சிறுவர் கதைக் களஞ்சியம் - 1
சுட்டி கதைகள்
Back
சிறுவர் கதைக் களஞ்சியம் - 1
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : சிறுவர் கதைக் களஞ்சியம் - 1 (அப்பாத்துரையம் - 32)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 16+304 = 320
விலை : 400/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
சிறுவர் கதைக் களஞ்சியம் -1
முதற் பதிப்பு - 1945
இந்நூல் 2002 இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
கடல் நங்கை
நில உலகத்தைவிடக் கடலுலகம் மும்மடங்கு பெரிது, ஆழ் கடலுலகம் இன்னும் பல மடங்கு இடமகன்றது. அதில் எண்ணற்ற அழகுக் காட்சிகள் இருந்தன. எல்லையற்ற அருள்பொருட் செல்வங்கள் கொட்டிக்கிடந்தன. இந்த ஆழ்கடலுலகின் தலைநாயகமாய் அமைந்தது குமரிக்கடல், முத்தும் சங்கும் அதையே தம் தாயகமாகக் கொண்டிருந்தன. அங்கேயே அவை கருவீன்று செழித்துக் கொழித்தன. குமரிக்கோடு - பன்மலை போன்ற மலைத்தொடர்களும் கடலடியும் பவளப் பாறைகளுமாகவே அமைந்திருந்தன. ஆறுகள் போன்ற கடல் நீரோட்டங்கள் கடலுலக மெங்கணுமிருந்து வந்து, இவ்விடத்தில் பிணைந்து கலந்தன. பலவகை மணிக்கற்கள், ஆமைத் தோடுகள், திமிங்கில எலும்புகள், பாசிகள், சிப்பிகள் ஆகியவற்றை அவை அடித்துக் கொணர்ந்தன. மலைகள் அவற்றைத் தேக்கித் தம் அருகே படியவைத்தன.
குமரிக்கோடும் பன்மலையும் பின்னிப் பிணையும் இடத்தில் ஓர் அழகிய பவளப் பள்ளத்தாக்கு இருந்தது. அதுவே கடலுலகின் தலைநகர். கடலுலகில் வாழ்ந்த கடல் மக்கள் அங்கே பெருந்திரளாகக் குடியிருந்தார்கள். அவர்கள் உடலின் மேற்பகுதி மனிதர் உடல் போலவே இருந்தது. அத்துடன் அது மனித உடலைவிட அழகு மிக்கதாய் அமைந்தது. ஆயினும் அரைக்குக் கீழே அவர்களுக்குக் கால்கள் இல்லை, உடலின் அடிப்பகுதி முழுவதும் மீனுடலாயிருந்தது.
நிலஉலக மனிதர்களைவிட அவர்கள் நீண்டநாள் வாழ்ந்தனர். முப்பத்தைந்து ஆண்டளவிலேயே அவர்கள் இளமைப் பருவம் எய்தினர். அதன்பின் இருநூறு முந்நூறு ஆண்டுகள் வரை அவர்கள் வாழ்ந்தாலும், அவர்களை முதுமை தீண்டியதே கிடையாது. அவர்கள் வாழ்வு முழுவதும் இளமைமாறா வாழ்வாகவே இருந்தது. சிறு பருவத்தில் அவர்கள் உடல் முழுவதும் ஒரே படிக நிறமாய் விளங்கிற்று. ஆனால் கட்டிளமைப் பருவம் வந்ததும், உடலின் மேற்பகுதி வெள்ளி பொன் கலந்த பசும்பொன் மேனியாயிற்று. மீன் வால் போன்ற அடிப்பகுதியும் இளநீல நிறமாயிற்று.
கட்டிளமை விழாவிலே, இவ்வழகிய வடிவத்தை அவர்கள் ஆடையணிகளால் மேலும் அழகுபடுத்தினர். முத்துக்கோத்த ஆடையை அரையில் அணிந்தார்கள். நுரைகளாலான படிக நிற மேலாடை இட்டனர். இரண்டையும் செங்கழுநீர் வண்ணப் பட்டை ஒன்றால், இடுப்பில் இறுகக் கட்டினர். பச்சைப்பட்டுப் போல் நீரில் அசைந்தாடிய கூந்தலின்மீது ஒரு பொன் முடியிட்டனர்.
இந்நிலையில் மீன்வடிவமான அவர்கள் உடலின் அடிப்பகுதி நன்கு புலப்படுவதில்லை. குலைப் பண்புடைய மக்கள் கண்களுக்கு அவர்கள் கடலின் அழகுத் தெய்வங்களாக அவ்வப்போது காட்சியளித்தார்கள்.
பவளப் பள்ளத்தாக்கின் நடுநாயகமாகக் கடலரசன் தண்பொருநன் மாளிகை அமைந்திருந்தது. அதன் அடித்தளம் ஆமைத் தோடுகளால் பாவப்பட்டுப் பளிங்கால் மூடப்பட்டிருந்தது. சுவர்கள் பன்னிறச் சலவைக் கற்களாலும் பளிங்குகளாலும் எழுப்பப்பட்டிருந்தன. திமிங்கில எலும்புகள் தந்தம்போல் இழைக்கப்பட்டு, அவற்றாலேயே தூண்கள், விட்டங்கள், உத்தரங்கள் உயற்றப்பட்டன. மேற்கூரை தட்டையாக ஒரு மட்டுப்பாவாய் அமைந்திருந்தது. அது முற்றிலும் உயிருள்ள முத்துச் சிப்பிகளால் பாவப்பட்டது. இதனால், மேலிருந்து பார்ப்பவர்களுக்கு மாளிகை சிறிதும் தென்படுவதில்லை. கடலடியின் முத்துச் சிப்பிகளிடையே அதுவும் முத்துச் சிப்பிகளின் ஒரு குவியலாகத் தோற்றிற்று. ஆயினும் நீரோட்டங்களின் அசைவுகளும் அலையியக்கங்களும் முத்துச் சிப்பிகளின் மேல்தோட்டை ஓயாது திறந்து மூடிய வண்ணமிருந்தன. முத்துக்களின் தூய வெள்ளொளி எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நீல நிறமும் செந்நிறமும் கலந்து செறிந்த இருள், நீராழத்தில் படர்ந்திருந்தது. இந்நீல இருளையும் செவ்விருளையும் கிழித்து வெள்ளொளி அலைகள் கடல் நீரில் மாய ஓவியப் படிவங்களைத் தீட்டியவண்ணமா யிருந்தன.
கடலரசன் தண்பொருநனுக்கு ஆறு புதல்வியர் இருந்தார்கள். கடைசிப் புதல்வி வேல்விழி மற்ற ஐவரையும் விஞ்சிய அழகுடையவளாய் இருந்தாள். கடல் நங்கையரின் உடல் அழகுடன் நங்கையருக்குரிய மன அழகும் அவளுக்கு வாய்ந்திருந்தது. அவள் கடலுலகின் அழகில் ஈடுபட்டு அக் கலைச்செல்வத்தை நுகர்ந்து வளர்ந்தாள். கடலகத்துள்ள வாடா மணிமலர்களை அவள் தன் பலகணியிலும் தோட்டத்திலும் வைத்துப் பயிரிட்டாள். நீர்க் குதிரை, நீர்ச்சிங்கம், பொன்மீன், ஆழ்கடல் நண்டு ஆகிய வனப்புமிக்க உயிரினங்கள் அவள் கையில் ஏறித் தீனி பெறத் தாவின, அவையே அவளுக்கு விளையாட்டுத் தோழர்களாய் அமைந்தன.
வேல்விழிக்குத் தாய் இல்லை. அவளைப் பெற்ற முதல் ஆண்டிலேயே அவள் தாய் தமிழமுது நீருடன் நீரானாள். நுரைவடிவாய் அவள் கடற்பரப்பின்மீது உலவியதாக மற்றவர்கள் கூறினார்கள். நுரை வடிவமாக மிதக்கும் தன் அன்னையையும் முன்னோர்களையும் காண அவள் துடித்தாள். நீர்ப்பரப்பின் மேல் என்ன இருக்கக்கூடும் என்று அறிய அவள் அடிக்கடி ஆர்வம் கொண்டாள். கடலில் ஆழம் குறைந்த இடத்திற்கு அவள் சென்றதில்லை. சென்றால் அலை கடற்கரையில் கொண்டு தள்ளிவிடும் என்று பெரியோர் கண்டித்திருந்தனர். “கரையிலே மனிதர் உலவக்கூடும். அவர்கள் கண்களில் கடற்குழந்தைகள் படக்கூடாது. பட்டால் அவர்கள் உடல் முழுதும் நீராய் உருகிவிடும்” என்று அச்சுறுத்தினார்கள்.
கரையருகிலும் நீர்ப்பரப்பின் மீதும் இறகு முளைத்த மீன்கள் வெட்டவெளியில் நீந்துவதாக அவள் கேள்விப் பட்டிருந்தாள். இவை உண்மையில் பறவைகளே. ஆனால் ஆழ்கடலுலகத்தில் பறவைகள் இல்லாதால், அவற்றை அவர்கள் வெட்ட வெளியில் நீந்தும் இறகு முளைத்த மீன்களாகக் கருதினார்கள். அவற்றில் பல இனிமையாகப் பாடியதைக் கடல்மக்கள் கேட்டதுண்டு. வேல்விழியும் அவ்வழகிய இறக்கை மீன்களின் பாடல்களைக் கேட்க விரும்பினாள். ஆனால் கடற் குழந்தைகள் அவற்றைக் கேட்டால் பேச்சிழந்து நாவடங்கிப் போவார்கள் என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
கட்டிளமை விழா முடிந்த பின்னரே இக்காட்சிகளைக் கடற் குழந்தைகள் சென்று காணலாம் என்று அவளுக்குக் கூறப்பட்டது. அந்நாளையே அவளும் அவள் தமக்கைமார் ஐவரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர்.
அவர்கள் எல்லாரும் முறையே ஒருவர்பின் ஒருவர் ஒரோர் ஆண்டு இளையவர்கள், ஆகவே முதல்முதல் கட்டிளமை எய்தும் பேறு மூத்த தமக்கையாகிய கோமாட்டிக்கே உரியதாய் இருந்தது. சீமாட்டி, திருவாட்டி, மால்விழி, சேல்விழி என்ற மற்றத் தமக்கையர்கள் மூத்தவளை அடுத்தும், வேல்விழி எல்லாருக்கும் பிற்பட்டுமே அந்த உரிமையைப் பெற வேண்டியதாயிருந்தது.
வேல்விழியையும் அவர் தமக்கையரையும் அவர்கள் அத்தை பொன்னாவிரை வளர்த்து வந்தாள். அவள், கடலுலகு பற்றியும் நிலவுலகு பற்றியும் பல செய்திகளும் கதைகளும் கூறி, அவர்கள் ஆர்வத்தை வளர்த்தாள். கோமாட்டி கட்டிளமைப் பருவமெய்தியதும், அவளைப் பொன்னாவிரை தன்னுடன் இட்டுச் சென்றாள். பின் நிலவுலகிலிருந்து கடலுலகத்தில் வந்து பாய்ந்த தண்பொருநையாற்றின் புதுமுகத்தில் அவளை நீராட்டினாள். எல்லாக் கடல்மக்களும் அங்கே வந்து கூடி ஆடிப்பாடினர். விழா முடிவில் நகரப்பரப்புக்கும் கரைக்கும் செல்லும் உரிமையின் சின்னமாக, அவளுக்கு ஆடையும் அரைப்பட்டியும் பொன்முடியும் வழங்கப்பட்டன. கடலுலக மெங்கும் கணத்தில் விரைந்து செல்வதற்காக ஒரு மின்சார விலாங்கு மீனும் அளிக்கப்பட்டது. அதன் மீதேறி அவள் களிப்புடன் கடற்பரப்புக்குத் தாவிச் சென்றாள்.
பொன்னாவிரை கூறிய கதைகளெல்லாம் பொய்யாகும் வண்ணம் கோமாட்டி தங்கையருக்குப் புத்தார்வக் கதைகள் கூறினாள். செங்கடல், கருங்கடல், வெண்கடல், பொன்கடல் ஆகியவற்றின் அரும் பொருள்களை அவள் வருணித்தாள். பல நிறப் பச்சை வண்ணத்துடன் குடைபோலச் சிறகு விரித்து நிலத்திலே ஆடிய ஒரு மீனைத் தமிழகக் கரையில் பார்த்ததாக அவள் கூறினாள். இது, உண்மையில் ஒரு மயிலின் வருணனையே ஆகும்.
நிலத்தையும் கடலையும் ஒரே தாவாகத் தாவி வரிசை வரிசையாகச் செல்லும் வெண்மீன்களின் அழகை அவள் புகழ்ந்தாள். இவ் வெண்மீன்கள் உண்மையில் நாரை கொக்கு வகைகளே.
இந்த ஆர்வக் கதைகளைக் கேட்ட தங்கையர் ஐவரும் தம் தம் கட்டிளமை நாள் என்று வருமோ என்று அதையே எண்ணி எண்ணி ஏங்கினார்கள்.
சீமாட்டி, திருவாட்டி, மால்விழி, வேல்விழி, ஆகிய நங்கையர் கட்டிளமை விழாக்களும் இவ்வாறே வந்துவந்து சென்றன. ஒவ்வொருவரும் விழாநாளை ஆவலுடன் எதிர் பார்த்தனர். அந்நாளையும் அதனையடுத்த சில நாட்களையும் ஒவ்வொருவரும் ஆர்வத்துடிப்புடனேயே கழித்தனர். தம் இளைய நங்கையர்களிடம் தாம் கண்ட புதுமைகளைக் கூறி அவர்கள் ஆவலைத் தூண்டவும் அவர்கள் தவறவில்லை. ஆயினும் புதுமையார்வம் ஒரு சில நாட்களுக்குள் அனைவரிடமும் ஒய்ந்துவிட்டன. கடற்பரப்பிலும், நிலப்பரப்பிலும் உள்ள அக்கரையை ஒவ்வொருவராகக் கைவிட்டனர். ஆழ்கடலின் பழைய சூழலுக்குள்ளேயே அவர்கள் மீண்டும் இழைந்தனர்.
வேல்விழியின் ஆர்வம் இந்த ஐந்து ஆண்டுகளிலும் வளர்ந்தே வந்தது. ஆர்வம் ஆறிய தமக்கையரிடம் அவள் அதைக் காட்ட விரும்பவில்லை. ஆனால், அவள் கண்கள் அவள் நிலையை அவர்களுக்கு நன்கு விளக்கின. அவை, முன்னிருப்பவற்றைப் பார்க்கவில்லை. எப்போதும் கடற்பரப்பையும் வானையும் நிலத்தையுமே கனவு கண்டன. பொறுமையாக அவள் ஒவ்வொரு வரிடமிருந்தும் மனிதர், கப்பல்கள், நிலவுலக வாழ்க்கை ஆகியவை பற்றிய செய்திகளைக் கேட்டு உள்ளத்தில் சேகரித்து வந்தாள். “கடல் மக்கள், நிலவுலக மக்களுடன் ஊடாட முடியுமா? நில உலக மக்களாக வாழ வழியுண்டா?” இத்தகைய கேள்விகளை அவள் மெல்ல அத்தை பொன்னாவிரையிடமும் பிற தோழி யரிடமும் கேட்டாள். “முடியாது” என்றனர் சிலர். “இன்பகரமான கடல்வாழ்வைவிட்டு அதை யார் நாடுவார்கள்?” என்றனர் வேறு பலர்.
“ஏன்? மனித வாழ்வு இன்பகரமானதல்லவா?” என்று அவள் கேட்டாள். இளையோர் சிரித்தனர். “நாம் புயலில் விளையாடுகிறோம். அந்தப் புயலில் அவர்கள் கப்பல் கவிழ்கிறது. உடல் தத்தளித்து மூழ்குகிறது. மீன்கள் தின்றது போக, எலும்புகள் நம் தோட்டத்தில் வந்து விழுகின்றன. அவர்கள் இன்பத்தை அயலே சென்று பார்” என்று அவர்கள் உணர்ச்சியற்ற முறையில் பேசினார்கள். முதியோர் கேலி பேசவில்லை; அறிவுரை கூறினார்கள்.
"இன்பம் இங்குமட்டுமன்று: அங்கும் உண்டு, இங்குள்ள இன்பத்தை விட மிகுதியான இன்பங்கள்கூட அங்கே உண்டு. ஆனால் இங்குள்ள கலப்பற்ற இன்பம் அங்கே கிடையாது. மனிதர் வாழ்வின் பின்பகுதியில் கட்டிளமை தளர்ந்துவிடும். கட்டிளமையிலும் நோய், வறுமை ஆகிய புறத் தீமைகள் வந்து குறுக்கிடும். மனிதரின் பொய்ம்மை, வஞ்சகம், பொறாமை ஆகிய அகத் தீமைகளும் உண்டு. இவை ஒன்றும் நமக்குக் கிடையாது.
“மேலும் மனிதர் இன்ன சமயம் என்றில்லாது இறக்கலாம். நீடித்து வாழ்ந்தாலும் நூறாண்டுக்கு மேல் வாழ மாட்டார்கள். அதில் முதுமையும் சிறு பருவமும்போக, இருபது முப்பது ஆண்டுகளுக்குமேல் நல்வாழ்வு இருப்பதில்லை. ஆனால் நாமோ முந்நூறு ஆண்டுகளுக்குமேல் இளநலம் பெறுகிறோம். அதன் பின்னும் நுரையாக உலவுவோம்.” என்று அவர்கள் கூறினர்.
சிறியோர் உணர்ச்சியற்ற கேலி, பெரியோர்அறிவுரைகள் இவை எதுவும் வேல்விழிக்கு மனித உலகிலுள்ள பாசத்தை மாற்றவில்லை. துன்பங்கலத்த சில நாளைய இன்பமாயினும், மனித உலக இன்பமே பெரிது என்ற அவள் எக்காரணத்தாலோ எண்ணினாள்.
இறுதியில் நீண்டகாலமாக அவள் கனவு கண்ட நாளும் வந்தது. புத்திளமையின் பொலிவுடன் அவள் புத்தாடை அணிமணிகள் பூண்டு அழகரசியாய் விளங்கினாள். அவள் கடைசிப் புதல்வியாதலால், அவள் விழா கடலுலகம் காணாத முறையில் கொண்டாடப்பட்டது. ஆனால் அவள் தன் விழாவிலே கருத்துச் செலுத்தவில்லை; அதன் முடிவுக்கே அவள் ஆவலுடன் காத்திருந்தாள். முடிந்ததும் அவள் நீர்ப்பரப்பை நோக்கிப் பாய்ந்து சென்றாள். வழக்கமாக அத்தை தரவிருந்த மின்சார விலாங்கைப் பெறக்கூட அவள் காத்திருக்கவில்லை. உண்மையில் எந்த ஊர்தியையும்விட, அவள் உள்ளத்தின் ஆர்வம் அவளை விரைந்து இழுத்துச் சென்றது.
அகன்ற நீல வானையும் கதிரவனையும் கண்டு அவள் நாள்தோறும் களிப்பில் குளித்தாள். எழுந்தெழுந்தடங்கும் கடற்பரப்பு, கரையில் மோதியடித்துச் சிதறும் அலைகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டே அவள் நாழிகைகளைக் கணங்களாகக் கழித்தாள். நிலவின் அமைதியிலும் புயலின் கொந்தளிப்பிலும் அவள் ஆர்வம் பழக்கத்தினால் ஆறவில்லை. அவளிடம் என்றும் புத்தார்வம் பொங்கிக் கொண்டே இருந்தது.
ஒருநாள் தற்செயலாக அவள் ஒரு புத்தம் புதிய காட்சி கண்டாள். அது அவள் வாழ்க்கையையே மாற்றியமைப்பதாய் இருந்தது.
அன்று வானம் ஒரே மப்பும் மந்தாரமுமாயிருந்தது. வான வெளியில் காற்று முற்றிலும் உறங்கிக் கிடந்தது. அலையில்லாத கடல் பச்சைப் பசேல் என ஒரே புல்வெளிபோல் மின்னிற்று; முழுப்பாய் விரித்துச் சென்ற ஒரு கப்பல், காற்றில்லாக் காரணத்தினால், கடலரசன் மாளிகைக்கு அருகிலே கடற் பரப்பில் தயங்கித் தயங்கி மிதந்து கொண்டிருந்தது. கப்பலின் பலகணிகள் வழியாகப் பந்தங்கள்போலப் பல ஒளிவிளக்கங்கள் தெரிந்தன. உள்ளிருந்து பலவகை இசை ஒலிகளும் ஆரவாரங்களும் நீரில் மிதந்து வந்தன. பலகணி ஒளியில் நிழல்கள் அடிக்கடி அப்புறமும் இப்புறமும் விரைந்து சென்றன. அவள் கப்பல் அருகே சென்றாள். கப்பலைச் சுற்றிச் சென்றாள். அடிக்கடி, கடல் வீக்கத்தின்போது, அவள் நீரில் மிதந்து நின்று பலகணிகளின் வழியாக எட்டிப் பார்த்தாள்.
அந்தக் கப்பல் உண்மையில் பாண்டியநாட்டின் இளவரசனும் கடல் தளபதியுமான செழுங்கோவின் இன்ப உலாக் கப்பலேயாகும். செழுங்கோவின் இருபதாவது ஆண்டுப் பிறந்தநாள் விழாவைக் கடற்படையினர் ஈழ நாட்டுக் கரையிலே கொண்டாடத் திட்டம் இட்டிருந்தனர். கப்பல் ஈழநாட்டின் வடகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திடுமென எழுந்த கடலின் அமைதி, கப்பலை நடுக்கடலிலேயே நான்கைந்துநாள் சிறைப்படுத்யும் கப்பலில் வைத்தே நடத்த முனைந்தனர்.
கப்பலைப் பார்த்துவிட்டுத் திரும்பும் சமயத்தில், திடுமெனக் கடலதில் ஓர் ஓசை கேட்டது. அவள் கப்பலின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். கப்பலிலிருந்து பல வடிவுகளிலும் வண்ணத்திலும் தீச்சுடர்கள் வானை நோக்கி எழுந்தன. ஒன்று - பல நிறக்குமிழிகளாக எழுந்து உயர்ந்து வானத்தில் தாமரை மலர்போல் விரிந்து மலர்ந்தது. ஒன்று - நேரே மேலே சென்று ஒளிப்பொறிகளை வாரி இறைத்தது. சில - பாம்புபோல் சீறிப் பொறி வீசிச் சென்று வானில் ஓவிய வடிவங்களாக வெடித்தன.
இக்காட்சிகளை அவள் என்றும் கண்டதுமில்லை; அவற்றைப் பற்றி கேட்டதோ, கனவு கண்டதோ கூட இல்லை. அவற்றைக் காணும் ஆர்வம் அவளை நீர்ப்பரப்பில் மிதக்க வைத்தது. அதே சமயம், அச்சம் அவளை முன்னேறிச் செல்ல விடவில்லை. மல்லாந்து நீரில் படுத்தபடியே அவள் வானத்தின் வாணவேடிக்கைகளைப் பார்த்திருந்தாள்.
கடைசி வாணவெடி வானமெங்கும் பரவிற்று. பல திசைகளிலிருந்தும் ஒளிப்பொறிகளைச் சிதறிற்று. அவளை நோக்கி நாற்புறமிருந்தும் நெருப்புப் பிழம்புகள் மழைபோல் பொழிந்தன. ஒருகணம் அவள் கண்கள் கூசின, அவள் தன்னையறியாது வீறிட்டாள்; கண்களை மூடினாள்.
அவள் கண்களைத் திறந்தபோது எல்லாம் அடங்கி யிருந்தன. கப்பலில் விளக்குகள் குறைவாகவே இருந்தன. ஆனால் ஒரு பலகணி இன்னும் ஒளிக்கதிர் பரப்பிக் கொண்டுதான் இருந்தது. அதன் வழியே ஓர் அழகுருவம் கடலில் அவள் இருந்த திசை நோக்கி நின்றிருந்தது. அது போன்ற ஓர் எழில் வடிவை அவள் அதற்குமுன் பார்த்ததில்லை. காந்தம்போல் அது அவளைத் தன்னைநோக்கி இழுத்ததென்று அவள் கருதினாள்.
அந்த உருவம் அவளைப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆயினும் அது அலைகளையே கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்தது. அவள் கப்பலின் பக்கமாகச் சென்றாள். புற விளிம்பை அடுத்து இருள் கவ்விக் கிடந்தது. அதனூடாக அவள் பலகணியின் பக்கம் சென்றாள். பலகணியில் கண்ட வடிவம் அவளிடமிருந்து மூன்று முழத்தொலைவிலேயே நின்றிருந்தது.
அவ்வடிவம் இளவரசன் செழுங்கோவேயாகும். தோழர் களெல்லாம் போனபின்பும் அவன் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். கடைசி வாணவெடி வெடித்த போது எழுந்த குரல் அவனுக்கு வியப்பூட்டிற்று. அது மனிதக் குரல் போலவே இருந்தது. ஒன்று அது கடல் நங்கையர் குரலாயிருக்கவேண்டும்; அல்லது ஏதேனும் புதுவகைப் பறவையாகக்கூட இருக்கலாம் என்று அவன் நினைத்தான். அதைக் காணும் அவாவுடன்தான் அவன் பலகணியில் நின்றிருந்தான்.
கூக்குரலிட்டது வேல்விழி என்பதை அறியாமலே, கூக்குரல் கேட்ட இடத்தில் அவன் பார்வையைச் செலுத்தினான். பாலாடை போர்த்த ஓர் அழகிய நங்கையைப் பார்த்ததாக அவன் ஒருகணம் எண்ணினான். ஆனால் அடுத்த கணம் வேல்விழி நீரில் மூழ்கி வேறு வழியில் அலைகளிடையே திரிந்தாள். தான் கண்டது கனவாய்த்தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.
செழுங்கோ கடலையும், வேல்விழி செழுங்கோவையும் எவ்வளவு நேரம் பார்த்திருந்தனர் என்று கூற முடியாது. இருவரும் புற உலகை மறந்திருந்தனர். ஆனால் அவர்களைச் சுற்றிலும் கடல் இருண்டு குமுறிற்று, திடுமென வானத்தில் இடிஇடித்து மின்னல் மின்னிற்று. ஒரு சில கணங்களுக்குள் கடலும் வானும் ஒரே சூறாவளியில் சிக்கிப் புரண்டன. கப்பலில் ஒளி மறைந்தது. இளவரசன் உருவமும் மறைந்தது.
இருட்டில் கப்பல் உருண்டுருண்டு கழல்வதை அவள் கண்டாள். திடுமென ஒரு பேரொலி கேட்டது. உடைந்தது கப்பல்; கப்பலெங்கும் ஒரே ஆர்ப்பாட்டமாயிற்று; ஆர்ப்பாட்டம் கடலின் ஆர்ப்பாட்டத்தில் கலந்தது. கப்பலும் கப்பலில் உள்ளவர்களும் என்னவானார்கள் என்றே தெரிய முடியவில்லை. கப்பல் தண்டுகள் ஆங்காங்கே மிதந்தன. சிலவற்றில் மனிதர் தொத்திக் கொள்ள அரும்பாடுபட்டனர்.
கடல்மக்களுக்குக் கடலே உயிர். ஆனால் அதே கடல் நிலவுலக மக்களுக்குக் கூற்றுவனாக இருந்தது. இது கண்டு வேல்விழியின் உள்ளம் கலக்கம் அடைந்தது. அதே சமயம் அந்தக் கூற்றுவனைப் பொருட்படுத்தாது, கப்பலில் ஓடியாடித் திரிந்த மக்களுலகின் துணிச்சலை அவள் பாராட்டினாள். தன் உருவைக் காட்டிக் கொள்ளாமலே, மிதக்கும் கட்டைகளை அவள் தத்தளிக்கும் மனிதரருகே தள்ளினாள். ஆவளால் அப்போது செய்யமுடிந்த உதவி அவ்வளவே. அவர்கள் மட்டும் கடல் மக்களாயிருந்தால், அவள் அத்தனை பேரையும் கடலடியிலுள்ள தன் தந்தை மாளிகைக்கே கொண்டு சென்றிருப்பாள். ஆனால் அவர்கள் நிலவுலக மக்கள்; கடலுக்குள் கொண்டு சென்றால் அவர்கள் மூழ்கியே இறந்து விடுவார்கள்.
சூறாவளி - பெரிதும் அடங்கிற்று, கிழக்கில் வானம் பால் வார்க்கத் தொடங்கிற்று, அவளால் தள்ளப்பட்ட கட்டைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டே ஒரு மனித உருவம் மிதந்து தவழ்ந்தது. அதன் உடலில் உயிர் இருப்பதாகவே தோற்றவில்லை. பிடிமட்டும்தான் கட்டையைத் தொற்றிக் கொண்டிருந்தது. அவள் உள்ளம் இன்னதென்றறிய முடியா இயக்கத்தால் கனிவுற்றது. அவள் அந்த உருவத்தை அணைத்தெடுத்தாள். அந்தோ, அதுவே இளவரசன் செழுங்கோ!
அவள் துடித்தாள். அவள் உடல், அதன் இயற்கை நிறம் நீங்கி வெளிறிற்று.
அவள் அவ்வுடலைத் தூக்கினாள். அலைகள் மீது தாவித் தாவி கரையிருந்த திசை நாடி விரைந்தாள்.
நல்லகாலமாக அருகிலேயே ஒரு சிறு தீவு இருந்தது. அதன் கரை, பன்னிற மணல்களால் பாவப்பட்டிருந்தது. பொன்மணல் பரந்த ஒரு நுரையில் அவன் உடலைக் கிடத்தினாள். உடலில் சூடுபட ஆவலுடன் கைகளால் தேய்த்தாள். இளவரசன் உடலில் மெல்ல உணர்வு வந்தது. அவள் மகிழ்ந்தாள். அவள் உடலிலும் அப்போதுதான் உணர்வு வருவது போலிருந்தது. இளவரசன் மார்பு மெல்ல உயர்ந்துயர்ந்து தணிந்தது.
மூக்கு வழியே மூச்சுத் தடைபட்டுத் தடைபட்டு வரத் தொடங்கிற்று. இனி, அவன் விரைவில் விழித்துவிடுவான் என்று அவள் உணர்ந்தாள்.
கிழக்கு முற்றிலும் வெளுத்துவிட்டது. கடல் நங்கையான தால், வேல்விழி நெடுநேரம் கரையில் தங்க முடியவில்லை. அதே சமயம் செழுங்கோவை ஆதரவில்லாமல் விட்டுப் போகவும் அவள் விரும்பவில்லை. அவள் தயங்கினாள். சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அருகிலே இருந்த வள்ளியம்மன் கோயிலில் வழி பாடாற்றி விட்டுச் சில பெண்கள் அவ்வழியே சென்று கொண்டிருந்தார். வேல்விழி மெல்ல அலைகளில் நுழைந்து ஓர் அலைமுகட்டில் தலைநீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நங்கையர் இளவரசனைக் கண்டும் காணாதவர்கள் போல் போய்விட்டனர். ஆனால் அழகுமிக்க ஒரு நங்கை அவனைக் கடக்கும்போது பின்னால் பார்த்துக் கொண்டே சென்றாள். சிறிது தொலைவு சென்றதும், அவள் ஏதோ சாக்கிட்டு மற்ற நங்கையரை அனுப்பிவிட்டுத் திரும்பினாள்.
இளவரசன் அப்போதுதான் விழித்துக் கொண்டிருந்தான். அவள் அவனை ஆவலுடன் அணைத்து ஆதரவு காட்டினாள். அவனும் நன்றிமிக்க கண்களுடன் அவளைப் பார்த்தான்.
இளவரசன் கடலில் மிதக்கும்போது அவனுக்கு அரையுணர்வு இருந்தது. கடலிலிருந்து யாரோ ஒரு பெண் தன்னை அழைத்து எடுத்து சென்றதை அவன் உணர்ந்திருந்தான். ஆனால் கரைக்கு வருமுன் அவன் உணர்வு முற்றிலும் அகன்றது. மீட்டும் உணர்வு வந்து கண்விழித்த போது, அவன் தன்னருகே ஒரு நங்கையைக் கண்டான். கடலுலகத்திலிருந்து தன்னை மீண்டது ஒரு கடல் நங்கையாகவே இருக்க வேண்டும் என்று முதலில் அவன் கருதியிருந்தான். ஆனால் இப்போது அவன் தன் கருத்தை மாற்றிக் கொண்டான். தன் அருகிலிருந்த நிலவுலக மாதரசியே தன்னை நடுக்கடலிலிருந்து மீட்டிருக்க வேண்டுமென்று அவன் எண்ணினான்.
செழுங்கோவின் உள்ளக் குறிப்பை வேல்விழி ஊகிக்க முடிந்தது. தன்னால் விரும்பப்பட்டவனைக் காத்து விட்ட மகிழ்ச்சி அவளுக்கு இருந்தது. ஆனால், இன்னொருத்தி அதன் நன்றியைப் பெற்றது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் இளவரசன் நிலவுலக மனிதன். அவன் தன்னிலையடைந்து வாழும்படி செய்ய அவளுக்கு வேறு வழியில்லை. அவள் தன் உயிரை நிலவுலகிலே உலவ விட்டு, உடலை மட்டும் கடலடிக்குக் கொண்டு சென்றாள். வேல்விழியின் உடல் அன்று முதல் ஆழ்கடலில் அமையவில்லை. அது இளவரசன் கரையேறிய பகுதிக்கு அருகிலேயே வட்டமிட்டது. மீண்டும் அவனைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமா என்றே அவள் துடித்தாள்.
அத்தீவுக்குத் தூதுவம் என்று பெயர், குமரிக் கடலில் மூழ்கியிருந்து முத்தும், சங்கும் எடுக்கும் செம்படவர்கள் அதில் வாழ்ந்தனர். கோயிலிலிருந்து சென்ற பெண்கள் அங்குள்ள செம்படவப் பெண்களே. இளவரசனுக்கு ஆதரவு தந்த பெண் செம்படவத் தலைவன் திமிலன் மருகியாகிய திருகுவளையே யாவள். அவள் தன் தாய் மாமன் வீட்டிற்கு வந்த சமயத்தில்தான் இளவரசனை மீட்க நேர்ந்தது. இளவரசன் அடுத்த நாளே அவளிடம் விடைபெற்று மீண்டான். தான் யார் என்பதை அவள் அவனிடம் கூறினாள். ஆனால், அவன் யார் என்பதை அவள் அறியவில்லை. அவளை மீண்டும் காணும் அவாவுடன் அவன் அவ்விடத்திலேயே அடிக்கடி சுற்றினாள்.
வேல்விழிக்கு அவனை அடிக்கடி காண வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவன் அவளைப் பார்க்கவில்லை. அவன் கண்கள் அடிக்கடி யாரையோ தேடின. அவன் தன்னை நாடவில்லை. தன்னைக் காத்தவள் என்று அவன் கருதிய மற்ற நங்கையையோ நாடினான் என்று அவள் கண்டாள். அவள் கோபத்துடன் அலைகளில் மூழ்கினாள். ஆனால் அவள் உள்ளம் அவளுக்கு எதிரியாகவே இருந்தது. அது அவளை அவன் பக்கமே தள்ளிற்று. அவனன்றித் தனக்கு வேறு உயிரில்லை; வாழ்வில்லை; இன்பமில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
அவன் கரையில் செல்லும் இடமெல்லாம் அவள் கடற்கரையைச் சுற்றிக்கொண்டே சென்றாள். ஆனால் அவள் கரையில் உள்நாடிச் சென்றபோது அவள் மீள வேண்டிய தாயிற்று. “நான் ஏன் கடல் நங்கையாகப் பிறந்தேன். நில நங்கையாகப் பிறந்திருந்தால், இந்த நிலவுலக வேந்தனுடன் எப்போதும் வாழலாமே” என்று அவள் எண்ணி ஏங்கினாள்.
கடல் நங்கையாக இருக்கும்வரை அவனை அடைய ஒருபோதும் முடியாது. என்ன பாடுபட்டாலும், நிலவுலக நங்கையாகித் தீர வேண்டும். இதற்கு என்ன வழி? இதுவே அவள் ஓய்வு ஒழிவு இல்லாத சிந்தனை ஆயிற்று.
தன் கருத்துகளை அவள் யாரிடமும் கூறவில்லை. ஆனால் அவள் போக்கும் தோற்றமுமே அவளைக் காட்டிக் கொடுத்தன. தமக்கையர் மெல்ல மெல்ல அவள் செய்தி அறிந்தார்கள். ஒரு நிலஉலக மனிதனிடம் கடல்நங்கை எப்படிப் பாசம் கொள்ள முடியும் என்று அவர்களால் உணர முடியவில்லை. ஆயினும் தங்கையின் நிலைகண்டு அவர்கள் அரும்பாடு பட்டார்கள். அன்பு கனிந்த சொற்களால் அவள் உள்ளத்தின் உடன்பிறப்புப் பாசத்தை இயக்கிப் பார்த்தார்கள். கெஞ்சிப் பார்த்தார்கள். ஒன்றும் பயன்தரவில்லை. “இந்த ஆடவனை எப்படிப் பெறுவது? அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்ற பல்லவியையே அவள் மீண்டும் மீண்டும் பாடினாள்.
அவள் துயரங்கண்டு தமக்கையரால் வாளா இருக்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு உதவும் வகைகளும் அவர் களுக்கு விளங்கவில்லை. அத்தை பொன்னாவிரையிடமே சென்று அவர்கள் உதவிகோரினர். பொன்னாவிரை அனுபவமிக்கவள். வேல்விழியிடம் அவள் உயிரையே வைத்திருந்தாள். அவள் கவலையுடன் வேல்விழியை ஆர அணைத்துக் கொண்டாள்.
"கண்மணி, உன் புதுமையான ஆவல் கண்டு நான் கவலைப் படுகிறேன். மனிதருடன் வாழ வேண்டுமானால், மனிதராகித் தீரவேண்டும். அது நன்றன்று; எளிதுமன்று, கடலுலகின் இன்பங் களையும் நீண்ட வாழ்வையும் மட்டுமல்ல; உன் இனிய குரலையும் கூட நீ இழக்க வேண்டி வரும்; குறுகிய மனித வாழ்நாளில்கூட, எல்லையற்ற துன்பங்களைத் தாங்க வேண்டியதாய் நேரும்; அது மட்டுமன்று, இத்தனை விலைகொடுத்தும் உன் விருப்பம் நிறைவேறிவிடும் என்று உறுதியில்லை. அழகு ஒன்றை நினைத்து, ஊமையாகிய ஓர் ஊர் பேர் தெரியாப் பெண்ணை இளவரசன் விரும்புவான் என்பதில் என்ன உறுதி இருக்கிறது? விரும்பி மணந்துகொள்ள அவன் இசைவான் என்பதும் எதிர்பார்க்கத் தக்கதா?
“இதை நான் சொல்வதற்காக வருந்தாதே; ஏனெனில், அவன் விரும்பாவிட்டாலும் சரி; அல்லது அவனோ, உறவினரோ மணவினையை மறுத்தாலும் சரி; உன் மனித வாழ்வுக்கும் ஊறு ஏற்பட்டுவிடும். அவன் இன்னொரு பெண்ணை விரும்புகிற அந்தக் கணமே உன் உடலில் கடலகத்தின் மின்சார காந்த அலைகள் புகுந்து பொசுக்கத் தொடங்கிவிடும். அவன் இன்னொரு பெண்ணை மணப்பதானால், அப்பெண்ணின் கழுத்தில் மாலையிடும் கணமே, நீ கடல் நீரில் நீராக நுரை வடிவமாய்விடுவாய், இவற்றை எல்லாம் நன்கு சிந்தித்து உன் கருத்தை மாற்றிக் கொள்” என்றாள்.
அத்தையின் எச்சரிக்கை கேட்டு அவள் நடுங்கவில்லை. அது உண்மையில் அவளுக்குப் புது நம்பிக்கையையே ஊட்டிற்று. ‘மனித இனப் பெண்ணாவது, இடர் நிறைந்த காரியம்தான். ஆனால் அது முடியாத காரியமன்று. இளவரசனைப் பெறுவதில் இடர்கள் மிகுதி தான், ஆனால் பெறவழியுண்டு. பெறாவிட்டால் கூட, அந்நிலையில் நீண்ட நாள் துன்ப வாழ்வு வாழ வேண்டியிராது. நுரையுடன் நுரையாய்த் தன் முன்னோர்களிடம் தஞ்சம் அடைந்து விடலாம்.’ இந்த எண்ணங்கள் அவளுக்குப் புதிய தெம்பு கொடுத்தன. இளவரசனுக்காக இத்தனை இடர்களையும் வரவேற்கவே அவள் துணிந்தாள்.
’அத்தை, உங்களையும் என் அன்புத் தமக்கையரையும் விட்டுப் பிரிய நான் எண்ணவில்லை. ஆனால், இளவரசனில்லாத கடலுலகில் நான் இனி ஒரு கணமும் அமைதியுடன் வாழ முடியாது. உங்கள் இன்பங்களில் நான் பங்கு கொள்ளவும் முடியாது. ஆகவே நான் என் வழியில் செல்வதுதான் எல்லாருக்கும் நன்று. நான் மனித உருவடையும் வழி யாது? அதை எனக்கு விரைவில் கூறுங்கள். அதன் பின் ஆவது ஆகட்டும், என் ஆவல் நிறைவேறினால், என் இடர்களை நான் எப்படியும் தாங்கிக் கொள்வேன். உங்களை என்றும் மறக்க மாட்டேன். நிறைவேற வில்லையானால், உங்கள் அன்பில் கலக்க முடியாத இந்த வேல்விழியின் துயரத்தைவிட, நுரையாய் உலவும் வேல்விழியின் துயரம் உங்களுக்குப் பெரிதன்று; அது, ஆறுதலாகக் கூட அமையும்" என்றாள்.
பொன்னாவிரை அவளைத் தன் கண்ணீரால் ஆட்டினாள். "அம்மா, உன் விருப்பம் அதுவானால், நான் உதவத் தடையில்லை. தென்மா கடலின் நடுவில் ஒரு பாரிய நீர்ச்சுழி அழன்று கொண்டிருக்கிறது. அது ஒரு நீண்ட புழையாய் அடிநிலக் கடலுக்குச் செல்கிறது. புழையின் நாற்புறமிருந்தும் பாரிய நீர்ச்சிலந்திகள் புழையில் செல்லும் உயிர்களை வலைவீசிப் பற்றிய வண்ணமாய் இருக்கும். பல்தலை நீர்ப் பாம்புகள் நீருள் தம் நச்சு நாக்குகளால் புழையைத் துழாவியபடியே சுழலும். இவற்றிலிருந்து தப்பி மேற்செல்ல ஒரே ஒருவழிதான் உண்டு. சுழியிலிருந்து புழையில் தயங்காமல் தலைகுப்புற விழவேண்டும்.
"அடி நிலக் கடலில் ஆழ்கடலணங்கு வாழ்கிறாள். அவள் மாயம் வல்லவள். அவளால் கடல்மனிதரை நிலவுலக மனிதராகவும், நிலவுலக மனிதரைக் கடல் மனிதராகவும் ஆக்க முடியும். ஆனால், கடல் மனிதர் நிலவுலக மனிதராகும்போது அவர்கள் வாழ்நாளைஅவள் பெற்றுக் கொள்வாள். அவர்கள் வாலையும் அவள் தன் வாலாக்கிக் கொள்வாள். இதனால் இப்போதே அவளுக்கு ஆறுவால் ஒரே உடலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அறுவர் வாழ்நாளையும் பெற்று ஆயிரம் ஆண்டுக்குமேல் அவள் வாழ்ந்து வருகிறாள். உன் வாலையும் வாழ்நாளையும் பெற்றால் அவள் ஏழு வாலுடன் இன்னும் முந்நூறு ஆண்டு வாழ்வாள். வாலினிடமாக, அவள் இரண்டு அவள் இரண்டு வால்களை மாயத்தால் காலாக்கி உனக்கு ஒட்டுவாள். அவை பிறர் கண்களுக்குக் கால்களாயிருக்கும். ஆனால் உனக்கு அவை வால்களாகவே இருக்கும். அவற்றின் நுனிமீதே உன் சதை உடற்பகுதி அமையும். நிற்கும் போதும், இருக்கும் போதும், நடக்கும் போதும் அவை உனக்குச் சொல்ல முடியாத வேதனை தரும். அத்துடன் அந்த வேதனையைப் பேசா நாவுடனேயே நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
“உன்னை இப்பேரிடரில் அனுப்ப வேண்டி வந்ததே என்று நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை நீ அறிய மாட்டாய். ஆனால், உன் உள்ளம் விட்டவழி செல். கடல் தெய்வம் உன்னைக் காக்கட்டும்” என்று அத்தை அன்பு கனிந்த உருக்கத்துடன் பேசினாள்.
கட்டிளமைவிழாவின் ஆரவாரம் எதுவும் இப்போது இல்லை. ஆனால் கடல்மைந்தர், கடல் நங்கையர் யாவரும் கூடினர். நும் இளவரசிக்கு ஆராத்துயருடன் விடை கொடுத் தனுப்பினர். ஒரு மின்சார விலாங்கின் மீதேறி அவள் தென்மா கடலின் நடுவிடம் சென்றாள்.
கடல் சுழன்று சுழன்று எரிமலையின் உச்சி மீதுள்ள கெலிபோன்ற ஒரு புழையில் முடிவுற்றது. இளவரசன் எழிலுருவம் அவளுக்குத் துணிச்சல் தந்தது. அவள் தலைகுப்புற அதில் சென்று பாய்ந்தாள்.
நாற்புறமும் நீர்ச்சிலந்திகளின் கோர உருவங்கள் பேய்ச் சிரிப்புப் போன்ற கெக்கலிப்புடன் இழைகளை வீசின. பல்தலை நச்சுப் பாம்புகள் நாற்புறமும் இழைந்தன. ஆனால் அவளது பாய்ச்சலின் வேகத்தால் அவற்றின் பிடிவழுகிச் சென்றாள். அவள் புழைகடந்து ஆழ்கடல் நங்கையின் முன்சென்று விழுந்தாள்.
வேல்விழியின் வரவுகண்டு ஆழ்கடல் நங்கை மகிழ்ந்தாள். அவள் உடல் கடல்நங்கையின் உடல்போலவே இருந்தது. ஆனால் எந்தக்கடல் நங்கையையும்விட அவள் அழகும் உயரமும் மிக்கவளாயிருந்தாள். ஆறு கடல் நங்கையரின் வாழ்வுடன் அவர்கள் உயரமும் அழகும் புகுந்திருந்தன. அவளிடம் ஆறு நங்கையரின் வால்கள் அவள் உடலைச் சுற்றி நெளிந்தன. அவள் முகம் புன்னகை பூத்தது. வேல்விழியை எடுத்து அவள் ஆரத்தழுவினாள். “அழகிய சித்திரப் பாவையே! நீ நிலவுலக மங்கையாவதற்காகத் தானே வந்தாய்?” என்று கேட்டாள்.
“ஆம்” என்றாள் வேல்விழி,
“உன் வாலையும் வாழ்வையும் குரலையும் அதற்காகக் கொடுக்க விருப்பம்தானே?” என்றாள்.
வேல்விழி தலையசைத்தாள்.
ஆழ்கடல் நங்கையின் அருகே இரண்டு வாள்கள் இருந்தன. அவை மாயவாள்கள். இரண்டையும் அவள் தனது இருகையில் பற்றினாள். இரண்டும் எதிரெதிர் பாய்ந்தன, வேல்விழியின் வால் துண்டிக்கப் பட்டு, உடன்தானே ஆழ்கடலணங்கின் ஏழாவது வாலாய் ஒட்டிக் கொண்டது. வால் துண்டுபட்டதால் வேல்விழி துடித்தாள். ஆனால் ஆழ்கடலணங்கு இரு வாள்களையும் அதில் குத்தி நிறுத்தியபோது வேதனை இன்னும் பன்மடங்காயிற்று இளவரசன் எண்ணம் ஒன்றே இத்தனையையும் அவள் ஒருவாறு தாங்க உதவிற்று.
வாள்கள் அவளுக்கு வாள்களாகவே இருந்தன. ஆயினும் அவை கால்கள் போலவே ஒட்டி இயங்கின. பிறர் கண்களுக்கு அவை கால்களாகவே இயங்குபவை என்று அவள் கண்டாள். தவிர, அதைச் சுற்றி மீன்வாலின் நிறத்துடனேயே அழகிய இளநீல ஆடை புரண்டது. அவள் நடக்கும்போது வாள்கள் உள்ளூர அறுத்தன. ஆனால் ஆடையின் நெளிவு குழைவுகள் அவள் உள்ளத்தைக்கூட வசப்படுத்தின. அவள் வேதனையை மறந்து இன்பமாகக் கூவ முனைந்தாள். ஆனால் கூவ முடியவில்லை. அவள் குரலை ஆழ்கடலணங்கு வாங்கிக் கொண்டு விட்டாள் என்பதை அவள் உணர்ந்தாள்.
வேல்விழி இப்போது கடற்பரப்புக்கு விரைந்து வந்தாள். விரைந்து தூதுவத் தீவின் கரையை அணுகினாள். அப்போது இரவு அகன்றிருந்தது. கிழக்கின் செவ்வானம் கடல்மணலைப் பொன்னாக்கியிருந்தது. இளவரசன் செழுங்கோ கடற்கரை யிலேயே நின்றிருந்தான். அவள் அலைகளிலிருந்து நழுவிக் கரையில் சென்று உலவினாள். கதிரவன் ஒளிக் கைகள் கண்டு இப்போது அவள் நடுங்கவில்லை. ஏனென்றால், அவள் கரையில் கால் வைத்ததுமே, நிலவுலக நங்கையாகி விட்டாள்; ஆனால் கடலலைகளின் உணர்ச்சியும் மென்மையும் குழைவும் நெறிவும் அவள் உடலை விட்டகலவில்லை. ஆழ்கடலின் நீலம் அவள் கண்களில் புத்தழகுக் காட்டிற்று. பகலொளியை எள்ளி நகையாடும் நிலவொளிபோல் அவள் கரையில் உலவினாள்.
இத்தடவை, செழுங்கோவின் பார்வை அவள் மீதுபட்டது. அவன் ஆவலுடன் அவளை அணுகினான். வாள் அவளை அறுத்ததுபோல, அவன் முதற்பேச்சுக்கூட அவளைச் சற்று அறுத்தது. “நீ யார், எழிலரசி! ஆ! என் திருகுவளையைக் கண்டால், உன்னைக் காண வேண்டியதில்லை. அவள் அழகையே உரித்து எடுததுக் கொண்டு வந்ததுபோல நிற்கிறாய்; ஒருவேளை நீ அவள் தங்கையாய் இருக்கலாமோ?” என்றான்.
தன் அழகு அவனைக் கவர்ந்தது கண்டு அவள் மகிழ்ந்தாள். ஆனால் அதே சமயம் அதை இன்னொருத்தியின் அழகாக அவன் வருணித்தது கேட்டு அவள் புழுக்கமடைந்தாள்" அந்தோ! முதலில் அவரைப் பெற்றும், முதலில், என் அழகில் அவர் ஈடுபடாமல் இருக்க நேர்ந்துவிட்டது. அவர் நெஞ்சம் இன்னொருத்திக்கல்லவா உரிமைப்பட்டுவிட்டது!" என்று அவள் நடுங்கினாள்.
கடற்காற்றில் அவள் நடுங்குவதாக எண்ணி, செழுங்கோ தன் சால்வையால் அவளைப் போர்த்தினான். ஆதரவுடன் அவளை அணைத்து அரண்மனைக்குக் கொண்டு சென்றான். அவளை அவன் வேற்றுமை இல்லாமலே நடத்தினான். நாளுக்கு நாள் திருகுவளையின் அழகை அவன் மறந்தான். அவள் அழகே அவ்வழகாக அவனுக்கு இன்பம் அளித்தது. ஆனால் திருகுவளை அவனுடன் பேசினாள். உள்ளத்துக்கு உள்ளம் பரிமாறினாள். வேல்விழியோ கண்விழியால் மட்டுமே பேசினாள். அப்பேச்சு அவள் கண்வழியே அவன் கண்ணில் பாய்ந்தது. கண்ணின் பேச்சுக்கு விரல்கள் விளக்கம் தந்தன. விரல்களுடன் விரல்கள் ஊடாடின. செழுங்கோவின் உடலும் உள்ளமும் மெல்ல மெல்ல அவள் பாசத்தில் இழைந்தது.
அடிக்கடி செழுங்கோவின் உள்ளம் கடலலைகளில் தவழும் ஒரு கடலணங்கின் மென்கரங்கள் தன்னை அணைப்பதாக அவன் உணர்வான். அச்சமயம் அவன் கைகள் வேல்விழியின் கைகளைத் தடவின. கடலலையில் இருந்து தன்னை மீட்ட கைகள் அவையாகவே இருக்க வேண்டுமென்று அவன் எண்ணுவான். அச்சமயங்களில் வேல்விழியில் உடலில் இனியதோர் உணர்ச்சி பாய்ந்து ஓடும்.
ஆனால், மற்றும் சில சமயங்களில் இளவரசன் உள்ளம் கடற்கரையில் உலவும்; அச்சமயம் வேறு ஓர் ஆர்வக் குரல் அவன் செவிகளுக்கு இசையமுதாய் இருந்தது. அவன் அவற்றைக் கேட்டவண்ணம், வேல்விழியின் இதழ்களை நோக்குவான். அவள் அவன் நோக்குக்கு எதிர்நோக்கி அவனை அணைப்பாள். ஆனால் இவள் உடல் இச்சமயம் அனலாய் எரியத் தொடங்கும். இளவரசன் உள்ளம் வேறொரு திசையில் சென்றிருந்தது என்பதை இச்சமயம் அவள் உணர்ந்தாள்.
வேல்விழியின் அழகைப் பாண்டியன் அரண்மனையில் போற்றாதார் யாருமில்லை. ஆனால் அவள் யார், எங்கிருந்து வந்தாள் என்பதை அவர்கள் அறியக் கூடவில்லை. அத்துடன் அவள் வாயாடா ஊமை என்ற செய்தியும் வெளிவந்தது. இளவரசன் அவளை மணக்கக் கூடாது. என்று பாண்டியர் குடிப் பெருமக்கள் வாதாடினர். இளவரசன் உள்ளத்திலும் பலவகை எண்ணங்கள், உணர்ச்சிகள் எழுந்து வாதாடின. இவையனைத்தும் வேல் விழியைத் துன்பத் தீயிலும் இன்பக் கடலிலும் மாறி மாறி மூழ்குவித்தன. அவள் இளவரசன் உள்ளத்தில் மாறா இடம் பெற்றுவிடுதற்காகப் போராடினாள்.
முன்பு செழுங்கோ கடலலையில் உயிருக்காகப் போராடினான். வேல்விழி தானாகச் சென்று அவனுக்கு உதவினாள். இப்போது வேல்விழி வேறொருவகைப் புயலில் மிதந்து தத்தளித்தாள். இன்று அவன் தனக்குக் கைகொடுத்து உதவ மாட்டானா என்று அவள் ஏங்கினாள். நாவின் உதவியில்லாமல் அவள் பேச முடியவில்லை. தன் கருத்தைத் தனக்குள்ளேயே ஓடவிட்டு, அவள் சிந்தனைச் சுழல்களில் உழன்றாள்.
இளவரசன் பெரும்பாலும் அவளுடனேயே இருந்து இன்பமாகப் பொழுதைக் கழித்து வந்தான். ஆனால், சிலசமயம் அரசியல் அலுவல்கள் அவனை அவளிடமிருந்து பிரித்தன. அப்போதெல்லாம் அவள் அனல்பட்ட தளிராகத் தத்தளித்தாள். சிலசமயம் மாலைப்போதுகளில் கூட அவன் அவளில்லாமல் உலவச் சென்றுவிடுவான். இவ்வேளைகள் அவள் உச்ச அளவில் துன்புற்ற வேளைகளாய் அமைந்தன. ஏனென்றால், இத்தகைய மாலை உலாக்கழிந்து மீண்டபின்பு இளவரசன் பல கணங்கள் அவளைப் பாராமல் இருந்து வந்தான். ஒரு தடவை மாலை உலாச்சென்று இரவு அவன் மீளவே இல்லை. காலையிலேயே மீண்டான். ஆனால், வழக்கம்போல் அவன் ஒதுங்கியிருக்க வில்லை. அன்று ஆர்வமாக அவளை எடுத்து மடிமீது வைத்துக் கொண்டான். தலைமுடியை நீவி, நெற்றியைத் தடவினான். அன்று அன்பொழுக அவன் பேசினான்.
“அன்பே நீ தான் என்னைக் காத்தவள் என்பதை நான் இன்றுதான் உணர்ந்தேன். திருகுவளையை நான் இன்று கண்டேன். கடலிலிருந்து என்னை நீதானே மீட்டுக் கரை சேர்த்தாய் என்று கேட்டேன். அவள் விழித்தாள். கரையிலே தான் அவள் என்னைக் கண்டதாகக் கூறினாள் கடல் நடுவிலிருந்து என்னைக் கரைக்குக் கொண்டுவந்த கடல் தெய்வம் நீயே என்று கண்டு கொண்டேன். உனக்கு என் உயிர் உரியது. உன் அழகும் திருகுவளையின் அழகில் சிறிதும் குறைந்ததன்று, அவளை நான் காணாவிட்டால், உன்னையே அவளாகக் கொண்டிருப்பேன். ஆயினும் நான் என்ன முயன்றும் அவளை மறக்க முடியவில்லை. அவளை நான் மணந்துகொள்ள விரும்புகிறேன். அதே சமயம் உன்னையும் என் அரண்மனைத் தெய்வமாக, நாட்டின் அழகுத் தெய்வமாக, நானும் திருகுவளையும் வைத்துப் பேணுவோம், நாளையே அவளை நான் மணக்க வேண்டும். அதற்கு வாய்பேசா உன் வாழ்த்துரையையே வேண்டுகிறேன்.” என்று கூறி அவன் அவளை ஆதரவுடன் தழுவிக் கொண்டான்.
அவள் உடலில் மின்சாரக் காந்த அழல் எரியத் தொடங்கிற்று. அவள் காதல்கோட்டை மெழுகாய் உருகிற்று. ஆயினும் அவள் உள்ளத்தில் ஒரு புதிய தெம்பு எழுந்தது. இளவரசன் காதலுக்காக வாழ்வதே இதுவரை அவள் கட்டிய மனக்கோட்டை, அதே காதலுக்காக மாள்வது இப்போது ஒரு புதிய இன்பமாக அவளுக்குத் தோற்றிற்று. அவள் கண்கள் புதுமொழி பேசின. இளவரசன், அதை உணர்ந்து கொண்டான். அது அவன் புது மண வாழ் விற்குரிய வாழ்த்துரை என்று உணர்ந்தான். அவன் உள்ளம் பாகாய் உருகிற்று.
வேல்விழியை விட்டு இளவரசன் பிரிந்து சென்ற மாலை வேளைகளிலெல்லாம். அவன் உண்மையில் திருகுவளையையே தேடிக் கொண்டிருந்தான். திருகுவளையும் அவனை நாடி மாமன் வீட்டில் வந்து காத்திருந்தாள். அவர்கள் சந்தித்தனர். மீண்டும் அளவளாவிப் பேசினர். அவர்கள் இப்போது தங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை, தங்களைக் கூட்டி வைத்த மாயக் கடல் நங்கை பற்றியும் பேசினர்.
மாய நங்கையும் தன்னைப் போலவே இளவரசனிடம் மாறாத பற்றுக் கொண்டவள் என்பதைத் திருகுவளை அறிந்தாள். அவள் நிலை கண்டு அந்த நங்கை மனம் கசிவுற்றாள். “அன்பரே, அவள் என்னைப் போலவே ஒரு பெண். அத்துடன் வாய் பேசாதவள், ஆதரவற்றவள், அவள் மனம் அறிந்துதான் நான் உங்களை மணந்துகொள்ள முடியும். ஆனால் அவள் இணங்கினால், அவளை என்னுடன் என் தங்கையாக, நம் குடும்ப விளக்காக வைத்துப் பேண உறுதி கொண்டுள்ளேன். அவள் மனங் கோணாமல் நீங்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா” என்று அவள் இளவரசனிடம் கூறினாள்.
வேல்விழியின் வாய்பேசா வாழ்த்துக் கிடைத்தபின் செழுங்கோவும் திருகுவளையும் மீண்டும் எல்லையிலா இன்பக்கடலுள் மூழ்கினர். அந்த இன்பத்துக்கு விலையாக, வேல் விழி செய்த தன்மறுப்பை அவர்கள் அன்று உணரவில்லை.
இளவரசன் விருப்பப்படி, கப்பல் புயலில் உடைபட்ட இடத்திலேயே, மற்றொரு கப்பலில் வைத்துத் திருமணம் நடக்க ஏற்பாடாகியிருந்தது. மணமக்கள் இரவிலேயே வேல்விழியுடன் கப்பலில் சென்று தங்கினர். வேல்விழி இன்பமே உருவாய் மணமகள் தோழியாகக் கப்பலில் அங்குமிங்கும் உலவினாள். ஆனால் அவள் உடல் உள்ளூர மின்சாரக் காந்த அழலில் பட்டுத் தத்தளித்தது. அதை அவள் வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை.
கப்பலில் மணவிழாப் பாட்டுகள் யாழுடனும் குழலுடனும் இழைந்தன. அதே சமயம் அவற்றினும் மெல்லிய இனிய குரலுடன் அலைகள் கப்பலுக்கு வெளியே பாடின. அவை உண்மையில் கடல் நங்கையரின் சோகங்கலந்த பாடலே என்பதை வேல்விழி அறிந்தாள். அவள் மெல்லக் கப்பலின் பலகணி வழியே கடலலைகளை நோக்கினாள்.
அப்போது நள்ளிரவு, காதலர்கள் கூட அயர்ந்து உறங்கினர். யாழொலியும் குழலொலியும் கூடத் தூங்கிசை பயின்றன. அந்த இசையுடன் இழைந்து பாடிய வண்ணம் வேல்விழியின் தமக்கையர் கடலலை முகட்டில் மிகுந்தனர். வேல்விழியைக் கண்டதும் அவர்கள் கப்பல் அருகே தாவி வந்தனர். வேல்விழியும் அலைகளில் குதித்து அவர்களை அணைத்துக் கொண்டாள். அவர்களும் அவளை மாறி மாறி அணைத்து வெதுவெதுப்புடைய தம் புத்தம் புதிய கண்ணீரால் அவளை நீராட்டினர்.
கோமாட்டி அவளை மடிமீது எடுத்து வைத்துக் கொண்டாள். மற்ற தமக்கையர்கள் சூழ்ந்து அலைகளிடையே தவழ்ந்து நின்றனர். கோமாட்டி கம்மிய குரலில் பேசினாள்.
"ஆரூயிர்த் தங்கையே, இளவரசனுக்காக நீ துறந்த இன்பங்கள் மிக மிகப் பெரியன. ஆனால் நீ இளவரசனிடம் வைத்த அன்பைவிட நாங்களும் அத்தையும் உன்னிடம் வைத்துள்ள அன்பு சிறிதன்று. இதை நீ இதுவரை அறிந்திருக்க முடியாது. நீ சென்றது முதல், அத்தையும் உன்னிடம் வைத்துள்ள அன்பு சிறிதன்று. இதை நீ இதுவரை அறிந்திருக்க முடியாது. நீ சென்றது முதல் அத்தை கடலுலக ஆட்சியையே வெறுத்து விட்டார். கடலுலகமும் இப்போது கடலுலகமாய் இல்லை. அங்கே விழாக் கிடையாது. விருந்து கிடையாது. உன்னைப் பற்றியே எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
“உன் வீரச்செயல்கள் யாவும் எங்களுக்குத் தெரியும் நாங்கள் அனைவருமே உன்னைத் தொடர்ந்து ஆழ்கடலணங் கினிடம் சென்றோம். அவள் உதவியால் நிலவுலகில் நடப்பதையும் அறிந்து கொண்டோம். குரலை இழந்ததால், நீ படும் துயரம், உனக்கு நேர்ந்த தோல்விகள் ஆகியவற்றைக் கண்டு கொண்டோம். ஆழ்கடல் நங்கையிடம் உன் புதுவாழ்வின் வெற்றி நாடி நாங்கள் எங்கள் அனைவரின் வாழ்நாளில் பாதி தருவதாக உறுதி கூறினோம். அவள் உள்ளமும் இளகிற்று. அவள் அதற்கு வழி கூறினாள். அந்தப் புதிய வலுவுடனே தான் உன்னைத் தேடி வந்தோம்” என்று கோமாட்டி முடித்தாள்.
தமக்கையின் அன்புத் துடிப்பு வேல்விழியை ஆட்கொண்டது. அவள் தமக்கையின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். “உங்கள் அனைவரின் அன்பும் எனக்கு முன்பே தெரியும் அக்கா. ஆனாலும் இவ்வளவு எனக்காக நீங்கள் துன்பம் ஏற்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன். என் புது வாழ்வில் இவற்றால் மட்டும் எப்படி வெற்றி கிட்டக்கூடும் என்பது விளங்கவில்லை. நாளை இளவரசன் திருகுவளையை மாலையிட இருக்கிறான். ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை. நான் நுரையாக உங்களைச் சுற்றி ஆடுவேன். இளவரசனும் எந்தன் மறுப்பை அறிந்து என்னை உள்ளத்தில் போற்றுவது உறுதி, இது தவிர எனக்கு வேறு என்ன வேண்டும்?” என்றாள்.
கோமாட்டி கண் பனித்தது. “பெருந்தன்மை மிக்க நங்கையே… உன் புதுவாழ்வு அது அன்று; இதோ என்னிடம் ஓர் ஒப்பற்ற மாயவாள் இருக்கிறது. எங்கள் பாதி வாழ்வு கொடுத்து அதை ஆழ்கடலணங்கிடம் பெற்றோம். இன்றிரவு இதனைத் திருகுவளை உடலில் செலுத்திவிட்டால் போதும், உன திடமாகத் திருகுவளை நுரையாவாள், நீ அவளிருக்க வேண்டிய இடத்தில் இருப்பாய்; பாண்டியர்குல அரசியாவாய்; முன்பே பாண்டியர் குடியுடன் நமக்குத் தொடர்புண்டு. உன்னால் அத்தொடர்பு இன்னும் நெருக்க மடையும், ஆகவே எங்களுக்காக, அத்தை பொன்னா விரைக்காக, இந்த ஒரு காரியத்தைத் துணிகரமாகச் செய்யக் கோருகிறோம். அதன்பின் ஆழ்கடலணங்கின் உதவியால், நாங்கள் அனைவருமே நிலவுலக மக்களாய் உன்னுடன் வாழவந்து விடுவோம்” என்றாள்.
வேல்விழிக்கு இந்தத் திட்டம் முற்றிலும் பிடிக்கவில்லை. ஆனாலும் தமக்கையர் நல்லார்வத்தைத் தகர்க்கவும் அவள் துணியவில்லை. வாளை அவள் பெற்றுக் கொண்டாள்.
அன்றிரவு முழுவதும் அவள் உள்ளம் ஒரு போர்க்கள மாயிற்று. “திருகுவளை அவள் காதலுக்கு ஒரு முட்டுக் கட்டைதான். ஆனால் அது அவள் குற்றமன்றே! அவள் காட்டிய இரக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றுக்கு நான் என்ன கைம்மாறு தான் செய்ய முடியும்? அத்துடன் இளவரசன் அன்புள்ளம் இருவரிடமும் தானே பாசம் கொண்டுள்ளது? திருக்குவளையிடம் அவன் முதற்பாசம் கொள்ளா விட்டால், அப்பாசம் என்னுடையது தானே! அவ்வுள்ளத்துக்கு நான் என்ன விட்டுக் கொடுத்தால்தான் தகாது” என்று அவள் ஒரு சமயம் கருதுவாள், ஆனால் மறுசமயம் தமக்கையர், அத்தை, கடல்மக்களின் வாழ்வு அவள் கண்முன் நிழலாடின. “அந்தோ என் ஒருத்திக்காக அத்தனை பேரும் செய்த, செய்ய இருக்கும் மிகப் பெருந் தன்மறுப்பு எவ்வளவு! அதற்கு மாறாக, நான் இந்த ஒரு செயலைச் செய்யத் தயங்கல் கூடுமா?” என்று அவள் உள்ளம் வாதாடிற்று.
இருவகைச் சிந்தனைகளும் மாறி மாறி எழுந்து முழங்கின. எதன் வழியும் அவன் உள்ளம் துணியவில்லை.
மணமக்கள் அமர்ந்தனர். செழுங்கோ மாலையைக் கையில் எடுத்தான். திருகுவளை மெல்லப் புன்முறுவல் பூத்தாள். அவன் குனிந்த தலைமீது மாலையிடச் செழுங்கோ எழுந்து நின்றான்.
அவள் உள்ளம் இப்போது ஒரு திசையில் துணிவுற்றது. இளவரசனுக்காக அவள் தன்னை மட்டுமே துறக்க முடிவு செய்திருந்தாள். இளவரசன் உள்ளங் கொள்ளை கொண்ட நங்கைக்காக அவள் தன்னை மட்டுமன்றி, தன் இன முழுவதையுமே பலிகொடுக்க உறுதி கொண்டாள்.
வாளை அவள் உருவினாள். திருகுவளையின் காலடியில் வைத்தாள். அவள் இன்னதுதான் செய்கிறாள் என்று யாரும் காணுமுன், அவள் கப்பலிலிருந்து கடலில் குதித்தாள்.
இளவரசன் திடுக்கிட்டான். அவன் கைமாலை நழுவி திருகுவளை கழுத்தில் விழுந்தது. அந்தக் கணமே வேல்விழியின் உடல் ஒரு சிறு, திவலை நீர் நுரையாயிற்று அவள் வேல்விழியாகக் கடலில் விழவில்லை. நீர்த் திவலையாகவே விழுந்தாள். இளவரசன் இதை நோக்கினான். அவன் உள்ளம் ஒரு கணத்தில் உண்மையின் அடிப்படையை ஊகித்தது. அவனும் மற்றெல்லா வற்றையும் மறந்து அந்த நீர்த் திவலையைப் பிடிக்கத் தாவிக் குதித்தான்.
திருகுவளை உள்ளமும் ஒரு நொடியில் யாவும் உய்த்துணர்ந்தது. அவளும் நீர்த்திவலையைப் பின்பற்றி மணமாலையுடன் கடலில் குதித்தாள். மணமாலை அலைகளின் கழுத்தில் மாலையாக விழுந்தது. ஆக மூன்று நீர்த் திவலைகளின் மீதிட்ட மாலையாய் அமைந்தது.
கடல் மைந்தர், கடல் மங்கையர் அனைவரும் அக்கணமே நீர்த்திவலைகளாகி, அந்த மூன்று நீர்த்திவலைகளாகி, அந்த மூன்று நீர்த் திவலைகளையும் சுற்றி ஆரவாரித்தனர். கடல் அலைகள் தம் ஆட்டபாட்டம் முற்றும் அடங்கி அவர்களை வரவேற்றுப் பெருமைப்படுத்துபவைபோல் அமைந்து குழைவுற்றன. பாண்டிய நாட்டுக் கடற்படையினர் தம் வீரத் தலைவனான இளவரசன் முடிவு கண்டு கலங்கினர். ஆனால் உண்மை மெல்ல அவர்களுக்கும் விளங்கிற்று. இருகடல் நங்கையர்களின் உருவுடன் அவன் உருவும் சமைத்து, அவர்கள் மூவருக்கும் ஒரே மணமாலையிட்டனர். அவ்வுருவங்களைத் தூதுவத் தீவின் கரையிலே எழுப்பிப் பூசித்தார்கள்.
கடலின் நுரைகள் மாலைதோறும் அந்த மூவுருவங் களையும் சுற்றிவந்து முழங்கின.
வழித்துணை வேலன்
அரியக்குடி ஒரு பழமை வாய்ந்த தமிழ் நகரம். அங்கே முதுசாத்தன் என்ற ஒரு வணிகன் இருந்தான். அவன் தமிழார்வம் உடையவன். ஈகைக் குணமுடையவன். அவனுக்குச் செல்வமும் பொங்கி வந்தது. ஆனால் திடுமென அவன் வாழ்வில் புயல் மூண்டது. அவன் வாணிகம் நொடித்துப் போயிற்று. அவன் மனைவி ஒரு புதல்வனை ஈன்றாள். ஆனால் புதல்வன் பிறந்ததை அடுத்து அவள் உயிர் நீத்தாள். வறுமையைப் பொருட்படுத் தாமல் முதுசாத்தன் அப்புதல்வனை அருமையாக வளர்த்தான்.
முதுசாத்தன் மனைவியின் பெயர் இளநாகு. மைந்தனுக்கு அவன் மனைவியின் பெயரையும் தன் பெயரையும் சேர்த்து, இளஞ்சாத்தன் என்று பெயரிட்டான். இளஞ்சாத்தனிடம் தாயின் பொலிவும். தந்தையின் அறிவும் ஒருங்கே குடிகொண்டிருந்தன. அவன் நற்குணம் இருவருக்கும் நற்பெயர் அளிப்பதாயிருந்தது.
இளஞ்சாத்தனுக்குப் பதினைந்தாண்டு நிறையுமுன்பே, முதுசாத்தன் நோய்வாய்ப்பாட்டான், வரவர, அவன் உடல் வலிமை கெட்டு வந்தது. ஒரு நாள் அவன் மைந்தனைத் தன் அருகே அழைத்தான். “கண்மணி, நீ உன் தாயை உரித்து வைத்ததுபோல் இருக்கிறாய். எங்கும் நல்லவன் என்றும் பெயரெடுத்திருக்கிறாய். நம் முன்னோர்கள் ‘வாழ்வு’ உன் காலத்தில் மீண்டும் தழைக்கும் என்ற உறுதி எனக்கு உண்டு. ஆனால் அதைக் காண நான் இன்னும் நீண்டநாள் இருக்க மாட்டேன் என்று எண்ணுகிறேன். ஆயினும் எனக்குப்பின் நீ கவலையடையாதே. உனக்கு நான் பணமாக மிகுதி வைத்துப் போகவில்லை. ஆயினும் உன் குடிப்பெயரும் உன் வாய்மையுமே உன்னைக் காக்கும். அத்துடன் நான் உனக்கு இப்போது சொல்லும் வாய் மொழியையும் நீ மறவாதே.”எல்லாரிடமும் அன்புடையவனாய் இரு. கடமையை அஞ்சாமல் செய். அதன் பயன் பற்றிக் கவலைப் படாதே! கடவுள் உன்னைக் காக்கட்டும்" என்று அவன் பேசினான்.
அவன் பேச்சு முடியுமுன், கண்கள் மூடின. சிறுவன் இளஞ்சாத்தன் “அப்பா, அப்பா” என்று கூவினான். தந்தை பேசாதது கண்டு அவன் அலறினான். துடித்தான். ஆனால் விரைவில் தன் கடமை அவன் நினைவுக்கு வந்தது. அவன் சில உறவினர் உதவியை நாடினான். குடும்பக்கல்லறை மாடத்தில் தந்தையின் உடலை அடக்கம் செய்தான். கடைசி வாய் மொழியை நினைவுபடுத்திக் கொண்டான். அதன்படி நடப்பதாக அவன் வாக்குறுதி செய்தான். அன்புடன் தந்தை கல்லறைக்குப் பூசனைகள் நிகழத்தினான்.
தந்தை இறந்த பதினாறாவது நாள் அவன் கல்லறை மாடத்துக்குத் திருமெழுக்கிட்டான். கல்லறையைப் பலவாறு மலர்களால் அணி செய்தான். பற்றார்வத்துடன் பூசனை செய்து விடை பெற்றான். வெளிநாடு சென்று பொருள் தேட எண்ணிப் புறப்பட்டான்.
தந்தை செல்வத்தின் எச்சமிச்சமாக, அவனிடம் ஐம்பது பொன் காசுகளே இருந்தன. அவற்றை ஒரு பையிலிட்டு முடிந்து, அரைக் கச்சையில் கட்டிக் கொண்டான்.
அவனிடமுள்ள சிறுதொகையில்கூட, அவன் ஒவ்வொரு பொன்னாக எடுத்துச் சில்லரை மாற்றி வைத்துக் கொண்டான். தன்னால் இயன்ற மட்டும் ஏழை எளியவர்களுக்கு அதைக் கொடுத்து உதவினான். துணையற்ற நாடோடி விலங்குகளுக்கும் அவன் அவ்வப்போது தீனி வாங்கி உதவினான். பலவிடங்களில் ஏழைகளின் வீடுகள் கூரை அகன்றும், சுவர் இடிந்தும் கிடந்தன. அவன் கிடுகுகள் முடைந்து கூரைகளைச் செப்பம் செய்தான். மண்குழைத்துச் சுவர்களைத் திருத்தினான். ஏழைமக்கள் அவனை வாயார வாழ்த்தினார்கள்.
இரவு நேரங்களை அவன் அவ்வப்போது ஏழைகள் குடிசைகளில் கழித்தான். ஒவ்வொருநாள் அவன் மரத்தடிகளிலும் வைக்கோல் போர்களினடியிலும் தங்க வேண்டி வந்தது. ஆனால் அவன் இதுபற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. வானத்தைவிடச் சிறந்த கூரையை அவன் எதிர்பார்க்கவில்லை. வான்மீன்களே அவனுக்கு நல்ல துணைவர்களாயிருந்தன. காலையில் சின்னஞ்சிறு பறவைகளின் கலகலப்பு அவனைத் தட்டி எழுப்பிற்று. இலைதழைகள், காய்கனிகள் அவனுக்கு உணவாயின. ஓடை கேணிகள் பருக நீர் அளித்தன, மலர்களின் பொலிவு அவன் அயர்வு நீக்கி, உள்ளக் கிளர்ச்சியூட்டிற்று.
ஒரு நாள் அவன் ஒரு பெரிய பாழடைந்த கல்லறை மாடத்தில் தங்கவேண்டி வந்தது. அங்கே, பல கல்லறை மேடைகள் சிதைந்த நிலையில் கிடந்தன. இளஞ்சாத்தன் தன்னாலியன்ற மட்டும் அவற்றைத் துப்புரவு செய்தான். காட்டு மலர்களால் அவற்றிற்குப் பூசனை நிகழ்த்தினான். தந்தையின் கல்லறையை இச்சமயம் அவன் நினைத்துக் கொண்டான். தான் பிறர் குடும்பக் கோவில்களுக்கு மலர்ப் பூசனை செய்தால், தன் குடும்பக் கோயிலுக்கும் அதுபோல வேறு யாராவது மலர்ப் பூசனை செய்யக்கூடும் என்று அவன் எண்ணினான். அவ்வாறே அவன் அன்றிரவு கனவும் கண்டான். ஏனெனில் அவன் அக்கல்லறை மாடத்திலேயே அமைதியாக உறங்கினான்.
காலையில் அவன் எழுந்தான். கை, கால், அலம்பி மீண்டும் பயணம் தொடங்க முனைந்தான். ஆனால் மாடத்தின் ஒருபுறம் அவன் ஒரு புதுமையான காட்சி கண்டான். நிலத்தில் ஒரு சிதை கிடந்தது. அதில் கவலையற்று உறங்குவதுபோல் ஓர் அமைதியான மனித வடிவம் கிடந்தது. அதற்கு உயிரில்லை. ஆனால் அதைச் சுற்றி நாலு முரடர் நின்றனர். அவர்கள் அதை மாறி மாறிக் கழியால் அடித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் தம் வாயார அவர்கள் இறந்தவனை வைது பழித்தார்கள்.
இக்கொடுஞ் செயல்கண்டு இளஞ்சாத்தன் நெஞ்சம் பதைத்தது. அவன் அவர்களை அணுகினான். “ஐயன்மீர், இது என்ன கோரச் செயல் செய்கிறீர்கள்? இறந்த உயிருக்குக் காட்டும் மதிப்பு இது தானா?” என்று கேட்டான்.
அவர்கள் சீறிவிழுந்தார்கள். “உனக்கென்ன வந்தது போ, அவன் எங்களுக்கு நாற்பத்தைந்து பொன் தர வேண்டும் பணம் தராமல் தப்பி ஓடி விட்டான். ஆகவேதான் அவன் உடலுக்குத் தண்டனை அளிக்கிறோம்” என்றார்கள்.
இளஞ்சாத்தன் ஒன்றும் மறுமொழி பேசவில்லை. சட்டென மடியில் கையிட்டான். அவன் செலவு செய்தது போகக் கணக்காக நாற்பத்தைந்து பொன்கள் இருந்தன. அவற்றை அவன் அவர்கள்முன் எண்ணிக் காட்டினான். “உங்களுக்குப் பணம் பெரிது. ஆள் பெரிதன்று. இதோ உங்களுக்குச் செலுத்த வேண்டிய பொன்னை நான் தருகிறேன். பேசாது இவ்விடம் விட்டுச் செல்லுங்கள்” என்றான்.
கிடைக்காது என்று கைவிட்ட பொன் கிடைத்தது கண்டு முரடர் மகிழ்ந்தார்கள். அதைக் கையேந்தி வாங்கிக் கொண்டு, அவர்கள் அவ்விடம் விட்டு அகன்றார்கள். இளஞ்சாத்தன் அந்த உடலுக்கு ஆதரவுகாட்டி, அதை மாடத்தின் ஒருபுறம் அடக்கம் செய்தான். அச்சமயம் உயிரற்ற அவ்வுடல் அவனை நோக்கிப் புன்முறுவல் பூத்ததுபோல அவனுக்குத் தோன்றிற்று.
கடமை ஆற்றியதால் ஏற்பட்ட கிளர்ச்சி அவன் உள்ளத்தில் துள்ளி ஆடிற்று. தந்தையின் ஆவி இதனால் மகிழ்ச்சியடைவது உறுதி என்று அவன் எண்ணினான். இறந்த மனிதன் முகம் அவன் மனக்கண்முன் நின்று புன்னகை செய்தது.
அன்று இரவு அவன் அகல்வெளியிலேயே துயில் கொள்ள நேர்ந்தது. அவன் இனிய கனவுகள் கண்டான். தந்தை முகம் அவன் கண்முன் தோன்றிற்று. அதில் களிப்பு ஒளி வீசிற்று. அருகே இறந்த மனிதன் உருவம் நின்றது. தந்தை அதைச் சுட்டிக் காட்டினார். “நன்று செய்தாய், குழந்தாய்! இனி இவர் உன் மாறா உயிர் நண்பர்” என்று தந்தை கூறினார். திடுமென இறந்த மனிதன் உருவம் மறைந்தது. எழில்மிக்க ஓர் இளவரசி தந்தையருகே நின்றாள். “இது உன் வருங்காலச் செல்வம்” என்று தந்தை சுட்டிக்காட்டினார். இளவரசி அவனுக்கு மாலை சூட்டினாள். அவன் தலையில் பொன்முடி கவித்தாள்.
காலையில் எழுந்ததும், இத்தோற்றம் முழுதும் கனவு என்று இளஞ்சாத்தன் கண்டாள். ஆயினும் அவன் உள்ளம் இதனால் மகிழ்ச்சி கொள்ளாமலில்லை. தந்தையின் நல் வாழ்த்தே இது என்று அவன் கருதினான்.
அவனிடம் இப்போது ஒரு செப்புக்காசும், வழிக்காகக் கொண்டுவந்த உணவும்தான் இருந்தன. தள்ளாத ஒரு கிழவன் அவனைக் கண்டு “ஒரு காசு இருந்தால் கொடப்பா, நான் ஏழை, உழைக்க முடியாதவன்” என்றான். இளஞ்சாத்தன் சிறிதும் சிந்திக்காமல், தன் செப்புக்காசை அவனுக்குக் கொடுத்தான். உணவிலும் சிறிது கொடுத்து உண்பித்தான். அருகிலிருந்த ஓடையில் சென்று, தேக்கிலையில் நீர் மொண்டுவந்து கொடுத்தான். கிழவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவன் இளஞ்சாத்தனை உளமார வாழ்த்திச் சென்றான்.
காட்டுவழியாக அவன் சென்று கொண்டிருந்தான். பின்னால் ஒரு பாட்டுக்குரல் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். அது அவனைப் போலவே ஒரு வழிப்போக்கன். “தம்பி, நீ எங்கே போகிறாய்?” என்று அவன் கேட்டான். இளஞ்சாத்தனும் அவனிடம் அன்பு காட்டினான். “நான் பொருள் தேடித் தொலைவிடம் செல்கிறேன். அண்ணா! எனக்குத் தாயும் இல்லை. தந்தையும் இல்லை. ஆனால் உலகம் பரந்தது. கடவுள் எப்படியும் ஒரு வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் போகிறேன்” என்றான்.
“கடவுள்தான் என்னை உன்னிடம் அனுப்பியிருக்க வேண்டும்” என்று கூறி வழிப்போக்கன் சிரித்தான். “எனக்கு ஒரு நல்ல துணை அகப்பட்டது. தனியாக நடந்தால் வழி தொலையாது. ஒரு துணைவனுடன் செல்வது பயணத்தின் சோர்வைக் குறைக்கும்” என்றான் அவன்.
இருவரும் மிக எளிதில் பழகிவிட்டனர். வழிப்போக்கன் இளஞ்சாத்தனைவிட ஆண்டில் முதியவனாய் இருந்தான். ஆனால் உடல் வலுவிலும் திறமையிலும் அவன் இளஞ்சாத்தனுக்கு எவ்வளவோ மிச்சமாய் இருந்தான். அவன் உள்ளம் இளமை மிக்கதாகவே இருந்தது. இளஞ் சாத்தனுக்கு அவன் வந்தது முதல், பயணம் பயணமாகவே தோன்றவில்லை. அது ஓர் இன்ப உலாப்போல் எளிதாயிற்று.
வழிப்போக்கன் பெயர் கேட்டதும் இளஞ்சாத்தன் இன்னும் களிப் படைந்தான். வழித்துணை வேலன் என்பதே அது. அவன் செயலுக்கும் குணத்துக்கும் அப்பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.
உச்சி வேளையில் அவர்கள் ஒரு மரத்தடியில் இளைப்பாறி இருந்தனர். அச்சமயம் அவ்வழியே ஒரு கூனி தளர்நடையுடன் வந்தாள். அவள் முதுகின்மீது ஒரு பெரிய விறகுக்கட்டை இருந்தது. நண்பர்கள் இருந்த இடத்துக்கு அருகே வந்ததும். அவள் கால் தடுக்கிற்று. பள்ளத்தில் விழுந்ததால், அவள் கால் புரண்டு முறிவுற்றது. வலி பொறுக்க மாட்டாமல், கூனி கதறி அழத் தொடங்கினாள்.
