சிறுவர் கதைக் களஞ்சியம் - 2
சுட்டி கதைகள்
Back
சிறுவர் கதைக் களஞ்சியம் - 2
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : சிறுவர் கதைக் களஞ்சியம் -2 (அப்பாத்துரையம் - 33)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 24+280 = 304
விலை : 380/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
** -கல்பனா சேக்கிழார்**
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
அப்பாத்துரையார் எனும் அறிவாட்சி அடங்கியதே!
தப்பாய்த் தவறாய்த் தமக்காய்ப்
படிக்கும் தரகரிடை
உப்பாய் உணவாய் உடம்பாய்த்
தமிழை உயிர்த்திருந்து,
‘முப்பால் ஒளி’யாய் முகிழ்த்து
’மணிவிளக்’ காய்எரிந்த
அப்பாத் துரையார் எனும்அறி
வாட்சி அடங்கியதே!
ஒப்பாய்த் தமிழ்கற்(று) உரைவிற்(று)
உயிர்வாழ உடல்களிடை
மப்பாய்த் திரண்டு மழையாய்ப்
பொழிந்து தமிழ்வளர்த்துக்
கொப்பாய்க் கிளையாய் மலராய்க்
கனியாய்க் குலம்புரந்த
அப்பாத் துரையார் எனும்தமிழ்
மூச்சிங் கொடுங்கியதே!
செப்போ இரும்போ மரமோ
மணலோ எதுதரினும்
எப்போ திருந்தமிழ் மாறி
உயிர்வாழ் இழிஞரிடை
முப்போ திலுந்தமிழ் ஆய்ந்தே
களைத்த மொழிப்புலவர்
அப்பாத் துரையார் எனும்மூ
தறிவும் அயர்ந்ததுவே!
ஒருமொழிப் புலமை உறற்கே
வாணாள் ஒழியுமெனில்,
இருமொழியன்று, பன் மூன்று
மொழிகள் இருந்தகழ்ந்தே
திருமொழி எனநந் தீந்தமிழ்த்
தாயைத் தெரிந்துயர்த்திக்
கருவிழி போலும் கருதிய
கண்ணும் கவிழ்ந்ததுவே!
குமரிஆரல்வாய் குமிழ்த்தமுத்
தம்மைக்குக் காசிநாதர்
திமிரிப் பயந்தஅப் பாத்துரை
என்னும் திருவளர்ந்து
நிமிர்த்துத் தமிழ்மொழி நீணில
மெங்கும் நிலைப்படுத்தும்
அமரிற் படுத்திங் கயர்ந்ததே
ஆரினி ஆந்துணையே!
செந்தமிழ் ஆங்கிலம் இந்தி
பிரெஞ்சு செருமனுடன்
வந்தச மற்கிரு தம்ருசி
யம்சப்பான் என்றயல்சார்
முந்துபன் மூன்று மொழிபயின்
றேபன் மொழிப்புலமை
வெந்துநீ றானதே, தாய்ப்புலம்
விம்ம வெறுமையுற்றே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார், கனிச்சாறு (பக். 158-59)
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் முத்துக்கள் 10
தமிழகத்தின் பிரபல மொழியியல் வல்லுநர்களில் ஒருவரான பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
1. குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் பிறந்தார் (1907). இவரது இயற்பெயர், நல்லசிவம், சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றார்.
2. சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றா. தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தார்.
3. திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணி யாற்றினார். பின்னர் காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு மாணவராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் கல்வி பயின்றார்.
4. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம்
குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.
5. சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.
6. தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சி களில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் குமுரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.
7. ‘சரித்திரம் பேசகிறது’ சென்னை வரலாறு’, கொங்குத் தமிழக வரலாறு’, ‘திராவிடப் பண்பு’, ‘திராவிட நாகரிகம்’ உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.
8. அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.
9. ‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றம், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.
10. அறிவுச் சுரங்கம், தென்மொழித தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை 1989ஆம் ஆண்டு 82ஆவது வயதில் மறைந்தார்.
சிறுவர் கதைக் களஞ்சியம் -2
இந்நூல் 2002 இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
“கோமரம் குதிரை ஈனுமா?”
காயங்குளம் ஒரு கடற்கரைப்பட்டினம். அங்கே அயல் நாடு களிலிருந்து கலங்களில் குதிரைகள் வந்து இறங்கும், வணிகர் அதை உள்நாட்டு நகர்களுக்குக் கொண்டு சென்று விற்பர், விற்றுப் பெரும் பொருளுடன் திரும்புவர்.
ஒரு நாள் அமீது என்ற வணிகன் குதிரையுடன் காயங் குளத்திலிருந்து புறப்பட்டான். சாத்தன்குளம் என்ற நகரத்திலுள்ள சந்தையில் அதைக் கொண்டு சென்று விற்க விரும்பினான்.
வழியில் மனிதனுக்கு வேண்டிய உணவும், குதிரைக்கு வேண்டிய கொள்ளும் புல்லும் குதிரையின் முதுகிலேயே ஒரு சாக்கில் கிடந்தது.
அவன் சில சமயம் குதிரை மீது ஏறியும், சில சமயம் அதை நடத்திக் கொண்டும் சென்றான்.
வழியில் ஓர் ஏழைச் சிறுமி; ஒரு பனை மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்தாள்; அவள் முகம் அழுதழுது வீங்கி யிருந்தது; அவன் காலில் ஏதோ கட்டுக் கட்டியிருந்தது.
அமீது சிறுமியை அன்புடன் நோக்கினான். “அம்மா! நீ ஏன் இப்படித் தனியாகக் காட்டிலிருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
சிறுமி மீண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டு அழுதாள். “ஐயா! நான் போக்கற்றவள். தாய் தந்தையில்லை. பிச்சை யெடுத்து வயிறு வளர்க்கிறேன். என் காலில் முள் தைத்து விட்டது. நடக்க முடியவில்லை. யாரிடம் என்ன கேட்க முடியும்?” என்றாள்.
வணிகன் தன்னிடமுள்ள உணவில் சிறிது கொடுத்தான். தன் குதிரை மீதே அவளை ஏற்றிக் கொண்டான்.
மாலையாகும்போது அவர்கள் அடுத்த ஊர் வந்து சேர்ந்தனர். சிறுமி அவனுக்கு நன்றி தெரிவித்து. “ஐயா! உங்கள் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்; இஃது எனக்குப் பழக்கமான ஊர்தான். நான் சென்று வருகிறேன். தங்களுக்கு எப்போதாவது நான் உதவ முடியுமானால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றாள்.
வணிகன் சிறுமியின் உள்ளங்கனிந்த நன்றியுணர்வு கண்டு வியப்படைந்தான். அந்த நன்றியுணர்வை அவளின் செயலில் காட்டும்வேளை மிக விரைவிலே வரும் என்று அவன் எண்ணவேயில்லை.
அவ்வூரின் ஒரு பகுதியில் வீடுகள் ஒழுங்காகவும் வரிசை யாகவும் கட்டப்பட்டிருந்தன. வீடுகளின் நடுவே ஒரு பெரிய சதுக்கமும், அதன் நடுவே ஒரு கோமரமும் இருந்தன. அதன் பக்கமாக அவன் போகும்போது, ஒருவன் நட்புரிமையுடன் அவனை அணுகினான்.
“அண்ணா! தாங்கள் நெடுந் தொலைவிலிருந்து வருகிறீர்கள் போல் இருக்கிறது. நம் வீட்டுக்கு வாருங்கள். என் விருந்தினனாக இரவு தங்கி விடிந்து செல்லலாம்” என்று தேனொழுகப் பேசினான்.
அமீது உண்மையில் எங்கே இரவு தங்குவது என்ற கவலை யுடன்தான் சென்றான். ஆகவே அந்த வாய்ப்பை ஆர்வத்துடன் ஏற்று, அவன் வீடு சென்றான்.
“குதிரையை எங்கே கட்டுவது?” என்று வணிகன் சுற்றுமுற்றும் பார்த்தான்.
“அதோ அந்த கோமரத்தில் கட்டி வையுங்களேன்” என்றான் வீட்டுக்குரியவன்.
வணிகனும் வீட்டுக்காரனும் நெடுநேரம் பேசியிருந்தனர். பின் திண்ணையில் படுத்து உறங்கினர்.
பொழுது விடியுமுன் வீட்டுக்காரன் முதலில் எழுந்து சென்றான். வணிகன் அப்போது விழித்துக் கொண்டிருந்தாலும், அலுப்பால் எழாமல் படுத்துக் கொண்டே சிறிது புரண்டான்.
“தலைமுறை தலைமுறையாக ஊரைக் காக்கும் கோமரமே! மாதம் தவறாமல் நீ எனக்கு ஒரு கன்றை ஈன்று தந்திருக்கிறாய். ஆனால் இந்த மாதம் நீ காட்டிய கருணையே கருணை! இப்போது நீ ஒரு குதிரையையே தந்திருக்கிறாய்?” என்று அவன் கோமரத்தை வாழ்த்தி வணங்கினான்.
பின், அவன் குதிரையை அதிலிருந்து அவிழ்த்து, அதன் மீது ஏறிப் புறப்படத் தொடங்கினான்.
இத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்தான் வணிகன். நண்பனாக அணுகியவன், நயவஞ்சகனாகச் செயலாற்றுவது கண்டு அவன் உடனே எழுந்து சென்றான்.
“அன்பனே! என்ன பிதற்றுகிறாய்? உன் நண்பன் குதிரையை ஆளற்ற குதிரையாகப் பாவித்துக் கதை அளக்கிறாயே,” என்றான்.
வீட்டுக்காரன், “ஐயா! நீ எங்கே குதிரையுடன் வந்தாய்? நடந்தல்லவா வந்தாய். இந்தக் கோமரம் மாதந்தோறும் ஒரு கன்றோ, ஆடோ ஈனுவது இவ்வூரார் எல்லோருக்கும் தெரியுமே! இத் தடவை அஃது என் பூசனையில் மகிழ்ந்து ஒரு குதிரை ஈன்றிருக்கிறது. அஃது என்னுடையதே. உன்னுடையதல்ல.” என்றான்.
அவ்விடம் வந்த அந்தக் குப்பத்தின் ஆட்கள் அனைவரும், “நீ வரும்போது நாங்கள் பார்த்தோமே! நீ குதிரை மீது எங்கே வந்தாய்? நடந்தல்லவா வந்தாய்?” என்று அஞ்சாது பச்சைப் பொய் கூறினர்.
வணிகன் அப்பக்கத்துள்ள ஒரு முறை நடுவரிடம் சென்று முறையிட்டான். ஆனால், அவர் அந்தக் குப்பத்தின் பல திருட்டுக் களில் மறை ஊதியம் பெற்று வந்தவராதலால், அவர்களுக்கு உடந்தையாகவே இருந்தார்.
“குதிரை உனது என்பதற்குக் கண்கூடான சான்று உண்டா? இல்லையானால், கண்டவர் சான்றுகளைத்தான் நான் நம்ப வேண்டும்” என்றார் அவர். மாலை நேரத்துக்குள் சான்று காட்டா விட்டால், அவனுக்கு எதிராகத் தீர்ப்பு அளித்துவிடப் போவதாக அவர் அச்சுறுத்தி அனுப்பினார்.
“முன்பின் தெரியாத அந்த ஊரில் தனக்குச் சான்று கூற யார் முன் வருவார்கள்?” என்ற தடுமாற்றத்துடன் வணிகன் ஊரெங்கும் சுற்றினான். தன் குதிரை மீதே ஏறி வந்த சிறுமியின் எண்ணம் அவனுக்கு ஏனோ வரவேயில்லை. ஆனால், சிறுமி அவனைத் தொலைவிலிருந்தே பார்த்து விட்டாள்.
அவள் அவனிடம் விரைந்தோடி வந்து. “ஐயா! ஏன் கவலையுடன் அலைகிறீர்கள்? உங்கள் குதிரை எங்கே?” என்றாள்.
வாணிகன் முகத்தில் களைதட்டிற்று. “ஆம், குதிரையை நேரில் கண்ட ஒரு சான்று கிடைத்துவிட்டது!” என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்தது.
சிறுமி தன் நன்றியுணர்வைக் காட்டுவதற்குக் கிடைத்த வாய்ப்பை ஆர்வத்துடன் ஏற்றாள்.
ஆனால், முறை மன்றத்துக்கு நேரே வர அவள் விரும்ப வில்லை. “கோமரத்தருகேயே நான் இருக்கிறேன். முறைமன்றக் காவலன் மூன்று தடவை கூவியபின், நானாக வருகிறேன்” என்றாள்.
அவள் உட்கருத்தை வணிகன் உணரவில்லை ஆயினும், “சரி,” என்று கூறிச் சென்றான்.
நடுவர், “சான்று கிட்டிற்றா?” என்றார், கிட்டவில்லை என்ற மாற்றத்தையே எதிர்பார்த்து!
ஆனால், அவன் “உண்டு” என்றதும் அவர் முகம் சுளித்தது.
“யார்”?
வணிகன் சிறுமியின் பெயர் கூறினான்.
நடுவர், “நங்கை!” என்று அழைத்தார்.
காவலாள், “நங்கா, நங்கா நங்கா!” என்று மூன்று தடவை கூவினான்.
மூன்று தடவை கூவும் வரை யாரும் வரவில்லை. ஆனால், மூன்றாம் தடவையில் சிறுமி விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தாள். அவள் கந்தலாடையின் சுருக்குகள் நீரில் நனைந்தும் அழுக்கடைந்தும் இருந்தன.
நடுவர் உரத்த குரலில். “நங்கை, நீ வர ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்டார்.
“ஐயா மன்னிக்க வேண்டும் இந்தக் குப்பத்தை அடுத்த தெப்பக்குளத்தில் தீப்பற்றிக் கொண்டது. வெப்பம் பொறுக்க மாட்டாமல் மீன்கள் கரைமீது துள்ளித்துள்ளிவிழுந்தன. அவற்றை மடியில் திரட்டிக் கொண்டிருந்தேன். அதனால் தான் நேரம் ஆயிற்று” என்றாள்.
“இஃதென்ன அண்டப்புளுகு புளுகுகிறாயே! தண்ணீரில் எங்கேயாவது நெருப்புப் பற்றுமா?” என்று கேட்டார் நடுவர்.
“கோமரம் குதிரைக்குட்டி ஈனுகின்ற குப்பத்தில், நெருப்பு ஏன் தீப்பற்றாது?” என்றாள் சிறுமி.
மன்றத்திலிருந்த எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். நடுவருக்கு வெட்கமாயிற்று.
அவர் சிறுமியின் சான்று முழுதும் கேட்காமலே, குதிரையை வணிகனிடம் ஒப்படைத்தார்.
சிறுமியின் நன்றியுணர்வை மட்டுமன்றி, அவள் அறிவையும் கண்டு வணிகன் அவளைப் பாராட்டினான். அவளைத் தன்னுடனே இட்டுச் சென்று தன்மகளாக வளர்த்தான்.
அவளும் வணிகன் குடிக்குரிய ஒப்பற்ற குலக் கொழுந்தானாள்.
மாயக் கட்டில்
மானூரில் மயன் என்ற பெயரை அறியாதவர் எவரும் இல்லை. அவன் மாயக் கைத்திறம் வாய்ந்த தச்சன், மூன்று தலைமுறைகளாகச் செல்வர் வீட்டுப் பணப்பெட்டிகள் முதல் ஏழை வீட்டு அரிவாள்மணை வரை, அவன் கைபடாத பொருள் இல்லை. ஆனால் குடிமரபாக அந்தத் தொழிலை நடத்த அவனுக்கு ஒரு புதல்வன் கிடையாது. மாலை என்ற ஒரு மகள் மட்டுமே இருந்தாள்.
அவன் அவளைத் தன் தமக்கை புதல்வனான மதியனுக்கு மணம் செய்வித்து, அவனிடம் தன் தொழிலை விட்டுச் சென்றான்.
மதியன் மாமனிருக்கும்போது நல்ல முறையில் தொழில் பழகிக் கொள்ளவில்லை. அதற்கு அவன் சோம்பலே பெரிதும் காரணமாயிருந்தது. மாமன் இறந்தபின் அவன் இதை எண்ணி வருந்தினான்.
மாமன் புகழை எண்ணிப் பலர் அவனிடம் வேலை கொண்டு வந்து கொடுத்தனர். அவன் அவற்றில் ஒன்றிரண்டு தான் செய்ய முடிந்தது. மாமன் கைத்திறம் அதில் கூட இருந்தது என்று ஊரார் கூறினார்கள். ஆயினும், அவன் பெரு முயற்சியுடன் சிறிதளவே செய்ததனால், ஊதியம் பற்றவில்லை. அவன் மனைவி பல வீடுகளில் வேலை செய்து, அவர்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியதாயிற்று.
வேலை செய்து வேலை செய்து, மாலை உடல் நலிவுற்றாள். ஆனால், பிள்ளை குட்டிகள் பெருகின. இனி நெடுநாள் இம்மாதிரி வேலை செய்ய முடியாது என்று அவள் கண்டாள். ஒருநாள் அவள் கணவனிடம் மனம் திறந்து பேசினாள்:
“நான் வீட்டைப் பார்ப்பேனா? குழந்தைகளைப் பார்ப்பேனா? வேலையைப் பார்ப்பேனா? ஆண் பிள்ளையா யிருந்தும் நீங்கள் இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? நான் இப்படி நெடுநாள் இருக்கப் போவதில்லை. நான் இறந்தால் குழந்தைகள் என்ன செய்யும் என்றுதான் கவலைப்படுகிறேன்!” என்று அவள் பொருமினாள்.
மதியன் உள்ளத்தின் ஆழத்தில் அவள் சொற்கள் பதிந்தன. மாமன் இறந்ததுமுதல் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு கோணிப்பையை அவன் எடுத்துக் கொண்டான். அதில் ஒரு கைக் கோடாரி, வாய்ச்சி, உளி, சுத்தி, சீவுளி முதலிய கருவிகள் இருந்தன. அவற்றுடன் அவன் காடு நோக்கிச் சென்றான். மாலை அவனுக்குக் கட்டுச்சோறு கட்டித் தந்தாள்.
காட்டின் உட்புறத்தில் ஒரு திறந்த வெளி இருந்தது. அதில் ஒரு சிறு மடமும், சின்னஞ்சிறு சுனையும் இருந்தன. சுனையருகே பார்க்க அழகற்ற, ஆனால் ஒரு மரம் இருந்தது. அதன் மீது ‘மயன்’ என்ற பெயர் செதுக்கப் பட்டிருப்பதை அவன் கண்டான்.
புகழ் மிக்க தன் மாமன் பெயர் அதில் யாரால், எப்போது, எதற்காகப் பொறிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்தான். கருவிப் பையைத் தலைப்பக்கம் வைத்து அவன் சிறிது சாய்ந்தான். எப்போது அவன் கண்ணயர்ந்தான் என்பது அவனுக்குத் தெரியாது. ஆயினும் கண் மூடிய பின்னும் அவன் அகக்கண் மூடவில்லை. அது மயனிருந்த காலத்தைப் பற்றியும், அவன் வேலைப்பாடு பற்றியும் கனவு கண்டது.
அவன் கண்முன் மயன்வந்து நின்று, புன்முறுவலுடன், “மாலை எப்படி இருக்கிறாள்? குழந்தைகள் நலந்தானா?” என்று கேட்டான்.
கனவிலேயே அவன், “ஆம், ஆனால், என் சோம்பேறித் தனத்தால் தான்…” என்று தன் கதையைத் தொடங்கினான்.
ஆனால், மாமன் அவனைப் பேசவிடவில்லை. “அஃதெல்லாம் ஒன்றுமில்லை. மாப்பிள்ளை; உங்கள் கைத்திறம் உங்களுக்குத் தெரியாது; அது கிடக்கட்டும்; மாலையை நான் நலம் வினவியதாகக் கூறுங்கள்; பிள்ளைகளுக்கு என் பெயர் சொல்லி முத்தம் கொடுங்கள்; இன்றைய ஒரு நாள் வேலையை நான் உங்களுக்காகச் செய்து விடுகிறேன். அதன்பின் மாலைக்குக் கவலை வேண்டாம். நீங்கள் சற்றுநேரம் தூங்குங்கள்” என்றான்.
தூக்கத்தில் கனவு கண்ட மதியன், கனவிலேயே மீண்டும் தூங்கினான்.
தூக்கத்திலும் மரம் வெட்டும் அரவம் கேட்டது. சீவும் ஓசை, தட்டும் ஓசை தொடர்ந்தன.
அவன் அதன்பின் எதுவும் கேட்கவில்லை. ஆழ்ந்து அயர்ந்து தூங்கினான். அவன் தூங்கி விழித்தான். கனவு முடிந்துவிட்டதா அல்லது கனவிலேயே விழித்தானா என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், அவன் தன் கண்முன் கண்ட காட்சியை நம்ப முடிய வில்லை. மயன் கைத்திறன் முழுவதும் காட்டும் வகையில் ஓர் அழகிய கட்டில் அவன் முன் கிடந்தது.
அவன் மரத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். மரம் இருந்த தடத்தையே காணவில்லை. கட்டிலும் கட்டிலுக்கு அருகே குவிந்து கிடந்த சில துண்டு துணுக்குகளும்தான் அதன் கதையை ஒருவாறு தெரிவித்தன. அருகே மயன் நின்றிருந்தான். அவனை மதியன் உற்று நோக்கினான்.
மயன் தன் கைவேலையின் வெற்றியை எண்ணியோ, மாலையை எண்ணியோ முகமலர்ச்சியுடன் காணப்பட்டான். கலை நிறைந்த மதிபோல அவன் முகம் ஒளி வீசிற்று.
மாமனிடம் பேச மதியன் வாயெடுத்தான். பேச முடியவில்லை; அத்துடன் தன் முன் நிற்பது மயன்தானா, அல்லது தன் மயக்கத்தால் ஏற்பட்ட உருவெளித் தோற்றம் தானா என்று தயங்கினான். அவன் தயங்கத் தயங்க, அந்த ஒளி உருவம் மங்கி மங்கி அப்பால் சென்றது. தொலைசெல்லும்தோறும் அது மாலைவானில் மங்கித் தோன்றும் மதியம் போல மாறுபட்டு மறைந்தது.
அவன் கண்விழித்தான். இன்னும் கனவு காண்கிறோமா அல்லது நனவுலகில் விழித்து விட்டோமா என்று தயங்கிக் கொண்டே அவன் கண்விழித்தான்.
அவன் வியப்பு அடங்கவில்லை. அஃது இன்னும் பன்மடங் காயிற்று. ஏனென்றால், அவன் கனவில் கண்ட கட்டில் இப்போது அவன் முன்னிலையிலேயே கிடந்தது. அத்துடன் உறங்கப் போகும்போது கண்ட மரத்தையும் காணவில்லை. கனவில் கண்ட மரத்தின் துண்டுத் துணுக்குகள்கூடக் கிடந்த இடத்திலேயே கிடந்தன. “ஆம்! மாலை மதியமாக மறைந்த அவன் மாமன் முகம், மாலை மதியமாகவே அவன் கண்முன் காட்சியளித்தது!”
அதுமட்டுமன்று, உறங்கும்போது மதியமாயிருந்தது. இப்போது மாலையாயிற்று! அவன் மனம் நனவுலகின் எல்லையில், கனவுலகின் விளிம்பில் ஊசலாடிற்று. அவன் சுனையில் மீண்டும் நீராடி, மாமனிருந்த திக்குநோக்கி நன்றியறிதலுடன் தெண்டனிட்டான். பின் கட்டிலுடன் வீடு வந்து சேர்ந்தான்.
கட்டிலின் மாயாவனப்பைக் கண்டு மாலை குதித்தாடினாள்.
“ஆ, என் தந்தை செய்த கட்டில் போலவே இருக்கிறதே. இவ்வளவு நல்ல வேலைத் திறத்தை வைத்துக் கொண்டுதானா, இவ்வளவு நாள் என்னை வதைத்தீர்கள்?” என்றாள் அவள். அவன் ஒன்றும் பேசவில்லை.
பின், “இந்தக் கட்டில் சோறு போட்டுவிடாது. இதை எங்கே கொண்டுபோய் விற்கலாம் என்று எண்ண மிடுகிறேன்” என்றான் அவன்.
“நம் மன்னன் பேகனைத் தவிர இதை வாங்கத் தக்கவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? அவரிடமே கொண்டு கொடுங்கள்” என்றாள்.
“பேகனிடம் பொருள்பெற இந்தக் கட்டிலா வேண்டும்? மயிலுக்குப் போர்வையும், முல்லைக்குத் தேரும் கொடுத்த மன்னன் நம் வறுமையைக் கண்டே கொடுத்துவிடக் கூடும். கட்டிலுக்கேற்ற விலையை வேறு இடம் தான் பார்க்க வேண்டும்” என்றான் மதியன்.
“மன்னனை நீங்கள் அறிந்தது அவ்வளவு தான்! நாம் அவனிடம் இரக்க வேண்டாம் கட்டிலின் தகுதியறிந்து விலை கோரத்தான் போகிறோம். அவன் இரப்பார்க்குக் கொடுப்பது வேறு. பொருளுக்குத் தகுதியறிந்து தரும் விலை வேறு” என்றாள் மாலை. அவன் மனைவி.
“இதற்கு என்ன தகுதியென்று நமக்குத் தெரிய வேண்டாமா?” என்று மதியன் கேட்டான்.
மனைவி மறுமொழி கூறுமுன் ‘கணீர்’ என்று எங்கிருந்தோ மறுமொழி வந்தது.
“என் தகுதியை நான் அறிவேன். நானே எனக்குள்ள விலையைக் கூறுவேன். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்” என்று அந்தக் குரல் கூறிற்று, பேசியது கட்டில் தான்!
அதுகேட்டு அவர்கள் வியப்படைந்தார்கள்.
“இதை நானே அரண்மனைக்குக் கொண்டு போய்விலை பெற்று வருகிறேன்” என்று மாலை புறப்பட்டாள்.
மன்னன் பேகன் கொலுமுடிந்து உவளகத்தில் தன் மனைவி கண்ணகியுடன் வீற்றிருந்தான். அவன் முன் பாணர் பாடிக் கொண்டு இருந்தனர். விறலியர் ஆடிக் கொண்டு இருந்தனர்.
வாயில் கடந்து மாலை கட்டிலுடன் சென்றாள். அவள் முன்னிலையில் கட்டிலை வைத்துவிட்டு, அவள் ஒதுங்கி நின்றாள்.
பேகம் கட்டிலின் வனப்பைக் கண்டு திகைத்தான். “ஆ… மயன் மீண்டும் உயிர்பெற்று வந்துவிட்டானா? அல்லது இஃது அவன் இறக்குமுன் செய்து வைத்திருந்த ஒன்றா?” என்றான்.
மாலை, “அரசே! நான் மயனின் மகள் மாலை, இந்தக் கட்டில் என் கணவன் செய்தது. அவரும் என் தந்தைக்குத் தமக்கை மகன் தான். இதை விற்கக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றாள்.
“என்ன விலையானால் கொடுப்பாய், மாலை!” என்று கேட்டாள், அரசி கண்ணகி.
“கட்டிலே கூறும், அம்மணி!” என்றாள் மாலை.
“கட்டில் பேசுமா? இதேது?”என்று கூறி அரசன் வாய் மூடுமுன், கட்டில், “ஆம், அரசே! என் விலை ஐந்து மரக்கால் பொன்” என்றது.
பேகன் சிரித்து, “ஒரு கட்டிலுக்கு ஐந்து மரக்கால் பொன் யார் கொடுக்க முடியும்?” என்றான்.
கண்ணகி பெருமிதத்துடன் காவலாளை நோக்கி, “ஆறு மரக்கால் பொன் கொடுத்துக் கட்டிலை வாங்கி அரசன் பள்ளிமாடம் சேர்ப்பி” என்றாள். மாலை களிப்புடன் வீடு சென்றாள்.
“கேட்ட விலைக்கு மேல் ஒரு மரக்கால் பொன் கொடுப்பானேன்” என்று மன்னன் அரசியிடம் கேட்டான்.
“அதையும் கட்டிலிடமே கேளுங்களேன்” என்று கூறிக் கண்ணகி மன்னனை அழைத்துச் சென்றாள். முன்னிரவில் மன்னன் புதிய கட்டிலில் அமரச் சென்றான்.
“வள்ளல் மன்னரே மயன் புகழ் மரபில் வந்த கட்டிலில் ஏற வேண்டுமானால் குளித்துத் துப்புரவான சிந்தனைகளுடன் வரவேண்டும்” என்றது கட்டில்.
"மன்னன் மரபைவிட மயன் மரபு சிறந்ததுதான் என்று தனக்குள் கூறிக் கொண்டே, மன்னன் சென்று நீராடிப் புத்தாடை அணிந்து, அறக் கடவுளை நினைந்து கட்டிலை அடைந்தான்.
சற்று நேரம் சென்றபின் அரசிவந்தாள். கட்டில் பேசிற்று; “மன்னனுக்கேற்ற ஒப்பனையுடன், உயர் சிந்தனையுடனும் வரவேண்டும், அம்மையீர்!” என்றது கட்டில்.
மயன் வகுத்த கட்டில் மன்னன் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் கட்டளையாகத் தொடங்கிற்று.
கட்டிலின் நடவடிக்கை முழுவதும் அத்துடன் முடியவில்லை. கட்டிலின் முதல்கால் வெளியே போயிற்று. முதல்யாம முடிவில் அது மற்ற மூன்று கால்களையும் நோக்கிப் பேசிற்று. “தோழர்களே! நான் நகரும் நாடும் சுற்றிவருகிறேன். நகரின் எல்லைப்புறத்தில் உணவு உடையில்லாமல் நூற்றுக்கணக்கானவர் நகரை நோக்கி வருகின்றனர். காலையில் அரசன் அவர்களுக்கு ஐம்பதாயிரம் கலம் நெல்லும் ஐம்பதாயிரம் பொன்னும் கொடுக்காவிட்டால், அவர்கள் கொள்ளைக்காரராக மாறக்கூடும்” என்றது.
இரண்டாம் யாமத்தில் இரண்டாம் கால் இதுபோலவே சுற்றிவந்து பேசிற்று. “தோழர்களே! நான் காடுகளைச் சுற்றிப் பார்வையிட்டு வருகிறேன். பன்றிகள் பெருக்கமுற்று நாட்டை நோக்கி வருகின்றன. அரசன் காலையிலேயே சென்று அவற்றை வேட்டையாடா விட்டால், அவை நாட்டில் புகுந்து பயிர்களை அழித்து விடும்!” என்றது.
மூன்றாவது யாமத்தில் மூன்றாம் கால் இது போலப் பேசிற்று. “தோழர்களே! நான் வானமெங்கும் திரிந்து வருகிறேன். முகில் மண்டலம் முழுவதும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. வருகிற ஆண்டுகளில் மழை குறைந்து பஞ்சநிலை ஏற்படக் கூடும். இவ்வாண்டு உணவுப் பொருள்களை அரசன் சேகரம் செய்ய வில்லையானால், நாட்டின் செல்வத்துக்கு ஊறு உண்டாகும்” என்றது.
நான்காம் யாமத்தில் நான்காம் கால் பேசிற்று. “தோழர்களே! நான் கடலகமெங்கும் திரிந்து வருகிறேன். நடுக்கடலின் ஆழத்தில் புயல் கருக்கொண்டு வருகிறது. வருகிற ஆறு மாதங்களுக்கு நடுக்கடலில் செல்லும் கலங்கள்பெருத்த அழிவுகளுக்கு ஆளாகக் கூடும். கடல் கடந்து செல்லும் வணிகர் சில காலம் நடுக்கடலில் செல்லாமல் கடலோரமாகச் செல்லும்படி அரசன் ஆணை பிறப்பிக்காவிட்டால், வாணிகத் துறையில் சீர்கேடு ஏற்படும்” என்றது. கனவில் கேட்பது போல மன்னன் இத்தனையையும் கேட்டான்.
பொழுது விடிந்தவுடனேயே மன்னன் கால்களின் எச்சரிக்கைகள் அத்தனையையும் கவனித்து ஆவன செய்தான். .அரசன் முன்னறிவின் திறன் கண்டு அமைச்சர்கள்கூட வியப்படைந்தனர்.
மன்னன் மாலையையும், மதியனையும் அழைத்து, ஆறு மரக்கால் பொன்னை அறுபது மரக்காலாக அவர்கட்கு அளந்து தந்தான். அச்சமயமும் அரசி கண்ணகி அவனை நயமாகக் கடிந்து கொண்டாள். “அன்பரே! ஐந்து கேட்டவர்களுக்கு நான் கேட்காமல் ஆறு கொடுத்தேன். நீங்களோ ஒன்றும் கேட்காதவர்களுக்கு அறுபது அளக்கிறீர்கள்” என்றாள்.
மன்னன், அரசியைத் தனியே அழைத்துக் கட்டிலின் மாய மதியுரைகளைக் கூறினான். மயன் புகழ்த்திருவுடன் போட்டி யிடும் பொருள்பெற்று மதியனும், மாலையும் வாழ்ந்தார்கள்.
நீல ஒளி
நள்ளி என்றொரு மன்னன் இருந்தான். அவன் கொடாக் கஞ்சன், அத்துடன் தற்பெருமையும் உடையவன். அவன் மகள் வள்ளி செம்பவளம் போல அழகுடையவள். ஆனால், அவளும் தன் அழகுபற்றிச் செருக்குடையவளாயிருந்தாள்.
நள்ளியின் அரண்மனையில் நீலன் என்ற ஒரு வீரன் காவல் வேலை பார்த்து வந்தான், அவன் வாழ்நாள் முழுவதும் உண்மையாக உழைத்தான். அவனுக்கு ஊதியம் குறைவு, வேலையை விட்டுப் போகும்போதும் அரசன் அவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.
வள்ளியை நீலன் தூக்கி வளர்த்தவன். அவன் வேலையை விட்டு நீங்கும்போது அவள் பன்னிரண்டு வயதுச்சிறுமி. அவன் அவளைப் பார்த்து, “இளவரசி! எனக்கு ஏதாவது கொடுத்தனுப்பும் படி நீயாவது அப்பாவிடம் சொல்லு” என்றான். ஆனால், அவன் எதிர்பாரா வண்ணம் அச்சிறுமி, “போ, போ ஒரு வேலையும் செய்யாமல் அரண்மனை வாசலில் நின்றவன் தானே நீ! உனக்கு ஊதியம் தந்ததே தப்பு” என்றாள்.
தந்தையின் கடுமையைவிட அந்தச் சிறுமியின் ஈரமற்ற சொற்கள் அவன் உள்ளத்தை மிகுதியும் அறுத்தன.
நீலன் தன் துயரக் கதையைத் தன் இளமைந்தனிடம் கூறினான். அவன் பெயர் நேரி. அவன் மிகவும் மனம் வருந்தினான்.
“அப்பா! இந்த அரசனிடம் நீங்கள் இவ்வளவு நாள் வேலை பார்த்தது தப்பு. நான் இந்த அரசனிடமும் வேலைபார்க்கப் போவதில்லை. இந்த நாட்டிலும் இருக்கப் போவதில்லை. எங்காவது சென்று என் மதிப்பை உயர்த்துவேன். முடியுமானால், இந்த அரசனுக்கும் அவன் மகளுக்கும் நல்ல பாடமும் படிப்பிப்பேன். ஆகவே, எனக்கு விடை கொடுங்கள்” என்றான்.
கிழவனுக்குத் தன் இளமகனைவிட்டுப் பிரிய மனமில்லை. ஆனால், அவன் கூறியதிலும் உண்மை இருந்ததென்று கண்டான். ஆகவே, அன்பு ததும்பிய உள்ளத்துடன் விடை தந்தான்.
இளைஞன் நேரிக்கு இப்போது வயது பதினாறு. அவன் அச்சம் என்பது இன்னது என்றறியாத காளை, துன்பங்களை அவன் அந்தச் சிறு வயதிலேயே துரும்பு என்று கருதினான்.
அவன் காட்டில் நெடுந்தொலை சென்றான். நடந்து காலும் கையும் சோர்வுற்றது. கல்லும் முள்ளும் அவன் காலடிகளையும் உடலையும் புண்படுத்தின. இனி, நடக்க முடியாது என்ற நிலையில் அவன் ஒரு மங்கிய ஒளியைக் கண்டான். அதை நோக்கி நகர்ந்தான்.
அந்த ஒளி காட்டின் நடுவில் உள்ள ஒரு குடிலிலிருந்து வந்தது. அங்கே யாரும் இல்லை. ஒரு மாயக்காரக் கிழவி மட்டுமே இருந்தாள். அவள் இரக்கமற்றவள்; கொடியவள்; ஆனால், நேரியின் கள்ளமற்ற மென்முகங் கண்டு, அவள் கூட அவன் மீது இரக்கம் கொண்டாள்.
தன் குடிலுக்கு வந்தவர்களை இன்மொழிகளால் வரவேற்று, நயவஞ்சகத்தால் கொல்வது அவள் வழக்கம். நேரியை அங்ஙனம் செய்ய மனமில்லாமல், கடுமொழிகள் கூறி. “இங்கே இடமில்லை, போ, போ,” என்றாள்.
நேரி, “அம்மையே! என்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. நீங்கள் இந்த ஓர் இரவு தங்க இடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்” என்றான்.
அவள் ஒருவாறு இணங்கினாள். ஆனால், ஒரு கட்டுப்பாடுடனேதான் இணங்கினாள். “காலையில் எழுந்தவுடன் என் தோட்டம் முழுவதும் கிளறிவிட்ட பின்புதான் நீ போக வேண்டும்” என்றாள். இளைஞன் ஒத்துக் கொண்டான். இரவில் அவன் மாயக்காரியின் குடிலில் நன்றாகவே தூங்கினான்.
மறுநாள் காலையில் அவன் தோட்டத்துக்குச் சென்று மண்ணைக் கிளறத் தொடங்கினான். தோட்டம் மிகவும் பெரிய தாயிருந்தது. அதைக் கிளறி முடிக்க ஒரு முழுப் பகல் நேரமாயிற்று. அதன்பின் அவனால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.
அவன் மீண்டும் ஒருநாள் இரவு தங்க இடம் தரும்படி கிழவியிடம் கெஞ்சினான். கிழவி முதலில் மறுத்தாள். பின் ’மறுநாள் காலையில் ஒரு வண்டி நிறைய விறகு வெட்டிக் கொண்டு வர உறுதி தந்தால், தங்கலாம் என்றாள்.
மூன்றாம் நாளும் விறகு வெட்டி முடிய முன்னிரவாயிற்று. இப்போது அவன் முன்னிலும் பன்மடங்கு சோர்ந்து தளர்ச்சி யடைந்தான். மற்றும் ஓர் இரவு தங்க இடம் அளிக்கும்படி கெஞ்சினான்.
இத்தடவை கிழவி கொடுத்த வேலை அத்தனை கடுமையாகத் தோன்றவில்லை. காலையில் தோட்டத்திலுள்ள கிணற்றிலிறங்கி, அதனடியிலிருக்கும் நீல ஒளி விளக்கை எடுத்துத் தரவேண்டும் என்பதே அது.
நேரி இரவு அமைதியாக உறங்கினான். மறுநாள் கிழவி அவனைக் கிணற்றில் இறக்கினாள். அதில் தண்ணீர் இல்லை. ஆனால் அஃது அறுநூறு அடி ஆழமுடையதாயிருந்தது. போகப் போகப் புழுக்கம் மிகுதியாயிருந்தது. மூச்சும் முட்டிற்று. ஆனால், நேரி மூச்சடக்கிக் கொண்டு, உயிரைக் கையில் பிடித்த வண்ணம், கிணற்றின் அடித்தளத்தைச் சென்றடைந்தான். ஆங்கே இருந்த அழகிய நீல விளக்கை எடுத்துக் கொண்டு அவன் மேலே ஏறினான்.
கிணற்றின் கரையருகே அவன் வந்ததும், கிழவி விளக்கைப் பெறக் கையை நீட்டினாள். அதில் ஏதோ சூது இருக்கக் கூடும் என்று அவன் ஐயுற்றான். ஆகவே, “நான் முதலில் கரை ஏறி விடுகிறேன்; அதன்பின் தருகிறேன்” என்றான்.
கிழவிக்குச் சினத்தால் மூக்குச் சிவந்தது. அவள் திடுமெனக் கயிற்றோடு அவனைக் கிணற்றில் தள்ளினாள். அத்துடன் ஒரு பெரிய பாறாங்கல்லால் கிணற்றின் வாயையும் அடைத்தாள்.
நேரி கிணற்றில் அடைபட்டுத் தவித்தான்; ஓர் அரை நாழிகைக்குமேல் அதில் தான் உயிருடன் இருக்க முடியாது என்பதை அவன் கண்டான். சாகுமுன் இருந்த கொஞ்ச நேரத்தை அவன் அமைதியாகக் கழிக்க விரும்பினான். அவன் இறுதியாகத் தன் கடவுள் வழிபாட்டை முடித்தான். சட்டைப் பையில் கையிட்டு அதில் தன் புகையிலைச் சுருளில் பாதி மீந்திருக்கக் கண்டான். சிறிது புகை குடிக்க விரும்பி, சுருளின் நுனியை நீல ஒளியில் காட்டினான்.
திடுமென எங்கும் நீலப்புகை பரந்தது. அது ஒரு பெரிய நீலப் பூதமாக அவன் கண்முன் நின்று “என்னை ஏன் அழைத்தீர்கள், என் ஆண்டவரே!” என்றது. சிறிது அச்சத்துடன் நேரி, “நான் ஆண்டவரும் அல்ல. நான் உன்னை அழைக்கவு மில்லை” என்றான்.
“நீல ஒளியை வைத்திருப்பவர்கள் யாராயிருந்தாலும், எனக்கு ஆண்டவர்தாம்; நான் அவர்கள் அடிமை; ஒளியில் புகையிலைச் சுருள் காட்டினால், அதையே அழைப்பாகக் கொண்டு நான் வருகிறேன். அவர்கள் என்ன கோரினாலும் நான் உடனடியாக அட்டியில்லாமல் செய்வேன்” என்றது பூதம்.
நேரிக்கு அச்சம் தெளிந்தது. புதிய தெம்பு வந்தது. “அப்படியா? மகிழ்ச்சி, என்னைக் கிணற்றிலிருந்து வெளியேற்று” என்றான்.
கூறியதுதான் தாமதம், அவன் வெளியே வந்துவிட்டான். அவ்வளவு விரைவில் எப்படி வெளியே வந்துவிட்டான் என்று அவனுக்கு விளங்கவில்லை. ஆனால், பூதத்தினால் எத்தகைய செயலையும் செய்ய முடியும் என்பதை அவன் கண்டு கொண்டான். சூனியக்காரி தனக்குச் செய்த தீங்குக்கு, அதைக் கொண்டே தண்டனை தர அவன் எண்ணினான். ஆகவே, அவன் பூதத்துக்கு மறுபடியும் வேலை தந்தான். “நான் இருந்த கிணற்றினுள் சூனியக்காரியைப் போட்டு அடை” என்று அவன் கூறினான். இதுவும் கண்மூடி விழிக்குமுன் நடந்தேறிற்று.
சூனியக்காரி தன் தீயவழிகளால், மிகுந்த பொன் சேர்த்து வைத்திருந்தாள். நேரி அதில் வேண்டுமளவு எடுத்துக் கொண்டு, மீதியைச் சேமப்படுத்தி வைத்தான். ஏழையாகவும், துணையற்ற வனாகவும் புறப்பட்ட அவன் இப்போது பணக்காரன் ஆனான். அத்துடன் தான் நினைத்ததை எல்லாம் முடிக்கும் ஆற்றலுடைய பூதம் அவன் கைவசம் இருந்தது.
நேரிக்கு இப்போது தன் தந்தையிடம் தான் பேசியது நினைவுக்கு வந்தது. தந்தை உழைப்பை மதியாத நன்றி கெட்ட அரசன் நள்ளிக்கும், செருக்கும் ஈரமற்ற நெஞ்சமும் உடைய அவன் மகள் வள்ளிக்கும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அவன் பழைய அவாவை நிறைவேற்ற இப்போது வாய்ப்பு ஏற்பட்டது.
அன்று இரவு வள்ளி மாடியில் உறங்கிக் கொண்டிருந்தாள். நேரியின் ஆணைப்படி பூதம் அவளை உறக்கத்திலேயே அவனிடம் தூக்கிக் கொண்டு வந்தது. அவன் அவளை எழுப்பி, தன் அறையைப் பெருக்கி மெழுகும்படி அதட்டினான். முதலில் அவள் மறுத்தாலும், அவனுடனிருந்த பூதத்தைக் கண்டு அஞ்சி வேலையைச் செய்தாள்.
அவள் செருக்கெல்லாம் பறந்தோடிற்று, இரவு முழுவதும் கடுமையாக வேலை வாங்கியபின், விடியற்காலம் அவன் பூதத்தின் மூலம் அவளை அரண்மனைக்கு அனுப்பினான்.
ஒவ்வோர் இரவும் இளவரசியின் செருக்கு இதுபோல அடக்கப்பட்டது. அவள் மனம் புழூங்கி அரசனிடம் முறை யிட்டாள். ஆனால், ‘தான் சென்றது எங்கே? தன்னிடம் வேலை வாங்கித் தன்னை அவமதித்து யார்?’ என்று அவளுக்குத் தெரியவில்லை.
இதை அறிய அரசன் அவளுக்கு ஒரு வழி தெரிவித்தான். “உன் பை நிறையப் பாசிப்பயறு போட்டுக் கொண்டு போ. வரும் வழியில் அதை ஒன்றொன்றாகப் போட்டுக் கொண்டு வா. அந்தத் தடமறிந்து நான் இடத்தையும் ஆளையும் கண்டுபிடிக்கிறேன்” என்றான் அவன். அவள் அவ்வாறே செய்தாள்.
ஆனால், அரசன் பேசுவதைப் பூதம் கேட்டுக் கொண்டிருந் தது. அஃது ஊர் முழுவதும் பாசிப் பயறு தூவி வைத்துவிட்டது. பாசிப்பயறு மழை பெய்திருக்கிறது என்று எல்லாரும் வியந்து பேசினர். சிறுவர் சிறுமியர் அதைப் பொறுக்கினர்.
தன் சூழ்ச்சி, பலிக்கவில்லை என்று அரசன் கண்டான். அடுத்த நாள் அவன் வள்ளியிடம் மற்றொரு சூழ்ச்சித் திறம் கூறினான். “உன் காலணியில் ஒன்றை நீ வேலை பார்க்கும் அறையில் ஒளித்து வைத்துவிட்டு வா, மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.
பூதம் இப்போது நேரிக்கு ஏற்பட இருக்கும் இடர்பற்றி அவனை எச்சரித்தது. “இந்த வேலை இனி வேண்டாம். இதில் கட்டாயம் ஏதேனும் சிக்கல் வந்து சேரும்” என்றது. நேரி இந்த எச்சரிக்கையைச் சட்டை பண்ணவில்லை. இளவரசி வள்ளி அன்று அவன் அறையில் வேலை பார்க்கும்போது, தன் செருப்புகளில் ஒன்றை ஒளித்து வைத்தாள்.
அடுத்த நாள் அரசன் ஒற்றர்களையும் காவலர்களையும் எங்கும் அனுப்பினான். காணாமற்போன செருப்பின் அடையாளத்தை மறு செருப்பால் காட்டி, அதைத் தேடவும் ஆணையிட்டான். நேரியின் அறையில் அஃது அகப்படவே, அவன் உடனே சிறையில் அடைக்கப்பட்டான்.
நேரியின் கெட்டகாலம், அவன் சிறைப்படும்போது நீலவிளக்கு அவன் கையிலில்லை. அவன் சிறையில் அடைபட்ட போது, அது வீட்டில் கிடந்தது. இதனால் பூதத்தின் உதவியும் அவனுக்குக் கிடைக்க வழியில்லை.
பூதத்தின் எச்சரிக்கையைப் புறக்கணித்ததற்காக அவன் வருந்தினான். என்ன செய்வது என்ற கவலையுடன் அவன் சிறைக்கூடத்தில் முன்னும் பின்னும் நடந்தான்.
அச்சமயம் அவன் பழைய விளையாட்டுத் தோழர்களுள் ஒருவன் வெளியே போய்க் கொண்டிருந்தான். நேரிக்கு ஒரு புது எண்ணம் தோன்றிற்று. அவன் சட்டைப் பையில் கைவிட்டுப் பார்த்தான். அதில் ஒரு பொன்காசு இருந்தது. அவன் உடனே தோழனைக் கூப்பிட்டான். “என் வீட்டில் ஒரு சிறு துணி மூட்டை இருக்கிறது. அதை என்னிடம் கொண்டு வந்து கொடு. உனக்கு ஒரு பொன் காசு தருகிறேன்” என்றான்.
தோழன் மகிழ்ச்சியுடன் மூட்டையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். அவனுக்குப் பொன்காசு கொடுத்தான். அவனுக்குப் பொன் காசு கிடைத்தது. நேரிக்கோ, உயிரினும் விலை மதிப்புடைய நீல விளக்கும், புகையிலைச் சுருளும் கிடைத்தன.
நேரி பூதத்தை அழைத்தான். சிறையிலிருந்து தப்ப வழி தேடும்படி கோரினான். ஆனால், பூதம் இப்போதும் அவனுக்கு நல்லறிவுரை கூறிற்று. “ஆண்டையே! சிறையிலிருந்து தப்புவதனால் மட்டும் பயன் என்ன? அரசன் தண்டனைக் கொடுக்கும்வரை பொறுத்திருப்போம். நீங்கள் மட்டும் நீலவிளக்கை உடன் கொண்டு செல்க. அப்போது அதன் மூலம் என்னை வரவழையுங்கள். அச்சத்தால், அரசன் பணிந்து வழிக்கு வந்து விடுவான்” என்றது.
நேரி அரசன் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டான். அவன் தூக்குத் தண்டனை பெறும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், தூக்கு மேடையில் ஏறுமுன் நேரி ஒரு கடைசிக் கோரிக்கை கோரினான். சாகுமுன் புகைகுடிக்க இணக்கம் அளிக்க வேண்டும் என்பதே அது. அரசன் அதற்கு இணங்கினான். ஆனால், புகைச் சுருளை நீல விளக்கின் முன் கொண்டு சென்றதும், பூதம் தோன்றிற்று அரசனையும் காவலரையும் கொல்லும்படி அவன் பூதத்துக்கு ஆணையிட்டான்.
பூதம் கொல்லப் புறப்பட்டது. காவலர் ஒருவர் இருவர் தலைகள் உருளத் தொடங்கின.அச்சமயம் அரசன் மண்டியிட்டுப் பணிந்தான்.
“ஆற்றல் மிக்க இளைஞனே! நான் செய்ததை எல்லாம் பொறுத்துவிடு. என் மகள் வள்ளியை உனக்கு மனைவியாக அளிக்கிறேன். என் அரசையும் உனக்கே அளிக்கிறேன். என்னையும் என் ஆட்களையும் கொல்லாமல் கருணை செய்” என்றான்.
நேரி பூதத்திடம், “சரி, அரசனை மன்னித்துவிடுவோம், விட்டுவிடு; திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்” என்றான்.
நேரிக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்தேறியது. நேரி அரசனானான்.
நேரியின் தந்தை நீலனுக்குத் தனி மாளிகையும் ஏவலர் பணியாட்களும், அரசுரிமை வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன.
“திறமை வாய்ந்த பிள்ளையைப் பெற்றோம்; அதன் பயனை அடைந்தோம்” என்று நீலன் மகிழ்ந்தான்.
இளவரசி வள்ளி தன் செருக்கெல்லாம் விட்டொழிந்தாள். நேரிக்கு அவள் நல்ல மனைவியாய், நாட்டின் நல்லரசியாய் விளங்கினாள்.
முதலை மாப்பிள்ளை
மருதாற்றின் வடக்கே ஆத்திக்காடு என்று ஒரு காடு இருக்கிறது. அதில் செவ்வோரி என்ற ஒரு நரியும், சிறுகாலி என்ற அதன் மனைவியும் வாழ்ந்தன. சூழ்ச்சித் திறத்திலும் நகைத் திறத்திலும் நரி உலகிலேயே செவ்வோரிக்கு ஈடுகிடையாது.
பொங்கல் தோறும் செவ்வோரி எங்கிருந்தாவது கரும்பு, மஞ்சள், இஞ்சி, நெல் ஆகியவற்றைத் தேடிக் கொண்டு வரும், சிறுகாலி பொங்கல் படைத்து, உண்டு, உடுத்து மகிழும். உறவு முறையான நரிகளையும், நண்பர்கள், அண்டை அயலார்களான நரிகளையும் அழைத்து விருந்து வைக்கும்.
சிறுகாலி அந்த ஆண்டில் கருவுற்றிருந்தது. அதற்கு அச்சமயம் வெள்ளரிக்காய் தின்ன ஆவல் உண்டாயிற்று. பொங்கல் நாளன்றே நிறைய வெள்ளரிக்காய் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமென்று செவ்வோரி கருதிற்று.
ஆத்திக் காட்டில் அந்த ஆண்டு வெள்ளரிக்காயே அகப்பட வில்லை. ஆனால், மருதாற்றுக்குத் தெற்கேயுள்ள வேம்பன் காட்டில் நிறைய வெள்ளரிக்காய் இருப்பதாக அது கேள்வியுற்றது.
ஆயினும், மருதாற்றில் வெள்ளம் இருகரையும் புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படிக் கடப்பது என்ற செவ்வோரி சிந்தனை செய்து கொண்டிருந்தது.
அச்சமயம் ஆற்றில் கரையோரம் ஒரு முதலை வருவதை அது கவனித்தது. அதற்கு ஒரு புதிய வழி தென்பட்டது. ஆகவே, அது முதலைக்கு வணக்கம் தெரிவித்தது.
“ஆற்றலும் அழகும் மிக்க முதலையாரே! வணக்கம் எங்கே இப்படி?” என்று முதலையிடம் நரி நலம் பாராட்டிற்று.
நரியின் புகழுரை கேட்டு முதலைக்கு முகம் மலர்ந்தது. அது தன் நெடும் பல்வரிசை இரண்டையும் திறந்து காட்டிச் சிரித்தது. நரிக்கு எதிர் வணக்கம் செய்து. “என்ன நரியாரே ஏது இப்பக்கம்?” என்று கேட்டது.
“உம்மைக் கண்டுதான் இப்பக்கம் வருகிறேன். என் மனைவி சிறுகாலியின் வீடு ஆற்றின் அந்தப் பக்கம் இருக்கிறது. அங்கே அவள் தங்கை வாணகை இருக்கிறாள். அவள் நல்ல அழகி. மணப்பருவமும் அடைந்திருக்கிறாள். ஆனால், அவள் தனக்கேற்ற பல்லழகன் கிடைத்தால்தான் மணஞ்செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். உங்களைப் பார்த்ததும், ஆற்றுக்கு அக்கரை சென்று உம்மைப் பற்றிப் பேச எண்ணினேன்” என்றது செவ்வோரி.
“அப்படியா? மகிழ்ச்சி” என்றது முதலை.
“உமக்கு இசைவானால், பொங்கல் கழிந்தவுடன் மணநாள் வைக்கலாம்” என்றது நரி.
முதலை இசைவு தெரிவித்தது.
“நான் உம்முடனே அக்கரை வருகிறேன். அவள் இசைவு தெரிவித்ததும் வந்து உம்மை அழைத்துச் செல்கிறேன்” என்றது
செவ்வோரி.
முதலை செவ்வோரியைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு அக்கரை சேர்த்தது.
செவ்வோரி வேம்பன் காட்டில் திரிந்தது. வயிறு நிறைய வெள்ளரிக்காய் தின்றது. வேண்டும் மட்டும் வெள்ளரிக்காயைத் திரட்டிக் கொண்டிருந்தது.
பொங்கல் அணுகிற்று. அஃது ஆத்திக் காட்டுக்குச் சென்று மனைவியிடம் வெள்ளரிக்காய் மூட்டையைக் கொடுக்க விரும்பிற்று.
ஆற்றில் இன்னும் வெள்ளம் தணியவில்லை. இன்னும் ஒரு முறை அதைக் கடக்க என்ன செய்வது? தான் ஏமாற்றிய முதலையின் கோபம் அகற்றி மற்றொருமுறை ஏமாற்ற அது தீர்மானித்தது.
ஆற்றின் இக்கரையில் சற்றுத் தொலைவில் அஃது ஒரு கோலை நட்டு வைத்தது. அதைச் சுற்றி ஒரு சிவப்புத் துணியையும் சுற்றிற்று.
நரி பெண் பேசிவிட்டுத் திரும்பி வரும் என்று முதலை பல நாள் காத்திருந்தது. அதனால், அது மிகவும் சீற்றம் அடைந்திருந்தது. நரியைக் கண்டதும், “ஏமாற்றுக்காரனே! நீ என்ன சொல்லி விட்டுப் போனாய்? என்னை என்ன நினைத்தாய்?” என்றது.
நரி, சிரித்துக் கொண்டு, “மாப்பிள்ளை எளிதில் ஏமாற மாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால், வாணகை பொங்கல் வரை காத்திருக்க மறுக்கிறாள். இப்போதே அக்கரை போய் முடிக்க வேண்டும் என்கிறாள்” என்றது.
“எங்கே அவள்” என்று முதலை கேட்டது. செவ்வோரி சிவப்புத் துணி சுற்றிய கோலைச் சுட்டிக் காட்டிற்று.
“நான் சென்று பார்க்கிறேன்” என்று முதலை அப்பக்கம் திரும்பிற்று.
நரி தடுத்தது. “அவ்வளவு படபடப்புக் கூடாது, மாப்பிள்ளை! அவள் இனி எங்கே போகப் போகிறாள்? என்னை அக்கரை சேர்த்துவிட்டால் நான் திருமண காரியங்களை விரைவு படுத்துவேன். நீர் ஆர அமர அவளுடன் பேசிக் கொண்டு, அவளை அழைத்து வரலாம்” என்றது.
புதுப்பெண்ணைப் பார்க்கும் அவாவால், முதலை விரைந்து நரியை அக்கரை கொண்டு சேர்த்துவிட்டுத் திரும்பிற்று.
அடக்க முடியாத ஆர்வத்துடன் முதலை பெண்ணின் அருகே சென்றது. அது பெண்ணல்ல, சிவப்புத் துணி சுற்றிய கோல் என்று அறிந்ததும், அது மிகவும் ஏமாற்றம் அடைந்தது. செவ்வோரி இனி அகப்பட்டால், அதைக் கொன்று பழி தீர்க்க வேண்டுமென்று அது தனக்குள் வெஞ்சினம் கூறிக் கொண்டது.
முதலை பலநாள் செவ்வோரியை எதிர்பார்த்தது. ஆனால் அது வரவில்லை. “எப்படியும் என்றேனும் அஃது ஆற்றுக்குத் தண்ணீர் குடிக்க வராமல் இருக்க முடியாது; அப்போது மறைந்திருந்து பிடித்துக் கொள்ளலாம்” என்று அது காத்திருந்தது.
வழக்கமாக விலங்குகள் தண்ணீர் குடிக்க வருமிடத்தில், முதலை சேற்றுக்கிடையே பதுங்கி இருந்தது. செவ்வோரி நீரில் முட்டளவு ஆழத்தில் இறங்கி நின்று தண்ணீர் குடித்தது. முதலை அச்சமயம் பார்த்துத் தண்ணீருக்குள்ளாகவே வந்து, ஒரு காலைப் பற்றிக் கொண்டது.
முதலை பதுங்கிக் கொண்டிருந்ததென்று நரிக்குத் தெரியாது. அது காலைப் பற்றியபின்தான் செய்தி தெரிந்தது. அதை இப்போது ஏமாற்றித் தப்பப் பழைய சூழ்ச்சிகள் செல்ல மாட்டா என்று அதற்குத் தெரியும். அஃது ஒரு கண நேரத்துக்குள் ஒரு புதுச் சூழ்ச்சி கண்டுபிடித்தது. அதன்படி நடந்தது.
“முதலையாரே! நில்! நல்ல திறமைசாலிதான்! உம்மை அடிப்பதற்கென்று நான் ஒரு கம்பு கொண்டு வந்தேன். நீர் அதைப் பார்த்துக் கடித்துக் கொண்டீரே! எனக்கு ஒரு கம்பு வீணாயிற்று” என்று நரி கூறிற்று.
“கால் என்று நினைத்துக் கம்பைக் கவ்விவிட்டோம்!” என்று வெட்கி முதலை காலைவிட்டது.
நரி சற்று அப்பால் சென்று நின்றது. “முதலையாரே! நீர் கடித்தது உண்மையில் என் கால்தான்; கோலல்ல; காலுக்கும் கோலுக்கும் வேறுபாடு தெரியாத மட்டி என்று கண்டுதான், நான் பெண்ணென்று சொல்லி உமக்கு ஒரு கம்பை நட்டு வைத்திருந்தேன். உம் தகுதிக்கு அது சரி என்றே இப்போது தோன்றுகிறது” என்று நரி நையாண்டி கூறி நடந்தது.
முதலை வெட்கத்தாலும், சினத்தாலும் புழுங்கிற்று. மறு தடவை ஏமாறாமல் எச்சரிக்கையாயிருந்து அதைக் கொல்ல எண்ணிற்று.
செவ்வோரி அது முதல் தண்ணீரில் இறங்குவதேயில்லை. கரையில் பாறையருகில் நின்று கொண்டே நீர் குடிக்கும். ஆனால், ஒரு தடவை நாவால் நீரைத் துழாவிக் குடிக்கும் போது, முதலை நீருக்குள் பதுங்கியிருந்தது. அது நாவையே எட்டிப் பிடித்துக் கொண்டது.
இத்தடவை எப்படித் தப்புவது என்று செவ்வோரி சிந்தித்தது. அது கலகல என்று சிரித்தது.
“முதலையாரே! உமது பற்கள் பார்க்கத்தான் வலுவுடையவை யாயிருக்கின்றன. செவ்வல்லி மலரின் ஓர் இதழை இவ்வளவு வன்மையுடன் கடிக்கிறீரே, அஃது என்ன இரும்பா?” என்றது.
தன் மடமையைக் காட்டிவிட்டதாக முதலை எண்ணி வெட்கத்துடன் பல்லின் பிடியைத் தளர்த்திவிட்டது. நரிவிரைந்து ஓடி அப்பால் நின்று கொண்டு, மீண்டும் நையாண்டி செய்தது. “முதலையாரே! நீர் ஒரு மடையர் என்பதை நீயே அறிந்திருக்கிறீர், ஆனால், எவ்வளவு தொலை மடையர் என்பது இன்னும் உமக்குத் தெரியாது. எங்காவது நரி செவ்வல்லி மலருடன் திரிவதுண்டா?” என்று கூறிற்று;
வெட்கமும், சினமும் முதலையைப் பாடாய்ப் படுத்தியது நீரில் மூழ்கியும் வெளிவந்தும் தன் சீற்றத்தை வெளிப்படுத்தியது, அந்த நரியின் தந்திரத்தை, அதன் நடிப்பை, புத்தி கூர்மையை, தொடர்ந்து தன்னை ஏமாற்றியதை நிதானமாய் நினைத்து வேதனையுற்றது. தானும் அதுபோலவே செயல்பட்டு அதனை வீழ்த்தியே தீரவேண்டும் என்று
செவ்வோரிக்கும் அதன் மனைவி சிறுகாலிக்கும் எப்போதும் நாவற்பழம் என்றால், மிகவும் பிடித்தம். ஆற்றங்கரையில் சேற்றருகில் ஒரு நாவல்மரம் இருந்தது. அதில் பழம் பழுத்த சமயம் பார்த்து, முதலை அதன் வேரிடையே வேராகப் பதுங்கிக் கிடந்தது.
நரி நாவற்பழம் பறிக்க அதனருகே வந்தது. சேற்றில் முதலையின் தடம் கண்டு, அது சிறிது ஐயுற்று அப்பால் நின்றது. முதலை இன்னும் அங்கே இருக்கிறதா என்று அறிந்து மேல் செல்ல விரும்பிற்று.
“நாவல் அண்ணே? நாவல் அண்ணே! உனக்கு ஒரு நல்ல வணக்கம், பழங்கள் பக்குவமாய் விட்டனவா?” என்று அது கேட்டது.
நாவல் மரம் பேசாது என்பது நரிக்குத் தெரியும். ஆனாலும் அது பேசாதது கண்டு வியப்புற்றது போல நரி பாசாங்கு செய்தது.
“என்ன அண்ணே! வழக்கமாகப் பேசுகிற நீ இன்று பேசாமல் இருக்கிறாய்? ஓகோ, இன்று நேரம் சரியாயில்லை என்று நினைக்கிறாய் போலிருக்கிறது” என்று அப்பாற் செல்ல முயன்றது.
நரி போய்விடக் கூடாதே என்ற ஆவலில், முதலை தானே மரமாகப் பாவித்துப் பேசத் தொடங்கிற்று. “நரித் தம்பி! நரித் தம்பி! போகாதே பழந்தின்று விட்டுப் போ” என்றது.
“ஆகா, அப்படியா சேதி, முதலையாரே! மரம் பேசாது என்ற மதி இல்லாமல், வெளிப்பட்டுவிட்டீரே! உம் அறிவே அறிவு” என்று கூறிற்று. அன்று பழம் பறிக்காமலே அது சென்றது.
முதலை தூங்கிய சமயம் பார்த்து அது பழம் பறித்துச் சென்றது.
நரி ஆற்றருகே வரும்போது ஏமாற்றிப் பிடிப்பது அரிது என்று முதலை கண்டு கொண்டது.
நரியும் அதன் மனைவியும் வெளியே போன சமயம் பார்த்து, அது அவற்றின் வீட்டுக்குள்ளேயே புகுந்து ஒளிந்து கொண்டது. அவர்கள் உள்ளே வந்ததும் இருவரையும் பிடித்துத் தின்றுவிட வேண்டுமென்று எண்ணிற்று.
வீட்டுக்குள் வருமுன்பே, செவ்வோரி முதலையின் தடத்தைக் கண்டு ஐயுற்றது. கதவு சிறிது திறந்திருக்கக் கண்டதும் ஐயம் வலுப்பட்டது. தானும் நின்று தன் மனைவியையும் கையைப் பிடித்து நிறுத்திக் கொண்டது.
வீட்டுடன் அது பேசுவதாகப் பாவனை செய்தது.
“வணக்கம், வீட்டக்கா! எல்லாம் நலம் தானே?” என்றது. வீடு பேசாதது கண்டு ஐயுற்றதாக அது பாவனை செய்தது.
“என்ன வீட்டக்கா, எப்போதும் போல இன்று என்னை வரவேற்காததேன்? சூதுமதியாளர் யாராவது வீட்டினுள் வந்தார்கள் போலிருக்கிறதே!” என்றது.
வீடு பேசினாலல்லாமல் நரி போய்விடக் கூடுமென்று நினைத்து முதலை, “ஊ,ஊ, வாங்க, வாங்க!” என்றது.
“முதலை மாமா, முதலை மாமா! வீடு பேசாது என்று தெரியாத மட்டி மாமா! உமக்கு ஒரு நெடு நீண்ட வணக்கம். உம்முடைய தொடர்பு எனக்கு வேண்டாம். நான் போய் வருகிறேன்,” என்று அது தன் மனைவியுடன் கம்பி நீட்டிற்று.
மருதாற்றையும் ஆத்திக்காட்டையும் விட்டு, அது பாலாற்றின் கரையிலுள்ள ஆர்க்காட்டில் சென்று புதுக்குடி அமைத்துக் கொண்டது.
செங்கீரை
வேடர் குடும்பமொன்றில் கீரன் என்றொரு சிறுவன் இருந்தான். சிறு வயதிலேயே அவன் தாய் தந்தையரை இழந்தான். அவன் உறவினர் எவரும் அவனைக் கவனிக்கவில்லை. அவன் தன்னந்தனியாகக் காடுகளில் அலைந்து திரிந்தான்.
அவன் உறவினர் அவனை வெறுப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் வேடனாகப் பிறந்தாலும், எந்த உயிரினத்தையும் கொல்ல விரும்பவில்லை. மற்ற வேடர்கள் அம்பு எய்தி காயப் படுத்திய பறவைகளைக்கூட அவன் எடுத்து வளர்த்து, பின் பறக்கவிட்டு விடுவான்.
விலங்கு பறவைகளைக் கொல்ல விரும்பாமல் அவன் காய் கனி கிழங்குகளையும் சருகுகளையும் உண்டு, நறுநீர் பருகி நாட்கழித்தான்.
அந்தண்மை வாய்ந்த அறவோர் ஒருவர் அக்காட்டில் தவஞ் செய்து கொண்டிருந்தார். அவர் அன்புடன் வளர்த்த மிளா ஒன்று ஒருநாள் வேடர் வலையில் சிக்கிக் கொண்டது. கீரன் வலையை அறுத்து அதை விடுவித்தான். அதற்குப் புல்லும் நீரும் அளித்தான். அது அவனை அன்புடன் பார்த்துக் கொண்டே மெள்ள அவன் ஆடையைப் பற்றி இழுத்தது.
வாய்விடா விலங்காகிய அந்த மிளா தன்னை எங்கேயோ அழைத்துச் செல்ல விரும்புகிறது என்று அவன் குறிப்பால் அறிந்து, அதனுடன் சென்றான். அது அவனை அறவோரிடம் இட்டுச் சென்றது.
அறவோர் முகம் புன்முறுவல் பூத்தது. “அப்பனே! வாயில்லாத இந்த விலங்குகூட உன் செயலின் அருமை அறிந்து நன்றி தெரிவிக்கிறது. பார்! வேடனாயிருந்தும் இந்த இரக்க உள்ளத்தை நீ எங்கே பெற்றாய்?” என்றார்.
“தங்களைப் போன்றோர் இவ்வளவு அருகே இந்தக் காட்டிலிருக்கும் போது, எங்களுக்கு என்ன குறை?” என்ற அவன் அறவோரின் நலம் பாராட்டினான்.
“அப்படியே உன் வாழ்வு நிறைவு பெறுக. நாளை உன் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிச் செல். ஒரு நாழிகை தொலை சென்ற பின், பன்னிரண்டு புறாக்கள் மரத்தின்மேல் விரித்திருக்கும் ஒரு போர்வையைத் தூக்கிச் செல்ல முயல்வதைக் காண்பாய். புறாக்கள் மீது படாமல் அவற்றிடையே ஓர் அம்பைச் செலுத்து. புறாக்கள் ஓடிவிடும். போர்வையும் அம்புபட்ட ஒரு மாம்பழமும் கீழே விழும். அந்தப் போர்வை இந்திரபடாம். அது உன்னை நினைத்த நினைத்த இடத்திற்குக் கொண்டு போகும். அந்த மாம்பழம் பொன் மயமாயிருக்கும். அது கற்பகக் கனி. அதை உன் தலையணையடியில் வைத்துப் படுத்துக் கொண்டால், ஒவ்வொரு நாள் காலையிலும் அதனடியில் ஒரு வெண்காசு உண்டாகும். இவற்றால் உன் வகையற்ற வாழ்வில் இசை பெருக்குக” என்று அறவோர் கூறியகன்றார்.
கீரன் அறவோர் கூறியபடியே சென்றான். இந்திர படாமும் கற்பகக் கனியும் அவன் கைவசமாயின. அவன் கையில் விரைவில் ஒரு பொற்குவை சேர்ந்தது. அவன் அவற்றுடன் நாடு சுற்றப் புறப்பட்டான்.
போர்வை எப்போதும் அவன் தோளில் கிடந்தது. கற்பகக்கனி அவன் கையிலுள்ள சிறு மூட்டையில் இருந்தது. அவன் அவற்றைக் கவனமாக வைத்துப் பேணினான்.
பல நாடுகளைப் பார்த்துவிட்டு, அவன் வைர மாமலையின் சாரலடுத்திருந்த பொன்மணி நாட்டுக்குச் சென்றான். அங்கே நகருக்கப்பால் மலையை அடுத்து ஒரு மாளிகை இருந்தது. அதன் வாயிலில் ஓர் அழகிய நங்கையும் அவள் தாயும் நின்றிருந்தார்கள். தாய் அவனை அன்புரைகளுடன் வரவேற்று. தன் மாளிகையில் தங்கிப் போகும்படி வேண்டினாள். அவனுக்கு இப்போது களைப்பு மிகுதியாயிருந்தது. அத்துடன் இளநங்கையின் புன்முறுவல் அவனைக் கவர்ந்தது. ஆகவே, தாயின் அழைப்பை ஏற்று, அம் மாளிகையில் ஒன்றிரண்டு நாள் தங்க ஒருப்பட்டான்.
கிழவி உண்மையில் ஒரு மாயக்காரி. அவள் இளைஞனின் கவலையற்ற களிமுகத்தைக் கண்டு, அவனிடம் ஏதேனும் அருஞ் செல்வம் இருக்க வேண்டும் என்று உய்த்துணர்ந்தாள். மகளைத் தூண்டி அவனை வசப்படுத்தி, அது இன்னதென்று அறிந்து, அதைப் பெற அவள் முனைந்தாள்.
நங்கையின் பெயர் தேங்கனி. கீரன் அவள் வசப்பட்டது போலவே, அவளும் அவன் வசப்பட்டிருந்தாள். எளிதில் இருவரும் நேசமும் பாசமும் கொண்டனர். ஆயினும் தாயின் தூண்டுதலுக்கு அவள் ஆளாகி, அவனைச் சூழ்ச்சி வலையில் சிக்க வைக்க ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.
பாசத்தில் கீரன் தன்னிலை மறந்து, தன் வரலாறு முழுவதையும் அவளிடம் சொன்னான். அத்துடன் தேங்கனிக் கேற்ற மாங்கனி என்று கூறிக் கற்பகக் கனியையும் அவளுக்குக் கொடுத்தான். தாய் அதை வாங்கித் தன் தலையணையடியில் வைத்துப் பொன் சேர்த்தாள். ஆனால், இத்துடன் அவள் பேரவா நிறைவடையவில்லை. “இந்திர படாத்தையும் இதுபோல அவனிடமிருந்து தட்டிப் பறித்துக் கொண்டு, அவனைத் துரத்திவிடு” என்று அவள் மகளிடம் கூறினாள். தேங்கனி முதலில் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. தாயின் வற்புறுத்தலால். அவள் இறுதியில் இணங்கினாள். மாலை நேரம் பலகணி வழியாக இனிய தென்றல் வீசிற்று. கீரன் கிளர்ச்சியுடன் தேங்கனியிடம் பேசத் தொடங்கினான். ஆனால், அவள் அவனுடன் உரையாடாமல், வைரமாமலைப் பக்கமாகப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவன் கனிவுடன், “ஏன், என்ன கவலைப்படுகிறாய், தேங்கனி?” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லை, அந்த வைரமாமலைக்குச் சென்று வைரம் பொறுக்கிக் கொண்டு வரவேண்டுமென்று என் நெடுநாளைய ஆவல். ஆனால், அது மனிதர் எவராலும் ஆக முடியாத காரியம் என்பதையும் நான் அறிவேன் மலைச் சாரலுக்கும் நமக்கும் இடையேயுள்ள ஆறு எவ்வளவு ஆழமுடையது. இதை நினைத்துத்தான் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அவள்.
உடனே அவன், “இவ்வளவு தானா?” என்று கூறிய வண்ணம் தன் இந்திர படாத்தில் அவளையும் இழுத்துப் போர்த்தினான். அடுத்த கணமே இருவரும் வைரமாமலைச் சாரலில் இருந்தனர். தேங்கனி மகிழ்ச்சியுடன் அதில் வைரக் கற்கள் பொறுக்கிக் கட்டிக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் உலவினர். இறுதியில் இருவரும் ஓரிடத்தில் உட்கார்ந்தனர். தேங்கனியின் மடியில் தலைவைத்துக் கீரன் சிறிது நேரம் படுத்தான். படுத்தவன் விரைவில் கண்ணயர்ந்தான்.
தேங்கனி இத்தறுவாயைப் பயன்படுத்தினாள். அவன் தலைக்கு ஒரு கல்லை அண்டை கொடுத்து விட்டு எழுந்தாள். இந்திர படாத்தை மெள்ள அவனிடமிருந்து எடுத்து, அதன் உதவியால், தான் மட்டும் தன் மாளிகைக்கு மீண்டும் வந்து சேர்ந்தாள். கீரன் மலையிலேயே கிடந்தான்.
கண் விழித்துப் பார்த்தபோது கீரன் திடுக்கிட்டான். தேங்கனியும் அவள் தாயும் தன்னிடம் கொண்ட நட்பு வஞ்சக நட்பு என்பதை உணர்ந்து. அவர்கள்மீது அவன் சீற்றங் கொண்டான். ஆனால், இப்போது அவன் சீற்றம் பயனற்றது. அவன் வைரமாமலையை விட்டு வெளியேற முடியாத நிலையில் அதில் அடை பட்டான்.
வைரமாமலையில் மனிதவாடை கிடையாது. அரக்கரே வாழ்ந்தனர். அவர்களில் சிலர் அப்பக்கம் வந்தனர். அவர்களிட மிருந்து தப்பும் வழியை ஆராய்ந்து கொண்டே, கீரன் தூங்குபவன் மாதிரி கண்ணை மூடிக் கொண்டுகிடந்தான். அரக்கருள் ஒருவன் அவனைக் கண்டு அவனை மிதித்துக் கொல்ல முயன்றான். ஆனால், அடுத்தவன் தடுத்தான். “தூங்குகிறவனைக் கொல்வானேன்” அவனாக எழுந்திருந்தால்கூட இன்னும் உயரமாகத்தான் ஏறப் போகிறான். ஏதேனும் புயலிலோ முகிலிலோ சிக்கினால், அதுவே இவனை எங்காவது தூக்கி எறிந்துவிடும்!" என்று சொல்லிக் கொண்டே அரக்கன் தன் தோழனுடன் அப்பால் சென்றான்.
அரக்கர் கைப்பட்டுச் சாவதைவிட இது நல்லவழி என்று எண்ணிக் கீரன் மலை மீதேறினான்.
திடுமென ஒரு புயல் அவனை நோக்கி வந்தது. அது ஒரு சூறாவளிப் புயல் அது அவனை வாரித் தூக்கிக் கொண்டு சென்று. வைரமாமலை கடந்து ஒரு பரந்த புலவெளியில் போட்டது.
இப்போது தான் இருந்த இடம் எது என்று அவனுக்குத் தெரியவில்லை. பல திசையிலும் நடந்து பார்த்தான், எல்லாத் திசையிலும் புல்வெளி பரந்து கிடந்தது.
பசியும் விடாயும் அவனை வதைத்தன. புல்லிடையே புல்லாக வளர்ந்த சில செங்கீரைகளை அவன் பறித்துத் தின்றான். தின்னும்போதே திடுமென அவன் தன் உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதாக உணர்ந்தான். விரைவில் தான் மனித உருவம் இழந்து, கழுதை உருவம் அடைந்ததை உணர்ந்து அவன் மனம் வருந்தினான்.
பசி மிகுதியாயிருந்ததால், அவன் செங்கீரையை மேலும் மேலும் தின்றான். சிறிது தொலைவில் வேறுவகைச் செங்கீரை இருந்தது. தற்செயலாக அவன் அதில் சில தின்றான். உடனே அவன் உடலில் மீண்டும் மாறுபாடு ஏற்படுவதை உணர்ந்தான். ஆனால், இத்தடவை அவன் கழுதை உடல் மாறி, மீண்டும் பழைய மனித உடலாயிற்று.
செங்கீரை வகைகளின் அரும் பயன்களை அவன் இப்போது உணர்ந்தான். கழுதையுருவமாக்கவல்ல வகையிலும், மனித உருவமாக்க வல்ல வகையிலும் இரு கொத்துக்கள் பறித்து வைத்துக் கொண்டான்.
அவன் மறுபடியும் நாடு நாடாக அலைந்தான். மீண்டும் பொன்மணி நாட்டுக்கு வரும்வரை அவன் கால் ஓயவில்லை. தொலைவில் தேங்கனியின் மாளிகை தெரிந்தவுடன் அவன் தன் முகத்தில் கரிபூசி உடைமாற்றிக் கொண்டு அங்கே சென்றான்.
மாளிகை வாயிலில் தேங்கனியும் தாயும் இப்போதும் நிற்பதை அவன் கண்டான். அவர்களும் கண்டார்கள். ஆனால், அவர்கள் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
“நீ யார் அப்பா?” என்று அவர்கள் கேட்டனர்.
அவர்களுக்கு மீட்டும் ஆவலூட்டும் வகையில் அவன் பேசினான்.
“அம்மணி! நீண்ட வாழ்நாள் அளிக்கும் ஒரு செங்கீரை வகையை அரசனுக்காகப் பெருமுயற்சி செய்து தேடிக் கொண்டு வந்திருக்கிறேன். நெடுந்தொலை அலைந்ததால் களைப்பா யிருக்கிறேன். உங்கள் மாளிகையில் சிறிது தங்க இடங் கொடுக்கும் படி வேண்டுகிறேன்” என்றான்.
சூழ்ச்சியால் செங்கீரையைத் திருடும் எண்ணத்துடன் கிழவி இடமளித்தாள்.
மறுநாள் கிழவி அவனிடம் வந்து, “தம்பி! நீ அருமையாகக் கொண்டு போகும் செங்கீரையில் நாங்கள் கொஞ்சம் சமைத்து அருந்தத் தரப்படாதா?” என்று கேட்டாள்.
“ஆகா கட்டாயம்! என்னிடம் இரண்டு கொத்துக்கள் இருக்கின்றன. ஆகவே சிறிது தருகிறேன். சமைத்து உண்ணுங்கள்” என்று அவன் கூறினான். கழுதையுறுவாக்கும் வகையில் சிறிது எடுத்துக் கொடுத்தான்.
வேலைக்காரி அதைச் சமைக்கும் போதே சிறிது தின்றாள். அவள் கழுதையாகித் தோட்டத்தில் சென்று மறைந்து திரிந்தாள்.
தாய் சிறிது நேரங்கழித்துச் சமையற் களம் வந்தாள். செங்கீரை பக்குவமாய் இருப்பது கண்டு சிறிது அருந்தி, அவளும் கழுதை உருவமடைந்து, தோட்டத்துக்குள் சென்று திரியலானாள்.
தேங்கனி கீரனுடன் இருந்து, செங்கீரை கொண்டு வரும் வேலைக்காரிக்காகக் காத்திருந்தாள். வேலைக்காரி வராததால், அவளை அழைத்துப் பார்த்தாள். பின் தாயை அழைத்தாள். இருவரும் வராமல் போகவே, எங்கே தனக்கில்லாமல் தின்று விடுகிறார்களோ என்று பார்க்க ஓடினாள்.
செங்கீரையில் கொஞ்சந்தான் மீந்திருந்தது. அவள் அதைத் தின்று கழுதையாகி மிரள மிரள விழித்தாள்.
கீரன் இப்போது மாளிகைக்கும், அதிலுள்ள எல்லாச் செல்வத்துக்கும் உரியவனானான். ஆனால், வீடெங்கும் தேடியும் கற்பகக் கனியையோ, இந்திர படாத்தையோ காண முடிய வில்லை. இப்போது அவன் அவற்றுக்காகக் கவலைப்படவில்லை. கையில் ஒரு மூட்டை தங்கத்துடன் மாளிகையைப் பூட்டிக் கொண்டு மூன்று கழுதைகளையும் துரத்திக் கொண்டு அவன் வெளியேறினான்.
தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் அவன் ஒரு வண்ணானைத் தேடிப் பிடித்தான். அவன் ஏழையாதலால் கழுதை வாங்க முடியவில்லை. தானே துணி மூட்டைகளைச் சுமந்து சென்றான். கீரன் அவனை நோக்கி, “அப்பா! நீ ஏன் இந்த மூட்டைகளைச் சுமந்து தொல்லைப்படவேண்டும்? இதோ இந்தக் கழுதைகள் எனக்கு வீட்டில் இருந்து தொல்லை தருகின்றன. நான் சொல்லுகிறபடி செய்தால். இந்த மூன்று கழுதைகளையும் நீ இலவசமாகப் பெறலாம் அத்துடன் அவற்றை வைத்துக் காக்க மாதம் நூறு பொன்னும் தருவேன்” என்றான்.
பருத்தி புடைவையாய்க் காய்த்ததுபோன்ற மகிழ்ச்சி யடைந்தான் வண்ணான். “ஆகா! தாங்கள் என்ன சொன்னாலும் அதன்படி செய்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவன் வணக்கத்துடன் கேட்டான்.
கீரன் மூன்று கழுதைகளையும் தனித்தனி சுட்டிக் காட்டினான். “அன்பனே! இதோ பார் கிழக்கழுதை! இதற்கு வாரத்துக்கு ஒரு தடவை சிறிது வைக்கோல் கொடுத்தால் போதும். ஆனால், நாள் தவறாமல் ஒரு நாளைக்கு மூன்று தடவை தாங்கு மட்டும் அடி கொடுக்க வேண்டும். கத்துவது நின்றால் மட்டும் அடி போதும் என்று விட்டு விடலாம். இதோ இந்த நடுத்தர வயதுடைய கழுதைக்கு நாள்தோறும் ஒரு தடவை உணவு கொடு. ஆனால், வாரம் ஒரு தடவை அடி கொடு. கடைசிக் கழுதையாகிய இந்தக் குட்டிக்கு ஒவ்வொரு நாளும் மூன்று தடவை உணவு கொடு. வாரம் ஒரு நாள் மட்டும் பட்டினி போட்டுவிடு” என்றான்.
குட்டிக்கழுதைதான் தேங்கனி. இச்சமயத்தில்கூடக் கீரனுக்குத் தன்னிடம் நேசம் இருப்பதை அது அறிந்தது. அவனுக்குத் தான் கேடு செய்ய எண்ணியதை நினைத்து, அது வருந்திக் கண்ணீர் வடித்தது.
