
வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக்
கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக்
கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற்
றம்பியர் மூவரு மைம்பான் மருகரு
முடன்சமர் தொடங்கி யொருங்கு களத்தவிய
வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக்
கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத்
----------------
(பாடம்) *'பாகடகு' †'திறங்கெழு' ‡'ஊர்ப்புக் காவயின்'
தன்முதற் றாதையொடு கோன்முத* லமரர்
வியந்தனர் நயந்த விசும்பி
னியன்றலை யுலகம் மறிந்ததா லதுவே."
இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் காண்க.
ஒருவற்குப் பல் படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் - அங்ஙனம் நல்லிசை எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற் கொன்ற வேந்தன் பல்படை புறங்கொடுத்தலின்+ அவரைக் கோறல் புரிதல் அறனன்றென்று++ கருதாது அவன் வாளாற் றடிந்து கொன்று குவித்தற்கண்ணும்;
வஞ்சத்தாற் கொன்ற வேந்தனைக் கொன்றமைபற்றித் தனக்குக் கெட்டோரையும் அடங்கக் கோறற்கு உரியானை நல்லிசை முன்னர்ப் பெற்றோனென்றார். நூழிலாவது, கொன்று குவித்தல்.
"வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டு."
(பத்து-மதுரை, 255-257)
என்றாற்போல.
உதாரணம் :-
"அறத்திற் பிறழ வரசெறியுந் தானை
மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச்
செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே
பல்படையார் பட்ட படி."
எனவரும்.
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே – பொருந்தித் தோன்றுமத் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றவாறு.
- -----------
(பாடம்) * 'கொண்முதல்.' + 'புறக்கொடுத்தலின்.' ++ 'புரிதல் நன்றன்று.'
இன்னும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து எனவுங் கூட்டிப் பன்னிரண்டன்கண்ணும் முற் கூறிய வெட்சித்திணை முதலியவற்றான் நிகழுந் தும்பையும் வந்துகூடப் பின் அவற்றிற்கு முரியவாய்ப் பொருந்தித்தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றும் பொருள்கொள்க. பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங்கால் ஏனைத் திணைக்கட் கூறினாற்போல ஒன்று நிகழ்ந்தபின் ஒன்றுநிகழாது இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இத்திணை நிகழுமென்றற்குப் 'புல்லித்தோன்றும்' என்றார். பல்பெருங் காதமாகிய நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும்* துறையெனப் பலதுறை யென்பதுபோல இச் சூத்திரத்துத் துறையைத் தொகுதியுடன் அறுதிகாட்டிற்றென்றுணர்க. இவ்விலக்கணம் மேல்வருகின்ற திணைகட்கும் ஒக்கும். (17)
------------
73.
- வாகை தானே பாலையது புறனே.
இவ் வாகைத்திணை பாலையெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாமென்கின்றது.
(இ-ள்) வாகை தானே- இனிக் கூறாதுநின்ற† புறத்திணையுள் வாகையெனப்பட்டது தானே: பாலையது புறனே- பாலையென்னும் அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.
என்னை? பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி இல்லறநிகழ்த்திப் புகழெய்துதற்குப் பிரியுமாறுபோலச், சுற்றத்தொடர்ச்சியின் நீங்கி அறப்போர்செய்து துறக்கம்பெறுங் கருத்தினாற் சேறலானும், வாளினுந் தாளினும் நிறையினும் பொறையினும் வென்றியெய்துவோரும் மனையோரைநீங்கிச் சேறலானும் பிரிவுள தாயிற்று.
பாலை தனக்கென ஓர் நிலமின்றி நால்வகைநிலத்தும் நிகழுமாறு போல, முற்கூறிய புறத்திணை நான்கும் இடமாக வாகைத் திணை நிகழ்தலிற் றனக்கு நிலமின்றாயிற்று. "நாளு நாளு மாள்வினை யழுங்க, வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழ்‡ என ஆள்வினைச் சிறப்புக்கூறிப் பிரியுமாறு போல இதற்குத் துறக்கமே எய்தும் ஆள்வினைச் சிறப்புக் கூறலுங்கொள்க. பாலை பெருவரவிற்றாய்த் தொகைகளுள் வருமாறுபோல வாகையும் பெருவரவிற்றாய் வருதலுங் கொள்க. (18)
----------
74.
- தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப.
இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறு கின்றது.
------------
(பாடம்) *'நெடுநெறியிடத்துள் நிகழ்ந்த இடத்தவும்'
†'கருதிநின்ற' ‡ இந்நூல் 10-ஆம் பக்கத்திற் காண்க.
(இ-ள்) தாவில் கொள்கைத் தத்தங் கூற்றை- வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தோரும் அறிவருந் தாபதர் முதலியோருந் தம்முடைய கூறு பாடுகளை; பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப- இருவகைப்பட மிகுதிப்படுத்தலென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
இருவகையாவன, தன்னைத்தானே மிகுதிப்படுத்தலும் பிறர் மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள் உறழ்ச்சியாற் பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லையெனவுங் கூறுவர். படுதலென்னாது படுத்தலெனப் பிறவினையாற் கூறினார், அவர் தம்மினுறழாதவழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோன் இவனென்றுரைத்தலும் வாகையென்றற்கு; ஒன்றனோடு ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற்போல உலகமுழுதும் அறியும் உயர்ச்சியுடைமையும் அது. தாவில் கொள்கையெனவே இரணியனைப்போல வலியானும் வருத்தத்தானுங் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று. (19)
------------
75
- அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபி னரசர் பக்கமும்
இருமூன்று மரபி னேனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியி னாற்றிய வறிவன் றேயமும்
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்
பாலறி மரபிற் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோ டாங்கெழு வகையிற்
றொகை நிலை பெற்ற தென்மனார் புலவர்.
இது வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார், இன்னும் அதற்கேயாவதோர் சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறுகின்றது; மேற்கூறி வருகின்றாற்போலத் துறைப்படுத்திக் கூறுதற்கேலாத பரப்புடைச் செய்கை* பலவற்றையுந் தொகுத்து ஒரோவொன்றாக்கி எழுவகைப்படுத்திக் கூறுதலின்.
(இ-ள்) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்- ஆறு கூற்றினுட்பட்ட பார்ப்பியற் கூறும்;
- ------------
(பாடம்) *'யாப்புடைச் செய்கை'
ஆறுபார்ப்பியலென்னாது வகையென்றதனான் அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க; அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஒத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின், இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின்* இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந் தரும நூலும் இடையாய ஒத்து; அதர்வம் வேள்விமுதலிய ஒழுக்கங்கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுஞ்சூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாதாயிற்று.
ஆறங்கமாவன, உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும் அவ்விரண்டையும் உடனாராயும் ஐந்திரத்தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்து வாசம் ஆபத்தம்பம் ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வாராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்.
தருமநூலாவன, உலகியல்பற்றி வரும் மனுமுதலிய பதினெட்டும்; இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின.
இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சிநூலும் அவரவர் அதற்கு மாறுபடக்கூறும் நூல்களும் கடையாய ஒத்து. எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின்† அகத்தியந் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஒத்தாமென்றுணர்க; இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம்.
இனித் தமிழ்ச்செய்யுட்கண்ணும் இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாருங் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச்சங்கத்தார் செய்தன இடையுங், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க.
இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்புஞ் சிறப்பின்மையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமுங் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம்.
- -----------
(பாடம்) *'வியாகரணத்தாற் காரியப்படுதலின்' †'இனிமை பயின்று வருதலின்'
இனி ஓதுவிப்பனவும் இவையேயாகலின் அவைக்கும் இப் பகுதி மூன்றும் ஒக்கும். ஓதுவித்தலாவது கொள்வோனுணர்வு வகை அறிந்து அவன் கொள்வரக் கொடுக்கும் ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுமாம். வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியற்றீயாயினும் ஒன்றுபற்றி மங்கல மரபினாற் கொடைச்சிறப்புத்தோன்ற அவிமுதலியவற்றை மந்திரவிதியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி; வேளாண்மைபற்றி வேள்வியாயிற்று,. வேட்பித்தலாவது, வேள்வியாசிரியர்க்கோதிய இலக் கணமெல்லாம் உடையனாய் மாணாக்கற்கு* அவன் செய்த வேள்விகளாற் பெரும்பயனைத் தலைப்படுவித்தலை வல்லனாதல்; இவை மூன்று பகுதியவாதல் போதாயனீயம் முதலியவற்றானுணர்க. கொடுத்தலாவது, வேள்வியாசானும் அவற்குத் துணையாயினாரும் ஆண்டுவந்தோரும் இன்புறுமாற்றான் வேளாண்மையைச்செய்தல். கோடலாவது, கொள்ளத் தகும் பொருள்களை அறிந்துகொள்ளுதல். உலகுகொடுப்பினும் ஊண் கொடுப்பினும் ஒப்பநிகழும் உள்ளம் பற்றியுந், தாஞ் செய்வித்த வேள்விபற்றியுங் கொடுக்கின்றான் உவகைபற்றியுங், கொள் பொருளின் ஏற்றிழிவு பற்றியுந், தலை இடை கடை யென்பனவுங் கொள்க.
இனி வேட்பித்தன்றித் தனக்கு ஓத்தினாற்கோடலுங் கொடுப்பித்துக் கோடலுந் தான் வேட்டற்குக் கோடலுந் தாயமின்றி இறந்தோர் பொருள்கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலுந் துரோணாசாரியனைப் போல்வார் படைக்கலங் காட்டிக் கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம்.
பார்ப்பியலென்னாது பக்கமென்றதனானே பார்ஒப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பால்கட்டோன்றின வருணத் தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இவற்றிற்கெல்லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரியரென்பது கொள்க.
உதாரணம்:--
"ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த
லீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகு
மறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி" (பதிற்று-24)
இஃது அந்தணர்க்குக் கூறிய பொது.
"முறையோதி னன்றி† முளரியோ னல்லன்
மறையோதி னானிதுவே வாய்மை- யறிமினோ
வீன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினான்
சான்றான் மகனொருவன் றான்"
இஃது ஓதல்.
- ----------
(பாடம்) *'மாணாக்கனை' †'முறையோ தினன்றீ'
இனி ஓதற் சிறப்பும் ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங் கொள்க.
"இம்மை பயக்குமா லீயக் குறைவின்றாற்
றம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றா
லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோன்
மம்ம ரறுக்கு மருந்து." (நாலடி- 14.2)
"ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார்
நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு
வேற்றுநா டாகா தமவேயா மாதலா
லாற்றுணா வேண்டுவ தில்." (பழமொழி)
"ஒத்த முயற்சியா னொத்து வெளிப்படினு
நித்திய மாக நிரம்பிற்றே - யெத்திசையுந்
தாவாத வந்தணர் தாம்பயிற்றிக் காவிரிநாட்
டோவாத வோத்தி னொலி.'
இஃது ஓதுவித்தல்.
"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. (குறள் - அறிவுடைமை-4)
இஃது ஓதுவித்தற் சிறப்பு.
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டி
னாறுணர்ந்த வொருமுதுநூ
லிகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
வுரைசால் சிறப்பி னுரவோர் மருக
வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சைச்
சுவற்பூண்ஞான் மிசைப்பொலிய
மறங்கடிந்த வருங்கற்பின்
னறம்புகழ்ந்த வலைசூடிச்
சிறுநுதற்பே ரகலல்குற்
சிலசொல்லிற் பலகூந்தனி
னிலைக்கொத்தநின் றுணைத்துணைவியர்
தமக்கமைந்த தொழில்கேட்பக்
காடென்றா நாடென்றாங்
கீரேழி னிடமுட்டாஅது
நீர்நாண நெய்வழங்கியு
மெண்ணாணப் பலவேட்டு
மண்ணாணப் புகழ்பரப்பியு
மருங்கடிப் பெருங்காலை
விருந்துற்றநின் றிருந்தேந்து *நிலை
யென்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந்
தண்புனற் படப்பை யெம்மூ ராங்க
ணுண்டுந் தின்று மூர்ந்து மாடுகஞ்*
செல்வ லத்தை யானே செல்லாது
மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவள ரிமயம்போல
நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே." (புறம்-166)
இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க.
"ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது
வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ-னீந்த
மழுவா ணெடியோன் வயக்கஞ்சால் வென்றி
வழுவாமற் காட்டிய வாறு."
இது பரசுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு.
"நளிகட லிருங்குட்டத்து" என்னும் (26) புறப்பாட்டினுள், அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தது.
"இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள." (குறள் - ஈகை - 3)
இஃது ஈதல்.
"ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்கண் ணவர்." (குறள்-ஈகை-8)
இஃது ஈதற் சிறப்பு.
"நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங்
குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர்
தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோற்
றாவா தொளிசிறந்த தாம்."
(பெரும் பொருள்விளக்கம், புறத்திரட்டு - குடிமரபு)
இஃது ஏற்றல்.
"தான்சிறி தாயினுந் தக்கார் கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.' (நாலடி - 48)
இஃது ஏற்றற் சிறப்பு.
ஓதுவித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய.
- -------------
(பாடம்) * 'பாடுகம்.'
ஐவகை மரபின் அரசர் பக்கமும்- ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ்செய்தல் என்னும் ஐவகையிலக்கணத்தையுடைய அரசியற்கூறும்.
வகையென்றதனான் முற்கூறிய மூன்றும் பொதுவும், பிற்கூறிய இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க.
பார்ப்பார்க்குரியவாக விதந்த வேள்வியொழிந்த வேள்விகளுள் இராசசூயமுந் துரங்கவேள்வியும் போல்வன அரசர்க்குரிய வேள்வியாம். கலிங்கங் கழுத்து யாத்துக் குளம்புங் கோடும் பொன்னணிந்த புனிற்றாநிரையுங், கனகமும் கமுகு முதலியனவும் அன்னமும் செறிந்த படப்பை சூழ்ந்த மனையுந், தண்ணடையுங் கன்னியரும் பிறவுங்கொடுத்தலும் மழுவாணெடியோனொப்ப உலகு முதலியன கொடுத்தலும் போல்வன அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்களாலும் நாற்படையானுங் கொடைத் தொழிலானும் பிறவற்றானும் அறத்தின் வழாமற் காத்தல் அவர்க்குரிய காப்பாம். அங்ஙனம் காக்கப்படும் உயிர்க்கு ஏதஞ்செய்யும் மக்களையாயினும் விலங்கையாயினும் பகைத்திறத்தையாயினும் அறஞ்செய்யா அரசையாயினும் விதிவழியால் தண்டித்தல் அவர்க்குரிய தண்டமாம். இஃது அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும்.
'வகை' யென்றதனானே களவுசெய்தோர் கையிற் பொருள் கோடலும், ஆறிலொன்றுகோடலுஞ் சுங்கங்கோடலும் அந் தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப்பொருள் நும் மிடத்து யான் கொள்வலெனக் கூறிக்கொண்டு அதுகோடலும், மறம்பொருளாகப் பகைவர்நாடு கோடலுந் தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன்றாயங்கோடலும் பொருளில்வழி வாணிகஞ் செய்துகோடலும் அறத்திற்றிரிந்தாரைத் தண்டத்திற்றகுமாறு பொருள்கோடலும் போல்வன கொள்க. அரசியலென்னாது பக்கமென்றதனான் அரசர் ஏனைவருணத்தார்கட் கொண்ட பெண்பாற்கட் டோன்றிய வருணத்துப்பகுதியோருஞ் சில தொழிற்குரியர் என்றுகொள்க.
உதாரணம்:--
"சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி யவைதுணை யாக
வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
யுருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்டதீயின் சுடரெழு தோறும்
விருப்புமெய்* பரந்த பெரும்பெய ராவுதி" (பதிற்று-21)
எனவரும்.
"கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச்
சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல்
வேறுபடு திருவி னின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரையக நண்ணிக் குறும்பொறை நாடித்
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக்
கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற்
புள்ளு யிரலைத் தோலூ னுதிர்த்துத்
தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற்
பருதி போகிய புடைகிளை கட்டி
யெஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன்
சூடுநிலை யுற்றுச் சுடர்விடு தோற்றம்
விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப
நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள்†
ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவி
லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து
சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங்
காவற் கமைந்த வரசுதுறை போகிய
வீறுசால் புதல்வர்ப் பெற்றனை யிவணர்க்
கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப
அன்னவை மருண்டென னல்லே னின்வயின்
முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை
வண்மையு மாண்பும் வளனும் மெச்சமுந்
தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென
வேறுபல நனந்தலை பெயரக்
கூறினை பெருமநின் படிமை யோனே" (பதிற்று-74)
எனவும் வருவனவற்றுள் ஓதியவாறும் வேட்டவாறுங் காண்க.
"ஒருமழுவாள் வேந்த னொருமூ வெழுகா
லரசடு வென்றி யளவோ- வுரைசான்ற
வீட்டமாம் பல்பெருந்தூ ணெங்கும் பசுப்படுத்து
வேட்டநாள் பெற்ற மிகை"
இதுவும் வேட்டல்.
‡"விசையந்தப்பிய" என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.
-----------
(பாடம்) *'விசும்புமெய்' †'நோற்றோள்'
‡'விசையம் பற்றிய', என்றே ஏடுகளில் உள்ளது.
- "ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்" (குறள்-கொடுங்-10)
இது காவல்கூறிற்று.
"கடுங்கண்ண கொல்களிற்றான்" என்னும் (14) புறப்பாட்டுப் படைக்கலங் கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க.
"தொறுத்தவய லாரல்பிறழ்நவு
மேரு பொருதசெறு வுழாது வித்துநவுங்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்க ணெருமையி னிரைதடுக குநவுங்
கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்
வளைதலை மூதா வாம்ப லார்நவு
மொலிதெங்கி னிமிழ்மருதிற்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பி
னாடுகவி னழிய நாமந் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகித்
கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க
வூரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்
துள்ள மழிய வூக்குநர் மிடறபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
காடே கடவுண் மேன புறவே
யொள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
வாறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பார மோம்பி
யழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது
மழைவேண்டு புலத்து மாரிநிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே" (பதிற்று -13)
இதனுண் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும், அறத்திற் றிரிந்த வேந்தனையழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக் காத்தவாறுங் கூறிற்று.
"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்" (குறள்-செங்-10)
இது தண்டம்.
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்- ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும், வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும்;
வாணிகரையும் வேளாளரையும் வேறுகூறாது இருமூன்று மரபினேனோரெனக் கூடவோதினார், வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்குமொத்தலின்.
இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல் பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி ஆறென்பாருமுளர். வழிபாடு இருவகை வேளாளர்க்கும் உரித்து. இனி வேட்டலைக் கூட்டுவார் அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்பர்.
பக்கமென்பதனான் *வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னியராகத் தோன்றினாரையும் அடக்குக; ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குந் தொழில்வரையறை அவர் நிலைகளான் வேறுவேறு படுதல்பற்றி அவர்தொழில் கூறாது இங்ஙனம்
பக்கமென்பதனான் அடக்கினார். இவை ஆண்பால்பற்றி உயர்ச்சி கொண்டன.
உதரணம்:-
"ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே
காட்டிய கைவண்மை காட்டினார்- வேட்டொறுங்
காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்
தாமரையுஞ் சங்கும்போற் றந்து"
(பெரும்பொருள் விளக்கம், புறத்திரட்டு-குடிமரபு)
இது வாணிகரீகை.
"உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியு
மொருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவரு
ளறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே" (புறம்-183)
இது வேளாளர் ஓதலின் சிறப்புக் கூறியது.
---------
(பாடம்) *'வாணிகர்க்கு, வேளாளர் கன்னியர்கட் டோன்றினாரையும்'
"ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்கண் ணவர்." (குறள்-ஈகை-8)
இஃது இருவர்க்கும் +ஈதற்சிறப்புக் கூறிற்று.
"போர்வாகை வாய்த்த புரவலரின் மேதக்கா
ரேர்வாழ்ந ரென்பதற் கேதுவாஞ் - சீர்சா
லுரைகாக்கு மான்னர்க் கொளிபெருகத் தாந்த
நிரைகாத்துத் தந்த நிதி."
இது வேளாளர் நிரைகாத்தது.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்." (குறள்-உழவு-3)
இஃது உழவுத்தொழிற் சிறப்பு இருவர்க்குங் கூறியது.
"வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தம்போற் செயின்." (குறள்-நடுவு-10)
இது வாணிகச்சிறப்பு இருவர்க்குங் கூறியது.
"இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை
விடுப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ
டொன்றா வுணரற்பாற் றன்று." (நாலடி-குடி-3)
இது வழிபாடு கூறியது; ஏனைய வந்துழிக் காண்க.
மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பக்கமும்;
தேயத்தைக் 'கிழவோ டேஎத்து' (இறையனாரகப்-8) என்றாற்போலக் கொள்க.
உதாரணம் :-
"வாய்மை வாழ்நர் மூதறி வாள
நீயே யொருதனித் தோன்ற லுறைபதி
யாருமி லொருசிறை யானே தேரி
னவ்வழி வந்தநின் னுணர்வுமுதற் றங்குந்
தொன்னெறி மரபினு மூவகை நின்றன
காலமு நின்னொடு வேறென
யாரோஒ பெருமநிற் றேர்கு வோரே."
என வரும்.
--------
(பாடம்) * 'ஈதல் கூறிற்று.'
- "வாடாப்போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கு
மருளின் றீந்தே னிறைந்துநனி ஞெகிழ்ந்து
மலரினு மெல்லி தென்ப வதனைக்
காமர் செவ்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கி* நிமிர்ந் தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின்
யாதோ மற்றது மெல்லிய வாறே"
இதுவும் அது.
கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க.
நாலிருவழக்கிற் றாபதப் பக்கமும்- அவ்வறிவர் கூறிய ஆகமத்தின்வழிநின்று வீடுபெற முயல்வார்க்கு† உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம்புரியுங்கூறும்.
வழக்கென்றதனான் அந்நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரி யனவுந் தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகையவென்று கொள்க.
அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம்பொறுத்தல், தட்பம்பொறுத்தல், இடம்வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை என எட்டும், இவற்றிற்கு உணவினும் நீரினுஞ்சென்ற மனத்தைத்தடுத்தலும், ஐந்தீநாப்பணும், நீர்நிலையினும் நிற்றலுங், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையுந், துறந்த காற்றொட்டும் வாய்வாளாமையும் பொருளென் றுணர்க.
இனி யோகஞ்செய்வார்க்குரியன, இயமம், நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என எட் டும். இவற்றை,
"பொய்கொலை களவே காமம் பொருணசை
யிவ்வகை யைந்து மடக்கிய துயமம்"
"பெற்றதற் குவத்தல் பிழம்புநனி ‡வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பய மாசாற்§ களித்தலொடு
நயனுடை மரபி னியம மைந்தே"
------------------------
(பாடம்) *'விலங்கு' †'வீடு முயல்வார்க்கு' ‡'யுணர்தல்' §'அரசர்க்'
- "நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென்
றொத்த நான்கி னொல்கா நிலைமையோ
டின்பம் பயக்குஞ் சமய முதலிய
வந்தமில் சிறப்பி னாசன மாகும்."
"உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந்
தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை."
"பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம
லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே."
"மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை."
"நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற்
குறித்த பொருளொடு கொளுத்த னினைவே."
"ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு
தான்பிற னாகாத் *தகையது சமாதி."
என்னும் உரைச்சூத்திரங்களா னுணர்க.
பக்கமென்றதனான், முட்டின்றி முடிப்போர் முயல்வோர் என்பனவும்,
"நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடரோம்பி - யூரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி." (புற-வெ-மாலை-வாகை-14)
என்பனவுங் கொள்க.
"ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற்
பாவை யன்ன குறுந்தொடி மகளி
ரிழைநிலை நெகிழ்த்த மள்ளர்க் கண்டிகுங்
கழைக்க ணெடுவரை யருவி யாடிக்
கான யானை தந்த விறகிற்
+கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே." (புறக்-251)
எனவும்,
"வைததனை யின்சொலாக் கொள்வானு நெய்பெய்த
சோறென்று ++கூழை மதிப்பானு - &ஊறிய
கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்." (திரிகடுகம்-48)
எனவும்,
-----------
(பாடம்) * 'தசைப்பது.' + 'கடும்புகை.' ++ 'கூழைத் துதிப்பானும்.' & 'நூறிய.'
- "ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து." (குறள்-அடக்கம்-6)
எனவும்,
"ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்." (குறள்-அவா-10)
எனவும்,
"நீஇ ராட னிலக்கிடை கோட
றோஒ லுடுத்த றொல்லெரி யோம்ப
லூரடை யாமை யுறுசடை புனைதல்
காட்டி லுணவு கடவுட் பூசை
யேற்ற தவத்தி னியல்பென மொழிப."
எனவும் வரும்.
ஏனைய வந்துழிக் காண்க.
அறிமரபிற் பொருநர்கட் பாலும் - தாந்தாம், அறியும் இலக்கணங்களாலே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும்;
அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும் பிறவாற்றானும் *வேறலாம்.
உதாரணம் :-
"விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்." (குறள்-சொல்வன்-8)
இது சொல்வென்றி.
"வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணான் பாடினான்
வெண்டுறையுஞ் செந்துறையும் +வேற்றுமையாக் - கண்டறியக்
கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையா
ழந்நரம்பு மச்சுவையு++ மாய்ந்து."
(புற-வெ-மாலை-பெருந்-18)
இது பாடல்வென்றி.
"கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக்
கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப்
படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந்
தொடுகழன் மன்னன் றுடி." (புற-வெ-மாலை-பெருந்-17)
இஃது ஆடல்வென்றி.
------------
(பாடம்) * 'பொரலாம்.' + 'வேற்றுமையாற் - பண்டங்கு.' ++ 'ஈர்ஞ்சுவையும்.'
- "இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,
யொருகான் மார்பொதுங் கின்றே யொருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப்
போரருந் தித்தன் காண்கதி லம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
*விருதலை யொசிய வெற்றிக்
களம்புகு மள்ளர்க் கடந்தடு நிலையே." (புறம்-80)*
இது மல்வென்றி.
"கழகத் தியலுங் கவற்றி னிலையு
மழகத் திருநுதலா ளாய்ந்து - புழகத்துப்
பாய வகையாற் பணிதம் பலவென்றா
ளாய வகையு மறிந்து. (புற-வெ-மாலை-ஒழிபு-16)
இது சூதுவென்றி.
அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையில் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்- அக்கூறுபட்ட ஆறுபகுதியும் நிலைக்களமாக அவற்றுக்கண் தோன்றிய வேறுபட்ட கூறு பாட்டோடு முன்னைய ஆறுங் கூட்டி அவ்வெழுகூற்றால் துறை பல திரண்ட தொகை பெற்றது அவ்வாகைத்திணை என்று கூறுவா ராசிரியர் என்றவாறு.
அனையென்றது சுட்டு. நிலை - நிலக்களம், நிலையது வகை.
ஆங்கென்றதனை அனைநிலைவகையொ டென்பதனகண் வகைக்கு
முன்னே கூட்டுக. ஓடு எண்ணிடைச்சொல்லாதலின் முன்
ணெண்ணியவற்றொடு கூட்டி ஏழாயிற்று.
இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையாவன பார்ப்பார்க்கும் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்பு நிகழ்வதற்கு முன்னே களவில் தோன்றினானும், அவள் பிறர்க்குரியாளாகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்திருந்துழித்# தோன்றினானும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும், அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினாருமாகிய சாதிகளாம். இன்னோருந் தத்தந் தொழில்வகையாற் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். ஒழிந்த பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும். இன்னும் பெண்பாலுயர்ந்து ஆண்பாலிழிந்தவழிப் பிறந்த சாதிகளும் அனைநிலைவகைப்பாற்படும். யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலைவகையோராவர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்பக்கத்தாராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென்றி முதலியன பாலறிமரபிற் பொருநர்கண் அனை நிலைவகையாம்.
- ---------
(பாடம்) * 'ஒருதலை யொசிய வொற்றி.' # 'களவிற்றோன்றினும்.'
------------
76.
- கூதிர் வேனி லென் றிரு பாசறைக்
காதலி னொன்றிக் கண்ணிய மரபினும்
ஏரோர் களவழி யன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர்
வென்ற கோமான் முன்றேர்க் குரவையும்
ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும்
பெரும்பகை தாங்கும் வேலி னானும்
அரும்பகை தாங்கு மாற்ற லானும்
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்
ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையி னொன்றொடு புணர்ந்து
தொல்லுயிர் வழங்கிய வலிப்பலி யானும்
ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும்
பகட்டி னானு மாவி னானும்
துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும்
கட்டி னீத்த பாலி னானும்
எட்டுவகை நுதலிய வவையத் தானும்
கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும்
இடையில் வண்புகழ்க் கொடைமை யானும்
பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும்
பொருளொடு புணர்ந்த பக்கத் தானும்
அருளொடு புணர்ந்த வகற்சி யானும்
காம நீத்த பாலி னானுமென்
றிருபாற் பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே.
-------------------
# 'உதாரணம் வந்துழிக் காண்க.'
இது மேல் தொகுத்துக் கூறிய எழுவகைத் திணையுள் அடங்காதவற்றிற்கு முற்கூறிய துறைகளேபோலத் தொடர் நிலைப்படுத்தாது மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப் படுத்துத் துறை கூறுகின்றது.
(இ-ள்) கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்- கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்;
கூதிர், வேனில் ஆகுபெயர். அக்காலங்களிற்சென்றிருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமைபெற்ற காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந் திருத்தல். இக் காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியாயிற்று. தலைவிமேற் காதலின்றிப் போரின்மேற் காதல்சேறலின் ஒன்றெயென்றார். இக்காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டையும் ஓதினாரேனும் ஓர்யாட்டை எல்லை இருப்பினும் அவற்று வழித்தோன்றிய ஏனைக் காலங்களும் இரண்டாகி அவற்றுள் அடங்குமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.
"வினை வயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே" (அகம்-84)
எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம். அகத்திற்கு வழுவன்றென்றற்கு மரபென்றார். *ஏனையகாலங்களாற் பாசறைப்பெயர் இன்றென்றற்கு இரண்டானும் பெயர் கூறினார். இங்ஙனங் கூறவே முற்கூறிய துறைபோலத் தொடர் நிலைப்படுத்தலின்றாய் இதனானே பலவாகி ஒருதுறைப்படுத்தலும் இன்றாயிற்று.
இனி இருத்தற்பொருண் முல்லையென்பதேபற்றிப் பாசறைக்கண் இருத்தலாற் பாசறைமுல்லையெனப் பெயர் கூறு வாரும் உளர்.
- -----------
(பாடம்) *'ஏனைய காலங்கள் பாசறைப் பெயராதலி னென்றற்கு இரண்டானும் பெயர் கூறினார்'
உதாரணம்:--
"மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடைய
மாதர்பாற் பெற்ற வலியளவோ- கூதிரின்
வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலா
னைங்கணை தோற்ற வழிவு"
(பெரும்பொருள் விளக்கம், புறத்திரட்டு-பாசறை-4)
என வரும்.
"கவலை மறுகிற் கடுங்கண் மறவ
ருவலைசெல் கூரை யொடுங்கத்-துவலைசெய்
கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான்
மூதின் மடவாண் முயக்கு" (புற-வெ-வாகை-15)
எனவும் வரும்,
ஏரோர் களவழி(த் தேரோர் தோற்றிய வென்றி) யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்- வேளாண்மாக்கள் விளையுட்காலத்துக் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப்பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் *செய்கைகளை மாறாது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும்;
என்றது நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து, அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல, அரசனும் நாற் படையையும் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக †வாள்பட ஓச்சி அதரிதிரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றொடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனாவேண்மான் இடத்துழந் தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக்கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்.
- ---------------
(பாடம்) *'செய்யுளை' †'வான்மடல்'
உதாரணம்:--
"இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற்
கருங்கை யானை கொண்மூ வாக
நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த
வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக
வரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்புறு வல்வில் வீங்குநா ணுகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
யீரச் செறுவிற் றேரே ராக
விடியல் புக்கு நெடிய *நீட்டிநின்
செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சாற்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்
கான நரி†யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க் கிருந்த பீடுடை யான
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்திற் போர்வை
யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப்
பாடி வந்திசிற் பெரும பாடான்
றெழிலி தோயு மிமிழிசை யருவிப்
பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன
வோடை நுதல வொல்குத லறியாத்
துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா வீகைத் தகைவெய் யோயே" (புறம்-369)
என வரும்,.
"நளிகட லிருங்குட்டத்து" என்னும் (26) புறப்பாட்டுப் பலி கொடுத்தது.
களவழிநாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது.
"ஓஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடை யெல்லாங் கீழ்மேலா
யாவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து" (களவழி நாற்பது-36)
என வரும்.
தேரோர்வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்- தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கை பிணைந்தாடுங் குரவையானும்;
உதாரணம்:--
"சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க
வாடிய கூத்தரின்வேந் தாடினான்- வீடிக்
குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த
விறையாட வாடாதார் யார்"
--------------------
(பாடம்) *'நீடலின்' †'கணநரி,' 'புகாநரி'
- "விழவுவீற் றிருந்து வியலு ளாங்கட்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்
திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன்
மடம்பெரு மையி* னுடன்றுமேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே." (பதிற்று-56)
என வரும்.
ஒன்றிய மரபிற் பிந்தேர்க் குரவையும்-தேரோரைவென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடுங் குரவை யானும்;
உதாரணம்:-
"வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின்
கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை-நின்றளிப்ப
வுண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில்
+கொண்டா டினகுரவைக் கூத்து."
(பெரும் பொருள் விளக்கம், புறத்திரட்டு-களம்-12)
என வரும்.
"களிற்றுக் கோட்டன்ன வாலெயி றழுத்தி
விழுக்கொடு விரைஇய வெண்ணினச் சுவையினள்
குடர்த்தலை துயல்வரச் சூடி யுணத்தின#
வானாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் பலவென
வுருகெழு பேஎய்மக ளயரக்
குருதித்துக ளாடிய களங்கிழ வோயே." (புறம்-371)
என்பதும் அது.
பெரும்பகை தாங்கும் வேலினாலும்-போர்க்கணன்றியும் பெரியோராகிய பகைவரை அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்;
காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படையாதலானுஞ் சான்றோர் வெற்படையே சிறப்பப் பெரும்பான்மை கூறலானும் வேலைக் கூறி ஏனைப்படைகளெல்லாம்,
--------------
(பாடம்) * ’மடங்காப் பெருமையின்.’ + ’கொண்டாடினர்.’
# ‘குடர்த்தலைமாலை துயல்வரச் சூடி யுணர்த்தின.’
"மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின்
மொழியா ததனையு முட்டின்று முடித்தல்."
(தொல்-பொ-செய்-110)
என்னும் உத்தியாற் பெறவைத்தார்.
உதாரணம்:-
"குன்று துகளாக்குங் கூர்ங்கணையான் வேலெறிந்
தன்று திருநெடுமா லாடினா-னென்றும்
பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ
டினிச்சென் றமர்பொரா யென்று."
இது பாரதம்.
"இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார்
இருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே
நல்லரார வுறையும் புற்றம் போலவுங்
கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
யுளனென வெரூஉ மோரொளி
வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே." (புறம்-*309)
என்பதும் அது.
"இவ்வே, பீலியணிந்து" என்னும்(65) புறப்பாட்டும் அது.
அரும்பகை தாங்கும் ஆற்றலானும்-வெலற்கரும் பகைவர் மிகையை நன்குமதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதியானும்;
உதாரணம்:-
"எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற
சில்விளை* வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாண ருண்டுகடை தப்பலி
னொக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தளவ கூறி
வரகுகட னிர*க்கு+ நெடுந்தகை
யரசுவரிற் றாங்கும் வல்லா னனனே." (புரம்-327)
என வரும்.
"களம்புக லோம்புமின்" என்னும்(87) புறப்பாட்டும் அது.
வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும்-உயிர்வாழ்க்கையைப் பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்; பக்கமென்றாதனாற் தாபதப்பக்கமல்லாத போர்த்தொழிலாகிய வல்லாண்மையே* கொள்க.
------------
(பாடம்) * ‘சில்வினை.’ + ’ஈர்க்கு.’
உதாரணம்:-
"கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து
மலிபுகழ் வேண்டு மனத்த-ரொலிகடல்சூழ்
மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார்
புண்ணகலாப்+போர்க்களத்துப் போந்து."
இப் பாரதத்துள் அது காண்க.
ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றோடுபுணர்ந்து தொலலுயிர் வழங்கிய அவிப்பலியானும்- பகைவர் நாணும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனத் தான் கூறிய பகுதியிரண்டனுள் ஒன்றனோடே பொருந்திப் பல பிறப்பினும் பழகிவருகின்ற உயிரை அங்கியங்கடவுட்குக்# கொடுத்தட் அவிப்பலியானும்;
நாணுதலாவது நம்மை அவன் செய்யாதே நாம் அவனை அறப்போர் செய்யாது வஞ்சனையால் வென்றமையில் அவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென நாணுதல்.
உதாரணம்,-
"எம்பியை வீட்டுத லம்மனைக்கா யான்படுதல்
வெம்பகன்முன் யான்விளைப்ப னென்றெழுந்தான்-றம்பி
புறவோரிற் பாணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தா
னறவோன் மறமிருந்த வாறு."
இப் பாரதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்ய முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க.
"இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.’ (குறள்-படைச்-9)
இதுவும் அது.
ஒல்லாரிடவயிற் புல்லியபாங்கினும்-பகைவராயினும் அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும்போல் வன வேண்டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்துநட்புச்செய்தலானும்;
----------- (பாடம்) * ‘வல்லானே.’ +’புண்ணியமாம்.’
# ‘அங்கிக் கடவுள்.’
உதாரணம் :-
"இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரந்திரவி
மைந்தனை வெல்வான் வரங்கொண்டான் - றந்தநா
ளேந்திலைவேன் மன்னனே யன்றி யிதற்குவந்த
வேந்தனும் பெற்றான் மிகை."
இப் பாரதத்துப் பகைவனாற் படுதலறிந்துந் தன் கவசகுண்டலங் கொடுத்தமை கூறினமையிற் புல்லியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருணையாகலின் வாகையாயிற்று.
இத்துணையு மறத்திற்குக் கூறியன.
பகட்டினானும் மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர்
பக்கமும் - எருதும் எருமையுமாகிய பகட்டினானும் யானையுங்
குதிரையுமாகிய மாவினானுங் குற்றத்தினீங்குஞ் சிறப்பினால்
அமைந்தோரது கூறுபாட்டானும்;
இவற்றான் உழவஞ்சாமையும் பகையஞ்சாமையுமாகிய வெற்றி கூறினார். பக்கமென்றதனாற் புனிறுறாவுங் காலாளுந் தேருங் கொள்க.
உதாரணம் :-
"யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தோ
ரேனை நிரையுடைய வேர்வாழ்நர் - யானைப்
படையோர்க்கும் வென்றி* பயக்கும் பகட்டே
ருடையோர்க் கரசரோ வொப்பு."
(பெரும்பொருள் விளக்கம், புறத்திரட்டு-குடிமரபு-9)
"ஏனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறைய
னென்றனி ராயி னாறுசெல் வம்பலிர்
மன்பதை மருள+ வரசுகளத் தவியக்
கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை
மீபிணத் துருண்ட தேயா வாழியிற்++
பண்ணமை தேரு மாவு மாக்களு
மெண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே
கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி
யுக்க்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச்
சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்ன செலவிற்பல்
யானை காண்பலவன் றானை யானே." (பதிற்று-77)
என்பதும் அது.
----------------
(பாடம்) * 'நன்றி.' + 'பெயர.' ++ 'தெய்வயாழின்.'
கட்டில் நீத்த பாலினானும் - அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட பகுதியானும்; அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி.
உதாரணம்:-
"கடலு மலையுந் தேர்ப்படக் கிடந்த
மண்ணக வளாக* நுண்வெயிற் றுகளினு
நொய்தா லம்ம தானே யிஃதெவன்
குறித்தன னெடியோன் கொல்லோ மொய்தவ
வாங்குசிலை யிராமன் றம்பி யாங்கவ
னடிபொறை யாற்றி னல்லது
முடிபொறை யாற்றலன் படிபொறை குறித்தே."
இஃது அரசு கட்டினீத்தபால்.
"பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில
மொருபக லெழுவ ரெய்தி யற்றே
வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக்
கையவி யனைத்து மாற்றா தாதலிற்
கைவிட் டனரே காதல ரதனால்
விட்டோரை விடாஅ டிருவே#
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே." (புறம்-358)
என்பதும் அது.
எட்டுவகை நுதலிய அவையத்தானும்- எண்வகைக் குணத்தினைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும்;
அவை குடிப்பிறப்புக் கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவுநிலைமை அழுக்காறின்மை அவாவின்மை எனவிவையுடையராய், $அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல்.
உதாரணம்:-
"குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற&
வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற்
காத லின்பத்துத் தூங்கித் தீதறு
நடுவுநிலைமை நெடுநகர் வைகி வைகலு
மழுக்கா றின்மை யவாஅ வின்மையென
விருபெரு நிதியமு மொருதா மீட்டுந்
-----------------
(பாடம்) * 'மண்ணக வளாக நிறைய நுண்வெயிற்- றுகளினு
நொய்தா லம்மதானே- யிஃதெவன் குறித்தனன் கொல்லோ மொய்தவ.'
# 'விடாஅது திருவே."
$ 'உடையாரவைக்கண் முந்தியிருப்பதோர் வெற்றி.' & "நாளினும்."
- தோலா நாவின் மேலோர் பேரவை
யுடன்மரீஇ யிருக்கை யொருநாட் பெறுமெனிற்*
பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத்
தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து
நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது
நிலையழி யாக்கை வாய்ப்பவிம்
மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே."
(ஆசிரியமாலை-புறத்திரட்டு-அவையறிதல்)
என இதனுள் எட்டும் வந்தன.
கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்- வேத முதலியவற்றாற் கட்டுதலமைந்த ஒழுக்கத்தடு பொருந்திய காட்சியானும்;
கண்ணதுதன்மை கண்மையெனப்படுதலின் அதனைக்
கண்ணுமையென உகரங்கொடுத்தார். எண்மை வன்மை வல்லோர் என்பது எளுமை வலுமை வல்லுவோர் என்றாற்போல.
இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக்கொண்டு ஐம்பொறியினை வென்று தடுத்தலாம் அவை இல்லறத்திற்கு உரியவாக நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை. பிறர்மனை நயவாமை, வேஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை முதலியனவாம்.
உதாரணம்:-
"ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து" (குறள்-அடக்க-13)
"ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்" (குறள்-நடுவு-8)
"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி" (குறள்-நடுவு-8)
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு" (குறள்-பிறனில்-8)
"படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்." (குறள்-வெஃகாமை-2)
"அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது" (குறள்-புறங்-145)
"தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு" (குறள்-தீவினை-1)
-----------------
(பாடம்) *'உடனய லிருக்கை யொருநா ளாமெனின்'
- "ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு" (குறள்-அழுக்கா-1)
"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்" (குறள்-பொறை-8)
பிறவும் இந்நிகரனவெல்லாங் கொள்க.
"விழையா வுள்ளம் விழையு மாயினுங்
கேட்டவை தோட்டி யாக மீட்டாங்
கறனும் பொருளும் வழாமை நாடித்
தற்றக வுடைமை நோக்கி மற்றதன்
பின்னா கும்மே முன்னிய முடித்த
லினைய பெரியோ ரொழுக்க மதனா
லரிய பெரியோர்த் தெரியுங் காலை" (அகம்-286-8-14)
என இது தொகுத்துக் கூறியது.
இடையில்வண்புகழ்க் கொடைமையானும்- இடையீ டில்லாத வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்;
உலகமுழுதும் பிறர்புகழ் வாராமைத் தன்புகழ் பரத்தலின் இடையி லென்றார்.
வண்புகழ்-வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும். இக்கொடைப் புகழுடையான் மூப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம்.
உதாரணம்:-
"மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந தனரே
துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வ
ரின்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற்
றொன்மை மாக்களிற் றொடாபறி யலரே
தாடாழ் படுபணி யிரட்டும் பூநுத
லாடியல் யானை பாடுநர்க் கருகாக்
கேடி னல்லிசை வயமான் றோன்றலைப்
பாடி நின்றனெ னாகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
னாடிழந் ததனினு நனியின் னாதென
வாடந் தனனே தலையெமக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையி
னாடுமலி யுவகையொடு வருகுவ
லோடாப் பூட்கைநின் கிழமையோற்* கண்டே." (புறம்-165)
என வரும். இது புறம்.
----------------
(பாடம்) *'கிளைமையோன்,'
பிழைத்தோர்த் தாங்குங் காவலானும்- தம்மைப் பிழைத்தோரைப் பொறுக்கும் பாதுகாப்பானும்;
காவலாவது இம்மையும் மறுமையும் அவர்க்கு ஏதம் வாரா மற் காத்தலாதலால், இஃது ஏனையோரின் வெற்றியாயிற்று.
உதாரணம்:-
"தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா-லும்மை
யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொ* லென்று
பரிவதூஉஞ் சான்றோர் கடன்" (நாலடி-58)
"அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த றலை" (குறள்-பொறை-1)
என வரும்.
பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்- அரசர்க்குரியவாகிய படை குடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப் பகுதியானும்;
பக்கமென்றதனான் மெய்ப்பொரு ளுணர்த்துதலுங்கொள்க.
உதாரணம்:-
"படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு" (குறள்-இறை-1)
நாடு அரண்முதலாகக் கூறுவனவெல்லாந் திருவள்ளுவப் பயனிற் காண்க.
"படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணு
முடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி†
யிட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்து
நெய்யுடை யடிசின் மெய்பட‡ விதிர்த்து
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யெல்லைத் தாம்வாழு நாளே." (புறம்-188)
"கேள்வி கேட்டுப் படிவமொடியாது" என்னும் (74)
பதிற்றுப்பத்தும் அது.
"ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு" (குறள்-மெய்யு-4)
என வரும்.
- ------------
(பாடம்) *'நிரயத்துளெய்துங்கொல்.'
†'நடந்துஞ்சிறுகை நீட்டியும்.' ‡'மெய்பெற.'
அருளொடு புணர்ந்த அகற்சியானும்- அருளுடைமையோடு பொருந்திய துறவறத்தனும்:
அருளொடு புணர்தலாவது ஓருயிர்க்கு இடர்வந்துழித் தன்னுயிரைக் கொடுத்துக் காத்தலும் அதன் வருத்தந் தனதாக வருந்துதலும் பொய்யாமை கள்ளாமை முதலியனவுமாம். இக்கருத்து நிகழ்ந்த பின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அறவெற்றியாயிற்று.
உதாரணம்:-
"புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாது
முலைமறாக் குழவி வாங்கி வாய்மடுத்
திரையெனக் கவர்புற நோக்கி யாங்க
ஏரிளங் குழவியின் முன்சென்று காணக்
கூருகிர்# வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய
வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப்
பாசிலைப் போதி மாதவன் பெருந்தகை
யாருயிர் காவல்$ பூண்ட
பேரருட் புணர்சசியி னகலு மாறே."
"தன்னுயிர்க கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்." (குறள் - இன்னா- 8)
"வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்." (குறள் -வாய்மை-1)
"களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்." (குறள்- கள்ளாமை-7)
"யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனு னதனி னிலன்." (குறள்-துறவு-1)
ஏனையவும் இதன்கண் அடக்குக.
காமம் நீத்த பாலினானும் - அங்ஙனம் பிறந்தபின்னர்& எப்
பொருள்களினும் பற்றற்ற பகுதியானும்;
உதாரணம் :-
"காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்." (குறள்- மெய்யு- 10)
என வரும்.
பாலென்றதனால் உலகியலு ணின்றே காமத்தினைக் கைவிட்ட பகுதியுங் கொள்க.
------------
(பாடம்) #'தானக் கூருகிர்.' $ 'ஆருயிர்க்காவல்.'
& துறவுள்ளம் பிறந்த பின்னர் என்றவாறு.
"இளையர் முதிய ரெனவிருபால் பற்றி
விளையு மறிவென்ன வேண்டா- விளையனாத்
தன்றாதை காம நுகர்தற்குத் தான்காம
மொன்றாது நீத்தா னுளன்"
(பெரும் பொருள் விளஞக்கம் புறத்திரட்டு-அறிவுடைமை-15)
என வரும்.
என்று இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே- முன்னர் ஒன்பானும் பின்னர் ஒன்பானுமாக இரண்டு கூறுபட்ட ஒன்பதாகிய பதினெட்டுத் துறையினையுடைத்து வாகை என்றவாறு.
இதனுள் ஏது விரியாதனவற்றிற்கும் ஏது விரித்தவாற்றான் இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க. (21)
---------------
77.
- காஞ்சி தானே பெருந்திணைப் புறனே.
இத்துணையும் உரிப்பொருள்பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி, இஃது உரிப்பொருளில்லாத பெருந்திணைக்குப் புறனிது வென்கின்றது. இது வாகைக்குப் பின்வைத்தார், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு.
(இ-ள்) காஞ்சிதானே பெருந்திணைப் புறனே- எழுதிணையுட் காஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந்திணைக்குப் புறனாம் என்றவாறு.
அதற்கு இது புறனாயவாறு* என்னையெனின், எண்வகை மணத்தினும் நான்குமணம்பெற்ற பெருந்திணைபோல இக்காஞ்சியும் அற முதலாகிய மும்முதற்பொருளும் அவற்றது நிலை யின்மையுமாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத்திணைகட்கும் ஒத்த மரபிற்றாகலானும், 'பின்னர் நான்கும் பெருந்திணை பெறும்' (தொல்.-களவியல்-14) என்ற நான்குஞ் சான்றோர் இகழ்ந்தாற் போல அறம் முதலியவற்றது நிலையின்மையுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், 'ஏறிய மடற்றிற' (தொல்-அகத்-51) முதலிய நான்குந் தீய காமமாயினவாறுபோல உலகியனோக்கி நிலையாமையும் நற்பொருளன்றாகலானும், உரிப்பொருள் இடைமயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணைபோல அறம்பொரு ளின்பம் பற்றியன்றி வேறுவேறு நிலையாமையென்பதோர் பொருளின்றாதல் ஒப்புமையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. 'கைக் கிளை முதலாப் பெருந்திணையிறுவாய்' (தொல்-அகத்-1) ஏழனையும் அகமென்றலின் அவ்வத்திற்கு இது புறனாவதன்றிப் புறப்புறமென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (22)
-----------
(பாடம்) *'அஃது அகத்துக்குப் புறனாயவாறு'
-----------
78.
- பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானு
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.
இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது*
(இ-ள்) பாங்கருஞ் சிறப்பின்- தனக்குத் துணையில்லாத வீட்டின்பம்† ஏதுவாக; பல்லாற்றானும்- அறம் பொருள் இன்பமாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து- நிலைபே றில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை யுடைத்துக் காஞ்சி என்றவாறு.
எனவே வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது‡ காஞ்சியாயிற்று. பாங்கு-துணை.
உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட் பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவு வேறின்மையிற் பல்லாற்றானுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் கணந்தோறுங் கெடுவனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு ஆறென்றார். நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமையுணர்தலின் வீடு ஏதுவாயிற்று. பல்லாற்றனுமென்றதனாற் சில்லாற்றானும் வீடேது வாகலின்றி நிலையாமைக்குறிப்பு ஏதுவாகலுங் கொள்க. இஃது அறிவன் தேயமுந் தாபதப்பக்கமும்பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம்.
உதாரணம்:-
"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக§
வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை¶ வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப்$
பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப்
-------
(பாடம்) *'இலக்கணம் உணர்த்துகின்றது.' †'பேரின்பம்.' ‡'குறிப்பாயினது'
§'முகனக', 'முதலாக.' 'வழியிடை.' $'வயங்கு மணியாத்து.'
பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின்#
முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
வுளனே$ வாழியர் யானெனப் பன்மா
ணிலமக ளழுத காஞ்சியு
முண்டென வுரைபரா லுணர்ந்திசி னோரே." (புறம்-365)
இதனுள் உண்டென உரைப்பரால் உணனர்ந்தோ ரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார் நில்லா உலகம் புல்லியதாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர் பல வேறு நிலையாமையை அறைந்த& மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம். (23)
-------------
79.
- மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங்
கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து+ முடியு மறத்தி னானு
மேமச் சுற்ற மின்றிப் புண்ணோற்
பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமு
மின்னனென் றிரங்கிய மன்னை யானு
மின்னது பிழைப்பி னிதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானு
மின்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற்
றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியு
நீத்த கணவற் றீர்த்த வேலிற்
பேஎத்த மனைவி யாஞ்சி யானு
நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பா டஞ்சிய மகட்பா லானு
முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
யீரைந் தாகு மென்ப பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற
-------------
(பாடம்) # 'முன்பின்.' $'உள்ளேன்.' &'அறிந்த.' +'புண்கழித்து.'
மாய்ந்த பூசன் மயக்கத் தானுந்
தாமே யேங்திய தாங்கரும் பையுளுங்
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமு
நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையுங்#
கழிந்தோர் தேஎத் தழிபட ருறீஇ
யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங்
காதலி யிழந்த தபுதார நிலையும்
காதல னிழந்த தாபத நிலையு
நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச்
சொல்லிடையிட்ட பாலை நிலையு
மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத்$
தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும்
மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
நிறையருஞ் சிறப்பின் றுறையிரண் டுடைத்தே.
இது முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாகவன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம்போலத் துறையொடும் படாது நிலையின்மைப்பொருளை வகுத்தோதிய சூத்திரமென்றுணர்க.
(இ-ள்.) மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும்- பிறராற் றடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங்காஞ்சியானும்;
கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள்வகையாற் கூறுபடுத்துங் கடவுள்; அதனைத்தான் பேரூர்க் கூற்றம்போலக் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மையிற் 'காலம் உலகம்' என (தொல்-சொல்- கிளவி- 58.) முன்னே கூறினார்.
---------------
(பாடம்.) #'தலைமகன் புலம்பிய முதுபாலை நிலையும்.' $ 'சிறுவன்.'
உதாரணம் :-
"பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
டயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினு
மல்லது செய்த லோம்புமி னதுதா
னெல்லாரு முவப்ப தன்றியு*
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே." (புறம்-195)
இது வீடேதுவா கவன்றி வீடுபேற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது.
"இருங்கடலுடுத்த" என்னும் (363) புறப்பாட்டும் அது.
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - இளமைத்தன்மை கழிந்து அறிவுமிக்கோர் இளமைகழியாத அறிவின் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்;
முதுமை மூப்பதலான் அது காட்சிப்பொருளாக இளமை நிலையாமை கூறிற்றாம்.+
உதாரணம் :-
"இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி++
மறையென லறியா& மாயமி லாயமொ
டுயர்சினை@ மருதத் துறையுறத் தாழ்ந்த
நீர்நணிப்$ படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் ** துடுமெனப் பாய்ந்து
குளிததுமணற் கொண்ட கல்லா விளமை
யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே." (புறம்-243)
இது வீடுபெறுதற்கு வழிகூறியது.
பண்புறவரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும் - நன்றாகிய குணம் உறுநிலையாகப்## பெறுகின்ற பகுதி யாராய்ந்து பெறுதற்குப் பட்ட விழுப்புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சியானும்;
- ----------
(பாடம்) *'எல்லாரும் புகழ்வ தன்றியும்.' +'இளமை நிலை கூறிற்றாம்.'
++'தங்குவழித் தங்கி.' &'மறையென வறியா.' @'உயர்திணை.'
$'நீர்க்கணிப்படிந்த.' **'நெடுமென் குட்டத்து.' ##'உறுவிலையாக.'
இஃது யாக்கை நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது. இதனை வாகைதுதிணைப்பின்னர் வைத்தார்; இக்காஞ்சியும் வாகையொடு மயங்கியுங் காஞ்சியா தல்பற்றி.
உதாரணம் :-
"பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக்
கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச்
சென்று களம்புக்க தானை தன்னொடு
முன்மலைந்து மடிந்த வோடா விடலை
நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன்
புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச்
சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை
யரசுமலைந்து தாங்கிய களிறுபடி பறந்தலை
முரண்கெழு தெவ்வர் காண
விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே."
இது போர் முடிந்தபின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலையின்மையினையும் பண்புறவருதலையும் நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று.
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஒம்பிய பேஎய்ப் பக்கமும் - கங்குல யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின்மையின் அருகுவந்து புண்பட்டோனைப் பேயானே காத்த பேய்க்காஞ்சியானும்;
பேய் காத்ததென்றலின் ஏமம் இரவில் யாமமாயிற்று; ஏமம் காப்புமாம். ஓம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஓரியும் நரியுங் கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம்.
இது சுற்றத்தாரின்மை கூறலிற் செல்வநிலையாமை யாயிற்று. பக்கமென்றதனாற் பெண்டிர் போல்வார் காத்தலும் பேயோம்பாத பக்கமுங் கொள்க.
உதாரணம் :-
"புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற்
கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - யுண்ணு
முளையோரி யுட்க வுணர்வொடுசா யாத*
விளையோன் கிடந்த விடத்து."
என வரும்.
- -----------
(பாடம்) *'உணர்வொடுஞ் சாயா.'
ஏனைய வந்துழிக் காண்க.
இன்னன் என்று இரங்கிய மன்னையானும் - ஒருவன் இறந்துழி அவன் இத்தன்மையோனென்று ஏனையோர் இரங்கிய கழிவு பொருட்கண்வந்த மன்னைக்காஞ்சியானும்;
இது பலவற்றின் நிலையாமைகூறி இரங்குதலின் மன்னைக் காஞ்சியென வேறுபெயர் கொடுத்தார். இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற் பற்றியே வருமென்றற்கு மன் கூறினார்.* இது மன்னையெனத் திரிந்து காஞ்சியென்பத-னோடடுத்து நின்றது.† இஃது உடம்பொடு புணர்த்தல்.
"சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற்றானு நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே
யென்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
யம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே." (புறம்-235)
என இப் புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருடந்தது.
"பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே‡
யாடுநர்க் கித்த பேரன் பின்னே
யறவோர் புகழ்ந்த §வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பின்னே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கி
லனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுக லாயின புரவல னெனவே." (புறம்-221)
இது மன் அடாது அப்பொருடந்தது.
"செற்றன் றாயினும்" என்னும் (226) புறப்பாட்டு முதலியனவும் அன்ன.
இதனை ஆண்பாற் கையறுநிலை யெனினும் அமையும்.
இன்னது பிழைப்பின் இதுவாகியரேனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும் - இத்தன்மைய தொன்றினைச் செய்தலாற்றேனாயின் இன்னவாறாகக் கடவேனெனக் கூறிய வஞ்சினக் காஞ்சியானும்;
- -------------
(பாடம்) * 'மன்னே கூறினார்.' †'நின்றதென்னும்.'
‡ 'பல்புக ழினனே.' §'ஆய்சொல் லினனே.'
அது தான்செய்யக் கருதியது பொய்த்துத் தனக்கு வருங்குற்றத்தால் உயிர்முதலியன துறப்ப னென்றல். சிறப்பு – வீடு பேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு.
உதாரணம் :-
"மெல்ல வந்தெ னல்லடி பொருந்தி
யீயென விரக்குவ ராயிற் சீருடை
முரசுகெழு தாயத் தரசோ தஞ்ச
மின்னுயி ராயினுங் கொடுக்குவே னிந்நிலத்
தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென்
னுள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற்
றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல
வுய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக்
கழைதின் யானைக் காலகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச் சென்றவண்
வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய
திதீ னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தன் மகளி
ரொல்லா முயக்கிடைக் குழைகவேன் றாரே." (புறம்-73)
"நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்" "மடங்கலிற் சினைஇய" என்னும் (72,74) புறப்பாட்டுக்கள் உயருஞ் செல்வமும் போல்வன நிலையும் பொருளென நினையாது வஞ்சினஞ் செய்தன.
இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் - இனிதாகிய நகையினையுடைய மனைவி தன் கணவன் புண்ணுறறோனைப் பேய் தீண்டுதலை நீக்கித் தானுந் தீண்டாத காஞ்சியானும்;
என்றது, நகையாடுங் காதலுடையாள், அவனைக் காத்து விடிவளவுஞ் சுற்றுதலன்றி முயங்குதற்கு உள்ளம் பிறவாதபடி அவன் நிலைமையை எய்தினானென்றவாறு.
