திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டம் பாகம் 1


பக்தி நூல்கள்

Back

திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டம் பாகம் 1
பரஞ்சோதி முனிவர்



பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்)
1. மதுரைக் காண்டம், பாகம் 1 ( படலம் 1-4)


    உள்ளடக்கம்
      1. மதுரைக் காண்டம்
      காப்பு (1-5)
      கடவுள் வாழ்த்து (6-23)
      பாயிரம் (24-26)
      அவையடக்கம் (27-31)
      திரு நாட்டுச் சிறப்பு / பாண்டித் திருநாட்டுப் படலம் (32-91)
      திரு நகரச் சிறப்பு / மதுரைத் திருநகரப் படலம் (92-200 )
      திருக்கையாலச் சிறப்பு / திருக்கயிலாய வருணனைப் படலம் (201 - 207 )
      புராண வரலாறு / திருநகரச் சிறப்பு புராண வரலாற்றுப் படலம் (208 - 232)
      தல விசேடம் / தல விசேடப் படலம் (233- 255 )
      தீர்த்த விசேடம் / தீர்த்த விசேடப் படலம் (256- 291)
      மூர்த்தி விசேடம் / மூர்த்தி விசேடப் படலம் (292 -328 )
      பதிகம் / பதிகப் படலம் (329 - 343 )
      திருவிளையாடல்கள்
      1. இந்திரன் பழி தீர்த்த படலம் (344- 440)
      2. வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம் (441-471 )
      3. திருநகரம் கண்ட படலம் சுபம் ( 472 - 518)
      4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் (519 - 599)


    1. காப்பு (1-5)

    1 விநாயகர் காப்பு
    சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
    முத்தி யான முதலைத் துதிசெயச்
    சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ
    சித்தி யானைதன் செய்யபொற் பாதமே
    2 சொக்கலிங்கமூர்த்தி காப்பு
    வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுணர் உள்ளந் தோறுஞ்
    சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி யேற்றுக்
    குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி
    மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி
    3 அங்கயற்கண்ணம்மை காப்பு
    சுரம்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி
            யுத்தரியத் தொடித்தோள் போற்றி
    கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப்
            பால்சுரந்த கலசம் போற்றி
    இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட
            வங்கயற்கண் எம்பிராட்டி
    அரும்புமிள நகைபோற்றி யாரணநூ புரஞ்சிலம்பு
            மடிகள் போற்றி
    4 நூற்பயன்
    திங்களணிதிருவால வாயெம் மண்ண றிருவிளையாட்
            டிவையன்பு செய்துகேட்போர்
    சங்கநிதி பதுமநிதிச் செல்வ மோங்கித்
            தகைமை தரு மகப்பெறுவர் பகையை வெல்வர்
    மங்கலநன் மணம்பெறுவர் பிணிவந் தெய்தார்
            வாழ்நாளு நனிபெறுவர் வானா டெய்திப்
    புங்கவராய் அங்குள்ள போக மூழ்கிப்
            புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார்
    5 வாழ்த்து
    மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
    பல்குக வளங்கள் எங்கும் பரவுக வறங்க ளின்ப
    நல்குக வுயிர்கட் கெல்லா நான்மறைச் சைவ மோங்கிப்
    புல்குக வுலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க


    கடவுள் வாழ்த்து (6-23)

    6 பரமசிவம்
    பூவண்ணம் பூவின் மணம்போலமெய்ப் போத வின்ப
    மாவண்ண மெய்கொண் டவன்றன்வலி யாணை தாங்கி
    மூவண்ண றன்சந் நிதிமுத்தொழில் செய்ய வாளா
    மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம்
    7 பராசக்தி
    அண்டங்கள் எல்லாம் அணுவாக வணுக்க ளெல்லாம்
    அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்
    அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும்
    அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர்
    8 சொக்கலிங்கமூர்த்தி
    பூவி னாயகன் பூமக ணாயகன்
    காவி னாயக னாதிக் கடவுளர்க்கு
    ஆவி நாயகன் னங்கயற் கண்ணிமா
    தேவி நாயகன் சேவடி யேத்துவாம்
    9 அங்கயற்கண்ணம்மை
    பங்கயற்க ணரியபாம் பரனுருவே தனக்குரிய படிவமாகி
    இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த சராசரங்கள் ஈன்றுந் தாழாக்
    கொங்கயற்கண் மலர்க்கூந்தற் குமரிபாண்டியன்மகள் போற் கோலங் கொண்ட
    அங்கயற்க ணம்மையிரு பாதப்போ தெப்போது மகத்துள் வைப்பாம்
    10 நடேசர்
    உண்மையறி வானந்த வுருவாகி வெவ்வுயிர்க்கு முயிராய் நீரின்
    தண்மையனல் வெம்மையெனத் தனையகலா திருந்துசரா சரங்க ளீன்ற
    பெண்மையுரு வாகியதன் னாநந்தக் கொடிமகிழ்ச்சி பெருக யார்க்கும்
    அண்மையதா யம்பலத்து ளாடியருள் பேரொளியை யகத்துள் வைப்பாம்
    11 சௌந்தரபாண்டியர்
    சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங் கொன்றையந்தார் தணந்துவேப்பந்
    தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி
    விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு மகனாகி மீன நோக்கின்
    மடவாலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம்
    12 தடாதகைப் பிராட்டியார்
    செழியர்பிரான் திருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து செங்கோ லோச்சி
    முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டுந்திகண முனைப்போர் சாய்த்துத்
    தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித் தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்
    தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி யடிக்கமலந் தலைமேல் வைப்பாம்
    13 கான் மாறி நடித்தவர்
    பொருமாறிற் கிளர்தடந்தோள் ஒருமாறன் மனங்கிடந்த புழுக்க மாற
    வருமாறிற் கண்ணருவி மாறாது களிப்படைய மண்ணும் விண்ணும்
    உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத் தடுமாறி யுழலு மாக்கள்
    கருமாறிக் கதியடையக் கான்மாறி நடித்தவரைக் கருத்துள் வைப்பாம்
    14 தஷிணாமூர்த்தி
    கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி
    வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்
    எல்லாமாய் அல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச்
    சொல்லாமற்சொன் னவரை நினையாமனினைந் துபவத் தொடக்கை வெல்வாம்
    15 சித்தி விநாயகக் கடவுள்
    உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யறுதியாகத்
    தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப் படுத்தித் தறுகட் பாசக்
    கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்து வருவினைக டீர்ப்பாம்
    16 சுப்பிரமணியக் கடவுள்
    கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப் பெருங்
            கடலுங் கலங்கக் கார்வந்
    துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும்
            பிளப்பமறை யுணர்ந்தோராற்றும்
    அறங்குலவு மகத்தழலு மவுணமட வார்வயிற்றி னழலும் மூள
    மறங்குலவு வேலெடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம்
    17 சரசுவதி
    பழுதகன்ற நால்வகைச் சொன் மலரெடுத்துப்
            பத்திபடப் பரப்பித் திக்கு
    முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி பெற
            முக்கண் மூர்த்தி தாளிற்
    றொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
            சூட்டவரிச் சுரும்புந் தேனும்
    கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத் தாளடி
            முடி மேற்கொண்டு வாழ்வாம்
    18 திருநந்தி தேவர்
    வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி
    பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி
    அந்தியும் பகலும் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும்
    நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்
    19 திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
    கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக்
    கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற்
    பிடியன நாயனார் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த
    முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்
    20 திருநாவுக்கரசு நாயனார்
    அறப்பெருங் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா
    மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சகர் இட்டநீல
    நிறப்பெருங் கடலும் யார்க்கும் நீந்துதற் கரிய வேழு
    பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்
    21 சுந்தர மூர்த்தி நாயனார்
    அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு
    தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் றன்னைப்
    பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
    இரவினிற் றூது கொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்
    22 மாணிக்கவாசக சுவாமிகள்
    எழுதரு மறைக டேறா விறைவனை யெல்லிற் கங்குற்
    பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
    தொழுதகை தலைமே லேறத் துளும்புகண் ணீருண் மூழ்கி
    அழுதடி யடைந்த வன்பன் அடியவர்க் கடிமை செய்வாம்
    23 சண்டேசுர நாயனார் முதலிய திருத்தொண்டர்
    தந்தைதா ளடும்பிறவித் தாளெறிந்து
            நிருத்தர்இரு தாளைச் சேர்ந்த
    மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி பத்திநெறி
            வழாது வாய்மெய்
    சிந்தைதா னரனடிக்கே செலுத்தினராய்ச்
            சிவானுபவச் செல்வ ராகிப்
    பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர்
            தாள்பரவிப் பணிதல் செய்வாம்
    கடவுள் வாழ்த்து சுபம்
    -------------------

    பாயிரம் (24 - 26 )

    முதனூல்
    24 அண்ணல்பாற் றெளிந்த நந்தி யடிகள்பாற் சனற்கு மாரன்
    உண்ணிறை யன்பி னாய்ந்து வியாதனுக் குணர்த்த வந்தப்
    புண்ணிய முனிவன் சூதற் கோதிய புராண மூவா
    றெண்ணிய விவற்றுட் காந்தத் தீசசங் கிதையின் மாதோ
    25 நூல் யாத்தற்குக் காரணம்
    அறைந்திடப் பட்ட தாகு மாலவாய்ப் புகழ்மை யந்தச்
    சிறந்திடும் வடநூல் தன்னைத் தென்சொலாற் செய்தி யென்றிங்
    குறைந்திடும் பெரியோர் கூறக் கடைப்பிலத் துறுதி யிந்தப்
    பிறந்திடும் பிறப்பி லெய்தப் பெறுதுமென் றுள்ளந் தேறோ
    26 மொழி பெயர்த்த முறை
    திருநகர் தீர்த்த மூர்த்திச் சிறப்புமூன் றந்த மூர்த்தி
    அருள்விளை யாட லெட்டெட் டருச்சனை வினையொன் றாக
    வரன்முறை யறுபத் தெட்டா மற்றவை படல மாக
    விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்ப லுற்றேன்
    பாயிரம் சுபம்
    -------------------------

    அவையடக்கம் (27 -31 )

    27 நாயகன் கவிக்குங் குற்ற நாட்டிய கழக மாந்தர்
    மேயவத் தலத்தி னோர்கென் வெள்ளறி வுரையிற் குற்றம்
    ஆயுமா றரிதன் றேனு நீர்பிரித் தன்ன முண்ணுந்
    தூயதீம் பால்போற் கொள்க சுந்தரன் சரிதந் தன்னை
    28 கவைக்கொ ழுந்தழனாச் சுவை கண்டவூனிமையோர்
    சுவைக்க விண்ணமு தாயினம் துளக்கமில் சான்றோர்
    அவைக்க ளம்புகுந் தினியவா யாலவா யுடையார்
    செவிக்க ளம்புகுந் தேறுவ சிறியனேன் பனுவல்
    29 பாய வாரியுண் டுவர்கெடுத் துலகெலாம் பருகத்
    தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர்
    ஆய கேள்வியர் துகளறுத் தாலவா யுடைய
    நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல்
    30 அல்லை யீதல்லை யீதென மறைகளு ம்அன்மைச்
    சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தர னாடற்
    கெல்லை யாகுமோ வென்னுரை யென்செய்கோ விதனைச்
    சொல்லு வேனெனு மாசை யென் சொல்வழி கேளா
    31 அறுகாற்பீ டத்துயர்மால் ஆழிகடைந் தமுதையரங் கேற்று மாபோல்
    அறுகாற்பே டிசைபாடுங் கூடன்மான் மியத்தையருந் தமிழாற் பாடி
    அறுகாற்பீ டுயர்முடி யார் சொக்கேசர் சந்நிதியி லமரச் சூழும்
    அறுகாற்பீ டத்திருந்து பரஞ்சோதி முனிவனரங் கேற்றி னானே

    அவையடக்கம் சுபம்
    --------------

    திரு நாட்டுச் சிறப்பு /பாண்டித் திருநாட்டுப் படலம் (32-91)

    32 கறைநி றுத்திய கந்தர சுந்தரக் கடவுள்
    உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளதுக்கி
    மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்
    முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம்
    33 தெய்வ நாயகன் நீறணி மேனிபோற் சென்று
    பௌவ மேய்ந்துமை மேனிபோற் பசந்துபல் லுயிர்க்கும்
    எவ்வ மாற்றுவான் சுரந்திடு மின்னரு ளென்னக்
    கௌவை நீர்சுரந் தெழுந்தன கனைகுரல் மேகம்
    34 இடித்து வாய்திறந் தொல்லென வெல்லொளி மழுங்கத்
    தடித்து வாள்புடை விதிர்த்துநின் றுஇந்திர சாபம்
    பிடித்து நீளம்பு கோடைமேற் பெய்துவெம் பெரும்போர்
    முடித்து நாமென வருதல்போன் மொய்த்தன கொண்மூ
    35 முனித னீள்வரை யுச்சிமேன் முழங்கிவா னிவந்து
    தனித நீர்மழை பொழிவன தடஞ்சிலை யிராமன்
    கனித னீர்மையா லாலவாய்க் கண்ணுதல் முடிமேற்
    புனித நீர்த்திரு மஞ்சனம் ஆட்டுவான் போலும்
    36 சுந்த ரன்றிரு முடிமிசைத் தூயநீ ராட்டும்
    இந்தி ரன்றனை யொத்தகா ரெழிழிதென் மலைமேல்
    வந்து பெய்வலத் தனிமுதன் மௌலிமேல் வலாரி
    சிந்து கின்றகைப் போதெனப் பன்மணி தெறிப்ப
    37 உடுத்த தெண்கடன் மேகலை யுடையபார் மகள்தன்
    இடத்து தித்தபல் லுயிர்க்கெலா மிரங்கித்தன் கொங்கைத்
    தடத்து நின்றிழி பாலெனத் தடவரை முகடு
    தொடுத்து வீழ்வன விழுமெனத் தூங்குவெள் ளருவி
    38 கருநிற மேக மென்னுங் கச்சணி சிகரக் கொங்கை
    அருவியாந் தீம்பால் சோர வகன்சுனை யென்னுங் கொப்பூழ்ப்
    பொருவில்வே யென்னு மென்றோட் பொதியமாஞ் சைலப் பாவை
    பெருகுதண் பொருநை யென்னும் பெண்மகப் பெற்றாள் அன்றே
    39 கல்லெனக் கரைந்து வீழுங் கரும்புனற் குழவி கானத்
    தொல்லெனத் தவழ்ந்து தீம்பா லுண்டொரீஇத் திண்டோண் மள்ளர்
    சொல்லெனத் தெழிக்கும் பம்பைத் தீங்குரல் செவிவாய்த் தேக்கி
    மெல்லெனக் காலிற் போகிப் பணைதொறும் விளையாட்டு எய்தி
    40 அரம்பைமென் குறங்கா மாவி னவிர்தளிர் நிறமாத் தெங்கின்
    குரும்பைவெம் முலையா வஞ்சிக் கொடியிரு நுசுப்பாக் கூந்தல்
    சுரும்பவிழ் குழலாக் கஞ்சஞ் சுடர்மதி முகமாக் கொண்டு
    நிரம்பிநீள் கைதை வேலி நெய்தல்சூழ் காவில் வைகி
    41 பன்மலர் மாலை வேய்ந்து பானுரைப் போர்வை போர்த்துத்
    தென்மலைத் தேய்ந்த சாந்த மான்மதச் சேறு பூசிப்
    பொன்மணி யாரந் தாங்கிப் பொருநையாங் கன்னி முந்நீர்த்
    தன்மகிழ் கிழவ னாகந் தழீஇகொடு கலந்த தன்றே
    42 வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டு
    முல்லையா னைந்துந் தேனுந் திரைக்கையான் முகந்து வீசி
    நல்லமான் மதஞ்சாந் தப்பி நறுவிரை மலர் தூய் நீத்தஞ்
    செல்லலாற் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள் போலும்
    43 அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர்த்
    திரங்கிவா லன்ன மேங்கதி யிருகையும் சங்கஞ் சிந்தி
    மசுங்குசூழ் காஞ்சி தன்னவரம்பிற வொழுகும் மாரி
    பரம்பரற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்
    44 வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி
    அரைபடு மகிலுங் சாந்து மப்பியின் னமுத மூட்டுக்
    கரைபடு மருத மென்னும் கன்னியைப் பருவ நோக்கித்
    திரைபடு பொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கு மாதோ
    45 மறைமுதற் கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும்
    நிறைபர மென்றும் பூதி சாதனநெறி வீடென்றும்
    அறைகுவ தறிந்துந் தேறா ரறிவெனக் கலங்கி யங்கி
    முறையின்வீ டுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரி வெள்ளம்
    46 மறைவழி கிளைத்த வெண்ணெண் கலைமகள் போல் வருநீர் வெள்ளந்
    துறைவழி யொழுகும் பல்கால் சோலைதண் பழனஞ் செய்தேன்
    உறைவழி யோடை எங்கு மோடிமன் றுடையார்க் கன்பர்
    நிறைவழி யாத வுள்ளத் தன்புபோ னிரம்பிற் றன்றே
    47 இழிந்த மாந்தர்கைப் பொருள்களும் இகபரத் தாசை
    கழிந்த யோகியர் கைப்படிற் றூயவாய்க் களங்கம்
    ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடுத் தெழிலி
    பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்
    48 ஈறி லாதவள் ஒருத்தியே யைந்தொழி லியற்ற
    வேறு வேறுபேர் பெற்றென வேலைநீ ரொன்றே
    யாறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
    மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ
    49 களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
    குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
    வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
    அளமரு பொறிபோ லேவ லாற்றவள் வினையின் மூண்டார்
    50 பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
    அலமுக விரும்புதேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
    நிலமகள் உடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
    சலமென நிவந்த நெங்கேழ்த் தழன்மனி யிமைக்கு மன்னோ
    51 ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்துச்
    சேறுசெய் குநருந் தெய்வம் தொழுதுதீஞ் செந்நெல் வீசி
    நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநருந் தெவ்வின்
    மாறுசெய் களைகட்டோம்பி வளம்படுக் குநரும் ஆனார்
    52 பழிபடு நறுவந் தன்னைக் கடைசியர் பருகிச் செவ்வாய்
    மொழி தடுமாற வேர்வை முகத்தெழ முறுவல் தோன்ற
    விழிசிவந் துழலக் கூந்தன் மென்றுகில் சோர வுள்ளக்
    கழிபெருங் களிப்பு நல்கிக் கலந்தவ ரொத்த தன்றே
    53 பட்பகையாகுந் தீஞ்சொற் கடைசியர் பவளச் செவ்வாய்க்
    குட்பகை யாம்ப லென்று மொண்ணறுங் குவளை நீலங்
    கட்பகை யாகு மென்றுங் கமலநன் முகத்துக் கென்றும்
    திட்பகை யாகு மென்றுங் செறுதல்போற் களைதல் செய்வார்
    54 கடைசியர் முகமும் காலும் கைகளும்கமல மென்னார்
    படைவிழி குவளை யென்னார் பவளவாய் குமுத மென்னார்
    அடையவுங் களைந்தார் மள்ளர் பகைஞரா யடுத்த வெல்லை
    உடையவ னாணை யாற்றா லொறுப்பவர்க் குறவுண் டாமோ
    55 புரையற வுணர்ந்தோர் நூலின் பொருளினுள் ளடங்கி யந்நூல்
    வரையறை கருத்து மான வளர்கருப் புறம்பு தோன்றிக்
    கரையமை கல்வி சாலாக் கவிஞர்போ லிறுமாந்து அந்நூல்
    உரையென விரிந்து கற்பின் மகளிர்போ லொசிந்த தன்றே
    56 அன்புறு பத்தி வித்தி யார்வநீர் பாய்ச்சுந் தொண்டர்க்
    கின்புரு வான வீச னின்னருள் விளையு மாபோல்
    வன்புறு கருங்கான் மள்ளர் வைகலுஞ் செவ்வி நோக்கி
    நன்புல முயன்று காக்க விளைந்தன நறுந்தண் சாலி
    57 அகனில வேறு பாட்டின் இயல்செவ்வி யறிந்து மள்ளர்
    தகவினை முயற்சி செய்யக் காமநூல் சாற்று நான்கு
    வகைநலார் பண்புசெல்வி யறிந்துசேர் மைந்தர்க் கின்பம்
    மிகவிளை போகம் போன்று விளைந்தன பைங்கூ ழெல்லாம்
    58 கொடும்பிறை வடிவிற் செய்த கூனிரும் பங்கை வாங்கி
    முடங்குகால் வரிவண் டார்ப்ப முள்ளரைக் கமல நீலம்
    அடங்கவெண் சாலி செந்நெல் வேறுவே றரிந்தீடாக்கி
    நெடுங்களத் தம்பொற் குன்ற நிரையெனப் பெரும்போர் செய்தார்
    591 கற்றைவை களைந்து தூற்றிக் கூப்பியூர்க் காணித் தெய்வம்
    அற்றவர்க் கற்ற வாறுஈந் தளவைகண் டாறி லொன்று
    கொற்றவர் கடமை கொள்ளப் பண்டியிற் கொடு போய்த் தென்னா
    டுற்றவர் சுற்றந் தெய்வம் விருந்தினர்க் கூட்டியுண்டார்
    60 சாறடு கட்டி யெள்ளுச் சாமைகொள் ளிறுங்கு தோரை
    ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை யேனல்
    வேறிபல் பயறோ டின்ன புன்னில விளைவு மற்றும்
    ஏறோடு பண்டி யேற்றி யிருநிலங் கிழிய வுய்ப்பார்
    61 துறவின ரீச சேனசத் தொண்டினர் பசிக்கு நல்லூண்
    டிறவினைப் பிணிக்குத் தீர்க்கு மருந்துடற் பனிப்புக் காடை
    உறைவிடம் பிறிது நல்கி யவரவ ரொழிகிச் செய்யும்
    அறவினை யிடுக்க ணீக்கி யருங்கதி யுய்க்க வல்லார்
    62 நிச்சலு மீச னன்பர் நெறிப்படிற் சிறார்மேல் வைத்த
    பொச்சமில் அன்பு மன்னர் புதல்வரைக் கண்டாலன்ன
    அச்சமுங் கொண்டு கூசி யடிபணிந் தினிய கூறி
    இச்சையா றொழுகி யுள்ளக் குறிப்பறிந் தேவல் செய்வார்
    63 நறைபடு கனிதேன் பெய்த பாலொடு நறுநெய் வெள்ளம்
    நிறைபடு செம்பொன் வண்ணப் புழுக்கலா னிமிர்ந்த சோறு
    குறைவற வுண்டு வேண்டும் பொருள்களும் கொண்மி னென்ன
    மறைமுத லடியார் தம்மை வழிமறித் தருத்துவார்கள்
    64 பின்னெவ னுரைப்ப தந்தப் பெருந்தமிழ் நாடாங்கன்னி
    தன்னிடை யூர்க ளென்னு மவயவந் தாங்கச் செய்த
    பொன்னியற் கலனே கோயின் மடமறப் புறநீர்ச் சாலை
    இன்னமு தருத்து சாலை யெனவுருத் தரித்த தம்மா
    65 இன்ற டம்புனல் வேலிசூழ் இந்நில வரைப்பிற்
    குன்ற முல்லைதண் பணைநெய்தல் குலத்தினை நான்கும்
    மன்ற வுள்ளமற் றவைநிற்க மயங்கிய மரபின்
    ஒன்றோ டொன்றுபோய் மயங்கிய திணைவகை யுரைப்பாம்
    66 கொல்லை யானிரை மேய்ப்பவர் கோழிணர்க் குருந்தின்
    ஒல்லை தாயதிற் படர் கறிக் கருந்துண ருகுப்ப
    முல்லை சோறெனத் தேன்விராய் முத்திழை சிற்றில்
    எல்லை யாயமோ டாடுப வெயின்சிறு மகளிர்
    67 கன்றோ டுங்களி வண்டுவாய் நக்கவீர்ங் கரும்பு
    மென்று பொன்சொரி வேங்கைவா யுறங்குவ மேதி
    குன்றி ளந்தினை மேய்ந்துபூங் கொழுநிழன் மருதஞ்
    சென்று தங்குவ சேவகம் எனமுறச் செவிமா
    68 எற்று தெண்டிரை யெறிவளை யெயிற்றியர் இழைத்த
    சிற்றில் வாய்நுழைந் தழிப்பவச் சிறுமியர் வெகுண்டு
    பற்றி லாரெனச் சிதறிய மனவணி பரதர்
    முற்றி லாமுலைச் சிறுமியர் முத்தொடும் கோப்ப
    69 முல்லை வண்டுபோய் முல்லையாழ் முளரிவாய் மருதம்
    வல்ல வண்டினைப் பயிற்றிப்பின் பயில்வன மருதங்
    கொல்லை யான்மடி யெறிந்திளங் குழவியென்று இரங்கி
    ஒல்லை யூற்றுபால் வெள்ளத்து ளுகள்வன வாளை
    70 கரும்பொற் கோட்டிளம் புன்னைவாய்க் கள்ளுண்டு காளைச்
    சுரும்பு செவ்வழிப் பாண்செயக் கொன்றைபொன் சொரிவ
    அருந்த டங்கடல் வளையெடுத்து ஆழியான் கையில்
    இருந்த சங்கென விறைகொளப் பூவைமே லெறிவ
    71 கழிந்த தெங்கினொண் பழம்பரீஇ முட்பலாக் கனிகீண்
    டழிந்த தேனுவர்க் கேணிபாய்ந் தகற்றுவ வுவரை
    வழிந்த தேன்மடற் கேதகை மலர்நிழல் குருகென்
    றொழிந்த தாமரைப் போதுபுக்கு ஒளிப்பன கெண்டை
    72 ஆறு சூழ்கழிப் புலால்பொறா தசைந்துகூன் கைதை
    சோறு கால்வன வாம்பல்வாய் திறப்பன துணிந்து
    கூறு வாரெனக் குவளைகண் காட்டிடக் கூடித்
    தூறு வாரெனக் சிரித்துஅலர் தூற்றவ முல்லை
    73 துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்தக்
    கள்ளு மாறவும் கூனலங்காய் தினை யவரை
    கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவைக் கன்னல்
    எள்ளு மாறவும் அளப்பன விடைக்கிடை முத்தம்
    74 அவமி கும்புலப் பகைகடந் துயிர்கெலா மன்பாம்
    நவமி குங்குடை நிழற்றிமெய்ச் செய்யகோ னடாத்திச்
    சிவமி கும்பர ஞான மெய்த் திருவொடும் பொலிந்து
    தவமி ருந்துஅர சாள்வது தண்டமிழ்ப் பொதியம்
    75 வான யாறுதேய்ந் துயரிய மலயமே முக்கண்
    ஞான நாயக னம்மலை போர்த்தகார் நால்வாய்
    ஆனை யீருரு யம்மழை யசும் பதன் புண்ணீர்
    கூனல் வான்சிலை குருதிதோய் கோடுபோன்று அன்றே
    76 சுனைய கன்கரைச் சூழல்வாய்ச் சுரும்புசூழ் கிடப்ப
    நனைய விழ்ந்தசெங் காந்தண்மேல் நாகிள வேங்கைச்
    சினைய விழ்ந்தவீ கிடப்பபொன் றோய்கலத் தெண்ணீர்
    அனைய பொன்சுடு நெருப்பொடு கரியிருந் தனைய
    77 குண்டுநீர்ப்படு குவளைவாய்க் கொழுஞ்சினை மரவம்
    வண்டு கூப்பிடச் செம்மறூய்ப் புதுமது வார்ப்ப
    அண்டர் வாய்ப்பட மறைவழி பொரிசொரிந் துஆனெய்
    மொண்டு வாக்கிமுத் தீவினை முடிப்பவ ரனைய
    78 அகிலு மாரமுந் தழன்மடுத் தகழ்ந்தெறிந் தழல்கால்
    துகிரு மாரமுந் தொட்டெறிந் தைஐவனம் தூவிப்
    புகரின் மால்கரி மருப்பினால் வேலிகள் போக்கி
    இகலில் வான்பயிர் ஓம்புவ வெயினர்தஞ் சீறூர்
    79 அண்ட வாணருக்கு இன்னமு தருத்துவோர் வேள்விக்
    குண்ட வாரழற் கொழும்புகை கோலுமக் குன்றிற்
    புண்ட வாதவே லிறவுளர் புனத்தெரி மடுப்ப
    உண்ட காரகிற் றூமமு மொக்கவே மயங்கும்
    80 கருவி வாள் சொரி மணிகளுங் கழைசொரி மணியும்
    அருவி கான்றபன் மணிகளு மகன்றலை நாகத்
    திரவி கான்றெசெம் மணிகளும் புனங்கவ ரினமான்
    குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்துஎறி கவண்கல்
    81 மாய வன்வடி வாயது வையமால் உந்திச்
    சேய மங்கய மாயது தென்னனா டலர்மேற்
    போய மென்பொகுட் டாயது பொதியமப் பொகுட்டின்
    மேய நான்முக னகத்தியன் முத்தமிழ் வேதம்
    82 ஏக மாகிய மேருவும் பொதியமே யிரும்பொன்
    ஆகு மேருவைச் சூழ்ந்தசாம் பூநத யாறும்
    நாக ராடுதண் பொருநையே நாவலா றுடுத்த
    போக பூமியும் பெருநைசூழ் பூமியே போலும்
    83 சிறந்த தண்டமிழ் ஆலவாய் சிவனுல கானாற்
    புறந்த யங்கிய நகரெலாம் புரந்தரன் பிரமன்
    மறந்த யங்கிய நேமியோ னாதிய வானோர்
    அறந்த யங்கிய வுலகுரு வானதே யாகும்
    84 வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மெழுகிக்
    களைந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும்
    அளைந்த தெண்டிரைப் பொருநையோ வந்நதி ஞாங்கர்
    விளைந்த செந்நெலுங் கன்னலு, வீசும் அவ் வாசம்
    85 பொதியி லேவிளை கின்றன சந்தனம் பொதியின்
    நதியி லேவிளை கின்றன முத்தமந் நதிசூழ்
    பதியி லேவிளை கின்றன தருமமப் பதியோர்
    மதியி லேவிளை கின்றன மறைமுதற் பத்தி
    86 கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
    அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலி னிளைப்பு
    விடுக்க வாரமென் காறிரு முகத்திடை வீசி
    மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ
    87 விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்
    வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலயமா முனிக்குத்
    திடமு றுத்தியம் மொழிக்கெதிர் அக்கிய தென்சொன்
    மடம கட்காங் கென்பது வழுதிநா டன்றோ
    88 கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
    பண்ணு றத்தெரிந்து ஆய்ந்தவிப் பசுந்தமி ழேனை
    மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
    எண்ணி டைப் படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ
    89 தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தலும் முதலை
    உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
    கண்ட தும்மறைக் கதவினைத் திறந்துங் கன்னித்
    தண்ட மிழ்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்
    90 வெம்மை யால்விளை வஃகினும் வேந்தர்கோல் கோடிச்
    செம்மை மாறினும் வறுமைநோய் சிதைப்பினுஞ் சிவன்பாற்
    பொய்மை மாறிய பத்தியும் பொலிவுகுன் றாவாய்த்
    தம்மை மாறியும் புரிவது தருமம் அந்நாடு
    91 உலகம் யாவையு மீன்றவ ளும்பரு ளுயர்ந்த
    திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று
    தலைவ ரான்முறை செய்தநா டிஃதன்றிச் சல்தி
    சுலவு பாரினுண் டாகுமோ துறக்கத்தும் அஃதே
    பாண்டித் திருநாட்டுப் படலம் சுபம்
    ---------------------------