கீரன் மீண்டும் தேங்கனியின் மாளிகைக்கு வந்து சில காலம் கவலையில்லாமல் வாழ்ந்தான். ஆனால், தேங்கனியின் கண்ணீர் அவன் கனவுகளில் வந்து அவன் முன் நிழலாடிற்று. அவன் ஒருநாள் புறப்பட்டு வண்ணான் வீட்டுக்கு வந்தான்.
வண்ணான் மூன்று கழுதைகளின் உழைப்பினாலும், அவற்றின் வளர்ப்புக்காகக் கிடைத்த பொன்னாலும் செல்வனாகி விட்டான். கீரனை நன்றியறிதலுடன் வரவேற்றான். கழுதைகளின் பேச்சு வந்ததும், வண்ணான் சிறிது வருத்தத்துடன், “அன்பரே! கழுதைகளுள் கிழக்கழுதை என்ன காரணத்தாலோ செத்துப் போய்விட்டது. அதன்பின் இரண்டாம் கழுதையைக் கூட எனக்கு மிகுதியாக அடிக்க மனம் வருவதில்லை. குட்டிக் கழுதையை ஒரு நாள் பட்டினி போடவும் நான் விரும்பவில்லை” என்றான்.
இயல்பாக வண்ணான் இரக்க நெஞ்சுடையவனா யிருந்தான். அதுகண்டகீரன் அவனைப் பாராட்டினான். மூவரின் உண்மை வரலாற்றைக் கூறிவிட்டு, இரு கழுதைகளையும் வரவழைத்தான். மீட்டும் மனித வடிவம் தரும் செங்கீரையில் கொஞ்சம் கொடுத்தான். அவன்முன் வேலைக்காரியும் தேங்கனியும் நின்றனர். இருவரும் அவன் காலில் விழுந்து கதறி அழுதனர்.
கீரன் தேங்கனியை வாரி எடுத்துத் தழுவிக் கொண்டான். வேலைக்காரிக்கும் ஆறுதல் கூறினான். "உங்களை நான் இனி தண்டிக்கப் போவதில்லை என்றவுடன் இருவர் துன்பக் கண்ணீரும் இன்பக் கண்ணீராயிற்று.
தேங்கனி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டே “அன்பரே! நான் தங்களுக்கு மனமார எந்தத் தீமையும் செய்யத் துணிவில்லை. என் தாயின் வற்புறுத்தலைத்தான் என்னால் தட்ட முடியாமற் போய்விட்டது” என்றாள்.
வேலைக்காரியும், “ஆம் ஆண்டே! உங்களை மலையில் விட்டுவிட்டு வந்தபின் அவள் ஒருநாள் கூட இரவு அமைதியாகத் தூங்கியது கிடையாது. காலையில் அவள் நனைந்த தலையணையை நான்தான் வெய்யிலில் அம்மா அறியாமல் உலர்த்தி வருவேன்” என்றாள்.
கீரன் வேலைக்காரிக்கு உடல் நிறைய நகையும் பணமும், கைநிறையப் பொன்னும் கொடுத்ததுடன் அவளை வண்ணானுக்கே மணம் செய்து கொடுத்தான். பின் அவன் மாளிகைக்குத் தேங்கனியுடன் மீண்டான்.
தேங்கனி கற்பகக் கனியும் இந்திர படாமும் இருக்குமிடம் தேடி, அவற்றை எடுத்து வந்தாள்.
“இதோ உங்கள் பொருளை உங்களிடம் சேர்த்து விட்டேன். இனி நான் வாழ்நாள் முழுதும் உங்கள்….”
கீரன் அவளைப் பேசி முடிக்க விடவில்லை.
“அவை இனி உன்னிடமே இருக்கலாம். ஏனென்றால், இனி நீயே என் மனைவி, நான் உன்னையே மணந்து கொள்ளப் போகிறேன்” என்றான்.
கீரனும் தேங்கனியும் மணம் செய்து கொண்டு இன்பமாக வாழ்ந்தனர். கற்பகக் கனி அவர்களுக்கு வேண்டிய பணம் தந்தது.
இந்திரபடாம் அவர்கள் விரும்பிய இடம் சென்று உலவவும், வைரமாமாலை சென்று வைரங்கள் எடுத்து வரவும் உதவிற்று.
இருவகைச் செங்கீரையையும் அவர்கள் தோட்டத்தில் பயிராக்கினர். தீங்கு செய்தவர்களை அவர்கள் சிலகாலம் கழுதையாக மாற்றித் தண்டித்து, மீண்டும் மனிதராக்கி மகிழ்ந்தனர்.
நிலாச்செல்வி
செய்நாடு என்ற ஒரு நாட்டில் பொன்மீளி என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் கலையில் ஆர்வம் கொண்டவன். அவன் நாடும், கலைப் பண்பில் எந்நாட்டுக்கும் முன்னோடியாயிருந்தது.
செய்நாட்டின் எல்லைக்கப்பாலுள்ள ஒரு சிற்றூரில் கலைப் பண்பில் தேர்ந்த ஒரு தட்டார் குடியும், தச்சர் குடியும் இருந்தன. இருகுடியிலும் இரண்டு சிறுவரே எஞ்சியிருந்தனர். செய்நாட்டின் கலைப்புகழ், அவர்கள் காதுக்கு எட்டிற்று. அந்நாட்டரசனைக் கண்டு தம் கலைத்திறங்காட்டிப் பரிசில் பெறும் எண்ணத்துடன் அவர்கள் புறப்பட்டார்கள். தத்தம் திறம் முழுவதையும் காட்டும் வேலைப்பாடுள்ள ஒவ்வொரு காணிக்கைப் பொருளுடன் சென்றார்கள்.
அரசன் பொன்மீளி அவர்களை வரவேற்றான். இருவர் கலைப் பொருள்களையும் கண்டான்.
தட்டார இளைஞன் காணிக்கை -அழகிய ஒரு வெள்ளிமீன். அதன் கண்கள் இரண்டும் கருமாணிக்கங்கள். மீன் முற்றிலும் உயிர்த்துடிப் புடையதாகவே இருந்தது.
தச்ச இளைஞன் காணிக்கை - ஒரு மரக்குதிரை. அதன் பிடரியில் மறைந்திருந்த ஒரு திருகாணியை அழுத்தினால் அது உயிருள்ள குதிரை போல கனைத்துப் பீடு நடைபோடும்.
அரசன் இருவர் கலைத் திறங்களையும் வியந்து பாராட்டி னான். ஒவ்வொருவருக்கும் ஒரு பதினாயிரம் பொன்னைப் பரிசாக அளிக்கும்படி கட்டளையிட்டான்.
“என் மீனின் முழுத் திறத்தைக் கண்டு. அதன்பின் எனக்குப் பரிசளிக்கக் கோருகிறேன். அரசே! அதை ஒரு நீர்நிலையருகில் விட்டுப் பாருங்கள்” என்றான்.
அரண்மனை நீர்நிலையருகே மீன் விடப்பட்டது. அது கண்ணொளி வீசிக் களிப்புடன் குளத்து நீரில் மூன்று முறை சுற்றி நீந்திற்று. பின் அரசன் காலடிக்கு வணக்கம் செய்து நின்றது. அரசன் மன மகிழ்ச்சியடைந்து தட்டார இளைஞனுக்கு நூறாயிரம் பொன் அளித்துப் பெருமைப்படுத்தும்படி ஆணை தந்தான்.
தச்ச இளைஞனும் தன் குதிரையின் உண்மைத் திறமை காட்டி முழுப் பரிசு பெற விரும்பினான்.
“அரசே! என் குதிரையில் ஏறி அதன் ஆற்றல் காணுங்கள். அதன் பின் எனக்குப் பரிசு தரலாம். ஆயினும், என் குதிரை மீது ஏறிச் செல்பவர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை தர வேண்டும். அதை யாரும் அடிக்கக் கூடாது” என்றான்.
அரசனோ இளைஞன். இந்த எச்சரிக்கை கேட்டு அவன் சீறினான். “உயிருள்ள எத்தனையோ உயர்தரக் குதிரைகள் என் கையால் அடிபடத் தவம் கிடக்கின்றன. இந்த மரக் குதிரையையா நான் அடிக்கப்படாது” என்ற கடுஞ்சினத்துடன் கூறி அதன்மீது ஏறினான். ஏறியதும் அதைக் கைக்கொண்ட மட்டும் அடித்தான்.
ஒவ்வோர் அடிக்கும் ஓர் ஆயிர அடி உயரமாகக் குதிரை வானில் பறந்தது. அரசன் உருவம் வான முகில்களிடையே மறைந்தது. நெடுநேரம் யாவரும் ஆவலாகப் பார்த்தும் குதிரையோ, அரசனோ திரும்பி வரவில்லை.
மக்கள் கூக்குரலிட்டனர். மதியமைச்சர்கள் துடி துடித்தனர். படைத்தலைவர்கள் பதைபதைத்தனர். ஆனால், போன மன்னன் மீளவில்லை. காவலரும் ஏவலரும் தச்ச இளைஞனையே கடிந்து அவனைச் சிறையிலிட்டனர்.
அமைச்சர் குழு ஒன்று நாடாண்டது. மன்னனைத் தேடி உலகெங்கும் வீரரும், வேவுகாரரும் சுற்றினர்.
வானளாவிப் பறந்த குதிரை காடுகளும் மலைகளும் பாலை வனங்களும் ஆறுகளும், கடல்களும் தீவகங்களும் கடந்து சென்றது. தற்செயலாக அரசன் அதன் பிடரியிலுள்ள ஒரு முளையை அழுத்த நேர்ந்தது. உடனே குதிரை கீழ்நோக்கி இறங்கி, அரசனை ஒரு நகரின் அருகே கொண்டு சென்று இறக்கியது.
அந்நகர் பொன்மீளிக்கு முன்பின் தெரியாத ஒன்று. அங்கே உள்ள பழக்க வழக்கங்களும் முற்றிலும் புதியவையாயிருந்தன. அங்குள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் அவன் ஓர் அறையெடுத்தான். அறை சென்றதும், உண்ட பின் ஒரு விளக்குக் கொண்டு வரும்படி ஏவலரைப் பணித்தான்.
ஏவலர் மிரள மிரள விழித்தனர்.
விடுதி முதல்வன் நேரே வந்தான். “ஐயா! உம் வேண்டுகோள் கேட்டு வியப்படைகிறோம். இந்நாட்டில் விளக்குகள் கிடையாது. விளக்குகள் கொண்டு வரவும் சட்டம் கிடையாது. இது உமக்குத் தெரியாதா?” என்றான்.
இப்போது பொன்மீளி மிரள மிரள விழித்தான்.
“இஃது என்ன புதுமை? விளக்கில்லாமல் இரவில் இருட்டிலா இருப்பீர்கள்?” என்று கேட்டான்.
விடுதி முதல்வன் விளக்கம் தந்தான்.
“அன்பரீர், இந்நாட்டு இளவரசியின் முகம் முழு நிலாப் போன்றது. முழு நிலாப் போல ஒளி வீசுவது. இரவு முழுவதும் அவளே அரண்மனைக் கோபுர உச்சியிலிருந்து நகருக்கு ஒளி தருகிறாள். அதற்குப் போட்டியாக எவரும் விளக்கு ஏற்றக் கூடாது என்பது இந்நாட்டின் சட்டம். அரசர் ஆணை, விளக்கு ஏற்றினால் கடுந்தண்டனை கிடைக்கும்” என்றான்.
அப்போது இரவாகத்தான் இருந்தது. அரசன் வெளியே எட்டிப் பார்த்தான். எங்கும் நிலவாயிருந்தது. ஆனால், அது நிலாச் செல்வனின் நிலவல்ல. ஒரு கோபுர உச்சியில் நிலாச் செல்வனே போல் ஒளிமிக்க ஒரு முகம் தெரிந்தது.
அரசன் வியப்படைந்தான்.
அத்தகைய அழுகொளியுடைய இளவரசியைக் காண, அவன் உள்ளம் துடித்தது.
மறுநாள் காலை அவன் மரக்குதிரையைத் தட்டி ஏறி, கோபுர மாடியில் சென்று இறங்கினான்.
அவன் மேடையெங்கும் சுற்றிப் பார்த்தான். பின் கீழே இறங்கிப் பல கூடங்களிலும் அறைகளிலும் உலவினான். ஓர் அறையில் இளவரசி நிலாச் செல்வி அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் ஒளி திகழும் அழகைக் கண்டு அவன் திகைத்து நின்றான், அவன் தன்னையும் மறந்து உலகையும் மறந்து விட்டான்.
அவள் மெள்ளக் கண் திறந்தாள். எதிர்பாராத புதிய ஆள் கண்டு அவளும் திடுக்கிட்டாள். தன் தனிமையைக் கலைத்ததனால் வந்த சீற்றம். அவன் துணிச்சல் கண்டு அச்சம் ஆகிய உணர்ச்சிகள் அடுத்தடுத்து எழுந்தன. ‘அவன் யார்? எப்படி இங்கே வந்தான்?’ என்றறியும் ஆர்வம் இந்த உணர்ச்சிகளைத் தாண்டி மேலெழுந்தது.
“நீ யார்? இங்கே ஏன் வந்தாய்?” என்று அவள் கேட்டாள்.
நேசம் நிறைந்த அவன் உள்ளம் பேசிற்று. அவன் தன் வரலாறு கூறினான். தன் அவா ஆர்வங்களைக் கொட்டினான். அவள் மீது தான் கொண்ட நேசத்துடன் முடித்தான்.
“நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் உன் அழகொளிக்கு அடிமையாகி விட்டேன். நீ என்ன செய்தாலும் நான் அதை இன்பமாக வரவேற்பேன்” என்றான்.
அவனிடம் பேசப் பேச அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வளவு துடிப்புடைய, நாகரிகமுடைய, வீரமுடைய இளைஞனை அவள் கண்டதே இல்லை. அவளும் அவனிடம் ஈடுபட்டாள்.
நெடுநேரம் பேசி அளவளாவியபின் மறுநாள் வருவதாகக் கூறி, அவன் குதிரையேறி மீண்டான்.
மாயக் குதிரை ஏறிவரும் அந்த மன்னிளங் கோவை எண்ணியே அவள் நாள்முழுதும் கழித்தாள். இரவில் அவள் ஒளிமுகம் அவன் இருக்குந் திசையிலேயே நெடுநேரம் நோக்கிற்று. அவனும் நகருக்கு ஒளிதந்த அந்த நிலா முகத்தைப் பார்த்துக் கொண்டே இரவைப் போக்கினான்.
நாள்தோறும் அவர்கள் அரண்மனை மாடியில் பகலில் சந்தித்துப் - பேசிப் - பொழுது போக்கினர்.
தன்னை மணந்து கொள்ளும்படி பொன்மீளி அவளை ஒருநாள் வேண்டினான்.
அவளும் அவனை மணாளனாகப் பெற விரும்பினாள். ஆனால், தந்தையை எண்ணி அவள் அச்சமுற்றாள்.
பகலெல்லாம் அரசி தூங்குவது வழக்கம். இரவு முழுதும் அவள் கோபுர மேடையிலிருந்து நகருக்கு ஒளி கொடுப்பாள். இப்போது பகலில் நெடுநேரம் பேச்சில் கழிந்ததால், அவளால் இரா முழுதும் விழித்திருக்க முடியவில்லை. இடையில் சில சமயம் கண் உறக்கச் சோர்வால் இறுகும். அப்போது அவள் சிறிது அப்பால் சென்று தூங்கி எழுவாள். அச்சமயங்களில் நகரில் இருள் சூழும். நகர மக்களிடையே இது புதுப் பேச்சுக்கு இடம் தந்தது.
பகலிலும் மாடியில் அயலார் நடமாட்ட மிருப்பதைச் சிலர் கவனித்தனர்.
அரசன் செவிகளுக்கும் இந்தச் செய்திகள் எட்டின. இதன் உண்மையை ஒரு வாரத்துக்குள் கண்டு கூறும்படி அமைச்சருக்கு அவன் ஆணையிட்டான். ஒரு வாரத்துக்குள் உண்மை காணாவிட்டால். அமைச்சர் தலையை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தான்.
அமைச்சன் கவலையிலாழ்ந்தான்.
ஆனால், அமைச்சர் மகள் அமர்விழி தான் அதைக் காண வகை செய்வதாக உறுதி கூறினாள்.
அவள் நிலாச் செல்வியுடன் நயமாகப் பேசிச் செய்தி அறிய முயன்றாள். நிலாச் செல்வி தன் காதலனைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆயினும், அறையில் அடிக்கடி அவள் யாருடனோ நேசமாகப் பழகி வருவதுண்டு என்பதை அமர்விழி அறிந்து கொண்டாள். வருகிற ஆளைக் கண்டுணர அவள் ஒரு சூழ்ச்சி செய்தாள்.
கண்ணுக்கு எளிதில் புலப்படாத ஒரு சாயத்தை அவள் அறை எங்கும் தூவினாள். உருப்பெருக்கிக் கண்ணாடியால் மட்டும் அதைக் காண முடியும். அந்தக் கண்ணாடியால் அந்தச் சாயம் தோய்ந்த ஆடை யுடையவரைத் தேட அவள் நகரெங்கும் ஆளனுப்பினாள்.
பொன்மீளியறியாமல் அந்த மாயச் சாயம் அவன் உடையில் பரந்திருந்தது. அவன் பிடிபட்டான். அரசன் முன் அவன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான்.
தானும் ஓர் அரசனேயாதலால், உண்மையை ஒப்புக் கொள்வதே நலம் என்று அவன் நினைத்தான். ஆனால் அரசன் கொல்லும்படி உத்திரவிட்டான்.
கொலைகாரரைப் பொன்மீளி ஆவல் காட்டி ஏய்க்க முனைந்தான். சாகுமுன் தன் அறையிலுள்ள செல்வத்தை அவர்களிடம் கொடுக்க விரும்புவதாகக் கூறினான். அவர்கள் அவன் அறைக்குச் செல்ல இணக்கமளித்தனர். ஆனால், அறை சென்றதும் அவன் மரக்குதிரை ஏறிப் பறந்தோடினான்.
கொலைகாரர் அவன் போனது பற்றிக் கவலைப்பட வில்லை. உண்மையிலேயே அவன் அறையில் பெருஞ்செல்வம் இருந்தது. அவர்கள் அதை எடுத்துக் கொண்டனர். ஓர் ஆட்டைக் கொன்று அதன் குருதியை அரசனிடம் காட்டினர். பொன் மீளி கொலையுண்டதாக எண்ணி அரசன் அமைந்தான்.
பொன்மீளி மறுநாள் பகலில் வழக்கம் போல அரண்மனை மாடிக்கு வந்தான்.
எல்லோரையும் போலவே நிலாச் செல்வியும் அவன் கொலை செய்யப்பட்டான் என்று எண்ணியிருந்தாள். அந்த எண்ணத்தினால் அவள் முழுவதும் மனக்கலக்கம் அடைந்திருந்தாள். ஆனால், அவனை நேரில் கண்டதும், அவள் ஒரு புறம் அதிர்ச்சியும், மறுபுறம் மகிழ்ச்சியும் உற்றாள். நடந்த செய்திகள் யாவற்றையும் அவன் அவளுக்குக் கூறினான். பின், “இப்போது என்னுடன் வருகிறாயா? என் நாட்டுக்குச் சென்று மணம் செய்து கொள்வோம்” என்று கேட்டான்.
அவள் இணங்கினாள்.
இருவரும் குதிரை மீதேறிச் சென்றனர். அது வானளாவப் பறந்தது.
ஆனால், வெளியேறும் சமயத்தில் இளவரசி தன் வைர மாலையை எடுத்துவர மறந்தாள். அது அவள் குடும்பத்தின் மரபுரிமைச் சின்னமாதலால் அதை இழக்க அவளுக்கு மனம் ஒப்பவில்லை. ஆகவே, பொன்மீளி ஒரு திடலில் இறங்கி அவளை மட்டும் திரும்ப அவள் மாளிகைக்கு அனுப்பினான்.
வைர மாலையை எடுத்துக் கொண்டு நிலாச்செல்வி மீண்டும் புறப்பட்டாள். ஆனால், கெட்ட காலமாக, அவள் குதிரையின் திருகாணியைத் தவறாகத் திருப்பி விட்டாள். குதிரை துண்டு துண்டாக விழுந்தது. அவள் அரண்மனையிலேயே இருந்துவிட வேண்டியதாயிற்று. தன் காதலன் இனி என்ன நினைப்பானோ என்ற கலக்கத்துடன், அவள் வேண்டா வெறுப்பாக அங்கேயே தங்கினாள்.
பொன்மீளி இளவரசிக்காக நாளும் வாரமும் காத்திருந்தான். அத்திடலில் அவன் காய் கனிகளை உண்டு திரிந்தான். தற்செயலாக அவன் ஒரு நாள் ஒரு பழத்தைத் தின்றபோது, அது அவனைக் கிழவனாக்கிற்று. ஆனால், அதுபோல இன்னொரு கனி அவனைத் தற்செயலாகச் சிறுவனாக்கிற்று. இரண்டையும் வேண்டிய அளவில் தின்றால், என்ன வயது என்ன வடிவம் வேண்டுமானாலும் பெறலாம் என்று அவன் கண்டான்.
சிறுவனுருவிலேயே அவன் தன் காதலியைத் தேட முனைந்தான்.
நிலாச்செல்வியின் அரண்மனையில் சமையற்காரனா யிருந்த மீனவன் என்பவன் குழந்தையில்லாமல் வருந்தியிருந்தான். அவன் கப்பலில் வழிச் செல்லும் போது, பொன்மீளி இருந்த திடலில் இறங்கினான். பொன்மீளி துணையற்ற சிறுவன் என்று கேள்வியுற்று அவன் பொன்மீளியைத் தன் பிள்ளையாக ஏற்றுக் கொண்டான். பொன்மீளி அவனுடன் நிலாச்செல்வியின் அரண்மனைக்கே வந்தான்.
மீனவனுக்கு உடல் நலம் கெட்டு வந்தது. அவன் தன் இடத்தில் பொன்மீளியைச் சமையல் வேலையில் சில காலம் அமர்த்தினான். கிழவனாக்கும் கனியைப் பொன்மீளி அரசன் உணவில் கலந்து கொடுத்தான். அரசனும் நிலாச்செல்வியும் கிழவராயினர். இளமையுடன் அழகும் ஒளியும் போய் விட்ட படியால், நிலாச் செல்வியால் நகரம் ஒளி பெறவும் முடியாமல் போயிற்று.
அரசனையும் இளவரசியையும் மீட்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருபவருக்கு. நாட்டிற் பாதியையும் இளவரசியையும் கொடுப்பதாக அரசன் பறையறை வித்தான்.
பொன்மீளி இதற்காகவே காத்திருந்தான். அவன் தன் வளர்ப்புத் தந்தையாகிய மீனவனிடம் சென்றான்.
“என்னால் அரசனையும் இளவரசியையும் நலப்படுத்த முடியும்” என்றான்.
மீனவன் முதலில் இதை மறுத்தான். பொன்மீளியின் வற்புறுத்தலால் அவன் பொன்மீளியை அரசனிடம் இட்டுச் சென்றான். இளைஞனாக்கும் கனியால் பொன்மீளி அரசனையும், நிலாச்செல்வியையும் பழைய உருவம் பெறச் செய்தான்.
அரசனுக்கும் மக்களுக்கும் வந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பொன்மீளிக்கு நாட்டிற் பாதியையும் நிலாச் செல்வியையும் தர எல்லோரும் இசைந்தனர்.
ஆனால், இப்போது நிலாச்செல்விக்கு மட்டும் துளி கூட மகிழச்சியில்லை. அவளுக்குச் சமையற்கார இளைஞனே பொன்மீளி என்பது தெரியாது.
தனிமையில் சென்றதும், நிலாச் செல்வியிடம் தான் யார் என்பதை அவன் கூறினான். வயது பெருக்கும் கனியை வேண்டிய அளவில் அருந்திப் பழைய உருவம் காட்டினான். அவளும் தன் துயரம் மாற்றிப் புது மகிழ்ச்சி கொண்டாள்.
நிலாச் செல்வியை மணந்து பொன்மீளி சில நாள் அந்நாட்டின் இளவரசனாக இருந்தான். பின் ஒரு நாள் அவன் அரசனிடம் தன் வரலாறு கூறினான். தன் நாட்டுக்குச் செல்ல விடை தரும்படி கோரினான். அரசன் முதலில் மகளை விட்டுப் பிரிய மனம் ஒப்பவில்லை. ஆயினும், இறுதியில் அவளை அனுப்ப இசைந்தான். ஏராளமான பொன்மணி கலங்களுடன் அவர்கள் புறப்பட்டனர்.
மரக்குதிரையைப் பொன்மீளி திரும்பவும் பொருத்தி, அதன் மேல் ஏறி நிலாச் செல்வியுடன் தன் நாடு வந்தான்.
மாண்டு விட்டதாக நினைத்த அரசன் மீண்டு வந்ததையும், புதிய அரசியுடன் வந்ததையும் கண்டு மக்கள் மகிழ்ச்சிக் கடலுள் குளித்தனர்.
சிறையிலடைபட்டிருந்த தச்ச இளைஞனைப் பொன்மீளி விடுதலை செய்து. அவனுக்கு ஐம்பது நூறாயிரம் பொன் பரிசளித்தான். அத்துடன் அவனையே அமைச்சனாகவும் அமர்த்திக் கொண்டான். அவன் நண்பனான தட்டார இளைஞனுக்கும் அரண்மனையில் தக்க பணி தரப்பட்டது.
அரசி நிலாச்செல்வியுடன் பொன்மீளி செய் நாட்டை நீண்டகாலம் ஆண்டான்.
ஐம்பொன் மரம்
ஏழாரம் என்ற நாட்டில் சேந்தன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் முதல் மனைவி சிலம்பன் என்று புதல்வனைப் பெற்றெடுத்துப் பின் இறந்து போனாள். சேந்தன் இரண்டாவ தாக ஒரு மனைவியைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கும் கங்கன், கலிங்கன் என்ற இரு புதல்வர் இருந்தனர்.
அரசிக்குச் சிலம்பன்மீது எப்போதும் பொறாமை மிகுதி யாயிருந்தது. அவன் மூத்தவனாயினும் எளிதில் அரசுரிமை பெறாதபடி செய்ய, அவள் அரும்பாடு பட்டாள். அரசனிடம் அவனைப் பற்றி ஓயாது கோள் சொல்லி, அரசனுக்கு அவன் மீது வெறுப்பூட்ட முயன்றாள். இதன் பயனாக அவனும் அவன் செவிலித் தாயும் அரண்மனையை விட்டுத் துரத்தப்பட்டனர். அவர்கள் நகரெல்லையில் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்தனர்.
சிலம்பனுக்கு அரசுரிமையில் பங்குகூடத் தராமல் நாட்டைக் கங்கனுக்கும் கலிங்கனுக்கும் மட்டும் பங்கு போட்டுக் கொடுக்கும்படி அவள் அரசனை வற்புறுத்தினாள். அரசன் அவள் வேண்டு கோளையும் மறுக்க முடியாமல், மூத்த மகனையும் விலக்க முடியாமல் வாளா இருந்தான்.
ஒருநாள் அரசன் ஒரு புதுமையான கனவு கண்டான். அவன் முன் ஓர் அழகிய மாமரம் நின்றது. அதன் வேர்கள் வங்கமாகவும், அடிமரம் இரும்பாகவும், கிளைகள் செம்பாகவும், இலைகள் வெள்ளியாகவும், பூவும் காய் கனிகளும் தங்கமாகவும் இருந்தன. அது காண்போர் வியக்கத்தக்க முறையில் ஆடிப்பாடிற்று.
ஐம்பொன் மாமரத்தின் ஆடல் பாடலைக் கனவில் மட்டுமின்றி, நனவிலும் காண அரசன் அவாக் கொண்டான். அந்த மரம் தன்முன் ஆடும்படி செய்பவர்களுக்கு நாட்டில் பாதி தருவதாக அவன் பறை சாற்றினான்.
வேறு யாராவது ஐம்பொன் மாமரத்தைக் கொண்டு வந்து பாதி நாட்டைக் கொண்டுபோய் விடுவார்களோ என்று கங்கனும் கலிங்கனும் அஞ்சினார்கள். ஆகவே, அவர்களிருவரும் தாமே அம்மரத்தைத் தேடப் புறப்பட்டார்கள்.
அவர்கள் செல்லும் வழியில் ஒரு செல்வச் சீமாட்டியின் மாளிகை தென்பட்டது. சீமாட்டியின் பாங்கியர் வெளியே நின்றிருந்தார்கள். அவர்கள் இளவரசர் இருவரையும் கண்டதும், அவர்களை அன்புடன் அழைத்தனர். “எம் தலைவி தாயம் ஆடுவதில் வல்லவள். அவளுடன் ஒன்றிரண்டு நாள் ஆடியிருந்து விருந்துண்டு செல்லுங்கள்” என்றார்கள்.
வேடிக்கை விளையாட்டு என்றால், கங்கனுக்கும், கலிங்கனுக்கும் பெருவிருப்பம், அவர்கள் சீமாட்டியின். விருந்தினராயிருந்து, பகலும் இரவும் அவளுடன் தாயமாடினர்.
சீமாட்டி ஒரு மாயக்காரி, அவள் கள்ள ஆட்டம் ஆடுவதில் கைதேர்ந்தவள், அரசர் பெருமக்களுடன் ஆடி அவர்கள் செல்வம் முழுவதும் கவர்ந்தபின், அவள் அவர்களைத் தன் ஏவலர்களாக ஆக்கி வந்தாள். அவள் மாளிகையிலுள்ள ஏவலர்கள் அத்தனை பேர்களும் இவ்வாறு அரசும், செல்வங்களும் இழந்த காவலர்களே.
கங்கனும் கலிங்கனும் மற்றக் காவலர்களைப் போலவே தம் செல்வங்களை இழந்த ஏவலர்களாயினர். ஐம்பொன் மாமரத்தைத் தேடிவந்த அவர்கள் முயற்சியும் முற்றுப் பெறாது போயிற்று.
ஐம்பொன் மாமரத்தைத் தேடச் சென்ற புதல்வர் இருவரும் திரும்பாதது கண்டு, அரசி கலங்கினாள். ஆனால் சிலம்பன் அவளிடம் வந்து ஆறுதல் கூறினான். “நான் எப்படியும் சென்று அவர்களை மீட்பேன்” என்று கூறினான். அரசனிடமும், “தம்பிமார்களை மீட்பதுடன், முடியுமானால் ஐம்பொன் மாமரத்தையும் தேடிக் கொண்டு வருவேன்” என்று கூறிச் சென்றான்.
கங்கனையும் கலிங்கனையும் போலவே, சிலம்பனும் சீமாட்டியின் மாளிகை வழியாகச் சென்றான். சீமாட்டியின் பாங்கியர் அவனையும் அன்புடன் அழைத்தனர். அவன் சீமாட்டி யின் விருந்தினனாய் அவளுடன் இருந்து தாயமாடினான்.
சிலம்பனின் செவிலித்தாய் ஒரு மாயக்காரியின் மகள். ஆகவே அவள் மாயங்களை அறிந்தவள். தன் பாதுகாப்பில் வளர்ந்த சிலம்பனை அவள் தன் புதல்வனைப் போலவே நேசித்தாள். மாயங்களை அறிந்து தடுக்கவல்ல ஆற்றல்களில் அவள் அவனைப் பயிற்றுவித்திருந்தாள். ஆகவே, சீமாட்டியின் மாயத்தையும் கள்ள ஆட்டத்தையும் சிலம்பன் ஒரு நொடியினுள் கண்டு கொண்டான். எனினும், அது தெரியாதவன் போலவே நடித்து. அவன் அவள் மாயத்துக்கு எதிர் மாயம் வழங்கினான். தன் வித்தையால் அவன் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சுண்டெலியை அவன் உண்டு பண்ணினான். கட்டத்தில் விழும் காய்களை எல்லாம் அது அவன் பக்கமே வெற்றி கிட்டும்படி புரட்டிற்று.
சீமாட்டியின் மாயத்திறம் படிப்படியாக இறங்கிற்று. அவள் வாழ்க்கை யிலேயே முதல் தடவையாகத் தன் செல்வம் முழுவதும் இழந்தாள். அவள் ஏற்பாட்டின்படி, அவள் தன் வீட்டிலேயே தானும் அடிமையானாள். அவளால் அடிமையாக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களுள் சிலம்பனின் தம்பிமாரான கங்கனும் கலிங்கனும் இருந்தனர். அவர்களுக்கு விலையேறிய பரிசுகளைக் கொடுத்தனுப்பினான்.
சீமாட்டிக்கும், அவன், அவள் செல்வத்தில் பாதி கொடுத்து, தொலையூர் சென்று நல்வாழ்வு வாழும்படி அனுப்பினான். மீதிப் பாதிச் செல்வத்தைப் பூட்டி வைத்துவிட்டு அவன் தானும் வெளியேறினான்.
மாற்றாந் தாயிடமும் தந்தையிடமும் கூறிய முதல் உறுதி மொழி இப்போது அவனால் நிறைவேறிவிட்டது. ஆனால், தந்தையிடம் கூறிய மற்றொரு உறுதிமொழி இப்போது அவன் நினைவுக்கு வந்தது. தந்தை காண அவாவிய ஐம்பொன் மாமரத்தையும் தேடிப் பார்க்கலாம் என்று அவன் புறப்பட்டான்.
பல பகல், பல இரவு அவன் அலைந்து திரிந்தான். ஐம்பொன் மாமரத்தின் தடம் எங்கும் காணவில்லை. ஒரு நாள் முன்னிரவாகியும் தங்க இடம் அற்ற ஒரு பாலைவனத்தில் அவன் தங்க வேண்டியதாயிற்று. அதன் நடுவில் ஒரு கேணியும், கேணி அருகே இனஞ் சுட்டியறிய முடியாத ஒரு பெரிய மரமும் இருந்தன. கேணியின் நீர்த்தளம் நிலத்தளத்துடன் சரி நிரப்பிலேயே கிடந்தது. நீரின் சிற்றலைகள் நிலத்தின்மீது நெடுந்தொலை படர்ந்து அதை ஈரமாக்கியிருந்தது. இப்புதுமையைச் சிறிது நேரம் நோக்கியிருந்தபின் அவன் மரத்தை ஊன்றிக் கவனித்தான்.
அம்மரத்தின் வேர்கள் கருநிறமாயிருந்தன. அடிமரம் துருவேறிக் கிடந்த இரும்பு போல இருந்தது. கிளைகளில் பசும்பாசி அடைந்திருந்தது. இலைகள் அரை நிலாவொளியில் வெண்மையாகப் பளபளத்தன. கனிகள் மட்டும் இல்லை.
கட்டாயம் இந்தக் கேணியிலும் மரத்திலும் நாம் தேடி வந்த புதுமையின் துப்பு ஏதாவது துலங்கக் கூடும் என்று அவன் எண்ணினான். வேறு தங்க இடம் இல்லாததால், அவன் அம்மரத்தின் மேலேறி அகலக் கொப்பு ஒன்றில் அமர்ந்தான்.
தனிமையும் தங்கும் இடத்தின் வாய்ப்புக் கேடும் அவன் தூக்கத்தைக் கெடுத்தன. அவன் கண் கேணியின் மீதிருந்தது. அவன் சிந்தனைகள் நாற்புறமும் சென்று ஓய்ந்தன.
சரியாக நள்ளிரவு நேரம். அவன் விழித்திருந்தானோ, அரை உறக்கம் உறங்கினானோ என்று அறுதியிட முடியா நிலையிலே இருந்தான். அப்போது நீரில் வட்ட வட்ட அலைகள் பரந்தன. அவை வங்கம், பொன், செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய பல நிற அலைகளாக அவன் கண்களுக்குத் தெரிந்தன. அவன் கருத்து முற்றிலும் விழிப்படைந்தது.
ஆனால், அவன் கண்டதை அவனால் நம்ப முடியவில்லை.
கேணி மையத்திலிருந்து ஒரு நீண்ட கழி எழுந்தது. அது கிணற்றின் ஓரம் வரை வளைந்தது; பின் அது நெளிந்தது. அது ஒரு பாம்பின் கோர வடிவம் என்பதை அவன் அப்போதுதான் கண்டான். அவன் உடல் நடுங்கிற்று. மரக்கிளைகளை அவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
திடுமென ஒரு பேரொளி கேணி நீர் மீதும் நிலத்தின் மீதும் பரந்தது. அதன் ஒளியில் நீரும் நிலமும் அவற்றில் படிந்த தூசிகளுங்கூட நன்றாகத் தெரிந்தன. அவ் ஒளி பாம்பின் வாயிலிருந்த ஒரு மணியிலிருந்து வீசிற்று என்று அவன் கண்டான். பாம்பு அதைக் கரையில் வைத்துவிட்டு, அதனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. வட்டம் அகலஅகல பாம்பு நெடுந்தொலை சென்றது. ஒன்றிரண்டு மணி நேரம் சென்ற பின் பாம்பு மீண்டும் வட்டமிடுவது தெரிந்தது. பின் மணியை வாயில் கௌவிய வண்ணம் அது மீண்டும் கேணிக்குள் சென்றது. நள்ளிருளைப் பகலாக்கிய அந்த ஒளி மீண்டும் மறைந்தது.
காணற்கரிய இக்காட்சியைக் கண்டு, சிலம்பன் மேனி முழுவதும் சில்லிட்டது. விடிந்து நெடு நேரமாகும்வரை அவன் மரத்தை விட்டு இறங்கிவர அஞ்சினான். ஆனால், அச்சத்தினிடை யிலும் அவன் மூளை வேகமாகவே வேலை செய்தது.
அவன் அருகிலிருந்த ஒரு நகருக்கு அன்றே சென்றான். கொல்லன் ஒருவனிடம் அவன் பளுவான, வழவழப்பான விளிம்புடைய, ஒரு இரும்புச் சட்டி செய்யும்படி சொன்னான். சட்டியின் வெளிப்புறம் முழுவதும் கூறிய சிறு முட்களும், கத்தி அலகுகளும் அமைக்கும்படியும் அவன் திட்டம் செய்தான். மாலையாகுமுன் அதைக் கட்டித் தூக்கிக் கொண்டு அவன் மீண்டும் மரத்தடிக்கு வந்தான்.
அன்றிரவும் பாம்பு முன்போல வெளிவந்தது. அது ஒளி மணியை உமிழ்ந்து வைத்துவிட்டு, வட்டமிட்டு விலகிச் சென்றது. அது கண்ணுக்கு மறைந்ததும், அவன் இரும்புச் சட்டியை ஒளி மணிக்கு நேராகக் கீழே போட்டான். அது, ஒளி மணியை முற்றிலும் கவிழ்த்து நிலத்துடன் பொருந்திக் கிடந்தது. உடனே எங்கும் ஒரே இருட்டாயிற்று. மணி எந்த இடத்தில் கிடந்தது என்பதையே யாரும் கூற முடியாது.
என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் அவன் கைகள் கிளைகளைப் பற்றிக் கொண்டன. கை நகங்கள் மரப்பட்டைகளைத் துளைப்பவை போல அவற்றில் அழுந்தின. அவன் அஞ்சியது சரி என்பது விரைவில் விளங்கிற்று. பாம்பு ஒளிமணியைக் காணாமல் விரைந்து வந்து எங்கும் நிலத்தைத் தடவும் அரவம் கேட்டது. இரும்புச் சட்டியை உராயும் அரவம் அடுத்துச் செவிக்குப் புலப்பட்டது.
இருட்டில் கூடப் பாம்பின் நெடிய உருவம் வளைந்து நெளிவதை அவன் காணமுடிந்தது. அது சட்டியை வளைத்து அப்புறப்படுத்த முயன்றது. படங்கொண்டு அதை ஓங்கி அறைந்து உடைக்க முயன்றது. ஆனால், சட்டியின் விளிம்பு நிலத்துடன் பொருந்தியிருந்தது. பளு மிகுதியானதால், அது அசையவில்லை. அதே சமயம் அது உடைபடவும் இல்லை. பாம்பின் உடலெல்லாம் முள்ளாலும் கத்தி அலகுகளாலும் காயப்பட்டு விட்டது. நீலக்குருதி சிந்திற்று.
தன் உயிருக்குப் போராடுவது போலப் பாம்பு ஒளி மணியை எடுக்கப் போராடிற்று. அப்போராட்டத்தில் அது வெற்றி பெறாமல், அதிலேயே மாண்டது.
சிலம்பன் சிந்தனைத் திட்டத்தின் ஒரு பகுதி நிறைவேறிற்று. அவன் மறுநாள் விடியற்காலையில் மெள்ள மரத்திலிருந்து இறங்கி வந்தான். பாம்பை மண்ணில் புதைத்துவிட்டு, மணியை எடுத்து வைத்துக் கொண்டான். பகலில் கூட அதன் ஒளி வெய்யிலுடன் போட்டியிடுவதாக இருந்தது.
மாயப் பாம்பின் முழு இரகசியத்தையும் அறிய அவனுக்கு ஆர்வம் எழுந்தது. ஆகவே அவன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு கேணியில் மூழ்கினான்.
அடித்தளத்தை எட்டியபின் அதில் தடவிச் சென்றான். அவன் எதிர்பார்த்தபடி அது கிணற்றின் அடித்தளத்துக்குள் முடியவில்லை. அது நெடுந்தொலை சென்றது. செல்லச் செல்ல ஆழம் குறைந்தது. அவன் நீர்ப் பரப்புக்குமேல் வந்துவிட்டான். ஆனால், அவன் மேலே எழுந்த இடம் நிலப்பரப்பல்ல. அது கிட்டத்தட்ட ஒரு புதிய உலகமாயிருந்தது. நிலத்தடியில் அரண்மனைகள், மாட மாளிகைகள், பூங்காக்கள் எல்லாம் இருந்தன. அவற்றைக் கண்டு அவன் வியப்படைந்தான்.
அவன் பூங்காக்களைச் சுற்றிப் பார்த்தான், மாடங்களில் புகுந்து திரிந்தான். அரண்மனையில் உலவினான். எங்கும் ஆளில்லை. இரண்டு இரவு விழித்திருந்ததாலும், அலைந்து திரிந்ததாலும், களைப்பும் அயர்ச்சியும் மேலிட்டன. அவன் அங்கிருந்த பஞ்சணையில் கண்ணயர்ந்தான்.
கலகலப்பான சிரிப்புக் கேட்டு அவன் எழுந்திருந்தான். கண்ணைக் கவரும் எழில் வனப்புடைய நான்கு நங்கையர்கள் அவனைச் சுற்றி ஆடிப்பாடியிருந்தனர்.
அவர்கள் அவனுடன் அன்புரையாடிக் களித்தனர். ஆனால், இறுதியில் அவர்கள் முகங்களில் கவலைக்குறி தோன்றிற்று. அது கண்ட அவன், “அருமைத் தோழியர்களே நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்று கேட்டான்.
“அன்பரே! உம்மோடு ஆடிப்பாடியிருப்பதில் எங்களுக்கு எவ்வளவோ மகிழ்ச்சிதான். ஆனால், இந்த இடம் பூதத்துக்கு உரியது. அது வெளியே பாம்புருவில் சென்று அகப்பட்ட விலங்குகளையோ, மனிதர்களையோ கொண்டுவந்து தின்னும், சிறு குழந்தைகளாக இருக்கும்போதே அது எங்கள் தாய் தந்தையரை இப்படித் தின்றுவிட்டது. நாங்கள் பெண்களானதால் தின்னாமல் வைத்திருக்கிறது. நாங்களும் அதன் மனம் கோணாமல் ஆடல் பாடல்களால் அதை மகிழ்வித்து வருகிறோம். நேற்று எக்காரணத்தாலோ அது இரைதேடச் சென்றபின் வரவில்லை. இன்று எப்படியும் வந்துவிடும். அது வந்தால், உங்களைத் தின்றுவிடுமே என்று எண்ணித்தான் நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று அந்த நங்கையர் அழாக் குறையாக அழுது புலம்பினார்கள்.
அவர்கள் கூறிய பூதமே, தான் கண்ட பாம்பாய் இருக்க வேண்டும் என்று சிலம்பன் உய்த்தறிந்தான். அவர்கள் கவலையை அகற்றித் தான் கண்டவை யாவும் கூறினான். முதலில் நங்கை யரால் அவன் கூறியதை நம்ப முடியவில்லை. பின் அவன் தன்னிடம் இருந்த மணியைக் காட்டினான். அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. அவர்கள் ஆடிப் பாடினார்கள், கூத்தாடினார்கள்.
ஒன்றிரண்டு நாட்களுக்குள் நங்கையருடன் அவன் மிகவும் நட்புடையவனானான். அவர்கள் தம் கதை கூறினர். அவன் தன் கதை கூறினான். தந்தை கண்ட கனவை அவன் கூறியதுமே அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து நகைத்தனர். அது கண்ட அவன், “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“வேறொன்றுமில்லை, அன்பரே! உம் தந்தை கனவிற் கண்ட மரம் நாங்கள் தாம்” என்றார்கள்.
“நீங்கள் மரங்களா? நீங்கள் பெண்களாயிற்றே! எப்படி மரமாவீர்கள்?” என்று கேட்டான் சிலம்பன்.
அவர்கள் மேலும் சிரித்து, "உமக்குத் துணிச்சலும் வீரமும்
இருந்தால், எம்மை மரமாக்கிக் காட்டலாம்" என்றனர்.
“என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்” என்றான் அவன்.
அவர்கள் ஒரு வாளை அவன் கையில் கொடுத்தனர். “இதன் கூரிய புறத்தால் எங்கள் ஒவ்வொருவர் கழுத்தையும் வெட்டுங்கள். நாங்கள் செத்து விடுவோமோ என்று அஞ்ச வேண்டாம். தந்தை கனவில் கண்டதை நீரும் பார்க்கலாம். ஆனால், அது முடிந்தவுடன், இதே வாளின் மொட்டைப் புறத்தால் ஒவ்வொருவர் கழுத்தாக வெட்டுங்கள். நாங்கள் பழையபடி பெண்களாக ஆவோம்” என்று மூத்தவள் கூறினாள்.
அவன் அவ்வாறு செய்ய முதலில் தயங்கினான். பின் ஒருவாறு துணிந்தான்.
முதற் பெண்ணை வெட்டியதும் அவள் இரும்பாலான அடிமரமாய் நின்றாள். அவள் காலடியில் வங்கவேர் படர்ந்திருந்தது. இரண்டாவது பெண்ணை வெட்ட அவள் செம்பு வண்ணமான கிளைகளாக அடிமரத்தின் மீது படர்ந்து நின்றாள். மூன்றாவது பெண்ணை வெட்ட, அவள் வெள்ளி இலைகளாகக் கிளைகளின் மீது படிந்து தாழ்ந்தாள். நான்காவது பெண்ணை வெட்ட அவள் அழகிய பொன் வண்ணமான காய், கனிகளாகப் பூத்துக் காய்த்துக் கனிந்து தொங்கினாள்.
முதல் பொன் பழக்கொத்து நிலமளாவ வளர்ந்தவுடன், மரம் கண்ணைக் கவரும் கனிவுடன் ஆடிப் பாடத் தொடங்கிற்று. சிலம்பன் கண்ணிமையாது பார்த்துக் களித்து நின்றான்.
ஆட்டம் பாட்டம் ஓய்ந்ததும் அவன் வாளின் மொட்டைப் புறத்தால் பூ, கனி, காய்களை வெட்டினான். நான்காவது பெண் அவன் முன் நின்று புன்முறுவல் பூத்தாள். பின் அவன் இலைகள் மீது வெட்டினான். மூன்றாவது பெண் தன்னுருவமடைந்தாள். இப்படியே மரக்கிளைகளையும் அடிமரத்தையும் வெட்டியபோது மற்றப் பெண்களும் தத்தம் உரு அடைந்தனர்.
தந்தையின் இரண்டாவது கோரிக்கை இப்போது கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. ஆனால், அவன் எவ்வளவு அந்நங்கையர்களைத் தன்னுடன் வரும்படி வேண்டினாலும், அவர்கள் அவனுடன் செல்ல மறுத்தனர். ஆயினும், அவன் வற்புறுத்தலை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. அவனிடம் அவர்கள் ஒரு வெள்ளிக் குழலைக் கொடுத்தனர். “நீ எப்போது இதை ஊதினாலும் நாங்கள் வந்து இந்த ஆட்டம் ஆடிக் காட்டுவோம். போய்வா” என்று அவனுக்குப் பிரியாவிடை தந்தனுப்பினர்.
சிலம்பன் இப்போது திரும்பவும் ஏழார நாட்டுக்கு வந்தான். அரசனாகிய சேந்தன் அவனைக் காண மிகவும் மகிழ்ந்தான். ஆனால், அவன் வரமாட்டான் என்று எதிர்பார்த்துக் கங்கனும் கலிங்கனும், நாட்டு மக்களைத் துன்புறுத்தியும் பணத்தை இறைத்தும் கும்மாளமடித்துக் கொண்டு இருந்தனர். சிலம்பனைக் காணவே அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆடிப்பாடும் ஐம்பொன் மாமரத்தைக் கண்டுபிடித்ததாக அவன் கூறியதே அவர்கள் எரிச்சலுக்கு அளவில்லை.
மறுநாள் அரசன் முன்னிலையில் சிலம்பன் நின்று, தன் வெள்ளிக் கொம்பை ஊதினான். நான்கு நங்கையர்களும் வந்து நின்றனர். அவன் அவர்கள் தலைகளை வெட்டினான். உடனே ஐம்பொன் மாமரம் யாவர் கண்களையும் பறிக்கும் அழகுடன் நின்றது. அதன் ஆடல் பாடலோ அவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அரசன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
அவன் தன் நாட்டில் பாதியை தன் உறுதி மொழிப்படி சிலம்பனுக்கு அளித்தான்.
ஆடிப் பாடிய ஐம்பொன் மாமரத்தை அவன் மீண்டும் வாளின் மொட்டைப் புறத்தால் வெட்டினான். அவர்கள் மீண்டும் பெண்களாயினர்.
அவன் அவர்களுக்கு அரண்மனையில் விருந்து நடத்தினான். விருந்து முடிந்து அவர்கள் போகுமுன் அவன் மூத்த பெண்ணிடம் நயந்து பேசினான். “அழகு மிக்க நங்கையே! நீ போய்விட்டால்,, எனக்கு இந்த அரசாட்சி கூடம் பிடிக்காது. என்னை நீ மணந்து கொண்டால், எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்றான்.
அவள் முதலில் பிணங்கினாள். பின், “பூதத்திட மிருந்து நீ பெற்ற மணியினால் எனக்குத் தலைச் சுட்டி செய்து கொடுத்தால், உன்னை மணந்து கொண்டு இங்கேயே வாழ்கிறேன்” என்றாள்.
அவன் மகிழ்ந்தான். பாம்பின் மணியினால் அவன் தலைச் சுட்டி செய்து அவளுக்கு அணிந்தான். அதன் ஒளி பகலில் எல்லாருடைய கண்களையும் பறித்தது. இரவில் அது எங்கும் ஒரு சிறு கதிரவன்போல் ஒளி தந்தது.
தமக்கையை விட்டுப் பிரிய மனமில்லாமல் மற்றப் பெண்களும் சிலம்பன் அரண்மனையிலேயே தங்கினர். கங்கனும் கலிங்கனும் தம் தீய குணங்களை விட்டுவிட்டால், அவர்களுக்கு அடுத்த இரண்டு பெண்களை மணஞ்செய்து கொடுப்பதாகச் சிலம்பன் அவர்களுக்கு ஆசை காட்டினான். இது அவர்களைத் திருத்திற்று. அவர்கள் அடுத்து இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டனர்.
சிலம்பன் இல்லாத போது தம்பியர் இருவரும் செய்த கொடுமைகளைக் குடியான இளைஞன் ஒருவன் எதிர்த்துப் புரட்சி செய்திருந்தான். அவர்கள் வழி நின்ற அரசன் அவனைச் சிறைப்படுத்தியிருந்தான். சிலம்பன் அவனை விடுவித்து அவனுக்கு நான்காம் பெண்ணை மணஞ் செய்வித்தான்.
அவ்வப்போது நான்கு பெண்களும் சிலம்பன் விருப்பத்துக்கு இணங்க ஐம்பொன் மாமரமாய் ஆடிப் பாடினர். ஆனால், சேந்தன் இறந்த பின் அவர்கள் ஐம்பொன் மாமரமாக மறுத்துவிட்டனர். அவன் வியப்புடன், “தந்தை இறந்ததற்கும் நீங்கள் மறுப்பதற்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டான்.
மூத்த பெண்ணாகிய சிலம்பன் மனைவி பெருமூச்சு விட்டாள்.
"அன்பரே! முதலில் உங்கள் தந்தை யார் என்பதை அறியாமல்தான் இருந்தோம். அவர் கனவும் எங்களுக்குப் புரிய வில்லை. உம் அரண்மனை வந்தபின் யாவும் உணர்ந்தோம்.
"உங்கள் தந்தை எம் மாமன். எங்கள் தாய் அவர் உடன் பிறந்த நங்கை, எங்கள் நாடு தொலைவிலிருந்ததால், நாங்கள் பிறந்து வளரும்வரை எங்கள் தாய், தன் தமையன் நாட்டுக்குச் செல்ல முடியவில்லை. பல அழைப்புகளுக்குப் பின் எங்கள் தாய் தந்தையருடன் நாங்கள் எங்கள் மாமனாகிய உங்கள் தந்தையைக் காண உங்கள் அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தோம். உங்கள் தந்தை எங்களை வரவேற்க வந்தார். ஆனால், அவர் வருமுன் நாங்கள் தங்கியிருந்த காட்டில் ஒரு பூதம் எங்கள் தாயையும், தந்தையையும் விழுங்கிவிட்டது. எங்களை மட்டும் இட்டுச் செல்ல விரைந்தது. ஆனால், உங்கள் தந்தை அதற்குள் வந்துவிட்டார்.
"பூதம் மாயத்தால் எங்களை ஐம்பொன் மரமாக்கி ஆடச் செய்தது. அவர் அதைப் பார்த்த வண்ணம் உறங்கினார். அவர் எழுமுன் பூதம் எங்களைக் கிணற்றடியிலுள்ள பாதாள அரண்மனைக்கு இட்டுச் சென்றது.
"பூதம் சொல்ல இவற்றை அறிந்தோம், ஆனால், எங்கள் மாமனே உங்கள் தந்தை என்பதை நாங்கள் அறியவில்லை.
ஆனால், உங்கள் தந்தை இறுதிப் படுக்கையிலிருக்கும் போது, எங்களைத் தனியாய் அழைத்து இவற்றைக் கூறினார்."
தன் மனைவி கூறியது கேட்ட சிலம்பன் அவளை முன்னிலும் அன்பு கலந்த மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான். அவள் தன் மனைவி மட்டுமல்ல, அவளே தன் அத்தை மகளும் ஆவாள் என்று அவன் கண்டான்.
பொன்கனிகள் போன்ற நன் மைந்தர்களைச் சிலம்பன் மனைவியும் மற்ற நங்கையரும் ஈன்று மகிழ்ந்தனர்.
வெண்மணி வேந்தன்
வேங்கை நாட்டரசியிடம் வெண்மணி ஒன்று இருந்தது. அதை அவள் தன் கண்மணி போலப் பேணிக் காத்து வந்தாள். அரசனும் அவளைக் கண்ணிமை போல் பாதுகாத்தான். அவளுக்கு ஒரு குறையும் இல்லாதிருந்தது. ஆயினும், பிள்ளை இல்லையே என்று அவள் வருந்தினாள்.
ஒரு நாள் வெண்மணி திடீரென்று காணாமற் போயிற்று. அவள் அதைத் தேடி அல்லலுற்றாள். ஆயினும், அது காணாமற் போன அன்றே அவள் தாய் ஆனாள். பத்து மாதங்களுக்குள் அழகு மிக்க ஓர் ஆண் குழந்தை அவளுக்குப் பிறந்தது. அதற்கு அவள் தன் வெண்மணியின் பெயரையே சூட்டினாள். வெண்மணி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தான்.
வெண்மணியின் புன்னகையில் அரசி தன் கவலைகள் யாவற்றையும் மறந்திருந்தாள். அவன் சதங்கையணிந்து ஓடியாடி விளையாடியதைக் காண, அவள் உண்ணும் உணவையே மறந்து விடுவாள். அவன் இளைஞனான பின் வில், வாள் எடுத்து வேட்டைக்குச் சென்ற போது, அவள் அரண்மனையிலிருந்து அவன் வீரத்தோற்றத்தில் பெருமை கொண்டாள்.
வெண்மணிக்கேற்ற ஒரு பெண்மணியை அரசன் நாடினான். அரசியின் மகிழ்ச்சி இன்னும் பெருகிற்று தனக்கு வரப்போகும் மருகி எப்படியிருப்பாள் என்று கற்பனை செய்வதில் அவள் பொழுது கழிந்தது.
வேங்கை நாட்டுக்குத் தெற்கே அருவா நாடு என்று ஒரு நாடு இருந்தது. இரண்டு நாடுகளுக்கிடையே பல காடுகள் இருந்தன. வேங்கை நாட்டரசன் தூதுவர் பல நாடுகளும் சுற்றி அருவா நாட்டுக்கு வந்தனர்.
அந்நாட்டரசன் புதல்வி எழிலரசி பெயருக்கேற்ப அழகில் சிறந்தவளாயிருந்தாள். தந்தத்தில் கடைந்தெடுத்த பாவைபோல் அவள் விளங்கினாள். நடையில் அவள் அன்னம் போன்றவள்; தோற்றத்திலும் சாயலிலும் மயில் போன்றவள்; பேச்சில் கிளி போன்றவள்; அவள் யாழ் மீட்டிப் பாடிய போது, குயில்கள் நாணின.
வேங்கை நாட்டரசன் அவள் அழகையும் குணத்தையும் பற்றிக் கேள்வியுற்றான். அவளையே வெண்மணிக்கு மணம் செய்ய விரும்பினான். வெண்மணியின் தாய் தந்தையரும் இவ்வேற்பாட்டுக்கு இணங்கினர். அதன்பின் எழிலரசியை மணம் செய்யும்படி வெண்மணி வெள்ளிப் பல்லக்கில் புறப்பட்டான்.
வெண்மணியின் பல்லக்கைச் சுமந்து சென்றவர்கள் பாடிக் கொண்டே சென்றனர். அவர்கள் காடும் மலையும் கானாறும் கடந்து சென்றனர்.
ஒரு நாள் இரவு அவர்கள் பல்லக்கை ஒரு படர்ந்த ஆலமரத்தடியில் இறக்கி வைத்துவிட்டு உறங்கினர். இளவரசன் வெண்மணியும் பல்லக்கிற்குள்ளேயே உறங்கினான். காலையில் அவர்கள் பல்லக்கைத் தூக்கினர். அது பளுவற்றதாயிருந்தது. உள்ளே தேடினர். இளவரசனைக் காணவில்லை.
அவர்கள் அஞ்சினர். கவலையுற்றனர். காடு மேடெங்கும் தேடினர். இறுதியில் வேங்கை நாட்டுக்கே வந்து செய்தி அறிவித்தனர்.
இளவரசனைத் தேட வேங்கை நாட்டரசன் எங்கும் ஆளனுப்பினான். அதே சமயம் இளவரசன் காணாததை அவன் அருவா நாட்டாருக்குத் தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட நாளில் எப்படியும் திருமணத்தை முடித்துவிட அவன் விரும்பினான். ஆகவே, இளவரசனுடைய வாளைப் பல்லக்கிலேற்றி அனுப்பினான். வேங்கைநாட்டு வழக்கம் இதுபோலும் என்று எண்ணி அருவா நாட்டாரும் மணமுடித்தனர்.
வெண்மணி வேந்தன் வாளுக்கு மாலையிட்ட எழிலரசி வேங்கை நாடு வந்து சேர்ந்தாள். மாமன் மாமியாராலும் மக்களாலும் அவள் புதிய அரசியாகவே நடத்தப்பட்டாள். தன் புதிய அரண்மனையில் அவள் எந்த குறையையும் காணவில்லை. ஆனால், கணவனையே காண முடியாமல் அவள் துடித்தாள்.
வெண்மணியை எவரும் தேடிக் காணவில்லை, சின்னாளில் மெள்ள மெள்ள எழிலரசிக்கும் அவன் மறைந்த மாயம் தெரிய வந்தது.
புயலில் பட்ட தளிர்போல அவள் துடித்தாள். வெங்காற்றுப் பட்ட மென்மலர்போல அவள் வெம்பி வெதும்பினாள். வான்துளி பெறாத பயிர்போல அவள் உடல் துவண்டது. அவள் துயர்கண்ட அரசியும் அரசனும், வெண்மணியின் பிரிவால் வருந்தியதைவிட மிகுதி வருந்தினர்.
ஒருநாள் எழிலரசி திடுமென ஆணுடையணிந்து, தான் மாலையிட்ட கணவனுடைய வாளுடன் அரசன் அரசியிடம் வந்தாள். அரசனும், அரசியும் முதலில் அவளை அடையாளம் அறியவில்லை. அறிந்த போது வியப்புடன், “ஏனம்மா! ஏனிந்தக் கோலம்?” என்று கவலையுடன் கேட்டனர்.
“என் கணவனைப் பிறர் தேடும்படி விட்டு, நான் அரண்மனை வாழ்வு வாழ விரும்பவில்லை. வீர இளைஞனை மணந்த நான் உங்கள் கவலையைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டு வாளா இருப்பதும் சரியல்ல. ஆகவே, என் கணவனைத் தேடநானே புறப்பட்டுவிட்டேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதனால்தான் ஆணுடையுடன் புறப்பட்டேன். என் கணவனையும் உங்கள் பிள்ளையையும் எப்படியும் தேடிக் கண்டு கூட்டிக் கொண்டு வந்துவிடுவேன்” என்றாள் அவள்.
மகனுடன் மருகியையும் விட்டுப் பிரிந்திருக்க அரசனும் அரசியும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் எழிலரசி வற்புறுத்தியதனால் வேறு வகையின்றி அவர்கள் அவளை வாழ்த்தி அனுப்பினர்.
கணவனைத் தேடிய காரிகை காணாத காடில்லை கரையில்லை. காய்கனி கிழங்கன்றி, அவள் எதையும் உண்ணவில்லை. கானாறுகளின் நீரன்றி, அவள் எதுவும் பருகவில்லை. கல்லிலும், முள்ளிலும் நடந்து, கடும்பாறையிலும் கட்டாந்தரையிலும் படுத்து, அவள் பகலிரவு கழித்தாள்.
ஒரு நாளிரவு அவள் ஒரு மரத்தினடியில் படுத்திருந்தாள். நடந்த அலுப்பால் உடலெல்லாம் நோவுற்றது. ஆயினும் உறக்கம் வரவில்லை. அயர்ச்சி தீர அவள் கண்ணை மூடிக் கொண்டு கிடந்தாள். ஒரு பெரிய பறவை மெல்லப் பறந்து வந்து மரத்தில் பதுங்கியது போன்ற அரவம் அவள் செவிகளில் பட்டது. அப்போதும் அவளால் உடனடியாக கண்களைத் திறக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவள் மெல்ல இமைகளை விலக்கிப் பார்த்தாள்.
மரத்தின் கிளைகளில் எதிர்பாராத ஒரு பொருள் தொங்கிக் கொண்டிருந்தது. அது கப்பல் வடிவில் அமைந்து ஒரு பெரிய கூடு. அவள் அதைக் கூர்ந்து நோக்கினாள். அது எந்தப் பறவையின் கூடாகவும் இருக்க வழியில்லையென்று கண்டாள். ஏனென்றால், அது ஒரு மனிதன் படுத்திருக்கப் போதிய அளவு பெரிது. அது கம்புக் குச்சிகளால் செய்யப் படவில்லை. பளபளப்பான ஏதோ ஒருவகை மெழுகினால் செய்யப்பட்டது போலிருந்தது. வியத்தகு முறையில் அதற்கு இரண்டு சிறகுகளும் இருந்தன.
எழிலரசியின் வியப்பார்வம் அவள் அமைதியை வென்றது. அவள் துணிச்சலுடன் மரக்கிளையில் ஏறிப் பார்த்தாள். அண்மையில் கண்ட காட்சி தொலைக்காட்சியைவிட வியப்பூட்டுவதாயிருந்தது. கப்பலுக்குள் ஒரு அழகிய பூவேலை செய்த கட்டில் இருந்தது. அதில் நிழல் போல வாடி வதங்கிய ஓர் அழகிய இளைஞன் வடிவம் கிடந்தது. அது உயிருள்ள வடிவமா, உயிரற்ற வடிவமா என்று அவளால் கூறமுடியவில்லை.
அவள் பின்னும் அருகில் சென்ற அவ்வடிவின் உடலைத் தொட்டாள். கண்கள் சற்றே திறந்தன.
“ஆ, உயிர் இருக்கிறது, இது ஒரு மனிதனே” என்று அவள் தனக்குள்ளாகக் கூறிக் கொண்டாள்.
“நீங்கள் யார்? எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று அவள் கேட்டாள்.
அவன் வாயைத் திறந்தான். ஆனால், பேச முடியவில்லை.
அவள் கீழே இறங்கிச் சென்றாள். தன்னிடமிருந்த மாவைச் சிறிது பாலில் கரைத்தாள். அதைக் கொண்டு சென்று அவன் வாயில் மெள்ள மெள்ள ஊற்றினாள்.
அவனுக்குத் தெம்பு வந்தது. அவன் வாய் திறந்து பேசினான். ஆனால், ஆண் வேடத்தில் இருக்கும் அவள் பெண் என்பதை அவன் உணரவில்லை. ஆண் என்றே கருதினான்.
“தெய்வமாக வந்து எனக்குத் தெம்பூட்டிய இளநண்பனே! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். உணவில்லாமல், சாகாமல் செத்து மடியும் எனக்கு நீ வந்து உயிர் தந்தாய்” என்றான். அவன்.
“உங்கள் பெயர் என்ன? இந்தத் தூங்கு கப்பலில் எப்படி வந்தமர்ந்தீர்கள்?” என்று அவள் கேட்டாள்.
அவன் கதை அவளைத் திடுக்கிட வைத்தது. பின் உருக்கிற்று.
“அன்பனே! நான் ஓர் இளவரசன். எனக்குத் திருமணமாக இருந்தது. பெண் வீட்டுக்குச் செல்லும் சமயம், என் பல்லக்கு ஒரு மரத்தடியில் இறங்கிற்று. நான் உறங்கினேன். அதன் பின் என்ன நடந்தது என்பதை இன்னும் நான் சரிவர அறியமுடியவில்லை. அன்று முதல் இந்தக் கப்பலிலேயே கிடக்கிறேன். யாராவது வந்து என்னை விடுவிக்கக்கூடும் என்று நான் தொடக்கத்தில் மனப்பால் குடித்தேன். ஆனால், ஒவ்வோர் இரவு முடிந்ததும் என்னைச் சிறைசெய்த பூதம் வருகிறது. பெரிய பறவை வடிவில் அது கப்பலைத் தூக்கிச் சென்று, பகலெல்லாம் பறந்து, இரவில் வேறு ஒரு மரத்தில் தொங்க வைக்கிறது. அந்தப்பூதம் என்னைச் சாகவிடாமல் சிறிது உணவு தருகிறது. ஆனால் கைகால் அசைக்கக்கூட அந்த உணவு தெம்பு தரவில்லை” என்றான் இளவரசன்.
அவனே தன் கணவனாயிருக்கக் கூடுமா என்று அவள் வியந்தாள்.
“உங்கள் பெயரென்ன, அன்பரே!” என்று அவள் கேட்டாள்.
“என் பெயர் வெண்மணி, என் தந்தை தாய் வேங்கை நாட்டை ஆள்பவர்கள்” என்றான் அவன்.
அவனே தன் கணவன் என்பதை அவள் இப்போது அறிந்து கொண்டாள்.
அவனைக் காக்கவும், காத்து மீட்கவும் என்ன செய்வது என்று அவள் நீளச் சிந்தித்தாள்.
அவள் தன் மேலாடையைச் சிறுசிறு துண்டுகளாகக் கிழித்து முடிச்சிட்டாள். அவற்றை அவன் படுக்கையினருகே போட்டாள். “அன்பரே! பறவை உங்களைத் தூக்கிச் செல்லும் போது இந்தச் சிறு முடிச்சுகளை ஒவ்வொன்றாக வழியெல்லாம் போடுங்கள். அந்த அடையாளம் கண்டு நான் இரவு தோறும் வந்து உணவு தருகிறேன்” என்றாள்.
அந்த நல்ல இளைஞன் - இளைஞனென்றே அவளை அவன் நினைத்தான் - தனக்குதவ வந்த தெய்வம் மட்டுமல்ல; தன்னைக் காக்க வந்த கடவுள் தூதன் என்றும் அவன் எண்ணினான்.
இரவு தோறும் துணி முடிச்சுகளின் தடம் பார்த்து எழிலரசி நடந்தாள். வழியில் நகரங்களில் உணவும் ஆடையும் வாங்கினாள். இரவு தோறும் அவள் இளவரசனுக்குப் போதிய தெம்பளிக்க உணவும், கிழித்து முடிச்சிட ஆடைகளும் தந்தாள்.
தன் கணவன் பிழைக்க இப்போது வழி கண்டாயிற்று. இனி அவனை மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் மீண்டும் சிந்தித்தாள்.
அவள் திறமைமிக்க ஒரு கொல்லனை அழைத்தாள்; அவனிடம் முதலில் கை நிறைய பணம் தந்தாள்; அவளை யாரோ ஓர் இளைஞன் என்றே நினைத்த கொல்லன், “ஏனப்பா இது?” என்றான்.
“எனக்கு ஒரு பெரிய இரும்புப் பெட்டி வேண்டும். அது எப்போதும் திறந்தபடி இருக்க வேண்டும். ஆனால், ஒரு சிறுபறவை உள்ளே சென்றால் கூட, அது உடனே மூடித் தன்னைத் தானே பூட்டிக் கொள்ள வேண்டும். அதில் இத்தகைய ஒரு பொறி அமைத்துத் தா. அது முடிந்ததும் இன்னும் நிறையப் பணம் தருகிறேன். ஆனால், இவ்வளவும் இன்று மாலைக்குள் முடிய வேண்டும்” என்றாள்.
கொல்லன் மகிழ்வுடன் ஒத்துக் கொண்டான். அன்று மாலைக்குள் பெட்டி முற்றுப் பெற்றது. கொல்லனுக்கு மீண்டும் அவள் கைநிறையப் பணம் தந்தாள். அதனுடன் அவள் இளவரசன் தங்கிய மரத்தடிக்குச் சென்றாள். பறவைகள் ஆவலுடன் தின்னும் பலவகைப் பண்டங்களும் வாங்கிச் சென்றாள்.
அன்றிரவு, அவள் இளவரசனுக்கு உணவும், எப்போதும் போல முன்னெச்சரிக்கையாக ஆடை முடிச்சுகளும் தந்தாள். பின் அவள் கீழே இறங்கினாள். திறந்த பெட்டியினுள்ளே பறவைக்கான உணவுப் பொருள்களை நிரப்பினாள். அதன் பிறகு யாரும் தன்னைக் காணாதவாறு அதன் அருகே ஒளிந்திருந்தாள்.
விடிய ஒரு யாமத்தில் வழக்கம் போலப் பூதம் வந்தது. அது பெரிய பறவை வடிவம் எடுத்துக் கப்பலைத் தூக்க அருகே சென்றது.
அதன் கண்களில் உணவுப் பொருள்கள் நிரம்பிய பெட்டி தெரிந்தது. உணவுப் பண்டங்களின் வண்ணமும், அழகும், மணமும் அதன் அலகையும் கண்களையும் துளைத்தன. அவற்றைச் சிறிது தின்னும் அவாவுடன் அது கீழே பறந்தது. பெட்டியினுள் நுழைந்தது.
பெட்டி உடனே மூடிக் கொண்டது. பொறிகள் இயங்கின. அது பூட்டு மேல் பூட்டாகப் பல பூட்டுகள் இட்டுக் கொண்டது.
வழக்கம் போலப் பறவை தன்னைத் தூக்கிச் செல்லாதது கண்டு, இளவரசன் வெண்மணி வியப்படைந்தான். பறவை பெட்டியில் அகப்பட்டுத் திணறியது அவனுக்குத் தெரியாது.
எழிலரசி இப்போது ஒரு பெரிய வண்டியும் ஆட்களும் சேகரித்தாள். பின் இளவரசன் கூண்டுக் கப்பலில் தொங்கும் மரத்தண்டை வந்தாள்.
கப்பல் அப்படியே வண்டியில் இறக்கப்பட்டது. இளவரசன் இப்போது எழுந்து உட்காரும் நிலையில் இருந்தான். ஆகவே, அவன் கப்பலிலேயே இருந்தான். இரும்புப் பெட்டி வண்டியில் ஆடாமல் தொங்கவிடப்பட்டது. முன்னும் பின்னும் ஆட்களும் வீரரும் காவல் சென்றனர். கப்பலின் அருகே ஓர் இருக்கையில் அமர்ந்து எழிலரசி இளவரசனுடன் பேசினாள்.
வெண்மணி: என் அன்பரே! என் தாய் தந்தையருக்கு அடுத்தபடி நீரே என் குலதெய்வம். ஆனால், பூதம் வராமல் நீர் தடுத்த வகையை என்னால் அறிய முடியவில்லையே. அதற்கு என்ன செய்தீர்?
எழிலரசி: அதைப் பின்னால் அறிவீர்கள். இப்போது நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்?
வெண்மணி: வேங்கை நாட்டுக்குப் போய் என் தாய் தந்தையரைக் கண்டு வணங்க வேண்டும்.
“உம்மை மணக்க இருந்த பெண்ணைப் பார்க்க விருப்ப மில்லையா?” என்று எழிலரசி குறும்பு நகையுடன் கேட்டாள்.
வெண்மணி: இல்லை, அது யார் என்றே எனக்குத் தெரியாது, மணமும் நடக்கவில்லையே!
எழிலரசி: அப்படியானால் உங்கள் தாய் தந்தையரைத் தவிர நீங்கள் வேறு யாரையும் நேசிக்கவில்லையா?
வெண்மணி: நேசிக்கிறேன். அவர்களுக்கு அடுத்த படியாக உம்மை நேசிக்கிறேன்.
எழிலரசி: என்னுடனேயே வாழ்வீரா?
வெண்மணி: ஓகோ!
எழிலரசி: நீர் திருமணம் செய்து கொண்டால்?
வெண்மணி: எனக்கு இனித் திருமணம் வேண்டாம். நீர் திருமணம் செய்து கொள்ளும் வரை உம்முடன் வாழ்கிறேன். அதன் பின்பும் உம் நண்பனாகவே இருப்பேன்.
எழிலரசி உள்ளூரச் சிரித்துக் கொண்டாள்.
அரண்மனையில் அரசனும் அரசியும் தம் மருமகனையும் மருமகளையும் ஆர்வமாக வரவேற்றனர். மக்களும் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்ந்தார்கள், ஆனால், எழிலரசி இன்னும் ஆணுடை களையாததால், வெண்மணி அவளை அடையாளம் அறியவில்லை.
அரசி மகனை வாரியணைத்து, “அப்பா! உன் மனைவி நமக்கு ஒரு குலதெய்வம்தான். அவளால்தான் உன்னை உயிருடன் காணக் கிடைத்தது” என்று இன்பக் கண்ணீர் வடித்தான்.
வெண்மணி அவள் சொற்களின் பொருளறியாது விழித்தான். அதற்குள் எழிலரசி உட்சென்று தன் பெண்ணுடை யுடன் வந்தாள். ஆணுடையில் வந்த நண்பன் தன் மனைவியே என்பதை உணர்ந்த வெண்மணி அகமகிழ்வுடன் அவளை அணைத்துக் கொண்டான்.
வீரமும் அறிவும் வாய்ந்த தன் மனைவியுடன் வெண்மணி மீண்டும் உறுதிமணம் செய்து கொண்டு வாழ்ந்தான். பின்னாட்களில் அரசனும் அரசியும் மகிழ, அவர்கள் புதல்வர்களும் புதல்வியரும் ஓடியாடி விளையாடினர்.
திம்மப்பன் திட்டங்கள்
திண்டுக்கல் என்ற ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அவள் ஒரு செல்வமிக்க வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஊரையடுத்த மலையில் ஒரு கள்வர் கூட்டம் இருந்தது. அது அவள் வீட்டைச் சூறையாடி அவள் செல்வத்தைக் கொள்ளை கொண்டது. கள்வர்களை எதிர்த்துப் போராடி, அவள் கணவனும் இரண்டு பிள்ளைகளும் மாண்டார்கள். அவள் தன் கடைசிப் பிள்ளை யான திம்மப்பனுடன் தன் இடிந்த வீட்டின் ஒரு மூலையில் வாழ்ந்து வந்தாள். கடுமையாக வேலை செய்தும் அவளுக்குச் சிறிது கூலியே கிடைத்தது. அதைக் கொண்டு அவளும் திம்மப்பனும் வாழ்வதே மிகவும் கடுமையாக இருந்தது.
திம்மப்பன் தன் தாயின் வறுமையைச் சிறிதும் எண்ணிப் பார்க்க வில்லை. குறும்புக்காரருடன் சேர்ந்து கும்மாளமடித்து வந்தான். தாய்க்கும் மிகவும் தொல்லை கொடுத்தான்.
ஒரு நாள் கிழவிக்கு உடல் நலிவுற்றது. அவள் வேலை செய்ய முடியாமல், படுக்கையில் கிடந்தாள். கூலியும் கிடைக்கவில்லை. உணவுக்கும் வழியில்லை.
தான் இறந்தபின் திம்மப்பன் நிலை என்ன ஆகுமோ என்று அவள் கவலைப்பட்டாள்.
தன் வாழ்வில் முதல் தடவையாகத் திம்மப்பனுக்கு வருத்தம் ஏற்பட்டது.
தாய் அது கண்டு பின்னும் மனம் உருகினாள்.
“அப்பா! நான் இன்னும் எத்தனை நாள், எத்தனை மணி இருக்கப் போகிறேனோ, தெரியவில்லை. நீயோ குடும்பக் கவலை யுமில்லாமல், பிழைக்க வழியும் தெரியாமல் திரிகிறாய். நான் இறந்தபின் உனக்கு என்ன ஆகுமோ என்றுதான் கவலைப் படுகிறேன்” என்றாள்.
திம்மப்பன், “என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா! உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஏதாவது வாணிகம் செய்து வழி செய்து கொள்கிறேன். இனி வீணாகத் திரிய மாட்டேன்” என்றான்.
கிழவி அவன் நல்லுணர்ச்சியை இன்னும் பெருக்க நினைத்தாள்.
“அப்பா! நீ வேறு எது செய்தாலும் வாணிகம் செய்ய வேண்டாம். அன்றன்று உழைத்து, அந்தக் கூலியைக் கொண்டு பிழைத்தால் போதும். பணம் சேர்க்க வேண்டாம். ஏனென்றால், உன் தந்தை வாணிகத்தால் பெரும் பொருள் சேர்த்தார். அதனால் அவர் தன் உயிரையும் இழந்தார். உன் அண்ணன் மார்களும் அதனால் மாள நேர்ந்தது. இந்த ஊரருகிலுள்ள திருடர்கள் அவர்களைக் கொன்று செல்வத்தையும் கொள்ளை யிட்டுப் போய் விட்டார்கள். நம் குடும்பத்தில் நானும் நீயும் நம் வறுமையும் தான் மீதி” என்றாள்.
கிழவி ஒன்றிரண்டு நாட்களுக்குள் உயிர் நீத்தாள். திம்மப்பன் தன்னிடமுள்ள சிறிதளவு பொருளால் தாயின் கடைசிக் கடன் ஆற்றினான்.
தாயின் கடைசிச் சொற்கள் அவன் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தன.
தன் குடும்பத்தை அழித்த திருடர் கூட்டத்துக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டுமென்று அவன் நினைத்தான்.
அவன் பல நாட்களாகச் சிந்தனை செய்தான். இறுதியில் ஒரு வழி தோன்றிற்று.
அவன் நிறைய ஓடுகளைப் பொறுக்கிச் சேர்த்தான். அவற்றைத் தேய்த்துத் தேய்த்து, நாணயங்கள் போன்ற மெல்லிய வட்டுக்கள் ஆக்கினான். ஒரு பெரிய பையில் அவற்றை இட்டுத் தோளில் தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.
திருடர் கூட்டம் ஒரு மலையடிவாரத்தில் இருந்தது. அதில் ஏழு திருடரும் அவர்கள் மனைவிமாரும் அவர்கள் கையில் சிக்கிய ஒரு பெண்ணும் இருந்தனர். பெண்ணின் பெயர் செல்வி, அவள் இளம் பெண், அவள் அவர்கள் மனங்கோணாமல் அவர்களுக்கு வேலை செய்தும் தண்ணீர் மொண்டும் உதவினாள்.
செல்வி கிணற்றில் தண்ணீர் இறைக்கச் சென்றாள். அச்சமயம் திம்மப்பன் தன் பையுடன் அதன் அருகே வந்து உட்கார்ந்தான். செல்வி அவனுடன் இனிமையாகப் பேசினாள். ஆனால், அவள் வேலை திருடர்களின் தொழிலுக்கு உடந்தையாயிருப்பது. அவள் அதை மறக்கவில்லை.
திம்மப்பன், “எனக்குக் களைப்பாய் இருக்கிறது.சிறிது உணவும் ஒரு நாள் தங்க இடமும் கொடுப்பீர்களா?” என்று கேட்டான்.
அவள் மகிழ்வுடன் அவனைத் திருடர்களிடம் இட்டுச் சென்றாள்.
பணப்பையைக் கண்டதே, திருடர் மகிழ்ச்சியடைந்தனர். அவன் கவனக் குறைவாய் இருக்கும் நேரம் பார்த்து, அதைத் திருட அவர்கள் சமயம் பார்த்திருந்தார்கள்.
திம்மப்பன் அவர்களுக்குச் சிறிதும் பிடி கொடுக்கவில்லை. அவன் கண் எப்போதும் அதன் மீதே இருந்தது. இரவிலும் அவன் அதைக் கெட்டியாக அணைத்துக் கொண்டே உறங்கினான்.
திருடர்களும் செல்வியும் கூடிக்கூடிப் பேசினர். அவனைக் கொன்று விடலாமா என்றுகூட அவர்கள் எண்ணினர்.
செல்விக்கு அவனைச் சாகவிட விருப்பம் இல்லை. எனவே, அவள் மிக எளிய திட்டம் ஒன்று கூறினாள். அவர்களும் அதை ஆர்வத்துடன் ஏற்றனர்.
அவள், தான் திம்மப்பனுடன் நேசமாக இருப்பதாகப் பாவனை செய்தாள். அவனைப் பின்னும் ஒன்றிரண்டு நாள் தங்கி இருக்கும்படி வேண்டினாள். அவர்கள் சூதை அறிந்து திம்மப்பனும் இணங்கினான்.
ஒன்றிரண்டு நாட்கள் சென்றன. அப்போதும் திம்மப்பன் பையை அவர்களால் திருட முடியவில்லை. அவன் எப்போதும் அதன் மீது கண்ணாய் இருந்தான்.
திருடர்கள் பின்னும் கூடிப் பேசினர். இத்தடவை செல்வி இன்னும் எளிதான திட்டம் வகுத்துரைத்தாள்.
“என்னை உங்கள் தங்கை என்று சொல்லி, அவனுக்கு மணம் செய்து கொடுங்கள். நான் மனைவியாக அவனுடன் சென்று, சமயம் பார்த்துப் பணத்துடன் ஓடி வந்து விடுகிறேன்” என்றாள்.
“இது நல்ல வேடிக்கையான திட்டம்தான்” என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டனர்.
தலை மூத்த திருடன் திம்மப்பனை அணுகினான். பாலோடும் பழம் சேர்ந்தாற்போல இனிமையாகப் பேசினான். கடைசியில் தன் தங்கையை அவனுக்கு மணம் செய்து வைக்க விரும்புவதாகக் கூறினான்.
திம்மப்பன் இதையும் எதிர்பார்த்திருந்தான். ஆகவே, தடை சொல்லாமல் ஒத்துக் கொண்டான்.
ஒன்றிரண்டு பணம் செலவு செய்து திருமணம் பரபரப்புடன் நடந்தேறியது.
செல்வி மணப்பெண் போலவே நடந்து கொண்டாள். திம்மப்பனுடன் அவள், கணவன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.
திம்மப்பன் ஒரு செல்வன் என்றே செல்வி எண்ணியிருந்தாள். ஆனால், அவன் வீடு இடிந்து விழுந்த குட்டிச் சுவரின் ஒரு மூலையிலுள்ள குச்சு வீடாயிருந்தது. அது கண்டு அவள் ஏமாற்றம் அடைந்தாள்.
“அன்பரே! இவ்வளவு பணம் வைத்திருக்கீறீர்களே, உங்கள் வீடு ஏன் குச்சு வீடாயிருக்கிறது?” என்றாள்.
அவன் கலகலவென்று சிரித்தான்.
அவள் முன் அவன் தன் பையை அவிழ்த்தான். ஓடுகள் கலகல வென்று உருண்டோடின. “உன் அண்ணன்மார் கண்ணைக் கவர்ந்த பணம் இதுதான். இதைத்தானே அவர்களிடம் கொண்டு சேர்ப்பதாக நீ கூறியிருந்தாய்?” என்றான்.
அவள் சிறிது நேரம் வெட்கித் தலை குனிந்தாள். திருடர்களை அவன் ஏய்த்த திறமை கண்டு அவள் வியப்படைந்தாள். ஆனால், அவர்களுடன் தான் செய்த திட்டம் வெளிப்பட்டது கண்டு நாணம் அடைந்தாள்.
“நான் செய்தது தவறு தான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை அண்டிப் பிழைப்பவள். அவர்களுக்கு நான் உடந்தை யாயில்லா விட்டால் எப்படி வாழ்வேன்?” என்றாள்.
“சரி, அப்படியானால், இனி நீ செய்யப் போவது என்ன?” என்றான் திம்மப்பன்.