இதுவும் ஆண்பாற்காஞ்சியாம். இக் காஞ்சி யென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக.
"தீங்கனி யிரவமொடு* வேம்பு +மனைச்செரீஇ
வாங்குமருப் பி++ யாழொடு பல்லியங் கறங்கப்
பையப் பெயர்த்து& மைவிழு திழுகி@
-----------
(பாடம்) *'தீங்கினி யாஅமொடு.' +'மனைச்செரீஇய.' ++'யாங்கு மருப்பு.'
@'கைபயப் பெயர்த்து. @'மையிழு திழுகி.'
யயைவி சிதறி யாம்ப லூதி
யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
*காக்கம் வம்மோ காதலந் தோழி†
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே." (புறம்-281)
என வரும்.
நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சியானும்-உயிர்நீத்த கணவன் தன்னுறவை நீக்கின வேல்வடுவாலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியானும்;
எஞ்ஞான்றும் இன்பஞ்செய்த கணவனுடம்பு அறிகுறி தெரியாமற் புண்பட்டு அச்சநிகழ்தலின், யாக்கை நிலையாமை கூறியதாம். பேஎத்த என்பது உரிச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயரெச்சம். அஞ்சின, ஆஞ்சி யென நின்றது.
"இன்ப முடம்பு‡ கொண் டெய்துவிர் காண்மினோ
வன்பி னுயிர்புரக்கு மாரணங்கு--தன்கணவ
னல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே
புல்லார்வேன் மெய்சிதைத்த புண்."
(தகடூர்யாத்திரை-புறத்திரட்டு-மூதின்மறம்-8)
என வரும்.
இனி ‘வேலிற்பெயர்த்த மனைவி’ யென்று பாடமோதி, அவ்வேலான் உயிரைப்போக்கின மனைவி யென்று கூறி, அதற்குக்
"கெளவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோ-னவ்வேலே
யம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற்
கொம்பிற்கு மாயிற்றே கூற்று." (புற-வே-மாலை-காஞ்சி-23)
என்பது காட்டுப.
நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்- பெண்கோளொழுக்கத்தினெத்து மறுத்தல் பற்றிப் பகைவனாய் வலிந்து கோடற்கு எடுத்துவந்த அரசனோடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்;
வேந்தியலாவது உயிர்போற்றாது வாழ்தலின், அவரது நிலையினை நோக்கி, அவரோடொத்து மகளிரைப் படுத்தற் கஞ்சி மறுப்பாராதலின் அஞ்சியவென்றும், மேல்வந்த வென்றுங் கூறினார். அம்முது குடிகள் தாம் பொருதுபடக் கருதுதலின் உயிரது நிலையாமை உணர்ந்த காஞ்சி யாயிற்று. பாலென்றத னான். முதுகுடிகளேயன்றி 'அனைநிலைவகை' (தொல்-புறத் திணை-20) யெனப்பட்டார் கண்ணும் இத்துறை நிகழ்தல் கொள்க.
-------------
(பாடம்) * ’காக்க வம்மோ.’ † ‘தொழில்.’ ‡ ‘இன்னு முடம்பு.’
உதாரணம் :-
" நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய *கூறும் வேந்தே தந்தையு
நெடிய வல்லது பணிந்துமொழி யலனே
இஃதிவர் படிவ மாயின் வையெயிற்
றரிமதர் மழைக்க ணம்மா வரிவை
மரம்படு சிறுதீப் போல
வணங்கா யினடான் பிறந்த வூருக்கே." (புறம்-349)
என் வரும்.
"களிறணைப்பக் கலங்கின காஅ
தேரோடத் துகள்கெழுமின தெருவு
மாமறுகலின்† மயக்குற்றன வழி
கலங்கழா அலிற் றுறை, கலக்குற்றன
தெறன் மறவ ரிறைகூர்தலிற்
பொறைமலிந்து நிலனெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பி
னோவுற ழிரும்புறங் காவல் கண்ணிக்
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
மைய னோக்கிற் றையலை நயந்தோ
ரளியர் தாமேயிவ டன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய்‡ வாளர்
குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு
கழாஅத் தலைய கருங்கடை நெடுவே
§லின்ன மறவர்த் தாயினு மன்னோ
வென்னா வதுகொ றானே
பன்னல் வேலி¶யிப் பணைநல் லூரே. (புறம்-345)
இதனுள் "நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென" என்றலின், அரசர்க்கு மகட்கொடைக் குரியரல்லாத அனைநிலை வகையோர்பாற் பட்டது.
முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந்தாகு மென்ப – தன் கணவன் தலையைத் தன்முகத்தினும் முலையினுஞ் சேர்த்திக்கொண்டு, அத்தலையான் மனைவி யிறந்த நிலைமையானுந் தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவாராசிரியர் என்றவாறு.
- ----------
(பாடம்) * 'கடவும்.'† 'மாவழங்கலின்ழ' ‡ 'ததுவாய்.'
§ 'இன்னம் பிறவர்த் தாயினும்.' 'பன்னெல்வேலி.'
தலை, அவள் இறத்தற்கேதுவாகலின் அது வினைமுதலாயிற்று. மேல் துறை இரண்டென்பாராகலின், இவை பத்தும் ஒருதுறையாமென்றற்கும் இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் ஈரைந்தென வேறோர்தொகை கொடுத்தார். அவன் தலையல்லது உடம்பினை அவள் பெறாமையின், அவன் யாக்கைக்கு நிலையின்மை யெய்தலின், இதுவும் ஆண்பாற்கே சிறந்ததாம். மனைவி இறந்துபடுதலும்* அதனாலெய்துதலின் மேல்வருகின்ற பெண்பாற்கும் இயைபுபடப் பின்வைத்தார். இதற் கியைபுபடத் தொடாக்காஞ்சியும் ஆஞ்சிக்காஞ்சியும் பெண்பாலொடுபட்ட ஆண்பாற் காஞ்சியாதலின் முன்வைத்தார். இவை ஒருவகையாற் பெண்பாற்கண்ணு நிலையின்மையுடைய வாயினும் இரண்டிடத்தும் ஓதிச் சூத்திரம் பல்காமற், சிறப்புடைய ஆண் மகற்கே ஓதிப் பெண்பாற் பகுதியுந் தழீஇயினா ரென்றுணர்க. இனி வருகின்ற பத்தும் பெண்பாற்கே யுரிமையின் அவற்றிற்கும் ஈரைந்தென்பதனைக் கூட்டிமுடிக்க.
உதாரணம்:-
"நிலையி லுயிரிறத்தற் கஞ்சிக் கணவன்
றலையொழிய மெய்பெறாள் சாய்ந்தா- டலையினால்
வண்ணம் படைத்தான் முழுமெய்யு மற்றத
னுண்ணின்ற தன்றோ வுயிர்."
என வரும்.
பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத்தானும் -பெரும்புகழுடையவனாகி மாய்ந்தானொருவனைச் சுற்றிய பெண்கிளைச் சுற்றங் குரல்குறைவுபட்ட கூப்பீட்டு †மயக்கத்தானும்;
என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் விரவியெழுந்த ஓசையை. ஆய்ந்தவென்பது உள்ளத னுணுக்கம். 'மாய்ந்த பூசன் மயக்க' மென்று பாடமாயிற், சுற்றம் ஒருங்கு மாய்ந்த வழிப் பிறரழுத பூசன் மயக்கமென்று கொள்ளினும் அமையும். ஈண்டு மாய்ந்த மகனென்றதூஉஞ் சுற்றப்படுவானை அறிவித்தற்கே; ஆண்பாலும் உடன்கூறியதன்று. மேலனவற்றிற்கும் இஃதொக்கும்.
-----------
(பாடம்) *'இறந்துபாடும்' †'கூப்பிட்ட மெய்மயக்கத்தானும்.'
உதாரணம்:--
"இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப்
புரவலன் மாய்ந்துழியும் பொங்கு- முரைமயங்க*
வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா
தோற்கண்ண போலுந் துடி"
(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு-இரங்கல்-2)
என வரும்.
†"மீனுண் கொக்கின் றூவியன்ன " (277) புறப்பாட்டும் அது.
தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும்- அச்சுற்றத்தாருமின்றி மனைவியர் தாமே தத்தங் கொழுநரைத் தழீஇயிருந்து அழுதது கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்;
தாமே யெனப் பன்மை கூறினார், ஒருவர்க்குத் தலைவியர் பலரென்றற்கு. ஏகாரஞ் சுற்றத்திற் பிரித்தலிற் பிரிநிலை.
இது செல்வமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது.
"மழைகூர் பானாட் கழைபிணங் கடுக்கத்துப்
புலிவழங் கதரிடைப்‡ பாம்புதூங் கிறுவரை
இருள்புக்குத் துணிந்த§ வெண்குவரற் கல்லளை
யொருதனி வைகிய தனைத்தே பெருவளத்து
வேனின் மூதூர்ப் பூநாறு நறும்பக
லெழுதுசுவர் மாடத்துக் கிளயுடை யொருசிறை
யவரின்று நிகழ்தரு முறவே யதனா
லழுதுபனி கலுழ்ந்தவெங் கண்ணே யவ்வழி
நீர்நீந்து பாவை யசைவது நோக்கிச்
சேணிடை யகன்ற துயிலே யதுவினி
யவருடைக் கனவோ டிவ்வழி யொருநாள்
வாரா தாயினும் யாதாங் கொல்லோ
மெலிந்து மெலியுமென் யாக்கையிற்
கழிந்த கழியுமென் னாருயிர் நிலையே"
என வரும்.
- --------
(பாடம்) *'உரையழுங்க'
†'மீனுண் கொக்கின் றூவி யன்ன'
வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டன னென்னு முவகை
யீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே"
‡ 'புலிவழங் காரிடை' §'துறந்த'
"கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்ப" என்னும் (249) புறப்பாட்டும் அது.
தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார் தாமே தனித்திருந்த தென்றுகூறிக்,
"குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினு
மாளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்படு ஞமலியி னிடர்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபத
மதுகை யின்றி வயிற்றுத் தீத்தணியத்
தாமிரந் துண்ணு மளவை
யீன்ம ரோவிவ் வுலகத் தானே" (புறம்-74)
என்னும் புறப்பாட்டுக் காட்டுவாரும் உளர்.
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்- மனைவி தன்கணவன் முடிந்தபொழுதே உடன் முடிந்துபோகிய செலவுநினைந்து கண்டோர் பிறர்க் குணர்த்திய மூதானந்தத்தானும்;
ஆனந்தம்- சாக்காடு. முதுமை கூறினார். உழுவலன்புபற்றி. இப்படியிறத்தலின் இஃது யாக்கை நிலையின்மை.
உதாரணம்:--
"ஓருயி ராக வுணர்க வுடன் கலந்தார்க்
கீருயி ரென்ப ரிடைதெரியார்- போரில்
விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கு
முடனே யுலந்த துயிர்."
(புற-வெ-மாலை-சிறப்பிற்-பொது-9)
என வரும்.
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்- மிகுதிமிக்க* அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின முதுபாலையானும்;
புலம்பிய வெனவே அழுதல் வெளிப்படுத்தல்† கூறிற்று. பாலையென்பது பிரிவாகலின், இது பெருமபிறி தாகிய பிரிவாதல் நோக்கி முதுபாலை யென்றார். நனிமிகு சுரமென்று இரு கால்‡ அதனருமை கூறவே, பின்பனிப் பிரிவு அதற்குச் சிறந்த
தன்றாயிற்று.§
- -------
(பாடம்) *'மிகுதி தக்க' †'புலப்படுத்தல்' ‡'இருக்கால்'
§'பின்பனிதானு முரித்தென மொழிப' என்று அகத்திணையியலுள் ஓதியது கொண்டு இது கூறினார்.
இதுவும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று.
"இளையரு முதியரும் வேறுபுலம் படர
வெடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல
விடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த
வளையில் வறுங்கை யோச்சிச் கிளையு
ளின்ன னாயின னிளையோ னென்று
நின்னுரை செல்லு மாயின்* மற்று
முன்னூர்ப் பழுனிய கோளியா லத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
வளனுஞ் செம்மலு மெமக்கென நாளு
மானாது புகழு மன்னை
யாங்கா குவள்கொ லளிய டானே" (புறம்-254)
என வரும்.
கழிந்தோர் தீஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்- கணவனோடு மனைவியர் கழிந்துழி† அவர்கட்பட்ட அழிவுபொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துபடா தொழிந்த ஆயத்தாரும் பரிசில்பெறும் விறலியருந் தனிப்படருழந்த செயலறு நிலைமையானும்;
ஒழிந்தோரென வரையாது கூறினமையிற் கழிந்தோராற் புரக்கப்படும் அவ்விருதிறத்தாரையும் உடன்கொள்க. கழிந்தோரென்ற பன்மையால் ஆண்பாலுந் தழீஇயினார்; கையறுநிலை அவரையன்றி அமையாமையின். ஆண்பாற் கையறுநிலை மன்னைக்காஞ்சியுள் அடங்கும். அழிவாவன புனல்விளையாட்டும், பொழில விளையாட்டுந், தலைவன்வென்றியும் போல்வன.
உதாரணம்:-
"தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற்
றீராத பண்பிற் றிருமடந்தை- வாரா
வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ
வலகற்ற கற்பி னவள்."
எனவரும்.
காதலி இழந்த தபுதார நிலையும்- தன் மனைவியைக் கணவனிழந்த தபுதார நிலையானும்;
என்றது தாரமிழந்தநிலை. தன் காதலியை இழந்தபின் வழிமுறைத் தாரம் வேண்டின், அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும் எஞ்ஞான்றும், மனைவியில்லாதானுந் தபுதார நிலைக்கு உரியனாயினும், அது காஞ்சியாகாதென்றற்குந், தபுதார நிலையென்றே பெயர்பெறுதன் மரபென்றற்குங், காதலியிழந்த நிலையுமென்றே ஒழியாது, பின்னுந் தபுதாரநிலையு மென்றார். தலைவர் வழிமுறைத்தாரமும் எய்துவாராகலின் அவர்க்கு நிலை யாமை சிறப்பின்மையின் ஆண்பாற் காஞ்சியன்றாயிற்று.
- -----------
(பாடம்) *'சொல்லுமாயின்' †'கழிந்தவழி'
இஃது யாக்கையும் இன்பமும் ஒருங்கு நிலையின்மையாம்.
உதாரணம் :-
"யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே
யுயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்
தொள்ளழற் பள்ளிப் பாயல் சோத்தி
ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை
யின்னும் வாழ்வ லென்னிதன் பண்பே." (புறம்-245)
என வரும்.
காதலன் இழந்த தாபதநிலையும் - காதலனையிழந்த மனைவி தவம் புரிந்தோழுகிய நிலைமையானும்;
இருவரும் ஓருயிராய் நிகழ்ந்தமையின் உயிரும் உடம்பும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம்.
இதனை இல்லறம் இழத்தலின் அறநிலையின் அமையு மென்ப.
உதாரணம் :-
"அளிய தாமே சிறுவெள் ளாம்ப
லிளைய மாகத் தழையா யினவே
யினியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
தின்னா வைக லுண்ணும்
அல்லிப் படூஉம் புல்லா யினவே." (புறம்-248)
என வரும்.
நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடையிட்ட பாலைநிலையும் - கற்புடைமனைவி தன்கணவன் இறந்து அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்துகூறிய புறங்காட்டு நிலையானும்;
எல்லா நிலத்தும் உள தாகி வேறுதனக்கு நிலனின்றி வருதலானும் நண்பகல்போல வெங்கனலான் வெதுப்புதலானும் புறங்காட்டைப் பாலை யென்றார்; பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு நிலையென்றார்.
உதாரணம்:-
"பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த# கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு
முயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட் டீம
நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளித ழவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே." (புறம்-246)
என வரும்.
மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பெயரத் தாய் தப வரூஉந் தலைப்பெயல் நிலையும் - பொருகளத்துப் பொருதுமாயும் பெருஞ்சிறப்பிற் றீர்ந்து தன்மகன* புறங்கொடுத்துப் போந்தானாக, அதுகேட்டுத் தாய் சாக்காடு துணிந்து சென்று மகனைக் கூடுங் கூட்டமொன்றானும்; இனி அவன்பிறர்சிறப்பு மாய்தற்குக் காரணமாகிய பெருஞ்சிறப்பொடு களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி அவனோடு இறந்துபட வரும் தாயது தலைப்பெயனிலைமை யொன்றானும்;
இவ் விருகூறும் உய்த்துக்கொண்டுணர்த லென்னும் உத்தி. நிலையென்றதனால் அவள் இறந்துபடாது மீடலுஞ் சிறுபான்மையாம் காஞ்சி யென்றுகொள்க, அஃது அன்பிற்கு
நிலையின்மையாம்.
"வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
நோவே னத்தை நின்னீன் றனனே
பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி
யக்களத் தொழிதல் செல்லாய் மிக்க
புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃக
மதன்முகத் தொழிய நீபோந் தனையே
யதனா, லெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த
கல்லாக் காளையை யீன்ற வயிறே."
(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு மூதின்மறம்-9)
இத் தகடூர் யாத்திரை கரியிடை வேலொழியப் போந்ததற்குத் தாய்தபவந்த தலைப்பெயனிலை,
-------------
(பாடம்) #'அடகிடைக்.'
"எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ
வென்மக னாத லெற்கண் டறிகோ
கண்ணே கணைமூழ் கினவே தலையின்
வண்ண மாலையும் வாளிவிடக் குறைந்தன
வாயே, பொங்குநுனைப் பகழி மூழ்கலிற் புலர்வழித்
தாவ# நாழிகை யம்புசெறித் தற்றே
நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே
நிறங்க ரந்து பலசர நிரைத்தன வதனா
லவிழ்பூ வப்பணைக் கிடந்தோன்
கமழ்பூங் கழற்றீங் காய்போன் றனனே."
இத் தகடூர்யாத்திரை துறக்கத்துப்பெயர்ந்த நெடுங்கோளன்$ தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை.
"நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோண்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன& னாயி னுண்டவென்
முலையறுத் திடுவன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
வீன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே." (புறம்-278)
இப் புறப்பாட்டு மீண்டது.
"ஈன்றுபுறந்தருதல்" என்னும் (312) புறப்பாட்டும் அது.
மலர்தலை உலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு - அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்றுமுறைமையினைப் பலரும் பெரிதுணரும் படியாகப் பிறந்தோரெல்லாரும் இறந்துபோகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்துதலானும்;
உதாரணம்:-
'உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப்
பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு
புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ
டிகணெடுவே லானை யிழந்து."
(பெரும்பொருள் விளக்கம்- புறத்திரட்டு-இரங்கல்-19)
என வரும்.
--------
(பாடம்) #'புலாவழித் தாவா.' $'நெடுங்கேரளன்.' &'உலைந்தனன்.'
"களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூஉங் கூகையொடு பிறழ்வர
வீம விளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றி மஞ்சுபடு முதுகாடு#
நெஞ்சமர் காதல ரழுத கண்ணீ
ரென்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப
வெல்லாப் புறனுந் தான்கண் டுலகத்து
மன்பதைக் கெல்லாந் தானாய்த்
தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே."$ (புறம்-356)
இதுவும் அது.
தொகைஇ ஈரைந்து ஆகுமென்ப – தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர்; நிறையருஞ் சிறபிற் றுறை இரண்டு உடைத்தே - ஆதலான்& அக் காஞ்சி நிறுத்தற்கு எதிர் பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து என்றவாறு.
எனவே முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென்பதுங் கூறினாராயிற்று. நிறையருஞ் சிறப்பென்றதனானே மக்கட்குந் தேவர்க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப்பகுதிக்கண்ணுள்ள நிலையாமை காஞ்சிச்சிறப்பன்று என்றுணர்க. (24)
---------------
80.
- பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே.
இது மேற் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் (தொல்-புறத்திணை-1) என்புழிக் கிடக்கைமுறை கூறிய முறையான் இறுதிநின்ற பாடாண்டிணைக்குப் பொதுவிலக்கணம் உணர்த்துவான் அதற்குப் பெயர் இன்ன தெனவும், அது கைக்கிளைப்புறனாமெனவும், அஃது இத்துணைப் பொருளுடைத்தெனவுங் கூறுகின்றது.