இளஞ்சாத்தன் சட்டென எழுந்து அவளுக்கு ஆதரவு தந்தான். விறகுக் கட்டையும் அவளையும் அவளது வீடு வரை தூக்கிச் சென்று உதவவும் முற்பட்டான். ஆனால் வழித்துணை வேலன் அவனைத் தடுத்தான். “அவளைத் தூக்கிச் செல்ல வேண்டுவதில்லை. நோவைக் குணப்படுத்த என்னால் முடியும் அதன்பின் அவளாக நடந்து சென்று விடுவாள்!” என்றான்.
“அப்படியே செய்யுங்கள், அண்ணா! உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றான் இளஞ்சாத்தன். “நான் புண்ணியத்துக்குச் செய்ய முடியாது. என்னிடம் இருக்கும் மருந்து விலை ஏறியது. அரசர், இளவரசர்களுக்காகச் செய்ப்பட்டது. ஆனால் கூனி இடையில் செருகியிருக்கும் மூன்று வேப்பங் கழிகளையும் கொடுத்தால், மருந்திடுவேன்” என்றான் வழித்துணை வேலன்.
“நற்செயலுக்குக் கூலியா பெறுவது?” என்று இளஞ் சாத்தன் நினைத்தான். ஆனால் ஒன்றும் கூறவில்லை. கிழவியும் சற்றுத் தயங்கினாள். ஆனால் காலின் நோவு அவளை விரைவில் இணங்க வைத்தது.
வழித்துணை வேலன் இடுப்பிலிருந்து ஒரு புட்டி எடுத்தான். அதிலுள்ள மையின் தடம்பட்டதுமே, கிழவிக்கு நோவகன்றது. அவள் முன்னிலும் வலுவுடன் எழுந்து நடக்க முடிந்தது. மகிழ்வுடன் அவள் வேப்பங்கழிகளை வழித்துணை வேலனிடம் தந்தாள்.
அவள் இளஞ்சாத்தனுக்கே நன்றி காட்டுவது போல் அவனைக் கனிவுடன் நோக்கினாள். ஆயினும் வெளிப்படையாக, இருவருக்குமே அவள் நன்றி செலுத்தினாள். “நோவு தீர்ந்ததற்காக மட்டும் நான் கழிகளைக் கொடுத்துவிடவில்லை. நீங்கள் நல்லவர்கள். உங்களுக்கு இது பயன்படும்” என்று அவள் கூறிச் சென்றாள்.
“நீங்கள்” என்று இருவரையும் குறித்த போதும், அவள் இளஞ்சாத்தனையே குறிப்பாகப் பார்த்தாள்.
"இந்தக் கழிகள் எதற்கு உதவும்? என்று இளஞ்சாத்தன் தன் நண்பனிடம் கேட்டான்.
“நாம் தங்குமிடத்தில், இதைக் கொண்டு பெருக்கிக் கொள்ளலாம். வேப்பங்கழி தூசு மட்டுமின்றி, நச்சு வாடைகளையும் அகற்றும்” என்று அவன் அமைதியாக விடையளித்தான்.
விடை இளஞ்சாத்தனுக்கு மனநிறைவளிக்கவில்லை. ஆனால் அவன் மீண்டும் கேள்வி கேட்கவில்லை. நண்பன் செயல்கள் அவனுக்குப் புதிராயிருந்தன. ஆனால் அவன் அறிவும் ஆற்றலும் எதிர்பாராத ஆர்வம் ஊட்டின.
அவர்கள் வழி பாறையடர்ந்ததாயிற்று; கீழே நிலம் வெப்ப முடையதாயிருந்தது. ஆனால் வானமெங்கும் முகில்கள் திரண்டு வருவது போன்றிருந்தது. “இவ்வளவு மேகங்கள் இருந்தும் ஏன் வெப்புக் குறையவில்லை?” என்று இளஞ்சாத்தனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“தம்பி, இவை மேகங்கள் அல்ல. இவை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய மலைகள், நாம் நடப்பதே அவற்றில் முதல் மலையிலேதான்” என்றான்.
இளஞ்சாத்தன் அந்த அழகிய மலைக்காட்சியில் ஈடுபட்டான். வெப்புத் தெரியவில்லை. ஆனால் மலையுச்சி இன்னும் நெடுந்தொலைவிலேயே இருந்தது. பகல் முழுதும் நடந்தும் அது முன் இருந்த தூரத்திலேயே தெரிந்தது.
“ஒரு நாளைக்கு இவ்வளவு நடந்தது. போதும், அருகிலே ஏதோ ஊர் இருப்பதுபோலத் தெரிகிறது. சிறிது அங்கே சென்று தங்கிப் போகலாம்” என்று இளஞ்சாத்தன் தெரிவித்தான். வழித்துணை வேலன் மகிழ்வுடன் இணங்கினான்.
அது சிற்றூரன்று, ஒரு பெரிய நகரமாயிருந்தது. பல தெருக்களில் அலைந்தபின், அவர்களுக்கு ஓர் அருந்தகத்தில் தங்க அறை கிடைத்தது. அங்கே தங்கி இருவரும் நகரைச் சுற்றிப் பார்த்தார்கள்.
அன்றுமாலை அருந்தகத்தின் நிலாமுற்றத்தில் மக்கள் கூடியிருந்தனர். அழகிய பூவணிகளால் ஒரு மேடை ஒப்பனை செய்யப் பட்டிருந்தது. அதில் ஒரு நாடகக் குழு ஆடிற்று. அது நாட்டுப்புறக் குழுவானாலும், மக்கள் பொழுது போக்குக்காக அதைக் கண்டு களித்திருந்தார்கள். இளஞ்சாத்தனும் வழித்துனை வேலனும் கூட்டத்துடன் இருந்து பார்த்தனர். ஆனால் நாடகத்தின் காட்சி நடுவில் இளவரசியாக நடித்தவள் ஆடை தீப்பற்றிக் கொண்டது. தீ உடனே அணைக்கப்பட்டது. அனால் நடிகை ஆட முடியாதது கண்டு, நாடகக் குழுத் தலைவன் வருந்தினான். அச்சமயம் வழித்துணை வேலன் அவனை அணுகினான். “உன் நடிகையின் வெப்பை ஆற்றி இப்போதே என்னால் நடிக்க வைக்க முடியும். நீ என்ன தருவாய்?” என்றான்.
அவன் ஆர்வமுடன், “என்னிடம் இருப்பது எதுவானாலும் தந்து விடுவேன்” என்றான்.
“உன் அரைக்கச்சையில் தொங்கும் வாளைத் தருவாயா? அது போதும்” என்றான் வழித்துணை வேலன்.
அவன் சிறிது தயங்கினான். பின், “குணப்படுத்தி விட்டால் தரத் தடையில்லை” என்றான்.
வழித்துணைவேலன் தன் மையில் சிறிது நடிகை இளவரசியின் உச்சியில் தடவினான். அவள் வெப்பு உடன் அகன்றது. அதுமட்டுமன்று. அவள் உடனே முன்னிலும் அழகு மிக்கவளாகப் பொலிந்தாள். அவள் பாடியபோது, குரல் பழைய நாட்டுப்புறக் குரலாயில்லை. நகரமங்கையர் குரலும் நாணும் படியாயிருந்தது. ஆடியபோது அந்த ஆடலும் நகர ஆடல் நங்கையரைப் பழி காண்பதாய் அமைந்தது.
அரசு நடிகனும் மற்ற நடிக நடிகையரும் அவள் மாற்றம் கண்டு புழுங்கினார்கள். அவளும் அவர்கள் மாறுபடாமல் தான் மட்டும் தனியழகியாய் இருக்க விரும்பவில்லை. எல்லோரையும் மாற்றியருளும்படி அவள் தலைவனை வேண்டினாள். தலைவன் நாடக முடிவில் வழித் துணை வேலனிடம் புது வேண்டுகோளைத் தெரிவித்தான். வாளின் உறையையும் கேடயத்தையும் கொடு என்று கேட்டுப் பெற்று, அவன் எல்லோரையும் உருமாற்றினான். நாடகக் குழுவினரும் தலைவரும் மிகவும் அகமகிழ்வுடன் சென்றார்கள்.
வழித்துணை வேலன் ஒரு மனித நண்பன்தானா அல்லது நண்பன் உருவில் வந்த ஒரு தெய்வமா என்று இளஞ்சாத்தன் வியப்படைந்தான்.
வழித்துணை வேலனின் வாளுக்கு ஒரு நல்ல பயன் கிட்டிற்று. நள்ளிரவில் ஒரு இனிய - ஆனால் சோகமான பாடல் அருந்தக மாடத்திலிருந்து பரவிற்று. நண்பர் இருவரும் மாடி ஏறிச்சென்று பார்த்தனர். பல அடி நீளமுள்ள இறக்கையை விரித்த வண்ணம் ஓர் அன்னப்பறவை அந்தரத்தில் மிதந்தது. பாட்டு வரவர இனிமையாயிற்று. ஆனால் குரல் வரவரத் தளர்ந்தது. இறக்கையும் படிப்படியாகச் சுருங்கிற்று. பாட்டு முடிவில் பறவை கீழே விழுந்து மாண்டது. அப்போதும் இறக்கை இரண்டடி நீளமுள்ள தா யிருந்தது. வழித் துணைவேலன் இறந்த பறவையின் இறக்கைகளை வாளால் வெட்டி வைத்துக் கொண்டான்.
நண்பர்கள் மீண்டும் மலையேறப் புறப்படத் தொடங்கினர். ஆனால் அவர்கள் பயணம் எதிர்பாராது தடைப்பட்டது. நகர்த் தெருக்களெல்லம் காவலர்கள் அணி வகுத்து நின்றனர். அந்நாட்டின் அரசர் பாரி இளநாகனும் அவன் புதல்வி நாகவல்லியும் உலாவச் சென்று கொண்டிருந்தனர். நாகவல்லியின் அழகிய வடிவத்தைக் கண்டதும் இளஞ்சாத்தன் பேச்சு மூச்சற்று வியப்பே உருவாக நின்றான். ஏனென்றால், தந்தையுடன் கனவில் கண்ட அழகுருவம் அதுவே. “எப்பாடு பட்டாயினும், அவளையே பெற முயல வேண்டும். அல்லது அம் முயற்சியிலேயே மாள வேண்டும்” அருந்தகத்தின் நண்பரும் தலைவரும் பின்னும் மிகுதியாக அச்சுறுத்தினர். “அனுபவமற்ற இளைஞனே, அந்த இளவரசி அழகு கண்டு ஏமாறாதே. அவளைவிடக் கொடிய பேய்வடிவம் இருக்க முடியாது. அவள் கேட்கும் மூன்று கேள்விகளுக்குச் சரியான விடை கூறாவிட்டால் அவர்கள் தூக்கிடப்படுவார்கள். இப்படித் தூக்கிடப்பட்டவர்கள் எத்தனையோ இளவரசர்கள். இறந்த பின்னர் அவர்கள் உடல் தலையில்லாமல் தொங்கின. இளவரசியே தலையை விழுங்கி வந்தாள் என்று எல்லாரும் நம்புகிறார்கள். அவள் செய்வது கண்டு, மன்னன் கூட அவளை மனமார வெறுக்கத் தொடங்கி விட்டான். ஆகவே அந்த அரக்கிக்கு இரையாக வேண்டாம்” என்று அவர்கள் மன்றாடினர்.
இளஞ்சாத்தன் யார் சொல்லும் கேட்கவில்லை. “உலகம் பெரிது. கடவுள் எதையும் முழுவதும் தீங்காகப் படைத்திருக்க முடியாது. அவர் எப்படியும் என்னைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். காப்பாற்றாவிட்டால் கூட, அவர் விட்டவழிப்படி நான் நடப்பதில் கேடில்லை” என்று அவன் கூறியமைந்தான்.
அவன் மன்னனிடம் சென்று, தன் கோரிக்கையைக் கூறினான். சூதுவாதற்ற அவனது இளமுகம் கண்டு மன்னன் மனமுடைந்தான். அவனைத் தடுக்க எவ்வளவோ முயன்றான். ஆனால் இளவரசி தலையிட்டாள்; “என்னை விரும்பி வருபவனை நீங்கள் ஏன் தடுக்க வேண்டும்? அவன் முயன்று பார்க்கட்டும்” என்றாள்.
மறுநாளே முதற்கேள்வி கேட்பதாகக் கூறி அவள் அவனை அனுப்பினாள்.
அன்றிரவு நெடுநேரம் வரை வழித்துணை வேலனுடன் இளஞ்சாத்தன் உரையாடி மகிழ்ந்தான். மறுநாளே வாழ்வில் கடைசி நாளாயிருந்தால், நண்பனுக்கு இந்நாளாவது பிரிவு விழாவாயிருக்கட்டும் என்று அவன் எண்ணினான். இது தவிர அவன் வேறு எதுவும் கவலைப்படவில்லை. தெய்வம் எப்படியாவது உதவக்கூடும் என்ற நம்பிக்கையும் அவனை விட்டு அகலவில்லை. நள்ளிரவு வருமுன் அவன் அமைந்து தூங்கினான்.
வழித்துணை வேலனும் உறங்குவதுபோலச் சிறிது நேரம் நடித்தான். அதன்பின் நள்ளிரவுக்கு அரை நாழிகைக்கு முன்பே அவன் எழுந்தான். வேப்பங் கழிகளையும் வாளையும் இடையில் செருகினான். இறக்கைகளைக் கையில் எடுத்துக் கையுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டான்.
அன்னத்தின் இறக்கைகள் மாய இறக்கைகளாய் இருந்தன. அவற்றைக் கையில் கட்டியவுடன், வழித்துணைவன் உடல் கண்ணுக்குத் தெரியாத ஆவி உடலாயிற்று. அதனுடன் அவன் பறந்து சென்றான். அரண்மனையை அணுகி, இளவரசியின் பலகணியருகே ஒளிந்திருந்தான்.
அன்று நள்ளிரவிற்குள் இடி இடித்தது. மின்னல் மின்னிற்று. மழை வாரியடித்தது. மலைகளைப் பெயர்த்துவிடுவது போல வெள்ளம் புரண்டோடிற்று. ஆனால் இதற்கிடையே இளவரசியின் பலகணி திறந்தது. அவள் மணப்பெண் போன்ற ஆடை அணிமணி அணிந்து, பலகணி வழியாகப் பறந்து சென்றாள். வழித்துணையும் அவள்பின் பறந்து சென்றான்.
வழித்துணைவேலன் இடுப்பிலிருந்த வேப்பங்கழிகளில் ஒன்றை எடுத்தான். இளவரசி பறக்க வொட்டாமல் அவன் அவளை வலுக்கொண்ட மட்டும் அடித்தான். ஆனால் அவள் மழையையும் இடியையும் பொருட் படுத்தவில்லை. அடிகளைக் கூடச் சட்டைப் பண்ணவில்லை. அடி பொறுக்க மாட்டாமல் உடல்தான் நெளிந்து துடித்தது. அவள் போக்கு மாறவில்லை. அவள் நேரே மலையுச்சிக்குப் பறந்து சென்றாள்.
மலைப்பாறை ஓரிடத்தில் திறந்து வழிவிட்டது. அவள் உட்சென்றதும் அது மூடிக் கொண்டது. ஆனால் வழித்துணை வேலன் அது மூடுமுன் உட்சென்று விட்டான். வழியெல்லாம் அழகிய மலர்ப் பந்தர்போல அணியழகுடையதாயிருந்தது. ஆனால், மலர்கள் உண்மையில் பலநிறச் சிலந்திகளாக இருந்தன. அதன் முடிவில் ஓர் அழகிய அரண்மனை இருந்தது. அது தேரைகளால் கட்டமைந்திருந்தது. அதன் நடுக்கூடத்தில் நீலக் கந்தக ஒளிவீசும் பாம்புப் பற்களால் ஒரு விதானம் அமைந்திருந்தது. மின்மினிகள் விளக்காகவும், எலும்புகள் தூண்களாகவும், எலிகள் இரு தவிசுகளாகவும் அமைந்திருந்தன. இவற்றுள் ஒன்றில் கோர உருவமுடைய ஒரு மாயக்காரன் வீற்றிருந்தான். “ஏன் இவ்வளவு நேரம்?” என்று அவன் இளவரசியை அதட்டினான்.
அவள் பணிந்து மன்றாடினாள். மழையையும் இடியையும் சாக்குக் கூறினாள். சவுக்கடி போல ஆலங்கட்டிகள் ஓயாது விழுந்தன என்றும் குறை தெரிவித்தாள். அவன் ஒருவாறு அமைந்து, தன் மயிரடர்ந்த முரட்டுக் கைகளால் அவன் தலையைக் கோதினான்.
இரவு முழுவதும் பல மாய வேடிக்கைகள் அந்த அரண்மனையில் நடைபெற்றன. மாயாவியும் இளவரசியும் அவற்றைக் கண்டு களித்திருந்தனர். எலும்புக் கூடுகள் வகைவகை யாக ஆடின. விறகுக் கட்டைகள் மீட்டுவார். இல்லாமலே யாழ் போலப் பாடின. பலவகைக் கலங்களும் உண்டிகளும் பரிமாறுவார் இல்லாமலே இளவரசியின் அருகிலும் மாயாவி அருகிலும் வந்தன. ஒரு யாமம் வரை அவர்கள் குடித்துக் கொண்டிருந்தனர். பின் இளவரசி புறப்பட்டாள். புறப்படும் சமயம் அவள் புதிதாக தன்னை நாடிவந்த இளைஞனைப் பற்றிக் கூறினாள்.
மாயாவி கண்கள் ஒளி வீசின." ஆகா, நன்று-நன்று புதிய விருந்துதான் நாளை! விரைந்து அவன் கதையை முடித்து விட்டுவா!" என்றான்.
“அவனிடம் என்ன கேள்வி கேட்பது?” என்று அவள் கேட்டாள்.
“சிந்தனைக்கு எட்டாதவை சிறுபொருள்கள்தாம். இதோ உன்காலில் இருக்கும் செருப்பை நினைத்துக் கொள். என்ன நினைக்கிறேன்? என்று கேள். அவன் தலை நாளை உன் உணவு மேடைக்கு வருவது உறுதி” என்றான்.
அவள் விடைபெற்று மீண்டாள். வழித்துணை வேலன் கழி, முன்பே அரைகுறையாக நைந்திருந்தது. திரும்பும்போது அது முற்றிலும் தும்புதும்பாகுமட்டும் அவன் அவளை அடித்தான். அவள் பலகணி வழியாகப் புகுந்து அரண்மனைக்குள் மறைந்தாள். அடிபட்ட வேதனையாலும் வழித்துணை வேலன் காலையில் இளஞ்சாத்தனைத் துயிலெழுப்பினான். “அப்பனே, நீ வெற்றி பெறுவாய் என்று ஏதோ ஒன்று எனக்குக் கூறுகிறது. நான் ஒரு கனவு கண்டேன்; அதை யாரிடமும் சொல்லாதே; நான் நினைப்பது என் கால்மிதியடி என்று இளவரசி கூறியதாகக் கனவு கண்டேன்” என்றான்.
“மிக்க மகிழ்ச்சி, உன் வாக்கையே நான் கடவுள் உதவிய தெய்வ வாக்காகக் கொள்வேன்” என்று இளஞ் சாத்தன் அவனை அணைத்துக் கொண்டான்.
தேர்வு முடிவில் நகரத்தில் யாருக்குமே நம்பிக்கையில்லை. அன்று நடக்க இருக்கும் கோரப் பலியை எண்ணி நகரமாந்தர் கண்ணீர் விட்டனர். அரசன் முகம் சிந்தனையால் சோர்வுற்றி ருந்தது. இளவரசி அவன்முன் வந்து நின்றாள். இளஞ்சாத்தன் ஓருவன் முகம் மட்டுமே கவலையற்றிருந்தது.
இறுமாந்த தொனியுடன் இளவரசி குரலெழுப்பினாள். “நான் இப்போது என்ன நினைக்கிறேன். அதைக் கூறினால் நன்று. கூறா விட்டால், திட்டப்படி நீர் உயிரிழக்க வேண்டும” என்றாள்.
“இளவரசி, நீங்கள் நினைப்பது உங்கள் கால் மிதியடியை” என்று அவன் அமைதியுடன் கூறினான்.
அவள் முகம் சுண்டிற்று. தலையிறங்கிற்று. “ஆம், இன்று தப்பினீர்!” என்றாள்.
பல ஆண்டுகளுக்கிடையே முதல் தடவையாக அரசன் பாரி இளநாகன் முகத்தில் சிறுநகை ஒளிவீசிற்று. ஆனால் அது விரைவில் மறைந்தது. “இன்றைய பலிதான் தப்பிற்று. இன்னும் இரண்டு தவணைகள் இருக்கின்றனவே” என்ற எண்ணம் மறுபடியும் அவனைத் துயரில் தள்ளிற்று.
மக்கள் உள்ளத்தில் புது நம்பிக்கை எழுந்தது. ஆனாலும் மறுநாள் பற்றிய அச்சமும் இருந்தது. புதிய இளைஞன் வெல்வானா, மாட்டானா என்ற கவலையுடன் அவர்கள் ஒரிரவு கழித்தனர்.
முன்னாள் போலவே யாவும் அடுத்த நாளும் நடந்தது. இரண்டாவது நாளும் வேப்பங்கழி அந்த இளவரசியை மீட்டும் குற்றுயிராக்கிற்று. ஆனால் அவள் பயணத்தை நிறுத்தவில்ல. மாயாவியிடம் சென்று யாவும் உரைத்தாள். இளவரசியின் எண்ணத்தை இளைஞன் சரியாக ஊகித்தது கேட்டு, மாயாவி வியப்படைந்தான். “சரி, எப்படியும் நாளைத் தப்பமாட்டான்” என்று அவன் கறுவினான். இளவரசியிடம் கடைசிநேரம் வரை அவன் எதுவும் கூறவில்லை. ஆழ்ந்து சிந்தித்தான். மலைப்பாறை வரை அவன் அவளைத் தொடர்ந்து வந்து, காதுடன் காதாக “உன் கையுறை” என்று மெல்லக் கூறினான்.
இத்தடவையும் வழித்துணைவேலன் மறுமொழியைக் கனவாகவே நண்பனிடம் கூறினான்.
முதல்நாள் வெற்றி மக்கள் ஆர்வத்தைக் கிளறியிருந்தது. ஆகவே மறுநாள் அரண்மனையில் உள்ளும் புறமும் மக்கள் குழுவி அவாவுடன் தேர்வு முடிவை எதிர்பார்த்திருந்தனர்.
இளவரசியின் முகம் சற்று வாடியிருந்தது. அவள் முன்போலவே கேள்வி கேட்டாள். “உங்கள் கையுறை” என்று குரல் கேட்டு அவள் முகம் ஒளியிழந்தது. ஆனால் அரசன் அன்று சிறுபிள்ளை போலத் துள்ளிக் குதித்தெழுந்தான். “இன்னும் ஒரு நாள்தான். இதே வெற்றி நாளையும் கிட்ட வேண்டும். கடவுளே” என்று அவன் மனமார வேண்டினான்.
மூன்றாம் நாளிரவு இடியும் மின்னலும் இன்னும் கடுமையாக இருந்தன. வழித்துணை வேலனும் அன்று தன் முழுவலுவும் வருவித்து அவள் போக்கைத் தடுக்க முயன்றான். இன்று அவளும் வலுவிழந்தே இருந்தாள். பலதடவை வழியில் பாறைகளில் தங்கித்தங்கி இளைப்பாறிச் சென்றாள்.
அன்று மாயாவியின் முகத்தில்கூடச் சிறிது கவலை நிழலாடிற்று. “எனக்கெதிரான ஏதோ ஒரு சக்தி இரண்டு நாள் வேலை செய்திருக்கிறது. ஆயினும் நீ அஞ்ச வேண்டாம். இன்று அதை ஒழித்துவிடுவேன்” என்று அவன் கூறினான்.
அன்று இரண்டு யாமம் அவர்கள் உண்டாடினர். ஆனால் இரண்டு யாமமும் மாயாவியின் மூளை சிந்தித்துக் கொண்டே யிருந்தது. இளவரசி திரும்பும்போது. அவன் அவளுடன் புறப்பட்டான். பாறை கடந்தபோதும் அவன் விடை சொல்ல வில்லை. அவன் அவளைப் பின்தொடர்ந்து பறந்தான். வழித்துணை வேலனின் கழி, இருவரையும் மாறிமாறி அடித்தது. இளவரசியைப் போலவே, அவனும் அவற்றை ஆலங்கட்டிகள் என்று எண்ணினான். ஆனால் அவற்றால் இருவர் வலுவும் குறைந்து வந்தது. இளவரசி தலையில் கட்டியிருந்த நீலச் சவுக்கம் இச்சமயம் காற்றில் நெகிழ்ந்தது. வழித்துணைவேலன் அதைப்பற்றி இழுத்தான். அடுத்தகணம் அவள் கண்களுக்கு அது தெரியவில்லை. ஆவி வடிவான வழித்துணை வேலன் ஆடைக்குள் அது மறைந்தது.
இளவரசி பலகணியைத் திறந்தாள். உட்சென்றாள். மாயாவி அப்போதும் விடை சொல்லவில்லை. பலகணிக்குள் அவள் சென்றபின் அவள் காதில் “என் தலை” என்று கூறிவிட்டுத் திரும்பினான்.
இளவரசி உடல் அரண்மனைக்குள் மறைந்தது. பலகணி அடைத்தது. மாயாவி ஒருபுறம் அவளைப் பார்த்துக் கொண்டே மறுபுறமாகப் பறந்து எழுந்தான். வழித்துணைவேலன் அச்சமயத்துக்கே காத்திருந்தான். அவன் இடையில் தொங்கிய வாளை உருவினான். மாயாவியின் உடல் பறந்தது. ஆனால் தலை உடலைவிட்டுப் பிரிவுற்றது.
இளவரசியின் நீலச்சவுக்கத்தை ஏந்தி வழித்துணைவேலன் மாயாவியின் தலையை அதில் ஏற்றான். ஆதில் அதைச் சுற்றிக் கட்டினான். ஒன்றும் தெரியாதவன் போல அந்த மூட்டையுடன் அருந்தகத்தில் வந்து படுத்துக் கொண்டான்.
இளஞ்சாத்தனிடம் வழித்துணைவேலன் வழக்கம் போலப் பேசினான். “அன்பனே, இன்று நான் கனவு ஏதும் காணவில்லை. இது வியப்பாகத்தான் இருக்கிறது. ஆயினும் என்னருகில் காலையில் இந்த மூட்டையைக் கண்டேன். நீ இதை இப்படியே வைத்துக்கொள். என்ன நினைக்கிறேன்? என்று இளவரசி கேட்டவுடன், நீ எதுவும் சொல்ல வேண்டாம் ‘இதுதான்’ என்று கூறி இந்த மூட்டையைத் திறந்து காட்டிவிடு. மற்றவை தெய்வம் விட்டவழி ஆகட்டும்” என்றான்.
மூன்றாம்நாள், வெளிநாட்டார்கூட “வியத்தகு” இளைஞனைப் பார்க்க நகரத்தில் வந்து குழுமினர். ஆகவே அன்று அரசன் கொலுவை நகர்ப் பொதுவிலேயே கூட்டினான். இளவரசியின் முகத்தில் அன்று ஈயாடவில்லை. அவள் குரல் முற்றிலும் கம்மியிருந்தது. ஆயினும் அன்றைய தேர்வில் இளைஞன் வெற்றி பெற முடியாது என்ற எண்ணம் அவளுக்குத் தெம்பளித்தது. அவள் மாயாவியின் தலையை உள்ளத்தில் பாவனை செய்து கொண்டாள். “நான் என்ன நினைக்கிறேன்?” என்று கேட்டாள்.
“இதுதான்” என்ற சொற்களுடன், இளஞ்சாத்தன் கையிலுள்ள மூட்டையை அவிழ்த்தான். உள்ளிருந்த கோர உருவத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. வாழ்வில் முதல் தடவையாக அவன் திகில் கொண்டான். அரசனும் மக்களும் அவனைப் போலவே திகைத்து நின்றனர். ஆனால் இளவரசி “ஆ” என அலறி விழுந்தாள். எல்லாரும் தம் திகைப்பை மறந்து, அவள் பக்கம் திரும்பினர். பாங்கியர் முகத்தில் நீர் தெளித்து விசிறினர். அவள் கண்விழித்தாள். அவள் முகத்தில் உணர்வு மீண்டது. அத்துடன் முன்னில்லாத ஓர் ஒளியும் பரவிற்று. அவள் நீலக்கண்கள் நாற்புறமும் சுழன்று மெல்ல இளஞ்சாத்தன் மீது தங்கின.
“நீங்கள் சரியாக ஊகித்துவிட்டீர்கள். இனி நான் உங்கள் ஆருயிர்த் துணைவி, முழு மகிழ்வுடன் உங்களை ஏற்கிறேன். ஏனெனில் நீங்கள் என் வாக்குறுதியை நிறை வேற்றியதும் அன்றி, என் உயிரையும் ஒரு கோர மாயத்திலிருந்து மீட்டீர்கள். அந்தத் தலைமட்டும் என்முன் கிடக்காவிட்டால். உங்கள் வெற்றியால்கூட நான் மகிழ்ந்திருக்க முடியாது. ஏனென்றால், யாராவது மூன்று நாளும் வெற்றி பெற்றுவிட்டால், அந்தப் பொல்லாத மாயாவிக்கு வெற்றிபெற்ற இளைஞனுடன் நானும் இரையாக வேண்டும். தங்கள் உயிரையும் என் உயிரையும், அப் பொல்லாப் பகைவனை ஒழித்துத் தாங்கள் மீட்டுள்ளீர்கள். என் தந்தை உயிரையும் காத்து மக்கள் இடரும் தீர்த்தீர்கள்” என்றாள்.
அவள் மாயத்தின் முழுக் கோரவடிவையும் அவன் சொற்களால் அறிந்த யாவரும் இளஞ்சாத்தனைப் பன்முறை புகழ்ந்து கொண்டாடினர். அன்றே மணவினைக்கான ஏற்பாடுகள் எங்கும் தொடங்கின.
இளஞ்சாத்தன் உள்ளம் இந்த மகிழ்ச்சியிலும் வழித்துணை வேலன் அருஞ்செயல்களை மறக்கவில்லை. மகிழ்ச்சிகரமான முடிவுகூற அவன் அருந்தகம் விரைந்தான். ஆனால் வழித்துணை வேலனை எங்கும் காணவில்லை அவன் படுக்கையில் ஓர் உறை கிடந்தது. ஆவலுடன் அதைப் பிரித்துப் படித்தான்.
“அன்பனே, என்னை நீ எங்கும் தேட வேண்டாம். நான் ஆவி உருவில் எப்போதும் உன்னுடனிருந்து உன்னைக் காப்பேன். என்வேலை முடிந்துவிட்டது. நான் செல்கிறேன்.”
"நான் யார் என்பது உனக்குத் தெரியுமா? கடன்காரப் பழிகாரரிடமிருந்து நீ மீட்ட உடல் என் உடல்தான். கடன் சுமையால் என் உயிர் உடலைச் சுற்றி ஊசலாடிக் கொண்டிருந்தது. பழிகாரர் அடிகள் மட்டுமின்றிச் சொற்களும் என் ஆவியைத் துளைத்தன. உன் செயல் எனக்கு விடுதலை தந்தது. என் நன்றியை உனக்குச் செயல் மூலம் தெரிவிக்காமல் நான் மேலுலகம் செல்ல விரும்பவில்லை.
"வாழ்வில் நான் மருத்துவனாயிருந்தேன். கடன் வாங்கி நான் உழைத்தது உயிர் மருந்தைக் காணும் பொருட்டே; இறக்கும் தறுவாயில்தான் அதைக் கண்டேன். அது எனக்குப் பயன்பட வில்லை. ஆனால் நன்றியுணர்வு என் ஆவிக்கு மீண்டும் ஆற்றல ளித்தது. நான் என் உடலிற் புகுந்து உன்னைத் தொடர்ந்து வந்து உதவினேன். அச்செயலுடன் என் ஆற்றல் தீர்ந்தது. ஆனால் மகிழ்வுடன் நான் இனிச் செல்லும் உலகில் உனக்காக இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பேன்.
"கூனியாக வந்தது என் நல்வினையே, மூன்று முரடர்களையும் அது மூன்று வேப்பங்கழிகளாகக் கொண்டு வந்து தந்தது. இளவரசியின் மாயப் பழியகற்ற அவை உதவின. என்னிடம் நீ கொண்ட நட்பும், உயிர்களிடம் காட்டிய அன்புமே அன்னமாய் வந்து தன் இறக்கைகளை அளித்தது. அவற்றின் உதவியால்தான் நான் மீட்டும் ஆவி வடிவில் கண்காணாமல் சென்று, மாயாவியின் மறைவிடத்திலிருந்து மறைமொழிகளை அறிய முடிந்தது. நாடகக் குழுவாக வந்தவர்கள் உன் நல்லெண்ணங்களே. அவர்கள் தந்த வாள் உண்மையில் நீ அருள் உள்ளத்துடன் கிழவனுக்குக் கொடுத்த கடைசிக் காசுதான். அதுவே மாயாவியின் தலையை வெட்ட உதவிற்று.
"உன் நற்செயல்களே உனக்கு உதவின. உன் நல்லுள்ளம் உலகில் நலம் பரப்பி வாழட்டும். உன் மகிழ்ச்சியிடையே என் நட்பை நினைத்துக் கொள்.
“உன் சிலநாள் நண்பன், பலநாள் துணைவன், வழித்துணை வேலன்”
புதுமையான இக்கடிதத்தை இளஞ்சாத்தன் மீட்டும் மீட்டும் வாசித்தான். அவன் வாழ்வில் அது என்றும் மாறாத ஓர் ஊக்கும் துணையாயிருந்தது.
இளவரசி நாகவல்லியுடன் இளஞ்சாத்தன் இனிது வாழ்ந்து, பலவகை அறச்செயல்களால் மக்களை மகிழ்வித்து நாடாண்டான்.
இளவேனில்
சேர நாட்டில் காந்தளூர் ஒரு பழங்காலத் துறைமுகப் பட்டினம். அதில் பூணாரம் என்றொரு செல்வ வணிகன் இருந்தான். அவனுக்குப் பூமாலை என்னும் பொற்புடை மனைவியும், பொன்முடி, பொன்மணி என்று இரு புதல்வர்களும் இருந்தனர். பொன்முடியும், பொன்மணியும் சிறுவர்களாய் இருக்கும்போதே பூமாலை காலமானாள். வணிகன் இதன்பின் மையார்விழி என்ற மற்றொரு நங்கையை மணங்செய்து கொண்டான்.
மாற்றந்தாயான மையார்விழியிடம் சிறுவர்கள் பலவகையிலும் அவதியுற்றார்கள்.
பொன்முடியும் பொன்மணியும் இணைபிரியா அன்புடைய வரா யிருந்தனர். பொன்முடிக்கு வயது வந்த போது, பூணாரம் அவனுக்கு இளவேனில் என்ற நற்குடி நங்கையை மணஞ் செய்வித்தான். அவள் கணவனிடம் எல்லையற்ற பாசங் கொண்டிருந்தாள். கணவன் தம்பியாகிய பொன்மணியிடமும் அவள் மிகுந்த பரிவு காட்டினாள். ஆனால் இளைஞர்கள் இருவரையும் போலவே அவளும் மையார்விழியின் வெறுப்புக்கும் கடுகடுப்புக்கும் ஆளானாள்.
பூணாரத்துக்குப் புதல்வர்களிடம் இயற்கைப் பாசம் மிகுதியாகவே இருந்தது. ஆனால் புது மனைவியின் வழிப்பட்டு அவர்கள்மீது அவன் அக்கறை குறைந்து வந்தது. அதே சமயம் மையார்விழியைவிட இளவேனில் திறமையும் பண்புமுடைய வளாயிருப்பது கண்டு, அவள் வீட்டுப் பொறுப்பைப் பெரிதும் அவளிடமே ஒப்படைத்தான். இது அவள் மீதும் பிள்ளைகள் மீதும் மையார்விழிக்கு இருந்து வந்த குறுகுறுப்பைப் பெருக்கிற்று.
ஒருநாள் காடுகாவலன் ஒருவன் வணிகனைக் காண வந்திருந்தான். வணிகனுக்கு அன்புப் பரிசாக அவன் ஓர் உயர் பண்புடைய வருக்கைக் கனியைக் கொடுத்தான். பாறையின் பிளவில் விளைந்து நீண்டநாள் முதிர்ந்தது அக்கனி. அது தெய்வீக ஆற்றல் உடையதாயிருந்தது. அதை உண்டால் அழுத கண்ணீர் முத்துக்களாகப் பொலிவுற்றன. சிரித்த சிரிப்பு மணிகளாகச் சிதறின. இச் சிறப்புக்களைக் கூறி அதைக் கவனமாகப் பக்குவம் செய்து உண்ணும்படி காடுகாவலன் வேண்டினான்.
பூணாரம் வழக்கப்படி அதை இளவேனிலிடம் கொடுத்தான். அதைத் தனிப்படச் சமைத்துத் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் அளிக்கும்படி கோரினான்.
மையார்விழிக்கு வணிகன். செயலும் கட்டளையும் இரண்டுமே பிடிக்கவில்லை. ஆனால் கணவனைக் கடிந்து கொள்ள அவள் துணியவில்லை. எப்படியாவது அவர்களுக் கெதிராக அவனைத் தூண்டி அவர்களை ஒழிக்கக் கருதினாள். அன்றே அவளுக்கு அவ்வாய்ப்பும் கிட்டிற்று.
பொன்மணி இளைஞனாய் விட்டாலும் விளையாட்டுப் போக்கு மாறாதவன். அவன் ஒரு மணிப் புறாவைப் பறக்க விட்டுப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான்.
மணிப்புறா மையார் விழியின் மாடத்தினுள் சென்று தஞ்சம் புகுந்தது. அவள் அதை எடுத்துத் தன் மணப்பொருள் பேழைக்குள் ஒளித்து வைத்தாள். பொன்மணி கேட்டபோது அது தன்னிடம் இல்லை என்றாள். ஆனால் மணிப்புறா உள்ளே சென்றதை அவன் பார்த்திருந்ததால், அவள் சொல்வதைக் கேட்காமல் மாடத்தினுள் புகுந்தான். அவள் தடையை மீறி அறை முழுவதும் தேடி மணிப் புறாவைக் கண்டெடுத்தான். இம்முயற்சியில் மையார் விழியின் கைவளைகள் உடைந்தன. மணப்பொருள்கள் தாறுமாறாகச் சிதறுண்டன.
தன் மணிப்புறாவைப் பறித்துத் தன்னையும் புண்படுத்தி விட்டான் என்று அவனைப்பற்றிக் கணவனிடம் கூற மையார்விழி திட்டமிட்டாள். அவ்வாறு செய்து அவனையும், அவன் அண்ணனையும் அண்ணியையுமே வெளியேற்றிவிடுவதாகவும் அவள் அச்சுறுத்தினாள்.
சற்று முன்னோ பின்னோ, அவள் கூறியபடி செய்து விடுவாள் என்றே இளவேனில் அஞ்சினாள். ஆகவே அவள் தன் கணவனையும் கணவனின் தம்பியையும் எச்சரித்து அன்றே வெளியேறும்படி தூண்டினாள். சமைத்து வைத்திருந்த வருக்கையில் இளைஞருக்கு ஒரு பகுதியைக் கொடுத்து உண்பித்தாள். ஒரு பகுதியை மாமனுக்கென மூடி வைத்தாள்.
மனைவியின் நகைகளையும் ஒரு குதிரையையும் எடுத்துக் கொண்டு, பொன்முடி மனைவியுடனும் தம்பியுடனும் இரவே வெளிக்கிளம்பி அயல்நாடுகள் சென்றான்.
வணிகனுக்கு வைத்திருந்த வகை உணவை இரவே பூனை தின்று விட்டது. `பிள்ளைகளே அத்தனையையும் தின்றுவிட்டு இரவே ஓடினர்’ என்று மையார் விழி கதைகட்டினாள். வணிகன் சீற்றத்துடன் அவர்களை எங்கும் தேடும்படி ஆள் அனுப்பினான். ஆனால் அவர்கள் சென்ற குதிரை உயர்ந்த ‘வாம்பரி’ ஆதலால், அவர்கள் நெடுந்தொலை சென்றுவிட்டனர்.
அவர்கள் பல ஊர்களும் நாடுகளும் கடந்து பலநாள் பயணம் செய்தனர். இளவேனில் அச்சமயம் நிறை கருவுற்றிருந் ததனால் அவர்கள் வேகம் தடைப்பட்டது. இறுதியில் அவர்கள் ஒரு காட்டாற்றின் கரையை அணுகினர். அவ்விடத்திலே இளவேனில் வயிற்றுநோவு மிகுந்தது. அவள் உணர்விழந்த நிலையில் ஒரு மரத்தடியில் சாய்ந்தாள். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள்.
குளிர் மிகுந்த அந்தக் காட்டுவெளியில் தாய்க்கும் பிள்ளைக்கும் குளிர்ப்பாதுகாப்புக்கு நெருப்பு உயிர்த்தேவையாய் இருந்தது. காட்டில் உலர்ந்த கள்ளிகள் எளிதாகக் கிடைத்தன. ஆனால் அவர்களிடமிருந்த நெருப்புக்குச்சிகள் முன்பே செலவாய்விட்டன. நெருப்புப் பெட்டி. அல்லது நெருப்புத் தேடிக் கொணரும்படி பொன்முடி சென்றான். இளவேனிலைப் பொன் மணியின் பாதுகாப்பிலேயே விட்டுச் சென்றான்.
இளவேனில் உணர்வற்ற நிலையிலேயே கிடந்தாள். குளிர் மிகுதியால் குழந்தைகூட அழவில்லை. எந்த நேரமும் போன அண்ணன் திரும்பி வருவான் என்று பொன்மணி மணிக்கணக் காகக் காத்திருந்தான். பின் பொறுமையிழந்தான். ஆற்று வழியாகவே அண்ணன் வரக்கூடும் என்று அவன் ஆற்றங்கரையில் சென்று அங்கே கிடந்த ஒரு கல்மீது அமர்ந்தான்.
பஞ்சணையில் கிடக்கவேண்டிய அண்ணி பருக்கைக் கற்களில் கிடந்தாள். தாதியர் சூழ்ந்து ஆரவாரிக்கத் தங்கத் தட்டிலே கிடக்க வேண்டிய அண்ணன் குழந்தை ஓநாய்களின் ஆர்ப்பரிப்பிடையே குளிர்காய வகையின்றிக் கிடக்கிறது. நெருப்பு நாடிச் சென்ற அண்ணனோ திரும்பி வரக் காணவில்லை. இங்கே அவர்கள் இந்நிலை; அங்கே அவனுக்கு என்னுற்றதோ? இந்தக் கவலைகளால் பொன்மணி உள்ளம் நைந்து நைந்து உருகிற்று. கண்ணீர் ஆறாகக் கன்னங்களில் ஒழுகி, அவன் அமர்ந்திருந்த கல் மீது முத்து முத்தாய் உதிர்ந்தது.
துயரத்திடையே பொன்மணி தன்னை மறந்தான். தன் சூழலையும் கூட மறந்தான். அவன் எதிரிலேயே ஆற்றில் சென்ற படகைக்கூட அவன் கவனிக்கவில்லை. ஆனால் படகில் சென்ற ஒரு வணிகன் அவனை உற்றுநோக்க நேர்ந்தது. பொன்மணியின் தோற்றத்தைவிட அவன் அருகே காணப்பட்ட ஒரு செய்தியே அவன் கருத்தைக் கவர்ந்தது.
பொன்மணி அமர்ந்திருந்த கல்லருகில் முத்துக்கள் குவிந்து கிடப்பது போலத் தோற்றின. அவன் பணம் பேராசை உடையான். அக்குவியல்கள் முத்துக்கள்போல் தோற்றம் ஒளித்தன. அது ஏதேனும் ஒரு பொருளா, அல்லது முத்துக்களாகவே இருக்கக் கூடுமா? இந்த எண்ணமே பொன்முடியின் திசையில் அவன் கூர்ந்து பார்க்கும்படி செய்தது. அவன் பார்க்கப் பார்க்க, முத்துக்கள் உண்மை முத்துக்களாகத் தோன்றியது மட்டுமல்ல; அவற்றின் குவியல் வரவரப் பெரிதாக வளர்ந்து கொண்டும் வந்தது.
வணிகன் பெயர் பொன்னாடை. அவன் படகைக் கரைக்குச் செலுத்தும்படி படகோட்டிகளைப் பணித்தான். படகு கரையில் வந்ததும் இறங்கிப் பொன்மணியை அணுகினான். பொன்மணி அப்போது அசையவில்லை. அவனைக் கவனிக்க வில்லை. அவனருகே முத்துக்கள் குவிந்து கிடந்தன என்பதும், அவன் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர்த் துளிகளே முத்துக் களாகப் பெருகின என்பதும் அவனுக்குத் தெரியாது. ஆனால் வணிகன் இவற்றை உணர்ந்தான். அவன் முத்துக்களை முதலில் வாரித் தன் படகில் சேர்த்தான். பின் முத்துக்களின் உயிரூற்றின் இருப்பிடமான பொன்மணியையும் படகில் கட்டிப் போடும்படி படகோட்டிகளுக்குக் கட்டளையிட்டான். இத்தனையும் இம்மெனுமுன் - பொன்மணி என்ன நிகழ்ந்தது என்று அறியுமுன் - நடந்தேறின.
அந்தக் கணமுதல் பொன்மணியின் வாழ்வு ஒரு சித்திர வதையாகத் தொடங்கிற்று. ஏனெனில் அவன் இயற்கையாக அழும்போது குவிந்த முத்துக்களைவிட மிகுதியான முத்துக்களை விளைவிக்க வணிகன் பொன்னாடை விரும்பினான். பொன் மணிக்கு நாள் தோறும், நாழிகை தோறும் கசையடிகள் தரப்பட்டன. அவன் வீறிட்டு, அழ அழ, முத்துக்கள் பெரிதாயின, முத்துக்கள் பெரிதாகுந்தோறும் கசையடிகள் முன்னிலும் கடுமையாகவும் முன்னிலும் பலவாகவும் பெருகின.
பொன்னாடையின் பேரவா அவன் அறிவைக் கூராக்கிற்று. அவனுக்குப் புதிய கருத்துக்கள் எழுந்தன. அழும்போதே முத்துமுத்தாய் அழுபவன், சிரித்தால் எப்படிச் சிரிப்பான் என்று பார்க்க விரும்பினான். அவனைச் சிரிக்க வைக்கும் பணியில் வேலையாட்களை ஊக்கினான். அவன் சிரித்த போது மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம் முதலிய மணிகள் சிதறுவது கண்டு வணிகன் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டான். அதுமுதல் பொன்மணியின் சித்திரவதையின் போக்கு மாறிற்று. அவன் அழும்படியும் சிரிக்கும்படியும் மாறி மாறித் தூண்டப்பட்டான். முத்துக்களும் மணிகளும் உண்டுபண்ணும் உயிர்ச்சாலையாக அவன் மாறினான்.
உயிர்ச்சாலை குற்றுயிராக வாழ்வுக்கும் மாள்வுக்கும் இடையே ஊசலாடிற்று என்று கூறத் தேவையில்லை. ஆனால் உணர்ச்சியற்ற வணிகனுக்காக அழும்போதும் சிரிக்கும்போதும் அவன் உள்ளம் தனியாகக் கிடக்கும் அண்ணி, அண்ணியின் குழந்தை பற்றித் தவித்தது. காணாமற் போன அண்ணனைப்பற்றி ஓயாது கவலைப்பட்டு மாழ்கிற்று.
உதவி தேடிச் சென்ற கணவனும் உதவி தேடச் சென்றவனை எதிர்பார்த்த பொன்மணியும் இல்லாமலே இளவேனிலும் அவள் இளமதலையும் காட்டில் கிடந்தனர்.
அவர்கள் கிடந்த காடு ‘பாலி’ நாட்டைச் சார்ந்தது. அந்நாட்டின் படைத் தலைவனின் நாட்டுப் புறமனை அந்த ஆற்றருகிலேயே இருந்தது. அவன் தற்செயலாக இளவேனில் கிடந்த இடத்தின் வழியாகச் செல்ல நேர்ந்தது. அச்சமயம் அவன் துயரமிக்க ஒரு செயலில் வேண்டா வெறுப்புடன் ஈடுபட்டிருந் தான். அவன் இளமனைவி பல குழந்தைகளைப் பெற்றும், பிறந்த குழந்தைகளெல்லாம் சில நாட்களுக்குள்ளாகவே இறந்து போயின. இப்போதும் ஒரு குழந்தை பிறக்கும்போதே இறந்து பிறந்தது. அதைக் கையிலேந்தி ஆற்றருகே அடக்கம் செய்யும் கசப்பான கடமையாற்றலே அவன் அவ்வழியே தனியே வந்தான்.
இளவேனில் கிடந்த இடம் முதலில் அவன் கவனத்தைக் கவர்ந்தது. ஆனால் அருகே பொன்னின் உயிர்ப் பதுமையாகக் கிடந்த இளங்குழந்தையைக் கண்டதே அவன் அகம் துடித்தது. ஆதரிக்கக் குழந்தை இல்லாத அவன் பார்வை, ஆதரவற்றுக் கிடந்த அக்குழந்தை மீது ஆவலாகப் பாய்ந்தது. ஆவல் அவன் உள்ளத்திலும் புதுக்கருத்துத் தூண்டிற்று, குழந்தை பிறந்ததே யறியாது கிடந்த தாயருகே அவன் தன் உயிரற்ற மதலையைக் கிடத்தினான். உயிர் மகவை ஆர்வத்துடன் அணைத்தெடுத்துச் சென்றான்.
குளிரால் அழமுடியாது விறைத்துக் கிடந்த குழந்தை அவன் அணைப்பிலே அழத் தொடங்கிற்ற!
இறந்த குழந்தையை இடுகாட்டுக்கு அனுப்பி ஏங்கிக் கிடந்த படைத்தலைவன் மனைவி பண்டார வல்லி, அழுங்குழந்தையுடன் கணவன் வருவது கண்டு வியப்பார்வமுற்றாள். இறந்ததாகக் கருதப்பட்ட தம் குழந்தையே ஆற்றோரக் காற்றுப்பட்டு உயிர்த்துடிப்படைந்துவிட்டது. என்று கணவன் பொருத்தமான விளக்கம் தந்தான். பல புதல்வர்களைப் பெற்றிழந்த வயிறு அக்கூற்றால் மிகவும் குளிர்ந்தது. ஏனெனில் அதன்பின் அவள் அடுத்தடுத்து இரு குழந்தைகளுக்குத் தாயானாள். இரண்டும் உடலுரம் பெற்று வளர்ந்து கண்டெடுத்த குழந்தையுடன் போட்டியிட்டு வளர்ந்தன.
இளவேனில் உணர்வு பெற்றெழ உண்மையிலேயே நெடுநேரமாயிற்று. சுரத்தில் தங்கிய பறவைகள் அவள்மீது .ஓயாது உதிர்த்த இறகுகளும் எச்சங்களுமே அவளைக் குளிரினின்றுங் காக்க உதவியிருந்தன. ஆனால் அவள் தன்னருகே குழந்தை இறந்து கிடப்பது கண்டு திகில் கொண்டாள். ஏனெனில் குழந்தை மாற்றப்பட்டது. அவளுக்குத் தெரியாது. கணவனையும், கணவன் தம்பியையும் காணாமல் அவள் சுற்றுமுற்றும் தேடினாள், கூவியழைத்தாள். காத்திருந்து பார்த்தாள். அவள் துயரம் கங்கு கரையற்றதாயிருந்தது. வாழ்வில் கசப்புற்று ஆற்றின் பரப்பில் தன் உயிரை ஒப்படைக்கத் துணிந்தாள்.
ஆற்றின் எதிர்க்கரையிலே மூதாட்டி அண்டர்கோவடிகள் என்ற அருட்பெரியார் அறச்சாலை கட்டி வாழ்ந்தார். அவர் தம் அறச்சாலைச் சிறுமியருடன் ஒரு படகில் ஆற்றைக் கடந்து வந்து சிறுமியருக்கு இன்னுணவளித்து உலவவிட்டு மீண்டும் படகேற இருந்தார். ஆற்றில் நிலைகடந்து ஒரு பெண் இறங்கித் தத்தளிப்பது கண்டதும் அவர் படகை அப்பக்கம் செலுத்தினார். சிறுமியர் உதவியுடன் இளவேனிலைப் படகேற்றித் தம் அறச்சாலைக்கே கொண்டு சென்றார். முதுமையுடைய அந்த அருண்மாதின் ஆதரவில் இளவேனில் தன் வாழ்வின் துயரைச் சிறிது சிறிதாக உள்ளத்தில் அடக்கி மக்கள் பொதுவாழ்வு நலத்துக்கான தொண்டுகளில் ஈடுபட்டாள். நாளடைவில் அண்டர் கோவடிகளின் அருள் துறவு வழி நின்று, அவளும் அன்புத்துறவு பூண்டாள். வணிகர் கோப்பெண்டு என்ற முறையில் அவளும் வணிகர் கோவடிகள் என்ற துறவுப் பெயர் பூண்டாள்.
பிள்ளை பெற்றுத் தனியே தவிக்கும் மனைவிக்கும் உதவியாக நெருப்புத் தேடச் சென்ற பொன்முடியை ஊழின் குறும்பாட்டம் புத்தம் புதிய வகையில் அலைக்கழித்தது. பாலை நாட்டில் ஒரு தமிழ்ப் புலவன் பாடிய பழியறம் சூழ்ந்திருந்தது. அம் மரபில் ஓர் அரசன் பெண் கொலை செய்திருந்தான். இதனால் தலைமுறை தோறும் மரபுக் கால்வழி நலிந்து வந்தது. மன்னன் மனைவியாக வந்த பெண்கள் கருக்கொள்வதில்லை. மன்னனும் மணமான முதலாண்டிலேயே எவ்வழியிலோ படுக்கையிலே மாண்டு கிடந்தான். ஆண்டுதோறும் பாலை நாட்டு மக்கள் இந்நிகழ்ச்சி கண்டு மனங்குமுறினர். அத்துடன் மரபற்ற குடிக்கு மரபு தேடும் வேலையைப் பட்டத்து யானைக்கு அளித்திருந்தனர். மாண்ட அரசனை அதற்குக் காட்டியபின், அது யாரைத் தானாக முதலில் தன் கழுத்தின் மீது ஏற்றுவிக்கிறதோ, அவனையே அடுத்த அரசனாக்கி வந்தனர்.
இம்முறையிலே, தன் விருப்பத்துக்கு மாறாக, காட்டு வழியில் அலைந்த பொன்முடி பாலை நாட்டு அரசனாக்கப் பட்டான்; அவன் தலைமீது ஒரு பொன்முடி கவிக்கப்பட்டது.
இம்முறையிலே, தன் விருப்பத்துக்கு மாறாக, பாலை நாட்டு மக்களால் அரசுரிமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நங்கை அவன் அரசியானாள். முன்னாள் அரசி அவளுக்கு மாலை சூட்டி அவளிடம் முடி எடுத்துத் தர. அவள் பொன் முடிக்கு மாலை சூட்டி அவனுக்கு முடியும் அணிவித்தாள்.
அரசியின் பெயர் செந்தழல், அவள் சிவந்த மேனியுடையவள். சிவந்த ஆடைகளையே விரும்பி அணிந்தாள்.
பாலை நாட்டு அரச மரபின் வழிபற்றிப் பொன்முடி கேள்விப் பட்டிருந்தான். முடியுமானால் அப்பழியினின்று தப்பி, தன் பழைய மனைவியையும் மீட்டு வாழ அவன் திட்டமிட்டான். இந்நோக்கத்துடன் அவன் மூன்று செயல்கள் வகுத்துக் கொண்டான். தான் முடியேற்ற நாள் வருந்தோறும் ஒவ்வொரு திங்களிலும் பாலை நாட்டின் பழிதீர்க்கத் தமிழ்த் தெய்வத்தை வேண்டிப் பாடுபவர்களுக்குப் பரிசளிக்க ஏற்பாடு செய்தான். எப்போதும், படுக்கைக்குச் செல்லும்போது கூட, உடைவாளை அருகே வைத்துக் கொண்டான். பகலில் சிறுதுயில் கொண்டு இரவு முழுதும் விழித்து, சூழ நடப்பதைக் கவனித்த வண்ணம் இருந்தான்.
ஆண்டு நிறைவுநாளில் அவன் விழிப்பும் உன்னிப்பும் மிகு தியாயின. ஏனெனில் தலைமுறைதோறும் ஆண்டு நிறைவு நாளே ஆட்சி மாறும் நாளாயிருந்து வந்தது.
நள்ளிரவில் தமிழ்ப் பழியும் பெண் பழியும் அரசியின் மூக்கின் இரு புறமிருந்தும் இரண்டு மெல்லிய இழைகளாக வெளிவந்தன. இரண்டும் இணைந்து முறுகியதே ஒரு கோரப் பாம்பாக நெளிந்தது. இதைக் கூர்ந்து கவனித்த பொன் முடி உடனே வாளால் பாம்புருத் தாங்கிய அப்பழியைத் துண்டித்தான்.
அவன் மீண்டும் உறங்க வில்லை. ஆனால் மீண்டும் எதுவும் நடைபெறவில்லை. விடியும் நேரம் பாம்பின் குருதியிலிருந்து தமிழன்னையின் ஒளியுருவம் எழுந்து அவனுக்குக் காட்சி தந்தது.
“வணிகச் செம்மலே! புலவர்களுக்கு வழங்கிய உன் குடிமரபு வந்து கலந்ததனாலேயே புலவர் பழிக்குரிய இந்த அரசர் குடி புதுவாழ்வும் புது மரபும் பெற்றது. இனி நீ, உன் இறந்த மனைவியையும் இழந்த தம்பியையும் மீட்டு இனிது வாழ்வாயாக” என்று வாழ்த்தி மறைந்தாள் அன்னை.
மறையுமுன் அன்னையே அவனுக்குப் பொன் மணியின் இருப்பிடமும் நிலையும், இளவேனிலின் இருப்பிடமும் நிலையும் கூறிச் சென்றாள்.
பணப் பேரவாவால் பொன்மணியைச் சித்திரவதைக்கு ஆளாக்கிய வணிகன் பொன்னாடைக்குப் பொன் முடி வேறு எத்தகைய தண்டனையும் தர விரும்பவில்லை. ஆண்டர் கோவடிகளும் வணிகர் கோவடிகளும் நடத்திய அறச்சாலையை ஒரு பல்கலைக் கழகமாக்கி, அதை நடத்தும் பொறுப்பை அவனிடம் விட்டனர். வணிகர் கோவடிகளின் தலைமாணவி இளஞ்சேடிகள் என்ற பெயருடன் அதை நடத்த முன் வந்தார்.
வணிகர் கோவடிகள் மீட்டும் இளவேனிலாகி, பிரிந்து சென்ற கணவனுடன் இணைந்தாள். ஆனால் செந்தழலின் புதல்வன் வளர்ந்தபின் அவனுக்கு ஆட்சி தந்து அவர்கள் மீண்டும் அண்டர் கோவடிகளுடனே இணைந்து இருவருமே துறவறம் பூண்டனர்.
படைத் தலைவனின் பிள்ளையாக வளர்ந்த பொன்முடியின் புதல்வனைப் பொன்முடி அழைத்து அவன் பிறப்பறிவித்தான். வணிகர் கோவடிகளாக இருந்த அவன் அன்னையும் அவனை மனமார ஏற்று மகிழ்ந்தாள். அவன் வளர்ந்த வீரக் குடிக்கேற்ப அவனுக்குப் பொன்முடி வீரவாளும் விருதும் அளித்து, அவனையே காந்தளூர்த் துறைமுகத்தின் காவலனாக்கினர். வணிகன் பூணாரம் பிள்ளையில்லாமல் இறந்ததால், அவனே அம்மரபின் உரிமையாளனானான். அவன் பாட்டி மையார்விழி தன் செயல்களுக்கு வருந்தி அவனைத் தன் குடிக்கொழுந்தாக ஏற்றாள்.
படைவீரன்
உச்சங்கியில் ஆண்ட பாண்டியர்களிடம் பண்டாரம் என்ற ஒரு படைவீரன் பணியாற்றி வந்தான். மூன்ற தலைமுறை களாக அவன் முன்னோர்கள் உச்சங்கிப் பாண்டியரிடம் பல உயர் பணிகளிலமர்ந்து புகழுடன் வாழ்ந்திருந்தனர்.
தாய்மொழியாகிய தமிழுடன் தம் நாட்டு மொழியாகிய தெலுங்கு-கன்னடத்திலும் பண்டாரத்தின் முன்னோர்கள் புலமையுடையவராய் இருந்தனர். தொலைத் தமிழகத்திலிருந்து வரும் தமிழ்ப் புலவர்களுக்கு மன்னர் பெரும் பரிசில்களும் பெருவிருந்தும் அளித்தபோது, பண்டாரத்தின் முன்னோர்கள் அவர்களுடன் வந்த காவலர், ஏவலர், படி எழுத்தாளர் முதலியவர்களுக்குத் தம்மாலியன்ற பரிசுகளும் சிறு விருந்துகளும் வழங்கினர். இதனால் பண்டாரத்துக்கு அவர்கள் விட்டுச் சென்ற பொருட் செல்வம் சிறிதாகவும், புகழ்ச் செல்வமே பெரிதாகவும் இருந்தது.
பண்டாரம் சிறுவனாய் இருக்கும்போதே அவன் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராய்க் காலமாய்விட்டனர். அவர்கள் விட்டு வைத்த சிறு செல்வம் அவன் கல்விக்குப் போதவில்லை. எழுத்தறிவு மட்டும் பெற்றபின் அவன் படைத் துறையில் ஒரு சிறு பணியிலமர்ந்தான். படைவீரன் நிலையி லிருந்து அவன் ஒரு சிறிதும் உயரவில்லையானாலும், மற்றப் படைவீரர்களைப்போல் ஆட்டபாட்டம் குடி முதலியவற்றில் நேரமும் பொருளும் வீணாக்கவில்லை செட்டாக வாழ்ந்து சேமித்து, ஒரு சிறிது பொருள் சேர்த்து வைத்தான்.
உச்சங்கி நகரில் பொருநகர், சேண்டை என்ற இரண்டு திசை வீணர் திரிந்தனர். அவர்கள் நெடுநாளாகப் பண்டாரத்தின் செட்டான போக்கில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அவன் ஓரளவு பொருள் சேர்த்து வைத்திருப்பது தெரிந்ததும், அதை எப்படியாவது கவர்ந்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் திட்டமிட்டனர். இவ்வெண்ணத்துடன் அவர்கள் நல்லவர்கள் போல் நடித்து அவன் கெழுதகை நண்பராயினர்.
பண்டாரத்தின் பழங்குடி உறவினர்கள் பாண்டி நாட்டில் திருக்குறுங்குடியில் வாழ்ந்தனர். வாழ்வில் பிற்பகுதியில் ஓய்வு பெற்றபின் அவன்தன் சிறு சேமிப்புடன் அங்கே போய் அமைதியாக வாழவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். பாண்டித் திருப்பதிகளாகிய குற்றாலம், பாபநாசம், செப்பறை, குறுக்குத்துறை, திருச்செந்தூர், குருகூர் ஆகியவற்றைச் சுற்றிக் காணவும் அவன் அவாவினான். தோழர்கள் இதை அறிந்து அவனுக்குத் தூபம் போட்டனர்.
“இப்போது உன்னிடம் இருக்கும் பொருளே உன் தலைமுறைக்கு ஏராளம் போதியது. தவிர இந்த வயதிலேயே சென்றால் ஒரு பாண்டி நாட்டுப் பெண்ணையே மணந்து கொள்ளலாம். திருந்திய செந்தமிழ்ச் சூழலில் வாழலாம். வாழ்நாள் இறுதியில் போய் என்ன பயன்?” என்று அவர்கள் கூறினர்.
அவர்கள் அறிவுரை பண்டாரத்துக்கு இனிப்பாகவே இருந்தது. கள்ளங்கபடமற்ற அவன் உள்ளம் அவர்கள சூதுமதியை எளிதில் காணவில்லை. ஆகவே அவன் படையரங்கம் சென்று தன் பணியிலிருந்து விடுதலை பெற்றான். தன் இடைக்கால முன்னோர் வாழ்வகமாயிருந்த சிறுமனையையும் நிலபுலன்களையும் விற்றுக் காசாக்கினான். அவனைத் தமிழக எல்லைவரை வந்து வழியனுப்புவதாகக் கூறித் தோழரும் உடன் வந்தார்கள்.
ஒன்றிரண்டு நாள் பயணம் செய்தபின் அவர்கள் ஒரு மலைக் கோட்டையை அணுகினார்கள். அது கடந்ததும் அவர்கள் சென்ற பாதை அடர்ந்த காடுகள் வழியாகச் செல்லத் தொடங்கிற்று. பாதை மூன்றாகப் பிரியும் ஓரிடத்தில் வந்ததும் நண்பர்கள் சிறிது காலாற அமர்ந்தனர். அவற்றில் இடப்புறமாகச் செல்லும் பாதையே மதுரை செல்வது என்றும், அதில் ஒரு நாழிகை வந்துவிட்டுத் தாங்கள் திரும்பி விடுவதாகவும் தோழர் கூறினர். ஆனால், அவர்கள் உட்கார்ந்திருந்த கல்லே ஒரு வழி காட்டிக் கல் என்று அவர்களுக்குத் தெரியாது. தெரிந்தாலும் அவர்கள் அதை வாசித்திருக்க முடியாது. அது தமிழில் எழுதப்பட்டிருந்தது. அதன் எழுத்துகள் மூலம் இடப்புறவழி உச்சங்கிக்கே திரும்பிச் செல்லும் காட்டுவழி என்றும், நடுவழியே மதுரை செல்லும் வழி என்றும், வலப்புற வழி அருகிலே இருந்த செங்கேணி நாட்டின் தலைநகருக்குச் செல்வதென்றும் அவன் அறிந்து கொண்டான். ஆகவே “நடு வழிதான், நான் போகிறேன்” என்று கூறினான்.
அவன், தங்கள் சூழ்ச்சியை அறிந்து கொண்டார் என்று அவர்கள் சட்டென முடிவு கட்டினர். ஆகவே சரியான வழி பற்றிய பேச்சையே அவர்கள் சச்சரவாக்கினர். முன்பின் சிந்திக்க இடங்கொடாமல் அவர்கள் பண்டாரத்தின் தலையில் கழிகளால் அடித்தனர். அவன் உடலெல்லாம் புண்பட நையப் புடைத்தனர். தலையில் பட்ட அடிகள் அவன் இரு கண்களையும் குருடாக்கின. கண் தெரியாமல் குற்றுயிராய்விட்ட அவனை அவர்கள் எங்கெங்கோ இழுத்துச் சென்று, ஓரிடத்தில் கட்டிப் போட்டனர். பின் அவன் உடல் முழுதும் சோதனை செய்து அவன் பணத்தை எடுத்துக் கொண்டு போயினர்.
அவன் நெடுநேரம் உணர்வற்ற நிலையில் இருந்தான். உணர்வு வந்தபோதும் கண் தெரியாத காரணத்தால், அது இரவா பகலா, எத்தகைய இடம் என்பதை அவன் அறியவில்லை. வீணர்கள் போய்விட்டார்களா அல்லவா என்றும் அவனால் காண முடியவில்லை. ஆனால், தான் கட்டப் பட்டிருப்பது ஓரு கல் தூணிலேயே என்பதை மட்டும் அவன் உணர்ந்தான். அது ஏதோ ஒரு காட்டுக் கோயிலிலுள்ள கொடி மரமாய் இருக்க வேண்டும் என்று எண்ணினான். இவ்வெண்ணம் அந்நேரத்திலும் அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. இறப்பதானால் இறைவன் திருக்கோயிலடியின் முன்னிலையில் இறப்பது மேம்பாடுடையது என்று அவன் எண்ணினான்.
அவன் எண்ணப்படி கோயில் இருப்பதாக அவன் கற்பனை செய்த திசையை நோக்கி, அவன் தெய்வத்தை மனமார வணங் கினான். வள்ளுவர் பெருமான் அருளறத்தை மனங்கொண்டு, தீங்கிழைத்த அந்த வீணர்களுக்கு நல்வழி காட்டும்படியும் தன் உடல் வேதனைகளுக்கு விரைவில் ஒரு முடிவுகட்டித் தன்னை அழைத்தருள வேண்டுமென்றும் இறைவனை வேண்டினான்.
இறைவன் திருவருளின் ஒரு முன்முகம்போல, துன்ப மகற்றும் துயில்வந்து அவன் ஒளியற்ற கண்ணிமைகளை மூடின.
எவ்வளவு நேரம் அவன் உறங்கினான் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் கரகரப்பான ஒரு குரல் கேட்டு அவன் துயில் தெளிந்தான்.
அவன் கட்டப்பட்டது அவன் நினைத்தது போல ஒரு கோயிலின் கொடி மரத்திலன்று. கொடி மரம் என்று அவன் கருதியது வானளாவ உயர்ந்த ஒரு தூக்குமரத்தின் இரு தூண்களில் ஒன்றே. அவன் கேட்ட கரகரப்பான குரல் நள்ளிரவு தோறும் அவன் விட்டத்தின் மீது வந்து தங்கிய இரண்டு அண்டங் காக்கைகளின் குரல்களே.
பண்டாரத்தின் குடும்பத்தினர் வழிவழியாக விலங்கு, பறவைகளின் குறிப்புமொழி அறிந்திருந்தனர். இது பயனற்ற அறிவு என்றே பண்டாரம் கருதியிருந்தான். ஆனால் கண்ணில்லாது தவித்த இச்சமயத்தில் அது அவனுக்குக் கண்ணைவிடப் பெரிதான களைகணாய் உதவிற்று!
பெண் அண்டம் ஆண் அண்டத்தினிடம் பேசிற்று:
“என் அருமை மணிக்கழுத்தே! அன்றொருநாள் இதே வேளை இதே இடத்தில் தானே என்னை முதல் முதலில் நீங்கள் கண்டீர்கள்! இந்தத் திருவேளையை நாம் கொண்டாட வேண்டாமா!” என்றது.
“ஆம்! என் அருமை மையலகே! அதற்காகத் தான் நான் உனக்கு விருப்பமான மீன்கண், தவளைக்கண், நண்டுக்கண் ஆகிய மூன்று தின்பண்டங்களும் கொண்டு வந்திருக்கிறேன். அதை முதலில் தின்னு!”
“முதலில் தின்னு என்றால் இரண்டாவது மூன்றாவது வேறு ஏதாவது இருக்கிறதோ?” என்று அலகைச் சாய்த்துக் கொண்டே கேட்டது காகப் பெண்மணி.
"உன் ஊகம் சரியே, இடம், இந்த வேளை இரண்டும் நம் முதல் மணத்தால்மட்டும் பெருமையுடையவையல்ல. மனித உலகுக்கும் அவை பலவகையில் பெருமையுடையவை. நீ தின்று கொண்டே கேள்.
“இந்த இடம் புனிதமானது. தமிழகத்தை நோக்கி முன்னேறி வந்த கடம்பர்கள் இந்த இடம் வரை வளநாடுகள் யெல்லாம் சுடுகாடுகளாக்கி வந்தனர். ஆனால் இந்த இடத்திலே உச்சங்கிப் பாண்டியரும், செங்கேணிச் சோழரும் சேர்ந்து அவர்களுக்கு ஒரு சுடுகாடு உண்டுபண்ணினார்கள். அதன் பயனாகத்தான் இந்த இடத்தில் வாழ்ந்துவந்த என் குடிமரபினர் கடம்பரைப் பின்பற்றி வந்த உன் மரபினருடன் அளவளாவ முடிந்தது. அந்தப் போரின் பின் உன் தாய் தந்தையர் இங்கேயே தங்கினர். எனக்காக வேண்டி!” என்று கூறி மணிக்கழுத்து மையலகைத் தன் அலகால் கிண்டலாகக் கிள்ளிற்று.
“நீங்கள் இவ்வளவு குறும்புக்காரர் என்பது தெரிந்திருந் தால், நான் அன்றே கடம்ப நாட்டுக்குப் போயிருப்பேன். என் முன்னோரைத் தேடி!” என்றது மையலகு.
மணிக்கழுத்து மீண்டும் தொடர்ந்தது.
"இந்தத் திருவிடத்தின் சிறப்பை இப்போது கேட்டாய், இந்தத் திருவேளையின் சிறப்பு இன்னும் விந்தையானது. அது கேட்டு முடியும்வரை உறங்கிவிடாதே.
“இந்நேர முதல் விடியும் வரை இந்த இடத்தில் பெய்யும் பனி வெறும் பனியன்று; வானமுது. அதைக் குருடர் கண்களில் தடவினால், அவர்கள் உடனே கண்ணொளி பெற்றிடுவர்!”
“ஆ, அப்படியா!” என்றது பெண் காகம் வியப்பார்வத்துடன்.
“இது மட்டுமன்று. இந்நாட்டரசன் புதல்வி ஒய்யார வல்லி நெடுநாளாய் ஒரு விசித்திர நோய்க்கு ஆளாய் இருக்கிறாள். அவள் உடல் காற்றுப் பட்டால் நடுநடுங்குகிறது. அதை எவராலும் குணப்படுத்த முடியவில்லை. குணப்படுத்துவோருக்கு ஒய்யாரவல்லியையும் நாட்டாட்சியையும் கொடுப்பதாக அரசன் முரசறைந்திருக்கிறான். இதைக் குணப்படுத்தும் மருந்தை எவரும் அறிய மாட்டார்கள். ஆனால் நான் அறிவேன். இந்தக் கொலைக் களமெங்கும் காட்டுத் துளசி காடாய்க் கிடக்கிறது. அவற்றில் இன்றிரவு பூக்கும் பூவை எரித்துச் சாம்பலாக்கி அதை அவள் உட்கொண்டால், உடனே குணமடைவாள்.”
“ஏன் நீங்கள் கூட” என்று தொடங்கிற்று, மையலகு, ஆனால், அந்த இனிய பேச்சின் மீந்த பகுதி மையலகின் வாயிலிருந்து வெளிவராமல் மணிக்கழுத்தின் அலகு தடுத்தாத் கொண்டது.
“இவை பெரிதல்ல. சென்ற மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் மழையில்லாமல் வானமும் மண்ணும், ஆறுகுளம் கேணிகளும் வறண்டு வேகின்றன. மனிதருடன் விலங்குகளும் பறவைகளும் நா உலர்ந்து துடிதுடிக்கின்றன. இந்நிலையைத் தவிர்க்கும் வகை அருகிலேயே இருக்கிறது. ஆனால் எவரும் அறிவதில்லை. நாம் சற்றுமுன் தங்கியிருந்தோமே, ஊர் நடுவிலுள்ள வெற்றித் தம்பம், அதனருகில் உள்ள குத்துக் கல்லைப் பெயர்த்து விட்டால் போதும். அதனுள்ளிருந்து அந்த வெற்றித் தம்பத்தின் உயரத்துக்கு உயிரூற்றத்துள்ளிக் குதித்தெழும்.”
“என்ன வியப்பின்மேல் வியப்பு! மக்கள் அறியாத மருமம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே!” என்று பாராட்டிற்று மையலகு.
"தெரிந்தது என் திறத்தினால் மட்டுமன்று. உன் திறத்துக்கும் அதில் பங்கு உண்டு. நான் செங்கேணி, உச்சங்கி ஆகிய இரண்டு குலத்துக்கும் உரியவன், நீ கடம்பர் குலத்துக்கு உரியவள். நம் குலமனிதர் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தார்கள். நாம் அவர்களையெல்லாம் தின்று குலங்களை இணைத்து முட்டை இட்டிருக்கிறோம் அந்த முக்குல முட்டைகளின் மகிமைதான் எனக்கு இந்த அறிவைத் தந்துள்ளது.
“இந்த இடத்துக்கு இனி அடுத்த ஆண்டு இந்நேரம் வரலாம். இப்போது நம் தாய்தந்தையர்களைச் சென்று வணங்குவோம் வா.”
குரல்கள் அடங்கின. இறக்கைகள் சலசலத்தன.
பண்டாரத்துக்கு இப்போது காக்கைகளின் பேச்சு மூலமே தான் இருக்கும் இடம், வேளை ஆகியவற்றின் விவரமும் தன் வாழ்க்கையையே வளப்படுத்தத்தக்க விவரங்களும் கிடைத்தன. ஆனால், அவன் உடல் சோர்ந்திருந்தது. அத்துடன் செயலற்ற நிலையில் அவன் கம்பத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தான். ஆயினும் நல்வாழ்வின் ஆர்வம் அவனை வியக்கத்தக்க நிலையில் ஊக்கிற்று. அவன் கட்டுக்களை மெல்ல அசைத்தசைத்துத் தளர்த் தினான். பின் அவற்றை அறுத்துக் கொண்டு நிலத்திலேயே சுற்றுமுற்றும் தடவினான்.
புல்லில் ஒரு குத்தை அவன் அள்ளினான். அதன் குளிர்ச்சியால் அது பனி நிறைந்திருந்ததென்பது அவனுக்கு புலனாயிற்று. அவற்றைக் கண்களில் ஒற்றினான். அவன் கண்கள் தெரிந்தன. முகத்திலுள்ள புண்களும் அவற்றின் வேதனையும் நொடியில் அகன்றன. உடலிலும் அவற்றை ஒற்றியபின், அவன் சோர்வகன்று எழுந்து நடமாட முடிந்தது.
கிழக்கு வெளுக்க இன்னும் சிறிது நேரமே இருந்தது. வானளாவ நான்கு பனை உயரம் எழுந்த தூக்கு மரத்தையும் அதனைச் சுற்றிக் கரையற்ற வறண்ட ஏரி போல் காட்சியளித்த புதர் வெளிக்காட்டையும் கண்டு நடுநடுங்கினான். ஆனால் அடுத்த கணமே காட்டுத் துளசியின் நினைவு அவனுக்கு வந்தது. கண் கொடுக்கும் மருந்தும் அத்துளசி மலரும் இன்னும் சிறிது நேரத்தில் ஆற்றல் இழந்துவிடும் என்றும் அவன் கண்டான். தன்னிடமிருந்த புட்டிகளில் ஒன்றில் பனித்துளிகளை ஏந்தி நிரப்பினான். காட்டுத் துளசி மலர்களைக் கொய்து குவித்து எரித்து அதன் சாம்பலை மற்றொரு புட்டியில் நிறைத்துக் கொண்டான்.
அவனிடம் இப்போது செலவுக்கு ஏதும் இல்லை. இருந்த பண முழுவதும் தோழராக வந்த வீணர்கள் தட்டிப் பறித்துக் கொண்டார்கள். ஆனால் அவன் தன்னையே சோதனையிட்டுப் பார்த்ததில் விரையேறிய ஒரே ஒரு பொருள் வீணர் கைப்படாமல் மீந்திருந்தது. அதுவே அவன் பொன் அரைஞாண். அது நைந்து சிதைந்திருந்ததால், பித்தளை என்று வீணர் விட்டுப் போயிருந்தனர். அவன் அதை நகரில் கொண்டுபோய் விற்றான். அந்தப் பணத்தில் நல்லுணவுண்டு நல்ல உடை உடுத்துக் கொண்டான். ஒரு நாள் நகர் சுற்றி, அங்குள்ள செய்தி விவரங்களையெல்லாம் அறிந்து கொண்டு மறுநாள் காலை அரண்மனை சென்றான்.
ஒய்யாரவல்லிக்கு நோயறிந்து மருந்துதரவல்ல மருத்துவர் எவரும் மாதக்கணக்காக வந்ததில்லை நோயும் தீராது. மகளும் மணமாகாக் கன்னியாகவே இருக்கப் போகிறாள் என்ற ஏக்கம் மன்னனை வாட்டிற்று. இந்த நிலையில் ஏழையாயினும் ஒருவன் மருந்துதர முன் வந்தது கண்ட மன்னன் ஒரு சிறிதே கிளர்ச்சி கொண்டான். ஆயினும் அவன் முயற்சியில் வெற்றியடைவான் என்று எதிர்பார்க்கவுமில்லை, நம்பவுமில்லை. பண்டாரம் கொடுத்த சாம்பலைக் கரைத்து மகளுக்கு அளிக்கும்படி மட்டும் கட்டளையிட்டான்.
ஒய்யாரவல்லி நோய் உடனே நீங்கிவிட்டது. அது மட்டு மன்று; அவள் உடனேயே படுக்கையை விட்டெழுந்து உலவத் தொடங்கி விட்டாள். அதை அரசியே ஓடோடி வந்து சொன்னபோது, மன்னனால் எளிதில் நம்ப முடிய வில்லை. ஆனால், ஒய்யாரவல்லியே நேரில் வந்து அதை நம்ப வைத்தாள்.
நோய் தீர்த்த மருத்துவன் ஏழையானாலும் தன் கணவனாக வர இருப்பவன் என்றறிந்த இளவரசி ஒய்யாரவல்லி இரு சேடியருடன் பண்டாரத்திடம் வந்து வணங்கி, அவன் மருந்தால் குணமடைந்து விட்டதறிவித்து நன்றி கூறினாள்.
விரைவில் அரண்மனை முற்றிலும் செய்தி பரவிற்று. நகர் முழுவதும் மகிழ்ச்சி அடைந்தது.
அவர்கள் திருமணம் அரசன் அரசி கண்குளிர நடந்தேறியது. தனக்கு வரவிருக்கும் கணவன் மருந்துவ வல்லுநனாகவே இருக்கக் கூடுமாதலால் கிழவனாகவேயமையக்கூடும் என்று இளவரசி கனாக்கண்டு கொண்டிருந்தாள். பண்டாரத்தின் இளமையும் வனப்பும் கண்டு அவள் பெருமகிழ்வுற்றாள். அவனைத் தன்னாலியன்ற அளவு பேணிப் பாராட்டினாள்.
விரைவில் பண்டாரமே இளவரசனாகவும் இளமுடி சூட்டப்பட்டான்.
முடிசூட்டு விழாவில் மாமனாகிய அரசன் முன்னிலையில் அவன் முதன் மந்திரியை அழைத்தான்.
“அறிவில் சிறந்த அமைச்சரே! புதிய ஆட்சியில் மக்கள் மனமகிழ ஏதாவது செய்ய விரும்புகிறேன். நீண்ட நாள் ஆட்சியனுபவமுடையவர்கள் நீங்கள், குடிமக்களின் தற்போதைய பெருவிருப்பம் யாது என்று அறிந்து கூறுங்கள்” என்றான்.
“இளவரசே! தாங்கள் என் உள்ளக் குறிப்பையே ஊகித்து விட்டீர்கள். அத்தகையவர்கள் மக்கள் விருப்பத்தையும் அறிந்திருப்பீர்கள். அண்ணலே! ஆயினும் கூறுகிறேன். இந்நாட்டு மக்கள் மூன்றாண்டுகளாகத் தண்ணீரில்லாமல் வாடுகிறார்கள். மக்கள் மட்டுமல்ல, கால்நடைகளும், மற்ற உயிரினங்களும், வானில் பறக்கும் பறவைகளும் கூடத்தான் அல்லலுறுகின்றன. இத்துயரை ஒரு சிறிதே துடைக்கக் கூடுமானாலும், மக்களும் உயிரினங்களும் இங்ஙனம் துயர் துடைப்பவரைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றுவார்கள்” என்றான் அமைச்சன்.
“தாங்கள் செய்தி தெரிவித்ததற்கு நன்றி, அமைச்சரே! நும் நகர மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதற்குமே போதிய தண்ணீர் நகருக்குள்ளேயே இருக்கிறது. நகரின் நடு அம்பலத்தில் ஒரு வெற்றித் தூண் நிற்பதை நீங்கள் அறிவீர்கள். அதனை அடுத்து ஒரு குத்துக்கல் நிற்கிறது. அதைச் சூழச் சலவைக்கல் தளம் பாவி நாற்புறமும் வளைத்துப் பெரிய தாமரை மலர்போலக் கட்டி வளையுங்கள். தாமரை மலரின் இதழ்கள் வடிவிலே சூழ ஏழு தொட்டிகள் அமைத்து அவற்றுக்கு அருகே, நீர் வடியும்படி மதகு அமையுங்கள்” என்றான்.
அமைச்சனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் சொன்னபடி செய்தான்.
தாமரை மலரின் இதழ்கள் போலமைந்த தொட்டிகளைப் பண்டாரம் பார்வையிட்டான். பின் அதனுள்ளிருந்த கல்லை அகற்றிவிட்டு விரைந்து தொட்டியிலிருந்து வெளியேறும்படி சில ஆட்களைப் பணித்தான். குத்துக் கல்லை அகற்றியதே நீர் பீறிக் கொண்டு பாய்ந்தது. வானளாவ எழுந்த ஊற்றின் ஆற்றல் பெரிதாய் இருந்தது. தொட்டிகள் விரைவில் நிறைந்து ஏழு மதகுகளிலும் நீர் ஊற்றெடுத்தோடிற்று.
நகர மக்களும் சூழ்புல மக்களும் பெரிய பெரிய கலங்களில் குழாயிலிருந்து நீர் பிடித்துக் கொண்டு சென்றனர். விலங்கு களுக்கும் பறவைகளுக்கும் பண்டாரம் தனியே வேறு குழாய்களும் சிறு தொட்டிகளும் திறப்பித்தான்.
புதிய மன்னன் நீர் கண்டு பிடித்துதவிய மாயத் திறமையை அமைச்சரும் மக்களும் அரசன் அரசியும் வியந்து பாராட்டினர். நாடெங்கும் பஞ்சம் நீங்கி வளஞ் சுரந்தது. புதிய மன்னன் புகழ் செங்கேணி எல்லை கடந்து உச்சங்கிக்கும் தமிழகத்துக்கும் எட்டிற்று.