    மதுரைத் திருநகரப் படலம் (92-200)

    92 மங்க லம்புனை பாண்டிநா டாகிய மகட்குச்
    சங்க லம்புனை தோளிணை தடமுலை யாதி
    அங்க மாம்புறந் தழுவிய நகரெலா மனைய
    நங்கை மாமுக மாகிய நகர்வளம் பகர்வாம்
    93 கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ்
    அங்க மேதிருச் சுழியல்அவ் வயிறுகுற் றாலஞ்
    செங்கை யேடக மேனியே பூவணந் திரடோள்
    பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம் புரமே
    94 வடுவின் மாநில மடந்தைமார் பிடைக்கிடந் திமைக்கப்
    படுவில் ஆரமே பாண்டிநா டாரமேற் பக்கத்
    திடுவின் மாமணி யதன்புற நகரெலா மிவற்றுள்
    நடுவி னாயக மாமணி மதுரைமா நகரம்
    95 திரும கட்கொரு தாமரைக் கூடமே திருமான்
    மரும கட்குவெண் டாமரை மாடமே ஞானந்
    தரும கட்கியோ கத்தனிப் பீடமே தரையாம்
    பெரும கட்குஅணி திலகமே யானதிப் பேரூர்
    96 திக்கும் வானமும் புதையிரு டின்றுவெண் சோதி
    கக்கு மாளிகை நிவப்புறு காட்சியந் நகருள்
    மிக்க வாலிதழ்த் தாமரை வெண்மகள் இருக்கை
    ஒக்கு மல்லது புகழ்மக ளிருக்கையு மொக்கும்
    97 நெற்க ரும்பெனக் கரும்பெலா நெடுங்கமு கென்ன
    வர்க்க வான்கமு கொலிகலித் தெங்கென வளர்ந்த
    பொற்க வின்குலைத் தெங்குகார்ப் பந்தரைப் பொறுத்து
    நிற்க நாட்டிய காலென நிவந்ததண் பணையே
    98 சிவந்த வாய்க்கருங் கயற்கணாள் வலாரியைச் சீறிக்
    கவர்ந்த வான்றருக் குலங்களே கடிமணம் வீசி
    உவந்து வேறுபல் பலங்களும் வேண்டினர்க் குஉதவி
    நிவந்த காட்சியே போன்றது நிழன்மலர்ச் சோலை
    99 ஒல்லொ லிக்கதிர்ச் சாவிகள் புறந்தழீஇ யோங்க
    மெல்லி லைப்பகங் கொடியினால் வீக்குறு பூகம்
    அல்லெ னுங்களத் தண்ணற னணிவிழாத் தருப்பைப்
    புல்லொ டும்பிணிப் புண்டபொற் கொடிமரம் போலும்
    100 சீத வேரியுண்டு அளிமுரல் கமலமேற் செருந்தி
    போத வேரியு மலர்க்களுஞ் சொரிவன புத்தேள்
    வேத வேதியர் செங்கரம் விரித்துவாய் மனுக்கள்
    ஓத வேமமு முதகமு முதவுவா ரனைய
    101 விரைசெய் பங்கயச் சேக்கைமேற் பெடையொடும் விரவி
    அரச வன்னநன் மணஞ்செய வம்புயப் பொய்கை
    திரைவ ளைக்கையா னுண்டுளி செறிந்தபா சடையாம்
    மரக தக்கலத் தரளநீ ராஞ்சனம் வளைப்ப
    102 இரும்பின் அன்னதோள் வினைஞரார்த் தெறிந்துவாய் மடுக்குங்
    கரும்பு தின்றிடி யேற்றொலி காட்டியின் சாறு
    சுரும்பு சூழ்கிடந் தாற்றிடச் சொரிந்துவெஞ் சினத்தீ
    அரும்பு கட்களி றொத்தன வாலையெந் திரங்கள்
    103 பள்ள நீர்குடைந் தஞ்சிறைப் பாசிபோர்த்து எழுந்த
    வெள்ளை யன்னத்தைக் காரன மெனப்பெடை வீழ்ந்த
    உள்ள மீட்டல மரச்சிற குதறியுள் ளன்பு
    கொள்ள வாசையிற் றழீஇக்கொடு குடம்பைசென் றணையும்
    104 இரவி யாழியொன் றுடையதே ரீர்த்தெழும் இமையாப்
    புரவி நாநிமிர்த் தயில்வன பொங்கர்வாய்த் தளிர்கள்
    கரவி லார்மகத் தெழுபுகை கற்பக நாட்டிற்
    பரவி வாட்டுவ பனியெனப் பங்கயப் பொய்கை
    105 பிறங்கு மாலவா யகத்துளெம் பிரான்அரு ளால்வந்
    தறங்கொ டீர்த்தமா யெழுகட லமர்ந்தவா நோக்கிக்
    கறங்கு தெண்டிரைப் பெரும்புறக் கடலும்வந் திவ்வூர்ப்
    புறங்கி டந்ததே போன்றது புரிசைசூழ் கிடங்கு
    106 எறியும் வாளையு மடிக்கடி யெழுந்துடல் பரப்பிப்
    பறியு மாமையும் வாளடு கேடகம் பற்றிச்
    செறியு நாண்மலர் அகழியுஞ் சேண்டொடு புரிசைப்
    பொறியு மேயொன்றி யுடன்றுபோர் புரிவன போலும்
    107 கண்ணி லாதவெங் கூற்றெனக் கராங்கிடந் தலைப்ப
    மண்ணி னாரெவ ரேனுமிம் மடுவிடை வீழ்ந்தோர்
    தெண்ணி லாமதி மிலைந்தவர்க் கொப்பெனச் சிலரை
    எண்ணி னார்இரு ணரகநீத் தேறினு மேறார்
    108 குழிழ லர்ந்தசெந் தாமரைக் கொடிமுகிழ் கோங்கின்
    உமிழ்த ரும்பா ஞானமுண் டுமிழ்ந்தவாய் வேதத்
    தமிழ றிந்துவை திகமுடன் சைவமு நிறுத்தும்
    அமிழ்த வெண்டிரை வைகையும் ஒருபுறத் தகழாம்
    109 பிள்ளை யும்பெடை யன்னமுஞ் சேவலும் பிரியாக்
    கள்ள முண்டகச் செவ்வியாற் கண்டவர் கண்ணும்
    உள்ள முந்திரும் பாவகை சிறைப்படுத்து ஓங்கும்
    புள்ள லம்புதண் கிடங்கிது புரிசையைப் புகல்வாம்
    110 மாக முந்திய கடிமதில் மதுரைநா யகர்கைந்
    நாக மென்பதே தேற்றமந் நகர்மதில் விழுங்கி
    மேக நின்றசை கின்றதவ் வெஞ்சினப் பணிதன்
    ஆக மொன்றுதோ லூரிபட நெளிவதே யாகும்
    111 புரங்க டந்தபொற் குன்றுகோ புரமெனச் சுருதிச்
    சிரங்க டந்தவர் தென்னரா யிருந்தனர் திருந்தார்
    உரங்க டந்திட வேண்டினும் உதவிசெய் தவரால்
    வரங்க டந்திடப் பெறவெதிர் நிற்பது மானும்
    112 சண்ட பானுவும் திங்களும் தடைபடத் திசையும்
    அண்ட கோளமும் பரந்துநீண் டகன்றகோ புரங்கள்
    விண்ட வாயிலால் வழங்குவ விடவரா வங்காந்
    துண்ட போல்பவு முமிழ்வன போல்பவு முழலா
    113 மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழிச்
    சிகர மாலைசூ ழம்மதி றிரைக்கரந் துழாவி
    அகழ வோங்குநீர் வைகையால் அல்லது வேற்றுப்
    பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே
    114 எல்லை தேர்வழித் தடைசெயு மிம்மதிற் புறஞ்சூழ்ந்
    தொல்லை மேவலர் வளைந்துழி யுடன்றுபோர் ஆற்றி
    வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளெ வெல்ல
    வல்ல வம்மதிற் பொழிசெயு மறஞ்சிறி துரைப்பாம்
    115 மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை வாள்கள் வீசுவன முத்தலைக்
    கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி கால வீசுவன காலனேர்
    எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள் விடமென்ன வீசுவன வன்னெடுங்
    கொழுக்கள் வீசுவன கற்க வண்கயிறு கோத்து வீசுவன வார்த்தரோ
    116 நஞ்சு பில்குதுளை வாளெ யிற்றரவு நாநிமிர்த் தெறியு மலையரா
    வெஞ்சி னங்கொண்முழை வாய்தி றந்துபொரு வாரை விக்கிட விழுங்குமாற்
    குஞ்ச ரங்கொடிய முசலம் வீசியெதிர் குறுகு வார்தலைகள் சிதறுமால்
    அஞ்சு வெம்பொறி விசைப்பி னுங்கடுகி யடுபு லிப்பொறி யமுக்குமால்
    117 எள்ளி யேறுநரை யிவுளி மார்பிற வெறிந்து குண்டகழி யிடைவிழத்
    தள்ளி மீளுமுருள் கல்லி ருப்புமுளை தந்து வீசுயுடல் சிந்துமாற்
    கொள்ளி வாயலகை வாய்தி றந்துகனல் கொப்பு ளிப்பவுடல் குப்புறத்
    துள்ளி யாடுவன கைகள் கொட்டுவன தோள்பு டைப்பசில கூளியே
    118 துவங்கு சங்கிலி யெறிந்தி ழுக்குமரி தொடர்பி டித்தகை யறுக்கவிட்
    டுவக்கு மொன்னலர்க டலைக ளைத்திருகி யுடனெ ருக்குமா நிலைகளாற்
    சுவைக்கொ ழுந்தழல் கொளுத்தி வீசுமெதிர் கல்லு ருட்டியடும் ஒல்லெனக்
    குவைக்க டுங்கன்மழை பெய்யு மட்டமணல் கொட்டு வேவலர்கள் கிட்டவே
    119 உருக்கி யீயமழை பெய்யு மாலய வுருக்கு வட்டுருகு செம்பினீர்
    பெருக்கி வீசும்விடு படையெ லாமெதிர் பிடித்து விட்டவர் தமைத்தெறச்
    செடுக்கி வீசுநடை கற்ற மாடமொடு சென்று சென்று துடி முரசொடும்
    பெருக்கி மீளுநடை வைய மேனடவி யெய்யும் வாளிமழை பெய்யுமால்
    120 வெறிகொள் ஐம்பொறியை வெல்லி னும்பொருது வெல்லுதற்கரிய காலனை
    முறிய வெல்லினும் வெலற்க ருங்கொடிய முரண வாயமர ராணெலாம்
    அறிவி னானிறுவு கம்மி யன்செயவு மரிய வாயவனர் புரியுமிப்
    பொறிகள் செய்யும்வினை யின்ன பொன்னணி புரத்து வீதிக ளுரைத்துமால்
    121 கழையும் தாமமும் சுண்ணமு மணிநிழற் கலணுங்
    குடையுந் தூபமுந் தீபமுங் கும்பமுந் தாங்கித்
    தழையுங் காதலர் வரவுபார்த் தன்பகந் ததும்பி
    விழையுங் கறிபினா ரொத்தன விழாவறா வீதி
    122 ஆலநின்றமா மணிமிடற் றண்ணலா னந்தக்
    கோல நின்றசே வடிநிழல் குறுகினார் குணம்போல்
    வேலை நின்றெழு மதியெதிர் வெண்ணிலாத் தெண்ணீர்
    கால நின்றன சந்திர காந்தமா ளிகையே
    123 குன்ற நேர்பளிக் குபரிகை நிரைதொறுங் குழுமி
    நின்ற பல்சரா சரமுமந் நீழல்வாய் வெள்ளி
    மன்ற கம்பொலிந் தாடிய மலரடி நிழல்புக்
    கொன்றி யொன்றறல் கலந்தபல் லுயிர்நிலை யனைய
    124 கறிந்த ருந்துபுற் குவைகழீஇக் காற்றொடர் பரியத்
    தெறித்த கன்றயன் மரகதச் சித்திரத்து எற்றி
    எறித்த பைங்கதிர்க் கொழிந்தையு மெட்டிநா வளைத்துப்
    பறித்து மென்றுவா யசைப்பன பசலையான் கன்று
    125 சிறுகு கண்ணவாய்க் காற்றெறி செவியவாய்ப் பாசம்
    இறுகு காலவாய்க் கோட்டுமா னினம்வழங் காறுங்
    குறுகு நுண்மருங் கிறுத்தெழு கோட்டுமா னினம்போம்
    மறுகும் வண்டுசூழ்ந் திறைகொள மான்மத நாறும்
    126 மாட மாலையு மேடையு மாளிகை நிரையும்
    ஆட ரங்கமு மன்றிவே ளன்னவர் முடியும்
    ஏட விழ்ந்ததா ரகலமு மிணைத்தடந் தோளுஞ்
    சூடு மாதரார் சீறயிப் பஞ்சுதோய் சுவடு
    127 மருமச் செம்புன லாறிட மாறடு கோட்டுப்
    பருமச் செங்கண்மால் யானையின் பனைக்கையு மறைநூல்
    அருமைச் செம்பொரு ளாய்ந்தவர்க் கரும்பொருள் ஈவோர்
    தருமச் செங்கையு மொழுகுவ தானநீ ராறு
    128 பரிய மாமணி பத்தியிற் பதித்திருட் படலம்
    பொரிய வில்லிடக் குயிற்றிய பொன்னர மியமும்
    தெரிய மாமுர சொலிகெழு செம்பொனா டரங்கும்
    அரிய மின்பயோ தரஞ்சுமந் தாடுவ கொடிகள்
    129 வலம்ப டும்புயத் தாடவர் மார்ப்மேற் புலவிக்
    கலம்ப டர்ந்தபூண் முலையினார் காலெடுத் தோச்சச்
    சிலம்ப லம்பிசை மழுங்கமுன் னெழுமவர் தேந்தார்ப்
    புலம்பு வண்டுநொந் தரற்றிய பொங்குபேர் ஒலியே
    130 தைய லார்மதி முகங்களுந் தடங்களுங் குழைய
    மைய ளாவிய விழிகளு மாடமுங் கொடிய
    கையு நாண்மலர்ப் பொதும்பருங் கறங்குஇசைவண்ட
    நெய்ய வோதியும் வீதுயு நீளற னெறிய
    131 மலருந் திங்கடோய் மாடமுஞ் செய்வன மணங்கள்
    அலருந் தண்துறை யுங்குடைந் தாடுவ தும்பி
    சுலவுஞ் சோலையு மாதருந் தூற்றுவ வலர்கள்
    குலவும் பொய்கையு மனைகளுங் குறைபடா வன்னம்
    132 ஊடி னாரெறி கலன்களு மம்மனை யுடன்பந்
    தாடி னார்பரி யாரமு மடியினாற் சிற்றில்
    சாடி னாரொடு வெகுண்டுகண் டதும்புமுத் திறைப்ப
    வாடி னார்பரி நித்தில மாலையும் குப்பை
    133 ஐய வென்னுரை வரம்பினை வாகுமோ வடியர்
    உய்ய மாமணி வரிவளை விறகுவிற் றுழன்றோன்
    பொய்யில் வேதமுஞ் சுமந்திடப் பொறாதகன் றரற்றுஞ்
    செய்ய தாண்மலர் சுமந்திடத் தவம்செய்த தெருக்கள்
    134 தோரண நிரைமென் காஞ்சி சூழ்நிலை நெடுந்தே ரல்குற்
    பூரண கும்பக் கொங்கைப் பொருவின்மங் கலமா மங்கை
    தாரணிந் தாரந் தூக்கிச் சந்தகி றிமிர்ந்து பாலிச்
    சீரணி முளைவெண் மூரல் செய்துவீற் றிருக்கு மன்னோ
    135 திங்களைச் சுண்ணம் செய்து சேறுசெய் தூட்டி யன்ன
    பொங்குவெண் மாடப் பந்தி புண்ணியம் பூசுந் தொண்டர்
    தங்கண்மெய் வேடந் தன்னைத் தரித்தன சாலக் கண்கொண்
    டங்கணன் விழவு காண்பா னடைந்தென மிடைந்த வன்றே
    136 தேரொலி கலினப் பாய்மான் சிரிப்பொலி புரவி பூண்ட
    தாரொலி கருவி யைந்தும் தழங்கொலி முழங்கு கைம்மான்
    பேரொலி யெல்லா மொன்றிப் பெருகொலி யன்றி யென்றும்
    காரொலி செவிம டாது கடிமணி மாடக் கூடல்
    137 இழிபவ ருயர்ந்தோர் முத்தோ ரிளையவர் கழியர் நோயாற்
    கழிபவர் யாவ ரேனும் கண்வலைப் பட்டு நெஞ்சம்
    அழிபவர் பொருள்கொண் டெள்ளுக் கெண்ணெய்போ லளந்து காட்டிப்
    பழிபடு போகம் விற்பா ராவணப் பண்பு சொல்வாம்
    138 மெய்படு மன்பி னார்போல் விரும்பினார்க் கருத்துந் தங்கள்
    பொய்படு மின்பம் யார்க்கும் புலப்படத் தேற்று வார்போல்
    மைபடு கண்ணார் காமன் மறைப்பொருள் விளங்கத் தீட்டிக்
    கைபடச் சுவராய்த் தோன்றச் சித்திரங் காணச் செய்வார்
    139 திருவிற்கான் மணிப்பூ ணாகம் பலகையாத் தெண்முத் தார
    அருவிக்கால் வரைமென் கொங்கைச் சூதொட்டி யாடி வென்றும்
    மருவிக்கா முகரைத் தங்கள் வடிக்கண்வேன் மார்பந் தைப்பக்
    கருவிச்சூ தாடி வென்றும் கைப்பொருள் கவர்தல் செய்வார்
    140 தண்பனி நீரில் தோய்த்த மல்லிகைத் தாம நாற்றி
    விண்படு மதியந் தீண்டும் வெண்ணிலா முற்றத் திட்ட
    கண்படை யணைமேற் கொண்டு காமனுங் காமுற் றெய்தப்
    பண்பல பாடி மைந்த ராவியைப் பரிசில் கொள்வார்
    141 குரும்பைவெம் முலையிற் சிந்து சாந்தமுங் குழலிற் சிந்தும்
    அரும்பவிழ் மாலைத் தாது மளிநுகர்ந் தெச்சி லாகிப்
    பொரும்பரிக் காலிற் றூளாய்ப் போயர மாதர் மெய்யும்
    இருங்குழற் காடுஞ் சூழ்போ யியன்மணம் விழுங்கு மன்னோ
    142 ஆலவா யுடையா னென்று மங்கயற் கண்ணி யென்றும்
    சோலைவாழ் குயிலி னல்லார் சொல்லியாங் கொருங்கு சொல்லும்
    பாலவாங் கிளிகள் பூவை பன்முறை குரவ னோதும்
    நூலவாய்ச் சந்தை கூட்டி நுவன்மறைச் சிறாரை யொத்த
    143 ஔவிய மதர்வேற் கண்ணா ரந்தளிர் விரன டாத்தும்
    திவ்விய நரம்புஞ் செவ்வாய்த் தித்திக்கு மெழாலும் தம்மிற்
    கௌவிய நீர வாகிக் காளையர் செவிக்கா லோடி
    வெவ்விய காமப் பைங்கூழ் விளைதர வளர்க்கு மன்றே
    144 கட்புல னாதி யைந்து முவப்புறக் கனிந்த காமம்
    விட்புலத் தவரே யன்றி வீடுபெற் றவரும் வீழ்ந்து
    பெட்பமுற் றமுதும் கைப்பப் பெரும்குலக் கற்பி னார்போல்
    நட்பிடைப் படுத்தி விற்கு நல்லவ ரிருக்கை யீ தால்
    145 வழுக்கறு வாய்மை மாண்புங் கங்கைதன் மரபின் வந்த
    விழுக்குடிப் பிறப்பு மூவர் ஏவிய வினைகேட் டாற்றும்
    ஒழுக்கமு மமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையுங் குன்றா
    இழுக்கறு மேழிச் செல்வர் வளமறு கியம்ப லுற்றாம்
    146 வருவிருந் தெதிர்கொண் டேற்று நயனுரை வழங்கு மோசை
    அருகிருந் தடிசி லூட்டி முகமனன் கறையு மோசை
    உரைபெறு தழிழ்பா ராட்டு மோசைகேட் டுவகை துள்ள
    இருநிதி யளிக்கு மோசை யெழுகட லடைக்கு மோசை
    147 அருந்தின ரருந்திச் செல்ல வருந்துகின் றாரு மாங்கே
    இருந்தினி தருந்தா நிற்க இன்னமு தட்டுப் பின்னும்
    விருந்தினர் வரவு நோக்கி வித்தெலாம் வயலில் வீசி
    வருந்திவிண் ணோக்கு மோரே ருழவர்போல் வாடி நிற்பார்
    148 வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும்
    ஞானமும் பொறையுங் குன்றா நன்றியு மூக்கப் பாடுந்
    தானமுங் கொடையு மன்பும் வரிசையுந் தகைசா னண்பும்
    மானமுந் தவஞ்செய் தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார்
    149 புல்லியோர் பண்டங் கொள்வார் வினவின பொருடம் பக்கல்
    இல்லெனி னினமா யுள்ள பொருளுரைத் தெதிர்ம றுத்தும்
    அல்லதப் பொருளுண் டென்னின் விலைசுட்டி யறுத்து நேர்ந்துஞ்
    சொல்லினு மிலாபங் கொள்வார் தொன்பர பிருக்கை சொல்வாம்
    150 நீல வேதிமேற் பளிங்கினா னிழற்சுவர் நிறீஇமின்
    கால வாலிய வைரவாள் கானிரைத் தும்பர்க்
    கோல வாணிலாச் சொரிமணி குயிற்றிவெண் மாடம்
    மாலை போல்வருத் தியற்றின பீடிகை மறுகு
    151 திரைய ளிப்பவுந் திரைபடு தீம்புனல் வேலிக்
    கரைய ளிப்பவுங் கரையிலா னிரைபடு கானத்
    தரைய ளிப்பவுந் தரைகிழித் தூன்றிவிண் டாங்கும்
    வரைய ளிப்பவும் வாங்கிவாய் மடுப்பன மாடம்
    152 கரிய கம்பலக் கிடுகின் மேற் கதிர்விடு பவளத்
    தெரியல் பொன்னரி மாலிகை தெண்ணிலாச் சொரியும்
    பரிய நித்தல மணிவட மரகதப் பசுந்தார்
    விரிய விட்டன விந்திர வின்னிசை யனைய
    153 நாள்க ளுங்குளிர் திங்களு ஞாயிறு மேனைக்
    கோள்க ளுங்குளிர் விசும்பொரீஇக் குடிபுகுந் தாங்கு
    வாள்கி டந்திராப் பகலொளி மழுக்கலால் வணிகர்
    ஆள்க லம்பகர் பீடிகை துறக்கநா டனைய
    154 பன்னி றத்தபல் பெருவிலைப் பட்டெலா மவண
    அன்ன பட்டின்மேம் படுவிலைப் பருத்தியு மவண
    எந்நி லத்தரும் பொருள்பதி னெழுபுல வணிகர்
    மன்னி ருக்கையு மரும்பெறல் வளனெலா மவண
    155 மரக தத்தினா லம்மிகள் வைரவா ளுலக்கை
    உரல்கள் வெள்ளியா லடுப்பகில் விறகுலை பனிநீர்
    அரிசி முத்தழல் செம்மணி யடுகலன் பிறவும்
    எரிபொ னாலிழைத் தாடுப விவர்சிறு மகளிர்
    156 செயிரிற் றீர்ந்தசெம் பொன்னினால் திண்ணிலைக் கதவம்
    வயிரத் தாழுடைத் தவர்கடை வாயிலு மென்றால்
    அயிரிற் றீந்தபே ரறிஞரு மனையர்தஞ் செல்வத்
    தியலிற் றாமென வரையறுத் திசைப்பதை யெவனோ
    157 எரிக்கு றும்பொறி யனையசெம் மணிசுட ரெறிபொன்
    வரிச்சு ரும்புநேர் மரகத முத்துவாள் வைரந்
    தெரிப்ப ருந்துகிர் சிந்தின செல்லுநா ளன்றும்
    கரிப்பர் கையகப் படுவன வாயிரத் திரட்டி
    158 பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண்
    தேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான் றூய
    மாயை காரிய வொலி யன்றி வான்முதற் கருவின்
    ஆய காரிய வோசையே யாய்க்கிடந் தன்றே
    159 ஒழிவில் வேறுபல் பொருளுமே ழுலோகமும் பிறவும்
    வழுவில் வேறுபல் கலைகளு மரபுளி வகுத்துத்
    தழுவி வேண்டினர் தாங்கொளத் தக்கவா பகரா
    அழிவி லாமறை போன்றன வாவண வீதி
    160 திக்கெலாம் புகழ் மதுரையைச் சிவபுர மாக்கி
    முக்க ணாயக னரசுசெய் முறையினுக் கேற்பத்
    தக்க தோழனோ டளகைமா நகருறை தயக்கம்
    ஒக்கு மந்நகர் வாணிக ருறையுள்சூழ் நிகமம்
    161 ஒற்றை யாழியா னுலகிரு ளதுக்குமா போலச்
    செற்ற நேமியாற் கலி யிரு டின்றுகோ லோச்சி
    மற்ற டம்புய வலியினான் காறடு சீற்றக்
    கொற்ற மன்னவர் விழுக்குடிக் கோமறு குரைப்பாம்
    162 தரங்க வேலைக டம்மையே தாளுறப் பிணித்துத்
    துரங்க மாவெனத் தொகுத்தமந் துறைபல வருவி
    இரங்கு மோரறி வுயிர்வரை யாவையும் பெய்ர்த்து
    மரங்கொல் யானைபோற் பிணித்தகூ டம்பல மன்னோ
    163 மழுக்கள் வச்சிரங் கார்முகம் வாளிமுக் குடுமிக்
    கழுக்கள் சக்கர முடம்பிடி கப்பண நாஞ்சில்
    எழுக்க ணாந்தகம் பலகைதன் டிவைமுதற் படையின்
    குழுக்க ளோடிகல் விந்தைவாழ் கூடமும் பலவால்
    164 துளைய கல்லைமா லெனக்கொண்டு சுழற்றியுஞ் செந்தூள்
    அளையும் யானைபோற் பாய்ந்துமல் லாற்றியும் ஆற்றல்
    விளைய வாளடு கேடகம் வீசியும் வென்றி
    இளைய ராடமர் பயில்வன வெண்ணிலாக் கூடம்
    165 தேசவிர் நீல மாடஞ் செம்மணிச் சென்னி மாடங்
    காசறு கனக மாடஞ் சந்திர காந்த மாடம்
    மாசற விளக்கு மின்ன மாடநீண் மாலை கூடற்
    பாசிழை மடந்தை பூண்ட பன்மணிக் கோலை யன்ன
    166 விரையகல் கதும்பி னல்லார் வீங்கிளங் கொங்கை போழ்ந்த
    வரை யகன் மார்ப மன்றி வடுப்படார் தமக்கன் பில்லார்
    உரையகன் மான வாற்றா லொழுகுவார் பலகை யொள்வாட்
    கரையகல் விஞ்சை வீரர் கணம்பயில் காட்சித் தெங்கும்
    167 மின்னைவா ளென்ன வீசி வீங்குவார் தம்மிற் போர்மூண்
    டென்னவான் மருப்பு நீட்டி யெதிரெதிர் புதையக் குத்தி
    அன்னவா னென்ன வாய்விட் டதுவெனச் செந்நீர் சோரப்
    பொன்னவா மகன்ற மார்பர் பொருகளி றாட்டு வார்கள்
    168 தூண்டுவா ருளமுந் தங்கள் பின்னிடத் துவக்குண் டீர்த்துத்
    தாண்டுமா னொற்றை யாழித் தேரினும் துள்ளித் துள்ளப்
    பாண்டில்வாய்ப் பசும்பொன் றேயப் பார்மகண் முதுகுகீண்டு
    சேண்டிசை போய்மடங்கச் செல்வத்தேர் நடாத்து வார்கள்
    169 மைந்தர்தந் நெருக்கிற் சிந்து கலவையும் மகளிர் கொங்கைச்
    சந்தமுங் கூந்தல் சோர்ந்த தாமுமுஞ் சிவிறி வீசு
    சிந்துரப் பொடியும் நாறத் தேனொடு மெழுந்து செந்தூள்
    அந்தர வயிறு தூர்ப்ப வடுபரி நடாத்துவார்கள்
    170 தம்முயிர்க் கிரங்கார் ஆகித் தருக்கொடு மான மீர்ப்பத்
    தெம்முனை யெதிர்ந்தா ராற்றுஞ் செருவெனக் குருதிச் செங்கேழ்க்
    கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர்போர் மூட்டி
    வெம்முனை நோக்கி நிற்பார் வேறவற் றூறு நோக்கார்
    171 பெண்முத்த மனைய பேதைச் சிறுமியர் பெருநீர் வைகை
    வெண்முத்த மிழைத்த சிற்றில் சிதைபட வெகுண்டு நோக்கிக்
    கண்முத்தஞ் சிதறச் சிந்தும் கதிர்முத்த மாலைத் தட்பத்
    தெண்முத்தி னகைத்துச் செல்வச் சிறார்கடே ருருட்டு வார்கள்
    172 கொடிமுகி றுழாவு மிஞ்சிக் கோநகர் வடகீழ் ஞாங்கர்
    முடிமிசை வேம்பு நாற முருகவி ழாரும் போந்தும்
    அடிமிசை நாறத் தென்னர் வழிவழி யரசு செய்யும்
    இடிமுர சுறங்கா வாயி லெழுநிலை மாடக் கோயில்
    173 ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும்
    நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக
    ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித்
    தீர்த்தராய் முத்தீ வேட்குஞ் செல்வர்தம் இருக்கை சொல்வாம்
    174 முஞ்சிநாண் மருங்கின் மின்னப் பொன்செய்த முளரி வேய்ந்த
    குஞ்சிநான் றசையத் தானைச் சொருக்குமுன் கொய்து தூங்கப்
    பஞ்சிநாண் கலைந்தோன் மார்பும் பலாசக்கோல் கையும் தாங்கி
    எஞ்சிநாண் மறைநூல் கற்போர் கிடைகளே யில்ல மெல்லாம்
    175 தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேதம்
    நாவரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்
    பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்
    காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ
    176 வேதமு மங்க மாறு மிருதியும் புராண நூலின்
    பேதமும் தெரிந்தோ ராலும் பிறமதங் களைய வல்ல
    வாதமும் மதமேற் கொண்டு மறுத்தலும் நிறுத்த வல்ல
    போதமு முடையோ ராலும் பொலிந்தன கழக மெல்லாம்
    177 உறிபொதி கரகக் கைய ரொளிவிடு செங்கற் றோய்த்த
    அறுவைய ருயிர்க்கூ றஞ்சு நடையின ரவிச்சை மாள
    எறிசுடர் மழுவா ளென்னக் கோவணம் யாந்த கோலர்
    மறைமுடி வன்றித் தேறா மாதவர் மடங்க ளெங்கும்
    178 அட்டில்வாய்ப் புகையு மாடத் தகில்படு புகையும் வேள்வி
    விட்டெழு புகையும் ஒன்றி விரிசுடர் விழுங்கக் கங்குல்
    பட்டது பலருந் தந்தம் பயில்வினை யிழக்க நங்கை
    மட்டவிழ் கடுக்கை யான்கண் புதைத்தநாண் மானு மன்னோ
    179 தெய்வ நீறுமைந் தெழுத்துமே சிதைக்கல னாக
    எவ்வ மாசிரு வினையுடம் பெடுத்துழல் பிறவிப்
    பௌவ மேழையும் கடந்தரன் பதமலர்க் கரைசேர்
    சைவ மாதவர் உறைமடத் தனிமறு குரைப்பாம்
    180 எங்கு மீசனைப் பூசைசெய் திகபர மடைவார்
    எங்கு மன்பரைப் பூசைசெய்து எழுபிறப் பறுபார்
    எங்கு மாகமஞ் செவிமடுத் தெதிர்வினை தடுப்பார்
    எங்கு நாயகன் வடிவுணர்ந் திருள்மலங் களைவார்
    181 அழிவி லானுரை யாகமம் இலக்கமாய்ந் தவற்றுள்
    விழிமி தாகிய விதியினும் விலக்குனு மடியைத்
    தழுவு தொண்டர்கண் மைந்தர்கள் சாதகர் பாசம்
    கழுவி வீடருள் போதகக் காட்சியர் பலரால்
    182 மறைகள் ஆகமம் பொதுச்சிறப் பெனச்சிவன் வகுத்து
    முறையி னோதிய விதிவிலக் குரைகளு முடிவில்
    அறையும் வீடுமொன் றிரண்டெனும் பிணக்கற வமைத்த
    குறைவி லாச்சிவ யோகியர் குழாங்களும் பலவால்
    183 குழலும் தும்புரு நாரதர் பாடலும் குனித்துச்
    சுழலுங் கொம்பனார் ஆடலு மூவர்வாய்த் துதியும்
    விழவின் செல்வமுஞ் சுருதியுந் திசையெலாம் விழுங்கும்
    முழவுங் கண்டுயி லாதது முன்னவன் கோயில்
    184 மடங்கல் இன்றிவிண் பிளந்துமேல் வளர்ந்துவெள் ளேற்று
    விடங்கர் வெள்ளிமன் றிமைத்தெழு வெண்சுடர் நீட்டம்
    முடங்கல் வெண்பிறைக் கண்ணியான் கயிலைமூ வுலகும்
    ஒடுங்கு கின்றநா ளோங்கிய வோக்கமே யொக்கும்
    185 கரந்து தேன்றுளித் தலர்களும் சொர்ந்துவண் டரற்ற
    நிரந்து சுந்தரற் கொருசிறை நின்றபூங் கடம்பு
    பரந்து கட்புனல் உகப்பல மலர்கடூய்ப் பழிச்சி
    இரந்து நின்றருச் சனைசெயு மிந்திர னிகரும்
    186 உழல்செய் தீவினை புருப்பற வுயிர்க்கெலா மடியின்
    நிழல்செய் வார்க்குநீ ணிழல்செயா நின்றபூங் கடம்பின்
    குழல்செய் வண்டுகற் பகமதுக் கொணர்ந்துவந் தூட்டித்
    தழல்செய் காமமென் பேடையின் ஊடனோய் தணிக்கும்
    187 ஆரு நீர்க்கட லன்றது வெனநிறை யகழ்கார்
    ஊரு மாழியன் றதுவென வோன்கெயி லெட்டாய்ச்
    சாரு நேமியன் றதுவெனச் சமைந்தகோ புரம்பொன்
    மேரு வன்றது வெனச்சுடர் விசும்பிழி விமானம்
    188 வேத வந்தமுந் துளக்கற மெய்ப்பொருள் விளங்கும்
    நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலைப் பொருளின்
    பாத வந்தனைப் பத்தியின் பாலராய்ப் பயில்வோர்
    மாத வந்தரு பயனெனத் தழைத்தபல் வளனும்
    189 பொறிகள் ஐந்தினுக் கூட்டுபல் போகமு மிதப்பச்
    செறிகொ ணீரவா லுவர்ப்பவத் திருநகர் மாக்கள்
    நெறிகொள் செஞ்சடைப் பிறைமுடி நிருமலக் கொழுந்தின்
    வெறிகொ ணான்மல ரடிதழீஇ வீடுபெற் றார்போல்
    190 முன்ன வன்னர சிருக்கையால் அந்நகர் முளரிப்
    பொன்னை யீன்றதா லதுபல பொருணிறை செல்வந்
    தன்னை யீன்றதா லதுபல தருமமென் றுரைக்கும்
    மின்னை யீன்றதஃ தீன்றதால் விழுத்தகு புகழே
    191 எழுக்க டந்ததோ ளுருத்திர வுலகமென் றியாரும்
    வழுத்த நின்றவிந் நகர்வயின் உம்பரின் மாண்ட
    விழுத்த கும்பல செல்வமும் வியந்துபார்த் துள்ளத்
    தழுக்க றாமையா லின்னமு மமரர்கண் ணுறங்கார்
    192 விரைய வீழ்ந்ததார் மீனவர் வாகைவேல் விடுத்துத்
    திரைய வென்றது முடிதகர்த் திந்திரன் செருக்குக்
    கரைய வென்றதுங் கார்தளை யிட்டதுங் கனக
    வரைய வென்றதும் இந்நகர் வலியினா லன்றோ
    193 எங்கு நாவுமா யெங்கணுங் கண்ணுமா யெங்குந்
    தங்கு பேரொளி யல்லதித் தனிநகர்ச் செல்வஞ்
    செங்க ணாயிர நாவினான் செப்பவும் எதிர்க்கண்
    டங்க ணாயிர முடையவ னளக்கவும் படுமோ
    194 புண்ணி யம்புரி பூமிபா ரதில்வரு போகம்
    நண்ணி யின்புறு பூமிவா னாடென்ப நாளும்
    புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம்
    நண்ணி யின்புறு பூமியு மதுரைமா நகரம்
    195 பண்கனிந் தனைய சொல்லார் நரப்பிசைப் பாணி தேவர்
    உண்கனி யமுதுங் கைப்பச் செவிதுளை தூண்ட வுண்டும்
    பெண்களின் அமுத மன்னார் பெருமித நடன முண்ணக்
    கண்களை விடுத்துங் காலங் கழிப்பவ ரளவி லாதார்
    196 கலவிவித் தாக வூடிக் கட்புனல் குளிக்கு நல்லார்
    புலவிதீர் செவ்வி நோக்கிப் புனர்முலைப் போகந் துய்த்தும்
    நிலைநிலை யாமை நோக்கி நெறிப்படு தரும தானங்
    கலைஞர்கைப் பெய்துங் காலங் கழிப்பவ ரெண்ணி லாதார்
    197 சந்தித்து மீனநோக்கி தலைவனை மூன்று போதும்
    வந்தித்தும் ஈசன் பூசை மரபுளி முடித்தும் வேதம்
    அந்தித்து மறியான் செய்த திருவிளை யாடல் கேட்டுஞ்
    சிந்தித்து மன்பர் பூசை செய்துநாள் கழிப்பார் பல்லோர்
    198 கற்பவை கற்றுங் கேட்டுங் கேட்டவை கருத்துள் ஊறச்
    சொற்பொரு ணினைந்துங் கேட்போர்க் குணர்த்தியுட் டுளக்கந் தீர்த்தும்
    எற்பக லிரவு நீங்கு மிடத்துமெய் யறிவா னந்த
    அற்புத வெள்ளத் தாழா தாழ்ந்து நாள் கழிப்பார் சில்லோர்
    199 தன்னிகர் உயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவனாக
    முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகம னன்றோ
    அன்னது தனதே யாகு மண்ணிலே பாண்டி வேந்தாய்
    இந்நகர்க் கரச னாவா னிக்கவிக் கிறைவ னாவான்
    200 என்னென வுரைப்பேன் இந்த விறைமகன் பண்மை யேனை
    மன்னவர் வானோர் போல மதித்துரை விரிக்கற் பாற்றோ
    அன்னவ னாணை யாற்றா டைப்பதிவ் வகில மென்றான்
    முன்னவன் செய்த வாடல் வரவினை முறையிற் சொல்வேன்