(இ-ள்.) பாடாண்பகுதி கைக்கிளைப்புறனே பாடாணெனப்பட்ட புறத்திணையது கூறு கைக்கிளையென்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறனாம்; நாடுங்காலை நாலிரண்டு
உடைத்து - தன்னை நாடிச் சொல்லுவார் செய்யுளுண் முடிந்த பொருள் பாடாணாகவே நிறுப்ப நாடுங்காலத்து எண்வகைப் பொருளுடைத்து என்றவாறு.
- ---------
(பாடம்) #'அஞ்சுவந் தமிய மென்னா துஞ்சுவர் - தன்றி மஞ்சுபடுமுது காடு.'
$'காண்பொல் லாதே." &'என்பதாகலான்.'
பாடாணென்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண் மகனையும் நோக்காது, அவனதொழுகலாறாகிய திணை யுணர்த் தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஒருதலைவன் பரவலும்# புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின் அவைதம்மின் வேறாகிய ஒருதலைக்காம மாகிய கைக்கிளையோ டொத்தலிற் பாடாண்டிணை கைக்கிளைப் புறனாயிற்று. வெட்சி முதலிய திணைகளுஞ் சுட்டி யொருவர் பெயர் கொடுத்துங் கொடாதும் பாடப் படுதலிற் பாடாண்டிணையாயினும், ஒருவனை ஒன்று நச்சிக் கூறாமையின், அவர் பெறுபுகழ் பிறரைவேண்டிப் பெறுவதன்றித் தாமே தலைவராகப் பெறுதலின், அவை கைக்கிளைப்புறன் ஆகாமை உணர்க. இவ் விருகூறுந் தோன்றப் பகுதியென்றார். புகழை விரும்பிச் சென்றோர் வெட்சி முதலியவற்றைப் பாடின், அவை கைக்கிளைப்புறன் ஆகாதென உணர்க.
இதனானே புறத்திணை ஏழற்கும் பெயரும் முறையும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. நாலிரண்டாவன இப்பாடாண்டிணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி$ பலவுங் கூட்டி ஒன்றும், இருவகை வெட்சியும் பொதுவியலும் வஞ்சியும் உழிஞையுந் தும்பையும் வாகையுங் காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம்.
இனி இக்கூறிய ஏழுதிணையும் பாடாண்டிணைப் பொருளாமாறு காட்டுங்கால் எல்லாத்திணையும் ஒத்ததாயினும், அவை பெரும்பான்மையுஞ் சிறுபான்மையுமாகி வருதலும் அவை இரண்டும் பலவும் ஒருங்குவருதலும் பாடாண்டிணைக்கு மேற் கூறும் பொருளும் விராய் வருதலுமாமென்று உணர்க.
உதாரணம்:-
"முனைப்புலத்துக் கஃதுடை முன்னிரைபோல் வேந்தூர்
முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - யெனைப்புலத்துச்
சென்றது நின்சீர்த்தி தேர்வளவ தெவ்வர்போ
னன்றுமுண் டாக நமக்கு."
இது கூற்றுவகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பானாக்கி நினைத்துரைத்தலின் வெட்சியும் வாகையும் வந்த பாடாண்டிணையாம்.
"அவலெறிந்த வுலக்கை& வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை யிரிய வயிரைக்
கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்+
------------
(பாடம்) #'பாடுதலும்.' $'பொருளும் பகுதியும்.' &'அவலெறி யுலக்கை.'
+'குழறலின்.' 'குமுறலின்.'
வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு
மழியா விழவி னிழியாத் திவவின்
வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடு
மகன்கண் வைப்பி னாடும னளிய
விரவுவேறு புலமொடு குருதி வேட்ட#
மயிர்கோதை மாக்கண் கடிய கழற
வமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும்
பெரும்பல்$ யானைக் குட்டுவன்
வரம்பி றானை பரவா வூங்கே." (பதிற்று-23)
இதில் இமயவரம்பன் றம்பி பலயானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்-கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது குறிப்பு வகையாற் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப்பொருள் வந்த பாடாணாயிற்று.
"இலங்கு தொடிமருப்பின்" என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும் பதின் றுலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணாயிற்று.
"பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல
மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே
நிலந்திறம் பெயருங் காலை யாயினுங்
கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி+ மிகைபடத் தண்டமிழ் செறித்துக்
குன்று நிலை@ தளர்க்கு முருமிற் சீறி
யொருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட்
செருமிகு தானை வெல்போ ரோயே
யாடுபெற் றழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையே மென்றனர் நீயு
நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற்##
செல்வக் கோவே சேரலர் மருக
*சாறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனி
னடையடுப் பறியா வருவி யாம்ப
லாயிர வெள்ள வூழி
வாழி யாத வாழிய பலவே." பதிற்று-63)
இது வாகைத்துறைப் பாடாண்பாட்டு.
இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண்டிணையேயாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க. (25)
- -----------
(பாடம்) #'வட்ட.' $'பெருமலை.' &'மலைப்பறி.' +'கொண்டமை.' @'குன்றினிலை.'
##'நுந்நுங் கொண்டினும் வென்றோயே.'
81.
- அமரர்கண் முடியு மறுவகை யானும்
புரைதீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி யொன்று மென்ப.
இது முன்னர் எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத் தன் பொருட்பகுதிகள் எல்லாங் கூடி ஒன்றாமென்ற பாடாண்டிணை தேவரும் மக்களு மென இருதிறத்தார்க்கே உரிய என்பார் அவ்விரண்டினுள் தேவர்பகுதி இவையென்ப துணர்த்துகின்றது.
(இ-ள்) அமரர்கண்முடியும் அறுவகையானும்- பிறப்பு வகையானன்றிச் சிறப்புவகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின்கண்ணும்; புரைதீர் காமம் புல்லிய வகையினும்- அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக் கண்ணும்; ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப- மேற் பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக்கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களுமெனப் பகுத்த இரண்டனுள் தேவர்க்கு உரித்தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்குவருமென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு.
அமரர்கண்ணே வந்து முடியுமெனவே அமரர் வேறென்பதூஉம் அவர்கண்ணே வந்து முடிவன வேறென்பதூஉம் பெற்றாம். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம். இவை தத்தஞ் சிறப்பு வகையான் அமரர்சாதிப் பால வென்றல் வேதமுடிவு. இதனானே பிறப்புமுறையாற் சிறந்த அமரரை வாழ்த்தலுஞ் சொல்லாமையே முடிந்தது தந்திரவுத்தி வகையான். வகையென்ற தனானே அமரரை வேறு வேறு பெயர் கொடுத்து வாழ்த்தலும் ஏனைப் பொதுவகையாற் கூறி வாழ்த்தினன்றிப் பகுத்துக் கூறப்படாமையுங் கொள்க. புரை, உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத காமமாவது மறுமைப்பயன்பெறுங் கடவுள்வாழ்த் துப்போல் உயர்ச்சியின்றி இம்மையிற் பெறும்பயனாதலின் , இழிந்த பொருள்களிற் செல்லும் வேட்கைக் குறிப்பு. புல்லிய வகையாவது, அம்மனக்குறிப்புத் தேவர்கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன்பொருட்டானும் ஆக்கத்து மேல் ஒருவன் காமுற்றவழி அவை அவற்குப் பயன்கொடுத்த லாம். இது ஒன்றனுடைய பகுதியென்க. இத்துணைப் பகுதி யென்று இரண்டிறந்தன எனக்கூறாத, வாளாதே பகுதியென் றமையில் தேவரும் மக்களுமென இரண்டேயாயிற்று, அத் தேவருட் பெண்டெய்வங் 'கொடிநிலை கந்தழி' என்புழி அடங் கும். மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையிற் "செயிர் தீர் கற்பிற் சேயிழை கணவ" (புறம்-3) என்றாற்போலச் சிறு பான்மை ஆண்மக்களோடுபடுத்துப் பாடுப. வகை யென்ற தனான் வாழ்த்தின்கண் மக்கட்பொருளும் உடன்றழுவினும் அவை கடவுள் வாழ்தாமென்று கொள்க.
உதாரணம்:-
"எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க்
கொன்றையும் பைந்தா ரகலத்தன் பொன்றா
ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட்
காடமர்ந் தாடிய வாட னீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து
வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரலனிரண் டுருவா
யீரணி பெற்றவெழிற் *றகைய னேரு
மிளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய
சூலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட் குயர்கமா வலனே."
இது கடவுள் வாழ்த்து.
தொகைகளிலுங் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக.
இனி அறுமுறை வாழ்த்தும் வருமாறு.:-
"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்" (குறள்-நீத்-8)
"கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை" (குறள்-வான்-5)
"நாகின நந்தி யினம்பொலியும் போத்தென
வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப வாயர்
அகன்றார் சுரைய கறந்தபால் சீர்சிறந்த
வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர்
மெல்லக் கடைவிடத்து நெய்தோன்று நெய்பயந்து
நல்லமு தன்ன வளையாகு நல்ல
புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி
யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற்
காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி
யாவா ழியரோ நெடிது."
ஏனைய வந்துழிக் காண்க.
"புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து
வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங்
கரிமான் பீடத் தரசுதொழ விருந்து
பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம்
புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந்
துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி
முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ
லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன்
பிறந்தது பார்த்துப் பிறர்வாய் பரவநின்
னறங்கெழு சேவடி காப்ப வுறந்தையோ
டூழி யூழி வாழி
யாழி மானில் மாழியிற் புரந்தே"
இது கடவுள் வாழ்த்தி ஒழியாது தனக்குப் பயன்படுவோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்தலின் புரைதீர்காமம் புல்லிய வகையாயிற்று. (26)
--------------
82.
- வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப்
பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினு
முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை
வண்ணப் பகுதி வரைவின் றாங்கே.
இது மேல் 'ஒன்றன்பகுதி' (தொல்-புறத்திணை-26) என்புழித் தோற்றுவாயாகச் செய்த இருபகுதியுண் மக்கட் பகுதி கூறுகின்றது.
(இ-ள்) பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்- ஒரு தலைவன் தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந் துரைத்தலுங் கருதிய பக்கத்தின்கண்ணும்; வகைபட முன்னோர் கூறிய குறிப்பினும்- அறம்பொருளின்பங்களின் கூறுபாடு தோன்ற முன்னுள்ளோர் கூறிய குறிப்புப்பொருளின் கண்ணும்; செந்துறை நிலைஇ- செவ்வன கூறுந்துறை நிலை* பெற்று; வழங்குஇயல் மருங்கின்- வழங்குதல் இயலுமிடத்து; ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்று- அச்செந்துறைக்கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கு நிலைமையின்று என்றவாறு.
- -----------
(பாடம்) *'குறிப்பினது பொருள்.'
பரவல் முன்னிலைக்கட் பெரும்பான்மை வரும். பரவலும் புகழ்ச்சியுந் தலைவன்கண்ணவாய்ப் பரிசில் பெறுதல் பாடுவான் கண்ணதாகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்கு புறனாயிற்று. முன்னோர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன்கண் வேட்கை யின்மையிற் கைக்கிளையாம். குறிப்பென்றார், அறம் பொருள் இன்பம் பயப்பச்செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதிபயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறையாவது விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கைவகையான் இயன்ற மக்களைப் பாடுதல் இது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும்.
"வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா" (பத்து- குறிஞ்சி-31) என்பவாகலானும் ஐவகை நிறத்தினையும் வண்ண மென்பவாகலானும் வண்ணமென்பது இயற்சொல்: வருணமென்பது வடமொழித்திரிபு.
ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்றெனவே வருகின்ற காமப்பகுதியிடத்து வண்ணப்பகுதி வரையப்படுமாயிற்று; கைக்கிளைக் கிழத்தியை உயர்ந்தோன் வருணத்துப்படுத்துக் கூறாதது, ‘அனைநிலை’ (தொல்-புறத்திணை-20) வருணப்படுத்துத் தோன்றக்கூறலின்.
உதாரணம்:-
"நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி
னளப்ப ரியையே
நாள்கோ டிங்கள் ஞாயிறு கனையழ
லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை
போர்தலை மிகுந்த வீரைம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
யக்குர னனைய கைவண் மையையே
யமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ டழித்த செருப்புகன் முன்ப
கூற்று வெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே
யெழுமுடி கெழீய திருஞெம ரகலத்து
நோன்புரி தடககைச் சான்றோர் மெய்ம்மறை
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பி
னொடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ
பல்களிற்றுத் தொகுதியோடு வெல்கொடி நுடங்கும்
படையே ருழவ பாடினி வேந்தே
யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின்
முன்றிணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே." (பதிற்று-14)
பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு; இதனை வாழ்த்தியலென்பர்.
"வரைபுரையு மழகளிற்றின் மிசை
வான்றுடைக்குந்* தகையபோல
விரவுருவின கொடிநுடங்கும்
வியன்றானை விறல்வேந்தே
நீ, யுடன்று நோக்கும்வா யெரிதவழ
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலி
னின்னிழற் பிறந்து நின்னழல் வளர்ந்த
வெம்மள வெவனோ மற்றே யின்னிலைப்
பொலம்பூங் காவி னான்னாட் டோருஞ்
செய்வினை மருங்கி னெய்த லல்லதை
யுடையோ ரீதலு மில்லோ ரிரத்தலுங்
கடவ தன்மையிற் கையற வுடைத்தென
வாண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலி
னின்னா டுள்ளுவர் பரிசில
ரொன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே:" (புறம்- 38)
இது புகழ்ச்சிக்கண்வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. இயைபியன்மொழி யென்பதும் அது.
"உண்டா லம்மவிவ் வுலக மிந்திர
ரமிழ்த மியைவ தாயினு மினிதெனத்
தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி
னுலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்வில
ரன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே" (புறம்-182)
இது வகைபட முன்னோர் கூறிய குறிப்பின்கண்வந்த செந் துறைப் பாடாண்பாட்டு.
இது முனிவர் கூறுமாறுபோலக் கூறிப் பரவலும் புகழ்ச்சி யுங் கூறாது மறுமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக்கிளைப் புறனாய்ப் பாடாணாயிற்று.
இவை செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதூஉம் வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக்குரியவாகி வருமென்பதூஉங் கூறின், அவை ஈண்டுக்கூறல்† மயங்கக் கூறலாம். அன்றியும் ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கோர் காரணமின்மையானும் அங்ஙனங் கூறாரென்ப. பரவலும் புகழ்ச்சியும் அவ்வப் பொருண்மை கருதினாரைத் தலைவராக வுடைமையானும், ஏனையது அக்குறிப் பிற் றன்றாகலானும், அதற்குப் பாட்டுடைத்தலைவர் பலராயி னும் ஒருவராயினும் பெயர்கொடுத்துங் கொடாதுங் கூறலானும் வேறு வைத்தாரென்க. இத்துணை வேறுபாடுடையதனைப் பரவல் புகழ்ச்சியொடு கூடவைத்தார்.
- ---------
(பாடம்) *'வான்றைவரும்' †'இரண்டுங்கூறல்.'
அவை முன்னோர் கூறிய குறிப்பினுள்ளும் விராய்வரும் என்றற்கு. இன்னும் அதனானே பாடாண்டிணைப்பொருண்மை மயங்கிவரினும் முடிந்த பொருளாற் பெயர்பெறுமென்று கொள்க.
"நிலமிசை வாழ்நர்" என்னும் (43) புறப்பாட்டுப் புலவன் அரசனை வைதுஆறி அது நன்குரைத்தல். அது இயற்கை வகையானன்றிச் செயற்கைவகையாற் பரவலும் புகழ்ச்சியுந் தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு.
இன்னும் மயங்கி வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (27)
------------
83.
- காமப் பகுதி கடவுளும் வரையா
ரேனோர் பாங்கினு மென்மனார் புலவர்.
இது முற்கூறிய கடவுட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
(இ-ள்) காமப்பகுதி- முன்னர்ப் 'புரைதீர் காம' (தொல்-புறத்திணை-26) மென்றதனுட் பக்குநின்ற புணர்ச்சி வேட்கை; கடவுள் பாங்கினும் வரையார்- கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்; ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர்- மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் என்றவாறு.
பகுதி ஆகுபெயர். அது கடவுண்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப்பெண்டிர் நயப்பனவுங், கடவுண் மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம்.
இன்னும் பகுதியென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங் 'காமஞ்சாலா இளமையோள்வயிற்' (தொல்-அகத்திணை-50) காமமுமன்றி இது வேறோர் காமமென்று கொள்க.
உதாரணம்:-
"நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமே
லொல்கெனி னுச்சியா ணோமென்னு-மல்கிரு
ளாட லமர்ந்தாற் கரிதா லுமையாளை
யூட லுணர்த்துவதோ ராறு." (புற-வெ-மாலை-பாடாண்-48)
"பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு
வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால்
வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீரேறுங்
கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ"
"குடுமிப் பருவத்தே கோதை புனைந்தே
யிடுமுத்தம் பூத னிருப்பப்-படுமுத்தம்
புன்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பணையார்க்
கென்னமுறைய ளிவள்."
என வரும்.
"களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
யளியா னளிப்பானே போன்றான்- றெளியாதே
செங்காந்தண் மெல்விரலாற் சேக்கை தடவந்தே
னென்காண்பே னென்னலால்யான்." (முத்தொள்ளாயிரம்)
"அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப்
பணியாயே யெம்பெருமா னென்று- கணியார்வாய்க்
கோணலங் கேட்ப தூஉங் கொண்கர் பெருமானார்
தோணலஞ் சேர்தற் பொருட்டு."
என வரும்.
"அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
றொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
யடுதோண் முயங்க* லவைநா ணுவலே
யென்போற் பெருவிதுப் புறுக வென்று
மொருபாற் படாஅ தாகி
யிருபாற் பட்டவிம் மைய லூரே." (புறம்-83)
இது பெருங்கோழி நாய்கன் மகள் †ஒருத்தி ஒத்த அன்பினாற் காமமுறாதவழியுங் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது, இதனானடக்குக.
இன்னும் ஏனோர்பாங்கினும் என்பதனானே கிளவித்தலைவனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவுங் கொள்க.
-----------
(பாடம்) *'அடுதொறு முயங்கல்.'
†'இவள் பெயர் நக்கண்ணையார். புறநானூற்று 96-ஆம் பக்கத்துப் பிரதி பேதத்தானுணர்க.
உதாரணம்:-
"கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந்
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்*
நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார்
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்." (கலி-67)
இது குறிப்பினாற் பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறியது.
"மீளிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே." (கலி-36)
என்பதும் அது.
இவ்வாறு வருவதெல்லாம் இதனான் அமைக்க. (28)
------------
84.
- குழவி மருங்கினுங் கிழவ தாகும்.
இது முன்னிற்சூத்திரத்திற் பக்குநின்ற காமத்திற்கன்றிப் 'புரைதீர் காம'த் (தொல்-புறத்திணை-26) திற்குப் புறனடை கூறுகின்றது.
(இ-ள்.) குழவிமருங்கினும் கிழவதாகும்-குழவிப் பருவத்துங் காமப்பகுதி உரியதாகும் எ-று.
மருங்கென்றதனான் மக்கட்குழவியாகிய ஒருமருங்கே கொள்க: தெய்வக்குழவி யின்மையின். இதனை மேலவற்றோ டொன்றாது வேறு கூறினார், தந்தையரிடத்தன்றி, ஒரு திங்களிற் குழவியைப்பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையுந் தாலுஞ் சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும், அம்புலியுஞ் சிற்றிலுஞ் சிறுதேருஞ் சிறுபறையுமெனப் பெயரிட்டு வழங்குதலானு மென்பது.
இப்பகுதிகளெல்லாம் 'வழக்கொடு சிவணிய' (தொல்-புறத் திணை-31) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். இப்பருவத்துக்கு உயர்ந்தவெல்லை மூவகை வருணத்தாரும் இருபிறப்பாளராகின்ற பருவமாம். வேளாளர்க்கும் மூவகையோர்க்குரிய பருவமேகொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வேண்டியக்காலும் அக்குழவிப் பருவமே கருதிப் பாடுக வென்றதற்குக் கிழவதாகுமென்றார். இதற்குப் பரிசில்வேட்கை அக்குழவிக் கணன்றி அவன் தமர்க்கண்ணுமாமென் றுணர்க.