பண்டாரத்தை முதலில் கொள்ளையடித்த வீணர்கள் அவன் பணத்தை ஒரு சில நாளில் குடித்து அழித்துவிட்டனர்: செங்கேணியின் செழிப்பைக் கேட்டு அவர்கள் அங்கே வந்து கொள்ளையடித்தனர். காவலர் அவர்களைப் பிடித்து அரசனிடம் கொண்டு வந்தனர். அவர்களைக் கண்டு அரசன் அடையாளம் கண்டு கொண்டான். அவர்கள் செய்த தீமைக்குச் சரியான படிப்பினை அவர்களுக்குப் பின்னும் நலம் செய்வதே என்று துணிந்தான். ஆனால் அவன் தனக்கு நேர்ந்த நலங்களை எடுத்துரைத்ததே அவர்களுக்குப் போதிய தண்டனையாய் அமைந்தது. இவ்வளவு நல்ல ஒருவன் ஆட்சியில் வாயில் காப்போராய் இருப்பதே தமக்குப் பெருமை தருவது என்று அவர்கள் கருதினர். ஆனால் பண்டாரம் அவர்களுக்கு அரண்மனைத் தோட்ட மேற்காப்பு வேலையையே அளித்தான். அரண்மனைப் பெண்கள் இருவரை அவர்களுக்கு மணஞ் செய்வித்து அவர்களுக்கு வேண்டிய செல்வமும் அளித்தான்.
மன்னர் மரபும் மக்கள் மரபும் இணைந்து குடியரசு மரபு தழைத்தது. பண்டாரத்தின் மக்கள் இருமரபுகளின் நற்பண்பு களுக்கு ஒரு பண்டாரமாக விளங்கினர்.
பொன்னீர்
குடகொங்கு நாட்டில் வல்லானன் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் அரசியின் பெயர் பொற்சிலை பெயருக் கேற்றபடி அவள் பொன்மேனி உடையவளாய் இலங்கினாள். அவளுக்குச் செம்பியன், செழியன், சேந்தன் என்ற மூன்று புதல்வர்களும், அலைவாயமுது என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர். புதல்வி பிறந்த ஆண்டிலேயே அரசி உலக வாழ்வு நீத்தாள்.
அரசியின் பிரிவாற்றாது மன்னன் பெரிதும் மனங்கலங்கினன். ஆயினும் அரசியைப்போலவே பொன்னிற அழகுடைய வளாயிருந்த அலைவாயமுதை வளர்த்துப் பேணும் ஆர்வத்தில் அவன் பெரிதும் தேறுதல் அடைந்தான். ஆனால் இத்துறையிலும் அவனுக்குப் புதுக்கவலை ஒன்று பிறந்தது. தாயை இழந்தது முதல் குழந்தை அலைவாயமுது உள்ளூர ஏதேச நோயுற்றவள்போல வாடினாள். அவள் பொன்நிறம் படிப்படியாக மங்கி வெளிறிய வெண்ணிறம் ஆயிற்று கதிரவன் ஒளி படாத இளந்துளிர்போல அவள் வாட்டமுற்றாள்.
அரண்மணை மருத்துவரேயன்றி, உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்கள் பலரும் வந்து வந்து இளவரசியைக் குணப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் முயற்சிகள் எவையும் பலிக்க வில்லை. நோய் இன்னதென்பதுகூட அவர்களுள் எவருக்கும் மட்டுப்படவில்லை. மகள் வளரவளர, மன்னன் கவலையும் வளரலாயிற்று.
ஒருநாள் கடல்மயிலையிலிருந்து ஒரு சித்தர் அரசனைக் காண வந்தார். அவர் திருவள்ளுவர் பெருங்குடி மரபில் தோன்றியவர். மக்கள் உடல் நோய்களும் உள நோய்களும் ஆற்றிக் கொண்டே அவர் நாடு சூழ வருவது வழக்கம். அச்சமயம் அவர், குடகொங்கு
நாட்டு மன்னன் மனக்கவலை பற்றிக் கேள்வியுற்றார். அரசனை அணுகிக் குழந்தையைப் பற்றி அன்புடன் உசாவினார்.
குழந்தையின் முகத்தைக் கண்டதே சித்தர் முகம் புன்முறுவல் பூத்தது. ஆனால், அந்தப் புன்முறுவலிலும் கவலையின் ஒரு சாயல் படிந்திருந்தது.
“அரசே! இது நோயன்று. இதன் காரணத்தை நான் அறிவேன். ஒரு சிறு செயல் மூலம் நோய் அகலுவதுடன், உனக்கு பெருவாழ்வு வந்து எய்தும், ஆயினும்; அச்செயல் செய்பவரைக் கண்டு தேர்வதுதான் அரிது; அது அவ்வளவு கடுமுயற்சியினா லாவது!” என்றார்.
“உட்பகை வென்ற உரவோய்! செய்யநன் வகை கூறினால், என் உயிரும் உடலும் ஈந்தாயினும் அது செய்ய வல்லவரைக் காண முயல்வேன்” என்றான் அரசன்.
“அப்படியா? சரி! பொன்னிற நீர் எங்கிருக்கிறது என்று யாராவது தேடிக் காண வேண்டும். எப்பாடுபட்டாவது இளவரசி அதில் ஒரு மடக்கு உட்கொண்டால் போதும், நோயும் நொடியும் யாவும் அகலும்!” என்று கூறியவாறு சித்தர் விடைபெற்றுச் சென்றார்.
பொன்னீர் கிடைக்கும் இடம் கூறுபவருக்கு அரசில் பாதியும், அது கொண்டுவந்து கொடுத்து இளவரசியைக் குணப்படுத்துபவருக்கு அதன் மறுபாதியும் தருவதாக அரசன் முரசறைவித்தான்.
அரசு முழுவதும் முறைப்படி தனக்கு உரியது என்று செம்பியன் கருதியிருந்தான். ஆகவே முரசொலி மாற்றம் கேட்டு அவன் திடுக்கிட்டான். “பெண்மகவின் பாசத்தால் தந்தை ஆண்மகவாகிய என் உரிமையை மறந்தாரே” என்று அவன் அகம் வெம்பினான். ஆனால் தந்தையிடம் எதுவும் எதிர்த்துக்கூற அவன் துணியவில்லை. எப்படியாவது தானே இரண்டு செயல்களிலும் வெற்றி பெற வேண்டுமென்று அவன் விரும்பினான். அவ்வாறு வெற்றி பெற்றுத் தன் உரிமையைத் தன் முயற்சியாலேயே அடைய வேண்டும் என்று அவன் துணிந்தான்.
அவன் தந்தையிடம் சொன்னான். தானே பொன்னீர் தேடிக் கொணர விரும்புவதாகக் கூறினான்.
அலைவாயமுது பற்றிய கவலையால் அரசன் தன்னையே மறந்திருந்தான். இந்நிலையிலும் மைந்தரிடம் அவன் கொண்ட பற்றுச் சிறிதன்று. ஆகவே தன் மூத்த புதல்வனை இந்தப் பெருமுயற்சியில் ஈடுபடுத்த அவன் விருமபவில்லை. ஆனால் நாட்கள், மாதங்கள் சென்றும், பொன்னீர் பற்றிய செய்தி கூற எவரும் முன்வரவில்லை. செம்பியன் வற்புறுத்தலும் இடைவிடாது அவனை நச்சரித்தது. அவன் இறுதியில் இணங்க வேண்டிய தாயிற்று.
பொன்னீர் எங்கே கிடைக்கும்?’ என்று கேட்டுக் கொண்டே செம்பியன் நாடு நகர், காடு மேடு எங்கும் திரிந்தான்.
வழியில் உணவுக்காக அவன் பொரிவிளங்காய் மூட்டை ஒன்றைச் சுமந்து சென்றிருந்தான். ஒரு தண்ணீர்க் குடுவையும் அவன் இடுப்பில் தொங்கிற்று. சில நாட்களுக்குள் பொரி விளங்காய் கிட்டத்தட்ட முழுதும் செலவாய்விட்டது. ஒரு வாயளவே இன்னும் மீந்திருந்தது. போகும் இடம் நீர்த்தடமற்ற மலங்காடாயிருந்ததால், நீர்க் குடுவையிலும் ஒரு சிறிது தண்ணீர்தான் இருந்தது. பசியும் நீர்விடாயும் மிகுதியாய் இருந்தாலும். அடுத்த நீர் நிலையையும் உணவகத்தையும் காணும்வரை அவற்றை உட்கொள்ளத் துணியாமல் அவன் நடந்து சென்றான்.
அவன் சென்ற பாதை மலைகளுக்குள் புகுந்தது. இரு புறமும் உயர்ந்த பாறைகள் பாதையை அணுகிக்கொண்டே வந்தன. எங்கே போகிறோம் என்று அறியாமல் வேகும் வெயிலில் அவன் விரைந்து சென்றான்.
“எங்கே இத்தனை வேகமாகச் செல்கிறீர், இளவரசே!” என்ற எதிர்பாராக் குரல் கேட்டு அவன் முன்னும் பின்னும் சுற்றுமுற்றும் பார்த்தான்.
எவரையும் காணவில்லை.
அவன் மேலும் நடந்தான்.
குரல் தன் ஆர்வக் கற்பனையே என்று அவன் எண்ணினான்.
ஆனால், குரல் மீண்டும் மீண்டும் கேட்டது.
தற்செயலாக அவன் பார்வை பாறைகள் மீது சென்றது.
ஒரு திருப்பத்தருகில் பாறைமீது ஒரு குள்ள உருவம் தென்பட்டது!
அதன் முகம் இயற்கையாகவே கேலிச் சிரிப்புச் சிரிப்பது போல அமைந்திருந்தது.
“எங்கே இத்தனை வேகமாய்ச் செல்கிறீர், இளவரசே!” என்ற குரல் அத்தோற்றத்துக்கேற்ப அவனை ஏளனம் செய்வதுபோல் இருந்தது.
அவன் உள்ளத்தில் கடுஞ்சினம் பொங்கிற்று.
“உனக்கு ஏன் அது; போ! எனக்குப் பேச நேரமில்லை!” என்று அவன் மீண்டும் விரைந்தான்.
குள்ள உருவம் அவனைப் பின்பற்றிப் பாறை மேலாகவே ஓடி வந்தது. அதன் குரல் இப்போது கெங்சும் குரலாயிற்று!
“கோபம் வேண்டாம், இளவரசே! நுhன் ஏழுநாளாய் உணவு நீர் இல்லாமலிருக்கிறேன். உங்களிடமிருக்கும் பொரி விளங்காயையும் நீரையும் சிறிது கொடுத்து உதவுங்கள், இல்லாவிட்டால் என் உயிர்போய்விடும்!” என்றது.
உருவத்தைச் சுட்டெரிப்பதுபோலப் பார்த்தான் செம்பியன்.
“அப்படியானால் செத்துத் தொலைவது தானே!” என்று கூறிப் பின்னும் விரைந்தான்.
உருவம் திடுமென மறைந்தது.
ஆனால் பாதை போகப்போகப் பாறைகளிடையே நெருக்க மடைந்தது. ஓர் ஆள் நுழைய முடியாத சிறு இடுக்காயிற்று.
முன்னே போக முடியாதென்று அவன் திரும்ப எண்ணினான்.
ஏற்கெனவே திரும்பமுடியாத அளவு பாறைகள் நெருங்கி யிருந்தன.
அவன் பின்னோக்கி நகர முயன்றான். பின் புறமும் பாறைகள் எப்படியோ வந்து நெருங்கி இணைந்தவாகத் தோன்றிற்று.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பாறைகள் அவனை நாற்புறமும் சூழ்ந்தன. இடுப்பில் தொங்கிய நீர்க் குடுவையையோ தோளில் கிடந்த பொரிவிளங்காய் முடிச்சையோ கூட அவனால் எடுக்க முடியவில்லை. கைகால் அசைய முடியாதபடி அவன் பாறைகளில் அடைபட்டான்.
குள்ள உருவத்திடம் பேச ஒரு கணம் நிற்க முடியாமல் படபடத்த இளவரசன் நாழிகைக்கணக்காக, நாட்கணக்காகப் பாறைகளிடையே நின்றான். உடலும் பாறையுடன் பாறையாய் விட்டதாகவே தோன்றிற்று. ஏனெனில் உணவு நீர் இல்லாமலே, அது உணர்வு கலையாமல் இருந்து அவனை வாட்டிற்று.
செம்பியன் நாட்கணக்கில் வராததைக் கண்ட மன்னன் முன்னிலும் பன்மடங்கு கவலை கொண்டான்.
செம்பியன் வராததனால் கவலைப்படாதவன் அவன் இளவல் செழியனே! தமையனில்லாவிட்டால் உரிமை தனக்கு வரும் என்பது அவன் எண்ணம். ஆனால் தமையன் உரிமைக்கு ஏற்பட்ட இடையூறு இப்போது அவன் உரிமைக்கும் இருந்தது. ஆகவே தமையனைப்போல அவனும் பொன்னீர் தேடும் முயற்சியில் ஈடுபட எண்ணினான்.
வல்லாளன் இன்னொரு மகனை இடருக்குள்ளாக்கச் சிறிதும் ஒப்பவில்லை. ஆயினும், இடைவிடா வற்புறுத்தலினால், அவனும் தமையனைப் போல இறுதியில் இணக்கம் பெற்றான்.
செம்பியனைப் போலவே செழியனும் மலங்காட்டு வழியில் குள்ள உருவைச் சந்தித்தான். அண்ணனுக்கு அவ்வுருவத்தால் நேர்ந்த இடர் அவனுக்குத் தெரியாது. மேலும் அவனும் அண்ணனைப் போலவே கோபமும் இரக்கமற்ற கல்நெஞ்சமும் உடையவனாய் இருந்தான். ஆகவே அண்ணனுக்குக் கிட்டிய அதே மாயச் சிறை அவனுக்கும் கிடைத்தது.
இரண்டாம் புதல்வனும் திரும்பி வராதது கண்ட அரசன் துயரம் எல்லை மீறிற்று. இருவரையும் போகவிட்டதற்காக அவன் ஓயாது தன்னையே நொந்து கொண்டான். இளைய புதல்வனாகிய சேந்தன் இக்காட்சி கண்டு உளம் நைவுற்றான். ‘இன்று வருவார்கள், நாளை வருவார்கள்’ என்று அவன் தந்தைக்குச் சிலநாள் ஆறுதல் கூறினான். பின், “நானே சென்று அவர்களையும் மீட்டு, தங்கையின் நோய் தீர்க்கும் அருமருந்தாகிய பொன்னீரையும் கொணர்கிறேன்.” என்றான்.
கடைசிப் புதல்வனையும் இழக்க விரும்பாமல் வல்லாளன் நாட்கடத்தினான். சேந்தன் தன் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து நடப்பதாக மீண்டும்மீண்டும் வலியுறுத்தித் தந்தையிடம் விடைபெற்றான். அண்ணன்மாரைப் போலவே அவனும் பொரிவிளங்காய் மூட்டையுடனும் தண்ணீர்க் குடுவையுடனும் புறப்பட்டான்.
குள்ள உருவின் கேலித் தோற்றம் கண்டு சேந்தனுக்குக் கோபம் வரவில்லை. “எங்கே இத்தனை வேகத்துடன் செல்கிறீர், இளவரசே?” என்று உருவம் கேட்டபோது, அவன் நேரடியாகவே விடையளித்தான்.
“என் தங்கை பிறக்கும் போது பொன்னிறமுடையவளாய்ப் பொலிவுற்றிருந்தாள். பல பல ஆண்டுகளாக உடல் நலிவுற்று வெளிறி வாடுகிறாள். எங்கிருந்தாவது பொன்னீர் கொண்டு வந்து கொடுத்தால் தான் குணமாகும் என்று கேள்விப்படுகிறோம். அதைத் தேடி என் அண்ணன்மார் இருவரும் சென்றார்கள். இருவரும் திரும்பி வரவில்லை. அவர்களைத் தேடிக் காணவும் பொன்னீர் தேடிக் கொணரவுமே நான் புறப்பட்டேன்” என்றான்.
குள்ள உருவத்தின் முகத்தின் கேலித் தோற்றம் திடுமென மறைந்தது.
“இளவரசே! நான் ஏழுநாளாய் உணவு நீர் இல்லாமலிருக் கிறேன். பேசக்கூட முடியவில்லை. உங்களிடம் இருக்கும் பொரிவிளங்காயையும் நீரையும் கொடுத்து உதவுவீர்களா?” என்று கேட்டது.
சேந்தன் தன் பசி, விடாய்களை மறந்தான். குள்ள உருவத்தின் நிலைகேட்டு இரங்கினான். பொரி விளங்காயையும் நீர்க் குடுவையையும் அதன் முன் எட்டிவைத்தான். “இவை ஒரு வயிற்றுக்குப் போதமாட்டா! ஆயினும், இவற்றை முழுதும் உண்டு அரை வயிறாவது ஆற்றுக” என்றான்.
குள்ள உருவம் பொரிவிளங்காய் முழுவதையும் கடைசித் துளி நீரையும் உட்கொண்டு சிறிது ஏப்பமிட்டது. அப்போது, அதன் முகத்தில் மட்டற்ற குளிர்ச்சியான அமைதி நிலவிற்று.
"இளவரசே! பொன்னீரைத் தேடும் முயற்சியிலீடுபட்ட எவரும் உயிருடன் மீண்டதில்லை. அத்துடன் அது எங்கிருக்கிறது என்பதே எவருக்கும் தெரியாது ஆயினும் நீர் என்னிடம் தயவு காட்டியபடியால், உமக்கு என்னாலியன்ற உதவி செய்ய விரும்புகிறேன்.
"குடகொங்கு நாடும் காடும், வடகொங்கு நாடும் காடும் கடந்து சென்றால், பல காதம் பரந்தகன்ற அடர்ந்த மலைக் காட்டை அடைவீர். அதுவே முன் தலைப்பொன்னி நாடாயிருந்த பகுதி. ஒரு பழியால் அது காடாகியுள்ளது. அதன் நடுவே மலையிடையே செப்பனிட்டமைந்த மலைபோல ஒரு பெரிய கோட்டை மாளிகை தென்படும். அதன் உள்ளேதான் பொன்னீர் இருக்கிறது என்று குள்ள உருவம் கூறிற்று.
சேந்தன் அவ்வுருவத்துக்கு நன்றி கூறினான். அதற்கு வணக்கம் தெரிவித்த வண்ணம் புறப்பட எழுந்தான்.
குள்ள உருவம் அவனைத் திரும்பவும் கீழே அமரும்படி சைகை செய்தது.
"இளவரசே! பொன்னீர் இருக்கும் இடம் தெரிந்ததனால் ஒன்றும் பயன் கிடையாது. ஏனெனில் அந்தக் கோட்டையில் கதவு ஒன்று இருப்பதையே யாரும் காணமுடியாது. அது மட்டுமன்று. அதனுட் சென்றாலும் இரண்டு சிங்கங்கள் வருபவரை விழுங்கக் காத்திருக்கும்; சிங்கங்களுக்குத் தப்பினால் கூட. மேலும் எத்தனையோ எதிர்பாரா இடர்கள் உள்ளன.
"நீர் அன்பு மட்டுமன்றி நன்றியும் உடையவராகக் காணப்படுகின்றீர். ஆகவே இவற்றிலும் வெற்றியடையும்படி உமக்கு என்னால் முடிந்த அளவும் உதவ விரும்புகிறேன்.
"நான் உமக்கு ஒரு மாத்திரைக்கோலும் இரண்டு அப்பங்களும் தருகிறேன். கோட்டையை அடைந்ததும் கோலால் முகப்பைத் தட்டுங்கள். ஓர் அகன்ற வாயில் உடனே திறக்கும். அதன் வழியே நேரே உட்செல்லுங்கள் சிங்கங்கள் முழங்கிக் கொண்டு எதிரே வரும், அப்பங்களிரண்டையும் இரண்டின் முன்னும் எறியுங்கள். அவை அவற்றைத் தின்னும் சமயம் உங்களை ஒன்றும் செய்ய மாட்டா. நேரே உள்ளே செல்லலாம்.
“உள்ளே எங்கும் எக்காரணங் கொண்டும் தங்காதீர்கள். ஏனெனில் அங்குள்ள மணிக்கூண்டு பன்னிரண்டடிப்பதற்குள் கோட்டைக்கு வெளியே வராவிட்டால், கோட்டை அடைத்துக் கொள்ளும். அதன்பின் வெளிவர முடியாது. மணி பன்னிரண்டடிப்பதற்குள் அங்கே பொன்னொளி வீசும் கேணியில் சென்று விரைவில் பொன்னீர் மொண்டுகொண்டு வெளிவந்து விடுங்கள்” என்று உருவம் பேசிற்று.
பேசியபடியே அது சேந்தனுக்கு ஒரு மாத்திரைக் கோலும் இரண்டு அப்பங்களும் தந்தன.
மறுபடியும் குள்ள உருவத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவன் மீண்டும் பயணம் புறப்பட்டான்.
அண்ணன்மார் செல்லும்போது அடைத்துக் கொண்ட பாறைகள் அவன் போகும்போது அடைத்துக் கொள்ளவில்லை? அது மட்டுமன்று. அதன் அகலமான வாயில் திறந்து அவனுக்கு வழி விட்டது. இதனால் தமையன்மார் அங்கே அடைந்த இடர்ப்பாடு அவன் கண்ணில் படவில்லை.
நாட்கள் பல சென்றன.
சேந்தன் நாடு நகர்கள், காடுகரைகள் கடந்த கோட்டையை அணுகினான். மாத்திரைக்கோலால் அதைத் தட்டினான். கற்சுவர் போலிருந்த இடத்தில் திடுமென ஓர் அகன்ற வாயில் திறந்தது. அவன் உள்ளே சென்றான்.
அவன் முன் இரு சிங்கங்கள் இடிபோல் முழங்கிக் கொண்டு வந்தன. அவன் தன்னிடமிருந்த இரண்டு அப்பங்களையும் அவற்றின் முன் எறிந்தான். அவை உடனே குந்தியிருந்து அவற்றை ஆர்வத்துடன் தின்னத் தொடங்கின. அவற்றை அவன் கடந்து சென்ற போது அவை அசையவில்லை.
உட்கூடத்தில் ஒருபுறம் ஓர் அழகிய இளநங்கை சாய்ந்து கொண்டிருந்தாள். அவள் சற்றே நிமிர்ந்து சேந்தனை வரவேற்றாள். அவள் வாய்மொழி மூலம் அவள் ஒரு பழிக்கு ஆளாகிக் கோட்டையுள் கட்டுண்டு கிடந்ததாகத் தெரிந்தது. பொன்னீர் கொண்டு செல்பவர் எவராவது ஓராண்டு கழித்து வந்தால் தன் பழி தீர்ந்துவிடும் என்று அவள் கூறினாள். அப்போது பழிதீர்த்தவரைத் தான் மணப்பதுடன், தன் அரசையும் அவனுக்கே அளிக்க முடியும் என்றும் தெவித்தாள்.
அவன் கூறியபடியே செய்வதாக உறுதி கூறிச் சேந்தன் மேலும் உட்சென்றான்.
ஓரிடத்தில் படைவீரர் பலர் உறங்கினர். அவர்கள் விரல்களில் வைர மோதிரங்கள் மின்னின. அவன் அவற்றைக் கழற்றித் தன் கையிலிட்டுக் கொண்டான்.
மற்றும் ஓரிடத்தில் ஒரு மேசை மீது ஒரு வாளும் சில அப்பங்களும் இருந்தன. அவற்றையும் அவன் எடுத்துக் கொண்டான்.
ஓரிடத்தில் நறுமணமலர்கள் பரப்பிய தண்ணிழற் பந்தர் இருந்தது. அங்கிருந்து பார்த்தால் பொன்னீர்க்கேணி அருகேயே தெரிந்தது. அவன் கால்கள் மிகவும் களைப்புற்றிருந்ததால் சிறிது இளைப்பாறிச் செல்ல எண்ணி உட்கார்ந்தான்.
உட்கார்ந்தவன் சாய்ந்தான். சாய்ந்தவன் கண் மூடினான். இனிய தென்றல் உடல் தடவ மெய்ம்மறந்து உறங்கினான்.
மணி பன்னிரண்டடிக்கத் தொடங்கியது. முதல் இரண்டடியிலேயே அவன் திடுக்கிட்டு விழித்தான். முன்னிருந்த மணிக் கூண்டைப் பார்த்தான். மணி பன்னிரண்டாயிற்று. அவன் துள்ளிக் குதித்தான் கண்மூடித் திறக்குமுன் பொன்னீர்க் கேணியில் ஒரு கலம் நீர் மொண்டான். கேணியின் பொன்னொளி கண்ணைப் பறித்தது. ஆனால் அதன் அழகைக்கண்டு மகிழ அவனுக்கு நேரமில்லை. பொன்னீர்க் கலத்துடன் அவன் கோட்டை வாயிலை நோக்கி ஓடினான்.
வாயில் கடக்கும் சமயம் மணி ஓசையின் பன்னிரண்டாவது முழக்கம் முடிவுற்றது. நல்லகாலமாக அவன் ஒரு சிறிதே ஒரு மயிரிழையளவிலே தப்பினான். ஆனால் வாயில் மூடிய வேகத்தில் அவன் குதிங்காலின் பின் சதை துண்டிக்கப்பட்டுக் குருதி ஆறாய் ஓடிற்று.
குருதி பற்றியும் குதிங்கால் பற்றியும் அவன் இப்போது கவலைப்படவில்லை. உயிருடன் தப்பி வந்தது குறித்தும் பொன்னீருடன் வந்தது குறித்தும் எல்லையிலா மகிழ்ச்சி யடைந்தான்.
குள்ள உருவத்தை அவன் வழியில் கண்டான். அவன் மகிழச்சி இப்போது இன்னும் பெரிதாயிற்று. அவன் கை மோதிரங்களையும் வாளையும் அப்பங்களையும் கண்டபோதே குள்ள உருவம் அவனைக் கட்டியணைத்து மகிழ்ந்து கூத்தாடிற்று! “இந்த மோதிரங்கள் உன் புகழ் பெருக்கும். இந்த வாள் பகைவர்கள் எத்தனைபேர் உன்னைத் தாக்கினாலும் அவர்களைக் கொல்லும். இந்த அப்பங்களை எத்தனை பேருக்குக் கொடுத்தாலும் அவை அவர்கள் பசியாற்றுமேயன்றிக் குறையாது. இத்தகைய செல்வங்கள் பொன்னீரினும் குறைந்த மதிப்புடையவையல்ல” என்று குள்ள உருவம் கூறிற்று.
குள்ள உருவத்துடன் பேசிக் கொண்டிருக்கும்போதே சேந்தனுக்குத் தன் அண்ணன்மார் நினைவு வந்தது. அது கண்ட குள்ள உருவம் அவன் கவலைக்குரிய காரணம் வினாவிற்று. அண்ணன்மாரைப் பற்றிய பேச்செடுத்தபோதே அது முதலில் சீறிற்று. பின் எச்சரித்தது.
“உங்கள் அன்பும் நன்றியுணர்வும் கண்டே உங்களுக்கு உதவினேன். ஆனால் அவர்கள் இரக்க மற்றவர்கள். ஆகவேதான் அவர்களைப் பாறையில் மாயச்சிறை உண்டுபண்ணி அதில் மாட்டியிருக்கிறேன். நீங்கள் அவர்களைப் பற்றி கவலைப் படாதேயுங்கள். அவர்களுக்கு உதவி செய்ய எண்ணாதேயுங்கள். அவர்கள் நன்றி கெட்டவர்களாதலால், உங்கட்குத் தீங்கே இழைப்பார்கள்” என்றது.
சேந்தன் காதில் குள்ள உருவின் அறிவுரை ஏற்கவில்லை. அவன் அண்ணன்மார் நிலைகேட்டுக் கோவெனக் கதறியழத் தொடங்கினான். “என் அண்ணன்மார் இல்லாமல் நான் போக விரும்பவில்லை. இங்கேயே இருந்து சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்றான்.
“தம்பி, உங்கள் அன்பு பெரிதாய் இருக்கலாம் ஆனால் அறிவு கட்டைதான் என்று நினைக்கிறேன். இங்கேயே இருந்து சாவதானால், உம் தங்கை நிலை என்ன?” என்றது.
சேந்தன் சற்றுத் திடுக்கிட்டான்.
“ஆம். என் தங்கையை நான் மறந்தேன், நீங்களே நினைவூட்டினீர்கள். ஆனால், நான் என் தமையன்மாரையும் கைவிட முடியாது. தங்கையைக் குணப்படுத்தாமலும் இருக்க விரும்பவில்லை. ஆகவே எனக்காக ஒன்று செய்யுங்கள். என்னை இங்கேயே சாகவிட்டுவிடுங்கள். பொன்னீரைக் கொண்டு சென்று தங்கையைக் குணப்படுத்துங்கள் எங்கள் முடிவைக் கூறி என் தந்தையாகிய அரசருக்கு வேண்டிய ஆதரவு கொடுங்கள்” என்றான்.
“நல்லவேலை கொடுக்கிறீர்கள் தம்பி! எனக்கு உதவி செய்த உங்களைச் சாகவிட்டா நான் போவது? மூன்று உலகும் எனக்குக் கிடைத்தாலும் எனக்கு வேண்டாம்!” என்றது.
சேந்தன் உள்ளத்தில் திடுமென ஒரு புதிய யோசனை எழுந்தது.
“மூன்று உலகும் என்னால் தரமுடியாது. நீங்களே பொன்னீர்க் கேணிக்கு வழி கூறியவராதலால், என் தந்தை கூறிய வாக்குப்படி பாதி அரசு உமக்கு நேரே உரியது. பொன்னீரையும் நீரே கொண்டு சென்றால் முழு அரசும் உமக்குக் கிடைக்கும். அத்துடன் ஆண்மக்களாகிய நாங்கள் மூவரும் கிட்டாத குறையைத் தந்தை உங்கள் மூலமே போக்கிக் கொள்வார். என் விருப்பமும் அதுவே என்று கூறிக் கொண்டிருந்த போதே,”குள்ள உருவம் திடுமென நிமிர்ந்தது. அது குள்ள உருவம் தானா அல்லது தன் கனவார்வத் தோற்றமா என்று சேந்தனால் உணர முடியவில்லை. பொன்னொளி மிக்க ஓர் இளவரசன் தோற்றம் சட்டென வந்து மறைந்தது.
இவ்வளவும் ஒரு நொடிக்குள் நிகழ்ந்தது. அவன்முன் பழையபடி முன்னைய குள்ள உருவமே நின்றது. ஆனால், அதன் கண்ணொளிகளில் இப்போதும் பொன்னொளி நிலவிற்று.
“இளவரசே! தங்கள் அன்புக்கு எல்லையில்லை அவ்வளவுக்கு நான் தகுதியுடையவனோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆயினும் இதற்கு மாறாக நான் உங்கள் அண்ணன் மாரைப் பிழைப்பித்துத் தருகிறேன். அவர்கள்வகையில் நான் கூறிய எச்சரிக்கை மட்டும் நினைவிருக்கட்டும்” என்று கூறிக் குள்ள உருவம் தன் இரு கால்களையும் உயர்த்திப் பாறையை உதைத்தது.
ஒவ்வோர் உதையிலும் ஒரு பெரிய முழக்கம் கேட்டது. பாறை திறந்து முதலில் மூத்த அண்ணன் செம்பியனும், பின் இளைய அண்ணன் செழியனும் வெளி வந்தனர்.
இருவரும் சேந்தனைக் கண்டு மிரளமிரள நின்றனர். தம் விடுதலையையும் அவர்களால் எளிதில் நம்ப முடியவில்லை. ஆனால் சேந்தன் அவர்களைக் கட்டிக் கொண்டு ஆறாகக் கண்ணீர் பெருக்கினான்.
செம்பியனுக்கும் செழியனுக்கும் இப்போது தம் பொன்னீர் வேட்டை நினைவுக்கு வந்தது. உடனே அவர்கள் எழுந்தனர். “நாங்கள் பொன்னீர் தேடப் போக வேண்டும். நீ இங்கேயே இரு” என்றனர்.
சேந்தன் புன்முறுவல் பூத்தான்.
“அவ்வளவு அவசரம் தேவையில்லை. அண்ணன்மாரே! பொன்னீர் இதோ என்னிடம் இருக்கிறது.” என்று அவன் தன் கையிலுள்ள கலத்தைச் சுட்டிக் காட்டினான். அதிலிருந்து பொன்னிலவு ஒளி வீசுவது கண்டு அவர்கள் திகைத்தனர்.
குள்ள உருவம் இப்போதும் சேந்தனைக் கண்களால் எச்சரித்தது. ஆனால் தமையன்மாரைக் கண்ட மகிழ்ச்சியில் அவன் எதுவும் கவனிக்கவில்லை. அவன் குள்ள உருவுக்குப் படிபடியாக நன்றி தெரிவித்துவிட்டு அண்ணன்மாருடன் புறப்பட்டான்.
போகும் வழியில் சேந்தன் அண்ணன்மாருக்குத் தான் பொன்னீர் கொண்டுவந்த கதை முழுதும் கூறினான். ஆனால் கதை கூறும்போது அவன் கொணர்ந்த மாத்திரைக்கோல், அப்பம், மோதிரம் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைச் சற்று மறந்திருந்தான். வழியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அவற்றை நினைவூட்டி அவற்றுக்குப் பயனும் தந்தன.
பகைவர்கள் கையில் சிக்கி ஓர் இளவரசி ஒரு மலைக் கோட்டையில் சிறைப்பட்டிருந்தாள். ஒரு கோபுரம் அதன் பலகணியில் நின்று சேந்தனையும் அண்ணன்மாரையும் கண்டபோதே அவள், தனக்கு உதவி செய்து விடுதலை யளிக்கும்படி சைகை காட்டினாள். சேந்தனுக்கு இப்போது வாளின் நினைவு வந்தது. அவன் கோட்டைக்குள் புகுந்தான். திடுமென அவன் புகுந்ததனால், முன்வாயில்கதவுகளை உள்ளிருந்தோர் அடைக்க முடியவில்லை. ஆனால் படைவீரர் திமுதிமுவென அவனை வந்து சூழ்ந்து தாக்கினர். அப்போது அண்ணன்மார் கோட்டை வாயிலை விட்டு ஓடிப் போயிருந்தனர்.
தன் அஞ்சா வீரத்தாலும், வாளின் ஆற்றலாலும் சேந்தன் கோட்டையிலுள்ள பகைவர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினான். அஞ்சியோடிய சிலரை உலுக்கி, இளவரசி இருந்த கோபுர அறையைத் திறக்கச் செய்தான்.
இளவரசி சிறைப்படுமுன் அண்டை நாட்டரசனுக்கு மணப் பெண்ணாகச் சென்று கெண்டிருந்தாள். இதை அறிந்த சேந்தன் அவளை அவளுக்குரிய அரசனிடமே இட்டுச் சென்று அவனிடம் ஒப்படைத்தான். அரசியும் அரசனும் அடைந்த மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் எல்லையில்லை. அவர்கள் அவனுக்குப் பெருஞ் செல்வமும் படைக்கலங்களும் காவற்படையும் அளித்தனர். அவன் அவர்களைத் தன் தந்தையிடம் அனுப்பித் தன் வரவும் தமையன் வரவும் அறிவிக்கும்படி கூறினான்.
அவனை விட்டோடிய அண்ணன்மார் இந்நேரத்தில் அவன் வெற்றிக் கண்டு பொறாமைகொண்டு மீட்டும் அவனை அணுகினர். சூதற்ற சேந்தன் அவர்களை மீண்டும் மனமார ஏற்றான்.
அவர்கள் சென்ற வழியில், மற்றொரு நகரில் பெரும் பஞ்சம் நிலவிற்று. சேந்தனுக்கு இப்போது அப்பத்தின் நினைவு வந்தது. அவன் அவற்றை மக்களுக்கெல்லாம் வழங்கினான். உணவின்றி நலிந்து கிடந்த மக்கள் வயிறார உண்டு தெம்புடன் உழைக்கத் தொடங்கினர். ஒரு சில நாளில் குறுகிய காலப் பயிர்கள் வளர்த்துச் சேந்தன் பஞ்சம் போக்கினான்.
தமையன்மார் உள்ளம் இப்போது முன்னிலும் பொறாமையில் வெம்பிற்று. அதே சமயம் அவனை எதிர்க்கவும் அவர்கள் தயங்கினர். பொன்னீரை மட்டும் எப்படியும் அவனிடமிருந்து தட்டிப் பறிக்க அவர்கள் திட்டமிட்டனர்.
ஒருநாள் கடற்கரை வழியாக அவர்கள் பயணம் செய்தனர். வெயிலால் களைப்புற்று ஓரிடத்தில் சேந்தன் அவர்களுடன் தங்கித் துயின்றான். உறங்கும்போது செம்பியன் விழித்தெழுந்தான். தான் கொண்டு வந்த கலத்தில் பொன்னீரை ஊற்றிக் கொண்டான். பொன்னீர்க் கலத்தைக் கடல் நீராலேயே நிரப்பிவிட்டு, ஒன்றும் அறியாதவன் போலத் தூங்கினான்.
அவன் செயலைச் செழியன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன், தானும் தன் கலத்தில் பொன்னீரை ஊற்றிக் கொண்டு அண்ணன் கலத்தில் கடல்நீரை ஊற்றினான்.
செம்பியன் உண்மையில் உறங்கவில்லை. செழியன் செயல் கண்டு அவன் எழுந்து அவன் மீது வெகுண்டான். செழியனோ சேந்தனை எழுப்பி விடாதிருக்கும்படி சைகை செய்துவிட்டு, பொன்னீரை அண்ணனிடமே தந்தான். ஆனால் அதைக் கொடுக்கும்போது, ஒருவன் இடம் கண்டறிந்ததாகவும் ஒருவன் கொணர்ந்ததாகவும் கூறி அரசை இருவருமே பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றான். சேந்தனை வெற்றிகரமாக ஒழிக்கும் ஆர்வத்தில் இருவரும் இத்திட்டத்தை ஆர்வமாக ஏற்றனர்.
சேந்தன் தூங்கி விழித்தபோது இந்தச் சூதொன்றையும் அறியவில்லை. அவன் தன் கலத்திலிருப்பது பொன்னீர்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
தந்தையினிடம் மூவரும் சென்றனர். மூவரும் இடர் நீங்கி வந்தது குறித்துத் தந்தை மகிழ்ந்தான்.
இளையவன் சேந்தன் பொன்னீரும் கொண்டு வந்திருப்ப தாகக் கேட்டு மன்னன் மகிழ்ச்சி இன்னும் பெரிதாயிற்று. ஆனால் நீரைக் கண்டதும் அவன் நம்பிக்கை பாதி தளர்ந்தது; அது பொன்னிறமாயில்லை. அதில் ஒரு சிறிது அலைவாயமுது அருந்தியும். அவள் கைப்புப் பொறுக்காமல் அலறினாள். அத்துடன் அவள் நோயும் நலிவும் முன்னிலும் மிகுதியாய் விட்டன.
தங்கையைக் கொன்று தரணியைக் கைக்கொள்ளவே சேந்தன் சதி செய்தான் என்று மன்னன் எண்ணினான். அவன் சீற்றத்துக்கு எல்லையில்லை. அவனுக்காகப் பரிந்து பேசுவது போலப் பாவித்துச் செம்பியனும் செழியனும் அரசன் கோபத்தைப் பெருக்கினர். மன்னன் தன் மெய்க்காவற் படைத்தலைவனை அழைத்து, சேந்தனைக் காட்டிற்குக் கொண்டு சென்று வாளுக்கிரையாக்கும்படி உத்தரவிட்டான்.
அண்ணன் நிலைகண்டு அலைவாயமுது துடித்தாள். அவன் தன்னைக் கொல்லச் சதி செய்திருந்தால் கூட, அவனை இழக்க அவள் ஒருப்படவில்லை. அவள் மெய்க்காவற் படை வீரனைத் தனியாக அழைத்து, அண்ணன் உயிரை மட்டும் காப்பாற்றும்படி மன்றாடினாள்.
வேட்டைக்குச் செல்வதாக மெய்க்காவற்படை வீரன் சேந்தனை இட்டுச் சென்றான். ஊரெல்லை கடந்தபின் இருவரும் மட்டுமே குதிரைகள்மீது சென்றனர். நடுக்காட்டில் இருவரும் இறங்கியபின்தான் மெய்காவற் படைத்தலைவன் மன்னன் கட்டளைபற்றிக் கூறினான்.
தந்தை கட்டளைப்படி தன்னைத் தயங்காமல் கொல்லும்படி சேந்தன் வேண்டினான். ஆனால், மெய்க்காவற் படைத் தலைவன் அலைவாயமுதின் அன்பு வற்புறுத்தலை அவனிடம் கூறினான். “குதிரையை வெட்டிக் குருதியுடன் அரசரிடம் காட்டி விடுகிறேன். நீ அலைவாயமுதின் பெயரும் என் பெயரும் காத்து மீண்டும் அரசன் கண்ணில் படாமல் தப்பியோடி விடு” என்றான்.
அலைவாயமுதைத் தான் கொலை செய்ய எண்ணியதாக அவன்கூட நினைத்திருக்க வேண்டும் என்பதைச் சேந்தன் அறிந்தான். இது அவன் உள்ளத்தைச் சுட்டது. ஆனால் இந்த எண்ணங் கடந்தும் தங்கைக்குத் தன் மீதிருந்த பாசம் அவனை உருக்கிற்று. “அலைவாயமுது செய்த உதவியை என்றும் மறவேன். அதே சமயம் தன் பெயர் திரும்பவும் உலகில் அடிபடாமல் தொலைவு சென்று விடுவேன் என்ற உறுதி கூறுக” என்று காவற்படைத் தலைவன் மூலம் அவன் சொல்லியனுப்பினான்.
சேந்தன் உடைகளும் குருதியும் கண்டு மன்னன் சீற்றம் அமைந்தது. செம்பியனும் செழியனும் அதுகண்டு தமக்குள் எல்லையிலா மகிழ்ச்சி அடைந்தனர்.
சேந்தனை ஒழித்து நாட்டில் ஆளுக்குப் பாதி அடைந்த வுடன் அந்த இருவர் தீய உள்ளங்களும் நிறைவு அடையவில்லை. சேந்தன் கூறிய செய்திகளால், பொன்னீர் இருந்த கோட்டையின் இளவரசியும் அவள் அரசு, பொன்னீர் எடுத்துச் சென்றவனுக் காகக் காத்திருந்ததறிந்தனர். சேந்தன் இறந்து விட்டதால் இப்போது அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவருக்குத் தெரியாமல், அதைத் தாம் தாமே அடைய வேண்டுமென்று திட்டமிட்டனர்.
பொன்னீர் கொணர்ந்து ஓர் ஆண்டு நிரையும்வரை செம்பியனால் பொறுத்திருக்க முடியவில்லை. இன்னும் ஆண்டு முடிவுக்கு ஒரு வாரம் இருக்கும்போதே அவன் புறப்பட்டான். விரைநடைக் குதிரை ஒன்றின்மீது அவன் அமர்ந்து சென்றான். குதிரையின் சேனமும் அவன் ஆடையணிமணிகளும் பொன்னூலிழைத்த பட்டிழைகளாயிருந்தன.
பொன்னீர்க்கேணி இருந்த கோட்டை உண்மையில் பழைய தலைப்பொன்னி நாடேயாகும். பொன்னீரைச் சேந்தன் எடுத்துச் சென்றபின் வாரந்தோறும் மாதந்தோறும் நாட்டைக் காடாக்கிய பழி சிறிது சிறிதாக அகன்று வந்தது. காடு, படிப்படியாக நாடாகி வந்தது. ஆனால் கோட்டை வாயிலுக்கு வெளியே அதன் தோற்றம் பழைய காட்டு கோட்டையாகவே இருந்தது.
பதினொராம் மாதத்துக்குள் காட்டு விலங்குகளாகத் திரிந்த படைவீரர், விலங்கு பறவைகளாக இருந்த குடிகள், முட்புதர்களாக இருந்த மாடமாளிகைகள் ஆகிய யாவரும் பழைய உருவம் மேற்கொண்டனர். அரசுரிமைத் தவிசு மட்டுமே வெற்று மேடையாகக் காட்சியளித்தது.
இளவரசி கோட்டை வாயிலருகே இருபுறமும் திண்டோள் வீரர்களைக் காவல் வைத்தாள். கோட்டை வாயில்கள் முன்போல் இப்போது மூடியிருக்க வில்லை. மலரத் திறந்து வைக்கப்பட்டன. வாயிலை நோக்கிவரும் பாதை முழுவதையும் அவள் செப்பனிடச் செய்தாள். ஆனால் அதன் நடுவே ஐந்தடி அகலத்துக்குப் பாதை முழுவதையும் பொன்னால் பரவும்படி செய்தாள்.
வாயில் காவலருக்கு அவள் சில கட்டளைகள் இட்டாள். “ஆண்டு முடிவடைய இருக்கிறது. ஆகவே இரு திசையிலும் விழிப்பாய் இருங்கள். வாயிலை நோக்கி யார் குதிரைமீது வந்தாலும் உன்னிப்பாகக் கவனியுங்கள் வருகிறவன் பொன்பாவிய நடுப்பகுதியில் நேரே வந்தால் வாயிலில் தாராளமாக உட்செல்ல விடுங்கள், வலப்புறமோ இடப்புறமோ ஒதுங்கினாலும், அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு அசைந்தாடி வந்தாலும் பிடித்துச் சிறை செய்யுங்கள்.” என்று அவள் அவர்களிடம் கூறியிருந்தாள்.
செம்பியன் குதிரை செப்பனிட்ட பாதையை விரைந்து அணுகிற்று; பொன்பாவிய நடுநெறியைக் கண்டதும் அவன் சிறிது நேரம் அப்படியே திகைத்து நின்றான். பொன்னாலான அந்த அழகிய பாதைமீது அவன் தன் குதிரைக் குளம்படிகள் படுவதை விரும்பவில்லை. அதே சமயம் இறங்கி நடக்கவும் அவன் விரும்பவில்லை. குதிரையை அவன் விரும்பவில்லை. குதிரையை அவன் மெல்ல வலப்புறமாக ஒதுக்கி ஓட்டினான். அப்படியும் தங்கப் பாளத்தில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே மெல்லக் கோட்டை வாயிலை அணுகினான்.
இளவரசி கட்டளைப்படியே காவற்படையினர் அவன் மீது பாய்ந்து பற்றி அவனைச் சிறையில் அடைத்தனர்.
செம்பியன் திடுமெனக் காணாமற் போனது கண்டு மன்னன் மறுகினான். அலைவாயமுது செய்தி இன்னதென தெரியாமல் திகைத்தாள். ஆனால் செழியன் உண்மையை ஒரு நொடியில் ஊகித்துக் கொண்டான். தன்னை ஏமாற்ற எண்ணிய தமையன்மீது அவன் உள்ளூரக் கொதித்தெழுந்தான். அவன் யாரிடமும் கூறாமல் அடுத்த நாள் காலையே விரைநடைக் குதிரை மீதிவர்ந்து புறப்பட்டான்.
பொன்பாவிய நீள்நெறி கண்டபோது அவனும் திகைப்பே அடைந்தான். அண்ணனைப் போலவே அவனும் அதன்மீது குதிரையை நடத்த விரும்பவில்லை. அண்ணனைப் போலவே இறங்கி நடக்கவும் விரும்பவில்லை. ஆகவே, அவன் குதிரையை இடது புறமாக ஒதுக்கி ஒட்டினான். பொன்பாவிய நெறியின் பொலிவைக் கண்டு வியந்த வண்ணமே அவனும் குதிரையை மெல்ல ஓட்டினான். காவலர் அவனையும் கைப்பற்றிச் சிறை யிட்டனர்.
திடுமெனச் செழியனும் காணாமல் போனதறிந்து மன்னனும் அலைவாயமுதும் முனனிலும் கவலை பெருக்கினர்.
சேந்தன் இடைவழியில் காப்பாற்றிய இளவரசியின் நாட்டிலிருந்தும், பஞ்சம் தீர்ந்து வாழ்வளித்த நாட்டிலிருந்தும் அனுப்பப்பட்ட பரிசுகள் வழியில் திருடர் தொல்லைகளால் வல்லாளன் நாட்டுக்கு வருவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. ஆனால் வந்தபோது வல்லாளன் துயரில் மூழ்கியிருப்பது கண்டனர். விவரங்கள் அறிந்ததும் அவர்களும் சொல்லொணாத் துயருற்றனர்.
“எங்கள் நாடுகளுக்கு வாழ்வளித்தது உங்கள் மூத்த புதல்வர்கள் அல்லர்; இளைய புதல்வன் சேந்தனே! அவருக்கு நாங்கள் அளித்த பரிசுகளே இவைகள்; அவற்றை உங்களிடமே அவர் அனுப்பினார். போதாக்காலமாக நாங்கள் பரிசுகளை ஒப்படைப்பதில் இவ்வளவு தாமதமாகி விட்டது. அத்துடன் நீங்கள் நினைப்பதுபோல் பொன்னீரைத் தேடிக் கொணர்ந்தது. அந்த மூத்த புதல்வர்களல்லர்; இளைய புதல்வரே!, கெடுகேடரான அந்த இருவரையும் நம்பி அவரும் ஏமாந்தார். அவர்களை நம்பி நீங்களும் அவரை இழந்தீர்கள்! உங்கள் நிலைக்கு நாங்கள் உண்மையிலேயே வருந்துகிறோம்!” என்று தூதர்கள் கூறினர். பின் வேண்டா வெறுப்பாகப் பரிசுகளை மன்னனிடமே விட்டுவிட்டு அவர்கள் திரும்பி மாளாத் துயருடன் தம் நாடுகள் நோக்கிச் சென்றனர்.
சேந்தன் உயிரை வெறுத்தான். ஆனால் அலைவாயமுது அருமுயற்சி செய்து காத்தளித்த உயிரை அவன் போக்கவும் விரும்பவில்லை. நாட்டுப் பக்கமாகச் செல்லாமல், காட்டுப் பக்கங்களிலேயே ஒதுங்கி ஒதுங்கிச் சென்றான், நன்றாக உண்ணாமலும் உடுத்தாமலும் உடல் பேணாமலும் அவன் மேனி மாசும் கந்தலும் அடைந்திருந்தது.
திரும்பிச் சென்ற தூதர்கள், இந்த நிலையிலும் அவனை அடையாளம் கண்டு கொண்டனர். அவனைத் தம் நாட்டுக்கு இட்டுச் சென்றனர்.
அவனால் காக்கப்பட்ட இளவரசி அவனுக்குப் பல வகையிலும் தேறுதல் கூறி ஊக்கினாள்; தமையன்மார் மீட்டும் காணாமற்போன செய்தியையும், தந்தை உண்மையறிந்து வருந்துவதையும் தூதர் மூலமே மெய்ப்பித்தாள். மீண்டும் பொன்னீர்க்கோட்டை சென்று இளவரசியை மணக்கும்படி தூண்டினாள்.
“இளவரசே! அந்த இளவரசி வேறு யாரும் அல்லள். அந்தக் காட்டுக்கோட்டையும் உங்கள் தாயின் தாய் வாழ்ந்த நாடாகிய தலைப்பொன்னி நாடே. இளவரசி உம் மைத்துனியே யாவள். வழியில் உம்மையும் உம் தமையன் மாரையும் சந்தித்த குள்ள உருவம் தலைப்பொன்னி நாட்டின் கடைசி ஆண்மரபினனாகிய இளவரசனே. தலைப் பொன்னி இளவரசி அவன் தங்கையேயாவள். ஆகவே விரைந்து சென்று, உம்மால் பழியினின்று மீட்கப்பட்ட அரசியையும் அவள் நாட்டையும் பெற்று, இளவரசரையும் மீட்பீராக” என்றாள்.
அந்நாட்டு அரசியும் அரசனும் அளித்த குதிரைமீதிவர்ந்து சேந்தன் தலை தெறிக்கத் தலைப்பொன்னிக் கோட்டை நோக்கி விரைந்தான். ஏனெனில் பொன்னீர் கொண்டுவந்த பின் ஒரு முழு ஆண்டு கழித்து அப்போது மூன்றுமாதம் ஆகியிருந்தது. அவன்சென்ற வேகத்தில் பாதையில் தூளி பரந்தது. சின்னஞ்சிறு கற்கள் இருபுறமும் தெறித்துச் சிதறின. பொன்பாவிய பாதை கடந்து அவன் விரைந்தான். பாதை பொன்னாக இருந்ததே அவனுக்குத் தென்படவில்லை. அவன் கருத்து முற்றிலும் தனக்காகக் காத்திருக்கக்கூடும் இளவரசியிடமும், தன்னால் இன்னும் பழியினின்று மீட்கப்பட வேண்டிய இளவரசனாகிய குள்ள உருவத்திடமும் இருந்தது.
பொன் பாதை மீதே புயல் வேகத்தில் வந்த அவனைக் காவலர் வணங்கி ஏக விட்டனர். அவன் அவர்கள் வணக்கத்தையும் கண்ணெடுத்துக் காணாமல் கோட்டை வாயிலினுள் நுழைந்தான்.
அவன் புயல் வேகத்தாலேயே அவன் வரவறிந்த இளவரசி அவனை எதிர்கொண்டு வரவேற்றாள். குதிரை இளவரசியைக் கண்டு திடுமென நின்றது. சேந்தன் குதிரை மீதிருந்து வேகத்தால் முன்சென்று விழ இருந்தான். ஆனால், அவனை இளவரசியின் மெல்லிய தோள்களே ஏற்றன!
“உங்களுக்காகப் பொன் பாவிய பாதை அமைத்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறேனே! ஏன் இத்தனை வேகம்!” என்று இனிய மொழிகளில் இளவரசி அவனை ஆதரவுடன் அணைத்துத் தன் அரண்மனைக்கு இட்டுச் சென்றாள்.
“என் வேகம் புரியவில்லையா? எங்கே இளவரசன், எங்கே இளவரசன்!” என்றான் அவன்.
“ஆ, என் அண்ணன்! நான் மறந்துவிட்டேனே!” என்றாள்.
அவர்கள் முன் புன்முறுவலுடன் நின்றது ஒரு குள்ள உருவம்!
“பொன்னழகி! இனி நீ அண்ணனை மறக்க வேண்டியது தானே!” என்று கூறிக் குறும்பு நகை நகைத்தது அது!
“என் தங்கைக்கும் எனக்கும் வாழ்வளித்த பெருந்தகையே! உம் பழிதீர்க்கவே விரைந்தோடி வந்தேன்! நேரம் தாழ்த்து விட்டேனே! ஏன் உம்மை உம் உரிமை வடிவில் காணவில்லை?” என்று ஏங்கினான் சேந்தன்.
குள்ள உருவம் குலுங்கக் குலுங்க நகைத்தது; ஆனால், நகைக்கும்போதே அதன் கூன் அகன்றது; உடல் ஒளி வீசிற்று. முன் உருவெளியில் சேந்தன் கண்ட இளவரசன் உருவம் அவன் முன் நின்றது.
“ஆ, பொன்னேந்தல்! ஆ. அண்ணா!” என்று பொன்னழகி அவன் காலில் விழுந்து முழந்தாளை அணைத்துக் கொண்டாள்.
நீண்டநாள் பழிவாழ்விலிருந்து மீண்ட அண்ணனும் தங்கையும் தத்தம் துயர்க் கதைகளை விரைவில் சுருக்கமாக ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொண்டனர். அதற்குப்பின் பொன்னேந்தல், பொன்னழகியைக் கைப்பற்றிச் சேந்தனிடம் அளித்தான்.
“இந்தச் செல்வத்தையும் முன்போல மடத்தனமாக இழந்துவிடாதே!” என்று கூறி இருவரையும் இணைத்தான்.
இந்தச் சொற்கள் சேந்தனுக்கு மீண்டும் தமையன்மாரை நினைவூட்டின. அவன் தனிமையில் இளவரசியிடம் அவர்களைப் பற்றி உசாவினான். அவர்கள் நிலையறிந்தபின் அவர்களுக்காக வாதாடினான்.
“அண்ணலே! அவர்கள் இந்நாட்டின் கைதிகள் தாமே! அவர்களைக் கைது செய்த அரசி நான். நீங்கள் நாட்டிற்கும் எனக்கும் அரசராகப் போகிறீர்கள். அதன்பின் அரசர் என்ற முறையில் எது தகுதியோ அது செய்யுங்கள்” என்றாள்.
பொன்னேந்தல் ஒரு தனித் தூதனைக் குட கொங்கு நாட்டுக்கு அனுப்பி மைந்தர் செய்தியாவும் தெரிவித்திருந்தான். அலைவாயமுதையும் உடன்கொண்டு அரசன் அமைச்சர் படைவீரர் சூழத் தலைப்பொன்னி நாடடைந்தான்.
பொன்னழகி மன்னனைப் பெற்று மகிழந்தாள். தான் சேந்தனை மணக்கும்போதே அலைவாயமுதைத் தன் அண்ணன் மணந்து கொண்டால் இரு நாடுகளும் முன்போல் வளமடையும் என்று அவள் கூறினாள். “அலைவாயமுதின் விருப்பறிந்து அவ்வாறே செய்க” என்றான் வல்லாளன்.
பொன்னழகி-சேந்தன் திருமணத்துடன், அலைவாயமுது-பொன்னேந்தல் திருமணமும் இனிது நிறைவேறின. மணவிழா மகிழ்ச்சியிடையே பொன்னழகியின் இசைவு பெற்று, சேந்தன் தமையன்மாரை விடுவித்தான். தான் பஞ்சத்தினின்று காத்த நாட்டின் இளவரசியர் இருவரையே அவர்கட்கும் மணஞ் செய்வித்தான்.
தாம் செய்த இன்னல்களுக்கும் நன்றி கேடுகளுக்கும் மாறாக இன்னலமே செய்த தம்பியின் பெருந்தன்மை கண்டு செம்பியனும் செழியனும் வெட்கி மன்னிப்புக்கேட்டுத் திருந்தினர்.
பொன்னேந்தல் அலைவாயமுதுடன் குடகொங்கு நாட்டையும், சேந்தன் பொன்னழகியுடன் தலைப்பொன்னி நாட்டையும் ஆண்டனர். அலைவாயமுதின் அன்னையின் நாடாகிய வடகொங்கு நாட்டுக்கு மரபு இல்லாதிருந்த நிலையில், செம்பியனுக்கும் செழியனுக்கும் சேந்தன் அதைப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்ந்தான்.
அரிமானேந்தல்
தென் மாவிலங்கையில் காரிக்குடி என்ற நகரத்தில் மும்முடி நாகன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் கலங்கள் சீனம், யவனம், மாவிலங்கை கடாரம் முதலிய நாடுகளுக் கெல்லாம் சென்று வாணிகம் செய்து வந்தது. ஒரு தடவை மேற்கே மிசிர நாடு சென்று வாணிகம் செய்ய அவன் புறப்பட்டான். போகும் சமயம் அவன், பண்பார்செல்வி பசுங்கழனி, செம்பவளம் என்ற தன் மூன்று புதல்வியரையும் தன்னருகே அழைத்தான்; ‘திரும்பி வரும்போது நான் உங்கள் விருப்பப்படி தக்க பரிசுகள் கொண்டுவர எண்ணுகிறேன். ஒவ்வொருவரும் என்ன விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டான்.
‘பாண்டிநாட்டு முத்துக்கள் கோத்த முத்து மாலை வேண்டும்’ என்றான் பண்பார்செல்வி.
‘சேரநாட்டுத் தந்தத்தாலான அருங்கலப் பேழை கொண்டு வாருங்கள்’ என்றாள் பசுங்கழனி.
செங்கழுநீர் மலர்மாலை ஒன்று கொண்டுவந்தால் போதும்’ என்றாள் செம்பவளம்.
மிசிர நாட்டில் மும்முடி நாகனுக்குச் செழித்த ஆதாயம் கிடைத்தது. அவன் மகிழ்வுடன் திரும்பினான். வரும்வழியெங்கும் அவன் எங்கே செங்கழுநீர் மலர் கிடைக்கும். என்று கேட்ட வண்ணம் வந்தான். செங்கழுநீர் மலரும் இடங்களில் காலநிலை சரியாயில்லை. காலநிலை சரியாய் இருக்கும் இடங்களில் செங்கழுநீர் மலர் அகப்படவில்லை. எனவே அது கிடைக் காமலே தமிழகக் கரைவரை வந்துவிட்டான். தமிழகத்திலே சேரநாட்டில் தந்தப் பேழையும், பாண்டி நாட்டில் முத்து மாலையும் வாங்கிக் கொண்டான். தென்மாவிலங்கையின் கீழ்க்கரையிலிருந்து காரிக்குடிக்கு அவன் நேரே செல்ல விரும்பவில்லை. மேல்கரைத் துறைமுகம் ஒன்றிலேயே இறங்கிவிட்டான். கலங்களைக் காரிக்குடிக்கு அனுப்பிவிட்டு, அவன் மட்டும் செங்கழுநீர்மலர் தேடி நிலவழியாகப் பயணமானான்.
அவன் செல்லும் வழியில் காடுகள் இருந்தன. மலைகள் இருந்தன. கானாறுகளும் அருவிகளும் நிறைந்த சோலைகள் இருந்தன. சிற்றூர்கள் அவற்றிடையே நின்று சிறு நகை செய்தன. அவன் எங்கும் செங்கழுநீர் மலரே தேடினான். எல்லாரிடமும் செங்கழுநீர் மலர் பற்றியே உசாவினான். ஆனால் ‘அது இங்கே எப்படிக் கிடைக்கும்? இப்போது எப்படிக் கிடைக்கும்?’ என்ற மறுமொழிகளையே கேட்டுக் கேட்டுச் சலிப்படைந்தான்.
மலைநாட்டை அவன் அணுகியபோது, ஒரு புதுவகையான மறுமொழி அவனுக்குக் கிடைத்தது. “எந்த மலர் வேண்டு மானாலும் கிடைக்கும் இடம் ஒன்று அணிமையிலே, அதோ தெரியும் மலைச்சாரலிலே இருக்கிறது. ஐயனே! ஆனால் அப்பக்கம் எவரும் போகத் துணிய மாட்டார்கள்: அது சிங்கநாகர்கள் உலவும் இடம்” என்று ஒருவன் கூறினான்.
“நானும் ஒரு நாகன் தான், தமிழ்நாகன். இந்தச் சிங்க நாகர்கள் என்னை என்ன செய்துவிடுவார்கள்? போய்ப் பார்க்கிறேன்” என்றான் வணிகன் மும்முடி நாகன்.
நாகர் மலைச்சாரல் உண்மையில் ஒருசிறிய உலகமாகவே காட்சியளித்தது. அதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பருவம் ஆட்சி செய்வது போலிருந்தது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு திணைவளம் பரந்து கிடந்தது. இளவேனில் ஒரு புறமும், பனிப்புயல் ஒருபுறமும் ஆட்சி செய்தது. முல்லைக்காடு ஒருபுறமும் பாலை மற்றொரு புறமும் விரவிக் கிடந்தன. அவற்றின் நடுவேயுள்ள ஒரு கட்டாந்த பாழ்பட்ட மாளிகையருகே பல்வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. அவற்றின் ஒருபுறம் செங்கழு நீர்மலர்களும் மலர்ந்திருந்தன. அவற்றைக் கண்டபோதே அவன் உள்ளமும் மலர்ச்சியுற்றது.
மலர்களைச் சென்றணுகும் வழி முள் நிறைந்ததாயிருந்தது. அவன் கால்களை முட்கள் பீறின. அவன் அவற்றைச் சட்டை செய்யவில்லை. புதர்களில் எங்கும் நாகங்கள் நெளிந்தன. அவையும் அவன் துணிவை மாற்றவில்லை. நாகங்கள் எதனையும் மிதித்துவிடாமல் பார்த்து அடி வைத்துச் சென்றான். செங்கழுநீர் மலர்களில் ஒவ்வொன்றைப் பறிக்கும் போதும் ஒரு நாகம் சீறிப்படமெடுத்தது. அவன் அவற்றைக் கண்டு அஞ்சாமல் அமைதியுடனேயே வேண்டுமளவும் மலர் பறித்துக் கொண்டான். பின் வந்தவழியே திரும்ப எண்ணினான்.
அச்சமயம் அவன் முன்னே வாலைச் சுற்றிக் கொண்டு ஒரு சிங்கம் வந்து சீறி நின்றது. அவன் மலைத்து நின்றான். அது முழக்கமிடுவதுபோல வாய் திறந்தது. ஆனால் அது முழங்கவில்லை. பாலிமொழி கலந்த கொடுந்தமிழில், சிங்க நாகர்கள் பேசுவது போலவே பேசிற்று.
“இங்கே மலர் எடுப்பவன் என் வயிற்றுக்கு இரையாக வேண்டும். நில் இப்படி?” என்றது.
சிங்கத்தைக் கண்டபோது வணிகனுக்கு ஏற்பட்ட அச்சம் அது பேசியபோது ஒரு சிறிதே குறைந்தது.
“விலங்குலக அரசர் பெருமானே! நான் இங்கே திருடவோ, கொள்ளையடிக்கவோ வரவில்லை. நான் உலகெங்கும் சென்று வாணிகம் செய்யும் வணிகன். இப்போது நீங்கள் பேசிய தமிழ் மொழிதான் என்மொழியும். உங்கள் பேச்சால் நீங்கள் சிங்க நாகர் என்று அறிகிறேன். நானும் நாக இனத்தவன்தான். ‘திரும்பி வரும்போது உங்களுக்கு என்ன பரிசு கொண்டுவருவது’ என்று என் மூன்று குழதைகளிடமும் கேட்டேன். மூன்றிலும் எனக்கு உயிருக்கு உயிரான குழந்தை, சிறிய குழந்தை செங்கழுநீர் மாலை வேண்டும் என்றது. அதற்காகத்தான் எடுக்க நேர்ந்தது. உனக்கும் பிள்ளைகுட்டிகள் இருக்குமே! பிள்ளைப் பாசத்தால் எடுத்த மலருடன் நான்செல்லும்படி அருள் பாலிக்கக் கோருகிறேன்” என்றான்.
சிங்கத்தின் கண்களில் ஒரு சிறு நகை ஒளி தோன்றிற்று. “உன்னையும் விட்டுவிடுகிறேன். மலரையும் விட்டுவிடுகிறேன். வீடு திரும்பியதும் உன் கண்பார்வையில் முதலில் தட்டுப்படும் பொருளை நீ எனக்குத் தந்துவிட இசைய வேண்டும்” என்றது.
மும்முடி தயங்கினான்.
“உங்கள் உயிர் பெரிதல்லவா? முதலில் காணும் பொருளைத் தர ஏன் தயங்குகிறீர்கள்?” என்று கேட்டது சிங்கம்.
“முதலில் காண்பது என் குழந்தையாய் இருந்து விட்டால் என்ன செய்வது என்றுதான்?”
சிங்கத்தின் முகத்தில் கவலைக்குறி தோன்றிற்று. ஆனால் சிங்கம் அதை விரைவில் மறைத்துக் கொண்டது.
“எதுவானாலும் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் முதலில் காண்பது ஒரு நாயோ பூனையோ ஆகக்கூட இருக்கலாம் அல்லவா? அதையும் நான் ஏற்கத்தானே வேண்டும்?”
சிங்கம் ஒரு நல்ல வழக்கறிஞராகப் பேசிற்று என்பதை மும்முடி உணர்ந்து கொண்டான். ஆனால் வேண்டா வெறுப்பாக, வேறு வழியின்றி இதை ஏற்றுக் கொண்டு செங்கழுநீர் மலர்களுடன் அவன் மீண்டும் பயணமானான். ஒரு சில நாட்களில் அவன் காரிக்குடிக்கே வந்து சேர்ந்தான்.
வீட்டில் காலடி எடுத்து வைத்த கணமே அவன் மகிழ்ச்சி யெல்லாம் பறந்தோடிப் போய்விட்டது. ஏனெனில் அவன் வருகையையே நாள் தவறாமல் எதிர்பார்த்திருந்த அவன் கடைப் புதல்வி செம்பவளமே அவனை முதல்முதல் எதிர்வந்து வரவேற்றாள். ’செங்கழுநீர் மாலை கொண்டு வந்தாயா அப்பா!" என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
அவன் மாலையை எடுத்து அவளிடம் கொடுத்தான். ஆனால்… தந்தை முகத்தில் அத்தறுவாயில் இருக்க வேண்டிய மகிழ்ச்சி இல்லை என்பதையும், துயரால் அது கறுத்து வாடுவதையும் குழந்தை கண்டாள்.
‘ஏன் அப்பா, எதற்காக வருந்துகிறீர்கள்? என்ன நடந்தது?’ என்று அவன் கேட்டாள்.
‘உன் செங்கழுநீர் மலருக்காக நான் கொடுக்க நேர்ந்துவிட்ட விலைதானம்மா பெருங்கவலைக்கிடமாகி விட்டது’ என்று தொடங்கி, அவன் நடந்ததெல்லாம் கூறினான். சிங்கத்தினிடம் அவன் கூறிய வாக்குறுதியையும், இப்போது அது முடிந்த வகையையும் எடுத்துரைத்தான். சின்னஞ்சிறு குழந்தையாகிய செம்பவளம் தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் கண்களைத் துடைத்தாள்.
“இதற்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும். அப்பா! எனக்காகத் தானே நீங்கள் மலர் தேடினீர்கள்! நான் நாடிய மலர் இயல்பாக எனக்குக் கொண்டு வந்த வாழ்வை நான் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. எல்லாம் நன்றாக முடியும். நீங்கள் கூறிய வாக்குப்படியே தயக்கமில்லாமல் நடவுங்கள். அதனை நிறை வேற்றுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி” என்றாள்.
மும்முடிநாகன் ஆறுதலடையவில்லை. முன்னிலும் கலங்கினான்.
“நீ பயமறியாத சிறு குழந்தை அம்மா! உன்னை நான் எப்படி ஒரு சிங்கத்தினிடம் அனுப்பிவிட்டு இங்கே இருக்க முடியும்? எந்தக் கணமும் அது உன்னை…”
“அதொன்றும் அஞ்சவேண்டாம், அப்பா! அது பேசுகிற சிங்கம், கொல்லாது! குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்.
மும்முடி மகளை எடுத்து ஆர அணைத்துக் கொண்டான்.
“இவ்வளவு அறிவு வாய்ந்த பெண்ணாய் இருக்கிறாயே, அம்மா! உனக்கேற்ற பண்புடைய வீரனாகப் பாராமல்..”
“ஏனப்பா! எந்த வீரனும் சிங்கத்துக்கு ஈடாவானா, அப்பா! யாருக்கும் அஞ்சாத நீங்களே சிங்கம் என்றவுடனே அஞ்சுகிறீர்களே? உங்களுக்கு எந்தச் சிந்தனையும் வேண்டாம் அப்பா”.
தன் துயரத்தைக்கூட மறந்து மும்முடி சிரித்தான்.
அன்று முழுவதும் மற்ற இரு புதல்வியரும் தத்தம் பரிசுகளைப் பகட்டாக எல்லாருக்கும் காட்டி மகிழந்தனர். தந்தையின் கவலையை அவர்கள் அறியவில்லை. ஆனால் செம்பவளம் அவன் அருகிலேயே இருந்து அவனுக்கு வேண்டும் ஆறுதல் தேறுதல்கள் அளித்தாள். மறுநாள் காலையில் அவள் மற்றவர்கள் எவரும் எழுந்திருக்குமுன் எழுந்தாள். தந்தை தானாக அவளை அனுப்பத் தாளமாட்டான் என்றறிந்து, அவள், அவன் தலையணை மீது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டாள். தந்தை கூறிய அடையாளப்படியே ஓட்டமும் நடையுமாக நடந்து சென்றாள்.
அவள் நாகமலையின் பாழடைந்த மாளிகையை அடைந்த சமயம் கிட்டதட்ட மாலைவேளையாயிற்று. சிங்கம் அவளை எதிர்பார்த்த வண்ணமே செங்கழுநீர் மலர்களை எடுத்து வந்த மும்முடி நாகன் இளைய மகள் வீடு வந்தவுடன் என்னையே அவர் கண்டதால், உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார். தங்கள் விருப்பம் என்னவோ?’ என்றாள்.
சிங்கத்தின் முகம் களிப்பால் மலர்ந்தது. அடுத்த கணம் சிங்கத்தின் முகமும் உடலும் திடுமென உருமாறின அவள் முன் கட்டழகனான ஓர் இளவரசன் நின்றான். சிங்கம் இளவரசனாக மாறிய அதே கணமே பாழடைந்த மாளிகை அரண்மனை யாயிற்று.
செம்பவளம் எல்லையிலா வியப்பும் மலைப்பும் அடைந்தாள்.
சிங்கம் உண்மையில் ஒரு சிங்கநாக இளவரசனே. நீங்கள் நாகரிடையே மாயம் வல்ல ஒரு நாகனே, அவனையும் அவன் வீரர்களையும் சிங்கங்களாக மாற்றியிருந்தான். மாவிலங்கை யெங்கும் சுறா நாகரும் சிம்புள் நாகரும் படையெடுத்துச் சிங்க நாகரை அழிக்க முற்பட்டதனாலேயே, அவர்களைக் காக்க மாயாவி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தான். மாயாவி தன் இறுதிப் படுக்கையில் சிங்க நாக இளவரசனை அழைத்தான். அவன்மாயத்தை ஒரு சிறிதே மாற்றினான். ’இரவெல்லாம் நீங்கள் பழைய வடிவில் இருப்பீர்களாக! பகலில் சிங்கங்களாகவே திரியுங்கள்! மாவிலங்கையில் அமைதி ஏற்பட்டபின் ஒரு பெண் சிங்க உருவிலேயே உன்னை ஏற்று மூன்றாண்டுகள் கழிந்தபின் நீயும் உன் வீரரும் நிலையாக மனித உருப்பெறுவீர்கள்" என்று கூறியிருந்தான்.
திடுமெனச் சிங்கம் இளவரசனானது இதன் பயனாகவே! அப்போது முழுவதும் மாலைவேளை ஆகியிருந்தது.
சிங்கத்திடமே அச்சமின்றி வந்த அணங்கு. சிங்கம் வீர இளவரசனாக மாறியபின் அவனுடன் தாராளமாகப் பழகினாள். அவன் அழகும் குணமும் அறிவும் மிக்கவனாகவே விளங்கினான். அவனுடன் பேசுவதிலேயே அவள் பேரின்பம் கண்டாள். இந்நிலையில், சிங்க இளவரசன் அவளைக் காதலித்துத் தன் மனைவியாகக் விரும்பியபோது, அவள் அவனை மனமார ஏற்றாள். அன்றிரவே சிங்க வீரர் முன்னிலையில், அவள் சிங்க இளவரசனைக் கடிமணம் செய்து கொண்டாள்.
சிங்கநாக இளவரசன் பெயர் மயிலாலன் என்பது, அவனும் செம்பவளமும் இரவுதோறும் இன்பக் கேளிக்கைகளில் ஈடுபட்டு வாழ்ந்தனர். ஆனால் விடிந்தவுடனே இளவரசனும் வீரர்களும் சிங்க உருமேற் கொண்டு காட்டில் திரிந்து வேட்டையாடினர். இவ்வாறாக மாதங்கள் கழிந்தன. நாகமலை வாழ்வு எவ்வளவு இன்பமாயிருந்த போதிலும், செம்பவளம் தந்தையை மறக்க முடியவில்லை. தந்தை தன் வாழ்க்கையின் மெய்ந்நிலை அறியாமல் ஓயாத கவலையுடன் இருப்பார் என்று அவள் எண்ணி எண்ணி மறுகினாள். குறைந்த அளவு தான் உயிருடன் இருப்பதாகவாவது அவன் அறிய வேண்டுமென்று அவள் விரும்பினாள்.
ஒரு நாள் இளவரசன் மயிலாலன் மகிழ்வுடன் அவளை நோக்கினான். ‘இன்று உன் தந்தை வீட்டில் பெரிய விருந்து நடக்கிறது. ஏனெனில் உன் முதல் தமக்கைக்குத் திருமணம் ஏற்பாடாகியிருக்கிறது. நீ போக விரும்பினால் சொல்லு. அக்காள்மாரையும் அப்பாவையும் பார்த்துவிட்டு வரலாம்’ என்றான்.
அவள் மகிழ்ச்சியை அவள் முகமே எடுத்துக் காட்டிற்று. ஆனால் அதே முகம் அடுத்தகணம் சிறிது கோணிற்று.
"நீங்கள் வருவீர்களா?’ என்றாள்.
’நான் பகலில் என்ன வடிவுடன் இருக்கிறேன். தெரியு மல்லவா? அறிவுடைய பெண்ணாகத்தானே இங்கே வந்தாய். இப்போது ஏன்.."
“உங்கள் அறிவு துணைக்கு இருக்கும்போது, எனக்கு அறிவு எதற்கு? சரி, நீங்கள் வராவிட்டால் நானும் அங்கே போக வேண்டாம். நீங்களில்லாமல் நான் எப்படி அங்கே போக முடியும்?”
“சிங்க உருவிலேயே என் பணியாட்கள் உன்னைக் காட்டெல்லையில் கொண்டு விடுவார்கள். சேரும் நேரம் இரவாயிருப்பதால், அவர்கள் உன்னை மனித உருவுடனேயே அங்கே விட்டு வருவர். திருமணம் முடிந்த பின்னும் மாலையில் மனித உருவுடனேயே அவர்கள் சிவிகையுடன் வந்து இட்டு வருவார்கள்” என்றான் மயிலாலன்.
அவள் இறந்து போயிருப்பாள் என்றே எண்ணிக் கொண்டு தந்தை மும்முடி ஆறாக் கவலையில் ஆழ்ந்திருந்தான். மற்ற புதல்வியருக்கு அவளை ஒரு சிங்கம் வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டது என்றே அவன் கூறியிருந்தான். ஆகவே அவள் உயிருடன் வந்தது கண்டு அவர்கள் மிகுந்த வியப்பும் மகிழ்வும் கொண்டனர். அத்துடன் அவள் யாதொரு குறைவுமில்லாமல் இன்பமாகவே இருப்பதை அவள் சொல்லாலும் தோற்றத்தாலும் கண்டு தந்தை மிக ஆறுதல் கொண்டான்.
திருமண முடிவில் செம்பவளம் தந்தையிடமிருந்தும். தமக்கைமாரிடமிருந்தும், புதிய மைத்துனனிடமிருந்தும், விடைபெற்றுக் கொண்டு நாகமலைக்கே திரும்பினாள்.
செம்பவளத்தின் திருமண வாழ்வின் இரண்டாவது ஆண்டில், மயிலாலனின் மாயம் பேரளவு குறைந்தது. சிங்க வடிவும் மாளிகையின் பாழ்நிலையும் பகலில் ஒரு பாதியில் தான் நீடித்தது. அடுத்த ஆண்டிலோ இந்தப் பாதிநாள் கூட இல்லை. மாயத்தின் கடைசிச் சின்னமாக, மாலையில் ஒரு சில கணங்களே வடிவமாறுதல் ஒரு கனவுக் காட்சி போல வந்து சென்றது.
’செம்பவளத்தின் இரண்டாவது தமக்கையின் திருமணம் இப்போது வந்தது. மயிலாலன், இப்போதும் செம்பவளத்திடம் தகவல் அறிவித்தான். “தந்தை வீடு சென்றுவந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. இன்னொரு தமக்கைக்குத் திருமணம் நடக்க விருக்கிறது. முன்போலப் போய்ப் பார்த்து வரவிரும்புகிறாயா?” என்றான்.
செம்பவளம் முகம் மீண்டும் மலர்ந்தது. ஆனால் அவள் வாய் திறக்கவில்லை. அவள் முகத்தைத்தன் இரு கைகளால் பற்றித் தோள்மீது சாய்த்துக் கொண்டான். "இத்தடவை நான் தனியாகப் போகப் போவதில்லை. உங்கள் உருவம்தான் நிலையாக மீண்டுவிட்டதே! நீங்களும்கூட வந்துதான் ஆகவேண்டும்’ என்றாள்.
மாயம் இன்னும் முற்றிலும் நீங்கவில்லை என்பதை அவன் அவளுக்கு எடுத்துரைத்தான். "மாலைப்போதில் திடுமென வரும் மாறுதலை நீ அறிவாய், அதுவே எவ்வளவு இடையூறு உண்டு பண்ணும் என்பது உனக்குத் தெரியும் அது மட்டுமல்ல. நீ அறியாத இன்னொரு பேரிடறும் உண்டு. நம் மாளிகையில் இரவில் விளக்கே கிடையாதென்பதை நீ கவனித்திருக்க மாட்டாய். சுவரெங்கும் நாகமணி பதித்திருப்பது எதனால் என்பதும் உனக்குத் தெரியாது. அந்த மணியொளியன்றி வேறு விளக்கொளி என் உடலின் மீது பட்டால், நான் மனித உருவையும் சிங்க உருவையும் இரண்டையுமே நிலையாக இழந்து ஓர் அன்னப் பறவையாய் ஏழுகடல் கடந்து அமரக நாடு சென்று விடுவேன். என்னைச் சிங்க உருவினனாக்கிய மாயக்காரனின் மகள் அங்கே மாயத்தால் என்னைக் கைக்கொண்டு விடுவாள். உன்னால் என்னை எளிதில் மீட்க முடியாது’ என்றான்.
செம்பவளம் இது கேட்டு நடுங்கினாள். ஆனால் கணவனை விட்டுப் பிரியாது அவனுடனே செல்லும் ஆர்வம் இந்த நடுக்கத்தையும் வென்றது. “மாலையிலும் காலையிலும் மட்டுமல்ல இரவிலும் நீங்கள் வெளியே வரவேண்டாம். போகும் போது உங்களைச் சிவிகையில் மறைத்துக் கொண்டு போகிறேன். காற்றுப்புகாத அறையிலேயே உங்களை வைத்துக் காக்கிறேன். நீங்கள் வந்துதானாக வேண்டும்” என்றாள்.
அவன் எவ்வளவு வற்புறுத்தி எச்சரித்தும் நங்கை கேட்கவில்லை. இறுதியில் அவள் இளவரசனுடனேயே தாயகம் சென்றாள்.
கணவன் தன்னுடன் வந்திருப்பதை அவள் எவருக்கும் கூறவில்லை. தனக்கெனத் தந்தை அளித்த அறைகளில் ஒன்றில் வாயில் பலகணிகள் யாவும் இறுக அடைத்து, அதில் அவனை இரவு பகல் ஓய்வுகொள்ள வைத்தாள். வாயிலில் திண்ணிய கருந்திரைகள் பல இட்டு மூடி, எத்தகைய ஒளிக்கதிரும் புகமுடியாதபடி ஒன்றொன்றாக நீக்கி மூடிவிட்டே உள்ளே சென்று வந்தாள். இந்நிலையில் விழா நாளும் விருந்தும் இனிது கழிந்தன. மயிலாலனுக்கு அறையிலேயே உணவு வட்டிக்கப் பட்டது. அதுவும் செம்பவளத்தாலேயே அதுகொண்டுவந்து ஊட்டப்பட்டது.
செம்பவளத்தின் ஆர்வ ஏற்பாடுகள் அத்தனையையும் அவள் எதிர்பாராத இயற்கையின் ஒரு சிறு கோளாறு தகர்த்து விட்டது. அவள் வாழ்வின் இன்ப அமைதியையே பேரளவில் கெடுக்க அது காரணமாயிற்று.
மயிலாலன் இருந்த அறையின் சுவரில் ஒரு பிளவு இருந்தது. அது மயிரிழையிலும் நுண்ணியதாக இருந்ததால் எவரும் அதைக் கவனிக்கவில்லை. நள்ளிரவில் ஊர்வலம் அந்தச் சுவரின் மறுபுற மாடத் தெருவில் பேரொளி விளக்குகளுடன் சென்றது. செம்பவளம் ஊர்வலக் காட்சியை வெளியில் நின்றே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒளி விளக்கங்களின் ஒரு கதிர் சுவரின் பிளவு வழியாக அறையெங்கும் வீசிற்று. மயிலாலன் அக்கணமே வெள்ளை அன்னப்பறவையானான். அவனும் இதை எதிர்பாராத தனால் திடுக்கிட்டான். எப்படியும் மாயத்தின்பிடி தன்னறிவையும் நிலையையும் முழுதும் பற்றுமுன் செம்பவளத்திடம் தகவல் கூறிப் போகக் காத்திருந்தான்.
ஊர்வலம் சென்றதும் செம்பவளம் வழக்கம்போல முன்னெச்சரிக்கையுடன் திரைகள் கடந்து உள்ளே நுழைந்தாள். படுக்கையில் இளவரசனைக் காணாமல் பதைபதைத்தாள். அதேசமயம் இறக்கை ஓசை கேட்டு அவள் மேலே பார்த்தாள்! படுக்கையின் விட்டத்தின் மீதே, ஒரு வெள்ளன்னத்தைக் கண்டாள். ‘ஆ! என் உயிர்த் துணைவரே. என்ன செய்து விட்டேன்!’ என்று அலறினாள்.
அன்னம் அவளுக்கு ஆறுதல் கூறிற்று!
‘செம்பவளம், இப்போது அழ நேரமில்லை! உனக்குக் கூற வேண்டியதை நான் விரைவில் கூறிவிட்டுப் போக வேண்டும். இந்த உருவில் நான் உன்னையும் பழைய வாழ்வையுமே விரைவில் மறந்துவிடக் கூடும். முன்னே நான் கூறியபடி நான் அமரிக நாட்டுக்குப் பறந்து செல்கிறேன் போகும் வழியெல்லாம் என் இறக்கைகளை நான் கீழே உதிர்த்தே செல்லுவேன். என்னை அடைய விரும்பினால் நீ ஏழாண்டுகள் காடும் மலையும் கடந்து அந்த வழியைப் பின்பற்ற வேண்டும். ஒரு படகைத் தூக்கிக் கொண்டே வந்து, நிலமானால் நடந்தும் கடலானால் படகேறியும் ஓயாது சுற்றவேண்டும். அதன் முடிவில் நீ என்னை அடையலாம். இதில் வெற்றிபெறுவாய் என்றே நம்புகிறேன்’ என்றான்.
மறுகணம் இறக்கையடித்த வண்ணம் அன்னம் பறந்தோடிற்று.
அது கூறியபடியே போகிற வழியெல்லாம் வெண்தூவிகள் பறந்து கீழே படிந்து அது சென்ற வழியைக் காட்டின.
அவள் ஒரு மணி நேரம் திகைத்து நின்றாள். பின் தன் மடமையை நினைத்து உருகினாள். வருந்திப் பயனில்லை என்று கண்டு, இறுதியில் எவரிடமும் கூறாமலே தன் அணிமணிகளை விற்று ஒரு படகு வாங்கிக் கொண்டு புறப்பட்டாள்.
மாதம்மாதமாக, ஆண்டு ஆண்டாக, அவள் அன்னத்தின் தூவிகளைப் பின்பற்றி அலைந்து திரிந்தாள்.