அவள் சிறிது சிந்தித்தாள். அவள் திருடருடன் வாழ்ந்தாலும், அவர்களுடன் முழுவதும் ஒன்றுபட்டு விடவில்லை. அத்துடன் அவள் கூரிய அறிவும் நல்லெண்ணமும் உடையவளாயிருந்தாள், அவள் விரைவில் ஒரு முடிவுக்கு வந்தாள்.
“நான் உங்கள் மனைவியாக நடித்தேன். இனி மனைவி யாகவே இருக்கிறேன். ஆனால், அவர்களை நினைத்தால் அச்சமாயிருக்கிறது” என்றாள்.
“அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் திம்மப்பன்.
செல்வி பணப்பையுடன் திரும்பி வருவாள் என்று திருடர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார்கள். நாட்கள் ஏழாகியும் அவள் திரும்பி வரவில்லை. அவர்கள் அவளைத் தேடிப் புறப்பட்டனர்.
அவர்கள் நடமாட்டத்திலேயே திம்மப்பன் கண்ணுங் கருத்து மாயிருந்தான். அவர்களை மறுபடியும் ஏய்க்க அவன் புதுத் திட்டம் வகுத்தான்.
அவன் முயல்களுக்கான பொறி வைத்துச் சில முயல்கள் பிடித்தான். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரண்டு முயல்களை வைத்துக் கொண்டு மற்றவற்றைத் துரத்தி விட்டான். தன் மனைவி யான செல்வியிடம், “உன் அண்ணன்மார்கள் வருகிறார்கள். உன் அண்ணன் மார்களாகவே நான் அவர்களை நடத்தப் போகிறேன். நீ இன்று அவர்களுக்கு கத்தரிக் காய்க்கறியும், புளி சோறும் செய்து வை, நான் அவர்களை எதிர் கொண்டு அழைத்து வருகிறேன்” என்றான்.
மனைவி அப்படியே சமைத்து வைத்திருந்தாள்.
ஒரு முயலை அவன் துணியில் கட்டி வைத்தான்.
“எதற்காக இந்த முயல்?” என்று செல்வி கேட்டாள்.
அவன் காதோடு காதாகத் தன் திட்டத்தை அவளிடம் கூறினான். “ஆகா! நல்ல திட்டம்” என்று அவள் சிரித்தாள்.
மற்ற முயலுடன் திம்மப்பன் திருடர்களை எதிர் கொண்டழைத்தான். சூதறியாதவன்போல அவர்களிடம் மைத்துன முறையுடன் பேசினான்.
“செல்வி அங்கே வர ஒவ்வொரு நாளும் துடி துடிக்கிறாள். ஆனால், நான்தான் நாள் கடத்தி வருகிறேன். நீங்கள் வந்து அழைத்தால் போகலாம் என்று! வாருங்கள். வீட்டுக்குப் போகலாம்!” என்று அவன் அவர்களை அழைத்தான்.
அவர்கள் வேறு வழி காணாமல், ஒத்துக்கொண்டனர்.
ஆனால், இந்தச் சமயம் அவன் தன் முயலைக் கையில் எடுத்தான். “அடே வெள்ளை! நீ அம்மாவிடம் போய், கத்தரிக் காய்க் கறியும், புளிச்சோறும் செய்து வைக்கச் சொன்னதாகச் சொல்லு. மைத்துனர் ஏழுபேரும் வந்திருப்பதாகவும் சொல்லு” என்று முயலின் காதில் சற்று உரத்துக் கூறிக் கீழே விட்டான்.
விடுபட்ட முயல் காட்டுக்குள் ஓடிற்று.
திருடர்கள், “இது என்ன பைத்தியம்? முயலிடம் தூதனுப்புகிறான். முயல் வீட்டுக்குப் போகுமா, பேசுமா?” என்று தமக்குள் எண்ணிக் கொண்டார்கள்.
வீட்டுக்குப் போனதும் திம்மப்பன் மனைவி, அவர்களை எதிர் கொண்டழைத்தாள்.
“நான் சொன்னபடி முயல் வந்து செய்தி தெரிவித்த தல்லவா?” என்று அவன் கேட்டான்.
“ஆகா, அது தெரிவித்ததால்தானே, நான் இதற்குள் கத்தரிக்காய்க் கறியும், புளிச்சோறும் சமைத்து வைத்திருக்கிறேன். முயல்கூட ஓடி வந்த களைப்பில் அதோ படுத்திருக்கிறது, பாருங்கள்” என்றாள்.
அங்கே முயல் ஓடி வந்த களைப்பினால் படுத்திருப்பது போலவே படுத்துத் தூங்கிற்று.
ஆனால்,அது ஓடி வந்த முயலல்ல. அதனுடன் சோடியாகத் திம்மப்பன் பிடித்து, முன்பே வீட்டில் கட்டிப் போட்டிருந்த முயலே அது.
திருடர்கள் கனவு கண்டவர்கள் போல விழித்தார்கள், ஏனென்றால், ஓடி வந்த முயலே அங்கே படுத்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். அத்துடன் ஏழு பேர்க்கும் போதிய அளவு கத்தரிக்காய்க் குழம்பும் புளிச் சோறும் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது.
திருடர்கள் தமக்குள் பேசிக் கொண்டனர். திம்மப்பன் பழைய செய்திகளையோ, செல்வியின் வேலையையோ அவர்கள் இப்போது எண்ணவே இல்லை. அவற்றை எல்லாம் மறந்து விட்டனர். அவர்கள் ஒரே ஆவல் இப்போது முயலைப் பற்றியது தான். அதை எப்படியாவது பெற வேண்டுமென்று அவர்கள் துடித்தார்கள்.
“திம்மப்பனிடம் இனி எதையும் தட்டிப் பறிக்க முடியாது. மைத்துன உரிமையிலேயே இதைப் பெற வேண்டும்” என்று அவர்கள் திட்டமிட்டனர்.
அவர்கள் திம்மப்பனிடம் இனிமையாகப் பொழுது போக்கினர். இறுதியில் முயலின் பேச்செடுத்தனர். திம்மப்பன், “உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பேன். என் ஒரே செல்வமான முயலைக் கொடுக்க மாட்டேன்” என்றான்.
அவர்கள் விலை பேசினர். நூறு பொன் தருவதாகச் சொன்னார்கள். அவன் எழுநூறு பொன் கேட்டான். சிறிது நேரம் சென்றால் எங்கே மனம் மாறிவிடுவானோ என்று அஞ்சி அவர்கள் எழுநூறு பொன்னை எண்ணிக் கொடுத்தனர். பின் பெரு மகிழ்ச்சியுடன் முயலைப் பெற்றுக் கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.
வழியில் அவர்கள் சிறிது தங்கி இளைப்பாறினர். அப்போது அவர்களுக்கு முயலின் நினைவு வந்தது. தலை மூத்த திருடன் அதை எடுத்துத் தன் மனைவியிடம் தூதனுப்பினான். “அம்மாவிடம் போய், நாங்கள் வருகிறோம். எல்லாருக்கும் சுண்டைக்காய்க் குழம்பும், பருப்புச் சோறும் செய்து வைக்கும்படி சொல்லு” என்று காதில் கூறி, அதைக் கீழே விட்டான். எதிர்பார்த்தபடியே அது காற்று வேகத்தில் பறந்தது.
வீட்டுக்குப் போனபோது, யாரும் அவர்களை எதிர் பார்த்திருந்ததாகத் தெரியவில்லை. ஏழு பேருடைய மனைவியரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மனைவிமாரை ஆரவாரத் துடன் எழுப்பி, " எங்கே முயல்? அது வந்து செய்தி சொல்லவில்லையா?" என்றனர்.
“என்ன முயல்? என்ன செய்தி?” என்று அவர்கள் விழித்தனர்.
“சுண்டைக்காய்க் குழம்பும், பருப்புச் சோறும் சமைத்து வைக்கும்படி ஒரு முயல் வந்து சொல்லவில்லையா?” என்று திருடர்கள் கேட்ட போது, அவர்கள் மனைவியர் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“ஆகா! மோசம் போனோம், முன்பே ஏமாற்றியது போதாமல், இப்போதுமா ஏமாற்றினான்? இதோ, இப்போதே போய்த் தொலைத்து வருகிறோம்” என்று அவர்கள் மீண்டும் புறப்பட்டனர்.
அவர்கள் வருகையைத் திம்மப்பன் இப்போதும் எதிர்பார்த்தே இருந்தான். அவன் இப்போது புதிய திட்டம் வகுத்திருந்தான். செல்விக்கும் அதன் விவரம் தெரிவித்திருந்தான்.
செல்வி சில இனிய திண்பண்டங்களை உண்டு பண்ணினாள். திம்மப்பன் அவற்றை அருகிலுள்ள சில செடி, கொடிகளில் ஒட்டித் தொங்க விட்டான். அவற்றின் மீது ஒரு துணியிட்டு மறைத்த பின் அவன் வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டான்.
விடியற்காலமே திருடர் திமுதிமு என்று நுழைந்தனர். திம்மப்பனும் தடதடவென்று எழுந்து இன்னுரைகளுடன் அவர்களை வரவேற்றான். அத்துடன், “உன் அண்ணன்மார் வந்து விட்டார்கள். செல்வி, எழுந்திரு, எழுந்து விரைந்து காலை உணவுக்குச் சிற்றுண்டி செய்” என்றான்.
அவள் புரண்டு படுத்தாள்; நெளிந்தாள். எழுந்திருக்க வில்லை.
“சரிதான். சோம்பேறித் தங்கைக்காக அண்ணன்மார் பட்டினி கிடப்பதா? போகட்டும், நீ எழுந்திருக்கா விட்டாலும், என் மந்திரக் கோலையாவது கொடு. செடியிலிருந்து ஏதேனும் தின்பண்டங்களையாவது வருவித்து என் மைத்துனன்மாருக்குக் கொடுக்கிறேன்” என்று அவன் முழக்கமிட்டான்.
அவள் கண்ணை விழிக்காமலே அருகிலிருந்த ஒரு கோலைத் தூக்கி வீசினாள். “இது என்ன புதுப் பைத்தியம்?” என்று திருடர்கள் ஆர்வத்துடன் விழித்தனர்.
செல்வி சற்றுமுன்தான் எழுந்து சென்று, செடி கொடிகளை மூடியிருந்த துணிகளைத் திறந்து வைத்திருந்தாள். அவள் சோம்பல் உண்மையில் திம்மப்பன் திட்டங்களின் ஒரு பகுதியேயாகும்.
திம்மப்பன் கோல்கொண்டு செடி கொடிகளைத் தட்டினான். பலவகைத் தின்பண்டங்கள் விழுந்தன. அவன் அவற்றை இலைகளில் சிறுசிறு சிப்பங்களாகக் கட்டினான். மொத்தம் ஒன்பது சிப்பங்கள் இருந்தன.
ஏழு திருடர் முன்பும் ஏழு சிப்பங்களை வைத்தான். தான் ஒன்றை வைத்துக் கொண்டான். ஒன்றை மனைவியின் படுக்கையருகிலேயே வைத்து, “சமைக்க எழுந்திருக்காவிட்டாலும் உண்ண எழுந்திரு, சோம்பேறிப் பிண்டமே!” என்றான்.
அவள் எழுந்து பல் துலக்கினாள்.
தின்பண்டங்கள் செடியிலிருந்து விழுந்தாலும், வீட்டில் செய்தவைபோலவே இருந்தன. செய்தது விடிய ஒரு யாமத்திலாதலால் பலவற்றில் இன்னும் சூடு ஆறவில்லை.
“ஆகா! இரவு பனி அடித்திருக்கிறது. தின்பண்டங்களை அவை சூடாக்கியிருப்பதைப் பார்” என்றான். திம்மப்பன்.
செல்வியும் அதற்கேற்பப் பேசினாள். “ஆ… நல்ல பனியில், வெந்த பண்டமாக எனக்கு இன்னும் ஒன்று கொடுங்கள்” என்றாள்.
அவள் அத்துடன் அமையாமல், இன்னும் தின்பண்டம் விரும்புபவள் போல், மாயக்கோல் எடுக்கப் போனாள். அவன் அவளைத் தடுத்து மாயக்கோலை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டான்.
“விருந்தினராயிற்றே என்று நான்? மாயத் தின்பண்டம் வரவழைத்தால், நீ அதை வைத்துக் கொண்டே சோம்பேறியாகக் காலங் கழிக்கலாம் என்று பார்க்கிறாயா? அதெல்லாம் முடியாது போய் வேலையைப் பார்” என்றான்.
அவர்கள் முன் ஏமாறியதையெல்லாம் மறந்தனர். இப்போது மந்திரக் கோலைப் பெறும் நப்பாசையில் சிக்கினர்.
இத்தடவை திம்மப்பன் முன்னிலும் மிகுதியாக பிகுச் செய்தான். அத்துடன் செல்வியும் இப்போது தலையிட்டாள். “ஐயோ கோலைக் கொடுத்துவிட்டால் நானல்லவா இரவும் பகலும் குறுக்குமுறிய உழைக்க வேண்டும்”என்று தடுத்தாள்.
திருடர்கள் ஆயிரம் பொன்வரை உயர்வில் பேசி, அந்த மந்திரக் கோலுடன் வெற்றிகரமாக மீண்டனர்.
“இனி நம் மனைவியரை எதிர்பார்த்து வாழ வேண்டிய தில்லை” என்ற எண்ணத்துடன் அவர்கள் தங்கள் நடையைக் குதிரை நடையாக்கினர்.
வீட்டுக்குச் சென்றதும் தம் மனைவியரை ஆர்ப்பாட்டத் துடன் அழைத்தனர்.
“இதுவரை நீங்கள் எங்களுக்கு உணவு உண்டு பண்ணித் தந்தீர்கள். இப்போது பாருங்கள், உங்களுக்கு நாங்கள் தருவதை! உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? வடை வேண்டுமா? அப்பம் வேண்டமா, எள்ளுகுண்டை வேண்டுமா?” என்று கேட்டனர்.
எல்லாரும், “எள்ளுருண்டை வேண்டும்” என்றார்கள்.
மூத்தவன் தன் மடியில் இருந்த மாயக்கோலை எடுத்தான். அங்குள்ள செடி கொடிகள் ஒவ்வொன்றாகத் தட்டினான்.
ஒன்றிலிருந்தும் எள்ளுருண்டை விழவில்லை.
கணவன்மார் தங்களைக் கேலி செய்கின்றனர் என்று எண்ணி மனைவியர் கோபம் கொண்டு அவர்களை வைதனர்.
சீற்றமும் அவமானமும் அவர்களைப் பிடுங்கித் தின்றன. அவர்கள் திம்மப்பனையும் செல்வியையும் கொன்று கிழித்து விடுவதாகச் சூளுரைத்துக் கொண்டு பாய்ந்து வந்தனர்.
இத்தடவை இன்னுரைகள் பயன்பட மாட்டா என்பது திம்மப்பனுக்குத் தெரியும். செல்வியுடன் அவன் ஆழ்ந்த சிந்தனை செய்து எதிர்பாராத முறையில் திட்டம் வகுத்தான். அவர்கள் வருமுன்பே ஒருவரை ஒருவர் எதிர்த்துச் சண்டையிடுவதாகப் பாசாங்கு செய்தனர்.
செல்வி கையில் ஓர் அரிவாள்மணை இருந்தது. “இதனால் உன்னை வெட்டிவிடுவேன். என் பக்கத்தில் வராதே” என்றாள். அத்துடன், “ஆகா! அண்ணன்மாரை ஏய்த்ததுபோல என்னையும் ஏய்க்கவா பார்க்கிறாய்? இதோ உன்னைக் கொன்று தீர்த்துவிட்டு, மறுவேலை பார்க்கிறேன் பார்” என்று கூவினாள்.
திருடர்கள் தங்கள் கோபத்திலும் சிறிது தயங்கி நின்றார்கள்.
தடார் தடார் என்று அடிகள் கேட்டன. அவை உண்மையில் திம்மப்பன் சுவர் மீது அடித்த அடி உதைகள், ஆனால் செல்வி, “ஐயோ! அட பாவி!” என்றாள்.
அரிவாள்மணை ‘கணீர்’ என்று விழுந்த அரவம் கேட்டது. திம்மப்பன், “ஆ சண்டாளி, என் விரலை வெட்டி விட்டாயே! உன்னை இதோ என்ன செய்கிறேன் பார்!” என்று இரைந்தான், மீண்டும் ‘திண் திண்’ என்ற ஓசை கேட்டது.
“என் மண்டை போச்சு” என்று சொல்லிச் செல்வி விழுந்தாள்.
அவள் இறந்தவள் போலப் பேச்சுமூச்சற்றுக் கிடந்தாள்.
“ஐயையோ, மனைவியைக் கொன்றுவிட்டேன், இனி என்ன செய்வேன்? மைத்துனன்மார் வந்தால் என்ன சொல்வேன்?” என்று அவன் படபடத்தான்.
திருடர் இச்சமயம் தடதடவென்று உள்ளே நுழைந்தனர். அவர்கள் பழைய கோபத்தை மறந்தனர். செல்வி கொலைக்குப் பழி வாங்கப் போவதாகப் பாவித்தனர்.
திம்மப்பன் அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டான். “மைத்துனமாரே! உங்கள் தங்கை உயிரை பிழைக்க வைத்து விடுகிறேன்: என்னை மன்னியுங்கள்” என்றான்.
“செத்தவளை எப்படியடா பிழைப்பிக்க முடியும்?” என்றார்கள் திருடர்கள்.
அவன், மாடத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்தான். செல்வியின் மூக்கை அதைக் கொண்டு மூன்று தட்டு தட்டினான்.
முதல் தட்டில் உடல் விறைத்தது.
இரண்டாவது தட்டில் அவள் வீறிட்டாள்.
மூன்றாவது தட்டில் அவள் எழுந்து உட்கார்ந்து, சுற்று முற்றும் பார்த்து விழித்தாள். “நான் எங்கிருக்கிறேன். எமதரும ராசாவே!” என்றாள்.
“நான் எமதரும ராசாவல்ல. உன் கணவன், இவர்கள் எமகிங்கரர்கள் அல்ல. உன் அண்ணன்மார்கள். இதோ பார்” என்று திம்மப்பன் கல்லைக் காட்டினான்.
அவள் அந்தக் கல்லை வாங்கி முத்தமிட்டாள். “இந்தக் கோபக்காரக் கணவனைக் கட்டிக் கொண்டேன்: நீ மட்டும் இல்லாவிட்டால், நான் எப்படி இந்த மாதிரிச் செத்துச் செத்துப் பிழைக்க முடியும்” என்றாள்.
அத்துடன் அவள் கணவன் காலைத் தடவிப் பார்த்தாள். “ஐயோ, நான் அரிவாள்மணையால் காலை வெட்டி விட்டேனே! அந்தக் காயம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.
திம்மப்பன் சிரித்தான். “முதலில் மந்திரக் கல்லை என் காலுக்குப் பயன்படுத்திய பின்புதான் உனக்குப் பயன்படுத்தினேன். ஆனால், இப்போது கூட உனக்கு உயிர் தந்திருக்க மாட்டேன். இரண்டுநாள் செத்துக் கிடக்கட்டும் என்று விட்டிருப்பேன். உன் அண்ணன்மார்கள் தங்கையைக் கொன்றதற்காக என்னைக் கொல்ல வந்தார்கள்” என்றான்.
செல்வி திருடர்களைப் பார்த்து இனிய உரைகளால் வரவேற்றாள்.
“அண்ணன்மாரே! இவர் எப்போதும் இப்படித்தான் செய்கிறார். ஆனால் இந்த மந்திரக்கல் இருப்பதால்தான் நான் இறந்து வாழ்கிறேன். அவருக்கு, கொன்ற பிற்பாடு கோபம் போய்விடும், என்னைத் திரும்பவும் பிழைக்க வைத்து விடுவார். அஃதிருக்கட்டும், வீட்டில் அண்ணிமார் எல்லாரும் நலந்தானே” என்று நயமாகத் தேனொழுகப் பேசினாள்.
திருடர்கள் இப்போது மந்திரக் கல்லில் சொக்கிவிட்டனர். மற்றப் பழைய செய்திகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். அவர்கள் மந்திரக் கல்லுக்குப் பேரம் செய்யத் தொடங்கினார்கள்.
இப்போது திம்மப்பனை விடச் செல்வியே மந்திரக் கல்லைத் தர மாட்டேன் என்று வாதாடினாள். ஆனால், திருடர்கள் இப்போது அவளை உண்மையிலேயே தங்கைப் பாசத்துடன் இரந்து, வேண்டினர், “அண்ணிமார் அத்தனை பேர் நகைகளையும் தந்தால், இந்தக் கல்லைத் தருவேன்” என்றாள் அவள்.
திருடர் அனைவரிலும் இளையவனான ஒருவன் சென்று நயமாகப் பேசித் திருடர் மனைவியரின் நகைகளை வாங்கிக் கொண்டு வந்தான். திருடர் அனைவரும் காவல்காரர்களிடம் சிக்கி விட்டதாகப் பொய் சொல்லியே அவற்றை அவன் பெற முடிந்தது.
அத்தனை நகைகளையும் கொடுத்துவிட்டு, ஒரு கல்லை மிகுந்த நன் மதிப்புடன் எடுத்துக் கொண்டு திருடர் வீடு வந்தனர்.
மனைவியர் நடந்த செய்திகள் பற்றி ஆவலாகக் கேள்விகள் கேட்டனர். மந்தரக்கல்லின் கதையை அவர்களால் நம்ப முடியவில்லை. “இது முன்போல ஏதாவது ஏமாற்றாகத்தான் இருக்கக் கூடும்” என்றார்கள்.
மூத்த திருடன், “அப்படி ஐயப்படவே தேவையில்லை, நாங்கள் கண்ணாரப் பார்த்தோம், அவன் செல்வியை தடி கொண்டு பல அடி அடித்துக் கொன்றுவிட்டான். பின் மந்திரக் கல்லால் மூக்கில் மூன்று தட்டுத் தட்டினான். எமதரும ராசாவிடம் சென்ற அவள் உயிர் எழுந்து அவனை ‘எமதருமராசா’ என்றும் அழைத்தாள்” என்றான்.
அப்போதும் அவர்கள் ஐயம் தீரவில்லை.
“வேண்டுமென்றால், உங்களில் ஒருத்தியைக் கொன்று உயிர் வருவித்துக் காட்டுகிறேன்” என்றான் எல்லாரையும்விட இளையவனான திருடன்.
ஆனால், தங்கள் உயிரைப் புடம் போட மனைவியர் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. “ஏன் உங்களில் ஒருவரைக் கொன்று உயிர் வருவிப்பது தானே” என்றாள் இளைய திருடன் மனைவி.
“ஒருவரை என்ன அத்தனை பேரையும் நீங்கள் கொல்லுங்கள். பின் மறக்காமல் மந்திரக் கல்லால் பிழைக்க வையுங்கள்” என்றான் மூத்த திருடன்.
மனைவியர் ஆளுக்கு ஒரு குழவிக் கல்லைக் கொண்டு வந்தனர். அவரவர் கணவன்மாரை அவரவரே அம்மிக் குழவியால் அடித்துக் கொன்றனர். பின் ஒவ்வொருவரும் மந்திரக் கல்லால் மூக்கை மூன்று தரம் தட்டிப் பார்த்தனர். எவரும் உயிர் பெற்று மீளவில்லை.
மூன்று தடவைக்கு முப்பத்து மூன்று தடவை தட்டிப் பார்த்தும் பயனில்லை. பெண்கள் எல்லாரும் அழலானார்கள். மூத்த திருடன் மனைவி ஒருவாறு தேறினாள்.
“தங்கைமார்களே, இந்த மூடர்கள் ஓயாமல் ஏமாந்து வந்தவர்கள். அவர்கள் சாகாமலிருந்தாலும் எப்போதும் இந்த ஏமாற்றுகளுக்கு ஆளாகி நமக்குத் தொல்லைதான் தருவார்கள். இப்போது அவர்கள் மடத்தனத்துக்கு நம்மைப் பலியாக்காமல், அவர்களே பலியானார்கள். போய்த் தொலையட்டும். மிச்சமிருக்கும் பணத்தைக் கொண்டு நம் தாய் தந்தை உறவினரைக் கண்டுபிடித்து, இனியாவது திருடர் வீட்டுப் பெண்களாயிராமல் நல்ல வீட்டு பெண்களாயிருப்போம்” என்றாள்.
அவள் அறிவுமதியை அனைவரும் பின்பற்றினர். அவர்கள் பணம் அவர்களுக்குச் சமூகத்தில் இடம் அளித்தது. அவர்கள் திருந்திய குணம் விரைவில் அவர்களுக்கும் புது வாழ்வு தந்தது.
திருடர்கள் திரும்பவும் வரக்கூடும் என்று திம்மப்பனும் செல்வியும் எதிர்பார்த்திருந்தனர். பின் நடந்த செய்தியை அவர்கள் கேட்டறிந்து கவலையற்று வாழ்ந்தனர். திருடர் மனைவியர்கள் திருந்தியது கேட்டு, அவர்கள் அந்தப் பெண்களையும் சென்று கண்டு நல்லுறவாடி வாழ்ந்தனர்.
கொடைமீளியின் துயர்
நீலமலைக்கு அப்பால் செங்கேணி என்று ஒரு நாடு உண்டு, அதில் கொடைமீளி என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் தன் பெயருக்கு ஏற்ப ஒரு பெரிய கொடை வள்ளல். யார் எது கேட்டாலும் அவன் இல்லை என்று சொல்வதில்லை. அவன் நாட்டுக்குச் சென்று தங்கள் வறுமையைப் போக்கிக் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள்.
கொடைமீளியின் மனைவி சேதாம்பற்செல்வி கணவனைப் போலவே இரக்கமனம் உடையவள். அவன் கொடை வண்மைக்கு ஏற்ப, அவளும் விருந்தோம்பும் வண்மை உடையவளாயிருந்தாள்.
அங்கன், அனங்கன் என்று அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்தான் இருந்தன.
கொடைமீளி சிறந்த போர்வீரனாகவும் இருந்தான். ஆகவே, எந்த பகையரசனும் அவன் நாட்டின் மீது படையெடுக்க அஞ்சினான். அவன் ஆட்சி நல்லாட்சியாய் இருந்ததால், குடிமக்களும் அவனைப் போற்றினர்.
கொடைமீளியின் பகையரசனான கடுங்கோன் அவன் நாட்டை வஞ்சனையால் பெற எண்ணினான். அவன் ஒரு அறவோன் உருவம் மேற்கொண்டு கொடைமீளியிடம் வந்தான்.
கொடைமீளி அவனை இன்சொல்லுடன் வரவேற்றான். “தாம் வந்த செய்தி என்ன? என்னால் தங்களுக்கு என்ன ஆக வேண்டும்?” என்று கேட்டான்.
“அரசே! தங்களிடம் ஒரு வேண்டுகோளுடன்தான் வந்திருக்கிறேன். தாங்கள் எது கேட்டாலும் மறுக்காது கொடுப்பவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆயினும், நான் விரும்புவதைக் கேட்கத் தயங்காமல் இருக்க முடியவில்லை” என்றான். அறவோன் உருவில் வந்த அந்த வஞ்சக மன்னன்.
“எதுவாயினும் கேளுங்கள், தருகிறேன், சிறிதும் தயக்கம் வேண்டாம்” என்றான் கொடைமீளி.
கடுங்கோன் தன் அறவுருவைக் கலைத்துத் தன்னுருவிலேயே நின்றான். “நான் விரும்புவது உம் நாடு, உம் அரசு, உம் செல்வம் அத்தனையும் தான். அறவோன் உருவில் வந்தால்தான் கொடுப்பீர்கள் என்று நினைத்து வந்தேன். ஆனால், என் உருவிலேயே அதைப் பெற விரும்புகிறேன். இனி உங்கள் விருப்பம்” என்றாள்.
“எந்த உருவில் வந்தால் என்ன? நீர் விரும்பியதை எடுத்துக் கொள்ளும்” என்று சொல்லிக் கொண்டே கொடைமீளி தன் அரசுத் தவிசிலிருந்து இறங்கினான்.
வஞ்சனையால் கேட்டவனிடம் வாய்மொழிப்படி நடக்க வேண்டியதில்லை என்று அமைச்சர் தடுக்க முனைந்தனர். அரசன் கேட்கவில்லை. அன்றே அவன் கடுங்கோனை அரசனாக முடிசூட்டினான். அவனையே அரசனாக ஏற்கும்படி நாட்டு மக்களுக்கு ஆணை பிறப்பித்தான். பின் தன் ஆட்சியையும், செல்வத்தையும் அவனிடம் விட்டு விட்டு மனைவி மக்களுடன் இரவோடிரவாக நாட்டை விட்டு அப்பால் சென்றான்.
குடிகள் அழுதனர்; கோமக்கள் மயங்கினர்; அமைச்சர், படைவீரர் நெஞ்சம் புழுங்கினர். ஆனால், அவர்கள் நெஞ்சம் திறைகொண்ட வேந்தனின் ஆணைக்கு அவர்கள் கட்டுப் பட்டனர். வேண்டா வெறுப்பாகப் பகை வேந்தன் ஆட்சிக்கு உட்பட்டனர்.
கொடைமீளி நாடு கடந்து காட்டை அடைந்தான். காட்டு வழியிலேயே நெடுநாள் நடக்க வேண்டியதாயிற்று. பஞ்சணையும் பட்டுமல்லாமல் ஏதுமறியாத அரசி சேதம்பற் செல்வியும், பாலும் பழமும் பாகுமல்லாமல் எதுவும் அறியாத அரசிளஞ் செல்வரும் வெய்யிலில் வெம்பியும், முள்வழியில் நைந்தும் வருந்தினர். காய்கனிகளும் தண்ணீரும்கூட அவர்களுக்கு அவ்வப்போது தான் கிடைத்தது.
காடும் மலையும் கடந்தபின், அவர்கள் மேலைக் கடற் கரையடுத்த கொண்கான நாட்டை அடைந்தனர். காட்டில் கிடைத்த உணவுகூட இங்கே அவர்களுக்கு அரிதாயிற்று. ஆடையணிமணிகளை விற்றுச் சில நாள் பின்னும் நடந்தனர். கடற்கரையடுத்த பாக்கம் ஒன்றில் அவர்கள் ஓரிரவு தங்கவேண்டி வந்தது. அங்குள்ள ஒரு விடுதியைத் தேடிச் சென்றனர்.
விடுதியின் தலைவி ஒரு கிழவி, அவள் முதலில் இடம் தர மறுத்தாள். சேதாம்பற்செல்வியின் தோற்றத்தைக் கண்டதும் இணங்கினாள். விடுதியில் அவர்களுக்கு விடப்பட்ட இடம் பின்புறமுள்ள கூடமே. அதில் மூட்டை, கொசு, எலி, பெருச்சாளி அகிய எல்லாவற்றின் தொல்லைகளும் நிறைந்திருந்தன. அரசியும் செல்வர்களும் இவற்றிடையேகூட அலுப்பால் அயர்ந்து உறங்கினர். ஆனால் அரசனுக்கு உறக்கம் வரவேயில்லை. ’விடுதிக்காரி மறுநாள் தங்கியதற்கான கூலி கேட்டால் என்ன செய்வது?" என்ற கவலை அவனை அரித்தது. அவன் கையில் ஒரு காசுகூட இல்லை.
காலையில் விடுதிக்காரி பணம் கேட்க வந்தாள். அரசன் அவள் வாய்திறக்குமுன் தன் நிலைமையை விளக்கினான். “அம்மா! நாங்கள் நல்ல நிலையில் இருந்தவர்கள். ஆனால், இப்போது கையில் ஒரு காசுகூட இல்லை. ஆயினும் எங்களுக்கு இடமளித்த உங்கள் கடன் தீர்க்காமல் நாங்கள் போக விரும்பவில்லை. நான் வேலை செய்து கடன் தீர்த்துப் போகிறேன்” என்றான்.
விடுதிக்காரி பணப் பேராவல் உடையவள். அவள் முதலில் கடுஞ்சீற்றம் அடைந்தாள். பின் உண்மையிலேயே அவனிடம் காசில்லை என்று அறிந்து, ஒருவாறு அவன் வேண்டுகோளுக்கு இணங்கினாள். ஆனால், எல்லோருமே வேலை செய்ய வேண்டுமென்றும், ஒருநாள் தங்கலுக்கு ஒருநாள் வேலை ஊதியம் சரியாகப் போய்விடுமென்றும் வற்புறுத்தினாள்.
அரசன் இணங்கினான்.
அரசன் தன் தவறை உணர நீண்டநாள் ஆகவில்லை. ஒவ்வொரு நாள் உழைப்பும் முந்தியநாள் தங்கலுக்கே சரியாயிற்று. உழைத்த நாள் தங்கலுக்காக ஒவ்வொரு நாளும் மறுநாள் உழைக்கவே வேண்டி வந்தது. முதல் முதல் ஒருநாள் தங்கியிருந்த பாவத்தால், அரச குடும்பம் ஒரு விடுதிக்காரிக்கு மீளா அடிமையாயிற்று.
கொடைமீளியின் வேலை பெரும்பாலும் காட்டுப் புறங்களிலேயே கழிந்தது. அவன் விடுதிக்கு வேண்டிய விறகைக் காட்டிலிருந்து வெட்டித் தன் தலையிலேயே தூக்கிக் கொண்டு வர வேண்டியதாயிற்று. அது அவனுக்கு எவ்வளவு கடுமை யானாலும், மனைவி மக்களை எண்ணி அதைத் தளராமல் செய்தான். ஆனால், அதே சமயம் அரசி சேதாம்பற்செல்வியின் நிலையும் குழந்தைகளின் நிலையும்கூடக் கடுமையாக, இருந்தன. அரசி சமையல் வேலை முழுவதையும் செய்தாள். அவளுக்கு முன் அவ்வேலையிலிருந்த மற்ற வேலைக்காரர்கள் நீக்கப்பட்டார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள் பரிமாறும் வேலையிலும் வெளியே ஏவல்கள் செய்யும் வேலையிலும் இட்டுத் துவைக்கப்பட்டனர்.
தாய் தந்தையர் ஒருவரை ஒருவரோ, தங்கள் குழந்தை களையோ பார்க்கக்கூட வாய்ப்பு ஏற்படவில்லை. குழந்தைகளை எண்ணித் தாயும், மனைவி மக்களை எண்ணி அரசனும் ஓயாது கவலைப்பட்டுக் கவலைப்பட்டு உருகினர்.
அவர்கள் துன்பங்கள் இவற்றுடன் நிற்கவில்லை. ஒரு புதிய துயர் உண்டாயிற்று. விடுதியில் ஒருநாள் ஓர் அயல் நாட்டு வணிகன் தங்கினான். வேலைக்காரி நிலையில் இருந்த அரசியை அவன் பார்க்க நேர்ந்தது. அவள் அழகைக் கண்டு, அவன் அவளைத் தானே மனைவியாக்கிக் கொள்ள எண்ணினான். அதற்காக அவன் விடுதிக்காரியிடம் கைந்நிறையப் பணமும் கொடுத்தான். பண அவாவால் கிழவி அதற்கு இணங்கினாள்.
வணிகனுக்குக் கப்பலில் உணவு கொண்டு போய்க் கொடுக்கும்படி விடுதிக்காரி சேதாம்பற் செல்வியை அனுப்பினாள். வணிகனுடன் அவள் செய்திருந்த சூழ்ச்சியின்படி, அவள் கப்பலில் வணிகன் அறைக்குள் நுழைந்ததும், கப்பல் பாய் விரித்தோடிற்று.
அரசி தன் நிலையறியுமுன் கப்பல் நடுக்கடலில் சென்று விட்டது.
கணவனையும் குழந்தைகளையும் நினைத்து அவள் துடித்தாள்.
வணிகன் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான். ஆனால், அவள் அவனிடம் கடுஞ்சீற்றம் அடைந்தாள்.
அவள் வேலைக்காரியாக இருந்தாலும், உயர்குடியைச் சேர்ந்தவள் என்று வணிகன் கண்டான். ஆகவே அவளை மதிப்பாக நடத்தி, அவள் மனம் போல இருக்கும்படி விட்டான். அவளாக மனம் மாறும்வரை அவளை எந்த வகையிலும் அவன் புண்படுத்த விரும்பவில்லை.
தாயைக் காணாத பிள்ளைகளும், மனைவியைக் காணாத கணவனும் துடிதுடித்தனர். ஆனால், விடுதிக்காரி அவளைப் பற்றிய விவரம் எதுவும் கூற மறுத்துவிட்டாள். அவளாக எங்கோ ஓடி விட்டாள் என்று அவதூறு கூறினாள். அத்துடன், அவர்களையும் விடுதியிலிருந்து வெளியே துரத்தினாள்.
“பட்ட காலிலே படும்: கெட்ட குடியே கெடும்” என்று ஒரு பழமொழி உண்டு. அரசன் வகையில் அது உண்மையாயிற்று. பிள்ளைகளை விட்டுக்கூட அவன் விரைவில் பிரிய வேண்டிய தாயிற்று. ஓர் ஆற்றை அவர்கள் கடக்க வேண்டி வந்தது. வெள்ளம் பொங்கிக் கொண்டிருந்தது. படகுகள், கிடைக்கவில்லை. அரசன் பிள்ளைகளை ஒவ்வொருவராக இட்டுச் சென்று கடக்க எண்ணினான். ஒரு குழந்தையை அக்கரை சேர்த்துவிட்டுத் திரும்பும் போது, நட்டாற்றில் ஒரு சுழி அவனை இழுத்துச் சென்றது.
குழந்தைகளைப் பார்த்து அவன் கதறினான். ’குழந்தைகள் அவனைப் பார்த்துக் கதறின. ஆனால், தந்தையின் கதறலையோ, குழந்தைகளின் துடிப்பையோ ஆறும் சுழியும் கவனிக்கவில்லை. குழந்தைகளின் கண்பார்வையிலிருந்து அரசன் மறைந்தான்.
சிறிது நேரம் சென்று ஒரு படகோட்டி தன் மனைவியுடன் ஆற்றோரமாகப் படகில் வந்தான். இருபுறமும் இரண்டு குழந்தைகள் அழுவதைக் கண்டு படகோட்டியின் மனைவி இரங்கினாள். படகோட்டி துணிந்து மறுகரையிலுள்ள குழந்தையையும் கொண்டு வந்தான். இரண்டு குழந்தைகளையும் தங்கள் பிள்ளைகளாகவே அவர்கள் வளர்ந்தனர்.
அரசன் ஆற்றில் அமிழ்ந்து விடவில்லை. நீரோட்டம் அவனை நெடுந்தொலை சென்று கரைப்பக்கமாக தள்ளிற்று. கரையேறியதும் அவன் பிள்ளைகளைத் தேட விரைந்தான். ஆனால், ஒரு பெருங்கூட்டம் அவன் எதிரே வந்தது. அவர்கள் பொன் வெள்ளியாடைகளால் ஒப்பனை செய்யப்பட்ட ஒரு பாடையுடன் வந்தனர். பாடையின் முன் சென்றவர்கள் கொடைமீளியைப் பற்றிக் கொண்டு சென்றனர்.
அந்தக் கூட்டம் இறந்துவிட்ட அந்நாட்டு அரசனை அடக்கம் செய்யப் புறப்பட்ட கூட்டமே. பாடையின் எதிரே வருபவர் யாராயிருந்தாலும் அவரையே அரசராகக் கொள்வது அந்நாட்டு வழக்கம். அதன்படி கொடைமீளி மீண்டும் ஒரு புதிய நாட்டில் அரசனானான். ஆயினும், அரசியையும் அரசிளஞ் செல்வரையும் இழந்ததனால், அவன் ஆட்சியில் மனங்கொள்ள வில்லை. அமைச்சரிடமே எல்லா பொறுப்பையும் விட்டுவிட்டு, மனைவி மக்களைத் தேடும் பணியில் கருத்துச் செலுத்தினான்.
பலநாள் தேடியும் பயனில்லாமல் போகவே, அவன் கிளர்ச்சியற்றவனாய், தன் அறையிலேயே கிடந்து வாடி வதங்கினான்.
படகோட்டியிடம் வளர்ந்த பிள்ளைகள் இளைஞராயினர். வளர்த்த தாய் தந்தையரிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்கள் வேலை நாடிப்புறப்பட்டனர். தற்செயலாக அவர்களுக்கும் கொடைமீளியின் அரண்மனையிலேயே வேலை கிடைத்தது.
சேதாம்பற்செல்வி இருந்த கப்பல் ஒருநாள் தற்செயலாகக் கொடைமீளி ஆண்ட தலைநகரின் துறைமுகத்தில் வந்து சேர்ந்தது. கப்பலைப் பாதுகாக்க அமைச்சர் இரண்டு காவலரை அனுப்பினார். ஆனால், அந்தக் காவலர் வேறுயாருமல்ல; அங்கன், அனங்கன் என்ற அரசிளஞ் செல்வர்களே.
அவர்கள் சேதாம்பற்செல்வியின் அறையருகிலேயே காவலிருந்தனர். அவர்கள் குரல்கேட்டுச் சேதாம்பற்செல்வி திடுக்கிட்டாள்.
அவர்கள் இயல்பாகத் தம் இளங்கால நினைவுகளைப் பற்றி பேசினர். அனங்கன் சிறுபிள்ளையாதலால் அவனுக்கு எதுவும் நினைவில்லை. அங்கன் அவற்றை நினைவுடன் எடுத்துக் கூறினான். ஆற்றில் தந்தையை இழந்துவிட்டது பற்றிய நிகழ்ச்சி உருக்கமாயிருந்தது. ஆனால், சேதாம்பற் செல்வி இன்னும் அவர்கள் யார் என்று காண முடியவில்லை. இன்ன தென்றறியாத மனித உணர்ச்சிதான் அவள் உள்ளத்தில் அலையாடிற்று. ஆனால், விடுதியைப் பற்றியும் தாயைப் பற்றியும் பேச்சு வந்ததும் அவள் துடிதுடித்தாள். அவர்கள் பெயரைக் கேட்டறிந்ததும் அவர்கள் தம் பிள்ளைகளே என்றறிந்தாள்.
சேதாம்பற்செல்வி அந்நிலையிலும் தன் சூழலை மறக்கவில்லை. ஆகவே, உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டாள். கப்பலைவிட்டு வெளியேறினாலல்லாமல் தான் தன் பிள்ளைகளுடன் சேர முடியாது என்று அவள் கண்டாள். இதற்காக, சூழ்ச்சியறியாத அவள் உள்ளம் சூழ்ந்து சூழ்ச்சி செய்தது.
காவலராயிருந்த இளைஞர்கள் தன்னைப் பற்றி ஏளனம் செய்ததாகவும், அவர்களைப்பற்றி அரசனிடம் முறையிடும்படியும் அவள் வணிகனை வேண்டினான்.
அரசன், வணிகனையும் சேதாம்பற் செல்வியையும் இளைஞரையும் அழைத்து உசாவும்படி அமைச்சருக்கு ஆணையிட்டான். ஆனால், இளைஞர்மீது அவன் நல்லெண்ணங் கொண்டிருந்ததால், வழக்கத்தை மீறித் தானே முறைமன்றத்துக்கு வந்திருந்தான்.
முறை செய்த அமைச்சர், சேதாம்பற்செல்வியை வணிகன் மனைவி என்று கருதியிருந்தார். ஆகவே, “நீ இந்த வணிகன் மனைவி தானே?” என்று கேள்வியுடன் உசாவல் தொடங்கினார்.
“அல்ல” என்று கூறி அவள் தன் கதையைத் தெரிவித்தாள்.
எதிர்பாத்தபடி இங்ஙனம் தன் அடாச் செயல் வெளிவருவது கண்டு வணிகன் நழுவினான். காவலர் அவனைக் கைப்பற்றிக் கொண்டனர்.
வணிகனிடமிருந்து விடுதலை பெற்றபோதே! சேதாம்பற் செல்வி இன்னும் துணிவு பெற்றாள். அவள் முறை நடுவரிடம் புதிய வேண்டுகோள் விடுத்தாள். “அண்ணலே! நான் வணிகனிட மிருந்து விடுதலை பெறுவதற்கே, இந்த இளைஞர்மீது குற்றம் சாட்டினேன். அவர்கள் உண்மையில் என் பிள்ளைகளே, என் கதை கேட்டு, அவர்களுடன் என்னைச் சேர்க்கும்படி வேண்டுகிறேன்” என்றாள்.
வழக்கம்போல் எதிலும் கவனமில்லாமல் இருந்த அரசனுக்கு, வணிகன் கதை கேட்டதே! அரை உணர்வு வந்துவிட்டது. அவன் சேதாம்பற் செல்வி கூறியதைக் கூர்ந்து கவனித்தான்.
பிள்ளைகளைப் பற்றி அவள் கூறியதைக் கேட்டதே!, அவன் உண்மை நிலையை உணர்ந்தான். இளைஞர்கள் தன் குழந்தைகளே என்று கண்டு அவர்களை வந்து அணைத்துக் கொண்டான்.
அரசிக்கு இப்போதுதான் அரசன் தன் கணவன் என்று தெரிந்தது. அவள் ஓடி அவன் காலடியில் விழுந்தாள்.
கொடைமீளி தன் மனைவியுடனும் குழந்தையுடனும் இனிது வாழ்ந்தான். அரச காரியங்களில் அவன் அதுமுதல் கிளர்ச்சி யுடன் ஈடுபட்டான்.
அங்கனையும் அனங்கனையும் வளர்த்த படகோட்டிக்கும், அவன் மனைவிக்கும் அரும்பரிசில்கள் வழங்கப்பட்டன.
கொடைமீளியின் ஆட்சித் திறமையும் வள்ளன்மையும் மீண்டும் அவன் புகழ்பரப்பியது. செங்கேணி நாட்டு மக்கள் கடுங்கோனின் கொடுங்கோன்மை தாளாமல் கிளர்ந்தெழுந்து அவனை அழித்தனர். தம் பழைய அரசனையே மீட்டும் அழைத்தனர். கொடைமீளி தன் புதிய கொண்கான நாட்டில் அங்கனை இளவரசனாக்கிவிட்டு, செங்கேணி நாட்டின் ஆட்சியைக் கைக்கொண்டான்.
கொடைமீளி நீண்டநாள் ஆண்டபின், அங்கன் செங்கேணி நாட்டையும் அனங்கன் கொண்கான நாட்டையும் ஆண்டனர். கொடை மீளியின் துயரக்கதை இருநாட்டு மக்களுக்கும் நாட்டுப் பெருங்கதை ஆயிற்று.
நம்பியின் நண்பர்கள்
நம்பி ஒரு சிறு பையன். அவனுடன் விளையாட அவனுக்குத் தம்பி தங்கை இல்லை. ஆனால், அவன் அன்பு உள்ளம் படைத்தவன். சின்னஞ்சிறு பறவைகளுடனும், உயிரினங் களுடனும் அவன் விளையாடினான்.
ஒருநாள் நம்பி அடுத்த ஊருக்குப் போய்க் கொண்டிருந்தான். வழியில் ஒரு முரட்டுப் பையன் ஒரு பறவையைப் பிடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். பறவையிடம் நம்பிக்கு இரக்கம் ஏற்பட்டது. அதை விட்டுவிடும்படி அவன் அந்தப் பையனிடம் கெஞ்சினான்.
“என்னிடம் இருந்த கடலையையெல்லாம் இந்தப் பொல்லாத பறவை சிந்தி விட்டது. அதை விட மாட்டேன்” என்றான் பையன்.
“இந்தா! வேறு கடலை வாங்கிக் கொள், பறவையை விட்டுவிடு” என்று கூறி, நம்பி ஒரு காசை எடுத்துக் கொடுத்தான். அது அவன் கடலை வாங்க வைத்திருந்த காசு.
பையன் பறவையை விட்டுவிட்டான். அது மகிழ்ச்சியுடன் பறந்தோடிற்று. ஆனால், சிறிது நேரம் கழித்து அது நம்பியின் பின்னாலேயே பறந்து வந்து, அவனுடன் விளையாடிற்று. “உனக்கு இனி நான் ஒரு தங்கை போல் இருப்பேன். நீ கூப்பிட்ட போதெல்லாம் வந்து உன்னுடன் விளையாடுவேன். உனக்கு என்னால் இயன்ற உதவி செய்வேன்” என்று அந்தப் பறவை கூறிற்று.
நம்பி சிறிது பெரிய பையனாக வளர்ந்து விட்டான். அப்போது அவன் வாய்க்கால்கரை வழியே போய்க் கொண்டிருந்தான். சில பையன்கள் ஒரு தவளையைக் கல்லால் எறிந்து கொண்டிருந்தார்கள். நம்பிக்குத் தவளை மீது இரக்கம் ஏற்பட்டது. தவளை மீது கல் எறிய வேண்டாம் என்று அவன் பையன்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
ஒன்றிரண்டு பையன்கள் “சரி” என்றார்கள். ஆனால், மற்றப் பையன்கள் கேட்கவில்லை. “தவளை மீது நாங்கள் கல் எறிந்தால், உனக்கென்ன? தவளை உனக்குத் தம்பியா?” என்று கேட்டு அவர்கள் அவனைக் கேலி செய்தார்கள்.
நம்பி, அவர்கள் கேலியைப் பொருட்படுத்தவில்லை. அவன் தன் சட்டைப் பையில் கையை விட்டுத் துழாவினான். அதில் அவன் மாமன் கொடுத்த முந்திரிப் பருப்புகள் இருந்தன.
அவன் அவற்றைக் கையில் எடுத்தான். “கல் எறியாத பையன் ஒவ்வொருவனுக்கும் இரண்டு முந்திரிப் பருப்புத் தருகிறேன்” என்றான்.
“நான் எறியவில்லை. நான் எறியவில்லை” என்று சொல்லிய வண்ணம் அவர்கள் தலைக்கு இரண்டு முந்திரிப் பருப்பு வாங்கிக் கொண்டு போனார்கள்.
தவளை உயிருடன் தப்பிற்று. “நான் இனி உனக்குத் தம்பி தான். உனக்கு எப்போதும் நான் உதவி செய்வேன். உனக்கு வேண்டியபோது அந்த ஒரு பறவையிடம் சொல்லியனுப்பு” என்றது.
நம்பி பெரியவனானான். அப்போது அவன் அயலூர் ஒன்றுக்குச் சென்றான். அந்த ஊரார் ஒரு மானைச் சூழ்ந்து அடித்துக் கொல்ல முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நம்பிக்கு மான் மீது இரக்கம் உண்டாயிற்று. அந்த மானை விட்டு விடும்படி அவன் வேண்டினான்.
“இது எங்கள் வயல்களைத் தின்றழித்தது. அதை நாங்கள் கொன்று தின்னாமல் விடப் போவதில்லை” என்று அவ்வூரார் சொன்னார்கள்.
நம்பிக்கு இன்னது செய்வதென்று புரியவில்லை. மானைச் சாகவிடவும் அவனுக்கு மனமில்லை. அவன் சிறிது சிந்தித்தான்.
ஒரு குறும்பன் நம்பியைப் பார்த்து நையாண்டி செய்தான். “மான் உன் அத்தை மகளா? அதற்காக உனக்கு ஏன் இவ்வளவு கரிசனை?” என்றான்.
நம்பிக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று.
“நான் ஓர் ஆண்டு முழுவதும் உங்கள் வயல்களுக்கு கூலியில்லாமல் தண்ணீர் இறைக்கிறேன். இந்த மானை விட்டு விடுங்கள்” என்றான்.
ஊரார் மானை விட்டுவிட்டனர்.
மான், நன்றியுடன் நம்பியைப் பார்த்தது. “நான் இனி உனக்கு அத்தை மகள் தான். உனக்கு வேண்டும்போது அந்தப் பறவையை என்னிடம் அனுப்பு” என்றது.
நம்பி, அதுமுதல் பொறுமையாக எல்லாருக்கும் ஓர் ஆண்டு வேலை செய்தான்.
நம்பிக்கு மாமன் மகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் நாகு. நம்பி அவளை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான். அவளை நம்பிக்குக் கொடுக்க மாமனுக்கு விருப்பம் இல்லை. நம்பி தன் வீட்டுப் பக்கம் வராமல் தடுக்க வழி தேடினான்.
“அரசி குளிக்கும் மஞ்சளை எடுத்து வந்து கொடு; அதன் பிறகு நாகுவை நீ மணந்து கொள்ளலாம்” என்றான் நம்பியின் மாமன்.
“நம்பி இந்தக் காரியத்தைச் செய்தால், அவனைக் காவலர் பிடித்துக் கொள்வார்கள். அவன் திரும்பி வர மாட்டான்” என்று மாமன் நினைத்தான்.
நம்பி என்ன செய்வது என்று சிந்தித்தான்.
பறவை அப்போது அவனைவிட்டுப் பறந்து சென்றது. சிறிது நேரத்தில் அது மஞ்சளுடன் அவன் முன் வந்தது.
“அது அரசி குளிக்குமிடம் சென்று மஞ்சளைக் கொண்டு வந்திருக்கிறது” என்பதை அவன் அறிந்தான். நன்றியுடன் பறவையைக் கையிலெடுத்து அதைத் தடவிக் கொடுத்தான்.
“நாகுவின் மிஞ்சி கிணற்றில் விழுந்து விட்டது. அதை இன்று மாலைக்குள் எடுத்துக் கொடுத்தால், நீ நாகுவை அடையலாம்” என்றான்.
நம்பி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
பறவை இப்போதும் திடீரென அவனை விட்டுச் சென்றது. அது தவளையிடம் போய் விவரம் தெரிவித்தது. பின் தவளையைத் தூக்கிக் கொண்டுபோய்க் கிணற்றில் விட்டது. தவளை மிஞ்சியைக் கொண்டு வந்தது. பறவை, தவளையைத் திரும்ப அது இருக்கும் இடத்தில் கொண்டு போய்விட்டது. மிஞ்சியுடன் நம்பியின் பக்கத்தில் குந்திற்று.
நம்பியின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவன் பறவையை இன்னும் ஆதரவுடன் தடவிக் கொடுத்தான்.
நம்பி இரண்டாவது தடவையும் சொன்னபடி செய்துவிட்டது கண்டு மாமன் புழுங்கினான். இத்தடவை அவன் சாக்குப்போக்கு ஒன்றும் சொல்லவில்லை. “நாகுவை நான் உனக்கு தர முடியாது. அத்துடன், இன்றிரவே நீ இந்த ஊரை விட்டுப் போய்விட வேண்டும். இல்லாவிட்டால் அரசியின் மஞ்சளைக் காட்டி உன்னைக் காவலரிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்” என்றான்.
நம்பி கவலை தோய்ந்த முகத்துடன் மாமன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். “வாழ்ந்தால், நாகுவை மணம் செய்து கொண்டு வாழ வேண்டும். இல்லாவிட்டால், காவற் கூடத்துக்குப் போனாலென்ன, எங்கே போனாலென்ன!” என்று அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டு நடந்தான்.
அவன் முன் ஒரு பூ வந்து விழுந்தது.
அவன் திரும்பிப் பார்த்தான்.
பலகணியில் நாகுவந்து நின்றிருந்தாள்.
அவள் கண்கள் கலங்கி இருந்தன.
“நம்பி! அப்பா மனம் உன்மீது ஏனோ கல்லாய் இருக்கிறது. ஆனால், நீ இல்லாமல் நான் வாழ முடியாது. இன்றிரவே என்னை இட்டுக் கொண்டு போய்விடு. நடு இரவில் முழுநிலா உச்சிக்கு வரும். அப்போது நான் தோட்டக் கதவின் பக்கம் வந்து உனக்காகக் காத்திருப்பேன்” என்றாள்.
“சரி” என்று நம்பி கூறிவிட்டு, வீட்டுக்கு வந்தான்.
நாகுவின் பாசம் அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் “ஓர் இரவுக்குள் நாகுவுடன் எப்படித் தப்பி ஓடுவது” என்று அவன் சிந்தித்தான். சிந்தித்துச் சிந்தித்து அவன் தலைசுழன்றது. அந்நிலை யிலும் பறவையின் நினைவுகூட அவனுக்கு வரவில்லை.
ஆனால், பறவை இப்போதும் அவனைவிட்டுப் பறந்தோடிற்று.
ஏற்றித் தானும் ஏறி அமர்ந்தான்.
மான் பாய்ந்தோடிற்று; பறவை பறந்தோடிற்று.
வழியில் வாய்க்கால் கரை வந்த போது, தவளை கத்திற்று. பறவை அதைத் தூக்கிக் கொண்டு மானுடன் பறந்தது.
காடு கடந்து ஒரு புதிய நாட்டுக்கு அவர்கள் வந்தார்கள்.
அங்கே, குளக்கரைகளிலெல்லாம் தவளைகள் நிறைந்திருந்தன. மரங்களிலெல்லாம் பறவைகள் நிறைந்திருந்தன. சூழ இருந்த காடுகளிலெல்லாம் மான்கள் நிறைந்திருந்தன.
தவளை இங்கே வந்தவுடன் உண்மையிலேயே ஒரு தம்பியாயிற்று. பறவை இங்கே வந்தவுடன் உண்மையிலேயே ஒரு தங்கையாயிற்று. மான் இங்கே வந்தவுடன் உண்மையிலேயே ஒரு அத்தை மகளாயிற்று.
தம்பி, தங்கை, மைத்துனர் ஆகிய உறவினர் உதவியோடு நம்பி நாகுவுடன் இன்பமாக வாழ்ந்தான்.
உயிர் மருந்து
செம்பியனும் சேந்தனும் அண்ணன் தம்பியர். செம்பியன் சேந்தனிடம் தன் உயிரையே வைத்திருந்தான்.
சேந்தன் ஒரு நாள் கண்ணை மூடினான். மூடின கண் திறக்க வில்லை. மீளாத் துயிலில் ஆழ்ந்தான்.
செம்பியன் ஆறாகக் கண்ணீர் விட்டான். தன் பணத்தை எல்லாம் செலவழித்துச் சந்தனத்தால் பெட்டி செய்தான். அதில் சேந்தன் உடலை வைத்து அடக்கம் செய்தான்.
சேந்தனில்லாததால், அவனுக்கு வாழ்க்கை வெறுத்தது. அவன் காடுமேடாக அலைந்தான்.
காட்டுவழியில் ஒரு மண்டபம் இருந்தது. அதில் இருந்து கொண்டு அவன் சேந்தனை நினைந்து நினைந்து உருகினான்.
அவன் முன் ஓர் ஆண்டி வந்து நின்றான். “அப்பனே, நீ ஏன் காட்டு மண்டபத்திலிருந்து அழுகிறாய்?” என்று கேட்டான்.
“மாண்டுபோன தம்பியில்லாமல் என்னால் வாழ முடிய வில்லை. அவனை நினைத்து நினைத்து வருந்துகிறேன்” என்றான் செம்பியன்.
ஆண்டியின் முகத்தில் ஒரு புன்னகை ஒளி வீசிற்று. துயரத்தில் ஆழ்ந்திருந்த செம்பியன் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், ஆண்டி சொன்னது அவனுக்குக் கேட்டது. “அப்பா, நீ தம்பியிடம் கொண்ட பாசம் பெரிது, ஆகவே, திரும்ப அவனை உயிரோடு காண ஒரு வழி சொல்கிறேன்” என்றான் அவன்.
செம்பியன் ஆவலுடன், “ஆ, அப்படியா? கூறுங்கள், கூறுங்கள்!” என்றான்.
“ஆம், இதோ மூன்று மாங்கனிகள் தருகிறேன். இவை மிகவும் இனிமையானவை. நண்பகலுக்குள் இவற்றை நீ செந்தில் ஆண்ட வனுக்குக் கொண்டுபோய்ப் படைக்க வேண்டும். படைக்கும்வரை நீ எதுவும் உண்ணப்படாது. இவற்றை யாரும் தீண்டவும் விடப்படாது. கூறியபடி செய்தால், ஆண்டவன் செத்தவன் உயிர் பெற்று வரும்படி உயிர் மருந்தை உனக்கு அளிப்பார்” என்றான் ஆண்டி.
செம்பியன் ஆண்டிக்கு நன்றியும், வணக்கமும் தெரிவித் தான். மாங்கனிகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
காட்டு வழியில் பசி அவன் காதை அடைத்தது. நீர் வேட்கையால் அவன் நா உலர்ந்தது. ஆனால், அவன் மாங்கனியின் மீது சிந்தனை செலுத்தவில்லை. வேறு உணவையோ, நீரையோ நாடவும் இல்லை. சேந்தனை உயிரோடு காணும் அவாபசியையும், விடாயையும் வென்றது.
புல் பூண்டோ, நீரோ அற்ற மணல்பரப்பில் அவன் நடந்து சென்றான். முற்பகலேயானாலும் வெயில் கொளுத்திற்று. அவன் தலை சுழன்றது. ஆனால், அந்நிலையிலும் இரங்கத்தக்க ஒரு காட்சி அவன் கண்களில் பட்டது.
ஒரு குரங்கு வெயிலில் பசியாலும், விடாயாலும் வாடிச் சுருண்டு கிடந்தது. அது கிட்டத்தட்டச் சாகும் தறுவாயில் இருந்தது.
குரங்கினிடம் செம்பியன் இரக்கம் கொண்டான். அவன் கால்கள் அதைக் கவனிக்காமல் செல்ல மறுத்தன. ஆனால், அதே சமயம் சேந்தன் நினைவு அவன் கால்களை முன்னே தள்ளின. இறுதியில் இரக்கம் வென்றது. செந்தில் ஆண்டவனுக்குப் படைக்க வைத்திருந்த மாங்கனிகளில் ஒன்றை அவன் அதற்குக் கொடுத்தான்.
குரங்கு அவனுக்கு நன்றி தெரிவித்தது. “திரும்பி வரும்போது இந்த இடத்திலேயே நான் இருப்பேன். நான் ஓர் அப்பாவிக் குரங்குதான். ஆனால், என்னால் இயன்ற அளவு உன் களைப்பை ஆற்றுவேன்” என்றது.
“செந்திலாண்டவனிடம் இனி மூன்று மாங்கனிகளையும் படைக்க முடியாது. ஆயினும் இரண்டைக் கொண்டு போய்ப் படைத்துப் பார்ப்போம்” என்று செம்பியன் மனச்சோர்வுடன் கூறிக் கொண்டான்.
அவன் மேலும் நடந்தான்.
வெயில் ஏறிற்று. அவன் விரைந்து நடக்க முயன்றான்.
மீண்டும் இரங்கத்தக்க ஒரு காட்சி அவனைத் தடுத்தது.
வல்லூற்றினால் அடிக்கப்பட்ட ஒரு பச்சைக்கிளி சிறகிழந்து துடித்தது. அவனுக்கு இன்னது செய்வது என்று தெரியவில்லை. இத்தடவை அவன் சிறிதும் தயங்காமல் ஒரு மாங்கனியை அதற்குக் கொடுத்தான்.
பச்சைக்கிளி அதை உண்டபின் சிறிது தெம்படைந்தது. அது நன்றியுடன் அவன் மடியில் வந்து உட்கார்ந்தது. “நீ திரும்பி வரும்போது நான் இங்கே இருப்பேன். நான் பசையற்ற ஒரு பச்சைக் கிளிதான். ஆனாலும், உனக்கு என்னால் இயன்ற பொருள் தந்து உன்னை மகிழ்விப்பேன்” என்று கூறிற்று.
“ஒரு மாங்கனியை ஆண்டவனுக்குக் கொண்டு போய்க் கொடுத்து என்ன பயன்? திரும்பிவிடலாமா?” என்று செம்பியன் ஒரு கணம் நினைத்தாள். ஆனால், நன்றியுள்ள கிளிக்குத் தன் உண்மை நிலைமை தெரிந்தால் வருத்தம் ஏற்படுமே என்று அவன் மேலும் நடந்தான்.
பொழுது உச்சியை நெருங்கிற்று. அவனை அறியாமல் அவன் கால்கள் விரைந்தன. ஆனால் திடீரென்று அவன் கால்கள் நின்றன. அவன் காலடியில் ஒரு பாம்பு சுழன்று சுழன்று வந்தது.
“சேந்தனைப் பெறவே முடியாது. ஆண்டவனுக்காக வைத்திருந்த கனிகளில் இரண்டை இழந்தாய்விட்டது. இனி நடந்தென்ன, நடவாமல் இருந்தென்ன? பாம்பு நம்மைக் கொன்றால் நாமே….!” என்று அவன் மனந்தேறிப் பாம்பின் அருகில் சென்றான்.
பாம்பு கடிக்கவில்லை. அது வாயைப் பிளந்து பிளந்து காட்டிற்று. அதுவும் பசியாலும், விடாயாலும்தான் வருந்துகிறது என்பதை அவன் கண்டான்.
அவன் கையிலிருந்த கடைசி மாங்கனி; பாம்பின் துயர் தீர்த்தது.
“குழந்தை வரம் தேடச் சென்று, கொண்டவனை இழந்த கதையாயிற்று. மாங்கனிகள் முன்றையும் இழந்தபின் செந்திலாண்டவனைப் போய்ப் பார்த்து என்ன பயன்? இப்பெருங் குற்றத்தைச் செந்திலாண்டவன் மன்னிக்கவா போகிறார்? அவர் சாபம் இடாதிருந்தால் போதும்” என்று அவன் எண்ணமிட்டான்.
“ஆனால், அவன் திரும்ப எண்ணவில்லை. பாம்பு தன் துயரை அறிந்தால் வருந்தும். மேலும் சேந்தனில்லாமல் வாழ்வதைவிடச் செந்திலாண்டவன் சாபம் பெற்றாவது சாவோமே” என்று அவன் நினைத்தான்.
அவன் மீண்டும் நடந்தான். எப்படியோ கணக்காய் உச்சி வேளையில் அவன் செந்திலாண்டவன் திரு முன்னிலையில் சென்று நின்றான்.
அங்கேயும் ஆண்டவன் முன் ஓர் ஆண்டி நின்றான். ஆனால் இது முன் கண்ட ஆண்டியல்ல; அவன் புரோகித ஆண்டி.
“ஆண்டவனுக்கு என்ன கொண்டு வந்தாய்?” என்று ஆவலுடன் கேட்டான்.
செம்பியன் தன் கதையைச் சொன்னான்.
“போ, போ! நீ சண்டாளன் பாவி! ஆண்டவனுக்குரிய பொருளைக் கீழின விலங்குகளுக்கா கொடுத்தாய்? உன்னைப் பார்ப்பதுகூட மாபழி ஆகும். போ, போ போய்த் தொலை” என்று ஆண்டி சீறி விழுந்தாள்.
கவலை தோய்ந்த முகத்துடன் செம்பியன் அவ்விடம் விட்டுத் திரும்பினான்.
அவன் நடக்கவில்லை. அவன் கால்கள் அவனை இழுத்துக் கொண்டு சென்றன.
பாம்பு அவனைத் தன் வளைக்கு இட்டுச் சென்றது. பலவகை இனிய பழங்களை அளித்தது. அவனால் உண்ண முடியவில்லை. அவன் மனம் தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தது.
பாம்பு அவன் முன் ஒரு மணியை வைத்தது. “என்னால் தரத்தக்க பரிசு இது ஒன்று தான். பாம்பு கடித்து இறந்தவர்கள் தலையில் இதை வைத்தால், அவர்கள் பிழைத்தெழுவார்கள். இதை எடுத்துக் கொண்டு போ. அத்துடன் என் உதவி எப்போது வேண்டுமானாலும் இதனிடம் சொல். நான் உடனே வருவேன்” என்றது.
பாம்பின் நன்றியுணர்வு அவன் உள்ளத்தை உருக்கிற்று. ஆனால், அவன் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
பச்சைக்கிளி அவனைத் தன் கூட்டருகே அழைத்துப் பாலும் பழமும் தந்தது. அத்துடன் ஒரு மலரை அவன்முன் வைத்தது. “என்னால் தரத்தக்க பரிசு இது ஒன்று தான். வயது சென்ற எவர் இதை முகர்ந்தாலும், இளமையுடையராவர், அத்துடன், எப்போதாவது என் உதவி உனக்குத் தேவைப் பட்டால், இதனிடம் சொல்லு, நான் உடனே வருவேன்” என்றது.
பச்சைக்கிளியின் சொற்கள் அவன் செவியில் ஏறவில்லை. அதன் அன்புரைகள் அவனைப் பாகாய் உருக்கிற்று. ஆனால், அவன் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. அவன் தன்னை மறந்து அம்மலரைத்தன் மேலாடையில் முடிந்தான். “சேந்தனைப் பிழைப்பிக்கும் வகையை வீணாகக் கெடுத்து, செந்திலாண்ட வனுக்கும் துரோகம் செய்துவிட்டோம்” என்று அவன் வருந்தினான்.
குரங்கு அவன்முன் ஓர் அருநெல்லிக் கனியை வைத்தது. “என்னால் தரத்தக்க பரிசு இதுதான். இதைக் கையில் வைத்துக் கொண்டு, செத்துப் போனவர் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினால், அவர்கள் உயிர் பெற்று விடுவார்கள். அத்துடன் உனக்கு எப்போது என்ன வேண்டுமானாலும் என்னை நினை; நான் வருவேன்” என்றது.
குரங்கின் பேச்சை அவன் காதுகள் வாங்கவே இல்லை. அவன் கைகள் அவனை அறியாமல் அவ் வருநெல்லிக்கனியை அவனுடைய சம்புடத்தில் வைத்துக் கொண்டன.
ஆண்டியைக் கண்ட மண்டபத்தில் வந்து அவன் ஓர் இரவு அங்கே தங்கினான்.
ஆண்டியை அங்கே காணவில்லை. ஆனால், ஒரு காசுமாலை அங்கே கிடந்தது. அதிலுள்ள பச்சை, சிவப்பு வெள்ளைக் கற்கள் எங்கும் ஒளி வீசின. அவன் அதைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தக் காசுமாலை அருகில் உள்ள ஒரு நகரின் இளவரசி யினுடையது. திருடர் அதைத் திருடிக் கொண்டு வந்திருந்தனர். காவலர் அவர்களைத் துரத்தவே, அவர்கள் அதை மண்டபத்தில் போட்டுவிட்டு ஓடி ஒளிந்தனர்.
காசுமாலையை வைத்துக் கொண்டிருந்த செம்பியனைக் காவலர் கைப்பற்றிச் சென்றனர். அவனைக் கடுங்காவலில் வைத்தனர்.
அடுத்தநாள் சிறைக்காவலன் சோர்ந்த முகமுடையவ னாய்க் காணப்பட்டான்.
“சோர்வுக்குக் காரணம் என்ன?” என்று கேட்டான் செம்பியன்.
“காசுமாலை அகப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த காரிகை, இன்று பாம்பு கடித்து உயிரிழந்தாள்” என்றான் காவலன்.
“என்னை மன்னனிடம் கொண்டுவிடு. நான் பிழைப்பிக் கிறேன்” என்றான் செம்பியன்.
மன்னன் அவனை வரவழைத்தான். பாம்பு தந்த மணி யினால் செம்பியன் இளவரசிக்கு உயிர் வருவித்தான்.
மன்னனும் அரசியும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை யில்லை. அவர்கள் செம்பியனுக்கே அவளை மணம் புரிவிக்க எண்ணினார்கள்.
வாழ்வில் கசப்படைந்த செம்பியன் முதலில் மறுத்தான். அதுகேட்டு இளவரசி கண்கலங்குவதை அவன் குறிப்பால் அறிந்தான். அவன் மணவினைக்கு இசைந்தான்.
மணமகளுக்குப் பாங்கியர் ஒப்பனை செய்தனர்.
மணமகனுக்குப் பாங்கர் ஒப்பனை செய்தனர். அச்சமயம் அவன் பழைய ஆடைகள் களையப்பட்டுப் புதிய ஆடைகள் அணிவிக்கப்பட்டன.
பழைய ஆடைகளைத் துவைக்கச் சென்ற வண்ணார மாது வயது சென்ற கிழவி. அவள் ஆடையில் ஏதோ முடிந்திருப்பது கண்டு அவிழ்த்தாள். மலராயிருந்ததால் முகர்ந்து பார்த்தாள். பின் அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு ஆடைகளைத் துவைத்தாள்.
புத்தாடையுடன் அவள் அரண்மனைக்கு வந்தபோது அவளை யாரும் அடையாளம் அறியவில்லை. ஆனால், அவள் யார் என்று தெரிய வந்தபின் எல்லாரும் வியப்படைந்தனர். அவள் முகர்ந்த மலரை முகர்ந்து பல கிழவியரும் அரசியும் அரசனும் இளமை பெற்றனர்.
மணமகன், மணமகளுக்கு உயிர்கொடுத்ததுடன், தமக்கு இளமையும் தந்தானென்று அரசனும் அரசியும் மகிழ்ந்தார்கள்.
செம்பியனுக்கும் இளவரசிக்கும் மணம் இனிது முடிந்தது.
செம்பியன் மணமானபின்னும் முகவாட்டமாயிருப்பது கண்ட இளவரசி, அவன் வரலாறு முழுவதும் கேட்டறிந்தாள்.
பாம்பு கொடுத்த மணியின் கதையை அவன் கூறினான். “கிளி என்ன கொடுத்தது? குரங்கு என்ன கொடுத்தது?” என்று அவள் கேட்டாள்.
“தெரியவில்லை. எதுவும் தந்ததாக நினைவில்லை” என்றான் அவன்.
இளவரசி அறிவுடையவள், “கிழவியைக் குமரியாக்கிய மலரைக் கிளியே கொடுத்திருக்க வேண்டும். அதை மறதியாக அவன் முந்தானையில் முடிந்திருக்க வேண்டும்” என்று அவள் ஊகித்தாள்.
“குரங்கு கொடுத்த பொருளும் இதுபோல விலை மிக்கதாயிருக்க வேண்டும். அதையும் அவன் மறதியாக எங்காவது வைத்திருக்கக் கூடும்” என்று அவள் கருதினாள்.
அவள் எங்கும் தேடினாள். சம்புடத்திலிருந்த அருநெல்லிக் கனி அவளுக்கு அகப்பட்டது.
அவள் அதைக் கையில் வைத்துக் கொண்டு செம்பியனிடம் சென்றாள். “அன்பரே! உமக்கு என்ன கிடைத்தால் கவலை தீரும்?” என்று கேட்டாள்.
“என் தம்பி சேந்தன் பிழைத்து வந்தால், என் கவலை தீரும்” என்றான் அவன்.
அச்சமயம் “அண்ணா” என்ற குரல் கேட்டு அவன் திடுக்கிட்டான்.
சேந்தன் அவன் முன் நின்றான்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
இளவரசிக்கும் எதுவும் புரியவில்லை. ஆனதால் அவள் பாதி உண்மையை ஊகித்தாள். “குரங்கு கொடுத்த பொருள் இதோ இருக்கிறது. இது அதன் அரிய ஆற்றலாய்த் தான் இருக்க வேண்டும்” என்றாள்.
இளவரசிக்கு முன் பிறந்த இளவரசன் ஒருவன் இருந்தான். அவன் இரண்டாண்டுகளுக்கு முன் இறந்திருந்தான். இளவரசி கூறியதைக் கேட்ட அரசி கனியைத் தான் வாங்கி, “எனக்கு என் மகன் உயிருடன் வர வேண்டும்” என்றாள்.
இளவரசியின் அண்ணன் தன் தாய் முன் வந்து “அம்மா!” என்றான்.
அரசன், அரசி, இளவரசன், இளவரசி ஆகிய எல்லா உறவினருடனும் சேந்தனுடனும் செம்பியன் களிப்புடன் நாட் கழித்தான்.
மண்டபத்தில் கண்ட ஆண்டி ஒரு நாள் செம்பியன் கனவில் தோன்றினார்.
ஆண்டியின் உருவம் செந்திலாண்டவன் உருவமாக மாறிற்று.
புரோகித ஆண்டி ஆண்டவனை வழிமறிக்க முயன்றான். “ஆண்டவனே, இவன் பாவி! இவன் பக்கம் வராதேயுங்கள்” என்று அவன் கத்தினான்.
ஆண்டவன் புரோகித ஆண்டியைத் தள்ளி வீழ்த்தினார். பின் அவர் செம்பியனை அணுகி அன்புடன் நோக்கினார்.
"அன்பனே, எனக்குப் பழி செய்ததாக இவன் உன்னிடம் சொன்னது முழுதும் தவறு.
குரங்கின் துன்பத்தில், கிளியின் படுதுயரில், பாம்பின் பரிதவிப்பில் நான் தான் வந்து நின்று உன்னிடம் கேட்டேன். நீ அளித்தாய். அன்புதான் என் மெய்யுருவம். உன் அன்புள்ளம்தான் என் மெய்க்கோயில். உன் இரக்கமே என் உண்மை புரோகிதன்" என்று முழங்கிற்று ஆண்டவன் குரல்.
செம்பியன் உள்ளம் குளிர்ந்தது.
“ஆண்டவன் வேறு, அன்பு வேறல்ல. என் அன்பு கண்டு ஆண்டவன் என்னை வெறுக்கவில்லை. இழந்த ஆண்டவனை மீண்டும் பெற்றேன்” என்று அவன் மகிழ்ந்தான்.
தங்க மயில்
முல்லைக் காட்டில் முத்தன் என்றொரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பதினாறாவது வயது வந்ததும் அவன் தன் தந்தையிடம் சென்றான்.
“அப்பா, நான் இப்போது பெரிய மனிதனாகி விட்டேன்; இனி, நானே உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். எனக்கு ஒரு கலப்பையும் கோடாரியும் கொடுங்கள்” என்று அவன் கேட்டான்.
தந்தை அவ்வாறே கொடுத்தது. “போய்வா, குழந்தாய்! கவனமாக அறிவுடன் வாழ்” என்றார்.
முத்தன் ஊரைவிட்டு நெடுந்தொலை சென்றான். அவன் ஒரு புதர்க்காட்டைக் கண்டான்; ஓர் இடத்தில் புதரை வெட்டி இடைவெளி உண்டாக்கினான். புதரைக் குவித்துத் தீ மூட்டினான். புதரின் சாம்பலுடன் நிலத்தை உழுது புழுதியாக்கினான். பின்பு அவன் நிலத்தில் தினை விதைத்தான்.
தினை கதிர்விட்டது. அவன் நாள்தோறும் இரவில் விழித்திருந்து அதைக் காத்தான். ஆனால், ஒரு நாள் அவன் சற்றுத் தூங்கிவிட்டான். எழுந்து பார்க்கும்போது, தினைப் பயிர் முழுவதும் கதிர் இழந்து நின்றது. யார் அல்லது எந்த விலங்கு அல்லது எந்தப் பறவை அவற்றை வந்து மேய்ந்தது என்று தெரியாமல் அவன் விழித்தான்.
ஆனால், தினைப்புனத்தின் ஓரத்தில் பொன்மயமான ஒரு மயிலிறகு கிடந்தது. இதன் மூலம், ‘மேய்ந்தது ஒரு மயில்; ஆனால், அது மண்ணுலக மயிலல்ல, மயனுலக மயில்’ என்று அவன் கண்டான்.
பொன் இறகை அவன் அருகிலிருந்த நகரத்துக்குக் கொண்டு போய் விற்க முயன்றான்.
இறகு சொக்கத் தங்கமாயிருந்தது. அரசனைத் தவிர யாரும் சொக்கத் தங்கத்தால் எதுவும் செய்யக் கூடாது. ஆகவே, பொன் வணிகன் அவனைக் காவலரிடம் சேர்ப்பித்தான். காவலர் அவனை மன்னன் முன் கொண்டு நிறுத்தினர்.
" இந்த இறகு உனக்கு ஏது?" என்று அரசன் கேட்டான்.
முத்தன் அது தனக்குக் கிடைத்த வரலாறு கூறினான். அரசனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
“இந்த இறகுக்கு உரிய தங்கமயிலைக் கொண்டு வந்து காட்டு. இன்னும் ஏழு நாட்களில் நீ கொண்டு வந்து காட்டாவிட்டால், உன்னை மண்ணில் புதைத்து மண்டை மீது விளக்கேற்றி வைப்பேன்” என்றான்.
முத்தனுக்கு முதலில் இன்னது செய்வது என்று தெரியவில்லை. அவன் சிந்தித்தான்.
பின் அவன் தினைப்புனமெங்கும் கூர்ந்து கவனித்தான். மயிலின் சுவடுகள் நிலத்தில் இருந்தன. அவற்றை அவன் பின்பற்றிச் சென்றான்.
திடுமெனச் சுவடு நின்றுவிட்டது. ‘மயில் அந்த இடத்திலிருந்து பறந்து சென்றிருக்க வேண்டும். இனி, அது சென்ற வழியை எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்று அவன் வருந்தினான்.
அவன் கன்னத்தில் கையூன்றிக் கவலையுடன் குந்தியிருந்தான். அவன் கண்ணீர் கன்னத்தின் வழியாக வடிந்து புல்தரை மீது விழுந்தது.
புல்மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமை அவனைப் பார்த்தது. “தம்பி! ஏன் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு என்ன துன்பம்?” என்று கேட்டது.
“எருமை அண்ணா! தினைப்புனங்களில் மேயும் தங்க மயில் ஒன்று இருக்கிறது. அதைக் கொண்டு வந்து காட்ட வேண்டு மென்று அரசன் ஆணையிட்டிருக்கிறான். காட்டாவிட்டால், என்னை மண்ணில் புதைத்து, என் மண்டை மீது விளக்கேற்றி வைப்பானாம்” என்றான் அவன்.
“என் முதுகில் ஏறிக் கொள். அதன் சுவடு காணும் வரை கொண்டு செல்கிறேன்” என்றது காட்டெருமை.
அவன் எருமைக்கு வணக்கம் செலுத்தி அதன் முதுகில் ஏறினான். அது நாழிகைப் பொழுதுக்கு ஏழு நாளிகை வழியாக விரைந்து சென்றது. அந்தக் காட்டின் எல்லையில் மீண்டும் பொன்மயிலின் சுவடு தென்பட்டது.
எருமையிடம் நன்றி தெரிவித்துவிட்டு அவன் நடந்தான்.
மறுபடியும் சுவடு நின்றுவிட்டது. முத்தன் மீண்டும் இருந்து கண்ணீர் விட்டான். இந்தத் தடவை ஒரு மான் அவன் மீது இரக்கப்பட்டது. அது அவனை அடுத்த சுவடு காணும் இடம் வரை கொண்டு விட்டது.
மறுபடியும் சுவடு நின்றது. ஆனால், இப்போது அவன் மயனுலக எல்லைக்கு வந்துவிட்டான் அது எங்கும் கரடிக் கல், புலிக்கல், யானைக் கற்கள் நிறைந்து, மலைப்பாங்காய் இருந்தது. தொலைவில் ஒரு மலையுச்சியில் பொன்மரம் ஒன்றின் கிளையில் தங்கமயில் உட்கார்ந்து கொண்டிருந்தது. பொன்மரத்தின் இலைகள் மரகதமாய், தளிர்கள் கோமேதகங்களாய், மலர்கள் வைரங்களாய், கனிகள் மாணிக்கங்களாய் இருந்தன.
பயணம் கிட்டத்தட்ட முடிந்ததென்று முத்தன் களிப்படைந்தான்.
ஆனால், அவன் நினைத்தபடி பயணம் முடிந்து விடவில்லை. பாறைகளுக்கிடையே ஆழமான பள்ளங்கள் இருந்தன. தவிரக் கரடிபோல இருந்த கற்களுக்கிடையே கரடிகள் சுற்றின. புலிபோல இருந்த புலிக்கற்களைச் சுற்றிப் புலிகள் உறுமின. ஆனை போலிருந்த ஆனைக் கற்களைச் சுற்றி ஆனைகள் வீறிட்டன.
அவன் குந்தியிருந்து அழுதான்.
ஒரு கரடி அவனிடம் வந்தது. “என் முதுகில் ஏறிக் கொள்” என்றது. அது கரடிக் கற்களைத் தாண்டி அவனைக் கொண்டு போய் விட்டது.
அவன் மீண்டும் குந்தியிருந்து அழுதான்.
ஒரு புலி அவனிடம் வந்தது.
அது அவனைப் புலிக்கற்கள் தாண்டிக் கொண்டு போய் விட்டது.
ஓர் ஆனை அவனை ஆனைக் கற்களையும், ஆழமான பள்ளங்களையும் கடந்து. மலையிலும் ஏறிப் பொன் மரத்தடியில் அவனைக் கொண்டுவிட்டது.
மரத்தின் கிளை மீது தங்கமயில் உட்கார்ந்திருந்தது.
ஆனால், கிளைகள் ஐம்பது அறுபடி அடி உயரத்துக்கு மேலிருந்தன.
கைக்கெட்டியும் வாய்க்கெட்டவில்லையே என்று அவன் குந்தியிருந்து அழுதான்.
மரங்களிடையே மரம்போல ஓர் ஒட்டைச்சிவிங்கி நின்றிருந்தது.
அது, “என் முதுகில் ஏறி, கழுத்தில் தவழ்ந்து தலை மீது நில், அப்போது கிளை எட்டும்” என்றது.
முத்தன் அப்படியே செய்தான். ஆனால், தங்க மயில் எட்டவில்லை.
ஒட்டைச்சிவிங்கி ஆனையைக் கூட்டிக் கொண்டு வந்தது. ஆனை மீது ஒட்டைச் சிவிங்கி நின்றது. அப்போதும் எட்டவில்லை.
ஆனை புலியைக் கூட்டிக் கொண்டு வந்தது. ஆனை மீது புலியும், புலி மீது ஒட்டைச் சிவிங்கியும் நின்றன.
அப்போதும் எட்டவில்லை.
புலி கரடியைக் கூட்டிக் கொண்டு வந்தது. ஆனை மீது புலியும், புலி மீது கரடியும், கரடி மீது ஒட்டைச் சிவிங்கியும் நின்றன.
ஆனை, முத்தனைத் தும்பிக்கையால் தூக்கித் தன் மத்தகத்தின் மீது வைத்தது; யானையின் மத்தகத்திலிருந்து புலித் தலையிலும், புலித்தலையிலிருந்து கரடித் தலையிலும் அவன் ஏறினான்; பின், ஒட்டைச்சிவிங்கியின் முதுகின் மேலேறி, கழுத்தில் தவழ்ந்து தலைமீது நின்றான்.
தங்கமயில் இப்போது எட்டிற்று.
முத்தன் எதிர்பார்த்தபடி தங்கமயில் கடிக்கவோ, கத்தவோ, துடிக்கவோ இல்லை. அது ‘தங்க’ மாகவே அமைதியுடனிருந்தது.
தங்கமயிலுடன் அவன் ஒட்டைச்சிவிங்கி தலையிலிருந்து கழுத்துக்கும், கழுத்திலிருந்து முதுகுக்கும் தாவினான். பின் கரடியின் தலையில் கால்வைத்துப் புலித் தலையிலிறங்கி, புலித் தலையில் கால்வைத்து யானைத் தலையில் இறங்கினான். யானை தும்பிக்கையால் அவனைக் கீழே இறக்கி விட்டது.
மயிலைப் பிடிக்குமுன்பே அவன் மாணிக்கம், மரகதம் வைரம், கோமேதகம் ஆகியவற்றில் வேண்டிய மட்டும் எடுத்தான். சட்டைப்பை நிறைய அவற்றைத் திணித்துக் கொண்டான்.
அவன், ஓட்டைச் சிவிங்கிக்கு வணக்கமும் நன்றியும் தெரிவித்தான்.
ஆனை, அவனை மீண்டும் ஆனைக் கற்களைத் தாண்டி கொண்டுவந்து விட்டது; புலி புலிக்கற்களைத் தாண்டி கொண்டு வந்து விட்டது; கரடி கரடிக்கற்களைத் தாண்டிக் கொண்டு வந்து விட்டது.
மானும், காட்டெருமையும் அவனைக் காடு தாண்டிக் கொண்டு வந்துவிட்டன.
அரசனிடம் அவன், பொன்மயிலைக் கொடுத்தான்.
அரசன் மனமகிழ்ந்தான். “உனக்கு என்ன வேண்டும்? கேள் தருகிறேன்” என்றான்.
“இளவரசி எழில் நங்கையை எனக்கு மணமுடித்துத் தர வேண்டும்” என்றான் முத்தன்.
அரசன் இணங்கினான்.
அரசி மகளைத் தர மனமில்லாமல் முணுமுணுத்தாள். அவன் மரகதங்களை அவளிடம் தந்தான். அவள் மகிழ்ச்சியுடன் இணங்கினாள்.
இளவரசி முத்தனை மணந்து கொள்ள மாட்டேன் என்று சிணுங்கினாள்.
அவன் வைரங்களை அவளிடம் தந்தான். அவள் மனமகிழ்வுடன் அவனை மணந்து கொள்ள இணங்கினாள்.
இவற்றைக் கேட்ட முத்தனின் வயது சென்ற தந்தை அவனிடம் வந்தான். “முத்தா, நீ என் பிள்ளை. என் இணக்க மில்லாமல் நீ மன்னனுக்கு மருமகனாக முடியாது” என்றான்.
முத்தன் மாணிக்கங்களை அவனிடம் கொடுத்தான். அவனும் மனமகிழ்ச்சியுடன் மன்னனுக்கு அவனை மருமகனாக்க இணங்கினான்.
“தமதம” என்று மத்தளம் முழங்க, “குயிங் குயிங்” என்று யாழ் ஒலி செய்ய, முத்தனுக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தேறிற்று.
தங்கள் முதல் குழந்தைக்கு அவர்கள் “தங்க மயில்” என்று பெயர் வைத்தனர்.
கடவுள் என்ன செய்வார்?
மாரி தொண்னூறு வயதான ஒரு தொண்டு கிழவன், அவன் மிகவும் நல்லவன், அனால், அவனுக்குக் கடவுள் என்றாலே சினம் வந்துவிடும். “கடவுளுக்குக் கண்ணில்லை; அவர் கருணை யற்றவர்” என்று அவன் பழிப்பான். ஒரு தடவை நேரே கடவுளைப் போய்ப் பார்த்து இரண்டு கேள்வி கேட்டுவிட்டு வருவது என்று அவன் புறப்பட்டான்.
கடவுளிடம் அவன் சினம் கொண்டதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவன் நன்னன் என்ற மன்னனிடம் வேலை செய்தான். நன்னனின் பாட்டன் காலத்தில் சிறு பையனாக அவன் வேலைக்குச் சேர்ந்தான். பாட்டனுக்கும் தந்தைக்கும் வேலை செய்து, பழுத்த வயதில் நன்னனிட மிருந்து அவன் ஓய்வு பெற்றான். மூன்ற தலைமுறையாக அவன் செய்த தொண்டை எண்ணி நன்னன் அவனுக்கு ஒரு பொற்கிழி கொடுத்தான்.
பொற்கிழியுடன் வீட்டுக்கு வரும் வழியில், அவன் களைப்பு தீரத் தன் ஊர்த் தெப்பக் குளத்தில் குளித்தான்.
அப்போது நண்பகல், குளத்தருகே காகம் கூட இல்லை. அத்துடன் கிழியின் பக்கம் ஒரு கண் வைத்துக் கொண்டுதான் அவன் குளித்தான். ஆனாலும் குளித்து வந்து பார்த்தபோது கிழியைக் காணவில்லை. கள்வர் யாரும் வரவில்லை. எனினும், அது காணாமற் போயிற்று.
மூன்று தலைமுறை உழைப்பில் கண்கண்ட பயன் அது. அது ஒரு கணத்தில் காணாமல் போய் விட்டது. அவன் மனம் இடிந்தது.
“கடவுளுக்குக் கண்ணில்லை. அவர் கருணையற்றவர்” என்று அவன் நினைத்ததற்குக் காரணம் இது தான்.
அவன் போகும் வழியில் மற்றொருவன் கடவுளைத் திட்டிக் கொண்டிருந்தான். மாரிக்கு அவன் மீது தோழமைப் பாசம் ஏற்பட்டது.
அவன் ஒரு பெரிய செல்வன். அதை அவன் வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. ‘அறச்சாவடி கட்டப் போகிறேன், குளம் வெட்டப் போகிறேன்’ என்று கூறி அவன் பல ஊர்களில் காவடி எடுத்தான். செல்வர்களிடம் பணம் பெற்றான்.
இப்படிச் சேர்த்த பணத்தைக் கொண்டு ஒரு சாவடி கட்டினான்; ஒரு குளமும் வெட்டினான். ஆனால், குளத்தை எவ்வளவு ஆழமாக வெட்டியும் தண்ணீர் ஊறவில்லை. ஊரார் தன்னைப் பாவி என்று கூறுவது கேட்டு அவன் புழுங்கினான். ‘கடவுளுக்குத் தன் மீது கண்ணில்லை’ என்று அவன் புழுக்கமடைந்தான்.
கடவுளிடம் கேள்வி கேட்கும் போது, அவன் செய்தியையும் கேட்டு வருவதாகச் சொல்லிவிட்டு மாரி மேலும் நடந்தான்.
கிழவன் இரண்டாவதாக மற்றும் ஒரு தோழனைக் கண்டான். அவன் ஒரு கட்டழகன். ஆனால், அவனை எந்தப் பெண்ணும் மணம் புரிந்து கொள்ள இணங்கவில்லை. மண வயது கடந்தும் அவனுக்கு அவன் தங்கையே சமைத்துச் சோறு போட்டாள். அண்ணனுக்கு மணமாகாமல் இருப்பதால், அவளும் மணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
கட்டழகன் கடவுளை நொந்து கொண்டான். “கடவுளுக்குக் கண்ணிருந்தால் என் வாழ்வைக் கெடுத்து, என் தங்கைக்கும் தொல்லை கொடுப்பாரா?” என்று அவன் கேட்டான்.
மாரி கடவுளிடம் கேள்வி கேட்கும் போது அவனுக்காகவும் கேட்பதாகக் கூறி வழி நடந்தான்.
மூன்றாவதாக அவன் கடவுளை நொந்து கொண்ட தோழன் ஒருவனைக் கண்டான். அவனிடம் எட்டுவகை இலக்கணங்களும் வாய்ந்த குதிரை ஒன்று இருந்தது. அதை அவன் விற்க எண்ணினான். யாரும் விலைக்கு வாங்க வரவில்லை.
குதிரையை வழிப்போக்கருக்கு வாடகைக்கு விட எண்ணினான். யாரும் அதில் ஏறிச் செல்ல முன் வரவில்லை. அவனுக்குக் குதிரை தவிர வேறு செல்வமுமில்லை. ஆகவே, அவன் கடவுளை நொந்து கொண்டான். “கடவுளுக்குக் கண்ணில்லை இருந்தால், இவ்வளவு நல்ல குதிரையைத் தந்து பயனில்லாமல் வைத்திருக்கச் செய்வாரா?” என்று அவன் கேட்டான்.
கடவுளிடம் கேள்விகள் கேட்கும் போது அவனுக்காகவும் கேள்வி கேட்பதாகக் கூறிவிட்டு மாரி மேலும் நடந்தான்.
கடவுள் நவிர மலை மேல் இருப்பதாக அவன் கேள்விப் பட்டான். ‘காரி உண்டிக் கடவுள்’ என்று மக்கள் அவரை அழைத்தனர்.
மலைமேல் கிழவன் மாரி, தண்டூன்றி ஏறினான். ஒருநாள் பகலும் இரவும் பெருமுயற்சியுடன் ஏறியபின், மறுநாள் உச்சி வேளையில் அவன் கோயிலைக் கண்டான்.
கடவுள், காவலன் உருவில் வாயிலில் நின்று “என்ன செய்தி? கடவுளிடம் என்ன கேட்க வந்தாய்?” என்றான்.
கிழவன் முதலில் தன் முறையீட்டைக் கூறினான். பின் குளந்தொட்ட அறச்செல்வன், பெண்ணற்ற கட்டழகன், பயனில்லா அழகுக்கு உடையவன் ஆகியவர்கள் முறையீடுகளையும் எடுத்துரைத்தான். “உலகில் நடப்பதைப் பார்க்கக் கடவுளுக்குக் கண்ணில்லையா? பார்த்து வகை செய்யத் திறமை இல்லையா? நீதி முறை அறிய அறிவில்லையா?” என்று அவன் கேள்விகளை அடுக்கினான்.
கடவுள் தன் அறிவுக் கண்ணைத் திறந்து காட்டினார். அதன் ஒளி கண்கூச வைத்தது. அவர் இதழில் புன்னகை பூத்தது. அது பொன் நிலவொளி வீசிற்று. அவர் கழுத்திலுள்ள நீலமணி நீணிற நிலவெறித்தது. மூன்று ஒளிகளும் சேர்ந்து கிழவன் கண்களுக்குக் கூட அழகு விருந்தளித்தன. கடவுள் அவன் கேள்விகளுக்கு விளக்கம் தந்தார்.
"அன்பனே, நீ மிகவும் நல்லவன். அதனால்தான் உனக்குக் காட்சியளித்தேன். நீ என்னைப் பழித்தாலும் நான் சினம் கொள்ள மாட்டேன். ஏனென்றால், உன்னிடம் அறியாமைதான் இருக்கிறது. வஞ்சகம், பேராவல், கெடுமதி ஆகிய எதுவும் இல்லை. உன் பொற்கிழி உன் வீட்டில்தான் இருக்கிறது. அதை யாரும் எடுக்கவில்லை. உன் நாய் நீ குளிக்கும் போது அதை எடுத்துக் கொண்டு போய், உன் தலையணையின் கீழ் வைத்திருக்கிறது. அதை வேறு யாரும் எடுக்காமல் அது கண் காணித்தும் வருகிறது.
"உன் மகன் மிகவும் குறும்புக்காரன். அவன் உன் பொருளை வீணாக்கிவிடுவான். இப்போது கொடுக்காதே மணமாகி ஒரு குழந்தை பிறந்த பின் கொடு.
"பயனில்லாக் குதிரையை வைத்துக் கொண்டு வறுமையில் ஆழ்ந்து வருபவனிடம் சொல். அவன் குதிரை எல்லாரையும் கடிக்கிறது. அதற்கு, முள் வாய்ந்த கடிவாளம் இட்டுச் சேணம் போடச் சொல், நல்லவிலை வேண்டுமானால் நல்ல விலை வரும்; விற்காமலே நல்ல வாடகையும் கிடைக்கும்.
"கட்டழகனை எந்தப் பெண்ணும் கட்டாததற்குக் காரணம், வாயாடியான அவன் தங்கை அவன் வீட்டிலிருப்பதுதான். அவள் உன் மகனுக்கு ஏற்றவளாயிருப்பாள். அவன் குறும்பு, அவள் வாயாடித்தனத்தை அடக்கும். அவள் வாயாடித்தனம் அவன் குறும்பை அடக்கும். அவளை நீ இட்டுக் கொண்டு போ; மறுநாளே கட்டழகனை மணக்கப் பெண் வந்துவிடுவாள்.
"அறச்செல்வன் எவ்வளவு செல்வன் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால், அறச்சிந்தை அவனுக்கு எள்ளளவும் கிடையாது. அறத்தின் பெயரால் ஊரை ஏய்த்து அவன் ஈட்டிய பெரும் பொருள் அந்தக் குளத்தின் ஒரு மூலையில்தான் புதைக்கப் பட்டிருக்கிறது. இதை நீ அறிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம். குளத்தின் மூலையிலிருப்பதை அகற்றிவிடச் சொல். குளத்தில் நீர் ஊறும்.
“மனிதனின் அறியாமை, வஞ்சகம், பேராவல், கொடுமை ஆகியவற்றுக்குக் கடவுள் என்ன செய்வார்? நீ கடவுளைப் பழிப்பது பற்றி எனக்குக் கவலை கிடையாது. உன்னால் யாருக்கும் கெடுதல் இல்லை. ஆனால், மற்றவர் பழிக்கும்போது, ’மனிதனின் அறியாமை, வஞ்சகம், பேராவல் ஆகியவற்றுக்குக் கடவுள் என்ன செய்வார்?” என்று சொல், அவர்கள் உள்ளம் அவர்களைச் சுடும். அவர்கள் வாய் பேச மாட்டார்கள். கடவுள் திடுமென மறைந்தார்.
காரியுண்டிக் கடவுளின் சிலை கோயிலினுள்ளிருந்து புன்முறுவல் செய்வது போல மாரிக்குத் தோன்றிற்று.
கடவுள் சொன்னவற்றை மாரி செய்தான்.
கடவுளுக்குக் கண்ணில்லை என்று அவன் அதற்குப் பின் சொன்னது கிடையாது. யாராவது அப்படிச் சொல்லக் கேட்டால், அவன், “கடவுள் என்ன செய்வார்?” என்பான். இந்த வாய்பாட்டை, அவன் முடிப்பதில்லை, முடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை.
பிறைமுடியின் பெருவாழ்வு
கீரனூர் என்பது ஒரு சிறு நிலப்பண்ணை, பண்ணையின் பழைய தலைவனைக் கொன்றொழித்துச் சீதங்கன் என்பவன் அதை ஆண்டு வந்தான். பழைய தலைவன் குடி சிறுமைப்பட்டுச் சீரழிந்தது. அதில் மீந்திருந்தவர்கள் பிறைமுடியும், அவன் தாயும் மட்டுமே.
சீதங்கன் கொடுமைகளைப் பிறைமுடியின் அன்னை பொறுமையுடன் தாங்கி வந்தாள். ஆனால், பிறைமுடியை அவளால் பணிய வைக்க முடியவில்லை. அவன் குறும்பும் துணிச்சலும் வாயடியும் பண்ணையாருக்குத் தொல்லை தந்தன.
அறுவடை முடிந்து போரடிக்கும் காலம் வந்தது. பண்ணையின் ஒவ்வொரு குடியும், போரடிக்க ஓர் ஆள் அனுப்புவது மரபு. ஒவ்வொருவரும் முதலில் கோடரி எடுத்துக் கொண்டு காடு சென்று, போரடிக்க ஒரு கட்டை வெட்டி வருவார்கள். மேனியின் ஒரு பகுதியும், அடித்த வைக்கோலின் ஒரு கூறும் அவர்களுக்குக் கிடைக்கும் அத்துடன் அன்று பண்ணையார் செலவில் ஆரவாரமான பெருஞ்சோறு வழங்கப்படும்.
மற்றக் குடிகளுக்குரிய இளைஞர் எல்லாரும் ஒரு கோடரியுடன் காட்டுக்குப் புறப்பட்டனர். பிறைமுடிக்குக் கோடரி இல்லை. பண்ணையாரிடம் சென்று இரவல் கேட்டான். மறுப்பே வந்தது. நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தான். அவனுக்கு யாரும் உதவ முன் வரவில்லை. அவன் மனவருத்தத்துடன் குப்பைக் கிடங்கைக் கிளறினான். பாதி மக்கிப்போன துருப்பிடித்த கோடரி கிடந்தது. வீட்டிலுள்ள பழைய மர உலக்கையில் அதைப் பூட்டித் திட்டிக் கொண்டு புறப்பட்டான்.
அருகிலிருந்த மரங்களை எல்லாம் பிறர் வெட்டிக் கொண்டு மீண்டனர். அவன் அவர்களைக் கடந்து அப்பால் சென்றான். அடர்த்தியான காட்டருகில் செல்லுமுன் உச்சியணுகிற்று. களைப்பால் ஒரு மரத்தடியில் சிறிது படுத்து இளைப்பாறினான். அயர்ந்து அவன் கண்கள் மூடின. அவன் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்தான்.
“இந்த ஏழையிடம் நல்ல கோடரிகூட இல்லை. இவனாக வேறு எந்த மரத்தை வெட்ட முடியும். நம்மில் ஒருவரைத்தான் வெட்ட வேண்டும்” என்று ஒரு குரல் எழுந்தது.
அது ஒரு மரத்தின் குரலாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால், அவனால் கண்ணைத் திறந்து பார்க்க முடிய வில்லை.
“உன்னை வெட்டினால் நீ என்ன கொடுப்பாய்” என்றது ஒரு மரம்.
“நான் பிறருக்குக் கிடைப்பதில் இரட்டிக் கொடுப்பேன்” என்றது மற்றொன்று.
“நான் மூவிரட்டிக் கொடுப்பேன்” என்றது இன்னொன்று.
“நீ என்ன கொடுப்பாய்? கோணங்கி மரமே!” என்றது இரண்டாவது மரம், முதலில் பேசிய மரத்தினிடம்.
“அவன் அடிப்பது சாவியாகயிருந்தால்கூட நான் நூறு மடங்கு மேனி கொடுப்பேன்” என்றது கோணங்கி மரம்.
உரையாடல் முடிகிற நேரத்தில் பிறைமுடி எழுந்தான். கோணலாக இருக்கும் மரந்தான் கோணங்கி மரமாய் இருக்கக் கூடும் என்று நினைத்து அவன் தேடினான். இரண்டு இளமரங்களுக்கு அருகே கூனி வளைந்த ஒரு மரம் இருந்தது. அதுதான் கோணங்கி மரம் என்று அவன் நினைத்தான்.
ஒன்றிரண்டு வெட்டிலேயே மரம் முறிந்தது. அவன் அதை அளவாகச் சீவி எடுத்துக் கொண்டு மீண்டான்.
அவன் திரும்புமுன் யாவரும் போரடித்து முடித்து விட்டனர். பெருஞ்சோறும் ஆரவாரத்துடன் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அவன் கோணல்கழி கண்டு பலர் சிரித்தனர். பண்ணையார் அவனை ஏளனமாகப் பார்த்தார்.
“மீந்த சோறு கறியை வேண்டுமானால், உனக்குப் போடச் சொல்கிறேன். மேனியில் உனக்குப் பங்கு கிடையாது” என்றார்.
“சரி, அடித்துக் கழித்த சாவியில் எனக்குப் பங்கு கொடுங்கள், என் கழிக்கு வேலை கொடுத்து அதில் காணும் மேனியை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றான் பிறைமுடி.
பண்ணையார் இறுமாப்புடன், “அதோ கிடக்கின்றது. எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போ” என்றார்.
பிறைமுடி சாவியைச் சாக்குகளில் கட்டினான். ஐம்பது சாக்குச் சாவி இருந்தது. உணவுக்காகக் கூடக் காத்திராமல், அவ்வளவையும் வீடு கொண்டு வந்து சேர்த்தான்.
கழியின் உதவி கொண்டு இரவு பகலாக அதை அடித்துப் புடைத்துக் கொழித்தான். பண்ணையாட்கள் யாவரும் அதன் மேனி கண்டு மூக்கில் கை வைத்தனர். “ஒரு சாக்குச் சாவியில் நூறு சாக்கு மேனி எங்கிருந்து வந்தது?” என்று அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர்.
உடனடியாக அவன், சில சாக்குகளை விற்றுக்கொள் முதலாக்கினான். நெல்லைக் கொட்டி வைக்க ஒரு பத்தாயமும், தான் வாழ ஒரு மட்டான வீடும் கட்டினான். பிறைமுடியின் தாய்க்குத் தன் கணவன் இறந்தபின் இப்போது தான் மனக்களிப்பு ஏற்பட்டது. அவள் நல்லாடையும் நல்லுணவும் அவள் தோற்றத்தை இன்னும் உயர்த்தின.
பிறைமுடியின் புதிய செல்வம் கண்டு பண்ணை யாரும், பண்ணையாட்களும் ஒருங்கே பொறாமை கொண்டனர். அவனை எப்படியாவது ஒழித்துக் கட்டி அவன் பொருளைக் கவர எண்ணினர்.
ஒருநாள் பண்ணையாரின் ஆட்கள் அவனை வலுக்கட்டாயமாக வந்து பிடித்து ஒரு சாக்கிலிட்டுக் கட்டினர். பொழுது சாய்ந்து இருட்டியதும் ஆற்றில் எறிந்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டு சென்றனர்.
அவர்கள் திரும்பி வருவதற்குள் ஓர் ஆட்டிடையன் அந்த வழியே ஆடுகளை ஓட்டிக் கொண்டு போனான். ஆளில்லாத சாக்கைக் கண்டு அதில் என்ன இருக்கிறது என்று அவன் திறந்து பார்த்தான். பிறைமுடி அவன் மீது சீறி விழுந்தான். “நான் இந்திரன் உலகுக்குப் போகிறவன். ஆயிரம் ஆடுகளை வைத்துக் கொண்டு தேவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ ஏன் இப்போது திறந்து விட்டாய்?” என்று கேட்டான்.
“ஆயிரம் ஆடுகள்” என்ற சொல் இடையன் ஆர்வத்தைத் தூண்டிற்று. “ஏனையா, அங்கே நீர் போனால் உமக்கு அவற்றைக் கொடுத்து விடுவார்களா?” என்றான்.
“கொடுக்காமலா நான் மாதந்தோறும் போகிறேன். நிறைமதியன்று போனால்தான் கொடுப்பார்கள். நான் விரைவில் போக வேண்டும்; என்னை மறுபடியும் வைத்துக் கட்டு” என்றான்.
இடையன், “இந்த ஒரு மாதம் எனக்குப் போக விடை கொடுங்கள். இதோ என்னுடைய ஆடுகளை எல்லாம் இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு” என்றான்.
பிறைமுடி முதலில் இணங்க விரும்பாததுபோலப் பாசாங்கு செய்து, பின் இணங்கினான். அவன் இடையனைத் தனது இடத்தில் சாக்கில் வைத்துக் கட்டி விட்டு, ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அப்பால் சென்றான்.
பிறைமுடியை ஒழித்துவிட்டோம் என்ற எக்களிப்புடன் பண்ணையாட்கள் ஒன்றுமறியாத இடையனை ஆற்றில் எறிந்து விட்டுத் திரும்பினார்கள். அவர்கள் கூறியபடி பிறைமுடி ஒழிந்தான் என்று பண்ணையாரும் மகிழ்ச்சி யடைந்தார்.
எப்படியோ இரவு நேரத்திலேயே பிறைமுடியினுடைய தாயின் காதிற்குச் செய்தி எட்டிற்று. அவள் பண்ணை யாரையும், ஆட்களையும் திட்டினாள். “ஐயோ, மகனே!” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள்.
பிறைமுடி இரவு ஊருக்கு வெளியிலே சிறிது தொலை விலுள்ள குப்பத்தருகே சென்று ஆடு மாடுகளைக் காத்துக் கொண்டு விழித்திருந்தான். விடியற்காலையில் ஆடுகளைத் துரத்திய வண்ணம் வீடு வந்து சேர்ந்தான்.
அவனைச் சிலர் வியப்புடன் பார்த்தனர். “இறந்தவன் பேயாக வந்தானோ?” என்று அஞ்சி நடுங்கினர் சிலர்.
ஒருவர் இருவர் அவனிடம் வந்து, “உன்னை ஆற்றில் எறிந்து விட்டதாகச் சொன்னார்களே! எப்படித் தப்பி வந்தாய்?” என்று கேட்டார்கள். அவன் கூறிய பழமொழி அவர்கள் பொறாமைத் தீயை இன்னும் கிளறிற்று.
“என்னை ஆற்றில் எறிந்தவர்கள் நீடுழி வாழ வேண்டும்; அவர்கள் எறிந்ததனால்தான் எனக்கு இவ்வளவு ஆடுகளும் கிடைத்தன” என்றான்.
“நீ சொல்வது ஒன்றும் புரியவில்லையே, கொஞ்சம் விவரமாகச் சொல்” என்றார்கள்.
“முழுநிலா நாளில் ஒருவனைச் சாக்கிலிட்டு, ஆற்றில் எறிந்தால் அவன் இந்திரன் உலகுக்குப் போவான். இந்திரன் உலகத்தார் அவனுக்கு வேண்டுமளவு ஆடுகள் தந்து அனுப்புவார் கள். இது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது” என்றான்.
பிறைமுடியின் தாய் அவனைக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஆனால் பகைவர்களிடையே இன்னும் இருந்தால் என்ன நேருமோ என்று அஞ்சி நடு நடுங்கினாள். எங்கேயாவது ஓடிப்போய்விட வேண்டும் என்று துடித்தாள். ஆனால், பிறைமுடி அவளை ஆற்றி அமைதிப் படுத்தினான். “இன்னும் இரண்டொரு நாள் பொறுங்கள் அம்மா; அதற்குள் ஒருவழி பிறக்கும்” என்றான்.
பிறைமுடி உயிருடன் தப்பிவந்துவிட்டது மட்டுமல்லாமல், முன்னிலும் செல்வமுடையவனாய் விட்டான் என்ற செய்தி பண்ணையாருக்கு எட்டிற்று. அவன் கூறிய கதையும் அவருக்குத் தெரியவந்தது. அவனை அழைத்துக் கேட்டு, அவர் பின்னும் ஐயந் தெளிவித்துக் கொண்டார்.
பண்ணையாருக்குத் தானும் இந்திர உலகம் போக வேண்டும் என்ற அவா உண்டாயிற்று. ஆனால், அவர் ஆட்களுக்கும் அதே அவா எழுந்தது. யார் யாரைக் கட்டுவது என்று போட்டி போட்டனர். பிறைமுடி, “நான் கட்டிவிடுகிறேன். என்னிடம் பாசமுள்ள உறவினருக்கு நான் இவ்வளவாவது செய்யப்படாதா? நான் ஒரு தடவை போய்விட்டபடியால், இன்னும் ஒரு மாதம் கழித்துப் போகிறேன். உங்களை வருகிற மாதமே அனுப்பிகிறேன்” என்றான்.
அடுத்த முழுநிலா நாளில், பிறைமுடியின் உறவினரான பண்ணையாரும், பண்ணையாட்களும் வரிசையாக நின்றனர். ஒவ்வொருவர் முன்பும் ஒரு சாக்குக் கிடந்தது.
உறவினரல்லாத வேறு பலர் வந்து, “என்னையும் கட்டி அனுப்பு: என்னையும் கட்டி அனுப்பு” என்று போட்டியிட்டனர்.
தனக்குத் தீங்கிழைத்த உறவினரைத் தவிர, வேறு யாரையும் அனுப்பப் பிறைமுடி விரும்பவில்லை. ஆகவே,கனிந்த முகத்துடன், “அடுத்த மாதமே எல்லாருமே போகலாம். எனக்காக சற்றுப் பொறுமையாயிருங்கள். இன்னும் மிகுதியான பேர்களுக்கு ஆற்றின் குறுகலான பாதையில் இடம் இராது” என்று தடுத்தான்.
விளக்கு வைத்ததும், சாக்குச் சாக்காகப் பண்ணையாரும், பண்ணையாட்களும் ஆற்றில் எறியப்பட்டனர்.
கீரனூர் ஆட்கள், ஒவ்வொரு நாளும் பண்ணையாருக்காகக் காத்திருந்தனர். பண்ணையாரும் வரவில்லை. அவரின் ஆட்களும் வரவில்லை.
பிறைமுடி- மக்களைக் கூட்டி, பண்ணைக்கும் தனக்கும் உள்ள தொடர்பு, தனக்குப் பண்ணையாரும், பண்ணை யாட்களும் செய்த கொடுமைகள் ஆகியவற்றை எடுத்துச் சொன்னான். இறுதியில் தனக்கு அவர்கள் தோண்டிய குழியிலேயே அவர்கள் விழுந்ததை எடுத்துக் காட்டினான்.
ஊரில் சிலர் ‘பிறைமுடி செய்தது குற்றமே’ என்றனர். ஆனால், பலர் ‘பண்ணையார் கெடுமதிக்கு இது சரியான பாடமே’ என்று கருதினார்கள்.
பண்ணைக்குடியில் மீந்த ஒரே உரிமையாளன் என்ற முறையில், பண்ணை பிறைமுடிக்குச் சொந்தமாயிற்று.
அதை, அவன் ஊராருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். தன் பொருளையும் ஊருக்கு நல்ல காரியங்களில் செலவு செய்தான். செல்வத்தால் மட்டுமன்றிப் பண்பாலும் அவன் எல்லாராலும் புகழத் தக்கவனானான்.
பஞ்சப்புலிக்கு அஞ்சிய புலி
குற்றாலத்தை அடுத்த குப்பத்தில் ஒரு வேடர் குடிப் பையனும் குறவர்குடிப் பையனும் நண்பராயிருந்தனர். இருவருக்கும் அவரவர் தாய் தந்தையர் ‘கொற்றன்’ என்றே பெயரிட்டிருந்தனர். ஆகவே, வேறுபாடு தெரிவதற்காக அவ் ஊரார் அவர்கள் நெடுங்கொற்றன், இளங்கொற்றன் என்று அழைத்தனர்.
குறும்பில் நெடுங்கொற்றன் மிச்சமா, இளங்கொற்றன் மிச்சமா என்று யாரும் கூற முடியாது. குறும்பர்களாகிய அவர்களுக்குக் குடும்பத்தின் வறுமைகூடக் கவலை உண்டு பண்ணவில்லை. அவர்கள் எங்கும் கூடிக் குலவிக் கும்மாளமடித்து வந்தனர்.
ஊரின் சிறுமியர் செப்புக்குடம் ஏந்தி மலையருவிப் பக்கம் நீர் மொள்ளச் செல்வர். அச்சமயம் ஒரு கொற்றன் தன் வில்நாணில் சிறு களிமண் குண்டேற்றி, அது குடத்தில் சென்று ‘கண், கண்’ என்று தெறிக்கும்படி பின்னின்று எறிவான். சிறுமி சீறிக்கொண்டு திரும்பிப் பார்ப்பாள். அச்சமயம் மற்றக் கொற்றன் இன்னொரு சிறு குண்டால் செடியிலிருக்கும் மலர் அவள் தலையில் விழும்படி எய்வான். சிறுமியின் சினம் குறுமுறுவலாக மாறிவிடும்.
அவர்கள் குறும்பு ஒருநாள் எல்லைகடந்து விட்டது. குறவர் குப்பத்தின் தலைவன் தன் வீட்டுப் பிள்ளைகளுக்காக நகரத்தி லிருந்து பொம்மைப் புலிகள் வாங்கி வந்து கொண்டிருந்தான். களிமண் குண்டுகளால் நெடுங்கொற்றன், இளங்கொற்றன் ஆகிய இருவரும் ஆளுக்கு ஒரு புலியின் தலையை உடைத்துவிட்டனர்.
பொம்மைப் புலிகள் உடைந்தது கண்டு சீற்றங்கொண்ட தலைவன் முன், அவர்கள் பின்னும் கேலி பேசினர். “புலிகளையே நாங்கள் கொன்றுவிட்டோம். எங்களிடம் உங்கள் சினம் செல்லாது” என்று அவர்கள் கும்மாள மடித்தனர்.
தலைவரின் ஆட்கள் அவர்களுக்கு அன்று நல்ல பாடம் கற்பித்தனர். ஊருக்குள் அவர்கள் குறும்பு சிறிது அடங்கியிருந்தது.
“சிறு பெண்களிடமும் பொம்மைப் புலிகளிடமும் தானடா உங்கள் வீரம் செல்லுபடியாகும். உண்மைப் புலியின் அரவம் கேட்டால் தெரியும் எல்லாம்” என்று தலைவரின் சிறுமி ஒருநாள் அவர்களை கேலி செய்தாள்.
“அப்படி நினைக்காதே! நாங்கள் புலிகளின் மீது ஏறிச் சவாரியும் செய்வோம், தெரியுமா?” என்றனர் இரு கொற்றர்களும்.
அந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக எங்கும் வறட்சி தாண்டவமாடிற்று. வறட்சியால் பஞ்சமும், பஞ்சத்தால் வறுமையும் மிகுதியாயிற்று.
ஒருநாள் முன்னிரவில் நெடுங்கொற்றன் தன் தாயினிடம் வந்து, “அம்மா, நான் அயலூர்களுக்குச் சென்று பிழைப்புக்கு வழி தேடி வருகிறேன்” என்று சொன்னான்.
இளங்கொற்றனும் அச்சமயம் கூடவே இருந்தான். அவனும், “ஆம் அத்தை! நாங்கள் இருவரும் நல் தொழில் பார்த்துப் பணம் ஈட்டி வருகிறோம்” என்றான்.
நெடுங்கொற்றன் தாய் வறுமையிலும்கூடத் தன் பிள்ளையை வெளியே அனுப்ப விரும்பவில்லை. வேண்டாமடா, படுகிற துன்பத்தை எல்லாரும் சேர்ந்து படலாம். நீங்கள் ஊர் கடந்து சென்றால், புலி கிலி ஏதாவது வந்து உங்கள் மீது பாய்ந்துவிடக் கூடும்; நான் உங்களையும் இழக்க வேண்டி நேரிடும்" என்றாள்.
இளங்கொற்றனுக்கு உடனே தலைவர் வீட்டுச் சிறுமியின் கேலியும் பொம்மைப் புலியும் நினைவுக்கு வந்தன.
“அத்தை! பஞ்சப் புலியும் கிலியும் நடமாடுகிற இடத்தில் நாம் இருக்கிறோம். அவற்றின் முன் புலி என்ன செய்யும்? நாங்கள் புலிக்கு அஞ்சவில்லை. பார்த்துக் கொள்கிறோம்” என்றான்.
அவர்கள் சொல்வதை உண்மையிலேயே ஒரு புலி ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தது. ‘பஞ்சப்புலி, கிலி நடமாடுகிற தாமே! அவற்றின் முன் புலிக்கு அவர்கள் அஞ்ச வேண்டாமாமே! ஐயோ, பஞ்சப் புலியும் கிலியும் எப்படி இருக்குமோ? அவற்றினிடம் நாமே அகப்பட்டுக் கொண்டு விட்டால், என்ன செய்வது?’ என்று எண்ணி அந்தப் புலி கிடுகிடுத்தது; அதன் உள்ளம் அறியாமல் அதன் உடம்பிற் கிலி புகுந்தது.
நெடுங்கொற்றன் வீட்டை அடுத்து ஒரு புறம் இளங்கொற்றன் வீடும், இரண்டிலிருந்தும் ஒரு கொல்லை தாண்டித் தலைவன் மாளிகையும் இருந்தன. புலி பதுங்கிப் பதுங்கித் தலைவன் மாளிகையை நோக்கிச் சென்றது.
நெடுங்கொற்றன் வீட்டின் மற்றொரு பக்கம் பஞ்சத்தை எண்ணித் திருட வந்த சில திருடர் பதுங்கியிருந்தனர். பேச்சிலிருந்தே அந்த வீட்டில் ஒன்றும் பசையிராது என்று கண்டார்கள். ஒரு திருடன் பக்கத்திலிருந்த மாளிகையைச் சுட்டிக் காட்டினான். எல்லாரும் அந்தப் பக்கமாகப் பதுங்கிப் பதுங்கிச் சென்றனர்.
பதுங்கிப்பதுங்கி ஒரு பள்ளத்தில் புலி நகர்ந்து கொண்டிருந்தது. பதுங்கிப் பதுங்கிச் சென்ற திருடர்களில் ஒருவன் அதன் மீது கால் இடறி விழுந்தான். அவன் மீது இடறி அடுத்தவனும், அதன்பின் அடுத்தவனுமாக எல்லாரும் விழுந்தடித்து எழுந்தனர். அவர்களில் ஒருவன் கையிலிருந்த கத்தி புலியின் விலாவில் குத்திற்று.
கிலி பிடித்த புலி பலர் விழுந்த அதிர்ச்சியினாலும், கத்திக் குத்தாலும் பதறிப் பாய்ந்தோடிற்று. திருடர் மீது புலியும் புலிமீது திருடருமாக விழுந்தடித்து உருண்டோடினர். புலி தப்பினோம் பிழைத்தோமென்று தலைவர் மாளிகையின் பின்புறமுள்ள குதிரை இலாயத்தில் சென்று குதிரைகளுடன் குதிரையாகப் பதுங்கிக் கிடந்தது. இரவு நெடுநேரம்வரை எழுந்து தப்பியோடவும் துணியவில்லை. குதிரைகளின் பக்கம் திரும்பவும் துணியவில்லை.
இரவே, நெடுங்கொற்றனும் இளங்கொற்றனும் தம் பெற்றோரிடம் விடைபெற்றுக் கொண்டனர். இரவு இருவருக்கும் உறக்கம் வரவில்லை.
“விடிய ஒரு யாமத்துக்கு முன்பே எழுந்து நடந்துவிட வேண்டும்” என்றான் இளங்கொற்றன். “ஏன் இப்போதே மெல்ல நழுவிவிட்டால் என்ன? விடிவதற்குள் நெடுந்தொலை சென்று விடலாமே” என்றான் நெடுங்கொற்றன்.
"அதுவும் நல்ல முன் கருதலான திட்டம் தான். அண்ணா! எனக்கு இன்னொரு எண்ணம் எழுகிறது. சிறிது துணிச்சலான காரியம்தான்! ஆனால்….. என்று இழுத்தான் இளங்கொற்றன்.
“ஆனால் என்ன? சும்மா சொல்.”
“இல்லை, நாம் தான் எப்படியும் நிறையப் பணம் தேடிக் கொண்டு வரப்போகிறோமே! இப்போது நம் தலைவர் வீட்டில் சும்மா கட்டிக் கிடக்கின்ற குதிரைகளில் மட்டமான ஒன்றைக் கொண்டுபோனால் என்ன? இருவரும் மாறிமாறி ஏறிச் செல்லலாம். திரும்பி வந்தபோது தலைவர் கொஞ்சம் கும்மாளம் அடிப்பார். குதிரைவிலையைக் கொடுத்துவிட்டு, ‘வேண்டுமானால் குதிரையையும் எடுத்துக் கொள்ளலாமே, உங்கள் பேராசைக்கு’ என்று கூறலாம்” என்றான்.
“நல்ல ஏற்பாடு, உன் மூளை களி மண்ணானாலும் நல்ல சுட்ட களிமண் தான் போலிருக்கிறது.”
“போடா, கேலி இருக்கட்டும், புறப்படு உடனே.”
இரண்டு கொற்றரும் இருட்டிலேயே புறப்பட்டனர். தலைவர் இலாயம் சென்றனர். சில குதிரைகள் கனைத்தன. குதிரைகளைவிட உயரத்தில் குறைந்த ஓர் உருவம் நடுநடுங்கிக் கனைக்காமல் பதுங்கிற்று.
“மட்டமான குதிரை இது தாண்டா நெடுங்கு!” என்று இளங்கொற்றன் அதன் மீது ஏறினாள்.
சட்டத்தின் மீது மாட்டப்பட்ட கடிவாளத்தை எடுத்து நெடுங்கொற்றன் அதன் வாயில் பூட்டினான். சேணத்தை மாட்டியபின் இளங்கொற்றன் விலங்கின் முதுகிலிருந்து ஒரு துள்ளுத் துள்ளி மீண்டும் சேணத்தில் உட்கார்ந்தான்.
நெடுங்கொற்றன் வாலைப் பிடித்துக் கொண்டான். அது குதிரையின் வால் போல் இல்லை. அது கண்டு அவன், “இது கிழட்டுக் குதிரையடா” என்றான். அதற்குள் இளங்கொற்றன், “கிழட்டுக் குதிரை போதுமடா, நமக்கு” என்று தட்டிவிட்டான். நெடுங்கொற்றன் வாலைப்பிடித்த பிடியை விடாமல் அவனைப் பின்பற்றினான்.
அவர்கள் ஏறிச் சென்றது கிழட்டுக் குதிரையல்ல. முரட்டுப் Òபுலி! இது அவர்களுக்குத் தெரியாது. புலிக்கும் கிலி பிடித்திருந்ததால், அதுவும் இழுத்த இழுப்புக்கெல்லாம் உட்பட்டு வாயாடாமல் கால் கை ஆடாமல் சென்றது. கிழட்டுக் குதிரைகூட அவ்வளவு அமைதியாக நடந்திருக்காது. ஏற்கெனவே, திருடர்களை அது பஞ்சப்புலி என்று கருதி அஞ்சியிருந்தது.
இப்போது முதுகில் ஏறியிருப்பது, பஞ்சப்புலியாயிருக்க வேண்டுமென்றும், வாலைப் பிடித்துக் கொண்டிருப்பது கிலியாயிருக்க வேண்டுமென்றும், அது கணக்கிட்டுக் கொண்டது.
“எந்தக் கணத்தில், முதுகின் மேல் ஏறியிருந்த பஞ்சப் புலி தலையைக் கடித்து விழுங்கிடுமோ? எந்தக் கணத்தில் வாலைப் பிடித்துக் கொண்டு பின்பற்றிய கிலி பின்னிருந்து அடித்துக் கொன்று விடுமோ?” என்று அஞ்சி அஞ்சிச் செத்தபடியே சென்றது. புலி!
தாங்கள் ஏறிச் சென்றது கிழட்டு மட்டக் குதிரையல்ல, முரட்டுக் காட்டுப் புலி என்பதை இரு கொற்றர்களும் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் உணரத் தொடங்கினர்.
“அட அண்..”
“அட சட்..”
இருவரும் வாயில் வந்த பேச்சை விழுங்கி விட்டனர். புலி தம்மை அடையாளம் கண்டு விடப்படாதே என்பதற்காக!
அதே சமயம், பஞ்சப் புலியும் கிலியும் தன்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கின்றனவோ என்ற கவலை, புலியைப் பிடுங்கித் தின்றது.
புலியைவிட்டு இறங்க அஞ்சி இளங்கொற்றன், அதன் செவிகளைக் கைகளாலும் விலாவைக் கால்களாலும் இறுகப் பற்றிக் கொண்டான். நெடுங்கொற்றனும் புலி தன்னைத் திரும்பிப் பார்த்துவிடப் போகிறதே என்று அஞ்சி வாலின் அடிவரைக் கையில் முறுக்கிப் பற்றிக் கொண்டான்.புலி திரும்பும் நேரத்தி லெல்லாம் வாலைப் பின்னுக்கு இழுத்ததினால் புலி இன்னும் அஞ்சி நடுநடுங்கிற்று.
புலி, பொறுத்துப்பொறுத்துப் பார்த்தது. தன் நிலைமைக்குத் தானே வருந்தி ஏக்கத்துடன் கரையத் தொடங்கிற்று.
கொற்றர் இருவருக்கும் புலியின் நிலை தெரிந்த பின் சிறிது ஊக்கம் வந்தது. ஆயினும், அவர்களாக வாய் திறக்கவில்லை.
“என்னை என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று புலி நடுங்கிய குரலில் கேட்டது.
என்ன விடை கூறுவது என்று நெடுங்கொற்றனுக்கு புரியவில்லை. ஆனால், இளங்கொற்றன் உடனடியாக நல்ல விடை கொடுத்தான். “ஏரில் மாட்டி உழப் போகிறோம்” என்றான் அவன்.
“உழ இரண்டு புலிகளல்லவா வேண்டும்?”
“முன்பே ஒரு புலியைத் தொழுவில் கட்டிப் போட்டிருக்கிறோம்!” என்றான், இளங்கொற்றன் சட்டென்று!
புலி கொஞ்ச நேரம் கவலையுடன் சிந்தித்தது.
“ஏரில் மாடுகளைத் தானே பூட்டுவார்கள். நீங்கள் ஏன் புலிகளைப் பிடித்துப் பூட்ட வேண்டும்?” என்று அது கேட்டது.
“மாட்டைப் பூட்டினால் எள்ளும் கொள்ளும் நெல்லும் தான் விளையும்; புலியைப் பூட்டி உழுதால் பொன்னும் வைரமும், மாணிக்கமும் விளையுமே?” என்றான் இளங்கொற்றன்.
இளங்கொற்றன் மூளை சுட்டமண் அல்ல. பொன்தான் என்று எண்ணி வியந்து மகிழ்ந்தான் நெடுங்கொற்றன்.
புலி மீண்டும் பேசிற்று; “பஞ்சப்புலியண்ணா! கிலியண்ணா! உங்கள் இருவருக்கும் ஆயிரம் வணக்கம் செலுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பெரிய மனது வைத்து என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்குப் பொன்னும் வைரமும் மாணிக்கமும்தானே வேண்டும்? என் குகைக்கருகே ஓர் இளவரசன் வந்திருந்தான்; இறந்து போன என் புலி மனைவி அவனையும் அவன் குதிரையையும் கொன்றுவிட்டது. அவன் அணிந்திருந்த பொன் அணிமணியும் அவன் பையிலிருந்த பொன்னும் என்னிடம் குகையில் இருக்கின்றன. அத்தனையையும் உங்களுக்குத் தருகிறேன்” என்றது.
இளங்கொற்றன் நெடுங்கொற்றனையும், நெடுங்கொற்றன் இளங்கொற்றனையும் பார்த்து சாடை பேசிக் கொண்டனர்.
“சரி, என்று ஒத்துக்கொள்” என்று சாடை காட்டினான் நெருங்கொற்றான்.
இளங்கொற்றன் பின்னும் சற்றுச் சிந்தித்துத் திடீரென்று புத்தொளி கண்டவன்போல் நிமிர்ந்து, புலியைப் பார்த்து, “நீ நல்ல புலியாயிருக்கிறாய். ஆகவே, குகைக்குச் சென்று பொன்மணியைக் காட்டியபின் விட்டு விடுகிறோம். ஆனால், முதலில்….” என்று அரைகுறையாக பேச்சை நிறுத்தினான்.
“இன்னும் என்ன சொல்லப் போகிறான். இந்த நேரத்தில்!” என்று நெடுங்கொற்றன் விழித்தான்.
"கிலியை விடப் பஞ்சப்புலி பொல்லாததாயிருக்கிறதே இன்னும் என்ன கேட்கப் போகிறதோ!’ என்று புலியும் கவலை கொண்டது.
"முதலில் நாம் புறப்பட்ட ஊருக்குத் திரும்பிச் சென்று தெருவில் ஒரு தடவை உலவிவிட்டு வரவேண்டும்’ என்று முடித்தான் இளங்கொற்றன்.
புலி மீண்டும் நடுங்கிற்று!
“என்னைக் கொல்ல இது புதுவழியா? நீங்கள் விட்டாலும் ஊரார் விடமாட்டார்களே! கல்லெறிந்தும் குத்தியும் வெட்டியும் வேட்டு வைத்தும் தீர்த்து விடுவார்களே!” என்றது அது.
முதல் தடவையாக, இளங்கொற்றன் சிரித்தான். ‘மனிதர் களுக்குப் புலி கண்டு அச்சம். புலிக்கும் கிலி கண்டு அச்சம்தான்’ என்று அவன் எண்ணினான்.
“அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ மட்டும் வேகமாகச் சென்று திரும்பிவிடு. பின்பு, குகைக்கு வந்து பொன்மணியைத் தந்தவுடன் உன்னை விட்டுவிடுகிறோம்” என்றான் அவன்.
புலி இப்போது ஊருக்கே திரும்பிற்று.
அப்போது விடிந்திருந்தது. மணி ஆறரை இருக்கும். தலைவர் மகளும், ஒன்றிரண்டு பெண்களும் நீர்க்குடத்துடன் ஊர்ப் பொதுவிலுள்ள கேணிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
ஒன்றிண்டு பெரிய மனிதர்கள்தான் தெருவில் நடமாடினர். புலி மீது ஒரு பையனும், அதன் வாலைப் பிடித்துக் கொண்டு மற்றொருவனுமாக வருவதைக் கண்டு சிறுமியர் குடத்தை எறிந்துவிட்டு மருண்டோடினார். பெரியவர்கள் அவர்கள் மீது விழுந்தடித்து உருண்டனர்.
புலி மீதிருந்த இளங்கொற்றன், “வளார் வளார்! புலி நம்முடைய புலிதான். அஞ்சாதே அக்கா!” என்றான்.
நெடுங்கொற்றன் வாலைப் பிடித்துக் கொண்டே “பளார்! பளார்! இந்தப் புலிக்கா தலைவர் மகள் அஞ்சுவது? இதற்கா பொம்மைப் புலியை மாமா வாங்கிக் கொடுத்துப் பழக்குகிறார்?” என்று கூறிக் கொண்டே ஓடினான்.
புலி விரைவில் குகைக்கே மீண்டது. புலி காட்டிய இடத்தில் பொன் அணி மணியும் தங்கக் காசுகளும் ஏராளமாக இருந்தன.
புலியின் முதுகிலிருந்து இறங்கியதும் இறங்காததுமாக அவற்றில் பாதியை மடியில் கொட்டிக் கொண்டு இளங்கொற்றன் வீட்டை நோக்கி விரைந்தான்.
புலியின் வாலை விட்டதும் விடாததுமாக நெடுங்கொற்றன் மீந்ததை வாரிக் கொண்டு அவனைப் பின்பற்றினான்.
புலி உயிர் தப்பியது போதும் என்று குகைக்குள்ளேயே பதுங்கியிருந்து விட்டது.
தலைவர்மகள் ஓடோடி வீடு சென்றாள். பெற்றோரிடம் கண்டதை எல்லாம் கூறினாள். “இந்தக் கூட்டாளிக் கொற்றர்கள் இருவரும் பொம்மைப் புலியை உடைக்கும்போது சொன்னது சரியாய்ப் போயிற்று. விடியற் காலத்தில் அவர்கள் புலி மீது ஏறி ஊருக்குள் வந்தார்கள்” என்றாள்.
முதலில் பெற்றோர்கள். “இது அவள் கண்ட கனவு” என்றனர்.
ஆனால், பல பெண்களும் பல பெரியோர்களும் பரபரப்புடன் அதே செய்தியைக் கூறினர். நண்பகலுக்குள் எங்கும் அதே பேச்சாயிற்று.
அதற்குள் கொற்றர் இருவரும் திரும்பி வந்தனர். அவர்கள் பெருஞ்செல்வம் விரைவில் அவர்களைப் பெரிய மனிதர்களாக்கிற்று.
நெடுங்கொற்றன் தலைவர் மகளை மணந்து கொண்டான். இளங்கொற்றன் அவளுடன் தம்பி முறை கொண்டவனாதலால், தலைவர் மகள், தன் மைத்துனியைப் பற்றி இழுத்து வந்து, “இவளை மணந்து கொள்கிறாயா?” என்றாள். அவன் இணங்கவே, அவளும் அவனை மணந்து கொண்டாள்.
“புலியை வெல்ல நாங்கள் பட்டபாடெல்லாம்” என்று இளங்கொற்றனும், நெடுங்கொற்றனும் பேச்சிடையே தொடங்குவர்.
“இங்கே எங்களிடம் வந்து சிக்கியதுடன் முடிந்துவிட்டது!” என்று முடிப்பர் தலைவர் மகளும், அவள் மைத்துனியும்.
புலி தந்த செல்வத்தால் அவர்கள் பூமான்கள் ஆயினர். அதன் பொன்னும் மணியும் பூவையரை மகிழ்வித்தன.
பொன் மான்
நிலமலைக்கப்பால் பொன்மலை என்ற ஒரு மலை உண்டு. பொன்னும் அகிலும் தேக்கும் நிறைந்த காடுகள் அதில் நிறைந்திருந்தன. அவற்றில் வாழ்ந்த வேடர் குடிகளுள் ஒன்றைப் பூமன் என்ற தலைவன் ஆண்டு வந்தான். அவன் தோட்டக் காடுகளில் மான்கள் தங்குதடையின்றித் திரிந்தன. யாரும் அவற்றை வேட்டையாடக் கூடாதென்று அவன் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தான்.
பொன்னன் என்ற வேட இளைஞன், தலைவன் கட்டளையை மீறி அதில் அடிக்கடி வேட்டையாடினான். அவனுக்குக் கிடைத்த மான்களின் கொம்புகளையெல்லாம் வீட்டில் அழகழகாக அடுக்கி ஒப்பனை செய்தான். இச்செய்தி ஒற்றர்கள் மூலமாகத் தலைவனுக்குத் தெரிந்தது. அவன் பொன்னனைத் தன் அரண்மனைக்கு அழைத்தான். தன் காட்டகத்தில் துணிந்துவந்து மான்களை வேட்டையாடிய தற்காக அவனை வன்மையாகக் கண்டித்தான்.
“நீ எத்தனையோ பொன்னான மான்களை அழித்திருக்கிறாய். அவற்றிற்கு ஈடாக, ஒரு பொன்மானையே கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும். அப்படிச் சேர்ப்பித்தவுடன் நீ இந்நாட்டில் பாதியைப் பெறலாம். சேர்ப்பிக்காவிட்டால் உன்னை உயிரோடு விடமாட்டேன். மூன்று ஆண்டுகள் தவணை தருகிறேன்.” என்றான்.
பொன்னன் வீடு வந்து கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தான். உணவிலும் உடையிலும் உறக்கத்திலும் அவன் கருத்துச் செலுத்த முடியவில்லை. அவன் துயர் கண்டு அவன் தாய் பொம்மி அவனுக்கு ஆறுதல் கூறினாள். “வெள்ளம் அணை கடக்குமுன் கவலைப்பட்டால் பயனுண்டு; இனிக் கவலைப்பட்டு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. உண்டு, உடுத்து, உறங்கி எழுந்தால், கவலை தீர வழி பிறந்தாலும் பிறக்கும்” என்றாள்.
தாய் கூறியதிலும் உண்மை இருக்க வேண்டும் என்று அவன் கருதினான்.
அவன் உண்டு உடுத்து உறங்கி எழுந்தான். அவன் கவலை குறைந்திருந்தது. மூளை தெளிவடைந்திருந்தது. அவன் தன்தாயிடம் சென்றான்.
“அம்மா! மூன்று ஆண்டு எப்படியும் தவணை இருக்கிறது. நான் எப்படியாவது அதற்குள் பொன்மான் இருக்கும் இடத்தை உசாவியறிந்து, அதைக் கைப்பற்றி வருகிறேன்” என்றான்.
பொம்மி முகமலர்ச்சியுடன் விடைகொடுத்தாள். உள்ளூர அவள் கவலைப்பட்டாலும், மகன் மனக் கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் கருதி, அவள் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ள வில்லை.
அவன் மலையும் மலைசார்ந்த கடுநிலமும் கடந்தான். பின் காடும் காடுசார்ந்த புதர் நிலமும் தாண்டினான்.
பகலில் வெய்யிலும் இரவில் வெப்பும் கலந்த பாலை வனத்தை அடைந்தான். மரஞ் செடி கொடிகள் உயிர்கள் எல்லாம் அங்கே கருகி வாடிவதங்கின. அதைக் கடக்க அவனுக்குப் பல நாளாயிற்று.
பின் அவன் காவிரியும், வையையும், தண்பொருணையும் ஓடும் ஆற்று வெளிகளைக் கடந்து மணலும் மணல் சார்ந்த கடற்பகுதியும் கண்டான்.
பல வழிப்போக்கரிடம் உசாவியும், மாதக்கணக்காக அலைந்தும் பொன்மானைப்பற்றிய செய்தி எதுவும் கிடைக்கவில்லை. அவன் சிறிது கவலையுடன் கடற்கரையில் உலாவினான்.
அவன் இருந்த பகுதி நாரைக்காடு; அதன் அரசன் நீள்காலனும் அரசி நெடுங்கழுத்தியும் அவனைத் தொலைவி லிருந்தே கண்டு விரைந்து வந்து வரவேற்றனர். அவனுக்கு அவர்களை முன்பின் தெரியாவிட்டாலும் அவர்கள் அவனை ஆர்வமாக ஆதரித்தழைத்தனர்.
“வாருங்கள் மாப்பிள்ளை, வாருங்கள், நீங்கள் எப்போது வருவீர்கள், எப்போது வருவீர்கள் என்று நம் ‘செங்கு’ ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறாள். நாங்களும் உங்கள் வழிபார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்து விட்டன” என்று அவர்கள் களிப்புடன் கூறினர்.
‘செங்கு’ என்பது நாரையரசின் மகள் ‘செங்காலி’ என்று அவன் பின்னால் அறிந்துகொண்டான். அவள் வந்தவுடன் அவளும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
செங்காலியை உடனே மணந்து கொள்ள வேண்டுமென்று அரசனும் அரசியும் படபடத்தனர். தான் வந்த வேலையைச் சாக்கிட்டு அவன் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை.
நாரையுலகம் முழுமைக்கும் நாணற்புல் மீது வரையப்பட்ட திருமணத்தாள் சென்றது. கடல் கடந்த நாரைக் காடுகளுக்குத் தனி நாரைத் தூதுவர் சென்றனர். வானகமெங்கும் நாரைகள் பரவிப் பகலை இரவாக்கின. நாரை இளவரசிக்கும் பொன்னனுக்கும் திருமணம் நடந்தேறிற்று.
சிலநாள் அங்கிருந்தபின் அவன் பயணம் கூறி, மனைவி யிடமிருந்தும் மாமன் மாமியாரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டான். திரும்பிவரும் வழியில் மனைவியை இட்டுச் செல்வதாக அவன் கூறினான்.
நாரையரசன் மூலம் அவன் பொன்மான் இருப்பிடத்தையும், அதற்குள் செல்லும் வழியையும் அறிந்தான். அது; உலகின் கீழ் பெருங்கடலில் இரண்டு தீவுகள் தாண்டிப் பொன்னாடு என்ற மூன்றாவது தீவில் இருந்தது. முதல் தீவுவரை செல்வதற்கான நாரைத் தேர் ஒன்றை நாரை அரசன் அவனுக்குக் கொடுத்தான். அந்தத் தேர் ஒரு பெரிய நாரை வடிவில் அமைந்திருந்தது. அதன் இரண்டுபுறச் சிறகுகளிலும் ஒவ்வொன்றில் ஏழு நாரைகள் நீண்ட பட்டு இழைகளால் இணைக்கப்பட்டிருந்தன. அப்பட்டிழைகளை ஏழு நாரைகள் இழுத்துச் சென்றன.
முதல் தீவு பன்றித் தீவு. அதில் இறங்கியபின் பொன்னன் அங்கேயிருந்து கழிகளில் உலவத் தொடங்கினான். அவனைத் தொலைவிலிருந்தே கண்ட பன்றியரசன் நெடுங்கோடனும் பன்றியரசி நெடுங்கோடியும் அவனை அன்பாதரவுடன் வரவேற்றனர். “வாருங்கள் மாப்பிள்ளை, வாருங்கள்! உங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து, நம் ‘முத்து’ வாடிப் போயிருக்கிறாள். நாங்களும் உங்கள் வழிபார்த்துப்பார்த்துக் கண்சிறுத்துப் போனோம்” என்றனர்.
“முத்து” என்றது பன்றி இளவரசி முத்துப் பல்லி என்று அவன் விரைவில் அறிந்து கொண்டான். அவளும் வந்தவுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “என்னை இத்தனை நாள் ஏன் காக்க வைத்தீர்கள்?” என்றாள்.
அவன் தன் முதல் திருமணம் பற்றிப் பேசிப் பார்த்தான்; தன் பயணத்தைப் பற்றிச் சொல்லித் தவணை கோரினான். அவர்கள் கேட்கவில்லை. உடனே திருமணத்தை முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர் அவனும் ஒருவாறு இணங்கினான்.
சீவிய பனங்கிழங்கின் மீதெழுதப்பட்ட திருமணத் தாள்கள் பன்றியுலகெங்கும் சென்றன. கடல்கடந்த பன்றித் தூதுவர்கள் கடலலைகளைக் கிழித்துக்கொண்டு சென்றனர். முத்துப் பல்லிக்கும் பொன்னனுக்கும் திருமணம் நடந்தேறிற்று.
நில உலகமெங்கும் பாய் விரித்தாற்போல் பன்றிகள் பரந்து நின்றன. சில நாள் அங்கிருந்தபின் அவன் பயணம் கூறி மனைவி யிடமிருந்தும் மாமன் மாமியரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டான். திரும்பி வரும் வழியில் மனைவியை இட்டுச் செல்வதாகக் கூறினான்.
பன்றியரசன் அடுத்த தீவுவரைச் செல்ல அவனுக்குப் பன்றித்தேர் ஒன்று அளித்தான். அது பன்றியுருவங் கொண்ட ஒரு பெரிய காட்டு மரத்தின் வேராயிருந்தது. அதன் கணுக்களில் தம் கொம்பைச் சொருகிய வண்ணம் நூற்றெட்டுப் பன்றிகள் அதைச் சுமந்து நீரில் மிதந்து சென்றன.
இரண்டாவது தீவு ஓர் எருமைத் தீவு. அங்கே எருமை வடிவில் அமைந்த பாறைகளும் அவற்றினிடையே ஆழ்கசங்களும் இருந்தன. பாறை ஒன்றின் மீது நின்று அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
அவன் இருந்த பாறை திடுதிடென நடுங்கிற்று. எருமையரசன் வன்குளம்பனும் எருமையரசி வன்குளம்பியும் அவனை ஆரவாரமாக வந்து வரவேற்றனர். “எப்போது வந்தீர்கள் மாப்பிள்ளை? ஏன் இவ்வளவு தாமதம்? இன்னும் ஒருநாள் நீங்கள் வரத் தாமதித்தால், ‘இளா’ கடலுக்குள் குதித்துவிடுவே னென்று அடம் பிடிக்கிறாள்” என்றனர் இருவரும்.
‘இளா’ என்றது எருமை இளவரசி இளமேதி என்று அவன் அறிய நெடுநேரம் செல்லவில்லை. அவள் ஓடி வந்து அவன் மடி மீது உட்கார்ந்து கொண்டு. ’நான் செத்துப் போகட்டும் என்று இவ்வளவு நாள் வராமலிருந்தீர்கள்" என்றாள்.
முதல் இரு திருமணங்களைப்பற்றிக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. பொன்மானைத் தேடும் பயணத்தைப் பற்றி அவன் பேச்செடுத்தான். உடனே வன்குளம்பன், “பொன் மான் வேண்டு மானால் இளமேதியை உடனே மணந்து கொள். ஏனெனில் எருமையுலகத்தின் உதவி அதற்கு இன்றியமையாதது. திருமணத்தின் போதே அதற்கு ஏற்பாடு செய்து விடலாம்” என்றான்.
முதல் தடவையாக, பொன்னன் ஆர்வத்துடன் மண வினையை ஏற்றான். அல்லி இலை மீது திருமணத்தாள்கள் எருமை யுலகெங்கும் மிதந்து சென்றன. திருமண இதழின் அடியிலேயே எருமையுலகத்தின் எல்லா நாட்டுப் போராட்களுக்கும் தனியாணை ஒன்று சென்றது.
“பொன்மானைத் தேட மாப்பிள்ளை செல்ல வேண்டியிருப்பதால், எருமைப் படைவீரர் எல்லாரும் வருக. இது அரசன் ஆணை” என்று அதில் வரைப்பட்டிருந்தது.
பொன்னனுக்கும் இளமேதிக்கும் திருமணம் இனிது நடந்தேறிற்று. கடற்பரப்பெங்கும் எருமைகளே நிறைந்து நீர்ப்பரப்பை மறைத்தன. சில நாள் அங்கிருந்தபின் அவன் பயணத்துக்கு எழுந்தான். எருமைத் தோலால் அமைந்த சிவிகை வன்குளம்பனையும் பொன்னனையும் ஒரு கடற் கூம்பின் நுனிவரை இழுத்துச் சென்றது.
வன்குளம்பன் ஆணையால் எருமைப்படைகள் கடலைக் கடக்கும் பாலமாக வந்து நின்றன.
“பிள்ளையினும் பாசமிக்க மாப்பிள்ளையே! நான் இக்கரையிலேயே உம்மை எதிர்பார்த்திருப்பேன். என் எருமை வீரரின் முதுகிலும் தலையிலும் மிதித்துச் சென்று நீங்கள் அக்கரை அடையலாம். அதுவே பொன்னாடு. என் முன்னணிப் படை அங்கே உமக்காகக் காத்து நிற்கும் அதனைப் பின்பற்றி நீர் செல்க, வழியில் எந்தத் தடையும் என் எருமைப் படைமுன் நிற்கமாட்டா. அவை பொன்மானை நாற்புறமும் வளைத்துக் கொள்ளும். இதோ எருமைத் தாம்பால் பின்னப்பட்ட இந்த வலையை வீசும். பொன்மான் மட்டுமல்ல, அதன் பிணையும் வலைக்குள் வந்து வசப்படும் இரண்டு மானுடனும் நீர் வெற்றியுடன் மீள்வீராக” என்றான்.
பொன்னன் அவ்வாறே சென்றான். எருமை முன்னனிப் படை அவனைப் பொன்னாட்டின் நடுவிலுள்ள பொன் கொடுமுடிவரை கொண்டு சென்றது.
பொன் கொடு முடியின் ஒளியினால் ஆறுகள், சுனைகள், காடுகள் யாவும் பொன்மயமாயிருந்தன. எருமை வீரர்கள் கூடப் பொன் எருமைவீரர்களாகக் காட்சியளித்தனர். ஆனால், இவற்றைக் காணப் பொன்னனுக்கு நேரம் இல்லை. ஓர் எருமைப் படை பொன்மான் இரண்டையும் வளைத்து அவன் முன் கொண்டு வந்தது. எருமைத் தாம்பு வலையால் அவன் அவற்றைப் பற்றிக் கொணர்ந்தான்.
எருமைப்படையின் முன்னணி முரசம் முழங்கிற்று. எருமையரசன் ஏற்பாட்டின்படி அதனைக் கடலகத்துள்ள எருமைகள்யாவும் தம் முழக்கத்தால் எதிரொலித்தன. எருமைகளின் ஆரவாரத்துக்கிடையே அவன் பொன்மான் களுடன் எருமைத்தீவு வந்து சேர்ந்தான்.
எருமைத் தீவில் சிலநாளும், பன்றித் தீவில் சிலநாளும், நாரைக் காட்டில் சிலநாளும் தங்கி, இளமேதி, முத்துப்பல்லி, செங்காலி ஆகிய மூன்று மனைவிகளுடனும் பொன்னன் தன் நாடு திரும்பினான். மனைவியரிடமும் அவனிடமும், மாமன் மாமியர் வேண்டிய அறிவுரைகள் கூறியனுப்பினர். எப்போதும் மருமகனுக்கு என்ன இடையூறு நேர்ந்தாலும், விரைந்து தூதனுப்பும்படி அவர்கள் புதல்வியரிடமும் மருமகனிடமும் வற்புறுத்தினர். தூதுவர் படையும், நிலையான பாதுகாப்புப் படையும், வழியனுப்புப் படைகளும் அவர்களுடன் வந்தன.
மணல் நிலம், ஆற்று நிலம், காட்டு நிலம், பாலை நிலம், மலை நிலம் ஆகியவற்றைக் கடந்து அவன் பொன்மலையில் தன் தாய் இல்லம் வந்து சேர்ந்தான். ஒரு பொன்மானுக்கு இரண்டு பொன்மான்களுடனும், இளவரசிகளான மூன்று மனைவி களுடனும் அவன் வந்தது கண்டு அவன் தாய் பொம்மி மகிழ்ந்தாள்.
வேட அரசன் பூமனிடம் செல்லுமுன் பொன்னன் தாயுடனும் மனைவியருடனும் தூதுவர்படை, காவற்படைத் தலைவருடனும் கூட்டங் கூடிக் கலந்தாய்வு நடத்தினான். “ஒரு பொன்மானை வைத்துக் கொண்டு ஒரு பொன்மானைக் கொடுக்க வேண்டும். முன் உறுதிமொழிப்படி பாதி அரசு தராவிட்டால், அதன் பிறகு புது ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று எல்லாரும் முடிவு செய்தனர்.
வேட அரசன் பூமன் அவன் உறுதிமொழிப்படி நடக்க வில்லை. பொன்மானுடன் அவன் வந்திருப்பதை அறிந்ததும், அவன் தன் அமைச்சர்களுடன் சதி ஆராய்வுரை நடத்தினான்.
“பொன்மானுக்கு இணையாகப் பிணைப் பொன் மானையும் கொணர்ந்தால்தான், அரசில் பாதியைக் கொடுப்பேன். இல்லாவிட்டால் உன் தலையை அகற்றுவேன்” என்று கூறும்படி அவர்கள் அறிவுரை கூறினர்.
பொன்னனின் தாயும் மனைவியரும் மீண்டும் ஆய்வு நடாத்தினர். சில நாள் மறைந்திருந்து. தேடிச்சென்று கொணர்ந்தது போல அடுத்த பொன்மானைக் கொடுத்துப் பார்ப்பதென்று முடிவு கட்டினர்.
இரண்டாவது பொன்மான் கிடைத்த பிறகும் மன்னன் சதி நின்ற பாடில்லை.
“ஓரிரவுக்குள் நாட்டெல்லையில் ஆயிரம் அடி நீளம், ஆயிரம் அடி அகலம், ஆயிரம் கைப்பிடி ஆழமுள்ள பெரிய ஏரி ஒன்று வெட்ட வேண்டுமென்று ஆணையிடுக. அதை நிறைவேற்றா விட்டால் தூக்கிலிடுக” என்று அறிவுரை கூறினர் அமைச்சர்.
பொன்னன் இதை ஏற்றுக் கொண்டான். “ஆனால் ஏரி வெட்டி முடிந்ததும் கூறியபடி செய்யவில்லையானால், நான் அதற்குமேல் பொறுத்திருக்க முடியாது. உம்மைக் கொன்று அரசைக் கைப்பற்றிக் கொள்வேன்” என்றான்.
அவன் புதிய நிலைகண்டு மன்னன் நடுங்கினான். ஆனாலும் ஓரிரவில் அந்த வேலையை எந்த மனிதனாலும் செய்ய முடியாது என்று அவன் கருதிச் செம்மாப்பு அடைந்தான்.
இரண்டாம் தடவை உறுதி மீறிய உடனேயே மனைவியர் தங்கள் தங்கள் தாய் தந்தையருக்குத் தூதுவர்களை அனுப்பினர். நாரையரசன் நெடுங்காலன் நாரையுலகெங்கும் ஓலை போக்கி விட்டு வந்தான். பன்றியரசனும் எருமையரசனும் அவ்வண்ணமே வந்தனர். பன்றியுலகெங்கும் எருமையுலகெங்கும் அவற்றின் அரசன் ஆணைகள் பறந்தன.
மூவுலக அரசுகளின் போராட்கள் அடங்கிய மாமன்றம் நடைபெற்றது. திட்டங்கள் தீட்டப்பட்டன.
நாரைப்படைகள் வானகமெங்கும் நிறைந்தன. எங்கும் இருள் மூடிற்று. இரவு கழிவதையும் பகல் செல்வதையும் யாரும் அறியவில்லை. ஏரி வேலை முடியுமுன் உலகத்துக்கு விடியற் காலமே ஏற்படாமல் நாரைகள் பார்த்துக் கொண்டன.
பன்றிப் படைகள் நடுவிலும் எருமைப்படைகள் இருபுறமும் அணிவகுத்து, ஏரிக்குக் குறித்த நிலத்தை அணுகின. பன்றிகள் வரிசை வரிசையாக நிலத்தைக் கிளறித் தள்ளின. எருமைகள் கால் குளம்புகளால் கிளறிய மண்ணைப் பின்னோக்கி வீசித் தள்ளின.
மூன்று நூறாயிரம் கோடிப் பன்றிகளும், மூன்று நூறாயிரம் கோடி எருமைகளும் நிலத்தில் வேலை செய்தன. முந்நூறு நூறாயிரம் கோடி நாரைகள் வானத்தை மறைத்துப் பறந்து கொண்டே சுழன்றன. நாரையுலகின் கணக்குப்படி ஏரி வேலை முடிய எப்படியும் மூன்று மாதங்களாயின. ஆனால், நில உலகின் கணக்கின்படியும், சட்டப்படியும், ஒரே இரவுதான் ஆயிற்று. ஏனென்றால், மூன்று மாதமும் ஒரே இருட்டாகயிருந்ததனால், பொழுது விடியவே இல்லை.
ஏரி அகழ்ந்து கட்டியாயிற்று என்ற செய்தி பூமனுக்கு எட்டிற்று. இனி நாட்டைக் கொடுக்க வேண்டும், அல்லது முழு வலுவுடன் பொன்னனை எதிர்த்தழிக்க வேண்டும் என்பதை அவன் அறிந்தான். அவன், தன் முழு நிறை படைகளுடன் பொன்னன் வீட்டைச் சூழ்ந்துகொள்ள எண்ணிப் புறப்பட்டான். ஆனால், எருமைப் படைகள் சென்று அவன் படைகளின் முன்னணியைத் தாக்கின.
பன்றிப் படைகள் சென்று அரசன் படைகளைப் பின்புறமும் வலப்புறமும் இடப்புறமும் தாக்கின. அத்துடன் பல வீரமிக்க பன்றிகள் மண்ணைத் துளைத்துப் படைவீரர் நின்ற நிலத்தின் அடியில் அகழ்ந்து கீழ்நின்று தாக்கின. நாரைப்படைகள் மணலை இறக்கைகளில் எடுத்துச் சென்று வானத்திலிருந்து மண்மாரி தூவின.
மன்னன் படைகள் ஓடவும் வழியின்றி, நிற்கவும் வகையின்றி மாண்டன. மன்னன் கண்ணை ஒரு நாரை கொத்திற்று. அவன் காலை ஒரு பன்றி ஒடித்தது. ஓர் எருமை அவன் உடலைச் சாய்த்தது. பொன்னன் அவன் தலையை வெட்டி வீழ்த்தினான்.
வேட அரசை இரண்டு விலங்கின அரசுகளின் துணை கொண்டும், ஒரு புள்ளின அரசின் துணை கொண்டும் வென்று பொன்னன் ஆண்டான்.
முக்கால்பணத் திருமணம்
சொக்கனுக்குத் தந்தை இல்லை; தாய் உண்டு, ஆனால், அவள் மாற்றாந்தாய்! அவனுக்கு அறிவும் திறமையும் இல்லை. இருக்கிற அறிவையும் திறமையையும் பயன்படுத்த அவனுக்கு வாய்ப்புமில்லை. ஆயினும், அவன் எப்படியோ தடதடவென்று வாட்டசாட்டமாக வளர்ந்து வந்தான்.
இளஞ்சிறுவனாக இருக்கும்போதே, அக்கம் பக்கத்தார், “பையனுக்குத் திருமணம் எப்போது அம்மா?” என்று தாயைக் கேட்பார்கள். அவள் அப்போதெல்லாம், “அவன் இன்னும் சிறுபையன்தானே அம்மா, இன்னும் கொஞ்சம் வளரட்டும்” என்பாள். அவனுக்கு வயது இருபது கழிந்தது. அப்போதும் தாய் பழையபடியே சொன்னாள்.
திருமணம் முடிக்க வேண்டுமென்று அவனுக்கே உள்ளூர ஆவல் ஏற்பட்டது. ஒருநாள் அவன் அதை வெளியிட்டுக் கேட்டுவிட்டான்.
“என்னடா, நீ தேடியதாகக் கையில் ஒரு கால் பணமாவது இருக்க வேண்டாமா, திருமணம் செய்ய?” என்று தாய் சலிப்புடன் கூறினாள்.
அவன் எங்கிருந்தோ தேடி ஒரு கால் பணம் கொண்டு வந்தான்.
“அம்மா,கால்பணம் கொண்டு வந்துவிட்டேன். திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.
மாற்றாந்தாய்க்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. அவள் அதை அடக்கிக் கொண்டு, “போடா, ஒரு கால்பணம் எப்படிப் போதும்? இன்னொரு கால் பணம் கொண்டு வந்துவிடு, அப்புறம் திருமணம் செய்யலாம்” என்றாள்.
சொக்கன் எங்கெங்கெல்லாமோ சுற்றினான். இன்னொரு கால்பணமும் கிடைத்தது.
“அம்மா கால்பணத்துடன் இன்னொரு கால்பணம் சேர்த்துவிட்டேன். இது திருமணத்துக்குப் போதுமல்லவா?” ஆவலுடன் வேட்டான்.
மாற்றாந்தாய் அதுவும் போதாதென்றாள். “இன்னும் கால்பணம் கிடைத்தால், அப்போது பார்ப்போம்” என்று பின்னும் கடத்தினாள்.
சொக்கன் பின்னும் பொறுமையாக எங்கும் சென்று தேடினான். இத்தடவை அவன் ஒரு கால்பணத்தை நடக்கும் பாதையிலேயே கண்டெடுத்தான். திருமணமே கையில் வந்து கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அவன் தாயிடம் வந்தான்.
“அம்மா, கால்பணம் கிடைத்துவிட்டது. இனி திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.
மாற்றாந்தாய் உள்ளம் அவன் உள்ளத்தின் நிலையை அறியவில்லை. அவள் வெறுப்புடன், “திருமணமும் மறுமணமும் தான்! போடா, போ! உன் திருமணத்துக்கு முக்கால்பணம் எந்த மூலைக்கடா போதும்?” என்றாள். சொக்கன் மனம் இடிந்து விட்டது.
“தாய் என்ற பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பிண்டம். இதை நம்பினால் நம் திருமணம் நடக்கவே நடக்காது. முதலில் ஒரு கால்பணத்தில் நடத்திவிடுகிறேன் என்றாள். இப்போது இரண்டானாலும், மூன்றானாலும் போதாது என்கிறாள்; இனி நானே போய், இந்த முக்கால் பணத்துக்குள் திருமணம் முடிக்கமுடியுமா, இல்லையா பார்க்கிறேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டு அவன் புறப்பட்டான்.
தாய் அவனிடத்தில் அன்பில்லாதவளாயிருக்கலாம்! ஆனால், திருமணச் செலவு பற்றி அவள் கூறியது தவறல்ல. இதை அவன் சிலநாட்களுக்குள் அறிந்து கொண்டான். ஆயினும் திருமணம் செய்வது என்று உறுதிகூறி வெளியேறியபின், அன்பில்லாத தன் மாற்றாந்தாயிடம் அவன் திரும்பிவர விரும்பவில்லை.
கிடைத்த இடத்தில், கிடைத்த உணவு உண்டு, அவன் திரிந்தான். அந்த மூன்று கால் பணத்தை மட்டும் அவன் எக்காரணம் கொண்டும் தொடவில்லை. அதை வைத்துக் கொண்டு எப்படித் திருமணம் செய்யலாம் என்று அவன் ஆய்ந்து ஓய்ந்து சிந்தித்தான்.
அந்த முக்கால் பணத்தில் திருமணம் செய்து முடிப்ப தென்பது உண்மையில் உண்டை நூலால் பாராங்கல்லைக் கட்டித் தூக்குவது போலத்தான் என்பதை அவன் அறிந்து கொண்டான்.
“நேரடியாகத் தானே, உண்டை நூலால் பாராங்கல்லைத் தூக்க முடியாது? உண்டை நூலில் சீப்பு நூலையும், சீப்பு நூலில் கொட்டை நூலையும், கொட்டை நூலில் நூல் கயிற்றையும், நூல் கயிற்றில் கயிற்றையும், கயிற்றில் வடத்தையும், வடத்தில் பாராங்கல்லையும் தூக்க முடியுமே! மூளையைப் பயன்படுத்தி வேலை செய்தால், மூன்று முப்பதாகவும், முப்பது முந்நூறாகவும் ஏன் பெருகாது?” என்று அவன் சிந்தித்தான்.
சிந்தனை, திட்டம் தீட்டித் தரவில்லை. வழி காட்டவும் இல்லை. ஆனால், நம்பிக்கை ஊட்டிற்று. தற்செயல் நிகழ்ச்சிகள் படிப்படியாக அவனுக்கு வழிகாட்டின.
ஒருவன் தட்டுநிறைய அப்பத்தை அடுக்கி விற்றுக் கொண்டிருந்தான். தட்டில் விற்ற பணம் சில்லறையாகக் கிடந்தது. அச்சமயத்தில் அவன் மனைவி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது.
அவன் அப்பங்களை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். என்ன விலை கிடைத்தாலும். அதை மொத்தமாக விற்றுவிட அவன் துடித்தான். அச்சமயம் சொக்கன் அவனிடம் சென்று, “என்னிடம் மூன்று கால் பணம் இருக்கிறது. அவ்வளவு அப்பத்தையும் கொடுக்கிறாயா?” என்றான்.
கிடைத்தது போதும் என்று அப்பக்காரன் அப்பங்களையும் தட்டையும் போட்டுவிட்டு மூன்று கால் பணத்தையும் தன் சில்லறையுடன் எடுத்துக் கொண்டு போனான்.
மூன்று கால்பணத்துக்கு வாங்கிய அப்பத் தட்டுடன் அவன் தெருவழியே அப்பம் விற்றுக் கொண்டு சென்றான். மூன்று கால்பணம் விரைவில் மூன்றே முக்கால் பணமாகி, ஒன்றிரண்டு நாட்களில், அவன் உணவுச் செலவு போக, முப்பத்துமூன்றே முக்கால் பணமாயிற்று.
நாலுபணத்துக்கு ஒரு வெள்ளியாக அவன் அதை மாற்றினான். இப்போது அவன் மடியில் எட்டு வெள்ளியும் ஒன்றே முக்கால் பணமும் இருந்தன. அவன் அவற்றுடன் வேறு ஊருக்குப் பயணமானான். வழியில் பருகுவதற்கும் உண்பதற்கும் அவன் ஒரு கலத்தில் நீரும் கட்டுச்சோறும் கொண்டு சென்றான்.
காட்டு வழியே அவன் செல்லும்போது ஒரு நடுத்தர மாதும் அவள் கணவனும் தன் கைக்குழந்தையுடன் எதிரே வந்தனர். அவர்கள் பின்னால் மூன்று கழுதைகள்மீது பெரிய துணி மூட்டைகள் இருந்தன. குழந்தை என்ன காரணத்தாலோ அழுதழுது துடித்தது. சொக்கன் அவர்களைப் பார்த்து, “குழந்தைக்கு என்ன செய்கிறது?” என்று கேட்டான்.
“ஐயா! நாங்கள் வண்ணார வேலை செய்து பிழைப்பவர்கள். எங்கள் ஊரில் ஆறு, குளம் எல்லாம் வற்றி விட்டது. பஞ்சத்தால் பலர் இறந்து விட்டனர். துணிகளைக் கேட்க வருவார் இல்லை. ஆகவே, புது ஊர் சென்று தொழில் நடத்தப் புறப்பட்டோம். ஆனால், எவ்வளவு துணியுடன் வந்தும் என்ன பயன்? மூன்று நாளாகக் காட்டில் உணவும் நீரும் இல்லாமல் நாங்களே துடிக்கிறோம். இந்த சிறு குழந்தையோ தண்ணீரில்லாமல் இரண்டு நாளாய் அழுகிறது. இன்னும் ஒரு பொழுது கழிவதற்குள் குழந்தையை நாங்கள் இழந்துவிட நேரலாம்; என்ன செய்வோம்?” என்றான் குழந்தையின் தந்தை.
“எங்களுக்கு இச்சமயம் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் போதும். இவ்வளவு துணியையும் கொடுத்து விடுவோம்” என்றாள் தாய்.
சொக்கனுக்கு உள்ளூர இரக்கம் ஏற்பட்டது. ஆனாலும், அவன் தன் செல்வ நிலையை உயர்த்தும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.ஆகவே, “மூன்று கழுதையையும் மூட்டை களையும் தந்தால், தண்ணீர் மட்டுமல்ல, உணவும் தருகிறேன்” என்றான்.
குழந்தை ஆவலுடன் நீர் பருகிற்று. பின் சிறிது உணவும் உண்டது. தாய் தந்தையரும் சிறிது உண்டு பருகிக் களைப் பாறினர். சொக்கனுக்கு அவர்கள் மனமார வணக்கம் தெரிவித்து, மூட்டைகளையும் கழுதைகளையும் விட்டுச் சென்றனர்.
முக்கால்பணம் முழு வெள்ளியானதுடன் நிற்கவில்லை. அது எட்டு வெள்ளியுடன், மூன்று கழுதைகளும் மூன்று மூட்டை ஆடைகளும் தந்துவிட்டது கண்டு, சொக்கன் மகிழ்ந்தான்.
காட்டில் ஓர் ஓடை குறுக்கிட்டது. அதில் அவன் குளித்துச் சில பச்சிலைகளைப் பறித்து உண்டு, நீர் பருகினான், பின், துணிகளையும் நீரில் அலம்பி, அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிக் காய வைத்தான். அவை காயும்வரை அவன் அதன் அருகே உட்கார்ந்திருந்தான்.
அச்சமயம் குதிரை மீது வந்த ஒருவன் மரத்தில் தொங்கிய துணிகளைக் கண்டு, “இவை எப்படி இங்கே வந்தன?” என்று கேட்டான்.
“இது ஆடை காய்க்கும் மரம் என்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான் சொக்கன்.
