நாவலர் பாரதியாரின் கட்டுரைகள்-2
கட்டுரைகள்
Back
நாவலர் பாரதியாரின் கட்டுரைகள்-2
சோமசுந்தர பாரதியார்
1. நாவலர் பாரதியாரின் கட்டுரைகள்-2
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. பதிப்புரை
4. நுழைவாயில்
5. நாவலர் பாரதியாருடன்…!
2. புலமை அறம்
3. குடியாட்சிக் கொடுமைகள்
4. முத்தமிழ்
5. வள்ளுவர் கண்ட கடவுள்
6. ஒழுக்கமே மக்கட்பண்பு
7. அறிவும் உணர்வும்
8. இன்பம்
9. தமிழருக்கு அறிவிப்பு
10. பாரதியார் தமிழ்ப் புலமை
11. தருமன் சால்பு
12. சாரதாவின் சட்டமும் சமயவாதப் போராட்டமும்
13. தேச நேசமும் தமிழகமும்
14. திருவள்ளுவர் கடவுட் கொள்கை
15. சுதந்திர இந்தியாவில் தமிழர்
16. ஜாதிமத வேற்றுமையும் சமுதாய ஒற்றுமையும்
17. காதல்
18. அழகு
19. இளமையும் முதுமையும்
20. தமிழிசை வளர்ச்சியும் தமிழர் மறுமலர்ச்சியும்
1. வெறுப்பின் மறுப்பு
2. பாரதியார் கருத்து
3. பாராட்டு (1)
4. பாராட்டு (2)
5. வாழ்த்து (1)
6. வாழ்த்து (2)
7. வாழ்த்துரை (3)
8. வாழ்த்துப் பாக்கள்
9. ராஜா சர் அண்ணாமலை வள்ளல் பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள்
10. அன்புடைய அருளாளர்
11. நாவலர் சிறப்புரை
12. தலைமையுரை
13. அபிப்பிராயம்
14. மதிப்புரை
15. கடிதங்கள்
16. பெருமங்கலப் பாமாலை
17. வெள்ளணிவிழா
18. வாழ்த்துப் பாக்கள்
19. வாழ்த்து
20. வாழ்த்துரைகள்
21. பாராட்டு (1)
22. பாராட்டு (2)
23. இரங்கற் பாக்கள்
24. இரங்கல் உரைகள்
25. கடவுட் கழலிணை எய்திய நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
26. நாவலர் பாரதியாருக்கு நன்றி!
27. பரிவுச் செய்தி!
28. நாவீறு படைத்த நாவலர்
29. முன்னணி வீரர்
30. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு
31. கண்மணி இழந்தாள் தமிழன்னை
32. வல்லாளகண்டர்
33. செந்தமிழ்க் காவலர்
34. உறுமிய தமிழ்ச்சிங்கமே! ஓய்ந்ததோ உந்தன் மூச்சு!
35. இன உணர்ச்சி ஏந்தல்
36. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நாவலர்
37. பாரதியார் புகழ் வாழ்க!
38. தமிழ்ச்சேய் மறைவு
39. நமக்கிருந்த ஒரே நாவலர்
40. தமிழ் நாட்டின் முதுபெரும் தமிழறிஞர்
41. புகழ்பட வாழ்ந்த பெருந்தகையார்
42. தமிழர் படைத்தலைவர்
43. நாவலர்தம் மாணவர்களின் கருத்துரைகள்
44. அஞ்சா நெஞ்சினர்
45. யாம்பெற்ற பேறு
46. உரை நயங்காணும் உரவோர்
47. வருங்கால ஞானி
48. கடமை வீரர்
49. ஆசிரியப் பெருந்தகை
50. தாரகை நடுவண் தண்மதி
51. பேருரை
52. செந்தமிழ் விளக்கும் செஞ்ஞாயிறு
53. சில நினைவுகள்
54. நாவலர் ச.சோ. பாரதியாரின் நற்றமிழ்ப்பணி
55. சமகாலப் புலவர் பட்டியல்
56. நாவலர் பாரதியாரின் வரலாற்றுக் குறிப்பேடு
57. கணியம் அறக்கட்டளை
நாவலர் பாரதியாரின் கட்டுரைகள்-2
சோமசுந்தர பாரதியார்
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : நாவலர் பாரதியாரின் கட்டுரைகள்-2
தொகுப்பு : நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5
தொகுப்பாசிரியர் : ச. சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி
பதிப்பாளர் : ஆ. ஆதவன்
பதிப்பு : 2009
தாள் : 16 கி வெள்ளைத்தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 320
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 200/-
படிகள் : 1000
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்சு, இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : ஆதி பதிப்பகம்4/2, 2 வது மாடி சீனிவாசா தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004.
பதிப்புரை
20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி, இன மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் முன்னவர். இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்காக இவர்தம் குடும்பம் சிறைசென்று பெரும் பங்களிப்பை செய்த குடும்பம். வணங்குவோம்.
பெருமை பெற்ற பிறப்பினர் முதல் , முத்தமிழ்ப் பட்டம் பெற்ற முதுமுனைவர் வரை 15 பெருந் தலைப்புகளில் உள்ளடக்கி நாவலர் சோமசுந்தர பாரதியார் எனும் தலைப்பில் அவர்தம் அருமை பெருமைகளை, ஆய்வு நெறிமுறைகளை, தமிழின்பாலும், தமிழினத்தின் பாலும், இந்தியப் பெருநிலத்தின் விடுதலையின் -பாலும் அவர் கொண்டிருந்த பற்றினை ஆசிரியர் சாம்பசிவனார் எழுதிய சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள நூலில் காண்க.
எனது அன்புள்ள பெரியார் பாரதியார் அவர்களுக்கு, ஈ.வெ.ராமசாமி வணக்கம். என்று தொடங்கி தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும், யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்- . இது தந்தை பெரியார் நாவலர் பாரதியாருக்கு எழுதிய கடித வரிகள்.
குகை விட்டுக் கிளம்பிய புலியெனப் போர்க்கோலம் கொண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்ல வேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்! - இது பேரறிஞர் அண்ணா கூறியது.
அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைவர்கள், சான்றோர்கள், பாவலர்கள் கூறிய அரும்பெரும் செய்திகள் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தலைவர்களாலும். நண்பர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் மதித்துப் போற்றிய பெருமைக்குரியவர்.
தாய்மொழி வழிக் கல்வி கற்கும் நிலை வரவில்லையே? என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாவலர் பாரதியார் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. தாய்மொழி வழிக் கல்வி வளரும் இளம் தமிழ்த் தலைமுறைக்குக் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று அன்று அவர் கூறியது இன்றும் நிறைவேறவில்லையே என்பது தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமும் கவலையும் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு தாய்மொழி வழிக் கல்விக்கு முதன்மைதரும் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி நடைமுறைக்கு வருமானால் தமிழ் உணர்வாளர்களின் கவலைக்கு மருந்தாக அமையும்.
தமிழ் மரபு இது; அயல் மரபு இது! என்று கண்டு காட்டியவரும், இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன் முதலில் எதிர்த்தவருமான செந்தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் படைப்புகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஆறு தொகுதிகளாக நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் எனும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இத்தொகுப்புகள் செப்பமுடன் வெளிவருவதற்கு வழிகாட்டியதுடன், உதவியும் செய்த தொகுப்பாசிரியன்மார் ச.சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி ஆகிய பெருமக்களுக்கு எம் நன்றி.
இந்நூலாக்கத்திற்குக் கணினியில் தட்டச்சுச் செய்த திருமதி விசயலெட்சுமி, திரு.ஆனந், செல்வி. அனுராதா, திரு. சிவமூர்த்தி ஆகியோருக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய திரு.இராசவேலு, திரு. கருப்பையா, திரு.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், அட்டைப் படம் செய்த செல்வி வ.மலர் மற்றும் குமரேசன், நூல் கட்டமைப்பாளர் வே.தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா ஆகியோருக்கும் எமது நன்றி.
இந்நூல்களை வாங்கிப் பயனடைவீர்.
- பதிப்பாளர்
நுழைவாயில்
தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் பொய்யில் புலவர். இவ்வுரைக்கேற்ப இவ்வுலகில் தோன்றி வாழ்ந்தவர்களுள் நாவலர் பாரதியாரும் ஒருவராவார். நாவலர், கணக்காயர், இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர், நாவீறு படைத்த பெரும் வழக்கறிஞர், அஞ்சாநெஞ்சர், அறநெறி பிறழாது ஆய்வுரை கூறும் ஆண்மையாளர், புத்துரை கண்டவர், நாட்டுப்பற்று மிக்கவர், பெரும் பேராசிரியர் என்றிவ்வாறு அறிஞர்களால் போற்றப்பெற்ற பெருமையுடையவர்.
தொல்காப்பியர், திருவள்ளுவர், அகலிகை போன்றோரைப்பற்றி எழுந்த கட்டுக் கதைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர்; தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் நூல்களும் கட்டுரைகளும் எழுதித் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்; தமிழுக்குப் பல்லாற்றானும் அருந் தொண்டாற்றிய சிறப்பினர்; தமிழின் ஏற்றத்தை மேடை தோறும் முழக்கமிட்டவர்; பேச்சிலும் எழுத்திலும் தமிழர் மரபு இது, அயலவர் மரபு இது என்று தெளிவுறுத்தியவர்.
தூத்துக்குடியில் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரோடு பெருநட்புக் கொண்டு, நாட்டு விடுதலை இயக்கத்திற்காகவும் போராடியவர்; வ.உ.சி. உருவாக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலராகவும் இருந்தவர்; இத்தமிழ் நாட்டில் இந்தி கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்தபோது, தாம் வகித்துவந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பதவியைத் துறந்து தம் பேச்சாலும் எழுத்தாலும் வீறுகொண்டு எதிர்த்து நின்றவர்.
இருள் சூழ்ந்த தமிழகத்தில் நம்பிக்கை ஒளி வீச முளைத்த விடிவெள்ளி! உறங்கிக் கிடந்த தமிழர்களைத் தட்டி எழுப்பத் தோன்றிய எழுஞாயிறு! தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கில இலக்கியத்திலும் ஆங்கில வழக்கு நூற்புலமையிலும் சிறந்தவர்; செந்தமிழ்ப் புலமையும் சிறந்த நாவன்மையும் பாவன்மையும் நிறைந்தவர்.
இவரெழுதிய நூல்களிலும் கட்டுரைகளிலும் நடையழகு, கருத்தாழம், சொல்லாற்றல் போன்றவற்றைக் காணலாம். உண்மை காண்பதில் இவருக்கிருந்த வேட்கையும் உறுதியும் உழைப்பும் ஒப்புயர்வற்றன. ஒரு கருத்தை வற்புறுத்தற்கும் பிறர் கருத்தை மறுப்பதற்கும் இவர் காட்டும் வாதத்துக்கு எதிர்வாதம் காண்பது எளிதில் அமைவதன்று.
நாவலர் பாரதியார் கையாண்டிருக்கும் ஆராய்ச்சி முறை இக்கால ஆய்வாளர்களுக்குப் பெரியதோர் வழிகாட்டியாக உள்ளது என்று மு. இராகவையங்கார், ச. வையாபுரிப் பிள்ளை, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் முதலான தமிழ் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஐந்தாம் தொகுதியில் நாவலர் பாரதியார் எழுதிய கட்டுரைகள், சொற்பொழிவுகள், வாழ்த்துரைகள், பாராட்டுரைகள், சிறப்புரைகள், பிற நூல்களுக்கு எழுதிய மதிப்புரை மற்றும் அணிந்துரைகள் முதலானவை இடம் பெற்றுள்ளன. இவை இதற்குமுன் ச.சாம்பசிவனார் தொகுத்து வெளியிட்ட தொகுப்புகளில் இடம் பெறாதவை.
நாவலர் பாரதியார் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் தொகுத்துப் பதிவு செய்யும் நோக்கத்தில் அவர் இறைவனடி சேர்ந்த பின்னர் அவர்மீது பாடிய இரங்கற் பாக்கள், இரங்கல் உரைகள், நாள் வார மாத இதழ்களில் வெளிவந்தவை, நாவலர்தம் மாணவர்களின் கருத்துரைகள், கலந்துரையாடல், சமகாலப் புலவர் பட்டியல், அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள், நிழற்படங்கள் போன்றவையும் ஐந்தாம் தொகுதியில் உள்ளன.
கட்டுரைகள் 19 உள்ளன. இவை இந்தியத்தாய் பொங்கல் சிறப்பு மலர், அழகு, திருவள்ளுவர் நினைவுமலர், மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர், கலைக்கதிர், குமரன் ஆண்டு மடல், பாரதி, தமிழர் நாடு, செந்தமிழ், குமரன் அனுபந்தம் ஆகியவற்றில் 1926ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்தவையாகும். அந்தந்தக் கட்டுரையின் இறுதியில் எந்த இதழில் எந்த ஆண்டில் வெளிவந்தது என்பது பற்றிய செய்தி அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியம், காப்பியம், அரசியல், மொழிபெயர்ப்பு, பாரதியார் போன்ற தலைப்புகளில் இக் கட்டுரைகள் அமைகின்றன. இக்கட்டுரை களில் காணப்படுவனவற்றுள் ஒருசில வருமாறு :
1. தமிழர்கள் யாருக்கும் அடிமையில்லாமல் வாழ்ந்தவர்கள் என்பதற்குச் சங்க நூல்களிலே நல்ல சான்றுகள் கிடைக்கின்றன.
2. காந்தியாரைச் சென்னையிலிருந்து தூத்துக்குடிவரை நான்தான் அழைத்து வந்தேன்.
3. மக்களுக்கு மனத்திலே உள்ள பண்புதானே மொழியிலும் இருக்கும்.
4. ஒரு நாட்டின் பண்பாட்டை மொழிதான் காக்கும்.
5. தமிழ்க் குடியிலே தோன்றிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சங்க நூல்களைச் சங்கையறக் கற்க வேண்டும்.
6. இலக்கியத்துக்குப் பொதுப் பெயர் செய்யுள் என்பது.
7. வருமுன் காக்கக் கருதி முயலாமல், வந்தபின் நொந்து விதிப்பயன் என்பதால் பயன் என்ன?
கட்டுரைகள் தவிர ஏனையவை தமிழ்ப் பொழில், தமிழர் நாடு, கலைமகள், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், திராவிடநாடு, குறள்நெறி, தமிழ்நாடு, குடியரசு இதழ், தினத்தந்தி, ஜனசக்தி, நவ இந்தியா, முரசொலி, விடுதலை, மாலை முரசு, குயில், நாத்திகம், பேரிகை, கல்கி, பிரசண்ட விகடன் ஆகிய இதழ்களில் வெளியானவையாகும்.
நாவலர் பாரதியாரைப்பற்றி இக்காலத்தவர் அறிந்து கொள்ளும் வகையில் மிகப்பெரும்பான்மையான தகவல்களை அரிதின் முயன்று தொகுத்துத் தந்துள்ளோம்.
அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் முதலான அனைத்தையும் தொகுத்து நாவலர் பாரதியார் - நற்றமிழ் ஆய்வுகள் எனும் பொருண்மையில் ஐந்து தொகுதிகள் தமிழிலும்,ஒரு தொகுதி ஆங்கிலத் திலும் சேர்த்து ஆறு தொகுதிகளாக ஆதி பதிப்பகம் வெளியிட முன்வந்துள்ளது. இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதற்குக் காரணமாக இருந்த தமிழ்த்திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும், ஆதி பதிப்பகத்தாருக்கும் எம் நன்றி.
தமிழ்ப்பெருமக்கள் இத்தகு தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடுமாறு வேண்டுகின்றேன்.
இங்ஙனம்
ம.சா.அறிவுடைநம்பி
26-04-2009
தி.வ.ஆண்டு 2040
நாவலர் பாரதியாருடன்…!
முனைவர் ச. சாம்பசிவனார்,
ஆசிரியர், தமிழ் மாருதம், மதுரை.
முன்னுரை
"அல்லைஆண் டமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச
வில்லையூன் றிய,கை யோடும்
வெய்துயிர்ப் போடும் வீரன்
கல்லையாண் டுயர்ந்த தோளான்
கண்கள்நீர் சொரியக் கங்குல்
எல்லைகாண் பளவும் நின்றான்
இமைப்பிலன் நயனம் என்றான்!
இது, கம்பன் கூற்று. இராமனும் சீதையும் வனவாழ்க்கையின் போது நடந்த நிகழ்ச்சி! கல்லையே தலையணையாக் கொண்டு புல் தரையில் இராமனும் சீதையும் கண்ணுற்றுறங்கிய போது, தம்பி இலக்குவன், அவர்கட்கு எத்தீங்கும் நேராவண்ணம் வில்லை ஊன்றிய கையுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு விடியல்வரை காத்திருந்தான் என்பது கருத்து.
இதனை உட்கொண்டு, நாவலர் பாரதியாரைக் குறிப்பிடவந்த கவிஞர் கண்ணதாசன்,
"தமிழ்மகள் உறங்கத் தான்விழித் திருந்து
இமையசை யாதொரு பகை அணுகாமல்
காத்திருந் தான்,உயிர் காற்றொடும் போயது!. . .
நாவலன் காலடி நரிவிழுங் கோலடி!
சோமனின் காலடி சூழ்ச்சிக்கு நாலடி!
சுந்தரன் காலடி இந்திக்கு வேலடி!
பாரதி காலடி பண்புக்குச் சேவடி!
என்று அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பாடினார். தமிழன்னையை உறங்க வைத்துவிட்டு அவளுக்கு எத்தகைய கேடும் நேராவண்ணம் கண்விழித்துக் காத்த மாவீரர் நாவலர் பாரதியார் என்று கவிஞர் கூறுவது பொய்யுரையன்று, புனைந்துரையன்று, மெய்யுரையே!
இத்தகைய மாபெரும் தமிழ்ப்புலவர் நாவலர் பாரதியாருடன் இறுதிக்காலத்தில் தொடர்பு கொள்ள அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது!
இதுகுறித்து ஒருசிறிது விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்!
மதுரைத் தமிழ்ச் சங்கத் தொண்டினுக்கு அடுத்தபடியாகத் திகழ்வது மதுரைத் திருவள்ளுவர் கழகம். இது, மீனாட்சி திருக்கோயில் வடக்காடி வீதியில் அமைந்துள்ளது. இதனை 1941ஆம் ஆண்டில் தோற்றுவித்த பெருந்தகையர், தமிழவேள் பி.டி. இராசனாரும் அறநெறி யண்ணல் கி.பழநியப்பனாரும் ஆவர். தென்காசித் திருவள்ளுவர் கழக ஆசிரியராக இருந்த தி.ப. சுப்பிரமணிய தாசுவை மதுரைக்கு வரவழைத்துத் திருக்குறள் ஆசிரியராக அமர்த்தியவர்கள் இவர்கள்!
யான், மதுரைக் கல்லூரியில் 1947-48ஆம் ஆண்டில், இடைக்கலை (Intermediate) வகுப்பில் பயின்றவன்; குடும்பச் சூழலால் படிப்பை நிறுத்திவிட்டு, மதுரை இராமநாதபுரம் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையில் எழுத்தராகப் பணிபுரிந்த காலம்!
அக்காலத்தில் ஏரல் மலையப்பன் என்பவர் மதுரையில் வாழ்ந்தவர். மதுரை நகராட்சியில் ‘MADURAI’ என்று தீர்மானம் நிறைவேற்றியபோது, அதனை எதிர்த்து மதுரையை மடுரை ஆக்காதே எனக் குரல் கொடுத்தவர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நடாத்திய தமிழர் நாடு என்னும் இதழின் முகவராக (Agent) மதுரையில் விற்றுத் தந்தவர்!
அவர் திடுமென இயற்கை எய்தினார். எனவே தமிழ்ப்பற்றின் காரணமாக அவ்விதழின் முகவர் பணியை யான் ஏற்றுக் கொண்டேன். அதனை விற்பதற்குப் பல கடைகளை நாடினேன். மேல ஆவணி மூல வீதியில் ஒரு சிறு இடத்தில், திருவள்ளுவர் பல்பொருள் அங்காடி என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டதைக் கண்டு வியந்து அதன் உரிமையாளர் ஆ. சண்முகவேலனை அணுகினேன். சில இதழ்கள் விற்றுத் தருவதாகக் கூறியவர், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் மாணவராகச் சேர்ந்து திருக்குறள் படிக்கலாமே எனக் கூறிக் கழகத்திற்கு என்னை ஆற்றுப்படுத்தினார்.
யானும் இக்கழகம் சென்றேன்; தி.ப.சு.வைக் கண்டேன்; அவர், தம் கைப்பட, முதல் திருக்குறளுக்கு உரை எழுதிக் கொடுத்தார். அன்றுமுதல் (1948) கழகத் தொடர்பு ஏற்பட்டது. திருக்குறளை யானே முழுதும் படித்தேன். செவ்வாய்தோறும் கழக மாணவர் சொற்பொழிவு. மாணவர்க்குத் தலைப்புக் கொடுத்து ஊக்கப்படுத்துவார். அவ்வாறு யான் பெற்ற பயிற்சியே பிற்காலத்தில் வெளிநாடுகளில் - உலகளாவிய மாநாடுகளில் - சிறப்பாகப் பேசவும் புகழ்மாலை பெறவும் முடிந்தது. அத்தகைய பெரியாரை இன்னும் நினைவு கூர்வேன்!
விரைவிலேயே கழகத் துணைச்செயலர் பொறுப்பை எனகளித்தனர். யான் அப்பொறுப்பை ஏற்றபின்னரே, கழக ஆண்டு விழாக்களுக்கு வெளியூர் அறிஞர்களை வரவழைக்கும் மரபு உண்டாயிற்று. என் தூண்டுதலால் கி.ஆ.பெ. விசுவநாதம், முதன்,முதல் ஆண்டுவிழா மேடையேறி முழக்க மிட்டார்! யான் துணைச்செயலராக இருந்தாலும், செயலர் பொறுப்பைப் பெரும்பாலும் வகித்தவன்!
தமிழ்ப் பேரறிஞர்கட்குக் கழகச் சார்பில் ஆண்டுதோறும் பாராட்டும் பட்டமும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. கழகத்தில் நிலைத்த பெருமைதரு தலைவர் - தமிழவேள் பி.டி. இராசன்! ஆட்சிக்குழுத் தலைவர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நாவலர் ச.சோ. பாரதியாருக்குப் பாராட்டு விழா எடுக்கக் கழகம் முடிவு செய்தது. தைத்திருநாள் விழாவை முன்னிட்டு17-01-1954இல் அவரது பாராட்டு விழா, கல்வித் தந்தை கருமுத்து தியாகராசச் செட்டியார் - விழாத் தலைவர். விழாவில் நாவலருக்குக் கணக்காயர் எனும் கவின்மிகு பட்டம் வழங்கப்பட்டது. கழக ஆட்சிக்குழுத் தலைவர் கி. பழநியப்பனார், செயலர் மீ. கந்தசாமிப் புலவர், விழாத் தலைவர் கருமுத்து தியாகராசனார் ஆகியோர் கையொப்பமிட்ட பட்டச் சான்றிதழ், வெள்ளிப் பேழைச் சுருளில் வைத்து வழங்கப்பட்டது. கி.ஆ.பெ. விசுவநாதம், டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார், வித்துவான் நா. இராமையா பிள்ளை ஆகியோர் பாராட்டுரை பகர்ந்தனர்.
விழா முடிந்தபின், ஒருநாள், கருமுத்து தியாகராசச் செட்டியார், தம் மாளிகையில், நாவலருக்கு விருந்து அளித்தார்; தமிழவேள் பி.டி. இராசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டோம். விருந்தின் போது கருமுத்துவே உணவு படைத்தார் எனில் நாவலர்மீது எத்துணை மதிப்பு வைத்திருந்தார் என்பது புலனாகும்!
இதுவே நாவலர் பாரதியாரோடு பிற்காலத்தில் யான் அணுக்கத் தொடர்பு ஏற்படக் காரணம்!
யான், பசுமலை உயர்பள்ளியில் 17-06-1957 முதல் 30-06-1964 வரை 7 ஆண்டு, தமிழாசிரியப் பணி புரிந்தேன்!
சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளையும்; நெல்லைத் தமிழாசிரியரும் என் சிறிய மாமனாருமான வித்துவான் அ.க. நவநீதகிருட்டிணனாரும் நெருங்கிய நண்பர்கள். ஆண்டுதோறும் கழகச் சார்பில் சிற்றிலக்கிய மாநாடு, வெண்பா மாநாடு முதலாயின நெல்லை அருணகிரி இசைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெறும். இதனை முன்னின்று நடத்திப் பெரும்புகழ் கொண்டவர் அ.க. நவநீதகிருட்டிணன். யான், வ. சுப்பையா பிள்ளையுடன் நட்புக் கொள்ளத் துணை நின்றவர் - அ.க. நவநீதகிருட்டிணன். அன்றியும், யான் பல்வேறு பள்ளித் தமிழாசிரியர்களை நன்கு அறிந்திருந்தமையால், ஆண்டுதோறும் கழகம் வெளியிடும் 9ஆம் வகுப்புத் தமிழ்த் துணைப் பாடநூல்களைத் தத்தம் பள்ளிகளில் வைக்கப் பெரிதும் துணைபுரிந்தவன்! நெல்லையில் கழகக் கிளைநிலையம் உண்டு. அதன் மேலாளர் பிச்சுத்தாயப்பன்; ஆண்டுதோறும் பசுமலை வருவார்; என்னிடமிருந்து பரிந்துரை மடல்கள் பெற்று, மதுரை மாவட்ட உயர்பள்ளித் தமிழாசிரியர்களைக் கண்டு, கழக நூலினைப் பாடமாக வைக்க வேண்டுகோள் விடுத்து வெற்றியும் பெறுவார். இதனாலும் கழக ஆட்சியாளர் வ. சுப்பையா பிள்ளை என்பால் பெருமதிப்புக் கொண்டிருந்தார். அன்றியும் யான் எழுதிய, கவிமன்னர் மூவர், நாவலர் நால்வர், அரசஞ்சண்முகனார், கந்த புராணம் வள்ளியம்மை திருமணப்படல உரை ஆகிய நூல்களைக் கழகப் பதிப்பாக வெளியிட்டார். (நாவலர் நால்வர் நூலில் நாவலர் பாரதியார் வாழ்க்கைக் குறிப்பு அடங்கியுள்ளது!)
மேலும், யானும், பசுமலைப் பள்ளிப் பொறியியல் ஆசிரியர் என் நண்பர் இரா. திருநாவுக்கரசும் சேர்ந்து எழுதிய ஓர் அறிவியல் நூல் பயன்பட வாழ்ந்த பெரியர் கழக வெளியீடு! தமிழகத்து அனைத்துப் பள்ளியிறுதி வகுப்பு மாணவர்க்குத் துணைப் பாடமாகவும் தமிழக அரசால் வைக்கப்பட்டிருந்தது!
அறிஞர் அண்ணா மறைவுக்குப் பின், தமிழ்ப் பேரொளி என்ற தலைப்பில் அவரைப்பற்றிய நூல் ஒன்றினைக் கழகம்
25-10-1969இல் வெளியிட்டது. அதில் அண்ணாவைப் பற்றி யான் எழுதிய முதல் கட்டுரை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது!
இன்னோரன்னவற்றால் வ. சுப்பையாபிள்ளை, என்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.
யான் பசுமலையில் வாழ்ந்தமையாலும் (1957 - 1964), மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் மூலம் நாவலர் பாரதியாரைத் தெரிந்திருந்தமையாலும் நாவலர் பாரதியார் வாழ்க்கை வரலாற்றை நூலாக ஆக்கித் தருமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே கருமுத்து தியாகராசச் செட்டியார் வரலாற்றையும் எழுதித்தரப் பணித்தார். இவரைப்பற்றிச் சில குறிப்புக்கள் மீனாட்சி நூற்பாலையில் பெற்று அனுப்பினேன். சங்க நூல் வெளியீட்டு விழாவுக்குக் கருமுத்து தலைமை தாங்கியபோது, சிறு துண்டறிக்கையாக அது வெளியிடப்பட்டது.
புலவர் இரா. இளங்குமரன், திருப்பரங்குன்றம் உயர்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் பணியில் இருந்தார். பசுமலையில் அவரது இல்லமும் எனது இல்லமும் அடுத்தடுத்து இருந்தன. நாளும் சந்திப்பதும் கலந்து உரையாடுவதும் வழக்கம். அப்போதே நூற்றுக்கணக்கான கவிதைகள் புனைந்தவர்! அவற்றை என்னிடம் படித்துக் காட்டியதுண்டு!
எங்கள் வீட்டினருகேதான் நாவலர் பாரதியார் வீடும் இருந்தது. எனவே அவரைக் கண்டு குறிப்புக்கள் பெறலாம் என்று எண்ணினேன். திடுமென ஓர் எண்ணம்! அவரிடம் ஒருவர், வினாத் தொடுக்க, மற்றொருவர் எழுதினால், விரைவில் நூலை முடிக்கலாமன்றோ என்பதுவே அது!
எனவே என் நண்பர் இரா. இளங்குமரனின் உதவியை நாடினேன். அவரும் மனமிசைந்தார். நாள்தோறும் நாவலர் பாரதியாரைக் காண்போம்; பெரும்பாலும் அதிகாலை, நடைப்பயணம் மேற்கொள்வார். அவருடன் சென்று, வினாக் கேட்பது, குறிப்பு எழுதுவது எனும் பணியில் வெற்றி கண்டோம்.
எங்கள் இருவரது பெயரில் நாவலர் பாரதியார் வாழ்க்கை வரலாற்று நூல், 17-02-1960இல் வெளிவந்தது. சென்னையில் அமைச்சர் சி. சுப்பிரமணியம் நூலினை வெளியிட்டார்!
இதற்கிடையில் நாவலர் பாரதியார், உடல்நலக் குறைவால் 14-12-1959இல் இறைவனடி சேர்ந்தார்!
நாவலர் பாரதியார் குடும்பத்தார் என்மீது அளவற்ற அன்பினராயினர். அவர் இறந்த ஞான்று யான் அவ் வீட்டிலிருந்து வேண்டுவன செய்தேன். கி.ஆ.பெ. விசுவநாதத்துக்குத் தொலைபேசிச் செய்தி; உடனே வந்தார்! இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை முன்னின்று நடாத்தினார்!
பதினாறாம் நாள் நீத்தார் நினைவு நாளிலும் பசுமலை வந்து, அனைத்தையும் நேரில் கவனித்தார். இரங்கல் கூட்டம் நிகழ்ந்தது; புலவர் பலர் கலந்து கொண்டனர்!
இவற்றால், நாவலர் பாரதியார் குடும்பத்தினருடன் எனக்கு அணுக்கத் தொடர்பு ஏற்பட்டது. அவரின் நூல்களை மறுபதிப்பாக வெளியிடவும்; அச்சில் வராத கட்டுரைகளை நூல் வடிவில் கொணரவும் வேண்டுமென வற்புறுத்தினேன். நாவலர் பாரதியார் மனைவியார் திருமதி வசுமதி அம்மாள் பாரதி, தமிழில் ஈடுபாடுடையவர்; அவ்வாறே மகள் டாக்டர் (திருமதி) லலிதா காமேசுவரனும்! என் கருத்தை ஏற்றுக் கொண்டு உடனே செயல்படுத்த முனைந்தனர். நாவலர் பாரதியாரின் மூத்த மகன் டாக்டர் சோ. இராசாராம் பாரதி, எட்டயபுரத்தில் நெடுநாள் மருத்துவப்பணி புரிந்தவர்; அவர், பின்னாளில், மதுரை - திருநகரில் தமக்கென வீடு வாங்கி, வாழ்ந்து வந்தார். தம் தந்தையார்பால் அளவற்ற அன்பினர்! எனவே, தந்தை நூல்களை மீண்டும் வெளிக்கொணர் வதில் பேரார்வம் காட்டினார்!
குடும்பத்தாரின் இசைவு பெற்று, நாவலர் பாரதியார் கல்வி அறப்பணிக்குழு ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. 1963இல் முறைப்படி பதிவும் செய்யப்பட்டது. இதன் தலைவர் : சோ. இராசாராம் பாரதி; செயலர் : ச. சாம்பசிவனார். உறுப்பினர்கள் : திருமதி வசுமதி அம்மாள் பாரதி, திருமதி கி. இலக்குமி பாரதி, சோ. இலக்குமிரதன் பாரதி, திருமதி ந. மீனாட்சி அம்மையார், டாக்டர் (திருமதி)லலிதா காமேசுவரன், கி. பரந்தாமனார், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார், டாக்டர் மு. வரதராசனார். நூல்களை வெளியிட நிதி பெரிதும் தேவையன்றோ? இப் பொறுப்பைத் திருமதி வசுமதி அம்மாள் பாரதி ஏற்றுக் கொண்டார்.
அம்மையாரும் யானுமாக நாவலர் புத்தக நிலையம் ஒன்றைப் பசுமலையில் 02-02-1966இல் தொடங்கினோம். பின்னர் இது மதுரை நகருக்கு (03-06-1968) மாற்றப்பட்டது.
அறப்பணிக்குழுவின் இசைவு பெற்று, நாவலர் பாரதியாரின் நூல்களை வெளியிட்டோம். போதிய நிதி உதவி இன்மையால், சிட்பண்டு முதலானவற்றின் உதவி பெற்று, ஒரே நேரத்தில் நாவலர் பாரதியார் நூல்கள் மட்டுமன்றித் தீபம் நா. பார்த்தசாரதி, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பதினான்கு அறிஞர் நூல்களை வெளியிட்டோம். நாவலர் புத்தக நிலையம் என் பொறுப்பில் நல்ல பெயருடன் இயங்கி வந்தது.
பசுமலையில் இருந்தபோது வசுமதி அம்மாள் பாரதி எனக்குச் செய்த உதவிகள் பல! ஆண்டுதோறும் என் இல்லத்துக்கு நெல் அளிப்பார்; நாகமலைப் புதுக்கோட்டைப் பகுதியில் தமக்கென நிலங்கள் வைத்திருந்தார். ஒரு பெரிய வீடும் இருந்தது. பல்கலைக்கழகத்துக்கு நிலம் ஒதுக்கும்போது இவரின் நிலங்களும் சேர்ந்து கொண்டன. உடனே டாக்டரம்மா, தமிழக முதல்வரை நேரில் கண்டு, தம் நிலம் உட்படப் பல ஏழைகளின் நிலங்கட்கு விதிவிலக்கு வாங்கித் தந்தார். இதனையறிந்து, அப்பகுதிக்கு நாவலர் பாரதியார் நகர் எனப் பெயர்ப் பலகை வைத்தேன். ஆனால் இப்போது ஆங்குள்ளோர் உண்மை தெரியாமல் நாவலர் என்பதை அழித்துவிட்டுப் பாரதியார் நகர் என்று மாற்றிவிட்டனர். தம் நிலத்தில் ஒருசிறு பகுதியை எனக்குத் தருவதாக வசுமதி அம்மையார் கூறியதுண்டு! ஆனால் அவர்கள் சென்னைக்குக் குடி பெயர்ந்தமையால் அது நிறைவேறவில்லை.
நாவலர் பாரதியாரின் புகழ் பரவ, யான் அவ்வப்போது மேற்கொண்ட செயல்கள் பலப்பல! இவண் நினைவிலிருந்து சில சுட்டுவேன்!
18-12-1960இல், நாவலர் பாரதியார் நினைவு நாளை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் கொண்டாடினேன். நினைவு மலரைச் சோமலெ வெளியிட்டார்.
07-05-1961இல் டாக்டர் ச. காமேசுவரன் தம் துணைவியாருடன் மேலைநாட்டுப் பயணம் மேற்கொண்ட போது வாழ்த்தி வழியனுப்பினோம்.
இவ்வாறே ஆண்டுதோறும் நினைவு நாளைக் கொண்டாடினேன். நாவலர் பாரதியாரின் பெயரர் ஆர்.எ. பாரதியிடமிருந்து ஓராயிர ரூபாய் நன்கொடை வாங்கித் திருவள்ளுவர் கழகத்தில், நாவலர் பாரதியார் பெயரில் ஆண்டுதோறும் பரிசளிக்க வகை செய்தேன்.
நாவலர் புத்தக நிலையத்தின் சார்பில் யான் வெளியிட்ட நாவலரின் தொல்காப்பியப் பொருட்படலப் புத்துரை - புறத்திணையியல் நூல் வெளியீட்டு விழாவை 05-09-1965இல், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் சிறப்பாகக் கொண்டாடினேன். நாவலரின் தலைமாணவரும் தியாகராசர் கல்லூரி முதல்வருமான டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் தலைமை தாங்க, ஔவை சு. துரைசாமிப் பிள்ளை நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
இவ்வாறே 18-12-1966இல் நடந்த நூல் வெளியீட்டு விழாவுக்குத் துணைவேந்தர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமை தாங்க, மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் வி. அழகப்பன் நூலை வெளியிட, நா. பார்த்தசாரதி, சுப. இராமன், அ.கி. பரந்தாமனார், கி. பழநியப்பனார், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை ஆகியோர் நாவலர் நற்றொண்டைப் புகழ்ந்தனர்!
பேரறிஞர் அண்ணா, சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை உலகமே வியக்கும்வண்ணம் கொண்டாடினார்! அதில், டாக்டர் லலிதா காமேசுவரன், பேராளராகக் கலந்து கொண்டு, தம் தந்தையாரின் ஆய்வு குறித்து ஆங்கிலத்தில் கட்டுரை (The Papers of Dr. S.S. Bharathiar) படித்தார் (26-12-1967).
அதற்கான அனைத்துக் குறிப்புக்களையும் கொடுத்து உதவினேன். கட்டுரை அச்சடிக்கப்பட்டுப் பலர்க்கும் வழங்கப்பட்டது.
பசுமலையிலிருந்து தம் குடும்பத்துடன் காரில் சென்னைக்குப் பயணமாயினர்; என்னையும் உடன் அழைத்துச் சென்றனர்!
அம் மாநாட்டின்போதுதான் டாக்டர் மு.வரதராசனாரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது!
நாவலர் புத்தக நிலையச் சார்பில் திருவள்ளுவர் நூலினை வெளியிட்டேன். இதில், திருவள்ளுவர் பற்றிய இவரது ஆராய்ச்சி மட்டு மன்று, அவ்வப்போது திருக்குறள் பற்றி எழுதிய கட்டுரைகளும் அடங்கும்!
இந் நூல் வெளியீட்டு விழாவை, 09-01-1972இல், மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் நடாத்தினேன். மதுரை மேயர் எ. முத்து - விழாத் தலைவர். அறப்பணிக்குழுத் தலைவர் சோ. இராசாராம் பாரதி, டாக்டர் ச. காமேசுவரன், திருமதி லலிதா காமேசுவரன், புலவர் வேலவன் பங்கேற்றனர். விழா முடிவில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
மதுரையில் நாவலர் பாரதியார் பெயரில் தமிழ்க் கல்லூரி ஒன்றை மதுரை மாநகராட்சி தொடங்க வேண்டும்! வழிமொழிந்தவர் : தமிழாசிரியர் மன்றச் செயலர் புலவர் ந. வேலவன்!
நாவலர் பாரதியார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட எண்ணி, ஓர் அமைப்புக் கூட்டத்தை 02-05-1975இல் கூட்டினேன். அதற்கு, கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமை தாங்கினார்; குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அக்கூட்டத்தில் நாவலர் பாரதியார் அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட வேண்டும்; பசுமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தைத் தமிழக அரசு விலைக்கு வாங்கி, நினைவிடமாக்க வேண்டும்! எனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, உரியவர்கட்கும் அனுப்பப் பட்டன!
நாவலர் பாரதியார் புகழ் பரப்பும் நோக்கத்தில் நாவலர் பாரதியார் இலக்கிய மன்றத்தை 21-05-1978இல் தொடங்கினேன். பண்டித மீ. கந்தசாமிப் புலவர் - தலைவர்; யான் செயலர். முறைப்படி இதனைத் தொடங்கி வைத்தவர் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்! (06-05-1979).
எனது வேண்டுகோட்கிணங்கத் தமிழக அரசு, நாவலர் பாரதியாரின் நூற்றாண்டு விழாவைச் சென்னையில் 27-07-1979இல் சிறப்பாகக் கொண்டாடியது. மதுரை மேயர் எ. முத்து தலைமை; கி.ஆ.பெ. விசுவநாதம், ஔவை து. நடராசன், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார், அ.மு. பரமசிவானந்தம், சி. பாலசுப்பிரமணியம், டாக்டர் லீலாவதி, நெல்லை இராசானந்தம் ஆகியோருடன் யானும் உரையாற்றினேன்.
திருச்சி, மதுரை வானொலி நிலையங்களிலும், நாவலர் பாரதியார் சிந்தனைகள் குறித்துப் பேசியுள்ளேன்.
அவ்வாறே சென்னைத் தொலைக்காட்சியிலும் டாக்டர் லலிதா காமேசுவரனுடன் நேர்முகப் பேட்டியிலும் கலந்து கொண்டு, அம்மையாரின் தந்தையின் தமிழ்த் தொண்டு குறித்து எடுத்துரைத்தேன்!
நாவலர் பாரதியார் இலக்கிய மன்றச் சார்பில், அவ்வப்போது பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. 14-12-1986இல் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், துணைவேந்தர் சீனி. கிருட்டிணசாமி, சுப. அண்ணாமலை, தமிழண்ணல், லெ. நாராயணன் செட்டியார் ஆகியோரைப் பாராட்டி, வாழ்த்து மடல்கள் வழங்கினேன்!
இதற்கிடையில் அறப்பணிக்குழுத் தலைவர் டாக்டர் சோ. இராசாராம் பாரதி இயற்கை எய்தினார். எனவே இவரின் தம்பியும் நாட்டுரிமைக்காகச் சிறை சென்ற தியாகியுமான சோ. இலக்குமிரதன் பாரதி, அறப்பணிக்குழுத் தலைவர் பொறுப் பேற்றார். (நாவலர் பாரதியார் குடும்பத்தில் ஏழு பேர் சிறை சென்ற மாண்பினர் என்பது இவண் குறிக்கத்தகும்!)
டாக்டர் லலிதா காமேசுவரன் பதவி உயர்வு பெற்றுக் குடும்பத்தோடு சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை மாண்புமிகு எம்.ஜி.ஆர். சிறப்பாக நடத்தினார். மதுரையில் நாவலர் பாரதியார் திருவுருவச் சிலை நிறுவ வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அஃது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மதுரை - பசுமலை நெடுஞ்சாலையில் நாவலர் பாரதியாரின் திருவுருவச் சிலையை மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து திறந்து வைத்தார்!
யான், மதுரை செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியராகவும், செந்தமிழ் இதழின் பொறுப்பாளராகவும் இருந்த போது, நாவலர் பாரதியார் பயன்படுத்திய அனைத்து நூல்களையும், மதுரைத் தமிழ்ச் சங்கத்து நூலகத்திற்கு அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்தேன். (நாவலர் பாரதியார் சங்கச் செயலராகவும் இருந்தவர். அவர் காலத்தில்தான் நெருப்புக்கு இரையான மையக் கட்டிடம் கட்டப்பட்டது!)
யான், நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப்பணி என்ற பொருளில், மதுரைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்தேன். எனக்கு வழிகாட்டுநராக இருந்தோர் கோவை பேராசிரியர் தா.ஏ. ஞானமூர்த்தி; நாகர்கோயில் பேராசிரியர் அனந்த கிருட்டிண பிள்ளை!
முனைவர் பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்த போது துணைவேந்தராக இருந்தவர் மு. வரதராசனார். என வாழ்த்தினார்!
இந்த ஆய்வுக்காக நாவலர் பாரதியார் எந்தெந்த இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார், அவர், சொற் பொழிவுக்காகச் சென்ற இடங்கள் யாவை, அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஆற்றிய அரும்பணிகள் எனப் பல்வேறு கோணங்களில் செய்திகள் சேகரித்தேன்.
இந்த ஆய்வேடு பின்வரும் 10 தலைப்புக்களில் 400 பக்க அளவில் அமைந்துள்ளது :-
1. தோற்றுவாய்
2. நாவலர் பாரதியார் ஆராய்ச்சி நூல்கள்
3. படைப்பிலக்கியங்கள்
4. தொல்காப்பியப் புத்துரைகள்
5. கட்டுரைகளும் புதுமைக் கருத்துக்களும்
6. சொற்பொழிவுகள்
7. நாட்டுத் தொண்டும் நற்றமிழ்ப் பணியும்
8. நடை
9. ஆய்வு நெறிமுறைகள்
10. முடிவுரை
இதில் யான் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களின் எண்ணிக்கை : 393.
யான், செந்தமிழ்க் கல்லூரியினின்றும் விலகி, மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வித்துறையில், தமிழ் விரிவுரையாளர் பணியில் அமர்ந்தேன்; முனைவர் தமிழண்ணல் - துறைத்தலைவர்!
அங்குப் பணிபுரிந்தபோது 23-10-1983இல் எனக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சிக்கழக நிதி உதவியுடன் அதனை நூலாக்கினேன்.
டாக்டர் லலிதா காமேசுவரன் சென்னையில் இருந்தாலும், அடிக்கடி என்னுடன் தொலைபேசித் தொடர்பு கொள்வதுண்டு. யான் சென்னை செல்லும்போதெல்லாம் இந்திரா நகரிலிருந்த அவர்தம் இல்லம் சென்று திருமதி வசுமதி அம்மாள் பாரதியையும் குடும்பத்தாரையும் கண்டு வருவேன்!
என் மகள் ஒருத்திக்குச் சிவகாமி என்று பெயர்; எனினும், நாவலர் பாரதியாரின் துணைவியார் வசுமதி அம்மாள் பாரதி எனக்குச் செய்த உதவிகட்காக இவளுக்கு வசுமதி என்னும் பெயர் வைத்தோம்; குடும்பத்தார் அறிந்ததும் இப்பெயரே!
தமிழ்த் தொண்டு செய்தோரின் பிள்ளைகட்கு மருத்துவப் படிப்பில் ஓரிரு இடங்கள் தருவது மரபு. எனவே, எனது தமிழ்த் தொண்டுகளைப் பட்டியலிட்டு, அரசு அலுவலர் சான்று பெற்று என் மகள் சிவகாமி (வசுமதி)யின் விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அப்போது மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பிலிருந்தவர் டாக்டர் திருமதி லலிதா காமேசுவரன்! எனவே என் மகள் விண்ணப்பத்தின்மீது பரிந்துரை செய்து, மாண்புமிகு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் நேரில் அளித்த போது, யார் இந்த சாம்பசிவனார்? எனக்குத் தெரியாதே என்று கேட்டார். அம்மையார் நேராக அலுவலகம் சென்று, யான் செய்த தமிழ்த் தொண்டுகளை வரிசையாகப் பட்டியலிட்டுத் தமிழில் எழுதிக் கொண்டு போய் முதல்வரிடம் கொடுத்தார்; முதல்வரும் படித்துப் பார்த்து என் மகளுக்கு மருத்துவக்கல்வி பயில இசைவு தந்தார்! இஃது என் வாழ்வில் மறக்க முடியாதது!
என் மகள் சிவகாமி - சி.சின்னத்துரை திருமணத்தை டாக்டர் லலிதா காமேசுவரன் தலைமையில் நடத்தினேன். இஃது, மதுரையில் 28-05-1990இல் நிகழ்ந்தது. டாக்டர் காமேசுவரன் - அம்மையார் தலைமை தாங்க, அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் நடாத்தி வைக்க, துணைவேந்தர் மா. இலட்சுமணன், பதிவாளர் சிவசங்கரன், லெ. நாராயணன் செட்டியார் உள்ளிட்ட பல அறிஞர்கள் வாழ்த்துரை வழங்கினர். (இப்போது என் மகள் சிவகாமி (வசுமதி) தமிழக அரசுப் பணியில் மருத்துவராக உள்ளாள்!)
- இதுபோன்ற பல உதவிகளை எனக்குச் செய்த - எங்கள் குடும்பத் தெய்வமாகப் போற்றப்படும் டாக்டர் லலிதா காமேசுவரனை, எழுமை எழுபிறப்பும் உன்னுவன்!
டாக்டர் லலிதா காமேசுவரன், தம் மகன் டாக்டர் மோகன் காமேசுவரன், மகள் சித்ரா ஆகிய இருவர்க்கும் ஒரே நாளில் சென்னையில் திருமணம் நிகழ்த்தினார்; அதற்குச் சென்று, இரண்டு மணமக்களுக்கும் வாழ்த்துப் பாக்கள் பாடி, நூல் வடிவில் வழங்கினேன்!
நாவலர் பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி என்னும் எனது ஆய்வு நூலைச் சென்னையில் வெளியிட எண்ணிய டாக்டர் லலிதா காமேசுவரன், அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கச் செயலர் டாக்டர் ந. முருகன் (சேயோன்), இவ்விழாப் பொறுப்பை மேற்கொண்டார்.
21-06-1986இல், தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில், நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் - தலைமை. மாண்புமிகு நாவலர் இரா. நெடுஞ்செழியன் - நூல் வெளியீடு. முனைவர் ச. அகத்தியலிங்கம், முனைவர் ஔவை நடராசன், மன்னர் மன்னன் முதலானோர் - சொற்பொழிவு. வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் குழுவினரின் இன்னிசை. முதற்படி பெற்றோர் : டாக்டர் லலிதா காமேசுவரன், டாக்டர் திருமதி மீனாட்சி முருகரத்தனம்.
யான், என் துணைவி திருமதி சா. மனோன்மணி (இவள் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி!) மற்றும் குடும்பத்துடன் சென்னை சென்றேன்.
பலரும் நூலைப் பாராட்டி, நாவலர் பாரதியாரின் தமிழ்த் தொண்டினை வியந்து போற்றினர். சென்னை நல்வாழ்வு மன்றத்தார் விருப்பப்படி அருந்தமிழ் மாமணி என்னும் அழகுறு பட்டத்தை நாவலர், எனக்களித்துப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்! சென்னை வந்து, எனக்குப் பொன்னாடை போர்த்திப் பாமாலையும் சூட்டினார்.
- என் வாழ்வில் மறக்க முடியாத விழா இது!
நாவலர் பாரதியாரின் பல்வேறு நூல்களை ஐந்து தொகுதியாக வெளியிடத் திட்டமிட்ட டாக்டர் லலிதா அம்மையார், அதனை என் பொறுப்பில் விட்டுவிட்டார்! கீழ்க்கண்டவாறு நூல் தொகுதிகள் அமைந்தன :-
1. தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை
2. ஆராய்ச்சி நூல்கள்
3. கட்டுரைகள்
4. கவிதைகள்
5. ஆங்கில நூல்கள்
இவ் ஐந்தையும் சரி பார்த்து நூலாக்கம் செய்தவன் யானே! ஆனாலும் டாக்டரம்மா விருப்பப்படி, முன் மூன்றும் என் பெயரிலும், பின் இரண்டு, அம்மாவின் உறவினரும் தமிழ்ப் பேராசிரியையுமான டாக்டர் (திருமதி) மீனாட்சி முருகரத்தனம் பெயரிலும் வெளிவந்தன. சென்னை வசுமதி அம்மாள் பதிப்பக வெளியீடுகள்; அனைத்துச் செலவையும் டாக்டரம்மாவே ஏற்றுக்கொண்டார்; அருமுயற்சி செய்து பொது நூலக இயக்குநரின் கட்டளை பெற்றுச் சில படிகளை நூலகங்கட்கும் வழங்கினார்.
அவ்வப்போது தமிழக அரசுக்கு எனது தமிழ் மாருதம் இதழ் மூலம் வேண்டுகோள் விடப்பட்டதாலும்; நாவலர் பாரதியார்மீது அளவுகடந்த பற்றுக் கொண்டதாலும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், நாவலர் பாரதியார் நூல்களை நாட்டுடைமையாக்கி, ஒரு பெருந்தொகையை நாவலர் குடும்பத்தார்க்கு வழங்கினார்.
டாக்டரம்மா, என்னை உடன்பிறப்பாளன் போல் கருதியதாலும், நாவலர் பாரதியாரின் நற்றமிழ் பரப்பிய தன்மையாலும், அரசிடமிருந்து தாம் பெற்ற நிதியில் ஒருபங்கை எனக்கு மனமுவந்து அளித்தார். இஃது யான் தொடங்கிய தமிழ் மாருதம் நூல்நிலையக் கட்டிடத்திற்குத் துணையாயிற்று!
இத்துணையளவு தமிழுக்குத் தொண்டாற்றிய மாபெரும் புலவர் நாவலர் பாரதியாரைப் பற்றித் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில் ஒரு குறிப்பும் இல்லாமை கண்டு வருந்தி, அதன் பதிப்பாசிரியர் பெ. தூரனுக்கு மடல் எழுதினேன். அவர் மிக வருந்தி இனிவரும் பதிப்பில் சேர்க்கிறேன் என்று மடல் எழுதினார்.
யான் ஒருமுறை சென்னை சென்று டாக்டர் அம்மாவைக் கண்டபோது தம் இல்லில் உள்ள அனைத்து நூல்களையும் தமிழ் மாருதம் இலவச நூலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினார். யானும் மகிழ்ந்து உடன்பட்டேன். எனது தீயூழ்! திடுமெனச் சின்னாளில் சென்னையில் டாக்டரம்மா இயற்கை எய்திய செய்தியைத் தொலைபேசியில் கேட்டுப் பெரிதும் அதிர்ந்து போனேன்! என் மருகர் திரு சி. சின்னதுரையை உடன் அழைத்துச் சென்றேன்! குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நல்லடக்கம் செய்து விட்டனர்; அம்மையாரின் திருமுகத்தைக்கூடக் காணமுடியாத துயரத்தில் மதுரை திரும்பினோம்.
தமிழ்க்கடல் மறைமலையடிகளாரின் புகழ் பரப்பக் கழக வ.சுப்பையா பிள்ளை தேவைப்பட்டார். அவ்வாறே நாவலர் பாரதியாரின் புகழ் பரவ யான் துணை நின்றேன் எனப் பெருமையாகக் கூறலாம்.
வாழ்க நாவலர் புகழ்!
புலமை அறம்
மக்கட்பண்பாய திணை. அதாவது மாந்தர் அறவொழுக்கம் பிறழாமல் உயர்ந்தோங்க உதவுமாறு. புலநெறிவழக்கமைப்பதும் செய்யுளி யற்றுவதுமாகும். இழிதகு செயலையும் பழியடர் இழுக்கையும் வெறுத்து விலக்காமல், விருப்பூட்ட விரிப்பது ஆன்றோர் கவிமரபாகாது. தமிழளவில் பண்டைச் சான்றோர் பாக்களில் இம்மரபு வழுவாமல் தழுவப்பட்டுளது. பிற்காலத்தில் இப்புலமையறம். வழுவாமல் பேணிய புலவருள் தலைமை நிலை கம்பரின் தனியுரிமை. வான்மீகர் இதிகாசவரலாறுகளை ஆங்காங்கே தமிழறம் தழுவி ஏற்ற பெற்றி மாற்றிப்படைப்பது கம்பர் கவிகளில் கண்கூடு. பொதுவாகக் குடிப்பிறந்த மக்கள் ஒழுக்கறத்தையும், சிறப்பாகக் குலமகளிர் கற்பறப் பெருமையும் வழுவாமல் ஓம்பிக்க விப்பதவரியல்பு. இதை வலியுறுத்தும் சான்றுகளில் ஒன்றிரண்டை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
பவனிவரும் பாட்டுடைத்தலைவரின் அழகிலீடு பட்டு, பலபருவ மகளிரெல்லாம் நிறைநெகிழ்ந்து, பெண்மை அறமறந்து, கலைசோர வளைகழலக்காமுற்று, வாயிற்படிகடந்து தெருக்களிலே நாணின்றி அலமருவ ரென்றுரைக்கும் உலாமடல்கள் புலவர்களால் இயற்றப் பெற்றியங்கக் காண்போம். நளன்நகரில், காரிகையார் கண்ணே, விலங்குவன மெய்ந்நெறியை விட்டு - என உட்காமல் பெண்மைக்கும் புலமைக்கும் பழிசூட்டிப் பாடியதை, வெட்கமின்றி இன்றளவும் பாராட்டும் புலவருளர். இதற்கு நேர்மாறாக, கம்பர், அயோத்தி நகரில் மட்டுமன்றி, கோசலநாடு முழுவதிலுமே கோழையர்கள் கோதிலுயர் கற்புடையரெனக் குறிக்கும் கவியமுதை அருந்துபவர், அவியுண்ணும் ஆன்றாரின் மகிழ்வாரன்றோ?
“ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்,
காசலம்பு முலையவர்கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறஞ்செலாக்
கோசலம்புனை ஆற்றணி கூறுவாம்”
இது, இராமாவதாரப் பெருங்காவியத்தின் முதற்பாடல். இதில், ஆடவர் பொறிகளும், அரிவையர் அமர்த்த கண்களும் நெறியின் புறம் செலாநேர்மை கோசல நாடு முழுவதும் நிலவியதாகப் பேசும் கம்பர் கவியுள்ளம் கண்டு வியவாதார், கவிநலமுண்டு நயவாதாராவர்.
இனி, வாலிமனைவியைக் கழிகாம இழிதக வுடைய குரங் கொழுக்கமுடையளென வான்மீகர் பழிக்கின்றார். தன்னிகரற்ற வீரனும், தானவரும் கடவுளரும் இயலாமல் ஓய்ந்தபிறகு தானொருவனாய்க் கடல்கடைந்து தேவருக்கு இறவாமை தருமருந்தைத் தானருந்தாது ஈந்து வந்த வள்ளலும், சிவபத்த சிரோமணியுமான வாலியின் மனைவி தாரையை, அறக்கற்பும், அருட்டிறமும் நிரம்பிய புனிதவதியாகச் சித்திரிக்கும் கம்பர் கவியறச் செவ்வி, படிக்கும்தொறும் வாயும், மடுக்கும் தொறும் செவியும், நினைக்கும்தொறும் மனமும் தெவிட்டாதினிக்கும்.
இன்னும், அகலிகை தன்னைத் தேவர்கோன் நயந்துவந்து கலந்தது கிட்டாப்பேறென மட்டின்றி மகிழ்ந்த கயத்தி எனக்காட்டுவர் வான்மீகர்; செந்தண்மை பூண்ட அந்தண முனிபுங்கவரான கவுதமரின் அற மனைவியைக் கற்பறம் திறம்பிப் பிறன் பாலின்பம் நுகர்ந்து மகிழும் தூர்த்தை யாக்குவது, பெண்மைக்கும், காவியக் கவியறத்துக்கும் பழிதரும் வழுவென விலக்கி, அவளைத்தன் நெஞ்சினாற் பிழைப்பிலாத மாசறு கற்பின் மிக்க அணங்கெனக் கம்பர் காட்டுவர். இந்திரனே தனை விரும்பி வந்ததற்கு மகிழ்ந்து அவனைக் குதூகலித்துக் கூடினாள், வான்மீகரின் அகலிகை, தீவினை நயந்து (சூழ்ந்து) தேவர்கோன் தன் உருக்கரந்து, கவுதமர் வடிவில்வந்து இருள் மிகுமிரவில் கூடக் கணவனென் றெண்ணி யாங்கே இணங்கினள், கம்பர் காட்டும் அகலிகை. கூடுவோன் காமக்களி, வந்தவன் மகிழ்நன் அல்லன், ஏதிலன்கள்வன் என்று குறிக்கவே, தன் மாசிலா மனம் பதைத்து மங்கைதன் அறிவழிந் தயர்ந்து சோர்ந்தாள். ஆதலால், அகலிகை தீதிலாத்தன் நெஞ்சினாற் பிழையிலாதாள் என்று, அவள் வரலாறு கேட்ட கோதிலா மனத்திராமன் கண்டனன்; அன்னைநீ எனவழுத்தி, அவள் பொன்னடி வணங்கிப்போனான். போய்க் கோதமர்பால், நின்மனைவி மாசறுகற்பின் மிக்காள்; ஆதலின் அவளை மீண்டும் நீ அழைத்திடுதி என்று கூறினன் - என்பர் கம்பர்.
1. தையலாள் நயனவேலும்,
மன்மதன் சரமும்பாய,
உய்யலாமுறுதி நாடி உழல்பவன்,
ஒரு நாளுற்ற
மையலால் அறிவுநீங்கி,
மாமுனிக்கற்றம் செய்து,
பொய்யிலா உள்ளத்தான்,
தன்உருவமே கொண்டுபுக்கான்.
2. புக்கு, அவளோடும் காமப்புதுமண
மதுவின்தேறல்
ஒக்க உண்டிருத்தலோடு
முணர்ந்தனள் உணர்ந்தபின்னும்
தக்கதன்று என்ன ஓராள்,
தாழ்ந்தன ளிருப்பத்தாழா
முக்கணானனைய ஆற்றல்
முனிவனும் முடுகிவந்தான்.
இவற்றுள், அகலிகையின் பெண்ணீர்மை பேசுவதற்குப்பின் கவியே பெரி துதவும். இதில் சொற்களெலாம் சிறந்த பொருட்செவ்விமிகச் செறிந தொழுகும்.
இக்கவியில், கம்பர்தரும் அகலிகையின் கற்பழிவுக் கதை முழுவதும் வான்மீகர் வரலாற்றின் வேறுபடுதல் விசதமாகும். சொந்த உருவொடு வந்த இந்திரனை அகலிகை அறிந்து அவனைக் காமத்தால் குதூகலித்துக் கலந்தின்பம் நுகர்ந்தனள், என்பது வான்மீகர் வரலாறு. கம்பர் கவிமுற்றிலும் அதனோடு முரணுகிறது. மாசறு கற்பின் மிக்க அகலிகை அழகால் அறிவழிந்து மையலுற்றுழலும் தேவர்கோன், தீவினை நயந்து, வைகறைக் கோழிபோற் கூவிக்கோதமனைச் சதியால் புறம் போக்கி, அவனுருவம்தான் கொண்டு நள்ளிரவில் கரவறியாள் பள்ளியுள்ளே புகுந்து அவளை மருவுகிறான். கணவனெனக் கருதி அவள் பிணங்காமல் இணங்குகிறாள். கூட்டத்தில் புதியவனின் சேட்டைகளால், கூடுபவன் கணவனலன் கள்வனென உணர்கின்றாள். அவ்வளவில் அறிவழிந்து சோர்கின்றாள். அதனாலே அக்கூட்டத் தவறளந்து சீர்தூக்கும் திறமின்றித் தாழ்ந்து வீழ்ந்தாள். ஆதலால் அவள் நெஞ்சினாற் பிழையிலாதாள் கோதமன் அவளைத் தள்ளினது தவறு; மீண்டுமவரால் அவள் கொள்ளத்தக்காள் - என்பது கம்பர் கூற்று.
இது கம்பர் வனைந்த அகலிகை ஓவியம். இவ்வாறு முனிவர் மனைவியின் கற்பு மேம்படு பெண்ணியலும் மனையற மாண்பும் ஓம்பும் கம்பர் கருத்தறியாமல், அவர்கவிகள் வான்மீகர் வரலாறே கூறுவதாகக் கொண்டு பொருந்தாப் பொருள் உரைத்துப் பெண்பழி வளர்க்கும் புலவர் பலரின்று முளர். அவர்தம் கொள்கைக்கு, உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும் தக்க தன்றென்ன ஓராள் தாழ்ந்தனளிருப்ப - எனும் சொற்றொடரைத் தமக்காதரவாகக் காட்டுவர். உணர்ந்தனள் - என்பதற்குத் தன்னைத் தழுவினவன் இந்திரனென்றறிந்தாள், என்றும், அப்படி உணர்ந்த பின்னும் அக்கூட்டம் தனக்குத்தகாதது என்று கருதிலள், அவன் தரும் காம இன்பக்
களியிலாழ்ந்து மகிழ்ந்தவ ளாகையால் - என்றும், உரைகூறி உவப்பர். இவ்வுரை பொருந்தாமை, இத்தொடரின் சொற்கொண்டும், இதைத் தொடரும் கவிகளிலே கம்பர் சுட்டும் தொடர்கொண்டும் தேர்ந்து தெளிவோம்.
முதலில், உணர்ந்தனள் என்றுமட்டும் உரைத்த தன்றி, இன்னான் என்றுணர்ந்த குறிப்பெனைத்தளவும் பாட்டிலில்லை. கரவுருவால், இரவிருளால், வருபவன் தன் கணவன் எனக்கருதி, அவன்தனை மருவ இணங்கியபின் கலவியிலே புது முறையாம் கேளியினால், மருவுபவன் நிறைகவரும் கள்வனென மெய்ப்பரிசப்புலன் உணர்த்த அப்பரிசால் கற்பழிவை உணரலுற்றாள். அஃதொழிய, அவன் இன்னான் என்றறிய ஏதுவில்லை; இடமுமில்லை.
அன்றியும், அறிந்தனள் என்றாது, உணர்ந்தனள் என்றதன் குறிப்பும் கருதற்குரியது. பொறிகளினால் புலனாவது உணர்வு; அறிவால் தேர்வது ஓர்ப்பு. இத்தொடரில் கம்பர் இவ்விரு சொல்லும் பெய்தமைத்த பெற்றியினால், உணர்தல், ஓர்தலின் வேறாதல் விளக்கமாகும். புணர்பவன் கணவனலன் என்பதை ஊற்றுணர்வால் உணர்ந்ததுமே, வஞ்சத்தால் நிறையழிந்த அகலிகை தன் அறிவழிந்தங் கயர்ந்து சோர்ந்தாள். கற்புறு சிந்தைமாதர், கணவரை அன்றி வேறோர் இன்புறத்தவர் மெய்தீண்டில் பின்னுயிர் தாங்க மாட்டாள். தன்நிறை யழிவுணர்ந்ததும் அகலிகை அறிவிழந்தயர்ந்ததனால், வஞ்சித்த கள்வனைத் தான் கூடியது தக்கதா அன்றா என்றாராய்ந்தறிய வொண்ணாள் ஆனாள். ஆராயவேண்டு மிவ்விடத்து, உணராள் என்னாது, ஓராள் என்றதனால், ஓர்தற்குரிய அறிவை அழிக்கும் அயர்ச்சியினால், அவள் ஓர்கிலள் என்பது குறிப்பாகும். இன்னும் இக்கவியில், அகலிகை அறிவழிந்து சோர்ந்தமை, தாழ்ந்தனள் என்ற சொல்லால் தோற்றமாகும். தாழ்தல் சோர்ந்து வீழ்தல்; சிலர் கூறுமாறு காமக்களியில் ஆழ்தலன்று. களிக்கடலில் மூழ்குபவர் திளைப்பதலால், தாழ்தலில்லை.
இனி, பின்னும் என்பதன் உம்மையைச் சிறப்பும்மையாக்கி, மருவியவன் பிறனெனத் தான் உணர்ந்தபின்னும், பழி அறியாக் கழி காமகளிக்கடலில் குளித்து மகிழ்கயத்தி அவள் என்று சிலர் கதைக்கின்றார். அப்பொருட்குப் பின்னும் என்னும் மொழி முழுதும் மிகையாகும். எச்ச உம்மை என்றிங்குக் கொள்ளுவதே பொருத்தமொடு பொருட்சிறப்பும் உதவக்காண்பாம். மருவினவன் ஏதின்மை உணருமுன்னும் உணர்ந்த பின்னும் அவன் கூட்டம் தக்கது, அன்று, என்ன ஓராள் என்பதே குறிப்பு. முன்னவள் ஓராமை, அவனைத்தன் கணவனெனக் கருதியதால், அங்கு அவ்வாராய்ச்சிக்கிட மில்லை. ஆராய எண்ணுவதும், இயல்பன்று! ஆகவே, அவன் கூட்டம் வேட்டவுடன், நன்றுதீது என்றறிய வேண்டாமல் தழுவலுற்றாள். பின்னர்த்தன் அறிவழிவால், அந்நிலையைச் சீர்தூக்கி யாராய வழி யில்லை இருபொழுதும் ஓராமைக் காரணங்கள் வேறாகும்; எனினும் ஓராத உண்மை நிலை பொதுவாகும். முன் ஐயமிலை ஆதலினால், ஓர்ந்திலன்; அதுபோலப் பின்னுமவள் ஓர்ந்திலள் அறிவழிந்து சோர்ந்ததனால் ஆராயின், நிறையழிவு அவள் தவறன்றெனும் உண்மை விளக்கமாகும். மேலும், தக்கதன்று என்பதை எதிர்மறையாய், ஒரு சொல்லாய்க் கொள்வதிங்குப் பொருந்தாது. கணவனெனக் கருதியவள் கூடினது தவறாதாகையினால், தக்கது + அன்று எனப்பிரித்து, ஓராள் என்பதை அவ்விரண்டோடும் கூட்டிப் பொருள் முடிவு காண்பதுவே பொருத்தமாகும்.
முடிவாக, வான்மீகர் கூறினதே கம்பரினிக்கவிக் கருத்தாய்க் கொள்ளுதற்குத் தள்ளரிய தடைகள் பல அவர்கவிகள் தருவதனைக் காணுகிறோம். காமத்தால் இந்திரனென்றறிந்தவனைக் கலந்து களித்து வந்தவளை, மாசற்று கற்பின் மிக்க அணங்கெனக் கோதிலாக் குணத்திராமன், அவள் தீதறிந்தும், கோதமன்பால் கூறுவனா? கூறினும், அம்முனிவர் ஏற்றுமீட்டுமவள்தனை மனையிற் கூட்டுவரா? பழிநிலைக்கப் பிழைத்தவளை, அப் பழியை இப்பாட்டில் கூறியபின், நெஞ்சினாற் பிழைப்பிலாதாள் எனக்கம்பர் தன் னெஞ்சறிய அஞ்சாமல் பொய்யுரைக்கத் துணிவரா? ஐயமற அவள் தூய்மை சுட்டுமிந்தக் கட்டுரைகள் தொடர்ந்து பல கவிகளிலே தோன்றுவதால், அதற்கு மாறாய், அப்புலவர் முன் கவிக்குப் பொருள் கூறல் அறிவறமும் அழகுமாமா? எவ்விடத்தும் நிரந்தரமாய்க் குலமகளிர் நலத்தோடு கவி அறமும் பேணிவரும் கம்பர் பாட்டில் தவமுனியின் மனைவிக்குப் பழிச்சூட்டைத் தேடுவது பிழையாகும். இக்கவியின் சொற்றொடரும், அவர் மரபை அழியாமல் நல்ல பொருள் நல்குவதை நாமறிந்து நயம் காண முயலுவதே பயனுமாகும்.
குடியாட்சிக் கொடுமைகள்
காங்கிர ஆட்சியில் அந்நிய அதிகாரிகளால் விதிக்கப்பட்ட வரிச்சுமை குறையுமென்றும், மக்கள் நன்மை பெருகுமென்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாகக் காங்கிர மந்திரிமார் நாள்தோறும் வரிகளைக் கூட்டியும், புதுப்புது வரிகளை அதிகமாய் விரித்தும் மக்களின் வாழ்க்கை நாள்தோறும் பாழாகும் வண்ணம் போய்க் கொண்டிருக்கின்றனர். ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் உலகப்பெரும் போரில்கூட உணவுக்கும், உடைக்கும் பஞ்சமில்லை. போர் முடிந்து மக்கள் நலம் பேணும் கட்சியார் ஆட்சியைக் கைக்கொண்ட பிறகுதான் முதலில் உணவுப்பஞ்சம் உண்டாக்கப்பட்டது. அதன் பிறகு உண்ணாவிரதம் மேற்கொண்ட மக்களுக்கு, உடலும் மிகையாதலால் அதை மூடத் துணி தேடலும் வீண் எனக் கருதித் துணிவிலக்குத் திட்டமும் கையாளப்படுகிறது. நாட்டு மக்களுக்கு வேண்டிய அளவு கதர்த்துணி நெய்து கொடுக்க இன்னும் பல ஆண்டுகள் வரை இயலாதென்று காங்கிர பெருந்தலைவர்கள் கூறுகின்றனர். அதுவரை மில் துணி கட்டவும் கூடாது என்கின்றனர் நம் மந்திரிமார். கைத்தறித் துணியையும் கிட்டவொட்டாமல் கட்டுப்படுத்துகின்றனர். போதிய கதர்த்துணி கிடைக்கும்வரை மில் துணி கைத்தறித் துணிகளை உடுப்பதைத் தடுப்பானேன்?
இக்கொடிய கட்டாயத் துணி மறுப்புக்குக் காங்கிர மேலதிகாரிகள் இதுவரை ஆளாகவில்லை. சென்னை மாகாணம் தவிரக் காங்கிர ஆட்சியுள்ள பிற எந்த இந்திய மாகாணத்திலும் இத்துணி மறுப்புக் கொள்ளப்படவில்லை. இக் கொடுமை சென்னை மாகாண தேசீய மந்திரிகளின் தனிச்சிறப்பாகிறது.
வாழ்க்கைக்கு இன்றியமையாச் சரக்குகளின் விலை சண்டைக் காலத்தைவிட நாள்தோறும் பல மடங்கு பெருகிவருகிறது. அதற்கு வியாபாரிகளின் கள்ள வாணிகத்தைக் காரணம் காட்டுகிறார்கள். உண்மையில் அரசியலார் கொடுமையினால்தான் இத்தகைய கள்ள வாணிகம் உண்டாகிறது. மக்களுக்கு உணவும், உடையும் இன்றியமையாதவை. அவைகளை வெளிப்பட நேர்மையாக விற்கலாமென்றால் வணிகர் போட்டியால் விலை தணியக்கூடும். அதிகாரிகளின் அபிமானத்துக்குரிய சிலரன்றிப் பிற வியாபாரிகள் இவைகளை வாங்கி விற்கத் தடுக்கப்படுவதாலும் எப்படியும் அவைகளை மக்கள் வாங்க விரும்புவதாலும் மறைமுக வாணிகம் வளருகிறது. விலைவாசியை மட்டும் வரையறுத்து விற்பனை உரிமை வேண்டுவோர்க் கெல்லாம் கொடுக்கப்படுமானால், வியாபாரப் போட்டியால் விலைகூட வழி இராது. மறைமுகவாணிகமும் மறைந்துவிடும்.
இனிக் கட்டாய மதுவிலக்குத் திட்டமும் வரிச்சுமை வளர்ச்சிக்குக் காரணம் ஆகிறது. குடிப்பதை நன்மக்கள் கொள்ளமாட்டார். மது அருந்துவது கேடு தரும் தீமைகளிலெல்லாம் இழிவானது என்பதைக் குடிகாரர்களே உணர்கின்றனர். அதனால் குடிப்பவர்களும் வெட்கத்தால் அதை மறைப்பதைக் காணலாம். மற்றக் குற்றமுடையார்களை நாளடைவில் அறிவுறுத்தித் திருத்தக்கூடும். அறிவைப் பறிமுதல் செய்யும் வெறி விரும்பிக் குடிப்பவர்க்கு விடுதலை கிடையாது. யாராலும் அவரைத் திருத்தவும் இயலாது. அன்றியும் மது அருந்துதல் அருந்துவோர்க்கன்றிப் பிறருக்குத் தீங்கு தராது. மற்றவர்க்குக் கேடின்றித் தன்னைத்தான் கெடுக்க விரும்பிக் கெடுவாரைச் சட்டத்தால் கட்டுப்படுத்தி நல்லவராக்கும் முயற்சி, கழுதையைக் குதிரையாக்க அதைக் கட்டிப்பிடித்து உடல் நோவக் கல்லால் தேய்த்த திருவாளத்தான் கதைபோலாகும். கழுதைகளை இளம் பருவம் முதல் நல்லுணவு தந்து, நடை பயிற்றி வளர்ப்ப தானால் அவைகளை ஓரளவு உயர்த்தக்கூடும். அதை விட்டு உடலைத் தேய்த்துப் புண்ணாக்கிக் கதற வைப்பதால் அதற்கு வலியும், துன்பமும் தருவதன்றி வேறு பயன் கிடையாது. அது போலவே, குடிகாரரையும் கல்வி, நல்லினப் பழக்கம் முதலிய அன்பாதரவுகளால் திருத்த முயல்வது நலந்தரலாம். சட்டத்தால் கட்டுப்படுத்தி நல்லவராக்க நினைப்பது நகைப்புக்கிடனாவதன்றி நலம் ஏதும் விளைக்காது. இனித் திருத்தமுடியாத சில இழிதகவுடைய குடிகாரரைத் திருத்துவதாய்ச் சொல்லி, அரசியல் வரிகளை அதிகப்படுத்திக் குற்றமற்ற பெரும்பாலோரான நன்மக்களை வதைப்பது அறமா-? அறிவாகுமா-? ஏழைத் தொழிலாளருக்குக் கள் அவசியம் என்பது பல மருத்துவர் கருத்தாகும். அதனால் அவர்கள் ஓரளவு குடிப்பதை மறுப்பதும் அறமாகாது. இனிக் குடிப்பதைத் தடுப்பதற்கு எளிதில் மதுவை எய்த விடாமல் அதன் விலையை அதிகப்படுத்துவது ஓரளவு நல்லவழி. பலர் வாங்க முடியாமையால் குடி குறையும். அதிக விலை கொடுத்தும் அதை வாங்கி அருந்துவோரால் அரசியல் வருமானம் குறையவும் மாட்டாது.
மக்களின் உரிமைகளைக் குறையாமல் வளர்ப்பது காங்கிர கூட்டத்தின் பெரு நோக்கம். காங்கிர தலைமை அதிகாரிகள் மில் துணிவிலக்கு, கட்டாய இந்தித் திட்டங்களை வற்புறுத்தவில்லை. பிற மாகாண மந்திரிகளும் வற்புறுத்த விரும்பவில்லை. ஆனால், நம் மாகாண மந்திரிகள் மட்டும் ஏனோ எங்குமில்லாத இந்தக் கொடுமைகளைச் சுமத்தி நாள்தோறும் மென்மேலும் உரிமைகளைக் குறைத்தும், வரிகளை உயர்த்தியும் மக்களை வருத்த முயலுகிறார்களென்பதை அறிய முடியவில்லை. மதுவைப் போலவே அதிகாரமும் அனுபவத்தால் வெறியை வளர்க்கும். கிடையாத பதவிகளும், அதிகாரமும் பெற்றவுடனே தாம் பிறரால் அடக்கப்பட்டு இடர்ப்பட்டதை மறந்து மற்றவர்களை இடர்ப்படுத்த விரும்பு கிறார்கள்போலும்.. இம் மாகாண மக்களும் எதிர்க்கத் துணிவார்கள் என்பதை அறியும்வரை புதிய மந்திரிகளின் அதிகார ஆசை குறையுமென்று எதிர்பார்க்க இடமில்லை; வழியுமில்லை.
(இது, 22-4-47-ல் எழுதப்பட்டது. ஆ-ர்)
முத்தமிழ்
முத்தமிழ் வளர்ச்சி மாநாடு கோவையில் நடைபெறப் போவதாகத் தெரிவித்து என்னை அன்போடு அழைத்தபொழுது நான் சொன்னேன். என்னிலும் இளமை உணர்ச்சியுடைய இளைஞர் ஒருவரை அழையுங்கள். என்னை ஏன் அழைக்கிறீர்கள்? ஒழிவி லொடுக்கம் தேடி அமைதியாக இருக்க விரும்பும் என்னை ஏன் அழைக்கிறீர்கள் என்று சொன்னேன். அவர்களுக்கு என்னை விட மனமில்லை. கட்டாயம் வந்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் என்னை வற்புறுத்தியதின் பேரில் மாநாட்டைத் திறக்க ஒத்துக் கொண்டேன். தமிழர்கள் யாருக்கும் அடிமையில்லாமல் வாழ்ந்தார்கள் என்பதற்குச் சங்க நூல்களிலே நல்ல சான்றுகள் கிடைக்கின்றன. சமீபத்தில் தென் இந்தியாவில் உதவிப் பிரதம மந்திரி வல்லபாய் பட்டேல் பேசியபோது எல்லோரும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்று கூறியிருக்கிறார். இதைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய தன்மான உணர்ச்சி நசுக்கப் படுவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியுமா? பட்டேல் என்ன நம்மையெல்லாம் சும்பன் என்று எண்ணிக் கொண்டாரா? பழந்தமிழர் பழக்கவழக்கங்கள் அறிவை ஒட்டி ஆராய்ச்சிக்குட்பட்டதாகவே அமைந்திருந்தன. சைவசித்தாந்திகளாகவும், வைஷ்ணவர்களாகவும் இங்கு யாவரும் இருந்ததில்லை!
ஆதியில் ஆரியர் தமிழர் பகை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பாராட்டாமல் சமகிருதம் தேவமொழி என்று கூறித் தமிழ்நாட்டில் அதைக் கொண்டு வந்து புகுத்தினார்கள். அப்பொழுதே தமிழர்கள் அதை வன்மையாக எதிர்த்தார்கள்.
எந்தப் பெரியார் எதைச் சொன்னாலும் அதற்கு நான் என்றும் உடன்படுவதில்லை! என் மனச்சான்று எதைச் சொல்லுகிறதோ அதைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். அறிவு என்ன சொல்லுகிறதோ அதைத்தான் நான் ஏற்றுக்கொள்வேன். வெள்ளைக்காரர்களாவது ஒருவிதத்தில் நம்மைச் சம உரிமையோடு நடத்தினார்கள். இப்
பொழுதுதான் வாரத்தில் ஒருநாள் பட்டினிகிட, அரைநாள் பட்டினிகிட என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலோருக்கு நம் அரசியலார் போக்கு பிடிக்கவேயில்லை!
இப்பொழுது அரசியலார் எல்லா இழவையும் இந்தியில்படி என்று சொல்லுகிறார்கள். நாடு முழுதும் ஒன்றாயிருக்க வேண்டுமாதலால் இந்தி படியுங்கள் என்று சொல்லுவதில் அர்த்தமில்லை. நாடு முழுதும் ஒன்றாயிருக்க வேண்டுமானால் தனியாகப் பாகிதானை ஏன் பிரிக்க வேண்டும்? மலேயாவிலே சென்று ஒரு தமிழன் வாழவேண்டுமென்று விரும்பினால் மலேயா மொழியை அவனே விரும்பிப் படித்துக் கொள்ளுவான். அதுபோலவே வடக்கே அலுவலாகச் செல்லவிரும்பும் தமிழன் தனியே விரும்பிப் படித்துக் கொள்வான். தமிழர்கள் எல்லோரும் இந்தி படியுங்கள் என்று அரசியலார் சொல்லுவதிலே அர்த்தமில்லை. அவரவர்கள் தொழிலுக்கு அவசிய மானால் அந்தந்த மொழியைக் கற்றுக் கொள்வார்கள்.
சென்ற 40 ஆண்டுகளாக நான் காங்கிர தொண்டனாக இருந்தேன். நீண்டநாள் காங்கிர தொண்டனாக இருந்த நான் காங்கிரஸைவிட்டு விலக நேர்ந்தது. இதற்குக் காரணம் காங்கிர புதிய போக்கிலே சென்று விடாப்பிடியுடன் சிலவற்றைச் செய் என்று வற்புறுத்தியதேயாகும். ரேஷனை எடு! மக்கள் நாணயமாக நடந்து கொள்ள முடியாது என்று காந்தியார் பலமுறை சொன்னார். அதை அரசியலார் கேட்டார்களா? இல்லை! இந்தியைக் கட்டாயமாக்காதே என்று காந்தியார் சொன்னதை அரசியலார் கேட்டார்களா? இல்லை! காந்தியார் சொல்வதை இவர்கள் சரிவரக் கேட்பதில்லை. இவர்களுக்கு வேண்டும்பொழுதெல்லாம் காந்தியாரைத் தூக்கிக் கொண்டு ஆடுவார்கள்.
நான் காங்கிரசை விட்டு விலகியதற்கு முக்கியக் காரணம் இதுதான்; காங்கிரசில் எந்தக் கொள்கையை விரும்பி நான் சேர்ந்தேனோ அந்தக் கொள்கைகள் சிறிது சிறிதாக மாறத்தொடங்கின. நான் காங்கிரசில் இருந்த போது காந்தியாருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. காந்தியாரைச் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை நான்தான் அழைத்து வந்தேன்.
மகாத்மா காந்தியார் எல்லோரையும் கதர் உடை கட்டவேண்டு மென்று கட்டாயப்படுத்தினார். எதையும் கட்டாயப்
படுத்தாதீர்கள், அது தவறு என்று காந்தியாரிடம் கூறினேன். காந்தியாருக்கும் எனக்கும் அப்பொழுதுதான் மனமாற்றம் ஏற்பட்டது.
மற்ற நாட்டாரிடம் இல்லாத ஒரு சிறப்பு நம்மிடம் அநேக நாட்களாக இருந்துவருகிறது. அது என்ன? அதுதான் Fashion. நம்மைவிடாத மோகம். நம்மவர் இன்னும் விடாமல் இருக்கும் இந்த மோகத்தைப்பற்றிப் பாரதியார் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
“என்று தணியுமிந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்”
என்று கூறுகிறார். அடிமையில் நம்நாட்டு மக்களுக்கு அவ்வளவு மோகம். மொழியைப்பற்றி நான் சொல்வதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். மக்களுக்கு மனத்திலே உள்ள பண்புதானே மொழியிலும் இருக்கும். தற்சமயம் தமிழ் மக்களின் மனத்தில் அடிமை உணர்ச்சி வந்துவிட்டது. ஒரு நாட்டின் பண்பாட்டை மொழிதான் காக்கும். வடநாட்டார் இங்கு எல்லோரையும் அடிமையாக்க எண்ணங் கொண்டுள்ளார்கள். பண்டைக் காலத்திலே தமிழர்களிடம் ஆண்மைத் தனம் இருந்ததால் அவர்கள் அடிமையாயில்லை. பண்டைத் தமிழர்கள் பெண்களுக்கு நல்லார் என்ற அழகிய பெயரை இட்டார்கள். பெண்களை நல்லார் என்றே மதித்து வந்தார்கள்.
தமிழிலே உள்ளதுபோல ரஷிய மொழியிலே நீங்கள் 3 பிரிவுகளைக் காணமுடியாது. இங்கிலீஷ், பிரெஞ்சு, இந்தி போன்ற எந்த மொழியிலும் தமிழில் உள்ள சிறப்பை நீங்கள் காணமுடியாது. தமிழ் ஒன்றில்தான் நீங்கள் 3 பிரிவுகளைக் காணமுடியும். முத்தமிழிலே எல்லாம் உண்டு. முத்தமிழ் புராதனமானது. தமிழர்கள் இயற்றமிழை மட்டுமன்றி இசைத் தமிழையும், நாடகத் தமிழையும் விரும்பி வந்தார்கள். மகாபெரியவர் தொல்காப்பியர் இயற்றிய நூலிலே உண்மையான கருத்துகள் பல காணக்கிடக்கின்றன. தொல்காப் பியத்திலே இயல், இசை, நாடகம் ஆக மூன்று பகுதிகளைக் காணலாம்.
தமிழர்கள் தொல்காப்பியத்தைப் படிக்கும் பொழுது தொல்காப்பியர் கண்கொண்டு படிக்க வேண்டும். இப்பொழுது
தொல்காப்பியத்தைப் படிக்கும் தமிழர்கள் நச்சினார்க்கினியன் கண்கொண்டு தொல்காப்பியத்தைப் படிக்கிறார்கள். அறிவாகிய கடவுளுக்கு 6 முகம் உள்ளது 12 கையுள்ளது என்று கூறுவது எப்படிப் பொய்யோ அப்படித்தான் நச்சினார்க்கினியர் உரையும். பண்டிதர்களில் சிலர் தொல்காப்பியத்தை நன்கு ஆராயாமல் இயற்றமிழ் நூல் என்று கூறுவர். தொல்காப்பியம் ஒரு முத்தமிழ் நூல். நாம் தமிழ் மொழியை மறக்க வேண்டுமென்பதற்காகவே அன்று வடமொழியைப் புகுத்தினார்கள்.
பொருணர் என்றால் (Actor) நடிகர் என்று பெயர். பொருந்தர் - பொருள்பகுதி. பொருணர் வேறு - பொருந்தர் வேறு. நாம் கல்வியை மறந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகின்றன. நாம் படித்த தெல்லாம் கல்வி என்று எப்படிச் சொல்லமுடியும்? 14-வது வயதிலே எனக்குத் திருமணம் நடந்தது. அந்தக் காலத்திலே ஐயரின்றித் திருமணம் செய்துகொள்ள நான் எவ்வளவோ பாடுபட்டேன். என் பெற்றோர் லேசில் ஒத்துக்கொள்ள மாட்டேனென்றார்கள். பின்னர் எங்கள் குருக்கள் ஐயாவை வைத்துத் திருமணம் நடத்துவதாகக் கூறினார்கள். ஸமகிருதமாவது பிராமணர்கள் மொழி. அவர்கள் அதை நன்கு உச்சரிக்கக்கூடும். நம்முடைய குருக்கள் ஐயாவோ அதை அறைகுறையாகத்தான் சொல்லுவார். எனக்குப் புரியாத அந்த வடமொழி மந்திரம் வேண்டாம் என்று வற்புறுத்தினேன். இதற்குத் தலையாய காரணம் என்னுடைய இளமை உணர்ச்சிதான். பொருள் விளங்காத சனியன் ஆயிற்றே அந்த மந்திரம். அது எனக்கெதற்கு என்று கூவிப் பேசினேன். என்னுடைய தமிழ் உணர்ச்சிதான் என்னை இப்படிப் பேசச் செய்தது. இங்குக் கூடியுள்ள இளைஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்ச்சியோடு இருக்க வேண்டுமென்பது என் ஆசை.
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
என்றொரு வாசகம் உண்டு. இப்படி இருக்கக் கூடாது என்று எண்ணிச் சிலர் தென்னாட்டுச் சிவனை வடநாட்டில் வாழ்வோனே போற்றி என்று எழுதி வைத்தார்கள். இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படித் தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ், தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர். கவர்னர் ஜெனரலா யிருந்த திரு இராஜ கோபாலாச்சாரியார் தலைகீழ் நின்று இந்தியைக் கட்டாயப்பாடமாக்கினார். பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அது எடுக்கப்பட்டுவிட்டது. அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியை உங்களுடன் கூடி எதிர்த்தேன். எடுக்கப்பட்ட இந்திச் சனியனை மறுபடியும் கொண்டு வந்து நுழைத்தது யார்? தமிழ் மந்திரியாயிருந்த அவிநாசிலிங்கம் செட்டியார் தான் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழ் கல்லாதவரை நாம் ஒரு மந்திரியாக ஆக்கியதனால்தான் இந்தக் கோளாறு ஏற்பட்டது. தமிழறிந்த மந்திரியைத்தான் தமிழ் நாட்டிலே மந்திரியாக்க வேண்டும்.
அரசியலாரை இப்பொழுது ஏன் இந்தியைக் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டால் அகில இந்தியாவையும் ஒன்றாக்கப்போகிறோம். ஆதலால் இந்தி படிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். கடவுள்தான் இதைக் கேட்கவேண்டும். தமிழறியாத மந்திரிகள் சுற்றுப்பிரயாணம் செய்யும்பொழுது அவர்களுக்கு மாலை மரியாதை செய்தால் அவர்கள் ஏன் நம் தலையில் ஏற மாட்டார்கள். மந்திரி வேலைக்கு லாயக்கில்லாதவர்களை மந்திரிகளாக்கியது நம் தவறுதான்.
சென்னைப் பல்கலைக்கழகம் ஏதோ தமிழை வளர்ப்பதாகக் கூறுகிறது. சிறந்த தமிழ்ப் புலவர்களுக்குப் பல்கலைக்கழகத்தார் தக்க மதிப்புத் தருவதில்லை.அறிவைக் கெடுக்கக்கூடிய புராணங்கள் தமிழ் நூல்களிலே ஏராளமாகப் புகுந்தபின்தான் தமிழர்கள் அறிவை மறந்தார்கள். நம்மிடையே அறிவு விலக்கப் படாமல் இருந்தால்தான் நாம் அடிமைத்தளையினின்று நீங்க முடியும்.
நாம் வெறும் மாநாடு கூடுவதால் தமிழ் வளர்ந்து விடாது. உண்மையிலே நம் தாய்மொழியாகிய தமிழை வளர்க்கவேண்டு மென்று நீங்கள் விரும்பினால் உங்கள் வாழ்க்கையில் நாள்தோறும் எழுத்திலும், சொல்லிலும் தமிழை நீங்கள் நன்கு பயன்படுத்த வேண்டும். உங்கள் நல்லன்பு தமிழின்பால் இருக்க வேண்டும். அறிவை வளர்ப்பதுதான் கல்வி. அறிவில்லையேல் கல்வியில்லை! பண்டைத் தமிழர்கள் அறிவைத்தான் வளர்த்தார்கள். தமிழர்கள் அறிவை வளர்க்கக்கூடிய தமிழ் நூல்களையே படிக்கவேண்டும். நமக்குத் தேவையானது அறிவோடு கூடிய தமிழ்தான். ஒவ்வொரு வரும் அவரவருடைய வாழ்க்கையிலே நல்ல திட்டங்கள் போட்டுத் தமிழை வளர்க்கவேண்டும்.
“கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்”
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும், அறிவுடையார் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார். அப்பொழுது நான் அறிவுடையவனாயிருந்தால் இந்த M.A., B.L., டிகிரியைப் பெறவே நான் எண்ணியிருக்க மாட்டேன். தமிழ்க் குடியிலே தோன்றிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சங்க நூல்களைச் சங்கையறக் கற்கவேண்டும். சிவன் தான் எங்களுக்குக் கடவுள். சிவம் என்றால் நேர்மை - நிறைவு என்று பொருள். சிவநெறி என்பது பழைய தமிழ்ச்சொல் உபயவேதாந்த சைவ சித்தாந்த மகாசமாஜம். இதில் எது தமிழ் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.
இலட்சியம் என்றால் நோக்கம் என்று பொருள். இலக்கணம் என்றால் இலக்கணம், பாட்டு என்றால் பாட்டு, ஆனால் செய்யுள் என்றால் பாட்டல்ல. செய்யுள் என்றால் (Literature) இலக்கியம். இலக்கியத்துக்குப் பொதுப்பெயர் செய்யுள் என்பது. செய்யுள் என்ற சொல்தான் தமிழ். இலக்கியம் என்ற சொல் தமிழல்ல; அது வடமொழி. என் அறிவுக்கு மாறாக நான் எதையும் சொல்வதில்லை. என் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் நான் சொல்லுகிறேன். சிவபெருமான்தான் எனக்கு அறிவைத் தந்தார். என்னை நீங்கள் திருத்தவேண்டுமென்று எண்ணினால் அறிவான காரியங்களைச் சொல்லித்தான் நீங்கள் என்னைத் திருத்த வேண்டும். தமிழை அகத்தியன் வளர்த்தான் என்று கூறுவது முழுப்பொய். தமிழைப் படித்ததால் அகத்தியன் பெருமை பெற்றான்; கம்பன்கூட அகத்தியனைப் பற்றிக் கூறும்போது,
“என்றுமுள தென்றமிழ் இயம்பி
இசை கொண்டான்”
என்று கூறியுள்ளார். அகத்தியன் கடவுள் அல்ல. நம்மைப் போல அகத்தியன் ஒரு மனிதன். அகத்தியனைப் பற்றிப் புராணங்கள் கட்டுக்கதைகளைக் கிளப்பின.
பழமையெல்லாம் கெட்டதல்ல. தமிழ் வளர வேண்டுமானால் முதலில் அறிவு வளரவேண்டும். உண்மையான தமிழிலே உங்களுக்கு அன்பு இருக்க வேண்டும். தமிழர் எல்லோரும் ஒரே இனம்தான். தமிழினத்தில் ஜாதியே இல்லை. ஜாதி என்ற பெயரே தமிழில் இல்லை! திருக்குறளிலே ஜாதி என்ற ஒரு சொல்லைக்கூட நீங்கள் காணமுடியாது. ஜாதிச்சனி இடைக்காலத்திலே வந்தது. ஆறுமுகநாவலர் என்ற தமிழரே நம்மையெல்லாம் நற்சூத்திரர் என்று எழுதி வைத்தார். ஆரியருக்கு இவர் அசல் அடிமையாயிருந்ததால் தான் இப்படி எழுதி வைத்தார். இது நமக்கு எவ்வளவு அவமானம்? மானக்கேடு?
சர்க்காரைத் தாக்கி உண்மையைப் பேசுகிறேனே என்று என்னை அரசியலார் சிறையிலே தள்ளினாலும் தள்ளலாம். அதற்கு நான் அஞ்சவில்லை!
இந்த நாட்டிலே சுதந்திரம் என்றால் அடிமை என்று பொருள் போலும்! அடிமையாயிருந்தால் சுதந்திர உணர்ச்சி எப்படி வரும்?
இந்த முத்தமிழ் வளர்ச்சி மாநாடு நல்ல கருத்தோடு தொடங்கியிருக்கிறது.
வள்ளுவர் கண்ட கடவுள்
வள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடையவர். அவர் அறநூலை எரித்துவிட விரும்பாத புதிய புலவர் சிலர், கடவுள் வாழ்த்து, பிற்கால மூடநம்பிக்கையார் புனைந்து புகுத்திய இடைச்செருகல் இது என்பர். இக்கடவுள் வாழ்த்து, குறளில் தலையணியாய்த் திகழ்கிறது. அன்றியும், பிற்காலப்புலவர் தொகை நூல்களுக்குப் பாடிச் சேர்த்த கடவுள் வாழ்த்துக்களனைத்துக்கும், வள்ளுவர் கடவுள் வாழ்த்து மாறாகவும் இருக்கிறது. அவைகள் மக்கள், மனைவியர், நட்பு - பகை முதலிய உறவும் உடையராய், ஐம்புலனும் அறுபகையும் கடவாத பிறநூற் கடவுளரைப் போல் அல்லாமல், பண்டைத் தமிழறிஞர் கண்ட கடவுளை வாழ்த்துவர் வள்ளுவர். முதற் குறளில் கடவுளியல்பும் உலகோடுடைய தொடர்பும் விளக்கி, பிற குறள்களால் அக்கடவுள் வழிபாடு கூறுவர். முதல் குறள் தத்துவ முரைப்பது; மற்றவை சமயநெறி காட்டுவன. முதற் குறளில் வள்ளுவர் அறிவுக்கண்ணால் கண்ட கடவுளியலை விளக்குவதால், அதை ஆராயின், அவர் கண்ட கடவுளையும் ஒருவாறு நாம் காணலாம்.
அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதிபகவன் முதற்றே உலகு.
இதில் இயல்பு, ஏது, எடுத்துக்காட்டு என்பன அனைத்தும் அளவை முறைபிறழாமல் தெளிக்கப்பட்டு, வள்ளுவர் தன் கடவுட் கருத்தை விளக்கும் நுட்பம் நுனித்தறிந்து மகிழ்ந்து பாராட்டத்தக்கது.
கடவுள் என்ற பெயரே சிந்தையும் புலனும் கடந்த பொருளைக் குறிக்கும். அதனால் காட்சியும், நுகர்ச்சியுமான இரண்டு அளவைகளும் புலனுதவி வேண்டுவனவாகி, புலன் கடந்த பொருளறிதற் குதவாதன வாகி விடுகின்றன. எஞ்சிய அறிவளவைப் புலனுணர்வும் போத உணர்வும் என இருதிறப்படும். இவற்றுள் புலனுணர்வு, கடந்த பொருளைக் காட்டாதாகவே, புலனுணர்வால் தெளிந்த ஒப்பைத் துணைக்கொண்டு, போதம் அதாவது தனி அறிவுத் துணையால் மட்டும் அறியத்தக்க கடவுளை, தக்கதோர் ஒப்பணியால், தெளிய விளக்கும் இக்குறள். ஒப்பணிப்பொருள் உய்த்துணர்ந்தால், வள்ளுவரின் கடவுளிலக்கணமும் வரையறைப்படும். அதனால் முதலில் ஒப்பணியின் உட்பொருளை ஆராய்வோம்.
பிண்டமாக, இக்குறட் தொடருக்கு, எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடைய; அதுபோல, உலகமும் கடவுளை முதலாக உடையது -எனப் பொருள் கூறுவர். தமிழ் - வடமொழி இரண்டு மொழிகளின் நெடுங்கணக்கிலும், அகரம் இடத்தால் முதலில் நிற்பது யாருமறிந்தது. இதனால் கடவுள் இலக்கணம் எதுவும் விளங்காது.
அகரம் அவ் உருவத்தில் முதலாகாத எழுத்து வகைகளைக் கொண்ட சில மொழிகளும் உலகில் நிலவுகின்றன. உண்மையில் மக்கள் மட்டுமன்று, உயிரின மனைத்தும் ஒலிப்பதற்கு முதலில் வாயை அங்காத்தல் வேண்டும். திறவாமல் மூடிய வாயில் ஒலி பிறவாது. இனி அங்காக்கும் அவ்வளவே தோன்றுவது அகரமாம், அதன்பிறகு பிறக்கும் ஒலிவகை அனைத்துக்கும், வாய் மூடாமல் அங்காத்திருப்பது இன்றியமையாதது. அங்காப்புள்ளவரை அகர ஒலிநிற்கும். அகர ஒலிமறையில் அங்காத்தலும் முடியும். அது முடிந்தால் ஒலி எதுவும் நிலையாது. எனவே, தமிழ், சமகிருதம், நெடுங்கணக்குகளில் மட்டுமன்றி, வாய்திறந்து பேசும் எழுத்துக்களில் எல்லாம் என்றும் அகரம் முதலாதல் வெளிப்படை. கால இடங்களால் முற்படுவது மட்டுமில்லை; அகரமின்றி ஒலியே பிறவாதாதலாலும், பிற ஒலி பிறப்பதற்கும் அகரம் அங்காத்தலால், உடனின்றொலித்தலாலும், அகரம் எழுத்தினங்கள் எல்லாவற்றிற்கும், முதற்காரணமாவதோடு, ஒவ்வோரெழுத்திற்கும் உடனின்றுழவும், துணை யாயுமிருக்கக் காணுகிறோம். இனி அகரம் அங்காத்தல் உள்ளளவும் நின்று, வாய்மூட மறையவே, பிற எல்லா ஒலிகளும் முடிவதும் தேற்றம். அதனால் எல்லா எழுத்துக்களுக்கும், அதாவது எல்லாப் பேச்சொலிகளுக்கும், அகரம் முதலும், துணையும், முடிவுமாக நிற்பது விளங்கும். அதுபோல நாமிருக்கும் பூமி மட்டுமன்று, எல்லா உலகங்களுக்கும் கடவுளடியாகத் தோன்றி, கடவுள் துணையாய் நின்று, கடவுள் மறைவால் மறையும் என்ற உண்மை இவ்வொப்பணியில் கிடைக்கிறது. அகரம், பிற எழுத்துக்களுக்கு முதற்காரணமாவதோடு, அவ் வெழுத்துக்கள் உள்ளளவும் உடனொலித்துதவுவது போல, கடவுளும் உலகங்கள் தோன்றுவதற்கு முதற் காரணமாகி, அவைகள் நின்று வினைப்படவும் அவற்றினூடுருவி உடனின்றுழவும் துணையாயிருந்தது, தன் மறைவில் அனைத்துக்கும் அடங்க வைக்கும் மூலப் பொருளாதலே கடவுள் இலக்கணம் என்பதை, இவ்வொப்பணியால் வள்ளுவர் இனிதுபெற வைத்துள்ளார்.
அதுமட்டுமன்று, பிரமம் தவிரப் பிறிதெதுவு மில்லை; உயிரும் உலகும் இரண்டும் பிரமத்தின் சாயைகளே, என்பது வேதாந்தக் கொள்கை. உலகும் உயிரும் கடவுளல்ல; இவற்றுக்கு வேறாய், மூலமாய்க் கடவுளிவற்றைத்தோற்றி, நின்று, மறையச் செய்யும் முழு முதற்பொருள் என்பது தமிழர் சமயம். தனக்கு வினை யின்றி வாளாசாட்சியாய் நிற்பது பிரமத்தின் இலக்கணம் என்பர் சங்கரர். அதற்கு முற்றிலும் மாறாய், கடவுளே உயிரையும் உலகையும் உருப்படுத்தி வினையிலுய்க்கும் என்பர் தமிழறிஞர். இவ்வுண்மையையும் குறளின் ஒப்பணி வலியுறுத்தக் காண்பாம்.
அகரம், மற்ற எல்லா எழுத்தொலிகளுக்கும் மூலமாயும் இன்றியமையாத்துணையாயுமிருத்தல் மறுக்கொணா உண்மை. எனினும் பிற ஒலிகளுடன் நின்று ஒலிக்குமல்லது, அகரம் தானே பிற ஒலிகளாக மாறுவதில்லை. பிற எழுத்துக்கள் ஒலிக்கும் போதுதான் அவ்வவ் வொலியோடு உடனொலித்துதவுமல்லது, தன்னிலை ஒழிந்து பிற ஒலியாய் அகரம் மாறுவதில்லை. அகரத்தின் இவ்வியல்பு, தமிழரின் கடவுள் கொள்கையை வலியுறுத்த நல்ல உவமையாதல் வெளிப்படை. இதில் உயிருள்ளவும் இல்லவுமாகிய அனைத்தும் அடங்கிய உலகத்தோடு ஒன்றாயும் வேறாயும் நின்று, தோற்றல், நிற்றல், மறைதல் ஆம்முத்திறவினைக்கு மூலமாதல் கடவுட்பண்பு என்பது தெளிக்கப்படுகிறது. பண்டைத்தமிழ்ச் சான்றோரின் இக்கடவுளியல், பிற்காலத்து மெய்கண்டார் நூலில் இலக்கணமாக மட்டும் சூத்திரிக்கப்படுகிறது. இதை ஒப்பணியால் கவிச்சுவையும் அளவை நலமும் பொலிய அறப்பழங்காலத்தில் வள்ளுவர் தம்குறளால் விளக்கியுள்ளார்.
இனி, பிற எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாதல் போல், அகரத்துக்கு முதல் யாதென்றாராயின், அங்காத்தலளவில் வெளிப்பட்டு, வாய்மூட மறைந்து, என்றும் தனக்குப் பிறிதுமுதல் வேண்டாது நின்றுவரும் அகரம், ஆதலால், அதுபோல, கடவுளும் பிற அனைத்துக்கும்தான் முதலாவதன்றி, தனக்கு வேறொரு முதலை வேண்டுவதில்லை, தனக்குத் தானே முதலாய், ஆதி அந்தமில்லாத தனிப்பொருளாய் நிற்பது கடவுளியல். இதை வலியுறுத்தக் கருதி பகவன் முதற்றே என்று கூறி அமையாமல், ஆதிபகவன் முதற்று, என்று அடை கொடுத்துக் கூறினார். அகரமுதல எழுத்தெல்லாம் என்பதுபோல, பகவன் முதற்றேயுலகு என முடித்திருக்கலாம். அப்போதும் ஒப்பில் உள்ள இயல்கள் பொருளிலும் பொருந்தி நிற்பது விளங்கும். வாய்திறக்கத் தோன்றி, மூடமறைவதன்றி, அகரம் பிறத்தலும் இறத்தலு மில்லை. அதனால் எழுத்துக்களுக்கெல்லாம் முதலான அகரத்துக்கு அகரமே முதலாகும்; அதுபோல, உலகனைத்துக்கும் முதலாகும் பகவன் தனக்குத்தானே முதலாம் என்பதை ஐயமற வலியுறுத்த வேண்டி, பிற முதலை வேண்டும் உலகை அடையின்றி வாளாகுறித்து, தனக்குத்தானே முதலாம் பகவனை அவ்வியலைச் சுட்டி விளக்க ஆதிபகவன், அதாவது அனைத்துலகுக்கும் தனக்கும் ஆதியாம் பகவன் எனச் சிறப்படை கொடுத்துக் கூறினர் வள்ளுவர். ஆகவே, இம்முதற்குறளால் வள்ளுவர் கண்ட பண்டைத் தமிழரின் கடவுள் இலக்கணம் முற்றும் தெற்றெனத் தெளிக்கப்படுதலறிக.
இன்னும், வாலறிவன், அறவாழி அந்தணன், எனும் தொடர்களில், கடவுள் அறிவுருவன், இறஇயல்பன், என்ற தமிழர் கொள்கைகளும் சுட்டப்படுவதும் சிந்தித்துச் சுவைத்தற்குரியனவாம்.
ஒழுக்கமே மக்கட்பண்பு
மதி நுட்பம் அல்லது புத்தியே உயிர்ப் பண்பு என்பது வட நூலுடையார் கொள்கை. பொருள் அனைத்தும் சேதனம் அசேதனம், அறிவுற்றதும் அற்றதும் என இரு வகுப்பினுள் அடங்கும் என்பதவர் துணிவு. உயிர்கள் ஒன்று முதல் ஆறுவரை அறிவுடையவை; உயிரினத்தில் மக்களும் தலையாய ஒரு வகுப்பினரே யாவர்; அறிவு ஆறும் நிறையப் பெற்றவர் மாந்தர்; அவரல்லா அனைத்துயிரும் வரிசையாக ஒன்று முதல் ஐந்தறிவே உடையன. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐந்து புலனுணர்வோடு, சிந்தித்துத் துணியும் மதியுடைமையே மக்கட் பண்பு என்று அவர் கருதுவர்.
மதியுடைமை மக்கட்குச் சிறப்புரிமையன்று; மாக்களும் மதி நுட்பமுடையனவே என்பது தமிழர் கொள்கை. மக்களும் மாக்களும் தம்முள் மதி அளவால் மாறுபடுவதன்றி, தன்மை அல்லது பண்பால் அவருள் வேறுபாடு காணற்கில்லை. அறம் பிறழா ஒழுக்கம் ஒன்றே மக்கட் சிறப்பு என்பர் தமிழறிஞர். தமிழில் திணை என்பது ஒழுக்கம் குறிக்கும் மரபுச் சொல். உயிராலும் அறிவாலு மன்றி, ஒழுக்கம் ஒன்றே பற்றிப் பொருளனைத்தையும் உயர்திணை அஃறிணை எனப் பிரிப்பர் தமிழ்ச் சான்றோர்.
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே”
என்பது மூவாயிர மாண்டுகட்கு முந்திய தொல்காப்பியர் கூற்று.
உயிருள்ளவை இல்லவை என்றேனும், அறிவுடையவை இல்லவை என்றேனும் பிரிக்காமல், பொருளனைத்தையும் மக்கட்கே சிறப்புரிமையான ஒழுக்கம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டது இப் பாகுபாடு என்பது தேற்றம். எனவே, பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் ஒழுக்கம் ஒன்றையே மக்கட் பண்பு எனக் கொண்டனர்.
ஏறத்தாழ எல்லா உயிர்கட்கும் பொதுவான அறிவைப் பொருட்டாக்காமல், ஒழுக்கம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டது இப்பாகுபாடு என்றும், திணை என்பது ஒழுக்கம் குறிக்கும் மரபுச் சொல் என்றும் முன்பு யாம் சுட்டியது காண்க.
ஒழுக்கம் ஒன்றையே தமக்குச் சிறப்புரிமையாகக் கொண்டவர் மக்கள் மட்டுமே. அதனால் அவரைத் தனிவேறு பிரித்துத் தலைமை தந்து நிறுத்தி, மற்றுயிரை அறிவுடையவும் இல்லவுமான எல்லா வற்றையும் வேறு ஒரு வகுப்பினுள் அடக்குவாரானார் தமிழ் நூலுடையார். உயர்திணை என்மனார் மக்கள்தாமே என்னாமல் மக்கட் சுட்டே என விதந்து சுட்டுவர். எனவே மாந்தர் ஒழுக்கம் உடைமையால் மக்கள் எனவும் அஃதின்மையால் மாக்கள் (விலங்குகள்) எனவும் கொள்ளப்படுவாராயினர்.
இது மட்டோ? பிறப்பால் மாந்தராய், உருவத்தால் மக்கள் போல்வார் எல்லாரையும் மக்கள் எனக் கொள்ளாமல் விலக்கவும் துணிவர்.
“உறுப்பொத்தல் மக்கள்ஒப் பன்றால்; வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு”
என்பது பொய்யில் புலவர் பொருளுரை.
கேவலம் மதி நுட்பம் மக்கட் பண்பாகாது என்பதையும் ஒழுக்கம் ஒன்றே மக்கட் பண்பாம் என்பதையும் வற்புறுத்துவர் தமிழ்ச் சான்றோர்.
“அரம்போலும் கூர்மைய ரேனும்மரம் போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்”
என விளக்கப்படுதல் காண்க.
எல்லா நன்மைக்கும் ஒழுக்கமே வித்தும் விளைபயனும் ஆகும். இதனை நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்பதனால் அறிக.
மக்களுள் உயர்வு தாழ்வு பிறப்பால் இல்லை; ஒழுக்கத்தால் உண்டு. மக்கட்கு மட்டுமன்றி, எல்லா உயிர்கட்கும் பிறப் பொப்புமை உண்டு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பர் வள்ளுவர். ஒழுக்கம் என்றால் மட்டுமே மக்கள் தனிச் சிறப்புடையவராவர் என்பதை,
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி”
என்பர்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலால், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
என எச்சரிப்பர். ஒழுக்கமின்மையால் எய்தும் பழியை அறிவுடை மக்கள் அனைவரும் நாணுவர். நாணுடைமை மாந்தர் சிறப்பு.
மதி நுட்பம் மக்கள் பண்பன்று; ஒழுக்கமே மக்கட் பண்பு என்பது தமிழர் கொள்கை.
அறிவும் உணர்வும்
பொதுவாக அறிவும் உணர்வும் ஒருபொருள் குறிக்கும் இரு சொல்லாகக் கருதப்படுகின்றன; பண்டிதரும் பாமரரும் எழுத்திலும் பேச்சிலும் வழங்குகின்றனர். உண்மையில் இவை இரண்டும் இருவேறு பொருள் சுட்டும் ஒருவகைச் சொற்களாகும்.
அறிவாவது மதி அல்லது புத்தியாம். அது மனத்தின் பண்பு.
உணர்வு சிந்தையின் இயல்பு. இன்ப துன்ப, விருப்பு வெறுப்புணர்ச்சிகளுக் கிடமாவது உள்ளம் அல்லது இதயம்.
தேர்ந்து தெளியும் அனைத்தும் மதி அல்லது அறிவைச் சார்ந்தவை.
அறிவின் வேறான விருப்புணர்ச்சிகளுக்கிடம் உள்ளம் அல்லது சித்தம்.
ஒன்றன் தன்மை அல்லது இயல்பறிதல், அதன் பண்பு - நன்மை தீமைப் பயன் அளந்தறிதல் போல்வன எல்லாம் மதி அல்லது அறிவைப் பொறுத்தவை.
வேட்கை வெறுப்புணர்வுக்கு இடம் சித்தம் அல்லது உள்ளம்.
குறையுணர்தல், நலம் நாடி நிறைத்தல், பயன் தரும் புதியன புகுத்தல், பயனற்ற பழையன கழித்தல் போல்வன எல்லாம் அறிவின் திறமாம்.
மகிழ்தல், வருந்தல், உவத்தல், உவர்த்தல் போல்வன யாவும் உள்ள உணர்ச்சிகளாம்.
மரத்திலிருந்து விழும் பழம் வானில் தங்காமல் - விண்ணில் ஏறாமல் - நிலமீது படிவானேன்? என எண்ணி, நிலமும் அதிலுள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் பிறவற்றை ஈர்க்கும் இயலுடையன எனவும், அதனால் பெருநிலம் சிறு பொருளனைத்தையும் தன்பா லிழுக்கு மியல்பிற்றெனவும் நினைத்து முதலிற் கண்டவன் நியூட்டன் (Newton) என்னும் ஆங்கில அறிஞன், அவ்வுண்மையை ஆதாரமாகக் கொண்டு பின் அரிய பல இயலறங்கள் தெரியலாயின. இவை அறிவின் பயன்.
அதன்பின், நிலவுலகும் கோள்கள் யாவுமே இவ் வீர்க்கும் திறத்தால் தம்முள் மிகப்பெரிய ஞாயிற்றைச் சுற்றி உழல்கின்றன என்றும், இவை போலவே பர வெளியில் பல ஞாயிறுகளும் அவற்றைச் சுற்றும் கிரகங்களும் நிலவுகின்றன என்றும், பூமியைச் சுற்றும் மதியைப் போன்ற பல மதிகளும் கிரகங்களைச் சுற்றி உலவுகின்றன என்றும் துணிந்தனர் அறிஞர்.
அதுவேபோல, தம் புலன் உணர்வால் இசை உலகங்களையும், காவிய உலகங்களையும் படைத்துதவி யுள்ளார் அறிஞர். அவற்றில் அறிவியற் பனுவல்களை நூல் எனவும், உணர்வியற் பனுவல்களைக் காவியம் அல்லது செய்யுள் எனவும், வெவ்வேறு பெயரிட்டுச் செவ்வனே தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமன்று. கிரகங்களும் மதிகளும் தம்மைத் தாமே ஓயாது சுற்றிச் சுழல்வதால், கால வேறுபாடுகளும் ஏற்படுகின்றன. மதி உலகைச் சுற்ற ஒரு திங்களும், உலகு ஞாயிற்றைச் சுற்ற ஓர் ஆண்டும், தன்னைத் தான் சுற்றிச் சுழல ஒரு நாளும் ஆகும். இவற்றை அறிவால் மதித்துப் புலனுணர்வால் துய்க்கின்றோம்.
இன்னும், பேருலகின் இயல்புகளை அறிவால் மதித்து, உலகு உருண்டை (உருளை)யானதால், அதை ஒருமுகமாகச் சுற்றினால் விட்ட இடத்தைத் தொட்டுவிடலாம் எனத் துணிந்து, கடலில் கலங்கொண்டுலவி புதிய நிலம், கண்டங்களைக் கண்டு பிடித்தார் கொலம்பசு போல்வார் பலர். அவர்களுக்கும் முன்பே பசிபிக் பெருங்கடலையும், சப்பான் சீன தேசங்களையும் கண்டு பிடித்தனர் ஐரோப்பிய யாத்திரிகர். உலகில் கலைகளை முதலில் உதவிய தமிழ் முன்னோரின் பின்னோராகிய நாம், எல்லாம் ஈசன் செயல், ஊழ் என எண்ணித் துணிவும் முயற்சியும் இகழ்ந்து வாளா தூங்கி மகிழ்கின்றோம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரில் பிற நாட்டார் வியந்து பாராட்ட வாழ்ந்த தமிழரின் மக்களாகிய நாம், புதிய ஆக்கம் தேடும் ஊக்கமும் உரனும் இன்மையோடு முன்னோர் தந்ததையும் போற்றத் தெரியாத மந்த மதிகளாய், பிறர் இகழ வாழுகிறோம். வள்ளுவரையும் கம்பரையும் உலகினுக் குதவிப் புகழ் கொண்டவரின் வழிவந்த நாம், தமிழக மொழிந்த இந்திய உள் நாட்டாரின் அவமதிப்புக்கு மாளானோம். உழைத்துப் பழியை உதறி முன்னேற முயலாமல் உறங்குகிறோம்.
விழித்துழைத்துப் பழியழித்து முன்னேற முயல்வோமாக.
இன்பம்
இன்பம் உவகையின் வேறுபட்டது. புற நிகழ்ச்சி தரும் பொறியுணர்வால் உள்ளத்தெழும் மகிழ்ச்சியே உவகை யெனப்படும்.
உவகையின் மிகுதியே களிப்பு. இவற்றிற்குப் புறநிகழ்வும் பொறியுணர்வும் இன்றியமையாதன. இவை போலன்றிப் புற நிகழ்வும் பொறியுணர்வும் வேண்டாது உள்ளத்தே ஊறிச் சுவை தரும் உணர்வே இன்பமாகும். உவகையும் மகிழ்ச்சியும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்கள். உவகையூட்டும் புறப்பொருள் மறைவாலும் அதை நுகரும் பொறிநிலையின் புலனுணர்வுகளின் குறைவாலும், மகிழ்ச்சியின் நேர்மை மாறுபடும்; இன்பமானது, உயிரின் இயலாய் அறிவின் தூய்மையில் விளைவதாகலின், ஓய்வு ஒழிவின்றி என்றும் ஒன்றுபோல் நின்று வளரும்.
புலனுணர்வால் புதிது புதிதாய் மாறும் மகிழ்ச்சி மனத்தில் நிலையாது. கணந்தோறு மாறும் உணர்வில் உண்டாகும் உவகையானது, நிலவொளி போலக் குறைந்தும் வளர்ந்தும் அறவே மறைந்தும், ஒரு நிலையின்றிப் பலபட மாறும். அன்றியும் தனக்குரிய தின்றி, ஞாயிறு கொடுக்கக் கொண்டொளிரும் திங்கள் ஒளிபோல, பொறித்துணையால் புலத்துறும் புறநிகழ்வு, உள்ளத்தில் விளைக்கும் உணர்வே மகிழ்வின் விதையாம். இரவி ஒளிபோல, ஒருவர் ஆன்ற அறிவிற்றோன்றும் இன்பம் குன்றாமல் என்றும் நின்று திகழும். சிறிதிலகி பிறகு விலகும் திங்களொளியால் உலகிருள் பெருகி விரியும்; அதுபோல மகிழ்வு நிலை மாறி அகம்புகு துன்பம் மிகுவது இயல்பாகும்.
மகிழ்வு அகத்தளிராகும்; இன்பம் மன மணக்கும் வாடா மலராகும். மகிழ்வு அளவிறந்து மிகுந்த உணர்வின் வெறி களிப்பாகும். அறிவடங்கி அறவுணர் வொடுங்கிப் பொறிப் புலனால் விளையும் வெறியே களி வளர்க்கும் நறவு ஆகும்.
தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு. அது மக்களின் சிறப்பியல்பு. விருப்பூட்டும் உணர்வு வழியொழுகி உவகைபெறும் இயல்பு, விலங்கொடு மாந்தர்க்கும், வேறு ஏனைய உயிர்கட்கும் ஒத்த பொது உடைமை.
அறிவையும் தூய உணர்வையும் அயர்த்தவர் களிப்பு, கயவரன்றி, உயரும் உயிர் வேண்டா அது, உள்ளழிவின் விளைவு.
மக்கட் பண்பாகும் ஒழுக்கத்தின் ஊன்று கோலாய் நன்று தீதுணர்த்தும் அறிவினை மாய்த்து, அறம் வளர் உணர்வையும் ஓய்த்து வளரும் களிமயக்கம். ஈன்றாள் முகத்தேயு மின்னாதால், அதனைச் சான்றோர் வெறுப்பது வியப்பில்லை. களியை, மெய்யறியாமை என்றும், நாணழிக்கும் பேணாப்பெருங்குற்றம் என்றும், இறவா அறக்குறள் கூறுதலானும், களியின் இளிவு பெறப்படும். மகிழ்வினும் இழிந்த களிப்பை இன்ப மென்பர் கயவர்.
இனி, வீடு பேறுதவும் நிலைப்பயனை ஆநந்தம் என்பர் வடநூலார். ஆனால், அவர் கருதும் ஆநந்தம் தமிழர் விழையும் இன்பமாகாது என்பது, அவற்றின் இயல் வேறுபாட்டை ஆய்வார்க்குத் தெளிவாகும்.
உவகை - உவர்ப்பு என்ற இரண்டாலும் துன்பம் ஏற்படு மாதலின், அவ்விரண்டு மில்லா நடுநிலையே ஆநந்தம் என்பார் வடநூலார். அறிவுணர்வு அழிந்தவை அறவே இறந்த மனவெறு நிலையை ஆநந்தம் என்பது அவர் கொள்கை. முதலும் முடிவும் இன்றி அறிவினியல்பாகி மக்கள் உளத்து என்றும் வளரும் உணர்வை இன்பம் என்பது தமிழ் மரபு.
ஆநந்தம் வெறுநிலை; இன்பம் உள்ளூறும் நிலையுணர்வு. இன்மை உண்மைகளின் தன்மையைத் தெளியாமல், இவ்விருவர் கொள்கையும் ஒன்றெனல் அறிவுக்கு ஒவ்வாத் தவறாகும்.
தமிழருக்கு அறிவிப்பு
தற்காலம் தமிழருக்குப் பொதுவுடமையா யிருப்பது தமிழ் மொழி ஒன்றே. சமயம், சாதி, கொள்கை, நடைமுறை முதலிய பல துறைகளிலும் பல வேறுபட்ட வகுப்பு வாதங்களால் மெலிந்துவரும் தமிழ்ச் சமுதாயம் ஒற்றுமை பெற்று உய்வதற்கு உரிய ஒரு பெருந்துணையாய் உதவக்கூடியது நம் தாய்மொழியாகிய தமிழேயாகும். தமிழ் மொழியும் தமிழர் நாகரிகமும் இன்று நேற்று எழுந்தன அல்ல; துவக்கம் அறியவொண்ணாத பழமையும் பிறவற்றின் கலப்பால் தளராத தூய செழுமையும் உடையனவாய்த் தொன்றுதொட்டு நின்று நிலவும் பெருமையுடையனவாம்.
மண்ணுலகில் பிறநாட்டு மக்களெல்லாம் கலையுணர்வும் நாகரிக நில வொளியும் பெறாத மிகப்பழங்காலத்தே தொல்காப்பிய இலக்கணமும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு முதலான நல்லிலக்கியங்களும் இசை நுணுக்கம் முதலிய கலைக் கடல்களையும் உலகுக்குதவி மகிழ்ந்தவள் தமிழ்த் தாய். பிறப்பால் சிறப்பு வகுத்து மாறுபாட்டுணர்வை மலிவிக்கும் நடுநிலையற்ற பிற மக்களுடைய சாத்திரங்கள் போலாது எஞ்ஞான்றும் மக்களாவார் எவ்வெவர்க்கும் உயர்வொழுக்கம் ஒரு நெறியே கூறுஞ் சிறப்புடைய இறவாக்குறள் போன்ற அறநூல்களை அருளியவளும் நம் அன்னையேயாம். மெய்ந்நெறியெனும் பொதுப் பெயர்பூண்ட தென்றமிழ்ச் சைவமும் வடவரிடை யெழுந்த சமணசாக்கியச் சமயங்களும் நம் முன்னையோரின் ஒற்றுமை குறையாமல் ஒன்றியுடனுறைய உதவியவளும் தமிழ் அன்னையே யாகும். இந்திய நாட்டிலெழுந்த பிற மொழிகளனைத்தையும் வீறடக்கி அவற்றின் நிலையழித்துத் தன் வழிப்படுத்திச் செம்மாக்கும் வடவாரிய மொழியையும் சிரித்து மருவிச் செருக்கித் தன்சீர் குன்றாது திகழும் செந்தமிழ் நம்மவரின் செல்வமன்றோ!
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை எனும் முதுமொழிபேணிப் பெருமிதங் கொண்டநாம் தற்காலம் தமிழன்னையின் தனியாட்சிக்குரிய தமிழகத்தில் அவளிறைமைக்குக் குறைவுகோலி, முந்நூறாண்டுகளுக்கு முன்பிறந்து இலக்கியப்பதமும் நலனும் இன்னும் அறியவொண்ணாப் பேதைப் பருவங்கடவாத ஹிந்தி மொழிக்கு இளவரசுப் பேரோடு முற்றுரிமை முடிசூட நினைப்பவர் தம் முயற்சியை முன்னறிந்து தடுப்பது நமது தலைசிறந்த முதலறமாகும். தமிழருக்கு ஹிந்தி அந்நிய மொழியென்பதை ஹிந்தி மோக மைந்தர்களும் மறுக்கவில்லை, அயற்பெண்டு வருபவளை வெறுத்து விரட்டித் துரத்தல் வேண்டா எனின் அந்நியளொருத்திக்கு அன்னையை அவள்மனையில் உரிமையும் இடமும் உதவவற்புறுத்தும் மகனின் தாய்ப்பற்று பாராட்டி மகிழற் பாலதாமா? தாய்மொழியைப் பேணாமல் தளரவிட்டுப் பெருமையடைந்த மக்கட் சமுதாயம் சரிதத்திற் காணப்படாத தொன்று அன்றோ? ஹிந்திக்கு இரங்கித் தமிழ் மொழியின் வளனும் தனி நிலை வீறும்விட்டுப் பிறிது துறைகளில் தன்னலம் பேணுதல் தமிழராய்ப் பிறந்தவர்க்குப் பழியன்றிப் புகழ் தருமா? அழிவு அன்றி ஆக்கந்தரும் அறத்
துறையாமா?
ஆங்கில முதலிய கலைச்செல்வம் நிறைந்த புதிய உயர் மொழிகளிலுள்ள வளங்களையும் எழில்களையும் தமிழ்மகள் அடைந்து புதிய பெருவாழ்வு பெற்று முன்னினும் சிறந்தோங்கச் செய்வது நம் கடன். எனினும் அவ்வளங்களும் எழில்களும் நிரம்பித் ததும்பும் ஆங்கிலத்தைக்கூடக் கட்டாயப் பாடமாக வைத்திருப்பது தவறு, எல்லாக் கலைகளையும் அறிவையும் தாய் மொழியால் மட்டுமே கற்பித்தல் வேண்டும் என்று வாய்ப்பறையறைந்த தலைவர்களே திடீரென்று கலைநலமும் மொழி வளமும் எனைத் தளவுமில்லாத ஹிந்தி இந்தியருக்குப் பொது மகளாதற்குரியள் என நம்மிளைஞருக்குப் போதிப்பதுடன் நம்மவருதவியால் தாம் பெற்றுள்ள புதிய பதவியையும் ஹிந்திக்குச் சமர்ப்பிக்க விரும்பு கின்றார்கள். இது நன்றோ! இதைப் பார்த்திருத்தலும் நன்றோ! அளவற்ற பொறுமை ஆண்மைக்கு அழகு தராது. தாய்நலம் பேணல் சேயருக்கறனாகும் ஆங்கிலவராதிக்கம் தீதென்று துணிந்த நாம் தமிழ்நலமும் தமிழர்புகழும் நலிவிக்கும் பிறிதாட்சி யெதுவாயினும் புதுப்பற்றுக் காரணமாகக் கருமம் சிதைய விட்டுப்பின் அவந்தராய் அவலப்பட்டு இரங்காமல் தற்காப்பு மேற்கொள்ளுதல் இன்றியமையாததாகும்.
பாரதியார் தமிழ்ப் புலமை
காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியார் தன்னிகரற்ற தமிழ்ப்புலவர். நமக்கு அணுகிய காலத்தராகவே, இவர் கவிநலத்தினுயர்வை உள்ளபடி அளந்தறிவதருமையாகும். வெறுப்பவரும் நயப்பவரும் நடுநிலையின்றி இவரியல்புகளைக் கடையிறந்து காண்பாராவர். நங்கால நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு, நவீன ஆதர்சத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு நம்மிடையே பாடும் நங்காலப் புலவ ரொருவரின் கவிகளை மிதமிஞ்சிப் புகழ்வாரும், வெறுத்து மிகப் பழிப்பவரும் பலராவர். ஆனால் இத்தகைய புலவரின் கவிகளை, கவி நலமறிவ தன்றிப் பிறிது நோக்கங் கொள்ளாது, தம்முணர்வு கவரவிடாது படிப்பதும், படித்தவற்றினியல்பளந் தறிவதும் மிகச் சிலர்க்கேயாவதாகும். நடுமை நல்லறிவாளர் பாரதியார் கவித்திறமறிந்து கூறும் நயவுரைகள் காணும்வரை, மற்றவர் இப்புலவர் கவிதைநலங் காணமுயல்வது தவறென்பது சாலா தன்றோ? ஆனவரை இத் தமிழ்ப்புலவர் கவி நலத்தை யாராய்வேன். முற்றத்துணிந்த முடிவுகாண வல்ல முதுக்குறைவுக் குரிமை கேளேன். எனினும் இயன்றவரை பொறுமையொடு பாரதியாரின் கவித்திறத்தை யாராய்ந்து கண்ட முடிபுகளை வெளியிடுவதால், மற்றைத்தகவுடைய பெரியாருண்மைக் கருத்துக்களை வெளியிடச் செய்யவுங் கூடுமாதலால் இம்முயற்சியி லொரு சிறிது தலையிடத் துணிந்தேன்.
முதலில், தற்காலத் தமிழ்ப்புலவர் சங்கேதங்களுக்கு, பாரதியார் பெரும்பாலும் புறப்புறச் சமயியாவர். நாகபந்தங்களும் ஏகத்தாளிதழகல் எமக வந்தாதிகளும், புல மைத் தலைக்கோலாக் கருதும் பாலரிடையில், சித்திரகவிச் சத்துருவான பாரதியார் பாக்கள் மதிக்கப் படுவ தருமையேயாகும். மனோபாவ வறுமையோடு, பொருளும் வறண்ட தற்காலப் புலமைவளம், அழகொடு மணஞ்செயு மலர்களேனும், கொழுவிய தண்சுவைக் கனிகளேனும் தரவொணாது அடர்ந்திருண்டு காழ்த்து மலிந்த இலைச் செடிகளானும் புதர்களானுமே நிறைந்து தோன்றுவதியல்பாகும். தற்காலம் தழைகளே தழைவ தாகவே, மணமற்ற தழைமாலைகளே பெரும்பாலு மிடையப் படுகின்றன. அழகுமண முதலிய இயற்கை நலமில்லாதாகவே, தழைகளை வினைத்திற மலியப் பலவாறு தொடுத்து, அடுக்காலுந் தொடையானும் பல்வேறுபட்ட இலை மாலைகளையே பலரும் மிடைய லாவர். இவ்வனத்திடையே தளரா ஊக்க முடையானொரு புலவன், வெறுஞ்செடி களைந்து, நிலந்திருத்தி, உணர்வு நீர் வார்த்து உரன்கதிரூட்டி வளர்த்த நல்ல தமிழ்ப் பூந்தோட்டத்தில் நறுமலருஞ் சுவைக்கனியுங் காணப் பெற்றால், அஃது அவ்வனத்தியல்புக்குப் பொருத்தமற்ற அபூத விளைவாகவே தோன்றும். பாரதியார் பாக்கள் இவ் இலைவனத்திடை எழுந்த கனிமலர்த்தோப்பாம்.
இவர் பாக்கள், கருத்துக்களை வருத்தமின்றி விளக்கும் பண்டைப் பாவலர் பளிங்குநடை பயின்று, இளகியொளிரும் வெண் பொன்னொழுக்கும், இனிய ஓசையும், திட்பமும், சுவையுமுடையன. இப்புலவர் நூல் படிப்பவருக்கு நிகண்டகராதிகள் வேண்டா. கள்ளமற்ற உள்ளமும், ஊன்றிய கவனமும், தமிழிலார்வமு முடையாருக்கு இப்புலவரிதயம் வெள்ளிடைமலையாம். எளிய இனிய இவர் கவிநடை, நீரொழுக்குடையதேனும் வயிரத்தின் திண்மையுமொளியும் பெற்று நிற்கும்.
“கண்ணிரண்டும், ஆளைவிழுங்கு மதிசயத்தைக்
கூறுவனோ,
மீள விழியில் மிதந்த கவிதை யெலாம் சொல்லி
லகப்படுமோ?”
“நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தந் தவஞ்செய் குமரியெல்லை - வட
மாலவன் குன்ற மிவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு”
“(எங்கள் தாய்) செப்புமொழி பதினெட்டுடையாள்,
எனில்
சிந்தனை யொன்றுடையாள்”
“பூதலமுற்றிடும் வரையும் - அறப்
போர் விறல்யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவருங் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்”
“நாமிருக்கு நாடுநம தென்பதறிந்தோம் - இது
நமக்கே யுரியதா மென்ப தறிந்தோம் - இந்தப்
பூமியிலெவர்க்குமினி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்”
“தெற்கு, மாகடலுக்கு நடுவினிலே யங்கோர்
கண்ணற்ற தீவினிலே, தனிக்காட்டினிற் பெண்கள்
புழுங்குகின்றார் அந்தக்-(கரும்புத் தோட்டத்திலே)
மதியுண்டு, செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ”
“வலியுண்டு, தீமையைப் பேர்க்கும்,
விதியுண்டு, தொழிலுக்கு விளைவுண்டு, குறைவில்லை,
விசனப் பொய்க் கடலுக்குக் குமரன்கைக்
கணையுண்டு, ஜயமுண்டு பயமில்லை மனமே”
“மாலைப்பொழுதிலொரு மேடைமிசையே
வானையுங் கடலையு நோக்கியிருந்தேன்.
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
நீலநெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரங்கழிவதிலு நினைப்பின்றியே
சாலப் பலபல நற்பகற் கனவில்
தன்னை மறந்தலயம் தன்னிலிருந்தேன்”
இனைய உருகுபொன் னொழுக்குடைய ஒப்பற்ற இனிய அடிகளைப் படிக்குந்தோறும் நாவும், கேட்குந்தொறுஞ் செவியுமினிக்கும்.
அணியினம் அனைத்துக்குந் தாயான உவமையைக் கையாளுவதில் இப் புலவர் பண்டைப் பாவலர் யாருக்கு மிளையாதவர். இக்காலத்திலிணை யற்றவர். வருந்தித் தேடிப் பொருந்தச் செய்யும் புலவர் பெரு முயற்சியை, நன்றிமறவாது சுமந்து காட்டும் பல புலவர் அணிகளைப் போலன்றி, பாரதியாரின் உவமைகள் இயற்கை
யினின்று இவர்வாக்கைத் தேடி வந்தடையும். கருத்துக்குப் பொருத்த முடைமையோடு கேட்போர் மனத்திற்பதிந்து மறையா துறையுஞ் செவ்வியுடையவாம் இவர் உவமையனைத்தும். இயற்கையினின்று எளிதிலெடுத்து, தன் கவிதையமுதருத்தி இவராளு முவமைகள், இப்புலவர் கற்பனைத்திறனையும், ஒப்புணர் தேர்ச்சியையும், கவிவனை கைவினை முதிர்ச்சியையும், அநாயாச ஆட்சியையும் இனிது காட்டும். பழம் பாட்டுக்களைத் துருவி, பண்டையுவமைகளையுருவி, தம்புலமை நிறுவக்கருவியாக்கும் இழி செயலையறவே வெறுத்தவர் இப்புலவர்.
"விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
அதன்கதிர்கள் விரைந்து வந்து,
கண்ணகத்தே யொளிதருதல் காண்கிலமோ?
நின்னையவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழ்ந்து புறஞ்செய்தும்,
யாங்களெலா மறக்கொ ணாதுஎம்
எண்ணகத்தே, லாஜபதி, இடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரே?"
எனவும்,
"தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்,
சிறப்பை மறந்துவிட்ட பூவும்,
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை, தோழி
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்கள் இருந்து பயனுண்டோ?"
என்றும்,
"பாயுமொளி நீ யெனக்கு -
பார்க்கும் விழி நானுனக்கு
தோயுமது நீ யெனக்கு -
தும்பியடி நானுனக்கு"
" பானமடி நீ யெனக்கு -
பாண்டமடி நானுனக்கு
பண்ணுசுதி நீ யெனக்கு -
பாட்டினிமை நானுனக்கு"
"வீசுகமழ் நீ யெனக்கு -
விரியுமலர் நானுனக்கு"
பேசுபொருள் நீ யெனக்கு -
பேணுமொழி நானுனக்கு"
என்றும்,
"மண்ணிலின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?
எனவும் வருவன பல உவமைகளையுங்காண்க. உவமான உவமேய இயைபுகளும், அடைகளினழகும், கவிகளில் இவற்றின் அமைப்பும் விசதமாயெடுத்து விரிப்பதானால் இவற்றிற்கே பல வியாசங்கள் வேண்டும். கேவலம் பண்புகளையும் மனோபாவ எண்ணங்களையுமே உருவகப்படுத்தி, அவற்றினுதவிகொண்டு தங்கோள் நிறுவுதலில் இவர்கைவந்த சமர்த்தர். கண்ணனைக் காதலி பாவமாக்கித் தன் காதல் பாடும் பக்தன் வாயில்,
வீரமடி நீயெனக்கு - வெற்றியடி நானுனக்கு . . . . என்றிவர் கற்பித்த கவிதை நயங்கருதி நயவாதிருக்க முடியாது. இன்னும் ஓசைகளினுதவி கொண்டே சொற்களின் தன்மையையும் பொருளையும் மாற்றி, இலக்கிய நலம் வளர்க்கும் ஆரியம், ஆங்கிலமன்ன பிற சில மொழிகள் போலன்றித் தமிழில் மொழிகளை எளிதில் மாற்றொணா
தென்றும், நிலைத்தவுருவங்களுடைய தமிழ்ச் சொற்கள் பொருள் வேறுபாடு காட்டுவதற்குப் பிற சொற்களோடு ஒட்டித்தான் ஆக வேண்டுமெனவுங் கருதுவார் பலருண்டு. தமிழிலக்கண நுணுக்கங்களை யாராய்ந்து தெளிவோர், தமிழ் கேவலம் ஒட்டுமொழி யன்று. ஆரியம்போல் அசையேற்று மாற்றங்காட்டுங் செல்வ நிலையுடைமையோடு ஆங்கிலம்போல் சொற் கூட்டறுத்துப் பிரிவு நிலையையுமடைந்துள தென்பது இவர் அறியகில்லார். இஃதெப்படியாயினும் அருந்தமிழ்ப் பெரும்புலவர் இவர் கருதுமாறிடர்ப் படுவதில்லை. துயர், மழை என்னும் பெயர்ச்சொற்களினின்று, துயரினன், மழைத்தனள் என்று அநாயாசமாய் வினைகளாக்கித் தமிழாக்கங்கண்ட கம்பரன்ன பழம்பெரும் புலவர் தமிழ்த்திறம் இறவாதுநின்று நிலவுகிறது. உரனோடு ஊக்கமுடைய தமிழ்வாணரால் இயன்றளவுங் கையாளப்படுகின்றது. துப்பொடு துணிவுடையார் தூயகவிகளில் இந்நலம் செப்பமொடு செழுமையுங்காட்டி, தமிழின்னும் வளரும், வாழு மென்னும் இறவா மெய்ம்மையும் இனிது விளக்கி நிற்கும். பாரதியார் இத்திறங்கைவந்த கவியென்பதை அவர் பாக்களிற் பரக்கக் காணலாம். இதற்கீண்டு ஒரே சான்று காட்டிப் போவேம். உறவென்றும் நட்பென்றும் கதைக்கிறான் என்று சுயோதனன், பாஞ்சாலி சபத நூலில், தன் தந்தையை வெறுத்துக் கூறுமிடத்து வருமிப்பிரயோகம் போலவே, பாரதியார் பனுவல்களில் பலவேறிடத்தும் இப்புலமை நலமொளிரக் காண்போம்.
பாரதியார் பாட்டுக்களில், ‘நொள்ளைக் கதைகள்;’ - ‘கண்ணாலஞ் செய்யுங் கருத்துடையேன்;’ - ‘பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ? - நட்ட நடுநிசியில், பட்டப்பகலிலே பாவி மகள் செய்தியைப் பார், கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னால் அங்கு காறியுமிழ்ந்திடுவான் - காட்டு வழியானாலும், கள்ளர் பயமானாலும் - தாலி கட்டும் பெண்டாட்டி சந்ததிகளேதுமில்லை - நீசக் குயிலே நிலைப்பறியாப் பொய்ம்மையே - நின்றன் மோடி கிறுக்குதடி தலையை - நல்ல மொந்தைப் பழைய கள்ளைப் போலே - என்றிவ்வாறு பலவிடத்தும், பாட்டுக்கும் பாத்திரங்களுக்கும் பொருத்தமாக நடப்புச் சொற்களையும் தொடர்களையும் நயம்பட எடுத்தாளும் புலமைத்திறனுங் கவிநலமுங் கனிந்து கவினும்.
இவரை ஆசில் மதுரகவி யென்னலாம். இவர் சித்திரகவிக்கு மித்திரரில்லை. விதார கவியம்சங்களைப் போற்றி யாட்சிப்படுத்தினாரானாலும், பண்டை முறைப்படி விதாரப்படுத்தி யாதொரு நூலுஞ்செய்ய இவர் விரும்பினதாய்த் தெரியவில்லை. வெளிவந்த பாஞ்சாலி சபதமொத்த சில சிறு காவியங்களும், அச்சேறாத சேற்றூருலாவன்ன சில ஒருதுறைக்காதற் பனுவல்களும் இவர் செய்ததுண்டு. இவரியற்றிய ஒரு பொருள் நுதலிய பலதுறைக் கோவைகளில், கண்ணன் பாட்டும், சுதேச கீதங்களுமே தலைநின்ற சிறப்புடையனவாம். இவற்றுள், கவிதொறுங் கனியுந் தேனும், அடிதொறுங்கமழுங் கண்டும், தெவிட்டாத சுவை தருவதாம்.
தனித்தும், சேர்ந்தும், பாரதியார் பனுவல்கள் நுதலிய பருப்பொருளும், அவற்றால் அவர் விளக்க விரும்பிய விஷயங்களும், அவற்றின் கருத்தும் பயனும், விசாரிப்பதற்கு ஈண்டிடம் பெறேன். தனி வேறு வியாசங்களான இவற்றை யாராயப் புகுவதே தகுவதாகும். ஈண்டு இப்புலவர் கவிகளைப் பற்றிய திரண்ட பொது மதிப்பை மட்டும் இயன்றவரை சுருக்கியளப்பதே கருத்தாகலான், இவர் பாக்களின் பண்புகளைத் தொகுத்துக் காட்டுவதன்றி வகுத்து விரியாது விடுப்பேன்.
பண்டுதொட்டுப் பாவலர் நால்வகைப் பாவிலு மியற்றியுள்ள பனுவல்கள் ஆயிரக்கணக்கானவை. இன்று நின்று நிலவுஞ் சீரிய செவ்விய தமிழ் நூல்கள் நூற்றுக்கணக்கானவை. எல்லாம், அகவல், வெண்பா, கலிப்பாக்களான் அமைந்தியலக் காண்கின்றோம். பாவினங்களில், பெருங் காவியங்களைச் செய்து, திருத்தக்கதேவரும் கம்பரும் விருத்த யாப்பை வீறுபெறச் செய்த முதல், பிந்திய புலவரெல்லாம் பாக்களின் பண்பையும், பயனையுமறவே மறந்து, விருத்தப்பா வினத்திற்கே அரசுரிமை தந்து வைத்தார். யாரும் யாண்டும் எதுபற்றியும் விருத்தங்களிலேயே நூல்கள் யாக்கலாயினர். விருத்தமல்லா வேறு பாவினங்கொண் டெழுந்து, விழுமிய தனிப் பனுவலாகப் புலவர் போற்றுவது தற்காலவுலகில் கலிங்கத்துப் பரணியொன்றே. மற்றையன சிந்துகளாகச் சிதறிச் சீர் சிறந்தன்று. இந்நிலையில் தற்காலத் தமிழகத்தெழுந்த நம் புலவர், தந்தனிப் பாசுரங்களால் தலைநின்ற தம் கவித் திறத்தை எவ்வகைப் பாவிலுங் காட்ட வல்லாராயினும், தாந்தொகுத்த பனுவல்கள் பலவும் இசையொடு பாடத்தகும் பாவினப் பாட்டுக்களைக் கொண்டே யாத்தமைத்து வைத்தார். நமது கவி தம் புதுக்கருத்துக்களுக்கும், நாடு மொழி மதங்களொடு குறுகாமல், மக்கள் நலத்தொடு விரிந்த தமது விசால நோக்கத்துக்கும், உலகமுழுதும் பரந்துவந்து நமது நாட்டையுமியக்கும் புதுக்கிளர்ச்சிக்கும் - பொருத்தமிக்குடைய தாகவும், தம் கவியுள்ளங்கனிந்துருகி, அலைத்தெழும் உணர்வு வெள்ளத்தை வழிப்படுத்தி, தமிழ்ப்பெருமக்களை யூக்கி அவர்க்கு ஆக்கந்தருவதற்கு இசையினிக்கப் பாடுவதே கடனென்றறிந்த புலவரக்கருத்து மேற்கொண்டும், இவர் இப்புதுவழி புகுந்து தமிழருக்குப் புதியவுணர்ச்சியும், தமிழுக்குப் புதுப்புத்தணிகளும், தேடித் தந்துள்ளார். பண்டைப் போக பூமியே பொன்னுலகெனக் கண்டுவைத்த பிற்காலப் புலவர் போலாது பாரதியார் சிருஷ்டிகள், புதுநலம் பொதுளி, இறப்பவராய் அமரரெனப் பொய்ப்பெயர் புனைந்து வாழுவார் போக லோகத்தவருக்கு மட்டேயன்றி, கல்லார் கற்றோர், பொல்லார் நல்லோராதியரனைவர்க்கும் இறவாத நறுமண நற்காட்சிதந்து ஐம்புலன்களுக்கும் அனவரதம் புதுவிருந்தருத்தலோடு, மேலுணர்வு மெய்யறிவுந் திளைத்துக் களிக்கச் செய்யுமுண்மைக் கவியுலகங்க ளாகவும் திகழ்கின்றன. எதுகை மோனைகளைத் தேடிப் பொருள் போக்கித் திண்டாடும் பாக்களால் புண்பட்ட தமிழ்மகள், பாரதியார் பாக்களில் ஏறி யினிமைபெறும் பேறு விரும்பி, யெதுகை மோனைகள் இவரைச் சரணடைந்து அபயம் பெற, தொட்டதெலாம் பொன்னாக்குமிவர் பாவன்மை வேதுபெற்று ஆறுதலு மகிழ்வுமடைவாள். பாப்பாப் பாட்டு, முரசுக் கவிகளால் மிழன்று; பள்ளுங்கிளிப்பாட்டும் பயின்று; விடுதலை, தாய்நாடு, பாடி; பாஞ்சாலி சபதங்கூறி; கண்ணன் பாட்டு, ஜீவன் முத்திகளில் வீறிய இவர் கவிதை நலம் பண்ணேறி விண்ணுயர்ந் துலவுவதாகும். சமயம், ஆசாரம், சமுதாயவொழுக்கமாதியவற்றுள் சமதிருஷ்டியும், சர்வாபியனுதாப நிறைவும் இவர் பாத்தொறும் பரவி விரவும். எனைத்தானும் தற்காலத் தமிழுலகில் இவரொத்தார் அரியர்; மிக்காரிலராவர்.
தருமன் சால்பு
பாரதம் வட ஆரியர் காவியங்களுள் ஒன்று. அதை அவர் இதிகாசம் (பூர்வகதை) என்பர். அதில் தென் தமிழருக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. அதன் கதாபாத்திரர்பால் தமிழருக்கு இயற்கை விருப்போ இருக்க வேண்டாம். அவரவர் கொள்கை குறிக்கோள் நோக்கம் செய்கைகளால் சீர்தூக்கி மதிப்பதுவே அறிவும் அறனுமாகும். பண்டிதரும் பாமரரும் தருமனைப் புகழ்ந்தும் துரியோதனனை இகழ்ந்தும் வருகின்றனர். கதைப்பவர் கூற்றை மட்டும் ஆதரவாய் ஏற்றுக் கொண்டாலன்றி, அவரவர் செயலையும் இயலையும் உரைகல்லாய்க் கொண்டு மதிப்பின் அவ்விருவரைப் பற்றி வழக்கிலிருக்கும் கொள்கை சரியாய்க் காணவில்லை. ஆழ்ந்து சூழ்ந்து அலசி அளப்பின், கதை காட்டும் காட்சி வேறும், கதைப்பவர் போற்றும் மாட்சி வேறுமாய்த் தோன்றுகின்றன. ஆயினும் தமிழ்ப் புலவரும் ஆரிய ஆசிரியர் கூற்றை ஏற்று, தருமனைப் போற்றியும், சுயோதனனைத் தூற்றியும் வருகின்றனர். ஆதலால் இங்கு நாம் கதைதரும் காட்சியைச் சிந்தித்துப் புலவர் கூற்றைச் சீர்தூக்கி, உண்மையை ஓரளவு காணமுயல்வோம்.
சுயோதனன் குடிகளுக்கோ குலத்தவர்க்கோ, தொண்டருக்கோ தோழருக்கோ யாதும் தீது செய்யவில்லை; செய்ய விரும்பவுமில்லை. எனினும் தருமன்பால் பகைமை பூண்டான். அது தவறாயின், அவனோடு வீடுமர் முதலிய குலத்தலைவரும், துரோணர் போன்ற ஆசிரியரும் சேரவும், தருமனோடு பகைத்துப் போரிடவும் துணி
வானேன்? அவரனைவரும் அறம் திறம்பாச் சான்றோர் என்றே போற்றப்படுகிறார். எங்கும் அவர் சொல்லும் செயலும் அவரைத் தீயன வெறுக்கும் தூயவ ரென்றே காட்டுகின்றன. அவரனைவரும் ஊரிலும் என்றும் சுயோதனனோடும் வாழ்ந்து, பின் போரிலும் அவன் சார்பாய்த் தருமனோடு பெருகின்றனர். அதற்குத் தக்க நியாயம் வேண்டுமெனத் தோன்றிற்று. அதனால் சிறிதூன்றிச் சிந்தித்து, உண்மையை ஆராய்ந்தேன். நான் கொண்ட முடிவைப் பல ஆண்டுகளுக்கு முன்னமே தருமர் தாயம் என்றொரு கட்டுரையாய் எழுதி வெளியிட்டேன். அதை மறுத்து எனைத் திருத்த யாருமிதுவரை முன்வரவில்லை. ஆயினும் பண்டிதர் எவரும் அதுவே சரி எனத் தழுவி எழுதவும் இல்லை. இப்போது இளைஞர் சிலர் தருமன் பண்புகளைத் தெளிவாக விளக்கி ஒரு கட்டுரை எழுதும்படி வேண்டினர். அவர் பொருட்டு இதனை எழுதலாயினேன்.
தருமன் குருநாட்டில் பாதிப்பங்கு வேண்டினான். சுயோதனன் அதை மறுத்தான். ஆதலால் பாரதப் போர் மூண்டது; பார் அழிந்தது என்பது பண்டிதர் முதல்வாதம். வீடு - காடுபோல, நாடு ஒரு குடும்பத்தார் தம்முள் பங்கிடும் தாயச் சொத்தில்லை. அது அரசன் மூத்த வாரிசுக்கே முழுதுரிமை. பின் பிறந்தாருக்கெல்லாம் வாழ வகைமட்டு முண்டு; அதற்குமேல் எதுவுமில்லை. அறத்தொடு வழக்கும் அஃதே.
சுயோதனன் குருநாட்டரசனில்லை; அவன் தந்தை திருதராட்டிரனே முடியுடை மன்னனாவான். அவன் கண் பார்வையில்லாக் கபோதி - குருடன். ஆகையால் நாட்டை அவன் மகன் சுயோதனன் அவனாளாய் ஆண்டுவந்தான்.
தருமன் சுயோதனன் சோதரனுமில்லை. அவன் இறந்த சிறியதந்தை பாண்டுவின் மகன். தருமனுக்கு நாட்டில் பங்குரிமை உண்டாயின், சுயோதனன் உடன்பிறந்தார் நூற்றுவருக்கும் தாயமுண்டாம். அவர் பங்கைக் கழியாமல், தருமன் நாட்டில் சரி பாதி கேட்ட தெப்படி? சரிபங்கு தருமனுக்கு நாட்டில் உண்டேல், வீடுமர், துரோணர் போன்ற சான்றோர் எல்லாரும் ஒன்று தருமனோடு சேரவேண்டும்; அன்றேல் ஒதுங்கிப் பொதுவாய் விலகல் வேண்டும். அறம் துறந்து, முறை திறம்பி, சுயோதனன் பொருட்டுப் போரில் அவன் சார்பாய்த் தருமனோடு பொருவாரா?
இனி, தருமனே குருகுலத்தார் அனைவருக்கும் வயதில் மூத்தோன்; அதனால் அரசுரிமை அவனுக்கு முதலில் உண்டு என்னில், வயது முதுமைக்காகமட்டும் அரசுரிமை தருவதில்லையே. பின் வழியில் முன் பிறந்தார், முன் வழியில் பின் பிறந்தோரின் நாட்டரசுச் சிறப்புரிமை பறித்தடைய அறமில்லை; வழக்குமில்லை. அரச னிறந்தால் வயதில் முதிய அவன் தம்பியர் இருக்க, இளையரான அவன் மக்களுள் மூத்தவனுக்கே அரசுரிமை இறங்குமன்றி, வயது முதுமைக்காக இறந்த அரசன் தம்பியர்க்கு இறங்காது; இருக்கும் திருதராட்டிரனே அரசன். அவனிறந்தால், அவன் மக்கள் நூற்றுவருள் அப்போதிருப்பவருள் முதல்வனுக்கே அவன் அரசு வரும். தருமன் அவருக்குத் தம்பியுமில்லை. அரசனிருக்க, அவனுக்குப்பின் வரிசையாய் அவனரசுக்குரிய அவன் மக்கள் நூற்றுவரிருக்க, அவன் இறந்ததும் தம்பி பாண்டுவின் புதல்வனான தருமனுக்கு நாட்டில் சரிபாதி உரிமை ஏது? அரசனிருக்க, அவனிறந்தால் நாடாள அவன் முதல் புதல்வன் தானிருக்க, ஒருகால் தானிறக்க நேரினும் தனக்குப் பின் உரிமை உடையார் வரிசையாய் நூறு பேரிருக்க, உரிமை கொள்ளாமலும் கோராமலும் இறந்த சிறு தந்தை மகன் தருமன் நாட்டில் பங்கு கேட்ட தெப்படி? இது தருமன் மண்வெறுப்பு. நிற்க, இனி அவன் பெண் வெறுப்பையும் ஒருவாறு கருதிப் பார்ப்போம்.
துருபத மன்னன் தன்னைப் போரில் வென்ற இளையனான அருச்சுனனுக்குத் தருதற்கென்றே தவம் செய்து கடவுளிடம் வரம் வாங்கித் துரோபதையைப் பெற்றான். அவள் மங்கைப் பருவம் அடைந்தவுடன், அவளை மணப்பதற்கு அருச்சுனனைக் காணவில்லை. உருக்கரந்து புறம் திரிந்த பாண்டவருள் ஒருவனான அவனைத் தேடத் துருபதன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
தனஞ்சயன் தவிரப் பிறர் எவரும் செய்ய வொண்ணா வில்லாண்மை அருஞ்செயல் ஒன்றைக் குறிப்பிட்டு, அதனைப் புரிபவர்க்கே தன் மகளைத் தருவதாகச் சூள் வைத்தான். சூள் களத்தில் பார்ப்பனராய் வேடம் பூண்டு வந்திருந்த ஐவருள் பார்த்தன் சூள் முடித்துப் பெண்ணை வென்றான். பின் அப்போலிப் பார்ப்பார் துரோபதையைத் தன் தாயிருக்கு மிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தருமன் அங்கு முதலிற்புகுந்து, தாம் ஒரு கனி கொணர்ந்திருப்பதாய்த் தாயிடம் சூதாகச் சொன்னான். கொணர்ந்தால் ஐவரும் பொதுவாய் அதனை உண்மின் எனச் சொன்னாள். பிறகு தன் மக்கள் கொணர்ந்தது கனியன்று, கன்னி எனக் கண்டு, குந்தி நொந்து தான் சொன்னதற்கு வருந்துகையில், தருமன் தங்கள் எண்ணமும் அதுவேயாதலால், தாய்வாய்ச் சொல் வீணாகாமல் துரோபதி ஐவருக்கும் பொதுமனைவி ஆவதுவே முறையென்று கூறி, அவளைத் தனஞ்சயனோடு தானுங் கூட மணந்து கொண்டான். அப்பழியைப் பிறர் எவரும் குடிக்கிழிவென்றெடுத்துக் கூறித் தடுக்கத் தருமனுக்கஞ்சித் துணியவில்லை. துணிந்திகழ்ந்த சுயோதனன் தருமனால் கொடியோன் என வெறுக்கப் பட்டான். பிறப்பாலும் வரத்தாலும், துருபதன் சூளாலும் தனஞ்சயன் தாளாலும் அவன் ஒருவனுக்கே உரிய துரோபதி ஒருத்தியைத் தருமன் சூழ்ச்சியால் தனக்கும் உரியளாய் ஆக்கிக்கொண்டான். ஒருத்தியைப் பலர் தமக்குப் பொது மனைவியாய்க் கொள்ளப் பொருத்தமான விதிவழக் கெதுவும் உண்டா? நாடறியப் பீடழிக்கும் அக்கொடிய கூட்டுறவைப் பழிபாவமஞ்சாமல் சதிசெய்து முடித்துக்கொண்ட தருமன் தன் நெஞ்சுரமும் துணிவும் என்னே! இப்படி மண்ணாசை பெண்ணாசை எனுமிரண்டு துறைகளிலும் தப்பான உள்ளமொடு, ஒப்பனைக்கு நல்லவனாய் நடந்தவனைத் ‘தருமன்’ என்பது கருநிறத்தொருவனை ‘வெள்ளையப்பன்’ என்றும், நச்சரவை ‘நல்லது’ என்றும் சொல்லுவது போலாமன்றோ?
சாரதாவின் சட்டமும் சமயவாதப் போராட்டமும்
அகில இந்திய சட்டசபையில் திருவாளர் சாரதா கொணர்ந்த சிசுமண விலக்கு மசோதா, சமீபத்திற் சட்டமாகச் செய்யப்பட்டதை அறியாதாரில்லை. அந்தச் சட்டத்தால் மதங்களே அடியறுக்கப்பட்டு அழிந்து பாழ்படுவதாக ஆங்கிலப் புலமை நிறைந்த பல இந்தியர்கள் கூட நாள்தோறும் பிரலாபித்து வருகிறார்கள். இந்தச் சட்டத்தை உடனே மாற்றாத வரை இது அரசியலையே அடியோடு அழித்துவிட முயற்சி செய்வதாயும், அப்படி அருங்கேடு விளையுமுன்னே தங்கள் பெருமுயற்சியால், தாங்கள் சொல்லுகிறபடி இந்தச் சட்டத்தை ரத்துச் செய்துவிட வேண்டுமென்றும் இச் சமயவாதிகள் அரசாங்கத்தாரை அச்சுறுத்தி மிரட்டுகின்றனர். இந்த நிலையில் இச் சட்டத்தின் போக்கையும் அதை ஆக்ஷேபிப்பவர்களின் நோக்கையும் சிறிது விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது.
முதலில், நன்மை தீமைகளை யாராய்ந்து தத்தமக்குத் தீர் மானித்துக் கொள்ளும் சுதந்தரமற்ற வயது வராத சிறுவர்களை, அவர்களிஷ்டத்தைக்கூடக் கருதாமல் பிறர் அவர்களை ஆயுள் வரை மாற்ற முடியாத விவாத பந்தத்துக் குட்படுத்துவதே தருமம் என்று எந்தச் சமயமாவது சொல்லுமா? அப்படிச் சொல்கிற வைதீக ஹிந்து சமயத்தில் மக்கள் எல்லாரும் மலராத சிறுமிகளை மணக் கயிற்றாற் கட்டித் தீரவேண்டுமென்று கூறவில்லை. ஏதோ பார்ப்பனர்களுக்கு மட்டும் அப்படி ஒரு விதி சுருதியில் இல்லாவிட்டாலும் பின் வந்த சில மிருதிகளில் இருப்பதாகத் தற்கால வைதீக வேடதாரிகள் சிலர் வாதிக்கின்றனர். இவர்களில் வைதீக ஹிந்து சமயிகளான பல பிராமணர்கள் இவ் வாதம் தவறென்றும், மனு முதலான மிருதிகளிலும் கூட ருதுமதி விவாகம் பார்ப்பனருள்ளிட்ட எல்லாருக்கும் சொல்லப்படுவதாயும் விவகரிக் கின்றனர். இவ்வுண்மை எதுவாயினும் ஆகுக. தருமம் கூறும் மிருதி நூல்கள், காலதேச வர்த்தமானங் களை அனுசரித்து யுக்தி அனுபோகங்களால் மாற்றக் கூடியதும் மாற்ற வேண்டியதுமான அனுஷ்டானங்களைச் சொல்ல வந்தவைகளே தவிர, சமயத்துக் கடிப்படையான தத்துவங்களைப் பேசவந்தவை யல்ல. வேதத்தில் இவ்விதியில்லை. நாரதர் முதலிய பிற்கால மிருதிக்காரர் ருதுமதி விவாகத்தையே பார்ப்பாருக்கும் வற்புறுத்தி யிருக்கக் காணுகிறோம். மனுவிலும்கூட ருதுமதி விவாகம் நடந்தால் அது செல்லாதென்றாவது, அது சமய விரோதமான தென்றாவது சொல்லப்படவில்லை. சொல்லுவதாக வைத்துக் கொண்டாலும், மிருதிகளின் முக்கிய நோக்கம் இடம் காலங்களுக்குத் தக்கபடி பொருத்தமாக ஆசாரங்களை மாற்றவேண்டுமென்பதே யாகையால், மனு விதியை மறந்து தற்கால நடுநிலை யறிவுக்குப் பொருத்தமான திருத்தங்களை அமைப்பது சமுதாய நலம் கருதுபவர் கடமையாகும். பல கோடி மாந்தருக்குப் பொருத்தமெனக் கொண்டபிறகு, பார்ப்பனருக்கு மட்டும் சிசுமணம் இன்றியமையாதது என்று ஹிந்து மதம் கூறுவதாகக் கொள்ளுவது அறிவுக்குப் பொருத்மாகாது.
மேலும் சிசுமணம் நல்லதென்று இந்தச் சமயத்தி லெவர்களும் கூடச் சொல்லத் துணியவில்லை. வைத்திய உடற்கூற்று நூல் வல்லவரும், சமுதாய அனுபோக வாதிகளும், நடுநிலை அறிவுடையார் அனைவருமே சிசுமணம் நல்லதில்லை யென்று ஒருதலையாக உடன்பாடு கூறுகின்றனர். சமயத்திற்கும் விவாக வயதுக்கும் இன்றியமையாத தொடர்பு ஒன்றுமில்லை. இந்நிலையி லிவர்கள் அரட்டுக்கு அடிப்படை என்ன இருக்கிறது? அந்நிய அரசியலில் அரசாங்க அதிகாரிகளை அரட்டி மிரட்ட எதுவு முதவும் என்ற பொது உபாயம் தவிர வேறு நியாயம் எதுவும் காணப்படவில்லை. இதுமட்டுமன்று. இச் சட்டமானது சிசுமணத்தை அறவே மறுப்பதாக வாவது இருக்கிறதா? அதுவுமில்லை. சிசுமணத்தை விலக்கச் சிறிதளவு முயற்சி மேற்கொண்டது தவிர இச் சட்டம் அத்தீமையை மறுக்க வரவில்லை. குறித்த வயதுக்குக் கீழ்ப்பட்ட சிசுக்களைப் பிறர் மணச் சடங்குகளுக்குட்படுத்தி விட்டால், பழையபடி என்றும்போல் இச் சிறுவர் மாற்ற முடியாத கட்டுப்பாட்டுக்குட்பட்ட அடிமைகளாக இருக்கும்படி இந்தச் சட்டம் சொல்லுகிறது. வயது வராத சிறுவர் பொருளற்ற தங்கள் சிறு சொத்துக்களை விற்றால் அது செல்லாது. அவர்கள் செய்யும் மற்ற எந்த ஒப்பந்தங்களும் ஊர்ஜிதமில்லை. ஆனால் அவர்களிஷ்டத்தை எதிர் பாராமல் மற்றவர்கள் இந்தச் சிசுக்களுக்கு விவாகச் சடங்கு நடத்தி விட்டால் மட்டும் இவர்கள் என்றும் கட்டுப்படவேண்டும். அச் சிசுமணம் செல்லாதென்று சாரதாச் சட்டம் மறுக்கவில்லை. ஐந்து வயதுச் சிறுவனுக்கு இரண்டு வயதுப் பெண்ணை மணமுடித்ததாக அவர்கள் பெற்றோர்கள் விழாச் செய்துவிட்டால் போதும். சட்டம் அவர்களை உடனே மணமுடித்த தம்பதிகளாகவே கருதிவிடும். அந்தக் கூலிக் கலியாணக் கேலியைக்கூடச் செல்லாதென்று சொல்லச் சட்டசபையும் அரசியலாரும் அஞ்சுகிறார்கள். வயது வராத பெண்ணைப் பிறர் மணம் செய்துகொடுத்து ருது சாந்தியான பிறகும் தன் வயது வந்தவுடன் அப்பெண் தன் விவாகத்தை மறுத்து விலக்கி விடலாமென்று கருணையும் அறிவுமுள்ள மகமதியச் சட்டம் இடம் தருகிறது.
சாரதாச் சட்டம் ருது சாந்தி நடைபெறாத நிலையிற்கூடச் சிசு மணத்தை மறுக்கவில்லை. சிசுக்களை மணம் செய்வித்தால், அக் கொடிய செயலால் வரும் கெடுதிகளை, அச் சிசுக்களுக்கு மாற்றி வைக்க இச் சட்டம் இடம் தரவில்லை. ஆனால் அப்படி மணம் நடத்தின பெரியவர்களுக்குச் சிறிதளவு அபராதம் அல்லது வேலை யற்று உண்டுறங்கியிருப்பதற்கான வெறு மெய்காவல் இச் சட்டத்தில் விதிக்கப்படுகிறது. சிசுமணம் மறுத்தபாடில்லை. அதை நடத்தி வெறியாடும் சிலரை விலக்கச் சிறிதளவு முயலுகிறது. இச் சட்ட மில்லாமலே மணச் செலவு ஆயிரக்கணக்காக விரயமிட்டு மகிழும் வைதிகர்களுக்கு அவ் விழாச் செலவிற்கூட ஒரு நூறு அல்லது இரு நூறு ரூபா கூட்டிச் செலவிடுவதில் வருமாபத்தென்னவோ? இச் சட்டப்படி சிசு மணத்தை முடித்துவிட்டு ஒன்று சொல்ப அபராதம் கொடுத்து விடலாம் அல்லது அரசியலார் செலவில் வேலை யில்லாமல் விருதாச் சோறுண்டு சிறுபோது அரச விருந்தினரா யிருந்து வரலாம். மற்றப்படிச் சிசு மணம் பண்ணுவோர்களுக்கு இச் சட்டத்தால் வருங்கெடுதி ஒன்றுமில்லை. சமயத்தில் அழுத்தமான பற்றுடையவர்களுக்குச் சிறு தொகையைக் கூட்டிச் செலவிடக்கூட மனமில்லையா? அல்லது தங்கள் மதாபிமானத்தை இந்தச் சிறு அபராதத் தொகையளவுகூட விலை மதிக்கவில்லையா? தெரிய வில்லை. முதற் குற்றம் அறியாமற் செய்பவர்களை, அதாவது சிசு விவாஹம் செய்பவர்களை முதிரா அறிவுடையோராகப் பாவித்து இனிமேல் நடத்தாதிருக்க, அவர்களுக்கு அபராதம் மெய்காவல் முதலிய எவ்விதத் தண்டனையுமில்லாமல் எச்சரித்து விட்டுவிட வேண்டுமென்று ஒரு திருத்தச் சட்டமும் கொண்டுவர மசோதா சட்டசபையில் வருகிறது. எதைச் செய்யாமல் தடுக்க எப்போது எவரை எச்சரிப்பதோ? அவ்வெச்சரிப்பால் யாது பிரயோஜனமோ? என்ன விமோசனமோ? தெரியவில்லை. வேண்டுமென்று சட்டத்தை மீறி இரு சிறுவர்களை என்றைக்கும் மீளாத மணப் படுகுழியில் வீழ்த்திய பிறகு அப் பாவிகளை எச்சரித்தாவதென்னோ? எச்சரியாததிலென்னோ? இத் திருத்தச் சட்டமும் வந்து விட்டால் சிசுமண விலக்கு முயற்சியின் முடிவுதான் ஏதோ? உற்றுப் பார்த்தால் இச் சட்டத்தால் சிசுமணம் தடுக்கப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும். அப்படியிருக்க இச்சட்டத்தால் தங்கள் சமயமே அழிந்துவிடுவதாக அழுபவர்களின் மாயத்தை எப்படி மதிப்பது?அன்றியும் சிசு மணத்தால் மட்டும் நிற்கும் சிசுக்கள் மணவாமலிருப்பதனால், அல்லது அச்சிசுமணம் சிறிதளவும் விலக்க முயற்சிக்கப்படுவதனால் அதுபற்றி இறந்துவிடும் சமயங்களிருந்தால், அச்சமயங்கள் இருப்பதினும் விரைவில் இறப்பதுவே நலமன்றோ? சமுதாயத்தை நாசப்படுத்தி மக்களை மணமற்ற நடைப்பிண மாக்கிவரும் சிசு மண உணவால் வாழும் ஒரு மதமுண்டானால் அதையே முதலில் பலி கொடுத்து இந்தியச் சமுதாய நல்வேள்வி நடத்துவதே நன்மையாகும். ஆனால் எந்த மதமும் சிசுக்களை மணப்பலி கொடுக்கும்படி தூண்டவில்லை. அத்தகைய விதிகளை உண்மைச் சமயநூல்களிற் காணவுமுடியாது. மடியா மடமையாற் பீடிக்கப்பட்ட இந்திய சமுதாயத்தில் நடுநிலையறிவற்ற மதம் பிடித்த சில மதவாதிகளை ஒழித்து, வேறு யாரும் இச் சட்டத்தில் எவ்வித நியாய ஆக்ஷபனையும் கூறுவதற்கில்லை என்பதே சிந்திப்பார் எல்லார்க்கும் ஒப்பமுடிவதாம் துணிபாகும்.
தேச நேசமும் தமிழகமும்
தற்போது அகில பாரத நாட்டிலும் புதிய ஆதர்ஸம் எழுந்து பரந்து வளருகிறது. நாடெங்கும் நமதுரிமைப் புத்துணர்வு வேரூன்றித் தழைகின்றது. நாகரிக உலக முழுவதையும் நாசமாக்கி முடிந்த சமீப காலப் பெரும் போரின் பயனாக மக்கள் வருக்கத்தினர் யாவருமே எங்கணும் அடிமை வாழ்வகற்றிச் சுயவுரிமை நாட்டத்தை மேற்கொண்டு முயல்கின்றனர். இத்தகைய முற்றுலக முழுக்கிளர்ச்சி தமிழரைத் தவிர்க்கவில்லை. பிறர்க்கன்றித் தனக்குழையா மெய்த்துறவியான காந்தியடிகளின் அறமுயற்சித் திறம் அயர்ந் துறங்குந் தமிழரையு மெழுப்பி யாடச் செய்கிறது.
நெடிதுநாள் நீர் வறந்த ஆற்றகத்தே புகுந் தொழுகும் புது வெள்ளம், தெளிந்து குளிர்ந்திருப்ப தில்லை. பொங்கிய நுரையும், தங்கிய கழிமுடைக் களியழுக்கும் எங்கணும் பரந்து, வெங்கொதியலை மலைந்து, கரைகடந்து அணுகிய அனைத்தையு மழித்தினாரத்து விரையும். அதில் விழுவார் நீத்தலரிது. அதன் வேகத்தை விரும்பி வீழ்ந்தாழாது, அதன் ஒழுக்கியலும் துறையும் தேர்ந்து அறிவாற்றல்களால் அதையடக்கி யாளுபவருக்கு அது அளவற்ற பயன் தரும். அன்றிச் செம்மாந்து குதிப்பவரைச் சுழியிற் செறித்து அலைத் திழுத்தாழ்த்திக் கொன்று கழியும். அதுவே போல, புதிய தேச நேச வெறியாட்டும் நன்கறிந் தாளுபவரை நல்வழிப்படுத்தவும், திமிர் கொண்டு திரிபவரைத் தொலைத்தொழிக்கவும் வன்மையுடைய தென்பதை மறத்தற்கில்லை.
இத் தொடர்பில் மற்றோருண்மையும் மறவாது போற்றற்குரியது. தீமை விதைத்து நன்மை யறுத்தவரை இவ்வுலகில் யாரும் எஞ்ஞான்றும் கேட்டதில்லை. நன்மை நோக்கத்திற் குதவுமெனத் தீங்கிழைப்பவர், அமிழ்தின் பயன் தருமென நஞ்சருந்தும் வரை யொப்பார். சிங்கி குளிர்ந்தும், கொல்லும். மருந்து கசந்தாலும், பிணி தணித்து வாழ்வு தரும். சிகிச்சை மேற்கொண்டபின், மருத்துவன் ஆணை மறுத்து, அவன்தரு மருந்தினை வெறுத்து, அவபத்தியப் பொருளருந்தின், பழைய நோய் தணியாது வளர்வதுடன், புதுப் பிணிகளுக்குமாளாகி மிக வருந்தி விரைந்து மாள நேரும். தேர்ந்த மருத்துவன் தெளிந்த மருந்தோ, நாளடைவில் நலமே வளர்க்கும்; எவ்வகைத் தீமையுமிழையாது.
தற்காலத் தமிழருக்குத் தேசீய முயற்சி சிறிது புதிய பயிற்சி. இதிற் கைபழகித் தேர்ச்சி பெறுமுன், நாட்டினை யாட்டும் பெருங்கிளர்ச்சி வேக வெள்ளத்தில் விரைந்து பாய்ந்து கைகா லாடித் தோய்ந்து தாழ்ந் தாழ்ந்து ஒழிவது பேதமையன்றோ? நிலை நீர்க் குட்டத்தும் நீந்தி யறியாதார் யாற்று வெள்ளத்தில் துள்ளிக் குதிப்பாரா? தேர்ந்த ஆசானைச் சார்ந்து அவன் சொற்கடவாமற் கைபழகிய பின், ஆற்றிலும் அருங் கடலிலும் நீந்தித் தன்னைக் காப்பதுடன் தப்பிய தம்மவர் பிறரையும் ஏந்திக் கரை சேர்க்கலாம். பழகாமலும், பழகுவதில் ஆசான் பணித்த வரம்பு திறம்பி நல்வழிப்படாமலும் திரிபவருக்குப் பெரு வெள்ளத்தை அடக்கியாண்டு பயன்படுத்தல் கைகூடும் காரியமா? இவ்வாறு திரிபவர், கரையழித்து விரைந்து வரும் வெள்ளத்தைத் தடுக்கவுமியலாது; அடக்கி
யாண்டு பயன்படுத்தற்கோ அவர் அருகரில்லை. இந்நிலையில் அன்னவர் கையறவுகொண்டு அழிந்தொழிவதன்றிப் பிறிது வழி காணமாட்டார்.
புதிய தேசீயக் கிளர்ச்சி தடுப்பரிய வெள்ளமாகி நாடெங்கும் பரந்து வளர்ந்து வருகிறது. இனியிதனை வேண்டாமென விலக்கி விட விரும்பினும், தப்பி நிற்க இடமிந் நாட்டிலில்லை. வருகின்ற புதுப்புனலைப் பயன்படுத்த வழிதேடி யாகவேண்டும்; அதற்குரிய துறைகளிணை முறையாகப் பயிலுதற்கு விரைய வேண்டும். நம்மவரோ நெடுங்காலம் நீரறியா வெஞ் சுரத்தில் வசித்து வந்தோர். பிறநாட்டுப் புது வெள்ளப் பெருக்குகளில் நெருக்குண்டு நீந்தி நன்கு கைவந்த நஞ்சுற்றத்தொரு தலைவன் நமக்கிக்கால் வாய்த்து முள்ளான். தன்னலத்தை அறமறந்து, நம்மவரை ஈடேற்ற அவனணுகிக் கைகொடுத்து நந்நீந்தத் திற நமக்குப் பயிற்றுவிக்க விழைந்தருகே நிற்கின்றான். நாளும் நம்மவரை உய்விப்பதையே தனக்குரிய வேதனமாகக் கருதுகின்றான். நீத்தப் போர் வல்லுநர்கள் பிறரெல்லாம் இவனை முதற் திறத்தவனாய், நல்ல மனம் படைத்தவனாய் வழுத்துகின்றார். துணையற்ற நாமுமிவன் தனைத்தானே தஞ்சமெனக் கொண்டு விட்டோம். என்னினியும் நாமிவன் சொற்
கேளாமல், அறத்துறைகள் அவன் முறையிலாளாமல், வாழாமல் மாளுகின்றோம்.
துணையின்றி மெலிந்துள்ளோம், வலியுமில்லே மாகிய நம்மவருக்கு அறத்துணையன்றி ஆக்கவழி வேறுமுண்டோ? விடுதலை (மோக்ஷத்தை)யைத் தரும் கைம்மாறு தருவதாயினும் பிறர்க்கின்னா செய்யாமையே மாசற்றார் கோள் என்று வற்புறுத்திய தமிழ்வேதம் பன்னூறாண்டுகள் பயின்றுள தமிழகத்தில், அவ்வடிபட்ட தமிழ்ச்சுருதி மருந்தையே காந்தியடிகள் நம்மவருக்கு மீட்டு மூட்ட முன்வந்துள்ளார். எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தானும் மாணா செய்யாமை தலையறமாக நாம் கையாள வேண்டுமென்று அடிகள் கூறின், அது பண்டைத் தமிழ் மூதற மாவதேயென விரைந்து மேற்கொள்ளாமல் மயங்குவானேன். இவ்வறத்தைச் செவ்வனே கையாண்ட பண்டை நாளில் தமிழர் தனியரசு நடத்தியதுமன்றி, அக்கால உலகனைத்தும் தமை வியக்கத் தலை சிறந்து ஓங்கி வாழ்ந்தார். பிறகதனை நெகிழவிட்ட இடையிருட் காலத்தேதான் நம்மவர் நாட்டுரிமை நாகரிக வாழ்வுகளை யிழந்து மிலேச்சருக் கடிமையானார். நம்முரிமை நலங்களை நாம் பெறுதற்கு மீட்டுமித் தமிழ்த் தொல்லை நல்லறத்தை நாடெங்கும் தழைவிக்க விழைய வேண்டும். அடிகளுமிங் கதனாட்சி ஒன்றனையே வேண்டுகின்றார்.
உண்மை யிதுவாகவும், தேசத் தொண்டியற்றுவதாகக் கூறி, இத் தமிழறம் திறம்பி நாட்டின் நன்மைக்கு அயலில் ஏதிலார் மாட்டுஇயன்றாங்கு இன்னா இயற்றுவதும் கடனெனப் பிதற்றுவாரும் சிலருள ராகையால், உண்மைத் தேச நேசத்திற்கு முதற்படியும் கடைப்பிடியும் இன்னா விலக்கே இன்றியமையாததாகு மென்பதை ஈண்டு முதலில் வலியுறுத்த விடை கொள்கின்றேன்.
என்றும் எந்நிலையிலும் யாருக்கும் எனைத் துணையும் தீங்கிழைப்பதன் பயன் தீமையே யாவதன்றி நன்மையாகாது. பிறர்க்கின்னா நமக்கு நலமென்பார். பிறர்க்குவிடம் நமக்கமு தென்று மனப்பால் குடித்து மாய்வார். ஒரோவழி நலம்போலத் தோற்றுமேனும், இன்னாமை யாண்டும் இன்னாமையையே விளைப்பதாகும். அறனறிந்து தீதின்றி வாராத எப்பொருளும் இனிமையாவது. கடனறிந்து தேசத் தொண்டு மேற்கொள்ளும் சான்றோர் எவர்க்கும், தெய்வத் தொண்டருக்குப் போலவே, நல்லவை எல்லாம் கடனென்ப. தீயார்மாட்டும் தீங்கிழைப்பது, மெய்க்கடன் மறந்து அறங்கொல்லும் பெருமித வெறியேயாகும். நம்மோடொவ்வார், நம்பகையாவார் என்று கொள்ளும் குறு நோக்கம் தமிழகங்கொள்ளாத சிறு நோக்காம். அறத்திற்கே அறம் துணையாம் என்பார் அறிவிலார்; ஆராயின், மறத்திற்கும் கோடாத நல்லறமே இறவாத் துணையாக நிற்கும். கயவரையும் கயமைகளைந்து கனிவித்து நல்வழிப்படுத்துவது இன்னா விலக்கிய இனிய நல்லறத் துறையேயாகும்.
மது விலக்கல், அந்நியத்துணி மறியல் முதலிய தேச நற்றொண்டுகளிலும், வழிப்படா வன்கணாளரையும் அடைவில் வயப்படுத்தற்குரிய வழி இன்னா விலக்கிய இனிய முறைகளேயாகும். கடுஞ் சொல்லும் கொடுஞ் செயலும் கெடுந் தொழிலாளரைத் திருத்தும் நன்னோக்க நிறைவுக்கும் கேடே தருமன்றி இனிதுதவாது. இப்போது நாம் வெறுக்கும் தீநெறி யொழுகுவாரும் நம்மவ ரென்பதை நாமறக்கொணாது. அடிகள் பறையடிக்கு முன் நம்மிற் பலரு மிவர்போலவே பல துறைகளில் நாட்டினலத்தொடு நம்மறமும் மறந்து திரிந்தவரே என்பதை ஞாபகத்தில் அனவரதமிருத்தல் வேண்டும். ஏதிலருக்கும் தீது கருதுதல் தீதேயாகும். அப்படியிருக்க நம்மவர் தவறு பொறாமல் நாமே யவர்க்கின்னா விளைப்பது அறிவன்று; அறமுமன்று. இந்தியாவின் வட பகுதிகள் சிலவற்றுள் சில இளைஞர் அறந் தடுமாறி நாட்டுத் தொண்டுக்குப் பொருள் தேடுபவராய் ஆறலைத்தும் தனிகர்மனை புகுந்து கொடுமையாற்றிப் பணம் பறிமுதல் செய்தும் வருவதை நாமறிவோம். இதுவேயுமன்றி நம்மை அடிமை நிலையி லிருக்கவைக்கு அந்நிய ஆட்சி வெறுப்பின் பயனாக அவ்வாட்சிக்குரியார் அந்நியர் சிலரை மறைந்தும் வலிந்தும் உயிர்வௌவும் வன்கண்மை தேசத்தொண்டெனக் கருதி மருளும் சிறு சேவகர் சிலரைப்பற்றியும் அடிக்கடி கேட்கின்றோம். சிந்தியாது சிலபோது இன்னவரைப் புகழ்ந்தும், இவர் தீத் தொழில்களையிகழாமலும் இருக்கின்றோம். இத்தகைய மறத் தொழில்களால் நாட்டுக்கு விடுதலை நாள் விடியாது அகன்று வருவதுமன்றி, நமது சமுதாய வாழ்வும் நலிகின்ற தென்பதைத் தெள்ளறிவாளர் தெருட்டி வலியுறுத்துவது கண்டேனும் தெளிந்து தேர்தல் வேண்டும். அனுபவத்
தோடறிவாலும் தூய பெரியரென நாம் கண்டுகொண்ட அடிகளின் ஆணை மீறுவது அறக்கொலையும் ஆக்க மழித்தலுமாகு மென்பதைத் தெளிதல் வேண்டும்.
திருவள்ளுவர் கடவுட் கொள்கை
தற்கால ஆராய்ச்சியாளர் சிலர் திருவள்ளுவரைப் பறைக்குலப் பண்டிதராக்குவதோ டமையாது, அவரை அருக மதத்தினர் என்று கூசாது பேசுகின்றனர். என்னளவில் மதம் பற்றி விருப்பு வெறுப்பு எதுவுமில்லை என்பதை யாவரும் அறிவார். எனினும் உண்மையை உணர்ந்தவாறு உரைப்பதே என் வழக்கம். அண்மையில் என் பார்ப்பன நண்பரொருவர், வேறு ஒரு நல்ல புலவர், வைதிகரே வள்ளுவரை அருகர் எனச் சான்று காட்டிக் கூறியதாயும், நான் அவரை விரிந்த நோக்குடைய சமதரும வைதிகக் கொள்கையின ரென்று எழுதியிருப்பதை மாற்றவேண்டும் என்றும் என்னிடம் வற்புறுத்தினார். வள்ளுவர் சமண ரென்பதற்குத் தக்க சான்று கிடைத்தால், என் கருத்தைத் திருத்திக் கொள்ளத் தடை கிடையா தாகையால் புலவர் கூறிய சான்றைக் கூறக் கேட்டேன். நண்பருக்குப் புலவர் கூறியது புதியதொன்று மில்லை. மலர் மிசை ஏகினான் - எனக் கடவுளைத் திருக்குறளில் வள்ளுவர் கூறியிருப்பது அருகமத மரபு. அதனோடு எண்குணத்தான் என இறைவனைக் குறள் பேசுவதும் அருகச்சார்பைச் சுட்டும். இவ்விரு கூற்றுக்களும் வள்ளுவர் சமணர் என்பதை வலியுறுத்துவதால் அதை உடன் பட்டுத் தீரவேண்டும் எனப் புலவர் வாதித்ததாக, என் நண்பர் வேதியர் வருந்தக் கேட்டேன்.
அவ்வளவில் தேவர் குறள் நின்றாலுமே, அக் கூற்றுக்கள் திருவள்ளுவரைச் சமணராக்கி விடமாட்டா. முதலாவது, அன்பர் இதயத்தாமரையில் சென்று தங்குவன் இறைவன் - என்பது எல்லாச் சமயிகளும் பேசும் பொது மரபு.
1. மாதிவர் பாகன், மறைபயின்ற வாசகன்,
மாமலர் மேய சோதி (திருவாசகம்)
2. தார்தந்த என்மனத் தாமரையாட்டி (கம்பர்)
3. வெள்ளை உள்ளத் தண்டாமரைக்குத் தகாது கொலோ (சரசுவதி அந்தாதி)
4. பூத்த என் இதயப் புண்டரீக மலரில்
எந்தையோடு மினிதமர்ந்த ஒரு செல்வியை
5. வெறுப்பொடு விருப்பினையறுத்தவர்,
உளத்துமலர் பதும பதத்தானை
(முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்)
6. பள்ளம்பாய் மழை வெள்ளத்திற் பத்தர்தம்
உள்ளத் தூமலர் உள்ளுவந் துறைகுவன்
எள்ளருங் குணத்திறை, மறைக்கெட்டிலன்
வள்ளல் தாளை வணங்க மறக்கிலம்
எனப் பல பாக்களிலும் புலவர் கூறுவதால், மலர்மிசை ஏகுதல் அருகனுக்குத் தனி உரிமையாகாது.
மேலும், மலர்மிசை ஏகினான் என அருகனைச் சுட்டுவதுமில்லை. பூமேல் நடந்தான் என்பதே சமணர் தம் கடவுட் கிட்ட பெயர் என்பதை அம்மதத்தவர் இயற்றிய தமிழ் நிகண்டுகளிற் காணலாம். வள்ளுவர் காலத் தமிழகத்தில் சமணமதம் போதுமளவு பரவியதாக அக்காலச் செய்யுட்களால் தெரியவுமில்லை. ஆகையால் விதவா இப் பொதுப் பெயரால் அருகனே குறிக்கப்பட்டதாய்க் கொள்ளற்கில்லை.
இனி, எண்குணத்தான் என்பதும் அருகனுக்குப் போலவே, சிவனுக்கும் சமயப் பெயர். அது அருகனையே சுட்டுமென ஒருதலையாய்த் துணிய இயலாது. அன்றியும் வள்ளுவர் ஒரு மதத் தெய்வத்தை விதந்து சுட்டும் குறுகிய மனப்பாங்குடையரல்லர் - என்பது யாண்டும் கடவுளை அவர் சமயகோடிகளெல்லாம் தந்தெய்வமாகக் கொள்ளும் பொதுப் பெயர்களால் மட்டும் சுட்டிப் போவதால் விளங்கும். ஒன்பதாம் குறளில் எண்குணத்தான் என்பதும் எண்ணற்கரிய குணச்செல்வனான பொதுக் கடவுளைக் குறிப்பதன்றி, ஒரு தனிமதத் தெய்வச் சுட்டாகாது. எட்டுக் குணத்தன் சிவன் என்பது பிற்காலச் சைவர் சிலர் கடவுட் பண்புகளை அறுதியிட்டு அளந்து வரையறுக்கத் துணிவார் கூற்றாகும்; பண்டைச் சிவநெறிச் செல்வர் கொள்கையாகாது.
இன்னும் எண்குணத்தன் என்பது ஒரு மதத் தெய்வத்துக்கும் தனி உரிமைப் பெயரன்று. எண்ணருங் குணத்திராமன் என வைணவரும் தங்கடவுளைக் குறிப்பதறிக. மேலும் திருவள்ளுவர் தம் குறளில் எண் என்பதை, எட்டெனச் சுட்டும் எண்ணுப் பெயராக்காமல், எண்ணும் (நினைக்கும்) இயல்பைக் குறிக்கவே வழங்கும் மரபும் அறிக. எண் சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும், பெண் சேர்ந்தாம் பேதைமையில் என்று அவரே பின்னும் பேசுதல் காண்க. ஆகவே, புலவர் காட்டும் சான்றுகள் வள்ளுவரைச் சமணராகக் கொள்ளப் போதாமை வெளிப்படை.
அதற்கு மாறாகத் திருக்குறள் இயற்றிய தெய்வப் புலவர் வேதத்தை ஆதரிக்கும் விரிந்த பொது நோக்குடைய பெரியார் என, அவர் நூலே தெளிக்கக் காணுகிறோம். வேத வேள்வியை நிந்தனை செய்வது சமணர் கோள் எனத் தேவாரம் கூறுகிறது. இவ்விரண்டையும் வீடு பெறும் வழிகளாய்ப் பௌத்தர் உடன்படாவிடினும், இவற்றைப் பழிப்பதும் அவர் வழக்கமில்லை. சமணரோ இவ்விரண்டையும் யாண்டும் வெறுத்துப் பழிப்பதை விரதமாகக் கொள்ளுவர். திருக்குறள் இவ்விரண்டையும் பழியாததோடு, பாராட்டவும் பார்க்கின்றோம்.
1. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும் - குறள் 28
2. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன் மறப்பர்
காவலன் காவான் எனின் - குறள் 560
3. மறப்பினும் ஓத்துக்கொள லாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் - குறள் 134
இக்குறட்பாக்கள், வேதம் மறக்க வொண்ணாதது; அதை ஓதல் உலக நன்மைக்கு இன்றியமையாதது; ஓதமறப்பது உலகத்துக்குக் கேடு பயக்கும் பொல்லாங்காம் எனக் கூறுகின்றனவே இவ்வாறு ஒரு சமயர் வேத வேள்விகளைப் பாராட்டுவாரா? மாட்டார். அன்றியும், சமணர் வெறுக்கும் வேள்வியையும் குறளில் வள்ளுவர் பாராட்டுகிறார்.
“செவி உணவிற் கேள்வியுடையார் -
அவிஉணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து” (413)
அவி - வேள்வியில் மந்திரத்துடன் பலியிட்டு அவித்துப் படைக்கும் பிராணியின் இறைச்சி ஆகும். அதை உண்ணும் தேவரை வானில் வசிக்கும் ஆன்றார் என்று வேதம் புகழும். அவரோடு ஒத்த பரிசும் பெருமையும் உடையார் நிலத்து நிரம்பிய கேள்வியுடைய ஆன்றார் என்று வள்ளுவர் குறள் பாராட்டுகின்றது. இது வைதிகர் கொள்கை. சமணரால் வெறுக்கப்படுவது. இன்னும், அவி சொரிந் தாயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செகுத்
துண்ணாமை நன்று - என்பதும் வேள்விப் பாராட்டேயாகும். இக்குறள் வேள்வியைப் பழிப்பதாகப் பேசுபவரும் உளர். அவர் ஒப்பணியின் இயல்பறியாதவர் என்பது தெளிவு. உவமை உயர்ந்ததன் மேற்றே எனத் தேற்றேகாரத்தால் வலியுறுத்தப்படுவது. ஒன்றைக் கொன்று அதன் ஊனை உண்ணாமை நன்று என்று கூற வந்த வள்ளுவர், அதை வலியுறுத்த மற்றும் ஒரு நன்றைச் சொல்லி, அதனினும் உயிர் செகுத்துண்ணாமை நன்றென்றார். ஒன்றைப் பலியிட்டு அதன் ஊன் உண்ணும் வேள்வி தீதெனல் வள்ளுவர் கருத்தாயின், அத்தீதைக் காட்டி அதனினும் உண்ணாமை நன்றெனக் கூறமாட்டார். உயிர் செகுத்து அதன் ஊனை யாக பலியாக உண்ணுதல் நன்றென்று கொண்டாலன்றி, உண்ணும் தீமையினும் உண்ணாமை நன்று என்பதற்குப் பொருளில்லை. கற்கண்டு வெல்லத்தினும் நல்லது என்பது ஒப்பணி; வேம்பினும் கற்கண்டு இனிக்கும் என்றும், நெருப்பினும் சந்தனம் குளிரும் என்றும் யாரும் கூறார். ஒத்த இரண்டில் அறிந்த ஒன்றைவிட மற்றது அவ்வொப்பியலில் சிறந்தது என்பதே உவமை மரபாம். மாறுபட்ட பொருளால் ஒப்புக் கூறுதல் மரபும் இயல்பும் அன்றே. அதனால், வேள்விப் பலியான அவி உண்ணுதல் நன்றுதான். எனினும், நன்றாகும் ஆயிரம் வேள்வியினும், ஒன்றைக் கொன்று அதன் ஊன் உண்ணாமை நன்று என்பதே இக்குறளின் பொருள் என்று துணிதலே முறைமையும் நூன்மரபும் ஆம். அதற்கு மாறாகப் பொருள் கூறுதல் குதர்க்கம் ஆகும்.
ஆகவே, நேர்மையும், உண்மையில் ஊன்றிய ஆர்வமும், சமயச் சார்பால் நெகிழாமல் நுனித்தாராய்வார்க்கு, வள்ளுவர் புறமதத்தர் அல்லர்; விரிந்த பொது நோக்குடைய வேத வழக்கொடு முரணாத தமிழ் நெறியினரே என்பது தெளிவாகும்.
சுதந்திர இந்தியாவில் தமிழர்
ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆங்கிலேயர் ஆட்சியிலும், அதற்கு முன் முகமதியர் ஆதிக்கத்திலும் உரிமையற்ற குடிகளாக இருந்த நாம் 1947 ஆகட் முதல் அயலவர்க்கடிமை நிலை மாறி, சுய ஆட்சி அடைந்து, சுதந்தர மக்களாக வாழ்கிறோம் என்று பெருமிதம் அடைகிறோம். ஆங்கிலேயர் நீங்கிய அந்நாளைக் கொண்டாடுகிறோம். உண்மையில் அடைந்த சுதந்தரத்தின் மாற்றும், எடையும் என்ன? அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியில் உடுப்பதையும், உண்பதையும் தடுப்பவரில்லை. உலகப் பெரும்போர் இரண்டிலும்கூட உணவுக்கும், துணிக்கும் பஞ்சமில்லை. நம்மவர் ஆட்சியில் சொந்த நிலத்தில் பயிரிட்டெடுத்த மாசூலையும் நாம் வயிறார, வேண்டுமளவு உண்ண ஒண்ணாமல், அரை வயிற்றுக்கு அவர் அளக்கும் படியை ஏற்று, மீதம் அனைத்தும் அரசியல் ஏவலர்க்கு அவர் தரும் விலைக்கு அளந்துவிடவேண்டும். நம் நாட்டில் விளைவுக் குறைவு மில்லை; வீட்டில் நமக்குத் தேட்டை யிருந்தும் போதியது உண்ண உரிமையுமில்லை. நாள்தோறும் பட்டினி உரிமை ஒன்றையே காண்கிறோம்.
இனி, புதிய சுய ஆட்சியில் பழைய தமிழைப் பயிலாமல் விட்டு, புதிய இந்திப் பொதுமொழியே எல்லாரும், எங்கும், எப்போதும் பயிலவேண்டுமென்று திட்டவட்டமாய்ச் சட்டமும் வருகிறது. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. சட்டம் வரு முன்னமே, நம்மை ஆளுபவர், பள்ளியில் பிள்ளைகள் எல்லாரும் இந்தியைக் கட்டாயப் பாடமாய்ப் படிக்கும்படித் திட்டமிட்டு விட்டார்கள். மறுக்க முயலும் மனவுரனுடைய தமிழரில்லை. இருந்தாலும் கட்டுப்பாடாக எதிர்க்க ஒரு அமைப்பும் தமிழ்நாட்டில் இல்லை. உணவு உடையோடு மொழியிலும் தடை. இவை, சுய ஆட்சியில் தமிழர் அடைந்த சுதந்தரத்தின் அளவுகள்.
ஆங்கிலராட்சியில், அரசியலார் ஆணைகளை ஆராய்ந்து நீதித் துலையில் நிறுத்து, தவறு கண்டால் மறுத்து, மக்களுரிமை பேண மன்றம் (கோர்ட்)களுக்கு அதிகாரமுண்டு. சுதந்தர இந்தியாவில் நம் அரசியலார் ஏற்படுத்திவரும் புதுச் சட்டங்கள் எல்லாவற்றிலும், ஆளுபவர் அமுல் திட்டங்களை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லாமல் எடுக்கப் பட்டிருக்கிறது. இதுதான் பூரண சுய ஆட்சி என்றால் நாம் யாரை நோகிறது?
அந்நியர் வலிமையால் அடங்கி வாழும் அடிமை நிலை மக்களுக்கு இழிவு என்பதை மறுப்பாரில்லை. எனினும், ஆளுவோர் உரன் குறைவாலோ, பிற காரணங்களாலோ அவர் ஆதிக்கம் தளர நேரிடும் பொழுது அடக்கப்பட்டோர் ஊக்கத்தால் திரும்பத் தாமிழந்த உரிமையைப் பெறலாகும். அதனால் பிறர் அடலால் வரும் அடிமை நிலையை ஒரு காலம் விடல் கூடும். ஆனால் உள்ளம் ஓய்ந்து, உரன் மாய்ந்து, தாமே பிறர்க்கடிமை யாவாருக்கு உய்தி ஏது? ஒன்றுமில்லை யல்லவா?
பண்டைச் சான்றோர் கண்டு கையாண்ட கடவுள் வழிபாடுகள் யாவும் சிவநெறி எனவும், மெய்நெறி எனவுமே தமிழ்ப் பெயரால் பழந்தமிழ் நூல்களில் பேசப்படுகின்றன. பிறகு சிவநெறி, சைவ சமயமாகி யிருக்கிறது. சுதந்தரம் சௌந்தரியமாவதும், சகம் சௌக்கியமாவதும் வடமொழியில் தத்திதாந்த முறையாகும். வான்மீகர் இயற்றியதை வான்மீகம் என்பதும், அம்முறையாம். தமிழில் ஆகுபெயர் உண்டு; ஆனால் சொல் உருவம் மாறாது. வள்ளுவர், கம்பர் செய்த நூல்களை அவரவர் பெயரால் வழங்கலாமே தவிர, வள்ளுவம், கம்பம் என்றழைக்க யாரும் துணியார். உண்மை இவ்வாறிருக்க சங்கத் தொகை நூல்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த தமிழ்த் தொல்காப்பியர் நூலைத் தொல்காப்பியம் எனவும், அவரையே ஆரியப் பிராமணர் என்றும் யாரோ கட்டிய கதையைத் தமிழ்ப் புலவர் ஏற்று வழங்கும் மனப்பான்மையை என்என்பது? இது போதாமல், அகத்தியர் என்றொரு வைதிகப் பார்ப்பனர் வந்து வரன்முறையற்ற தமிழுக்கு முன் இல்லாப் புது இலக்கண வரம்பு விதித்து முதல் நூல் இயற்றித் தந்ததாயும், தமிழ்த் தொல்காப்பியர் அவர் மாணவருள் ஒருவரெனவும் கதையும் கட்டினர். அதையும் புலவர்கள் சிலர் ஆராயாது ஏற்றனர்.
அதற்கு நேற்றையப் பேர் போன உரையாசிரியர் கற்பனையும் பார்ப்பனீயப் புனை கதைகளுமன்றி வேறு யாதொரு ஆதாரமும் பழைய தொகை நூல்களிலில்லை. அகத்தியர் என்ற பெயர் கூட அந்நூல்களில் இல்லை. இது தமிழருள் நூலியற்றவல்ல புலவரில்லை; ஆரிய னொருவன் வந்து நூல் செய்து தந்த பிறகே மொழி திருந்தியது என்று பிறர் தமிழைப் பழிக்கச் செய்த சூழ்ச்சியாகும்.
உலக மொழி எதிலுமில்லாத உயர் அறநூலை இயற்றித் தமிழுக்குத் தனிப்பெருமை தந்த வள்ளுவரை ஒரு புலைச்சிக்கும் ஒழுக்கமற்று இழுக்கிய ஒரு பார்ப்பன வழிப்போக்கனுக்கும் தவறாகப் பிறந்த மகனாகப் பழிக்கும் இழிகதையைக்கூடக் கட்டி விட்டிருக்கின்றனர். இன்னும் அவ்விழிபிறப்பை நினைவுறுத்த முப்பிரி நூலும், உச்சிக் கொண்டையும் வள்ளுவர் உருவத்திற்குத் தீட்டி வருகின்றனர். இது எத்தகைய கொடுமை?
இன்னும் மூலத்தானத்தில் புகுந்து வழிபட சிவன் கோவில்களில் பார்ப்பனச் சுமார்த்தருக்கே தனி உரிமை; மற்றவர் யாவராயினும் நுழையலாகாது, வாயிலில் தடைச் சங்கிலி தொங்கும். அம்மட்டோ? பூசை முடிந்ததும், சுமார்த்தர் அகத்தே சாமவேதம் பாடி அவருக்கு விபூதியும் கொடுத்து முடிந்த பிறகுதான் தமிழில் பாசுரம் பாடவும், தமிழர் பிரசாதம் பெறவும் கூடும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என முழங்கும் தமிழ் மறையை, தமிழை இகழ்ந்து தமிழரை தாச சூத்திரராகப் பழிப்பவர் இந்நாட்டில் இன்றும் இருக்கின்றனர்! வலியற்ற அவருக்கஞ்சி அவரைப் பூதேவராக வழிபடும் தமிழரும் இருக்கின்றனர்! இது பார்ப்பனர் உடல் வலியால், படை பலத்தால், அடக்குமுறையால் தமிழருக்கு வந்த அடிமை நிலையன்று. அவர் புகுத்திய முன் இல்லாத சாதி வேறுபாட்டை நம்மவர் மேற்கொண்டதோடமையாது, அவரின் நான்கு வகுப்பைத் தானப் பெருக்கால் நாலாயிர மாக்கி நமக்குள் மாறாத பகைமையை வளர்ப்பதால் வந்த விளைவு அல்லவா?
கடைசியாக, இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் நமக்கென்ன என்ற பழமொழி பொதுமக்களின் உறைந்த உள்ளக்கிடைக்குப் போதிய சான்றாகும். அதற்குமேல் மக்களைத் தட்டி எழுப்பித் திருத்த வேண்டிய புலவரே இலக்கியங்களிலும் இவ்விழி வுணர்வை உறுதிப்படுத்துவரேல் அச்சமுதாயத்துக்கு வாழ்வு முயற்கொம்பாகும் அல்லவா? தொகைச் செய்யுள்களுக்குப் பிறகுள்ள பிரபந்தங்களுள் தலைசிறந்தது கம்பர் காவியம். அதில் அவர் இராமர் ஆளிலென்? இராக்கதர் ஆளில் என் வையம்? எனத் திருத்தமாக, நல்ல தமிழில் அப்பழியைக் கூசாமல் கவிதையால் முத்திரையிட்டு விட்டார். என் செய்வது? உயிர் நீப்பர் மானம்வரின் என்ற பழந்தமிழர் கொள்கைக்கு முற்றிலும் மாறாக எது செய்தும் எப்படியும் வயிறு வளர்த்தால் போதுமென்று தமிழர் எண்ணும்வரை, பேசும்வரை, நடக்கும்வரை தமிழருக்கு உய்தியில்லை. கடவுளும் உயிரும் போலவே உலகும் நித்தியம் என்ற சமயக் கொள்கைக்கே மாறாக, உலகம் பொய், வாழ்வாவது மாயம் எனப் பாடும் சோம்பல் வெறி தணிந்து, தன்னம்பிக்கையும் மானமும் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையா அடிப்படை எனத் துணிந்து, எல்லாத் துறையிலும் முயற்சி மேற்கொண்டு ஊக்கத் தொடங்குவதே ஆக்கம் தரும். பிறர் யாரையும் குறை கூறாமல் நம்மையே நாம் தூண்டி, எல்லாத் துறையிலும் உழைப்பால் வெற்றி பெறும் உரம் நமக்கு வேண்டும். அதுவே நாம் பெறும் உண்மைச் சுதந்திரமாக இருக்கும். வாழ்க தமிழ் மொழி!
ஜாதிமத வேற்றுமையும் சமுதாய ஒற்றுமையும்
பாரதபூமியிற் பல்வேறுபட்ட சமயங்களும் ஜாதிகளும் இருக்கின்றன. அதனால் பாரத சமுதாயம் ஒன்றுபட்டுயர்வாழ்வெய்த முடியாது - என்று பலர் சொல்லக் கேட்கிறோம். இப்படிச் சொல்லுபவர் நம் நன்மை விரும்பாத பிறநாட்டுப் பேதையர் சிலர் மட்டுமல்லர்; நம்மவருள் ஆங்கிலவுணர்ச்சி முதிர்ந்த மேதையர் பலருமுளர். இது முதுக்குறைவில்லார் சழக்குரையேயா மென்பதைச் சிறிதாராய்வாம்.
ஜாதிமத வேற்றுமைகள் நமது நாட்டிலுண்டு. எந்த நாட்டி லில்லை? சமுதாய வொற்றுமையிலும் நாட்டின்மீ தன்பிலும், தலைசிறந்தனவாகக் காணப்படு மன்னிய ஐரோப்பியநாடுகளேனு மித்தகைய வேற்றுமைகளை விலக்கிநிற்கின்றனவா? ஏசுமதமன்றி, இதரமத மறியாத ஐரோப்பியர் சமயச்சண்டையற்றமைதியுற்றனரா? கிறிதுசமயம், அரமீனியம் கிரேக்கம் உரோமக்கோவில் என்ற பழம்பிரிவுகளோடு மமையாமல், ஆதிரோமமதம் திருத்தப்புத்தேசுமதம் எனப் பிளவுபட்டு, இவ்வொரு சமய விருவகுப்பினருந் தம்முட்கொண்ட மாற்சரியத்துக்கும் மதவெறித் தீச்செயற்கொடுமைகளுக்கும் நாகரிகமற்ற மிலேச்சர் சரிதைகளிலு மீடுகாண லரிதாகும். இக்கிறிதவர் சமயப் போராட்டங்களை நோக்க, நமதுநாட்டுச் சைவ சமணத் தென்கலை வடகலைச் சண்டையெல்லாம் குற்றமற்ற விளையாட்டாக் கொள்ளவேண்டும். சமயவெறி தலையேறி மதவாத நோய் மலிந்த காலத்திலும், நமது
நாட்டிற் சில மடங்களெரி யுண்டதும் அற்பமான சிறுசச்சரவு சிலவிடங்களில் நிகழ்ந்தது முண்டே தவிர, ஒருசாரார் பிற மதத்தரைப் பிடித்துப் பிணித்துயிருடன் தழலிலிட்டு, எரிபவர் பரிபவத்தை அருவிருந்தாகக்கொண்டு குழாங்கூடி விழாக் கொண்டாடினதில்லை. கொள்கைவேறுகொண்டதைக் கொடுங் குற்றமாக்கி, ஊர்கூடிக் கல்லெறிந்து கொன்றதில்லை. பட்டினிவைத்துக் கோபமூட்டிய கொடு விலங்குக் கிரையாக்கி மகிழ்ந்ததில்லை. சில சமயக் கோட்பாடுகளிற் சம்மதம் தரச் சகியாத பழுதற்ற வொழுக்கமுடைய சமுதாய சேவை மேற்கொண்டான்ற மூதறிவாற் சான்றோருக்குரிய தண்டனை, அவரைத் தழலிலிட்டுப் பிறர் விழவெடுக்க வேண்டும் எனச் சட்டங்களேற் படுத்தியதுமில்லை. இவையெல்லாம், பலவேறு சமயம் புகா ஒருமதமுடைய கிறிதவ சமுதாயச் சரிதைகளிற்றான் காண் கின்றோம். இக்கொடுமைகளெல்லாம் ஒருநாட்டார் பிறநாட்டாருக்குச் செய்தனவாக் கருத வேண்டாம். ஒருநாட்டில் ஓரரசியலின் கீழ் ஒன்றுபட்ட குலாசாரமுடையாரே சமயப்பற்றின் காரணமாகத் தத்தமக்குட் செய்தனவேயாகும். பலபட்ட வரசியல்களின் கீழ்ப் பல்வேறு சமயங்களும் வேறுபட்ட ஜாதி யாசாரவநுஷ்டானங்களும் தொன்றுதொட்டுப் பரவி நின்ற பாரதப் பழநாட்டிலோ நாள்தோறும் அகப்பிரிவுகளும் புறக்கிளைகளும் முளைத்துத் தழைக்க வைதிகமதம் நின்று நிலவியது. அதுமட்டுமல்ல; பல புறச்சமயங்களும் வந்து புகப்புக, புதியரை விருந்தினராகத் தழுவிச் சற்காரங்களா லாதரித்தும், ஆதரத்தா லவரைப் பிணித்தும் நாளடைவில் நம்மவராக்கிப் பாரதசமுதாயம் பழியற்றுச் சிறந்து நிற்கின்றது.
இவ்வாறு, ஒருமதமேற்கொண்டிருந்தும் சமயச் சண்டைக் கொடுமைகள் மிகுந்த ஐரோப்பிய நாடுகளிற் சமுதாயவொற்றுமை யுணர்ச்சி தழையாதிருக்கவுமில்லை; மதமாற்சரிய வேறுபாடுகள் மிகவுங் குறைந்து அனுதாப ஆதாரத்துட னொன்றிப் பல நீண்ட நூற்றாண்டுகளாகப் பலசமயங்களும் ஜாதிகளும் வாழ்ந்துவந்த பழம்பாரத நாட்டில் தற்சமயம் சமுதாயவுணர்ச்சி திட்பங்குறைந்து நெகிழ்வுற்றுமிருக்கிறது. ஆதலால் சமுதாய ஒற்றுமைக்கு, ஜாதி மத அபிப்பிராய வேறுபாடுகள் தீராத் தடையு மில்லை; சமயமொன்றுடைமை ஜாதிவேறின்மையாதி காரணங்கள் மட்டும் போதியனவுமாகா. எனவே, நம்மவருள் சமுதாய வொற்றுமையின் தற்கால நெகிழ்வுக்குரிய காரணத்தை யாராய்ந்து களைவதும், ஒற்றுமை யுணர்ச்சி தடிக்கத்தக்கவழி கண்டு கையாளுவதுமே நங்கடமையாகும். ஜாதி சமய வேறுபாடுகளே சமுதாய நெகிழ்வுக்குக் காரணமாக் காண்பவர் பாரத சமுதாயத்துக்கு என்றுமே விமோசனங் காணாராவர். வைதிக ஹிந்துமதத்தினுட் சாதி வேறுபாடுகளை இவர் விரும்புகிறபடி ஒருவாறு குறைத்து ஒன்றுபடுத்துவ தானாலுங்கூடச் சமயவேறுபாடுகளை விலக்குவ தெப்படி? அரபியாவிலும் சீனத்திலும் ஆங்கில நாட்டிலுமே அந்நியமததர் பெருகி அவரவர்க்குரிய ஆலயங்களு மெழவாரம்பிக்கு மிக்காலத்தில், பாரத நாட்டி லனைவரையும் ஒரேசமய மேற்கொள்ளச்செய்ய முயலப்
போகின்றார் யார்? ஒவ்வொரு சமயத்திலுமே நாள்தோறும் பிரிந்து பெருகும் உட்பிரிவுகளைப் பிணைத்தொருமுகப்படுத்தி யொன்றவைப் பார் யாவர்? ஜாதி சமய வேறுபாடுகள் நிற்க; சாதாரண வொழுக்க வழக்க உணவுடை முறைகளிலும் அபிப்பிராயத் துறைகளிலும் ஒரேவகுப்பினருள்ளும் அனவரதம் பிளவு காணவில்லையா? குலங் குடி வகுப்புக்களில் வேறுபடாதவரும் சோதரருங்கூடத் தம்முள் நாள்தோறும் பலபடியும் வேறுபடவில்லையா? மனிதர் ஒவ்வொருவருமே கால சமய காரண வேறுபாடுகளாற் றம் வழக்க ஒழுக்கங்களையும் கருத்துக்களையும் திருத்திக் கொள்ளாதிருக்க முடிய வில்லையே? அப்படியிருக்க, விரிந்த பெரும் பரதகண்ட முழுதும் ஜாதி சமய வேறுபாடுகளற் றொருதுறைப் பட்டாலன்றிச் சமுதாய ஒற்றுமை யேற்படாதென்பவர் கொள்கை யுண்மையாமா? உண்மையாமேல், உலகத்தி லென்றும் யாண்டு மொருசமுதாய மேற்படவே முடியாதாக வேண்டும். சமயம், ஜாதி, வகுப்பு, தொழில், துறை, அறிவு, திரு, ஆற்றலாதி எண்ணிறந்த விஷயங்களாலும் எல்லையற்ற வேறுபாடுகள் எக்காலத்திலும், எந்த நாட்டிலும், எல்லாமாந்தரிடத்து மெழுவதேயியல் பாயிருப்பதால், மனித சமுதாயமே கிடையாதாகும். ஆனா லித்தகைய வேறுபாடுகளால் நமக்கு நலமும் நம் நாட்டுக்கு விடுதலையு மில்லையென்று வாதிக்கவருபவ ரெல்லாம், இவ்வேறுபாடுகள் நிறைந்த மேலையர் நாடுகளிற் சமுதாயவொற்றுமையுண்மையை மறுக்கத் துணிகின்றிலர். நம்பா லிக்காலம் அவ்வொற்றுமைக் குறைவுண்மையை நாமும் மறுக்கவில்லை. அதன் காரண விசாரணையிலும், அக்குறை துடைத்து நம்மவ ரொற்றுமை நலம் வளர்ப்பதற் கிவர்சொல்லும் வழிகளிலுந்தான் நாமிவரோடு மாறுபடுகின்றோம். இப்படிச் சொல்லுவதால் ஜாதி வேறுபாடுகள் தற்காலம் நமது நாட்டிற் கவசியமென்றாவது அவற்றாலாந் தீங்கில்லை யென்றாவது வாதிக்கும் சனாதனதர்ம விமர்சனமெழுத நாம் முன்வரவில்லை. ஜாதி சமய வேறுபாடுகளை நம்மவர் சமுதாய வாழ்க்கைக்குத் தீராத் தடையாகக் கொள்பவர் வாதம் ஏதம் தருவதாகும்; இவ்வேறுபாடுகளினிடையே ஒற்றுமையுணர்ச்சி வேரூன்றித் தழைத்தோங்கலாகும் - என்ப தெங்கருத்தாகலா லதை வெளிப்படுத்துவதே இவ்வியாசத்திலெம் முக்கிய நோக்கம்.
நம்முள் ஜாதி மத வேற்றுமையுள்ளவளவும் சமுதாய வொற்றுமை யேற்படாதென்பார்க் கின்னுஞ் சில சொல்லுவ தவசியம். வேறுபாடு களனைத்தையும் விலக்கி, யாவரையும் எல்லாவற்றிலும் யாண்டும் எக்காலத்தும் ஒருநிலைப்படுத்தல் ஆவதா? அவசியமா? அறந்தானாமா? நலந்தருமா? - என்ற சிலவற்றையுஞ் சிந்திக்க வேண்டும். அறவே வேற்றுமையனைத்தும் வேரறுத்தல் அமானுஷ்யம். இஃதாவதன்றாகவே, சமுதாயநலந் தேடு முயற்சியே வீணாகும். நம்மவர் சமுதாய வாழ்வையே வெறுக்கவேண்டுமென்ப தெவரும் விரும்பாததாகையால், சமுதாய நலந் தேடுபவர் ஆகாமுயற்சி மேற்கொள்வதா லாம் பயனில்லை. ஆகவே, சமுதாயநலம் வளர்ப்பதற்கு வேற்றுமைகளையெல்லா மறவே துடைக்க வேண்டு மென்னும் வீண்வாதத்தை மறப்பதே முதற்கடமை. இனி, ஆவதொருகாரியமெனினும், அது கருதிமுயலுங்காரியத்திற் கவசியமன்றேல், அதைக் கைவிடுவதே முறை. வேறுபாடுகளை விடாத பிறநாடுகளிற் சமுதாய வொற்றுமை வளரக்காணுவதால், நமது சமுதாயநல் வாழ்வுக்குமட்டும் வேற்றுமை யனைத்தையும் முதலில் விலக்க முயல்வதனாவசியமென்பது விசதமாகிறது. அன்றியும், ஆவதுமில்லை; அவசியமுமல்லாத தொன்றை மேற்கொள்வது அறமாகாது. அறமற்ற வெதுவும் நலம் தராது. ஆகையால் ஜாதிமத வேறுபாடுகளனைத்தையும் நம் பாரத சமுதாயத்திலிருந்து விலக்கிவிடமுயல்வது, அமானுஷ்யம், அனாவசியம், அறமற்றது, நலம் தராததுமாகும்.
மேலும், வேற்றுமையற்றவிடம் இயற்கையிலுண்டா? ஒற்றுமைக்கு வேற்றுமை விலக்குண்டா? வேற்றுமைமுழுது மற்ற வொற்றுமை யுடைமை, மக்கட் டன்மைக்கு மட்டுமேயில்லை; இயற்கைமுறைக்கே பொருந்தாவொன்றாகும். இறைவன், வேற்றுமை மலிந்த இயற்கை நிலையில் தன் ஒற்றுமையை விளக்குகின்றான், என்பதே சர்வசமயி களின் சம்மதவுணர்ச்சி. ஒற்றுமையைப் போலவே வேற்றுமையும் இன்றியமையா இயற்கையறமாகும். ஒற்றுமையின்றி வேற்றுமை நிலை பெறாது. வேற்றுமையின்றி ஒற்றுமையும் நிலைபெற்றதன்று. இதனை நிலையியற் பொருள் இயங்கியற்பொருள் ஆகிய எல்லாவற்றுள்ளுங் காணலாம். பொருள்க ளெல்லாம் ஒருவாற்றா னொப்புமையும் ஒருவாற்றான் வேற்றுமையும் உடையனவே. இதனை ஒருபுடை யொப்புமை என்ப. பிரபஞ்சமேன் பலதிறப்பட வேண்டும்? எல்லாம் நீராகவேனும், நிலமாகவேனும் அமையப்படாதா? நிலத்திலும், மலையும் யாறும் மருதமும் பாலையும் கலந்தமைவதேன்? மரமும் செடியும் புல்லும் பூண்டும், நீர்வாழ்வனவும் நிலத்திருப்பனவும், ஊர்வனவும் பறப்பனவும், உயிருள்ளவு மற்றனவும், தம்மிற் சாதிபேதமற்று வகுப்பொன்றேயுடையவாகக் காணப்படுகின்றில. மக்களினும் மாக்களிடை வகுப்பு வேற்றுமைகள் மிகப் பலவாக மலியக் காண்கின்றோம். இவ்வாறியற்கை முழுதும் பாக்கக்காணும் பலதிறவேற்றுமைகளால் ஒற்றுமை நல மொழிந்ததாயுமில்லை. ஒவ்வொரு பொருளுமே வேறுபட்ட அணு1த்திரள்கள் அசை2த் திறங்க ளாலான ஒற்றுமை நலத்தை நயம்படக் காட்டி நிற்கின்றது. வாழ்க்கை நிலைக்கே வேற்றுமை களுமின்றியமையாதன வாகக் காண்கின்றோம்.பொருளானுந் தொழிலானும் வேற்றுமையற்றவிடத்தில் வாழ்வழியும். ஆனாலொற்றுமையற்ற தனி வேற்றுமைத் தொகுதியிலும் வாழ்வு கிடையாது. வாழ்க்கைச் சிறப்புக்கும் இன்பத்திற்கும் இவ் விருதிறப்பட்ட இயற்கைநிலையு மின்றியமையாததாம். ஆயின் ஒவ்வொரு பொருளும் அதனிலைக்குப் பொருந்தியவாறு ஒற்றுமை வேற்றுமைத் திறங்களைக் கலந்தமைந்து நிற்கும். அளவையிலேனும் அமைப்பிலேனும் இத்திறங்களின் பொருந்தாப்புணர்ச்சி அழகையும் வாழ்வுநிலையத்தையு மழித்து நிலைகுலை விக்கும். இதனா லிவ்விருதிறங்களுந் தம்முட்பொருந்தா நிலைகளில்லை, உண்மையில் யாண்டும் எதனினு மொரு நிலைப்பட்டே நிற்குமென்றறிவோம். இவைதம்முள் அளவையுமமைப்பும் பொருந்தப் புணரின், வாழ்வும் வளர்ச்சியும் வனப்பொடு நலனால் வளம்பட வமையும். இவற்றின் தந்திரம்பிறழ்ந்த பொருந்தாப்புணர்ச்சியே அழிவுங் கேடும் விளை நிலமாகும். இவ்வாறெவ்வகை நலத்துக்கும் வேறுபட்ட உறுப்புடைமை வேண்டும்; உறுப்புக்களி னொருப்பாடும் வேண்டும். சட உயிர்ப் பொருள்க ளொவ்வொன்றின் தனிவாழ்வுக்குமே இவ்வித ஒற்றுமை வேற்றுமை களின்றியமையாதனவாம்.
திணைமுறையிலும் வேற்றுமைத்தொகுதி மிகுந்து அவற்றிடை ஒற்றுமைத்திற மூடுருவி யொருப் பட்டுநிற்பதே உயர்வுக்குறியாகக் காண்பாம். ஒற்றுமையே வெளிப்படையாய் வேற்றுமை சுருங்கிய பொருளெலாம் அஃறிணையும் அதி லறத்தாழ்ந்தனவுமாகி நிற்கும்; திணை யுயரவுயர, வேற்றுமைத்திறமு மிகுந்துகாணும். சட நிலைக்கும் எவ்வுயிர்த் தனிவாழ்வுக்கும் வேற்றுமை யுடைமையும் அவற்றிடை ஒருப்பாட்டுண்மையு மின்றியமையா வியற்கையறமாகவே, உயர்திணை மக்கட் டொகுதியாலாய சமுதாய வாழ்க்கையி லவ்வறவரம்பை மீறலாமா? வேறுபட்டவுறுப்புக்களி னொருப் பாட்டா லுடல் சிறப்பதே போல், பலதிறப்பட்ட மக்கள் கூடி யொன்றிவாழுஞ் சமுதாயமே சிறப்புடையதாகும். வேறுபாடற்ற மக்கட்டொகுதிகள், எல்லாம் வாய், எல்லாம் வயிறென்ன உறுப்புவகையற்ற வோருடற் புழுக்களேபோ லுயர்வற்ற வாழ்க்கை நிலையுடையனவே யாம். ஆகவே வேறுபாடுண்மையால் மட்டும் சமுதாய வாழ்வுக்கிழுக்கில்லை. ஒன்றிவாழ்திறமுடைய சமுதாயம், அதன் மக்களிடைத் தோன்றும் வேறுபாட்டின்மிகையாற் றளராது, எழிலும் வளமும் எய்துவதாகும். உருப்படவாழ விருப்படையாத மாந்தர் சமுதாயவாழ்வை மறத்தல் முறை, துறத்தல் கடன்; வேறுபாடுடைமையே வெறுக் கொணா விலக்கொணா இயற்கையறம். வேறுபட்டாரோடொன்றி வாழ்தலே சமுதாய வாழ்க்கையின் முதலறம். வேற்றுமையி லொற்றுமை யியல்பு; அதனால் வேறுபாடுடையார் தம்முள் ஒன்றி வாழ்த லெளிதேயாம். வேறுபாடெல்லாம் வெறுக்கொணாது. வெறுப்புடைமையே ஒன்றிவாழத் தடையாகுமன்றி, வேறுபாடுடைமை தடையாகாது. வேறுபாடுடைய பிறரை அதுபற்றி வெறுப்பவரே சமுதாய வாழ்வுக்கு விஷமாவர். வேறுபட்ட ஒவ்வொருவர் தனித்திற வளர்ச்சிக்கு மிடையூறின்றித் தந்நலம் போலப் பிறர்நலத்தையும் பேணி, வெறுப்பின்றி யொன்றிவாழ விரும்புபவரே சமுதாயநலம் வளர்ப்பார்.
இனிக் கூடிவாழ்தலி னவசியத்தளவே அவ் வாழ்க்கையை வளர்க்குமக்கரை பிறக்கும். இவ்விதியும் சர்வஜீவவாழ்க்கைக்கும் பொதுவானதே. முதலில், பறவை விலங்கினங்களை விசாரிப்போம். உடல்வலியும் மனவுரமுமுடைமையோடு, தன்னல விருப்பமிக்குடைய வகுப்பினவெல்லாந் தனிவாழ்வனவேயாம்; கூடிவாழப் பரபரப்பதில்லை. இவையெல்லாம், பிறவற்றின் கேட்டளவிற் றந்நலமுமின்பமுந் தேடுவனவாம். பறவைகளுள், வைரியுங் கழுகு மிக்குணத்தவை; விலங்கினத்தில், புலி சிங்கம் போன்றவையு மித்தகையனவே. பிறவற்றைக் கொன்று தின்னுமியல் புடைமையோடு, பிறிது துணை வேண்டா வலியு முடையவை; அதனாற் கூடிவாழக்கூடாமையும் அவசிய மன்மையுமுடையன. வலியும் வன்கண்மையுமற்ற படைக்குருவி ஆடு மானன்ன பிறவகுப்பின பலவுங் கூடிவாழ்வனவாம். ஊனுண்பவற்றுள்ளும், பிறவற்றை வருத்துதலி லின்பந்தேடா வியல்பினவெல்லாம் கூடி வாழத் தக்கனவேயாம். கள்ளக்காகமுங் குள்ளநரியு மிவ்வகுப்பின. உரமற்று இரைதேட உதவிவேண்டு மவசியத்தால்மட்டு முடனுறைந்து குரூரவியல்பு குன்றா ஓநாயன்னவை பசிதணிக்க வலிமெலிந்த தம்மவற்றையே அற்றந்தேடித் தின்னக் கொல்லும்; இரை கிடைத்துழி இனத்தையு மொதுக்கித் தாமுண்ணும்; இனையவற்றின் சமுதாய வாழ்வு தன்னலத்திற்கு வேண்டுமளவே யாகும்; உண்மைச் சமுதாய வாழ்வாகாது. சேர்ந்து வாழ்வதில் விருப்பமுடைய காகம், தன்னினத்தைக் கரைந்துண்ணும்; எனில், பிணமுகக்கு மிக்காகமும் தன்னினந்தின்னாது. ஆனால் உரமற்றுதவிவேண்டி யுடனுறையு மவசிய மின்றியும், போதிய வலிவளம் படைத்தும், சமூக வாழ்க்கையி லின்புற்றுக் கூடிவாழும் யானைக் கூட்டத்திற்றான் ஒருசிறி துண்மைச் சமுதாய வாழ்க்கை நலங் காணலாகும். இனிய கருப்பங்காடு கண்டபோதும், பிடியும் களிறும் இளையனவும் வலியற்றனவு முண்ண விட்டுப் பக்கல்நின்று பகைகாத்துக் குழூஉத்தழுவிப் பெருமிதங்கொள்ளும் அடற்கொம் பாண்யானைக் குணமும், அதற் கடங்கி யுடனடக்கும் யானை யினத்தின் ஒற்றுமையும், பகைகாணிலிகமொதுக்கிப் பொருதற்குத்தா முந்துறுந் திறல்யானை களின் பெருங்குணமும், தன்னலங்குறைத்துச் சமூகநலம்பேணுஞ் சமுதாய வாழ்க்கை வளத்தை வளர்ப்பதாகும்.
மாந்தரும், புலி கழுகு போல்வாரும் ஓநாயன்னாரும் நரி காகநேர்வாரும் யானையினமொப்ப வருமாகப் பலதிறப்
படுவாராவர். தன்னயமன்றிப் பிறிதின்பமறியார்; துணைவேண்டா வலியுடையார், சமுதாய வாழ்விகழ்ந் திகந்த கபந்தன் இடும்பன் பகன்போன்ற தறுகண்மை அடலரக்கர் தனிவாழ்வார். விரும்புவன வனைத்துந் தாமே தேடி யமைக்குந் திறனிலார், சமூகத்தாளாண்மை யிற்றன்னலந்தேடுவார், ஓநாய்நீர்மையர் சமுதாய வாழ்விக
வாரேனும், அதன் நன்மைக்குழைக்க விழையார். இன்னவர் சமுதாய வாழ்க்கைநல மறியாராவர். தன்னல மறக்கொணாதார், இனத்தவர்கூட்டம் வேட்பார், காகமும் நரியும்போல இனம்பேணிக் கூடிவாழ்வாரேனும், உண்மைக் கூட்டுற வின்ப முணரொணாதார். சுற்றத்தார் நலம்பேணும் விருப்பாற் சிறிது தன்னலக் குறைவு வெறுக்காத சமூக வாழ்வுடையார், யானையினமொப்ப, ஓரினத்தொருதுறை யொழுக்க வழக்க முடையாரோடன்றிப் பிறருடன் நெருக்க வாழ்வை விரும்பார்; இவர் நேசத்திற் மினத்தள வேயாமாதலால். இவர் உண்மைச் சமுதாய வாழ்க்கை நலத்தை யொருதிறத்துணர்ந் ததனைப் பேணுவாரெனினும், நிரம்ப விரியாத நேசநிலையும், தன்னலமறக்குந் தகைக்குறைவு மிவர்சமுதாயத்தைச் சுருக்கிக் கூட்டுறவின்பத்தைக் குறைக்கும். பற்றுக் காரணமற்ற அகன்ற அன்பும் தன்னலந்துறந்தும் பிறரின்பம்பேணும் பெருந்தகவும் விரும்பி வளர்ப்பார் சமுதாயங்களிற்றான் சமூகப் பொதுவாழ்க்கை யின்பத்தின் பெருக்கும் முதிர்ச்சியும் காணலாகும். விலங்கு புள்ளினங்களின் சமுதாயங்களெல்லாம், தத்த மினத்தளவில் எல்லைப்பட்டுநிற்கும். மக்கட் சமுதாயத்தி லேதான், இனத் தெல்லைச் சிற்றளவையிகந்து, சமயப் பொதுமை ஜாதியொருமை யாதி குறுகியகாரணப்பற்றைப் பற்றுக்கோடாக்காமல், இன்பதுன்பங்களைச் சமூகப் பொதுப்பொருளாக்கிச் சமுதாயத்தொவ் வொருவ ருடையவு மனைவருடையவு மாக்கம்பெருக்கு முண்மையுயர் வாழ்வு சாத்தியமாகும். சிறி தாழச்சிந்திப் பார்க்கு, மக்களனைவரு மோரினத் தொருபெரு வகுப்பினரேயாவர்; பறவை மிருகங் களிடைக் காணும் பிளவுபட்ட வேறு பல் பெருவகுப்புக்கள் (genera) மாந்தரிடைக் குடையா; மனிதவருக்கமுழுது மொரு பெருவகுப்பாகுமன்றி, உருவ வினை யுண வொழுக்கங்களில் ஒன்றொணா வேற்றுமைகளாற் பிரிவுபட்டுள்ள விலங்கினங்கள் பறவைப் பகுதிகளைப் போன்ற வகுப்புவகை மாந்தரிடைக் கிடையாது, என்பது விசதமாகும். இணங்கொணா யியற்கை வேறுபாடுகளாற் பிரிவுபட்ட புள் விலங்கினப் பெருவகுப்புக்களின் முக்கிய அடையாளம், இருவகுப்பி னிருபாலிரண்டின் கூட்டுறவு முயக்கம் பயன்தராது; அதனா லவற்றிடை இயற் பாலீர்ப்புமில்லை -(no natural sexual attraction) மக்கட்பெரும் பகுதியிலிவ்வித இயற்கைப் பிளவில்லை. எவ்விருபாலாருக்கும் மணமு மகப்பேறு மியல்பாகும். இதனாலு மனித சமுதாயத்துக்கு இனவரையறையின்மை தெளியலாகும்.
கூட்டுறவை இயற்கைநெறிநலமாக் காதலியாமற் காரணக் கட்டுப்பாட்டளவில்மட்டுங் கூடிவாழ்வார், அவிழ்ந்தபொழு தகன்றோடும் நெல்லிக்காய் மூட்டை, களங்கடந்து தளத்தலைவன் கட்டளையுங் கழிந்த பொழுது பிரிந்தொழியும் படைகள்போலக் கட்டளவிலே கூடிக் கட்டாய மில்லாதபோது விலகுபவர் கூட்டமே யாகும்; உண்மைச் சமுதாயமாகாது. சமுதாயங் கேவல மொரு வெறுங்கூட்டமில்லை; தனிவாழ்வுடையதொரு ஜீவிய நிலையாம். ஜீவியநிலையுடைய ஒவ்வொன்றிற்குந் தனித்தொழிலுடைய பல வுறுப்புண்டு; ஆனால் உறுப்புக் கூட்டத்தைமட்டும் ஜந்துவாகக் கருதமுடியாது உறுப்புக்களி னொருப்பட்ட தொழின் முடிவாகத் தனிவாழ்வு பெற்று நிற்பதே ஜந்துவாகும்; அதன் வாழ்க்கைதான் ஜீவியநிலையாம். உறுப்புக்களின் தனி வினைமை ஜீவ்யமாகாது; அதை வாழ்க்கையென்னும் வழக்கு மில்லை. தனி உறுப்புக்களின் வினைமையின் வேறாய்ப் பல உறுப்புக்களினொன்றிய வினைத்திரட்சியின் முடிவாய், அவற்றி னொருப்பாட்டி னுருப்பாடாவதே அவ்வுறுப்புக்களாலாய ஜந்துவின் ஜீவ்யவாழ்வாம். அதுவே போல், சமுதாயவுணர்ச்சியற்ற மாந்தர் கூட்டமெல்லாம் தனிவாழ்வு பெற்றுயிர்த்திலா வெறுங் கூட்டமேயாகும். உண்மைச் சமுதாயமாவது, அதனவயவ மக்களின் தனிவாழ்வின் வேறாய், அவர்களி னொற்றுமை யுணர்வின் முடிவாய் ஒருப்பட்ட தனிவாழ்வுடைய தொன்றாம். நிலைபெற்றவுண்மைச் சமுதாயத்தைத் தனக்கொரு தனி ஜீவ்யநிலையுடைய ஜந்துவுக்கு ஒப்பிடலாம். அவயவ வினைகளின் வேறான தனி வாழ்வுடைய அவயவிபோலவே, தன் னகவுறுப்பா மாந்தரின் தனிவாழ்க்கைக்கு வேறாய்த் தனக்கொரு தனி வாழ்வுடையதே சமுதாயமாம். அவயவியின் வாழ்வு எப்படி அவயவங்களினியல்புக்கும் தொழிலுக்கும் வேறாயினு மாறுபாடின்றிப் பொருந்திநிற்குமோ, அப்படியே சமுதாய வாழ்க்கையும் அதிலுள்ள மக்களின் தனிவாழ்வுக்கு வேறாகி விரோதமற்றிருக்கும். யாதொரு அவயவி தன்னவயவங்களின் தனிவாழ்வைக் கெடுப்பானோ, அவன் கெடும் அவயவத்தளவு தன் வாழ்க்கையையும் கெடுப்பானாவான். அவயவ மனைத்தும் தத்தந்தொழிலைத் தடையின்றி நடத்தி வளரச் செய்யு மவயவியே தன் பூர்ணவாழ்க்கையின் சம்பூரண சுகம் பெறுவானன்றோ. உறுப்புச் சில கெடினும், உறுப்புக்களின் வினைமை சிறிது குன்றினும், ஜந்துவின் ஜீவியம் சம்பூர்ணமாகாது. உறுப்புக்கள் வேறுபட்ட இயல்பும் வினையு முடையவைகளாகவே, யாதோருறுப்பு மியல்புவினைமையில் தன்னிலை திரியின் அவயவியின் வாழ்வு மவ்வளவி லூறுபடும். பலதிறப்பட்ட அவயவங்களின் வெவ்வேறாய வினை திரண்டே அவயவியின் வாழ்க்கைக் குயிரு மழகும் தருவதாகும். சமுதாய வாழ்க்கையு மவ்வகைத்தே. ஒரு சமுதாய மக்களின் தனிவாழ்வு சிறக்கச் சிறக்க சமுதாயவாழ்வுஞ் சிறப்பதாகும். மக்களின் தனிவாழ்க்கையை ஊறுபடுத்திச் சமுதாயம் நன்மைபெறாது. தன் னவயவமக்க ளெல்லாரு மொருவகைப்பட்டு வேறுபாடெதுவு மின்றியிருக்க விரும்பும் எந்தச் சமுதாயமும், தன் உறுப்புக்களெல்லாம் ஒருதன்மைத்தாக்கவிரும்பு மவயவியைப்போல் நலிந்து கெடும். அவயவியின் வாழ்க்கைக்கு, எல்லாவுறுப்பு மவசியம். சிறந்ததாகக் கருதுங் கண்ணொன்றே கொண்ட ஜந்துவின் வாழ்க்கை யென்னாம்? காதும் மூக்கும் வேண்டாமா? கீழ்நின்றுநடத்துங் காலில்லாத வாழ்வு முடவாழ்வன்றோ? உறுப்புக்களிற் கீழ்மேல் கிடையாது. அவயவியின் வாழ்க்கைக்கு அனைத்துறுப்புமவசியமே. அவன் பாதுகாப்புக்கும் கவனத்துக்கு மனைத்துஞ் சரி யுரிமை யுடையனவேயாம். சமுதாய நல்வாழ்வுக்கும், பல்வேறுபட்டநிலையுந் தொழிலும் நினைவுந் திறனு முடையார் எல்லாரு மவசியமே; அவ்வனைவரையு மொப்பக்காத்துப் பேணுவதும் சமுதாயத்தின் கடமையாம். தொழில்மறந் திடந்தவிரும் நாவைத் தன்றொழி னடத்துழியூறு செய்யும் பல்லும் ஊறுபடும் நாவும் தத்தம் தொழிலை முறையாற்றி யொருவாயிலமைந்து மாறின்றி அவயவியின் வாழ்க்கையை வளர்ப்பதேபோல் தத்தம் அறந்திறம்பா தவ்வவர் தொழிலாற்றிப் பிறழ்ந்தார் பீழை படினும் அவர்க் கூறுசெய்வது கருத்தின்றி அனைவரு மறமாற்றி யொருப்பட வாழும் மக்களை யுடைய சமுதாயம் நாள்தோறும் நலமுற்று வளரும். தங்கடனாற்று வதிலிடை வந்த பிறர் நோவநேரு வதல்லால், சமுதாய வாழ்வு பேணுவாரனைவரும் நாம் பிறர்நோவ நடவாமலறமாற்ற விரும்பல் வேண்டும். உய்த்துணரின் ஒவ்வொருவருண்மை நலமும் பிறர்நலம் பேணுவதேயாம்.
இனித் தமிழ்ச்சமுதாயந் தற்காலம் நிலைகுலைய நிற்பதற்கு முக்கியக் காரணம் ஜாதிமாற்சரியமேயாம். இத்தகைய வேறுபாடுக ளென்றுமிருந்திருக்க, முன்னில்லாத மாற்சரிய வுணர்ச்சி தற்காலந் தடிக்கக் காரண மறியவேண்டும். தமிழகத்தே முன்னைய வேறுபாடுகள், சமுதாயப் பொதுவாழ்வுக்கு மாறின்றி அவசியம்பற்றியும் வினை வகை இயல்புகள் காரணமாயு மெழுந்தனவாய்ப் பல்வகுப்பினரும் கீழ்மை மேன்மை யுணர்ச்சியின்றித் தத்தந்தொழி னிகழ்த்தி யொன்றி வாழ்தற்கிசையவமைந்து நின்றன. சமுதாய வொற்றுமையும் இன்றியமையா வியற்கைச் சிறுவேற்றுமைகளுந் தம்முள் மாறின்றி யியைந்த விணக்கத்தால் தமிழ்ச் சமுதாயவாழ்வு சிறந்து நின்றது. ஆரியவர்ண பேதங்களிற் பேதவுணர்ச்சி யுண்டோ, அன்றி யிடைப்புகுந்ததோ, அறிகிலேம். தமிழகத்திற் பகைமைவித்தாய பேத வுணர்ச்சி கிடையாதென்ப தொருதலை. நிலம் திணை தொழில்கள் பற்றி வேறுபட்ட தமிழர் பலரும், கீழ்மேலுணர்ச்சியற்றுத் தகவும் தருணமு நேருங்கால் தம்முள் வரைவின்றி உணவும் மணமும் கையாண்டுள்ளார். ஆரியநாகரிகத் தொடு கலந்த பிறகும் ஆரியர் வருணமுறையனைத்துந் தமிழ்நாட்டில் வேரூன்றினதாயுமில்லை. என்றும் போலத் தொழில் பற்றி நின்ற வகுப்புக்களையே பலஜாதிகளாகப் பேசுவதல்லால், வரன்முறையே மேலவர் இடையாவார் தாழ்ந்தவர் என்ற பிறப்புவகை வேறுபாடு கண்டதில்லை. மேலவர் தாழ்ந்தாரிடைப் பெண்கொள்வதன்றித் தருவதில்லை; கீழவர் மேலவரிட முண்பதன்றி உண்பிப்பதில்லை என்ற முறைகள் ஆரியருட்போலத் தமிழருட் டமிழகத் தில்லை. சரிதமறியும் இடைக்காலந் தொட்டுத் தமிழ்நாட்டில் தச்சர் கொல்லர் மறவர் இடையர் வேளாளர் என்ற வினைவகை வகுப்புக்களுண்டேனும், உணவு மணவுரிமைகள் ஒருவருக்கு அதிகமும் மற்றவருக்குக் குறைவுமாக வேறுபட்டதில்லை. ஒவ்வொரு வகுப்பினரும் தம்மைத் தாம் மதித்துப் பிறர் தமக்குத் தராவுரிமைகளைத் தாமும் பிறருக்கு மறுத்துத் தம்மது போலப் பிறருரிமைகளையும் பேணிச் சமத்துவ புத்தியொடு தம்மறமாற்றிச் சமுதாய நலம் வளர்த்து வந்தார். இன்றளவும் தமிழகத்தி லிவ்வாறே ஒவ்வொரு வகுப்பினரும், தம்மைத் தாம் மதித்துத் தம்முட்டாமே மணந்து, பிறர்பால் உணவொடு மணமும் மறுத்தே வருகின்றனர். தமிழ்ப் பார்ப்பனரும் தமிழக நாகரிக முறையையே கையாண்டு தம்மை வேறாக்கி வைத்தும், பிறரிடைத் தாந்தரா வுரிமைகளை விரும்பாமலும் பிறர் தம்மிற்றாழ்ந்தவரென்ற பேதவுணர்ச்சி பிறவாமலும் பிற தமிழரோ டொன்றி வாழ்ந்தமை வாரானார். அதனாற் சமுதாயநலம் குறையாமல் வளர்ந்து வந்தது. தற்காலமோ இச்சமத்துவ நல்லுணர்வுதளர்ந்து, சிலர் தம்மை மேலோராகத் தாங்கருதுவதோடமையாது பிறரையுந் தம்மேன்மை பாராட்ட விரும்புவாராயினர். இப்பிறழ் வுணர்ச்சியே சமுதாயவாழ்வுக்கு நஞ்சாயிற்று. இந்நச்சுணர்வு பிறக்கவுந் தடிக்கவும் முதற்காரணமாவார் யார் என்ற வினா அவசியமற்றது. யார் தவறேனும், தவறாலாய கேடு துடைக்கமுயல்வது சமுதாய வாழ்வை விரும்பு மனைவருக்கு மொத்தகடனேயாமாதலால், வீண் வழக்கிட்டுப் பகை வளர்த்துச் சமுதாய வாழ்வையிழவாமல் உண்மைப் பரபரப்புடன் இம்மாற்சரியப் பொய்யுணர்ச்சியைக் கொன்று ஒற்றுமைவளர்க்கும் வேற்றுமையில் சமத்துவ புத்தியை வேரூன்றச் செய்து தமிழ்ச் சமுதாயத்தை நிலைநிறுத்த விரைவோமாக.
சமுதாய வாழ்வுக்குச் சமுதாயவுணர்ச்சி தடிக்க வேண்டும்; சமுதாய நன்மைக்கு மாறான தன்னல முண்டென்பதை ஒவ்வொருவரும் மறத்தல் வேண்டும். உரிமையெல்லாந் தமக்குங் கடமையெல்லாம் பிறர்க்குமாகக் கருதுபவரே சமுதாயப் பகைஞராவர். தமக்கே போற் பிறர்க்கு முரிமையுண்டு; பிறர்க்குப் போலத் தமக்குங் கடமையுண்டு. உரிமையுங் கடமையுந் தம்முட் தொடர்புடையன; தனித்து நில்லா. தன்னுரிமை பிறர் கடமையாவதேபோல், பிறருரிமை தன்கடமையா மென்பதை மறக்கொணாது. உரிமையே பேசினும், கடமையே கருதினும், அகத்தும் புறத்து மொப்பநிறுத்தித் தொழிலாற்றுவார் தப்பாத சமுதாயசேவை புரிவார். சமுதாயம் நிற்க; இந் நடுநிலைநினைவும் பிறர்பொருட்டுத் தன்னுரிமை தவிர்க்குந்திறமு மற்றவழிக் குடும்பவாழ்வே கூடாதாகும். தத்த முரிமை சில குறைத்துங் கடமை சில பெருக்கியும் வருவார்க்குத் தான், குடும்பமும் இனமுங் கூடுவதாகும். அன்றி அனவரதம் தம்முரிமைகளிலிறையுங் குறையஇடந்தராது பேணுவார்க்கு அடவிகளிலரக்கர் தனி வாழ்வே பொருத்தமாகும். தன்னலமு மின்பமுமன்றிப் பிறிதுணராப் புலியும், காமத்துணையுடன் தன்னிரையைப் பகுத்துண்கிறது. இதுமட்டோ? தாய்ப்புலி புழைகாக்கத் தந்தைப் புலி தன்குறளைகள் வலிபெற்று வேறாகி வாழு மட்டும் அவைகளுக்கும் இரைதேடிக் கொடுத்தும் பகை காத்துப் பேணியும் வருகின்றது. இவ்வாறு கொடும்புலி கூடத் தன்னலங்குறைத்தே தங்குலம்பெருக்குவதைப் பார்க்கின்றோம். தம்முரிமை சிறிதும் விடோமென்பார்க்கு எவ்விதக் கூட்டுறவுமே சாத்தியமில்லை. தன்னலத் துறவிலேதான் கூட்டுற வின்பவீடு திறக்கின்றது. உலகத்தில் மனித ரியல்பானு மவசியத்தானும் சமூக வாழ்வையே விரும்ப வேண்டியவராதலால் அதற்கின்றியமையாத இத்தன்னல மறப்பையு மேற்கொள்ளாதிருக்க முடியாதவ ராகின்றார். இவ்வற மேற்கொண்டால், சமுதாய வாழ்வு சித்தியாய் விட்டதாகும். எனவே சமுதாயம் நெகிழ்வுற்று நலங் குன்றுவதற்கு முக்கியக்காரண மிவ் வறவுணர்ச்சிக் குறைவேயாகும்; ஜாதி மத வேற்றுமைகள் உண்மைக் காரணமாகா. சமுதாய வுணர்ச்சியும் தன்னலமறக்குந் திறனுந் தழையுமாயின், சமுதாயந் தலைநிமிர்ந்து வளம்பல வளர்வதாகும்.
நம் பாரதசமுதாயங்களும், அறிவெட்டுந் தொல்லைக்கால முதற் பல்வேறுபட்ட மக்களாலாய்ப் பகைமையும் பழியு மின்றித் தகைமையிற்றழைத்துள்ளனவாகக் காண்கின்றோம். வசிஷ்ட விசுவாமித்திர வாதத்தாலும், பிராம்மண பௌத்தப் பிணக்காலும், ஹிந்து முலீம் நெருக்காலும், சைவ சமணச் சண்டைகளாலும், தென்கலை வடகலை வெறியாட்டாலும், ஹிந்துதானத்திலேனும் தமிழகத்திலேனும் சமுதாய வாழ்வு நிலைகுலைந்ததில்லை. மகம்மதியரும் மகாராஷ்டிரரு மாறுபட்டு மலைந்தபோதும், பாரத பூமியிற் சமுதாயவாழ்வு கெட்டதில்லை. கங்கை வளநாடுவிட்டு நெட்டிடைக் கொடுவனநீந்தி வந்துற்ற ஆரிய அந்தணரையன்போடாதரித்து அவரறம்பேணி வாழு
மாறுதவிய தமிழகம், நாளடைவில் அவ்வந்தணரைத் தம் மொழிமறந்து தமிழ்வளர்க்கச் செய்து, வேறின்றித் தன்னகப்படுத்திச் சமுதாய வாழ்க்கையின்பத்தை விரித்துப் பெருக்கி வளம்பட வளர்த்து நலம்பெற்றது. பின்வந்த பௌத்த சாக்கியரையுமப்படியே தன் சமுதாய வாழ்வி லாழ்த்தி யமைத் தழகுபெற்றதோடு, தமிழகம் கிறிதவர் யூதர் மகம்மதியராதி அயனாட்டாரையு மசட்டை செய்யாம லாதரித்திழுத்துத் தழுவித் தழைத்து நின்றது. தென் றிப்படி நின்றுநிலவிய சமுதாயப் பெருவாழ்வு தற்காலம் தளர்வுற் றவலப்படக் காரணம் சமுதாயவுணர்ச்சிக்குறைவுந் தன்னலவிருப்ப மிகையு மன்றி வேறன்று. ஜாதிசமயவேறுபாடு நாட்டுக்கும் நமக்கும் புதிதில்லை; தற்காலத் தடுமாற்றந் தவிர்த்துச் சமுதாய வாழ்வை நிலைநிறுத்தி முன்னிலுஞ் சிறக்கச் செய்வதற்குரியவழி தேடவும் நடக்கவு மரிதுமில்லை. உயிரனைத்துமொப்ப வோம்பு மருட் பெருமான் கௌதமனும், தனக்கு நிரயநிலையை விலை யாக்கியேனும் சமூகத்தாருக்கு முத்திதேடு மாசைமேலீட்டால் ஆசாரியன் ஆணைமீறி மூலமந்திரத்தை அனைவருமறிய முழக்கஞ் செய்த அருட்டுறவி இராமாநுஜரும் பிறந்த நாட்டவராய நாம், சமுதாய வாழ்க்கை வளர்ப்பதற் குரியவழி கடைப்பிடிக்கப் பின்னிடைவேமோ?
நமக்கு நாம் விரும்புமளவிற் பிறருந் தமக்கு நலம் விரும்புமியல்பை மறவேமேல், சமுதாய வாழ்க்கைநலம் நம்பால் வழிதேடி வந்தடையும். தாம்பெற விழைவதே போற் பிறர்மாட்டுஞ்செயத் துணிவதே தருமமாகும். அன்பு நிறையு மறத்துறையு மதுவேயாம். சமயத்திலோ மற்றைச் சதகோடி யுரிமைத்துறைகளிலோ பிறர் நல்வழியிற் றலையிடவேண்டே மாகையால், பிறர்பேணு முரிமைவழிகளில் நாமு மெவ்வகையினுந் தலையிடல் தவிர்த்தல் வேண்டும். தமக்குரிய கோழியாடுகளைக் கொல்லுமுரிமைவிடாத ஹிந்துக்கள், முறைகடவாது தமக்குரிய பசுவைத் தம் மிஷ்டப்படி செய்யுமுரிமையை முலீம் சோதரருக்குமறுப்ப தெங்ஙனமாகும்? உயிர்க் கொலையை அறவெறுக்கு முயர்ஞான சமயத்தாரும், பலி விரும்புந் தெய்வவழிபாடுடையார் கொலைப்பலியைத் தடுப்பதில்லை. பலிப்பொருளை நெறியிற் றமதாக்கிப் பின் கொல்லுவதை வலியாற் றடுப்பது தவறென்ப தறியும் நம்மவர், பிறருடைமையில்லாத் தம் பசுவைத் தஞ்சமயவிதி கடவாத மகம்மதியர் வழிபாட்டுமுறையிற் கொல்லு முரிமையை வலிந்து தடுக்க முயல்வது அறமாமா? பசுப் பேணல் நம்மதமாயின், பசுப்பலி அவர் சமய அறமாவதை மறுப்பதும் மறத்தலும் முறையாமா? சமயக்கடனளவிற் பசுப்பலியை நிறுத்தவும், நம்மவர் சமய வுணர்ச்சியை மதித்துப் பசுக்கொலையைக் கூடியவரை குறைக்கவும் மறைக்கவும் நம் பாரத சமுதாய சோதரரான மகம்மதியரை நாம் நேசமுறையில் மன்றாடிக் கேட்கு முரிமை நமக்குண்டு. மாற்சரியமின்றி அன்புவழியி லவர்பாற் குறையிரப்பின், அவரும் நம் வேண்டுகோளை மதித்திணங்கும் நேசக்கடமையை மறவார். அதைவிட்டு அவருரிமையை நாம் வலிந்து மறுப்பின், நாந் தவறிழைப்பதோடு வலிகொண்டவர் மோதிப் பகைக்கவு மவர்க்கு நாமே வழிகாட்டுவதுமாகும்.
இனி நம் மகம்மதிய கிறிதவ சோதரர்கள் தத்த மாலயங்களில் தொழுகை ஆராதனைகள் நடக்கும்போது, கோவிலின்முன் எவ்வித ஒலியுமெழாதபடி காப்பது தங்கள் சமயக்கடனாகக் கருதுகின்றனர். தெருக்களிற் பிறர்க் கிடையூறின்றி ஊர்கோலம் உலாக்கள் நடத்தவும் பஜனை இசைமுழக்க மியற்றவும் ஹிந்து சமயத்தவருக் குரிமை
யுண்டு. ஆனால் நமது கிறிதவ மகம்மதிய நண்பர்க ளிவ்வுரிமை நாங்கொண்டாடுவதை வெறுப்பதோடு, தொழும்பொழுதுமட்டுமல்ல எப்போதுமே தங்கள் கோவில் முன் எவ்வித பஜனை இசை முழக்கமும் யாரு மெதுபற்றியுஞ் செய்யவிடேமெனத் தடுக்க விரும்புகின்றனர். வலிந்து தடுப்பது அவர்பால் தவறேயாம். ஆனா லவர்சமயவுணர்ச்சியை மதியாமல் அவர் தொழுகை மத்தியிலும் மொலியெழுப்பியவரை நோவப் பண்ணுவது ஒற்றுமையுணர்ச்சி வளர்க்கும் வழியாமா? உரிமை நமக்குளதேனும், நேசத்தோடு அவர் சமயவுணர்ச்சியை நன்கு மதித்துத் தொழுகைக் காலங்களிலேனும் நா மிசையை அவராலயங்களினருகில் நிறுத்தின் நம்நட்பை விரும்பித் தம்முரிமைகளிற் சிலவற்றை நமக்காக அவர் விட்டுக் கொடுப்பார். சிறிது தூரம் சிறிதுநேர மிசைநிறுத்துவதி லெவ்விதக் கஷ்ட நஷ்டமும் நமக்கேற்படுவதில்லை. சமயநெறி யவசியமற்ற விடத்திலும் ஹிந்துக்களினிசையுரிமையை மறுக்க மகம்மதியர் விரும்புவது மவசியமற்ற தவறாகும். இருதிறத்தவரு மொருநாட்டி லொன்றிவாழு முரிமையுங் கடமையு முடையராயிருக்கப் பரபரம் சமயக் கொள்கைகளையு முணர்ச்சிகளையும் மதித்துப் பேணி அவசியமற்ற வீணுரிமைகளைப் பாராட்டாமல் விடுத்து நட்பொடு நலத்தையும் வளர்க்க விரும்பாது பகைமை விதை தேடி விதைப்பது அறிவுடைமைக்கழகாமா? இருவரும் தத்த முண்மைநலமுணர்ந்து ஒன்றிவாழ்வதே முறையாமன்றோ?
காதல்
கூத்தரங்கம் மனிதவாழ்க்கையினும் காதலுக்குக் கடப்பாடுடைத்து. ஏனெனில், கூத்தரங்கிற் பெருக இன்கூத்துக்களுக்கும் அருக வன்கூத்துக்களுக்கும் காதல் பொருளாகிறது; வாழ்க்கை யிலோ சில்கால் மோகினி போன்றும் சில்காற் கொடுங்காளி போன்றும் அது மிகவும் குறும்பு செய்கிறது. பண்டும் இன்றும் நினைவெட்டு மட்டும் பெருந்தகையரனைவருள்ளும் வெறிமயக்களவு கழிகாமங் கையிகந்தார் எவருமில்லையென நீவிர் காணலாகும்; இது பெருங்குணமும் பேராற்றலும் இச் சிற்றுணர்ச்சியை முற்றும் விலக்குவதைப் புலப்படுத்துகிறது. ஆயினும், உரோமப்பேரரசிற் சரியுரிமையுடைய மார்க்க அந்தோனியரையும், அந்நாட்டிற்கு நீதிமுறை வகுத்த பதின்மருள் ஒருவரான ஆப்பியக்ளாடியரையும் இதற்கு விலக்காகக் கொள்ள வேண்டும்; இவருள் முன்னவர் கரைகடந்த காமுகர்; மற்றவர் விசதஞானி; ஆகவே பஞ்சையர்பசைந்த சிந்தையுண் மட்டுமன்றி உரவு நல்லரணுடையருள்ளத் துள்ளும், கருத்தொடு காவாக்கால், காதல் புகலிடம் பெறுவது அபூர்வமேனும் அரிதன்றென் றறியலாகும்; நாம் பரபரம் பரமதிருப்தி விளைக்கும் நாடகசாலையாயிருக்கிறோம் என்பது எபிகூரன்1 சிறுமாற்றம். வீட்டையும்2 பீட்டையும்3 உயர்வுள்ளப் படைத்த மக்கள் மாக்களொப்ப வாய்ப் பொறிக்கிடையாவிடினும் பெரும்பயன் நுகர்தற்கான கட்புலனுக்கடிமையாகிப் பஞ்சைப்பதுமையைப் பணிதலன்றிப் பிறிதொரு வினையையும் பேணார் போலும். பொருள்களின் இயல்பையும் மதிப்பையும் புறக்கணித்துமிகும் இக்காமக்கடுமை, காதலன்றிப் பிறிதொன்றும் ஓவா உயர்வுநவிற்சிக்கு ஒல்லாமை கொண்டு குறிக்கலாகும் ஒரு புதுமையாம். இன்னும் அது சொல்லளவில் நில்லாது; இச்சகம் பேசுவோர் மெச்சுமோரச்சாணி அதனை விரும்புபவன் அந்தராத்மா என்று நன்று கூறப்பட்டிருப்பினும், காதலரே நெடுமொழி கழிநனியுகப்பர். ஏனெனில், காதலர் தாம்வீழ்வார் தகவு கருதுமளவு தமை மதிக்குஞ் செருக்குடைய சழக்கர் எஞ்ஞான்றும் இருந்ததில்லை; அதனால் உரமும் காமமும் ஒருதுறை மருவுதல் அரிதினுமரியதென் றான்றோர்கூறுப. நிறையற்ற சுடுகாமச்சிறுமை வீழப்படுபவரன்றிப் பிறர் மட்டும் அறிவதென்றன்று; காதலிருவர் கருத்தொரு மித்தாரவு பட்டவிடத் தன்றித் தாம்வீழாது வீழப்படுவார் ஏதிலரெவரினும் இதனை நன்குணர்வர். ஏனெனில், காதல் எஞ்ஞான்றும் ஒத்த காதலையேனும் புறம்பொதிந்து அகத்தலரு மகிழ்ச்சியையேனும் கைம்மாறு கொள்ளுமென்பது இயற்கையறமாகும். பிறவற்றை யன்றித் தன்னையுமே கெடுக்கவல்ல இக்காமத்தைக் கடக்க மாந்தர் நனிமிக்க கருத்துடையராக வேண்டும். காமம் தரும் பிறகேடுகளைக் காவியவரலாற்றால் நன்கறியலாம்; ஹெலனாவை மிக விரும்பியவன் ஜூனோ (நிதிக்கடவுள்), பாலா (கலைக்கடவுள்) ஆகிய இருவர்தரும் பரிசையும் இழந்தான். ஏனெனில், காமவின்பத்தைப் பெரிதும் விரும்புகின்றவன் திருவையும் அறிவையும் மருவு கின்றிலன். இக்காமம் ஒருவன் வலிதளர்தருணங்களில் வெள்ளமாய் வளருகின்றது. பேராக்கம் போல அத்துணை நன்கு தெளியப்படாவிடினும், பெருநிரப்பும் காம வளர்ச்சிக்குக் காரண மாகின்றது; இவ்விருநிலையும் காதலை மூட்டிக் கனிவிப்பதனால், மடமைக்குக் காதல் மகவெனத் தெளிவிக்கின்றன. காதலைக் கடக்க முடியாதார் வரம்பிட்டடக்கிச் சிந்தனைக்குரிய செய்திகளி னின்றும் வாழ்க்கை வினைகளினின்றும் அறவே யதனை விலக்கின் நன்றாற்றுவாராவர். ஏனெனில், காரிய விருத்தியில் அஃதொரு முறை குறுக்கிடின் மக்களின் ஆக்கம் அலைத்து அவரைத் தம்நோக்கங்களுக்குரிய மெய்ந்நெறியிற் செல்லொணாதாராக்குகின்றது. எப்படியோ வீரர் காதலுக்கு ஈடுபடுகின்றனர்; அன்னார் கள்ளினைப் போலவே இதனையும் காமுறுகின்றனரென்று எண்ணுகின்றேன்; ஏனெனில் வழக்கமாக விபத்துக்கள் இன்பங்களை வேதனமாக விரும்புகின்றன. மனிதன் இயல்பாகவே பிறர்பாற் பற்றுதலுற்று நிற்குஞ் சார்புடைய னாயிருக்கிறான். அப்பற்று ஒருவர் அல்லது ஒருசிலர்மேற் செல்லாவழிப் பலரிடத்தும் பரந்தமைந்து, துறவிகளிடைச் சிலசமயங்களில் நாம் காணுமாறு, மக்களை ஈரமும் ஈகையும் உடையராக்குகின்றது. மணக்காதல் மக்கட் சமுதாயத்தை ஆக்குகின்றது; நட்புக்காதல் அதனை நனிதிருத்துகின்றது; காமக்காதலோ அதனை அழித்திழிக்கின்றது.
அழகு
மட்டவேலையமைந்த மதிப்புள்ள மாணிக்கம் போன்றது சால்பு; மெல்லிய முகச்சாயல்களைப் பெறாவிடினும் நல்லுருவுடையானிட மமைந்த ஒழுக்கம் இனிதாகும்; அது காட்சி வனப்புடைய தன்றெனினும் கம்பீரத்தோற்ற முடையதாகும். மற்று நல்லெழிலு டையரெல்லாம் சால்புடையராகக் காணப்படவுமில்லை; இழுக்காதிருத்தற் கன்றி நிறைமாண்பியற்ற இயற்கை பெருமுயற்சி மேற்கொள்வ தில்லைபோலும். ஆதலால் அழகுடையோர் கற்றோராதலன்றிப் பெருந்திறலோராதல் இல்லை; சான்றாண்மை யினும் ஒப்புரவையே பயில்கின்றனர். எனில் இதுவும் எஞ்ஞான்றும் நியதியில்லை; ஏனென்றால் அகடஸீஸர், டைட வெபாஸி யான, பிரான் தேசத்துப் பிலிப்லேபெல், ஆங்கிலவரசர் நான்காம் எட்வர்டு, ஏதென் நகரத்து ஆல்கீ பியாடி, பாரசீக நாட்டுச் சோபீஇமேல் இவர்களெல்லாம் உயர்பேராற்றலும் தங்காலத்தவருட் பேரழகும் உடையருமாவர். வனப்புக்கு வருணத்தினும் சாயலும், சாயலினும் உசித கம்பீர நடையும் நல்லமைவுடையவாகும். தீட்டிய ஓவியம் காட்ட வொண்ணாததே வனப்பின் வடித்தபாகமாகும்; அதனை அளந்துரைப்பதற்கு உருவத்தின் முதற்காட்சியுமே போதியதன்று. குண விகிதங்களில் ஒரு புதுமையற்ற மாட்சியுடைய வனப்பே கிடையாது. அபெல்லீஸோ அல்லது ஆல்பர்ட்டியூரரோ அதியற்பரென்று எவரும் சொல்ல இயலாது; அவருள் ஒருவர் பெருக் கலளவையால் எழிலுருவமைக்க விரும்புகின்றார், மற்றவர் பலவேறுமுகங்களின் நற்சாயல்களைத் திரட்டி ஒருமுகமாட்சிநிறுவ விழைகின்றார். இனைய செய்முக விலாஸங்கள் செய்த சித்திரிகனையன்றி மற்றெவரையும் உவப்பியா வென்றெண்ணுகின்றேன். ஓவியன் முகங்களை உள்ளவற்றினும் நல்லனவாயெழுத வொல்லனெனக்கருதகில்லேன்; ஏனெனில் பாணன் இசையினிற் பண் செய்யுமாறு அவன் அதனைச் சுவைப் புலனாலன்றிக் கேவலம் அளவைகளால் இயற்றொணாது. உற்றுநோக்கின் ஒன்றும் நன்றமையா உறுப்புக்கள் தம் ஒருப் பாட்டமைப்பா லழகு செய்யும் முகங்களை யாரும் காணலாகும். வனப்பின் வடித்தபாகம் நனியினிய சாயல்களின் செலவாமேல், ஆண்டில் முதியரும் அழகுடையராதல் அதிசயமன்றென்பது சரதமாகும்; இளமை தானே அழகியற்றுமெனு மெண்ணத்தானும் அதன்பாற் பொறுமை யானுமன்றி இளைஞர் அழகுடையராவதில்லை. கெடுதற் கெளியவும் நீண்டிராதனவுமான வேனிற் கனிகளனையது அழகு : அது பெரும்பாலும் இளையரை விடரும் முதியரை முகவிலாச மற்றவரு மாக்குகிறது : எனினும், அஃதினிதமையு மிடத்து ஒழுக்கம் ஒளிரவும் ஒழுக்கின்மை வெட்கித் தலை சாய்க்கவும் உதவுகிறது.
இளமையும் முதுமையும்
ஆண்டி லிளைஞனும் தான் பயன்படுத்திய பொழுதளவில் முதியனாகலாம். எனின் அது அரிய சம்பவம். (ஊன்றியெழும்) பின்னெண்ணம்போல உரமுடையதாகாத (ஆழச்சிந்தியாத) முதற் கருத்தனையது இளமை. ஏனெனில் வயதிற்போலவே எண்ணத்திலும் இளமையுண்டு. ஆயினும், இளைஞரின்கற்பனை முதியர் முதுக்குறைவினுந் துலக்கமுடையது; (முதியர் மனத்தினும்) இளைஞருள்ளத்தில் மனோபாவங்கள் மிகுதியாயும் தெய்விக மாயும் பெருகுகின்றன. ஜூலிய ஸீஸர், ஸெப்டிமிய ஸெவர இவர்களிடம் கண்டது போல அதியுற்சாகத்துடன் மிகுவேகவிருப்பங்களும் வைகல்யக் கலக்கங்களுமுடைய சுபாவங்கள் நடுவயது கழியுமட்டும் பெருவினையேற்கப் பருவமடையா. மேலவருட் பின்னையர் வாலிபவழுக்களும் அவற்றினு மதிகமாய் வெகுளி மிகுதியும் உடையரென் றுரைக்கப்படுவர். எனினும், (உரோம) சக்கரவர்த்திகளனைவரிலும் இவரே பெருந்திறலுடையரானார். அகட ஸீஸர், காம, பிளாரன் பிரபு, காடன்டிபாய் அனைய பிறரிடம் காணுமாறு சாந்த சுபாவங்களோ இளமையிலே நன்றாற்ற வல்லனவாம். அதற்கு மறுதலையாக வயதினில் வரும் ஊக்க உத்ஸாகங்கள் முயற்சிக்கினிய செயற்கை யாகும். இளைஞர் தூக்கித் துணிவதினும் கற்பனைக்கு மிக உரியராவர்; சூழ்வதினும் செய்தற்கு மிகவுரியர். துணிந்த தொழி லியற்றுதலினும் புத்துபாயங்கள் சூழ்தற்குரியர். மூதனுபவமோ தன்னளவில் வருபவற்றை வழிவகுத்து நனி நடத்தும்; புதிய வற்றுட்டவறியற்றும். இளையோர் வழுக்கள் தொழிலழிவுசெய்யும்: முதியவர் தவறுகள் அளவினும் விரைவினு மாவனவாற்றாக் குறையினோடமையும். இளைஞர் வினைசெயல் நிர்வாகங்களை இயல்வதினும் மிக மேற்கொள்வர்; ஆற்றுதற்கதிகம் அவர் மூட்டுவர்; கருவியும் தகுதியும் கருதுகின்றிலராய், இறுதி யினெல்லைக்கெழுந்து பறப்பர். நினையாது தன்வழிநேர்ந்த சிலநியமங்களைப் பின்தொடர்வர்; அறியா அவலங்கட்காட்படுத்தும் புதுமுறை வகுப்பதிற் கவலை கொள்ளார். கடை நிலைச் சிகிச்சைகளை முதலில் மேற்கொள்வர்; நில்லா மீளா அமையாப் புரவிபோல், இளையர் தம் வழுக்களை இருமடங்காக்குவதன்றி ஓர்வதும் ஒழிப்பதும் உணர்வதில்லை. முதியரோ சதா மட்டின்றி நீண்டு நிதானிக்கின்றார், சாகஸவறுமை தாமிகவுடையர், விரைந்தனுதாப மேலிடுகின்றார், (விழுமிய பயன்பெறத்) தொழில் முழுதாற்ற ஊக்கவொல் லாராய், மத்தியசித்தியில் திருப்தியடைகின்றனர். இரண்டையும் இணைத்து ஏவல்கொள்ளுதல் இனிதென்பது சரதம்: ஏனெனில் இவை ஒவ்வொன்றின் சீலமும் மற்ற தன்குறை நிறைக்குமாதலான். இவை யிணைதல் நிகழ்வுக்கு நலமாகும்; இளையராய்க் கற்பதற்கும் முதியராய் ஆற்றுதற்கும் உதவுகையால் எதிர்வுக்கும் இதுவே நலமாம்; பிரமாணம் முதியரையும், அபிமானமும் ஜனசம்மதமும் இளையரையும் போற்றுதலால், வெளிவிபத்துக்களுக்கும் இதுவே நன்மை தரும். எனினும், இறையியற்கு முதுமையுதவுமாறு, சான்றாண்மைக்கு இளமை தலையாவதாம்போலும். உமதிளைஞர் (கண்காணாக்) காட்சிகளையும், முதியோர் கனவுகளையுங் காணுவர் என்னும் மூலபாடத்தை ஆதரவாகக் கொண்டு ஒரு யூதபோதகன் கனவினுங் காட்சி தெளிவுடையதாகையால், இளைஞரே முதியரினும் கடவுளுக்கணியராவார் என்று அனுமானிக்கிறான். நுகர்பவரை உலகறிவு மயக்குவதும் உண்மையன்றே; விருப்ப வேட்கைகளின் சான்றாண்மையினும், விவேக விருத்திகளிலேயே முதுமை பயனுகருகின்றது. இளமையிற் கனிந்து விரைவினிற் கழியுந் தெளிவுஞ் சிலர் உடையராவர். இவருள் முதலொருசாரார் உடையு முரவுடையராய், அதன் கூர்மை விரைவில் மழுங்கப் பெறுகின்றனர்; முன்னர் மிகவும் நுணுகியாழ்ந்த நூல்களைச் செய்து பின்னாட் கழிமடம் வளர்த்த ஹெர்மோஜினீ1 என்னும் நாவலர் இத்தகையர். மற்றொருசாரார் முதுமைக்குதவா திளமைக்கினிதாம் வளத்தொடு விரையக்கிளத்தலொத்த வயதினும் வாலிபத்தே மிக அழகுசெய்யும் சில இயல்பாந்தன்மைகள் உடைய தரிக்ககில்லன் தெரிக்கவுமொல்லன் என்று தல்லி2 சொல்லும் ஹார்டன்ஸிய அனையர் இவர். நீளுமாண்டுகள் நிறுவ வொண்ணாத பெருந்தகைமை பேணி, பொறுத்தற்கரிய வருத்த மேற்கொள்வர் இன்னு மொரு சாரார். ‘முற்று முதலிலகி இற்றிறுதிவிலகு’பவ னாக ‘லிவி’3 கூறும் ‘ஸிபியோ ஆபிரிகானஸ்’ அன்னவர் இன்னோர்.
தமிழிசை வளர்ச்சியும் தமிழர் மறுமலர்ச்சியும்
“பூதங்களொத்துப் புதுமைதால்விந்தை எனின்
நாதங்களொத்து நயந்தருதற் கொப்பாமோ?”
(பாரதியார்)
தமிழ் நாட்டில், தமிழ ராக்க முயற்சியெலாம் பிறர் தடுக்கும் புதுமையினுக்குவமையிந்த உலகிலில்லை. சிறு வகுப்பார் வட வரிங்கு வந்தேறிக் குடிபுகுந்தார்க்கன்போடு தம்மோடொத்த முற்றுரிமை, முயற்சியின்றி வாழுதற்கு நிலநிதியம் எல்லாம் தந்த தமிழருக்குத் தாழ்நிலையும் அடிமை வாழ்வும் கைம்மாறாக ஆரியர்கள் தந்து, அதனைக் கடவுளாணை என்று சொல்லி வருகின்றாருளப்பாங்கும் சூழ்ச்சி யருந்திறனையும் நாம் வியக்கின்றோம். சாமி அடியேனென்று தெண்டனிட்டுத் தமிழர் நாளும் அவராளும் தொழும்பர்களாய் அமைந்ததற்குத் தலைதாழ்ந்து மனமழிந்து மாழ்கி வாழ்வோம். தமிழிகழ்ந்து தருக்காலே, தமிழருக்கு வசை தந்து தமிழிசையை மறுக்கும் ஒரு வகுப்பார்க்கு மிகவுமஞ்சி நிற்கின்றோம். நம்மவர்க்கு விடுதலை நாள் விடிவுண்டோ? பிறர்க்கென வாழும் பெருந்தகை அண்ணல் - செட்டிநாட்டரசர் போல்வாரின்னாளுமிருப்பதனால், நன்னாளை எதிர்பார்க்கத் துணிவுகொள்வோம்.
பெரும் பரதநாட்டினிலே தமிழ் தவிரப் பிற மொழிகளனைத்தையும் தன்னடிமை கொண்ட ஆரியத்தா லழியாத தென் தமிழை ஒழிப்பதற்கு, அவ்வாரியத்தின் கடைக் குட்டியான இந்தியினைக் கட்டாயக் காவடியாய்த் தமிழர் தோள் மேல் தூக்கி வைத்துத் தமிழினுக்குக் கொடுமை செய்தார்கள். தமிழ்த் தாயை அவளகத்தில் வந்த புது இந்தி மொழிக்கடிமையாக்கி இகழ வேண்டாம், பிற மொழியா ரெவர்க்கு மில்லாப் பழிவாழ்வும் மொழிச் சுமையும் தமிழருக்கு மட்டுமே கட்டாயமாக்க வேண்டாம், என்று எதிர்த்து மாற்றி, தமிழ் மான மழியாமல் காத்ததனால், தன் மதிப்பும் தமிழுணர்வும் தழைத்தரும்பத் தொடங்கியது. பிறப்பளவில் உயர்வு தாழ்வு பேசி எழும் பிளவுணர்வை வளர்க்கின்ற சாதிபேதப் பேதைமையை ஒழித்து, முன்போல் தமிழரிடை ஒற்றுமையும் சரி உரிமையுணர்வும் பூத்து மறுமலர்ச்சி இயக்கம் வலிபெறுவதாயிற்று. புத்துயிரும் புதுவுணர்வும் தமிழரிடைத் தலையெடுக்க, ஒருவகுப்பார் மனப்புழுக்கம், அச்சத்தால் உவர்ப்போடு கார்ப்பினையும் அவர் மிக்கூட்டி எரியலாயிற்று. அவரெதிர்ப்பால், தமிழர் தமதுரிமை வேட்கை உறைத்தூன்ற நெட்டுறக்க அசதி நீங்கிப் புது வாழ்வில் துறைதோறும் தமிழ் மணத்தை நாடலானார்.
இந்நிலையில், தமிழர் தமதுளங்குளிர உணர் வொளிரத் தாய்மொழியி லிசைவளர்க்க விரும்புவது இயற்கைதானே. அவர் விருப்பம் தவறென்று ஆரிய வகுப்பார் சீறி யதை எதிர்க்கலுற்றார்; தமிழர் தமிழிசை வளர்க்க முயல்வதிலே பிறர்க்கு மனங் கொதிப்பானேன்? பிறமொழியிற் பாடுவதைத் தமிழர் தடைசெய்யவில்லை. ஏழிசையின் சூழலிலே பண்பயக்கு மின்பமுடன், பாட்டுதவும் பொருளுணர்வாலுள மலர்ந்து பெருகுமின்ப வாரியிலே தோய்வதவர் விருப்பமாகும். இசைச் சுவைக்கு மொழிவேண்டா, ஆதலினால் பொருளறியும் தமிழ்ப் பாட்டு மிகையென்று கூறுகின்றார். ஆனால், ஆத்திரத்தோடாரியத்தில் இவர்களிசைக் கணிசெய்யும் பாட்டுக்கள் என்றவற்றை உவக்கின்றார். சொற்பொருளில் சுவையில்லை என்பவர்கள் பண்ணளவிலின்புற்று, பாட்டுமொழி கருதாமலிருப்ப தன்றோ நேர்மையாகும்? அதற்குமாறாய்ப் பண்ணோடு பிறமொழியிற் பாட்டி வரிசைவரிசைக் கணியாகக் கொள்ளுகிறார். ஆனால் தமிழ்ப் பாட்டை வெறுக்கின்றார். பண்ணொன்றே குறி யென்றால், பாட்டுமொழி எதுவானாலும் ஒன்றுதானே? தமிழ் மட்டும் கசந்து பிறமொழிப் பாட்டெல்லா மினிப்பானேன்? இனி, பொருளுணர்வே இசைச் சுவைக்குத் தடையாமென்றுஞ் சிலர் கூறுகிறார். அது மெய்யானால், தெலுங்கர் அவர் மொழிப்பாட்டைக் கேட்பதுவும் பிசகாகும்; அவரவர்கள் அறியாத பிறமொழியிலிசை நுகர்தல் அவசியமாம். அதைக் கூறாமல், ஆரியமும், அதன் மயமாம் ஆந்திரமும் தழுவி, தீந்தமிழினையே தடை செய்து பகைப்பானேன்?
இசை, உள்ளுணர்வை இன்புறுத்தும் கலையாகும். உணர்வு தொடா தல கெண்ணிப் பண் பரிசு நுண்ணறிவாலளக்க வரும் இசையமைப்பு வியப்புமிக வளர்க்கக்கூடும். ஆனால், அஃதுணர்வை எழுப்பி உளங்குளிர் வித்துவப்பிக்கும் இனிய இசையாக மாட்டா. பண்ணோசை இனிப்பூட்டு மென்பதுண்மை. ஆனால் பொருட்சுவையே, உளங்குழைத்து உணர்வினிக்கக் கனிவித்துப் புளக மூட்டும். சுதி (அலகு)க் கணக்கை அறிவாலே சுவைத்தல் கூடும். உளங்குளிர்வித்து உணர்வெழுப்பப் பொருட்சுவையே உதவியாகும். அதனாற்றான் ஆழ்வாரும் நாயன்மாரும் தாய் மொழியில் உயிருருக்கும் பாசுரங்கள் உளங்குளிர்ந்த போதெல்லாம் உவந்துவந்து பாடினர்.
தாய்மொழியிற் பாடுவதே கேட்போரை உளங்குளிர்வித் துணர்வினிக்க இன்பூட்டி உவப்பிக்கும். பொருளறியாப் பிறமொழிப் பாட்டெதுவும் காதிலின் னோசை யளவில் நின்று, நெஞ்ச நெகிழ்த் துணர் வெழுப்புஞ் சுவையினிலே குன்றிவிடும். அதனாற்றான் உணர்வு நிறைந்துளங் குளிர்ந்தோர் பரவசத்தால் தாய் மொழியில் பாடுகின்றார். பண்ணறிவில்லாதவரும், உணர்வூறிவழியுங்கால் நினையாமல் வாய் பாட மனமகிழுமியல்பினையும் காணுகிறோம். பெரும் பரத கண்டத்தில் பல மொழியாரவரவர் தம் தாய்மொழியில் பாடுவதிற் றடை காணாதவர்கள் தமிழ்ப் பாட்டை எதிர்ப்பதற்குத் தாமறியுங் காரணங்களிருத்தல் வேண்டும்.
தமதாக்கம் கருதித் தம்முரிமை தாமடையத் தமிழ் மக்கள், தம் நாட்டில் தமிழினிலும் தமிழர் பழங்கலைகளிலும் தடுப்பரிய காதலொடு மறுமலர்ச்சி யுணர்ச்சி யெழத் தமதுடைமை மீட்பதற்கு முயல்கின்றார். உறங்கியவர் விழித்துப் புத்துணர்வுற் றூக்கும் ஆக்க முயற்சிகளை வரையறுத்து, அரசியலில் தமக்குதவும் அம்மட்டோ டமைந்தோய ஆரியர்கள் ஆணையிட்டு வருகின்றார். மீறுவோரைச் சபித்திழித்து வைகின்றார். அரசியலில் ஆங்கிலரை எதிர்த்துத் தம்முரிமை மீட்பினிலே முனைபவரைப் பிற துறையி லாரியருக் கடங்கியவராணை வழி நிற்பரென நினைப்பார்தம் பேதைமையை என்னென்பாம். எது கொண்டும் யாரிடத்தும் இகலுவதை வெறுத்து நடுநிலையே விரும்புஞ் செட்டி நாட்டரசர், ஓரிசைக் கூட்டத்தில் தமிழரிடைத் தமிழ்ப்பாட்டு மிகுவிக்கும் நன்னோக்க மொன்றே கூறித் தூண்டினார்கள். உடனே இங்கொரு வகுப்பார் உடன்றெழுந்து, மணியிழந்த நாகம்போல் மாழ்கிச் சீறி அழலுகிறார். அறிவாலே மக்கள் பிற மாக்களுக்கு மேலாவதுண்மை; எனினும், அறிவை விட உணர்வு மக்கள் வாழ்வினிலே அதிகவிடம் கொள்ளுவது முண்மையாகும். அதை யறிந்த ஆரியர்கள், தமிழ் தழைந்து இசைக் கலையும் தமிழ்த்தளிர்விட் டுணர்வுமலர் பூத்துவிட்டால், தமிழர் பிறகவ ருரிமை யனைத்தினையு மடைவதனைத் தடுக்க முடியாதென்று கண்டு கொண்டு, தமிழர் தனிக்கலைக்கிளர்ச்சி விளைவுகளை முளையினிலே கிள்ளி வேரில் வெந்நீர் விட்டவித்துவிட விரைகின்றார். பண்பாதி - பா பாதி என்ற பழம் படிப்பினையு மறந்து விட்டார்.
பொருளுணர்வால் தாய்மொழியிற் பாட்டுக்கள் தரும் பெரிய பயன்களைச் சுருக்கி மேலே ஓரளவு காட்டினோம். அது வொன்றே தமிழிசையை இசை யுலகில் நிறுவப் போதும். ஆனால் அம்மட்டில் இசைக் கிளர்ச்சி அவசியத்தை அளக்கவேண்டா. இசையுலகில் பழைய தனித் தமிழ் முறையும் வடநாட்டாரிய முறையும் தொன்று தொட்டு வேறாக நின்று வருமுண்மையினை நடுநிலை ஆராய்ச்சியாளர் நாடோறும் விளக்குகின்றார். அதனாலும் தமிழிசைக்குப் புத்துயிர் நாமளிக்க வேண்டும். ஆரியர்பாற் கொண்டவற்றிற் காரியப்பெய ரிரவலையும் தமிழர் கொள்வார். தனித்தமிழ்ப் பெயருள்ள வெலாம் தமிழர் முதலுடைமை யெனச் சான்று சொல்லும். சுரங்களேழும் வடகலையாரிடைப் பெற்ற குறிகளுடன் பெயர்ப் பொருளும் வேறாகும். பழைய தமிழிசை நூலால், வேறு பொருட்குறிப்புடைய குரல் முதலா மேழிசையும் அமையக் காண்பாம். தமிழ்ப் பண்கள் ஆரியரின் மறைகளுக்கு முன்முதலே ஏழிசையின் சூழல்களாய் வாழ்ந்தனவாக, பழைய முதல் மறைகளிலே சுரங்கள் நாலாய் இசையாகாதிருந்ததோடு பின்னெழுந்த சாமங்கூட ஔடதமாய் ஐந்து சுரத்தளவோடே யமைந்த தாகும். தமிழர் தனி யாழ்ப்பண்ணின் முறையைப் பற்றிப் பிற்றைய நாள் புதிய கருநாடக மென்றேழு சுரமுடைய தொரு சங்கீத முறையினை ஆரியர்கள் அமைத்து முடித்துள்ளார்கள். தமிழிசையின் தார நிலை பயின்றறியா ஆரியர்கள் காந்தரக் கிரமமெனப் பெயரிட்டு வானுலகத் துளதாகக் காட்டுகிறார். தாரத்தோ டிளி குரலா முந்நிலையும் ஆளத்தி முறை யிற்றேறி, தமிழிசை தன் அரசுகட்டிலேறி, வீறுடனே இந்நாட்டிலிசையுலகை யாண்ட துண்மை. அதற்கு மாறாய், அரிய தமிழிசை யமைப்பு மறைந்தறவே தமிழராலும் மறந்து விடப்படுவதாயிற்று. பண் வரிசையுலகத்தை இரு பிறவிப் புது ராக குலங்களின்று நின்றாளக் காணுகிறோம். மேனாட்டு மேதைகளும் பிறரு மின்று கணித முறையா லளந்தாய்ந்து கண்டறிந்து பண்டைய நம் முன்னோர்கள் கையாண்ட பண்ணமைப்பைத் தேர்ந்து நாளும் வியந்து மிகப் பாராட்டி வருகின்றார். சிலப்பதிகார உரைவிளக்க ஆராய்ச்சியிற் புகுந்து, நாரதரின் ஆரிய சங்கீத நூலோடேனை நூலுண்மைகளை யொப்பிட்டு, வாழ்விழந்த முதுநாரை, இசை நுணுக்க முதலான தமிழரது பண்டை நூலின் இசை மரபும் பண்முறையும், அலகளவோ டிசைநிலைக ளனைத்து முறையேதேர்ந்து இனிய தமிழ் நடையில் தெளிவாகக் கட்டுரைகள் வெளியிட்டு வருமொரு பெரியாரைத் தமிழுலகம் வாழ்த்த வேண்டும். ஆழ்ந்தமதி யோடகன்றநூலறிவும், நடுநிலையில் வழுவாத மெய்யுணர்வும், அன்புளமு மமைந்த விபுலானந்தப் பெருந்தகையார் பல்லாண்டு வாழ்ந்து முன்னாள் நம்மவர்கள் இழந்த இசைக்கலை நிதியை மீண்டு தருவாராக. தாளாற்றித் தந்த பெருநிதிக்கிழவர், செட்டிநாட்டரசர், தமிழ்க் கலைக்குப் பெருங் கழகம் நிறுவியதோ டிசைக்கலையை வளர்க்க முன்வந்த வள்ளலின் வேளாண்மை பாராட்டி வாழ்த்தித் தமிழரெல்லாம் பல்லாண்டு பாடுகின்றார். தமிழிசையும் தமிழ் மொழியும் தளர்வொழிந்து தலைநின்றோங்கித் தழைந்திடுக. தமிழர்களும் பழி நிலையைக் கைவிட்டு முயன்று மக்கள் முதலணியில் முன்போலப் புகழ் வாழ்வை எய்திடுக.
வெறுப்பின் மறுப்பு
தமிழ்ப்பொழில் துணர் 25இன் முதல் மலரில், பண்டிதர் திரு கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் ஐந்திறம் என்னும் கட்டுரையைக் கண்டேன். அதில், ஐந்திரம் என வழங்கும் பனம்பாரர் பாயிரம் பாடம் தவறு எனவும், தொல்காப்பியர் தாம் செய்த நூலுக்கு ஐந்திறம் என்றே பெயர் வைத்தனர் எனவும் பண்டிதர் அவர்கள் தேர்ந்து தெளிந்த துணிபு சுட்டப்பட்டிருந்தது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பது அறிவு ஆகையால், அப் புது முடிபின் உண்மை உணர அக் கட்டுரையை ஆவலுடன் படித்தேன். அதில் பண்டிதரவர்களின் அருந்திறல் ஆராய்ச்சியை விருந்தென அருந்தும் வேட்கையால் எதிர்பார்த்த கொள்கை விளக்கப்படாமல், வீணாகப் பண்டித ரவர்கள் என்பாற் கொண்ட வெறுப்பும், நான் கூறாத கொள்கைக்கு மறுப்பும் எழுதியிருப்பது வியப்பை விளைத்தது.
தொல்காப்பியர் தாம் அருளிச் செய்த நூலுக்குத் தொல்காப்பியர் எனத் தம் பெயரையே வைத்ததாக என் உரைப்பாயிரத்தில் எழுதினேன் என்பது பண்டித ரவர்கள் என்மேல் ஏற்றும் முதல் குற்றச்சாட்டு. காப்பியர் என்பது தமிழகத்து வழங்கும் அரும் பழம் பெருநூலியற்றியவரின் இயற்பெயரேயன்றிக், காப்பியக் குடியினர் எனச் சுட்டும் காரணக் குறிப்புப் பெயரன்று என்றும், அந்நூல் அவர் பெயரால் வழங்குகிறது என்றும் மட்டுமே என் கருத்தாக நான் எழுதினேன். தொல்காப்பியர் என்பதே இந்நூலியற்றியார்க்கு இயற்பெயரும், அவர் நூலுக்கு ஆகுபெயரும் ஆம் என்பது மட்டுமே என் உரைப் பாயிரத்தில் நான் எழுதியது. தொல்காப்பியர் தாம் எழுதிய நூலுக்குத் தாமே தம் பெயரை வைத்தார் என்று யாண்டும் யான் எழுதவில்லை.
தொல்காப்பியரே தம் பெயரால் இத் தமிழ்ப் பெருநூலை இயற்றினர் என்று பனம்பாரனர் பெயரால் வழங்கும் அந்நூற்பாயிரம் இயம்புகிறது என்று பிறர் மதமும் சுட்டியிருக்கிறேன். அதனால் அது என் கொள்கை யாகாமை தெளிவாகும்.
இனி, தாம் இயற்றிய நூலுக்குத் தொல்காப்பியர் வைத்த பெயர் இன்னதென்னத் துணியச் சான்றின்மை யாலும், தமிழகத்தில் அந்நூல் அவர் பெயரால் வழங்கி வருவதாலும், அவ் வழக்குப் பெயர் அந் நூலுக்கு ஆகுபெயராம் என்று கருதி, அதையும் எழுதினேன். அதற்கு எடுத்துக்காட்டும் நான் காட்டவில்லை என்பது பண்டித ரவர்கள் என்மேல் கூறும் இரண்டாம் குற்றம். இயற்றியவர் பெயர் அவர் நூலுக்கு ஆகுபெயரால் வழங்குவதற்கு எடுத்துக்காட்டு எதுவும் புலவர் வேண்டார். வள்ளுவர், கம்பர் எனும் புலவர் பெயர்கள் அவர் நூல்களுக்கு ஆகுபெயராய் வழங்குவதை யாவரும் அறிவர். எனினும், அப் பெயர்களை அந் நூல்களுக்கு அப் புலவரே வைத்தனர் என்றெவரும் எண்ணார்.
இன்னும், ஒரு நூற்கு ஏற்ற பெய ரிடுவதும், அன்றி, அதை ஆக்கியோன் பெயரால் அழைப்பதுமே பழைய தமிழ் வழக்கு என்று நான் எழுதியதைப் பின்னும் ஒரு பிழையெனப் பண்டிதர் கண்டிக்கின்றார். ஆக்கியோன் தன் பெயரால் தான் இயற்றிய நூலை அழைப்பது வழக்கென நான் கூறவில்லை. அழைப்பது என்ற பொதுப் பயனிலைக்கு முதலில் ஆக்கியோன் என்ற எழுவாயை ஏற்படுத்திக் கொண்டு, பிறகு அதைப் பண்டித ரவர்கள் கண்டிக்கிறார்கள். ஆனால், அவர்களே ஆக்கியோன் தன் பெயரையே தானியற்றிய நூலுக்கு வைப்பது தமிழ் வழக்கென நான் எழுதவில்லை என்றும் உடன்படுகிறார்கள். ஆயினும், அவ்வாறு நான் எழுதாததையும் என்மேல் மற்றுமொரு குற்றமாகக் கூறுகிறார்கள். நான் கூறாதவற்றைக் கூறியது போலக் கொண்டு, இல்லதைப் பொல்லதென எழுதுவது எப்படியும் அவர்கள் வெறுப்பின் தப்புக் கூற விரும்பும் குறிப்பாவதன்றி, என் குற்றமாகாது என வினயத்துடன் வற்புறுத்த விரும்புகிறேன்.
சுருங்கச் சொல்லின், என் உரைப்பாயிரக் கூற்றுக்களில் குற்றம் எதுவுமில்லை.
1. முதலில், தொல்காப்பியர் என்பது தமிழில் வழங்கும் பெரும் பழ நூலை ஆக்கிய புலவரின் இயற்பெயர் என்பதென் துணிவு. அதைப் பண்டிதரவர்கள் மறுக்கவில்லை.
2. இரண்டாவதாக, தொல்காப்பியர் என்ற தமிழ்ப் பெயரைத் தொல்காப்பியம் என வடமொழித் தத்திதப் பெயராக்கி, பழமையான கபியின் (சுக்கிரனின்) மரபினர், அரும் பழநூலை ஆக்கிய பெருந்தமிழ்ப் புலவர் எனப் புனைந்த கற்பனை பொருந்தாப் புதுக்கதை என விளக்கினேன். அதுவும் பண்டித ரவர்கட் குடன்பா டென்றே தோன்றுகிறது. ஆனால், அக் கற்பனைக் கதையை முதலில் மகாவித்துவான் ரா. இராகவையங்கா ரவர்கள் புனைந்தது போலப் பண்டிதரவர்கள் கருதுகின்றார்கள். பழைய உரையாசிரியர் அமண இளம்பூரணரும், பிந்திய ஆரிய உரைகாரர் அனைவருமே, தொல்காப்பியர் என்பதைத் தொன்மையான காப்பியக் குடிப் பிறப்பைச் சுட்டும் காரணக் குறிப்புப் பெயர் என்றே எழுதியுள்ளனர்.
3. என் மூன்றாம் குற்றம், ஐந்திரம் என்னும் பாடப் பொருத்தத்தை நான் ஆராயவில்லை என்பது. ஆன்ற புலமை சான்ற பழைய முத்தமிழ் வித்தகர் அடியார்க்கு நல்லார் முதல் தமிழறிஞர் யாவருமே இடையின ரகரத்தொடு ஐந்திரப் பெயரைக் கடைப் பிடித்துக் கையாண்டு வருவதாலும், வல்லின றகரம் சுட்டும் சான்று காணாமையாலும் நான் அவ்வாராய்ச்சியில் புகவில்லை. அதிலிறங்கி ஆழ்ந்தாய்ந்து துணியும் பண்டித ரவர்களின் முடிபுகளையும், அவற்றிற் கவர்கள் கூறும் ஏதுக்களையும் ஆதரவுகளையும் ஆராய்வோம்; தக்காங்கு பாராட்டுவோம்.
பாரதியார் கருத்து
தமிழ்நாடு தலைநிமிர்ந்து வாழ்வதா? அன்றித் தாழ்வதா? என்ற நெருக்கடி வந்துவிட்டது. இதுவரை நம்மவர் தொல்லைகளுக்கு அந்நிய ஆட்சியே காரணம் எனப் பேசிவந்தோம். ஆயுத வலிமையுடையவரை அகற்ற முடியாமல் அவதியுற்றோம். உலகப் பெரும்போரால் ஓய்வு விரும்பிய ஆங்கிலர், நாகரிக மக்களின் நன்மதிப்பை வேண்டி நம் நாட்டு அரசு முறையை நாமே அமைத்துக் கொள்ள உரிமையும் தந்தனர். அரசியல் அமைப்புக் குழுவில் தமிழ் நாட்டவர்க்குத் தக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்தனுப்ப முடியாது போயிற்று. ஒரு சார்பினரின் ஊழியர் சிலர் வடநாட்டுத் தலைவர் வரையறையில் நின்று கையுயர்த்தச் சென்றிருப்பதறி வோம். வருமுன் காக்கக்கருதி முயலாமல் வந்தபின் நொந்து விதிப்பயன் என்பதால், பயன் என்ன?
இப்போது நமது தமிழ் நாட்டு அரசும் காங்கிரசுப் பேரால் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டு அது நடந்துவரும் கோலம் நம்மவர் அழவும், பிறநாட்டார் நகைக்கவும் காரணமாக இருந்து வருகிறது. உரிமைபேசி ஜனநாயக முறையில் ஆளவந்த அமைச்சர், அந்நியராட்சியில் நாம் அடைந்திருந்த உரிமைகளைக்கூட அழித்து, நம்மை அடிமைகளாகவும் இயங்கும் பிணங்களாகவும் கருதி வருவதாகத் தெரிய வருகிறது. நமது நாட்டு மந்திரிகள் ஆழாக்கு அரிசியும் ஐந்து கசத்துணியும் கொண்டு வாழ வேண்டும் என உயிர்ப்பிணங்களுக்குக் கட்டளையிட்டு விட்டனர். ஆனால் செத்த பிணங்களோ வாய்க்கரிசியும், கோடித் துணியுமில்லாமல் சுடுகாடு போக மறுத்து வருகின்றன. இந்தக் கண் கொள்ளாக் காட்சியைத் தவிர வேறெதுவும் தற்கால ஆட்சியில் காண்பதற்கில்லை.
விளைத்தவர் போதுமான அளவு உண்ணலாகாது என்னும் கொடுமையை அரக்கர் ஆட்சி என்பதானால் மானமறைக்கப் போதிய துணியும் போர்த்தலாகாது என்பதற்கு என்ன பெயரிடுவது? வயல்களில் வேலை செய்யும் தமிழ் மகளிர்க்குங்கூடக் குறைந்தது 16 முழச் சேலையாவது வேண்டுமே! நம் நாட்டில் பருத்தி விளைந்தும், நமக்குப் போதிய அளவுக்கு மேலுமிருந்தும், மில்லுகள் கட்ட இடங்கள் இருந்தும், வேண்டிய பொருளிருந்தும், நடத்தத் திறமையிருந்தும், உழைக்க ஆள் இருந்தும், நூற்று உடுத்த விடமாட்டோம் என்று முனைந்து கூறுகின்ற அறிவு கலவாதமொழியை எந்த ஆண்டவனிடம் ஒப்புவிப்பதோ?
எல்லாரும் நூற்பது, எல்லாரும் தெருப் பெருக்குவது, எல்லாரும் நெல் குத்துவது என்பதை எந்த நாட்டிலாவது எவராவது எதிர்பார்க்கக்கூடிய தொன்றாகுமா? மந்திரி வேலைக்குச் சிலரும், மண் சுவர் வைக்கச் சிலரும் வேண்டாமா? காங்கிரசு சபையிலோ, காந்தி அடிகளின் முடிவிலோ கட்டாயப்படுத்தும் கூற்று இருப்பதாக எண்ணுவதற் கில்லாதபோது சென்னை மந்திரிக்கு இது ஏனோ? அறிய முடியவில்லை.
எது எப்படியாயினும், இனி ஒருநாள்கூட வீண் போக்காமல் இந்து - மகமதியச் சண்டை, பார்ப்பார் அல்லாதார் பகைமை, காங்கிர ஜடி வாதம், ஏழை செல்வர் என்ற பிளவு எதுவுமில்லாமல், அனைவரும் ஒன்றுபட்டு ஒருமுகமாக எதிர்த்து, அறிவுக்கு ஒவ்வாத ஆட்சியை அழித்து, ஒழித்து, தமிழ் மாகாணத்தைத் தனியாகப் பிரித்து, தகுதியும் அறிவும் ஆற்றலுமுள்ள தலைவரைத் தேர்ந்தெடுத்து, நாடாளச் செய்யத் தயங்காமல் முயலவேண்டும் என்று தமிழகப் பெரு மக்களைப் பெரிதும் வேண்டிக் கொள்ளுகிறேன். ‘தமிழர் நாடு’க்கும், அன்பர் விசுவநாதம் அவர்களுக்கும் எனது வாழ்த்துதல்.
பாராட்டு (1)
பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது (1942) நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் பாராட்டிப் பேசியவை வருமாறு :
மாட்சிமை தங்கிய செட்டி நாட்டு மன்ன ரவர்களே! மண்டு புகழுடைப் பண்டித மணியவர்களே! பெரியோர்களே! பெருமாட்டிகளே!
இங்கு நடைபெறும் நல்விழா அறிவுலகிற் புகாத வெறுஞ் செல்வர்களைச் சிறப்புறச் செய்வதற்கன்று; இருபெரு மொழிகளின் விரிவோ டாழமும் அளந்து நிலைகண்டு அருந்தமிழ் விநோதராய்ப் பொருளொடு புகழும் மருளறு சிவநெறி மாண்பும் எய்திய பண்டிதமணியைப் பாராட்டுதற்கென்று அறிந்து மகிழ்கின்றேன். அம் மகிழ்ச்சி இன்று மூன்று காரணங்களால் முறையே மும்மடங்கு பெருகி விரிகின்றது.
முதலாவது மக்கள் படும் இன்னல்களெல்லாம் பேதைமை, புல்லறிவாண்மைகளால் ஆதலால் அவற்றைத் தொலைத்து நல்லறிவை நாடோறும் வளர்க்கும் கல்வியை நாடெல்லாம் பரப்பும் கடன் மேற்கொண் டொழுகும் செட்டிநாட்டரசரே, நிரம்பிய புலமை வரம்புகண் டுவக்கும் பண்டிதமணிகளின் அறுபதாண்டு நிறைவைக் கொண்டாடும் கூட்டத்திற்குத் தலைமை வீற்றிருக்கும் பொருத்தம் உவகையைப் பெருக்கி இனிமை தருவதாகும். அறிவும் திருவும் விரியும் புகழும் உரிமை கொள்ளும் அரசர் அண்ணாமலை வள்ளல் நம் பண்டிதமணியின் பெருமை யறிந்து இவர்களைத் தாம் நிறுவிய பல்கலைக்கழகத் தமிழ்த் தலைவர் ஆக்கிச் சீரொடு சிறப்பும் செய்தது அவர்கள் தகவளந்து தெளிந்து தேறும் வினைமாட்சியை விளக்குவதாகும். முப்பெருங் கழகமும் ஒருங்கு தேர்ந்து பண்டிதமணிக்குத் தமிழ்த் தலைமை தந்து வியந்தது, அரசரவர்களின் திறலை உலகறியச் சான்று தந்து விளக்குவதாகும். அத்தகு புலவரின் வைர வெள்ளணி விழாவில் தலைமை தாங்குதல் தமிழ்ப் புலமைக்கும் தமக்குமே தகுமெனத் துணிந்து வந்திருந்து நடத்தும் பெருமையை நாம் எல்லோரும் பாராட்டும் கடப்பாடுடை யோம்.
இனி இரண்டாவதாகத் தமிழர் தமிழ்ப் புலவரைப் பாராட்டுவது அரிதில் இனிய பெரிய காட்சி. அச்சமும் அவாவும் தூண்டுங்கால் அதிகாரிகளின் விருப்பத்திற்காகத் தமிழர் அல்லார் ஒரு சிலரைப் புலமையைப் பேரளவில் புலனாக்கி உண்மையில் தந்நலங் கருதிக் கொண்டாடும் கூட்டங்கள் இடையிடையே நிகழ்வதுண்டு. அங்ஙனமின்றிப் பதவியும் பெருநிதியும் உதவும் சிறப்பில்லாத நிலையில் புலமையைப் பேணித் தமிழ்ப் புலவரைத் தமிழர் கூடிப் பாராட்டும் இவ் விழாவை இன்று நான் காண்பதால் என் மகிழ்ச்சி இருமடங்காகி வளர்கின்றது.
மூன்றாவதாக எங்களிடையே முப்பதாண்டுகளாகத் தொடங்குநாள் தொட்டு நெகிழ்ச்சியும் நெரிவும் இன்றிச் செறிந்து வளரும் நட்புப் பயிரை அறிவு நீராற் செழுமை கொள்ளச் செய்துவரும் நம் பண்டிதமணி யவர்களின் பெருவிழாவில் பட்டம் பதவி அதிகாரம் ஒன்றும் இல்லாத எனக்கும் இடங் கிடைத்ததை நினைத்து என் மகிழ்ச்சி மூன்றாமுறையாக மும்மடங்கு பெருகி மலர்கின்றது. என் நெடு வாழ்க்கையின் முதலில் ஆங்கிலமன்றித் தமிழிற் பேசியறியாத என்னைத் தாய் மொழியில் தமிழர் கூட்டத்தில் பேச வைத்து அத் துறையில் ஊக்கித் தமக்கினியர் குழுவில் என்னையும் சேர்த்து அன்பு காட்டும் பண்டிதமணியவர்களின் வயதொடு வளரும் புகழை வளர்க்கும் புலமையின் நிறைவைப் பாராட்டும் பெரியாரிடை எனக்கும் இடந் தந்தார் அன்பை நினைந்து மகிழ்கின்றேன். ஞாயிறு தனக்குப் பேரொளி வளர்வது இயல்பே போலக் கல்வி ஒளி திகழும் கதிரேச நாவலரின் ஒல்காப் புகழ் தமிழகத்து ஒளிர்வதும் இயல்பாகும். இவர் கேட்டார்ப் பிணித்துக் கேளாரும் வேட்ப மொழியுஞ் சொல்லின் செல்வர்; சிவநெறிக் கிழவர்; கல்வியமுதருந்தி மூவா இளநல முதிருணர்வு கனிந்து கமழும் வித்தகர். இத்தகையார்க்கு இன்னும் பல்லாண்டு வாழ்நாள் உயர்க. இவர்கள் தமிழ்த் தாய்க்கு அன்புப் பணியாற்றுக. ஆண்டுதோறும் அளவிலா அறிவு நூல் இயற்றித், தமிழகம் உவக்கத் திருவாசகம் திருத்தொண்டர் புராணம், தேவர் சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய நூற்பெரும் பாற்கடல்களைக் கடைந்து சுவைநலமிக்க பொருளமிர்தத்தையெடுத்துத் தாமும் நுகர்ந்து பிறர்க்கும் ஊட்டி நல்வாழ்வு எய்துக.
பாராட்டு (2)
பிரும்மஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களைத் தமிழுலக முழுதறியும். இவர்கள் புகழ் பரவுதற்கு என்போன்றார் எடுத்துரைகள் யாதும் வேண்டா. இவர்கள் பெருந்தகவுரைக்கச் சிறப்புரிமை பெற்று யருஞ் சிலரோடு சேர்த்தெண்ணப் பெறும் பேற்றை எனக்குதவிய கலைமகள் பத்திராசிரியருள் ஒருவரும், சென்னைச் சர்வகலாசாலைத் தமிழகராதித் தலைமைப் பதிப்பாசிரியருமாகிய திரு வையாபுரிப்பிள்ளை யவர்களின் அன்பும், ஐயரவர்களின் தமிழ்த் தொண்டு பாராட்டும் விழவினில் என்மகிழ்ச்சி கூறுமவாவுமே இப்பணியில் எனைத் தூண்டுவன. நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றாற்றலாமாகையால், இப் பெரியாரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டு வெளியீட்டில் யானும் இப்பெரியாரின் மெய்க்கீர்த்தி சிறிது கூற விழைந்து விடைபெறுகின்றேன்.
தற்காலத் தமிழகத்தில், புலமையுலகில் தலைமை நிலை தாங்கித் தன்னிகரற்ற தமிழ் நாவலராய் வீறு பெற்றுயர்ந்த தகையாளர் சாமிநாதை யரவர்களை அறியாதார் தமிழ்மணமறியாதாராம். தமிழகமட்டுமன்று; தமிழ் மொழித்தகவாயும் மேனாட்டார் எல்லாரும் இவர்கள் புகழேற்றிப் போற்றுகின்றார்கள். விரிந்து பரந்தாழ்ந்த பல விழுமிய நூலெழுந்து காலவரம்பிகந்த தமிழுகந்து பயின்று நிதம் நலமயின்று வளமலிந்து நிரம்பியநூற் பெரும் புலமைச் செல்வருளே இப்பெரியார் செம்மலாவார். சிறந்த சால்பு பிறிதெதுவும் இலதெனினும், இவர்களிடம் நின்ற நிறைபுலமை யொன்றே இவர்களுக்குக் குறையாத புகழுதவப் போதியதாகும்.
இன்னும் இவர்கள், மருங்கொவ்வாத் தமிழ்வாணர் ஒருங்கு வந்து வீறுசொலப் பொதுவறு தண்டமிழ்ப் புலமை இறைமை தாங்கி, அனைவருக்கும் இனியவராஞ் செவ்வி மிகப்படைத்தாளும் பண்பு இவர்கள் உடைமையாகும். இன்சொலினிதீன்றால் கண்டு கொண்டு இவர்கள் யாண்டும் யார்க்கும் எஞ்ஞான்றும் இனியனவே சொல்லிக் கனிவிக்கும் ஏமாப்பை அகல அணிகலனாக் கொண்டுடை யார்கள்.
சமயவெறி, தனச் செருக்கு, சண்டையிடும் இழிபுலமை செறிந்தடர்க்குந் தற்காலத் தமிழ்ச் சமுதாயத்தில், வேத்தியலில் விழுப்பதவிதாங்குபவர், குறுமன்னர் வினையாளர், பலமடத்தின் அதிபதிகள், தனிவணிகர், வேளாண்மை விழுச்செல்வர், இகலினையே புகலிடமாக் கொள்பவர்கள், வாதினைத் தம் வாழ்வினுக்குச் சாதகமாகக் கொண்ட பலர், பலவேறு பதவியுடை யெனைவோரும் இவர்கள் தமதின்றுணைவ ரென விரும்ப எவ்வெவர்க்கும் இனிய சொலும் சொல்லின் செல்வர்.
நாமறியத் தமிழர்களே தமிழ்பேசல் இழிதக வென்று அதை வெறுத்து இறுமாந்த காலமுண்டு. தமிழுணர்வின் குறைவளவே அறிவின் நிறைவளங் குறிப்பதெனச் சொல்பவரைப் பழியாமல் தமிழுலகம் பெரியார்போல் மதித்ததுண்டு. தமிழ்க்கல்வி பயிலாதார் எனை மாட்சியுடையாரும் அந்நியரும் ஆங்கிலரும் இந்நாளில் தட்டுண்டு தடுமாறியேனும் தமிழிற் பேச விரும்புவதை இன்று காண்போம். இவ்வரிய மதிப்பு விருப்பமாறுபாட்டை ஒரே தலைமுறையில் தமிழரிடைச் செய்துதவித் தமிழ் வளர்த்த செவிலியருள் தலைமைநிலை ஐயரவர்கட்கே உரித்தாமென்பது மிகையாகாது.
தமிழில் நன்னூலே கிடையாது, அறிவுவளம் பெருக்காத சின்னூல்கள் சிலவன்றி மதிவாணர் மதிக்க வேறெந்நூலும் இல்லையெனப் பழித்த பலர், வாழ்நாளை முழுதுதவிப் பயின்றாலும் படித்துலவாப் பன்னூல்கள் விழுப்பொருளும் கவிச்சுவையும் முழுவி நலமிக நிறைந்த எண்ணில நூல் இறந்தனபோய் இன்றுமுள படிப்பார்க் கென்று தொன்னூல்கள் துருவியெடுத்து உலகறிய உதவித் தொன்மைத் தமிழ்ப்பெருமை நாகரிகம் உலகறியச் செய்த பெரும் புண்ணியருள் முதற்பதவி இவர்களதே யென்பதி லோர் ஐயமில்லை.
காலகதியும் கறையானும் கொண்டுண்டு அழிந் தொழிந்தன போக, அழியவிருந்த பல பழைய விழுமிய நூற்சுவடிகளைத் தற்காலத் தமிழரின் நொதுமல், மறவி, மடிமையெனும் மறலிதூதர் கொடுங்கையினின்றும் பிடுங்கி அவற்றிற்கு இறவாப் புதுவாழ்வு உதவிய பலருங் கூடச் சிதலரித்தும் பிறவழியும் விளங்காத இடங்களிலே சொல்விரித்தும் திரித்தும் தமது மனம் விரும்பியாங்குத் திருத்தங்கள் பல துணிந்து நூற்பான்மை மாற்றாதா ரில்லை யெனலாம். ஐயரவர்களோ, தெளிந்து துணியக் கூடும் இடங்களிலும் புதுப்பாடம் பெய்யாமல் ஏடிருந்த படியெழுதி வெளியிடுவர்; பாடங்கள் பலவுளவேல், அவை பலவு மறையாமல் குறிப்பிப்பர். இவ்வாறு பழம்புலவர் மரபினொடு மாண்புபேணிப் பதிப்பு வெளியீடுகளில் மெய்ம்மையறம் ஓம்பிக் காப்பர்.
இதுவுமன்றி மேனாட்டார் முறைமுழுதும் மேற்கொண்டு முகவுரைகள், அரியபடி விளக்கங்கள், அபிதானமஞ்சரிகள், மேற்கோளின் விவரங்கள், நூலில் வரும் அரிய பல பொருட்குறிப்பு இவையெல்லாம் அரிது முயன்று இனிதெழுதித் தமிழகத்தில் நூலுலகைச் சால வளஞ் செயும் அரிய முயற்சியிலே அயர்ச்சியின்றி உழைத்து மகிழ்வார்கள். இவர்கள் பெருமுயற்சியினால் நாகரிகப் புலவர் பலர் இன்றளவும் நூலினையே படியாமல் பல பழநூற் பொருள் முழுதும் உணர்ந்ததுபோல் வாதப்போர் விளைத்து உளஞ்சுழியாக் களியாட்டம் கொள்ளுதற்கு இப்பெரியார் இவர்க்கெல்லாம் வைப்புநிதி வழங்கி அவை எண்பதத்தாலெவ்வெவரும் துய்த்துலவச் செய்து வைத்த வள்ளலாவர்.
அருமையென மேனாட்டார் கொண்டாடும் வெள்ளி விழா இரட்டிய பொன்விழாவாண்டும் ஐம்பதேயாம். இக்காலம், தலைமுறைகள் இரண்டளக்கப் போதியதாம். இத்துடனே ஒருபது கூடி அறுபது பெறினும் அதை வைரவிழாவெனவே வெள்ளையரும் அயர்ந்து மகிழ்வார். ஐயரவர்கள் எண்ணைந்தை இரட்டிய ஆண்டவதி கண்டும், ஐயைந்தை யிரட்டியதன் மேலான ஆண்டு பல தமிழ்த் தொண்டே ஆற்றிவந்தும், தமிழுலகு அவர்களுக்குத் தகவுடைய செய்ந்நன்றி செய்ததெனக் கூறற்கில்லை. அந்நியராம் ஆங்கிலநல் லரசியலார் இப்பெரியார் தமிழ்ப்புலமை நிறைவுகண்டு மகாமகோபாத்தியாயப் பதவி இவர்க்கு உதவி ஒருவாறு கடனாற்றக் கண்டுவைத்தோம்.
வடமொழிக் கடலுக் கெல்லைகண்ட திருக்குடந்தை மடாதிபதிகளும் இவர்களைத் தாக்ஷிணாத்திய கலாநிதியெனப் புகழ்ந்து தாமும் புகழ் கொண்டார்கள். தென்மதுரைத் தமிழ்ச்சங்கம் இவர்களுக்கு நிதிக்கிழி யொன்றுதவித் தன்னறத்தை ஒருசிறிது நிறுவிற்றாகும். எனினும், கொடைமடம் பயின்ற வள்ளலர் வாழ்ந்த புகழோட்டம் பெரிதகன்ற தமிழகத்தில் தமிழ்ப்பெருமை நெடிதுநிதம் பேசும் நம்மவர்கள் தளராமல் சலியாமல் தமிழ்த் தொண்டை ஒல்லும் வகையா னோவாது அறவினையாச் செல்லும் வாயெல்லாம் செய்துவரும் ஐயரவர்களுக்குச் செய்ந்நன்றி மறவாத் தமிழ் மரபின் மாட்சி அறிவித்தல் இன்றியமையாததாகு மன்றோ? தமிழர் விரைந்து வினைமேற்கொண்டு உற்றுழியுதவும் கொற்றம் விரும்பி இந்த நல்ல தருணத்தில் தங்கடனாற்றித் தம்பால் தமிழன்பு உணர்வின் தளர்வின்மையை விளக்கி வீறுபெறுவரென நம்புகிறேன்.
இப்போது நாம் செய்யும் உபசாரம் இவர்களுக்குச் செய்ததாக மட்டுமமையாது, தமிழ்ப் புலமைக்கும் தமிழ் வளர்க்குந் தொண்டினுக்குமே நாம் வைத்திருக்கும் மெய்யன்பை நீட்டியளப்பதோர் கோலாகும். ஐயரவர்கள் இன்னும் பல்லாண்டு இனிதிருந்து இனிய தமிழ்வளத்தை வளர்த்து உயரும் பெருவாழ்வும் நலம் பலவும் பெறுகவென விரும்புகின்றேன்.
தமிழன்,
ச.சோ. பாரதி
வாழ்த்து (1)
மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் பண்டிதமணியவர்களின் உருவப்படத் திறப்பு விழாவை யொட்டிப் பெற்ற வாழ்த்துக் கடிதம்.
இனித் தங்கள் சபையில் இருபெரு மொழிகள் தருநல மனைத்தும் உண்டு தேக்கி, உலகத்தோடொட்ட வொழுகும் ஒப்புரவாண்மை ஒப்புயர்வற்ற வென்றியும் வீறுமுதவ, அறிவு நிறை ஓர்ப்புக்கடைப்பிடி நான்கும் செறிவுறு செவ்வியாற் சிறந்த பண்டிதமணியவர்களின் இடையறாத்துணை நலம் பாராட்டி, அவர்கள் திருவுருவப் படம் திறக்கும் பெருவிழாவும் இவ்வாண்டில் உடன் நடத்தும் பெற்றி சாலச் சிறப்புடைத்து.
எண்ணிய எண்ணியாங் கெய்தும் திண்ணிய திறலனைத்தும் ஒருங்குபடைத்துப் புண்ணியப் பெரும் புகழ் நண்ணிய . . . . . திரு செட்டிநாட்டு மன்னவரவர்கள், அப்பெரியார் படந்திறக்க உடன்
பட்ட பான்மை ஒன்றே அப்பெரியார் பெருமைக்குப் போதிய சான்றாகும்.
S.S. பாரதி
வாழ்த்து (2)
கரந்தைக் கவியரசு திரு அரங்க வேங்கடாசலம் பிள்ளையவர்களின் அறுபதாவது ஆண்டு வாழ்த்து விழாவையொட்டித் தமிழகத்துத் தமிழ்ப் புலவர்களையும், இலக்கியத்தையும் புரக்கும் செல்வப் பெரியார்களுக்கு (To the Patrons of Tamil Scholars & Literatures, Tamilaham) என்ற தலைப்பில் எழுதப்பெற்ற கடிதம்.
தமிழகத்தில், தமிழ்ப் புலமையையும் இலக்கியத்தையும் பேணும் செல்வப் பெரியார்களுக்குக் கரந்தைத் தமிழ்க் கல்லூரித் தலைமைப் பேராசிரியர், கவியரசு, சு. வேங்கடாசலம் பிள்ளை அவர்களை அறிமுகப்படுத்துவது மிகையாகும். தமிழவேள், காலஞ் சென்ற உயர்திரு உமாமகேசுவரம் பிள்ளையவர்களின் பெரு மதிப்பையும் அன்பையும் உரிமைகொண்ட நற்புலவர் இவர்களென்றால், இவர்கள் பெருமை புலமைகளுக்குப் பிறசான்றெவையும் வேண்டா. இவர்களொடு பல்லாண்டு களாக நேரில் நெருங்கிப் பழகி யிருக்கின்றேன். நூற்புலமையின் அகலமும், ஆராய்ச்சி யறிவின் ஆழமும், யாரும் பாராட்டாதிருக்க முடியாத பல பண்பு, சால்புகளின் உயர்வும், பழகும்தொறும் அவர்கள்பால் என் மதிப்பையும் நட்பையும் பெருக வளர்க்கின்றன.
தமிழ்ப் புலவரைப் பராமுகம் பண்ணிய பாவகாலம் மறைந்து, செல்வர் தங்கள் கடன் பாராட்டுவதென உணர்ந்து வரும் இக்காலத்தில், இப் புலவரவர்களை ஆர்வத்தோடு ஆதரிப்பதற்கு என்போல்வார் எடுத்துரைக்க அவசியமில்லை. சாதி சமயக் கருத்து வேறுபாடுகளைக் கருதாமல், கல்வி அறிவு ஒழுக்கங்களை ஆதரிக்க விரும்பும் அறனுணரும் பிரபுக்கள் அனைவரும், சிறப்பாக, திருவுயர் செட்டிநாட்டரசர் அவர்கள், திரு டாக்டர் அழகப்ப செட்டியார் அவர்கள், திரு குமார ராச அவர்கள், திரு கரு.முத்து. தியாகராசச் செட்டியார் அவர்கள், மகாலட்சுமி மில் தலைவர் திரு ராவ் பகதூர் இலட்சுமணன் செட்டியார் அவர்கள் போன்ற திருவுடைத் தெள்ளியாரும், மனமுவந்து, இப்புலவரின் வைர விழா (அறுபதாண்டு நிறைவுவிழா)வுக்கு நிதிக்கிழி அருளி, தமிழறமும் வள்ளன்மையும் ஆற்றித் தம் பெருமையைப் போற்றுமாறு கேட்பவர்களுள் நானும் ஒருவன் என விநயத்துடன் அறிவித்துக் கொள்ள விரும்பும்,
பசுமலை,
தமிழன், இளசைக்கிழான்,
23-10-46
நாவலன், ச.சோ. பாரதி
வாழ்த்துரை (3)
ஐயா!
தமிழில் கவியெனக் கருதற்குரிய புலவரொரு வருமே இலர் என முழங்கும் அறிஞரைத் தமிழ்ப்பெரும் புலவராய்க் கற்றவர் பாராட்டுங் காலமிது. இப்போது வள்ளுவர் பெயரால் ஒரு கழகம் நிறுவி, அவரியற்றிய இறவாக்குறளையும், பிற தமிழ்ச் சான்றோர் தந்துள்ள பழைய செய்யுள்களையும் ஆய்ந்து மகிழும் நும்மனோர் தாய் மொழித் தொண்டும், ஆர்வமும் கண்டு வியந்து மகிழ்கின்றேன். என்றும் எவரு மிகழொணாப் பெருமை யுடைய குறளும், தொல்லைத் தொகை நூல்களும், சேக்கிழார் - கம்பர் - செயங்கொண்டார் - கூத்தர் போன்ற ஆன்றோர் கவிகளும் அழகு செய்யும் தமிழில் திளைத்து வினையாடும் தம்மனோர்க்குப் பல்லாண்டு கூறி வாழ்த்தத் தமிழர் யாவரும் களிப்பொடு கடப்பாட்டுணர்வுடையா ரென்று நான் கருதுகின்றேன்.
தாம் திருவள்ளுவர் கழகப் புது மலர் ஒன்று வெளிவரச் செய்வது விரும்பத்தக்கதே. பண்டைப் பாக்களொடு, புதிய தீவியதூய பாக்களும் உரையும் பலப்பல மலியத் தூண்டிப் புலவரை மதித்து வரிசை வழங்கி, வேண்டியாங்காதரவும் உதவி, தம் கழகத்துக்குப் புகழும், தமிழ்க்குப் புதுவளமும், தமிழருக்காக்கமும் பெருக வளர்க்கும் பேறுமதாகுக. உண்மையிலுறைத்த அன்பும், உள்ளத்துரனும், அறநெறியில் நம்பிக்கையு முடைய தமிழர் அனைவரையும் தழுவப் பழக வேண்டும். சாதி சமய வேறுபாட்டுணர்வுகளை விடமுடியாதவரும், அவற்றைத் தம் தனி நினைவாக்கி, தமிழ்ப் பொது வாழ்வில் எல்லோர்க்கும் சரிநிகர் சமானவுரிமை வழங்கு மனநிலையை வளர்த்தல் வேண்டும். பிளவுணர்வால், தளர்வுற்றுத் தாழ்ந்த தமிழரினி ஒற்றுமையால், புதுவலியும் பெரு வளமும் புகழ் வளமும் உயர் வாழ்வும் பெறும் வழியைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும். முன்னோரை மதிப்பது நம் முதற் கடமை; முன்னோர்கள் சொன்னதெல்லாம் ஆயவேண்டா மாறாத உண்மை என்றும், புதிய கருத்தனைத்தும் வெறுத் திகழ்வதுவே அறிவறமென்றும் கொள்ளாமல், கடவுளிய லறிவாலே நடு நிலையிலாராய்ந்து கண்டவுண்மை கடைப் பிடிக்கும் உரனோடு, உயர்வுள்ளும் பெருமையையும் மறவாமல் வளர்த்தல் வேண்டும். அகத்துறையும் புறவாழ்வும் அறவொழுக்க நெறி பிறழாத் தமிழர் பழ மரபினையே பயன்றூக்கிப் பயன் தழையமுயலல் வேண்டும். இனைய தமிழற நெறியில் தலைநின்று கடனாற்றி வீறெய்தத் துணிந்த தங்கள் கழகத்தின் புது மலர் நந்தமிழ் மணத்தை நாடெங்கும் நிரப்பி நலம் வளர்ப்பதற்கு அறக்கடவுள் துணையருள்க என விரும்பி வாழ்த்துகிறேன்.
பசுமலை,
9-8-42
(SD.) S.S. BHARATI
வாழ்த்துப் பாக்கள்
1. கம்பமா கடல்கடைந்தின் கவிதிரட்டி நல்குமால்
பம்புநூற் பரப்பிரண்டு பரவையுண்டு பயனெலாம்
வம்பமாரி யாய்வழங்கு வள்ளல்ஆய்தென் பொதியிலூர்
அம்புலீநின் கலைகளென்னும் அமிழ்தமின்னும்வளர்கவே
2. பண்டை வேளிர் மரபினர்தென் பாண்டியாண்ட முதலிமார்
தொண்டைமண்ட லத்தூர்தூய தொன்றுயர்ந்த குடியினாய்
இண்டைமாண் கிழத்திமார்கள் இருவரொத் துயர்ந்தநீ
கண்டையாண் டோரெண்ப தின்னும் காண்பையாண் டொரெண்ணில
3. எள்ளவெள்ளு மிசைபரப்பி யெண்பதிற்றி யாண்டுநீ
தள்ளவெள்ளு தமிழ்மழைத்த தகைமைசான்ற எழிலியோய்
விள்ளவெள்ளு வினையுளார்பல் வயல்கள் சூழும் வெள்ளகால்
வள்ளல்சுப்ர மண்யநீடு வாழியாம் வழுத்தவே.
ராஜா சர் அண்ணாமலை வள்ளல் பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள்
1. மாறெதுவும் வேண்டாது நலநாடிக் கடனாற்று
மரபில் வந்தோன்
ஆறுதவுஞ் சடையானுக் கன்பாரண் ணாமலைமன்
அறத்து ளெல்லாம்
வீறுதவத் தீதொரீஇ நன்றுய்க்கு மறிவுதரு
மேலாங் கல்விப்
பேறுதவுஞ் சாலையுடன் பெருநகரு நிறுவியிசை
பெருக்கிக் கொண்டான்.
2. மானம்விற்றுப் பதவிபொருள் வாங்கிமகிழ் பவர்குழுமி
வாழு மிந்நாள்
தானதவத் துறைதழையத் தாளாற்றி யறந்தருதன்
தனத்தை வாரி
வேணவரை தந்துமட வார்பொறையின் மேல்வன்மை
மடமை நீக்கி
மாணவரை மாணவராக் குவதெனப்பல் கலைக்கழகம் வழங்கி னானால்.
3. பத்திமகிழ் தில்லைச்சிற் றம்பலவன் சேவையிலே
பழுத்துத் தூய்தாய்
நித்தமுயர் பெருமரபைத் தன்முதலா வழிமுறையே
நிருப ராநின்
றொத்தபுகழ் அறம்வளர்க்க உயர்த்தினவன் வெள்ளணிநாள்
உவந்து செய்வான்
வித்தகமுத் தையப் பெயரான் தந்தையினும் வீறுபெற
விரும்புஞ் சான்றோன்.
4. சால்புடையான் அவ்விளங்கோத் தன்றந்தை வெள்ளணிநாட்
டலைமை தாங்கு
மேல்புடையான் கலைக்கழகத் துணைத்தலைவன் எனவிரும்ப
இறைமை தாங்கி
மால்படையா மதியரங்க நாதனமர்ந் திருக்கவிழா
மாணப் பாரி
நூல்படைமா ராகவநா வலனரங்கில் நுவலநனி
சிறந்த தம்மா.
5. கரணமோர் மூன்றுந் தூய்மை
கனிந்துயர்ந் தொளிரக் கல்வி
யரணமோர்ந் தடுப்பார்க் கெல்லாம்
ஆற்றலும் அறிவு மோங்கப்
பரணமாக் கலைக ளெல்லாம்
பயில்பெருங் கழகந் தன்னைச்
சரணமா யூழி நிற்கத்
தமிழகந் தழையத் தந்தான்.
6. வள்ளலண் ணாமலை வாழிய வூழி
கள்ளவிழ் தாரவன் கான்முளை வாழி
எள்ளரு நல்லறம் யாவையும் வாழி
வள்ளியன் பல்கலைப் பள்ளியும் வாழி.
(12-10-1935)
7. நண்ணாரும் போற்ற நலம்புரியா நாளறியா
அண்ணா மலைகழகம் ஆக்கினனால் - எண்ணாந்த
எல்லாப் பொருளும் இனிதுதரும் நல்லறிவை
எல்லார்க்கு மேயுதவு மென்று.
8. என்றும் நிலவுபுகழ் யாண்டும் நிறுவுகுணக்
குன்றம் இவன்குடியைக் கொண்டன்றி - நன்றெய்தல்
இன்றென் றிறைமைபுக ஏற்றதனை ஒப்புரவால்
மன்ற அளித்தான் மணந்து.
9. மன்னவர்க்கும் வள்ளன்மை வாய்ப்பரிதால் வள்ளியர்பால்
மன்னுதலை வேண்டுமிறை மாட்சியெனும் - பொன்னுரையைக்
கொள்ளற்குச் சான்றாகும் கோமான்அண் ணாமலைமன்
வெள்ளணிநாள் யாமயர்வாம் வேட்டு.
10. வேணவா மிக்குடையார் வெஃகும் பொருளனைத்தும்
மாண உதவ மதித்தமைத்த - மாணவர்தம்
கண்ணேர் கலையனைத்தும் கற்றுயர்கல் லூரிசொலும்
பண்ணேர் புகழுடையான் பண்பு.
11. பழிமேல் வெகுளி பரவு புகழிற்
கழிகாமம் தில்லைக் கடவுள் - வழிபாட்டில்
ஊன்றும் உளமயக்கிம் மூன்றுங் கொடைமடத்திற்
கான்றதுணை அண்ணற் கமைந்து.
12. ஆன்றபுகழ் அண்ணா மலையரசர் வெள்ளணிநாள்
தான்றவிழாக் காண்பரிரு தக்கோர்கள் - ஆன்றகலை
வல்லார் புகழ்சீநி வாசப் பெருந்தகையான்
பல்லார் பரவிளங்கோப் பார்.
13. பாரார் அறிஞரெலாம் பாராட்டு மெய்க்கீர்த்தி
சாரேறண் ணாமலைமன் தானுமவன் - பேரார்
கழகமும் கோக்குடியும் கான்முளையும் வாழ்க
நிழலறமும் நீள்வளமும் நேர்ந்து.
(30-09-1936)
14. திறம்படர் செல்வ மோங்கத் தீதெலாம் நீங்க மண்ணில்
வறங்கெட மாந்தர் வாழ்வு வளம்பெற வழங்கும் வாய்மை
நிறம்பட ரறிவார் கல்வி நிறைப்பதே நியம மென்று
புறம்படர் புகழான் பேரார் புலம்வளர் கழகம் தந்தான்.
15. அறந்தரு பொருளாற் குன்றா அறந்தலை வளர்த்து நின்றான்
சிறந்தநல் லுரனாற் சீர்த்த செம்மலண் ணாமலைமன்
பிறந்தநாள் பெருகப் பேணிப் பெருங்கலைக் கழகம்நன்றி
மறந்தமை யாத மாண்பால் வழிவழி சிறக்க வாழ்த்தும்.
16. தென்னர் தமிழுயரச் செங்கோல் அறம்வளர்த்த
அன்னை கயற்கண்ணிக் கன்புடையான் - மன்னர்
தலைவனண் ணாமலையுந் தன்குடியும் பேரார்
கலைநிலையும் வாழியவே காண்.
(30-09-1937)
17. இருமை நீரறிந் தீண்டறம் பூண்டவன்
ஒருமை யுள்ளமொ டொப்பில் முயற்சிதன்
பெருமை பேணிடப் பெட்பொடு மாற்றுதற்
கருமை யாற்றும் அண்ணாமலை மன்னவன்.
18. தீது தீர்திருத் தெள்ளறி வத்திருக்
கோது தீர்கல்வி கூட்டும் அறிவிலார்
யாது மில்லவர் என்னுடை யோருமால்
ஈது நற்கலை யென்றறம் எண்ணினான்.
19. ஏய பேர்ப்புகழ் எங்கணு மண்டிட
நேயப் பல்கலைப் பள்ளி நிறுவினான்
தோய நல்வளம் தோமற வாழ்கவே
தீய வீழ்கநந் தேயமும் ஓங்கவே.
அன்புடைய அருளாளர்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பிரிவு தமிழகம் விரைவில் மறக்கவோ மாற்றவோ முடியாத பேரிழவாம். அவர்கள் திருவாங்கூர் மண்டில நாஞ்சில் நாட்டு வேளாளர் மரபு பிறங்கப் பிறந்து, சிறந்த பெரியார். சீலமும் புலமைச் செல்வமும் ஒருங்கு சேர்ந்துயர்ந்த பெருந்தகை. கற்றோரும் மற்றோரும் போற்றிப் பாராட்ட, மாண்புற வாழ்ந்த சான்றோர். கல்லாக் கவிகளும் கவியாப் புலவரும் போலல்லாமல், நிரம்பிய புலமையும் அரும்பிய கவிதையும் ஒக்க மணக்கும் தக்க புலவர். மக்களும் மகளிரும் உவந்தோம்ப, இளைஞரும் சளையாது இன்புற்றுச் சுவைக்கப் பாடும் பாவலர். கவிப்பது போலவே கதைக்கவும் வல்ல நாவலர்.
தன் தகவுணராச் சால்பினால் யாவரும் போற்றப் பலரையும் பேணி வாழ்ந்த மாண்புமிக்குடையார். ஆசுகவி மணம் வீசும் உத்தமர். மதுரகவி உலகு பல படைக்கும் வித்தகர். பொருள் வளம் போலவே சொல்லினிமை வாய்க்கப் பாடும் நல்ல புலவர். மக்கட் பண்புமிக்க ஒப்புரவாளர். இன்முகமும் மென்சொல்லும் எல்லார்க்கும் ஒருங்குதவும் நல்லார். சுற்றமும் சூழலும் முற்றிலுமறந்து, எங்கும் எப்போதும் வேறுபாடறியா அன்போ டொழுகும் விழுமியோர், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற அறவோர். நல்லார்க்கு நல்லவராதல் எல்லார்க்கும் எளிது. கவிமணி நல்லவரல்லார்க்கும் எல்லார்க்கும், எங்கும் எப்போதும், தண்டமிழன்பர் அனைவர்க்கும் நண்பர். புகழையோ பொருளையோ இகழாமல், இவறாமல், நாடாமல் தேடும் திறலுடையார். எவரையும் இழியாமல், யாரோடும் இகலாமல் எல்லார்க்கும் அன்புடைய அருளாளர். அணையா அனலா உணர்வும், இருளா மருளாஅறிவும் படரும் பாக்கள் யாக்கும் கவிமணியைத் தமிழகம் மறவாதென்றும் வாழ்த்தும்; இறவாதவர் கவி வாழ்க!
நாவலர் சிறப்புரை
தற்காலத் தமிழுலகில் நல்ல பேச்சாளிகளுள் ஒருவரான திரு கி.ஆ.பெ. விசுவனாதம் அவர்கள் திருச்சி வானொலியில் பேசிய ஏழு பேச்சுக்கள் அச்சு ஏறி தனிச் சிறு புத்தக வடிவில் வெளிவருகிறது. அதை வெளியிடும் சென்னைத் தமிழர் பதிப்பகத் தலைவர் எனக்கு முன்படி ஒன்றை அனுப்பி ஒரு முன்னுரை தருமாறு பணித்தனர். எல்லோரும் மதிக்கும் நல்ல சரக்குக்கு விளம்பரம் மிகை; நாடறிந்த நாவலர் விசுவநாதம் அவர்களின் இன்னுரைகளுக்கு என் முன்னுரை மிகை.
கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழியும் இந்நாவலர் பிறவியில் பேச்சாளி; சிறந்த எழுத்தாளர். நகைச்சுவை ததும்ப ஆழ்ந்த கருத்துக்களைக் கேட்பவர் அகத்தூன்றப் பேசி, இன்பமும் பயனும் ஒருங்கெய்தவைக்கும் திறம் நிறைந்தவர். பொருளற்ற சொல்லடுக்கும் புலவர் அல்லர். இகலாது வெல்லும் சொல்வல்ல வித்தகர். எளிமையும் இனிமையும், எண்ணாமல் எழுந்துபேசும் உரைகளையும் மிளிர வைக்கும் சொல்லின் செல்வரான இவர், தமிழ் அறிஞர் தமக்கு விருந்தாகத் தயாரித்துப் பேசும் வானொலி உரைகள் தேனென இனிப்பதில் வியப்பிராதல்லவா?
வெளிவரும் ஏழுரைகளையும் முன் வானொலியின் வாயிலாகக் கேட்டு மகிழ்ந்த எனக்கே மீட்டும் படிக்கத் தெவிட்டாமல் சுவை தந்தன என்றால், அவற்றை இப்புத்தகத்தில் முதல் முதலில் படிப்பவர்க்கு அவை உவகை தருவதில் ஐயமில்லை. கற்றாரும் முன்னறியாப் பல புதிய செய்திகளை இவற்றில் காணலாம். உளம் தளராமல் மேல்வரும் பொருளை உணர்ந்துவக்க ஆவலூட்டி, எதிர் பார்ப்பதிலும் அதிக இன்பம் உதவி, படிப்பவர்க்கு முடிவில் மேலும் பேசாமல் நிறுத்த நேர்ந்தமைக்கு வருத்தம் உறுத்தும் இன்னுரைகள் இவை. பதவி, வயது, மதம், பால், கொள்கைகளில் வேறுபடுவாரும் வெறுப்பின்றி விரும்பி வரவேற்கும் நடுநிலையும், நாட்டு நலம் நாடுபவர் யாவரும் பேணத்தக்க பொருள் நயமும் வாய்ந்துள்ளன. இவைபோலவே, இவர்களின் பேருரைகள் பலவற்றையும் திரட்டி வெளியிடுவது தமிழ் இளைஞர் பலர்க்கும் பெரும்பயனும், யாவர்க்கும் நயனும் தரும் என நம்புகிறேன்.
பசுமலை
12-11-1947
இளைசை கிழான்
ச.சோ. பாரதி
தலைமையுரை
என்னை இந்த ஆசிரியர் மாநாட்டுக்கு வந்து அழைத்தபோது என் இயலாமையைக் கூறி மன்னிக்கும்படி கேட்டுப் பார்த்தேன். என்னுடைய குறைபாடுகளைச் சொல்லுவதற்காகவாவது இந்த மாநாட்டிலே என்னை அழைத்தார்களோ? எப்படி இருந்தாலும் நான் சொல்லும் கருத்துக் களையோ என்னையோ மறுத்துக்கூற உங்களுக்கு உரிமை இல்லை! என்று முதலிலேயே சொல்லிக் கொள்ளுகிறேன்.
வாழ்க்கையிலே ஒரு மொழியைப்பற்றி மட்டுமே தெரிந்து கொண்டால் போதாது. வாழ்க்கையில் ஒரு மொழியை மட்டும் படித்துப் பயன்படுத்திவிடலாம் என்று எண்ணுவது தவறு. ஒவ்வொரு மொழிகளிலும் சிறந்த துறைகள் உண்டு. மொழிகள் எல்லாம் சிலசில துறைகளிலே மேம்பட்டிருக்கலாம். ஒரு மொழி மற்றொரு மொழிக்குத் தாழ்ந்ததில்லை.
அக்காலத் தமிழகம் பாரதியாரைத் தமிழனாகக் கருதவில்லை! தமிழனைத் தமிழன் போற்றியதில்லை. பாரதியார் கௌபீனம் கட்டிய நாள் முதல் பட்டினியோடு அவர் புதுவையிலே காலம் கழித்ததை நான் அறிவேன். முதலிலே என்னைச் சந்தித்ததும் கட்டித் தழுவினார். நான் எழுதிய கட்டுரைகளை யெல்லாம் படித்துப் பாராட்டினார். தமிழர்கள் தமிழர்களை மதிப்பதில்லை! தமிழர்களே தமிழர்களை மதிக்கவில்லை யென்றால் பார்ப்பனர் தமிழர்களை ஏன் மதிக்கப் போகிறார்கள்.
புலமையைப் புலமைக்காகப் படிக்க வேண்டும். பாராமல் ஒப்பிப்பது படிப்பல்ல. அறிவு என்ற நிலையில் மொழியைப்பற்றிக் கவலையில்லை! அறிவை வளர்க்கக் கூடியது எதுவோ அதுதான் கல்வி. தமிழ் வளர வேண்டுமானால் முதலிலே அறிவு வளர வேண்டும். ஆசிரியர் என்று வருகிறவர் என்ன மொழியினாலே சொன்னாலும் அறிவை அடிப்படையாகக் கொண்டு சொல்ல வேண்டும். சாதாரணமாகச் சில பழைய பாட்டுக்களைத் தமிழர் பலர் நெஞ்சு குத்தி ஒப்பிப்பதைப் பார்க்கிறேன். பலாபலன்களைச் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.
தமிழையே அகத்தியர் உண்டு பண்ணினாரா? இல்லையா? என்ற ஐயப்பாடு உங்களில் பலருக்கு இருக்கிறது. எந்த ஆதரவு வைத்துக் கொண்டு அகத்தியர் தமிழை உண்டாக்கினார் என்று சொல்லுகிறீர்கள்? வளர்த்தார் என்று கூறுவது முழுப்பொய். தமிழைப் படித்ததால் அகத்தியன் பெருமை பெற்றான். கம்பனைச் சும்பனாக எல்லோரும் எண்ணவில்லை. கம்பன் சொல்லுகிறான், தமிழைக் கடவுள்கூடப் பண்ணவில்லை. வடமொழியையும் கடவுள் பண்ணவில்லை. தேவமொழி என்று கூறி ஒரு கூட்டத்தினர் புகுத்தினார்கள். பேச்சு வழக்கில் சமகிருதம் இருந்ததில்லை. அதை மக்கள் ஒருசில காரியங்களுக்காக வளர்த்தார்கள். காளிதாசன் கூடப் பேச்சிலே வடமொழி இருந்ததாகச் சொல்லவில்லை.
இலத்தீன் மொழி ஐரோப்பாவிலே சிறந்த மொழியாகக் கருதப்பட்டது. ஐரோப்பாவில் இருந்த அறிஞர்களில் பலர் இலத்தீன் மொழியைப் படித்தவர்கள். இலத்தீன் மொழியும் பேச்சு வழக்கில் இல்லாத மொழி. இலத்தீன் மொழியைவிட 100 மடங்கு சிறந்ததாக வடமொழி செய்யப்பட்டது. கம்பன்கூட அகத்தியனைப் பற்றிக் கூறும்போது,
"என்றுமுள தென்றமிழ் இயம்பி
இசை கொண்டான்
என்று கூறுகிறார்.
அகத்தியன் கடவுள் அல்ல. அகத்தியன் ஒரு மனிதன். அகத்தியனைப்பற்றிப் புராணங்கள் கட்டுக் கதைகளைக் கிளப்பின.
கடலால் அழிந்தொழிந்த பகுதிகள் சில பண்டைத் தமிழ்நாடு என்று அழைக்கப்படுகிறது. புதிதாகத் தமிழ்மொழி பிறக்கவில்லை. ஆரியம்பற்றித் தவறான கருத்துத் தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஆரியம் என்ற சொல்லைப் பழிப்பதே பிசகு. வடமொழியைச் சனியனாக ஏன் கருதுகிறீர்கள்? வடமொழியைக் கண்டு அஞ்சத்தகுந்த நிலை ஏற்படுவானேன்? வடமொழியால் தமிழை எக்காலத்திலும் அழித்துவிட முடியாது. அழிப்பது என்றே திட்டம்போட்டுக் கொண்டு சிவபெருமானே வந்தாலும் தமிழ் அழியாது.
தமிழ் ஆதிகூட இல்லாதது, அந்தமும் இல்லாதது. கம்பன் சொல்லிய கருத்தைப் புலவர் பெருமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திக்காமல் அவசர அவசரமாக இக்காலப் புலவர்கள் பலர் கருத்தை வெளியிடுவது தவறு. எந்தக் கருத்தைச் சொல்லுவ தானாலும் சிந்தித்து ஆராய்ந்து பேசுங்கள்.
கேள்விப்பட்டதையெல்லாம் ஆராயாமல் மேடையிலே தெரிவிக்கிறீர்கள். தமிழ்ப் புலவர்களே தமிழைப்பற்றி ஆராயாமல் கருத்தைத் தெரிவித்தால் Physics, Chemistry, படித்த Professor தமிழைப்பற்றி என்ன என்ன எண்ணுவார்கள்?
தன் மதிப்பு இருக்க வேண்டும். நீங்களே தமிழை முதலிலே மதிக்க வேண்டும். தமிழை நீங்கள் நன்கு மதித்தால்தான் தமிழுக்கும் உங்களுக்கும் பெருமை. தமிழே தமிழரின் செல்வம் என்பதை நினைவில் வையுங்கள்.
மானம் என்ற சொல் எந்த மொழியிலும் கிடையாது. இந்தச் சொல்லிலே இருக்கிற சிறப்பை எண்ணிப் பாருங்கள் - தமிழாசிரியர்கள் உண்மையைத் தேடி அலைய வேண்டும். தமிழின் பழமையை மட்டும் பேசினால் தமிழ் உயர்ந்துவிடுமா? தமிழ் மொழி பழமை வாய்ந்தது என்று சொன்னால் தமிழ்மொழி வளர்ந்து விடுமா?
இலக்கணம் என்றால் இலக்கணம், பாட்டு என்றால் பாட்டு. ஆனால் செய்யுள் என்றால் பாட்டல்ல. செய்யுள் என்றால் (Literature) இலக்கியம். இலக்கியத்துக்குப் பொதுப்பெயர் செய்யுள் என்பது. செய்யுள் என்ற சொல்தான் தமிழ். இலக்கியம் என்ற சொல் தமிழல்ல; அது வடமொழி. அறிவை முன்னிறுத்தி எதையும் செய்யுங்கள். மேலும் மேலும் அறிவை வளர்த்துக் கொண்டே போகவேண்டும். அறிவுத் துறையிலே நின்று ஆராய்ச்சி செய்தால் புதிய துறையிலே தமிழும் தமிழர்களும் முன்னேறலாம். உலக மொழிகளிலே சிறந்தது தமிழ் மொழி.
ஆங்கிலம், பிரெஞ்சு மொழியைவிடத் தமிழுக்குக் குறை இருந்து வருகிறது. தமிழாசிரியர்கள் தமிழை இறந்து விடும்படி விட்டுவிடலாகாது. தமிழை எல்லோருக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும். தமிழைக் கேவலம் ஒரு துறையிலே மட்டும் வளர்க்காமல் பல துறையிலும் வளர்க்க வேண்டுமென்று அமைச்சர் சொன்ன கருத்தை வரவேற்கிறேன்.
இந்தச் சர்வகலாசாலை என்ன நோக்கத்துக்காக ஏற்பட்டது. தமிழ் மக்களுக்காக தமிழுக்காக ஏற்பட்டது. தமிழுக்கு ஒரு சிறந்த தலையிடம் இந்தச் சர்வகலாசாலையில் இருக்கிறது. இந்தச் சர்வகலாசாலை நல்ல நோக்கத்தோடு கட்டப்பட்டது. வருங்காலத்தில் தமிழே கூடாது, தமிழர்களும் கூடாது, தமிழுக்காகச் சர்வகலா சாலை ஏன்? என்ற காலம் வந்தாலும் வரலாம். அந்தக் காலம் வராமல் செய்ய வேண்டிய பொறுப்புத் தமிழாசிரியர்களைச் சார்ந்தது.
தமிழாசிரியர்கள் நெஞ்சுகுத்திப் பாடல்களை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. எல்லாத் துறையிலும் தமிழாசிரியர்கள் அறிவைச் செலுத்திப் படிக்க வேண்டும். சர்வகலாசாலை என்றால் எல்லாத் துறையிலும் அறிவை வளர்ப்பது என்று பொருள். எல்லாம் என்றால் நல்லதெல்லாம் என்று பொருள்.
தமிழ் இளைஞர்கள் மற்ற எந்த நாட்டு இளைஞர்களையும்விட ஒருபடி முன்னேற வேண்டும் என்ற தனித்த எண்ணமுடையவன் நான். தமிழாசிரியர்களும் மற்ற ஆசிரியர்களைவிட ஒருபடி முன்னே இருக்க வேண்டுமென்பது என் ஆசை. கல்வி அமைச்சர் பேசியதைக் கேட்டேன். கல்வி அமைச்சர் இவ்வளவு தூரம் கடவுள் உண்மையை வற்புறுத்தும்படி வந்துவிட்டதே? கடவுள் உண்டா? இல்லையா? கடவுள் என்ற சொல்லிலே இருக்கிற அமைதியைப் பாருங்கள். தமிழன் தெய்வத்தை வழிபட்ட முறையே ஒரு சிறந்தமுறை. இக்காலத்தில் பலர் கடவுளுக்கு ஒரு தலையா? ஆறு தலையா? கடவுளுக்கு ஒரு பெண்டாட்டியா? ஆறு பெண்டாட்டியா? என்றெல்லாம் கேட்கிறார்கள் - இப்படிக் கேட்பது தவறு. கடவுள் என்றால் உண்மை கடந்தது என்று பொருள். கடவுள் வழிபாடு ஒழுக்கத்தைப் பொறுத்திருக்கிறது. ஒழுக்கத்துக்கு மாறாக நடப்பவனிடம் கடவுள் வழிபாடு இருப்பதாகச் சொல்ல முடியாது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை கலி முதலிய பாட்டுக்கள் இருந்தன. பின் 10ஆம் நூற்றாண்டில் தமிழிசை, விருத்தம் முதலிய பலவினங்களில் காலநிலைக்கேற்ப இசை வகையில் ஈடுபட்டனர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்றவனும் தமிழனே. பாவினங்களிலே இப்பொழுது பலர் பாடி வருகிறார்கள். தமிழாசிரியர்கள் பாவினங்களில் பல இயற்றுவதோடு நில்லாமல் அறிவு நூல்கள் பல இயற்றவேண்டும். தமிழாசிரியர்கள் நல்ல தமிழ்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும். நல்ல நெறி என்று சொல்லுங்கள். சமயம் என்று ஏன் சொல்ல வேண்டும். சிவநெறி என்று சொல்லுவதற்குப் பதிலாகச் சைவ சித்தாந்தம் என்று ஏன் சொல்ல வேண்டும்.
அன்பர்களே,
நல்ல துறையிலே அறிவாராய்ச்சி செய்யலாம். தமிழாசிரியர்களிடையே அறிவு வளர வேண்டும். அறிவு வளர்ந்தால் நாடும் முன்னேறும். நாமும் முன்னேறுவோம். தமிழாசிரியர்கள் அனைவரும் அறிவுத்துறையிலே ஒன்றுபட்டு உழைத்தால்தான் நாம் வெற்றி பெறலாம். அறிவுத் துறையிலே பெரியவர் என்று சொல்லப்படுகின்ற பெருந்திருவாளர் ஜவகர்லால் நேரு எல்லாக் கருத்துக்களையும் தாய் மொழியிலேயே வெளியிட வேண்டுமென்றார். அதை நாம் மறுத்தல் கூடாது.
ஆங்கிலம் அதிகமாகப் படித்த எனக்கு இளமையில் தமிழார்வம் உண்டானது. வழக்கறிஞர் தொழிலிலே அதிக வருவாய் வந்த பொழுதும் அதை விட்டுத் தமிழைப் படிக்க எண்ணினேன். தமிழ், படிக்கும் படியான ஆற்றலை எனக்கு ஊட்டியது. மொழியின் ஆற்றலைக் கண்டு நான் வியந்தேன். தமிழிலே கொஞ்சம் சுவையும், அன்பும் தோன்றிவிட்டால் தமிழ் அவர்களை எந்நாளும் விடாது. இந்த மாநாட்டிலே கலந்து கொண்டதைக் கண்டு வீறாப்படைகிறேன். தமிழ்மொழி இன்றோ அல்லது நேற்றோ தோன்றியதல்ல. மனிதர்கள் முதலில் பேசுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. தமிழ் என்ற சொல்லின் அழகை எண்ணிப் பாருங்கள். அகில உலகமும் போற்றக்
கூடிய திருக்குறள் நம்முடைய தமிழ் மொழியிலே தோன்றியது. நமக்கெல்லாம் எவ்வளவு பெருமையைத் தந்திருக்கிறது.
“பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றப்
பொய்யில் புலவன் பொருளுரை தேராய்”
என்று மணிமேகலை கூறுகிறது.
திருவள்ளுவருக்கு மற்ற பெயரைவிடப் பொய்யில் புலவன் என்பது மிகவும் பொருந்தும். வள்ளுவன் ஜாதிப் பெயரல்ல; தொழில் பெயர். ஜாதி என்ற சொல்லே திருக்குறளில் இல்லை.
தமிழாசிரியர்கள் தமிழ்க்கலையை வளர்ப்பதோடு மட்டும் நில்லாமல் எல்லாக் கலையையும் வளர்க்கப் பாடுபட வேண்டும். தமிழாசிரியர்கள் அனைவரும் இனியாவது ஒன்றுபட்டு நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று சொல்லி என் உரையை இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.
தமிழாசிரியர்கள் வாழ்க!
தமிழ் வாழ்க!!
தமிழ்நாடு வாழ்க!!!
அபிப்பிராயம்
பண்டித நா. கனகராஜையர் எழுதிய ஸ்ரீ சதாசிவ முனிவர் சரிதம் என்ற நூலுக்குச் சிதம்பரம் அண்ணாமலை ஸர்வகலாசாலைத் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீமான் S. சோமசுந்தர பாரதியார் M.A.,B.L., அவர்கள் எழுதிய அபிப்பிராயம்.
அன்புடைய ஐயா!
தங்கள் நூல் செவ்விய ஆற்றொழுக்கான இனிய பாட்டுகளாலாயிருப்பது படிப்பவர்க்கினிமை தருகிறது. இது தங்கள் மதிநுட்பத்தையும் நூற்கல்வியையும் இனிது விளக்குகிறது. தங்களின் குரு பக்தியின் பெருக்கைத் தங்கள் நூல் முழுதும் பரக்கக் காணலாம். இறும்பூதுகளைச் சதாசிவ முனிவர் பல்காலும் பலவாறு செய்தும் செய்வித்தும் சித்துக்களை வெளிப்பட விளக்கியதாக நூலிற் கூறப்பட்டிருப்பதோடமையாது, அம்முனிவரின் நல்ல சீலம் சால்புகளையும் வலியுறுத்திச் செல்வது மிகவும் பயன்தரக்கூடியது. தற்கால மாணவருக்கு இத்தகைய சீல விமரிசனங்களை விளக்கும் புதிய பல நூல்களைப் புதுமுறையில் இயற்றி யுதவுவீர்களென்று நம்புகின்றேன்.
தங்கள், சோதரன்,
S.S. Bharathi
மதிப்புரை
மதுரை சங்கீத வித்துவான் ஸ்ரீ பொன்னுசாமி பிள்ளை அவர்கள் எழுதியுள்ள பூர்வீக சங்கீத உண்மை என்னும் இசை இலக்கண நுணுக்க ஆராய்ச்சி நூல் பண்டைத் தமிழ் நாகரிக உண்மை நிலை தெரியவிரும்பும் யாவரும் படிக்கவேண்டிய தொன்றென்பதை வெளியிடுவதில் மிகுந்த சந்தோஷ முடையவனாயிருக்கிறேன்.
ஆதிதெரியாத தொல்லைத்தமிழர் நாகரிகப் பெருமை எல்லாம் இடையிருட் காலத்தில் மறக்கப்பட்டிருந்து சமீபகால முதல் ஆராய்ச்சி செய்யும் தமிழபிமானிகளின் நன்முயற்சி காரணமாகத் தற்காலம் சிறிது சிறிதாக வெளியாகிவருகின்றது. ஆரிய நாகரிகமும், தமிழக நாகரிகமும் வேறுபாடு தெரியாமற் கலக்குமுன் தமிழரின் மதம் ஆசாராதிகளும் கலைகளுமிருந்த தனிநிலையறிவது தற்கால மிகவுமரிதாகிவிட்டது. இந்த நிலமையில் தமிழர் பண்டை இசை நுணுக்கங்களை ஆராய்ந்து உண்மை தெளிந்ததோடமையாது, அத்தமிழர் தொல்லைத் தனியிசை நுணுக்கமரபே உண்மைச் சங்கீத மரபாவதைப் பக்ஷபாதமற்ற சமதிருஷ்டியுடைய சங்கீத வித்வான்கள் பலரும் ஒப்புக்கொள்ளும்படி தக்க வாத விசார விவகாரங்களாலும், இலக்கண மரபு முறை நியாயங்களாலும் சித்தாந்தப்படுத்தி இந்நூலாசிரியர் வெளிப்படுத்தி யுள்ள இச்சஞ்சிகை தமிழரை மிகவும் கடப்படுத்துகின்றது.
இசை இலக்கணத்திலெனக்கும் பயிற்சி கிடையாது என்றாலும், ஆசிரியர் தக்க சான்றுகாட்டித் தங்கோள் நிறுவியிருக்கும் முறையைப் படிக்கும்போது இவர் கொள்கையே அளவிற்குப் பொருத்தமாகக் காணப்படுகிறது. மேலும், தற்கால சங்கீத வித்வான்கள் கக்ஷிகளுக்கு அவர்கள் ஆதாரமாகக் காட்டும் சங்கீத நூல்கள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமல் முரண்படுவதையும், அவர் கையாளும் சங்கீத சம்பிரதாய முறைகள் வரையறுக்கப்பட்ட ஒரு மரபுக்குக் கட்டுப்படாமல் இடர்ப்படுவதையும் ஆனால் தற்காலம் தமிழ் நாட்டிலும் இந்தியப் பிறநாடுகளிலும் பயின்றுவரும் சங்கீத முழுவதும் இவ்வாசிரியர் எடுத்துக்காட்டும் தொல்லைத் தமிழிசை மரபோடு அமைவதையும் இவர் விசதமாக விளக்கியிருப்பதனாலேயே இந்நூலிற் கொள்கை வலிபெறுவதாகின்றது.
தற்கால சங்கீத உலகில் அபிப்பிராய பேதங்கள் எப்படியிருந்தாலும் உண்மை வெளிப்பாட்டிற்கும் இசைக்கலை வளர்ச்சிக்கும் இத்தகைய ஆராய்ச்சிகளேற் படுவதோடு அவை அச்சமற்று உண்மை காணுமாசையோடு வெளிப்படுத்தவும் வேண்டுமென்பது நடுநிலை யுடையார் யாவருக்கும் ஒப்ப முடிந்ததாகும். இந்த நோக்கத்தோடு இந்நூலுக்குப் பல்லாண்டு கூறுகின்றேன்.
மணிநகரம் மதுரை,
05-06-1924
சோமசுந்தரபாரதி M.A.B.L.
ஹைக்கோர்ட்டு வக்கீல்
AN ODE ON THE DEHLI CORONATION DURBAR
ச.சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடியில் வழக்கறிஞராக இருந்த காலத்தில் 16-02-1912இல் மேற்கண்ட தலைப்பில் எழுதிய கவிதை.
நீடாழி உலகத்து நிலைநின்ற நிறையாரும் நிறைபொற்பினாள்,
வாடாதபருவத்து வரமுற்றமகள், எங்கள்பரதசிறாள்,
சூடாழி மணிவண்ணன் வரனென்று தொழுநாளில், வரதன்தவிர்த்
தேடார் மரைக்கண்கள் துயில்மூடி அலையெய்த, இருமந்தவள். (1)
இருபாதி உலகத்தும் உயர்வுற்ற துவசத்தன்; எழில்நாடெலாம்
திருவாழும்;என்று என்றும் மறையாது தொழிலேவு செங்கோல்வலான்,
முருகாரும் வயமாலின் முழுதூறும் அருள்நெஞ்சன்; முன்னோன்மணம்
தருமென்று மகிழ்கோதை தன்காதல், வரனோடு தளராமலே, (2)
தளவத் தின்முகைமூரல், தருமத்தின் உருவத்தள், அவிர்பொன்தழூம்
அளகத்தள் துயர்கொய்து, துயில்தன்முன் நிலையெய்தி, அருள்செய்தவன்,
உளமல்க, அறநிற்கவரு ஜார்ஜுமகிபன்; மண்மேல்மால்கன
முளரித்திருக்கோதை மடமேரி உடனெய்தி முறைசெய்யுநாள், (3)
முறையானும், முன்னின்று முடிவிக்கும் ஊழானும், நமதாரியை,
கறைநின்ற பிறைநாண, ஒளிர்கின்ற புகழ்கண்ட கதிர்வேலினான்,
இறைவன்றன் முன்சென்று, குறைசொல்லி, எனையாளவருவாய், எனா,
மறைகண்ட வமுதச்சொல் விகசிக்க, எழிலுண்டு, மகிழ்வெய்தினான். (4)
எய்தான், மலர்க்கோதை மகன், வாளி;இறைகாத லீடாயினான்,
கைவேலும் நிகரற்ற மைக்கூர்விழிப்பேதை கவல்தீருமாச்
செய்வான், உடன்வந்து, தெய்வத்திருக் கங்கைதொழுநங்கையைத்
தைவந்து, தைதந்து, அவள்தந்த சார்பௌம முடிசூடினான். (5)
சூடுபிறை முடிதவிர்த்து, நிலமிழிந்து, துளக்கமுறு
தொல்கங்கை வளம்தருவான் தொடங்குநாள்தொட்
டேடலருமரைச்செல்வி குடியிருப்பாம், எழில்வளஞ்சேர்
இந்தியநாட்டெழில் அரசின் ஏற்றம், தன்சீர்ப்
பீடுயர்பொன் மணிச்சார்வ பௌமமுடிப் பெற்றியிலார்,
பிறங்கிலதாம்பிறமுடியே பெற்றுநின்றார்
வாடருங்கோல் வகித்திலது, என்றறிந்து இவண்
வந்தெம்மவர்கள்
மனத்தவிசில் இருத்தவரசு இருந்தான் மன்னோ. (6)
வாழிபாரதமங்கை நயந்ததொல்
ஆழிசூழ்நிலத் தாங்கில நேர்மையும்;
வாழி ஆரியை வாழ்நலத்தின்பமும்;
வாழிமேரி மணாளனும் வாழ்கவே. (7)
கடிதங்கள்
நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கட்கு வந்த கடிதங்கள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.
மதுரை, 9/7/34
1
உ
சிவமயம்
வண்டே திரவிய சம்பத்தி னோங்கிய பாரதியார்
எண்டேதி ஆதியும் இம்மதி நன்கொடை ஈந்திலனால்
வண்டே தியாதிய கண்ணாய் அவர்முன் மகிழச்சென்று
கண்டே திதற்கென்னை என்றே வினாவுக காமுறவே.
(கு.பு.)
3வது அடி - ஏதிலைவாழ் கண்ணாய் - மகடூஉமுன்னிலை
4வது அடி - ஏதுகாரணம் காமுறவே - விரும்ப
முறவே; இது - வேட்பமொழிவதான் சொல் என்பதைப் புலப்படுத்தும்.
அதிதமாகிய அன்புமிக்க ஐயா! இதன்முன் மாதந்தோறும் எழுதிய பாடல்கள் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்ததோ தரவில்லையோ என்று எண்ணுகிறேன். அதுபற்றித் தாங்கள் ஒன்றும் எழுதவும் பேசவும் இல்லாததினால் என்க. இம் மதிமணி அனுப்ப ஞாபகப் படுத்தினேன். மற்றவை எல்லாம் தாங்கள் இங்கு வந்தபோது நேரில் தெரிவிப்பேன். வந்தால் எனக்குத் தரிசனம் தந்தே போகுதல் வேண்டும்.
தங்கள் அடைக்கலமாகிய
மு.ரா. அருணாசலக்கவிராயர்
M.R.Ry.
S. SOMASUNDARA BHARATHI AVL.,
Principal,
Annamalai College, Annamalai Nagar,
Chithambaram.
2
15-7-34
உ
சிவமயம்
ஒருபாதி யிம்மதி நாளோடியதனால் மற்
றிருபாதி யெய்த இடைந்தேன் - கிருமதா
நிதியாகும் பாரதி நீதா நீதாநல்
லதியாக மாகவோ ரைந்து (1)
இரு - பெரிய; உபாதி - துன்பம். இடைந்தேன் - வருந்தினேன்.
தங்களடைக்கலப் பொருளாகிய
மு.ரா. M., மதுரை.
உ கணபதியே நம
மகாமாட்சிமை தங்கிய ஸ்ரீமாந்
சோ - பாரதியவர்கள்
பிரன்பால்
3
21-5-34
உ
சிவமயம்
அம்பளவாம் விழிப்பாரதி நேர்கற்றவ னேனும்நீ
சம்பளம் வந்தவுடன் மணியாடரிற் றந்தநிதி
கம்பள நாடிவரல் போலக் கைவரக்கண்டு, கொண்டோம்
நம்பள கொன்றுங் கருதாத பாரதி நாவலனே (1)
3-அடி. கம் - நீர்; பளம் - பள்ளம். 4 அடி. பளகு - குற்றம்.
வேறு
வேண்டுவர் வேண்டுவதே யீவான்
கண்டாயென்று மேலோர் கூடல்
ஆண்டவனைச் சொல்லினா ரவன்பேர்
வைத்திருக்கின்றா யாதலாலே
நாண்டறும் வழியோருமே
நான் கேட்டபடிநீயும் நல்கிறாயால்
பண்டுபுகழ் மிகுசோம சுந்தர
பாரதி நாமப் புலவரேறே. (2)
3 அடி - நாள் - மானம்.
இதுதான் ஞாலத்தினாற் செய்தநன்றி. இத்தகைய நம்மிடுவர் போல்வார் பலரை அக்காலம் கண்டு இந்தக் குறள் நாயனாரருளிச் செய்தனர் போலும்! உடல் நலம் வரவரச் சிறிது சுகமானாலும் துக்கம் பழையபடித் தானிருக்கிறது. சோக நிகழ்ச்சியைப் பின்பின் எழுதுவேன். தயை கூர்வீர்களாக.
தங்களுழுவலன்பு மறவாத
மு.ரா. அருணாசலக் கவிராயர்
மதுரை
திருக்குறள் தெளிபொருள் வசனப் புத்தகத்தைக் கவனித்தருள்க.
மு.ரா.அ.
ஸ்ரீமாந் சோமசுந்தரபாரதியவர்கள்
பிரின்பால்
அண்ணாமலைக் காலேஜ்
அண்ணாமலைநகர்
சிதம்பரம் பக்கம்
4
உ
சிவமயம்
அஞ்சுவந்த தென்னுடைய அன்னையார் தொண்டியற்றி நெஞ்சுவந்த
தெல்லாம் நினதருளே - மஞ்சிவர்ந்த
சோலைப் பசுமலைவாழ் சோமசுந்தரப் பெரியோய்
சாலப் பெரிதுன் தயை
என்பாலும் பேரன்புள்ள
வயிநாகரம் அ. இராமநாதன் செட்டியார்
24-2-40
மதுரை
5
14-12-34
உ
சிவமயம்
வில்லடிசம் பர்ச்சுனன்பால் வேண்ட லன்பினா லன்றோ
நல்லடி சம்பர்மதிக்கி நான்புகல்பா
சொல்லடியில் குற்றமிருந்தாலும் அன்பால் கொண்டு
பொறு பாரதியாம் நற்றமிழ்தேர் நாவலனே நன்கு.
குறிப்பு - சம்பு - சிவபெருமான். சொல்லடியில் - சொல்லீறு அடியீறு.
இன்று வந்துன் மருமானீந்த மணி ஐந்தும் நன்று வந்து பெற்றன நான்.
மு.ரா. அருணாசலக் கவிராயர்
உயர்திருவாளர். சோமசுந்தர பாரதி அவர்கள்,
பிரின்சுபால், அண்ணாமலை காலேஜ்
அண்ணாமலை நகர், (சிதம்பரம் வயா)
5
உ
நாலிரு பத்தாண்டு நண்ணியசீர் நாவல!
மேலிரு பத்தாண்டும் மேதினியின் - மேலிருந்து
செந்தமி ழன்னை சிறக்கநீர் வாழ்கவே
எந்தை யருளால் இனி.
அ. காமாட்சி குமாரசாமி, M.A.
“தமிழகம்”
மறவனேரி - சேலம்
நாவலர் உயர்திரு ச. சோ. பாரதியார் அவர்கள்,
மலையகம், பசுமலை, மதுரை.
6
12-9-1935
அன்பார்ந்த நண்பரவர்களே!
தங்கள் புதுமனை புகுவிழா அழைப்புக்கள் வரப் பெற்றேன். விழாவின் பிற்பகுதிக்கு நான் வந்து சேருவேன். ஒவ்வொரு காலையிலும் மணி 7 முதல் 9 வரையிலும் இவ்விடம் கீழவூர் மகா-ள-ள-ஸ்ரீ அ.செ.சு. கந்தசுவாமி ரெட்டியாரவர்கள் வீட்டில் மதுரை ஸ்ரீ பிரமானந்த சுவாமிகள் மடத்தின் தற்கால அதிபதி ஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் துறவிகளும் இல்லாருமாகிய 25 பேர்களுக்கு ஞானவாசிட்டம் சொல்லி வருகிறார்கள். அவ்விருபத்தைந்து பேர்களில் நான் ஒருவன்.
ஆதலால் விழாவின் முற்பகுதிக்கு நான் வர இயலாதவனாயிருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருளால் விழா சிறப்பாக நடைபெறும். நான் அங்கு வந்த பின்னர் நேரிலும் தங்களுக்கு என் வாழ்த்தைச் சமர்ப்பிப்பேன். நமது அருமை நண்பர் பண்டிதமணி அவர்களுக்கும் ஏனைய புலவர்களுக்கும் நான் விழாத் தினம் மாலை 4 மணிக்கு முன்னர் அங்கு அவர்களைத் தரிசிப்பேன் என்று சொல்லுக.
தங்கள் அருமை மகளும், தேசபக்த சிரோன்மணியாகிய திரு L. கிருஷ்ணசாமி பாரதியாரவர்கள் மனைவியுமாகிய ஸ்ரீமதி இலக்குமி அம்மாளை இங்குக் கண்டேன். க்ஷேமம் வினாவினேன், என் மனைவி மக்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவ்விருவரையும் விழாத் தினத்தில் அங்குக் காணும் பாக்கியம் பெறுவேனென்று நம்புகிறேன். கடவுள் துணை.
அன்புள்ள
(ஒப்பம்) வ.உ. சிதம்பரம்
பின் குறிப்பு : சிவஞான போதத்திற்கு ஓர் உரை எழுதித் தினமணி வருஷ அனுபந்தத்திற்கு அனுப்பியுள்ளேன். ஸ்ரீ சிவஞான சுவாமிகள் உரையைக் கண்டித்தால், சைவர் பலர் மனம் நோகுமென்று கருதி அது செய்யாது விடுத்துள்ளேன். என் உரை சுவாமிகள் உரைக்குப் பல இடங்களில் வேறுபட்டும் மாறுபட்டு முள்ளது. இதற்குஞ் சைவர் குழாம் நிந்தித்தல் கூடும். அந்நிந்தனையை வந்தனையாகவே கொள்ளும் மனநிலை யுடையேன் யான் தற்காலம். கடவுள் துணை.
வ.உ.சி.
பிரசண்ட விகடனுக்கு வாழ்த்து என்ற தலைப்பில் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ எ.எழுதியுள்ள கடிதமாவது :
ஆரணம் பேசும் அரனால் போல் மகிழ் நாரண துரைக்கண்ணனா ரவர்கட்கு,
தற்காலத் தமிழர் தந்நல மறப்பைத் துறப்ப துண்டோ? அவர் அடிமை மோகத் தவயோகத்தை அழித்து, கலிகால உலகில் சலியாதுழைத்துத் தம்பெரு முயற்சியால் தமது வாழ்வுயர்த்தத் தூண்டவல்ல துணைவர் இங்குளரோ? பன்னூறாண்டுகள் தந்நூறறி யாமல் நெட்டுறக்க நோயாற் கட்டுண்ட தமிழரைத் தட்டி எழுப்ப விகடர் பலர் முயன்றும் பயன் பெறவில்லை. பிரசண்ட விகடன் பேரண்ட முழக்கால் சுழுத்தி சென்று உறங்கும் நம்மவர் உணர்வை விழித்து உலக வாழ்வில் நிலைக்கத் தூண்டி, நெடும்பழி துடைத்து நம் இடும்பைகள் ஒழித்து, எல்லாத் துறையிலும் வல்லராய் முன்போல் தமிழர், தம்மை இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை பெற வைத்திடுக. அரசியலில் மட்டுமன்று; சமயம், மொழி, கலையறிவு, பொதுப்புற வழக்கு, தனி மனைவாழ்க்கை எல்லா வகையிலும் அந்நியர் ஆட்சிக்கு ஆட்பட்டு அடியராய்க் கவலையற்றுக் களித்திருக்கின்றோம். தமிழகத்தில் பிற மொழிக்கு அரசு தந்து தமிழைத் தொண்டுபுரிய வற்புறுத்தத் துணிபவருக்கு ஆதிக்கம் தருகின்றோம். தமிழ் இசையை வளர்த்து, நாட்டில் இன்ப உணர் வூட்டுவதைத்தடுத்து வைய அஞ்சாது நெஞ்சுரம் கொண்டு எழுவார்க்கும் பின் சென்று புகழ் பேசி துணையாற்றத் துணிபவரும் தமிழரென வாழ இடம் தருகின்றோம். நமக்கு யார் மாட்டும் பகையில்லை; யாவரையும் நாம் இகழ்வதிலை. தொன்று தொட்டுவந்த புது வகுப்பினர்க ளெல்லார்க்கும் மதம், மொழி, தம் வாழ்வு முறை அனைத்திலுமே சம உரிமை தந்து, நந்தம் சொந்த உடன்பிறந்தவர் போல் நடத்தி வந்தோம். பார்ப்பாரும், பௌத்த, சமண மதத்தினரும், சிரிய தேசக் கிறித்தவரும் அரபியரும் வந்தார்க்கு அவரவர்க்கு நிலம், பொருள், நற்றுணையுதவி, பதவி, பொது உறவுரிமை எல்லாம் தந்தோம். அனைத்துலகும் அமணர்களாய் கல்வியறியாதவராய்த் திரிந்த பழங்காலத்தில் தமது மரக்கலங்களிலே தமது பல விளைபொருளும் வினைமாட்சி நிறையுடைகள், சந்தனம் நற்றேக்கு முத்து நல்லரிசி முதலியவை கொண்டு தந்தோம். கல்வியொடு அறிவினையும், பரப்பி வந்தோம். . . . . . வெற்றி பல கொண்டாலும், பிறரைக் . . . . யாளும் பேதைமையை வெறுத்து நின் . . . . . . முதல் இமயம் வரை ஒரு மொழி வைத் . . . . . டார் வழியில் வந்த தமிழர் இன்று . . . . . பிறர் இழிக்கத் தலை குனிந்து திரிகின்றார். . . . . இல்லாச் சாதி வகைப் பிளவாலே, . . . . . . . மவரை நாம் இழித்து மகிழ்கின்றோம். . . . . . நாம் உணர்ந்து துடைத்து, நல்ல . . . . . . . சமுதாயப் புது வாழ்வு மேற்கொள்ள வி . . . . . வாழ்வில்லை; தாழ்வுக்கே தனிப்பெரு . . . . . . இவ்வுறக்கநிலை குலைத்து நம்மவரை . . . . . . வாழ வுயரப் பிரசண்ட விகடன் . . . . வேளாண்மை வீறு பெறுக. விகடனுக்குப் பல்லாண்டு கூறுகின்றேன்.
31-12-43
எ.எ. பாரதி
குறிப்பு : . . . . . . . இவ்வாறு புள்ளியிட்டுக் காட்டப்பட்ட இடங்களில் கிழிந்துள்ளது.
தமிழ் ஓங்குக!
இளசைக்கிழார் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
எழுபதாவது பிறந்தநாள்
பெருமங்கலப் பாமாலை
அ. இராசகோட்டியப்பன்,
கூட்டாசிரியர், தமிழ்த் தென்றல்
எட்டபுரம் எனும்இளசை எழுந்தஇள
ஞாயிறென இசை பரந்த
கட்டழகன் கலைக்கடலைக் கடைந்துயர்ந்த
மதியழகன் கனிந்த வீரம்
சொட்டழகன் சோமசுந் தரநாமம்
துலங்கழகன் தூய செஞ்சொற்
கொட்டழகு முகிலனையான் குலவிநிதம்
தமிழ்நிலம்கை கூப்ப வாழி! ` (1)
எழுபதியாண் டெனினுமிளம் சிங்கமென
எழுந்திந்திக் கிசைய மாட்டோம்
எழுகதமிழ் இளைஞர்காள் எனமுரசம்
இயம்பிஎழுந் தியாரும் ஒப்பப்
பழகுதமிழ்ப் பெருமையெலாம் அழியும்இந்தி
நுழையிலெனப் பகரும் சான்று
செழுமழைபோல் தருஞ்சோம சுந்தரபா
ரதிநீடு செழித்து வாழி! (2)
சிற்சிலவாண்டெனினும் அண்ணா மலைச்சருவ
கலாசாலைச் செந்தமிழ்க் கோர்
பொற்புறுநற் றலைமைவகித் துண்மைநிலைப்
புகழ்கொழிக்கப் புதுமை யான
பற்பலநூல்1 படைத்தரிய மாணவர்பற்
பலவரையும் படைத்தெ டுத்தோன்
நற்புலவர் தலைமணியாம் சோமசுந்
தரவீரன் நாளும் வாழி! (3)
ஆங்கிலத்தி லழகொழுகப் பேசவலான்
அரசமன்றத் தறையு நீதிப்
பாங்கதனில் தன்னிகரில் வழக்குரைஞன்
பகைவரஞ்சிப் பதைப தைக்க
ஓங்குதமிழ் மக்கள்எழிற் பண்பொழுக்கம்
உலகெங்கும் ஓங்கி நிற்கத்
தேங்குபணி செயுஞ்சோம சுந்தரநா
வலவமணி தினமும் வாழி! (4)
துன்னுபுகழ்ச் சோமசுந் தரன் இளசைக்
கிழானென்னத் துலங்கு கோமான்
உன்னுமுயர் கருத்திருத்தி உயர்புலவோர்
வழுத்துமணி ஒளி விளக்காய்
இன்னும்பற் பலவாண்டும் இருதிருவும்
மிகவளர்ந்தே இசைகொ ழித்து
மன்னுமனை சுற்றமொடு மக்கள்வழி (5)
நாவலர் - பாரதியார், 70-வது பிறந்தநாள்
வெள்ளணிவிழா
சா. வேதமுத்து, விழா அமைச்சர்
தமிழர் தலைவர் இளசைக் கிழார் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் எழுபதாவது பிறந்தநாட் பெருமங்கல விழா விருதைத் தமிழ்க் கழகத்தினரால் 30-07-48 மாலை 5-30 மணிக்கு, விருதுநகர் மாதர் சங்கக் கட்டிடத்தில் ராவ்பகதூர் செந்திக்குமார நாடார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு சி. இலக்குவனார் எம்.ஓ.எல். அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விருதைத் தமிழ்க் கழகத் தலைவர் திரு வே.வ. இராமசாமி அவர்கள், இந்நாட்டில் அரசியல் தலைவர்களின் நாட்களைக் கொண்டாடுவது வழக்கம்; மேல் நாடுகளில் புலவர்களின் நாட்களைக் கொண்டாடு கிறார்கள். அம்முறையில், தக்க அறிஞர், திரு இலக்குவனார் எம்.ஓ.எல். தலைமையில், நாவலர் - பாரதியார் பிறந்த நாளைக் கொண்டாடக் கழகம் தீர்மானித்தது. நாவலர் மீது ஆணை! அவர்வழி நின்று ஓரளவேனும் அவரது சில கொள்கைகளையாயினும் கடைப்பிடிக்க உறுதி செய்வோம் என்று கூறி அனைவரையும் வரவேற்றனர்.
பின் விழா அமைச்சர், தோழர் சா. வேதமுத்து வழிமொழிகையில், மேல் நாடுகளில் போப்பனீயமும், இந்நாட்டில் பார்ப்பனீயமும் பல நூற்றாண்டுகளாக மக்களுடன் போரிட்டு வந்தன. அதனால் மக்கள் குருட்டு நம்பிக்கைகளில் உழன்று பிற்போக்கினராயினர். ஆனால் 16-ம் நூற்றாண்டில் மேல் நாட்டில் போப்பனீயம் தோல்வியுற்றது. மக்கள் வென்றனர்; முன்னேற்றம் அடைந்தனர். இந்நாட்டிலோ பார்ப்பனீயம் வென்றது. மக்கள் தோல்வியுற்றனர்; பிற்போக்கு வளர்ச்சி யடைந்து கொண்டே யிருக்கிறது. தமிழனின் முன்னேற்றத்தில் கருத்துக் கொண்ட நாவலர் - பாரதியார், பார்ப்பனீயத்துடன் போராட முனைந்தார். தொண்டாற்றினார்; தமிழர் விழிப்படைந்தனர். அத்தகைய தமிழ்த் தலைவர் பிறந்த நாளை நினைப்பதும், அன்னார் கருத்தை மனத்தில் நிறுத்திக் கொள்வதும் தமிழ் மக்கள் கடமையாதலால் இவ்விழாவை ஏற்படுத்தினோம் என்று கூறினார். விழாவைப் பாராட்டி வந்திருந்த வாழ்த்துத் தந்திகள் பல படிக்கப்பெற்றன.
தலைவரவர்கள் தம் முன்னுரையில் பாரதியாரின், தமிழ் ஆர்வத்தையும், ஆராய்ச்சி முறையையும், வாக்கு வன்மையையும், பழைய நூல்களுக்கு உரையெழுதும் திறமையையும் எடுத்துக் கூறினார்கள்.
வித்துவான் ந. சேதுரகுநாதன் அவர்கள் பேசுகையில், பாரதியார் உருவாலும், உரையாலும், உறுதியாலும் சங்ககால நக்கீரருக்குச் சமம் என்பதைப் பல சான்றுகளுடன் பண்பட்ட சொற்களால் பகர்ந்தார்கள்.
பின்பு, மாதர் சங்கத்து அமைச்சரும், விருதைத் தமிழ்க் கழகத் துணைத்தலைவருமாகிய திருமதி தி. பதுமாவதி அம்மையாரவர்கள் பாரதியாரின் இனிய, எளிய, உயரிய சொல் நடையைப் பாராட்டி, பாரதியார், பெண்கள் அடிமைத்தனம் நீங்க முன்னொருமுறை விரித்துப் பேசியவற்றை நினைவூட்டினார்கள்.
விருதை முத்தமிழ்ப் புலவர், திரு ச. கண்ணன் அவர்கள், பாரதியார் இயற்றிய மாரிவாயில் வரலாறு முதலிய பல அரும்பொருள்களைத் தமக்கேயுரிய அடுக்குத் தொடராலும், அழுத்தந்திருத்தமான சொற்களாலும் விரித்துரைத்தனர்.
பின்பு, ஔவை தங்கம்மையார் பாரதியாரைப் பாராட்டிப் பேசினார்கள். வாழ்த்துப் பாடலும் பாடினார்கள்.
கடைசியாக, தமிழ்த் தென்றல் கூட்டாசிரியர் அ. இராசகோட்டியப்பன் அவர்கள் பாரதியார் மீது ஓர் பாமாலை பாடி, உரை கூறி அவையோரை மகிழ்வித்தனர்.
தலைவரவர்கள் தம் முடிவுரையில் சொற்பொழிவாளர்கள் கூறிய கூற்றுகளில் உள்ள ஏற்றங்களை எடுத்துத் தொகுத்தும், வகுத்தும், விரித்தும் கூறியதுடன் தனித்தமிழ் இயக்கத்தின் நன்மைகளையும், வடமொழிப் பெயர்களைத் தமிழர் தமக்கிட்டுக்கொள்வதால் வரும் இழிவுகளையும் தாமும் தமிழர்தாம் என்று சொல்லிக் கொள்வோரும், தமிழராயிருந்தும் அல்லாரால் நல்லார் என்று பேர்பெற விரும்பும் பொல்லாரும் தமிழுக்குச் செய்து வரும் கேடுகளையும் தூயதனித் தமிழில், நிறை முறை பிறழாது சொன்மாரி பொழிந்து பாரதியாருக்குப் பல்லாண்டு கூறி முடித்தார்கள்.
விழா அமைப்பாளர் யாவருக்கும் நன்றி கூற, கூட்டம் எட்டுமணிக்கு இனிது கலைந்தது.
வாழ்த்துப் பாக்கள்
குறிப்பு : நாவலர் பாரதியாரின் எண்பதாண்டு நிறைவு விழாவை யொட்டி வெளியிடப்பெற்ற வாழ்த்துப் பாக்கள். இவ்விழாக் குழுவின் செயலர்களாக இருந்தோர் : திரு கி. பழநியப்பன், திரு நா. இராமய்யா பிள்ளை.
ஞா. தேவநேயப்பாவாணர்
அண்ணாமலை நகர்
25.07.1959
சோம சுந்தர பாரதி நாவலன்
சொல்லும் செந்தமிழ்க் கோப்பெருங் காவலன்
காமர் நுண்மதி கூர்ந்துதொல் காப்பியக்
கட்டம் தீரவே கண்ணுரை யீத்தவன்
நாமம் என்பது நெஞ்சில்இல் லாதவன்
நம்பன் சொல்லிலுங் குற்றங்கண் டோதுவன்
ஏம நல்வளம் ஈன்றே வாழியே
ஏறு போலுரு வீறுநீ டூழியே.
வித்வான் மு. அருணாசலம் பிள்ளை
தமிழ்ப் பகுதி ரீடர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நாவலர், கணக்காயர், டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களுக்கு எண்பதாண்டுகள் நிறைவுறுதல் குறித்து நடைபெறும் பாராட்டு விழா நிகழ்ச்சியை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். எங்கள் பேராசிரியராகிய அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நல்வாழ்வு வாழ, அங்கயற்கண் அம்மையுடனாகிய ஆலவாய்ப் பெருமான் அருள் புரிவாராக என வேண்டுகிறேன்.
வாழ்த்து
1. எண்ப தாண்டுகள் எய்திய நாவலர்
பண்பு நேர்மை பழுத்த புலமையர்
கண்டு நேருங் கனிதமி ழின்சுவை
யுண்டு தேக்கி யுலகுக் குதவுவார்
2. சோம சுந்தர பாரதி யாரென
நாம கிழ்ந்து நவிலும் பெயரினர்
ஏமஞ் செய்யும் இளைஞர் குழாத்தினை
மேன்மை பெற்று விழிப்புறச் செய்தவர்
3. இந்தி யின்றி யியலா தெனுஞ்சுழல்
வந்த போது வழக்கறி மாண்பினால்
ஐந்தும் வென்ற அருந்தவர் போலெழீஇ
முந்தி நின்று முனைந்து தடுத்தவர்
4. நூலி னாலுரை யால்நுவல் வன்மையால்
சால வுந்தமிழ்த் தாய்ப்பணி செய்தவர்
ஆல வாயிறை வன்னரு ளாற்பல
காலம் இன்னுங் களிப்புற்று வாழ்கவே.
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்து
“எட்டைய நற்புரத்தின் எம்சோம சுந்தரராம்
பட்டம் பலபெற்ற பாரதியார் - கிட்டினார்
எண்பதாம் ஆண்டுதனை எம்சோம சுந்தரனே
கண்பார்த் தருள்தந்து கா.”
“காக்கக் கடனுனங்கே கந்தனார் தந்தையே
நோக்கிஇவர் நூறாண்டு வாழுமா - ஆக்கியருள்
எல்லா நலமும் இனிதின் அடைந்திடவும்
செல்வனே சீரருள் செய்”
சோம சுந்தர பாரதியார் நீடூழி வாழிய!!
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை**
அமைச்சர்.
மு. இராமலிங்கம் பி.ஏ.,
பாரதி நகர்
மதுரை
நேரிசையாசிரியப்பா
தமிழர் தாய முறையைத் தகவே
தமிழர் ஆயத் தனியே தந்தீர்!
அமிழ்தம் எனவே உலகம் போற்ற
இமிழ்திரை யுலகப் பொதுமறை தந்த
வள்ளுவர் குலத்தைத் தெள்ளிய முறையில்
அனைவரும் உணரப் பிழையறுத் தளித்தீர்!
இலக்கிய மரபை இனிதுணர் வழியில்
துலக்கிய பெரியீர் துணிந்தே
கலக்கிடும் இனத்தவர் கலங்கிடச் செய்தீர்!
கலி விருத்தம்
நிலைபடைத்தோர் கலைவளர்க்கும்
நெறிகாட்டிய பெரியீர்!
கலைபடைத்தோர் குலம்வளர்க்கும்
கதிகாட்டிய அறிவீர்!
மலைபடைத்தோர் குணம்நிகர்க்கும்
வழிகாட்டிய தெளிவீர்!
வலைபடைத்தோர் பிணக்கறுக்கும்
வழக்காட்டிட அறிவீர்!
குறுவெண்பாட்டு
கணக்காயர் பாரதியார் காசினியின் கண்ணே
பிணக்கறுக்கும் டாக்டர் பிறங்கு.
நெடுவெண்பாட்டு
(இன்னிசை)
நாவலர் என்றே நம் நானிலத்தார் போற்றிடவே
மேவலர் பொன்றிடவே மேதினியில் நம்தமிழர்
காவலர் என்றே நாம் கட்டுரைக்க ஏற்ற பெரும்
பாவலர் என்றுரைப்போம் பார்த்து.
பாரத் வாஜி : சேதுபதி உயர்பள்ளி,
ஈ. சுப்பிரமணியம்
மதுரை.
1. திங்களணி அழகுடையார் புலவ ராகச்
சேர்ந்திருந்து போற்றியநற் சங்கந் தந்த
துங்கமுறு தீந்தமிழா மமுதை யுண்டு
துளங்காது மன்பதையுள் தேவாய் நிற்போய்!
பங்கமறு மறத்தமிழ! பாட்டுக் கேட்டுப்
பாகாக உருக்கெடுக்கு முள்ளங் கொண்டே
எங்கடமக் கருள்புரியுஞ் சிவனார் பேராம்
எழிற்சோம சுந்தரப்பேர் பெற்றோய்! வாழி!
2. தமிழென்னும் அழியினைக் கடைந்து நன்கு
தனக்கேதும் நிகரற்ற இன்ப மான
அமுதென்று சான்றோர்கள் சாற்று கின்ற
அழகொழுகும் பேரமுதாம் மாரி வாயில்
தமிழர்க்கு விருந்தாக வாரி வீசித்
தாமரைக்கண் ணானாக நீயு மானாய்!
இமிழ்திரைநீர் வரைப்பினிலே எமையும் மேலாம்
இமையாத நாட்டத்தா ராக்கிவைத்தாய்!
3. ஆங்கிலமும் அருந்தமிழும் அழகாய் ஆய்ந்தோய்!
அரும்வாதம் புரிதிறனில் கீர னென்கோ!
ஓங்குபுகழ்க் கவித்திறனில் கம்ப னென்கோ!
ஒண்மைபெறும் உரைநடையில் ஒருவ னென்கோ!
ஏங்குகிற மாணாக்கர் எல்லோ ருக்கும்
எழில் நிறைந்த பாடங்கள் விளங்க வைத்துப்
பாங்குடைய கணக்காயர் பட்டத் தோடு
பாரினிலே புகழ் விரித்த சான்றோ னென்கோ!
4. நாவல ரேறே! வாழி!
நானிலம் போற்று கின்ற
பாவல ரேறே! வாழி!
பைந்தமி ழாய்வாய்! வாழி!
பாவலர் தலைவ ரான
பாரதி நண்ப! வாழி!
யாவரும் வாழ நல்ல
இறையடி வாழி மாதோ!
வாழ்த்துரைகள்
திரு வே. வ. இராமசாமி
சென்னை மேல்சபை உறுப்பினர், விருதுநகர்.
திரு ச. சோ. பாரதியாருக்கு 80 ஆண்டு நிறைவு விழா நடத்துவது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்த்துக்களுடன் விழாக் குழுவில் சேர்த்துக் கொள்ளக் கட்டணம் அனுப்பியுள்ளேன்.
திரு ஜி. டி. நாயுடு,
கோவை.
உங்கள் 6 - 7 - 59 சுற்றறிக்கையைக் கண்டேன், ரூபாய் இருபது அனுப்பி இருக்கிறேன். நாவலர் பாரதியாரின் எண்பதாண்டு நிறைவு விழாக் கட்டணமாக ஏற்றுக் கொள்க. எனது வாழ்த்துக்கள்.
திரு கி. ஆ. பெ. விசுவநாதம்,
திருச்சி (சிறைக் கூடத்திலிருந்து)
நாவலர் திரு பாரதியார் அவர்களின் 80ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு வரமுடியாத நிலையில் இருப்பதைப் பற்றி வருந்துகிறேன்.
விழா இனிது நடைபெற வேண்டுமென விரும்புகிறேன்.
ஆசிரியர் : கலைக்கதிர்,
திரு. ஜி. ஆர். தாமோதரன்,
B.Sc., Elec., B.Sc. Mech. (Durham) 25-07-59
M.I.E.E. (London), M.I.E. (India)
கோவை
நாவலர் பாரதியார் அவர்களின் எண்பதாண்டு நிறைவு விழாக் குழுவில் என்னையும் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி.
டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார்,
எம்.ஏ., பிஎச். டி., எம்.எல்.சி.,
தலைமை ஆசிரியர்,
ஆங்கிலத் தமிழ் அகராதி.
சென்னைப்
பல்கலைக்கழகக்
கட்டிடம், சென்னை - 5.
என் மதிப்பிற்கும் வணங்கற்பாட்டிற்கும் உரிய பேராசிரியரும் பேரறிஞரும் ஆகிய பெருநாவலர் அவர்களுடைய 80ஆம் ஆண்டு நிறைவு விழா தக்க சிறப்புக்களோடு இனிது நிறைவேறுமாறு அருளும்படி இறைவனை வேண்டுகிறேன்.
பெருநாவலர் பாரதியார் அவர்கள் நமது மொழிக்கும் நம் நாட்டு மக்கட்கும் செய்துள்ள தொண்டுகளை யாவரும் அறிவர். அவர்களது மதி நலத்தாலும் நாவன்மையாலும் எழுத்தாற்றலாலும் தமிழ் மொழியின் தன்நேரில்லாத் தன்மையை மக்கள் சென்ற நூற்றாண்டில் அறிந்திருந்ததைக் காட்டிலும் அதிகமாக அறிந்து மதிக்கின்றனர். தமிழ் மக்களது தன்மானத்தையும் தமிழ் மொழியின் பொதுவில் சிறப்பினையும் எடுத்துக் காட்டி வீறுபெறச் செய்த நாவலர் அவர்கட்குத் தமிழுலகு பெரிதும் கடப்பாடுடைத்து. அவர் நினைவினை வழி வழியாக நாட்டில் நிலைபெறச் செய்தற்குத் தக்க வழி வகைகள் காண்பீர்களென நம்புகிறேன்.
திரு. ரா. விசுவநாதன்,
மகா மகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதைய்யர் நூல் நிலையம், சென்னை -20.
பேராசிரியர் டாக்டர் பாரதியார் அவர்கள் இன்று விளங்கும் தமிழ்ப் பெருஞ்சோதி. அவர்களின் ஆராய்ச்சித் திறனும் தமிழன்பும், உள்ளத் தூய்மையும், உலகமறிந்தவை. அவர்களின் பாராட்டு விழா மிகச் சிறப்பாய் நடந்தேறவும் அவர்கள் நீடூழி நல்லுடலுடன் வாழவும் அருளுமாறு இறைவனை வேண்டுகிறோம்.
திரு மயிலை சிவமுத்து
சென்னை - 1.
தமிழ் மக்கள் வாழ, தமிழ் நாடு செழிக்க, பாரதியார் நீடு வாழ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
கரந்தைத் தமிழ்ச் சங்கம், கருந்தாட்டாங்குடி, தஞ்சாவூர்.
பாராட்டுப் பெறும் நாவலர் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்த் தொண்டு புரிய வேண்டுமென்று தமிழ்த் தாயின் இன்னருளை இறைஞ்சுகின்றேன்.
திரு டி. எஸ். கிருஷ்ணமூர்த்தி
தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை - 2.
தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவலர் அவர்களைக் கௌரவித்துக் கேடயம் வழங்கிப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறது. அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இலக்கியப் பணியாற்றக் கலைமகள் அருள் புரிவாளாக.
திரு எம். சண்முக சுப்பிரமணியம்,
மாவட்ட முன்சீப், மன்னார்குடி.
உண்மையை அஞ்சாது உரைக்கும் உரமான உள்ளம் படைத்த நாவலர் அவர்களின் நக்கீரப் பண்பை நம்மில் ஒருசிலராவது பெற முயன்றோமானால் தமிழினம் இன்னும் நன்கு தலை நிமிர்ந்து நிற்கலாம்.
திருமதி ஆர். இராசாமணி B.A. (Hons) L.T.,
மேரி அரசினர் கல்லூரி, சென்னை-4.
உயர்திரு டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் எனது பேராசிரியர் ஆவர். இரு பெரும் புலவர்கள் பாராட்டுரை வழங்க, முதுபெரும் புலவர் பன்னெடுங் காலம் வாழ, எல்லாம் வல்ல இறை இன்னருள் புரிவானாக.
திரு நெ. து. சுந்தரவடிவேலு
சென்னை மாநிலப் பொதுக்கல்வி இயக்குநர். சென்னை -6.
விழா இனிது நடைபெற விழைகின்றேன். நாவலர் பல்லாண்டு நலத்தோடு வாழ்க.
திரு மொ. அ. துரை அரங்கசாமி,
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் அவர்கள் நூறாண்டு முடியும் வரையில் நல்லுடலுடன் எல்லா நலங்களும் பெற்றுத் தமிழன்னைக்குத் தொண்டாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டுமென்று அவன் இணையடிகளை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
திரு அ. மு. பரமசிவானந்தம்,
சென்னை - 30.
தமிழர் வாழ்வு சிறக்க ஒல்லும் வகை பணியாற்றிய அந்த நல்லாசிரியர் இன்னும் பல ஆண்டு சிறக்க வாழ்க. விழா நாட்டுக்கும் நற்றமிழுக்கும் நல்விளக்கமாக அமைவதாக! நாவலர் வாழ்க! நல்விழா சிறக்க!
திரு பு. ரா. சீனிவாசன்,
சர்க்கார் மியூஸியம், சென்னை - 8.
நாவலர் பாரதியார் தமிழ்நாடு பெற்ற தவப் புதல்வருள் தலை சிறந்தவர், வாழ்க.
இராசரத்தினம்,
வில்லிங்டன் சீமாட்டியார், போதனாமுறைக் கல்லூரி, சென்னை.
எனக்குத் தமிழில் ஆர்வம் ஊட்டியவரும் பேராசிரியராய் இருந்து தமிழ் பயிற்றுவித்தவருமாகிய டாக்டர் ச. M.A., B.L., D.Litt., அவர்களைப் பாராட்டுவதற்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த நீங்கள் முன் வந்தது போற்றுதற்குரிய ஒரு சிறந்த செயலாகும். நாவலரது எண்பதாவது ஆண்டு நிறைவு விழாவானது இனிது நடைபெற வேண்டுமென்று தமிழறிவின் பெருமானாகிய சொக்கநாதப் பெருமானை வழுத்துகிறேன்.
வாழ்க நாவலர்!
வாழ்க அவர் தம் தமிழ்த் தொண்டு!
திரு கே. ஆர். சீனிவாசன்,
ஆர்க்கியலாஜிகல் சூபிரண்டெண்ட், கோயில் சர்வே திட்டம், சென்னை - 18.
தமிழ் மரபில் வந்து தமிழ்ப் பணியாற்றித் திளைத்த பெரியார் இன்னும் பல்லாண்டு நம்மிடை இருந்து தமிழ்க் கலைகளையும் வளர்க்க அருள் புரியுமாறு எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
திரு டி. கே. பகவதி
சென்னை
விழா சிறப்புற நடந்தேற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன், நல்வாழ்த்துக்கள்.
திரு எம். ஜி. இராமச்சந்திரன்,
நடிகர், சென்னை.
விழா வெற்றியோடு நடைபெற விழைகிறேன்.
திரு கண்ணதாசன்,
சென்னை,
விழா வெல்க ; நாவலர் வாழ்க.
திரு இராமசாமி அடிகள்
புலவர் கல்லூரி, பேரூர்,
பாரதியார் வாழ்க!
திரு எஸ். எஸ். இராசேந்திரன்,
சென்னை.
விழா வெற்றியோடு நடைபெற விழைகிறேன்.
விழாவில் பாடியளித்த பாட்டுக்கள்
மதுரை எழுத்தாளர் மன்றம், மதுரை.
நீறுபூத்த நெருப்பாகத் தாய கத்தில்
நீள்தமிழைக் காத்திடவே நாளும் வாழ்ந்த
பேறுமிக உடையோய் நீ! தமிழ்நற் றாயின்
பெற்றியினைப் காத்திடவே வாழும் வீர!
வீறுடனே எதிர்த்தாயே அன்றே இந்தி
விளைநிலமாம் பைந்தமிழில் புகுந்த போது!
சீருடனே செந்தமிழ்தான் வாழ நாளும்
செயல்புரிந்தோய்! தமிழ்போல வாழ்க நன்றே!
எண்பதாண்டு வாழ்ந்திடினும் இளைஞன் ஆனாய்
இதயத்தே செந்தமிழைக் கொண்ட தாலே!
பண்பான தாயகத்தின் வீரா! என்றும்
பைந்தமிழே வாழ்ந்திடத்தான் வாழும் தீரா!
எண்ணத்தில் தாயகத்தின் இளைஞர் தம்மின்
உள்ளத்தில் வாழ்கின்ற எங்கள் தாத்தா!
மண்ணிதுதான் வாழும்நாள் வாழ வேண்டும்!
மலரட்டும் தமிழ்நாடே! வாழ்க எம்மான்!
மதுரை பாராட்டுக் குழுவினர் படித்து வழங்கிய
பாராட்டு இதழ்
வாரி சூழுலகில் ஆங்கிலம் தமிழில் மாபெரும் புலமை
வாய்ந்தவன்
மாரி வாயிலென நாவலோர் புகழும் மாண்பு நூலதனை யீந்தவன்
நேரி தாமுறையில் வாதமே புரியும் நிகரிலாத் திறமை யுற்றவன்
கூரி தாமறிவு கொண்டுநுண் பொருள்குடைந்துகாண் மதுகை
பெற்றவன் (1)
அமிழ்தின் இனிதாய் அழியாத ஆற்ற லுளதாய் அமைந்தசெழுந்
தமிழின் உயர்வைத் தமிழ்மரபைத் தமிழர் இனத்தைத்
தாழ்த்துவதில்
திமிர்கொண் டலைவோர் சிறுமையினைச் சிங்க வேறு போற்சாடிக்
குமுறுங் குரலால் வென்றடக்கும் கொள்கை சான்ற குணக்குன்று (2)
வெஞ்சொல் இந்தி தனைப்புகுத்த விழைந்த வீரர் சூழ்ச்சியெலாம்
பஞ்சாய்ப் பறக்கப் பொருதொழித்த பண்புகொண்ட மறத்தமிழன்
அஞ்சா நெஞ்சன் கொள்கையினில் அணுவும் பிறழா ஆண்மையினான்
எஞ்சாப் புகழ்கொள் நாவலன் இளசைப் பதியில் வந்துதித்தோன் (3)
தொல்காப்பியமாம் பெருங்கடலுள் தோய்ந்து தோய்ந்து
பொருளனைத்தும்
பல்காற் பயின்று தெளிவடைந்து பாரோர் வியந்து பாராட்ட
ஒல்காப் புலமைத் திறம்விளங்க உண்மையுரைசெய் திண்மையினான்
நல்லார் போற்றும் கணக்காயன் நாவீ றுடைய பாவலவன் (4)
தெய்வப் புலவர் வள்ளுவரின் சிறப்பைத் தாழ்த்தச் சிலர்புனைந்த
பொய்மைக் கதைகள் மண்மூடிப் போகும் வண்ணம் ஆராய்ந்து
மெய்மைச் சான்று பலகாட்டி விளக்கி உண்மை துலக்கியநம்
அய்யன் சோம சுந்தரனின் ஆற்றல் சாற்றும் அளவிற்றோ? (5)
கன்னல் செந்நெல் கதித்தோங்கும் கவிஞனார் வயல்சூழ் அயோத்தி
நகர்
மன்னன் ஆகும் தயரதனே மாசுபடிந்த மனமுடையான்
அன்ன நடையாள் கைகேயி அறவே களங்கம் இல்லாதாள்
என்ன உலகோர் தெளிந்துணர எடுத்துக்காட்டும் வழக்குரைஞன்(6)
அல்லும் பகலும் சிந்தனையில் ஆழ்ந்து துணிந்து மாற்றலரை
வெல்லும் சேரர் தாயமுறை விரிவாய் எழுதும் மேன்மையினான்
நல்ல தமிழில் உயர்நடையில் நயமார் நூல்கள் பலசெய்ய
வல்ல திறமை கைவந்தோன் வாய்மை தவறா மாண்புடையோன் (7)
எண்பதாண்டு சென்றஎங்கள் ஏந்தல் சோம சுந்தரன்
பண்பு கொண்ட தமிழ ணங்கு பார்த்து மகிழ்வு பூத்திட
நண்பு கொண்ட அன்பர் போற்ற நாளும் நாளும் ஓங்கியே
மாண்பு றங்கு சீர்த்திகொண்டு வாழ்க! நீடு வாழ்கவே! (8)
பூமருவும் சோலை புடைசூழ் பசுமலை வாழ்
சோமசுந்த ரப்பெயர்கொள் தோன்றலவன் - காமருபூந்
தண்டமிழ்த்தாய் நன்கு தழைக்கப் பணிபுரிந்து
மண்டலத்தில் வாழ்க மகிழ்ந்து. (9)
மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் படித்தளித்த
பாராட்டு இதழ்
வெண்பா
1. திருக்குமர! நற்கீர! செந்தமிழ்ப்போர் வீர!
திருக்குறளார் வாழ்வுதருஞ் செம்மால் -
அருட்புலமைப்
பாரதியார் மெச்சிடுமெம் பாரதியே! வாழியவே
நீரணிபெம் மானாய் நிலைத்து.
2. எண்பதுக்கு மேலும் இனிவரும்நூ றாண்டுவிழா
நண்பரெலாங் கண்டுவக்கும் நாள்காண்பாய் -
தண்டமிழின்
தொண்டின் வடிவான சோமசுந்த ரப்பெரியோய்!
வண்டமிழர் தந்ததிரு வாக்கு.
3. சங்கப் புலவர்க்கோர் தங்கப் புலவனும் நீ
துங்கக் கலைஞர்க்கோர் தோன்றலும் நீ -
இங்கெவர்க்கும்
அன்புக் கொருபுலவ! ஆர்வத் தமிழ்த்தலைவ!
இன்பத்தோன்றால்! வாழ்க ஈங்கு.
4. தமிழ்க்கதிரே! பாரதியே! தாய்மை விளக்கே!
அமிழ்தப் பிழம்பின் அழகுத் - தமிழ்நடையாய்!
மூவருமே போற்றிமகிழ் முத்தமிழின் மாமணியே!
தேவரென வாழ்வாய் சிறந்து.
5. தலைமை நிறைந்தபெருந் தக்க புலமைக்
கலைஞரெலாம் போற்றுங் கலையே! - நிலையாக
நின்றுரைத்து நீதிதர நேராகப் போராடி
வென்றியெலாம் பெற்றாய் விழைந்து.
6. நுணுக்கப் புலமையினால் நுட்பமதியால்
அணுக்குற்றார் என்றும் அகலார் - இணக்கமுற
செல்வக் கருவூலச் செந்தமிழே! வாழியரோ
கல்விக் கடலே! கனிந்து.
7. வில்லாற்றல் வீரருமே வெட்கித் தலைகுனியும்
சொல்லாற்றல் பெற்றொளிருஞ் சொற்கோவே - நல்லாற்றல்
கட்டுரையில் என்பேமா? கன்னித் தமிழ்க்கவிதைக்
கட்டிலென் பேமா? கணித்து.
8. என்னே நினக்குரிய ஏற்றமுள தோற்றமதே
தென்னன் மதித்திடவுஞ் செய்திறமே - பொன்னெனவே
மின்னலொளிர் மேனியுடன் மேலா முரிமைக்கோர்
மன்னனென வாழ்வாய் மகிழ்ந்து.
9. நம்பாண்டி நாட்டினரே நற்றமிழில் வல்லுநராய்
அம்பொன் மொழிப்புலமை யாற்றலுடன் - நம்பியராய்
வந்திடவே சங்கம் வளர்ந்திடவே வைத்ததுரை
தந்தசங்கங் காப்போம் தழைத்து.
10. செந்தமிழ்க் கல்லூரி சீர்மைத் திறப்பினுக்கே
எந்தமிழ்க் கோவள்ளல் இராசனார் - வந்துசங்கம்
ஓர்தலைவர் வேண்டுமென உள்ளுணர்ந்த போழ்தினிலே
நேர்முகமாய்ப் போந்தனையே நீ.
11. ஐய! தமிழவேள் அன்றளித்த நற்றலைமை
மெய்யே! இனியவரால் மேன்மைதருஞ் - செய்யதிருப்
பாராட்டுச் செய்துபெரும் பாங்கால் உயர்கின்றோம்
சீராட்டு வாழ்க செழித்து!
12. வாழியவே சங்கம்! வளர்ந்திடுக கல்லூரி!
வாழியவே கூடிவரும் பெரியோர் - வாழியவே
இன்பக் கலைவளர்ப்போம் எக்கணமும் எம்பெரும
அன்புயிராய் வாழ்வோம் அமர்ந்து.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் வழங்கிய
வாழ்த்திதழ்
திருவளருந் தென்பாண்டி இளசைநகர்
செய்தவத்தால் வந்த நல்லோய்!
மருவளருந் தமிழ்க்கலையும் மாண்புறுநல்
லாங்கிலமும் தேர்ந்த ஐய!
பொருவருதொல் காப்பியத்தின் பொருந்தாத
வுரைகள்பல விளக்கிக் காட்டி
தெருளுறுநல் லுரைகண்ட திகழ்சோம
சுந்தரனே! சிறந்துவாழி! (1)
சீராருங் குறள்கம்பன் சிவஞான
போதமுதல் பன்னூ லாய்ந்து
பேராருஞ் சேரர்குல வரலாறும்
பிறதொகைநூல் ஆய்ந்தமேலோய்!
நேராரும் நீதிநிலைக் களனென்றே
நின்மொழியால் வியந்துநிற்பர்
வாராரும் பணிபலசெய் வள்ளலே
பல்லாண்டு சிறக்கவாழி! (2)
வடபுலத்தார் வளமார்ந்த தமிழ்மொழியைச்
சிதைக்கபல சூழ்ச்சி செய்தார்
திடமுறுநற் கோளரிபோல் சினந்தெழுந்து
தீந்தமிழ்க்குக் காவல் ஆனாய்
உடலிலுயிர் உள்ளளவும் ஓயாது
தமிழ்வளர உழைத்த மாண்ப!
மடநீக்க மங்கலமும் மாரிவாய்க்
கவிதைகளும் வனைந்தோய் வாழி! (3)
அண்ணா மலைஅரசர் அழகியநல்
சேதரசர் இளசை வேந்தர்
கண்ணார நினதுகலைத் திறனெல்லாங்
கண்டுணர்ந்து நின்னைச் சார்ந்து
உண்ணாடி உயர்பதவி பரிசில்பல
தாங்கொடுத்தே வுயர்வு பெற்றார்
அண்ணாவே! அருந்தமிழின் துணையே!
நீ பல்லாண்டு சிறக்க வாழி! (4)
மன்னியசீர் பாண்டியர்கள் மாண்புறுமுத்
தமிழ்ச்சங்கம் மகிழ்ந்து கூட்டி
தன்னிகரில் தமிழ்ப்புலவர் தகவெல்லாம்
ஆய்ந்துபல சிறப்புச் செய்தார்
பின்னாளில் பாண்டித்துரை தேவரமை
சங்கத்தின் உறுப்பாய் நின்று
மன்னவர்செய் பலபணிகள் மகிழ்ந்தேற்று
மொழிவளர்த்த மாண்ப! வாழி! (5)
தமிழர்களும் தமிழகமும் தமிழ்பயிலும்
தகவோரும் சிறந்து ஓங்க
அமிழ்துநிகர் தமிழ்மொழியும் தமிழ்ப்பண்பும்
தமிழ்க்கலையும் தழைத்து வாழ
தமிழ்த்தொண்டு புரிந்துவரும் தகவோய்
நந் தமிழ்ப்பகைமைக் களையை நீக்கி
இமிழ்கடல்சூழ் தமிழகத்தின் தமிழாட்சி
ஏற்றமுறச் செழிக்கச் செய்வீர்! (6)
வாழியரோ வளர்சோம சுந்தரனே!
வண்புகழும் நற்றொண்டும் வாழிவாழி!
வாழியரோ கணக்காய! வண்டமிழின்
திறனாய்வும் கவிதைகளும் வாழிவாழி!
வாழியநற் றமிழ்மாதின் தவமகனே!
நாவலனே! நல்லறிஞ! வாழிவாழி!
வாழியபல் லூழியெலாம் மலிவளனும்
பிறநலனும் நிறைந்து வாழி! (7)
நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கட்குப்
பாராட்டு (1)
முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் தம் புகழ்பாடித் தன்னவை வந்தோர்க் கன்றி மன்புகழ்தேடி அறநெறி பாடிய அரும்பெரும் நாவலர்களை அன்புடன் ஏற்றுப் பண்புறு மொழியால் மட்டுமன்றிப் பொன்னும் மணியும் புனைதேர் மாவும் வளனும் நிலனும் கவினுறத் தந்து புகழ்பெற்ற வரலாறுகளைப் பண்டை இலக்கியங்கள் நன்கு எடுத்தியம்புகின்றன.
இக்காலத்தும் மக்கள் ஆட்சியில் மாபெரும் புலவர்களை மக்கள் மதித்துப் போற்றுகின்ற செயல்களை நாம் கண்டு வருகின்றோம். தனிப்பட்ட அரசனாண்ட காலமுதல் மக்கள் ஒவ்வொருவரும் அரசராக ஆய இக்காலம் வரை நாவன்மையும் பாவன்மையும் புலமை வன்மையும் உடையோரைப் போற்றிப் புகழ்தல் என்பது கடமையும் மகிழ்ச்சியும் என்பது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் நாட்டைச் செம்மையும் சிறப்பும் அடையச் செய்யும் வழியாகும்.
ஒரு புலவனுக்கு வேண்டிய நிலபுலன்கள் ஆடை அணிகள் பொன் மணிகள் இவை யாவையும் கொடுத்தாலும் அவன் உள்ளம் ஊக்கத்தால் உந்தப்படுதல் இல்லை. என்? அவன் செய்த தொண்டுக்கும், கலை வளர்ச்சிக்கும், அவையாவும் ஈடாகமாட்டா. பின்னர் அவன் தன் தொண்டிற்குக் கைம்மாறாக எதனை விரும்புகிறான்? சுவைப்
போரையும் பாராட்டுதலையும் விரும்புகிறான். கலைஞனுடைய கலையாகிய பயிர் பாராட்டுதல் என்ற நீர் பாய வளரும் என்ற உண்மையைப் பண்டைக் காலந்தொட்டுக் கண்டு வருகிறோம்.
இன்று நம்மிடையே தோன்றி நற்குடிப் பண்புகளும் தமிழ்ப் பண்பாடும் நிறைந்து வழக்கு நூலிற்றேர்ச்சி யுற்று வகையான தமிழறிவும் சிறந்து விளங்கிப் பலதுறையில் தொண்டாற்றும் நாவலர் சோமசுந்தர பாரதியவர்களை அறியாதார் அறியாதாராவர். அன்னார் ஆராய்ச்சி அறிவும் கலையுணர்வும் இலக்கியப் பண்பும் மொழிப் புலமையும் நிறைந்தவர் என்பதைத் தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், மாரிவாயில் - தொல்காப்பியப் பொருளதிகார உரை. இன்னோரன்ன செயல்கள் நெல்லிக் கனிபோல் காட்டும் என்பதைக் கூறவும் வேண்டுமோ? அரசியலாருடன் மாறுபட்டு முதற்கண் இந்திப் போரில் குதித்த மாவீரருமாவார், அன்னாரை உள்ளத்தால் பாராட்டி வந்த தமிழகம் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக வாயிலாகப் பேரறிஞர் என்னும் பட்டம் சூட்டிப் பொன்னாடை போர்த்தித் தன் நன்றியுணர்வைக் காட்ட முன்வந்து இராசா சர் முத்தையாச் செட்டியார் தலைமையில் தமிழகத்துப் பெருங்கவிஞர் பாரதிதாசனார், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, திருவாளர் இராமசாமி நாயுடு முதலிய பேரறிஞர்களும் அண்ணாமலைப் பல்கலைப் பேராசிரியர்களும் எடுத்தியம்பப் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு பாராட்டிய செயல் மிகவும் போற்றத்தக்க தாகும்.
பாராட்டு (2)
பண்டைக்கால நம் தமிழகத்தில் முடியுடை வேந்தர்கள் மூவரும், குறுநிலமன்னரும், வள்ளல்களும், தமிழ்ப்பெரும் புலவர் பெருமக்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்தனர். சான்றாகச் சோழ மன்னன் கரிகாற் பெருவளத்தான் கடியலூர் உருத்திரங்கண்ணனாரைப் பெருமைப்படுத்தியதும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மாங்குடி மருதனார்பாற் பெருமதிப்பு வைத்து நடந்த வரலாறும், சேரமான் கணைக்காலிரும்பொறை யென்னும் சேர வேந்தன் மிக்க பேரன்புகொண்டு முரசு கட்டிலில் தூங்கிய மோசிகீரனாருக்கு விசிறி கொண்டு வீசிய வரலாறும் பிறவும் அக்காலம் மன்னர்கள் புலவர்களைப் பாராட்டி மேன்மைப்படுத்தியமைக்குச் சான்று தருவனவாம்.
தமிழகம் பண்டைப் பண்பாடு குன்றி வேற்று நாட்டினர்க்குக் கீழ் அடிமையானபின் அரசர்களின்மையால் அப்பணியைக் குறுநில மன்னர்களிற் சிலரும் செல்வர்களும் கலைக்கழகங்களும் பட்டங்கள் பல வளித்துப் புலவர்களைப் பாராட்டுவவாயின.
அம்முறையில் நாவலர் திரு ச. சோமசுந்தர பாரதியாரவர்கட்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா 9-2-55இல் நிகழ்ந்தபோது டாக்டர் என்னும் பட்டமளித்துப் பேரறிஞர்கள் பலர் வாழ்த்துதற்கிடையே பாராட்டியது. இப்பட்டம் பெற்றமைக்கு மகிழ்ந்து பாராட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் மன்றம், தமிழ் இலக்கியக் கழகம் ஆகியவற்றின் சார்பில் 28-2-55இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் இணைவேந்தர் இராசா சர். முத்தையச் செட்டியாரவர்கள் தலைமையில் கூட்டம் கூடியது. விழாவிற்கு மன்ற உறுப்பினர்களும், நீதிபதிகளும், புலவர் பெருமக்களும், மாணவ மாணவிகளும் பெருந்திரளாகக் குழுமியிருந்தனர். பேராசிரியர் திரு லெ.ப.கரு. இராமநாதன் செட்டியாரவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்கள்.
கடவுள் வாழ்த்துக்குப் பிறகு பல சங்கங்களின் சார்பில் முத்தையச் செட்டியா ரவர்கட்கும், நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியா ரவர்கட்கும் பல வாழ்த்துரைகள் படித்தளிக்கப் பெற்றன. பின்னர் முத்தையச் செட்டியாரவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கித் திரு பாரதியாரவர்களின் அரிய தமிழ்த் தொண்டினையும், அவர்களின் ஆற்றலையும் பற்றிப் பெருமை பெறப் பாராட்டிப் பேசிச் சங்கங்களின் சார்பாகப் பொன்னாடை போர்த்திப் பெருமைப் படுத்தினார்கள்.
அப்பால் திரு தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பேராசிரியர் திரு ரா.பி. சேதுப்பிள்ளை, திரு சு. இராமசாமி நாயுடு முதலியோர் நாவலர் டாக்டர் பாரதியாரின் தமிழ் ஆய்வுப் புலநலத்தையும், நாவீறு படைத்த சொற்செல்வப் பண்பையும், பிற பண்புகளையும் பலபடப் பாராட்டிப் பேசினர். அதுகாலை விழாவுக்குக் குழுமி யிருந்த மக்கள் பேராரவாரஞ் செய்து தம் மகிழ்வை வெளிப்படுத்தினர்.
பின்னர்ப் பாரதியாரவர்கள் தமக்குப் பொன்னாடை போர்த்துச் சிறப்புச் செய்தமை குறித்துப் பேசுங்கால், தமக்குச் செய்த சிறப்பு தமிழ்மொழியிடத்தில் தமிழகத்தவர் கொண்டுள்ள பேரன்பையே குறிப்பதாகு மென்றும், தமிழுக்கும் நாட்டுக்கும் தம்மால் இயன்றவரை உழைப்பதையே தம் கடமையாகக் கொண்டுள்ளதாகவும், தமிழ் ஆட்சிமொழியாகி எல்லாச் செயல்களும் தமிழிலேயே நடைபெறற்கான வழிவகைகளைக் காண வேண்டுமென்றும் தெள்ளத்தெளிய விளக்கமுறக் கூறினர்.
இரங்கற் பாக்கள்
கி. பழநியப்பன்,
திருவள்ளுவர் கழகம்,
மதுரை.
கீரனாரின் வழித்தோன்றல் கேடயமாம் தமிழ்மொழிக்குத்
தீரமுடன் வாதாடித் திறமையுடன் வெற்றிகாணும்
வீரமுள்ள நெஞ்சினராம் மிகநல்ல பண்பாளர்
பாரதியார் உருவையினிப் பார்ப்போமோ பாரினிலே! (1)
தொல்குடியாம் தமிழினத்தின் துயர்களைந்த போர்வீரர்
தொல்காப்பிய வுரைகண்டு துலக்கினரே தமிழ்ப்பண்பை
பல்கலையாய்க் கழகமதிற் பணிபுரியும் வகைவகுத்த
சொல்வல்லர் நாவலரும் தோன்றுவரோ இனியிங்கே! (2)
எண்பதாண்டு விழாவெடுத்து இன்புற்றோம் சங்கமதில்
மண்புகழும் புலவோர்கள் மாட்சிமிகு தலைவரென
விண்ணதிர வாழ்த்திநின்றோம் வீறுபெற்ற தமிழினத்தை
மண்ணுலகில் எவ்வாறு மறந்திடவே துணிந்தனரோ! (3)
பொன்னாடை கழகமதிற் போர்த்தியுமே கணக்காயர்
என்றழைத்தும் மகிழ்ந்தோமே; இன்றில்லை அப்பெரியார்;
என்செய்வோம் பாரதிக்கே என்றுநமை ஏங்கவிட்டுத்
தென்னகத்தின் தமிழ்த்தலைவர் சென்றனரே அமைதிக்கே! (4)
மதுரைத் திருவள்ளுவர் கழகச் சார்பில்
பண்டித மீ. கந்தசாமிப் புலவர்
1. நாவலனே மாப்புலவர் நற்றலைவ செந்தமிழின்
காவலனே யெங்கள் கணக்காய - பாவலயாம்
துன்பமுறச் செல்சோம சுந்தர நின்செயல்மற்
றின்பமோ நன்றோ வியம்பு.
2. கன்றைப் பிரிந்த கறவையெனச் செந்தமிழை
யன்றைப் பிரிந்த தழகாமோ - குன்றைப்
பொருவு புகழ்சால் புலவ! அதற்கார்
மருவு துணையாகு வார்.
3. பேச்சால் எழுத்தாற் பிறர்க்குரைக்கும் நன்மறுப்பால்
மூச்சால் தமிழுணர்ச்சி மூட்டினாய் - ஏச்சு
மொழிவார் நடுக்கமுற முந்துறுவாய் நின்போற்
பழியார் இனித்தீர்ப் பவர்.
4. நாடு துணையிழக்க நாங்கள் வலியிழக்கப்
பீடு பெறுதமிழும் பேச்சிழக்க - நீடுநின்
சால்பு நிறைமக்கள் தந்தை யிழக்கயாம்
மால்புகவே நின்னிழந்தோ மால்.
5. அண்ணா மலைநகர்ப்பே ராசிரிய னாகிமுனந்
தண்ணார் தமிழ்வளர்த்த சான்றோயே - விண்ணோரும்
செந்தமிழர் பண்பு தெரியத் தமிழுணர
வந்தனரோ வாங்கு மகிழ்ந்து.
6. தனாது குறையுந்தன் றையலியல் புஞ்சொல்
லுனாது விரிவுரைகேட் டோர்ந்து - வினாவிக்
கசரதமாக் காலாளாற் காலமெல்லாம் வெல்லும்
தசரதனென் னானாநீ சாற்று!
7. வசைதீர்ந்த கைகேசி வந்துகரங் கூப்பித்
திசைநோக்கிக் கும்பிட்டுச் சேர - விசைசேரும்
தொல்காப் பியர்தேவர் சொல்லினரோ நல்வரவு
பல்கா லுனக்குப் பரிந்து.
8. நாரணனா ராறுமுக நாவலனார் நாட்டார் நற்
சீரணவு கார்மேகச் செம்மலார் - சேரும்
புகழப்பண் டிதமணியார் போற்றுமையர் போல்வார்
மிகக்கண் டுவந்தார்கொல் விண்.
9. வலித்துத் திரங்கி மருங்குகிடந் தாலும்
புலித்தலைமுன் ஆற்றலற்றுப் போமோ - கலிக்கும்
முழக்கமிடுஞ் செம்மால்நின் மூப்பினுங்கண் டஞ்சும்
சழக்கரச்சந்த தான்தீர்ந் தது.
10. அருநூற் பொருளுணர்ந்த வையா வதன்மேல்
பொருணூலுந் தேர்ந்த புலவ! - மருணீக்கும்
மன்றுடையான் பொன்னம் மலரடிக்கீழ்ச் சார்ந்துநீ
என்றென்றும் வாழ்க வினிது!
பேராசிரியர் ஞா. தேவநேயப்பாவாணர்
அண்ணாமலை நகர்
காமுறத் தமிழ் காத்தபண் டாரகன்
சோம சுந்தர பாரதி சூருடல்
ஈம மெய்தினும் இந்நிலம் நிற்பனே
ஏம நல்லுரை ஏறென வென் றுமே!
பேராசிரியர் சி. இலக்குவனார்
மதுரை
செஞ்சொற் புலவ! செழுந்தமிழின் காவல!
துஞ்சினையோ தூய தமிழ்ப்பகையை - எஞ்சாது
வெல்லும் துணிவோடு வேறுலகம் சென்றனையோ?
அல்லல் எமக்கே அளித்து.
பேராசிரியர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
மதுரை
பிணக்காய வல்ல பேரறிஞர் டாக்டர்
கணக்காயர் நாவலர் காணின் - வணக்கமிலாத்
தூய தமிழ்த்தலைவ சோமசுந்த ரப்பேரால்
மேயார் மறைந்தடைந்தார் விண். (1)
பாரதியா ரோமறைந்தார் பண்பார் தமிழினத்துள்
யாரவர்தம் நற்புலமைக் கீடாவர் - சீர்மிக்க
ஆய்வால் அறிவினால் அஞ்சா வுரைநலத்தால்
தேயா மனத்தால் சிறந்து. (2)
பண்டித - வித்துவான் தி. சங்குப்புலவர்
சென்னை
1. அறைந்தனையே தமிழ்ப்பெருமை யயனாட்டுக்
கலைப்பெருமை யாய்ந்தி யாவர்க்கும்
உறைந்தனையே தமிழ்ப்பணியை யுரியபணி
யெனப் புரிந்திவ் வுலகமெங்கும்
நிறைந்தனையே சீர்த்தியாற் றமிழுலக நின்றிரங்க
நீயிந் நாட்போய்
மறைந்தனையே யுயர்சோம சுந்தரபா ரதிநாம
வள்ளா லென்னே!
2. உலகமெலாம் புகழ்சோம சுந்தரபா ரதியே நின் னுரையைக் கேட்க
வலவரிலர் புவிக்கணென மதித்தனையோ
புலவர்குழு வானினுண்டே
நிலமுறுசெந் தமிழையினி யவண்பரப்பு வாமென்ன நினைந்தாய் கொல்லோ
புலவர்குழுத் தலைமையண்மை பூண்டநீ யெமைப்
பிரிந்த பொருளென்னேயோ!
3. சாற்றுவார் யார்செந் தமிழையினி வளர்த்துப்
போற்றுவார் யாரன்னோன் போற்புவியிற் - கூற்றுவா
தூய புகழ்ச்சோம சுந்தர பாரதியை
மாயமாக் கொன்றனையே மன்.
பேராசிரியர் அ. கி. பரந்தாமனார், எம். V.,
மதுரை
1. இமயமலை இடிந்ததந்தோ! எரிந்தவிளக் கணைந்ததந்தோ!
அமைந்துநின்று தமிழ்காத்த அருங்காவல் மறைந்ததந்தோ!
தமிழ்மறத்தின் திருவுருவம் தான்கரந்து மடிந்ததந்தோ!
அமிழ்தமொழி தமிழ்காக்க அறிஞரெவர் இனியுளரோ?
2. இந்திமொழி வந்துபுக எண்ணியவர் இடிந்திடவே
முந்திவந்து தமிழ்காத்த மூதறிஞ, பாரதியே,
சிந்தனையின் சிகரமெனத் திகழ்ந்திருந்த பேரறிஞ
அந்தகனும் நினதுயிரை அஞ்சாது கவர்ந்தனனே!
3. கடமைசெயா மடமையர்கள் காசினியில் மிகவிருக்கத்
திடமிகுந்த பாரதியே, நீதானோ செயற்குரிய
கடமைகளைத் தவறாது கண்டறிந்து முடித்துவிட்டாய்;
உடலின்று மறைந்திடினும் உனதுபுகழ் மறைவரிதே!
4. வாழ்க பாரதி வளர்புகழ் வளமுடன்!
வாழ்க நின்னுயிர் அமைதியாய் வானிலே!
வாழ்க நின்னரு மக்களும் வழிவழி
வாழ்க தமிழ்மொழி வையகம் போற்றவே!
பண்டித அ. முத்துசாமிப் புலவர்
மதுரை
1. மண்ணுலகத் தவர்நெஞ்சில் மங்காதே தமிழ்ப்பற்று
வளரச் செய்தாய்
பண்ணினிமைத் தமிழ்மொழியின் பெருமையைஇத்
தமிழகத்திற் பரவச் செய்தாய்
கண்ணிருந்தும் குருடர்களாம் தமிழர்களுக் கரியவழி
காட்டிச் சென்றாய்
எண்ணரிய தொண்டுசெய்த பாரதிஎம் ஐயஉனை என்று
காண்போம்.
2. தெள்ளமுதம் உலகிலுள யாவினுமே இனியதெனச்
செப்புவார்கள்
உள்ளபடி காணுங்கால் தமிழமிழ்தின் இனியதெனும்
உண்மை தன்னை
விள்ளரிய சீர்படைத்த வானவர்க்கு விளக்க மிகவிரும்பி
நெஞ்சை
அள்ளுதமிழ்க் கடலாய பாரதிநீ வானுலகை அடைந்
தாய் போலும்!
3. வீரத் தமிழினத்தின் மேன்மைக் குழைத்த தமிழ்ச்
சூரப் புலிசோம சுந்தர - பாரதியின்
மீசைக்கஞ் சாரே விரைந்துயிர் கொள் கூற்றுவநின்
ஆசைக் களவில்லை யா?
4. மருவும் விகாரி வளர்கார்த் திகையில்
வருமிருபத் தெட்டுமதி வாரத் - திருநாளே
எல்லோரும் போற்றும் இயற்சோம சுந்தரனாம்
நல்லோன் உயர்நீத்த நாள்.
வித்துவான் அ. இராசகோட்டியப்பன்
விருதை
1. பிற்றை நாட் கீரனென்கோ? பிறங்குதொல் காப்பி யற்கு
முற்றிய தோற்ற மென்கோ? முதன்மையாஞ் சங்கந் தன்னில்
துற்றிய முதல்வன்சோம சுந்தரன் என்னக் கேட்போம்
இற்றைநாட் கண்டோம்! என்றினிக் காண்போம் ஐயா!
2. நாவலா ரேத்துஞ் சிங்கம்! நயனுளார் போற்றுந் தந்தை!
பாவலார் பரவும் வேந்து! பண்புளார் கருதும் அண்ணல்!
மேவலார் தமிழ்ப்ப கைஞர் விதிர்ப்புற்று வீழச் சாடுங்
காவலார் டாக்டர் சோம சுந்தரா! காண்ப தென்றோ?
3. வாழ்வாங்கு வாழ்ந்தார் தம்மை வானுறை தெய்வமென்ற
வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் வாழ்க்கையை வடித்துத் தந்தாய்
வாழ்வாங்கு வாழ்ந்த சோமசுந்தரா! மறைந்த மாயம்
வாழ்வாங்கு வாழும் தெய்வத் தமிழ்மொழி எனத் துணிந்தோ?
சி. துரைசாமி
மயிலம் தமிழ்க் கல்லூரித் தலைவர்
எங்கள்தமிழ்ப் புலவர்குழு தனித்தலைவ!
நாவலரே! இளமை யான
எங்கள்தமிழ் இனிமைதனை இமையவரும்
இனிதுணர்ந்து ஏத்தும் வண்ணம்
எங்கள்தமை விட்டகன்று ஏகினையே!
விண்ணுலகு என்னக் கேட்டு,
எங்களது உளத்துடிப்பை என்னென்று
எடுத்துரைப்பேம் எந்தாய் அந்தோ! (1)
தமிழருக்கு வீரமுண்டு என்று பல
தமிழ்ப்புலவர் அவையிற் சொல்வார்;
தமிழ்மொழிக்கு இடையூறு செய்வாரை
தாமென்றும் சார்ந்தே வாழ்வார்
தமிழருக்கு உரியதொரு தனிப்பண்பு
வீரமென சாற்றல் அன்றி;
தமிழ்மொழியைக் குறைகூறும் தகவிலரைத்
தானடக்கும் தகைவு எங்கே! (2)
தொல்லரது இலக்கணத்தில் தூயபொருள்
அறியாமல் தோன்றி யாங்கு
அல்லபொருள் உரைத்திட்டார் அதைமறுத்து
நல்லுரையை அளித்தாய் அந்தோ!
பல்லோரும் துயர்க்கடலுள் மூழ்கிடவே
விண்ணுலகு பறந்தா யேனும்;
எல்லோரும் தொழும் சோம சுந்தரனே
நின்புகழ்தான் என்றும் வாழி! (3)
இராமசாமியடிகள்
சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி
பேரூர்
செந்தமிழ்த் தலைவ னாகித் திறம்பொலி சிந்தை யோடு
சிந்தனைச் செம்ம லாகத் திகழ்ந்துயர்ந் திலகுசோம
சுந்தர பார திப்பேர் தூயவ தமிழ்த்தாய் வாட
எந்தமைப் பிரிந்தாய் எந்தாய் இனியெவர் தலைமைஏற்பார்?
திறங்கொண்ட தமிழர் பண்பும் சிந்தனை வளமும் மாண்பு
பிறங்கிடும் ஒழுக்க வாழ்வும் பீடுறக் கொண்டே நாளும்
அறங்கரை நாவின் ஓங்கி அவிர்தரு நாவ லாநின்
நிறங்கிளர் வடிவு காணேம் நிலையுயர்ந் துயிர்தான் வாழி!
பண்டித - வித்துவான் இராம. கோவிந்தசாமிப் பிள்ளை
தஞ்சாவூர்
ஆங்கில மாரியம் பாங்கொடு பயின்றே
எம்மே பீயெல் லென்னும் பட்டம்
பெற்ற நற்றவ! பெருமிதத் தோடும்
தண்டமிழ்க் குழைத்த ஒண்டிறற் பாரதி!
பாவலர் போற்று நாவல ரேறே!
சோம சுந்தர துரிசினற் றிருப்பெயர்
பூண்ட பெரிய! புவிபுகழ் பரப்பி
எண்பதின் மேலும் இயலுற வாழ்ந்தனை!
பசுமலை யகத்தே பரிவொடு முற்றனை!
நற்றிருப் புதல்வரைப் பெற்று முகந்தனை
தொல்காப் பியவுரை தோமறக் கண்டனை!
மாரிவாயில் வளமொடு மியாத் தினை!
செந்தமிழ்ச் சங்கம் செழிப்புற வளர்த்தனை
தமிழுக் கிழுக்குச் சாற்றிடுங் கயவரை
முக ரோமத்தை முறுக்கி வீறொடும்
மருட்டி வெருட்டி மாழ்குறச் செய்தனை!
பாரதி பேச்சினைப் பரிவுறக் கேட்டோர்
வேறோ ருரையினை விரும்பிக் கேட்பரோ?
அத்திரு வுடைய ஐயநீ பூத
உடம்பினை யொருவி உமையொரு கூறன்
றிருவடி சேர்ந்தனை மருவறு சுற்றம்
நட்பினர் நற்றமிழ் வாணர் கலங்குற
பிரிவினை யந்தோ பெரிது மாற்றேம்
எங்ஙன மாற்றுவம் எந்தா யந்தோ!
பண்டித ச. சாம்பசிவன்
பசுமலை
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்தம்
பொய்மைக் கதையைப் பொசுக்கிய - அய்யனே!
நெஞ்சாலிவ் வாய்வை நினைந்துரைக்க நீயல்லா
தஞ்சாரோ ஏனை யவர். (1)
ஓல்காப் பெரும்புலவர் ஓர்ந்துணர்ந்து போற்றவே
தொல்காப் பியவுரையைச் சொல்லிய - நல்லோய்!
பசுந்தமிழை விண்ணோர் பருகட்டும் என்றோ
விசும்பினிலே சென்றாய் விரைந்து. (2)
எம்சோம சுந்தரனே! எம்மருமை நாவலனே!
எம்போல்வார் ஏத்துஞ்சீர் ஏந்தலே! - எம்மனோர்
இந்நிலத்தே ஏங்க இருநிலந்தான் சென்றனையோ?
நந்தமிழ ரேறே நவில். (3)
இற்றைநாள் யாமறிந்த புலவர் தம்முள்
இவரொப்பார் இந்நிலத்தில் இல்லை யென்றும்
அற்றைநக் கீரனார் வந்து தித்த
அறிவுமுதிர் ஆசிரியர் ஆவ ரென்றும்
பிற்றைநாட் பெரும்புலவர் பேசு மாறு
பெருநிலத்தில் வாழ்ந்திட்ட பெருமை சான்றோய்!
கற்றவர்யாம் கனிந்துருகக் காலன் உன்னைக்
கவர்ந்திட்டான் கடுந்துயரம் எய்தி னோமே! (4)
வித்துவான் வீ. ப. நடராசன்
பசுமலை
1. பசுமலையின் நாவலரைக் காண்போம் என்றே
பாவலரும் நாவலரும் வருதல் எங்கே?
விசும்பினிடை பாரதியார் உள்ளார் என்றே
விண்ணவர்கள் ஓடியோடிக் காண்பர் அங்கே!
2. கணக்காயர் நாவலரைக் காணோம் என்றே
கவல்கின்ற பெருந்தகையோர் கண்ணீர் கண்டோம்
குணக்குன்றாம் பாரதியார் பேசுவதைக் கேட்போ மென்றே
கூடுகின்ற நிலையினையை இழந்தோம் மண்மேல்!
3. ஆணழகன் சிங்கமென அறைந்தாலோ மிகையேயில்லை
அன்புதவழ் முகப்பொலிவு அருளும் உண்டே
மாரினெழிலாள் தமிழன்னை வளர்த்த மன்னன்
வையகத்தில் புகழ்நாட்டி மறைந்தா ரந்தோ!
4. தமிழகத்தில் இவரறியாத் தமிழர் உண்டோ?
தன்னிகரில் புலவரிவர் தமிழே வாழ்வு
அமிழ்தமெனும் தமிழ்மொழியும் ஆங்கிலமும் அறிந்த அன்பர்
யாருண்டு தமிழகத்தே இவரிடத்தை ஈடேசெய்ய?
கவிஞர் எம். பி. மஸ்கரேனஸ்
தூத்துக்குடி
என்செய்வோம் அந்தோ! எமது குழுத்தலைவர்
முன்செய்த நல்வினையை முற்றுணர்வான் - பொன்செய்த
மேலுலகம் சென்றனரோ? வீரத் தமிழ்உலகம்
சாலத் தயங்கத் தளர்ந்து.
புலவர்மணி - வித்துவான் தி. கி. சுந்தரமூர்த்தி
மதுரை
அஞ்சாத நெஞ்சுரமும் ஆழ்ந்த நோக்கும்
அரியதமிழ்ப் பற்றுளமும் இன்ப அன்பும்
எஞ்சாத தமிழ்நாட்டையும் ஏய்ந்த பண்பும்
எத்திசையும் தமிழ்வீரம் ஏத்தும் வாயும்
நெஞ்சாரத் தமிழ்ப்பகையை நீவும் சால்பும்
நிகரில்லாத் தமிழ்வாழ்வு நீடு வாழச்
செஞ்சொல்உரை பாரதியார் மறைந்த நாடு
செந்தமிழ்நா டெனில்என்ன செய்வோம் ஐயா!
நா. சிவராம முத்துக்குமார வேல்
தேனி
1. நாவலர் பாரதியார் நல்ல தமிழ்ப் புலவர்
பாவலர் போற்றும் பழங்கவிஞர் - ஆவலுறும்
பேச்சினிலே வல்லார் பிறங்கு தமிழ்த்தொண்டை
மூச்சினிலும் கொண்டார் முதிர்ந்து.
2. சொன்மறவர் நற்சோம சுந்தரனார் பாரதியார்
இந்நிலத்தோர் போற்ற இனிதுறைந்தே - மென்மைமிகு
நற்றமிழைப் பேணி நயமாய்ப் பலநூல்கள்
கற்றொழுகி யாத்தார் கனிந்து.
3. அத்தகைய மேலோர் அருமைத் தமிழகத்தின்
வித்தகர்கள் யாரும் விதிர்விதிர்த்துச் - சித்தம்
கலங்கிடவே விண்ணடைந்தார் கன்னித் தமிழை
இலங்கிடயார் செய்வார் இனி?
வித்துவான் சி. இராமசாமி
வத்தலக்குண்டு
1. செந்தமிழ்நா வலர்சோம சுந்தரபா ரதி மறைந்த செய்தி கேட்டுச்
சிந்தைகலங் கியதமிழர் மனந்தோறும் வகையதனைச் செய்வா ருண்டோ?
தந்ததமிழ் அன்னையுந்தன் தலைமகனை யிழந்துமிகத் தவிக்கின் றாளே!
இந்தவொரு பேரிழப்பை ஈடுசெயத் தமிழகத்தார் என்செய் வாரோ?
2. தமிழனெனுந் தன்மானத் துடன்வாழ்ந்த பேராண்மைத் தலைவன் எங்கே?
தமிழகத்தே தமிழ்த்தாய்க்குத் தனித்தொண்டு புரிந்தவருந் தனையன் எங்கே?
தமிழினத்தார் தலைநிமிரத் தகவுரைகள் பலஆய்ந்து தந்தோன் எங்கே?
தமிழ்வடிவந் தாங்கியொளிர், தறுகண்மை, யுறுவீரத் தமிழன் எங்கே?
3. கட்டாயம் நுழைந்திடுவேன் எனவந்த இந்தியினைக் கண்டு சீறி
விட்டேனா பார் எனவே விரட்டியடித் திடமுனைந்த வீரன் எங்கே?
தொட்டாலே, மணக்குந்தொல் காப்பியம்வள் ளுவர்கம்பர் துருவித் தேர்ந்து
தட்டாமல்பெரும் புலவோர் தாம்போற்றுமுரை நூல்கள் சமைத்தோன் எங்கே?
4. இருந்தமிழே யுனக்காக இருக்கின்றேன் எனக்கிந்நாள் எண்பத் தொன்று
பொருந்துவய தாயிடினும் உணர்வினிலே இளமைநலம் பொதியச் செய்யும்
மருந்தெனநீ வயங்குகிறாய் எனவுரைக்கும் வகையிலரும் வாழ்வு சூழ்ந்த
பெருந்தகையோன் தமிழகத்துப் புலவர்குழுத் தலைவனவன் பிரிந்ததெங்கே?
சுருளியாண்டிப் பாவலர்
கோம்பை
சிங்கத் தமிழர் திறமெல்லாம்
சேர்ந்தோர் உருவாய்த் திகழ்ந்தோனே!
சங்கத் தமிழன் தகவெல்லாம்
சலியா துரைத்துத் தகவாகத்
துங்கத் தொண்டு செய்திடவே
சுரர்தம் நாடு சென்றனையோ?
என் றறியாமல்
ஏக்கங் கொண்டோம் பாரதியே! (1)
தொல்காப் பியத்துக் குரைகண்ட
தூயோய் துங்கத் தமிழ்மொழியில்
பல்காப் பியமும் பயின்றோனே!
பசுமலை வாழ்ந்த பாவலனே!
மல்காப் புலமை மடமையரின்
வாயை அடக்கும் வல்லோனே!
ஒல்காப் புகழ்சேர் கணக்காயர்!
உன்திற முற்றும் உரைப்பவர்யார்? (2)
இந்தியை முந்தி எதிர்த்தாயே!
எந்தாய் மானம் காத்தாயே!
அந்திய காலம் வரைவீறாய்
அயரா துழைத்து அலுத்தாயே!
செந்தமிழ் மொழியின் காவலனே!
சீர்மிக வுற்ற நாவலனே!
சுந்தர சத்தி யானந்த
சோம சுந்தர பாரதியே! (3)
எண்பத் தோராண் டினிதாக
இந்நில வுலகில் இருந்தாயே!
அன்பு மனைவி, மக்களுடன்
அருந்தமிழ் மக்கள் அனைவோரும்
என்பும் உருக ஏங்கிமிக
இரங்கிட விட்டுப் பிரிந்தாயே!
பண்பு மிக்க பாரதியே?
பாரில் மீண்டும் வாராயோ? (4)
பாவலர் மு. கா. அம்பலவாணனார்
1. சிந்துநதி வறண்டதுவோ மாமேரு
தான்வெடித்துச் சிதறிற் றாமோ
பைந்தமிழ்சேர் பொன்னிவளம் குன்றியதோ
உற்சோம சுந்தரனே பாவல்லோனே
அந்தமிலாப் புகழுடையாய் புலவரெல்லாம்
அகம்குழைந்தார் அந்தோ நீதான்
எந்தவிதத் தான்மறைந்தாய் வந்தொருகால்
தமிழன்னைக் கிதம்சொல் வாயே!
2. உம்பரெலாம் தமிழ்கேட்டு மனமுவந்து
வரவேற்று உவந்தார் கொல்லோ!
நம்பகமாம் தமிழன்னை உளம் சோர்ந்தாள்
நாவலனே பாரதியே நவில்வாம் ஐய!
இம்பருல கத்திருந்து சிவனெறியிற்
றான் கலந்தாய் ஏந்தால் நீதான்
அம்மவுல கம்நீத்தாய் ஆனந்த
நல்லொளியில் அமைக நாளும்!
3. சங்கநூ லைத்திரட்டித் தமிழன்னைக்
கேயளித்த சாமி நாதர்
துங்கமிகு வ.உ.சி. தான் கரந்தாய்
நும்பசிதாம் தீரவில்லை தொலைவிலாதாய்
பொங்குதமிழ் நற்சோம சுந்தரனைப்
பொன்றுவித்தாய் நும்பசிதாம் போக்கினாயோ
மங்காத புகழுடையாய் நாவலனே
நின்மறைவு மறக்கப் போமா?
நல்லைக்கவி அ. இளங்கோவன்
1. கன்னித் தமிழ்மொழியின் காவலனே நாவலனே
பன்னுந் தமிழ்க்கினிய பாவலனே பாரதியே
கன்னற் கவிச்சோம சுந்தரனே காலனுக்குக்
தின்னத் தெவிட்டாத தெள்ளமுத மானாயோ!
2. வாராயோ வந்துனது வண்ணமுகக் காட்சிதனைத்
தாராயோ தந்தெம்மைத் தாவியணைத் தின்னருட்கண்
பாராயோ பார்த்தெமக்குப் பாவமுதம் ஊட்டாயோ?
தீராயோ எந்துயரம் தீர்த்துய்வு காட்டாயோ?
3. மாமதுரைச் சங்கமது மனங்குமுறி நின்றழூஉம்
ஏமமிகு புலவர்குழு ஏங்கிநின்று நின்றழூஉம்
சூழ்மதுரைச் சொக்கனழும் சுந்தரனே நின்பிரிவால்
தேமதுரத் தமிழழூஉம் தென்னாடு தானழூஉம்!
4. எல்லாம்யாம் அழுதாற்ற ஏனோநீ காலனுடன்
சொல்லாமற் கொள்ளாமற் போய்விட்டாய் சுந்தரனே?
நில்லாதே காலனுடன்! நீங்கியிங்கு வந்துவிடு!
நல்லானே நமதுதமிழ் நாட்டுக்கே வந்துவிடு!
தமிழகப் புலவர் குழுவினர் சார்பில்
புலவர் ந. இராமநாதன்
1. ஏமமும் எழிலும் பூத்திங் கிருந்தமிழ் அன்னை ஓங்கக்
காமரு செயலாற் சொல்லாற் கருத்தினாற் புரட்சி செய்த
சோம சுந்தரனே ச. சோ. பாரதி என்னுந் தோன்றால்
தேமெலாம் அரற்ற யாண்டுச் சென்றனை ஐயா அந்தோ!
2. பாவலர் வியக்கப் பாடும் பைந்தமிழ்க் கவிஞர்,செஞ்சொல்
நாவலர், நலிந்தோர்க் கெல்லாம் நல்வழக் குரைஞர், கேட்போர்
யாவரும் உணர ஓதும் நறுங்கணக் காயர் என்ற
மேவிய புகழால் தோன்றும் வேந்தனே போந்தாய் அந்தோ!
3. எதிர்ப்பினுக் கஞ்சாத் தீர்ப்போ டெஃகுளம் விரிக்கும் வாய்ச்சொல்
விதிர்ப்புற லறியாக் கல்வி வென்றியால் திகழும் ஆய்வென்
றுதிர்த்தலை உணரச் செய்த ஒண்சுடர் அனையாய்! உள்ளம்
கொதிப்புறச் சென்றாய்! ஐயோ! கூற்றமே கொடியை! அந்தோ!
4. அண்டிநம் மடியில் வாழ அழைப்பிலா திங்குற் றோர்நம்
தண்டமிழ் நூல்கட் கெல்லாம் தகவிலா உரைகண் டாரென்(று)
எண்டிசை வியப்ப நல்ல எழிலுரை வரைந்த மேலோய்
பண்டித மணிகள் போற்றும் பைந்தமிழ் மகனே! அந்தோ!
5. செந்தமிழ் உவக்கும் சிந்தைச் செம்மலே! மொழிகட் கெல்லாம்
முந்திநின் றறத்தின் வாய்மை முகிழுநற் பொருள்கள் வேண்டி
வந்தவர்க் களித்து வாழும் மாண்பினை அறியா துற்ற
இந்தியை எதிர்த்து வாகை ஏந்திய தமிழர் ஏறே!
6. ஏறுறு நடையும் இன்ப இசைதவழ் தொடரும் தாங்கி
வீறுறும் எழுத்தால், யாரும் வெல்லொணாச் சொல்லால்,
இங்கு வேறுபட் டெழுந்தார் உள்ளம் வெந்துபட் டொழியச் செய்தாய்!
ஊறுபட் டிந்நா டேங்க ஒளிந்தனை ஒளியே! இந்நாள்
7. தமிழ்துறை தோறும் எங்கள் கனிதமிழ் ஆட்சி யோங்கத்
தமிழகப் புலவர் கூட்டத் தனிப்பெரும் தலைவ னாகி
இமிழ்கடல் வரைப்பில் எந்தாய் மொழிக்கிலை ஈடென் றார்வம்
முகிழ்தரக் கூறி நின்ற மொய்ம்பனே! அந்தோ அந்தோ!
8. வஞ்சனை வழக்குப் பொய்ம்மை வன்செயல் சூழ்ச்சி யாவும்
அஞ்சிமுன் னழிய நல்ல ஆய்வுரை தமிழிற் கீந்து
நெஞ்சினி லுறையும் சான்றோய்! நிறைதமிழ் அறிஞ ரேறே!
துஞ்சுதல் முறையோ எங்கள் துயர்களைந் தருள்வார் யாரே?
9. பகுத்தறிந் தாய்ந்து சொல்லும் பண்புடைப் புலவ! உன்போல்
மிகத்தெளி வாக யார்க்கும் விளங்கதொல் காப்பி யற்குத்
நீ தோற்றுவாய் செய்தாய்; அந்தோ!
அகத்தொளிர் விளங்கே எந்தம் அண்ணலே ஐயா அந்தோ!
10. முத்தமிழ்ச் சங்கம் போற்ற முதுதமிழ் ஆசா னாகி
நித்திலப் பவழக் கோவை நிகர்எழுத் தாள னாகி
புத்தமு தளித்த மேலோய் புலவர்தம் புலனே அந்தோ!
இத்தரை புலம்பச் சென்றாய் என்றினிக் காண்போம் ஐயா!
கரந்தைத் தமிழ்ச் சங்கப் புலவர் கல்லூரி சார்பில்
ச. பாலசுந்தரம்
1. பேரறிஞர் எனக் கொண்டு பிறபுரிவார்
புகழ்பெறுவார் பிழைப்பார் அஞ்சப்
பேரறிஞர் ஆய்த்திகழ்ந்த பீடுதமிழ்
நற் பேரா சானென்
றூரறிய உலகுவப்ப உரைமிகுத்த
ஒண்சுடரே! ஒட்ப மிக்க
பாரதியே! எங்குற்றாய்; பண்பட்ட
தமிழ்மகனே! பாவல் லோயே!
2. கொடுத்துயர்ந்த செந்தமிழின் கோளுணர்ந்து
குணம்பெருக்கக் குறையா வீரம்
மடுத்தெழுந்த தமிழேறே; மறவர்குல
மாவீரா! மதிமாண் பாலே
தொடுத்தெழுந்த கைதவரைத் தோல்விபெறச்
செய்து தமிழ்த் தூய்மை காக்க
அடுத்தடுத்துப் போர்புரிந்த அறிஞர்தமக்
கருந்தலைவா! அந்தோ! அந்தோ!
3. நக்கீரர் கபிலரையுன் நாவுரையால்
கண்டோமிந் நாட்டில் வந்து
புக்கோரின் புரையுரையைப் பல்புகழ்தொல்
காப்பியனூற் புகுந்து ணர்ந்து
தக்காங்குச் செய்யுரையால் தமிழ்மானம்
வாழ்வுகலைத் தன்மை கண்டோம்
மிக்காரும் போற்றபல மெய்யுரைகள்
ஆய்ந்தளித்த விறலே! அந்தோ!
4. மதியழகார் மதியழகன் மாவீரன்
மறத்தமிழன் வணங்காச் சொல்லன்
சதிபுரிவார் சதிக்கெல்லாம் சதியான
தமிழ்மறவன் தக்கோன் நீயென்
றெதுவரினும் இயம்புகவென் றெந்தமிழ
வேள்விரும்ப எவருங் காணாப்
புதுமைகமழ் ஆய்வுரைகள் பொழிந்துதமிழ்ப்
பொழில்வளர்த்த புலவா! அந்தோ!
5. ஆய்வறிவின் கனிபழுத்த அரசே! நல்
லமுதளித்த முகிலே! கல்வித்
செந் தமிழ்வளர்த்த
பேராறே! தருக்கி வந்தோர்
வாய்மடக்கிச் செந்தமிழ்த்தாய் வாகைகொளப்
பணிபுரிந்த வாள்வீ ரா! நீ
உன் பொன்னுளம் போல்
தமிழ்ப்பணியே புரிவோம் ஐயா!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தார்
திருச்சிராபள்ளி
நதியணிந்த சடைப்பெருமான் நம்பெருமா னல்கியதும்
எதிரிதனக் கொன்றுமிலை யெனவேத்த வெழில்பெற்று
மதுரமென மொழிவல்லோர் மாந்திடும் நற்றமிழை
மதியழக பாரதிபோற் சுவைகண்டார் மற்றுளரோ?
மதியழக பாரதியே மறைந்தனையோ யெமைவிட்டு
விதிமுடிந்து சென்றனையோ விண்ணாட்டு விருந்தினனாய்
மதிமிகுந்த நினைக்கண்டு மகிழ்வோர்கள் தாமெல்லாம்
கதிநினைந்து கதறுவதைக் கவிஞனேநீ காணுதியோ!
கருதரிய வள்ளுவரும் கவியரசு கம்பனுமே
பொருவரிய வுனையெதிர்வர் பொன்னுலகி லுவகைகூர்ந்து
அருங்கலையின் விளக்கமது அவிந்ததெனத் தமிழணங்கு
உருகியுளம் நைவதைநீ யுணர்வாயோ யுரையாயோ!
போக்கரிய புரையதனைப் போக்கினைநீ யகலிகைபால்
தாக்கரிய தயரதன்பால் தாக்கண்டாய் நடுநிலையால்
கேடறியாக் கைகயிதன் கற்பாற்றைக் காட்டினையால்
நாடுதலில் நினையொப்பார் நீணிலத்தில் நேர்வார்யார்?
பல்காப் பியங்களிலே பன்முறைதான் தோய்ந்தாலும்
தொல்காப் பியந்தனிலே தோயாதார் புலவரலர்
எல்லாரு மதன்சிறப்பை யினியுன்போ லெளிதுணரச்
சொல்வார்யார் நின்புலமை சொல்லுதற்கு மெளிதாமோ?
வேறு
தாரணி மொழிகள் தம்முள் தமிழ்மொழி சிறந்த தென்பர்
பார்தனில் கொடையோர் தம்முள் பாரியே பெரியோ னென்பர்
சாரதி தம்முள் மேலோன் சுமந்திர னென்று சொல்வர்
பாரதி பலருள் ச.சோ. பாரதி பெரியோ னென்பார்.
நாவலந் தீவு தன்னில் நாவலர் ஒருவர் மற்றோர்
நாவலர் தாமே யென்று நவிலும் யாழ்ப்பா ணத்தார்
நாவல ரென்று நாவால் நலனுற வுனைய ழைத்தார்
பூவுல கதனைப் போக்கிப் பொன்னுல கடைந்த தென்னோ!
வேறு
தமிழகத்தா ருனைமதிக்கத் தகுதியில ரெனநினைந்தோ
அமிழ்துடைய வகனாட்டா ருனைமதிப்ப ரெனநினைந்தோ
இப்புவியிற் பட்டமெலா மினியமையு மெனநினைந்தோ
செப்பரிய தமிழ்ச்சிறப்பங் குணர்த்துதற்கோ சென்றதுவே!
வேறு
புலவராற் பாடப் பெற்றாய்ப் புலவனு நீயே யானாய்
கலைவலார் தங்கட் கெல்லாங் காட்டெனத் திகழு கின்றாய்
நலமலி தமிழ்நாட் டார்தம் நன்றியை நவிலு கின்றார்
அலகில்சீர் நின்னான் மாவும் அமைதிபெற் றுய்க மாதோ!
தஞ்சை இலக்கியக் கழகம்
தஞ்சை
1. தொன்மையொடு தூய்மைமிக ஒழுகி யிந்தத்
துரைத்தனத்தின் ஒளிபெருக்கி மக்கட் கெல்லாம்
நன்மைமிகச் செய்வதுநற் றமிழே யன்றி
நாகரிக மற்றபிற மொழிக்கே தென்று
வன்மைமிகப் பேசிவடக் கிருக்கும் இந்தி
வாராமற் போரிட்டு வாகை கொண்டோய்!
சொன்மைநலந் தேர்ந்துணந்த தூயோய்! சோம
சுந்தரனே! உனையிழந்த துயரம் போமோ?
2. உமிழ்கின்ற சொற்களெலாம் புரட்சி ஏந்தி
உயர்கருத்தே ஒளிர்வகையால் உரைக்கும் மேலோய்!
தமிழ்த்தாயின் கான்மிதித்தார்த் தலைமி திக்கும்
தன்மானம் சால்மறவ! தகுதி கண்டால்
அமிழ்தாகப் பாராட்டும் அன்ப! இங்கே
ஆரியத்தால் வந்தபெருங் கேட்டை எல்லாம்
இமிழ்கடலின் அலையைப்போல் எடுத்தி யம்பி
எமக்குணர்வு தந்ததமிழ் ஏந்தால்! அந்தோ!
3. விலைகருதாச் சிந்தனையும், தன்ன லத்தில்
விழைவில்லாக் கருத்துரையும் வென்றி நோக்கிப்
புலைகருதாப் பேருழைப்பும் பொருந்தி எங்கள்
நற் புதுமை காணும்
கலையுருவே! தமிழ்மலையே! சால்பு யர்ந்த
கணக்காயர் எனமிளிர்ந்த கவிஞர் ஏறே!
நிலைமெலிந்தார் பாலிருந்து நேயஞ் சான்ற
நிறைந்தவழக் காடும்வழக் குரைஞ! அந்தோ!
4. வள்ளுவர்யார் எனவினவி, வழங்கி வந்த
வாயல்லா வறுமொழியாம் கதைகள் யாவும்
வெள்ளமுறு துரும்பாகி விரைந்த மாய
விரித்துரைசெய் தறிஞரெலாம் வியக்கச் செய்தாய்!
உள்ளபடி தமிழ்உயர்வை உணரார் ஒப்பார்
உரைத்ததமிழ் நூலுரைகள் ஒவ்வா என்றே
ஒள்ளியதொல் காப்பியனூற் குரைவ ரைந்த
ஓங்குபுகழ் நாவலனே! ஒளிந்தாய் அந்தோ!
5. தருமனிடம் தருமமிலை என்று கண்டாய்
தயரதனின் குறைகண்டாய் தகுதி யின்றி
அருமையுறும் அகத்தியனே இல்லை என்றாய்
அகலிகைபாற் குறைசிறிதும் காணேம் என்றாய்
இருமையிலும் ஈடுதமிழ்க் கில்லை மேலாம்
இயல்நெறியில் முதிர்ந்துநறுஞ் செய்யுள் சான்ற
பெருமைநம தன்னைமொழிக் குரிமை என்று
பேசியபே ராசிரிய! மறைந்தாய் அந்தோ!
பண்டித வித்துவான் அ. கி. செல்வக்கணபதி, மதுரை.
அறமுரைத்த வள்ளுவரை ஆய்ந்துரைத்த அமுதவாய்
மறைந்ததே அந்தோ! அந்தோ!
திறமுரைத்த தீந்தமிழைக் காய்வாரைத் திட்டிடுநா
வொடுங்கிற்றே அந்தோ! அந்தோ!
மறமுரைத்த தமிழர்நிலை மாண்புறுத்து மீசையுந்தான்
மடங்கிற்றே அந்தோ! அந்தோ!
புறமுரைத்த நற்றமிழைப் புரிந்தெழுது பொற்கையு
மழிந்ததே அந்தோ! அந்தோ! (1)
நந்தமிழே ஆட்சிபெற நாடோறு முழைத்திட்ட
நாவலன்றா னெங்கே எங்கே?
வந்தமொழி ஆளுவதை வன்மையுடன் கண்டித்த
வாய்வேந்த னெங்கே எங்கே?
மந்தமொழி ஆளாமல் மாற்றுவகை செய்திட்ட
மாவீர னெங்கே யெங்கே?
இந்திமொழி வீறழித்த வெழிற்சோம சுந்தரனா
மேந்தல்தா னெங்கே யெங்கே? (2)
பிறந்ததின முதலாகப் பெற்றெடுத்த வன்னையினும்
பெருமையுறப் போற்றிப் பேணிச்
சிறந்தனையென் றுனைக்கொண்டே வெக்கலையுஞ்
செம்மையுற வளர்த்திடவே சிந்தித் தோனே!
மறந்தனையோ வெங்களையும் மாற்றவரின் மனம்போன்ற
மாபாவி மறலி தன்னால்
இறந்தனையோ வென்னையா! இன்றமிழைப் பரப்புதற்கே
எமனுலக மேகி னாயோ? (3)
அகழ்வாரைத் தாங்குகிற வறங்கண்டு மான்றமைந்த
பொருள்கண்டு மன்பு பேசித்
திகழ்வாரி னின்புகண்டுந் தீந்தமிழின் சுவைகண்டுந்
தென்னவரின் திறமை கண்டும்
இகழ்வம்பர் வடநாட்டா ரெதிர்நின்றார்; இன்றமிழர்
நிலைகாட்டி ஏற்றம் கண்டான்
புகழ்க்கம்பர் காவியமாம் புணரிமூழ்கிப் பொற்புடைய
கைகேசி நிறைகண் டோனே! (4)
தெள்ளுரை பற்பல வுள்ளநற் றொன்னூல் தெளிந்துதிரு
வள்ளுவர் வாழ்வின் வரலாற் றுயர்வை வடித்துதவி
துள்ளுதொல் காப்பியத் துள்ளுறு மின்சுவை சொல்லியவன்
வள்ளுவர் தொண்டர் வழங்கிய பொன்னுடை பெற்றனனே! (5)
வித்துவான் கு.மா. திருநாவுக்கரசு, மதுரை.
1. அன்பினையே அணிகலனாக் கொண்டு
அறிவுதனில் தலைமைதனைப் பெற்று
இன்மொழியாம் நந்தமிழிற் பற்று
ஏற்றமிகக் கொண்டுலகில் நின்று
வன்பினையே கொண்டிலங்கும் வஞ்ச
வாழ்வுடையார் செயல்தன்னால் வந்த
இன்னவெல்லாம் இரிந்தோட வாழ்வை
ஈந்திட்ட நாவலர்தாம் எங்கே?
2. தொண்டுள்ளம் அமைந்திட்ட வாழ்வு,
தூய்மைநெறி மிகுந்திட்ட நெஞ்சம்,
விண்டுரைக்க முடியாத புலமை,
விரியுலகிற் சிறந்திட்ட ஆண்மை,
கண்ணனைய பல்கலைக்குத் தலைமை,
கசிந்துருகும் பண்பையெலாம் பெற்று
மண்ணுலகைக் கைவிட்டு மறைந்தார்
மாண்புடைய பாரதியார் அந்தோ!
3. இன்றிந்த வுலகில்நா வலரை
இழந்திட்டே ஏங்குகிறோம் அந்தோ!
கன்றிழந்த தாயைப்போல் நாமே
கதறுகிறோம் துயர்தன்னுள் மூழ்கி,
என்றினிநாம் நந்தமிழின் தலைவர்
இயற்சோம சுந்தரரைக் காண்போம்?
தென்றமிழின் நற்பண்பைப் பெற்றே
திக்கெல்லாம் புகழ்விளங்கச் செய்வோம்.
கவிஞர் திரு கண்ணதாசன்,
சென்னை.
தமிழ்மகள் உறங்கத் தான்விழித் திருந்து
இமையசை யாணாரு பகையணு காமற்
காத்திருந் தானுயிர் காற்றொடும் போயது!
ஆற்றொழுக் காயசெந் தேன்தமிழ் ஊற்றி
அற்றையப் புகழ்நிலம் பிற்றைய நாளிலும்
மாற்றலர் கைகளில் மாண்டொழி யாவணம்
காத்திருந் தானுயிர் காற்றெனப் போயது!
சாத்தனும் மாய்ந்தபின் பூத்தியோ முல்லையென்று?
ஆற்றுகி லானாய் அழுதவன் துயரினும்
நாத்திறல் மறவன் தீப்படுக் கைகொளப்
பார்த்தவன் துயர்க்குரல் பன்மடங் காயது!
எம்மரு மன்னைஇப் புதல்வனை வளர்த்ததும்
தம்மருங் குலத்தவர் தமக்கென வளர்த்ததும்
செம்மொழி படைத்ததும் திறத்தொடு காத்ததும்
மும்முடி சூட்டிமெய் முதனிலை கொடுத்ததும்
கொள்முதல் குவித்ததும் கொடுமுதல் வளர்த்ததும்
உள்ளுவ யாவினும் உயர்வினை வைத்ததும்
வெள்ளலைக் கண்களில் செவ்வலை சேர்த்ததும்
சொல்லோடுங் கனல்வரும் துடிப்பினைத் தந்ததும்
பின்னொரு புலவரும் பெற்றிலாப் பெற்றியே!
பாரதிர்ந் தெழுந்துயார் யாரெனக் கேட்குமா(று)
ஊரெழுந் தோடிஎம் உயிரெனக் கூறுமா(று)
ஏறெழுந் தன்னஎம் பாரதிஎழுந்து சொல்
மாரிபெய் வான், புனல் மாரிபெய் வான்என!
மாதமும் மாரிஇம் மண்ணிடைப் பொய்ப்பினும்
நாதமும் மாரிந டாத்துவான் பாரதி!
தூது வந்துற்றதோ? தூமணிப் பாவலன்
ஓதுசெந் தமிழ்ச்சுவை உலகெலாம் கேட்டதோ?
மாண்டவர் உளமதை மாந்திடத் துடித்ததோ?
தாயழப் `பாரதித் தமிழழப் போயினான்!
போயவன் தந்தநற் பொருளெலாம் காப்பதுந்
தூயவன் வாழ்க்கையின் துணிவினைப் பெறுவதும்
தாய்த்தமிழ் காப்பதும் தலைமுறைக் கடனென
யாமறிந் தவ்வழிப் போய்ப்புகழ் சூடுவதும்
நாவலன் காலடி நரிவிழும் கோலடி!
சோமனின் காலடி சூழ்ச்சிக்கு நாலடி!
சுந்தரன் காலடி இந்திக்கு வேலடி!
பாரதி காலடி பண்புக்குச் சேவடி!
வித்துவான் திரு நா. இராமையாபிள்ளை எம். ஏ .,
மதுரை.
அமிழ்தாம் தமிழ்மொழி யள்ளி மாந்தி
தமிழ்மொழி யிலக்கணம் தன்னுட் சிறந்த
தொல்காப் பியரெனும் தூயோர் இயற்றிய
நல்காப் பியத்தை நானிலம் போற்ற
உரையொரு மூன்றே யியலுக் கெழுதித்
தரையினில் தந்த தக்கோர் பாரதி
நாவலர் என்றே நானிலம் புகழ்ந்தத
கணக்காயர் என்றே கற்றோர் புகன்றனர்
பிணக்கறுத் தாய்ந்த பெரியார் என்றே
டாக்டர் பட்டம் தானே வந்ததே
எல்லாம் வந்தபின் எம்மைத் துறப்பதோ?
மெய்யாய் வானவர் விரும்பினர் போலும்!
ஆவன செய்ய ஆங்கே சென்ற
செய்தி யெமக்கே உய்தியாம் இல்லை
கையா றெய்திக் கலங்கித் தவித்துச்
சுழலும் எமக்குத் துணிவுரை யாதோ?
முதுமையிற் பிறந்த குழந்தையைத் தந்தையார்
அன்பாய்ச் செல்வமாய் அணைத்து வளர்ப்பர்
அதுபோல் என்னையும் கற்பித்த அந்நாள்
என்று காண்பேன் இனியந் நிலையை
நன்றியும் வணக்கமும் நவிலுவன் இன்றே!
>வித்துவான் திரு இரா. இளங்குமரன்,
>பரங்குன்றம்.
எட்டய புரந்தந்த இளஞ்சிங்கப் பாரதியே!
சொட்டுதமிழ் ஈழத்தார் தொடுத்தசீர் நாவலனே!
கட்டுபுகழ் மாமதுரைக் கணக்காய! மூதறிஞ!
விட்டெமைநீ பிரிந்துவிட்டாய்; வேந்தவுனைக் காண்பதெங்கே? (1)
இந்திவெறி அரசுக்கோர் இருப்பாணி வைத்தடித்துப்
புந்தியறும் இச்செயலில் போகாதீர் போவீரேல்
நொந்தழிவீர் திண்ணமென நுவன்றவனாம் சீர்ச்சோம
சுந்தரனைக் காண்பதெங்கே? சொன்மழையைக் காண்பதெங்கே? (2)
மேவுபெரும் நிறையுடையாள் கைகேயி, மிகுகுறையன்
காவலருள் காவலனாம் தயரதனே எனக்காட்டி
ஏவுகணை விடுவோர்போற் சொற்போரி னெதிர்வென்ற
நாவலனைக் காண்பதெங்கே? நனியாய்வைக் காண்பதெங்கே? (3)
தண்டேந்து கரமெங்கே? தமிழ்காக்கும் உரமெங்கே?
விண்டேந்து மொழியெங்கே? விறல்மீசைத் துடிப்பெங்கே?
கண்டேந்தும் அழகெங்கே? கழியிளமை வளமெங்கே?
கொண்டேந்து சிறப்பெங்கே? குறிப்பெங்கே? குணமெங்கே? (4)
>வித்துவான் திரு தி. மு. சங்கரலிங்கம்
>திருவாமாத்தூர்.
செந்தமிழே மூச்சென்று சீர்பலவும்
மிகக்கொண்டு சிறந்த தான
முந்தையர் தம்வழிநின்று அறிவுரைகள்
மக்களுய முயன்று தேடி
எந்தவிடத் தும்தமிழ்நா டினிதேறப்
பாடுபடும் எங்கள் சோம
சுந்தரனே! நின்பிரிவு எந்தமக்கோர்
ஆற்றவொண்ணாத் துயர மன்றோ? (1)
வீரமிகு பேச்செங்கே? வியன் தமிழ்ச்சொல்
வாயெங்கே? மீசை எங்கே?
ஈரமிகு மனமெங்கே? மெய்ப்பொருள் காண்
அறிவெங்கே? இனிமை தோய்ந்த
வாரமிகு கனிவெங்கே? வண்டமிழைக்
காக்கவரும் வளமார் பெங்கே?
கோரமிகு கூற்றுவன்றன் பசிக்குணவாச்
சென்றனவே! குணமிக் கோனே! (2)
மண்ணுலகிற் கற்றுணர்ந்து மக்களுளம்
மகிழவுரை வழங்கி, இந்நாள்
விண்ணுலகம் சென்றுதமிழ் விரிவுரைகள்
ஆற்றுதற்கு விரைவுற் றாயோ?
மண்ணுடன்சேர் தமிழ்ஆய்வோர் குழுத்தலைவ!
பாரிலுனைப் பார்ப்ப துண்டோ?
கண்ணுளவிர் மணிஒளிபோல் தமிழ்த்தாயின்
மலரடியிற் கலந்து வாழி! (3)
திரு வெ. வேதாசலம்,
மயிலம்.
மலைபோலும் நிலையான கொள்கை வீரா!
மண்டிவிட்ட கொடுமைக்கு நீயே கூற்றம்
அலைகாற்றில் பறக்கின்ற இலவம் பஞ்சாய்
ஆற்றிடையே அகப்பட்ட நாணற் புல்லாய்
அலைகின்றோம்! தமிழ்ச்சுடரே! உயிரே! உள்ளே
அமைந்திட்ட இதயத்தை உனக்கே தந்தோம்!
விளைகின்ற தமிழ்ப் பயிர்க்குச் செம்மை யூட்ட
வியன்சொல்லே ருழவரினி எவரே உள்ளார்? (1)
நிலவிழந்த வானம்போல் நிலைகு லைந்து
நீரற்ற காணலாய்ப் பொலிவி ழந்து
கலமிழந்த வீரன்போல் கைகள் சோர்ந்து
நிலமிழந்த உழவன்போல் நெஞ்சம் வெந்து
வளமிழந்த கோவைபோல் வனப்பி ழந்து
குளம்பிரிந்த மீனைப்போல் உயிர்து டித்தோம்!
உலவிவந்த பேரேடே! தமிழின் பேறே!
உமக்குற்ற மறைவினிலே நொந்து! நொந்து! (2)
பலவான்குடி திரு மெ. வே. வேலப்பச் செட்டியார்
நாவலவா! நற்சோம சுந்தரனே! நாடிமிக
ஆவலாய் உன்னை அழைத்ததெவன் - ஏவல்
விதியென்று சொல்லி வீண்மறலி கொள்ளச்
சதிதவறு செய்தானோ தான். (1)
பாவலனே! ஈண்டு பரிவுட னின்றேங்கக்
காவலற னின்றிக் கடந்தனையே - மேவிநீ
எங்குற்றாய் ஐயா! இனிவரவும் உண்டாமோ?
இங்குற்ற கோதென் இயம்பு. (2)
செந்தமிழின் செங்கோல் நற்சீர்செறிந்தே
இவ்வுலகிற் சிறக்க வேண்டிச்
சுந்தரனே நீயடைந்த தொல்லைபல
ஆனாலுந் துளிபோல் எண்ணிச்
சிந்தைமிக நீயிருக்கும் அக்காலை
அக்காலன் சீர்த்தி நோக்கி
வந்தபெரு மடமைதனை மறப்பாரோ
இவ்வுலகில் மாண்புள் ளாரே! (3)
மயிலம் திரு ஆ. சிவலிங்கனார்
பாரதியா ரென்றால் பயனார் பசுமலைப்
பாரதியா ரென்றே பகர்வேமால் - பாரதியார்
ஏற்ற உடல்மறைந்த தேனும் தமிழ்வடிவுத்
தோற்றம் நமக்குத் துணை.
வெண்பாவூர் திரு பொ. திருஞானம்
தனித்தமிழை இழித்துப்பலர் பேசியதைத்
தன்மான உணர்ச்சியினால் திருத்திவந்த
கனித்தமிழைப் பரப்பிவந்த கணக்காயர்
காலத்தின் கோலத்தால் மறைந்தாரே!
இனியிந்தத் தமிழகத்தில் இவர்போன்ற
இனியதமிழ்ச் சொல்லறிஞர் பிறப்பதென்றோ?
நனியுறுக திருவடியின் நிழலினிலே
நல்லார்தம் ஆவிமிக இன்புறவே!
சோழவந்தான் பண்டித திரு கு. குருநாதன்
சோமசுந்தர பாரதியே தூயதமிழ் வல்லோரே
நாமமிகு நல்லவரே நாவலரே - ஆமுமைப்போல்
நல்லதமிழ் வல்லவரை நானிலத்தும் யாங்காணேம்
அல்லலுறம் எங்களைநீ யாள்.
இரங்கல் உரைகள்
குறிப்பு : நாவலர் பாரதியார் மறைவுக்கு இரங்கல் உரைகள் என்ற தலைப்பில் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 34, பரல் 5 சனவரி 1960இல் வெளியிடப்பட்டுள்ளது (பக். 210-212). அதிலிருந்து எடுக்கப்பெற்றவை :
பல்புகழ் நிறைந்த பாரதியார் தொல்காப்பிய உரையாலும், மாரிவாயிலாலும், மங்கல வாழ்த்தாலும், திருவள்ளுவராலும், கைகேயி நிறையாலும், நற்றமிழாலும் வாழ்வார். டாக்டரின் அரிய நூல்கள் என்றும் கிடைத்து வருமாறு நூற்பணி செய்தல் மக்களின் கடமை.
- டாக்டர் வ.சுப. மாணிக்கம்,
காரைக்குடி.
தமிழன்னை, தன் தனிப்பெரும் புதல்வனை யிழந்தாள். தமிழ்நாடு ஈடுசெய்ய முடியாத நட்டத்திற்குள்ளாகியது. அப்பெரியாரின் பூதவுடல் அழியினும் புகழுடல் என்றும் நிலைபெற்றிருக்கும்.
- பேராசிரியை ஆர். இராசாமணி அம்மையார்,
சென்னை.
டாக்டர் சோமசுந்தர பாரதியார், கற்றுத்துறைபோய பெரிய அறிஞர். தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க்கலைக்கும், தமிழ் இசைக்கும் அவர் செய்த செயல்களும், தமிழக நன்மைக்கு அவர் ஆற்றிய பணிகளும் என்றும் மனத்தில் நிறுத்தத்தக்கன. தமிழ்த்துறையிலும், தமிழிசைத்துறையிலும், அவரது வழிகாட்டியைப் பெற்றது உண்மையிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நல்வாய்ப்புக்கிட்டியது எனலாம்.
- டாக்டர் இராசா சர் எம்.ஏ. முத்தையாச் செட்டியார்,
சென்னை.
இறுதி மூச்சுவரை, தமிழ் - தமிழ் - தமிழ் என முழக்கிய அஞ்சா நெஞ்சர், தீரர், வீரர் - சோமசுந்தர பாரதியாரவர்கள் நக்கீரரின் மறுபதிப்பு. அவர்கள் வீரர் மட்டுமன்று, எத்தனை எத்தனையோ வீர உள்ளங்களையும் படைத்து விட்டார்கள்.
- வீரசிவம், திருவாவடுதுறை ஆதீன வித்துவான்.
திரு சோ. அவர்கள் மறைந்துவிட்ட செய்தியைப் படித்ததும் சில நாட்களுக்குமுன் நான் அவர்களைச் சந்தித்தது - பல நாட்களுக்குப்பின் சந்தித்தது - நினைவுக்கு வந்து மனத்தை வருத்திற்று. ஆறுதல் எழுத்துக்களில் ஒன்றும் பொருளில்லை. என் வயதுக்குக் கிட்டத்தட்ட இருப்பவர்கள் ஒருவர்பின் ஒருவர் மறைந்து போவதைப் பார்த்துக் கொண்டு வருகிறேன். எனக்கு ஒரு மாதிரியான வெட்கம் ஏற்படுகிறது.
- இந்திய முன்னாள் ஆளுநர், சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார்,
சென்னை.
திரு சோமசுந்தர பாரதியாரவர்கள் மறைந்தமையறிந்து மிக வருந்துகிறேன். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு எத்துணை யளவு அவர் பணிபுரிந்துள்ளாரென்பதை நான் அறிவேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியப் பணி ஏற்பதற்காக, மிக வருவாயையுடைய தமது வழக்கறிஞர் தொழிலையும் விட்டார்; தமிழ் வளர்ச்சிக்கு நிறையப் பாடு பட்டார்; அதேபோன்று தமிழாராய்ச்சியிலும் ஈடுபட்டார். சென்னையில் ஒரு வரவேற்பின்போது அவரைச் சந்தித்தேன். அவரது இழப்பிற்கு எனது உண்மையான வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.
- டாக்டர் பி. சுப்பராயன்,
புதுதில்லி.
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற உறுதிகொண்டு, கற்ற தொழிலைவிடக் கவின்மிகும் கன்னித் தமிழுக்கே என் பணி என்ற சூளுரையுடன் தன் வாழ்நாள் முழுமையும் தமிழ்ப் பணிக்கே செலவிட்ட திரு சோமசுந்தர பாரதியார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு.
- இராசேந்திரன் நாடக மன்றம்,
சென்னை.
சென்னை மாநிலத் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் 20-12-59 ஞாயிறு காலை 10 மணிக்குச் சென்னை பச்சையப்பன் உயர்பள்ளி மண்டபத்தில் பேராசிரிய நாவலர் டாக்டர் ளு.சோமசுந்தர பாரதியார் அவர்கள் மறைவு குறித்த இரங்கற் கூட்டம் டாக்டர் m. சிதம்பரநாதன் செட்டியார் M.A., M.L.C., அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, அன்பு கணபதி, சிறுவை மோகனசுந்தரம், P. குருசாமி கோவை, C. தனக்கோடி, நாரா. நாச்சியப்பன், M. சண்முகம், புலவர் தனபாலன், அம்பை சங்கரன், புலவர் குருசாமி ஆகியோர்கள் திரு பாரதியார் அவர்களின் தொண்டுகளையும், எழுத்தாற்றல், உண்மையை உரைப்பதில் அஞ்சாமை முதலிய பண்புகளையும் கூறி இரங்கினர். பின்னர்க் கீழ்க்காணும் முடிவுகள் ஒருமுகமாக நிறைவேற்றப்பட்டன.
1. திரு பாரதியார் அவர்களுக்குத் தக்க நினைவுச் சின்னங்கள் சென்னையிலும் மதுரையிலும் அண்ணாமலை நகரிலும் எழுப்பப்படுதற்கு அரசாங்கமும் செல்வர்களும் அறிஞர்களும் பல்கலைக்கழகங்களும் தமிழாசிரியர்களும் மாணவர்களும் முன்வரவேண்டும் என இக்கழகத்தார் கேட்டுக் கொள்கின்றனர்.
2. திரு பாரதியார் ஆன்மா அமைதியுறும் வகையில் தமிழ் மக்கள் தொடர்ந்து பணிபுரிதல் வேண்டும் என இக்கழகத்தார் கேட்டுக் கொள்கின்றனர்.
- சென்னை மாநிலத் தமிழாசிரியர்கள் கழகம்.
நிலத்தில் யார்க்கும் அஞ்சாப் பெருநெறியும் நிமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டொளிர்ந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் தம் அருங்குணமும் பேரறிவாற்றலும் அமைந்த உயர்திரு இராசாராம் பாரதி அவர்களே! உயர்திரு இலக்குமிரதன் பாரதி அவர்களே! நாவலரின் பேரன்புக்குரிய அருமைச் செல்வியரே!
தமிழ்ப்பெருங்குடிமக்களின் முடிசூடா மன்னராய்த் திகழ்ந்த தங்கள் அரும்பெறல் தந்தையார் மறைந்தார் என்ற பேரவலச் செய்தி கேட்டுத் திடுக்கிட்டுத் துன்பக்கடலில் ஆழ்ந்து விட்டோம். தமிழ் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்து பங்கு கொண்ட மன்றத்தின் வெள்ளிவிழாவிற்குத், தன்னிகரற்ற தமிழ்ப் பெருந் தலைவராய்த் திகழ்ந்த தங்கள் தந்தையார் சென்னை நகர வீதிகளில் அடலேறென வலம்வந்து விழாத் தலைவராய் அமர்ந்து பெருமுழக்கம் செய்து பேருரையாற்றிய காட்சி எங்கள் உள்ளத்தில் தோன்றவும் செயலிழந்து, நிலைமறந்து கண்ணீர் உகுக்கின்றோம்.
தொல்காப்பியப் புத்துரை, திருவள்ளுவர் என்னும் நூல்களால் தம் நுண்ணிய ஆய்வினையும், மாரி வாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி என்ற நூலால் பாநலனையும் வெளிப்படுத்திச் சிறந்த தமிழ்ப்பணி புரிந்த டாக்டர் பாரதியார் அவர்கள் புகழ் தமிழ்மொழி வளருந்தோறும் பரவிவிரவி நிற்றல் உறுதி.
அன்புக்கு உரியவர்களே! தங்கள் வாழ்வில் ஏற்பட்ட இப்பெருந் துன்பத்தில் நாங்களும் பங்கு கொண்டு எங்கள் உளங்கனிந்த வருத்தத்தினையும், பரிவுமிக்க ஆறுதலையும் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் திருப்பெயர் வாழ்க!
- சென்னை மாணவர் மன்றத்தினர்.
மற்றும் கீழ்க்கண்ட பெருமக்களிடமிருந்தும் இரங்கலுரைகள் வந்துள்ளன :ஆட்சிச்சொல் காவலர் N. இராமலிங்கனார், பேராசிரியர் r. ஆறுமுக முதலியார், வித்துவான் K. அருணாசலம் பிள்ளை, பேராசிரியை ஆர். இராசரத்தினம் அம்மையார், நாதன், பேராசிரியர் ரா. விசுவநாதன், புலவர் கி.வா. சகந்நாதன், பேராசிரியர் பூ. ஆலாலசுந்தரஞ் செட்டியார், பரலி சு. நெல்லையப்பர், நா. பார்த்தசாரதி, புலவர் முத்து சு. மாணிக்கவாசக முதலியார், முகவை இராசமாணிக்கம், கவிஞர் ப. தூரன், நக்கீரர் கழகத்தார், டாக்டர் தருமாம்பாள் நினைவுப் படிப்பகத்தார்.
கடவுட் கழலிணை எய்திய நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே என்பது பண்டைச் சான்றோர் ஒப்பாரும் மிக்காரு மின்றித் தாமே தனிமாண்பினராய் வாழ்ந்து கண்ட வாய்மொழியாகும். அம் முதுமொழி நாட்டுக்கு மட்டுமன்று, விழியெனக் கொள்ளும் மொழிக்கும், வழியெனப் பற்றும் விழுத்துணை நெறிக்கும் ஏற்புடைத்தேயாம். அகவிழியாம் மொழியின் தகவு கொண்டே ஒரு நாட்டின் நலத்தினை நல்லோர் நாளும் ந வில்வர். மொழியின் வளமனைத்தும் கணக்காயர், பாவலர், நாவலர், புலவோர், ஆசிரியர் முதலியோர் நுண்மாண் நுழைபுல வளத்தாலாவன. இத்தகைய மூதறிஞர்களை வள்ளுவப் பெருந்தகையார் தக்கார் என்னும் ஒரு சொல்லான் மொழிந்து அவரே மிக்கார் என்னும் மெய்ம்மையினைக் குறிப்பிற் புலப்படுத்துவார் நடுவணதாகப் பெய்து நாட்டினர். அத்திருக்குறள் வருமாறு :
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு (731)
அம்முறையில் நம் நாவலர் எல்லாமாய்த் திகழ்ந்து பொன்றாப் புகழெய்திய வல்லார். செந்தமிழன்னை அவ்வப் போது வந்துறும் இடையூறுகளை மடிதற்றுத் தாமுந்துறும் ஆண்மை மிக்க மைந்தர்களைக் கொண்டு நீக்கிக் கொள்ளும் நீர்மையளாய்த் திகழ்கின்றனள். இந்நிலைமை கடைச்சங்கப் புலவர் தலைமணி நக்கீரனார் காலந்தொட்டு நிகழ்ந்து வருகின்றது. அந் நக்கீரனார் போன்று ஆக்கவும் அழிக்கவும் வல்ல நோக்கமும், நொடிப்பும், நூன்முறைச் செயலும் ஊக்கமும் உழைப்பு மிக்காராய் நம் நாவலர் ஒருவரே இந்நாள் திகழ்ந்தனர்.
அவர்தம் உருவும் திருவும், நடையும் கொடையும், மொழியும் எழுத்தும், வழிகள் வகுக்கும் வண்மை விழியும், பழியொடு படராப் பண்பமை உரனும், அடையலரடங்க ஆற்றும் மறனும், நடையவர் விளங்க நாட்டும் அறனும், செந்தமிழன்னையின் சீர்மை காக்க முந்துறநிற்கும் முதன்மையும், உலகத்துயர்மொழி பலவற்றுள்ளும் தொன்மையும் நன்மையும், தூய்மையும் தனித்தியங்குந் தன்மையும், குறையாநிறைவும், இனிமையும் எளிமையும், இறையுணர்வுடைமையும், இலக்கண வரம்பும், நிரம்பும் இலக்கிய வளமும், அவ்வப்போது வேண்டும் சொற்களை ஆக்கிக்கொள் மாண்பும் ஒருங்கமைந்த தாய் மொழியாம் தமிழ்மொழியின் தனிப்பெரும் சீர் சிறப்பு அமிழ்தினுமினிய தமிழக மட்டுமன்றி இமிழ்திரையுலகம் எங்கணும் திகழத் தம் பெரும் புலமையால் பழம்பெருநூல் ஆய்வும், புதுப் பலநூல் யாப்பும் தமிழில் செய்தமை போன்று ஆங்கிலத்திலும் செய்தமைத்த செயற் பேராண்மையும் கண்டார் உள்ளங் கவர்வனவாய்க் கேட்டாருள்ளம் நாட்டங்கொள்வன வாயுள்ளன.
இப் பெருந்தகையார் வரலாறு யாவரும் படித்துணர்வது அவர்தம் முன்னேற்ற வாழ்விற்குப் பெருந்துணைப் பெரு விளக்கமாக நிற்கும் பெற்றி வாய்ந்தது. அத்தகைய விரிந்த வரலாறு நம் கழகப்பதிப்பாக வெளிவந்துள்ளது. முழுவதும் அதன்கண் காணவிடுத்து ஒரு சிறிதுமட்டும் ஈண்டு வரையுதும்.
செல்வர்தாம் உறையும் திருநெல்வேலி மாவட்டத்து எட்டையபுரம் என்று ஓர் ஊர் உளது. அவ்வூர் அறிவும் ஆற்றலும், மாற்றொணா ஆண்மையும், உருவும் திருவும், உரனும் உண்மையும், அருளும் பொருளும் ஒருங்கு அமைந்த குறுநில மன்னரால் ஆளப்பட்ட திருவூர். அவருள் பல்லாற்றானும் சிறந்த நல்லார் முத்துசாமி எட்டப்ப நாயக்க ஐயன் ஆவர். இவர் சென்னைக்கு வருங்கால் அறிமுகமாகி இவர்தம் நட்பைப் பெற்றவர் சுப்பிரமணிய நாயகராவர். இவர்கள் அந்நாளில் செந்தமிழ்ச் சித்தாந்தச் சைவச் சண்டமாருதமாகத் திகழ்ந்த சோமசுந்தர நாயகரின் உறவினராவர்.
சுப்பிரமணிய நாயகர் எட்டையபுரம் வந்து சார்ந்தார். மன்னரின் உள்படுகருமத் தலைவராகப் பணிபுரிந்தனர். இப்பணியின் பின் மன்னரின் ஒப்புதலின்மேல் தம்பெயரை எட்டப்பபிள்ளை என வைத்துக் கொண்டனர். இவர்க்குப் பேராதரவு புரிந்த மன்னரின் வளர்ப்புப் பெண்மகவொன்று அரண்மனையில் வளர்ந்து வந்தது. அம்மகவின் பெயர் முத்தம்மை எட்டப்பபிள்ளைக்கு முன்னமே திருமணம் முடிந்திருந்தது. எனினும் மகப்பேறில்லாக் குறையொன் றிருந்தது. அதனை நீக்குதற்பொருட்டு அரண்மனை முத்தம்மையை மணந்து கொண்டனர். அந்நங்கை அரண்மனையில் வளர்ந்தமையால் மன்னற்குரிய உருவும் திருவும், ஊக்கமும் உரனும், வளனும் வண்மையும் வாய்க்கப்பெற்றிருந்தனள். மனைவாழ்க்கையும் அத்தகு சிறப்புடன் நிகழ்ந்து வந்தது. அந்நங்கை கருவுற்றுக் கி.பி. 1879 சூலை 27ஆம் நாள் நல்லதோர் ஆண்மகவை ஈன்றனள். அம்மகவே நம் பாரதியாராவர். அவருக்குத் தந்தையார் தம் அருமை மகனார்க்குத் தம் நெருங்கிய உறவினரும் ஒருங்கியவுள்ளஞ்சேர் சித்தாந்தச் செல்வருமாகிய சோமசுந்தர நாயகரின் திருப்பெயரையே சூட்டினர். அத்துடன் சச்சிதானந்தன் என்னும் அடை மொழியும் சேர்ந்து சச்சிதானந்த சோமசுந்தரன் என வழங்குவதாயிற்று. பின்பு சுருக்கத்தின் பொருட்டு ச.சோ. பாரதியார் என வழங்கலாயினர்.
நாவலர் முப்பதுநாள் குழந்தையாக விருக்கும்போது அரசியார் இலக்குமி அம்மையாரின் விழைவின்படி அவ்வம்மையார்பால் ஒப்புவிக்கப்பட்டனர். அவ்வம்மையாரால் சீர் சிறப்புடன் வளர்க்கப் பட்டனர். நாவலர் அரசர் திருவுடன் வளர்ந்து வந்தனர். அதனால் அவர் பிற்காலத்து அனைத்துத் துறையிலும் அரியேறெனத் திகழ்
வாராயினர். ஐந்தாம் அகவையில் பள்ளிக்கு வைத்தனர். அரண்மனை ஆசிரியர் சங்கர சாத்திரியாரைக் கொண்டு எழுத்தறி வித்தனர். எழுத்தறிவிக்குங்கால் தமிழ்மொழி வடமொழி இரண்டினையும் அறிவித்தனர். தெய்வ சிகாமணி ஐயங்கார் பள்ளியில் சேர்த்தனர். நாவலர் பள்ளியிற் சேர்ந்தவன்று அவ்வாசிரியர் வேறொரு மாணவனைக் குருதி சொட்ட அடித்தனர். அது கண்டஞ்சிய நாவலர் அப் பள்ளிக்குப் போக மறுத்துவிட்டனர். அரசியாரும் அதற்கிணங்கி அரண்மனையிலேயே நிறுத்திக் கொண்டனர். பின் அவ்வரசியார் இறையடி எய்தினர். நாவலர் பெற்றோரில்லம் புகுந்து வளர்வாராயினர். அப்பொழுது நாவலருக்கு அகவை பதினொன்று. பெற்றோரின் பெரு விருப்புக்கு ஏற்பப் பள்ளி செல்வாராயினர். தந்தையாரின் தனிப் பெருஞ் சைவப்பற்று மைந்தனார்பாலும் விளங்குவதாயிற்று. நாவலர்பால் திருவெண்ணீற்றுப் பொலிவும் சிவமணிப் பொற்பும் என்றும் விளங்கின.
எட்டையபுரத்தில் நம் நாவலர் எட்டாம் வகுப்புவரை கற்றனர். கற்றுவருங்கால் அரண்மனைக்கு வந்து மீளும் புலவர் பலரின் சார்பால் தமிழின்மாட்டுத் தண்டாக்காதல் கொண்டு தனித்துக் கற்று வல்லராய்ப் பாடவும் திறம்பெற்றனர். இங்ஙனங் கற்ற தமிழ்க் கல்விக்குத் துணையாக உடன் பயின்றவர் நாட்டுக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாராவர். அகவை பதினைந்துக்குள் எட்டையபுரப் படிப்பு நிறைவுற்றது. பெற்றோர் பெருவிருப்பத்தின்படி திருமணமும் நிகழ்ந்தது. திருமண நிகழ்ச்சியில் தெய்வத் தமிழ்மண மாட்சியும் கால்கொண்டது. அஃதாவது திருமுறைவல்ல ஓதுவாரடிகள் ஆசிரியராய்த் திகழ்ந்துதிருமுறையோதிச் சடங்கினையியற்றத் திருமணம் நிகழ்ந்தது.
நாவலர் திருநெல்வேலிக்கு உயர்தரக் கல்வியின் பொருட்டு வந்தனர். சர்ச் மிசன் உயர்நிலைப்பள்ளியில் ஊக்கமுடன் படித்தனர். இப் பள்ளியோடு கல்லூரியும் இணைந்திருந்தமையால் இடைக்கலை வகுப்பு (F.A.) முடியப் பயின்றனர். கல்லூரியில் அறிவியற் பேராசிரியர் ஒருவர் சமயச் செருக்குக் கொண்டு இலைக்கலத்துண்ணும் ஏற்றமுடைய ஒழுக்கத்தை இழித்துரைத்தனர். இதனை நாவலர் அஞ்சாது மறுத்து இலைக்கலத்தாலேற்படும் மேலாம் நன்மையினை எடுத்து மொழிந்தனர். இதனை உணர்ந்த கல்லூரி முதல்வர் நாவலரை வியந்து பாராட்டினர். இங்ஙனம் பிற்காலத்து அரசியல் அலுவலகத்தும், முறை மன்றத்து விளங்கும் நடுவரகத்தும், முறைமன்றுக்கு வரும் அரசியல் முதன்மையரகத்தும் காணப்படும் நேர்மைக் குறைகளையும் முறைகேடுகளையும் அவ்வவர் உணர்ந்து திருந்துமாறு தம் ஆற்றல்மிக்க சொல்லாலும், செயலாலும் அஞ்சாது வெளிப்படுத்திக் காட்டிய நிகழ்ச்சிகளும் பலவாகும்.
இடைக்கலைத் தேர்வை இனிதுறத் தேறிய நம் நாவலர் சென்னைக் கோநகரில் வந்து மேற்கலை பயில விழைந்தனர். நெல்லைக் கல்லூரி முதல்வர் சாஃப்டரின் பரிவுரைக் கடிதத் துடன் சென்னை வந்தனர். வந்து கிறித்துவக் கல்லூரி முதல்வர் மறைத்திரு வில்லியம் மில்லர் துரைமகனாரைக் கண்டு கடிதத்தை நல்கி விழைவை மொழிந்தனர். அந்நாளில் மில்லர் துரைமகனார் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவு மிருந்தனர். அவர் இவரை அன்புடன் ஏற்றுக் கல்லூரியில் சேர்த்துக் கொண்டனர். அவர்க்கு நெல்லையில் நிகழ்ந்தது போல் கல்லூரிப்படி வசதி முதலியனவும் செய்தளித்தனர். ஆங்கு இவர்க்குத் தமிழ்ப் பேராசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் பரிதிமாற் கலைஞரும் மறைமலையடிகளாருமாவர். இவர்தம் சார்பால் நம் நாவலருக்குத் தனித்தமிழ்ப் பற்றும் நாவீறுகொண்டு முழக்கும் முழக்கமும் நன்கு வளர்வவாயின. கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (B.A.) பெற்றனர். பின் சட்டக் கல்லூரியில் பயின்றனர். படிப்பிற் கிடையில் தந்தையார் மறைந்தனர். இளமையில் மணம் செய்து கொண்டனர். மக்களும் மூவர் பிறந்தனர். பணமுட்டும் நேர்ந்தது. உலக மாதாவாகிய இலக்குமி அம்மையாரால் அளிக்கப்பட்டிருந்த பன்னிரண்டு ஏக்கர் நிலத்தையும் விற்றுப் படித்தனர்.
1905இல் சட்டக்கலையில் தேறினர். சின்னாள் அரசியலில் ஓர் எழுத்தராக அலுவல் பார்த்தனர். பின்னர்த் தூத்துக்குடி வந்து வழக்கறிஞர்த் தொழிலையேற்று வளமுற வாழ்ந்தனர். இவர் செய்யும் வழக்காய்வும், வழக்காடுதலும் நேரிய முறையும் சீரிய பாங்குமாகவிருந்தன. நகரத்தார் வழக்குகள் மிகுதியாக வந்தன. பெரும்பாலும் இவர் மேற்கொள்ளும் வழக்குகள் அனைத்தும் வெற்றியேயாம். 1913இல் பட்டம் பெற்றனர்.
அந்நாளில் அஞ்சாநெஞ்சுடன் நாட்டுப் பணிபுரிந்து, கப்பலோட்டிப் பெருந்தலைமை எய்திய வீரர் வ.உ.சி. அவர்களுடன் நாட்டுப் பணிபுரிந்து பெரும்புகழ் பெற்றனர். 1919இல் மாநிலக் காங்கிரசு மாநாடொன்றினை நம் நாவலர் நெல்லையில் கூட்டினர். அக்காலத்துப் பெருந்தலைவர்களாகத் திகழ்ந்த சீனிவாச சாத்திரியார், சத்தியமூர்த்தி, எஃச். சீனிவாசய்யங்கார், அன்னிபெசண்டு அம்மையார் முதலியோரும் கலந்து கொண்டனர்.
காந்தியடிகள் ரௌலட் சட்டம் என்னும் கொடுங் கோன்மையை அகற்றச் சுற்றுப்புறப்பாடு புரிந்தனர். அப்பொழுது தமிழ்நாட்டில் சென்னைக்கு வந்தனர். தமிழ்நாட்டில் வேறு எங்கும் காந்தியடிகள் போகும் திட்டம் ஏற்படுத்தவில்லை. அப்படிக்கிருந்தும் நாவலருடைய பேரன்பிற்கும் பெருவிருப்பிற்கும் வற்புறுத்தலுக்கும் இணங்கி அடிகள் தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்றினர்.
1920ஆம் ஆண்டில் வழக்காளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மதுரைக்கு வந்து வழக்கறிஞர்த் தொழிலை நடத்தி வந்தனர். சுயராச்சியக் கட்சியில் சேர்ந்த சி.ஆர். தாசை 1926இல் மதுரைக்கு வரவழைத்து மாபெருங் கூட்டம் கூட்டிப் பேசுவித்தனர். அப் பேச்சினைத் தாமே மொழிபெயர்த் துரைத்தனர். 1930ஆம் ஆண்டில் நிகழ்ந்த சட்ட எதிர்ப்புக்கு நம் நாவலர் பணந்திரட்டித் தாமும் பெரும்பொருள் வழங்கிப் பணிபுரிந்தனர். கற்பும் பொற்பும் ஒருங்கமைந்த நாவலரின் மனைவியார் மீனாட்சியம்மையாரும் நாட்டுப்பணி பல புரிந்ததுடன் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர்க்குச் செய்த நலத்தொண்டுகள் அளப்பில. 1937இலும், 1948இலும் நடந்த மாபெரும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் பலவற்றிலும் பேச்சாளராகவும் தலைவராகவும் விளங்கிப் புரிந்த ஆண்மைச் செயல்கள் அளப்பில. அந்நாள் முதலமைச்சராயிருந்த ராசாசியார்க்கு விடுத்த ஆங்கிலத் திறவுக் கடிதம் ஓர் ஒப்பற்ற அறிவுரைக் கடிதமாய் அனைத்துலகும் போற்றும் சிறப்பினதாய்த் திகழ்கின்றது. 1933 முதல் 1938 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக வீற்றிருந்து எல்லையில் தமிழ்ப் பணிகள் வல்லவாறு புரிந்தனர். தமிழகம், கடல் கடந்த நிலங்களில் தமிழர்கள் வாழும் தமிழகம் முதலிய எல்லா இடங்களிலும் தலைவராய் நம் நாவலர் புரிந்த தமிழ்த் தொண்டு எண்ணில. பெற்ற பட்டங்களும் அளப்பில. அவற்றுள் ஒன்று யாழ்ப்பாணத்துப் பெருமக்கள் 1944இல் வழங்கிய நாவலர் என்னும் பட்டம். 1954இல் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தார் கணக்காயர் என்னும் பட்டம் வழங்கினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
1958இல் நாவலர் இல்லத்துத் துவங்கிய தமிழகப் புலவர் குழுவுக்கு நாவலரே நிலைமுதல்வராய்ப் பணிபுரிந்தனர். 1959 சூலை 27இல் நாவலர்க்கு எண்பதாம் ஆண்டு நிறைவு விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. இயற்றிய நூல்களுட் சில, திருவள்ளுவர், பண்டைச் சேரர், தமிழிலக்கியமும் தமிழகமும், தொல்காப்பியத்தைப் பற்றிய கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் பேரூர், சேரர் தாயமுறை, மாரி வாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி, தொல்காப்பியப் பொருட்படலப் புத்துரை முதலியன தமிழில் வெளிவந்தன.
நம் பெருந்தலைவராய் வழிகாட்டியாய் நம்மிடையே வாழ்ந்து உறுதுணையாய்த் திகழ்ந்த டாக்டர் பாரதியார் பத்து நாட்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்நாளிலிருந்து பேச்சு நின்றுவிட்டது. உயர்ந்த மருத்துவங்கள் புரிந்தனர். புரிந்தும் 14-12-1959 இரவு 8.45 மணிக்கு மூச்சு நின்று முன்னோன் திருவடி சேர்ந்தனர். அவர் தமக்குத் திருவடி சேர்ந்தார்க்குச் செய்யும் சிறப்பனைத்தும் வேந்தரும் விழையும் வியப்புடன் நிகழ்ந்தன. அவற்றின் விரிவனைத்தும் இச் செல்வியின் மற்றொரு பகுதியில் காண்க. பாங்கார் பாரதியாரின் பண்பமையாவி கடவுள் திருவடியிற் கலந்தின்புறுக. கழகத்தாரின் ஆழ்ந்த பரிவும் ஆறுதலும் அவர்தம் குடும்பத்தார்க்குச் சேர்வதாக. ஈடு செய்ய வொண்ணாப் பேரிழப்பெனினும் நாடுமவர் தொண்டை நயந்து மேற்கொண்டு புரிதலே நம் பெருங்கடனாம்.
நாவலர் பாரதியாருக்கு நன்றி!
கணக்காயர், நாவலர், டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி இந்தக் கிழமை தமிழக மக்களைத் துயரக் கடலுள் தள்ளிவிட்டிருக்கிறது. வாழ்வின் ஒரு ஓரமாகிய முதுமையடைந்தவர்தான் என்றாலும், பிறந்தார்க்கு இறப்பு உண்டு என்பதனை உணர்ந்திருக்கின்றோம், என்றாலும், பாரதியாரின் மறைவு மனத்தை வாட்டிடச் செய்கிறது.
அதற்குக் காரணம் தமிழ்மொழிக்கும் தமிழகத்திற்கும் அவர் ஆற்றியுள்ள அருந்தொண்டுகளேயாகும்.
இன்று போலவே இருபது ஆண்டுகளுக்கு முன்பும் இந்தி வந்துவிடுவேன் - புகுந்துவிடுவேன் - தமிழகத்து மண்ணில் என்று அச்சுறுத்திக்கொண்டிருந்தது. இந்தியுடன் வந்துறும் கேடுகளைக் களைந்து நாட்டுக்கு நலம் விளைக்கவேண்டும் என்ற பெருங் குறிக்கோளோடு அன்றைய தமிழகம் வீறு கொண்டு எழுந்தது. என்று போராடினர். அந்தப் போராட்டத்தின் நடுப்புள்ளிகளாக விளங்கியோரில் டாக்டர் நாவலர் பாரதியாரும் ஒருவர் ஆவர்.
கல்லூரி வகுப்பறையில், பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில், சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு மேலே கிறுகிறுவென மின்விசிறி சுழன்றாட, விரித்த ஏட்டில் தெரிந்த செய்தி இது என்று நீட்டி முழக்கி ஆராய்ச்சி செய்துகொண்டு, இதுவே இன்பம் - ஈடு இதற்கு ஏது என்று இருந்திருக்க வேண்டிய அந்தப் பேராசிரியர் - குகைவிட்டுக் கிளம்பிய புலி எனப் போர்க்கோலங்கொண்டு, ஊரைநாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில் உறங்கிடுவோர்க்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை - அதனை அழிக்கவரும் பகையை - அந்தப் பகையை வெல்லவேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையைத் தவறாது ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்!
பகை வந்துற்றபோது - எதிர்த்து ஈடுகொடுத்து, ஆற்றல் விளைத்து வெற்றிமுரசம் கொட்டியது போலவே அமைதியான முறையிலும் அவர் ஆற்றிய தொண்டினைக் கண்டு வியக்கின்றோம்.
களை எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் புதிய செடிகளையும் தோற்றுவிப்பதுதான் தோட்டத்திற்குப் பொலிவைத் தரும். தமிழ்க் கழனியில் தவறி முளைத்த களைகளைக் கல்லி எறியும் பணியாகிய அரிய ஆராய்ச்சி நூல்கள் எழுதியதோடு, புதிய நூல்கள் படைத்தளித்துத் தமிழ் இலக்கிய உலகினுக்குத் தம்மால் ஆன தொண்டினை ஆற்றியுள்ளார்.
அவரோடு நாம் பல நேரங்களில் கருத்து மாறுபாடு கொண்டிருந்தது உண்மை. அந்த நேரங்களில் எல்லாம் அவருடைய புலமைத் திறமையையும் பண்பின் மேம்பாட்டையும் கண்டு வியந்து பாராட்டியது உண்டு. கருத்து வேறுபாடு என்பது நாகரிகம் விளைத்துள்ள நல்ல முறை. அப்படி ஏற்படும் கருத்து வேறுபாட்டைத் தாங்கிக் கொள்ளும் முறைதான் நாகரிகத்தின் அளவுகோல் எனலாம். அந்த நாகரிகம் நனி நிரம்பி வழிந்தது பாரதியாரிடம்.
சமயம் போன்ற துறைகளில் பழமைப்பற்றுக் காரணமாகக் காலத்தோடு ஒட்டாத சில கருத்துக்களை அவர் கொண்டிருந்தாரேனும் தமிழ் மொழிக்கு ஆபத்து, தமிழர்க்குக் கேடு, தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்ற நிலைமைகள் உருவான போது வீறுகொண்டு எழும் வேங்கைபோல் களம் நோக்கி எழும் வீரராகத்தான் அவர் விளங்கிவந்தார். இன்று சிலர் ஏதேதோ போர்வைகளை இழுத்து மூடிக்கொண்டு அதற்குள் ஒடுங்கி வாழ்பவர்போல் வாழ்ந்தவர் அல்லர் அவர். அந்த முறையில் தமிழ் காத்த வீரன் என்ற முறையில் அவர் மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பு என்பதிலே ஐயமே இல்லை.
புத்துலகக் கருத்துக்களைக் கொண்டதோர் மாணாக்கர் படையை அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்தபோது படைத்தளித்திருக்கின்றார்.
மாண்டார் அவர் என்று மனம் துவண்டுவிடாமல் செல்லும் நெறியில் சிறிது நேரம் நின்று கண்ணின் நீரைத் துடைத்துக் கடமையாற்றல் வேண்டும். அவர் உழைத்த நெறியில் பாடுபட மனம் கொள்ளவேண்டும்.
இந்தி இந்த நாட்டுக்கு ஆகாத மொழி - அது நமக்குக் கூடாது - வேண்டாம் என்று தமிழகத்தின் மூலை முடுக்குகளில் முழங்கினார் அவர். அந்த இந்திப்பகை இன்றும் வருவேன் வருவேன் என்று ஒதுங்கியும் பதுங்கியும் அச்சுறுத்துகின்றது. அதைத் தொலைப்பதற்கு ஆற்றும் பணியே நாவலருக்கு நாம் செலுத்தும் நன்றி என்பதைத் தமிழக மக்கள் குறிப்பாகப் புலவர்கள் - சிறப்பாகத், தாங்கள்தான் தமிழ் மொழியின் காவலர்கள் என்று கூறிக்கொள்வதிலே தனி இன்பம் - தமிழின்பம் கண்டு, இன்னும் காணலாமா - அப்படியொரு வாய்ப்பு உண்டாகுமா என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் உணரவேண்டும். நாவலர் பாரதியாருக்குச் செலுத்தும் நன்றியாக இது அமையட்டும்.
வாழ்க பாரதியாரின் புகழ்!
பரிவுச் செய்தி!
வீரஞ்செறிந்த நாவீறு படைத்த நாவலர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்ற தலைப்பில் தி.மு.கழகப் பொதுச் செயலாளர் பரிவுச் செய்தியாகத் திராவிடநாடு வாரவெளியீட்டில் (20-12-1959) வெளியிடப்பட்ட செய்தி வருமாறு :
இன்றைய தமிழகத்தின் முதுபெரும் புலவர்களில் முதல்வராக வைத்து எண்ணப்பட்டும் பாராட்டப்பட்டும் வந்தவரும், நாவீறு படைத்த நாவலர் என்று தமிழ்ப் பெருங்குடி மக்களால் போற்றப்பட்டு வந்தவரும் ஆன பேரறிஞர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் இயற்கை எய்திய துக்கச் செய்தி கேட்டு ஆற்றொணாத் துயருற்றேன். அவரது மறைவு தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். நாவலர் பாரதியார் அவர்களின் மறைவால் தமிழ்கூறு நல்லுலகம் ஒரு பெருந்தமிழ்ப் புலவரை, ஒரு பெருந்தமிழ்ப் பேராசிரியரை, நாவீறு படைத்த ஒரு பெருஞ் சொற்பொழிவாளரை, அஞ்சா நெஞ்சத்துடன் உண்மைக்காக வாதாடும் ஒருபெரும் வழக்கறிஞரை, தமிழ் மொழிக்காகவும் தன் நாட்டுக்காகவும் பாடுபட்ட ஒரு பெரும் விடுதலை வீரரை இழந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஆற்றிய அரும்பணிகளும், இந்தியத் துணைக்கண்ட விடுதலைப் போராட்டக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுச் செய்த தொண்டுகளும், நல்ல தமிழ்மணங் கமழுமாறு எழுதித் தந்துள்ள இலக்கிய நூல்களும், அவர் ஆற்றிய ஆணித்தரமான வீரஞ் செறிந்த சொற்பொழிவுகளும், தமிழைக் காக்க இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய திறனும், தமிழர்க்குப் பகையானவர்களை எதிர்த்து நின்ற வீரமும் யாராலும் மறக்கக் கூடியன அல்லவாகும். அவரது தோற்றம் - கருத்து - எழுத்து - சொல் - செயல் ஆகிய எல்லாம் வீரஞ்செறிந்தனவாகும். இப்படிப்பட்ட நாவலர் பாரதியாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்க்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும், தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த பரிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரா. நெடுஞ்செழியன்
15-12-1959
நாவீறு படைத்த நாவலர்
முருக பாரதி
’பேச்சால் எழுத்தால் பிறர்க்குரைக்கும் நன்மறுப்பால், மூச்சால் தமிழுணர்ச்சி மூட்டிய" முதுபெரும் புலவர்.
‘தற்காலத் தமிழகத்தில் ஒரு முற்கால நக்கீரரின் புதுப்பதிப்பாக வாழ்ந்து’ மறைந்தவர்.
“தமிழுக்கே பிறந்தவர்; தமிழ் ஆய்ந்தவர்; தமிழருக்குக் கேடு நேர்ந்தால் உயிரையும் பொருட் படுத்தாதவர்; பகைவரைப் பகைக்கத் தெரிந்தவர்; அஞ்சாமை யுடையவர் ஆகிய இத்தனை பொருளும் சேர்ந்த பொருளாகிய முழுத் தமிழர்”என்று புரட்சிக்கவிஞரின் பாராட்டைப் பெற்றவர்.
தீங்குதரும் இந்தியை எதிர்ப்போம்; ஈங்கு உயிர்த் தித்திப்பை எண்ணிடப் போவதில்லை என்னும் உறுதி வீறார்ந்து தமிழ் உரிமை முழக்கம் செய்த பெரியார் ஏரார்ந்த தமிழின் சீரார்ந்த தகைமை ஆராய்ந்த அறிஞர்.
‘நாட்டிற்கு ஒரு தலைவராய் இருக்கலாம்; ஆனால் தமிழ் மொழிக்குத் தலைவராக முடியுமா?’ எனக் காந்தியடிகளைத் தட்டிக்கேட்ட தமிழ்ப் படைத் தளபதி.
“அவர்தம் திருவும் உருவும், நடையும் கொடையும், மொழியும் எழுத்தும், வழிகள் வகுக்கும் வன்மை விழியும், பழியொடு படராப் பண்பமை உரனும், அடையலரடங்க ஆற்றும் மறனும், நடையவர் விளங்க நாட்டும் அறனும்” காட்டும் பெருமை, ஏட்டில் எழுதி முடியாது.
அவரே நாவலர், டாக்டர், கணக்காயர் சோமசுந்தர பாரதியார் அவர்கள்.
‘ஆங்கிலங் கற்றால் அதுவே போதும்’ என்ற போலிப் பெருமை நிலவிய காலத்தில், ஆழ்ந்த ஆங்கிலப் புலமையும், நேர்ந்த தமிழ் ஆற்றலும், ஆர்ந்த ஆராய்ச்சி ஏற்றமும், கூர்த்த நாநலமும் சீர்த்த பாவளமும், எழுச்சித் தமிழ் தீட்டும் விழுச் சீரும் இணைந்த நாவலரை, நாடு கண்டு நன்றி கொண்டு தழுவியது.
பாரதியாரது தமிழ்மேடை வக்கீல் அரங்காகவே காணப்படும் என்ற தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் பாராட்டுதலைப் பெற்றவர் நாவலர்.
பெரும் பொருள் ஈட்டும் வழக்கறிஞர் தொழிலைத் துறந்து, அருட்பொருள் கூட்டும் அருந்தமிழை நாடியது நாவலரின் தமிழ்ப் பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நாவலர் பாரதியார் இன உணர்ச்சி ஏந்தலர்; புகழ்பட வாழ்ந்த பெருந்தகையர், முன்னணி வீரர், அஞ்சா நெஞ்சினர்; காலங்கடவாக் கடப்பாடுடையர்; செழுந்தமிழ்க் காவலர்; நன்றி மறவா நல்மரபினர். அனைத்துப் பெருமையும் அணைந்தது அவர்தம் திருவுள்ளம்.
தமிழில் ஆழப்பற்றுக்கொண்ட ஈழப்பெருமக்கள் பாரதியார் அவர்களின் நாநலத்தை நன்கு தேர்ந்து நாவலர் என்ற பட்டத்தை நல்கினர் 1944ல். மாடமலி மதுரைத் திருவள்ளுவர் கழகத்தார், தனக்காக வாழ்தல் கொள்ளாத் தண்டமிழ்க் காவலருக்குக் கணக்காயர் பட்டத்தை அளித்தனர் 1954ல். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெரும் புலவர்கட்கு மேலாகத் தமிழ்த்துறைத் தலைவராகப் (1933 முதல் 1938 வரை) பணியாற்றிய நாவலருக்குக் கழகத்தின் சார்பாக டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது 1955ல். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கேடயம் நாவலருக்குக் கிட்டிற்று 1957ல்.
ஆராய்ச்சித் திறன், இலக்கியத் திறனாய்வு, வரலாற்று நுட்பம், மொழி நூற்புலமை ஆகியவனைத்தும் நாவலரின் ஆற்றற் களஞ்சியங்களாம்.
நாவலர் தமிழ்ப் பெருந்தொண்டர். நாவலரின் மனத்தில் தமிழ் மலர்ந்தது; அறிவில் தமிழ் அலர்ந்தது; உணர்வில் தமிழ் ஒளிர்ந்தது; மூச்சில் தமிழ் உரிமை முகிழ்த்தது; பேச்சில் தமிழ் வளம் பிறந்தது. தொண்டனை வாழ்த்துவது கடவுளை வாழ்த்துவதைவிடச் சிறந்தது என்பது நாவலர்தம் நன்மொழி; பொன்மொழி.
நாவலரின் ஆராய்ச்சி அருமை பெரிதும் போற்றற்குரியது. தண்டமிழ்ப் பெருமையைத் தாழ்த்தி, ஆரியத்தைத் தூக்கி ஆடும் மல்லர்களின் ஆய்வுத் தவற்றை மாய்த்தார். தொல்காப்பியப் பொருட்படலத்திற்கு அரிய புத்துரை வழங்கினார் நாவலர் பாரதியார். துட்டுக் காசுமின்றித் துட்டக் கைகேயிக்காக வாதிட்டு வெற்றிக் கல் நாட்டினார். தசரதன் குறையும் கைகேயி நிறையும் காண்க. கட்டுக் கதைகளை எட்டி உதைத்துப், புரட்டையடித்துத் திருவள்ளுவரின் தெள்ளிய உருவைத் திருநாட்டார்க்குக் காட்டினார். சேரர் பேரூர், சேரர் தாயமுறை (ஆராய்ச்சி நூல்கள்); மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி, மாரி வாயில் (செய்யுள் நூல்கள்); பழந்தமிழ்நாடு, நற்றமிழ் (கட்டுரை நூல்கள்) ஆகிய நாவலரின் தமிழ்ப் புலமையை, ஆராய்ச்சித் தெளிவை, அறிவுத் திறத்தைத் தமிழ்கூறு நல்லுலகில் தட்டி முழக்கும்.
எண்பது யாண்டுகள் ஏற்றமும் எழிலும் உற்று வாழ்ந்த நாவலர் 1959ல் தமிழ்த் திருவடி அணைந்தார். ஆனால் அவர்தம் புகழோ அணையாது ஒளிவீசித் திகழ்கிறது.
“மன்னா வுலகில் மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே”
நாவலருக்குப் பிறகு . . . . . ?
பொச்சாப்பும், அச்சமும், மிடிமையும் பிடுங்கித் தின்னக் கூன்விழுந்து குறுகியது தமிழகம். ‘கூன் நிமிர்ப்பார் யாருளரோ? எனக் கூவிக் கூவியழுத தமிழகத்தை ஏறிட்டுப் பார்த்தார் இலக்குவனார். நாவலர்க்குப்பின் அவர்தம் பணியை யேற்றுத் திறம்பட ஆற்றுகின்றார்.
உண்மைத் தொண்டு, நேர்மை உழைப்புக்கு உயர்வு கிட்டாதா?
முன்னணி வீரர்
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றலும், ஆழ்ந்தகன்ற தமிழ்ப் புலமையும், நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆராய்ச்சித் திறனும் சான்ற நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மறைவு தமிழ் நாட்டிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
இளமை தொட்டே தாய்மொழியிடத்து மாறாப் பற்றும் ஆறாக்காதலும் கொண்டு திகழ்ந்த நாவலர் பாரதியார், தமக்கே உரித்தான பீடுமிக்க செந்தமிழ் நடையில் இடையறாது பேசியும், எழுதியும் மக்களிடையே மொழியார்வத்தையும், நாட்டுணர்ச்சியையும் தூண்டினார்.
பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களிலும், சிறப்பாகத் தொல்காப்பியத்திலும் சிறந்த பயிற்சியுடைய இப்பெரியார், தமிழர்கலை, நாகரிகப் பெற்றியைத் தாழ்த்தியும், திரித்தும் கூறிவந்த சில புலவர்களின் பொய்மையைத் தமது அரிய ஆராய்ச்சி நூல்களின் வாயிலாக வெளிப்படுத்தி, கன்னித் தமிழின் தொன்மை, மேன்மை, ஒப்பற்ற தன்மை ஆகியவற்றையும், அம்மொழி வழங்கும் மக்களின் நற்பண்பாட்டின் உயர்வையும் நிறுவிக் காட்டினார். இன்று தமிழகத்திலுள்ள தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர் ஆகியோரில் பலர் கணக்காயர் பாரதியாரின் மாணவர்கள் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். தேசீய ஒற்றுமை என்ற போர்வையில் இந்தி கட்டாய முறையில் தமிழகத்தில் திணிக்கப் பட்டபோது அதை வீறு கொண்டெழுந்து முழு மூச்சுடன் எதிர்த்துப் போரிட்ட முன்னணி வீரர்களுள் பாரதியாரும் ஒருவராவர். இசையுடன் தோன்றி, பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தாற் போல் விளங்கி, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய குறிக்கோளுடன் வாழ்ந்து, பொன்றாப் புகழ் நிறுவி, அமரநிலை எய்திய நாவலர் பாரதியாருக்குத் தலை தாழ்த்து அஞ்சலி செய்வதுடன், அவரைப் பிரிந்து தவிக்கும் வாழ்க்கைத் துணைவியார்க்கும், மங்கல மக்கட்கும், சுற்றத்தார்க்கும், நண்பர்க்கும் நமது ஆழ்ந்த இரக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈடு செய்ய இயலாத பேரிழப்பு
தமிழ்ப்பேரறிஞர் நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் 14-12-59 திங்கட்கிழமை இரவு தமது 81ஆம் வயதில் மதுரையில் காலமானார். தமிழ் கூறும் நல்லுலகுக்கு அவர் ஆற்றிய இலக்கியப்பணி ஒப்புவமையற்றதாகும். கப்பலோட்டிய தமிழராகிய வ.உ. சிதம்பரம் பிள்ளை, தேசீய மகாகவி பாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, அவர் ஆற்றிய தேசீயப்பணிக்கும் ஈடிணை கிடையாது. காந்தியடிகளை முதன்முதலாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து தமிழருக்கு அவரை அறிமுகம் செய்துவைத்த பெருந்தகையும் அவரேயாகும். அப்பெரியாரின் மறைவு தமிழ் நாட்டுக்கு மட்டுமன்றிப் பாரததேசம் முழுமைக்குமே ஈடு செய்ய இயலாத ஒரு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத் தாருக்குக் குடியரசு தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
கண்மணி இழந்தாள் தமிழன்னை
நாவலர் ச.சோ. பாரதியார் மரணம் அடைந்தார். தமிழ் உலகின் தங்க ஞாயிறு மறைந்தது. சங்க காலப் புலவர் போல் சிங்க நோக்குடன் வாழ்ந்த மங்காத புகழுடையோன் இயற்கை எய்தினார். தமிழ்த்தாய் தலைமகனை இழந்தாள். தமிழகம் இந்தி எதிர்ப்புப் போர்த் தளபதியை இழந்தது. தமிழர்கள் இன எழுச்சி யூட்டிய ஏந்தலை இழந்தார்கள். மறைமலையடிகள், திரு.வி.க. ஆகியோர் வாழ்ந்த பைந்தமிழ்ப் பரம்பரையில் இறுதியாக எஞ்சி இருந்தவர் சோமசுந்தர பாரதியார் ஒருவர்தாம்! அஞ்சாநெஞ்சம் படைத்தவர் சோமசுந்தர பாரதியார். இது அவருக்குத் தனிப்புகழை ஈட்டித் தந்தது. தவறு என்றால் கூற அஞ்ச மாட்டார். இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்த - எப்படை வரினும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் படைத்த வீரனை இழந்து கண்ணீர் சிந்துகிறோம். காலமெல்லாம் தன்னைக் காக்கத் தோன்றாத் துணையாக நின்ற கண்மணியை இழந்த கன்னித் தமிழன்னை கண்ணீர் வடிக்கிறாள். சோமசுந்தர பாரதியார் மறைவு நிறைவு செய்ய இயலாத மாபெரும் இழப்பாகும். தமிழ் உள்ளளவும் அவருடைய பெயர் நிலைத்து நிற்கும். அவர் காட்டிய வழியில் நடந்து செல்வதுதான் நற்றமிழர் அவருக்குக் காட்டும் நன்றியாகும்.
வல்லாளகண்டர்
இந்த நூற்றாண்டில் தமிழில் தலைசிறந்த பெருநாவலர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சோமசுந்தர பாரதியார். அப் பெரியாரின் சொல்வன்மையும், சோர்வின்மையும், அஞ்சாமையும் முன்மாதிரி யானவை. பாரதியார், புலவர்களில் புலவர். தமிழ் இலக்கண - இலக்கியப் பெரும் புலவர்களின் போற்றுதலுக்கு உரியவராக விளங்கிய அவர், அந்தப் பெரும் புலவர்களின் பழமைப் போக்கோடு என்றும் இணைந்து நின்றார் இல்லை. அவர் தேசபக்தியும், அரசியல் உள்ளமும், சமூக சீர்திருத்தப் பாங்கும், பகுத்தறிவுப் போக்கும் கொண்டு வாழ்ந்தவர். ஆரிய நாகரிகத்தையும், வான்மீகத்தையும் கடுமையாக விமர்சித்த பாரதியார், கம்பனை உச்சிமேல் வைத்து மெச்சியதும், தான் தமிழனேயன்றித் திராவிடன் அல்லேனென்று இறுதிவரை உறுதியாகப் போராடி நின்றதும், தமிழ்ப்பெரு மக்களால் சிந்திக்கத்தக்கவை. கொண்ட கொள்கைகட்கு முழுமூச்சோடு வழக்காடுவதில் பாரதியார் வல்லாளகண்டர். தமிழை, தமிழ் மொழியை, தமிழ்நாட்டை, தமிழ்ப்பண்பை, தமிழ் நாகரிகத்தை, தமிழ்க்கலை இலக்கியத்தைப் பொருட்படுத்தாது எதிர்ப்பிலும் வெறுப்பிலும்கூடக் கொஞ்சம் அதிகமான ஆவேசமோடாயினும், உச்சி மேல் தூக்கிவைத்துப் போற்றிய ஒரு பெருநாவலர் மறைந்துவிட்டார். இந்த இழப்பு உணர்ச்சியில் தமிழ் மக்களோடு நாமும் அணி வகுத்து நின்று பணிவன்புடன் இறுதி வணக்கம் செலுத்துகிறோம்.
செந்தமிழ்க் காவலர்
செந்தமிழ்க் காவலரும் நாவலருமான பேரறிஞர் சோமசுந்தர பாரதியார் தமது எண்பத்தொன்றாவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்துவிட்டது தமிழ்கூறு நல்லுலகத்திற்குப் பேரிழப்பாகும். பெரும் பொருளீட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்த வழக்கறிஞர் தொழிலைப் பெரிதும் பேணாது தாய்த் தமிழ் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக் காகவும் தமது நாட்களை மிகுதியும் ஈடுபடுத்தியவர் பாரதியார். தமிழ் மொழியின் தூய்மையிலும் அதன் இலக்கிய இலக்கண நுட்பங்களிலும் தமது ஆர்வம் நிறைந்த கருத்தைச் செலவிட்டவர் அறிஞர் பாரதியார் ஆவார். நுனிப்புல் மேயும் குறை முறையை விலக்கி, ஆழ்ந்தாராயும் நிறையறிவு படைத்த அவருடைய நூல்களைப் படித்தவர்களும், விரிவுரைகளைக் கேட்டவர்களும் அவருடைய பிரிவால் பெரிதும் கவல்வார்கள் என்பதுறுதி. ஆண்டில் முதிர்ந்த நிலையிலேயே அப்பெருமகனார் தமது நாட்களை முடித்துக் கொண்டார். தமிழ் வளம்பெறக் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள் அவர் காட்டிய வழியே நின்று பணியாற்றுவதே அவருக்கு ஆற்றக்கூடிய நன்றியாகும். அவருடைய பிரிவால் துன்புற்றிருப்பவர்க் கெல்லாம் ஆறுதல் கிடைக்கவும் அன்னார் ஆன்மா நல்லமைதி பெறவும் இறையருளைக் கோருகின்றோம்.
உறுமிய தமிழ்ச்சிங்கமே! ஓய்ந்ததோ உந்தன் மூச்சு!
பசுமலை தந்த தமிழ்மலை மறைந்துவிட்டதாம்; பாழும் செய்தி கூறுகிறது இப்படி. செந்தமிழுக்கு இன்னல் வந்த போதெல்லாம் சங்காரம் நிசமென்று முழங்கிய சங்கு, தீக்குழிக்கு இரையாகி விட்டதாம். இத்திங்கள் 14ஆம் நாளிரவு நாவலர், டாக்டர் சோமசுந்தர பாரதியார் இயற்கை எய்தினார் எனும் சேதியைக் கேள்வியுற்ற தமிழ் நெஞ்சங்களில் செந் தீப் புகுந்தது. அந்தோ! இணையற்ற புலமையும், ஆதிக்கக்கணை தாங்கும் மார்பும், வக்கணை பேசுவோரை மிரட்டிடும் மீசையும், அணை கடந்த வெள்ளமென வரும் சொல்லும் படைத்த நாவலர் நம்பக்கம் - என இறுமாந்திருந்த தமிழ்க்குலம் இன்று கண்ணீர் வடிக்கிறது. தீங்குள்ள இந்தியை எதிர்ப்போம்; உயிர்த் தித்திப்பை எண்ணிடப் போவதில்லை என்று முழங்கினார். அன்று முழங்கிய முழக்கம், இன்றுவரை தேயவில்லை, உடலும் ஊனும் தேய்ந்த போதுங்கூட! தமிழ்க்காவலர், தமிழ் ஊறும் நாவலர் நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்! நாவலரே! எங்கள் விழிகளைக் குளமாக்கி நீங்கள் பிரிந்தாலும், மொழி உணர்ச்சி விழி திறந்துவிட்டுச் சென்றீர்கள்! அந்த விழி என்னும் மொழி காப்போம்; அம் மொழியின் விடுதலைக்கு வழி வகுப்போம்.
இன உணர்ச்சி ஏந்தல்
தமிழ்த்துறையில் நல்ல ஆராய்ச்சியாளரும், நாவல்லாரும், இன உணர்ச்சி கொண்டவருமான திரு சோமசுந்தர பாரதியாரவர்கள் மறைந்துவிட்ட செய்தி, தமிழர்களாய்ப் பிறந்த அனைவருக்குமே துயரத்திற்குரிய செய்தியாகும். வயது 81 என்றாலும் இறுதி வரையில் இவர் இளமை முறுக்குடன் கூடிய இன உணர்ச்சி கொண்டவரா யிருந்தார். தமிழ்ப் பேரறிஞர்கள் கூட்டத்தில் ஆரிய எதிர்ப்புணர்ச்சியிலும் ஆரியக் கலாச்சார எதிர்ப்புணர்ச்சியிலும், தமிழ் - தமிழர் உணர்ச்சியிலும், காலஞ்சென்ற மறைமலையடிகளுக்கு இணையானவர், நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களே யாவர்! தமிழ்ப் பெரும்புலவர்களில் அன்றும் இன்றும் இந்த இருவருக்கும் அடுத்தபடியாகக் கூறக் கூடியவர் எவருமேயில்லை! கடந்த முப்பதாண்டுகளாகவே பெரியார் அவர்களுக்கும் பாரதியா
ரவர்களுக்கும் நெருங்கிய பாசமும் பற்றும் இருந்துவந்தது என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது. இவரது மறைவு தமிழர் சமுதாயத்துக்கு ஒரு பெரிய இழப்பாகும். ஆனாலும் இவருடைய கருத்துக்களும் கொள்கைகளும் தமிழர்களிடையே நன்றாக வேரூன்றிப் பரவி யிருக்கின்றன.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நாவலர்
கணக்காயர் சோமசுந்தர நாவலரின் மறைவு தமிழ் மொழிக்கு ஒரு பேரிழப்பாகும். நாவலர் நெடுங்காலம் வாழ்ந்து, தமிழ்த் தொண்டு செய்து புகழுடன் வாழ்ந்தபின் மறைந்திருக்கிறார் என்றாலும், அவருடைய ஆழ்ந்த புலமையைத் தமிழ்நாடு இழக்க நேர்ந்தது மிகுந்த வருத்தத்துக்கு உரியது. சென்ற நூற்றாண்டுக் காலத்தில் தோன்றி மறைந்த தமிழ் ஆசிரியர்கள் பலர்; ஆனால் தமிழ்மொழி ஆராய்ச்சித் துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர்கள் வெகு சிலர். குறிப்பிடத்தக்க அந்த வெகுசிலரில் ஒருவர் சோமசுந்தர நாவலர். வைதீக மதவெறி கொண்ட உரையாசிரியர்கள், தத்தம் கொள்கைகளுக்கேற்பத் தமிழ் இலக்கியத்தின் தலையில் கொட்டிவிட்ட குப்பையை ஒதுக்கி எறியும் பணியில் சோமசுந்தர நாவலர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினார். அவருடைய பணியைத் தொடர்ந்து செய்யும் தகுதி உடைய பல ஆசிரியர்களையும் தோற்றுவித்திருக்கிறார்.
பாரதியார் புகழ் வாழ்க!
தமிழரின் தனிப்பாசறை, ஒரு தமிழ்ப் படைத் தலைவனை இழந்தது. தமிழர் தலைவரின் சிறிய பட்டியலிலிருந்து ஒரு பெரிய புள்ளி - சோமசுந்தர பாரதியார் பெயர் இப்போது இல்லை. நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. சோமசுந்தர பாரதியார் முழுத்தமிழன். தமிழனுக்கே பிறந்தவன்; தமிழ் ஆராய்ந்தவன்; தமிழருக்குக் கேடு நேர்ந்தால் உயிரையும் பொருட்படுத்தாதவன்; பகைவனைப் பகைக்கத் தெரிந்தவன்; அஞ்சாமை உடையவன் - ஆகிய இத்தனை பொருளும் சேர்ந்த பொருளே முழுத்தமிழன். தமிழகம், முழுத்தமிழனை எண்ணித் தவங்கிடக்கும் இந்த வேளையில் இருந்தாரில் சிறந்தாராகிய நாவலரும் இறந்தார் என்றால் ஈடுசெய்ய முடியாத இழப்பால் அன்னை அலறுகின்றாள். சாவுக்குப் பசி என்றால் அது, நிறையக் கிடக்கும் பதர்களை அள்ளித் தின்றி
ருக்கலாம். காட்டிக் கொடுக்கும் கயவர்கள் தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழைக் குறைத்துப் பேசி வயிறு வளர்க்கும் பேடிகள் இல்லாமலா போய்விட்டார்கள்? புலவர்களையும், வீரர்களையும், தமிழ்ப் பற்றுள்ளாரையும் உண்டாக்கக் காரணமாய்த் திகழ்ந்த சோமசுந்தர பாரதியாரை - விதை நெல்லை அல்லவா விழுங்கிவிட்டது சாவு! நான் ஆறுதல் அடையத் தமிழறிஞர்களை, தமிழ்ப் புலவர்களை வேண்டுகிறேன். சோமசுந்தர பாரதியாரைப் பின்பற்றுங்கள். தமிழைக் காப்பாற்ற முன் வாருங்கள். அஞ்சாதீர்கள்! நாவலரை - கணக்காயரை - டாக்டரை - சோமசுந்தர பாரதியாரை - குடும்பத் தலைவரை இழந்த மக்களும், உற்றாரும் அழவேண்டாம். அவர்களின் முதியோராகிய பாரதியார் தமிழுக்கும், தமிழகத்திற்கும் நிறையத் தொண்டு செய்துள்ளார்; நிறைந்த புகழைப் பெற்றுள்ளார். ஆதலின் இருக்கின்றார்; இறக்கவில்லை; இழந்ததாக அழுவதில் பயனில்லை.
தமிழ்ச்சேய் மறைவு
பேரறிவும் பேராற்றலும் பெற்ற தமிழ் வீரர் நாவலர் - சோமசுந்தர பாரதியார் அவர்களின் இறப்புச் செய்தி கேட்டுத் தாங்கொணாத் துயர முறுகிறோம். நூற்றாண்டுக்கொரு முறை தான் இப்படிப்பட்ட சொல் வன்மை படைத்த வீரமக்களைத் தமிழ்த் தாய் ஈன்றெடுத்திருக்கிறாள். அந்தச் சிங்கப் பாரதி நம்மை விட்டு மறைந்து விட்டார் என்னும்போது, நாம் எங்கே அவர்களின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் ஆறுதல் சொல்லத் திராணி கொண்டவர்களாவோம்.
நமக்கிருந்த ஒரே நாவலர்
மயத்தை ஒத்த தமிழ்ப்புலமையும், அதற்கு நிகரான ஆங்கிலத் திறமையும், ஒருங்கே அமையப்பெற்ற நாவலர் சோமசுந்தரபாரதியார் மறைந்த செய்தியைக் கேட்டுத் தமிழுலகம் இன்று துயரத்தில் மூழ்கியுள்ளது. வெறும் பிடிவாதத்துக்காகத் தான் கொண்ட கொள்கையைச் சாதிக்க வேண்டும் என்பதற்காகமட்டும், அவர் எந்த நாளிலும் வாதித்ததில்லை. சொல்வதை அழுத்திச் சொல்லும் இயல்பு அவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது. இதைமட்டும் கண்ட சிலர், அவரை ஒரு ஆத்திரக்காரர் என்றுகூட நினைப்பதுண்டு. இருப்பினும் ஆத்திரத்தோடு பேசினாலும், அவசரப்பட்டு, அதாவது முறையான ஆராய்ச்சி செய்யாமல், அவர் பேசமாட்டார். அவரைப்போன்ற ஆய்ந்த அறிவு மற்றவர்களுக்கு இல்லாததால், அவரை எளிதில் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை! நமக்கிருந்த ஒரே நாவலரும் மறைந்து விட்டார்.
தமிழ் நாட்டின் முதுபெரும் தமிழறிஞர்
இந்த நூற்றாண்டில் தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டாற்றிய புலவர் பெருமக்களில் பசுமலை நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரும் ஒருவர் ஆவார். நிறைந்த வருவாயும், புகழும் கொடுத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலை விட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றச் சென்ற பெருமை நாவலர் பாரதியாருக்கு உண்டு. கவி சுப்பிரமணிய பாரதியாருடன் நெருங்கிப் பழகிய சிறப்பும் நமது நாவலர் பாரதியாருக்கு உண்டு.
சேரர் தாயமுறை, திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும், மாரி வாயில் ஆகிய நூல்களும், அவர் எழுதிய தொல்காப்பிய ஆராய்ச்சிப் பகுதிகளும் தமிழகம் உள்ளவரை அவருடைய புகழைப் பரப்பிக் கொண்டே இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர் தமிழ்த் தலைமைபூண்டு பணியாற்றியதும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் செயலாளராயிருந்து தொண்டுறவு பூண்டு அவர் செய்த தொண்டுகளும் மறக்க இயலாதவை. மறை மலையடிகள், திரு.வி.க.வைப் போன்று பேரும் புகழும் பெற்ற தமிழ்நாட்டின் முதுபெருந் தமிழறிஞர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் டிசம்பர் 14ஆம் தேதி மதுரையில் அரசினர் வைத்திய நிலையத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்து கிறோம்.
புகழ்பட வாழ்ந்த பெருந்தகையார்
பேரறிஞரும் நாவலருமாய ச. சோமசுந்தர பாரதியாரவர்கள் 14-12-59 திங்கட்கிழமை இரவு இயற்கை யெய்தியமையறிந்து வருந்துகின்றோம். பாரதியாரவர்கள் கற்றோர்க்குத் தாம் வரம்பாக நின்ற தக்க பேரறிஞராவார். தம் வாழ்நாளில் தமிழ்நலங் கருதியும் தமிழர் நலங்கருதியும் குறிப்பிடத்தக்க தொண்டுகளைத் தம்முடைய எழுத்தாலும் பேச்சாலும் இயற்றியவர். தமிழ்மொழியில் பேசுவதும் தெரியாதென்று இறுமாந்து கூறும் நாளில் தமிழில் கடலென முழங்கி அறிவூட்டிய பெருமை நாவலர்க்குண்டு. தமிழ்த் துறையில் அவர் தொண்டு கைம்மாறு கருதாத இயல்பினது எவ்வகையான பயனையும் எதிர்பாராது தமிழிலக்கண இலக்கிய ஆய்வில் இறங்கினார். அவருடைய ஆர்வமெல்லாம் உண்மை காண வேண்டும்; தமிழும் தமிழரும் தமிழ் மாநிலத்திலாவது நன்னிலையடைய வேண்டுமென்பதாகும். பாரதியாரவர்கள் புலமைத் துறையில் சிறந்து விளங்கியது போலவே வாழ்வுத் துறையிலும் வள்ளுவர் கூறியது போல வாழ்வாங்குப் புகழ்பட வாழ்ந்த பெருந்தகையாவர். பெருஞ் சிறப்பிற்குரிய பாரதியாரவர்கள் மறைந்தமை குறித்து வருந்துகின்றோம்.
புகழுடன் தோன்றிய பெரியார் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாம் சொல் என்னும் இலக்கணத்திற்கோர் இலக்கியமாய் வாழ்ந்தவரும், ஆழ்ந்தகன்ற தமிழ்ப் புலமையும் நுண்மாண் நுழைபுலமிக்க ஆய்வுத்திறனும் மிகப்பெற்றவருமாகிய நாவலர் - கணக்காயர் - டாக்டர் - ச. சோமசுந்தர பாரதியாரவர்கள் டிசம்பர் 14ஆம் நாளன்று மண்ணுலக வாழ்வை நீத்த செய்தி கேட்டு மாறாப் பெருந்துயர் கொண்டுள்ளோம். அவரது மறைவு தமிழ் நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இளமை தொட்டே தமிழ்மொழியாம் தாய்மொழி யிடத்து மாறாத பற்றும், ஆறாத காதலும்கொண்டு வாழ்ந்தவர்; அவருக்கே உரித்தான பீடுமிக்க செந்தமிழ் நடையில் இடையறாது பேசியும் எழுதியும் மக்களிடையே மொழியார்வத்தையும், நாட்டுணர்ச்சியையும், ஊட்டியவர்; பழந்தமிழிலக்கிய இலக்கண நூல்களில் - குறிப்பாகத் தொல்காப்பியத்தில் - சிறந்த புலமையுடையவர்; கட்டாய இந்தித் திணிப்பை ஏறென எழுந்து, முழுமூச்சுடன் எதிர்த்துப் போரிட்ட வீரர்களில் தலையானவர்.
தாம் பிறந்த நாடு, மொழி, இனம் ஆகியவற்றின் உயர்வையே தமதுயிரெனக் கொண்டு வாழ்ந்த பாரதியாருக்கு நாம் இனிச் செய்யும் கைம்மாறுதான் என்னை? நான் பாரதியாரின் வழி நடப்பேன். அவர் விட்டுச்சென்ற பணியை உறுதியோடு செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு தமிழனும் எடுத்துக் கொள்வதே அன்னாருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறாகும்.
தமிழர் படைத்தலைவர்
கடந்த இரண்டுவார காலத்தில் மூன்று பெரியார்கள் அவரவர் மேற்கொண்ட துறைகளில் மிகப் பிரசித்தி பெற்றவர்களான பேரறிஞர்கள் - ஒருவர்பின்னொருவராக நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார்கள் என்ற துக்கச் செய்தியை மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம். முதலாவதாக இம் மண்ணுலக வாழ்வை நீத்துச் சென்றவர் தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்த தமிழ்ப் பேரறிஞர் சோமசுந்தர பாரதியாராவார். மகாகவி சுப்பிரமணிய பாரதிக்குப்பின், பாரதி என்றால் இவரையே நினைக்கும் படியாகப் பிரசித்தி பெற்றவர். கவிஞர் பாரதியாருடன் இளமையில் எட்டையாபுரத்தில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வளர்ந்து அவருடைய மேதையை நன்கறிந்து சொல்லக் கூடியவரா யிருந்தார். வழக்கறிஞராகத் தொழில் நடத்திப் பெரும் பொருள் ஈட்டி வந்த இவர் தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள பேரார்வங் காரணமாகத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். பல சிறந்த நூல்கள் இயற்றினார். தமிழ் நாடெங்கணும் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். அத்துடனில்லாது, வக்கீல் தொழிலை இடையில் நிறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றலானார். இராசகோபாலாச்சாரியார் முதன் மந்திரியாயிருந்த 1937ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டபோது, இவர் அவ்விசமச் செயலை எதிர்த்து முறியடிக்கக் கிளர்ந்தெழுந்த தமிழர் படைக்குத் தலைமை தாங்கும் பெரியார்களில் ஒருவரானார். அவர் வாணாள் முழுதும் தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் அரும்பெருந்தொண்டு ஆற்றிவந்தார். இவருடைய பெரும் பிரிவு தமிழரனைவரையும் பெருந்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நாவலர்தம் மாணவர்களின் கருத்துரைகள்
** மாபெரும் வீரர் டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார்**
பெருநாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்கள்பால் நற்றமிழ் கற்கும் பேறுபெற்றவர்களில் நானும் ஒருவன். வகுப்பிற் பயின்று கொண்டிருந்த போது பாரதியார் அவர்களுடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியராய் இருந்த தலைமாணாக்கர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் பெருமையுறுகிறேன். அவர் தமிழ்ப் பேராசிரியராக அப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பணியின் பயன் தமிழ்நாட்டு மூலை முடுக்குகளுக்கெல்லாம் இப்போது எட்டியுள்ளது. பாரதியார் அவர்கள் வெறுங்காசிற்காக வேலை பார்த்தவரல்லர். உண்மையிலேயே தம்முடைய தமிழ்ப் புலமையையும் தமிழ்ப் பற்றினையும் பயன் படுத்த வேண்டுமென்றும், பரப்ப வேண்டும் என்றும் கருதிய நோக்கத்தால் அவர் 1933 முதல் 1938 வரையிலும் அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் அமர்ந்திருந்து பெருந்தொண்டாற்றினார். தமிழ்ச் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு அவர் தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள், தொல்காப்பியம், கலித்தொகை போன்ற உயரிய பாடங்கள் எடுத்து நடத்தி மகிழ்வித்து அறிவுறுத்தினார். அவருடைய மாணவராக இருந்து பயனுற்ற பலர் வாழையடி வாழை எனத் தமிழார்வம்மிக்க மாணவர் குழாத்தினராய் அமைந்து உருவாகியுள்ளனர். பாரதியார் அவர்களிடமிருந்து நான் கற்றதை, என்னிடமிருந்து திருவாளர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன்,அ.ச. ஞானசம்பந்தம் போன்றவர்கள் கற்றுத் திறம்படப் பெருக்கித் தமிழ் நாடெங்கணும் வழங்கி வருவது பலர் அறிந்த செய்தி. வகுப்பு மாணவர்களும் தமிழ்ப் புலவர் வகுப்பு மாணவர்களும் இன்று பல்வேறு கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர்களாய்ப் பணியாற்றி வருவதோடு, ஆண்டு தோறும் பாரதியார் வழிவழியில் வரும் மாணவர் பலரை ஆங்காங்கு உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அக்காரணத்தால், தமிழுக்கு இழிவும் அழிவும் வராமற் பாதுகாப்பதற்கு ஒரு பெரும்படை நம் நாட்டில் திரளும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதானே!
சென்னை மாநிலத்தில் இந்தியைப் பள்ளிக்கூடக் கட்டாய மொழியாகத் திரு இராசகோபாலாச்சாரியார் புகுத்திய பொழுது அதனைக் கண்டித்து அவருக்கு ஒரு வெளிப்படைக் கடிதத்தைப் பத்திரிகைகளில் வெளியிட்ட ஒரு பெருந் தொண்டிற்காகவேனும் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அப்பெரியாருக்கு நன்றி செலுத்தும் கடமை உடையர். அவ்வாறு அவர் அரசியலில் தலைப்பட்டுச் செயல் புரிந்தது தகாது எனக் கூறப்பட்டபொழுது, அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நிலையினின்று விடுவித்துக் கொள்வதாக அஞ்சாமல் உரைத்தார் என்பதை ஒருவேளை இன்றுள்ள இளைஞர்கள் அறியாமல் இருத்தல் கூடும். அக்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட பல அல்லல்களுக்குக் குலையாமல் இடையூறுகளைப் பொடிபடுத்தி வெற்றியுற்ற மாபெரும் வீரர் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று கூறுவது புனைந்துரையாகாது; பொருள் உரையேயாகும்.
பாரதியார் அவர்கள் தமிழ் வாழவும், தமிழர்கள் சங்க காலத் தமிழர்களுடைய சீரிய வாழ்க்கை எய்தவும் தமிழ்நாடு முன்னேறவும் அவர்தம் வாழ்நாட்களில் செய்த பல தொண்டுகளை நினைவு கூறும் வகையில் இன்றுள்ள இளைஞர்கள் முன்னேறுதற்கு வழி காண்பர் என்பது உறுதி.
நாவலர் பாரதியார் அவர்கள் இன்னும் பல்லாண்டு உடலு ரத்துடனும் மனத்திட்பத்துடனும் வாழ்ந்து மேலும் பல தொண்டுகளுக்குத் தலைமை தாங்க வேண்டுமென்று விரும்பும் பலரில் யானும் ஒருவன்.
அஞ்சா நெஞ்சினர்
பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம்,
தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி,
சென்னை.
நாவலர் பாரதியார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தகாலை அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன். தன்மானத்தோடு, எதற்கும் அஞ்சாது செயலாற்றும் வீரத்தமிழ் உள்ளத்தை அவரிடம் கண்டேன். தான் எண்ணியதை வெளிப்படையாகச் சொல்லி, அதை நிறுவும் ஆற்றல்வல்ல பெருவீரராக அவர்கள் விளங்கினார்கள். மாற்றலர் சொல்லை வெறுக்காது மதித்து, அதே வேளையில் அதில் தவறு இருக்குமானால் எடுத்துக்காட்டி இடித்துத் திருத்தும் பண்பு அவர்களுடையது. முறுக்கிய மீசையும் நறுக்கிய சொல்லும் அவர் வாய்க்கு அழகு செய்வன.
தன்னிடம் பயிலும் மாணவர்கள்பால் தாழாத அன்பு உடையவராக அவர் விளங்கினார். நான் தமிழ்ப் பேரவைச் செயலாளனாக இருந்தமையின் தலைவராகிய அவரிடம் அடிக்கடி பல பொருள்பற்றிப் பேச வாய்ப்பு இருந்தது. சிலவற்றில் நான் கூறுவதில் நல்ல கருத்துக்கள் இருக்குமாயின் வியந்து போற்றி மகிழ்வார். தவறு இருக்குமாயின் தட்டாது கண்டிப்பார். தன்னால் ஒன்றைச் செய்ய முடியாத நிலை இருப்பின் அதை வெளிப்படையாகச் சொல்லி
விடுவார். முன்னே கனிந்து பேசிப் பின்னே புறஞ் சொல்கூறும் புன்மை அவரிடம் காணமுடியாது. அதனால் சிலருடைய பகைமை நேரினும் அதற்கென அஞ்சாதவர் அவர்.
அவரிடம் பழகிய எனக்கும் சிலசில வேளைகளில் யாருக்கும் அஞ்சா மனப்பான்மை உண்டாவதுண்டு. அத்தகைய நிலையில் அவர் என்னை ஊக்குவிப்பார். உலகில் வாழும் மனிதன் உண்மை ஒன்றனுக்குத் தவிர வேறு எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை என்பது அவர்தம் முடிவு - நம்பிக்கை. ஆம்! அந்த வகையில் உலகில் மனித இனம் வாழின் நலம் உண்டு.
நாவலர் இன்னும் பல்லாண்டு பாரில் வாழ்ந்து பண்பாட்டை வளர்க்க வழிகாட்டுவாராக.
யாம்பெற்ற பேறு
ப. சோதிமுத்து,
தமிழ்த்துறைத் தலைவர்,
அமெரிக்கன் கல்லூரி, மதுரை.
நான் 1933இல் அண்ணாமலை நகருக்குச் சென்றபோது தமிழ் மாணவர்களிடையே ஒரு பரபரப்புக் காணப்பட்டது. தமிழ்த்துறைக்குத் தலைமை பூணத் திரு பாரதியாரவர்கள் வந்தமைதான் அப்பரபரப்புக்குக் காரணம். அன்னாரை அப் பல்கலைக்கழகத்தை நிறுவிய டாக்டர் அண்ணாமலைச் செட்டியாரவர்கள் அரிதில் முயன்று, ஆங்கு வரவழைத்திருந்தமையும் அறியலானோம். பட்டத்தேர்வுக்கு எங்கள் வகுப்பு இரண்டாவதாகும். நாங்கள் எட்டுப்பேர் வகுப்பில் இருந்தோம். எண்மரில் ஐந்து பேர், பிற இடங்களில் வேலை பார்த்து விட்டுத் திருமண முடித்து மேற்படிப்புக்காக வந்தவர்கள். மூன்று பேர் மாத்திரம் ஆனர்சு (Hons) வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
பாரதியாரிடம் நாங்கள் திருக்குறளையும், கலித்தொகையையும், கம்பராமாயணத்தையும், தொல்காப்பியத்தையும், தமிழ் இலக்கிய வரலாற்றையும் பாடம் கேட்போம். அதுவரைக்கும் நான் தமிழில் பாடம் கேட்ட எல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரையாகத்தானிருந்தன. ஆனால் பேராசிரியர் பாரதியாரிடம் நான் பாடம் கேட்கத் தொடங்கிய போது, அவர்களின் விரிந்த நூற்புலமையும், ஆராய்ச்சி மனமும், சொல் வன்மையும், விரிந்த நோக்கும் தெற்றெனப் புலனாயின. தமிழ்ப் புலவர் கருத்துக்களை ஆங்கிலப் புலவர் கருத்துக்களோடு ஒப்பிட்டுக் கூறிய வேளைகளில், தமிழைப் பற்றியும், தமிழ் நாகரிகம் பண்பாடு பற்றியும், நான் கொண்ட மகிழ்ச்சி சிறிதன்று. தமிழனாய்ப் பிறந்து தமிழ் கற்கின்றமைக்கு மிகவும் மனமுவந்தேன். தமிழன் மொழி, தமிழன் கலை, பண்பாடு, நாகரிகம், உலகில் உள்ள வேறு எத்தகைய உயர்ந்த மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் இவற்றிற்கு எவ்வளவேனும் தாழ்ந்தவை அல்ல என்பதை எங்களுக்கு ஆணித்தரமாக எடுத்துக் காட்டினார்கள். அவர்கள் தமிழறிவு, ஆங்கிலப் பயிற்சி, சட்டப் படிப்பு, அவரது பேராசிரியத்துக்கு அணி செய்து நின்றன. ஈராண்டுகளிலும் அவரிடம் பாடம் கேட்ட ஒவ்வொரு துறையையும் பற்றிக் கூறுவதென்றால், அது கூடிய காரியமன்று. அன்னார் எங்கட்குப் பேராசிரியராகக் கிடைத்தது பெரும் பேறே என்று கூறுவதோடு அமைகின்றேன்.
அன்றியும், நாங்கள் ஓரு சிலராக அன்னார் இல்லம் சென்று, உரையாடி, வினவி இங்ஙனம் கழித்த நாட்கள் பல. இரண்டாவது ஆண்டில் எனக்குத் தனிப்பட்ட முறையில் பேருதவியும் செய்தார்கள். அப்போது துணைவேந்தராகப் பணியாற்றிய உயர்திரு அரங்கநாதரிடம் கூறி, பல்கலைக்கழகப் பண உதவியும் எனக்குக் கிடைக்கும்
படி ஒழுங்கு செய்தார்கள். அந்நன்றி என்றும் மறக்கற் பாலதன்று. அவர்கள் பேராசிரியத் தகைமையும் எனது உள்ளத்தை விட்டு என்றும் அகலாது.
உரை நயங்காணும் உரவோர்
புலவர் க. வெள்ளைவாரணனார்,
தமிழ் ஆராய்ச்சி விரிவுரையாளர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர்.
திரு பாரதியார் அவர்கள் தனித்தமிழ் பயிலும் வித்துவான் வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கிலத்துடன் தமிழ்ச் சிறப்பு வகுப்பிற் பயிலும் மாணவர்களுக்கும் பாடஞ் சொல்லி வந்தார்கள். தாம் சொல்ல எடுத்துக் கொண்ட நூல்களை நன்றாகப் பயின்று தெளிந்த பிறகே இவர்கள் அவற்றைக் கற்பிக்க வருவார்கள். முன்னோர் கருத்துடன் தாம் கண்ட புதியவுரையையும் அவர்கள் விளக்கிச் சொல்லும் பொழுது மாணவர்கள் ஒரு நூலைத் தெளிவாகப் பயிலும் முறை இதுவே எனத் தெரிந்து கொள்வார்கள். இவர்கள் உலகியல் வழக்குடன் நூல் வழக்கும் நன்குணர்ந்த சிறந்த வழக்கறிஞராதலால் இவர்கள் பாடம் நடத்தும் வகுப்பறை, வழக்கினை நன்குணர்ந்து முடிவு காணும் நீதிமன்றம் போல் விளங்கியதில் வியப்பில்லை.
நாங்கள் வித்துவான் இறுதிநிலை வகுப்பிற் பயிலும் பொழுது இவர்கள் கம்பராமாயணம் அயோத்தியா காண்டப் பகுதியைப் பாடஞ் சொன்னார்கள். இக்காலத்தார் கருதுமாறு கைகேயி சிறிதும் தவறுடையள் அல்லள் என்றும், அவள் கணவனாகிய தசரத மன்னனே தவறுடையான் என்றும், தெளிய உணரும்படி இவர்கள் வான்மீகம் முதலிய நூல்களிலிருந்து சான்று காட்டி விளக்கிய திறத்தை மாணவர்கள் அனைவரும் வியந்து போற்றினார்கள். இவர்கள் பாடங்கற்பிக்குங் காலத்துப் பொழுது போவதே மாணாக்கர்களுக்குத் தெரிவதில்லை, வித்துவான் முடிவுநிலை வகுப்பு மாணாக்கர்களும் தமிழ்ச் சிறப்பு முடிவுநிலை வகுப்பு மாணாக்கர்களும் ஆகிய இருதிற மாணாக்கர்களும் கலந்தமைந்த வகுப்பில் இவர்கள் தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் உவமவியல் ஆகிய பகுதிகளைப் பேராசிரியர் உரையுடன் தெளிவாகக் கற்பித்தார்கள்; தொல்காப்பியமாகிய இயற்றமிழ் இலக்கண நூலினைப் பிற்கால உரையாசிரியர்கள் உரைவழியில் மட்டும் நின்று அமையாது ஆசிரியர் தொல்காப்பியனார் உளக் கருத்தை அவரது வாய்மொழியாகிய மூலத்தின் உதவி கொண்டு துணிதல் வேண்டும் என்ற நுட்பத்தை மாணவர்கள் நன்குணரும்படி இவர்கள் கற்பித்த முறை காய்தலுவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆராயும் ஆராய்ச்சி முறைக்கு நல்ல உதாரணமாக அமைந்தது. இவர்கள் குறிஞ்சிக் கலியினைக் கற்பித்தபோது நச்சினார்க்கினியர் உரையளவில் அமையாது அப்பாடல்களுக்குச் செம்பாகமாகப் பொருள் கொண்டு இவர்கள் கூறிய நயமான விளக்கங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை விளைவித்தன. கலித்தொகை 62ஆம் பாடலில்,
“மையின் மதியின் விளங்கு முகத்தாரை
வௌவிக் கொளலும் அறனெனக் கண்டன்று”
என்ற தொடருக்கு மறுவில்லாத மதிபோல விளங்கும் முகத்தினையுடைய மகளிரை வலிதிற் புணர்தலும் ஒரு மணமென நூல் கண்டது என நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். இவ்வுரையினை மட்டும் மேற்போக்காகக் கொண்டு இத்தொடரின் சொல்லமைப்பினை உய்த்துணராது இத்தொடரில் அறன் எனக் குறிக்கப்பட்டது இராக்கதமணமே எனப் பிழைபட எழுதினாரும் உளர். அன்பின் ஐந்திணை யொழுகலாற்றில் சிறிதும் வழுவாத மைந்த இக் கலித்தொகைப் பாடலில் தலைவனும் தலைவியும் ஒருங்கு உடன்படற்குரிய அறமெனப்பட்டது பொருந்தாக்காமமாகிய இராக்கதமணமாக இருத்தல் இயலாது என உணர்ந்த பாரதியாரவர்கள்,மகளிரை வௌவிக் கொளலும் அறன் எனப் பொதுப்படக் கூறாது மையின் மதியின் விளங்கு முகத்தாரை, வௌவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று என அடைமொழி புணர்த்து ஓதியதனால் மறுவில்லாத மதிபோன்று மகிழ்ச்சி மிக்கு விளங்கும் காதற்குறிப்புடைய முகத்தினராகிய ஒத்த அன்புடைய மகளிரைப் பெற்றோர் முதலியவர்களது உடன்பாடின்றி வலிதில் உடன் கொண்டு செல்லுதலும் அறந்தலைப் பிரியா நெறியென்றே நூல்களில் கண்டது என இத்தொடர்க்குப் பொருளுரைப்பதே ஏற்புடையதென மாணாக்கர் உளங்கொள விளக்கினார்கள்.
இவ்வாறே இவர்கள் தமது கூர்த்த நுண்மதி கொண்டு தொல்காப்பியம், திருக்குறள், சங்கச் செய்யுட்கள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலிய சிறந்த நூற் பகுதிகளுள் சிலவற்றுக்கு இன்றியமையாத இடங்களில் புதிய உரைவிளக்கம் தந்துள்ளார்கள். இவர்களால், இயற்றப் பெற்ற நூல்களில் மாரிவாயில் என்ற செய்யுள் நூல் இப்பல்கலைக்கழகத்திற் பணியாற்றும் நிலையில் நிறைவேறியது. இங்குள்ள தமிழ்ப் பெரும் புலவர் பேரவையில் எடுத்துரைக்கப் பெற்று அரங்கேறியது. இவர்கள் தொல்காப்பியத்திற்கு ஆசிரியர் கருத்தின் வழுவாது உரை காணுதல் வேண்டும் என்ற விருப்பத்துடன் இங்கிருந்த பொழுது தொல்காப்பியத்தை நன்கு ஆராய்ந்து ஆங்கிலத்தில் சில கட்டுரைகளைப் படியெடுக்கும் பணியினை ஆசிரியர் திரு பொ. பழநியப்பப் பிள்ளையவர்கள் உவப்புடன் செய்தார்கள். தமிழ் ஆராய்ச்சி மாணவனாக இருந்த யான் இவர்கள் எழுதும் தமிழ்க் கட்டுரைகளைப் படியெடுத்தல் வழக்கம். கோடை விடுமுறையில் இவர்களுடன் நீலகிரி முதலிய இடங்களுக்குச் சென்று இவர்களுடைய ஆராய்ச்சி யுரைகளை எழுதும் பணியும் எங்களுக்குக் கிடைத்தது.
1939 ஏப்ரல் மே மாதங்களில் இவர்கள் இராமேசுவரத்தை யடுத்த மண்டபத்தில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது இவர்களுடன் இருந்து தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இவர்கள் கூறும் உரையை எழுதி முடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்கள் உரை சொல்ல யான் எழுதிக் கொண்டு வரும் நிலையில் பழைய உரையாசிரியர்கள் கருத்துக்களை மறுத்துரைக்கும் சில இடங்களில் எனக்குத் தெளிவாக விளங்காத பகுதியையும் என் மனத்திற்கு ஒவ்வாதவற்றையும் எழுதத் தயங்கிச் சிறிது தாமதித்தலும் உண்டு. இவர்கள் என் குறிப்பினை விரைவில் உணர்ந்து என்னைச் சிறிது வெகுண்டு பேசுதல் இயல்பாயினும் யான் கூறக் கருதிய தடைகளைக் கேட்டு அவற்றினுக்குத் தக்க பல காரணங்களை எடுத்துக் காட்டித் தம் துணிபினைத் தெளிவித்த முறை மிகவும் இன்பந் தருவதாக இருந்தது.
இவர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமிய பெருங் கூட்டத்திற் பேசுங் காலத்து எவரேனும் இவர்கள் கூறும் பொருள் பற்றி இடையே தடை நிகழ்த்தினாற் போதும், அப்பொழுதே அப்பொருள் பற்றிப் பிறர் கூறும் தடைகள் யாவும் போலியென எடுத்துக் காட்டித் தம் கருத்தே வலியுடையது என இவர்கள் நிலைநாட்டி விடுவார்கள். அப்பொழுது அவையிலுள்ளார் அடையும் பெருமகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
வழக்கறிஞர் தொழிலிலும் கல்வித்துறையிலும் ஈடுபட்ட பேரறிஞரான பாரதியாரவர்கள், பாரத நாடு விரைவில் விடுதலையடைய வேண்டும் என்னும் உரிமைப் போராட்டத்திலும், நாட்டில் தீண்டாமை என்னும் நோய் விரைவில் ஒழிய வேண்டும் என்னும் சமூகச் சீர்திருத்தப் பணியிலும், தமிழ் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் நிலையில் 1937இல் சென்னையமைச்ச ரவையினர் விதித்த கட்டாய இந்தியை எதிர்க்கும் மொழிப் போராட்டத்திலும் ஈடுபட்டு அஞ்சாது பேரூக்கத்தோடும் உழைத்த பெருவீரர் என்பதனைத் தமிழ்நாடு நன்கறியும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் காந்தியடிகள் வந்த பொழுது அடிகளைச் சிறப்பாக வரவேற்பதிலும் அவர்கள் எடுத்துக் கொண்ட பணிக்கு நன்கொடை வழங்குவதிலும் இவர்கள் முதல்வராய் விளங்கியதனை நேரிற் கண்டோர் இவர்களது உரிமைத் தொண்டினை உளமாரப் பாராட்டினார்கள்.
வருங்கால ஞானி
ஆர். இராசரத்தினம் அம்மையார்,
தமிழ்ப் பேராசிரியை,
வெல்லிங்டன் சீமாட்டி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி,
சென்னை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகத் திருவாளர் சோமசுந்தர பாரதியாரவர்கள் பணியாற்றி வந்த போதுதான் நான் கல்லூரி இடைநிலை வகுப்புத் தேர்வில் (இண்டர்மீடியட்) வெற்றி பெற்று, இறுதிநிலை வகுப்பில் (பி.ஏ.) சேர்ந்து வரலாற்றினை விருப்பப் பாடமாக எடுத்துக் கொண்டேன்.
அதே ஆண்டில் திருச்சிராப்பள்ளி, புனிதச் சிலுவைக் கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்ற என் தோழி திருமதி, இராசாமணியம்மையார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழ்ப் பாடப் பிரிவு உள்ள தென்பதை என் மூலமாக அறிந்து, தன் சொந்த ஊராகிய திருச்சியிலிருந்து படிப்பதையும் விடுத்து, தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தினால் தூண்டப் பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழ் வகுப்பில் சேர்ந்தார்கள்.
அப்போது அப்பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இரண்டே பெண்களாகிய எங்களுள் ஒருவர் வரலாற்றுப் பகுதியிலும், மற்றொருவர் தமிழ்த் துறையிலும் படிப்பதைக் கண்ணுற்ற நாவலர் அவர்கள், ஒருநாள் என்னை அழைத்து ஒரு தீர்க்கதரிசியைப் போலப் பேசலுற்றார்கள். அதாவது, எதிர் காலத்தில் பாரத நாட்டிற்குச் சுதந்திரம் அல்லது விடுதலை கிடைப்பது நிச்சயமென்றும் அவ்வமயம் பாரத நாட்டு மொழிகள் அனைத்தும் சிறப்புறுவது திண்ணமென்றும் கூறினார்கள். மேலும் விடுதலை பெற்ற பின்னர் இந்திய மொழிகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கு நல்ல மதிப்பும், சிறந்த ஊதியமும் கிடைப்பது உறுதி என்றுங் கூறினார்கள். எனினும் அனுபவ ஞானமற்ற எனக்கு மட்டுமேயன்றி, என் நல்வாழ்வினை விரும்பிய என் அன்னையாருக்கும், நான் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படிப்பது அவ்வளவு திருப்தியாக இல்லை. இதனை நன்றாக அறிந்திருந்தும் நம் நாவலர் அவர்கள் வழக்கறிஞருக்குரிய இயல்பின்படி விடாப்பிடியாக இருந்து, பலகாலும் என்னிடம் தமிழின் பெருமையை எடுத்துரைத்தார்கள். மேலும் ஓர் இடத்தில் படிக்கும் இரு பெண்களும் ஒரே துறையில் படிப்பதால் விளையக்கூடிய பல நன்மைகளையும் எடுத்தியம்பினார்கள். அதைக் கேட்ட நான் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படிப்பவருக்கு அந்த ஒரே துறையில்தான் வேலை கிடைக்குமென்றும், அவ்வாறு வேலை கிடைப்பினும் ஊதியம் அதிகமாகப் பெற இயலாதென்றும் தெரிவித்த போது அவர்கள், சென்னை மாநகரத்திலுள்ள மேரியரசி கல்லூரி போன்ற இடங்களில் உடனே வேலையும் சிறந்த ஊதியமும் கிடைக்குமென்று உறுதி கூறினார்கள்.
அன்றைக்கு அவர்கள் கூறிய வார்த்தை முற்றிலும் உண்மையாயிற்று, நாங்கள் இருவருமே, மேரியரசி கல்லூரியில் பணியாற்றும் பேறு பெற்றோம். அற்றையநாள் அவர்கள் கூறியாங்கே, நிகழ்ந்தமையால் அவர்களை எதிர்காலம் உணர வல்ல ஞானி என்று கூறுவது மிகையாகா தல்லவா? அது மட்டுமன்று; அவர்கள் கூறியவாறே நாடும் விடுதலை யடைந்தது. அதன் விளைவாகத் தாய் மொழி படித்தவருக்கு எல்லாத் துறைகளிலும் வேலையும் கிடைத்து வருகிறது.
அஞ்சாமை : எத்தகைய உயர்பதவியை வகிப்பவராக இருப்பினும் அவருடன் உரையாடுங்கால், நாவலர் அவர்கள் தாம் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் விடயங்களைத் தெளிவாக எடுத்தியம்பி, தமது கொள்கையையே நிலைநாட்டுவார்கள். இவ்வரிய பண்பானது அவர் எழுதியுள்ள தசரதன் குறையும், கைகேயியின் நிறையும் என்ற நூலினின்றுங்கூடப் புலனாகும்.
சீர்திருத்தம் : திருவனந்தபுரத்து மகாராணியாகிய திருவாட்டி சேதுபார்வதிபாய் அம்மையாரவர்கள், அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குள் செல்ல அரிசனங்களை அனுமதித்த செய்தியைக் கேட்ட நாவலர் அவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தார்கள். அத்துடன் ஒரு பெண்மணி அத்தகைய தீரச் செயலைச் செய்தமைக்காகப் பெண் குலத்தையே அன்று பாராட்டிப் புகழ்ந்தார்கள்.
மாணவரிடத் தன்பு : அவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஒருநாள் நானும் என் தோழியும் மதுரைக்குச் செல்ல நேர்ந்தது. அப்போது எமது பேராசிரியரைக் கண்டு வரலாமென்று பசுமலைக்குச் சென்றோம். சென்றவிடத்தில் எங்களுக்கு இரண்டு விதமான விருந்துகள் கிடைத்தன.
அதாவது, அவர்கள் இல்லக்கிழத்தியார் திருமதி. வசுமதியம்மாள், எங்கள் இருவருக்கும் சிறந்த உண்டி வகையால் விருந்தளித்தார்கள். நாவலர் அவர்களோ தாம் அப்போது எழுதி முடித்திருந்த மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி என்ற நூலை இசையோடு படித்துக் காட்டி அந்நூலைப் பற்றி எங்கள் கருத்தினைக் கூறுமாறு பணித்தார்கள். நாவன்மையும், பட்டறிவும் மிக்க நாவலர் அவர்கள், அப்போதுதான் படித்து முடித்துப் பட்டம் பெற்ற எங்கள் கருத்தினையும் அறிந்து அதற்கேற்பத் தம் நூலை அமைக்கக் கருதியதானது, அவர்களுடைய பரந்த மனப்பான்மையைக் காட்டுகின்றது.
மேலும் அவர்கள் அவ்வப்போது தம் மாணவர் எங்கெங்கு எவ்வெப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று விசாரித்தறிந்து அவர்களது நல்வாழ்வையே நாடி வருகின்றனர். அவர்கள் நல்லாசிரியர் பரம்பரையில் வந்த நாவலராகையால் உலகம் வாழ வேண்டு மென்னும் விருப்பம் மீக்கூர்ந்தவர்களாவார்கள்.
_வாழ்க தமிழ் மொழி! வாழ்க நாவலர் அவர்கள்!_
கடமை வீரர்
ஆர். இராசாமணி அம்மையார்,
தமிழ் விரிவுரையாளர், மேரியரசி கல்லூரி,
சென்னை.
டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழ் எடுத்திருந்த எமக்கு ஆசிரியராயும், தமிழ்த் துறைத் தலைவராயும் இருந்தார்கள். அக்காலத்தைப் பொற்காலம் எனக் கூறின் அது மிகையாகாது.
திரு பாரதியாரவர்கள், ஆங்கிலம், அருந்தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமை படைத்தவர்கள், எந்தச் சபையிலும், தமது கருத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் படைத்தவர்கள். தர்க்கரீதியில் விடயங்களை ஆராய்ந்து பேசும் இயல்புடையவர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்கள்.
நாங்கள் திரு பாரதியாரவர்களிடம், தொல்காப்பியம் இலக்கிய வரலாறு போன்ற நூல்களைப் பயின்றோம். சுவையுடனும் இசையோடும் பாடங் கற்பிப்பார்கள். ஐயப்பாடுகளைக் குறித்துக் கொண்டு வரச்சொல்லி, அவற்றை நிவர்த்தி செய்வார்கள்.
ஆசிரியரும் மாணவரும் குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பிற்கு வந்துவிட வேண்டும்; வர இயலவில்லையானால் விடுமுறை விண்ணப்பத்தாளை உரிய காலத்தில் அனுப்ப வேண்டும் என்பது நியதி. ஒருநாள் மிகுந்த மழை பெய்ததாலும், உப்பனாற்றில் வெள்ளம் பெருகியதனாலும், பாதை சரியாக இல்லாததாலும், நாங்கள் சிவபுரியினின்றும், வண்டியிலோ, கால் நடையாகவோ கல்லூரிக்கு வர இயலவில்லை. அடுத்த நாள் விடுமுறை விண்ணப்பத்தாளைக் கொடுத்த போது, திரு பாரதியார் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; முதல் நாளே அனுப்பியிருக்க வேண்டும் என்றார்கள், பெருமழை காரணமாகக் கல்லூரிக்கு ஒருசமயம் விடுமுறையாக இருக்கலாம் என்று நாங்கள் கருதியதால் முன்கூட்டியே விண்ணப்பத்தாளை அனுப்பவில்லை என்றும், தபாலில் சேர்த்திருந்தாலும் அடுத்த நாள்தானே கிடைத்திருக்கும் என்றும் வாதாடினோம்; பயனில்லை; கல்லூரிக்கு வராததற்காகச் சிறு அபராதம் விதிக்கப்பட்டது.
வித்துவான் வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்த மாணவர் ஒருவர், தம் உறவினரது மறைவுக்காக வெளியூர் சென்று பல நாட் கழித்துத் திரும்பி வந்தார். அவ்வளவு நாள் கழித்து வந்தமைக்குக் காரணம் கேட்டார் ஆசிரியர். பதினாறாம் நாள் அன்று கிடைக்கும் சீர் வரிசைகளைப் பெற்று வருவதற்காகத் தங்க நேர்ந்தது என்றார் மாணவர். உடனே அபராதம் விதிக்கப்பட்டது. அதைச் செலுத்துவதற்குத் தன்னிடம் பணமில்லை என்று மாணவர் கூறினார். மொய்ப் பணம் வந்திருப்பதால் அதினின்றும் செலுத்தலாமே என்றார் ஆசிரியர். இவ்வாறு கடமையை நிறைவேற்றுவதில் கண்டிப்புடையவராய் விளங்கினார்.
திரு பாரதியார் அவர்கள், வரலாற்றுச் சிறப்பினையுடைய செஞ்சி, மாமல்லபுரம், காஞ்சி முதலிய இடங்களுக்குத் தமது மாணவ மாணவியரை அழைத்துச் சென்றார்கள். விடயங்களை விளக்குவதற்கு ஓர் ஆசிரியர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ளோரின் வேண்டுகோளுக்கிணங்கப் பேராசிரியர் சொற்பொழி வாற்றினார். மகாபலிபுரத்திலுள்ள கால்வாய்க்கு, இப்போதுள்ளது போல் பாலம் கிடையாது. படகில்தான் செல்ல வேண்டும், அப்போது ஆசிரியர் தமது இன்னிசையால் அனைவரையும் மகிழ்வித்தார்.
டாக்டர் பாரதியார் அவர்கள், சென்னைக்கு வருமுன் தமது மாணவர்கட்குக் கடிதம் எழுதி, தாம் சொற்பொழிவாற்றுமிடங்கட்கு அவர்களை வரவழைத்து, அன்னாருடன் உரையாடுவார்கள். வராதவர்களின் நலத்தையும் விசாரிப்பது வழக்கம்.
இத்தகைய அருங்குணங்கள் பலவும் படைத்த ஆசிரியப் பெருந்தகை பன்னெடுங்காலம் இந்நிலவுலகில் நின்று நிலவ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!
ஆசிரியப் பெருந்தகை
பூ. ஆலாலசுந்தரஞ் செட்டியார்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னைக் கிறித்தவக் கல்லூரி, சென்னை.
பாரதியாரவர்களின் பழைய மாணவன் என்று கூறிக் கொள்வதில் யான் பெருமிதம் அடைகின்றேன். அவரிடத்தில் யான் கண்ட அரிய பண்புகள் பல. அவர், நக்கீரர் போன்று எதற்கும் அஞ்சாது பேசும் ஆற்றல் பெற்றவர். நடுவு நிலையுடன் ஆராய்ச்சி செய்தல் வேண்டும் என்பதைத் தமிழ் உலகிற்கு எடுத்துக் காட்டியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிப் பகுதி தோன்றுவதற்குக் காரணமாக விளங்கியவர். அவரது நாவன்
மையை, அவர் தம் சொற்பொழிவுகளிலும், பாவன்மையை மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி, மாரிவாயில் என்ற நூல்களிலும், ஆராய்ச்சித் திறனைத் தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தொல்காப்பியர் பொருட்படலம் முதலிய நூல்களிலும், கட்டுரைத்திறனை நற்றமிழ் முதலிய கட்டுரைகளிலும் பரக்கக் காணலாம். அவரது மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன. அவர், தம் உடம்பைப் பேணும் முறையினை நாம் பின்பற்றினால், நாமும் எண்பது ஆண்டுகளுக்கு மேல் சிறக்க வாழலாம். பாரதியாரின் சட்டப்புலமை அவரது ஆராய்ச்சிக்கு உறுதுணையாக விளங்கிற்று என்பேனாகில் அது புனைந்துரையன்று.
தமக்கென வாழாது தமிழ் நலம் கருதி வாழும் எங்கள் ஆசிரியப் பெருந்தகை நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரவர்கள் பன்னெடுங்காலம் சிறக்க வாழுமாறு அங்கயற்கண்ணி பாகனை மனமொழி மெய்களான் இறைஞ்சுகின்றேன்.
தாரகை நடுவண் தண்மதி
ச. ஆறுமுக முதலியார்,
முதல்வர்,
அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி,
குமாரபாளையம்.
அக்காலத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வானில், விண்மீன்களாகப் பேராசிரியர்கள் சொல்லின் செல்வர் டாக்டர் சேதுப்பிள்ளை, பண்டிதமணி, நாவலர் நாட்டார், கந்தசாமியார், சர்க்கரை இராமசாமிப் புலவர், பொன்னோதுவார், பழனியப்ப பிள்ளை, அமிர்தலிங்கம் பிள்ளை, அருணாசலம் பிள்ளை, பலராம ஐயர் முதலியோர் விளங்கத் தாரகை நடுவண் தண்மதி போல நாவலர் பாரதியார், அவர்களுக்குத் தலைமை தாங்கி மிளிர்ந்தார். இது போன்ற ஒரு கழகப் பேரறிஞர் குழுவைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகம் இனித் தோன்றப் போவதில்லை யென உறுதியாக அறுதியிட்டுக் கூறலாம்.
கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த டாக்டர் பாரதியார், தமது நுண்மாண் நுழைபுலங் கொண்டு மாணவர்களாகிய எங்களுக்குத் திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களைக் கற்பிக்குங்கால், அவர்களுடைய ஆராய்ச்சித் திறனும், இலக்கியத் திறனும் ஆற்றலும், மொழி நூற் புலமைத் திறமும், வரலாற்று அறிவு நுட்பமும், காரண காரிய முறையிற் செய்திகளைக் கூறி வற்புறுத்தும் ஆற்றலும், தன் மதம் நிறுவும் தகுதியும், பிறர் மதம் அகற்றும் தெளிவும், கடல் மடை திறந்தது போன்ற ஒப்புமைப் பகுதி மேற்கோள்களும், இடத்திற்கேற்ற எடுத்துக்காட்டுக்களும், தாம் கண்ட உண்மையை, நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே என்றவாறு எடுத்துக் கூறும் மன உறுதியும், தேனினும் இனிய செந்தமிழ் எழுத்துப் பேச்சு நடைகளும், இன்ன பிறவும், பசுமரத் தாணியென மாணவர்களின் உள்ளத்தமையும். மாணவர்கள் எவ்வகைப்பட்ட கேள்விகள் கேட்பினும் அவர்களை மட்டந்தட்டி அமர்த்தி விடாது, அன்னாரை ஊக்கி, ஆராயுந்திறத்தை வளர்த்துத் தடைகளுக்கு விடைகள் தந்தும், எதிர் வினாக்களால் விடைகளை வரவழைத்தும் இவர்கள் பாடம் நடத்தும் முறையே ஒரு தனிமுறை. வகுப்புகளுக்கு வெளியேயும் பிற இடங்களிலும், தமது இல்லத்திலும், மாணவர்க
ளோடும் பிற ஆசிரியர்களோடும் இவர்கள் தந்தை போலவும், தமையன் போலவும், நண்பன் போலவும் நடந்து கொள்ளும் முறை, பிற பேராசிரியர்களும் பின்பற்றத்தக்க தொன்றாம். தமிழ்ப் பகைவர்களும் எதிரிகளும் இவரைக் கண்டால் அரிமாவைக் கண்ட ஆனை போல் அஞ்சி ஒளிவர். நெடுமாலென வளர்ந்த உடலும், பரந்த மார்பும், திரண்ட தோளும், பார்ப்போரை ஊடுருவிச் சென்று அருட் பார்வை கொண்டு விளங்கும் பெருங் கண்களும், முறுக்கி விட்ட மீசையும், ஆடவர்களிற் சிறந்த அண்ணலாக இவர் தோற்றப் பொலிவை எடுத்துக் காட்டும்.
‘திருவள்ளுவர்’, தசரதன் குறையும் கைகேயி நிறையும் போன்ற இவரது ஆராய்ச்சி நூல்கள் இலக்கியத் திறனாய்வார்க்கெல்லாம் வழிகாட்டிகளாக விளங்குகின்றன. `மாரி வாயில் என்னும் இவரது செய்யுள் நூல், திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும் அகத்தியனார் முரஞ்சியூர் முடிநாகராயர் முதலியோரும் இருந்து தமிழாராய்ந்த தலைச்சங்கத் தனிப்பெரு நூல்களும், அகத்தியனார் தொல்காப்பியனார் முதலியோராய்ந்த இடைச் சங்க நூல்களுள் தொல்காப்பிய மொழிந்த ஏனைய நூல்களும் கிடையாதொழிந்தன. கிடைத்துள்ள கடைச் சங்கப் புலவர்களின் தனிப்பெரு நூல்களோடு வைத்தெண்ணத்தக்க சொல் நயமும் பொருள் நயமும் நடை நலமும் தொடை நலமும் வாய்ந்த தனிப் பெருஞ் சிறப்புடையது.
இன்னும் பல்லாண்டுகள் நாவலர் பாரதியார் தமிழும் தமிழரும் தழைக்குமாறு, வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.
பேருரை
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
எட்டையபுரத்து மண்
கட்டபொம்மன் வரலாற்றைப் படிக்கும் பொழுதெல்லாம் எட்டையபுரத்து மண்ணின் மீது ஒரு வெறுப்புத் தோன்றும். தமிழ் வாழ்க என்று ஒலித்த தமிழர்களின் தலையில் அங்குள்ள தமிழர்களே கல்லால் அடித்துச் செங்குருதியை வழியவிட்ட வரலாறும் அம்மண்ணை வெறுக்கச் செய்யும். என்றாலும் தமிழ் வளர்த்த மன்னர்களை, தமிழ் வளர்த்த புலவர்களை, தமிழ் வளர்த்த பாரதிகளை வளர்த்த மண் அம்மண் என்ற எண்ணம் உடனே வரும். மனம் மாறும். புண் ஆறும்.
மணியும் முத்தும்
தந்தை சுப்பிரமணியம், தாய், முத்தம்மாள். இந்த மணியிலிருந்தும் முத்திலிருந்தும் பிறந்த தமிழ் ஒளியை நிலவொளி என நினைத்தோ, தந்தையின் நெருங்கிய உறவினரும், அக்காலப் பிரசங்க கேசரியும் ஆகிய திரு சோமசுந்தர நாயகரை எண்ணியோ இவ்வொளிக்குச் சோமசுந்தரம் எனப் பெயரிட்டனர். பிறந்த ஆண்டு 1879. இன்றைய வயது 78.
சோ. சு. பாரதி
இது சோமசுந்தர பாரதி என்றாகாது சோமு பாரதி, சுப்பு பாரதி என்ற இரட்டையர்களைக் குறிக்கத் தோன்றிய ஒரு சொற்றொடர். சோ. பாரதியின் வீட்டிற்குப் பக்கத்து வீடே சுப்பிரமணிய பாரதியின் வீடு. சோ. பாரதிக்கு, சு. பாரதி மூன்று ஆண்டுகளுக்கு இளையவர். இன்று இருந்தால் அவருக்கு 75 வயது இருக்கும். இருவரும் தோழர்கள். இவ்விருவருக்கும் தமிழில் ஒரு வெறி தோன்றியது.
சந்தேக பாரதி
மூன்று வயதில் சம்பந்தர் எப்படித் தேவாரம் பாடினார் என்ற சந்தேகம் சோ. பாரதிக்கு அதிகம். அத்தகைய சந்தேகப் பாரதியை 7 வயதில் வெண்பாவைப் பாடிக் காட்டி நம்ப வைத்தார் சுப்பிரமணிய பாரதி.
பயங்கொள்ளிப் பாரதி
திண்ணைப் பள்ளிக்கூடத்திலோ, தமிழாசிரியர்களிடத்திலோ இவர்களிருவரும் தமிழ் படித்ததில்லை. இவர்கள் இருவரும் தமிழ் படித்தவிடம் எட்டையபுரத்துக் கோவிலின் உட்பிரகாரத்து வாகன மண்டபம். அதிலும் பெற்றோர்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் வாகனத்தின் மறைவிலிருந்து தமிழ் படித்தவர்கள். காரணம் தமிழ் படித்தால் அடி உறுதி என்ற பயமேயாம். நீங்கள் எப்போதாவது எட்டையபுரத்திற்குச் சென்றால் தமிழ்த் தாய் இப்பிள்ளைகளுக்கு அன்பால் கொடுத்து வளர்த்த அவ்விடத்தைப் பார்த்து மகிழுங்கள்.
பாரதத்தில் பாரதி
புலவர்கள் வழங்கிய பட்டம் இவ்விருவரின் புலமையை வியந்தேயாகும். பாரதி என்பதன் பொருள் சரசுவதி என்பது. அது கலைமகளை, அவளருளைக் குறிக்கும். எனினும் இவர்கள் அதற்குக் கூறும் விளக்கம் பாரதத் தாயின் மக்கள் யாவரும் பாரதி என்பதே.
மாணவ ஆசிரியப் பாரதி
இருவரும் தமிழ் இலக்கணம் பயின்றார்கள். தாமாகவே படித்தார்கள். ஓய்வுள்ள போதெல்லாம் படித்தார்கள். சோமுவுக்குச் சுப்புவும், சுப்புவுக்குச் சோமுவுமே இலக்கண ஆசிரியர்களாகத் திகழ்ந்தார்கள்.
பிரிந்து போன பாரதி
தமிழ்க் கலையும் அலையும் புரண்டுவரும் காவிரியை அரங்கம் தடுத்து அங்கேயே பிரித்து விட்டதைப் போல, அன்பு புரண்டு வரும் இவ்விருவரையும் ஆங்கிலப் படிப்புத் தடுத்து அவ்விடத்திலேயே பிரித்து விட்டது.
கலை இளைஞன் பாரதி
சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்ற சோமசுந்தர பாரதி பி.ஏ., பட்டத்தைப் பெற்றது 1902இல் அப்போது அவருக்கு வயது 23.
சட்ட அறிஞன் பாரதி
பாரதியார் சட்டக் கல்லூரியில் பயின்று பி.எஸ்., பட்டமும் பெற்றார், அது 1905இல். அப்போது சட்டப் படிப்பின் காலம் மூன்று ஆண்டுகளாகும்.
வழக்கறிஞன் பாரதி
வழக்கறிஞர் தொழிலை உடனே தொடங்கினார். தொடங்கியது தூத்துக்குடியில். அங்கு 15 ஆண்டுகள் நடத்திய பிறகு மதுரைக்கு வந்து பத்து ஆண்டுகள் வரை இத் தொழிலை நடத்தினார். அக்காலத்தில் இவரது தொழில் பலரது கவனத்தையும் இழுப்பதாக இருந்தது.
கலைத் தலைவன் பாரதி
வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லுரியில் படிக்காமல் தானாகவே தனித்துப் படித்து எம்.ஏ., பட்டம் பெற்றார். அது 1913இல். இந்நிகழ்ச்சி அக்காலத்தில் பலருக்கு வியப்பையளித்தது.
எழுத்தாளன் பாரதி
தமிழ் மொழியில் சிறந்த கருத்துக்களை உயர்ந்த நடையில் அழகு பெற அமைத்து, அழுத்தமாக எழுதும் ஆற்றல் ஒரு தனிப்பட்ட முறையாகப் பாரதியாரிடம் அமைந்திருந்தது. அவரது கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வாங்கி வெளியிட்டு வந்த அக்காலப் பத்திரிகைகள் மதுரைச் செந்தமிழ், கரந்தைத் தமிழ்ப் பொழில், சென்னைச் செந்தமிழ்ச் செல்வி முதலியன.
பேச்சாளர் பாரதி
வள்ளுவன் வரலாற்றை அறியப் புலவர்கள் விரும்பினர். அதற்காக ஒரு பெருங் கூட்டத்தைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராதரவோடு கூட்டினர். கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி மண்டபம். கூடிய நாள் 1929 மார்ச்சு 11. பேசியவர் சிலர். வெற்றி பெற்றது பாரதியின் பேச்சு. ஒப்பியவர்களில் தலைமை வகித்தவர் உ. வே. சாமிநாத ஐயர். இப் பேச்சுப் புத்தக வடிவில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது வெளியீடாக வெளியிடப் பெற்றிருக்கிறது.
கவிஞன் பாரதி
இவர் எழுதிய கவிதைகள் பல. அவற்றுள் முழுவதும் கவிதைகளாக வெளிவந்த நூல்கள் இரண்டு. ஒன்று மாரி வாயில்; மற்றொன்று மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி. இக் கவிதைகட்கு என்றும் உயிர் உண்டு.
ஆராய்ச்சியாளன் பாரதி
சேரர் தாயமுறை, தசரதன் குறையும் கைகேயியின் நிறையும், சேரர் பேரூர் என்று தமிழ் மொழியில் மூன்று ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இம்மூன்று நூல்களும் தமிழ் அறிஞர்களுக்குப் பெரு விருந்தளிப்பனவாக அமைந்தன.
தொல்காப்பிய பாரதி
தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தை ஆராய்ந்து அகம், புறம், மெய்ப்பாடு ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் விளக்கம் எழுதித் தனித்தனி நூல்களாக வெளியிட்டிருக்கின்றனர். இன்னும் சில கருத்துக்கள் அச்சிடப்படாமல் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கும் இன்றைய ஒரே புலவன் பாரதி. இவர்களோடு தொல்காப்பியத்தின் பரம்பரைப் புலமை அற்றுப் போகாதிருக்க வேண்டுமே என்ற கவலை இன்றையத் தமிழறி
ஞர்களுக்கு உண்டாக வேண்டுமே என்பதே என் கவலை.
நூலாசிரியர் பாரதி
தமிழகமும் பழந்தமிழ் நூல்களும் என்ற பெயரில் ஓர் அரிய நூலை ஆங்கில மொழியில் எழுதி உலக நூலாசிரியர் குழுவில் ஒருவராகத் திகழ்பவர் பாரதி. தமிழை, தமிழரை, தமிழகத்தை அறிய விரும்பும் பிற நாட்டினர்க்கு இந்நூல் பெருந்துணையாக இருந்து வருகிறது.
சீர்திருத்த வீரன் பாரதி
சாதி வெறி மிகுதியாகத் தலைவிரித்து ஆடிய அக்காலத்திலேயே சாதிமுறை ஒழிந்தாக வேண்டும் என எழுதிப், பேசி, நடந்து காட்டியவர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தம் திருமணத்தையே தமிழ்த் திருமணமாக நடத்திக் காட்டியவர்.
அரசியல் தலைவன் பாரதி
இளமையிலிருந்தே பாரதி, சிறந்த தேசத் தொண்டர் வ.உ.சி. யுடன் இருந்து பெருந் தொண்டு செய்தவர். வர மறுத்துங் கூடக் காந்தியடிகளைக் கட்டாயப்படுத்தித் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பேசச் செய்தவர். இன்றுங்கூடப் பாரதியாருக்குக் காந்தியடிகள் மீது மாறாத அன்பு உண்டு.
தமிழர் தலைவன் பாரதி
தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்கருதி 1938இல் தோன்றிய தமிழர் கழகத்திற்குத் தலைமை தாங்கி நாடு முழுவதும் சுற்றி அலைந்து, பல கிளைக் கழகங்களைத் தோற்றுவித்து இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி மொழிப் போராட்ட வீரர்களில் முதல்வராய் இருந்து வெற்றி கண்டவர் பாரதி.
நடுநாள் கண்ட பாரதி
ஆரியர்களுக்கு நாள் தொடக்கம் காலை 6 மணி. அராபியர்களுக்கு நாள் தொடக்கம் மாலை 6மணி. ஐரோப்பியர்களுக்கு நாள் தொடக்கம் நள்ளிரவு 12 மணி. ஆனால், தமிழர்களின் தொடக்கம் நண்பகல் 12 மணி எனக் கண்டு கூறியவர் பாரதி. இக்கருத்தை அரண் செய்வது புறம் 280இல் உள்ள நடுநாள் வந்து என்ற சொற்றொடர்.
சான்று காட்டும் பாரதி
பல சமயங்களில் பாரதியார் கூறும் முடிவைவிட அவர் காட்டும் சான்று சிறப்புடையதாக இருக்கும். அவற்றுள் ஒன்று இது. திருவள்ளுவ மாலை வள்ளுவர் காலத்திலேயே பாடப் பெற்றது என்பது பலரது முடிவு. பிற்காலத்துப் புலவர்களால் பாடப் பெற்றது என்பது பாரதியின் முடிவு. அதற்கவர் காட்டும் சான்று உயிரோ டிருக்கும் காலத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டுகின்ற வழக்கம் தமிழ்ப் புலவர்கள் தோன்றிய காலந் தொட்டு இன்று வரையிலில்லை என்பதே.
பேராசிரியர் பாரதி
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று, மதுரையில் தாம் நடத்தி வந்த வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டுச் சென்று, ஐந்து ஆண்டுக் காலம் பேராசிரியராக இருந்து தமிழ்ப் பணி செய்து வந்தவர். இது 1933 முதல் 1938 வரையிருக்குமென எண்ணுகிறேன்.
பெரும் புலவன் பாரதி
பாரதியார் பழங்காலப் பெரும் புலவர்களில் ஒருவராக விளங்கியவர். அவரோடு ஒத்த புலவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தகுந்த பெருமை வாய்ந்தவர்கள் : வெள்ளகால் வி.பி. சுப்பிரமணிய முதலியார், உ.வே. சாமிநாதையர், அரசஞ் சண்முகனார், ரா. இராகவையங்கார், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், மு.ரா. அருணாசலக் கவிராயவர், பா.வே. மாணிக்க நாயக்கர், சுவாமி விபுலானந்தர், ந.மு.வே. நாட்டாரையா, நெல்லையப்பக் கவிராயர், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, கா. சுப்பிரமணிய பிள்ளை முதலியோர்.
புலவர் தலைவன் பாரதி
இவர்களிடம் பயின்ற மாணவர்களில் பலர் இன்று பெரும் புலவர்களாகவும் பேராசிரியர்களாகவும் திகழ்கின்றனர். அவர்களிற் சிலர் தமிழ்த் துறைக்குத் தலைமை வகித்துத் தனித் தனியாகப் பல கல்லூரிகளையும் பல்கலைக்கழகத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள். டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், பூ, ஆலால சுந்தரன் செட்டியார், அ.ச.ஞானசம்பந்தன், வெள்ளை வாரணனார், இராசரத்தினம் அம்மையார், ஆர். இராசாமணி அம்மையார் முதலியோர்.
வாது புரியும் பாரதி
தசரதன் குறை என்ற நூலைப் பற்றிப் புலவர் சிலர் மனக்குறையடைந்த செய்தி இராமநாதபுரம் மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி அவர்கட்கு எட்டியது. அவர் தமது சமத்தானப் புலவராகிய ரா. இராகவையங்கார் அவர்களை அழைத்து இதுபற்றிப் பாரதியாரோடு வாது புரியலாமா? என வினவினார். ஐயங்கார் விரிந்த மனப்பான்மை யுடையவர். ஆதலின் அவர் கூறிய விளக்கத்தினால் அது நடைபெறாமற் போயிற்று.
உண்மை கண்ட பாரதி
சேரன் தலைநகரமாகிய வஞ்சி, திருச்சியை அடுத்துள்ள கரூரே என்று மு. இராகவையங்கார் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்கள். பாரதியார் அதை மறுத்துத் திருச்சியில் உள்ள கரூரில் கடற்கரைப் பகுதி இல்லை என்பதை எடுத்துக்காட்டி சேர நாட்டுக் கடற்கரைப் பகுதியிலுள்ள பட்டினமே வஞ்சியும் கரூரும் ஆகும் என நிலைநாட்டினார். காலப்போக்கில் உண்மை பாரதியாரையே தழுவியது.
நாவலர் பாரதி
சுவாமி விபுலானந்தா அவர்களின் அழைப்பினை ஏற்றுப் பாரதியார் இலங்கைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழ் மழை பொழிந்தார். மனங்குளிர்ந்த அங்குள்ள புலவர் பெருமக்களால் வாழ்த்தி வழங்கப் பெற்ற பட்டமே நாவலர் பட்டமாகும்.
டாக்டர் பாரதி
ஒல்லும் வகையெல்லாம் ஓயாது தொண்டு செய்து மொழியை வளர்த்த மூதறிஞர் நாவலர்க்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினர் சென்னை மாநிலம் முழுவதையும் கூட்டி வைத்து வழங்கி மகிழ்ந்த பட்டமே டாக்டர் பட்டமாகும்.
உணர்ச்சி வெள்ளம் பாரதி
சுப்பிரமணிய பாரதி புதுச்சேரி சென்று செயலிழந்து இருந்தபோது எவரும் எதுவும் பேசாதிருந்தனர். காரணம் அவரைப்பற்றிப் பேசினால் அது இராசத்துரோகக் குற்றம் ஆகும் என்பதே. அக்காலத்தில் சுப்பிரமணிய பாரதியைப் புதுச்சேரியில் விட்டு வைத்திருப்பது தமிழுக்கு ஒரு இழப்பு, தமிழனுக்கு ஒரு இழிவு, தமிழகத்திற்கு ஒரு மானக்கேடு என்று எழுதிப், பேசிக், கண்டித்துப் பத்திரிகைகளில் வெளியிட்டுப் பலனை எதிர்பார்த்திருந்த உணர்ச்சி வெள்ளம் பாரதியின் உள்ளம். இதற்காக விடுதலை பெற்று வந்ததும் சு. பாரதி, சோ. பாரதியைக் கட்டித் தழுவிக் கண்ணீருகுத்த காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.
நல்ல தமிழன் பாரதி
இத்தகைய உயர்ந்த தமிழ் மகனைத் தமிழகம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை, இது தமிழ் நாட்டின் தீயூழ். எஞ்சியுள்ள நாட்களையாவது பயன்படுத்திக் கொள்வது நலமாகும். நாடு வாழ, மொழி வாழ, மக்கள் நல்வாழ்வு வாழ, பாரதியார் வாழ்ந்தாக வேண்டும் என வாழ்த்த வேண்டும். இன்றைய எழுத்தாளர் சங்கம் பாரதியை வாழ்த்திப் பயன் பெறுகிறது. அதற்கு எனது வாழ்த்து. அது இன்னும் பல பேரறிஞர்களையும் வாழ்த்தி வளர வேண்டும் என முழுமனதோடு வாழ்த்துகிறேன்.
வாழட்டும் பாரதி!
வளரட்டும் தமிழ் மொழி
செந்தமிழ் விளக்கும் செஞ்ஞாயிறு
பொன்னும் மணியும் வரன்றிப் போதரும்
பன்னிற ஆடையிற் பரந்தவா லருவியும்
தென்றலும் மாறாத் தென்பொதி யம்மும்
என்றும் மாறா இயற்கை நலந்தரும்
செந்தமிழ் நாட்டில் சீர்கெழும் இளசையில்
வந்து தோன்றிய வான்குடித் தோன்றல்
இருந்தமிழ்க் கடலும் ஏற்றஆங் கிலமாம்
பெருமொழிக் கடலும் கடந்த பெற்றியன்
சோமசுந் தரனெனும் ஏமமார் பெயரோ
வாமமால் வரையென வளர்தோற் றத்தான்
அண்ணா மலைப்பல் கலைக்கழ கத்தின்
நண்ணிய தமிழ்ப்பே ராசான் நாவலன்
தொல்காப் பியஅகத் திணைபுறத் திணையியற்(கு)
அல்கா விரிவுரை ஆக்கிய அறிஞன்
கேளாரும் கேட்ப விரிவுரை கிளத்துவோன்
தமிழ்ப்பெரும் புலவன் தண்டமிழ் நாட்டிடை
வாழிய வையை மணலினும் பலவே.
- செல்லூர்க்கிழார் செ.ரெ. இராமசாமிப் பிள்ளை
சில நினைவுகள்
எ. கதிர்வேலாயுதம்,
தலைவர், சு.வி.வா.சங்கம், காரைக்கால்.
நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் காரைக்காலில் 13, 14-02-1943 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் பேசுவதற்காகச் சென்றிருந்தார். அப்போது நடைபெற்ற நிகழ்வுகளை 25-12-1995இல் திரு எ. கதிர்வேலாயுதம் பின்வருமாறு எழுதி அனுப்பியுள்ளார்.
இல்லத்து நினைவுகள்
1. பாரதியார் தொல்காப்பியத்திற்கு எழுதிய உரை நூல்களை 13-02-1943 அன்று மறைமலையடிகளார்க்குக் காரைக்காலிலிருந்து அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.
2. மறைமலையடிகளின் மகன் திருநாவுக்கரசு, பாரதியார் தலைமையின்கீழ் சமயச் சொற்பொழிவு நிகழ்த்த அச்சங் கொண்டார். இதனைத் தலைவருக்கு மெதுவாக எடுத்துரைக்கப் பட்டது. சற்றும் சுளிக்காமல் திருநாவுக்கரசு தன் கருத்தைச் சுதந்திரமாகப் பேசுவதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை என்றார். முடிவுரையில் குறைவான விமர்சனம் இருக்காது என்று நாங்கள் அமைதியுற்றோம். பாரதியாரின் சகிப்புத் தன்மை அல்லது விட்டுக் கொடுக்கும் தன்மை எங்களை வியக்க வைத்தது.
3. உரையாடிக் கொண்டிருந்தபோதுதான் இங்கிருந்து சென்னை செல்வதாகவும் எழும்பூர் இரெயில் நிலையத்தில் நான், நீ என்று அடித்து மோதிக் கொண்டு என் கைப்பெட்டியைப் பிடுங்கும் தமிழனின் கேவல நிலைமை என்று மாறுகிறதோ அன்றுதான் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்றார். அவரது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.
ஆண்டு விழா மேடை நினைவுகள்
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டவாறு பாரதியார் 14.2.43 ஞாயிறு மாலை 3.45 மணிக்கு மேடை மீதமர்ந்தார்.
1. அவையில் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. அவர்கள் மேடைக்குச் சேய்மையில்அமர்ந்தனர். சங்கத்தினராகிய எங்களுக்குக் கூட்டம் குறைவாக இருக்கிறதே என்று கவலையடைந்திருந்தோம். எங்கள் முகம் தொங்கி இருந்தது. ஆனால் அவையோரைப் பார்த்து நெருங்கி வாருங்கள். அளவில் சிறியதாயிருப்பினும் இந்த அவை போதும். நிகழ்ச்சியைத் தொடங்குவேன் என்றார். குறித்த நேரத்தில் அவை தொடங்க வேண்டும் என்ற நெறியைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தார்.
2. விழா நடந்த காரைக்காலம்மையார் திருவரங்குக் கெதிரிலுள்ள குறுந்தெருவில் இந்து சமரச சன்மார்க்க சங்கம் என்ற ஒரு பலகை இராமலிங்கசுவாமி மடத்திற்கு முன்னால் இருந்தது. அதைக் கண்ணுற்ற பாரதியார் தன் உரை நடுவே, இந்து என்ற சொல்லுக்குக் கண்டனம் தெரிவித்துப் பொதுவாகச் சமரச சன்
மார்க்கம் என்றிருக்க வேண்டும் என்று வாதிட்டார். அதன் பின்னர் பலகையில் இந்து நீக்கப்பட்டுச் சமரச சன்மார்க்க சங்கம் மட்டும் நிலைத்தது.
3. பாரதியார் உரையின் மையக் கருத்தாகத் தமிழன் தாழ்ந்த நிலையில் இருக்கிறான். மேலை நாட்டான் போல் உயர வேண்டும் என்ற உணர்ச்சி வெள்ளம் அமைந்தது.
4. இத்துடன் நிகழ்ச்சி நிரலின் ஆண்டறிக்கைப் பகுதியின் உட்பக்க நகல் இணைத்துள்ளேன்.
ஆறாவதாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
ஆறாவதாண்டு நிறைவு விழா சித்திரபானு ஆண்டு மாசித் திங்கள் க.உ (13, 14-2-43) நாட்களில் பசுமலை உயர்திரு. சொன்மறவர் ச. சோமசுந்தர பாரதியார் M.A.,B.L., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதுபோழ்து கீழ்க்காணும் அறிஞர்களின் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன.
1. பண்டைத் தமிழ்ப் புலவர்களும் அரசியலும் புலவர் உயர்திரு சி. இலக்குவர் அவர்கள், B.O.L. தமிழ் விரிவுரையாளர், அரசர் கல்லூரி, திருவையாறு.
2. வள்ளல் உள்ளம் புலவர் உயர்திரு மு. இராசாக்கண்ணு அவர்கள், B.O.L. தமிழாசிரியர், செயின்ட் அன்னி உயர்பள்ளி, சென்னை.
3. மாணிக்கவாசகரும் இராமகிருஷ்ணரும் புலவர் உயர்திரு மறை. திருநாவுக்கரசு அவர்கள், சைவ சமயச் சொற்பொழிவாளர், H.R.E. Board, சென்னை.
4. சைவமும் வைணவமும் புலவர் உயர்திரு மா. இராசமாணிக்கம் அவர்கள், B.O.L. தமிழாசிரியர், முத்தியாலுப் பேட்டை, சென்னை.
5. புறநானூறு புலவர் உயர்திரு வி.மு. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள், தமிழாசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
6. தமிழ்நாடும் இளைஞர்களும் புலவர் உயர்திரு மு. இராசாக்கண்ணு அவர்கள், B.O.L. சென்னை.
7. உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும் உயர்திரு அ. முருகசாமி அவர்கள், வி.வா.ச. காரை.
நாவலர் ச.சோ. பாரதியாரின் நற்றமிழ்ப்பணி
குறிப்பு : நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மாணவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவருமான பேராசிரியர் திரு க. வெள்ளைவாரணனாரும், நாவலர் ச.சோ. பாரதியாருடன் நெருங்கித் தொடர்பு கொண்டு, அன்னாரது தமிழ்ப்பணி குறித்து ஆராய்ச்சி செய்து வருபவரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வித் தமிழ் இணைப்பேராசிரியருமான திரு ச. சாம்பசிவனாரும் பங்குகொண்டு கலந்துரையாடிய உரைப்பகுதி இடம்பெறுகிறது. இலக்கியச் சிந்தனைகள் என்ற தொடரில் 08-03-1981 அன்று திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியில் இக்கலந்துரையாடல் பகுதி ஒலிபரப்
பாகியது.
ச.சாம்பசிவனார் எழுப்பிய வினாக்களுக்கு க. வெள்ளை வாரணனார் விடை தருகின்றார்.
வினா :
பேராசிரியர் உயர்திரு க. வெள்ளைவாரணனார் அவர்களே! வணக்கம்.
தமிழ்மகள் உறங்கத் தான்விழித்திருந்து
இமையசை யாதொரு பகையணுகாமல்
காத்திருந்தான்!
ஆற்றொழுக் காயசெந் தேன்தமிழ் ஊற்றி
அற்றையப் புகழ்நிலம் பிற்றைய நாளிலும்
மாற்றலர் கைகளில் மாண்டொழி யாவணம்
காத்திருந்தான்!
பாரதிர்ந் தெழுந்து யார்யாரெனக் கேட்குமாறு
ஊரெழுந் தோடிஎம் உயிரெனக் கூறுமாறு
ஏரெழுந் தன்னஎம் பாரதி எழுந்துசொல்
மாரி பெய்வான்! புனல்மாரி பெய்வான் என
மாத மும்மாரி இம்மண்ணிடைப் பொய்ப்பினும்
நாத மும்மாரி நடாத்துவன் பாரதி!
என்று கவியரசு கண்ணதாசனால் போற்றப்படும் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரைத் தமிழ்ப்பெருமக்கள் நன்கு அறிவர். அத்தகு பெரியாரோடு கடைசிச்சில ஆண்டுகள் தொடர்புகொண்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. இருந்தாலும், தாங்கள், அன்னாரின் தலையாய மாணவராயிருந்ததோடு மட்டுமல்லாமல், அவர் பணியாற்றிய அதே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி விரிவுரையாளராகவும், பின்னர் அவரைப் போலவே அப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்து தமிழ்ப்பணி செய்துள்ளீர்கள் நாவலர் பாரதியாரோடு தாங்கள் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகி யிருப்பதால் அன்னாரின் நற்றமிழ்ப்பணி குறித்துத் தங்களிடம் உரையாடி அறிந்து கொள்வதில் அளவுகடந்த மகிழ்ச்சி ஏற்படும் என்று சொல்ல வேண்டியதில்லை. முதலில் நாவலர் பாரதியாரின் இளமைப் பருவம், கல்விப்பயிற்சி பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறீர்களா?
விடை :
நண்பர் சாம்பசிவன் அவர்களே! என் வணக்கத்திற்குரிய பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியாரவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்கள்தான் முதன்முதலில் எழுதியிருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு அவர் வரலாறு நன்கு தெரியும். என்றாலும் அவரோடு பல ஆண்டுகள் கூடவே இருந்து பழகும் வாய்ப்பு எனக்கு இருந்ததால் சில நிகழ்ச்சிகள் எனக்கு அதிகமாகத் தெரிந்திருக்கும் என்பது உண்மைதான்.
நாவலர் சோமசுந்தர பாரதியாரவர்கள் கி.பி. 1879 சூலைத் திங்கள் 27ஆம் நாள் எட்டயபுரத்தில் சுப்பிரமணிய நாயகர் என்னும் இயற்பெயருடைய எட்டப்ப பிள்ளைக்கும் அவர் மனைவியார் முத்தம்மாள் அவர்கட்கும் மகவாய்த் தோன்றினார்.
அவர்தம் தந்தையார் சுப்பிரமணிய நாயகர், சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் அவர்கள்பால் தமக்குள்ள பேரன்பினாலும் பெருமதிப்பினாலும் உறவினாலும் தம் மைந்தர்க்குச் சோமசுந்தரம் எனப் பெயரிட்டார்.
இவருடைய தாயார் முத்தம்மாள் அவர்கள் எட்டயபுரத்து அரசியார் இலக்குமி அம்மையாரால் சுவீகாரப் புதல்வியாக வளர்க்கப் பெற்றவர். எனவே, முத்தம்மாள் பெற்ற சோம சுந்தரனார் முப்பதுநாள் குழந்தையாய் இருக்கும்போதே எட்டயபுரம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பெற்று, அரசியாரின் பெயரன் என்ற முறையில் சிறப்பாக வளர்க்கப் பெற்றார்.
இவர் தமது ஐந்தாம் வயதில் அரண்மனை ஆசிரியர் சங்கர சாத்திரியாரைக் கொண்டு தமிழ் வடமொழி இரண்டிலும் எழுத்து அறிவிக்கப்பெற்றார்.
எட்டயபுரத்தில் அப்பொழுது ஆங்கிலப்பள்ளி இல்லை. திண்ணைப் பள்ளிக்கூடமொன்றே நிகழ்ந்து வந்தது. அரசியார் சோமசுந்தரத்தை அத் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார். அதனை நடத்திய ஆசிரியர் தெய்வ சிகாமணி ஐயங்கார் அவர்கள் நம் சோமசுந்தரரைப் பேரன்புடன் வரவேற்று வாழ்த்தினார். இவர் பள்ளியில் சேர்ந்த அன்று ஒரு மாணவனுக்குக் கொடுக்கப்பட்ட கொடுந்தண்டனை இவர் உள்ளத்தை மாற்றிவிட்டது.
மாணவனைக் கடும்வெயிலிற் குனியவைத்து முதுகில் கல் சுமத்திக் குருதி வழிய ஆசிரியர் அடித்த துன்பநிலையைக் கண்ட சோமசுந்தரர் அதனைப் பொறுக்கலாற்றாது, அழுது புலம்பிக் கொண்டே அரண்மனைக்கு ஓடினார். நிகழ்ந்ததை அரசியாரிடம் தெரிவித்தார். திரும்பவும் தன்னை அப்பள்ளிக்கு அனுப்பினால் பாழுங்கிணற்றில் வீழ்ந்து தம் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் முறையிட்டார். அதனைக் கேட்ட அரசியார் அவருக்கு ஆறுதல் மொழி கூறியதுடன், அவரை யாரும் அப்பள்ளிக்கு அழைத்துச் செல்லக்கூடாதென்றும் உத்தர விட்டார்.
ஒன்பது வயது வரை இவர் எட்டயபுரம் அரண்மனைப் பிள்ளைகளுடன் உரிமையோடு திரிந்து விளையாடி அரண்மனையிலேயே தங்கி இருந்தார். இதனால் இவரது பள்ளிப்படிப்பு தடைப்பட்டாலும் இவர் பெற்ற பயன்கள் பலவாகும்.
அஞ்சாநெஞ்சமும், எத்தகைய எதிர்ப்பின் நடுவிலும் தாம் எண்ணிய செயலை நிறைவேற்றும் உறுதிப்பாடும், உள்ளதை உள்ளவாறே உரைக்கும் உண்மை உணர்வும் எங்கும் எவரிடமும் அடக்குமுறையை மறுத்து, தம் உரிமையோடு வாழும் உரிமை உயர்வும் நாவலர் பாரதியார் அவர்கள்பால் அமைந்தமைக்கு இவ்வரண்மனை வாழ்வே சிறந்த காரணமாகும்.
இவரை அன்போடு வளர்த்த அரசியார் இறைவனடி எய்தியபின் தந்தையின் வற்புறுத்தலும் அன்னையின் அன்பும் இவரைப் பள்ளிக்குச் செல்லத் தூண்டின. இவர் தமது பதினொன்றாம் வயதில்தான் எட்டயபுரத்தில் உள்ள பிறிதொரு பள்ளியிற் சேர்ந்து எட்டாம் வகுப்பு வரையில் படித்தார்.
எட்டயபுரம் சமதானம் தமிழ்ப் புலவர்களைப் போற்றும் தனிச் சிறப்புடையதாக விளங்கியதனாலும், அரசவைப் புலவர் சிலருடன், இவர்க்கு இயல்பாகவே ஏற்பட்ட தொடர்பினாலும் தமிழ்ப்பற்று இவரோடு கூடவே வளர்ந்ததில் வியப்பில்லை.
எட்டயபுரத்தில் எட்டாம் வகுப்புவரை தமது கல்வியை முடித்த நாவலர் திருநெல்வேலி சென்று அங்கிருந்த சர்ச்சு மிஷன் உயர்நிலைப்பள்ளியில் படித்துத் தேறினார். அங்குப் படித்து முடித்தவுடன் அதனோடு தொடர்ந்துள்ள கல்லூரியில் எப்.ஏ. வகுப்பிற் சேர்ந்து பயின்று தேர்ந்தார்.
இவர் இக்கல்லூரியிற் பயிலும் காலத்து, ஆங்கிலம் கணக்கு தமிழ் முதலிய பாடங்களில் சிறந்த முறையில் பயின்றமையால் கல்லூரி முதல்வரது அன்புக்கும் ஆதரவுக்கும் உரியரானார்.
நெல்லையில், கல்லூரி இடைநிலை வகுப்பை முடித்த நாவலர் தம் கல்லூரி முதல்வரது பரிந்துரையினைப் பெற்று, சென்னையிலுள்ள கிருத்தவக் கல்லூரியில் இளங்கலை வகுப்பிற் சேர்ந்து பயின்றார். அந்நிலையில் அக்கல்லூரியின் முதல்வரும் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரும் ஆகிய மில்லர் துரைமகனார் அவர்களது பேரன்புக்கு உரியராம் பெருமையைப் பெற்றார்.
கிருத்துவக் கல்லூரியில் இவர்கள் பயிலும்போது, தமிழ்க் கடலாகிய மறைமலை அடிகளாரும், தனித்தமிழிலுள்ள பேரார்வத்தால் தமது பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்ட பேராசிரியர் வி.கோ. சூரியநாராயண சாத்திரியார் அவர்களும், தமிழ்த்துறையிற் பணிபுரிந்தமை நாவலர் பாரதியாரது இயல்பாகிய தமிழ்ப் பற்றுக்கும் புலமைக்கும் உரமூட்டுவதாயிற்று.
கிருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ. பட்டம்) பெற்றபின், சென்னையிலுள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில விரும்பினார்.
உயர்நிலைக் கல்வியினை முடித்த காலத்திலேயே மீனாட்சி அம்மையாரை வாழ்க்கைத் துணையாக மணந்து கொண்ட நாவலர் மூன்று மக்கட்குத் தந்தையான இவர் குடும்பப்பொறுப்பு முழுவதையும் தாமே மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருந்தார். தம்முடைய கல்விப் பயிற்சிக்கெனப் பிறரது உதவியை நாடும் எண்ணமும் இவர்பால் தோன்றவில்லை. எனவே, காலம் சென்ற எட்டயபுரம் அரசியார் இவர்பால் வைத்த அன்பின் காரணமாக அளித்திருந்த பன்னிரண்டு ஏக்கர் நிலத்தையும் விற்றுத் தம்முடைய சட்டப் படிப்பைத் தொடங்கினார். கி.பி. 1905ஆம் ஆண்டில் சட்டப் படிப்புத் தேர்வு எழுதினார். அத்தேர்வு முடிவு தெரியும்வரையிலும் ஏதேனும் ஓர் அலுவலை மேற்கொண்டு தமது குடும்பத்தை நடத்தவேண்டிய கடமையுடையவரானார்.
சென்னையிலுள்ள அரசினர் வருவாய்த்துறை அலுவலகத்தில், எழுத்தர் ஒருவர் தேவையென அறிந்தார். அவ்வலுவலகத் தலைவரிடம் தாமே நேரிற் சென்று வேலை தருமாறு வேண்டினார்.
இவரோடு உரையாடி இவர்தம் சொல் வன்மையினையும் உள்ளத் திண்மையையும் கண்ட அலுவலகத் தலைவர் இவரை உடனே வேலையில் அமர்த்திக் கொண்டார்.
அவ்வலுவலகத்தில் எழுத்தராக இவர் பணிபுரியும் காலத்து வெள்ளையராய் உள்ளோர் இந்தியர்களைக் குறைவாக நடத்தும் முறையை உறுதியுடன் எடுத்துக்காட்டி அலுவலகத் தலைவர் ஆதரவு கொண்டு இந்தியரது உரிமையுணர்வை நிலைநாட்டிய பெருமை இவர்க்குரிய தனிச் சிறப்பாகும்.
சில நாட்களில் இவர் சட்டத் தேர்வில் (பி.எல்.) வெற்றி பெற்ற செய்தி வெளியாகியது. இவரும் அவ்வேலையிலிருந்து விலகி, தூத்துக்குடி சென்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ளலானார்.
சட்டத்தேர்வில் வெற்றி பெற்று, வழக்கறிஞர் தொழிலைத் தொடங்குவோர் யாவரும், பெயர் பெற்ற வழக்கறிஞர் ஒருவரிடத்தே சில ஆண்டுகள் இருந்து பயிற்சி பெறுவது வழக்கம்.
ஆனால், பிறந்தது முதல் எவரிடத்தும் அடிமையாக இருந்து பணிபுரிதலை விரும்பாத நாவலர் அவர்கள் தமக்கு வழிகாட்டியாக வழக்கறிஞர் எவரையும் நாடாது, தாமே தனித்து நின்று வழக்குகளை ஏற்று வெற்றிபெற நடத்திக் காட்டினார். இச்செயல் இவர்தம் தன்மான உணர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
1905 முதல் 1920ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியிலேயே இவர் வழக்கறிஞராய் இருந்தார். அப்பொழுது, நாட்டுக் கோட்டை நகரத்தார் சிலர் தம் வழக்கினை நடத்தும்படி தேவகோட்டைக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
நகரத்தாராகிய அன்பர்கள் சிலர் தூத்துக்குடியை விட்டு மதுரைக்கு வந்து தொழில் நடத்துமாறு இவரைப் பன்முறையும் வேண்டிக் கொண்டார்கள். அவர்களது விருப்பத்திற்கிணங்கவே நாவலர் பாரதியாரவர்கள் 1920ஆம் ஆண்டு முதல் மதுரைக்கு வந்து தமது வழக்கறிஞர் தொழிலை நடத்தத் தொடங்கினார். இத்தொழிலின் தொடக்க கால முதற் கொண்டு இத்தொழிலில் இவருக்கு நல்ல புகழும் ஆதரவும் உண்டாயின.
தம்மிடம் வரும் வழக்குகளை, பலமுறை துருவி ஆராய்ந்து நேர்மையுடையதெனத் தெளிந்தாலன்றி இவர் எவ்வழக்கையும் எடுத்துக் கொள்வதில்லை. தாம் ஏற்றுக் கொண்ட வழக்கையும், எதிர்க்கட்சியினர் எந்தெந்தக் காரணங்களைக் கொண்டு மறுப்பரென்பதனை முதலிலேயே சிந்தித்துப் பார்த்து அவற்றிற்குத் தக்க விடைகளையும் தேர்ந்து கொண்டு தம் கட்சியாளர்க்கு வெற்றி தேடித் தருவதனை இவர்தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தமையால் இவரை நாடினால் நம் வழக்கு வெற்றி பெறுதல் உறுதி என்னும் நம்பிக்கை கட்சிக்காரர்களிடையே நிலைபெற்று வளர்ந்தது.
நாவலர் பாரதியாரவர்கள் தமது வாழ்க்கை வளங்கருதி வழக்கறிஞர் தொழிலை நடத்திக் கொண்டிருக்கும்பொழுதே தமக்கு இயல்பாக அமைந்த தமிழ்ப் பற்றின் காரணமாக, தமிழ் நூல்களையும் தமிழர் வரலாறுகளையும் நன்கு பயின்று 1913ஆம் ஆண்டு எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க தாகும்.
நாவலரவர்கள் தமிழை முதன் மொழியாகவும், மலையாளத்தைத் துணை மொழியாகவும் கொண்டு பயின்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி எம்.ஏ. தேர்வில் சிறந்த முறையில் வெற்றியடைந்தார். இது நாவலர் பாரதியாரவர்களின் அயரா உழைப்பினையும் தமிழார்வத் தினையும் ஆராய்ச்சியுணர்வினையும் நன்கு புலப்படுத்துவதாகும்.
பழந்தமிழ் நூல்களின் சிறந்த புலமையாளராய்த் தமிழ்நிலை பெற்ற மதுரையம்பதியில் வழக்கறிஞர் தொழிலிற் சிறந்து விளங்கிய நாவலர் அவர்களுக்கு அக்காலத்தில் தமிழ்ப் புலமையில் தன்னிகரற்றுத் திகழ்ந்த தமிழ்ப்பெரும் புலவர் பலரோடும் அளவளாவும் வாய்ப்பு இயல்பாகவே அமைவதாயிற்று. மதுரையில் பாண்டித்
துரைத் தேவரவர்களால் நிறுவப்பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கப் பணிகளில் பொறுப் பேற்று நற்றமிழ்ப்பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் கடமையும் இவர்பால் வந்து சேர்வதாயிற்று. தமக்குரிய வழக்கறிஞர் தொழிலுடன் அமைந்துவிடாது தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆகிய இருவகை வழக்கினையும் நன்கு ஆராய்ந்து தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆக்கந்தேடும் ஆராய்ச்சிப்பணிக்கெனத் தம்மை ஆளாக்கிக் கொண்டமையால் இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழ்வளர்த்த பெரும் பேராசிரியர்களில் முதல் வரிசையில் வைத்துப் போற்றத் தகும் புலமையாளராக நாவலர் பாரதியாரவர்கள் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது பலரும் அறிந்த செய்தியாகும்.
வினா :
நல்லது பேராசிரியர் அவர்களே! நம் நாவலர் பாரதியார் வாழ்ந்த காலம், நம் பாரதத் திருநாடு. தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டுக் கிடந்த காலம்; ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலம். தாய் மொழியாகிய தமிழைப் படிப்பதும், பேசுவதும், எழுதுவதும் இழிவு என்று தமிழர்களே எண்ணிக்கொண்டிருந்த காலம். தமிழைப் படித்தால் மற்றவர்கள் கேவலமாக எண்ணுவார்கள் என்று எண்ணி, யாருக்கும் தெரியாமல், உள்ளூர்க் கோவில் வாகனங்களுக்கிடையே தமிழைப் படித்தார் நாவலர் என்று கேள்விப்பட்டேன். அப்படி இருக்கும்போது நாவலர் பாரதியாருக்கு மட்டும் தமிழின்மீது இளமைக் காலத்திலேயே பற்று ஏற்படக் காரணம் என்ன என்பதைச் சொல்லலாமா?
விடை :
நாவலர் அவர்கள் பிறந்த ஊராகிய எட்டயபுரம் மரபினராகிய குறுநில மன்னரால் ஆளப்பெறும் உரிமை நிலமாக விளங்கியது. இயல் இசை நாடகமாகிய முத்தமிழ்த் திறங்களையும் நன்குணர்ந்த செந்தமிழ்ப் புலவர்களையும் வடமொழியறிஞர்களையும் ஆர்வமுடன் வரவேற்றுப் பேணும் வளமனையாக எட்டப்பர் அரண்மனை விளங்கியது. செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கிய கடிகைமுத்துப் புலவர், நாகூர் முத்துப் புலவர், முத்துக்குமாரப் புலவர், பெத்தண்ணன் தளவாய் முதலிய புலவர் பெருமக்கள் எட்டயபுரம் சமத்தானத்தில் அவைக்களப் புலவர்களாக அமர்ந்து தமிழ்ப் புலமை நலத்தை வளர்த்துள்ளார்கள். இவ்வாறு தமிழ்நலம் பேணிய எட்டயபுரம் அரண்மனையிலே அரசியார் இலக்குமியம்மையாரால் அன்புடைய பேரன் எனக் கொண்டு வளர்க்கப் பெற்றவர் நம் நாவலர் பாரதியார் அவர்கள். இளமைப் பருவத்திலேயே தமிழ்க்கல்வியிற் சிறந்து விளங்கிய எட்டயபுரம் மன்னர் பக்கத்தே இருந்து அவைக்களத்தில் வந்து செல்லும் புலவர் பெருமக்களைக் காணுதற்கும் அவர்தம் தமிழ்ப்புலமை நலத்தினை ஓரளவு உணர்ந்து மகிழ்தற்கும் ஏற்ற சூழ்நிலையில் வளர்ந்தமையாலும் இவர்தம் தந்தையார் சுப்பிரமணிய நாயகர் என்னும் எட்டப்ப பிள்ளையவர்கள் செந்தமிழும் சிவநெறியும் வளரப் பெருந்தொண்டாற்றிய சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் அவர்களது உறவினராயிருந்ததுடன் அவர்கள் செய்த தமிழ்ப்பணியைத் தம் மைந்தரும் செய்ய வேண்டும் என்னும் தமிழார்வத்துடன் அவரது பெயரை இவர்க்கு இட்டு அழைத்த பண்பினாலும் நம் நாவலர் அவர்களுக்குத் தாய்மொழியாகிய தமிழின்பால் நிலையான பற்றும் தமிழ் மொழியினை நன்கு பயின்று புலமை பெறுதல் வேண்டும் என்னும் ஆர்வமும் இளமை முதற் கொண்டே இவர்பால் தோன்றி வளர்ந்தன.
தமிழிற்புலமையும் ஆர்வமுடையராய் எட்டயபுரம் சமத்தானத்தில் அலுவல் பார்த்த சின்னசாமி ஐயரின் புதல்வராய் நம்நாடு உரிமைபெறப் பாட்டின் திறத்தாலே நாட்டில் விடுதலை யுணர்வினையூட்டித் தமிழ்நலம் வளர்த்தமையால் தேசீயகவியென எல்லோராலும் போற்றப்பெறும் சுப்பிரமணிய பாரதியார் அவர்களும் நம் நாவலர் சோமசுந்தர பாரதியாரவர்களும் இளம் பருவமுதற் கொண்டே நெருங்கிப் பழகும் தோழனாரானார்கள். இவ் விருவரது தோழமையும் நம் பாரத நாட்டின் விடுதலையுணர்வு வீறுபெற்றெழு தற்கும் தமிழ் மொழி புதுப் பொலிவுடன் வளர்தற்கும் ஊக்கமும் உரமும் ஊட்டின. நாவலர் பாரதியாரவர்கள் ஆங்கில நூல்களில் நிரம்பிய தேர்ச்சி பெற்றிருந்தும் பிறமொழி மயக்கத்திற்கு ஆளாகாது தம் தாய்மொழியாகிய தமிழில் எல்லையற்ற பேரார்வமும் நன்மதிப்பும் உடையராய்த் தமிழுக்கு ஆக்கந்தரும் நற்பணிகளில் ஈடுபட்டுழைப் பாராயினர்.
வினா :
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
எனச் சின்னஞ்சிறு குழந்தைக்குக்கூடத் தேமதுரத் தமிழ் மொழியின் உயர்வினைச் சொல்லிக் காட்டினானே அமரகவி பாரதி! அந்தப் பாரதி தோன்றியதும் இந்த எட்டயபுரம்தானே? அந்த உலக மகாகவிக்கும் நம் நாவலர் பாரதியாருக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
விடை :
நல்ல கேள்வி கேட்டீர்கள் சாம்பசிவம்! நம் நாவலர் சோமசுந்தரனார் அவர்கள் திருநெல்வேலி சி.எம்.எ. கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போது தேசியகவி சுப்பிரமணியனார் அவர்கள் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிற் சேர்ந்து பயின்றார். பிறந்த ஊரினாலும் சிறந்த குறிக்கோள்களாலும் ஒன்றுபட்ட உள்ளத்தினராகிய இவ்விருவரும் அடிக்கடி தமிழ்நலங்குறித்துக் கூடி அளவளாவி மகிழ்தலைத் தமது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்கள். தேசியகவி பாரதியாரைப் பற்றிப் பலரும் அறியாத புதுச் செய்திகளைத் தமிழ் மக்களுக்குக் கூறிய பெருமை நம் நாவலர் பாரதியாருக்கு உண்டு!
வினா :
அப்படியா? ஒருசில நிகழ்ச்சிகளைக் கூறமுடியுமா பேராசிரியர் அவர்களே!
விடை :
நன்றாகச் சொல்லலாம். தேசியகவி பாரதியார், தம் 7ஆம் வயதிலேயே அருமையான தமிழ்க் கவிதைகளைப் பாடும் ஆற்றல் பெற்றவர் என்பதை நேரில் கண்டு வியந்தவர் நம் நாவலர். கேவலம், படிப்பினால் மட்டும் பாவன்மை வராது. கவிகள் பிறப்பிலேயே அமைய வேண்டும் என்று நாவலர் பாரதியார் கூறுவர். பாரதி என்ற பட்டமே, இந்த இரண்டு பேருக்கும் ஒரேநேரத்தில் அளிக்கப்பட்டது என்ற உண்மையைப் பலர் அறியார்கள். நாவலர் சோமசுந்தரமும், கவிஞர் சுப்பிரமணியமும் நெல்லையிற் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருசமயம் யாழ்ப்பாணப்புலவர் ஒருவர் திருநெல்வேலிக்கு வந்திருந்தார். கல்லூரியொன்றிற் சொற்பொழிவு செய்யும்படி அன்பர் பலர் அவரை வேண்டிக் கொண்டார்கள். அன்பர்களது விருப்பத்திற்கிசைந்து சொற்பொழிவு நிகழ்த்திய ஈழநாட்டுப் புலவர் தமது சொற்பொழிவுக்குப்பின் அங்கு வந்திருந்த புலவர் பலருடனும் அன்புடன் அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தார். தமிழ் பயில்வாரிடையே விரைந்து செய்யுள் பாடும் கவித்திறன் வளர்தல் வேண்டும் என விரும்பிய அப்புலவர் அங்குள்ள புலவர்களை நோக்கி ஈற்றடி ஒன்றைக் கூறிப் பாடல் அமைத்துத் தரும்படி வேண்டிக் கொண்டார். அவ்வாறே அங்குள்ள புலவர்கள் அவர் தந்த ஈற்றடியைக் கொண்டு பாடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ்ச் சுவையில் ஈடுபட்டு அங்கு வந்திருந்த எட்டயபுரத்து மாணவ இளைஞர் இருவருள் சுப்பிரமணியர் தம் தோழர் சோம சுந்தரரைப் பார்த்து அடே சோமு நீ ஒரு பாட்டுப்பாடு; நானும் பாடுகின்றேன். இப்புலவர்கள் பாடிக் கொடுப்பதற்கு முன்னரே நாம் பாடிக்கொடுத்துவிட வேண்டும் என்று கூறினார். சுப்பிரமணியனார் விரைவில் பாடி முடித்தார். அடுத்துச் சோம சுந்தரரும் பாடி முடித்தார். இருவரும் சேர்ந்து தத்தம் பாடலைத் தலைவரிடம் முதலிற் கொடுத்தனர். அதன்பின்னரே புலவர் பலரும் பாடிய பாடல்களைத் தலைவரிடம் தந்தனர். பெரும்புலவர் பலரும் பாடிக் கொடுப்பதற்கு முன் இவ்விளைஞர் இருவரும் பாடித்தந்த பாடல்களையும் பின்வந்த புலவர்கள் பாடல்களையும் படித்துக் காட்டிய யாழ்ப்பாணப் புலவர் எல்லோருடைய பாடல்களிலும் இவ்விளைஞர் பாடல்களே சிறப்பாக அமைந்துள்ளன என்பதனை எடுத்துக்கூறிப் பாராட்டினார். வந்திருந்த புலவர் பலரும் அம்முடிபினை ஏற்றுக் கொண்டார்கள். இவ்விளம் வயதிலேயே நற்றமிழ்ச் செய்யுட்களைப் பாடும் புலமை வாய்க்கப்பெற்ற இவ்விளைஞர்களை ஊக்கப்படுத்துதல் புலவர் கடன் என்றுணர்ந்த யாழ்ப்பாணப் புலவர், கலைமகள் அருளால் செந்தமிழ்ப் புலமை நலம் பெற்ற இவ்விருவரையும் கலைமகளுக்குரிய பாரதி என்பதனைச் சிறப்புப் பெயராற் பாராட்டிப் போற்றுதல் வேண்டும் என்றார். அவையோர் பலரும் அவரது கருத்தினை ஏற்றுக் கொண்டார்கள். புலவர் பலர் குழுமிய அவ்வவையில் இவ்விருவர்க்கும் பாரதி என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. அன்று முதல் சுப்பிரமணியம் சுப்பிரமணிய பாரதி எனவும் சோமசுந்தரம் சோமசுந்தர பாரதி எனவும் மக்களால் அழைக்கப் பெற்றனர்.
பாரதியின் கவிதைகளைப்பற்றி நம் நாவலர் இப்படிச் சொல்கிறார் : பாரதியின் பாக்கள், கருத்துக்களை வருத்தமின்றி விளக்கும் பண்டைப் பாவலர் பளிங்கு நடை பயின்று, இளகி ஒளிரும் வெண் பொன் ஒழுக்கும், இனிய ஓசையும், திட்பமும், சுவையும் உடையன. . . எளிய இனிய இவர் கவிநடை நீரொழுக்கு உடையதேனும், வயிரத்தின் திண்மையும் ஒளியும் பெற்று நிற்கும். எனைத்தானும் தற்காலத் தமிழுலகில் இவர் ஒத்தாரைக் காண்பது அரிது; மிக்கார் சிலராவர்!
எட்டயபுரத்தில் அரசவைக் கவிஞராகவும் இளவரசராகவும் இருந்த அரசரது அன்புக்கும் ஆதரவுக்கும் உரியராகிய தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் அரசர் விருப்புக்கு இசைந்து காவடிச்சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியாரைப் போலவே அழகிய சிந்தினை விரைவிற் பாடிக் கொடுத்துத் தமது கவித்திறத்தைப் புலவர் பலரும் அறியச் செய்தார். இந்தியா என்ற இதழின் பொறுப்பாசிரி யராகப் பணியினை மேற்கொண்டு சென்னையில் வாழ்ந்த சுப்பிர மணிய பாரதியார் இந்தியர்களை அடிமை நிலையில் வைத்து ஆளும் ஆங்கில அரசின் கொடுமைகளை விளக்கிக் கட்டுரைகள் பல எழுதினார். தம் பாட்டின் திறத்தால் நாட்டு மக்களின் சுதந்திர வுணர்வினைத் தூண்டி மக்கள் பலரும் அடிமைத்தளை களைய விழித்தெழச் செய்தார். இதனால் வெறுப்படைந்த ஆங்கில அரசு இவர்மீது பிடியாணை (வாரண்டு) பிறப்பித்தது. அதனையுணர்ந்த தேசியகவி பாரதியார் சென்னையிலிருந்து தப்பிப் புதுச்சேரியிற் பல்லாண்டுகள் தங்கி, பாட்டும் உரையுமாகிய நூல்கள் பல இயற்றிப் பாரதநாட்டுக்கும் தமிழுக்கும் பயன்படும் முறையில் புலமைப்பணி புரிந்தார். சுப்பிரமணிய பாரதியாரின் கவித்திறனை ஆங்கிலேயரும் அறிதல் வேண்டித் தேசியகவி பாரதியாரைப்பற்றி வாழும் மிகப்பெரிய கவிஞர் (The Greatest Living Poet) என்ற தலைப்பில் நம் நாவலர் சோமசுந்தர பாரதியாரவர்கள் ஆங்கிலத்திற் கட்டுரை யெழுதி வெளியிட்டார்கள்.
புதுச்சேரியை விட்டு வெளியேறிய சுப்பிரமணிய பாரதியார் கடலூர் அருகே ஆங்கில அரசினராற் பிடிக்கப்பட்டுச் சிறைப்பட்டபொழுது தூத்துக்குடியில் வழக்கறிஞராயிருந்த சோமசுந்தர பாரதியார் அவர்கள் சென்னைக்கு விரைந்து தக்க தலைவர்களைக் கண்டு பேசித் தம் நண்பர் சுப்பிரமணிய பாரதியார் சிறையினின்றும் விரைவில் விடுதலை பெறுதற்குரிய வழி செய்தார். தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாடல்களின் அருமை பெருமைகளை நன்குணர்ந்து அப் பாடல்களின் சுவைநலத்தைத் தமிழ் மக்களுக்கு முதன்முதல் அறிமுகப்படுத்திய பெருமை நம் நாவலர் சோமசுந்தர பாரதியாருக்குரிய தனிச்சிறப்பாகும். இவ்வுண்மையினை இக்காலத்தில் அமரகவி பாரதியாரைப் போற்றும் தமிழன்பர்களிற்பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
வினா :
பேராசிரியர் அவர்களே! தங்கள் பேச்சிலிருந்து தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்னவர்களில் நம் நாவலர் பாரதியாருக்கும் பெரும் பங்கு உண்டு என்று தெரிகிறது. தேசியகவியைத் தவிர நாவலரின் நண்பர்கள் வேறு யார்யார் என்று கூறலாமா?
விடை :
சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழ்ப்பணி புரிந்த அறிஞர் பெருமக்கள் பலரோடும் நெருங்கிப் பழகிய சிறப்பு நாவலர் பாரதியார் அவர்
களுக்கு உண்டு.
மதுரையில் நான்காம் சங்கத்தை நிறுவிய பெருமகனார் பாண்டித்துரைத்தேவர், பரிதிமாற்கலைஞர், தமிழ்க்கடல் மறைமலையடிகளார், இலக்கணக் கடலனார் அரசஞ் சண்முகனார், மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர், மகாவித்துவான் ரா. இராகவையங்கார், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், நெல்லை வேதநாயகம் பிள்ளை, மு. அருணாசலக் கவிராயர், குமண சரித்திரம் பாடிய மு.ரா. கந்தசாமிக் கவிராயர், யாழ் நூலாசிரியர் விபுலானந்த அடிகளார், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை முதலிய பெருமக்கள் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்
தக்கவராவர்.
அரசியல் வாழ்வில் இவர்தம் உள்ளத்தை யீர்த்த பெருமக்களுள் அண்ணல் காந்தியடிகளார், பெரியார் ஈ.வே.ரா., சி.ஆர். தா முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர்.
வினா :
நாவலர் பாரதியார் நண்பர்களில் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களும் ஒருவர் என்பதைக் குறிப்பிட்டீர்கள். வ.உ.சி. நட்பு அரசியல் தொடர்பால் ஏற்பட்டதா? அன்றித் தமிழ்த் தொடர்பால் ஏற்பட்டதா?
விடை :
நல்ல கேள்வி! நம் நாவலர் பாரதியார், சிறந்த தமிழ்ப் புலவர் என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். அவர் ஓர் அரசியல்வாதியுங் கூட என்பதைப் பலர் அறியார். வ.உ. சிதம்பரனாருக்கும் நாவலர் பாரதியாருக்கும் தொடக்கத்தில் தமிழ்த் தொடர்புதான். ஆனால் பின்பு அது அரசியல் தொடர்பாகவும் ஆகிவிட்டது!
வினா :
வ.உ.சி. அவர்கள், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற சிறந்த நூல்களைப் பதிப்பித்ததோடன்றிப் பல அரிய தமிழ் நூல்களையும் எழுதிய பெருமகனார் ஆவார். அத்தகைய தமிழ்ப் பேரறிஞரோடு நாவலர் பாரதியார் நட்புக் கொள்ளத் தமிழ்தான் காரணம் என்பதை உணரமுடிகின்றது. ஆனால் அரசியல் தொடர்பும் உண்டு என்கிறீர்களே! அதுபற்றிக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நல்லது!
விடை :
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு
போகவோ? - நாங்கள் சாகவோ?
அழுதுகொண்டிருப் போமோ? - ஆண்பிள்ளைகள்
அல்லமோ? - உயிர் வெல்லமோ?
என்ற வீரஉணர்ச்சி கொண்ட வ.உ.சி. வெள்ளையருக்கு எதிராகக் கப்பல் கம்பெனி நிறுவினாரல்லவா? நம் நாவலர், பி.எல். சட்டப்படிப்புத் தேறியதும், தூத்துக்குடியில் 1905 முதல் 1920 வரை வழக்கறிஞர் தொழில் மேற்கொண்டிருந்தார். அப்போது, வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் உரிமைக் குரல் எழுப்பிய காலம். நாட்டு விடுதலைக் கிளர்ச்சியில் பங்கு கொண்ட நம் நாவலர், நண்பர் வ.உ.சி.யுடன் சேர்ந்து அரசியல் மேடைகளில் பெருமுழக்கமிட்டார். நாட்டு விடுதலைப் பணியிலும் தீண்டாமையொழிப்பு முதலிய சீர்திருத்தப்பணிகளிலும் தமிழ் வளர்ச்சிப் பணிகளிலும் நாவலர் பாரதியார் அவர்களும் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களும் ஒத்தவுணர்வுடன் ஈடுபட்டுழைத்த பெருமக்கள் என்பதும் அக்காலத்து அயலவர் ஆட்சியாலுண்டாகிய பல்வேறு இடர்ப்பாடுகளையும் பொருட்படுத்தாது நாடு விடுதலை பெறுதல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் இப்பெருமக்கள் மேற்கொண்ட உழைப்பு நாட்டு மக்கள் எல்லோராலும் நன்றியுடன் பாராட்டத் தகுவதென்பதிற் சிறிதும் ஐயமில்லை. அதுமட்டுமன்று. வ.உ.சி. தொடங்கிய கப்பல் கம்பெனியின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று நடத்தியவர் நம் நாவலர். வ.உ.சி., நம் நாவலரிடத்து எத்தகைய மதிப்புக் கொண்டிருந்தார் என்பதற்கு ஓர் உதாரணம் : யாராவது வ.உ.சி.யிடம் ‘உங்களிடம் 2 கப்பல்கள்தாமே உண்டு!’ என்று கேட்டால் உடனே வ.உ.சி., ‘ளு.ளு. பாரதி என்ற தமிழ்க் கப்பலைச் சேர்த்து 3 கப்பல்கள் உண்டே என்பாராம்!
வினா :
பேராசிரியர் அவர்களே!
“தமிழுக்கு நிகர்இங்கு இல்லை - அன்னைத்
தமிழின்றி உலகினில் எதுவுமே இல்லை!”
என்று தமிழ்ப்பரணி பாடுவோர், பாரதத் திருநாட்டை மறந்து விடுதலும் உண்டு!
“பாரத நாடேபழம் பெருநாடு - பாரிலே
இதற்கு இணையில்லை ஈடு”
என்று நாட்டின் பெருமையை முரசு கொட்டுவோர், தாய் மொழியைப் போற்றாதிருத்தலும் உண்டு!
ஆனால் நாவலர் பாரதியாரோ நற்றமிழ்ப் பணியோடு நாட்டுப்பணியும் மேற்கொண்டவர் என்று தாங்கள் கூறுவது செவிக்கும், மனத்திற்கும் இனிமை தருவதாக உள்ளது. அவர் ஆற்றிய அரசியற்பணிகள் குறித்து ஒருசில கூறலாமா?
விடை :
கூறலாம் சாம்பசிவமவர்களே! விடுதலைக் கிளர்ச்சியில் நம் நாவலர் ஈடுபட்டதற்காக 1905 முதல் 1919 வரை, இவர்தம் பெயரை அக்கால ஆங்கில ஆட்சி ஐயப்பட்டியலில் வைத்திருந்தது. மாண்டேகு செம்சுபோர்டு சீர்திருத்தம் பற்றி ஆராய, நெல்லை மாநகரில் மாநிலக் காங்கிரசு மாநாட்டைக் கூட்டியவர் நாவலரே! அம்மாநாட்டில் சீனிவாச சாதிரியார், சத்தியமூர்த்தி, எ. சீனிவாச அய்யங்கார், அன்னி பெசண்ட் அம்மையார் போன்ற பெருந்தலைவர்களை வர வழைத்துப் பேசச் செய்தார் நாவலர். கதூரி சீனிவாச ஐயங்கார் மூலமாக அண்ணல் காந்தியடிகளைத் தூத்துக்குடிக்கு வரவழைத்த பெருமை நம் நாவலர் பாரதியாருக்கு உண்டு. 1920இல், மதுரையிலும் மாநிலக் காங்கிரசு மாநாட்டைக் கூட்டினார். 1926இல் சி.ஆர். தாஸை மதுரைக்கு வரவழைத்து அவரது பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்தவரும் நாவலரே! இப்படி நிறையச் சொல்லலாம்.
வினா :
அப்படியானால் நாவலரைச் சிறையில் தள்ளாமல் ஆங்கில அரசாங்கம் எப்படிச் சும்மா இருந்தது?
விடை :
சாம்பசிவம் அவர்களே! நல்லதொரு வினாவைக் கேட்டு விட்டீர்கள். சட்ட நுணுக்கம் நன்கு தெரிந்த நாவலர் பாரதியாரை அக்கால ஆங்கிலேய அரசு எதுவும் செய்துவிட முடியவில்லை. அவர்தான் சிறைக்குச் செல்லவில்லையே தவிர அவருடைய மகள், மகன், மருமகன் உட்பட ஆறேழுபேர் இந்த நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டுச் சிறை சென்றுள்ளார்கள்.
வினா :
நம் நாவலர் பாரதியார் குடும்பம் நல்ல தமிழ்க் குடும்பம் என்றுதான் பலரும் அறிவர். ஆனால் நாட்டுரிமைக்காகப் போராடிய குடும்பம் என்று அறியும்போது யார்தான் தலை வணங்காமலிருக்க முடியும்?
விடை :
அதுமட்டுமன்று சாம்பசிவம்! நான் கண்ணாற் கண்ட மற்றொரு நிகழ்ச்சியையும் இங்கே குறிப்பிடவேண்டும். அண்ணல் காந்தியடிகள் அண்ணாமலை நகருக்கு ஒருமுறை வந்தபோது, அவரிடம் நாட்டு விடுதலை இயக்கத்திற்காக நிதி அளிக்கப்பட்டது. அப்போது நடந்த ஒரு கூட்டத்தில், நாவலர் பாரதியாரின் குழந்தைகளான மீனாட்சியும், லலிதாவும், தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளையே கழற்றி அண்ணல் காந்தியடிகளிடம் கொடுத்து அவர்தம் பாராட்டைப் பெற்றவர்கள்!
வினா :
இதுவரை நாவலரின் இளமை, கல்வி, அரசியற்பணி குறித்துச் சொன்னீர்கள். நல்லது. தண்டமிழ்த் தாய் நன்கு தழைக்க நற்றமிழ்ப் பணி புரிந்த நாவலர் என்று இவரைத் தமிழுலகம் போற்றுகின்றது. தமிழுக்கு இவர் ஆற்றிய நற்பணிகள் குறித்து விரிவாகச் சொல்லலாமா?
விடை :
ஒன்றல்ல, இரண்டல்ல, ஒருநூறு சொல்லலாம். நாவலர் பாரதியார் செய்த நற்றமிழ்ப் பணிகள் பலதிறத்தன. அக்காலத்தில் தமிழில் பேசுவதே இழிவு என்ற மனப்பான்மை இருந்தது. t.c.a., திரு.வி.க. போலவே இவரும், அரசியல் மேடைகளைத் தமிழ் மேடைகளாக ஆக்கித் தமிழ்ப் பெருமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது இவர் பேசாத தமிழ்க் கூட்டமோ, தமிழ் மாநாடோ இல்லை எனலாம்! மதுரை முத்தமிழ் மாநாடு, கோவை முத்தமிழ் மாநாடு, தமிழாசிரியர் மாநாடு, மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா, சாதி ஒழிப்பு மாநாடு - இப்படி எத்தனையோ மாநாடுகளில் தலைமை தாங்கியும் சொற்பொழிவாற்றியும் தமிழ்த் தொண்டு செய்தவர் நம் நாவலர்.
வினா :
இவரது பேச்சாற்றலைக் கருதித்தான் நாவலர் எனும் நற்றமிழ்ப் பட்டம் வழங்கப்பட்டதோ?
விடை :
இவரது பேச்சாற்றல் மட்டும் காரணமில்லை; இவரது ஆராய்ச்சிப் புலமையும் ஒரு காரணமாகும். எதனையும் எண்ணிப் பார்த்து, நன்றாகச் சிந்தனை செய்த பின்பே ஒன்றைப் பேசத் தொடங்குவார்!
வினா :
நாவலர் பாரதியாரின் ஆராய்ச்சி நுட்பத்திற்கு ஒரு சான்று கூறலாமா?
விடை :
பல சான்றுகள் கூறலாம். அவர் எழுதிய நூல்கள் அனைத்துமே ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்தவை. ஒருவர் முன்பு சொன்ன கருத்தை அப்படியே சொல்லும் மனப்பான்மை உடையவரல்லர். புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து உணர்த்தும் பண்பினர். தெய்வப்புலவர் திருவள்ளுவரைப்பற்றி நம் நாட்டில் வழங்கிய கட்டுக் கதைகள் கொஞ்சமா நஞ்சமா? அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த பெருமை நம் நாவலருக்கே உண்டு!
வினா :
அது எப்படி?
விடை :
வள்ளுவர் புலைமகளின் பழிமகனாரல்லர்; தமிழ் முடிமன்னர்தம் உள்படு கருமத் தலைவராய் இருந்தவர்; கடைச் சங்கத்திற்கு நெடும் பல்லாண்டுகட்கு முன்பிருந்தவர் என்ற உண்மையைத் தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளார். இதுபற்றி இவர், சென்னையில் முதன்முதலாகப் பேசியபோது டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் மேடைக்கு வந்து இவரைக் கட்டித் தழுவி, இவர்தம் ஆராய்ச்சியை வியந்து பாராட்டியதோடு, இவ்வாராய்ச்சி மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவருதற்கும் உறுதுணை புரிந்தார்!
வினா :
தமிழ்த் தாத்தா சாமிநாதய்யரவர்களாலேயே பாராட்டப்பட்டவர் நம் நாவலர் என்றறியும்போது நாவலரின் பெருமை இன்னும் பன்மடங்காகிறது. வேறு என்னென்ன ஆராய்ச்சி செய்துள்ளார் நாவலர்?
விடை :
இவரது ஆராய்ச்சிக்குத் தசரதன் குறையும் கைகேயி நிறையும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்!
வினா :
தசரதன் குறையும் கைகேயி நிறையுமா? என்பதே நூல் தலைப்பா? அப்படியானால் தசரதன் குறையுடையவன், கைகேயி நிறையுடையவள் என்கின்றாரா?
விடை :
ஆம்! பொதுவாகத் தசரதன் வாய்மை நெறி தவறாத வள்ளல் என்றும், கைகேயி, தன் கணவன் உயிர் கவர்ந்த வன்கட் கயத்தி என்றும் கூறுவர். ஆனால் நம் நாவலரோ தசரதன் தவறுடையவன், கைகேயி நிறையுடையவள் என்று கம்பர், வான்மீகி சான்றுகள் காட்டி நிறுவுகின்றார். இவைதவிரச் சேரர் பேரூர், சேரர் தாயமுறை முதலான ஆராய்ச்சி நூல்களையும், பட்டினப்பாலைத் தலைவன் யார், மெய்கண்டார் நூல் மொழி பெயர்ப்பா, கண்ணகி மணம், தருமன் சால்பு முதலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். இவற்றுள் சிலவற்றை ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார்.
வினா :
சேரர் பேரூர் என்று சொன்னீர்களே? அதுபற்றி விளக்கிச் சொல்லலாமல்லவா?
விடை :
சங்க காலத்தில் சேர வேந்தர்கள் ஆட்சிபுரிந்ததைப் பதிற்றுப்பத்து முதலான சங்க இலக்கியம் கூறுகிறதல்லவா! சேர மன்னர்களின் தலைநகரம் வஞ்சி என்பதை அனைவரும் அறிவர். அந்த வஞ்சிமாநகரம் எந்த இடத்தில் இருந்தது என்பதுபற்றிப் பலரும் பலவிதமாகக் கூறுவர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் அவர்களும், மேற்குக் கடற்கரையில் உள்ள பேராற்றின் கரையில் உள்ளது இவ் வஞ்சி என்றனர். கனகசபைப் பிள்ளை என்ற அறிஞர், மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் பேரியாற்றங்கரையில் உள்ள திருக்கரூரே வஞ்சி என்றார். மு. இராகவையங்கார், திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதிக் கரையில் உள்ள கருவூர் ஆனிலையே வஞ்சி என்றார். இம்மூன்று கருத்தில் எது சரி என்று ஆராயுமாறு தஞ்சைச் சீனிவாசபிள்ளை கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப நம் நாவலர் இதுபற்றி ஆராய்ந்து, மலைநாட்டில் மேலைக்கடற்கரையில் பேராற்றின் கரையில் உள்ள பழம்பட்டினமே இவ்வஞ்சியே தவிர உள்நாட்டு ஊர் எதுவும் இல்லை என்று வற்புறுத்தி எழுதியுள்ளார். அதுவே சேரர் பேரூர் என்ற நூலாகும். இதை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்!
வினா :
சேரர் தாயமுறை என்றீர்களே? அது என்ன ஆராய்ச்சி?
விடை :
சேர நாட்டில் மருமக்கள் தாயமுறை உண்டு!
விடை :
மருமக்கள் தாயமா?
விடை :
அதாவது, ஒரு தந்தையாரின் சொத்து அவருடைய பிள்ளைகளுக்குக் கிடைக்காது. பதிலாக, தந்தையாரின் உடன்பிறந்தாளின் புதல்வர்களுக்கே சொத்து உரிமை உண்டு - இதுவே மருமக்கள் தாயம் எனப்படும். இது கேரள நாட்டில் இருந்துவந்த பழக்கம். இவற்றிலும் நாவலர் ஆராய்ந்து, இம்முறையே பண்டைத் தமிழகத்திலும் இருந்து வந்தது என்கின்றார். இதனையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
விடை :
நீங்கள் சொல்லும் நூல்கள் எல்லாம் உரைநடையில் அமைந்தவை
யல்லவா? நாவலர் பாரதியாருக்குக் கவிதை புனைவதில் விருப்ப
மில்லையோ?
விடை :
நாவலர் பாரதியார், தம் நண்பர் சி. சுப்பிரமணிய பாரதியாரைப் போல எளிய இனிய கவிதையைப் போன்று, எல்லோருக்கும் புரியும் வகையில் தம்மால் எளிதாகப் பாடமுடியாது என்ற உணர்வினால்தான் பாப்புனையும் பயிற்சியினையே விட்டுவிட்டு ஆராய்ச்சிப் பணியிலேயே முழுநேரமும் செலவிட்டார். ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவோர்க்குப் பாப்புனையும் பழக்கம் எளிதில் கைகூடுவதில்லை. என்றாலும் தமக்கும் பாப்புனையும் திறம் உண்டு என்பதைக் காட்டத்தான் மாரி வாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி என்ற 2 கவிதை நூல்களையும் யாத்துள்ளார்.
விடை :
மாரி வாயில் என்ற கவிதைநூல்பற்றிக் குறிப்பிட்டீர்களே? நாவலர் பாரதியார் பாடிய மாரி வாயில் என்ற நூலினை யான் அண்மையில் பார்த்தேன். அது தமிழ் மாரியாகவே நிலத்தைக் குளிர்விப்பது என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. போற்றுகின்ற நூல்தானே! அதுபற்றிச் சுருக்கமாகச் சொல்லலாமா?
விடை :
மாரி வாயிலைப் புகழாதார் யாருமில்லை! அருச்சுனன், தீர்த்த யாத்திரை மேற்கொண்டு கன்னியாகுமரிக்கு வந்தான். வரும் வழியில் பாண்டியன் தலைநகரில் பாண்டியனின் விருந்தினனாக இருந்து, அவன் மகள் சித்திராங்கதை என்பவளை மணந்தான் என்று பாரதம் கூறும். அந்த நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு கற்பனையாகப் பாடப் பெற்ற அழகிய சிற்றிலக்கியந்தான் மாரி வாயில்! மாரி என்பது மேகம்; வாயில் என்பது தூது. தன்னை மணந்த அர்ச்சுனன் வடக்கே இந்திரப் பிரதம் சென்றவன் திரும்பி வராததைக் கண்ட சித்திராங்கதை, மேகத்தைப் பார்த்து அவன்பால் தூது சென்று திரும்பிவர வேண்டும் என்று வேண்டுகிறாள். மேகமும் அவள் சொன்ன வழியிலே சென்று, பார்த்தனைக் கண்டு செய்தி கூறித் திரும்பவும் வந்து அவளிடம் கூறுகின்றது.
விடை :
மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி என்ற நூல்பற்றிக் கூறஇயலுமா?
விடை :
மங்கலக் குறிச்சி என்பது ஓர் ஊர். அவ்வூரில் ஒரு பொங்கல் விழா! அப்போது நடந்த நிகழ்ச்சியைக் கூறுவது இந்நூல். தைப் பொங்கல் அன்று கன்னிப் பெண் ஒருத்தி, நீராடச் செல்கிறாள். ஆற்றில் வழுக்கி வீழ்ந்தாள். வெள்ளம் இழுத்துச் சென்றது. அவளைக் கண்ட காளை ஒருவன், கரைக்குக் கொண்டுவந்து காப்பாற்றுகிறான். இருவருக்கும் காதல் உண்டாகின்றது.
விடை :
1933 முதல் 1938 வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து தமிழ்ப்பணி புரிந்தாரல்லவா நாவலர் பாரதியார்? தமிழ் வளர்ச்சிக்கு அவரது தலைமை எவ்வகையில் உறுதுணையாயிருந்தது?
விடை :
நண்பர் சாம்பசிவம் அவர்களே! தமிழ் வளர்த்த நிலையங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குப் பெரும் பங்கு உண்டு. அப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர்கள் அருட்டிரு விபுலானந்த அடிகள் ஆவார்கள். அவர்களுக்குப் பின் அப் பொறுப்பினை ஏற்றவர் நம் நாவலர் பாரதியாரே! அண்ணாமலை அரசரது வேண்டுகோளுக்கு இணங்க, மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலை நிறுத்திவிட்டுத் தமிழ்ப்பணி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்த்துறைத் தலைமைப் பணியை ஏற்றார். இது ஒன்றே அவரது தமிழ்ப்பற்றுக்குச் சான்றாகும். என்றாலும், தமிழ்த்துறையை அனைவரும் மதிக்கத்தக்க வகையில் போற்றிப் பாதுகாத்தார். இசைத்துறையைக் கண்காணிக்கும் பொறுப்பு, தமிழ்த்துறைக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்ற வரையறையை நெகிழ விடாமல் பாதுகாத்தார். பல்கலைக்கழகம், மாணவர்க்குப் பாடம் கற்பிக்கும் பணியை மட்டும் செய்தால் போதாது, ஆராய்ச்சிப் பணியைத் தலைமையாகக் கொண்டு செயலாற்றவும் வேண்டும் என்பது இவர் கொள்கை.
விடை :
தாம் கொண்ட கொள்கையைச் செயன்முறையிற் காட்டினாரா?
விடை :
ஆம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறை நாவலர் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. அதற்கு இவரே காரணராவர். அதுமட்டுமன்று. மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்களை அழைத்து ஆராய்ச்சித்துறைக்குத் தலைவராக்கிய பெருமையும் நாவலருக்கு உண்டு. நாவலர் தமிழ்த்துறைத் தலைவராயிருந்தபோது பண்டிதமணி அவர்களையும், ந.மு.வே. நாட்டார் ஐயா அவர்களையும் தமிழ்த்துறைப் பணியில் அமர்த்தச் செய்தவரும் இவரே!
விடை :
சரி பேராசிரியர் அவர்களே! தாங்கள் அவரிடம் பாடம் கற்றிருக்கிறீர்கள். பாடம் நடத்தும் முறையில் ஏதேனும் விசேடம் உண்டா? தங்களைப்போல் அவரிடம் தமிழ் பயின்றவர்கள் ஒருசிலரைக் கூறலாமா?
விடை :
ஆம் சாம்பசிவன் அவர்களே! அவர்களிடம் நேரிடையாகப் பாடம் கேட்கும் பேறு எனக்குக் கிடைத்தமை குறித்து இறும்பூது கொள்கிறேன். நாவலர் வகுப்பு நடத்த வருகிறார் என்றாலே மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கணத்தைக்கூட எளிதில் புரியுமாறு இலக்கியச் சுவையுடன் கூறுவதில் வல்லவர். மாணவர்களைத் தம் நண்பராகவே கருதுபவர் நாவலர். மாணவரின் ஆராய்ச்சித் திறனைத் தூண்டி, அவர்களாகவே எதனையும் எண்ணி முடிவு கட்டும் பான்மையை வளர்த்தார் எனலாம். பிற்காலத்தில் பேரும் புகழும் பெற்ற டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார், அ.ச. ஞானசம்பந்தம், அ.மு. பரமசிவானந்தம், பூ. ஆலாலசுந்தரஞ் செட்டியார், சரவண ஆறுமுக முதலியார், பி.ஆர். மீனாட்சிசுந்தரம், ஆர். இராசரத்தினம் அம்மையார், ஆர். இராசாமணி அம்மையார், எ. உருத்திரபதி, ஆ. முத்துசிவன், ப. சோதிமுத்து முதலியோர் வகுப்பில் முறையாகப் பாடம் கேட்டவர்கள். அண்மையில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை வெளியிட்ட பூதூர் வேங்கடசாமி ரெட்டியார், நம் நாவலரிடம் தனிப்பட்ட முறையில் தமிழ் பயின்று புலமை பெற்றவர்கள்.
விடை :
தாங்கள் கூறுவதை நோக்குங்கால் தமிழ் ஆராய்ச்சிக் கென்றே தம்மை அர்ப்பணித்தார் நாவலர் என்று சொல்லலா மல்லவா? அவரது ஆராய்ச்சியிலேயே மணிமகுடமாகத் திகழ்வது எது என்று தாங்கள் கருதுகிறீர்கள்?
விடை :
நாவலர் பாரதியார் எழுதிய அனைத்துமே ஆராய்ச்சிதான்! ஆனாலும், இக்காலத்து ஆராய்ச்சியாளர் எவரும் மேற்கொள்ளாத சிறந்த ஆராய்ச்சி ஒன்றை அவர் மேற்கொண்டார். அதுதான் தொல்காப்பியத்துக்குப் புத்துரை கண்டது. அதுவே ஆராய்ச்சியின் மணிமுடி என்னலாம்!
விடை :
தொல்காப்பியத்துக்குத்தான் இளம்பூரணர், நச்சினார்க் கினியர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார் போன்ற பலரும் உரை எழுதியிருக்கிறார்களே! நாவலர் அப்படி என்ன புத்துரை கண்டு விட்டார்? தெளிவாகச் சொல்லலாமா?
விடை :
நல்லது சாம்பசிவன் அவர்களே! தாங்கள் குறிப்பிட்ட வாறு தொல்காப்பியத்துக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகள் இல்லாமற் போனால் பொருளை நம்மால் புரிந்து கொண்டிருக்க இயலாது. என்றாலும் அவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலைக்கேற்பச் சில பொருந்தா உரைகள் இடம்பெற்று விட்டன. அத்தகைய இடங்களை நாவலர் நுணுகி ஆராய்ந்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு புத்துரை கண்டுள்ளார்!
விடை :
அப்படியானால் தொல்காப்பியம் முழுமைக்குமே உரை கண்டுள்ளாரா? இல்லை! சில பகுதிகட்கு மட்டும் கண்டுள்ளாரா?
விடை :
நூல் முழுமைக்கும் அவர் உரை காணவில்லை. தமிழர்களின் நாகரிக மேம்பாட்டை உலகுக்கு உணர்த்தக்கூடிய வகையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாடு இம்மூன்று இயல்கட்கும் விரிவான உரைகளும், சங்க இலக்கியச் சான்றுகளும் காட்டியுள்ளார். களவியல், செய்யுளியல் முதலானவற்றில் ஒருசில சூத்திரங்கட்கு உரை விளக்கம் தந்துள்ளார்.
விடை :
அவரது புத்துரைக்கு ஒருசில சான்று கூறலாமல்லவா?
விடை :
கூறலாம். மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை என்று ஒரு சூத்திரம். இதில் வரும் ஓரை என்பதற்கு விளையாட்டு என்ற பொருள் கண்டதோடு அதற்குச் சங்க இலக்கியச் சான்றும் காட்டி அரண் செய்துள்ளார். இவ்வாறே அமரர்கண் முடியும் அறுவகை என்பதில் அமரர் என்பது தேவர்களைக் குறிக்கும் என்று பழைய உரைகாரர் கூற இவரோ, அமரகத்து அஞ்சாத் தறுகண் வீரர் என்பர். இப்படிப் பொருள் கூறினால்தான் அறுவகை என்பதற்குப் பொருத்தமான உரை காணமுடியும் இப்படிப் பல சான்றுகள் காட்டலாம்.
விடை :
தொல்காப்பியம் போன்ற பெருந்தமிழ் இலக்கணப் பயிற்சி உடைய நாவலர், மாரி வாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி முதலான கதை தழுவிய பாடல்களையும் பாடியுள்ளாரே! நாவலருக்குச் சிறுகதை அல்லது நாவலில் ஈடுபாடு உண்டா? நாவல் எதுவும் எழுதியிருக்கிறாரா?
விடை :
தமிழுக்கு விருந்தாகிய உரைநடையும் வளம் பெற வேண்டும் என்பதில் விருப்பமுடையவரே நாவலர். ஒருமுறை கோடை விடுமுறைக்கு நாவலர், தம் துணைவியார் வசுமதி அம்மாள், குழந்தைகள் முதலானோரோடு, கோத்தகிரி சென்று 2 திங்கள் தங்கியிருந்தார். அப்போது நானும் சென்று வந்தேன். ஒரு புதிய நவீனம் ஒன்றை வெளியிட விரும்பிய நாவலர், நாள்தோறும் சொல்லச் சொல்ல நான் அப்படியே எழுதி வந்தேன். ஆனால் அது, பின்பு முழு நிறைவு பெறவில்லை!
விடை :
தமிழ் மொழிப் பாதுகாப்புக்கு நாவலர் பாரதியார், பெருந்தொண்டு செய்தார் என்கிறார்களே? அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?
விடை :
நாவலர் பாரதியார் நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தேசீயவாதியாக இருந்தாலும், தம் தாய்மொழிக்குக் கேடு என்ற நிலைவந்தபோது சும்மா இருந்துவிடவில்லை. இந்நாட்டில் பள்ளி இளஞ்சிறார்க்கு இந்தி கட்டாயப் பாடம் என்ற நிலை வந்தபோது அதை முழுமூச்சாக எதிர்த்தவர்களில் நம் நாவலருக்குத் தலைமையிடம் உண்டு. அப்போது முதலமைச்சராயிருந்த மேன்மை தங்கிய சக்கரவர்த்தி இராஜாஜி அவர்கட்கு வெளிப்படைக் கடிதம் ஒன்றை எழுதியதும் இங்கே குறிப்பிடலாம்!
விடை :
முத்தமிழ்க் காவலர் திரு கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களால் தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவுக்கும் நாவலருக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
விடை :
ஆம். தொடர்பு உண்டு. இப்புலவர் குழுவின் அமைப்புக் கூட்டமே, பசுமலையில் உள்ள நாவலர் இல்லத்தில் நாவலர் தலைமையில்தான் 14-12-1958இல் கூட்டப்பட்டது. இக்குழுவின் முதல் 3 கூட்டங்களுக்கு நம் நாவலரே தலைமை தாங்க வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
விடை :
தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் தவிர வேறு நூல்களில் பயிற்சி உடையவரா நாவலர்?
விடை :
ஆம். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர் அவர். கம்பரை யாரேனும் குறை சொன்னால் அவர் மனம் தாங்காது!
விடை :
அப்படியா? அதற்கு ஒரு நிகழ்ச்சி கூறலாமா?
விடை :
ஒருமுறை கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரனார் வீட்டில் நம் நாவலர் தங்கியிருந்தார். இரவு நேரம். கொசுவலை கட்டி உள்ளே படுத்துத் தூங்கிய நேரம். அப்போது யாரோ ஒருவர், கம்பரைக் குறை கூறியதாகப் பேச்சு நடந்தது. அரைகுறைத் தூக்கத்தில் இருந்த நாவலர், சட்டென எழுந்து, கம்பனைக் குறை கூறியவர்களைச் சும்மாவா விட்டு வந்தீர்கள். என்று கோபத்துடன் கூறினார். அப்போது தமிழவேள், ‘நீங்கள் உறங்கிக் கொண் டிருப்பதாக நினைத்தல்லவா இப்பேச்சினைத் தொடங்கினோம்! என்று கூறினார்.
விடை :
நாவலர் பாரதியார், மிகவும் கோபக்காரர். அவருடன் பழகுவதே கடினம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அப்படிப்பட்ட வரல்லர் என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன். அவரைவிட அறிவிலும் ஆற்றலிலும் குறைந்துள்ள என்னைக் கூட அவர்கள் அன்பாகவே நடத்தியிருக்கின்றார். பாரதியாரின் பண்புகள் குறித்து நீங்கள் கருதுவது யாது?
விடை :
அவரிடம் உண்மை, அஞ்சாமை என்ற உயர்ந்த பண்புகள் உண்டு. அவரது உயர்வுக்கு உண்மையே காரணம் என்னலாம். அவரது அஞ்சாமையைக் கண்டு பலரும் அவரை இக்கால நக்கீரர் என்று கூறுவது உண்டு. அதேவேளையில் தம் நண்பர்கள் தம்மைக் கேலியாகப் பேசினால் அந்தக் கேலிப் பேச்சில் தாமும் இணைந்து கொள்வார். நாவலர், புலவர் பலரையும் அழைத்துத் தம் வீட்டில் விருந்து செய்வது வழக்கம். ஒருமுறை பண்டிதமணி, நாட்டார், நீ. கந்தசாமிப் பிள்ளை முதலியோர் விருந்துண்டு மகிழ்ந்த நேரம். அப்போது தமிழாசிரியர் ஒருவரைக் குறித்து, ‘நன்னூல்கூடத் தெரியாத அவரை என் குரு என்று எப்படிக் கூறுவது? என்ற பேச்சு உண்டாயிற்று. மற்றொருவர் பேராசிரியர் என்று சொன்னால் சரியாகிவிடும் என்றார். உடனிருந்த ஒருவர், நம் நாவலரைப் பார்த்து, ‘இவர் சொல்வதைக் கேட்டீர்களா? என்றார். அப்போது நாவலர், நம் நண்பர்கள் நம்மைப் பொருளாகக் கொண்டு கேலி செய்து மகிழும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து மகிழ்வது தானே முறை என்றார். கேட்ட நண்பர்கள் நாவலரின் பெருந்தன்மையைப் போற்றினர்.
விடை :
நாவலர், புலவராகமட்டும் அமையாது பெரும் பொருள் தேடிய செல்வருமாவார்! அப்படிப்பட்டவர் தமிழ்ப் புலவர்களுக்குப் பணஉதவி தந்து ஆதரிக்கிறாரா?
விடை :
ஆம். வாழ்நாள் முழுவதும் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் மு.ரா. அருணாசலக் கவிராயர் அவர்கட்குத் தொடர்ந்து ஒரு தொகை அனுப்பி வந்துள்ளார் என்பதை நான் அறிவேன்.
விடை :
நாவலர் பாரதியார் சமய நம்பிக்கை இல்லாதவர் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறதே! உங்கள் கருத்து யாது?
விடை :
அப்படிப் பலர் நினைத்தது உண்டு. உண்மையில் அவர் சமய நம்பிக்கை உடையவரே! புறவேடங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவர் ஒரு சைவ சித்தாந்தி என்பதை நெருங்கிப் பழகியவர்கள் உணர்வர்.
விடை :
மாரி வாயிலில்கூடச் சைவ சித்தாந்தக் கருத்தை வலியுறுத்து கிறார் அல்லவா?
விடை :
ஆம்! மாரி வாயிலில் ஒன்றே இரண்டில்லை என்பாருள் இன்பத்தை உணர்வாரலர் என்ற அடியில் சைவ சித்தாந்தக் கருத்தை வற்புறுத்து கின்றார்.
விடை :
மறைந்தபிறகு நினைவுச்சின்னம்?
விடை :
ஆம். தமிழக அரசு, சென்னை இராஜாஜி மண்டபத்தில் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தியது. உலகத்தமிழ் மாநாட்டினை முன்னிட்டு அவரது உருவச்சிலையை மதுரையில் திறந்து வைத்தது.
சமகாலப் புலவர் பட்டியல்
1. அநவரத விநாயகம் பிள்ளை 1877 - 1940
2. அரசஞ் சண்முகனார் 1868 - 1915
3. அருணாசலக் கவிராயர் 19,20ஆம் நூற்.
4. அனந்தராமையர் 1872 - 1931
5. ஆலாலசுந்தரம் பிள்ளை 1858 - 1923
6. இராகவையங்கார், மு. 1878 - 1960
7. இராகவையங்கார், ரா. 1870 - 1948
8. இலக்குமண பிள்ளை 1864 - 1950
9. உமாமகேசுவரனார், த.வே. 1883 - 1941
10. உலகநாத பிள்ளை 20ஆம் நூற்.
11. கதிரேசச் செட்டியார், மு. 1881 - 1953
12. கந்தசாமிக் கவிராயர், மு.ரா. 19,20ஆம் நூற்.
13. கந்தசாமிப் புலவர், சேவற்குளம் 1849 - 1922
14. கலியாண சுந்தரனார், திரு.வி. 1883 - 1953
15. கனகசுந்தரம் பிள்ளை, த. 1863 - 1922
16. சண்முகம் பிள்ளை, மயிலை. 1880 - 1941
17. சதாசிவச் செட்டியார், கயப்பாக்கம் 1872 - 1929
18. சதாசிவப் பண்டாரத்தார், தி.வை. 1892 - 1960
19. சாமிநாதையர், உ.வே. 1855 - 1942
20. சிதம்பரநாத முதலியார், டி.கே. 1882 - 1954
21. சிதம்பரம் பிள்ளை, வ.உ. 1872 - 1931
22. சிவசுப்பிரமணிய முதலியார், சி.கே. 1885 - 1945
23. சிவராச பிள்ளை, கே.எ. 1879 - 1941
24. சீனிவாச பிள்ளை, கே.எ. 1842 - 1929
25. சுந்தரம் பிள்ளை, பெ. 1855 - 1897
26. சுப்பிரமணிய ஐயர், வ.வெ. 1881 - 1925
27. சுப்பிரமணியக் கவிராயர், சே.ரா. 19,20ஆம் நூற்.
28. சுப்பிரமணிய சிவா 1884 - 1925
29. சுப்பிரமணிய பாரதியார், சி. 1882 - 1921
30. சுப்பிரமணிய பிள்ளை, கா. 1885 - 1945
31. சுப்பிரமணிய முதலியார், வெ.ப. 1857 - 1946
32. சூரியநாராயண சாத்திரியார்,வி.கோ. 1870 - 1903
33. செல்வக்கேசவராய முதலியார், தி. 1864 - 1921
34. சேதுப்பிள்ளை, ரா.பி. 1896 - 1961
35. ஞானியார் அடிகள் 1873 - 1942
36. திருநாராயணையங்கார் 1861 - 1947
37. திருநாவுக்கரசு முதலியார், மணி. 1888 - 1935
38. நமச்சிவாய முதலியார், கா. 1876 - 1937
39. நல்லசாமிப் பிள்ளை, ஜே.எம். 1864 - 1920
40. நாராயணசாமி ஐயர், பின்னத்தூர் 1862 - 1914
41. பவானந்தம் பிள்ளை, ச. - 1932
42. பாண்டித்துரைத் தேவர் 1867 - 1911
43. பூரணலிங்கம் பிள்ளை, எம்.எ. 1866 - 1947
44. மறைமலையடிகள் 1876 - 1950
45. மாணிக்க நாயக்கர், பா.வே. 1871 - 1931
46. மாதவய்யா 1872 - 1925
47. வடிவேலு செட்டியார், கோ. 1863 - 1936
48. வரதநஞ்சைய பிள்ளை, அ. 1877 - 1956
49. விபுலானந்த அடிகள் 1892 - 1947
50. வேங்கடசாமி நாட்டார், ந.மு. 1884 - 1944
51. வேங்கடாசலம் பிள்ளை, ரா. 1858 - 1953
52. வையாபுரிப்பிள்ளை, ச. 1891 - 1956
குறிப்பு :இவ் ஆண்டுகளில், ஒன்றிரண்டு வேறுபாடுகளும் காணப்படுகின்றன.
சான்று :1.தமிழ் வட்டம் 2ஆவது ஆண்டு மலர், 1969.
2. ந.சி. கந்தையா பிள்ளை, தமிழ்ப் புலவர் அகராதி, 1960.
3. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு.
நாவலர் பாரதியார் தமது அச்சேறிய நூலை மீண்டும் செப்பம் செய்வார் என்பதற்குரிய சான்றும் உ.வே.சா. அவர்களால் அச்சிடப்பட்ட புறநானூறு நூலில் குறிப்பு எழுதிய சான்றும் ஒளிப்படமாகத் தரப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாவலர்
ச. சோமசுந்தர பாரதியார் தலைமையின் கீழ்ப் பணிபுரிந்த
ஆசிரியப் பெருமக்கள்
1. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
2. பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்
3. அ. சிதம்பரநாதச் செட்டியார்
(இவர் நாவலர் பாரதியாரின் மாணவராக இருந்து, பின்பு அவரது தலைமையின்கீழ்ப் பணிபுரிந்தவர்.)
4. எ. இராமசாமிப் புலவர்
5. ஆர். கந்தசாமியார்
6. ஏ. பூவராகம் பிள்ளை
7. ஆர்.பி. அமிர்தலிங்கம் பிள்ளை
8. மு. அருணாசலம் பிள்ளை
9. லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
நாவலர் பாரதியாரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள்
1. அ.சிதம்பரநாதச் செட்டியார்
2. ச. ஆறுமுக முதலியார்
3. க. வெள்ளைவாரணனார்
4. அ.மு. பரமசிவானந்தம்
5. பூ. ஆலாலசுந்தரஞ் செட்டியார்
6. அ.ச. ஞானசம்பந்தன்
7. பி.ஆர். மீனாட்சிசுந்தரம்
8. ஆர். இராசரத்தினம் அம்மையார்
9. ஆர். இராசாமணி அம்மையார்
10. எ. உருத்திரபதி
11. ஆ. முத்துசிவன்
12. ப. சோதிமுத்து
13. நவரத்தினம் (இலங்கை)
14. செல்வநாயகம் (இலங்கை)
15. கார்த்திகேயன் (இலங்கை)
16. கே.சி. கோவிந்தராசன்
17. மா. மங்களம்மாள்
18. ஆ. நமசிவாய முதலியார்
19. ஆர். ஏகாம்பரநாதர்
20. செகந்நாத ஐயர்
21. நா. சீனிவாச முதலியார்
22. எம்.சி. கண்ணபிரான்
23. கோபாலசாமி நாடார்
24. த. முருகேசனார்
25. மு. சடகோபராமாநுசம் பிள்ளை
26. முருகேசன்
27. எம். அம்பலவாண பிள்ளை
28. அ. குஞ்சிதபாதம் பிள்ளை
29. கே.சி. வன்மீகநாதன்
30. பி.சி. லிங்கம்
31. கவி. தண்டமிழ்ப்பித்தன்
(குறிப்பு : இன்னும் பலரைப்பற்றிய விவரங்கள் தெரியவில்லை.)
நாவலர் பாரதியாரின் வரலாற்றுக் குறிப்பேடு
1879 சூலை 27 - நாவலர் பாரதியார் தோற்றம்.
இயற்பெயர் : சத்தியானந்த சோமசுந்தரன்.
தந்தை : எட்டப்ப பிள்ளை.
தாய் : முத்தம்மாள்.
1894 (ஏறத்தாழ) மீனாட்சியம்மையாரை மணமுடித்தல்.
1898 மார்ச் 30 - முதல் மகன் இராசாராம் பாரதி பிறப்பு.
1903 பிப்ரவரி 16 - இரண்டாம் மகன் இலக்குமிரதன் பாரதி பிறப்பு.
1905 அக்டோபர் 13 - மகள் இலக்குமி பாரதி பிறப்பு.
1905 சட்டப்படிப்புத் தேர்வு.
1905-1920 தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழில்.
1905-1919 நாட்டு உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக அரசினர் ஐயப்பட்டியலில் நாவலர் பெயர்.
1913 எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றி பெறல்.
1916 ஆகடு 19 - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் ஆராய்ச்சிச் சொற் பொழிவு.
1920 தூத்துக்குடியை விட்டு மதுரை வந்து வழக்கறிஞர் பணி புரிதல்.
1920 மதுரையில் மாநிலக் காங்கிரசு மாநாட்டை நடத்துதல்.
1926 சனவரி 25 - மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபக் கிறித்தவர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் ஆராய்ச்சிச் சொற்பொழிவு.
1926 மதுரையில் சி.ஆர். தாசைப் பேசச் செய்தல்.
1927 திசம்பர் 1 - வசுமதி அம்மையாரைத் திருவெட்டாற்றில் திருமணம் புரிதல்.
1929 பிப்ரவரி 28 - மகள் மீனாட்சி பிறப்பு.
1929 மார்ச் 11 - சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் திருவள்ளுவர் சொற்பொழிவு.
1930 சூலை 27 - மகள் லலிதா பிறப்பு.
1930 ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம்.
1932-1933 மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறுப்பு.
1933 மே 13 - உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத் தொடக்கப்பள்ளி உண்டாக்குதல். (வீரர் வ.உ.சி.யின் தொடக்க விழா உரை.)
1933-1938 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைமைப் பணி.
1935 செப்டம்பர் 15 - எட்டயபுரத்தில் தமிழகம் புதுமனை புகுவிழா.
1936 ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம் (2ஆவது முறை).
1937 செப்டம்பர் 5 - சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவர்.
1937 அக்டோபர் 25 - இந்தி மொழி பற்றிச் சென்னை மாநில முதலமைச்சர் திரு ச. இராசகோபாலாச்
சாரியாருக்கு வெளிப்படை மடல் எழுதல்.
1942 ஆகடு 1-3 - மதுரை முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவர்.
1944 திசம்பர் 30-31 - ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம் (3ஆவது முறை) ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றத்தாரின் நாவலர் பட்டம்.
1948 பிப்ரவரி 14 - சென்னையில் அகிலத் தமிழர் மாநாட்டின் தலைவர்.
1948 சூன் 27 - இந்திமொழி பற்றிச் சென்னை மாநிலக் கல்வி அமைச்சர் திரு தி.சு. அவினாசிலிங்கஞ் செட்டியாருக்கு மடல் எழுதுதல்.
1954 சனவரி 17 - மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் கணக்காயர் பட்டமும் பொன்னாடை போர்த்தலும்.
1954 சூலை 11 - அண்ணாமலைநகரில், சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவர்.
1955 பிப்ரவரி 9 - அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முனைவர் (டாக்டர்) பட்டம்.
1955 பிப்ரவரி 28 - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொன்னாடை போர்த்தல்.
1956 சூன் 3 - மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா 5ஆம் நாள் விழாவின் இயலரங்குத் தலைவர்.
1957 சூன் 22 - சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கல்.
1958 திசம்பர் 14 - பசுமலை நாவலர் பாரதியார் இல்லத்தில் தமிழகப் புலவர் குழு அமைப்புக் கூட்டம் - குழுவின் தலைவர்.
1959 சூலை 27 - மதுரையில் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா - பாராட்டு.
1959 அக்டோபர் 4 - மதுரையில் தமிழகப் புலவர் குழுவும், மதுரை நகரவையும் பாராட்டுதல்.
1959 நவம்பர் 8 - மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாவில் தொடக்க உரை (நாவலர் கலந்து கொண்ட இறுதிக் கூட்டம்).
1959 திசம்பர் 2 - பசுமலையில் தமது இல்லத்தில் மயக்கமுற்று விழுதல்.
1959 திசம்பர் 4 - மதுரை அரசினர் பெரு மருத்துவமனை செல்லல்.
1959 திசம்பர் 7 - நினைவிழத்தல்.
1959 திசம்பர் 14 - இறைவனடி சேரல் (இரவு 8.40 மணி).
1959 திசம்பர் 15 - பசுமலையில் உடலுக்கு எரியூட்டல் (மாலை 6 மணி).
1959 திசம்பர் 15 - இறுதிக் கடனிகழ்ச்சி - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட பல அறிஞர்களின் சொற்பொழிவு, ஏழைகளுக்கு உணவளித்தல்.
1963 நாவலர் சோமசுந்தர பாரதியார் கல்வி அறப்பணிக்குழு தோற்றுவித்தல்.
கருத்துகள்
கருத்துரையிடுக