    மதுரை திருநகரப் படலம் சுபம்
    ----------------------

    திருக்கயிலாய வருணனைப் படலம் (201 - 207)

    201 வரங்க டந்தரு ளெனமுது வானவர் முனிவோர்
    கரங்க டந்தலை முகிழ்த்திடக் கருணைசெய் தவிச்சை
    உரங்க டந்துரை யுணர்வெலாங் கடந்தரு மறையின்
    சிரங்க டந்தவன் இருப்பது திருக்கயி லாயம்
    202 புரந்தர் ஆதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
    பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
    வரந்த வாதுவார் பதமெலா நிலைகெட வருநாள்
    உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்
    203 அரம்பை மாதரா ராடலி னரவமும் பாடல்
    நரம்பி னோசையு முழவதிர் சும்மையு நால்வாய்
    வரம்பில் ஓதையு மருவிவீ ழொலியுமா றாது
    நிரம்பி வானமுந் திசைகளு நிமிர்வன மாதோ
    204 வெந்த நீற்றொளி வெண்மையும் விமலனை யகங்கொண்
    டந்த மின்றியே யசைவற விருக்கையு மருவி
    வந்த கண்களும் கொண்டவ ணிருக்குமா தவர்க்குத்
    தந்த தாலரன் கயிலையிந் தனதுசா ரூபம்
    205 ஆங்கு வெண்டுகில் விரித்தெனக் கல்லென வார்த்து
    வீங்கு காலரு வித்திரள் வெள்ளமே யன்றி
    ஓங்கு நான்மறைக் குடுமியின் உள்ளளி நோக்கித்
    தூங்கு மாதவர் கண்களும் சொரிவன வெள்ளம்
    206 கோட்டு மாமலர் நிலமலர் குண்டுநீர் எடுத்துக்
    காட்டு மாமலர் கொடிமலர் கொண்டுமுட் கரைந்த
    பாட்டு மாமலர் கொண்டுநம் பரஞ்சுட ரடியிற்
    சூட்டு மாதவர் தொகுதியுஞ் சூழ்வன வொருபால்
    207 கைய நாகமும் காய்சின வுழுவையுங் கடுவாய்ப்
    பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண்
    ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந்து அன்பு
    செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு

    திருக்கைலாய வருணனைப் படலம் சுபம்
    -------------------------

    புராண வரலாற்றுப் படலம் (208 - 232)

    208 அளந்தி டற்கரி தாயவக் குன்றின்மேல்
    களங்க றுத்துவிண் காத்தவன் கோயின்முன்
    விளம்ப ருஞ்சிவ தீர்த்தத்தின் மிக்கதாய்
    வளம்பெ றுஞ்சிவ தீர்த்தத்தின் மாடது
    209 தண்ட ருங்கதிர்ச் சந்திர காந்தத்திற்
    பண்ட யங்க நவமணி பத்திசெய்
    தண்டர் தச்சன் அனேக தவஞ்செய்து
    கண்ட தாயிரக் கான்மண் டபமரோ
    210 ஆன பான்மையி னால்அந்த மண்டபம்
    ஞான நாயக னாண்மலர்த் தாடொழ
    வான மீனொடு வந்து பதங் குறித்
    தூன மின்மதி வைகுவ தொத்ததே
    211 அன்ன மண்டபந் தன்னு ளருந்தவம்
    என்ன வேங்கை யதண்மேல் இருந்தனன்
    பன்னு வேள்விப் பதினெண் புராணமும்
    சொன்ன மாதவச் சூத முனிவனே
    212 அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
    வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
    சந்தி யாகி தவமுடித் தீறிலா
    இந்து சேகரன் றாணினைந்து ஏத்தியே
    213 சம்பு பத்தன் சதானந்தன் உத்தமன்
    அம்பு யத்த னனைய மகோதரன்
    உம்ப ரஞ்சிய வுக்கிர வீரியன்
    நம்பு வேள்விப் பிரசண்ட நற்றவன்
    214 ஆதி மாதவர் யாவரும் அன்புமை
    பாதி யாய்முற்று மாகும் பராபரச்
    சோதி பால்வைத்த சூதனைத் தோத்திரம்
    ஓதி யஞ்சலித் தொன்று வினாவினார்
    215 வேத வாகம புராணமே மிருதியே முதலா
    ஓது நூல்களின் றுணிபொரு ளுலகெலாம் பயந்த
    பேதை பாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய
    போத மாதவ வுனக்கியாம் புகல்வது ஒன்று றுலதால்
    216 மேரு மந்தரங் கைலைபர்ப் பதமுதல் விடைமேல்
    ஊரு மந்தர நாடவன் உறைபதி யனந்தம்
    ஆரு மந்தமில் போகம்வீ டடைவதென் றவற்றின்
    கார ணங்களோ டுரைத்தனை கருத்தினுக் கிசைய
    217 ஐய மாதிமுக் குற்றமும் அகலநீ யருளிச்
    செய்ய வுந்தெளிந் திலேங்கள்யாஞ் சிற்றறி வுடையேம்
    மைய னெஞ்சினே மாகையான் மயக்கற வின்னும்
    உய்யு மாறருள் செய்தியென் றுரைத்தனர் மன்னோ
    218 தலங்க டம்மின்மிக் குள்ளதாய்த் தகுதிசா றீர்த்தக்
    குலங்க டம்மின்மிக் குள்ளதாய்க் குறையிரந் தோர்க்கு
    நலங்க டந்தருண் மூர்த்தியாய் நாதவே தாந்தப்
    புலங்க டந்தபேர் ஒளியுறை தலனொன்று புகலாய்
    219 என்ற போதெதிர் முகமலர்ந் திருண்மல வலியை
    வென்ற சூதனுந் தலங்களின் விசேடமாய்ந் தம்பொற்
    குன்ற வார்சிலை யானிடங் கொண்டுறை பதியுள்
    ஒன்று கேட்கவீ டளிப்பதாய் உளதுமற் றதுதான்
    220 முற்ற வோதிய புராணமூ வாறினுட் காந்தம்
    பெற்ற தாறுசங் கிதையவை யாறுந்தம் பெயராற்
    சொற்ற பேர்சனற் குமரமா முனிவரன் சூதன்
    கற்றை வார்சடைச் சங்கரன் மால்அயன் கதிரோன்
    221 இன்ன வாறனுட் சங்கர சங்கிதை யென்று
    சொன்ன நூலினை யுணர்த்தினான் சங்கரன் துணைவிக்
    கன்ன போதவண் மடியினி லிருந்துகேட் டதனை
    மின்னு வேல்பணி கொண்டவேள் வெளிப்பட வுணர்ந்தாள்
    222 குன்றே றிந்தவேள் வழிபடு குறுமுனிக் குரைத்தான்
    அன்று தொட்டஃ தகத்திய சங்கிதை யாகி
    நின்ற தன்னது கேட்பவர்க் கரனடி நீழல்
    ஒன்றும் இன்பவீ டளிப்பதா வொருதல னுரைக்கும்
    223 அதிக வப்பதி யாதெனி னாலவாய் கேட்கக்
    கதிய ளிப்பதென் றோதிய சூதனைக் கதியின்
    மதியை வைத்தவர் அன்னதைப் பகரென வந்த
    விதியி னிற்புகல் கின்றனன் வியாதன்மா ணாக்கன்
    224 புதிய தாமரை வேவிய பழமறைப் புத்தேள்
    விதியி னாற்கடு நடைப்பரி மகஞ்செய்வான் வேண்டிக்
    கதியை மாய்ந்தவர்க் குதவுதண் டுறைகெழு காசிப்
    பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டொரு வைகல்
    225 அகத்தியன் வியாத னாரதன் சனகன் ஆதிநான் முனிவர்கோ தமனூற்
    சிகைத்தெளி வுணர்ந்த பராசரன் வாம தேவன்வான் மீகியே வசிட்டன்
    சகத்தியல் கடந்த சுகன்முதன் முனிவர் தம்மொடும் பத்துவெம் பரிமா
    மகத்தொழின் முடித்து மற்றவர்க் குள்ள மகிழ்வுற வழங்குந வழங்கா
    226 சத்திய வுலகிற் சரோருகக் கிழவன் சார்ந்தபின் புலப்பகை சாய்த்த
    அத்திரு முனிவர் அனைவரும் காசி யடிகளை யடைந்தனர் பணிந்து
    முதல் மண்டபத்தி னறமுத னான்கு மொழிந்தருண் மூர்த்திசந் நிதியிற்
    பத்தியா யிருந்து நாரத முனியைப் பார்த்தொரு வினாவுரை பகர்வார்
    227 தலமுதன் மூன்றுஞ் சிறந்ததோர் சைவத் தலமுரை யென்னநா ரதன்றான்
    கலைமுழு துணர்ந்த சனற்குமா ரன்பாற் கற்றவன் வியாதனாம் அவன்பால்
    நலமுறக் கேண்மி னெனவவன் கதிர்வே னம்பிபான் மறைமுத லனைத்தும்
    அலைவற வுணர்ந்தோன் குறுமுனி யாகு மவனிடைக் கேண்மென விடுத்தான்
    228 மலயமா தவனை யடைந்துகை தொழுது வாழ்த்திவா தாவிவில் வலனைக்
    கொலையுரி தரும மூர்த்தியே விந்தக் குன்றடக் கியதவக் குன்றே
    அலைகடல் குடித்த வருட்பெருங் கடலே யருந்தமிழ்க் கொண்டலே தென்பார்
    துலைபெற நிறுத்த களைகணே யென்று சுருதியா யிரமெனத் துதித்தார்
    229 மூவகைச் சிறப்பு முள்ளதோர் தான மொழிகென முகமலர்ந் தருள்கூர்ந்
    தியாவையும் உணர்ந்தோன் முத்திமண் டபத்தி னீரிரு தொகையின்வந் திறக்கும்
    சேவல்க டமையு மைங்கரன் றனையுஞ் சேவலங் கொடியுடை வடிவேற்
    காவலன் றனையும் வடநிழ லமர்ந்த கண்ணுதற் பரனையும் பணியா
    230 அங்கயற் கண்ணி தன்னையு மெந்தை யாலவா யானையும் இதய
    பங்கயத் திருத்திச் சமாதியி லிருந்து பரவச மடைந்துபார்ப் பதிக்குச்
    சங்கர னருளிச் செய்தசங் கிதையைத் தாரக னுடலிரண் டாகச்
    செங்கைவேல் விடுத்த சேவக னெனக்குத் தெருட்டினா னனையசங் கிதையில்
    231 பெறற்கருந் தவஞ்செய் தகந்தெளிந் தரிதிற் பெறுங்கதி கேட்பவர்க் கெளிதா
    யுறப்படுந் தலநீர் வினாயமுச் சிறப்பு முள்ளதெத் தலத்தினுங் கழிந்த
    சிறப்பினாங் கெண்ணெண் டிருவிளை யாடல் செய்தருள் வடிவெடுத் தென்றும்
    மறைப்பொருள் விளங்கு மாலவாய் அதனை மண்ணின்மேற் சிவனுல கென்னும்
    232 அத்தலத் தனைய மூவகைச் சிறப்பும் அளவிலா வுயிர்க்கெலாங் கருணை
    வைத்தவன் செய்த திருவிளை யாட்டும் வரையுரங் கிழியவே லெடுத்த
    வித்தக னெனக்கு விளம்பிய வாறே விளம்புவ னுமக்கென வந்த
    உத்தம முனிவர் யாவருங் கேட்க வுணர்த்துவான் கடலெலா முண்டான்

    ------------------------

    தல விசேடப் படலம் (233- 255 )