உதாரணம்:-
"அன்னா யிவனொருவ னந்தரத்தா னானென்றான்
முன்ன மொருகான் மொழியினான்-பின்னுங்
கலிகெழு கூடலிற் கண்ஞீடி† வந்து
புலியாய்ப் பொருவான் புகும்."
--------
(பாடம்) *'வையையின்.' †'கண்ணாடி.'
அந்தரத்தானா னென்றான் அம்புலி வேறாயும் ஒருகாலத்தே விளையாட்டு நிகழ்த்துமென, மதுரையிற் பிட்டுவாணிச்சி மகற்கு மங்கலக் குறிப்பாற் சான்றோர் கூறியது. (29)
--------------
85.
- ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப.
இது புரைதீர் காமத்திற்கன்றிப் பக்குநின்ற காமத்திற்குப் புறனடை கூறுகின்றது.
(இ-ள்) பக்குநின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்றுகூறுவர் ஆசிரியர் எ-று.
தோற்றமுமென்றது, அக்காமந் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக்கத்தை. அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச்
செய்யுளாம்.
இச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்புமென்று பொருள்கூறின், மரபியற்கண்ணே 'ஊரும் பெயரும்' (தொல்-மரபியல்-27) என்னுஞ் சூத்திரத்து ஊர்பெறுதலானும்,* முன்னர் 'வண்ணப்பகுதி' (தொல்-புறத்திணை-27) என்பதனாற் பிறப்புப் பெறுதலானும் இது கூறியது கூறலா மென்றுணர். (30)
---------------
86.
- வழக்கொடு சிவணிய வகைமை யான.
இது 'அமரர்கண் முடியும்' (தொல்-புறத்திணை-26) என்னுஞ் சூத்திர முதலியவற்றுக்கெல்லாம் புறனடை.
(இ-ள்.) கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு தோற்ற மீறாகக் கிடந்தனவெல்லாஞ் சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்திவந்த பகுதிக் கண்ணேயான பொருள்களாம். எ-று.
எனவே புலனெறிவழக்கின் வேறுபடச் செய்யற்க என்பது கருத்து.
கடவுள் வாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் பாடியவாறன்றி முப்பத்துமூவருட் சிலரை விதந்துவாங்கிப் பாடப் பெறாது.
இனி அறுமுறைவாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப்படா.
- --------
(பாடம்) *'ஊரெய்தலானும்.'
இனிப் புரைதீர் காமம் புல்லியவகையும் ஒருவன்றொழுங் குலதெய்வத்தை* நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது.
இனிச் செந்துறைப்பாடாண்பாட்டு முன்னுள்ளோர் கூறியவாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது.
இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண்டெய்வத்தோடு இயல்புடையாரைக் கூறினன்றி எண்வகை வசுக்கள் போல்வாரையும் புத்தர் சமணர்+ முதலியோரையுங் கூறப்படாது.
இனி மக்களுள் ஒருவனைத் தெய்வப்பெண்பால் காதலித்தமை கூறுங்காலும் மக்கட்பெண்பாற்குக் காதல் கூறுங்காலும் முன்னோர் கூறியவாறன்றிக் கூறப்படாது.
இனிக் குழவிப்பருவத்துக் காமங் கூறுங்காலும் முன்னர்க் காப்பும் பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறியவாறன்றிக் கூறப்படாது.
இனி ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது.
இன்னுஞ் ‘சிவணியவகைமை’ என்றதனானே முற்கூறிய வற்றோடே நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரும் பிறவும் வருவன வெல்லாக் கொள்க.
உதாரணம்:-
"முற்பற்றி னாரை முறைசெய்யிற் றானென்னைக்
கைப்பற்றக் கண்டேன் கனவினு-ளிப்பெற்றித்
தன்னைத் தனக்கே முறைப்படி னென்செய்யு
பொன்னம் புனனாட்டார் கோ."
"ஏரியு மேற்றத்தி னாலும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாந்-தேரி
னரிதாளின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு"# (பொருநராறு)
இவை நாடும் யாறும் அடுத்துவந்தன.
"மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மு
ளொலியும் பெருமையும் மொக்கு-மலிதேரான்
கச்சி படுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும்."
இஃது ஊர் அடுத்துவந்தது.
-----------
(பாடம்) *’குலத்தெய்வ.’ +’அமணர்.’ # ‘நாட்டு.’
"மிதியற் செருப்பிற் பூழியர் கோவே
குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை
பால்பயந் தழீஇய பயங்கெழு நெடுந்தோட்டு
நீரறன் மருங்குவழிப் படாப் பாகுடிப்
பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சரச்
சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேருயர் நெடுவரை யயிரைப் பொருந." (பதிற்று-21)
இது மலை யடுத்தது.
"ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்." (புறம்-14)
இது படையடுத்தது.
"பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
பாம்புண் பறவைக் கொடிபோல* - வோங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
கொல்யானை மன்னன் கொடி." (புற-வெ-பாடாண்-39)
இது கொடியடுத்தது.
"வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே." (புறம்-60)
இது குடையடுத்தது.
"முரசு முழங்குதானை மூவருங் கூடி
யரசவை யிருந்த தோற்றம் போல." (பொருந)
இது முரசடுத்தது.
"சாலியரி சூட்டான் மடையடைக்கு நீர்நாடன்
மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா
மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு."
இது புரவியடுத்தது.
"அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்ன
ரெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட்
பாய்ந்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான்
காய்ச்சினவேற் கிள்ளி +களிறு."
(முத்தொள்ளாயிரம் - யானைமறம்,71)
இது களிறடுத்தது.
"நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவு தோன்றி++
மாக்கட னிவந்தெழுதருஞ்
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ" (புறம்-4)
இது தேரடுத்தது.
---------
(பாடம்) *'(கொடிப்போல.' +'கோதை' யென ஏடுகளிலுள்ளது.
++'பொலிவொடுதோன்றி.'
"மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப." (புறம்-10)
இது தாரடுத்தது.
இவற்றுட் சிலவற்றை வரைந்துகொண்டு சின்னப்பூ வென்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க. (31)
----------------
87.
- மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.
இது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளும் பாடாண்டிணைக்குரிய மெய்ப்-பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென்கின்றது.
(இ-ள்) மெய்ப்பெயர் மருங்கின்- புறத்திணைக்குரிய மெய்ப்பெயர்களின் மருங்கே; வழி வைத்தனர்- புறத்திணை தோன்றுதற்கு வழியாகிய அகத்திணையை வைத்தார் முதனூலாசிரியர் என்றவாறு.
என்றது எனக்கும் அதுவே கருத்தென்பதாம். வழியென்பது ஆகுபெயர் மெய்ப்பெயராவன புறத்திணைக்குரிய பாட்டுடைத்தலைவர் பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம்.
இதன் கருத்துச் 'சுட்டியொருவர் பெயர்கொளப் பெறாஅர்' (தொல்-அகத்திணை-54) என அகத்திணையியலுட் கூறினமையிற் கிளவித்தலைவன் பெயரை மெய்ப்பெயராகக்
கொள்ளாது ஏனைப் புறத்திணையாற்கொண்ட மெய்ப்பெயரிடம் பற்றி அகத்திணைப் பொருணிகழவும் பெறுமென்பதாம்.
உதாரணம்:- "*அரிபெய் சிலம்பின்" என்னும் (6) அகப் பாட்டினுள் தித்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லினென நாடும், உறந்தையென ஊருங், காவிரி யாடினை யென யாறுங் கூறிப், பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க.
'மருங்கு' என்றதனாற் பாட்டுடைத்தலைவன் பெயர்கூறிப் பின்னர் நாடு முதலியன கூறன் மரபென்று கொள்க. அதுவும் அச் செய்யுளாற் பெற்றாம்.
"நிலம்பூத்த மரமிசை நிமிர்பாலுங் குயிலெள்ள
நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க
கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப்
புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலு முள்ளார்கொல்" (கலி-27)
----------
* இச் செய்யுளை 21-ஆம் பக்கத்திற் காண்க.
இதனுட் கூடலிடத்துத் தலைவி யென்பது கூறினார்.
"கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத்
தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க
வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற
வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்" (கலி-27)
இதனுள் வென்வேலான் குன்றென மலை கூறினார்.
"திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை
வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த
மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்." (கலி-26)
இதனுள் ஆறு கூறினார்.
"புனவளர் பூங்கொடி' என்னும் (27) மருதக்கலியும் அது.
"கரியமலர் நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி
யரியசூள் பொய்த்தா ரறனிலரென் றேழையம்யாங் கறிகோ மைய
விரிகதிர் வெண்மதியு மீன்கணமு மாமென்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையு முத்துங்கண் டாம்பல் பொதியவிழ்க்கும் புகாரே யெம்மூர்"
(சிலப்- கானல்-7)
இதுமுதலிய மூன்றும் புகாரிற் றலைவியெனக் கூறியவாறு காண்க
இன்னுஞ் சான்றோர் செய்யுட்கள் இங்ஙனம் வருவனவெல்லாம் இதனால் அமைக்க. இக்கருத்தினாற் செய்யுள் செய்த சான்றோர் தமக்கும் பாடாண்டலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி அகத்திணைச் செய்யுள் செய்தாரேனும் 'தம்மிசை பரந்துலகேத்த வேதினாட்டுறைபவ'ரென்று இவை பாடாண்டிணையெனப் பெயர்பெறா என்றற்கு இது கூறினார். (32)
-----------
88.
- கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.
இது தேவரும் மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப்பகுதி யிரண்டுங் கூறி இன்னும் அத்தேவரைப்போல் ஒரு வழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டிணைக்கு உரிய ரென்கிறது.
(இ-ள்) கொடிநிலை- கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர்மண்டிலம்; கந்தழி- ஒருபற்றுக் கோடின்றி அருவாகித் தானேநிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி- தண்கதிர்மண்டிலம்; என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்- என்று சொல்லப்பட்ட குற்றந்தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே- முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும் என்றவாறு.
"பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை
மையறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு
மின்னா விடும்பைசெய் தாள்" (கலி-141)
என்றவழிக் கீழ்த்திசைக்கண்ணே தோன்றும் மண்டில மென்றாற்போலக்* கொடிநிலை யென்பதூஉம் அப்பொருடந்ததோர் ஆகுபெயர்.
இனி எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந்நீடனிலைமை† பற்றிக் கொடிநிலையென்பாருமுளர்,
"குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே." (குறுந்-132)
என்றாற்போல வள்ளியென்பதுவுங் கொடியை; என்னை? பன் மீன்தொடுத்த‡ உடுத்தொடையைக் கொடியெனப்படுதலின், அத் தொடையினை இடைவிடா துடைத்தாதலின் அதனை அப்பெயராற் கூறினார்; முத்துக்கொடியெனவும் மேகவள்ளியென வுங் கூறுமதுபோல. கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய்
நிற்றலின் இடையே வைத்தார்.
- ---------
*"மூவர் கொடியுள்ளு மொன்றொடு பொரீஇ
மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று."
எனவும்,
"சூழுநேமியான் சோவெறிந்த
வீழாச்சீர் விறன்மிகுத் தன்று.'
எனவும்,
"பூண்முலையார் மனமுருக
வேன்முருகற்கு வெறியா டின்று."
(புறப்-வெ-மாலை-பாடாண்-39-40-41)
எனவும் கூறினார் ஐயனாரிதனார்.
(பாடம்) †'அந்நீண்ட நிலைமை.' ‡'கோத்த.'
இனி அமரரென்னும் ஆண்பாற்சொல்லுள் அடங்காத பெண்பாற்றெய்வமும் வள்ளியென்னுங் கடவுள்வாழ்த்தினுட் படுவனவாயின பாடா ணெனப்படா வாயினுமென்பது; என்னை? ஞாயிறு நெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமையானுந், திங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமையானுமென்பது. அல்லதூஉம் வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளி யென்பதூஉமாம் என்பது.
உதாரணம்:-
"மேகத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா
னாகத்தா னீமறைய நாட்கதிரே-யோகத்தாற்
காணாதார் நின்னை நிலையாமை* கட்டுரைப்பர்
நாணாத கண்ணெனக்கு நல்கு."
இது கொடிநிலை வாழ்த்து.
†"சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ்
சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ
வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த
தூய்மையதா மைதீர் சுடர்."
இத கந்தழி வாழ்த்து.
"பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங்
குறைகாணா தியாங்கண்டு கொண்டு-மறைகாணா
தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென்
றாய்ந்தது நன்மாயை யாம்."
இது வள்ளிவாழ்த்து.
"தனிக்கணிற் பாகமுந் தானாளு மாமை‡
பனிக்கண்ணி சாவு படுத்துப்-பனிக்கணந்
தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென்
றியாமுரையா நிற்கு மிடத்து."
இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள் வாழ்த்து. (33)
- -----------
(பாடம்) *'அலையாமை' †"கந்தழியாவது ஒருபற்றுமற்று அருவாய்த் தானே
நிற்குந் தத்துவங்கடந்தபொருள்: அது, 'சார்பினாற் றோன்றாது........மைதீர் சுடர்' என்பதாம்." என்பது பத்து-திருமுருகாற்றுப்படை- நச்சினார்க்கினியர் உரை.
‡'தானாளும் யாமை.'
89.
- கொற்ற வள்ளை யோரிடத் தான.
இஃது எய்தாதது எய்துவித்தது; தேவர்க்கும் உரியவாம். ஒருசார் அப்பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின்.
(இ-ள்) கொற்றவள்ளை-அதிகாரத்தாற் கைக்கிளைக்குப் புறனாய் வெட்சிமுதல் வஞ்சி யீறாகிய பாடாண் கொற்றவள்ளை; ஓரிடத்தான-மேற்கூறி நின்ற தேவர் பகுதிக் கண்ணதன்றி அவரின் வேறாகிய மக்கட் பகுதிக்கண்ணது என்றவாறு.
எனவே, உழிஞை முதலிய பாடாண் கொற்றவள்ளை நற்றிளைஞருங் கூளிச்சுற்றமுங் ஒன்றனை நச்சிப் புகழ்ந்து வாளாதே கூறுதலும், ஈண்டுக் கூறுகின்ற கொற்றவள்ளை புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய ஏழனானும் புகழ்ந்துரைத்தலுமாயிற்றாதலிற் 'படையியங் கரவம்' (தொல்-புறத்திணை.3) முதலாக வஞ்சியிற் 'குன்றாச்சிறப்பிற் கொற்றவள்ளை' யீறாகக் கிடந்த பொருட்பகுதியெல்லாம் பாடாண்டிணையாகப் பாடுங்கான் மக்கட்கேயுரிய என்பதூஉம். உழிஞை முதலியவற்றைப் பாடாண்டிணையாகப் பாடுங்கால் அவை மக்கட்குந் தேவர்க்கும் ஒப்ப உரியவென்பதூஉங் கூறுதலாயிற்று. என்னை? அரசியலாற் போர்குறித்து நிரைகோடலும் மீட்டலும் மேற்செல்லும் வஞ்சியுந் தேவர்க் கேலாமையாயினும், அவுணரான் முற்றப்பட்ட துறக்கத்தினை அகத் துழிஞை யரணாக்கி மனுவழித் தோன்றிய முசுகுந்தனோடு இந்திரன் காத்தாற் போல்வனவும் பிறவுந் தேவர்க்குக் *கூறுதலான் அவரும் மதின்முற்றியவழிப் போர் தோன்றுதலும் ஆண்டு வென்றி யெய்துதலும் உடையராதலிற் பாடாண் பொருட்கும் உரியாரென நேர்பட்டது.
இச்சூத்திரம் மக்கட்கெய்திய பொருண்மையை மீட்டுங் கூறி நியமித்ததாம். ஆகவே வெட்சிமுதல் வஞ்சியிற் கொற்ற வள்ளை ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்டிணைக்குரியராகி இடைபுகுந்த தேவர்க் காகாவென விதிவகையான் விலக்கியதாம். எனவே, தேவர்க்கு உழிஞைமுதலிய கொற்ற வள்ளை ஆமென்பதூஉங் கூறினாராயிற்று.
கொடிநிலை முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப் பட்டாரை அதிகாரங்கொண்ட அளவேயாமென் றுணர்க.
-----------
* ஏடுகளிற் 'கூறு' என்பதன்பின் சிறிதிடம் எழுதாது விட்டுத் தானவரும் மதின்முற்றிய வழி' யென எழுதப்பட்டுள்ளது.
உதாரணம்:-
"மாவாடியபுல நாஞ்சிலாடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை
யினம்பரந்த புலம் வளம்பரப் பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
நீயுடன்றோர் மன்னெயி றோட்டி வையா
கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கி
னாண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
வுருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை
வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே" (பதிற்று-25)
இது புலவன் பொருணச்சிக் கூறலிற் பாடாண்கொற்ற வள்ளை, 'வல்லா ராயினும் வல்லுந ராயினும்', 'காலனுங் காலம்' என்னும் (57, 4) புறப்பட்டுக்களும் அது. (34)
------------
90.
- கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலு
மடுத்தூர்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ்
சேய்வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க்க குரைத்த கடைநிலை யானுங்
கண்படை கண்ணிய கண்படை நிலையுங்
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
வேலி னோக்கிய விளக்கு நிலையும்
வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூஉ
மாவயின் வரூஉம் புறநிலை வாழ்த்துங்
கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத்
தொக்க நான்கு முளவென மொழிப.
இது முன்னிற் சூத்திரத்து அதிகாரப்பட்டு நின்ற மக்கட் பாடாண்டினைக் குரிய துறை கூறுகின்றது.
(இ-ள்) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப்பழித்தலும்- பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக்கூறிப் பிறர்க் கீயாதாரை இழித்துக் கூறலும்;
சான்றோர்க்குப் பிறரை யிழித்துக்கூறற்கண் ணது தக்க தன்றேனும் நன்மக்கள் பயன்பட வாழ்தலுந் தீயோர்* பயன் படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவரென்பது பயப்பக்கூறலின் இவர்க்கு இங்ஙனங் கூறுதல் தக்கதாயிற்று. இதனை ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க.
- ------------
(பாடம்) *'தீமக்கள்'
உதாரணம்:--
"தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
வடகின் கண்ணுறை யாக யாஞ்சில
வரிசி வேண்டினே மாகத் தான்பிற
வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி
யிருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு *நல்கி யோனே யன்னதோர்
தேற்றா வீகையு முளதுகொல்
போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே. (புறம்-140)
இது கொடுப்போர் ஏத்தியது.
"பாரிபாரி யென்றுபல வேத்தி
யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே" (புறம் -107)
என்பதுவும் அது.
"ஒல்லுவ தொல்லு மென்றலு மியாவர்க்கு
மொல்லா தில்லென மறுத்தலு மிரண்டு
மாள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே
யொல்லா தொல்லு மென்றலு மொல்லுவ
தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே
யிரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயி லத்தை
யனைத்தா கியரினி யிதுவே யெனைத்துஞ்
சேய்த்துக் காணாது கண்டன மதனா
னோயில ராகநின் புதல்வர் யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை
நாணல தில்லாக் கற்பின் வாணுதன்
மெல்லியற் குறுமக ளுள்ளிச்
செல்வ லத்தை சிறக்கநின் னாளே" (புறம்-196)
"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்" (குறள்-புகழ்-7)
இவை கொடாஅர்ப் பழித்தல்.
------------------
(பாடம்) *'கருங்களிறு'
"களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
வீகை யரிய விழையணி மகளிரொடு
சாயின் றென்ப வாஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
யுரைசா லோங்குபுக ழொரீஇய
முரசுகெழு செல்வர் நகர்போ லாதே." (புறம்-127)
இஃது ஆயைப் புகழ்ந்து ஏனைச்செல்வரைப் பழித்தது.
"மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்றாகிப்
பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே
யொளிப்பாரு மக்களா யொல்லுவ தாங்கே
யளிப்பாரு மக்களா மாறு."
(பெரும்பொருள் விளக்கம்- புறத்திரட்டு)
இதுவும் அது.
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் - தலைவனெதிர்சென்று ஏறி அவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும் அவன்மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்தும்;
என்றது, இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம் இக்குணங்கள் இயல்பென்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையை யென்றும், அன்னோர்போல எமக்கு நீயும் இயல்பாக ஈ யென்றும் உயர்ந்தோர் கூறி அவனை வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று. இதனை உம்மைத்தொகையாக்கி இயன் மொழியும் வாழ்த்துமென இரண்டாக்கிக்கொள்க.