ஆண்டுகள் ஆறு உருண்டோடின. ஏழாம் ஆண்டு தொடங்கிற்று. அவள் கால்கள் நடந்துநடந்து வெம்பின. படகைச் சுமந்தும் உகைத்தும் கைகள் முற்றிலும் தளர்ந்து செயலிழந்தன. காய் கனி கிழங்குகளும் நீரும் உட்கொண்டு உட் கொண்டு வயிறு குமட்டத் தொடங்கிற்று. ஆயினும் அந்த ஆண்டின் இறுதிக்குள் பயணத்துக்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் அவள் நடந்தாள்.
இந்த நம்பிக்கையிலும் திடுமெனப் பேரிடி விழுந்தது. தூவிகளின் தடம் சட்டென நின்றது. தூவிகள் மட்டும் சற்று மிகுதியாகச் சிதறிக் கிடந்தன. அன்ன உருவிலிருந்த இளவரசனுக்கு ஏதாவது ஆபத்து நேர்த்திருக்கக் கூடுமோ என்று அவள் அஞ்சினாள். அவள் அச்சம் உண்மையே என்பதும் அவளுக்கு விரைவில் தெரியவந்தது.
‘அவள் இப்போது திக்குத் திசையற்றுத் திரிந்தாள் இறக்கைகளை உதிர்த்துக் கொண்டே பறக்கும் ஓர் அன்னப் பறவையைக் கண்டீர்களா?’ என்று அவள் சந்தித்தவரிட மெல்லாம் கேட்டாள்.
பட்டாடை விற்றுக் கொண்டு ஒருவன் அவ்வழி சென்றான். ‘அன்னப்பறவையை நான் காணவில்லை. ஆனால் அது யார் என்று எனக்குத் தெரியும்; நீ ஏன் தேடுகிறாய் என்பதும் எனக்குத் தெரியும், உன் வருத்தத்தைக் கண்டு இரங்குகிறேன். இது உனக்கு உதவும்; இதை நீ வைத்துக்கொள். துணையற்ற நேரத்தில் என்னை நினைத்து இதை உடைப்பாயாக’ என்று கூறி, அவன் ஒரு செப்புப் பேழையைக் கொடுத்துச் சென்றான். அதை அவன் முந்தானையில் முடிந்து கொண்டாள்.
சிறிது தூரம் சென்றபின் கோழிகளை மேய்த்து கொண்டு ஒரு பெண் சென்றிருந்தாள். செம்பவளத்தின் கேள்விகளுக்கு அவளும் பதில் கூற முடியவில்லை. ஆனால் அவள் மிகச் சிறிய ஒரு முட்டையை அவளிடம் கொடுத்து ‘வேறு உதவியில்லாத நேரத்தில் என்னை நினைத்து இதை உடைப்பாயாக’ என்று கூறிச் சென்றாள்.
மூன்றாவதாகச் செம்பவளம் ஓர் ஆட்டிடையனைச் சந்தித்தாள். அவனிடமும் அன்னப்பறவையைப் பற்றி கேட்டாள். அவன் அதுபற்றிய விவரம் யாவும் அவளுக்கு கூறினான்.
"அம்மணி! நான் அவனையும் உன்னையும் நன்கு அறிவேன். ஏனென்றால் மாயக்காரன் மாயத்துக்கு முன்பே நான் நாகமலையை விட்டு வெளியேறியவன். நீ அங்கே இருக்கும் போதும் ஒரு தடவை வந்திருக்கிறேன். ஆகவே உன் நிலைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
சிங்கநாகர்களைச் சிங்கங்களாக்கிய மாயக்காரன் அவர்கள் நண்பனே. ஆகவே, மாயத்தால் அவன் அவர்கட்குத் தீங்கு செய்யவில்லை; நன்மையே செய்தான். அவன் மாயம் இதற்குள் நீங்கியிருக்கவேண்டும். ஆனால், சிம்புள் நாகரிடையே மற்றொரு மாயக்காரி இருக்கிறாள். அவள் உன்னிடமிருந்து இளவரசனைக் கைப்பற்றச் சூழ்ச்சி செய்திருக்கிறாள். அவள் ஏவிய சிம்புள் ஒன்று அன்னத்தைத் துரத்திப் பிடித்தது. பழைய மாயம் மறந்து புது மாயத்தால் அன்னம் இளவரசனாயிற்று. ஆனால் உன் கண்ணில் படாமலிருக்க மாயக்காரி அவனை மீண்டும் சிங்கமாக்கினாள் சிம்புள் சிங்கத்தை இழுக்க, சிங்கம் சிம்புளை எதிர்க்க இரண்டும் இன்னும் பேராடிக் கொண்டிருக்கின்றன. நான் சொல்கிறபடி கேட்டால் நீ இளவரசனை விரைவில் காப்பாற்றலாம்" என்றான்.
செம்பவளம் ஆவலுடன், ’நான் என்ன செய்யவேண்டும்? கூறுங்கள்!" என்றாள்.
“அதோ தெரியும் ஓடைக்கரை வழியே போ, ஓடையின் அருகிலே பல பட்டமரங்களைக் காண்பாய். எண்ணிக்கொண்டே சென்று, பதினோராவது மரத்தில் ஒரு கிளையை முறித்துக் கொள், பின் ஓடைவழியாகவே திரும்பிச் சென்றால், சிம்புளும் சிங்கமும் போரிடும் இடத்தை அடைவாய், சிம்புள்மீது பட்டமரத்தின் கிளையால் அடி, உடனே சிங்கமும் சிம்புளும் தம் நேரான உருவடையும், மாயக்காரி இளவரசனைக் கைப்பிடித்து இழுக்குமுன் நீ முந்திக் கொண்டு அவனைப் பற்றிச் சென்றால் அவள் மாயம் பலிக்காது” என்றான் ஆட்டிடையன்.
செம்பவளம் அவனுக்கு வணக்கம் செலுத்தினாள். ஓடை வழியே சென்று பதினோராவது பட்ட மரக்கிளையை முறித்தாள். பின் சிம்புளும் சிங்கமும் போராடும் இடம் சென்று பட்ட மரக்கிளையால் சிம்புளை அடித்தாள். அடுத்தகணமே இளவரசனும் மாயக்காரியும் அவள்முன் நின்றனர்.
திடீர் மாற்றத்தால் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் அவன் சிறிது நேரம் தன்னை மறந்து நின்றாள். ஆட்டிடையன் எச்சரிக்கை இச்சமயம் அவள் நினைவுக்கு எட்டவில்லை. அச்சமயம் பார்த்து மாயக்காரி இளவரசனைக் கைப்பற்றினாள். அடுத்த கணம் இருவரும் மாயமாய் மறைந்தனர். கைக்கெட்டியது வாய்க் கெட்டாமல் செம்பவளம் முன்போலப் புலம்பித் திரியலானாள்.
இளவரசனும் மாயக்காரியும் மறைந்த திசையிலேயே அவள் சென்றதால், ஒரு சில மாதங்களில் அவள் மாயக்காரியின் மாளிகையை அடைந்தாள். அவளை மாயக்காரி காணவில்லை. ஆனால் இளவரசன் பார்க்கும்வரை அவள் நின்றும் பயன் ஏற்படவில்லை. இளவரசன் அவளை அடையாளமறிந்து கொண்டதாகவே தெரியவில்லை. புதுமாயம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது என்று செம்பவளம் உணர்ந்து கொண்டாள்.
மாளிகையைச் சுற்றி எங்கும் கொட்டகை ஏற்பாடுகள் தொடங்கப்பட்டிருந்தன. செம்பவளம் அங்குள்ள வேலையாட்களை அவைபற்றி விசாரித்தாள். இளவரசனை இரண்டொரு நாட்களுக்குள் மாயக்காரி மணம் புரியப் போகிறாள் என்று அறிந்தாள்.
அவளுக்கு இப்போது மூளை முற்றிலும் குழம்பிற்று, செய்வது இன்னது என்று தெரியவில்லை. அங்குள்ள ஒரு மரத்தடியில் சென்றமர்ந்து கண்ணீர் வடித்தாள். அப்போது அவளுக்கு ஆடை வணிகன் தந்த செப்புப் பேழை நினைவிற்கு வந்தது. அதை அவள் எடுத்து உடைத்தாள்.
பேழை ஒரு கைப்பிடியளவே இருந்தது. ஆனால் அதனுள் மிக மெல்லிய ஒளி பொருந்திய பட்டுகள், பொன்னூலிழைத்த உடைகள் இருந்தன. அவள் உள்ளத்தில் திடீரென மின்னல் போல ஒரு வழிவகை தென்பட்டது. அவள் அதை எடுத்துக் கொண்டு மாயக் காரியின் மாளிகை முன் சென்றாள்.
‘நீ யார்? எதற்காக வந்திருக்கிறாய்?’ என்று வேலையாள் கேட்டான்.
‘மணவேளையில் இளவரசிகள் அணியத்தக்க ஆடையணி கலங்கள் விலைக்குக் கொண்டு வந்திருக்கிறேன். வீட்டுத் தலைவிக்கு இவை வேண்டுமா என்று கேட்டுவா!’ என்றாள்.
மாயக்காரி மாடியிலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆடைகள் அவள் கண்களைப் பறித்தன. ‘என்ன விலை கேட்கிறாய், இவ்வாடைகளுக்கு?’ என்று கேட்டாள்.
‘அம்மா, பணத்துக்கு இவை விற்கப்படுபவை அல்ல, மணமகனுடன் நான் ஓரிரவு இருந்து பேச முடியுமானால், மணமகளாகிய நீ அடுத்த நாள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்றாள்.
செம்பவளம் கேட்ட விலை தகாவிலை என்றே மாயக்காரி எண்ணினாள். ஆனால், ஆடைகளிலிருந்து அவள் கண்களை எடுக்க முடியவில்லை. ஆகவே செம்பவளம் கேட்ட உரிமை அளித்தாள்.
மாயக்காரிக்குச் செம்பவளத்தைப் பற்றிய ஐயம் பெரிதா யிருந்தது. ஆகவே முன்னெச்சரிக்கையாக, அவள் வேலையாள் மூலம் இளவரசனுக்குக் கொடுக்கும் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்தாள்.
செம்பவளம் இரவு முழுதும் இளவரசன் படுக்கை யிலேயே இருந்தாள். ஆனால் இளவரசன் ஒரே உறக்கமாக உறங்கினான். அவள் கண்ணீர் வடித்தாள். புலம்பினாள். தன் துயரக் கதை கூறினாள். எதுவும் அவன் செவியில் ஏறினதாகவே தெரியவில்லை.
மறுநாள் மாயக்காரி ஆடைகளைப் பெற்றுக் கொண்டு அவளை வெளியே அனுப்பினாள்.
செம்பவளம் இப்போது மீண்டும் மரத்தடியில் போய் இருந்தாள். இப்போது அவளுக்குக் கோழி மேய்ப்பவள் தந்த முட்டை நினைவுக்கு வந்தது. அவள் அதை எடுத்து உடைத்தாள்.
முட்டை கோழி முட்டையைவிடச் சிறிதாகவே இருந்தது. ஆனால் அதனுள் முற்றிலும் பசும் பொன்னாலான ஒரு சின்னஞ்சிறு பெட்டைக் கோழியும், அதனைச் சுற்றி மிளகளவே யாக மாணிக்கதாலான ஐந்து கோழிக் குஞ்சுகளும் இருந்தன. பொன் கோழி ஒரு தடவை இறக்கைகளை அடித்து உடல் பூரித்தது. அடுத்த கணமே மாணிக்க குஞ்சுகள் அதன் உடலுக்குள் சென்று பதுங்கின. பொன் சிறகுகளில் மாணிக்கப் புள்ளிகளாகக் குஞ்சுகள் அடங்கின.
முன்னாள் ஆடைகளின் அழகைவிட இந்த மாய உயிர் அழகு செம்பவளத்தின் கண்ணைப் பறித்தது. அவள் அவற்றுடன் மீண்டும் மாயக்காரியிடம் சென்றாள். மாயக்காரியின் ஆர்வம் முன்னிலும் பெரிதாய் இருந்தது. ஆனால் செம்பவளம் மீண்டும் முன்னைய விலையே கூறினாள். முன்னாளையச் சூழ்ச்சியினையே நம்பி மாயக்காரி இணங்கினாள்.
முன்னாளிலே இளவரசன் எதுவும் தெரியாமல் மயங்கிக் கிடந்தாலும், அவன் முற்றிலும் உணர்விழந்து விடவில்லை. செம்பவளம் சிந்திய கண்ணீர் - அவனுக்கு மழை பொழிவது போல் இருந்தது. அவள் புலம்புவது - புயல் அலறுவது போலச் செவிக்குப் பட்டது. அவள் ஆர்வத் துடிப்பு - மின்வெட்டுவ தாகத் தோன்றிற்று. இவற்றை மனத்தில் வைத்துக்கொண்டு இரண்டாம் நாள் பகலில் அவன் வேலையாளிடம் செய்தி விசாரித்தான். வேலையாள் தனக்கொன்றும் தெரியாதென்று கூறினான். ஆனால் மாயக்காரியின் உத்தரவால் தான் பாலில் மயக்க மருந்து கொடுத்ததைத் தெரிவித்து அதன் பயனாக இந்த மயக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று மட்டும் சொன்னான்.
இரண்டாம் நாள் வேலையாள் பால் கொடுத்த போது இளவரசன் அதைக் குடிக்கவில்லை. அந்தப் பாலை மாயக்காரிக்குக் கொடுத்தனுப்பிவிட்டு, தான் வேறு பால் உட்கொண்டான். இதனால், அன்று செம்பவளத்தை அவன் உணரவும் அவள் புலம்பலைக் கேட்கவும் முடிந்தது. மாயக்காரியின் மாயத்தால் அவள் நினைவு மறந்திருந்தாலும் செய்திகளனைத்தும் கோவையாகக் கேட்டபோது, அவனுக்கு முழு உணர்வும் வந்துவிட்டது.
அப்போது இரவு மணி பன்னிரண்டுதான் இருக்கும். மாயக்காரி இயல்பாகவே உறங்கும் நேரம், மயக்க மருந்து வேறு வேலை செய்தது. ஆகவே இளவரசன் மயிலாலன் செம்பவளத்தைப் பிடித்திழுத்துக் கொண்டு குதிரை மாடம் சென்றான். மாயக்காரி தானே ஓட்டிய குதிரை வழக்கப்படி இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்தது. அதன்மீது செம்பவளத்தையும் ஏற்றி, அவன் படகுடன் தானும் அமர்ந்து கொண்டான். விடியுமுன் இருவரும் மாயக்காரியின் அமரிக நாடு கடந்து. கடற்கரையை அடைந்தனர்.
படகு ஒருபுறமும் குதிரை ஒருபுறமும் அவர்கள் பயணத்தை எளிதாக்கின. சில ஆண்டுகளுக்குள் இளவரசன் மயிலாலனும் செம்பவளமும் மாவிலங்கை நாடு வந்து சேர்ந்தனர்.
செம்பவளத்தின் தந்தையான மும்முடி நாகன் இப்போது தொண்டு கிழவனாய் இருந்தான். ஆனால் தன் ஆருயிர்ப் புதல்வி துன்பங்கள் பலவும் கடந்து வந்ததையும், சிங்கம் இளவரச னானதையும் கேட்டு அவன் மீண்டும் இளமை பெற்றது போல் மகிழ்ந்து கூத்தாடினான். துன்பத்தில் நீண்டநாள் துவண்ட காதல் துணைவர் கட்டறா இன்ப வாழ்வில் மீண்டும் இணைந்தனர்.
அவர்கள் சின்னங்சிறு குழந்தைகள், சிங்கநாகர் மரபுக்கு மாவிலங்கையில் மீண்டும் புத்துயிர் அளித்தன. தந்தையின் சிங்க உருவை நினைவூட்டும்படி முதல் மைந்தனுக்கு அவர்கள் ‘அரிமானேந்தல்’ என்றே பெயரிட்டு வளர்த்தனர். தென்மா விலங்கையுடன் மாவிலங்கை நாட்டையும் அயல் மாநிலங்கை யுடன், மாவிலங்கை நாட்டையும் அயல் மாநிலங்களையும் வென்று அவன் நெடுங்காலம் பேரரசாண்டு மகிழ்வுடன் வாழ்ந்தான்.
வெள்ளைத் தாரா
பொதிகைமலை ஆண்ட வேம்பாய் என்ற குடி மன்னனுக்குக் குறுநகை என்ற ஓர் அருங்குணச் செல்வி இருந்தாள். அவள் பொதிகை மலைத் தென்றலே போன்ற இனிய பண்புடையவள். நாஞ்சில் மலைத் தலைவன் இளநாகன் அவளை விரும்பி மணந்து தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டான்.
வேம்பாய் - மதுரை மாநகரில் ஆண்ட பாண்டியப் பேரரசன் படைத் தலைவனாய் இருந்தான். பாண்டியர் வடதிசையில் குந்தள நாட்டுப் பேரரசனுடன் கண்ணனூரில் சென்று போராடிய போது, வேம்பாய் மட்டுமன்றி இளநாகனும் வடதிசை செல்ல வேண்டி வந்தது. குறுநகைக்குத் தாய் இல்லை. உடன் பிறந்தாரும் இல்லை. ஆகவே அவள் கணவன் மாளிகையிலேயே தன்னந்தனியாக இருந்து வரவேண்டி வந்தது. கணவனும் எவர் துணையையும் விடத் தனிமையே பாதுகாப்பான தென்று கருதினான். ஆகவே, எக்காரணம் கொண்டும் தான் வரும்வரை எங்கும் வெளியே போக வேண்டாம் என்று எச்சரித்தான். வெளியில் யாருடனும் பழகக் கூடாது என்று அறிவுரை கூறிச் சென்றான்.
குறுநகை தந்தை வீட்டிலும் குடிக்கு ஒரு குலக் கொழுந்தாகச் செல்லமாக வளர்ந்தவள். கணவன் வீட்டிலும் அவள் கால் நிலத்தில் பாவாமலே வாழ்ந்து வந்தாள். தந்தையையும் கணவனையும் தவிர அவள் யாருடனும் பழகியதில்லை. ஆகவே அவள் முற்றிலும் உலக அனுபவம் அற்றவளாய் இருந்தாள். சிறு குழந்தைகள் போல எதையும் எவரிடமும் இன்னதென்று கூற முடியாத அச்சமும் இருந்தது. இந்நிலையில் கணவன் அறிவுரைப்படி நடப்பதென்ற உறுதியுடன் அரண்மனைக் குள்ளேயே மாதக் கணக்காக அடைபட்டுக் கிடந்தாள்.
அவளுக்கு எந்த வேலையிலும் மனம் ஓடவில்லை. எந்த வேலை செய்யும்போதும் மாண்டுபோன தாய், போர் களத்துக்குச் சென்றிருந்த தந்தை, கணவன் ஆகிய மூன்று பேர் பற்றிய சிந்தனைகளைச் சுற்றியே அவள் உள்ளம் உழன்றாடிற்று. திருக்குறள். சிலப்பதிகாரம், மனிமேகலை போன்ற நல்ல தமிழ் ஏடுகளில்கூட அவள் உள்ளம் ஈடுபட முடியவில்லை. ஏனெனில் அவையும் அம்மூவர் பற்றிய எண்ண அலைகளையே எழுப்பின.
ஒருநாள் அவள் தன் மாடத்தின் பலகணி அருகே அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள். அவள் அருகே ஏடுகள் சிதறிக் கிடந்தன. கையில் துன்னூசி இருந்தாலும், துள்ளி வந்த வரிச்சுருள் கைநழுவிக் கீழே கிடந்தது. அச்சமயம் பலகணிக்கு வெளியிலிருந்து தளர்ந்த ஒரு பெண் குரல் அவள் சிந்தனையைக் கலைத்தது.
“அம்மணி, நீ நாட்டையாளும் அரசன் மகள், நாட்டை ஆளும் அரசி. இவை மட்டுமல்ல. அழகுக்குக்கூட நீயே அரசி. அப்படியிருக்க நீ தனிமையில் அடைபட்டுக் கவலைப்படு வானேன்? என் போன்ற கிழடுகள் கூட இந்த இளந்தென்றலில் வெளியே சுற்றி அழகுக்காட்சிகளை நுகர்கிறோமே!” என்றது.
அரசி அவளை எட்டிப் பார்த்தாள். அவள் தண்டூன்றி நடக்கும் ஒரு கிழவி. உடல் வில்லாக வளைந்திருந்தது.கை கால்களும் தலையும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவள் பேச்சிலும் குரலிலும் புகழ்ச்சியும் பரிவும் கலந்திருந்தன; குறுநகையால் அவளிடம் எத்தகைய தீங்கும் காணமுடியவில்லை. அதே சமயம் கணவன் எச்சரிக்கையையும் அவள் எண்ணிக் கொண்டாள். ஒன்றும் பேசாது மாடத்துக்குள்ளே வந்து விட்டாள். ஆனால் அவள் உள்ளத்தில் அந்தத் தொண்டு கிழவியின் உருவும் குரலும் மீண்டும் மீண்டும் வந்து நிழலாடின. பாவம் நல்லெண்ணத் துடனே தான் என்னிடம் ஏதோ கூறினாள். மறுமொழி கூறாமல் வந்துவிட்டது பற்றி என்ன நினைத்துக் கொண்டாளோ? என்று தனக்குள்ளாகக் கூறிக் கொண்டாள்.
அதே இடத்தில், அதே நிலையில், குறுநகை மீண்டும் மீண்டும் அதே குரலைக் கேட்டாள். அதே உருவைக் கண்டாள். இரண்டாம் தடவை வாய்திறந்து ஒரு வாசகத்தில் “எனக்கு விருப்பமில்லை” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள். ஆனால் மறுநாள் முதல் தன் முடிவுக்குச் சிறிது சிறிதாக விளக்கங்கள் கூறினாள். ஒவ்வொரு விளக்கத்துக்கும் கிழவி மெல்லிய மொழிகளில் எதிர்விளக்கம் கூறினாள். முன்னிலும் பரிவுடனும் அன்புடனும் வெளிவரும்படி குறுந்தகையை வற்புறுத்தி வேண்டினாள்.
“என் கணவன் இல்லாத வேளை இது; ‘வெளியே எங்கும் போக வேண்டாம். வெளியார் எவருடனும் பேச வேண்டாம்’ என்று அவர் கூறியிருக்கிறார். அதனால் நான் வெளியே வரவிரும் பவில்லை.”
குறுநகையின் இந்த மறுமொழி கேட்டவுடனே கிழவியின் கண்களில் ஒரு புத்தொளி வீசிற்று. ஆனால், அதைக் குறுநகை கவனிக்கவில்லை. இளநாகன் மனைவியிடம் கொண்ட பாசத்தைப் புகழ்ந்து கிழவியும் தன்னை அவள் வெளியார் என்று கருதாதபடி நடந்து கொண்டாள். அவள் பரிவுத்தொனி மனைவி யிடமும் கணவனிடமும் ஒருங்கே பரவிற்று.
"பாவம், நல்ல பிள்ளை! மனைவியிடம் உயிர்ப் பாசமாகத் தான் இருக்கிறான். ஆனால் நீயும் சிறு பிள்ளை; அவனும் சிறு பிள்ளை; நீ வெளியே வராமலிருப்பது நல்லது தான். ஆனால் உன் கவலையை வெளியே உலவவிடாமல் போனால் உடம்புக்கு என்னவாகும்? அவன் வருவதற்குள் கவலை உன் அழகுடலையே அரித்துத் தின்றுவிடுகிறதே! அதைப் பார்த்து அவன் வந்தால் எவ்வளவு கவலைப்பட மாட்டான். மேலும் நீ தனியே வெளியே எங்கும் போக வேண்டியதில்லை. உன் அரண்மனைத் தோட்டத்- தினருகிலேயே என்னுடன் சிறிது உலவிவிட்டு வரலாம் உன் அழகை உன் கணவன் வரும்வரை பேணும் பொறுப்பு, என்னுடையது.’ என்றாள் கிழவி.
கிழவியின் பேச்சும் பரிவும் மெல்ல மெல்லக் குறுநகையின் மனத்தைக் கரைத்திருந்தன. அவள் உறுதியும் முன்னெச்சரிக்கைப் பண்பும் அவளை விட்டு படிப்படியாக நழுவின. கிழவி சொல்வதிலும் எவ்வளவோ உண்மை இருக்கிறது என்று அவள் தனக்குள்ளாகக் கூறிக் கொண்டாள். தன் ஆடையணிகளைத் திருத்திக் கொண்டு கிழவியுடன் தோட்டப் பக்கமாகச் சென்று சிறிது உலவினாள்.
தோட்டத்தில் எல்லாவகை அழகுக் காட்சிகளும் நிரம்பியிருந்தன. அவற்றில் ஈடுபட்ட வண்ணமே குறுநகை எங்கும் உலவினாள். கிழவி அவற்றை காட்டி மகிழ்வித்த வண்ணமே அவளைப் பலவகையிலும் புகழ்ந்து பசப்பினாள். தோட்ட எல்லைக்குச் சற்று வெளியே ஒரு குளிர் நறும்பொய்கை இருந்தது. அதன் படிகம் போன்ற நீரில் கருநிறமான மை வண்ணத் தாராக்கள் மிதந்தும் மூழ்கியும் விளையாடின. கிழவி குறுநகையை மெல்ல அப்பக்கமாக இட்டு வந்து. அப்பொய்கையையும் அத் தாராக்களையும் அவற்றின் குஞ்சுகளையும் அவளுக்குச் சுட்டிக் காட்டினாள்.
“அந்தத் தாராக்களின் மையழகைப் பார்! உன் நிறம் மட்டும் அவற்றிற்கு இருந்தால் அவற்றின் அழகு இன்னும் அவ்வளவு வளங் கொழிக்கும்? தண் நறும் பொய்கையின் குளிர்ச்சியில் வெப்பு என்பது இன்னதென்றே அவற்றுக்குத் தெரிவதில்லை. எனக்குக்கூட முடியுமானால் அதில் நீந்தி விளையாட வேண்டுமென்று ஆர்வம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஆனால் இப்போது நான் தொண்டு கிழம். உன் வயதில் நான் இங்கே மணிக்கணக்காக நீந்திக் குளிர் நீரில் குளித்திருக்கிறேன்” என்றாள்.
அதில் சிறிது மூழ்கி எழுந்தால் என்ன என்று நைப்பாசை குறுநகை உள்ளத்தில் எழுந்தது. அவள் கண்கள் அவள் எண்ணத்தை அவள் ஆடையணி மணிகளின் பக்கம் திருப்பின. இக்குறிப்பால் கிழவி அறிந்தாள். அவள் அதற்காகவே காத்திருந்தாள்.
“ஆடையணிமணிகளைப் பற்றி உனக்கேன் கவலை? நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்ள. நீ குளித்தெழுந்தபின் உன் அழகை அரண்மனை கொண்டு சேர்ப்பது என் பொறுப்பு. நீ வெப்புடன் கவலையும் விலகச் சிறிது நேரம் நீராடு” என்றாள் கிழவி.
ஆடையணிமணிகளையும் பொன்முடியையும் குறுநகை பொய்கைக் கரையிலுள்ள ஒரு கற்படியில் எடுத்து வைத்தாள். ஆர்வமாகப் பொய்கையில் படிந்தாள். பொய்கையில் மூழ்கி எழுந்து நீந்தியபோது தாராக்கள் துய்க்கும் இன்ப முழுதும் தனதாயிற்றென்று கருதினாள். ஆனால், தானே ஒரு தாரா ஆனதை அவள் முதலில் கவனிக்கவில்லை. தண்ணீர் அலை வற்றியிருந்த இடங்களில் கருநிறத் தாராக்களிடையே அழகிய ஒரு வெண்நிறத் தாராவின் நிழலுருவையும் கண்டபோது தான் அவள் தன்னைச் சுற்றிலும் நோக்கினாள். அந்நிழல் தன் வடிவுடன் ஒட்டிய தன் நிழலே என்று கண்டபோதுதான். தன்னிடம் ஏற்பட்ட மாறுதல் அவளுக்குத் தெரிந்தது. அவள் தன் அணிமணிமுடிகளும் கிழவி இருந்த இடம் நோக்கினாள். அங்கே கிழவியின் கந்தலாடைகளும் தண்டும் தான் கிடந்தன.
கிழவி உண்மையில் ஒரு மாயக்காரி, குறுநகை நீரில் மூழ்கிய மறுகணமே அவள் வெள்ளைத் தாரா ஆய்விடுவாள் என்பது அவளுக்குத் தெரியும். ஆகவே அவள் தன் மாயத்தால் குறுநகை வடிவம் மேற்கொண்டு அவள் ஆடையணிமணிகளையும் முடியையும் அணிந்து அரண்மனைக்குச் சென்று விட்டாள்.
அரண்மனையில் குறுநகையுடன் ஒன்றிரண்டு சேடியர் களல்லாமல் வேறு எவரும் கிடையாது. மாயக்காரி அடிக்கடி அப்பக்கம் வருபவளாதலால் அவள் அவர்களை நன்கு அறிந்தவள், குறுநகை வெளியே சென்றதும் தாராவாக மாறியதும் அவர்கள் அறியாதவை, அவர்கள் கனவிலும் எண்ணியிராதவை. ஆகவே மாயக்காரி குறுநகையுருவுடனும் ஆடையணி முடிகளுடனும் அவர்களை அணுகியபோது, அவர்கள் அவளைக் குறுநகை என்றே நம்பினர். அவர்கள் கண்கண்ட மாறுதல் குணமாறுதல் ஒன்றே. கணவனைப் பற்றிய ஏக்கத்தால் அவள் தம்மீது சீறிவிழுவதாக அவர்கள் எண்ணிக் கொண்டனர்.
இளநாகன் கண்ணனூர்ப் போரில் தன் மாமன் வேம்பாய்க்கும், பாண்டியப் பேரரசனுக்கும் பெருவெற்றியும் புகழும் தேடித் தந்து, வீறுடனும் களிப்புடனும் மீண்டான். கொந்தளிக்கும் ஆர்வத்துடன் குறுநகையை நாடிவந்தான். மாயக் குறுநகையும் வாயிற்படி கடந்து ஓடிவந்து தன்னை வரவேற்றது கண்டு அவன் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டான். தான் பிரியா விடைகொண்டு விட்டுச் சென்ற குறுநகை வேறு. தன்னை வரவேற்ற குறுநகை வேறு என்ற எண்ணம் அவனுக்கும் எழவில்லை. ஆனால் முன்னைய அன்பின் உயிர்த் துடிப்பை இப்போது மனைவியிடம் காணாமல் அவனும் சிறிது மலைப்புற்றிருந்தான். மாறுதல், வேலையினாலேயே என்று கருதி அடிக்கடி வெளியே இட்டுச் சென்று அக்கவலையைப் போக்கவும் முயன்றான். ஆனால், மனைவியிடம் ஏற்பட்ட மாறுதல் கவலையினாலன்று என்பதை இப்போது அவளிடம் காணப்பட்ட புதிய மன உறுதியே காட்டிற்று. அத்துடன் தோட்டத்தின் பக்கமாகச் செல்ல அவன் முயன்றபோதும், தோட்டத்தின் எல்லையிலுள்ள பொய்கையின் பக்கமாகத் திரும்ப முனைந்த போதும் அவள் வழக்கத்துக்கு மாறாக அவனை அத்திசையிலிருந்து இழுத்துச் சென்றாள். அது அவனுக்கு ஒரு புதிராக இருந்தது.
கணவன் போருக்குப் புறப்பட்ட சமயமே குறுநகை கருவுற்றிருந்தாள். கருவுடனேயே அவள் தாராவாகியிருந்ததால், அவள் தாராவுருவிலேயே இரு முட்டைகள் இட்டாள். தான் தாராவுருவமடைந்துவிட்டதற்காக அச்சமயத்தில் அவள் முன்னிலும் இருமடங்காக வருந்தினாள். ஆனால் அரசுரிமை பெறவேண்டிய அக்கரு முட்டை வடிவில் பொன்முட்டை களாயிருந்தன. குஞ்சுகளும் வடிவில் பொன் குஞ்சுகளாகவே அமைந்தன. அரசன் வெள்ளைத் தாராவைக் கண்டுவிடக் கூடாதென்று மாயக் குறுநகை அஞ்சியது போலவே, அந்தத் தாராவாகிய குறுநகையும் குஞ்சுகள் எக்காரணம் கொண்டும் பொய்கைக்கு வெளியே தோட்ட எல்லை நோக்கி வெளியே சென்றுவிடக் கூடாதென்று பெருங்கவலை கொண்டாள், எச்சரித்தாள்.
குஞ்சுகளை எச்சரிக்கும் அந்தச் சமயத்திலே, தன் கணவன் எச்சரிக்கையைத் தான் மீறியதால் வந்த வினையை நினைத்து அவள் நைந்து உருகினாள்.
தக்தக்கதக தத்தக்க தக
தங்கக் குஞ்சுகளே -உங்கள்
தந்தை சொல்லைத் தட்டிநடந்தே
தாரா ஆனேன் நான்!
புத்தக்கபுகு புத்தக்கபுகு
பொன்னங்குஞ்சுகளே-இந்தப்
பொய்கை எல்லை போகாதீர்கள்
பொல்லாங் காய்வீடுமே!
செல்வக் குஞ்சுகளே-உங்கள்
செல்வ நடையைக் கண்டாலந்தச்
சிறுக்கி கொல்வாளே!
என்று அவள் தன் செல்வங்களை அடிக்கடி கொஞ்சிக் கொஞ்சி எச்சரித்தாள். ஆனால் மாயக் குறுநகையின் தடையைச் சட்டை செய்யாது இளநாகன் அப்பக்கம் வந்த சமயம், அவன் இப்பாட்டைக் கேட்க நேர்ந்தது. அதன் பக்கம்மாயக் குறுநகையின் கவனத்தைத் திருப்ப அவன் முயன்றதும். அவள் அவனை வழக்கம் மீறிய கடுமையுடன் பரபரவென்று மாளிகைக்குள் இழுத்துச் சென்றுவிட்டாள். அவளுக்கு வந்த கோபத்தில் அரசனை அவள் கணவனாகவே நடத்தவில்லை. அதே சமயம் அவனை விட்டகலாமல் அவன் செயலிலும் கண்ணோட்டமாக இருந்தாள். அரசன் இவற்றைக் கண்டு குழம்பிய உள்ளத்தில் மீண்டும் குழப்பம் அடைந்தான்.
அன்றிரவு அரசன்மெய்சோர்ந்து உறங்கினான். ஆனால் அவன் கவலை தோய்ந்த உள்ளத்தில் தோட்டத்தின் காட்சிகளும் அந்த உருக்கமான பாடலும்அகக் கண்களிலும் அகச்செவியிலும் ஓயாது சுழன்றன. அதே சமயம் மாயக்குறுநகை அவன் மீது மாயத்துயில் பரப்பிவிட்டுத் தோட்டத்துக்குச் சென்று, தாராக்குஞ்சுகள் வரவுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு நாளும் இதுபோல அரசனைத் துயிலடையச் செய்துவிட்டுச் சென்று காத்திருந்தாள்.
பகலில் தாய் காவல் மீறாமல் குஞ்சுகள் பொய்கையிலேயே தங்கின. முன்னிரவிலும் அவை தாயின் சிறகணைப்பினுள் ளிருந்தே கண்ணயர்ந்தன. ஆனால், அவ்வப்போது நள்ளிரவில் அவை விழித்துக்கொண்டு மெல்லச் சிறகுக்குள்ளிருந்து சிறிது தொலைவு ஓடியாடி மீண்டும் உள்ளே புகுந்தன. தொடக்கத்தில் வெளியே தொலைதூரம் செல்லாமல் விரைந்தன. வெளியே செல்லவும் அவை அஞ்சின. தாய் விழித்துக் கொண்டால் கண்டிப்பாளே என்றும் சிறிது தயங்கின. ஆனால், படிப்படியாக அச்சமும் தயக்கமும் தளர்வுற்றன. ஒருநாள் தோட்ட எல்லைக்குள்ளேயே புகுந்து நடமாடின.
முன்பு மாயக்காரியின் மாயம் தோட்ட எல்லைக்கு வெளியே தான் செயலாற்றிற்று. இப்போது அது தோட்ட எல்லைக்குள் பொய்கை எல்லை கடந்தே செயலாற்ற வல்லதாய் இருந்தது. ஆகவே மாயக் குறுநகை குஞ்சுகளைத் தோட்ட எல்லைக்கு உள்ளே வரும்வரை அங்கிருந்த ஒரு தூணுடன் தூணாகப் பதுங்கியிருந்தாள். அவை எல்லை கடந்த பின்னும் அவள் பொன்மயமான கூலமணிகளைத் தூவி அவற்றுடன் விiளாயடிக் கொண்டே அவற்றை அரண்மனைக்கு அருகாமை யில் இட்டுச் சென்றாள். அதன்பின் மேலும் ஓர் அறைக்குள் தொட்டி நீரும் பஞ்சணை மெத்தைகளும் வைத்து ஆசை காட்டி விளையாட விட்டு அறையைத் தாழிட்டுப் பூட்டினாள்.
புதிய இடம், புதுமாதிரி நீந்து தொட்டி முதலியவற்றை கண்ட ஆர்வத்தில் குஞ்சுகள் தாயை மறந்து விiளாயடின. தாயை மறந்த வண்ணமே பஞ்சணையில் உறங்கின. அதற்குள் மாயக் குறுநகை தன் கத்திகளைத் தீட்டினாள். சமையல்காரரிடம் சென்று. “நல்ல பொன் வண்ணத்தாராக் குஞ்சுகள் அகப்பட்டிருக்கின்றன. இன்று அவற்றைக் கறி வைக்க வேண்டும். அடுப்பைச் சுத்தம் செய்யுங்கள்” என்று பணித்தாள்.
இதற்குள் காலை நேரம் அணுகிவிட்டது. மாயக் குறுநகை விரைந்து வேலை முடித்தாள். உறக்கம் நீங்காமலே வாத்துக் குஞ்சகள் ஒவ்வொன்றும் ஒரே ஒருமுறை கீச்சென்றன. அதற்கு மேல் கத்திகள் அவற்றின் உயிரை விட்டு வைக்கவில்லை. அடுப்புப் பக்கமாக அவற்றுடன் மாயக் குறுநகை நடந்தாள்.
அவற்றின் குரல் சிறிதானாலும் அது தாய்த் தாராவின் காது களுக்குத் தப்பவில்லை. குஞ்சுகளைச் சிறகடியில் காணாமல் விடியற்காலமே தாரா வடிவிலிருந்து குறுநகை மாளிகையைச் சுற்றிச் சிறகடித்த வண்ணம் பறந்தாள்.
தத்தக்க புத்தக்கவே-என்
தாராக் குஞ்சுகளே,
தத்தக்க புத்தக்கவே-என்
தங்கக் குஞ்சுகளே!
தந்தக்க புத்தக்கவே-கொடுஞ்
சண்டாளி கொன்றாளே.
மன்னனை ஏய்த்தாளே-போதாமல்
மக்களும் கொன்றாளே!
தத்தக்க புத்தக்கவே-இனிநான்
செத்து மடிந்திடுவேன்,
தத்தக்க புத்தக்கவே-இனிஉயிர்
வெல்லம் எனக்கல்லவே!
கல்லும் கரைய இவ்வாறு கரைந்து உருகியவாறு, வெள்ளைத் தாரா மாயக் குறுநகை செல்லும் வழியில் வந்து அவர் காலைச் சுற்றிச் சுற்றிச் சுழன்ற வண்ணம் தலையை நிலத்தில் அடித்துக் கொண்டது. அவள் சீற்றத்துடன் “உன் பிள்ளைகள் போனவழி நீயும் போய் ஒழி” என்று கூறிய வண்ணம் தாராவை மிதிக்கக் காலை ஓங்கினாள்.
வெள்ளைத் தாராவின் கதறலைக் கேட்ட வண்ணமே மன்னன் விரைந்து படுக்கையை விட்டு எழுந்தான். அதன் முறையீடு மன்னன் என்ற முறையிலேயே அவன் மன்னுள்ளத்தைச் சுட்டெரித்தது. அவன் விரைந்து ஓடிவந்து மாயக் குறுநகையின் காலடியிலிருந்து தாராவை விடுவித்தான். அவள் கையிலிருந்த குருதி தோய்ந்த கூரிய கத்தியையும் பொன் வண்ணத்தாராக் குஞ்சுகளையும் கண்டு அவன் அகம் படபடத்தது. ‘என் குறுநகையா நீ! பொதிகைமலைத் தென்றலில் பிறந்தவளா நீ! புலவர் பாடும் ஆய்மரபில் வந்தவள்தானா நீ’ என்று சீறினான்.
“இல்லை, அவளல்ல குறுநகை அரசே” என்று வெள்ளைத் தாரா கூறியது கேட்டு அரசன் திரும்பினான்.
மாயக் குறுநகையின் மாயம் அக்கணமே மறைந்தது. வெள்ளைத் தாராவாயிருந்த குறுநகை அவன்முன் குறுநகை யாகவே நின்றாள். மாயக் குறுநகை நின்ற இடத்தில் குமுறிக் கொண்டு ஒரு தாரா நின்றது. ஆனால் அது வெள்ளைத் தாராவன்று. கருநிறத் தாரா. அந்த நிலையிலும் அது பொன் தாராக் குஞ்சுகளின் உடல்களை அடுப்பிலிட்டெரிக்க விரைந் தோடிற்று. ஆனால், அரசன் இம்மெனுமுன் அதனருகில் கிடந்த கத்தியால் அதன் தலையைச் சீவினான்.
கிறீச்சென்ற குரலுடன் தாரா விழுந்தது. ஆனால் அதன் உடல் தாராவடிவாகக் கீழே விழவில்லை. குறுநகையை வஞ்சித்த கிழவி வடிவமாகவே விழுந்து கிடந்தது. ஆனால் அவளைப் பற்றிச் சிந்திக்க அரசனுக்கோ, குறுநகைக்கோ நேரம் இல்லை. ஏனெனில், அவள் விழுந்த கணமே துண்டுகளாகக் கிடந்த பொன் வண்ணக் குஞ்சுகள் உயிர் பெற்றன-குறுநகை எடுத்தணைத்தவுடனே குஞ்சுகள் தவழும் குழந்தைகளாயின. அவள் அவர்களை அரசரிடம் தந்து அவன் காலடியில் விழுந்தழுதாள். “நீங்கள் கூறியதை மறந்து இந்த மாயக்கள்ளியை நம்பினேன். நம்பிப் பொய்கையில் சென்று குளிக்க முற்பட்டேன். அதன் பயனாக இத்தனைத் துயர்களுக்கு ஆளானேன். என்னை மன்னியுங்கள்”என்று அழுதாள்.
இழந்த உயிரை எடுத்தணைப்பது போல மன்னன் அவளை எடுத்து ஆதரவுடன் துயராற்றினான். குழந்தைகளுக்கும் தக்க ஏற்பாடுகள் செய்தான். ஆனால், இவ்வளவு நன்முடிவுகளுக்குப் பின்னும், ஒரு சிறு உயிர்மீது தான் கொல்கருவி ஏவநேர்ந்ததே என்று வருந்தினான். ஆனால் அவ்வெண்ணம் நீடிக்கவில்லை.
எண்ணற்ற பெண்ணாரணங்குகள் அத்திசையாக வந்து வந்து அரசனை வணங்கினர். "நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்னை வந்து ஏன் வணங்குகிறீர்கள்? என்று கேட்டான்.
“ஐயனே! இந்தக் கள்ளியின் மாயத்தால் நாங்கள் எல்லாரும் உங்கள் தோட்டத்திலுள்ள பொய்கையிலே கருநிறத் தாராக்களாய் இருந்தோம். உங்களை அலைக்கழித்தழிக்க முயன்றது போலவே இந்தக் கள்ளி எங்கள் பெற்றோர்களை யெல்லாம் அழித்திருந்தாள். இப்போது வெள்ளைத் தாராவாக வந்த தம் அரசியின் நல்தோழமையால் நாங்கள் உயிர் பெற்றோம். எங்கள் தாய் தந்தையரும் சுற்றத்தவரும் பிழைத்தெழ அருள் செய்ய வேண்டும்” என்று மன்றாடினர்.
மன்னன் ஒருபுறம் மகிழந்தான். ஆனால் மறுபுறம் திகைத்தான். “எனக்கு ஒன்றும் புரியவில்லையே. நீங்கள் பிழைத்ததுபற்றி எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு உண்டு. ஆனால் உங்கள் பெற்றோர்களை என்னால் எப்படிப் பிழைப்பிக்க முடியும் என்று தெரியவில்லையே?” என்றான்.
பெண்ணணங்குகளில் ஒருத்தி-மற்றவர்களைவிட மைக்கருநிற மாயிருந்த ஓர் அணங்கு பேசினாள்.
“அரசே! மாயக்காரி இறந்ததனால் நாங்கள் மனித உரு அடைந்தோம். ஆனால் மாயக்காரி எங்களுக்களித்த கருநிறம் எங்களைவிட்டு இன்னும் அகலவில்லை. அதை மாயக்காரியே போக்க முடியும். எங்கள் தாய் தந்தையரையும் எழுப்பி அவளே உயிர் தரமுடியும். இந்த இரு செயல்களுக்காகவாவது அவளுக்கு உயிர்தரக் கோருகிறேன்” என்றாள்.
மன்னனுக்கு இப்போதும் விளங்கவில்லை. ஆனால் தாரா உருவில் இருந்த மாயக்காரியைக் கொன்றதற்கான கழுவாய் தேட வழி ஏற்படக் கூடும் என்ற எண்ணம் புது நம்பிக்கையூட்டிற்று.
“மாயக்காரியை எழுப்ப முடிந்தால் நான் மிகவும் மகிழ்வேன். நான் அவ்வளவு கொடியவளைக்கூட மனமாரக் கொல்ல விரும்பவில்லை. தற்செயலாக நடந்தது” என்றான்.
மாயக்காரியின் உடலில் ஒரு சிறு நடுக்கம் காணப்பட்டது.
மைக்கருநிற அணங்கு மேலும் பேசினாள்:
“அருளுள்ளம் படைத்த மன்னர் மன்னனே! தங்கள் உயர் பெருங் கருணையே மாயக்காரிக்கு உயிர்ப்பு மட்டுமல்ல, நற்பண்பும் அளிக்கப் போதியது. அவளுக்கு இனி உயிரூட்ட நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. நாங்கள் வாழ்ந்த பொய்கை நீரில் சிறிது தெளித்தால் போதும்” என்றாள்.
இது எளிதில் முடிந்தது.
மாயக்காரி எழுந்தவுடன் சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அவள் முதல் உணர்ச்சி பெண்ணணங்குகளைச் சுட்டெரிப்பது போலப் பார்ப்பதாகவே இருந்தது. ஆனால் அடுத்த கணம் அவள் ‘ஓ’ வென்று அழுதாள். "என் மாயம் போய் விட்டதே! இனி என் கதி என்னாவது? ஐயோ ஐயோ! என்று அரற்றினாள்.
மைக்கரு நிற அணங்கு அவள் அருகில் சென்றாள். “மன்னர் உன்னை மன்னிப்பதாகக் கூறினார். உனக்கு உயிர் தந்தவர் அவர்தாம்” என்றாள்.
அவள் உடனே மன்னன் காலடியிலும் குறுநகை காலடியிலும் விழுந்தாள். “அய்யனே, அம்முதி! நான் செய்த தீங்கு பெரிது. என்னை அதற்காகத் தண்டிக்க வேண்டாம். நான் எல்லாப் பழிகளையும் துடைத்து விடுகிறேன். ஆனால் எனக்கு நான் இழந்த வாழ்வு கொடுங்கள்” என்று கண்ணீருடன் கதறினாள்.
“முதலில் இந்த பெண்ணணங்குகள் பழி முழுதும் அகற்று. அவர்கள் பெற்றோர்களைப் பிழைப்பித்துக் கொடு. உனக்கு வேண்டியவையாவும் நான் செய்ய அட்டியில்லை” என்றான் மன்னன்.
அவள் தன் கத்தியினால் தன் கையில் ஒரு குத்துக் குத்தினாள். அதன் குருதியைப் பெண்ணணங்குகளின் மீது தெளித்தாள். அவர்கள் அனைவரும் பொன்னிற அணங்குகளாக மாறினர். அக் குருதியின் ஒரு துளியை நீரில் கலந்து, அதனை முன்பு மைக்கருநிறமாயிருந்த அணங்கிடமே தந்தாள். “எல்லார் தாய் தந்தையரையும் பிழைப்பித்து விட்டு, உன் தாய் தந்தையுடன் வா” என்றாள்.
ஐந்து கணத்துக்குள் பெண்ணணங்குகள் அனைவரின் தாய் தந்தையரும் வந்து தத்தம் வாயார மன்னனை வாழ்த்தினர். மாயக்காரியைக் கூட மகிழ்ச்சியால் பாராட்டினர். கருநிறமாயிருந்த அணங்கையோ அவர்கள் எல்லையற்ற நன்றியுடன் நோக்கினர்.
வந்த தாய்தந்தையருள் துணைவர் இருவர் கருநிற மாயிருந்த அணங்குக்கே உரிமையானவர்கள். அவர்கள் அவளை அன்புடன் அணைத்து மகிழ்ந்தனர். பின் இளநாகனிடமும் குறுநகையிடமும் நன்றி தெரிவித்துத் தம்மை அறிமுகப்படுத்தி, மாயங்களுக்கான விளக்கமும் வழங்கினர்.
"பெருந்தன்மை மிக்க மன்னனே! தங்கள் ஆட்சியில் குடி மக்கள் அடைந்த நலங்கள் பல. ஆனால் தங்கள் குடி வாழ்வில் நேர்ந்த ஓர் அரு நிகழ்ச்சி உங்கள் பண்புள்ளத்தை இன்னும் மிகைபடுத்தியுள்ளன. ஏனெனில் உங்கள் நாட்டிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள எங்களுக்கும் எங்கள் குடிகளுக்கும் அது எண்ணற்ற நலங்கள் அளித்துள்ளது. நான் ஆனைமலை யருகிலுள்ள ஆவிநன்குடிவேள். என் பெயர் செம்பேகன், இது என் அரசி கண்ணகை. உங்களால் மைக்கருநிற வண்ணமும், பழியும் போக்கப்பட்டு உயிரளிக்கப்பட்ட இந்நங்கை எங்கள் ஒரே புதல்வி மைவிழி. உங்களுக்கும் அரசிக்கும் இத்தனை தீங்கு செய்த மாயக் குறுநகைகூட என் தந்தையுடன் பிறந்த அத்தை, ஆவிடை யாய்ச்சியே யாவள்.
“நன்றாக வாழ்ந்த எங்கள் குடிக்கு எப்படியோ எங்கள் அத்தையே தீங்கு சூழ்ந்தாள். எங்கள் மாமன் மாயாவி, அவர் மாயத்தால் பல நலங்கள் செய்தே வாழ்ந்தார். எப்படியோ அத்தை அதைக் கற்று, அவர் மறைந்தபின் தன் பேரவாவுக்குப் பயன்படுத்தினாள். தாராவாக வாழும் ஒவ்வோர் இளநங்கையின் வாழ்வும் அவள் வாழ்வை நீட்டின. இதனால் அவள் இதுவரை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறாள். எத்தனையோ குடிகளை இளம் பெண்களின் வாழ்வுக்காக அழித்து, இறுதியில் எங்கள் குடிக்கும் எமனானாள். ஆனால் மாயத்துக்கு ஆளான பெண்களின் குடும்பத்தினர் எவராவது தாம் அழியுமுன் அவளை எதிர்த்து விட்டால் மாயம் மறைந்து விடும். அவள் இறந்துவிடுவாள். ஆனால் மாயத்தை அழித்தவர் மனமார முயன்றால், மாயத்திலிருந்து அவள் பழி அகற்றிய செயலுக்காக அவளிடம் நாங்கள் பகைமையைத் தவிர்த்து விட்டோம். எங்கள் பெருந்தன்மையோ எம்மன்னிப்பை விட எவ்வளவோ மடங்கு போற்றத்தக்கது” என்றாள்.
ஆவிடை மீண்டும் இளநாகன் காலடியில் விழுந்தாள். “என் தவறுகளை இனிச்சரி செய்வேன் என்று நான் உறுதி கூறுகிறேன். உங்கள் பெருந்தன்மை இதை எனக்குக் கற்பித்து விட்டது. என் மாயத்தை நான் இனிப் பிறர் நலத்துக்கன்றிப் பயன்படுத்தப் போவதில்லை. அதன் முதற் செயல் என் நீடித்த வாழ்வின் பயனான செல்வத்தை உங்கள் எல்லாருக்கும் பகிர்வதே” என்றாள்.
உயிர்பெற்ற அணங்குகள் அனைவர்க்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் செம்பேகனுக்கும் இளநாகனுக்கும் வேம்பாய்க்குமாக அவள் பெருநிதியங்களை வாரிவாரிக் கொடுத்தாள்.
செம்பேகன் குடும்பத்தைச் சேர்ந்த ஆவிடை, நாஞ்சில் மலைக்கு வந்ததெப்படி என்று இளநாகன் வியப்புற்றான்; அதற்கு ஆவிடையே விளக்கம் அளித்தாள்:
“என் கணவன் மாயத்தை நல்ல வழியில்தான் பயன்படுத் தினார் என்று என் அண்ணன் பிள்ளை கூறக் கேட்டீர்கள். ஆனால் இந்த நாஞ்சில் மலையாண்ட உங்கள் முன்னோர் ஒருவர் அவரைப் போரில் கொன்றார். அதற்குப் பழிவாங்கும் எண்ணத்துடனேயே நான் மாயம் பயிலத் தொடங்கினேன். பயின்றபின் என் வாழ்வை நீடிக்க வைத்து அதை முடிக்கவே நான் இவ்வளவு கொடுமைகளைச் செய்ய நேர்ந்தது” என்றாள். இளநாகன் பெரிதும் வியப்புற்றான். ஆவிடை மேலும் விளக்கினாள்:
“என் கணவன் குந்தள நாட்டு அரசுரிமைக்குரிய இளவரசன். இப்போது நீங்கள் கண்ணனூர்ப் போரில் வென்ற அரசன் அவர் பிள்ளையின் பிள்ளையே. இதற்கு முன் நடைபெற்ற போர்களில் ஒன்றில் உங்கள் தந்தையால் களத்தில் விழுந்தவர்தாம் என் கணவர்” என்றாள்.
இளநாகன் இப்போது ஆவிடையிடம் மன்னிப்புக் கோரினான். “நான் பகைமையால் வஞ்சித்துக் கொள்ளவில்லை. என் பேரரசினைக் காப்பதற்காகப் போரில்தான் கொன்றேன். ஆயினுங் கணவனிடம் நீங்கள் கொண்ட பற்றை மதிக்கிறேன். அச்செயலுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். வீரம் தமிழர் பண்பாயினும், அது போருக்குப் பயன்படும் நிலையை நானும் வெறுக்கிறேன். தீமை எதிர்த்து அறப்போர் அன்றி வேறு போரில்லா நிலை உலகில் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தையே நம் வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது” என்றான்.
இளநாகன் உள்ளம், தீங்கடைந்தவர்களுக்கு வாழ்வு கொடுத்ததன்றித் தீங்கிழைத்தவர்களையும் பண்பில் உயர்த் திற்று. ஆவிடையும் பழிநங்கையாயிருந்த நிலைமாறி அற நங்கையாய் மேலும் ஒரு வாழ்நாட்காலம் வாழ்ந்து புகழ் பெற்றாள்.
கண்ணாடி மலை
வானளாவிய செங்குத்தான மலை ஒன்று ஒரே கண்ணாடிப் பாளமாய், வெயிலொளியில் வெள்ளி மலை போல் விளங்கிற்று. காலை வெயிலொளியிலும் நிலவொளியிலும். அது பொன்னொளி வீசிற்று. ஆனால் அதன் உச்சியில் உண்மை யாகவே கட்டி வெள்ளிப் பாளங்களால் அமைந்த ஒரு பெரிய அரண்மனை இருந்தது. அதன் நடு முகப்பும் கோபுரமும் தங்கப் பாளங்களாகவும், வாயிற் கதவுகளும் பலகணிகளும் உட்சுவர் களும் நவமணிகள் பதித்த வைர, முத்துப் பவளப் பாளங்களாகவும் திகழ்ந்தன. உள்ளே இருந்த பட்டு அணிமணிக் குவைகளுக்கும் பெரும் பொருள் நிதியங்களுக்கும் அளவு கிடையாது.
இத்தனையும் அதில் தன்னந்தனியாக வாழ்ந்த ஓர் எழிலார்ந்த அரசிளஞ் செல்விக்கே உரியதாய் இருந்தது. அவள் பெயர் பொன்னரசி.
நிலைப் பேழைகளிலுருந்த பல்வண்ணப் பொன்மணி உண் கலங்கள் அவள்கேட்ட கேட்ட உண்டி, நீர் வகைகளைக் கேட்ட கேட்ட வகையில் கொடுத்தன. விரும்பிய விரும்பிய ஆடையணி மணிகள், வண்ண மணப் பொருள்கள் அவளுக்கு இருந்தன. ஆயினும் அவள் வாழ்வில் மகிழ்ச்சியில்லை. ஏனெனில் அவளுக்கு மனிதத் துணையாக உறவினரோ, நண்பரோ, தோழர் தோழியரோ, பணியாளர் குடிமக்களோ கூடக் கிடையாது.
கவலையே உருவாக அவள் தன்முன்னிருந்த பலகணி வழியாக ஆர்வத்துடன் கீழேயுள்ள உலகத்தைப் பார்த்த வண்ணமே, வேளையில் அவள் இரவுகளில் கூடத் தூங்க முடியாமல் சுற்றியுள்ள அழகுக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்துத் தனிமையிலே தத்தளிப்பாள். பேசுவதற்கேனும் ஒரு துணையாக அவளுக்குக் கிடைத்தவை கிளிகளும் பூவைகளும் தாம். அவை அவள் சொல்லி வைத்தவை, சொல்லியவைதான் சொல்லும், மனமறிந்த மொழி பேசமாட்டா. மனிதக் குரல்கள். மனித மொழிகள் கேட்க அவள் காதுகள் காத்து ஏங்கித் தவித்தன.
அது ஒரு மாயாலை. அந்த அரண்மனையும் ஒரு மாய அரண்மனை. ஏனெனில் அது அவ்வளவு உயரமாய் இருந்த போதிலும் கீழிருந்து பார்ப்பவர்களுக்கு அரண்மனையும், அதன் பலகணியில் வந்து காத்திருக்கும் எழிலரசியும் அருகிலுள்ள மாயப்படக் காட்சிபோல விளக்கமாகத் தெரிய வந்தன. அதுபோலவே பொன்னரசியும் மாயத்துக்குட்பட்டவளே. ஏனெனில் அவள் கண்ணுக்கும் அடிவாரத்திலுள்ளவர்களின் உருவும் வடிவும் நடையுடை பாவனைகளும், அடிவாரத்திலிருந்து நெடுந்தொலைவுள்ள காட்சிகளும் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தன. பார்வை வகையில் தொலைவு இவ்வாறு மாயத்தால் வெல்லப்பட்டாலும் ஓசை வகையில் எல்லாம் நேர்மாறாய் இருந்தன. ஏனெனில் கீழே உள்ள கூக்குரலை மலையின் எதிரொலியாக மட்டுமே, அதுவும் நெடுநேரம் கழித்து இளவரசி கேட்க முடிந்தது. மேலேயுள்ள குரல் எவ்வளவு பெரிதானாலும் அது கீழே வருவதேயில்லை. ஆகவே பொன்னரசி யாழ் வாசிப்பதைக் கீழே மக்கள் தெளிவாகக் காணமுடிந்தாலும், அவள் பாடியதையோ யாழ் ஒலியையோ யாரும் கேட்க முடியவில்லை. அவள் பெருமுச்சு விடுவதையும் அவள் சோக மூச்சையும் யாவரும் பார்க்க முடிந்ததே தவிர, அவள் பெருமூச்சையோ அவள் புலம்பலையோ கேட்க முடியவில்லை.
பொன்னரசியைக் கண்டவர்கள் எல்லாரும் அவள் அழகின் புகழையும் அவள் சோக வாழ்க்கைக் கதையையும் எங்கும் பரப்பி வந்தார்கள். அக் கண்ணாடிமலையின் உச்சியில் ஒரு பொன் இலந்தைமரம் இருந்தது. அதன் பழங்கள் பெயரளவிலின்றி, உண்மையிலேயே பொன்னாலியன்ற இலந்தைப் பழங்களோ என்னும்படி பொன்னிறங்கொழித்தன. அத்துடன் அம்மலையின் செங்குத்தான பக்கங்களில் ஏறி அதன் உச்சியை அடைபவன் அதன் ஒரு பழத் தைப் பறித்தாலன்றி அரண்மனைக்குள் நுழைய முடியாது. ஏனெ னில் அதைச் சுற்றிக் காவல் காத்த பூதம் அந்தப் பழம் ஒன்றைத் தின்னும் நேரத்திலேயே எவரும் உள்ளே போக முடியும். மரத்தை ஒரு பெரிய கழுகு இதுபோலக் காத்து வந்தது. அது தானும் ஒரு நாளைக்கு ஒரு தடவை நள்ளிரவில் ஒரு பழம் தின்று, ஒரு பழத்தையே வாயிற் பூதத்துக்கும் எறிந்து வந்தது.
கண்ணாடிமலையின் நாற்புறமும் சுவர்கள் போல் செங்குத்தாகவும் வழுவழுப்பாகவும் இருந்தன. அதில் யாரும் ஏற முடியவில்லை. தொலைவிலிருந்தே பொன்னரசியின் மாய அழகு பற்றிக் கேள்விப்பட்ட எண்ணற்ற அரசிளஞ்செல்வர்கள், இளங்கோக்கள், வணிக இணைஞர் ஒவ்வொரு நாளும் வந்து மலையடி வாரத்தில் குழுமினர். சிலர் குதிரை மேலிருந்தே ஏற முயன்றனர். சிலர் வெறுங்காலுடனேயும், சிலர் கால்கை களுடனேயும் தவழப் பார்த்தனர். ஏற முடியாதவர்கள் சிறிது தொலைவு ஏறி வீழ்ந்த பின்னும் ஏறவே முயன்றனர். ஏற முடிந்தவர்கள் அரைப்பனை ஒருபனை உயரம் ஏறி விழுந்து நொறுங்கினர். ஆனால் தோல்வியுற்றவர்களும் சரி, விழுந்து இறந்தவர்களின் கோர முடிவைக் கண்டவர்களும் சரி, தம் முயற்சியில் அதனால் தளரவில்லை. ஏனென்றால் மேலே ஒரு தடவை பார்த்து உடனே பொன்னரசியின் பொன்னழகு அவர்களுக்கு மாயக்கவர்ச்சி தந்து மேலும்மேலும் ஊக்கிற்று. மேலும் மேலும் வெறியூட்டிற்று. இந்நிலையில் ஏறமுயன்ற எவரும் தம் உடலை அடிவாரத்துக்குப் பலியாகக் கொடுத்ததன்றி மீளவில்லை. நாள்தோறும் உயிரிழந்த வீரர், குதிரைகளின் எலும்புகள் அடிவாரமெங்கும் உள்ள ஆழ்குழிகளில் கிடந்து வாடிவதங்கிக் கலகலத்தன. பழைய எலும்புகள் பொடியாகப் போன பின்பும் புதிய எலும்புகள் அவற்றின்மீது விழுந்து கொண்டே இருந்தன.
பொன்னரசியை மாயத்தில் சிக்கவைத்த மாயாவி அவளை மாயத்திலிருந்து விடுவித்து மணஞ் செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுக் கெடுதான் அளித்திருந்தான். அதுவரை எவரும் அவளை விடுவித்து அடையாவிட்டால். அவளை அடையும் உரிமையை அம்மாயம் அவனுக்கு தந்துவிடும். அவன் இதற்காகவே காத்திருந்தான். ஆண்டுகள் செல்லுந்தோறும் முயல்பவர்கள் தொகை ஒருநாள்கூட நூற்றுக்குக் குறையவில்லை. சிலநாள் அது பல நூறுகள் ஆயின. ஆனால் இவற்றால் ஏற்பட்ட பயன், உருவிலா எலும்புக்குவைகளன்றி வேறெதுமில்லை. உண்மையில் ஏறுபவர்களை வேடிக்கை பார்க்க வந்து நின்றவர் களில் சிலரைத் தோல்விகள் அச்சுறுத்துவதற்கு மாறாக, அத் தோல்விச் சுழலிலேயே கவர்ந்தீர்த்தன. இதனால் அழிவு கண்ணாடிமலையைச் சுற்றிலும் ஆண்டுதோறும் தொலை தூரம் வரை விரிவுற்றது.
ஏழாம் ஆண்டும் விரைந்து முடிந்து வந்தது. அழிவு இதுவரை முயற்சியைத் தடுக்கவில்லையாயினும், பேரழிவு முயற்சி செய்யத்தக்க ஆடவர் தொகையையே குறைத்திருந்தது. நாளைக்கு நூறு இருநூறு என்ற நிலை மாறிப் பத்து இருபது, ஒன்று இரண்டு ஆக தொடங்கிற்று. அதுகூட இன்றி நாட்கள் ஒன்றிரண்டு, சிலபல கழிந்தன. கிட்டதட்ட இறுதி நாளை அடுத்துப் பொன் கவசமணிந்து வெண்ணிறக் குதிரைமீதேறி ஒரு வீரன் வந்தான். அவன் குதிரைமீதிருந்தே வந்த வேகத்தில் பாதி மலை ஏறினான். அதன்பின் அவன் சறுக்கி விழவும் இல்லை. மேலும் ஏறவுமில்லை. ஏறியபடியே குதிரையை திருப்பிக் கால் சிறிதும் இடறி வழுக்காமலே கீழே இறங்கினான். அன்றைய முயற்சியை அத்துடன் நிறுத்தி, அவன், அடுத்த நாளும் இதே போலக் குதிரையை மேலே தாவி ஏறும்படி செலுத்தினான்.
அன்று அவன் கிட்டத்தட்ட மலையின் முக்கால் பகுதி பின்னிட மேலேறினான். அன்றும் அவன் கடந்து செல்லாமல், மீண்டும் குதிரையைப் பின்னிடவிட்டுத் திறமையுடன் இறங்கினான். இவ்விரண்டு வெள்ளோட்டங்களுக்குப் பின் மூன்றாம் நாள் அவன் போக்கு இன்னும் எளிதாயிற்று. அவன் குதிரை கிட்டத்தட்ட மலையுச்சியையே அணுகிற்று. ஆனால் மலையுச்சியருகே வருமுன், பொன்னிலந்தை மரத்தின் மீதிருந்து அவன் முயற்சியிலேயே கண்ணாயிருந்த பாரிய கழுகு திடுமெனச் சிறகு விரித்துக் குதிரையை நோக்கிப் பறந்தது. இன்னதென்று பொன்கவச இளைஞன் திரும்பிப் பார்க்குமுன் கழுகின் அலகு குதிரையின் இரு கண்களையும் குத்திவிட்டது.
கண் தெரியாத நிலையில் வேதனை பொறுக்க மாட்டாமல் குதிரை வாயைப் பிளந்து தலையை உதறிற்று. அது தன் முன்னங்கால்களைப் பாறையில் இருந்து தூக்கி நெளிந்தது. இதனால், பின்னங்கால்களும் நழுவ, அது பொன்கவச வீரனுடன் மலையுச்சியிலிருந்து தலைகீழாக விழுந்தது. மலை எண்ணற்ற பல பனை உயரத்திலிருந்ததால், மனிதனும் விலங்கும் விழுந்த வேகத்திலேயே எலும்புகள் ஒன்றுடனொன்று முறிந்து பிணைந்து குருதியும் தசையும் வற்ற உணங்கி யாவும் உருத் தெரியாக் கூளங்களாய்க் கீழே வெயிலில் கலகலத்தன.
இக்கோரக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற ஒரு சிலருள் பால்வடியும் இளமுகமுடைய ஓர் இளைஞன் இருந்தான். அவன் முகத்தின் இளநிலவு இக்காட்சியாலும் சிறிதும் கலைய வில்லை. வெற்றியின் கைப்பிடியருகே பொன்கவச இளைஞன் சென்றதும், அவன் எதிர்பாராத் தடை ஒன்றினாலேயே அழிய நேரிட்டதும் அவனை ஊக்கியிருக்க வேண்டும். அவன் முகத்தில் ஒரு புத்தொளிபடர்ந்தது. அவன் துள்ளுநடையுடன் பொன்னரசியைப் பார்த்தான். விடாமல் பார்த்து கொண்டு, கண்ணாடி மலையிலிருந்து பின்னோக்கியே நடந்து சென்றான்.
மறுநாள் ஏழாம் ஆண்டின் கடைசிநாள், பொன்னரசி முந்திய இரவெல்லாம் உறங்கவில்லை. பொன் கவசவீரன் பெருந்திறத்தை இரண்டுநாள் அவள் பொங்கார்வத்துடன் நோக்கியிருந்தாள். அவன் முடிவு அவள் உள்ளத்திலிருந்த நம்பிக்கை ஒளியைக் கிட்டத்தட்ட அணைத்தே விட்டது சோகத்தின் வடிவாகவே அன்று காலை அவள் மேனி அரண்மனையில் பலகணி ஓரத்தில் ஒருபுறமாகக் கொடிபோல் சாய்ந்து துவண்டு கிடந்தது. ஆனால் அந்நிலையிலுள்ள அவள் வனப்பு யாவர் கண்களையுங் கவர்ந்தது. யாவர் உள்ளங்களிலும் சோகக் குழையை உண்டு பண்ணிற்று அது கண்ட புத்திளைஞன் உள்ளம் முன்னிலும் பதின்மடங்கு ஆர்வத்துடன் அவளை நோக்கித் துடித்தது.
புதிய இளைஞன் பெயர் வாடாமணி, அவன் நல்ல குடியில் பிறந்தவனாகவே இருக்கவேண்டும் என்பதை அவன் முகமும் தோற்றமும் நடையுடையும் காட்டின. ஆனால் அது எக்குடி, எத்தகைய குடி? என்பவற்றை அவன் அறியமாட்டான். அவனுக்கு வீடில்லை. வாசலில்லை. பெற்றோரில்லை. உறிவினர் துணைவர் கூடக் கிடையாது. நினைவு வந்தநாள் முதல் அவனை யார் யாரெல்லாமோ பேணி வளர்த்தனர்; உதவினர். ஆனால், எக்காரணத்தாலோ அவனை அன்புடன் வளர்த்த ஒவ்வொரு வரும், உதவிய ஒவ்வொருவரும், அன்புடனேயே அவன் பொறுப்பைத் தமக்கயலான மற்றொருவரிடம் ஒப்படைத்து வந்தனர். வளர்த்த எவரும் நீடித்து வளர்ப்புத் தாய் தந்தையரா யிராமல், துணைதந்த எவரும் நீடித்துத் துணைவராயிராமல், தங்கிய எம்மனையும் அவன் மனையாயிராமல் அவன் அலைந்து வந்ததன் காரணம் இதுவே. பொன்னரசியிடம் உள்ளம் பறிகொடுக்க நேர்ந்தநாள் முதல் பற்றற்ற அவனது உள்ளத்தில் அவளைப் பெறும் ஒருபற்றே பற்றாக, அவளே அவனது ஒரே சுற்றமாக, ஒரே பெருந்துணையாக அமைந்தவகை இதுவே.
பொன்கவச வீரன் முடிவு கண்டபின், அவன் தன் மறுநாளைத் திட்டத்தை விரைந்து வகுத்து விட்டான். அவன் கவசம் தேடவில்லை. கூரிய நீண்ட கத்தி ஒன்றை அரைக் கச்சிடையில் எளிதில் உருவும் முறையில் சொருகிக் கொண்டான். பல்லியின் நகம்போல் பற்றிப் பிடிக்கும் தொய்வு குழையுடைய வில்நகங்களை அவன் கைகளுக்கும் கால்களுக்கும் பொருத்திக் கொண்டான். அந்நகங்கள் கெட்டியான பசைபோல் எளிதில் அழுத்தமாக ஒட்டிக் கொள்ளும் தோலால் செய்த கையுறை காலுறைகளில் பொருத்தப்பட்டிருந்தன. தோலின் மடிப்புகள் தோறும் ஒட்டகை மயிர்கள் கற்றை கற்றையாக இணைக்கப் பட்டிருந்தன. இவ்வகைத் துணைக் கருவிகளுடன் அவன் கண்ணாடி மலையில் ஏறப் புறப்பட்டான். அவன் பெரும்பாலான இளைஞர்களைப் போல விரைந்து சிறுமுயற்சி செய்து விழவில்லை. பொன் கவசவீரனைப்போல விரைந்து பெருமுயற்சி யால் வெற்றியை அணுகவில்லை. ஆனால்… இருசார்புகளுக்கும் இல்லாத ஒரு வசதி அவனுக்கு இருந்தது. அவன் மெதுவாக உயர்ந்து சிறு சிறு தொலை சென்றான். பின் ஏறவும் இறங்கவும் செய்யாமல் கண்ணாடி மலையில் ஒட்டியவாறே திரும்பாமல்பம்மிச் சிறிது தங்கி ஒப்புக்கொண்டான். இவ்வகையிலே அவன் நண்பகலுக்குள் மலையின் உயரத்தில் பாதி கடந்துவிட்டான்.
நம்பிக்கையற்றுச் சோர்ந்து எதையும் கவனியாதிருந்த பொன்னரசி கண்களுக்கு, அவன் முயற்சியில் அவளது கருத்து இப்போதுதான் திரும்பிற்று. அனுபவமற்ற அவன் இளமுகம் அதில் வீசிய நம்பிக்கை ஒளி அவளுக்கு ஒரு புதுவகையான கவர்ச்சி அளித்தது. முந்தைய முயற்சிகளைவிடச் சிறப்பாகப் பொன்கவசவீரன் முயற்சியைவிட, அவன் முயற்சியில் மிகுந்த வெற்றி காண்பான் என்ற நம்பிக்கை கொள்ளத்தக்க எதுவும் அவனிடம் இல்லை. ஆனால் அவள் அதை இன்று எதிர் பார்க்கவுமில்லை. ஆயினும் அவன் முயற்சி தோல்வியானால் கூட, இத்தனை தோல்விகளும் அவளுக்கு அளித்திராத ஆறுதல் ஒன்றை இந்த இளைஞன் முயற்சி அவளுக்கு அளித்துவிட்டது. மாயாவியின் பிடியில் சிக்கி வாழ்வு முழுவதும் இழக்க நேர்ந்துவிட்டால் அப்போதுகூட இந்த ஒரு முயற்சியின் ஒளி, ஒரு முதிரா இளைஞன் கூடத் தன்னைநாடி மனமுவந்து உயிர்விட முற்பட்டான் என்ற இந்த ஓர் எண்ணம், அவள் இறுமாந்த வாழ்வுக்கு ஒளி தரப் போதியதாக அவளுக்குத் தோற்றிற்று. அவள் உயிரார்வத்துடன் வாடாமணியின் முயற்சியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள்.
நங்கையின் கவனம் நம்பியை மேலும் ஊக்கிற்று. அவன் கிட்டத்தட்ட முக்கால் மலையுயரத்துக்கு ஏறிவிட்டான். ஆனால் அதற்குள் அவன் கால்கள் புண்ணாகக் கொப்பளித்தன. கைகள் சோர்ந்து நொந்தன. கண்ணாடியில் உராய்ந்து உராய்ந்து மேனியெல்லாம் வெம்பி வெதும்பிற்று நண்பகல் வெயிலில் அவன் உடலும் மூளையும் எரியத் தொடங்கின. ஏறவும் அவனால் முடியவில்லை. இறங்கவும் அவனுக்கு விருப்போ, துணிவோ இல்லை. ஏனெனில், ஒருசிறிது கண் கீழே நாடியதே கண்ணுக்கெட்டா அந்த ஆழத்தின் தொலை அவன் கண்களைச் சுழல வைத்தது. கால்கள் வலுவிழந்தபோது கைகளாலும், கைகள் வலுவிழந்தபோது கால்களாலும், இரண்டும் வலுவிழந்த நேரங்களில் மாறி மாறி ஒரு கை ஒருகாலாலும் அவன் மலையின் கண்ணாடிச் சுவரைப் பற்றிக் கொண்டு செயலாற்றத் தொடங்கினான். இந்நிலையிலேயே அவனை மீறிச் சிறிதே உணர்வற்ற நிலையிலேயே கைகால்கள் எப்படியோ பிடித்தபிடிவிடாமல் அவனைக் காத்து நின்றன.
இதே நிலையில் அவன் எவ்வளவு நேரம் இருந்திருப்பான், மீட்டும் ஏற முயல்வான், வீழத்தான் நேருமா என்று யாரும் சொல்லமுடியாது. அவனுக்குப் பதில் மேலே தொலைவிலிருந்து அவனை நோக்கிக் கொண்டிருந்த பொன்னரசியுள்ளம் அவன் முடிவுபற்றிக் கவலையுடன் துடிதுடித்தது. ஆனால் அவள் துடிப்பு விரைவில் அழுகையாக மாறிற்று. பொன்கவசவீரனை அழித்த கழுகு அச்சமயம் மலையைச் சுற்றிப் பறந்து வந்தது. பாறையில் தொங்கும் இளைஞன் தசையைத் தின்னும் ஆர்வத்தால் அது அவன் தோள்களைப் பற்றித் தூக்கிற்று. துயிலிடையிலும் பறவையின் சிறகொலி கேட்ட வாடாமணி அது தன் நகங்களைத் தோலினுள் பாய்ச்சும்வரை அந்த வேதனையைப் பொறுத்துக் கொண்டான். ஏனெனில் இன்னும் சிறிது நேரத்தில் எப்படியும் கீழே விழ வேண்டியதைத் தவிர அவன் வேறு வழி காணவில்லை. விழுந்து நொறுங்குவதை விடக் கழுகின் பிடியில் படுவது மேம்பட்டது என்று அவன் எண்ணினான்.
கழுகின் ஆற்றல், பாறைமீதிருந்த அவன் பிடிப்பை எளிதில் தளர்த்தி அவனை வானளாவத் தூக்கியது. ஆனால், பாறையிலுள்ள பிடி விடுமுன் அவன் இரு கைகளாலும் கழுகின் கால்கள் இரண்டையும் இறுகப் பற்றிக் கொண்டான். இதனால் கழுகு தன் பிடியைவிட்டாலும் கீழே விழாமலிருக்கும் வகையில் அவன் தன் பிடியை உறுதி செய்து கொண்டான். கழுகு அவன் பிடியைத் தளர்த்த எவ்வளவோ முயன்றும், பறந்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகவே பொன்னிலந்தை மரத்துக்கே பறந்து சென்று, அவன்மீது அது பழிதீர்க்க எண்ணிற்று.
வாடாமணி தன் கனவுகளில் கூட எட்டிப் பார்க்க எண்ணியிராத மலையுச்சி. பொன் இலந்தைமரம், இளவரசியின் மாய அரண்மனை ஆகியவை இப்போது அவனுக்கு மேலல்ல, கீழே தெரிந்தன. அவை பொதுவாகவும், பொன்னிலந்தை மரக்கிளைகள் சிறப்பாகவும் அவனை நோக்கி மேலேறி வருவனபோலத் தோன்றின. அவனுக்குப் புதிய நம்பிக்கை, புதிய வலு திடீரென்று வந்தது. பொன்னிலந்தையின் கிளை சற்று அருகே வரும் சமயம், அவன் ஒரு கைப்பிடியைக் கழுகின் காலிலிருந்து எடுத்தான். அரைக்கச்சையில் செருகப்பட்டிருந்த நீண்ட கத்தியை உருவினான். தன் கைக்கு மேலாக கழுகின் இரு கால்களையும் ஒருசேர அரிந்தான்.
அவன் பொன் இலந்தையின் கிளைகள் மீதே விழுந்தான். விழுந்த அதிர்ச்சிக்கு மிகுதி ஆளாகாமல் சமாளித்துக் கொண்டு அவன் கழுகின் முடிவையே கவனித்தான். அதன் கால்கள் அவன் கைப்பிடியிலேயே இருந்தன. கால்களை இழந்த பறவை துடிதுடித்து மலையைச் சுற்றி ஓலமிட்டுக் கொண்டு ஒருதடவை பறந்தது. பின் அது கண்காணாமல் மறைந்தது. அது குருதி சோரக் கெவியில் விழுந்ததை அவன் பார்க்க முடியவில்லை. ஆனால் அது மீட்டும் மலைமேல் பறந்து வர முடியாதென்றிருந்ததே. வாடாமணிக்கு அது பற்றிய அச்சம் தணிந்தது. அவன் இப்போதுதான் தன் உடல் வேதனை பற்றிச் சிந்தித்தான். தன் கண்முன்னே, அருகே பொன்னரசி இருந்த அரண்மனையைக் கண்டபோது அந்த வேதனை பெரிதாகவும் தோன்றவில்லை. பொன் இலந்தைகளில் ஒன்றின் தோலை உரித்துத் தோல்களில் காயங்களின்மீது அப்பிக் கொண்டே நோவும் காயங்களும் நொடிப்போதில் மாறின. அதன் ஒரு பழத்தை அவன் உண்டதே அவன் உடல் நோவகன்று புதிய ஆற்றல் உண்டாயிற்று. வாயிற் பூதத்துக்கு ஒன்றும், பொன்னரசிக்கு ஒன்றும் கையுறையாய் ஒன்றுமாக மூன்று பொன் இலந்தைப் பழங்களைப் பறித்துக் கொண்டு, அவன் அம்மரக்கிளையிலிருந்து கீழே தாவி அரண்மனை முன்வாயிலை நோக்கி நடந்தான்.
கழுகின் நகங்கள் அவனைப் பற்றியபோது அலறிய பொன்னரசி, அதன்பின் நடந்தவற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். ஆனால் பொன் இலந்தை மரத்துக்கு வந்தபின் நடந்தவைகள் அவள் அறியாதவை. அதை அவள் பார்க்கவே இல்லை. இளைஞனைக் கழுகு தின்றுவிடுவது உறுதி என்று எண்ணியவள் அந்தக் கோரக்காட்சியை உளங்கொண்டு எண்ணவும் நடுங்கினாள். இம்முடிவைவிடப் பொன் கவச வீரன் முடிவு எத்தனையோ மடங்கு நல்லதென்று அவள் எண்ணிவருந்திக் கொண்டிருந்தாள். ஆகவே அரண்மனை முன்வாயிலை நோக்கி அவன் வருவது கண்டதே, மலைப்பாலும், வியப்பாலும் மகிழ்ச்சியாலும் அவள் கூசினாள். மறுகணம் அவ்வதிர்ச்சிகளுக்கான உணர்ச்சி இழந்து சோர்ந்து வீழ்ந்தாள்.
அவள் நிலைகண்டு வாடாமணி உட்செல்ல விரைந்தான். ஆனால் வாயிற்பூதம் தன் இறகு விரித்துத் தன் அழல்வாய்திறந்து சீறிக்கொண்டு அவன்மீது பாய்ந்தது. அவன் சட்டென்று பொன் இலந்தை ஒன்றை நிலத்தில் அதன்முன் எட்டி வீசினான். அது அதனை ஆவலுடன் எடுத்துண்ணக் குந்தியது. அவன் அரண்மனை வாயினுள் புகுந்தான். அவன் பொன்னரசியை எடுத்து அமர்வித்துப் பொன்னிலந்தைப் பழத்தில் ஒன்றின் சாற்றினை அவள் வாயில் ஊற்றியதும் அவள் உணர்வுற்றெழுந் தாள். தான் இதுகாறும் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே பலதடவை ஊசலாடக் கண்ட இளைஞன் தன் அருகில் இருப்பது கண்டதே அவள் மகிழ்ச்சியால் அவனோடு நீண்டநாள் பழகியவள் போல அளவளாவினாள். அவர்கள் இன்ப உரையாடலில் அவர்களுக்கு நாழிகைகள் கணங்களாகக் கழிந்தன.
வாடாமணி, பொன்னரசியை அடைந்ததன் மூலம் மாயாவியின் மாயம் அன்த மாலைப்போதுக்குள் மறைந்தது. ஆனால், இதை அவர்கட்கு நினைவூட்டுவதுபோல மலையெங்கும் ஒரே பெருத்த ஆரவாரம் நிறைந்தது. முன் பொன்னரசி கீழே எட்டிப்பார்த்திருந்த பலகணியில் இருவரும் சென்று கீழே நோக்கினர். அவர்கள் கண்ட காட்சியைச் சிலநேரம் அவர்களால் நம்பமுடியவில்லை. இது வரை அடிவாரத்தில் என்றுமில்லாத பெருங்கூட்டம் அதனைச் சூழநின்று ஆடிப்பாடி மொய்த்தது. பொன்னரசியும் வாடாமணியும் ஒருங்கு நின்றதை அம்மக்கள் திரள் கண்டதே, அனைவரும் பெருமுழக்கமிட்டு அவர்களை வாழ்த்தினர். அவ்வோசை பொன்னரசிக்கும் வாடாமணிக்கும் கேட்காவிட்டாலும் வாழ்த்தின் அறிகுறியாகத் துண்டு துணிகளையும் கைக்குட்டைகளையும் ஏந்திக் கொண்டு கையையுயர்த்தி வீசி அவர்கள் ஆரவாரிப்பது நன்கு தெரிந்தது. அவர்கள் யார், ஏன் தம்மைப்பார்த்து இத்தனை மகிழ்ச்சியடை கிறார்கள் என்ற அவ்விருவரும் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால், விரைவிலேயே அவர்களுக்கு முழு விவரம் தெரிந்தது.
அவர்கள் முன் ஒரு முரட்டு இளைஞன் வந்தான். வாடாமணிக்கு அவன் யார், அங்கே எப்படி வந்தான் என்பது புரியவில்லை. ஆனால் பொன்னரசியின் நடுக்கத்திலிருந்து, அவன் அவளுக்குத் தெரிந்தவன் மட்டுமல்ல; அவன் வெறுப்புக்கும் அச்சத்திற்குரிய ஓர் ஆள் என்று அறிந்து கொண்டான். அவள் அச்சத்தால் உரிய ஓர் ஆள் என்று அறிந்து கொண்டான். அவள் அச்சத்தால் நடுநடுங்கி, வாடாமணியின் அருகே வந்து பதுங்கினாள். வாடாமணி அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டு மறுகையால் கத்தியை உருவினான். “யாரடா நீ? இங்கே உனக்கு என்ன வேலை?” என்றான்.
வந்தவன் முகத்தில் முதலில் கோபமும், பின் வியப்பும், இறுதியில் கோரமும் தென்பட்டன.