    233 நாட்டமொரு மூன்றுடைய நாயகனுக் கன்புடையீர் நயந்து நீவிர்
    கேட்டதலம் ஈண்டுரைத்த திருவால வாயதனுட் கிளைத்துப் பொன்னந்
    தோட்டலர்தா மரைமுளைத்த தொருதடமுஞ் சுந்தரச்செஞ் சோதி ஞான
    ஈட்டமென முளைத்தசிவ லிங்க மொன்று முளவின்னு மிசைப்பக் கேண்மின்
    234 திருவால வாய்க்கிணையா மொருதலமும் தெயவமணஞ் செய்ய பூத்த
    மருவார்பொற் கமலநிகர் தீர்த்தமுமத் தீர்த்தத்தின் மருங்கின் ஞான
    உருவாகி யுறைசோம சுந்தரன்போ லிகபரந்தந் துலவா வீடு
    தழிவானு முப்புவனத் தினுமில்லை யுண்மையிது சாற்றின் மன்னோ
    235 அவ்வகைய மூன்றின் முதற் றலப்பெருமை தனைச்சுருக்கி யறையக் கேண்மின்
    எவ்வகைய வுலகத்துந் தருமதல மதிகமவற் றீறிலாத
    சைவதல மதிகமவற் றறுபத்தெட் டதிகமவை தமிலீ ரெட்டுத்
    தெய்வதல மதிகமவற் றதிகதல நான்கவற்றைச் செப்பக் கேண்மின்
    236 அன்னமலி வயற்புலியூர் காசிநகர் காளத்தி யால வாயாம்
    இன்னவளம் பதினான்கிற் றிருவால வாயதிக மெவ்வாறு என்னின்
    மின்னவிரம் பலங்காணக் காசிநகர் வதிந்திறக்க வியன்கா ளத்திப்
    பொன்னகரம் பத்தியினால் வழிபாடு செயவளிக்கும் போகம் வீடு
    237 அறந்தழையுந் திருவால வாய்கேட்ட வுடன்போக மளிக்கும் ஈண்டு
    பிறந்திறவாப் பேரின்பக் கதியளிக்கும் இதுவன்றிப் பிறழா தெங்கும்
    நிறைந்தபர னெத்தலமும் படைப்பானித் தலத்தைமுத னிருமித் திங்ஙன்
    உறைந்தருளி னானன்றி யின்னமுள திதன்பெருமை யுரைப்பக் கேண்மின்
    238 திருவால வாயென்று கேட்டவரே யறம்பெறுவர் செல்வ மோங்குந்
    திருவால வாயென்று நினைத்தவரே பொருளடைவர் தேவ தேவைத்
    திருவால வாயிடத்துக் கண்டவரே யின்பநலஞ் சேர்வ ரென்றுந்
    திருவால வாயிடத்து வதிந்தவரே வீட்டுநெறி சேர்வர் அன்றே
    239 சுரநதிசூழ் காசிமுதற் பதிமறுமைக் கதியளிக்குந் தூநீர் வைகை
    வரநதிசூழ் திருவால வாய்சிவன் முத்திதரும் வதிவோர்க்கு ஈது
    திரனதிகம் பரகதியும் பின்கொடுக்கு மாதலினிச் சீவன் முத்தி
    புரனதிக மென்பதெவ னதற்கதுவே யொப்பாமெப் புவனத் துள்ளும்
    240 ஆதலினிப் பதிவிட்டுப் பிரபதியிற் போய்நோற்போர் அங்கை கொண்ட
    சீதளவா னமுதேய்ப்பத் தித்திக்கத் தேம்பெய்து செய்த தீம்பால்
    ஓதனத்தைக் கைவிட்டு புறங்கையை நக்குவா ரொப்பா ரிந்த
    மாதலத்தின் பெருமைதனை யாவரே யளவிட்டு வழுத்தற் பாலார்
    241 மற்றைய தலங்க டம்மிற் பரிமகம் வாச பேயம்
    அற்றமில் சோடசாக மக்கினிட் டோமம் யார்க்கும்
    முற்றரு மிராசு சூய முதன்மக முடித்த பேறுஞ்
    செற்றமி றரிச பூர்ண முதலிட்டி செய்த பேறும்
    242 எள்ளிழு தன்னங் கன்னி யிவுளிதே ரியானை யில்லம்
    வெள்ளியான் பொன்பூ ணாடை விளைவொடு பழனமுன்னாத்
    தள்ளரும் அடிமையாதி தானங்கள் செய்த பேறும்
    வள்ளறன் காசியாதிப் பதிகளில் வதிந்த பேறும்
    243 கங்கைகா ளித்தி வாணி காவிரி கண்ண வேணி
    துங்கபத் திரைதீம் பாலி தூயதன் பொருநை முன்னாச்
    சங்கையி னதிகண் முற்றும் ஆடிய தவத்தின் பேறும்
    மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க் கெய்தும்
    244 அன்னிய தலங்க டம்மில் ஆற்றிய பிரம கத்தி
    பொன்னினைக் களவு செய்தல் கள்ளுண்டல் புனித வாசான்
    பன்னியைப் புணர்த லின்ன பாதக மனைத்து மென்றுந்
    தன்னிக ரால வாயில் வதிபவர் தமைவிட் டேகும்
    245 மற்றைய தலத்தின் சாந்தி ராயண மதியந்தோறும்
    உற்றபே றிங்குக் கங்கு லூண்டியால் அடைபே றாகும்
    மற்றைய தலத்தின் மாதப் பட்டினிப் பலத்தின் பேறிங்
    குற்றொரு வைக லுண்டி யொழிந்தவர் பெறும்பே ராகும்
    246 அயனக ரடைந்து நான்கு திங்களோன் பாற்றும் பேறிவ்
    வியனக ரடைந்து நோற்கும் அட்டமி விரத நல்கும்
    அயனக ரெய்தி யாறு திங்கணோன் பாற்றும் பேறிவ்
    வியனகர்ச் சோம வார விரதமே யளிக்கு மன்றே
    247 ஏனைய தலத்தி லோராண் டுணவொழிந் தியற்று நோன்பால்
    ஆனபே றிங்கு நோற்குஞ் சிவனிரா வளிக்கும் இங்கே
    ஊனவைம் பொறியும் வென்றோன் முப்பொழு துண்டு வைகித்
    தானமர்ந் தாலுங் காலுண் டியற்றுமா தவத்தோ னாகும்
    248 இந்தநான் மாட மோங்கும் ஆலவா யிடத்தியா ரேனும்
    அந்தணர் தமக்கோர் முட்டி யருந்தவர் தமக்கோர் பிச்சை
    தந்தவர் புறம்பு செய்த சோடச தானந் தம்மால்
    வந்தபே றடைவர் பல்வே றுரைப்பதென் மதியான் மிக்கீர்
    249 பல்வகைத் தலங்கள் எல்லாம் வைகிய பயனு மென்றும்
    பல்வகைத் தீர்த்த மெல்லா மாடிய பயனு மென்றும்
    பல்வகைத் தான மெல்லா நல்கிய பயனு மென்றும்
    பல்வகைத் தான பூசை பண்ணிய தவத்தின் பேறும்
    250 பல்வகைத் தவங்கள் எல்லாம் முற்றிய பயனுந் தூய
    பல்வகை மந்தி ரத்தி லெய்திய யயனு நூலின்
    பல்வகைக் கேள்வி யெல்லா மாய்ந்துணர் பயனும் யோகம்
    பல்வகை ஞான மெல்லாம் பயின்றுணர்ந் தடங்கும் பேறும்
    251 அனையதொல் பதியி லென்றும் வைகுவோர் அடைவ ரென்றால்
    இனையதொல் பதிக்கு நேர்வே றில்லையிப் பதியின் மேன்மை
    தனையறி பவரா ரீசன் றானன்றி யாத லலே
    வினைனைவெல் பவரங் கெய்தி வதிவதே வேண்டு மாதோ
    252 கைத்தலநான் கிரண்டுடைய மலர்க்கடவுண் மோலொருநாட் கயிலையாதி
    எத்தலமு மொருதுலையிட் டித்தலமும் ஒருதுளையிட் டிரண்டுந் தூக்க
    உத்தமமாந் திருவால வாய்மிகவுங் கனத்ததுகண் டுலகின் மேலா
    வைத்ததல மிதுவென்றா லிதன்பெருமை யாவரே வழுத்தர் பாலார்
    253 அத்திருமா நகரின்பேர் சிவநகரங் கடம்பவனம் அமர்ந்தோர் சீவன்
    முக்திபுரங் கன்னிபுரந் திருவால வாய்மதுரை முடியா ஞானம்
    புத்திதரும் பூவுலகிற் சிவலோகஞ் சமட்டிவிச்சா புரந்தென் கூடல்
    பத்திதரு துவாதசாந் தத்தலமென் றேதுவினாற் பகர்வர் நல்லோர்
    254 என்றுதலச் சிறப்புரைத்த குறுமுனிவ னெதிரறவோர் இறும்பூ தெய்தி
    நன் றுதலப் பெருமையருள் செய்தனைகேட் டுடலெடுத்த நயப்பா டெல்லாம்
    இன்றடைந்தே மினிச்சுவண புண்டரிகச் சிறப்பதனை யிசைத்தி யென்னக்
    குன்றமடக் கியகருணைக் குன்றனையான் வரன்முறையாற் கூறு கின்றான்
    255 விரதமா தவத்தீர் காணின் வெவ்வினை யெல்லாம் வீட்டிச்
    சரதமாப் போக நல்குந் தபனிய முளரி வந்த
    வரவுமக் கனக கஞ்சப் பெருமையும் வளனு நன்கா
    உரைசெய்துங் கேண்மி னென்னா முனிவரன் உரைக்கு மன்னோ

    தலவிசேடப் படலம் சுபம்
    -------------------------

    தீர்த்த விசேடப் படலம் (256- 291 )

    256 கண்ணகன் குடுமி மாடக் கடிபொழி லால வாயின்
    அண்ணலம் பெருமை யாரே யளப்பவ ரவிர்தண் முத்த
    வெண்ணகை யுமையா ளன்பு விளைமுகச் செவ்வி போலத்
    தண்ணறும் கமலம் பூத்த தடப்பெருந் தகைமை சொல்வாம்
    257 ஆற்றுனுக் கரசாங் கங்கை காவிரி யாதி யாறும்
    வேற்றுரு வாய முந்நீர் வேலையும் பிறவுங் காருந்
    தோற்றுமுன் றன்னை யாட்டச் சுந்தர மூர்த்தி செங்கண்
    ஏற்றினன் கண்ட தீர்த்த மாகுமீ தெவ்வா றென்னின்
    258 அகளமா யுலக மெல்லாம் ஒடுக்கியந் நெறியே யார்க்கும்
    நிகளமாம் விருத்தி தோன்ற நினைவற நினைந்து நிற்குந்
    குகளிலா வறிவா னந்த சுந்தரச் சோதி மேனாட்
    சகளமா முருவங் கொண்டு தானொரு விளையாட் டாலே
    259 முக்கணன் அரவப் பூண நூலினன் முகிழ்வெண் டிங்கட்
    செக்காஞ் சடையன் சூல கபாலத்தன் செங்க ணேற்றன்
    மைக்கருங் கயலுண் கண்ணி வாமத்தன் முன்னும் பின்னும்
    பக்கமு நந்தி யாதி கணாதிபர் பாவிச் சூழ
    260 சென்றுதன் தேனித் தேசாற் றிசையெலாம் விளங்கச் செங்கண்
    வென்றிகொள் உரக வேந்த னகரமும் விபுதர் வேந்தன்
    பொன்றிகழ் நகரும் வேதன் புரமுமால் புரமு மேலைத்
    தன்றிரு நகருஞ் சென்று சஞ்சரித் தாடி மீள்வான்
    261 அன்னபோ தயனுந் தேவர்க் கரசனும் ஆழி வேந்தும்
    முன்னர்வந் திறைஞ்சி யேத்த முனிவரும் பேறு நல்கித்
    தன்னக ரடைந்து நீங்காத் தனிப்பெருங் கணத்தி னோரை
    இன்னருள்சுரந்து நோக்கி யிலிங்கத்திற் புகுது மெல்லை
    262 வேத்திரப் படையோன் ஆதி கணாதிபர் வீழ்ந்து பால
    நேத்திர வன்பர்க் கன்ப நிரஞ்சன நிருத்தா னந்த
    சாத்திர முடிவுந் தேறாத் தனிமுக லொருவ வென்னாத்
    தோத்திர வகையா லேத்தித் தொழுதொன்று வினாவல் செய்வார்
    263 ஐயவிவ் விலிங்க மூர்த்திக் காட்டவு மடியே மூழ்கி
    உய்யவுங் கங்கை யாதி நதிகளும் உலகத்துள்ளோர்
    மை யறு தடாச நீரு மற்றிலை யிருமைப் பேறுஞ்
    செய்யவோர் தீர்த்த மிங்குண் டாக்கெனச் செப்ப வேண்டும்
    264 அத்தகை யிலிங்க மூர்த்திக் கடுத்ததென் கீழ்சா ராக
    முத்தலை வேலை வாங்கி நாட்டினான் முதுபார் கீண்டு
    பைத்தலைப் பாந்தள் வேந்தன் பாதலங் கீண்டு போயெண்
    கைத்தலப் பிரமன் அண்ட கடாகமுங் கீண்ட தவ்வேல்
    265 அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்தபேர் ஆழி யூழிப்
    பௌவநீ ரென்ன வோங்கப் பாணியா லமைத்து வேணித்
    தெய்வநன் னீரைத் தூவிக் கலந்துமா தீர்த்த மாக்கிக்
    கைவரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்
    266 இன்னமா திர்த்தந் தன்னை யெனைப்பல தீர்த்தங் கட்கு
    முன்னம்யாம் இங்குக் கண்ட முதன்மையா லாதி தீர்த்தம்
    என்னலா மினியுண் டாக்குந் தீர்த்தங்க ளெவைக்கு மேலாய்
    மன்னலாற் பரம தீர்த்த மெனப்பெயர் வழங்க லாகும்
    267 மருட்கெட மூழ்கி னோர்நன் மங்கலம் பெறலா னாமம்
    அருட்சிவ தீர்த்த மாகும் புன்னெறி யகற்றி யுள்ளத்
    திருட்கெட ஞானந் தன்னை யீதலான் றிதற்கு நாமம்
    268 குடைந்துதர்ப் பணமுஞ் செய்து தானமுங் கொடுத்தும் மாடே
    அடைந்தெழுத் தைந்தும் எண்ணி யுச்சரித் தன்பா லெம்மைத்
    தொடர்ந்துவந் திறைஞ்சிச் சூழ்ந்து துதித்தெமை யுவப்பச் செய்தோர்
    உடம்பெடுத் ததனா லெந்த வுறுதியுண் டதனைச் சேர்வார்
    269 இந்தநீ ரெம்மை யாட்டி னேழிரண் டுலகின் மிக்க
    அந்தமி றீர்த்த மெல்லாம் ஆட்டிய பயன்வந் தெய்தும்
    வந்திதின் மூழ்கி யிங்கு வைகுநங் குறியை யுங்கள்
    சிந்தையி லார்வம் பொங்கப் பூசனை செய்மி னென்னா
    270 விண்ணவர் தம்மின் மேலாம் வேதிய னாகி நின்ற
    பண்ணவன் றானந் நீரிற் படிந்துதன் னனுச்சை யாலே
    அண்ணலங் கணத்தி னோரை மூழ்கிவித் தனாதி யாய
    புண்ணிய விலிங்கந் தன்னுட் புகுந்தினி திருந்தான் மன்னோ
    271 அந்தமா நீரா னந்தி யாதியோர் விதியாற் சோம
    சுந்தரன் முடிமேல் ஆட்டித் துகளறப் பூசை யாற்றிச்
    சிந்தையில் விழைந்த வெல்லா மடைந்தனர் செம்பொற் கஞ்சம்
    வந்தவா றிதுவத் தீர்த்த மகிமையு முரைப்பக் கேண்மின்
    272 வளையெறி தரங்க ஞான வாவியை நோக்கிற் பாவத்
    தளையறு மூழ்கின் வேண்டுங் காமியம் எல்லாஞ் சாரும்
    உளமுற மூழ்கு மெல்லை முழுக்கொன்றற் குலகத் துள்ள
    அளவறு தீர்த்த மெல்லா மாடிய பயன்வந் தெய்தும்
    273 மெய்யைமண் ணாதி கொண்டு விதிவழி சுத்தி செய்து
    மையறு வருண சூத்த மந்திர நவின்று மூழ்கிற்
    றுய்யமா தீர்த்த மெல்லாந் தோய்ந்துநான் மறையு மாய்ந்தோர்
    கையிலெப் பொருளும் ஈந்த காசறு பேறு நல்கும்
    274 தெய்வவித் தீர்த்தந் தன்னை நினைவின்றித் தீண்டினாலும்
    அவ்விய வினையு னீந்தி யரும்பெறல் வீடு சேர்வர்
    இவ்வுரை மெய்யே யாகும் என்னெனின் மனத்தா றன்றி
    வெவ்வழ றீண்டி னாலுஞ் சுடுமன்றி விடுமோ வம்மா
    275 ஆருமந் நீரி லென்று மாடினார் சீவன் முத்தி
    சேருவ ரந்நீ ராடுஞ் சிறப்புறு பயனுக் கொவ்வா
    வாருண மாக்கி னேய மந்திரம் இவைமுன் னான
    பேருணர் வளிக்கு நானஞ் செய்தவர் பெறும்பே றெல்லாம்
    276 அன்னநீர் தனையுமாடி யாலவா யுடைய நாதன்
    றன்னையும் பணிவோன் மேலைப் பாகதி தன்னைச் சாரும்
    என்னநன் னூலிற் சொன்ன பவித்திரம் எவைக்கு மேலாய்ப்
    பன்னரும் புனித மான பவித்திர மாகி நிற்கும்
    277 ஆதர விலனா யந்நீ ராடினோன் சுவர்க்கன் சேரும்
    ஆதர வுளனாய் மூழ்கி வானவ ராதி யானோர்க்
    காதர வரிசி யெள்ளுத் தருப்பண மமையச் செய்தோன்
    ஆதர வேள்வி முற்று மாற்றிய பயனைச் சேரும்
    278 ஏனைமா தலங்க டம்மி லிருந்துசெய் விரதம் பூசை
    தானமா தரும மோமந் தவஞ்செபந் தியானந் தம்மால்
    ஆனமா பயனிற் கோடி யதிகமாம் அடைந்து மூழ்கி
    ஞானமா தீர்த்த ஞாங்க ரிருந்தவை நயந்து செய்யின்
    279 பிறந்தநா ளந்னீர் மூழ்கின் மேலைவெம் பிறவிப் பௌவம்
    மறிந்திடு மறிதேள் கும்ப மதிகளின் மூழ்கித் தென்பால்
    உறைந்தவர் பொருட்டுப் பிண்ட முதலினா லவர்தாம் ஆழ்ந்து
    நிறைந்திடு பிறவிப் பௌவ நின்றுமே லெழுவ ரன்றே
    280 அத்தட மருங்கின் யாவர் தென்புல மடைந்தோர் தங்கள்
    சித்தமா சகற்ற வேண்டிச் செய்கடன் முடிக்கி னன்னோர்
    எத்தனை யெண்ணேர்ந் தாலும் எள்ளுக்கா யிரமாண் டாக
    அத்தனை யாண்டு மட்டு மவரைவிண் ணான வைப்பார்
    281 மூவகை யுலகில் உள்ள தீர்த்தமு முறையா லென்றுஞ்
    சேவகஞ் செய்யு மிந்தத் தீர்த்தமெந் நாளு மூழ்கி
    ஏவாந் நீரா லென்று மீசனைப் பூசை செய்வோர்
    ஆவரிப் பிறவி தன்னி லவர்கதிக் கரையைச் சார்வார்
    282 விடுத்திடல் அரிய நித்த வேள்வி விரதம் வேதந்
    தடுத்திட லரிய தானந் தவமிவை தரும்பே றெல்லாம்
    அடுத்ததன் கரையில் வைகி யீசனை யருச்சிப் போர்க்குக்
    கொடுத்திடு புண்ணி யத்திற் கோடியி லொன்றுக் கொவ்வா
    283 உம்மையிற் பிறவி தோறு நியமநல் லொழுக்கம் பூண்டு
    பொய்மையில் விரதந் தானந் தவஞ்செய்து புனிதராகிச்
    செம்மைநன் னெறியி னின்ற சித்தழிக் கலதித் தீர்த்தம்
    இம்மையில் அடைந்து நித்தமாடுதற் கெய்தா தன்றே
    284 மதிகதிரோ னிடத்தொடுங்கு தினந்திங்கட் பிறப்பரவம் வாயங் காந்து
    கதிர்கடமை விழுங்குதினம் விதிபாத மிந்நாளிற் கருதி மூழ்கித்
    துதிகடருப் பணந்தானம் புரிதன்மனு வோதுதலத் தொகையொன் றற்கொன்
    றதிகபல னம்முறைநூ றாயிரநூ றாயிரமோர் அநந்த மாகும்
    285 பொருவரிய தகர்த்திங்க டுலாத்திங்கள் இவை யுதிக்கும் போது மூழ்கின்
    ஒருபதினா யிரமடங்காஞ் கறவுகவைத் தாளலவ னுதிப்பின் மூழ்கின்
    இருபதினா யிரமடங்கா மிந்திரவி யிடத்தொடுங்கு மிந்து வாரம்
    வருவதறிந் தாடிமனு வோதன்முதற் செயினனந்த மடங் குண்டாகும்
    286 பிரயாகை தனின்மகர மதிநாண்முப் பதுங்குடைந்து பெறும்பே றிந்தத்
    திரையார்பைந் தடத்தொருநாண் மூழ்குவோன் பெறும்விரத சீலம் பூண்டு
    வரையாமல் ஒருவருடம் படிந்துமையை யமரர்சிகா மணியாம் வேத
    உரையானை வழிபடுமேன் மலடிக்கு நன்மகப்பே றுண்டா மன்னோ
    287 எண்டிசைய நதிவாவி வடிவான மாதீர்த்தமெல்லா மிப்பொற்
    புண்டரிக தடத்திலொரு கோடியிலோர் கூறுநிகர் போதா வீது
    கண்டதனா லறந்தீண்டப் பெற்றதனா னற்பொருளங் கையால் அள்ளிக்
    கொண்டதனா லின்பநலங் குடைந்ததனாற் பேரின்பங் கொடுக்கு மன்றோ
    288 முன்னவ னருளிச் செய்த காரண முறையால் அன்றி
    இன்னமிப் புனித வாவிக் கேதுவா லெய்து நாமம்
    மின்னவிர் சடையான் சென்னி மேவிய கங்கை நீரிற்
    பின்னது கலந்த நீராற் பெறுஞ்சிவ கங்கையென்றும்
    289 அலகிலாத் தீர்த்தந் தம்மு ளதிகவுத் தம்மாய்த் தோன்றி
    இலகலா லிதனைத் தீர்த்த வுத்தம மென்பர் ஆராய்ந்தோர்
    பலவிதழ் விரித்துச் செம்பொற் பங்கய மலர்ந்த நீரால்
    உலகவர் யாரும் பொற்றா மரையென வுரைப்ப ரன்றே
    290 தருமமுன் னாகு நான்குந் தருதலாற் றரும தீர்த்தம்
    அருமைசால் அருத்த தீர்த்த மரும்பெறற் காம தீர்த்தம்
    இருமைசேர் முத்தி தீர்த்த மென்பதா மீனைய தீர்த்தம்
    வெருவரு பாவமென்னும் விறகினுக் கெரியா மன்றே
    291 இவ்வருந் தலத்தி னாற் பெருமையும் எரிகால் செம்பொற்
    றெய்வத பதும தீர்த்தப் பெருமையுஞ் செப்பக் கேட்டேன்
    எவ்வமில் போகம் வீடு பெறுவரென் றிசைத்தான் முந்நீர்ப்
    பௌவமுண் டமரர் வேந்தன் பரிபவ விழுமந் தீர்த்தோன்

    தீர்த்த விசேடப் படலம் சுபம்
    -----------------------------

    மூர்த்தி விசேடப் படலம் (292 -328 )