இஃது ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறலாலும் வண்ணப் பகுதியின்மையானும் பரவலின் வேறாயிற்று.
உதாரணம்:-
"மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
யொலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை யுருகெழு முரசம்
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
யறியா தேறிய வென்னைத் தெறுவர
விருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை
யதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறித
லதனொடு மமையா தணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடங் கமழ
விவணிசை யுடையோர்க் கல்ல தவண
துயர்நிலை யுலகத் துறையு ளின்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குரிசினீ யீங்கிது செயலே." (புறம்-50)
இவை போல்வன வெல்லாம் இயன்மொழி.
"மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி
வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கத்
கடல்போ றானைக் கடுங்குரன் முரசங்
காலுறு கடலிற் கடிய வுரற
வெறிந்து சிதைந்தவா
ளிலைதெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
வாய்ந்துதெரிந்த புகன்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போ, லசைவில் கொள்கைய ராகலி னசையா
தாண்டோர் மன்றவிம் மண்கெழு ஞால
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப
விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர
நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த
விலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே." (பதிற்று-69)
இது முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பதுபடக் கூறிய இயன்மொழிவாழ்த்து.
"முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு
மரசுடன் பொருத வண்ண னெடுவரைக்
கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும்
பறம*பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
கொல்லி யாண்ட வல்வி லோரியுங்
காரி யூர்ந்து பேரமர்க் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையனு
மூரா தேந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியு
மீர்ந்தண் சிலம்பி@ னிருடூங்கு நளிமுழை
யருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமையப்
பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி
மோசி பாடிய வாயு மார்வமுற்
றுள்ளி வருந ருலைவுநனி தீரத்
தள்ளா தீயுந் தகைசால் வண்மைக்
கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்
கெழுவர் மாய்ந்த பின்றை யழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
யிரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவ
ணுள்ளி வந்தனென் யானே விசும்புறக்
கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
யாசினிக் கவினிய பலவி னார்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
றுய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரு
மதிரா யாணர் முதிரத்துக் கிழவ
விவண்விளங்கு சிறப்பி னியறேர்க் குமண
விசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுகநீ யேந்திய வேலே." (புறம்-158)
-----------
(பாடம்) #'இருந்தண் சிலம்பின்.'
இஃது இன்னோர்போல எமக்கு ஈ யென்ற இயன்மொழி வாழ்த்து.
"இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே பின்னு
முன்னே தந்தனெ னென்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யல னாகி
யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன்
றான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப
வருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்ற
னினமலி கதச்சேக் களனொடு வேண்டினுங்
களமலி நெல்லின் குப்பை வேண்டினு
மருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கும மன்ன வறத்தகை யன்னே
யன்ன னாகலி னெந்தை யுளளடி
முள்ளு நோவ வுறாற்க தில்ல
வீவோ ரரியவிவ் வுலகத்து
வாழ்வோர் வாழவவன் றாள்வா ழியவே." (புறம்-171)
இது படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து.
"இம்மைச் செய்தது மறுமைக் காமெனு
மறவிலை வணிக னாயலன் பிறருஞ்
சான்றோர் சென்ற நெறியென
வாங்குப் பட்டன் றவன்கைவண் மையே." (புறம்-134)
இது பிறருஞ் சான்றோர் சென்ற நெறி யென்றமையின் அயலோரையும் அடுத்தூர்ந்தேத்தியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.
சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலற்கு உரைத்த கடைநிலையானும் - சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந்தீர வாயில் காக்கின்றவனுக்கு என் வரவினை இசையெனக்கூறிக் கடைக்க ணின்ற கடைநிலையும்;
இது வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ்வருத்தந் தீர்க்கும் பாடாண்டலைவனதே துறையென்பது பெற்றாம்.
இழிந்தோரெல்லாந் தத்தம் இயங்களை இயக்கிக் கடைக் கணிற்றல் 'பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்' (தொல்- பொரு-புற-36) என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம்.
உதாரணம்:-
"வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு
மாற்றற்கு வந்தனேம் வாயிலோய் - வேற்றார்
திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயி
லிறைமகற்கெம் மாற்ற மிசை."
என வரும்.
"வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்
தாம், முன்னியது முடிக்கு முரனுடையுள்ளத்து*
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க் கடையா வாயி லோயே
கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி
தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொ
லறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
வறுந்தலை யுலகமு மன்றே யதனாற்
காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை
மரங்கொ றச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே." (புறம்-206)
இது தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை நோக்கிக் கூறலிற் பரிசில் கடாயதின்றாம்.
ஆண் அசை; ஏழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்துலுமொன்று.
கண்படை கண்ணிய கண்படைநிலையும் - அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண்டுயில் கோடலைக் கருதிக் கூறிய கண்படை நிலையும்;
கண்படை கண்ணிய என்றார், கண்படை முடிபொருளாக இடைநின்ற உண்டிமுதலியனவும் அடக்குதற்கு.
- ----------
(பாடம்) *'உள்ளியது முடிக்கு முரணுடை யுள்ளத்து.'
உதாரணம்:-
"வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னிநின்
னோவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர்
களிறுகவர் முயற்சியிற்பெரிது வருந்தினரே
யுலகங் காவலர் பலர்விழித் திருப்ப
வறிது துயில்கோடல் வேண்டுநின்
பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே"
என வரும்.
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - சேதாவினைக் கொடுக்கக் கருதிய கொடைநிலை கூறுதலும்;
இது வரையா ஈகையன்றி இன்னலுற்றாற் கொடுக்கவென உயர்ந்தோர் கூறு நாட்காலையிலே கொடுப்பதாமாதலின் வேறு கூறினார் கண்ணிய என்றதனாற் கன்னியர் முதலோரைக் கொடுத்தலுங் கொள்க.
"பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந்
தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் -சென்னிதன்
மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த்
தானுலக மண்ணுலகா மன்று"
வேலின் ஓக்கிய விளக்கு நிலையும்-வேலும் வேற்றலையும் விலங்காதோங்கியவாறு போலக் கோலோடு விளக்கும் ஒன்று பட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலையும்,
இன், உவமப்பொருள். இது கார்த்திகைத் திங்களிற் கார்த்திகை நாளின் ஏற்றிய விளக்குக் கீழுமேலும் வலமுமிடமுந் திரிபரந்து சுடர்ஓங்கிக் கொழுந்து விட்டெழுந்ததென்று அறிவோராக்கங் கூறப்படுவதாம்.
உதாரணம்:--
"மைமிசை யின்றி மணிவிளக்குப்போலோங்கிச்
செம்மையி னின்றிலங்குந் தீபிகை-தெம்முனையுள்
வேலினுங்கோடாது வேந்தன் மனைவிளங்கக்
கோலினுங் கோடா கொழுந்து."
என வரும்.
வேலின் வெற்றியை நோக்கிநின்ற விளக்குநிலையெனப் பொருள் கூறி,
"வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி
யொளிசிறந் தோங்கி வரலா- லளிசிறந்த
நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு
வென்னெறியே காட்டும் விளக்கு" (புற-வெ-மாலை-பாடாண்-12)
என்பது காட்டுவாரும் உளர். அவர் இதனை நிச்சம் இடுகின்ற விளக்கென்பர்.
வாயுறை வாழ்த்தும்-’வாயுறை வாழ்த்தே ***வேம்புங் கடுவும்’ என்னும் (112) செய்யுளியற் சூத்திரப்பொருளை உரைக்க.
இதற்கு ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின் இதுவுங் கைக்கிளைப்புறனாகிய பாடாணாயிற்று. செவியுறைக்கும் இஃதொக்கும்.
உதாரணம்:-
"எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பிற்*
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவ
லருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவரி னோம்புமதி
யளிதோ தானேயது பெறலருங் குரைத்தே." (புறம்-5)
இதனுள் நிரயங் கொள்வாரோ டொன்றாது காவலையோம்பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக்கூறி அவற்கு உறுதி பயத்தலின் வாயுறை வாழ்த்தாயிற்று.
"காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் +பன்னாட் காகு
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கு
மறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்து
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கலலென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா னுலகமுங் கெடுமே." (புறம்-184)
என்னும் புறப்பாட்டும் அது,
தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின், அவர் சூத்திரப்பொருளாகத் துறைகூறவேண்டு மென்றுணர்க. ‘செவியுறைதானே’ (தொல்-பொ-செ-114)
என்னும் சூத்திரப் பொருண்மை இவ்வுதாரணங்கட்கு இன்மை உணர்க.
- ---------
(பாடம்) *’மெய்ம்பின்.’ +’பன்மாக்காக்கும்.’
செவியறிவுறூஉம்- இதற்குச் 'செவியுறைதானே' என்னும் செய்யுளியற் (114) சூத்திரப்பொருளை உரைக்க.
ஒருவுதலை ஒரூஉதலெனவும் ஒரூஉவெனவுங் கூறுமாறுபோல, உறுவும் உறூதலெனவும் உறூஉவெனவுங் கூறப்படும்.
உதாரணம்:--
"அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர்
தந்தையா யென்றிவர்க்குத் தார்வேந்தே-முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழிநின்று கேட்டன் முறை" (புற-வெ-மாலை-பாடாண்-33)
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்குங்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்குங்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்குங்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டி
னீர்நிலை நிவப்பின் கீழு மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன்* போல வொருதிறம்
பற்ற லிலியரோ† நிற்றிறஞ் சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்‡
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தை §நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
யிறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்து ++கை யெதிரே
வாடுக விறைவநின்$ கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
**செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துளித்த வாண்முகத் தெதிரே
யாங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுட
ரொண்கதிர் ஞாயிறு போலவு
மன்னிய பெருமநீ நிலமிசை யானே" (புறம்-6)
----------------------
(பாடம்) *'தெரிகோற்சமன்' †'பற்றிலியரோ' ‡'ஏஎ' §'பணீஇயரத்தை' ++'முதல்வர்' $'இயவுணின்' **'செலீஇயரத்தை'
இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றோடு செவியுறையுங் கூறினான், செவியுறைப்பொருள் சிறப்புடைத்தென்று அவன்கருதி வாழ்தல்வேண்டி.
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்-தெய்வவழிபாடு உடைத்தாயினும் மக்கள் கண்ணதேயாகித் தோன்றும் பாட்டுடைத்தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்த்தும்;
தெய்வஞ் சிறந்ததேனும் மக்கள் அதிகாரப்படுதலின் அவர் கண்ணதேயாதற்கு ‘ஆவயின் வரூஉம்’ என்றார். இதற்கு ‘வழிபடு தெய்வம்’ என்னும் செய்யுளியற் (110) சூத்திரப் பொருளை யுரைக்க.
இதுவுந் தலைவன் குறிப்பின்றித் தெய்வத்தால் அவனை வாழ்விக்கும் ஆற்றலுடையார்கண்ணதாகலிற் கைக்கிளைப் புறனாயிற்று.
உதாரணம்:-
"கண்ணுதலோன் காப்பக் கடன்மேனி மால்காப்ப
வெண்ணிருதோ ளேந்திழையா டான்காப்பப்-பண்ணியனூற்
சென்னியர்க் களீக்குந் தெய்வநீ
மன்னுக நாளுமிம் மண்மிசை யானே."
என வரும்.
கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇ-மேற் காமப்பகுதியென்ற கைக்கிளையல்லாத கைக்கிளையின் பகுதியோடே வாயுறை வாழ்த்துஞ் செவியறிவுறூஉம் புறநிலை வாழ்த்துங்கூட நான்காகிய தொகைபெற்ற நான்கும்;
வாயுறை வாழ்த்து முதலிய மூன்றுந் தத்தம் இலக்கணத்திற் றிரிவுபடா; இக்கைக்கிளை திரிவுபடுமென்றற்கு எண்ணும் மையான் உடனோதாது உளப்படவென வேறுபடுத்தோதினார். அகத்திணையியலுள் இருபாற்குங் கூறிய கைக்கிளையுங், ‘காமஞ் சாலா இளமையோள்வயிற்’ (தொல்-பொ-அகத்-50) கைக்கிளையும், ‘முன்னைய நான்கும்’ (தொல்-பொ-அகத்-52) என்ற கைக்கிளையும், ‘காமப்பகுதி’ (தொல்-பொ-புறம்-28) என்ற கைக்கிளையும், களவியலுண் ‘முன்னைய மூன்றும்’ (தொல்-பொ-கள-14) என்ற கைக்கிளையும் போலாது எஞ்ஞான்றும் பெண் பாலார் கூறுதலின்றி இடைநின்ற சான்றோராயினும் பிறராயினுங் கூறுதற்கு உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பினராகிக் கடைநிலைக்காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்ததனால் துறந்த பெண்பாற் கைக்கிளையாதலின் திரிபுடைத்தாயிற்று. இது முதனிலைக்காலத்துத் தான்குறித்து முடித்துப் பின்னர் அவளை வருத்தஞ்செய்து இன்பமின்றி யொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று.
உதாரணம்:-
"அருளா யாதலோ கொடிதே யிருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினே மாக
நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண்
கலுழ்ந்துவா ரரிப்பனி பூணக நனைப்ப
வினைத லானா ளாக விளையோய்
கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென
யாந்தற் றொழுதனம் வினவக் காந்தண்
முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா
யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி
யெம்போ லொருத்தி நலனயந் தென்றும்
வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேக
னொல்லென வொலிக்குந் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே" (புறம்-144)
இது கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளைவகைப் பாடாண்பாட்டு.
'கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென' வினவ, யாங்
கிளையல்லேம் முல்லை வேலி நல்லூர்க்கண்ணே வருமென்று
சொல்வாளெனக் கூறுதலின் அஃது ஏனைக் கைக்கிளைகளின்
வேறாயிற்று.
'கன்முழை யருவி' யென்னும் (147) புறப்பாட்டும் அது.
தொக்க நான்கும் உள என மொழிப- அந்நான்கும் முற்கூறிய ஆறனோடே தொக்குப் பத்தாய்ப் பாடாண்பகுதிக் கண்ணே உளவாய் வருமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
'தொக்க நான்' கென்றதனான் இந்நான்கும் வெண்பாவும் ஆசிரியமுந் தொக்குநின்ற மருட்பாவானும் வருமென்பதூஉங்கொள்க. இவற்றை மேல்வருகின்றவற்றோடு உடன்கூறாராயினார், அவை இழிந்தோர் கூறுங் கூற்றாகலின். (35)
--------------
91
- தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூத ரேத்திய துயிலெடை நிலையுங்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு
மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமுஞ்
சிறந்த நாளணி செற்ற நீ்க்கிப்
பிறந்த நாள்வயிற் பெருமங் கலமுஞ்
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமு
நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபு
மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமு
மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெருவள னேத்தி
நடைவயிற் றோன்று மிருவகை விடையு
மச்சமு முவகையு மெச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங்
காலங் கண்ணிய வோம்படை யுளப்பட
ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பிற்
கால மூன்றொடு கண்ணிய வருமே.
இதுவும் அது.
(இ-ள்) தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்- தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவர்ச்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை நிலையும்;
'கிடந்தோர்க்' கெனப் பன்மைகூறவே அவர் துயிலெடுப்புத் தொன்றுதொட்டு வருமென்பதூஉஞ் சூதர் மாகதர் வேதாளிகர் வந்திகர் முதலாயினோருட் சூதரே இங்ஙனம் வீரத்தால் துயின்றாரைத் துயிலெடுப்புவரென்பதூஉம், யாண்டும் முன்னுள்ளோரையும் பிறரையுங் கூறப்படுமென்தூஉங் கொள்க. அவர் அங்ஙனந் துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின் ஒரு தலைக் காமம் உளதாயிற்று.
உதாரணம்:-
"கானம் பொருந்திய கயவாய் மகளிரின்
யானுறுந் துயர நந்திய பானா
ளிமையாக் கண்ணோ டமையாக் காத்தநின்
மூதின் முதல்வன் றுயில்கொண் டாங்குப்
போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ
சேக்கை வளர்ந்தனை பெரும தாக்கிய
வண்கை யவுண னுயிர்செல வாங்கவ
னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய
வாடா வஞ்சி மலைந்த சென்னிப்
போரடு தானைப் பொலந்தேர் வளவ
நின்றுயி லெழுமதி நீயு
மொன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே."
எனவரும்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்- ஆடன்மாந்தரும் பாடற்பாணரும் கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியுமென்னும் நாற் பாலாருந் தாம்பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்;
கூத்தராயிற் பாரசவரும்* வேளாளரும் பிறரும் அவ் வாடற் றொழிற்கு உரியோர்களும் பாரதிவிருத்தியும்† விலக் குயற்கூத்துங் கானகக்கூத்துங் கழாய்க்கூத்தும் ஆடுபவராகச் சாதி வரையறையிலராகலின் அவரை முன்வைத்தார்; பாணரும் பொருநருந் தத்தஞ் சாதியில் திரியாது வருதலிற் சேரவைத் தார்; முற்கூறிய முப்பாலோருட் கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப் போந்து புலப்பட ஆடுவார்; அது விறலாகலின் அவ் விறல்பட ஆடுவாளை விறலியென்றார்.. இவளுக்குஞ் சாதிவரையறை யின்மையிற் பின்வைத்தார். பாணரும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப்பாணருமெனப் பலராம். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம்பாடுநரும் பரணிபாடுநருமெனப் பலராம். விறலிக்கு அன்னதோர் தொழில் வேறுபாடின்றித் தொழி லொன்றாகலின் விறலியென ஒருமையாற் கூறினார்,.
- -----------
(பாடம்) *'பாரசைவர்.' என்பது முன் அச்சுப்பிரதியிற் கண்ட பாடம். ஆனால் அது திருத்தமானதன்று.
†'பாரத விருத்தி.' என்பது திருத்தமான பாடம் அன்று.
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயனெதிரச் சொன்ன பக்கமும்- இல்லறத்தைவிட்டு்த் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்டகாட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே தான் இறைவனிடத்துப்பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந்திரிந்து பெறாதார்க்கு இன்ன விடத்தே சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடும்;
பக்கமென்றதனானே அச்செய்யுட்களைக் கூத்தராற்றுப்படை பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை விறலியாற்றுப்படை முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்புமுதலியனவுங் கூறுதலுங் கொள்க.
உதாரணம்:-
"வான்றோய் வெண்குடை வயமா வளவ
னீன்றோர் தம்மினுந் தோன்ற நல்கினன்
சுரஞ்செல் வருத்தமோ டிரங்கி யென்று
மிரந்தோ ரறியாப் பெருங்கலஞ் சுரக்குவன்
சென்மதி வாழிய நீயே நின்வயி
னாடலு மகிழான் பாடலுங் கேளான்
வல்லே வருகென விடுப்பி னல்லது
நில்லென நிறுக்குவ னல்ல னல்லிசைப்
பெருந்தகை வேந்தர் கோலமொடு
திருந்தா வாழ்க்கையின் வருந்து வோயே."
"திருமழை தலைஇய விருணிற விசும்பின்."
(பத்து-மலைபடுகாடம்-1)
இவை கூத்தராற்றுப்படை.
"பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
யூரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
யாரீ ரோவென வினவ லானாக்
காரெ னொக்கற் கடும்பசி யிரவல
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்று
முடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேக
னெத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமைநோக் கின்றோ வன்றே
பிறர், வறுமைநோக் கின்றவன் மைவண் மையே.*" (புறம்-141)
----------
(பாடம்) *'நல்லா றெனினும்' திருக்குறள், 222.
"மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை." (பத்து-சிறுபாண்-1)
இவை பாணாற்றுப் படை.
"சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பி
னொலிபுனற் கழனி *வெண்குடைக் கிழவோன்
வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்
வள்ளிய னாதல் வையகம் புகழினு
முள்ள லோம்புமி# னுயர்மொழிப் புலவீர்
யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை
யொருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப்
பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினே னாக
வகமலி யுவகையொ டணுகல் வேண்டிக்
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழ நல்கின னஞ்சி
யானது பெயர்த்தனெ னாகத் தானது
சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண்
டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினுந்
துன்னரும் பரிசி றருமென
வென்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே." (புறம் - 394)
"அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட்." (பத்து-பொருநர்-1-2)
இவை பொருநராற்றுப் படை.
"சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினு மருவி
கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக
மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரு
நீரினு மினிய சாயற்
பாரி வேள்பாற் பாடினை செலினே." (புறம்-105)
"மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியில்." (புறம்-133)
இவை விறலியாற்றுப் படை.
கூத்தராற்றுப்படை தடுமாறுதொழிலாகமற் கூத்தரை ஆற்றுப் படுத்தென விரிக்க. ஏனையவும் அன்ன.
- --------
(பாடம்) *'ஒலிகதிர்க் கழனி.' # மோம்புமி.
முருகாற்றுப்படையுட் "புலம்பிரிந் துறையுஞ் சேவடி' யெனக்கந்தழிகூறி, 'நின்னெஞ்சத் தின்னசைவாய்ப்பப் பெறுதி' யெனவுங் கூறி, அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்றால் அவன் 'விழுமிய பெறலரும் பரிசி னல்கும்' எனவுங் கூறி, ஆண்டுத் தான் பெற்ற பெருவளம் அவனும்பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஓரிரவலனை ஆற்ழறுப்படுத்த தென்பது பொருளாகக்கொள்க. இனிக் கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப் பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யாமையுணர்க.
இனி இசைப்புலவர்க்கும் நாடகப்புலவர்க்கும் இங்ஙனங் கூறலமையாது; அவருள் உயர்ந்தோரல்லாதாரும் அத்தொழிற்குப் பெரும்பான்மையும் உரியராய் நடத்தலின்,
நாளணி செற்ற நீக்கிச் சிறந்த பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்- நாடொறுந் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங்களைக் கைவிட்டுச்* சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியும்;
அரசன் நாடோறும் தான் மேற்கொள்கின்ற செற்றமாவன சிறைசெய்தலுஞ் செருச்செய்தலுங் கொலைபுரிதலும் முதலியன. சிறந்த தொழில்களாவன சிறைவிடுதலுஞ் செருவொழிதலுங் கொலையொழிதலும் இறைதவிர்த்தலுந் தானஞ்செய்தலும் வேண்டின கொடுத்தலும் பிறவுமாம்.
மங்கலவண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி யென்ப. ஆகுபெயரான் அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணி யாயிற்று.
உதாரணம்:--
"அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போன் மாண்ட களிறூர்ந்தா- ரெந்தை
யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு" (முத்தொள்ளாயிரம்-82)
இது சிலம்பி கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற் றென்றலின் வெள்ளணியாயிற்று.
------------------
(பாடம்) *'செற்றங்களைக் கையிட்டு' என்பது முன் அச்சுப் பிரதிப் பாடம். இது பொருந்தவில்லை.
"செய்கை யரிய களவழிப்பா முன்செய்த
பொய்கை யொருவனாற் போந்தரமோ-சைய
மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி
கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம்."
இது சிறைவிடுதல் கூறிற்று.
"கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின்-நண்ணாதீர்
தேர்வேந்தன் றென்னன் றிருவுத் திராடநாட்
போர்வேந்தன் பூச லிலன்" (முத்தொள்ளாயிரம் 7)
இது செருவொழிந்தது.
"ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான்
வாமான்றேர்க் கோதை சதயநா -ளாமாறு
காம நுகருமின் கண்படுமி னென்னுமே
யேம முரசின் குரல்"
இதனுள் இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கல மென்றதனானே பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க.
சிறந்த சீர்த்தி மண்ணும் மங்கலமும்- அரசர்குச் சிறப் பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும்நீராட்டு மங்கலமும்;
இதனைப் பிறந்தநாளின் பின்வைத்தார் பொன்முடிபுனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும் இது வருமென்றற்கு குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தோடு கூடிய மண்ணுமங்கலமுங் கொள்க.
உதாரணம்:--
"அளிமுடியாக் கண்குடையா னாகதிநாள் வேய்ந்த
வொளிமுடி பொன்மலையே யொக்கு- மொளிமுடிமேன்
மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே
லந்தரத்துக் கங்கை யனைத்து"
எனவரும்.
இதனானே யாண்டு இத்துணைச் சென்றதென்று எழுதும் நாண்மங்கலமும் பெறுதும்.
நடை மிகுத்து ஏத்திய குடைநிழன் மரபும்- உலகவொழுக்கத்தை இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக்கணமும்;
இங்ஙனம் புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந்நிழல் உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக்குடி புறங்காத்தற்குக் குறியாகக் குடைகொண்டேனென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின்.
மரபென்றதனாற் செங்கோலுந் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க.
உதாரணம்:-
"மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத்
திங்க ளதற்கோர் திலதமா-வெங்கணு
முற்றுநீர் வைய முழுது நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை" (முத்தொள்ளாயிரம்-62)
என வரும்.
"அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப்
புறநீர்போன் முற்றும் பொதியும்- பிறரொவ்வா
மூவேந்த ருள்ளு முதல்வேந்தன் முத்தமிழ்க்குக்
கோவேந்தன் கண்டன் குடை."
எனவும்,
.... .... .... ...
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின் மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ (புறம்-35)
.... .... .... ....
எனவும்,
"திங்களைப் போற்றுதுந் திங்களைப்போற்றுதுங்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்த லான்" (சிலப்-மங்கல.)
எனவும்,
"திங்கண் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி"
(சிலப்-கானல்வரி)
"ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதுங்
காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்." (சிலப்-மங்கல)
எனவும் இவை குடையையும் செங்கோலையுந் திகிரியையும் பனைந்தன.
மாணார்ச்சுட்டிய வாண்மங்கலமும்--பகைவரைக் குறித்தவாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்;
இது பிறர் வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும் 'வென்ற வாளின் மண்'(புறத்திணை-13)ணென்பதனில் வேறாயிற்று. புகழ்ச்சிக்கட் பகைவரை இகழ்ந்து புகழ்தலின் 'மாணார்ச்சுடடிய' என்றார்.
உதாரணம்:--
"ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக்
கூளிகள் வம்மினோ கூத்தாடக்--காளிக்குத்
தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி
நீராட்டி யுண்ட நிணம்."
என வரும்.
"அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வாள்
பெரும்புலவுஞ் செஞ்சாந்து நாறிச்--சுரும்பொடு
வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி
யுண்டாடும் பக்கமு முண்டு." (முத்தொள்ளாயிரம்-109)
இது பிறர் கூறியது.
இது பாணியிற் பயின்றுவரும்.
மன்னெயில் அழித்த மண்ணு மங்லமும்—மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங் கொள்ளும் வித்தி மங்கலமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடுமங்கலமும்;
அழித்ததனான் மண்ணுமங்கலம்.
உதாரணம்:--
"கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்." (புறம்-15)
என்று எயிலழித்தவாறு கூறி,
"வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட."
எனவே, ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க.
குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலழித்தல் கூறாமை யின் இதனின் வேறாயிற்று.
பரிசில் கடைஇய நிலையும் - பரிசிலரை நீக்குதலமையாது நெடிது கொண்டு ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் கடும்பினது இடும்பை முதலியன கூறித் தான் குறித்த பொருண்மையினைச் செலுத்திக் கடாவினநிலையும்;
கடைக்கூட்டு நிலையும் - வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலையும்;
இதுவும் இழிந்தோர் கூற்றாயிற்று, இருத்தலே அன்றிக் கடாவுதலின். நிலையென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னுங் குறிப்பும் பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க.
உதாரணம்:-
"ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி
னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி
யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
வென்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத்
தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணார் முழவின் வயிரிய
ரின்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே." (புறம்-164)
இது பரிசில் கடாநிலை.
மதியேர் வெண்குடை யதியர் கோமான்
கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான்
பசலை நிலவின் பனிபடு விடியற்
பொருகளிற் றடிவழி யன்ன வென்கை
யொருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ
வுருகெழு மன்ன ராரெயில் கடந்து
நிணம்படு குருதிப் பெரும்பாட் டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிதெனச்
சென்றியா னின்றனெ னாக வன்றே
யூருண் கேணிப் பகட்டிலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத்
தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்
கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ
யூண்முறை யீத்த லன்றியுங்* கோண்முறை
விருந்திறை நல்கி யோனே யந்தரத்
தரும்பெற லமிழ்த மன்ன
கரும்பிவட் டந்தோன் பெரும்புறங் கடையே.#" (புறம்-392)
இது கடைநிலை.
"நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
$விசும்பா டெருவைப் பசுந்தடி தடுப்பப்
பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே." (புறம்-64)
இது போகல்வேண்டுங் குறிப்பு.
"ஊனு மூணு முனையி னினிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவு
மளவுபு கலந்து மெல்லியது பருகி
விருந்துறுத் தாற்றி யிருந்தனெ மாகச்
சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென
யாந்தன் னறியுந மாகத் தான்பெரி
தன்புடை மையி னெம்பிரி வஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப்
பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப்
பெயல்பெய் தன்ன செல்வத் தாங்க
ணீயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி
யூனுகிர் வலந்த தெண்க ணொற்றி
விரல்விசை தவிர்க்கு மரலையில் பாணியி
னிலம்பா டகற்றல் யாவது புலம்பொடு
தெருமர லுயக்கமுந் &தீர்க்குவோ மதனா
@னிருநிலங் கூலம் பாறக் +கோடை
வருமழை ##முழக்கிசைக் கோடிய பின்றைச்
சேயை யாயினு மிவணை யாயினு
மிதற்கொண் டறிநை வாழியோ கிணைவ
சிறுநனி, யொருவழிப் படர்கென் றானே யெந்தை
யொலிவெள் ளருவி வேங்கட நாட
னுறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கு
மறத்துறை யம்பியின் மாண மறப்பின்
றிருங்கோ ளீராப் பூட்கைக்
கரும்ப னூரன் காதன் மகனே." (புறம்-381)
-----------
(பாடம்) *'ஊண்முறை விடுத்த லின்றியும்."
#'பெரும் பிறங்கிடையே.' என்பது முன் அச்சுப்பிதியிற் கண்ட பாடம். ஆனால் அது சிறந்ததன்று.
$'விசும்போ டெருவை' &'தீர்க்குவோ னதனால்.'
@'இருநிலங் கூலமாறி.' + 'கொண்ட வருமழை.' ##'முழக்கிடை."
இது மேலும் இக்காலத்தும் இங்ஙனந் தருவலென்றானெனக் கூறினமையின் அவன் பரிசினிலை கூறிற்று.
"குன்றும் மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
நின்ற வென்னயந் தருளி யீதுகொண்
டீங்கனஞ் செல்க தானென வென்னை
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணா தீத்த விப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசில னல்லேன் பேணித்
தினையனைத் தாயினு மினிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே." (புறம்-208)
என்னும் புறப்பாட்டும் அப்பரிசினிலையைக் கூறியது காண்க.
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றும் இருவகை விடையும் - அங்ஙனம் பரிசில் பெற்றபின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக்கூறி உலக வழக்கியலால் தோன்றும் இரண்டு வகைப்பட்ட விடையும்;
இருவகையாவன, தலைவன் தானே விடுத்தலும் பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூறிவிடுத்தலுமாம்.
உதாரணம்:-
"தென் பரதவர் மிடல் சாய
வடவடுகர் வாளோட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பி
னற்றார்க் கள்ளின் சோழன் கோயிற்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீணகர் நின்றே
னரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி
யெஞ்சா மரபின் வஞ்சி பாட
வெமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்
டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநருஞ்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரு
மரைக்கமை மரபின மிடற்றியாக் குநரு
மிடற்றமை மரபின வரைக்கியாக் குநருங்
கடுந்தே ரிராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதாணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்
கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே
யிருங்கிளைத் தலைமை யெய்தி
யரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே" (புறம்-378)
இது தானே போவென விடுத்தபின் அவன் கொடுத்த வளனை உயர்த்துக் கூறியது.
"உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட்
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய
செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக வல்லே
யகறி ரோவெம் மாயம் விட்டெனச்
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையிற் றரத்தர யானு
மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்
டின்மைதீர வந்தனென்" (பத்து-பொருநர்-119-29)
இது யான் போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தபின், அவன் தந்த வளனை உயர்த்துக்கூறியது. 'நடைவயின் தோன்று' மென்றதனாற் சான்றோர் புலனெறிவழக்கஞ்செய்துவரும் விடைகள் பலவுங் கொள்க. அவை பரிசில் சிறிதென்று போகலும், பிறர்பாற் சென்று பரிசில்பெற்றுவந்து காட்டிப் போகலும், இடைநிலத்துப் பெற்ற பரிசிலை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவனவும், மனைவிக்கு மகிழ்ந்து கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாங் கொள்க.
உதாரணம்:--
"ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ வரிதே பெரிது
மீத லெளிதே மாவண் டோன்ற
லதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே" (புறம்-121)
இது சிறிதென்ற விடை.
"இரவலர் புரவலை நீயு மல்லை
புரவல ரிரவலர்க் கில்லையு மல்ல
ரிரவல ருண்மையுங் காணினி யிரவலர்க்
கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் றோன்றல் செல்வல் யானே" (புறம்-162)
இது பிறன்பாற் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை.
"வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி" என்னும் (152) புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக் கூறியது.
"நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்குங்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
னெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கு
மின்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயு
மெல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
றிருந்துவேற் குமண னல்கிய வளனே" (புறம்-163)
இது மனைக்குக் கூறியது.
நாளும் புள்ளும் பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகையும் எச்சமின்றிக் காலங் கண்ணிய ஓம்படை உளப்பட- நாணிமித்தத்தானும் புண்ணிமித்தத்தானும் பிறவற்றினிமித்தத் தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்குகண்டு அஞ்சிய அச்சமும் அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின் அவர் தலைவர் உயிர்வாழுங் காலத்தைக்கருதிய பாதுகாவன் முற் கூறியவற்றோடேகூட;
ஒருவன் பிறந்தநாள்வயின் ஏனைநாள்பற்றிப் பொருந்தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைக் கோண்மீன் கூடியவழி அவன் நாண்மீனிடைத் தீதுபிறத்தலும், வீழ்மீன் தீண்டியவழி அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும் போல்வன நாளின்கண் தோன்றிய நிமித்தம். *"புதுப்புள் வருதலும் பழம்புட் போதலும் " பொழுதன்றிக் கூகை குழறலும் போல் வன புள்ளின்கண் தோன்றிய நிமித்தம்; ஓர்த்து நின்றுழிக் கேட்ட வாய்ப்புள்ளும் ஓரிக்குர லுள்ளிட்டனவுங் கழுதுடன் குழீஇய குரல்பற்றலும் வெஞ்சுடர் மண்டிலத்திதுக் கவந்தம் வீழ்தலும் அதன்கண் துளைதோன்றுதலுந் தண் சுடர் மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றிய நிமித்தம்.
உவகை, அன்பு இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு நிகழ்த்தினான் ஒரு பாடாண்டலைவனது வாழ்க்கை நாளிற்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சி அவற்குத் தீங்கின்றாகவென்று ஓம்படை கூறுதலின் அது காலங்கண்ணிய ஓம்படையாயிற்று. எஞ்ஞான்றுந் தன் சுற்றத்து இடும்பை தீர்த்தானொருவற்கு இன்னாங்கு வந்துழிக் கூறுதலின், இற்றைஞான்று பரிசிலின் றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினானாமாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று. இவன் இறத்தலான் உலகுபடுந் துயரமும் உளதாகக் கூறலிற் சிறந்த புகழுங் கூறிற்று.
- -------------
*'இருமுந்நீர்க்' புறநானூறு-20. பக்கம், 294.
"நெல்லரியு மிருந்தொழுவர் " என்னும் (24) புறப்பாட்டினுள் "நின்று நிலைஇயர்நின் னாண்மீன்" என அவனாளிற்கு முற்கூறிய வாற்றான் ஓரிடையூறு கண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஓம்படை கூறியது.
உதாரணம்:-
"ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளரையிரவின்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனி யுயரழுவத்துத்
தலைநாண்மீ னிலைதிரிய
நிலைநாண்மீ னதனெதிரேர்தரத்
தொன்னாண்மீன் றுறைபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னா
தளக்கர்த்திணை விளக்காகக்
கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி*
யொருமீன் வீழ்ந்தன்றால் விசும்பி னானே
யதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்
பறையிசை யருவி நன்னாட்டுப் பொருந
னோயில னாயி னன்றுமற்றில்லென
வழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப
வஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே
மைந்துடை யானை கைவைத் துறங்கவுந்
திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவுங்
காவல் வெண்குடை கால்பரிந் துலறவுங்
காலியற் கலிமாக் கதியின்றி வைகவு
மேலோ ருலக மெய்தின னாகலி
னொண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்†
தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்
களந்து கொடையறியா வீகை
மணிவரை யன்ன மாஅ யோனே" (புறம்-229)
இதனுட் பாடாண்டலைவனது நாண்மீனை வீழ்மீன் நலிந்தமை பற்றிக் கூறியது.
---------------
(பாடம்) *'கால்பிதிர்வுபொங்கி' †'மகளிர்க் கமர்துணை யாகி'
"இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைய காயமு, மென்றாங்
கவையளந் தறியினு மளத்தற் கரியை
யறிவு மீரமும் பெருங்கண் ணோட்டமுஞ்
சோறுபடுக்குந் தீயோடு
செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே
திருவி லல்லது கொலைவில் லறியார்
நாஞ்சி லல்லது படையு மறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்
பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவ ருண்ணா வருமண் ணினையே
யம்புதுஞ்சுங் கடியரணா
லறந்துஞ்சுஞ் செங்கோலையே
புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை
யனையை யாகன் மாறே
மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே." (புறம்-20)
இப் புறப்பாட்டும் அது.
புதுப்புள் வந்ததும் பழம்புட் போயதுங் கண்ட தீங்கின் பயன் நின்மேல் வாராமல் விதுப்புறவறியா ஏமக் காப்பினையாக என்று ஓம்படை கூறியது. அது மேல் நின்னஞ்சுமென்று அச்சங்கூறி வெளிப்படுத்ததனான் உணர்க.
"மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயுந்
தீமுரணிய நீரும், என்றாங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலு மளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந
வான வரம்பினை நீயோ பெரும
வலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும் பகலிருளினு
நாஅல்வேத நெறிதிரியினுந்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
யந்தி யந்தண ரருங்கட னிறுக்கு
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே" (புறம்-2)
என்னும் புறப்பாட்டுப் பகைநிலத்தரசற்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் ஓம்படை வாழ்த்தாயிற்று. "காலனுங் காலம்" என்னும் (41) புறப்பாட்டும் அது.
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே- உலகத்துத் தோன்றும் வழக்கினது கருத்தினானே மூன்று காலத்தோடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறிவருகின்ற பாடாண்டிணை என்றவாறு
என்றது, இவ்வழக்கியல் காலவேற்றுமைபற்றி வேறுபடுமாயின், அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்பதுணர்த்தியவாறு.
அவை, பகைவர்நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம்; அதுவன்றிப் பொருள் கருதாது பாதுகாவாதான் நிரயைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த இடையாய அறம்; அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடல் நிகழினும் அஃது அதனினுமிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப் பகைவன் போற்றாத நாட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும் பொருள் வருவாய் பற்றிச் சேறலும் வஞ்சித்துச் சேறலும் போல்வன ஒன்றனின் ஒன்றிழிந்த ஞாலத்து நடக்கைக் குறிப்பு; மாற்றரசன் முற்றியவழி ஆற்றாதோன் அடைத்திருத்தலும், அரசியலாயினும் அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந், தனக்கு உதவிவரவேண்டியிருத்தலும், ஆற்றலன்றி ஆக்கங் கருதாது காத்தேயிருத்தலும் ஒன்றனினொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு.
இனி வாகைக்குப் பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க. காஞ்சிக்கும் அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க; உயிரும் உடம்பும் பொருளுமென்ற மூன்றும்பற்றி. இது பாடாண்டிணையுட் கூறினார், எல்லாத்திணைக்கும் புறனடையாதல் வேண்டி. இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலை இடை கடைகோடலும், அறுமுறை வாழ்த்திற்கும் அவற்றின் ஏற்றிழிவு பற்றிக் கோடலும் பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. முற்கூறியனவெல்லாம் ஓம்படையுளப்படக் கண்ணிய வருமென்பது. (31)
இரண்டாவது புறத்திணையியற்கு, ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகை முடிந்தது.
சூத்திர முதற்குறிப்பு அகரவரிசை.
கருத்துகள்
கருத்துரையிடுக