"நான் பொன்னரசியின் மாமன்மகன்தான்; ஆனால், அவளால் வெறுக்கப்பட்டவன். அவள் எப்படியும் என்னை மணக்கச் செய்யும்படி இந்த மாயமலையையும் அரண்மனையை யும் பூதத்தையும் கழுகையும் அமைத்த மாயாவி நான்தான். ஆனால், என் மாயம் எனக்கு ஒரு சிறிதும் உதவவில்லை. மாயத்தில் எனக்கு இருந்த நம்பிக்கை அத்தனையையும் நீ இடித்துவிட்டாய். இது உனக்குத் தெரியாது. பொன்னரசிக்குக்கூடத் தெரியாது.
’என்னைப் பொன்னரசி இனி வெறுக்கத் தேவையில்லை. அஞ்சவும் தேவையில்லை. இனி நான் உங்கள் இருவர் நட்புமே கோருகிறேன். ஏனென்றால் நீங்கள் மன்னிக்காவிட்டால் இனி என் வாழ்வு முற்றிலும் கசப்பாய் போய்விடும். என்னை இருவரும் மன்னிப்பதாகக் கூறினால் இருவருக்கும் நான் எவ்வளவோ உதவிகள் செய்வேன்" என்று கூறி இருவர் காலடிகளிலும் விழுந்தான்.
வாடாமணி அவனை எடுத்து ஆரத்தமுவிக் கொண்டான்.
“உன்னை மன்னிப்பதல்ல, உன்னை என் உடன் பிறந்தவனாகவே கொள்கிறேன்.” என்று கூறி ஆற்றினான். பொன்னரசியையும் நோக்கி அவனுக்காகப் பரிந்து பேசினான். “பொன்னரசி, உனக்காக நான் எவ்வளவோதுன்பங்களை அனுபவித்தவன். அந்த உரிமையால் கேட்கிறேன். இவன் முன் என்னதான் செய்திருந்தாலும், இனி, இவனை இருவரும் நம் உறவினனாக நடத்த வேண்டும் என்று கோருகிறேன்” என்றான்.
“உங்கள் மனம்தான் என்மனம், ஆனால், என் அச்சம் இன்னும் தீரவில்லை” என்றாள்.
இளைஞன் பொன்னரசியை இரக்கமாக நோக்கினான்.
“நீ அஞ்சுவது இயல்பே. ஆனால், நான் முற்றிலும் தீமை செய்யும் ஆற்றல் இழந்துவிட்டேன். இதை நீ விரைவில் காண்பாய். ஆனால், நன்மை செய்யும் ஆற்றலை இழக்கவில்லை. அதை விரைவில் இருவருமே காணப் போகிறீர்கள். முதலில் உங்களுக்கு நான் ஒன்று உடனே கூற வேண்டும் இந்த மாய அரண்மனையும் செல்வமும் நீடிக்கும். ஆனால் மாயம் இரவுக்குள்ளேயே மாறிவிடும். அதற்குள் நாம் பேச வேண்டியவை எத்தனையோ, செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. நாளைக் காலை உங்கள் திருமணத்தை நானே நடத்தப் போகிறேன். ஆகவே முதலில் உணவு கொள்வோம்” என்றான்.
பொன்னரசியும் வாடாமணியும் அவன் உரை கேட்டு மகிழ்வும், அவன் கூறப் போவதைக் கேட்க ஆர்வமும் கொண்டனர். மூவரும் அமர்ந்து விரைவில் உண்டபின் உரையாட அமர்ந்தனர்.
இளைஞன் பேசத் தொடங்கினான்:
"என்னைப் பற்றிய விவரங்களில் சில பொன்னரசிக்குத் தெரியும். ஆனால், அவளுக்கும் தெரியாத செய்திகள் உண்டு. ஆயினும் இருவரும் அறிய நான் முழு விவரமும் கூறுகிறேன்;
"என் பெயர் மாடலன், பொன்னரசியின் தாய் என் அத்தை; தந்தை என் மாமன். ஒருவர் பின் ஒருவராகப் பொன்னரசி நாலு வயதாகியிருக்கும் போது அவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் இறக்கும்போது எனக்கு வயது பன்னிரண்டுதான். அப்போதே எனக்குப் பொன்னரசியை மண முடித்து வைக்கவேண்டுமென்று என் அத்தை அவாவுற்றாள். ஆனால் மாமாவோ அதை விரும்பவில்லை. பொன்னரசியின் தந்தைக்கும் ஒரு தங்கை மகன் இருந்தான். சிறுபிள்ளையிலேயே அவன் தாய் தந்தையர் இறந்துவிட்டதால், அவன் பொன்னழகியுடன் வளர்ந்தான். பொன்னரசிக்கு இது நினைவிராது. ஏனெனில் அவள் அப்போது மிகச் சிறுபிள்ளை. ஆனால் பொன்னரசியின் தந்தைக்கு அவளை அவனுக்கு மணங்செய்துவிக்க விருப்பம். சின்னஞ் சிறுமியாகிய பொன்னரசியிடம் கேட்டபோதும் கேட்டது இன்னதென்றறியாத அந்தச் சிறிய வயதிலேயே இருவரும் அதை விரும்புவதாகக் கூறினர்.
அச்சிறுவனே எனக்குத் தடையாய் இருப்பதாகக் கருதி பொன்னரசியின் தாயான என் அத்தை, அச்சிறுவனைக் கொலை செய்யும்படி ஆட்களை ஏவினாள். அவர்களும் கொன்று விட்டதாக வந்து கூறினர். நானும் அதை இன்றுவரை நம்பினேன்."
"ஏன் இன்றுவரை, இன்று அதை ஏன் நம்பவில்லை? என்று இடைமறித்தான் வாடாமணி.
"அதை விரைவில் அறிவீர்கள். ஆனால் நடந்த செய்தி எப்படியோ என் மாமாவுக்குத் தெரிந்துவிட்டது. இச்செயலுக்கு நானும் உடந்தை என்று அவர் கருதினார். அது உண்மை என்பதை நான் இப்போது உங்களிடம் ஒத்துக் கொள்வதில் தடையில்லை. ஆனால் அதற்காக அவர் என்னைத் தண்டிக்க விரும்பினார். ஆனால், தண்டனையிலும் அவர் நீதி உணர்ச்சி மேலிட்டிருந்தது. மாயங்களின் வல்லவர் அவர். இந்த மாய மலையும் அரண்மனையும் அவர் அன்று அமைத்தவையே. எனினும் இந்தச் செல்வங்கள் யாவும் மாயச் செல்வங்களல்ல. ஒரு பகுதி அவர் குடிக்கும். என் அத்தை குடிக்கும் உரியவையே. ஆனால் மாயத்தாலும் அவர் பெருங் குவையை நிலவரமாகப் படைத்துச் சேர்த்தார். சிறு குழந்தையிலிருந்து தந்தையறியாமல், தாயறியாமல் பொன்னரசி இதில் சிறைப்படுத்தப்பட்டாள். சிறைக் காவலனாக நானும் பூதமும் கழுகும் வேலை செய்தோம். பொன்னரசி விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு ஒன்று தவிர, மற்ற எல்லா வகையிலும் அத்தையும் அவரும் இறக்கும்போது, என்னையே பொன்னரசிக்கும் மாய அரண்மனைக்கும் பொறுப்பாளனாக விட்டுச் சென்றனர்.
"பொன்னரசிக்காக ஓர் இளைஞனைக் கொன்ற பழிக்காக, பொன்னரசி எனக்கு இல்லையென்றும், ஏழாண்டுகளில் மலைமீதேறி அரண்மனையில் நுழைபவனுக்கே அவள் உரியவள் என்றும், அதனை நான் நிறைவேற்ற வேண்டுமென்றும், அவர் என்னிடம் ஆணையிட்டு உறுதி வாங்கினார். ஆனால், ஏழாண்டு எவரும் அவளைப் பெறத் தவறினால் நானே அவள் விருப்பம் அறிந்து அவளைப் பெறலாம் என்றும், அப்போதும் அவள் அதை விரும்பாவிட்டால். மூன்றாண்டு பொறுத்து அவள் விருப்பப்படி நடக்க நான் விட்டுவிட வேண்டுமென்றும் அவர் வகுத்துள்ளார்.
"இது மட்டுமன்று, பொன்னரசியின் விருப்பம் பொன்னரசி யின் தாயின் விருப்பம் என் விருப்பம் ஆகியவற்றுக்கெல்லாம் அவர் தக்க நடுநிலை நேர்மையை இவ்வாறு வகுத்தது போலவே, அத்தையும் நானும் செய்த பழிகளுக்கும் உரிய தண்டனை வகுத்திருந்தார். பொன்னரசிக்காக உயிர்விடும் இளைஞர் உயிர்களுக்கும் தக்க நிதி வகுத்திருந்தார். அவர் எனக்கும் அத்தைக்கும் உடந்தையாயிருந்த கொலைகாரரில் ஒருவனையே வாயிற் பூதமாகவும், மற்றவனையே கழுகாகவும் மாற்றியிருந்தார். ஏழாண்டுகள் அவர்களில் ஒருவன் இறந்தால் நான் ஒரு கால் நொண்டியாக வேண்டுமென்றும்; மற்றவன் இறந்தால் நான் மறுகால் நொண்டியாக வேண்டுமென்றும் பொன்னரசியும், அவளை வெற்றிகரமாகப் பெறுபவனும் மனமார மன்னித்து உதவினால் மட்டும் இத்தண்டனை மாறும் என்றும் கூறிச் சென்றார்.
"இன்று அவர் கூறிய தண்டனை எனக்கு வந்துள்ளது. கழுகு வாடாமணியால் இறந்து விட்டதால், உலகுக்கு ஒரு பெரும் நன்மையும் எனக்கு ஒரு பெருந்தீமையும் ஏற்பட்டுள்ளது. அதன் குருதி பட்டதே எலும்பாகக் கீழேவிழுந்து கிடந்த எண்ணற்ற இளைஞரும் மாயம் நீங்கி உயிர் பெற்றுவிட்டனர். சற்றுமுன் நீங்கள் இருவரும் கண்ட காட்சி இதுவே. தம்மை உயிர்ப் பித்தவர்கள் நீங்கள் என்பதனாலேயே அவர்கள் உங்களை வாழ்த்தினார்கள்.
"ஆனால் கழுகு கூறிய தண்டனை எனக்கு வந்துள்ளது. கழுகு வாடாமணியால் இறந்து விட்டதனால், உலகுக்கு ஓரு பெரும் நன்மையும் எனக்கு ஒரு பெருந்தீமையும் ஏற்பட்டுள்ளது. அதன் குருதி பட்டதே எலும்பாகக் கீழே விழுந்து கிடந்த எண்ணற்ற இளைஞரும் மாயம் நீங்கி உயிர்பெற்றுவிட்டனர். சற்றுமுன் நீங்கள் இருவரும் கண்ட காட்சி இதுவே. தம்மை உயிர்ப்பித்தவர்கள் நீங்கள் என்பதனாலேயே அவர்கள் உங்களை வாழ்த்தினார்கள்.
“ஆனால் கழுகு ஏழாண்டுக் காலத்துக்குள் இறந்ததனாலே இன்றிரவு என் கால்களுள் ஒன்று நொண்டியாகிவிடும். பொன்னரசியும் நீங்களும் என்னை மன்னித்தால் இத்தண்டனை யினின்றும் விடுபடுவேன் ஆகையால் மன்னிக்கும்படி கோருகிறேன்” என்றான்.
“முதலில் என்பெயர் இன்னும் பொன்னரசிக்கே தெரியாதே. உங்களுக்கு எப்படித் தெரிந்தது” என்று வாடாமணி கேட்டான்.
“பொன்னரசிக்கு இன்னோர் அத்தைமகன் உண்டு என்று கூறினது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவனை என் தாயும் நானும் கொலைஞர்களை ஏவிக் கொல்லும்படி செய்தோம். அந்தக் கொலை காரர்களில் ஒருவன் கழுகாகி உங்களால் கொள்ளல்லப் பட்டான். மற்றவன் இன்றிரவுடன் மாய முடிவில் தன் உரு அடைந்துவிடுவான். அவர்கள் சிறுவனைக் கொன்றுவிட்ட தாகவே இதுவரை நானும் எல்லாரும் கருதியிருக்கிறோம். ஆனால் அது தவறு என்பதை இப்போது உங்களைக் கண்ட வுடனே அறிந்தேன். நீங்கள் உங்கள் திறமையால் மாயத்தை வென்றவர்கள் மட்டுமல்ல. அந்தச் சிறுவனும் நீங்கள்தாம். உங்கள்பெயரை நான் அறிந்தவகையும் அதுவே” என்றான்.
வாடாமணி வியப்புற்றான். வியப்புடன் புதிய ஆர்வத் துடன் பொன்னரசியை நோக்கினான். “நீ என் மணமகள் மட்டுமல்ல, என் அத்தை மகள், இருமுறையிலும் உன்னை நான் இனி நேசிப்பேன்” என்றான்.
பொன்னரசி தலைகவிழ்ந்தாள்.
“நானும் அப்படியே” என்றாள்.
“அது மட்டுமல்ல, நானும் பொன்னரசிக்கு அத்தை மகன் மட்டுமல்ல. வாடாமணிக்கும் ஒன்றுவிட்ட உடன்பிறந்தான். அம்முறையிலேயே இருவரையும் நான் நேசிப்பேன்” என்றான்.
இருவர் மணவினையையும் மறுநாள் காலையிலே மாடவன் செய்து முடித்தான்.
மாயமலையில் இப்போது மாய நீக்கத்தாலேயே படிகள் தோற்றின. வாயிற்பூதமாயிருந்த கொலைஞனும் மன்னிப்புப் பெற்று அவர்களுடன் சென்று வாழ்ந்தான். வாடா மணியைக் கொலை செய்யாது மறைத்தவன் உண்மையில் அவனே. அவன் மூலம் வாடாமணியை வளர்க்க உதவியவர்களை எல்லாம் கண்டு மூவரும் ஆதரித்து அளவளாவினர்.
தங்கத் தாமரை
எழுமுடி கொங்கு நாட்டில் ஒரு பெருங்குடித் தலைவன், எழுமுடி என்பது அவன் குடும்பத்தில் வழிவழி வந்த பெயர். அவன் முன்னோருள் ஒருவன் சேரப் பேரரசன் ஒரே போர்க்களத்தில் ஏழு முடியரசர்களை வென்று, ஏழு முடிகளை மாலையாக அணிந்து புகழ் நாட்டினான். ஆனால், அதே போர்க்களத்தில் எழுமுடியின் முன்னோன் அவன் உயிரையே காக்க நேர்ந்தது. உயிர் காத்து உயர் புகழும் ஊறுபடாது பேணிய வீரனுக்கு அவன் எழுமுடி என்ற தனிச்சிறப்பு வாய்ந்த பட்டத்துடன், பெருஞ் செல்வமும் பெருநிலப் பண்ணைகளும் வழங்கினான்.
எழுமுடிக்குத் தங்கத்தாமரை என்ற ஒரே ஒரு புதல்வி பிறந்தாள். குழந்தைப் பருவத்திலேயே அவன் உடல் தந்தத்தில் வார்த்தெடுத்த பதுமைபோலத் திகழ்ந்தது. உடலின் தூய வெண்பளிங்கு நிறத்தை எடுத்துக் காட்டும் முறையில், முடியும் புருவமும் மை நீலமாகவும், கைகால் நகங்களும் இதழும் கண்களும் செல்வலரியின் வண்ணமாகவும் இருந்தன. அவள் வளரவளர இந்த அழகு கண்கொள்ளா எழில் வடிவாக மலர்ச்சியுற்றது. அவள் பொன்னிற ஆடையையே விரும்பி உடுத்ததால், தங்கத் தாமரை என்று பெயருக்கு அவள் அழகும் தோற்றமும் பொருத்தமாக இருந்தன.
எழுமுடி தன் நேரமுழுவதையும், தன்செல்வத்தையும் தன் அன்பு முழுவதையும் தங்கத் தாமரையைப் பேணி வளர்ப்பதிலேயே ஈடுபடுத்தினான். அவளுக்கு இல்லாத வாய்ப்பு வசதிகள் எவருக்கும் கிடையாது. அவள் கற்றுக் கொள்ளாத கலைகள், வித்தைகள் இல்லை. அவள் ஆடல், மயிலைப் பழித்தது. அவள் பாடல், குயிலைப் புறங்கண்டது. அவள் பேச்சினிமைக்குக் கிளியும் பூவையும் ஏங்கின. அவள் அறிவோ ஒவ்வொரு துறையிலும் அவ்வத் துறைகளின் தலைமை ஆசான்களை மலைக்க வைக்கப் போதியதாயிருந்தது. அவள் முழுநிறை பண்பு கண்டு எழுமுடி உளம் பூரித்தான். தங்கத் தாமரையிடம் யாரும் எத்தகைய குறையுங்காண முடியவில்லை. அவளைப்பற்றிக் கவலைப்படக் காரணம் இருக்கக்கூடும் என்றும் எவரும் கருதவில்லை. ஆனால் அவள் தாய் வேண்மாள் ஒருத்தி மட்டும் அவ்வாறு குறை கண்டாள். கண்டு மறுகினாள். அவள் இதை வெளிப்படக் கூறவில்லை. ஆனால், முகம் காட்டிற்று. இதைக் கவனித்த எழுமுடிக்கு அடிக்கடி உள்ளூரச் சிரிப்பு வந்தது. தன் மகள் நிறைவு ஒரு தாயின் உள்ளத்தில்கூடப் பொறாமை உண்டு பண்ணிற்று என்று அவன் எண்ணினான்.
“குழந்தையின் பெருமை முற்றிலும் தாய் தந்தையர் பெருமை தானே! அதைக் கண்டு நான் மகிழ்வதுபோல் உன்னால் ஏன் மகிழ்வு கொள்ள முடியவில்லை?” என்று எழுமுடி மனைவியிடம் கேட்டான்.
“நீங்கள் தந்தையாய் இருக்கலாம். பெற்ற தாய் அல்ல, பெண் உள்ளம் படைத்தவர்களும் அல்ல. பெண்ணை ஒரு பொம்மையாக வைத்து நீங்கள் விளையாடுகிறீர்கள். அதன் வாழ்வின் அக்கரை இருந்தால்தானே அதுபற்றி அக்கறை எழும், கவலை உண்டாகும்?” என்றாள் தாய்.
எழுமுடி இச்சொற்கள் கேட்டு வியந்தான். ஆனால் அச்சொற்களில் அவன் எவ்வகைப் பொருளும் காணவில்லை. அவன் பார்வை இதை வேண்மாளுக்கு நன்கு விளக்கிற்று. அவள் மேலும் தொடர்ந்தாள்:
“வாழ்வில் இன்பம் உண்டு துன்பமும் உண்டு. ஒரு சிறிது துன்பங் காணாமல், இன்பத்தை எவரும் உணரமுடியாது. உங்கள் பிள்ளையைத் துன்பமே தெரியாமல் வளர்த்து விட்டீர்கள். அவளுக்கு இப்போது இன்பத்தின் அருமையும் தெரியாது. அது மட்டுமல்ல. வாழ்வில் எப்பேர்ப்பட்டவர்க்கும் தம்மிலும் மூத்தவர் இளையவர். பெரியவர் சிறியவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் உண்டு. இந்த இரண்டு திசையிலும் தராதரம் அறிந்து நடப்பதுதான் மனிதத் தன்மை. நம் பெண் கொடி எவரையும்-தாய் தந்தையரைக்கூட - மூத்தவராகவோ, பெரியவராகவோ, உயர்ந்தவராகவோ கருதுவதில்லை. உலகில் எல்லாருமே தனக்குத் தாழ்ந்தவர்; தனக்கு மேலானவரும், ஒப்பானவரும் இல்லை என்ற எண்ணமுடையவளாயிருக்கிறாள். இதன் பொருள் என்னவென்பதை அவள் மணப் பருவமடைந்த பின்னும் நீங்கள் நினையாமல் இருக்கிறீர்கள்” என்றாள்.
தாயின் பாசம் கண்டுகொண்ட குறை எழுமுடிக்கு இப்போது ஒரு சிறிதே தெரிந்தது. ஆனால் அது ஒரு பெருங்குறை என்று அவன் கருதவில்லை. எனினும் உடனடியாக மகளுக்கு ஏற்ற கணவனைத் தேடும் முயற்சியில் இறங்கினான்.
அவன் நேரடியாக மகளிடம் எதுவும் கூறவில்லை. ஆனால் வணிகர், பெருங்குடி மக்கள், வீரர், அரசியற் பணியாளர், இளவரசர் ஆகிய பல திறத்தவரின் ஓவியங்களையும் விவரங்களையும் சேகரித்தான். மனைவி மூலமும் செவியிலர் தோழியர் மூவரும் அவர்களைப்பற்றித் தங்கத் தாமரையிடம் பேச்சுக் கொடுத்து அவள் கருத்தறிய முயன்றான்.
சிறு செல்வர்கள் பேச்செடுக்கவே தங்கத் தாமரை இடந்தரவில்லை. ‘என் கால் செருப்பு வாங்கப் பற்றுமா இவர்கள் செல்வம்? என்பாள். வீரர்களைப்பற்றிப் பேசினாலோ அவர்கள் முரடர்கள் என்பாள். செல்வச் சீமான்களை அவள் வேறுவகையாக ஏளனம் செய்வாள். ’இவர்கள் பெண்களைப் போலப் பகட்டித் திரிபவர்கள். ஆண்களுக்கு இவர்கள் ஏற்ற சோடிகள்’ என்பாள்.
எழுமுடியின் செல்வாக்கும் தங்கத்தாமரையின் புகழும் சேர்ந்து பல மன்னர்கள் இளங்கோக்களையே எழுமுடியின் மாளிகைக்கு வருவித்தது. எழுமுடி அவரவர் தகுதிக்கேற்ப அவர்களை நடத்தியதுடன் தங்கத் தாமரையின் மாளிகையைக் காட்டுவதுபோல அவளிடம் இட்டு வந்தான். தங்கத் தாமரை அவர்களை நடத்திய வகையிலிருந்துதான் தாய் கூறிய குறையின் அளவை எழுமுடி அறிய முடிந்தது. அவர்கள் அத்தனை பேரையும் தங்கத் தாமரை வெறுத்தாள். ஏளனமாகக் கருதினாள். அது மட்டுமன்று. இந்த வெறுப்பையும் ஏளனத்தையும் பட்டாங்கமாகத் தன்போக்கு வரவுகளிலும் நிலையிலும் பார்வையிலுமே காட்டினாள். அவள் பேச்சுக்களோ எவரையும் மதியாத நையாண்டியாய் இருந்தது.
வந்தவர் கேட்க அவள் செவிலியர் தோழியரிடம் அவர்களைப் பற்றிய தன் கேலி வருணனைகளைக் கூறினாள். சில சமயம் அவர்களைப் பற்றிய தன் கேலி வருணனைகளைக் கூறினாள். சில சமயம் அவர்கள் போன பின்னே கூறினாலும். அவள் சிரித்த சிரிப்பொலி அவர்களுக்கெட்டிற்று. பலரைப் பற்றிய அவள் நகைத் துணுக்குரைகள் எங்கும் பரவி, வந்தவர்களின் வாழ்விலேயே அரிப்பை ஊட்டின.
ஒருவர் பல்லில் தேங்காய் திருகலாம் என்பாள். ஒருவர் மூக்கில் காய்கறி வெட்டிக் கொள்ளலாம் என்பாள் சிலர் வயிறு அவளுக்குப் பொங்கல் பானையை நினைவூட்டிற்று. சிலர் கை வீச்சையும் கால் நடையையும் அவள் பின்பற்றி நடித்துக் காட்டிப் பெண்களிடையே அவர்களைக் கோமாளி ஆக்கினாள்.
இந்தக் கேலிகளால் தாய் தந்தையர் எவ்வளவு வருந்தினாலும், நாடெங்கும் தங்கத் தாமரையின் புகழ் வளர்ந்தது. அவளை நாடுவோர் படியும் உயர்ந்தது. சோழப் பேரரசர் மரபின் இளவலான மாந்தரனே தன் எழூபரித்தேர் ஏற எழூமுடியின் மாளிகையருகே பாடியமைத்தான். தமக்கு வந்த இப்பெரு மதிப்பால் மகிழ்ந்து, எழுமுடியும் வேண்மாளும் தங்கத் தாமரையின் பழைய தவறுகளை எல்லாம் மறக்க ஒருப்பட்டிருந்தனர். இளவரசன் மாந்தரனை மகிழ்விக்க அவர்கள் பல விருந்து வேடிக்கைகள் நடத்தினர். அதனிடையே ஒருநாள் அவனைத் தங்கத்தாமரைக்கு அறிமுகம் செய்து வைத்தனர். செவிலியர் தோழியர் உன்னிப்பாகவும் நயமாகவும் அவன் அருமை பெருமைகளை அவளுக்கு எடுத்துரைத்து வந்தனர்.
தங்கத்தாமரை ஆர்வமதியுடன் கேட்பதுபோல் எல்லா வற்றையும் கேட்டாள். இளவரசனுடன் பேசும்போதும். நெடுநேரம் அவளுடைய வழக்கமான நொடிப்பேச்சுப் பெரிதும் தலைகாட்டாமல் இருந்தது.
அவள் மீது இளவரசன் மாறாத பாசங் கொண்டிருந்தான். ஆகவே அவளைப் பெருமைப்படுத்தவும் மகிழ்விக்கவும் அவன் பலவகையில் முயன்றான்.
‘உங்கள் தந்தையின் விருந்தினராய் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மகிழ்கிறேன்’ என்றான்.
தங்கத் தாமரை இளவரசன் முகத்தை உற்று நோக்கினாள். போரில் வாள் வெட்டினால் ஏற்பட்ட ஒரு வடு, அவன் கன்னத்தில் கிடந்தது. வீரத்தமிழ் மரபில் அதை எவரும் புகழ் வடுவாகக் கருதுவரேயன்றி, குறையாகக் கருத மாட்டார்கள். அது முகத்தினழகைக் கெடுப்பதாகவும் இல்லை. ஒரு பெருமிதத் தோற்றத்தையே அளித்தது. ஆனால் குற்றங் குறைகளையே தேடிய தங்கத்தாமரை அதைக் கண்டதை வெளியிடாமல் இருக்க முடியவில்லை.
‘உங்கள் முகத்தில் மட்டும் அந்த வடு இல்லாமல் போனால், தந்தையைப் போலவே நானும் உங்களை ஓர் அரும்பொருளாகப் போற்றியிருக்க முடியும்’ என்றாள்.
வடுவைக் காட்டியதுகூட உண்மையில் இளவரசனைப் புண்படுத்தவில்லை. பாசத்துக்குரியவர் வாய்மொழியில் இகழையும் புகழாகக் கொள்ளும் பண்பு அவனிடம் இருந்தது. தங்கத்தாமரை எந்த விருந்தினர்க்கும் தரும் உச்ச உயர் மதிப்பு அவர்களை ஓர் அரும்பொருளாகக் காண்பதுதான் என்ற குறிப்பு அவன் ஆர்வத்தைக்கூடப் பெரிதும் குலைத்தது.
அவள் கெடுபண்பைச் சுட்டித் தோழியர் அவளிடம் கண்சாடை காட்டினர். ஆனால், இதுவும் அவளைத் திருத்து வதற்கு மாறாக, அவள் கோபத்தை மேலும் தூண்டிற்று.
“எனக்கு நீங்களெல்லாம் அறிவுரை தருவது போதும் இந்தப் பெரிய இடத்துக்கோ மாளிகைக்கோ உங்களில் ஒருவர் வந்து பெருமைப்படுத்துவது தானே!” என்று அவள் இறுமாந்து பேசி விட்டுத் தன் அறைக்கே போய்விட்டாள்.
எழுமுடிக்கு மகள் மேலிருந்த மதிப்பு, பாசம் எல்லாம் ஒரு நொடியில் மறைந்து போயிற்று. அவன் அவனைக் கடிந்து இதுவரை ஒரு சொல் கூறியதில்லை. கண்டிப்புடன் பார்த்தது கூடக் கிடையாது. ஆனால், இன்று வாழ்நாளில் எவரிடமும் கொள்ளாத கோபத்துக்கு அவன் ஆளானான், அங்கம் துடிக்க, மீசை படபடக்க, வேண்மாளின் கெஞ்சு பார்வையையும் சட்டை செய்யாமல் அவன் மகள் சென்ற திசை நோக்கிச் சீறி எழுந்தான்.
“இனி இந்த இறுமாப்புக் குடுக்கைக்கு நான் தக்க துணை தேடப் போவதில்லை. என் செல்வத்தில் ஒரு தூசு அவளுக்குக் கிடையாது. அந்நிலையில் அவளை இனி எவன் முதன்முதலாக் கொண்டு போக விரும்புகிறானோ, அவன் பின்னாலேயே ஆளற்ற அனாதையாக அவளை அனுப்பிவிடப் போகிறேன். இது உறுதி!” என்று முழங்கினான்.
அவன் கோபத்தில் அவனிடம் பேசத் துணியாமல் வேண்மாளும் தன் அகமாளிகை சென்றாள். ஆனால், அவள் இப்போது முன்போலத் தன் மகள் வகையில் தலையிடாதவளாய் இருக்கவில்லை. அவளைத் திருத்தி ஆட்கொள்ளும் பொறுப்பை அவளே மேற்கொண்டாள்.
தங்கத்தாமரையின் போக்கால் நாடெங்கும் கலகலத்தது. தந்தையின் கோபம் அவள் மதிப்பை எங்கும் குறைத்திருந்தது. ஆனால், இளவரசன் மாந்தரன் உள்ளத்தில் அவளைப் பற்றிய பற்றும் பாசமும் ஒரு சிறிது கூடக் குறையவில்லை. அவள் குறை வளர்ப்பின் குறை; உள்ளத்தின் குறையல்ல என்று அவனுக்குத் தோன்றிற்று. குறையின் தகுதி மீறித் தந்தையின் கோபம் அவளுக்குத் தண்டனை அளிப்பதாக அவன் கருதினான். இந்த எண்ணங்களுடன் அவன் தன் மாடியின் உட்கூடம் சென்று எழுச்சிகுன்றி உட்கார்ந்தான். அவன் மனம் எதிலும் நிலை கொள்ளாமல் தத்தளித்தது.
அச்சமயம் அவன் முன் ஒரு பணிப்பெண் வந்தாள். ‘தங்கத் தாமரையின் அம்மா உங்களிடம் இந்தக் கடிதத்தைத் தந்து மறுமொழி அனுப்பும்படி வேண்டினாள்’ என்றாள் அவள்.
அவன் கடிதத்தைப் பெற்று வாசித்தான்.
"பெருந்தகையீர்!
"என் புதல்வி தங்கத்தாமரை தங்களிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி வருந்துகிறேன். அதுபற்றித் தங்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டியவர் என் கணவர். அவரோ என்றுமில்லாக் கோபத்தில் இப்போது குமுறிக் கொண்டிருக் கிறார். ஆகவே குழந்தையின் தவற்றை மன்னிக்குமாறு குழந்தையின் சார்பிலும் குழந்தையின் தந்தை சார்பிலும் என் சார்பிலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
"தங்கள் தகுதியையும் பெருந்தன்மையையும் நன் நன்கறிவேன். உலகமுமறியும்; இவ்வளவு நடந்த பின்னும், தங்கதாமரையிடம் உங்கள் பற்றுக் குறையவில்லை என்றுதான் எனக்குத் தோற்றுகிறது. அதற்காக மகிழ்கிறேன். ஏனெனில், உலகமறியாத பெண்மையின் இறுமாப்பு ஒன்று மட்டும் மாறினால், தங்கத்தாமரை உங்கள் பாசத்திற்குத் தகுதியற்ற வளாய் இருக்கமாட்டாள் என்றே நான் நினைக்கிறேன். தாங்களும் அவ்வாறு நினைப்பதானால், என் கணவரை எதிர்பாராமலே, தக்க வழி வகைகளால் அவரைத் திருத்தி ஆட்கொள்வீர்கள் என்று வேண்டுகிறேன்.
"முதன் முதலாகவரும் எவருக்கும் முன்பின் ஆராயாது தங்கத் தாமரையைக் கொடுத்து அவளை அவமதித்தனுப்பி விடுவதென்ற என் கணவர் கோபத்தில் கூறியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்!
தங்களை வரவேற்கும் பெருமையுடைய
எழுமுடி கிழானுக்காக,
வேண்மாள் எழுமுடி"
இளவரசன் பார்வையில் இந்தக் கடிதமே தங்கத் தாமரையின் குடிமதிப்புப் பண்புக்கு ஒரு சான்றாய் இருந்தது, வேண்மாளை ஒத்த அறிவும் திருவும் அரசியல் நுண்ணறிவும் உடைய தாயின் குலக்கொடி உண்மையில் அதனில் குறைபட முடியாது என்று அவன் உறுதி கொண்டாள்.
"அம்மணி,
தங்கள் அன்புக்கும் புத்திமதிக்கும் நன்றி; தங்கள் கருத்தே என் கருத்து. தங்கள் முடிவே என் முடிவு, இனி, தங்கத் தாமரை வகையில் தாங்கள் விரும்புகிறபடியே யாவும் முடிப்பது என் பொறுப்பு. அதற்கான திட்டங்களை நானே முன்னின்று செய்து கொள்வேன். அதுபற்றித் தாங்கள் கவலைப்படாதிருக்க வேண்டுகிறேன்.
தங்கள் அன்புக்கும் தகுதிக்குமுரிய
மாந்தரஞ்சேரல்"
இவ்வாறு இளவரசன் கடிதம் எழுதி வேண்மாளின் பணிப் பெண்ணிடம் கொடுத்தான்.
அடுத்தநாள், கந்தலாடை உடுத்த பாணன் ஒருவன் மன்னர் பெருமக்களைப் பாடிப் பரிசில் பெறுவது போல, எழுமுடியிடம் வந்தான். இப்போது எழுமுடியைப் பார்ப்பது விரும்பத் தக்கதல்ல என்று பணியாட்கள் எச்சரிக்க முயன்றனர். ஆனால், எழுமுடி மாடியிலிருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். காவலனை அனுப்பி அழைத்துவரச் செய்தான்.
பாணன் ஆடை கந்தலாயிருந்தது; அவன் முகம் தாடி மீசை வளர்ந்து காடாயிருந்தது. அவன் நல்வாழ்வு வாழ்ந்தவன் என்பதை அவன் குரல் மட்டுமே காட்டின. எழுமுடி மன்னரை எதிர்த்துச் சேரர் அடைந்த வெற்றி பற்றியும், அதில் எழுமுடியின் முன்னோன் கொண்ட பங்கு பற்றியும் அவன் பாடல் புகழ்ந்து பாராட்டிற்று, பாணனுக்குப் பரிசில்கள் வழங்கியபோது, பரிசிலுடன் பரிசில் பொருளாக எழுமுடி தங்கத் தாமரையையும் அவனுக்கு அளிப்பதாக வாக்களித்தான். மணமுடிக்கக் குருக்களும் தங்கத் தாமரையும் கையோடு அழைக்கப்பட்டனர். தங்கத்தாமரை எவ்வளவு மறுத்தும் கெஞ்சியும் அழுதும் எழுமுடி சிறிதும் மனங்கனியவில்லை. மணவினை முடிவில் எழுமுடி பாணனுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு மகளையும் உடனே பின்சென்று விடும்படி ஆணையிட்டான். அரண்மனையில் வாழ்ந்த பெண் இப்போது ஆண்டி ஒருவனுடன் அங்காடி வழியே செல்ல வேண்டியதாயிற்று. சிவிகையில் அமர்ந்து செல்லும் நங்கை இப்போது காலில் மிதியடிகூட இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் நடந்தாள். எல்லாரையும் அவமதித்துப் பழகிய அணங்குக்கு இப்போது இரங்குவார் யாரும் இல்லாது போயிற்று.
நாடு நகர் ஊர்கள் பல கடந்து நெடுநாள் பாணனுடன் தங்கத் தாமரை பயணம் செய்தாள். பாணன் வழியில் பச்சைக் காய்களையும் நீரையுமே உட்கொண்டான். தான் உண்டதில் மீந்த பகுதியையே அவளுக்குக் கொடுத்தான். பாலும் பழமும் மறுத்த அவள், வாயும் வயிறும் பசியின் கொடுமையால் அவற்றை விரைந்து விழுங்கின.
பாணன் முதலில் அவளுடன் பேச்சே கொடுக்கவில்லை. பேசிய சமயம் அவளைப் பல வேலைகளில் ஏவுவதற்கு மட்டுமே பேசினான். ஒரு சிறிது வேலையில் பிசகினாலும் அடி உதை என்ற அச்சத்துக்குப் பேச்சின் தொனியே இடம் தந்தது.
ஒரு காட்டில் சென்றதும் அவன் தானாக, ‘இந்தக் காடு யார்காடு தெரியுமா?’ என்று கேட்டான்.
‘தெரியாதே!’ என்றாள் அவள்.
‘இவைதான் சேர இளவரசன் மாந்தரஞ்சேரல் காடு அவனை நீ மணக்க இணங்கியிருந்தால், இது இப்போது உன் காடாகவே இருக்கும்’ என்றான். தங்கத்தாமரை இதைக் கேட்டுக் குன்றிப் போனாள். இது போலவே சோலைவனம். ஏரி, அணைக்கட்டு, நாடுநகரம், மாளிகை ஆகியவைகளையும் பாணன் தங்கத்தாமரைக்குச் சுட்டிக் காட்டினான். அவை மாந்தரஞ் சேரலுக்குரியன என்றும் அவனை அவள் மணந்திருந்தால் அவை அவளுக்கே உரியவையாயிருக்குமென்றும் கூறினான். தந்தையின் செல்வமும் ஆதரவும் இருந்த அந்நாளில் இச்சொற்கள் அவளுக்குப் பொருளற்றவையாகவும் கேலிக்குரியவையாகவே இருந்திருக்கும். ஆனால் அவற்றை இழந்த நிலையில் இவை, அவளைச் சுருக்கென்று தைத்தன.
“அந்தோ! நான் மாந்தரஞ் சேரலின் அருமையறியாது. கைவரப் பெற்ற நலத்தை உதறித் தள்ளினேனே! அத்துடன் அவரையும் அவமதித்தேனே!” என்று அவள் கலங்கினாள்.
பாணன் இச்சமயம் பார்த்து மேலும் கடுமொழிகள் கூறினான். “இப்போது உன் கணவன் நான். நீ மாந்தரஞ் சேரலையோ வேறு எவனையோ மனத்தில் நினைப்பது தவறு. எனக்கேற்ற நல்ல குடும்பப் பெண்தான் என்று நினைத்ததனால் தான் நான் உன்னை ஏற்றேன். இல்லையென்றால் தந்தை யாசகமாகத் தந்தாலும் கூட உன்னை ஏற்றிருக்க மாட்டேன்” என்றான்.
இச்சொற்களில் பொதிந்திருந்த வசைகளைக் கேட்டு அவள் உடலும் உளமும் குன்றின. ‘மாந்தரஞ்சேரலையே மறுத்தொதுக்கிய தன் இறுமாப்பு எங்கே? இந்தப் பாணன், தனக்குத் தகுதியுடையவள்தானா என்றும், குடும்பப் பெண்ணின் குணங்குன்றியவளோ என்றும் ஐயுறும் நிலை எங்கே?’ என்று எண்ணி அவள் ஏங்கினாள். ஆனால் அவள் ஏக்கத்துக்குப் பாணன் நேரமும் இடமும் தரவில்லை.
மாட மாளிகைகளின் அருகிலே, ஆற்றின் பின்புறமாக ஒண்டிக் கொண்டிருந்த ஒரு குச்சு வீட்டிற்குள் பாணன் அவளை இட்டுச் சென்றான். ‘இது யார் மாட்டுக் கொட்டில்’ என்று அவள் தன்னையறியாமல் கேட்டாள்.
‘இது இப்போது மாட்டுக் கொட்டிலல்ல. நீயும் நானும் குடியிருக்கப் போகும் புதுமனை இது தான்’ என்றான்.
நடந்த அலுப்பால் அவள் நிலத்தில் உடலைச் சிறிது சாய்க்கப் போனாள். பாணன் சீறினான்.
’நீ சாய்ந்து கிடந்தால் இங்கே நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? இது உன் தந்தை போன்ற சோம்பேறிச் செல்வர் வீடு என்று நினைத்தாயா? ஏதோ நம் புதுமண வாழ்வுக்கு அந்த வள்ளல் பெருமான் மாந்தரஞ்சேரல் கொடுத்த பரிசு இருக்கிறது. நான் போய் அரிசி, பருப்பு, காய்கறி வாங்கி வருகிறேன். அதற்குள் வீடு பெருக்கி மெழுகிச் சமையலுக்கு முன்னேற் பாடாகட்டும்!" என்று கூறிப் பாணன் வெளியே சென்றான்.
‘இனி இந்தப் பாணன்தான் தஞ்சம்! சிறிது தன் மதிப்புக்குக்கூட ஒண்டி நிற்க ஒரு தாய்வீடு தனக்குக் கிடையாது’ என்பதைத் தங்கத்தாமரை இப்போது உணர்ந்தாள். அவள் நெஞ்சு பொருமிற்று. இதயம் விம்மி வெதும்பிற்று. வேறு போக்கின்றிச் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு அந்தச் சிறு குடிலைப் பெருக்க முனைந்தாள். தன் மாளிகையில் இதே வேலை செய்பவர்கள் மீது சிறு சிறு குறைகளுக்கு எரிந்து பேசியது அவள் நினைவுக்கு வந்தது. இப்போது தன் நிலையைவிட அவர்கள் நிலை எவ்வளவோ மேலானது என்று அவளுக்குத் தோற்றிற்று. அவள் கண்ணீரால் குப்பை சேறாயிற்று. அவள் வேலை இன்னும் கடுமையாயிற்று. பெருக்கி மெழுகும் வேலை கணவன் வருமுன் முடியாததைக் கண்டு அவன் மேலும் கடுமொழிகள் பேசினான். தன் வாழ்வில் முதல் தடவையாக அவள் அவனிடம் பேசினாள்.
“இந்த ஒருநாள் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் இந்த வேலைகள் செய்து பழகிக் கொள்ளவில்லை. விரைவில் பழகிக் கொள்கிறேன்” என்றாள்.
தன் சமையலின் தன்மையை அன்று அவளே கண்டாள். உணவு, கறிகளை அவளால் விழுங்க முடியவில்லை. ஆனால் அவள் கணவன் இதற்கு அவளிடம் சிறிதும் கோபப்படாதது. கண்டு அவள் வியப்படைந்தாள். உணவின் சுவையை அவன் முகம் அவ்வப்போது ஒரு சிறிது எடுத்துக் காட்டிற்று. ஆனால், அவன் வயிறார உண்ணத் தவறவில்லை. அவன் உண்டபின் அவள் உண்ண முயன்றபோது மட்டும் அவனைப் போல உண்ண முடியவில்லை.
“நான் சமைத்த உணவை என்னால் உண்ண முடியவில்லை. நீங்கள் அதற்காக என்னைக் கண்டிப்பீர்களென்றுதான் எதிர்பார்த்தேன். கண்டித்தால் அது தகுதியாகவே இருக்கும். ஆனால் நீங்கள் ஒன்றும் சொல்லாமலே உண்டீர்களே, அது எதனால்?” என்று அவள் அவனிடம் நாணத்துடன் கேட்டாள்.
“நீ வள்ளல் எழுமுடி தந்த பரிசு என்பதை நான் எப்படி மறக்க முடியும்? அவர் மாளிகையில் அரசர்களுக்கும் கிடைக்காத உணவை எத்தனை நாள் நான் என் தோழர்களுடன் உண்டிருக்கிறேன். என் தகுதிக்கு மேம்பட்ட அத்தகைய உணவுகளை அவர் தந்தபோது வயிறார உண்ட நான். அவர் பரிசாகவே வந்த இந்த உணவை உண்டாலென்ன?” என்றான்.
தந்தையால் தனக்கு எப்போதும் எளிதாகக் கிடைத்த பெருமை, அதைத் தான் தன் சிறுமையால் கெடுத்துக் கொண்ட தவறு ஆகிய இரண்டையும் அவள் எண்ணித் தன்னை மனமாரத் திருத்திக் கொள்ள எண்ணினாள். ஆயினும் எண்ணுவது எளிதாயிருந்தது. எண்ணிய வண்ணம் செய்வது மட்டும் கடினமாகவே அமைந்திருந்தது. ஒரு வார உழைப்புக்குள் வாழ்க்கையே வெறுத்து விட்டது. அருகில் இருந்த வானியாற்றின் ஆழ் மடுவில் சென்று தன் உயிரையே மாய்த்துக் கொள்ள அவள் விரும்பினாள். இரவு கணவன் குறட்டை விட்டு உறங்குவதைப் பார்த்து விட்டு, எழுந்து நழுவினாள். சூசகக் கச்சுக்களை அவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு மடுவில் சாய்ந்தாள்.
வாழ்வதைவிட இறப்பது அவளுக்கு அரிதாகவே இருந்தது. மடுவில் கை கால்கள் துடிதுடித்து நீந்தின. கைகால்கள் சோர்ந்த பின் அவள் நிலையிழந்து நீரில் மூழ்கினாள். அச்சமயம் எங்கிருந்தோ ஒரு கை அவளை மெல்ல அணைத்தெடுப்பது போல் இருந்தது. அவளுக்கு விரைவில் உணர்வு நீங்கிற்று. ஆனால், நீங்கும் சமயத்தில் தான் மீண்டும் மன்னிக்க முடியாத தவறு இழைத்து விட்டதாக அவள் நினைத்தாள். ஏனெனில் ஆடை நெகிழ்வுற்ற நிலையில் நீரில் அமிழ்ந்ததால், அந்நிலையிலே எவர் கையிலோ பட நேர்ந்ததே என்று எண்ணி அவள் துணுக்குற்றாள்.
அவள் எண்ணியதுபோல அவள் அயலார் கையில் படவில்லை. அவளை மீட்டது அவள் கணவனாகிய பாணனே. அரைகுறைக் கிழவனாகக் காட்சியளித்த அவனுக்கு அவ்வளவு உடல் வலிமை இருக்குமென்று அவள் கருதியிருக்கவில்லை. ஆனால், கண்விழித்தபோது அவனே அருகிலிருந்து கலங்கிய கண்களுடன் அவளைப் பேணுவதை கண்டாள். அவளை யறியாமல் அவள் கை நன்றியுடன் அவன் கையை அணைத்துக் கொண்டது. அவன் முகம் அப்போது அடைந்த மலர்ச்சியையும் அவள் கவனிக்காமலிருக்க முடியவில்லை.
அவன் செய்த செயலால் அவள் வாழ்வில் எத்தகைய மாறுதலும் நேரவில்லை. ஆனால் அதை நினைவூட்டுவது போல ஒரு சிறு செயல் நிகழ்ந்திருந்தது. அவள் கரையில் அவிழ்ந்து வைத்த ஆடைகள் தந்தை வீட்டிலிருந்து அவள் அணிந்து வந்த ஆடைகள். இப்போது அவற்றைக் காணவில்லை. வேறு கந்தலாடைகளே தன் உடல் மீதிருந்தன. தன் செயலால் தன் இயற்கைத் தகுதி பின்னும் குறைந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். தந்தை அளித்த ஆடைக்கு மட்டுமல்ல. அவர் பெற்றெடுத்த உடலுக்குக்கூடத் தான் தகுதியுடையவளல்ல என்பதை அது அவளுக்குச் சுட்டிக் காட்டுவதுபோலிருந்தது.
ஒரு மாதம் முடிவதற்கு முன்னே கணவன் அவளுக்கு ஓர் எச்சரிக்கை தந்தான். ‘வள்ளல் எழுமுடி தந்த பரிசில் செலவாகி விட்டது. இளவரசன் மாந்தரஞ்சேரல் எல்லாருக்கும் கொடுக்கும் வள்ளலானாலும், அவன் கண்ணில் விழிக்கும் தகுதி எனக்குக் கிடையாது. இந்நிலையில் நீ இனி சமையல் செய்தால் போதாது. ஏதாவது வருவாய்க்கும் வழி தேடவேண்டும். ஒரு சட்டி, பானைக் கடை வைத்துத் தருகிறேன். அடுத்த தடவை பரிசில் கிடைப்பது வரை அதை நடத்திச் சிறிது வருவாய்க்கும் வழி செய்து கொள்’ என்றான்.
மாந்தரஞ் சேரலின் பெயரைக் கேட்குந்தோறும் இப்போது அவள் மனம் நைவுற்றது. அவனைத் தான் அவதூறாகப் பேசிய தால் அவனுக்கு எந்தக் குறையும் ஏற்படவில்லை. அவனைப் பேசிய அவள்தான் படிப்படியாக மதிப்பிழந்து வந்தாள்.
ஏழைப் பாணன் மனைவி, தொழிலிலீடுபட்ட பெண் என்ற நிலையில் கடையில் கலம் வாங்க வந்த பல சோம்பேறிகள் அவளிடம் கேலி பேசினர். கலத்துக்கு அவள் கூறிய விலை அவளுக்குரிய விலையைவிட மிகுதியாயிருப்பதாகக் சிலர் தெறி பேசினர். மோசமான கலத்தைக் கொடுத்ததற்காகச் சிலர் அவளைத் தாக்குவதாகக் கூடப் பயமுறுத்தினர். உயர்ந்தோரிடமும் தெறி பேசிய அவள் இப்போது இந்த இழிமக்கள் கேலியைத் தாங்கவும் முடியவில்லை. அவற்றைக் கணவனிடம் கூறவும் அவள் தயங்கினாள். ஏனெனில் ஏழைப் பாணனாகிய அவனால் எதுவும் செய்ய முடியாது. அத்துடன் அவன் அவளையே குற்றங்கூறி வெறுத்து விடவும் கூடும் என்று அவள் அஞ்சினாள்.
மன்னர் படையிலுள்ள ஒரு குதிரைவீரன் ஒரு நாள் குடித்து விட்டுக் கடைத்தெருவில் குதிரை ஏறி வந்தான். கடைக்காரர்கள் பலர் கடைகளை உடனே மூடிவிட்டார்கள். தங்கத்தாமரை யாருடனோ பேரம் பேசிக் கொண்டிருந்ததால் நடப்பதைக் கவனிக்கவில்லை. படைவீரன் குதிரையைக் கடைக்குள்ளேயே ஏற்றினான். பானை சட்டிகள் தாறுமாறாக உடைந்தன. அத்துடன் அவன் அவளையும் தாவிப் பிடித்துத் தொல்லைதரத் தொடங்கினான். அவள் கதறினாள். அயலவர் வந்து அவளை மெல்ல விடுவித்தனர். ஆனால் குடிகார வீரன் குற்றத்தை யெல்லாம் எளிதில் அவள் மீதே சுமத்தினான். “இந்தச் சிறுக்கி என்னைப் பார்த்துக்கேலி செய்தாள். கண் சாடை காட்டினாள்” என்றான்.
தங்கத் தாமரை இந்த அவமானம் தாங்க மாட்டாமல் முகத்தைக் கையால் பொத்திக் கொண்டு கலங்கினாள். ஆனால் அச்சமயம் குதிரை வீரன் நழுவிவிட, அவள் கணவனே வந்து, அவளை வாயில் வந்தபடி வைது, பலர் முன்னிலையிலே நையப்புடைத்துக் குடிசைக்கு இட்டுச் சென்றான்.
கணவன் அதுமுதல் அவளை நம்பி வெளியில் விடவில்லை. வீட்டிலேயே இட்டுப் பூட்டினான். கூடை முடைவதற்கான பொருள்கள், பின்னுவதற்கான கருவிகள் வாங்கிக்கொடுத்து, ஒவ்வொரு நாளும் இவ்வளவு வேலை செய்து தீரவேண்டும் என்று கட்டுப்பாடு செய்தான். வேலை செய்து முடிந்த வேளையில் சமையல், வீடு பெருக்குதல், மெழுகுதல், தோட்ட வேலைகள் ஆகியவற்றில் அவள் ஈடுபட்டாள். அவள் உடலழகு இதனால் முற்றிலும் கெட்டுவிடவில்லை. ஆனால், உடல் துரும்பாயிற்று. அதன் மென்மை, பளபளப்பு, பொன்னிறம் ஆகியவை தடமழிந்து போயின.
ஒருநாள் அவள் வேலை மிகுதியால் சிறிது அயர்ந்து கண் மூடியிருந்தாள். வெளிக் கதவு அன்று தாழிடப்படவில்லை. கணவனும் பூட்ட மறந்து சென்றிருந்தான். அக்கதவைத் திறந்து கொண்டு முன்பு கடையைத் தாக்கிய குதிரை வீரன் உள்ளே வந்தான். அவள் உறங்கியிருந்ததால், அவன் உள்ளிருந்து கதவைத் தாழிட்டு விட்டு வந்து அவள் அருகே உட்கார்ந்தான். அவன் கை தன் மீது பட்டபோது, அவள் விழித்துக் கொண்டாள். ஓவென்று கதறினாள். வீரன் அரைநொடியில் கதவைத் திறந்து கொண்டு ஓடினான். ஆனால் அடுத்த கணம் அண்டையயலார் அவளைச் சுற்றித் திரண்டனர். கணவனும் அச்சமயம் உள்ளே வந்தான்.
செல்வம் இழந்தாலும் மதிப்பிழந்தாலும் கடுவேலை செய்ய நேர்ந்தாலும் அதையெல்லாம் தங்கத்தாமரை இப்போது பொருட்படுத்தவில்லை. தன்பெண்மையின் மதிப்பு, கணவனுக் கேற்ற நல்ல மனைவி என்ற பெயர் இவற்றையே இப்போது அவள் மிக உயர்ந்த பொருளாகக் கருதினாள். அதைக்கூடக் காக்க முடியவில்லையே என்று அவள் கலங்கினாள்.
பாணன் இப்போது அவளிடம் இரக்கம் கொண்டது. போலத் தோற்றிற்று. "தன்னைக் காத்துக்கொள்ளக்கூடத் தெரியாத பெண் நீ. உனக்கு ஏற்ற இடம் இதுவல்ல; நம் அரசர் அரண்மனையிலேயே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். பாணன் மனைவி என்ற முறையில் உனக்கு அங்கே பாதுகாப்புக் கிடைக்கும். நீயாகத் தீங்கு நினைக்கா விட்டால் அங்கே உனக்குக் கேடு வராது என்றான்.
கணவனுக்கு இன்னும் தன் மீதே ஐயம் இருப்பது கண்டு. அவள் மனம் நைவுற்றாள். அதைப் போக்கத் தன்னாலியன்ற மட்டும் முயல்வதாகத் தனக்குள்ளே உறுதி செய்து கொண்டாள். அரண்மனை அடிசிற்களத்திலே அவளுக்கு முதலில் பெருக்குதல் போன்ற வேலையே தரப்பட்டது. பின் கறிக்கு வெட்டுதல், சமையல் வேலையில் உதவல் ஆகிய படிப்படியான உயர்வுகள் கிட்டின. அவள் விரும்பியபடியே நல்ல வேலைக்காரி என்ற பெயர் அவளுக்குக் கிடைத்தது. அவளே தலைமைச் சமையற் காரிக்கடுத்த வேலையாளானாள்.
ஒரு நாள் பாணன் அவளருகே அமர்ந்தான்.
"நம் துன்பங்களுக்கு ஓர் ஓய்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது. நீ மகிழ்ச்சியோடிரு. நம் இளவரசர் மாந்தரஞ்சேரலுக்கு நாளை திருமணம் நடக்க இருக்கிறது. அவர் இப்போது ஒரு வேலைக்காரப் பெண்ணையே விரும்பி மணம் செய்துகொள்ளப் போகிறார் என்று தோற்றுகிறது. அதனால் திருமணம் அவ்வளவு ஆடம்பரமாய் இராது. ஆனாலும் பெருமக்கள் பலர் அங்கே வந்திருப்பார்கள். நீ நல்லாடை உடுத்து மதிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றான்.
அவள் நெஞ்சு அவளைச் சுட்டது. ‘தன்னை விரும்பி வந்தும், தான் வெறுத்தொதுக்கிய இளவரசர் இப்போது ஒரு வேலைக்காரப் பெண்ணையே விரும்பும்படி ஆயிற்றே! தனக்குக் கிட்டாத கொம்புத்தேன் ஒரு வேலைக்கார பெண்ணுக்கல்லவா கிட்டிற்று?’ என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். அதை உணர்ந்து கொண்டவன் போலப் பாணன் பேசினான்:
“பெண்களுக்குச் செல்வம், பதவி பெரிதல்ல; நல்ல குணம் இருந்தால் இளவரசியும் ஒன்றுதான். வேலைக்காரப் பெண்ணும் ஒன்றுதான். அது மட்டுமல்ல, ஆண்களில்கூடப் பண்பற்ற இளவரசரும் உண்டு. பண்புமிக்க பாணர், இரவலர்கூட உண்டு. நீதான் பார்த்திருக்கிறாயே! இளவரசருக்கும், என் போன்ற பாணனுக்கும், உன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டானே, அந்தக் குதிரை வீரனுக்கும் எவ்வளவு வேற்றுமை என்பதை நீ அதற்குள் அறிந்திருக்கக் கூடுமல்லவா?” என்றான்.
அவள் அவனை ஆர அணைத்துக் கொண்டாள்: “எனக்கு இப்படி ஒரு பாணனே போதும்; இளவரசர் பதவி உங்களிடம் இல்லை; அவர் குணம் உங்களிடம் இருப்பதை நான் அறிவேன்” என்றாள்.
“உன் அறிவு இப்போது மிகவும் விளக்கம் அடைந் திருக்கிறது. ஆனால், இன்னும் எவ்வளவோ விளக்கம் அடைய வேண்டும்” என்று பாணன் கூறிவிட்டு எழுந்தான்.
அவன் சொற்கள் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவள் மறுநாள் திருமணத்துக்குப் போவதற்குரிய நல்லாடை தேர்ந்தெடுப்பதில் கருத்துச் செலுத்தினாள்.
இத்திருமணத்துக்காக அவள் செய்த ஒப்பனை. எழுமுடியின் மாளிகையிலிருந்த காலத்தில் அவள் செய்த ஒப்பனைகளுக்கு ஈடல்ல. ஆனால் ஒப்பனையின் பயன் அதற்குச் சிறிதும் குறைந்ததாயில்லை. அவள் தளர்ந்த உடையிலும் எளிய ஆடையிலும் அவள் அழகு தெய்வீக அழகாய் அமைந்தது. வேலைக்காரரிடையே வேலைக்காரியாகவே அவள் உடுத்திருந்தாலும், அவள் இயல்பாகவே மாறுவேடம் புனைந்த ஓர் இளவரசி போல் தோற்றினாள்.
மணவறை ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பெருமக்கள் பலர் ஒவ்வொருவராக வந்து வீற்றிருந்தனர். சேரப் பேரரசர்கூட அரசுரிமை ஆடையணிமணியில்லாமல் தனித் தவிசொன்றில் வந்தமர்ந்திருந்தார். மணமக்கள் அமர்வதற்குரிய பூந்தவிசுகளில் ஒன்றில் மாந்தரஞ்சேரல் இரும்பொறை புன்முறுவல் பூத்த இன்முகத்துடன் அமர்ந்திருந்தான். இக் காட்சிகளைக் கண்டு அவள் முற்றிலும் தன்னையே மறந்து நின்றாள்.
பெருமக்களிடையே அவள் எழுமுடியை-தன் தந்தையைக் கண்டு முகம் வெம்பினாள். "அந்தோ! தந்தையருகில் வீற்றிருக்கும் பெருமையைக்கூட இழந்துவிட்டேனே!’ என்று அவள் கலங்கினாள். அச்சமயம்தான் அவள் தன்னைச் சுற்றிப் பார்க்க நேர்ந்தது. தன் கணவனாவது அருகிலிருக்கிறானா என்று அவள் தேடினாள். அவனை எங்கும் காணவில்லை. முற்ற எந்த மதிப்பு இல்லாவிட்டாலும் கேடில்லை. தன் அருகில் தன் கணவன் நின்றிருந்தால், அதுவே தனக்குரிய பெருமதிப்பு என்று அவள் கருதினாள். தன் தந்தை கண்முன் அது தனக்கு ஒரு பெரிய ஆறுதலாகும் என்று அவள் எண்ணினாள்.
தந்தையருகே தன் தாய் வேண்மாள் இருப்பது கண்ட தங்கத் தாமரைக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவளை நோக்கித் தலையமைந்தாள்.
இச்சமயம் திடுமென எங்கும் அமைதி சூழ்ந்தது. பேரரசன் குரல் எழுந்தது. “மணப்பெண்ணை யார் கூட்டி வருவது” என்றார். வேண்மாள் தன் கணவனை நோக்கினாள். எழுமுடியோ மணமகனாக அமர்ந்த மாந்தரஞ்சேரலை நோக்கினான். மாந்தரஞ்சேரல் தவிசிலிருந்து இறங்கித் தங்கத்தாமரை அருகே வந்தான். இப்போது அவளுக்குக் குலை நடுக்கம் எடுத்தது. தன் கணவனை நாடி அவள் கண்கள் சுற்றுமுற்றும் தேடின.
"பாணனைத்தானே பார்க்கிறாய், தங்கத் தாமரை?’ என்றான் மாந்தரன்.
அவள் தலை குனிந்தது. ‘ஆம்’ என்று வாய் முனகிற்று.
‘நீ நிமிர்ந்து பார்த்தால்தானே பாணனை அடையாளம் காண முடியும்?’ என்றான் மாந்தரன்.
எங்கும் ஒரே அமைதி நிலவிற்று. தங்கத்தாமரைக்கு ஒன்றும் புரியவில்லை. மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
பாணன் முகத்துக்கும் மாந்தரன் முகத்துக்கும் உள்ள ஒற்றுமை அவளுக்குத் திடுமெனத் தோற்றிற்று.
“ஆம் நீங்கள் தானா…..!” என்று வியப்புடன் கூவினாள் அவள்.
“ஆம், நான் தான் பாணன். நான் தான் மாந்தரன், பாணனாக எண்ணித் தந்தை உன்னை எனக்குப் பரிசளித்தார். இப்போது மாந்தரனாகவே திரும்பவும் அவர் உன்னை எனக்களிக்கவிருக்கிறார். உனக்கு இசைவு தானே?” என்றான்.
இதற்குள் இன்னியங்கள் முழங்கின. தங்கத்தாமரை கையைப்பற்றி மாந்தரன் சேரல் தன்னருகிலுள்ள பூந்தவிசுக்கு இட்டுச் சென்று அமர்த்தினான். முறைப்படி பேரரசனும் பேரரசியரும், எழுமுடியும் வேண்மாளும் வந்து வாழத்துரைத்தனர். இளவரசன் தங்கத் தாமரைக்கு மாலை சூட்டினான்.
பாணனாக வந்தது மட்டுமல்ல, முரட்டுக் குதிரை வீரணாக வந்து தன்னை அச்சுறுத்தியதும் இளவரசனே என்பதைத் தங்கத் தாமரை விரைவில் உணர்ந்தாள். அந்த இரு மாற்றுருக்களிலும் அவன் அவனைத் தடுத்தாத் கொண்ட இன்னருங் காதலை எண்ணிஎண்ணி அவள் இப்போது மகிழ்ந்தாள். அதில் தாயின் பங்கு எவ்வளவு என்றறிந்தபின் அவள் தாயின் காலடி பணிந்து வணங்கினாள்.
“தந்தை எனக்கு முன்பு தாயும் தந்தையுமாக இருந்தார். இப்போது நீங்கள் எனக்குத் தந்தையும் தாயுமானீர்கள். உங்களிருவருக்கும் நான் கொடுத்த துயரம் பெரிது. அதை மன்னிக்கக் கோருகிறேன்” என்றாள்.
“இப்போதும் அவர்கள் உனக்குத் தொல்லை தருகிறார்கள். யார் தந்தை, யார் தாய் என்பது இப்போது தெரியவில்லை யல்லவா?” என்று கேலி செய்தான் பேரரசன்.
தங்கத்தாமரை இயல்பாகத் தங்கமாகவே இருந்தாள். இப்போது புடமிட்ட பத்தரை மாற்றுப் பசும்பொன்னாக விளங்கினாள்.
மார்கழி
திருவதிகை என்ற ஊரில் ஞிமிலி என்றொரு வணிகன் இருந்தான். அவனுக்குப் போதிய செல்வம் இருந்தது. அவன் மனைவி ஆதிரை நற்குடி நங்கை. அவள் நல்லழகும் நற்குணமும் வாய்ந்தவளாகவே இருந்தாள். ஆனால் அவர்களுக்கு நெடுநாள் குழந்தை இல்லை. நாளடைவில் இந்தக் குறையும் அவர்களை விட்டு அகலத் தொடங்கிற்று. ஆதிரை கருவுற்றாள். கரு முதிர்ந்து வளர வளர, அவளால் வீட்டுவேலைகளைச் செய்ய முடியவில்லை; தன் அறையிலேயே படுக்கையில் கிடந்து புரண்டாள். ஞிமிலி தன் வெளியூர்ப் பயணங்களை நிறுத்தி அவளுக்கு உதவியாக வீட்டிலேயே தங்கினான்.
சூலுண்டவர்களின் இயல்புக்கேற்ப, ஆதிரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பொருளில் ஆர்வங்கொண்டாள். அவள் கணவனும் தன்னால் இயன்ற மட்டும் அவற்றைத் தருவித்து அவள் அவாக்களை நிறைவேற்றி வந்தான். ஆனால் திடுமென ஒருநாள் தனக்கு அகத்திக்கீரை வேண்டுமென்றாள். அகத்திக்கீரை தழைக்கும் காலமல்ல அது. அவன் எங்கும் ஆளனுப்பிப் பார்த்தும் அகத்திக்கீரையே அகப்படவில்லை. இதுகேட்ட ஆதிரை சிரித்தாள். ‘அடுத்த தோட்டட்தில் அகத்தி வளர்ந்திருப்பதைப் பார்த்துத்தான் எனக்கு அவா ஏற்பட்டது. அது இவ்வளவு கிடைக்காத அரும்பொருள் என்பது எனக்குத் தெரியாது’ என்றாள்.
அவர்கள் வீட்டை அடுத்து ஒருதோட்டம் உண்டு என்பதே அதுவரை ஞிமிலிக்கோ, அந்த ஊராருக்கோ தெரியாது. அத்தோட்டம், வானளாவிய மதில்கள் சூழ்ந்தது. மதில்களினுள்ளே என்ன இருந்ததென்று எவரும் பார்த்ததில்லை. அதனுள் செல்லும் வாயிலும் ஊரப்புறமாய் இல்லாமல் காட்டுப்புறமாய் இருந்தது. ஆகவே அதற்குரியவர் யாரென்பதும் எவருக்கும் புதைமறைவாகவே அமைந்தது. ஆனால் ஞிமிலியின் வீட்டின் உள்ளறையில் நெடுங்காலம் அடைத்துக் கிடந்த ஒரு பலகணி இருந்தது. தற்செயலாக ஆதிரை அன்று அதைத் திறக்க நேர்ந்தது. அதன் வழியாகவே அவள் மதிலகமுள்ள தோட்டத்தைக் கண்டாள். நீலநிறக் கடலின் அலைகள்போல அகத்தியின் தளதளப்பான இலைகள் அங்கே ஆடிக் கொண்டிருந்தன. நீல அலைகள்மீது தவழ்ந்தாடும் வெள்ளன்னங்கள் போல அதன் பூக்கள் விளங்கின. அவற்றைப் பார்த்த ஆதிரைக்கு அகத்திக்கீரை மீது அவாவுண்டானதில் வியப்பில்லை.
மனைவியிடமிருந்து தோட்டத்தின் செய்தி கேட்டபின், ஞிமிலியும் பலகணி வழியாகப் பார்த்தான். ஆனால் பலகணியில் ஒரு கைகூட நுழைய முடியாது. மதிலைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான். அதில் ஏற அவன் துணியவில்லை. அதே சமயம் அகத்திக்கீரையின் ஆவல் தணியாமல் நாளுக்கு நாள் ஆதிரையின் உடல் மேன்மேலும் வாடிற்று. இன்னும் வாளா இருந்தால் குழந்தையுடனே தாயும் உலக வாழ்வை நீத்துவிட வேண்டிய நிலை ஏற்படும் என்ற ஞிமிலிக்குத் தோற்றிற்று. இந்த உயிராபத்தில் தன் உயிர் கொடுத்தேனும் அகத்திக்கீரை பெற்றுவிடுவது என்று வணிகன் துணிந்தான்.
விடிய ஒரு யாமத்திலேயே அவன் எழுந்து மதில்களில் ஏறினான். மறுபுறம் எவ்வளவோ ஆழமாகத் தோற்றினாலும் துணிந்து குதித்தான். மடிநிறையக் கீரையைப் பறித்துக் கொண்டு விடியுமுன் வெளியேறினான்.
கண்டதனால் ஏற்பட்ட அவா தின்றதனால் சிறிதும் நிறைவு பெறவில்லை. அது பன்மடங்கு மிகுதியாயிற்று ஞிமிலி நாள் தோறும் விடியற்காலம் மதிலேறி உட்சென்று தன்னாலியன்ற மட்டும் கீரையை மூடை மூடையாகத் தூக்கி வந்தான். ஆதிரையின் உடல் அகத்திக்கீரை தின்றபின் முற்றிலும் நன்னிலை யடைந்து வந்தது. ஆனால், அவள் அவா மட்டும் தீரவில்லை. அதை முற்றிலும் நிறைவேற்றத் தவறினால், எங்கே மீண்டும் பழைய நிலை வந்துவிடுமோ என்று ஞிமிலி அஞ்சினான். எனவே தொடர்ந்து மதிலேறிச் செல்ல வேண்டியதாயிற்று.
தோட்டத்திற் குரியவன் உண்மையில் ஒரு மாயக்காரன். நாள்தோறும் அகத்திக்கீரை குறைவதைக் கவனித்து, அவன் தோட்டத்தை மேன்மேலும் உன்னிப்பாகக் காவல்காத்து வந்தான். ஞிமிலி, கீரையை மூட்டை கட்டிக் கொண்டு மதிலேறப் போகும் சமயம் அவனை மாயக்காரன் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான். ஆகா, மதிலேறி வந்து திருட உனக்கு என்ன துணிச்சல்? இதோ, உன் தலையை அந்தக் கீரைக்கு உரமாக்கி விடுகிறேன், பார்!’ என்று அவன் தன் இடுப்பில் செருகியிருந்த வாளை உருவினான்.
வணிகன் ஒருகணம் பொறி கலங்கியபடி நின்றான். ஆனால் கீரையுணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும். மனைவியின் உருவம், அவள் வயிற்றிலுள்ள இளங்கரு ஆகியவை அவன் மனக் கண்முன் தோன்றின. அவன் மாயக்காரன் காலடியில் விழுந்து அதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு கோவென்றழுதான். ’நான் எனக்காகவோ திருடி பிழைப்பதற் காகவோ இப்படிச் செய்ய வில்லை. விலை கொடுத்தால்கூட அகத்திக்கீரை எங்கும் கிடைக்க வில்லை. கருவுற்ற என் மனைவி அதன் ஆவல் தீராவிட்டால் இறந்துவிடுவது உறுதி. இந்த இக்கட்டில்தான் இது யாருடையது என்று தெரியாமல் மதிலேறிப் பறிக்க நேர்ந்தது. பறித்த கீரைக்கும் இனிப்பறிக்கப் போகும் கீரைக்கும் என்ன விலை கூறினாலும் தருகிறேன். பெரிய மனது வைத்து, என் மனைவி குழந்தையை எண்ணியாகிலும் என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்" என்று மன்றாடினான்.
மாயக்காரன் மனம் சிறிது இரங்குவதுபோலத் தெரிந்தது. அவன் வாளை உறையில் இட்டான். “நான் உன்னைக் கொல்லாமல் விட வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. உனக்கு வேண்டுமளவு கீரையை எப்போதும் பறித்துக் கொள்ளலாம். ஆனால் உன் மனைவிக்குக் குழந்தை பிறந்தவுடன், குழந்தையை நீ என்னிடம் தந்துவிட வேண்டும” என்றான்.
தலைக்குவந்த இடர் தலைமுடியுடன் போயிற்றென்றே வணிகன் கருதினான். மனைவியைப் பற்றிய கவலையில் பிறக்க இருக்கும் குழந்தையைப் பற்றி அவன் மிகுதியாக எண்ணவில்லை. மாயக்காரன் கேட்டபடியே வாக்களித்துவிட்டுச் சென்றான். நடந்த செய்திகளைக் கேட்ட போது ஆதிரை திடுக்கிட்டாள். ஆனால் சிறிது அமைந்து சிந்தித்துப் பார்த்தபின், கணவன் உயிர் தப்பியதே பெரிது என்று அவள் ஆறுதலடைந்தாள். பிறக்கப் போகும் குழந்தை பற்றிய அச்சம் அவளுக்கு மிகுதியில்லை. இதுவரை காத்த தெய்வம் இனியும் காக்கும் என்று அவள் ஆறுதல்கூட அடைந்தாள்.
ஆதிரைக்கு அழகிய பெண்மகவு ஒன்று பிறந்தது. அதன் அழகும் ஒளியும் தாய்தந்தையர் உள்ளத்தைக் களிக்கச் செய்தன. பிள்ளை பிறந்த நாள்போதாறாவது நாள் அதற்குப் பெயர் சூட்டு விழா நடந்தது. உறவினர் ஊரார் அனைவரும் வந்திருந்தனர். அவர்களிடையே மாயக்காரனும் இருந்தது கண்டு ஞிமிலி திடுக்கிட்டான். ஆனால் இதை அவன் மனைவிக்கோ மற்றவர்களுக்கோ கூறி அவர்கள் மகிழ்ச்சியைக் குலைக்கவில்லை. பிள்ளைக்குப் பரிசு கொடுத்தவர்களுள் மாயக்காரனே எல்லார் கவனத்தையும் கவர்ந்தான். ஏனெனில் அவன் பரிசுகள் பலவாகவும் விலையேறியவையாகவும் இருந்தன. உறவினர் குழந்தைக்குப் பெயரிடும் பொறுப்பை அவனிட மேவிட்டனர். அவனும் அதை ஏற்றுப் பிறந்த மாதத்தின் பெயரால் குழந்தையை மார்கழி என்று அழைத்தான்.
விருந்தினரனைவரும் சென்றபின், மாயக்காரன் வணிகனிடம் வந்து குழந்தையைக் கேட்டான். அப்போது தான் அவனை அடையாளமறிந்த ஆதிரை, அவனிடம் பலவாறு கெஞ்சி மன்றாடினாள், பெரும் பொருள் பெற்றுக் குழந்தையை விட்டுப் போகும்படி வேண்டினாள். மாயக்காரன் இணங்க வில்லை. அவன் குழந்தையைக் கொண்டு போன அன்றே ஆதிரை அந்த ஏக்கத்தால் மாண்டாள். இரண்டு மூன்று நாட்கள் மனைவியையும் மகவையும் நினைத்துத் துடிதுடித்த வண்ணம் ஞிமிலியும் உயிர் நீத்தான். தாய் தந்தையருக்கு நேர்ந்த இப்பழிகளை ஒரு சிறிதும் அறியாதவளாகவே குழந்தை மார்கழி மாயக்காரன் வீட்டில் வளர்ந்தாள்.
மாயக்காரன் தன் வாழ்நாளைத் தன் மாயங்களால் எல்லையற்ற காலம் நீட்டிக் கொண்டே வந்திருந்தான். ஒவ்வொரு தலைமுறையிலும் களங்கமற்ற ஒவ்வொரு கன்னியின் வாழ்வைத் தன் வாழ்வுடன் இணைப்பதன் மூலம் அவன் தலைமுறைதோறும் மேன்மேலும் புதுவாழ்வு வாழ்ந்து வந்தான். மார்கழியை இவ்வளவு அரும்பாடுபட்டுப் பெற்றது இந்த எண்ணத்துடனேயே, அவள் அழகு செழித்து வளருந்தோறும் இதுவகையில் அவனுக்குப் பெருங்கவலை ஏற்பட்டது. யாராவது அவள் அழகைக் கண்டு நேசித்த்தாலும், அல்லது அவள் தன்னையன்றி வேறு எவரிடமேனும் பாசம் காட்டினாலும், தான் எதிர்பார்த்த புதுவாழ்வு தனக்குக் கிட்டாமல் போய்விடும் என்று அவன் அஞ்சினான். ஆகவே மார்கழிக்குப் பதினைந்து வயதானதும், அவன் அவளைத் தன் காட்டுத் தோட்டத்தின் நடுவில் இருந்த ஒரு கோபுரத்தில் சிறை வைத்தான். மாயக்காரனைத் தவிர வேறு எந்த மனிதரையும் காணாமல், காட்டில் வளரும் மல்லிகை போல அவள் வளர்ந்தாள்.
கோபுரம் எவரும் ஏறமுடியாத அளவு உயரமாய் இருந்தது. அத்துடன் அதில் ஏறிச்செல்லப்படிகளோ ஏணியோ எதுவும் கிடையாது. அதற்கு வாயிலும் ஒன்றே ஒன்று தான், அந்த ஒன்றும் கோபுர உச்சியிலிருந்த ஒரு பலகணியே, மாயக்காரன் அதில் ஏறிச் செல்லத் தனக்கென ஒரு புதுவகைமுறையையும் பின்பற்றினான். கீழே நின்று அவன் ‘மார்கழி, மார்கழி! உன் கூந்தலைப் பலகணியில் ஒரு சுற்றுச் சுற்றிக் கீழே விரி’ என்பான், அது நீலநிறப் பாம்பு போலச் சுருண்டு சுருண்டு கோபுரத்தின் அடித்தளம் வரை வந்து விழும், அதைப்பற்றிக் கொண்டே அவன் உள்ளே செல்வான். மார்கழியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மீட்டும் இம்முறையிலேயே இறங்கிச் சென்று வந்தான்.
மாயக்காரனின் வஞ்சக எண்ணங்கள் ஒன்றும் மார்கழிக்குத் தெரியாது. தன் தாய் தந்தையரைப் பற்றியோ, அவன் கொடுமைக்கு ஆளாகி அவர்கள் மாண்டது பற்றியோகூட அவள் எதுவும் அறிந்ததில்லை. வேறு மனிதர் எவரையும் காணாததால் அவள் எதுபற்றியுமே கவலையில்லாமல், கூட்டில் பிறந்து கூட்டிலேயே மடியும் வளர்ப்புப் பறவைபோல வாழ்ந்தாள்.
தற்செயலான நிகழ்ச்சி ஒன்று குறுக்கிட்டிராவிட்டால் மாயக்காரனின் புதுவாழ்வு என்ற சிறையிலிருந்து விடுபட்டு அவள் தனக்குரிய புதுவாழ்வை அடைந்தே இருக்க முடியாது.
திருவதிகையடுத்த சேந்தமங்கலம் என்ற நகரில் சோவரையன் என்ற மன்னன் ஆண்டிருந்தான். பகைவர்களால் அவன் நாடு கைப்பற்றப்பட்டது. அவனும் போரில் மாண்டான். ஆனால் அவன் புதல்வன் மானேந்தி திரும்பவும் நாடு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் காட்டில் அலைந்து திரிந்தான். மார்கழி சிறைப்பட்டிருந்த காட்டில் நெடுநேரம் வேட்டையாடிய அலுப்பால் அவன், தோட்டத்தினருகே வந்து தங்கினான். வழக்கப்படி மாயக்காரன் மார்கழியைக் காண வந்தான். இளவரசன் அருகே இருப்பதை அவன் கவனிக்கவில்லை. ஆனால் இளவரசன் அவன் வந்ததைக் கண்டு கொண்டான். அந்த நடுக்காட்டில் அவனுக்கென்ன வேலை என்பதைக் காணும் ஆவலுடன் அவனையே நோக்கியிருந்தான்.
காட்டில் தோட்டம் இருப்பதே வியப்புக்குரியதென்று மானேந்தி எண்ணினான். தோட்டத்தினருகே கோபுரம் இருப்பதை முதலில் அவன் காணவில்லை. கோபுரத்தினருகே சென்று ’மார்கழி, மார்கழி!’என்று மாயக்காரன் அழைத் ததையும், அதன்பின் நிகழ்ந்த விசித்திர நிகழ்ச்சிகளையும் அவன் கண்டு வியப்படைந்தான். கூந்தலின் நீளத்திலிருந்தும், பளபளப் பிலிருந்தும் உள்ளே ஓர் அழகரசிதான் இருக்க வேண்டும். அவள்பேர் தான் மார்கழியாய் இருக்க வேண்டும் என்று அவன் ஊகித்தான். மாயக்காரன் கூந்தலேணி பிடித்துக் கீழே இறங்கிச் சென்றபின் அவன் அங்கேயே நீண்ட நேரம் தங்கினான்.
நாள்தோறும் மாயக்காரன் மாலையில் வருவதும் இரவே போய்விடுவதும் இரண்டொரு நாட்களில் மானேந்திக்குப் புரிந்து விட்டது. அவன் மூன்றாம் நாள் காலையில் துணிச்சலாகக் கோபுரத்தருகே சென்றான். மாயக்காரன் கூப்பிட்டபடியே ‘மார்கழி, மார்கழி’ என்று கூப்பிட்டான். அவன் இளைஞனாதலால், மாயக்காரனைவிட மிக எளிதாகக் கோபுரத்துக்குள் சென்றான்.
மாயக்கரனுக்குப் பதில் வேறோர் ஆண்மகன் வருவது கண்ட மார்கழி அச்சத்துடன் நடுங்கினாள். ஆனால், மானேந்தி ஒரு சில சொற்களால் அவள் அச்சத்தைப் போக்கினான். அரண்மனைகளிலேகூடக் காணமுடியாத பேரழகை அக்காட்டுக் கோபுரத்தில் கண்டு இளவரசன் மதிமயங்கி நின்றான். மாயக்காரனைத் தவிர யாரையும் பார்த்தறியாத மார்கழியும் வீரமும் அழகும் கலந்த இளவரசன் வடிவம் கண்டு மலைப் பெய்தினாள்.
ஒரு சில நாட்களுக்குள் இளவரசனுக்கும் மார்கழிக்கும் எவர் பிரித்தாலும் பிரிய முடியாத நெருக்கமான நட்பும் பாசமும் ஏற்பட்டுவிட்டன. ஒவ்வொரு நாளும் அவன் வரவை எதிர்பார்த்து அவள் உறக்கமற்றவளாகக் காத்திருந்தாள். அதே சமயம் எப்போது விடியும் எப்போது விடியும் என்று அதே தோட்டத்திலேயே இளவரசன் காத்திருந்தான்.
‘இரவெல்லாம் தோட்டத்திலேயே உனக்காகக் காத்திருக்கிறேன்’ என்று ஒருநாள் இளவரசன் மார்கழியிடம் கூறினான். அது கேட்டு அவள் சிரித்தாள். ‘நான் தான் உலகமறியாத பேதை, நாடாளப் போகிறவர்கூட ஏன் இப்படி மதியிழந்து விட்டீர்கள்’ என்று அவள் கேட்டாள்.
அப்போதுதான் இளவரசனுக்குத் தன் மடமை தெரிய வந்தது. இரவில் இங்கே மார்கழியும், தானும் தனித்தனி காத்திருக்கத் தேவையில்லையென்று கண்டான். அதுமுதல் மாயக்காரன் இறங்கிச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் இளவரசன் கோபுரமேறினான். இரவெல்லாம் இளவரசியுடன் இனிப்பாகப் பேசிப் பொழுது போக்கிவிட்டு, பகலில் சிறிது உறங்கியபின் வெளிவந்தான். மாலை நேரங்களில் தன் அரச காரியங்களைக் கவனிப்பான். இப்படி அவர்கள் நாட்கள் இன்பமாகக் கழிந்தன.
மாலைதோறும் மாயக்காரன் இளவரசியிடம் வந்து பேசினான். அவள் அழகும் தளதளப்பும் முன்னிலும் பன் மடங்காகப் பெருகியிருப்பதை அவன் கண்டான். அதே சமயம் தன் உடல் வலிமை மிக வேகமாகக் குறைந்து வந்ததை உணர்ந்து வியப்புற்றான். அவன் மாய ஏற்பாடுகளின்படி அவன் வாழ்வில் இணைக்கப்பட்ட கன்னியின் வளர்ச்சி அவனுக்கு இளமைநலம் அளித்திருக்க வேண்டும். இதை அவன் அறிவான். அது நடைபெறாததன் காரணம் விளங்காமல் அவன் மலைப்புற்றான். ஆகவே மார்கழியின் வாழ்விலே ஏதோ மருமம் புகுந்திருக்கக் கூடும் என்று அவன் ஊகித்தான். ‘வேறு யாராவது இங்கே வருகிறார்களா?’ என்று அவன் கேட்டான்.
மார்கழியின் உடல் நடுக்கம் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால், அவள் நாவார எதையும் வெளியிடவில்லை. மாயக்காரனைத் தவிர யாரையும் தான் கண்டதில்லை என்று மறுத்தாள்.
அவள் பொய் சொல்கிறாள் என்பது பற்றி அவனுக்கு இப்போது ஐயப்பாடு இல்லை. அவள் வாழ்வு தன்னைவிட்டு எவ்வளவு தூரம் சென்று விட்டது என்பதை அந்தப் பொய்யே அவனுக்குத் தெரிவித்தது. ஆயினும், அவன் அமைதியிழக்க வில்லை. ‘பொய்யைப் பொய்யால் தான் வெல்ல வேண்டும். ஆத்திரத்தால் வெல்ல முடியாது’ என்பது அவன் தத்துவம், அவன் அவளை ஐயுறாததுபோலக் காட்டிக் கொண்டான். ‘என் உடல் வலிமை கெட்டு வருகிறது. அதற்கு என் அன்பைவிட உன் அன்பு குறைவாய் இருப்பதே காரணம் என்று கருதுகிறேன்’ என்று மட்டும் நயமாகக் கூறினான்.
பேச்சினிமையில் மார்கழி தன்னை மறந்தாள்.
“நீங்கள் கூறுவது சரியல்ல. ஏனெனில் நீங்கள், சொல்லு கிறபடி புதிதாகப் பழகியவருக்குத்தான் வலிமை இன்னும் குறைவாயிருக்க வேண்டும்” என்றாள்.
சொல்லி வாய் மூடுவதற்குள் அவள் தன் பிழையை உணர்ந்து கொண்டாள். ஆனால், சொல்லிய சொல்லைப் பின் வாங்குவது எப்படி? மாயக்காரன் முகம் ஒரு கணத்தில் படமெடுத்த நாகமாயிற்று, அவளது நீண்ட கூந்தலை அவன் பற்றி இழுத்தான். கையிலிருந்த வாளால் அதை ஒட்ட அறுத்தான். மொட்டைத் தலையுடன் அவளை அவ்விடத்தி லிருந்து அகற்றி ஆள் நடமாட்டமற்ற ஒரு பாலைவனத்தின் நடுவில் தன் மாயத்தால் கொண்டு விட்டான். "எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம்’ என்றறியாமல் அவள் பாலைவனத்தில் திசை தெரியாது சுழன்றாள்.