    292 ஆலவா யலர்ந்த செம்பொ னம்புயப் பெருந்தீர்த் தத்தின்
    மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண்
    நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த
    மூலமா விலிங்கமேன்மை முறையினா லறைய லுற்றாம்
    293 பொன்னெடு மேரு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
    வன்னெடும் புரிசை சூழந்த வாரண வாசி யாதிப்
    பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
    முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்
    294 அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
    கப்புவிட் டெழுந்த விந்தக் காரணமிரண்டி னாலும்
    ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
    திப்பிய விலிங்க மூல விலிங்க மாய்ச் சிறக்கு மன்னோ
    295 இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
    அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
    சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
    சந்தர னென்று நாமஞ் சாத்தினார் துறக்க வாணர்
    296 திறப்படு முலக மெங்கும் வியாபியா ய்ச்சிறந்துநிற்கும்
    அறப்பெருங் கடவுள் சோமசுந்தர னதனா லன்றே
    கறைக்கதிர் வடிவேற் றென்னன் கையிற்பொற் பிரம்புபட்ட
    புறத்தடித் தழும்பு மூன்று புவனமும் பட்டதன்றே
    297 சொற்றவிச் சமட்டி யான சோமசுந் தரனைக் காணப்
    பெற்றவர் வியட்டி யான பிறபதி யிலிங்கங் காணல்
    உற்றவ ராவ ரென்னென் றுரைக்கின்வே ரூட்டு நீர்போய்
    மற்றைய சினைக ளெல்லாந் தழைவிக்கு மரத்தின் மாதோ
    298 எத்தலத் தியாவ னெண்ணெண் டிருவிளை யாடல் செய்தான்
    அத்தலத் தவனுக் கொப்பு மதிகமாஞ் சிறப்பும் பெற்ற
    உத்தம னென்று மெந்த வுலகிலு மில்லை யந்த
    வித்தக னதிகத் தன்மை யெனைத்தெனின் விளம்பக் கேண்மின்
    299 பொருப்பினுட் டலைமை யெய்தும் பொன்னெடுங் குடுமி மேரு
    தருக்களிற் றலைமை சாருந் தண்ணறுந் தெய்வ தாரு
    விருப்புறு கேளிவி தம்முண் மேம்படும் புரவி மேதம்
    அருட்படு தானந் தம்முள் விழுமிதா மன்ன தானம்
    300 மனிதரி லுயர்ந்தோ ராதி மறையவர் தேவர் தம்மிற்
    பனிதரு திங்கள் வேணிப் பகவனே யுயர்ந்தோன் வேட்டோர்க்
    கினிதருள் விரதந் தம்மு ளதிகமா மிந்து வாரம்
    புனிதமந் திரங்க டம்முட் போதவைந் தெழுத்து மேலாம்
    301 மின்மைசான் மணியிற் சிந்தா மணிவரம் விழுப்ப நல்குந்
    தன்மைசா லறங்க டம்மின் மிகுஞ்சிவ தரும மென்ப
    இன்மைசா னெறி நின் றோருக் கேற்குநற் கலங்க டம்மின்
    நன்மைசான் றவரே முக்க ணாதனுக் கன்பு பூண்டோர்
    302 தீயவான் சுவை ப்பா லாவிற் றேவரா வதிகம் பல்வே
    றாயமா தீர்த்தந் தம்மு ளதிகமாஞ் சுவண கஞ்சம்
    மாயமா சறுக்க வெல்லாத் தலத்திலும் வதிந்து மன்னுந்
    தூயவா னவரிற் சோம சுந்தரன் சிறந்தோ னாகும்
    303 அந்தமு முதலு மில்லா வகண்டபூ ரணமா யார்க்கும்
    பந்தமும் வீடு நல்கும் பராபரச் சோதி தானே
    வந்தனை புரிவோர்க் கிமை மறுமைவீ டளிப்பா னிந்தச்
    சுந்தர விலிங்கத் தென்றும் விளங்குவான் சுருதி யேத்த
    304 இத்தகு சயம்பு தன்னை யேனைய சயம்பு வெல்லாம்
    நித்தமும் தரிசித் தேகு நிருமல வொளியா மிந்த
    உத்தம விலிங்கங் கண்டோ ருரையுணர் வொடுங்க வுள்ளே
    சித்தமா சொழியத் தோன்றுஞ் சிவபரஞ் சுடரைக் கண்டோர்
    305 இத்தனிச் சுடரை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ மெல்லாங்
    கொத்தழற் பொறிவாய்ப் பட்ட பஞ்சுபோற் கோப மூள
    மெய்த்தவஞ் சிதையு மாபோன் மருந்தினால் வீயு நோய்போல்
    உத்தம குணங்க ளெல்லா முலோபத்தா லழியு மாபோல்
    306 கலிகடல் இரவி தோன்றக் கருகிரு ளுடையு மாபோல்
    ஒலிகெழு பெருங்கா றள்ள வுடைபடு மேகம் போல
    வலிகெழு மடங்கல் சீற மாயுமால் யானை போலக்
    குலிசவல் லேறு தாக்கப் பொடிபடுங் குன்றம் போல
    307 மருட்சிசெய் காம நோயான் மதிகெடு மாறு போல
    அருட்சிவ ஞான நோக்கால் வலிகெடும் அவிச்சை போலத்
    தருக்கறு முவணஞ் சீறத் தழலரா விளியு மாபோற்
    செருக்குற வழியுங் கற்ற கல்விபோற் சிதையு மன்றோ
    308 புலரியிற் சீவன் முத்தி புரேசனைக் காணப் பெற்றால்
    அலைகட னான்குட் பட்ட வவனிமா தானஞ் செய்த
    பலனுறுங் கதிர்கால் உச்சி வைகலிற் பணியப் பெற்றாற்
    கலைஞர்பா னூற்றுப் பத்துக் கபிலைமா தானப் பேறோம்
    309 விண்ணிடைப் பரிதிப் புத்தேண் மேலைநீர் குளிக்கும் எல்லை
    அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறோம்
    பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்
    வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும்
    310 இன்னன வதிக மாம்பே றறிந்துபோ யெத்தே வர்க்கும்
    முன்னவன் சமட்டி விச்சா புரமுறை முதல்வன் றன்னைச்
    சொன்னவிக் காலந் தோறும் இறைஞ்சியுந் தொழுதுஞ் சூழ்ந்தும்
    பொன்னடிக் கன்ப ராகி வழிபடும் புனித சீலர்
    311 உம்மையில் வினைக ளென்னும் பிணியவிழ்ந் தொருவித் தூய
    செம்மைய ராகி யானாத் திருவொடு செல்வ மோங்க
    வெம்மையில் போகமூழ்கி மலவிருள் வீக்க நீந்தி
    மைம்மலி கண்டத் தெங்கோன் மலரடி நீழல் வாழ்வார்
    312 அறவுருவன் ஆலவா யானாமஞ் செவிமடுத்தா லடைந்த பத்துப்
    பிறவிவினை யறுநினைந்தா னூறுபெரும் பவப்பாவப் பிணிபோங் கூடல்
    இறைவனையின் றிறைஞ்சுதுமென் றெழுதுமனைப் புறம்போந்தா லீரைஞ்ஞாறு
    மறமுறுவெம் பவத்திழைத்த பாதகவல் வினையனைத்து மாயு மன்னோ
    313 புழைக்கைவரை தொலைத்தானை தரிசித்தோர் ஆயிரமாம் புரவி வேள்வி
    தழைத்தபெரும் பயன்பெறுவ ருருத்திரசூத் தம்மதனாற் றவவா னோர்கள்
    தொழற்கரியான் றனைத்துதித்தோர் கணத்துக்கா யிரராச சூய யாகம்
    இழைத்தபெரும் பயன்பெறுவர் சமட்டிவடி வாகியவவ் விலிங்கந் தன்னை
    314 அங்கையள வாகியநன் னீராட்டிப் பூசித்தோ ரளவி லேனைத்
    துங்கதலத் துறையிலிங்க மூர்த்திகளைச் சிவாகமநூல் சொன்ன வாற்றான்
    மங்கலமா கியமுகம னீரெட்டும் வழுவாது வாசந் தோய்ந்த
    செங்கனசு மணிக்கலச்ப் புனலாட்டி மாபூசை செய்தோ ராவார்
    315 அவ்வண்ணஞ் சுந்தரனை யைந்தமுத மானுதவு மைந்து தீந்தேன்
    செவ்வண்ணக் கனிசாந்தச் சேறுமுதன் மட்டித்துத் தேவர் தேறா
    மெய்வண்ணங் குளிரவிரைப் புனலாட்டி மாபூசை விதியாற் செய்தோர்
    மைவண்ண வினைநீந்தி யறமுதனாற் பொருளடைந்து மன்னி வாழ்வார்
    316 நல்லவகை முகமனீ ரெட்டுள்ளும் வடித்தவிரை நன்னீர் ஆட்ட
    வல்லவர்நூ றாயிரமா மேதமகப் பயன்பெறுவர் வாச நானம்
    எல்லவிர்குங் குமஞ்சாந்த மிவைபலவு மட்டித்தோ ரெழிலார் தெய்வ
    முல்லைநகை யாரோடும் விரைக்கலவை குளித் தின்ப மூழ்கி வாழ்வார்
    317 நன்மலரொன் றாலவா யான்முடிமேற் சாத்தினா யைந்து நூறு
    பொன்மலர்கொண் டயற்பதியுற் பூசித்த பயனெய்தும் புனித போகத்
    தன்மைதரு சுந்தரக்கு தூபமொரு காற்கொடுப் போர் தமக்குத் தாங்கள்
    சொன்மனமெய் யுறச் செய்த குற்றம் ஆயிரம் பொறுப்பன் சுருதி நாதன்
    318 திருவமுது நிவேதிப்போர் அவிழொன்றற் குகமொன்றாச் சிவலோ கத்தின்
    மருவிநிறை போகமுடன் வைகுவர்தாம் பூலமுக வாச மீந்தோர்
    பொருவரிய கடவுளராண் டொருநூறு கோடிசிவ புரத்து வாழ்வார்
    ஒருபளித விளக்கிடுவோர் வெண்ணிறமுங் கண்ணுதல முடைய ராவார்
    319 நறுந்திருமஞ் சனமெடுக்கக் குடமாட்ட மணிக்கலச நல்ல வாசம்
    பெறுந்தகைய தூபக்கா றீபக்கான் மணியின்ன பிறவுங் கங்குல்
    தெறுங்கதிர்கான் மணிமாட மதுரைநா யகர்க்கீந்தோர் செய்த பாவம்
    வெறுந்துகள்செய் தைம்பொறிக்கும் விருந்தூட்டும் பெருங்காம வெள்ளத் தாழ்வார்
    320 கயலிசைய கண்ணுமைகோன் றிருமுன்னர்ப் பல்லியமுங் கல்லென் றார்ப்ப
    இயலிசைய பாடலினோ டாடலிவை செய்விப்போர் இறுமாப் பெய்திப்
    புயலிசைய வியங்கலிப்ப மூவுலகுந் தொழவரசாய்ப் பொலங்கொம் பாடுஞ்
    செயலிசைய வணங்கனையா ராடரங்கு கண்டின்பச் செல்வத் தாழ்வார்
    321 ஒருகாலட் டாங்கமுடன் பஞ்சாங்க முடநாத லெண்செங் கால்வெண்
    குருகாலு மலர்த்தடஞ்சூழ் கூடனா யகற்பணிவோர் கோலொன் றோச்சிப்
    பொருகாலின் வருபரித்தேர் மன்னவரா யாவருந்தம் புடைவந் தெய்தி
    இருகாலுந் தலைவருட வெக்காலுந் தமைவணங்க விருப்பர் அன்றே
    322 இத்தகைய திருவால வாயுடையான் றிருமுன்னர் இயற்று மோமம்
    மெய்த்தவமந் திரந்தான மின்னவணு வளவெனினு மேரு வாகும்
    உத்தமமா மிவ்விலிங்கப் பெருமையெலாம் யாவரளந் துரைப்பர் வேத
    வித்தகரே சிறிதறிந்த வாறுரைத்தே மினிப்பலகால் விளம்பு மாறென்
    323 இத்தலத்துக் கொப்பாக வொருதலமும் பொற்கமலம் என்னு மிந்த
    உத்தமமா தீர்த்தத்துக் கொப்பதொரு தீர்த்தமுமெய் யுணர்வா னந்த
    வித்தனைய விலிங்கமிதற் கொப்பாவோ ரிலிங்கமும்பார் விண்மே லென்னும்
    முத்தலத்து மிலையந்த மூர்த்திதிரு நாமங்கண் மொழியக் கேண்மின்
    324 கருப்பூர சுந்தரன்பூங் கடம்பவன சுந்தரனுட் கரவாத் தொண்டர்
    விருப்பூருங் கலியாண சுந்தரனல் லறவடிவாய் விளங்கு மேற்றுப்
    பொருப்பூரும் அபிராம சுந்தரன்றேன் புடைகவிழப் பொன்னிற் பூத்த
    மருப்பூசௌ சண்பகசுந் தரன்மகுட சுந்தரன்றான் வாழி மன்னோ
    325 மான்மதசுந் தரன்கொடிய பழியஞ்சு சுந்தரனோர் மருங்கின் ஞானத்
    தேன்மருவி யுறைசோம சுந்தரன்றேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
    கான்மருவு தடம்பொழில்சூழ் ஆலவாய்ச் சுந்தரன்மீன் கணங்கள் சூழப்
    பான்மதிசூழ் நான்மாடக் கூடனா யகன்மதுரா பதிக்கு வேந்தன்
    326 சிரநாலோன் பரவரிய சமட்டிவிச்சா புரநாதன் சீவன் முத்தி
    புரநாதன் பூவுலக சிவலோகா திபன்கன்னி புரேசன் யார்க்கும்
    வரநாளுந் தருமூல விலிங்கமென விவைமுதலா மாடக் கூடல்
    அரனாம வின்னமளப் பிலவாகும் உலகுய்ய வவி லிங்கம்
    327 பாதாள மேழுருவ முளைத்தெழுந்த தவ்விலிங்கப் படிவந் தன்னுள்
    அதார மாகவமர்ந் தறுபத்து நாலுவிளை யாடல் செய்த
    போதானந் தன்பெருமை நங்குரவன் மொழிப்படியே புகன்றோ மென்றான்
    வேதாதி கலைதெரிந்த மலயமுனி கேட்டறவோர் வினாதல் செய்வார்
    328 அருட்கடலே யிறைவிளையாட் டறுபத்து நான்கென்றா யவையா னந்தப்
    பொருட்கடவுள் எக்காலத் தியாவர்பொருட் டாடினனெம் போதந் தேறித்
    தெருட்படர வரன்முறையாற் செப்புகெனக் கரங்குவித்தார் தென்பால் வெற்பில்
    இருப்பவனும் வினாயபடிக் கிறை நிரம்பத் தொகுத்துவிரித் தியம்பு கின்றான்

    மூர்த்தி விசேடப் படலம் சுபம்
    -------------------------------

    பதிகப் படலம் (329 - 343 )

    329 வானவர்கோன் பழிதொலைத்த விளையாட்டுங் கரிசாப மாய்த்த வாறும்
    மீனவர்கோன் காடெறிந்து புரங்கண்ட பெருஞ்சிறப்பு மீனநோக்கி
    ஆனதடா தகையழல்வா யவதரித்துப் பாராண்ட வருளும் ஈசன்
    தானவளை மணஞ்செய்து முடிதரித்து மண்காத்த தகைமைப் பாடும்
    330 புலிமுனியும் பணிமுனியுந் தொழவெள்ளி மன்றுணடம் புரிந்த வாறும்
    வலிகெழுதோட் குண்டகட்டுக் குறட்கன்னக் குன்றளித்த வகையும் பின்னும்
    நலிபசிநோய் கெடவன்னக் குழியசைத்துக் கொடுத்துநீர் நசைக்கு வைகை
    அலைபுனல்கூ யருத்தியதும் பொன்மாலைக் கெழுகடலும் அழைத்த வாறும்
    331 அந்தரர்கோ னாதனத்தில் உறைமலயத் துவசனை மீண்டழைத்த வாறுஞ்
    சுந்தரவுக் கிரகுமர னவதரித்த வாறும்வளை சுடர்வேல் செண்டு
    தந்தையிடத் தவன்பெற்ற வாறுமவ னவ்வடிமேல் சலதி வீறு
    சிந்தவிடுத் ததுமகவான் முடியைவளை யெறிந்திறைவன் சிதைத்த வாறும்
    332 பொன்னசலந் தனைச்செண்டாற் புடைத்துநிதி யெடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
    பன்னரிய மறைப்பொருளைப் பகர்ந்ததுவு மாணிக்கம் பகர்ந்த வாறுந்
    தொன்னகர்மே னீர்க்கிழவன் வாவிடுத்த கடல்சுவறத் தொலைத்த வாறும்
    அன்னதனித் தொன்மதுரை நான்மாடக் கூடனக ரான வாறும்
    333 வட்டங்கொள் சடையுடைய சித்தர்விளை யாடியதோர் வனப்புங் கையிற்
    கட்டங்கந் தரித்தபிரான் கல்லானை கரும்பருந்தக் காட்டு மாறும்
    உட்டங்கு வஞ்சனையால் அமணர்விடு வாரணத்தை யொழித்த வாறும்
    இட்டங்கொள் கௌரிமுனம் விருத்தனிளை யோன்குழவி யான வாறும்
    334 செய்யதாண் மாறிநட மாடியதும் பழியஞ்சு திறனுந் தாயை
    மையலாற் புணர்ந்தமகன் பாதகத்தை மாற்றியது மதியா தாசான்
    தையலா டனைவிரும்பு மாணவனை வாளமரிற் றடிந்த வாறும்
    பையரா வெய்ததுவும் படிற்றமணர் விடுத்தபசுப் படுத்த வாறும்
    335 அறவேற்றுப் பரியுகைத்து மெய்க்காட்டுக் கொடுத்தவிளை யாட்டுங் காட்டுச்
    சுறவேற்றுக் கொடியரசன் றனக்குலவாக் கிழிகொடுத்த தொடர்பு நாய்கர்
    நறவேற்ற மலர்க்குழலார் மனங்கவர்ந்து வளைபகர்ந்த நலனு மாறு
    மறவேற்கண் மாதரார்க்கு அட்டமா சித்திபெற வகுத்த வாறும்
    336 சென்னிபொருட் டெயில்வாயி றிறந்தடைத்து விடைபொறித்த செயலுஞ் சென்னி
    மன்னிகலிட் டமர்விளைப்ப மீனவற்கு நீர்ப்பந்தர் வைத்த வாறும்
    பொன்னனையாள் பொருட்டிரத வாதவினை முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
    தன்னையகன் குழிவீட்டித் தென்னவற்கு மறவாகை தந்த வாறும்
    337 மனக்கவலை கெடவுலவாக் கோட்டையடி யாற்களித்த வகைய மாமன்
    எனக்கருணை வடிவாகி வழக்குரைத்துப் பொருள் வணிகற் கீந்த வாறுஞ்
    சினக்கதிர்வேல் வரகுணற்குச் சிவலோகங் காட்டியதுந் திலவுக் கோலான்
    தனக்கடிமை யெனவிறகு திருமுடிமேற் சுமந்துபகை தணித்த வாறும்
    338 அப்பாணற் கிருநிதியஞ் சேரனிடைத் திருமுகமீந் தளித்த வாறும்
    அப்பாணன் மனைவியிசைப் பகைவெல்ல வண்ணலவை யடைந்த வாறும்
    அப்பாண னாளென்றோன் முலையருத்திப் பன்றியுயி ரளித்த வாறும்
    339 வயவேனக் குருளைகளை மந்திரிகள் ஆக்கியதும் வலியுண் டாகக்
    கயவாய்க்குக் குருமொழிவைத் தருளியது நாரைக்குக் கருணை நாட்டந்
    தயவால்வைத் தருண்முத்தி நல்கியதுங் கூடனகர் தன்னைச் சித்தர்
    புயநாகம் போய்வளைந்து திருவால வாயாக்கிப் போந்த வாறும்
    340 சுந்தரனென் றெழுதியகூ ரம்பெய்து செம்பியன் போர் தொலைத்த வாறுஞ்
    செந்தமிழோர்க் கியற்பலகை யருளியதுந் தருமிக்குச் செம்பொன் பாடித்
    தந்ததுவு மாறுபடு கீரற்க்குக் கரையேற்றந் தந்த வாறும்
    விந்தமடக் கியமுனியாற் கீரனியற் றமிழ்தெளிய விடுத்த வாறும்
    341 ஊமனாற் புலவரிக லகற்றியதும் இடைக்காட னுடன்போய்க் கொன்றைத்
    தாமனார் வடவால வாயமர்ந்த பரிசும்வலை சலதி வீசிப்
    பூமனாய் குழலியைவேட் டருளியதும் வாதவூர்ப் புனிதர்க் கேறத்
    தேமனாண் மலரடிகண் முடிசூட்டி யுபதேசஞ் செய்த வாறும்
    342 நரிகள்பரி யாக்கியதும் பரிகணரி யாக்கியது நாகம் பூண்டோன்
    அரியதிரு மேனியின்மேல் அடிசுமந்து மண்சுமந்த வருளுந் தென்னன்
    எரியடுவெஞ் சுரந்தணித்த வாறுமம ணரைக்கழுவி லிட்ட வாறுங்
    கரியதென வன்னிகிண றிலிங்கங்கூய் வணிகமகட் காத்த வாறும்
    343 எனத்தொகையால் அறுபத்து நான்கிவற்றை நிறுத்தமுறை யீறிலாத
    வினைத்தொகையா றகன்றீரெக் காலமெவர் பொருட்டெனநீர் வினாய வாற்றான்
    மனத்தளவி லன்புமடை யுடைந்தொழுகத் திருவால வாயான் றாளை
    நினைத்தளவி லானந்தம் பெருகவிரித் துரைப்பலென நெரியாற் கூறும்

    பதிகப் படலம் சுபம்
    -------------------

    இந்திரன் பழி தீர்த்த படலம் (344-440 )