அவன் விளையாட்டாகவே கேட்டான். ஆனால், வணிகன் அதை அப்படியே நம்பிவிட்டான் “ஆ! மரத்தில் பருத்திதான் காய்க்கக் கூடும், ஆடையே காய்க்குமா?” என்று வியப்புடன் கேட்டான்.
சொக்கன் அவன் நம்பிக்கையை வளர்த்துக் கதை கட்டினான். “பருத்தி காய்க்கும் செடி வேறு, ஆடை காய்க்கும் மரம் வேறு. இம்மரத்தைக் கண்டுபிடிக்கவே நான் அரும்பாடுபட்டேன். கண்டுபிடித்தபின், அது தளிர்த்துப் பூத்துக் காய்க்கும்வரை பூசை செய்தேன். அது மட்டுமல்ல. அது தளிர்த்தபின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் பகலிலோ, இரவிலோ ஏதேனும் ஒரு பறவை வந்து மரத்தில் உட்கார்ந்தால் போதும், ஆடைகள் காய்க்க மாட்டா. எப்படியோ காத்திருந்த பலன் கிட்டிற்று. இதோ இத்தனை ஆடைகள் காய்த்து விட்டன” என்றான்.
வணிகன் உண்மையில் தன் மகள் திருமணத்துக்காக ஆடை வாங்கவே புறப்பட்டவன். அதற்காக அவன் கையில் ஆயிரம் பொன் இருந்தது. ஆனால், அவற்றைத் தேடி அலைவதைவிட ஆடை காய்க்கும் மரத்தை வாங்கிவிட்டால், திருமணத்துக்கு மட்டுமல்லாமல், அதற்குப் பின்னும் ஆடை விளைவிக்கலாம் என்று அவன் பேராவல் கொண்டான்.
“தம்பி. நீ பட்ட பாட்டுக்கு ஒரு தடவை காய்த்த ஆடையை எடுத்துக் கொண்டு போ; ஆனால், மரத்தை எனக்கு விற்றுவிடு, நானும் பூசைசெய்து ஆடை பெறுகிறேன்” என்றான்.
“நீ ஆடை வாணிகம் செய்யப் பார்க்கிறாய், உனக்குத் தர மாட்டேன்” என்று சொக்கன் பிணங்கினன். வணிகன் ஆவல் வளர்ந்தது; விலை உயர்ந்தது; கடைசியில் அவன் ஆயிரம் பொன்னையும் தன் குதிரையையும் கொடுத்துவிட இணங்கினான்.
சொக்கன் கழுதைகள்மீது புடவைகளை மூட்டைக் கட்டிக் கொண்டான். ஆயிரம் பொன்னைப் பையிலிட்டுக் கட்டிக் கொண்டு, குதிரை மேல் ஏறிச் சென்றான். வணிகன் தங்கியிருந்து மரத்துக்குப் பூசை செய்து வந்தான்.
மரத்தில் புதுத் தளிர்கள் தோன்றின; அவன் மகிழ்ந்தான். பூக்கள் பூத்தன; அவன் பூசை இன்னும் மும்முரமாயிற்று; காய்கள் காய்த்தன; ஆனால், காய்கள் காய்களாகவே வெடித்தன. ஆடைகள் மலரவில்லை.
பறவைகள் தம்மையறியாமல் மரத்தில் வந்து அமர்ந்தி ருக்கலாமோ என்று எண்ணி, மறுபடியும் கவனமாக பூசை யிட்டான். மரம் ஆடை காய்க்காது என்று திண்ணமாய் அறியப் பல நாட்களாயின. ஆனால் அதற்குள் மரத்தை விற்றவன் நெடுந்தொலை சென்று விட்டான். அவனைத் தேடி வணிகன் அலைந்து திரிந்து, காணாமல் மனம் நொந்தான்.
குதிரை, பணம், கழுதைகள், ஆடைகள் ஆகியவற்றுடன் சொக்கன் ஒரு சிறு செல்வனானான். இனித் திருமணம் செய்வது எளிதே என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது. ஆனால், திருமணத்துக்கு ஏற்ற பெண் எங்கே கிடைப்பாள் என்பது அவனுக்குத் தெரியவில்லை. பல இடங்களில் தங்கி உசாவினான். வீடும் குடியுமாயில்லாத நாடோடிக்கு யாரும் பெண்தர முன்வரவில்லை.
வாணியும், பொன்னியும் வந்து கலக்கும் இடத்தில் அவன் வந்து தங்கினான். அங்கே ஒரு கிழவன், வழிப் போக்கர்களை இக்கரையிலிருந்து அக்கரைக்கும், அக்கரையிலிருந்து இக்கரைக்கும் படகில் இட்டுச் சென்று கொண்டிருந்தான்.
சொக்கன் திருமணத்துக்காகச் செய்த ஏற்பாடுகளைக் கேட்ட கிழவனுக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. “தம்பி, நாடோடி யாக அலைந்து திரிபவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? நீ என்னுடனே தங்கிவிடு; எனக்கு வயதாயிற்று; வேறே மனைவி மக்கள் இல்லை.; வீடும் படகும் சிறிது நிலமும் இருக்கிறது. என் பிள்ளையாயிருந்து படகோட்டி வாழ்; உனக்கு எப்படியும் யாராவது பெண் கொடுப்பார்கள்” என்றான்.
கிழவன் சொன்னது சரி என்று சொக்கன் எண்ணினான். அவன் கிழவனுக்கு ஒரு பிள்ளைபோல நடந்து கொண்டான். அவன் கிழவனை வீட்டில் தங்க வைத்து, தானே படகோட்டி மேலும் பணம் தேடலானான்.
சில நாட்களுக்குள் கிழவன் கண்ணை மூடினான். அவன் வீடும் படகும் சொக்கன் செல்வத்துடன் செல்வமாயிற்று.
ஒரு நாள் ஆற்றில் புயலும், வெள்ளமும் மிகுதியாயின. அச்சமயம் ஓர் அழகிய பெண்ணை இட்டுக் கொண்டு ஓர் ஆண்டி படகுத் துறையை அணுகினான். ஆண்டியானாலும் அவன் பெண்ணுடன் ஆற்றைக் கடந்து செல்ல விதிர் விதிர்த்தான். ஆனால், புயலில் படகைச் செலுத்த முடியாது என்று சொக்கன் மறுத்தான்.
பெண்ணிடம் நகைநட்டுகள் நிறைய இருந்தன. அவன் ஒரு கழுத்து மாலையைக் கழற்றிப் பட கோட்டியிடம் காட்டினான். “இதை உனக்குத் தருகிறேன். இருவரையும் அக்கரை சேர்த்துவிடு” என்றான்.
சொக்கன், ஆண்டியின் படபடப்பைக் கண்டு வியப்படைந்தான். பெண்ணை உற்று நோக்கினான். ‘பெண் ஆண்டியுடன் செல்ல விரும்பவில்லை; அவன் பிடியை விட்டுத் தப்பியோடவே விரும்புகிறாள்’ என்று, அவன், அவள் குறிப்பால் அறிந்தான்.
அவன் மூளைவேலை செய்தது.
“புயலில் படகு போவதே கடினம். அத்துடன் அது மூன்று பேரைத் தாங்காது. வேண்டுமானால் உம்மை ஒரு தடவை கொண்டு சென்று மறுகரை சேர்க்கிறேன். திரும்பி வந்து இந்த நங்கையைக் கொண்டு வருகிறேன்” என்றான் அவன்.
ஆண்டி வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டான். ஆனால், அவன் ஒத்துக் கொண்டதே, நங்கை முகத்தில் களிப்புத் தோன்றிற்று.
ஆண்டி அக்கரை சேர்ந்தான். படகு இக்கரை வந்தது.
“பெண்ணே, நீ யார்? ஆண்டி உனக்கு என்ன உறவு? நீ அவனுடன் போக விரும்புகிறாயா?” என்று சொக்கன் பெண்ணிடம் கேட்டான்.
“ஐயா, நான் தாய் தந்தையற்ற பெண். என் தாய் மாமன் பணத்துக்கு ஆசைப்பட்டு, என்னை இந்தக் கிழவனிடம் தள்ளி விட்டான். நான் அவனுடன் போவதைவிட ஆற்றில் விழுந்து சாவது நல்லது என்றுதான் நினைக்கிறேன். என்னைப் படகில் இட்டுச் செல்ல வேண்டாம். சென்றாலும் நான் ஆற்றில் குதித்து இறக்கத் தான் துணிந்து விட்டேன்” என்றாள் பெண்.
“வேண்டாம், உன்னை நான் கொண்டு போகவில்லை. ஆனால் நான் உன்னை என் படகில் வைத்து என்னுடன் கொண்டுபோகப் போகிறேன். என்னை நீ மணம் செய்து கொள். நாம் இருவரும் நெடுந்தொலை சென்று வாழலாம்” என்றான்.
பெண் சிறிது தயங்கினாலும், இறுதியில் ஒத்துக் கொண்டாள். படகும் பணமும் சொக்கனுக்கு உரிமையாக இருப்பது தெரிந்தபின் அவள் பின்னும் மகிழ்ந்தாள்.
அந்தப் பெண்ணின் பெயர் மதுரை. சொக்கன் என்ற பெயருடன் அது பொருத்தமாய் இருந்தது. இருவரும் விரைவில் மணமுடித்துக் கொண்டனர். மணமான இரண்டொரு நாளில், படகையும், வீட்டையும் நிலத்தையும் விற்றுப் பணத்துடன் அவர்கள் புறப்பட்டார்கள்.சொக்கன் ஊருக்கே வந்து சேர்ந்தார்கள்.
தன் மனைவியுடன் அவன் மாற்றாந்தாயின் காலில் விழுந்து வணங்கினான். “முக்கால் பணத்தில் நான் மணம் முடித்துக் கொண்டேன் அம்மா! பெண் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” என்றான்.
தாய் வியப்படைந்தாள். அவன் கதை முழுவதும் கேட்ட பின், அவள், அவன் திறைமையைப் பாராட்டினாள்.
அவள் இப்போது சொக்கனை மாற்றாந்தாய்போல நடத்தவில்லை. ஏனென்றால், சொக்கனுக்கு இப்போது செல்வமும் செல்வாக்கும் பெருகிவிட்டன.
தை தக்க தை!
அகுதை என்று ஒரு அரசன் இருந்தான். அவன் நாட்டில் பொய்கை என்று ஒரு செல்வன் வாழ்ந்து வந்தான். பொய்கையின் மகள் இலஞ்சி அழகில் சிறந்தவள். அறிவிலும் அப்படியே. எதையும் எளிதில் அழகாகச் செய்து முடிக்கும் கைத்திறமும் அவளிடமிருந்தது.
பொய்கை ஒரு கரும்பாலை வைத்திருந்தான். அதன் பாகு நன்றாகக் காயும்போது, அவள் சிறிது செம்பாகு எடுத்து வைத்துக் கொள்வாள். அதில் பலவகை வண்ணங்குழைத்து, அவள் வகைவகையான பொம்மைகள், சித்திரக் காட்சிகள் தீட்டிப் பிள்ளைகளுக்கு ஊட்டுவாள். சில சமயம் அவள் பாகினாலேயே வீணைகள், ஊதல்கள் செய்து இயக்கி, எல்லாரையும் மகிழ்விப்பாள்.
பொய்கை தன் மகளைப்பற்றி எப்போதும் மிகப் பெருமையாகப் பேசுவான். “வைக்கோலிலிருந்து என் மகள் இலஞ்சி பொன்நூல் நூற்று விடுவாள்” என்று அவன் அடிக்கடி கூறுவது வழக்கம்.
ஒரு தடவை அவன் இவ்வாறு பெருமையடிப்பதை அகுதை மன்னன் நேரில் கேட்டான். உடனே “அப்படியானால், நான் அவளையே மணந்து கொள்ளப் போகிறேன். ஆனால், அவள் வைக்கோலிருந்து பொன் நூற்காவிட்டால், அவள் உயிரையே இழக்க வேண்டும்” என்றான் அவன்.
மன்னன் உரைகேட்டுப் பொய்கை நடுநடுங்கினான். இலஞ்சியோ தந்தையைக் கடிந்து கொண்டாள். ஆனால், சொல் ஆற அரசன் நேரம் தரவில்லை. அவன் இலஞ்சியை உடனே ஒரு சிறிய அறையில் அடைத்துப் போட்டான். ஒரு சிறிது வைக்கோலும், ஓர் இராட்டினமும் கொடுத்தான்.
“நாளை விடியுமுன் இது பொன்நூல் ஆகாவிட்டால், உன் உயிர் போய்விடும், விரைந்து வேலை செய்ய வேண்டும்” என்று அவன் கூறிச் சென்றான்.
இலஞ்சிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் இரவு முற்றிலும் இருந்து அழுதாள்; அழுதழுது முகம் வீங்கி விட்டது.
மூன்றாம் யாமம் ஆயிற்று. வைக்கோல் வைக்கோலாகவே கிடந்தது. அவள் கண்கள் பாதி மூடியிருந்தன.
“தையலே! ஏன் அழுகிறாய்?” என்று குரல் கேட்டு அவள் திடுக்கிட்டெழுந்தாள்.
அவள்முன் ஒரு முழமே உயரமுள்ள ஒரு கூழை உருவம் நின்றது. அதன் தோற்றம் அருவருப்பாகவும், அச்சந் தருவதாகவும் இருந்தது. அதன் மீசையும், தாடியும் மட்டும் ஒரு முழம் நீண்டு சுருண்டு கிடந்தன. அது ஒரு கூளி.
அவள் முதலில் அச்சத்தால் நடுங்கினாள். பின், “இந்த வைக்கோலை நான் விடியுமுன்பொன்னாக நூற்க வேண்டும். இல்லாவிட்டால் என் உயிர் போய்விடும். நான் என்ன செய்வேன்?” என்றாள்.
“அந்தக் கவலைஉனக்கு வேண்டாம். வேலையை நான் செய்து தருகிறேன். அதற்காக எனக்கு என்ன தருவாய்?” என்று கேட்டது கூளி.
“இதோ இந்தக் கழுத்து மாலையைத் தருவேன்.” என்றாள் இலஞ்சி.
அரை நாழிகைக்குள் வைக்கோல் முழுதும் பொன் கம்பியாக நூற்கப்பட்டுவிட்டது. இலஞ்சி அதுகண்டு வியப்படைந்தாள். அவள் கவலை களிப்பாக மாறிற்று.
மன்னன் அகுதை பேராவலுடையவன். மின்னுகின்ற பொன்னூலைக் கண்டு அவன் மனநிறைவடையவில்லை, அது அவன் பேரவாவைத் தூண்டிற்று. ஆகவே, அவளை இன்னும் மிகுதி வேலை வாங்கிப் பொன்னைப் பெருக்க அவன் விரும்பினான்.
அவன், அவளை ஒரு பெரிய கூடத்தில் அடைத்து வைத்தான். கூடத்தின் பெரும்பகுதியும் வைக்கோல் நிறைந்திருந்தது.
“இத்தனை வைக்கோலையும் ஓர் இரவில் பொன்னாக நூற்காவிட்டால், நாளை நீ உயிரிழப்பாய்” என்று அவன் கூறிச் சென்றான்.
இலஞ்சி மீட்டும் மனம் கலங்கி அழுதாள். அன்றிரவும் கூளி அவள் முன்வந்து நின்றது. “இன்றும் உன் வேலையை முடித்துத் தருகிறேன். என்ன தருவாய்?” என்று கேட்டது.
அவள் தன் கையிலிருந்த கணையாழியைத் தருவதாகக் கூறினாள். அன்றைய வேலையும் இனிது முடிந்தது.
அவள் இடர் இன்னும் தீரவில்லை. மறுநாள் அகுதை, ஒரு வைக்கோல் போரையே அவளிடம் காட்டினான். இவ்வளவையும் இரவுக்குள் பொன்னாக நூற்று ஆடையாகச் செய்ய வேண்டும் என்று அச்சுறுத்திச் சென்றான். ‘இரண்டு நாள் தப்பினாலும், இன்று தப்பவே முடியாது’ என்று எண்ணி இலஞ்சி ஏங்கினாள்.
கூளி அன்றும் மூன்றாம் யாமத்திலேயே வந்தது. இலஞ்சி, அது வருவதை எதிர்பார்க்கவும் இல்லை. வந்ததைக் கவனிக்கவு மில்லை. கவனித்த பின்னும், அவள் மனநிலை மாறவில்லை. ஏனெனில், அன்றைய வேலை கூளியின் மாயத்துக்கும் அப்பாற் பட்டது என்று அவள் கருதினாள்.
ஆனால், கூளி அவளுக்கு நம்பிக்கை ஊட்டிற்று. “உனக்கு அது பற்றிக் கவலை ஏன்? நான் முடித்துத் தருகிறேன். ஆனால், நீ அதற்காக என்ன தருவாய்? அதைச் சொல்!” என்றது.
அவள் பின்னும் விழித்தாள். கொடுக்கத்தக்க பொருளாக, அவளிடம் இப்போது எதுவும் இல்லை. ஆனால், அவள் நிலைமையை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கூளி ஒரு பொறி வைத்தது.
“அம்மணி, ஒன்றுமில்லையே என்று கலங்கத் தேவை யில்லை. உங்கள் முதல் பிள்ளையை எனக்குத் தருவதாக வாக்களித்தால் போதும். முன்போல் உங்கள் வேலையை முடித்துத்தர அட்டி கிடையாது” என்றது.
இலஞ்சி இந்தக் கோரிக்கையை மெல்லவும் முடியாமல், விள்ளவும் முடியாமல் தயங்கினாள். பின் அவள் ஒருவாறு தேறித் துணிந்தாள்.
“என்றோ வரப்போகும் நிலைக்கு, இன்று அஞ்சுவானேன்? கூளி இதனைச் சிலநாளில் மறந்துவிடவும் கூடும்” என்று அவள் எண்ணினாள். ஆகவே, அவள் அதன் கோரிக்கைக்கு இணங்கினாள்.
அவள் வேலை முடிந்தது. அரசன் அவளை அதற்குமேல் அலைக் கழிக்கத் துணியவில்லை. அவன் அவளை மணந்து அரசியாக்கினான்.
அரசி இலஞ்சி அழகிய சிறுமதலை ஒன்றைப் பெற்றெடுத் தாள். அது ஆண் மகவு. அதற்கு அவள் இளங்கோ என்று பெயர் வைத்தாள்.
அவள் கூளியை மறந்துவிட்டாள். ஆனால், கூளி அவளையோ, அவள் வாக்குறுதியையோ மறக்கவில்லை. பிள்ளை பிறந்த நாற்பத்திரண்டாவது நாளில் அது, அவள் முன்வந்து நின்றது.
அவள் மீண்டும் கண் கலங்கினாள்; அழுதாள்; புழுங்கினாள்.
அவளை எப்படியாவது தேற்றி மனமாரக் குழந்தையைத் தரச்செய்ய வேண்டும் என்று கூளி நினைத்தது. ஏனென்றால், மனமாரத் தராத எந்தக் கொடையும் கூளிகளுக்குப் பயன்படாது.
“அம்மணி, பிள்ளையை இப்பொழுதே கொடுத்துவிட வேண்டும் என்று மனங்கசிய வேண்டாம். மூன்றுநாள் தவணை தருகிறேன். அத்துடன் தங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் தருகிறேன். மூன்று நாளும் நான் தங்களை வந்து காண்கிறேன். மூன்று நாளைக்குள், என் பெயரை நீங்கள் எப்படியாவது ஊகித்துக் கூறிவிட்டால் போதும்! உறுதிமொழிப்படி நீங்கள் குழந்தையைத் தரவேண்டாம். ஆனால், மூன்று நாட்களில் நீங்கள் கூறும் பெயர்களுள் என்பெயர் வராவிட்டால், நீங்கள் கண்கலங்காமல், மகிழ்ச்சியுடன் பிள்ளைiயை என்னிடம் தந்துவிட வேண்டும்” என்றது.
நீரில் தத்தளிப்பவர் துரும்பையும் சிக்கெனப் பிடிப்பது போல, அவள் இவ்வாய்ப்பைப் பற்றினாள். “மூன்று நாளைக்குள் தெரிந்த பெயரையெல்லாம் நினைத்துத் திரட்டிக் கூறினால், எப்படியும் வெற்றி கிட்டலாம்” என்று அவள் நினைத்தாள்.
மூன்று நாள் தவணையால் தனக்கு ஒன்றும் கெட்டுவிடாது என்று கூளி உறுதியாக நினைத்தது. தன்பெயரை அவள் அறியவே முடியாதென்றும், ஆகவே ஒப்பந்தப்படி மூன்று நாளைக்குப்பின், அவளாக மனம் துணிந்து பிள்ளையைக் கொடுத்துவிடுவா ளென்றும் எண்ணி அது மகிழ்ந்தது.
முதல் நாள் கழிந்தது. சாத்தன், வேலன், முருகன், கண்ணன், சொக்கன் முதலாகத் தனக்குத் தெரிந்த தமிழ்ப் பெயர்களை எல்லாம் அவள் கூறிப் பார்த்தாள். கூளி தலையை அசைத்து விட்டது.
இரண்டாம் நாள் வந்தது. செம்பியன், வேம்பன், வழுதி முதலிய தமிழ்ப் பெயர்களையும்; குஞ்சன்: ஐயப்பன், அச்சன் முதலிய தமிழினப் பெயர்களையும்: சண்முகன், சங்கரன், வாசுதேவன் முதலிய அயலினப் பெயர்களையும் அவள் பட்டி பட்டியாக எழுதி வாசித்துப் பார்த்தாள்.
கூளி அசைத்த தலை அசைத்தபடியே இருந்தது. அவள் நம்பிக்கைக் கோட்டை தளர்ந்தது. கூளியின் உறுதி உரம் பெற்றது.
மூன்றாவது நாளும் அவள் தோல்வியையே எதிர்பார்த்து மனமுடைந்து கிடந்தாள். ஆனால், நாடெங்கும் புதுப்பெயர்கள் திரட்ட அவள் அனுப்பியிருந்த ஒற்றர்களுள் ஒருவன், முசுமுசுத்த வண்ணம் ஓடிவந்தான்.
சற்று மூச்சு தணிந்தபின் அவன் பேசினான்.
“அம்மா, கவலை வேண்டாம். பெயரைக் கண்டு பிடித்து விட்டேன்” என்றான்.
“என்னப்பா, அவ்வளவு துணிச்சலாகக் கூறுகிறாய்; பெயர் என்ன? அதுதான் சரியான பெயர் என்று எப்படி நீ துணிய முடியும்?” என்று அரசி இலஞ்சி கேட்டாள்.
"அம்மணி, நான் கண்டுபிடித்த விவரம் கேட்டால் யாவும் விளங்கும். நானும் என் உடன் வந்த துணைவரும் நகரும் நாடும் முற்றிலும் இரண்டு நாளில் துருவிப் பார்த்து விட்டோம். ஆகவே, இன்று நான் காட்டுப்புறமாகச் சுற்றினேன். நடுக்காட்டில் ஒரு சின்னஞ்சிறு வீட்டைக் கண்டேன்.
"அது மின்மினிகளை உள்ளே சுற்றி வைத்த பஞ்சுச் சுருள் போல் ஒளிவீசிற்று. மின்மினிகள் போன்ற சின்னஞ்சிறு விளக்குகள் அதனுள் எரிந்தன. மூன்று கைவிரலகலமுள்ள பலகணிகளும் இரண்டு முழ உயரமுள்ள ஒரு கதவும் அதற்கு இருந்தன.
"உள்ளிருந்து ஒரு கீச்சுக்குரல் காட்டு வெளியில் நெடுந் தொலை கேட்டது.
"வீட்டின் புதுமையையும், இரவின் புதுமையையும் கண்டு ஐயப்பாட்டுடன் அருகிருந்து ஒற்றுக் கேட்டேன். பின் உள்ளே ஒரு பலகணி வழியாக உற்றுப் பார்த்தேன்.
"பாடிய உருவம் - நீங்கள் கண்ட கூளியுருவை நினைவூட்டிற்று. பாட்டு - உங்கள் நிலையை எள்ளி நகையாடிற்று. கூளியின் பெயரையும் அந்தப் பாட்டே எடுத்துக் காட்டிற்று. இதோ அந்தப் பாட்டு:
"தைதக்க தைதக்க தை! தை! தை!
தையலே என்கையில் தயங்காமல்,
தந்திடுன் பிள்ளையை மயங்காமல்! (தைதக்க)
"இருந்துநல் அரசி நீ ஏங்குறவே,
அருந்துவேன் அப்பளம் பருப்புடனே!
ஆடுவேன் பாடுவேன் வியப்புடனே! (தைதக்க)
"தைதக்க தை என்றன் பெயர் என்றே,
தரணியில் அறிபவர் யார் இன்றே?
நெய்தொக்க தசைதின்பன் நான் அன்றே! (தைதக்க)
"வலஞ்சுற்றி இடஞ்சுற்றி விசையுடனே,
ஆடுவேன் பாடுவேன் இசையுடனே,
கொதிகல நெய்சுற்றும் வடைஎனவே! (தைதக்க)
“சென்றது ஒன்று நாள், இரண்டு, மூன்றே,
வென்றது நான், இனி வெல்வது நான்,
வெற்றி கொண்டாடி மகிழ்வது நான்!” (தைதக்க)
“நாளை வெற்றி என்ற வீறாப்பில், அவ்வுருவே இன்று தன் பெயரை வெளியிட்டுவிட்டது. ஆகவே, இனிக் கவலையில்லை அம்மணி!” என்றான் ஒற்றன்.
அரசி இலஞ்சிக்கு வந்த களிப்பில், அவள் ஒற்றன் மீது பொன்மலர்கள் தூவி அவனை வாழ்த்தினாள்.
மறுநாள் கூளி வெற்றி எக்களிப்புடன் வந்தது.
“அம்மணி, என்பெயரை இன்றாவது கண்டு ஆராய்ந்து முடிவு கட்டியிருப்பீர்களென்று நம்புகிறேன்” என்றது அது.
“ஆம்” என்றாள் அவள்.
“என்ன பெயர்?” என்று அது கேட்டது.
“தை தக்க தை” என்றாள் இலஞ்சி.
இடிகேட்ட அரவம் போல் கூளி இறந்துவிட்டது.
அரசனான அகுதையுடனும், புதல்வனான இளங்கோ வுடனும் இலஞ்சி அரசி இனிது வாழ்ந்தாள். அரசியின் அருங்கதை கேட்டு அகுதைகூடத் தன் பேராவலை விட்டொ ழித்தான். அவள் தந்தையும் நனி மகிழ்ந்தான்.
பழிதீர்த்த குரங்கரசன்
வேல்மாறன் என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் அரண்மனை ஒரு சிறு நகரம் போலிருந்தது. அதில் அத்தனை மாடகூடங்கள், தெருவீதிகள், சதுக்கங்கள் இருந்தன. அரண்மனையின் பின் உள்ள தோட்டமும் இதற்கேற்ப ஒரு சிறிய காடாகவும், அதிலுள்ள குளம் மறுகரை தெரியாத ஒரு பெரிய ஏரியாகவும் இருந்தது.
காடுகளில் திரியும் கரடிபுலிகள் போலத் தோட்டத்தின் பல பகுதிகளில் ஆடுமாடுகளும், குரங்குகளும், மான் மிளாக்களும் திரிந்தன. பறவைகளும் ஏராளம். அரண்மனையும் தோட்டமும் சந்திக்கும் இடத்துக்கு அருகாமையில், குதிரைகள் கட்டிய ஒரு பெரிய இலாயம் இருந்தது.
விலங்குலகிலே, வேல்மாறன் தோட்டத்து விலங்குகளுக்குத் தனிப்பெருமை இருந்தது. ஏனென்றால், நாட்டு விலங்குகளைவிட அவற்றுக்கு உணவு ஏராளமாகவும் எளிதாகவும் கிடைத்தது.
அதேசமயம், காடுபோலப் பரந்துகிடந்த அந்தத் தோட்டத்தில், அவை, காட்டு விலங்குகளைப்போலவே தங்கு தடையில்லாமல் திரிந்தன.
அவற்றுள்ளும் வேல்மாறன் தோட்டத்தின் குரங்குகளே மிகவும் கொந்தளிப்பான வாழ்க்கை உடையவையாயிருந்தன. ஏனென்றால், அரசிளஞ் செல்வர்களுக்குக் குரங்குகளே விளையாட்டுத் தோழர் களாயிருந்தன. அவர்கள் குரங்குகளுக்கு வகை வகையான உணவுகளும், விளையாட்டுப் பொருள்களும் வழங்கினர்.
வேலையாட்களும் அரண்மனையில் மீந்த சோறு கறிகளையும், காய் கனிகளையும் அவைகளிடையே கொண்டு வந்து படைத்தனர்.
“பிறந்தால் குரங்காய்ப் பிறக்க வேண்டும்; அதிலும் வேல்மாறன் தோட்டத்துக் குரங்காய்ப் பிறக்க வேண்டும்” என்பது குரங்கினச் சூழலில் ஒரு பழஞ்சொல்லாய்விட்டது.
குரங்கினத்தின் அரசன் முசுகுந்தன் என்பவன்; அவன் வேல்மாறன் தோட்டத்திலே ஒரு செவ்விளந்தெங்கைத் தன் அரசிருக்கையாகக் கொண்டு வாழ்ந்தான். வந்தது வருவதும் அறிந்து, வர இருப்பதை உணர்வதில் அவனுக்கு ஒப்பான அறிவுடைய குரங்கு எதுவும் இல்லை என்று குரங்குகள் யாவும் பெருமைப்பட்டன.
முசுகுந்தன் ஒரு நாள் தன் குரங்கு அமைச்சர், குரங்குப் படைவீரர் எல்லாரையும் குரங்கம்பலத்தில் வந்து கூடும்படி அழைத்தான். அவர்கள் எதிர்பாராத ஒரு புதிய ஆணையை அவன் பிறப்பித்தான்.
“குரங்கினக் குடிமக்களே! வேல்மாறன் தோட்டம் நமக்கு ஓர் இன்ப உலகமாகவே இப்போது இருக்கிறது; ஆனால், இந்நிலை நீடிக்காது; விரைவில் நமக்குப் பெரிய இடர் வர இருக்கிறது; ஆகவே, நாம் விரைவில் வேறிடம் செல்ல வேண்டும்; இதுவே என் விருப்பம்; என் ஆணை” என்றான்.
படைவீரர்கள் திடுக்கிட்டனர். ஆனால், வாய் பேசவில்லை. ஓர் அமைச்சகக் குரங்கு எழுந்து அரசனுக்கு வணக்கம் தெரிவித்துப் பேசிற்று.
“அரசே, தங்கள் அறிவைப் பற்றி நாங்கள் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். ஆனாலும் இடர் இன்னது என்று கூறினா லல்லாமல், மண்ணுலகின் ஒரு பொன்னாடான இந்தத் தோட்டத்தை விட்டு நாங்கள் போக விரும்பவில்லை” என்று அது கூறிற்று.
அரசன் மீண்டும் வாய் திறந்தான்.
"தோழர்களே, தோழியர்களே! குரங்குகளாகிய நாம் கொடுத்ததைத் தின்று குலவி மகிழ்கிறோம். தீமையை நாம் வரவழைப்பதில்லை; தீங்கு செய்வதுமில்லை; ஆனால், எல்லா உயிரினங்களும் இதே பண்பை உடையவையல்ல.
"தீமையை வரவழைக்கும் மூடஇனம் ஒன்று இருக்கிறது. அதுதான் ஆடு. தீமை செய்ய அஞ்சாத இனம் ஒன்று இருக்கிறது; அதுதான் மனித இனம்; இந்த இரண்டுக்கும் இடையிலே நம் போன்ற உயிரினங்களுக்கு விரைவில் தீங்கு ஏற்பட இருக்கிறது.
"ஆடு பேராவல் கொண்டது. அத்துடன், அருகில் இருப் பதை விட்டு விட்டுத் தொலைவில் இருப்பதை நாடும். அரண் மனையில் இருக்கிற கம்பிளி ஆடுகள் அடிக்கடி சமையல்கூடம் சென்று பொருள்களை அழிவு செய்கின்றன.
"இவை செய்யும் அழிவைக் கண்டு, மனிதர் அவற்றின் மீது சீற்றங்கொண்டு, கண்டதை எடுத்து அடிக்கிறார்கள்.
ஆய்ந்தோய்ந்து பார்க்கும் மதியில்லாத இந்த மனிதர்கள் என்றேனும் ஒருநாள் அவர்கள் கையில் எளிதில் கிடைக்கும் கொள்ளிக்கட்டையால் அதை அடிக்கக்கூடும். இதனால் மேல் தோல் கம்பளி பற்றி எரியும். அந்த நோவு தாங்காத ஆடுகள் இலாயத்திலுள்ள வைக்கோலில் சென்று புரளும், இலாயம் எரிந்து குதிரைகள் வெந்து புண்ணுக்கு ஆளாகும்.
"குதிரைகள், குரங்குகள் போன்றவை அல்ல. மனித உலகில் அவற்றுக்கு விலை உண்டு. மனிதரோ, தம் பணத்தைக் காக்க வேண்டிய காலங்களில், எந்த விலங்கின் உரிமைகளையும் மதிக்க மாட்டார்கள். தீப்பட்ட புண்ணுக்குக் குரங்கின் கொழுப்பு நல்ல மருந்து என்று மனித உலக மருத்துவம் கூறுகிறது. புண்பட்ட குதிரைகளைக் குணப்படுத்த, மனிதர் அச்சமயம் நம்மை வேட்டையாடத் தொடங்குவர்.
“நான் கூறிய இடர் இதுதான். இதற்காகத்தான் இந்தத் தோட்டத்தின் மாய இன்ப வாழ்வைத் துறந்து, வேறு எங்காவது போக வேண்டும் என்றேன்.”
குரங்கரசன் பேசி நிறுத்தியபின், படைவீரரிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது; சிறிது நேரம் அடங்கிய முணுமுணுப்பு எங்கும் பரந்தது; பின் முதன்மையான குரங்குகள் தம் கருத்தைத் தெரிவித்தன.
"அரசே, நீங்கள் இதுவரை மன்னராயிருந்திருக்கிறீர்கள். ஆணையிட்டிருக்கிறீர்கள். அறிஞராயிருந்திருக்கிறீர்கள். அறிவுரை கூறியிருக்கிறீர்கள்; இப்போது கவிஞராய்விட்டீர்கள், நீங்கள் கூறியவற்றில் உண்மை உண்டு. ஆனால், கற்பனை மிகுதி.
“பல தற்செயல், நிகழ்ச்சிகளை நீங்கள் ஒரே கோவையாகத் தொடுத்துவிட்டீர்கள். இவற்றுள் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டால், அதற்குள் நாம் எச்சரிக்கை பெற்று ஓடிப்போய் விடலாம். ஆகவே, இப்போதே போக வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.”
முசுகுந்தன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி எச்சரித்தான். குரங்குகள் தோட்டத்தைவிட்டு உடனே செல்ல மறுத்தன. வேண்டாவெறுப்பாக, ஆனால், கவலை நிரம்பிய முகத்துடன், முசுகுந்தன் மட்டும் தோட்டத்தை விட்டு வெளியேறி வேறிடம் சென்றான்.
குரங்கரசன் அரசியல் துறவியாய் வாழ்ந்தான். குரங்கமைச்சர் குரங்குலகில் குடியரசு நிறுவி ஆண்டனர்.
ஆனால், குரங்கமைச்சர் மதியைவிட முசுகுந்தன் மதியே சிறந்த தென்று விளங்குவதற்கு நீண்ட நாளாகவில்லை.
முசுகுந்தன் கற்பனை செய்தபடியே விரைவில் நடை பெற்றது. ஒருநாள் ஓர் ஆடு சமையற்கூடத்தில் புகுந்தது. சமையலாட்கள் அதைக் கொள்ளிக்கட்டை எடுத்து அடித்தனர். அது இலாயத்தில் புகுந்து புரண்டது. இலாயம் எரிந்தது. புண்பட்ட குதிரைகளுக்குக் குரங்குக் கொழுப்பு, வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.
முதல் நிகழ்ச்சி நிகழ்ந்ததே, ஓடிவிட முடியும் என்று குரங்கமைச்சர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவர்கள் தகவல் அறியுமுன்பே, நிகழ்ச்சிகள் விரைந்து ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கின. குரங்குகள் ஒன்றுவிடாமல் தோட்டத்தில் வளைக்கப் பட்டன; சில கொலையுண்டன; சில பிடிபட்டுக் கொல்லப் பட்டன; சின்னஞ்சிறு குட்டிகள் கூட மருந்துக்காக இரக்கமின்றிக் கொல்லப்பட்டன.
“முசுகுந்தன் எச்சரிக்கையைக் கேட்டோமில்லையே”!? என்று வருந்தி வருந்திக் குரங்குகள் மாண்டன.
மாளாது மீந்த முசுகுந்தன் மாளவில்லை; ஆனால், அவன் மாளாது மாண்டான். இரக்கமற்ற மாந்தர் கொடுமைக்கு இரையாகித் தன் இனத்தவர் மாண்டதை எண்ணி எண்ணி, அவன் துடித்தான். இனத்தின் பழிக்குப் பழி வாங்கியே தீருவது, அல்லது அம் முயற்சியிலேயே மாள்வது என்று அவன் தீர்மானித்தான்.
குரங்கினத்துக்குப் பின்வருவதை முன்னறிந்து எச்சரித்த அவன் மூளை, இப்போது இனப்பழிக்குப் பழி வாங்குவது எவ்வாறு என்பதிலேயே முனைந்து நின்றது.
அம்முயற்சியில் அவன் மூளை திட்டம் தீட்டிற்று: வெற்றியும் கண்டது.
தோட்டத்துக்கு அப்பாலிருந்த ஏரி மிகப் பெரிதானாலும் அது மனித, நடமாட்டமற்றதாயிருந்தது. விலங்குகள்கூட அப்பக்கம் மிகுதி போவதில்லை. முசுகுந்தன் ஒரு நாள் அப்பக்கமாகச் சென்று வேவு பார்த்தான்.
ஏரிக்கரையில் தண்ணீருக்குச் செல்லும் காலடிகள் சில இருந்தன. அவற்றுள் மனிதர் காலடிகளும் இருந்தன. விலங்கு பறவைகள் காலடிகளும் இருந்தன. ஆனால், எந்தக் காலடியும் நீரிலிருந்து திரும்பி வருபவையாயில்லை. ஈரக் காலடியின் நயப்பும் நிலத்தில் இல்லை. இதைக் கண்டதே முசுகுந்தன் ஏரியைப் பற்றி ஐயங்கொண்டான். அதில் முதலை போன்ற கொடுவிலங்கு ஏதேனும் இருக்கக் கூடும் என்று அவன் எண்ணமிட்டான். அதன் உண்மை காண விரும்பினான்.
அவன், நீரில் கால் வைக்காமலே நீரிலுள்ள ஒரு பூத்தண்டை இழுத்து முறித்தான். அந்தத் தண்டின் மூலமே நீர் குடித்துவிட்டுத் திரும்பும் பாவனையுடன் நின்றான்.
அந்த ஏரியில் ஒரு பெரும்பூதம் வாழ்ந்து வந்தது. நீர் குடிக்க வரும் மனிதர், விலங்குகளை அது உண்டு வாழ்ந்தது. நீரில் அரவம் கேட்டு அது கரைக்கு வந்தது. முதல் தடவையாக ஒரு விலங்கு தன் பிடியிலிருந்து தப்பியது கண்டு, அது அதன் அறிவுக்கு வியந்தது. "மனிதர்கூட என்னிடத்தில் வந்து ஏமாறி ஏமாறிச் செல்கின்றனர். என்னிடத்தில் ஏமாற்றமடையாத விலங்கினம் இருப்பது கண்டு நான் பெருமையடைய வேண்டும்’ என்று அது தனக்குள் எண்ணிற்று. ஆகவே, அது முசுகுந்தனிடம் மதிப்புடனும், அன்புடனும் பேசிற்று.
“குரங்குத் தம்பீ! என் ஏரியில் இறங்கி அதை மாசு படுத்தாதவன் நீ ஒருவன் தான். நீ நீடூழி வாழ்! மாசுபடுத்திய எத்தனைப் பேரையோ நான் விழுங்கியிருக்கிறேன். ஆனால், உன்னை இன்று முதல் நான் நண்பனாகக் கொண்டேன்” என்றது.
“அண்ணா! நீ பலநாள் பலரைத் தின்றிருக்கலாம். ஒரே நாளில், ஒரே தடவை எத்தனைபேரை விழுங்க முடியும்?” என்று கேட்டான் முசுகுந்தன்!
"இது என்ன வேடிக்கையான கேள்வி? எத்தனை கிடைத்தாலும், அத்தனைக்கு நல்லதுதான்! இரண்டாயிரம், மூவாயிரம் கிடைத்தால் கூட, எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அத்தகைய விருந்து எங்கே கிடைக்கிறது?
“நான் கிடைக்கச் செய்கிறேன். நான் கூறியபடி செய்வாயா?”
“ஓ கோ…..!” என்றது பூதம்.
பூதத்தின் கழுத்தில் ஒரு வைரமாலை கிடந்தது. முசுகுந்தன் அதைச் சுட்டிக் காட்டினான். “அந்த வைர மாலையை ஒன்றிரண்டு நாள் என்னிடம் கொடு. அதனைப் பெற்றபின் விரைவில் நான் கூறிய நல்வாய்ப்பு உனக்குக் கிடைக்கும்படி செய்கிறேன்” என்றான். பூதம் அவ்வாறே கொடுத்தது.
முசுகுந்தன் வைரமாலையைத் தன் கழுத்தில் போட்டுக் கொண்டான். பின், அவன், பூதத்திடம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றான்.
முசுகுந்தன் வைரமாலையைக் கழுத்திலிட்டுக் கொண்டு, மரத்துக்கு மரம் துள்ளிக் குதித்துக் கொண்டே கும்மாள மடித்தான். வேலையாட்கள் காண, அதைக் கழுத்திலிருந்து எடுத்து நீட்டியும், அவர்கள் கழுத்தில் போடுவதாக ஆசைகாட்டி ஏய்த்தும் அவன் விளையாடினான்.
குரங்கின் கழுத்தில் உள்ள வைரமாலை பற்றிய பேச்சு, அரண்மனை எங்கும் பரந்தது. மன்னன் வேல்மாறன் காதுக்கும் அது எட்டிற்று. அவன் குரங்கரசைத் தன்னிடம் இட்டுவரும்படி ஆள் அனுப்பினான்.
குரங்கரசன் முசுகுந்தன், வேல்மாறன் முன் வந்து நின்றான்.
“உனக்கு இந்த வைரமாலை ஏது?” என்று கேட்டான் அரசன்.
“நம் தோட்டத்திற்கு அப்பாலுள்ள ஏரியில் நீரரமகளிர் வாழ்கின்றனர். முழுமதி நாளில் நிலாத் தோன்றும் நேரத்தில் அக்குளத்தில் குளித்தெழுபவர்களுக்கு, அவர்கள் இம்மாதிரி ஒரு வைரமாலையைக் கழுத்திலிட்டு, வாழ்த்தி அனுப்புவார்கள்” என்றான் முசுகுந்தன்.
அப்படியா? ஏரியை எனக்குக் காட்டு! நானும் ஒரு வைர மாலை பெறுகிறேன்!" என்றான் வேல்மாறன்.
முசுகுந்தன், “அரசே, உங்களுக்கு மட்டுமென்ன? அரண்மனை யிலுள்ள ஆண்பெண் குழந்தைகள் எல்லோருமே வரட்டும். முழுமதி நாளில் அத்தனை பேரையும் அழைத்து வாருங்கள். அவர்களனைவரும் முழுகி வைர மாலையுடன் வரும் காட்சியை நீங்கள் பார்த்தபின், நீரா வேந்தனைக் கண்டு, வேந்தனுக்கு வேந்தனென்ற முறையில் உங்களுக்குப் பன்மணிமாலை ஒன்றையே அளிக்கச் செய்கிறேன்” என்றான்.
அரசன், அவ்வாறே அரண்மனையில் ஆணை பிறப்பித்தான்.
முழுமதிநாள் மாலையில் ஏரிக்கரையில் ஆயிரக் கணக்கான ஆடவரும் பெண்டிரும் முதியோரும் இளைஞரும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கூடினர், அரசன் வேல்மாறன், முசுகுந்தனுடன் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைவரும் நிலாத் தோன்றிய அதே கணத்தில் நீரில் இறங்கினர். பூதம் அத்தனை பேரையும் அரை நொடிக்குள் விழுங்கித் தன் ஆராப்பசியைத் தீர்த்துக் கொண்டது.
அவர்கள் வைரமாலையுடன் தன்முன் வருவதை எதிர்பார்த்து வேல்மாறன் காத்திருந்தான். நெடு நேரமானபின், “இன்னும் அவர்கள் ஏன் வரவில்லை?” என்றான்.
“அரசே! அத்தனை பேருக்கும் வைரமாலை போட்டு வாழ்த்த நேரமாகுமல்லவா? நான் எதற்கும் மரத்தின் மேலேறிப் பார்க்கிறேன்” என்று ஏறி, முசுகுந்தன் விரைந்து ஒரு மரத்தின் உச்சிக் கிளையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
“அவர்கள் வருகிறார்களா?” என்று ஆவலுடன் கேட்டான் வேல்மாறன்.
ஆனால், குரங்கரசன் தாளமிட்டுப் பாடத் தொடங்கினான்.
“கழிந்தது குரங்கினப் பரிகள் இன்றே,
அழித்தது மனிதப் பகையினமே!
ஒழிந்தான் இனத்தினில் யானொருவன்,
ஒழிந்த உன் இனத்திலும் நீயொருவன்!
குடியற்ற குரங்கின் மன்னன் நானே-அதுபோல்,
குடியற்ற மன்னனின் மன்னன் நீயே!”
அரசனுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. குரங்கரசன் விளக்கம் கூறினான்.
"அரசே! யாதொரு குற்றமும் உனக்குச் செய்யாத குரங்கினத்தை, உன் குதிரைகளுக்காக நீ கொன்றொழித்தாய், என் இன அழிவைத் தடுக்க முடியாமல், நான் இனமிழந்து ஏங்கி நின்றேன்.
“நான் நினைத்திருந்தால், உன் இனத்தாருடன் உன்னையும் ஒழித்திருப்பேன். ஆனால், நான் இருக்கும் நிலையை, நீயும் இருந்து பார்ப்பது நல்லது என்று நினைத்தேன். உன் இன அழிவைத் தடுக்க முடியாமல், நீயும் அதைப் பார்த்து என்னைப் போல வெம்பிப் புழுங்கு வாயாக!”
“இதற்காகவே உன் இனத்தவரனைவரையும் ஏரியிலுள்ள பூதத்துக்கு இரையாக்கினேன். ஆனால், உன்னை மட்டும் இரையாக்காது விட்டு வைத்தேன்” என்றான் முசுகுந்தன்.
பகைவர்களுக்கஞ்சாத வேல்மாறன், குரங்கரசன் அறிவுக்கும் நேர்மை நெறிக்கும் அஞ்சி, மனவருத்தத்துடன் தலைவணங்கிச் சென்றான்.
குரங்கரசன் வைரமாலையைத் திரும்பவும் பூதத்தினிடம் தந்து, தன் இனமழியக் காரணமான தோட்டத்திற்குச் சென்றான். அங்கே உணவையும் நீரையும் வெறுத்து, வேல்மாறன் குரங்கரசனை வணங்கித் தானும் அதனுடன் வடக்கிருந்து உயிர்நீத்தான்.
மரகதப் பாவை
ஆயன் பெருமாள் திருவாரூர்த் தமிழ்க் கழகக் கல்லூரியில் ஒரு மாணவன், தந்தை வழியில் நீடித்த கலை மரபும். தாய் வழியில் நீடித்த புலமை மரபும் அவன் நாடி நரம்புகளில் இணைந்தோடின. கல்லூரியின் ஓய்வு நாட்களில் அவன் முச்சங்க ஏடுகளும் பழந்தமிழ் அருங்கலைப் பொருள்களும் தேடித் தமிழகமெங்கும் சுற்றி வந்தான்.
எதிர்பாராத வகையில் சேர நாட்டில் காப்பியக்குடி என்ற ஊரில் அவன் ஒரு கலைமாளிகையைக் காண நேர்ந்தது. அதில் அண்ணல் பல்லவராயன் என்ற பெருமகன் வாழ்ந்து வந்தான். அவன் சோழப் பெரும் பேரரசில் கடற்படைத் தலைவனாயிருந்து ஓய்வு பெற்றவன். கலைப் பொருள்களைச் சேகரித்துத் தொகுப்பதி லேயே அவன், தன் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தான். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின். அவற்றை அழகுபெற வைத்துப் பேணுவதற்காகவே அவன் காப்பியக் குடியைத் தன் வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்து, அந்த மாளிகையையும் கட்டியிருந்தான். கலையார்வம் காரணமாக அவன் தன் புதல்விக்குக் கூட செழுங்கலை என்றே பெயரிட்டிருந்தான். அப்பெயருக்கேற்ப, அவள் கலையுணர்விலும் கல்வியறிவிலும் சிறந்து விளங்கினாள்.
அண்ணல் பல்லவராயன் தன் கலைப் பொருள்களை எவருக்கும் காட்டியதில்லை. எவரையும் தன் கலை மாளிகை யருகே வரவிடுவதும் இல்லை. ஆனால், ஆயன் பெருமாள் இதையறிந்த பின்னும் சலிப்படையவில்லை. எப்படியாவது அவற்றைப் பார்த்துவிடவே அவன் துடியாய்த் துடித்தான். அண்ணல் பல்லவராயர் கலையார்வம் தூண்டியே இவ்வகையில் வெற்றிபெற அவன் முனைந்தான். ஒரே பெரிய மனிதக் கற்கண்டை இழைத்து அவன் ஓர் அழகிய பேழை செய்தான். அதனுள் தேனையும் தினைமாவையும் வாதுமைப் பருப்புக் களையும் வண்ணப் பாகையும் பயன்படுத்திப் பலநிற மலர்க் கொடிகளும் மலர்களும் பழச் செடிகளும் பழங்களும் அழகுறச் சமைத்தான். அழகுக்கு அழகும் இனிமைக்கு இனிமையும் ஊட்டப்பட்ட இப்பேழையை அவன் கலையார்வலனாகிய அண்ணல் பல்லவராயனுக்குரிய கலைக் காணிக்கையாக எடுத்துச் சென்றான்.
அண்ணல் பல்லவராயனருகே அவன் புதல்வி செழுங்கலை யாழ்மீட்டிக் கொண்டிருந்தாள். பேழையின் அழகு கண்டு அவள் ஓடிவந்து அதைத் திறந்து பார்த்தாள். அதன் அருமைப்பாட்டை உணருந்தோறும், அதை விட்டு அவளால் நகர முடியவில்லை. பேழையையும் தந்தையையும் அவள் மாறிமாறிப் பார்த்தாள். அவளிடம் உயிர்ப்பாசம் கொண்டிருந்த அண்ணல் பல்லவராயன் அவள் மனநிலையறிந்து, ஆயன் பெருமாளை அன்புடன் வரவேற்றான். தன் ஏடுகளையும், கலைப் பொருள்களையும் ஒவ்வொன்றாக அவனுக்குக் காட்டினான்.
கலைப்பொருள்கள் ஒவ்வொன்றையுமே இளமாணவன் ஆர்வமீதூரப் பாராட்டினான். “இதற்குமேல் அழகுத் தெய்வத்தின் முழு உருநிலை உலகில் இருக்க முடியாது” என்று ஒவ்வொன்றையும் உச்ச அளவில் வானாளவப் புகழ்ந்தான். ஆனால், ஒவ்வொரு தடவையும் அடுத்த கலைப்பொருள் முன்னையவற்றையெல்லாம் விஞ்சிய அழகுடையதாகவே தோன்றிற்று. உச்ச அளவுக்கு மேற்பட்ட பாராட்டுரை எதுவும் காணாமல் ஆயன் பெருமாள் நாக்குழறினான்.
இளைஞன் ஆர்வப் புகழுரைகள் கேட்டு, அண்ணல் பல்லவராயன் புன்முறுவல் பூத்தான். “அன்பரே! இந்தப் பொருள்கள் ஒவ்வொன்றையுமே இப்படி உச்ச நிலையில் புகழ்கின்றீரே! தனியழகின் திருவுருவான அழகுத் தெய்வத்தை தெய்வீக அழகுச் சிலையைக் கண்டால் நீர் என்ன சொல்வீரோ?” என்று விதந்துரைத்தான்.
“அத்தகைய தெய்வீக அழகு இம்மண்ணுலகில் இருப்பதல்லவே, ஐய!” என்று மாணவன் விடை பகர்ந்தான்."
மண்ணுலகில் என்ன? இந்தத் தமிழகத்திலேயே - இந்த மாளிகையிலேயே அது இருக்கக்கூடும்!" என்று கண்ணைச் சிமிட்டியவாறு அண்ணல் பல்லவராயன் கட்டுரைத்தான். ஆனால், பேசி வாய்மூடுமுன் அவன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டான். வெளியிட்டுச் சொல்லத்தகாத ஒன்றைச் சொல்லிவிட்டோமே என்ற உணர்ச்சியுடன் அவன் சட்டென எழுந்து உள்ளே சென்றான்.
அழகுத் தெய்வம் என்ற அண்ணல் பல்லவராயன் குறிப்பிட்டது ஒரு கண்காணாக் கற்பனையல்ல என்பதையும் அது ஒரு கண்கண்ட மனித உலகக் கலைப்பொருளே என்பதையும் இப்போது ஆயன் பெருமாள் கண்டு கொண்டான். அதைக் காணும் ஆர்வம் அவனுள் அடக்க முடியாமல் துடித்தெழுந்தது. ஆனால், அண்ணல் பல்லவராயன் மீண்டும் அந்தப் பேச்சை எடுக்கவே தயங்கினான். அதே சமயம் அதைக் காணாமல் திரும்பிச் செல்லவும் ஆயன் பெருமாள் உளங் கொள்ளவில்லை. பல நாள் பல நாழிகை நேரம் அவன் வாதாடி வற்புறுத்தியபின், அண்ணல் பல்லவராயன் இளைஞனைத் தன் மாளிகையின் உச்சமாடிக்கு இட்டுச் சென்றான். அதன் நடுக்கூடத்தின் நடுவறையே கலைத்தெய்வத்தின் கோயிலாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது.
அழகுத் தெய்வத்துக்கேற்ற ஓர் அழகுக் கோயிலாகவே அவ்வறை அமைந்திருந்தது. அதன் நாற்புறச் சுவர்களும் வெண்பளிங்குக் கற்களால் செப்பம் செய்யப்பட்டிருந்தன. சுவர்களின் மேலருகில் சிகப்பு, மஞ்சள், பச்சை ஆகிய மூவண்ணப்பட்டைகள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றின் மீது செங்கழுநீர் வண்ணத்தில் நீலமணி முகடுகள் கூடிய ஒரு தூங்கானை மாடம் உயர்ந்தோங்கி நின்றது. கோயிலின் உட்புறத்திலும் முன்கட்டின் நீலத்தளமும் சுவர்களும் ஒண்பளிங்குபோல் இழைக்கப்பட்ட வெள்ளிப் பாளங்களாலும், பின்கட்டு அதே போல இழைக்கப்பட்ட தங்கப் பாளங்களாலும் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. சிலையின் முன்புறத்தில் வானவில்லின் ஏழு நிறங்களின் சாயல்களும் பாயும்படி ஏழு மெல்லிய வண்ணத் திரைகள் ஊசலாடின. அவற்றை ஒவ்வொன்றாக விலக்குந்தோறும் உயிர்த் துடிப்பு மிக்க அழகுத் தெய்வத்தின் பேரெழில் புதுப்புது மேனியுடன் காண்பவர் உள்ளம் திறை கொண்டது.
அது ஒரு மரகத மணிப்பாவை, ஆனால், அதை ஒரு மணிப் பாவை என்றோ உயிரற்ற ஒரு கலைப் பொருள் என்றோ எவரும் கூறிவிட முடியாது. அந்த அளவுக்கு அது ஒரு கண்கண்ட உயிருருவாக, அதே சமயம் கலையுலகம் கூட என்றும் காணாத கவர்ச்சியுடையதாகத் திகழ்ந்தது. ஒரே மரகத மணியில் அது செதுக்கப்பட்டிருந்தாலும், ஒன்பது மணிகளின் ஒளிக்கூறுகளும் அதன் நிழலொளி வண்ணங்களாகக் காட்சியளித்தன. எட்டு மெய்ப்பாடுகளும் ஒன்பது சுவைத் திறங்களும் கொஞ்சிக் குலவ, அது கலை மொழியிலேயே கலைஞருடன் பேசிற்று. அதன் ஒரு கண்காட்சியே அத்தனை மெய்ப்பாடுகளையும் சுவைத் திறங்களையும் எழுப்பி அதனை ஓர் உணர்ச்சிப் பிழம்பாக்கி இருந்தது. அத்துடன், எவ்வளவு நேரம், எத்தனை தடவை அதைப் பார்த்தாலும் பார்ப்பவருக்கு அயர்வு தோற்றாத வகையில் அது கணந்தோறும் புதுப்புது அழகுவண்ணம் தோற்றுவித்து வந்தது.
உயிர்ப்பாசத்துடன் எதையோ சென்றணைக்க விரைவது போல அச்சிலையின் ஒரு கை முன்னே தாவிற்று; எதனாலோ வலிந்து இழுக்கப்படும் நிலையில் உயிர்ப் போராட்டத்துடன் துடி துடித்தது மற்றொரு கை; இவ்விருவகை உணர்ச்சிகளிடையே சிலையின் அகமும் முகமும் ஆகமும் எத்தனையோ உணர்ச்சிப் படிகளை ஒரே கணத்தில் அலையலையாக எழுப்பின. ஆவல், அச்சம், துடிதுடிப்பு, திகில், ஏமாற்றம், ஏக்கம், ஆர்வ உறுதி மனித உள்ளத்தின் வேறுவேறு வகைப்பட்ட இந்நிலைகள் யாவற்றையும் ஒருங்கே தீட்டிக்காட்டும் ஒரு மாதிரிப் படிவமாய் அது இயங்கிற்று.
ஆயன் பெருமாள் வைத்தகண் வாங்கவில்லை; கண் இமைக்கவில்லை; அது அன்று சிலை; தானே சிலை; என்னும் அளவில் அவன் நின்றான். அண்ணல் பல்லவராயன் அவன் முதுகில் மீண்டும் மீண்டும் தட்டிய பின்பே, தான் சிலையல்ல, தன் முன் உயிர்ப்புடன் இயங்கும் உயிருருவந்தான் சிலை என்பதை அவன் உணர்ந்தான். சிலையில் ஈடுபட்டு அவன் தன்னிலை மறந்திருந்தது போலவே, செழுங்கலை அவன் நிலையில் ஈடுபட்டுத் தானும் மெய்ம்மறந்திருந்தாள். ஆயன் பெருமாள் இக்கிளை நாடகக் காட்சியை உணரவில்லை. ஆனால், அண்ணல் பல்லவராயன் கண்ணுக்கு அது தப்பவில்லை. இக்காட்சி அவன் எதிர்பாராதது; ஆனால்; விரும்பாதது அன்று; என்பதை அவன் தோற்றம் காட்டிற்று. அவன் உள்ளம் உள்ளூரப் பூரிப்படைந்தது, - முகம் மலர்ச்சியடைந்தது.
கலைநங்கையின் உள்ளுறையை ஆயன் பெருமாள் உணரவில்லை. ஆயினும், சிலையின் உள்ளுறையை உணர்ந்து கொண்டான். சிலையின் அழகு தெய்வ அழகு தான். ஆனால், அதன் உணர்ச்சியும் துடிப்பும் மனித வாழ்க்கைக்கே உரியவை என்பதை அவனால் எளிதில் ஊகிக்க முடிந்தது. அச்சிலைக்கு உயிர் தந்த வாழ்வின் உயிர்முதல் யாது என்பதையும், அதை ஆக்கிய உயிர்க் கலைஞன் யார் என்பதையும் அறியாமல் திருவாரூர்க்குத் திரும்பிச் செல்ல அவன் விரும்பவில்லை. எனவே, கல்லூரி ஓய்வு நாட்கள் விரைந்து கழிந்து வந்தாலும் அவன் காப்பியக் குடியை விட்டகலாமல், அந்தக் கலை மாளிகையைச் சுற்றியே வட்டமிட்டான்.
அவன் விடாமுயற்சி வீண் போகவில்லை. ஒரு நாள் அண்ணல் பல்லவராயன் தானாகவே சிலை பற்றிப் பேசத் தொடங்கினான்;
"நான் தென்மாகாணத்தில் கடலாட்சிப் பொறுப்பு ஏற்குமுன், நாகப்பட்டினத்தில் துறைமுகக் காவலனாக இருந்தேன். அங்கே கடாரப் பேரரசன் கட்டியுள்ள சூடாமணிப் பள்ளியைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்களென்றே நினைக்கிறேன். என் அரசியற்பணியை முன்னிட்டே நான் ஒரு நாள் அதைச் சென்று காண நேர்ந்தது. அச்சமயம் அந்தப் புத்தப் பெரும்பள்ளியின் தலைவியாக விருந்த மூதாட்டி என்னுடன் தமிழிலேயே திருத்தமாகப் பேசியது கேட்டு நான் வியப்படைந்தேன். அது கண்டு அவள் புன்முறுவல் பூத்தாள்.
“நான் புத்த சமயம் சேர்ந்தவளானாலும் தமிழ் நங்கை தான். அது மட்டுமன்று. எனக்கு முன் இப்பள்ளித் தலைமை தாங்கியவள் உங்களைப் போலவே ஒரு சோழர் கடற்படைத் தலைவர் மகளே. என் தாய் அவள் குடும்பத்தில் செவிலியாய் இருந்தவள். அப்பெருந்தகை அணங்கு, வாழ்வில் திடுமென கசப்படைந்து இப்பள்ளியில் தஞ்சம் புகுந்தபோது, என் தாய் என்னையும் இட்டுக் கொண்டு அவளுடன் இங்கே வந்தாள். அணங்கின் தலைமையில் சில நாட்களிலேயே புத்தப்பள்ளி உலகெங்கும் பேரும் புகழும் பெற்றுவிட்டது. ஆனால், அவள் வாழ்வை அலைக்கழித்த சூறாவளி இங்கும் தொடர்ந்து வந்து அவள் உயிரைக் கொள்ளை கொண்டது. அவள் பிரிவாற்றாமல் என் தாயும் இறந்தாள். அவர்கள் உயிர்களுக்கு உறுதி ஏற்படும் வகையில், அவர்கள் விட்டுச் சென்ற பெரும் பொறுப்பை நான் என்னாலியன்றவரை நிறைவேற்றி வருகிறேன்” என்றாள் அவள்.
"கடமைக்காகவும் காட்சி காணவுமே பள்ளிக்கு வந்த நான் மூதாட்டியின் பேச்சினால் அப்பள்ளி மீது முழுதும் பாசம் கொண்டேன். என் குடும்பச் செல்வத்தின் பெரும் பகுதியையும் அதற்கே உரிமையாக்கினேன். என் ஆர்வமுயற்சிகள் இதனுடன் நின்றுவிடவில்லை. கடாரப் பேரரசன் அப்பள்ளிக்குத் தமிழகத்தின் சில ஊர்களையே விலை கொடுத்து வாங்கி மானியமாகவிட விரும்பியிருந்தான். சோழப் பேரரசில் எனக்கிருந்த உயிரார்வத்தை அவள் உணர்ந்திருந்தாள். ஆகவே ஒருநாள், நீங்கள் இங்கே காணும் இந்தக் கலைத் தெய்வச் சிலையை எனக்கே பரிசாக அளித்தாள். அத்துடன், தான் முன்கூறிய அணங்கின் வாழ்க்கைப் புயலுக்கே மூலகாரணமான சிலை இது என்றும் கூறி, அச்சிலையையே நடுநாயகமாகக் கொண்ட அப்பெண்மணியின் விளக்கமான வரலாற்றையும் ஒரு கலைக் காவியமாக விரித்துரைத்தாள்.
“நான் இதற்கு முன்பு பழந்தமிழ்க் காப்பியங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்தவன். இப்போது சிலையின் மாயக்கதை ஒன்றே என் உள்ளத்தின் ஆழ்தடம் வரையில் சென்று கிளறும் கலைக் காவியமாய் உள்ளது. முன்பு கண்டகண்ட கலைப் பொருள்களையெல்லாம் தேடித் திரிந்தேன். இப்போது இந்த ஒரு சிலையன்றி வேறு எதனையும் நான் நாடுவதில்லை. என் புதல்வி செழுங்கலையை நான் ஒரு நாள் காணாதிருந்தாலும் இருக்க முடியும். இந்தச் சிலையைக் காணாமல் நான் உயிர்வாழ முடிவதில்லை” என்று கூறிச் சிறிது பெருமூச்சு விட்டான், அண்ணல் பல்லவராயன்.
ஆயன் பெருமாள் சிறிது நேரம் அசைவற்றிருந்தான். பின் மெல்ல, ‘அக்கலைக் காவியத்தின் சுவையில் நானும் சிறிது பங்கு கொள்ளலாமா?’ என்று கேட்டான்.
அண்ணல் பல்லவராயனின் முகம் முற்றிலும் புன் முறுவல்கள் பூத்து மலர்ச்சியுற்றது. “உமது கலையார்வமே என் உள்ளத்தில், சிலைக்கும் செழுங்கலைக்கும் அடுத்தபடியான இடத்தை உமக்கு அளித்துள்ளது. தாரளமாகக் கூறுகிறேன். அத்துடன் செழுங்கலையும் இதுவரை அக்கதை கேட்டதில்லை. நீங்கள் கேட்கும் சமயமே அவளும் முதன் முதலாக என் வாழ்வின் இந்த இன்னொளியை உணரட்டும், எனக்குப் பின் நீங்கள் இருவருமே இந்தச் சிலைத் தெய்வத்தை வைத்துப் பேண வேண்டியவர்கள்” என்றான்.
கலையார்வத்தினிடையே கலைநங்கையின் பக்கம் இதுவரை திரும்பாதிருந்த ஆயன் பெருமாள் இச்சமயம் செழுங்கலையைச் சிறிதே திரும்பி நோக்கினான். உயிர்ச் சிலையின் ஒரு நிழலாகவே அச்சமயம் அவள் அவனுக்குத் தோற்றினாள். அவன் உள்ளமும், செழுங்கலையுள்ளமும் ஒரு கணம் அண்ணல் பல்லவராயனை மறந்து ஒன்றில் ஒன்று ஈடுபட்டன. அடுத்த கணம் இருவர் கண்களும், சிலையையும் அண்ணல் பல்லவராயன் முகத்தையும் ஒரே நொடியில் பார்த்தன. அண்ணல் பல்லவராயன் பேசத் தொடங்கினான்.
அவன் கூறிய மரகதச் சிலையின் மாயக் கதையே இது:
சோழப் பேரரசின் ஈழ நாட்டுப் படையெடுப்பில் அந்நாட்டில் பல குடும்பங்கள் சீரழிவுற்றன. கணவனை இழந்த காரிகையர்களும், தந்தையிழந்த சேய்களும் பலர். ஆனால் எழுமுடி என்ற ஒரு சிறுவன் நிலை, அத்தகையவர்களிடையேயும் தனிப்பட்ட முறையில் இரங்கத்தக்கதாய் இருந்தது. துன்பம் இன்னதென்று அறியாத சின்னஞ்சிறு வயதிலே அவன் உற்றார் பெற்றார் உறவினர் அனைவரையும் இழந்து தவித்தான். அவன் நிலைகண்டு இரங்கிய சோழப் படைத்தலைவன் கங்கராயன்காரி அவனைத் தன் குடும்பத்திலேயே இடங்கொடுத்துப் பேணினான். அவன் புதல்வி செவ்வந்தி கிட்டத்தட்ட எழுமுடியின் வயதே உடையவளாக இருந்தாள். ஆகவே அவள் தோழமைப் பணியாளனாக எழுமுடி இடம் பெற்றான்.
ஈழப்போர் முடிவுற்றபின் கங்கராயன் குடும்பத்துடன் சோழ நாடு திரும்ப வேண்டி வந்தது. சிறுவன் எழுமுடியும் அக்குடும்பத்துடனே சோழ நாட்டுக்கு வந்து, அவர்கள் மனையின் பணியாளாகவே வளர்ந்தான். செவ்வந்தி விளையாடும் சமயம் அவனும் அவளுடன் விளையாடினான். செவ்வந்தி பள்ளிக்குச் செல்லும் போது, அவனும் அவள் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு சென்று அவளுடனே படித்து வந்தான். பணியாள் என்ற நிலையிலேயே செவ்வந்தி உண்ணும்போதும் ஓய்வு கொள்ளும்போதும், அவன் அவளுக்கு வேண்டும் உதவிகள் செய்து அவள் கைகளுள் ஒரு கைபோலப் பழகினான்.
எழுமுடி துணையற்றவனாகவும் பணியாளாகவுமே குடும்பத்தில் இடம்பெற்ற போதிலும், துணையற்றவனுக்கும் பணியாளுக்கும் உரிய பணிவும், பேச்சு நடை நயங்களும் அவனிடத்தில் இல்லை. கங்கராயன் மாளிகையின் வேலையாட் களை அவன் வேலையாட்களாகக் கருதவில்லை நண்பராகவே கருதினான். ஆனால், அதே சமயம் அம்மாளிகைக்கு வரும் உயர்தர விருந்தினரிடம் மற்ற வேலையாட்கள் பணிந்து நடப்பதுபோல அவனால் நடக்க முடியவில்லை. அரசியல் பேராவல் உடைய கங்கராயனுக்கு இது பிடிக்கவில்லை. எழுமுடி மீது அவனுக்கு வரவர மனக்கசப்பே ஏற்பட்டது. ஆனால் அவனை இக்காரணத்தால் மாளிகையிலிருந்து வெளியேற்றவும் அவன் துணியவில்லை. நாடற்ற, வீடற்ற, அவன் நிலை இதற்குள் மற்றயாவர் உள்ளத்திலும் பரிவும் பாசமும் வளர்த்திருந்தது. சிறப்பாக, செவ்வந்தி அவன் இல்லாமல் எதுவும் செய்ய இயலாதவளாய் இருந்தாள். வேறு எத்தகைய பணியாளையும் அவள் இவ்வளவு உரிமையுடன் துணைக் கொள்ள மறுத்தாள்.
எழுமுடியிடம் பாசம் காட்டியவர்களெல்லாம் இரக்கம் என்ற ஓர் உணர்ச்சியையே அவன் மீது கொண்டிருந்தனர். வேறு எத்தகைய தகுதியையும் எவரும் அவனிடம் காணவில்லை. செவ்வந்திக்கு அவன் வாய்ப்பான சமவயதுப் பணியாளன் என்றும் அவள் குடும்பத்தினர் பொதுவாக எண்ணினர். ஆனால் செவ்வந்தியின் உள்ளம் அவனை ஒரு பணியாளாக, இன்றியமையாத துணையாளாகக் கூட என்றும் கருதவில்லை. அவள் தொடக்கமுதலே அவனைத் தன் இன்னுயிர்த் தோழனாக்கிக் கொண்டிருந்தாள். அவள் வளருந்தோறும் அந்த உயிர்த் தோழமை வளர்ந்து கொண்டே வந்தது. யாரும் எதிர்பாராத வகையில், செவ்வந்திகூட அறியாத முறையில், இத்தோழமையே அவனிடம் புதியபுதிய தகுதிகளை வளர்க்கத் தொடங்கிற்று. அதுவே எவரும் அறியா நிலையில் அவள் உள்ளத்திலும் பெண்மையின் முழுநிறை முதிர்ச்சியை உண்டு பண்ணிற்று.
ஒரு பணியாள் - சரிசம வயதுடைய பணியாள்கூட - தன் தலைவியிடம் கொள்ளக்கூடிய பாசத்தைவிட எழுமுடி செவ்வந்தியிடம் கொண்ட பாசம் ஆர்வமிக்கதாய் இருந்தது. அவளை மகிழ்விப்பது ஒன்றே அவன் வாழ்வின் நோக்கமாய் அமைந்தது.
அவன் அவளுக்காகத் தாள்கள் கொண்டு மலர்களைச் செய்வான். அவற்றுக்கு உயிர் மலர்களின் வண்ணம் தீட்டி, அவற்றின் மணமும் ஊட்டுவான். உயிர் மலர்களைவிடச் செவ்வந்தி அவற்றை விரும்பி ஏற்றது கண்டு அவன் எல்லையிலா மகிழ்ச்சியடையவான். தாய் தந்தையர் அவளுக்குத் தந்தத்தாலான பொம்மைகள், வெள்ளி, பொன்னாலான ஊதல்கள், கிலுகிலுப்பைகள் வாங்கித் தந்தனர். ஆனால், எழுமுடி கிடைச்சினாலும் களிமண்ணாலும் அவற்றைவிட உயிர்த்தோற்றமுடைய, அவற்றைவிட உயிரியக்கமுடைய பொம்மைகள், கருவிகள் செய்து தந்தான். தந்தமும் வெள்ளி பொன்னும் வீசியெறிந்து செவ்வந்தி அவற்றையே ஆர்வமாக ஏற்று அகமகிழ்வுற்றாள். அவள் மகிழ்ச்சியில் அவன் கலைத் திறம் வளர்ந்தது. அவன் கலைத் திறத்தின் ஒவ்வொரு மலர்ச்சிப் படியிலும் அவள் கைகொட்டி ஆர்ப்பரித்து ஈடுபாடு காட்டினாள். அவன் இயற்றிய இசைக் கருவிகளில் தன் கலைத்திறம் பெருக்கி, அவள் அவன், கலையைப் பிறரும் வியந்து பாராட்டும்படி செய்தாள்.
செவ்வந்தி ஓர் அழகு மங்கையாக வளரலானாள். எழுமுடியும் அவ்வளர்ச்சியில் அவளுக்குப் பிற்படாமல், வீரமும் வனப்பும் மிக்க ஒரு காளையாக விளங்கினான். ஆனால், இப்பருவ மாறுபாட்டால் அவர்கள் நட்பும் தோழமையும் ஒரு சிறிதும் மாறுபடவில்லை; குறைவுபடவில்லை; அது அவர்களையும் அறியாமல் புதிது புதிதாகத் தளிரிட்டு வளர்ந்து வந்தது. அவள் பின்னல் மீது இப்போதும் அவன் தொடுத்த வண்ண மலர்கள் இடம் பெற்றன. அத்துடன் கல்லூரிக்கு அவள் தூக்கிக் கொண்டு சென்ற பாரிய ஏடுகளின் புறங்களில் அவன் வரைந்து தீட்டிய வண்ண ஓவியங்கள் நகையாடின. அதே சமயம் அவள் பூ போலயிட்டு, குறள் வாசகமும் கலித்தொகை வாசகமும் தீட்டிய வண்ணக் கைக்குட்டை, வீட்டு வேலையில் ஈடுபட்டுழைத்த எழுமுடியின் தலையை அழகு செய்தன. இவை மட்டுமோ? கல்லூரியில் நங்கை படித்த காவியங்கள் பலவும், மாளிகைக்கு வந்தபின் நம்பியின் கலையுள்ளத்திலும் படிவுற்றன. அவை, அவன் இயற்கைக் கலையுணர்வைப் பின்னும் கூராக்கின.
செவ்வந்தி வளர வளர, அவள் திருமணம் பற்றிய எண்ணம் கங்கராயன் அரசியல் பேரவாவின் ஒரு பகுதியாய், அவன் கட்டிய பாரிய மனக்கோட்டைகள் மீதே பறந்தது. அவள் மூலம் தன்னினும் செல்வத்திலும் பதவியிலும் உயர்ந்த ஒரு படைத் தலைவனையோ, அமைச்சர் புதல்வன் அல்லது அரசிளஞ் செல்வனையோ தன் மருமகனாக்கிக் கொள்ள வேண்டுமென்று அவன் அவாவினான். அவள் அழகும் கலைத் திறமும் குணமும் காணக்காண, இந்த அவாவும் மேன்மேலும் உயர்ந்தோங்கி வளர்ந்தது. இப்பேரவா நோக்கிச் செவ்வந்தியின் உள்ளத்தையும் போக்கையும் மாற்ற அவன் முயன்றான். எனவே, எழுமுடியின் தோழைமை யிலிருந்து அவளை மெல்ல மெல்ல உயர்த்த அவன் அரும்பாடுபட்டான். அத்தோழமையின் வலுவைக் காணக்காண, அவனுக்கு எழுமுடி மீது கசப்பு வளர்ந்தது. வீட்டில் அவன் தொடர்பைக் குறைக்கும் எண்ணத்துடன் கங்கராயன் அவனை வீட்டு வேலையிலிருந்து தோட்ட வேலைக்கு மாற்றினான்.
கங்கராயனின் புதிய ஏற்பாட்டால் அவன் கருதிய நோக்கம் ஒரு சிறிதும் கைக்கூடவில்லை. ஏனெனில், எழுமுடியின் வாழ்விடம் தோட்டமானது முதல், செவ்வந்திக்கும் வீட்டைவிடத் தோட்டமும் தோட்ட வீடுமே கவர்ச்சிகரமான இடங்களாயின. அவள் அடிக்கடி தோட்டத்திலேயே சென்று உலாவினாள். ஓய்வு நேரங்களில் அங்கே எழுமுடியுடன் பேசியும் சிரித்தும் பொழுது போக்கினாள். அவள் படிப்புக்கும் பெரிதும் தோட்டவீடே இடமாயிற்று. எழுமுடியின் தோட்ட வேலையும் அவனுக்கு ஓர் உயிர்க் கலையாக்கிற்று. அவன் மலர்களுடன் மலர்களையும், கனிகளுடன் கனிகளையும் ஒட்ட வைத்துப் புதிய மணமலர்களும் வனமலர்களும், புதுவகைச் சுவைக் கனிகளும் உண்டு பண்ணினான். இவற்றில் செவ்வந்தி காட்டிய ஆர்வம் அவன் கலையிலும் புது மலர்ச்சி உண்டு பண்ணிற்று.
செவ்வந்தி எழுமுடி ஆகியவர்கள் தொடர்பில் இன்னும் ஒரு பெரும் புதிர் இருந்தது. தம் இளமை நட்பு இளமை கடந்து வளர்ந்துவிட்டது என்பதையே சூதற்ற அந்த இரண்டு இள உள்ளங்களும் உணரவில்லை. ஏனெனில், அவர்கள் உள்ளுணர்ச்சிகள் அவர்களை அறியாமலே வளர்ந்து வந்தன. ஒருவர் கூட்டுறவில் ஒருவர் இன்புற்றதன்றி அவர்கள் எதையும் எண்ணவில்லை. இளமைக் கால நட்புத் தொடர்பே என்றும் நீடிக்க முடியுமென்று அவர்கள் கருதினர். வருங்காலத்தைப் பற்றிய வேறு அவாவோ, திட்டமோ அவர்களுக்கு எதுவும் கிடையாது. ஓர் இளைஞனும் ஓர் இள நங்கையும் வாழ்நாள் முழுவதும் தோழர்களாக மட்டுமே இருந்துவிட முடியாது என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவேயில்லை. ஆனால் அவர்கள் உள்ள நிலைமையை அறியத் தாய் தந்தையர்களுக்கு நெடுநாள் பிடிக்கவில்லை.
செவ்வந்தியை மணம் நேரும்படி படைத்தலைவர், அமைச்சர், சிற்றரசர், செல்வர்கள் மட்டுமன்றிச் சோழப் பெரும் பேரரசர் குடியின் செம்மல்களே வந்து வந்து கங்கராயன் மாளிகையை வட்டமிட்டனர். அவர்களில் எவரையாவது செவ்வந்தி தேர்ந் தெடுக்கக்கூடும் என்று தாய் தந்தையர் ஆவலாய் எதிர்ப்பார்த்தனர். ஆனால், செவ்வந்தி அவர்களில் எவர் பக்கமும் ஒரு சிறிதும் கருத்துச் செலுத்தவும் இல்லை; திருமணம் என்ற பேச்சுக்கே ஒரு சிறிதும் இடம் அளிக்கவும் இல்லை. கல்வியை முற்றுவிப்பது தவிர வேறெதற்கும் தனக்கு நேரமில்லை என்று அவள் வெட்டொன்று துண்டு இரண்டாய் எல்லாரிடமும் கூறிவிட்டாள்.
செவ்வந்தி மூலம் எழுமுடி இச்சூழ்நிலைகளை உணரத் தொடங்கினான். தன் வருங்கால வாழ்க்கைக்குரிய ஒரு பணி இல்லாமல், இனி நெடுநாள் கங்கராயன் மனையில் இருக்க முடியாது என்பது அவனுக்குத் தெளிவாயிற்று, ஆகவே, எப்படியும் வெளியேறிப் பணி தேடுவதென்று அவன் துணிந்தான். ஆனால், செவ்வந்தி அவனை அவ்வளவு எளிதாகப் பிரிந்து செல்லவிட வில்லை. இருவரும் கூடிக் கலந்தாராய்ந்து, ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி எழுமுடி பகலில் வெளியே சென்று ஏதாவது பணி தேடி அதில் ஈடுபடுவதென்றும், அதே சமயம் தோட்ட வீட்டிலேயே தொடர்ந்து தங்குவதென்றும் அவர்கள் தமக்குள் துணிந்தனர்.
தந்தையின் பேரவா ஒருபுறமும் மகள் மனப்பாங்கு மற்றொரு புறமும் முரண்படுவது கண்டு. செவ்வந்தியின் தாய் கவலை கொண்டிருந்தாள். ஆகவே, இளைஞர் புதிய ஏற்பாட்டை அவள் ஆவலுடன் வரவேற்றாள். கங்கராயனும் அதற்கு ஆதரவளித்தான். இம்மாறுதல் மூலம் எழுமுடியின் தொடர்பு படிப்படியாக விலகிவிட வழியுண்டு என்றே இருவரும் நம்பினர். ஆனால், இங்கும் அவர்கள் ஏமாற்றம் அடைய நேர்ந்தது.
செவ்வந்தியின் பாசமோ எழுமுடியை ஓர் இயற்கைக் கலைஞனாக வளர்த்திருந்தது. அப்பாசம் ஒன்றையே இதுவரை அவன் வாழ்க்கை நோக்கமாகக் கொண்டிருந்தான். ஆனால், அந்தப் பாசத்துடன் போட்டியிடவல்ல புதுப்பாசமாகக் கலையார்வம் இப்போது கனிவுற்றிருந்தது. அவன் இதன் தூண்டுதல் வழிசென்று, நகரிலுள்ள ஒரு மணித் தொழில் கலைஞன் நிலையத்தில் பணி ஏற்றான். ஆசானில்லாமலே ஆசானை விஞ்சி, அவன் அக்கலைத் துறையில் புகழ் பெற்றான். மாணிக்கம், வைரம், வைடூரியம், நீலம், மரகதம் முதலிய எல்லா மணிகளும் அவன் கைத்திறத்தில் இழைந்து உயிர் பெற்றன. அம் மணிக்கலையில் அவன் திறமை தமிழகமெங்கணும் இல்லாத அருந்திறமையாக விளங்கிற்று. அவன் கைத் திறமையால் அவன் பணி செய்த கலைத் தொழில் நிலையத்தின் பெயர் தமிழுலகமெங்கும் பரந்தது. நிலய முதல்வனுக்கு அவன் ஓர் அரிய கருவூலமாக விளங்கினான். அவனைத் தன் நிலையப் பணியாளனாகப் பெற்றதையே ஓர் அரும்பேறாக எண்ணி நிலைய முதல்வன் மகிழ்ந்தான். தன்னாலியன்ற மட்டும் அவனை அத்துறையில் ஊக்கி ஆதரித்தான்.
எழுமுடியின் கலை அவன் கைத் திறத்துடன் நின்றுவிட வில்லை. அவன் உள்ளமும் உணர்வும் முழுதும் அக்கலையுலகிலே ஈடுபட்டுப் புது உலகங்கள் கண்டன. பகல் நேரத்தில் செவ்வந்தி கல்லூரியில் பயின்ற நேரத்தையே அவன் தொழிலில் கழித்திருந்தான். இருவரும் தோட்ட வீட்டில் சந்தித்த பின் செவ்வந்தி பகலில் பயின்ற காவியங்களின் கனவையெல்லாம் அவன் உள்ளத்தில் பாய்ச்சினாள். அவனும் மணியுலகில் கண்ட மாயம் புத்தார்வங்களை யெல்லாம் அவள் உள்ளத்தில் கொட்டி அவளுக்குப் புத்துயிர் ஊட்டினான். இவ்வாறாக, இளைஞன் கலைத் தொழிலாளனான பின், இள உள்ளங்கள் இரண்டும் ஒன்றன் பண்பில் ஒன்று பின்னி முன்னிலும் இரண்டற ஒன்றுபட்டு இணைந்தன.
கங்கராயன் இச்சமயம்தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் வகைமுறைகளைத் தேடிக் கொண்டிருந்தான். சோழப் பேரரசனுக்கு அதுவரை எவரும் அளித்திராத முறையில் அடுத்த புத்தாண்டில் உயர்ந்த கலைப்பொருள் ஒன்றைக் காணிக்கையாகத் தர அவன் எண்ணம் கொண்டான். இந்நோக்கத்துடன் அவன் ஒரு மிகப் பெரிய வைரமணியை வாங்க எண்ணினான். எழுமுடி வேலை பார்த்த நிலையமே மணித் தொழிலில் புகழ் பெற்று விளங்கியதால், அதை அந்நிலையத் தலைவனிடம் கொடுத்தான். பேரரசனுக்கேற்ற முறையில் மிக அழகிய வேலைப்பாட்டுடன் அம்மணியில் ஒரு தமிழ்நங்கை உருச்செதுக்கும்படி கேட்டுக் கொண்டான்.
கலை நிலைய முதல்வன் இப்பணியை எழுமுடியிடமே ஒப்படைத்தான். இந்த வேலையே அவனுக்கு உலகப் புகழை உண்டு பண்ணப் போதியதாதலால், இதில் முழுக் கருத்தும் செலுத்தும்படியும் ஏவினான். இயல்பிலேயே கலையில் உயிரார்வம் கொண்டிருந்த எழுமுடிக்கு இதற்குமேல் தூண்டுதல் தேவைப்படவில்லை. ஆனால், அவன் உள்ளத்தில் கலை ஆர்வத்துடன் ஆர்வமாக இச்சமயம் இடம் பெற்றிருந்தவள் செவ்வந்தி. ஆகவே, அவன் தீட்டிய உயிர்ச் சிலையும் செவ்வந்தியின் சாயலிலேய அமைந்தது. ஒரு சாண் உயரமே உடைய அவ்வைரப் பாவை பேரரசனாலும் நாட்டு மக்களாலும் ஒப்புயர்வற்றதெனக் கொண்டாடப்பட்டது. அதன் மூலம் நிலைய முதல்வன் கூட எதிர்பாராத அளவில் நிலையப் புகழும் எழுமுடியின் கலைப் புகழும் உலகெங்கும் பரந்தன. ஆனால், சிலை செவ்வந்தியின் சாயலாக இருந்ததைக் கண்டவனும், கண்டு மனங் குமுறியவனும் ஒரே ஒருவன் இருந்தான் - அவன் செவ்வந்தியின் தந்தையாகிய கங்கராயனே!
பேரரசனுக்குச் சிறந்த காணிக்கை அளித்ததன் மூலம் கங்கராயன் செல்வாக்கு உயர்ந்தாலும், அக்காணிக்கைப் பொருளே அவன் பேரவாவுக்கு ஒரு பேரிடியாகவும் அமைந்தது. எழுமுடியின் கலை வாழ்வுடனும் புகழுடனும் செவ்வந்தியின் வாழ்வு பின்னிப் பிணையத் தொடங்கிவிட்டது என்பதை அவன் கண்டான். அவளுக்கு வயது இருபத்தொன்றாகியும் இன்னும் அவளாக ஒரு மணமகனைத் தேர்ந்து கொள்ளாததன் மருமத்தையும் அவன் இப்போது உணர்ந்தான். இனி ஒரு கணம்கூடத் தாமதியாமல் அவர்கள் உறவை முறித்து விட வேண்டும் என்ற துணிவு அவனுக்கு ஏற்பட்டது. ஆகவே செவ்வந்தியை பேரரசர்குடிச் செம்மல் ஒருவனுக்கே கொடுப்ப தென்று வாக்களித்து, மண உறுதிச் சடங்கையும் அவள் விருப்பத்தை எதிர்பாராமலே நடத்தி விட்டான். மணவிழாவுக் கான நாளும் குறிக்கப்பட்டு விட்டது. அதற்கான ஏற்பாடுகளும் செவ்வந்தி கண்முன்பே ஆரவாரமாகத் தொடங்கப்பட்டன.
தன் உண்மை நிலையைச் செவ்வந்தி இப்போதுதான் உணர்ந்தாள். இனி, தந்தையின் கைக்குள் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டிருந்தால், தன் உளமார்ந்த வாழ்க்கைத் துணைவனை இழக்க நேரும் என்பது அவளுக்குத் தெளிவாயிற்று. அவள் எழுமுடியுடன் நீடித்து ஆராய்ந்து மணநாள் நெருங்குமுன் வெளியேறத் திட்டமிட்டாள்.
அவர்கள் திட்டம் கிட்டத்தட்ட வெற்றியடைந்தது. புதிய இடத்தில் தொழில் தொடங்குவதற்கு உதவியாக, செவ்வந்தி தன் அணிமணிகளை ஒரு கைப்பெட்டியில் வைத்துப் பூட்டி எடுத்துக் கொண்டாள். இருவரும் இரவே எவரும் அறியாமல் மாளிகையை விட்டுத் தோட்டப் பக்கமாக வெளியேறிச் சென்றனர். ஆனால், போகும் வழியில் முதியவனான ஒரு குடும்பப் பணியாள் அவர்களைத் தடுத்து நிறுத்த முனைந்தான்.
எழுமுடி அம்முதிய பணியாளை உதறித் தள்ளிவிட்டுப் போகவே விரும்பினான். குடும்பத்தின் செல்வியை எவரும் கொண்டு செல்லாமல் தடுப்பது தன் உயிர்க் கடமை என்று சரியாகவோ தப்பாகவோ கிழவன் கருதினான். அவர்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு மற்றவர்களைக் கூவியழைக்க முயன்றான். வேறு வழியற்ற நிலையில் எழுமுடி கடுஞ் சீற்றத்துடன் அவனைத் தாக்கி அப்பால் தள்ளினான். கிழவன் தள்ளாடி விழுந்தபோது அருகிலிருந்த தூணில் அவன் தலை மோதிற்று. கூக்குரலிட முடியாமலே அவன் வீழ்ந்து ஒரு கணத்தில் உயிர் நீத்தான்.
காதல் துணைவர் வெளியேறியதை மாளிகை யிலுள்ளவர்கள் விடிந்த பின்னரே அறிந்தனர். வயது சென்ற பணியாள் இறந்ததை அவர்கள் காவல் துறையினருக்கோ, வெளியாருக்கோ தெரியாமல் மறைக்கவே முயன்றார்கள். குடும்பத்தின் உரிமைப் புதல்வி தப்பியோடியதைக்கூட அவர்கள் கூடிய மட்டும் அடக்கவே விரும்பினர். ஏனென்றால், இரண்டு குடும்பத்துக்கும் இருந்த பெருமதிப்பை இது குலைத்துவிடும் என்று அவர்கள் கருதினர். ஆனாலும் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டது முதல் கங்கராயன் உள்ளம் குமுறி எழுந்தது. அவன் எங்கும் துணைவர்களைத் தேட ஆள் அனுப்பினான். காவல் துறையிலும் தனக்கு உள்ளூர உடந்தையாயிருந்த சில பணியாளர்களை அதே செயலில் ஊக்கினான்.
துணைவர் வெளியேற்றமும் வேலைக்காரன் கொலையும் நெடுநாள் முற்றிலும் வெளிப்படாதிருக்கவில்லை. பேரரசின் காவல் துறையினரும் நேரடியாக எழுமுடியைத் தேடிப் பிடிக்க ஏற்பாடுகள் செய்து வந்தனர். சோழப் பேரரசின் எல்லா மாகாணங்களிலும் காவலர், ஒற்றர் எங்கும் துருவி வலை வீசினர்.
பேரரசின் எல்லை கடக்கும்வரை எழுமுடியும் செவ்வந்தியும் மூச்சுவிடக்கூட நேரமின்றி அலைந்து திரிந்தனர். பாண்டி நாட்டிலோ, ஈழ நாட்டிலோ, சேர நாட்டிலோ, குடகு நாட்டிலோ அவர்கள் எங்கும் நீடித்துத் தங்க அஞ்சினர். பேரரசின் காவல் துறையினரின் கண்களில்பட அவர்கள் விரும்பவில்லை. சாளுக்கிய நாட்டை அடைந்த பின்பும் தலைநகரிலோ, பெரிய நகரங்களிலோ தங்கித் தொழில் செய்ய எழுமுடி துணியவில்லை. ஏனெனில் சோழப் பேரரசின் ஒற்றர்கள் அங்கே மறைந்து திரிந்து வந்தனர். ஒதுக்கிடம் தேடிப் பஞ்சவடியருகே ஒரு சிற்றூரில் அவர்கள் நிலையாகத் தங்கினர். இங்கே மணம் புரிந்து கொண்டு அவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ்க்கை தொடங்கினர். செவ்வந்தியின் அணி மணிகளை விற்று அமைதியான குடி வாழ்வும் தொழிலும் நடத்த அவாவினர்.
நாடு தொலை நாடானாலும் மணித் தொழில் கலையில் எழுமுடி ஈடுபடுவதனால் பேரிடையூறுவரும் என்று அவன் மனைவி இச்சமயம் எச்சரித்தாள். அவன் கலைப்புகழே அவனைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதே அவள் அச்சம். இதை எழுமுடியும் உள்ளூர உணராமலில்லை. ஆனால், இதற்குள் அவன் கலையார்வம் அவள் காதல் பாசத்தையும் விஞ்சி வளர்ந்துவிட்டது. தன் உள்ளுணர்வையும் மனைவியின் அச்சத்தையும் கீழடக்கி அது அவனை அக்கலைப்பக்கமே இழுத்துச் செல்லத் தொடங்கிற்று.
“செவ்வந்தி! கலையில் பழகிய கையும் மெய்யும் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் தன் திறமை காட்டாமல் இராது. களிமண்ணில் நான் உருச் சமைத்தாலும், கல்லிலும், செம்பிலும் உழைத்தாலும் இதே நிலை ஏற்படத்தான் போகிறது. ஆகவே, வீணே கீழ்த்தரத் தொழில்களில் இறங்குவானேன்? இது தொலை நாடு. இங்கே மக்கள் பேசும் மொழி தமிழன்று; வேறு மொழி; ஆகவே, மணிக் கற்களிலேயே இங்கே தொழில் தொடங்கினாலும் யாரும் நம்மை அறியப் போவதில்லை. நீ வீணாகக் கலவரப் படாதே!” என்று அவன் தேறுதல் கூறினான்.
கலையார்வம் கணவன் உள்ளுணர்வை மறைக்க போதியதா யிருந்ததென்றால், கணவன் பாசம் காரிகையின் நல்லுணர்வையே கீழடக்கப் போதியதாயிருந்தது. கணவன் போக்கின் இடர் தெரிந்தும் அவன் உயிரார்வத்தைத் தடுக்க அவள் துணியவில்லை போழாத மணிப் பாளங்களை வாங்கி எழுமுடி வேலை தொடங்கினான்.
மனைவியின் எச்சரிக்கையை மனத்தில் கொண்டு தொடக்கத்தில் எழுமுடி கூடிய மட்டும் கலைநயமற்ற முரட்டு வேலையை செய்ய முயன்றான். இதற்காக அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள், வேறு எத்தகைய கலைஞனின் கலையையும் அழிக்கப் போதியவை. அவன் கண்ணைக் கட்டிக் கொண்டு சில நாள் வேலை செய்தான். இருட்டில் தொழில் பழகினான். உருவங்களைப் புனைவதில் சுட்டு விரல் உயிர்நிலையான உறுப்பாதலால், அதை முரட்டுத் துணியால் சுற்றிக் கட்டியும், களிமண் வைத்து மூடியும் வேலை செய்ய முயன்றான். ஆனால், இவற்றால் அவன் புகழ் நீடித்துத் தடைப்படவில்லை. இத்தடைகளை மீறி அவன் கலைத் திறமும் புகழும் முன்னிலும் பன்மடங்காக வளர்ந்தன. முன் அத்துறையில் சோணாட்டுக்கு இருந்த பெருமையெல்லாம் மங்கி, பஞ்சவடிக்கு அந்தப் புகழ் கிட்டத் தொடங்கிற்று. சோழப் பேரரசின் காவல் துறையினர் கவனம் இதனால் பஞ்சவடிப் பக்கம் திரும்பிற்று. அது பேரரசுக்கு அயல் நாடாயிருந்த போதிலும் ஒற்றர்கள் அப்பக்கமாக எழுமுடியைத் தேடும்படி ஊக்கப்பட்டனர்.
செவ்வந்தி ஒருநாள் எழுமுடியின் முன் வந்து நின்றாள். அவள் கண்கள் கோவைப் பழங்களாகச் சிவந்திருந்தன. அவளை யறியாமல் கலங்கிய விழிகளிலிருந்து வெப்ப மிக்க இரண்டு துளிகள் அவள் கன்னங்களில் விழுந்து கண நேரத்தில் உலர்ந்தன. அவள் உள்ளார்ந்த மன வருத்தம் கண்டு, எழுமுடி அவளை அருகிருத்தி ஆதரவுடன் பேசினான். “ஏன் கவலைப்படுகிறாய் செவ்வி!” என்று கேட்டான்.
“அன்பரே! கலைஞன் புகழ் காண அவர்கள் மனைவியர் தவங்கிடப்பது இயல்பு. ஆனால், உங்கள் எதிர்பாராத பெரும் புகழ் என்னைக் கலங்க வைக்கிறது” என்றாள்.
புதிய அச்சத்துக்கு இப்போது என்ன வந்துவிட்டது என்று ஏழுமுடி வியந்தான். அவன் குறிப்பறிந்ததுபோல அவள் மீண்டும் பேசினாள்.
“நான், நம் இருவருக்காக மட்டும் அஞ்சவில்லை. கண்ணா! இப்போது… இப்போது….!”
அவள் தயக்கம் அவனுக்கு உடனே செய்தியை உணரச் செய்தது. அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகும் நிலையில் இருந்தாள். குடும்ப வாழ்வின் இந்நிறை பயன் கண்ட எழுமுடி பேச்சு முழுவதையும் மறந்தான். பிறக்க இருக்கும் குழந்தையை எண்ணித் தாயிடம் அன்புரைகள் பேசினான். அவளும் முன் கொண்டிருந்த அச்சத்தை ஒரு சில கணம் மறக்கும்படிச் செய்தான். ஆனால், அவள் அச்சம் முற்றிலும் நீங்கி விடவில்லை. அது வீண் அச்சமன்று என்பதையும் அன்றைப் பொழுதே அவர்களுக்குக் காட்டிவிட்டது.
எழுமுடியின் கலை நிலையத்தில் கலைப்பொருள்கள் வாங்க வந்த அயலான் ஒருவன் கலைப் பொருள்களைக் கூர்ந்து கவனித்து விட்டுத் திடுமென அவனை நோக்கினான். எதிர்பாராத வகையில் ‘நீ தமிழன் அல்லவா?’ என்று தமிழிலேயே கேட்டான்.
தாய்மொழியார்வமும் தாய்மொழியுமே அன்று எழு முடியைக் காட்டிக் கொடுத்து விட்டன. அவன் சிந்தனைக்கு இடமே கொடாமலே “இருக்கலாம்!” என்று தமிழில் பதிலளித்து விட்டான். நேரடியாகப் பதில் கூறும் தன் திறமை பற்றியே முதலில் அவன் பெருமைப்பட்டுக் கொண்டாலும், விரைவில் தன் தவற்றை உணர்ந்தான். தமிழ்ப் பேச்சை அறிந்து கொண்டதாகவும் காட்டி விட்டான். தமிழில் பேசியும் தான் தமிழனே என்று தெளிவுபடுத்தி விட்டான்.
“ஆ! நான் நினைத்தேன்” என்று அயலானாக வந்த தமிழன் தொடங்கினான்.
“நீ எழுமுடியல்லவா?”
“கங்கராயன் வீட்டு வேலைக்காரனைக் கொன்று விட்டு அவன் மகளுடன் ஓடியவன் தானே நீ !”
இக்கேள்விகள் யாவும் எழுமுடியைத் திகிலடைய வைத்தன. ஆனால், முதல் தவற்றை அவன் பூசி மெகுகிவிட முயன்றான்.
“நான் தமிழன் என்பது உண்மையே, ஆனால், நீ கூறும் ஆளல்ல. நீ கூறும் பெயர்களும் எனக்குத் தெரியாது!” என்றான்.
“இந்தப் புளுகை நான் நம்ப முடியாது. ஏன், நீ கூறுவது உண்மையானால், உன் மனைவியை எனக்குக் காட்டு பார்ப்போம். அவள் நான் கூறும் ஆளாயில்லாவிட்டால், நீ கூறுவதை நான் ஏற்கிறேன்” என்றான் அப்புதியவன்.
“இதெல்லாம் என்ன கேள்வி? இது தொழிலகம். இங்கே இந்த வீண் பேச்சுக்களுக்கு இடம் கிடையாது. உடனே எழுந்து போகிறாயா, இல்லையா?” என்று எழுமுடி சீற்றத்துடன் அவனை வெளியே தள்ளினான்.
அவன் தொழிலகமும் வீடும் ஒரே கட்டிடத்தில்தான் இருந்தன. பின் அறையிலிருந்த செவ்வந்தி இக்கலவரத்தை முற்றிலும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். திரை விளிம்பு வழியாகப் பார்த்து, அயலானையும் அவள் அடையாளம் கண்டு கொண்டாள். அவன். அவள் தந்தையின் பழைய நண்பனான ஓர் ஒற்றனே!
அவள் வயிறு குலுங்கிற்று!
ஒற்றனும் அன்று திரும்பி வரவில்லை. அயல்நாட்டில் அவன் அந்நாட்டுக் காவல் துறையினர் உதவியை எளிதில் பெற முடிய வில்லை. அவசரப்பட்டு எதிரியைக் கலவரப்படுத்தி விட்டதற்காக அவனும் வருந்தினான். வீட்டைக் கவனிக்க வேறோர் ஒற்றனை ஏவிவிட்டு, அவன் பேரரசின் மூலமே அயலரசாட்சியின் துணை கோர ஏற்பாடுகள் செய்து வந்தான்.
செவ்வந்தி ஓர் இரவுகூடக் கணவனை அவ்வூரில் தங்கவிட வில்லை. பகலிலேயே மூட்டை துணிமணிகளைக் கட்டினாள் ஒற்றர்கள் கண்கள் வீட்டைக் கண்காணித்து வரக்கூடும் என்பதை அவள் ஊகித்திருந்தாள். ஆகவே, அண்டை வீட்டு வேலைக்காரியின் துணை கொண்டு தன்னை வேலைக்காரியாகவும், கணவனைத் துணி வெளுக்கும் வண்ணானாகவும் உருமாற்றிக் கொண்டாள். இருவரும் இரவில் தனித் தனியே வெளியேறிச் சென்றனர்.
ஊர் எல்லை சென்றதே அவர்கள் நேராக மேல் கடற்கரையோரம் நாடினர். அங்குள்ள துறைமுகங்களுள் ஒன்றில் கப்பலேறி ஈழ நாட்டை அடைந்தனர். அதுவும் அன்று சோழப் பேரரசின் பகுதியாய் இருந்ததனால், அங்கும் அவர்கள் தங்கத் துணியவில்லை. கடாரப் பேரரசு அன்று தமிழர் ஆட்சியிலேயே இருந்தாலும். அது அச்சமயம் சோழப் பேரரசர் ஆணைக்குக் கட்டுப்படாமலே இருந்தது. ஆகவே, ஏழுமுடியும் செவ்வந்தியும் திரிகோண மலையில் மீண்டும் கப்பலேறிக் கடாரம் சென்றனர்.
கடாரத்திலேயே அவர்களுக்கு ஒரு புதல்வன் பிறந்தான். அவர்கள் அவனுக்குக் கடாரச் செல்வன் என்று பெயரிட்டனர். கடாரத்தில் அவர்கள் புது வாழ்வு மீண்டும் தொடங்கிற்று.
தமிழ் வணிகர் கடாரத்தின் நகரங்கள் தோறும் ஏராளமாக இருந்தனர். இது ஒரு வகையில் எழுமுடியின் மறைபுதைவான வாழ்வுக்கு உதவிற்று. இங்கே மொழியே அவனைக் காட்டிக் கொடுத்துவிடக்கூடும் என்ற அச்சத்துக்கு இடமில்லை. ஆனால், முன்பு செவ்வந்தியின் எச்சரிக்கையை மீறி, மணித் தொழிற் கலையே மேற்கொண்டதனால், பஞ்ச வடிவில் அவன் இடையூறுகளை வருவிக்க நேர்ந்தது. இதனை இப்போது அவன் மனத்துள் கொண்டு, செவ்வந்தியின் கருத்துக்கு விட்டுக் கொடுத்து, மாக்கல்லிலும், தந்தத்திலும் வேலை செய்ய இணங்கினான். இது சில நாள் அவனுக்குப் புதுத்துறை அனுபவத்தையும் புது வெற்றியையும் தந்தது.
மாக்கல் வேலை, தந்த வேலை ஆகியவை, புதியனவாயி ருந்ததால் எழுமுடிக்குந் தொடக்கத்தில் வெற்றி முதன்மைநிலை ஏற்படவில்லை. அதே சமயம் அவன் நிலையம் இருந்த நகரிலேயே மற்றொரு கலைஞன் இருந்தான். அவன் சீன நாட்டான். அவன் மாக்கற் பணியும் தந்தப் பணியும் கீழ்த்திசை யெங்கும் ஏற்கெனவே புகழ் பெற்றிருந்தன. எழுமுடி புதிய கலைஞனானாலும் மிக வேகமாக முன்னேறித் தனக்குப் போட்டியிடத் தொடங்குவதை அவன் கண்டு கொண்டான். எழுமுடியின் போட்டியை முளையிலேயே கிள்ளியெறிய எண்ணி அவன் எதிர்ப் பிரசாரத்தில் இறங்கினான். ‘தமிழ்க் கலைஞன் செய்யும் போலிச் சரக்குகளல்ல, உண்மையான முதல்தரச் சீனச் சரக்குகள்’ என்று தன் கலைப் பொருள்களுக்கு விளம்பரம் செய்தான்.
இச்செயல் எழுமுடியின் கலையுணர்ச்சியை மட்டுமன்றி மொழியுணர்ச்சியையும் நாட்டு உணர்ச்சியையும் கிளறிற்று. அதன் பயன் சீனக் கலைஞன் எதிர்பாராததாய் இருந்தது. ஒரு வாரத்துக்குள் தமிழ்க் கலைஞன் சீனக் கலைஞனை அவன் தனித் துறைகளிலேயே வென்றுவிட்டான். எழுமுடியைப் போலவே உலகப் புகழ் பெற்றிருந்த சீனக் கலைஞன் இதனால் மனமுடை வுற்றான். இவ்வீழ்ச்சியை எப்படியாவது ஒரு புதுத் துறையில் ஈடுசெய்ய எண்ணி, அவன் அருமுயற்சி செய்த மணிக் கலையிலேயே விரைந்த தேர்ச்சி பெற்றான். அத்துறையில் தமிழகம் பெற்றிருந்த முதன்மைப் பெயரை அவன் இப்போது எளிதில் சீன நாட்டவருக்கே உரிமையாக்கினான்.
போட்டியின் புதுப்போக்கு எழுமுடியின் உள்ளத்தில் சுருக்கென்று தைத்தது. இங்கும் கலையுணர்ச்சி மட்டுமின்றி, மொழியின் உணர்ச்சியும் அதனுள் பிறிட்டெழுந்தது. அன்று வீட்டில் அவன் உண்ணவில்லை. உடுக்கவில்லை; என்றுமில்லா நிலையில் அவன் அன்று மகன் கடாரச் செல்வனைக்கூட வழக்கம் போல எடுத்து விளையாடவில்லை. செவ்வந்தி அவன் புதுத் தோற்றம் கண்டு பாம்பின்மீது மிதித்தவள் போல பதறினாள். “இது என்ன புது மாறுபாடு, அன்பரே?” என்று துடிதுடித்துக் கேட்டாள்.
“என் கலையுணர்ச்சி அவமதிக்கப்படுகிறது. என் நாட்டின் புகழும், மொழியின் புகழும் அயலான் ஒருவனால் காலின் கீழிட்டுத் துவைக்கப் படுகின்றன. அதைப் பார்த்துக் கொண்டு நான் என் உயிரைக் காக்கும்படி எத்தனை நாள் கோழையாக இருப்பது?” என்று கதறினான்.
செவ்வந்திக்கு முதலில் ஒன்றும் புலப்படவில்லை. செய்தியை விளக்கமாக அறிந்ததும், அவளும் நிலையின் நெருக்கடியை உணர்ந்தாள். கணவன் கலையார்வத்தை அடக்கிவிட்டது போல அவன் புதிய கொந்தளிப்பை அடக்க முடியாதென்று கண்டு கொண்டாள். ஆயினும், அவள் முதல் தடவையாக, தன் நிலையையும் தன் சிறுவன் நிலையையும் அவனுக்கு நினைவூட்டினாள்.
“உயிருக்காக நீங்கள் கோழையாக வில்லை, அன்பரே! கலை யுணர்ச்சியின்முன் என்றோ நீங்கள் உங்கள் உயிரைக் கொடுத்திருப்பீர்கள் என்பதை நான் அறியாதவளல்ல! எனக்காகவும் இந்தச் சிறுவனுக்காகவுந் தான் நீங்கள் இவ்வளவு பொறுமையுடன் துன்பங்களையும் அவமதிப்பையும் தாங்கியிருக்கிறீர்கள் என்று நான் அறிவேன். எங்களை நினைத்து இந்த இக்கட்டிலும் உங்கள் உணர்வுகளைச் சிறிது காலம் அடக்கி வைத்துக் கொள்ளும்படி கோருகிறேன்” என்றாள்.
அவன் அமைதியை நாடி மனைவி உரைத்த இந்த மொழிகளே எழுமுடிக்கு ஒரு புதுவழி காட்டிவிட்டன.
‘ஆ’ செவ்வி! உன் மொழியிலிருந்தே உணர்ந்து கொண்டேன், நான் உயிருக்கு அஞ்சும் கோழை என்று! உங்களுக்காக நான் எந்தத் துன்பமும் ஏற்றுவிடவில்லை. உண்மையில் நீயும் இச்சிறுவனும்தான் எனக்காகத் துன்பத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை நான் விட்டுவிட்டால், உங்கள் இருவரையும் உன் தந்தை ஏற்று ஆதரவு காட்டாமலிருக்கப் போவதில்லை. என் உயிரை காக்கவும் என் இன்ப வாழ்வு கருதியும் இனியும் நான் உங்களையும் என் அவல வாழ்வில் சிக்க வைக்கப் போவதில்லை. அத்தகைய கோழையாய் நான் இனியும் இருக்கப் போவதில்லை. என் கலையுணர்ச்சிக்கு இனியேனும் விடுதலை தந்து, என் மொழிக்கும் நாட்டுக்கும் இனத்துக்கும் நேர்ந்த இழுக்கைத் துடைத்து விடத் துணிந்து விட்டேன்" என்று கூறி அவன் வெளியேறினான்.
‘கலை வென்றது, காதல் தோற்றது!’ - இதைச் செவ்வந்தி அந்தக் கணமே உணர்ந்தாள். ஆனால், அத்தகைய கலைஞனைக் காதலித்த அந்நங்கை இத்தோல்விக்காக வருந்தவில்லை - அத்தகைய வீறார்ந்த கலைஞனைக் கணவனாகப் பெற்றதை எண்ணி அன்று அவள் மகிழ்வின் உச்ச எல்லை எய்தினாள்.
அவள் தயக்கங்கள் மறைந்தன. அச்சம், எச்சரிப்பு, அறிவுரை ஆகிய எதுவும் அன்று முதல் அவளிடமிருந்து வெளிவரவில்லை. குறுகிய காதல் சூழலிலிருந்து கலைவானில் வீறியெழுந்து பறந்த கணவனைப் போலவே, அவளும் தன் வாழ்விலிருந்து காதல் வானில் வீறி எழுந்து பறந்தாள். காதலனுக்காக அவளும் காதலின் எல்லை தாண்டினாள். கணவன் நோக்கத்தையே தன் நோக்கமாக ஏற்றாள் - அவன் பாதையில் குறுக்கிடாமலே அவனைக் காக்கும் திட்டங்களில் தனித்து நின்று ஈடுபட்டாள்!.
அவள் காதல் வாழ்வில் தோன்றிய புதிய மாறுதலை எழுமுடி கண்டான். அவன் கலை முன்னிலும் வீறி எழுந்து தெய்வக் கலையாகச் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கிற்று!
எழுமுடி இப்போது தன் கலை நிலையத்தை மணிக் கலை நிலையமாக்கினான். தன் கலையார்வம், கலைத்திறமை, கற்பனை ஆகிய யாவற்றையும் காட்டி ஒன்றன்பின் ஒன்றாக வியத்தகு கலைப் பொருள்களைப் படைத்தான். அவற்றுள் ஒன்று, அவன் முன்பு பேரரசனுக்குரிய பரிசாக இயற்றிய சிலையையும் விஞ்சிய புகழை அவனுக்குத் தந்தது. அது வைரமணிச் சிலையன்று; மாணிக்க மணிச் சிலை; முந்திய சிலையில் செவ்வந்தியின் உருவமே அவன் கலையுணர்வைத் தூண்டியிருந்தது. அதே உருவம்தான் இப்போதும் அவன் உள்ளத்தில் நிழலாடிற்று. ஆனால் செவ்வந்தி அடைந்த மாறுதலை இச்செம்மணிச் சிலையும் காட்டிற்று. கலையார்வ நங்கை இப்போது கலைத் தியாக நங்கையாகக் காட்சியளித்தாள். பெண் வாழ்வு கடந்து பெண்மையில் வீறியெழுந்த அந்நங்கையின் திருவுருவம் இளங்கோ கண்ட கண்ணகியுருவுக்கே புத்துயிர் அளித்து நின்றது. போட்டியிட்ட சீனன் புகழை மட்டும் வென்றமையவில்லை அதன் கலைத்திறன் - எழுமுடியின் ஆர்வ இளமைக் கலையின் புகழையும் வென்றது. சோணாட்டுத் தமிழ்ப் புகழாக நிலவிய அப்பழம் புகழ், இப்போது கடார நாட்டுத் தமிழ்ப் புகழாக மிளிர்ந்தது.
புதியபுகழ் அவன் புதிய புகலிடத்தைக் காட்டிக் கொடுப்பதற்கு நெடுநாள் ஆகவில்லை. கடாரத்தின் புதிய மணிக் கலைஞனின் புகழ்கேட்ட கங்கராயன் சோழப் பேரரசன் முழுச் செல்வாக்கையும் திரட்டிக் கடாரப் பேரரசன் அவர்களை வரவேற்று, அவர்களுடன் சென்று எழுமுடியைக் கைப்பற்ற ஒரு காவற்படை வீரர் குழுவையும் அனுப்பினான்.
எழுமுடி தன்மாணிக்கச் சிலைக்குக் குறித்திருந்த விலைக்கு மூவிரட்டி விலை கொடுத்துக் கங்கராயனின் ஆள் அதை வாங்கினான். ஆனால், அடுத்த கணமே நிலையமும் அதனையடுத்த வீடும் ஒரு கணத்தில் படை வீரர்களால் சூழப்பட்டது. மூன்று படைத் தலைவர்களும் எழுமுடியின் முன் வந்து, சோழப் பேரரசன் ஆணை; கடாரப் பேரரசன் துணையாணை; ஆகிய இரண்டையும் காட்டினார்கள். தம்முடன் உடனே புறப்படும்படி கட்டளை யிட்டனர். தன்மனைவியிடம் செய்தி கூறி வருவதாகத் தெரிவித்து அவன் வீட்டினுள் சென்றான்.
செவ்வந்தி அவன் செய்தி கூறுமுன்பே எல்லாம் அறிந்திருந்தாள். அதுமட்டுமன்று. இந்த நாளை எதிர்பார்த்துக் கணவனைக் காக்க அவள் ஒரு திட்டமே வகுத்திருந்தாள். “அனபரே! நீங்கள் கலையில் மூழ்கி உங்கள் உயிரை மறந்தீர்கள். ஆனால், அதைக் காக்கும் திட்டத்திலேயே நான் இத்தனை நாளும் ஈடுபட்டிருந்தேன். இன்று செய்யப்படத்தக்கது ஒன்றுதான். நீங்கள் எங்களை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட வேண்டும். இதில், என்னையும் குழந்தையையும் விட்டுப் பிரிய வேண்டுமே என்று மட்டும் தயங்காதீர்கள். உங்களைத் தப்பிவிக்கத் திட்டம் செய்தது போலவே திரும்பவும் உங்களை அடையவும் நான் வழி வகுத்துவிடுவேன். நீங்கள் மட்டும் நான் கூறுகிறபடி செய்ய வேண்டும் -இது எனக்காக, குழந்தைக்காக!” என்றாள் அவள்.
வாதிட நேரமில்லை என்பதை அவன் உணர்ந்தான். “உங்களைத் திரும்பவும் அடைய வேண்டுமானால் எதுவும் செய்கிறேன்” என்றான்.
“நீங்கள் தப்புவது எளிது. நம் வீட்டுக்குப் பின்புறம் ஒரு துணையற்ற கைம்பெண் - ஓர் ஏழைப் படைவீரன் மனைவி - குடியிருக்கிறாள். அவளுடன் முன்பே எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன். நீங்கள் மாறுவேடமிட்டு அங்கே செல்லுங்கள். வீடு ஆற்றங்கரையில்தான் இருக்கிறது. ஆறு கடந்தால் காடுதான். ஆறு கடக்க ஒரு படகோட்டியும் முன்பே ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு நான் இந்தப் படை வீரர்களைச் சமாளித்துக் கொள்வேன். அதற்குள் நீங்கள் மறைந்து விடுங்கள்” என்றாள்.
அவள் தொனி கண்டு அவன் முன்னிலும் வியப்படைந்தாள்.
“நீ - குழந்தை?” என்று அவன் அங்கலாய்த்தான்.
“நாங்கள் திரும்ப எப்படியும் வந்து சேருவது உறுதி. அதுபற்றி இப்போது பேச நேரமில்லை. ஆனால், திரும்ப எங்களை அடைய நீங்கள் செய்ய வேண்டிய ஒரு கடுமையான காரியம் உண்டு”
“உங்களுக்காக எதுவும் செய்வேன்!”
“உண்மையாகவா?”
“ஏன் அப்படிக் கேட்கிறாய்! என் அன்பு…!”
“அதன் அளவு எனக்குத் தெரியாததல்ல. ஆனால், அதனினும் பெரிது உங்கள் கலையார்வம். நான் எல்லாம் திட்டம் செய்து உங்களை மீட்க வழி தேடும் வரையாவது கலைப் பக்கம் நாடாமல் நிங்கள் உறுதியாக இருக்க முடியுமா?”
“உங்களை அடைய அது வழியானால் கட்டாயமாக இருப்பேன்!”
“சரி, அந்த உறுதி போதும்; ஆனால், இதில் விழிப்பாய் இருங்கள். உங்கள் உயிர்தானே என்று இருந்து விடாதீர்கள். நீங்கள் கலையை நாடி என்னை விட்டுப் பிரிய நேர்ந்தால், நான் உங்களை நாடி இச்சிறுவனை….”
“செவ்வி! வேண்டாம். நான் விழிப்பாய் இருப்பேன்.”
“நீங்கள் விழிப்பாய் இருங்கள். நான் அது பற்றி ஓயாக் கவலையாகவே இருப்பேன். சரி, விரைந்து செல்லுங்கள் போய் வாருங்கள்… போய் வாருங்கள்.”
மாற்றுருத் தாங்கிய வண்ணம் அதன் பின்னோக்கி அண்டை வீடு சென்றான். உயிரைவிட்டுச் செல்லும் உடல்போல அவன் முகம் ஒளியிழந்திருந்தது. ஆனால், உயிரின் பாதியை ஓடவிட்டுக் காத்திருக்கும் மறு பாதி உயிர்போல், ஆறாக் காதல், வீரம், உறுதி, தியாகம், கவலை, துன்பம் ஆகிய உணர்ச்சிகளின் திருவுருவாய் அவள் அவனை நோக்கி நின்றாள்.
நாள் கணக்காக, வாரம், மாதம், ஆண்டுக்கணக்காக, அந்தத் திருவுருவம் கணவனாகவும் கலைஞனாகவும் அமைந்த எழுமுடியின் கண்ணில் நிழலாடிக் கருத்திலும் ஒளியாடிற்று.
அவன் உயிரற்ற சடலம்போலப் படைவீரன் மனைவி முன் சென்று விழுந்தான். ஆனால், ஏழையின் துயர்களறிந்த அக்கைம் பெண் அவனை ஆற்றங்கரைக்கு இட்டுச் சென்று படகோட்டி யிடம் ஒப்படைத்தாள். படகோட்டியும் எழுமுடியின் நிலையறிந்த வனாதலால் வாய் பேசாது அவனை மறுகரைக்குக் கொண்டு சென்றான்.
காவலர் வீட்டுக்குள் வந்து எழுமுடி தப்பிய செய்தியைக் கண்டு பிடிக்குமுன், எழுமுடி கடாரப் பேரரசின் அக எல்லை தாண்டி, அதனை யடுத்திருந்த மலாய் நாட்டின் காடுகளில் காட்டு விலங்குகளில் ஒரு விலங்காக மறைந்தான்.
எழுமுடி மீதும் மகள் மீதும் கங்காராயன் இச்சமயத்திலும் அடங்காச் சீற்றத்துடன்தான் இருந்தான். எழுமுடி தலையைக் கொள்ளுவதுடன் கங்கராயன் அமைய எண்ணவில்லை. எழுமுடிக்காகத் தன் குடிப்பெருமை குலைத்த செவ்வந்தியையும் கண்டதுண்டமாக்கி விட்டு அதற்குரிய தண்டனைக்கு ஆளாகி விடுவதென்றே அவன் துணிந்திருந்தான். செவ்வந்தியின் தாய்கூடச் செவ்வந்தியை வாயார வைதாளேயன்றி மகளிடம் இரக்கம் கொண்டதில்லை. ஆனால், அழுது முகம் வீங்கிய குழந்தையிடங்கூடக் கருத்தில்லாமல் நடைப்பிணமாக வந்த மகளைக் கண்ட கணமே, தந்தைகோவெனக் கதறினான். தாய் அது காணப் பொறாமல் அந்தக் கணமே உயிர்விட்டாள்.
“செவ்வந்தி! நீ செய்தபிழை மிகப் பெரிது. அந்தத் தறு தலையைத் தப்ப வைத்திருக்கிறாய். இதோ உன் தாயைக்கூடக் கொன்றுவிட்டாய். நானும் இனி நெடுநாள் இருக்கப் போவதில்லை. ஆனாலும் உன்னளவில் உன்னை மன்னிக்கிறேன். இந்த ஒளியற்ற இருண்ட வீட்டில் இனி நீயாவது குழந்தையுடன் இரு” என்றான்.
தந்தை மன்னிக்கவில்லை - மனமிடிந்து விட்டான் என்பதைச் செவ்வந்தி உணர்ந்தாள். அவள் எதுவும் பேசவில்லை. நடைப் பிணம் போல வீட்டில் திரிந்தாள். அவள் முகம் குழந்தையைப் பார்த்துக்கூட மகிழவில்லை. குழந்தை துயரைக்கூட அவள் ஆற்ற முற்படவில்லை - குழந்தைதான் அவளை அவ்வப்போது ஆற்ற முற்பட்டது.
தந்தை அவள் கணவனை மன்னிக்கவில்லை - அவளும் தந்தை வீட்டில் சிறைப்பட்டே இருந்தாள் - இது அவளுக்குத் தெரியும் - ஆனால், அவளுக்குச் சிறைக்கும் வீட்டுக்கும் இப்போது வேற்றமை யில்லை - அவள் இருந்தபடி நாட்கணக்கில் இருந்தாள் - கிடந்தபடி வாரக் கணக்கில் கிடந்தாள்.
அவள் உணவு மறுக்கவில்லை - நீர் பருகத் தயங்கவில்லை. ஆனால், உணவும் நீரும் அவள் உடலுக்கல்ல; தந்தை உளமாற்றத்தை எதிர்பார்த்தே - சூழல் மாற்றத்தை எதிர்பார்த்தே - அவள் இயங்கினாள். அவள் தந்தையிடமோ, எவரிடமோ இம்மாற்றம் கோரிப் பேசவில்லை. ஆனால், அவள் வாழ்க்கை பேசிற்று; அதில் வேறு எண்ணமில்லை; கருத்தில்லை, நோக்க மில்லை; அது தவிர, வேறு உயிரியக்கம் அவளுக்கு எதுவும் இல்லை.
கங்கராயனும் ஒளியிழந்தான் - வாடி மெலிந்து வதங்கினான் ஆனால், அவன் வாட்டம் இரும்பின் வாட்டமா யிருந்தது. தன் பேரவாவில் குறுக்கிட்ட எழுமுடியை அவனால் மன்னிக்க முடியவில்லை. துணையற்று, மனைவி மக்களற்றுத் திரிந்த நிலையிலும் சட்டத்தின் உதவி கொண்டு அவனை அழித்தொழிக்கும் உறுதியை அவனால் தளர்த்த முடியவில்லை. ஆகவே, அவன் மன்னிப்பைப் பெற்று அவன் செல்வாக்கின் உதவியால், பேரரசின் மன்னிப்பைக் கணவனுக்கு வாங்கித் தருவதென்ற செல்வந்தியின் திட்டம் இன்னும் எட்டாத் தொலைத் திட்டமாகவே இருந்தது. தந்தை மகள் ஆகிய இருவரும் வாய் பேசாமலே இருந்தாலும், அவள் திட்ட அலைகள் அவன் உள்ளத்திலும், அவன் உறுதியலை அவள் உள்ளத்திலும் மோதிக் கொண்டேதான் இருந்தன.
கங்கராயனுடன் போட்டியிட்டு அரசியல் செல்வாக்கில் வளர்ந்து வந்தவன் வங்காரன் என்ற வணிகச் செல்வன், செவ்வந்தி ஓடிவிட்டபின், அவளுக்கு மண உறுதி செய்யப்பட்ட சோழர் குடிச் செம்மலை மருமகனாக்கிக் கொண்டவன் அவனே. தொடக்கத்தில் கங்கராயன் அவன் நல்லருட்பேறு கண்டு புழுங்கினாலும், அவன் பகைமையைவிட நேசமே தனக்கு நன்று என்பதை விரைவில் உணர்ந்தான். படைத்தலைவனும் வணிகனும் படிப்படியாகப் பழைய போட்டியை மறந்து உண்மையிலேயே நேசமாயினர். இந்நிலையில் பேரரசனுக்கு முன்பு கங்கராயன் அளித்த பரிசுக்கு ஒப்பான ஒரு காணிக்கைப் பொருள் அளிக்கத் தானும் விரும்புவதாக வங்காரன் அவனிடம் தெரிவித்தான். போட்டி கடந்த நேசம் கொண்டு விட்ட கங்கராயன் தன்னிடம் உள்ள மாணிக்கச் சிலையை அவனுக்குக் காட்டினான்.
மாணிக்கச் சிலை இச்சமயம் செவ்வந்தியிடமே இருந்தது. வங்காரன் அரசனிடமிருந்த வைரச் சிலையைப் பார்த்தவன், அதற்கொப்பான சிலையையே எங்கும் பெற முடியாதென்று ஏங்கியிருந்தவன். மாணிக்கச் சிலையைக் கண்டதுமே இவன் துள்ளிக்குதித்தெழுந்தான். “ஆ, ஆ! இது வைரச் சிலையைவிடப் பத்து மடங்கு சிறந்ததாய் இருக்கிறதே!” என்று அவன் வியந்தான். ’இதன் உயிருக்கு உயிர் தந்த கலைஞன் யாரோ?" என்றும் வினவினான்.
செவ்வந்தி இக்கேள்வி செவிப்பட்டபின் புயலில் தளிர்போல நடுங்கினாள். வங்காரன் கேள்விக்குப் பதில் எதுவுமே தேவைப்படாது போயிற்று, அவன் அன்பு கனிந்த நோக்குடன் செவ்வந்தியை நோக்கினான். “மகளே! நான் யாரென்று தெரியாமல் கேட்டுவிட்டேன். உன் மனம் புண்படுவது கண்டு வருந்துகிறேன். அத்துடன் இன்று முதல் நீ கங்கராயன் மகள் அல்ல; என் மகள்; இவ்வளவு ஒப்பற்ற கலைஞனைக் கணவனாகப் பெற்ற உன்னைவிட இந்தப் பேரரசின் தலைவி கூடப் பாக்கியம் உடையவளல்லள். உன் கணவனை நான் எப்படி யாவது மீட்டுத் தருகிறேன். அதுவரை இந்தச் சிலையும் உன்னிடம் இருக்கட்டும் பேரரசனுக்கு நான் வேறு சிலை பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.
ஆண்டுக்கணக்காக அழுதிரா செவ்வந்தி, வணிகன் கால்களைக் கட்டிக் கொண்டு கோவென அழுதான்.
கங்கராயன் கண்கள்கூடக் குளமாயின.
வங்காரன், இதுதான் சமயமென்று கங்கராயன் மனந்திருப்ப முயன்றான்.
“அன்பரே! உம் பேரவாவை நான் அறிவேன். ஒரு பேரரசச் செல்வன் மருமகனானால் உமக்குப் பெரும்புகழும் செல்வாக்கும் கிடைக்குமென்று நீர் எண்ணினீர். அந்தச் செல்வத்தை நான் உண்மையில் பெற்றும் உம் நேசத்தை ஏன் விரும்பிப் பெற்றேன் தெரியுமா? உண்மையில் நான் ஏமாந்தேன். நீர்தாம் பாக்கியசாலி, இந்தக் கலைஞன் கலைக்குச் சோழப் பேரரசென்ன? சோழப் பேரரசும், கடாரப் பேரரசும், சீனப் பேரரசும் சேர்ந்தாலும் ஈடாகாவே! அத்தகைய மருமகன் மீதுள்ள பேரரசின் சீற்றத்தை நானே தணித்து, எழுமுடியை வருவித்துச் செவ்வந்தியுடன் சேர்ப்பதன் மூலம் அவர்களை மகளும் மருமகனும் ஆக்கிக் கொள்ளப் போகிறேன். உங்கள் கருத்தென்ன?” என்றான்.
கங்கராயன் இரும்புறுதி ஒரு கணத்தில் சரிந்தது.
“கலையருமை தெரியாத நான் குருடனானேன். பேரரசனுக்கு அந்தக் கலைஞன் செய்த சிலையைத் தருவதைவிட, அவன் புகழ்கொண்டு பேரரசுகளையெல்லாம் விலைக்கு வாங்கியிருக்கலாம்! ஆனால், என் கண்ணைத் திறந்த உமக்கே இனி என் உயிர்ச் செல்வியையும், அவள் உயிரினும் மேலான அக்கலைச் செல்வனையும் அளித்து விடுகிறேன். இனி நீரே நான், நானே நீர்!” என்று கூறி உணர்விழந்து சாய்ந்தான்.
செவ்வந்தி அவன் உயிரிழந்தானோ என்று துடிதுடித்து அவனை அடுத்து ஆதரித்தாள். உணர்வு வந்தபின், அவன், அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதான். “கண்ணான உன் தாய் உனக்காக இறந்தபின்னும் நான் கண்ணிழந்தேனே!” என்று அவன் மீண்டும் கதறியழுதான்.
நம்பிக்கையிழந்து மறுகிய செவ்வந்திக்கு இப்போது போன உயிர் பாதி மீண்டு வந்ததுபோல் இருந்தது. இதுவரை தந்தை யில்லாப் பிள்ளையாக மட்டுமன்றி, தாயற்ற கிள்ளையாகவும் இருந்த கடாரச் செல்வனை அவள் எடுத்தணைத்துக் கண்ணீரால் கழுவினாள். “என் துன்பத்தில் உன்னையும் மறந்தேனடா, கண்ணே! நீ என் பிள்ளை என்பது கூட இப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது!” என்று புலம்பினாள்.
செவ்வந்திக்கு இன்னும் ஒரே ஒரு கவலை தான் இருந்தது கணவன் பிரிந்து ஆண்டுகள் பலவாய் விட்டன. இவ்வாறு நாளும் கவலையை மறந்து அவன் உயிர் காத்திருக்கக் கூடுமா? - இக்கேள்வி அவள் உள்ளத்தில் எழுந்து எழுந்து அவளை உள்ளூர அரித்தது.
அவள் கேள்விகள் பொருளற்ற கேள்விகளல்ல. செவ்வந்திக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்து அவன் மணிக் கலையை மட்டுமன்றிக் கலையையே துறந்து வாழ்ந்தான். ஆனால் இதனால் அவன் உள்ளுயிர் பேதலித்தது. ஆண்டு செல்லச் செல்ல, அவன் கைகால்கள் உழைக்க மறுத்தன. அவன் உணவை வெறுத்தான். உடையை வெறுத்தான். கண்கள் துயில்கொள்ள மறுத்தன. அவனுக்குப் பைத்தியம் பிடித்தது!
அவன் பைத்தியம் விசித்திரமாயிருந்தது. “நான் கலைஞனல்ல. மணிக்கலை எனக்கு வரவே வராது” என்று அவன் நாக்கு அடிக்கடி கூறும். ஆனால், இது தனித்திருக்கும் நேரத்தில் தான். நாக்குக் கூறுவதை அவன் காதுகள் மட்டுமே கேட்கும். செவ்வந்தி என்ற சொல் அவன் உள் நாக்கு வரைதான் வரும். குரல் வெளியே வரும்போது அவன் ‘செவ்’ என்று ஒலியுடன் நிறுத்திக் கொள்வான். இரண்டு நாழிகை நேரம் சென்ற பின் ‘வந்’ என்பான். நெடுநேரம் சென்றபின்னே நாக்கு ‘தி’ என்று புலம்பும். அவன் எங்கும் அலைந்து திரிந்ததனால், எவரும் மூன்று அசைகளையும் ஒருங்கே கேட்ட தில்லை. அவன் பெயரோ, விவரமோ அறிய முடியாத கடார மக்கள் ஓரிடத்தில் அவனுக்குப் பைத்தியக்காரன் ‘சே’ என்றும் பெயரிட்டழைத்தனர். நாளடைவில் ‘சேவாதி’ என்பதே கடார மொழியிலும் கடாரத் தமிழிலும் அவன் பெயராயிற்று.1
மாணிக்கச் சிலையைக் காணுமுன்பே வங்காரன் தன் பல தேசத்து நண்பர்களுக்கும் பேரரசனுக்கும் தான் அளிக்க எண்ணிய சிலையைப் பற்றி எழுதியிருந்தான். வங்காரன் மைத்துனன் மணிமாறன் சோழப் பேரரசின் அரசியல் தூதனாகக் கடாரப் பேரரசுக்குச் சென்று, அங்கேயே சில காலம் தங்கி நாடு சுற்றிப் பார்வையிட்டு வந்தான். ‘குவலாலபுரம்’ என்ற நகரில் நல்ல மணிக் கலைஞர்கள் இருப்பதறிந்து அவன் அங்கே ஒரு நாள் தங்கினான். நகரின் தலைசிறந்த கலைஞர்களை வரவழைத்து அவர்களிடம் தன் விருப்பம் கூறினான், அவர்களில் பலர் பேர்போன சோழப் பேரரசன் சிலையைச் சென்று பார்த்தவர்கள். ஆனால், பார்த்தவர்களும் சரி, பாராதவர்களும் சரி, எவ்வளவு பணம் தந்தாலும் அதற்கு இணையான சிலையைச் செய்யத்தக்க கலைஞன் உலகிலேயே சிடையாது என்று கூறிவிட்டனர்.
மணிமாறன் கவலை படர்ந்த முகத்துடன் அக்கலைஞர்களை நோக்கினான்.
“ஆம், அண்ணலே! பைத்தியம் பிடித்தவன்தான் அந்த மாதிரிக் கலைப்பொருளைச் செய்ய முடியும். கலைஞர்கள் எவராலும் அதைச் செய்ய இயலாது” என்ற பேச்சு கேட்டு எல்லோரும் திரும்பினர்.
அவனைக் கலைஞர்கள் நன்கு அறிந்திருந்தனர். கலை நிலையங்கள் தோறும் வாயாடாது திரிந்த பைத்தியக்காரன் ’சேவாதி’யே அவன். ஆனால், கலைஞர்கள் என்றும் அவன் வாய் திறந்து ஒரு சொல் கூறியதையே கேட்டதில்லை. வாய்திறந்து பேசினால் என்ன மொழி பேசுவான் என்பதும் யாருக்கும் தெரியாது. முழுப் பைத்தியக்கார மொழி தவிர அவன் வேறு எந்த மனித உலக மொழிகளும் கலந்து பேசியதில்லை.
“அடே, இந்தப் பைத்தியம் ஊமை என்றல்லவா இருந்தோம். இது இன்று பேசுகிறதே1” என்றான் கலைஞனாக வந்திருந்தவரில் ஒருவன்.
“அவன் தமிழல்லவா பேசுகிறான்? ஒரு வேலை தமிழ்நாட்டுப் பைத்தியமாகவே இருக்க கூடுமோ?” என்றான் மற்றொருவன்.
மணிமாறன் முதலில் பைத்தியத்தின் பேச்சை ஒரு பொருளாகக் கருதவில்லை. ஆனால், கலைஞர் பேச்சுக் கேட்டபின் “இந்தப் பைத்தியம் விசித்திரமான பைத்தியம் தான். இதைக் கிளறிப் பார்ப்போம்” என்ற எண்ணம் தோன்றிற்று. கலைஞர்களை அனுப்பிவிட்டு, அவனை மாளிகையினுள்ளே அழைத்தான்.
“பைத்தியக்காரன்தான் அதுமாதிரியான சிலை செய்ய முடியும் என்றாயே! உன்னால் செய்ய முடியுமா?”
“மரகதமணியாகப் பார்த்துப் பெரிதாகக் கொடுங்கள். முயன்று பார்க்கிறேன்”
“உனக்கு என்ன கூலி வேண்டும்?”
“கூலி ஒன்றும் இப்போது வேண்டாம். எவரும் உள்ளே வரமுடியாது ஓர் இருட்டறை வேண்டும். வாரத்துக்கு ஓர் உலர்ந்த அப்பத் துண்டும் ஒரு தொட்டித் தண்ணீரும் வேண்டும். கூலியை நான் செய்து முடித்தபின் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.
பைத்தியத்தின் கோரிக்கை பைத்தியக்காரத்தனமாகத் தானே இருக்கும் என்று மணிமாறன் தனக்குள் கூறிக் கொண்டான். அவன் சிலை எதையும் செய்ய முடியும் என்று அவன் நம்பவில்லை. ஆனாலும், அவன் கேட்டபடி ஒரு பெரிய மரகதமணிக் கல் தருவித்து ஓர் அறையையும் அவனுக்குச் சுட்டிக் காட்டினான். அறையில் மூடியிட்ட ஒரு தொட்டி நீரும் சில உலர்ந்த அப்பத் துண்டுகளும் வைக்கப்பட்டன.
ஐயோ! பைத்தியத்துக்கு உணவு வேண்டுமே என்ற எண்ணத்துடன், அவன் வேலையாளை நான்கைந்து நாட்களுக்குப் பின் சில நல்லப்பங்களுடனும் பாலுடனும் அறைக்கு அனுப்பினான். ஆனால், அறையைத் தட்டும் போதே உள்ளே இருந்து, ’ஐந்து மாதம் இந்தப் பக்கம் வராதே!" என்ற உறுமல் ஓசை கேட்டது.
வாரந்தோறும் ஓர் உலர்ந்த அப்பம் மட்டும் ஒரு கதவிடுக்கு வழியாக உள்ளே போடப்பட்டது. அதை கருக்கிருட்டாய் இருந்ததால், பைத்தியம் அதை மடுத்ததோ மடுக்கவில்லையோ என்பதைக் கூட எவரும் அறியவில்லை.
இரண்டு மூன்று மாதங்களாலவதற்குள் வேலைக் காரர்கள் பைத்தியத்தையும் அதன் அறையையும் பெரிதும் மறந்தே போய்விட்டார்கள். மணிமாறன் மறக்கவில்லையானாலும் அக்கம்பக்கங்களைச் சுற்றிப் பார்ப்பதில் ஐந்து மாதங்களையும் போக்கி, ஐந்தாம் மாதம் திரும்பிவர எண்ணினான். ஆனால், அவன் போன பின்னும் யாராவது அப்பக்கம் அணுகினால் வரும் உறுமல்தான் பைத்தியத்தின் நினைவை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டிருந்தது. ஆனால், உணவு உடை இல்லாமல் காற்று, வெளிச்சம் இல்லாமல் பைத்தியம் எப்படி அறைக்குள் உயிரோடிருக்க முடியும் என்பதை எவரும் அறிய முடியவில்லை. அது மனிதப் பைத்தியமல்ல, பைத்தியம் பிடித்த ஒரு பேயாக இருக்கலாமோ என்று கூடப் பலர் எண்ணி அந்த அறைப்பக்கம் நாட அஞ்சினர்.
ஐந்துமாதம் கழிந்து ஒன்றிரண்டுநாட் கழியுமுன் மணிமாறன் திரும்பி வந்துவிட்டான். பைத்தியத்தைப் பற்றி விசாரித்தான். ஆனால், அந்தப் பக்கத்தில் யாராவது போகத் துணிந்தால்தானே! துண்டுகளை இடுக்கு வழியே போடுவதற்குக்கூட வேலைக்காரர்கள் அஞ்சுகிறார்கள் என்று மணிமாறனுக்கக் கூறப்பட்டது.
மணிமாறன் கதவைத் தட்டினான்.
அரவம் எதுவும் இல்லை.
தக்க ஆள் துணை, கருவித் துணையுடன் உள்ளே தாழிடப் பட்டிருந்த கதவு உடைக்கப்பட்டது. ஆனால், மணி மாறனைத் தவிர உள்ளே யாரும் நுழையத் துணியவில்லை. அவனும் கையில் விளக்குடன் நடுநடுங்கியே சென்றான். ஆனால், உள்ளே சென்றதும் மணிமாறன் குரலாக, ‘ஆ!’ என்ற ஓர் ஓசைதான் கேட்டது. விளக்கு அணைந்தது. அவன் நிலத்தில் விழுந்த ஓசையும் கேட்டது.
பரபரப்புடன் வேலையாட்கள் வேறு விளக்குகள் கொண்டு வந்தனர். மணிமாறன் முகத்தில் நீர் தெளித்து உணர்வு வருத்தினர். ஆனால், அவன் பார்த்த திசையில் அவர்கள் பார்த்த போதும் அவர்கள் ஒவ்வொருவராக ‘ஆ!’ என்றனர்.
மணிமாறன் ‘ஆ…..’ என்று கூறி விழுந்த போது அறைக்குள் இருப்பது பேய்தான் என்ற எண்ணம் எங்கும் பரவிற்று. ஆனால் வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக ‘ஆ!’ என்று கூவியபின் மெல்ல மெல்ல உண்மை வெளிப்பட்டது.
பைத்தியம் இருந்த அறையில் பைத்தியம் இல்லை. ஆனால், ஒரு பீடத்தின் மேல் கண்டவர் கண்களையெல்லாம் ஈர்த்துப் பிணிக்கும் பேரழகுடைய ஒரு மரகதச் சிலை நிற்கும் நிலையில் உயிர்ப்புடன் இலங்கிற்று. பார்த்தவர் எவரும் நெடுநேரம் வரை அது தெய்வீக ஆற்றலுடைய ஓர் உயர் உருவம்தான் என்று எண்ணினர்.
சற்று உணர்வு தெளிந்தபின் மணிமாறன், சிலை சிலைதான் என்ற உணர்வுடன் அதனையும் அறையையும் துருவி நோக்கினான். சிலையின் அடியில் ஒரு பெரிய தாள் கற்றை கூடாக அடைத்து ஒட்டப்பட்டுக் கிடந்தது.
அவன் முதல் உணர்ச்சி, அதை, எடுத்துப் பார்க்கத் தூண்டிற்று!
அதன் மீது “சோழப் பேரரசின் தலைமைத் தூதுவர், கடாரம்” என்று மேல் வரி இடப்பட்டிருந்தது.
உள்ளே அவன் பெயருக்கே ஒரு கடிதமும் முகவரி இடப்படாத மற்றொரு தாள் கற்றைக் கூடும் இருந்தது.
அவன் கடிதத்தில் கீழ்வருமாறு வரையப்பட்டிருந்தது.
"ஊர் பேர் இல்லாது திரியும் பைத்தியமாகிய நான் பேரரசின் பெருந்திருவாளரான மணிமாறனாருக்கு வண்ணமுடன் தெரிவிப்பதாவது;
"தங்களிடம் ஏற்றுக் கொண்ட பொறுப்பை ஒரு பைத்தியத்தால் முடிந்த அளவு நிறைவேற்றி விட்டேன். அது எந்த அளவுக்கு உங்களுக்குப் பிடிக்கும் என்பதை நான் கூற வேண்டுவதில்லை. ஆனால், அதற்கு நான் கூலியாகக் கேட்பதெல்லாம் இது தான். இத்துடன் இருக்கும் மேல்வரி இல்லாத உறையைத் தளபதி கங்கராயனிடம் அப்படியே கொடுக்கும்படியும், வெளியுறை கிழித்தபின் உள்ளுறையில் இருக்கும் மேல்வரி நோக்கி, அதற்கு உரியவரிடம் அதைச் சேர்ப்பிக்கும்படியும் தான்.
"இது தவிர, இங்கே நான் குறிக்க வேண்டுவது யாதும் இல்லை. முகவரியாளரிடம் உறையைச் சேர்த்தபின், இந்த ஏழைப் பைத்தியத்தின் தவறுகள் ஏதாவது தெரிய வந்தால், நான் உங்கள் கட்டளையை உண்மையுடன் நிறைவேற்றியதறிந்து என்னை மன்னிக்கும்படி கோருகிறேன். அந்த நன்றியைத் தெரிவிக்க எனக்கு இனி வாய்ப்பு ஏற்படாது. இக்கடிதத்தை நீங்கள் வாசிக்குமுன் பைத்தியம் வேறுலகப் பைத்தியமாகப் போய் இருக்கும். ஆதலால், இங்கே இப்போதே நீங்கள் உறையை உரியவரிடம் சேர்ப்பித் துதவும் அரும்பணிக்கு முன்கூட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
“உங்களைக் காணும் நற்பேறு பெற்ற பைத்தியம்.”
பைத்தியக்காரன் எங்கே போயிருக்கக்கூடும் என்று வியந்த வண்ணம் அறையை மணிமாறன் மேலும் துருவி நோக்கினான். அதன் பயனாக அவன் கொண்ட வியப்புக்கு எல்லையில்லை. அறையில் போட்ட அப்பத் துண்டுகளில் ஒன்றிரண்டுக்கு மேல் அவன் தின்றிருக்கவில்லை என்பது கண்டான். போட்ட அப்பங்கள் அத்தனையும் உலர்ந்து தூசி படிந்த நிலையில் ஒட்டுத்துண்டுகள் போலக் கிடந்தன. தொடக்கத்தில் வைத்த அப்பத் துண்டுகள்கூடச் செலவாகாமல் அப்படியே இருந்தன. தொட்டியில் தண்ணீர் இயல்பாக வற்றிய அளவில் சிறிது குறைந்து தூசி படிந்து சேறாகக் கிடந்தது. ஐந்துமாதம் உணவும் நீரும் இல்லாமல் அந்தப் பைத்தியம் எப்படி வாழ்ந்தது? எப்படி இந்த அருமையான பணியைச் செய்து முடித்தது? முடித்தபின் எப்படி பூட்டிய அறையினின்றும் வெளியேறிற்று? என்று அவன் திகைத்தான்.
மோட்டில் சில ஓடுகள் விலக்கப்பட்டும் குறுக்குச் சட்டங்கள் முறிக்கப்பட்டும் இருப்பதை இதன் பின்னரே மணிமாறன் கவனித்தான். அதனைப் பின் பற்றி அவன் சென்றிருக்கக்கூடும் இடமெல்லாம் தேடும்படி பணியாட் களுக்குக் கட்டளையிட்டான். காவலர்களுக்கும் செய்தி தெரிவித்து விசாரிக்கும்படிக் கோரினான். பணியாளர் துப்பு எதுவும் இன்றித் திரும்பினர். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன் தான் “பைத்தியம் அடுத்த ஓர் ஊர்க் கோடியில் நின்று, ‘செவ்வந்தி, செவ்வந்தி’ என்று கூவியவாறு உயிர்விட்ட தென்றும், காவலர் உதவியுடன் ஊர் மக்களே அதைப் பைத்தியக் காரருக்குரிய மதிப்புடன் அடக்கம் செய்தனர்” என்றும் காவல் துறையிலிருந்து செய்தி அறிவிக்கப்பட்டது.
வங்காரன் வேண்டுகோளின்படி நல்ல சிலை கிடைத்ததால் மகிழ்ச்சியும், அதைச்செய்த கலைஞன் முடிவால் மனத்துயரும் ஒருங்கே கொண்ட மணிமாறன், தானே நேரில் சென்று கலைஞன் வேண்டுகோளை நிறைவேற்றத் துணிந்தான். தனக்குக் கிடைத்த ஒரு கலைப் புதையலுடன் வருவதாகவும், சில காரணங்களால் நேரே கங்கராயன் மாளிகைக்கே வருவதால் அங்கே வந்து அக்கலைப் புதையலைப் பெறும்படியும் வங்காரனுக்கு அவன் கடிதம் எழுதினான். குறித்த தேதிக்கு முன்பே வங்காரன் கங்கராயன் மாளிகைக்கு வந்து, தான் அறிந்த அளவில் மணிமாறன் தெரிவித்த செய்தி கூறி அங்கேயே காத்திருந்தான்.
வங்காரனுக்கோ கங்கராயனுக்கோ இந்தச் செய்தி முழுதும் புதிராயிருந்தாலும், இது செவ்வந்தி காதில் பட்டதே அவள் இதயம் துடிதுடிக்கத் தொடங்கிற்று. இன்னதென்றறிய முடியாத அகவேத னையுடன் அவள் மணிமாறன் வரவைக் கணந்தோறும் எண்ணிக் காத்துக் கொண்டிருந்தாள். ஆயினும் அவள் அறையின் உட்புற மிருந்து வெளிப்புறம் வராமலிருந்ததால், கங்காரயனோ வங்காரனோ அவள் நிலையை உணரவில்லை. பலகணித் திரையூடாக இரண்டு சோடிக் கண்கள் வாயிலையே நோக்கியிருந்ததையும் அவர்கள் அறியவில்லை.
மணிமாறன் வந்தபோது, முதலில் வங்காரனையும் கங்கரா யனையுமே கண்டான். பொருள்களுக்கும் அவ்விருவருக்கும் உள்ள தொடர்பு அவனுக்குத் தெரியாது. ஆகவே, பரிசுப் பொருளை ஆக்குவதற்காகத்தான் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவற்றையும் அவன் நாடகத்தின் திரைக் காட்சி வருணனைகள் போலவே வருணித்தான். அதன் முடிவில் தாள் கற்றை விவரம் கூறிக் கங்கராயனிடம் அக்கற்றையையும், சிலையடங்கிய பெட்டியைத் திறந்து வங்காரனிடம் சிலையையும் கொடுத்தான்.
கதை கேட்கும் சமயத்திலேயே செவ்வந்தியின் நெஞ்சில் புயல்கள் வீசின; மின்னல்கள் மின்னின; செய்வது இன்னதென்று தெரியாமலே எட்டு வயதுச் சிறுவனான கடாரச் செல்வன் தாய் முகம் நோக்கிக் கண்கலங்கினான்.
சிலை எதிரே திறந்து வைக்கப்பட்டதே, உள் அறையில் ஒரு கதறல்கேட்டு நண்பர் திடுமென உள்ளே சென்று பார்த்தனர். சிலையின் பேச்சுக்கு மேல் செவ்வந்திக்கு வேறு மொழி தேவைப் படவில்லை. அவள் கணவன் அடைந்த துன்பங்களை எண்ண ஆற்றாமல் வெம்பித் துடிதுடித்து உணர்விழந்தாள். அவள் அலறலுடன் அலறலாகச் சிறுவன் அழுது தேம்பினான். நண்பர் குழந்தையை ஆற்றினர். செவ்வந்திக்கு வேண்டும் துணைநலங்கள் அளித்துத் தேற்றினர்.
கங்கராயன் இதன் பின்பே கற்றையின் வெளியுறையை நீக்கினான். நீக்கு முன்பே அவனும் செவ்வந்தியைப் போல அதன் உள்ளிருக்கும் செய்தியை ஓரளவு ஊகித்துக் கொண்டான். ஆகவே, மேல் உறையைக் கிழிக்கும்போதே அவன் கை நடுங்கிற்று. அவன் எதிர் பார்த்தபடியே மேல்வரி ‘செவ்வந்திக்கு’ என்று எழுதப் பட்டிருந்தது.
கடிதத்தை எடுக்கவோ, உறை கிழிக்கவோ செவ்வந்தியால் முடியவில்லை. ஆயினும் கணவன் கடிதத்தைத் தானே கிழித்து வாசிக்க அவள் முயன்றாள், அம்முயற்சியே அவளுக்குச் சில கணநேரம் பிடித்தது. ஆனால் கடிதத்தின் வாசகங்கள் அவள் நெஞ்சையே கிழித்தன.
எழுமுடி தன் இதயம் பிழிந்து தன் மனைவிக்கு எழுதியிருந்தான்.
"ஆருயிர்த் துணைவி செவ்வந்திக்கு எழுமுடி எழுதுவது;
"என் இதயத்தைப் பிழிந்துதான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன்.
"நாம் பிரியும்போது உன்னிடம் கொடுத்த வாக்குறுதி காத்து எத்தனையோ ஆண்டுகள் உன்னையும் என் கடாரச் செல்வத்தையும் மட்டுமன்றிக் கலையையும் விட்டு வாழ்ந்து விட்டேன். இந்த வாழ்வில் கடுமையை உனக்கு நான் எழுதத் துணிவில்லை - அது என்னைப் பைத்தியக்காரனாக்கிவிட்டது - பைத்தியம் ஓரளவு தெளிந்து உன்னிடமிருந்தும் கடாரச் செல்வனிடமிருந்தும் மட்டுமன்றி, என்னிடம் இரக்கம் காட்டாத இந்த உலகத்தினிடமிருந்தே விடை கொள்ள இருக்கும் சமயம் தான் உனக்கு இதை எழுதுகிறேன்.
"உன் தந்தை என்னை மன்னிப்பார் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது - அவர் மன்னிப்பில்லாமல் பேரரசின் வலையிலிருந்தும் நான் தப்ப முடியாது. இவை கூட இனி நிறைவேறக் கூடுமானாலும் அதனால் எனக்குப் பயன் ஏற்படாது. ஏனென்றால் என் கடைசிக் கலை முயற்சிக்கு என் பைத்தியந் தோய்ந்த வாழ்வில் கடைசி மூச்சு வரை செலவழித்து விட்டேன். இதை எழுதும் சமயம் என்னிடம் இருக்கும் ஆற்றல் சாவதற்காக நான் குறித்த இடம் சென்று சாவதற்குக் கூடப் போதுமோ என்று தெரியவில்லை. ஆகவே இக்கடிதம் உன் கையில் வந்து சேர்வதற்கு நெடுநாளைக்கு முன்பே என் ஆவி உன்னை வந்து சுற்றிக் கொண்டிருப்பது உறுதி. உடலுடன் இருக்கும் போது எனக்கு இராத துணிவு, ஆவியுருவில் எனக்குக் கட்டாயமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்.
"இதை வாசிக்கும்போது நீ அடையும் துயர் நான் அறியாததல்ல. ஓர் இடியைத்தான் கடித உருவில் அனுப்புகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆயினும் உன் அருகில் இருக்கும் கடாரச் செல்வனை மறந்துவிடாதிருக்கும் படியும், அவனுக்காக, தந்தையிழந்த அவனுக்குத் தந்தையும் தாயுமாக நீ இருந்து உன் துயரத்தை வெல்ல வேண்டுமென்றும் என் காதலின் பெயரால், காதலைக்கூடக் கொலை செய்துவிட்ட, இந்தப் பழிகாரக் கலையின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். என் செல்வனிடம் நான் கொண்ட, கொண்டிருக்கும் பாசத்தை இனி நீதான் அவனுக்குக் காட்ட வேண்டும். அதற்கு போதிய ஆற்றலை, ஆண்மை உறுதியை பெண்களில் ஒரு மரகதமணியாகிய உனக்குக் கலைத் தெய்வம் அருளுமாக என்பதே என் கடைசி வேண்டுகோள்.
"கலையைவிட ஒரு படி குறைவாகவே உன்னையும் என் செல்வனையும் நேசித்த பாவம் எனக்கு உண்டு. அந்தப் பாவ மற்றவர்கள் உன் தந்தை - அவர் அருமையை நான் இப்போது உணர்கிறேன் - அவர்மீது இதுவரை உன் கோபத்தை விட்டிரா விட்டால், இனிமேலாவது கட்டாயம் விட்டுவிடு. அவரால் முடிந்தால், என் மரபை மன்னித்து என் செல்வனை ஏற்றா தரிக்கும்படி என் சார்பிலில்லாவிட்டாலும், உன் சார்பிலாவது கேட்டுக் கொள்.
"இந்தக் கடிதத்தை உன்னிடம் சேர்ப்பித்த பேரரசின் பணியாளப் பெருமகனான மணிமாறனாருக்கு நான் அவர் கடிதத்தில் கூறியிருக்கும் நன்றி ஒரு சிறிதும் போதாது. என் சார்பில் உன் நன்றியையும் தெரிவி.
"அழாதே! என்னை நினைத்து உன் கண்ணீரை அடக்கு. அருகில் உன்னையே பார்த்து நிற்கும் கடாரச் செல்வனைக் கலங்கவிடாதே. உரிய காலத்தில் அவனுக்கு அவன் தந்தையைப் பற்றி ஒரு சிறிதே நினைவூட்டு, ஏனென்றால் தந்தை பட்ட துயரம் அவன் நினைவிலும் தோன்றா திருக்கட்டும், உன்னை மீறி நான் பின்பற்றி அழிந்த கலைப்பக்கம் அவன் கவனம் திரும்பாதிருக் கட்டும், வருங்காலத்தில் நம் மரபில் கலை போதும், வாழ்வு மலரட்டும்!
“உறுதியாயிரு, கண்ணே!’ என்று மீண்டும் மீண்டும் என் கடைசி வாக்காக, உன் உள்ளத்தில் என்றும் எதிரொலிக்க வேண்டும் வாக்காகக் கூறிவிட்டு விடை கொள்ளும் உன் எழுமுடியான, பைத்தியம்.”
புறத்தே சுட்டெரிக்கும் தீ போலாது அகத்தே சுட்டெரிக்கும் தீயாகக் கடிதம் அவளை வாட்டியது. அவள் அழவில்லை. சுருண்டு விழுந்தாள்; கடைசி வாசகத்தை அவள் நினைக்க நினைக்க, ஆறுதல் கொள்வதற்கு மாறாகச் சுருண்டு சுருண்டு பொசுங்கினாள். கணவன் துயர வாக்குகள் கசைகளாக, கொதிப்பேறிய கம்பிகளால் இயன்ற சாட்டைகளாக அவளைச் சுழன்று சுழன்று அடிப்பன போன்றிருந்தன.
தந்தை கங்கராயனும் மற்ற நண்பர்களும் கடிதம் வாசித்து அவள் துயரின் முழு வேகமும் உணர்ந்தனர். அவளை ஆ,ற்றும் வகை யறியாது திண்டாடினர். இறுதியில் தந்தையே அவளுக்குக் கணவன் இறுதி வேண்டுகோளை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினான். அவனைத் தக்க காலத்தில் மன்னித்து மீட்காததற்கு அவள் துன்பம் தனக்கேயுரிய தண்டனையாகும் என்றும், தன்னை மன்னித்ததற் கறிகுறியாகத் துயரை அடக்கிக் கொள்ளும் படியும் வேண்டினான்.
வாடி வதங்கி விழுந்த தளிர் மீண்டும் எழுந்து நின்றதுபோல் அவள் தன்னை தேற்றிக் கொண்டு எழுந்தாள்.
“அப்பா! உங்கள் தவறு எதுவும் இல்லை. அவருக்கிருந்த தியாகத்தின் உறுதியில் பாதி எனக்கிருந்திருந்தால், நான் உங்களை என்றோ என் பக்கம் திருப்பியிருக்கக்கூடும், ஆனால் இப்போது அவருக்காகவும் எனக்காகவும் தாங்கள் செய்ய வேண்டும் உதவி ஒன்றே ஒன்று தான் உண்டு. அதைச் செய்துதவும்படி கோருகிறேன்” என்றான்.
“கண்ணே! அவரைப் பின்பற்றி நீயும் என்னைவிட்டுப் போய்விடாதே! அதை என்னால் தாங்க முடியாது. அது தவிர எது வேண்டுமானாலும் கேள். இனி என் உடல் பொருள் ஆவி மூன்றும் உனதுதான். எதுவும் கேள்” என்றான்.
“கேட்க எனக்கு ஒரு பெருந்தடை போட்டுவிட்டீர்கள் அப்பா! ஆயினும் கேடில்லை. இந்தச் சிறுவனைக் காக்கும் பொறுப்பை அவர் என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார். அது இனிய பொறுப்புதான் என்பதையும் அறிவேன். ஆனால் ஒளியிழந்த என்னுடனே அவன் நெருங்கிப் பழகுவது அவனுக்கு நன்றல்ல. நான் அவனை உங்கள் பொறுப்பில் விட்டு விட்டு, உலக வாழ்விலிருந்து ஒதுங்கி, ஒரு புத்தமடத்தில் சென்று மனித சேவையில் குறைநாளும் கழிக்கப் போகிறேன்” என்றாள்.
அவள் வேண்டுகோளை மறுக்கவும் ஏற்கவும் விரும்பாமல் கங்கராயன் பலவாறு அவனிடம் கனிவுடன் வாதாடினான். “குழந்தைப் பொறுப்பை நான் தடையில்லாமல் ஏற்கிறேன். ஆனால் நீ ஏன் மடத்து வாழ்வை ஏற்க வேண்டும்?” என்றான்.
“கணவனை இழந்த பின் நான் உயிர் வாழவே உண்மையில் விரும்பவில்லை. ஆயினும் குழந்தையையும் கணவன் ஆணையையும் மதித்தே நான் இந்த அளவு ஒதுங்கியாவது வாழ எண்ணுகிறேன். கலைக்காக உயிரிழந்த கணவன் மறைவுற்ற துன்பத்தைத் தாங்க அறப்பணி ஒன்றே எனக்கு ஆறுதல் அளிக்கும்” என்று செவ்வந்தி உறுதியாக நின்றாள்.
கடாரச் செல்வனிடமிருந்து பிரிய முடியாமல் செவ்வந்தி பலநாள் மாளிகையும் மடமுமாகக் கழித்தாள். இறுதியில் நாகை யிலுள்ள புத்த மடத்தில் வந்து அதன் தலைமையேற்று வாழ்ந்தாள்.
அவள் உருவில் சமைந்த மரகதமணியை வங்காரன் பேரரசனுக்குக் காணிக்கையாக அளித்தான். ஆனால் செவ்வந்தியின் துயரக் கதையறிந்த பேரரசன், அதற்கீடாக மாணிக்கமணியையே பெற்றுக் கொண்டு, அதைச் செவ்வந்தி தலைமை வகித்த மடத்துக்கே அளித்து விட்டான்.
தந்தை துயரத்தைக் கடாரச் செல்வனிடமிருந்துயாரும் மறைக்க முடியவில்லை. வயதுக்கு மேற்பட்ட அவன் அறிவு அவன் அதை முற்றிலும் உணர்ந்து கொள்ளும்படி செய்துவிட்டது. ஆண்டுக்கு ஒருமுறை அவனிடம் வந்தும், மாதத்துக்கு ஒருமுறை அவனை வருவித்தும் பார்த்த அவன் அன்னை அவன் துரும்பாய் நலிவது கண்டு அவனைத் தேற்ற முயன்றாள். ஆனால், இறுதியாக அவனைக் கண்ட சமயம் அவனும் அவளிடம் விடை கொள்வ தாகவே கூறிவிட்டான்.
“அம்மா! எனக்காக நீ இருக்க வேண்டுமென்றுதான் தந்தை கட்டளையிட்டிருக்கிறார். நீ சாகாமல் செத்து, அவர் சொல்லைக் காக்க ஒரு வழி கண்டு கொண்டாய், உனக்காக வாழ வேண்டு மென்று எனக்கு அவர் கட்டளையிடவில்லை. எனக்கும் என் தாய் தந்தையர் வாழ்வை மறந்து வாழ முடியவில்லை. நான் இறந்தால் நீ நெடுநாள் இருக்கமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னால் உயிரைத் தாங்கிக் கொண்டிருக்க முடியவில்லை. அடுத்த தடவை உன்னைக் காணும்வரை நான் இருக்க மாட்டேன் என்று எனக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. உன்னுடன் விடை கொள்ளாமல் போக விரும்பவில்லை. எத்தனையோ துன்பங் களைத் தாங்கித் தானாக வேண்டும். ஏனென்றால் என்னுடன் நீயும் புகழுலகில் அப்பாவுடன் சென்று சேர இனி நெடுநாள் இராது என்று நினைக்கிறேன்” என்று அவன் கூறினான்.
கண்ணீரை அடக்க முடியாமல், அக்கண்ணீர்த் திரை வழியாகவே அவனுக்கு விடை கூறினாள். அறநிலையை அன்னை.
கடாரச் செல்வன் அன்றிரவே இறந்தானென்ற கொடு மொழி அறநிலைய மதில் தாண்டி அவள் செவியில் புகுந்தது.
அந்த இரவே அவளுக்கும் கடைசி இரவாயிற்று.
மரகதமணிப் பாவையின் மாயக்கதை இதுவே என்று அண்ணல் பல்லவராயன் முடித்தான்.
எதிரெதிரே மேசைமீது அமர்ந்திருந்த ஆயன் பெருமாள். செழுங்கலை ஆகிய இருவர் கண்களிலிருந்தும் இருகண்ணீர் அருவிகள் மேசைமீது பாய்ந்தோடி மேசை நடுவில் கலந்தன.
“இந்தக் கதையை நான் கேட்ட நாள் முதல் சோழப் படைச் தலைவனாயிருந்த கங்கராயன் செய்த தீவினைக்குக் கழுவாயாக அந்த சிலையுடன் மற்ற இரு சிலைகளையும் சேர்த்துவிட வேண்டும் என்ற அவா மட்டும் எனக்கு இருந்தது. அது என்னால் இன்னும் முடியவில்லை. தக்க கலை இளைஞனைக் கண்டு, இந்தக் கலைத் தெய்வத்துடன் அந்தக் கலை அவாவையும் உரிமையாக விட்டுச் செல்ல விரும்பினேன். இரண்டையும் நீங்கள் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன்” என்றான் அண்ணல் பல்லவராயன்.
“மகிழ்வுடன் ஏற்கிறேன், மறுபிறப்பு என்று ஒன்றிருந்தால், அந்தக் கங்கராயனின் மறுபிறப்புதான் நீங்களோ என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. ஏனெனில் அவர் பழிக்கு நீங்கள் கழுவாய் தேடுகிறீர்கள்” என்று ஆயன் பெருமாள் சிறிது புன்முறுவலுடன் கூறினான்.
இதுவரை வாய் திறவாத செழுங்கலை இப்போது வாய் திறந்தாள். “மன்னிக்க வேண்டும், அன்பரே! அப்பா கங்கராயனின் மறுபிறப்பாயிருக்கக் கூடுமானால், அவர் செய்ய வேண்டும் பணியின் பொறுப்பை ஏற்ற நீங்கள் எழுமுடியின் மறுபிறப்பாயிருக்கக் கூடுமோ என்று ஐயுறுகிறேன்” என்றாள்.
அவள் பேச்சே அவள் குறிப்பைத் தந்தைக்கும் ஆயன் பெருமாளுக்கும் தெரிவிக்கப் போதியவையாயிருந்தன. ஆனால், அதையும் தன் குறிப்பையும் அவன் செவ்வந்திக்கு ஒரே பதிலில் தெரிவித்தான்.
செவ்வந்தியின் மறுபிறப்பே தாங்கள் என்று நான் நம்பக்கூடு மானால், மற்ற இரண்டு மறுபிறப்புகளும் நிறை பயனுடை யவையாகும். அது வகையில் உங்கள் விருப்பமும் உங்கள் தந்தையினுடைய விருப்பமும் எதுவோ, அதுவே என் விருப்பமாகவும் இருக்கும்" என்றான் அவன்.
செழுங்கலை இப்பதில் கேட்டுப் புன்னகை தவழ்ந்த முகத்தை மறைத்துத் தலை கவிழ்ந்தாள். அண்ணல் பல்லவராயன் மலர்ச்சியடைந்தான். பின் அமைதியாக இன்முகத்துடன் பேசினான்;
“காவியக் கதைக்கு உண்மையிலேயே ஒரு மறு பிறப்புத் தந்தால் உங்கள் ஒன்றுபட்ட உள்ளம் அக்கதைக்கே ஒருகழுவாய் ஆகும். உங்கள் இருவர் உள்ளமும் ஒன்றுபடுவது கண்டு மகிழ்வுடன் உங்களை என் இணையுரிமை யாளராகவும் என் கலையவாவின் நிறைவேற்றுதற்குரிய இணை பொறுப்பாள ராகவும் ஏற்கிறேன்” என்றான்.
அண்ணல் பல்லவராயன் வாழ்நாளிலேயே ஆயன் பெருமாள் சோழப் பேரரசின் மேலாட்சியாளரைத் தூண்டி நாகைப் புத்தப் பள்ளியில் ஒரு கலைக்கூடம் நிறுவி, அதில் மூன்று சிலைகளையும் ஒருங்கே நடுநாயகமாக வைத்தான். மூச்சிலைகளின் திறப்பு விழாவிலே, அண்ணல் பல்லவராயன் பெயரால், அச்சிலைகளின் கலைக் காவியத்தையும் புதியதொரு சிலப்பதிகாரமாக அவன் அரங்கேற்றுவித்தான். தஞ்சைக் காண்டம், கடாரக் காண்டம், நாகைக் காண்டம் என அக்காவியம் முப்பெருங் காண்டங்களால் இயன்றது.
ஆவியுலகக் குழந்தைகள்
பொன்முடியும் தென்னவனும் இணைபிரியாத் தோழர்கள். அவர்களினிடையே நிலவிய பாசத்தைக் கண்டு வியப்புக் கொள்ளாதவர் கிடையாது. ஏனெனில் இருவரும் முற்றிலும் இருவேறு வகைப்பட்டவர்கள். இருவருமே வேறு எவருடனும் நெருங்கிப் பழகாதவர்கள்.
பொன்முடி எல்லையற்ற பெருஞ் செல்வத்துக்கு உரியவன். அத்துடன் தட்டிக்கேட்க ஆளின்றி வளர்ந்தவன். கல்விமணம் எதுவும் அறியாமல், ஆடையணிப் பகட்டிலும் இன்பப் பொழுது போக்குகளிலுமே அவன் காலம் கழித்தான். தென்னவனோ ஏழைக் குடியிற் பிறந்தவன், பள்ளி கல்லூரிக் கல்விகளை யெல்லாம் நொடியில் தாண்டி, அதன் பின்னும் மலைமலையாகப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவன். அவன் எழுதிக் குவிக்கும் ஏடுகளே குன்று குவடுகளாக அவன் மேசையில் புரண்டன. படிப்பிலும் எழுத்திலும் ஈடுபடாத சமயமெல்லாம் அவன் அறிவாராய்ச்சி வாதங்களிலேயே செலவிட்டான். ஆனால், அவன் அறிவாராய்ச்சிகளைப் பொறுமையுடன் கேட்பவர்கள் பொன் முடியைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதுவே அவர்கள் நட்புக்கு அடிப்படையாய் அமைந்தது எனலாம்.
தென்னவன் வாதிட்ட போதெல்லாம் பொன்முடி செவி கொடுத்துக் கேட்பது தவிர வாய் திறந்து எதுவும் பேசியதில்லை. ஆனால், இதைத் தென்னவன் பொருட்படுத்துவது கிடையாது. பொன்முடியின் முகத்தில் அடிக்கடி நிழலாடிய புன்னகை அலைகள் பேச்சைவிட அவனுக்குச் சுவை பொதிந்தவையாய் இருந்தன. பொன்முடியின் கண்களில் அவ்வபோது மின்னிய நில வொளிகளோ, அறிவொளி தராத ஊக்கத்தைத் தென்னவனுக்கு அளித்தன. அவ்வப்போது வாதத்தைக் கேட்டபடியே பொன்முடி தென்னவன் தோள்களின் மீதே சாய்ந்து உறங்கிவிடுவான். அவன் விடும் குறட்டைகள் காதைத் துளைக்கும்போதுதான் தென்னவன் வாதத்தில் சிறிது தளர்ச்சி ஏற்படும். ஆனால், இந்நிலைகள் கூடப் பொன்முடி மீது அவன் பாசத்தை வளர்த்தனவே தவிரக் குறைக்கவில்லை.
தென்னவன் ஆராய்ச்சிகளில் ஒன்று அவன் ஓய்வு நேரங்களை முழுதும் கொள்ளை கொண்டது. ஆவியுலகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களை எல்லாம் அவன் தனித்தனியே யார் என்னென்ன கேள்விகள் கேட்டாலும், அவற்றிற்குக் காரசார மான மறுப்புகள் வரைந்தான். உடலோடு வாழும் உயிர்களைத் தவிர, வேறு ஆவிகள் கிடையா என்பான் அவன். பல நண்பர்கள் வேண்டுகோளின் மீது, இதுபற்றிய ஒரு விரிவான ஆராய்ச்சி ஏடு எழுதுவதில் அவன் முனைந்தான்.
பொன் முடிக்கு நிலபுலன்களோடு வீடுகளும் பல இருந்தன. அவற்றைப் போதாடி என்பவன் குடிக்கூலிக்கு விட்டு மேற்பார்வை பார்த்து வந்தான். அவ்வீடுகளில் ஒன்று ஊர்க்கோடியில் வான ளாவிய ஒருசோலையினடுவில் அமைந்திருந்தது. பொன்முடி வாழ்ந்த மாளிகையை விட அது பன்மடங்கு அழகுடையதாய் இருந்தது. ஆயினும், அதில் எவரும் குடியிருக்கத் துணியவில்லை. அதில் குழந்தை வடிவான ஆவிகள் இரவெல்லாம் அழுதும் கூவியும் கும்மாளமடித்ததாக ஊரில் யாவரும் அஞ்சியதே இதற்குக் காரணம். தென்னவன் இதுபற்றியும் அடிக்கடி தெறிபேசுவது வழக்கம். ‘இந்தக் குழந்தை ஆவிகள் எவ்வளவு காலமாக ஊடாடுகின்றன’ என்று அவன் ஊராரைக் கேட்டான். ‘எட்டு பத்து ஆண்டுகட்கு மேலிருக்கும்’ என்று அவர்கள் கூறுவர். ‘இவ்வளவு ஆண்டுகளிலும் குழந்தை ஆவிகள் அப்படியே குழந்தை ஆவிகளாகவா இருக்கும்? அவை வளரமாட்டாவா?’ என்பான் அவன்.
ஆவிகள் வளர்வதுண்டா, இல்லையா என்ற செய்தியைப் பற்றியே எவரும் அதுவரை சிந்தனை செலுத்தியவர்களல்லர். இதனால் இக்கேள்வி கேட்டு அவர்கள் அதிச்சியடைந்து விழிப்பர். ‘உங்கள் புளுகு இப்போது உங்களுக்கே புரிந்ததா?’ என்று கேட்டுத் தென்னவன் நையாண்டி செய்வான்.
ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சி ஏட்டை, குழந்தை ஆவிகள் ஊடாடிய வீட்டிலேயே இருந்து எழுதி முடிப்பதென்று தென்னவன் துணிந்தான். பொன்முடி எவ்வளவு தடுத்தும் தென்னவன் கேட்கவில்லை. ஆகவே, பகலில் மட்டும் அவ்வீட்டில் சென்று தென்ன வனுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, இரவில் பொன்முடி வெளியே வந்துவிடத் தொடங்கினான். புத்தகங்களை யெல்லாம் அடுக்கித், தாளை, எழுதும் பாணியில் பரப்பி வைத்துக் கொண்டு, எழுதுகோலுடன் தென்னவன் சாய்விருக்கை மீது சாய்ந்து சிந்தனையில் ஆழ்ந்துவிடுவான்.
அவன் இருந்த அறையிலிருந்து தொலைவிலோ, சில சமயம் சற்று அருகிலோ குழந்தைகள் ஓடியாடும் அரவம், ஒன்றுடனொன்று சண்டையிடும் பாவனையிலுள்ள குரல்கள், சில சமயம் சிரிப்பு அல்லது அழுகைக் குரல்கள் இரவில் அடிக்கடிக் கேட்பதுண்டு. ஆனால், இயல்பாகவே ஆவிச் சிந்தனைகளிடையே இக்குரல்களும் ஆவிச் சிந்தனைகளாகவே மிதந்தாடும். புறத்தே ஆவிகள் நடமாடியதாக அவன் எண்ணுவதேயில்லை.
குழந்தை ஆவிகளைப் பற்றி அவ்வப்போது நினைக்கும் போதுகூட , அவன் தன்னையறியாமல் சிரித்து விடுவான். அப்படி அவன் சிரிக்கும்போது ஒரு சமயம் ஒரு சிரிப்பொலியின் எதிரொலியாகத் தன் எதிரே ஒரு குழந்தை சிரிப்பொலியைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். பவழம் போன்ற இதழ்களைச் சற்று விலக்கிக் கொண்டு முத்துச்சரம் போன்ற இரு பல்வரிசைகள் அவன் மேசையின் பின்னிருந்து எட்டிப் பார்ப்பது போலிருந்தது. மேசை தாண்டி அத்தோற்றத்தை எட்டிப் பிடிக்க அவன் கை நீட்டு முன், கால் கைகள் தடதடவென்று விரைந்து தவழும் ஓசை கேட்டது. தாள்கள் இட்டிருந்த ஒரு கூடை புரண்டு சலசலத்தது; ஒரு முக்காலி உருண்டு புரண்டது; ஆனால், அறையில் வேறு எதுவும் காணோம்.
சற்றுத் தேடிவிட்டு அவன் உட்கார்ந்தான். எல்லாம் எலிகள் படுத்தும் தொல்லை என்று அவன் கூறி மூடுமுன், மீண்டும் நகைப்பொலி கேட்டது; எலி கடிப்பது போல ஏதோ ஒன்று கால் நகங்களைப் பற்றி உராய்ந்தது; அவன் காலை அதன் மீது நறுக்கென்று அழுத்தினான்; கிறீச்சென்று கூக்குரல் செவியைத் துளைத்தது; ஆனால், அது எலியின் குரல் அல்லவே அல்ல. நோவு பொறுக்காமல் அலறிய ஒரு குழந்தையின் குரலே,
முதல் நாளிரவு இதற்குமேல் எதுவும் நெடுநேரம் நடை பெறவில்லை.
இரவு முழுவதும் அவன் எழுதிஎழுதிக் குவித்தான். ஆயினும் தடைபட்ட அவன் சிந்தனைகள் ஓடவில்லை. என்ன எழுதினோம் என்ற எண்ணமின்றி எழுதியதனால், எழுதியவற்றை யெல்லாம் கழிவுத்தாள் கூடையில் திணித்து விட்டு, இறுதி யாமத்தில் தென்னவன் சிறிது கண்ணயர்ந்தான். ஆனால், நெடுநேரம் கழித்துத் தூக்கம் முழுதும் கலையுமுன் அரைத் தூக்கத்தில் இரண்டு குழந்தைக் குரல்கள் ஒன்றுடன் ஒன்று பேசுவது அவன் காதுகளில் தெளிவாகக் கேட்டது. ‘உன் விரல் மிகவும் நோகிறதா? அக்கா!’ என்றது ஒரு குரல்.
"இப்போது அவ்வளவு நோவில்லை முத்து! மேலும் எனக்குள் என்னவோ கூறுகிறது. இந்த மனிதர் மற்ற மனிதர்களைப் போல இரக்க மற்றவர் அல்ல என்று. நம்மை எலி என்று நினைத்ததனால்தான் அவர் இப்படி மிதித்தாரடி. குழந்தைகள் என்று தெரிந்தால்………!
“ஏன் அக்கா, பேச்சை நிறுத்திவிட்டாய்? தெரிந்தால் என்னவாம்!”
“உசு, உசு! அவர் செவி அதோ அசைகிறதேடி! தூங்காமல் கேட்டுக் கொண்டிருந்தாலும் இருப்பார். நாம் இப்போதே போய்விடுவோம்.”
குரல்கள் அடங்கிவிட்டன.
தென்னவன் சட்டெனத் தலையுயர்த்திப் பார்த்தான்.
முகங்களை அவன் பார்க்கவில்லை. உருவங்களும் விரைவில் திடுமென மறைந்துவிட்டன. ஆயினும். ஒரு தாவணியின் பின்தானையையும் ஒரு பாவாடை நுனியையும் அவன் தெளிவாகக் காண முடிந்தது. குரல்கள் இரண்டும் குழந்தைக் குரலாய் இருந்தாலும், ஒன்று பதினான்கு வயதுக்குக் குறையாத நங்கை யென்றும், மற்றது எட்டு வயதுக்கு மேற்படாத சிறுமி யென்றும் அந்த உருவங்களின் சாயலால் ஊகித்தான். அவன் செவியில் கேட்ட சொற்களும் இதனை உறுதிப்படுத்தின. சிறுமியின் பெயர் ‘முத்து’ என்றும், மற்றவள் அவளால் ‘அக்கா’ என்று அழைக்கப்பட்டவள் என்றும் அவன் புரிந்து கொண்டான்.
பகலெல்லாம் குழந்தைகளின் சிந்தனையிலேயே அவன் மனம் உழன்றது. ஆனால், அவன் அதைப் பொன் முடிக்குக்கூடக் கூறத் துணியவில்லை. அவன் எது கூறினாலும் குழந்தை ஆவிக் கதையைத்தான் அது வலியுறுத்தும் என்பதை அவன் அறிவான். அந்தச் சோலை வீட்டை விட்டுப் போகவும் அவன் இப்போது சிறிதும் விரும்பவில்லை. அத்துடன் குழந்தை ஆவிகள் என்றே அவனால் நம்பவும் முடியவில்லை. இதற்கு அவன் கொள்கைகள் மட்டும் காரணமல்ல. அவனிடம் அவை கொண்ட அச்சம், எலி என்றவுடனே எலிபோலக் காலைச் சுரண்டிய குறும்புச் செயல், நோவு பொறுக்காத அலறல், அவனைப் பற்றியே அவர்களிடையே நிகழ்த்தப்பட்ட குணங்குறை ஆராய்வுகள் ஆகியவை மனிதக் குழந்தைகளின் தன்மையையே மிக வலிவுடன் நினைவூட்டின.
அவர்களைப் பற்றிய மெய்ம்மை அறிய வேண்டுமானால், அவர்கள் அச்சத்தைப் போக்குவதே சிறந்த வழியென்று அவன் மனங்கொண்டான்.
அச்சம் உள்ளவர்களே மற்றவர்களிடம் அச்சமூட்ட முடியும். தென்னவனோ ஆவியச்சம் சிறிதும் இல்லாதவன். இதனாலேயே முதனாளிரவிலேயே குழந்தை ஆவிகளுக்கு அவனிடம் அச்சம் மிகுதி இல்லாமலிருந்தது. ஆனால் மறுநாள் அவர்கள் கண்ட தென்னவன் அவர்களுக்கு இன்னும் புதுமையான தென்னவனாய் இருந்தான்!
குழந்தை ஆவிகள் தொலைவில் நின்று கூவின. அவன் நிமிர்ந்து பார்த்து அவற்றை அச்சுறுத்தவில்லை. ஒரு குழந்தை மெல்ல மெல்ல அடி மேல் அடி ஊன்றி மேசையின் மறுபுறம் வந்து நின்றது. அவன் திடுமென நிமிரவில்லை. மெல்ல இயல்பாகவே தலையைத் தூக்கினான். ஓர் அழகிய வட்டமுகம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு மீண்டும் தன் வேலையில் ஈடுபட்டான்.
இப்போது குழந்தைகள் ஓடவில்லை; ஒரு குழந்தை எட்டி எட்டிப் பார்த்து ஒளிந்தது; ஒளிவிலிருந்து மீண்டும் மீண்டும் எட்டி எட்டிப் பார்த்து; மற்றக் குழந்தையோ மெல்ல அடிமேலடி வைத்துத் தென்னவன் பின்புறமே வந்து நின்றது; அதன் மூச்சு அவன் முதுகில் பட்டது; மூச்சு மெல்லத் தோள்கள் வரை ஏறி நிற்கிறது; என்பதை அவன் அறிந்து கொண்டான். திரும்பிப் பார்க்காமலே ஒரு கையைப் பின்னால் நீட்டிக் காட்டினான். குழந்தை முதலில் கைப்பிடியிலகப்படாதபடி விலகினாலும், சிறிது நேரத்துக்குள் கையை மெல்லத் தொட்டுப் பார்த்தது.
குழந்தையுடன் விளையாடி அறியாதவன் தென்னவன். அவன் உடம்பெல்லாம் சிலிர்த்தது. தென்னவனல்லாமல் வேறொருவனாக இருந்தால், ஆவியின் மாய ஆற்றல் என்று அஞ்சியிருப்பான். ஆனால், குழந்தைப் பாசத்தின் முதல் விதிர்விதிர்ப்பே அது என்பதைத் தென்னவன் உணர்ந்திருந்தான். குழந்தை துணிச்சல் மிகுந்து அவன் கையினை மெல்ல வருடிற்று. தென்னவன் புன்னகையுடன் பேசாமலிருந்தான்.
ஆனால், குழந்தை அவன் பொறுமையை இன்னும் சோதிக்க விரும்பி, அவன் முன் கையின் மென் மயிரைப் பிடித்து இழுத்தது. எதிர்பாராத சிறு நோவினால் தென்னவன் ‘ஆகா’ என்று கதறினான்.
முதற் குழந்தை அவன் செயலை இதுவரை கூர்ந்து நோக்கிக் கொண்டுதான் இருந்தது. ஆனால், அவன் ‘ஆகா’ என்றதே அவளும் ‘ஐயோ’ என்று கூவிய வண்ணம் பாய்ந்து வந்து தென்னவன் மடிமீது உட்கார்ந்து கொண்டாள். சிறுமியின் கையை எடுத்து எறிந்துவிட்டு அவன் கையைத் தடவினாள்.
சிறுமி நாணத்துடன் தலை குனிந்து நின்றாள்.
மூத்த நங்கை அவளிடம் மேலும் சீற்றங் கொண்டு ஏதோ பேசத் தொடங்கினாள்.
தென்னவன் சிறுமியையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதலளித்தான். மூத்த நங்கையின் சீற்றத்தையும் இன்னுரைகளால் மாற்ற முனைந்தான்.
“முத்துவின் மீது நீ ஏன் கோபம் கொள்ள வேண்டும். கண்ணே! நேற்று நான் உன் கையை மிதித்தபோது உனக்கு இப்படித்தானே இருந்திருக்க வேண்டும். அதை எனக்கு உன் தங்கை காட்டினாள். அவ்வளவுதானே” என்றான். மூத்த நங்கையின் கோபம் இப்போது தணிந்து விட்டது.
“இவர் இனி நமது அண்ணா. உன் பெயரைக்கூடத் தெரிந்து வைத்திருக்கிறார் பார். இவரை இன்று கிள்ளியது போல இனி நீ கிள்ளக் கூடாது” என்றாள்.
முத்து, இப்போது தென்னவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பினாள். “என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது. அக்காள் பெயரும் தெரியுமா?” என்றாள்.
“தெரியாது” என்று தென்னவன் தலையசைத்தான். ‘உன் பெயர் கூறி, நேற்று உன் அக்கா உன்னை விளித்ததனால் அறிந்தேன்’ என்றான்.
மூத்த நங்கை, இப்போது பேசினாள். “என் பெயர் வெண்ணிலா; என் தங்கையை நான் தான் முத்து என்று கூப்பிடுவேன்; அவள் முழுப்பெயர் ‘முத்தொளி’; இருவர் பெயரையும் கூறிவிட்டேன். ஆனால், உங்கள் பெயர்….”
அவள் கேள்வி அரைகுறையிலேயே நின்று விட்டது. முகம் நாணத்தால் சிவந்தது.
அவள் குழந்தைபோலப் பேசினாலும், நாணம் அவள் வயதுப் பருவத்தைச் சுட்டிக் காட்டிற்று.
தென்னவன் ஒரு புத்தகத்தைச் சுட்டிக் காட்டினான். அது அவன் ஆக்கிய ஏடு. அவன் பெயர் கொட்டை எழுத்துக்களால் அதன்மீது தீட்டப்பட்டிருந்தது.
அவள் ஒன்றும் பேசாமல் விழித்தாள்.
முத்துவும் அக்காளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களிலும் ஒரே திகைப்புக் காணப்பட்டது.
குழந்தைகளுடன் பழகிய பின் முதல் தடவையாகத் தென்ன வனுக்கு அவர்கள் நிலை புரியவில்லை.
‘என் பெயர் இதோ! ஏன் விழிக்கிறாய், வாசிக்கத் தெரியாதா?’ என்றான்.
அவள் முகம் ஒரு கணத்தில் கன்னி வீங்கிற்று. மறுகணம் அவள் விம்மிக் குலுங்கக் குலுங்க அழுதாள். முத்துவும் ‘அக்கா, அக்கா’ என்று அழத் தொடங்கினாள்.
தென்னவனுக்கு இப்போதும் ஒன்றும் புரியவில்லை. அவர்களுக்கு ஆறுதல் தர எண்ணி இரு பெண்களின் தோள்களையும் நோக்கி கைகளை உயர்த்தினான். ஆனால் அடுத்த கணமே குழந்தைகள் முதல் நாள் ஓடியது போல் ஓடி மாயமாக மறைந்தன.
ஓரிரவுக்குள் குழந்தைகள் அவனுக்கு உடன் பிறந்த தங்கைகள் போலப் பழகிவிட்டார்கள். ஓரிரவுக்குள் அவன் இரு தங்கையர்களுக்கு அண்ணனாய்விட்ட புத்துணர்வு பெற்றிருந்தான். ஆனால் அந்த ஓரிரவு முடியுமுன் மீண்டும் அவர்களுக்கும் அவனுக்கும் இடையே இன்னதென்று தெரியாத இடைவேலி ஏற்பட்டுவிட்டது. அன்றைப் பகல் அவனுக்கு எல்லையற்றதோர் ஊழியாய் நீண்டு நீண்டு சென்றது அன்றும். நண்பன் பொன்முடியிடம் அவன் எதுவும் கூறத் துணியவில்லையாதலால் அவன் மனத்தின் பாரம் பெரிதாயிற்று. இரவு எதுவுமே நடக்கவில்லை என்று அவன் பொன்முடியிடம் கூறியபோது, அவன் முகத் தோற்றம் கவலை தோய்ந்ததா யிருந்தது. நண்பன் நிலைபற்றி மிகவும் துடிதுடிப்புடன் பொன் முடி அவ்வீட்டை விட்டு வெளிவரும்படி அவனை வற்புறுத்தினான். ஆனால் வழக்கமான பிடி முரண்டுடன் தென்னவன் பொன் முடியைச் சமாளித்து வெளியே அனுப்பினான்.
பொன்முடி போனபின் தென்னவன் சிறிது நேரம் தங்கை யரைப்பற்றிச் சிந்தித்தவாறே சோலையில் உலவினான். அறைக்குள் நுழையும்போது வெளியே இருட்டியிருந்தது. ஆனால் அறையினுள் விளக்கேற்றப்பட்டிருந்தது கண்டு வியப்புற்றான். உள்ளே நுழைந்ததும் வியப்பு இன்னும் மிகுதியாயிற்று. சிதறிக் கிடந்த கழிவுத்தாள்கள் கூடையினுள் இட்டுச் செறிக்கப்பட்டு, அறை முழுதும் துப்புரவாக்கப் பட்டிருந்தது. மேசை மீது புத்தகங்கள், தாள்கள் என்றுமில்லா அழகுடன் ஒழுங்கு படுத்தப் பட்டிருந்தன. எழுதுகோல்கள் மைப்புட்டிகள் கூடப் புத்தம் புதியவையாயிருந்தன.
‘விளக்கேற்றி வைத்தது யார்? அணி ஒப்பனைகள் செய்தது யாராயிருக்கலாம்? தங்கையர் செயல்கள்தாம் இவை’ என்றறிய அவனுக்கு நெடுநேரம் ஆகவில்லை.
‘ஐயோ, முதல்நாள் எலியோ என்று கருதி மிதித்து விட்டேனே! நேற்று அவர்கள் மிரள மிரள விழித்த போதும் என்ன என்னவோ எண்ணி மலைத்தேனே! இத்தனை அன்பிருக்கு மிடத்தில், சொல்லமாட்டாத என்ன என்ன துயர்கள் இருந்தனவோ?’ என்று எண்ணி மறுகினான் அவன்.
அவனையறியாமல் அவன் மேசை மீது ஒரு சொட்டுக் கண்ணீர் வடிந்தது.
அவன் கழுத்தை ஒரு சின்னஞ்சிறு பிஞ்சுக் கை சுற்ற அன்புடன் அணைத்தது. மற்றோர் இளங்கை கண்ணைத் துடைத்தது.
‘நாங்கள் செய்த தப்புகளை எண்ணியா அண்ணா கண்ணீர் வடிக்கிறீர்கள்? இனி நாங்கள் கவனமாக இருப்போம். நீங்கள் சொல்கிறபடி நடப்போம். நீங்கள் வருத்தப்படாது’ என்றது அந்தப் பிள்ளை உள்ளம்.
முத்தொளி மடிமீது வந்து கூறிய ஆதரவைவிட, வெண்ணிலா கவிழ்ந்த சோகமுகத்துடன் கண்கலங்கி அவன் முன்னின்ற காட்சி தான் அவனை முற்றிலும் உருக்கிற்று. முத்தொளியைக் கையில் ஏந்தியவாறே வெண்ணிலாவையும் அருகே இழுத்து அவன் அன்பாதரவுடன் உச்சி நீவினான்.
நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. என் உயிர்ச் செல்வங்களே! நான்தான் உங்கள் அருமை தெரியாமல் நேற்று ஏதோ சொல்லிவிட்டேன். நீங்கள் என்ன நினைத்து வருத்தப் பட்டீர்களோ என்றுதான் இன்று முழுவதும் ஆராத் துயர் அடைந்தேன். ஏங்கே நீங்கள் வராமல் இருந்துவிடு வீர்களோ என்று கூட எனக்குப் பெருங்கவலையாய் விட்டது’ என்றான்.
‘அண்ணாவை இனி நான் என்றும் திடீரென்று விட்டுப் போக மாட்டேன். அண்ணா மனம் வருந்த இனி என்றும் நடக்க மாட்டேன்’ என்றாள் வெண்ணிலா.
‘நானும் அப்படித்தான்’ என்று அக்காபேச்சை எதிரொலித்தாள் முத்தொளி. தென்னவன் முந்திய நாள் நிகழ்ச்சியைத் திரும்ப நினைவூட்டவில்லை.
ஆனால் முத்தொளி குறிப்பறிந்து அவன் பெயருடைய ஏட்டை எடுத்து அவன் முன் ஏந்தினாள். ‘அண்ணா, எங்களுக்குப் படங்களைக் காட்டினால் தெரியும். எழுத்துக்களைக் காட்டினால் தெரியாது. எங்களுக்குத் தாய் தந்தையாரும் கிடையாது. என் வயதில் அக்காவும் அவள் மடியில் பால் மறவாத குழந்தையாக நானும் இந்த அறையிலேயே இருக்கிறோம். எங்களுக்கு யார் சொல்லித் தருவார்கள்’ என்றாள்.
தென்னவன் தலை சுழன்றது. நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. ‘அந்தோ! மனிதக் குழந்தைகள் எண்ணிப் பார்க்க முடியாத தீங்குகளுக்கு அல்லவா இந்த ஆவிக் குழந்தைகள் ஆளாயிருக்கின்றன! ஆவி என்ற இரண்டெழுத்துக்குள் இத்தனை சோகம் இருக்கக் கூடுமென்று ஆவிகளைப் பற்றி ஆராய முற்பட்ட நான் கூட என்றும் நினைத்தது கிடையாதே’ என்று அவன் உள்ளூர ஏங்கினான்.
அவள் நிலையைக் குறிப்பாலறிந்தவள் போல வெண்ணிலா அவனைத் தன் அன்புச் சூழலுக்குள் மீட்டும் இழுத்தாள்.
"எவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற அண்ணன் நமக்குக் கிடைத்து விட்ட பின் இதையெல்லாம் என் கூறுகிறாய். முத்து! அண்ணன் மனது மெழுகு போன்றது. நீ சிறு பிள்ளைத்தனமாக எதுவும் கூறிவிடாதே என்றுஅவள் முத்தொளியைக் கடிந்து கொண்டாள்.
அன்று முதல் தென்னவன் தங்கையருக்குப் படங்களுடன் எழுத்துப் பாடங்கள் எழுதினான். அவன் ஆவிகள் பற்றிய புத்தாராய்வுரைகள் தீட்டும்போது அவன் இரு விலாக்களிலும் சாய்ந்து கொண்டு அந்தத் தங்கைகள் தமிழ் எழுத்துக்கள் தீட்டினர். அவன் ஆராய்ச்சி ஏட்டில் கால் பங்கு முடிவதற்குள் வெண்ணிலா எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டு விட்டாள். தான் பிந்தி விடப்படாதே என்று முத்தொளியும் அவளை எட்டிப் பிடிக்க விரைந்து முன்னேறி வந்தாள்.
அவன் எழுத்து வேலையிலேயே அவர்கள் பங்கு கொண்டு வந்தனர்.
அவர்கள் ஆவி வாழ்வு பற்றி அறியும் எண்ணத்துடன் தென்னவன் மிகுந்த எச்சரிப்புடன் அவர்களிடம் பேசினான். தாங்கள் ஆவிகள் என்பது அவர்களுக்குத் தெரியாது. முத்தொளிக்குத் தனக்குப் பெற்றோர் உண்டு என்பதே தெரியாது. ஆனால் வெண்ணிலா பெற்றோரை நன்கு நினைவில் வைத்திருந்தாள். அவர்கள் ஏதோ பேரிடரில் சிக்கி மாண்டார்கள் என்பதனை மட்டும் அவள் ஊகிக்க முடிந்தது. ஆனால் பிரியும் சமயம் கூறிய வாசகங்கள் மட்டும் நினைவிலிருந்தன. அவள் வாழ்க்கையின் மூல பாடமே அதுதான். அதன்படியே எட்டாண்டுகளாக அவள் நடந்தும் வந்திருந்தாள்.
அப்பாடத்தை அவள் ஒப்பித்தாள்.
"அம்மாவும் அப்பாவும் ஆறாக வழிந்த கண்ணீரை ஒதுக்கிவிட்டுக் கொண்டு தேம்பித் தேம்பிக் கூறிய பேச்சுக்கள் அந்தச் சிறுவயதில்கூட என் உள்ளங்களைக் கலக்கிவிட்டது.
"அம்மா, சிறு பிள்ளையாக உன்னையும், கைக்குழந்தை யாகிய உன் தங்கையையும் துணையில்லாமலே விட்டுப் போகிறோம்.
"நாங்கள் இனி வாழ முடியாது, ஆனாலும் எங்கள் கவலை உங்களைப் பற்றியதுதான். நீங்களாவது வாழ வேண்டும். ஆனால் உங்களைப் பாதுகாக்க இனி யாருமில்லையே என்றுதான் கவலைப்படுகிறேன்.
"நீ சிறு பிள்ளை, ஆனால் நீயாவது நாங்கள் சொல்வதை அறியக் கூடிய வயது உடையவள். உன் தங்கையை ஒரு தாய்போல், தந்தை போலப் பார்க்கும் பெரும் பொறுப்புக்கள் கூட உன் சின்னஞ்சிறு தோள்களின்மேல் போட்டுப் போகிறோம்.
"உன்னால் எப்படி இவ்வளவும் முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் கண்ணீரும் கவலையும்தான் உனக்கு இனி வலுவும் அறிவும் தந்து, தங்கையையும் வளர்த்து நீயும் வளர உதவ வேண்டும்.
"கடவுளாக ஒரு வழிகாட்டும் வரை இந்தக் கட்டத்தில் இந்த அறையைவிட்டு எங்கும் போகாதே. தங்கையையும் போகவிடாதே.
"நல்லகாலமாக இந்த அறைக்குள் பல ஆண்டுகளுக்குப் போதிய உணவுப் பொருள்கள் இருக்கின்றன. தெரிந்த மட்டும் இங்கே சமைத்துண்டு வாழ்ந்து தங்கையையும் ஊட்டி வளர்ப்பாயாக.
"நாங்கள் போகிறோம். உன்னை நம்பி உங்கள் வாழ்வில் மாளா நம்பிக்கையுடன் உங்களை விட்டுப் போகிறோம்.
"கடவுள் தான் இனி உன் தாய், தந்தை, உறவினர் எல்லாம்.
“காலம் வரும், எப்படியாவது அதுவரை எவருக்கும் தெரியாமல், எங்கும் போகாமல், எவரையும் நம்பாமல் இங்கே வாழுங்கள்.”
திரும்பத் திரும்ப நினைத்து அவர்கள் முகங்களை நான் என் நெஞ்சில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சொற்களைக் சொல்லிச்சொல்லிப் பாடம் செய்து கொண்டிருக்கிறேன்.
அறியாச் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்து எப்படியோ நான் சமைக்கவும் ஆடை புனையவும் வீடு காக்கவும் கற்றுக் கொண்டு, இந்த என் தங்கையையும் வளர்த்து வந்திருக்கிறேன்.
“இந்த அறையை ஒட்டிய அடுத்த அறையே எங்கள் வீடு, எங்கள் ஊர், எங்கள் உலகம், அதிலிருந்து பார்த்தால் எல்லா அறைகளும் தெரியும். ஆனால், அதிலிருந்து இந்த அறைக்கு மட்டும் எவரும் அறியாது வரும் வழி உண்டு. அதன் மூலமாகவே நாங்கள் தோன்றித் தோன்றி மறைகிறோம்.”
ஆவிகள் அறிந்த வரைக்கும் குழந்தை ஆவிகளின் கதையைக் கேட்டுத் தென்னவன் தன் வாழ்வின் முதல் தடவையாகக் கடவுளுக்கு மனமார வணக்கம் செலுத்தினான். ‘இந்தக் குழந்தை ஆவி ஊடாடும் வீட்டுக்கு வந்ததனால், நான் எத்தனை புண்ணியம் செய்தவனாவேன்’ என்று மகிழ்ந்தான்.
குழந்தை ஆவிகளின் கதையின் மற்றக் கூறுகளை அறியத் தென்னவனுக்கு நெடுநாள் பிடிக்கவில்லை. நண்பகலில் ஒருநாள் தென்னவன் வெண்ணிலாவே போன்ற ஒரு நங்கை தெருவில் போவது கண்டான்.
அவனை அறியாமல் அவன் அகம் துடித்தது. “வெண்ணிலா” என்று கூவினான்.
அவள் சட்டென நின்றாள். அவள் கையிலிருந்த நீர்க்குடம் கீழே விழுந்து உடைந்தது. அருகே ஊர் கூடிவிட்டது. ஆனால், நங்கை தன்னை விரைவில் சமாளித்துக் கொண்டாள்.
‘எனக்கு வழக்கமான மயக்க நோய் திடுமென வந்து விட்டது. வேறொன்றுமில்லை’ என்று கூறி, மற்றவர்களையெல்லாம் அவள் அனுப்பி விட்டாள். தென்னவனை நோக்கி அதன்பின் அவள் தழுதழுத்த குரலில் பேசினாள்.
"அன்பரே! நீங்கள் கூறிய பெயர் கேட்டுத்தான் நான் அதிர்ச்சியடைந்தேன்.
“வெண்ணிலா என்ற பெண்ணை நீங்கள் அறிவீர்களா? இன்னும் உயிருடன் இருக்கிறாளா?” என்றாள்.
தென்னவன் பக்குவமாக வெண்ணிலா, முத்தொளி ஆகிய இரு பெண்கள் தன் தங்கையர்களாக வாழ்வதை எடுத்துரைத் தான். ஆனால், குழந்தை ஆவி வீடு பற்றிக் கூறவில்லை.
அவள் மூலம், அவர்கள் வாழ்வின் பெரும் பகுதியும் அவனுக்கு விளக்கமாயிற்று.
“அன்பரே! இனி நீங்கள் எனக்கும் அண்ணா தான். அண்ணா என்று அழைக்க விரும்புகிறேன்.” அண்ணா!
"என்னைப் பார்த்து நீங்கள் வெண்ணிலா என்று அழைத்தீர்கள். அதில் இப்போது எனக்கு வியப்பில்லை. நானும் அவளும் இரட்டைப் பிள்ளைகள். என்னுடன் இப்போது ஒரு தங்கை இருக்கிறாள்; அவள் பெயர் தென்றல்; அவளை நீங்கள் பார்த்தால் முத்தொளி என்று கூப்பிடுவீர்கள். அவளும் முத்தொளியும் இரட்டைப் பிள்ளைகள்.
"நாங்கள் நால்வரும் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள், எங்கள் தாய் தந்தையர் இந்த ஊரில் பெருஞ் செல்வத்துடன் இருந்தார்கள். ஆனால், என் தந்தையின் தமையனான பெரியப்பா ஒருவர் எங்கள் தந்தையையும் தாயையும் எங்களையும் ஒழித்து விட்டு எங்கள் செல்வம் கவர எண்ணினார். நாங்கள் ஈழம் செல்லும்போது கப்பலிலேயே எங்களைக் கொல்லும்படி கொலைகாரரை உடன் அனுப்பியிருந்தார். ஆனால், தற்செயலாக எங்கள் பெற்றோர் வெண்ணிலாவையும் முத்தொளியையும் வீட்டில் விட்டு என்னையும் தென்றலையும் மட்டும் இட்டுச் சென்றிருந்தனர். வழியில் புயலில் கப்பல் உடையவே, எங்களுடன் கொலைகாரரும் உயிர்ப்பேரிடருக்கு ஆளானார்கள். அவர்கள் எங்கள் தாய் தந்தையரிடம் உண்மை கூறினர். அத்துடன் பிழைத்தாலும் தாய்நாடு மீளக் கூடாது என்று தாய் தந்தையருக்கு எச்சரித்துவிட்டு, எங்களை மாற்றுப் பெயருடன் காத்து வாழ வைப்பதாகக் கூறி இட்டுச் சென்றனர்.
"அந்தக் கொலைகாரர்கள் எங்களுடன் படகில் தப்பி வந்து விட்டார்கள். பெற்றோர்கள் என்ன ஆனார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், கொலைகாரர்கள் கொலைக்குரிய பணம் வாங்கிய பின் உண்மையிலேயே திருந்தி விட்டார்கள். நாங்கள் யார் என்று கூறினால் உயிருக்கு இடர் ஏற்படும் என்று எச்சரித்து, எங்களைத் தங்கள் பிள்ளைகளாகவே வளர்த்து வருகிறார்கள். இப்போது அவர்கள்தாம் எனக்கும் தங்கைக்கும் பெற்றோர்.
“இங்கே வந்தபின் எங்கள் உடன் பிறந்தார்களைப் பற்றி எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களும் இறந்து போய் இருப்பார்களென்றே இதுவரை நானும் தங்கையும் எண்ணி யிருக்கிறோம். நீங்கள் வெண்ணிலா என்று என்னைப் பார்த்து உரைத்தபோது, என் வாழ்வில் புத்தமுதம் ஊட்டினீர்கள். வெண்ணிலாவுக்கும் முத்தொளிக்கும் மட்டுமல்ல, எனக்கும் தென்றலுக்கும்கூட நீங்கள் தான் ஒப்பற்ற உயிர் அண்ணா! வாருங்கள்; தென்றலையும் தன் தாய் தந்தையரையும் வந்து பாருங்கள்” என்றழைத்தாள்.
“தற்போது உங்கள் தாய் தந்தையரிடம் எதுவும் சொல்ல வேண்டாம். தென்றலுக்குப் பக்குவமாக வேண்டிய அளவு கூறு. சில நாளில் நான் வந்து மேலே வேண்டியது கூறுகிறேன்” என்று கூறித் தென்னவன் மீண்டான்.
பொன்முடியிடம் தென்னவன் குழந்தை ஆவிகளின் அனுபவம் முதல் புதிய தங்கையர்வரை யாவும் கூறினான். அவன் அறிவுரை கோரினான்.
பொன்முடிக்கும் இந்த நிகழ்ச்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடும் என்று தென்னவன் நினைத்ததில்லை. ஆனால், தென்னவன் பேச்சிடையே பொன்முடி பெருமூச்சு விட்டான். கண் கலங்கினான். இறுதியில் ஆறாகக் கண்ணீர் பெருக்கித் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.
தென்னவன் திகைத்துத் தன்னாலியன்ற மட்டும் அவனைத் தேற்றினான். “இப்படி நண்பன் அழுதால் நான் என்ன செய்ய முடியும். இதுபற்றி உனக்குத் தெரிந்தவை யாவும் கூறு. பின் ஆவன செய்வோம்” என்றான்.
"அன்பனே, உன்னைப்போல புண்ணியவானும் இந்த உலகில் கிடையாது. என்னைப்போலப் போலியும் கிடையாது.
"உடன் பிறவாத நீ நான்கு நங்கையர்க்கும் உடன் பிறந்த வனிலும் இனிதான அண்ணனாக அமைந்திருக்கிறாய். உடன் பிறந்தவனான நான் அவர்கள் வாழ்க்கைக்குயமனாக வாழ்ந்து விட்டேன்.
"இந்த நான்கு நங்கையர்களின் பெற்றோர் எங்கிருக் கிறார்களோ என்னவானார்களோ எனக்குத் தெரியாது. பிள்ளைகளை மாளாது காத்த இறைவன் அவர்களையும் காத்திருக்கக்கூடும் என்று மட்டும் இப்போது நம்ப இடம் இருக்கிறது. அவர்கள் தந்தை எழுமுடியும் என் தந்தை இறைமுடியும் உடன் பிறந்தவர்கள். ஆகவே, அவர்கள் என் தங்கையர்களே. இப்போது என் செல்வம் என்று இந்த ஊரார் கருதுவதில் பெரும்பகுதி அவர்களுடையதே. ஏனெனில், எங்கள் குடும்பச் செல்வம் அதில் காற்கூறுதான். தங்கையர்களின் தாய் கொணர்ந்த செல்வமே முக்காற்கூறு ஆகும். தன் தம்பியையும் தம்பி குடும்பத்தையும் ஒழித்தால் அவ்வளவு செல்வத்தையும் எனக்காக்கி விடலாம் என்று என் தந்தை நினைத்ததை நான் அறிவேன். அதை எப்படி அவர் செய்து முடித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், திடுமென ஒருநாள் எல்லாரும் காணாமற் போயினர் நாங்கள் முறைப்படி இழவு கொண்டாடினோம். செல்வ முழுவதும் என் தந்தை கைக்கு வந்தது.
"அவரும் ஒரு சில மாதங்களுக்குள் இறந்ததால், நான் எதுவும் அறியாமலே இப்பெருஞ் செல்வம் எனக்குரியதாகி விட்டது. குழந்தை ஆவி குடியிருந்த வீடு உண்மையில் சிற்றப்பா வீடுதான். அதுவும் சின்னம்மை வழி வந்த வீடு. குழந்தை ஆவிக்கதை கேட்டபின். தந்தை குழந்தைகளை அந்த வீட்டில் கொன்றதனால் தான் அங்கே ஆவிகள் உலவுவதாக நினைத்தேன்.
"என் தந்தையின் கொடும் பழிகள் இப்போது விளக்கமாகத் தெரிகின்றன. அப்பழிகளுக்கு எவ்வளவு வருந்துகிறேன் என்பதை என்னை நன்கறிந்த நண்பனாகிய உனக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை. ஆனால், கடவுள் அந்தப் பழிகள் முற்றிலும் நிறைவேறாமல் காத்தமைக்கு மகிழ்கிறேன்.
“சிற்றப்பாவும் சின்னம்மாவும் உயிருடனிருந்தால், அவர்கள் கால்களில் விழுந்து தந்தையை மன்னிக்கும்படி வேண்டி அவர்கள் செல்வத்துடன் என் செல்வத்தையும் தங்கையர்கட்கே கொடுப்பேன்” என்றான்.
வெண்ணிலாவும் அவள் உடன் பிறந்தார்களும் இனி ஆவிகளாகவோ பிற வகையிலோ மறைந்திருக்கத் தேவையில்லை என்று தென்னவன் கண்டான். வெண்ணிலாவுக்கும் முத் தொளிக்கும் இளவேனிலுக்கும் தென்றலுக்கும், இளவேனிலையும் தென்றலையும் வளர்த்த பெற்றோருக்கும் அவன் எல்லா விவரமும் கூறியபின் அவர்களை ஒருங்கு கூட்டினான்.
பொன்முடியின் தலைமையில் ஊராரைக் கூட்டித் தென்னவன் குழந்தை ஆவிகளின் உருக்கமிக்க கதை முழுதும் கூறினான்.
“அவர்கள் ஆவிகளல்ல. ஆள் துணையற்று ஆரிடர்பட்ட குழந்தைகளே” என்று கூறி அவர்களையும் அவர்கள் உடன் பிறந்தார்களையும் வளர்த்தவர்களையும் அறிமுகப்படுத்தினான்.
பெற்றோர்கள் அவ்வூரையடுத்த காடுகளிலேயே திரிந்திருந்தனர். தங்கையின் இளவேனிலையும் தென்றலையும் வளர்த்தவர்கள் அவர்களை அடையாளங்கண்டு இட்டு வந்தனர். கப்பலில் தாமும் பிழைத்து வந்தாலும், தங்கள் உயிருக்கும் மற்றப் பிள்ளைகள் உயிருக்கும் அஞ்சியே பிள்ளைகளை நிலவறையில் விட்டுச் சென்றதாகவும் அவர்கள் கூறினார்கள். இளவேனிலை வளர்த்தவர்கள் அவர்களைக் கண்டும் காணாததுமாய் விட்டிருந்தனர்.
தென்னவனும் பொன்முடியும் தாம் பெற்ற தங்கைச் செல்வங்களுக்கு எல்லாச் செல்வமும் அளித்து ஊக்கினர் அவர்கள் வாழ்வில் தம் வாழ்வின் மாவளம் கண்டு மகிழ்ந்தனர்.
புட்டிச்சாத்தன்
ஹவாய்த்¹ தீவில் ஓர் ஊரில் ஓர் ஏழை இருந்தான். அவன் பெயர் கீவ். அவன் ஓர் இளைஞன். அவனுக்குத் திடமான உடல் இருந்தது; அழகிய தோற்றம் இருந்தது; அந்தத் தீவிலுள்ள மக்கள் பேசிய மூன்று நான்கு மொழிகளையும் அவனால் திருத்தமாகப் பேசவும் எழுதவும் முடியும். அத்துடன் அவன் சுறு சுறுப்பானவன். ஆனால், இத்தனையும் இருந்தும், அவன் எப்படியோ ஏழையாகவே காலங்கழித்து வந்தான்.
அயல் நாடுகளுக்குச் சென்றால், தன்னைப் பிடித்த ஏழ்மை தன்னைவிட்டுப் போகக்கூடும் என்று அவன் எண்ணினான். தன் வீடு வாசல் எல்லாவற்றையும் விற்று இருநூறு வெள்ளிகளுடன் அவன் புறப்பட்டான். கொழும்பு, சென்னை, சிங்கப்பூர், ஷாங்ஹாய் முதலிய நகரங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, அவன் சான்ஃபிரான் சிஸ்கோ’ நகரத்துக்குச் சென்றான்.
சான்ஃபிரான்சிஸ்கோவி³ன் அழகு கீவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. வீடுகளும் தெருக்களும் வாழ்வதற்காக மட்டுமல்ல; அழகு பார்ப்பதற்காகவும் கட்டமைக்கப்பட்டன என்று தோன்றிற்று. பகலெல்லாம் நகரைச் சுற்றிப்பார்த்தபின், மாலையில் அவன் நகர்ப்புறத்தில் உள்ள அழகிய துறைமுகத்தையும், அதையடுத்துள்ள குன்றையும் சுற்றி உலாவினான்.
துறைமுகம், சலவைக்கல்லால் செதுக்கி உருவாக்கப்பட்ட தெப்பக்குளம் போலக் கிடந்தது. அதில் தங்கி மிதந்த பெரிய கப்பல்கள், தூங்குகிற பெரு முதலைகளைப் போலவும், அவற்றினி டையே திரிந்த மற்றச் சிறு கப்பல்களும் படகுகளும் அவற்றைச் சுற்றி விளையாடும் குட்டி முதலைகளைப் போலவும் காட்சியளித்தன.
கீவ் - துறைமுகத்திலிருந்து குன்றின் பக்கமாகச் சென்ற போது ஞாயிறு செவ்வண்ணமடைந்து கடல் நீரையெல்லாம் பொன்னாகவும், மலைக்குவட்டையெல்லாம் பவளமாகவும் மாற்றியிருந்தது. குன்றின் அடிவாரமெங்கும் பசுஞ் சோலை வனங்களாயிருந்தன. அவற்றிடையே அழகிய வேலைப் பாடமைந்த சிறு மாடங்களும் பெருங்கூடங்களும் இடமகன்ற அரண்மனைகளும் இருந்தன.
ஹவாயில் பல கட்டடங்களைப் பார்த்து அவன் பொறாமைப் பட்டதுண்டு. ஆனால், ‘அந்தக் கட்டடங்களுக்கு உரிய செல்வர்கள் இங்கே வந்தால், இந்த மாட கூடங்களைப் பார்த்துப் பொறாமைப்படாமலிருக்க முடியாது’ என்று கீவ் தனக்குள் கூறிக்கொண்டான்.
குன்றில் அவன் நெடுந்தொலை ஏறிவிட்டான். சோலை வனங்கள் முடிவுற்றுக் கடும்பாறை கண்ணுக்கெதிரே தோன்றிற்று. இனித் திரும்பவேண்டியதுதானே’ என்று தனக்குள் சொல்லிய வண்ணம் அவன் தன் பார்வையைத் திருப்பினான். அச்சமயம் அவன் கண்முன் கண்ட காட்சி அவனை அப்படியே மலைக்க வைத்து விட்டது!
அரண்மனைகளைவிடச் சிறிய ஒரு மாளிகை அது! ஆனால் அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் அரண்மனைகளின் அழகு குழைத்து வைக்கப்பட்டிருந்தது. மற்ற அரண்மனைகளில் அவன் மணிகளைக் கண்டால் இதில் மணிகளின் மணியாகிய முத்தைக் கண்டான் என்று கூறலாம். அதன் தோட்டங்கள் சித்திரங்கள் போன்றிருந்தன. சித்திர வடிவம் தோன்றச் சிதறிப் பாய்ந்த ஊற்றுக்கள், அவற்றைக் கேலிசெய்யும் கலையின் சிரிப் பொலி களாகக் காட்சியளித்தன. சுவர்கள் வண்ணப் பளிங்குகளாக ஒளிநிழல் வீசின. கதவுகளும் பலகணிகளும் வளைந்து வளைந்து செல்லும் மரப்படிகளும் அவற்றை வரவேற்கும் வாயில் வளைவுகளும் வண்ணப் பளிங்கு மேடையில் ஒசிந்து நெளிந்தாடிய ஆடலணங்குகளாக அவன் கண்களை மயக்கின.
“இந்த வீட்டுக்குரியவன் மண்ணுலகின் அவாக்கள் அத்தனையையும் தாண்டி அவற்றின் உச்சி மகுடத்தில் வீற்றிருப் பவனாகவே இருக்கமுடியும். இதன் அழகின் முன் ஹவாய் ஒரு துரும்பு. அமெரிக்கா முழுதும் இதன்முன் வெறும் இரும்பு. அனைத்துலகும் கனவு கண்டும் உண்டு திளைக்காத செங்கரும்பு இது”என்று பலவாறு அதை உள்ளுக்குள்ளே புகழ்ந்து வியந்தபடி தன்னை மறந்தவனாய் அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றான், கீவ்!
‘வாழ்ந்தால் இதுபோன்ற வீட்டிலல்லவா மனிதன் வாழ வேண்டும்!’ என்று அவன் கலையுணர்வு, அவனை இடித்துக் கூறிற்று. இதன் ஒரு தூணைக் கட்டிமுடிக்க எவ்வளவு செலவாகும் என்பதை எண்ணிப் பார்த்தாயா? ஆயிரம் பொன்னைக் கையில் வைத்துக் கொண்டு ஆய்ந்தோய்ந்து பார்க்கவேண்டிய செய்தியில், அத்தனை வெள்ளிகூட இல்லாத நீ அரைக்கணத்தில் திட்டமிடுகிறாயே!’ என்று அடித்துப் பேசிற்று அவன் அனுபவ அறிவு.
ஆனாலும், ஆவல் யாரை விட்டது? அவன் தன் சட்டைப் பையில் கையைவிட்டு, அதிலுள்ள பணத்தை எண்ணிப் பார்த்தான். சரியாக ஐம்பது அமெரிக்க வெள்ளிகள்தான் இருந்தன. ஒரு காசு கூடவோ குறையவோ இல்லை. உலகம் சுற்றுவதற்காக அவன் கொண்டு வந்திருந்த இருநூறு வெள்ளிகளில் மீந்திருந்த தொகை அது. திரும்ப ஹவாய்க்குப் போகக்கூட அந்தத் தொகை முழுவதும் பற்றாது.
அவன் கனவுக் கடலின் எண்ண அலைகளில் மிதந்து தத்தளித்தான். அச்சமயம், “அன்பனே, ஏன் தயங்குகிறாய், அந்த ஐம்பது வெள்ளி கொடுத்தால் போதும். இந்த வீடு வேண்டு மானாலும் கிடைக்கும். இதுபோல் எத்தனை வீடுகள் வேண்டு மானாலும் கட்டிக் கொள்ளலாம்.” என்றது ஒரு குரல்.
அவன் அருகே வயது சென்ற, கூனிய ஒரு குள்ள உருவம் நின்றிருந்தது. அவன் தன் கண்களை நம்ப முடியவில்லை. “என்ன? என்ன? இந்த வீட்டையா? ஐம்பது வெள்ளிகளுக்கா? நீ கேலி செய்கிறாய்!” என்றான் அவன்.
குள்ள உருவத்தின் முகத்தில் கேலிக் குறிப்புக் கொஞ்சங்கூட இல்லை. “ஆம், இந்த வீட்டைத்தான். ஏன்? இந்த வீட்டைப்போல ஆயிரம் வீடுகளையோ ஆயிர மடங்கு மற்ற இன்பங்களையோகூட நீ பெறலாம். ஐம்பது வெள்ளியைக் கொடுத்து வாங்க விருப்ப மிருந்தால் கூறு.” என்றது அக்குள்ள உருவம் “என்னால் நம்ப முடியவில்லை. இது என்ன குட்டிச் சாத்தான் கதைபோலல்லவோ இருக்கிறது?” என்றான் கீவ்.
“இது குட்டிச்சாத்தான் கதையல்ல தம்பி; ஆயினும் இதில் ஒரு புட்டிச்சாத்தனின் திருவிளையாடல் உண்டு. நீ இந்த வீட்டை வாங்கினாலும் சரி; வாங்கா விட்டாலும் சரி; இரண்டும் எனக்கு ஒன்றுதான்; இதை வாங்க விரும்பும் உனக்கும் ஒன்றுதான். அந்தப் புட்டிச்சாத்தனை நீ ஐம்பது வெள்ளி கொடுத்து வாங்கினால் இந்த வீடே உனக்குத் தேவையில்லை. இதைக் காட்டிலும் உயர்ந்த எத்தகைய வீடோ, தோட்டமோ, பொன்னோ, மணியோ, புனை மகுடமோ எது வேண்டுமானாலும் அந்தப் புட்டிச்சாத்தனிடம் கேட்டமாத்திரத்தில் உனக்குக் கிடைக்கும். நீ அதை வாங்கிக் கொள். ஐம்பது வெள்ளியையும் கொடுத்து வாங்கிக்கொள்,” என்றது.
குள்ள உருவம் தன் சட்டைப் பையில் கையை நுழைத்து ஒரு கரிய நிறமுடைய சிறு புட்டியை எடுத்து நீட்டிற்று. கீவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், மேற்கு வானொளியில் குள்ள உருவம் புட்டியைக் காட்டிய போது, அதில் பாதரசத்தின் நிறத்தில் தலைகீழாக ஒரு சிற்றுருவம் தெரிந்தது. அது கீவை நோக்கிக் குறும்புச் சிரிப்புச் சிரிப்பதுபோலக் காட்சியளித்தது.
இப்போதும் கீவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. குள்ள உருவம் புட்டியைத் தலைகிழாகவும் நெட்டாகவும் பல நிலைகளில் திருப்பிக் காட்டிற்று. புட்டி எந்த நலையிலிருந்தாலும் உள்ளிருந்த பாதரசக் குறளி ஒரே நிலையில் தலை கீழாகத்தான் நின்றது!
குள்ள உருவம் புட்டியை நிலத்தின்மீது ஒங்கி வீசிற்று. அது தெய்வத்தால் செய்த பந்துபோல் துள்ளி அவன் கைக்கே திரும்பி வந்தது! அவ்வுருவம் அதைக் குன்றின் குவட்டை நோக்கி வீசி எறிந்தது. பின் சட்டைப் பையில் கையைவிட்டு அதை எடுத்துக் காட்டிற்று!
கீவ் இவ்வளவையும் வியப்புடன் நோக்கினாள்! ஆனால், “ஆயிரம் வெள்ளி கொடுத்தாலும் பெறமுடியாத இந்த வீட்டைத் தர இதனிடம் என்ன ஆற்றல் இருக்க முடியும்?” என்றான்.
குள்ள உருவம் புட்டிச்சாத்தனை நோக்கி, “இந்நண்பன் காண இந்தக் குன்றின்மீதிருந்து ஓர் அருவியை வரவழைத்துக் காட்டு,” என்றது.
குன்றின் முகட்டில் கதிரவனின் கடைசிக் கதிரொளி தயங்கி ஒளி வீசிய இடத்திலிருந்து ஒரு மின்னொளி கிளம்பிற்று. அது முகில் வரைகளைச் சுற்றும் மின்னற் கொடிபோலக் குன்றின் மேடு பள்ளங்களிடையே விரைந்து. நெளிந்து நெளிந்து வந்தது! ’இம்’மென்பதன் முன்னே அவர்கள் பேசிக்கொண்டிருந்த மாளிகையின் அருகாகச் சலசலவென்று ஓர் அருவி வந்து விழுந்தது. அது மாளிகை கடந்து மலைச்சாரலில் உலவி, துறைமுகத்தை அடுத்த ஒரு சிறு குடாவில் சென்று கலந்தது! கீவ் புட்டிச்சாத்தனை என்றும் நம்பியதில்லை. ஆனால், இன்று ஒரு புட்டிச் சாத்தனின் திருவிளையாடலைக் கண்முன் கண்டான்!
“என்ன வியத்தகு புட்டிச்சாத்தன்! என்ன வியத்தகு புட்டி! இதற்காக என்ன விலை கொடுத்தாலும் தகும்!” என்று கீவ் வாய்விட்டுக் கூறினான்.
“ஐயமென்ன, தம்பி, கொடுத்த விலையையும் இது உடனே திருப்பிக் கொடுக்கும் அதற்குமேல் விரும்பிய யாவும் கொடுக்குமே!” என்று குள்ள உருவம். அதன் முகத்தில் முதல் முதலாக மகிழ்ச்சிக் குறிப்புத் தோற்றிற்று. தன் ஆவல் கண்டு எங்கே அது ஐம்பது வெள்ளிக்குமேல் கேட்டுவிடப் போகிறதோ என்று அவன் அஞ்சினான்.
அவன் எண்ணத்தை அறிந்ததுபோல் அவ்வுருவம் "ஐம்பது
வெள்ளிக்குமேல் கொடுக்க வேண்டிவரும் என்று நீ அஞ்ச வேண்டாம். நீ கொடுத்தால் கூட நான் ஐம்பது வெள்ளிக்கு மேல் வாங்க மாட்டேன்" என்றது.
“ஏன் அப்படி? இதில் ஏதேனும் சூது இருக்கக் கூடுமோ?” என்று எண்ணினான் கீவ். அந்த எண்ணத்தையும் ஊடுருவிக் கண்டதுபோலப் புட்டிக்குரிய குள்ள உருவம் பேசிற்று. "ஆம், இதில் ஒரு சிறிது சூது இல்லாமலில்லை; நான் உன்னை வஞ்சிக்கமாட்டேன்; நன்மை தீமைகள் யாவற்றையும் என் வரலாற்றையும் வாழ்வு தாழ்வையும் கூறிவிடுகிறேன்; அதன் பிறகு நீ விரும்பினால், நீ துணிந்தால், இதை வாங்கிக் கொள்ளலாம்.
"இந்தப் புட்டியில் இருக்கும் புட்டிச்சாத்தனின் ஆற்றலுக்கு அளவே கிடையாது. இதை விலைக்கு வாங்கிய எவரும் அந்த ஆற்றலைப் பெற்றுத் தாம் விரும்பிய செல்வங்கள், உயர்வுகள், புகழ்நிலைகள் எவையானாலும் வட்டியில்லாமல் பெறலாம். இதை வாங்கியவர்கள் பலர் உலகத்தை ஆண்டிருக்கிறார்கள்! பெருஞ்செல்வத்தை மலைபோலக் குவித்து ஆரவாரம் செய்திருக்கிறார்கள்! பெறற்கரிய இன்பவாழ்வு பெற்றிருக் கிறார்கள். செயற்கரிய செயல்கள் செய்திருக்கிறார்கள்!
"ஆனால், இந்தப் புட்டிச்சாத்தன் தரும் கொடைகளுக்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. அது மனித வாழ்வின் மட்டான, இயற்கை எல்லையாகிய அறுபது ஆண்டுக்குமேல் ஒருகணநேரம் கூட வாழ்வு அளிக்காது. அத்துடன், இதை வாங்கியபின் அந்த நாளைக்குள் விற்றுவிடாதவர்களுக்கும் ஒரு தண்டனை உண்டு. அந்த நாள் வருவதற்கு முந்தினநாளிலேயே இந்தப் புட்டிச் சாத்தன் அவன் உயிரைக் தன் கையில் பற்றி, என்றும் சாகாத நரகத்துன்பங்களுக்கு ஆளாக்கிவிடும்.
“எனக்கு இப்போது வயது ஐம்பத்தைந்துக்கு மேலாகி விட்டது. ஐம்பது ஆண்டு வந்தது முதல், இந்த அழகிய இன்பமாளிகையில் எனக்கு இருக்கை கொள்ளவில்லை. இந்த வீட்டின் அழகைக் காண்பவர்கள் யாராவது இதை வாங்கிக் கொள்ள மாட்டார்களா?’ என்று தான் நான் கவலைகொண்டு வாழ்கிறேன்.”
கீவ் இளைஞன். அவன் இன்னும் இருபத்து மூன்றாவது வயது தாண்டவில்லை. பேய், பொன்னுலகம், நரகம், கடவுள் ஆகிய எதுபற்றிய கவலையும் அவனுக்கு இல்லை. ஆகவே, அவன் குள்ள உருவமடைய கிழவன் சொல்லியது கேட்டு இரக்கப்பட்டான். உடன் தானே புட்டியை விலைக்கு வாங்கிவிட அவன் கையும் ஆகமும் அகமும் படபடத்தன. ஆயினும் ‘ஐம்பது வெள்ளிக்கு அதைக் கொடுக்க முன்வருவானேன்? விற்பதில் ஏன் இவ்வளவு துடிப்பு? இவ்வளவு ஏக்கம்? புட்டிச்சாத்தனின் அருஞ்செயல் கண்ட எவரும் எத்தனை வெள்ளி, எத்தனை பொன் கொடுத்தும் இதை வாங்கத் தயங்க மாட்டார்களே!’ என்று அவன் எண்ணினான். கிழவன் மேலும் பேசினான்;
"இவ்வளவு சிறந்த கருவூலத்தை விற்பதில் என்னகவலை என்று நினைக்கிறாய் போலத் தோற்றுகிறது. முதலாவதாக, உன்னைப் போன்ற இளைஞர்களுக்குத்தான் இவ்வளவு ஆர்வமும் துணிச்சலும் இருக்க முடியும். அத்துடன் இதை விற்பதற்கும் மற்றச் சரக்குகளை விற்பதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. பொதுவாக வாங்கிய விலையைவிடக் கூடுதல் விலைக்கே எவரும் எதையும் விற்க விரும்புவார்கள். இதனால் பொருள்களின் விலை கைமாறுந்தோறும் ஏறுகிறது. இந்தப்புட்டியின் செய்தி இதற்கு நேர்மாறானது. இதை வாங்கின விலைக்கு ஒரு காசு கூட்டி விற்றாலும், அதே விலைக்கு விற்றாலும் வாங்கியவனிடமிருந்து விற்றவனிடமே இது திரும்பி வந்து விடும். ஆகவே, இதை விற்கும் ஒவ்வொரு தடவையிலும் இதன் விலை குறைந்து கொண்டே போகிறது.
“தொடக்கத்தில் இதன் விலை நூறாயிரம் பொன்னுக்கு மேலிருந்ததாகக் கேள்வி; மன்னர்களுக்கும் இளங்கோக்களுக்கு மிடையே இது கைமாறிற்று; ஆனால், விலை குறையக்குறைய இது என் போன்ற ஏழைகளிடமும் வந்து வாழ்வளிக்கத் தொடங்கிற்று; நான் இதை ஐம்பத்தொரு வெள்ளிக்குத்தான் வாங்கினேன். என்னிடங்கூட அவ்வளவு வெள்ளிதான் இருந்தது; வாங்கினபின் நான் ஐந்தாண்டுகளுக்கு முன்வரை கவலைப் பட்டதேயில்லை; எத்தனை ஆயிரமாயிரம்பொன் வேண்டு மானாலும், வேறு என்ன பொருள் வேண்டுமானாலும் புட்டிச் சாத்தன் எனக்குத் தந்தது. ஆனால், இவ்வளவு குறைந்த விலைக்கு எப்படிக் கொடுப்பது என்றுதான் கவலைப்படுகிறேன்.”
இதைக் கேட்டதும் கீவ் முன்னைவிட உரக்க வாய்விட்டுச் சிரித்தான். பிறகு, “எங்கே, முதலில் எனக்கு ஒன்றிரண்டு வெள்ளி கொடு, கூடுதல் கொடுத்து அது உம்மிடமே திரும்புகிறதா, பார்ப்போம்.” என்றான்.
கிழவன் கைநிறைய வெள்ளிகள் கொடுத்தான். கீவ் ஐம்பத்திரண்டு வெள்ளிகள் எண்ணிக் கொடுத்து விட்டுப் புட்டியுடன் பத்தடித் தொலைவு சென்றான். ஆனால் சட்டைப்பையில் கைவிட்டபோது, புட்டி அதில் இல்லை; அது கிழவன் கையில் இருந்தது.
புட்டிச்சாத்தனின் மீது இப்போது கீவுக்குக் கட்டுக் கடங்காத ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பொழுது சாய்வதற்குக் கூட அவனால் பொறுக்க முடியவில்லை. அதற்குள் புட்டிக்கு விலைகொடுத்து வாங்கி அதன் மூலம் தான் விரும்பிய செல்வங்களைப் பெற அவன் துடித்தான். ஐம்பது வெள்ளிகளும் குள்ளக்கிழவனிடம் சென்றன. புட்டியும் புட்டிச்சாத்தனும் அவன் சட்டைப்பையில் ஒட்டிக்கொண்டன.
முதலில் புட்டியைப் பயன்படுத்தும் ஆர்வத்தைவிட, அதன் அருஞ்செயல்களைக் காணும் ஆர்வமே கீவுக்கு மிகுதியாக இருந்தது. அவன் புட்டிக்காகத் தான்கொடுத்த ஐம்பது வெள்ளியும் திரும்பத் தன்னிடம் வரவேண்டும் என்று கேட்டான். சட்டைப்பை உடனே பளுவாயிற்று. அதனுள்ளிருந்த பணத்தை எடுத்து எண்ணினான். சரியாக ஐம்பது வெள்ளி இருந்தது.
அவன் புட்டியை உடைத்துப் பார்த்தான். அது உடையவில்லை, நெட்டிவாங்கி ஒன்றைக் கொண்டு மூடியைத் திறக்க முயன்றான். நெட்டிவாங்கிதான் வெளி வந்தது; மூடியில் அதன் தடமே காணவில்லை.
புட்டியைத் தெருநடுவில் வைத்துவிட்டுச் சென்றான். முதல் திருப்பம் திரும்புமுன் புட்டியின் தலை கையில் முட்டியது. புட்டி பையில் கிடந்தது.
புதிதாக வாங்கிய விளையாட்டுப் பொருளுடன் சிறு குழந்தை விளையாடுவதுபோல அவன் விளையாடினான். அதன் அருஞ்செயலிலுள்ள அவன் ஆர்வம் அத்தனை பெரிதாயிருந்தது!
நகரிலுள்ள ஒரு பழம்பொருள் வணிகனிடம் சென்று அப்புட்டியைக் காட்டி அதற்கு நூறு வெள்ளிவிலை கேட்டான். முதலில் அதைப் பார்த்துக் கடைக்காரன் சிரித்தான். பின் எப்படித் திருப்பினாலும் பாதரசக் குறளி தலை கீழாயிருக்கும் புதுமையைப் பார்த்தபின் அறுபது வெள்ளி கொடுக்க இசைந்தான். கீவ் புட்டியைக் கொடுத்துவிட்டு அறுபது வெள்ளியை வாங்கிக் கொண்டு நடந்தான். “வாங்கியதை விடக் கூடுதலான விலைக்குக் கொடுத்துவிட்டேன். அது திரும்பி வருகிறதா பார்ப்போம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கப்பலில் ஏறியபின் அவன் சட்டைப்பையில் துழாவினான். பணத்துடன் புட்டியும் இருந்தது!
புட்டியைப் பற்றிய சிந்தனை அவன் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்கவில்லை. அவன் கைகளும் என்ன வேலை செய்தாலும் இடையிடையே பையைத் தொட்டுப் பார்க்கத் தவறியதில்லை.
கப்பலில் கீவுக்கு லோப்பாக்கா என்ற ஒரு நண்பன் பழக்கமானான். கீவ் எப்போதும் அழகிய வீடு வேண்டும் என்ற கனவில் ஆழ்ந்திருந்ததுபோல, அவன் எப்போதும் வாணிகம் நடாத்த ஓர் அழகிய படகு வேண்டும் என்ற கனவில் ஆழ்ந்திருந்தான். கீவ் எப்போதும் எதையோ சிந்திப்பதையும், அடிக்கடி பையில் கை வைப்பதையும்கண்டு அவன் வியப்படைந்தான். ஏதாவது பெருஞ் செல்வமோ அல்லது அரும்பொருளோ இருக்கலாம் என்று நினைத்து, அவன் "கீவ், உன்னிடம் பணம் நிறைய இருக்கிறதுபோலத் தோற்றுகிறது. எனக்கு ஒரு படகு வேண்டும் என்று நீண்டநாள் அவா, அதற்கு நீ பணம் கடனாய் உதவ முடியுமா?’ என்று கேட்டான்.
கீவ் தான் வைத்திருந்த புதையல், அது பெற்றவகை, அதன் வியத்தகு ஆற்றல் ஆகிய யாவற்றையும் கூறி, “ஊர் போய் என் ஆவல் நிறைவேறியபின், உனக்குக் கடனாக அல்ல, இலவசமாகவே வேண்டிய தொகை தருவேன்.” என்றான்.
லோப்பாக்காவும் முதலில் எதையும் நம்பவில்லை. சல செய்திகளைக் கண்ணார நேரில் கண்டு. சிலவற்றைக் காதாரக் கேட்டபின்கூட அரைநம்பிக்கைதான் ஏற்பட்டது. “ஊர் சென்றபின் நீ நினைத்தபடியெல்லாம் நடந்தால், நான் உன்னிடமிருந்து பணம் பெறுவானேன்? புட்டியையே விலைக்கு வாங்கிக்கொள்கிறேன்.” என்றான் அவன்.
இதன்பின் கப்பலில் போகும்போதே கீவ் தன் அவாவைப் புட்டிச்சாத்தனிடம் கூறினான்;
“ஹவாயில் கோனா என்ற இடத்தினருகில் நான் பிறந்தேன். பிறந்த இடத்திலேயே எனக்கு ஓர் அழகிய தோட்டமும் வீடும் கடற்கரையருகில் வேண்டும். தோட்ட மெங்கும் பூஞ்செடிகள், கதிரவனொளியை வரவேற்கும் பல வண்ணக் கண்ணாடி களாலான கதவுகள். பலகணிகள், சலவைக் கல் தளங்கள் ஆகிய யாவும் அதில் இடம் பெற வேண்டும். வெள்ளிப் பொன் பூச்சுப் பூசிய சுவர்கள். அழகிய படங்கள், பட்டுத்திரைகள். வெண்தோதகத்திமரம், தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டுப் பொன் வெள்ளியாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட இருக்கைகள், கட்டடங்கள்யாவும் அதில் நிறைந்திருக்கவேண்டும். மற்ற வகைகளில் அது நான் சான்ஃபிரான் சிஸ்கோவில் கண்ட வீடுபோன்றிருக்க வேண்டும்.”
தான் கேட்ட இத்தனையையுங் கீவ் தன் நண்பனிடமும் கூறினான். “இறங்கினவுடன் அதன்படி நடக்குமா?” என்பது பற்றி இருவரும் ஓயாது பேசிப் பேசிப் பொழுது போக்கினார்.
ஊரில் இறங்கியவுடன் முதன் முதலில் அவர்கள் கேட்ட செய்தி கீவைத் துயரில் ஆழ்த்திற்று. அவன் நெருங்கிய உறவினர்கள் இருவர் இறந்துவிட்டனர் என்று அவனுக்குத் தெரியவந்தது. அவன் இது கேட்டு மிகவும் வருந்தினான். அவ்வருத்தத்தில் அவன் புட்டியையே மறந்து விட்டான். லோப்பாக்கா அதை நினைவு படுத்தினான். தான் வீடு கட்டிப்பார்க்க எண்ணிய இடம் அவர்களுக்கு உரிய இடம் என்று, அப்போதுதான் கீவுக்கு நினைவுவந்தது. இதைக் கேட்டதே நண்பன் லோப்பாக்கா துள்ளிக் குதித்தான். அன்பனே! கொன்றது நீ யல்லவா? இப்போது வருத்தப்படுவானேன்? நீ கோரிய வீட்டுக்கான மனையிடம் அவர்கள் நிலத்திலிருக்கும் போது, அவர்கள் சாகாமல் நீ நிலத்தை அடைவதெப்படி?" என்றான்.
இதுவரை தன் பேரவாவினிடையே கீவ் இதுபற்றிச் சிந்திக்க வில்லை. இப்போது, அதே பேரவா மீண்டும் எழுந்து அவன் வருத்தத்தையும் போக்கிற்று. இதற்குள் வழக்கறிஞர் ஒருவர் நிலத்தின் கிடப்பு வரை படம் ஒன்றை அவனிடம் தருவித்து, அதில் வீடு கட்டுவதாயிருந்தால் அதற்குரிய அமைப்பாளரையும் அனுப்பித் தருவதாகத் தெரிவித்திருந்தார். மறுநாளே அவன் விருப்பம் அறியுமுன்பே அமைப்பாளர் வந்து திட்டத்தை அவனுக்குக் காட்டினார். அவன் வியப்படைந்தான். திட்டம் அவன் மனத்தில் எண்ணிய எண்ணங்கள் அத்தனையையும் படம் பிடித்திருந்தது. கட்டடம் முடிப்பதற்கான செலவையும் அமைப்பாளர் கணக்கிட்டு ஒரு பெருந்தொகையைக் கூறிவிட்டுச் சென்றார்.
தொகைக்கு என்ன செய்வது என்று அவனுக்குத் தெரிய வில்லை. புட்டிச்சாத்தனிடமே அதையும் கேட்கலாம் என்பதைக் கூட அவன் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால், சிறிது நேரத்திற்குள் இன்னொருவன் வந்து, வீட்டுக்காக அவன் திட்டமிட்ட இடம் போக, மீந்த இடத்தை விலைக்குக் கேட்டான். பேரம் எதுவும் பேசமாலே, கீவ் திட்டமிட்ட வீட்டின் செலவுக்கான தொகையை எண்ணிவைத்து, அவன் நிலத்தைத் தனக்கு எழுதி வாங்கிக் கொண்டான்.
கீவின் நம்பிக்கையும் லோப்பாக்காவின் நம்பிக்கையும் வளர்ந்து ஆர்வத்துடிப்புக்கள் ஆயின. ஒரு சில நாட்களுக் குள்ளாகவே கீவின் கனவு நனவாயிற்று. அவன் கனவுகண்ட மாளிகையில் அவன் நனவுருவிலேயே சென்று குடிபுகுந்தான்.
புதிய வாழ்வால் அவன் பண்புகளிலும் புதுக் கூறுகள் எழுந்தன. புட்டிச்சாத்தனின் ஆற்றலைக் கண் கூடாகக் கண்டு அதை வாங்க விதிர்விதிர்ப்புற்றான் லோப்பாக்கா. ஆனால், கீவ் தன் பணியாட்களை ஏவி அவனை வீட்டிலிருந்தே துரத்தினான். தான் அருமையாகப் பெற்ற வாழ்வை அவ்வளவு விரைவில் அவ்வளவு எளிதாக இன்னொருவன் பெறுவதா என்று அவன் உள்ளம் குமுறிற்று!
"புட்டியை லோப்பாக்காவுக்குக் கொடுக்க மறுத்த போது, கீவின் பேரவாவைவிடத் தன்னலமே ஒங்கியிருந்தது. தான் கனவுகண்ட ஒரே பேரவா நிறைவேறியபின், அவன் பேரவாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. கொஞ்ச நாட்களுக்குள் அது அவன் அமைதியான வாழ்வின் ஒரு கூறாய்விட்டது. புதிய அவா எதுவும் ஏற்படாததால், புட்டிச் சாத்தனைப் பயன்படுத்த வழி ஏதும் உண்டாகவுமில்லை, அதனிடம் வெறுப்பும் தட்டிற்று. ஆனால் கீவ் இன்றும் இளமையின், தொடக்கக் கோடியிலேயே இருந்ததால், இவ்வெறுப்பு அதை விட்டொழிக்கும் துணிவாக உருவாகவில்லை. அதை, இனிப் பயன்படுத்துவதே இல்லை என்று அவன் தனக்குள் உறுதிசெய்து கொண்டான்.
மனிதன் ஏழ்மையின்போது பணமே பெரிதென்று நினைக் கிறான். பணம் எளிதில் கைக்கு வந்துவிட்டால், அப்போது தான் அது வாழ்வின் நிறைவு அல்ல என்று உணர்கிறான். கீவ் இவ்வுண்மையை இதுவரை அறியவில்லை; இப்போது நேரடியாகத் தன் வாழ்விலேயே உணர்ந்தான்.
கலைவண்ண மாளிகைக்கு உரியவன் என்ற முறையில் அவனுக்கு எங்கும் மதிப்புத் தரப்பட்டது. ஆனால், எவருக்கும் தன்னிடத்தில் அன்பு இல்லை என்பதை அவன் கண்டான். அவனை மணம்செய்து அந்த வீட்டில் வாழ விரும்பாத பெண் இல்லை. ஆனால், தன் வீட்டை விரும்பித் தன்னை மணக்கும் எந்தப் பெண்ணையும் மனைவியாக ஏற்க அவன் உள்ளம் ஒப்பவில்லை. அத்தகைய எந்தப் பெண்ணையும் அவனால் காதலிக்கவும் முடியவில்லை.
ஏழைகளுக்கு இன்னல்களிடையே மின்னொளிபோலக் கிட்டும் காதல், செல்வருக்கும் செல்வ வேட்கை உடையவர் களுக்கும் கிட்டுவது அரிது என்ற உண்மையை அவன் இப்போது உணர்ந்தான். உணர்ந்து தன் செல்வத்தையே வெறுத்தான்.
தன் வீட்டையும் தன் செல்வத்தையும் தன் பெயரையும் முற்றிலும் மறைத்து ஏழ்மையின் போர்வை போர்த்துக் கொண்டே, காதலைத் தேடிச்செல்ல அவன் எண்ணங் கொண்டான்.
இந்நிலையில் ஒருநாள் பழைய நண்பன் லோப்பாக்கா அவனைப் பார்க்க வந்தான். கீவும், தான் இடையில் அவனிடம் நன்றிகெட்டதனமாக நடந்ததை எண்ணிவருந்தி, அன்புடன் முகமன் கூறி வரவேற்றான். லோப்பாக்காவும் நண்பனின் புதுவாழ்வின் உயர்நிலையில் குறுக்கிட்டு எதுவும் சொல்லாமல், வேறு பேச்சுகளே பேசியிருந்தான்.
“உன் விருப்பங்கள் யாவும் நிறைவேறி விட்டனவா? நீ இன்பமாக இருக்கிறாயா?” என்று கேட்டான் லோப்பாக்கா.
கீவ், “நான் எதிர்பார்த்ததெல்லாம் கிடைத்து விட்டது. எதிர் பார்த்தற்குப் பதின்மடங்கு கிடைத்ததுவிட்டது. இனி எனக்கு இந்தப் புட்டிப்பேயால் ஆக வேண்டியது எதுவுமே கிடையாது. முன்பு அதை உனக்குத் தரமாட்டேன் என்றேன். இப்போது உனக்கோ அல்லது வேறு யாருக்கோ விருப்பமானால் அதை நான் கொடுக்கத் தடையில்லை. ஆனால், யார் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அதை நான் இனிப் பயன்படுத்தப் போவதில்லை என்று உறுதி கொண்டுவிட்டேன்.” என்றான்.
லோப்பாக்கா இம் மனமாறுதல் கண்டு வியப்படைந்தான். அவனுக்கும் இப்போது, முன் கீவுக்கு இருந்த ஆர்வம் இல்லை. அதேசமயம் தன் நீண்டநாள் ஆர்வமான படகுவாணிகத்தை அவனால் மறந்து இருக்கவும் முடியவில்லை. ஆகவே, “எனக்கு உன் விருப்பத்துக்கு மாறாக அதை வற்புறுத்தி வாங்க வேண்டு மென்றில்லை. ஆனால், வாங்குவதாக உன்னிடம் கூறியிருந்தேன். வாங்க நான் தயங்கவில்லை. எனக்கு வேண்டிய ஒரு படகும் செலவுக்குச் சிறிது பணமும் பெற்றபின், நானும் அதை விரைவில் விற்றுவிடவே எண்ணுகிறேன்.” என்றான்.
கீவ் புட்டியை எடுத்துக் கொடுத்தான். லோப்பாக்கா கூடியமட்டும் உயர்ந்த தொகைகொடுத்துவிட்டு, புட்டியைப் பெற்றுக்கொண்டு கிளம்பினான். அவன் இருக்க விரும்பவும் இல்லை. கீவ் அவனை இரவு தங்கும்படி கூறவுமில்லை. ஆனால், மழையாயிருந்ததை எண்ணி ஒரு குடையும் புற உடுப்பும் தந்து அவனை விரைந்து அனுப்பி வைத்தான்.
புட்டியையும் அதில் இருந்துகொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பொல்லாத புட்டிச்சாத்தனையும் விட்டொழித்ததனால் கீவ் மகிழ்ச்சியே அடைந்தான். மறுநாளே அவன் தன் ஏழ்மைப் போர்வையைப் போர்த்திக்கொண்டு தன் பழைய சுற்றுப் பயணத்தை மீண்டும் தொடங்கினான்.
கலைமாளிகையின் புகழும் அதற்குரியவனான கீவின் புகழும் பெருமா கடலுலகெங்கும் அதற்கப்பாலும் பரந்திருந்தன. கீவ் சென்ற இடமெங்கும் அதற்கப்பாலும் அவை அவன் காதுகளிலேயே ஓதப்பட்டன. ஆனால், அவற்றுக்கும் அவனுக்கும் தொடர்பு உண்டு என்பதை எவரும் அறியவில்லை.
பல இடங்களுக்கும் சென்று திரும்பும் வழியில் அவன் ஹவாயிலே உள்ள ஹோனுனு என்ற சிறு நகரில் தங்கினான். அது அவனுக்குப் பழக்கமான இடமானதால் அவன் எல்லாரையும் அறிந்தான். ஆயினும் அவன் மாற்றுருவில் யாரும் அவனை அறியவில்லை. இந்நிலையில் மாலை நேரத்தில் ஒரு பெண் குளித்துக்கொண்டிருப்பது கண்டு, அது யாரென்றறிய அத்திசையில் சென்றான். அவள் குளித்துப் புத்தாடையுடன் கண்முன் வந்து நின்றாள். அதேசமயம் அவள் அழகும் இளமைப் பொலிவும் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
“பெண்மணி, நீ இந்த இடத்துக்குப் புதியவளென்று நினைக்கிறேன். நீ யார்?” என்றான் அவன்.
“ஒருவகையில் நான் புதியவள் தான். நான் கியானோவின் மகள் கோக்குவா. ’ஒகு’வுக்குப் படிக்கச் சென்றிருந்து, இரண்டு நாட்களுக்கு முன்தான் திரும்பி வந்தேன். நீங்கள் யாரோ?” என்றாள்.
கீவ் தான் யார் என்று அறிவிப்பதில் சற்றே தயங்கி, அதன்பின் துணிந்து தன் மாறுபெயரைக் கூறினான். அவன் தயக்கத்தைக் கவனித்தும் கவனியாதவள்போல் இருந்தாள்.
“உனக்குத் திருமணமாயிருக்கிறதா என்பதை நான் அறியலாமா?” என்றாள்.
“எனக்கும் ஆகவில்லை. இதுவரை அதைப்பற்றி நான் எண்ணியது மில்லை. ஆனால், உன்னைப் பார்த்தவுடன்…..”என்று கூறித் தயங்கினான் கீவ். அவள், அவன் கூறியதை முழுதும் கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. வீட்டை நோக்கி ஓடி மறைந்தாள். அன்றே கீவ், கியானோவிடம் சென்று, “உன் மகளை எனக்குத் தரமுடியுமா?” என்று கேட்டான்.
கியானோ, கீவை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. கீவை மணம் செய்து அவன் கலை மாளிகையில் வாழத் தன் மகள் விரும்பி இருந்ததை அவன் அறிவான். ஆகவே, அவன் மறுக்க இருந்தான். இச்சமயம் கோக்குவா கீவின் பின்புறம் நின்று சைகை காட்டினாள். அதன் பொருள் என்ன என்பதை அறியாமலே, கியானோ, “மகள் விருப்பம் அதுவாக இருந்தால், தடையில்லை,” என்றான்.
கோக்குவா, கீவின் தயக்கத்திலிருந்து அவன் உண்மையில் சமூகத்தில் தன் குறைந்த படிமையை மறைக்கப் பார்ப்பதாகவே எண்ணியிருந்தாள். அதனால் அவன் கேட்கும்படி அவன் ஏழ்மை பற்றியும் குறைந்த படிமை பற்றியும் நையாண்டி பேசினாள். அப்போது அவன் முகம் அடைந்த மாற்றத்தை அவள் உன்னிப்பாகப் பார்த்தாள். அவன் மறைப்பது குறைந்த படிமையையல்ல, உயர் படிமையையே என்பதை இதனால் அவள் ஊகித்தாள். அத்துடன் கீவ் ஏழ்மையுருவில்வெளியேறி உலகம் சுற்றுவதாக அவள் கேள்விப் பட்டிருந்தாள். ஆகவே, உருக்கரந்து வந்தவன் கீவாகவே இருக்கவேண்டும் என்பதை அவள் உய்த்தறிய முடிந்தது.
கீவ் அவளை அணுகி, “என் உண்மைப் படிமையை அறியாமலே நீ என்னை நையாண்டி செய்ததைக் கேட்டேன் உண்மைப் படிமையை உணர்ந்தால் இன்னும் உன் மதிப்பில் நான் தாழ்வடையவே முடியும். நான் உன்னிடம் அளவில்லா அன்பு கொண்டு விட்டேன். ஆனாலும், உன் விருப்பமில்லாமல் நான் உன்னை மணம் செய்ய உளங்கொள்ளவில்லை. உன் தந்தையும் உன் விருப்பப்படியே நடப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே, விருப்பமில்லா விட்டால், தெளிவாகக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் என் நம்பிக்கையை ஏற்கெனவே இழந்துவிட்டதால், நீ உன் கருத்தை மனம்விட்டுக் கூறத் தயங்க வேண்டாம்” என்றான்.
‘உங்கள் விருப்பமே என் விருப்பம்’ என்று மணிச் சுருக்கமாகத் தன் கருத்தை அவள் தெரிவித்தாள். இதைக் கேட்டதும் அவன் வியப்படைந்தான். ஆனால், அவன் மகிழச்சிக்கு எல்லையில்லை. விரைவில் திருமண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவளை வந்து காண்பதாகக் கூறி, அவன் கோனாவிலுள்ள தன் மாளிகைக்குத் திரும்பினான்.
கோக்குவா கீவைப் பார்ப்பதற்குமுன், அவன் மாளிகை பற்றிக் கேள்விப்பட்டு, அதற்காகவே அவனை நாடியிருந்தாள். ஆனால், அவனைக் கண்டபின் மாளிகையில்லாமலேகூட அவனை மணக்க அவள் உள்ளம் துடித்தது. இரண்டுநாள் அவனைச் சந்தித்தபின், அவன் இல்லாமல் அவள் வாழ்வு ஒரு கணமும் சுவைப்படவில்லை. அவனுக்காக அவள் தன் தாய் தந்தை, வீடு, வாசல், சுற்றம் நட்பு யாவும் துறந்து செல்ல நேர்ந்தாலும் தயங்கியிருக்க மாட்டாள்.
கீவுக்கும் இப்போதுதான் வாழ்வில் முதல் தடவையாக ஆர்வம் ஏற்பட்டது போலிருந்தது. கலைமாளிகையின் கனவு, கோக்குவா அவனை மனித உணர்ச்சி உடையவனாக்கி, அவன் மனித உள்ளத்தின் கனவுருவாய் நின்றாள்.
அவன் வந்தபோது அவன் தன் குதிரையை மனம் போனபடி ஓடவிட்டு வந்திருந்தான். இப்போது அவன் அதனை அதன் முழுவேகத்தில் முடுக்கினான். குதிரைகூட இதை வெறுக்க வில்லை. அது கோனா விலுள்ள தன் இலாயத்தில் சென்று, வளமான புல் தின்ன விரைந்தது.
கலைமாளிகையின் பணியாட்கள் அவன் திரும்பிய போது வியப்படைந்தனர். அவன் பாடிக்கொண்டே வந்தான். பாடிக் கொண்டே, என்றும் இல்லாதவாறு வீட்டின் அழகைக் கண்டான். கோக்குவாவின் கண்கள் கொண்டு அவன் அதைப் பார்க்க முயன்றான் என்பதை அவர்கள் எப்படி உணர முடியும்? வீட்டிற்குப் புதுத்தலைவி வருவதற்கு முன்பே புதுத்தலைவன் ஏற்பட்டு விட்டதாக மட்டும் அவர்களுக்குத் தெள்ளத் தெளியத் தெரிந்தது.
ஹோனானா செல்ல அவன் திருமண நாள்வரை காத்திருக்க வில்லை. அதற்கு நாள் பார்க்கும் சாக்கிலும், சரக்குகள் வாங்கும் போக்கிலும், நண்பர்களைக் காணும் வாக்கிலும் அவன் பலதடவை அங்கே சென்றான். அவன் தன்மீது கொண்ட ஆர்வத்தைக் கோக்குவா அவன் கண்களில் கண்டாள், அவனும் அவளுக்குத் தான் வருவதனால் ஏற்படும் மகிழ்ச்சியை அவள் கண்ணொளியில் கண்டுமகிழ்ந்தான்.
அவன் திருமணச் செய்தி சிறிதுசிறிதாகப் பணியாட் களுக்குத் தெரியலாயிற்று. அவன் கலகலப்பின் பொருளும் இப்போது அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர்களும் அதில் பங்கு கொண்டனர்.
ஒருநாள் வழக்கம்போல அவன் பாடிக்கொண்டே எழுந்தான். குளிப்பறையில் தண்ணீர்த் தொட்டி நிரப்புபவன், வெந்நீர் ஊற்றி லளாவுபவன் முதலிய பணியாட்களிடம் வழக்கம் போலவே ஆர்ப்பாட்டம் செய்தான். கதவை அடைத்துக் கொண்டு அவன் தொட்டியில் அமர்ந்து குளிக்கும் ஓசையுடன் ஓசையாக, அவன் பாட்டும் எங்கும் கணகணவெனக் கேட்டது.
ஆனால், திடீரென்று பாட்டு நின்றது. குளிப்பும் விரைவில் நின்று விட்டது. பாடிக்கொண்டு அறைக்குள் சென்றவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு வெளியே வந்தான். அன்று பகல் முழுவதும் அவன் சிரிக்கவில்லை. பாடவில்லை, இரவில் அவன் உறங்கவில்லை. மேலும் கீழும், வலமும் இடமும், முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு அவன் கவலையுடன் திரிந்தான். அத்துடன் ஹோனானாப் பக்கம் அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
இந்தப் புது மாறுதலுக்குக் காரணம் என்னவென்று அறியாமல் பணியாட்கள் மீண்டும் திகைத்தனர். கலை மாளிகைக்குச் சுண்ணமும் நறுமணப் பொருள்களும் கொண்டு வந்தவர்களுக்குத் திடீரென்று ‘ஒன்றும் வேண்டாம்’ என்ற உத்தரவு பிறந்தது. திருமணத்துக்குரிய பெண் ஏதேனும் வெறுப்பாக நடந்து கொண்டாளோ என்று யாவரும் நினைத்தனர்.
ஆனால், இந்த மாறுதலால், மிகுதி மனச் சோர்வும் துன்பமும் அடைந்தவள் கோக்குவாவே. அவள் நாளும், நாழிகையும், கணமும் எண்ணி எண்ணி அவனை எதிர்பார்த்துக் கண்பூத்துக் காதும் அடைபட்டாள். எதைக் காண்பதிலும், எதைக் கேட்பதிலும், எந்தச் செயலில் ஈடுபடுவதிலும் அவள் உள்ளம் பற்றுக் கொள்ளவில்லை.
கீவின் இத்தனை மாறுதலுக்குக் காரணம், குளிக்கும் சமயம் அவன் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு துணுக்குறத்தக்க எண்ண மேயாகும். இன்பக் கோட்டைகளிடையே அவன் தன் உடல் மீது சவுக்கார நுரையையும் நீரையும் வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அப்போது காலின் ஒரு பகுதியில் அவன் ஒரு வெள்ளைப் புள்ளியைக் கண்டான். அவன் பார்க்கப் பார்க்க அது விரிவடைவது போலவும் வெள்ளை படர்ந்துகொண்டு வருவது போலவும் அவனுக்குத் தோற்றிற்று. மீளாப் பெருநோய்க்குத் தன் அழகிய உடல் இரையாக இருந்ததாக அவன் திடுமென நினைத்தான். பாட்டு திடீரென நின்றதற்கும், அவன் மகிழ்ச்சி முற்றும் மாறியதற்கும் இதுதான் காரணம்.
ஒருவனுக்கு எவ்வளவு செல்வமும் மதிப்பும் பணியாட்களும் இருந்தும் என்ன பயன்? காதலில்லாத இடத்தில் அத்தனையும் வீண்’ என்று கீவ் முதலில் கருதியிருந்தான். இப்போதோ காதல் அவன் வாழ்வில் கனியமுதூறக் காத்திருந்தது. ஆனால், ‘காதலும் செல்வமும் இருந்துதான் என்ன பயன்’ என்று அவன் இப்போது எண்ணினான். அந்த ஒரு சிறு புள்ளி, அவன் வாழ்க்கைத் தத்துவம் அத்தனையையும் மாற்றியமைத்தது.
கோக்குவாமீது அவன் வைத்திருந்த பற்றுப் பெரிது. அவளுக்காக அவன் உயிரும் தரத் தயங்கவில்லை. அவன் காதல் தன்னலக் காதலாய் அமைந்திருந்ததால், இப்போதும் அவன் கோக்குவாவை மணக்கத் தடையில்லை. அந்தப் புள்ளி இன்னும் பலநாள் வெளியாருக்குத் தெரியவராது. ஆனால், அவன் தன் காதலுக்காக ஓர் உயிரின்- தன் உயிருக்குயிரான ஒரு காதலியின் வாழ்வைப் பலியிட விரும்பவில்லை. முன்பு செல்வத்தை வெறுத்தது போலக் காதலையும் துறந்து நடைப்பிணமாகத் திரிவது அல்லது உயிரை எந்த நல்ல காரியத்திலாவது ஈடுபடுத்திப் பலியிடுவது என்று அவன் துணிந்தான்.
இதுமுதல் அவன் தலை, எண்ணெயை மறந்தது; உடல், புத்தாடை களையும் நறுமணப் பொருள்களையும் மறந்தது; அவன் கலைமாளிகையையே கண்ணெடுத்துப் பாராமல், பகலையும் பட்டணத்தின் தெருக்களையும் நாடாமல், காடு கரைகளில் கரந்து திரிந்தான்.
திடுமென ஒருநாள் அவனுக்குப் புட்டிச்சாத்தனின் நினைவு வந்தது. இப்போதுமட்டும் அந்தப் புட்டி கைவசமிருந்தால், ஒரே ஒரு தடவை அதன் உதவி நாடி, என் காதலுக்கு இருக்கும் ஒரே தடையைப் போக்கிக் கொண்டு, அதை மீண்டும் விற்றுவிடலாமே! ஏன்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.
பணத்துக்காக விரும்பாத புட்டிச்சாத்தனை, அவன் காதலுக்காக மீண்டும் ஒருமுறை விரும்பினான்.
அவன் உள்ளத்தில் மீண்டும் நம்பிக்கை ஒளி ஏற்பட்டது. உடலில் மீண்டும் தெம்பு ஏறிற்று. திருமண நாளைச் சற்று ஒத்தி வைத்திருப்பதாக ஹோனானாவில் கியானோவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, அவன் புறப்பட்டான். புட்டியோடு மழையில் அனுப்பிவைத்த நண்பன் லோப்பாக்காவை நாடி அவன் கால்கள் விரைந்தன.
ஓடும் வண்டிகளில் அவனுக்கு இருக்கப் பிடிக்கவில்லை. வண்டியைத் தாண்டி ஓட நினைத்தான். நீர் கிழித்துச் செல்லும் படகில் அவன் இருக்கை கொள்ளவில்லை. சிறகிருந்தால் பறக்க உதவுமே என்று எண்ணினான்.
‘இருந்தவன் எழுந்திருக்குமுன் நடந்தவன் காதவழி’ என்று ஒரு பழமொழி உண்டு, அவனிடம் பலநாள் தூங்கிக் கிடந்த புட்டிச்சாத்தன் அவன் கையிலிருந்து சென்றதே. அவனிடமிருந்து நெடுந்தொலை பறந்தோடிவிட்டது என்பதை அவன் கண்டான்!
லோப்பாக்காவை அவனால் காணமுடியவில்லை. அவன் பெருஞ்செல்வமடைந்து தொலைநாடுகளில் வணிக மன்னனாக வாழ்வதாகக் கேள்விப்பட்டான். அவன் நண்பர் சிலரைப்பற்றி உசாவினான். அவர்களும் திடீரெனப் பெருவாழ்வு கண்டு பெருவாழ்வு கண்டு பெருமாக் கடலின் பல எல்லைகளில் மாளிகைகள் கட்டி வாழ்வதாகக் கேள்வியுற்றான். ‘அந்தோ! நான் அருமையறியாது வாளாவைத்திருந்த புட்டி, சென்ற வழியெல்லாம் செல்வக் குவை தூவிய வண்ணம் நெடுந்தொலை சென்றிருக்கிறது! இப்போது அதன் விலை என்னா வாயிருக்குமோ?’ என்று கவலை அவன் உள்ளத்தில் எழுந்தது.
‘புட்டியை வாங்குவதில் திறமை இல்லை; பயன்படுத்து வதிலும் விற்பதிலுந்தான் திறமை இருக்கிறது’ என்பதை அவன் கண்டான். செல்வமும் மகிழ்ச்சியும் தாண்டவமாடிய இடங்களி லெல்லாம் அதை விற்று விட்ட திறனைத்தான் அவன் கண்டான். செல்வத்துடன் துயரம் குடிகொண்ட இடந்தான் அது தங்கி இருக்கும் இடமாயிருக்க வேண்டுமென்ற குறியிலக்குடன் அவன் ஓயாது தேடினான்.
முத்தும் துறைமுகத்தை அடுத்த ஒரு பேட்டையில் ஒரு வெள்ளை இளைஞன் வீட்டில் கீவ் தான் நாடிய குறியிலக்கை அடைந்தான். அங்கே செல்வத்தின் தடம் இருந்தது. ஆனால், சிந்தனையும் சீர்கேடும் அதில் படர்ந்திருந்தன.
அவன் தேடிச்செல்லுமு ன் வெள்ளை இளைஞன் அவனை நாடி எதிர்வந்தான். கீவ் கைநடுங்க வாய் குளற அவனைப் பற்றிக் கொண்டு, ‘புட்டிக்காக, புட்டிக்காகவே நான் வந்தேன்,’ என்றான்.
வெள்ளை இளைஞன் நல்லவன், இரக்க உள்ளம் படைத்தவன். அவன் கீவைக் கட்டிக்கொண்டு கோவென்று அழுதான். கீவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘புட்டியை விற்க மனமில்லையா? அல்லது புட்டி வேறிடம் சென்றுவிட்டதா? ஏன் அழுகிறாய்? அதை உன்னிடமிருந்து வாங்கத்தானே வந்திருக்கிறேன். உனக்கு இன்னும் ஏதேனும் வேண்டுமானாலும், புட்டியிடமிருந்து பெற்றுக்கொள். நான் அதை வாங்கிக் கொள்ளவே வந்திருப்பதால், நீ தயங்க வேண்டாம்’ என்றான்.
இளைஞன், “அந்தோ! நான் அதற்காகவெல்லாம் அழவில்லை, புட்டி என்னிடம்தான் இருக்கிறது. அதை நான் விற்கவும் தயங்கவில்லை. ஆனால், நான் தொழிலாளி, என் முதலாளியிடமிருந்து திருடிய காசுகொண்டு அதை வாங்கினேன். வாங்கியதிலும் எனக்குப் பழி; அதை எளிதில் யாரும் திரும்ப வாங்கமுடியாத விலைக்கும் வாங்கிவிட்டேன். அது என்னிடம் இருந்தாலும் எனக்குப் பழி; ஆனால், இப்போது நீ அதை வாங்க வந்திருக்கிறாய். என்போல் நீயும் இளைஞன்தான். ஆனால், நீதான் கடைசி ஆளாகவேண்டும். என் பழிசார்ந்த வாழ்விலிருந்து தப்ப, உன் வாழ்வையே நான் பாழாக்க வேண்டும். இத்தகைய இருதலைப் பழியில் வந்து சிக்கி விட்டேனே என்று தானே வருந்துகிறேன்.” என்றான்.
கீவினால் அந்த நேரத்திலும் ஒரு சிரிப்புச் சிரிக்க முடிந்தது. அது பேய்ச் சிரிப்புத்தான். ஆனால், அதிலும் ஒரு கனிவு இருந்தது. காதலுக்காக அவன் பழி ஏற்கவும் தயங்கவில்லை. இந்த இளைஞன் தனக்காக அழாமல் இன்னொருவனுக்காக அழுவதைக்காண அவன் மீது ஏற்பட்ட பாசமும் அவன் கவலைகண்டு இரங்கும் இரக்கமும் அந்த நகைப்பில் கலந்திருந்தன.
‘ஆனால், “காசு!,” நீதான் கடைசி ஆள்!" இவற்றின் பொருள் என்னவாயிருக்கக்கூடும்?" என்று சிந்தித்தான். ’நீ வாங்கிய விலைதான் என்ன?’ என்று கீவ் கேட்டான்.
இளைஞன் குரல் ஈயின் குரலினும் தாழ்வுற்றது. ‘இரண்டு காசுகள்’ என்றான்.
கீவுக்கு இப்போது தன் கோரநிலை புரிந்தது. இரண்டு காசுக்கும் குறைத்துத்தான் வாங்கவேண்டும். அதற்குக் குறைந்த விலை ஒன்றே ஒன்றுதான்-ஒரு காசு! அதன்பின் அதை யாரும் வாங்க முடியாது! அதனுடன் தான் தன் வாழ்வை ஒப்படைத்து-அந்த நரகவாதையை..’ அதற்குமேல் அவனால் சிந்திக்க முடிய வில்லை. அவன் உடல் வியர்த்தது. அவன் உறுப்புக்கள் நடுங்கின.
அவன் உடலைவிட இளைஞன் உடலில் நடுக்கம் மிகுதியாயிருந்தது. அவன், “அண்ணா, நான் இந்தப் பேயிட மிருந்து தப்பக்கூட உன்னை அதனிடம் ஒப்படைக்க விரும்ப வில்லை. இது என்னிடமே இருக்கட்டும். உனக்கு வேண்டாம். ஏற்கெனவே பழிச் செயல்கள் செய்த நானே மீதிப் பழியையும் சுமந்து செல்வதாக இருக்கட்டும் பொன்னான உன் வாழ்வை அது கறைப்படுத்த வேண்டாம்.” என்றான்.
கீவ் நடுக்கம் தீர்ந்தது. அவன் வெள்ளை இளைஞனைப் பிடித்து ஆதரவாக ஒரு திண்ணையின் பக்கம் கொண்டு சென்றான். "தம்பி! இதோ, என்னைப் பார்; நான் துணிந்து வந்திருக்கிறேன்; பழியச்சம் என்னை ஒன்றும் செய்யாது; அதைக் காட்டிலும் ஒரு பெரிய ஆற்றல் என்னை ஆட்டிப் படைக்கிறது; நான் அதை வாங்கத்தான் போகிறேன். என்றான்.
“அப்படி என்ன ஆற்றல் இருக்கிறது. உலகில்?” என்று வியப்பே உருவாகக் கேட்டான் இளைஞன்.
“காதல்!” என்றான் கீவ்.
கீவிடம் வெள்ளியாக ஒரு வெள்ளிதான் இருந்தது. “உன்னிடம் சில்லறை இருக்கிறதல்லவா?” என்று கேட்டான். இளைஞன் உயிரைப் புதைத்து வைத்திருப்பதுபோல, தன் மடியில் ஐந்து காசுகளைச் செருகி வைத்திருந்தான். வெள்ளியைக் கொடுத்து முதலில் அவற்றைக் கீவ் வாங்கினான்; பின் ஒரு காசு இளைஞனிடம் சென்றது. முன் ஐம்பது வெள்ளியின் சின்னமாக அவனிடம் வந்த புட்டிச்சாத்தன், இப்போது ஒரே ஒரு காசின் சின்னமாக அவனிடமே திரும்பி வந்தது.
அவன் வீடு திரும்பும்வரைகூடக் காத்திருக்கவில்லை. புட்டி கையில் வந்ததே. “என் பெரு நோய்க் கூறு நீங்கி நான் உடல் நலம் பெறுக,”என்று புட்டிச் சாத்தனிடம் கூறினான்.
வீடு வந்து சேர்ந்தபின் அவன் குளிப்பறை சென்றான். உடலிலிருந்த புள்ளி மறைந்து போய்விட்டது. அவன் துள்ளிக் குதித்தான்.
அவன் இப்போது கவலை தீர்ந்தான். ஆனால், பாடவில்லை. இனித் தன் காதலியைப் பெற்றுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மகிழ்ச்சி எழுந்தது. ஆனால், காதலுக்காக மீளா நரகத்தையும் விலைக்கு வாங்க வேண்டி வந்தது என்ற எண்ணம் அந்த மகிழ்ச்சிக்கு ஒரு கரைகட்டி இருந்தது.
அந்தச் சிறு புள்ளி தந்த வாழ்க்கைத் தத்துவத்தைத் திருத்திப் புட்டி மற்றொரு வாழ்க்கைத் தத்துவத்தை அவனுக்கு அறிவுறுத்தி விட்டது. ‘பகலும் இரவும் தனித்தனி வராது; சேர்ந்தேவரும். அது போல இன்பமும் துன்பமும் இணைந்தே பெறவேண்டும். இணைத்து ஏற்கத் தயங்கக் கூடாது’ என்பதே இந்தப் புதுத் தத்துவம்.
இது, ஆறுதலளிக்கும் தத்துவம் ஆனால்; ஆரவாரித்து ஆர்ப்பரிப்பதற் குரிய தத்துவமல்ல.
கீவின் முதல் பேரவாவைப் போலவே. இரண்டாவது பேரவாவும் புட்டிச்சாத்தனால் நிறைவேறிற்று. அவன் கோக்குவாவை மணம் செய்து கொண்டு புதுமனைவியுடன் கலைமாளிகையில் குடிபுகுந்தான். கலை மாளிகையில் முதல் தடவையாக வாழ்வின் களை ஒளி வீசிற்று.
கோக்குவா பச்சைக்கிளிபோல் மாளிகையெங்கும் பறந்தாள். அவளுடைய குயிலினுமினிய குரல் மாடிப் பலகணி களிலிருந்து தென்றலில் மிதந்து குயில்களுடன் இன்பப் போட்டி யிட்டது. கீவும் அடிக்கடி அவள் பாடலுடன் சேர்ந்து பாடுவான். அவள் காதல் நிறைவிலிருந்து பொங்கிய மகிழ்ச்சியால் அவன் புட்டிச்சாத்தனைப் பெரிதும் மறந்திருந்தான். எப்போதாவது தனியாயிருக்கும் நேரம் அந்த நினைவு வந்தாலும் அவன் காதற்கடமைகள் அதைத் துரத்தியோட்டின.
குயிலின் பாட்டுக்கும் ஒரு காலமும் இடமும் உண்டு. பச்சைக்கிளி எப்போதும் பறந்துகொண்டே இராது கோக்குவாவின் கன்னி இளமைக் கட்டிளமையாயிற்று கட்டிளமை முற்றிளமையாக முதிர்ந்தது. அவள் கால்கள் வரவரநிலத்தில் பரவவும் பதியவும் தொடங்கின. அவள் குரல் மழலைத் தன்மை இழந்தது. ஆடல் பாடல் இன்ப அமைதியாக நிலவிற்று. ஆனால், இம்மாறுதல்களை அவள் அறியவில்லை. அவள் உள்ளத்தின் காதல் இளங்குருத்தாயிருந்து இப்போது பசுமரமாகி ஆணி வேரிட்டுக் கீவின் வாழ்வில் ஆழ்ந்தது.
கீவ் கோக்குவாவினுடன் முன்போலவே கூடிக் குலவிப் பேசியிருந்தான். "ஆனால்,, அவள் அப்பால் சென்ற போதெல்லாம் தன் காதலுக்காகத் தான் செய்த பெருந் தன் மறுப்பும் அதன் பளுவும் அவனை அழுத்தின. அதன் கோர நினைவுகளால் அவன் அடிக்கடி கண்ணீர்விட்டுக் கலங்குவான். பல இரவுகள் அவன் தனியே சென்று தன் தலையணைகளைக் கண்ணீரால் துவைப்பான். ஆனால், இவற்றை, மனைவி காணாமல் மறைத்து, கழுவிய கண்களுடன் புன்முறுவலை வருவித்துக்கொண்டு அவளிடம் பேசுவான். இம்முயற்சிகளால் தன்னைப் பிடித்த பெருங்கவலை தன் மனைவியின் மாசுமறுவற்ற வாழ்வினைப் பற்றிவிடவில்லை என்று அவன் அமைந்திருந்தான்.
கீவின் நெற்றியில் ஏற்பட்ட அடங்கிய கவலையின் கோடு களைக் கோக்குவாவின் கண்கள் முற்றிலும் காணாமலில்லை. அத்துடன் அவன் வாட்டமும் உடல் நலிவும் அவள் உள்ள அமைதியைத் தட்டி எழுப்பின. கீவ் பிரிந்துசென்று தன் பெருங் கவலையில் ஆழ்ந்தது போலவே, அவளும் அடிக்கடி பிரிந்து சென்று அதன் காரணத்தை அறிய முனைந்தும் அதுபற்றி உள்ளங் கசிந்தும் வருந்தலானாள்.
ஒருநாள் கீவ் வீட்டில் நுழையும்போது சந்தடி இல்லாம லிருந்தது. யாருமில்லை என்று எண்ணி அவனும் குரல் கொடுக்காமல் உள்ளே வந்தான். தன் அறைக்கு அருகில் ஏதோ குழந்தை தேம்பித்தேம்பி அழுவது போன்ற குரல் கேட்டு எட்டிப் பார்த்தான். கோக்குவா நிலத்தில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தாள்.
அவன் அவளை வாரி எடுத்து மடிமீது கிடத்தித் தடவிக் கொடுத்த வண்ணம், “இந்த வீட்டில் நீ அழுவதற்கு என்ன தவறு நடந்திருக்கக் கூடும்? நீ மகிழ்ச்சியாயிருப்பதற்காக நான் உயிரைக் கொடுக்கவும் ஒருக்கமாக இருக்கிறேன். என்னிடத்தில் சொல்லப்படாதா?” என்றான்.
அவன் அவள் கண்களைத் துடைத்தான்.
“அன்பரே, பாடலில் இல்லாத மகிழ்ச்சி ஆடலில் எங்கிருந்து வரும்? துன்பத்திலேயே அழுந்தியவர்கள் கூடக் காதலித்த பெண்ணை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். ஆனால், நீங்கள் என்னை மணம் செய்யுமுன் கவலையில்லாத இளங்காளையாக எங்கும் உலவியதை நான் அறிவேன். நான் வந்தபின் நீங்கள் கவலையுற்று வாடுவதை அறிந்தும் நான் எப்படி மகிழ்ச்சியோடிருக்க முடியும்? நீங்கள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை எனக்காக வருவித்துக் கொண்டாலும், உங்கள் அகத்தின் வாட்டம் ஆகம் முழுவதையும் வாட்டுவதை நான் அறியாமலா இருக்கிறேன்?” என்றாள் அவள்.
அவன் அவளை உட்காரவைத்து அருகிலமர்ந்து கையைப் பற்றிக் கொண்டு ஆதரவாகப் பேசினான். “பாவம்! என் வாட்டத்தின் காரணமறியாமல் நீ வீணே வருந்துகிறாய். அது உன்னால் வந்ததல்ல. உன் காதலைப் பெற நான் கொடுத்த விலைதான் அது. பொருளைப் பெற்றபின் விலைக்கு வருந்துவார்களோ? நான் நடந்தவை யாவற்றையும் கூறிவிடுகிறேன். அப்போது தான் என் துன்பம் தவிர்க்க முடியாதது என்று அறிந்து அதற்காக நீ வருத்தப் பட மாட்டாய்.” என்றான்.
அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். அவன் மெல்ல விளக்கினான். கலைமாளிகையைத் தான் பெற்ற வகை, அதன்பின் காதல்வாழ்வுக்கு ஏற்பட்ட இடையூறு, அதை நீக்கத் திரும்பவும் புட்டிச்சாத்தனைத் தேடியது. அதற்குக் கொடுத்தவிலை ஆகிய யாவற்றையும் அவன் அவளுக்கு விரிவாகக் கூறினான். பின், “இப்போது என் துயரத்துக் குரிய காரணத்தை நீ அறிந்து கொண்டாய். ஒரு காசுக்குக் குறைந்து புட்டிச்சாத்தனை விற்க முடியாதாதலால், நான் இனி இறுதிக்கால நரக வேதனை யிலிருந்து மீள முடியாது. ஆகவே, என் துயரை என்னிடம் விட்டு, நீ உன் மகிழ்ச்சியை மட்டுமாவது எனக்கு அளிக்கப்பார்,” என்றான்.
கோக்குவா எழுந்து நிமிர்ந்து நின்றாள். ஒரு கணத்தில் பெண்ணினத்தின் பீடு முழுவதும் அவள் சிற்றுடலில் பெருக்கெடுத் தோடிற்று. “பெண்ணைக் காதலித்து ஒரு ஆண் கெட்டான் என்ற பெயரைக் கோக்குவா பொறுக்கமுடியாது. எனக்காக நீங்கள் உங்கள் நலனைக் கெடுத்துக் கொண்டால், உங்கள் உயிரைப் பலியிட்டால், உங்களுக்காக நானும் என் நலனைக் கெடுத்துக் கொள்ளமுடியும்; உயிரைப் பலியிட முடியும் என்று காட்டுகிறேன்” என்றாள்.
“நீ எனக்காக எதுவும் செய்வாய் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஓருயிரல்ல, ஒன்பது உயிர் கொடுத்தாலும் போன என் அமைதி திரும்ப வரமுடியுமா? ஆகவே, முடியாத காரியத்துக்காக மனம் கலங்காமல், முடிகின்ற காரியங்களில் கருத்துச் செலுத்து. எனக்கு இறுதியமைதி தரமுடியா விட்டாலும், அதுவரை நீ இன்பமாயிருப்பதை நான் காணும் அமைதியையாவது நீ எனக்குத் தரலாமல்லவா?” என்றான் அவன்.
“முடியாது என்ற சொல்லை என்னிடம் b சால்லாதீர்கள். ஒரு பெண் நினைத்தால் - கோக்குவா திட்டமிட்டால் - ஆகாதது எதுவுமில்லை. பெண்ணின் காதல் - கோக்குவாவின் காதல் - என்ன செய்யும் என்பதை நீங்கள் இனித்தான் காண்பீர்கள். ஆடவர் அறிவு கடந்து, காதல் கனிந்த பெண்ணின் அறிவுக் கண்கள் அறியவல்லன.”
“சரி, நீ என்ன செய்வாய், பார்க்கலாம்!”
“பார்ப்பதென்ன, இதோ ஒரு காசு, ஒரு காசு என்று நீங்கள் கைகட்டிக்கொண்டு அழுகிறீர்கள். அமெரிக்கக் கொடியின் ஆட்சியில் ஒரு காசைவிடக் குறைந்த தொகை இல்லைதான், ஆனால், அமெரிக்காவை விட்டால் வேறு உலகமே இல்லையா? நீங்கள் கவலையில் சிந்தனையை இழந்துவிட்டீர்கள். பிரிட்டனுக்குச் சென்றால் சல்லி என்று ஒரு சிறு பணம் இருக்கிறது. ஒரு காசுக்கு இரண்டு சல்லி மாற்றலாம். இன்னும் அப்பால் சென்றால் ஃபிரான்ஃசு இருக்கிறது. அங்கே சிறுகாசு என்று ஒரு பணம் இருக்கிறது. நம் காசுக்கு அதில் ஐந்து கிடைக்கும். எழுங்கள், புறப்படுங்கள், போகலாம். ஃபிரஞ்சுக்கொடி பறக்கும் தாகிதி தீவுக்குச் சென்றால், அங்கே உங்கள் காசு கடந்து நாலு சிறு காசு, மூன்று சிறு காசு, இரண்டு சிறு காசு, ஒரு சிறு காசு என்று நான்கு கைம்மாற்றுப் பண்ண இன்னும் இடமிருக்கிறது. விற்பனைக்குத் தூண்ட நாம் ஒருவருக்கு இருவர் இருக்கிறோம். எழுங்கள், புறப்படுங்கள். கோக்குவாவைக் கட்டினவன் கைகட்டிகொண்டு அழத் தேவையில்லை,” என்றாள்.
கோகுக்குவாவின் அறிவார்ந்த திட்டம் கண்டு கீவ் வியப்புமிக்க மகிழச்சி கொண்டான். அவளிடமே தன் கவலைகள் அனைத்தையும், அவற்றைத் தீர்க்கும் பொறுப்பையும் விட்டு விட்டுப் புறப்பட ஏற்பாடானான்.
கோக்குவா அன்றுமுதல் இரண்டு மூன்று நாட்களாக ஆரவாரமாகப் பயணத்துக்குத் திட்டம் செய்தாள். கீவைப்போல அவள் புட்டிச்சாத்தனைத் தொட அஞ்சவில்லை. தேவைக்கு வேண்டிய பணத்தைக் கீவைத் தூண்டிப் புட்டிச்சாத்தன் மூலம் தருவித்து, தன் செல்வத்தை எல்லாரும் காணும்படி பகட்டாகச் செலவு செய்தாள். தாகிதி செல்லச் சில நாள் பிடித்தது. அங்கே பிரிட்டிஷ் தூதர் அலுவலக மாளிகைக்கெதிரே ஒரு மாடி வீடு எடுத்துக் கொண்டு இதே முறையில் ஆரவாரமாக வாழ்ந்தார்கள்.
அவர்கள் செல்வத்தைக் கண்டு வியந்து பொறாமைப் பட்டவர்களிடையே நேரம் பார்த்து இருவரும் தனித்தனியாகப் புட்டிச்சாத்தன் ஆற்றல் பற்றிப் பேச்செடுத்தார்கள். அதை வாங்கியவர்களுக்கு இத்தனை செல்வமும் ‘இம்’ மெனுமுன் எளிதாகக் கிடைக்கும் என்று ஆவல் ஊட்டினார்கள். ஆனால் தானாகப் பழுக்க வேண்டிய பழத்தைக் கல்லிப் பழுக்க வைத்த கதையாகவே அவர்கள் முயற்சி இருந்தது. புட்டிச் சாத்தனைப் பற்றிய பேச்சுக் கேட்டவர்களெல்லாம் ஒன்று அதை நம்பாதவர் களாயிருந்தனர்; அல்லது அதனால் வரும் நலங்களைவிடத் தீங்குகளையே பெரிதாக எண்ணி அஞ்சியவர்களாக இருந்தார்கள். நாளடைவில் புட்டிச்சாத்தன் தொல்லைக் கஞ்சி எவரும் அவர்களுடன் நெருங்காமல் விலகத் தொடங்கினர்.
சீவ், கோக்குவா ஆகிய இருவர் காதல்வாழ்வில் மீட்டும் தனித்தனி துயர், வாய்பேசா எண்ண நிழல்கள் படர்ந்தன. புட்டிச்சாத்தனைப் பற்றிய கவலை ஒன்றே இருவர் உள்ளத்திலும் இருந்தது, அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் உருக்கிற்று. பல இரவுகளில் ஒருவர் தூங்குவதாக மற்றவர் எண்ணிக்கொண்டு. இருவருமே துயிலொழித்திருந்தனர். ஒருவேளை இருவரில் ஒருவர் சற்று அயர்ந்தால்கூட, விழிக்கும்போது மற்றவர் கண்ணீர் பெருக்கி வீங்கிய முகத்துடன் தூங்காமல் இருப்பதையே கண்டனர்.
ஒருநாள் கோக்குவா சற்றுக் கண்ணயர்ந்து உறங்கி எழுந்தபோது, அருகே, கீவைக் காணவில்லை. வீடெங்குந் தேடியும் பயனில்லை. தோட்டத்தின் பக்கமுள்ள பல கணியில் சென்று பார்த்தாள். அவள் உள்ளம் பதை பதைத்துப் பாகாய் உருகிற்று. கீவ் ஒரு மரத்தினடியில் மண்ணில் கிடந்து புரண்டு வாய்விட்டுப் புலம்பினான்.
முதலில் எழுந்த உணர்ச்சியில் கோக்குவா அவனிடம் சென்று தேறுதல்சொல்ல எண்ணினாள். ஆனால், அவள் பெண்மையறிவு விரைவில் எழுந்து அவளைத் தடுத்தது. மனைவிக்குத் தெரியாமல் வெளியே சென்று தன் துயரைக் கொட்டும் கணவன் உள்ளம். அத்துயரை அவள் அறிந்து விட்டாள் என்று காணப்பொறாது என்பதை, அவள் உணர்ந்தாள். ‘இப்போது வேண்டுவது தேற்றுதல் அல்ல, துன்பந் தவிர்த்தல், காதலுக்காகத் தன் எதிர்கால நலனைத் துறந்த ஒப்பற்ற காதலனுக்குத் தான் செய்வது அதே துறவன்றி வேறெதுவுமன்று.’ என்று அவள் தனக்குள் துணிவு கொண்டாள்.
அவள் உள்ளம் முடிவான திட்டமிட்டது. அவள் ஒரு காசுக்குரிய சில்லறையாகிய ஐந்து சிறு காசுகளை எடுத்துக் கொண்டு பேசாமல் வெளியே புறப்பட்டாள். மாளிகையண்டை யுள்ள தெருக்களில் சுற்றுமுற்றும் உலவினாள்.
காசநோயால் உடல் முழுவதும் அரிக்கப்பட்டு, ஓயாது இருமிக்கொண்டே உறக்கமில்லாது உழலும் ஒரு கிழவனை அவள் கண்டாள். அவனருகில்சென்று அவன் நோய்பற்றிக் கேள்விகள் கேட்டு ஆதரவாகப் பேசினாள். ஓர் இளம் பெண் இந்த வேளையில் தன்னிடம் வந்து இவ்வளவு கனிந்து பேசுவதுகண்ட கிழவன் வியப்படைந்தான். ஆனால், அவன் உள்ளத்தில் அதனால் மிகவும் ஆறுதல் ஏற்பட்டது. அவன் தன் இருமல்களிடையே அவளை நன்றியறிதலுடன் நோக்கி, “உனக்கு என்ன என்னால் செய்யமுடியும்.. மகளே! உன் மனத்தில் ஏதோ துன்பம் இருப்பதாக உன் முகம் காட்டுகிறதே!” என்றான்.
கோக்குவா அவனிடம் புட்டிபற்றிய கதையையும் அந்தத் தீவுக்குத் தானும் தன் கணவனும் வந்திருப்பதன் காரணத்தையும் கூறினாள். நினைத்தபடி எவரும் புட்டியை வாங்காததால் தன் கணவன் படும் துயரையும் எடுத்துரைத்தாள்.
கிழவன், “மகளே! இதில் நான் என்ன செய்ய முடியுமோ, செய்கிறேன். நான் நெடுநாள் இருக்கப் போவதில்லை. என்னை அதை வாங்கச் சொல்கிறாயா” என்றான்.
“அவ்வளவு கொடிய காரியத்தை நான் யாரையும் செய்யச் சொல்ல மாட்டேன். அதிலும் உம்மைப் போன்றவர்களுக்கு உதவ வேண்டியதைவிட்டு, இந்த மாதிரி வகைப் பழிகளில் தள்ளுவதா? நான் கேட்பதெல்லாம் அந்தப் புட்டியை என் கணவனிடமிருந்து நாலு சிறு காசு கொடுத்து வாங்கித் திரும்ப என்னிடம் முன்று காசுக்கு விற்று விடுவதுதான். வாங்குபவள் நான் என்று தெரிந்தால், என் கணவர் விற்கமாட்டார். எனக்கோ நான் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை. என் கணவனை மகிழ்வித்துப் பார்க்க மட்டுமே விருப்பம்.” என்றாள் அவள்.
கிழவன் அவளைக் கைகூப்பி, “அம்மணி, நீ ஒரு பெண் தெய்வம். இதோ நீ கோரியபடி செய்கிறேன்.” என்றெழுந்தான்.
கோக்குவா நாலு சிறு காசை அவனிடம் கொடுத்து, “இந்த இடத்திலேயே நான் இருப்பேன். விரைவில் வாருங்கள்,” என்றாள்.
அவள் திட்டமிட்டதுபோலக் காரியம் முடிந்தது. கிழவன் புட்டியுடன் வந்தான். கோக்குவா மூன்று சிறு காசுகள் தந்து புட்டியைப் பெற்றுக் கொண்டாள். அவளிடம் புட்டியை விற்க மனமில்லாமல் கிழவன் தழுதழத்தான். ஆனால், கோக்குவாவின் வீர உள்ளம் கிழவனைப் பழி கொள்ள ஒருப்படவில்லை. புட்டியுடன் அவள் சென்றபின் கிழவன் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றான்.
இப்போது துன்பத்தின் முறை கோக்குவாவுக்கும் இன்பத்தின் முறை கீவுக்குமாக, அவர்கள் தொடக்கக் கால உறவு தலைமாறிற்று. புட்டியைத் தொலைத்துவிட்டோமென்ற மகிழ்ச்சியில் கீவ் உறங்கினான். அது உண்மையில் தன்னிடமிருந்து தன் மனைவியிடமே சென்றிருக்கிறது என்பதை அவன் கனவிலும் கருதவில்லை. ஆனால், அவன் உறங்கும் வேளையிலெல்லாம் கோக்குவா விழித்திருந்து தன் எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்டு அரற்றிக் கொண்டிருப்பாள். ஆனால், அத்துன் பத்தினிடையேயும் அவளுக்கு ஒரு ஆறுதல் இருந்தது. கணவன் காதலுக்கும் அவன் தன்மறுப்புக்கும் தான் சரி நிகரான கைம்மாறு செய்து கடனாற்றி விட்ட அமைதியே அது.
புட்டியை ஆவலாக வந்து வாங்கிக்கொண்ட கிழவனைப் பற்றிக் கீவ் அடிக்கடிப் பேசுவான். கிழவனின் அறியாமையை அச்சமயங்களில் அவன் குத்திக் கேலி செய்யாதிருப்பதில்லை. முட்டாள் அறிவில்லாமல் தன் வினையைத் தானே வாங்கிக் கொண்டு ஓடினான். அவனுக்கு இருப்பதோ ஒன்றிரண்டு மாதம், அதற்குள் எங்கே யார் அதை இரண்டு சிறுகாசு கொடுத்து வாங்கப் போகிறார்கள். அவனைப்போன்ற இன்னொரு முட்டாள் இந்த தாகிதித்தீவு முழுவதும் தேடினாலும் கிடையாதே! என்று கூறிய வண்ணம் கவலையற்ற உள்ளத்துடன் கீவ் கலகலவென்று நகைப்பான்.
கணவனின் இரக்கமற்ற கேலி கோக்குவாவின் காதலுள்ளத்தை அறுத்தது. அவள் கிழவன் மீது பரிவு கொண்டு பேசினாள். தான் விடுதலை பெற்றதுபற்றி மகிழ்வதற்கு மாறாக, அதற்கு உதவிய கிழவனிடமே பரிவு காட்டுகிறாளே என்று கீவ் புழுங்கினான்.
கோக்குவா இப்போது தன் கடமையைச் செய்துவிட்டாள். ஆனால், புட்டியை அவள் தானே வைத்து அழிய விரும்பவில்லை. மூன்று சிறு காசுக்குக் கீழ் இன்னும் இரண்டு கை மாற, இடமிருந்தது. ஆகவே, இரு சிறு காசுகள் தந்து அதை யாராவது வாங்கிக் கொள்ளக் கூடும் என்று கருதியிருந்தாள். ஆனால், மனைவி நிலை அறியாத கணவன் திட்டம் இதற்குக் குறுக்கே சென்றது. தாகிதித்தீவு வந்த காரியம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் முடிந்துவிட்டதால், இனி ஹவாய்க்குப் போக அவன் படபடத்தான்.
அவளுக்கு வந்த மனக்கசப்பில், ஹவாய்க்குச் செல்லுவதற்கு முன் இருந்த ஓரிரு வாரத்தைக் கூட அவள் தனக்காகப் பயன்படுத்த மனமில்லாமல், வீட்டுக் குள்ளாகவே அடைபடுக் கிடந்தாள். முன் காதலுக்காகத் தன் எதிர்காலத்தை இழந்த கீவின் இன்ப வாழ்வில் இப்போது அவளும் முழுதும் கலக்கமுடியாமல் குமுறினாள்.
ஒரு நாள் கீவ் வெளியே சென்று மகிழ்ச்சியுடன் உலாவ விரும்பினான். மனைவியையும் தன்னுடன் அழைத்தான், அவள் ‘உடம்புக்கு நலமில்லை’ என்று மறுத்தாள்.
உண்மையில் அவள் உடம்பு மட்டுமல்ல, உள்ளமும் வெந்து புழுங்கிற்று. ஆனால், அவள் உள்ள நிலைமை அறியாத கீவ் உள்ளூரப் பொருமினான். “நான் நன்மை அடைந்ததை இவள் உள்ளூர விரும்பவில்லை. இவள் பரப்பிய காதலெல்லாம் இவ்வளவுதான் போலும்!” என்று அவன் கறுவிக் கொண்டான்.
அடுத்த நாள்முதல் கீவ் குடிக்கத் தொடங்கினான். குடிவெறியில் அவன் தன் புட்டி, தன் பணம், தன் மனைவி என உ ளறினான். குடித்திருந்த நண்பன், ’பணத்தைப் பெண்களிடம் நம்பி வைத்திராதேடா, பாவி! பெண்கள் எல்லாரும் மோசக்காரிகள். என்றான்.
புண்பட்ட கீவ் உள்ளத்தில் குடிவெறியில் கூட இந்தச் சொற்கள் பதிந்தன. அன்றுமுதல் இரவில் அவன் திடுமென எழுந்து கோக்குவா என்ன செய்கிறாள் என்று உளவறிய முயன்றான்.
அவன் கண்ட அந்த உளவு அவன் அமைதியை மீண்டும் கலைத்தது. அவன் கண்டுபிடித்தது அவள் மோசத்தையல்ல, அவள் பாசத்தை! நள்ளிரவில் புட்டியை வைத்துக் கொண்டு முன் தான் மனம் நொந்ததுபோல அவள் இப்போது நொந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.
கீவுக்கு இப்போது புட்டியின் விற்பனைபற்றிய கோர உண்மை விளங்கிற்று, ‘அந்தோ! எனக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த மனைவியிடம் நான் என்ன நன்றி கெட்டதனமாக நடந்துகொண்டேன்! அவள் பத்தரை மாற்றுத் தங்கம். அவள் கேடடையக் கூடாது. நான் பாவி! சண்டாளன்! அந்தக் கேட்டை மீண்டும் நானே அவளறியாமல் என்மீது ஏற்றுக்கொள்வேன்’ என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். தான் உண்மையைக் கண்டு கொண்டதாகவே அவன் மனைவிடம் காட்டிக் கொள்ளவில்லை தான், திருந்தி விட்டதாகவும் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கம் போலக் குடிப்பதற்கு அவன் பணம் கேட்டு வாங்கிக்கொண்டு போனான். ஒரு காசை மாற்றிக் கையில் வைத்துக் கொண்டான்.
தன் மனைவிமீது அவதூறு கூறிய அதே குடிகாரனிடம் அவன் சென்றான். அந்த நண்பன் ‘என்ன எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய், எத்தனை புட்டி இன்று எனக்கு வாங்கித்தரப் போகிறாய்.’ என்று அரை மயக்கத்திலேயே கேட்டான்.
கீவ் அவன் மயக்கம்தீர இரண்டு குத்துக்கொடுத்து அடே, கேட்ட பணம் தரும் புட்டி என் மனைவியிடமிருக்கிறது. ஆனால், அதை அவள் இரண்டு காசு கொடுத்தால்தான் விற்பாள். எனக்கு விற்கவும் மாட்டாள். நீ அதை வாங்கித் தராவிட்டால் என்னிடம் இனிப் பணம்பெற முடியாது. வாங்கித் தருவதாயிருந்தால் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் புட்டியிடம் வாங்கித் தருவவேன்," என்றான்.
‘உன் புட்டிக்கதையை நான் நம்பவில்லை’ என்றான் நண்பன்.
‘நீயே தேர்ந்து பார்த்துக் கொள்ளேன். என்னிடமிருந்து வந்ததாக மட்டும் கூறாமல் இரண்டு சிறுகாசு கொடுத்து என் மனைவியிடம் கேள். அவள் புட்டியைக் கட்டாயம் கொடுப்பாள்; கொடுத்தபின் எனக்குத் தருவதற்கு முன் எத்தனை புட்டிக் குடிவகைகள் வேண்டு மானாலும் கேட்டுப்பார். அதன் பின் நான் ஒரு சிறுகாசு விலைதந்து அதை வாங்கிக் கொள்கிறேன்.’ என்றான்.
அச்சாரமாகச் சிறிது குடிவாங்கிக் கொடுத்த பின்னால் நண்பன் இரண்டு சிறு காசுகளுடன் சென்றான். கீவ் அவனுக்காக காத்திருந்தான். நெடுநேரம் இருந்தும் அவன் வரவில்லை.
கீவ் கவலையுடன் அவனைத் தேடிக்கொண்டே தன் வீட்டு வரை வந்தான். வீட்டண்டை வரும்போது அவனெதிரே நண்பன் நடக்கமாட்டாமல் தள்ளாடிக் கொண்டு வருவது கண்டான்.
அவன் உடுப்பின் ஒவ்வொரு பையிலிருந்தும் ஒன்றிரண்டு புட்டியின் கழுத்துகள் நீட்டிக் கொண்டிருந்தன. கையில் நீண்ட ஒரு புட்டி இருந்தது. அவன் குடித்துக் கொண்டே நடந்து வந்தான்.
“அண்ணே! நல்ல புட்டிச்சாத்தன் அண்ணே! நீதானே எனக்கு இந்த நன்மை செய்தாய், நீ ஒரு புட்டி சாப்பிடுகிறாயா?” என்றான்.
கீவ் அவன் நிலைகண்டு இரங்கினான். “புட்டி சாப்பிடுவது அப்புறமிருக்கட்டும். அந்தப் புட்டிச்சாத்தன் எங்கே? அதை நான் விலைக்கு வாங்கிக்கொண்டு விடுகிறேன். இதோ, ஒரு சிறுகாசு, அதைக்கொடு.” என்றான்.
நண்பன் புட்டிச் சாத்தனை உட்சட்டையின் உட்பைக்குள் செருகி வைத்திருந்தான். அதைத் தட்டிக் காட்டி ’ஒரு காசா! என்னை அவ்வளவு பைத்தியக்காரனென்றா நினைத்தாய்? குடிவெறியில் என் குடிச் செல்வத்தை மறந்து கொடுத்து விடுவேன் என்று பார்த்தாயா? ஒரு சிறு காசல்ல. ஒன்பது நூறாயிரம் பொன் கொடுத்தாலும் இனி இந்தப் புட்டி என்னிடமிருந்து வராது. என்னை நீ கொன்றுவிட்டால் கூட அந்தப் புட்டியையும் புட்டிச் சாத்தனையும் விழுங்கிவிட்டுத் தான் உயிர் விடுவேன்." என்றான்.
கீவுக்கு அதனை அப்படியே விட்டுச் சொல்ல மனம் வரவில்லை. அந்தப் புட்டியை வைத்திருப்பவனுக்கு நேரவிருக்கும் நரக வேதனையை எடுத்து மீண்டும் விளக்கினான்.
‘புட்டிகளின் அருமை தெரியாதவர்களிடம் சொல்லு அண்ணே, இந்தக் கதை எல்லாம்! எனக்குக் குடிக்கக் குடிக்கப் புட்டிதருகிற இந்தச் செல்வத்தை நான் ஒரு நாளும் கொடுக்க மாட்டேன். போ, இங்கே நின்று என்னைத் தடுத்தால், உன்னைக் கொன்று போடுவேன்.’ என்று கூறிக் கொண்டே தள்ளாடித் தள்ளாடி இருட்டில் மறைந்தான்.
கீவ் முதலில் தான் கண்ட காட்சி உண்மைதானா கனவா என்று உணரமுடியவில்லை. ஆனால், ஆர அமர எண்ணிப் பார்த்தபின், நண்பன் செயல் அவனுக்குப் புரிந்தது. குடிப்பதல்லாமல் வேறு எதுவும் நாடாத அவன் மற்ற எல்லாரையும்விடப் புட்டிச்சாத்தனின் பிடிக்கு உகந்தவன். நரகில் கூடக் குடிக்க வழியிருந்தால், அதை வானுலகாகக் கருதுபவன் அவன்.
ஹவாய்க்குப் புறப்பட ஏற்கெனவே குறிப்பிட்ட நாளிலேயே கோக்குவாவுடன் கீவ் கப்பலேறினான். புட்டிச்சாத்தன்மூலம் கோக்குவாவுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட துன்பங்களுக்கு ஓர் எல்லை ஏற்பட்டது. ஆனால் புட்டிச்சாத்தன் தந்த செல்வம்மட்டும் இன்னும் வாழ்வில் வளமூட்டிற்று.
புட்டியைக் கடைசியில் வாங்கியவனைப் பற்றிக் கீவும் கோக்குவாவும் சிறிது கவலைப்பட்டிருந்தனர். ஆனால், கப்பலேறும்போது, அந்த நண்பன் சிறிதும் சலிக்காமல் புட்டிகளை ஈட்டிகள்போல் உடுப்பில் மாட்டிக்கொண்டு குடித்தபடியே, ‘நீங்கள் என்னை ஏய்க்கப் பார்த்தீர்கள். நான் உங்களை ஏய்த்துவிட்டேன். ஆனாலும், புட்டிச்சாத்தன் பெயரால் உங்களுக்கு என் அழியா முழுநன்றி,’ என்று கூறி விடையனுப்பினான்!.
** பேரறிஞர் அண்ணா மணிவிழா வாழ்த்துரை**
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான்.
ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது.
அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டுக்கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித் திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து. பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப் போராட்டங் களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித் திறமையை நாம் நன்கு அறிவோம்.
** தமிழின் மூலத்தை ஆய்ந்தவர்**
அவர், தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல - தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும்.
நம் அப்பாத்துரையார் அவர்கள், எந்த நேரத்தில் பார்த்தாலும், சிந்தனை - படிப்பு - எழுத்து என்று சிறப்பாகக் கழித்திருக்கிறார்.
மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதற்கு அங்கே ஒருவரோடு ஒருவர்போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த நாட்டில் ஒருவரை ‘அறிவாளி’ என்று சொன்னாலே ஆபத்து; “அவன் என்ன பெரிய அறிவாளியா? என்ன அறிவு?”…. பெரிய அறிவு!" என்று கேட்பதன் மூலம் தங்களிடம் அறிவு இருக்கிறது எனக்காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள்!
இத்தகைய அறிவுப் பணி புரிவதே பெரிய சிக்கல்தான்; ஆனால் சிக்கலிலேதான் சுவையும் இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவுக்கு எழுத்துத்துறையானாலும், பேச்சுத் துறையானாலும், வேறு எந்தத் துறையானாலும் இங்கே உற்சாகமாக ஈடுபடுவது என்பது மிகமிகக் கடினம். இப்படிப்பட்ட கடினமான தொண்டை முப்பது - முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் நிறைவேற்றி வருகிறார். அவர், தம் வாழ்க்கையைக் கரடு முரடான பாதையில் நடத்தி, அதே வேளையில் மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்கும் அளவுக்குப் பணி புரிந்திருக்கிறார்.
** சுதிக்குள் பாடும் இசைவாணர்**
அப்பாத்துரையாரது வாழ்க்கை, ஒரு பூந்தோட்டமா? இல்லை! வறுமைச் சூழலிலே தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டு இருப்பவர் அவர். எனினும் பண்பட்ட உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல்களையும் தாங்கிக் கொண்டு - தம் பணிகளைச் செய்திருக்கிறார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சொன்னது போல், அவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்து கொள்ளவில்லை. எந்தெந்த வகையில் எல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றலாம் - எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி எண்ணி, அந்ததந்த நேரங்களில் அருந்தொண்டு ஆற்றியவர் அப்பாத்துரை யார்.
ஒவ்வொன்றையும் பற்றி ‘இப்படிச் செய்வது சரியா?’ என்ற கேள்வி அவருடைய எண்ணத்தில் ஊடுருவி நிற்கும். ஆகவே, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார்; பிறகு அது பிடிக்காமல் பத்திரிகை ஆசிரியர் ஆவார்; அதன் பிறகு, தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர், போராட்டத்தினால் பயனில்லை என்று கருதி, ஏடுகளை எழுதி அளிக்கஎண்ணுவார். இவ்வாறு அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார்.
இசை நிகழ்ச்சியில் பாடுபவர் - பல வகையான பண்களை ஏற்ற இறக்கத்தோடு பாடினாலும் - பல்வேறு இசை நுணுக்கங் களைக் கையாண்டாலும் - ஒரு சுதிக்குள்ளே நின்றுதான் பாடுவார்.
அதுபோலவே, அப்பாத்துரையாரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் ஒரு சுதிக்குள்ளாகவே - ‘தமிழ் வாழ வேண்டும் தமிழ் வளர வேண்டும்’ என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர்.
மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ் மொழியின் பாதுகாப்பைப் பொறுத்து இன்று ஒன்றுபடுகிறார்கள்.
நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம் - போக - நடவடிக்கைகள் - இருக்கும் இடம் - ஆகியவற்றில் மாறுபட்ட வர்கள்; என்றாலும், எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி! இதற்குள் நாம் எல்லா வற்றையும் காட்டலாம்; இந்த நிலை ஏற்பட, தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்குமேல் பாடுபட வேண்டியிருந்தது!
இந்தச் சுதியை நமக்கு அமைத்துக் தந்தவர்களில் அப்பத் துரையாரும் ஒருவர், அப்படிப்பட்ட முறையில் அமைவதுதான் அடிப்படையான தொண்டு.
** கடன்பட்டுக் குடிமாறும் புத்தக ஆசிரியர்கள்**
மேலை நாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளை வசதியாகக் கழித்துவிட முடியும் - அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு! அப்படிதான் ஓர் எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக - ஓராண்டுக் காலம் ஓய்வில் இருந்தே செலவழிப்பதற்காக - தென்அமெரிக்காவுக்குச் சென்று அங்கே வாழ்ந்தாராம்!
இங்கோ… … ஓர் ஆசிரியர், ஒரு புத்தகத்தை எழுதி வெளி யிட்டார் என்றாலே, குடியிருந்த வீட்டை மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்குத் தாம் பட்ட கடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சி, தென் சென்னையில் வீடு இருந்தால் வட சென்னைக்கும், வடசென்னை யில் வீடு இருந்தால் தென் சென்னைக்கும் அவர் குடிபோவார்! அப்படிப்பட்ட நிலையே இங்கு இருக்கிறது!
இங்குப் புத்தகம் எழுதுவதும் அதன் மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்!
புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.
அப்பாத்துரையின் நூல்களை - ஏடுகளை - வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும்.
அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் - எத்தனை ஆயிரம் கவிதைகளை, இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் - என்பதை எண்ணி எண்ணி வியந்தேன்.
புத்தகம் எழுதுவோரை மற்ற நாடுகளில் எல்லாம் வித்தகர் களாகப் போற்றுகிறார்கள். இந்த நாட்டிலோ, ‘புத்தகம் எழுதி இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்’ என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு!
இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ்மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதி யிருக்கிறார்.
** மறதி ஆகும் மரபு**
நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை.
‘தனித்தமிழ் இயக்கம்’ கண்ட மறைமலையடிகள், ‘தமிழ்த் தென்றல்’-திரு.வி.க. நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ் பெரும்புலவர்களின் - வாழ்க்கை வரலாறுகள் நம் மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு’ பிறகு நமக்குக் கிடைக்காது.
‘மரபு’ என்பதே இப்போது ‘மறதி’ என்று ஆகிவிட்டது.
பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை.
நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால் - இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு; தம்பி என்பாரும் உண்டு’ என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியத் செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். ‘கரிகால் வளவன் உரையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு’ என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருக்கும்!
** உண்மை வரலாறு உருவாகட்டும்**
இப்படி ஐயப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் போக்கினை நீக்கி, உண்மையான தமிழக வரலாற்றை உருவாக்கும் பணியினை வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வெட்டுகளில் காணப்படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளவற்றையும், இன்ன பிற சான்றுகளையும் திரட்டி, தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் - தமிழ்ச் சான்றோர்கள் - ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் சில திங்கள்களில் (1968- சனவரித் திங்கள் முதல் வாரத்தில்) இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளிநாடுகளிலிருந்து வருபவர் கட்கு, “இது தான் எங்கள் நாட்டு வரலாறு” என்ற எடுத்துக் காட்டமுடியும்.
இத்தகைய பணியை செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை - ஏற்றுப் பணியாற்று வதற்கு முழுத் திறமை பெற்றவர் - பன்மொழிப் புலவர் அப்பாத் துரையாரே ஆவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன்.
(சென்னையில் 20-9-1967 அன்று நடைபெற்ற
பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார்
அவர்களின் மணி விழாவுக்குத் தலைமை தாங்கி
அன்றைய முதல்வர் - பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய
பாராட்டுரை.
நன்றி - ‘நம் நாடு’ நாளிதழ் - : 22-9-1967.)
** அப்பாத்துரையார் அறிவைப் பேணாத அரசு!**
அறிவு பல துறையினது; எனவே அறிஞர்களும் பல துறையினர் ஆவர். தமிழ் எனும் மொழித்துறையும் அதன் புலமைத் துறையும் பற்பல. தமிழில் கலைகளும், பண்பியல்களும், புறத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். தமிழின் மொழி யியலும், சொல்லியலும் ஒலியியலும் அதன் அகத்துறையைச் சார்ந்த அறிவு நிலைகள். இசை, இயல், நாடகம் என்பன கலைத்துறை அறிவு நிலைகள். அவற்றுள் இலக்கியமும் இலக்கணமும் இயல்துறையைச் சார்ந்தவை. அறநூல்களும் வாழ்வியல் நூல்களும் பண்பியலைச் சார்ந்தவை. மொழியியலும் அது சார்ந்த இனவியலும் வரலாற்றைச் சார்ந்தவை. இன்னோரன்ன பலதுறைத் தமிழ் அறிவியலில் தனித்தனித் துறையறிவும், பல்துறை அறிவும் சான்ற பேரறிஞர்கள் பலர் அன்றுந் தேன்றினர்; இன்றுந் தோன்றி இருந்து சிறந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே படித்தாய் வளர்ந்தவருமிலர்; வாழ்ந்தவரும் இலர். அவர்களை அடையாளங் கண்டு கொண்டவரும் கொள்பவரும் மிகச் சிலரே!
வாழ்க்கை என்பது வெறும் உயிர் வாழ்தல், பொருளியல் துய்ப்புகளில் மேம்படுதல் என்பன மட்டுமே பொருள் பெறுமாயின், அறிவு வாழ்க்கையே பொருளற்றதாகப் போய்விடும். அறிஞர்களோ பிறவியிலேயே உயர் உணர்வு பெற்றவர்களாக, வாழ்வியலில் அக்கறை கொள்ளாமல், அறிவுத் துறைகளிலேயே தம்மை மூழ்கடித்துக் கொண்ட முழு மாந்தர்களாக வாழ்ந்து சிறப்பவர்களாவர். எனவே அன்றும் இன்றும் என்றும், வறுமை அவர்களுக்கு உயிருடைமையாகவே உள்ளது.
அவ்வறிஞர்கள் வரிசையில் நம் தமிழறிஞர்கள் தொன்று தொட்டு வறுமையிலேயே செம்மையைக் கண்டவர்களாக இருந்து வருவதை வரலாறு உறுதி கூறும். அறிவு முனைப்பால் முழுமை பெற்றவர்களாதலின், அவர்கள் தம் ஊனுடம்பு ஓம்பும் வெற்று வாழ்ககைக்காக, எதற்காகவும் எவரிடத்தும் எப்பொழுதும் கூனல் எய்தாக் கொள்கையாளர்களாக இருந்து, தாம் பேசும் தண்டமிழ்க்கும் தாம் வாழும் இனத்துக்கும், தாம் பிறந்த நிலத்துக்கும் அரிய பல தொண்டுகளாற்றி, இறுதி வரை, வாழ்வியலுக்கு உறுதி பயப்பதாம் பொருள் நிலையில் ஓர் இம்மியும் உயராது, வறுமையிலேயே வாழ்ந்து வெறுமை யிலேயே மறைவோராக இருக்கின்றனர்.
அவ்வருந்தமிழ்ச் சான்றோர்களுள், அண்மைக் காலத்தே நம்மிடையே தோன்றியிருந்து அரிய பல அறிவுத் தொண்டாற்றி, இறுதியில் கலங்கிய நெஞ்சொடும், கண்ணீர் விழியொடும், காலச் சுழலில் மாய்ந்து போனவர்களான இரு பெரும் புலவர்கள் என்றென்றும் இவ்வினமும் நிலமும் நினைக்கத் தக்க சான்றோர்கள் ஆவர். அவர்கள் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரும் ஆவார்கள். இவருள் பாவாணரை என் வாழ்வில் நாற்பத்தைந் தாண்டுக் காலம் அருகிருந்து பார்த்தேன்; பன்மொழிப் புலவரை கடந்த முப்பதாண்டுகளாக என் அகத்திருந்து பார்த்தேன்.
இவர்கள் இருவரும் இவ்விருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேரு மலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும், குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெரு மக்கள்! மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்களை விண்மீன்கள் என்றால், இவர்கள் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணாளர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டுத் தவம் இயற்றிய தீந்தமிழ்த்துறவோர்கள்.
பாவாணர்க்கும் பன்மொழிப் புலவர்க்கும் நெருங்கிய உளத்தொடர்பும், கொள்கைத் தொடர்பும், அறிவுத் தொடர்பும் உண்டு. உழைப்பில் இருவரும் ஊக்கம் இழக்காத ஓர் ஏர் உழவர்கள், யாருக்கும் அஞ்சாத வல்லரிமாக்கள்! தண்டமிழ்த் தாயின் தவப்பெரும் புதல்வர்கள்; வறுமையில் செம்மை காத்த பெருமையாளர்கள்! மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட நல் உரவோர்கள்!
தமிழகத்தில் பொதுவான அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள் பற்பலர் அவ்வப்போது தோன்றுகின்றனர்; பல அருஞ்செயல்களைக் கூடச் செய்கின்றனர்; செய்தும் வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே தரத்தினர், அறிவுத் திறத்தினர் அல்லர். அவரவர்களுக்கு அவரவர்களுடைய வாழ்க்கைக்குத் தமிழ் ஒரு பிழைப்புக் கருவி. அவர்கள் தமிழைப் படித்தனர்; அல்லது கற்றனர்; அதில் புலமை பெற்றனர்; அல்லது ஆசிரியத் தன்மை பெற்றனர்; வாழ்வுற்றனர். ஆனால், பாவாணரைப் போலும், அப்பாத்துரையார் போலும் தமிழ் அறிஞர்களும் பெரும் கொள்கைப் புலவர்களும் எப்பொழுதோ ஒருமுறை, ஓரிரு கால கட்டத்திற்குள்தாம் பிறந்து தம்மால் தமிழையும் தமிழால் தம்மையும் மேம்படுத்தும் அரும்பெறல் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அல்லது ஆற்றி வரும் தொண்டுக்குப் புலவர்கள் பிறர் அத்தனையரும் இணைந்து ஆற்றிய அல்லது ஆற்றிவரும் தொண்டும் ஈடாகாது என்று உறுதியாய் மெய்ப்பித்துக் காட்ட முடியும்.
அத்தகைய கொள்கைப் புலவோர்கள் தமிழுக்கு ஆற்றியது தான் - ஆற்றி வருவதுதான் தொண்டு-என்னும் பெருமை பெறக் கூடியது. புறநிலையில் அவர்போல் வைத்து எண்ணக் கூடிய புலவர்கள் பிறர் செய்வது பணி; தமிழ்ப் பணி! அல்லது ஆசிரியப் பணி; பேராசிரியப் பணி! எனவே தமிழும், தமிழினமும் தமிழ்நாடும பாவாணர், அப்பாத்துரையார் போலும் தனிமுதல் பேராசிரியர்களால் - அவர்கள் வாழ்க்கையையே ஈடு வைத்து ஆற்றிய தொண்டால் - பெருமை யுற்றன; நிலைமை பெற்றன; சிறப்புப் பெற்று வருகின்றன.
இவர்களுள் பாவாணர் தமிழ்மொழி ஆய்வில் தனிக்குன்றம் எனச் சிறந்து விளங்கினார். பன்மொழிப் புலவர் திராவிட மொழி ஆய்விலும் வரலாற்றிலும் தமிழையும் தமிழரையும் தமிழ் நாட்டையும் மேம்பாடு உறச் செய்தார். ஆனால் நம் நெடு வரலாற்று மூடக்கடைப்பிடியால் இருவரும் குன்றின் மேலிட்ட விளக்காக வாழாமல், குடத்துள் சுடர்ந்த விளக்குப் போல் நலங்குன்றி, வளங்குன்றி வறுமையிலேயே பெருமூச்செறிந்து உயிர் தவிர்க்கலாயினர். இது கழிபெரும் இரங்கல்! நாம் கழித்துக் கட்ட வேண்டிய புலமைப் புறக்கணிப்பு! இப்பிழைப்புக்கு நாமும் நம்மையாளும் அரசும் பெருந்தண்டனை ஏற்கத் தக்கவர்கள்! நாணித் தலைகுனிய வேண்டியவர்கள்!
பாவாணர் மறைந்த பொழுது அவர் செய்ய வேண்டிய பணி, முற்றுப் பெறாமல் பரந்துபட்டு நின்றது. அவர் ஏறத்தாழ இருபத்தைந்து நூல்கள் எழுதி இத்தமிழுலகு பயன்பெறத் தந்து சென்றார். ஆனால் பன்மொழிப் புலவரோ ஏறத்தாழ நூற்று எண்பது நூல்களுக்குப் பேராசிரியராக விருந்து அறிவாளுமை செய்து மறைந்தார். இருவரும் இன்னும் எழுதி முடிக்க வேண்டிய அறிவு நூல்கள் பல உள. அம் முடிக்கப்பெறா நூல்கள் இவ்விருவர் பாங்கிலிருந்தும் நமக்குக் கிடைக்கப் பெறாமற் போனது நம் போகூழே! நாமேதாம் அவர்கள் தம் பணியில் முற்றுப் பெறாமற் சென்றதற்கு முழுக் காரணர்களாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் வேண்டும். இது நமக்கு மட்டுமன்று. நம் மொழிக்கு இனத்திற்கும் நாட்டிற்கும் நாமே ஏற்படுத்திக் கொண்ட பெரும் பேரிழப்பாகும்! எதிர்காலம் நம்மைப் பொறுத்துக் கொள்ளாது.
நம் பெருமைக்குரிய பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்கள் பாவாணர் மறைந்த எட்டாண்டுகள் கழித்து மறைந்துள்ளார். பாவாணர் மறைந்த பின்னை நாமும் நம் அரசும் விழித்துக் கொண்டிருந்தாலும் நம் பன்மொழிப் புலவரை இன்னும் சில காலத்திற்குப் புரந்து பேணி அவர் எச்ச அறிவாட்சியை நீட்டித்திருக்க வழி செய்திருக்கலாம். அதன் வழி அவர் அறிவால் இம்மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்திருக்க வேண்டிய அறிவுக் கருவூலங்களைக் கிடைக்கச் செய்திருக்கலாம். ஆனால், நாம் தாம் போற்றிக் கொள்ள வேண்டிய பெரும் புலமையை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, அப் புதை மேடையில் நின்று மறைந்து போன புலவர்க்குப் போற்றுதலுரையும், விழா வேடிக்கையும் செய்து நிறைவுறுவோர்கள் ஆயிற்றே! என் செய்வது?
இனி, பன்மொழிப் புலவர் தம் வாழ்வியல் நிலைகளை நன்றியுடன் நினைந்து வியந்து போற்றுதல் செய்வோம்.
புலவரவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல் வாய்மொழி எனும் சிற்றூரில் 24.6.1907 ஆம் ஆண்டுப் பிறந்தார் பெற்றோர் முத்தம்மாளும் காசிநாதரும் ஆவர். சிறு அகவைப் பொழுதிருந்தே தமிழுணர்வும் தமிழின உணர்வும் அவருள் காழ் கொண்டிருந்தன. எதையும் விரைந்து கற்கும் ஆர்வமும், கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்ளும் திறமும் இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவராகையால், அவர் தமிழுடன் ஆங்கிலம், சமசுக்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளையும் பள்ளிப் பருவத்திலேயே எளிதாகக் கற்றுத் தேர்ந்தார். தொடக்கத்தில் ஆங்கிலத்திலேயே மதிதகு இளங்கலை ஆங்கிலப்பட்டம் B.A.(Hon’s) பெற்றார். பின்னர் தமிழில் முதுகலை (M.A.) தேர்வுற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெறுவதற்கு முன்னரேயே இந்தியில் விசாரத் (B.A.வுக்குச் சமமானது) பட்டம் பெற்றது பெருவியப்பே!
பின்னர், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி போலும் திராவிட மொழிகளையும், அரபு, சப்பான் ஈபுறு, மலாய் ஆகிய ஆசிய மொழிகளையும், பிரெஞ்சு, செர்மன், உருசிய, இத்தாலி முதலிய ஐரோப்பிய மொழிகளையும் ஆர்வத்தால் தொடர்ந்து கற்றுப் பன்மொழிப் புலவர் என்ற தனிச் சிறப்புப் பெற்றார். தமிழகத்தில் பன்மொழிப் புலவர் என்று அழைக்கும் தகுதி பெற்றவர் நம் பெருமதிப்பிற்குரிய கா. அப்பாத்துரையார் ஒருவரே. இனி வருங்காலத்தில்கூட இப்பன்மொழிப் புலமைத் தகுதிபெறம் ஒருவர் தோன்றுவார் என்பதற் குறுதியில்லை. ஒரு மொழிப் புலமை எய்துவதற்கே ஒருவர் வாழ்நாள் முழுமையும் செலவிட்டாலும் போதாது என்னும் நிலை இயல்பானதாயிருக்க, பன்மொழிப் புலமை பெறுவதென்பது செய்தற்கரிய செயலே அன்றோ?
நம் பேரறிஞர் அவர்கள் தொடக்கத்தில் அரசுப் பணியாளர், ஆசிரியர், இதழாசிரியர் எனப் பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். நூலாசிரியர் என்னும் நிலையில் இவர் தமிழகத்தின் தனிநிலைப் பேராசிரியராக விளங்குவது பெருமைப் படத்தக்கது. இதுவரை வெளிவந்த அவருடைய நூற்களே ஏறத்தாழ 180 அளவில் இருக்கும். (சரியான கணக்கு எடுக்கப் பெற்று வருகிறது.) இலக்கியம், வரலாறு, மொழியாய்வு, மக்கள் வரலாறு, திருக்குறள், சமயம், மெய்ப் பொருளியல், ஆராய்ச்சி முதலிய பல்வேறு துறைகளில் பல அரிய நூல்களை இத் தமிழ் மொழிக்கும், இம்மக்களுக்கும் ஆக்கி வழங்கிய பெரும் பேராசிரியர், அவர்.
அவர் எழுதிய நூல்களுள் மிக முகாமையானவை; மொழியியலில், தென்மொழி, வளரும் தமிழ், மொழிவளம், India’s Language Problem(மறைமலையடிகளாரின் அரிய முன்னுரையைக் கொண்ட ஆங்கில நூல்), கால்டுவெல் ஒப்பிலக்கணம் முதலியன; வரலாற்றியலில், தமிழக வரலாறு, இந்திய நாகரிகத்தின் திராவிடப் பண்பு, வருங்காலத் தமிழகம், குமரிக்கண்டம், தென்னாடு, தமிழ் முழக்கம், தமிழன் உரிமை, இதுதான் திராவிடநாடு, தாயகத்தின் அமைப்பு, ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், இருகடற்கால்கள், இந்திய மக்கள் விடுதலை வரலாறு, சரித்திரம் பேசுகிறது. கொங்குத் தமிழக வரலாறு (மூன்று பகுதிகள்), கெஞ்சிக்கதை முதலியன; மாந்தவியலில், நல்வாழ்வுக் கட்டுரைகள், வாழும் வகை, சங்க காலப் புலவர், சமதர்ம விளக்கம், இல்லறமாண்பு, சங்க இலக்கிய மாண்பு, மக்களும் அமைப்புகளும், தென்னகப் பண்பு, முதலியன; இலக்கிய வியலில், சங்க இலக்கிய மாண்பு, செந்தமிழ்ச் செல்வம், சிலம்பு வழங்கும் செல்வம், உலக இலக்கியங்கள். மேனாட்டு இலக்கியக் கதைகள் (இரண்டு பகுதிகள்), அன்னை அருங்குறள் முதலியன. திருக்குறள் தொடர்பாக - வள்ளுவர் நிழல், திருக்குறள் மணி விளக்க உரை (6 பாகங்கள்) திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, (ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் (Mind and Thought of Thiruvalluvar) முதலியன; அறிஞர்கள் வரலாற்று வரிசையில், ஆங்கிலப் புலவர் வரலாறு. அறிவுலக மேதை பெர்னார்டுசா, ஓவியக் கலைஞர் இரவி வர்மா, சேன்அயர், பெஞ்சமின் பிராங்ளின், அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன், தளவாய் அரியநாதர், கிருட்டிண தேவராயர், சுபாசு சந்திரபோசு, வில்லியம் கூப்பரின் கடிதம், டேவிட் லிவிங்சுடன், ஐதர் அலி முதலியன; பொதுமை நூல்கள்-குடியரசு, பொதுவுடைமை, சமூக ஒப்பந்தம், முதலீடு (Capital), போதும் முதலாளித்துவம், மே விழா முழக்கம், உலகம் சுற்றுகிறது, உயிரின் இயல்பு, அறிவுக்கடல், இன்பத்துள் இன்பம் முதலியன; கதை நூல்கள் - இரு நகரக் கதை, சேக்சுபியர் கதைக் கொத்து (நான்கு பாகங்கள்), விருந்து வரிசை, மாமனார் வீடு, முத்துமாலை, கடல் மறவர், கல்மனிதன், துன்பக்கேணி, நூர்சகான், மன்பதைக் கதைகள் (6 பாகங்கள்), விந்தைக் கதைகள் (4 பாகங்கள்), யாழ் நங்கை, மலைநாட்டுமங்கை, யுத்தக் கதைகள் முதலியன.
இனி, எழுத்தாக்கக் கொடுமுடியாகத் திகழும் நூல்கள், இவருடைய திருக்குறள் மணிவிளக்க உரை-6 பகுதிகளும், திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பும் (ஏறத்தாழ 1000 பக்கங்கள்), ஆகும். இனி, அவர் துணையாசிரியராக இருந்து தொகுத்தது சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான ‘ஆங்கிலத் தமிழ் அகராதி’ ஒரு செயற்கரிய செயலாகும். இதன் தலைமைத் தொகுப்பாசிரியராகத் திகழ்ந்தவர் மறைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பா. அ. சிதம்பரநாதனார் என்றாலும், அதன் முழுப் பணியும் நம் பன்மொழிப் புலவர் அவர்களையே சாரும் என்பதை அறிந்தார் அறிவர். இனி, இதன் அடிப்படையில், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்த ‘ஆங்கிலத் தமிழ்க் கையகராதி’ என்னும் ஏறத்தாழ 700 பக்கச் சில வெளியீடு மிகு பயனுடைய அரிய அறிவு நூலாகும்.
இத்தனை நூல்களை இவர் எழுதி வெளியிட்டிருந் தாலும், இவற்றாலெல்லாம் இவர்க்குக் கிடைத்த அறிவுக் கூலியோ மிக மிக எளிய சிறு சிறு தொகைகளே! இவர் நூல்களை வெளியிட்டுக் கொடுத்த பதிப்பகங்களால் இவர் பெரிதும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இவர் நூல்களை வெளியீடு செய்து கொள்ளையடித்த சில பதிப்பகங்கள் இவர்க்கு அறிவுக் கூலியாகக் கொடுத்தவை 100, 200 உருபாக்களும், மிகச் சில வெளியீட்டு நூல்களுமே! இவரின் கழக, ஆங்கிலத் தமிழ்க் கையரகராதிக்கு, அப்பதிப்பகத்தார் இவருக்குக் கொடுத்த தொகை வெறும் 300 உருபாவே என்றால், நம் நாட்டு வணிக நூல் வெளியீட்டகங்கள் புலவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு புலமையை விலை பேசும் நிலையினை என்னவென்று சொல்வது? இங்கு எப்படி அறிவு வளரும்? அறிஞர்கள் எப்படி வாழமுடியும்? கொள்ளையில் தலையாய கொள்ளை அறிவுக்கொள்ளையே! நம் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் தனிநிலை வாழ்க்கை மிக மிக இரங்கத்தக்கது என்பதைத் தெரிவிக்க மிகமிக வருத்தப் படுகிறோம். இவரின் மூளையை உறிஞ்சிக் கொழுத்த வெளியீட்டாளர்கள் இன்றைக்குப் பெருஞ்செல்வம் படைத்த பெரும் முதலாளிகளாய் உள்ள நிலையில், இவர் மறைந்த காலை வீட்டாருக்கு இவர் வைத்துச் சென்றது ஏறத்தாழ ஐந்து இலக்க உருபா கடன் சுமையே என்றால் இவரின் அவல வாழ்க்கையை எண்ணி எவ்வாறு கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியும்?
இவர் உயிரோடிருக்கும் பொழுது இவருக்குக் கிடைத்த பெருமைகள் பல. ஆனால் அவை வெறும் பெருமைகளும் பட்டங்களும் பாராட்டுகளுமே! 1961இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். தமிழகப் புலவர் குழு உறுப்பினராக இறுதி வரை இருந்துள்ளார். 1970இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்புறுப்பினராகக் கலந்து கொண்டார். பின் மதுரையில் நடந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில், தமிழக முதல்வர் முன்னிலையில் இந்தியத் தலைமையமைச்சரால் பொற்கிழியும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார். 1973இல் செந்தமிழ்ச் செல்வர் பட்டமும், சேலம் தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தில் சான்றோர் பட்டமும், தமிழன்பர் பட்டமும் பெற்றார். 1981 சனவரி 26இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி பட்டமும் நம் பன்மொழிப் புலவர்க்கு அளிக்கப்பெற்றது. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவர்க்கு திரு.வி.க. விருதையும் தங்கப் பதக்கத்தையும் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. அதே ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் இவருக்குப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தையும் அளித்தது. ஆனால், இவை எல்லாவற்றினும் பெருமைப் படக் கூடிய செய்தி இங்கிலாந்து ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூலை, அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைத்துள்ளதே!
இத்தனைப் பட்டங்களும் பெருமைகளையும் பெற்றுக் கொண்ட ஒரு பெரும் புலவர் அவற்றை வைத்துத் தமிழ் வணிகம் செய்யத் தெரியாத காரணத்தால், வாழ்வின் இறுதிக் கட்டம் வரை வறுமையிலேயே உழன்றார் என்பதும், இவர் மறைந்த பின் இவரின் விலைமதிப்பற்ற அறிவுடம்பும், எளிய ஓர் ஏழை மகனுக்கு வாய்க்கும் பூமலர்ப் பாடையில் கூட இன்றிப் புனைவு செய்யப் பெறாத ஒரு வெற்றுத் தென்னங்கிற்றுப் படுக்கையிலேயே கிடத்தி வைக்கப் பெற்றுத் தூக்கிச் சென்று சாவண்டியிலேற்றப் பெற்றதென்பதும் எத்துணைக் கொடுமை யான செய்திகள் என்பதை எண்ணிப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன். இனி, இதனினும் கொடுமை இவர் பொதுச் சுடுகாட்டில் எல்லா ஏழை எளியவர்களைப் போலவே வெறும் எருவாட்டியால் வைத்துத் தீ மூட்டப்பெற்றது. ஐயகோ! இன்றிருந்து நாளை ஒன்றுமில்லாமற் போகும் அரசியல் தலைவர்களுக்குக்கூட கடற்கரை போலும் சிறப்பிடங்களில் புதைக்கப்பெறும் வாய்ப்பும், ஆரவாரப் புதை மேடைகளும் மணிமண்டபங்களும் கிடைப்பது இயல்பாய் இருக்க, அப்பாத்துரையார், பாவாணர் போலும் பேரறிவுப் பெருமக்கள் பொது இடுகாடுகளிலும் சுடுகாடுகளிலும் புதைக்கப் பெறுவதும், சுடப் பெறுவதும் எத்துணை கொடுமையானவை! இங்கிலாந்தில் அறிஞர்கள், புலவர்கள், பாவலர்களுக்கு West Minister Abbey என்னும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய அடக்கவிடம் இருப்பது இங்கு சிந்திக்கற் பாலது!
அறிஞர்கள் மறைந்த பிறகு அவர்களை வெகுவாகப் போற்றிப் பேசுவதும், பாராட்டி வானளாவப் புகழ்வதும் நம் தந்நலத்தையும் மன இறுக்கத்தையுமே காட்டும். அறிஞர்கள் தனியாக வாழ்ந்து வளர்ந்து விடுவதில்லை. அனைவரும் குடும்பம் என்ற வயலிலேயே வளர்கின்ற பயிர்களாகவே இருப்பர். எவ்வளவுக்கெவ்வளவு அறிஞர்கள் தம் தனிநலத்தை மறந்து, பொது நலனுக்காக - மக்களுக்காக - தாம் பிறந்த மொழிக்காக - இனத்துக்காக - நாட்டுக்காகத் தங்களைப் பலியிட்டுக் கொள்கிறார்களோ - ஈகப்படுத்திக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் குடும்பங்கள் நசிந்துப் போகின்றன என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்! இந்த உண்மை நம் பன்மொழிப் புலவர் வாழ்வில் நூற்றுக்கு நூறு மெய்யாகி நிற்கிறது.
அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு ஏராளமான கடன் சுமைகள். அவர்களின் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளை அரசும் மக்களும் தாங்கிக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவருடைய நூல்களை மறுபதிப்புச் செய்தும் அச்சாகாத நூல்களை வெளிப்படுத்தியும், அவற்றை அரசுடைமையாக்கியும் அவருடைய அளப்பரிய அறிவுக்கு அரண் செய்தல் தமிழரசின் கடமையாகும்! அதன் வழி, தன்னை உண்மையாகத் தமிழ் நலமும் தமிழர் நலமும் கருதும் அரசாக மெய்ப்பித்துக் காட்டுதல் வேண்டும். அல்லாக்கால் எதிர்காலம் இன்றைய அரசையும் மக்களையும் குறைகாணவும் குற்றங்கூறவுமே செய்யும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்! வாழ்க பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரின் அரும் புகழ்!
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (528)
- தென்மொழி
கருத்துகள்
கருத்துரையிடுக