மாயக்காரன் அத்துடன் விடவில்லை. தன் புதுவாழ்வை அழித்த இளைஞன் யாராயினும் கண்டறிந்து பழிவாங்க அவன் துடிதுடித்தான். கத்தரித்தெடுத்த மார்கழியின் கூந்தல் அவனிடமிருந்தது. அதனுடன் அவன் மீண்டும் கோபுரத்தினுள் சென்று தங்கினான்.
நடந்தது எதுவும் தெரியாத இளவரசன் வழக்கம் போலக் கோபுரத்தடியில் வந்து காத்திருந்தான். மாயக்காரன் இறங்கிச் சென்ற பின்பே அவன் மேலே ஏறுவது வழக்கம், ஆனால், அன்று நெடுநேரம் வரை காத்திருந்தும் யாரும் இறங்கி வரவில்லை. அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. விடியுமுன் சற்றுத் துணிந்து, "மார்கழி, மார்கழி’ என்று கூவினான். அதற்கே காத்திருந்த மாயக்காரன் கூந்தலின் ஒரு கோடியைப் பலகணியில் கட்டி மறுகோடியைக் கீழே வீசினான். இளவரசன் மனமகிழ்வுடன் அதைப் பற்றி மேலே ஏறினான்.
கோபுரத்தின் உட்கூடத்தில் அரையிருள் சூழ்ந்திருந்தது. மாயக்காரன் மார்கழியின் ஆடைகளைச் சுற்றிக் கொண்டு நின்றிருந்தான். அவனையே மார்கழி என்ற நினைத்த இளவரசன் அவனை ஆர்வத்துடன் அணைக்க முனைந்தான். ‘இன்று ஏன் மாயக்காரன் வரவில்லை!’ என்று பேச்சையும் தொடங்கினான். மாயக்கரனுக்கு இப்போது துயரமும் கோபமும் பீறிட்டெழுந்தன. அவன் இளவரசனை மனங்கொண்ட மட்டும் அடித்துத் துவைத்தான். அவன் முகத்தில் குத்திய குத்துக்களால் கண்கள் குருதி கக்கிக் குருடாயின. இந்த நிலையில் மாயக்காரன் அவனைக் குற்றுயிருடன் கோபுரத்திலிருந்து கீழே எறிந்தான். அத்துடன் அவன் ஒழிந்தான் என்ற உறுதியில் தன் வீடு சென்றான்.
தன் மாயங்கள் பலிக்காத காரணத்தினால், மாயக்காரன் புது வாழ்வு முறிவுற்றது. ஒரு தலைமுறை வாழ்நாள் புதுவாழ்வு தொடங்காமலே முடிவுற்றதால் ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவன் குற்றுயிராய் வதைப்பட்டு மாண்டான். அதே சமயம் அவனால் வீசியெறியப்பட்ட இளவரசன் மானேந்தியின் உடலிலிருந்து அவன் எதிர்பார்த்தபடி உயிர் போகவில்லை. பலகணியில் கட்டியிருந்த மார்கழியின் கூந்தலே அவன் விழும் போது அவனைச் சுற்றிக் கொண்டது. கட்டு இப்போது தளர்ந்திருந்ததனால், அவன் சுமை தாளாமல் விழுந்தது. மயிர்ச் சுருளுடன் சுருண்டு விழுந்ததால் அவன் உடலில் முன்னிருந்த நோவன்றிப் புதிதாக எத்தகைய நோவும் ஏற்படவில்லை. அத்துடன் தன் காதலியின் நினைவை ஊட்டிய தலைமுடியே தன் உயிரும் காத்ததை எண்ணி அதை ஆர்வத்துடன் போர்வையாகச் சுருட்டிப் போர்த்த வண்ணம் தன் உடல் தேறுமட்டும் அவன் அங்கேயே கிடந்தான்.
எந்தக் கணமும் மாயக்காரன் திரும்பி வந்து தன்னைக் கொன்றுவிடக்கூடும் என்று அவன் அஞ்சினான். ஏனெனில் மாயக்காரன் இறந்தது அவனுக்குத் தெரியாது. உடல் தேறியதும் அவன் எழுந்து தட்டித் தடவி நடந்தான். கண் மட்டும் தெரியவில்லை. அந்நிலையில் என்ன செய்வது, மார்கழியை எங்கே தேடுவது என்று விளங்காமல் அவன் திகைத்தான்.
காட்டிலே திக்குத்திசை தெரியாமல் அலைந்து திரிந்து எப்படியோ அவன் மார்கழியின் தாய் தந்தையர் வாழ்ந்திருந்த திருவதிகை வந்து சேர்ந்தான்.
இங்கே அவன் எங்கும் தட்டித் தடவிக் கொண்டு சென்று இரந்துண்டான். அன்புடன் உணவு கொடுப்பவரிடம் அவன் ‘மார்கழி’ என்ற இளநங்கையைப் பற்றிக் கேட்பான். சிலர் தமக்குத் தெரியாதென்று கைவிரித்தனர். ஆனால், முதியவர் சிலர் வியப்புடன் அவனையே திருப்பிக் குறுக்குக் கேள்வி கேட்டனர்.
அவர் மார்கழியைப் பற்றித் தான் அறிந்ததை அவர்களுக்கு உரைத்தான். அவர்களிடமிருந்து பல ஆண்டுகளுக்குமுன் ‘மார்கழி’ என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் காணாமல் போய்விட்டது என்பதையும், தாய் தந்தையர் அத்துன்பத் தாலேயே இறந்துவிட்டனர் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். அத்துடன் மாயக்காரன் இருந்த இடமும் அவனுக்குக் கதைப் போக்கிலிருந்தே தெரிந்துவிட்டது.
அவன் கண்கள் இதற்குள் உட்புண்ணாறி வந்தன. அவனிடம் பழகிவிட்ட பெரியார்களுள் ஒருவர் மருத்துவர். மேலும் பண்டுவம் பார்த்து, அவன் கண்பார்வை முழுவதையும் அவர் மீட்டுத் தந்தார்.
கண்பார்வை வந்ததும் மானேந்தியின் முதல் வேலை மாயக்காரன் வீட்டில் சென்று உளவு பார்ப்பதாகவே இருந்தது. ஊரில் பெரியாரான சில நண்பர்களுடன் அவன் தோட்டத்து மதில் ஏறி உள்ளே நுழைந்து பார்த்தான். பயிர்கள் பார்ப்பார் இல்லாமல் அழிந்து கிடந்தன. மாயக்காரன் உடலும் வாடி வதங்கி ஈ எறும்புகளால் அரிக்கப்பட்டு உருவற்றுக் கிடந்தது. மாயக்காரனைப் பற்றிய அச்சம் நீங்கி அவர்கள் மார்கழியைப் பற்றி புலனறிய எங்கும் தேடினர். எதுவும் அகப்படவில்லை.
திருவதிகை சேத்தமங்கல மன்னன் ஆட்சியின் கீழேயே இருந்தது. மானேந்தி அதன் உரிமை இளவரசன் என்றறிந்த திருவதிகைப் பெருமக்கள் அவனுக்கு படையுதவி தந்து அரசனாக்குவதாக உறுதி கூறினர். ஆனால், மார்கழியைத் தேடிவந்த பின்தான் வாழ்வில் தனக்கு ஈடுபாடு ஏற்படும் என்று கூறிவிட்டு. அவன் மீண்டும் நாடோடியாகப் புறப்பட்டான்.
இரண்டாண்டுகள் பல நாடுகளும் காடுகளும் சுற்றிய பின்பு மானேந்தி, மார்கழி அலைந்து திரிந்து பாலைவனத்தை அணுகினான்.
பாலைவனத்துக்கு வரும்போதே மார்கழி கருவுற்றிருந்தாள். பாலைவனத்தில் அவளுக்கு ஆணும் பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் இருவர் பிறந்தனர். பாலை நீரூற்று பேரீத்தம் பழங்களும் ஒட்டகைப் பாலும் உண்டு, அரு முயற்சியுடன் அவள் பிள்ளைகளை வளர்த்தாள். பாலையில் பிறந்ததனால் அவர்களுக்கு செம்பாலை என்றும் பொலம்பாலை என்றும் பெயரிட்டாள்.
மானேந்தி பாலைவனத்தில் அலைந்து களைப்புடன் ஒரு கருவேல மரத்தடியில் சாய்ந்து கண்ணயர்ந்திருந்தான் அச்சமயம் குழந்தைகளின் குரல் கேட்டு அவன் திடுக்கிட்டெழுந்தான். செந்நாய் ஒன்று சிறுமியை சுற்றிவளைக்க முயன்று கொண்டிருந்தது. அச்சிறுமியின் வயதே உடைய சிறுவன் கவண் கல்லை வைத்து அதன் மீது குறிபார்த்துக் கொண்டிருந்தான். மானேந்தி தன் வாளால் செந்நாயை ஒரு நொடியில் வெட்டி வீழ்த்திவிட்டுக் குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டான். அதற்குள் சிறுவனும் வந்து ‘மாமா, மாமா’ என்று காலைச் சுற்றிக் கொண்டான்.
"நீங்கள் யார் குழந்தைகளே! இந்த ஆளற்ற பாலைக்கு எப்படி வந்தீர்கள்? உங்கள் பெற்றோர் எங்கே? என்று அவன் குழந்தைகளைக் கேட்டான். பொலம்பாலை ஒன்றும் பேசத் தெரியாமல் அவனையே மருண்டு மருண்டு பார்த்து விழித்தாள். ஆனால், சிறுவன் கணீரென்று விடையிறுத்தான்.
“நாங்கள் சிறுபிள்ளைகள், மாமா! இதற்கெல்லாம் மறுமொழி கூற எங்களுக்குத் தெரியாது. எங்கள் அம்மா அதோ தெரிகிற ஈத்தங்குப்பத்தில் இருக்கிறாள். வாருங்கள்! உங்களுக்கு எல்லாம் விளக்குவாள்” என்றான்.
குழந்தைகளின் தாயும் மானேந்தியும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். பின் திடீரென மானேந்தியை அடையாளம் கண்டு, மார்கழி அவன் காலடியில் தலைபுதைத்து அழுதாள். ‘மாமா, மாமா’ என்று சுற்றிய குழந்தைகளை அவள் எடுத்து அவனிடம் தந்தாள். ‘இவர் மாமா அல்ல. இவர்தான் உங்கள் அப்பா!" என்று குழந்தைகளிடமும், ’இந்தச் செல்வங்கள்தாம் நம் பிள்ளைகள்’ என்று மானேந்தி யிடமும் கூறினாள். மானேந்தி மனைவியையும் மக்களையும் ஆர அணைத்தெடுத்து இன்பக் கண்ணீராட்டினான். திருவதிகை வந்தது, மார்கழியின் தாய் தந்தையர் வரலாறு அறிந்தது முதலான செய்திகளை எல்லாம் மானேந்தி மார்கழிக்கு எடுத்துரைத்தான். அத்துடன் தான் இன்னான் என்பதையும் முதல் தடவையாக அவளுக்குக் கூறினான்.
உலகமறியா இளநங்கiயாகவே பாலைவனத்துக்கு வந்த மார்கழிக்கு அந்தப் பாலைவனம் ஓர் உலகப் பள்ளியாய் அமைந்திருந்தது. அதில் பிறந்த பிள்ளைகளுடனும், அதிலே தனக்குப் புது வாழ்வளித்த கணவனுடனும் அவள் திருவதிகை வந்து சேர்ந்தாள். ஏற்கெனவே மானேந்தியிடம் பாசங் கொண்டிருந்த திருவதிகை மக்களுக்கு, மார்கழியின் ஆர்வக் கதை ஒரு புதிய இன்பக் காவியமாயிற்று மானேந்தியையும் மார் கழியையும் அரகரிமை பெற செய்யும் முயற்சியில், திருவதிகை மட்டுமன்றிப் பல அண்டையயல் நகரங்களும் ஒத்துழைத்தன. சேந்தமங்கலத்தின் நகராட்சி மன்றமே இடைக்கால மன்னனை வெளியேற்றி அவர்களைத் தவிசேற்றி மகிழ்ந்ததது.
சேந்தமங்கல அரசிலேயே செம்பாலை திருவதிகை இளவரசனாகச் சிறிய பட்டம் கட்டப் பெற்றான். பொலம்பாலை சோழப் பேரரசுக்குரிய இளவரசனையே மணம் புரிந்து முழுநில அரசியானாள்.
அன்பரசி
களக்காடு என்னும் பழம்பதியில் பண்பார்ந்த வேளாண்குடி ஒன்று உண்டு. அதன் புகழ் மரபுக்குரிய செல்வங்களாக ஆடலழகன் என்ற நம்பியும் பாடுமாங்குயில் என்ற நங்கையும் வளர்ந்து வந்தனர். சிறு பருவத்திலிருந்தே அண்ணன் தங்கையர் பாசத்துக்கு அவர்கள் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக விளங்கினர். அதற்கேற்ப இருவரும் ஒரே வணிகக் குடும்பத்தில் வாழ்க்கைத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர். ஆடலழகன் வாழ்க்கைத் துணைவியாக அமைந்த வணிக நங்கை பண்பாயிரம் என்பவள். அவள் பாடுமாங்குயிலின் ஆருயிர்ப் பள்ளித் தோழி; அதே சமயம் பண்பாயிரத்தின் அண்ணன் பண்ணன் பாடிலி பாடுமாங்குயிலை மணம் நேர்ந்தான்.
பண்பாயிரத்துக்கு அருண்மொழி என்ற புதல்வனும், பாடுமாங்குயிலுக்கு அன்பரசி என்ற புதல்வியும் பிறந்தனர். இரு குழந்தைகளும் தொட்டில் தவழும் பருவத்திலேயே இரு திறத்துப் பெற்றோர்களும் அவர்கள் வருங்கால வாழ்வுகளை இணைய விடுவதென்று ஆர்வக் கனவு கண்டனர். அத்துடன் அருண்மொழி குழந்தை பருவம் கடக்கும் முன்பே பண்பாயிரம் உலக வாழ்வு துறக்க நேர்ந்தது. தாயற்ற அண்ணன் பிள்ளை பாடுமாங்குயிலைத் தன் குழந்தையுடன் படிக்க வைத்துத் தானே பேணி வளர்த்தாள். அச்சிறுவர் விளையாட்டுத் தோழமையில் தன் அண்ணனும் தானும் கொண்ட ஆர்வக் கனவின் நிழல் கண்டு. அண்ணியின் பிரிவை அவள் ஒருவாறு ஆற்றியிருந்தாள்.
இரு குடும்பங்களுக்கிடையேயும் நிலவிய இந்த இனிய பாசத் தொடர்பு இப்படியே நீடிக்கவில்லை. மனைவி இறந்த பின் ஆடலழகன் வாழ்க்கையில் கசப்புற்றுக் குடும்பக் காரியங்களில் கவனம் செலுத்தாது ஒதுங்கினான். இதனால் அவன் செல்வம் கரைந்து வறுமைக்கு ஆட்பட்டான். அதே சமயம் பண்ணன் பாடிலியின் செல்வநிலை நாளுக்குநாள் உயர்வுற்றது. இவ்வகையில் அவன் பெரியப்பன் மகனான பண்ணன் சேந்தன் அவனுக்குப் பெரிதும் உதவினான். பண்ணன் சேந்தன் தையல்நாயகம் என்ற உயர்குடிச் செல்வ நங்கையை மணந்தவன். அவளுடனே வாரியூர் என்ற நகரில் அவள் தந்தை இல்லத்திலேயே செல்வாக்குடன் வாழ்ந்தவன். பண்ணன் பாடிலி அவர்கள் இருவருக்கும் நல்லவனாக நயந்து நடந்ததால் அவர்கள் அவனை வாரியூருக்கே அழைத்து, அங்கே புதிய தொழிலகமும் செல்வமும் செல்வாக்கும் பெறும்படி ஏற்பாடு செய்தனர். இப்புதுத் தொடர்பு ஆடலழகன் வறுமை யிலிருந்து பண்ணன் பாடிலியைத் தொலைவாக்கிற்று. குழந்தை அருண்மொழி மீண்டும் தந்தையிடமே சென்று வாழ நேர்ந்தது.
ஆண்டுகள் சென்றன. அருண்மொழி இளமைப் பருவத்தின் வாயிலைச் சென்று எட்டியிருந்தான். ஆனால் அதற்குள் ஆடலழகன் செல்வ நிலையைப் போலவே உடல் நிலையும் தேய்வுற்றுத் தன் இறுதிப் படுக்கையில் சாய்ந்தான். இறுதி மூச்சுவரை அவன் மைந்தனிடம் தன் தங்கையைப் பற்றியே பேசினான்.
“நீ தாயற்ற பிள்ளையாய்விட்ட சமயத்தில் உன் அத்தைதான் உன்னைத் தாயாக வளர்த்தாள். இனி உனக்கு அவளே தாயாகவும் தந்தையாகவும் விளங்குவாள். அத்துடன் நீ குழந்தையாய் இருக்கும் போதே உன் மாண்ட தாயார் சான்றாக நாங்கள் இருவரும் உன்னை அன்பரசிக்கு உரியவனாக்கி யிருக்கிறோம். அந்த எண்ணத்திலேதான் உன்னை நான் வளர்த்திருக்கிறேன். அதே எண்ணத்துடன் உன் அத்தையும் அன்பரசியை வளர்த்து வருகிறாள். ஆகவே, நீ அத்தை வீடு சென்று இரு குடும்பத்துக்குமுரிய கடமைகளையும் ஆற்றி அத்தை மாமன் மனம் மகிழ வாழ்வாயாக.”
இந்த அறிவுரையுடன் ஆடலழகன் இயற்கையின் மடியில் தலைசாய்த்தான்.
அருண்மொழி தாயுடன் தந்தையும் இழந்து தன்னந் தனியனாய் மறுகினான். பின் தந்தையின் கடைசி அறிவுரையைக் கடைப்பிடித்து வாரியூருக்குப் புறப்பட்டு, மாமன் கடை இருக்குமிடம் கேட்டறிந்து மாமனை நேரில் சென்று கண்டான்.
பண்ணன் பாடிலி எப்போதும் தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருப்பவன். குடும்பத்தில் அவன் தலையிடுவ தில்லை. அதே சமயம் குடும்பப் பாசமும் அவனுக்குக் கிடையாது. எனவே அவன் மருமகனை ஆர்வமாக வரவேற்கவில்லை. அத்துடன் அவனை வெறுப்பதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவனை வீட்டுக்கு இட்டுச் சென்று பாடுமாங்குயிலினிடம் ஒப்படைத்தான். அதோடு தன் கடமை தீர்ந்துவிட்டதாக அவன் கருதினான். ஆனால் பாடுமாங்குயில் அவனைத் தன் அண்ணன் பிள்ளையாகவும் தன் வளர்ப்புக் குழந்தையாகவும் பாராட்டி ஆர்வத்துடன் வரவேற்றாள். தந்தை பிரிவுக்கு ஆறுதல் தேறுதல் கூறிக் கனிவுடன் அவனுக்கு ஆதரவு நல்கினாள்.
அன்பரசியை அவன் சந்தித்த போது, இருவரும் முதலில் ஒருவரை ஒருவர் வியப்பார்வத்துடன் நோக்கினர்.
“ஆ என் பழைய அருண்தானா நீ…ங்கள்? அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்…..டீர்களே” என்று அவள் தொடங்கினாள். “உங்களைக் காண மகிழ்ச்சி” என்று முடித்தாள்.
‘நீ’ என்ற பழைய சொற்பழக்கம் நாவில் வந்து, நீங்கள் என்று வலிந்து மாறுவதை அவன் உள்ளூர உவகையுடன் கவனித்தான்.
“ஏன் அன்பு! நீயும்தான் பழைய அன்பாயில்லை, முற்றிலும் மாறி விட்டிருக்கிறாய். இனி நானும் விளையாட முடியாது. நீயும் விளையாட அழைத்தால் வருபவளாய் இல்லை” என்று தானும் தன் பழைய விளையாட்டுத் தோழமையைச் சுட்டிப் பேசினான் அருண் மொழி.
“அருண் பசியுடனும் அயர்வுடனும் இருக்கிறான், அன்பு! போய் அவனுக்குச் சிற்றுண்டி குடிநீர் கொண்டு வரச் சொல்லு; அப்புறம் பேசலாம்” என்று அவளை ஏவினாள் பாடுமாங்குயில்.
சிறுவர் தோழமை இளமைப் பாசமாக வளர்வதற்கு நெடுநாளாகவில்லை. முதற் சந்திப்பிலேயே அருண்மொழி அன்பரசியை வியப்பார்வத்துடன் கண்ணிமையாது நோக்கி யதையும், அது கண்ட அன்பரசியின் முகம் நாணத்தாலும் உள்ளுவகையாலும் சிவந்ததையும் பாடுமாங்குயில் கூர்ந்து கவனித்துக் கொண்டாள். மேலும் வீட்டில் எத்தனையோ வேலையாட்கள் இருந்தாலும் அருண்மொழியின் வேலையை வேறு எவரும் செய்யவிடாமல் அன்பரசி தானே முந்தி நின்று அவற்றை முடித்து வந்தாள். இதுமட்டுமன்று. அவன் உடுத்திய ஆடை அணிகளுடனேயே வந்திருந்தான். தன் தந்தையிடமோ தாயிடமோ அதுபற்றி அவன் கேட்க நேரும் என்று அவள் அறிந்தாள். அப்படிக் கேட்க விடாமல் அவள் தானே அவற்றைத் தன் செலவுக்கென்று பெற்ற பணத்தைக் கொண்டு வாங்கி அவன் பெட்டியில் அடுக்கி வைத்தாள். இங்ஙனம் தாயின் ஆர்வம் கூட எதிர்பார்த்திராத அளவில் அன்பரசியின் உள்ளம் அருண் மொழியைச் சுற்றி இழைந்தது.
பண்ணன் பாடிலி எதையும் கணக்குப் பார்ப்பவன் என்பது பாடுமாங்குயில் அறிந்ததே. ஆகவே தன் மருமகனை அவன் ஓர் ஏழை உறவினனாக நடத்த அவள் விடவில்லை. தொழிலகத்தைப் பார்க்க ஓர் ஆள் வேண்டிவந்த சமயம், அவள் அருண்மொழிக்கே அவ்விடத்தைக் கொடுக்கும்படி பரிந்து பேசி, அவனை அதில் அமர்த்தினாள். அருண்மொழி எல்லாருக்கும் நல்லவனாக நடந்து கொள்ளும் இயல்புடையவன். ஆகவே வீட்டில் மற்ற எல்லாருக்கும் உறவினனாகவும், பண்ணன் பாடிலிக்கு மட்டும் தொழிலகத்தில் தொழில் நேரத்தில் தொழிலாளியாகவும் வாழ்ந்துவந்தான். இந்த நிலையிலேயே அன்பரசியின் உள்ளத்தில் உள்ளார்ந்த பாசத்தை அவன் முழுதும் காண வாய்ப்பு ஏற்பட்டது.
தன் காரியங்களில் அன்பரசி காட்டும் அக்கறையை அருண்மொழி அறியாமலில்லை. அவன் உள்ளமும் ஏற்கெனவே அவளிடம் வரவர ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நீடித்த உழைப்பின் பயனாக ஒன்றிரண்டு நாட்கள் அவன் தொழிலகம் போக முடியாமல் இருந்தது. அச்சமயம் அன்பரசி, தானே அவனுக்குத் தாயாகவும் தாரமாகவும் தங்கையாகவும் பிள்ளையாகவும் இருந்து, அவன் உடலும் உளமும் பேணி ஆதரவு செய்தாள். அந்த அன்புக்கனிவின் இனிமையில் அருண்மொழி தன் நோயை மறந்தான். மேலும் அவள் தோழமையின் இன்பத்தை இன்னும் பெறும் ஆர்வத்தினால் அவன் தன் நோய் பெரிதும் நீங்கிய பின்னும், அது நீடிப்பதாகப் பாசாங்கு செய்யத் தொடங்கினான்.
அவன் குறிப்பறிந்து அன்பரசி உள்ளூர எல்லையிலா மகிழ்ச்சி கொண்டாள். ஆயினும் தொழிலகத்தில் தந்தை மனம் கோணாமல் நடப்பது அவன் வருங்கால வாழ்வுக்கும் தன் வருங்கால அமைதிக்கும் இன்றியமையாதது என்று அவள் கருதினாள். ஆகவே மெல்ல அவனிடம் தொழிலகம் செல்வது பற்றி வலியுறுத்திப் பேசினாள்.
“அன்பரே, உடல்நோய் காரணமாக இரண்டு மூன்று நாட்கள் தொழிலகத்துக்கு. நீங்கள் செல்லவில்லை. தொழில் எப்படியிருக்கிறதோ, எப்படி நடக்கிறதோ பார்க்க வேண்டாமா? இன்றாவது நீங்கள் தொழிலகம் சென்றால்தான் நல்லது என்று நினைக்கிறேன்” என்றாள் அவள்.
“இன்றே போக வேண்டுமா? எனக்கு உடம்பு இன்னும் முற்றும் குணமாகவில்லை எனறு நினைக்கிறேன். நாளை போகிறேனே” என்றான்.
அன்பரசி அவன் கன்னத்தைத் தடவினாள்.
“அப்பா கோபிப்பார். உடல் இன்னும் குணமாகாததற்குக் காரணம் எனக்குத் தெரியாததல்ல. அது அவருக்கும் தெரிந்து விடக் கூடாது. அத்துடன் நான் இன்று உங்களுடன் இருக்கப் போவதில்லை. அம்மாவை இனியும் தனியே வீட்டு வேலைகளைப் பார்க்கும்படி விட முடியாது. நான் அம்மாவுடன் சென்று ஒத்தாசை செய்யப்போகிறேன்” என்றாள்.
அவள் தன் குறிப்பறிந்து தன் நன்மைக்காகவே கண்டிப்பாய் இருப்பது கண்டு அவன் ஆண்மை கிளர்ந்தெழுந்தது. “என்னை மன்னிக்க வேண்டும் அன்பு! உன் நேசம் விலையற்றது, அதற்கு நான் இனித் தகுதியுடையனாயிருப்பேன்!” என்ற கூறி எழுந்தான்.
அவள், அவன் கையை ஆர்வத்துடன் அழுத்தினாள். “மன்னிக்கப்பட வேண்டியவள் நான்தான்; நீங்கள் அல்ல. உங்களை என் கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ள முடியுமானால் அதைவிட தனக்கு மகிழ்ச்சி தருவது எதுவும் இல்லை. அத்துடன் உண்மையிலேயே உங்கள் உடல் இன்னும் முற்றிலும் குணமடைந்து விடவில்லை. நேரமும் மந்தமா யிருக்கிறது. ஆகவே போகும்போது குடையும் போர்வையும் எடுத்துச் செல்ல மறந்துவிடாதேயுங்கள்” என்று அன்பரசி நயந்துரைத்தாள். போர்வையை அவன் தோளில் இட்டு குடையைக் கையில் தந்து அவனுக்கு விடை தந்து அனுப்பினாள்.
அன்பரசியின் அன்பொளி அருண்மொழியைச் சுற்றிலும் தொழிலகத்திலும் வீட்டிலும் எங்கும் உலவிற்று. தொழிலின் கடுமை இதுமுதல் அவனுக்கு ஒரு சிறிதும் கடுமையாகத் தோன்ற வில்லை. அதற்கான தகுதிபெற அன்பரசியின் தோழமையைக் கூட அவன் துறக்கத் தயங்கவில்லை. அவள் வியப்படையும் வண்ணம் அவன் தொழிலக நேரம் வருமுன்பே தொழிலகம் செல்லப் புறப்படத் துணிந்தான். அதுபோலத் தொழிலக நேரம் கழித்தும் தொழிலக வேலையில் ஈடுபட்டிருந்து நேரம் சென்று வீடு திரும்பினான்.
பாடுமாங்குயிலே அவன் புதிய போக்குக் கண்டு ஒருநாள் அவனை அழைத்துப் பரிவுடன் பேசினாள்.
“அருண், நீ என் அண்ணன் பிள்ளைதான் என்பதில் ஐயமில்லை. கடமையில் அழுந்தி உடலைக் கவனிக்காமல் இருந்து விடுகிறாய். தொழிலகம் உன் மாமா தொழிலகந்தானே! ஏன் இப்படி இரவும் பகலும் சருகாய் உழைத்து உடம்பை அலட்டிக் கொள்ள வேண்டும்? நேரத்தில் சென்று நேரத்தில் வந்தால் என்ன?” என்று நயத்துடன் கேட்டாள்.
“மாமா தொழிலகம் என்றால் என் தொழிலகம்தானே, அத்தை? அதற்கு நானல்லாமல் வேறு யார் உழைப்பார்கள்? அன்பரசி ஆணாயிருந்திருந்தால் எப்படி உழைப்பாளோ, அப்படி நான் உழைக்க வேண்டாமா?” என்றான் அவன்.
அன்பரசி இதைக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவள் உள்ளம் பாகாய் உருகிற்று. ஆயினும், அவள் அதை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொண்டு வெளிப்படக் கிளர்ச்சியுடன் பேசினாள்.
“நான் ஆணாயிருந்தாலும் எப்படியும் சமாளித்துக் கொள்வேன். ஆனால், நிங்கள் பெண்ணாயிருந்தால் என்ன ஆவீர்களோ?” என்றாள்.
அருண்மொழியின் உழைப்பார்வம் முற்றிலும் வீணாய் விடவில்லை. குடும்பப் பாசமற்ற பண்ணன் பாடிலியைக் கூட அது அவன் மீது பரிவு கொள்ளச் செய்தது. மனைவியும் மக்களும் அவன் பக்கம் சாய்வதை அவன் ஏற்கெனவே அறிந்திருந்தான். இப்போது அவனும் அருண்மொழியைத் தன் குடும்பத்துடன் சேர்த்துக்கொள்ள உள்ளூர இணக்கம் கொண்டான். பாடுமாங் குயிலையும் அன்பரசியையும் போலவே அவனும் படிப்படியாக அருண்மொழியிடம் நேச உணர்ச்சியுடன் பழகினான். குடும்பத்தில் ஒருமனமும் இன்னமைதியும் மெல்லப் படர்ந்தன.
பண்ணன் சேந்தனும் அவன் மனைவி தையல் நாயகமும் ஒருநாள் பண்ணன்பாடலியின் இல்லத்துக்கு வந்திருந்தனர். அருண்மொழி மாமன் குடும்பத்துடன் குடும்ப உறுப்பினனாக ஒட்டி வாழ்வது கண்டு பண்ணன் சேந்தன் வியப்புற்றான். ஆனால் அவனைவிட அவன் மனைவிக்கு இது கசப்பாக இருந்தது. அவளுக்குக் குழந்தை இல்லாததால், பண்ணன் பாடிலியின் குடும்பத்தையே தனதாக்கி ஆள எண்ணியிருந்தாள். அதன் செல்வ நிலையையும் மதிப்பையும் உயர்த்தி வேறோர் உயர் குடும்பத்துடன் அன்பரசியை இணைக்க வேண்டுமென்பது அவள் பேரவாவாயிருந்தது. வாரியூரில் நகரவைத் துணைத் தலைவராயிருந்த குருகூரார் செல்வத்தாலும் பதவியாலும் உயர்ந்த குடியைச் சேர்ந்தவர். அவர் குடியையே தையல் நாயகம் அன்பரசிக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள். காசு பணமற்ற ஓர் ஏழை இளைஞனுக்காகப் பெருந் தொடர்பைக் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. மெல்லப் பண்ணன் பாடிலியின் உள்ளத்தையும் பாடுமாங்குயிலின் உள்ளத்தையும் இத்திசையில் திருப்ப அவள் முயற்சி செய்தாள்.
“பாடு, உன் இரக்க உள்ளத்துக்கு நான் உன்னை மெச்சுகிறேன். ஆனால், என்றும் நீ இப்படி ஒருவனை வைத்துத் தற்காக்க முடியுமா? மேலும் நம் தொழிலகத்திலே இருந்தால் அவன் தனக்கேற்ற நல்ல முயற்சியில் எப்படி ஈடுபட முடியும்? விரைவில் அவனே ஒரு தொழில் பார்க்கும்படி தூண்டி அவனுக்கு ஏற்ற ஒரு பெண்ணையும் தெரிந்தெடுக்கும்படி விடுவதுதானே?” என்றாள் தையல் நாயகம்.
பாடுமாங்குயில் அவள் மனப்போக்கை ஓரளவு ஊகித்து உணர்ந்தாள். ஆனால், அதை உணர்ந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை“. அவன் எனக்கு அண்ணன் பிள்ளை தானே! ஆகவே, நம் தொழிலகம் அவன் தொழிலகம் தானே! மேலும் அன்பரசிக்கு அவனே உரியவனென்று அவன் தாயும் தந்தையும் இருக்கும்போதே நாங்கள் உறுதி செய்துவிட்டோம். அதற்கு இப்போது யாரும் வருந்தத் தேவையில்லை. அவனைவிட நல்ல கணவனை நம் அன்பரசிக்கு எங்கே பார்க்க முடியும்?” என்றாள்.
தாய், தன் அன்பன் பேச்செடுத்ததே அன்பரசி நாணத்தால் முகம் சிவந்து தன் அறை சென்றாள்.
பண்ணன் சேந்தன் பாடுமாங்குயிலின் உரை கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான்.
“இரக்கச் சிந்தை இந்த அளவுக்குப் போய் விட்டதா? உதவியற்றவர்களுக்கெல்லாம் இப்படிக் கொடுக்க உங்களுக்கு இந்த உலக முழுதும் இருந்தால்கூடப் போதாதம்மா” என்றான்.
பாடுமாங்குயில் இந்த அவமதிப்புரை தாங்காது சீற்றம் கொண்டாள். ஆயினும், தன் கணவனுக்கு அவர்கள் காட்டி யிருந்த ஆதரவை எண்ணிச் சீற்றத்தை அடக்கிக் கொண்டாள்.
அப்படியும் அவள் இறுமாப்புடன் நிமிர்ந்து விடையளித்தாள்.
“மனிதர் விலை அவர்கள் பணத்திலில்லை, அம்மணி! பணமில்லாதவர் பணக்காரக் குடும்பத்தில் மணம் செய்து உணர்வு பெறுவதும் உலகில் நடக்காததல்ல. அப்படி இருக்க என் அண்ணன் பிள்ளையை, அதுவும் அவர் தங்கை, பிள்ளையைத் துணையற்றவனாக எப்படிக் கருதிவிட முடியும்?” என்றாள்.
தையல்நாயகி கணவனைக் கடிந்து கொண்டு நேசபாவனை யுடன் பேச்சை மாற்றினாள். ஆயினும் கூடுமானபோதெல்லாம் பாடுமாங்குயிலிடமும் பண்ணன் பாடிலியிடமும் தம் திட்டத்தை மெல்லக் கூறத் தயங்கவில்லை.
"அன்பரசி உனக்கு மட்டும் புதல்வியல்ல பாடு! அவளை நான் என் ஒரே பிள்ளையாகக் கருதுகிறேன். அவள் நகரவைத் துணைத் தலைவர் புதல்வன் பூணாரத்தைப் பொன்னாரமாக அணியும் நாளை எண்ணி எண்ணித்தான் நான் மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். அதற்காகவே உன் அத்தானிடம் நச்சரித்து நகை நட்டு, திருமணச் செலவுகளுக்கான பணம் எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன்.
“குருகூரார் வீடு என்றால் எளிதா? அவர்களுடன் சரிசமமாக மதிப்புப் பெறுவதற்காகவே நான் பெரும்பணம் செலவு செய்து உயர்குடி விருந்துகளுக்கெல்லாம் சென்று வருகிறேன்.என் வாழ்வின் ஒரே ஆவலைக் கெடுத்து விடாதே பாடு! அத்துடன் உன் அத்தான், உன் அண்ணன் மகனை ஏளனமாகப் பேசியதற்காக மன்னித்துவிடு, அவனுக்கு ஏற்ற நல்ல இடம் பார்த்துத் திருமணம் செய்யும் பொறுப்பைக்கூட நானே ஏற்றுக் கொள்கிறேன்” என்றாள்.
பாடுமாங்குயில் ஒன்றும் விடைதரவில்லை. எதிர்ப்பில் தையல் நாயகத்தைச் சமாளிக்க அவள் வகை தெரிந்திருந்தாள். ஆனால், அது நட்பாதரவாக மாறிய பின் அவள் செய்வகை இன்னதென்று அறியாது திகைத்தாள். தையல் நாயகத்தின் திட்டத்தை உதறித் தள்ளவும் அவளால் முடியவில்லை. அதே சமயம் குழந்தைகள் உள்ளத்தின் போக்கறிந்த பின், அதை மாற்றவும் அவள் துணியவில்லை. மாண்ட அண்ணன் அண்ணியின் முகங்கள் கண்ணீருடனும் கம்பலையுடனும் அவள் இமைகளிடையே ஓயாது நிழலாடின.
பாடுமாங்குயிலுக்கிருந்த இரண்டக நிலை பண்ணன் பாடிலிக்கு இல்லை. அண்ணன் சேந்தன் சொல்லை அவன் என்றும் தட்டியதில்லை. தையல் நாயகத்தினிடமோ அவன் மதிப்பு இன்னும் பெரிது. அவள் குறிப்பறிந்து நடக்கவே அவன் அரும்பாடுபட்டான். இந்நிலையில் அவன் தன் மனைவியின் விருப்பத்தையோ மகள் விருப்பத்தையோ ஒரு சிறிதும் எண்ணிப் பாராமல், அண்ணியின் திட்டத்தை நிறை வேற்றுவதிலேயே முழு மூச்சுடன் இழைந்தான்.
குருகூரார் வீட்டுத் தொடர்புக்கு ஏற்ற முறையில் பண்ணன் பாடிலி தன் நடையுடை தோற்றம், வீடு, தொழிலகம் ஆகியவற்றை முற்றிலும் செப்பம் செய்து உயர்வுபடுத்தினான். உயர்குடியினர், அரசியற்பணி முதல்வர் நடத்தும் விருந்து கேளிக்கைகளில் தானும் தன் குடும்பமும் சென்று கலந்து கொள்ள ஏற்பாடு செய்தான். பண்ணன் சேந்தனும் தையல்நாயகமும் இவற்றுக்கான செலவுகளிலும் அழைப்புகள் வருவித்துத் தருவதிலும் அவனுக்கு ஒத்தாசை செய்து ஊக்கினர். பாடுமாங்குயில் இவற்றை விரும்பவில்லையாயினும் கணவனை மீற இயலாது கலந்து கொள்ள நேர்ந்தது. ஆனால், அன்பரசி தன்னாலியன்ற மட்டும் சாக்குப்போக்குகள் கூறி விருந்துகளுக்குப் போகாமல் ஒதுங்கி யிருந்தாள். சாக்குப் போக்காகவே அவள் முதலில் தனக்கு உடம்புக்கு நலமில்லை என்று தன் அறையில் அடைபட்டுக் கிடந்தாள். ஆனால், விரைவில் உண்மையிலேயே அவள் நோய்வாய்ப்பட்டாள்.
அவள் உடல் வரவரத் துரும்பாக மெலிந்தது. உடலில் வெப்புத் தீயாகி அருகிலிருப்பவர் மீது வீசிற்று. தாய் சில சமயமும் தந்தை எப்போதா ஒரு தடவையும் அவளை அமைதிப்படுத்தும் எண்ணத்துடன் “உன் விருப்பப்படி தான் திருமணம் செய்து வைப்போம் அம்மா! கவலைப்படாதே!” என்று கூறிவந்தார்கள். அத்தகைய நாள்களிலெல்லாம் அன்பரசியின் உடல் வெப்புக் குறையும்; முகம் பெரிதும் தெளிவடையும்; உடலில் சிறிது தெம்புண்டாகி எழுந்து உட்கார்வாள்.
தாய் தந்தையாரின் இந்தச் சலுகையைக் கண்டு தையல் நாயகம் உள்ளூரப் புழுங்கினாள். அவள் பண்ணன் பாடிலியை அழைத்து அவனிடம் மறைவில் தனியாகப் பேசினாள். அவனையும் அவன் மனைவியையும் கடிந்து கொண்டாள்.
“உன் தொழிலகத்தை எவ்வளவு மேம்படுத்தினேன். உனக்கு நன்றியில்லை. உன் குழந்தையை என் குழந்தையாகப் பாராட்டி எந்த பெண்ணுக்கும் எளிதில் கிட்டாத உயர்குடித் தொடர்பு உண்டு பண்ண என் உழைப்பையும் பணத்தையும் வாரி இறைத்து இருக்கிறேன். அவள் ஓர் ஆண்டிப் பயலுக்காக அத்தனையையும் வெறுத்து உடம்புக்கு நோய் என்று நடித்துப் பாசாங்கு செய்கிறாள்; நாடகமாடுகிறாள்; உன் மனைவி நான் ஏதோ உன் குடும்பத்தைக் கெடுக்க முனைந்ததாக எண்ணி என்னைக் கண்டு நடுங்குகிறாள்; கண்ணீர் வடிக்கிறாள்; எனக்கு ஏன் இந்த வம்பெல்லாம்? நான் இனி உன் குடும்பத்தில் காலடி எடுத்து வைக்கப் போவதில்லை. வேறு எந்த ஏழைப் பண்ணையாவது எடுத்து வளர்த்தால் அதனிடமிருந்தும் அதன் குடும்பத்தாரிட மிருந்தும் நன்றியும் பாராட்டுமாவது எனக்குக் கிடைக்கும்” என்று கூறிவிட்டு சரேலென்று வெளியேறினாள்.
மனைவி செய்ததே சரியென்று கணவனும் வெளியேறத் தொடங்கினான். பண்ணன் பாடிலி அண்ணன் அண்ணி இருவர் கால்களிலும் விழுந்தழுதான். ’என் மனைவியையும் மகளையும் நான் சரி செய்து கொள்கிறேன். அவர்கள் உங்கள் சொல் கேளா விட்டால், அந்த ஆண்டியுடன் அவர்களையும் வெளியேற்றி நானாவது உங்களுக்கேற்றபடி நடந்து கொள்கிறேன். நீங்கள் வெளியேற வேண்டாம்" என்றான்.
பக்கத்தறையிலிருந்து இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான் அருண்மொழி, அவனருகிலேயே அன்பரசி நின்றிருந்தாள். சிறிது நேரம் இருவர் உள்ளங்களும் விம்மி வெடித்துவிடும் போலிருந்தன. ஆனால் அருண்மொழியின் உள்ளத்தில்தான் குமுறல் மிகுதியாயிருந்தது. அதை அன்பரசி அறிந்து உருகினாள்.
அன்பரசியின் பாசம் ஒருபுறம், தன்மானம் ஒருபுறம் அருண்மொழியின் உள்ளத்தில் போராடின. இந்தப் போராட்டம் பெரிதானாலும் அது முடிவுற ஒரு கணமே பிடித்தது. அதன்பின் அவன் திடுமென நிமிர்ந்து நின்றான். "எனக்காக உன் தாய் தந்தை, இந்த ஆண்டியைப் பின்பற்ற வேண்டாம், வெளியேறவும் வேண்டாம்; நான் போகிறேன்; உயிரை விட்டுப் போகும் உடல் போலப் போகிறேன்; என்னை மன்னித்துவிடு’ என்று கூறி அவன் தடதடவென வெளியேறினான்.
“என்னைவிட்டு எப்படிப் போகிறது என் உயிர்?” என்று கூறி அன்பரசியும் அவன் செல்லும் திசையில் காலடி எடுத்து வைத்தாள். ஆனால், நோயும் துயரமும் ஏற்கனெவே அவள் ஆற்றலைக் கெடுத்திருந்தன. அவள் படி தடுக்கிக் கீழே விழுந்தாள். முன்னே சென்ற அருண்மொழி அதைக் காணவில்லை. அவன் செல்லும் திசையறியாமல் பித்தன்போல நகர்த் தெருக்களின் வழியே சென்றான். சரேலென்று நகர் கடந்து பின்னும் நடந்து கொண்டேயிருந்தான்.
கீழே விழுந்த அன்பரசி எழுந்திருக்கவில்லை. மூக்கி லிருந்தும் உதட்டிலிருந்தும் குருதி பெருக்கெடுத்தோடிற்று. தாயும் தந்தையும் மட்டுமன்றிப் பண்ணன் சேந்தனும் அவன் மனைவியும்கூடத் திடுக்கிட்டு அவளைத் தூக்கி எடுத்துப் படுக்கையில் கிடத்தினர். பண்ணன் சேந்தன் விரைவில் ஓடிச் சென்று மருத்துவர் பலரை அழைத்து வந்தான். தையல் நாயகம் கோவெனக் கதறியழுது அன்பரசியை மடிமீது வைத்து உணர்வு வருவிக்க முயன்றாள். ஆனால், பண்ணன் பாடிலியும் பேச வில்லை. பாடுமாங்குயிலும் மூச்சுவிடவில்லை. இருவர் உள்ளங் களிலும் இருவேறு வகைப்பட்ட போராட்டங்கள் நிலவின. பண்ணன் பாடிலி பாசத்துடன் பணத்தையும் பகட்டையும் போட்டியிட விட்டான். ஆனால், பாடுமாங்குயில் நெஞ்சம் அண்ணன் அண்ணி நினைவில் ஆழ்ந்து சோர்ந்திருந்தது.
அன்பரசிக்கு மெல்ல மெல்ல உணர்வு வந்தது. ஆனால் இயல்பான உணர்வு முற்றிலும் வரவில்லை. ‘அருண் - என் உயிர் என்னைவிட்டு எங்கோ போய்விட்டது’ என்ற ஒரு வாசகம் மட்டும் மீண்டும் மீண்டும் அவள் உதடுகளில் மெல்ல முணுமுணுத்தன. பின் அவள் அடங்கினாள். எவர் பேச்சுக்கும் அவள் மறுபேச்சுப் பேச வாய் திறக்கவில்லை. அவள் கண்கள் இமையாது நின்றன. ஆனால், முன் நிற்பவரையே அவள் அடையாளம் கண்டதாகத் தெரியவில்லை.
தாயோ தந்தையோ அவளருகில் வந்து ஆதரவுடன் பேசிய போதுகூட அவள் ஒன்றும் வாயாடவில்லை. ஆளடையாளம் காணமுடியாதது போல் திருதிருவென விழித்தாள். ஒரு தடவை தாய் பெருமூச்சுவிட்ட சமயம் அவள் ‘நீ யாரம்மா’ என்று அவளை நோக்கிக் கேட்டாள். இது காணத் தாய் உள்ளம் விம்மி விம்மி அழுதது. மருத்துவர் வந்து வந்து போயினர். தம்மாலான வகையிலெல்லாம் நாடி பார்த்தனர். மருந்து கொடுத்தும் பார்த்தனர். நோய் இன்னதென்றே எவருக்கும் பிடிபடவில்லை. மருந்தோ உணவோ நீரோ எதுவும் உட்கொள்ளாமலே அவள் நாட்கள், வாரங்கள் படுக்கையில் கிடந்து புரண்டாள். வெளியே சென்ற அருண் மொழியும் எங்கே செல்வதென்றறியாமல் கால் சென்ற இடமெல்லாம் சுற்றினான். ஊணுடை உறக்கம் ஒழித்து அவன் பித்தன் போலானான். அவனைக் காண மக்கள் சிலர் அஞ்சினர். வேறு சிலர் இரங்கினர். சில காலம் அவன் களக்காட்டில் சென்று திரிந்தான். சில நாட்கள் வாரியூர் வந்தே தெருத்தெருவாகச் சுற்றினான். மாமன் கடையருகிலோ தையல் நாயகம் வீட்டருகிலோ அவன் செல்வதில்லை. ஆனால், அடிக்கடி அன்பரசியின் வீட்டின் பக்கம் வட்டமிட்டான்.
அவன் நிலையறிந்து நண்பர், சுற்றத்தார் பண்ணன் பாடிலியிடமோ பாடுமாங்குயிலினிடமோ வந்து கூறினர். பண்ணன் பாடிலியும் எதுவும் பேசாமல் இருந்து வந்தான். பாடுமாங்குயில் மகளை நோக்கியும் சுற்றுமுற்றும் நோக்கியும் பெருமூச்சு விடுவாள். ஆனால், தையல்நாயகி இவை கேட்டு முன்னிலும் குமுறினாள். “இதெல்லாம் மகளும் தாயும் நடிக்கிற பாசாங்கு நாடகங்கள்; நோய் நொடி என்றால் மருத்துவருக்குப் புரியாமலா போகும்? மேலும் தாயை மகளுக்கு அடையாளம் தெரியவில்லையாமே! நாட்கணக்கில் உணவு நீர் இல்லாமல் உயிருடன் வதங்குகிறாளாமே! இவற்றை யாராவது எப்போதாவது கேட்டதுண்டா? எல்லாம் பித்தலாட்டம். வெறும் பித்தலாட்டம்!” என்று அவள் எரிந்து விழுந்தாள்.
மகள் மனைவி ஆகியவர் நிலை பற்றி பண்ணன் பாடிலி அவ்வளவு கவலைப்படவில்லை. ஓர் ஏழை உறவினனுக்காக அண்ணன் அண்ணி ஆகியோர் மனத்தை அவர்கள் இவ்வளவு புண்படுத்துகிறார்களே என்று மட்டும் அவன் நொந்து கொண்டான்.
ஒருநாள் திடுமென அருண்மொழி அன்பரசியின் வீட்டுக்குள் வந்து அவள் அறையினுள் நுழைந்தான். அச்சமயம் வீட்டில் பாடுமாங்குயிலைத் தவிர வேறு யாரும் இல்லை. அவள் அவனைத் தடுக்கவில்லை. மகள் நிலையில் அது தேவைப்படுவ தாகவும் அவள் கருதவில்லை. ஆயினும், மகள் பற்றிய கவலையில் கூட, அவன் தோற்றம் கண்டு அவள் இரக்கப்படாமல் இருக்க முடியவில்லை. “போ, அருண்! போய்ப் பார்! நீ போன பின் அன்பு இருக்கும் காணச் சகியாத காட்சியைச் சென்று பார்! இப்படி யாயிற்றே என் பிள்ளையின் நிலை!” என்று அவள் பொருமினாள்.
“அன்பு! அன்பு!” என்று அலறியவாறு அருண்மொழி அறையினுள் புகுந்தான். முதலில் எல்லாரையும் பார்ப்பது போலவே அன்பரசி அவனையும் பரக்கக் கண்ணுருட்டிப் பார்த்தாள். ஆனால், மீண்டும் மீண்டும் அவன் அவள் பெயர் கூறி அழைத்தபோது, அவள் கண்கள் திடீரென இயற்கை ஒளி வீசிற்று. அவள் முகமெல்லாம் புன்முறுவல் எழுந்தது.
“ஆ, நீயா…. நீங்களா, அருண்!” என்றாள்.
தாய் அவள் நல்லுணர்வு கண்டு மகிழ்வுடன் வந்து அவளைக் கட்டிக் கொண்டாள். “என்னை உனக்குத் தெரிகிறதா அம்மா?” என்றாள்.
“என் அம்மா இப்படிக் கேட்கிறாய்? எனக்கு அப்படி என்ன வந்தது?”என்று அன்பாகத் தாய் பக்கம் திரும்பிக் கேட்டாள்.
அழுத குரலில் தாய் யாவும் கூறினாள். அன்பரசி வியப்பார்வத்துடன் தாயையும் அருணையும் மாறி மாறி நோக்கினாள். பின் அருண்மொழியை நோக்கி, ‘இனி என்னை விட்டுப் போய்விட மாட்டீர்களே!’ என்றாள்.
“அன்பு, நானா உன்னை விட்டுப் போனேன்? உன்..”
அன்பரசி முகத்தில் எழுந்த கறுப்பு நிழல் கண்டு பாடுமாங்குயில் அருண் மொழியின் வாயைப் பொத்தினாள், “போதும் அருண்! இனி நீ போகக் கூடாது. போனால் இவளை நான் இழந்துவிடுவேன்” என்றாள்.
“அப்படியானால் நான் கட்டாயம் போகவில்லை அத்தை!” என்றான் அருண்மொழி, இம்மறுமொழி அன்பரசியின் உடலையும் உள்ளத்தையும் ஒரு நொடியில் முன்னிலைக்கே கொண்டுவந்து விட்டது. இடையே எதுவும் நடக்காததுபோல் அவள் அருண்மொழியின் கையை வருடினாள். “நீங்கள் சற்று இருங்கள். உங்களுக்கு நான் சிற்றுண்டி தருவிக்கிறேன்” என்றாள்.
பாடுமாங்குயிலால் இது கேட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அன்று பாடுமாங்குயில் தன் கணவனைக் கரையாத வண்ணம் கரைத்துப் பார்த்தாள். “குழந்தை மாதக் கணக்காகக் கிடந்த கிடை உங்களுக்குத் தெரியுமே! அருண் வந்தவுடன் அவளுக்குப் போன உயிர் வந்து விட்டதையும் பார்த்தீர்கள். மருமகனுக்காக அல்லவானாலும், மகள் உயிர் காப்பாற்றுதற்காகவாவது அவள் விருப்பப்படி விட்டுவிடுங்கள்” என்று அவள் கணவன் நாடியைப் பிடித்துத் தாங்கினாள்.
“என் அண்ணியிடமே சொல்லிப் பார்! அவள் சொல்லை நான் தட்டிவிட முடியுமா? அதைவிட எனக்கு இந்த மட்டிப் பெண்ணின் உயிர்கூடப் பெரிதல்ல” என்று வழக்கமான உணர்ச்சியற்ற நிலையில் அவன் கூறிவிட்டான்.
பலநாள் அலைந்த அலுப்பால் அருண்மொழி அன்றிரவு அயர்ந்து உறங்கினான். ஆனால், உறக்கத்திடையே ஒரு மென்கரம் அவனை மெல்லத் தட்டி எழுப்பிற்று.
அன்பரசி இரவெல்லாம் உறங்காது விழித்திருந்தாள் என்பதை அவள் முகம் அவனுக்குக் காட்டிற்று.
“என்ன அன்பு! ஏன் நள்ளிரவில் விழித் திருக்கிறாய்? என்ன செய்தி?” என்று கலவரத்துடன் கேட்டான் அருண்மொழி.
“அன்பரே, உம் பாசத்தின் ஆழத்தை நானும் என் அன்பின் ஆழத்தை நீங்களும் உணர்ந்து கொண்டதுபோல, இருவர் தொடர்பின் ஆழத்தை அம்மா நன்கு உணர்ந்து கொண்டிருக் கிறாள். அவள் எப்போதும் நம்பக்கமே என்பதை நான் அறிவேன். ஆனால், இப்போது அப்பாவிடம் அவள் நமக்காகக் கல்லும் உருகும்படி மன்றாடி வாதாடியது கேட்டேன். ஆயினும் இரும்பாகியிருந்த அப்பாவின் உள்ளம் இப்போது எஃகாகி யிருக்கிறது. கல்லான பெரியம்மையின் உள்ளத்தின் உறுதி அதை வைரமாக்கி வருகிறது. இந்நிலையில் இனி நமக்குப் போக்கிடம் இல்லை. என் உயிர் இனி என்னை விட்டுப் போக வேண்டியது தான். நான் இனி என்ன செய்வேன்?” என்று அன்பரசி மறுகினாள்.
அவன் முகம் அந்தக் கணமே மீண்டும் வெளிறத் தொடங்கிற்று. தன் துடிப்பை மறந்து அவன், அவள் ஆராத்துயர் ஆற்ற முனைந்து கண்ணீர் துடைத்தான்.
“நீ வருந்தவேண்டா அன்பு! நான் இனி என் தன் மதிப்பைப் பெரிதாகக் கருதி முன்போல் உன்னைவிட்டுச் செல்லப் போவதில்லை. என்ன நேர்ந்தாலும் உன்னுடனே இருக்கத் துணிந்து விட்டேன். உன் உயிர் இனி உன்னை விட்டுப் போகாது” என்றான்.
அவள் அவனை ஆர்வமுடன் வாரி அணைத்துக் கொண்டாள். ஆனால் முகத்தில் படர்ந்த வெள்ளொளி ஒரு சிறிதுதான் அகன்றிருந்தது. அவள் குரல், இற்ற வீணையின் நாதம் போலக் கரகரத்தது.
“உங்கள் தன் மதிப்பு இனி என் தன் மதிப்பு; நீங்கள் போகத்தான் வேண்டும்; அது மட்டுமல்ல; நீங்கள், போகும் போது இனி நான் உங்களைப் பின் தொடர மாட்டேன்; ஏனெனில் உங்களையும் என்னையும் ஒருங்கே உயிர்போல் நேசிக்கும் என் தாயை நாம் தனியாக விட்டுச் செல்லப்படாது. ஆயினும், என் உடல் இங்கே கிடக்க, உயிர் உங்களை விட்டகலும் படிதான் உங்களை வேண்டா வெறுப்புடன் கேட்டுக்கொள்ள வேண்டியவளாகிறேன்” என்றாள்.
அவள் சொல்லின் பொருள் அவனுக்கு விளங்க வில்லை. அவன் விளக்கம் நாடவும் இல்லை. அவன் தலை சுழன்றது.
அவள் கெஞ்சும் குரலுக்கு அவன் எதுவும் செய்திருப்பான். உயிரும் கொடுத்திருப்பான். அதன் ஆற்றலை அவன் உணர்ந்தான். ஆனால், முதல் தடவையாக அதன் முன் அவன் நடுங்கினான்.
அவள் முகத்தில் மாறுதல் எதுவுமில்லை. அது வரவர வெளிறிக் கொண்டு மட்டும் வந்தது.
அவன் எழுந்தான். கைகள் கைகளைப் பற்ற முனைந்தன. அவள் கைகள் தந்தியடித்தனவேயன்றிப் பற்றவில்லை. ஆனால், அவள் மீண்டும் “தயங்க வேண்டாம். அன்பரே, நான்தான் கூறினேனே, என் உயிர் உங்களைத் தொடரும் என்று, ஒரு பகல் ஒருநாள்தான் நீங்கள் தனியே செல்கிறீர்கள். அதற்குள் என் திட்டம் நிறைந்துவிடும்” என்றாள்.
அவன் ஒருமுறை மீண்டும் தன் அவாவெல்லாம் தீர அவள் முகத்தை நோக்கினான். தள்ளாடிய நடையுடன் திரும்பிப் பார்க்கக்கூடத் துணியாமல் தயங்கித் தயங்கி நடந்தான். வாரியூர் எல்லை கடக்கும்போது பொழுது விடிந்தது.
“ஒரு பகல் ஓர் இரவு! அதற்குள் என் உயிர் உங்களைத் தொடரும்”.
இதன் பொருள் அவனுக்கு விளங்கவில்லை. “அந்தோ அதற்குள் அவள் உயிர்விட எண்ணியல்லவா என்னைப் போக்கி யிருக்கிறாள்? என்ன செய்தேன்? அந்த வெளிறிய முகத்தின் கெஞ்சுதலுக்குத் தெரியாமல் இணங்கிவிட்டேனே” என்று புழுவாய் துடித்தான். ஆனால், அதே முகத்தின் நிழல் அவனை மேன்மேலும் முன்னே தள்ளிற்று.
“அவள் உயிர் போயிற்று என்று கேட்டால், நானும் உடனே உயிர்விடுகிறேன். இது தான் இனி எங்கள் முடிவு!” என்று தனக்குள் கூறியவாறு நடந்தான். அவள் உள்ளம், உயிரையும் வெறுத்தது; உலகையும் வெறுத்தது; அவன் நடையைத் தட்டிவிட்டான்.
ஒரு பகல் கழிந்தது. அவன் வாரியூரடுத்த காட்டைத் தான் கடந்திருந்தான். அவன் எதிரே ஒரு கானாறு குறுக்கிட்டது. மலைமீது மேகங்கள் கவிந்த காலம் அது. ஆறு இருகரையும் புரண்டு பெருமிதத் தோற்றத்துடன் ஓடிற்று.
ஆற்றைக் கடக்கப் படகு வேண்டும். அந்த முன்னிரவிலும் அங்கே ஒரு படகு ஆளற்ற நிலையில் கிடந்தது. அதனருகே ஒரு பெண் மட்டும் நின்றாள்.
“நீ யார்? படகு யாருடையது?” என்று கேட்டான்.
“அது என் கணவன் படகு தான். விடியுமுன் அவர் வந்து விடுவார். நான் படகுக்குக் காவல் இருக்கிறேன்” என்றாள்.
இரவு கழிந்தால், ஆற்றை மட்டுமல்ல, உலக வாழ்வையே கடந்துவிட ஒருப்பட்டான் அவன்.
பொழுது விடிந்தது. ஆயினும் படகோட்டி வரவில்லை. ஆனால், அவன் கையில் பெண் ஒரு முடங்கல் கொடுத்தாள். வியப்புடனும் துடிதுடிப்புடனும் அவன் அதைப் பிரித்து வாசித்தான்.
‘ஒரு பகல் ஓர் இரவு கழிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு பகல் இருந்து பின் ஆறு கடக்கக் கோருகிறேன்’- அன்பு.
‘படகோட்டியின் மனைவி யார்? இந்த முடங்கல் அவள் கையில் எப்படி வந்தது?’ என்று அறியாமல் அவன் மலைத்தான். ஆனால் அன்பரசியின் கையெழுத்து அவனுக்குச் சிறிது தெம்பளித்தது. அந்தப் போகா நெடும் பகலைப் படகைச் சுற்றி அங்குமிங்கும் உலாவிக் கழித்தான். படகோட்டியின் மனைவியும் படகையோ அவனையோ கண்ணிலிருந்து மறையவிடாமல் அப்பக்கமே நடமாடி வந்தாள்.
இரவாயிற்று.
பெண் அவனிடம் படபடப்புடன் வந்தாள். ‘படகோட்ட என் கணவர் வரவில்லை. நீங்களே இனி ஒட்டலாம். மறு கரையில் அதை மரத்தில் கட்டி விட்டு போங்கள். என் கணவர் எடுத்துக் கொள்வார்’ என்றாள்.
அவனுக்கு எல்லாம் புதிர்மேல் புதிராயிருந்தது.
படகை அவன் கட்டவிழ்த்தான்.
தண்டைக் கைப்பற்றினான்.
அவன் கைத்தண்டை உகைக்கவில்லை. அன்பரசி இருக்கும் பகுதி கடந்து மறுபகுதி செல்ல அவன் தயங்கினான். ‘அன்பரசி சொன்ன சொல் என்ன ஆயிற்றோ? அவளைப் பற்றிய செய்தி ஒன்றும் தெரியவில்லையே’ என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
‘நான் இதோ வந்துவிட்டேன்’ என்ற குரல் கேட்டு அவன் திரும்பினான்.
அவன் திகைத்தான். மறுகணம் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தான். ஏனெனில் அன்பரசியே முழங்காலளவு நீரில் இறங்கி நின்று படகில் ஏற முயன்று கொண்டிருந்தாள். ஒரு கணத்தில் அருண்மொழியின் உதவியால் அவள் படகில் ஏறியமர்ந்தாள். படகு இரவில் அமைதி கிழித்து நீரில் அம்புபோல் பாய்ந்தது. வானத்தில் மினுங்கிய ஒன்றிரண்டு விண்மீன்கள் நீரில் ஒளி நிழல்களாகப் படர்ந்தன. ‘நீ எப்படி வந்தாய்,? அம்மா என்ன செய்கிறாள்’? என்ற பல கேள்விகள் அவன் உதட்டில் எழுந்தன. ஆனால் அவள் தன் இதழ் பொத்திக் காட்டி அவன் உதடுகளை மூடினாள். அவன் உள்ளத்தின் உணர்வு அதற்குமேல் அவளிடம் எதுவும் கேட்க விடவில்லை.
பெற்றோரைப் பற்றிய கவலை இல்லாதவளாகவே அவள் அவனுடன் சென்றாள். அவள் கவலைப்படாததறிந்து அவனும் அவர்களைப் பற்றிய கேள்விகளையும் எண்ணங்களையும் மெல்ல மெல்ல மறந்தான்.
மானாடு என்ற ஊரில் இருவரும் தங்கி, அந்தண்மை மிக்க ஆன்றோர் ஒருவர் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். ஆண்டு ஒன்று இரண்டு மூன்று என்று அகன்றது. ஆடலழகன், பாடுமாங்குயில் என்ற இரு வாய் பேசா எண்ணங்களின் நிழல்களாக அதே பெயர்களுடன் இரு செல்வங்கள் அவர்கள் மடிகள் மீது மாறி மாறித் தவழ்ந்தன. ஒரு தலைமுறை கடந்து அருண்மொழியின் தந்தையும் அன்பரசியின் தாயும் அவர்கள் முன் வந்து தம் பாசவலையை மீண்டும் விரித்தது போலிருந்தது.
அருண்மொழி ஒருநாள் கடைத்தெருவில் ஏதோ ஒரு பொருளை விலை பேசிக் கொண்டிருந்தான். ஆனால், கடைக்காரன் விலைபேசுவதை நிறுத்தி அருண்மொழியை ஏற இறங்கப் பார்த்தான்.
‘ஆ, நீ அருணல்லவா? இங்கே எப்படி வந்தாய்?’ என்று கேட்டான். அருண்மொழி ஓரளவு தன் நிலைமையை விளக்க முற்பட்டான்.
ஆனால், பேச்சு நடுவிலேயே கடைக்காரன் எழுந்து புலி கண்டவன் போல மிரளமிரள விழித்தான். அருகில் நின்றவர்கள் இதுகண்டு திகைத்தனர். அவன், அவர்களை நோக்கித் தழுதழுத்த குரலில் உளறினான்.
அன்பர்களே! இவன் அத்தை மகளை மணஞ் செய்ய எண்ணி, அது கைகூடப்பெறாமல் பித்தனாய் அலைந்தான். ‘பித்தம் தெளிந்துவிட்டது போலிருக்கிறது என்றெண்ணி இவனிடம் பேச்சுக் கொடுத்துவிட்டேன். ஆனால், பித்தம் முற்றியிருக்கிறது. இவனை இப்போதே அரசியலாரிடம் ஒப்படைக்க வேண்டும், நீங்கள் எல்லாம் உதவி செய்யுங்கள்’ என்றான். அருண்மொழிக்கு எதுவும் விளங்கவில்லை.’ அத்தைமகளையே மணஞ் செய்து இரண்டு பிள்ளைகூட எனக்கு இருக்கிறது. எனக்குப் பித்தம் எதுவும் இல்லை. வேண்டுமானால் வீட்டில் வந்து பாருங்கள்’ என்றான்.
கடைக்காரன் வாரியூரிலிருந்து புதிதாக வந்து கடை வைத்தவன். அவன் தன் பேச்சுக்கு விளக்கம் தந்தான்.
“நண்பர்களே இவர் சொல்வதுகூட எனக்குப் புரியவில்லை. வாரியூரிலிருந்து நான் வந்து இரண்டு நாட்கள்தாம் ஆகின்றன. இவன் அத்தைமகள் அங்கே உயிர் வெறுத்து மரக்கட்டையாய்க் கிடக்கிறாள். தாய் தந்தையர் துடிதுடித்து, இவனைக் கண்டுபிடித்து மணஞ் செய்ய எண்ணி எங்கும் தேடுகின்றனர். இங்கே இவன் மணம் செய்து பிள்ளைகள் பெற்றிருப்பதாகக் கூறுகிறான். நான் எதை நம்புவது?” என்றான்.
அருண்மொழி யார் என்று தெரியாவிட்டாலும், அவனுக்கு இரு குழந்தைகள் இருப்பதை மானாட்டார் பலர் அறிந்திருந்தனர். ஆகவே அவர்கள் அவன் பக்கம் பேசினர்.
அருண்மொழிக்குத் திடுமென ஒரு புதிய ஐயம் எழுந்தது. அவன் ஊராரை விலக்கி, கடைக்காரரையே வீட்டுக்கு இட்டு வந்தான். வீட்டில் அன்பரசியையும் குழந்தைகளையும் கண்டு கடைக்காரன் உண்மையிலேயே மிகவும் திகில் கொண்டான். அன்பரசியாய் வந்து மாமன் மகனுடன் வாழ்வது அவள் ஆவி யுருவமாயிருக்குமோ? என்று ஐயுற்றான். அதை மெல்ல அருண்மொழியின் காதிலும் முணுமுணுத்தான்.
அன்பரசி இதைக் குறிப்பாய் அறிந்தாள். அவள் கடைக்காரனை நோக்கிப் புத்தம் புதிய விளக்கம் தந்தாள்.
"அண்ணா! உங்கள் திகில் அபாயமானது! என் கணவர்கூட அதை நம்பிவிடப் போகிறார். ஆனால் ஆவிகள் உண்டு என்ற நம்பிக்கை உண்மை அறியாத இடத்தில்தான் வெற்றி பெறும். நான் என் கணவனை அடைவதற்காகச் செய்த திட்டத்தை என் கணவருக்குக்கூட நான் இதுவரை கூறவில்லை. அது என் தாய்க்குமட்டுமே தெரியும். அவன் நன்மை கோரித்தான் இந்த மறைநாடகம் நடத்த வேண்டி வந்தது.
"நான் இல்லாமல் என் துணைவரோ, துணைவர் இல்லாமல் நானோ வாழ முடியாது. இதை என் தாய் அறிந்திருந்தாள். அதே சமயம் என் தந்தையை மீறி நான் நடக்க என் தாய் விரும்பவில்லை. இதனால் நான் ஒரு திட்டம் செய்தேன். என்னைப் போலவே தோன்றுமபடி ஓர் உயிர்ச் சிலையை அருங்கலைஞன் ஒருவனைக் கொண்டு ஒரு நாளில் செய்வித்தேன். ஏற்கெனவே நான் சிலைபோல் கிடந்தவளாதலால், சிலையை அங்கே தாயிடம் விட்டு, என் துணைவனுடன் வெளியேறினேன்.
’என் தாய் நான் இல்லாமல் எவ்வளவு துன்பம் அடைந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். ஆயினும் நான் எங்கிருந்தாலும் நல்வாழ்வு வாழ்வது எண்ணித்தான் உயிருடன் இருக்கிறாள். அதே சமயம் இது தெரியாத என் தந்தைக்குத் தாய் மீது புதிய சீற்றத்துக்கு இடமில்லாமல் போயிற்று. அத்துடன் நீங்கள் கூறுவதிலிருந்து என் மறை திட்டம் இன்னும் மறைவாகவே இருக்கிறது என்றும், என் தந்தை மனமாற்றம் அடைந்து விட்டார் என்றும் அறிகிறேன். ஆகவே, இனி நான் தாய் துயர் முற்றிலும் அகற்றித் தந்தை மயக்கமும் மாற்றிவிடவேண்டும். உங்களுடனேயே நாளை எங்கள் குழந்தைகளுடன் நாங்கள் அங்கே செல்வோம்" என்றாள்.
கடைக்காரனும் ஊர்மக்களும் கூட அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஆனால் வாரியூரில் பாடுமாங்குயிலும் பண்ணன் பாடிலியும் அடைந்த புது மலர்ச்சி இதனினும் பெரிது. பாடுமாங்குயில் சின்னஞ்சிறு பாடுமாங்குயிலையும், பண்ணன் பாடிலி சின்னஞ்சிறு ஆடலழகனையும் தணியாத ஆர்வத்துடன் எடுத்து வைத்து மகிழ்ந்தனர்.
அன்பரசிக்கு மற்றும் மூன்று செல்வங்கள், இரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ஆண் செல்வங்களுக்குப் பண்ணன் சேந்தன், பண்ணன் பாடிலி என்றும், பெண் செல்வத்துக்கு தையல் நாயகம் என்றும் பெயரிட்டு வளர்த்தனர்.
பண்ணன் சேந்தனும் தையல் நாயகமும் தங்கள் உயர் ஆரவார அவாவால் நேர்ந்த தீங்குகளை எண்ணி மனம்மாறி, புதுமரபுச் செல்வங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
பண்பார்ந்த செல்வி
காந்தளூரெங்கும் ஒரே பரபரப்பு. பழந்தீவு சென்று குடியேற விரும்பும் பரதவர் ஒவ்வொருவருக்கும் அங்கே பத்துக் காணி புதுநிலம் இலவசமாக அளிக்கப்படும் என்ற அரச விளம்பரம் எங்கும் முரசறையப்பட்டிருந்தது. புது நிலத்துக்குப் பத்து ஆண்டுகள் வரி கிடையாது. அதன் மேல் ஐம்பதாண்டு களுக்குப் பாதிவரி தள்ளிக் கொடுக்கப்பட்டது. ஊர்க் கோடியிலிருந்த கடற்படை அரங்கத்தில் பலர் வரிசை வரிசையாக நின்று, தம் பெயரைக் குடியேறுபவர் பட்டியலில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
பெயரை ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டவர்களில் பைஞ்ஞீலி என்ற ஓர் இளம் பெண்ணும் பொன்னாவிரை என்ற ஓர் இளைஞனும் இருந்தனர். இருவருமே தாய் தந்தையற்றவர். நெருங்கிய உறவும் பாச நேசமும் உடையவர். ஆகவே இருவரும் ஒருங்கே பழந்தீவுக்குக் கலமேற விரும்பினர். ஆனால், பைஞ்ஞீலியைப் பாதுகாத்து வந்த முதுகணாளர் அவள் அம்மானான வாரியர் வள்ளத்தோள். அவர் புதிய சோழர் கடற் படையிலும் பதவி வகித்தவர். ஆகவே, அவளுக்கு அவர் கலத்தில் எளிதில் ஓர் இடம் பெற்றுத் தந்தார். ஆயினும், பொன்னாவிரை அவளுடன் போவதை அவர் விரும்பவில்லை. ஆகவே அவனுக்கு இடம் பெற்றுத்தர மறுத்தார். பயண நேரத்தில் இது இருவர் மகிழ்ச்சியையுமே குலைத்தது. ஏனெனில் நங்கை கலமேறிப் பழந்தீவிலும், நம்பி கலமேறாமல் இப்பால் தமிழகத்திலும் தங்கவேண்டியதாயிற்று.
பைஞ்ஞீலிக்கு அப்போது வயது பதினான்கு. அவள் பெயருக்கேற்றபடி அவள் தோள்களிலும் முதுகிலும் அலையலையாகச் சுருண்டு புரண்ட தலைமுடி ஒரே பசுநீல நிறமாய் இருந்தது. விழிகளும் அதே நிறமாய்ப் பைங்குவளை மலர்கள் போல் விளங்கின. அவள் முகமோ பாலாடையில் பொதிந்த முழுமதிபோல் இளமைநலம் வாய்ந்திருந்தது. பொன்னாவிரையைப் பிரிந்து செல்வதனாலுண்டான துயரம் அவள் அழகை இன்னும் பெருக்கிக் காட்டிற்று.
பைஞ்ஞீலியின் தூய வெண்ணிலா மேனிக்கிசைய, பொன்னாவிரையின் மேனி பத்தரை மாற்றுச் செம்பொன்னைப் பழிப்பதாய் இருந்தது. அவள் பசுநீல முடிகளின் அமைதியுடன், செம்பொன்னிறம் வாய்ந்த அவன் இளமுடி போட்டியிட்டது. பைஞ்ஞீலியின் துயரைவிட அவன் துயர் குறைந்ததல்லவாயினும் அவளைத் தேற்றும் முறையில் அவன் தன்னையடக்கிக் கொண்டு இன்னுரையாடி இருந்தான்.
கலத்திலேறிய பைஞ்ஞீலி, கலம் துறைமுகம் கடந்து செல்லுமளவும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவனும் துறைமுகத்திலிருந்து கலத்தையே கவனித்து நின்றான். பைஞ்ஞீலியின் முகம் கலத்தின் நிழலிலும், கலம் கடலலை களிலும் மறைந்து நெடுநேரம் ஆகும்வரை அவன் கடல் துறையைவிட்டு அகலவேயில்லை.
மாதம் தவறாமல் தாயத்துக்கு வரும்போது அஞ்சல் தூதர் மூலம் பைஞ்ஞீலி தன் ஆராத் துயரைப் பொன்னாவிரைக்குத் தெரிவித்தாள். பொன்னாவிரையும் அதுபோலவே தன் ஆறுதல் மொழிகளைப் பைஞ்ஞீலிக்குத் தெரிவித்தான். கடும் உழைப்பால் காசு திரட்டிக் கொண்டு பழந்தீவுக்கு விரைந்து செல்ல அவன் எண்ணியிருந்தான். அதுவரை தன் பங்குக்குரிய நிலத்தை, அவளே பயிரிடும்படி கூறி, அதற்கான தன் ஆணைப் பத்திரத்தையும் அவன் அவளுக்கு அனுப்பி வைத்தான். பயணத்துக்கு வேண்டிய தொகையைத் தானும் தன்னாலியன்றவரை திரட்டி அனுப்ப முயல்வதாக அவளும் எழுதியிருந்தாள்.
அலைகடலின் எல்லையற்ற பரப்பு அவர்கள் இருவரையும் பிரித்தது. ஆனால், தனித்தனியே தொலைவில் இருந்த ஒரே இதயத்தின் இருபாதிகளாக அவர்கள் ஒருவரை ஒருவர் நினைத்த வண்ணம் நாட்கழித்தனர்.
சேரநாடு அன்று சோழர் காலடியில் கிடந்தது. இரண்டு தலைமுறைப் போராட்டங்கள் காரணமாக நாட்டில் கோர வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடின. அந்நிலை ஒழித்துச் செழுமையும் வளமும் பரப்பச் சோழர் எவ்வளவோ முயன்றும் விரைந்த பயன் எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சோழர் ஆட்சி அச்சமயம் நாடுநாடாக எல்லையற்றுப் பரந்துக்கொண்டே யிருந்தது. போரில் செலுத்திய அதே அளவு கவனத்தைச் சோழர்கள் மக்கள் வாழ்வில், சிறப்பாகச் சேர நாட்டு மக்கள் வாழ்வில் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் பொன்னா விரையின் உழைப்பு அவன் உடலைத் தான் உருக்குலைத்ததே தவிர, அவன் கையிருப்பை ஒரு சிறிதும் பெருக்க முடியவில்லை. ஒரு மாத உழைப்பின்பின் அவன் பாயும் படுக்கையுமாகக் கிடக்க வேண்டியதாயிற்று. பைஞ்ஞீலிக்கு வழக்கமாக எழுதும் கடிதங்களைக்கூட அவனால் எழுத முடியவில்லை. பிறர் மூலமாக அவன் நிலையறிந்த பைஞ்ஞீலி பாகாய் உருகினாள். கண்ணீர் வடித்தாள். அவளும் தன்னாலியன்ற மட்டும் கடுமையாகவே உழைத்தாள். ஒரு தனி இளம்பெண் நான், ஆண்களின் வேலையைச் செய்வது கண்டு, அயலாரும் உறவினரும் அவளுக்குத் தம்மாலியன்ற உதவிகள் யாவும் செய்தனர். ஆனால் புதுக் குடியிருப்புக்களில் அவரவர் முழு உழைப்பும் அவரவர் வாழ்க்கைக்குத் தேவையாயிருந்தது. பைஞ்ஞீலியாலும் பெருந்தொகை மிச்சப்படுத்த முடியவில்லை.
அவளைச் சென்றடையும் நம்பிக்கை இழந்தவனாய்ப் பொன்னாவிரை இங்கே துடித்துக் கொண்டிருந்தான். அவனை வரவழைக்கும் வகை காணாமல் அவனையே எண்ணி எண்ணிப் பைஞ்ஞீலி அங்கே இரவும் பகலும் கண்ணீர் பெருக்கிக் கொண்டே இருந்தாள்.
பகலின் உழைப்பால் பைஞ்ஞீலி இரவில் ஒருசில மணி நேரமாவது அயர்ந்து உறங்குவதுண்டு. பொன்னாவிரையைப் பற்றிய எண்ணங்கள் அச்சமயங்களில் இனிய கனவுகளாக அவளைத் தாலாட்டும். எழுந்தபோது அவள் அடையும் ஏமாற்றம் காண்பவருக்குத் துயரம் தருவதாயிருந்தது. ஆயினும் எப்படியோ இக்கனவுகளே அவளுக்கு ஒரு சிறிதாவது தெம்பும் புதிய ஊக்கமும் தராமல் இருப்பதில்லை. ஒரு நாள் இத்தகைய இன்பக் கனவிடையே, நள்ளிரவில் அவள் கதவு தடதடவென்று தட்டப்பட்டது.
அவள் தூக்கம் முழுவதும் கலையவில்லை. அரைத் துயிலுடனேயே அவள் எழுந்து கதவைத் திறந்தாள். அவள் முன் நடு வயது கடந்த ஒரு முரட்டு வீரன் நின்றான். சற்றுக் கூர்ந்து நோக்கியபின் அவளுக்கு ஒரு சிறிதே அவன் அடையாளம் தெரிந்தது. அவன் பெயர் சிலம்பன், தாயகத்திலிருந்து அவள் வந்த கலத்தில் அவளுடனேயே வந்தவன் அவன். புது நிலத்தில் இறங்கிய மறுநாளே அவனை அவள் காணவில்லை. இது காரணமாகச் சில நாள் அவன் பெயர் அக்குடியிருப்பில் அடிபட்டிருந்தது. அவள், அவனை நினைவில் வைத்துக் கொண்டிருக்க உதவிய செய்தியும் இதுவே.
“ஆ, நீயா? இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய்? எப்படி இந்த நேரத்தில் வர நேர்ந்தது?” என்றாள்.
“பேச எவ்வளவோ இருக்கிறது. ஆனால் முதலில் வயிற்றுக்கு ஏதாவது கொடு. சிறிது உண்டு இளைப்பாறி விட்டுப் பேசுகிறேன்” என்றான் சிலம்பன்.
அவள் சட்டென எழுந்து, அவனுக்கு வயிறாரப் பழங்கஞ்சி வார்த்தாள். அத்துடன் சிறிது அப்பமும் கிழங்கு வகைகளும் அளித்தாள். ‘குறை இரவும் தூங்கி எழுந்த பின் காலையிலேயே எல்லாம் பேசிக் கொள்ளலாம்’ என்றாள்.
அவன் இணங்கவில்லை.
“அம்மணி! எனக்கு உண்மையில் பேசக்கூட நேரமில்லை. உன் வரலாறு முழுவதும் எனக்குத் தெரியும் உன் தங்கமான குணத்தையும் நான் அறிவேன். இல்லாவிட்டால் இந்த வேளையில் உன் நன்மையை நாடி இவ்வளவு தொலை வந்திருக்க மாட்டேன். இப்போதே நான் சொல்லவந்த முக்கியச் செய்தியைக் கூறிவிட்டு விடியுமுன்பே நான் போய்விட வேண்டும்” என்றான்.
அவள் அப்படியே அவனைப் பேச விட்டாள்.
“அம்மணி! இந்தத் தீவின் பெயர் பழந் தீவு பன்னீராயிரம் என்பதை நீங்கள் அறியலாமே! சோழர் இந்தத் தீவுகளை ஒவ்வொன்றாகப் பிடித்தடக்கப் பல ஆண்டுகள் ஆயின. ஆனால் இந்த தீவிலேயே சோழரால் கண்டுபிடிக்கப்படாமலும், நம் பழஞ் சேரரால்கூடக் கவனிக்கப்படாமலும் ஒரு பெரும்பகுதி இருக்கிறது. அதை இவ்வளவு நாளும் யவன வணிகர் தங்கள் வாணிகத் தளமாகக் கொண்டு மறைந்து வாழ்ந்தனர். இப்போது அவர்கள் கடற்படைகளைச் சோழர் கடற்படை தாக்கி அழித்துவிட்டது.. அவர்கள் கிடைத்த பொருள்களைச் சுருட்டிக் கொண்டு தங்கள் தாயகத்துக்கு ஓடிவிட்டனர். சோழ வீரர் கடற்கரையிலேயே இருப்பதால், உள்நாட்டுப் பகுதியில் இன்னும் எண்ணற்ற ஆடுமாடுகள், செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன. அங்கே செல்பவருக்கு ஏழு தலைமுறைகளுக்கு வேண்டிய வாழ்க்கை வாய்ப்புகள்எளிதில் கிடைக்கும் இதை எல்லாருக்கும் சொல்லிப் போகத்தான் வந்தேன். மற்றவர்களுக் கெல்லாம் விடிந்துதான் கூறப் போகிறேன். உன் நல்ல குணத்தை நினைத்து ஒருநாள் முந்தியே உனக்கு நான் இதைக்கூற எண்ணினேன்” என்றான் அவன்.
அவள் அவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தாள். ஆனால், இதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்று அவளுக்கு இன்னும் புரியவில்லை.
“ஐயா! உம் அன்பு பெரிது. ஆனால் நான் துணையற்ற இளம் பெண், முன்கூட்டித் தெரிந்தாலும் இரவில் நான் எங்கே செல்ல முடியும்? எப்படித் தனியே செல்ல முடியும்? நீங்களோ மற்ற ஊர் நண்பர்களோகூட வருவதாய் இருந்தால் தானே..?”
“அது பற்றி கவலை உங்களுக்கு வேண்டாம் அம்மணி, நான் எல்லாருக்கும் நேரே சொல்லக்கூட நேரம் இல்லை. அவர்கள் வேலை செய்யும் இடத்தில் எழுதி வைக்கப் போகிறேன். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு நாளை இரவோ மறுநாளோ தான் புறப்பட முடியும். அவர்களுக்கு வழியும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் உங்கள் வேலை எளிது. நான் வரும் வழியெல்லாம் கடப்ப மரங்களின் மேல் பட்டையை உரித்துச் சுண்ணம் பூசி வந்திருக்கிறேன். இரவின் இருட்டிலேயே அவை வழிகாட்டும். வழி, சிக்கலானது தான். ஒரு மலை ஏறி இறங்கியாக வேண்டும். அது கடந்தபின் இருபுறமும் கடல் அலைபாயும் ஒரு நீண்ட நில இடுக்கைக் கடந்து சென்றாக வேண்டும். ஆனால், இவை கடந்தால் உங்களுக்கு எவ்வளவோ பயனுண்டு. மாடு கன்றுகள், தானிய வகைகள் மட்டுமல்ல, ஆடையணிமணிகள் கூடக் கிடைக்கக்கூடும் முந்திச் செல்வதால் உள்ள முழுப் பயனும் உங்களுக்கு வளமளிக்கட்டும்” என்றான்.