    344 மின்பயில் குலிசப் புத்தேள் விருத்திரா கரனைக் கொன்ற
    வன்பழி விடாது பற்றக் கடம்பமா வனத்தில் எய்தி
    என்பர வாரம் பூண்ட விறைவனை யருச்சித் தேத்திப்
    பின்பது கழிந்து பெற்ற பேற்றினை யெடுத்துச் சொல்வாம்
    345 முன்னதா முகத்தில் வண்டு மூசுமந் தார நீழற்
    பொன்னவிர் சுணங்குண் கொங்கைப் புலோமசை மணாளன் பொற்பூண்
    மின்னவிரிந் திமைப்பச் சிங்கஞ் சுமந்தமெல் லணைமேன் மேவி
    அன்னமென் னடையா ராடு மாடன்மேல் ஆர்வம் வைத்தான்
    346 மூவகை மலரும் பூத்து வண்டுளே முழங்கத் தெய்வப்
    பூவலர் கொடிபேர்ந் தன்ன பொன்னனார் கூத்து மன்னார்
    நாவலர் அமுத மன்ன பாடலு நாக நாட்டுக்
    காவலன் கண்டு கேட்டுக் களிமதுக் கடலி லாழ்ந்தான்
    347 பையரா வணிந்த வேணிப் பகவனே யனைய தங்கள்
    ஐயனாம் வியாழப் புத்தேள் ஆயிடை யடைந்தா னாகச்
    செய்யதாள் வழிபா டின்றித் தேவர்கோ னிருந்தா னந்தோ
    தையலார் மயலிற் பட்டோர் தமக்கொரு மதியுண் டாமோ
    348 ஒல்லெனக் குரவ னேக வும்பர்கோன் றிருவி னாக்கம்
    புல்லெனச் சிறிது குன்றப் புரந்தர னறிந்திக் கேடு
    நல்லதொல் குரவற் பேணா நவையினால் விளைந்த தென்னா
    அல்லலுற் றறிவின் றன்னைத் தேடுவா னாயி னானே
    349 அங்கவ னிருக்கை புக்கான் கண்டில னவித்த பாசப்
    புங்கவர் உலகு மேனோர் பதவியும் புவன மூன்றில்
    எங்கணுந் துருவிக் காணா னெங்குற்றான் குரவ னென்னுஞ்
    சங்கைகொண் மனத்த னாகிச் சதுர்முக னிருக்கை சார்ந்தான்
    350 துருவின னங்குங் காணான் றிசைமுகற் றெழுது தாழ்ந்து
    பரவிமுன் பட்ட வெல்லாம் பகர்ந்தனன் பகரக் கேட்டுக்
    குரவனை யிகழ்ந்த பாவங் கொழுந்துபட் டருந்துஞ் செவ்வி
    வருவது நோக்கிச் சூழ்ந்து மலர்மகன இதனைச் சொன்னான்
    351 அனையதொல் குரவற் காணும் அளவுநீ துவட்டா வீன்ற
    தனையன்முச் சென்னி யுள்ளான் றானவர் குலத்தில் வந்தும்
    வினையினா லறிவான் மேலான் விச்சுவ வுருவ னென்னும்
    இனையனைக் குருவாக் கோடி யென்னலு மதற்கு நேர்ந்தான்
    352 அழலவிர்ந் தனைய செங்கேழ் அடுக்கிதழ் முளரி வாழ்க்கைத்
    தொழுதகு செம்ம றன்னைத் தொழுதுமீண் டகன்று நீங்கா
    விழைதகு காதல் கூர விச்சுவ வுருவன் றன்னை
    வழிபடு குருவாக் கொண்டான் மலர்மகன் சூழ்ச்சி தேறான்
    353 கைதவக் குரவன் மாயங் கருதிலன் வேள்வி யொன்று
    செய்திட லடிக ளென்னத் தேவர்கட் காக்கங் கூறி
    வெய்தழல் வளர்பான் உள்ளம் வேறுபட் டவுணர்க் கெல்லாம்
    உய்திற நினைந்து வேட்டான் றனக்குமே லுறுவ தோரான்
    354 வாக்கினான் மனத்தால் வேறாய் மகஞ்செய்வான் செயலை யாக்கை
    நோக்கினா னோதி தன்னா னோக்கினான் குலிச வேலாற்
    றாக்கினான் றலைகண் மூன்றுந் தனித்தனி பறவை யாகப்
    போக்கினான் அலகை வாயிற் புகட்டினான் புலவுச் சோரி
    355 தெற்றெனப் பிரம பாவஞ் சீறிவந் தமரர் வேந்தைப்
    பற்றலு மதனைத் தீர்ப்பான் பண்ணவர் மரமேன் மண்மேற்
    பொற்றொடி யார்மே னீர்மேல் வேண்டினர் புகுத்த லோடும்
    மற்றவ ரிஃதியாந் தீர்க்கும் வண்ணம்யா தென்ன விண்ணோர்
    356 அப்பிடை நுரையாய் மண்ணில் அருவருப் புவரா யம்பொற்
    செப்பிளங் கொங்கை யார்பாற் றீண்டுதற் கரிய பூப்பாய்க்
    கப்பிணர் மரத்திற் காலும் பயினதாய்க் கழிக வென்றார்
    இப்பழி சுமந்த வெங்கட் கென்னல மென்றார் பின்னும்
    357 கருவின் மாதர் கருவுயிர்க்கும் அளவு முறையாற் கணவர்தோள்
    மருவி வாழ்க மண்ணகழ்ந்த குழியு மதனால் வடுவொழிக
    பொருவி னீரு மிறைதோறு மூறிப் பொலிக மாங்குறைபட்
    டொருவி னாலுந் தழைகவென வொழியா நலனுமுதவினார்
    358 மாசிற் கழிந்த மணியேபோல் வந்த பழிதீர்ந் திந்திரனுந்
    தேசிற் றிகழத் துவட்டாத்தன் செல்வன் றன்னைத் தேவர்பிரான்
    வீசிக் குலிசத் துயிருண்ட விழுமங் கேட்டு வெகுண்டுயிர்த்துக்
    கூசிப் பழிகோள் கருதியொரு கொடிய வேள்வி கடிதமைத்தான்
    359 அந்தக் குண்டத் தெரிசிகைபோல் அழலுங் குஞ்சி யண்டமுக
    டுந்தக் கொடிய தூமம்போ லுயிர்த்துச் செங்கண் சினச்செந்தீச்
    சிந்தப் பிறைவா ளெயிறதுக்கித் திசைவான் செவிடு படநகைத்து
    வந்தக் கொடிய விடம்போல வெழுந்தா னொருவாண் மறவீரன்
    360 ஈங்குவன் விருத்திரன் என்ப வாரழற்
    றூங்குவன் கணைவிடு தூர நீண்டுநீண்
    டோங்குவ னோங்குதற் கொப்ப வைகலும்
    வீங்குவ னறனிலார் வினையி னென்பவே
    361 வீங்குடல் விருத்திரன் றன்னை விண்ணவர்
    எங்குற வருதுவட் டாவெ னும்பெயர்த்
    தீங்குறு மனத்தினேன் றேவர் கோனுயிர்
    வாங்குதி பொருதென வரவிட் டானரோ
    362 மதித்துணி யெயிற்றினோன் வடவை போற்சினைஇக்
    கொதித்தெதிர் குறுகினான் கொண்டல் ஊர்தியும்
    எதிர்த்தனன் களிற்றின்மே லிமையத் துச்சிமேல்
    உதித்ததோர் கருங்கதிரொக்கு மென்னவே
    363 அறத்தொடு பாவநேர்ந் தென்ன வார்த்திரு
    திறத்தரு மூண்டமர் செய்யக் கற்சிறை
    குறைத்தவன் றகுவன்மேற் குலிச வேலெடுத்
    துறைத்திட வீசினான் உடன்று கள்வனும்
    364 இடித்தனன் கையிலோர் இருப்பு லக்கையைப்
    பிடித்தனன் வரையெனப் பெயர்ந்து தீயெனத்
    துடித்தனன் சசிமுலைச் சுவடு தோய்புயத்
    தடித்தன னிந்திர னவச மாயினான்
    365 அண்டரே றனையவ னவச மாறிப்பின்
    கண்டகன் கைதவ நினைந்திக் கள்வனேர்
    மண்டமர் ஆற்றுவான் வலியி லோமெனப்
    புண்டரீ கத்தவ னுலகிற் போயினான்
    366 தாழ்ந்துதான் படுதுயர் விளம்பத் தாமரை
    வாழ்ந்தவன் வலாரியோ டணைந்து மாமகள்
    வீழ்ந்தமார் பின்னடி வீழ்ந்து செப்பமால்
    சூழ்ந்துவா னாடனை நோக்கிச் சொல்லுவான்
    367 ஆற்றவும் பழையதுன் னங்கை வச்சிரம்
    மாற்றவர் உயிருண வலியின் றாதலால்
    வேற்றொரு புதியது வேண்டு மாலினிச்
    சாற்றது மதுபெறுந் தகைமை கேட்டியால்
    368 தொடையகன் மார்பநாந் தூய பாற்கடல்
    கடையுநாள் அசுரருஞ் சுரருங் கையில்வெம்
    படையொடு மடையன்மின் பழுதென் றப்படை
    அடையவுந் ததீசிபா லடைவித் தாமரோ
    369 சேட்படு நாணனி செல்லத் தேவரா
    வாட்படை யவுணரா வந்து கேட்டிலர்
    ஞாட்படை படையெலா ஞான நோக்கினால்
    வேட்படை வென்றவன் விழுங்கி னானரோ
    370 விழுங்கிய படையெலாம் வேற றத்திரண்
    டொழுங்கிய தான்முது கந்தண் டொன்றியே
    எழுங்கதிர்க் குலிசமாம் அதனை யெய்துமுன்
    வழங்குவன் கருணையோர் வடிவு மாயினான்
    371 என்று மாதவன் இயம்ப வும்பர்கோன்
    ஒன்றும் வானவர் தம்மொ டொல்லெனச்
    சென்று மாயையின் செயலை நோன்பினால்
    வென்ற மாதவ னிருக்கை மேவினான்
    372 அகமலர்ந் தருந்தவன் அமரர்க் கன்புகூர்
    முகமலர்ந் தின்னுரை முகமன் கூறிநீர்
    மிகமெலிந் தெய்தினீர் விளைந்த தியாதது
    தகமொழிந் திடலென வலாரி சாற்றுவான்
    373 அடிகணீர் மறாததொன் றதனை வேண்டியிம்
    முடிகொள்வான் அவரொடு முந்தி னேனது
    செடிகொள்கா ரிருளுட லவுணர்த் தேய்த்தெமர்
    குடியெலாம் புரப்பதோர் கொள்கைத் தாயது
    374 யாதெனி னினையதுன் யாக்கை யுள்ளதென்
    றோதலும் யாவையு முணர்ந்த மாதவன்
    ஆதவற் கண்டதா மரையி னானனப்
    போதலர்ந் தின்னன புகல்வ தாயினான்
    375 நாள்நம தெனநரி நமதெ னப்பிதாத்
    தாய்நம தெனநமன் றனதெ னப்பிணி
    பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோ
    லாய்நம தெனப்படும் யாக்கை யாரதே
    376 விடம்பயி லெயிற்றர வுரியும் வீ நுழை
    குடம்பையுந் தானெனுங் கொள்கைத் தேகொலாம்
    நடம்பயல் கூத்தரி னடிக்கு மைவர்வாழ்
    உடம்பையும் யானென வுரைக்கற் பாலதோ
    377 நடுத்தயா விலார்தமை நலியத் துன்பநோய்
    அடுத்தயா வருந்திரு வடைய யாக்கையைக்
    கொடுத்தயா வற்ம்புகழ் கொள்வ னேயெனின்
    எடுத்தயாக் கையின்பயன் இதனின் யாவதே
    378 என்றனன் கரண மொன்றி யெழுகருத் தறிவை யீர்ப்ப
    நின்றனன் பிரம நாடி நெறிகொடு கபாலங் கீண்டு
    சென்றனன் விமான மேறிச் சேர்ந்தனன் உலகை நோன்பால்
    வென்றனன் துறக்கம் புக்கு வீற்றினி திருந்தா னம்மா
    379 அம்முனி வள்ளல் ஈந்த வடுபடை முதுகந் தண்டைத்
    தெம்முனை யடுபோர் சாய்க்குந் திறல்கெழு குலிசஞ் செய்து
    கம்மியப் புலவ னாக்கங் கரைந்துலைக் கொடுப்ப வாங்கி
    மைம்முகி லூர்தி யேந்தி மின்விடு மழைபோ னின்றான்
    380 மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன
    கறுத்தவாள் அவுணற் கொல்வான் கடும்பரி நெடுந்தேர் நீழ்ல்
    வெறுத்தமால் யானை மள்ளர் வேலைபுக் கெழுந்து குன்றம்
    அறுத்தவா னவர்கோ னந்த வவுணர்கோ மகனைச் சூழ்ந்தான்
    381 வானவர் சேனை மூண்டு வளைத்தலும் வடவைச் சேந்தீ
    யானது வரையி னோங்கி யழன்றுருத் தெழுந்தால் என்னத்
    தானவர் கோனு மானந் தலைக்கொள வெழுந்து பொங்கிச்
    சேனையுந் தானு மூண்டு சீறிநின் றடுபோர் செய்வான்
    382 அடுத்தன ரிடியே றென்ன வார்த்தனர் ஆக்கங் கூறி
    எடுத்தனர் கையிற் சாப மெறிந்தனர் சிறுநா ணோசை
    தொடுத்தனர் மீளி வாளி தூர்த்தனர் குந்த நேமி
    விடுத்தனர் வானோர் சேனை வீரர்மே லவுண வீரர்
    383 கிட்டினர் கடகக் கையாற் கிளர்வரை யனைய திண்டோள்
    கொட்டினர் சாரி மாறிக் குதித்தனர் பலகை நீட்டி
    முட்டின ரண்டம் விள்ள முழங்கினர் வடிவாள் ஓச்சி
    வெட்டின ரவுணச் சேனை வீரரை வான வீரர்
    384 வீழ்ந்தனர் தோளுந் தாளும் விண்டனர் சோரி வெள்ளத்
    தாழ்ந்தனர் போருந் தாரு மகன்றன ரகன்ற மார்பம்
    போழ்ந்தனர் சிரங்க ளெங்கும் புரண்டனர் கூற்றூர் புக்கு
    வாழ்ந்தன ரடுபோ ராற்றி வஞ்சகன் சேனை மள்ளர்
    385 தாளடு கழலு மற்றார் தலையொடு முடியு மற்றார்
    தோளடு வீர மற்றார் தும்பையொ டமரு மற்றார்
    வாளடு கரமு மற்றார் மார்பொடு கவச மற்றார்
    கோளடும் ஆண்மை யற்றார் குறைபடக் குறையா மெய்யர்
    386 தொக்கன கழுகு சேனஞ் சொரிகுடர் பிடுங்கி யீர்ப்ப
    உக்கன குருதி மாந்தி யொட்டல்வாய் நெட்டைப் பேய்கள்
    நக்கன பாடல் செய்ய ஞாய்பினுட் கவந்த மாடப்
    புக்கன பிணத்தின் குற்றம் புதைத்தபார் சிதைத்த தண்டம்
    387 இவ்வகை மயங்கிப் போர்செய் திறந்தவ ரொழியப் பின்னுங்
    கைவ்வகை யடுபோ ராற்றிக் கரையிற்ந் தார்கண் மாண்டார்
    அவ்வகை யறிந்து வானத் தரசனு மவுணர் வேந்துந்
    தெய்வதப் படைகள் வீசிச் சீற்நின் றடுபோர் செய்வார்
    388 அனற்படை விடுத்தான் விண்ணோர் ஆண்டகை யதனைக் கள்வன்
    புனற்படை விடுத்துச் சீற்றந் தனித்தனன் புனிதன் காற்றின்
    முனைப்படை விடுத்தான் வெய்யோன் முழங்குகால் விழுங்கு நாகச்
    சினப்படை தொடுத்து வீசி விலக்கினான் றேவ ரஞ்ச
    389 நாகமாப் படைவிட் டார்த்தா னாகர்கோ னுவணச் செல்வன்
    வேகமாப் படையை வீசி விளக்கினான் றகுவர் வேந்தன்
    மோகமாப் படையைத் தொட்டு முடுக்கினான் முனைவன் அன்ன
    தேகமாப் படிறன் ஞானப் படைவிடுத் திருள்போ னின்றான்
    390 மட்டிடுதாரான் விட்ட வானவப் படைக்கு மாறு
    விட்டுடன் விலக்கி வேறும் விடுத்திடக் கனன்று வஞ்சன்
    முட்டிடமான வெங்கான் மூட்டிட கோபச் செந்தீச்
    சுட்டிடப் பொறாது பொங்கிச் சுராதிபன் இதனைச் செய்தான்
    391 வீங்கிருள் ஒதுங்க மேக மின்விதிர்த் தென்னக் கையில்
    ஓங்கிருங் குலிச வேலை யொல்லென விதிர்த்த லோடுந்
    தீங்குளம் போன்றிருண்ட திணியுடற் கள்வ னஞ்சி
    வாங்கிருங் கடலில் வீழ்ந்தான் மறைத்தமை நாக மொத்தான்
    392 ஓக்கவிந் திரனும் வீழ்ந்தான் உடல்சின வுருமே றன்றான்
    புக்கிடந் தேடிக் காணான் புண்ணிய முளரி யண்ணல்
    பக்கம்வந் தனைய செய்தி பகர்ந்தனன் பதகன் மாளத்
    தக்கதோர் சூழ்ச்சி முன்னிச் சராசர மீன்ற தாதை
    393 விந்தவெற் படக்கி னாற்கீ துரையென விடுப்ப மீண்டு
    சந்தவெற் படைந்தான் வானோர் தலைவனை முகமன் கூறிப்
    பந்தவெற் பறுத்தான் வந்த தெவனெனப் பறைகள் எல்லாஞ்
    சிந்தவெற் பறுத்தான் வந்த செயலெலா முறையாற் செப்பி
    394 யாலையு முணர்ந்த வெந்தைக் கியானெடுத் துணர்த்து கின்ற
    தாவாதென் னமருக் காற்றா தாழிபுக் கொளித்தான் ஆவி
    வீவது மவனால் வந்த விழுமநோ யெல்லா மின்று
    போவதுங் கருதி நும்பாற் புகுந்தன மடிகளென்றான்
    395 என்றவன் இடுக்கண் டீர்ப்பா னிகல்புரி புலன்க ளைந்தும்
    வென்றவ னெடியோன் றன்னை விடையவன் வடிவ மாக்கி
    நின்றவ னறிவா னந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி
    மன்றவ னூழிச் செந்தீ வடிவினை மனத்துட் கொண்டான்
    396 கைதவன் கரந்து வைகுங் கடலைவெற் படக்குங் கையிற்
    பெய்துழுந் தெல்லைத் தாக்கிப் பருகினான் பிறைசேர் சென்னி
    ஐயன தருளைப் பெற்றார்க் கதிசய மிதென்கொன் முன்று
    வையமுத் தொழிலுஞ் செய்ய வல்லவர் அவரே யன்றோ
    397 அறந்துறந் தீட்டு வார்த மரும்பெறற் செல்வம் போல
    வறந்தன படுநீர்ப் பௌவம் வடவைகட் புலப்பட் டாங்கு
    நிறைந்தசெம் மணியு மத்தீ நீண்டெரி சிகைபோ னீண்டு
    சிறந்தெழு பவளக் காடுந் திணியிருள் விழுங்கிற் றம்மா
    398 பணிகளின் மகுட கோடிப் பரப்பென விளங்கிப்பல்கா
    சணிகலப் பேழை பேழ்வாய் திறந்தனைத் தாகி யொன்பான்
    மணிகிடந் திமைக்கு நீரான் மகபதி வேள்விக் காவாய்த்
    திணியுடல் அவுணன்பட்ட செங்கள மனைய தன்றே
    399 வறந்தநீர் தன்னின் மின்னு வாள்விதிர்த் தென்னப் பன்மீன்
    எறிந்தன நெளிந்த நாகம் இமைத்தன வளைய முத்துஞ்
    செறிந்தன கரந்த யாமை சேர்ந்தபல் பண்டஞ் சிந்தி
    முறிந்தன வங்கங் கங்க முக்கின சிறுமீ னெல்லாம்
    400 செருவினில் உடைந்து போன செங்கண்வா ளவுண னங்கோர்
    அருவரை முதுகிற் கார்போ லடைந்துவா னாடர் செய்த
    உருகெழு பாவந் தானோ ருருவெடுத் திருந்து நோற்கும்
    பரிசென நோற்றா னின்னும் பரிபவ விளைவு பாரான்
    401 கைதவ நோன்பு நோற்குங் கள்வனைக் கண்டு வானோர்
    செய்தவ மனையான் யாணர் வச்சிரஞ் சீரிப் பான்போற்
    பொய்தவன் றலையைக் கொய்தான் புணரிவாய் நிறையச் சோரி
    பெய்தது வலாரி தன்னைப் பிடித்தது பிரமச் சாயை
    402 உம்மெனு மார்பைத் தட்டு முருத்தெழு மதிர்க்கும் போர்க்கு
    வம்மெனும் வாய்மடிக்கும் வாளெயி றதுக்கும் வீழுங்
    கொம்மென வோடுமீளுங் கொதித்தழுஞ் சிரிக்குஞ் சீறும்
    இம்மெனும் அளவு நீங்கா தென்செய்வா னஞ்சி னானே
    403 விரைந்தரன் றிசையோர் வாவி வீழ்ந்தொரு கமல நூலுட்
    கரந்தனன் மகவா னிப்பாற் கற்பக நாடு புல்லென்
    றிடுந்ததா லிருக்கு மெல்லை யிம்பரி னகுட னென்போன்
    அருமபரி மேத வேள்வி யாற்றினான் ஆற்று மெல்லை
    404 அரசிலா வறுமை நோக்கி யவனைவா னாடர் யாரும்
    விரை செய்தார் மகுடஞ் சூட்டி வேந்தனாக் கொண்டார் வேந்தாய்
    வருபவன் சசியை யீண்டுத் தருகென மருங்கு ளார்ப்போய்த்
    திரைசெய்நீ ரமுத னாட்குச் செப்பவக் கற்பின் மிக்காள்
    405 பொன்னுயிர்த் தனைய காட்சிப் புண்ணிய குரவன் முன்போய்
    மின்னுயிர்த் தனையா ணின்று விளம்புவாள் இதென்கொல் கெட்டேன்
    என்னுயிர்த் துணைவ னாங்கே யிருக்கமற் றொருவ னென்னைத்
    தன்னுயிர்த் துணையாகக் கொள்கை தருமமோ வடிக ளென்றாள்
    406 மாதவர் எழுவர் தாங்க மாமணிச் சிவிகை மீது
    போதரி னவனே வானோர் புரந்தர னவனே யுன்றன்
    காதல னாகு மென்றான் கைதொழுதற்கு நேர்ந்தம்
    மேதகு சிறப்பாலிங்கு வருகென விடுத்தா டூது
    407 மனிதரின் மகவா னாகி வருபவன் சிவிகை தாங்கும்
    புனித மாதவரை யெண்ணான் புண்கணோய் விளைவும் பாரான்
    கனிதரு காமந் துய்க்குங் காதலால் விரையச் செல்வான்
    இனிதயி ராணி பாற்கொண் டேகுமின் சர்ப்ப வென்றான்
    408 சர்ப்பமா கெனமுற் கொம்பு தாங்குமுன் னடக்குந் தென்றல்
    வெற்பனா முனிவன் சாபம் விளைத்தனன் விளைத்த லோடும்
    பொற்பமா சுணமே யாகிப் போயினா னறிவி லாத
    அற்பரா னவர்க்குச் செல்வம் அல்லது பகைவே றுண்டோ
    409 பின்னர்த்தங் குரவ னான பிரானடி பணிந்து வானோர்
    பொன்னகர் வேந்தன் இன்றிப் புலம்படை கின்ற தைய
    என்னுலங் குரவன் போயவ் விலஞ்சியு ளளித்தாற் கூவித்
    தன்னுரை யறிந்து போந்த சதமகற் கொண்டு மீண்டாள்
    410 கொடும்பழி கோட்பட் டான்றன் குரவனை வணங்கி யென்னைச்
    சுடும்பழி கழிய தெங்ஙன் சொல்லெனத் தொலைவ தோர்ந்தான்
    அடும்பழி மண்மேல் அன்றி யறாதுநீ வேட்டைக் கென்னப்
    படும்பழி யிதனைத் தீர்ப்பான் பார்மிசை வருதி யென்றான்
    411 ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
    தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்ப தன்றிப்
    பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்தகா ரணத்தால் வந்த
    வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற
    412 வாம்பரி யுகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோர்
    தாம்பரி வோடுஞ் சூழத் தாராதலத் திழிந்து செம்பொற்
    காம்பர் தோளி பங்கன் கயிலைமால் வரையைத் தாழ்ந்து
    தேம்பரி யலங்கன் மார்பன் றென்றிசை நோக்கிச் செல்வான்
    413 கங்கைமுத லளவிறந்த தீர்த்தமெலாம் போய்ப்படிந்து காசி காஞ்சி
    அங்கனக கேதார முதற்பதிகள் பலபணிந்து மவுணற் கொன்ற
    பொங்குபழி விடாதழுங்கி யராவுண்ண மாசுண்டு பொலிவு மாழ்குந்
    திங்களனை யான்கடம்ப வனத்தெல்லை யணித்தாகச் செல்லு மேல்வை
    414 தொடுத்தபழி வேறாகி விடுத்தகன்ற திந்திரன்றான் சுமந்த பாரம்
    விடுத்தவனொத் தளவிறந்த மகிழ்வெய்தித் தேசிகன் பால் விளம்பப் பாசங்
    கெடுத்தவன்மா தலம்புனித தீர்த்தமுள விவணமக்குக் கிடைத்தல் வேண்டும்
    அடுத்தறிக வெனச்சிலரை விடுத்தவ்வே றாநிலை நின்று அப்பாற் செல்வான்
    415 அருவிபடிந் தருவியெறி மணியெடுத்துப் பாறை யிலிட் டருவி நீர்தூய்க்
    கருவிரல்கொய் தலர்சூட்டிக் கனியூட்டு வழிபடுவ கல்லா மந்தி
    ஒருதுறையில் யாளிகரி புழைக்கைமுகந் தொன்றற் கொன் றூட்டி யூட்டிப்
    பருகுவன புலிமுலைப்பால் புல்வாய்க்கன் றருந்தியிடும் பசிநோய் தீர
    416 நெளியராக் குருளைவெயில் வெள்ளிடையிற் கிடந்துயங்கி நெளியப் புள்ளே
    றொலியறாச் சிறைவிரித்து நிழல்பரப்பப் பறவைநோய் உற்ற தேகொல்
    அளியவா யச்சோவென் றோதியயன் மடமந்தி யருவி யூற்றுந்
    துளியநீர் வளைத்தசும்பின் முகந்தெடுத்துக் கருங்கையினாற் சொரிவ மாதோ
    417 படவரவ மணியீன்று நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை
    பெடைதழுவி மணஞ்செய்ய மணவறையில் விளக்கிடுவ பெருந்தண் கானத்
    தடர்சிறைமென் குயிலோமென் றார்ப்பமடக் கிள்ளையெழுத் தைந்தும் ஓசை
    தொடர்புபெற வுச்சரிப்பக் குருமொழிகேட்டாங் குவப்ப தொடிக்கட் பூவை
    418 இன்னவிலங் கொடுபுள்ளின் செயற்கரிய செயனோக்கி யிறும்பூ தெய்திப்
    பொன்னகரான் புளகமுடல் புதைப்பநிறை மகிழ்ச்சியுளம் புதைப்பப் போவான்
    அன்னபொழு தொற்றுவர்மீண் டடிவணங்கி யின்சுவைப்பால் அருந்து வான்முன்
    பின்னரிய தேன்சொரிந்தாங் குவகைமேற் பேருவகை பெருகச் சொல்வார்
    419 எப்புவனத் திலுமென்றுங் கண்டறியா வதிசயமு மெண்ணுக் கெய்தாத்
    திப்பியமு மிக்கடம்ப வனத்தின்று கண்டுவகை திளைத்தே பங்கண்
    வைப்பனைய வொருபுனித வாவிமருங் கொருகடம்ப வனத்தினீழல்
    ஒப்பிலொளி யாய்முளைத்த சிவலிங்க மொன்றுள தென் றுரைப்பக் கேட்டான்
    420 செவித்துளையி லமுதொழுக்கு முழையரொடும் வழிக்கொண்டு சென்னிமேற்கை
    குவித்துளமெய் மொழிகரணங் குணமூன்று மொன்றித்தன் கொடிய பாவம்
    அவித்துளயர் வொழிக்கமுளைத் தருள்குறிமேல் அன்பீர்ப்ப வடைவான் கானங்
    கவித்துளபூந் தடம்படிந்து கடம்பவனத் துழைநுழைந்தான் கவலை தீர்வான்
    421 அருவாகி யுருவாகி யருவுவங் கடந்துண்மை யறிவா னந்த
    உருவாகி யளவிறந்த வுயிராகி யவ்வுயிர்க்கோர் உணர்வாய்ப் பூவின்
    மருவாகிச் சராசரங்க ளகிலமுந்தன் னிடையுதித்து மடங்க நின்ற
    கருவாகி முளைத்தசிவக் கொழுந்தையா யிரங்கண்ணுங் களிப்பக் கண்டான்
    422 கண்டுவிழுந் தெழுந்துவிழி துளிப்பவெழு களிப்பென்னுங் கடலில் ஆழ்ந்து
    விண்டுமொழி தழுதழுப்ப வுடல்பனிப்ப வன்புருவாய் விண்ணோர் வேந்தன்
    அண்டர்பிரா னருச்சனைக்கு வேண்டுமுப கரணமெலா மகல்வா னெய்திக்
    கொண்டுவரச் சிலரைவிடுத் தவரேகப் பின்னுமொரு குறைவு தீர்ப்பான்
    423 தங்குடிமைத் தச்சனையோர் விமானமமைத் திடவிடுத்தத் தடத்தின் பாற்போய்
    அங்கணனைக் கடிதருச்சித் திடநறிய மலர்கிடையா தயர்வா னந்தச்
    சங்கெறிதண் டிரைத்தடத்தில் அரனருளாற் பலபரிதி சலதி யொன்றிற்
    பொங்குகதிர் பரப்பிமுளைத் தாலென்னப் பொற்கமலம் பூப்பக் கண்டான்
    424 அன்புதலை சிறப்புமகிழ்ந் தாடினான் காரணத்தால் அதற்குநாமம்
    என்பதுபொற் றாமரையென் றேழுலகும் பொலிகவென விசைத்துப் பின்னும்
    மின்பதுமத் தடங்குடைந்து பொற்கமலங் கொய்தெடுத்து மீண்டு நீங்காத்
    தன்பிணிநோய் தணியமுளைத் தெழுந்தமுழு முதன்மருந்தின் றன்பால் வந்து
    425 மொய்த்தபுனக் காடெறிந்து நிலந்திருத்தி வருமளவின் முளைத்த ஞான
    வித்தனைய சிவக்கொழுந்தின் றிருமுடிமேற் பரிதிகா மெல்லத் தீண்டச்
    சிந்தநெகிழ்ந் திந்திரன்றன் வெண்கவிகைத் திங்கணிழல் செய்வான் உள்ளம்
    வைத்தனனப் போதிரவி மண்டலம்போ லிழிந்த தொரு மணிவி மானம்
    426 கிரியெட்டு மெனமழையைக் கிழித்தெட்டும் புழைக்கைமதிக் கீற்றுக் கோட்டுக்
    கரியெட்டுஞ் சினமடங்க னாலெட்டு மெட்டெட்டுக் கணமுந்தாங்க
    விரியெட்டுத் திசைபரப்ப மயனிருமித் துதவியவவ் விமானஞ் சாத்தி
    அரியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை யருச்சிப்பான் ஆயி னானே
    427 முந்தவம ருலகடைந்து பூசனைக்கு வேண்டுவன முழுதந் தேர்வார்
    வந்துதரு வைந்தீன்ற பொன்னாடை மின்னுமிழு மணிப்பூண் வாசச்
    சந்தனமந் தாகினிமஞ் சனந்தூபந் திருப்பள்ளித் தாமந் தீபம்
    அந்தமிலா னைந்துநறுங் கனிதீந்தேன் றிருவமுத மனைத்துந் தந்தார்
    428 தெய்வத்தா மரைமுளைத்த தடம்படிந்து பவந்தொலைக்குந் திருநீ றாடித்
    சைவத்தாழ் வடந்தாங்கி யன்புருவாய் அருளுவந் தானாய்த் தோன்றும்
    பைவைத்தா டரவார்த்த பசுபதியை யவனுரைத்த பனுவ லாற்றின்
    மெய்வைத்தா தரம்பெருக வருச்சனைசெய் தானந்த வெள்ளத் தாழ்ந்தான்
    429 பாரார வட்டாங்க பஞ்சாங்க விதிமுறையாற் பணிந்துள் வாய்மெய்
    நேராகச் சூழ்ந்துடலங் கம்பித்துக் கும்பிட்டு நிருத்தஞ் செய்து
    தாராருந் தொடைமிதப்ப வானந்தக் கண்ணருவி ததும்ப நின்றன்
    பாராமை மீக்கொள்ள வஞ்சலித்துத் துதிக்கின்றான் அமரர் கோமான்
    430 அங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக
    கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச்
    செங்கணா போற்றி யாதி சிவபரஞ் சுடரே போற்றி
    எங்கணா யகனே போற்றி யீறிலா முதலா போற்றி
    431 யாவையும் படைப்பாய் போற்றி யாவையுந் துடைப்பாய் போற்றி
    யாவையு மானாய் போற்றி யாவையும் அல்லாய் போற்றி
    யாவையு மறிந்தாய் போற்றி யாவையு மறந்தாய் போற்றி
    யாவையு புணர்ந்தாய் போற்றி யாவையும் பிரிந்தாய் போற்றி
    432 இடருறப் பிணித்த விந்தப் பழியினின் றென்னை யீர்த்துன்
    அடியிணைக் கன்ப னாக்கு மருட்கடல் போற்றி சேற்கண்
    மடவரன் மணாள் போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி
    சுடர்விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி
    433 பூசையும் பூசைக்கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
    நேசனும் பூசை கொண்டு நியதியின் பேறு நல்கும்
    ஈசனுமாகிப் பூசை யான்செய்தேன் என்னுமென் போத
    வாசனை யதுவுமான மறைமுத லடிகள் போற்றி
    434 என்னநின் றேத்தி னானை யின்னகை சிறிது தோன்ற
    முன்னவ னடியார் எண்ண முடிப்பவ னருட்க ணோக்கால்
    உன்னது வேட்கை யாதிங் குரையென விரையத் தாழ்ந்து
    சென்னிமேற் செங்கை கூப்பித் தேவர்கோ னிதனை வேண்டு
    435 ஐயநின் னிருக்கை யெல்லைக் கணியனாம் அளவி னீங்கா
    வெய்யவென் பழியி னோடு மேலை நாளடியேன் செய்த
    மையல்வல் விளையு மாய்ந்துன் மலரடி வழுத்திப் பூசை
    செய்யவு முரிய னானேன் சிறந்தபே றிதன்மேல் யாதோ
    436 இன்னநின் பாதப் போதே யிவ்வாறே யென்றும் பூசித்
    துன்னடி யாருள் யானு மோரடித் தொண்டன் ஆவேன்
    அன்னதே யடியேன் வேண்டத் தக்கதென் றடியில் வீழ்ந்த
    மன்னவன் றனக்கு முக்கண் வரதனுங் கருணை பூத்து
    437 இருதுவிற் சிறந்த வேனிலு மதியா றிரண்டிச் சிறந்தவான் றகரும்
    பொருவிறா ரகையிற் சிறந்தசித் திரையுந் திதியினிற் சிறந்தபூ ரணையும்
    மருவுசித் திரையிற் சித்திரை தோறும் வந்துவந் தருச்சியோர் வருடந்
    தெரியுநாண் முந்நூற் றறுபது மைந்துஞ் செய்தவர்ச் சனைப்பயன் எய்தும்
    438 துறக்கநா டணைந்து சுத்தபல் போகந் துய்த்துமேன் மலபரி பாகம்
    பிறக்கநான் முகன்மான் முதற்பெருந் தேவர் பெரும் பதத் தாசையும் பிறவும்
    மறக்கநாம் வீடு வழங்குதும் என்ன வாய்மலர்ந் தருளிவான் கருணை
    சிறக்கநால் வேதச் சிகையெழு மநாதி சிவபரஞ் சுடர்விடை கொடுத்தான்
    439 மூடினான் புளகப் போர்வையால் யாக்கை முடிமிசை யஞ்சலிக் கமலஞ்
    சூடினான் வீழ்ந்தான் எழுந்துகண் ணருவி பன்முறை துதிசெய்
    தாடினா னைய னடிபிரி வாற்றா தஞ்சினா னவனரு ளாணை
    நாடினான் பிரியாவிடைகொடு துறக்க நண்ணினான் விண்ணவர் நாதன்
    440 வந்தரமங் கையர் கவரி மருங்கு வீச
            மந்தார கற்பகப்பூ மாரி தூற்ற
    அந்தரநாட் டவர்முடிகள் அடிகள்சூட வயிராணி
            முலைத்த டந்தோய்ந் தகலந் திண்டோள்
    விந்தமெனச் செம்மாந்து விம்மு காம வெள்ளத்து
            ளுடலழுந்தவுள்ளஞ் சென்று
    சுந்தரநா யகன் கருணை வெள்ளற் தாழ்ந்து தொன்
            முறையின் முறைசெய்தான் துறக்க நாடன்

    இந்திரன் பழிதீர்த்தப் படலம் சுபம்
    ------------

    2. வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம் (441-471 )


    441 தொட்ட பழியின் றொடக்கறுத்த வாறீது
    பட்டமத வேழம் பரனைப் பராய் முனிவன்
    அட்டகொடுஞ் சாபநீத் தேகியவாறு ஓதுவாம்
    442 கருவா சனைகழிக்குங் காசிநகர் தன்னிற்
    றுருவாச வேதமுனி தொல்லா கமத்தின்
    பெருவாய்மை யாற்றன் பெயர் விளங்க வீசன்
    ஒருவா விலிங்க வொளியுருவங் கண்டான்
    443 இன்புற் றருச்சனைசெய் தேத்துவான் அவ்வேலை
    அன்புக் கெளிய னருளாற் றிருமுடிமேன்
    மின்பொற் கடிக்கமலப் போதொன்று வீழ்த்திடலுந்
    தன்பொற் கரகமலப் போதலர்த்தித் தாங்கினான்
    444 தாங்கிக்கண் சென்னி தடமார் பணைத்துடலம்
    வீங்கித் தலைசிறந்த மெய்யுவகை மேற்கொள்ள
    நீங்கிக் கழிந்த கருணை நிதியனையான்
    யங்கற் பகநாட்டிற் போகின்றான் அவ்வேலை
    445 சங்கலறச் செங்களத்துத் தானவரைத் தேய்த்துவிறற்
    கொங்கலர்ந்தார் வேய்ந்தமரர் கோமான்றன் கோநகரிற்
    செங்கண் அமரர்பெருஞ் சேனைக் கடல் கலிப்ப
    மங்கலப்பல் லாண்டு மறைமுழங்க வந்தணைவான்
    446 எத்திக்குங் கல்லென் றியங்கலிப்ப வேந்திழையார்
    தித்தித்து அமுதொழுக்குங் கீதஞ் செவிமடுப்பப்
    பத்திக் கவரிநிரை தானைபடுகடலிற்
    றத்திப் புரளுந் திரைபோற் றலைபனிப்ப
    447 அங்கட் கடலி னெடுங்கூடம் பகநிமிர்ந்த
    வங்கத் தலையுய்க்கு மீகான் றனைமானத்
    திங்கட் குடைநிழற்றத் தீந்தே மதங்கவிழ்க்கும்
    வெங்கற் களிற்றின் மிசைப்பவனி போந்தணைந்தான்
    448 அத்தலைவிண் ணாடர் அருகணைந்து வெவ்வேறு
    தத்த மனக்கிசைந்த கையுறைக டாங்கொடுத்துக்
    கைத்தலங்கள் கூப்பினார் கண்டார் கடவுளரில்
    உத்தமனை யர்ச்சித்துப் போந்தமுனி யுத்தமனும்
    449 தீங்கரிய வாசிமொழி செப்பித்தன் செங்கரத்தின்
    நீங்கரிய தாமரையை நீட்டினான் மற்றதனைத்
    தாங்கரிய செல்வத் தருக்காலோர் கையோச்சி
    வாங்கிமத யானையின்மேல் வைத்தான் மதியில்லான்
    450 கீறிக் கிடந்த மதியனைய கிம்புரிகோட்
    டூறிக் கடங்கவிழ்க்கு மால்யானை யுச்சியின்மேல்
    நாறிக்கிடந்த நறுமலரை வீழ்த்தியுரற்
    சீறிக்கிடந்த நெடுந் தாளாற் சிதைத்தன்றே
    451 கண்டான் முனிகாமற் காய்ந்தா னுதற்கண்போல்
    விண்டார் அழல்சிதற நோக்கினான் வெங்கோபங்
    கொண்டா னமர ரொதுங்கக் கொதித்தாலம்
    உண்டா னெனநின் றுருத்தா னுரைக்கிறான்
    452 புள்ளியதோ லாடை புனைந்தரவம் பூணணிந்த
    வெள்ளிய செங்கண் விடையான் அடிக்கமலம்
    உள்ளிய மெய்யன் புடையா ரருவருத்துத்
    தள்ளிய செல்வத் தருக்கினா யென்செய்தாய்
    453 கதிர்த்தார் முடியமரர் கையுறையே நன்கு
    மதித்தா யெம்மீசன் மதிமுடிமேற் சாத்தும்
    பொதித்தா தவிழ்மலரைப் போற்றாது வாங்கி
    மிதித்தானை சிந்தவதன் மேல்வைத்தாய் பேதாய்
    454 வண்டுளருந் தண்டுழாய் மாயோன் இறுமார்ப்பும்
    புண்டரிகப் போதுறையும் புத்தே ளிறுமாப்பும்
    அண்டர்தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம்
    உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்
    455 சேட்டானை வானவநின் சென்னி செழியரிலோர்
    வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின்
    கோட்டான நாற்கோட்டு வெண்ணிறத்த குஞ்சரமும்
    காட்டானை யாகவென விட்டான் கடுஞ்சாபம்
    456 சவித்தமுனி பாதந் தலைக்கொண்டு செங்கை
    குவித்தமரர் தங்கோன் குறையிரப்பா ரைய
    அவித்தபொறி யாயெம் மரசுங்கா றள்ளுஞ்
    செவித்தறுகண் வேழமுந் தீங்குடையர் அன்றோ
    457 அத்தகைய நீராற் சபித்தீ ரடிகேன்மற்
    றித்தகைய சாப மினிவிடுமின் என்றிரந்து
    கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க் கிரங்கியருள்
    வைத்த முனிபிறிது சாபம் வகுக்கின்றான்
    458 சிந்தனை வாக்கிற் கெட்டாச் சிவனருள் அளித்த சேட
    நிந்தனை பரிகா ரத்தா னீங்காது தலைமட் டாக
    வந்தது முடிமட் டாக மத்தமா வனமா வாகி
    ஐந்திரு பஃதாண் டெல்லை யகன்றபின் பண்டைத் தாக
    459 என்றனன் பிறிது சாபம் இந்திரன் மகுட பங்கம்
    ஒன்றிய செய்கை பின்ன ருரைத்துமற் றஃது நிற்க
    நின்றவெள் ளானை வான நீத்தறி விழுந்து நீலக்
    குன்றென வனத்து வேழக் குழாத்தொடு குழீ இய தன்றே
    460 மாவொடு மயங்கிச் செங்கன் மறம்பயில் காடு முல்லைப்
    பூவொடு வழங்கு நீத்தப் புறவமுங் குறவர் தங்கள்
    தேவொடு பயிலுங் கல்லுந் திரிந்துநூ றியாண்டுஞ் செல்லக்
    காவொடு பயிலுந் தெய்வக் கடம்பமா வனம்புக் கன்றே
    461 புக்குரல் வட்டத் திண்காற் பொருவிறே வியலிற் றீர்ந்த
    மைக்கருங் களிறு முக்கண் மாதவன் அருள்வந் தெய்தத்
    தக்கதோ ரமையஞ் சார மரகதந் தழைத்து மின்னு
    நக்கபொன் முளரி பூத்த நளிர்கயந் தலைக் கண் டன்றே
    462 கண்டபோ தறிவு தோன்றக் கயந்தலைக் குடைந்த போது
    பண்டைய வடிவந் தோன்றப் பரஞ்சுடர் அருட்கண் டோன்றக்
    கொண்டதோர் பரமா னந்தக் குறியெதிர் தோன்றக் கும்பிட்
    டண்டர்நா யகனைப் பூசை செய்வதற் கன்பு தோன்ற
    463 தூம்புடைக் கையான் மொண்டு மஞ்சனத் தாநீ ராட்டித்
    தேம்புடை யொழுகப் பள்ளித் தாமமுந் தெரிந்து சாத்திப்
    பாம்புடைத் தாயவேணிப் பரனையர்ச் சிக்கவுள்ளத்
    தாம்புடை யறிந்த வெந்தை யானையை நோக்கிக் கூறும்
    464 வந்ததை யெவனீ வேண்டும் வரமெவன் உரைத்தி யென்னச்
    சிந்தையி லன்பு கூர்ந்த தெய்வத வேழந் தாழ்ந்து
    முந்தையில் விளைவும் வந்த முறைமையு முறையாற் கூறி
    எந்தையை யடையப் பெற்றேற் கினியொரு குறையுண் டாமோ
    460 என்பதா மாரம் பூண்ட வெந்தையிக் கரிக ளெட்டோ
    டொன்பதா யடிய னேனு முன்னடி பிரியா துன்றன்
    முன்பதா யிவ்வி மான முதுகுறச் சுமப்ப லென்றோர்
    அன்பதா யொன்றென் னுள்ளத் தடுத்ததா லஃதே வேண்டும்
    466 இடையறா வன்பின் வேழ மிங்ஙனங் கூற விண்ணா
    டுடையவ னம்பான் மெய்யன் புடையவன் அவனைத் தாங்கி
    அடைவதே நமக்கு வேண்டு மகமகிழ் வென்னாப் பின்னும்
    விடையவள் வரங்க ணல்கி விடைகொடுத் தருளி னானே
    467 விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை
    மேற்றிசை யடைந்துதன் பெயராற்
    றடமுமற் றதன்பால் ஆனையுங் கணேசன்
    றன்னையுங் கண்டருச் சனைசெய்
    திடையறா வன்புந் தானுமங் கிருக்கு மெல்லையிச்
    செய்திகேட் டருள்கூர்
    கடவுளர் பெருமா னுழையரை விளித்தெங்
    களிற்றினைக் கொணர்கென விடுத்தான்
    468 வல்லைவந் தழைத்தார் தம்மைமுன் போக்கி
    வருவ லென் றெழுந்துகீழ்த் திசையோர்
    எல்லைவந் தோரூர் தன்பெய ராற்கண் டிந்திரேச்
    சிரனென விறைவன்
    றொல்லைவண் பெயரா லொன்றுகண் டரனைத்
    தூயபூ சனைசெய்தல் கிருப்பக்
    கல்லைவன் சிறகு தடிந்தவன் இன்னுங் களிறுவந்
    திலதெனப் பின்னும்
    469 மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப வானடைந்
    திறைவனை வணங்கிப்
    புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட் புன்கணோ
    யுறவரு சாபங்
    கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு சுளைந்ததுங்
    கிளந்துதிக் கயத்தின்
    இனத்தினுங் கழிந்த தெய்வத வேழம் இனிதுவீற
    றிருந்தது மாதோ
    470 குடவயி னயிரா வதப்பெருந் தீர்த்தங் குடைந்தயி ராவத கணேசக்
    கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத்
    தொடர்பினும் பாவத் தொடர்பினுங் கழிவர் சுராதிபன் களிறுசென்னெறிபோய்
    இடர்கெட வைகை படிந்துதென் கரையில் இந்திரேச் சுரனடி பணிவோர்
    471 இம்மையி லறமுன் மூன்றால் எம்திய பயனை யெய்தி
    அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில்
    வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச்
    செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவார்

    வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம் சுபம்
    ------------------


    3. திருநகரம் கண்ட படலம் (472- 518)

    472 தான வாறிழி புகர்முகத் தடுகரி சாபம்
    போன வாறுரை செய்துமேற் புதுமதி முடிமேல்
    வான வாறினன் கடம்பா வனமுது நகரம்
    ஆன வாறது தனைச்சிறது அறிந்தவா றறைவாம்
    473 இன்ன ரம்புளர் ஏழிசை யெழிஅன்மிடற் றளிகள்
    கின்ன ரம்பயில் கட்ம்பமா வனத்தினின் கீழ்சார்த்
    தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக
    மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மண்வூர்
    474 குலவு மப்பெரும் பதியிளங் கோக்களில் ஒருவன்
    நிலவு மாநிதி போலருச் சனைமுத னியதி
    பலவு மாஞ்சிவ தருமமுந் தேடுவான் பரன்பாற்
    றலைமை சான்றமெய் யன்பினான் தனஞ்சயன் என்பான்
    475 செல்வ மாநக ரிருந்துமேற் றிசைப்புலஞ் சென்று
    மல்லல் வாணிகஞ் செய்துதன் வளம்பதி மீள்வான்
    தொல்லை யேழ்பவக் கடற்கரை தோற்றுவித் தடியார்
    அல்ல றீர்ப்பவன் கடம்பமா வனம்புகும் அளவில்
    476 இரவி கண்மறைந் தேழ்பரி யிரத முந் தானும்
    உரவு நீர்க்கருங் கடலில் வீழ்ந் தொளித்தன னாக
    இரவு நீண்மயங் கிருள்வயிற் றமியனாய் மெலியும்
    அரவு நீர்ச்சடை யண்ணலுக் கன்பினோ னாங்கண்
    477 வாங்கு நான்மருப் பேந்திய மதமலை யெருத்தந்
    தாங்கி யாயிரங் கரங்களாற் றடவியெண்டி சையுந்
    தூங்கு காரிரு டுரத்துசெஞ் சுடரெனச் சூழ்போய்
    வீங்கு காரிரு ளதுக்கிய விமானனேர் கண்டான்
    478 அடுத்த ணைந்தனன் அவிர்சுடர் விமானமீ தமர்ந்த
    கடுத்த தும்பிய கண்டனைக் கண்டுதாழ்ந் துவகை
    மடுத்த நெஞ்சினா னங்ஙனம் வைகிருள் கழிப்பான்
    எடுத்த சிந்தையி னிடுந்தன னிருக்குமவ் விருள்வாய்
    479 சோம வாரமன் றாதலாற் சுரர்களங் கெய்தி
    வாம மேகலை மலைமக டலைமகன் மலர்ந்த
    காமர் சேவடி பணிந்தவன் கங்குல்போற் கருதி
    யாம நான்கினு மருச்சனை யின்புறப் புரிவா
    480 அண்டர் வந்தது மருச்சனை புரிவது மனைத்துந்
    தொண்டர் அன்பினுக் கெளியவன் சுரர்தொழக் கறுத்த
    கண்ட னின்னருட் கண்ணினாற் கண்டன னுதலிற்
    புண்ட ரம்பயி லன்புடைப் புண்ணிய வணிகன்
    481 நான மென்பனி நறும்புன னாயகன் பூசைக்
    கான நல்விரை வருக்கமும் அமரர்கைக் கொடுத்து
    ஞான வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கர்த்
    தான மர்ந்தருச் சனைசெய்வான் றங்கணா யகனை
    482 வள்ள றன்னைமெய் யன்பினால் அருச்சனைசெய் வானோர்
    உள்ள வல்வினை யீட்டமுங் கங்குலு மொதுங்கக்
    கள்ள மில்லவன் யாரையுங் கண்டிலன் கண்டான்
    தள்ள ருஞ்சுடர் விமானமேற் றனித்துறை தனியை
    483 ஆழ்ந்த சிந்தையன் அதிசய மடைந்துசே வடிக்கீழ்த்
    தாழ்ந்தெ ழுந்திரு கைகளுந் தலைமிசைக் கூப்பிச்
    சூழ்ந்து தன்பதிக் கேகுவா னொருதலை துணிந்து
    வாழ்ந்த வன்பினான் விடைகொடு வழிக்கொடு வந்தான்
    484 முக்க டம்படு களிற்றினான் முகிறவழ் கோயில்
    புக்க டங்கலர் சிங்கமன் னானெதிர் புகல்வான்
    திக்க டங்கலுங் கடந்தவெந் திகிரியாய் நெருநல்
    அக்க டம்பமா வனத்திலோர் அதிசயங் கண்டேன்
    485 வல்லை வாணிகஞ் செய்துநான் வருவழி மேலைக்
    கல்ல டைந்தது வெங்கதிர் கங்குலும் பிறப்பும்
    எல்லை காணிய கணடனன் இரவிமண் டலம்போல்
    அல்ல டுஞ்சுடர் விமானமு மதிற்சிவக் குறியும்
    486 மாவ லம்புதார் மணிமுடிக் கடவுளர் வந்தத்
    தேவ தேவனை யிரவெலாம் அருச்சனை செய்து
    போவ தாயினார் யானுமப் பொன்னெடுங் கோயின்
    மேவு மீசனை விடைகொடு மீண்டன னென்றான்
    487 மூளு மன்பினான் மொழிந்திட முக்கணெம் பெருமான்
    றாளு மஞ்சலி கரங்களுந் தலையில்வைத் துள்ளம்
    நீளு மன்புறமற் புதமுமே நிரம்பநீர் ஞாலம்
    ஆளு மன்னவன் இருந்தனன் போயினா னருக்கன்
    488 ஈட்டு வார்வினை யொத்தபோ திருண்மலங் கருக
    வாட்டு வார்அவர் சென்னிமேன் மலரடிக் கமலஞ்
    சூட்டு வார்மறை கடந்ததந் தொல்லுரு விளங்கக்
    காட்டு வாரொரு சித்தராய்த் தோன்றினார் கனவில்
    489 வடிகொள் வேலினாய் கடம்பா வனத்தினைத் திருந்தக்
    கடிகொள் காடகழ்ந் தணிநகர் காண்கென வுணர்த்தி
    அடிகள் ஏகினார் கவுரிய ராண்டகை கங்குல்
    விடியும் வேலைகண் விழித்தனன் பரிதியும் விழித்தான்
    490 கனவிற் றீர்ந்தவ னியதியின் கடன்முடித் தமைச்சர்
    சினவிற் றீர்ந்தமா தவர்க்குந்தன் கனாத்திறஞ் செப்பி
    நனவிற் கேட்டதுங் கனவிற் கண்டது நயப்ப
    வினவித் தேர்ந்துகொண் டெழுந்தனன் மேற்றிசைச் செல்வான்
    491 அமைச்ச ரோடுமந் நீபமா வனம்புகுந் தம்பொன்
    சமைச்ச விழ்ந்தபொற் றாமரைத் தடம்படிந் தொளிவிட்
    டிமைச்ச லர்ந்தபொன் விமானமீ தினிதுவீற் றிருந்தோர்
    தமைச்ச ரண்பணிந்து அஞ்சலி தலையின்மேன் முகிழ்த்தான்
    492 அன்பு பின்றள்ள முன்புவந் தருட்கணீர்த் தேக
    என்பு நெக்கிட வேகிவீழ்ந் திணையடிக் கமலம்
    பொன்பு னைந்ததார் மௌலியிற் புனைந்தெழுந்து இறைவன்
    முன்பு நின்றுசொற் பதங்களாற் றோத்திர மொழிவான்
    493 சரண மங்கையோர் மங்குறை சங்கர சரணஞ்
    சரண மங்கல மாகிய தனிமுதல் சரணஞ்
    சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ்
    சரண மும்பர்க ணாயக பசுபதி சரணம்
    494 ஆழி ஞாலமே லாசையும் அமரர்வான் பதமேல்
    வீழு மாசையும் வெறுத்தவர்க் கன்றிமண் ணாண்டு
    பீழை மூழ்கிவா னரகொடு பிணிபடச் சுழலும்
    ஏழை யேங்களுக் காவதோ வெந்தைநின் கருணை
    495 சூள தாமறைச் சென்னியும் தொடத்தொட நீண்ட
    நீள னீயுனக் கன்பில மாயினு நீயே
    மூள வன்புதந் தெங்குடி முழுவதும் பணிகொண்
    டாள வேகொலிக் கானகத் தமர்ந்தனை யென்னா
    496 சுரந்த வன்பிரு கண்வழிச் சொரிவபோற் சொரிந்து
    பரந்த வாறொடு சிவானந்தப் பரவையுட் படிந்து
    வரந்த வாதமெய் யன்பினால் வலங்கொடு புறம்போந்
    தரந்தை தீர்ந்தவன் ஒருசிறை யமைச்சரோ டிருந்தான்
    497 ஆய வேலையின் மன்னவ னாணையால் அமைச்சர்
    மேய வேவலர் துறைதுறை மேவினர் விடுப்பப்
    பாய வேலையி னார்த்தனர் வழிக்கொடு படர்ந்தார்
    சேய காடெறிந் தணிநகர் செய்தொழின் மாக்கள்
    498 வட்ட வாய்மதிப் பிளவின்வெள் வாய்க்கூரிய நவியம்
    டூட்ட தோளினர் யாப்புடைக் கச்சினர் இரும்பின்
    விட்ட காரொளி மெய்யினர் விசிகொள்வார் வன்றோல்
    தொட்ட காலினர் வனமெறி தொழிலின ரானார்
    499 மறியு மோதைவண் டரற்றிட மரந்தலை பனிப்ப
    எறிய மோதையு மெறிபவ ரோதையும் இரங்கி
    முறிய மோதையு முரிந்துவீ ழோதையு முகில்வாய்ச்
    செறியு மோதையிங் கீழ்ப்பட மேற்படச் செறியும்
    500 ஒளிறு தாதொடு போதுசெந் தேனுக வொலித்து
    வெளிறில் வன்மரஞ் சினையிற் வீழ்வசெங் களத்துப்
    பிளிறு வாயவாய் நிணத்தொரு குருதிநீர் பெருகக்
    களிறு கோடிற மாய்ந்துவீழ் காட்சிய வனைய
    501 பூவ டைந்தவண் டினமயற் புறவொடும் பழனக்
    காவ டைந்தன பறவைவான் கற்பக மடைந்த
    கோவ டைந்திட வொதுங்குறுங் குறும்புபோற் செறிந்து
    மாவ டைந்தன மாடுள வரைகளுங் காடும்
    502 இருணி ரம்பியவனவெலா மெறிந்துமெய் யுணர்ந்தோர்
    தெருணி றைந்தசிந் தையின்வெளி செய்துபல் லுயிர்க்கும்
    அருணி றைந்துபற் றறுத்தர னடிநிழ லடைந்த
    கருணை யன்பர்தம பிறப்பென வேரொடுங் களைந்தார்
    503 களைந்து நீணிலந் திருத்திச்செந் நெறிபடக் கண்டு
    வளைந்து நன்னக ரெடுப்பதெவ் வாறெனத் தேறல்
    விளைந்து தாதுகு தார்முடி வேந்தன்மந் திரரோ
    டளைந்த ளாவிய சிந்தையோ டிருந்தன னங்கண்
    504 மெய்ய ரன்புதோய் சேவடி வியனிலந் தீண்டப்
    பொய்ய கன்றவெண் ணீறணி மேனியர் பூதிப்
    பையர் நள்ளிருட் கனவில்வந் தருளிய படியே
    ஐயர் வல்லைவந் தருளினா ரரசுளங் களிப்ப
    505 கனவி லும்பெருங் கடவுளர் காண்பதற் கரியார்
    நனவி லும்வெளி வந்தவர் தமையெதிர் நண்ணி
    நினைவி னின்றதா ளிறைஞ்சிநேர் நின்றுநல் வரவு
    வினவி யாதனங் கொடுத்தனன் மெய்யுணர் வேந்தன்
    506 தென்ன ரன்பினில் அகப்படு சித்தர்தா முன்னர்ச்
    சொன்ன வாதிநூல் வழிவரு சார்புநூற் றொடர்பால்
    நன்ன ராலய மண்டபங் கோபுர நகரம்
    இன்ன வாறுசெய் யெனவகுத் திம்மென மறைந்தார்
    507 மறைந்தெ வற்றினு நிறைந்தவர் மலரடிக் கன்பு
    நிறைந்த நெஞ்சுடைப் பஞ்சவ னிலத்துமேம் பட்டுச்
    சிறந்த சிற்பநூற் புலவராற் சிவபரஞ் சுடர்வந்
    தறைந்து வைத்தவா றாலய மணிநகர் காண்பான்
    508 மறைபயில் மதும மண்டப மருத்த மண்டப மழை நுழை வளைவாய்ப்
    பிறைபயில் சிகைமா மண்டப மறுகாற் பீடிகை திசையெலாம் பிளக்கும்
    பறைபயி னிருத்த மண்டபம் விழாக்கொள் பன்மணி மண்டபம் வேள்வித்
    துறைபயில் சாலை திருமடைப் பள்ளி சூழுறை தேவர்தங் கோயில்
    509 வலவயி னிமய வல்லி பொற் கோயின் மாளிகை யடுக்கிய மதில்வான்
    நிலவிய கொடிய நெடிய சூளிகைவா னிலாவிரி தவளமா ளிகைமீன்
    குலவிய குடுமிக் குன்றிவர் செம்பொற் போபுரங் கொண்டல்கண் படுக்குஞ்
    சுலவெயில் அகழிக் கிடங்குகம் மியநூற் றொல்வரம் பெல்லைகண் டமைத்தான்
    510 சித்திர நிரைத்த பீடிகை மறுகு தெற்றிகள் வாணிலாத் தெளிக்கும்
    நிலத்தில நிரைத்த விழாவரு வீதி நிழன்மணிச் சாளர வொழுக்கப்
    பித்திகை மாடப் பெருந்தெருக் கவலை பீடுசால் சதுக்கநற் பொதியில்
    பத்தியிற் குயின்ற மன்றுசெய் குன்று பருமணி மேடையா டரங்கு
    511 அருந்தவர் இருக்கை யந்தண ருறையு ளரசரா வணங்குல வணிகப்
    பெருந்தெரு நல்வே ளாளர்பே ரறஞ்சால் பெருங்குடி யேனைய கரிதேர்
    திருந்திய பரிமா நிலைக்களங் கழகந் தீஞ்சுவை யாறுநான் குண்டி
    இரந்தவர்க் கருத்து நல்லறச் சாலை யினையன பிறவுநன் கமைத்தான்
    512 துணிகயங் கீழ்நீர்க் கூவல்பூ வோடை தொடுகுளம் பொய்கைநந் தவனந்
    திணிமலர்ச் சோலை துடவையூ யானந் திருநகர்க் கணிபெறச் செய்து
    மணிமலர்த் தாரோன் மாளிகை தனக்கம் மாநகர் வடகுண பாற்கண்
    டணிநகர் சாந்தி செய்வது குறித்தா னண்ணலார் அறிந்திது செய்வார்
    513 பொன்மய மான சடைமதிக் கலையின் புத்தமு துகுத்தனர் அதுபோய்ச்
    சின்மய மான தம்மடி யடைந்தார்ச் சிவமய மாக்கிய செயல்போற்
    றன்மய மாக்கி யந்நகர் முழுதுஞ் சாந்திசெய் ததுவது மதுர
    நன்மய மான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனர் நாமம்
    514 கீட்டிசைக் கரிய சாத்தனுந் தென்சார் கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக்
    கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங் குடவயின் மதுமடை யுடைக்குந்
    தோட்டிளந் தண்ணந் துழாயணி மௌலித் தோன்றலும் வடவயிற் றோடு
    நீட்டிரும் போந்தி னிமிர்குழ லெண்டோ ணீலியுங் காவலா நிறுவி
    515 கைவரை யெருத்திற் கனவரை கிடந்த காட்சியிற் பொலிந்தொளிர் கோயின்
    மைவரை மிடற்று மதுரைநா யகரை மரபுளி யருச்சனை புரிவான்
    பொய்வரை மறையா கமநெறி யொழுகும் புண்ணிய முனிவரை யாதி
    சைவரைக் காசிப் பதியினிற் கொணர்ந்து தலத்தினிற் றாபனஞ் செய்தான்
    516 உத்தம குலத்து நாற்பெருங் குடியு முயர்ந்தவும் இழிந்தவுமயங்க
    வைத்தவு மான புறக்குடி மூன்று மறைவழுக் காமநு வகுத்த
    தத்தம நெறிநின் றொழுகவை திகழுஞ் சைவமுந் தருமமும் தழைப்பப்
    பைத்தெழு திரைநீர் ஞாலமேற் றிலகம் பதித்தென நகர்வளம் படுத்தான்
    517 அன்றுதொட் டசர னந்நகர் எய்தி யணிகெழு மங்கல மியம்ப
    என்று தொட் டிமைக்கு மனையின்மங் கலநா ளெய்தினா னிருந்துமுப் புரமுங்
    குன்று தொட் டெய்தான் கோயின்மூன் றுறுப்புங் குறைவில்பூ சனைவழா தோங்கக்
    கன்றுதொட் டெறிந்து கனியுருத் தான்போற் கலிதுரந் தரசுசெய் நாளில்
    518 பவநெறி கடக்கும் பார்த்திவன் கிரணம் பரப்பிளம் பரிதிபோன் மலயத்
    துவசனைப் பயந்து மைந்தன்மேன் ஞாலஞ் சுமத்திநாள் பலகழித் தொருநாள்
    நவவடி விறந்தோன் ஆலயத் தெய்தி நாதனைப் பணிந்துமூ வலஞ்செய்
    துவமையி லின்ப வருணிழ லெய்தி யொன்றியொன் றாநிலை நின்றான்

    திருநகரம் கண்ட படலம் சுபம்
    ------------------


    4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் (519 -599)

    519 கன்னியொரு பங்கினர் கடம்பவன மெல்லாம்
    நன்னகர மானது நவின்றுமுல கீன்ற
    அன்னைமக ளாகிமல யத்துவச னாகுந்
    தென்னனிடை வந்துமுறை செய்ததுரை செய்வாம்
    520 மனுவறம் உவந்துதன் வழிச்செல நடத்தும்
    புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
    கனியமுத மன்னகரு ணைக்குறையுங் காட்சிக்
    கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்
    521 வேனில் விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
    ஆனமாட வார்கள்பதி னாயிரவர் உள்ளான்
    வானொழுகு பானுவழி வந்தொழுகு சூர
    சேனன்மகள் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்
    522 கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
    எண்ணில்பல நாண்மகவி லாவறுமை யெய்துப்
    பண்ணரிய தானதரு மம்பலவும் ஆற்றிப்
    புண்ணிய நிரம்புபரி வேள்விபுரி குற்றான்
    523 ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற்
    றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன்
    நாறுமக மும்புரியி னென்பதநொ டிப்பின்
    மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும்
    524 நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம்
    இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின்
    அன்புறு மகப்பெறுதி யென்றமரர் நாடன்
    தன்புலம் அடைந்திடலு நிம்பநகு தாரான்
    525 மிக்கமக வேள்விசெய் விரும்புடைய னாகி
    அக்கண மதற்குரிய யாவையும் அமைத்துத்
    தக்கநிய மத்துரிய தேவியோடு சாலை
    புக்கன னிருந்துமக வேள்விபுரி கிற்பான்
    526 ஆசறம றைப்புலவர் ஆசிரியர் காட்டும்
    மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த
    ஓசையநு தாத்தசொரி தந்தழுவ வோதி
    வாசவ னிருக்கையி லிருந் தெரி வளர்ப்பான்
    527 விசும்புநில னுந்திசையும் வேள்வியடுசாலைப்
    பசும்புகை படர்ந்தொரு படாமென மறைப்பத்
    தசும்புபடு நெய்பொரி சமித்தனோடு வானோர்க்
    கசும்புபடு மின்னமுதின் ஆகுதி மடுத்தான்
    528 ஐம்முக னநாதிபர மாத்தனுரை யாற்றால்
    நெய்முக நிறைத்தழ னிமிர்ந்து வரு மெல்லை
    பைம்முக வராவணி பரஞ்சுடர் தனிப்ப
    மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண
    529 வள்ளன்மல யத்துவச மீனவன் வலத்தோள்
    துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
    தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிர் தீம்பால்
    வெள்ளமொழி கக்கரிய வேற்கணிட னாட
    530 இவ்வுலக மன்றியுல கேழுமகிழ் வெய்தச்
    சைவமுத லாயின தவத்துறை நிவப்ப
    ஔவிய மறங்கெட வறங்குது கலிப்பத்
    தெய்வமறை துந்துபி திசைப்புலன் இசைப்ப
    531 மைம்மலர் நெடுங்கணர மங்கையர் நடிப்ப
    மெய்ம்மன மொழிச்செயலின் வேறுபடல் இன்றி
    அம்மதுரை மாநகரு ளாரக மகிழ்ச்சி
    தம்மையறி யாதன தலைத்தலை சிறப்ப
    532 மார்ந்தர்பயின் மூவறுசொன் மாநில வரைப்பிற்
    றீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப
    ஆய்ந்ததமிழ் நாடர சளித்துமுறை செய்யும்
    வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை யெய்த
    533 நொய்தழ லெரிக்கடவு ணோற்றபயன் எய்தக்
    கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
    தைதவ ழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்
    மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன
    534 விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை
    வட்டமதி வாய்க்குறு முயற்கறையை மானக்
    கட்டியதி னாற்றிய கதிர்த்தரள மாலை
    சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப
    535 தீங்குதலை யின்னமுத மார்பின்வழி சிந்தி
    யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
    வீங்குடல் இளம்பரிதி வெஞ்சுடர் விழுங்கி
    வாங்குகடல் வித்துரும மாலையொளி கால
    536 சிற்றிடை வளைந்தசிறு மென்றுகில் புறஞ்சூழ்
    பொற்றிரு மணிச்சிறிய மேகலை புலம்ப
    விற்றிரு மணிக்குழை விழுங்கிய குதம்பை
    சுற்றிருள் கடிந்துசிறு தோள்வருடி யாட
    537 தெள்ளமுத மென்மழலை சிந்திவிள மூரல்
    முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
    பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
    எள்ளரிய பல்லுயிரும் எவ்வுலகு மீன்றாள்
    538 குறுந்தளிர்மெல் லடிக்கிடந்த சிறுமணிநூ புரஞ்சதங்கை குழறி யேங்க
    நறுந்தளிர்போல் அசைந்துதளர் நடையொதுங்கி மழலையிள நகையுந் தோன்றப்
    பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாலைமடி யிருந்தொருபெண் பிள்ளை யானாள்
    அறந்தழுவு நெறிநின்றோர்க் கிகம்போகம் வீடளிக்கு மம்மை யம்மா
    539 செய்யவாய் வெளிறாது துணைமுலைக்கண் கருகாது சேல்போல் நீண்ட
    மையவாய் மதர்த்தகருங் கண்பசவா தையிரண்டு மதியந் தாங்கா
    தையவா லிலைவருந்தப் பெறாதுபெறு மகவையெடுத் தணைத்தாள் மோந்தாள்
    துய்யவாய் முத்தங்கொண் டின்புற்றாள் முன்பெற்ற தோகை யன்னாள்
    540 பரையாதி விருப்பறிவு தொழிலாகி யுலகமெலாம் படைத்துக் காத்து
    வரையாது துடைத்துமறைத் தருளியவை நின்றுந்தன் வடிவு வேறாய்
    உரையாதி மறைகடந்த வொருமுதல்வி திருமகளா யுதித்தற் கிந்தத்
    தரையாளு மன்னவன்செய் தவமிதுவோ அதற்குரிய தவந்தான் மன்னோ
    541 கள்ளமா நெறியொழுகும் பொறிகடந்து கரண மெலாங் கடந்தா னந்த
    வெள்ளமாம் பரஞான வடிவுடையாள் தன்னன்பின் வெளிவந் தின்றோர்
    பிள்ளையாய் அவதரித்த கருணையுந்தன் மணாட்டிதவப் பேறுந் தேறான்
    பள்ளமா கடற்றானைப் பஞ்சவர்கோ னெஞ்சகத்துவப் பரிவு கூர்ந்தான்
    542 மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன் மைந்தற் பேறு
    தகவிந்த மகஞ்செய்தேன் அதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
    முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்றாய் முகிழ்த்து மாற்றார்
    நகவந்த தென்னேயோ என்றுவகை யிலனாகி நலியு மெல்லை
    543 மன்னவநின் றிருமகட்கு மைந்தர் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
    சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
    பொன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் புந்தி மாழ்கேல்
    என்னவரன் அருளாலோர் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே
    544 அவ்வாக்குச் செவிநிரம்ப வன்புவகை யகநிரம்ப வகல மெல்லாம்
    மெய்வாக்கு மனமொன்ற விழிவாக்கும் புனனிரம்ப விமலற் போற்றி
    நெய்வாக்கு மகநிரப்பி யெழுந்துமனை யொடுஞ்சாலை நீத்தி ரண்டு
    கைவாக்கு மியங்கலிப்பக கடிமாட மனைபுகுந்தான் சுழற்கால் வேந்தன்
    545 முரசதிர்ப்ப மங்கலங்கொண் டெதிர்வருவார் முகத்துவகை முறுவல் பூப்ப
    அரசிருக்கு மண்டபம்புக் கினிதமர்ந்து கனகமழை யான்ற கேள்வி
    விரசிருக்கு மறையவர்கைப் பெய்தெவர்க்கு மம்முறையால் வெறுப்ப நல்கிப்
    பரசிருக்குங் கரதலத்தெம் பரன்கோயி னனிசிறப்புப் பல்க நல்கா
    546 சிறைவிடுமின் சிறைக்களமுஞ் சீத்திடுமின் ஏழாண்டு தேயத் தீட்டும்
    இறைவிடுமி னயல்வேந்தர் திறைவிடுமி னிறைநிதிய மீட்டு மாயத்
    துறைவிடுமி னறப்புறமு மாலயமும் பெருக்குமெனத் தொழாரைக் காய்ந்த
    கறைவிடுமின் னயில்வேலான் வள்ளுவனைக் கூய்முரசங் கறங்கச் சாற்றி
    547 கல்யாண மணிமௌலி வேந்தரையுங் கால்யாப்புக் கழல நீத்துக்
    கொல்யானை பரிநெடுந்தேர் அரசுரிமை தொன்முறையாற் கொடுத்துப் போக்கிப்
    பல்லாருங் கொளகவெனப் பண்டாரந் தலைசிறந்து பசும்பொன் னாடை
    வில்லாரு மணிக்கொடும்பூண் வெறுக்கைமுத லெனைப்பலவும் வெறுக்க வீசி
    548 தூமரபின் வருபெருமங் கலகவிகட் கிருநிதியந் துகில்பூண் பாய்மா
    காமர்கரி பரித்தடந்தேர் முதலாய பலபொருளுங் களிப்ப நல்கிக்
    கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடு மெண்ணெய்விழாக் குளிப்ப நல்கி
    மாமதுரா நகரன்றி மற்றுமுள நகரெங்கு மகிழ்ச்சி தூங்க
    549 இவ்வண்ண நகர்களிப்ப விறைமகனுங் விறைமகனுங்
    களிப்பெய்தி இறைவர் சொன்ன
    அவ்வண்ணஞ் சாதமுதல் வினை நிரப்பித் தடாதகையென்று
    அழைத்துத் தேவி
    மெய்வண்ண மறையுணரா விறைவிதனை
    மேனைபோல் மேனா ணோற்ற
    கைவண்ணத் தளிர்தீண்டி வளர்ப்பவிம
    வான்போலக் களிக்கு நாளில்
    550 திருந்தாத விளங்குதலை யாயமோடு புறம்போந்து சிறார்க்குச் சிற்றில்
    விருந்தாக மணற்சிறுசோ றட்டும்வரை யுரங்கிழித்த வேளும் வாய்வைத்
    தருந்தாத விளமுலைவாய் வைத்தருத்தப் பாலைவதனக் களித்தும் போதில்
    வருந்தாதை யண்டமெலாஞ் சிற்றிலிழைப் பாளாய்க்கு மகிழ்ச்சி செய்தான்
    551 தீட்டுவாள் இரணடனைய கண்களிப்பத் தோழியர்க்குத் தெரிய வாடிக்
    காட்டுவா ளெனக்கழங்கு பந்துபயின் றம்மனையுங் கற்றுப் பாசம்
    வீட்டுவாண் மேலொடுகீழ் தள்ளவெமை வினைக்கயிறு வீக்கி யூசல்
    ஆட்டுவாள் காட்டுதல்போல் லாடினா ணித்திலத்தாம் பசைத்த வூசல்
    552 இம்முறையாற் றாயர்க்குந் தோழியர்க்கு மகத்துவகை யீந்தாள் ஆகி
    அம்முறையாற் றாதைக்கு மகத்துவகை யீவாளா யாத்த வாய்மைச்
    செம்முறையா ரண்முதனா லீரெட்டுக் கலைமுழுதுந் தெளிந்தா ளந்த
    மெய்ம்மறையார் கலையனைத்தும் மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா
    553 சொல்வாய்மைக் கலைத்தெளிவு முழுமதியைப் பிளந்திருபாற் சொருகி யன்ன
    பல்வாய்மைக் கடகரிதேர் பரியுகைக்குந் திறனுமழற் பகழி தூர்க்கும்
    வில்வாள்வச் சிரமுதற்பல் படைத்தொழிலுங் கண்டிளமை விழுங்கு மூப்பிற்
    செல்வாய்மைத் திறலரசன் றிருமகட்கு முடிசூட்டுஞ் செய்கை பூண்டான்
    554 முடிகவிக்கு மங்கலநாள் வரையறுத்துத் திசைதோறு முடங்கல் போக்கி
    கடிகெழுதார் மணிமௌலிக் காவலரை வருவித்துக் காவல் சூழ்ந்த
    கொடியணிமா நகரெங்கும் விழாவெடுப்ப வழகமைத்துக் குன்ற மன்ன
    தொடிகெழுதோட் சுமதிதிரு மணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான்
    555 மங்கலதூ ரியமுழங்க மால்யானை யுச்சிமிசை வந்த பூத
    கங்கைமுதல் ஓன்பதுதீர்த் தமுநிரப்பிக் கதிர் விடுபொற் கடம்பூ சித்துப்
    புங்கவரை மந்திரத்தீ வளர்த்தமுத மருத்தியெரி பொன்னாற் செய்த
    சிங்கமணி யாதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வ மேற்றி
    556 திருமுடியை மதயானை மிசைவைத்து நகரைவலஞ் செய்து பூசித்
    தருமணியாற் சுடிகையிழைத் தாடகத்தாற் குயிற்றியதோர் ஐவாய் நாகம்
    பெருமணிநீள் படம்பரப்பி மிசைகவிப்ப வச்சிங்க பீடத் தேற்றிக்
    குருமணிவா ணகைமயிலைக் கும்பத்துப் புண்ணியநீர் குளிர வாட்டி
    557 புங்கவர்மந் தாரமழை பொழியவருந் தவராக்கம் புகலத் தெய்வப்
    பங்கயமென் கொம்பனையா ராடமுனி பன்னியர்பல் லாண்டு பாட
    மங்கலதூ ரியமுழங்க மறை தழங்க மாணிக்க மகுடஞ் சூட்டி
    எங்கருணைப் பெருமாட்டிக் கரசமைச்சர் பணியுந்தன் னிறைமை நல்கா
    558 பாலனைய மதிக்கவிகை மிசைநிழற்ற மதிகிரணம் பரப்பி யன்ன
    கோலமணிக் கவரிபுடை யிரட்டமலர் மழைதேவர் குழாங்க டூற்றக்
    காலையிளங் கதிர்கயிலை யுதித்தெனவெண் கடாயானைக் கழுத்தில் வேப்ப
    மாலைமுடிப் பெண்ணரசை மங்கலதூ ரியமுழங்க வலஞ்செய் வித்தான்
    559 விண்ணாடு மொழிகேட்ட மகிழ்ச்சியுனுந் திருமகடன் விளக்க நோக்கி
    உண்ணாடு பெருங்களிப்புத் தலைசிறப்புச் சிலபகல்சென்றொழிய மேனாட்
    புண்ணாடு வேன்மங்கை குதுகலித்து நடிப்பத்தன் புயமேல் வைத்த
    மண்ணாடு மகட்களித்து வானாடு பெற்றானம் மகவு பெற்றான்
    560 விரதநெறி யடைந்தீற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியால் ஆற்றி
    அரதனமெல் லணைமேற்கொண் டுலகமெலா மொருகுடைக்கீ ழாள்வா ளானாள்
    சரதமறை யாய்மறையின் பொருளாயப் பொருண் முடிவு தானாய்த் தேனின்
    இரதமெனப் பூவின்மண மெனப்பரம னிடம்பிரியா வெம்பிராட்டி
    561 மண்ணர சிறைஞ்ச ஞால மநுவழி புரந்து மாறன்
    விண்ணர சிருக்கை யெய்தப் பெற்றபின் விடையோன் உள்ளத்
    தெண்ணர சன்ன மென்னத் தென்னவ னீன்ற கன்னிப்
    பெண்ணர சிருந்து நேமி யுருட்டிய பெருமை சொல்வாம்
    562 இன்னிய மியம்பு மாக்க ளெழுப்பவான் இரவி தோன்றக்
    கன்னலைந் தென்னப் பள்ளித் துயிலெழீஇக் கடிநீராடித்
    தன்னிறை மரபுக் கேற்ற நியதிமா தான மன்பு
    துன்னிய கடவுட் பூசைத் தொழின்முத லனைத்து முற்றா
    563 563
    திடம்படு மறிஞ்ர் சூழச் சிவபரன் கோயில் முன்னிக்
    கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை மறைவண் டார்க்கும்
    விடம்பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு
    குடம்பயில் குடுமிச் செம்பொற் குருமணிக் கோயில் நண்ணி
    564 அரசிறை கொள்ளுஞ் செம்பொன் அத்தாணி யிருக்கை யெய்தி
    நிறைசெற்¢ மடங்க லாறு முடங்கின நிமிர்ந்து தாங்க
    விரைசெறி மலர்மீப் பெய்த வியன்மணித் தவிசின் மேவித்
    திரைசெறி யமுதிற் செய்த பாவை போற் சிறந்து மாதோ
    565 அனிந்திதை யமுதின் சாயற் கமலினி யணங்குங் காதல்
    கனிந்தபார் மகளி ராய்வந் தடைப்பைப்பொற் களாஞ்சி யேந்த
    இனந்திரி பதுமக் கோயில் இருவரு மனைய ராகிப்
    புனைந்தவெண் கவரிக் கற்றை யிருபுடை புரட்டி வீச
    566 566
    செடியுட லெயினச் செல்வன் சென்னிமேற் சுமந்து சாத்துங்
    கடியவிழ் மலரிற் பொன்னிக் காவலன் குடக்கோ னேனை
    முடிகெழு வேந்தர் உள்ளார் முடிமிசை மிலைந்த தாமம்
    அடிமிசைச் சாத்திநங்கை யாணையா றேவல்செய்ய
    567 வையுடை வாள ராகி மார்புறப் பின்னி யார்த்த
    கையின ராகி யன்னை யென்றுதன் கருணை நோக்குஞ்
    செய்யுமென் றிமையார் நோக்கி நோக்குமேற் செங்கை கூப்பி
    உய்குந மெனவாய் பொத்தி யுழையர்தம் பணிகேட்டுய்ய
    568 ஆங்கவன் மராடர் வேந்தன் அவன்கரு நாடர் வேந்தன்
    ஈங்கிவன் விராடா வேந்த னிவன்குரு நாடர் வேந்தன்
    ஊங்குவன் சேரன் சென்னி யுவனெனக் கோலாற் சுட்டிப்
    பாங்கிரு மருங்குங் காட்டக் கஞ்சுகப் படிவ மாக்கள்
    569 செந்தமிழ் வடநூலெல்லை தெரிந்தவர் மறைநூ லாதி
    அந்தமில் எண்ணெண் கேள்வியளந்தவர் சமயமாறும்
    வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போத மாண்ட
    சிந்தனை யுணர்வான் மாயை வலிகெடச் செற்ற வீரர்
    570 முன்னிருந் தினிய தேற்று மூத்தவர் எண்ணி யெண்ணிப்
    பன்னுமைந் துறுப்பிற் கால மளந்தறி பனுவன் மாந்தர்
    பின்னுமுன் னோக்குஞ் சூழ்ச்சிப் பெருந்தகைச் சுமதி யோடும்
    இன்னமு தனைய கேள்வி மந்திரர் யாருஞ் சூழ
    571 கற்றறி யந்தணாளர் விருத்திகள் கடவுட் டானத்
    தற்றமில் பூசைச் செல்வ மறப்புற நடக்கை யேனைச்
    செற்றமில் குடிகண் மற்று மமைச்சராற் றெளிந்தும் வெவ்வே
    றொற்றுவிட் டுணர்த்தும் வேறு குறையுண்டே லொறுத்துத் தீர்த்தும்
    572 ஆதியுத் தேசத் தானும் இலக்கண வமைதி யானுஞ்
    சோதனை வகைமை யானுஞ் சொன்னநூ லனுவா தித்து
    நீதியி நவற்றாற் கண்டித் தவ்வழி நிறுத்தித் தம்மில்
    வாதிகள் வாதஞ் செய்யுங் கோட்டின்மேன் மகிழ்ச்சி கூர்ந்தும்
    573 பையுள பகுவாய் நாகப் பள்ளியோன் ஆதி வானோர்
    கையுள வலியா லட்ட கடலமு தனைத்தும் வாரிப்
    பொய்யுள மகலக் கற்ற புனிதநூற் புலவர் நாவிற்
    செய்யுள விளைவித் தூட்டத் திருச்செவி தெவிட்ட வுண்டும்
    574 தொல்லைநான் மறையோர் சைவர் துறந்தவர் யார்க்கும் இன்பம்
    புல்லவா னமுதுங் கைப்பப் பாகநூற் புலவ ரட்ட
    முல்லைவான் முகையினன்ன வறுசுவை முரியாமூரல்
    நல்லவூ ணருத்தி யன்னார் நாவிருந் தமுதுசெய்யும்
    575 எல்லவன் உச்சி நீந்து மெல்லையி னான்கு மாறும்
    வல்லவர் சூதனோதி வகுத்தமூ வாறு கேள்வி
    சொல்லவுண் மலர்ந்துமேனை மநுமுதற் றுறைமாண் கேள்வி
    நல்லவ நயந்து கேட்டு நன்பகற் போது நீத்தும்
    576 கலைக்குரை விரிப்பார் என்ன வறுமையிற் கல்வி போலப்
    புலப்படா மருங்கு னல்லா ரெந்திப் புலவன் பூட்டி
    அலைத்திடு பாவை போனின் றாடல்செய் யாடற் கண்ணும்
    நலத்தகு பாடற் கண்ணு நல்லரு ணாட்டஞ் செய்தும்
    577 இன்னிலை யொழுகுத் தொல்லோர் இயற்றிய தருமம் வேறும்
    அந்நிலை நிறுத்தும் வேள்வியறம்பல வாக்கஞ் செய்ய
    நன்னிதி யளித்தும் வேள்வி நடாத்தியுஞ் செல்வங் கல்வி
    தன்னிரு கண்க ளாகத் தழைந்திட வளர்க்கு நாளும்
    578 ஒப்புரு முதலீ றில்லா வொருத்திதன் சத்திபெற்ற
    முப்பெருந் தேவ ராலே முத்தொழி னடாத்து மென்று
    செப்பலும் புகழன் றென்னிற்றென்னவன் கன்னியாகி
    இப்புவி மநுவிற் காக்கும் என்பதென் பேதை மைத்தே
    579 வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
    விரைசெய் தார்முடி வேய்ந்துதண் குடைமநு வேந்தன்
    கரைசெய் நூல்வழி கோல்செலக் கன்னியாம் பருவத்
    தரசு செய்தலாற் கன்னிநா டாயதந் நாடு
    580 இன்ன வாறுமை யவதரித் திருந்தனள் என்னாப்
    பொன்ன வாவினர் பெறவெறி பொருநைகால் பொருப்பான்
    சொன்னவாய்மை கேட் டகங்களி தூங்கினர் தொழுது
    மின்னுவார்சடை முனிவரோர் வினாவுரை செய்வார்
    581 திருந்து நான்மறைச் சென்னியுந் தீண்டுதற் கரிதாய்
    இருந்த நாயகி யாவையும் ஈன்றவெம் பிராட்டி
    விரிந்த வன்புகூர் தக்கனும் வெற்பனும் பன்னாள்
    வருந்தி நோற்றலா லவர்க்கொரு மதலையாய் வந்தாள்
    582 மனித்த னாகிய பூழியன் மகளென வீங்குத்
    தனித்த காரணம் யாதெனத் தபனியப் பொதுவிற்
    குனித்த சேவடிக் கன்புடைக் குடமுனி யருள்கூர்ந்
    தினித்த தோர்கதை கேண்மினென்று எடுத்துரை செய்வாள்
    583 விச்சு வாவசு வெனுமொரு விச்சையன் பயந்த
    நச்சு வாள்விழி மடந்தைவிச் சாவதி நாமம்
    அச்சு வாகத மொழியினாள் அம்பிகைக் கன்பு
    வைச்சு வாழ்வுறு மனத்தினா டாதையை வணங்கா
    584 ஐய வம்பிகை தன்னையாண் அன்பினால் வழிபட்
    டுய்ய வேண்டுமென் றாளவ னுலகெலாம் பயந்த
    தையன் மந்திரந் தனைமக டனக்குப தேசஞ்
    செய்ய வந்நெறி யொழுகுவாள் செப்புவாள் பின்னும்
    585 இறைவி தன்னையா தரிப்பவற் கிம்பரிற் சிறந்த
    குறைவி னன்னகர் யாதெனக் கூறுவான் கேள்வித்
    துறைவி ளங்கினோர் பயில்வது துவாதச முடிவென்
    றறைவ ளம்பதி யவனிமேற் சிவபுர மாமால்
    586 சேடு தாங்குமூ வுலகினுட் சிறந்தன சக்தி
    பீட மூவிரு பத்துநான் கவற்றின்முற் பீடம்
    மாடம் ஓங்கிய மதுரையா மற்றது போகம்
    வீடும் வேண்டிய சித்தியும் விளைப்பதென் றெண்ணா
    587 அல்லு மெல்லுவா னகர்க்கத வடைப்பின்றிச் சுவர்க்கச்
    செல்வ ரங்கடைந் துமையருள் சித்தியால் வினையை
    வெல்லு வாரதான் றெந்தையோ டைவர்கள் வேண்டி
    நல்வ ரம்பல வடைந்தனர் நமர்களந் நகரில்
    588 எம்மை யாரையும் யாவையும் ஈன்றவங் கயற்கண்
    அம்மை யாவரே யாயினு மன்பினா தரிப்போர்
    இம்மை யாகிய போகம்வீ டெண்ணியாங் கெய்தச்
    செம்மை யாகிய வின்னருள் செய்துவீற் றிருக்கும்
    589 என்ற தாதையை யிறைஞ்சினாள் அநுச்சைகொண்டெழுந்தாள்
    மன்றன் மாமலர் வல்லிபோல் வழிக்கொடு கானங்
    குன்ற மாறுபின் கிடப்பமுன் குறுகினா ளன்பின்
    நின்ற வாதியெம் பரையரு ணிறைந்தவந் நகரில்
    590 அடைந்தி ளம்பிடி யாடல்போல் ஆடக கமலங்
    குடைந்து நான்மறைக் கொழுந்திடங் கொண்டுறை குறிப்பாற்
    படர்ந்த பொன்மலை வல்லியைப் பணிந்துவெங் கதிரோன்
    றொடர்ந்த வான்சுறா மதியமே யாதியாத் தொடங்கா
    591 பெரும்பக னல்லூண் கங்குலூ ணுதவப் பெற்றவூ ணிலைமுதற் பல்லூண்
    அரும்பொடி யெள்ளுண் சாந்திரா யணமா னைந்துபா னறியநீர் தருப்பை
    இரும்புத னுனிநீர் காலிவை நுகர்ந்து மியற்றரும் பட்டினி யுற்றும்
    வரம்புறு விராறு திங்களு நோற்று வாடிமேல் வருஞ்சுறா மதியில்
    592 சந்நிதி யடைந்து தாழ்ந்துநின் றிளமாந் தளிரடிக் காஞ்சிசூழ் கிடந்த
    மின்னிகர் மருங்குல் இழையிடை நுழையா வெம்முலைச் செம்மலர்க் காந்தட்
    பொன்னிரை வளைக்கை மங்கலக் கழுத்திற் பூரண மதிக்கலை முகத்தின்
    இன்னிசை யளிசூ ழிருட்குழற் கற்றை யிறைவியை யிம்முறை நினையா
    593 கோலயாழ்த் தெய்வம் பராய்க்கரங் குவித்துக் கொழுஞ்சுடர்ப் பசுங்கதிர் விளக்கம்
    போல நூற் பொல்லம் பொத்து பொன் னிறத்த போர்வைநீத் தவிழ்கடி முல்லை
    மாலைமேல் வீக்கிப் பத்தர்பின் கிடப்ப மலர்க்குழ றோய்சுவற் கிடத்திச்
    சேலைநேர் விழியாண் மாடகந் திரித்துத் தெறித்தனன் பண்ணிறிந் திசைப்பாள்
    594 ஒளியா லுலகீன் றுயிரனைத்து மீன்போற் செவ்வி யுறநோக்கி
    அளியால் வளர்க்கு மங்கயற்க ணன்னே கன்னி யன்னமே
    அளியால் இமவான் றிருமகளா யாவி யன்ன மயில்பூவை
    தெளியா மழலைக் கிளிவளர்த்து விளையாட் டயருஞ் செயலென்னே
    595 அண்டக் குவைவெண் மணற்சிறுசோ றாக்கித் தனியே விளையாடுங்
    கொண்டற் கோதாய் படி யெழுத லாகா வுருவக் கோகிலமே
    கொண்டற் குடுமி யிமயவரை யருவி கொழிக்குங் குளிர்முத்தால்
    வண்டற் குதலை மகளிரொடும் விளையாட்டயரும் வனப்பென்னே
    596 வேத முடிமேல் ஆனந்த வுருவாய் நிறைந்து விளையாடு
    மாத ரரசே முத்தநகை மானே யிமய மடமயிலே
    மாத ரிமவான் றேவிமணி வடந்தோய் மார்புந் தடந்தோளும்
    பாத மலர்சேப் புறமிதித்து விளையாட் டயரும் பரிசென்னே
    597 யாழியன் மொழியா லிவ்வழி பாடி யேத்தினா ளாகமெய் யுள்ளத்
    தாழிய வன்பின் வலைப்படு கருணை யங்கயற் கண்மட மானோர்
    சூழிய நுழைமெல் லிளங்குழற் குதலைத் தொண்டைவாய் அகவைமூன் றெய்தி
    வாழிளங் குழவி யாகியா லயத்து வந்துநின் றாள்வரங் கொடுப்பாள்
    598 இறைஞ்சியஞ் சலித்தா டன்னையெம் மன்னை யாதுவேண் டினையென வென்றும்
    நிறைந்தபே ரன்பு நின்னடிப் போதி னீங்கலா நிலைமைதந் தருளென்
    றறைந்தன ளின்னும் வேண்டுவ தேதென் றருளவிம் மகவுரு வாகிச்
    சிறந்துவந் தென்பால் அருள்சுரந் திருக்கத் திருவுளஞ் செய்யெனப் பணிந்தாள்
    599 சிவபரம் பரையு மதற்குநேர்ந் தருள்வா டென்னவர் மன்னனாய் மலயத்
    துவசனென் றொருவன் வருமவன் கற்பின் றுணைவியாய் வருதியப் போதுன்
    தவமக வாக வருவலென் றன்பு தந்தனள் வந்தவா றிதுவென்
    றுவமையில் பொதியத் தமிழ்முனி முனிவர்க் கோதினான் உள்ளவா றுணர்ந்தார்

    தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப்படலம் சுபம்
    ----------------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்