கடைசி வாசகம் அவள் உள்ளத்தில் புத்தலைகளை எழுப்பிற்று. தன் உயிர் நண்பனை விரைவில் தன்னிடம் வரவழைக்க இது உதவக்கூடும்! இக்கருத்து அவளுக்குப் புது வலிமை தந்தது. அவள் சிலம்பனை வாயார வாழ்ததி, வீட்டைச் சார்த்திப் பூட்டிவிட்டு இரவோடு இரவால், புறப்பட்டாள்.
முன்னறிவுடன் தன்னிடமிருந்த சில அப்பங்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டாள். ஒரு நீர்க்கலமும் நீண்ட கத்தியும் அவள் இடையில் தொங்கின. கயிற்றின் ஒரு சிறு சுருளை அவள் அரையில் சுற்றிக்கொண்டு எழுந்தாள்.
சிலம்பன் கூறிய அடையாளம் அவளுக்கு நன்கு பயன் பட்டது. நள்ளிரவுக்குள் அவள் மலையேறி இறங்கிவிட்டாள். ஆனால் நள்ளிரவில் தடம் தவறிற்று. அவள் சுற்றும் முற்றும் திரிந்து அலுப்புடன் ஒரு மரத்தின் மீது சாய்ந்தாள். அவள் கைகள் அதன் கிளைகளைத் தழுவின. ஆனால் அடுத்த கணம் அவளுக்கு மீட்டும் நம்பிக்கை வந்தது. பிடித்த மரக்கிளையே முறிக்கப் பட்டிருந்தது. கருக்கிருட்டில் கண்ணத்தடம் கூடத் தெரிய வில்லை. ஆனால், அவள் பொறுமையுடன் காத்திருந்தாள். வானத்தில் கவிந்த கருமேகங்கள் அகன்றபின் தடம் மீட்டும் தெரிந்தது.
காட்டில் தனியே செல்வதற்கு அவளுக்கு அச்சமாகத் தான் இருந்தது. அத்தீவில் மற்றக் கொடு விலங்குகள் இல்லாவிட்டாலும் நாற்புறமும் நரிகளின் ஊளையும் செந்நாய்களின் கூச்சலும் கேட்டன. பொன்னாவிரையின் எண்ணமொன்றே அக்காட்டில் செல்லும் மன உரத்தை அவளுக்கு அளித்தது. ஆனால் நில இடுக்கை அணுகியபோது அவள் அச்சம் இன்னும் மிகுதி யாயிற்று. கடலின் அலைகள் இருபுறமிருந்தும் அவள் காலடிகளையே வந்து தழுவின. எங்கே நில இடுக்கில் கடல் பாய்ந்து விடுமோ என்றும், எங்கே இந்தக் குறுகிய நிலத்தில் தடந்தவறித்தான் கடலில் சறுக்கி விழ நேருமோ என்றும் அவள் நடுங்கினாள். ஆனால் கண்ணில் ஆடிய தூக்கச் சோர்வை அகற்றி விழிப்புடன் அடிமேல் அடி வைத்து அவள் நடந்தாள்.
நில இடுக்குக் கடந்ததே எல்லையற்ற பெரும்பரப்பில் பசுங் கழனிகள், சோலைகள், அகல் வெளிகள், தனி மனைகள் கண்டு அவள் வியப்படைந்தாள். எங்கும் எவ்வகை அரவமும் இல்லை. ஆனால் அகல் வெளியை அணுக அவள் தயங்கினாள். சிறு சிறு கடல்கள் போல ஆடுகளும் மாடுகளும் அங்கே ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு திரிந்தன. அவற்றினிடையே அச்சமயம் தனியே செல்வது நல்லதல்ல என்று எண்ணி அவள் ஒதுங்கி மனைகளின் பக்கமாகச் சென்றாள், சற்று அகலமான வளைவுக்குள்ளிருந்த ஒரு தோட்ட வீட்டுக்குள் அவள் புகுந்தாள். உள்ளே யாரும் இல்லை. அழகிய குட்டையான ஒரு சிவலைப் பசு மட்டுமே அதில் திரிந்தது. அது வெளியே ஓடிவிடாதபடி தோட்டக் கதவை உள்ளிருந்து தாழிட்ட வண்ணம் அவள் மனைக்குள் சென்றாள்.
அவசர அவசரமாக ஆட்கள் வெளியேறிச் சென்ற அடையாளங்கள் எங்கும் தெரிந்தன. பாதி உண்ட உணவுடன் கலங்கள் கிடந்தன. பெட்டிகள் பாதி மூடியும் பாதி திறந்தும் காணப்பட்டன. ஆடைகள் அணிமணிகள் தாறுமாறாகக் கலைந்து கிடந்தன. அவசர அவசரமாக ஒரு சிலவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மக்கள் விரைந்தோடியிருந்தனர் என்பது தெள்ளத் தெளிய விளங்கிற்று.
நல்லுணவாகச் சிறிது எடுத்து அவள் உண்டாள். தன்னிடமுள்ள அப்பத்திலும் நீரிலும் அவளுக்கு ஒரு சிறிதே தேவைப்பட்டன. இதன்பின் நடந்து வந்த அலுப்புத் தீர அவள் சற்றுப் படுத்து ஒய்வுக் கொள்ள முயன்றாள்.
அவள் கண்கள். புத்தனுபவங்களுக்கிடையில் முற்றிலும் அயர்ந்துறங்க மறுத்தன. உடல் மட்டுமே சிறிது ஓய்வு கொண்டது. படுக்கும்போதே சுவரின் ஒரு பகுதி அவன் கவனத்தைக் கவர்ந்தது. சுவரின் சுண்ணம் அகற்றப்பட்டிருந்தது. அவ்விடத்தில் செங்கல்கள் வெளியே தெரிந்தன. ஆனால் செங்கல்களிடையே ஒன்று நிறத்திலும் உருவத்திலும் வேறுபட்டிருந்தது. அது அரும்பொருள் புதைந்த இடமாயிருக் கலாம் என்று அவளுக்குத் தோன்றிற்று. ஆனால் வெளியே சென்றவர்கள் அதை எடுத்துச் சென்ற தடமே இது என்று எண்ணினாள். அயர்வினால் இதை அவள் அப்போது சென்று உறுதிகாண இயலவில்லை. ஆனால் காலையில் எழுந்ததும் அந்தச் செங்கல்லை அகற்றிப் பார்த்தாள். ‘புதையலைக் கிளறி எடுக்க அவர்கள் முயன்றிருந்தனர். ஆனால், எடுத்துச் செல்ல அவர்களுக்கு நேரமில்லாதிருந்தது’ செங்கல் களைப் பாதி பிரிக்குமுன் இது அவளுக்குத் தெளிவாயிற்று. வியப்பும் மகிழ்ச்சியும் அவள் உள்ளம் நிரப்பின. வளியே சென்றவர்கள் அதை அவளுக்கு எளிதாகக் காட்டியிருந்தனரே யன்றி எடுத்துச் செல்லவில்லை. சுவரைப் பாதி தகர்க்குமுன் ஏதோ அச்சத்தால் அவர்கள் தேடியதை எடுக்காமல் ஓடியிருத்தல் வேண்டும் என்று அவள் ஊகித்தாள். ஏனெனில் அதில் விலையுயர்ந்த அணிமணிகளும் பழைய பாண்டியர் பொற் காசுகளாக நூற்றுக்கணக்கான காசுகளும் இருந்தன.
அவள் கவலைகள் தீர்ந்தன. ‘இனி பொன்னாவிரையின் வறுமை மறைந்தது. அவன் துயரங்களும் அகன்றன’ என்று அவள் எழுந்தாள். காசுகளை அவன் முந்தானையில் முடிச்சிட்டு இடுப்பில் செருகினாள். ஆடையணிமணிகளிலும் ஒரு சில எடுத்துக் கட்டினாள். அரையில் சுற்றியிருந்த கயிற்றை அவிழ்த்து அதைத் தோட்டத்திலிருந்த பசுவின் கழுத்தில் மாட்டினாள். பசுவின் கழுத்தில் மாட்டப்படுவதற்கிருந்த வார்மணியையும் எடுத்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டாள்.
சிலம்பன் எழுதி வைத்த கடிதம் கண்டு. பைஞ்ஞீலியின் குடியிருப்பிலுள்ள அனைவரும் காலையிலேயே புறப்பட்டு மலையேறி இறங்கியிருந்தனர். பசுவின் கழுத்திலிருந்த மணியோசை கேட்டு அவர்கள் வியப்புற்றனர். பசுவுடன் பைஞ்ஞீலியைக் கண்டதும் அனைவரும் அவளைக் கண்டு ‘எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டனர். தாங்கள் செல்லப்புகும் இடத்துக்கே அவள் சென்று வந்து கேட்டு வியப்பும் மகிழ்வும் அடைந்தனர். அவர்கள் ஒருவரேனும் அவள் முன்கூட்டிச் சென்றது பற்றிப் பொறாமைப் படவில்லை. அவள் அமைந்த குணத்திற்கு அவள் எவ்வளவு விரைவில் நற்பேறுகள் அடைந்தாலும் அவர்கட்கு மகிழ்ச்சியே. அவளும் பொற்காசு கிடைத்த விவரம் தவிர யாவும் கூறி அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் தெரிவித்து அனுப்பினாள்.
குடியிருப்பில் அனைவருக்குமே அவரவர்களுக்கு வேண்டிய ஆடு மாடுகள், ஏர் கலப்பைகள், தட்டுமுட்டுப் பொருள்கள், அணிமணிகள் கிடைத்தன.
பைஞ்ஞீலி தன் பொற்காசுகளில் இரண்டைத் தமிழகம் செல்லும் கலத்தின் மீகாமனிடம் கொடுத்துப் பொன்னா விரையை அழைத்து வரும்படி கோரினாள். பொன்னாவிரையின் செலவுகளுக்காக அவனுக்கும் இரண்டு காசுகள் கொடுத்தனுப்பினாள்.
பொன்காசுகள் கிடைத்ததைவிட அவற்றின் மூலம் பொன்னாவிரை கைவரப் பெற்றதற்கே பைஞ்ஞீலி பெருமகிழ் வடைந்தாள். பழந்தீவின் ஆட்சித் தலைவர் முன்னிலையில் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகத் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். இருவர் நிலத்தையும் தனிப்பெண்ணாகப் பைஞ்ஞீலி பயன்படுத்தியது போக, இருவர் நிலத்தையும் ஒரே குடும்ப நிலமாக இப்போது பொன்னாவிரை பண்படுத்தினான். விரைவில் சோழர் ஆட்சித் தலைவர் அவ்விருவர் நற்குணமும் திறமும் கண்டு, பொன்னாவிரையை ஆட்சித் துறையிலும் பைஞ்ஞீலியைக் கல்வித் துறையிலும் அமர்வித்தார்.
நேச வாழ்வில் காட்டிய அதே பண்பையும் உறுதியையும் இருவரும் குடும்பப் பாச வாழ்விலும், நாட்டுப் பணி வாழ்விலும் காட்டி மேம்பாடுற்றனர்.
நயத்தக்க நாகரிகம்
நாகைப்பட்டினத்தில் வானவன் என்றோர் உயர்குடிச் செல்வன் இருந்தான். அவன் குடும்பம் பல தலைமுறைகளாகச் சோழப் பேரரசருடன் உறவு கொண்டிருந்ததனால் அவன் மட்டற்ற செருக்கு உடையவனாயிருந்தான். அத்துடன் அவன் எவருக்கும் உதவுவதில்லை. எவர் சிறப்புறுவதையும் காணப் பொறுப்ப தில்லை. ஆனால், அதே நகரில் மீனவன் என்றொரு வணிகன் இருந்தான். அவன் செல்வக் குடியில் பிறக்கவில்லை. ஆயினும் தன் முயற்சியால் பெருஞ்செல்வனானான், அவன் கலங்கள் ஈழம், கடாரம், பழந்தீவங்கள் எங்கும் சென்று அரும்பொருட் கொணர்ந்தன. அவற்றை அவன் தன் பணியாளர்களுக்கும் உற்றார் உறவினருக்கும் நகர மக்களுக்கும் நலஞ் செய்வதிலேயே செலவழித்தான். சோலை வளம் பெருக்கும் சுனை அச்சோலையின் நிழலில் தானும் மேன்மேலும் நீர்வளம் சுரப்பது போல, அவன் வரையாது வழங்கவழங்க அவன் செல்வங்களும் வரையாது பொங்கின. இவற்றைக் கண்டு வானவன் பொருமினான்.
மக்கள் வானவனை மிகுதி விரும்பாவிட்டாலும், மன்னவையிலும் மன்னர் பெருமன்னர் சூழலிலும் அவனுக்குச் செல்வாக்கு எல்லையற்றது. அச்சூழலில் அவன் மீனவன் மீது பல அவதூறுகளை மெல்லமெல்லப் பரப்பி வந்தான். கால இடச் சூழல்களிடையே இதை வலியுறுத்தவும் அவனுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. இச்சமயம் பாண்டி நாட்டு அரசுரிமைப் போர்கள் மூலம் சோழ நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் இடையே பெரும் பூசல் மூண்டது. இதனால் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே நடைபெற்ற எல்லா வாணிகத் தொடர்புகளும் போக்குவரவுத் தொடர்புகளும் தடைப்பட்டன. ஆயினும், இந்தச் சூழலிடையிலும் எப்படியோ ஈழ நாட்டுத் துறை முகத்திலிருந்து மீனவன் கப்பலொன்று சரக்குகளுடனும் அரும்பெரும் பொருட் குவையுடனும் நாகப்பட்டினத் துறைமுகத்தில் வந்திறங்கிற்று. மீனவன் ஈழ அரசனுக்கு ஒற்றனாயிருந்து பணியாற்றி வந்ததாலேயே அவனுக்கு இந்தச் சலுகை தரப் பட்டதென்று கூறி, வானவன் இச்செய்தியைப் பேரரச வட்டாரங்களில் திரித்துரைத்தான்.
மீனவனைச் சோழப் பேரரசுத் தலைவர் சிறைப்படுத்தி, தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் வழக்கு மன்றத்தில் குற்றஞ்சாட்டினர். மீனவர் நிலைமையை நேர்மையுடனேயே விளக்கினான். அவன் கப்பல், போர் தொடங்க நெடுநாள் முன்னதாகவே ஈழம் சென்று, சரக்குகளுடனும் பொருட் குவையுடனும் திரும்பிற்று. வழியில் கப்பலின் பல பகுதிகள் புயலினால் பழுதுபட்டதால், பாண்டி நாட்டுத் துறைமுகங்களில் சீர்திருத்தம் பெறுவதற்குச் சென்றிருந்தது. அது இக்காரணத் தினால் போர் தொடங்கியுள்ள சேர சோழ நாட்டுக்கு வர முடிந்தது.
வானவன் நீண்டநாள் செய்துவந்த அவதூறு காரணமாக, தலைவர்கள் இந்த விளக்கத்தை புனைசுருட்டு என்று கருதினர். ஆகவே அவனைத் தண்டனைக்கு ஆளாக்கினர். அவன் செல்வ முழுவதும் பறிமுதலாயிற்று. அவனும் அவன் குடும்பத்தினரும் பேரரசின் எல்லைக் கப்பால் நாடு கடத்தப்பட்டனர். மீனவன் சேரநாட்டிலும் குந்தள நாட்டிலும் சுற்றித் திரிந்து பல அவதிகளுக்கு ஆளானான். ஆனால் இறுதியில் கோவாப் பட்டினத்திலுள்ள வெளிநாட்டு வாணிக நண்பனான நன்னிசோடன் அவனை வரவேற்றுத் தன்னுடனே வைத்துக் கொண்டான். அவன் நற்குணத்தாலும் திறமையாலும் விரைவில் நன்னிசோடன் செல்வமே பெருகியதனால், நன்னிசோடன் அவனைத் தன் பங்காளியாக்கிக் கொண்டதுடன், அவன் புதல்வனுக்கே தன் புதல்வியை மணமுடித்து, அவனைத் தன் குடும்பத்துடனேயே ஒன்றுபடுத்தினான்.
சோழநாட்டினரையும் ஈழ நாட்டினரையும் பாண்டிய நாட்டுப் போர் பல களங்களில் குருதிப் போராட வைத்தது. பல ஆண்டுகள் சென்று சோழர் வெற்றி எய்தினர், இடையே பல தறுவாய்களில் ஈழநாட்டார் கை மேலோங்கியிருந்தது. அச்சமயங்களில் சோழநாட்டாரும் அவர்களுக்கு ஆதரவா யிருந்த பல தமிழரும் படுகொலைக்காளாயினர். அத்துடன் உயர்குடியினர் பலர் சிறைப்பட்டு, குந்தள நாட்டிலும் கூர்ச்சர நாட்டிலும் கொண்டுபோய் அடிமைகளாக விற்கப்பட்டனர். இவ்வகையில் சிறைப்பட்டுக் காணாமல் போனவர்களுள் வானவன் குடியின் ஒரே செல்வனான தங்கமணியும் ஒருவன். சிறைப்படும் சமயம் அவனுக்குப் பதினாறு வயதே நிரம்பியிருந்தது. அவனை இழந்த அவன் தாய் புழுவாய்த் துடித்து உயிர் நீத்தாள். அவனிடமே உயிர்ப்பாசம் வைத்திருந்த அவன் தங்கை தண்பொருந்தம் உணவு, உடைகளில் கருத்துக் கொள்ளாமல் அனலிடைப்பட்ட தளிர்போல வாடி வதங்கினாள். வானவனோ தன் பெருமை எல்லாம் மறந்து மைந்தன் நாளை வருவான், நாளை வருவான் என்று காத்திருந்தான். தன் ஆருயிர்ப் புதல்விக்கும் ஆறுதல் கூறி வந்தான்.
ஆண்டுகள் ஐந்து கடந்தன. பாண்டி நாட்டுப் போர் முடிவுற்றது. ஈழ அரசனுடன் சோழப் பேரரசன் நட்புறவு பூண்டான். சிறைப்பட்ட பலர் இருநாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டனர். இரண்டு நாடுகளிலும் அமைதி விழாக்கள் கொண்டாடப்பட்டன. ஆனால், வானவன் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை. வெளியே எங்கும் வெற்றி முழக்கங்கள், விழாக் கொடிகள், இன்னிசை அலைகள்! ஆனால் அவன் இல்லத்தில் மாள்வை நோக்கி மறுகிய மங்கையும், மாள முடியாது மாண்டுவந்த செல்வனும் ஒளியிழந்து வாடியிருந்தனர்.
ஓர் இளைஞன் தடதடவென வானவன் முன் வந்து ‘அப்பா’ என்றான். வானவன் முகத்தை நிமிர்த்தவில்லை. அவன் காதுகள் கேட்கவில்லை.
இளைஞன் சற்றுத் திரும்பி நோக்கினான்.
ஒரு கட்டிலில் தலையணைகளிடையே ஒரு நுண்ணிழை போலக் கிடந்த உருவத்தைக் கண்டான்.
தண்பொருந்தம் உறங்கவில்லை. விழித்திருக்கவில்லை. அவள் மாளவில்லை. ஆனால் வாழவுமில்லை. அவள் நம்பிக்கையிழந்து சோர்ந்து கிடந்தாள். அவள் செவியிலும் வந்த இளைஞன் சொற்கள் விழவில்லை.
அவன் யார் என்று கேட்கக்கூட இருவருக்கும் தோன்ற வில்லை.
இளைஞன் கண்கள் பின்னும் சுற்று முற்றும் ஓடின. அவன் தன் அன்னையைத் தேடினான். அன்னையின் உருவப் படமே அவன் கண்முன் இருந்தது. தண்பொருத்தம் நாள்தோறும் அணிந்த வெண்மலர் மாலை அதன் மீது துவண்டு கிடந்தது.
அவன் அந்தப் படத்தை எடுத்தான்.
‘எங்கே என் தாய், எங்கே என் தாய், எங்கே என் அன்னை?’ என்று அலறினான். தண்பொருந்தம் தன் துயரினும் விஞ்சிய அத்துயர்க் குரல் கேட்டுத் திரும்பினாள். ஆனால் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளால் வாய்விட்டழவும் முடியவில்லை. கண்களிலிருந்து மட்டும் வற்றியிருந்த ஊற்று மீண்டும் சுரந்தது. அவளழுகை கண்டு தங்கமணி அவளருகே வந்து, ‘தண்பொருந்தம்! நீ ஏன் இப்படிப் போனாய்? அம்மா எங்கே?’ என்றான்.
தண்பொருந்தத்துக்கு அவன் அண்ணன் என்பது விளங்கி விட்டது. புதிய உயிருடன் புதிய துயரம் பீறிட்டெழுந்தன. ‘அண்ணா, அண்ணா! நீ இல்லாமல் அப்பாவும் நானும்தான் உயிருடன் இருக்கிறோம். அம்மா அப்போதே போய்விட்டாள். பாவம் நீ அடுத்த உலகில் இருக்கிறாய் என்று தேடப் போனாள். நீ இங்கிருக்கிறாய்; இத்தனை ஆண்டு கழித்தாவது வருவாய் என்று தெரிந்தால் அவள் போயிருக்க மாட்டாளே’ என்று தேம்பித்தேம்பி அழுதாள்.
வானவன், ஏதோ சிந்தனைக் கோட்டைகளிடையே தவழ்ந்திருந்தவன் இந்தக் காட்சியைக் கண்டு திகைத்தான். தங்கமணியின் முகத்தை இருகையாலும் ஏந்திக் கொண்டு, “நீ யார்? என் இறந்தபோன மகன் பற்றிய செய்தியா கொண்டு வந்திருக்கிறாய்?” என்றான்.
“அப்பா, நான் இறந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும் அப்பா! இங்கே வந்து அம்மா மறைவையாவது கேட்க நேராதிருந்திருக்கும். ஆனாலும், தங்கையை இந்நிலையில் நான் விட்டுச் சென்றிருக்கப்படாது. நீங்களும்….”
"ஆ, நீயா தங்கமணி, நீயா என் மகன்? எப்படியப்பா வந்தாய்? எங்கிருந்தாய்? தெய்வமே, என் மனைவியைக் கைக் கொண்டாய், மகனைக் கொடுத்தாய்? ஏன் இந்தக் கூத்து அப்பனே! பிள்ளையைக் காணாமல் அவள் இறந்தாளே! என்று புலம்பினான்.
“அப்பா, இங்கே அம்மையைக் காக்க ஒரு தெய்வம் இல்லாமலா போயிற்று? ஆனால் கோவாப்பட்டினத்தில் ஒரு தெய்வம் இருக்கிறது. தமிழனுக்குத் தமிழன் என்ற ஓர் உறவன்றி, அந்தப் பெருந்தகைக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. ஆனால், எனக்காக அவர் ஏனோ பணம் செலவு செய்து. வருத்தங்களும் மேற்கொண்டு அன்பையும் சொரிந்து, உங்களிடமே என்னை அனுப்பியிருக்கிறார். சிறைப்பட்டு அடிமையாக்கப்பட்ட என்னை அடிமையாகவே வாங்கி, விடுதலை தந்து மகனாக நடத்தி உங்களிடம் அனுப்பியிருக்கிறார். அத்தகைய தெய்வங்கள் நம் தமிழ்நாட்டிலும் இருந்தால் நம் துன்பங்கள்கூட இன்பமாய் இருக்கும் அப்பா” என்றான் தங்கமணி.
“யார் அப்பா, அவர்? விவரமாகச் சொல்லு! உன் உயிரைத் தந்த அவருக்கு நான் என்ன செய்தாலும் தகும்” என்றான் வானவன்.
“அவர் யார் என்று எனக்குத் தெரியாதப்பா! அங்குள்ள ஒரு பெரு வணிகர். பெயர் மீனவர்”. “மீனவனா, ஆ!” என்று சாய்ந்தான் வானவன்.
தங்கமணி கவலையுடன் அவனை அணைத்தெடுத்து முகத்தில் நீர் தெளித்து ஆற்றினான். பின், அவரை “உங்களுக்குத் தெரியுமா அப்பா? அவர் பெயர் கேட்டவுடன் இவ்வளவு சோர்வானேன்? சரி, அவரே உங்களுக்கு என்னிடமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், தர மறந்து விட்டேன்” என்று ஒரு உறையையும் சுட்டிக் காட்டினான்.
வானவன் உறையை அவசர அவசரமாகக் கிழித்து வாசித்தான். "இந்தக் கடிதத்துடன் உம் குடிக்கு ஒரே கொழுந்தான உங்கள் புதல்வன் தங்கமணி உங்களிடம் வந்து சேர்ந்திருப்பான். பெற்ற தந்தை என்ற உங்கள் உரிமை பெரிதாதலினாலேயே அவனை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவனை என் மகன் போலவே நேசிக்கத் தொடங்கிவிட்டேன். அவன் எங்கிருக்கிறான் என்று அறியாமல் நீங்கள் அடையும் துயரை அவனை விட்டுப் பிரியும்போது நான் அடையும் துயரே எனக்குக் காட்டுகிறது.
"சோழ நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் மீண்டும் நட்புறவு ஏற்பட்டதாகச் செவியுற்றேன். அந்த விழா நாளில் நான் கலக்க முடியாதவனாய் விட்டேன். ஆனால், என் வளர்ப்புப் புதல்வனும் அவன் குடும்பமுமாவது அதில் முழுதும் பங்கு கொள்ளட்டும் என்ற எண்ணத்துடனேயே நான் தங்கமணியை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். என் அன்பையும் சேர்த்து அவனிடம் நீங்கள் அன்பு காட்டுவீர்களென்று நம்புகிறேன்.
மறவா அன்பன்,
மீனவன்.
கடிதத்தை வாசித்து வானவன் கண்ணீர்வடித்து கதறியழுதான். தான் மீனவனுக்குச் செய்த கொடுமைகளை மைந்தனுக்கு எடுத்துக்கூறி, நயத்தக்க நாகரிகத்தை வாயாரப் புகழ்ந்தான்.
நீலமலை
தமிழகத்தின் கடைசிப் பாண்டியர் படையில் ஒரு பாண்டிநாட்டு வீரனும், சோழ நாட்டு வீரனும், சேர நாட்டு வீரனும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தனர். அவர்கள் பெயர்கள் முறையே இளஞ்செழியன், இளங்கிள்ளி, இளங்குட்டுவன் என்பன. பாண்டியர் படை வீழ்ச்சியின் பின் படை வீரர்களெல்லோருமே போர்த் தொழிலைக் கைவிட்டு வேறு வேறு தொழில் தேடவேண்டியவராயினர். ஆனால் நண்பர்கள் மூவரும் ஒரே திசையில் புது வாழ்வுக்கான புது வாய்ப்பும் புதுச் சூழலும்தேடிப் புறப்பட்டனர்.
அவர்கள் காடும் மலையும் கடுகி விழ நடந்தனர் இடையிடையே கண்ட ஊர்களிலோ நகரங்களிலோ படை வீரருக்கேற்ற வேலை எதுவும் கிட்டவில்லை. இறுதியில் உம்பற் காட்டின் அருகே வற்றற்பாலை போன்ற ஓர் அகல் வெளியைக் கண்டார்கள். அதன் நடுவே காணப்பட்ட ஒரு தனி மரத்தினடியில் இளைப்பாறினர். ஆனால், மூன்று நாட்களாக உணவின்றி அவர்கள் வயிறுகள் குடைந்தன. கால்கள் நடக்க மறுத்தன. மூவரும் மூன்று கட்டைகளாகக் கிடந்தனர். இரவு முழுவதும் உறங்கிவிட்டனர்.
விடிய ஒரு யாமத்துக்குள் பசி இளஞ்செழியனை எழுப்பி விட்டது. அவன் மரத்தின் மீதேறி உச்சிக் கிளையிலமர்ந்து கண்களை ஓடவிட்டான். ஒரே ஒரு திசையில் ஒய்யாரமான ஒரு மாளிகை தென்பட்டது. தோழர்கள் எழுந்திருக்குமுன் அங்கே சென்று உணவு கிடைக்குமா என்று பார்த்துவர எண்ணி அவன் புறப்பட்டான். மாளிகையின் கதவுகளும் பலகணிகளும் இறுகச் சார்த்தப்பட்டிருந்தன. ’சிறிது விடியட்டும்; யாரேனும் கதவு திறக்கக் கூடும் என்று எண்ணி அவன் புறவாரத்திலேயே அமர்ந்தான்.
மேலே ஒரு பலகணி திறக்கப்பட்டது. பின்னால், மயிலைப் பழித்த சாயலுடைய ஒரு பெண்ணுருவம் குயிலைப் பழித்த இனிய குரல் கொடுத்து ‘யாரது, என்ன வேண்டும்’ என்று.
“மூன்று நாளாக உணவு நீரில்லாமல் அலைகிறோம். ஏதாவது வயிற்றுக்கு…” சொல்லி முடியுமுன் அவள் முன்கதவு திறந்து ‘உள்ளே வாருங்கள்’ என்று அன்புடன் அழைத்தாள்.
பக்க அறை ஒன்றில் பல இளைஞர் உறங்கிக் கிடந்தனர். பெண்ணரசி உள்ளறை சென்று பாலும் பழமும் தின்பண்டங்களும் கொணர்ந்தாள். அவன் பசி மிகுதியாயிருந்தது. ஆகவே, அந்த இளைஞரைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ எதுவும் கேட்க முனையவில்லை. தோழரைக்கூடப் பசி மறக்கச் செய்தது. அவன் ஆர்வமாக உண்டு பருகினான். அடுத்த கணமே அவன் கண்கள் துயிலுள் ஆழ்ந்தன. அறையில் துயின்றவருள் அவனும் ஒருவனானான்.
விடிய அரை யாமத்துக்குள் பசி இளங்கிள்ளியையும் தட்டியெழுப்பிற்று. இளஞ்செழியனைக் காணாததால் அவன் எங்கே போயிருப்பான் என்று பார்க்க அவனும் மரத்தில் ஏறினான். மாளிகை அவனுக்கும் காட்சியளித்தது. இளஞ்செழியனுக்கு நடந்தபடியே அவனுக்கும் யாவும் நிகழ்ந்தன. அவனும் பெண்ணரசியின் மாளிகையில் துயில்பவருள் ஒருவனானான்.
விடியும் நேரத்திலேயே இளங்குட்டுவன் எழுந்தான். தோழர் இருவரையும் காணாமல் அவன் மூளை குழம்பிற்று. மரத்தின் மேல் ஏறிப் பார்த்து அவனும் மாளிகையடைந்து மயில் சாயல் பெண்ணரசியின் அழைப்பை ஏற்று உட்சென்றான். மற்ற இருவர் போலவே அவனும் பக்கத்தறையில் துயில்பவர்களைக் கண்டான். அவர்களிடையே தன் இரு தோழர்களும் கிடப்பது கண்டு அவன் அவர்களைப் பற்றிக் கவலைகொண்டான். எனவே, பெண்ணரசி, பாலும், பழமும், சிற்றுண்டிகளும் கொண்டுவந்து வைத்து உண்ணச் சொன்னபோது அவன் மற்றவர்களைப் போல உண்ணவில்லை.
‘நீ யார்?’ ‘இங்கே இத்தனை இளைஞர்கள் உறங்கு கிறார்களே அவர்கள் யார்? ஏன் இங்கே இவ்வாறு துயில்கிறார்கள்? ’அவர்களில் என்னுடன் வந்த என் தோழர் இருவரும் எப்படி வந்து சேர்ந்தார்கள்? ’இவற்றை அறியாமல் நான் உண்ண முடியாது!’ என்றான்.
பெண்ணரசி முகத்தில் ஏற்கனவே அடங்கிய கவலை இருந்தது. இப்போது நம்பிக்கைக் குறி காட்சியளித்தது.
"நான் ஓர் இளவரசி, என் பெயர் நீலமாமயில், என் தாய்வழியிலுள்ள குடிப்பழிகள் என்னை நாள்தோறும் தொல்லைப்படுத்தி வந்துள்ளன. அவற்றிலிருந்து என்னை விடுவிக்க மாயாவிகள் சிலர் வகுத்த மாளிகை இது. இதில் என்னிடம் உணவு கேட்பவருக்கெல்லாம நான் உணவு கொடுக்க வேண்டும். நான் யார் என்று கேட்காமல் உண்டவர்களெல்லாம் இப்படி ஓயாத் துயிலில் வீழ்வார்கள். யார் என்று கேட்பவன் இங்கேயுள்ள உள்ளறையில் மூன்று இரவுகள் எனக்காகத் தங்கி, அவ்வறையில் ஏற்படும் தொல்லைகளை எல்லாம் தாங்கி வாழ்ந்தால், அவன் என்னைப் பழிகளிலிருந்து விடுவிப்பதுடன் என்னையும் பரிசாகப் பெறுவான். அத்தகையவன் விரும்பினால், இதோ என் அருகே இருக்கும் மந்திரக் கோலால் தொட்டவுடன் துயில்கின்றவர் அனைவரும் விடுபடுவர்.
‘நூற்றுக்கணக்கானவர் இதுவரை இங்கே வந்தாலும் அத்தனை பேரும் துயிலுக்கு ஆளானார்களேயன்றி உங்களைப் போல் “நீ யார்” என்று கேட்க எண்ணியதில்லை. ஆகவே, என்னை விடுவிப்பவர்களே நீங்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்காக மூன்று நாள் இரவு அந்த அறையின் அவதியைத் தாங்கி உதவும்படி கோருகிறேன்’ என்றாள்.
இளங்குட்டுவன் இணங்கினான். தன் தோழர்களை மீட்கும் வழியும் அதுவே என்ற மனமமைந்தான்.
முதல் நாளிரவில் நள்ளிராப் போதில் ஒரு பூதம் அவன் மேல் வந்தமர்ந்து கொண்டது. அதன் தலை மட்டும் குருதிச் சிவப்பாய் இருந்தது. கழுத்துக்குக் கீழே நீலமாயிருந்தது. அது விடியும்வரை அவனை அடித்தது; இடித்தது; குத்தியது; உதைத்தது. அவனைச் சுருட்டிப் புரட்டிக் கைகளையும் கால்களையும் முறுக்கி உயிர் வதைப்படுத்திற்று. உடம்பில் பல இடங்களில் தன் கூரிய நகங்களால் தசையைக் கிழித்தது. கொடிய கோரைப் பற்களால் கடித்துக் கீறிற்று. விடியும் சமயம் அவனைக் குற்றுயிராய்த் துடிக்க விட்டுச் சென்றது.
விடியற் காலையில் நீலமாமயில் வந்து அவன் நிலை கண்டு பதைபதைத்தாள். அவள் தன் கையிலிருந்த ஒரு புட்டியிலிருந்து ஒரு சிரங்கை நறுநெய் எடுத்து அவன் அங்கமெங்கும் தடவினாள். தடவத் தடவ அவன் மேனியிலிருந்த காயங்கள் ஆறின. நோவு அகன்றது; ஆற்றல் மீண்டது; அவன் கண்கள் திறந்து அவளுக்கு நன்றி கூறினான்.
ஆனால், இரவு அனுபவித்த வதைவுகளின் நினைவு அவனை மீட்டும்மீட்டும் துடிக்க வைத்தது. இதுபோன்ற வதையை மறு இரவு தாங்க முடியாதென்றே வருத்தத்துடன் தெரிவித்தான். ஆனால், நீலமாமயில் தன் நிலையை அவனுக்கு எடுத்துரைத்தாள். ஏற்கெனவே பட்ட துயர் வீண் போகும் என்று வாதிட்டாள். தோழரைக் காக்கும் வாய்ப்பும், மேலும் நூற்றுக்கணக்கான வரை மீட்கும் வாய்ப்பும் இல்லாமல் போகுமே என்று நினைவூட்டினாள். அவன் ஒருவாறு இரண்டாம் இரவில் தங்க இணங்கினான்.
இரண்டாம் இரவில் பூதங்கள் ஒன்றுக்கு மூன்றாயின. உருவிலும் ஒன்றுக்கு மூன்று பங்கு பெரிதாயின. ஒவ்வொரு பூதமும் அரைக்குமேல் அழற்சிவப்பாய் எரிந்தன. மூன்றும் அவனை மூன்று திசைகளில் மாறிமாறி இழுத்தன. மூன்றும் உறுப்புறுப்பாகப் பிடித்துச் சிதைத்தன. ஒன்று அடிக்கும் போது ஒன்று உதைத்தது. மற்றொன்று நகத்தால் கிரித்தது. ஒன்று குத்தும்போது ஒன்று இடித்தது. மற்றொன்று கடித்தது. முதலிரவு அனுபவித்ததையெல்லாம் துரும்பாக்கி, அன்றைய வாதை இரும்பாகப் பெருகிற்று. விடியுமுன் அவனைக் கிட்டத்தட்ட இறந்த பிணம்போல அலங்கோலமாக்கிவிட்டுப் பூதங்கள் மறைந்தன. ஆனால், காலையில் நீலமாமயில் புட்டியில் ஒருபெரும் பகுதி நறுநெய்யை அவன்மீது கொட்டி உறுப்புறுப் பாகக் குழையத் தேய்த்தாள். ஒரு நாழிகை தேய்த்த பின் நோவு அகன்றது. மூன்றாவது நாழிகை தேய்த்த பின்னரே உடல் பழைய ஆற்றல் பெற்றது.
இரண்டு இரவின் அவதிகளும் இளங்குட்டுவனுக்குப் போதும்போதும் என்றாய் விட்டது. ‘நான் உயிரிழக்க அஞ்சவில்லை. ஆனால், ஓர் இரவு முழுவதுமே இப்படி அவதிப் பட்டுச் சாகாமல் சாகும் துன்பத்தை என்னால் தாங்க இயலாது. மூன்றாம் தடவையும் நான் அறைக்குள் புகமாட்டேன். என்னை வற்புறுத்தாதீர்கள்’ என்று அவன் நீலமாமயிலிடம் கூறினான்.
அவள் முகம் சிறிது புன்னகை பூத்தது. அதே சமயம் கண்கள் கலங்கியிருந்தன.
"உங்கள் துன்பங்களை நான் அறியாதவளல்ல. துன்பம் மிகமிகப் பெரிதுதான். ஆனால், அது முடிந்துவிடும்; ஒரு பொறி உயிர் இருக்கும் வரை என்னிடம் உள்ள நறுநெய் உயிரை மட்டும் மீட்பதன்று; நோய் அகற்றிவிடும்; முன்னிலும் மிக்க ஆற்றல் அளிக்கும்; எவரும் படாத துயரை எனக்காக இரண்டு இரவும் பட்டுவிட்டீர்கள். அவற்றின் பயனை நான் அடைய இன்னும் ஒரு நாள் இரவுதான் குறை. அதை முடித்துவிட்டபின், வாழ்நாள் முழுவதும் நான்தான் உங்களுக்குக் கடமைப்பட்டவளாவேன். உங்கள் நண்பர்கள் நன்றியும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நன்றியும் உங்களுக்கு உரியதாகும்.
“இவை மட்டுமன்று, இவற்றையெல்லாம்விட உங்களைத் தூண்டத் தக்கச் செய்தி ஒன்று உண்டு. உங்களிடம் நான் நன்றியை மட்டும் உடையவளல்ல, உங்களைக் கண்டவுடன் என் மனம் உங்களை நாடி விட்டது. நீங்கள் என்னைப் பெறத் தவறினால், நான் யாருக்காவும் இந்த மாளிகையில் இருந்து இதே சோதனைகளைச் செய்து கொண்டிருக்க விரும்பவில்லை. சோதனைகளில் வென்றவர்கள் எவரும் என் நன்றியையும் கடமையையும் பெறக் கூடும். நீங்கள் மட்டும் தான் என் விருப்ப ஆர்வத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உடன் பிறந்த பாசம் உடலுடன் வருவது. அது கடந்த உடன் பிறவா உயிர்ப் பாசத்தை உங்களைக் கண்டவுடன் நான் கொண்டு விட்டேன்” என்று அவள் உள்ளுணர்ச்சியுடன் பேசினாள். இளங்குட்டுவன் நீலமாமயிலை ஆர்வத்துடன் ஒரு தடவை பார்த்தான். மீந்த ஓர் இரவிலும் அந்த அறையில் அவதியுற இணங்கினான்.
இத்தடவை பூதங்கள் மூன்றுக்கு மும்மூன்றாயின. உருவிலும் உயரத்திலும் பருமனிலும் இரண்டாம் நாள் பூதத்தைப் பார்க்கிலும் மும்மடங்காய் இருந்தன. அத்துடன் பாதங்கள் மட்டுமே நீலமாய் இருந்தன. உடல் முழுதும் அழல் எழும் இருப்புப் பாளங்கள்போல எரிந்தன. அவற்றின் உடல் வெப்பும் மூச்சுமே அவனைச் சுட்டெரித்தன. ஒன்பது பூதங்களும் அவன் உடல் மேல் ஏறி நின்று ஆடி அதைத் துவைத்தன. அவனைப் பந்தாக்கிச் சுவருக்குச் சுவர் மோதின. மேட்டிலிருந்து தளத்துக்கும் தளத்திலிருந்து மேட்டுக்கும் காலால் எற்றின. ஒன்று அவன் முதுகில் ஏறிக் குத்திக் குடைந்தது. ஒன்று கழுத்தைக் கடித்தது. ஒன்று தலையைத் தேங்காய் உடைத்தது போல் உடைத்தது. இரண்டு கைகளை இரண்டு பூதங்களும், இரண்டு கால்களை வேறு இரண்டு பூதங்களும் பிடித்து மடக்கி முறித்துத் திருகின. வேறு இரண்டு பூதங்கள் நகங்களாலேயே இரு விலாக்களிலும் சூடிட்டன. இரண்டு நாள் இரவு பட்ட வாதை முழுவதையும் அவன் ஒவ்வொரு கணப்போதிலும் பட்டான். விடிவதற்குள் அவன் உயிரே உடலைவிட்டு ஓடிவிட்டதுபோல் தோன்றிற்று.
காலையில் நீலமாமயில், இளங்குட்டுவன் உடல் கிடந்த நிலை கண்டு ஒரு கணம் திடுக்கிட்டு அலறினாள்; பேச்சில்லை; மூச்சில்லை; உயிர் இருப்பதற்கான அடையாளம் சிறிதும் இல்லை. அவள் புட்டியிலிருந்த நறுநெய் முழுவதையும் அவன் உச்சியில் பெய்து உடம்பெல்லாம் தடவினாள். ஒரு நாழிகைக்குப் பின் தட்டித் தடங்கி மூச்சு வந்த போதே அவளுக்கும் உயிர் வந்தது. மூன்று நாழிகையில் காயங்கள் அகன்றன. பின்னும் மூன்று நாழிகையில் நோவும் அகன்றது. இறுதி மூன்று நாழிகைக்குள் அவன் பழைய ஆற்றல் மீண்டது. ஆனால், இத்தனை நாழிகையும் உணவு ஒய்வு இல்லாமல் ஒரே கவலையுடன் உழைத்த நீலமாமயில், முற்றிலும் சோர்வுற்று முழு உணர்வு பெற்றுவிட்ட இளங்குட்டுவன் தோள்கள் மீது உணர்விழந்து சாய்ந்தாள்.
பட்டில் இழைத்த பசுங்கொடிபோல் அப் பாவை கிடந்த பரிசு கண்ட இளங்குட்டுவன் தன் துன்பங்கள் அனைத்தையும் மறந்தான். இப்பரிசு கிட்ட இன்னும் எத்தனை துன்பங்களையும் தாங்க முடியும் என்று எண்ணினான். தன் மேலாடையால் அவளுக்கு மெல்ல விசிறி, அவள் அயர்ச்சி நீங்கும் வரை அவளை ஆதரவாக ஏந்திக் கொண்டு உடலை நோக்கும் உயிர்போல அவள் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். கண்விழித்த நீலமாமயில் அவனை அந்நிலையில் கண்டதே புன்முறுவல் பூத்தாள். அவனும் பாலும் பழமும் ஊட்டி அவளுக்குப் புதிய தெம்பளித்தான்.
இதற்குள் மாலையாயிற்று, நீலமாமயில் முகத்திலும் இப்போது ஒரு மென்னிழல் படர்ந்து. அவள் அவன் இரு கரங்களையும் பற்றிய வண்ணம் அவனை ஆவலுடன் நோக்கினாள்.
‘அன்பரே! என்னை நீங்கள் அரும்பாடுபட்டு விடுவித்துள்ளீர்கள். நான் இனி உங்களுக்குரியவள்; உங்களை மறக்க மாட்டேன். ஆனால், நாடு விடுதலை அடைந்தவுடன் என் தந்தையைக் காண வேண்டும். உங்களைப் பற்றிய கவலையால் நான் நெடுநேரம் உணர்விழந்து கிடந்து விட்டேன். அதன்பின் உங்கள் பாசம் என்னை நீண்ட நேரம் ஆகவேண்டிய இன்றியமையாக் கடமைகளை மறந்துவிடச் செய்துவிட்டது. ஆகவே, கிட்டிய பறவை பறந்து போகிறதே என்று எண்ணாதீர்கள். நான் விரைந்து திரும்பி வந்து உங்களை மீட்டுக் கொண்டு போகிறேன். இப்போது விடைபெற, விளக்கம் அளிக்கக்கூட நேரமில்லை. மன்னிக்கக் கோருகிறேன்’ என்று கூறி அடுத்த கணமே மறைந்துவிட்டாள்.
அவன் கன்னத்தில் ஒரு மெல்லிய கரம் விடை கொள்வது போல் தட்டியிராவிட்டால், அவள் தன் கனவில் மாய உருவாய் வந்து ஏமாற்றி விட்டதாகவே நினைத்திருப்பான். உடனிருந்து பேசிய மாது எப்படி அவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்திருப்பாள் என்று அவனால் அறிய முடிய வில்லை. அவன் அவளை எங்கும் தேடினான். பின் அயர்ந்து அவன் வழக்கமாக அமர்ந்த சாய்விருக்கையில் சாய்ந்தான்.
ஒரு குள்ளன், அவன் முன், தட்டில் பாலும் பழமும் தேம்பாகும் ஏந்தி நின்றான். ‘நீ யார்? நீலமாமயில் எங்கே?’ என்று கேட்டான் இளங்குட்டுவன்.
‘அவர்கள் போய்விட்டார்கள். நான் அவர்கள் வேலையாள். உங்களுக்கு உணவு, உடை வசதிகள் யாவும் செய்து தரும்படி அவரச உத்தரவு பிறப்பித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அத்துடன் காலையில் தங்களை வந்து இட்டுச் செல்லும்படி வருவதாகவும், அச்சமயம் உறங்காது விழித்திருக்கும்படியும் கூறிச் சென்றார்கள்’ என்றான்.
இது குட்டுவனுக்கு ஒரு சிறிது ஆறுதல் தந்தது. காலையில் எழுந்திருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவன் முன்னிரவிலேயே உறங்கச் சென்றான்.
அவன் உறங்கச் செல்லுமுன் குள்ளன் உடம்பில் குத்தினால்கூட நோவு தராத அவ்வளவு மெல்லிய குண்டூசி ஒன்றை அவன் சட்டைப் பையில் குத்திவிட்டான். இது இளங்குட்டுவனுக்குத் தெரியாது. அது மாயக் குண்டூசியாதலால், அவனை அது காலை எட்டு மணி வரை துயில வைத்து விட்டது.
எழுந்தவுடன் அவன் மணியைப் பார்த்தான். கலவரமுற்றுக் குள்ளனைக் கூவியழைத்தான். ‘எங்கே நீலமாமயில்? வந்து விட்டாளா?’ என்றான். ‘அப்போதே வந்து போய்விட்டார்கள். நீங்கள் எழுந்துவிட்டீர்களா என்று கேட்டார்கள். உறங்குவ தாகச் சொன்னபோது முகம் ஏமாற்ற மடைந்தது. பின் எப்படியும் நாளை வருகிறேன். எட்டு மணிக்குள் துயிலெழுந்து காத்திருக்கச் சொல் என்று கூறிச் சென்றார்கள்’ என்றான். ‘என்னை ஏன் எழுப்பக் கூடாது?’ என்று கோபமாகக் கேட்டான் இளங் குட்டுவன்.
‘ஆண்டே! இந்த மாளிகை மாய மாளிகை, இதன் எல்லையை விட்டு வெளியேறும் வரை எவரும் - இளவரசியோ நானோகூட - அதன் கட்டுப்பாடுகளை மீற முடியாது’ என்றான்.
இளங்குட்டுவன் பலகணி வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். கூறியது முற்றிலும் பொய்யன்று. குதிரை இலத்திகள் கிடந்தன. ஒய்யார வண்டியின் சக்கரங்கள் வந்து சென்ற தடம் தெரிந்தது. நீலமாமயில் நின்ற அழகிய காலடித் தடங்கள்கூட மணலில் காணப்பட்டது. அதனருகில் அவள் கூந்தலிலிருந்து விழுந்ததுபோல ஓர் இருவாட்சி மலர் கிடந்தது. அதை அவன் எடுத்துத் தன் சட்டைப் பையில் செருகி வைத்துக் கொண்டான்.
அன்று இளங்குட்டுவன் விளக்கு வைத்தவுடனே உண்டு உறங்கத் தொடங்கிவிட்டான். ஆனால், அன்றும் குள்ளன் உறங்குமுன் மாயக் குண்டூசியைக் குத்தி வைத்திருந்தான். இதன் பயனாக, மறுநாள் அவன் ஒன்பது மணிக்கே எழுந்திருக்க முடிந்தது. நீலமாமயில் அன்று முன்னிலும் முணுமுணுத்த தாகவும், இன்னும் ஒரே மணிக்குள் வருவதாகவும் கூறிச் சென்றிருந்தாள். அன்றும் முன் வாசலில் ஒய்யார வண்டித் தடமும் புதுக் குதிரை இலத்திகளும் கிடந்தன. ஒரு செண்பக மலரும் கீழே விழுந்திருந்தது. அவன் அதை எடுத்து வைத்துக் கொண்டான்.
இன்று, அவன் மாலையிலேயே உறங்கத் தொடங்கி விட்டான். ஆனால், குறிப்பறிந்து குள்ளனும் அதற்கு முன்பே குண்டூசியைக் குத்தியிருந்தான். ஆகவே, மறுநாள் இளங்குட்டுவன் ஒன்பது மணிக்குக் கூட எழுந்திருக்கவில்லை. பத்து மணிக்கே எழுந்திருந்து முழு ஏமாற்றமடைந்தான். ஏனெனில், நீலமாமயில் அன்று சீறிக் கொண்டே சென்றதாகக் குள்ளன் கூறினான்.
‘இம்மியளவாவது நான் வேண்டுமென்று எண்ணமிருந்தால் இப்படி மூன்று நாள் என்னை மறந்து தூங்குவாரா? சரி, போகட்டும், வேறு எந்தப் பெண்ணுடனாவது அவர் வாழ்ந்து கொள்ளட்டும்’ என்று கூறிவிட்டுப் போய்விட்டதாகக் குள்ளன் கூறினான்.
துயர வேதனையால் குமுறும் உள்ளத்துடன் இளங்குட்டுவன் பலகணி வழி எட்டிப் பார்த்தான். வழக்கமான ஓய்யார வண்டித் தடமும் புதிய இலத்திகளும் கிடந்தன. அவற்றின் அருகே ஓர் அழகிய செந்தாமரைப் பூவே கிடந்தது. அவன் ஆவலுடன் பூவை எடுத்தான். அதன் காம்புடன் காம்பாக ஒரு தாள் சுருள் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. துடிதுடிக்கும் கைவிரல்களுடன் அதைப் பிரித்துப் படித்தான்.
"அன்பரே! மூன்று நாள் மாயத் தூக்கத்தின் மருமத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. என் மாயக் கட்டுப்பாடு உங்களை எழுப்பவிடாமல் என்னைத் தடுத்துள்ளது. எழுந்திருக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடைவீரோ, என்னவோ - நான் முழு ஏமாற்றத்துடனேயே செல்கிறேன். மூன்று ஆண்டுகள் எப்படியும் நான் உமக்காகக் காத்திருக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கு மேல் என் தந்தைவழியில் நான் நடக்க வேண்டும். ஆயினும், வேறெருவருக்கு நான் உரிமைப்படுமுன் இந்த உயிர் உடலை விட்டுப் போய்விடும். என் உடலில் என் தந்தை கண்டெடுக்கும் கடிதத்தில் உயிர் நீத்த உடல் உமக்கே உரியது என்று எழுதிவிட்டு மட்டும் செல்வேன். அதையும் நீர் பெற மனங் கொள்ளா விட்டால், உடலைக் கடலில் எறிந்துவிட நான் அக்கடிதத்தில் எழுதிச் செல்வேன். நீர் விரும்பாத உடல் மீன்களுக்காவது இரையாகட்டும்-நீங்கள் அந்த அளவு விட்டுவிட மாட்டீர்கள் என்ற நைப்பாசையுடன் தான் இதை எழுதுகிறேன்.
"உமக்கே என் பரிசாக என் சாய்விருக்கையினுள் ஒரு வீரவாள் வைத்துச் செல்கிறேன். என் தந்தை நாட்டுப் பெயரையும் திசையையும் அது காட்டும். என்னைத் தேடி வருவதனால் அதைக் கொண்டுவருக. அது என் அன்பாக உம்முடன் இருந்து உம்மைக் காக்கும்.
“நீங்கள் மறந்தாலும் உங்களை மறவாத நீலமாமயில்”. கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்து இளங்குட்டுவன் பாகாய் உருகினான்; உளம் கருகினான்; கதறினான்; கண்ணீர் வடித்தான்; உருண்டான்; புரண்டான்; பின் ஒருவாறு தேறி, வீரவாளை எடுத்துக் கொண்டு புறப்பட எண்ணினான்.
தோழரும் இளைஞரும் கிடந்தகிடை இச்சமயம்தான் அவன் கண்களில் பட்டது. தன் ஆவலிலும் தன் துயரிலும் அவர்களை இதுவரை மறந்துவிட்டதற்காக அவன் வருந்தினான். நீலமாமயிலின் குறுந்தடியை அவன் கையில் எடுத்தான். ஆனால், அச்சமயம் குள்ளன் அவன் முன் தோன்றிக் குறுந்தடியைப் பறிக்க முயன்றான். இளங்குட்டுவன் கொடுத்த உதையில் குள்ளன் நிலத்தின் மீது உருண்டான்.
குறுந்தடியால் அவன் முதலில் ஊர் பெயர் தெரியாத இளைஞரையே தட்டினான். ஒவ்வொரு இளைஞன் எழும் போதும் குள்ளன் ஒரு முறை உருண்டான். ஒரு தடவை ‘ஐயோ’ எனக் கதறினான். வியப்புடன் கிட்டத்தட்ட எல்லா இளைஞர்களையும் எழுப்பி, வந்த வழியே ஓடிச் சென்றுவிடும்படி அவன் உத்தரவிட்டான். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருந்ததால், எல்லாரும் எழுந்து செல்ல ஒருநாள் முழுதும் ஆயிற்று.
மாலையில் தன் தோழர்களை எழுப்பிப் பின் அவன் அவர்களிடம் மாயக்கதை முழுதும் கூறினான். தான் நீலமாமயிலைத் தேடிப் புறப்பட இருப்பதால் விடை பெற்றுக் கொள்வதாக தெரிவித்தான். அவர்கள் தங்கள் தங்களால் இயன்ற அளவு தொலை உடன் வருவதாகக் கூறினர்.
தோழர்கள் எழுந்து கதை முழுதும் கேட்டு முடிந்தவுடன், குள்ளன் எழுந்திருந்தான். இளங்குட்டுவன் காலடியில் விழுந்தான்.
‘ஏந்தலே! நான் தங்களுக்குச் செய்த பிழைக்கு மன்னிக்க வேண்டும். மூன்று நாள் நீங்கள் உறங்கியமைக்கு நானே காரணம், நான் உங்கள் சட்டைப் பையில் ஒரு மாயக் குண்டூசியைக் குத்தி வைத்து உறங்கும்படி நானாகச் செய்ததல்ல. நான் இளவரசியின் பணியாளனானாலும் இந்த மாயாமாளிகைகு அவர்கள் தாய்மாமனால் அனுப்பப்பட்டவன். மாய மாளிகையை அமைத்தவரும் அவரே. குடிப்பழி தீர்ப்பது யாராயிருந்தாலும், தம் மருகியாகிய இளவரசி தன் மகனுக்கே வாழ்க்கைப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த சூழ்ச்சியே இது. ஆனால் இளவரசி உங்களிடம் கொண்ட பாசம் அவர் எதிர்பாராதது. அவர்களை நீங்கள் எப்படியும் அடையக்கூடும் என்றே எண்ணுகிறேன். ஆகவே என்னை மன்னிப்பதுடன், என் பிழை கூறி இளவரசியின் வருத்தம் மாற்றியபின் அவர்களிடமிருந்தும் எனக்கு மன்னிப்பு வாங்கித்தரக் கோருகிறேன்’ என்றான்.
முதலில் வந்த கோபத்தில் இளங்குட்டுவன் அவனைக் கொன்று விடவே எண்ணினான். ஆனால், சிறிது சிந்தித்த பின் அவன் கோபம் மாறிற்று. குள்ளனிடம் அவன் செய்வதாகக் கூறினான். குள்ளன் நன்றியுடன் ஒரு புட்டிமையை அவனிடம் தந்தான். ‘இது பசி அகற்றும், இறந்தவரைப் பிழைப்பிக்கும். மாயங்கள் வெல்லும். என் நன்றியின் சின்னமாக இதைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன்’ என்றான்.
வீர வாளுடனும் மைப்புட்டியுடனும் இளங்குட்டுவன் தன் தோழர்களோடு புறப்பட்டான். நீலமாமயிலின் கடிதமும், அவள் ஒவ்வொரு நாளும் கீழே இட்ட இருவாட்சி, செண்பகம், செந்தாமரை ஆகிய மூவகை மலர்களும் அவன் சட்டைப் பையிலேயே இருந்தன. வீரவாளில் நீலமாமயிலின் தந்தை நாடும் திசையும் அவள் குறிப்பிட்டபடியே வரையப்பட்டிருந்தன. வடதிசை என்பது நீலமாமயிலின் கையாலேயே சிவந்த மையால் தீட்டப்பட்டிருந்தது. நீலமாமலை என்ற பெயர் எஃகுப் பிடியிலேயே செதுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் நெடுநாள் நடந்து உம்பற்காட்டைக் கடந்தனர். அங்கே இளஞ்செழியன் உடல் நலிவும் சோர்வும் உற்றான். சில நாள் தங்கியபின் அவன் தன் ஊர், பெயர் முகவரிகளை இளங்குட்டுவனுக்குத் தனது நீலமாமயிலை அடைந்த பின்பு தன்னை வந்து காணும்படிக் கூறிச் சென்றான். பின்னும் பலநாள் பயணம் சென்றபின் அவர்கள் ஆனைமலையை அடைந்தனர். இங்கே இளங்கிள்ளி உடல் நலிவும் சோர்வும் கொண்டு உள்ளான். அவனும் தன் ஊர், பெயர், முகவரிகளை இளங்குட்டுவனிடம் அளித்து, நீலமாமயிலை அடைந்தபின் தன்னை வந்து காணும்படி அன்புடன் கூறிச் சென்றான். தோழர் இருவரும் அகன்றபின், வாளே துணையாக அவன் மீண்டும் பல நாட்கள் வாரங்கள் நடந்தான்.
நீலமாமலை எங்கிருக்கிறது என்று வழியில் தென்பட்டவர் களிடமெல்லாம் கேட்டுக்கொண்டே அவன் சென்றான். ‘நீலமாமலை’ என்றதுமே எல்லோருமே சிறிது நேரம் திகைத்தனர். நீலமாமலை என்ற பெயரை நாங்கள் கேட்டதில்லை. ஆனால், நீலமலை இன்னும் சில நாள் பயணங் கடந்து வழியில் வடக்கே இருக்கிறது. நீலமாமலை என்பது அதுவாகவே இருக்கக்கூடும்’ என்று அவர்கள் கூறினர்.
பல நாட்களுக்குப்பின் அவன் நீலமலையை அடைந்து விட்டான். ஆனால் மலையில் எங்கும் அலைந்தும், நீலமாமயிலின் தந்தை ஆண்ட பகுதியைக் காணவோ அதுபற்றிக் கேள்வியுறவோ இல்லை. இறுதியில் அதன் சாரலில் ஒரு மனையைக் கண்டு, அதில் தங்க இடம் கோரினன். அம்மனைக்குரியக் கிழவன் எவ்வளவோ வயது சென்றவனாகக் காணப்பட்டான். ஆனால், சிறுபிள்ளைகள் போலப் பரபரப்பாக ஓடியாடி வேலை செய்தான். இளங்குட்டுவன் தானும் அவருடனிருந்து வேலை செய்து அவருக்கு உதவியாயிருந்ததால் அவர் அவனிடம் நட்புக் கொண்டவரானார். அவன் ஊர், பெயர், பயண விவரங்களை அன்புடன் ஊசாவினார்.
“நான் நூறு ஆண்டுகளுக்குமேல் இந்த மலையில் வாழ்ந்திருக்கிறேன். நீலமாமலை என்ற பெயரைக் கேட்டதில்லை. அது மட்டுமன்று, நீலமலைக் கிழவனான என் கண்ணுக்கு இந்த நீலமலையின் ஒவ்வொரு பாறையும் கல்லும் தெரியும். ஆகவே, நீ கூறும் அரசனும் இளவரசியும் இந்த மலைக்கு உரியவர்களல்லர் என்று நான் உறுதியாகக் கூற முடியும். ஆயினும், என்னிடம் ‘உலக வரலாறு’ என்ற ஒரு பெரிய ஏடு இருக்கிறது. அதை ,இன்று இரவு பார்த்து நீலமாமலை என்ற பெயருடன் வேறு மலை இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்றான்.
உலக வரலாற்றில்கூட நீலமாமலை என்று ஒரு பெயர் இல்லை.
நீலமலைக் கிழவன் இப்போது ஒரு புதிய கருத்துரை கூறினான்: “இளங்கு! நான் இரவு முற்றிலும் இருந்து பார்த்தும் உலக வரலாறு எதுவும் கூறவில்லை. ஆனால், இப்போது எனக்கு ஒரு புது நினைவு ஏற்படுகிறது. இங்கிருந்து நூறு யோசனை தொலைவில் பெருநீலமலைச் சாரலில் என் தாய் மாமன் இருக்கிறார். என் தாய் பிறக்கும் போதே அவருக்கு வயது நூறு. நீ அவரிடம் போனால் அவர் கட்டாயம் உதவக் கூடும். நீலமாமலை ஒரு வேளை அந்தப் பெருநீலமலையாகவும் இருக்கலாம்” என்றான்.
‘அவ்வளவு தொலை நான் செல்ல மாதக் கணக்காகுமே!’ என்றான் இளங்குட்டுவன். ‘அது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஒரு நொடியில் உன்னை என்னால் அனுப்பிவிட முடியும். அவரிடம் நான் தரும் முடங்கலைக் கொடு’ என்ற கூறி ஒரு முடங்கல் வரைந்து கொடுத்தான். பின் அவன் ஒரு குழல் எடுத்து ஊதினான். அது மாயக்குழல்! ஏனெனில், அந்தக் குழல் கேட்ட கணமே இளங்குட்டுவனுக்கு உலகம் சுழல்வது போலிருந்தது. அவன் அடுத்த கணமே, நூறு யோசனைகளுக்கப்பாலுள்ள பெருநீல மலையில் பெருநீலமலைக் கிழவனைக் கண்டான். நீலமலைக் கிழவன் முடங்கல் கண்டு அவன் அகமகிழ்வுடன் இளங்குட்டுவனை வரவேற்றான். அவனுடன் அளவளாவி அவன் விவரங்கள் யாவும் உணர்ந்தான்.
நீலமாமலையைப்பற்றி அவனும் கேட்டதில்லை. அவனிடமிருந்த ‘உலக வரலாறு’ இன்னும் பெரிதாய் இருந்தது. அதை மூன்று இரவுகள் விழித்திருந்து அவன் தேடினான். நீலமாமலையின் பெயர் எங்குமில்லை.
‘என் முந்நூறு ஆண்டு வாழ்விலும் இப்படி ஒரு பெயரை நான் கேட்டதில்லை என் உலக வரலாற்றிலும் அப்பெயர் காணவில்லை. ஆயினும், என் தாய்மாமன் இங்கிருந்து முந்நூறு யோசனை தொலைவில் மாநீல மலையில் இருக்கிறார். அவர் கட்டாயம் உதவுவார். ஒருவேளை மாநீல மலையே நீலமாமலையாகவும் இருக்கக்கூடும்’ என்றான்.
‘அவ்வளவு தொலை நான் எப்படி விரைவில் செல்லக் கூடும்?’ என்று கேட்டான் இளங்குட்டுவன்.
‘அது ஒன்றும் கடுமையான காரியமன்று. நான் எழுதித் தரும் முடங்கலை அவரிடம் கொடுங்கள்’ என்று ஒரு முடங்கல் வரைந்து கொடுத்தான். பின் ஒரு முரசை அறைந்தான்.
இளங்குட்டுவனுக்கு உலகம் மிக விரைந்து சுற்றுவது போல் இருந்தது. அடுத்த கணத்தில் அவன் மாநீலமலைக் கிழவன் முன்போய் நின்றான்.
முடங்கலைப் பார்த்துவிட்டு மாநீலமலைக் கிழவனும் இளங்குட்டுவனை அன்புடன் வரவேற்றான். அவனிடமுள்ள ‘உலகவரலாற்று’ ஏடு ஒரு சிறு மலையாய் இருந்தது. ஒன்பது நாள் இரவும் பகலும் இருந்து அதில் தேடினான். நீலமாமலை என்ற பெயரைக் காணவில்லை.
‘என் தொள்ளாயிர ஆண்டு வாழ்வில் இப்பெயரை நான் கேட்டதில்லை. இந்த நீலமாமலையிலும் நீ கூறுவது போன்ற அரசனோ இளவரசியோ இல்லையென்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆயினும் இப்போது எனக்கு ஒரு புத்தம் புதிய எண்ணம் எனக்குத் தோன்றுகிறது. நம்மைவிடப் பறவைகள் நெடுந்தொலை பறந்து செல்பவை. அவற்றிடம் கேட்டுப் பார்க்கிறேன்’ என்றான்.
`பறவைகளிடம் எப்படிக் கேட்பது?’ என்று இளங்குட்டு வனுக்குப் புரியாமல் விழித்தான்.
ஆனால் மாநீலமலைக் கிழவனிடம் ஒரு யாழ் இருந்தது. அதை அவன் மீட்டினான். அது பறவைகளின் எல்லாவகைகளும் ஒருங்கே கலகலப்பது போன்ற இனிய ஒலியை எங்கும் பரப்பிற்று. அடுத்த கணம் வானம் இருண்டது. இன்னதென்று இளங்குட்டுவன் அறியுமுன் மாநீலமலை முழுவதும் பலவகைப் பறவைகள் வந்து நிறைந்தன.
“நீலமாமலையை யாராவது கண்டிருக்கிறீர்களா? வரிசையாக என்முன் வந்து, ஆம், இல்லை என விடையளியுங்கள்” என்றான்.
அணையில் தேக்கப்பட்ட நீர் குழல் வழியாக வெளி வருவதுபோல, மலைப் பக்கத்திலிருந்து பறவைகள் அணியணியாக வரிசை முறையில் கிழவன் முன் வந்து சென்றன. எல்லாம் இல்லையென்றே தலையசைத்தன.
பறவைக் கூட்டம் குறையக் குறைய, இல்லை என்ற பதில் கிழவனையும் இளங்குட்டுவனையும் பெரிதும் கவலை கொள்ளச் செய்தது. கடைசிப் பறவை போனபின் இளங்குட்டுவன் ஏமாற்றமே அடைந்தான். அதனைக் குறிப்பால் உணர்ந்த கிழவன் பறவைகளைப் பார்த்து. ‘எல்லாப் பறவைகளும் வந்து விட்டனவா?’ என்று கேட்டான்.
‘கழுகு மட்டும் வரவில்லை’ என்று பல பறவைகள் ஒரே குரலில் கூறின.
‘எங்கே கழுகு?’ என்று மாநீல மலைக் கிழவன் கேட்குமுன் மலையதிர ஒரு பெரிய நிழல் கீழ் நோக்கி இறங்கி வந்தது. அது உண்மையில் யானையளவு பெரிய ஒரு கழுகே.
‘ஆண்டே! யாழ் ஒலி கேட்டதும் விரைந்து வரத்தான் முயன்றேன். ஆனால் நீலமாமலை யரசன் மகள் திருமணத்துக் கான விருந்து ஏற்பாடுகள் என் வேகத்தைக் குறைத்துவிட்டன. விருந்துக்கான உணவு இவ்வளவு தொலை பறந்து வந்தபின் கூடச் செரிக்கவில்லை’ என்றது அது.
‘நீல மாமலை’ என்ற பெயரைக் கேட்டவுடன் கிழவன் பத்தடிக்குமேல் உயர்ந்து துள்ளிக் குதித்தான். ’நீ பிந்தி வந்ததனால் கேடில்லை. நாங்கள் ஏங்கித் தவித்த கேள்விக்கு உன்னிடமிருந்து பதில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. குறையும் விவரமாகச் சொல்லு. நீலமாமலை எங்கே இருக்கிறது? பார்! இந்த இளைஞன் நீ கூறும் இளவரசியின் உண்மைக் காதலன். அந்தத் திருமணம் நடக்குமுன் இவன் அங்கே போக வேண்டும்" என்றான்.
‘திருமண விருந்து ஏற்பாடுகள்தாம் தொடங்கியுள்ளன. போய்விடலாம். ஆனால் அந்த மலை இங்கிருந்து ஒன்பதாயிர யோசனை தூரத்திலல்லவா இருக்கிறது? என் போன்ற கழுகுகள் மூன்று நாளில் பறந்து சென்று அதை அடைய முடியும். இவர் எப்படிப் போவார்?’ என்றது கழுகு.
“நீ தான் நற்செய்தி கூறினாய். நீ தான் நல்வழியும் கூற வேண்டும்’” என்றான் கிழவன்.
“நான் கூறிய ஏற்பாடு செய்துதர முடியுமானால் நானே இவரைக் கொண்டு பறந்து சென்றுவிட முடியும். இவ்வளவு பளுவுடன் செல்ல இரண்டு இரவு ஒரு பகல் பிடிக்கும். அதுவரை எனக்கு அப்பாரத்துக்கேற்ற உணவு இடைக்கிடையே வேண்டும். இரு புறமும் பையுள்ளதாக என் முதுகில் ஒரு சேணம் இட வேண்டும். அதில் அறுபது மாடுகளின் இறைச்சிப் பாளங்கள் இட்டு வைக்க வேண்டும். பறக்கும்போது இவர் என் முதுகிலிருந்து என்னையே கவனித்து நான் தலை திரும்பும் போதெல்லாம் என் வாயில் ஒரு துண்டு போட வேண்டும். இம்முறையில் நீலமாமலைக்கு நான் அவரைக் கொண்டு செல்ல முடியும்” என்றது கழுகு.
கிழவனும் இளங்குட்டுவனும் சேர்ந்து இவை எல்லா வற்றையும் ஏற்பாடு செய்தார்கள். கழுகின்மீது சேணமிட்டு ஏறிக் கொண்டு இளங்குட்டுவன் சேணத்தின் பைகளில் மாட்டிறைச்சி களைக் கையிட்டு எடுக்கும் நிலையில் வாகாக வைத்துக் கொண்டான். பின் கழுகு பறந்தது. இரண்டு மூன்று நாழிகைக்கொரு தடவை கழுகு பறக்கும் வேகம் சற்றுத் தளரும். அக் குறிப்பறிந்து இளங்குட்டுவன் ஒரு பாளம் இறைச்சியை எடுத்து வைத்துக் கொள்வான். அது தலை திரும்பியதே அதன் வாயில் அதைக் கொடுப்பான். இவ்வாறு இடைவிடாது பறந்து கழுகு நீலமாமலையை எட்டிவிட்டது. ஆனால், இதற்குள் திருமண ஓரை ஆகிவிட்டதால், கீழே திருமண வினை நடப்பதை இளஞ்குட்டுவன் கழுகின் முதுகிலிருந்து பார்க்க முடிந்தது. கழுகும் அதைக் கண்டு வேகமாகப் பறந்தாலும் இறங்கி வருமுன் நீலமாமயில் மணமகனுக்கு மாலையிடும் கட்டம் நெருங்கி விட்டது. சமயத்துக்கேற்ற அறிவுடன் இளங்குட்டுவன் பையிலிருந்த இருவாட்சி, செண்பகம், செந்தாமரை ஆகிய பூக்களை ஒன்றன் பின் ஒன்றாக அவள் முன் விழும்படி எறிந்தான்.
வானத்திலிருந்து தேவர்கள் பூத்தூவுவதாக எண்ணி மக்கள் கொக்கரித்தனர். ஆனால், முதலில் இருவாட்சி விழுந்தவுடனே அதை எடுக்கும் சாக்கில் நீலமாமயில் மாலையை மணமகன் கழுத்திலிடாமல் தன் இருக்கையிலேயே இட்டு, அதை எடுக்கக் குனிந்தாள். அதற்குள் கழுகு மணவறை அருகே இறங்கிற்று. அதைக் கண்டதே மணமகனும் மக்களும் அஞ்சி விலகி ஓடினர். ஆனால், மணமகள் பூக்களால் உண்மையை ஊகித்துக் கொண்டு ஓடாமலே நின்றாள். இளங்குட்டுவன் இறங்கியதே அவன் கழுத்தில் மாலையை இட்டாள்.
ஓடிச் சென்றவர்கள், நடந்த செயல் கண்டு சீறித் திரும்பினர். சிலர் கழுகை எதிர்க்கத் துணிந்தனர். ஆனால், இளங்குட்டுவன் தன் வாளால் மணமகனை வெட்டி வீழ்த்தினான். மற்றவர்களும் ஓரிருவரைப் பலி கொடுத்து ஓடினர். இளங்குட்டுவன் நீலமாமயிலைக் காத்து நின்றான்.
நீலமாமயிலுக்கு உறுதி செய்த மணமகன் இறந்ததனால், அவள் தந்தை இளங்குட்டுவனை வேண்டா வெறுப்பாக ஏற்றார். ஆனால் நீலமாமயில் வருத்தந் தோய்ந்த முகத்துடன் இளங் குட்டுவனை நோக்கினாள்.
‘அன்பரே! நீர் இனி வரமாட்டீர் என்று நினைத்து நான் நஞ்சருந்தி விட்டேன். உம்மை அடைந்தும் பயனில்லாமல் போயிற்றே! என்ன செய்வேன்’ என்றாள்.
கூறிய மறுகணம் அவள் தலை சுழன்றது. அவள் கீழே விழுந்தாள்.
‘ஐயோ, நீலா! நீ இறந்தா விட்டாய்?’ என்று அவள் தந்தை புலம்பியழத் தொடங்கினார்.
ஆனால், இளஞ்குட்டுவன் கவலையுறவில்லை. குள்ளன் கொடுத்த மைப்புட்டியை எடுத்து, அவன், அதன் மையை அவள் நெற்றியில் தடவினான். அதன் மணம் பட்டதே அவள் நெடிய தூக்கத்திலிருந்து விழித்தெழுபவள் போல் மெல்ல மயக்கம் நீங்க எழுந்தாள்.
இளஞ்குட்டுவனும் நீலமாமயிலும் நீண்ட நாள் பிரிவை யாற்றி அன்புடன் ஒருவரை ஒருவர் தழுவி இன்ப உரையாடினர். குள்ளன் மாய ஊசியைப் பற்றிக் கேட்ட போது, அவளுக்கு அவன் மீது கோபம் பெரிதாயிற்று. ஆனால் அவன் மன்னிப்புக் கோரியதும், அவன் மைப் புட்டியாலேயே அவள் உயிர் மீட்கப் பெற்றதும் கேட்டபின் அவன் மீது சினம் தணிந்தாள்.
இளங்குட்டுவனுக்குக் குள்ளனைப் பற்றிய ஓர் ஐயம் இன்னும் தீரவில்லை. அவன் ஏன் நிலமாமயிலிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவனுக்கும் புரியவில்லை. ஆனால் நீலமாமயில் சிரித்தாள்.
‘குள்ளன் வேறு யாரும் அல்ல; நீங்கள் வீரவாளால் வெட்டிய மணமகன் அவனே. அவன் தான் என் மாமன் மகன். அவன் நீண்ட முன் நினைவுடன் தான் இதைச் செய்திருக்கிறான். இப்போது நீங்கள் அவன் கொடுத்த மையை என் வகையில் பயன்படுத்தியதுபோல, அவன் வகையிலும் பயன்படுத்தும்படி நான் உங்களைத் தூண்டவேண்டும் என்பதற்காக இப்படிக் கேட்டிருக்கிறான். ஏனென்றால் பெரும்பாலும் என் விருப்பம் செல்லும் இடத்தில் இந்த வீரவாள் சென்றிருக்கக் கூடும் என்று அவன் அன்று ஊகித்தான். அத்துடன் அவன் உங்களிடம் சொல்லாத இன்னொரு செய்தி உண்டு. துயில்பவர் ஒவ்வொரு வரையும் நீங்கள் எழுப்புந்தோறும் அவன் கூவியதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அந்த ஒவ்வொரு செயலும் என் மாமன் மாயம், உயிர் ஆகிய இரண்டின் ஒவ்வொரு கூறாக அழிப்பவை ஆகும். அவ்வாறு இறக்கும் சமயம்கூட அவன் என் தந்தையிடம் என்னை அவனுக்குத் திருமணம் செய்விக்குப்படி வற்புறுத்திக் கொண்டுதான் இறந்தான்.’
‘இவ்வளவையும் கேட்டபின் எனக்கு அவனை மன்னிக்கவோ, அவனுக்கு உயிர் கொடுக்கவோ எண்ணம் ஏற்பட வில்லை. உன் விருப்பம் என்னவோ?’ என்றாள். இளஞ்குட்டுவன். ‘உங்கள் விருப்பமின்றி எனக்கு இனி விருப்பம் இராது. ஆனால் இந்த வகையில் அவனைப் பிழைப்பிப்பதனால் நமக்கு ஒரு நன்மை உண்டு. உங்கள் கழுகை அதற்காகவே நான் இன்னும் இரை போட்டு இங்கேயே வைத்திருக்கிறேன். நீங்கள் வந்தது போலத் திரும்பிப் போகும்படி அறுபதுக்கு மூவறுபது மாட்டின் இறைச்சியும் ஏற்பாடு செய்திருக்கிறேன். அவன் உயிரை நீங்கள் நடு இரவுக்குச் சற்று முன் மீட்டுவிடுங்கள். நாம் நள்ளிரவில் உங்கள் நாடு சென்று விடுவோம். என்தந்தை வேண்டா வெறுப்பாக உங்களை ஒத்துக் கொண்டாலும், நான் இறந்த போது அழுவதாகப் பாசாங்குச் செய்தாலும், அவர் மனத்தை எப்படியோ தாய்மாமன் கலைத்திருக்கிறான். எனக்குப் பதிலாக அவர் தம் இறந்த மருமகனைப் பெற்று மகிழட்டும்’ என்றாள்.
அவள் திட்டம் இளங்குட்டுவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்று நடு இரவு குள்ளன் தந்த மையால் மணமகனாக முன் கொல்லப்பட்ட அவனையே பிழைப்பித்தான். அவன் இருவர் காலடியிலும் விழுந்தான். ‘காலையில் பேசிக் கொள்ளலாம் போய் உறங்கு’ என்று அவனை அனுப்பி விட்டு, இளஞ்குட்டுவனும் நீலமாமயிலும் கழுகின் மேலேறிப் பறந்தனர்.
நீலமாமயிலுக்கு அவள் தாயின் நகைகளும் பொன்னணி மணிகளும் ஏராளம் இருந்தன. அவற்றை அவள் தன்னுடன் கொண்டு வந்தாள். இருவருமாக நீலமலைக்கு வந்தபின், அங்கிருந்து இரு குதிரைகளின் மீது ஏறி முதலில் இளங்கிள்ளியின் ஊருக்கும், பின் இளஞ்செழியன் ஊருக்கும் சென்றனர்.
இருவரும் அதற்குள் கண்ணனூரில் இருந்து ஆண்ட ஹொய்சள மன்னன் படையில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இளங்குட்டுவன் உதவியுடன் இருவரும் படைத்தலைவனை அணுகினர். படைத் துறைக்கு வேண்டிய படைக்கலச் சாலையின் ஒரு பகுதியை மூவரும் நடத்துவதாகக் கூறிப் படைத் தலைவன் இணக்கம் பெற்றனர்.
அத்துறையில் அவர்கள் பேரும் புகழும் ஈட்டினர். பெருந்திருவு நாட்டினர், படைத்தலைவன் புதல்வியர் இருவரையே இளங்கிள்ளியும் இளஞ்செழியனும் மணந்து கொண்டனர். மூன்று தோழரும் ஒருபுறமும், நீலமாமயிலும் மற்ற இரு நங்கையரும் மற்றொரு புறமும் உடன்பிறந்தார் போல ஒன்றுபட்டு நல்ல குடி வாழ்வு நடத்தினர். தோழர்கள், தொடக்கத்தில் அவாவிய புது வாழ்வு இவ்வாறு பல தொல்லைகளுக்குப் பின் நீலமாமயிலின் துணையுடன் அவர்கட்குக் கிட்டிற்று.
பறக்கும் பேழை
எட்டி பூவாளி காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த ஒரு பெருங்கடல் வணிகன். அவன் தன் ஒவ்வொரு செப்புக் காசையும் வெள்ளிக் காசாகப் பெருக்குவதிலும், ஒவ்வொரு வெள்ளிக் காசையும் தங்கக் காசாக வளர்ப்பதிலுமே தன் வாழ்நாளைச் செலவு செய்தவன். இப்பெருஞ் செல்வமனைத்தையும் அவன் தன் ஒரே மைந்தன் வானவனேந்தலுக்கு விட்டுச் சென்றான்.
வம்பர், வீணர் சேர்க்கையால் வானவனேந்தலின் பெருஞ்செல்வம் விரைவில் கரைந்தது. செல்வம் குறையக் குறைய, அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகள் போல, போலி நண்பர்கள் மெல்ல மெல்ல அவனை விட்டகன்றனர். இறுதியில் அவன் வெறுங் கையனான நாளில் தன்னறையில் தன்னந் தனியனானான். அவனால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.
கதவு தாழிடப்படாமல் பொருத்திச் சார்த்தப்பட்டே கிடந்தது. தன் நண்பர்களில் ஒருவராவது வந்து உதவ முன்வரக் கூடும் அல்லது ஆறுதல் தரக்கூடும் என்ற அவன் ஒவ்வொரு கணமும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். நாள் முழுதும் எவருமே வரவில்லை. ஆனால், மாலை நேரத்தில் கதவு திடுதிடுவென அடித்துக் கொண்டது. அவன் ஆர்வத்துடன் சென்று கதவு திறந்தான். யாரையும் காணவில்லை. காற்றுத்தான் ஓசை உண்டு பண்ணிற்றோ என்று நினைத்து அவன் உள்ளே திரும்ப எண்ணினான். ஆனால், அதற்குள் கதவருகே ஓர் உடைந்த பழம் பேழை அவன் கண்ணில் தென்பட்டது. அதை அவன் உள்ளே எடுத்துக் கொண்டு வந்தான்.
பேழைக்குள் ஒரு கடிதம் இருந்தது. நெடுங்காலமாக அவன் பக்கமே நாடாத ஒரு பழைய நண்பன் அதை எழுதியிருந்தான்.
"உன் தந்தை காலத்துக்குரிய பேழை இது. உன் நல்ல காலத்தில் நல்ல நிலையிலேயே அது என்னிடம் வந்தது. இன்று உன் உடைந்த வாழ்வுக்கு ஏற்றபடி உடைந்து தளர்ந்த நிலையிலே அதை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன். உனக்கு என் கடைசி உதவி இது.
"நீ ஓர் உதவாக்கரை. இந்தப் பட்டினத்தில் இனி நீ வாழ முடியாது. இன்றிரவே எங்காவது கிளம்பிச் சென்று விடு. இந்தப் பேழை உன் கந்தல் கூளங்களை இட்டுச் செல்ல உதவக் கூடும்.
"இத்துடன் உன்னை மறந்துவிட விரும்பும் உன் ஒரே பழைய நண்பன்.
** உய்யவந்தான்"**
இந்த ஒரே நண்பனின் ஒரே உதவி அவனுக்கு ஆறுதல் தர உதவவில்லை. நேர்மாறாக அதுவே அவன் வறுமையின் எல்லையைச் சுட்டிக்காட்டி அவன் மனக்கசப்பைப் பெருக்குவதாய் இருந்தது. ஏனென்றால் அந்த உடைசல் பேழையில் இட்டுக் கொண்டு செல்லத்தக்க கந்தல் கூளம் எதுவும் அவனிடம் கிடையாது. இது காண அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது. “உடுத்தியிருக்கும் இந்த ஒற்றை ஆடையும் நானும் தான் இப்போது என்னிடம் உள்ள மூட்டை முடிச்சுகள். அவற்றைத்தான் இந்த பேழையில் வைக்க வேண்டும்” என்று வெறுப்புடன் கூறிய வண்ணம் அவன் அதில் குதித்தேறி உட்கார்ந்தான் உட்கார்ந்த இடத்தில் பேழை சரிந்து விடாமலிருக்கும்படி அதன் பக்கங்களை அவன் கெட்டியாகப் பிடித்தான்.
அடுத்து என்ன நடந்தது என்பதையே அவன் உணர முடியவில்லை. அது ஒரு மாயப் பேழையாயிருக்கக் கூடும் என்று அவன் கனவிலும் நினைத்தது கிடையாது. அத்துடன் அதன் விசை அதன் பூட்டில் இருக்குமென்பதும் அவனுக்குத் தெரியாது. எனவே, அது திடுமென நிலத்திலிருந்து குதித்த பொழுது அவன் திகைத்தான்; அறையில் ஒரே பலகணி வழியாக அது தானாக வெளியேறி வானோக்கிப் பறக்கத் தொடங்கிய சமயம் அவன் செய்வது இன்னது என்று அறியாமல் திகில் கொண்டான். பேழை மேன்மேலும் உயர்ந்து செல்லுந்தோறும் அவன் மலைப்பும் திகைப்பும் பெருகின.
அவன் அறையின் மோடு மட்டுமன்று, காவிரிப்பூம்பட்டின முழுவதுமே ஒரே மோட்டு மயமாக அவன் கீழே காட்சி தந்தன. மாடிகள், பூங்காக்கள், துறைமுகத்தில் கட்டுத் துறைகள், கப்பல்கள் ஆகிய யாவும் பல வண்ண ஓவியத் திரைகள் போல அவன் கீழே விரைந்து பின்னோக்கி ஓடின. சில கணங்களுக்குள் பேழை அகன்ற பெருங்கடல் நோக்கி விரைந்து சென்றது. படிப்படியாக காவிரிப்பூம்பட்டினமும் கடற்கரையும் மறைந்து விட்டன. மேலே எங்கும் ஒரே வானவெளி, கீழே எல்லாம் ஒரே அலைகடற் பரப்பு ஆயிற்று இவற்றினிடையே அவன் செயவிழந்ததோடன்றிச் சிந்தனையும் இழந்தான்.
பேழையில் ஆட அசைய இடமில்லை. இருந்த அளவில் கூட அவன் ஆட அசைய அஞ்சினான். ஏனெனில் அவன் அசையும்போதெல்லாம் பேழையில் உடைந்த அடித்தளம் இற்று விழுந்தவிடுமோ என்று எண்ணும்படி கிர்கிர் என்று ஆட்டங் கொடுத்தது. அதே சமயம் காற்று வேகத்தால் அவன் தலை சுழன்றது. நா வரண்டது. நீர் வேட்கையும் பசியும் விரைவில் அவன் காதை அடைத்தன. அவன் நாடி நரம்புகள் சோர்வுற்றன. கண்கள் இருண்டன. ஆனால், அப்போதும் பேழையின் பக்கங்களை அவன் விடாப்பிடியாக அழுத்திப் பிடித்துக் கொண்டே இருந்தான். எந்த நேரத்தில் பிடி தவறிக் கடலில் விழ நேருமோ என்று அவன் அஞ்சி அஞ்சி நடுங்கினான்.
எல்லையற்ற கடற் பரப்புகள் மீதும் தீவுத் திடல்கள் மீதும் இனமறியப் படாத காடு மலை நாடு நகர்கள் மீதும் பேழை காற்று வேகத்தில் தாவிச் சென்றது. ஆனால், இப்போது அவனை மீறி அவன் கண்கள் மூடின. பேழையின் திறந்த மூடி மீதே அவன் சாய்ந்தான். பூட்டின் மீதுள்ள அவன் பிடி இதனால் தளர்வுற்றது; பேழையின் பறக்கும் விசை பூட்டின் மீதுள்ள அழுத்தமே யாதலால், அது மெல்ல இறங்கிற்று. வானவனேந்தலின் நல்லகாலமாக அவன் இறங்கிய இடம் கடலாகவோ பெரும் பாறைகளாகவோ அமையவில்லை. நாட்டை அடுத்த ஒரு காட்டிலேயே அது இறங்கிற்று. இறங்கிய வேளையும் இரவன்று; நண்பகலே. ஆகவே, மாலை இளங்காற்றில் அவன் மெல்ல விழித்து உணர்வு பெற்றான். பேழை வானில் பறக்கவில்லை. இறங்கி விட்டது என்று கண்டான். கடலில் இறங்காமல் காட்டிலே இறங்கியது கண்டும் ஓரளவு தேறுதல் உற்றான். ஆயினும், இனமறியாக் காட்டில் இன்னும் என்னென்ன இடர் நேருமோ என்ற அச்சம் அவனை முற்றுலும் விடவில்லை.
காட்டுக்கனி கிழங்குகளும், சுனை நீரும் தேடி அறிந்து அவன் பசிவிடாய் ஆறினான். கொடு விலங்குகளுக்கு அஞ்சி இரவு நேரத்தில் மரங்களில் ஏறியிருந்தான். பகலில் சிறிது உறங்கியும் உணவுப் பொருள் தேடியும் நேரம் போக்கினான். ஓய்வு நேரங்களில் அவன் தன் மாயப் பேழையைப் பல வகைகளில் ஆராய்ந்து பார்த்தான். பூட்டை அழுத்தினால் அது பறக்கு மென்றும், மூடியை அழுத்தினால் அது திறக்குமென்றும், மூடியை அழுத்தினால் அது இறங்குமென்றும், மூடி திருப்பிய திசையில் அது இயங்மென்றும் பல செயல் தேர்வாராய்வுகள் மூலம் கண்டு கொண்டான். இந்த அறிவு அவனுக்கு மிகவும் பயன்பட்டது. ஏனென்றால் அடிக்கடி மாயப் பேழையில் அமர்ந்து வான் வழிச் சென்றே அவன் தான் இறங்கிய இடத்தின் சூழல்களை உணர்ந்து கொள்ள முடிந்தது.
அக்காட்டை அடுத்து ஒரு பெரிய நகரம் இருந்தது. வானவனேந்தல் வானிலிருந்தே முதலில் அதைக் காண முடிந்தது. நடந்து சென்று அதைக் காண அவன் சிலநாள் தயங்கினான். ஏனெனில், பேழையில் வந்த சமயம் அவன் மேலாடையை இழந்துவிட்டான். அரையாடைகூடக் கந்தலாய் இருந்தது. புதிய மக்கள் முன் இந்நிலையில் எப்படிச் செல்வது என்று அவன் தயங்கினான். அன்றியும் முன்பின் தெரியாத அந்த நாட்டின் மக்கள் எத்தகையவர்களாய் இருப்பார்கள், என்ன மொழி பேசுவார்கள் என்பதையும் அவன் அறியவில்லை. ஆனால், இத்தயக்கங்கள் அவனை நெடுங்காலம் தடுக்கவில்லை. அந்நாட்டு மக்கள் பொதுவாக எப்போதுமே அரையாடையுடனே இருந்தனர். அந்த ஆடையும் பெரிதும் கிழித்துத் தைத்த ஆடையாகவே இருந்தது. வானவனேந்தலின் கந்தலான அரையாடைகளை எவரும் இதனால் புதுமையாகக் கருதவில்லை. அத்துடன் பண்பிலும் மொழியிலும் அவர்கள் நெடுந்தொலை முரண்பட வில்லை. காவிரிப் பூம் பட்டினத்திலேயே வானவனேந்தல் சீனம், சாவகம், சோனகம் ஆகிய மொழிகள் பேசக் கேட்டிருந்தான். அந்நகர மக்கள் கொடுந் தமிழுடன் இம்மொழிகள் கலந்து ஒரு கலவை மொழியையே பேசினார்கள். வானவனேந்தல் சில நாட்களில் அம்மொழிக் கலவையையே தானும் வழங்கப் பழகிக் கொண்டான்
நகருக்குச் செல்லும்போதெல்லாம் அவன் பேழையைக் காட்டில் புதர்களுக்கிடையே தனக்கு மட்டும் அடையாளம் தெரியும்படி புதைத்து வைத்தான். அத்துடன் நகரின் ஒரு விடுதியில் தங்கி அந்நகரின் பல்வகைக் காட்சிகளைக் கண்டு நாட் போக்கினான்.
ஒருநாள் நகர் நடுவே அவன் கண்ட காட்சி அவன் கருத்தைக் கவர்ந்தது. அரண்மனையுடன் போட்டியிடும் வகையில் நகரில் ஓர் ஏழடுக்கு மாளிகை இருந்தது. அதைச் சுற்றிக் கிட்டத் தட்ட நாற்புறமும் அகன்ற தெருக்கள் இருந்தன. ஆயினும் எப்பக்கமும் அதற்கு வாயில்களோ பலகணிகளோ இல்லை. வானவனேந்தல் அன்றிரவு விடுதிக்குத் திரும்பியதும், விடுதித் தலைவியிடம் இது பற்றிய விளக்கம் கேட்டான்.
விடுதித் தலைவி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். “நீ யார்? எந்த ஊர்? நாடு முழுவதும் அறிந்த இந்த மாடத்தைப் பற்றிய செய்தி உனக்கு மட்டும் எப்படித் தெரியாமல் பேரயிற்று?” என்று கேட்டான்.
வானவனேந்தல் தன் நிலையை எளிதில் விளக்கினான்; "வாழ்நாளில் பெரும் பகுதியும் நான் தொலை நாடுகளில் சுற்றித் திரிந்தவை. தென் கடல் முழுவதும் ஆண்ட அரசன் பைந்தார் அந்நகரிலேயே வாழ்ந்தான். அந்நகரின் பெயர் பூந்துருத்தி என்பது, மன்னன் பைந்தாருக்கும் அவன் அரசி செம்புலப்பெயல் நீருக்கும் அழகிலும் குணத்திலும் சிறந்த ஒரே ஒரு புதல்வி இருந்தாள். அவள் பெயர் தேம்பாகு என்பது. அவள் பிறந்த சமயம் கணியன் ஒருவன் அவள் வருங்கால வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து, அவ்வாழ்வில் ஒரு பேரிடையூறு பற்றி எச்சரித்திருந்தான். நாடோடி வணிகனொருவன் இளவரசி தேம்பாகுவை மணம் புரிய விரும்புவானென்றும், அவனால் அரச குடிக்கே பெருந்துயர் விளையுமென்றும் அவன் அறிவித்திருந்தான்.
மன்னன் பைந்தார் தன் புதல்வியையும் குடியையும் இவ்விடரிலிருந்து காக்க எண்ணினான். வானவனேந்தல் கண்ட வாயிலில்லா மாடம் இதற்காக அவன் கட்டியதே அதற்குள் அரசன் அரசி இருவரும் இருந்த தனியறை மூலமாக மட்டுமே எவரும் புக முடியும். வேறு வழியில் செல்ல வாயிலோ, அல்லது உள்ளிருப்பவரைப் பார்க்கப் பலகணியோ கிடையாது. இளவரசி இந்த மாடத்துக்குள்ளேயே வாழ்ந்தாள். கட்டிடம் நாற்கட்டாய் இருந்ததனால் நடுவே, அவளுக்கு வேண்டிய பூம்பொழில், பொய்கை முதலிய எல்லா வாய்ப்பு நலங்களும் இருந்தன. இவற்றின் மையமாக அமைந்த நிலாமுற்ற மாடத்தின் தளத்தில் மாலையிலும் நிலா வேளைகளிலும் அவள் இனிது பொழுது போக்கவும் தக்க துணை நலங்கள் இருந்தன.
“அரசன் அரசி மூலமாகவே இளவரசிக்குத் தக்க துணைவன் தேர்ந்தெடுக்கப்படும்வரை, இளவரசி இந்தக் கோட்டையிலேயே கூட்டுக்கிளிபோல வாழ்ந்து வருகிறாள். தாய் தந்தையர் தம் புதல்விக் கேற்றவராகப் பல துணைவர்களைத் தேர முயலாமலில்லை. ஆனால், எப்படியோ ஒருவராவது இளவரசி தேம்பாகுவின் மனம் கவரவில்லை. இதனால் அரசனுக்கும் அரசிக்கும் கவலை தெரிதாகிக் கொண்டுதான் இருக்கிறது” என்றாள் விடுதித் தலைவி.
விடுதித் தலைவி மூலம் அறிந்த இந்த விவரங்கள் இளைஞன் வானவனேந்தலின் உள்ளத்தில் ஆயிரம் எண்ண அலைகளை எழுப்பின. அவற்றினூடாக எப்படியோ மாயப் பேழையின் நிழல் வடிவம் நுழைந்து நுழைந்து வெளி வந்தது. நாடோடி வணிகன் கணியன் எச்சரிக்கையுரையின் இத்தொடர் அவன் தன்னம்பிக்கையை உயர்த்திற்று. தற்பெருமையை வளர்த்தது. இளவரசியன் உள்ளம் தன்னை நாட முடியும் என்ற நம்பிக்கையார்வத்தை அது உண்டு பண்ணிற்று. அதே சமயம் மாயப் பேழை பற்றிய எண்ணம் அவ்வெச்சரிக்கை யுரையின் பயனாய் எழுந்த வாயிலில்லா மாடத்தின் கோட்டை மதிலைத் தாண்டும் துணிச்சலையும் அவனுக்குத் தந்தது.
அவன், பகலும் இரவும் சிந்தனையிலாழ்ந்து அவா ஆர்வத்துடன் திட்டங்களிட்டான். திட்டத்தின் முதற்படியாக அவன் விடுதி வாழ்வுக்கு விடை கொடுத்தான்.
தென் கடலக மக்கள் கலைப் பண்பு மிக்கவர்கள்; அவர்கள் கலைவாணர்கள் வீடுகள், பொது நிலையங்கள், பூங்காக்கள் ஆகியவற்றின் மதில்களிலெல்லாம் வானவர் வடிவங்களைப் புனைந்து தீட்டியிருந்தனர். வானவனேந்தல் இவற்றில் கருத்துச் செலுத்தினான். வானவர்களின் ஆடை அணிமணி தோற்றங்களை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டான். தன்னை அதே உருவில் ஒப்பனை செய்வதற்குரிய துணைப் பொருள்களைச் சேகரித்துக் கொண்டு அவன் காட்டுக்குப் புறப்பட்டான். மாயப் பேழையை மறைவிடத்திலிருந்து கண்டெடுத்து, அதன் உதவியால் இரவில் வான் வழியே நகரின் திசையில் சென்று உலவினான்.
அன்று முழு நிலா எங்கும் பாலொளி விசிக் கொண்டிருந்தது. நிலவையும் தென்றலையும் துய்த்தவண்ணம் இளவரசி நிலா மாடத்திலே மலர்ப் படுக்கை மீது கண்ணயர்ந் திருந்தாள். தூய கண்ணிமையின் இனிய கனவுகள் தெய்வ உருவங்களாக அவள் இமைகளிடையே நிழலாடின. அதன் பயனாகத் துயிலினிடையே அவள் முகத்தில் புன்னகை ஒளி தவழ்ந்தாடிற்று. வான்வழியே மாயப் பேழையின் உதவியால் பறந்து அந்நிலா மாடத்தில் இறங்கிய வானவனேந்தல் இக்கண் கொள்ளா அழகுக் காட்சியைப் பார்த்துக் கொண்டே நெடுநேரம் செயலற்று நின்றிருந்தான்.
தேம்பாகு ஒரு கனவலையிலிருந்து மற்றொரு கனவலைக்குத் தாவும் சமயம் தற்செயலாக இடையே கண் விழிக்க நேர்ந்தது. கனவிலே கண்ட கற்பனை வானவர் உருவங்களைவிட எழிலுடைய உருவமாக வானவனேந்தல் அவள் முன் காட்சி யளித்தான். கனவு நனவு வேறுபாடறியாத நிலையில் இளவரசி வானவனேந்தலைக் கண்டு சிறிதும் திடுக்கிடவில்லை. பேசவும் ஊடாடவும் தயங்கவில்லை. ஏனெனில் கனவின் வழியாக அவளை அணுகிய ஒரு வானவன் வடிவமாகவே அவனை அவள் கருதினாள். வானவனேந்தலும் அவள் சூழலும் குறிப்பும் உணர்ந்து கொண்டான். எடுத்த எடுப்பிலேயே தன் வானவன் வடிவம் தனக்கு வெற்றி தருவது கண்டு அவன் அகமகிழ்வுற்றான். அவளது இனிய மயக்கத்தை ஒரு சிறிதும் மாற்ற விரும்பாமல், வானவனாகவே நடித்து அதை வலியுறுத்தினான். அதன் மூலமாகவே அவள் உள்ளத்தில் பாசப் பயிரையும் வளர்க்க எண்ணினான். தன் அரைமயக்க உணர்விலேயே இளவரசி அவனிடம் பேசத் தொடங்கினாள்.
“அழகிய வானவ இளைஞரே! உம்மைக் காண எல்லையிலா மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும், தாம் ,தம் காட்சியால் எனக்குக் கணநேர இன்பம் தந்தபின் எல்லையற்ற துன்பத்தில் ஆழ்த்திச் சென்று விடுவீரோ என்று என்னால் கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.” என்றாள் தேம்பாகு.
நங்கை தன்னை வானவனாகவே நினைத்தாலும் அவ்வுருவிலேயே அவள் உள்ளத்தில் தான் இடம் பெற்று விட்டதை வானவனேந்தல் உணர்ந்து கொண்டான். புதிய தெம்புடன் தான் பெற்று விட்ட அவ்விடத்தை உறுதிப்படுத்த அவன் முனைந்தான்.
“வானுலகில் காணக் கிடைக்காத தென் கடல் அழகிளஞ் செல்வியே! நான் முதலில் உன் முழு நிறை அழகைக் கண நேரம் கண்டு களித்துச் செல்லும் எண்ணத்துடன்தான் இம்முற்றத்தில் இறங்கினேன். ஆனால், அருகே வந்து கண்ட பின் இவ்வழகு என் அவாக்களையெல்லாம் சிறை செய்துவிட்டது. நிலையாகவே இந்நிலவுலகிலிருந்து மீளாநிலை கொள்ளச் செய்துவிட்டது. வானுலக இன்பங்களெல்லாம் இப்போது எனக்கு உவர்த்துப் போயின. அவற்றில் என் மனம் செல்லாது. ஆகவே, நீயாக என்னை வெறுத்துத் தள்ளினாலன்றி இனி இங்கிருந்து செல்ல என் உள்ளம் ஒருப்படாது” என்றான்.
அவன் இனிய சொற்களில முழு நம்பிக்கை பெறாதவள் போலத் தேம்பாகு புன்முறுவல் பூத்தாள். “நீங்கள் வானவர்; கனவில் வந்து காட்சி தந்திருக்கிறீர்கள்; உங்கள் இனிய பேச்சுக்கள் எனக்குத் தற்காலிகமாகத்தானே இன்பமளிக்க முடியும் என்று இன்னும் கவலைப்படுகிறேன். கனவு நீங்கியபின்…”
அவள் முடிக்குமுன் வானவனேந்தல் அவளை இடை மறித்துத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான். “நான் வானவனாய் இருக்கலாம். ஆனால், இது கனவல்ல நனவு. கூடுமானவரை நான் உன்னைவிட்டு விலக விரும்பவில்லை. சிறிது விலகவேண்டி வந்தால்கூட மீண்டும் மீண்டும் உன்னை நாடியே வருவேன். உன்னைச் சுற்றியே வட்டமிடுவேன்.என்னை நீ நிலையாக ஏற்று, என்னை மணஞ் செய்து வாழ ஒருப்படும்வரை உன்னை விடாது சுற்றுவேன்” என்றான்.
முதலில் கனவில் அழகுத் தெய்வமாகத் தேம்பாகு முன் வந்து தோன்றிய வானவனேந்தல் விரைவில் அவளது மீளாக் காதல் துணைவனானான். இரவெல்லாம் இருவரும் இன்னுரை யாடி யிருந்து விடியல் ஒளி பரவியபோது ஒரு சிறிதும் பிரிய மனமில்லாதவர்களாகவே பிரிய ஒருப்பட்டனர். அப்போதும் அடுத்த நாள் முன்னிரவே வந்துவிட வேண்டும் என்ற உறுதி மொழி பெற்ற பின்பே தேம்பாகு வானவனேந்தலுக்குப் பிரியாவிடை தர இணங்கினாள்.
மாயப் பேழையும் அதில் அமர்ந்து சென்ற அன்புத் துணைவன் உருவும் ஒரு புள்ளியிலும் சிறிதாக வான வெளியில் மறையும் மட்டும் தேம்பாகு நிலா முற்றத்திலேயே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் பின்னரும் எதையோ பறிகொடுத்தவள் போல உடல் வேறு உளம் வேறாக அவள் தன் நாள்முறை வேலைகளில் ஈடுபட்டாள்.
நாட்கள் செல்லுந்தோறும் இளவரசி தேம்பாகு, வானவனேந்தல் ஆகிய இருவர் உள்ளங்களும் ஒன்றோடொன்று பின்னி இணைவுற்றன. இருவரும் தன் தற்கால இன்பச் சூழல் கடந்து நிலையான வருங்கால வாழ்வு பற்றியே திட்டமிட லாயினர். இளவரசியே வானவனேந்தலை அதற்கான செயல் முறைகளில் ஊக்கினாள்.
“வானுலக அன்பரே! நாம் இனியும் இப்படி நெடுநாள் ஒளிந்து மறைந்து சந்திக்கத் தேவையில்லை. என் தாய் தந்தையருக்கு நீங்கள் அறிமுகமானால், அவர்கள் உங்களை ஏற்பது உறுதி. அதன்பின் நாம் மணஞ் செய்து கொண்டு தடையற்ற இன்ப வாழ்வு வாழலாம் என்றாள்.”எனக்கும் அதுவே விருப்பம். ஆனால், அவர்களுடன் நான் அறிமுகமாவது எப்படி?" என்று கேட்டான் வானவனேந்தல்.
“நாடோடி வணிகரென்றால்தான் என் தாய் தந்தையர் அஞ்சுவார்கள். நீங்களோ வானவர். உங்களைப் பற்றி நான் கூறினால் அவர்கள் ஆர்வத்துடன் உங்களை நேரில் காண விரும்புவார்கள். உங்களுக்கென்று அவர்கள் மூலம் நான் ஒரு விருந்துக்கே ஏற்பாடு செய்கிறேன். ஆனால், நீங்கள் மட்டும் நான் கூறுகிறபடி செய்து அவர்கள் மனத்தையும் மக்கள் மனத்தையும் முற்றிலும் கவர்ந்துவிட வேண்டும்” என்றாள் தேம்பாகு.
“நீ கூறியபடியே எதுவும் செய்கிறேன்” என்றான் வானவனேந்தல். இளவரசி மேலும் தொடர்ந்தாள்:
“என் தாய் தந்தை இருவருக்குமே கதை என்றால் உயிர். நல்ல கதை கூறுபவர்களிடம் அவர்கள் முற்றிலும் ஈடுபட்டு அவர்கள் விருப்பம் எதுவானாலும் அதற்கு உடன்படுவார்கள். ஆயினும், இருவரும் இருவேறு வகைப்பட்ட கதையையே விரும்புவார்கள். என் தாய்க்குக் கதை ஒழுக்கமும் விருப்பமும் உடையதாய் இருக்க வேண்டும்; தந்தைக்கோ அது நகைச்சுவை நிரம்பியதாய் இருக்கவேண்டும். இருவருக்கும் பொருந்தும்ப டியான ஒரு கதையை உங்கள் வானுலகிலிருந்து கண்டுபிடித்துக் கொண்டு வருவீர்களானால், நீங்கள் மிக எளிதில் அரச குடியின் மருமகனாகி விடலாம்” என்றாள்.
“அப்படியே செய்கிறேன்” என்று வானவனேந்தல் தலையசைத்தான்.
"என் மனத்தையும் அரசன் அரசி மனத்தையும் கவர்வது போலவே நீங்கள் மக்களையும் வசப்படுத்துவது அவசியம். ஏனெனில், என்னை மணஞ் செய்துகொண்டபின், நீங்களே தென்கடல் அரசனாக அவர்களை ஆள வேண்டியவர்கள். அவ்வகையில் நீங்கள் வானவராயிருப்பதே உங்களுக்குப் பெரிதும் உதவும். அத்துடன் உங்கள் தெய்வீக ஆற்றலுக்கும் ஒரு முத்தாய்ப்புத் தர என்னால் முடியும்.
“நான் மனித உலகப் பெண்ணானாலும் என் தாய் ஒரு வானவன் புதல்வியேயாவாள். என் பாட்டனாகிய வானவனுக்கு அவர் வழிவழி மரபாக ஒரு தெய்வத் தன்மை பொருந்திய வாள் உரியதாய் இருந்தது. நான் சிறு பிள்ளையாய் இருக்கும்போது அதை என் பொம்மைகளுக்கு மாப்பிள்ளையாக வைத்து நான் விளையாடுவது வழக்கம். அது கண்டு அவர் புன்முறுவலுடன் ‘இதை உன் மாப்பிள்ளைக்கே கொடு’ என்று எனக்குப் பரிசளித்திருந்தார். இதை நானும் இதுகாறும் மறந்துவிட்டேன். தாய் தந்தையரும் மறந்து விட்டார்கள். அதை நீங்கள் அணிந்து கொண்டு விருந்துக்கு வாருங்கள். அதைச் சுழற்றி வீசினால் வானவில் ஒளி எங்கும் பரவும். மக்களுக்கு அதைக் காட்டினால் அவர்கள் உங்களிடம் இன்னும் மிகுதியாய் ஈடுபடுவார்கள்” என்றாள்.
இளவரசி தன் அறை சென்று கந்தையில் சுற்றிய ஒரு வாளுறையை எடுத்து வந்தாள். கந்தையின் தூசி அகற்றி அதைப் பிரித்தே பூ வேலையுடன் பொன்னூலிழைத்த ஓர் அரிய உறை தென்பட்டது. உறையினுள்ளே வானவில் வண்ணத்தில் நவமணி இழைத்த ஒரு வைரவாள் இருந்தது. அதன் பிடிகள் தந்தத்தால் இழைக்கப்பட்டிருந்தன. அதன் அழகு வண்ணத்தில் மதி மயங்கிய வானவனேந்தல், சிறிது நேரம் தேம்பாகுவைக்கூட மறந்து, அதையே நோக்கியிருந்தான். இளவரசி மெல்ல அவன் கன்னத்தைக் கிள்ளிய போதே அவனுக்கு உணர்வு வந்தது.
“அன்பரே! அந்த வாள் இனி எனதல்ல; உங்களது. என்னை நீங்கள் மணப்பதற்காக என் பொம்மைகள் உங்களுக்குத் தரும் பரிசு அது” என்று அவள் கேலி பேசினாள்.
வானவனேந்தல் இளவரசி தேம்பாகினை அன்பார் வத்துடனும் நன்றியார்வத்துடனும் பன்முறை அணைத்து ஆதரவுடன் விடை பெற்றுக் காட்டுக்கு மீண்டான்.
சிறு வயதிலேயே வானவனேந்தல் ஆர்வமாகக் கதை கேட்டதுண்டு. ஆனால், கதை சொன்னதுமில்லை, கதை கட்டியதுமில்லை, புதிதாகக் கதை கட்டத்தக்க - அதிலும் அரிய இருதிறப் பண்புகளும் ஒருங்கு வாய்ந்த கதை கட்டத்தக்க - கற்பனைத் திறம் தன்னிடம் இருப்பதாக அவன் கருதியதுமில்லை. ஆனால், இளவரசி தேம்பாகுவின் இனிய முகம் அவன் கலைத் திறனையும், கற்பனை யார்வத்தையும் தூண்டிற்று. அதுவே அவனுக்கு ஒரு புதுக் கதையையும் இரவில் உளத்தில் எழச் செய்தது. விருந்து நேர நடவடிக்கைகளையும் மேலும் கற்பனைத் திறத்துடன் திட்டமிடச் செய்தது.
வானவனேந்தல் சிறுவனாய் இருக்கும்போது, ஆண்டு தோறும் வாணம்விட்டு விளையாடியதுண்டு. சீன நாட்டிலிருந்து அவன் தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு தடவை சீன வெடிகளும் மத்தாப்புகளும் தருவித்து அவனுக்கு ஆர்வ வியப்பூட்டியதுண்டு. இப்போது அவன் அவற்றை நினைத்துக் கொண்டான். பறக்கும் பேழையின் உதவியால் அவன் தமிழகத்துக்கும் சீனத்தும் பறந்து சென்றான். வேண்டிய மட்டும் வாண வெடிகளும் மருந்துகளும். சீன வெடிகளும் மத்தாப்புகளும் வாங்கிப் பெட்டியினுள் சேகரம் செய்து வைத்துக் கொண்டான்.
தேம்பாகுவின் மாளிகையில் நடந்த விருந்தில், அரசனும் அரசியும் நகரப் பெருமக்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் முன்னே வானவனேந்தல் வானிலிருந்து பறக்கும் பேழையில் வந்திறங்கினான். எல்லாரும் அவனை வாழ்த்தி வணங்கி வரவேற்றனர். எல்லாரையும் அவனும் வாழ்த்தியதுடன் அரசன் அரசிக்கும் இளவரசிக்கும் பிறர்க்கும் தனித்தனி மலர் மாலைகள் இட்டான். அதன்பின் மாடத்திலுள்ளவர் மட்டுமின்றி எல்லாரும் காண அவன் பறக்கும் பேழையிலேறினான். அரசன் அரசியை வணங்கும் முறையில் மாடத்தைச் சுற்றி நகரெங்கும் தெரியும்படி வானிலேயே பறந்தான். அதையடுத்து மாடத்தின் மீது தவழ்ந்த வண்ணம் யாவரும் காணும்படி அவன் தன் வானவில் வாளை உருவிச் சுழற்றினான். அது மாடத்தின் மீதே அமைந்த ஒரு வான வில்லின் ஒளி மாலையாகக் காட்சி தந்தது. மன்னவனும் மக்களும் அது கண்டு மகிழ்ந்து ஆரவாரித்தனர்.
வானவனேந்தல் இப்போது தன் புதுக் கற்பனையைக் காட்டினான். வாணங்களையும் சீன வெடிகளையும் மத்தாப்புக் களையும் பேழையிலிருந்தபடியே கொளுத்தி வீசினான். சிறு வாணங்கள் அழற் பாம்புகள் போல நகரெங்கும் வீசின. வெடிகள் பல்வேறுபட்ட ஓசைகளுடன் எங்கும் மக்கள் காதுகளைத் துளைத்தன. மத்தாப்புகள் பல ஒளிப் பூ வண்ணங் களில் வானில் வண்ண ஓவியங்காட்டி மக்களை மகிழ்வில் ஆழ்த்தின. இவ்வேடிக்கைகளைப் பார்த்தறியாத தென்கடல் மக்கள் இவை ஒரு வானவன் செயலே என்று கருதி வானவனேந்தல் மீது பெருமதிப்பும் வியப்பும் மகிழ்வும் ஒருங்கே கொண்டு கூத்தாடினார்கள்.
வானவனேந்தலையும் ஒரு கண்ணால் பார்த்துத் தாய் தந்தையரையும் ஒரு கண்ணால் பார்த்தாள் தேம்பாகு. மன்னன், மகளைப் பார்த்து, அரசியை எதிர்நோக்கினான். அரசி, மக்களையும் மன்னனையும் மாறிமாறிப் பார்த்து இறுதியில் வானவனேந்தலை நோக்கிப் புன்முறுவல் செய்தாள்.
“ஒரு வானவனைக் காண்பதே மனித உலகுக்குக் கடுமை. நாங்களோ உங்களை விருந்தினராகப் பெற்றோம். ஆனால், இந்தத் தறுவாயை நான் வீணாக்க விரும்பவில்லை. விருந்து முடிவில் நீங்கள் என் மனம் மகிழ ஒரு கதை கூறவேண்டும். அது…..”
“ஒழுக்கமும் விழுப்பமும் உடையதாய் இருக்க வேண்டும்” என்று முடித்தான் வானவனேந்தல். தன் உள்ளக் கருத்தை அறிந்த அவன் தெய்வத் திறன் கண்டு வியந்தாள் அரசி செம்புலப் பெயல் நீர்.
அரசனும் தன் கருத்தைத் தெரிவிக்க விரும்பினான். “ஆம், தெய்வ இளைஞரே! கதை கேட்பதில் எனக்கும் கங்குகரையற்ற ஆவல். ஆனால், நான் விரும்பும் கதை….” “நகைச்சுவை ததும்புவதாய் இருக்க வேண்டும்” என்று மீண்டும் முடித்தான் வானவனேந்தல்.
வானவனேந்தல் வானவரினும் தலைசிறந்தவனானவன் என்பது இப்போது மன்னனுக்கு உறுதியாயிற்று. அவன் தன்னை அறியாமல் பின்னுமொருமுறை அவனை ஆர்வ மதிப்புடன் நோக்கி வணக்கம் தெரிவித்தான்.
விருந்து முடிவில் வானவனேந்தல் தன் முன்னிருந்த ஒரு நறும்புகைக் குமிழைக் கையில் எடுத்துச் சுழற்றிய வண்ணம் கதையைத் தொடங்கினான்.
“பொன்னுலக அரசனும் அரசியும் ஒரு நாள் பூங்காவில் உலவச் சென்றனர். அரசன் ஓர் அரச யானை மீதும் அரசி ஓர் அரசயானை மீதும் இவர்ந்து சென்றார்கள். பூங்காவில் அரசனும் அரசியும் ஒருபுறம் உலவினர் அரசயானையும் அரசி யானையும் மற்றொருபுறம் உலவின.” ஆகா ஆகா! என்ன ஒழுக்கம் என்ன விழுப்பம் என்று பாராட்டினாள், தென்கடல் அரசி செம்புலப் பெயல்நீர்.
“பூங்காவின் நடுவே கருதியது தரும் கற்பகத்தருபடர்ந் திருந்தது. அதன் வலப்பக்கமாகப் போவோம் என்றான் வாகை அரசன்: இடப்பக்கமாகப் போவோம் என்றாள் வாகை அரசி இருவரும் பிடிவாதமாகப் பூசலிட்டனர். இறுதியில் வாகை அரசன் கோபமாக வவப்பக்கம் போனான்; வாகை அரசி கோபமாக இடப்பக்கம் போனாள்.”
நன்று, மிக நன்று ! என்ன நகைச்சுவை! என்று கை கொட்டினான். தென் கடல் மன்னன் பைந்தார்.
“வானக அரசன் சென்ற திசைக்கு எதிர்ப்பக்கமாகத் திரும்பிற்று வானக அரச யானை; வானக அரசி சென்ற திசைக்கு எதிர்ப்பக்கமாகச் சென்றது வானக அரசி யானை.”
இப்போது தென்கடல் அரசன், அரசி ஆகிய இருவரும் தம் சூழலை மறந்து செவியாடாமல் கதையை அமர்ந்து கேட்கத் தொடங்கினர்.
“வாகை அரசனும் அரசியும் எதிர் எதிராகச் சுற்றி வந்து கற்பகத்தருவின் மறுபுறம் சென்று சந்தித்தனர். அரசி யானையும் அரச யானையும் அதுபோல எதிரெதிராகச் சுற்றி வந்து ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டன.”
இப்போது அரசனும் அரசியும் பெருமக்களும் சிரித்தனர்.
“காற்றிலாடிய கற்பகத்தின் கொம்பொன்று அரசி யானையின் நெற்றியில் மோதிற்று. அதன் இளந்தளிர் ஒன்று அதன் கண்ணில் குத்திற்று.” அரச யானை அதுகண்டு குதித்தெழுந்தது.
“ஆ! என் கண்ணுக்குக் கண்ணில் இந்தக் கற்பகம் சென்று குத்துவதா!” என்று அலறிற்று. அத்துடன் அது விடவில்லை. கோபத்துடன் அந்தக் கற்பகக் கொம்பைத் தன் துதிக்கையால் முறித்தது. “நீ மண்ணுலகில் சென்று விழுவாயாக, நீ செய்த குற்றத்துக்கு இனி மரமாகவே மண்ணில் வளர்ந்துபடு” என்றது.
"கற்பகக் கொம்பு நடுநடுங்கிற்று. கற்பகத்தைவிட்டு நான் பிரிந்து வாழ்வதா என்று கலங்கிற்று. ஆனால், அரச யானைக்கு எதிர் நிற்க அது துணியவில்லை. அரசி யானையின் காலடியில் விழுந்தது.
“அரசி யானைக்குக் கற்பகக் கொம்பின் மீது முதலில் கோபம் வந்ததோ என்னவோ, இப்போது அது முற்றிலும் பறந்தோடிற்று. அது, அதன் மீது இரக்கம் கொண்டு அதைத் துதிக்கையில் எடுத்தணைத்தது. நீ மண்ணில் சென்றாலும் மரமானாலும் கற்பகத் தன்மையில் சிறிது பெறுவாய்; நினைத்த தன்மை அடைவாய்; வருந்தாதே” என்றது. ‘என்ன விழுப்பம்! எத்தனை ஒழுக்கம்!’ என்றாள் கதை கேட்டு; கதை தொடர்ந்தது;
"தன் தண்டனைக்கு மாற்றாகப் பரிசளித்த அரசி யானையின் மீது, அரச யானைக்கு இன்னும் கோபம் தணிய வில்லை. அது வானக அரசனை நிமிர்ந்து பார்த்தது.
“அரசி யானை செய்தது தவறு; கற்பகக் கொம்பு என்ன நலம் பெற்றாலும் அதை நன்றி கெட்ட மனிதரே பெறட்டும். நலத்துக்கு மாறாக அது தீமையே அனுபவிக்கட்டும்” என்றான் அவன்.
"அரசி யானை இது கேட்டுப் பொருமிற்று. அது வானக அரசியைக் கடைக்கண்ணால் பார்த்தது.
"வானக அரசி புன்முறுவல் பூத்தாள். அரச யானையின் துதிக்கையை ஒரு கையிலும் அரசி யானையின் துதிக்கையை ஒரு கையிலும் பற்றி இரண்டையும் நறுக்கென்று கிள்ளினாள். ஆனை யானாலும் அரசனானாலும், தேவனானாலும் மனிதனானாலும் ஆணுக்கு அறிவு கட்டைதான்! நல்லகாலமாகப் பெண் அதைச் சரிப்படுத்தி விடத்தக்க அறிவுடையவளாய் இருக்கிறாள். கற்பகக் கொம்பு யார் அழித்தாலும் அழியாமல் மண்ணுலகில் இனம் பெருக்கி, இன்பம் பெருக்கி நன்றிகெட்ட மனிதருக்கும் விலங்கு களுக்கும் நலம் வளர்த்து வானவர் பூமனைக்குரிய புகழ் அடையட்டும் என்றாள்.
"அரச யானை மீது வந்த அரசன் அரசி யானை மீதும், அரசி யானை மீது வந்த அரசி அரச யானை மீதும் இவர்ந்து தம் பொன்மனை சார்ந்தனர்.
"கற்பகக் கொம்பு காற்றிலாடிச் சென்று காற்றாடி மரமாயிற்று. வெம்பும் கடல் மணலுக்குக் குளிர்ச்சி தந்தது. மக்கள் அதை விறகுக்கு ஒடித்து எரித்தனர். அது, இனிய வேர் நாடிற்று. மனிதர் அதைக் கிழங்கென்று தோண்டி எடுத்து உண்டனர். அது சுவையான தண்டு விரும்பிற்று. மனிதர் அதைக் கரும்பென்று ஆலையிலிட்டு ஆட்டி வெல்லம் உண்டு பண்ணினர். அது சுவையும் மணமும் உள்ள இலை நாடிற்று. மக்கள் அதைத் தளிர் வெற்றிலை என்று கிள்ளிக்கிள்ளி மொட்டையாக்கினர்.
"கொம்பு அழகுமலர் விரும்பிற்று. காய்கனி நாடிற்று. பெண்டிர் அம்மலர் கொய்து தலையில் சூடினர். அச்சமயம் பூஞ்செடி தற்காலிகமாக ஒளி இழந்து பின் மீண்டும் அரும்பிப் பூத்தது. குழந்தைகள் கொப்புகளில் ஏறிக் கனிகள் பறித்து உண்டனர். கொம்புகளில் இருந்து ஊசலாடினர். ஆனால், அது கிளைகளிலிருந்து விழுது என்ற பெயருடன் புது வேர் தோற்றுவித்துத் தூண்போல நிறுத்தி ‘ஆல்’ ஆகப் படர்ந்தது. தன் நிழலில் ‘அணிதேர்ப்புரவி ஆட்பெரும் படையுடன்’ மன்னர் வீற்றிருந்தனர். பறவைகள் வானுக்குள் ஒரு சிறு வானம் என்று கருதி அதிலேயே கூடுகள் கட்டி வாழ்ந்தன.
"வானக அரசன் ஆணைப்படி விலங்கு பறவைகள் போலவே மக்களும் நன்றி கெட்டவராகவே முதலில் நடந்து கொண்டனர். ஆனால், விரைவில் மர இனத்தின் கற்பகப் பண்பறிந்து மக்கள் அதைப் போற்றி வளர்க்க முற்பட்டனர். அதன் இலை. பூ, காய், கனிகளைத் தாம் உண்டதுடன் வானவர்க்கும் பூசனையாக நல்கினர்.
’கற்பகத்தரு காணாத ஆர்வப் பயன்களை எல்லாம் கற்பகக் கொம்பு மண் மீது மரவடிவில் பெற்றது. அத்துடன் வானகத்தில் ஒரு கற்பகத்தரு வென்றால் மண்ணகத்தில் அதன் கொம்பு செடி, கொடி, மரங்களாய்ப் பலவாகி எங்கும் பரவி வாழ்ந்தது.
’கற்பகக் கொம்பின் புதுப்பெரு வாழ்வு கண்டு அரச யானையும் அரசி யானையும் பூசல் தளர்ந்து பாடின. அந்நட்பின் புதுத்தருக்களாக இனிய குட்டி யானைகள் அவற்றின் பின் நடமாடின. வானக அரசனும் அரசியும் அது போலவே போட்டி தவிர்த்துப் பாசம் வளர்த்தனர். அவர்கள் இளமை தரும் கன்னியரும் யானைக் கன்றுகளுடன் கற்பக நிழலில் தவழ்ந் தாடினர். கற்பகமரம் அவர்களுக்குத் தன் கொம்பின் கதை கூறி மகிழ்வித்தது.
கதையைக் கதை என்று நினைக்காமல் தென் கடலரசி அதிலேயே மயங்கி உறங்கிக் கிடந்தாள். முதலில் சிரித்துச் சிரித்து அலுப்புற்ற அரசன் ஓய்வுற்றுச் சாய்ந்தான். பெரு மக்களும் விருந்தின் அயர்வால் கண்ணயர்ந்தனர். வானவநேந்தலும் தேம்பாகுவும் மட்டும் முன்னிரவுகளின் தனித்து இருவராய் ஊடாடியது போலவே நிலா முற்றத்தில் ஊடாடிக் காலையில் பிரிவுற்றனர்.
தேம்பாகுவுக்கும் வானவனேந்தலுக்கும் மண முடிப்ப தென்று அரசனும் அரசியும் உறுதி செய்து நாட்குறித்தனர். அமைச்சர் பணி முதல்வர் அதற்கான ஏற்பாடுகளின் முனைந்தனர். மக்கள் மணவிழாவை எதிர்நோக்கி மகிழ்ச்சி விழாக்கள் கொண்டாடத் தொடங்கினர். வானவனேந்தலுக்கு மறு இரவே மணவிழா நாளைக் குறித்த செய்தி கூறி மகிழ்ந்தாள் இளவரசி தேம்பாகு.
மணி விழாவுக்கு முன்னாள் காட்டுக்குத் தன் இறுதி விடை தரச் சென்றான் வானவனேந்தல். ஆனால், அதுவே நாட்டுக்கு அவன் தந்த இறுதி விடையாகத் திகழ்ந்தது.
வாண வேடிக்கைக்காக அவன் கொண்டு வந்த சரக்குகளில் எளிதில் வெடிக்காத ஒரு சிறு குண்டு இருந்தது. வெடித்து மீந்த கல்லென்று கருதி வானவனேந்தல் காட்டுக்குச் சென்றதும் அதைப்பெட்டியிலிருந்து எடுத்துக் கீழே எறிந்தான்.
விடியற்காலம் மணக்கோல மேற்கொள்ளுமுன் வானவனேந்தல் அருகிலுள்ள காட்டாற்றில் குளிக்கச் சென்றான். குளித்துக் கொண்டிருக்கும் சமயம் காது செவிடுபடும்படி இடி போன்ற ஒரு பேரோசை கேட்டான். காட்டில் ஒரு பகுதியே அழலில் சாம்பலாகக் குமுறியதுபோல் தோன்றிற்று. விரைவில் குளிப்பு முடித்துவிட்டு ஈர ஆடையுடன் அவன் பேழை இருந்த இடம் அணுகினான்.
பேழை இருந்த திசையில் பேழையையும் காண வில்லை. அப்பக்கம் இருந்த மரம் செடி கொடிகள் மண்மேடுகள் கூட அடையாளம் இல்லாமல் போய்விட்டன.
கல்லென்று அவன் நினைத்த குண்டு ஒரு மரத்திலிருந்து முறிந்து விழுந்த ஒரு கிளை ஒன்றின் மூலம் வெடித்திருந்தது. அது ஓர் ‘அணு’ குண்டு. ஆதலால், பேழையையும் அதன் அருகே உள்ள மரங்களையும் ஒருங்கே கட்டெரித்துத் தவிடு பொடி ஆக்கியிருந்தது.
வானவனேந்தலின் வானளாவிய திட்டங்கள் முக்காலே மூன்று வீசம் நிறைவேறியும் இறுதியில் இவ்வாறு தகர்வுற்றது. மாயப்பேழை இல்லாமல் குறித்த காலத்துக்குள் அவன் தேம்பாகுவின் மாடம் செல்லவும் இயலாது. நேரம் தவறிச் சென்றாலும் வானவனாகச் செல்ல முடியாது. எனவே, அவன் செய்வகை தெரியாமல் திகைத்தான். இளவரசியை எண்ணி எண்ணி ஏங்கினான்; புலம்பினான்.
அவன் மூளை குழம்பிற்று. பித்தனாக அவன் காட்டில் அலையத் தொடங்கினான். கண்ட கண்ட இடமெல்லாம் தேம்பாகு என்ற பெயரை எழுதிச் சென்றான். கேட்டவர்களுக் கெல்லாம் ‘மண்ணடைந்தது வானவேநந்தல் வாழ்வு’ என்றான்.
மணவேளையில் மணமகனைஎதிர்பார்த்து எதிர் பார்த்து இளவரசி ஏங்கினாள். அரசனும் அரசியும் எங்கும். ஆட்போக்கி னார்கள், தேடினார்கள். மக்கள் எங்கும் எல்லாரையும் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்கள்.
நாட்கள் சென்றன. வாரங்கள் சென்றன. மாதங்கள் ஆண்டுகள் ஆயின.
வானவனேந்தலை எல்லாரும் மறந்தனர். அரசனும் அரசியும் விடுதித் தலைவி மூலம் அவன் உண்மையில் ஏதோ மாயங் கைக்கொண்ட நாடோடி வணிகனே என்றறிந்து தலையில் அடித்துக் கொண்டனர். வேறொரு நல்ல இளைஞனைத் தேர்ந்து மணஞ்செய்து கொள்ளும்படி புதல்வியை வேண்டினர். வலியுறுத்தினர்; வாதாடினர் ஆனால், இளவரசி எதற்கும் வாய் திறக்கவில்லை.
‘வானவனோ, வணிகனோ! என் உளம் விரும்பியவன் மாடத்தில் வானவனாக வந்து எனக்கு இன்ப உலகம் காட்டிய ஏந்தல் தான்’ என்று அவள் உள்ளம் ஓயாத தனக்குள் கூறிக் கொண்டது.
அவள் எவரிடமும் எதுவும் சொல்லாமல் மாடத்திலிருந்து வெளியேறத் துணிந்தாள்.
அவள் பாசம் அவள் அறிவைத் தட்டிற்று. தன் ஆடை களையும் படுக்கைகளையும் அவள் கயிறாக முறுக்கினாள். மாடத்தின் புறக்கோட்டையான நாற்கட்டின் உச்சி ஏறி அதை வெளியே மதிலின் முகட்டில் கட்டினாள். உயிரை வெறுத்து. அக்கயிறு பற்றிக் கீழே விரைந்து நழுவினாள்.
உடுத்திய ஆடையுடனேயே இளவரசி தேம்பாகு வெளியேறி இருந்தாள். இரவே அவள் நகர் கடந்து காடுகளில் சென்று காய் கனி நீர் அருந்தி எங்கும் சுற்றித் தன் துணைவனைத் தேடித் திரிந்தாள். அவள் மேனி பொடி படர்ந்து வெயில் மழைபடிந்து நிறமாயிற்று. அவள் ஆடை கந்தையாயின. ஆயினும் அரைப் பைத்தியமாகவே திரிந்தாள். இதனால் அவளைத் தேடி அரசன் அரசி அனுப்பிய ஆட்கள் கண்ணில் அவள் பட்டாலும் அவர்கள் அவளை இனமறியக் கூடவில்லை.
அவள் நெடுநாள் அலைந்தபின் இனி வானவ னேந்தலைக் காண முடியாதென்ற முடிவுக்கு வந்தாள். அவளுக்கு வாழ்க்கை வெறுத்தது, உணர்வு நீங்கி அவள் அரைப் பிணமாக உலவினாள்.
வானவனேந்தல் உண்மையில் அச்சமயமும் தேம்பாகின் அருகிலேயே நடமாடி வந்தான். அவள், அவனை எல்லாரையும் போல ஒரு பைத்தியக்காரன் என்று தான் நினைத்திருந்தாள். அவனும் அவளை அவ்வாறே எண்ணியிருந்தான்.
தேம்பாகு தன் பெயரை அடிக்கடி காடெங்கும் கண்டு வியப்படைந்ததுண்டு. அது ஒருவேளை வானவனேந்தலின் செயலாக இரக்கலாமோ என்று சில சமயம் நினைத்தாள். ஆனால். அது பற்றி யாரிடம் உசாவுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு நாள் உறங்கும் நேரத்தில் “தேம்பாகு”, “தேம்பாகு” என்ற குரல் கேட்டு அவள் எழுந்தாள். அருகே யாருமில்லை. ஆனால், சிறிது தொலைவில் பைத்தியக் காரன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனே தூக்கத்தில் அவ்வாறு புலம்புவது கண்டாள். இடையிடையே அவன் ‘மண்ணடைந்தது வானவனேந்தல் வாழ்வு’ என்றும் கூவினான்.
இப்போது தேம்பாகுவின் உள்ளத்தில் உண்மையில் ஒரு மின்னல் ஒளி வீசிற்று அவள் அவன் அருகில் சென்றாள். ’தேம்பாகு வாயிலில்லா மாடத்திலல்லவா இருப்பாள். இங்கே ஏன் புலம்பித் தவிக்கிறாய்?" என்றாள்.
உறக்கத்திலும் தேம்பாகுவின் பெயர் வானவனேந்தலின் உணர்வைத் தட்டி எழுப்பிற்று. “ஆ! என் பறக்கும் பேழை மட்டும் பாழாய்ப் போன குண்டுக்கு இரை ஆகாதிருக்குமேயானால், இக்கணம் பறந்து சென்றிருக்க மாட்டேனா?” என்றான்.
அவள் உண்மையை ஒரு நொடியில் ஊகித்துணர்ந்தாள். அவனை வாரியெடுத்து மடிமீது கிடத்தினாள். "இனிப் பறக்கும் பேழை எதற்கு? வானவன் வடிவம்தான் எதற்கு? அன்பே! உன் தேம்பாகு உன் அருகிலேயே இருக்கிறாள் என்றாள். அவன் கண்ணைத் துடைத்துக் கொண்டு அவளை அடையாளம் கண்டான்.
“ஆ, நான் வானவனாக நடித்தல்லவா உன்னை பெறத் துடித்தேன். உன்னை இப்போது இங்கே காண மகிழ்ச்சிதான். ஆனால், நான் வானவன் அல்லவே, எப்படி என் ஆவல் ஈடேறும்” என்று புலம்பலானான்.
“வானவன் வடிவை நான் விரும்பவில்லை உள்ளத்தைத் தான் விரும்பினேன். அது எந்த வடிவிலிருந்தாலும் அதற்கே நான் உரியவள்” என்று அவள் அவன் ஐயத்தை நீக்கி அவனுடன் தன்னை இணைத்தாள். காட்டில் அவர்கள் பறவைகள்போல் ஓடியாடித் திரிந்து வாழ்ந்தனர். குழந்தை ஒன்று அவர்கள் காட்டு வாழ்விலும் இனிய தென்றலாக வந்து தவழ்ந்தது.
தம்மை எண்ணாவிட்டாலும் தம் குழந்தையை எண்ணியாவது அவர்கள் நகர் செல்ல முனைந்தனர். முற்றிலும் முதுமை நிலையிலும், அரசனும் அரசியும் அவர்களையும் தம் குலக்கொழுந்தாகிய சிறுவனையும் கண்டு தம் துயரமெல்லாம் மறந்தனர். நகர மக்களும் செய்தியறிந்து அவர்களை வரவேற்றனர்.
வானவனேந்தலின் கற்பகக்கொம்புக் கதையை நினைவூட்டும் முறையில் சிறுவனுக்கு அவன் பாட்டனும் பாட்டியும் ‘கற்பகக்கொழுந்து’ என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். கற்பகக் கொழுந்து தாய் தந்தையரின் அன்புக் கனியாகவும் தென் கடல் மக்களின் ஆர்வக் கொழுந்தாகவும் விளங்கினான். வானவனேந்தலும் தேம்பாகுவும் தென்கடல் அரசன் அரசியாக இணைமுடி சூட்டப்பட்டபோது, அவனே இணைமுடி இரண்டின் இடையே துணிமுடி சூடிய தேன் கடல் இளவல் ஏந்தல் ஆனான்.
இருகுடிக் கொழுந்து
பூவாளி தாய் தந்தையர் முகமறியாத இளைஞன்; பிறக்க இருக்கும் பிள்ளை ஆணா, பெண்ணா என்றறியும் முன்பே, தந்தை போர்க்களத்தில் வீரமுடிவெய்தினான். தாயும் ஒன்றரை மாதத்துக் கைக் குழந்தையாக அவனை விட்டு உயிர் நித்தாள், வேண்டா வெறுப்புடன் தொலை உறவினர் எப்படியோ அவனை வளர்த்தனர். ஊரகப் பலர் முகம் பார்த்து வாழ்ந்து அல்லலுற்று, இறுதியில் அவனும் தந்தையைப் போலவே படை வீரனானான். வேங்கி நாட்டைக் குந்தள நாட்டரசன் படையெடுத்தபோது அவனும் குந்தள நாட்டுப் படையுடன் வேங்கி நாடடைந்து அங்கேயே தங்கிவிட்டான்.
தாய் தந்தையர் விட்டுச் சென்ற செல்வமாக எதுவும் அவனிடம் கிடையாது. ஆயினும், அவர்களிடமிருந்து பல பண்புகள் அவனை அறியாமலே அவனிடம் வந்தமைந்திருந்தன. அவன் வளர்ந்த பயணம் இப்பண்புகளை மேலும் வலியுறுத்திப் பெருக்கிற்று.
அவன் தந்தை வழி, பாண்டியர் படையுடன் குந்தள நாட்டுக்கு வந்த மலையாள மரபுக்குரியதாயிருந்தது. தாய் வழியோ, பல்லவர் படையுடன் வந்த தமிழ் மரபாய் அமைந்தது. இதனால் நாட்டு மொழியாக அவன் பேசிய கன்னடத்துடன் மூதாதையர் மொழிகளாகிய தமிழும் மலையாளமும் பெரிதும் இடை கலந்திருந்தன. வேங்கி நாட்டுக்கு வந்த பின், தெலுங்குச் சொற்களும் பல இணைந்து அவன் ஒரு கதம்ப மொழி பேசத் தொடங்கியிருந்தான். பல நாட்டு வீரர்களும் அடங்கிய அக்காலப் படைத் துறையில் இது அவனுக்கு ஓர் அருஞ் செல்வமாய் இருந்தது. ஏனெனில் அரைகுறையாகவாவது எல்லா மொழியினரும் அவனைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயம் எம்மொழியாளரும் அவன் பேச்சைக் கேட்டு உள்ளுர நகைக்காமலிருக்க முடியவில்லை. புரியும் சுவையுடன் புதுமைச் சுவையும் கலந்த அப்பேச்சு, அவனைச் சூழப் பல நாட்டவர் நட்பை வளர்த்துப் பெருக்கிற்று.
பால்வடியும் அவனது இளமுகச் செவ்வியுடன் தன்னம்பிக்கையும் தற்சார்பும் தற்சிந்தனையும் மிக்க அவனது நடையுடை போக்கும் மிடுக்கும் அவனுக்கிருந்த இயல்பான கவர்ச்சியை வளர்த்தன.
வீரத்துக்கு அன்று விலை இருந்தது. ஆர்வ வரவேற் பிருந்தது. ஆனால், வீரத்தால் தனி மனிதருக்கோ, நாட்டுக்கோ அமைதி ஏற்படவில்லை. மன்னர் தவிசுகள் அன்று அடிக்கடி மண்மேடுகளாயின, மண்மேடுகள் திடுமெனக் கொஞ்ச காலம் மன்னர் தவிசுகளாகத் தலைகாட்டி வீழ்ந்தன. பயிற்சி பெறாத புது வீரர் கும்பல்கள் அடிக்கடி படைகளின் உருவில் உலவின. திட்டமில்லாத படைத் தலைவர், நாட்டு மக்கள் வாழ்வில் அக்கரையற்ற அரசியல் வேட்டைக் கோமான்கள் போர்க் களங்களில் விளையாடினர். இதனால் தோல்விகளைப் போலவே வெற்றிகளும் புதிய அழிவுகளுக்கு வழி வகுத்தனவே தவிர, ஆக்கம் விளைவிக்கவில்லை. பல போர்க்கள அனுபவங்களின் பயனாகப் பூவாளி இவற்றை நன்கு அறிந்து கொண்டிருந்தான்.
போர் வீரரிடையே போர் வீரனாக அவன், வீடின்றி ஊரின்றி ஓயாது அலைந்து கொண்டுதான் இருந்தான். போர் வீரர் வாழ்வின் வறுமையும் வாட்டங்களும் இடங்களும் அவனை ஓயாது அல்லற்படுத்திக் கொண்டுதான் இருந்தன. ஆனால், இந்நிலைகளிலும் அவன் எப்படியோ ஓய்வு நேரங்களைச் சிந்தனையில் பயன்படுத்தினான். வெற்றி தரத்தக்க நல்ல படைப் பயிற்சி முறை, தேர்ந்த படையாட்சி வகை, திறமான போர்முறை, வெற்றியை நிலைத்த வாழ்க்கை வளமாக்க வல்ல நேராட்சி முறை ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்து. அவன் திட்டங்கள் பல தீட்டினான். ஏடுகளில், பட விளங்கங்களான அவற்றைச் சுருட்டி எடுத்துக் கொண்டு அவன் ஒரு நாள் பயணம் புறப்பட்டான்.
வேங்கி நாட்டில் குந்தளப் படைகளின் மாபெருந் தலைவனாகத் தண்டநாயகன் மாவண் கோம்பி வெற்றி வீறுடன் அமர்ந்திருந்தான். அவன் மாளிகையில் வாள்களையும் வேல் களையும்விட வண்ணக் கலங்களும் வகைவகையான அணிமணி ஆடைகளுமே மிகுதியாக இடம் பெற்றிருந்தன. விரர்களையோ வெற்றிப் பாடகர்களையோவிட விருந்தாட்டயர்வதற்குரிய ஆடல் பாடலணங்குகள். சேடிப் பணிப் பெண்டிர்களே மிகப் பலராய் இருந்தனர். இந்நிலையில் தண்டநாயகத்தை அணுகுவதே பூவாளி போன்ற ஏழைப்படை வீரனுக்கு எட்டாச் செயலாய் இருந்தது. ஆயினும், அவன் முகச் செவ்வியும் இனிய நடையுடை தோற்றமும் அஞ்சாத் துணிவும் இங்கே அவனுக்கு உதவின. அவன் தண்டநாயகத்தின் திருமுன் காட்சி பெற்றான். உண்டாட்டயர்வில் தன்னை மறந்திருந்த தண்டநாயகம் தன் வழக்கத்துக்கு மாறாக அவனுக்கு எதிரிருக்கை தந்து அமர்வித்தான்; குளிர்ச்சியாகப் பேசினான்; இனிய தேனீரும் உண்டியும் அளிக்கும்படி அருகேயிருந்த பணி நங்கையர்க்குக் கட்டளை இட்டான்.
பூவாளி திரும்பி வரும்போது, அவன் முகம் பெரிதும் சோர்வுற்றேயிருந்தது. ஆதரவும் கனிவும் எதிர்பாராத அளவில் கிடைத்தும், எதிர்பார்த்த பலன் விளையும் என்ற நம்பிக்கை தளர்ந்துவிட்டது. திட்டச் சுருளைக் கண்கொண்டு பார்க்காமலே தண்டநாயகம் ஒரு பணியணங்கினிடம் அதனை வழங்கினான். பாலும் பழமும் இன்பப் பொருள்களும்தாம் தாண்டநாயகத்தின் ஆர்வந் தூண்டத் தக்கவை என்பதை அந்த ஒரு கணத்திலேயே பூவாளி நன்கு கண்டுகொண்டான். ஆயினும் இத்தோல்வி அவனை உடனடியாக முற்றிலும் ஆட்கொண்டு விடவில்லை. ஏனெனில் உண்டி, தேநீர் அவன் முன்னே வைக்கப்பட்ட போதும், திட்டச் சுருள் அப்பால் கொண்டு செல்லப்பட்ட போதும், கருவண்டுகள் போன்ற இரு கண்கள் அவனை ஆர்வமாக நோக்கின. அவையே அவன் ஆர்வத்தையும் பெரிதும் கிளறின. தோல்வியலைகளில் அவன் முற்றிலும் அமிழ்ந்து விடாதபடி இந்த இள ஆர்வம் அவனை ஒரு சிறிதே தடுத்து நிறுத்த உதவிற்று.
அவன் தன் தங்கும் விடுதியில் வந்து சோர்ந்து படுத்தான். ஆனால், தூக்கம் கண்களை அடைய மறுத்தது. நாட்டின் திக்கற்ற நிலையை இன்று அவன் உணர்ந்தது போல இதற்கு முன் என்றும் உணர்ந்து கொண்டதில்லை என்று அவனுக்குத் தோன்றிற்று. தண்டநாயகத்தின் வீரப்பொலிவற்ற தோற்றத்திடையே சுழன்று சுழன்று வந்த இரு கருவிழிகள் அவனுக்கு இவ்வகையில் ஓர் அரிய விளக்கமாயின. பெண்டிர் வாழ்க்கைக்கு அரணாயிருக்க வேண்டி வீரம் இன்று அதனைச் சூறையாடி அடிமை கொள்ளும் போலிப் பண்பாய்விட்டதே என்று அவன் ஏங்கினான்.
எண்ண அலைகளில் மிதந்து அவன் கனவு நிலையிலிருந் தான். ஆனால், கனவே நனவுருப்பெற்று அக்கனவலைகளைக் கலைக்க வந்ததுபோல, திடுமென அவன் முன்னே ஒரு பெண்ணின் உருவம் வந்து நின்றது. கண்களைக் கசக்கிவிட்ட வண்ணம் “நீ யார்?” என்று அவன் கேட்டான். “தண்ட நாயகத்தின் மாளிகையில் உங்களுக்குத் தேனீர் உணவு கொண்டு வந்த பணிப் பெண் நான். என் கையில்தான் தங்கள் திட்டச் சுருளும் தரப்பட்டது.”
“நீ இங்கே எப்படி வந்தாய்? எதற்காக - ஒருவேளை தண்டநாயகம்…?”
அவள் ’களுக்’கென்று நகைத்துப் பின் நகைப்பை அடக்கிக் கொண்டாள்." தற்காலத் தண்ட நாயகங்களுக்கு அவ்வளவு அறிவு எப்படி ஏற்பட்டுவிட முடியும். ஆனால், நான் அதை ஒரு சிறிதேனும் பார்த்து அதன் தன்மையை உணர்ந்து கொண்டு விட்டேன். நான் ஒரு தண்டநாயகமாய் இருந்தால் - ஆனால் காலக் கேடாக நான் தண்டநாயகமாகவும் பிறக்கவில்லை; ஒரு வீரனாக, ஓர் ஆணாகக்கூடப் பிறக்கவில்லையே என்று வருந்துகிறேன்."
“தண்டநாயகமாகப் பிறந்திருந்தால் என்ன செய்வாய்?”
“உங்கள் ஏட்டுத் திட்டங்கள் நாட்டுத் திட்டங்களாகும்படி செய்திருப்பேன்.”
“நாட்டுக்கு அந்த நற்பேறு இல்லாமல் போனதற்கு நான் மெய்யாகவே வருந்துகிறேன். ஆயினும் அத்தகைய அவாவுடைய ஒரு பெண் இருப்பது பிற்கால மரபு பற்றிய ஊக்கத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய செய்தியே; அஃதிருக்கட்டும் தண்ட நாயகத்தின் மாளிகைக்குரிய தாங்கள் இந்த ஏழைக் குடில் தேடிவந்த காரணம் என்ன என்றறிய அவாவுகிறேன்!”
“தாங்கள், `நீங்கள்’ என்று என்னை அழைக்க வேண்டாம். பெரிய இடங்களை நானாக நாடிப் போகவில்லை. இந்த இடங்கள் என் போன்றவர்களுக்கு நன்மை செய்பவையுமல்ல. அவ்வாழ்வை நிலையாக உதறித் தள்ளத் துணிந்து தான் இங்கே வந்தேன். தப்பி வெளிவர நான் இதுவரை எண்ணியதில்லை. உங்கள் திட்டத்தையும் உங்களையும் கண்டபின், உங்களுடனேயே வரத் தீர்மானித்து விட்டேன்.”
தன் வாழ்வின் அவல நிலையையும், உயர் வாழ்க்கையின் அனுபவம் பெற்ற பெண்ணுக்கு அது பொருந்துவதன்று என்பதையும் பூவாளி எடுத்துரைத்தான்.
“நானாகத் தங்களிடம் வந்திருக்கிறேன். தங்கள் இடர் களையும் இடையூறுகளையும் ஏற்க தயங்கவில்லை. ஆனால், தங்களுக்கு நான் சுமையாகத் தோன்றினால்கூட விட்டுவந்த படுகுழிக்கு நான் மீண்டு செல்ல முடியாது. என் வாழ்க்கை மீண்டும் வெற்று வாழ்வாகும். அவ்வளவுதான், உங்கள் விருப்பப்படி நடக்கிறேன்” என்றாள் அவள்.
எண்ண அலைகளில் மிதந்த இருவிழிகள் இயல்பாகவே அவள் வாழ்வில் இழைய நெடுநாளாகவில்லை. அவள் பாதுகாப்பை உன்னி, அவன், அவளுக்கு ஆணுடை அணிவித்து வேறிடத்துக்கு இட்டுச் சென்று தங்கினான். வெளியார் எவரும் வராத நேரங்களில்தான் அவள் ஆணுடையகற்றி இயல்பான பெண்ணுடை அணிந்து கொள்வாள்.
அவன் திட்டம், மெல்ல அவளை அரசியல் வாழ்வின் பக்கமாக இழுத்து வந்தது. அவளை அறிய அறிய அவன் அவளைத் தன் திட்டத்தின் திருவுருவாகவே மதிக்கத் தொடங்கினான்.
அவள் பெயர் இருகுடிக்கொழுந்து, இரு தலைமுறை களுக்கு மேலாக, சோழர்குடி அரசிளஞ் செல்வியர் சாளுக்கியர் குடியிலும், சாளுக்கியர்குடி அரசிளஞ் செல்வியர் சோழர் குடியிலும் வாழ்க்கைப்படுவது வழக்கமாய் இருந்து வந்தது. இதனால் தழைத்து வந்த புது மரபே இருகுடி என வழங்கிற்று. கருவிழி நங்கை இந்த இருகுடிக்கு உரியவள் என்பதை அவள் பெயரே எடுத்துக் காட்டிற்று. இதைப் பூவாளி அறிந்தபோது அவனால் குறும்புநகையாடாமலிருக்க முடியவில்லை. “இரு மரபுக்கும் புயல் போன்றது குந்தள நாட்டு மரபு. அதற்குரியவன் நான் - என்னிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்” என்றான் அவன்.
“புயல் மரபுதான் உங்கள் திட்டத்தை மதித்துணர முடியவில்லையே! வீரமும் அறிவும் இணைந்த ஈரிணைய மரபினர்தான் நீங்கள். இருகுடி மரபு அதை மதிக்கக்கூடும் அல்லவா?” என்றாள்.
“ஆம், அம்மரபில் ஒரு பெண் பிறப்பு ஏற்கெனவே மதித்துணர்ந்து விட்டது” என்றான் அவன், அவள் முகத்தில் அப்போது குறும்பு நகையில்லை. மகிழ்ச்சியே கூத்தாடி இருந்தது.
ஒருநாள் மாலை நேரத்தில் அறைக்கு வெளியே இருந்து பூவாளி தன் படைவீர உடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தான். உள்ளே அவனுக்காக உண்டி, தேனீர் வைக்கப்பட்டிருந்தது. இருகுடிக் கொழுந்து ஆணுடையை மறந்து கூந்தலை அவிழ்த்துக் கோதிக் கொண்டிருந்தாள். அச்சமயம் செந்தாடியுடைய ஒரு கட்டிளைஞன் சரேலென உட்புகுந்து, எதுவும் பேசாமலே உண்டி தேனீரை அருந்தத் தொடங்கினான். பூவாளி சீறி அவன் மீது பாய எழுந்தான்.
செந்தாடி இளைஞன் முகத்திலுள்ள ஏதோ ஒரு தோற்றம் இருகுடிக் கொழுந்தைத் திடுக்கிட வைத்தது. ஆனால், அவள் தன் அதிர்ச்சியில்கூட மதியிழக்கவில்லை. கூந்தலை இடக்கையால் ஒதுக்கிவிட்ட வண்ணம், துணைவன் சீற்றம் அமையும்படி வலக்கை அமர்த்திக் காட்டினாள். பின் ஆர அமரக் கூந்தலை வாரி முடித்துக் கொண்டு இளைஞனை நோக்கினாள்.
“நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன அன்பரே!”
“உன் கணவன் உணவை உண்கிறேன். உங்களிடம் எதுவும் மறைக்கக்கூடாது. ஆயினும் தற்போதைக்கு நான் கூறத்தக்கது மிகுதியில்லை. நான் ஒரு வடைத்துறைப் பணியாளன். என் பெயர் இருகுடிக்கோமான்” என்றான். “அப்படியா? என் பெயரும் இருகுடிக் கொழுந்துதான். இருவரும் குடிமரபால் உறவு கொண்டவர் என்று தோற்றுகிறது” என்றாள்.
“ஆ! அப்படியானால், நீ என் தங்கை. அதில் நான் இரட்டிப்பு மகிழ்வடைகிறேன். இவ்வளவு அறிவுடைய ஒரு தங்கையையும் பெற்றுவிட்டேன். அவள் நன்கு வாழ்வதையும் காணக் கிடைத்து விட்டது” என்றான் இருகுடிக்கோமான்.
இருகுடிக்கொழுந்து இப்போது தன் துணைவரைக் கூவி அழைத்தாள். “இதோ என் அண்ணனல்லவா வந்திருக்கிறார்! அவருக்கு நீங்கள் உரிய மதிப்புக் காட்ட வேண்டாமா?” என்றாள்.
பூவாளியும் இருமுடிக்கோமானும் எளிதில் உரையாடி மகிழ்ந்து பழகினர். ஆனால், எடுத்த எடுப்பிலேயே பூவாளியை மதித்துணர்ந்து கொண்டவன் இருகுடிக்கோமானே." “மைத்துனரே! நீர் கோபப்படக் கூடாது. நானும் உம் துணைவியும் இருகுடிக்கும் இரு மொழிகளுக்கும் மட்டும் உரியவர்கள். ஆனால், நீர் எங்களைத் தாண்டியவர். ஐந்து மொழிகளுக்குமே உரியவர். அத்துடன் உம் துணை பெற்றவர் ஐந்துமொழி நாடுகளையுமே ஆளும் செல்வம் பெறுதற்குரியவர் என்பதையும் அறிவேன்” என்றான் அவன்.
அவன் கூர்மதிக்கு வியந்து, பூவாளி அவனிடம் தன் உள்ள முழுதும் திறந்து காட்டினான். இருகுடிக்கோமானோ, தன்னை முழுதும் காட்டிக் கொள்ளாவிடினும், தன் பாச முழுதும் பூவாளி பேரிலும் இருகுடிக் கொழுந்தின் பேரிலும் சொரிந்தான். அவன் தன்னை அண்ணனாகவும் மைத்துனனாகவும் கூறிக் கொள்வ துடன் அமையவில்லை. அந்த உறவுகளின் உரிமை முழுவதையும் கைக் கொண்டான். “என் தங்கையை யாரோ எவரோ போல இருக்கவிட்ட நான் வாளா அமைய முடியாது. அவளுக்குத் தக்க தங்கிடம் உடை, யணிமணி வசதி செய்து கொடுப்பது என் மாளாக் கடமை” என்று அவன் கூறினான். அவர்கள் எவ்வளவு மறுத்தும் வற்புறுத்தி உயர்மதிப்புடைய இடம் அமைத்துக் கொடுத்து, உயர் உடையணிமணி, உணவு வசதிகளுக்கு ஏற்பாடு செய்தான்.
வேங்கி நாட்டின் அரசியல் கொந்தளிப்பு நிலை பற்றி அவர்கள் அடிக்கடி பேசினர். “குடும்ப உறவாலும் பாசத்தாலும் நாம் இணைந்து விட்டோம். அரசியல் கொந்தளிப்புகளிடையே நாம் தனித்தனியாகப் போக நேர்ந்தால்கூட இந்த நம் உறவு கட்டாயம் நீடிக்கும். அத்துடன் வேங்கி நாட்டின் நலம் எல்லாருக்கும் உரிய பொது நோக்கு. அவ்வகையில் தங்கை கணவராகிய தாம் கொண்டுள்ள போக்கு எதுவானாலும், நான் ஆதரவு காட்டக் கடமைப் பட்டவன். ஆகவே, தம் நோக்கம் அறிய விரும்புகிறேன்.” என்றான் இருகுடிக்கோமான்.
பூவாளிக்குத் தண்டநாயகம் மாவண்கோம்பியிடம் நம்பிக்கையில்லை, ஆயினும் குந்தள நாட்டரசன் ஆதரவு பெற்று ஆளமுற்பட்ட புதிய மன்னன் வென்றிக் கதிரோனையே ஆதரிக்கும் எண்ணம் கொண்டிருந்தான். தண்டநாயகம் மாவண்கோம்பியின் இடையீடின்றி அரசனை எவ்வாறு அணுகுவது? எப்படி அவனுக்குத் துணை தேடுவது? என்பதிலேயே அவன் மனம் ஈடுபட்டிருந்தது.
வென்றிக்கதிரோன் பெயர் கேட்டதும் இருகுடிக் கோமான் முகத்தில் முதலில் ஒரு சிறு களிப்புத் தென்பட்டது. ஆனால், அவன் அதை விரைவில் அடக்கிக் கொண்டான். சிறிது சிந்தனையில் வாழ்ந்திருந்தபின் அவன் மீட்டும் பேசினான்.
“மைந்துனரே! தம் திட்டத்தின் ஆற்றலை நான் அறிவேன். அதனை ஏற்கும் எவரும் வெற்றித் தேர் ஏறிப் புகழ் எய்துவர் என்பதும் தான் அறியாததன்று. அதன் நிறைவேற்ற வகையில் இப்போது மலைபோலத் தோற்றும் பெருந் தடையைக் கூட நான் பனிபோல எளிதாக அகற்றிவிட முடியும். என் தங்கையை நினைத்து அதைச் செய்யும் ஆவலுடையவனாக இருக்கிறேன். ஆயினும், அவ்வாறு செய்யுமுன் புதிய அரசரை நானும் பார்க்க வேண்டும்; அவர் தகுதியை அறிய வேண்டும். இதை நான் செய்ய வழிவகுக்க முடியுமா?” என்றான்.
பூவாளி இதுவகையில் ஏற்கெனவே செயல் தொடங்கி யிருந்தான். புதிய அரசனின் நம்பிக்கைக்குரிய உறவினனான செம்மீளியின் நட்பை அவன் பெற்றிருந்தான். பூவாளியின் திட்டத்தில் செம்மீளி ஆர்வ நம்பிக்கை கொண்டிருந்தான். “இத்திட்டத்தை நிறைவேற்றப் புதிய அரசனிடம் பணம் கையிலில்லை. ஆயினும், அரசனை நேரில் அறிமுகப்படுத்தித் திட்டத்தில் அவனை ஈடுபடச் செய்ய என்னால் முடியும்” என்று அவன் கூறியிருந்தான்.
“செம்மீளி மூலம் நான் புதிய அரசனைக் காண இருக்கிறேன். உங்களையும் உடன் கொண்டு செல்லத் தடையில்லை” என்றான்.
இருகுடிக்கோமான் யார் என்பதைப் பூவாளி அறிய வில்லை. உண்மையில் அவன் மாற்றுருவில் தன் பெயர் மறைத்துக் குடிப் பெயருடனேயே பழகியிருந்தான். புதிய அரசனின் தகுதியை நேரில் காண்பதால் மட்டும் எப்படி அறிந்துவிட முடியும் என்பதையும் பூவாளி அறிய முடியவில்லை. ஆயினும் அரசனை ஒருதடவை பார்த்த அன்றே இருகுடிக்கோமான் கருத்தில் மாறுபாடு ஏற்பட்டு விட்டதாகப் பூவாளி கருதினான்.
வென்றிக் கதரோனை நேரே கண்டபின் ஒரு சில நாட்களில் இருகுடிக்கோமான் தன் தங்கைக்கும் மைத்துனருக்கும் ஒரு விரைவு அழைப்பு அனுப்பினான். அழைப்புக் கொண்டு வந்த தூதருடன் சென்ற போது, அவர்கள் கண்ட காட்சிகளும் செய்திகளும் அவர்களை வியப்பில் ஆழ்த்தின. அரசர் அரண் மனையைவிட ஒய்யாரமான ஒரு மாளிகையில், அரசருக்கும் அரிதான ஒரு விருந்தில் அவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எதிர்பாராத வகையில் படைவீரர், செல்வர் எண்ணற்றவர்கள் அதில் பங்கு கொண்டிருந்தனர். இரு குடிக்கோமான் ஒரு பொதுநிலைப் படைவீரனல்லன்; அரசநிலைக்கு உரிய ஒருவனே என்பதைப் பூவாளி நன்கு உணர்ந்து கொண்டான்.
விருந்து முடிவில் இருகுடிக்கோமான் கூறிய செய்திகள், தெரிவித்த முடிவுகள், கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை இன்னும் வியக்கத்தக்கனவாய் இருந்தன.
தங்கையையும் மைத்துனரையும் அவன் ஆர்வமீதூரக் கனிவுடன் நோக்கினான்.
“மைத்துனரே, தங்கையே!” "நான் யார் என்பதை உங்களுக்கு இன்னும் திறந்து வெளியிட முடியாமைக்கு மன்னிக்கக் கோருகிறேன். ஆனால், நான் யாராக இருந்தாலும், இருகுடிக் கொழுந்தினுக்கு நான் எப்போதும் அண்ணன் தான்: பூவாளிக்கு எப்போதும் மைத்துனன் தான் என்பதில் உங்களுக்கு உறுதி இருக்கட்டும்.
"அந்த உறுதியின் பெயரால், இன்று நான் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
"இங்கே நம்முடன் திரண்டிருப்பவர்களில் ஒரு சிலரை உடன் கொண்டு நான் உங்களிடம் விடைபெற்றுச் செல்கிறேன். எங்கே செல்கிறேன்? எவ்வளவு நாளில் திரும்புவேன்? என்று இப்போது நானே அறிய மாட்டேன். ஆனால், உரிய முறையில் நீங்கள்அறிவீர்கள்.
"நான் யார் எவர் என்பதும் நாளாவட்டத்திலேயே உங்களுக்குத் தெரியவரும். ஆனால், உங்களிடம் எனக்குள்ள நட்பையும் பாசத்தையும் எதுவும் குறைக்காது.
"இந்த மாளிகை, இதில் உள்ள என் உடைமைகள், செல்வங்கள் எல்லாவற்றையும் நான் என் தங்கையும் மைத்துனருமாகிய உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். நான் புகவிருக்கும் என் புது வாழ்வில், நான் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் பொன் அணிமணிக் குவைகளும் இனிப் பயன்பட மாட்டா. அவற்றையும் உங்களிடமே விட்டுச் செல்கிறேன். உங்கள் திட்ட நிறைவேற்றத்துக்கும் வருங்கால வாழ்வுக்கும் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
“நான் இட்டுச் செல்லும் ஒரு சிலர் போக இங்கிருக்கும் ஆயிரக் கணக்கான வீரர், பணித் துணையாளர், பெருங்குடிச் செல்வரான, என் ஆதரவாளர்கள் ஆகிய யாவரையும் உங்கள் திட்டங்களுக்கும் உங்களுக்கும் உதவும்படி விட்டுச் செல்கிறேன். என் தங்கையையும் என் மைத்துனரையும் என்னைப் போலவே பாவித்து என்னிடம் நடந்து கொண்டதுபோலவே அவர்களிடமும் நடந்து கொள்ளும்படி அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.”
இருகுடிக்கோமான் உரைகளைக்கேட்டு அதிர்ச்சியும் கலக்கமும் அடையாதவர்கள் அங்கே யாரும் இல்லை. ஆனால், அனைவரும் ஒருவரைப் போல் அவர் சொற்படி நடப்பதாக உறுதி கூறினர்.
அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாகச் சூழ்ந்து நின்று இருகுடிக் கோமானுக்கு விடை கொடுத்தனர். அவரும் அவர் தோழர்களும் நெடுந்தூரம் சென்று புள்ளிகளாக மறையும்வரை அனைவரும் செயலிழந்து நின்றனர்.
அவர் விட்டுச் சென்ற மாளிகை, அணிமணிப் பொற் குவைகள் இரண்டு பேரரசுகளை அமைத்துக் கட்டிக் காக்கப் போதியவையாய் இருந்தன. செம்மீளி அவற்றைக் கண்டபோது இனிப் புதிய அரசின் வாழ்வில் அட்டி ஏதும் இல்லை என்று மகிழ்ந்து ஆர்ப்பரித்தான்.
புதிய அரசன் திட்டப்படி படையையும் ஆட்சியையும் செப்பனிடப் பொங்குமாவளம் பரப்பினான்.
குந்தளநாடாண்ட சாளுக்கியர் நிலையிலும், தமிழகம் ஆண்ட சோழர் நிலையிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்த போதிலும், வென்றிக் கதிரோன் ஆட்சியில் மாறுதல் எதுவும் இல்லை, ஏனெனில், வியக்கத்தக்க முறையில் அவன் சாளுக்கியரிடம் நேசமாய் இருந்ததுபோல, சோழரிடமும் நேசம் நிலை நாட்டினான்.
இருகுடிக்கோமான் யாரென்பது பற்றி இருகுடிக் கொழுந்து தொடக்கத்திலேயே ஓரளவு ஊகம் கொண்டிருந்தாள். அவன் பிரிந்து சென்றபின்னர் அவளுக்கு அவன் விட்டுச் சென்ற கடிதத்தில் அவன் முழு விவரமும் அறிந்து அவள் எல்லையிலா வியப்பு அடைந்தாள். பூவாளியும் அதனை மெள்ள அறிந்து இருகுடிக்கோமான் சென்ற திசைநோக்கி ஆர்வ வணக்கம் தெரிவித்தான்.
இருகுடிக்கோமான் உண்மையில் குந்தள அரசன் படையெடுப்புக்கு முன் வேங்கி நாட்டை உரிமையுடன் ஆண்ட சோழ சாளுக்கிய மரபினனான இராசேந்திரனேயாவான். வென்றிக் கதிரோனை நேரே கண்டபோது, சோழ அரசின் பணியாளர்கள் பலர் அவனுடன் இருந்து நட்பாடியதைக் கவனித்தான். சோழர் வெற்றிக்குப் பின்னும் அவள் உரிமை நீடிக்கும் என்பதைக் கண்டதனாலேயே, அவன் தன் அரசுரிமையை மனமார விட்டுக் கொடுக்க உளம் கொண்டான்.
தன் ஆட்சியை மீட்டுப் பெறுவதற்காக அவன் திட்டம் செய்து வைத்திருந்த மாளிகை, செல்வம், படைகள் ஆகிய வற்றையே அவன் தன் திட்டமாற்றம் காரணமாக இருகுடிக் கொழுந்து மூலமும் பூவாளி மூலமும் தன் எதிரிக்கு விட்டுச் சென்றான்.
அவன் யார் என்பதை அறிந்த பின், அவனைப் பற்றிய செய்திகளைப் பூவாளியும் இருகுடிக்கொழுந்தும் மேன்மேலும் கேளிவியுற்று மகிழ்ந்தனர். வேங்கி நாட்டுக்கு வடக்கே சோழப் பேரரசின் எல்லையைத் தாண்டிச் சக்கரக் கோட்டம், வயிராகரம் முதலிய பல புது நிலங்களை அவன் வென்று சோழப் பேரரசின் எல்லையைத் தாண்டிச் சக்கரக் கோட்டம், வயிராகரம் முதலிய பல புது நிலங்களை அவன் வென்று சோழப் பேரரசன் புகழ் பெருக்கிய செய்தி கேட்டு அனைவரும் அவன் புகழ் பாராட்டினர். ஆனால், வென்ற நாடுகளை அவன் வென்றிக் கதிரோன் ஆட்சிக்கே விட்டு விட்டு, சோழப் பேரரசின் பணியே மேற்கொண்டு, கடல் கடந்த கடராத்திலும் பல வெற்றிகள் கண்டபின் சோழர் புகழ்க் கொடியை அங்கும் உலகளாவப் பறக்கச் செய்தான்.
அவன் தன் மரபும் பெருமித வீரமும் ஒரு சிறிதும் வீண் போகவில்லை. இருகுடிக்கோமான் என்று தன்னை அழைத்துக் கொண்ட அவனை இறையருள் இருகுடிகளும் ஆண்ட சோழப் பெரும் பரப்பின் பேரரசனாகவே ஆக்கி மகிழ்ந்தது. இருகுடிக்கோமான் அல்லது குலோத்துங்கன் என்ற பெயரே தாங்கி அவன் சோழப் பேரரசுக்குப் புது வலிவும் புது வளமும் அளித்தான்.
இருகுடிக்கொழுந்தினையும் பூவாளியையும் பேரரசனாகிய இருகுடிக்கோமான் தமிழகத்துக்கு அழைத்துப் பெருஞ்செல்வம் அளித்துப் பாராட்டினான். பூவாளியின் பிள்ளைகள் பேரரசரின் மருமகப் பதம் பெற்று வாழ்ந்தனர்.
“திட்டத்தை உருவாக்கியவர் பூவாளியாகிய நீங்கள். அதனை நிறைவேற்றியவர் புவியாளியாகிய என் அண்ணா. எனக்குத்தான் எந்த தகுதியும் இல்லை” என்று இருகுடிக் கொழுந்து சில சமயம் பிணங்குவதுண்டு, “இருவருக்கும் இடையேயுள்ள திட்டப்பாலம் நீ தானே” என்று அவனைப் பாராட்டுவான் பூவாளி. “பாசத்திலிருந்து விழுந்த செல்வங்கள் இதோ” என்று பேரரசன் அவர்கள் குழந்தைகளை எடுத்து அனைத்து மகிழும்போது இருவரும் எல்லையிலா உவகை செய்தினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக