சிறுவர் கதைக் களஞ்சியம் - 3
சுட்டி கதைகள்
Back
சிறுவர் கதைக் களஞ்சியம் - 3
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : சிறுவர் கதைக் களஞ்சியம் -3 (அப்பாத்துரையம் - 34)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 16+256= 272
விலை : 340/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலையிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
சிறுவர் கதைக் களஞ்சியம் -3
முதற் பதிப்பு - 1945
இந்நூல் 2002 இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை -88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
அரங்கன் திருவிளையாடல்
மாமாங்கம் என்ற பேரூரிலே சட்டநாதர் என்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் கல்வியறிவில் வல்லவர். ஆனால் தருக்கு மிக்கவர். எவரையும் சட்டப் பொறியிலும் வாய்ப் பொறியிலும் மாட்டி அவர்களை அலைக்கழிப்பதில் அவர் மிகவும் வல்லவர். அவர் பொறிகளில் அகப்பட்டுச் செல்வம் முழுவதும் இழந்தவர்கள் பலர். வாழ்நாள் முழுவதும் தொல்லைப் பட்டுத் தவித்தவர்கள் பலர். அவர் திசையில் செல்லவே நாளடைவில் எவரும் துணியவில்லை. இவ்வளவு படித்த மனிதர் இத்தனை ஈர இரக்க மற்றவராயிருக்கிறாரே என்று பேசாதவர்கள் கிடையாது.
அந்த ஊருக்கு இரண்டு உடன் பிறந்தார்கள் பிழைப்பை நாடி வந்தார்கள். அவர்களுக்குச் சட்டநாதர் குணம் பற்றி எதுவும் தெரியாது. அவர் பெருஞ்செல்வர் என்பதையும், அவர் வீட்டில் வேலைக்கு எப்போதும் ஆள் தேவை என்பதையும் மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர்.
உடன் பிறந்தார்களில் மூத்தவன் பெயர் அங்கன். அவன் நல்ல உழைப்பாளி. ஆனால் சிறிதும் சூது வாதற்றவன். இளையவன் பெயரோ அரங்கன். அவன் சிறிது சோம்பலுடையவன். ஆனால் அவன் உலக அனுபவ மிக்கவன். அண்ணனின் நல்ல குணம் கண்டு, அவன் மனமார அவனிடம் மதிப்பும் பற்றுதலும் உடையவனாயிருந்தான். அண்ணனுக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டால், அவன் தயங்காமல் அதில் தலையிட்டு அவனைப் பாதுகாப்பது வழக்கம்.
அங்கன் ஒருநாள் சட்டநாதரிடம் சென்று, ‘எனக்கு ஏதாவது வேலை கொடுக்க முடியுமா?’ என்று கேட்டான்.
சட்டநாதர் கால்மேல் காலிட்டு, சட்ட நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார். அங்கனை அவர் ஏறிட்டுப் பார்த்து, அவன் நல்ல உழைப்பாளியே என்று கண்டு கொண்டார். ஆனால், அவர் அதை வெளிப்படக் காட்டிக் கொள்ளவில்லை.
“எனக்குத் தற்போது ஆள் மிகுதி தேவை இல்லை. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு தடவை ஓர் இலை அளவு சோற்றை மட்டும் பெற்று நன்றாக உழைக்கத்தக்க ஓர் ஆள் கிடைத்தால் வைத்துக் கொள்ளத் தடையில்லை. அத்துடன் வேலைக்கு இருப்பவன் தானாகப் போய்விட விரும்பினால், நான் அவன் மூக்கை அரிந்து விடுவேன். நானாக அவனைப் போகச் சொன்னால், என் மூக்கை அவன் அரிந்து விடவும் நான் இணங்குவேன்” என்றார் அவர்.
அங்கன் இதற்கு ஒத்துக் கொண்டான்.
அன்றே வேலை தொடங்கிற்று
காலைமுதல் மாலைவரை அவன் மாடுபோல் உழைத்தான். ஆனால், மாலையில் சட்டநாதர் மனைவியாகிய நாதாங்கி ஒரு மாவிலையில் சோறிட்டு அவனிடம் தந்தாள்.
“இது தானா எனக்கு ஒரு நாளையச் சாப்பாடு” என்று அவன் கேட்டான்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது. ஓர் இலை நிறையச் சோறு தரும்படி உன் தலைவர் சொல்லியிருக்கிறார். போதாதென்றால் அவரிடம் கேள்” என்றாள் அவள்.
அவன் சட்டநாதரிடமே கேட்டுப் பார்த்தான். “உன் குறை என்ன?” என்று அவர் கேட்டார்.
“ஒரு மாவிலையிலுள்ள சோறு ஒரு மனிதனுக்கு எப்படிப் போதும்?” என்று கேட்டார்.
“ஓர் இலை நிறையச் சோறு தருவதாகத் தானே நான் சொன்னேன். நீ அதை ஒத்துக் கொண்டு தானே வேலை ஏற்றாய்? அது இன்ன இலை என்று பேரம் பேசினாயா, என்ன? இப்போதும் என்ன கெட்டுவிட்டது. நம் ஒப்பந்தபடி நீ விலக விரும்புவதனால், மூக்கை அரிந்து கொடுத்துவிட்டுப் போ” என்று சட்டநாதர் புன்சிரிப்புடன் திருவாய் மலர்ந்தார்.
அங்கனுக்கு ஒன்றும் மறுமொழி கூற முடியவில்லை. அவன் நாள்தோறும் ஒரு மாவிலைச் சோற்றைமென்று, வயிற்றைத் தண்ணீரால் நிரப்பிக் கொண்டே வேலை செய்தான். இரண்டொரு நாட்களுக்குள் அவன் உடல் இளைக்கத் தொடங்கிற்று. ஒரு வாரத்துக்குள் அவன் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாதவன் ஆனான்.
அரங்கன் ஒருநாள் அண்ணனிடம் சென்றான். அவன் நிலைமை கண்டு மனம் பதைத்தான். சட்டநாதரிடம் செய்த ஒப்பந்தத்தையும் அதன்பின் நிகழ்ந்ததையும் அங்கன் அவனிடம் சொன்னான். அரங்கன் முதலில் சீறினான். பின், “அந்த வேலையை விட்டுவிடு வேண்டாம்” என்றான்.
“வேலையை நானாகவிட்டு வந்தால், மூக்கை அரிந்து கொடுக்க வேண்டுமே, என்ன செய்வேன்” என்றான் அங்கன்.
அரங்கன் சிறிது நேரம் சிந்தித்தான். அவன் மனத்தில் ஒரு திட்டம் தோன்றிற்று.
“அண்ணா, நான் சொல்கிறபடி கேள்” என்றான்.
“உனக்கு உண்மையிலேயே உடல் நோய்ப்பட்டிருக்கிற தல்லவா? அதைச் சொல்லி, இரண்டொரு நாள் ஓய்வுகேள்” என்றான்.
அங்கன், “சரி, அவ்வாறே கேட்கிறேன்” என்று புறப்படத் தொடங்கினான்.
அரங்கன் அவனைத் தடுத்து நிறுத்தினான். “அவ்வளவு எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிடாதே. அண்ணா! நீ ஓய்வு கேட்டு, அவர் கொடுக்க மறுத்தால் என்ன செய்வாய்?” என்றான்.
அங்கன் விழித்தான். “ஓய்வு தராவிட்டால் வேறு என்ன செய்வது? இப்படி நோயோடு நோயாக உழைத்துச் சாக வேண்டியது தான்” என்று அங்கன் அழாக் குறையாய்க் கூறினான்.
அரங்கன் சிரித்தான். “காரியம் அவ்வளவு மோசமாய் விடவில்லை. அவர் ஓய்வு தராவிட்டால், நீ பின்னும் அவரிடம் நயந்து ஒரு காரியம் கோர வேண்டும். ’என்னைவிடத் திடமான உடலுடைய தம்பி ஒருவன் எனக்கு இருக்கிறான். எனக்குப் பதிலாக அவன் வேலை செய்யும்படி இணக்கம் அளியுங்கள் என்று கேள். அவர் ஒத்துக் கொள்ளாமலிரார். நான் உன்னுடன் வந்து அருகிலேயே நிற்கிறேன். உனக்கு விடுதலை வாங்கித் தருகிறேன்” என்றான்.
“என் வேலையை நீ ஏற்றுக் கொண்டால், நான் படும் பாட்டை நீயும் படவேண்டுமே” என்று அங்கன் தயங்கினான். “என் காரியத்தை நான் சமாளித்துக் கொள்வேன். அண்ணா! என்னைப் பற்றிய கவலை வேண்டாம். நீ நான் கூறியபடி மட்டும் செய்துவிடு” என்றான் அரங்கன்.
தம்பி கூறியபடியே அங்கன் தலைவனிடம் ஓய்வு கோரினான். அவர் ஓய்வுதர மறுத்தார். பின் அங்கன் தன் இடத்தில், தன் தம்பியை அமர்த்திக் கொண்டு தன்னை விடுவிக்க வேண்டினான். அவர் அரங்கனை வரவழைத்துப் பார்த்தார். அவர் நோயற்ற திடமான தோற்றம் கண்டு அவர் உள்ளூர மகிழ்ந்தார். வேண்டாவெறுப்பாக இம்மாறுதலை ஏற்பது போல ஏற்றார்.
அண்ணன் ஏற்றுக் கொண்ட கட்டுப்பாட்டை அப்படியே ஏற்பதாகத் தம்பி உறுதி கூறினான்.
முதல்நாள் வேலை கழிந்தது. வேலை முடிந்து வரும் போதே. அவன் ஒரு பெரிய தலைவாழை இலையைப் பறித்துக் கொண்டு வந்தான்.
நாதாங்கி இதைக் கண்டதும். “இது எதற்காக?” என்று கேட்டாள்.
“என் உணவுக்காக” என்றான்.
நாதாங்கி கையைப் பிசைந்து கொண்டாள்.
“இலை நான் கொடுக்கிறேன். இது வேண்டாம்” என்று கூறிப் பார்த்தாள்.
“உணவு தான் நீங்கள் பெருந்தன்மையுடன் தருகிறீர்கள். இலையையும் நீங்களே தரும்படி நான் விடமாட்டேன். இலை கொண்டு வருவது என் கடமை. அதை நிறைப்பது உங்கள் கடமை” என்றான் அரங்கன்.
நாதாங்கி அவள் வாழ்க்கையிலேயே முதல் முறையாக, செய்வது இன்னது, சொல்வது இன்னது என்று தெரியாமல் விழித்தாள்.
அவள் தன் கணவன் உதவியை நாடினாள். அவரும் வந்து தன் வாய்த்திறமை முழுதும் காட்டினார். பயன்படவில்லை. “இலை நிறைய உணவு தவிர ஊதியம் எதுவும் நீங்கள் பேசிக் கொள்ளவில்லை. இலையைக் கொண்டு வந்துவிட்டேன். பேசிய படி இஃது ஒரு இலைதான். இது நிறைய உணவு தருவது உங்கள் கடமை” என்றான்.
“வஞ்சித்தவனை வஞ்சிக்க வந்த வஞ்சகன் இவன்” என்று முணுமுணுத்துக்கொண்டே, “இலை நிறைய உணவு படைத்துத் தொலை” என்று சட்டநாதர் எரிந்து பேசினார்.
சமைத்த உணவு இலையை நிரப்பப் போதவில்லை. மீண்டும் பெரிய பானை வைத்துச் சமைத்து நாதாங்கி இலையில் கொட்டினாள்.
அந்த உணவு உடன்பிறந்தார் இருவருக்கும் இரண்டு வேளைக்குப் போதியதாகி, பின்னும் ஏழை, எளியவர்களுக்கு கொடுக்கும்படி மீந்தது. அரங்கனை அங்கனும், அண்டை யிலுள்ள ஏழைகளும் புகழ்ந்து வாழ்த்தினார்கள்.
நாள்தோறும் அரங்கன் வீட்டிலும் அண்டையயல் வீடுகளிலும் மகிழ்ச்சி பெருகிற்று. ஆனால் சட்டநாதர் வீட்டில் எரிச்சலும், ஏசலும், பேசலும் பெருகின. சட்டநாதர் தம் சீற்றத்தை முழுவதும் அரங்கனிடம் கடுமையான வேலை வாங்குவதில் காட்ட எண்ணினார்.
ஆனால், அரங்கன் அவர் திட்டங்களைத் தவிடு பொடி ஆக்கினான்.
சட்டநாதர் வீட்டின் பின்புறத்தில் ஒரு குட்டை கிடந்தது. அதில் தண்ணீர் குறைவு. அரங்கனைக் கொண்டு அதைத் தூர்த்துவிட அவர் எண்ணினார்.
ஒருநாள் சுமக்க முடியாத பெரிய கூடையை அவர் அரங்கனுக்குக் காட்டினார். “இது நிறைய மண்வெட்டி எடு. அந்தக் குளத்தில் கொண்டு கொட்டு, அந்தக் குளம் நிரம்புவரை இப்படி கொட்ட வேண்டும். காலை முதல் மாலைவரை இந்த வேலையைச் செய்” என்று அவர் கட்டயையிட்டார். ‘சரி’ என்றான் அரங்கன்.
தலைவர் கண்காண அவன் வேலை தொடங்கினான். உண்மையிலேயே அவன் பெரிய கூடை நிறைய மண் வெட்டினான். ஆனால் காலைநேரம் முழுவதும் அவன் ஒரு கூடையை மெள்ள மெள்ள அசைத்து இழுத்து, நண்பகலில் ஒரு கூடை கொட்டினான். பிற்பகல் முழுவதும் இப்படியே செய்து மாலையில் ஒரு கூடை கொட்டினான். இடைநேரம் முழுவதும் கூடையிலேயே படுத்துக் கொண்டிருந்தான்.
“எத்தனை கூடை கொட்டினாய்?” என்று சட்டநாதர் மாலையில் கேட்டார். “இத்தனை என்று எண்ணிப் பார்க்க வில்லை. காலை முதல் மாலை வரைக் கொட்டினேன்” என்றான்.
ஓவ்வொருநாள் சட்டநாதர் வந்து வேலையைப் பார்ப்பார். அவன் படுத்திருப்பது கண்டு சீறுவார். “ஐயனே, நீர் கூறியபடி கூடை நிரப்பிக் கொட்டுகிறேன். இத்தனை தடவை கொட்ட வேண்டும் என்று கூறினால், விரைவில் கொட்டுவேன். நிரப்பு வதனால் நேரம் ஆகிறது. அதனால் களைத்துத் தூக்க முடியாமல், ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது” என்பான்.
“சரி, காலம் வீணாக்காதே, விரைந்து விரைந்து கொட்டு” என்றார் சட்டநாதர்.
மறுநாள் சட்டநாதரின் வயது சென்ற தாய் குளத்திலுள்ள சிறிதளவு நீரில் சட்டிபானை கழுவிக் கொண்டிருந்தாள். அரங்கன் கூடையை அவள் அருகில் வைத்துக் கொண்டு நின்றான். “அம்மா, எனக்கு நேரமாகிறது. நான் கொட்டட்டுமா?” என்றான்.
கிழவிக்கு கோபம் வந்தது. “ஆமடா, கொட்டு, என் தலைமேலேயே கொட்டு” என்றாள்.
அவன் அப்படியே தலைமேலே கொட்டிவிட்டான்.
கிழவி விழுந்து எழுந்திருக்க அரும்பாடுபட்டாள். அவள் தலையில் சிறிது காயம் ஏற்பட்டது. முகம் கை, கால் எல்லாம் மண்ணாயிற்று.
சட்டநாதரும் நாதாங்கியும் அவனை வாயில் வந்தபடி வைதனர். ஆனால் அவன் பொறுமையாக, "பெரியம்மா கொட்டச் சொன்னதால்தான் கொட்டினேன். இனி தலைவர் தவிர வேறு யார் சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை’ என்றான்.
நாதாங்கி கணவனிடம், “இந்த வேலையாள் வீட்டுக்கு அருகே இருக்கப்படாது. எங்காவது தொலைவில் வேலை கொடுங்கள்” என்றாள்.
சட்டநாதர் “இது நல்ல கருத்துத்தான்” என்று அவள் கூறியதை வரவேற்றார்.
அவரிடம் பல காணி பரப்புடைய தரிசுநிலம் ஊர் எல்லையில் இருந்தது. அதையடுத்துக் காடுகள் இருந்தன. சட்டநாதர் தரிசு நிலத்தை அவனிடம் காட்டினார். “நீ இன்று இந்த நிலமுழுவதையும் எங்கும் சுற்றி உழ வேண்டும். அத்துடன் வீட்டுக்கு நாளை உணவுக்கு வேண்டிய விறகும் இறைச்சியும் காட்டில் தேடிக் கொண்டு வர வேண்டும்” என்றார்.
“எந்த மரத்தை வெட்டலாம்” என்று அவன் கேட்டான்.
“ஏதாவது கைக்குக் கிடைத்த மரத்தை வெட்டித் தொலை” என்றார்.
“இறைச்சிக்கு எதைக் கொல்லலாம்?” என்று மீண்டும் அமைதியுடன் கேட்டான்.
அவன் கண்டதைக் கொல்லலாம்?" என்று மீண்டும் அமைதியுடன் கேட்டான்.
“ஏதோ கண்டதைக் கொல்லுடா! சும்மா கேள்வி கேட்டு தொலைக்காதே!” என்றார்.
அவன் நிலமுழுவதும் எங்கும் சுற்றினான். பின் கலப்பையை எடுத்துச் சிறிது உழுதுவிட்டுத் தூங்கினான்.
மாலையில் அவன் கலப்பையையே துண்டுதுண்டாக வெட்டி விறகாக்கினான். அதைக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.
வழியில் சட்டநாதரின் செல்வ நாய் எதிரே வந்து வாலைக் குழைத்தது. அவன் அதைத் தடியால் அடித்துக் கொன்றான். தோலை உரித்து எறிந்துவிட்டு இறைச்சியைச் சிப்பமாகக் கட்டினான்.
“அத்தனை வேலையையும் முடித்துவிட்டேன்” என்று அவன் சட்டநாதரிடம் கூறினான்.
அரங்கன் அன்று கலப்பையை விறகாக வைத்து எரித்தான். நாயைக் கறியாகச் சமைத்தான். நாய்க் கறியையும் உணவையும் சட்டநாதருக்கும் நாதாங்கிக்கும் அளித்தான்.
உண்டபின், நாதாங்கி நாய்க்கு உணவு தர எண்ணினாள். வழக்கப்படி நாயை அழைத்தாள். “இப்போது நாய் எங்கிருந்து வரும்? நாயைத்தான் நீங்களும் உங்கள் கணவனும் தின்று விட்டீர்களே!” என்றான் அரங்கன்.
அவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. புரிந்த போது அவர்கள் கோபத்துக்கு எல்லையில்லை. ஆனால் அரங்கன் அமைதியாகப் பேசினான். “நான் என்ன செய்வேன். எதைக் கொல்ல என்று கேட்டதற்கு. நீங்கள் தானே கண்டதைக் கொல்லு என்றீர்கள்!” என்றான்.
மறுநாள் அவனுக்கு இறைச்சி கொண்டு வரும் வேலை தரப்படவில்லை. உழும் வேலையும் விறகுகொண்டு வரும் வேலையும் மட்டும் தான் தரப்பட்டன. ஆனால் கட்டளை பெற்றதே அவன் சிரித்தான். “இன்று எப்படி உழுவது, கலப்பை கிடையாதே” என்றான்.
“ஏன்? நேற்று உழுத கலப்பை எங்கே?”
“அதைத்தான் நேற்று விறகாக்கி, உங்களுக்கு உணவு சமைத்தேனே!”
“ஏண்டா, கலப்பையையா முறிப்பது. வேறு மரம் அகப்பட வில்லையா?”
“நான் என்ன செய்வேன். எந்த மரத்தை வெட்ட என்று நான் கேட்டதற்கு, நீங்கள்தானே கண்டமரத்தை வெட்டு என்றீர்கள்” என்றான்.
சட்டநாதருக்குச் சீற்றமும் எரிச்சலும் பொங்கி வந்தன. அவர் தரிசு நிலத்துக்குப் போய் உழுத வகையையும் பார்த்தார். “வயல் முழுவதும் சுற்றி உழவல்லவா சொன்னேன்?” என்று அவர் அதட்டினார்.
“ஏன், சொன்னபடி நான் செய்யவில்லையா? வயலைச் சுற்றியாயிற்று. உழுதாயிற்று” என்று கூறி அவன் சிரித்தான்.
“இந்தச் சனியனை ஏன் கட்டிக் கொண்டு அழவேண்டும். இவனை நீக்கிவிடுங்கள்” என்றாள் மனைவி.
“அவனை நானாக நீக்கினால் என் மூக்கை அரிந்து கொடுக்க வேண்டும். அவனாகப் போனால் அவன் மூக்கை அரிந்து தர வேண்டும். அவனாகப் போகும்படிதான் இனிச்செய்ய வேண்டும்” என்று, அவர் மறுமொழி தந்தார்.
சட்டநாதரின் தாய் தலையில் பட்ட காயத்தால் இறந்தாள். சட்டநாதர் தாம் அரங்கனை அமர்த்திக் கொண்ட நாளை எண்ணி வருந்தினார். தாயை அடக்கம் செய்துவிட்டு அவர் வீட்டில் வந்து படுத்தார். ஆனால் அவரால் கண் மூட முடியவில்லை. அடுத்த வீட்டுச் சிறுவர் சிறுமியர் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
சட்டநாதர் அரங்கனை அழைத்தார் எனக்கு அமைதி தேவை அந்தப் பிள்ளைகளை சற்று ஓய்ந்திருக்கச்சொல் என்றார்.
அரங்கன் “அப்படியே” என்று கூறிச் சென்றான்.
ஆனால் அவன் பிள்ளைகளிடம் அப்படிச் சொல்லவில்லை. ‘உங்களை என் தலைவர் உரத்துப் பாடச் சொன்னார்’ என்றான். சிறிது நேரத்துக்குள் அவன் திரும்பி வந்தான். “பாடக் கூடாது என்று நான் சொன்னேன். அவர்கள் இன்னும் உரத்துப் பாடத் தொடங்கி விட்டார்கள்” என்றான்.
“அப்படியா செய்தி! பாடலை நிறுத்து. அல்லது நான்வந்து அவர்கள் மண்டையை உடைத்துவிடுவதாகச் சொல்” என்றார்.
அவன் சென்றான். ஒன்றுமே பேசாமல் சிறிதுநேரம் அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, ஒரு நீண்ட கழி எடுத்து ஒன்றிரண்டு பிள்ளைகள் மண்டை உடையும்படி அடித்தான். பிள்ளைகள் கோவெனக் கதறிக் கொண்டு ஓடின. “விரைவில் ஓடிவிடுங்கள்; இல்லாவிட்டால், மீதித் தலைகளையும் என் தலைவர் வந்து உடைத்துவிடுவார்” என்று அவன் உரக்கக் கத்தினான்.
கூக்குரல் கேட்டுச் சட்டநாதரும் நாதாங்கியும் ஓடோடி வந்தனர். ஆனால், அவர்கள் வருமுன் ஊர் திரண்டுவிட்டது. பிள்ளைகளின் தாய் தந்தையர் வந்து “பாவி, சண்டாளா!” என்று திட்டத் தொடங்கினர்.
பிள்ளைகளின் தாய்தந்தையருக்கு அவர்கள் ஏதோ சொல்லிக் கை நிறையப் பணம் தந்து அமைதிப்படுத்தினர்.
சட்டநாதருக்கும் நாதாங்கிக்கும் அரங்கனை விட்டு ஒழிவது எப்படி என்பதே கவலையாய்ப் போய்விட்டது.
அவனை நீக்குவதற்கு மாறாக, அவனுக்குத் தெரியாமல் அயலூர் சென்றுவிட அவர்கள் எண்ணினர். இரவோடிரவாக அவர்கள் எழுந்து நடந்து சென்றனர்.
ஒருநாள் முழுதும் நடந்தபின் அவர்கள் ஒரு குளத்தருகில் உட்கார்ந்தனர். ஒரு வகையில் அரங்கன் தொல்லை ஒழிந்தது. என்று சட்டநாதரும் அவர் மனைவியும் மகிழ்ச்சியுடன் உணவு மூட்டையை அவிழ்த்தனர்.
அவர்கள் எதிர்பாராமல், ஒரு பெரிய வாழை இலையுடன் அரங்கன் அவர்கள் முன் வந்துநின்றான். ஒப்பந்தப்படி அவனுக்கு இலை நிறைய உணவு தந்துவிட்டு, இவர்கள் மீந்ததை உண்ண வேண்டியதாயிற்று.
சட்டநாதர் தொலைவிலிருந்த தன் மாமனார் வீடு செல்லவே எண்ணியிருந்தார். ஆனால், அவ்வளவு தொலை அவராலும் நாதாங்கியாலும் நடக்க முடியவில்லை. ஆகவே வழியில் அவர் குதிரை வாங்கினார். கணவனும் மனைவியும் அதில் ஏறிச் சென்றனர். அரங்கன் நடந்து பின்னே சென்றான்.
இரண்டு நாள் பயணத்துக்குள் குதிரை மிகவும் களைப்படைந்தது. ஊர்ப்புற விடுதியொன்றில் அவர்கள் தங்கியிருந்தனர். குதிரையை அரங்கனிடம் கொடுத்து அதைச் சிறிது உலவ விட்டு, பின் தேய்த்துக் குளிப்பாட்டி வரும்படி அவனை அவர் அனுப்பினார்.
அரங்கன் குதிரையை ஊர்ப்புறச் சந்தைக்கு கொண்டு சென்று விலைபேசினான். மிக மலிவான விலை கூறியதனால் பலர் வாங்க முன் வந்தனர். வால் நுனியை மட்டும் அந்த விலைக்குக் கொடுக்க முடியாது என்று அவன் வாதாடினான். அதன்படி வால்நுனியை அறுத்து அரங்கனிடம் கொடுத்துவிட்டு குதிரையுடன் சென்றான். குதிரையை விற்றுவந்த வெள்ளியை, அவன் தன் உள்ளாடையில் முடிந்து வைத்துக் கொண்டு, குதிரையின் வால் நுனியுடன் விடுதிக்கு வந்தான்.
விடுதிக்கு வெளியேயுள்ள புறவெளியில் பல புதர்களும் புற்றுக்களும் இருந்தன. அரங்கன் ஒரு புற்றில் குதிரையின் வால் நுனியைத் திணித்து வைத்தான்.
அதன் தும்பைப் பிடித்து இழுப்பவன் போல நடித்துக் கொண்டே, அவன் தலைவன் கேட்கும்படி உரத்துக் கூவினான். “ஐயையோ, வாருங்கள்! வாருங்கள்! வந்து பிடியுங்கள்! குதிரை என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறது” என்று கூக்குரலிட்டான்.
“என்ன, என்ன” என்று படபடப்புடன் சட்டநாதர் ஓடி வந்தார்.
அவர் காண, அரங்கன் வால் நுனியைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கி விழுந்தான். எழுந்து நின்றதும், அவன் தலைவரை நோக்கி, “ஐயா, சற்றுமுன் வந்திருக்கக் கூடாதா? என்னாலான மட்டும் பார்த்தேன். குதிரை என்னை இழுத்துக் கொண்டு இந்தப் புற்றின் வழியாக உள்ளே போயிற்று. தும்பை நான் பிடித்துக் கொண்டிருந்தும், அது தும்பை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதே!” என்றான்.
சட்டநாதருக்குச் “சிரிப்பதா, அழுவதா; கோபப் படுவதா, கோபத்தை விழுங்குவதா?”என்று ஆயிற்று.
சட்டநாதர் குடும்பத்தின் துன்பத்துக்கு எல்லையில்லை. நடந்ததறியாத அவர்கள் குதிரையை இழந்த பின் பலநாள் வழி நடக்க வேண்டி வந்தது. அரங்கனை வேலைக்கு ஏவ அஞ்சி அவர்களே எல்லா வேலையையும் செய்தனர். ஆனால் உணவில் மட்டும் பெரும்பகுதியை அவனுக்கே தரவேண்டி வந்தது.
மாமனார் ஊர் எல்லை வருவதற்குள் அவர்கள் இருவருக்கும் எடுத்த அடி வைக்க முடியாமல் போய்விட்டது.
வேறு வழியில்லாமல் அவர்கள் பின்னும் அரங்கனை ஏவ வேண்டி வந்தது. “நாங்கள் நடந்துவந்த வகையை மாமனாரிடம் கூறு. நல்ல படுக்கையும் உணவும் எங்களுக்கு முன்னேற்பாடாகச் செய்து வைக்கச் சொல்லு” என்று அவர்கள் அவன் மூலம் சொல்லியனுப்பினர்.
அரங்கன் செய்த வேலை இத்தடவையும் அவர்கள் தொல்லை களைப் பெருக்குவதாகவே அமைந்தது.
அவன் மாமனார் மாமியார் ஆகியவர்களைக் கண்டு பேசினான். “தலைவரும், தலைவியும் உடம்புக்கு முடியாமல் வருகிறார்கள். மருத்துவர் அவர்களுக்கு மருந்து கொடுத்து அனுப்பியிருக்கிறார். மருத்துவர் கட்டளைப்படி அவர்கள் உப்பில்லா உணவுதான் சாப்பிட வேண்டுமாம். அத்துடன் அவர்கள் படுக்கும் அறையில் கட்டில், பாய், தலையணை, போர்வை எதுவுமே இருக்கப்படாதாம். இந்த ஏற்பாடுகளைச் செய்து வைக்கத்தான் என்னை அனுப்பினார்கள்” என்றான்.
மாமியார் மாமனார் அவனை நம்பினர். நல்ல உணவில்லாமல், களைத்து வந்த குடும்பத்திற்கு உப்பில்லா உணவுதரப்பட்டது. அறையில் கட்டாந் தரையிலேயே படுக்க வேண்டியதாயிற்று. மாமனார் வீடாதலால் சட்டநாதர் எதையும் கேட்கவும் கூச்சமுற்றார்.
அரங்கனுக்கு மட்டும் நல்ல உணவும், நல்ல படுக்கையும் கிடைத்தது.
மறுநாள் பொழுது விடிந்ததும் நாதாங்கி தன் தாயிடம் சென்று எல்லா விவரமும் அறிந்தாள். மாமனார் மாமியார் ஆகியவர்களுக்கும் அரங்கன் செய்த சதிகள் விளங்கின. அரங்கனை உதைத்து நொறுக்க அவர்கள் எண்ணினார்கள். ஆனால், சட்டநாதர் உடைந்த மனத்துடன், “அவனை என்ன செய்தாலும் அது நமக்குத்தான் தொல்லை. அவனைப் போகச்சொல்வதோ என்னால் முடியாது. என்ன செலவானாலும் ஆகிறது, நம்மைவிட்டுப் போய்விடும்படி அவனை நயந்து வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார்.
மாமனாரும் மாமியாரும் அரங்கனுக்கு விருந்தளித்து அன்புரையாடினர். “எங்கள் மருமகனிடமிருந்து நீயாக விலகினால், வேண்டிய பணம் தருகிறோம்” என்று அவர்கள் மன்றாடிக் கேட்டனர்.
“நானாக விலகினால், ஒப்பந்தப்படி என் மூக்கையல்லவா அரிந்து கொடுக்க வேண்டும்” என்றான் அரங்கன்.
“அவராகவும் விலக்கவேண்டாம். நீயாகவும் விலக வேண்டாம். நாங்கள் இடையேயிருந்து இருவருக்கும் ஒப்பந்த விடுதலை செய்கிறோம். அது வகையில் உனக்கு வேண்டிய நல்ல தொகையையும் தருகிறோம்” என்றார் மாமனார்.
அவர்கள் தன் கைப்பிடியில் இருப்பதை அறிந்து அரங்கன் மகிழ்ந்தான். அதே சமயம் அவர்கள் போதுமான தண்டனை பெற்று விட்டதையும் உணர்ந்தான். ஆகவே பேரத்தால் விடுதலைக்கு ஓர் உயரிய விலையைப் பெற்றுக் கொண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான்.
குதிரை விற்றவிலை, விடுதலையின் விலை ஆகிய இரண்டினாலும் அரங்கன் பெருஞ் செல்வனானான். அண்ணனான அங்கனுக்கும் அவன் அதில் பாதி அளித்தான்.
சட்டநாதன் தன் செருக்கை ஒழித்து அவர்களுடன் அளவளாவினான். நாதாங்கியின் இரு தங்கையரையே அவர்கள் இருவரும் மணந்து கொண்டு இன்பமாக வாழ்ந்தனர்.
கோமாரியும் சோமாரியும்
நாலூருக்கும் ஐந்தூருக்கும் நடுவே பெருங்காடு ஒன்று இருந்தது. இந்தக் காட்டில் திருடர் அச்சம் மிகுதி. இத் திருடர் கொலை செய்வதில்லை. வழிப்போக்கரைத் துன்புறுத்து வதுமில்லை. திருட்டையோ திருடரையோ யாரும் கண்டதும் கிடையாது. ஆயினும் காடு கடப்பதற்குள் எப்படியோ வழிப்போக்கர் கைப்பொருள்கள் காணாமற் போயின. சிலர் பெட்டிகளில் பணத்தைப் பூட்டிப் பெட்டியை ஒருநாள் ஒரு கூட்டத்துடனும், திறவுகோலை மற்றொருநாள் மற்றொரு கூட்டத்துடனும், அனுப்பி வைத்தனர். பெட்டியும் பாது காப்பாகப் போய்ச் சேர்ந்தது. திறவுகோலும் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்தது. ஆனால் காடு கடந்து பெட்டியைத் திறந்து பார்த்தபோது உள்ளே பணத்தின் தடத்தையே காணவில்லை!
திருடரின் மாயத் திறம் கண்டு எல்லாரும் வியப்படைந்தனர்! மாயத் திருட்டுத் திடுமென மாயமாய் நின்று விட்டது. காட்டு வழியே சென்றவர்கள் கொண்டு சென்ற பொருள்கள் இடையே மறையவில்லை. காடு கடந்தபின் அவை முன் இருந்தபடியே இருந்தன.
மாயத்திருட்டு எப்படி மாயமாக மறைந்தது என்றோ, திடீரெனக் காடு எப்படித் திருந்திற்று என்றோ யாரும் அறியவில்லை.
காட்டின் திருட்டுக்கு இரண்டே இரண்டு திருட்டுக் குடும்பங்கள் தான் காரணம். இருவரும் நாலூரின் எல்லையில் வாழ்ந்தவர்களே; வழிவழி மரபாகத் திருடர்களாய் இருந்ததனால், ஒரு குடும்பத்துடன் போட்டியிட்டு அடுத்த குடும்பம் தன் மாயத் திருட்டு திறனை வளர்த்திருந்தது.
இரண்டு குடும்பத்திலும் இருவரே மீந்திருந்தனர். முதற் குடும்பத்தில் மீந்தவன் கோமாரி. அவனே மூத்தவன். அடுத்த குடும்பத்தில் மீந்தவன் சோமாரி. அவன் கோமாரிக்குச் சற்று இளையவன். ஆனால் திறமையில் ஒருவருக்கொருவர் இளைத்தவர்கள் அல்லர்.
ஒருநாள் ஒரு பெரியவர் அந்தக் காட்டுவழியே சென்றார். அவர் கையில் பட்டுத்துணியில் கட்டப்பட்ட இரண்டு சிறு அழகிய சிப்பங்கள் இருந்தன. அது என்னவோ விலையுயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்று இரு திருடர்களும் நினைத்தார்கள். இவரும் தானே இரண்டையுமே திருடிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்கள். ஆனால், ஒவ்வொருவர் கையில் ஒவ்வொன்றே அகப்பட்டது.
சிப்பங்கள் திருடுபோனதே முதலில் பெரியவருக்குத் தெரியாது. ஏனெனில் அவர்கள் வழக்கம் போல, சிப்பங்களில் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு, சிப்பங்களை முன் இருந்தபடியே கட்டி வைத்திருந்தார்கள்.
பெரியவர் உண்மையில் மூன்றூரிலுள்ள ஒரு தமிழ்ப் புலவர். ஐந்தூர்க்கோமான் அறிவனின் இரு மைந்தர்களுக்குப் பிறந்தநாள். விழா நடக்க இருந்தது. புலவர் தன் இரு மைந்தர் களுக்கும் இரண்டு பரிசுகளாகவே இரண்டு சிப்பங்களையும் கொண்டு சென்றார். சிப்பங்களில் இருந்த செல்வங்கள் வேறு எவையுமில்லை. இரண்டு அழகிய திருக்குறள் ஏடுகளே. ஏடுகளின் தாள்கள் வெள்ளித் தாள்கள். எழுத்துகள் பொன் எழுத்துகள்.
திருடர்கள் இருவரும் தாம் தாம் எடுத்த புதையலைக் காட்டிலேயே திறந்து பார்த்தனர். அவை வெள்ளி பொன் நிறமா யிருந்தாலும், ஏடுகள் என்று கண்டனர். அதன் எழுத்துகள் அவர்களுக்குப் புரியவில்லை. திருடத்தான் அவர்கள் அறிந்திருந் தார்கள். எழுதப்படிக்க அறிந்தவர்களல்ல. ஆயினும் சோமாரிக்கு ஒருவேளை வாசிக்கத் தெரியலாமோ என்று கோமாரி நினைத்தான். அதுபோலவே கோமாரிக்கு வாசிக்கத் தெரியலாமோ என்று சோமாரி நினைத்தான்.
கோமாரி சோமாரியைப் பார்த்தான். சோமாரி கோமாரியைப் பார்த்தான். தம் போட்டி வாழ்விடையே முதல் தடவையாக இருவரும் ஒருவரையொருவர் பகைமை எண்ணமில்லாமல் பார்த்தனர். ’இது என்ன தெரியுமா, அண்ணே?" என்றான் சோமாரி.
’நான் உன்னையல்லவா இப்படிக் கேட்க நினைத்தேன், தம்பி!" என்றான் கோமாரி.
‘எனக்கு இந்த வெள்ளி பொன் வேண்டாம், இது என்ன என்று தெரிந்தால் போதும்!’ என்றான் கோமாரி.
‘எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. திருட்டில் எனக்கு ஈடுசோடு நீதான். உனக்கு ஈடுசோடு நான்தான். ஆனால் இந்தச் சிப்பத்தைப் பெரியவர் கொண்டு போவதைப் பார்த்தால், இது என்னவோ விலைமதிப்பற்ற பொருளாகத்தான் இருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். இம்மதிப்பை அறியும் வகையில் நாம் இருவரும் ஒன்றுதான். இதுவரை எவ்வளவோ செல்வங்களை ஏழைகளிடமிருந்தும் செல்வர்களிடமிருந்தும் பறித்தோம். இந்த ஒரு தடவை அந்தப் பெரியவரிடமே சென்று இந்த இரண்டு செல்வங்களையும் திருப்பிக் கொடுத்து, இவற்றின் மதிப்பை அறிந்தால் என்ன?’ என்றான் கோமாரி.
‘இப்போது நீ சொன்னது ஆயிரத்தில் ஒன்று, அப்படியே செய்வோம். உன்னோடு நானும் வருகிறேன்’ என்றான்.
புலவர் இன்னும் சிப்பத்தை அவிழ்த்துப் பார்க்கவில்லை. காட்டில் அலைந்த அலுப்பால், அவர் ஐந்தூர் எல்லையில் உள்ள ஒரு விடுதியில் உண்டு, களைப்பாறிக் கண்முடியிருந்தார். திருக்குறட் செல்வமிழந்த இரண்டு சிப்பங்களும் அருகே கிடந்தன.
அவர் அரியாமலே சிப்பங்கள் மீட்டும் அவிழ்க்கப்பட்டன. திருக்குறள் செல்வங்கள் முன்போலவே சிப்பங்களில் இடம் பெற்றன. சிப்பங்கள் முன்போலவே கட்டப்பட்டு விட்டன.
தூங்குகின்ற புலவரின் இரு கால்களையும் ஆளுக் கொன்றாக கோமாரியும் சோமாரியும் பிடித்துக் கொண்டனர்.
நாயோ பெருச்சாளியோ காலைக் கவ்விற்று என்று கருதிப் புலவர் திடுமென எழுந்தார்.
இருவரும் காலடியில் விழுந்து வணங்கினர். தம் செப்பைகளில் தாமே அடித்துக் கொண்டு, ‘மன்னிக்க வேண்டும். பெரியவரே! மன்னிக்க வேண்டும்! நாங்கள் தங்களுக்குப் பெரும் பிழை செய்துவிட்டோம்’ என்றார்கள்.
‘என்ன செய்தி! எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே!’ என்று கேட்டார் புலவர்.
திருக்குறட் செல்வங்கள் நாட்டிலே பறிபோன செய்தி கேட்டு முதலில் பதறினார் புலவர். ஆனால் அவை மீட்டும் தம்மிடமே சேர்ப்பிக்கப்பட்ட செய்தி கேட்டு வியப்படைந்தார். மகிழ்ச்சியும் கொண்டார். சிப்பங்களைத் திறந்து பார்த்தார். திருக்குறட் செல்வங்கள் வைத்தபடி அப்படியே இருந்தன.
வள்ளுவருடைய திருக்குறளின் பெருமை எப்படியோ திருடர்கள் உள்ளங்களிலும் புகுந்து வேலை செய்திருக்கிறது என்று கண்டு அவர் எல்லையிலா மகிழ்வடைந்தார்.
‘உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்?’ என்று அவர் கேட்டார்.
‘பெரியவரே, நாங்கள் படிப்பில்லாதவர்கள். நாங்கள் வாழ்நாள் முழுதும் திருட்டிலேயே கழித்து விட்டோம். அதுவே எங்கள் குடும்பங்களின் வழிவழி மரபுத் தொழிலாய் விட்டது. ஆனால், இந்த ஏடுகளைப் பொன்போல நீங்கள் எடுத்துச் செல்கிறீர்களென்று காண்கிறோம். இதில் அப்படி என்ன இருக்கிறது? இதை எங்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்றார்கள் இருவரும்.
வள்ளுவர்பிரான் திருவருளின் திருவிளையாடலை எண்ணிப் புலவர் மீண்டும் வியப்புற்றார். அதே சமயம் அவர் உள்ளம் இன்னதென்றறியா மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தது.
‘பொய், வஞ்சகம், திருட்டு, கள், கொலை ஆகியவை மனித வாழ்க்கையைக் கெடுப்பவை. அவற்றுக்கு ஆளானவர்களுக்கு மட்டுமல்ல, இழைப்பவர்களுக்கும் பெருந்தீங்கு பயப்பவை. அன்பும் அறமும் அருளும் குடும்பத்துக்கும் மரபுக்கும் இன்பம் தருபவை. இந்தப் படிப்பினைகளை விளக்கும் திருநூல் இது. நம் தமிழர் மரபு வாழ, வள்ளுவர் பிரான் வகுத்தளித்த நெறிமுறை இத்தகையது’ என்றார் புலவர்.
கோமாரியும் சோமாரியும் மீண்டும் மீண்டும் விழுந்து வணங்கினர். ‘அண்ணலே! கள், கொலை இரண்டும் நாங்கள் அறியாதவை. ஆனால், மற்ற மூன்றும் எங்கள் வாழ்க்கையாகி விட்டதே! என்ன செய்வோம்!’ என்றார்கள். புலவர் ஆழ்ந்து சிந்தித்தார்.
‘நீங்கள் திருட்டை மட்டும் விட்டுவிடுங்கள். வள்ளுவர் பெருமானே பின் உங்களுக்கு வழிகாட்டுவார்’ என்றார்.
‘இந்தக் காடு எங்களுக்கு இந்தத் தொழிலையே நினைவூட்டிக் கொண்டிருக்கும். ஆகவே நாங்கள் தொலையூர் சென்று திருந்திய வாழ்வு வாழ்கிறோம்’ என்று கூறிக் கோமாரியும் சோமாரியும் புலவரிடம் வணங்கி நன்றி தெரிவித்த வண்ணம் விடைபெற்றுச் சென்றனர்.
நாலூர் ஐந்தூர் இடைப்பட்ட காட்டில் திடுமென மாயத் திருட்டு நின்றுவிட்ட வகை இதுவே.
ஐந்தூர்க் கோமான் அறிவனும் அவன் இருமைந்தர்களும் புலவர் கூறியதைக் கேட்டு, திருக்குறளை முன்னிலும் பன்மடங்கு பூசித்தனர்.
ஆறூர் நாலூரிலிருந்து நெடுந்தொலைவிலிருந்து. கோமாரியும் சோமாரியும் அங்கே சென்று குடியேறினர். திருட்டுத் தொழிலை அவர்கள் அறவே கைவிட்டுவிட்டனர். வேறு வேலை தேடினர். ஆனால் வேறு வேலை கிடைப்பது அரிதாயிருந்தது. ஆறூர் வளமான ஊரானாலும் சிறிய ஊர், அங்கே அவரவர் வேலையை அவரவர் செய்தனர். வேறு ஆட்களைச் சம்பளத்துக்குச் சேர்த்துக் கொள்பவர் அங்கே யாரும் இல்லை.
ஊர்க் கோடியிலுள்ள ஒரு பெரிய தோட்ட வீட்டுக்காரன் இருவர்களையும் ஏற இறங்கப் பார்த்தான். பின் இருவருக்குமே வேலை தருவதாக வாக்களித்தான்.
‘உங்களுக்கு வேலை மிகுதியில்லை. ஆனால், கொடுத்த வேலையைச் சரிவரத் திருத்தமாகச் செய்துவிட்டால். வாழ்க்கைக்குப் போதிய ஊதியம் தருகிறேன். என் தோட்டத்தில் ஒரு பன்னீர் மரம் இருக்கிறது. அருகிலுள்ள குளத்திலிருந்து அதற்கு நீர் வார்க்க வேண்டும். மரத்தடியில் கொஞ்சம் நீர்கட்டி நிற்கும் வரையில் நீர் ஊற்றவேண்டும். இதை உங்களில் யாராவது ஓருவன் செய்யலாம். மற்றொருவன் என்னிடமிருக்கும் எருதைப் பக்குவமாக இட்டுச் சென்று புல்வெளிகளில் மேய விட வேண்டும். எருது ஓடிவிடாமலும், கம்பங் கொல்லைகளிலோ வயல்வெளிகளிலோ புகுந்து விடாமலும் நன்கு பாதுகாக்க வேண்டும். இவ்வளவுதான் உங்கள் வேலை’ என்றான் வீட்டுக்காரன்.
அவர்கள் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.
மறுநாளே இருவரும் வேலை தொடங்கினர். கோமாரி பன்னீர் மரத்து வேலையை எற்றான். சோமாரி எருது மேய்க்கும் வேலையை ஒப்புக் கொண்டான்.
ஒன்றிரண்டு வாளி நீருடன் பன்னீர் மரத்தடியில் நீர் தேங்கிவிடும் என்று தான் கோமாரி கணக்கிட்டிருந்தான். அந்த வேலையை அவன் விரைந்து தெரிந்தெடுத்ததன் காரணம் அதுவே. வேலை முடிந்தபின் பகல் முழுதும் உடல் சாய்த்து இளைப் பாறலாம் என்றும் அவன் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான். ஆனால், பன்னீர் மரம் அவன் திட்டங்களையெல்லாம் கவிழ்த்தது.
நீர் ஊற்றுமுன் நிலத்தின் வெடிப்புக்கள் நீரை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தன. இந்த வாளியுடன் நிலம் நெகிழ்வுற்று நீர் தேங்கிவிடும் அல்லது அடுத்த வாளியுடன் தேங்கிவிடும் என்று எண்ணி, கோமாரி வாளி வாளியாக ஊற்றிக் கொண்டே இருந்தான். விடியற்காலையிலிருந்து நண்பகல் கடந்து மாலை வரை நீர் ஊற்றிக் கொண்டேதான் இருந்தான். சிறிது இடையே ஓய்வெடுத்தால் கூட, அதற்குள் நீர் வற்றித் தேக்கம் தடைப்பட்டு விடக் கூடாதே என்ற எண்ணத்துடன், உணவுக்காகக்கூட அயராமல், விரைந்து விரைந்து உழைத்தான்.
பொழுது சாயும் நேரத்தில் எப்படியோ சிறிது நீர் தேங்கிற்று. ‘அப்பா!’ என்று அவன் தோட்டப் படிப்புரையில் வந்து படுத்தான்.
’இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தது தவறாய்ப் போய் விட்டது. சோமாரிக்கு நல் வாய்ப்பு. அவன் வேலை மிக எளிய வேலை. வரட்டும். நாளை மெல்ல இந்தச் சனி பிடித்த வேலையை அவன் தலையில் தள்ளிவிடுகிறேன். அந்த வேலையை விரைவில் செய்து முடித்துவிட்டு நன்றாய் மரத்தடியில் பகலெல்லாம் தூங்குகிறேன். என்று அவன் நினைத்துக் கொண்டான்.
சோமாரி தோட்டம் கடக்குமுன்பே ஒரு நல்ல மரநிழலும் அதனையடுத்துப் பச்சைப் பசேலென்ற புல்வெளியும் தென்பட்டன. எருதை மரத்தடியில் கொண்டு அவிழ்த்துப் புல் மேயவிட்டான். அத்துடன் கவலையில்லாமல் மரத்தடியில் வந்து படுக்க எண்ணி அதை நெருங்கினான்.
ஆனால், எருது புல்வெளியை விட்டு அப்பால் ஓடிற்று. அவன் அதன்பின் ஓடினான். அது அவன் கைப்பிடிக்கு அகப்படாமல், கம்பங் கொல்லை, நெல் வயல், கருப்பந்தோட்டம் எங்கும் அவனை இழுத்தடித்தது. எங்கே அது வயல்களிலும் தோட்டங்களிலும் புகுந்து மேய்ந்து, அவன் பிழைப்பைக் கெடுத்துவிடுமோ என்று அவன் அஞ்சி அஞ்சி நடுங்கினான். நடுக்கத்துடன் அது போகுமிடமெல்லாம் தொடர்ந்தான். இந்நிலையில் நண்பகல் உணவுண்ணக்கூட அவனுக்கு நேரமில்லாது போயிற்று. காலையில் பிடியிலிருந்து நழுவிய எருது மாலைவரை வயல் காடுகளிலும் ஊர்ப்புறங்களிலும் சுற்றித் திரிந்தது. பொழுது சாயும் நேரத்தில்தான் எப்படியோ அது பிடிக்கு எட்டிற்று.
‘செத்தோம், பிழைத்தோம்’ என்று அவன் எருதைத் தொழுவில் கட்டிவிட்டு மீண்டான்.
‘கோமாரி மிகவும் கெட்டிக்காரன். நல்ல வேலை பார்த்துத் தான் தேர்ந்தெடுத்துக் கொண்டான். எனக்கு இந்தப் பேயாட்ட வேலையைத் தள்ளிவிட்டான். இன்றெல்லாம் அவன் நன்றாக ஓய்வெடுத்தக் கொண்டிருப்பான். ஆயினும் வரட்டும், நாளை எப்படியாவது நயமாகப் பேசி இந்தப் பேய் வேலையை அவன்மீது சுமத்திவிடுவோம். நாளை நாம் நன்றாகப் படுத்து உறங்கலாம்!’ என்று அவன் திட்டமிட்டுக் கொண்டே நடந்தான்.
கோமாரி கால் நீட்டிக் கைபரப்பிப் படுத்திருப்பது கண்டதே, சோமாரிக்கு அவன்மீது உள்ளூரக் கோபம் வந்தது. ஆனால் அவன் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை.
சோமாரி கைவீசிக் கால்பரப்பி மெல்லநடந்து வருவதைக் கண்டதே, கோமாரிக்கும் அவன் மீது உள்ளூரப் புழுக்கம் எழுந்தது. ஆனால், அவனும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை.
இருவரும் திறமையாக நடித்தனர். ஒருவருடன் ஒருவர் நட்புப் பாசத்துடன் அளவளாவினர். எப்படியாவது வேலைகளை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை இருவரும் அப்போதே தேடிக் கொள்ள எண்ணினர்.
கோமாரி பேச்சைத் தொடங்கினான்.
‘தம்பி, உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறேன். ஏன் உனக்கு இவ்வளவு நேரம்! காலையிலேயே வேலையை முடித்து விட்டு நான் இப்படியும் அப்படியும் புரண்டு புரண்டு பார்க்கிறேன். நேரமே போகவில்லை. நீயும் இத்தனை நேரமாக வரவில்லை! நல்லகாலம்! இந்தத் தோட்டத்தில் இவ்வளவு குளிர்ச்சியான காற்றில்லையென்றால், இப்படிப் பாதி நேரத்தை இரண்டு மூன்று தடவை தூங்கிக் கழித்திருக்க முடியாது! சரி, இருக்கட்டும். உன் வேலை எப்படி!’ என்றான்.
அவன் சொல்வதைக் கேட்கச் சோமாரிக்கு வயிறு பற்றி எரிந்தது. ‘நான் சாப்பாடுகூட இல்லாமல் காலை முதல் மாலை வரை அலைந்து திரிகிறேன். இவனுக்கு நேரம் போக வில்லையாம், தூக்கமாம்! இதை ஒரு கை பார்த்து விடுகிறேன்!’ என்று உள்ளூரக் கறுவினான். ஆனால், வெளியே அவன் பழமும் குழைய இனிய மொழிகள் பேசினான்.
‘அண்ணேன், இப்போதுகூட என்ன? அண்ணன் ஒருவன் இருக்கிறானே என்ற எண்ணத்தால்தான் வர மனமில்லாமல் வருகிறேன். இல்லையென்றால், இந்த வேலை பகல் மட்டிலு மென்ன இரவிலும் இருக்கக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது. காலையில் தோட்டத்திலிருந்து எருதுடன் காலடியெடுத்து வைத்ததுதான் தாமதம்! எங்கும் ஒரே புல்வெளி. அதனை அடுத்துக் குளிர்மரக்கா, ஐந்தருப்போல அருமணல் பரப்பிய ஒரு மரத்தடி என்னை அழைத்தது. எருதைப் புல்வெளியில் மேய விட்டுவிட்டு அதனடியில் போய்ப் படுத்தேன். படுத்தவன். இப்போதுதான் எழுந்து வருகிறேன். பசிகூட இல்லை. பாலில் குளித்துப் பழமும் தேனும் உண்டதாகப் பலதடவை கனவு கண்டேன். உண்மையிலே ஓடை நீரும் மரக்கனியும் அப்படித்தான் இருந்தன’ என்றான்.
இப்போது கோமாரிக்கு வயிறு குமுறிற்று. ‘உண்ண நேரமில்லாமல் உழைப்பு இங்கே! கையும் காலும் ஏழு நாளைக்கு எடுக்க முடியாத வேதனை எனக்கு! அவனுக்கு உறக்கமாம், உணவாம்! பாலும் பழமும் தேனும்போல உணவாம்! சரி, சரி, பார்க்கிறேன். ஒரு கை!’ என்று அவனும் முணுமுணுத்துக் கொண்டான். ஆனால், அவன் நடிப்பு இதை மறைத்தது. அகத்தில் இல்லாத மலர்ச்சியைப் புறத்தே முகம் காட்டிற்று. சோமாரியின் தோள்களை அணைத்துக் கொண்டு, தென்றலிலும் இனிய மொழிகளில் அவன் பேசினான்.
‘தம்பி! இந்தத் தூக்கத்துக்கு அந்தத் தூக்கம் எப்படி இருக்கிறது என்று பார்க்க நான் விரும்புகிறேன். நம் வேலைகளை நாளை மாற்றிக் கொண்டாலென்ன?’ என்றான்.
பழம் நழுவிப் பாலில் விழுகிறது என்று கண்டு சோமாரி மகிழ்ந்தான். அவன் கோமாரியின் கழுத்தையே கட்டிக் கொண்டான்.
‘நான் நினைத்ததை நீயும் கூறிவிட்டாய், அண்ணா! நான் பெற்ற இன்பத்தை நீயும் நுகரவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால், என் அனுபவத்தால் உனக்கு நான் ஓர் அறிவுரையும் தரமுடியும். என் இன்பத்துக்கு ஒரே ஒரு குறை இருந்தது. மணலில் பருக்கைக் கற்களிலிருந்து உருளும் போது குத்துகின்றன. நீ போகும் போது, உன் கட்டிலையும் படுக்கை தலையணையும் மறவாமல் தூக்கிக் கொண்டு போ, தூங்கும் நேரத்தில் அல்லல் இல்லாமல் தூங்கலாம்!’ என்றான்.
அண்ணன் கண்ட இன்பத்தைத் தம்பி மறுநாள் கண்டான். ஓடி வேலை வாங்கும் எருதே ஓடாது வேலை வாங்கும் பன்னீர் மரத்தை விட ஆயிரம் பங்கு மேம்பட்டது என்று அவன் எண்ணினான். ஆயினும் படுக்கை தலையணை யெடுத்து அண்ணனது இன்பத்தைப் பெருக்கிய தனது திறமையை நினைத்து அவன் ஓரளவு ஆறுதல் அடைந்தான்.
கட்டில் படுக்கையுடன் மரத்தடிவரை சென்ற கோமாரி, படுக்கை விரிக்குமுன் எருது நாலு கால்பாய்ச்சலில் ஓடுவது கண்டான். கட்டில் படுக்கையை விட்டுவிட்டு ஓட அவனுக்கு மனம் வரவில்லை. திரும்புமுன் அதை யாராவது எடுத்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற முன் கருதல் அச்சமயத்திலும் அவனுக்கு இருந்தது. ஆகவே அவன் அவற்றைத் தலையில் தூக்கி வைத்து ஒரு கையால் பிடித்துக்கொண்டே ஓடினான்.
சோமாரி கண்ட இன்பத்துக்கு வட்டியும் முதலும் சேர்த்து அவன் இன்பங் கண்டான் என்று சொல்ல வேண்டியதில்லை. பொழுது சாயும்போதுதான் அவன் ஒரு கையால் எருதைப்பற்றித் தொழுவில் மாட்டிவிட்டு, ஒரு கையால் கட்டில் படுக்கையைப் பற்றிச் சுமந்தவண்ணம் தோட்டப்புரைக்கு வந்தான்.
சோமாரியும் வெயிலில் நின்று மாலைவரை உழைத்து விட்டு மேலும் கீழும் மூச்சுவாங்க அந்த இடத்துக்கு வந்தான். இப்போது இருவருக்குமிடையே பேச்சுகளுக்குத் தேவையில்லை. கண்ணும் கண்ணும் பார்த்தவுடன் ஒருவர் உண்மையான நிலை மற்றவருக்கு முற்றிலும் புரிந்துவிட்டது. அப்படியே வாய்திறவாமல் உள்ளத்துடன் உள்ளத்தைப் பேசவிட்டு அவர்கள் நெடுநேரம் சாய்ந்திருந்தனர்.
சோமாரி தனக்குள்ளாகவே பேசிக் கொண்டான். ஆனால், அது உரத்த பேச்சு. கோமாரிக்கு அது கேட்டது.
‘அந்தப் பன்னீர் மரத்தடி எவ்வளவு தண்ணீர் கொள்ளுகிறது. வள்ளு வர் பெருமானே! அதற்குக் கீழே தண்ணீர் விழ ஒரு குளமே தான் இருக்குமோ!’ என்றான்.
தம்பியின் பேச்சு அண்ணனைச் சிந்திக்க வைத்தது.
சிறிது நேரம் அவனும் பேசாமல் இருந்தான். பின் அவனும் தனக்குள்ளாகவே, ஆனால் உரக்கப் பேசினான்.
‘குளம் இருந்தாலும் இருக்கலாம், ஆயிரம் குடம் இருந்தாலும் இருக்கலாம்!’ என்றான்.
சிறிதுநேரத்தில் சோமாரி வாய்திறந்தான்.
‘பன்னீர் மரத்தடியில் குடமா? அப்படியானால்..’
‘அதில் புதையல் இருக்கலாம் என்று நினைக்கிறாயா?’
‘ஆம், நாளை கிளறிப் பார்க்கலாம்!’.
‘நாளை என்ன? இப்போதே போவோம்!’
இரண்டு உள்ளங்களில் உருவான கருத்து உடனே செயற்படுத்தப் பட்டது. அப்போது முன்னிரவு கழிந்துவிட்டது. இருவரும் கடப்பாறை மண்வெட்டியுடன் புறப்பட்டனர்.
ஆளுக்கொரு முறையாக அவர்கள் மாறி மாறி மண்ணை வெட்டி அகழ்ந்தனர்.
சோமாரி வெட்டும்போது ‘டங்,டங்’ என்ற ஒலி கேட்டது!
‘அது என்ன தம்பி பார்!’ என்றான் கோமாரி
அது ஒரு குடம். கோமாரி இதை ஒளிக்கவில்லை. ஒளிக்கவும் முடியவில்லை. ஆனால் அவன் கையால் துழாவிய போது குடங்கள் இரண்டு இருந்தன. கையை விட்டுப் பார்த்த போது, நிறையத் தங்கக் காசுகள் இருந்தன.
பண்டைக்காலத் தங்க நாணயங்கள் அவை! ஆனால் இச்செய்திகளை அவன் மறைக்க முயன்றான். குடம் இரண்டு உண்டு என்பதை அவன் கூறாததனால், சோமாரி அறியவில்லை. ஆனால் குடத்தில் ஒன்றுமில்லை. கற்கள் தான் இருந்தன என்று கூறியபோது, சோமாரி அதை நம்பவில்லை. ஆயினும் நம்பியதுபோல் அவன் பாவித்தான்.
‘அப்படியானால், நாம் செய்த வேலை முற்றிலும் வீண், வா, மண்ணை மறுபடியும் மூடிவிட்டுப் போவோம்!’ என்று சொல்லிய வண்ணம் கோமாரியே மண்ணை முன்போல மூடினான்.
அவர்கள், மீண்டும் தனித்தனி சிந்தனையில் ஆழ்ந்தனர். கோமாரி தூங்கியபின் சென்று. செல்வத்தை வேறிடத்தில் மறைத்துவைத்துவிட வேண்டும் என்று சோமாரி எண்ணினான். சோமாரி தூங்கியபின் அது போலவே செய்யக் கோமாரியும் திட்டமிட்டான்.
இருவரும் நெடுநேரம் தூங்குவதுபோல நடித்தனர். ஆனால், ஒவ்வொருவரும் அடுத்தவர் நடிப்பை நன்கு அறிந்து கொண்டனர்.
‘நான் தூங்குவதாகப் பாவனை செய்வதாக அவன் நினைக் கிறான். நினைக்கட்டும், அதற்குள் நான் உண்மையிலேயே ஒரு தூக்கம் தூங்கி எழுந்திவிடுகிறேன். அதற்குள் அவனும் உண்மையிலேயே தூங்கிவிடுவான்’ என்ற நடிப்பில் ஒரு படி தாண்டி நடிக்கத் திட்டமிட்டான் சோமாரி.
கோமாரிக்கு அவன் எண்ணம் புலனாயிற்று. அவன் தூங்கி விட்டானென்று கண்டான். உடனே புறப்பட்டான்.
கோமாரி ஐயுற்றது போலவே குடம் நிரம்பப் பொன்னே இருந்தது. அத்துடன் குடம் ஒன்றல்ல, இரண்டு என்பதும் அவனுக்கு எளிதில் புலனாயிற்று. அவன் இரண்டையும் வெளியே யெடுத்தான். குளக்கரையில் கொண்டுபோய்ச் சேற்றில் புதைத்து வைத்தான். புதைத்த இடமும் எடுத்த இடமும் தெரியாமல் முன்போல் மூடினான். ஒன்றும் தெரியாதவன் போல வந்து படுத்துக்கொண்டான்.
கோமாரி செய்த காரியம் சோமாரிக்குத் தெரியாது. அவன் நள்ளிரவு கழித்து விழித்தெழுந்தபோது, கோமாரி உண்மை யிலேயே தூங்கிக் கொண்டிருந்தான். சோமாரி மகிழ்வுடன் மெல்ல எழுந்து சென்றான். பன்னீர் மரத்தடியைத் தோண்டினான். எவ்வளவு தேடியும் குடங்களைக் காணவில்லை.
இது கோமாரியின் வேலைதான் என்று அவன் உணர்ந்து கொண்டான். அருகே எங்காவது ஒளித்து வைத்துவிட்டுத்தான் அவன் அவ்வளவு கவலையற்றுத் தூங்குகிறான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
அவன் எங்கும் தேடினான். திருடனாய் இருக்கும் காலத்தில் பெற்ற துப்பறியும் நுண்ணறிவு வீண் போகவில்லை. அவன் தூங்குகிற கோமாரியைச் சோதித்தான். கை காலில் நீர்க்கசிவி லிருந்து. தவிரச் சேற்று வாடையும். ஆங்காங்கே சிறிது சேற்றுப் பசையும் இருந்தன. ஒளித்து வைத்த இடம் குளம் தான் என்று அவன் கண்டு கொண்டான்.
அவன் குளத்தைச் சுற்றிச் சென்றான். மூன்று திசைகளிலும் தவளைகள் காலடி அரவம் கேட்டுத் துள்ளி ஓடின. ஒரு திசையில் ஓடவில்லை. அங்கேதான் புதிதாகச் சேறு கலைக்கப் பட்டிருக்கிறது என்று உணர்ந்தான். அந்தக் கரையில் தேடி இரண்டு குடங்களையும் கண்டெடுத்தான்.
அடுத்தபடி என்ன செய்வது? வேறிடத்தில் ஒளித்து வைப்பதா? வேறு நல்லவழி இருக்கிறதா? இவ்வாறு, அவன் சிந்தனை செய்தான்.
புல் மேயாமல் பகலெல்லாம் பாய்ந்தோடிய எருதின் நினைவு அவனுக்கு வந்தது.
அவன் இரண்டு குடங்களையும் எருதின்மீது வைத்துக் கட்டினான். அதன் மீதேறித் தட்டிவிட்டான்.
அவன் எதிர்பார்த்ததுபோலவே, அது சலிப்புறாமல் பளுவுடன் விரைந்து நடந்தது.
கோமாரி எழுந்தபோது, சோமாரியைக் காணாமல் திகைத்தான்.
குளத்தில் கரையில் சென்று துழாவிப் பார்த்தான். அவன் ஐயுறவு வலுத்தது. சோமாரி சும்மா செல்லவில்லை. என்று கண்டான்.
அவன் எப்படிக் குடங்களுடன் போயிருக்க முடியும் என்று அவன் ஆராய்ச்சி செய்தான். ஏதோ ஓர் ஐயம் ஏற்படவே, தொழுவில் சென்று எருதைத் தேடினான்.
எருதும் காணாமற்போகவே, முழுச் செய்தியும் அவனுக்கு விளங்கிற்று. இன்னும் பொழுது முற்றிலும் விடியவில்லை. விடிந்தால், புதையல் பறிபோவதுடன், சோமாரி கொண்டு சென்ற எருதுக்கும் அவனே பொறுப்பாக வேண்டும். ஆகவே அவன் விரைந்து வெளியேறினான்.
சோமாரி எங்கே போகக்கூடும்? பழைய நாலூர் வீட்டுக்குத்தான் போக முடியும். அவன் போகுமுன் அவனை எப்படியாவது மடக்கி, புதையலைக் கைப்பற்றிவிட வேண்டு மென்று கோமாரி திட்டமிட்டான்.
குறுக்கு வழிகளிலே அவன் நடந்தான். வழியில் ஒரு நகரம் குறுக்கிட்டதும், முன் கருத்துடன், பொன்னிழைத்துப் பூவேலை செய்யப்பட்ட அழகிய மிதியடி இணைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டான்.
அது விலையேறியதாயிருந்தது. அவன் கையிலிருந்த பொருள் முழுதும் அதில் செலவாயிற்று. ஆனால், அவன் பொருட்படுத்தவில்லை. அவன் உள்ளத்தில் தீட்டியிருந்த திட்டத்துக்கு அது மிகவும் தேவைப்பட்டது.
குறுக்குவழிகளில் விரைந்து சென்றதால், அவன் எளிதில் சோமாரியைச் சென்று எட்டிவிட்டான். ஆனால், சோமாரி அறியாமல் பின்னும் குறுக்குவழி சென்று அவனுக்கு முந்தினான்.
வழியில் சோமாரி வர இருக்கும் பாதை பார்த்து அவன் தன் அழகிய பொன் மிதியடிகளில் ஒன்றை நழுவ விட்டான்.
ஒரு இருநூறடி தொலைவு வந்தபின், ஓர் அடர்த்தியான மரம் இருக்கக் கண்டான். அதன் அருகே அடுத்த மிதியடியையும் நழுவ விட்டுவிட்டு, அவன் மரத்தின் மீதேறி ஒளித்திருந்தான்.
சோமாரி அவ்வழியே வந்தபோது, முதலில் அவன் கண்ணில் ஒற்றை மிதியடி தென்பட்டது. ‘ஆகா, என்ன அழகிய மிதியடி! என்னிடம் பணம் நிறைய இருக்கிறது. ஆனால், அப்பணத்தைச் செலவு செய்யாமலே அத்தகைய பணக்காரனுக்கேற்ற இந்த மிதியடி ஒன்று கிடக்கிறது. ஆயினும் ஒரு மிதியடி கொண்டு என்ன பயன்?’ என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
மிதியடியை அவன் எடுக்கவில்லை. அதைக் கடந்து நடந்தான்.
இருநூறு அடி கடந்தபின், அடுத்த மிதியடியையும் அவன் கண்டான்.
‘அந்தோ, நான் எவ்வளவு முட்டாளாகிவிட்டேன். அந்த மிதியடியை எடுத்து வந்திருந்தால், என் பணத்தைச் செலவு செய்யாமலே, அதைச் செலவு, செய்து வாங்கியதுபோல் தோற்றமளித்திருப்பேன். ஆயினும் இப்போதும் என்ன கெட்டுவிட்டது. இருநூறு அடிக்குள்ளாகத்தான் இருக்கிறது. அதை எடுத்து வந்துவிடலாம்!’ என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
குடங்கள் சுமந்துவந்த எருதை அவன் மரத்தில் கட்டினான். கோமாரி அந்த மரத்திலேயே இருப்பான் என்பதை அவன் கனவிலும் எதிர்பார்க்க வில்லை. வேகமாக முதல் மிதியடி கிடந்த இடத்துக்கு விரைந்தான்.
இந்நிகழ்ச்சிக்கே காத்திருந்த கோமாரி இறங்கிவந்து எருதைக் கட்டவிழ்த்துத் தட்டிவிட்டான்.
அருகே கிடந்த இரண்டாவது மிதியடியை விடுவானே னென்று அவன் அதையும் எடுத்துக் கொண்டான்.
சோமாரி முதல் மிதியடியுடன் விரைந்து திரும்பினான். ஆனால் எருதையே காணாமல் திகைத்தான்.
இரண்டாவது மிதியுடியுடன் காணவில்லை. ஆகவே ஏமாற்றியது வேறு யாருமல்ல, கோமாரியே என்று உணர்ந்து கொண்டான்.
புதையல் போன இடம் தெரிந்தபின், அவன் கவலை அகன்றது. அவன் கோமாரியைத் தாண்டிச் செல்ல விரைந்தான். இவ்வகையில் அவன் வெற்றி கண்டான். ஏனெனில் கோமாரிக்கு முன்பே அவன் நாலூரை அடைந்து, கோமாரியின் வீட்டு வெளி வாயில் கதவின் பின்னே ஒளிந்து நின்றான்.
கோமாரி புகுமுன்பே அவன் கோமாரியின் எதிரே சென்று அவனை வரவேற்றான்.
‘அண்ணேன்! பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டாயா? சரி. உனக்காகவும் என் புதையலுக்காகவும் தான் காத்திருக்கிறேன். உள்ளே போய்ப் பங்கு போட்டுக் கொள்வோமா?’ என்றான்.
‘சரி’ என்றான் கோமாரி. தனக்கு ஈடுசோடு சோமாரி தான் என்று கண்டபின், அவன் வேறு வழி காண வில்லை!
ஆளுக்கொன்றாகத் தங்கக் காசுகள் இரண்டிரண்டாக எடுத்துப் பங்கிடப்பட்டன. ஆனால், முடிவில் ஓர் ஒற்றைக்காசு வந்தது. அதைப் பங்கிட முடியாமல் அவர்கள் திண்டாடினர்.
‘இதை வெள்ளியாக மாற்றிப் பங்கிட்டுக் கொள்வோம்’ என்றான் கோமாரி.
‘சரி, ஆனால் அதுவரையும் அதை யார் வைத்துக் கொள்வது?’ என்று கேட்டான் சோமாரி.
‘ஏன், நான் தான்’ என்றான் கோமாரி.
“அது எப்படி! நான் தான் வைத்துக் கொள்வேன்” என்றான் சோமாரி.
‘என் பொன் மிதியடி ஒன்று உன்னிடம் இருக்கிறது. ஆகவே, அதற்கீடாகப் பொன் என்னிடம் இருக்கட்டும்’ என்றான் கோமாரி.
சோமாரி இணங்கவேண்டி வந்தது. அந்தப் பொன்னைப் பற்றி வாதிடாமலிருந்தால், பொன் மிதியடியைக் கொடுக்க வேண்டி வந்திருக்காது. தன் முன் கருதலில்லா மடமைபற்றி அவன் தன்னையே நொந்து கொண்டான்.
உண்மையில் சோமாரிக்குச் சில்லறை மாற்றிக் கொடுக்க விருப்பம் இல்லை. பாதிப் பொன்னைக் கொடுக்க வேண்டிய தாயிற்று. ஒரு மிதியடியும் அவன் கையில் சிக்கிவிட்டது. சில்லறையையும் கொடுக்காமல், மிதியடியையும் மீட்டாவது தன் வல்லமையை நிலை நாட்ட வேண்டும் என்ற அவன் எண்ணினான்.
அவன் ஆழ்ந்து சிந்தித்துத் திட்டமிட்டான். இத்தடவை அவன் மனைவியின் உதவியையும் நாடினான்.
கோமாரி உடலை அவன் மனைவி முற்றத்தில் மூடிக் கிடத்தினாள். அவன் இறந்ததாகக் கூறி அண்டை அயல் வீட்டுப் பெண்களையெல்லாம் திரட்டினாள். சோமாரி சில்லறை பெற வரும்போது பெண்களெல்லாம் உரக்க அழுதனர்.
‘என் கணவனை எங்கோ கூட்டிக் கொண்டு சென்று, அவனை வாழாமல் கெடுத்தவன் அந்தப் பாவி தான்!’ என்று மனைவி சோமாரி மீதே வசைபாடினான்.
சோமாரி சூது முழுவதையும் ஒரு நொடியில் ஊகித்துக் கொண்டான். அவன் மூளை உடனடியாக வேலை செய்தது.
‘நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது. அம்மணி, அது கருதியே நான் என் கடனை ஆற்ற வந்திருக்கிறேன். நீங்கள் பெண்கள். அவன் ஆண் உறவு நான் ஒருவன் தான். ஆகவே, அவனை அடக்கம் செய்யும் செலவையும் உழைப்பையும் நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்றான்.
அவர்கள் திகைத்தனர். ஆனால் பலர் முன்னிலையில் மனைவி ஒன்றும் சொல்ல முடியவில்லை!
சோமாரி வைக்கோல்புரி முறுக்கி, கோமாரியின் உடலைக் கட்டித் தூக்கிக்கொண்டு புறப்பட்டான்.
கோமாரிக்கு ஒன்றும் தோன்றவில்லை. வாய் திறந்தால் நடிப்பும் பொய்த்துவிடும். சில்லறை கொடுக்க வேண்டி வந்துவிடும். ஆகவே பேசாமல் பிணமாகவே நடித்தான்.
சோமாரி அவனை அடிக்கடி கல்லிலும் முள்ளிலும் போட்டு இழுத்தான். உடலெல்லாம் புண்பட்டுக் குருதியாயிற்று அப்போதும் அவன் வாயாடவில்லை.
ஊர் வெளிக்காடு சென்றபின், சோமாரி ஒரு மரத்தடியில் நின்றான்.
உடலை எரியூட்ட, தீப்பெட்டி இல்லாத குறையை அவன் அப்போது தான் உணர்ந்தான்.
தீப்பெட்டி எடுக்கத் திரும்பி வருவதென்றால், அதற்குள் பிணமாக நடித்த கோமாரி ஓடிவிடுவான். ஆகவே, போகவும் வழியில்லாமல், காரியம் முடிக்கவும் வகையில்லாமல் அவன் விழித்தான்.
பொழுது சாயும் நேரமாயிற்று. தொலைவில் ஆளரவம் கேட்டது. அப்போதும் கோமாரியைவிட மனமில்லாமல், அவன் அவன் உடலை வரிந்துகட்டி, காலில் கயிறிட்டுத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு மரத்தில் ஏறி, உடலைக் கிளையில் தொங்கவிட்டான்.
அத் திசையில் வந்தவர்கள் ஒரு புதிய திருட்டுக் குழுவினர். மரத்தில் பிணம் தொங்குவது கண்ட அவர்கள் மகிழ்ச்சி யடைந்தனர். ஏனெனில், பிணம் எதிர்ப்பட்டால், அது நல்ல குறி என்று அவர்கள் கருதினார்கள்.
போகும்போதே ஒருவன் அதுபற்றிப் பேசினான்.
‘அண்ணேன்! இந்தப் பிணம் நமக்கு நல்ல எதிர்ப்பாயிற்று. நாம் இனி வெற்றியடைவது உறுதி. அப்படி வெற்றியுடன் திரும்பும்போது, இந்தப் பிணத்துக்கு நம் நன்றியைத் தெரிவிப்போம். அதை அடக்கம் செய்வோம்’ என்றான். எல்லாரும் சரி என்றனர்.
அவர்கள் திரும்பி வரும்வரை, சோமாரி மரத்திலேயே இருந்தான்.
கோமாரியும் பிணம்போல இரவு முழுதும் தலை கீழாகத் தொங்கினான்.
அவன் வேதனை பெரிதாகத்தான் இருந்தது. ஆனால் அப்போதும் நடிப்பை விட்டுவிட அவன் எண்ணவில்லை. சோமாரிக்குச் சில்லறையைக் கொடுத்து விடவும் அவன் எண்ணவில்லை.
திருடர் திரும்பி வந்தனர். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடிற்று. அவர்கள் சுமைகள் வெற்றியைத் தெரிவித்தன.
சுமையை இறக்கி வைத்தபின், அடக்கம் செய்ய அவர்கள் ஏற்பாடுகள் தொடங்கினர். தீ முட்டப்பட்டது. கோமாரியின் உடல் கட்டப்பட்ட கயிற்றை அறுத்து, அவனை அவர்கள் தீயருகில் கொண்டு போயினர்.
கோமாரி ‘கோ’ என்று கதறினான்.
அதற்கே காத்திருந்த சோமாரியும் ‘சோ’ என்று கூவினான்.
திருடர் பேய் என நடுநடுங்கி மூலைக்கொருவராக ஓடினர். கோமாரியும் சோமாரியும் திருடர் கொள்ளைப் பொருளையும் கைக்கொண்டு வீடு சென்றனர்.
‘திருந்திய திருடர் செயல் இதுதானா!’ என்ற குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டனர்.
அவர்களுக்குத் திருக்குறளைப் போதித்த புலமைப் பெரியார் புன்முறுவலுடன் அவர்கள் முன் நின்றார்.
அவர்களிருவரும் எல்லாச் செல்வத்தையும் புலவர் காலடியில் வைத்து வணங்கினர்.
’அண்ணலே! நாங்கள் திருட எண்ணியதில்லை. அந்த தொழிலை விட்டுவிட்டோம். ஆனாலும் ஒருவருக்கொருவர் பொய் பேசினோம். தாங்கள் எடுத்த புதையலுக்காக ஒருவரை ஒருவர் ஏமாற்றத் திட்டமிட்டோம். அதன் மூலம் நாங்கள் கேளாமலே இன்னொரு திருட்டுக் குழுவின் கொள்ளைப் பொருளும் எங்கள் கையில் சிக்கியது.
‘இப்போது எல்லாவற்றையும் உங்களிடம் ஒப்படைத்து விட்டோம். இனி ஒருவருக்கொருவர் பொய்யுங் கூறமாட்டோம்; ஏமாற்றவும் மாட்டோம்!’ என்றனர்.
‘உங்கள் பொருளை நான் ஐந்தூர்க் கோமான் அறிவரிடமே கொடுத்து, வள்ளுவர் பல்கலைக்கழகம், வள்ளுவர் மருந்தகம், வள்ளுவர் காப்பகம், வள்ளுவர் திருந்தகங்கள் நடத்தச் சொல்கிறேன். ஆனால், நீங்கள் இனிமேல் திருடாமல், பொய் சொல்லாமல், ஏமாற்றாமல் இருந்தால் மட்டும்போதாது. உலகுக்கெல்லாம் உழைக்க வேண்டும். உயிர்களிட மெல்லாம் அன்பு செய்ய வேண்டும். எவருக்கும் துன்பம் செய்யாதிருப்ப துடன் நில்லாமல். துன்பம் வராமல் காக்க வேண்டும். இன்பம் பெருக்க வகை காண வேண்டும். அதுதான் வள்ளுவர் வழிநின்று திருந்தும் வழி!’ என்றார்.
‘நாங்கள் இனி அந்த அரும்பணி நிற்போம்’ என்றனர். இருவரும்!
புலவர்- கோமாரி, சோமாரி ஆகிய இருவரையும் கோமான் அறிவனிடம் இட்டுச் சென்றனர். அவர்கள் திருத்தம் பற்றிய சுவைமிக்க கதையையும் கூறினர்.
‘திருட்டின் திறங்களை எல்லாம் அறிந்து அப்போது திருந்திய வாழ்வு காண விரும்புபவர்கள் இவர்கள். திருட்டைத் தடுக்கும் காவல் வேலைக்கு இவர்களையே அமர்த்தி விடுகிறேன். அதற்கு இவர்களைவிடச் சிறந்த தகுதியுடைவர் கிடையாது’ என்றான் கோமான்.
புலவர் - இக்கருத்தைப் பாராட்டினார்.
கோமாரி நகரையும் நாட்டையும், சோமாரி அவற்றை அடுத்திருந்த காட்டையும் காவல்செய்யும் பொறுப்பை ஏற்றனர்.
ஐந்தூர் நாலூர் மட்டிலுமன்றிச் சுற்றுப்புறங்களிலேயே திருட்டும் கொலையும், பொய்யும் புலையும் அகன்றன. கோமாரி, சோமாரி ஆகியவர் திருத்தம் உலகின் திருத்தமாகப் பரந்தது.
கோமாரி, சோமாரியின் கதைகளை மட்டும் மக்கள் மறக்கவில்லை! அது எல்லாரையும் நல்வழிப்படுத்தியதுடன், எல்லாருக்கும் இன்பமும் அளித்தது.
சின்னத்தம்பி
சிங்கம்பட்டி என்ற ஓர் ஊரில் இரண்டு உழவர் இருந்தனர். ஒருவர் பெயர் பெரிய தம்பி. மற்றவன் பெயர் சின்னத் தம்பி. பெயருக்கேற்றபடியே பெரிய தம்பிக்குப் பெருஞ் செல்வம் இருந்தது. ஐந்து சோடு மாடுகளும் மிகுந்த நிலபுலங்களும் மாடி வீடுகளும் அவனுக்கு இருந்தன. ஆனால், சின்னத்தம்பி ஏழை. அவனிடம் ஒரு சோடு மாடுகளே இருந்தன. ஒரு சிறு நிலமும் ஒரு குச்சு வீடும் அவன் வாழ்க்கைக்கே பற்றுவனவாய் இருந்தன.
உழவுக் காலங்களில் சின்னத் தம்பி தன் ஒரு சோடு மாடுகளுடன் வாரத்தில் ஐந்து நாட்கள் பெரிய தம்பியின் நிலத்தில் சென்று உழுவது வழக்கம். இதற்கீடாகப் பெரிய தம்பியும் ஒரு நாள் தன் ஐந்து சோடு மாடுகளுடன் சின்னத் தம்பியின் நிலத்தில் வந்து உழுவான். சிற்றூர்களிலுள்ள இந்தப் பழமையான ஏற்பாடு இருவருக்கும் வசதியாகவே இருந்தது.
ஐந்து சோடு மாடுகளுக்கு உரியவனாய் இருப்பதே பெரு மதிப்பு என்று சின்னத் தம்பி கருதினான். அந்த நாளை எண்ணி மனப்பால் குடித்தான். அதுவே அவன் கனவாய் இருந்தது. ஆகவே, தன் ஒரு சோடு மாடுகளுடன் பெரிய தம்பியின் ஐந்து சோடு மாடுகளும் தன் நிலத்தில் வந்து உழும் நாளில் அவன் எல்லையிலா மகிழ்வு கொண்டான். அந்த ஒரு நாளாவது ஆறு சோடுகளும் தன்னுடையவை என்று கூறிக் கொள்ள அவன் விரும்பினான். இந்த ஆவலை அவனால் அடக்க முடியவில்லை. போவார் வருவாரிடமெல்லாம் பெருமையுடன் ஆறு சோடிகளையும் சுட்டிக்காட்டினான். ’இதோ பாருங்கள், இந்த அழகிய மாடுகளை! இந்த ஆறு சோடிகளும் என்னுடையவை தான்! எப்படி, என்னுடைய செல்வங்கள்! என்று பெருமிதத் துடன் பேசினான்.
தன் மாடுகளையும் சேர்த்துச் சின்னத்தம்பி உரிமை கொண்டாடு வதைப் பெரிய தம்பி விரும்பவில்லை. அதனால் தன் உரிமைக்கு அவமதிப்பு ஏற்படுகிறது. என்று அவன் கருதினான். ஆகவே அவன் சின்னத் தம்பியின் ஆர்வ உரைகளைத் தடுத்தான்.
‘இதோ பார், சின்னத் தம்பி! ஒரு சோடு மாடுகள்தான் உனக்கு உரியவை என்பது உனக்கே தெரியும். ஆகவே ஆறும் உன்னுடையவை என்று இனிச் சொல்லாதே! எனக்கு அது கேட்கப் பெருங் கோபம் வரும்’ என்றான்.
சின்னத் தம்பி தன் ஆவலால் பேசினானே தவிர. பெரிய தம்பியை அவமதிக்க எண்ணியதில்லை. ஆகவே, தவறாகச் சொல்லி விட்டதாக மன்னிப்புக் கோரினான். உழவு மீண்டும் தொடர்ந்தது.
அடுத்து, அப்பக்கம் யாராவது ஆள் வருவது கண்டவுடன் சின்னத் தம்பியின் ஆர்வம் மேலெழுந்தது, அவன் பெரிய தம்பியின் எச்சரிக்கையை மறந்தான். ‘இதோ பாருங்கள்..’ என்று தொடங்கினான்.
பெரிய தம்பிக்கு இந்தச் சொற்கள் வரவரக் கோப மூட்டின. சின்னத் தம்பியோ ஒவ்வொரு தடவையும் இனி இவ்வாறு கூறுவதில்லை என்று கூறிவிட்டு, அடுத்த ஆளை எதிரே கண்டதும், தன் வாக்குறுதியை மறந்து முன்போலவே பெருமை அடைந்தான்.
‘இனி ஒரு தடவை மட்டும் இப்படிச் சொல்லு. உன் மாடுகள் இரண்டையும் மண்டையிலடித்துக் கொன்று தீர்த்து விடுகிறேன்!’ என்றான். பெரிய தம்பி.
சின்னத் தம்பி இதுகேட்டு நடுங்கினான். ‘இனி வாய் திறப்பதேயில்லை’ என்று உறுதி கூறினான்.
ஆனால், அடுத்த ஆள் எதிர்ப்பட்டவுடனே அவன் மறுபடியும் தன்னை மறந்தான். வழக்கப்படி பெருமையளந்து விட்டான்.
‘அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான். இதோ உன் பெருமை என்ன ஆகிறது பார்!’ என்று பெரிய தம்பி சீறி எழுந்தான். அருகிலே கிடந்த ஏர்க்காலால் சின்னத் தம்பியின் இரண்டு மாடுகளின் தலைமீதும் ஓங்கி அடித்தான்.
இரண்டும் முதலடியிலேயே சுருண்டு விழுந்தன!
சின்னத்தம்பி தன் துடுக்குத்தனத்தை எண்ணிஎண்ணி வருந்தினான். தன் பேராவலுக்கே அடிப்படையான தன் மாட்டுச் செல்வங்களைக் கட்டிக்கொண்டு அழுதான். ஆனால் இனி அழுது பயன் இல்லை என்பதை உணர்ந்து அவன் ஆறினான்.
இரண்டு மாடுகளின் தோலையும் அவன் உரித்து உலரவைத்து எடுத்துக் கொண்டான். நிலத்தை உறவினரைப் பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிட்டு, தோலை எங்கேனும் விற்கப் புறப்பட்டான். இரண்டு மாட்டுத் தோல்களையும் அவன் ஒரு சாக்கிலிட்டுத் தூக்கிக் கொண்டு போனான்.
கண்காணாத ஏதேனும் ஊருக்குப் போய்விட வேண்டும் என்பது தவிர, அவனுக்கு வேறு திட்டம் எதுவும் கிடையாது. ஆகவே, அவன் ஓர் அடர்ந்த காட்டு வழியில் சென்றான். பகல் முழுதும் நடந்து சென்றும், காடு கடந்த பாடில்லை. இரவின் குளிரும் கொடுவிலங்குகளின் கூக்குரல்களும் அவனை அச்சுறுத்துத் தொடங்கின. பாதையிலிருந்து சற்று விலகியிருந்த ஒரு சிற்றூரை நோக்கித் திரும்பினான்.
அந்தச் சிற்றூரின் வீடுகள் எல்லாமே சிறு குச்சு வீடுகள். உள்ளே இருப்பவருக்கே அவை இடம் பற்றாதவையாகத் தோன்றின. ஆகவே, அவற்றில் அவன் தங்கிடம் கோர நினைக்க வில்லை. ஒரே ஒரு வீடுதான் செல்வ வளமுடையதாகத் தோற்றிற்று. அதுவே அவ்வூர்ப்பெரிய தனக்காரன் வீடு. அதனுள் இருளில் நெடுந்தொலை ஒளி வீசிய விளக்கொளியும் தெரிந்தது. நல்ல உணவு வகைகளின் மணமும் தொலைவில் தென்பட்டது. சின்னத் தம்பி ஆவலுடன் சென்று கதவைத் தட்டினான்.
ஆரவாரமாக ஆடையணிந்த ஓர் அணங்குதான் வந்து கதவைத் திறந்தாள். வந்தது ஓர் ஏழை வழிப்போக்கன் என்று கண்டதே அவள் முகம் கடுகடுத்தது. தங்கிடமும் உணவும் வேண்டும் என்று அவன் கேட்டதும் அவள் சீறி விழுந்தாள். ‘இது வீடு. சத்திரமல்ல. வேறெங்காவது போய்த் தொலை’ என்று கடுமையாகக் கூறிவிட்டு, அவன் கண் முன்னாலேயே கதவைத் தடாலென்று அடைத்து விட்டுச் சென்றாள்.
அவன் வீட்டில் வெளிப்புறத்திலேயே எங்காவது சிறிது ஒதுக்கமான இடம் பார்த்துத் தங்க எண்ணினான். சுற்று முற்றும் நோக்கினான். விட்டிலிருந்து சற்று விலகி ஒரு மாட்டுக் கொட்டில் இருந்தது. வீட்டுக்கும் கொட்டிலுக்கும் இடையே வைக்கோல் முதலியன பரப்புவதற்காக ஒரு தட்டையான கூரை இருந்தது. வீட்டின் மோடு ஒரு பாதியிலும் கொட்டிலின் மோடு மறு பாதியிலும் இதன்மேல் கவிந்திருந்தது. இது இடுக்கமான தாய் இருந்தாலும் குளிர் காற்றிலிருந்து பாதுகாப்பாகவும் ஓர் ஆள் படுக்கப் போதியதாகவும் இருந்தது. அதிலேயே இரவைக் கழிப்பதென்று அவன் உறுதி செய்தான்.
அந்த இடைவெளியில் கிடந்த வைக்கோலைப் பரப்பி, அதன் மீது அவன் கைகால்களை நீட்டினான். அவன் எதிர் பார்த்ததை விட அது நல்ல வாய்ப்புடையதாய் இருந்தது அறையிலிருந்த கணப்படுப்பின் காங்கை இடையிலுள்ள பலகணி கடந்து வீசியதால், குளிர் மிகுதியில்லாமல் அந்த இடம் கதகதப்பாகவும் இருந்தது.
அவன் படுத்த இடத்துக்கு நேரே தான் பலகணி இருந்தது. அதன் கதவுகள் அடைபட்டிருந்தாலும், சட்டங்கள் சிறிது
இடை விட்டுத் திறந்திருந்தன. அதன் வழியே அவன் உள்ளே வீட்டில் இருப்பவர்களை நன்றாகப் பார்க்கவும், அவர்கள் பேசுவதைத் தெளிவாகக் கேட்கவும் முடிந்தது. உணவின் மணம் மூக்கைத் துளைத்தது. அவன் ஆவலுடன் உள்ளே இருப்பதையும் நடப்பதையும் கவனித்தான்.
உள்ளே பெரியதனக்காரன் இல்லை. ஆனால், அவன் மனைவியுடன் அவ்வூர்க் கோயில் குருக்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார். பெரிய தனக்காரனுக்குக் கோயில் குருக்கள் என்றாலே பிடிக்காது. கோயில் குருக்களைக் கண்டாலே அவனுக்கு அருவருப்பு ஏற்படும். இதனால் அவன் மனைவியுடன் கடவுளை வழிபடக் கோயிலுக்குள் போகாமல் கோபுரத்தை வழிபட்டுவிட்டு வீடு வந்து விடுவான். பெரிய தனக்காரன் தன் வீட்டின் திசைக்குக் குருக்கள் வரவும் பொறுக்க மாட்டான். ஆனால், மனைவியோ கோயில் குருக்களையே கடவுளாகப் பாவித்தாள். கணவனில்லாத சமயம் பார்த்துக் கோயிலுக்குச் சென்று குருக்களுக்கு வாயும் வயிறும் நிறைய அமுதுகளும் கைநிறையப் பணமும் கொடுப்பாள். அன்று கணவனில்லாத சமயமாதலால், குருக்களுக்குத் தனி விருந்து சமைத்து அவரை அழைத்திருந்தாள்.
குருக்கள்முன் வகைவகையான உண்டி சிற்றுண்டிகள் படைக்கப் பட்டிருந்தன. அவற்றின் மணமே சின்னத்தம்பி மூக்கைத் துளைத்தது. குருக்கள் ஆர அமர அவற்றை உட்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
சின்னத்தம்பி நிலைமைகளை ஊகித்துக் கொண்டான். குருக்களுக்கு அவ்வளவு அன்புடன் படைத்த அணங்கு தன் பசிக்கு ஒரு பிடி பழைய அமுதோ தங்க ஒரு மூலையோ தர மறுத்ததை எண்ணியபோது, குருக்கள் மீது அவனுக்கும் எரிச்சல் ஏற்பட்டது. கிட்டத்தட்டப் பெரியதனக்காரன் அளவிலேயே அவன் குருக்கள் வகுப்பை வெறுக்கத் தொடங்கினான்.
இச் சமயம் திடுமெனக் கதவு தட்டப்பட்டது. பெரிய தனக்காரன் எதிர்பாராத வகையில் வெளியூர்ப் பயணம் தடைபட்டுத் திரும்பி வந்திருந்தான். குருக்களையோ, உணவு வகைகளையோ அவன் கண்டால், அவன் மட்டற்ற கோபம் கொள்வான் என்று மனைவிக்குத் தெரியும். ஆகவே, கதவைத் திறக்குமுன் குருக்களை ஒரு பெரிய பெட்டியிலிட்டுப் பூட்டினாள். உணவு வகைகளை அங்கிருந்த ஒரு நிலைப் பெட்டியிலிட்டு மறைத்தாள். சின்னத்தம்பி இவற்றையெல்லாம் வெளியிலிருந்தே பார்த்தான்.
கதவு திறக்குமுன், திடுமென வீட்டுக் கூரையிலிருந்து ஓர் எலி சின்னத் தம்பி மீது பாய்ந்துவந்த விழுந்தது. சின்னத் தம்பி பதறிக் கீழே குதித்தான். பெரியதனக்காரன் அவன் பக்கம் திரும்பி, “நீ யார், திருடனா! இங்கே எப்படி வந்தாய்!” என்றான்.
தன் கதையையும் நிலையையும் சின்னத்தம்பி உருக்கமாக எடுத்துக் கூறினான். தங்க இடமோ உண்ண உணவோ இல்லாமல், இடைக் கூரையில் படுத்து வைக்கோலைத் கடித்துக் கொண்டிருந்ததாகக் கூறினான்.
பெரியதனக்காரனுக்குக் குருக்களிடம் எவ்வளவு வெறுப்போ அவ்வளவுக்கு இயற்கையான தெய்வ பக்தியும், ஏழைகளுக்கு இரங்கும் உள்ளமும் இருந்தன. ஆகவே, அவன் சின்னத் தம்பியை வீட்டுக்குள்ளேயே வந்து உணவு உட்கொண்டு தங்கும்படி அழைத்தான்.
பெரியதனக்காரனுக்கும் சின்னத்தம்பிக்கும் வீட்டணங்கு பழைய அமுது படைத்தாள். ஒரு காரத் தொகையலைத் தவிர அமுதுக்குத் துணைக்கறி எதுவுமில்லை. குடியானவனுக்குப் பசி மிகுதியானதாலும், அதுவே அவன் வழக்கமான உணவாத லாலும், அவன் சுவையுடன் உண்டான். சின்னத்தம்பிக்குப் பசி மிகுதியாகத்தான் இருந்தது. ஆனாலும், சற்றுமுன் வகை வகையான உண்டி சிற்றுண்டிகளைக் கண்டதனால் அவ் எளிய உணவு உட்செல்ல மறுத்தது.
மாட்டுத்தோல் வைத்திருந்த சரக்கு அவன் காலடியிலேயே கிடந்தது. அவன் கால்கள் இச்சமயம் அதன் மீது தற்செயலாக அழுத்திற்று. அது ‘கிர், கிர்’ என்று இரைந்தது. சமயத்துக்கேற்ற புதுக் கருத்து அவனுக்குத் தோற்றிற்று. அவன் தோலை மீட்டும் அழுத்தினான். அது மீண்டும் இரைந்தது. அதை வாயடக்கி உறுக்குபவன்போல, ‘பேசாமலிரு!’ என்றான்.
‘தம்பி, பைக்குள் என்ன இருக்கிறது?’ என்றான் பெரியதனக்காரன்.
‘அது ஒன்றுமில்லை. வெறும் சாக்குத்தான்’ என்று செய்தியை மறைப்பதுபோலச் சின்னத்தம்பி பாவனை செய்தான்.
பெரியதனக்காரன் ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. “ஒன்று மில்லை என்றால் அது குரல் கொடுப்பானேன்? நீ ‘பேசாமலிரு’ என்று சொல்வானேன்? சும்மா என்னிடம் சொல்லு. சொன்னால்தான் நான் சாப்பிடுவேன்” என்றான்.
‘உங்களிடம் சொல்வதற்கென்ன? உங்களைப்போல நல்லவரிடம் சொல்லலாம்!’ என்ற பீடிகையுடன் சின்னத் தம்பி தொடங்கினான். ‘இதில் ஒரு மந்திரவாதியால் அடைக்கப்பட்ட ஒரு குறளித் தெய்வம் இருக்கிறது. அது தன்னை வைத்துப் பேணுகிறவர்களிடம் நடந்தது. நடக்கிறது, நடக்க இருக்கிறதை யெல்லாம் அறிந்து சொல்லும். அதன் வழக்கம் போல, இப்போதும் ஏதேதோ சொல்லிற்று. அவ்வளவுதான்’ என்றான்.
அவனை முதலில் புறக்கணித்துக் கடுமையாகப் பேசிய அணங்குக்குக்கூட இப்போது அவனிடம் அச்சம் பிறந்தது. பெரியதனக்காரன் ஆர்வம் முன்னினும் பதின் மடங்காயிற்று.
‘ஆகா, அப்படியா? அவ்வளவு பெரிய செல்வத்தையா வைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ பாக்கியசாலிதான். சரி, அது இப்போது என்ன கண்டு சொல்லிற்று! அதை தயவு கூர்ந்து எனக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்று வற்புறுத்தி வேண்டினான்.
சொல்ல விரும்பாதவன்போல மிகவும் பாவித்து, இறுதியில் தெரிவிப்பதாகச் சின்னத் தம்பி நடித்தான்.
“அண்ணா! வேறொன்றுமில்லை. நாம் பழைய அமுதும் தொகையலும் வைத்து சாப்பிடுவது காண அதற்குப் பிடிக்கவில்லை. ‘பக்கத்திலே நிலைப்பெட்டியில் வகை வகையான உண்டியும் சிற்றுண்டியும் வைத்திருக் கிறேன். எடுத்து இந்த அன்பருக்குக் கொடுத்து நீங்களும் சாப்பிடுவது தானே!’ என்று அது பன்னிப் பன்னிப் பேசுகிறது. மாய உணவென்றால் உங்களுக்குப் பிடிக்குமோ என்னவோ என்றுதான் நான் சொல்லத் தயங்கினேன்” என்றான்.
பெரியதனக்காரன் ‘அப்படியும் இருக்குமா!’ என்று வியப்புடன் எழுந்து சென்று நிலைப்பெட்டியைத் திறந்தான். கூறியபடியே எல்லாம் இருக்கக் கண்டு மேலும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தான். அணங்கின் அச்சம் பன்மடங் காயிற்று. இப்போது வழிப்போக்கனிடம் மிகுந்த அன்பும் பாராட்டும் காட்ட விரும்பினாள்.
அனைவருமாக உண்டி சிற்றுண்டிகளை உண்டனர். ‘இம்மாதிரி உணவை என் மனைவி சமைத்து நான் என்றுமே உண்டதில்லை’ என்றான் அவன்.
மனைவிக்கு இது சுறுக்கென்று தைத்தது. கணவனுக்கு இவள் இழைத்திருந்த வஞ்சனையை அது பன்மடங்கு பெருக்கிக் காட்டிற்று!
சின்னத் தம்பிக்கு இப்போதும் குருக்கள் மீதுள்ள கோபம் தீரவில்லை. ஆனால், அணங்கின் அச்சம் கண்டு அவள் மீது மட்டும் இரக்கம் ஏற்பட்டது. அவளுக்குத் தீங்கில்லாமலே குருக்களை தக்க தண்டனைதர வகை முறைகளை ஆய்ந்து கொண்டிருந்தான்.
உணவு முடிந்தபின், இருவரும் அமர்ந்தனர். பெரியதனக் காரன் தன் புதிய அனுபவத்தால் ஏற்பட்ட உள மாறுதல்களை விளக்கிப் பேசினான்.
‘தம்பி, நான் ஒரே கடவுள்தான் உண்டு என்ற உறுதியான நம்பிக்கை உடையவன். குட்டித் தெய்வங்களிலோ, பேய்களிலோ எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆயினும் இன்று உன் மாயம் கண்டு நான் மிகவும் மலைப்படைகிறேன். உன் குட்டித் தெய்வத்தின் மாய ஆற்றல் என் கண்முன்னே ஒரு பேயைக் காட்ட முடியுமா?’ என்றான்.
சின்னத்தம்பி தனக்குள்ளாகத் தேடிய வகைமுறை அவனுக்கு எளிதில் அகப்பட்டது.
‘காட்ட முடியும் அண்ணா! ஆனால், அதன் உருவத்தைக் காண உங்களுக்கு பிடிக்காது!’ என்றான்.
‘அதனால் கேடில்லை. பேய் உருவம் தானே! எப்படி பிடிக்கும்? ஒரு சிறிது காட்டிப் பின் மறைத்து விடச் சொல்லு!’ என்றான்.
சின்ன தம்பி மகிழ்ந்தான்.
"அப்படியே காட்டுகிறேன். அண்ணா!’ என்றான்.
அவன் கையை இரு தடவை மெல்ல அழுத்தினான். ‘கிரீச், கிரீச்’ என்ற குரல் எழுந்தது.
குரலை மொழி பெயர்க்கும் பாவனையில் அவன் பேசினான்.
‘இதோ இருக்கும் பெட்டி பூட்டப்பட்டுத்தான் இருக்கிறது. திறவுகோலால் அதை மெல்லத் திறவுங்கள். சிறிது திறந்து பார்த்த வுடன் அடைத்துப் பூட்டி விடுங்கள். ஏனெனில் அதில் ஒரு பேய் மனித உருவெடுத்துக் குந்திக் கொண்டிருக்கிறது’ என்றான்.
அணங்கு தன் செயல் வெளிப்பட்டு விடுமோ என்று நடுங்கினாள். சின்னத் தம்பியின் முகத்தை அச்சத்துடன் நோக்கினாள். அதிலிருந்த அமைதி அவள் அச்சத்தைச் சிறிது தணித்தது.
மனைவியிடமிருந்து திறவுகோல் வாங்கி, கணவன் மெல்லப் பெட்டியைத் திறந்து பார்த்தான். குருக்கள் உருவங்கண்டதே, அது பேயின் உருவம்தான் என்று அஞ்சி, திடுமெனப் பெட்டியை அடைத்து மீண்டும் பூட்டினான். அவனுக்குக் குட்டித் தெய்வத் திடம் நம்பிக்கை, பேய் நம்பிக்கை எல்லாம் ஏற்பட்டு விட்டது!
பெரிய தனக்காரன் மனைவிக்கிருந்த அச்சமும் பேரளவு நீங்கி, அவள் ஒரு பெருமூச்சுவிட்டாள். அவள் கொண்டுவந்து வைத்த வெற்றிலைப்பாக்கை இருவரும் போட்டுக் கொண்டனர்.
பெரியதனக்காரன் எப்படியாவது சாக்கிலுள்ள குட்டித் தெய்வத்தைச் சின்னத் தம்பியிடமிருந்து பெற்றுவிட விரும்பினான். சின்னத்தம்பியோ அதை விட்டுப் பிரிய ஒரு சிறிதும் ஒருப்படவில்லை. ‘மரக்கால் மரக்காலாகப் பொன்னைக் கொட்டியளந்து தந்தாலும் எனக்கு வேண்டாம். இந்த உயிர்த் துணையை நான் பிரிந்து வாழ மாட்டேன்’ என்றான்.
‘ஒரு மரக்கால் பொன்னே தருகிறேன். அதை என் நட்புக்காகத் தந்தேயாக வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தான் பெரியதனக்காரன்.
‘மரக்கால் பொங்கிவழியப் பொன்னை நான் பார்க்கட்டும். அதற்குப் பின் ஒருவேளை உங்கள் நற்குணத்தையும் நட்பையும் எண்ணி நான் ஒத்துக்கொள்ளக் கூடும்!’ என்றான் சின்னத்தம்பி.
மரக்காலைக் கொண்டுவந்து பொன்னைக் கொட்டி நிறைத்தான் பெரியதனக்காரன்.
அவன் மனைவி தன்னிடமிருந்த பொன் காசுகளைக் கொட்டி அது பொங்கிவழியச் செய்தாள்.
’உங்கள் இருவர் அன்பையும் எண்ணித்தான் இதைக் கொடுக்க இசைந்தேன். ஆனால், பொன்னை வைத்துத் தள்ளிக் கொண்டுபோக ஒரு தள்ளுவண்டியையும் நீங்கள் கொடுக்க வேண்டும்! என்றான் சின்னத்தம்பி.
‘கட்டாயம் தருகிறேன். ஆனால் அந்தத் தள்ளு வண்டியை வைத்து நீங்களே இந்தப்பேய் குடியிருக்கும் பெட்டியையும் கொண்டுபோய்விட வேண்டும். அது இங்கே இருக்க எனக்குப் பிடிக்காது. அதற்காக இன்னும் ஒரு மரக்கால் பொன்னைத் தருகிறேன்’ என்றான்.
சின்னத்தம்பி எதுவும் மறுமொழி கூறவில்லை. ஆனால் அதற்குக் காத்திராமல், பெரியதனக்காரன் இன்னொரு மரக்கால் பொன் அளந்து கொட்டி, இரண்டு மரக்கால் பொன்னையும் பேய் குடியிருந்த பெட்டியையும் ஒரு தள்ளுவண்டியில் வைத்தான்.
அதைத் தள்ளிக் கொண்டு சின்னத்தம்பி மகிழ்வுடன் மறுநாள் காலை திரும்பவும் பயணம் புறப்பட்டான்.
வழியில் ஒரு பேராறு குறுக்கிட்டது. அதன்மீது அகலமான ஒரு பாலம் இருந்தது. தள்ளுவண்டியைப் பாலத்தின் நடுவரை ஓட்டிக் கொண்டு சென்று அங்கே அதை நிறுத்தினான். பெட்டியிலிருந்த குருக்கள் கேட்க, அவன் பெட்டியை ஆற்றில் எறியப் போவது போல நடித்தான்.
‘பொன்னைத்தான் வைத்துத் தள்ளுகிறேன். கூட இந்தப் பேயும் பெட்டியும் எதற்கு? இரண்டையும், இந்த ஆற்றில் தள்ளிவிட்டால்தான் நல்லது. பின் தள்ளுவண்டியில் பளு பாதியாகிவிடும்’ என்று அவன் தனக்குள்ளாக, ஆனால் உரத்துக் கூறினான். அத்துடன் கூறியபடியே செய்பவன்போல, பெட்டியை வண்டியிலிருந்து உருட்டினான்.
குருக்கள் இதுவரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருந்தான். பெரியதனக்காரனிடமிருந்து தப்பியபின் சிறிது உயிர் வந்திருந்தது. சின்னத் தம்பி பேசியது கேட்டு முன்னிலும் கலவரமடைந்தான். பெட்டிக்குள் கைகால்களே கொள்ளவில்லை. பெட்டியை உருட்டிய போது உடல் உருண்டு புரண்டு கைகால்கள் நெரிந்தன. அவன் உள்ளிருந்தபடியே பூட்டுவாய் வழியே கத்தினான்!
‘நான் இதுவரை பட்டபாடு போதும், அண்ணே! என்னைத் திறந்து விட்டுவிடு, உனக்குக் கோடி புண்ணியம் உண்டு!’ என்றான்.
‘பேயின் புண்ணியம் எனக்கு வேண்டாம்! உன்னைத் தொலைத்தால் தான் எனக்குப் புண்ணியம். இதோ உன்னை ஆற்றில் தள்ளுகிறேன் பார்!’ என்று அச்சுறுத்தினான் சின்னத்தம்பி.
‘நான் பேய் அல்ல, ஏழைக் குருக்கள். உனக்கு ஒரு மரக்கால் பொன் தருகிறேன். என்னைத் திறந்து விட்டுவிட்டு பெட்டியை வேண்டுமானால் ஆற்றில் தள்ளிவிடு’ என்றான்.
‘உன்னை நம்பி நான் விடமாட்டேன். உன்னைத் தள்ளிவிடத்தான் போகிறேன்’ என்று மட்டும் அச்சுறுத்தினான் சின்னத்தம்பி.
‘நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். அத்துடன் திறந்துவிட்ட பின் நானே உன்னைத் தள்ளுவண்டியில் வைத்து என் வீடுவரை தள்ளுகிறேன். நான் மரக்கால் பொன்னை அளக்கும்வரை என் கழுத்தில் கயிறிட்டு இழுத்துச் செல்லவிடுகிறேன்’ என்று குருக்கள் மீண்டும் மீண்டும் மன்றாடினான்.
சின்னத்தம்பி தன்னிடமிருந்த மேல் துண்டைக் கயிறாக முறுக்கினான். பெட்டியை ஒரு சிறிதே திறந்தான். குருக்கள் தலை வெளிவருமுன், கழுத்தைச் சுற்றிச் சுருக்கிட்டான். வெளிவந்த பின் பெட்டியை ஆற்றில் தள்ளிவிட்டு. சுருக்கைக் கையில் பிடித்த படியே தள்ளு வண்டியில் அமர்ந்தான்.
நல்லகாலம்! குருக்கள் வீடு ஊருக்கு வெளியே இருந்தது. அத்துடன் அவன் பணம் அவன் தோட்டத்திலேயே புதைக்கப் பட்டிருந்தது. நேராகத் தோட்டத்துக்கு வண்டியை இழுத்துச் சென்றான்.
புதையலில் மரக்காலைவிடப் பெரிதான பானை நிறையத் தங்கக் காசுகள் இருந்தன. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆர்வத்தில் அவன் அது முழுவதையுமே சின்னத் தம்பியிடம் கொடுத்தான்.
நான்கைந்து மரக்கால் தங்கத்தையும் பெற்றுச் சாக்கால் மூடித் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு அவன் தன் வீடுவந்து சேர்ந்தான்.
ஐந்து சோடு மாடுகளையே செல்வத்தின் எல்லையாகக் கொண்டிருந்தவன் சின்னத்தம்பி, அத்தனை மரக்கால் பொன்னுக்கே அவன் இப்போது உரியவன் ஆய்விட்டான். தன்னை ஏளனமாக மதித்த பெரிய தம்பி அறியும்படி இதைக்காட்ட அவன் எண்ணினான். ஆகவே தானியங்கள் அளப்பதற்கென்று அவனிடம் ஒரு மரக்கால் கேட்டனுப்பினான்.
சின்னத்தம்பி திரும்பி வந்துவிட்டதறிந்த பெரியதம்பி வியப்படைந்தான். செல்வவளம் தோன்ற மரக்கால் கேட்டனுப்பியது கண்டு அவன் இன்னும் பொருமினான். அளப்பது வரகு சாமையாகத்தான் இருக்குமோ, அல்லது சோளம், நெல் போன்ற உயர் கூலங்களா என்றறிய அவன் விரும்பினான். ஆகவே மரக்காலினடியில் சிறிது பசையுள்ள மை பூசி அனுப்பினான்.
பெரிய தம்பியிடம் தன் பெருமையைக் காட்ட நினைத்த சின்னத் தம்பி தானே மரக்காலை வெற்று மரக்காலாக அனுப்பாமல் சில பொற்காசுகளிட்டு அனுப்பியிருந்தான். ஏனெனில் பெரிய தம்பி செய்திருந்த சூழ்ச்சி அவனுக்குத் தெரியாது. மரக்காலினுள்ளிருந்த தங்கக் காசுகளுடன், அதற்குச் சான்று பகர்வதைப்போல, அடியிலும் சில பொன் காசுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. இரண்டையும் கண்ட பெரியதம்பிக்குப் பொறாமை தீ பற்றியெறிந்தது. ஆயினும் அவன் நட்புரிமையை விடாமல், சின்னத் தம்பியைக் கண்டு அளவளாவச் சென்றான்.
‘மாட்டுத் தோல்கள் விற்கச் சென்ற உனக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது?’ என்று அவன் கேட்டான்.
அவன் தனக்குச் செய்த தீமையைச் சின்னத்தம்பி மறக்கவில்லை. சும்மா இருந்தால் இன்னும் தீமையே செய்யத் திட்டமிடுவான் என்பதையும் அவன் குறிப்பால் அறிந்தான். ஆகவே அவனைத் தண்டிக்கத் திட்டமிட்டான். குறும்பாகப் பேசினான். ஆனால் அவன் பேச்சிலும் நடிப்பிலும் இதை எவரும் கண்டுகொள்ள முடியாது.
‘மாட்டுத்தோல் தந்த செல்வம்தான் இது. அது மட்டுமல்ல. நீ செய்த உதவியால் வந்த செல்வம்தான் இது. நோய்ப்பட்டோ முதுமைப்பட்டோ செத்த மாடுகளின் தோலல்ல அவைகள். நல்ல நிலையிலே நீ அடித்துக் கொன்றதனால், தோல்களுக்கு அவ்வளவு விலைகிடத்தன’ என்று புன்முறுவலுடன் கூறினான்.
‘அப்படியா சேதி!’ என்ற இரண்டு சொற்கள்தான் பெரிய தம்பியின் வாயிலிருந்து வந்தன.
அவன் சரேலென்று வெளியேறிச் சென்றான்.
சின்னத்தம்பியின் மாடுகளை அடித்தது போலவே, அவன் பெருந்தடி கொண்டு தன் ஐந்துசோடு மாடுகளையும் அடித்தான். ஐந்து சோடு மாடுகளின் தோலையும் உரித்து உலர்த்தினான். அவற்றைச் சாக்கிலிட்டுக் கொண்டு, சின்னத்தம்பியைப் போலவே புறப்பட்டான்.
அவனும் தன் நிலபுலங்களையும் வீட்டையும் தன் உறவினரிடமே விட்டுச் சென்றான்.
உறவினரில் சிலர் அவன் செயல் கண்டு அவனைக் கண்டித்தார்கள். சிலர் அவனுக்குப் பைத்தியம் என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், அவன் அவர்களையெல்லாம் பார்த்துச் சிரித்தான்.
‘உங்களுக்கு என்ன தெரியும்! இது பணம் திரட்டப் புதுவழி. இதனால் அந்தச் சல்லிப்பயல் சின்னத்தம்பி எவ்வளவு பணம் ஈட்டிவிட்டான் தெரியுமா? எல்லாம் சில நாட்களில் நீங்கள் பார்ப்பீர்கள்.’ என்று இறுமாப்புடன் கூறிவிட்டுச் சென்றான்.
தோல் வாணிகர் தெருவில் சென்று. ‘மாட்டுத்தோல் வேண்டுமா! மாட்டுத்தோல்!’ என்று கூவினான்.
சிலர் கூப்பிட்டு விலை கேட்டனர்.
‘ஒரு சோடு மாட்டுத்தோல் மரக்கால் பொன்’ என்றான் அவன்!
சிலர் அவனைப் பைத்தியக்காரன் என்று கருதிப் பேசாமல் போயினர். சிலர் அவ்வாறே முகத்துக்கு நேரே சொன்னார்கள். சிலர் ‘இவ்வளவு பணம் வணிகத் தெரு முழுவதுமே கிடையாதே’ என்றனர்.
ஆனால், அவனோ, ‘பணம் இல்லையானால் பேசாமல் இருந்து தொலையுங்கள். இது செத்த மாட்டுத் தோல் அல்ல. நல்ல வேலை செய்துவந்த என்னுடைய மாடுகள். நானாகத் தடியால் அடித்துக் கொன்று தோலை உரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். இப்படிப் பட்ட மாட்டுக்கு ஒரு மரக்கால் பொன் என்பது உங்களுக்குத் தெரியாதா!’ என்று கேட்டான்.
அவன் பைத்தியம்தான் என்று எல்லாரும் முடிவு செய்தனர். அந்தத் தெருவில் ஒருவரும் வந்து விலை கேட்கவில்லை. ஆனால், அவன் தெருத் தெருவாகச் சென்றான். அவன் பைத்தியக்காரன் என்று கேள்விப்பட்டுச் சிறுவர், சிறுமியர், குறும்பர், வேலையற்றுத் திரிபவர் கும்மாளத்துடன் அவனைச் சூழ்ந்து செல்லத் தொடங்கினர்.
தெருத்தெருவாக அவன் சுற்றிக்கொண்டே இருந்தான். அவன் விற்கவும் செய்யாமல், போகவும் செய்யாமல் ஓயாது ஒரு மரக்கால் பொன் விலை கூறுவது கேட்ட சிலருக்குக் கோபம் வந்தது. அவர்கள் அவனை உலுக்கினர்! ‘நேர்மையான விலை கூறுகிறாயா?’ அல்லது இந்தத் திசைக்கு வராமல் போகிறாயா!’ என்றனர்.
‘நான் கேட்பதுதான் நேர்மையான விலை! அது தந்தால்தான் விற்பேன்!’ என்றான் அவன்.
ஒரு சில குறும்பர் ‘அவன் பைத்தியக்காரன்டா பைத்தியம்!’ என்று கூவினர். வேறு சிலர் ‘ஒரு மரக்கால் பொன், ஒரு மரக்கால் பொன்’ என்று கத்தினர். அவன் சிலரை அடிக்கக் கிளம்பினான்.
அதற்குள் சிலர், அவன் தோலைத் தட்டிப் பறித்துச் சென்றனர்.
‘ஐயோ, என் செல்வம் பறிபோய் விட்டதே! மரக்கால் கணக்கான பொன்னைக் கொள்ளை கொண்டு விட்டார்களே!’ என்று கடைகடையாகப் புகுந்து அவன் ஓலமிடத் தொடங்கினான்.
குறும்பர்களும் சிறுவர் சிறுமியர்களும் சூழ்ந்து கூவி வாணிகத்திற்கே தொல்லை கொடுத்தனர்.
வணிகர்கள் தொல்லை பொறுக்க மாட்டாமல் அவனைப் பிடித்து நையப் புடைத்தனுப்பினர். குறும்பரும் சிறுவர் சிறுமியரும் அத்துடன் விடாமல் கல்லாலும் கட்டியாலும் அவனைத் துரத்தி விடை கொடுத்தனுப்பினர்.
பெரிய தம்பி தன் செல்வத்துக்கும் தன் பெருமைக்கும் உரிய மாடுகளை இழந்து, மானமும் மதிப்பும்போய் வீடு நோக்கித் திரும்பினான். ஆனால் வீட்டிலுள்ளவர் முகத்திலோ, உறவினர் முகத்திலோகூட இனி விழிக்க முடியாது என்று கண்டு அவன் துயரத்தாலும் கோபத்தாலும் கனன்றெழுந்தான்.
தன்னை ஏமாற்றியதற்காகச் சின்னத் தம்பியைப் பழி தீர்த்து விடுவதென்று அவன் துணிந்தான். சின்னத் தம்பி வீடுநோக்கி நடந்தான்.
’பெரிய தம்பியின் குணம் சின்னத் தம்பிக்குத் தெரியும். தன் மாடுகளைக் கொன்றதுபோல அவன் மாடுகளையும் கொல்லட்டும் என்று தான் இப்படிக் குறும்பாகப் பேசியிருந்தான். ஆனால், அதன் தொலை விளைவுகளை அவன் அப்போது எண்ணிப் பார்க்கவில்லை. அவன் மாடுகளைக் கொன்று தோல்களைச் சாக்கிலிட்டுக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டான் என்று கேட்டபோது அவனுக்குத் தன் செய்நன்றியின் இசைவுகேடு நன்கு தெரிந்தது.
ஏமாற்றமும் தோல்வியும் கண்டபின் பெரியதம்பியின் கோபம் தன்னை அழித்துவிடப் போதியதாயிருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அவன் வருமுன் ஓடிவிடலாமா என்று அவன் முதலில் நினைத்தான். ஆனால், முன்போல இப்போது அவன் அவ்வளவு எளிதாக ஊரைவிட்டுச் செல்ல முடியாது. தன் செல்வத்தை விட்டுச்செல்ல அவன் விரும்பவில்லை. ஆகவே மீண்டும் தற்காலிகமாகவாவது பெரிய தம்பியிடமிருந்து தப்புவதற்கான வழிவகைகளை அவன் ஆராய்ந்தான்.
காலம் அவனுக்கு வழிகாட்டியுதவிற்று. அப்போது அவன் அன்புக்குரிய ஒரே உறவாயிருந்தவள், அவன் பாட்டி. திடுமென வந்த அவன் புதுவாழ்வின் மகிழ்ச்சி தாங்காமலே அவள் இறந்துவிட்டாள். இடருக்குமேல் இடர் வந்துவிட்டதே என்று கருதி, அழுதபடியே. இறந்துபோன பாட்டியின் முகத்தைப் பார்த்தான். பாட்டியின் முகம் தெளிவாகவே இருந்தது. கண்ணும் கடைசி நேரத்தில் இருந்தபடி திறந்தேயிருந்தது. அவன், அவளைத் தன் படுக்கையிலேயே சார்த்தி வைத்தான். தன் போர்வையாலேயே மூடினான். பின், நிலைப்பெட்டியருகே ஓர் ஒதுங்கிய மூலையில் சென்று சாய்ந்து உறங்கினான்.
சீற்றத்துடன் சின்னத்தம்பியின் வீடுநோக்கி வந்த பெரிய தம்பி, நள்ளிரவாகும்வரை அருகே பதுங்கி இருந்தான். ‘விழித்துக் கொண்டிருக்கும் போதே போனால், இன்னும் ஏதாவது சொல்லி ஏமாற்றுவான். ஆகவே பயல் நன்றாய் கண் மூடட்டும்; என் மாடுகளைத் தீர்த்தபடியே அவனையும் தீர்த்து விடுகிறேன்’ என்று அவன் திட்டமிட்டான்.
நள்ளிரவில் அவன் மெள்ள வீட்டினுள் புகுந்தான்.
கதவு திறந்து கிடந்தது கண்டு அவன் வியப்படைந்தான். ஆனால், அது பற்றி அவன் நீடித்துச் சிந்தனை செலுத்தவில்லை. அது தெய்வத்தின் உதவி என்று கருதினான்.
கட்டிலில் சாய்ந்துகிடந்த உருவை அவன் சின்னத்தம்பி என்றே நினைத்தான்.
தலையில் ஓங்கி ஓரடி அடித்தான்.
குரல் எதுவும் கேட்கவில்லை. சின்னத்தம்பி ஓரடியிலேயே மாடுகள் போல மடிந்துவிட்டான் என்று அவன் கருதிக் கொண்டான். ஆயினும், உடலிலும் இரண்டடி கொடுத்து உறுதியை மேலும் வலுப்படுத்திக் கொண்டான்.
ஒரு பெரிய காரியத்தைச் செய்துமுடித்துவிட்ட மன நிறைவுடன் அவன் வீடு சென்றான்.
பெரிய தம்பியின் செயல்களை எல்லாம் சின்னத் தம்பி மூலையிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தனக்கு வர இருந்த இடர் எத்தகையது என்பதையும், பெரிய தம்பி எத்தனை கொடியவன் என்பதையும் அவன் உணர்ந்தான்.
‘நல்ல காலம். பாட்டி முன்பே இறந்து போயிருந்தாள். இல்லாவிட்டால் இந்த அடியால் அவளுக்கு எவ்வளவு அவதி ஏற்பட்டிருக்கும்! இருக்கட்டும், இதற்கெல்லாம் சரியான பாடம் படிப்பிக்காமல் இருந்தால் நான் சின்னத் தம்பியில்லை’ என்று அவன் உள்ளூரப் புகைந்து கொண்டான்.
பாட்டி இறந்த செய்தி அதுவரை யாருக்கும் தெரியாது. ஆகவே, அவன் தன் பெட்டி வண்டியில் பாட்டியைக் கொண்டு போய், உட்கார்ந்திருக்கும் நிலையில் வைத்தான். உலாவச் செல்லுவதற்கு உடுத்தியதுபோல சிறந்த ஆடையணி மணிகளை உடுத்தினான்.
வழக்கமாகப் பாட்டியும் அவனும் வெள்ளிக்கிழமை தோறும் கோயில் போவதுண்டு. பணம் வந்தபின் ஒரு வெள்ளிக்கிழமை பெட்டி வண்டியில் போய் இருந்தான். அன்றும் வெள்ளிக் கிழமையானதால், கோயிலுக்குச் செல்லும் பாவனையில் வண்டி ஓட்டிச் சென்றான்.
கோயிலுக்குச் செல்லும் வழியில் ஓர் அருந்தகம் இருந்தது. அதன் உரிமையாளன் பெருஞ்செல்வன். ஆனால், அவன் ஒரு கஞ்சன். அத்துடன் முன் கோபி. வேலையாட்களுக்கு அவன் நேர்மை யாகக் கூலி கொடுக்காததாலும், அவன் கோபத்துக் கஞ்சியும் எவரும் அருந்தகத்தில் அவன் கீழ் வேலைபார்க்க மறுத்தனர். அது அவனுக்கும் பிடித்தமாகவே இருந்தது. தன் ஏழை உறவினனான ஒரு சிறுவனுடன் தானே அருந்தக வேலைகளை அவன் நேரிலிருந்து நடத்தினான்.
சின்னத்தம்பி அந்த அருந்தகத்தருகில் வண்டியை நிறுத்தினான். தான் மட்டும் இறங்கி அருந்தகத்தில் சிற்றுண்டியும் குளிர் நறுநீரும் பருகச் சென்றான். தனக்கு வேண்டியவற்றைக் கேட்ட பின்பு. வண்டியிலிருக்கும் பாட்டிக்கும் வேண்டியவற்றைக் கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
சின்னத்தம்பியின் செல்வநிலை அறிந்து உரிமையாளன் தானே வண்டியருகே சென்றான். போகும் போது சின்னத்தம்பி அவனுக்கு ஓர் எச்சரிக்கை தந்தான்.
‘அண்ணா! என் பாட்டிக்கு வயது ஆகிவிட்டது. காது மிகவும் மந்தம். மிக உரத்துப் பேசினால்தான் கேட்கும்!’ என்றான்.
‘சரி, அப்படியே!’ என்று கூறி உரிமையாளன் சென்றான்.
அவன் சற்று உரக்கவே குரல் கொடுத்தான். ‘என்ன வேண்டும்? என்ன அருந்துகிறீர்கள்?’ என்று கேட்டுப் பார்த்தான். ‘தோசை வேண்டுமா, வடை வேண்டுமா?’ என்று உச்சக் குரலில் கேட்டான். ஒன்றுக்கும் மறுமொழியில்லாததால், அவன் கோபம் எல்லைமீறிற்று.
‘இன்னும் கேட்கவில்லையா, செவிட்டுக் கிழம்!’ என்று அப்பளக் கட்டையால் தலையைத் தட்டினான். அடையில்லாது குந்தவைக்கப்பட்ட உயிரில்லாத உடல் அது என்று அவனுக்கு எப்படித் தெரியும்? அது கீழே சாய்ந்தபோது அவன் அஞ்சித் தானே அலறிவிட்டான்.
இதற்கே சின்னத்தம்பி காத்திருந்தான்; அவன் உடனே எழுந்தோடி வந்தான்.
‘ஐயோ படுபாவி! என் உயிருக்குயிரான பாட்டியைக் கொன்று விட்டாயடா! பார்! மண்டையில் நீ இடித்த இடி! உன்னை விடப்போவதில்லை. வா காவல் நிலையத்துக்கு!’ என்று இழுத்துப் பிடித்தான்.
அருந்தக உரிமையாளன் தன் முன்கோபத்தில் எத்தனையோ பழிகளைச் செய்ததுண்டு. ஆனால், என்றும் இதற்காக இன்றளவும் வருந்தியதில்லை; இன்றளவும் இவ்வளவு அஞ்சிய தில்லை; அவன் சின்னத்தம்பி காலில் விழுந்து கெஞ்சினான்.
‘ஐயோ, நான் ஆய்ந்தோய்ந்து பாராமல் நடந்துவிட்டேன். வேண்டுமென்று செய்யவில்லை. தெரியாமல் செய்துவிட்டேன்! என் பிழை பொறுத்து என் மானத்தைக் காப்பாற்று. பாட்டியை ஆடம்பரமாக நானே அடக்கம் செய்கிறேன். என் செல்வத்தையெல்லாம் உனக்கே தந்துவிட்டு வேற்றூர் போய்விடுகிறேன்’ என்று பலவாறாக மன்றாடினான்.
சின்னத்தம்பி முதலில் மிகவும் கோபப்படுபவனாக நடித்து, இறுதியில் அவனுக்கு இரங்குவதாகப் பாவித்தான்.
சின்னத்தம்பியின் விருப்பப்படியே, தாமதமும் ஆரவாரமும் இல்லாமல், ஆனால், எல்லாச் சீர் சிறப்புகளுடனும் கிழவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வாக்களித்தபடி அருந்தக உரிமையாளன் தன்னிடமிருந்த காசு பண முதலியவற்றை யெல்லாம் சின்னத்தம்பிக்குத் கொடுத்தான். அத்துடன் அருந்தகத்தையும் அதன் பொருள்களையும் விற்று அந்தப் பணத்தையும் அளித்து விட்டு வேற்றூர் சென்றான்.
பெருஞ் செல்வத்தை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சின்னத்தம்பி வீடுவந்து சேர்ந்தான்.
சின்னத்தம்பியைத் தன் கையாலேயே கொன்றொழித்து விட்டதாகக் கருதிப் பெரிய தம்பி மிகவும் அமைதியுடன் வாழ்ந்தான். ஆனால், அவன் முன்னிலும் பெருஞ் செல்வம் உடையவனாய்விட்டது கேட்டு அவன் மலைப்புற்றான். முன்போல நட்பு முறையிலேயே காண வந்தான். ‘நான் என் கையாலேயே அடித்துக் கொன்று விட்டேனே. நீ எப்படித் திரும்பவும் பிழைத்தாய்! முன்புள்ள செல்வமல்லாமல் புதிய செல்வம் எங்கிருந்து வந்தது!’ என்று கேட்டான்.
’இந்தத் தடவை நீ உண்மையிலேயே எனக்குப் பேருதவி செய்திருக்கிறாய்.
’நான் அன்றிரவு என் படுக்கையில் படுக்கவில்லை; என் பாட்டி நோயாய் இருந்தாள். அவளைத்தான் அதில்படுக்க வைத்தேன். கட்டிலின் கீழேதான் நான் படுத்திருந்தேன். பாட்டியை நீ அடித்துக் கொன்றதை நான் பார்த்துப் பதறினேன். ஆயினும், இறந்து போன உயிருக்கு என்ன செய்வது என்று இருந்தேன்.
‘பாட்டியின் பிணத்தை அடக்கம் செய்யத்தான் கொண்டு சென்றேன். ஆனால், வழியில் ஒரு மருத்துவச் செல்வர் வந்தார். இறந்த உடலை வீணாக ஏன் எரிக்கிறாய். அடித்துக் கொல்லப் பட்ட உடலானதால் அது எனக்கு மிகவும் பயன்படும். என் உயிர் மருந்துகளின் சக்திகளைப் பரிசோதனை செய்துவிட்டு நானே அடக்கம் செய்துவிடுகிறேன். உனக்கு நிறையப் பணமும் தருகிறேன்’ என்றார்.
அந்த வகையில் வந்த செல்வம் தான் இது என்று அருந்தக உரிமையாளன் தந்த செல்வக் குவையைக் கொட்டிக் காட்டினான்.
முன் தான் ஏமாந்த கதையைப் பெரிய தம்பி மறந்து விட்டான். தனக்கும் ஒரு பாட்டி இருக்கிறாள் என்ற நினைவு தான் அவன் உள்ளத்தில் மேலெழுந்து நின்றது.
பாவம்! அன்று அவன் பேரவாவுக்கு அவன் பாட்டி பலியானாள்.
அவன் பாட்டியின் உடலைப் பெட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டு இரவே புறப்பட்டான். விடியற்காலைப் பக்கத்து நகரத்திலிருந்த ஒரு பேர்போன மருத்துவச் செல்வர் வீட்டண்டை வண்டியை நிறுத்தினான்.
மருத்துவர், வாடிக்கைக்காரர் எவரும் வரும் நேரம் ஆகவில்லை. ஆகவே, அவர் அப்போதுதான் எழுந்திருந்து நிலைக்கண்ணாடிமுன் முகம் கழுவிக் கொண்டிருந்தார்.
வண்டியின் அரவம் கேட்டு ஏதோ அயலூர் வாடிக்கைக்காரர் வந்திருப்பதாக அவர் எண்ணினார்.
பெரியதம்பி வந்ததும். ’என்ன செய்தி? நோய் உங்களுக்கா? அல்லது வேறு யாராவது உறவினருக்கா? என்று கேட்டார்.
‘யாருக்கும் நோயில்லை. தங்களிடம் விற்பனைக்கு ஓர் ஆள் கொண்டு வந்திருக்கிறேன்’ என்றான் பெரியதம்பி. ‘விற்பனைக்கு ஆளா!’
மருத்துவப் பெரியார் ஒன்றும் தோன்றாமல் விழித்தார்.
‘உயிருடனுள்ள ஆளல்ல; செத்துப்போன ஆள்தான்!’
மருத்துவர் முன்னிலும் மிகுதியாக விழித்தார்.
‘பிணமா?’ என்று கேட்டார்.
’பெரிய தம்பி முகத்தில் புத்தொளி தோன்றிற்று.
‘ஆம்!’ என்றான்.
‘சாவுக்குப்பின் சோதனையா?’ என்றார்.
இப்போது பெரிய தம்பி ஒன்றும் புரியாமல் விழித்தான்.
‘இல்லை. நேற்றுக் கொல்லப்பட்ட பிணம். விற்கக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்றான்.
மருத்துவர் கைகால் பதறிற்று. ‘ஏதோ பைத்தியக் காரனிடம்தான் அகப்பட்டுக் கொண்டோம் போலிருக்கிறது’ என்று எண்ணினார்!
அவர் முகத்தில் தோன்றிய ஐயுறவைத் தீர்க்கப் பெரிய தம்பி முயன்றான்.
‘கொல்லப்பட்டது வேறு யாருமல்ல, என் பாட்டிதான். கொன்றதும் வேறுயாருமல்ல, நான்தான், உங்களிடம் கொண்டுவந்து விற்பதற்காகவே கொன்றேன்’ என்றான்.
மருத்துவர் அச்சம், கோபமாக மாறிற்று.
‘உடனே வெளியே போகிறாயா, சந்து சந்தாகப் புடைத்துக் காவல் கூடத்துக் அனுப்பவா? போ, என் வேலையாள் வருமுன் மறைந்தோடப் பார்!’ என்றார்.
பெரிய தம்பிக்கும் அச்சம் தோன்றிவிட்டது. மறு பேச்சுப் பேசாமல் வண்டியில் ஏறி ஊருக்கே மீண்டான்.
பாட்டியைக் காணாமல் தேடிய அவன் உறவினர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். ‘பாட்டிக்கு என்ன ஆயிற்று, எங்கே கொண்டுபோனாய்?’ என்று நச்சரிக்கத் தொடங்கினர்.
வாழ்க்கையில் முதல் தடவையாக அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டான். ‘பாட்டிக்குத் திடீரென்று நள்ளிரவில் வலி கண்டதால், அடுத்த ஊர் மருத்துவரிடம் எடுத்துச் சென்றேன். வழியிலேயே உயிர் போய்விட்டது. ஆகவே திரும்ப வேண்டியதாயிற்று!’ என்று சமயத்துக் கேற்ற கதை கட்டினான். பாட்டி அடக்கம் செய்யப்பட்டாள்.
‘சின்னத் தம்பியின் குறும்புகளால் மாட்டுச் செல்வமிழந்து, பாட்டியையும் இழந்து, மானமும் மதியும் கெட்டுவிட்டேன். இனி அவன் தப்ப வழி கொடுக்காமல், ஆழ்ந்த திட்டமிட்டு அவனை ஒழித்துவிடவே வேண்டும்’ என்று பெரிய தம்பி தனக்குள் கூறிக்கொண்டான்.
அவன் தன் கோபத்தை வெளியில் காட்டவில்லை.
சின்னத்தம்பி இப்போது ஏமாந்தான். தன் வழக்கமான முன் கருதலை மறந்தான்.
திடுமென ஒருநாள் மாலையில் பெரியதம்பி சின்னத் தம்பியைப் பிடித்து. ஒரு பெரிய சாக்கினுள் இட்டு அடைத்து விட்டான். எதிர்பாராத இந்தச் செயலால் சின்னத்தம்பி உண்மையிலேயே நம்பிக்கையிழந்தான். ‘இத்தனை நாளும் திறமையால் ஏமாற்றினேன். இப்போது என்னைக் காப்பாற்றுவர் யார்?’ என்று மனமிடிவுற்றான்.
இருட்டத் தொடங்கியதும் பெரிய தம்பி அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆற்றை நோக்கிச் சென்றான்.
வழியில் ஒரு நாற்சந்தி குறுக்கிட்டது.
சாக்கின் பளுவால் அவன் முற்றிலும் களைத்து போனான். சாக்கைக் கீழே வைத்துவிட்டுச் சற்று இளைப்பாற எண்ணினான்.
கூப்பிடு தொலைவில் ஓர் அருந்தகம் இருந்தது. சிறிது சூடான சுடுநீர் அருந்தினால், குறை வேலையைத் தெம்புடன் முடிக்கலாம் என்று அவன் கருதினான்.
பாதையில் சந்தடி இல்லை. ஆள் நடமாட்டம் ஓய்ந்துவிட்டது. சாக்கு கட்டப்பட்டிருந்ததனால், சின்னத் தம்பி தப்பியோடி விடவும் முடியாது. இவற்றை எண்ணி அவன் சாக்கை ஒதுக்கி வைத்துவிட்டுச் சென்றான்.
சின்னத்தம்பி சாக்கிற்குள்ளிருந்து உருண்டு புரண்டு பார்த்தான். ஆனால், கைகால்களைக்கூட அசைக்க முடியவில்லை. இன்னும் சிறிதுநேரத்தில் சாவுதான் என்று கருதி, தன் இறுதி வணக்கத்தை இறைவனுக்குச் செலுத்தினான்.
ஆடு மாடுகளின் பெருந்திரள் அவ்வழி கடந்து சென்றது. அவற்றை மேய்த்து வந்தவன் தள்ளாத கிழவன். அவன் சின்னத்தம்பி இருந்த பக்கமாகவே கால்நடைகளை ஒதுக்கி ஒட்டி வந்தான். கால்நடைகளில் பல சாக்கின்மீது மிதித்தும் சில அதன் மீது சாய்ந்தும் சென்றன. சாக்கு அடிக்கடி உருண்டது. சில சாக்கினுள் பருத்திக் கொட்டையோ தானியமோ இருக்கக்கூடும் என்ற எண்ணத்தால் கட்டைக் கடித்திருந்தன. கட்டு இதனால் சிறிது தளர்ந்தது சாக்குக்குள் இருந்த சின்னத்தம்பி இதனால் சிறிது உடலசைக்கவும் குரலெழுப்பவும் முடிந்தது.
‘இந்திரனுலகம் எனக்கு வேண்டாம். இந்திரன் உலகம் எனக்கு வேண்டாம்’ என்று அவன் கதறினான்.
சாக்கு கதறுவது கண்டு முதலில் கிழவன். அஞ்சி ஒதுங்க எண்ணினான். ஆனால், கதறிய வாசகம் வியப்பூட்டிற்று. ‘என்ன தம்பி! இந்திரன் உலகம், இந்திரன் உலகம் என்கிறாய்? உனக்குப் பைத்தியமா? உன்னை யார் எதற்காகச் சாக்குக்குள் வைத்துக் கட்டி இருக்கிறார்கள்?’ என்று கேட்டான்.
‘பைத்தியம் எனக்கல்ல, உனக்குத்தான்!’ என்று கோபத் தொனியில் சின்னத்தம்பி தொடங்கினான். ‘இந்திரனுலகுக்கு இந்தச் சிறுவயதிலே போக நான் விரும்பவில்லை. ஆனால், என் நண்பர்கள் இன்றே அனுப்பப் போகிறார்கள்’ என்றான்.
‘இந்திரனுலகா! அதற்கு எப்படி உன்னை அனுப்ப முடியும்?’ என்று கிழவன் கேட்டான்.
‘இவ்வளவு வயதாகியுமா உனக்கு இன்னும் தெரியாது! இன்று இந்திரனுக்கு விழாநாள். இந்த நாளில் யாரையாவது ஆற்றில் எறிந்தால். அவர் நேரே இந்திரனுலகம் செல்வார். அதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். ஆனால், இவ்வளவு சிறிய வயதிலேயே போக நான் விரும்பவில்லை!’ என்றான் சின்னத்தம்பி.
‘எனக்கு வயதாயிற்று! என்னை அங்கே அனுப்பப் படாதா!’ என்று கிழவன் ஆவலுடன் கேட்டான்.
‘அப்படியானால் என்னை விரைவில் அவிழ்த்துவிடு; உன்னை அனுப்புகிறேன்’ என்றான் சின்னத்தம்பி.
ஏற்கெனவே கட்டுத் தளர்ந்திருந்தது. கிழவன் சின்னத் தம்பியை எளிதில் வெளியேற்றினான். அவன் கிழவனை உள்ளே வைத்து இறுகக் கட்டினான்.
‘இந்திரனுலகுக்குச் சென்றால், என்னை மறந்து விடாதே!’ என்று கூறிவிட்டு, சின்னத்தம்பி கால்நடைகளை விரைந்து ஒட்டிக்கொண்டு சென்றான்.
‘உன்னை என்றும் மறக்கமாட்டேன். நீ செய்த உதவியை இந்திரனிடம் சொல்லி உனக்கு அவன் ஆதரவு தேடுவேன்’ என்று கிழவன் கூற எண்ணினான். ஆனால் கட்டு இறுக்கமாயிருந்ததால், அவன் குரல் எழவில்லை.
சிறிது நேரத்துக்குள் பெரிய தம்பி எழுச்சியுடன் வந்தான். சாக்கின் பளு மிகவும் குறைந்தது போலிருந்தது. சுடுநீர் அருந்தியதால் வந்த தெம்பு இது என்று கருதிக் கொண்டு, சாக்கை அவன் ஆற்றில் கொண்டு போய் எறிந்தான். எறியுமுன் அதைப் பெரிய பாறாங்கல்லுடன் கட்டியதனால் அது விரைந்து நீரில் அழுந்திற்று.
‘இனி ஒழிந்தது சனி!’ என்று கூவியபடி கைகளை வீசிக் கொண்டு அவன் நடந்தான்.
சின்னத்தம்பி கால்நடைகளை ஊர் வெளியிலுள்ள ஒரு சோலைக்கு ஓட்டினான். இரவெல்லாம் கால்நடைகளைக் காத்துக் கொண்டு தூங்காமல் விழித்தான். விடியற்காலையில் அருகிலிருந்த சிறு குளத்தில் கால்நடைகளைக் குளிப்பாட்டி, தானும் குளித்துவிட்டு வீடுநோக்கி நடந்தான்.
அவன் கால்நடைகளுடன் வருவதைப் பெரியதம்பி கண்டான். இறந்துவிட்டவன் ஆவியோ என்று அவன் அஞ்சினான். ஆனால், அணுகிவந்தபோது சின்னத்தம்பியே அவனுக்கு வணக்கமும் நன்றியும் தெரிவித்தான்.
‘அண்ணா! நீ கோபக்காரனானாலும் எவ்வளவோ நல்லவன். நீ செய்யும் நன்மையை வேறு யார் செய்வார்கள்!’ என்றான்.
பெரிய தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘உன்னைக் கல்லைக் கட்டி ஆற்றில் மூழ்கடித்துவிட்டு வந்தேனே! எப்படித் தப்பி வந்தாய்?’ என்றான்.
“தப்பி வரவில்லை. நீ நல்ல இடமாகப் பார்த்துத்தான் என்னைப் போட்டாய். நான் நேரே ஓர் அகன்ற புல்வெளியில் சென்று விழுந்தேன். அங்கே இந்திராணி போல ஓர் அரசி அரியணையில் வீற்றிருந்தாள். என்னைப் பேர் சொல்லி அழைத்தாள். என்னை அவிழ்த்து வெளியேற்றினாள். ‘என்னை நீ தஞ்சமடைந்தாய்; உனக்கு என்னிடமிருக்கும் சிறிது செல்வத்தைத் தருகிறேன்’ என்று கூறி இந்தக் கால்நடைகளை என்னுடன் அனுப்பினாள். அதுமட்டுமல்ல. ‘ஆற்றுக்குக் கிழே ஒரு பாதை தண்ணீருக்கடியிலேயே செல்கிறது. அதுவழியாக அரைக்கல் தொலை சென்றால், இந்திரன் இருக்குமிடம் செல்வாய். இவற்றைவிட உயர்ந்த, வளமான செல்வங்கள் தருவான். பெற்றுக் கொண்டு மண் உலகத்துக்குச் சென்று, எங்கள் பெயர் சொல்லி நீடுழி வாழ்!’ என்று அவள் என்னை அனுப்பினாள். இந்திரனைக் கண்டு அச்செல்வத்தைப் பெறத்தான் நான் போகிறேன்” என்றான்.
பெரிய தம்பி பெருவியப்படைந்தான். ஆனால், இத்தடவை அவன் சின்னத்தம்பியை எளிதில் நம்பவில்லை.
‘ஆற்றுக்குக் கீழே ஆடுமாடுகள் ஏது? என்னை ஏன் ஏய்க்கிறாய்!’ என்றான்.
‘ஆற்றில் நீ தானே என்னை எறிந்தாய்? வேறு எங்கிருந்து அவைவர முடியும்? பார்! ஆற்றிலிருந்த ஈரம் என் உடலிலும் போகவில்லை. இவற்றுக்கும் போகவில்லை! இவை உண்மையில் இந்திராணியின் அண்ணன் கடலரசனிடமிருந்துவந்த கடல் கால்நடைகள். இந்திரன் கால் நடைகள் இன்னும் பெரியனவாய் இருக்குமாம்’ என்றான்.
பெரிய தம்பிக்குப் பாதி நம்பிக்கை பிறந்தது.
‘சரி, ஆற்றோடு போகிற நீ வெளியே எப்படி வந்தாய்?’ என்றான். ‘ஆறு வளைந்து வளைந்து போகிறது. அதில் அரைக்கல் போவதற்குள் குறுக்கே நிலவழியாய்ப் போனால் கால் கல்தான் இருக்கும். நான் திரும்பவும் ஆற்றுக்குள் தான் இறங்கப் போகிறேன்’ என்றான்.
பெரிய தம்பிக்கு இப்போது முழுநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. கால்நடைச் செல்வத்தைத் தானே பெற வேண்டும் என்னும் அவாவும் எழுந்தது.
‘இவ்வளவு கால்நடைகள் உனக்குப் போதாதா, தம்பி! இந்திரன் பரிசுகளை நானேபோய்ப் பெறுகிறேன். எனக்கு இந்த ஒரு தடவை உதவி செய்’ என்றான்.
சின்னத்தம்பி வழக்கம்போலச் சிறிது வாதாடிவிட்டுப் பின் வேண்டா வெறுப்புடன் இணங்குவதாகப் பாசாங்கு செய்தான். அத்துடன் பெரிய தம்பியைத் தன்னால் தூக்கிச் செல்ல முடியாது என்றும் சாக்குக் கூறினான்.
‘நீ என்னைத் தூக்கிக்கொண்டு போக வேண்டாம். நானே ஆற்றங்கரைவரை வருகிறேன். நீ சாக்கிலிட்டு ஆற்றில் சரியான இடம் பார்த்துப் போட்டால் போதும்’ என்றான் பெரிய தம்பி.
சாக்கில் இறங்கும் போதும், ‘நேராக நான் கீழே போகவேண்டுமல்லவா? பெரிய கல்லாகப் பார்த்து இரண்டு கல்லை உள்ளேயிட்டுக் கட்டு’ என்றான்.
‘கல் எதற்கு, உன் எடையே போதும்’ என்று கூறிக் கொண்டே, சின்னத்தம்பி இரண்டு கல்லையும் உள்ளே போட்டுக் கட்டினான். பெரிய தம்பி கிழவனைத் தூக்கி எறிந்தபடியே, அவனை நட்டாற்றில் எறிந்தான்.
முந்திய மரக்கால் பொன்னுடனும், அருந்தக உரிமைக் காரன் செல்வத்துடனும் புதிய கால்நடைச் செல்வமும் பெற்றுச் சின்னத்தம்பி சிலநாள் கவலையற்று வாழ்ந்தான். பெரியதம்பி வாணிகம் நாடி வெளியூர் சென்றதாகவே அவன் பெரியதம்பியின் உறவினரிடம் கூறினான். அத்துடன் சின்னாட்களில் யாவரும் பெரியதம்பியை மறந்துவிடுவார்களென்றே அவன் எண்ணி யிருந்தான். ஆனால், திடுமென அவன் நல்ல காலம் அவனை விட்டோடியதுபோலத் தோன்றிற்று.
ஒருநாள், அவன் வீட்டினுள் ஒருவன் யானைமீது வீறுடன் புகுந்தான். அவன் எதிர்கொண்டு வரவேற்று, வந்தவன் முகநோக்கியதே அவன் முகம் கறுத்தது.
வந்தவன் பெரியதம்பியே என்று கண்டு அவன் வியப்பும் அதிர்ச்சியும் நடுக்கமும் கொண்டான்.
கற்களின் பளுவினால் பெரியதம்பியை இட்டுக் கட்டிய சாக்கு விரைந்து ஆழ்ந்தது. ஆனால், கட்டு மிகவும் இறுகி யிருந்ததனால் பெரிய தம்பி நீரில் திக்குமுக்காடி உதறிய உதறலில் கற்கள் சாக்கிலிருந்து பொத்துக் கொண்டு தனித்தனியே அமிழ்ந்தன. அவற்றின் கிழிவாய் வழியே வெளிவந்து பெரியதம்பி நீரில் மிதக்க நேர்ந்தது. ஆயினும் பிழைத்து வந்ததற்காக அவன் மகிழவில்லை ‘இன்னும் கொஞ்சம் பொறுமையுடன் அமிழ்ந்திருந்தால் இந்திரனின் கால்நடைச் செல்வங்கள் பெற்றிருக்கலாமே! இன்னொரு தடவை என்னைக் கட்டி நீரிலிட யார் கிடைப்பார்கள்’ என்றே அவன் தேம்பினான்.
அண்டை நாட்டு அரசன் யானைப்பாகன் அவ்வழி சென்று, அதே இடத்தில் யானையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். பெரியதம்பி அவன் உதவி நாடினான். யானைப்பாகன் வயது சென்றவன். அனுபவ அறிவும் அன்பும் பாசமும் மிக்கவன். பெரிய தம்பியின் விசித்திர வேண்டுதலையும் கதைகளையும் கேட்டு அவன் முதலில் சிரித்தான். பின் மெல்ல அவனுக்குப் புத்தி புகட்டினான். ‘அன்பனே! நீ மிக நல்லவன். ஆனால், சூதற்றவன். உன்னைச் சின்னத்தம்பி எத்தனை தடவை ஏமாற்றியும் உன் கோபத்தாலும் பேரவாவாலுமே நீ துன்பமடைந்து வந்திருக்கிறாய். நான் சொல்வதைக் கேள். பொறுமை, இன்னா செய்பவரையும் பொறுத்தருளல் ஆகியவை மனிதனைத் தெய்வமாக்கும். இவை தமிழர் வணங்கும் தெய்வமாகிய திருவள்ளுவர் பெருமான் அருள் மொழிகள். நீ இவற்றை மதித்து நடப்பதானால் என்னுடனே வரலாம். என் முதுமை காரணமாக அரசன் புதிய பாகனைத் தேடிக் கொண்டிருக்கிறான். உன்னையே அமர்த்தி, என்னிடம் வைத்துப் பழக்குகிறேன்’ என்றான்.
பெரியதம்பி தன் குற்றங்களையும் பேதைமையையும் உணர்ந்து திருந்தினான். சின்னத்தம்பியை நம்புவதையும் விட்டு விட்டான். அவன் மீது வஞ்சம் கொள்வதற்கு மாறாக அவனை உள்ளத்தில் மன்னித்து வாழ்த்தியவனாய் முதிய யானைப் பாகனுடன் சென்றான்.
அண்டையரசனின் புதிய யானைப்பாகனாகிப் பெரியதம்பி முதுமை வாய்ந்த பழைய பாகனைப் பேணித்துணைக் கொண்டான். பாகன், தன் புதல்வி பாவையை அவனுக்கே மணமுடித்துத் தன் செல்வத்தையும் செல்வியையும் அவனிடம் ஒப்படைத்தான். அவன் வாழ்க்கையில் முழுநிறை அமைதி ஏற்பட்டது. சின்னத்தம்பியை உள்ளூர மன்னித்து வாழ்த்திய துடன் அமையாமல் அவனைக் காணவே அவன் வந்திருந்தான்.
சின்னத்தம்பியின் அச்சம் விரைவில் நீங்கிற்று. பெரிய தம்பியின் நல்லெண்ணம் கண்டு. அவனும் தன் பிழைகளுக்கு வருந்தி அவனிடம் மன்னிப்புக் கோரினான். அவன் முன் இழந்த நலங்களை எண்ணி அவனைக் கட்டிக் கொண்டு அழுதான்.
அவர்கள் புத்துறவில் பாவையும் பங்கு கொண்டாள்.
பெரியதம்பியின் தங்கை கோவை. இருவரும் இரட்டைகள். இருநாழிகை நேரமே அவர்கள் முன்பின் பிறந்தவர்கள். பண்பு மாறிய பெரியதம்பி பாவையிடம் ஈடுபட்டதுபோலவே, குணநலம் பெற்ற சின்னத்தம்பி கோவையின் பக்கம் ஈர்க்கப் பெற்றான். பெரியதம்பி, அவர்கள் திருமணம் முடித்துச் சின்னத்தம்பியைச் சின்ன மைத்துனன் ஆக்கினான்.
இரு தம்பியர் பழங்கதைகளைக் கேட்டு இரு நங்கையர் களும் அடிக்கடி சிரிப்பதுண்டு. ஆனால், திருத்தத்துக்குக் கிட்டிய பரிசுகளையும், பரிசுகளின் பரிசுகளாக வந்த குழந்தைச் செல்வங்களையும் சுட்டிக்காட்டி இரு தம்பியர்களும் செம்மாப்புடன் புன்முறுவல் பூத்தனர். பெரியதம்பியின் புதல்வி வள்ளுவமும் சிறிய தம்பியின் புதல்வி அவ்வையும் அப்புன் முறுவலொளிகளிடையே முத்தும் பவளமும் போல் ஒளி திகழப் பின்னி விளையாடினர்.
அஞ்சாத குஞ்சான்
குறுக்கையூரில் ஓர் உழவனுக்கு மஞ்சான், குஞ்சான் என்று இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். மஞ்சான் சுறுசுறுப்பாக வேலை செய்தான். தாய் தந்தையருக்கு மிகவும் உதவியாய் இருந்தான். ஆனால், குஞ்சான் அடங்காச் சிறுவனாகவும் குறும்பனாகவும் இருந்தான்.
சிறு பருவத்திலேயே குஞ்சானுக்கு ஒரு தனிப் பண்பு இருந்தது. அவன் இருட்டுக்கும் தனிமைக்கும் அஞ்சுவதில்லை. திருடர், கொள்ளைக்காரர் கதைகளையும் துணிகர வீரக்கதை களையும் பேய்க் கதைகளையும் எல்லாச் சிறுவர்களும் ஆர்வ மாகக் கேட்பார்கள். கதை சொல்பவரின் அருகிலேயே சுற்றி உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், கதையின் உயிர்க்கூச் செறியும் நிகழ்ச்சிகளைக் கேட்டு அவர்கள் அஞ்சி அஞ்சிக் சாவார்கள். ‘எனக்கு நடுக்கமாயிருக்கிறது; எனக்கு அச்சமாயிருக்கிறது’ என்று கூறிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் நெருங்கி உட்கார்வார்கள். ஆனால், குஞ்சான் மட்டும் ஒதுங்கி ஒரு மூலையில் உட்கார்ந் திருப்பான். கதை முடிந்தபின் ‘அச்சம், நடுக்கம் எப்படியிருக்கும் என்பது எனக்குப் புரியவில்லையே! நடுங்குவது எப்படி என்று எனக்கு யாராவது கற்றுக் கொடுப்பார்களா?’ என்று குறைபட்டுக் கொள்வான்.
அவன் சொல்வதைக் கேட்கச் சிலருக்கு வியப்பாயிருக்கும். சிலர் இரங்குவதா, சிரிப்பதா என்று அறியாமல் தயங்கினர். சிலர் அவனை ஏளனம் செய்து நகையாடினர்.
அவன் தந்தைக்கு அவன் போக்கும் பிடிக்கவில்லை. பேச்சும் பிடிக்கவில்லை; ‘பார், உன் அண்ணன் எவ்வளவு உழைக்கிறான், எவ்வளவு உதவியாயிருக்கிறான். நீ உழைப்பதும் இல்லை; வீண் தொந்தரவும் செய்கிறாய்; உன்னைப் பெற்று வளர்ப்பதும் வீண்; உனக்குச் செய்யும் செலவும் உன்னால் நேரிடும் தொல்லைகளும் என்று தான் தொலையுமோ?’ என்ற கடிந்து கொண்டான்.
’அப்பா, நான் உழைக்கத்தான் விரும்புகிறேன். உதவி செய்யவும் எண்ணுகிறேன். ஆனால், அச்சம் நடுக்கம் என்றால் என்ன என்பதை நான் முதலில் அறிய வேண்டும். அதன்பின்தான் நான் ஒழுங்காக உழைத்து வாழ முடியும் என்றான்.
தந்தைக்கு இதைக்கேட்க மேலும் எரிச்சலாயிருந்தது. அவன் அண்ணன் இச்சொற்களைக் கேட்டுக் குலுங்குக் குலுங்க நகைத்தான். ‘அப்பா, இவன் உருப்படுவான் என்று கனவு காண வேண்டாம்.’ இவனுக்கு மூளையேயில்லை என்பது அவன் பேச்சால் தெரியவில்லையா!’ என்றான். தந்தை வெறுப்பை இஃது இன்னும் மிகுதியாக்கிற்று.
அண்டை வீட்டில் ஒரு காளி கோயில் குருக்கள் இருந்தார். குஞ்சான் பேச்சைப்பற்றி அவர் கேள்விப்பட்டார். ‘நடுங்கத் தானே கற்றுக் கொடுக்க வேண்டும்? இதுவா பெரிய காரியம். நான் கற்றுத் தருகிறேன்’ என்று கூறி அவனை இட்டுச் சென்றார்.
குஞ்சான் மகிழ்ச்சியோடு அவருடன் சென்றான்.
காளி கோயில், ஊருக்கு வெளியே காட்டின் நடுவில் இருந்தது. மாலையில் அங்குச் சென்று குருக்கள் பூசை செய்துவிட்டு வருவது வழக்கம். குஞ்சானை அங்கேயே இருந்து யாமந்தோறும் மணி அடிக்கும்படி அவர் கூறினார். மணிக்கூண்டு மண்டபத்தின்மேல் இருந்ததால், குஞ்சான் யாமத்துக்கு ஒரு தடவை மேலேறிச் சென்று மணியடித்து விட்டுக் கீழே வந்தான்.
இரண்டாவது யாமத்தில் அவன் மணியடிக்கச் சென்ற போது, வெள்ளைப் போர்வை போர்த்த ஓர் உருவம் மணியருகே நின்றது. தொலைவிலிருந்தே அதைக் குஞ்சான் கண்டான்.
‘அது யார் அது?’ என்று கூவினான் குஞ்சான்.
உருவம் மறுமொழி கூறவில்லை.
‘யார் அது! வாய் திறந்து பேசு. இல்லாவிட்டால், உதைத்துத் தள்ளுவேன்.’ என்றான் அவன்.
உருவம் அப்போதும் அசையவில்லை. அவன் அஞ்சி நடுங்குவான், அல்லது ஓடுவான் என்றே அஃது எதிர் பார்த்திருக்க வேண்டும். அது முற்றிலும் ஒரு பேய் உருவம் போலவே தோன்றிற்று.
மூன்றாவது தடவையும் அவன் உரத்துக் கேள்வி கேட்டான். மறுமொழி இல்லாததால் கோபத்துடன் அதை எட்டி உதைத்தான். மண்டபத்தின் ஓரத்தில் அது நின்றதால், உருண்டு கீழே விழுந்தது. ‘ஓ’ என்ற அலறலுடன் அது மண்டபத்தை அடுத்த ஆழ்கிடங்கில் விழுந்தது!
நாலு யாமமும் மணி அடித்துவிட்டு அவன் குருக்கள் வீடு சென்றான். ஆனால், குருக்களை வீட்டில் காணவில்லை.
இரவெல்லாம் குருக்களை எதிர்ப்பார்த்திருந்த அவன் மனைவி கலவரமடைந்தாள்.
‘குருக்கள் எங்கே?’ என்று அவன் கேட்டான்.
‘யாமம் தோறும் மணி அடிக்கச் சொல்லிவிட்டு, அவர் வந்துவிட்டார். நான் அவ்வாறே மணியடித்தேன். ஆனால் இரண்டாம் யாமத்தில் ஏதோ ஓர் உருவம் மணியருகே நின்றது. ’யார்?’ என்று மூன்று தடவை கேட்டும் மறுமொழி கூறவில்லை. அதை நான் கீழே தள்ளிவிட்டு, வேலையைப் பார்த்தேன்’ என்றான்.
குருக்கள் மனைவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அவள் தக்க துணையுடன் காளி கோயிலில் சென்று தேடினாள்.
பாவம்! குருக்கள் பெருங்கிடங்கொன்றில் படுகாய முற்று, கால்முறிந்து கிடந்தார். அவரால் கூக்குரலிடவும் முடியவில்லை. வேதனையால் முனகிக் கொண்டிருந்தார்.
அவர் மனைவி அழுதாள்; அரற்றினாள்; அவனை ஆதரவுடன் எடுத்துவந்து மருத்துவம் பார்த்தாள்.
அவர் குணப்படப் பல நாளாயிற்று. அப்படியும் அவர் நொண்டியாகவே வாழ நேர்ந்தது. அவர் மனைவி, குஞ்சான் தந்தையிடம் சென்று அழுது முறையிட்டாள்.
தந்தை மனவருத்தம் சொல்லி முடியாது. அவர் குஞ்சானிடம் ஐந்து பொன்னை எடுத்துக் கொடுத்தார். ‘அப்பனே, இத்துடன் நீ என் கண்ணில்படாமல் எங்காவது தொலைந்து போ. இனி என் பெயர் சொல்லாதே. நான் இருக்கும் திசைக்கே வராதே! நீ எனக்குச் செய்ய வேண்டுவது அவ்வளவுதான்!’ என்றார்.
‘தங்கள் விருப்பம் அதுவானால் அப்படியே போகிறேன்’ என்று அவன் புறப்பட்டான்.
‘நடுங்கத் தெரியவில்லையே எனக்கு! இதைக் கற்றுக் கொள்ளுவ தெப்படி?’ என்று தனக்குள் ஓயாது கூறிய வண்ணம் அவன் காடுமேடாகப் பயணம் செய்தான்.
அவன் முணுமுணுப்பைக் கேட்ட ஒருவன் அவனை உற்று நோக்கினான். அவன் சிறிது நகைச்சுவை உடையவன்; குறும்பன். ஆகவே, ஊர்ப்புற வெளியைக் குஞ்சானுக்குச் சுட்டிக் காட்டினான். ‘அதோ சோடியாக இரண்டு மரங்கள் கைகோர்த்து நிற்கின்றன பார்! அவற்றின் புதல்வர்கள் எழுவர். பாசக் கயிற்று மாமாவின் கன்னியர் எழுவரை மணந்துகொண்டு பறக்கக் கற்றுக் கொள்கிறார்கள் பலர். இரவு முழுதும் அந்த மணவறையருகே இரு. நடுங்கக் கற்றுக் கொள்வாய்!’ என்று கூறிச் சென்றான்.
அவன் சுட்டிக்காட்டிய இடம் ஒரு தூக்குமரம். பாசக் கயிற்று மாமாவின் கன்னியர் எழுவர் என்றது - ஏழு கயிற்றுச் சுருக்குகளை; அவர்களை மணந்த தூக்குமரத்தின் ஏழு புதல்வர்கள் என்றது - அவற்றில் பிணமாகத் தொங்கிய ஏழு கொலையாளிகளையே!
‘இவ்வளவுதானா? இஃது எளிதாயிற்றே! ஓரிரவுக்குள் நான் நடுங்கக் கற்றுக் கொண்டால், உன்னையே என் குருவாக மதிப்பேன். நாளைக் காலையில் உனக்கு என் காணிக்கையாக ஐந்து பொன் தருவேன்’ என்றான் குஞ்சான். எளிதில் ஐந்து பொன் பெறும் உறுதியுடன் குறும்பன் சென்றான்.
குஞ்சான் தூக்குமரத்தடியில் இரவு தாவளம் இட்டான். குளிர் மிகுதியாயிருந்ததால் அவன் குச்சிகள் பொறுக்கித் தீ மூட்ட மிட்டான். அப்படியும் நள்ளிரவில் குளிர் மிகுதியா யிருந்தது.
‘தீயருகேகூடக் கீழே எனக்கு இவ்வளவு குளிர் இருக்கிறது. பாசக் கயிற்று மாமா கன்னியரை மணந்து கொண்ட இந்த அண்ணன்மாருக்கு எவ்வளவு குளிராது பாவம்!’ என்று இரக்கம் கொண்டான் குஞ்சான்!
அவன் தூக்குமரத்தில் ஏறி ஒவ்வொன்றாகக் கயிறவிழ்த்துப் பிணங்களைக் கீழே கொண்டுவந்தான ஏழு பிணங்களையும் தீயைச் சுற்றிக் குளிர்காய வைத்தான்.
பிணங்கள் தீயில் குளிர் காயும்போது, தீ சிலவற்றின் கந்தலாடையில் பற்றின. குஞ்சான் அச்சமயம் தன்னிடமிருந்த உணவு மூட்டையை அவிழ்த்து உணவு உட்கொண்டிருந்தான். ஆகவே, தொலைவிலிருந்தே அண்ணன்மாரை எச்சரித்தான். ’அண்ணன்மாரே, அண்ணன்மாரே! தீக்கு மிகவும் அருகே போகாதீர்கள். உடல் கருகிவிடும் என்றான்.
உயிரற்ற பிணங்கள் தாமாக விலகிவிடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? பலவற்றின் கந்தல்கள் பற்றத் தொடங்கின.
’அட முண்டங்களே! தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் அறிவுகூடவா உங்களுக்கு இல்லை! சரி, நீங்கள் கன்னியருடனே குளிரில்தான் கிடக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு, அவன் பிணங்களை ஒவ்வொன்றாகத் தூக்குமரத்தில் ஏற்றித் தொங்க விட்டான். பின் தூக்குமரத்தடியில் தீயை மூட்டி அதன் வெது வெதுப்பின் அருகே உறங்கினான்.
காலையில் குறும்பன் ஐந்து பொன் பெற ஆவலோடு வந்தான். ‘நடுங்கப் படித்துவிட்டாயல்லவா? கொடு ஐந்து பொன்னை’ என்றான்.
‘அண்ணே! அதோ தொங்கும் உன் நண்பர்களுக்குத் தீப்படாமல் குளிர்காயத் தெரியவில்லை. அரும்பாடுபட்டு, அவர்களைக் கீழே இறக்கி குளிர்காய இங்கே அழைத்துவந்தேன். பாவம், பலர் கந்தல்கள் கருகியிருக்கின்றன; இத்தகைய முண்டங்களா எனக்கு நடுங்கக் கற்றுக் கொடுக்க முடியும்? அவற்றை நம்பச் சொன்னாயே, நீ ஒரு மூடம்! ஐந்து பொன்னுக்கு வந்து விட்டாய்!’ என்றான்.
அவன் ஒரு பேயாகத்தான் இருக்க வேண்டும் என்றஞ்சிக் குறும்பன் அவ்விடம் விட்டுக் கம்பி நீட்டினான்.
சில நாட்களுக்குள் அவன் ஒரு பேரூரை அணுகினான். அங்குள்ள ஒரு தங்கல் மனையில் இரா உணவு உட்கொண்டு உறங்கினான். காலையில் மனையாளன் சுடுகஞ்சி வடித்துக் கொண்டே அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
‘தம்பி, நீ யார், உன் பெயர் என்ன?’
குஞ்சானுக்குத் தந்தை சொன்னது நினைவு வந்தது. ‘என் பெயர், ஊர் கூறாதே! கண்ணில் விழியாதே’ என்று அவன் சொல்லியிருந்தான். ஆகவே ‘எனக்கு நான் யார் என்று தெரியாது, பெயரும் கிடையாது’ என்றான்.
வியப்புடன் மனையாளன் ‘உன் ஊர் எது? தாய் தந்தைகள் பெயர் என்ன?’ என்று கேட்டான்.
‘அவற்றை நான் சொல்லக்கூடாது!’ என்றான் குஞ்சான்.
மேலும் வியப்புடன், ’என்ன காரியமாய் வந்தாய்? என்றான் மனையாளன்.
’எனக்கு நடுங்கத் தெரியவில்லை. அதை கற்றுக் கொள்ளத்தான் நாடு நாடாகத் தேடி வருகிறேன் என்றான்.
‘மட்டியா இவன், அல்லது பைத்தியமா?’ என்று எண்ணினான் மனையாளன். ஆனாலும், வெளிப்படையாக அவன் இவ்வாறு கூறவில்லை!
‘நடுங்கத் தெரியவேண்டும். அவ்வளவு தானே!’
‘அதோ தெரிகிறதே, அந்த பாழுங்கோட்டையை பார்! அதில் மூன்று நாள் இருந்தால் எவருக்கும் நடுங்கத் தெரிந்துவிடும். அத்துடன், மூன்றுநாள் கழித்து வந்தால், இந்த ஊர் அரசன் மகளைக் கொடுப்பான். ஏனென்றால் அதில் பூதங்காத்த புதையல் இருக்கிறதாம்!’
‘போய் அரசனிடம் கேள்!’ என்றான்.
குஞ்சான் அரசனிடம் சென்றான்.
‘நான் நடுங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உயிர் கொடுத்தாவது கற்றுக் கொள்ள வேண்டும். தங்கள் பாழுங் கோட்டையில் மூன்று இரவுகள் தங்கினால் கற்றுக் கொள்ளலாம் என்று கேள்வியுற்றேன். போக விடை கொடுங்கள்!’ என்றான்.
மன்னன் உள்ளூரச் சிரித்தான். ‘ஆம், நீ கட்டாயம் கற்றுக் கொள்வாய். அத்துடன் கற்றுக் கொண்டு மூன்று இரவுகளுக்குப் பின்னும் உயிருடன் வந்தால், என் மகளையும் தருவேன்’ என்றான்.
‘உயிர் போனாலும் சரி, உன் மகள் வந்தாலும் சரி! கட்டாயம் நான் நடுங்கக் கற்றுக் கொண்டாக வேண்டும்’ என்றான் குஞ்சான்.
அரசிளஞ் செல்வி தோகை அவனைப் பரிவுடனும் வியப்பார்வத்துடன் நோக்கிப் புன்முறுவல் பூத்தாள்.
‘உயிரற்ற பொருள்களாக நீ பாழுங்கோட்டைக்கு உன்னுடன் நான்கு பொருள்கள் எடுத்துச் செல்லலாம். என்ன வேண்டும்?’ என்றான் அரசன்.
குஞ்சான், ‘நெருப்புப் பெட்டி, ஒரு விசிப்பலகை, ஒரு கத்தி, ஒரு சாணை ஆகியவை தருக’ என்றான்.
பாழுங்கோட்டையில் ஓர் ஒதுங்கிய தனியறையை அவன் தெரிந்தெடுத்தான். இரவில் ஒரு தீ வளர்த்து, அதன் கணப்பு அருகில் விசிப்பலகையிட்டு அமர்ந்தான். நேரம் போக அவன் கத்தியைச் சாணையில் ஓயாது தீட்டினான். தீயின் பொறியுடன் சாணையின் பொறிகள் கலந்து பறந்தன.
‘எனக்கு நடுங்கத் தெரிய வேண்டுமே! இங்கே அதை யார் கற்பிக்கப் போகிறார்கள்’ என்ற மந்திரத்தை முணுமுணுத்த வண்ணம் அவன் கண்விழித்திருந்தான்.
நள்ளிரவில் உறுமல்கள் கேட்டன.
ஏதோ ‘தொப், தொப்’ என்று கேட்டது.
புலிகள் போன்ற இரண்டு பெரிய கருநிறம் வாய்ந்த காட்டுப் பூனைகள் மேலிருந்து குதித்தன. இரண்டும் குஞ்சானின் இருபுறமும் அமர்ந்து, தம் நெருப்பு விழிகளால் அவனைக் கூர்ந்து நோக்கின.
அவையும் நோக்கின; அவனும் நோக்கினான்.
’நாம் தொட்டு விளையாடலாமா?’என்று கேட்டன பூனைகள்.
‘ஓகோ, அதற்கென்ன?’ என்றான் குஞ்சான். ‘ஆனால் முதலில் உங்கள் கைகளை நான் பார்க்கட்டும்’ என்று மேலும் கேட்டான்.
இரண்டும் முன் கைகளைக் காட்டின. அவற்றின் நகங்கள் கத்தியினை விடக் கூர்மையானவையாய் இருந்தன. அவை குருதி தோய்ந்தவையாய் இருந்தன.
‘என்ன அழுக்குப் பிடித்த நகங்கள்! இவை எனக்கும் பிடிக்கவில்லை’ என்று கூறி அவன் கத்தியால் நகங்களைச் செதுக்கி எறிந்தான்.
பூனைகள் நகம் பறிகொடுத்து ஏங்கின.
‘நீங்கள் கோழைகள், நகத்துக்கே அழுகிறீர்கள் உங்களுடன் எவன் விளையாடுவான்!’ என்றான் அவன்.
அருகிலிருந்த தடியால் அவன் பூனைகளை அடித்துக் கொன்றான். அவற்றின் பிணங்களைக் கோட்டையின் அகழியில் பலகணிவழியாக எறிந்தான்.
அவை எறியப்பட்ட இடத்திலிருந்து எண்ணற்ற கரும் பூனைகள் கருநாய்கள் வந்தன. ஒவ்வொன்றின் கழுத்திலும் பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சங்கிலி கட்டப்பட்டிருந்தது. அவை நெருப்பின்மீது நடனமாடின. நெருப்புச் சிதறிற்று.
சிறிதுநேரம் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். பின் கத்தி எடுத்து வலமிடமாகச் சுழற்றி அவற்றில் பலவற்றைக் கொன்றான்; மீந்தவை ஓடின.
தீயை அவன் மீண்டும் கிளறினான். கண்கள் உறக்கத்து அடைவால் அயர்ந்தன. அருகிலிருந்த ஒரு கட்டிலில் சென்று படுத்தான்.
அவன் படுத்த கட்டில் நகர்ந்தது. அது கோட்டையைச் சுற்றிலும் பறந்தோடிற்று. குட்டிச் சுவர்கள் மேலும் மொட்டைக் கோபுரங்கள் மீதும் தாவித் தாவிச் சென்றது.
தூங்காமலிருக்க இது நல்ல வலி! எவ்வளவு அறிவுள்ள கட்டில்!’ என்றான் குஞ்சான்.
அது திடுமெனக் கவிழ்ந்தது. அவன் மெத்தை தலையணை களுக்குக் கீழே சிக்கினான். கத்தியால் மெத்தை தலையணைகளைக் கிழித்துக் கொண்டு அவன் வெளியே வந்தான். அவற்றைக் கொண்டே, தீயை இன்னும் நன்றாக மூட்டினான்.
தீயருகே படுத்து உறங்கினான்.
காலையில் அரசன் இளவரசி, காவலருடன் வந்தனர். குஞ்சான் கிடப்பதைக் கண்டனர்.
‘ஐயோ பாவம்! நடுங்கப் படித்துக் கொண்டுவிட்டான். ஆனால், ஓர் இரவுக்குள் உயிர் போயிற்று’ என்றான் அரசன்.
‘உயிரும் போகவில்லை. நடுங்கவும் கற்றுக் கொள்ள முடியவில்லை’ என்று கூறி எழுந்தான் குஞ்சான்.
‘ஆ….! நீ பிழைத்திருக்கிறாயா? இன்னுமா நடுங்கக் கற்றுக் கொள்ளவில்லை!’ என்று யாவரும் வியப்படைந்தனர்.
இரண்டாம் இரவு நடுயாமத்தில் ஒரு பேரிரைச்சல் கேட்டது. அது வரவரப் பெருமுழக்கம் ஆயிற்று.
இறுதியில் அரைவடிவாகத் துண்டிக்கப்பட்டு உயிருடைய மனித உடல் மேல் நின்றும் விழுந்தது. அரை உடலிலிருந்து செங்குருதி கொட்டிற்று. அது ‘கூ கூ’ என்று கத்திற்று.
குஞ்சான் அதற்குமேல் கத்தினான். ‘அட பாவியே! உன் மறுபாதி எங்கே?’ என்றான்.
மீண்டும் பேரிரைச்சலுடன் மறுபாதி வந்து விழுந்தது.
இரண்டும் ஒட்டின; அது மனித உருவில் ஒன்றரை மடங்கு பெரிய கோர உருவம்; ஓன்று சேர்ந்தது; அது குதித்துக் கும்மாளமிட்டது; விசிப்பலகையை சுட்டிக்காட்டி ‘அதை எனக்குத் தா!’ என்றது.
‘முடியாது’ என்றான் குஞ்சான்.
உருவம் அவனைத் தள்ள, அவன் உருவத்தைத் தள்ள, அடிபிடியாயிற்று, இறுதியில் உருவத்தைக் குஞ்சான் கத்தியால் மீண்டும் இரண்டு துண்டாக்கினான்.
இப்போது பல உருவங்கள் வந்து திரண்டன. ஒவ்வொன்றின் கையிலும் ஒரு முதுகெழும்பு இருந்தது. அவற்றினிடையே ஒரு தலையோடு உருண்டது. ‘பந்து விளையாடுகிறாயா, மடையா!’ என்று உருவங்கள் குஞ்சானைக் கேட்டன.
‘மடையர்கள் நீங்கள்தாம். பந்தைப் பாருங்கள் பந்தை! கோணல் பந்து! இதை முதலில் சரி செய்கிறேன். பின் விளையாடலாம்’ என்றான்.
அவன் தலையோட்டைச் சாணையில் தீட்டி உருண்டை ஆக்கினான். ஆட்டம் தொடங்கிற்று.
‘நீ பணம் கட்ட வேண்டும்’ என்றன உருவங்கள்.
அவன் பணம் வைத்தாடினான். வென்றபோது அவனுக்கு ஒன்றும் கிட்டவில்லை. தோற்றபோது ஐந்து பொன்னில் சிறிது போயிற்று.
மணி இரண்டடித்ததும் உருவங்கள் மறைந்தன.
அவன் மீட்டும் தூங்கினான்.
மறுநாள் காலையில் அரசன் முதலியோர் வந்தனர்.
நடுங்கக் கற்றுக் கொண்டாயா?’ என்று வியப்புடன் கேட்டனர்.
‘இங்கே நடமாடுகிற முண்டங்களுக்கு நடுங்கத் தெரிந்தால் தானே. எனக்குக் கற்றுக் கொடுக்கும்! இந்தக் கோட்டை ஒன்றுக்கும் உதவாது’ என்று அவன் இறுமாந்து பேசினான்.
அவர்கள் மலைப்புப் பெரிதாயிற்று. ஆனால், இளவரசி தோகை முகத்திலும் அவள் அருகில் நின்ற அவள் தோழி தூதுவளை முகத்திலும் புன்முறுவல்கள் தோன்றி மறைந்தன.
கடைசி இரவு வந்தது. ‘எனக்கு நடுங்கத் தெரியவில்லையே! நடுங்கக் கற்றுக் கொடுப்பார் யாரோ?’ என்று கூறியவண்ணம் விசிப்பலகையில் அமர்ந்திருந்தான். அச்சமயம் ஒரு பிணப் பெட்டியைச் சுமந்து கொண்டு, ஆறு நெட்டை உருவங்கள் அவனருகே வந்தன.
‘ஆ, இஃது என் மைத்துனர் ஆயிற்றே! இறந்தா போய் விட்டார்? எங்கே, கீழே வையுங்கள் பார்ப்போம்’ என்றான்.
உருவங்கள் பிணப் பெட்டியை அவன்முன் வைத்தன.
அவன் மேல்மூடியைத் திறந்தான். பிணத்தின் கன்னத்தில் கைவைத்துப் பார்த்தான். அது சில்லிட்டிருந்தது.
கையைத் தீயில் வாட்டி முகத்தில் தடவிப் பார்த்தான். பயனில்லை.
பிணத்தை வெளியில் எடுத்துத் தீயருகே குளிர் காய வைத்தான். உடம்பைத் தேய்த்துச் சூடு உண்டு பண்ண முயன்றான். இவற்றால் எத்தகைய மாறுபாடும் ஏற்படவில்லை.
அவன் போர்வையால் பிணத்தை மூடினான். அதனுடன் படுத்துத் தன் உடம்பின் சூடு அதில் ஏறும்படி போர்வையைத் தன்னுடன் சேர்த்துப் போர்த்தினான்.
இப்போது பிணம் மெல்ல உயிர்த்துடிப்படைந்தது. எழுந்து உட்கார்ந்து குஞ்சானைக் கொடும் பார்வையுடன் பார்த்து, ‘உன் கழுத்தை நெரித்து விடுவேன்’ என்று பற்களை நெறுநெறு என்று கடித்தது.
‘அப்படியா செய்தி! உனக்கு உயிர்கொடுத்த தற்காகவா இது? சரி, சரி, நீ மீண்டும் பிணமாகவே இரு’ என்று அதனைப் பிணப் பெட்டியில் இட்டு மூடியை இறுக்கினான்.
பிணப் பெட்டிமீது இப்போது திடுமென ஒரு பயங்கர மனிதன் குதித்தான். அவன் பருத்த உடலுடன் குள்ளமாகவே காணப்பட்டான். ஆனால், உண்மையில் அவன் ஒன்றரை, ஆள் உயரமுடையவன். அவன் தாடி மூன்றாள் நீளம் அவனைச் சுற்றிப் புரண்டது.
’உனக்குச் சாவுகாலம் வந்துவிட்டதடா, வா என் பின்னே!" என்று பருத்த மனிதன் கூக்குரலிட்ட வண்ணம் அவன் கையைப் பற்றி இழுத்துச் சென்றான்.
இருட்டறைகீழ் இருட்டறையாகப் பல அறை தாண்டியபின் சிறு விளக்கொளி இருந்த ஒரு கூடத்தை அவர்கள் அடைந்தனர்.
நிலத்தில் இரண்டு பெரிய இரும்புப் பாளங்கள் கிடந்தன. அருகிலிருந்த சம்மட்டிகளில் ஒன்றால், அவன் ஒரு பாளத்தை அடித்தான். அது நிலத்துக்குள்ளே பதிந்து போயிற்று.
‘இது போல அடுத்த பாளத்தை அடித்துப் பதிக்கவை பார்ப்போம்’ என்றான் பருத்த மனிதன்.
அதைக்கேட்ட குஞ்சான் அப்படியே செய்தான்.
ஆனால், பருத்த மனிதன் தாடி பாளத்தின் மீது படும் சமயம் பார்த்துக் குஞ்சான் சம்மட்டியால் அடித்தான்.
பாளம் இரண்டாகப் பிளந்தது. சம்மட்டி சிக்கிக் கொண்டது. ஆனால், சம்மட்டியின் இருபுறமும் தாடி சிக்கிக் கொண்டது. பருத்த உருவம் ஆட அசைய முடியவில்லை.
குஞ்சான் மற்றும் சம்மட்டியால் பருத்த மனிதன் தலை மீது மேன்மேலும் அடித்துத் தாக்கத் தொடங்கினான்.
‘வேண்டாமய்யா, போதும், போதும்! நான் உனக்கு நிறையப் பணம் தருகிறேன். என் புதையலைக் காட்டுகிறேன்’ என்ற அவன் கூவினான்.
குஞ்சான் அடியை நிறுத்தி, தாடியையும் விடுவித்தான்.
பருத்த மனிதன் ஒரு மூலையில் புதைத்து வைத்திருந்த மூன்று மிடாக்களைக் காட்டினான்.
‘இவற்றை எடுத்துக்கொள். ஒன்றை ஏழைகளுக்குக் கொடு. ஒன்றை அரசனிடம் ஒப்படை; ஒன்றை நீ எடுத்துக் கொள்’ என்றான்.
இதற்குள் மணி இரண்டடித்தது.
பருத்த உருவம் மறைந்தது. விளக்கவிந்தது. காரிருள் கவ்விற்று!
‘நான் என் அறைக்கே செல்கிறேன். இங்கேகூட நடுங்கக் கற்றுத்தருபவர் கிட்டவில்லை’ என்று சொல்லிய வண்ணம் அவன் தட்டித் தடவி இருட்டறைகளைக் கடந்து தன் அறைக்கு வந்தான்.
தீயைக் கிளறிவிட்டு அதன் வெதுவெதுப்பில் தூங்கினான்.
மூன்றாம் நாளும் உயிருடன் இருக்கவே, மன்னன் மகிழ்ச்சியுடன் அவனை மருமகனாக வரவேற்றான். இளவரசி இப்போது உரக்கச் சிரித்து அவனுக்கு மாலையிட்டாள்.
‘ஏன் சிரிக்கிறாய்?’ என்று கேட்டான் குஞ்சான்.
‘இன்னும் நடுங்கக் கற்றுக் கொள்ளவில்லையே!’ என்று கிண்டல் செய்தாள் அவள்.
‘இல்லை, அங்கே ஒரு மைத்துனன் வந்தான். அவன் பிணமாயிருந்தான்; கட்டியணைத்து உயிர் கொடுத்தேன்; கழுத்தை நெரிக்க வந்தான்; மீண்டும் பிணமாக்கினேன்; பருத்த உருவமும் தாடியும் உடைய ஒருவன் வந்தான்;அவனுக்குத் தந்த பாடத்தால் அவன் மூன்று மிடாப் பொன் தந்தான்; ஆனால், எனக்கு நடுங்கக் கற்பிக்கத் தெரிந்தவர் யாருமில்லை!’ என்றான்.
‘நானே உங்களுக்குத் கற்றுக்கொடுக்கப் போகிறேன். கவலை வேண்டாம்’ என்று அவள் மீண்டும் சிரித்தான். அவள் தோழி தூதுவளையும் உடன் சிரித்தாள்.
ஒரு மிடாப் பொன்னைப் பெற்று அவ்வூர் ஏழைகள் அவனை வாழ்த்தினர். ஒரு மிடாப் பொன்னைப் பெற்று அரசன் இன்பக் கூத்தாடினான். ஒரு மிடாப் பொன்னையும் குஞ்சான் இளவரசிக்கு அளித்து, நகை நட்டுப் பண்ணிக் கொள்ளும்படி கூறினான்.
இளவரசி குஞ்சானுடன் படுக்கையில் கிடந்தாள். அவள் தோழி பனிக்கட்டியால் இளவரசி போலவே ஓர் உருவம் செய்து உயிர் வண்ணம் தீட்டி வைத்திருந்தாள். அத்துடன் ஒரு மண் குடம் நிறைய விலாங்கு மீன்களையும் உயிருடன் வைத்துப் பேணியிருந்தாள்.
நடு இரவில் இளவரசி மெல்ல வெளியே நழுவினாள். பனிச்சிலை அவன் இடத்தில் படுக்கையில் கிடத்தப்பட்டது. சிலையுடன் தன்னையும் சேர்த்துப் போர்த்திக் கொண்டு குஞ்சான் சிலைபோல் கிடந்தான்.
சிலையின் அணைப்பால் அவன் உடல்சில்லிட்டது. அவன் திடுமெனப் போர்வையை எறிந்து எழுந்திருக்க முயன்றான் விறைத்தஉடல் அசைய மறுத்தது. இச்சமயம் தோழி அவனருகே குடத்தைப்போட்டு உடைத்தாள். விலாங்கு மீன்கள் இருட்டில் பனிக்கட்டி மீதும் அவன் மீதும் மாறி மாறி ஏறி வழுகின.
அவன் இன்னதென்றறியாமல் பதைபதைத்தான். நடுங்கினான். ஆனால், அந்தக் கணமே அவனுக்கு மகிழ்ச்சியும் பிறந்தது.
‘நான் நடுங்கக் கற்றுக் கொண்டேன். என்னை விட்டு விடுங்கள், விட்டுவிடுங்கள்’ என்று கூவினான்.
சிலையை விலக்கிவிட்டு, இளவரசி அவனை அணைத்து உடலுக்கு வெப்பூட்டினாள்.
’ நடுங்கக் கற்றுக் கொடுத்தது யார் என்று தெரிகிறதா?’ என்றாள்.
திடுமென விளக்கு ஏற்றப்பட்டது.
அருகே மனைவியும் அவளே போன்ற சாயலுடைய பனிக்கட்டியும் கிடந்தன. விலாங்கு மீன்கள், பாம்புகள் போல நெளிந்துநெளிந்து பனிச்சிலையின் நயப்பை நாடின.
இளவரசியும் தோழியும் குலுங்கக் குலுங்கச் சிரித்தனர். ‘மைத்துனன் அணைப்பு எப்படி? இந்த மைத்துனி அணைப்பு எப்படி? புரிகிறதா?’ என்று இருவரையும் கேலி செய்தாள் தோழி!
‘போ இனி அவரைக் கேலி செய்யாதே!’ என்று அதட்டினாள் இளவரசி.
நடுக்கம் அறிந்த குஞ்சான் மிடுக்குடன் நாடாண்டு வாழ்ந்தான்.
ஆராய்ச்சியின் திருமணம்
அறிவூர் என்ற ஊரில் நன்மதி என்றொரு மூதாட்டி இருந்தாள். அவள் பழங்குடியில் பிறந்தவள். நற்குடியில் வாழ்ந்தவள். ஆயினும் அவள் வாழ்வின் பிற்பகுதியில் அவள் இன்னல் அடைந்தாள். காலம் என்று மாறும். நல்ல காலம் என்று வரும் என்று கேட்டுக் கொண்டே அவள், நாள் கடத்தி வந்தாள்.
அவளுக்குப் பின்மதி என்று ஒரு சிறுவன் இருந்தான். பெயருக் கேற்றபடி அவனுக்கு எப்போதும் முன்னறிவில்லாமல் இருந்தது. மாட்டைக் கொண்டுவா என்றால் தூக்கிக் கொண்டு வருவான். கழுத்தில் கயிற்றைப் பிடித்து இழுத்துவரத் தெரியாதா என்று தாய் கூறினால், அந்த அறிவுரையைப் பிடித்துக் கொள்வான். அடுத்த தடவை குழந்தையைக் கொண்டுவா என்றால், அதைக் கழுத்தில் கயிறிட்டு இழுத்து வருவான். மாட்டுக்கும் குழந்தைக்கும் வேறுபாடு தெரிந்த பின்னும், குண்டூசிக்கும் கத்திக்கும் அவனுக்கு வேறுபாடு தெரிவதில்லை. குண்டூசியைச் சட்டையில் குத்திக் கொண்டு வா என்று கூறியதைப் படித்துக் கொண்டு, கத்தியையும் அப்படியே குத்திச் சட்டையைக் கிழித்துக் கொண்டு வருவான்.
தாய் இறந்தபின் அறிவூரில் எல்லாரும் அவனைக் கேலி செய்தனர். சிலர் வைதனர். சிலர் அறிவுரைத்தனர். ஓர் அறிவுரை அவன் மூளைக்கு ஏறிற்று.
‘உன் பின்னறிவுக்கேற்ற முன்னறிவுள்ள ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள் உன் வாழ்வு சரியாய்ப் போய்விடும்’ என்றான் அந்த அறிவுரையாளன்.
அதுவே சரி என்று பின்மதிக்குப் புலப்பட்டது. அவன் புறப்பட்டான். தாயின் வீடும் பொருளும் விற்றான். அறிவுரை கூறிய நண்பன், அதை நல்ல விலைக்கு நண்பர்களுக்கு கொடுத்து, அவனிடம் ஒரு சிறு வெள்ளி மூட்டையைக் கொடுத்தான். அதில் ஐந்தாறு வெள்ளிப் பணங்கள் இருந்தன.
‘இதை அறிவுடன் பேணினால் உன் திருமணத்துக்கு உதவும். அறிவைப் பயன்படுத்தி இதை வைத்துப் பண்ட மாற்றுகள் செய்தால், இஃது உன் வாழ்வையே வளப்படுத்தவும் கூடும். எல்லாம் உன் முன்னறிவைப் பொறுத்தது’ என்று கூறி நண்பன் அவனை அனுப்பினான்.
தோளில் வெள்ளிச் சுமையுடன் அவன் நடந்து சென்றான். வெள்ளிக் காசுகள் தோளை அழுத்தின. அவற்றின் பளு அவன் நடையைக் கடுமையாக்கிற்று.
பளுவற்ற நல்ல பொருளுக்குப் பண்டமாற்றுச் செய்ய வேண்டும் என்று அவன் எண்ணமிட்டவண்ணம் நடந்தான்.
வழியில் ஒருவன் ஒரு மட்டக் குதிரை மீதேறிச் சென்றான்.
‘ஆகா! இந்தச் சுமைக்கு அந்தச் சுமை என்ன வேற்றுமை? இதை மனிதன் சுமக்க வேண்டியிருக்கிறது. அது மனிதனைச் சுமந்து பளுத் தெரியாமல் ஓடுகிறது. மனிதன் நடையைவிட விரைந்தும் செல்கிறது’ என்று அவன் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டான்.
‘என்ன முணுமுணுத்துக் கொண்டு போகிறாய் தம்பி!’ என்று குதிரை ஏறிச் சென்றவன் கேட்டான்.
பின்மதி தனக்குள்ளாகக் கூறியதை வெளியிட்டுக் கூறி, தன் வெள்ளிச் சுமையின் தாங்கவொண்ணாப் பளுவையும் எடுத்துக் விளக்கினான்.
குதிரை ஏறிச்சென்றவன் உள்ளூரச் சிரித்துக் கொண்டான். ஆனால், வெளிப்படையாக அவன்மீது இரக்கப்படுவதாகப் பாவித்தான்.
‘நீ இளைஞன். இந்தச் சிறுவயதில் இந்தப் பளுவைச் சுமக்க நேர்ந்தது பற்றியும் கால்நடையாய் நடக்க நேர்ந்ததைப் பற்றியும் வருந்துகிறேன்’ என்றான்.
இருவரும் அருகே அமர்ந்து அளவளாவினர். குதிரை மீது வந்தவன் நெடுந்தொலைவிலிருந்து வருவதாகவும், அருகிலுள்ள ஊருக்கே செல்வதாகவும் கூறினான். இந்தத் தூண்டிலைப்பற்றிப் பின்மதி அறிவு வேலை செய்தது.
‘அண்ணேன்! உன் பயணம் முடிந்தாய்விட்டது. எனது தொடங்கியுள்ளது. என் பளுவை நீ ஏற்று உன் குதிரையைக் கொடுத்தாலென்ன?’ என்றான்.
குதிரையேறி வந்தவன் விரும்பாததுபோலப் பாவித்து, இறுதியில் இரக்கத்தால் இணங்குபவன் போலப் பாவித்து இசை வளித்தான். பல நூறு வெள்ளிகளைக் கொடுத்து, ஒன்றிரண்டு நூறு கூடப் பெறாத குதிரையை வாங்கிக் கொண்டான். பளு நீங்கிய முயற்சியால் குதிரையைத் தட்டி விட்டான்.
அவன் தொல்லை தீரவில்லை. உண்மையில் இப்போது தான் தொடங்கிற்று. அவன் குதிரை ஒட்டிப் பழகாதவன். அந்த குதிரையோ சண்டிக் குதிரை. அத்துடன் அதன் தாயகம், அது செல்லும் திசைக்குப் பின்னால் இருந்தது. ஆகவே அஃது அடிக்கடி அவனைப் பின்னோக்கியே கொண்டு சென்றது. அடிக்கடி இடக்குகள் செய்து அவனைக் கீழே தள்ளிற்று. குதிரை ஏறத்தெரியாத அவன் வாலைப் பிடித்தேற முயன்று வாயிலும் வயிற்றிலும் உதைகள் வாங்கினான்.
பின்மதி என்ற தன் பெயர்ப் பொருத்தத்தை எண்ணி அவன் வருந்தினான். குதிரையை விட்டுநடந்து போகலாமா என்று கூட எண்ணினான்.
அச்சமயம் சந்தைக்கு மாடு விற்கச் செல்லும் ஒருவன் எதிர்ப்பட்டான். குதிரையிடம் பின் மிதிபடும் தொல்லையைத் தொலைவிலிருந்தே பார்த்து அவன் உள்ளூரச் சிரித்துக் கொண்டு வந்தான். விற்கக் கொண்டு போகும் மாடானதால் அவன் அதை நன்றாகப் பருத்திக் கொட்டையும் நீரும் காட்டித் தளதளப்பாக்கிக் கொண்டு வந்திருந்தான். வாங்குவோருக்குக் கறந்து காட்டுவதற்காக இரண்டு நாள் பால் கறவாமல் விட்டு வைத்திருந்தான். சந்தையில் வணிகர்களை ஏய்ப்பதைவிட இந்த மட்டியை ஏய்ப்பது எளிதென்று அவன் எண்ணினான். ஆகவே மாட்டை ஒருபுறமும் பின்மதியின் குதிரையை மற்றொரு புறமும் கட்டிவிட்டு அவனுடன் இருந்து அளவளாவினான்.
வீடு விற்ற விவரம், குதிரை வாங்கிய விவரம் ஆகியவற்றை எல்லாம் பின்மதி மாட்டுக்கார நண்பனுக்கு எடுத்துரைத்தான்.
‘பாவம் நீ அலைந்து திரிந்தது போதாமல் விழுந்து உதைபட்டு வருத்தப்பட்டிருக்கிறாய், போகட்டும். ஏதாவது உண்ணப் பருகக் கொண்டு வந்திருக்கிறாயா? உண்டு குடித்து இளைப்பாறலாம்,’ என்றான்.
வெள்ளிச் சுமை தவிரப் பின்மதி எதுவும் உணவாகக் கொண்டு வரவில்லை. அதை நினைத்து இப்போது வருந்தினான். ‘நீ எதுவும் கொண்டு வரவில்லையா?’ என்று மாட்டுக்காரனைக் கேட்டான்.
அவன் சிரித்தான். ‘நான் ஏன் உணவு கொண்டு வரவேண்டும். நண்பனே! பனை தென்னை கற்பகம், பசு காமதேனு என்று நீ கேட்டதில்லையா? என் பசு எனக்கு தூங்குமிடத்தில் வீடாக நிழல்தரும்; செல்லும்போது எறியாத குதிரையாகப் பயன்படும்; எனக்குப் பசிவிடாய் ஏற்பட்டால் உணவுடன், இனிய குடிநீரும் தரும்; இப்போது பார்’ என்றான்.
மாட்டின் அருகில் அமர்ந்து ஒரு குவளையில் அவன் பால் கறந்து நண்பனுக்குத் தந்தான். முன்பே வைத்திருந்த பால்கட்டி, பாலடையில் பாதியும் உணவாக அளித்தான். இன்னொரு குவளையில் கறந்து மறுபாதியுடன் தானும் உண்டான்.
‘குதிரையின் வறுமை தீர இந்த மாட்டுச் செல்வம் நமக்குக் கிடைக்கக்கூடாதா?’ என்று பின்மதி தனக்குள்ளாகக் கூறிக் கொண்டான். அதை மாட்டுக்கார நண்பனிடம் வெளிப்படை யாகக் கூறி அவனிடம் அதைக் கெஞ்சிக் கேட்கவும் தவறவில்லை. இதற்கே எதிர்பார்த்திருந்த மாட்டுக்காரன் மாட்டைவிட்டுப் பிரிய மனமில்லாதவனாக நடித்தான். இறுதியில் மாட்டிடம் பிரியா விடைபெற்றுக் கொண்டு குதிரையுடன் சென்றான்.
ஓரிரு நூறு வெள்ளிக்கு மேற்பட்ட குதிரை ஓர் ஐம்பது வெள்ளி பெறாத மாட்டுக்குக் கிடைத்தது பற்றி மாட்டுக்காரன் அகமகிழ்ந்தான்.
மாடு உண்மையில் குதிரையாகப் பயன்படவில்லை. அவன் ஏற முயன்றால் அது படுத்துக் கொண்டது. அஃது அடிக்கடி கொம்புகளால் அவன் விலாவைக் கிளறிக் காயப் படுத்திற்று. இறுதியாக, அவன் அடுத்த தங்கலில் அதனிடம் உணவும் குடிநீருமாகப் பால் எதிர்பார்த்தபோது, அவனுக்கு எதுவும் கிட்டவில்லை. அஃது உண்மையில் கிட்டத்தட்ட பால் வற்றிய மாடு. பால் இல்லாத மடியை அவன் பற்றியபோது அது அவனைச் சும்மா விடவில்லை. வயிற்றைக் குத்திச் சாய்க்க முயன்றது; அவன் ஒரு சிறிதே தப்பினான்.
அவன் இடர்களை எதிரே வந்த ஓர் இறைச்சிக் கடைக்காரன் கவனித்தான். அருகே வந்து மாட்டை அடக்கிக் கட்டிவிட்டு, ‘இஃது ஏது? ஏன் இதைக் கட்டிக் கொண்டு அழுகிறாய், இதுபால் மாடன்று, அடிமாடு’ என்றான்.
பின்மதி- தான் வீடு விற்றது; குதிரை வாங்கியது; மாட்டுக்கு அதை மாற்றியது; ஆகிய அறிவு மிக்க செயல்களைக் கூறினான். இறைச்சிக் கடைக்காரன் அவன் அறிவை மெச்சத் தவறவில்லை. ஏனென்றால் அதே அறிவை அவனும் பயன்படுத்த எண்ணினான்.
மாட்டின் தீனி, பன்றியின் தீனி ஆகியவற்றின் செலவு வேறுபாட்டை அவன் விளக்கினான். பன்றியின் குட்டிகள் பெருகும் பெருக்கம், அதன் இறைச்சியின் அருமை ஆகியவற்றைப் புகழ்ந்தான். இறுதியில் மாட்டைக் கொடுத்துப் பன்றியை வாங்கிக் கொண்டு போகும்படி செய்தான்.
இவ்வாறாகவே பின்மதி- பன்றியை ஒரு வாத்துக்கும், வாத்தை ஒரு சாணை தீட்டும் கல்லுக்கும் மாற்றினான். பன்றி முட்டையிடாது; வாத்து முட்டையிடும் என்று வாத்துக்காரன் வாதித்திருந்தான். பணத்தைச் சுமப்பதைவிடப் பணம் தரும் சாணையைச் சுமப்பது பயன் தரத் தக்கது. அது வாத்தைப் போல் வெறும் முட்டையிடாது; பணமுட்டையேயிடும் என்று சாணைக்காரன் தன் புராணம் அளந்திருந்தான்.
சாணைக்கல்லை ஒரு குளக்கரையில் வைத்துவிட்டு, பின்மதி குனிந்து நீர் மொண்டு குடித்தான். அச்சமயம், அவன் கால்தடுக்கிக் கல் குளத்தில் விழுந்துவிட்டது, விழுந்த இடம் ஆழமாயிருந்தது. அத்துடன் அடித்தளம் ஒரே சேறு. விழுந்த இடத்தின் குமிழியையும் கலங்கிய சேற்றையும் அவன் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
இனிப் பளு கிடையாது என்ற எண்ணம் அவனுக்குத் தேறுதல் மட்டுமன்று, தெம்பும் தந்தது. அவன் எட்டி நடந்தான்.
கொண்டுவந்த பணமும் அதன் பெருக்கமும் கவலையும் ஓய்ந்தபின் பின்மதிக்குத் தான் பயணம் செய்ததன் நோக்கம் நினைவுக்கு வந்தது. ‘ஆம், முன்னறிவுடைய ஒரு பெண்ணைத் தேட வேண்டும், அவள் எங்கே அகப்படுவாள்?’ என்ற அவன் தன் ஆர்வ முணுமுணுப்பை மாற்றினான்.
முன்னறிவுடைய பெண் எங்கே கிடைக்கும் என்று அவன் பலவிடங் களிலும் விசாரிக்கத் தொடங்கினான்.
பல பேரூர், சிற்றூர்களில் குறும்பர்கள், காலாடிகள் அவனைச் சுற்றித் திரண்டு தெறியும் கேலியும் பேசினர்; பலர் இரங்கினர்; சிலர் அவன் கேள்விகளால் எரிச்சலுற்றுச் சீறினர், ஆனால், அவன் இவை எவற்றையுமே சட்டை பண்ணவில்லை.
வெள்ளியின் பளுவைக் குறைக்க உதவிய தெய்வம் மேலான பெண்ணை அடையவும் கட்டாயமாக உதவும் என்ற உறுதியான நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அவன் நம்பிக்கை வீண்போகவில்லை.
ஒர் ஊரை அணுகும்போதே அதன் பேர்கேட்டு அவன் மகிழ்ந்தான். ஏனெனில், அதன் பெயர் முன்மதி, பின்மதிக்கேற்ற பெண் முன்மதியிலேயே கிடைக்கும் என்று அவன் எதுகை நயம்படத் தனக்குள் பாடிக் கொண்டான். அந்த ஊரில் சென்றதும் தெருத்தெருவாக, ‘அறிவுடைய பெண். முன்னறிவு மிக்க பெண் செல்வம் எங்கே கிடைக்கும்?’ என்று கேட்டான்.
‘முன்னறிவுடைய பெண்ணா தேடுகிறாய்? அப்படியானால் முன்னறி பெருமாள் வீட்டுக்கே போ!’ என்றான் ஒருவன்.
முன்மதியூர், முன்னறி பெருமாள் வீடு என்று பாடினான் பின்மதி.
பெண்ணின் தாய் பெயர், பெண் பெயர் என்னவோ என்று கேட்டான் அவன்.
மூதறிவணங்கு தாயின் பெயர், ஆராய்ச்சி பெண்ணின் பெயர் என்று கேட்டதே பின்மதியின் ஆர்வம் அடங்காத ஆவலாயிற்று. அவன் அவர்கள் காட்டிய வீட்டை நோக்கி எட்டி நடந்தான்.
முன்மதி, முன்னறி பெருமாள், மூதறிவணங்கு, ஆராய்ச்சி என்ற பெயர்ப் பொருத்தங்களை அதுவரை அந்த ஊரார் கவனித்ததில்லை. இதற்குக் காரணம் எல்லாம் அந்த ஊர்த் தெய்வத்தின் பெயராயிருந்தது என்பதே. ஆனால், முன்மதியில் பெண் பார்க்கப் பின்மதி வந்திருக்கிறா னென்றதே ஊரிலும் தெருவிலும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னறிபெருமாள் வீடு, ஒரு சிறிய ஊர்க் கூட்டத்துக்கு இடமாயிற்று. ஆடவரும் பெண்டிரும் முதியவரும் இளைஞரும் மணமானவரும் ஆகாதவரும் அங்கே வந்து குழுமினர். அவர்களிடையே பெண் பேச்சுத் தொடங்கிற்று!
பெண் வீட்டார் முதலில் மாப்பிள்ளை பேர், ஊர், குடி முதலிய விவரங்களைக் கேட்டார்கள். ஆனால், இவ்வகையில் ஊரார் மாப்பிள்ளையைப் பேசவிடவில்லை. வழியிலே அவன் கதைகளைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரித்தவர் பலர் அங்கே வந்திருந்தனர். அவன் நேரடியாகப் பேசக் கேட்டுப் பெண் வீட்டார் அவனை ஏளனம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, அவன் குடிப்பெருமை, செல்வநிலை ஆகியவற்றைப் பெருக்கிக் கூறினர். அவன் அறியாச் செல்வச் சீரழிவைப் பெருந்தன்மையாகவும், ஊதாரித்தனமாகவும் தீட்டிக் காட்டினர். இந்த மாப்பிள்ளையை விட்டால், இனி ஈடு சோடான மாப்பிள்ளை கிடையாது என்ற எண்ணத்தைப் பெண் வீட்டார் உள்ளத்தில் பதிய வைத்தனர்.
நங்கை ‘ஆராய்ச்சி’ பெண் வீட்டாரிடையே நடு நாயகமாக வீற்றிருந்தாள். மாப்பிள்ளை புகழில் மிகுதியும் மகிழ்ந்து களிப்பும் எக்களிப்பும் கொண்டவள் அவளே. மாப்பிள்ளை முன் தன் புகழும் பெருமித அறிவும் தோன்ற அவள் தன்னைச் சீர் செய்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
பின்மதி பெண்ணின் அழகை நேரில் பார்த்துக் கொண்டான். முன்னழகுக்குப் பின்னழகு எப்படியோ என்ற ஐயம் தீர, அப்படி இப்படிச் சுற்றி வந்து பார்த்தும் மன நிறைவே அடைந்தான். பின்தான் தேடிவந்த பெண்மை இலக்கணத்தைக் கூறினான். ‘பெண் முன்னறிவுள்ளவளாக இருக்க வேண்டும், இந்தப் பண்பைத் தேடியே இவ்வளவு தொலை காடும் மேடும் ஊர்களும் சுற்றி அலைந்தேன்’ என்றான்.
‘அப்படியானால் நீங்கள் தேடிவந்த பெண் நம் ஆராய்ச்சி தான்’ என்றாள் பெண்ணின் தாய் மூதறிவணங்கு.
‘ஊரின் பெயரே முன்மதி. அதில் முந்தியமதி ஆராய்ச்சிக் குத்தான். குடும்பத்தில் பாட்டி முப்பாட்டி காலமாக வந்த பெயர் அது என்பது உண்மை. ஆனால், ஆராய்ச்சிக்கு அது முழு அளவில் பொருத்தமான பெயர். முன்மதி ஊரில் வந்த, முன்னாராய்ச்சியறிவு அவள் அறிவு’ என்றான் தந்தை முன்னறி பெருமாள்.
அவன் பாராட்டை ஊர் முற்றிலும் ஆரவாரத்துடன் ஏற்றது.
பெண்ணின் அத்தையாக வந்திருந்த ஒரு மூதாட்டி, தன் மருமகள் அறிவை நேரிலேயே அயலூர் மாப்பிள்ளைக்குக் காட்ட விரும்பினாள். இதைக் கண்சாடையாய்ப் பெண்ணுக்கு அறிவித்தபடி, ‘ஆராய்ச்சி! உன் மாப்பிள்ளை சிற்றுண்டி அருந்த வேண்டுமே, பரணில் போய்ச் சிற்றுண்டிப் பேழையிலிருந்த நல்ல தீனிகளாகப் பொறுக்கிக் கொண்டுவா’ என்றாள்.
ஆராய்ச்சி பரணேறிச் சென்றாள்.
எல்லாரும் வெளியே கூடியிருந்ததனால் வீட்டினுள் ஆள் இல்லை. பரணில் பேழையைத் திறந்து, சிற்றுண்டிகளைப் பொறுக்கிக் கொண்டே, அவள் தன் கண்களைச் சுழலவிட்டாள். ஒரு விட்டம் இற்றுவிழும் நிலையில் இருப்பதாக அவளுக்குத் தோன்றிற்று. அவள் முன்னறிவு வேலைசெய்யத் தொடங்கிற்று.
‘இஃது இன்று விழாது. பலநாள் விழாது. ஆனால், ஒரு நாள் விழும். அந்த நாளைக்குள்.’
பின்மதியின் மனைவியாய்த் தான் வாழும் நாள்களை அவள் சிந்தனை அவள் மனக்கண்முன் படைத்துக் காட்டிற்று.
‘பின்மதிக்கு ஒரு பிள்ளை பிறப்பான். அவனுக்கு என் முன்மதியும் தந்தையின் பின்மதியும் ஒருங்கே அமைந்திருக்கும் அவன், இருவருக்கும் - இது குடிக்கும் - இரண்டு ஊர்களுக்குமே ஓவியமாக வளர்வான். இன்று சிற்றுண்டி எடுக்க நான் வருவது போல, அவனும் வருவான். அப்போது. அப்போது..’
அவன் எண்ணமே அவளுக்குத் திகிலூட்டிற்று. உத்தரக்கட்டை அந்த அருமந்த பிள்ளை மீது விழுவதாக அவள் மனக்கண்முன் தோன்றிற்று. அவள் ‘ஐயோ, பிள்ளை! பிள்ளை!’ என்று கூவினாள். பின் அலறிப் புடைத்தழுதாள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள்.
‘போன ஆராய்ச்சி திரும்பி வரவில்லையே, என்ன ஆராய்ந்து கொண்டிருக்கிறாளோ!’ என்று தாய் சிறிது நேரம் காத்துப் பார்த்தாள். பின் அழுகைச் சத்தம் கேட்கவே என்ன என்று பார்த்து வரும்படி பணிப்பெண்ணை அனுப்பினாள்.
பணிப்பெண் வந்து, ‘அம்மா ஆராய்ச்சி, ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டாள்.
ஆராய்ச்சி அழுது கொண்டே கூறினாள்;
‘அம்மா, அதோ பார்த்தாயா அந்தப் பாழும் உத்தரத்தை! அஃது இன்று நாளை விழாது. ஆனால், என் பின்மதிக்குப்பின் அருமந்தபிள்ளை சிற்றுண்டி எடுக்க வரப் போகிறான். அவன் தலையில் அது விழலாமே! விழப்போகிறதே! அதைப் பார்த்தும் தான் தாளவில்லை. அதோ என் அருமைச் செல்வன் தலையில் அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தாயா? எவ்வளவு இரத்தம், என்ன காயம் பார்த்தாயா? நான் என்ன செய்வேன்!’ என்று அழுதாள்.
அந்தக் காட்சியைக் காணச் சகியாமல், பணிப் பெண்ணும் அவளருகே இருந்து ஓலமிட்டாள்.
அழுகை இரட்டிப்பதைப் பார்த்துத் தாய் மூதறிவணங்கு வேலைக்காரனை அனுப்பினாள்.
அழுகை மூவிரட்டியாயிற்று, ஏனென்றால் பணிப் பெண் வேலைக் காரனுக்கு அந்த எதிர்கால நாடகக் காட்சியைக் காட்டி அலறி அலறி அழுதாள்.
வேலைக்காரனுக்குப்பின் அத்தை. அத்தைக்குப் பின் தாய், தாய்க்குப்பின் தந்தை என ஒவ்வொருவராகப் பரணேறிச் சென்று, ஒவ்வொருவராக உடனிருந்து அழத் தொடங்கினர். ஊரார் பலர் சென்று அவர்களும் உடனிருந்து கூக்குரலிடலாயினர். பரண் நிறைந்து, ஏணிப்படி நிறைந்து, வீடு நிறைந்து, முற்றமும் தெருவும் நிறைந்து யாவரும் அழத் தொடங்கினர்.
மாப்பிள்ளை மட்டும்தான் கூடஇருந்து அழவில்லை. பெண் மட்டுமன்று; குடும்பம் மட்டுமன்று; ஊரே முன்னறிவுடையது என்பது அவனுக்கு விளங்கிவிட்டது. அதுமட்டுமன்று, திருமணமாகு முன்பே, தான் ஒரு பிள்ளைக்குத் தந்தையாகி விட்டதில் அவனும் பெருமை அடைந்தான்.
அவன் கூட்டத்தாரை எல்லாம் விலக்கி நேரே ஆராய்ச்சி முன்போய் நின்றான்.
‘ஆராய்ச்சி, ஆராய்ச்சி! அழுவதை நிறுத்தது. முதற்பிள்ளை போனால் போகட்டும். திருமணம் நடக்கட்டும், இன்னும் எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். எழுந்து திருமண ஏற்பாடுகளை எல்லாம் கவனிக்கச் சொல்லு!’ என்றான்.
‘ஆகா, என் முன்மதி பெற்ற பின்மதி!’ என்று ஆராய்ச்சி தன் வருங்காலக் கணவனைக் கட்டிக் கொண்டாள்.
‘என் மூதறிவுக்கு ஒரு புத்தறிவு’ என்று வருங்கால அத்தை பின்மதியை வாழ்த்தினாள். முன்மதி ஊருக்கே ஒரு பின்மதிக் கொழுந்து என ஊரார் அழுகையை நிறுத்திப் பாராட்டிற் கலந்து கொண்டனர்.
‘திருமணத்துக்கு நான் என்ன நிறச் சேலை உடுத்துவது?’ என்று மணப்பெண் முன்னிரவே மணமகனைக் கேட்டறிந்து கொண்டாள். மணமகன் அவ்வாறு கேட்கவில்லை. அவன் ஆராய்ச்சியைத்தான் முதலில் கண்டபோது அவள் உடுத்திருந்த ஆடையின் நிறத்தையே தன் உடுப்பின் நிறமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். திருமணம் முடிந்தபின், உத்தரம் புதிதாக மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் முதல் குழந்தை பிள்ளையாகப் பிறக்கவில்லை. பெண்ணாகப் பிறந்தது.
தாய் தந்தையர் அப்பெண்ணுக்கு ஆய்வமைதி என்று பெயரிட்டனர். பெயருக்கேற்ப அவள் முன்னறிவு, பின்னறிவு, உலக ஒப்புரவறிவமைதியுடன் விளங்கினாள்.
"முதற் மகவு பெண்ணாகையால் கவலையில்லாமல் போய்விட்டது’ என்றாள் ஆராய்ச்சி.
‘இதெல்லாம் முன்பின் ஆய்ந்து பார்த்துத்தான் நான் பெண்ணாகப் பிறக்கத் துணிந்தேன்’ என்றாள் ஆய்வமைதி, பின்னறிவு ஒரு கன்னத்தையும், ஆராய்ச்சி ஒரு கன்னத்தையும் பற்றிக் கொண்டு ஆய்வமைதிக்கு ஆசை முத்தங்கள் அளித்தனர்.
மட்டி மருதாயி
பூங்கழனி என்ற ஊரில் நார்மடி என்று ஓர் இளைஞன் இருந்தான். சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அவன் தாய் தந்தையரை இழந்தான். ஆயினும் அவன் நல்லறிவும் நற்குணமும் நல்லுழைப்பும் உடையவனா யிருந்தான். இதனால், வயது நிரம்பும் முன்பே அவன் சிறிதளவு பணம் திரட்டினான். ஒரு சின்னஞ்சிறு வீடும் ஒரு காணி நிலமும் வாங்கினான்.
“நார்மடி திறமையுடையவன்; செட்டானவன்; கொஞ்சப் பணத்தில் எவ்வளவோ நல்ல வீடு கட்டியிருக்கிறான்; இந்த வீட்டுக்கேற்றபடி பதுமைபோல அழகான மனைவி கிடைத்தால் இன்னும் நன்றாய் இருக்கும்” என்று அவன் உறவினர், நண்பர்கள் பேசிக் கொண்டனர்.
இச்சொற்கள் நார்மடியின் உள்ளத்தில் பதிந்துவிட்டன. ஆனால், பதுமைபோன்ற வடிவழகி எங்கும் கிடைக்கவில்லை. அவன் காடுமேடாய் அலைந்து திரிந்தான்.
தொலைவிலிருந்தே ஓர் ஊரின் அழகு அவனைக் கவர்ந்தது. அவ்வூருக்கு நீர்மடி என்று பெயர். நேரிமலை என்ற மலையின் மடியில் இருப்பதுபோல அது காணப்பட்டது. அதன் பின்னே, ஊரின் பெரிய கோயிலும் மலைச் சிகரமும் இருந்தன. முன்னே ஓர் அகன்ற ஏரி இருந்தது. மலை முகட்டிலுள்ள சுனைகளி லிருந்து மாலை போல இரண்டு ஆறுகள் ஏரியில் வந்து விழுந்தன. ஏரியில் நீர் நிரம்பியபின், அதிலிருந்து புதிதாக மற்றோர் ஆறு புறப்பட்டு மலையை மூன்று முறை வலமாகச் சுற்றியோடிற்று.
நார்மடி இவ்வழகிய ஊரில் சிலநாள் தங்கினான். அங்கே அவன் ஒருநாள் பதுமைபோன்ற அழகுடைய ஒரு பெண்ணைக் கண்டான். தான் தேடிவந்த பெண் அவள்தான் என்ற உறுதி அவனுக்கு உடனே ஏற்பட்டு விட்டது. அவளைப்பற்றிய தகவல்கள் அறிய முற்பட்டான்.
அவள் மட்டான செல்வக் குடும்பத்தில் பிறந்தவள். தந்தை பெயர் காரி. தாய் பெயர் காயாம்பூ. இருவரும் தம் ஒரே பெண் மீது போட்டியிட்டு அன்பு சொரிந்தனர். காரி அவளுக்குத் தன் தாய் பெயரிட்டு, மருதி என்று அழைக்க விரும்பினாள். காயாம்பூவோ தன் அன்னை பெயரிட்டு, அவளைத் தாயி என்று அழைக்க விரும்பினான். இறுதியில் இருவரும் இரண்டு பெயரும் சேர்த்து அவளை மருதாயி என்று அழைத்தனர்.
மங்கைப் பருவமடைந்த பின்னும் மருதாயி குழந்தை போலவே ஓயாது பேசினாள். அவள் அறிவும் என்றும் குழந்தை யறிவாகவே இருந்தது. இதனால், எவ்வளவு அழகும் பணமும் இருந்தும், அவளை யாரும் மணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ‘அழகான பதுமையை வைத்துக் கொண்டு எப்படிக் குடும்பம் நடத்துவது?’ என்று அவர்கள் கருதினார்கள், பருவமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அவள் கன்னிப் பதுமையாகவே இருந்தாள்.
நார்மடிக்கு மருதாயியை முழுதும் பிடித்துவிட்டது. அவள் சிறுபிள்ளைத்தனம் வாய்ந்த படபடப்பான நடையும் பேச்சும்கூட அவனுக்கு வெறுப்பு ஊட்டவில்லை. ‘உலக அனுபவம் போதாத சிறுமி, சூதுவாதற்றவள், குடும்பப் பொறுப்பறிந்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்’ என்று அவன் கருதினான்.
மருதாயியின் திருமணம் பற்றிக் காரிக்கும் காயாம் பூவுக்கும் பெருங்கவலை இருந்தது. ஆகவே, நார்மடியின் கருத்தறிந்த போது, அவர்கள் எல்லையிலா மகிழ்ச்சி கொண்டனர். அவர்கள் மருதாயியை அவனுக்கு மணமுடித்து வைத்தனர். மனைவியுடன் நார்மடி தன் ஊருக்குப் புறப்பட்டபோது, மருதாயியின் பெற்றோர் அவனுக்குத் தம் செல்வத்தின் பெரும் பகுதியையும் பொன்னாகவே மாற்றிக் கொடுத்தனர். தம் பிள்ளையின் நலங்கருதி, அவளுக்குத் தெரியாமலே அந்தப் பொன்னை அவர்கள் நார்மடியிடம் ஒப்படைத்தனர்.
செல்வப் பெண்ணாகிய மருதாயியை நார்மடி சிலநாள் வேலைசெய்ய விடவில்லை. அவள் கால்கள் நிலத்தில் பரவ விடவில்லை. ஆனால், இந்த நிலை என்றும் நீடிக்க முடியாது என்று நார்மடி நினைத்தான். மெல்ல மெல்ல அவளை வீட்டு வேலையில் ஈடுபடுத்த எண்ணினான். மாலைச் சிற்றுண்டிக்கு வடை செய்து வைக்கும்படி கூறிவிட்டு, அவன் வயல்வேலை களைக் கவனிக்கச் சென்றான். செல்லுமுன், வடைக்கு வேண்டிய உழுந்து, எண்ணெய் முதலியவை வாங்கித் தொடக்க வேலைகளையும் கூடமாட இருந்து செய்ய உதவினான்.
“நீ கவலையில்லாமல் வா, அத்தான்; வடைகளைச் சுடச்சுட அடுக்கி வைத்திருக்கிறேன்” என்று கூறி மருதாயி அவனை அனுப்பினாள்.
அவளுக்கு வீட்டில் நேரம் போகவில்லை. பக்கத்து வீடுகளில் சென்று பேச முயன்றான். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். சிலர் அவளுடன் பேசிக் கொண்டே தங்கள் வேலையைப் பார்த்தார்கள். சிலர் தம் வேலையை அவளிடமே கொடுத்துவிட்டுப் பேசினார்கள். முற்பகலை இவ்வாறு கழித்துவிட்டு அவள் வீடுவந்தாள். காலையில் சமையல் செய்யாததால், வீட்டில் உணவு இல்லை. அவளுக்குப் பசியாயிற்று, பசியுடனேயே வடை சுடத் தொடங்கினாள். கணவன் வந்தவுடன் குளிப்பதற்காக அவள் வேம்பாவில் வெந்நீர் வைத்தாள்.
கணவன் வாங்கிவந்த எண்ணெயில் பாதியை அவள் எண்ணெய்ச் சட்டியில் வார்த்துத் தீ மூட்டினாள். வடை ஒவ்வொன்றாக எண்ணெயில் முறுக வெந்தது. அவளுக்கு இருந்த பசியில் முதலில் எடுத்த ஒன்றிரண்டு வடைகளை அவள் ஊதிச் சூடாற்றித் தின்றாள். மீந்தவற்றுள் சிலவற்றைச் சூடாற்று வதற்காகத் தட்டத்தில் வைத்தாள் சில எண்ணெயில் வெந்து கொண்டிருந்தன. இத்தருணத்தில் வேம்பா, மழவாய்க் கொதித்து இரையும் ஓசை அவள் செவியில் பட்டது. உடனே அவள் எழுந்து சென்று அதை வேறுகடத்தில் வார்த்துக் கொள்ள விரும்பினாள். பெரிய கலம் கனமாயிருந் ததால், சிறு கலத்திலே வெந்நீரை வாங்கி வாங்கிப் பெரிய கலத்தில் கொட்ட எண்ணினாள். சிறு கலத்தில் நீர் நிரம்பிக் கொண்டிருந்தது.
அச்சமயத்தில் அவள் அடுப்பின் பக்கமாகப் பூனை ஓடுவது கண்டாள். உடனே, வேம்பாவை அப்படியே விட்டுவிட்டு, அவள் பூனையைப் பின்பற்றி ஓடினாள். பூனை தட்டத்திலுள்ள வடைகளைக் கவ்விக் கொண்டே பின்வாயில் வழி தாவிற்று. அதை அவள் துரத்திக் கொண்டே சென்றாள்.
பூனை அவளுக்கு எட்டாத ஒரு மதில்மேல் ஏறிற்று. அங்கிருந்தவாறே வடைகளைத் தின்று விட்டது. அது தின்று முடியும்வரை மருதாயி அதைப் பார்த்துக் கொண்டே நின்றாள். “சரி, பூனை தின்றது, இனித் திரும்பி வராது. மீந்த வடையைப் பார்ப்போம்” என்று சமையற்கட்டுக்கு வந்தாள். ஆனால், அங்கே அடுப்பில் தீ ‘திமுதிமு’ என்று எரிந்து கொண்டிருந்தது. வடைகளெல்லாம் கருகி எண்ணெய் பற்றிக் கொண்டது. அடுப்பருகில் இருந்த எண்ணெய்கூடக் கொதித்துப் பொங்கி அடுப்பில் பாய்ந்ததால், தீ அடுப்பைக் கடந்து கொழுந்து விட்டெரிந்தது.
“ஐயோ! வடையெல்லாம் போயிற்று. எண்ணெயும் போயிற்று. அத்துடன் தீ வேறு வீட்டில் பற்றிக் கொண்டு விடும் போலிருக்கிறதே! என்ன செய்வேன்?” என்று அவள் அலறினாள். வடைக்கரைத்த மாவின் பெரும்பகுதி அருகிலேயே இருந்தது. சிந்திக்க நேரமில்லாமல் அவள் அதை அடுப்பின் மீது கொட்டினாள். அவள் எதிர்பார்த்தது போல், தீ அவிந்து விட்டது. ஆனால், மாவு முழுதும் கெட்டுப் போயிற்று. ‘எப்படியும் வீட்டையாவது தீப்பற்றாமல் காத்தோமே! அதற்காகக் கணவன் என்னைக் கட்டாயம் போற்றவே வேண்டும்!’ என்று அவள் தனக்குள்ளாகக் கூறிக் கொண்டாள்.
அவள் அடுப்பண்டை கவனம் செலுத்தியிருந்ததனால், வேம்பாவை முற்றிலும் மறந்து விட்டாள். கொதிக்கும் வெந்நீர் சிறு கலம் நிரம்பி வழிந்து அறையெங்கும் பரவித் தீயை அவித்தது. மருதாயி அந்த அறைக்கு வந்து பார்ப்பதற்குள் அறை முழுவதும் வெள்ளக் காடாய் இருந்தது. மேலும் அவள் அது கொதிக்கும் நீர் என்பதை மறந்து அறைக்குள் நுழைந்தபோது, நீரில் சறுக்கி விழுந்தாள். விழுந்ததனால் ஏற்பட்ட ஊமைக் காயங்களுடன் வெந்நீராலும் பாதி அணைந்த நெருப்பாலும் உடலில் வெப்புக் கொப்புளங்களும் உண்டாயின. அவற்றால் அவள் துடித்தாள்.
பொருள் நட்டத்தையும் உடம்பின் நோவையும் அவள் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. தாய் தந்தையரைவிடத் தன்மீது அன்பு காட்டிய கணவன் மனம் நோகுமென்றுதான் அவள் வருந்தினாள். தற்போதைக்காவது அவனிடமிருந்து இந்த வெள்ளக்காட்டை மறைக்க எண்ணினாள். அவளுக்குத் தெரிந்த அளவில் இதற்கு ஒரே ஒரு வழிதான் தோன்றிற்று. சலவை செய்த கணவன் ஆடைகளும் அவள் ஆடைகளும் ஓர் இரும்புப் பெட்டியில் இருந்தன. ‘இவற்றால் நீர் கொட்டிய இடம் தெரியாமல் துவட்டிவிடலாம். அவற்றைப் பின் நானே சலவை செய்து மடித்துவிடுகிறேன்; எல்லாம் சரி செய்தபின் இவற்றைத் தெரிவித்தால் கணவன் என் அறிவுக்கு மகிழ்வது உறுதி’ என்று அவள் எண்ணினாள்.
நீரில் தோய்த்துப் பிழிவதற்கு அவள் தன் திருமண ஆடைகளையே பயன்படுத்தினாள். ஈரம் புலர்வதற்கு மற்ற ஆடைகள் பயன்பட்டன. மறுநாள் எடுத்துச் சலவை செய்யலாம் என்ற எண்ணத்துடன் அவள் புழுதி படிந்து துவண்ட ஆடைகளை அப்படியே பெட்டியில் திணித்து வைத்துப் பூட்டினாள்.
நார்மடி பகல் முழுவதும் உழைத்தான். நண்பகல் சிறிது காய்கனி கிழங்கும் நீருந்தவிர அவன் எதுவும் உண்ணவில்லை. சோர்வுடனும் பசியுடனும் வீடு வந்தான்? “குளிக்க வெந்நீர் வார்த்து வைத்திருக்கிறாயா, மருது” என்று அவன் தன் மனைவியை அன்புடன் கேட்டான்.
அவள் சிறிது அச்சத்துடனும் சிறிது குழைவுடனும் பேசினாள்:
“ஐயோ! திறந்துவைத்த திருகை மூட மறந்து போய் விட்டேன். வெந்நீர் முழுவதும் கொட்டிப் போய்விட்டது. என்னை மன்னியுங்கள், இன்று ஒருநாள் தண்ணீரில் குளியுங்கள்!” என்றாள்.
அவள் எதிர்பார்த்த அளவுகூட அவன் கோபித்துக் கொள்ளவில்லை. அவள் குளிர்ச்சியான பேச்சில் அவன் மகிழ்ந்து விட்டான். நீரின் குளிர்ச்சியே அவனுக்குச் சோர்வகற்றியது.
ஆடை மாற்றிக் கொள்ள விரும்பி அவன் வேறு ஆடை கேட்டான்.
"அந்தோ, இங்கெல்லாம் ஒரே வெள்ளக்காடாக இருந்தது. அதைப் பார்த்து நீங்கள் அருவருப்புக் கொள்வீர்கள் என்று நினைத்தேன். அதையெல்லாம் நம் ஆடைகளைக் கொண்டுதான் துடைத்தேன். ஆனால், அறிவில்லாத்தனமாய் மாற்றாடை எடுத்து வைத்துக் கொள்ள மறந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்!’ என்று அவள் மன்றாடினாள்.
‘பாவம்! மன்னிக்க வேண்டிய செய்தி இந்த ஒன்றுதான் போலிருக்கிறது! இந்த முழு மூடத்தை வைத்துக் கொண்டு தாய்தந்தையர்கள் இவ்வளவு காலம் எப்படித்தான் வாழ்ந்தார்களோ?’ என்று நார்மடி நினைத்துக் கொண்டான். ஆனால், இப்போதும் அவன் எதுவும் சொல்லவில்லை. சொல்லிப் பயனில்லை என்று விட்டு விட்டான்.
இன்னும் பசிக்கு எதுவும் வரவில்லை. சிறிது நேரம் அவளாகக் கொண்டு வருவதை எதிர்பார்த்திருந்து விட்டு, பின் அவனாகக் கேட்டான்.
“பசி நேரம், சும்மா இருக்கிறாயே! எங்கே நீ செய்த வடைகள்? எப்படி இருக்கின்றன பார்ப்போம்?” என்றான்.
“ஐயையோ! வடைகள் ஒன்றிரண்டைத் தான் நான் தின்றேன். பகல் சமையலே செய்யாததால் எனக்குப் பசியாக இருந்தது. ஆனால், நான் தின்றதும் அன்றி நம் பூனையும் அடுக்கடுக்காக வடையைத் தூக்கிக் கொண்டு போயிற்று. அதை நான் துரத்திச் சென்றேன். அஃது எட்டாத மதிலேறி இருந்து கொண்டு என் கண் முன்னாலேயே அவ்வளவையும் விழுங்கிவிட்டுது!” என்று அவள் கதையளந்தாள்.
பசி, உள்ளார்ந்த கோபம் இவற்றிடையேகூட அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள்? பூனை நான்தான் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள் அவள்.
“என் மனைவி பூனை என்றும் நான் நினைக்கவில்லை; பூனை என் மனைவியென்றும் நினைக்கவில்லை; இரண்டும் வேறு வேறாகத்தான் இருக்க வேண்டும். சரி, நீயும் பூனையும் தின்றது போக மீதி ஒன்றும் இல்லையா?” என்றாள்.
“நான் பூனையைத் துரத்திக் கொண்டு போன சமயமாகப் பார்த்து வடைகள் கருகிவிட்டன. எண்ணெயும் பற்றி எரிந்து போயிற்று!” என்றான்.
அவனுக்கு இப்போது உண்மையிலேயே கோபம் மிகுதியாயிற்று. ஆயினும் அவன், அதை அடக்கிக் கொண்டான்.
‘அப்படியானால் நான் வந்த பின்னும் ஏன் சும்மா இருக்கிறாய்? போய் மீந்த எண்ணெயையும் மாவையுமாவது கொண்டு வா, திரும்பவும் நானாவது சுட்டு உனக்கும் தந்து நானும் தின்கிறேன்!’ என்றான்.
‘எண்ணெயும் மாவும் இருந்திருந்தால், நீங்கள் சுடப் போகும்வரை நான் சும்மாவா இருப்பேன்? மீதி எண்ணெய் அடுப்பிலேயே இருந்ததால் அதுவும் எரிந்து போயிற்று. எரிந்த தீ வீட்டையே பொசுக்கிவிடுமோ வென்று பயந்து, நான் மாவைக் கொட்டி அணைத்தேன். நான்செய்த பிழைகளில் இன்று நீங்களும் பட்டினி, நானும் பட்டினி!’ என்றாள்.
அவனால் அவளைக் காதைப் பிடித்துத் திருகாமல் இருக்க முடியவில்லை. “சிறு குழந்தைகளுக்கு இருக்கும் அறிவுகூட உனக்கு இல்லை. உன் தாய் தந்தையர்கள் உன்னுடன் எப்படிக் காலம் கழித்தார்களோ?” என்று மனக்கசப்புடன் கூறினான்.
காது நோவு பொறுக்காமல் அவள் சிறு பிள்ளை போலவே கத்தினாள். சிறு பிள்ளை போலவே அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“நான் அப்பா அம்மா இல்லாமல் நீங்களே கதி என்று வந்திருக்கிறேன். அடிபட்டு எனக்குத் தெரியாது. நீங்கள் இப்படி அடித்தால் நான் என்ன செய்வேன்!” என்று தேம்பினாள்.
அவன் கோபம் கணத்தில் மாறிவிட்டது. இரக்கமே மேலிட்டது. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. தாய் தந்தையர் அவளுக்குச் சரியான பயிற்சி அளிக்கவில்லையென்று அவன் கருதிக் கொண்டான். அவள் அழுகை தீர அவளை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு, குழந்தையைச் சிரிப்புக் கூட்டுவது போலப் பேசினான். அவளும் குழந்தைப் போல எல்லாவற்றையும் மறந்து அவனிடம் கனிவாகப் பேசினாள்.
வெளியே கோபத்தை விட்டுவிட்டாலும், நார்மடிக்கு உள்ளே கவலை மிகுதியாயிற்று.
வேலைக்குப் போகாமலும் இருக்க முடியாது. இவளை நம்பி வீட்டை விட்டுப் போன ஒரு நாளில் இவ்வளவு வீட்டுப் பொருள்கள் சேதமாய் விட்டன. நம் பொன்மணிகளையாவது இவளறியாமல் நாம் பாதுகாக்க வழி செய்ய வேண்டும் என்று அவன் எண்ணினான்.
அவன் தன் பொன்மணி காசுகளையெல்லாம் ஒரு பெட்டியிலிட்டான். விடியுமுன் சென்று அதைத் தோட்டத்து மூலையிலுள்ள ஒரு கொய்யா மரத்தடியில் புதைத்து வைத்தான்.
கணவன் எழுந்து செல்லும்போது மருதாயி அரையுறக்கத் தில்தான் இருந்தாள். பலகணி திறந்து அவள் பார்த்தாள். கணவன் கொய்யா மரத்தடியில் கிளறிக் கொண்டிருந்து விட்டு வருவதைக் கண்டாள். திரும்பி வந்தவுடன் அவள் கணவனிடம் இது பற்றிக் கேட்டாள். “ஏன் கொய்யா மரத்தடியைக் கிளறிவிட்டு வருகிறீர்கள்? அதில் என்ன இருக்கும்?” என்றாள்.
அவள் செய்தி முழுவதும் அறியவில்லை என்று அவன் கண்டான். பகலாய் விட்டதால், இனி புதைத்ததை இடமாற்ற முடியாது. மறுநாள் இரவு இன்னும் கவனமாக இருந்து இடம் மாற்றிவிட எண்ணினான். அதற்கிடையில் மட்டி மருதாயிக்கேற்ற ஏதேனும் ஒரு விளக்கம் கூறிவிட அவன் எண்ணினான். அவன் வழக்கமான நகைச்சுவை அவனுக்கு உதவிற்று.
“கொய்யா மரத்தில் கனிகள் பறிக்கலாம் என்று போனேன். மரத்தில் கனியில்லை. ஆகவே ஒருவேளை வேரில் இருக்கலாமோ வென்று தோண்டிப் பார்த்தேன்” என்றான்.
‘மரத்தில் கனியில்லாவிட்டால் வேரில் இருக்கக் கூடும்’ என்று மட்டி மருதாயி உண்மையிலேயே நம்பினாள்.
கணவன் வயலுக்குப் போன சமயம் கண்ணாடிக்கலம் விற்பவன் தெருவழியே கூவிக் கொண்டு சென்றான். மருதாயி அவனை உள்ளே அழைக்க எண்ணினாள். ஆனால், அவனாக வந்தான். அவன் நடந்து களைப்படைந்திருந்ததே அதற்குக் காரணம். மருதாயிடம் முதலில் நீர் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் குடித்தான். மருதாயி விரும்பிய ஒன்றிரண்டு கலங்களை அரிசி விலைக்குக் கொடுத்தான். பின், “சிறிது தோட்டத்தில் படுத்துவிட்டுப் போகிறேன். களைப்பாயிருக்கிறது” என்றான்.
அவள், “சரி, அந்தக் கொய்யாமரத்தடி குளிர்ச்சியாய் இருக்கும். போய்ப் படுத்துக்கொள்” என்றாள்.
“கொய்யா” என்றவுடன் அவன் ‘கொய்யாக்கனிகள் இருக்கின்றனவா’ என்று கொம்புகளைத் துருவிப் பார்த்தான்.
’மரத்திலே கனி இருக்குமென்று பார்க்கிறயா? அஃது ஒன்றும் கிடையாது. என் கணவர் இரவிலே போய்ப் பார்த்தார். கொப்புகளில் கனிகளில்லாதது மட்டுமல்ல, வேரிலாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். அங்கேயும் கிடைக்க வில்லை யாம்!" என்றாள் அவள்.
மருதாயின் பேச்சு விளங்காமல் அவன், அவள் முகத்தை நோக்கினான். அதில் கேலியோ குறும்போ எதுவும் இல்லை. மரத்தடியில் படுத்தவண்ணமே அவன் அவள் சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டான்.
முதலில் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பின் திடீரென்று அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று.
“இந்தப் பெண் உலகியல் அறிவு அற்றவள் என்பது தெளிவு. அவளிடம் கணவன் ஏதோ செய்தியை மறைத்துப் பேசியிருக்கிறான். இதில் கட்டாயம் சூது ஏதேனும் இருந்து தானாக வேண்டும். எதுவானாலும் இங்கே தோண்டிப் பார்த்தால் தெரிந்துவிடுகிறது” என்று அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.
அவன் மெல்ல மண்ணைக் கிளறினான். அது காலையில் கிளறிய மண்ணாதலால், அவன் வேலை எளிதாயிருந்தது. பொன்மணிக் காசுகளைக் கண்டதே அவன் அடைந்த வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை. அவற்றைச் சுருட்டிக் கலங்களுக் கடியில் வைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவன் மரத்தடியில் நின்று நகர்ந்து வெளியேறினான்.
மருதாயி கணவனை ஒற்றாடியது போலவே அவனையும் ஒற்றாடியிருந்தாள். ஆனால், அவள் பார்க்கும் போது அவன் கிளறியவற்றை மறைத்துக் கொண்டிருந்தான். அவன் வெளியேறும் போது அவள் கணவனிடம் கேட்டதுபோல அவனிடமும் கேள்விகள் கேட்டாள்:
“ஏது, உனக்கு வேரில் ஏதோ கனி அகப்பட்டுவிட்டது போலிருக்கிறதே!” என்றாள்.
அவன் முதலில் திடுக்கிட்டான்; தன் திருட்டுக் கண்டு பிடிக்கப்பட்டு விட்டதோ என்று திகிலடைந்தான்.
ஆனால், மருதாயியின் அடுத்த கேள்வி, எடுத்ததில் எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் தந்து விட்டுப் போனா லென்ன?" என்றாள் அவள்.
ஏதும் தெரியாத அவள் கேள்வியைச் சமாளிப்பதில் அவனுக்கு மிகுதி வருத்தம் ஏற்படவில்லை.
“அம்மா! ஒரு கனிதான் இருந்தது. அதைக் கடித்து எச்சில் படுத்திவிட்டேன். ஆனால், நீங்கள் தங்கமானவர்கள். கனிக்குப் பதில் ஒரு கண்ணாடிக் கலமே தருகிறேன்” என்றான். அவளுக்கு முன், கொடுக்க மறுத்த மிகுதி விலையுடைய ஒரு கலத்தை அவன் எடுத்துக் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் கம்பி நீட்டினான்.
மருதாயியும் அடக்கமுடியாத களிப்புடன் கணவன் வரவுக்குக் காத்திருந்தாள்.
கொய்யாமரத்தின் கவலையினாலேயே நார்மடி அன்று விரைந்து வீடுவந்தான். வாயிற்படியிலேயே சென்று மருதாயி அவனை வரவேற்றாள். வீட்டில் அடியெடுத்து வைக்குமுன் புத்தார்வச் சுவையுடன் கொய்யாக்கனி கதையையும், கடித்த கொய்யாக்கனிக்கு ஈடாக விலையேறிய கண்ணாடிக் கலம் பெற்ற அரும் பேற்றையும் எடுத்து விளக்கினாள்.
அவன் அவளிடம் ஒன்றும் பேசவில்லை. கொய்யாமரம் சென்று கிளறிப் பார்த்தான். அவன் ஆவியே பிரிவதுபோல இருந்தது. மனைவி என்ன கேட்டும் பேசாமல் அவன் கட்டிலில் கிடந்து பெருமூச்சு விட்டான்.
“அந்தக் கொய்யாக்கனி என்ன உங்களுக்கு என்னை விடவா பெரிதாய்ப் போயிற்று?” என்று அவள் புண்பட்ட உள்ளத்துடன் கேட்டாள்.
அந்தத் துயரத்திலும்கூட அவன் மெள்ளச் சிரித்தான். அவள் அறியாமைக்கு இரங்கியும் அன்புள்ளம் கண்டு பரிவுற்றும் அவன் அவளைத் தன்னருகில் இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.
“அன்பே, நீ என்னிடம் காட்டும் பாசம் எனக்கு உன்னிடம் உள்ள கோபத்தை எல்லாம் அகற்றி விட்டது. கொய்யாக் கனியன்று: உன் பெற்றோர் கொடுத்த அத்தனை பொன்மணிக் காசுகளுமே எனக்கு உன்னைவிடப் பெரிதன்று. அதை நீ இன்றாவது உணரலாம். ஏனென்றால் அந்தக் கண்ணாடிக்காரன் கொண்டு போனது கொய்யாக் கனியை அன்று: உன் பெற்றோர் என்னிடம் தந்த செல்வ முழுவதும் தான் அதிலிருந்தது!” என்றான்.
மருதாயி இப்போது உண்மையிலேயே பதைபதைத்தாள்.
“ஐயோ! நீங்கள் தாமே சொன்னீர்கள். வேரில் கனியிருக்கு மென்று கிளறினதாக!”
“ஆம்: கண்ணே! உனக்குச் செய்தி தெரியாமல் ஒளிப்பதற்காகத்தான் அப்படிச் சொல்லி உன்னை ஏமாற்ற நினைத்தேன். இப்போது அஃது என்னையே ஏமாற்றியதாய் விட்டது. கனிகள் கொப்பில்தான் இருக்கும். வேரில் இருக்கும் என்று சொன்னால், முழு மட்டி தவிர வேறுயாரும் நம்ப மாட்டார்கள். நீ நம்பினாய்; நான் நம்ப வைத்தேன்” என்றான்.
“என் தாய் தந்தையர் என்னிடம் எவ்வளவோ அன்பு காட்டினார்கள். ஆனால், நான் மட்டியாயிருந்ததை எனக்குத் தெரிவிக்கவில்லை. திருத்த முயலவும் இல்லை. அதனால்தான் அவர்கள் தந்த செல்வமெல்லாம் போயிற்று. ஆனாலும், நான் இனிமேலாவது இப்படி மட்டியாய் நடக்க மாட்டேன். என்னை எத்தனையோ தடவை மன்னித்திருக்கிறீர்கள். இந்தத் தடவை மட்டும் கடைசியாக இப்போது மன்னிப்புத் தாருங்கள்!” என்று அவள் கணவன் நாடியைத் தாங்கினாள்.
“மட்டித்தனத்தால் செல்வமெல்லாம் பறிகொடுத்தேன் பிறகு இனி மட்டியாய் இருந்தால்கூடக் கெடுதலில்லை” என்று எண்ணிக் கொண்டான் நார்மடி.
“நான் ஒரு மட்டி, இனி திருந்த வேண்டும், நான் ஒரு மட்டி இனி திருந்தவேண்டும்!” என்று தனியாய் இருக்கும் போதெல்லாம் மருதாயி தனக்குள் கூறிக் கொண்டேயிருந்தாள். அது அவள் ஓயாது செபித்து வந்த மந்திரமாகப் போய்விட்டது.
சில சமயம் அவள் இப்படி முணங்கிக் கொண்டிருக்கும் சமயம் திடீரென்று நார்மடி அவளைக் கூப்பிடுவான். அல்லது ஏதேனும் கேட்பான். அவள் தன்னையறியாமல் ‘நான் மட்டி, இனித் திருந்த வேண்டும்’ என்று மந்திரத்தை உரத்துக் கூறிவிடுவாள். இத்தகு தருணங்களில் அவளே வெட்கப்பட்டு அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்வாள். ’ஐயோ! இப்படிப்பட்ட மட்டி மனைவியைக் கட்டிக்கொண்டு நீங்கள் எவ்வளவு கட்ட நட்டங்களுக்கு ஆளாகிவிட்டீர்கள்! என்று கண்ணீர் வடிப்பாள்.
முதலில் அவள் அழகுக்காகவே அவளைத் தெரியாமல் மணந்தவன் நார்மடி; அவள் மட்டி என்று தெரிந்தபின் படிப்படியாகஅவன் அவளை மணம் செய்த பிழைக்காக வருந்தத் தொடங்கியிருந்தான். ஆனால், இப்போது அவள் கள்ளங்கபட மற்ற அன்புள்ளமும் மனிதப் பாசமும் பணிவும் வாய்மையும் அவனை உருக்கின. ’அவள் மட்டித்தனத்தையும் இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்; அதனால் ஏற்படும் கட்டநட்டங்கள் எவ்வளவானாலும் அதைப் பொறுத்துக் கொள்ள முடியும்; இந்த அன்புச்செல்வம் அவற்றுக் கெல்லாம் பதின்மடங்கு ஈடுசெய்ய வல்லது என்று அவன் எண்ணினான்.
அவளிடம் அவன் காட்டிய பரிவும் பாசமும் முன்னிலும் பன்
மடங்காயின. அம் மாறுதல் கண்டு அவளும் மகிழ்ந்தாள். இவ்வளவு நல்ல கணவனுக்காகத் தான் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தன் மட்டித் தனத்தை விட்டுவிடவேண்டுமென்றும் அவள் உறுதி செய்து கொண்டாள். அவ்வகையில் தனக்கு உதவும்படி அவள் கடவுளை ஓயாது வேண்டிக் கொண்டாள்.
நல்ல தூக்க நேரத்திலும் அவள் மந்திரமும் அவள் உறுதியும் அவளறியாது செயலாற்றின.
‘நான் மட்டி, நான் திருந்த வேண்டும். என் கணவர் எவ்வளவோ நல்லவர். அவருக்காக என் மட்டித்தனத்தை விரைவில் போக்கியருள வேண்டும், கடவுளே!’ என்ற சொற்கள் நார்மடியின் அரையுறக்கத்தில் அவன் செவியில் விழும். அச்சமயங்களில் அவன் அவளை அன்பாதரவுடன் நோக்கி மகிழ்வான்.
அவள் மட்டித்தனம் அவ்வளவு பெரிதாகப் போய்விடவு மில்லை. அதன் பயனாக ஏற்பட்ட வறுமையும் அவர்களை வாட்டாமல் விட்டு விடவுமில்லை. ஆனால், நார்மடி இப்போது அவள் திருந்த வேண்டு மென்றுகூட விரும்ப வில்லை. “மருது! நீ இப்படி ஓயாது கவலைப்பட வேண்டிய தில்லை. உன் மட்டித்தனத்தைக் கண்ட நான் முன்பு வருந்தியதும் கண்டித்ததும் தவறு என்று இப்போது காண்கிறேன். எனக்கு நீ திருந்த வேண்டும் என்ற எண்ணமும் இப்போது இல்லை. அதற்காக நீ கவலைப் படவும் வேண்டாம். இப்போது இருப்பதுபோல் இருந்தால் போதும்!” என்பான்.
மருதாயியும் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தை நாளடைவில் ஒழித்தாள். ஏனெனில், அவள் எவ்வளவு முயன்றாலும் அவள் மட்டித்தனம் புதுப்புது வகையில் செயலாற்றிக் கொண்டுதான் இருந்தது. நார்மடியும் புதுப்புது ஏமாற்றங்களடைந்து, சில சமயம் சிறு சீற்றங்கொண்டும், சில சமயம் சிரித்தும், சில சமயம் தோல்விகளை மறைத்தும் வந்தான்.
இனி, எப்படியாவது மீண்டும் உழைத்துப் பொருள் திரட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் நார்மடிக்கு எழுந்தது. அருகிலுள்ள நகரத்துக்குச் சென்று தொழிற்சாலைகளில் உழைக்க எண்ணினான். ஆனால், மருதாயி தானும் உடன் வரவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள்.
புறப்படும்போது அவர்களிடம் சில வறண்ட அப்பங்கள் தாம் இருந்தன. ஆனால், அவற்றுடன் சேர்த்து அண்டைய யாலரிடமிருந்து அவர்கள் மூன்று வெண்ணெயுருண்டைகள் பெற்றுக் கொண்டனர். வீட்டுப் பொருள்களையெல்லாம் அவன் உள்ளறையில் வைத்து விட்டுக் கதவுகளைப் பூட்டினான்.. வெளிக் கதவுகைளையும் பூட்டிக் கொண்டு வரும்படி மனைவியிடம் கூறிவிட்டு, நார்மடி ஊர் எல்லை வரை நடந்தான். ஊரில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தபின் அவன் முன் சென்று காத்திருந்தான்.
ஊர் தாண்டிச் சாலை வழியில் அவர்கள் சென்றனர். இருபுறமும் பச்சிளமரங்கள் தழைத்திருந்தன. வழி இடுக்கமா யிருந்ததால், வண்டிகள் செல்லும்போதும் இளமரப் பட்டைகள் பல உராய்ந்து கிழிந்திருந்தன. நார்மடி அவற்றை மருதாயிக்குச் சுட்டிக்காட்டினான். “பாவம்! பாதையருகில் இருப்பதால் இந்த இளமரங்கள் எவ்வளவோ தொல்லைப் படுகின்றன!” என்றான்.
மருதாயிக்கு மரங்கள்மீது உண்மையிலேயே இரக்கம் உண்டாயிற்று. அவள் தன்னிடமுள்ள வெண்ணெய் உருண்டையில் ஒன்றை எடுத்தாள். உராய்ந்த இடங்கள் ஆறும்படி அவற்றின்மீது தடவிக் கொண்டே சென்றாள். நார்மடி முன்சென்றதனால் இதைக் கவனிக்கவில்லை.
சாலை ஒரு குன்றின் மீதேறிச் சென்றது. அவர்கள் கிட்டத்தட்ட மேட்டின் உச்சியில் சென்றுவிட்டனர். நார்மடி உச்சி கடந்துவிட்டான். அச்சமயம் வெண்ணெய் உருண்டைகளில் ஒன்று மருதாயியின் கையிலிருந்து நழுவி விழுந்தது. அது குன்றின் சரிவில் பின் நோக்கி உருண்டோடிக் கொண்டே சென்றது. மருதாயி சிறிது தொலை அதை ஓடிப்பிடிக்க முயன்றாள். அது முடியாது என்று கண்டவுடன் அவளுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. ‘வெண்ணெயை வெண்ணெயால்தான் ஓடிச் சென்று பிடிக்க முடியும். ஆகவே, அந்த உருண்டையைப் பிடிக்க இந்த உருண்டையை அனுப்புவோம்’ என்று அவள் திட்டமிட்டாள். “வெண்ணெய் உருண்டையே! வெண்ணெய் உருண்டையே! உன் அக்காளுக்கு முன்னே ஓடிச் சென்று அவளையும் கூட்டிக் கொண்டு விரைந்து என் பின்னே வா! இஃது என் கணவருக்குத் தெரியுமுன் வந்து விடு!” என்று கூறி அவள் மூன்றாம் வெண்ணெய் உருண்டையையும் கீழே போட்டாள்.
அஃது உருண்டோடுவது கண்டு அவள் மகிழ்ந்தாள். ‘இது விரைவில் சென்று மற்ற உருண்டையையும் கூட்டிக் கொண்டு வந்துவிடும்’ என்று கூறிக் கொண்டே கணவனைப் பிடிக்க எட்டி நடந்தாள்.
அவர்கள் நெடுந்தொலை வந்துவிடவில்லை. பொழுதும் முற்றிலும் விடிந்துவிடவில்லை. ஆயினும், ஒரு சிற்றோடை சலசல என ஓடிக் கொண்டிருந்தது. அதனருகில் இருந்து உண்ணலாம் என்று நார்மடி எண்ணினான். மருதாயியும் ‘சரி’ என்றாள். ஆனால், அவள் உள்ளத்தில் இப்போது ஒரு கவலை ஏற்பட்டது. ‘வெண்ணெய் உருண்டைகள் இரண்டும் இன்னும் வரக் காணோம். ஏன் வரவில்லை!’ என்று எண்ணினாள். பின்னோக்கிக் கொண்டே வரண்ட அப்பப் பொட்டலத்தை அவிழ்த்தாள்.
“பின்னால் யாரைப் பார்க்கிறாய், மருது!” என்றான் கணவன்.
அவள் ஒன்றும் பேசவில்லை. பின்னால் ஆர்வத்துடன் பார்த்தபடியே இருந்தாள்.
“வெண்ணெய் உருண்டைகளில் ஒன்றை மட்டும் எடு. மற்றவற்றை உச்சிவேளைக்கு வைத்துக்கொள்வோம்” என்றான் அவன், மீண்டும்!
“வெண்ணெய் இல்லையே! பாவம் அந்தப் பச்சை மரங்களின் காயங்களை ஆற்ற உருண்டை முழுவதும் செலவழித்து விட்டேன்.”
“உன் அறிவே அறிவு! சரி அடுத்த உருண்டையை எடுப்பது தானே!”
“அடுத்த உருண்டை நாம் குன்றேறி வரும்போது நழுவி விழுந்தது; நான் குனிந்து எடுப்பதற்குள் அஃது உருண்டு உருண்டு ஒட்டமெடுத்தது. நான் எவ்வளவு ஓடியும் அதைப் பிடிக்க முடியவில்லை.”
நார்மடிக்கு முதலில் சிறிது கோபமும் அடுத்து அடக்க முடியாத சிரிப்பும் வந்தன. இரண்டையும் அடக்கிக் கொண்டான்.
“போனால் போகிறது. மூன்றாவது உருண்டையாவது இருக்கிற தல்லவா?” என்றான்.
“இரண்டு உருண்டைகளும் ஒன்றாகச் சேர்ந்து இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும். இரண்டாவது உருண்டையைச் சென்று அழைத்து வரும்படியாகத் தான் மூன்றாவதையும் பின்னால் வேகமாக அனுப்பியிருக்கிறேன்.”
நார்மடி பசியையும் கோபத்தையும் அறவே மறந்து வயிறு குலுங்கச் சிரித்தான். அவள் அதுகண்டு கண்கலங்கினாள். அப்போது அவனுக்கு மீண்டும் இரக்கம் வந்தது.
“போகட்டும்! வரண்ட அப்பந் தின்று தண்ணீரை யாவது வயிறு நிரம்பக் குடிப்போம்” என்று கூறி அப்பத்தில் ஒன்றைத் தின்னத் தொடங்கினான் நார்மடி. ஆனால், மருதாயிக்கு வெண்ணெய் இல்லாமல் அப்பம் இறங்க மறுத்தது. அச்சமயம் பார்த்து அவளுக்கு வீட்டைப் பூட்ட மறந்து விட்ட செய்தியும் நினைவுக்கு வந்துவிட்டது.
“அத்தான்! நான் முன்னைவிடப் பெரிய மட்டியாய்த் தான் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். பொருள்களையெல்லாம் வீட்டிற்குள் அடுக்கி வைத்து விட்டேன். ஆனால் பின் கதவை மூட மறந்து முன் கதவைப் பூட்டிவிட்டு வந்துவிட்டேன்” என்றாள்.
அவனுக்குச் சிறிது மனக்கசப்பு வந்தது. “நீ மட்டியல்லள், பெரிய அறிவாளி, இப்போதும் நம் பயணமே தடைப்பட்டுப் போயிற்று. திரும்பிப் போக வேண்டியது தான்!” என்றான்.
தன் காரணமாகப் பயணம் தடைப்படுவதை அவள் விரும்பவில்லை. சற்று இருந்து சிந்தித்தாள்.
“பயணம் தடைப்பட வேண்டாம். நான் விரைந்து போய்க் கதவுகளைச் சாத்திக்கொண்டு வந்துவிடுகிறேன். அத்துடன் நேற்றுத்தான் என் அப்பாவும் அம்மாவும் உங்களுக்கென்று முந்திரிக்கொத்தும் முறுக்கும் அனுப்பியிருந்தார்கள். அவற்றையும் எடுத்து வருகிறேன். வழியில் நம் வெண்ணெய் உருண்டைகளைக் கண்டால், அவற்றையும் கூட்டிக் கொண்டு வருகிறேன்!” என்று கூறியவாறு அவள் வீட்டுக்கு விரைந்தாள்.
அவள் விசித்திரப் போக்கு, சுறுசுறுப்பு, மறதி, திடீர் நினைவுகள் ஆகியவற்றை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் நார்மடி திகைப்புக் கொண்டிருந்தான்.
மருதாயி முன் கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்றாள். பின் கதவைச் சாத்தித் தாழிட்டாள். அதன்பின் அவள் பரணில் வைத்திருந்த முந்திரிக் கொத்துப் பானையையும், முறுக்குப் பானையையும் எடுத்துக் கொண்டாள். அவற்றுடன் முன்வாசல் கடந்து வந்தபின் முன் கதவைப் பூட்ட முனைந்தாள். ஆனால், அச்சமயம் அவள் மீட்டும் விழித்தாள். முன்வாசலைத் திறந்தபின் திறவுகோலை எங்கோ வைத்துவிட்டாள். திரும்பவும் வீடு முழுவதும் தேடியும் அஃது அகப்படவில்லை. அவள் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினாள்.
அவள் மூளை மீண்டும் வேலை செய்தது.
“திறவுகோல் போய்விட்டால் என்ன? பூட்டுத்தான் போய் விட்டால் என்ன? இந்தக் கதவையே பத்திரமாய்க் கொண்டு போய்த் திரும்பி வரும்போது கொண்டுவந்து சேர்த்து விடுகிறேன். என் கணவனுக்காக நான் எவ்வளவு பெரிய வேலையையும் செய்யத் தயங்கமாட்டேன்!” என்று அவள் எண்ணினாள்.
அவள் உண்மையில் அழகுப் பதுமை மட்டுமன்று, கவலையற்ற அவள் வாழ்வு அவளுக்கு வழக்கமீறிய உடல் வலுவைக் கொடுத்திருந்தது. அவள் கதவையே அதன் குடுமிகளிலிருந்து பிடித்துத் தூக்கி எடுத்தாள். அதைத் தலைமீது தாங்கிக் கொண்டாள். கதவின் மீது இரண்டு புரிமணைகள் இட்டு, முந்திரிக் கொத்துப் பானையையும், முறுக்குப் பானையையும் அவற்றின் மீது வைத்தாள். கணவன் இருந்த இடத்துக்கு எட்டி நடந்தாள்.
தன் திறமை, தன் தியாகம், தன் சமய சந்தர்ப்ப அறிவு ஆகியவை பற்றி அச்சமயம் அவள் கொண்ட பெருமைக்கு எல்லையில்லை. ‘நான் இவ்வளவு செய்வேனென்று என் கணவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. கதவைப் பூட்டி திறவு கோலைப் பத்திரமாகக் கொண்டுவரத்தான் அவர் சொன்னார். இப்போது கதவு முழுவதுமே பத்திரமாய் இருக்க வழி செய்துவிட்டேன். அத்துடன் இந்தக் கதவின் பளுவை அவர் பங்கிட்டுக் கொள்ளவும் நான் சம்மதிக்கப் போவதில்லை. நானே அதைத் தூக்கிக் கொண்டு போவேன்’ என்று அவள் உள்ளம் எக்களித்தது.
கதவைத் தூக்கிக் கொண்டு வரும் உருவத்தைக் கண்டதும் முதலில் நார்மடி யாரோ, ஏதோ என்று அச்சமடைந்தான். தூக்கிக் கொண்டு வருவது கதவையே என்றும், தூக்குபவள் தன் மனைவியே என்றும் கண்டபின், அவன் மலைப்பும் திகைப்பும் அடைந்தான். ஆனால், அதற்கான மனைவியின் விளக்கம், அது பற்றிய அவள் பெருமிதமான தற்பெருமை கண்டபோது அவன் ஒன்றும் பேசவில்லை. வயிற்றையும் விலாவையும் பிடித்துக் கொண்டான். அவ்வளவு பெருமுயற்சிகளைத் தனக்காக மேற்கொள்ளும் மனைவியைக் கண்டு சிரிப்பது தகாது என்று அவன் எண்ணினான்.
பாவம்! மருதாயி பொழுதடையும்வரை கதவும் பானை களும் சுமந்தாள். கணவன் அடிக்கடி அவற்றைத் தான் சுமப்பதாகக் கூறியும் அவள் விடவில்லை. “உங்களுக்குக் கால் வலித்தால், உங்களையே அதில் ஏற்றிக் கொண்டு நடக்க எண்ணுகிறேன்!” என்றாள் அவள்.
அவர்கள் வர எண்ணிய நகரம் இன்னும் ஒரு யாமத்தொலைவில் இருந்தது. இந்தக் கதவுடன் நள்ளிரவில் நகரையடைவதைவிட, காட்டு வழியில் தங்குவதே நன்று’ என்று நார்மடி கருதினான். ஆகவே ஒரு முச்சந்தியருகேயுள்ள படராலமரத்தடியில் அவர்கள் தங்கினர். கதவையே கட்டிலாக்கி அதில் இருவரும் அமர்ந்தனர். இருவரும் சிறிது அரைத்துயில் கொண்டனர்.
நள்ளிரவில் தொலைவில் அரவம் கேட்டு மருதாயி விழித்தாள். அவள் கணவனையும் விழிப்பூட்டினாள். வருகிற கூட்டம் திருடர் கூட்டம் போலவே தோன்றிற்று. “இந்தக் கதவை வைத்துக் கொண்டு எங்கே ஒளிவது?” என்று நார்மடி கவலைப் பட்டான்.
“கதவைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் அத்தான்! நீங்கள் ஏறுங்கள் மரத்தில்” என்றாள் மருதாயி.
அவளை கீழே விட்டுச்செல்ல மனமில்லாமல், “நீ முதலில் ஏறிக்கொள், கதவு கீழே கிடக்கட்டும்!” என்றான்.
“கதவு கீழே கிடந்தால் திருடர்கள் உள்ளத்தில் நம்மைப்பற்றி ஐயம் ஏற்படும். ஆனால் அதுபற்றிய பொறுப்பு உங்களுக்கு வேண்டாம். நான் கதவுடனேயே ஏறிக் கொள்வேன்!” என்றாள் மருதாயி.
அவள் உடலுரத்தின் திறத்தை அவன் அன்று தான் கண்டான். ஒரு கையில் பானைகளுடன் கூடிய கதவைப் பற்றிய படியே அவள் மரத்தில் பரபரவென்றேறி உச்சியில் மூன்று கிளைகள் இணையும் இடத்தில் அமர்ந்து கொண்டாள். கணவனையும் அங்கே வரும்படி அழைத்தாள். இருவரும் ஏறி அமர்வதற்கும் திருடர்கள் அணுகுவதற்கும் சரியாய் இருந்தது.
திருடர்கள் மரங்கடந்து சென்று விடுவார்கள் என்றே அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் அங்கேயே தாவளம் இட்டனர். நடுவே தீமுட்டி அதில் குளிர்காய்ந்த வண்ணம் சூழ அமர்ந்தனர். ஒவ்வொருவர் பையும் பளு வேறியதாய் இருந்தது. அவற்றிலுள்ள பொன்மணி நகைகள், வைரமாலைகள், பொன் காசுகள், முத்துப் பவளங்கள் ஆகியவற்றை எடுத்து அவர்கள் வகை வகையாக்கிக் கட்டினர். நார்மடி அவற்றை கண்டு வியப்பும் கிலியும் கொண்டு நடுங்கினான்.
மருதாயி பகல் முழுதும் கதவைச் சுமந்து வந்திருந்தாள். இரவில் நன்றாகத் தூங்கவுமில்லை. இப்போது மரத்தின் மேலும் அதை நீண்ட நேரம் தாங்கிக் கொண்டிருக்க அவளால் முடிய வில்லை. அத்துடன் கணவனுக்கு இருந்த கிலி அவளுக்கு இல்லை. அவன் கிலியையும் அவள் உணரவில்லை. வீட்டில் அயலார் அருகிலிருக்கும் சமயம் கணவனுடன் இரகசியமாகப் பேசுவது போல, அவள் அவன் அடித்துடையைக் கிள்ளிக் கொண்டு பேசினாள்.
“அத்தான்! என்னால் இத்தகைய சுமையையும் சுமந்து கொண்டிருக்க முடியாது. கொஞ்சம் பளுவைக் குறைக்கப் போகிறேன். முதலில் முந்திரிக் கொத்துப் போகட்டும்!” என்றாள்.
அவன், தம் ஆபத்தைச் சுட்டிக்காட்டி அதைத் தடுத்துப் பார்த்தான். அவள் கேட்கவில்லை. ‘சரி, இன்றுடன் இருவரும் ஒழிந்தோ ம்’ என்றே முடிவு செய்து அந்த முடிவை எதிர் நோக்கி இருந்தான்.
கதவின் மேலிருந்து ஒரு பானையை அவள் எடுத்தாள். கவிழ்த்தாள். மரத்தடியில் முந்திரிக்கொத்துகள் விழுந்து உருண்டன.
முதலில் திருடர் திடுக்கிட்டு எழுந்து சிறிது தொலை விலகினர். ஆனால், ஒருவன் சிரித்தான். “இவை அணில்கள் சேகரித்த கொட்டைகள் தாமடா! இதற்குப் பயமா?” என்றான்.
ஒரு திருடன் சிறிது வாய் பிளந்து கொண்டு அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்தான். முந்திரிக் கொத்து உருண்டை களில் ஒன்று சரியாக அவன் வாயில் மேல் விழுந்தது. விழுந்ததும் இனிக்கவே அவன் அதைக் கடித்துத் தின்றான்.
“அடே கொட்டையல்லடா! இந்த மரம் முந்திரிக் கொத்து மரமடா! விழுந்ததெல்லாம் முந்திரிக் கொத்துகள். பொறுக்குங்கள், பொறுக்கித் தின்னுங்கள்!” என்றான்.
அவர்கள் முந்திரிக் கொத்துகளைப் பொறுக்கும் போது மருதாயி பானையை ஒருவன் தலைமீது போட்டாள். அவன் தலையில் காயம் ஏற்பட்டது. பானையின் உடைசல்கள் வேறு ஒன்றிரண்டு பேரையும் காயப்படுத்தின.
“இந்த மரத்தில் முந்திரிக்கொத்துப்பூதம் இருக்கிறது போலிருக்கிறது” என்று கூறித் திருடர் காயத்தை ஆற்றிக் கொண்டனர். காயங்களின் கொதிப்பை முந்திரிக் கொத்துகளின் இனிப்பு அகற்றியது.
சிறிது நேரம் கழித்து மருதாயி முறுக்குப் பானையின் பளுவையும் குறைக்கத் திருவுளம் கொண்டாள். இத்தடவையும் நார்மடியின் எச்சரிக்கை பயன்படவில்லை.
இத்தடவை திருடர்களிடையே கிலி மிகுதி இல்லை. தவிர முந்திரிக் கொத்துகளைக் கல் என்றும் கொட்டையென்றும் கருதியது போல இப்போது எத்தகைய மயக்கமும் அடைய வில்லை. விழுந்தவுடனே, “முறுக்கு டோய், முறுக்கு” என்று ஒருவர் மேல் ஒருவர் விழுந்தடித்து முறுக்குகளைப் பொறுக்கினர்.
முன்போலவே பானை விழுந்தது.
“அட பூதமே! முந்திரிக் கொத்தும் முறுக்கும் கொடுத்து விட்டு எவ்வளவு வேண்டுமானாலும் எங்கள் மேல் பானை உடைத்துக்கொள்!” என்றான் திருடர் தலைவன்.
ஆனால், அடுத்து நிகழ இருப்பதை அவன் எதிர் நோக்கவில்லை. பானைகள் இரண்டும் போனபின்பும் பளுமிகுதி குறையவில்லையென்று மருதாயி முணுமுணுத்தாள். நார்மடி அவளைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். “கதவைக் கீழே போட்டுவிடாதே. வேண்டுமானால் நான் பிடித்துக் கொள்ளு கிறேன்” என்றான். ஆனால், அவள் இரண்டும் செய்யத் துணிய வில்லை. தடாலென்று கதவைக் கீழே எறிந்தாள்.
இத் தடவை திருடர் கிலிக்கு எல்லையில்லை. ஏனெனில் கதவால் தாக்குண்டவர்களுள் இருவர் தலையிலிருந்து குருதி பீறிடத் தொடங்கிற்று. கிலியிலும் கலவரத்திலும் அவர்கள் அனைவரும் பணப்பைகளையும் மறந்து உயிருக்கஞ்சி ஓட்டம் பிடித்தனர். அவர்கள் ஓடிய ஓட்டம் காடு கடக்கும் வரை நிற்கவில்லை. பொழுது விடியும் வரையும் விடவில்லை.
நார்மடியும் மருதாயியும் மெல்ல மெல்ல இறங்கி வந்தனர். எல்லையற்ற செல்வம் பை பையாக, சாக்குச் சாக்காகக் கட்டுண்டு கிடந்தது. அவற்றை எடுத்துச் செல்வதற்குரிய சாதனமாகக் கதவும் அருகே கிடந்தது. கதவில் பைகளை அடுக்கி, அவற்றை மறைத்து அவர்கள் விறகுகளை அவற்றின் மேலிட்டு கட்டினர். பளு இப்போது முன்னிலும் மிகுதியானதால், நார்மடியும் கதவை ஒருபுறம் தூக்க மருதாயி இணங்கினாள். வீட்டின் சிறு செல்வத்தைக் காவல் செய்யத் தவறிய கதவு, இப்போது காட்டின் மாபெருஞ் செல்வங்களுடன் மீண்டு வந்தது.
மட்டி மருதாயி தன் மட்டித்தனத்துக்காக இப்போது வருந்த வில்லை. அவள் கணவனும் அதற்காக இரக்கமடையத் தேவையில்லாது போயிற்று. அவர்கள் மருதாயியின் தாய் தந்தையர்களையும் அழைத்து அளவற்ற செல்வத்துடன் வாழ்ந்தனர்.
மருதாயியை இப்போது யாரும் மட்டி என்று அழைப்ப தில்லை. உண்மையில் செல்வத்தின் வளமும் அதனால் வந்த மகிழ்ச்சியும் அவள் மட்டித்தனம் இருந்த இடமறியாமல் அதைப் போக்கியிருந்தன. செல்வத்தின்மேல் செல்வங்களை அவள் ஈன்றாள். அந்தச் செல்வங்கள் அறிவு பற்றிய கவலை அவள் அறிவை இயல்பாக வளர்த்தது. கணவன்மீது அவள் காட்டிய அன்பும் உறவினர் ஊராரிடம் காட்டிய பாசமும் அறிவை மேலும் வளர்த்தன. கணவனும் பிறரும் அவள் அழகுக்காகவும் குணத்துக்காகவும் மட்டுமன்றி அவள் அறிவுக்காகவும் அவளைப் போற்றத் தொடங்கினர்.
குலாமலரின் குறும்பு
குலாமலர் பத்து வயது நிரம்பாத சிறுமி. அவள் முகம் முழு நிலாப்போல வட்டவடிவமானது. நிலவொளி போலவே அஃது இனிய நகையொளியுடையதாயிருந்தது. அவள் பேச்சிலோ யாழின் கவர்ச்சியும் குழலின் இனிமையும் கலந்திருந்தன. இவை காரணமாக அரியலூரில் எல்லா வீடுகளுக்கும் உரிய செல்வப் பிள்ளையாக அவள் ஓடியாடித் திரிந்தாள்.
குலாமலரை எல்லாரும் எவ்வளவு நேசித்தார்களோ, அவ்வளவு குலாமலர் ஆனைக்கையிடம் நேசமும், பாசமும் உடையவளாயிருந்தாள். ஆனைக்கை என்பது உண்மையில் ஒரு பூனையின் பெயரே. மற்றப் பூனைகளின் வால்களைப்போல அதன் வால் பட்டிழையாகத் தொங்குவதில்லை. அது கிட்டத் தட்ட ஆனையின் தும்பிக்கைபோல நிமிர்ந்து குழைந்து ஊசலாடிற்று. ஆனை தும்பிக்கையால் செய்யும் வேடிக்கைகளை யெல்லாம் அது வாலால் செய்து காட்டிற்று. சில சமயம் அஃது எலிகளைக்கூடப் பின்னாலிருந்தே வால் நுனியில் பற்றிப் பிடிக்கும். பெரிய மரக் கட்டைகளை வடங்களில் பிணித்து இழுக்கும் முறையில், அஃது எலிகளை வாலால் பிடித்திழுப்பது பார்க்க வேடிக்கையாய் இருக்கும். இக்காரணங்களாலேயே குலாமலர் அதற்கு ‘ஆனைக்கை’ என்று பெயரிட்டிருந்தாள்.
குலாமலரிடம் இரண்டு பெருங்குறைகள் இருந்தன. ஒன்று அவள் குறும்பு; மற்றொன்று அவள் மறுதி; இந்த இரண்டுக் காகவும் அவள் தாய் தேம்பாவணி அவளை அடிக்கடி கடிந்து கொண்டாள். அவள் தூங்கும் குழந்தைகளின் தலை முடிகளை முடிபோட்டு வைப்பாள். பெரியவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சமயம் பின்னிருந்து நாற்காலியடியில் வந்து உட்கார்ந்துகொண்டு அதன் நாலு கால்களையும் பிடித்து மெல்லத் தூக்குவாள். தான் செய்த குறும்புகளைக்கூட அவள் அடிக்கடி மறந்து விடுவதால், தான் வைத்த பொறிகளில் சில சமயம் அவள் தானே மாட்டிக் கொள்வதுண்டு. தவிர, தாய் அவளைச் சந்தைக்குக் கத்திரிக்காய் வாங்கிவர அனுப்பினால், அவள் கடைத்தெரு சென்று கத்திரிக்கோல் வாங்கி வருவாள். சில சமயம் சுண்டைக்காய் அரி என்றால், சுண்டு விரலை அரிந்து கொள்வது முண்டு.
ஆனைக்கைக்கு அடுத்தபடி அவள் அன்புக்குரியவன் இரண்டரை வயதுடைய அவள் தம்பியே; அவன் பெயர் கிண்கிணி. அவள் குறும்புக்கும் மறதிக்கும் மிகுதி ஆளானவர்களும் அவ்விருவருமே. ஆனைக்கையின் பின்புறத்தை ஏணையாக்கி, கிண்கிணியைப் பின்னோக்கி அதன்மீது அவள் ஏற்றி வைப்பாள். பூனை பின்னோக்கி ஏணையாய்ச் செல்லுமென்று அவள் எதிர்பார்த்து அதை ஊக்கி விடுவாள். ஆனால் பூனை முன்னோக்கி ஓடியதனால், கிண்கிணி முகங்குப்புற விழுந்து அழுவான். பூனை தான் செய்த தவறறியாது ‘மியூ, மியூ’ என்று கரையும். ஆனால் அவள் ‘ஏன் முன்னால் செல்லவில்லை! தும்பிக்கை இருக்கும் பக்கமாகத்தான் யானை போக வேண்டும்?’ என்று கூறி அதைக் கிள்ளுவாள்.
குலாமலருக்கு அரிசில்கிழான் என்று ஒரு மாமன் உண்டு. அவன் ஆண்டுக்குப் பதினொரு மாதங்கள் ஊரிலிருக்க மாட்டான். தமிழகமெங்கும் சுற்றித் திரிவான். ஆனால், அவன் அரியலூரில் தங்கிய காலத்தில் குலாமலர் ஓயாது அவனைச் சுற்றி வட்ட மிடுவாள். அரிசில்கிழான் செடிகொடிச் சித்து, பொன் சித்து, மண் சித்து முதலிய பலவகைச் சித்துகளில் வல்லவன், அந்தச் சித்துலகத்திலேயே அவன் விளையாடினான். அதன் மூலமே குலாமலருக்கும் ஆனைக்கைக்கும் எல்லையற்ற ஆர்வ விளையாட்டுகள் காட்டினான்.
அவன் கத்திரிச் செடியில் அவரைக்காயும் அவரைக் கொடியில் பூசணிக்காயும் காய்க்க வைப்பான். கண்ணாடியைக் கம்பியாக்கிக் கயிறுபோல் வளையும்படி செய்வான். வளையல் பொடிகளுடன் பசை சேர்த்துக் கூரிய கத்திகள் செய்வான். களிமண் எலி செய்து ஓடவிட்டு, ஆனைக்கை அவற்றை உயிருள்ள எலி என்று பின்பற்றிப் பிடித்து ஏமாறும்படி செய்வான். நிலைக்கண்ணாடிகள் பலவற்றைச் சாய்த்தடுக்கி ஆனைக்கை போன்ற பல உருவங்கள் அதில் தெரியும் படி செய்வான். அவை பல பூனைகள் என்று கருதி ஆனைக்கை அஞ்சி ஒதுங்கும்போது அவையும் ஒதுங்கும். ஆனால், ஆனைக்கை சீறும்போது அவை அத்தனையும் சீறும்.
குலாமலர் பூனையின் திகைப்புக் கண்டு வயிறு குலுங்கிச் சிரிப்பாள். பூனை, செய்தி இன்னதென்றறியாமல் திருதிருவென விழித்து மலைப்படையும்.
அரிசில் கிழான் எது செய்தாலும் குலாமலர் அது கண்டு களிப்புடன் குதித்தாடாமல் இருப்பதில்லை. அவன் செயல்கள் அவ்வளவு புதுமையார்வத்தையும் வேடிக்கையையும் தூண்டுவ தாயிருக்கும். ஆனால் பொதுவாக எந்தச் செயலும் அவளுக்கு நெடுநேரம் புதுமையாயிருப்பதில்லை. ஒருசில கணங்களுக்குள் அதில் அவள் சோர்வுற்றுவிடுவாள். ’இது வேண்டாம். மாமா! இஃது இப்போது போதும்! வேறு புதிதாக நல்ல வேடிக்கை காட்டு!" என்பாள்.
ஒருநாள் அவன் காட்டிய செயலில் அவள் புதுமை யார்வம் மணிக் கணக்காக மாறாமல் இருந்தது.
ஒரு சுண்டைக்காயின் பக்கம் அவன் ஒரு கடுகை வைத்தான். ஏதோ முணுமுணுத்துக் கொண்டு கடுகைத் தொட்டான். கடுகு சுண்டைக்காயளவு வளர்ந்தது. விரைவில் அதைச் சிறிதாக்கிற்று. நின் சுண்டைக்காயருகில் புன்னைக்காயையும் புன்னைக் காயருகில் மாங்காயையும், மாங்காயருகில் தேங்காயையும் வைத்து ஒவ்வொன்றும் மற்றதைத் தாண்டிப் பெரிதாக வளரச் செய்து காட்டினான். அதன்பின் எல்லாவற்றையும் பழையபடி சிறிதாக்கி, முன்போலவே இருக்கும்படி செய்தான்.
இந்த வேடிக்கையின் ஒவ்வொரு படியிலும் குலாமலர் ஆனைக் கையைத் தூக்கிக் கொண்டு அரிசில் கிழானைச் சுற்றிச் சுற்றி நடனமாடினாள். ஒரு தடவை மாமன் இந்த வேடிக்கையைச் செய்தபின் அதையே இரண்டாவது தடவை, மூன்றாவது தடவை எனப் பல தடவை செய்யும்படி அவள் தூண்டினாள். எத்தனை தடவை செய்தாலும் அவள் ஆர்வம் தீரவில்லை.
தன் வாழ்விலேயே முதல் தடவையாக, அவள் வேடிக்கை பார்ப்பதுடன் அமையவில்லை. அதைக் கற்றுத் தானும் செய்யத் துடித்தாள். அது வகையில் மாமனை ஓயாது நச்சரித்தாள். “உனக்கு எத்தனையோ வேடிக்கைகள் தெரியுமே மாமா! இந்த ஒன்றை எனக்குக் கற்றுக்கொடு. நீ போனால் திரும்பிவர ஆண்டுக்கணக்காகும். அதுவரை உன் பேரைச் சொல்லி இந்த வேடிக்கையை நான் செய்து கொண்டிருப்பேன். நீ எனக்குக் காட்டுவதுபோல, நான் ஆனைக்கைக்கும் கிண்கிணிக்கும் வேடிக்கை காட்டுவேன்” என்றாள்.
அரிசில்கிழானுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், அதே சமயம் அவன் முகத்தில் ஒரு சிறு கவலையின் கோடும் தோன்றிற்று.
“உனக்குக் கற்றுக் கொடுக்கத் தடையில்லை. ஆனால், நீ அதைக் கொண்டு யாருக்காவது குறும்பு செய்யாமல் இருக்க மாட்டாய்! அத்துடன் உனக்கு மறதி அதிகம். பெரிது சிறிதாக்கு வாய்பாட்டை மறந்துவிடுவாய்” என்றான்.
“குறும்பு செய்யமாட்டேன். மறக்கமாட்டேன்” என்று அவள் வாக்களித்தாள். அதன்பின் மாமன் அவளுக்கு எதையும் பெரிதாக்குவது, சிறிதாக்குவது ஆகிய வித்தைகளைக் கற்றுக் கொடுத்தான்.
அவன் வெண்பொடிப் பொட்டலம் ஒன்றை அவளுக்கு அளித்தான்.
’இதில் தேவைக்கேற்ற மிகச் சிறிய அளவே எடுத்துக் கொள். இடக்கையில் ஒரு விரலில் நன்றாய்த் தேய்த்துக் கொள்.
"பின் பெரிதாக்க வேண்டும் பொருளைத் தொடு.
“மன்மனம் போலே மன்கோலம்!” என்று கூறு.
"இதை, மெல்லக் கூறினால் பொருள்கள் மெல்ல வளரும். உரத்துக் கூறினால் விரைந்து வளரும்.
“வளர்ச்சி நிற்க வேண்டுமென்றால், ‘என்மனம் போலே இன்கோலம்’ என்று கூறு!” என்றான்.
குலாமலர் முதலில் வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்து கொண்டாள். ஒற்றைக்காலில் ‘செங்கீரை’ பாடிக் கொண்டே.
‘மன்மனம் போலே மன்கோலம்!
என்மனம் போலே இன்கோலம்!
தன்மனம் போலே தன்கோலம்!
தைதை தைதை தையக தை
தந்தக தந்தக தந்தக தை!’
என்று அவள் பாடியாடினாள்.
கலைச் சித்துகளில் அரிசில்கிழான் வல்லவனென்றால், குறும்புச் சித்துகளில் குலாமலர் அவனிலும் வல்லவளாகவே இருந்தாள். மாமன் கனவு காணாத புதுப்புது வகைகளிலெல்லாம் அவள் பெருமை சிறுமைச் சித்துகளைப் பயன்படுத்தினாள்.
அவள் சந்தையிலிருந்து கீரைத் தண்டு வாங்கி வருவாள். வழியில் கீரைத்தண்டு கீரை மரமாகிவிடும். தூக்கிவரும் பெருஞ்சுமை கண்டு தாய் ‘இஃது என்ன?’ என்று திகைப்பாள். அடுத்தகணம் கீரைமரம் பழையபடி கீரைத் தண்டாகிவிடும்!
“இந்தக் கழற்சியை நான் கீழே வைக்கிறேன். நீ தூக்கி விடுவாயா?” என்று அவள் விளையாட்டுத் தோழர்களைக் கேட்பாள். அவர்கள் இணக்கம் தெரிவித்தபின், அவள் சுழற்சிக்காயை ஒரு பெரிய பாராங்கல் ஆக்கி விடுவாள்! அதன்மீதே அவளும் உட்கார்ந்து கொண்டு சிரிப்பாள்!
ஒரு சிறிய எறும்பை ஒரு மூலைக்குள் துரத்தி நெருக்கிற்று ஒரு சிலந்தி. குலமலருக்கு உடனே தன் வாய்பாடு நினைவுக்கு வந்துவிட்டது. அவள் எறும்பைப் பெரிதாக்கினாள். துரத்திக் கொண்டு வந்த சிலந்தி அஞ்சி ஓடத் தொடங்கிற்று. ஆனால், அதைப் பக்கத்திலிருந்து பிடிக்க ஒரு பல்லி தாவிற்று. குலாமலர் சிலந்தியைப் பெரிதாக்கினாள். பல்லி அஞ்சி ஓடிற்று!
ஒருநாள் குலாமலர் ஒரு சுண்டெலியைப் பிடித்து விட்டாள். ஆனைக்கை அதை ஆவலுடன் கௌவ ஓடி வந்தது. ஆனால், அதற்குள் அவள் அதைப் பெரிதாக்கிவிட்டாள். சுண்டெலியைப் பிடித்த பிடியை அவள் பின்னும் விடவில்லை. அதை மேலும் பெரிதாக்கி, அதன் முதுகின் மீதே ஏறி அமர்ந்தாள். பெரிதாய் விட்ட சுண்டெலி அவளைத் தூக்கிக் கொண்டு சுற்றி ஓடிற்று.
வழக்கமான சந்து பொந்துகளில் அதன் உடல் புகவில்லை யாதலால் அது வழி தெரியாமல் திகைத்தது. ஆனால், வழக்கமாக அதை வேட்டை யாடும் பூனைகளும் நாய்களும் இப்போது அதைக் கண்டு ஓடின. ஆனைக்கை இப்போது குலாமலரையே கண்டஞ்சிற்று! கிண்கிணி மட்டும் ‘என்னையும் ஏத்திக்கோ, அக்கா! என்னையும் ஏத்திக்கோ அக்கா!’ என்று அழுது பின்னாலேயே ஓட முயன்றான்.
அவள் குறும்பு வேட்டைகளுக்குத் தற்செயலாக ஒரு முடிவு ஏற்பட்டது. ஆனால், இஃது அவளறியாமல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியாகும்.
அவள் ஒருநாள் தோட்டத்துக்குச் சென்றாள். ஒரு கத்திரிக்காயை அணில் கொத்திக் கீழே போட்டிருந்தது. அதை அவள் பெரிதாக்கினாள். அஃது, ஒரு சிறிய கன்றுக் குட்டி அளவு பெரிதானபின், அதை அவள் வண்டியாக உருட்டிக் கொண்டு வந்தாள்.
அச்சமயம் அவள் தன்னையறியாமல், ‘மன்மனம் போலே மன்கோலம்’ என்று முனகிக்கொண்டு வந்தாள்.
ஆனைக்கை அவள் எதிரே வந்தது. கத்திரிக்காய் வண்டியைக் கண்டு அஃது அஞ்சவில்லை. அதன் மீது தாவிற்று. குலாமலர் அதை எடுத்தணைத்துக் கொண்டாள். அச்சமயமும் அவள் வாய் மெல்ல, ‘மன்மலர் போலே மன்கோலம்’ என்று கூறியதை அவளே கவனிக்கவில்லை.
வீடு வந்தபின் அவள் கத்திரிக்காயை மீண்டும் சிறிதாக்கி விட்டாள். ஆனால், பூனைக்கும் சித்து ஏற்றியிருப்பது அவளுக்குத் தெரியாது. அது பூனைக்கும் தெரியாது. வாய்பாட்டைக் குலாமலர் வாய்க்குள்ளேயே கூறியிருந்ததால் அது மெல்ல மெல்லத்தான் வளர்ந்தது.
மாலையில் பால் குடிக்கும் சமயத்தில் கூட ஆனைக்கை ஒரு சிறிதே வளர்ந்திருந்தது. ‘இன்று நிறைய எலி தின்றிருக்கிறது போலிருக்கிறது’ என்று குலாமலர் எண்ணிக் கொண்டாள். ஆனால், வழக்கமாகக் குடித்த பால்கூடப் போதாமல் அது முனகிற்று.
அவர்கள் வீட்டுக்குப்பின் ஒரு தோட்ட வீடு இருந்தது. வெயில் நேரத்தில் தோட்டக்காரன் அதிலே தான் தங்குவான். தோட்டத்துக்கு வேண்டிய உரம், மண்வெட்டி முதலிய கருவிகள் வைக்கும் இடமும் அதுவே. கத்திரிக் காய், அவரைக்காய்களைக் கோடையில் வற்றல் போடுவதும், சேமிப்பதும் அங்கேயே யாதலால், அங்கே எலிகளின் தொந்தரவு அதிகம். ஆனைக்கை அடிக்கடி இரவுகளில் அங்கே சென்று வேட்டையாடுவது வழக்கம். வழக்கமான பால் போதாத காரணத்தால், அஃது அன்று முன்னிரவிலேயே அங்கே சென்று பதிவிருக்கத் தொடங்கிற்று!
குலாமலர் அன்று கவலையற்று உறங்கினாள். ஆனைக்கையோ தோட்ட வீட்டில் முன் என்றும் பிடிக்காத அளவு எலிகளைப் பிடித்துத் தின்று தின்று ஏப்பமிட்டது. தின்ற எலிகளின் தொகையை எண்ணி அதற்குக்கூடச் சிறிது வியப்புத் தட்டிற்று. இறுதியில் அது வழக்கமாகத் தான் படுக்கும் மூங்கில் பெட்டிக்கு வந்தது.
மூங்கில் பெட்டிக்குள் உடல் புகவில்லை; இரண்டு கால்கள் தாம் புகுந்தன.
அது பெட்டியருகிலேயே தலைவைத்துப் படுத்தது.
நள்ளிரவில் பூனை குலாமலரை நினைத்து எழுந்தது. படுத்திருப்பது தோட்ட வீடு என்று கண்டதும், குலாமலர் அறை நோக்கி ஓட எண்ணிற்று. ஆனால், கைகால்களைத் தூக்குவதே ஒரு சுமையாய் இருந்தது. வாயில் அருகே சென்றபோது, வாயிலுக்குள்ளே தலை நுழையவில்லை.
அந்தச் சமயம் குலாமலரோ அவள் தாயோ அப்பக்கம் வந்திருந்தால் ஆனைக்கையைக் கண்டு அலறிப் புடைத் தோடியிருப்பர். ஏனெனில் அது ஒரு பாரப்புலியினும் பெரிதாக வளர்ந்திருந்தது.
தோட்ட வீட்டில் ஆனைக்கைக்குப் படுக்க இடம் போதவில்லை. அஃது உட்கார்ந்து கொண்டே உறங்கிற்று. அந்த நிலையிலும் அது விடிவதற்குள் தோட்ட வீட்டின் நான்கு சுவர்களையும் முட்டி வளர்ந்தது. அதன் வால் அடுக்கி வைத்த கம்பளிக்கட்டுகள்போல் வாயில் வழியே தோட்டத்தில் புரண்டது. அதன் முதுகு மோட்டுடன் மோடாயிற்று. துலையோ மோட்டையே ஒரு புறம் தகர்த்துக்கொண்டு கூரை மேல் உயர்ந்துவிட்டது. பூனையின் கண்கள் கூரை மீதிருந்து தோட்ட முற்றும் பார்த்து ஒன்றும் புலப்படாமல் விழித்தன. அடிக்கடி அது குலாமலரை நினைத்துக் கரைந்தது. ஆனால் அதன் கரைவு இப்போது புலியின் உறுமல் போன்றிருந்தது.
தேம்பாவணி விடியற்காலையில் பல் துலக்கத் தோட்டத்துக்கு வந்தாள். கூரை மீதிருந்தே ஆனைக்கை அவளைக் கண்டு இரைந்தது. ஆனால் அந்தக் குரல் அவளைத் திகில்கொள்ள வைத்தது. அவள் கண்ட காட்சி அவளை மருண்டோடச் செய்தது.
அன்னை அலறல் கேட்டுக் குலாமலர் ஓடிவந்து பார்த்தாள். அவளும் முதலில் அஞ்சினாள். ஆனால், அவ்வளவு பெரிய உருவத்துடனிருந்தும் ஆனைக்கை அதன் வால் குழைத்து அவளைப் பரிவுடன் நோக்கிக் கரைந்தது. அது தன் ஆனைக்கை யாகத் தானிருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள்.
இரவில் பால் குடிக்கும் சமயத்திலேயே அது சற்றுப் பெரிதாயிருந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
கத்திரிக்காயை உருட்டும்போது பூனையைத் தொட்டது அடுத்து அவளுக்கு மின்னிட்டது. ‘ஆம், அச்சமயம் மனதுக்குள்ளாக வாய்பாட்டைக் கூறிக் கொண்டிருந்தேன்!’ என்று அவள் வாய்விட்டுக் கூறினாள்.
மோட்டளவு வளர்ந்த பூனையையோ புலியையோ பற்றித் தேம்பாவணி கேட்டதில்லை. குலாமலரின் பெருமை சிறுமை குறும்புகளை அவள் பார்த்திருந்தாள். ‘அவள்தான் இந்த வேடிக்கை செய்துவிட்டு, உண்மையை மறைத்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்று அவள் கருதினாள்.
குலாமலரை அணுகி அவள் செவியைப் பிடித்து முறுக்கினாள். “பூனையிடம் என்ன குறும்பு பண்ணினாய் சொல். இப்போது தோட்ட வீட்டின் மோடெல்லாம் தகர்ந்து விட்டதே! பாவம்! ஆனைக்கை இரவெல்லாம் வளர்ந்திருக்கிறது. உணவும் பாலும் இல்லாமல் என்ன பாடுபடுகிறதோ! எப்படி அஞ்சி அஞ்சிச் சாகிறதோ தெரியவில்லை! அந்தப் பயல் அரிசில் கெட்டாலும் கெட்டான். உன்னையும் கெடுத்துவிடுகிறான். போ, பூனையை மறுபடியும் பூனையாக்கு விரைவில்!” என்றாள்.
“இதோ சிறிதாக்கிவிடுகிறேன் அம்மா! இனி இந்தக் குறும்புகளை விட்டுவிடுகிறேன்!” என்று கூறிக் குலாமலர் தோட்ட வீட்டுக்கு ஓடினாள்.
அவள் வாய்பாட்டைக் கூறத் தொடங்கினாள். முதலில் வளர்ச்சி நிற்கும் வாய்ப்பாட்டை உரக்கக் கூவினாள்.
“தன்மனம் போல…. தன் மனம் போல….. தன் மனம்போல…”
இறுதிச் சொல் அவள் நாவுக்கு வரவில்லை. தொண்டைக் குள்ளிருப்பதுபோலத் தோன்றிற்று. தொண்டையை நெரித்து நெரித்துப் பார்த்தாள். அது நெஞ்சுக்குள் மறதி என்னும் ஆழ்மனத் துக்குள் செறிந்து விட்டதாகத் தோன்றிற்று!
வாய்பாட்டின் உயிர்நிலையான சொல் ஒரு தின்பண்டம் என்பதும், அதன் கடைசிச் சொல் மூன்றடியிலும் வந்ததென்றும் அவளுக்கு நினைவிருந்தது. ஒவ்வொரு பலகாரமாக எண்ணிப் பார்த்தாள்.
“மன்மனம் போலே தேங்குழல்
என்மனம் போலே உன்குழல்
தன்மனம் போலே.. ..”
இது சரியில்லை என்று கண்டாள்.
இடியாப்பம், ஆமைவடை, பொரிவிளங்காய், எள்ளுருண்டை என எல்லாப் பணியாரங்களையும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள். அவள் மறதி பற்றி அவளுக்கே எல்லை யில்லாக் கோபம் வந்தது.
தேம்பாவணி அருகில் வந்து அவளைக் குட்டினாள்.
“என்ன இன்னும் விழிக்கிறாய்! வாய்ப்பாட்டை மறந்து விட்டாயா, என்ன?” என்றாள்.
அவள் தேம்பித் தேம்பி அழுதாள். “ஆம் அம்மா! நான் என்ன செய்வேன்! இந்தப் பாழும் மறதியால் இன்று என் அருமை ஆனைக்கையின் வாழ்வுக்கே உலை வைத்து விட்டேனே! அரிசில் மாமாவும் இல்லையே! இனி என்ன செய்வேன்?” என்று விம்மினாள்.
இனிக் குலாமலரைக் கண்டித்துப் பயனில்லை என்று தேம்பாவணி கண்டாள். அவள் அறிவுடையவள். அனுபவம் மிக்கவள். ஆகவே குலாமலரை மெல்லத் தட்டிக்கொடுத்தாள்.
“அம்மா போனது போகட்டும், அழுதால் மறந்தது நினைவுக்கு வராது. வாய்பாட்டின் சொல் எது போன்றிருக்கும்?” என்று கேட்டாள்.
அம்மாவுக்குக் குலாமலர் மறந்த ஒரு சொல்லை மட்டும் விட்டுவிட்டு வாய்ப்பாட்டை விளக்கினாள். “பெரிதாக்கும் வாய்ப்பாட்டு வரியில் ஒரு தின்பண்டத்தின் பெயர் வரும், அதன்பின் வரும் சொல் வளர்ச்சி நிறுத்தம் வரியிலும் சிறிதாக்கும் வரியிலும் திரும்ப வரும்” என்றாள்.
தேம்பாவணி ஒவ்வொரு தின்பண்டமாக இரண்டு சொல்லுள்ள பெயர்களைக் கூறி வந்தாள். குலாமலர் ஒவ்வொன்றாக இல்லை என்று மறுத்து வந்தாள்.
‘முந்திரிக் கொத்து!’
‘இல்லை’
‘ஊத்தப்பம்!’
‘இல்லை’
‘இடியாப்பம்!’
‘இல்லை’
‘மனகோலம்!’
‘ஆகாகா! வந்துவிட்டது! மனக்கோலம்தான். மனகோலம்!’ மனகோலம்தான் மன்கோலம் என்று குலாமலர் ஆடினாள்.
அவள் இப்போது பூனையை நோக்கி உரக்கப் பாடினாள்.
‘என்மனம் போல் இன்கோலம்!’
நொறுங்கிக் கொண்டேயிருந்த மோடு சற்று அமைந்தது. அவள் இன்னும் உரக்கக் கூவினாள்.
‘என்மனம் போல இன்கோலம்!’
பூனையின் தலை கூரைக்குக் கீழே தாழ்ந்தது. அவள் இன்னும் இரக்கக் கூவினாள்.
பூனை விரைந்து சிறிதாகிக் கொண்டு வந்ததால் இந்தத் தடவை அவள் கூவுமுன் அது அவள்முன் பழைய உருவில் வந்து வால்குழைத்தது.
அவள் புதிய ஆர்வத்துடன் அதை எடுத்தணைத்துக் கொண்டு ஆடினாள்.
“சற்று முன் உன்னைக் கண்டால், புலிகூடப் பயந்திருக்கும், ஆனால் நீ பயந்தாயா?” என்று கேட்டாள்.
கிண்கிணி இவ்வளவுக்கும் தூங்கிக் கொண்டிருந்தான். இரவில் நடந்த இராமாயணம் ஒன்றும் அவனுக்குத் தெரியாது.
அரிசில்கிழான் இரண்டொரு நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டான். தேம்பாவணி அவனுக்குக் கொடுத்த உதையால் அவன், “இந்தச் சித்துக்களை எல்லாம் விட்டுவிடுகிறேன் அக்கா, இன்றே விட்டுவிடுகிறேன்” என்றான்.
அரிசில்கிழான் சித்துக்களை வேடிக்கைக்குப் பயன்படுத்து வதை அறவே விட்டுவிட்டான். ஆனால், அதைப் பயன்தரும் வகையில் பயிர் வளர்க்கவும், பண்ணை வளர்க்கவும் மட்டும் அவன் பயன்படுத்தினான்.
குழந்தை
சீன நாட்டில் சிங்-கங்-சங் என்றொரு பேரரசன் இருந்தான். அவன் அரசியல் காரியங்கள் எதிலும் தலையிடுவதில்லை. அவற்றை அமைச்சரிடமே ஒப்படைத்திருந்தான். முரட்டு மங்கோலியர் படையெடுத்த சமயங்களிலும் அவன் படைத்துறையிலோ, போரிலோ கவனம் செலுத்தவில்லை. அவற்றைப் படைத்தலைவர்களிடமே விட்டு வைத்தான். மக்கள் குறை தெரிவிக்கும் முறைமன்றத்துக்கும் அவன் செல்வதில்லை. முறை நடுவர்களையே அனுப்பி வைத்தான்.
அவன் நேரம் இரண்டு செயல்களில் மட்டுமே கழிந்தது. ஒவ்வொரு நாள் மாலையிலும் அவன் யாங்-ட்ஸி ஆற்றங் கரையோரம் உலாவுவான். அல்லது இசை ஆடல் அரங்குகளில் சென்று ஒய்யாரமாக வீற்றிருப்பான். இவை தவிர மற்ற நேரமெல்லாம் இரவும் பகலும் அவன் இந்த உலாவுக்கு அல்லது அரங்குகளுக்கு வேண்டிய வகைவகையான உடைகள் தேடு வதிலும், அவற்றால் தன்னை ஒப்பனை செய்து கொள்வதிலும், இன்னும் வகைவகையான ஆடைகள் பற்றித் தையல்காரர் களுடனும் பிறருடனும் கலந்தாராய்வதிலுமே செலவிட்டான்.
பாலாடைகளைப் பழித்த ஆடைகள், இளவெயிலையும் இன்னிலவையும் வெல்லும் மென்துகில்கள், காற்றைப் போல நிறமற்ற படிக உடைகள் ஆகியவற்றை நாடி நாடி அவன் அமைச்சர்களுக்கெல்லாம் பெருந்தொல்லை கொடுத்து வந்தான். நாட்டில் மிக உயர்ந்த சம்பளங்களும், பதவி உயர்வுகளும், பரிசுகளும், பாராட்டுரைகளும் யாவும் மிக மெல்லிய உடை வகைகளைத் தேர்ந்து கொண்டு வருபவர்க்கே அளிக்கப்பட்டன.
பேரரசனைப் பேட்டி காணச் சிற்றரசர் வந்து வந்து காத்துக் கிடந்தனர். அயல்நாட்டுத் தூதுவர்கள் வந்து வந்து போயினர். யார் எப்போது வந்து பார்த்தாலும் பேரரசனைக் காண வழியில்லாதிருந்தது. ‘அவர் ஆடையரங்கத்துக்கு இப்போதுதான் சென்றிருக்கிறார்; ஆடையரங்கத்தில் அவசர வேலையில் இருக்கிறார்; ஆடையரங்கத்துக்குப் புறப்பட்டுவிட்டார்’ என்ற செய்திகளே அரண்மனைக் காவலர்களிடமிருந்து எப்போதும் வந்த வண்ணமாயிருந்தன.
மாலை உலாவிலோ, இசை ஆடல் அரங்கிலோ பேரரசரைக் காண்பதென்பது முடியாத காரியம். கண்டாலும் ஆடை வகைகள் பற்றிய பேச்சுத் தவிர வேறு எதுவும் அவர் செவியில் ஏறுவதில்லை.
அந் நாளில் தமிழகத்திலே காஞ்சியில் ஆண்ட பல்லவப் பேரரசன், மாமல்லன் என்பவன், அவன் சீனப் பேரரசரிடம் ஒரு தூதுக்குழு அனுப்பியிருந்தான். மள்ளுவராயர், முதுகணாயர், மழவர்கோனாயர் என்ற மூன்று சான்றோர் தூதுக்குழுவில் உறுப்பினராய் இருந்தனர். சேகண்டி என்ற ஒரு மெய்க்காவலனும் அவர்களுடன் சென்றிருந்தான் கடலும் மலையும் தீவுகளும் தாண்டி ஓராண்டுக்குமேல் பயணஞ்செய்து அவர்கள் பேரரசன் அகநகரையடைந்தனர். ஆனால், அங்கே சென்றபின் மாதங்கள் உருண்டோடின. ஓராண்டும் கழிந்தது. பேரரசனைக் கண்ட பாடில்லை. பெரு முயற்சியின் மீது கண்டபோதும் அவன் அவர்களிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. “உங்கள் நாட்டில் உயர்ந்த ஆடை வகைகள் கிடைக்குமா? அவை எவ்வளவு மெல்லியனவாக இருக்கும்? காற்றைப்போல் இருக்குமா?” என்றே கேட்டான்.
தூதுக் குழுவினர் தமிழகத்தின் தலைசிறந்த நேரியல் ஆடைகளைக் கொண்டு சென்றிருந்தனர். பேரரசன் கோரியபடி அவை காற்றிலும் இலேசாகவே இருந்தன. சில பொன்னிள வெயில்போலவும், சில பாலிள நிலவு போலவும் கண்களைக் கவர்ந்தன. ஆனால், பேரரசன் மென்மை அவா அவற்றுடனும் நிறைவு பெறவில்லை. ஆகவே, அவன் பல்லாயிரம் காததொலை கடந்து வந்த அந்தத் தூதுவர்களுக்கு விரைந்து சில சொற்களில் மறுமொழி வரைந்தனுப்பிவிட்டான்.
பேரரசன் அறியாமை கண்டு வருந்தினார் சான்றோருள் ஒருவர். மற்றொருவர் அவன்மீது கடுப்புக் கொண்டார். மூன்றாவது சான்றோர் தம் அரசியல் கடமையை நினைவூட்டினார். தமிழகத்துக்கே திரும்பிச் செல்ல வேண்டுமென்று வலியுறுத் தினார். ஆனால், மெய்க்காவலனான சேகண்டி ஒரு புதிய கருத்துரை புகன்றான். “இந்தப் பேரரசனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்காமல் போகக் கூடாது. அதனால் இந்த நாட்டுக்கும் நலம் விளையும். நம் அரசன் தூதுச் செய்தியும் மறுமுறை நன்கு ஆராயப் பெறக்கூடும்” என்றான்.
“உன் கருத்துரை நன்றாய் இருக்கிறது. ஆனால், நாடு தொலைநாடு. அரசனோ பேரரசன். அவனுக்கு நாம் எப்படிப் பாடம் படிப்பிக்க முடியும்?” என்றனர் சான்றோர் மூவரும்.
அவன், அவர்கள் ஒவ்வொருவரிடமும் காதோடு காதாகப் பேசினான். அவன் கூறியது அவர்களுக்குப் பிடித்தமாகவே இருந்தது. அவர்கள் அவன் கருத்துப்படி நடக்க இணங்கினர்.
தூதுவர்கள் உள்நாட்டு அமைச்சரை அணுகினர். “நாங்கள் தமிழகத்தில் ஆடை நெய்யும் கலைத் தொழில் வல்லுநர்கள் தாம். பேரரசர் ஆடையில் இவ்வளவு அக்கறை காட்டுவார் என்பது எங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நாங்கள் கொண்டு வந்ததைவிட மிக உயர்ந்த மெல்லாடைகள் எடுத்து வந்திருப்போம். ஆனால், இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. பேரரசர் எங்களுக்குத் தக்க வாய்ப்பளிப்பதாயி ருந்தால், உலகில் எவரும் கண்டோ, கேட்டோ அறியாத மாய ஆடை நெய்து தரக் காத்திருக்கின்றோம். மீண்டும் எம் நாடு செல்லுமுன் பேரரசர் விருப்பம் நிறைவேறினால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்று தெரிவித்தனர்.
இச்செய்திக்குரிய விளைவறிய அவர்கள் மணிக்கணக்கில் கூடக் காத்திருக்க நேரவில்லை. ஓரிரு கணங்களுக்குள்ளாகவே அவர்கள் மீண்டும் பேரரசர்முன் கொண்டு செல்லப்பட்டனர்.
இத்தடவை அவர் முன்னிலும் எவ்வளவோ மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் அவர்களை வரவேற்றார்.
“நீங்கள் நெய்வதாகக் கூறிய ஆடை எப்படிப்பட்டது? அதைச் செய்ய எவ்வளவு நாளாகும்? என்னென்ன வேண்டும்?” என்று கேட்டான்.
"வானவர் மரபில்வந்த பேரரசே! நாங்கள் நெய்து தரும் ஆடை காற்றென்றால் காற்றாய்த்தான் இருக்கும். அது வான வில்லின் ஏழு நிறங்களுடன் கதிரவனொளிபோல் தகதகவென்று பொலிவுடையதாகவும் நிலவொளி போல் குளிர்ச்சியுடைய தாகவும் இருக்கும். ஆனால், அதே சமயம் அதற்கு எந்த ஆடைகளுக்குமில்லாத சில மாயப் பண்புகளோடும் இருக்கும்.
“அது காற்றையும்விட மெல்லியதாதலால், உடுத்தியிருப்பவர் அதை எத்தனை மடியாக உடுத்தினாலும் உடலில் உடை இருப்பதாகவே தெரியாது. அது மட்டுமன்று; கண் கொண்டு பார்ப்பதிலும்- உள்ளத்தில் உண்மையற்றவர்களுக்கும், தத்தம் பதவிக்குத் தகுதியற்றவர்களுக்கும் அது முற்றிலும் ஆடையற்ற வெற்றிடமாகவே தோற்றும்.”
ஆடையின் இந்த இயல்புகள் பேரரசருக்குப் பெரு மகிழ்வை அளித்தன. அது நல்லாடை மட்டுமன்று; தம் அமைச்சர்களிலும், படைத்தலைவர், அவையோர், குடிப் பெருமக்கள் ஆகியோரிடையிலும் யார் யார் பொய்யர்கள், தகுதியற்றவர்கள் என்று அறியவும் அதுவே உதவும். அத்தகைய மாய ஆடையில் அவன் ஆர்வம் வளர்ந்து துடிப்பாகப் பொங்கியெழுந்தது. தூதர்கள் கூறுவதை முன்னிலும் உன்னிப்பாகக் கேட்டான்.
“அந்த ஆடையை இரவு பகலிருந்து நெய்வதானாலும் நாற்பத்தொரு நாள் வேண்டும். ஏராளமான பஞ்சும், பட்டும், அவற்றுக்குப் பன்மடங்கான பொன்னும் மணியும் வேண்டும். தனியிடமும், தனித்தனியாக மூன்று தறிகளும் வேண்டும்” என்று அவர்கள் கூறி முடித்தனர்.
அவர்கள் கேட்டபடி தனியிடமும் தறிகளும் பொன்னும் மணியும் கேட்ட கேட்ட அளவில் அவர்களுக்குத் தரும்படி பேரரசன் அமைச்சருக்கு உத்தரவிட்டான். அவர்கள் தங்குவதற்கு அரண்மனையடுத்தே மாட கூட வாய்ப்புகள் யாவும் ஒருங்குவிக்கப்பட்டன.
தறிகள் வெற்றுத் தறிகளாகவே இருந்தன. நெசவுக்கென்று வாங்கிய பருத்தியையும் பட்டையும், பொன்னையும் மணியையும் அவர்கள் பயன்படுத்தாமலே கட்டித் தாயகத்துக்கு அனுப்பினர். ஆனால், வெறுந்தறியில் நூல்கள் இருப்பதாகப் பாவித்து ஓயாது வேலை செய்தனர். பஞ்சையும் பட்டையும் இழைப்பதாகவும், பொன்னை உருக்குவதாகவும், மணிகளை இழைப்பதாகவும் சேகண்டி ஓயாது பாவித்து நடித்தான்.
அமைச்சர் ஒவ்வொருவராக வேலையை மேற்பார்வையிட வந்தனர். நண்பர்கள் அவர்களை ஆர்வமாக வரவேற்றனர். பஞ்சு மட்டும் இல்லாமலே இழைக்கும் இடங்களைக் காட்டினர். “பாருங்கள் இழைகள் எவ்வளவு நேர்த்தியாய் உள்ளன!” என்று கூறினார்கள். அது போலவே வெற்றுத் தறியை ஓட்டிக் கொண்டே ‘நூல்கள் ஓடுவது கண்டீர்களா? எவ்வளவு நேர்த்தியான ஆடையாகி வருகிறது, தெரிகிறதா?’ என்று கேட்டார்கள்.
முதலில் வந்த அமைச்சர் பஞ்சு, இழை ஒன்றும் காணாமல் விழித்தார். ஆனால், ஒன்றும் காணவில்லை என்று அவர் சொல்லத் துணியவில்லை. நண்பர்களின் ஆர்வமே அவர்களை வெட்கமடையச் செய்தது. ‘இங்கே என் கண்முன் ஒன்றையும் காணவில்லை. ஆனால், இதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது. காட்டினால், நான் உண்மையற்றவன், என் வேலைக்குத் தகுதியற்றவன் என்று எல்லாரும் முடிவு செய்ய நேரிடும். நமக்கென்ன வந்தது? இந்த மாய இழைகளின் தொல்லையி லிருந்து நாம் தப்ப வேண்டுமானால், காணாததைக் கண்டதாகவே பாவித்துவிட வேண்டும், அவ்வாறே நடித்துவிட வேண்டும்’ என்று அவன் தனக்குள்ளாக முடிவு செய்தான்.
“ஆகா! இழைகள் என்ன எழில் வாய்ந்தவை? நெசவின் தரம்தான் எவ்வளவு உயர்ந்தது? உங்களைப் பெற்றநாடே நாடு! நீங்கள் வந்திருப்பதால் எம் நாடும் எம் பேரரசரும் புண்ணியம் எய்தினோம். நாங்களும் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்ந்தோம்” என்று அவன் காணாதது கண்டு மெச்சத் தொடங்கினான்.
’நண்பர்கள் விரும்பி எதிர்பார்த்தது இதுவே. “தங்கள் கலைச்சுவைத் திறம் நாங்கள் அறியாததன்று; முதன் முதலிலேயே உங்கள் நன்மதிப்பும் பாராட்டும் பெற்றதற்கு மகிழ்கிறோம்; தங்கள் கருத்தை மற்ற அமைச்சருக்கும் பேரரசருக்கும் தெரிவித்து எங்களைப் பெருமைப்படுத்த வேண்டுகிறோம்” என்று பணிவுடன் வேண்டினர்.
அமைச்சர் அவ்வாறே மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு விரைந்து வெளியேறினர். அவர் வெளியேறியபின் கூட நண்பர்கள் புன்முறுவல் செய்யவில்லை. தாமும் ஆடையைக் கண்டு மகிழ்வதாகவே அவர்கள் தோற்றம் இருந்தது.
அமைச்சரையடுத்து மற்ற அமைச்சர்கள், படைத் தலை வர்கள், பெருமக்கள் ஒவ்வொருவராக வந்தனர். முதல் அமைச்சரைப் போலவே அவர்களும் நடந்து கொண்டனர். தாம் தகுதியற்றவர் என்றோ, உண்மையற்றவர் என்றோ காட்டிக் கொள்ள யாரும் விரும்பவில்லை.
பேரரசனும் ஒருநாள் வந்து பார்த்தான். வெறுந்தறியைக் கண்டு அவன் முதலில் திகைத்தான். ஆனால், அடுத்த கணம் ஆடைக்கு இருப்பதாகக் கூறப்பட்ட மாய ஆற்றல் நினைவுக்கு வந்தது. ‘அந்தோ! இழையைக் கண்டு அமைச்சர், படைத்தலைவர் எல்லாரும் பாராட்டி விட்டனரே! எனக்கு மட்டும் தெரியவில்லை யென்றால், நானே தகுதியற்றவன் என்றாகிவிட்டது. இதை நான் யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. நானும் பார்ப்பதாகவே நடித்து விடுவது நல்லது. எனக்கு மட்டும் தெரியாவிட்டால் என்ன? அஃது இருப்பது உண்மை, எல்லாருக்கும் தெரிகிறது!’ என்று அவன் தனக்குள்ளே கூறிக் கொண்டான்.
மற்றவர்களைப் போலவே பேரரசனும் காணாதவெல்லாம் காண்பதாகப் பாராட்டிப் புகழ்ந்தான்.
ஆடை முடிவுறும் என்று கூறிய நாள் வந்தது. ஆடை முடிந்துவிட்டது என்றனர் நண்பர்கள்.
பேரரசன் ஆடையரங்கத்துக்குள் நண்பர் மூவரும் மெய்க்காவலன் சேகண்டியும் ஒரு பொற்பேழையை ஏந்திச் சென்றனர். மன்னன் பழைய ஆடைகள் ஒவ்வொன்றாக அகற்றப் பட்டன. பொற்பேழையைத் திறந்து ஆடையை ஒவ்வொன்றாக எடுப்பதாகப் பாவித்து, நண்பர்கள் வெறுங் கைகளை நீட்டினர். அரண்மனை ஒப்பனைப் பணியாட்கள் ஒவ்வொன்றையும் விரித்து அணிவதாகப் பாவித்து வெறுங் கையால் அபிநயம் செய்தார்கள்.
பளிங்கினால் செய்யப்பட்ட பல்லக்கில் பேரரசன் புத்தாடை அணிந்து நகர்வலம் வந்தான். மன்னர் பெருமக்கள், பெருமாட்டிகள் யாவரும் பேரரசனைப் புத்தாடையில் கண்டு களிப்பதாக பாவித்தனர். ஒருவருக்காவது பேரரசன் உடலில் ஆடை இருப்பதாகவே தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அது தமக்கு மட்டும்தான் தெரியவில்லை என்று எண்ணிக் கொண்டனர். அதைப் பிறர் தெரியும்படி எடுத்துரைக்க எவரும் விரும்பவில்லை. தம் தகுதியின்மை வெளிப்பட்டுவிடப்படாதே என்ற அச்சத்திலே ‘நீங்கள் காண்கிறீர்களா?’ என்று எவரும் அடுத்தவரிடம் கேட்கவே துணியவில்லை;
மேலாடையேயில்லாமல் பேரரசன் நகர் முழுவதும் சுற்றி அரண்மனை மீண்டான்.
தூதுக்குழுவினர் ஆடை நெய்வதற்கென இதுவரை ஏராளமான பொன்னும் மணியும் பொருளும் பெற்றிருந்தனர். இப்போது பேரரசன் இன்னும் பொருள் கொடுத்துத் தமிழகப் பேரரசனுக்கு நன்றியறிதல் நிறைந்த பாராட்டும் மகிழ்வும் தெரிவித்து, மிக உயர்ந்த பரிசுகளும் அனுப்பினான்.
தூதுக் குழுவினரில் சான்றோர் மூவரும் போனபோது, மெய்க் காவலன் சேகண்டி போகவில்லை. ‘நான் இருந்து பேரரசன் புதுப் படிப்பினைகளை முற்றும் பார்த்து வருகிறேன்! நீங்கள் செல்லுங்கள்’ என்றான். அவர்கள் அவனைச் சீனத்தில் தங்கவிட்டுத் தமிழகம் புறப்பட்டனர்.
நகர மக்கள் ஒவ்வொருவரும் அன்றும் மறுநாளும் வேறு எதுவும் பேசவில்லை. ஆடை எப்படியிருந்தது? என்ன நிறம்? எப்படிப்பட்ட ஆழகு?’ இத்தகைய கேள்விகளைக் கேளாதவர் இல்லை. கேட்பவர், தாம் கண்டதை மறைத்தது போலவே, மறுமொழி கூறியவரும் முற்றிலும் மறைத்தே வந்தனர். ஆனால், எல்லார் மனத்திலும் தம்மைப் பற்றிய கவலை எழுந்தது. தம்மைப் போலவே வெற்றுடலை வேறு யார் பார்த்திருந்தார்கள் என்று அறிய ஒவ்வொருவரும் துடித்தனர். ஆனால், எவரும் அதை ஒத்துக்கொள்ள வில்லை. எல்லோரும் அஞ்சினர்.
ஒரு சின்னஞ்சிறு குழந்தை பேரரசன் மேலாடையற்ற நிலையை வியப்புடன் நோக்கிற்று. மற்றவர்களுக்கிருந்த அச்சம் அதற்கு இல்லை. "ஐயோ! இந்தப் பேரரசனைப் பாருங்கள், மேலாடையேயில்லாமல் போவதை! இஃது என்ன ஊர்வலம், அம்மா!’ என்றது.
காற்று விம்மிய பையில் ஒரு சிற்றூசிக் குத்துப் போலாயிற்று, குழந்தையின் இந்தப் பேச்சு. எல்லாரும் அடக்கி வைத்திருந்த எண்ணங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டன. தாம் சொல்வதாகக் கூறாமல் குழந்தை கூற்றாக ஒவ்வொருவரும் இதை அடுத்தவருக்கு கூறினர். ‘குழந்தை கூறுவதைப் பார்! பேரரசன் நாணமில்லாமல் மேலாடையில்லாமல் போகிறாராம்!’ என்ற வாசகம் ஓர் இரகசிய அஞ்சலாக, கம்பியில்லாத தந்தியலைகளாக நகரெங்கும், நாடெங்கும் பரவிற்று.
ஒலி, எதிரொலியாக இடையறாது சுற்றிய இரகசியப் பேச்சு அரண்மனையிலும் படர்ந்தது. பேரரசனைத் தவிர, மற்ற எல்லாரும் எந்தச் சமயத்திலும் இதையே ஒருவருக்கொருவர் சொல்லி வந்தார்கள். தம்மைச் சுற்றிக்காணப்பட்ட இரகசியமும், ஏளனமும் பேரரசன் கவனத்தையும் கவர்ந்தது.
அவர் அமைச்சரிடம் அதுபற்றி உசாவினார்.
“ஒன்றுமில்லை. தங்கள் புதிய ஆடையைப் பற்றி ஒரு சின்னஞ்சிறு குழந்தை எதுவோ கூறிற்றாம்!”
“என்ன கூறிற்று?”
“ஆடை எதுவுமே இல்லை. பேரரசர் மேலாடையில்லாமலே போகிறாரே! என்று கேட்டதாம்!”
“சரி, அதை ஏன் எல்லோரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்?”
“அதுதான் ஒருவருக்கும் தெரியவில்லை!” என்றான் அமைச்சன்.
பேரரசர் முன்னிலை என்பதைக்கூட மறந்து எல்லாரும் சிரித்தனர்.
பேரரசருக்குப் பெருஞ்சினம் ஏற்பட்டது! அவர் உடலெங்கும் துடிதுடித்தது.
அப்போது ஒரு மூலையிலிருந்து ஒரு குரல் எழுந்தது.
அஃது, உண்மையில் சேகண்டியின் குரலே!
“உம் பேரரசிலே அந்தக் குழந்தை ஒன்றுதான் உண்மையற்றது. அரசியல் அறியாத உன் குழந்தை மனமும் அரச பதவிக்குத் தகுதியற்றது. மற்ற எல்லாரும் உண்மையும் தகுதியும் உடையவர்கள். பேரரசே!” என்றது அது.
பேரரசன் வெட்கத்தால் உட்கினான். அவனுடைய ஆடைப் பித்தம் அத்துடன் ஒழிந்துவிட்டது! அவன் பேரரசர் நிலைக்கேற்ற ஆடைகளுடனே அமைவுறலானான்.
பேரரசனைத் திருத்திய தூதுக் குழுவினரை எல்லாரும் வாழ்த்தினார்கள். ஆனால், குழுவில் அவர்கள் முன் சேகண்டி ஒருவனே இருந்ததால், அவனை எல்லாரும் போற்றினார்கள். அமைச்சர்கள் தனித்தனியே அவனைப் பாராட்டிப் பரிசில்கள் வழங்கினர். பேரரசர்கூடத் தம் திருத்தத்துக்குக் காரணமான அவனை வரவழைத்துப் பெரும் பரிசில்கள் வழங்கினார். அவன் மூலமாகவே தமிழகப் பேரரசர்க்கு மீண்டும் ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினார். புதிய பரிசில்களும் பல அனுப்பப்பட்டன.
தமிழகப் பேரரசனுக்கு அனுப்பப்பட்ட பரிசில்களில் ஒன்று, “மேலாடையில்லையே!” என்று நோக்கிய குழந்தையின் உயிர்ச்சிலையாய் அமைந்தது.
விந்தை மருத்துவன்
முக்கலிங்க நாட்டில் சொக்கலிங்கன் என்றொரு நாடோடி மருத்துவன் இருந்தான். அவனுக்கு எழுத்தறிவு கிடையாது. மருந்துபற்றிய அறிவுகூட அவனுக்குக் குறைவே. ஆனாலும் கைதேர்ந்த மருத்துவர்களைவிட அவன் பேரும் புகழும் உடையவனாய் இருந்தான்.
அவன் முன்னோர்கள் காஞ்சி நகரத்தில் புலவர்களாகவும், மருத்துவர்களாகவும் வாழ்ந்தவர்கள். ஆனால், சொக்கலிங்கன் கல்லா இளைஞனாகவே வளர்ந்தான். உற்றார் உறவினருக்கு அவன் கொடுத்த தொல்லைகள் பல. இறுதியில் சில குடும்ப ஏடுகளுடனே அவன் வெளியேறி, மருத்துவ வேடத்துடனே ஊர்ஊராகச் சுற்றினான். சோழர் பெரும்படை கலிங்கப் போருக்குக் கிளம்பிய சமயம், அவன் அப்படையுடனே கலிங்கம் சென்றான். மறுபடியும் தமிழகம் திரும்பாமல் அவன் அங்கேயே தங்கினான்.
தமிழ் வழங்காத அந்த நாட்டில், படிப்பு இல்லாமலே அவன் எளிதில் மதிப்படைய முடிந்தது. அவன் தமிழ் ஏடுகளைக் காட்டினான். அவற்றை வாசிப்பதுபோலப் பாவித்து, வாய்க்குவந்த பாடல்களைப் பாடினான். அத்துடன் அவன் மருத்துவப் பணிக்கென்று யாரிடமும் எதுவும் கோரவில்லை. பசித்த வேளைக்கு ஒரு பிடி உணவு, அயர்ந்த நேரங்களில் ஒரு குவளை நீர்-இவையே அவன் தேவைகள். இவற்றை அவனுக்கு எவரும் எளிதில் அளித்தனர்.
தவிர, வலிந்து அன்புடன் பொருள் அளிப்பவரிடம் அவன் தன் ‘பிள்ளைகளுக்குத் தின்பண்டங்கள்’ தன் உறவினருக்கு ‘உணவு’ என்றே அன்புப் பரிசுகள் பெறுவான். இவையும் அவன் பணிக்கு நன்கு உதவின. ஏனெனில், அவன் பிள்ளைகள் ஊர்ப் பிள்ளைகளே; அவன் உறவினரும் ஊராரே; மருந்து என்ற பெயரால், சிறுவர் சிறுமியர் அவனிடம் பெற்றது இனிப்பு விருந்தே. ஏழை எளியவர்களோ பசிநோய் அகற்றும் உணவையே அவனிடம் பெற்று அவனை வாழ்த்தினர்.
உழையாத செல்வர்கள், நோயில்லாமலே நோயாளிகளாக நடிப்பவர்கள் ஆகியவர்களுக்கு எத்தகைய மருந்து தேவை என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். ‘உங்கள் கையாலேயே மலையுச்சியிலுள்ள புல்லைப் பறித்து அடி வாரத்தில் நடுங்கள்; உங்கள் நோய் போய்விடும்’ என்று அவன் செல்வர்களிடம் கூறுவான். எரிச்சல் தரும் பொருள்கள், கசப்பான சரக்குகள் ஆகியவற்றாலும், கடு உழைப்பாலும், நோயாளிகளாக நடிப்பவரின் நோய் நடிப்பை அவன் நொடியில் போக்கி வந்தான்.
அவன் பெருஞ் செல்வாக்குக்கு இவை மட்டும் காரண மாயில்லை. அவன் மருத்துவப் பணியின் பாணியும் புத்தம் புதியதாய் இருந்தது. அவன் தாடியும் மீசையும் வளர்த்திருந்தான். போர்க்கால முரசு ஒன்றையும் எப்போதும் வாரிட்டுத் தோளில் கட்டித் தொங்க விட்டுக் கொண்டான். இந்நிலையில் தெருத் தெருவாக அவன் கூவிக் கொண்டும் முரசினை ஒலித்துக் கொண்டும் சுற்றினான்.
“மருந்தில்லாத மருத்துவம்,
மாயமான மருத்துவம்!
காசில்லாத மருத்துவம்!
காஞ்சிவாணர் மருத்துவம்!
செத்தவரைப் பிழைக்க வைக்கும்,
செல்வச்சிறுவர் தவழ வைக்கும்!
எய்தியவர்க்கு இளமை அளிக்கும்!
ஈடில் சித்தர் மருத்துவம்!”
என்று அவன் சந்திகள் தோறும் பாடியாடுவான். அவனைச் சுற்றி எப்போதும் சிறுவர்சிறுமியரும் வேலையற்றோரும் கூடினர். இஃது அவனுக்கு ஓர் ஒப்பற்ற விளம்பரமாய் அமைந்தது.
கலிங்கப்போரின் முடிவில் முக்கலிங்கத்தின் ஆட்சிக்குச் சோழமரபில் வந்த அனந்தவர்மன் சோழ கங்கனே உரியவனானான். அவன் கிட்டத்தட்ட அறுபத்து நான்கு ஆண்டுகள் நல்லமைதியுடன் முக்கலிங்கத்தை ஆண்டான். அவன் ஆட்சியில் குடிகள் எவருக்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால் மன்னனுக் கிருந்த ஒரே குறை மக்களையும் வாட்டிற்று. போரின் கோரத்திடையே சோழகங்கன் மனைவி கருவுயிர்த்தாள். தாயின் போர்க்காலக் கிலி பிள்ளையின் வாழ்வில் ஒட்டிக் கொண்டது. அழகொழுகும் அவன் ஒளிமுகம் கண்டு பெற்றோர்கள் அவனுக்குத் தேன் இன்பக் கடல் (மதுகாமார்வன்ண) என்ற இனிய பெயர் கொடுத்திருந்தனர். ஆனால், அவன் ஒளி, ஆழ்ந்த அறிவொளியாய் இலங்கிற்றேயன்றி, என்றும் நகையொளியாய்ப் படரவில்லை. எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடாமல் அவன் முனிவன் போல வாழ்ந்து வந்தான்.
இளவரசன் நிலை ஒரு நோயா அல்லவா என்றுகூட முக்கலிங்கத்தின் மூதறிஞராலும், மருத்துவராலும் உறுதி செய்ய முடியவில்லை. தமிழகத்திலிருந்து சோழ அரசன் தருவித்த மருத்துவர்கள் கூட இளவரசன் நிலையை மாற்ற முடியவில்லை. மகன் நோயின் இயல்பு பற்றியே மருத்துவர் முடிவு காணாமல் ஆய்வாராய்வுகள் நடத்துவது கண்டு, அரசன் உள்ளம் பொருமினான். ‘என் பிள்ளையைக் குணப்படுத்துவார் இனி என்றுமே, எங்குமே கிடைக்க மாட்டார்களா?’ என்று ஏங்கினான்.
அரசன் தாய் இராசசுந்தரி புகழ்மிக்க பேரரசன் குலோத்துங்க சோழன் புதல்வி, அவளுக்கு இப்போது ஆண்டு அறுபதுக்கு மேலாய் இருந்தது. அவள் காசியிலிருந்து கதிர்காமம் வரை எல்லா இடங்களிலும் உள்ள கோயில் குளங்களுக்குஞ் சென்று, பெயரன் குணமடைய வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். திரும்பும் வழியில் பூரி செகநாதர் கோயிலிலேயே அவள் சொக்கலிங்கனைக் காண நேர்ந்தது. செகநாதனருகே ஒரு மருத்துவநாதனாக விளங்கிய அவனிடம் அவளுக்கு எப்படியோ ஒருவகைப் பற்றுதல் உண்டாயிற்று. இளவரசனுக்கு அவனைக் கொண்டே மருத்துவம் செய்து பார்க்க அவள் விரும்பினாள்.
ஒரு நாடோடி மருத்துவனிடம் மகன் உடல் நிலையைத் திடுமென ஒப்படைக்க மன்னன் ஒருப்படவில்லை. நேரிலேயே அவன் சொக்கலிங்கனை அழைத்து உசாவிய போது அவன் அவநம்பிக்கை வளர்ந்தது. ஏனெனில் தமிழறிந்த அரசனிடம் சொக்கலிங்கன் போலி வீறாப்புகள் சாயவில்லை. சித்தர்கள் பெயரையே சரிவரத் தெரிந்து கொள்ளாமல், கொங்கணச் சித்தரை வங்கணச் சித்தரென்றும், போகரைப் புண்ணிய ரென்றும், முப்பு என்ற சஞ்சீவி மருந்தைக் குப்பு என்றும் அவன் பிதற்றினான். தவிர, ஒரு நொடியில் இளவரசனைக் குணப்படுத்தி விடுவதாக அவன் நா நவின்றாலும், எப்படிக் குணப்படுத்துவது என்ற மலைப்பு அவன் முகத்தில் நிழலாடிற்று.
அவன் திறமையைத் தேர்ந்தறிய மன்னன் ஒரு திட்ட மிட்டான். அரசு மருத்துவமனையிலே ஆண்டுக் கணக்காக விடா நோயாளிகளாக இருக்கும் ஐவரை அவன் பொறுக்கி எடுத்தான். அந்த ஐவர்களையும் ஐந்து நாட்களுக்குள் சொக்கலிங்கன் குணப்படுத்திவிட்டால், அதன் பின் அவனிடம் இளவரசன் உடல் நலத்தை ஒப்படைக்க எண்ணினான். ஐந்துநாளில் ஐவரும் குணமடையாவிட்டால், அவனைத் தூக்கிலிடுவதாகவும் அச்சுறுத்தினான்.
சொக்கலிங்கனுக்கு முதலில் எழுந்த மலைப்பு விரைவில் அகன்றது. மக்களிடம் காட்டிய சூழ்ச்சித் திறத்தையே மன்னிளங் கோவினிடமும் காட்டுவதென அவன் உறுதி கொண்டான். அத்துடன் மன்னன் தன் போலி அறிவைக் கண்டு கொண்டதும், தன்னிடம் அவநம்பிக்கை கொண்டதும் அவனைச் சுறுக்கென்று தைத்தன. மூதரசி இராசசுந்தரி தன்னிடம் காட்டிய அன்பு நம்பிக்கைக்கு மதிப்பளிக்க அவன் விரைந்தான்.
“அரசே! தங்கள் கட்டுப்பாட்டை நான் ஏற்கத் தயங்கவில்லை. ஆனால் ஐந்து பேரையும் குணமாக்க வேண்டும் என்ற முடிவை நான்கு பேரை என்று சற்று மாற்றிக் கொள்ளக் கூடாதா!” என்று கேட்டான்.
மன்னன் சிரித்தான்.
“ஏன் ! நான்கு பேரைக் குணப்படுத்திவிட முடியுமானால், ஐந்தாவது பேர்வழியையும் ஏன் குணப்படுத்த முடியாது?” என்று கேட்டான்.
“இளவரசன் ஆறு பேரில் ஒருவர் ஆவதைவிட ஐந்து பேரில் ஒருவன் ஆவது நல்லது தானே!” என்றான்.
இது கேட்டு மன்னன் மட்டுமன்றி எல்லாருமே சிரித்தார்கள். அவர்களுடனிருந்த இளவரசன் கண்களில் கூட ஒரு மின்னொளி தோன்றி மறைந்தது.
“சரி, நான்கு பேரைக் குணப்படுத்தினால் உன்னைத் தூக்கிலிட மாட்டேன். ஆனால், ஐந்து பேரையும் குணமாக்கி னால் தான் இளவரசனை உன்னிடம் ஒப்படைப்பேன்” என்றான் அரசன்.
மன்னன் அரண்மனையில் ஐந்து நோயாளிகளுக்கும் ஐந்து அறைகள் ஒழித்துவிடப்பட்டன. அவற்றின் திறவு கோல் சொக்கலிங்கனிடமே அளிக்கப்பட்டது.
முதல்நாள் இரவு சொக்கலிங்கன் முதல் நோயாளியிடம் சென்றான். அவன் தீராத வயிற்று வலியைச் சாக்கிட்டு ஓயாது முக்கலும் முனகலுமாய் இருந்தான்.
சொக்கலிங்கன் அவன் கண்முன் தன் மருத்துவப் பையை அவிழ்த்தான். அதிலிருந்து பளபளப்பான கத்திரிக்கோல் தட்டங்கள், கணப்படுப்பு, சில மருந்துப் பொடிகள் ஆகியவற்றை எடுத்தான்.
“அன்பனே! என்னால் எப்படியும் ஐந்து பேரையும் குணப்படுத்த முடியாது. நான்கு பேரையே குணப்படுத்தி என் உயிரைக் காத்துக் கொள்ள போகிறேன். நான்கு பேரைக் குணப்படுத்துவதற்கான மருந்துதான் என் கைவசமிருக்கிறது. அதைக் கலக்கும் முறையில் கலந்து உண்டு பண்ணவே உன் அறைக்கு வந்திருக்கிறேன்” என்றான்.
"அந்த நான்கு பேரில் நான் ஒருவன் அல்லவே என்று தெறிப்பாகக் கேட்டான் நோயாளி. ஆனால் அவனுக்குக் கிடைத்த விடை அவன் தெறிப்பை ஒரு நொடியில் போக்கிற்று. Òதீராத கிலியையும் ஊட்டிற்று.
“நால்வரில் நீ ஒருவன் அல்லன். ஆனால், நால்வரையும் குணப்படுத்தும் மருந்து உன்னிடம்தான் இருக்கிறது. ஒரு தீராத நோயாளியின் இதயத்தைக் கத்தரித்தெடுத்துச் சுட்டுக் கருக்கினால், அது நாலு தீராத நோயாளிகளைக் குணப்படுத்தப் போதுமானது!” என்று அமைதியுடன் கூறினான் சொக்கலிங்கன்.
“நான் தீராத நோயாளியல்லன், இன்றுடன் நோய் தீர்ந்துவிட்டது. என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று நோயாளி சொக்கலிங்கன் காலைப் பிடித்துக் கெஞ்சினான்.
“இன்று நோய் தீர்ந்திருக்கலாம். ஆனாலும் நீ தீராத நோயாளிதான். ஏனெனில், அது நாளையோ மறுநாளோ திரும்பி வராமலிராது!” என்றான் மருத்துவன்.
நோயாளி உறுதி கூறினான்; ஆணையிட்டான்; ‘இனி இப்பிறப்பில் இந்த நோய் திரும்பி வராது. இஃது உண்மை, முற்றிலும் உண்மை. இந்த உறுதியிலிருந்து என் தாயாணை, தந்தையாணையாக மீற மாட்டேன்’ என்றான்.
சொக்கலிங்கன் கனைத்துக் கொண்டான். அவன் விரும்பியது அதுதான். ’சரி, போய் அரசனிடம் நீ குணமடைந் தாய் என்று கூறு. எப்படிக் குணமடைந்தாய் என்பதை மட்டும் கூறாதே! எச்சரிக்கிறேன். உன்னுடன்அரசன் காவலர்கள் வருவார்கள். நோய் குணமடையவில்லை என்றால், உன்னை இங்கே இழுத்து வந்து விடுவார்கள். கத்தரிக்கோலும் கணப்படுப்பும் இங்கே சித்தமாகவே இருக்கும்!" என்றான்.
நோயாளி இப்போது நோயாளியாயில்லை. அவன் நாலடி ஓரடியாக நடந்து சென்றான். அவனைக் கண்டதே மன்னன் வியப்படைந்தான்.
“அரசே! மருத்துவர் தெய்வீகத் தன்மை வாய்ந்த மருத்துவர்தாம். முதல்நாளிலேயே என்னை முற்றிலும் குணப்படுத்திவிட்டார். இனி என் வாழ்நாள் முழுவதும் எனக்கு மருத்துவமனைக்குச் செல்லும் தேவையிராது. இந்தப் பெறற்கரிய பெருநலத்தை எனக்கு அளித்த மருத்துவருக்கும், அதற்கு வாய்ப்பளித்த தங்களுக்கும் என் எல்லையற்ற நன்றியையும் கடப் பாட்டையும் தெரிவித்துப் போகவே வந்தேன். வணக்கம்” என்று கூறிவிட்டு நோயாளி திரும்பிப் பாராமல் நடந்தான்.
முதல் நோயாளி குணப்பட்டது மற்ற நோயாளிகளுக்குத் தெரியாது. ஆகவே ஒவ்வொரு நாளும் சொக்கலிங்கன் ஒவ்வொரு நோயாளியையும் இதுபோல அச்சுறுத்திக் குணப்படுத்த முடிந்தது. ஒவ்வொரு நாளும் மன்னன் வியப்பும் மலைப்பும் பெரிதாயின. அதே சமயம் சொக்கலிங்கனிடம் அவனுக்கிருந்த அவநம்பிக்கையும் ஏளனமும் காற்றாய்ப் பறந்தன. இனித் தன் மகனும் நலப்பட்டுவிடுவான் என்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வளர்ந்தன.
ஐந்தாம் நாள் ஐந்தாம் நோயாளி குணப்பட்டவுடனே மன்னன் சொக்கலிங்கனை வரவழைத்தான். அரண்மனை மருத்துவருக்குரிய எல்லா நன்மதிப்புக்களுடனும் அவனை இளவரசனிடம் அனுப்பினான்.
முன்பே, மன்னனுடன் தான் பேசும்போது. இளவரசன் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைச் சொக்கலிங்கன் கவனித்திருந்தான். ஆகவே, இப்போது அவன் வேலை எளிதாயிற்று. மருந்தோ புட்டியோ மருந்துப் பையோ எதுவும் இல்லாமலே அவன் இளவரசனிடம் சென்றான்.
சொக்கலிங்கனை இளவரசன் இன்னமைதியுடனே வரவேற்றான். ஆனால், அவன் மருத்துவனாகவே வந்திருப்பது அவனுக்குத் தெரியாது. ஐந்து நோயாளிகளும் குணமடைந்து விட்ட செய்திகூட அவனுக்குத் தெரிய வரவில்லை. ஆகவே, அவன், அதுபற்றியே உசாவத் தொடங்கினான்.
“மருத்துவரே! எனக்காக எத்தனையோ மருத்துவர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். ஆனால், உங்களுக்காக ஐந்து நாட்களும் நான் மிகவும் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் நோயாளிகள் என்ன ஆனார்கள்?” என்று கேட்டான்.
“போய்விட்டார்கள்!”என்றான் சொக்கலிங்கன் சுருக்கமாக.
இளவரசன் முகத்தில் கவலை குடிகொண்டது. போய்விட்டார்கள் என்றவுடனே ஐவரும் செத்துப் போய்விட்டார்கள் என்றே அவன் முடிவு செய்துவிட்டான்.
“அப்படியானால் உங்கள் நிலை?” கவலை தோய்ந்த முகத்துடன் இவ்வாறு கேட்டான்.
“அஃது, இனி உங்கள் உடல்நலத்தையே பொறுத்தது” என்று கூறிச், சொக்கலிங்கன் மெல்லச் செய்திகளை விளக்கினான். ஐவரும் குணமடைந்துவிட்டனர் என்று கேட்டதே அவன் வியப்படைந்தான்.
“தீராத அவர்கள் நோயை நீங்கள் எப்படி அவ்வளவு சுருங்கிய காலத்தில் தீர்க்க முடிந்தது!” என்று கேட்டான்.
சொக்கலிங்கன் ஒவ்வொரு நோயாளிடமும் தான் கூறிய செய்திகளையும், அவர்கள் கொண்ட கிலிகளையும், அவற்றின் பயனாக அவர்கள் நோய் மாயமாய் மறைந்த வகையையும் நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தான்.
ஒவ்வொரு கதையின் முடிவிலும் இளவரசன் இடி இடித்தது போலக் குலுங்கிக் குலுங்கி சிரித்தான். ஐந்து தடவை சிரித்தபின், பழைய மௌன வலிபோய்ப் புதிய வயிற்றுவலி ஒன்று ஏற்பட்டது.
அரண்மனையில் என்றுமில்லாக் கலகலப்பைக் கேட்டு மன்னனும் அரசியும், மூதரசியும் ஒருவர்பின் ஒருவராக வந்து, இளவரசனைக் கண்டு மகிழ்ந்தளவளாவினர். சொக்கலிங்கன் கூறியதை நினைத்த போதெல்லாம், இளவரசன் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு திரும்பத் திரும்பச் சிரித்தான். ஆனால், அவனை மேலும் சிரிக்கவிடாமல் அவன் தங்கை ஏந்தாரவல்லி அவனைக் கையைப் பிடித்திழுத்துச் சென்றாள்.
அரசன் சோழகங்கன் அனந்தவர்மன், ஏந்தார வல்லியைச் சொக்கலிங்கனுக்கு மணமுடித்து வைத்து, அவனுக்குப் பேராற்றுப்படுகையில் ஒரு வளநாடும் முக்கலிங்க கடற்படைத் தலைமைப் பதவியும் அளித்துப் பாராட்டினான்.
வழிமனைவாணன்
திருக்குறுங்குடிக்கருகே இரண்டு நெடுஞ்சாலைகள் குறுக்கிடும் ஒரு நாற்சந்தியில் ஒரு வழிமனை இருந்தது. அதன் தலைவன் பெயர் அம்பலவாணன். அவன் பெயருடன் வழிமனையை இணைத்து அவனைப் பலரும் வழிமனை வாணன் என்றே அழைத்தனர்.
உயர்தரச் செல்வ வழிப்போக்கருக்கு வேண்டிய எல்லா வாய்ப்பு நலங்களும் வழிமனையில் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மதிப்பிலும் வருவாயிலும் வழிமனை வாணன் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்தான். சிறப்பாகப் பணியில்லா ஏழைகள், பணம் கடன் சொல்லி ஏய்ப்பவர்கள், வம்பர்கள், எத்தர்கள் ஆகியோர் அதனை அணுகாமல் தடுப்பதில் அவன் மிகவும் விழிப்பாயிருந்தான்.
ஒருநாள் ஒய்யாரமான குதிரை வண்டியில் மூவர் அவன் வழிமனையில் வந்திறங்கினார்கள். அவர்களின் நடையுடை தோற்றங்கள் யாவுமே பகட்டாய் இருந்தன. அவர்கள் செல்வமிக்க உயர்குடியினர் என்று வழிமனைவாணன் கருதியதனால், வழக்கம் மீறிய ஆர்வத்துடன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றான். வேலையாட்களை அனுப்பாமல் தானே சென்று அவர்கள் தேவைகளை உடனுக்குடன் கவனித்தான். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட வகை அவனுக்கு வியப்பூட்டிற்று. எவரிடமும் அவர்கள் மட்டமதிப் பின்றிப் பேசினர்; எவர்மீதும் சீறி விழுந்தனர்; கையோங்கினர்; உயர்குடியினராயினும் வீணர்களாகத் தோற்றியதால், எங்கே அவர்கள் தன்மீது குறை கண்டு பணம் தராமல் போய்விடு வார்களோ’ என்று அவன் அஞ்சினான்.
அவர்கள் வீணர்கள் என்று வழிமனைவாணன் கருதியது சரியே. ஆனால், உயர்குடியினர், பெருஞ்செல்வர் என்று அவன் நம்பியது ஒரு சிறிதும் உண்மையன்று. ஏனெனில் அவர்கள் ஏறிவந்த ஒய்யார வண்டிக்கு அவர்கள் வாடகையே கொடுக்கவில்லை. வண்டியில் இருந்தவர்களை உதைத்துத் தள்ளிவிட்டு வண்டியில் ஏறியிருந்தார்கள். எங்கே தனக்கும் உதை விழுமோ என்று அஞ்சியே வண்டியோட்டி அவர்கள் கூறிய இடத்துக்கு அவர்களைக் கொண்டுவிட்டான். அவர்கள் அணிந்த உடைகள் துணிக் கடைகளிலும் தையல்கடைகளிலும் இது போல அவர்கள் தட்டிப் பறித்தவையேயாகும்.
வழிமனையில் இறங்கும் சமயம் மூவரில் ஒருவன் சட்டைப் பையில் மட்டுமே பணம் இருந்தது. அதுவும் உண்மையில் ஒரு வெள்ளிப்பணம் மதிப்புடைய சில்லறைச் செப்புகாசுகள்தாம். அவன் நடக்கும்போது அந்தக் காசுகள் குலுங்கியது கேட்டு, அத்தனையும் பொன் வெள்ளிக் காசுகளாகவே இருக்க வேண்டுமென்று வழிமனைவாணனும் பிறரும் நினைத்துக் கொண்டார்கள்.
வழிமனையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் கணத்துக்குக் கணம், மணிக்கு மணி ஏறிற்று. அவர்கள் செலவும் வழி மனையின் மொத்த வாணிக அளவுக்குமேல் பெருகிற்று. தொகை பெருகப் பெருக வழிமனைவாணனுக்குப் பணக் கவலை பெரிதாயிற்று. அவர்களிடம் நாள்தோறும் செலவைக் கேட்பதா, கடைசியில் மொத்தமாக வாங்குவதா என்று அவன் தயங்கினான். அவர்கள் அட்டகாசத்தைக் கண்டால், கேட்பதற்கே அவனுக்கு நடுக்கமாயிருந்தது. போகும் நேரத்திலேயே விடாப்பிடியாகக் கேட்டு வாங்கிவிடுவது என்று அவன் உறுதி செய்து கொண்டான். தொகையையும் கணக்கு விவரத்தையும் பள்ளிப் பிள்ளைகள் மனப்பாடம் செய்வதுபோல் உருவிட்டவண்ணமே வேலைகளில் முனைந்தான்.
வழிமனைவாணன் மனத்தில் உள்ள எண்ணங்கள் வீணர்களுக்கும் நன்கு தெரிந்தே இருந்தது. அவர்கள் தனியாய் இருந்த நேரங்களில் அவர்களும் அதே செய்தி பற்றிப் பேசினர்.
“அடே, காடா! எங்காவது பணம் தட்டிப் பறித்துத் தானேடா இவனுக்குக் கணக்கு ஒப்பிக்க முடியும்?”
“என்ன புத்தியடா மாடா, உனக்கு! இவனுக்கு ஒப்பிக்க இன்னொருவனிடம் தட்டிப்பறிக்க வேண்டுமா? ஏன்? கணக்கையும் ஒப்பிக்காமல் இவனிடமே தட்டிப் பறித்தால் என்னவாம்! எப்படி என்கருத்துரை? வேண்டாம்!” என்றான் காடன்.
அவர்கள் மூவரும் மாடம்பி, காடம்பி, வேடம்பி என்ற புனைபெயர் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தாய் தந்தையர் அவர்களுக்குப் பெயர் வைத்திருந்தார்களோ என்னவோ, அவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் நெடுங் காலமாக அவர்கள் புதிது புதிதாகப் புனைப் பெயர் வைத்து வைத்து மாற்றியதனால், புத்தம் புதிய பெயர் தவிர மற்ற எதுவும் அவர்களுக்கு நினைவில்லை. காலந்தோறும் இடந்தோறும் புதுப்புதுப் பெயருடன் இருந்ததனால், காவல் துறையினரும் அவர்களை எளிதில் கண்டுகொள்ள முடியவில்லை. பலதடவை அவர்கள் ஏமாற்றுகளுக்கும் காவல்துறையினரே ஆளாயிருந்தனர்.
காடம்பி, மாடம்பி ஆகிய இருவர் கருத்துக்களையும் கேட்டு வேடம்பி ஒன்றும் பேசாமல் அவர்களையே கூர்ந்து நோக்கியிருந்தான். பின் அவன் ஏதோ நினைத்தவன் போல இடி இடி என்று சிரித்தான்.
“அடே ! உங்கள் இரண்டு பேருக்கும் பையிலும் காசில்லை; மண்டைகளிலும் மூளை இல்லை. உங்கள் காசெல்லாம் என் பையில்! உங்கள் மூளையெல்லாம் என் மண்டையில்! ஆகவே கணக்கையும் திட்டங்களையும் என்னிடமே விட்டுவிடுங்கள்!” என்றான்.
மற்ற இருவரும் இதை அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதாயில்லை.
“உனக்குத்தான் மூளையில்லை. என் பணத்தை நீ வைத்திருக்கிறாய், உன் மூளையை நான் வைத்திருக்கிறேன்” என்றான் மாடம்பி.
“நீ சொல்வதிலிருந்தே உனக்கு மூளை கிடையாது என்பது தெரிகிறதேடா, மாடா! பிறக்கும் போதே இவனுக்கு மூளை கிடையாதே! அதை நீ எப்படி எடுத்திருக்க முடியும்?” என்றான் காடம்பி.
“பையில் காசிருப்பவர்களுக்கும் வயிறு நிறைந்திருப்பவர் களுக்கும் மூளையே இராது என்பது உங்களுக்குத் தெரியாதா? எடுத்துக்காட்டாக, நம் வழிமனைவாணன் இருக்கிறானே….”
இதைக் கேட்டு கொண்டே வந்தான் வழிமனைவாணன். ஆனால், பேச்சின் தொடக்கம் அவனுக்குத் தெரியாததனால், அவன் இந்தப் பேச்சை ஒய்யார வீணரின் கேலி என்று மட்டுமே கருதினான். அந்த ஒய்யாரப் பேச்சில் அவன் மகிழ்ந்தான். அவர்களுக்கு இசையத் தானும் பேசிக் காரியம் சாதிக்க விரும்பி, அவனும் அப்பேச்சில் இழைந்தான்.
“ஆம்! என்னை அன்பர் நன்றாக அறிந்திருக்கிறார். பாம்பின் கால் பாம்புக்குத்தான் தெரியும் என்பார்கள். நான் மூளையில்லாதவன் என்பது இவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது!” என்று நாநயம்படப் பேசினான்.
அவன் பேச்சைப் பாராட்டுவதுபோல வேடம்பி அவனை முதுகில் ஓங்கித் தட்டினான். அது நடிப்பில் ஒரு நேசச் செயலேயானாலும், உண்மையில் ஒரு கண நேரம் வழிமனைவாணனைத் திணற வைத்தது. பல நாழிகை நேரம் அவனால் முதுகை அசைக்க முடியவில்லை.
மனைவாழ்வு நண்பர்களுக்குக்கூட வேறு எங்கும் எளிதில் கிட்டாத வாழ்வாயிற்று. அவர்கள் இன்னும் இரண்டு நாள், இன்னும் மூன்று நாள் என்று வாரக் கணக்காக அங்கேயே தங்கினார்கள். “போனாலன்றிப் பணம் கேட்க முடியாதே! இவர்கள் தாமாகப் போவார்களா? நிலையாக என் தலைமீதே தங்கிவிடுவார்களா?” என்று வழிமனைவாணன் மனம் பலவாறு எண்ணிக் குழப்படைந்தது.
ஒருநாள் அவன் துணிந்து வாய்திறந்தான்:
“மனையின் செலவுகளுக்குப் பணமுடையாயிருக்கிறது. பலநாள் பலவாரக் கணக்காகி விட்டது. கொஞ்சம் கணக்குத் தீர்த்துக் கொடுங்கள்” என்று அவன் கேட்டான்.
ஒரு கணம் மூவரும் பேசாதிருந்தனர்.
பின் காடம்பி பேசினான்: “எவ்வளவு வருகிறது கணக்கு?” என்று கேட்டான்.
வழிமனைவாணன் வாய் திறப்பதற்கு விடவில்லை மாடம்பி.
“கணக்கு எதற்கடா, இங்கே? நமது வீடு மாதிரி இங்கே தங்கியிருந்தோம். போகும்போது ஒரு முழு முடிப்பாகக் கொடுத்தால் சரியாகிறது?” என்றான் பெருமிதத்துடன்.
இருவரையும் எட்டியுதைப்பதுபோலப் பேசினான் வேடம்பி. “உங்கள் இருவரிடமும் சொல்லவில்லையா நான்? நீங்கள் பேசாதிருங்கள். இது முழுவதும் என் பொறுப்பு. நாம் தங்கிய நாள் முழுவதற்கும் நீங்கள் இருவர் மட்டுமல்ல, வழிமனைவாணன் கூட என் விருந்தினர்தான். எல்லார் செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னிடம் பணம் இருக்கிறது” என்றான், வீறாப்புடன்.
பேசும்போதே அவன் சட்டைப் பையைத் தட்டினான். “ஆம்; நான் இதோ இருக்கிறேன்” என்பது போலப் பத்துச் செப்புக் காசுகளும் கலகலத்தன.
பணம் பெறவும் முடியாமல், மீட்டும் கணக்குக் கேட்கவும் துணியாமல் வழிமனைத் தலைவன் பின்னும் மூன்று நாள் கழித்தான். அதற்குள் அவர்களைப் பற்றிய அச்சம் அவனுக்கு இன்னும் மிகுதியாயிற்று.
நாள்தோறும் நண்பர்கள் வழிமனையில் மட்டுமன்றி, அண்டை அயல் ஊர்களிலெல்லாம் சென்று ஆதாளி செய்தார்கள். பல கடைகளில் அவர்கள் சரக்குகளைக் கிளறித் தாறுமாறாக வீசினார்கள். கடைக்குக் கடை விளம்பரப் பலகைகளை மாற்றினார்கள். ‘எண்ணெய்க் கடை’ என்ற பலகை தொங்குமிடத்தில் துணிகளும், ‘துணிக் கடை’ என்ற பலகை தொடங்குமிடத்தில் துவரம்பருப்பும் இருப்பதை மக்களுக்குக் காட்டிக் கேலி செய்தார்கள். சில சமயம் கடையில் பொருள் வாங்க வரும் பெண்களின் தலைமுடிகளால் ஒருவருடன் ஒருவரைப் பிணைத்துவிட்டு வேடிக்கை செய்தார்கள்.
இயல்பாக ஊர் சுற்றும் வீணர்கள் பலரும் அவர்கள் வேடிக்கையில் எளிதில் கலந்து கொண்டார்கள். தவிர, நன் மக்களிலேயே ஒவ்வொருவரை நையாண்டி செய்யும் போதும், மற்றவர்கள் வீணர்களுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்தனர். இதனால், வீணர் செயல்களே எங்கும் பேச்சாகி விட்டாலும், அவர்களை யாரும் தடுக்க முயலவில்லை. தடுக்க முயன்றவர்களும் எளிதில் வீணர்களின் வம்புக்கும், நண்பர்களின் நையாண்டிக்கும் ஒருங்கே ஆளானார்கள்.
இந்தச் செய்திகள் கேட்ட வழிமனைவாணனுக்கு முன்னிலும் குலைநடுக்கமாயிற்று.
மனவாழ்வால் அவன் வாழ்க்கை உயர்ந்திருந்தது. பொறுப்பும் பெருகியிருந்தது. ஆனால், இளமையில் அவனும் வம்பர்களுடன் கூடியாடியதுண்டு. இதை அவன் எண்ணிக் கொண்டான். வம்பர்களுடன் வம்பனாக, நையாண்டிகளிடையே நையாண்டி செய்தாவது தன் பணத்தைப் பெற்று விடுவதென்று அவன் தனக்குள் உறுதி கூறிக் கொண்டான்.
அவன் மனஉறுதிக்கு இப்போது இன்னொரு காரணமும் இருந்தது. அவன் தன் மனைவியிடம் புதிய விருந்தினரைப் பற்றிப் பெருமையாகப் பேசியிருந்தான். அவர்கள் கட்டளைகளைச் சாக்கிட்டு அவன் அவளுக்குக்கூடப் பல தடைகளையும் தடங்கல்களையும் உண்டு பண்ணியிருந்தான். கடைசியில் அவர்கள் கையில் தான் ஏமாந்துவிட்டதாக அவள் எண்ணிவிடக் கூடாதே என்று அவன் கலங்கினான்.
ஓரளவு வழிமனையும் அதன் சூழல்களும் நண்பர்களுக்கும் சலித்துப் போய்விட்டன. இடம் மாறாமல் புனைப்பெயர்களை மாற்ற முடியாதாகையால், அவர்கள் மறுநாளே போய்த் தீருவதென்று உறுதி செய்தனர். ஆனால், வழிமனைவாணன் அவர்களுக்கு இளைத்தவனல்லன் என்பதை அவர்கள் இதற்குள் அறிந்து கொண்டனர். அவன் வேலையாட்களை அனுப்பாமல் எப்போதும் வேலைச் சாக்கில் நிழல்போல அவர்களைத் தொடர்ந்தான். இரவெல்லாம் ஏணிப்படியருகிலேயே அவன் படுத்துகிடந்தான். அவன் தூங்கிவிட்டான் என்று கருதி நண்பருள் ஒருவன் எட்டிப் பார்த்தபோது, ‘என்ன வேண்டும்?’ என்று அவன் குரல் கொடுத்தான். அவனைவிட்டுத் தப்புவது எளிதன்று என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
அவர்கள் அறையில் உள்ள பொருள்கள் மிகச் சில, வீணர் வெளியே செல்லும் சமயம் திரும்பிவராமல் எளிதாக வேறிடம் சென்றுவிட முடியும் காடனும் மாடனும் இதுவே தப்பும் வழி என்று கருதினர். ஆனால், வேடன் கேட்கவில்லை “நாம் என்ன திருடர்களா? கோழைகளா? நாம் ஒளிந்தோடத் தேவையில்லை. நான் சொல்லுகிறபடி கேளுங்கள். அவன் கண்கான அவனை ஏமாற்றிவிட்டே நாம் போகலாம்!” என்றான்.
அவர்கள் இணங்கினர், அவன் தன் முழுத்திட்டத்தையும் அவர்களிடம் விளக்கவில்லை. ஏனென்றால், அவனே முழுத்திட்டமும் வகுத்து முடித்துவிடவில்லை. ஆனால், தொடக்கத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எம்மாதிரி தறுவாய்க்குக் காத்திருந்து நழுவிவிட வேண்டும் என்பவற்றை மட்டும் அவர்களுக்குத் தெரிவித்தான்.
அதன்படி அவர்கள் மூவரும் அன்றிரவு தம் அறையில் கதை தொடங்கினர். வழிமனைவாணன் அறைக்கு வெளியே வந்து நிற்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே தக்க சமயத்தில் அவனாகத் திட்டத்தினிடையே வந்து சிக்கிக் கொள்வான் என்று அவர்கள் உறுதி கொண்டனர்.
வேடம்பி பேச்சைத் தொடங்கினான்.
“இது நம் கடைசி இரவு, இன்றே நாம் புறப்பட்டு விடுவோம். நான் கூறியபடி கணக்கு முழுவதையும் நானே தீர்த்துவிடுகிறேன். என்னிடம் பணம் இருக்கிறது!” என்றான்.
வழக்கப்படி பத்துச் செப்புக் காசுகளும் ஒன்று குறையாமல் ஒரே குரலில் கலகலத்தன.
“முடியாது. நான் தான் அவ்வளவையும் கொடுப்பேன். நீ சட்டைப் பையில் பணம் வைத்திருக்கிறாய். நான் பெட்டியில் வைத்திருக்கிறேன்” என்றான் மாடம்பி.
“நீங்கள் இருவரும் கொடுக்கக்கூடாது. நான் தான் எல்லோரிலும் மூத்தவன். நான் தான் கொடுக்கப்போகிறேன்” என்று காடம்பி பேசினான்.
“நான் தான் கொடுக்க வேண்டும். நான் தான் கொடுக்க வேண்டும்” என்றபடியே அவர்கள் சண்டையிடத் தொடங்கினர்.
வேடம்பி இப்போதும் தலையிட்டான்.
“நாம் அண்ணன் தம்பிகள், நமக்குள் ஏன் இவ்வளவு சண்டை? வழக்கை நியாயப்படி தீர்த்துக் கொள்வோம்” என்றான்.
‘சரி’ என்று மற்றை இருவரும் தலையசைத்தார்கள். அவன் தொடர்ந்தான்.
“நாம் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு கதை கூற வேண்டும். யார் கதையில் புதிய நகைத்திறமும் துடுக்குத் தனமும் மிகுதியோ, அவர்கள் கணக்கு முழுவதையும் தாமே தீர்த்துக் கொள்ளலாம்!” என்றான்.
அவர்கள் ஏற்றனர்.
இத் தறுவாயில் வழிமனைச் செல்வன் உள்ளே தலை நீட்டினான். “நீங்கள் சொல்வதுதான் சரி!” என்று தீர்க்கும் கணக்குக்குள்ள தன் உரிமைய நினைவூட்டினான்.
வேடம்பி முன்பு தட்டிய இடமாகப் பார்த்து அவன் முதுகில் மீண்டும் ஒருமுறை தட்டினான்.
“ஆகா, சரியான நேரத்தில் வந்து சேர்ந்தாய். எங்களுக்கு உன் உதவி இரண்டு வகையில் தேவை. முதலாவது, சூடாகத் தோசையும் தேநீரும் அருந்தினால் தான் கதைகளும் சுவைக்கும், நம் மூவர்க்கும்… ஏன் நால்வர்க்குமே - உணவு குடிகள் வரட்டும். இரண்டாவது, கதை சொல்பவர்கள் கதைகள் பற்றிய தீர்ப்புக் கூற முடியாது. நீங்கள் நடுவராகவும் இருக்கவேண்டும்” என்றான்.
தனக்குள்ள மூன்றாவது கடமையையும் வழிமனைவாணன் நினைவூட்டினான். “ஆகா, இந்த இரண்டு உதவியும் நான் செய்யத்தயார், ஆனால், எனக்கு மூன்றாவது நீக்க முடியாக் கடமையும் இருக்கிறது. யார் கணக்கைத் தீர்ப்பதாயிருந்தாலும், அதன்படி பணம் என் கைக்கு வந்து சேரவேண்டும்” என்றான்.
"ஓகோ! அதற்கென்ன? அதில் போட்டியில்லை. போங்கள், போய் விரைவில் வாருங்கள்! என்றான்.
தீர்ப்புப் பற்றியே மூவரும் கலவரம் செய்து, கலவரத்தினிடையே மூவரும் மூன்று திசையில் மறைய வேண்டுமென்று அவர்கள் இப்போது பேசிக் கொண்டனர். வழிமனைவாணன் இதை மறைந்து நின்று கேட்ட பின்பே கீழே சென்றான். ஆனால், அன்று அவன் தன் மனைவியிடம் முழுச் செய்தியையும் கூறி ஏற்பாடு செய்திருந்ததால், அடுத்த கணமே தோசை தேநீர்த் தட்டுகளுடன் வந்து சேர்ந்தான்.
தோசைகளின் மணத்துடனும் தேநீரின் சுவையுடனும் கதைகள் தொடங்கின.
காடம்பி தன் கதையைத் தொடங்கினான்.
I. காடம்பி கதை
நம் வழிமனைகளும் அருந்தகங்களும் தேநீரின் சுவையில் கடும் போட்டியிட்டு வருவது உங்களுக்குத் தெரியுமே! சுவையை மிகுதிப் படுத்துவதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை முறையைக் கையாளுகின்றனர். அதில் ஒரு முறையை வண்டலூரில் ஒரு விடுதியாளன் கையாண்டு வந்தான். தேநீரில் அவன் ஒரு சிறு திவலை மயக்கமருந்தைக் கலந்தான். அஃது உருகித் தேநீரின் சூட்டுடன் கலந்து நரம்புகளில் முறுக்கேறியதும், தேநீர் பருகியவன் புறக்கண்ணால் காணாதவற்றை எல்லாம் அசுக்கண்ணால் கண்டவற்றையே ஒன்றை மற்றொன்றாகப் பிறழக் கண்டான். ஆயினும் இக்காட்சியிடையே அவன் அடைந்த இன்பம் அவனை மீண்டும் மீண்டூம் அதே விடுதியின் தேநீரை நாடி இழுத்துச் சென்றது.
செங்கோடன் நல்ல வசதியான வாழ்க்கை நலங்கள் உடையவன். அந்த வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலுமே அவனுக்குப் பாசம் மிகுதியாய் இருந்தது. நண்பர்களுடன் அவன் மணிக்கணக்காகப் பேசிப் பொழுது போக்குவான். ஒவ்வொரு நண்பருக்கும் அவன் ஒவ்வொரு செல்லப் பெயர் அல்லது கேலிப் பெயர் வைத்திருந்தான். அவர்களும் அந்தப் பெயர்களாலேயே அவன் பாசத்தை ஏற்றனர். “அடே பன்றி!” என்றால் ஒருவன் “ஏன்?” என்பான். “அடா எருமை!” என்றால் ஒருவன் “இதோ?” என்பான்.
திருமணமானபின் செங்கோடன் பாசத்தின் பெரும் பகுதி அவன் மனைவி மீது பாய்ந்தது. அவளுக்கும் அவன் ஒரு பாசப் பெயர் வைத்திருந்தான் ‘என் அருமைக் குரங்குக் குட்டி’ என்று அவன் அவளை அழைப்பான். ‘என் கழைக் கூத்தாடி’ என்று அவனுக்கேற்றபடி அவள் அவனைக் கேலி செய்வான். அவர்கள் இருவர் பாசமும் ஒரு குழந்தை மீது படர்ந்தபோது, குழந்தைக்கு எந்த விலங்கின் பெயரிட்டழைப்பது என்று மனைவி கணவனைக் கேட்டாள். அவன் ஒரு நொடி கூடத் தயங்கவில்லை. ‘இதில் தயக்கம் எதற்கு?’ அது நம் ஆசைக் கழுதைக் குட்டியாகவே இருக்கட்டும்’ என்றான்.
செங்கோடன் மனைவியின் உண்மைப் பெயர் பூமாலை, மகளுக்கு இருவரும் இட்ட பெயர் பொன்னி, ஆனால், பூமாலை குரங்காயமைந்தது போலவே, பொன்னியும் ஆசை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கழுதைக் குட்டியாகவே இயங்கினாள். அவள் பொன்னி எங்கே என்று கேட்டால் கூட அவள் குரல் கொடுக்க மறந்துவிடலாம். கழுதைக் குட்டி என்று அவன் கூறியதுமே அவள் அவன் மடிமீது வந்திருந்து அவன் கன்னத்தைக் கிள்ளத் தவறுவதில்லை.
எப்படியோ செங்கோடனுக்கு வண்டலூர் விடுதியின் பழக்கம் ஏற்பட்டது. அதன் தேநீரை மிகுதியாகக் குடித்த சமயங்களில் அவனுக்குப் பகல் இரவாகவும், இரவு பகலாகவும் தோன்றின. நீர் நிலமாகவும், நிலம் நீராகவும் காட்சியளித்தன. இது மட்டுமன்று; சில சமயம் விலங்குகள் மனிதராகவும் மனிதர்கள் விலங்குகளாகவும் கூட மயங்கின.
ஒரு நாள் வழக்கமீறி மயக்கமருந்து தேநீரில் ஏறியிருந்தது.
நேரமும் இரவு பத்துமணியாயிற்று. அவன் திரும்பி வீடு வரும்போது, பாதையருகிலிருந்த சிறு குட்டை அவனுக்கு வீட்டு முற்றமாகக் காட்சியளித்தது. அடுத்த கணம் அவன் அயலே கிடந்து தவழ்ந்தான். குட்டையில் முட்டளவுக்குமேல் தண்ணீரில்லா விட்டாலும், அவன் அதை விட்டு வெளிவர முடியாமல் திண்டாடினான்.
அவன் நிலையறிந்த ஒரு நண்பன் அவனை இழுத்துக் கரைக்குக் கொண்டுவந்தான். தன் மேலாடையாலேயே அவன் உடலின் ஈரம் புலர்த்தினான். பின் வீட்டருகே இட்டுச் சென்று செங்கோடன் மனைவியையே தட்டி எழுப்பி அவளிடம் கணவனை ஒப்படைத்துவிட்டுச் சென்றான்.
பூமாலைக்குத் தூக்கச் சோர்வு முற்றிலும் நீங்கவில்லை. வெளிக்கதவைத் திறந்து அடைத்தபின், அவள் நேரே தன் படுக்கையில் சென்று விழுந்தாள். செங்கோடனுக்கும் தேநீர் மயக்கம் முற்றிலும் அகலவில்லை. அவன் அரை மயக்கத்திலேயே ’எங்கே என் கழுதைக்குட்டி?" என்று தேடினான்.
படுக்கையிலிருந்தபடியே பூமாலை வாய் முனகிற்று; இங்கே கழுதைக்குட்டி கிடையாது. கன்றுக்குட்டி தான் இருக்கிறது. வேண்டுமானால் தொழுவத்தில் சென்று பாருங்கள்!" என்றாள்.
தொழுவம் அவன் நின்ற இடத்தின் அருகிலேயே இருந்தது. அவன் தட்டித் தடவிக்கொண்டு அங்கே சென்றான். பசு ஒரு புறமாகவும் கன்றுக்குட்டி இன்னொரு புறமாகவும் கட்டப்பட்டிருந்தன. அவன் கண்களுக்கு எப்படியோ பசு அவன் மனைவி பூமாலையாகவும், கன்றுக் குட்டி அவள் குழந்தை பொன்னியாகவும் தெரிந்தன. அவன் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவதாக எண்ணிக் கொண்டு கன்றுக்குட்டியைக் கட்டிப்பிடித்தான். அது திமிறிய போதும் அவன் விடவில்லை. கொஞ்ச நேரத்துக்குப்பின் அதுவும் அவன் பிடிப்புடன் பழகிவிட்டது. அதன் தலை மீது தலை வைத்தபடி அவன் தொழுவத்திலேயே உறங்கினான்.
தன்னை விட்டுவிட்டுக் கன்றுக்குட்டியைக் கட்டிக் கொண்டிருக்கும் தந்தையைக் கண்டு, காலையில் பொன்னி கோவென்று கதறினாள். அதைக் கேட்டு அங்கே கூடியவர்கள் சிரித்தார்கள். ‘நம் கழுதைக் குட்டிக்கும் கன்றுக்குட்டிக்கும் வேறுபாடு தெரியாவிட்டால் வேறு என்ன தெரியப் போகிறது இவருக்கு?’ என்று பூமாலைகூட ஏளனம் செய்தாள்.
ஊரிலுள்ள குறும்பன் ஒருவன் இந்தத் தறுவாயை இத்துடன் விடவில்லை. கன்றுக்குட்டி பசுங் கன்றுக் குட்டியாத லால், அதனை மூச்சுத் திணறவைத்த பழி செங்கோடனை விடாது. அஃது அவனையும் அவன் குடும்பத்தையும் கட்டாயம் சுற்றும்’ என்றான். இப்போது பூமாலையும் பொன்னியைக் கட்டிக் கொண்டு இருவரும் அழலானார்கள். ‘இப்படி இத்தகைய பழி வந்து சேர்ந்ததே!’ என்று அங்கலாய்த்தார்கள்.
செங்கோடன் தான் செய்த காரியத்துக்கு மனமார வெட்கமும் வருத்தமும் அடைந்தான். ஆனால் ‘பழி’ என்ற புதிய பூச்சாண்டி கேட்டதே அவன் துயரத்துக்கு எல்லையில்லை. அவன் குறும்பன் காலைக் கட்டிக் கொண்டு, ‘நீங்கள் தான் வழி செய்ய வேண்டும். இந்தப் பழி போக என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன்’ என்றான்.
குறும்பன் எளிதில் வழிவிடவில்லை. “இஃது எளிதில் போகக்கூடிய பழியல்லவே! பசுப்பழி பொல்லாதது, அதுவும் இது கன்றுக்குட்டிப் பழி. இந்தக் கன்றைப் போல் ஒரு தங்கச் சிலை செய்து ஒரு குருக்களுக்குத் தானம் செய்ய வேண்டும்” என்றான்.
பூமாலை கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“இவ்வளவு போதுமா ஐயா! நானே பொன் கொடுக்கிறேன். இந்தப் பழியிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்றாள்.
பூமாலை செல்வச் செருக்குக்கு அவ்வளவு போதாது என்று குறும்பன் கருதினான். ஆகவே பழி மாற்ற அவன் மேலும் கட்டுப்பாடுகள் வகுத்தான்.
“உங்களைப் பழி சூழாமல் இருக்க அவ்வளவு செய்தால் போதும். ஆனால், பழி குழந்தையைச் சூழாமல் இருக்க வேண்டு மானால், மூன்று நாள் அவள் தன் அப்பாவிடம் பேசக் கூடாது, அவரைப் பார்க்கக்கூடாது. அவரை நினைக்கக் கூடப் படாது. அதே சமயம் அவள் தந்தை மூன்று நாள் மூன்று நேரமும் நோன்பிருக்க வேண்டும். நோன்பில் ஒரு கால்துண்டு இட்டலியும் ஓர் அப்பமும் மட்டுமே சாப்பிடலாம்” என்றான்.
‘அப்பாவிடம் பேசாமல் நான் எப்படி மூன்று நாள் இருக்க முடியும்? என்னால் முடியாது. பழி என் மீது வந்தால் வரட்டும்’ என்று சிணுங்கினாள் பொன்னி.
‘என்னால் எப்படிக் கால்துண்டு இட்டலி, ஓர் அப்பத்துடன் மூன்று நாள் இருக்க முடியும்? என்னால் முடியாது. பழி என்னை வந்து சுற்றினால் சுற்றட்டும்’ என்று செங்கோடன் சீறினான்.
ஆனால்’ பூமாலையின் கலங்கிய கண்கள் இருவர் உறுதி யையும் குலைத்தன. அவள் இருவரையும் நாடித் தாங்கினாள். ‘உங்களுக்காக நானும் நோன்பு இருக்கிறேன். இந்தப் பழியைத் தீர்த்துவிடலாம்’ என்று கெஞ்சினாள்.
இருவரும் வேண்டா வெறுப்புடன் இணங்கினார்கள்.
மறுநாள் முதல் பொன்னி பூசை அறையில் போய் உட்கார்ந்து கொண்டாள். வகைவகையான சிலைகள் படங்கள் அவளைச் சுற்றி வைக்கப்பட்டன. பூமாலை அவள் விளையாட்டுத் தோழர் தோழியர்களை எல்லாம் வரவழைத்து அவர்களுக்கு விளையாடுவதற்கு வேண்டிய எல்லாவற்றையும், தின்பண்டங்களையும் அளித்தனர். அப்பாவை நினையாமல் இருக்கும்படி அவளை வகைவகையான விளையாட்டுகளில் ஈடுபடுத்தியும், கதை சொல்லியும் மூன்று நாள்கழித்துவிடும்படி ஏற்பாடு செய்தாள். ஆனால், எந்தக் கதையிலும் ‘அப்பா’, ‘பிள்ளை’ என்ற சொற்களோ, செங்கோடன் என்ற பெயரோ வரக்கூடாது என்று எச்சரித் திருந்தாள். இந்த ஏற்பாடுகளின் தலைவியாக அடுத்த வீட்டிலிருந்த ஓர் அத்தை வரவழைக்கப்பட்டிருந்தாள். தவறுதலாகப் பொன்னியின் வாயில் அப்பா என்ற சொல் வருவதாகவோ அல்லது அவள் அப்பாவை நினைப்பதாகவோ நிழல் வீசினால், உடனே ஓர் அப்பத்தை அவள் வாயில் திணித்து நினைவைத் திணறடிக்க வைக்க வேண்டும் என்றும் திட்டம் செய்யப்பட்டிருந்தது.
செங்கோடன் நோன்புக்குரிய பொறுப்பை மட்டிலும் பூமாலை முழுவதும் தானே ஏற்றாள். இரவெல்லாம் இட்டலி சுடுவதிலும் அப்பம் சுடுவதிலும், அவற்றை வயிற்றில் தள்ளுவதற்காக நோன்புக்குரிய சுக்குத் தேநீர் காய்ச்சுவதிலுமே சென்றது. விடிய ஒரு யாமத்திலேயே அவள் சிறிது கண்ணயர்ந்தாள். அந்த இனிய தூக்கத்திடையே அவள் நாக்கு நோன்புக்குரிய ‘ஒரு துண்டு இட்டலி, ஓர் அப்பம்’ என்ற தொடர்களை மனனம் செய்து கொண்டிருக்கத் தவறவில்லை. ஆனால், அப்படியோ எழுந்திருக்கும் சமயம் ‘ஒரு துண்டு இட்டலி; ஓர் அப்பம்’ என்பது துண்டு இட்டலி முழு அப்பளமாய், பின் அதுவே துண்டு அப்பம் முழு இட்டலி ஆய்விட்டது.
நோன்பு வகுத்த குறும்பனைவிட அதை நிறைவேற்றிய பூமாலையிடமே இயற்கைக் கற்பனைத்திறம் மிகுதியாய் இருந்தது. ஏனெனில், கணவனிடம் அவள் கொண்டிருந்த பாசம் கற்பனையை இயல்பாகத் தூண்டிற்று. துண்டு அப்பம் என்பது துண்டு துண்டான அப்பம் என்றும், முழு இட்டலி என்பது துண்டுபடாத முழு இட்டலிகள் என்றும் புதிய பொருள் கொண்டுவிட்டன. அத்துடன் மூன்று நேர நோன்பு என்பது மூன்று நேரமும் இவ்வாறு முழு இட்டலிகளும் துண்டு அப்பங்களுமே தின்ன வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடாயிற்று. முழு இட்டலியைக் கணவன் ஒரே வாயில் விழுங்க வசதியாக அவள் சற்று மட்டளவான இட்டலியே சுட்டாள்.
நோன்பு முறைக்கேற்றபடி ‘வேண்டாம், வேண்டாம்’ என்று கூறிக்கொண்டே மூன்று நாளும் மூன்று நேரமும் செங்கோடன் முழு முழு இட்டலிகளையும் துண்டு துண்டு அப்பங்களையும் விழுங்கினான். நோன்பு வகுத்த அறிவாளி இட்டலி என்று மட்டும் கூறியிருந்தான். சட்டினி காரியமோ, மிளகுப்பொடி சாம்பார் காரியமோ ஒரு சிறிதும் கூறவில்லை. ஆனால், இட்டலி என்று சொல்லிலேயே சட்டினி என்ற பொருளும் தொக்கி நிற்கிறது என்றும் அதனால்தான் சட்டினிக்குத் ‘தொக்கு’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது என்றும் பூமாலை இலக்கணம் கூறினாள். இதில் செங்கோடனுக்கு நம்பிக்கை வராதது கண்டு, அவள் இட்டலிக்குள்ளேயே சட்டினியோ, மிளகாய்ப் பொடியோ வைத்துச் சுட்டுத், தன் சமயவாதத் திறமையைக் காட்டினாள்.
ஒரு சில இட்டலிகள் துண்டு அப்பங்களுக்குமேல் செங்கோடனால் தின்ன முடியவில்லை. ஆனால், பூமாலை விடவில்லை. அரைகுறையாக நோன்பை விட்டுவிட்டால் தவறு என்றும், நோன்பு முறிந்துவிடக் கூடாதென்றும் வலியுறுத்தி மேலும் மேலும் முழு இட்டலிகளையும், துண்டு அப்பங்களையும் திணித்தாள். ஒரு நேர நோம்பு முடிவதற்கும் அடுத்த நேர நோன்புக்கான இட்டலி அப்பம் சுடுவதற்கும் அவள் நேரம் சரியாய் இருந்தது. ஆனால், கணவன் நோன்பு இனிது நிறைவேற வேண்டுமே என்ற கவலையால் அவள் இரவு பகல் உடல் சோர்வு பாராமலே வேலை செய்தாள்.
மூன்றாவது நாள் மூன்றாவது நேர நோன்புதான் மிகவும்
கடுமையாய் இருந்தது. நோன்பாற்றி நோன்பாற்றிச் செங்கோடன் வயிறு உப்பிப் போய்விட்டது. ஒரு சில முழு இட்டலிகளுக்குமேல் செல்லவில்லை. வாய் சலித்தது; வயிறு குமட்டிற்று. ‘இத்துடன் போதும், நோன்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்’ என்றாள் பூமாலை, ஆனால், செங்கோடன் மனச்சான்று கேட்க வில்லை. ‘எடுத்துக் கொண்ட நோன்பை என்ன பாடுபட்டா னாலும் நிறை வேற்றிவிட வேண்டும் இந்த ஓர் இட்டலி குறைவதால் நோன்பு முறிந்துவிடப்படாது’ என்று கூறித் தன் இறுதித் தாக்குதலை முழுமூச்சுடன் வெற்றிகரமாக முடித்தான்.
செங்கோடன் வீரநோன்பின் புகழ் வண்டலூரெங்கும் பரவிவிட்டது. பூமாலையும் பொன்னியும் அவன் வீரத்தைப் பாராட்டி முன்னிலும் பன் மடங்கு அன்பை அவன் மீது சொரிந்தனர்.
II. மாடம்பி கதை
செங்கோடன் நோன்புபற்றிய கதை நண்பர்களையும் வழிமனை வாணனையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. சிரித்து ஓய்ந்த பிற்பாடு கூட யாராவது செங்கோடன் நோன்பு என்றோ, கழுதைக்குட்டியென்றோ கூறியவுடனே சிரிப்பு மீண்டும் ஓர் ஐந்துகணம் விடாமல் தொடரலாயிற்று.
தன் கதையின் வெற்றியில் பெருமை கொண்ட காடம்பி அதையே முடிவாக்கினான். ‘இனி, கணக்கின் பொறுப்பு என்னுடையதுதான்; கதைக் கச்சேரியை இத்துடன் நிறுத்துங்கள்’ என்றான். ஆனால், மாடம்பி இந்த முடிவை ஏற்கவில்லை. ‘என் கதையையும் கேட்ட பின்பல்லவா முடிவு செய்ய இயலும்? நான் கூறுகிறேன் கேளுங்கள்’ என்று தொடங்கினான்.
மாந்தரன் அறிவாராய்ச்சிகளில் வல்லவன். ஆனால், பள்ளி, கல்லூரிகளைக் கடக்க முடிந்ததே தவிர, அவற்றில் முன்னணியிடம் பெறவில்லை. உண்மையில் உச்ச உயர் பட்டத்துக்கான தேர்வு எழுதும் சமயத்தில் அவனுக்குத் திடுமென வேறொரு திசையில் கவர்ச்சி ஏற்பட்டது. அவன் ஒரு தேர்வு நடுவிலேயே எழுந்து சென்றவன் திரும்பி வரவில்லை. வழியில் கண்ட நண்பர்களிடம் தன் புத்தகங்கள், தாள் கட்டுகள், மைக்கோல்கள், கடிகாரங்களை வைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றான். அவன் திரும்பி வராததால், அவை நண்பர்களுக்கு அவனை நினைவூட்டும் பரிசுகளாயின.
அவனைக் கவர்ந்தது ஒரு பைத்தியம். விசித்திரப் பைத்தியம். வள்ளுவர் குறளை எடுத்து ஓர் ஆண்டி பேரூரையாற்றிக் கொண்டிருந்தான். ’பள்ளி, கல்லூரிக் கல்விகளால் என்ன பயன்? இந்த வள்ளுவர் குறள் ஒன்று இருந்தால் போதுமே! கடவுளைக் காண, நாட்டை ஆள உலகில் இன்பம் கண்டு நுகர – எதற்கும் வழிகாட்டுவது திருக்குறள் ஒன்றுதான் என்று அவன் ஒரு மரத்தடியிலிருந்து பெண்களுக்கு அறிவுரையாற்றிக் கொண்டி ருந்தான். அதைக் கேட்ட மாந்தரன் உள்ளம் அந்த உரையில் ஆழ்ந்தது. அவன் உணர்ச்சி உள்ளூரப் பொங்கிக் கொண்டிருந்தது. தேர்வு நடுவிலே ஆது பீறிட்டெழுந்ததாலேயே அவன் திடுமெனத் தன் பள்ளி, கல்லூரி வாழ்வுக்கு ஒரு முழுக்குப் போட நேர்ந்தது.
ஆண்டியுடன் மாந்தரன் அந்த மரத்தடியில் தங்கித் திருக்குறள் பாடம் கேட்டான். தன்னிடம் மீந்திருந்த காசு பணம் அனைத்தும் ஏழை எளியவருக்குக் கொடுத்து விட்டுச் சில நாள் ஆண்டியுடன் ஆண்டியாக வாழ்ந்தான். அந்த வாழ்விலும் அவன் நீண்ட நாள் நிலைக்க முடியவில்லை. அவன் ஒருநாள் ஆண்டியிடம் விடைபெற்றுப் பல ஊர், பல நாடுகள் சுற்றித் திரிந்தான். ஆண்டியிடம் அறிந்த குறளறத்தின் அறிவை எங்கும் பரப்பினான். இளமையின் ஒரு பாதி கழிந்தபின் அவன் மீண்டும் ஆண்டி இருந்த மரத்தடிக்கு வந்தான்.
இப்போது ஆண்டி அங்கே இல்லை. அவன் வருவதற்குச் சில நாள்களுக்கு முன்பே ஆண்டி காலமாய் இருந்தான். ஆண்டியிடம் முன்பு வந்து அறவுரை கேட்ட பெண்டிர் இப்போதும் வந்தனர். அவன் தன் அறவுரையால் அவர்களை மகிழ்வித்தான். அவனுடன் படித்த கல்லூரி, பள்ளித் தோழர் பலர்கூட அவனை அடையாளங் கண்டு வந்து பேசினர். அவர்களில் சிலர் இப்போது ஆசிரியராய் இருந்தனர். சிலர் உயர் அலுவலர்களாக, ஆட்சியாளர்களாக, அமைச்சர்களாக உயர்வுற்றிருந்தனர். ஆண்டியுருவில் அவன் ஆழ்ந்த அறிவையும், பரந்த அனுபவத்தையும் கண்டு அவர்கள் வியப்புற்றனர். பள்ளி, கல்லூரி நடை முறைகளில், ஆட்சியின் சிக்கல்களில், சட்ட நுணுக்கங்களில், சமய அறிவுத் துறைகளில் அவன் அறிவுரை கேட்டனர். அவ்வெல்லாத் துறையிலும் அவன் திறம்பட அறிவுரையாற்றியதனால் அரசியலும் பொதுவாழ்வுமே உயர்வடைந்தது.
இத்தனை அறிவும் திறமையும் இருந்தும் அவன் உயர் ஆட்சித் துறைகளை அடைந்தானில்லையே என்று வருந்தியவர் பலர். அறிவுடன் அழகிய தோற்றமும் இருந்தும் தக்க நல்ல இடங்களில் அவன் திருமண உறவு பெறவில்லையே என்று இரங்கியவர் பலர். மக்களிடையே ஆண்டியாக உலவுவதைவிட வளமிக்க மடங்கள், சமய நிலையங்களில் தொண்டாற்றிப் பீடும் புகழும் பெறலாமே என்று கருதினர் சிலர். இத் துறைகளி லெல்லாம் அவனை ஈடுபடுத்த நண்பர் பலர் முயன்றனர். மணமாகா நங்கையர், அத்தகைய நங்கையர் உறவினர் பலர் கூட அவனை மெல்ல உலகியல் பாசத்தில் தம்முடன் ஈடுபடுத்த எண்ணாமலில்லை.
எப்படியோ எதிலும் அசையாமல் மாந்தரன் தான் இருந்த அரச மரத்தடிக்கே உண்மையுரிமையுடைய ஆண்டியாக இருந்தான். ஒருநாள் ஒரு நண்பன் இதைக் கேலியாகக் சுட்டிக் காட்டினான். "உலகத்தில் எதையும்விட, அரச வாழ்வையும் அம்பல வாழ்வையும்விட, இந்த அரச மரத்துக்கே நீங்கள் உண்மையாய் இருக்கிறீர்கள். அரசமரம் மட்டும் ஓர் அரசனாய் இருந்தால்….
மாந்தரன் நண்பனைப் பேசவிடவில்லை. “அரசனாய் இருப்பதனால்தானே அரசமரம் என்று பெயர் வைத்திருக் கிறார்கள். அதன் ஒவ்வொரு கிளையும் ஒரு பேரரசின் ஆட்சியரங்கம், ஒவ்வோர் இலையும் பூவுங் காயும் ஒரு தனித் தனி உலகம். வேர்கள் தனித்தனி உலகங்கள். அவற்றின் உள்ளும் புறம்பும் எத்தனை உயிர்கள் வாழ்கின்றன தெரியுமா?” என்று கற்பனைக் கவிதைகள் அளந்தான்.
அவன் கற்பனை அவன் உள்ளத்திலிருந்து பீறிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்தக் கற்பனையின் நடுவிலே அவன் கண்கள் சுழன்றன. அவன் சோர்ந்து விழுந்தான்.
நண்பன் உடனே திகிலடைந்தான். முகத்தில் நீர் தெளித்தான். விசிறினான். கணநேரத்தில் ஆண்டியான அவன் வாழ்வில் அக்கறை கொண்ட எத்தனையோ நண்பர்கள், பெண்டிர், உயர் ஆட்சிப் பதவியாளர் வந்து வந்து பார்த்துப் போயினர். பலர் மருத்துவ உதவி தருவித்துப் பார்த்தனர். மாந்தரன் உணர்வற்ற வனாகவே கிடந்தான். ஆனால், மூச்சு மட்டும் அடங்கிய மெல்லிய நிலையில் வந்து போய்க் கொண்டிருந்தது.
அவன் ஒரு முழுநாள் கழிந்தே எழுந்திருத்தான். அப்போதும் பல நண்பர்கள் கவலையுடன் அவனருகிலேயே இருந்தனர். பாலும் சூடான தேநீரும் வழங்கினர். உண்டாறிய பின் அவன் சுற்றிச் சுற்றிப் பார்த்து விழித்தான். “நான் எங்கே இருக்கிறேன்? நீங்கள் யார்?” என்று கேட்டான்.
வியப்புடன் அனைவரும் அவனிடம் வந்து பேசினர். அவன் சற்று அமைந்து. ’நான் என்னையே மறந்துவிடும் அளவு நீண்ட கனவு கண்டிருக்கிறேன். ஆனால், அது கனவென்று நம்பமுடியவில்லை. இன்னும் அது முற்றிலும் உண்மையாகவே இருக்கிறது. அந்தக் கலக்கம் தீரவில்லை" என்றான்.
அவன் அனுபவங்களைக் கூறும்படி நண்பர் அவனைத் தூண்டினர். அவனும் இணங்கினான்.
நேற்று இந்த இடத்தில் நான் சோர்ந்து விழுந்தது. எனக்கும் நினைவிருக்கிறது. ஆனால், விரைவில் நான் இந்த அரசமரத்தைத் தவிர எல்லாம் மறந்துவிட்டேன். என் கண்களுக்கு அரசமரம் பல்லாயிரங் காதம் உயரமுடையதாயிற்று. வேர்களெல்லாம் பெரிய மலைகளாகத் தோன்றின. ஒரு வேர் மலையின் பக்கமாக ஓர் அகன்ற அரச பாட்டையாகச் செல்வது கண்டேன். அதில் பன்னிரண்டு குதிரைகள் பூட்டிய ஓர் ஒய்யார வண்டி என்னை நோக்கி வந்தது; அது என்னைக் கடந்து செல்லுமென்று எண்ணினேன். ஆனால், அது நான் இருக்கும் இடத்திலேயே வந்து நின்றது. அதன் பின் புறமிருந்து நீண்ட கறுப்பு வெள்ளை அங்கி அணிந்த காவலர் இருவர் இறங்கி வந்தனர். எனக்கு அவர்கள் வணக்கம் செய்தனர்.
“அரசமரப் பேருலகில் சிதல்வாணப் பேரரசின் பெருமான் தங்களை அழைத்து வரும்படி ஆணையிட்டிருக்கிறார். தங்களுக்காகவே இந்த வண்டி” என்றனர்.
நான் முதலில் வியப்படைந்தேன். பேரரசனை நான் ஏன் பார்க்க வேண்டுமென்று தயங்கினேன். பின் அன்பழைப்பை மறுப்பது நல்லதன்று என்று இணங்கிச் சென்றேன்.
பாதை நெடுந்தூரம் மலையருகாகவே சென்றது. பின் மலையின் உள்ளும் புறமும் மேலும் கீழுமாக நெளிந்து நெளிந்து ஊர்ந்தது. வில் வைத்த ஒய்யார வண்டியில் இருந்தபடியால் வழியின் நீளம் எனக்குத் தோன்றவில்லை. ஆனால், ஓரிரவு பயணம் செய்தபின் காலை இளவெயிலில் வானளாவிய ஒரு மதிலையும் ஒரு விரிந்தகன்ற கோட்டை வாயிலையும் கண்டேன் அதன்பின் பொன் வண்ண எழுத்துக்களில் ‘சிதல்வாணப் பேரரசின் கோட்டை’ என்று எழுதப்பட்டிருந்தது.
மதில்கள் பல காதம் நீளமுடையவையாகத் தோற்றின. அதனுள்ளும் புறமும், மக்கள் பரபரவென்று எறும்பு கறையான்கள் ஊர்வதுபோல ஊர்ந்து சென்றனர். ஒருவரை ஒருவர் கண்டு வணக்கம் செய்தபோதுகூட அவர்கள் ஒரு நொடிதான் நின்றனர். அதற்குள் ஆயிரம் திசைகளில் அவர்கள் சுற்றினர்.
புறநகரமும் அகநகரமும் கடந்து அவர்கள் அரண்மனை வாயிலை அடைந்தனர். அவ்வளவு அழகிய வேலைப்பாடமைந்த கட்டத்தை நான் எங்குமே கண்டதில்லை. அதன் கூடம் உட்கூடங்கள், இடைவழிகள், அறை, உள்ளறைகள் ஒரு பெரிய நகரத்தின் நெருக்கமான பகுதிகள்போலப் பார்வைக்கு இனிய குழப்பம் தந்தன. சிவப்பு, கறுப்புப் பட்டுக்களில் பொன் வேலை செய்த மேற்கட்டிகளும், நவமணி இழைத்த முத்துத்
தொங்கல்களும் மேலே எங்கும் நிறைந்திருந்தன. தூண்கள் வெல்வெட்டுப் பட்டுக்களாலும், நிலத்திடம் மணிக்கம்பளங் களாலும் முற்றிலும் போர்த்தப்பட்டிருந்தன.
அரசன் கொலுவிருக்கை மண்டபத்தின் அழகொளி கண்கூச வைத்தது. அதில் கோடி வெயில் நிலவெறிக்கும் அரசர் திருமுன் காட்சியைக் காண இயலாமலே, அவர் திருவடிகளில் நான் கொணர்ந்த மலர்களிட்டு, என் சட்டைப் பையிலிருந்த எலுமிச்சம் பழங்களைக் கையுறையாக வைத்து வணங்கினேன்.
அரசர் பெருமான் கையுயர்த்தி வாழ்த்தி அமரும்படி சைகை செய்ய அதை முதலமைச்சர் வாய்மொழியில் மொழி பெயர்த்து ‘அமருக, அறிவுசான்ற விருந்தினரே!’ என்றார்.
செல்வமும் பதவியும் எனக்கில்லாவிட்டாலும் எனக்கு அறிவிருக்கிறது என்ற ஓர் ஆறுதல் அப்போது எனக்கு ஏற்பட்டது.
அடுத்த நிகழ்ச்சி எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் குழப்பமும் ஒருங்கே தந்தது.
அரசர்பிரான் அமைச்சரைக் கடைக்கணித்தார். அமைச்சர் எழுந்து நின்றார்.
‘மன்னருள் பெற்ற விருந்தினரே! அரசர் பெருந்திருமேனி தம் இரண்டாம் புதல்வி ஏராரிளங்கிளியை உமக்கு மணஞ் செய்விக்கத் திருவுளம் அருள் பாலித்துள்ளது’ என்றார்.
‘மன்னர் மன்னன் அருட்பெருங் கருணைக்கு அடியேன் முற்றிலும் தகுதியுடையவனல்லேன்’ என்றேன் நான்.
இப்போது மன்னர் மன்னரே, வெள்ளிக்கலத்தில் பிறந்த ஓசை போன்ற வீறார்ந்த இனிய குரலில் திருவாய் மலர்ந்தருளினார்.
’எம் புதல்வியர் மூவருள்ளும் அழகிலும் அறிவிலும் முதன்மை வாய்ந்தவள் எம் இரண்டாம் புதல்வியே. அவளை மணம் செய்து கொள்ளத் தக்க உயர் தகுதியுடையவன் இந்த சிதல்வாணப் பேரரசிலே கிடைக்காமல் நான் கவலையுடன் இருந்தேன். உம் தந்தை நெடுநாளாய் எம் பணியில் உண்மையா யிருந்ததுடன், எமக்கு உயிர்த்துணைதரும் செயல்கள் பல செய்துள்ளார். அவர் தம் புதல்வன் அரும் பெருந்திறம் பற்றிக் கூறியதுடன், உம்மை எம் மருமகனாக்கிக் கொள்ளும்படி வேண்டினார். அதனாலேயே இவ்வளவு தொலை வரும்படி உமக்கு ஆணை பிறப்பிக்கும்படி நேர்ந்தது. எம் உவளகத்திலேயே சென்று பயண இளைப்பாறுக. எம் புதல்வி உமக்குப் பிடித்தமாகவே இருப்பாளென்று நம்புகிறேன்" என்றார்.
என் இனிய குழப்பத்தினிடையே என் நன்றியுரை ஒரு நீண்ட மூச்சாயிற்று.
ஒரு பெண்ணிடம் எவ்வளவு அழகு, எவ்வளவு அறிவு, எவ்வளவு திறமை இருக்கக்கூடும் என்பதை நான் அன்று அறிந்தேன். ஒரு பெண்ணின் பிடியில் கட்டுப்பட்டு, அவளிடம் சிறைப்படுவது எவ்வளவு இன்பகரமான அனுபவம் என்பதையும் நான் அதற்கு முன் எண்ணியதே கிடையாது. உண்மையில் அவள் அசையாமல் நான் அசைந்ததில்லை. அவள் பேசியதுதான் என் கிளிப்பிள்ளைப் பேச்சாயிற்று. அவள் சிந்தனையன்றி என் சிந்தனை என்று தனியாக எதுவுமில்லை. நான் அவள் வாசித்த வீணையானேன்; அவள் கொட்டிய மத்தளமானேன்; அவள் கால் சிலம்பொலியிலேயே உலகம் இயங்குவதாக நான் உணர்ந்தேன்.
எங்கள் திருமணம் பேரரசின் ஏழுநாள் பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
அவள் என்னை மடிமீது கிடத்திக் கொண்டு பால் பழம் அருத்துவித்தாள். வியர்க்காத போதே விசிறினாள். இல்லாத தேவைகளை எல்லாம் இருப்பதாக எண்ணி அவற்றை நிறைவேற்றி என்னைக் களிப்பில் குளிப்பாட்டினாள். ஆனால் இவற்றாலும் அவள் உள்ளம் நிறைவடையவில்லை.
“என் செல்வக் குஞ்சுக்கு இன்னும் என்னென்ன வேண்டும்? நானே உங்களுக்கு இனி தாய் தந்தை, அண்ணன் தங்கை, தாரம் சந்ததி ஆகிய எல்லாமாய் இருக்கிறேன். என்னிடம் தயக்க மில்லாமல் எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றான்.
“எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால்..”
“ஆகா, என் குஞ்சுக்கு என்ன வேண்டும்? வானத்து மதி வேண்டுமா? வையகத்துச் செல்வம் வேண்டுமா? என்னென்ன வேண்டும்? உடனே வருவிக்கக் காத்திருக்கிறேன்” என்றாள்.
“வேறொன்றுமில்லை. நீ இளவரசி, பேரரசன் புதல்வி. நான்..”
அவள் பேசவிடவில்லை. “இவ்வளவுதானா? தெம்மூல நாட்டுக்கு இப்போது அரசரில்லை. அப்பாவிடம் நாளையே சொல்கிறேன்.”
“தெம் மூலநாடா! தெம்மூலம்-தென்மூலம் அல்லவா அது?”
“உங்கள் தாய் தந்தையர்களுலகத் தமிழின் இலக்கணம் அதெல்லாம்! எங்கள் உலகத் தமிழில் அவ்வளவு இலக்கணம் கிடையாது. ஆனாலும், இந்த உலகம் உங்களுக்கு இனிக்காதிருக் காது என்றே எண்ணுகிறேன். ஒரு நொடி இருங்கள். நான் வருகிறேன்” என்றாள்.
அவள் போனதும் தெரியாது; வந்ததும் தெரியாது; அதற்குள் முன்னிலும் ஒய்யாரமான ஒரு வண்டியில், குதிரைகளின் மெத்தென்ற குளம்போசையன்றி வேறோசையில்லாமல் இளவரசியின் மடிமீது சாய்ந்த வண்ணம் நான் சென்று கொண்டிருந்தேன்.
புது நாட்டுக்கு அரசனென்ற முறையில் மீண்டும் விழாக்கள் தொடர்ந்தன. அதன்பின் அமைச்சர் வந்தனர்; தண்டலாளர் வந்தனர்; வழக்காளிகள் வந்தனர்; செய்வது இன்னதெனத் தெரியாமல் நான் தயங்கினேன். ஆட்சி இன்னதென்று தெரியாத எனக்கு எல்லாம் குழப்பமாய் இருந்தது.
“ஏன் இந்த ஆட்சியுயர்வு வேண்டினேன் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. உன்னுடனேயே ஓயாது இருப்பதை விட்டு, எங்கே போய் நான் என்ன செய்வது? அத்துடன் எப்படி எப்படிக் காரியம் செய்ய வேண்டும் என்பதும் எனக்குத் தெரியவில்லை” என்றேன்.
“என்னை எங்கும் இட்டுக்கொண்டே செல்லுங்கள். நீங்கள் மட்டும் என்னைப் பிடித்தபிடி விடாமலிருந்தால், நான் எல்லாவற்றையும் உங்கள் பெயரால் செய்கிறேன்” என்றாள்.
இது எல்லாவற்றையும் எளிதாக்கிற்று. அரியணையிலும் அறவணையிலும், தண்டல் மேடையிலும் நான் அவளை அருகில்
இருத்திக் கொண்டேன். என் வலக்கை அவள் இடுப்பைச் சுற்றியிருந்தது. அவள் என் மடி மீதமர்ந்து ஒரு கையால் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். இந்நிலையிலேயே எல்லா அரச காரியங்களையும் அவள் செய்து வந்தாள். அவள் மூலமாக நான் செய்வதாகவே மக்கள் எண்ணிப் பூரிப்படைந்தனர்.
இளவரசி முதல் ஆண்டில் ஒரு புதல்வனை ஈன்றாள். அப்போதும் அவளுடனேயே நான் அரசுரிமை நடத்தினேன். என் நிலையில் ஒரே ஒரு வேறுபாடுதான் இருந்தது. அரசிருக்கையில் இருவருக்குப் பதில் மூவர் இருந்தோம். என் மடியில் ஏராரிளங்கிளி, அவள் தோளில் எம் செல்வன் தென்கரையாளன்! இரண்டாம் ஆண்டில் எங்களுக்கு ஒரு புதல்வி தோன்றினாள். அவளுக்குத் தளிர்க்கொடி என்று பெயரிட்டோம். இப்போது அரசிருக்கையில் நாங்கள் நால்வர் ஆனோம். என் மடியில் தென்கரையாளன் ஒருபுறமும் ஏராரிளங்கிளி மற்றொரு புறமும் இருந்தனர். ஏராரிளங்கிளியின் தோளுடன் தோளாகத் தளிர்க்கொடி துடங்கினாள். தளிர்க்கொடி வளர்ந்தபின் மக்களிடையே இளவரசி வழக்குத் தீர்க்கும் போதே நான் என் செல்வங்களிடையே வழக்குத் தீர்க்க வேண்டியதாயிற்று.
என் இன்பம் எல்லையற்றதாக, தங்கு தடையற்றதாக, கறையற்றதாகவே தோற்றிற்று. பேரரசப் பெருமானின் மற்ற மருமகனோ மக்களோ தத்தம் ஆட்சியை அவ்வளவு திறமையாக நடத்தவில்லையென்றும், என் ஆட்சியிலே என் தெம்மூலநாடு வளங்கொழித்ததென்றும் கேட்டுப் பூரித்தேன். ஆனால், அதில் என் திறம் எதுவும் இல்லை என்பது எனக்கு மட்டும் தெரியும். ஏராரிளங்கிளியின் முழுநிறை அன்புக்கும் பாத்திரமாய், ஆண்டுதோறும் அழகிய குழந்தைகளைப் பெற்ற ஒன்றே எனக்குப் போதிய திறமையாய் அமைந்தது.
ஆனால் அந்தோ! எதிர்பாராமல் என் இன்பக் கோட்டை சரிந்தது. அடுத்த தடவை இளவரசி கருவுற்ற போது அவளால் எழுந்திருக்கக் கூடவில்லை. ஆட்சி கலகலத்தது. எங்கும் பஞ்சம் தலையெடுக்கத் தொடங்கிற்று. குழந்தை பெற முடியாமலே அவள் கண் மூடியபோது, மக்கள் என் ஆட்சிக் கோளாற்றையும் மறந்து என்னுடன் கதறியழுதனர். பேரரசனும் பிற பெருமக்களும் வந்து ஆறுதல், தேறுதல் கூறினர். பேரரசன் அடுத்த புதல்வியையே ஆறுதலாகத் தருவதாக வாக்களித்தான். ஆனால், நான் மறுத்துவிட்டேன். ஏராரிளங்கிளியின் கல்லறையே என் கல்லறையாக வேண்டுமென்று விரும்பினேன். பேரரசர் இதற்கு இணங்கவில்லை.
ஏரார் இளங்கிளியின் உடல் தெம்மூல நாட்டின் பெருமலை சென்றொடுங்கிய இடத்தில் மலையடியிலேயே புதைக்கப்பட்டது. அவளைப் புதைத்த இடத்தில் பல ஆளடி உயரமுள்ள ஒரு வெண் சலவைக்கல் நிறுத்தப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஒரு புதிய பூங்கா புனைந்தியற்றப் பட்டது. சலவைக்கல்மீது என் கட்டளைமீதே ஏரார் இளங்கிளியின் உருவும் என் உருவும், இருவர் இனிய காதல் வாழ்வின் சிறப்புகளும் என் ஆறாத் துயரும் சிறு காவியமாக்கப்பட்டுச் செதுக்கப்பட்டன.
துயர் நாள்கள் கழிந்தன.
என் ஆட்சி புல்லாட்சியாயிற்று. மக்கள் எனக் கெதிராகக் கிளர்ந்தனர். இனிய கிளியை மணந்த பூனை நான் என்று கூக்குரலிட்டனர். பேரரசன் என்னை அழைத்து என் அரச ஆணையை அகற்றினான்.
“உன் தகா ஆட்சிக்கு உன்னைத் தூக்கிடுவதே சிதல்வாண அரசச் சட்டப்படி செய்ய வேண்டிய முறைமை, ஆனால், நீ என் இன்னுயிர்ப் புதல்வி இதயத்தில் வீற்றிருந்தாய். ஆகவே உன் தாயகம் செல்லலாம். உன்னை நாடு கடத்தியிருக்கிறேன்” என்றான்.
“என் தாயகம் எது? என் ஏராரிளங்கிளியின் கல்லறை தானே?” என்றேன்.
“இல்லை, உன்னை அரசமரத்தடியிலிருந்து தானே வரவழைத்தோம். போ, மீண்டும் மனித உலகில் ஆண்டியாகப் போய் நாட்கழி!” என்றான்.
நான் கண்விழித்தேன். இங்கு இருக்கிறேன் என்று மாந்தரன் முடித்தான்.
“கனவு கனவு! அத்தனையும் பொய்க் கனவு” என்றனர் நண்பர்கள்.
“கனவா? இதோ நான் சென்ற பாதை!” என்று சுட்டிக் காட்டினான், மாந்தரன்.
எல்லாரும் வியந்தனர். அது கறையான் தடம்; ஆனால், அது சற்று அகலமானதாகவே நெடுந்தொலை சென்றது.
மாந்தரன் வற்புறுத்தலின் பேரில் பாறைக்கோல், வாள், வெட்டுக்கத்தி முதலியன கொண்டுவரப்பட்டன.
மாந்தரன் கதைக்கும் அவர்கள் கண்ட காட்சிகளுக்கும் இடையே இருந்த வேறுபாடு ஒன்றே ஒன்று தான். மனிதரளவாக அவன் வருணித்த பொருள்களெல்லாம் கறையானாகக் காட்சியளித்தன. ஆனால், பாதைகள் கறையான் தடங்களாகவும், நகரம், அரண்மனை நீண்டகன்று சூழ்ந்து மரத்தின் வேரடியில் வளர்ந்திருந்த புற்றுகளாகவும், மலைகள் வேர்களாகவும் இருந்தன. மாந்தரன் ஆட்சி செய்த தெம்மூல நாடு உண்மையில் அதில் தெற்கோடிய வேரின் அடியே அது, இப்போது பாழ்பட்டுக் கிடந்தது. வேர்கள் ஏற்கெனவே பட்டவேரா யிருந்தாலும் கறையான்கள் அணிமையில் தழைத்திருந்த சுவடுகள் நிரம்ப இருந்தன. ஆனால், வழிப்போக்கர் வேரருகே வைத்து எரித்த அடுப்பின் வெப்பினால், வேர் கருகிக் கறையான் புற்றுக்கள் அழிவுற்றிருந்தன. தெற்கோடிய வேரின் கோடியில் கறையான்கள் வகுத்த பூங்காவை நினைவூட்டிப் பாத்தி பாத்தியாக அழகாக வனையப்பட்ட பாசிகளின் பற்றுக்கள் கிடந்தன. அவற்றின் நடுவிலே மாந்தரன் தன் இளவரசிக்காக எழுப்பிய தூபி ஒரு சிறு கூழாங் கல்லுருவில் நின்றது. அதன் வடிவம் உண்மையில் தூபியை நினைவூட்டியதுடன், நன்கு தேய்த்துப் பளபளப்பாக்கப்பட்டது போலவே இருந்தது. அதனடியில் கறுப்பு சிவப்புக் கலந்த புள்ளிகளையும் கோடுகளையும் மாந்தரன் சுட்டிக் காட்டினான். அச்சமயம்கூட அவன் கண்களில் நீர் கசிந்தது. ஏனெனில் மனைவியின் மாள்வுக்காக அங்கே அவன் வனைந்த காவியந்தான் அது என்று அவன் கருதினான்.
தூபியைச் சுற்றிவந்து ஒரு சில கறையான்கள் வரி வரியாகச் சென்று கொண்டிருந்தன. மாந்தரன் அங்கு வந்து உட்கார்ந்ததே, அவை அவனைச் சுற்றிப் பெரு விரலண்டையில் ஒரு சிறிது நின்று உடல் வளைத்துச் சென்றன. ஓரிரண்டு செங்கறையான்கள் அவன் பெரு விரலிலேயே ஏறிநின்று அவன் நகத்தைத் தடவித் தடவித் தலையாட்டின. அருகில் நின்றவர்கள் அவற்றைத் தட்ட நினைத்த போது மாந்தரன் திடுமென அவர்களைத் தடுத்தான்.
“அன்பர்களே ! இவை தாம் சிதல்வாண உலகில் என் குழந்தைகள் -வருங்காலக் கறையான்.உலகின் பேரரசுக்குரிய செல்வங்கள்” என்றான்.
மனித உலகக் குடும்பப் பாசம், விடுதலை அறிவுடைய ஆண்டியின் கறையான் உலகக் குடும்பப் பாசம் கண்டு நண்பர்கள் வியப்புற்றனர்.
III. வேடம்பி கதை
காடம்பி கதையை மறக்கடித்தது மாடம்பியின் வியத்தகு கறையான்கள் உலகக் கதை. ஆகா! ஏராரிளங் கிளியின் ஒய்யார வாழ்வுக்கு மனித உலக அரசியரின் வாழ்வு ஈடல்ல என்று யாவரும் போற்றினர். “பார்த்தீர்களா! என் கதை கேட்டபின் கணக்கின் உரிமையை யாவரும் எனக்குத்தான் கொடுப்பீர் களென்று எனக்குத் தெரியும். நாம் கதைக் கச்சேரியை இத்துடனே நிறுத்திக் கொள்ளலாம்!” என்றான் மாடம்பி.
வேடம்பி இதற்கு ஒரு சிறிதும் இணங்கவில்லை. “முடிவு என் கதையிலல்லவா இருக்கிறது? அதைக் கேளுங்கள்” என்று தொடங்கினான்.
தலைத் தக்கோலம் கிட்டத்தட்ட படைத்தலைவர் பதவியோடொத்த உயர் பணியில் மலைதாங்கி என்றொரு வீரத் தலைவன் இருந்தான். அவனிடம் கண்டிப்பு மட்டுமன்றிக் கடுமையும் மிகுதியாயிருந்தது. அவன்கீழ் வேலை பார்த்தவர் களுக்கு அது முற்றிலும் கொடுமையாகவே தோற்றிற்று. ஆயினும் இந்தக் கண்டிப்பினாலும் கடுமையாலும் மிகவும் அவதிக் குள்ளானவன் அவனே. ஏனென்றால் அவனிடம் எவருக்கும் அன்பில்லை; அச்சமே இருந்தது. அவனுக்கு எவரிடமும் நம்பிக்கை கிடையாது. அவநம்பிக்கையும், அது காரணமாக இன்னதென்று வரையறுக்க முடியாத அச்சமும் மிகுதியா யிருந்தது.
எந்தக் கணத்தில் யார் அவனுக்கு மறைவாகத் தீங்கு செய்வார்களோ என்று அவன் ஓயாது விழிப்பாக இருந்தான். தத்தம் வேலையை எவரும் ஒழுங்காகச் செய்ய மாட்டார்கள் என்றே அவன் நினைத்ததனால், எப்போதும் அவர்களை ஏவிக் கொண்டும், குறை கண்டு கொண்டும், குறை பெருக்கிக் கொண்டுமே இருந்தான்.
அவன் நெடுநாள் திருமணமே செய்து கொள்ளவில்லை. வேலைக்காரர்களையோ நண்பர்களையோ நம்பாத நிலையில், ஒரு பெண்ணை நம்பி வாழ்வது என்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், திருமணம் புகாமல் படைத்துறையில் எவ்வளவு திறமையிருந்தாலும் ஒருவனுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் உயர்வு கிடைப்பதில்லை. இதை உன்னி அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.
எந்தப் பெண்ணும் மலைதாங்கிக்கு எளிதில் பிடிக்க வில்லை. எந்தப் பெண்ணும் எந்தப் பெண்ணின் பெற்றோரும் அவனை ஏற்க எளிதில் இணங்கவில்லை. ஏனென்றால், அவன் ஓயா அவநம்பிக்கை, கடுமை ஆகியவை உலகறிந்த செய்திகளாய் இருந்தன. ஆயினும் வறுமையிடையே பெண்கள் பெருகிப் போன ஒரு குடும்பத்தினர் தம் கடைசிப் பெண்ணை அவனுக்குத் தர இணங்கினர். பெண்ணும் கடைசிப் பெண்ணாதலால் அழகில் மட்டுமன்றி அறிவிலும் பொறுமையிலும் தலை சிறந்தவளா யிருந்தாள். அவள் பெயர் பொலந்தாரழகி.
பெண்ணா, பெண்ணுருவிலுள்ள ஓர் இயந்திரமா என்று எவரும் வியக்கும் வண்ணம் அவள் வேலை செய்தாள். இயந்திரங்கள் கடகடவென்று ஓசை செய்யும். அவள் அமைதியே உருவாக வேலையில் ஓசையின்றி இழைந்தாள். இயந்திரங்களின் வேலைப்பாட்டில்கூட மாசுமறு இருக்கலாம். அவள் சமைத்த உணவு, பெருக்கி மெழுகிய வீடு. அடுக்கிய கருவி கலங்கள் ஆகியவற்றில் யாரும் அப்பழக்குக் கூற முடியாது. வெங்காயத்தை உரித்து உரித்து உள்ளீட்டைப் பார்க்க முயலுவதுபோல, மலைதாங்கி அவளை அலசி ஆராய்ந்து குற்றந்தேடினான். பிறரிடம் குற்றங் காண்பதுபோல அவளிடம் காண முடியவில்லை. ஆனால் குற்றந்தேடுவதையே தொழிலாகக் கொண்ட அவனுக்குக் குற்றமற்ற தோற்றமே உள்ளூரக் குற்றத்தை மறைக்குந் திரையாகத் தோற்றிற்று. அவநம்பிக்கை நிறைந்த அவன் உள்ளத்துக்கு அவநம்பிக்கைக்கு இடமில்லாமையே அவநம்பிக்கைக்குரிய ஒரு பெருங்காரணமாக அமைந்தது.
அவன் படைத்துறையில் காட்டும் கண்டிப்பை அவளிடம் காட்டினான். பகைவர் புலங்களில் ஒற்றாடுவது போல அவள் போக்குவரவுச் செயல்களை மறைந்திருந்து வேவு பார்த்தான். அவள் உறங்கும்போது விழித்திருந்து அவள் எண்ணங்களையே துருவியறிய முயன்றான். எதிலும் அவள் குறை தெரியாமல் போகவே, அவள் குறைகளை மறைக்கும் திறமையில் தன்னை மிஞ்சியவள் என்ற முடிவுக்கே வந்தான். அதுமுதல் அவன் தன் கற்பனைக் குறைகளை எடுத்துக் கூறித் தாக்குதல் தொடங்கினான். பொறுமையின் உருவான அவள் அதற்கும் அசையாது போகவே, அவள் தன் பேச்சை சட்டை செய்யவில்லை என்று முணுமுணுத்தான்.
“உங்கள் மன நிறைவே என் மகிழ்ச்சி, உங்கள் விருப்பப்படி யெல்லாம் நான் நடந்து கொள்வேன். உங்கள் மனதிலுள்ளதைக் கூறுங்கள். வீணே கவலைப்பட்டுக் குழம்புவானேன்?” என்று அவள் கனிவுடன் கேட்டாள்.
“ஆகா! அப்படியா செய்தி! என்னை அப்படியெல்லாம் மசியவைத்து உன் முன்தானையில் கட்டிக் கொள்ள முடியாது. என்னால் உன் மாய நடிப்பைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. நீ உன் தாய் வீட்டுக்கே போய்விட வேண்டும்” என்றான்.
பொலந்தாரழகி எதற்கும் அஞ்சாத உறுதியுடைவள். கணவன் காலடியில் உயிர்விடச் சொன்னாலும் புன்முறுவலுடன் உயிரை விட்டுவிடுவாள். ஆனால், தாய் வீடு செல்ல மட்டும் அவள் விரும்பவில்லை. அரைப் பட்டினி கால் பட்டினி கிடக்கும் அவள் தமக்கைமார், கிட்டத்தட்ட முழுப் பட்டினியிலே வாடும் அவள் பெற்றோர்கள். உறவினர் யாவருமே அவள் ஒருத்தி நல்வாழ்வு வாழ்கிறாள் என்ற ஓர் ஆறுதலுடனேயே தள்ள முடியாத தம் வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அந்த ஒரு சிறு ஆறுதல் மீதும் ஒரு பேரிடியை வீச அவள் விரும்பவில்லை.
“உங்களுக்கு என்னைப் பிடிக்காதிருக்கலாம். என் மீது வெறுப்பாயிருக்கலாம். ஆனால், எனக்கு உங்களிடம் ஒரு குறையும் தோற்றவில்லை. நீங்கள் என்ன குறை கூறினாலும் அடித்தாலும் திட்டினாலும், அதைக் கேட்டுக் கொண்டு உங்கள் காலடி யிலேயே கிடந்து சாவதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை யில்லை. நீங்கள் போகச் சொன்னால்கூட, துரத்தினால்கூட, என் உடலில் உயிர் இருக்கும்வரை அது உங்களைவிட்டுப் போகாது. உங்கள் காலடிகளைச் சுற்றிக் கொண்டு கிடக்கும்” என்றாள் அந்தப் பெண்ணரசி.
அன்பும் பண்பும் பரிவும் மிக்க இந்தச் சொற்கள்கூட மலைதாங்கியின் சீற்றத்தைக் கிளப்பிவிட்டன. “சனியன், என்ன திண்ணக்கம் உனக்கு! பாம்புபோல் என் காலைச் சுற்றிக் கொண்டு வாழவிடாமல் செய்கிறேன். என்கிறாயா? பார்; உன் உறவினரை யெல்லாம் வருவித்து அவர்கள் கண் முன்னே உன் அட்டூழியங் களை எடுத்துக்காட்டி உன்னை இங்கிருந்து அவர்களுடனேயே துரத்துகிறேனா. இல்லையா பார்!” என்று குமுறினான்.
“உங்கள் பெண்ணுடன் நான் இனி ஒரு கணமும் வாழ முடியாது. அவள் செய்யும் அட்டூழியங்கள் எழுத முடியாது: ஏட்டில் அடங்காது. நீங்களே வந்து உங்கள் பெண்ணின் குடும்பத் திறமையைப் பார்த்துவிட்டு, அவளிடமிருந்து எனக்கு விடுதலையளிப்பீர்களென்று நம்புகிறேன்.”
இம்மாதிரி கடிதங்கள் தாய் தந்தையருக்கு, தமக்கையர், தமக்கையர் கணவன்மாருக்கு, உறவினர்களுக்கெல்லாம் அனுப்பட்டன. விழுந்தடித்துக் கொண்டு சோடி சோடிகளாக, கும்புகும்பாக உறவினர் யாவருமே மலைதாங்கி வீட்டில் வந்திறங்கினர். பொலந்தாரழகி குடும்பம் நடத்தும் திறமை ஒரு சிறிய படையையும், ஒரு சிறு நகரத்தையும் போர்க்காலத்தில் நடத்தும் திறமையாக வளர வேண்டியதாயிற்று.
பெற்றோர் உறவினர் ஒவ்வொருவரும் அவளை ஒவ்வொரு வகையில் தாக்கினர்; சிலர் வைதனர்; சிலர் அழுதனர்; சிலர் கெஞ்சினர்; தாய்ப்பாசம் தழுவித் தழுவித் தேம்பித் தேம்பி அழுதது. தந்தை முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு முணுமுணுத்தார்; தமக்கையர் வசைமாரி பாடினர்; தமக்கையர் கணவன்மாரோ பட்டிழைக்குள் முட்களையும் கூரிய ஊசிகளையும் புதைத்துவைத்து இடித்தனர்; அடிக்கடி அவள் கணவன் படைபடையாகக் குற்றச்சாட்டுகளை அவள் மீது ஏவிவிட்டு, அவளை உறவினர் துயராகிய படுகுழியில் தள்ள முயன்றான். இத்தனை தாக்குதல்களையும் சமாளித்து, அதனிடையே அத்தனை பேருக்கும் உணவு வசதி, குளிப்பு வசதி, படுக்கை வசதி, இருக்கை வசதிகள் செய்து கொடுக்கும் வேலையும் பொலந்தாரழகி மீது சாய்ந்தது.
இத்தனையையும் அவள் பொறுமையுடனும் திறமை யுடனும் தாங்கிச் சமாளித்தாள். அத்தனை பேர் நடமாடிய இடத்தில் ஒரு தூசு தும்பில்லாமல் எப்போதும் தளம் பளபளப் பாயிருந்தது. அத்தனை பேர் கையாண்ட பொருள்களும் கையாண்டது தெரியாமல் புதுமாளிகையில் அடுக்கி வைத்தது போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தம்மையறியாமலே எல்லாரும் அவள் செயல்திட்டப்படி உண்ணும் நேரம் உண்டனர்; உடுக்கும் நேரம் உடுத்தனர்; உறங்கும் நேரம் உறங்கினர். ஒருவர் தேவையாவது ஒரு கணமாவது நிறைவேற்றப்படாமலில்லை. ஒருவர் குற்றச் சாட்டுக்குக்கூட வாய்திறந்து விளக்கம் தராமலே அவள் குற்றச்சாட்டைப் பொய்ப்பித்தாள்.
அவளைக் கொத்திக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் கொதித்துக் கொண்டு வந்த உறவினர் அனைவரும் அவள் பண்பும் திறமும் கண்டு எல்லையிலா வியப்படைந்தனர். அத்தகைய தெய்விகப் பிறவி மீது இத்தனைப் பழித் தாக்குதல்கள் சுமத்திய கணவன் செயலில் அவர்கள் வியப்பும் சீற்றமும் பன்மடங்கு பெருகிற்று.
இதுவரை படைத்துறையில் அவன் கீழிருந்து பலவகைகளிலும் அல்லல்பட்ட படைவீரர், தொழிலாளிகள், காவலர்களுக்கு இப்போது அச்சமின்றி அவனைத் தாக்க ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் பொலந்தாரழகியின் நற்குணம், பொறுமை, திறமை ஆகியவற்றின் புகழை எங்கும் பரப்பினர். அவள் அருமை அறியாமல் மலைதாங்கி அவளைத் தூற்றும் அழிமதி மீதும் மக்கள் சீற்றம் எழுப்பினர். இவை உறவினர் காதுகளில் எட்டவே, அவர்கள் கைகள் வலுப்பெற்றன. பொலந்தாரழகி ஒப்பற்ற மனைவியென்றும், அவள்மீது சாட்டப்பட்ட குற்றங்கள் அடாப் பழிகளென்றும் அவர்கள் மலைதாங்கியின் முகத்துக்கு நேரேயே சொல்லத் தொடங்கினர்.
எல்லாரையும் தன்மீது ஏவிவிட்டாளென்று கருதிப் பொலந்தாரழகிமீது மலைதாங்கி முன்னிலும் பன்மடங்கு சீறினான். ஆனால், அதை வெளியிட்டுக் கூறுவதில் பயனில்லை என்பது அவனுக்குத் தெளிவாக விளங்கிற்று. எப்படியாவது உறவினர் முன்னிலையிலேயே அவள் குற்றஞ் செய்யும்படி செய்து, அவர்கள் இசைவுடனேயே அவளைத் தண்டிக்கச் சூழ்ச்சி செய்தான்.
“இவள் ஊருக்கெல்லாம் நல்லவளாயிருந்து போலி வேடமிட்டுக் கொண்டே என்னைக் கொல்லாமல் கொல்ல எண்ணுகிறாள். ஆனால், அவள் அட்டூழியங்களை உங்களுக்கு நான் நேரே மனங்கோணாமல் இனி நடந்து கொள்ள இசைகிறேன். ஆனால், இதில் உங்கள் கண்காண என் நீதி புலப்பட்டால், இவளை நீங்களே இங்கிருந்து அகற்றி இட்டுக் கொண்டு சென்று தக்கபடி தண்டியுங்கள்” என்றான்.
உறவினர் இதற்கு இணங்கினர்.
அடுத்தநாளே அனைவருக்கும் பொலந்தாரழகி விருந்து செய்யவேண்டு மென்றும், அச்சமயம் அவள் குறைகளைக் காட்டுவதாகவும் அவன் கூறினான். ஆனால் பொலந்தாரழகி யிடமே நேரில் அதற்கான கட்டளைகள் தந்தான். விருந்து மேடையைத் தோட்டத்தில் புடலைப் பந்தரடியில் போடும்படி கூறினான்.
கொடியிலிருந்து விழும் சருகு செத்தைகளை வைத்தும், தோட்டத்துக்கும் வீட்டுக்கும் அவள் அலையும் போது ஏற்படும் தாமதத்தை வைத்தும் அவள்மீது தாக்குதல் தொடங்க அவன் எண்ணியிருந்தான்.
அவள் கொடிப்பந்தரின் கீழ் நிலத்தைக் கண்ணாடி போல் மெழுகினாள். மெழுகு முன்னே உலர்சருகுகள். செத்தைகளை அடித்துத் தள்ளிவிட்டதுடன் மேலும் எதுவும் விழ முடியாதபடி காத்தாள். நடுவே மேடைகளிட்டு நாற்புறமும் உறவினருக்கான நாற்காலிகள் அடுக்கினாள். கணவனுக்கென அவன் தலைமைக் குரிய உயரிய நாற்காலி ஒன்றையும். பணிமனையி லிருந்து தருவித் திருந்தாள். இவையன்றி, உண்டபின் இளைப்பாற அருகிலிருந்த மரத்தடியில் கட்டில்களும், குடிநீர்க் கலங்களும், குவளைகளும் சித்தம் செய்து வைத்தாள். வீட்டுக்கும் தோட்டத்துக்கும் போய் வருவதில் கணக்கம் ஏற்படாதிருக்க, அருகிலிருந்த தோட்ட வீட்டிலேயே எல்லாப் பொருள்களையும் கொண்டு வைத்துப் பாதுகாப்பாக மூடினாள். சூடான பொருள்கள் சூடு கெடாமலிருக்க அவற்றைத் தணல்காயும் கணப்படுப்பின்மீதும் குளிர் கெடாதிருக்க அவற்றை நீரிலும் பனிக்கட்டி மீதும் பக்குவப் படுத்தி வைத்தாள்.
மேசை மீதும் நாற்காலிகள் மீதும் அரிய வேலைப் பாடமைந்த பனி வெள்ளைத் துணிகளிட்டு அவற்றின்மீது பளபளப்பான வெள்ளிப் பளிங்குக் கலங்களையும் கரண்டிகளையும் அழகுபட ஒழுங்கு பண்ணினாள். ஆனால், விரித்த துணிமீது திடுமெனக் குருவியொன்று எச்சமிட்டு விட்டது. அவள் துணுக்குற்றாள். தன் கணவன் தான் மாயம் செய்து அக்குருவியை அனுப்பியிருக்கக் கூடுமோ என்று அஞ்சினாள். அதற்கேற்ப, அதைத் துப்புரவு செய்ய இடந்தராமல் கணவனும் பிறரும் திடுமென வந்து கதவைத் தடதடவென்று தட்டினர்.
சமயத்துக்கேற்ற அவள் அறிவுத்திறம் அவளைக் காத்தது. இனிய தின்பண்டத்தால் அவள் எச்சத்தை மூடி. அதன் மீது சிங்காரமாக ஒரு தட்டத்தைக் கவிழ்த்து. அதன் மீது ஒரு கோப்பையை நிமிர்த்து வைத்துவிட்டு அவள் சென்று கதவைத் திறந்தாள்.
உறவினரும் கணவனும் உணவருந்தினர். மேடையருகே வேலை யாட்கள் எவருமே இல்லை. ஆனால், பொலந்தாரழகி பம்பரமாகச் சுற்றித் திரிந்து அவரவருக்கு வேண்டியவற்றை வேண்டிய உடனே தந்தாள். உறவினரும் எதுவும் குற்றம் காண முடியவில்லை. கணவன்கூட எதுவும் குறை காண இயல வில்லை. ஏனெனில் அவன், ஆவலுடன் எதிர்பார்த்தபடி அவள் தோட்டத்துக்கும் வீட்டுக்கும் செல்லவில்லை. சொத்தைச் சருகுகள்கூட அவள் கட்டளைக் கஞ்சியவைபோல் விழாதிருந்தன. அவள் ஒரு மாயக்காரிதானா என்று அவன் அஞ்சத் தொடங்கினான்.
அறிவிற் சிறந்தவர்களும் நிறை இன்ப நேரத்தில் தம் அறிவை ஒரு சிறிதே இழந்துவிடுவர் என்று கூறப்படுவதுண்டு. பொலந்தாரழகி வகையில் இஃது உண்மையாயிற்று. தன் வெற்றிமகிழ்ச்சியில் அவள் கணவனிடம் தானாகக் கிண்டல் பேசத் தொடங்கினாள். ‘உங்களுக்கு எல்லாம் பிடித்தமா யிருக்கிறதா? இன்னும் ஏதாவது வேண்டுமா?’ என்று கேட்டாள்.
தன் முழுத் தோல்வியினால் மனநைவுற்றிருந்தான் மலைதாங்கி, அதைப் பொலந்தாரழகி அப்படிப் பலர் முன்னிலையில் தன் முகத்துக் கெதிரே எடுத்துக் காட்டியது கேட்டு அவன் உள்ளம் புகைந்தெழுந்தது. ‘ஏன்? உன் பாட்டி ஒரு குருவியாய் வந்து இங்கே எச்சமிட வேண்டும். அஃது ஒன்றுதான் குறை!’ என்றான்.
திடுமென அவள் முகத்தில் ஒரு மின்னல் மின்னிற்று.
“ஆகா! அப்படியே முன்கூட்டி வரவழைத்து எச்சமிட வைத்திருக்கிறேன். உங்கள் பக்கத்திலேயே! இதோ பாருங்கள்” என்று கூறி அவள் நிமிர்த்திய குவளையையும் கவிழ்த்திய தட்டத்தையும் எடுத்துக் காட்டினாள்.
மலைதாங்கியின் முகம் சட்டென்று கறுத்தது. ஆனால், அதே சமயம் உறவினர் மட்டுமன்றித் தொலைவில் நின்றும் வேலிக்கப்பாலிருந்தும் வேடிக்கை பார்த்த மக்களும் இடி இடி என்று நகைத்துக் கைகொட்டி ஆர்ப்பரித்தனர்.
கணவன் தனிப்பட்டு அவதியுறுவது கண்ட பொலந்தாரழகி சட்டென அவன் காலில் சென்று விழுந்தாள். கோவென்று அழுதாள்.
“எல்லாரும் உங்களைக் கண்டு சிரிக்கும்படி நானே செய்து விட்டேன். நீங்கள் என்னைப் பற்றிக் கூறிய குற்றச் சாட்டுகள் அத்தனையும் உண்மை. என்னை இன்று மன்னித்து விட்டால், இனி உங்கள் மதிப்புக் கேற்ப நடப்பேன். என்னை மன்னியுங்கள்” என்று மன்றாடினாள்.
மலைதாங்கியின் கல்மனமும் அச்சமயம் முற்றிலும் கனிந்துவிட்டது. அவன் அனைவர் முன்னிலையிலும் அவளைத் தூக்கி எடுத்து அருகே அமர்த்திக் கொண்டான். “உன் அருமையை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், இன்றே நான் உணர்ந்தேன். உனக்கும் உன் உறவினருக்கும் இதுவரை செய்த அநீதிகளுக்கு மனமார வருந்துகிறேன். எல்லாருக்கும் தக்க சரியீடு செய்வது இனி என் கடன். அத்துடன் என் அலுவலகத்தில் இதுவரை நான் காட்டி வந்த கடுமையையும் நான் ஒழிக்க இஃது ஒரு படிப்பினையாகும்” என்றான்.
மலைதாங்கி வாழ்வு புது மலர்ச்சியுற்றது. பொலந்தாரழகியின் உறவினருக்கும் படைத்துறைக்குமே புதுவாழ்வு பொங்கிற்று. அவற்றுக் கெல்லாம் காரணமான நகைச்சுவை மட்டும் மக்கள் உள்ளத்தில் என்றும் மறையவில்லை.
பொலந்தாரழகியும் எப்போதாவது மலைதாங்கியிடம் சிறிது கடுமை கண்டால், “என் பாட்டி குருவியாய்…” என்று தொடங்குவாள். மலை தாங்கியின் சிரிப்பில் கடுமை காற்றாய்ப் பறந்துவிடும்.
IV. வழிமனை வாணன் கதை
காடம்பியும் மாடம்பியும் தாங்கள் தங்கள் கதையை மறந்து வேடம்பியின் கதையைப் புகழ்ந்து பாராட்டினர். “எதிரிகளே என் கதையின் சிறப்பை ஒத்துக்கொண்டபோது, நடுவர் தீர்ப்பே தேவையில்லை. ஆகவே கணக்குத் தீர்ப்பு என் பொறுப்பென்று முடிவு செய்யக் கோருகிறேன்” என்றான் வேடம்பி, ஆனால் வழிமனை வாணன் இப்போது எதிர்த்திட்டமே தொடங்கினான். “உங்கள் மூவர் கதைகளையும்விடச் சிறந்த கதையை நான் கூற முடியும். அதன் தீர்ப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன். என் கதை சிறந்ததாயிருந்தால், முழுக்கணக்கின் மூவிரட்டித் தொகையை மூவருமாகச் சேர்ந்துதர வேண்டும்” என்றான்.
வழிமனைவாணன் பேரவாவைச் சுட்டிக் காட்டுவது போல நண்பர் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனாலும், அவன் கதைபற்றிய முடிவிலேயே கலவரம் தொடங்கி நழுவுவது என்று உறுதி கொண்டு அவர்கள் நடுவர் கருத்தை ஏற்றனர்.
வழிமனைவாணன் தன் கதையைத் தொடங்கினான்:
இந்த வழிமனைக்கு அருகிலுள்ள திருக்குறுங்குடியிலே ஒரு செல்வக் குடியில் மடப்பிடி என்று ஒர் எழிலாரணங்கு இருந்தாள். அவளுக்குத் தந்தை இல்லை. ஆனால், அவள் தாய் அவளைச் செல்வமாக வளர்த்து வந்தாள். அவர்கள் குடி, ஊரிலேயே முதல் மதிப்புடையது. அவர்கள் செல்வத்துக்கும் குறையவில்லை. அத்தனை செல்வமும் குடியின் ஒரே பெண்ணாகிய மடப்பிடிக்கே உரியதாயிருந்தது. ஆகவே, செல்வ இளைஞர் எத்தனையோ பேர் அவளை விரும்பி மணஞ்செய்ய முன் வந்தனர். ஆனால், எக்காரணத் தாலோ அந்நங்கை அச் செல்வருள் எவரையும் ஏற்க ஒருப்படவில்லை.
‘பையில் கனமில்லாமல், வெளிக்குப் பகட்டாக உடுத்திக் கொண்டு இக்காலத்தில் திரிகிறார்களல்லவா சிலர்?’
(கதையிடையே நண்பர் மூவரும் சிறிது துணுக்குற்றனர். வழிமனை வாணன் தொடர்ந்தான்).
அவர்களில் ஒருவன்மீது மடப்பிடியின் தேர்வுச்சீட்டு விழுந்தது. அவன் மனமகிழ்வுடன் அவளை மணக்க ஒத்துக்கொண்டான். மணவிழாவும் நடந்தேறிற்று.
மணமகளை முதல்முதல் மணமகன் சந்திப்பதற்காகக் காத்தி
ருந்தான். அவள் இருந்த அறை அந்த விழாவுக்காக ஆரவாரமாகச் சோடிக்கப்பட்டிருந்தது. மணமகளும் தன்னைத் தக்கபடி ஒப்பனை செய்து கொண்டு மணமகனைச் சென்று காணத் துடித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆயினும், குறித்த நேரம் வந்தும் அவள் கால் எழவில்லை. தோழியர் அவள் நாணத்தால் பின்னடைகிறாள் என்று நினைத்து அவளை வலிந்து இழுக்க முனைந்தனர். ஆனால், அவள் அவர்களிடம் கெஞ்சிச் சிறிது ஓய்வு தரும்படி கேட்டுக் கொண்டாள்.
அவள் தோட்டத்திற்குச் சென்றுவர விரும்புகிறாள் போலும் என்று தோழியர் எண்ணிக் காத்திருந்தனர்.
அவள் தன் தாயிடம் சென்றாள். தன் உளந்திறந்து தனக்கிருந்த அச்சத்தைத் தெரிவித்தாள்.
“அம்மா! நீ கவனித்திருக்கக் கூடுமே அம்மா! நான் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும் வயிறு இரைந்து காற்றுப் புறம் போகுமே! இதுவரை இது பற்றி நான் கவலைப்பட்டதில்லை. ஆனால், எனது புதிய உறவில், அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ? திடீரென்று அவர் என்னை வெறுப்பதற்கு இடமுண்டாய்விடுமோ என்று என் மனம் பதறுகிறது” என்றாள்.
இந்தக் குறை உண்மையில் மடப்பிடியின் குடும்பத்தில் பெண் வழியில் வழிவழி மரபாக வந்த ஒரு குறையே. எப்படியோ மடப்பிடியின் தாயும், தாயின் தாயும் அதனால் மிகுதி தொல்லைப்பட்டதில்லை. ஆயினும், மகளின் அச்சம் தீர்ப்பதற் காகத் தாய் அவளுக்குத் தன் குடும்பப் பேழையிலுள்ள ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்தாள்.
“அம்மா! நீ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டா. இரண்டு நாளில் எல்லாம் பழகிப் போகும். ஆனால், இன்றைய அளவில் இந்த மாத்திரை உனக்கு உதவும். படுத்திருக்கும் சமயம் மெல்லக் காற்றை மழுப்பிவிடவும் இஃது உதவும். அவ்வப்போது சிறிது வெளியே சென்று வயிற்றுக்கனம் தணித்துக் கொண்டால் இந்த இரவு அமைதியாய்க் கழிந்து விடும்” என்றாள்.
தாயின் அறிவுரையும் கையுறையும் ஆயுதமாகப் பெற்ற மடப்பிடி தன் கணவனிடம் சென்றாள். மருந்தின் ஆற்றலால் வயிறு சற்று மிகுதியாகவே அடங்கி அமைதியாக இருந்தது. அவளும் அந்த வயிற்றின் தொல்லையைச் சற்று மறந்து நெடுநேரம் இருந்துவிட்டாள். ஆனால், அடங்கிய வேக முழுவதும் சேர்ந்து வயிறு திடுமென இரைந்து விரைவில் உப்பி விட்டது. அவள் பேச்சைத் திடுதிப்பென்று நிறுத்தி விட்டு வெளியே செல்ல விரைந்தாள்; ஆனால், படிக்கட்டை எட்டுவதற்குள் வயிற்றுப் பொருமல் தாங்காமல் அவள் ஒரு சிறிதே காற்றுத் தளர்த்த முயன்றாள். தளர்த்திய வழியே அஃது ஒரு நீண்ட பீரங்கி முழக்கம் செய்தது.
வெட்கத்துடனும் கலவரத்துடனும் வயிற்றை மீண்டும் அடக்கிக் கொண்டு அவள் படிகளில் இறங்கினாள். ஆனால், இது மீண்டும் தொல்லை தந்தது. படிக்கொரு தடவையாக வயிறு அவளை மீறி வேட்டுத் தீர்த்தது. அது மட்டுமன்று. வயிறு அமர்ந்துவிட்டதென்று எண்ணி அவள் திரும்பவும் ஏறி வந்த பின்னும், அது நெடுநேரம் விடாது ஊதித் தொலைத்தது.
அவள் எச்சரிக்கை அத்தனையும் வீணாயிற்று. வியப்பும் மலைப்பும் உருவாகிக் குந்தியிருந்த கணவனருகில் உட்கார்ந்து தனக்குத்தானே விளக்கம் கூறுவதுபோல அவள் அவன் கலவரத்தைப் போக்க முயன்றாள். ஆனால், அவள் மனக் குழப்பத்திடையே அவள் நாக்குக் குழறிற்று.
“நான் நினைத்ததொன்று. நடந்ததொன்று, எல்லாம் குறி தவறிப் போய்விட்டது” என்றாள்.
“கவலைப்படாதே! இதை இப்படியே அடக்கிவைத்திருந் தால் நல்லது. போர்க்காலத்தில் படைகளே தேவைப்படாது. எதிரிகளைப் பொறிகலங்க வைத்து விடலாம்!” என்று கணவன் கேலி பேசினான். அதுகேட்டு அவள் சிரித்தாள். அவனும் சிரித்துவிட்டான். அவள் அச்சம் அகன்றது.
(நண்பர்கள் மூவரும் வழிமனைவாணன் கதை கேட்டு ஊள்ளூரச் சிரித்தார்கள். ஆனால், வேண்டுமென்றே பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். அது கண்ட வழிமனைவாணன் தன் கதைக்குச் சரியான முத்தாய்ப்பு வைக்க முனைந்தான்.)
“கதையில் வரும் இந்தப் பெண் யார் தெரியுமா?” என்று கேட்டான்.
அவர்கள் தம் உறுதியை மறந்தனர். “யார்? யார்!” என்று ஆவலுடன் கேட்டனர்.
அமைதியாக, “என் மனைவி!” என்றான் வழிமனைவாணன்.
மூவரும் ஒவருவர்மேல் ஒருவரும் வழிமனைவாணன் மேல் அனைவருமாக விழுந்து விழுந்து சிரித்தனர்.
அதனிடையே வழிமனைவாணன் தன் கோரிக்கையை நீட்டினான்.
’உங்கள் சிரிப்பாலேயே என் கதையின் முதன்மைச் சிறப்பை நீங்கள் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். மொத்தக் கணக்கு முப்பது வெள்ளி. மூவருமாகத் தொண்னூறு வெள்ளி நம் கட்டுப்பாட்டின் படி எனக்குத் தரவேண்டும்" என்றான்.
வேடம்பி சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினான்:
“அந்தப் பீரங்கி அழகியைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். அதன்பின் தான் கதையையும் நம்ப முடியும்: கணக்கையும் தீர்க்க முடியும்” என்று கூறி அவன் பதிலுக்குக் காத்திராமல் அவனை முன்னே தள்ளிக் கொண்டு சென்றான்.
வழிமனைவாணனை வேடம்பியும், வேடம்பியை மாடம்பியும், மாடம்பியைக் காடம்பியுமாகத் தள்ளிக் கொண்டே மேல்மாடி ஏறினர்.
கலவரம் கேட்டு வழிமனைவாணன் மனைவி அப்போது தான் நடுத் தூக்கத்தில் எழுந்து கதவைத் திறந்து கீழே வரத் தொடங்கியிருந்தாள். முதல் படியில் கால் வைத்ததுமே கதையில் கேட்டதைவிடப் பன்மடங்கான, முழக்கத்துடன் வேட்டுக்கள் வீறிடத் தொடங்கின. மூவரும் ஒவ்வொரு வேட்டுக்கும் ஒரு தடவை ’அடேயப்பா!" என்று கூறி முன்னோக்கியபடியே பின்னாடி ஒரு படி தாவி இறங்கினர். கடைசிப்படி அடைந்ததும் ஒவ்வொருவரும் ஒரு திசையாக மறைந்தோடினர்.
விவரம் அறியாது கலவரப்பட்ட மனைவிக்குச் சுருக்கமாகவே விவரம் கூறிவிட்டு வழிமனைவாணன் திரும்பினான். நண்பர் மூவர் இருந்த இடமோ சென்ற தடமோ காணாமல் திண்டாடினான்.
விவரம் முற்றும் அறிந்தபின், வழிமனைவாணன் மனைவி முன் தன் வகையில் கணவன் சிரித்த சிரிப்பு முழுவதற்குமாகச் சிரித்துப் பழி தீர்த்துக் கொண்டாள். கணவனைப் போல் அவள் வம்பர்களைத் திட்டவில்லை; அவர்கள் தின்று அழித்துச் சென்ற பணத்திற்கும் வருந்தவில்லை; கணவன் ஓயாச் சிரிப்புக்கும் கதையமைப்புக்கும் சரியான பதில் சிரிப்பும் பதில் கதையமைப்பும் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டதில் அவள் மன நிறைவடைந்தாள்.
மாயக்கதை
கோகழியும், கொண்டலும் அண்ணன் தங்கையர்கள். கோகழிக்கு வயது ஏழு. கொண்டலுக்கு வயது ஆறு. அவர்களுக்குத் தாய் கிடையாது. அம்பலவாணர் அவர்களைத் தாய்ப்பாசம் குன்றாமல் வளர்த்தார். இருவரும் வீட்டில் ஒருங்கே ஓடியாடினர். இருவரும் மணக்குடியில் இருந்த ஒரே பள்ளியிலேயே பயின்றனர்.
விளையாட்டில் இருவருக்குமே மிகவும் விருப்பம்; தின் பண்டங்களிலோ இருவருக்கும் கொண்டாட்டம்; ஆனால் அவர்கள் விரும்பிய விளையாட்டு வயல்வெளிகளிலும், ஓடை கால்வாய்களிலும், மலை மேடுகளிலும் சுற்றி, மலர்களையும் வண்டினங்களையும் பறவைகளையும் கண்டு மகிழ்வதே. விழாக் காலங்களில் இதுபோலவே தின்பண்டக் கடைகளைச் சுற்றிப் பார்த்து, என்ன என்ன பண்டம் வாங்குவது என்பதை வாதித்து இறுதியில் ஒன்றிரண்டு வாங்குவதுடன் அவர்கள் ஆவல் அமைந்துவிடும்.
மணக்குடிக்கருகில் மலையைவிடச் சிறிதாயும் பாறையை விடப் பெரிதாயும் ஒரு புதர்மேடு இருந்தது. அதன் உட்புறத்தில் மாயச் சித்தர்கள் இருந்ததாக மணக்குடி மக்கள் நம்பினர். அதனால் அதற்கு சித்தர்மலை என்று பெயர். வேறெங்கும் காணாத செடி கொடி மலர் வகைகள், தும்பி வண்டு வகைகள், சிப்பி கூழாங்கல் வகைகள் அங்கே ஏராளம். கோகழியும் கொண்டலும் அடிக்கடி இம் மேட்டில் உலவி, மலர்களும், சிப்பிகளும் சேகரிப்பது வழக்கம். சில சமயம் அவர்கள் மலருக்கு மலர் தாவும் வண்டுகளைப் பின்பற்றிச் சென்று மகிழ்வார்கள்.
“சித்தர் மேட்டில் அதிகம் உலவாதேயுங்கள், அங்கே நல்ல சித்தர்களும் உண்டு. அவர்களில் யாராவது உங்களுக்குக் கெடுதல் செய்யவுங் கூடும்” என்று அம்பலவாணர் அவர்களை எச்சரிப்பதுண்டு. ஆனாலும் அவர்களை அறியாமல் அவர்கள் கால்கள் அடிக்கடி அப்பக்கம் சென்றன.
உண்மையாகவோ, அச்சங் காரணமாகவோ, சில சமயம் எதிர்பாராக் காலடி ஓசை கேட்டு, அல்லது விசித்திர நிழலுருவங்களைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடி வருவர், இதனை அடுத்துச் சில நாட்கள் அவர்கள் அப்பக்கம் நாடுவதில்லை. ஆனால், நாட் செல்லச் செல்ல அச்சம் நீங்கிவிடும். மீண்டும் அங்கே ஊடாடுவர்.
பள்ளி விடுமுறைக் காலத்தில் ஒரு நாள் அவர்கள் தோழர்களில் பலர் அண்டையூரிலுள்ள ஒரு விழாவுக்குச் சென்றிருந்தனர். அம்பலவாணருக்குச் சற்று உடல்நலிவா யிருந்ததனால், தவிர, விழாவுக்குச் செலவு செய்ய அவர்களிடம் ஆளுக்கு ஒரு காசுக்கு மேல் கையிலில்லை. ஆகவே விழாவுக்குப் போகாத குறைக்கு அவர்கள் சித்தர் மேட்டுக்குச் செல்ல எண்ணினர். காலைச் சிற்றுண்டிக்குப்பின் தந்தைக்கு வேண்டும் உதவிகளைச் செய்துவிட்டு இருவரும் அப்பக்கம் நடையைத் திருப்பினர்.
அன்று வழக்கமீறி மப்பு மந்தாரமாயிருந்தது. ஆகவே காலை ஒன்பது மணியாகியும் புல் நுனிகளிலும் இலை நுனிகளிலும் பனித்துளிகள் உலரவில்லை. சிலந்தியின் வலைகள் இப் பனித்துளிகள் தோய்ந்து, வான வில்லின் ஏழு நிறங்களுடன் மிளிர்ந்தன. அலர்ந்த பூக்களும், அரும்புகளும் மொட்டுக்களும் கொத்துத் கொத்தாகத் தொங்கின அழகில் ஈடுபட்ட வண்ணம் கோகழியும் கொண்டலும் வழக்கமீறி நெடுநேரம் திரிந்து, வழக்கமீறி நெடுந்தொலை சென்று விட்டனர். ஒரு திருப்பத்தில் அவர்கள் கண்ட காட்சி கனவிலும் காணுதற்கரியதாய் அமைந்தது.
அது ஒரு விழாக் காட்சியே, ஆனால் அந்த மாதிரி விழாக் காட்சியை அவர்கள் எங்கும் கண்டதும் இல்லை. காண எண்ணியது மில்லை. பெரிய காளான்போல வண்ணந் தீட்டப்பட்ட சுழல் குடைகளில் வண்ண வண்ண ஆடையுடுத்த சிறுவர், சிறுமியர், குழந்தைகள் பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தனர். மான்கள், மிளாக்கள், வரிக் குதிரைகள், முயல்கள் ஆகியவை குதிரைகள் போல அணி செய்யப்பட்டு அவற்றின் மீது பூவாடையடுத்த இள நங்கையரும், பொன்னாடை யுடுத்த இளைஞரும் சாரி சாரியாக அமர்ந்து சென்றனர். பல நிற மத்தாப்பூக்கள் போன்ற வாண வெடிகள் எங்கும் வெடித்து வானில் மலர்கள் போல ஓசை செய்யாது விரிந்தன. ஊற்றுக்கள், ஓடைகள் பன்னீரை வாரி இறைத்தது போல நறுமணம் வீசின.
வியப்பு, மலைப்பு, மகிழ்ச்சி, மயக்கம் ஆகிய பல உணர்ச்சிகளுக்குக் கோகழியும் கொண்டலும் ஆளாயினர். அவர்கள் கால்கள் நிலத்தின்மீது பாவவில்லை. அந்தக் கூட்டத்தில் முன்னும் பின்னும், உள்ளும் புறமுமாக அவர்கள் இழைந்து இழைந்து சென்றனர். எவரும் அவர்களைப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் எல்லாரையும் பார்த்தனர். கூட்டங் குறைந்த ஒரு பாறைச் சரிவுக்கு அவர்கள் வந்தனர். அந்தச் சரிவு முழுவதும் ஒரே தின்பண்டமயமாய் இருந்தது. தட்டுகள் வரிசை வரிசையாக வலமிருந்து இடமும், மேலிருந்து கீழும் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் குவிந்து கிடந்த முறுக்கு, தேங்குழல், ஓமப்பொடி, அவல் பொரி, பொரி உருண்டை, வண்ணமாச் சில்லுகள், வெல்லக் கட்டிகள், கற்கண்டுகள் ஆகியவை கண்ணையும் நாவையும் கவர்ந்தன.
வழக்கப்படி அவர்கள் என்ன என்ன வாங்கலாம் என்று ஆராயத் தொடங்கினர்.
“நம் கையிலிருப்பது ஆளுக்கு ஒரு காசு தானே! அதற்கு என்ன வாங்க முடியும்?” என்றாள் கொண்டல்.
மஞ்சள் காலணி, நீல உடை, சிவப்புத் தலையணி அணிந்து, தின் பண்டங்களிடையே ஒரு பெரிய தின்பண்டம் போலவே குந்தியிருந்தான் கடைக்காரன். அவன் திடுமென வாய் திறந்தான்;
“ஏன், எதை எடுத்தாலும் விலை காசு ஒன்று தான். எவ்வளவு எடுத்தாலும் ஒரு கையில் அள்ளக் கூடியது ஒரு காசு தான்!” என்றான் அவன்.
“ஆ! அப்படியா?” என்று வியப்படைந்தனர் இருவரும்.
எழுத்துச் சுவடி போன்றிருந்த ஒரு பெட்டி ஒரு புறம் கிடந்தது. எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஏழு வண்ணங்களில் கண்ணைப் பறித்தன. ‘இது என்ன?’ என்று கோகழி கேட்டான். கடைக்காரன் திறந்து காட்டினான். எள்ளுருண்டைகள் எல்லா எழுத்தின் வடிவிலும் செப்பம்பட வார்க்கப்பட்டிருந்தன.
“ஒரு காசுக்கு இதில் எத்தனை எழுத்துக்கள் எடுத்துக் கொள்ளலாம்?” என்று கேட்டான் கோகழி.
கடைக்காரன் விடை விசித்திரமாயிருந்தது. “எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எடுக்கும் எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து ஓர் உயிருள்ள பொருளின் பெயராய் இருக்க வேண்டும் அவ்வளவு தான்” என்றான்.
கோகழி ஓர் உயிருள்ள பொருளை நினைத்துக் கொண்டான்.
கோ-ழி என்ற இரண்டு எழுத்துக்களையும் எடுத்துக் கொண்டான்.
கொண்டலும் ஓர் உயிருள்ள பொருளை உள்ளத்தில் தேடினாள். அவள் கொ-க்-கு என்ற மூன்று எழுத்துக்களைத் தேடி எடுத்துக் கொண்டாள்.
இருவரும் மகிழ்ச்சியுடன் வீடுநோக்கி மீண்டனர். இருவர் கையிலும் இரண்டு பொட்டலங்கள் இருந்தன.
வழியில் ஒரு ஓடையண்டை கோகழி நின்றான். “எழுத்துருண்டைகளைத் தின்னலாமா?” என்றான்.
இதுவரை கொண்டல் சும்மா நடந்துவரவில்லை. விழாக் கூட்டம், திண்பண்டக் கடை ஆகியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு வந்தாள்.
“சித்தர் மேடெங்கே? இவ்வளவு விழாக் கூட்டமெங்கே? இதில் ஏதோ மாயம் இருக்க வேண்டும். இங்கே வரக்கூடாது என்று அப்பா எச்சரித்தாரே! கேட்காமல் தவறி வந்துவிட்டோம். மாயத்தோற்றம் கண்ட பிறகாவது ஓடியிருக்க வேண்டும்; ஓடவில்லை; மாயக்கடையில் தின்பண்டம் வாங்கியாவது இருக்கக்கூடாது. வாங்கி விட்டோம்; இனி என்ன செய்வது? இனி இத்துடனாவது நின்றுவிடவேண்டும். இதைத் தின்னக் கூடாது; குருவிகளிடம் எறிந்துவிட வேண்டும் காசு போனால் போகட்டும்.”
இவை அவள் எண்ணங்கள்.
ஆகவே அவள் கோகழியின் பேச்சைக் கேட்கவில்லை. அத்துடன் அவனுக்கும் அறிவுரை கூறினாள். “மாயத்தின் பண்டத்தை இருவருமே தின்ன வேண்டாம். குருவிகளிடம் எறிந்து விடுவோம்” என்றாள்.
கோகழி சிரித்தாள்.
“நீ பயங்கொள்ளி, நான் முதலில் தின்கின்றேன் பார்!” என்றான்.
“கோ” உருண்டை அவன் வாயில் கரைந்தது!
“ஆ! என்ன இனிமை! என்ன தித்திப்பு! இதற்கு முன் இத்தகைய பண்டம் எங்கும் தின்றதில்லை!” என்று அவன் துள்ளியாடினான்.
கொண்டல் அப்போதும் தன் உருண்டைகளைத் தின்னத் துணிவில்லை. “எனக்கென்னவோ பயமாகத் தான் இருக்கிறது. நீ தின்றுவிட்டதுகூட எனக்குப் பிடிக்கவில்லை” என்றாள் அவள்.
ஆனால், தின்ற சுவைகண்ட கோகழியால் சும்மா இருக்க முடியவில்லை. அவன் அடுத்த எழுத்து “ழி” உருண்டையையும் வாயிலிட்டான்.
அதுவும் கரைந்தது; இனிப்பாகவே இருந்தது; வேறு எவ்வகை மாறுதலும் ஏற்படவில்லை. ஆனால், கோகழி பேசத் தொடங்கியபோது அவன் தொண்டை கரகரத்தது; அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. கொண்டல் தின்ன அஞ்சிய தின் பண்டங்களைத் தின்ற மகிழ்ச்சியுடன் அவன் எட்டி முன்னடந்தான். கொண்டல் பின்னே நடந்தாள்.
கொண்டல் இப்போதுதான் எழுத்துருண்டைகளைத் தின்னத் தயங்கியதற்காக வெட்கமடைந்தான். தன் பொட்டலம் அவிழ்த்து ஏதோ ஓர் எழுத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள். “இதோ நானும் தின்னப் போகிறேன்” என்று கூறி முன்னால் சென்ற கோகழியை நோக்கினான்.
அவள் கண் எதையோ கண்டு வியப்புடன் உறுத்து நோக்கிறறு!
கோகழியின் தலைப்புச்சியில் சிகப்புக் குல்லாப் போல ஏதோ தெரிந்தது. “என்ன அது உன் தலைமேல் கோகழி!” என்று கேட்டாள்.
அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் “கொ… கொ… கொ… ள்” என்று கூறி நிறுத்தினான்.
‘கொண்டல்’ என்று கூற முடியாமல் கொன்னுகிறான் என்று அவள் எண்ணினாள்.
“இப்படி என்றும் நீ கொன்னுவதுகிடையாதே! இன்று ஏன்!….?”
அவள் பேசி முடிப்பதற்குள் கோகழி தற்செயலாக முகத்தை அவள் பக்கம் திருப்பியிருந்தான். அந்த முகத்தைக் கண்டதே அவள் தின்ன எடுத்த எழுத்துருண்டை மட்டுமன்றி, பொட்டலம் முழுவதுமே கீழே விழுந்துவிட்டது.
அந்த முகத்தில் அவன் மூக்கும் வாயும் பறவைகளின் ஓர் அலகாய் மாறியிருந்தது. தலையில் தோன்றிய சிவப்பையும் “கொ-கொ” என்ற குரலையும் இதனுடன் சேர்த்து நினைக்கவே கொண்டலுக்கு நடுக்கமாயிற்று. அவள் “ஐயோ, அண்ணா! என்ன செய்து விட்டாய்! அந்தப் பேய் உருண்டை என்ன உருண்டையோ?” என்று குத்திக் கொண்டு அழுதாள்.
அவனும் அருகே குந்தினான். ஆனால், அவனுக்குப் பேச வாயில்லை. தலை முழுதும் கோழித் தலையாய் விட்டது. சிறிது நேரத்துக்குள் கழுத்தும் உடலும் மென்மயிர் இறகும் அடர்ந்தன. கையும் ஆடையும் இறக்கைகளாக மாறின. கால்கள் ஒடுங்கி மரமரப் புற்றுக் கோழிக்கால்களாயின. அந்தோ! இறுதியாக, அவன் அழகிய காலடிகள் முக்கவர் முட்கள் ஆயின.
அவள் கோழியுருவாய்விட்ட அண்ணனைக் கட்டி அணைத்து அலறினாள். அவன் கோழி யுருவிலும் தங்கை துயரும் அன்பும் முற்றிலும் உணர்ந்தவன் போல அவள் கன்னங்களை அலகால் கோதினான்.
இந்தப் பெருந்துயரில் அவள் இப்போது அண்ணனுடன் பேச, அண்ணனுடன் திட்டமிட முடியவில்லை. அவள் தனியே சிந்தித்துத் தனியே வழி காண வேண்டியிருந்தது.
“அந்த மாயக் கடைக்காரனிடமே போவோம் வா! போய் ’இது என்ன முறைகேடு? இதற்கென்ன வழி வகை?” என்று கேட்போம் வா!" என்று அவள் எழுந்தாள்.
பேசத் தெரியாவிட்டாலும் கோழியுருவக் கோகழிக்குக் கேட்கவும் உணரவும் தெரிந்திருந்தது. அவனும் உடன் சென்றான்.
அவர்கள் சித்தர்மேடு எங்கும் தேடினார்கள்.
"அந்தோ! விழாக் கூட்டத்தின் தடத்தையே காணோம்! மாயக் கடையும் மாயமாய் மறைந்து விட்டது. அஃது இருந்த இடத்தில் பலவகைக் கறைகள் படிந்த பாறைச் சரிவுதான் இருந்தது.
கொண்டல் மற்றுமொருமுறை அங்கிருந்தும் அழுதாள். “ஐயோ! அப்பா வரப்படாதென்று கேட்டும் வந்தோமே? இப்போது என் ஆருயிர் அண்ணன் இல்லாமல் எப்படி அப்பா முகத்தில் போய் விழிப்பேன்?” என்று முகத்தில் அறைந்து கொண்டு அலறினாள்.
கோகழியாகிய கோழி அவள் மடியில் தலைசாய்த்துக் கலகலத்தது.
அழுதழுது அவள் முகம் வீங்கிற்று; கண்கள் சிவந்தன; அவள் அழுகை கண்டு கோகழியும் மறுகிற்று.
அவளுக்குத் திடீரென்று ஒரு புதுக் கருத்துத் தோன்றிற்று.
அவள் அழத் தொடங்கியபின் முதல் தடவையாக முகத்தில் தோன்றிய மின்னொளி கண்டு கோழியும் அவள் முகம் நோக்கிற்று.
அவள் எழுந்தாள். கோழியையும் கையிலேயே தூக்கிக் கொண்டாள்.
இருவரும், முன்பு சென்ற தடமறிந்து, அவ்வழியே சென்றாள்.
கோகழி எழுத்துருண்டையைத் தின்னத் தொடங்கிய இடம் சென்றதே அவள் அங்குலம் அங்குலமாக நிலத்தைத் துருவி நோக்கினாள். அவள் என்ன தேடுகிறாள். என்றறியாமலே கோழியும் தேடிற்று!
நல்ல காலமாக அண்ணன் முகமாற்றம் கண்டவுடன் அவள் கீழே எறிந்த எழுத்துருண்டைகள் அங்கேயே கிடந்தன.
அதில் ‘கொக்கு’ என்ற பெயரின் முதலெழுத்தாகிய ‘கொ’ என்பதை மட்டும் அவள் எடுத்தாள். அந்த எழுத்தின் முதற் பகுதியாகிய கொம்பும், கடைசிப் பகுதியாகிய காலும் அகலும்படி கூரிய கத்தியால் வெட்டினாள். இப்போது ‘க’ என்ற எழுத்தாக உருண்டை அவள் கையிலிருந்தது.
கோழியின் அலகைத் திறக்கச் செய்து. அதனுள் அவள் அந்த ’க’என்ற எழுத்தைத் திணித்தாள்.
செய்தி இன்னதென்று தெரியாமலே, அருமைத் தங்கை தருகிறாள் என்ற உணர்வில் கோழி அதை விழுங்கிற்று.
கொண்டல் அடுத்து என்ன மாறுதல் நடக்கிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது வீண்போகவில்லை.
மெல்ல மெல்லத் தலைச் சூட்டு மறைந்து கருமயிர் படர்ந்தது. தலை பெருத்தது. அலகு இருந்த இடம் மூக்கும் வாயும் வந்தன. முகம் மனித முகமாயிற்று. அதன்பின் கழுத்தும் உடலும், இறுதியில் கால்களும் பாதமும் முன்னிருந்தபடியே மாறின.
அவள் அண்ணன் கோகழி, கோகழியாகவே அவள் முன் நின்றான்.
“அண்ணா, கோகழி! உன்னைத் திரும்பவும் அடைய வழி கண்டுவிட்டேன். எனக்கு உயிர் கொடுத்தாய்!” என்று கொண்டல் அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
அவனும் தன் குரல் வந்ததே என்று கோவெனக் கதறி யழுதான்.
இருவரும் துயரம் முற்றும் கடந்து மீண்டும் அளவளாவிப் பேசினர்.
’கொண்டல்! இருவருமே அப்பா சொல் தட்டிச் சித்தர்மேடு சென்றது தவறுதான். ஆனால் நான் உன் சொல்லைத் தட்டி அதைத் தின்றேனே! அதற்காக நான் பட்டபாட்டை இனி மறக்க மாட்டேன். ஆனால் நீ அறிவுடையவளாயிருந்து தப்பினதுடன் உன் அறிவாலேயே எப்படியோ என்னையும் காத்துவிட்டாய். ஆயினும் அது எப்படி என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. இந்தச் சிறிய தலையில் அப்படி என்ன மாயச்சக்தி இருந்தது?" என்றான்.
கொண்டல் சிரித்தாள், “அண்ணா! ஆபத்து யாருக்கும் அறிவைத் தீட்டும், அதிலும் நீ இல்லாமல் நான் எப்படி வாழ முடியும்? எப்படி அப்பாவைத்தான் சென்று காண முடியும்? கோகு! அந்த அன்பு அதை இன்னும் தீட்டியது.”
"உன் மாறுதலின் பின் நான் மாயக்கடைக்காரன் சொல்லியதை எண்ணிப் பார்த்தேன்.
“எந்த எழுத்தையும் எடுக்கலாம். எத்தனை எழுத்தையும் எடுக்கலாம். ஆனால், அது ஓர் உயிர்ப் பொருளின் பெயராய் அமைய வேண்டும்” என்று கூறியிருந்தான். விலங்கு, பறவைகள் தான் உயிர்ப்பொருள் என்று நினைத்து நாம் கோழியையும் கொக்கையும் தெரிந்தெடுத்தோம்.
“கோழி என்ற உயிர்ப் பொருளின் எழுத்துக்களைத் தின்றதால்தான் நீ கோழி ஆனாய் என்று கண்டேன்.”
"கோகழியும் ஓர் உயிர்ப் பொருள்தானே! அந்த எழுத்துக்களைத் தின்றால் கோகழியாகத்தானே மாறக் கூடும் என்று எண்ணினேன்.
"மாயக் கடை இருந்திருந்தால் ‘க’ என்ற ஒரு எழுத்தை வாங்கி உனக்குத் தந்திருப்பேன். ‘கோ’, ‘ழி’, என்ற இரண்டு எழுத்தையும் நீ தின்றிருப்பதால், ‘க’ சேர்த்தவுடன், அது கோகழியின் எழுத்துக்கள் ஆய்விடும். ஆனால் அந்த மாயக்கடை மறைந்து போய் விட்டது. என்ன செய்யலாம் என்று நான் மீண்டும் ஆழ்ந்து ஆராய்ந்தேன்.
"நல்ல காலமாக நான் தின்னாது எறிந்த எழுத்துகள் என் நினைவுக்கு வந்தன. அதில் ‘க’ இல்லை. ஆனால் ‘கொ’ இருந்தது. அதன் இரு புறமும் அறுத்து விட்டால் ’சு’ஆகும். அதை உனக்குத்தர எண்ணினேன்.
“மீதி எனக்குத் தெரியும்” என்றான் கோகழி.
அவள் அறிவுக்கும் அன்புக்கும் கோகழி அவளை மெச்சிக் கட்டியணைத்துக் கொண்டான்.
அவர்கள் மாயத்தால் அடைந்த துன்பங்களை மறந்து வீடு செல்லும் போது மாலையாய் விட்டது. நண்பகல் உணவுக்கு அவர்களைக் காணாது அம்பலவாணர் பெருங்கவலை அடைந்திருந்தார். ஆகவே அவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் அவர் அவர்களை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் உணவருந்தியபின் கொண்டல் தானாகவே பேச்செடுத்துக் கதை கூறினாள்.
அம்பலவாணர் சிரித்தார். “சரி, இனி, சித்தர் மேட்டுப் பக்கம் போகமாட்டீர் களல்லவா?” என்றார்.
“ஒருபோதும் மாட்டோம், ஒருபோதும் மாட்டோம்?” என்றனர் இருவரும், அவர்கள் உறங்கியபின் அம்பலவாணர் பின்னும் ஒருமுறை சிரித்துக் கொண்டார்.
“பாவம், சித்தர் மேட்டில் சித்தம் போக்குச் சிவம் போக்காகத் தூங்கிவிட்டு, கனவை நனவாக எண்ணி இவ்வளவு கவலைப்பட்டிருக்கிறார்கள். நல்லகாலம். இந்தப் படிப்பினை நல்லதாகப் போயிற்று. இன்னும் நீடித்துப் படுத்திருந்தால் மாயத்தைவிடப் பொல்லாத நச்சுப் பகைகளுக்கு மேட்டினுள் இடமுண்டு என்பது இச்சிறுவர்களுக்குத் தெரியாது” என்று கூறியமைந்தார்.
ஊரில் ஆடு கோழிகளை; இரவு வந்தடித்துக் கொண்டு போகும் நரிகள், சிறுத்தைகள் சித்தர் மேட்டில் இருந்தன என்பதைக் கூறிச் சிறுவர் சிறுமியரை அச்சுறுத்த அவர் விரும்பவில்லை.
சொல்லும் செயலும்
விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று அயர்வகற்றும் மனவளமுடையவர்கள் தமிழினத்தவர். இப்பண்பில் தவழ்ந் தாடிற்று. கோடிக்கரை, ஏனெனில் அதன்மீது அலைவீசிய கடலுக்கு அப்பால் ஒரு தமிழகமும், இப்பால் ஒரு தமிழகமும் இருந்தன. இரண்டின் பண்பு வளங்களும் கோடிக்கரையில் கூடின. முத்தமிழகத்தின் பக்கத்திலிருந்தோ, ஈழத் தமிழகப் பக்கமிருந்தோ கோடிக் கரைக்கு வந்த எந்த ஏழையும் அங்கிருந்து என்றும் மிடியுடன் மீண்டதில்லை.
ஏழைகளைப் பேணும் பண்பு வேறு. அரசியல் சான்றோர்களை வரவேற்கும் ஆரவாரம் வேறு. முன்னைய பண்பில் நிறைவு எய்திய கோடிக்கரைக்குப் பின் கூறப்பட்ட பண்பு வகையில் ஒரு சோதனையோ, வாய்ப்போ என்றும் ஏற்பட்ட தில்லை. ஏனெனில் அரசியலாளர் தமிழகத்தின் மற்றப் பெரிய சிறிய நகரங்களுக் கெல்லாம் வருவதுபோலக் கோடிக்கரைக்கு வந்ததில்லை.
குறைந்த காலத்தில் மிகப் பெருந்தொகையான இடங்களுக்குச் சென்று புகழாரவாரம் பெறுவதில் அவா உடையவர்கள் அச்சான்றோர்கள். ஒரு நகரஞ் செல்லும் போதே, அதைச் சூழ இருந்த இடங்களுக்கும் அவர்கள் செல்லத் திட்டமிட்டு விடுவார்கள். கோடிக்கரைக்குச் செல்ல எண்ணுபவருக்கு இந்த வாய்ப்புக் கிடையாது. அங்கே செல்பவர் அங்கேதான் செல்ல வேண்டும். அது கடந்து வேறெங்கும் செல்ல முடியாது. அது ஒரு கோடியின் முனையிலே அமைந்திருந்தது. அதைப் பார்த்தபின் போன வழியிலே திரும்பி வந்துதான் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியும்.
கோடிக்கரைக்கு எந்த அரசியலாளரும் வராததற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. பெரும்படிக் கட்சி, ஆரவாரக் கட்சி என்ற நாட்டின் இரண்டு கட்சிகளுமே அந்நகரில் சரிசமமான அளவில் போட்டியிட்டன. ஒரு கட்சி செய்யும் எந்தத் தீர்மானத்தையும் மற்றக் கட்சிமுழு மூச்சுடன் எதிர்க்காமல் இராது. ஒன்றின் நன்மை, மற்றதன் அப்பழுக்கற்ற நன்மையாகவும் இருந்தது. ஆட்சி முறையில் மட்டிலுமன்றி. உணவு, உடை, வழிபாட்டு வணக்கமுறை ஆகிய எல்லாவற்றிலும் ஒவ்வொரு கட்சியும் கூடிய மட்டும் மற்றக் கட்சிக்கு மாறுபட்டே நடக்க அரும்பாடுபட்டது. இந்நிலையில் நகருக்கு வரும் அரசியலாளரை ஒரு கட்சி வரவேற்பதனால், மற்றக் கட்சி எதிர்க்காமல் இருக்க முடியாது. ஒரு கட்சியின் பாராட்டால் வரும் புகழை மறு கட்சியின் எதிர்ப்பால் இகழாக்க எந்த அரசியலாளரும் விரும்பவில்லை.
எதிரெதிர் கட்சிகளின் பண்புகளுக்கேற்ப அவற்றின் தலைவர்களும் எதிரெதிர் பண்புகளின் உருவங்களாகவே அமைந்தனர். பெரும்படிக் கட்சியின் தலைவர் ஏழுவேலி ஏகம்பவாணர் என்ற பெருநிலக்கிழார். அவர் கிட்டத்தட்ட ஆறடி உயரம் உடையவர். ஆனால், பக்கத்துக்குப் பக்கமாக அளந்தாலும், முன்பின்னாக அளந்தாலும் உடலின் அகலம் கிட்டத்தட்ட அதே ஆறடி இருந்ததால், அவர் உருவம் அவ்வளவு நெடிய உருவமாகத் தோற்றாது. அவருக்கு ஆடை உடுப்புத் தைப்பவனுக்குத்தான் அந்த உடலின் நீள அகலங்களின் எல்லை நன்கு தெரிந்திருந்தது. ஏனெனில், முட்டளவான வேட்டியும் குறுஞ் சட்டையும் அவர் அணிவது வழக்கமானாலும், வேட்டியுடன் வேட்டி, துணியுடன் துணி நீளத்தில் வேறாகவும் அகலத்தில் வேறாகவும் ஒட்டுப் போட்டே அவருக்கு உடை உருவாக்க வேண்டியிருந்தது. அவர் மேலாடை நான்கு பெண்டிர் முழு ஆடைக்குப் போதிய நீளமுடையதாயிருந்தது.
ஏகம்பவாணருக்கு நேர்மாறாக ஆரவாரக் கட்சியின் தலைவர் நெல்மண்டி நித்திலச்செல்வரோ ஐந்தடிக்கு மேல் உயரமுடைய வரல்லர். அத்துடன் உடலின் பருமன் அத்தனை அங்குலங்களே தானோ என்னும்படி அது ஒடுங்கி மென்மையுடையதாய் இருந்தது. அவரது வெண்பட்டுடைகளும், தோளளவு குறுகக் கத்தரித்து அழகுபடச் சீவிவிட்ட, அவரது தலைமுடியும் கிட்டத்தட்ட ஓர் அழகிய பொம்மையின் தோற்றத்தையே அவருக்குத் தந்திருந்தன. முகமும் கன்னமும் கவிந்து செவிகளுடன் பேசத் துடிதுடித்த மீசைகளும், கருநீல வண்டுகள்போல மினுங்கிய கண்களும் இல்லையானால் அவர் அழகுருவம் ஒரு தலைவருக்குரிய வீறுபெற்றிருக்க முடியாது என்னலாம்.
நகரில் இரு கட்சித் தலைவர்களுமே தத்தம் கட்சிகளுக்கு ஈடும் எடுப்புமற்ற சர்வாதிகாரிகளாக இருந்தனர். ஆனால், நகரம் இரண்டு சர்வாதிகாரிகளின் ஆட்சியைத் தாங்க மாட்டாமல், எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. ஏகம்பவாணர் இல்லாமல் அந்த நகரத்திலோ அதன் சுற்றுப்புற மாவட்டங் களிலோ கூட எதுவும் நடக்க முடியாது. ஏனென்றால், அவர் வாழ்நாள் முழுவதும் அவரே நகரவைக்குத் தலைவர்; போக, மாவட்ட நிலக்கிழார் சங்கம், ஆலை முதலாளிகள் சங்கம், ஊர்தி முதல்வர் சங்கம் ஆகியவற்றின் தலைவரும் அவரே, அவர் தயவில்லாமல் எவரும் நகரத்தில் வாழவும் முடியாது, நகரத்தை விட்டு எங்கும் போகவோ, வரவோகூட முடியாது. நகர வாழ்வு என்னும் தோட்டத்திலே உள்ளும் புறமும் அவர் ஒரு மதயானை போலத் திரிந்தார். ஆனால்; அவர் கட்சிக்கு எல்லா வகையிலும் எதிர்கட்சியாகவே நித்திலச் செல்வர் நிலை இருந்தது; இவர் நகரின் துறைமுக ஆட்சிக் குழுவின் தலைவர்; தவிர நகரிலும் நகரைச் சுற்றியிருந்த மாவட்ட முழுவதும் உள்ள வாணிகச் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், தொழிலாளர் கூட்டுறவுகள், கூட்டுறவுப் பண்ணைகள், கலைக் கழகங்கள், இலக்கியக் கழகங்கள் முதலிய யாவுமே அவர் கைப்பிடியில் இருந்தன. அவர் நினைத்தால் மாவட்டத்திலேயே விலையை ஏற்றவும் இறக்கவும் முடியும்; ஏற்றுமதி இறக்குமதிகளைத் தடுக்க முடியும். நிலக்கிழாரின் நெல் மாவட்டத்துக்குள்ளே செலாவணியாகாமல் செய்ய முடியும்; ஆனால் கடற் போக்குவரத்தன்றி நிலப் போக்குவரத்தை அவர் பயன்படுத்த முடியவில்லை. வெளியூர் செல்ல வேண்டுமானால், அவர் கடல்வழிதான் செல்ல வேண்டும். அல்லது அரசியலார் நேரடி ஆட்சியிலுள்ள தொடர் ஊர்தியில் செல்ல வேண்டும். மற்ற எல்லாத் தனி ஊர்திகளும் ஏகம்பவாணர் கட்டளையின் கீழ் இயங்கின.
நகராட்சியில் சரிசம வலுவுடைய இரண்டு சர்வாதி காரிகளும் எதிரியைத் தாண்டிச் செல்வாக்குப் பெற மாகாண ஆட்சியையும் துணைக் கொள்ள விரும்பினர். பெரும்படிக் கட்சியாளருக்கு மைய ஆட்சியின் பிடி இருந்தது. இதனால், மைய ஆணைக் குழுக்களில் அவர் இடம் பெற்றதுடன், மாநிலத்தின் மற்றத் துறைமுகக் குழுக்களைக் கோடிக்கரைக்கு எதிராகத் திருப்ப முடிந்தது. ஆனால், ஆரவாரக் கட்சித் தலைவர் மாநிலத் தொழிலாளர் இயக்கங்களைத் தூண்டிப் பெரும்படிக் கட்சியின் ஆதரவாளர்களைத் திணறடித்து வந்தார். மாகாண ஆட்சியில் அமைதிக் காவலராக இடம் பெற்று, அதன் மூலம் நகர மக்கள் மீது தம் செல்வாக்கை வளர்த்தார்.
மாகாண முதல்வராக மைய ஆட்சியினால் அமர்வு பெற்றவர்கள் பொதுவாக இரண்டு கட்சிகளின் நேசத்தையும் நடுநிலையையும் பேணவே விரும்பினர். இந்நிலையைத் தமக்குப் பயன்படுத்த முதல்முதல் முனைந்தவர் ஏகாம்பவாணரே. முதல்வர் பெயர் அண்ணல் கோவலர் என்பது. ஆகவே, அவர் நகர் நடுவில் அண்ணல்கோப் பூம்பொழில் ஒன்று அமைத்தார். அவர் பண்ணையில் புதிதாகப் பயிற்றுவித்து உருவாக்கிய ஒரு பாலாட்டு வகைக்கு ‘அண்ணல்கோ ஆடு’ என்று பெயர் வைத்தார். இப்புதிய செயலுக்கு எதிராக நித்திலச் செல்வர் போட்டியிட முனைந்தார். ஆனால், எதிரியின் செயலைப் பின்பற்ற அவர் விரும்பவில்லை. அஃது ஏகம்பவாணருக்கே பெருமைதரும் என்று கருதினார். எனவே ஏகம்பவாணர் செயலை நையாண்டி செய்யும் முறையில் அவர் துறைமுகப் பகுதியின் சில குப்பைத் தொட்டிகளுக்கும் சலவைத் தொழிலாளர் பயன்படுத்திய ஒரு வகைக் கட்டை வண்டிக்கும் ‘அண்ணல்கோக் குப்பைத் தொட்டி, ’அண்ணல் கோக் கட்டை வண்டி’ என்று பெயர் சூட்டினார்! சலவைத் தொழிலாளருக் காகவே அவர் வெளிநாடுகளிலிருந்து தருவித்திருந்த கோவேறு கழுதைக் குட்டிகளுக்கும் ஆரவாரமாக ‘அண்ணல்கோக் கழுதைக் குட்டிகள்’ என்று பெயரிட்டார்! பெரும்படிக் கட்சியை அவமதிப்பதற்காக மேற்கொண்ட இந்தச் செயல்கள் நடுநிலை வகிக்க விரும்பிய முதல்வரையும் அவமதிப்பதாக அமைந்தன.
அண்ணல் கோவலர் தம் பணியாட்சிக் கால முழுவதும் ஆரவாரக் கட்சியின் அவமதிப்பை மறவாதிருந்தார் என்று கூற வேண்டியதில்லை. அவர் சலுகைகள் மறு கட்சிக்கே கிடைத்தன. ஆனால், இதனால் ஆரவாரக் கட்சிக்கோ, சிறப்பாக அதன் கோடிக்கரைத் தலைவர் நித்திலச் செல்வருக்கோ எத்தகைய குறையும் ஏற்படவில்லை. ஏனென்றால், குறும்பர்களின் நகைச்சுவை யார்வம் அவர் பக்கம் இருந்தது. மக்களும் பொதுவில் அவர் பக்கம் சாயலாயினர். இதன் பயனாக, மாகாண முதல்வர் தம் கைக் குறிப்பேட்டில் ஆரவாரக் கட்சிக்குப் பாதகமாகப் பல செய்திகள் குறித்துச் சென்றார். ஆயினும், அவரை அடுத்துப் புதிதாக வந்த முதல்வர் உள்ளத்தை இக்குறிப்புச் சிறிதும் பாதிக்கவில்லை; பெரும்படிக் கட்சியின் நேசத்தைக் கூடிய மட்டும் விடாமலே, ஆரவாரக் கட்சியின் ஆதரவையும் பெற வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆகவே தாம் பதவியேற்றதும், மாகாண முதல்வர் அமைச்சர் முதலிய அரசியல் தலைவர் பெயர்களை எவரும் எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு ஆணை பிறப்பித்தார். அத்துடன் தம் சுற்றுப்பயணத்தின் போது, பொது வழக்கமீறி, கோடிக்கரைக்கும் வரப் போவதாக அறிவித்தார்.
இவ்விரு செயல்களாலும் கோடிக்கரையில் ஏற்படும் உணர்ச்சியலைகளைக் கூர்ந்து கவனித்து அறிவிக்கும்படி முதல்வர் அமைச்சர்களுக்கு வேண்டுதல் விடுத்திருந்தார். மறை ஒற்றர்கள் நகரெங்கும் திரிந்து கருத்துணர்ந்தார்கள். முதல்வர் செயல்கள் இரு கட்சி யாராலும் ஒருங்கே வெறுக்கப்பட்டன என்றே அவர்களுக்குத் தோற்றிற்று. இதை அறிந்த அமைச்சர்கள் கோடிக்கரைக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிடும்படி முதல்வருக்கு அறிவுரை கூறினார்கள்.
புதிய முதல்வர் சேவுடையார் எளிய வாழ்க்கை மேற்கொண்டவர். தூய உள்ளம் படைத்தவர். சமய பேதம் கட்சி பேதமில்லாமல் எல்லாருடனும் சரிசமமாகப் பழகுபவர். ஆகவே அமைச்சர்கள் அறிவுரையை அவர் முழுதும் ஏற்கவில்லை. இதுவரை எதிலும் ஒன்றுபடாத இரு கட்சிகளும், இப்போது தம்மை வெறுப்பதில் ஒன்றுபட்டிருப்பதையே அவர் ஒரு சுமுகமான முதல் நிலை என்று கொண்டார் ஆகவே அரசியல் நிலையில் தாம் சுற்றுப் பயணம் செய்யப்போவதில்லை என்றும், தனி முறையிலே தம் நண்பர்கள், தமக்கு அறிமுகமானவர்கள் ஆகியோரின் விருந்தினராகவே நாடு சுற்றிவரப் போவதாகவும் அறிவித்தார். பயணத் திட்டத்தில் கோடிக்கரையும் இடம் பெற்றிருந்ததென்று கூறத் தேவையில்லை.
பெரும்படிக் கட்சியினர் எப்போதும் ஆட்சியாளர் பக்கமே இருப்பவர்கள். அவர்கள் திட்டங்களை ஆதரித்துப் புகழ் பாடுவார்கள். ஆனால், புதிய முதல்வரை எதிர்ப்பதில் அவர்கள் ஆரவாரக் கட்சியைச் செயலற்றதாக்கிவிட்டனர். முதல்வர் வருகிற நாளில் வேண்டுமென்று பலர் பேசினர். அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புக் கூற வேண்டுமென்றனர் சிலர்; அவர் உருவில் கொடும்பாவி கட்டி இழுக்க வேண்டுமென்றுகூட ஒருவரிருவர் கூக்குரலிட்டனர். தனிப்பட்ட முறையில் வந்தால்கூட, பெரும்படிக் கட்சியைச் சேர்ந்த எவரும் அவரைச் சந்திக்கக் கூடாதென்றும், என்னவிலை தந்தாலும்கூட, அக்கட்சியாளர் அவருக்கு வண்டிவிடவோ, உணவு முதலிய வசதிகள் அளிக்கவோ கூடாதென்றும் கண்டிப்பான முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
நகரவைக் கூட்டம், நிலக்கிழார் சங்கம், ஊர்தி முதல்வர் சங்கம் முதலிய பெரும்படிக் கட்சியாதரவாளர் நிலையங்கள் யாவுமே முதல்வர் வரவேற்பின் எதிர்ப்பில் ஒன்றுடனொன்று போட்டியிட்டன. ஒன்றைவிட ஒன்று தீவிரமான கண்டனங்கள் தெரிவித்தன.
வியத்தகு முறையில் ஆரவாரக் கட்சியின் நடவடிக்கைகளும் தீர்மானங்களும் பெரும்படிக் கட்சியைத் தலைகுனிய வைத்தன. முதல்வர் வருகிற நாளுக்கு ஒருநாள் முன்பிருந்தே தொடங்கி, அவர் வேறிடம் சென்றுவிட்டதாக அறியப்பட்டதன் பின்னும் ஒரு நாள்வரை எல்லாத் தொழிலகங்களும் மூடப்பட வேண்டு மென்று அவர்கள் முடிவு கட்டினர். இதனுடன் அமையாப் பல தீவிரவாதிகள் அவர் வரவுக்குத் துக்கம் தெரிவிக்கும் முறையில் எல்லாரும் கறுப்புத் துணியால் முக்காடிட்டு ஊர்வலம் வரவேண்டுமென்றும், ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் தவிர மற்றெல்லாரும் உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தத்தம் கட்சிப் போக்கை இதுவரை இயக்கியவர்கள் அவற்றின் சர்வாதிகாரிகளான தலைவர்களே. ஆனால், கோடிக் கரையின் வரலாற்றில் முதல் தடவையாக, தலைவர்கள் இப்போது தத்தம் கட்சிப் போக்கில் மிதக்க வேண்டியவராயினர். இதை வெளிக்குத் தெரியாமல் மறைக்க வேண்டுமானால், தத்தம் கட்சியின் தீவிரவாதக் குரலை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் காலக் கேடாக, இருவர் உள்ளங்களும் கட்சிச்சார்பற்ற தனி, அவாக்களிலேயே சுழன்றன. இரு கட்சிகளின் எதிர்ப்பினாலும் மனக்கசப்புற்ற முதல்வருக்கு இப்போது எந்தத் தனி மனிதராவது சிறு ஆதரவு காட்டினாலும் அவரை அவர் ஆதரித்து உயர்த்திவிடுவது உறுதி என்பதை அவர்கள் அறிந்தனர். தாமே அதைத் தனிப்பட்ட முறையில் செய்வதானால், எதிர்கட்சியையும் எதிர்கட்சித் தலைமையையும் தாண்டி வளர்ந்துவிட முடியும் என்று அவர்கள் மனப்பால் குடித்தனர்.
பெரும்படிக் கட்சி எப்போதுமே பட்டம் பதவிகளை விரும்புவது. முதல்வரை வரவேற்க முடியுமானால், முன் எந்தப் பெரும்படித் தலைவரும் பெறாத உயர் பட்டமும் பதவியும் தமக்குக் கிடைத்துவிடும் என்று ஏகம்பவாணர் திட்டமிட்டார். அதேசமயம், கிட்டத்தட்ட அதே எண்ணம் நித்திலச் செல்வர் உள்ளத்திலும் வேறொரு வடிவில் எழுந்தது. ஆரவாரக் கட்சி பட்டம் பதவிகளைச் சாடுவது. ஆனால், பட்டம் பதவி துறப்பவர்களின் உயர்வு அவர்கள் துறக்கும் பட்டம் பதவிகளின் உயர்வுக்கேற்ப மதிப்புப் பெறும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, சூழலைப் பயன்படுத்தி, முதல்வர் மிக உயர்வான பட்டம் பதவி அளிக்கச் செய்து. அவற்றை இன்னயத்துடன் மறுத்து, ஆட்சியாளர் பாசத்தையும் மக்கள் நேசத்தையும் ஒருங்கே பெற்றுவிடலாம் என்று அவர் கனாக் கண்டார்.
கட்சிக் கூட்டங்களின் போக்கு இரு தலைவர்களுக்கும் தலைவலியாயிருந்தது. தலைமைப் பதவியைக் காத்துக் கொள்ளுவதற்காகத் தீவிரக் குரலில் பேச வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் உள்ளவாக் கட்சியினர் மாட்டான எதிர்ப்பைக்கூட விரும்பவில்லை. இந்த நிலையில் அவர்கள் சில வீம்பு வெற்றுரைகளுடன் வாளா இருந்தனர். தீர்மானங்களின் சொற்றொடர்களில் சிலவற்றை மாற்றியமைத்ததுடன் அவர்கள் மனமைந்தனர்.
பெரும்படிக் கட்சியிலிருந்து விலகாமலே ஆரவாரக் கட்சியிலும் மறைந்து ஊடாடியவன் பிள்ளைப் பெருமாள். அவன் இரு தலைவர்களின் உள்ளார்ந்த விருப்பங்களையும் நன்கு உணர்ந்து கொண்டான். இருவரையும் வைத்துப் பகடையாடித் தன் காரியமாற்றத் துணிந்தான்.
அவன் முதலில் ஏகம்பவாணரிடம் சென்றான்.
“உங்கள் கட்சிப் புகழும் உங்கள் புகழும்தான் இப்போது உச்சநிலை அடைந்திருக்கிறது. ஆனால், உணர்ச்சி வசப்பட்ட உங்கள் கட்சியை மட்டுமே நீங்கள் நம்பினால், இந்நிலை விரைவில் கெட்டுவிடும் என்றே கருதுகிறேன்” என்று தொடங்கினான். “என்ன கூறுகிறீர், பிள்ளை!” என்றார் ஏகம்பர்.
“உங்கள் எதிரி, தம் கட்சியைத் தூண்டி மட்டும்தான் எதிர்ப்பு நாடகம் நடிக்கிறார். முதல்வரை ஊர்தி நிலையத்திலேயே தனிப்படச் சென்று கண்டு வரவேற்பளிக்க அவர் காத்திருக்கிறார். உம் கட்சியைத் தம் அரசியல் திறத்தால் தூக்கி வாரிப் போட்டுவிட்டதாக அதன்பின் தம் கட்சியினரிடம் கூறி அவர்களையும் மாற்ற எண்ணியிருக்கிறார். இதன் மூலம் குறைந்த அளவில் துணை மாவட்ட முதல்வர் பதவியாவது அவருக்குக் கிடைத்துவிடும். அதையும் மறுப்பதன் மூலம் அவர் கட்சியிலும் அரசியலிலும் உயர்வு பெறத் திட்டமிடுகிறார்” என்றான்.
ஒரு தனியாள் தமக்கு அறிவுரை கூறும் நிலை வந்துற்றது கண்டு ஏகம்பர் உள்ளூர மேலும் புழுங்கினார். ஆனால், அவன் கூறிய செய்திகள் அவர் எரிச்சலை இன்னும் கிளப்பின.
‘எனக்கு உம் அறிவுரை வேண்டாம் போம்!’ என்று முதலில் மேலீடாக உறுக்கினார். பிள்ளை உடனே எழுந்து போக முயன்றபோது, அவரை அமர்த்தி, அவர் மனம் போலவே நடக்க இருப்பதாகக்கூறி அனுப்பினார்.
பிள்ளைப்பெருமாள் தம் சூழ்ச்சியின் ஒரு பாதி வெற்றியடைந்ததென்று கண்டு மேலும் ஊக்கமடைந்தான். அவன் நித்திலச் செல்வரிடமும் சென்று இதே போலக் கயிறு திரித்தான். எதிரி பிறரறியாமல் முதல்வரைப் பார்க்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதே, அவர் உடுத்த உடையைக்கூட மாற்றிக் கொள்ளாமல் ஊர்தி நிலையத்துக்கு ஓடினார். ஏனென்றால் ஊர்தி வருஞ் சமயமாய் விட்டதென்பதை, அடுத்துவரும் குழலோசை காட்டிற்று.
இருவரும் ஒருவர் அறியாமல் ஒருவர் நிலையத்தில் வந்து நின்றனர். அவர்கள் எதிர்பார்த்த ஊர்தியிலிருந்து பெருந்திரளான மக்கள் இறங்கினர்; பெருந்திரளான மக்கள் அதில் ஏறினர்; முதல்வர் தனிப்பட்ட முறையிலேயே வருவதாயிருந்ததனால், யார் முதல்வர் என்று அறியாமல், அவர்கள் இறங்குபவர் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டியதாயிற்று.
முதல்வர் வரும் ஊர்தி பற்றிப் பிள்ளைப் பெருமாள் இரு தலைவர்களுக்கும் வேண்டுமென்றே தவறான தகவல் கொடுத்திருந்தான். இதனால் அவர்கள் இரகசிய நடவடிக்கைகள் அவர்கள் எதிர்பார்த்த அளவில் முழுவதும் இரகசியமாயிராமல், பலருக்கும் அம்பலப்பட்டுவிட்டது. அத்துடன் கூட்ட நெருக்கடியில் முதல்வரை எங்கே அடையாளம் அறியாமல் போக விட்டுவிட்டோமோ என்று இருவரும் கலக்கமடைந்தனர். ஊர்தி சென்றபின் பிள்ளைப் பெருமாள் இருவரிடமும் தனித்தனியாகக் குறும்புச் சிரிப்புடன். ‘முதல்வர் வரும் ஊர்தி இதுவல்ல, அடுத்து வருகிறது’ என்று கூறியபின் தான் அவர்கள் முகத்தில் மீண்டும் உயிர்க்களை வந்தது.
அடுத்த ஊர்திவர அரைமணி நேரம் இருந்தது. அதுவரை இரு தலைவர்களும் பொறுமையிழந்து பக்க மேடையில் முன்னும் பின்னும் நடந்தனர்.
இரு தலைவர்களும் தலைவர்களானபின் ஒருவரை ஒருவர் நேரடியாகச் சந்தித்தது கிடையாது. ஆனால், இருவருமே ஒரே ஊரிலிருந்து பிழைப்புத்தேடி முப்பது ஆண்டுகளுக்குமுன் அந்நகருக்கு வந்தவர்கள். ஒருவர் வட்டிக் கடையில் பொருளும் நிலமும் ஈட்டி, தம் பெயரை மாற்றி நிலக்கிழார் ஏகம்பவாணர் ஆயிருந்தார். தம் பழைய எளிய வாழ்வைக் கூடிய மட்டும் தாமும் மறந்து பிறரையும் மறக்கடிக்க முயன்று வந்தார். தம் முன்னோரும் தம்மைப் போல நிலக்கிழாராகவே பல தலைமுறை இருந்ததாக அவர் கதைகட்டி நிலக்கிழாரின் கட்சியில் தன் மதிப்பையும், பெருமையையும் காத்து வந்தார். ஆனால், நிலத்திலச் செல்வர் கூலி வேலையிலிருந்து தாம் படிப்படியாக முன்னேறி உயர்வுற்றதை மறக்கவில்லை. எவரையும் மறக்க வைக்கவும் இல்லை. மணிவேல் என்ற தன் இளமைப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டாலும், இதையும் அவர் பெருமையாகவே கூறிக் கொள்ளத் தயங்கவில்லை. எதிரெதிராக இருவரும் ஒருவரையொருவர் கண்டசமயம் அவர்களுக்குத் தங்கள் புதுத் தலைமை வாழ்வு மட்டுமன்றி, இந்தப் பழைய வாழ்வுச் செய்திகளும் நினைவுக்கு வந்தன.
நித்திலச் செல்வர் குறும்பாக ஏகம்பவாணரை அணுகிப் பேச்சுத் தொடங்கினார்:
“ஏது, இத்தனை தொலை, வாணரே! எந்தப் பெரிய தலைவரை எதிர்பார்த்து இப்படிக் காத்து நிற்கிறீர்?” என்றார்.
’ஏகம்பவாணர் முகம் சுருங்கிற்று. ஆனால், அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டார்.
“என் மைத்துனர் ஒருவர் ஊர்தியில் செல்கிறார். அவசரமாக ஒரு தகவல் கூறவேண்டுமென்று தந்தி கூறினார். அதற்காகவே வந்தேன். நீங்கள் இவ்வளவு தொலை வந்து எத்தகைய பெரியவரை எதிர்பார்க்கிறீர்களோ?” என்று கேள்வியைத் திருப்பினார் ஏகம்பர்.
நித்திலச் செல்வர் இன்னும் எளிதாகத் தம்மைச் சமாளித்துக் கொண்டார்.
“என்னைப் போலப் பொதுவாழ்வையே வாழ்வாகக் கொண்டவனுக்குப் பெரியவராவது. சிறியவராவது! நகருக்கு யார் புதிதாக வந்தாலும், அவர்கள் வாய்ப்பு வசதிகளை நான் வந்துதான் கவனிக்க வேண்டியிருக்கிறது!” என்றார்.
நகர வாழ்வில் ஏகம்பவாணர் இன்றியமையாதவர் அல்ல, தாமே இன்றியமையாதவர் என்ற நித்திலச் செல்வர் குறிப்பு ஏகம்பவாணரை விலாவில் குத்துவது போலிருந்தது. அந்தப் பேச்சை மாற்றி அவரை இதுபோலக் குத்திக்காட்ட அவர் துடித்தார். நித்திலச் செல்வர் தமக்குச் சரிசமமானவரல்ல, தொழில் செய்து பிழைக்கும் வகுப்பினர் என்று சுட்டிக்காட்ட விரும்பினார்.
“உங்கள் கடையை மூடிவிட்டுத்தானே இங்கே வந்தீர்கள்? அதைப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்களே!” என்றார். நித்திலச் செல்வர் தாம் ஒரு தொழிலாளி என்று கூறுவதில் தயங்குவதில்லை. அதையே பெருமையாகக் கொண்டவர் என்பது ஏகம்பருக்குத் தெரியாது.
“நானே தனியாகக் கடையைப் பார்த்த காலமும் உண்டு; தனியாகத் தெருவில் கூலியாகத் திரிந்த காலமும் உண்டு; ஆனால் இப்போதெல்லாம் கடை மேலாள் இருக்கிறார். மாலை நேரத்தில்தான் நான் இருப்பது அவசியம்” என்றார்.
தம் குத்தல் பேச்சில் எதிரி மசியாதது கண்டு, ஏகம்பர் பின்னும் தம் குத்தலை வலிமைப்படுத்தினார்.
“தம் தொழிலைத் தாமே பார்க்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் பொதுத் தொண்டுக்குத் தகுதியற்றவர் களல்லவா?”
நித்திலச் செல்வருக்கு இக்கேள்வி ஓர் அரிய வாய்ப்பாயிற்று. “தமக்கெனத் தொழில் இல்லாதவர்கள்தான் பொதுவாழ்வைச் சாக்கிட்டு சுரண்டல் வேலை நடத்துகிறார்கள். அதுவே, அவர்களுக்குத் தொழிலாகி விடுகிறது. வருவாய்தரும் துறையாகிவிடுகிறது!”
ஏகம்பவாணர் தம் பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டார். அவருக்கு அதற்குமேல் பேசவும் இடம் இல்லை. “கூகூ” என்ற குரலுடன் ஊர்தி மேடை நோக்கி வந்தது.
இத்தடவை முதல்வர் யார் என்று தேடும் அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை. அந்த ஊர்தி முதல்வருக்கென்றே விடப்பட்டிருந்ததால், அவரும் அவர் மூட்டை முடிச்சுகளும் தவிர வேறு எதுவும் அதில் இல்லை. தவிர அவரை வரவேற்ப தாக முன்பே எழுதித் திட்டம் செய்திருந்தவர் பிள்ளைப் பெருமாள். அவர் ஒரு நிலையம் முன்னதாகச் சென்று, அவரை வரவேற்று ஊர்தியிலேயே உடன் வந்தார். ஆனால், இறங்கிய சமயம் இரு தலைவர்களையும் கண்டதாக அவர் காட்டிக் கொள்ளவேயில்லை.
இரண்டு தலைவர்களுள்ளும் ஏகம்பவாணரே முதலில் முதல்வரை அணுகியவர். தலையணியைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளையரைப்போல உடலை முடக்கி அவர் வணக்கம் செய்ய முயன்றபோது, அது எவரும் கண்டு நகைக்கத்தக்க காட்சியாகவே இருந்தது. நித்திலச் செல்வருக்கு நகைப்பை அடக்குவது அரிதாயிருந்த போதிலும், தாமும் வணக்க வழிபாட்டில் பிந்திவிடக்கூடாது என்ற எண்ணம் அவரைத் தடுத்தது. அவர் தமிழர் முறையிலே முதல்வருக்குக் கைகூப்பி முகமலர்ந்து வணக்கம் தெரிவித்தார்.
இருவேறு வகையில் வணக்கம் செய்தவர்களையும் சற்று ஏற இறங்கப் பார்த்த பின்னரே சேவுடையார் ஆசார முறைமைக்காகச் சிறிதே தலையசைத்தார். அவர் எதிர் வணக்கத்தில் அவ்வளவாக உயிர் இல்லை. அத்துடன் அருகில் பின்னே நின்றிருந்த பிள்ளைப் பெருமாள் பக்கம் திரும்பி நோக்கினார்.
’தங்கள் ஒருவரைத் தவிர, இங்கே யாரும் என்னை வரவேற்க வருவதாக எனக்குத் தெரிவிக்கவில்லை! தாங்களும் எதுவும் குறிப்பிடவில்லையே! எனவே இவர்கள் யார் என்று அறிய விரும்புகிறேன். தங்களுக்குத் தெரியுமா?" என்றார்.
‘ஏன் தெரியாது?’
’ஆங்கிலப் பாணியில் வரவேற்ற அந்த நண்பர்தாம் பெரும்படித் தலைவர் ஏழுவேலி ஏகம்பவாணர்.
’தமிழ்ப்பாணியில் வரவேற்ற இந்த நண்பர்தாம் ஆரவாரக் கட்சித் தலைவர் நெல்மண்டி நித்திலச் செல்வர்.
‘தாங்கள் தனிமுறையில் வருவதறிந்து தாமும் தனி முறையிலேயே தங்களை வரவேற்க இவர்கள் முன் வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அதனால்தான் அவர்கள் தங்கட்குத் தெரிவிக்கவில்லை. எனக்கும் அவர்கள் கருத்துத் தெரிய வரவில்லை.’
‘ஆகா அப்படியா செய்தி!’ என்று பிள்ளைப் பெருமாளிடம் கூறிவிட்டு, சேவுடையார் சட்டெனத் தலைவர் இருவர் பக்கமும் திரும்பினார்.
அவர் முகம் சற்றுக் கடுப்பாகவே இருந்தது. ஆயினும் உள்ளூர அதில் புன்முறுவல் ஒளி வீசி நின்றது.
அவர் அமைதியாகப் பேசினார்.
‘அன்பர்களே! உங்கள் இருவர் வரவேற்பும் விசித்திர மானது. ஆயினும், இந்த முறையில்கூட உங்களைக் காண மகிழ்ச்சியில்லை என்று நான் கூற மாட்டேன். ஆனால், அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நீங்கள் என்னை வரவேற்றதன்று. முதன் முதலாக நீங்கள் ஒருவரையொருவர் வரவேற்றதனாலேயே யாகும். அதன் சின்னமாக, இன்று என்னைத் தனி முறையில் வரவேற்க வந்த இருவர் கரங்களையும் என் இரு கரங்களால் இணைத்து வைக்கிறேன்.’
பேச்சுடன் பேச்சாக, அவர் தம் இருகரங்களாலும் இருவர் கரங்களையும் பற்றி இணைத்து வைத்தார்.
பிள்ளைப் பெருமாள் குறிப்பறிந்து இப்போது முன்வந்து ‘வாழ்க கோடிக்கரை!’ வாழ்க கோடிக்கரைத் தலைவர்களின் தனிமுறை நட்பு’ என்று கூறிச் சிரித்தார்.
தொடக்கத்தில் இப்போக்கினால் அதிர்ச்சியடைந்து விழித்த இரு தலைவர்களும் மெல்லப் புதிய நிலை கண்டு திரும்பினார்கள். இருவரும் இப்புதுநிலையை ஏற்கப் போட்டி யிட்டு, ‘நாட்டுத் தலைவரை வரவேற்கும் சின்னமாக, தனி முறையில் தம் நட்பை செய்கிறேன்’ என்ற ஒருவரை நோக்கி ஒருவர் புன்முறுவலுடன் கூறினர்.
நாட்டுத் தலைவரையும் நண்பர்களையும் இரு தலைவர் களுமே தத்தம் மனைக்கு விருந்தாக அழைத்தனர். எங்கே இந்தப் போட்டியில் பழைய பகை புது உருவம் பெற்று விடுமோ என்று சேவுடையார் சிறிது அஞ்சினார். ஆனால், பிள்ளைப் பெருமாள் இச்சிக்கலைத் தவிர்த்து, அனைவரையும் தம் இல்லத்துக்கு இட்டுச் சென்றார்.
புதிய நட்புப்பற்றிய செய்தி இதற்குள் காட்டுத் தீப்போல் நகரமெங்கும் பரவிற்று.
பெரும்படிக் கட்சி அன்று மாலையே அவசரக் கூட்டம் கூட்டிற்று. தம் தலைவரே தம் கட்சியின் திட்டங்களை மீறி அதன் தன்மதிப்பைக் குலைத்தது கண்டு, கட்சியினர் கோபம் எல்லை மீறிக் குமுறிற்று. அவர்கள், அவர்மீது உடனடியாக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி னார்கள். அத்துடன் கூட அவர்கள் சீற்றம் தணியவில்லை. தம் எதிர்க்கட்சித் தலைவராகிய நித்திலச் செல்வரையே தலைவராக்க ஒரு முடிவு எடுத்த பின்தான் அவர்கள் மனம் அமைந்தது.
ஆரவாரக் கட்சியும் அதே நாள் மாலையிலேயே அவசரக் கூட்டம் கூட்டிற்று. அக்கட்சியினர் கொந்தளிப்பும் அவர்கள் தலைவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு நிறைவேற்றி, எதிர்க்கட்சித் தலைவரான ஏகம்பவாணரைத் தலைவராக்க முடிவு செய்ததன் பின்னரே அமைந்தது.
தத்தம் பழைய கட்சிகளின் புதுப்போக்குகள் கண்டு, இருபழந் தலைவர்களும் கலவரமடைந்தனர். ஆனால், சேவுடையார் அவர்களைப் புன்முறுவலுடன் நோக்கிப் புதுவழி காட்டினார்.
‘அன்பர்களே, உங்கள் மனம்போல் இதுவரை நீங்கள் கட்சிகளை ஆட்டி வைத்தீர்கள். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. ஆள் தான் இப்போது மாறியிருக்கிறது. புதுத் தலைவர்களான இனி உங்கள் கட்சிகளின் போக்கிலேயே நடந்து கொள்ளுங்கள், எல்லாம் இனிது அமைதியாக முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன் தனிமுறையில் வந்து உங்கள் வரவேற்பைப் பெற்றது போல, தனி முறையிலேயே உங்களிடம் பிரிவு விடை பெற்றுச் செல்ல எண்ணுகிறேன். ஆயினும் உங்கள் புதுக்கட்சிகளிடம் நீங்கள் இவ்வகையில் பேசிச் செய்யும் முடிவை நான் ஏற்க விரும்புகிறேன்’ என்றார்.
இரு தலைவர்களும் இப்போது தங்கள் புதிய கட்சிக் கூட்டங்களை மீண்டும் அவசரமாகவே கூட்டினார்கள்.
இருகட்சிக் கூட்டங்களிலும் புயல் முன்னிலும் மிகுதியாகவே வீசியடித்தது. ஆனால், புதிய தலைவர்கள் புயலை இயக்கவில்லை. எதிர்க்கவில்லை, அதில் மிதந்தார்கள். கட்சி முடிவு எதுவானாலும் ஏற்று நடந்து கொள்வதாக மட்டுமே வாக்களித்தனர்.
தத்தம் புதுத்தலைவர்கள் நாட்டுத் தலைவரைத் தனி முறையாக வரவேற்றதற்கு இருபழங் கட்சிகளும் இப்போது ஆதரவு தெரிவித்தன. அதே சமயம் அவரைத் தனிமுறையிலே விருந்தினராக நடத்தித் தனிமுறையிலேயே விடை கொடுத்த னுப்பி விடுவதை இருகட்சிகளுமே விரும்பவில்லை. கட்சிகளின் சார்பாகவே அவரை மீண்டும் வரவேற்று விருந்தளித்துக் கட்சிகளின் சார்பிலேயே அவருக்கு வழியனுப்பு விழா நடத்துவதென்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
இரு கட்சிகளின் முடிவும் ஒரு முடிவானதனால், இப்போது அது நகரத்தின் முடிவாயிற்று.
கோடிக்கரையின் வரலாற்றிலேயே முதன் முதலாகக் கோடிக்கரை கோடிக்கரையாகச் செயலாற்றிற்று. எப்போதுமே ஏறுமாறாக நடந்து கொண்ட இரு கட்சிகளும் இப்போது ஒரு சீராக நடக்கத் தலைப்பட்டன.
பிள்ளைப் பெருமாள் தம் நீண்ட நாளைய கனவுத் திட்டம் நிறைவேறியதென மகிழ்ந்தார். நாட்டுத் தலைவர் சேவுடையாரும் முந்திய தலைவர்களுக்கெல்லாம் தொடர்ந்து இருந்துவந்த ஒரு தலைவலி நீங்கப் பெற்றவராய் இறும்பூது எய்தினார்.
பெரும்படிக் கட்சி ஒருநாளும் ஆரவாரக்கட்சி அடுத்த நாளுமாகச் சேவுடையாரை வரவேற்றன. விருந்துகளையும் ஒரு கட்சி காலையும் மறுகட்சி மாலையுமாகப் பங்கிட்டுக் கொண்டன. ஆனால், பிள்ளைப் பெருமாளின் முயற்சியால் விடையளிப்புக் கூட்டத்தை இரு புதுத் தலைவர்களுமே சேர்ந்து நடத்தினர். இரு கட்சிகளும் அதில் இயல்பாய்க் கலந்து கொண்டன. அத்துடன் இருகட்சிகளிலும் இதற்குள் தங்கள் பழந்தலைவர்கள் மீதுள்ள கோபம் தணிந்திருந்தது. இரு கட்சிகளுமே தத்தம் புதுத்தலைவர்களுக்கு மாலை யிட்டதனுடன் அமையாமல், பழந்தலைவர்களுக்கும் மாலையிட்டுச் சிறப்பித்தன.
இந்தச் சுமூக நிலையைப் பயன்படுத்தி, நாட்டுத் தலைவர் தம் விடைபெறு விழாவுரையில் கட்சிகளுக்குப் புதிய ஆய்வுரைகள் தந்தார். நகரவையிலும் பிற கழகங்களிலும் ஏகம்பவாணருடன் நித்திலச் செல்வருக்கும், துறைமுக ஆட்சிக்குழுவிலும் பிற தொழிற் சங்கங்களிலும், கலைச் சங்கங்களிலும் நித்திலச் செல்வருடன் ஏகம்பவாணருக்கும், இரு சார்புகளிலும் பிள்ளைப் பெருமாளுக்கும் துணையிடம் நல்கும்படி அவர் அறிவுரை கூறினார்.
சொல்லும் செயலும் மாறுபட்டு நடந்து உட்பகைப் போட்டிகளால் அவதியுற்ற கோடிக்கரை வாழ்வு இந்த நன்முடிவுகளால் புத்தமைதியும் புதுப் பொலிவும் பெற்றன. மாகாண, மைய அரசுகளிலும் இந்தப் புத்தமைதி புதுவீறு தோற்றுவித்துப் புதுப் படிப்பினைகள் தந்தன.
முக்குறும்பன்
மும்முடிச் சோழ நல்லூரில் முக்களாலிங்கன் என்றொரு செல்வன் இருந்தான். அவன் மனைவி முத்தார வல்லியும் செல்வக் குடியில் பிறந்தவளே. அவர்களுக்கு நெடுநாள் பிள்ளைச் செல்வம் இல்லாதிருந்தது. அது அவர்கள் குடும்பக் குறையாக மட்டுமில்லை. முக்களாலிங்கன் உடன் பிறந்தார்களும் முத்தாரவல்லியின் உடன் பிறந்தார்களும் இதுபோலவே பிள்ளைச் செல்வத்துக்கு அலைந்தவர்களாக இருந்தனர். எனவே முத்தாரவல்லி ஒரு சிறுவனைப் பெற்றெடுத்த போது அவன் மூன்று பெருங் குடும்பங்களுக்குரிய ஒரே செல்வமாகப் போற்றப்பட்டான்.
சிறுவன் முதற் பிறந்த நாளையும் பெயரீட்டு விழாவையும் கொண்டாட மூன்று குடும்பத்தினரும் அவர்கள் உற்றார் உறவினரும் பெருந்திரளாக வந்து மொய்த்தார்கள். அவனுக்கு என்ன பெயர் இட வேண்டுமென்பது பற்றி மூன்று குடும்பங்களுமே அமர்க்களப்பட்டன.
சிறுவனின் மூத்த தாய்மாமனான மூவேலி இப்போராட்டங் களில் கலந்து கொள்ளவில்லை. அவன் குழந்தையை மடியில் எடுத்து வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
‘அடே, குறும்புக்காரப் பயலே! பிறக்கும் போதே மூன்று குடும்பங்களையும் போராட விட்டுப் பிறந்திருக்கிறாயே! உன் பெயரென்ன என்பதை நீயாகவேதான் சொல்லி விட்டால் என்ன?’ என்று அவன் குறும்பாகக் கேட்டான்.
சிறுவன் காலை மூன்று தடவை உதறிக் காட்டிக் கொண்டு, ‘கு’, ‘கு’, ‘கு’ என்று மும்முறை கூறினான்.
இச்சமயம் முத்தாரவல்லி அருகில் வந்தமர்ந்து குழந்தையைச் செல்லமாகக் கிள்ளினாள். "என்னடா, மாமா உன் பெயரைக் கேட்டால், நீ ‘குக்குக்கு’ என்கிறாய்! என்ன பெயர் என்று தெளிவாகச் சொல்வது தானே!’ என்றாள்.
சிறுவன் இப்போது தாயிடம் தாவினான்.
அவன் செயல் எல்லாருக்கும் இனிய அதிர்ச்சி தந்தது.
அவன் தாய்க்கு மூன்று முத்தங்கள் அளித்தான். அருகிலிருந்த தந்தையை மூன்று முறை கிள்ளினான். மறுபுறமிருந்த தாய்மாமனை நோக்கி மீண்டும் மும்முறை காலை உதறிக் காட்டினான்.
மருமகனின் இச்செயல்களுக்கு மூவேலி உரை விளக்கம் கூறினான்.
‘மூன்று குடும்பங்களுக்கும் இவன் ஒரே குறும்பனாம்! ஆகவே முக்குறும்பன் என்று பெயர் வையுங்கள் என்று கூறுகிறான். இந்தச் சுட்டிப் பயல்!’ என்றான் அவன்.
விளக்கவுரை சரி என்று ஒத்துக் கொள்பவன் போலச் சிறுவன் மூன்று தடவை தலையாட்டிக் கொக்கரித்தான்.
மும்முடிச் சோழ நல்லூரில் கோயில் கொண்டிருந்த பிள்ளையாருக்கு முக்குறும்பன் என்றே பெயர். அதனால் தானோ, என்னவோ, அப்பெயரை எல்லாரும் ஆர்வமாக வரவேற்றார்கள். முக்குறும்பன் என்பதே சிறுவன் பெயராக நிலைத்தது.
மூன்று குடும்பங்களின் செல்வ வளர்ப்பில் முக்குறும்பன் விரைந்து முக்குறுணிக் குறும்பனாக வளர்ந்தான்.
விழாவன்றே அவன் குறும்பாட்சி தொடங்கிற்று.
அவனைப் பன்னீரில் குளிப்பாட்டிவிட்டுப் பொன் தொட்டிலில் வைப்பதற்காகச் செவிலித்தாய் தோளில் தூக்கிக் கொண்டு சென்றாள். அச்சமயம் அவன், அவள் தோளை வன்மையாகக் கடித்துவிட்டான். வலி பொறுக்க மாட்டாமல் அவள் அவனைக் கீழே தவறவிட்டாள். பன்னீரில் குளித்த உடல் திரும்பவும் சேற்றில் புரண்டெழுந்தது. மூவேலி இப்போதும் குறும்பான விளக்கவுரை தரத் தயங்கவில்லை. ‘மருமகனுக்குப் பன்னீர் முழுக்குப் போதாதாம்!’ சந்தனச் சேற்று முழுக்கு வேண்டுமாம்!’ என்று கூறினான். அதற்கேற்ப, மாமனே அவனைக் கழுவி மூன்றாவதாகச் சந்தனக் குழம்பில் குளிப்பாட்டினான்.
குழந்தைப் பருவத்தில் முக்குறும்பன் சுட்டித்தனங்கள் பெற்றோருக்கும் உற்றோருக்கும் கட்டணமில்லாத நாடகக் காட்சிகள், திரைக்காட்சிகளாயிருந்தன. செல்வக் குடும்பமாத லால், அவன் உடைத்த பொருள்கள் ஒன்றுக் கிரண்டாக மீண்டும் வாங்கப்பட்டன. கிளி, கோழி, பூனை, நாய், ஆகிய உயிரினங் களுக்கோ, வேலைக்காரர்களுக்கோ, உற்றாருக்கோ, அவன் கொடுத்த தொல்லைகள் மட்டற்றவை. ஆனால், எவரும் அவனைக் குறைகூறவோ தட்டிக் கேட்கவோ எண்ணவில்லை. தொல்லைகளுக்கும் கட்ட நட்டங்களுக்கும் ஆளானவர்கள் கூட அடிக்கடி அவனை மேலும் குறும்புகளில் ஊக்கினர்.
வீட்டுக் குறும்புகள் பள்ளிக்கும் தொடர்ந்தன. கல்வியில் அவன் முன்னேறாவிட்டாலும், புதுப்புதுத் தெறிப் பேச்சுகளிலும், புதுப்புதுத் திட்டங்களிலும் அவன் மூளை மேன்மேலும் திறமையாக வேலை செய்யத் தயங்கவில்லை. அவன் குறும்புகளைக் கண்டு மகிழ வீணர்கள் எப்போதும் அவனைச் சுற்றி ஊடாடினர். ஆனால், அவர்கள் கூட அவன் குறும்புகளுக்கு ஆட்பட்டுவிடும் அச்சத்தால் அருகே வராமல் கண்மறைவிலேயே ஒதுங்கி நடமாடத் தொடங்கினார்கள்.
முக்குறும்பன் குறும்புகள் வளருந்தொறும், அவற்றை ஊக்கி வளர்த்த மூன்று குடும்பங்களின் செல்வமும் தேய்ந்து கொண்டே வந்தது. முக்குறும்பன் இது பற்றிக் கவலை கொண்ட தில்லை. முக்கரளாலிங்கன் இறந்தபோது, வறுமை முக்குறும்பனின் குடும்பத்தையே பீடிக்கத் தொடங்கிற்று. அவன் தாய் முத்தாரவல்லி வீடு வாசல் தட்டுமுட்டுப் பொருள்களை யெல்லாம் விற்று ஒட்டுக்குடில் வாழ்வு வாழ நேர்ந்தது. செல்வக் குடியில் பிறந்துசெல்வக் குடியில் வாழ்ந்த அவள் இப்போது கிழிந்த கந்தையாடை உடுத்தி, எலும்புந் தோலுமாகக் காட்சியளித்தாள்.
குடும்பத்தின் இந்தக் கோர மாறுதல்கூட முக்குறும்பன் போக்கை அசைக்கவில்லை. அவன் வேலை செய்ய மறுத்தான். குறும்புகளிலேயே முழு நேரம் போக்கினான். அவன் குறும்பாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.
முத்தாரவல்லி ஒரு நாள் அவனை அழைத்துக் கண்டிப்புடன், ஆனால், உருக்கமாகப் பேசினாள்.
‘முக்கு! நான் உணவு கண்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், பட்டினி கிடந்தாவது நான் என் கையில் கிடைப்பதை உனக்குக் குறைவில்லாமல் அளித்து வந்தேன். இப்போதோ எனக்கும் ஒன்றும் இல்லை; உனக்கும் ஒன்றுமில்லை; எங்கிருந்தாவது உணவு தேடிக் கொண்டு வந்தால் உண்டு. இல்லையானால், இரண்டு பேரும் பட்டினிதான்; நீ இன்னும் வேலை தேடாவிட்டால், நான் இனி வீடு வீடாகச் சென்று வேலை தேட வேண்டும்; அதுவும் கிடைக்காவிட்டால், பிச்சை எடுக்க வேண்டியதுதான்’ என்றாள் அவள்.
அவள் கண்களிலிருந்து சூடாக இரண்டு சொட்டுக் கண்ணீர் அவன் கன்னத்தில் விழுந்தது.
அவன் நிமிர்ந்து தாய் முகம் நோக்கினான். ‘அம்மா! இதையெல்லாம் இவ்வளவுநாள் என்னிடம் ஏன் சொல்லவில்லை? சரி, போகட்டும், இப்போது உணவு தானே வேண்டும்! இதோ அதற்கு வழி செய்கிறேன்’ என்று அவன் புறப்பட்டான்.
அவன் பெரிய வீட்டு வேலையாள் மாதிரி உடையை வரிந்து கட்டிக் கொண்டான். ஒரு துண்டை எடுத்துத் தலையில் சுற்றிக் கொண்டான். உணவுப் பொருள்கள் விற்கும் ஒரு கடையில் தடதடவென்றேறி, அரிசி பருப்பு முதலியவற்றில் கையிட்டுக் கொண்டே கடைக்காரனை ஏற இறங்கப் பார்த்தான்.
‘என்ன வேண்டும் தம்பி?’ என்று கேட்டான் கடைக்காரன்.
‘எனக்கு ஒன்றும் வேண்டாம். எங்கள் பண்ணையாருக்கு உடனடியாக ஒரு சாக்கு அரிசியும், ஒரு சாக்கு பருப்பு காய்கறி முதலிய சரக்குகளும் வேண்டுமாம். விலை பற்றிக் கவலையில்லை. சரக்கு நயமாகக் கொடுப்பாயல்லவா?’ என்றான்.
செல்வம் தன்னைத் தேடி வருகிறது என்று மகிழ்ந்தான் கடைக்காரன். நல்ல அரிசி பருப்பு காய்கறிகளாகவே தேர்ந்து இரண்டு சாக்குகள் கட்டினான். தாராளமாக விலையுமிட்டுப் பட்டியலை நீட்டினான்.
‘பண்ணையார் இவ்வூர்ச் சத்திரத்தில்தான் இருக்கிறார்; பட்டியலுடன் உங்கள் பையனை அனுப்புங்கள். அவனிடம் பணம் கொடுத்தனுப்புகிறேன்’ என்றான் முக்குறும்பன்.
பையன் சாக்குகள் இரண்டையும் தூக்கிக் கொண்டு முன் செல்ல, முக்குறும்பன் பின்னே சென்றான்.
சாக்கில் பழச் சிப்பம் ஒன்று வெளியே துருத்திக் கொண்டிருந்தது. சேறு தங்கிய இடமாய்ச் சமயம் பார்த்து முக்குறும்பன் அதை மெல்லக் கீழே இழுத்து விட்டான். அது விழுந்து சேதப்பட்டுவிட்டது.
அவன் உடனே பையனை அதட்டினான்.
‘ஐயோ, என்ன வேலை செய்தாய்! பண்ணையார் இதைப் பார்த்தால் பணமே தர மாட்டாரே! போய் இதை உடனே மாற்றி வா, வேண்டுமானால் பட்டியலைக்கூட மாற்றிக் கொள்ளலாம். நீ வரும்வரை இங்கே இருக்கிறேன்?’ என்று கூறி அவன் பையனை அனுப்பினான்.
பையன் திரும்பி வருமுன் சாக்குகளுடன் முக்குறும்பன் மறைந்துவிட்டான். அவன் உருமாற்றத்துடன் வந்திருந்ததனால், கடைக்காரன் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சத்திரத்திற்குச் சென்று கேட்டதில் ‘இங்கே பண்ணையாரும் இல்லை, படையாட்சியும் இல்லை’ என்று கூறிவிட்டனர்.
உணவு எங்கிருந்து எப்படி வந்தது என்று கேட்க முத்தாரவல்லிக்குத் துணிவில்லை. அதுபற்றி அவள் நெடுநாள் கவலைப்படவும் நேரவில்லை. வறுமை ஒரு புறமும் முக்குறும்பன் போக்கு ஒரு புறமும் அவளை விரைவில் மீளாப் படுக்கையில் தள்ளிற்று. வந்த உணவுப் பொருள்கள் செலவாவதற்குள் அவள் முக்குறும்பனையும் அவன் வாழும் உலகையும் விட்டுப் பிரிந்து சென்றாள்.
ஒட்டுக் குடிசையும் மும்முடிச் சோழ நல்லூர் வாழ்வும் தனக்கு இனித் தேவையில்லை என்று கருதி, முக்குறும்பன் குடிசையை வந்த விலைக்கு விற்றுவிட்டு அவ்வூரிலிருந்தே வெளியேறினான். ஒரே ஊரில், அதுவும் முன்பு நல் வாழ்க்கை வாழ்ந்த ஊரில், தன் குறும்பாட்சி நெடுநாள் தழைக்க முடியாது என்றே அவன் கருதியிருந்தான். தாய் மறைவு இவ்வகையில் அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாய் அமைந்தது.
அடுத்து ஓர் ஊரில் அவன் தின்பண்ட வாணிகன் ஒருவனிடம் வேலைக்கமர்ந்தான். சில நாள் ஒழுங்காக வேலை செய்ததனால் கூலியாக ஒரு சிறு தொகை பணம் கிடைத்தது. ஆனால், அதற்குள் அவனிடம் அடங்கிக் கிடந்த குறும்பார்வம் உள்ளூரக் குறுகுறுத்தது. அடுத்து என்ன குறும்பு செய்வதென்று அவன் ஆழ்ந்தாராய்ந்தான்.
மறுநாள் பொங்கல் திருநாள். இதை எண்ணியதும் அவன் உள்ளத்தில் ஒரு திட்டம் உருவாயிற்று.
மாலை கடைகட்டும் சமயம் அவன் முதலாளியிடம் பேச்சுக் கொடுத்தான். ‘நாளை என்ன தின்பண்டங்கள் செய்யலாம் வழக்கமான தின்பண்டங்கள் போதுமா? புதிதாக ஏதேனும் செய்யலாமா?’ என்று அவன் பணிவுடன் கேட்டான்.
முதலாளியை அன்று சில கடன்காரர்கள் வந்து நச்சரித்திருந்தார்கள். ஆகவே, அவனுக்கு மிகவும் எரிச்சலும் புகைச்சலுமாக இருந்தது. இந்நிலையில் அவன் சலிப்புடன் சீறி விழுந்தான். ‘ஏதாவது நண்டு நட்டுவக்காலி செய்து தொலை!’ என்று கூறிச் சென்றான்.
முதலாளி எரிச்சலுடன் உளறிக் கொட்டியதை முக்குறும்பன் அப்படியே மகிழ்வுடன் பின்பற்றினான். திண்பண்டங்கள் யாவும் நண்டு நட்டுவக்காலியாக மட்டுமன்றி, பாம்பு, தேள், பல்லி, ஓந்தி பச்சோந்திகளாக நெளிந்தன.
மறுநாள் தின்பண்ட மேடையைப் பார்த்தபோது முதலாளி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ‘ஏனடா, ஆண்டுக் கொருநாளாக இப்படித் திருகுதாளம் பண்ணி யிருக்கிறாய்!’ என்று அவன் சீறினான்.
முக்குறும்பன் புன் முறுவலுடனேயே பேசினான்.
‘நீங்கள் சொன்னபடி தானே செய்திருக்கிறேன். இப்போது ஏன் கோபப்படுகிளீர்கள்? இரவெல்லாம் விழித்திருந்து வேலை செய்ததற்கு இதுவா நன்றி?’ என்று அவன் எதிர்மொழி கூறினான்.
தனக்கு மிஞ்சிப் பேசுகிற இத்தகைய வேலைக்காரனை இனி ஒரு கணமும் தன்னிடம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முதலாளி தனக்குள்ளாக உறுதி கொண்டான். ஆயினும் அவனுக்குச் சரியான பாடம் கற்பித்தே அனுப்ப வேண்டும் என்று அவன் கருதினான்.
‘உன் உழைப்பு எனக்குத் தேவையில்லை. நீ வீணாக்கிய மாவுக்குப் பணத்தைக் கீழே வைத்து விட்டுப்போ. உன் உழைப்பை நீயே எடுத்துக் கொண்டு நடையைக் கட்டு’ என்று அவன் கண்டிப்பாகப் பேசினான்.
முக்குறும்பன் இதற்கே காத்திருந்தான். மாவின் உண்மையான விலை அவனுக்குத் தெரியும். அவனே முந்திய நாளில் அதை வாங்கி வந்திருந்தான். தன் கூலிப் பணத்திலிருந்து அதை எண்ணி மேடைப் பலகைமீது வைத்தான். கடைச்சரக்கு முழுவதையும் சாக்கிலிட்டுக் கட்டிக் கொண்டு புறப்பட்டான்.
பொங்கல் விழாவை ஒட்டி அன்று ஊர் மக்கள் கோயில் மேட்டில் குழுமி வேடிக்கை வினோதங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர் சிறுமியர்கள் அங்கே பந்தாட்டம், கும்மி கோலாட்டம் முதலிய விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தார்கள். சீப்பு கண்ணாடி விற்பவர்களும் தின்பண்டம் விற்பவர்களும் ஒரு சிலரே அங்கே ஊடாடிக் கொண்டிருந்தார்கள்.
முக்குறும்பன் அங்குள்ள ஒரு மண்டபத்தில் தன் சரக்குகளைக் கடை விரித்தான். தின்பண்ட நண்டு, நட்டு வக்காலி, பாம்பு, தேள், பல்லி ஆகியவற்றைப் படி மேடையில் அணியணியாக அடுக்கி வைத்தான். ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துக் காட்டிப் பாடத் தொடங்கினான்.
கொடுக்காத நண்டிருக்குது. கொடுக்கிப் பாருங்கள்- குழந்தைகளே
கொடுக்கிப் பாருங்கள்-வாயிலிட்டுக் கடித்துப் பாருங்கள்!
கொட்டாத தேளிருக்குது, கொட்டிப் பாருங்கள் - பிள்ளைகளே
கொட்டிப் பாருங்கள் - நாவிலிட்டுத் தட்டிப் பாருங்கள்!
கடிக்காத பாம்பிருக்குது, கடித்துப் பாருங்கள்-செல்வங்களே
கடித்துப் பாருங்கள் - வளைத்திழுத்து நொடித்துப் பாருங்கள்!
இடுக்காத நட்டுவக்காலி இடுக்கிப் பாருங்கள் - அம்மாரே
இடுக்கிப் பாருங்கள் - பல்லிலிட்டுக் கொடுக்கிப் பாருங்கள்!
வேடிக்கையான தின்பண்டப் பொம்மைகளுடன் வேடிக்கையான பாட்டையும் கேட்டுச் சிறுவர் சிறுமியர் மட்டுமல்லாமல், சில பெரியவர்கள் கூட வந்து கூடினார்கள். பலர் நண்டையும் தேளையும் எடுத்துப் பார்த்து விலை கேட்டார்கள். முக்குறும்பன் விலையையும் பாட்டாகவே பாடினான்;
நண்டு நாற்பத்தைந்துகாசு, நாக்கிலிட்டால் கற்கண்டு,
நட்டுவக்காலி நாற்பதுகாசு, நாக்கிலிட்டால் இலட்டுதான்!
தேளு ஏழுபத்துக்காசு, தெவிட்டாத தேனு பாலுதான்,
பாம்பு எண்பத்தைந்து காசு, பாகு சர்க்கரை கரும்புதான்!
சிறுமி ஒருத்தி இடுப்பில் குழந்தையுடன் ஒரு தேளை வாங்கினாள். சிறிது நேரம் அவள் அதை வைத்துத் தம்பியை அச்சுறுத்தினாள். பின் கொடுக்கை அவள் கடித்துக் காட்டவே, சிறுவன் மீதி உடலுக்காக அழுதரற்றி அதை முறித்தெடுத்துத் தின்றுவிட்டான்.
விழா வேடிக்கையுடன் வேடிக்கையாகக் கடை விலைக்கு மூவிரட்டியாகத் தின்பண்டங்கள் விரைந்து விலையாகிவிட்டன.
மூன்றாவது ஊரில் முக்குறும்பன் விடியற் காலையிலேயே சந்தைக்குச் சென்று ஒரு மிடாவுடன் உட்கார்ந்தான். சந்தைக்கு வரும் வழி எங்கும் விடியற்காலத்திலேயே ‘இன்று பால் விலை படிக்கு ஐந்து காசு ஏற்றம். குறைத்து விற்க வேண்டாம்’ என்று எழுதி வைத்தான். மிடாவின் முன்னும் ‘இங்கே பால் படிக்கு ஐந்து காசு கூட்டி வாங்கப்படும்’ என்று எழுதி வைத்தான். காலையில் சந்தைக்குப் பால் விற்க வரும் பெண்கள், சிறுவர் சிறுமியர் யாவரும் அவனை அடுத்தனர், எல்லார் பாலையும் அளந்து குறித்துக் கொண்டு, மிடாவில் கொட்டிக் கொண்டான். மாலையில் பணத்திற்கு வரும்படி கூறினான்.
அன்று சிற்றுண்டிக் கடைகளுக்குப் பால் கிடைக்கவில்லை. சந்தைக்குள்ளேயே சிறுகுடி விற்பனையாளர். நீர்விடாய் உடையவர்கள் பாலுக்கு அலைந்தனர். முக்குறும்பன் உடனே ‘படிக்குப் பத்துக்காசு கூட்டி விற்கப்படும்’ என்று எழுதி ஒட்டினான். மிடாவில் முன்பே ஊற்றியிருந்த நீரும் இப்போது பாலாய் விட்டதனால், மாலை நேரத்திற்குள் அவனிடம் நிரம்பப் பணம் வந்து குவிந்தது. காலையில் பால் கொடுத்தவர்களுக்குரிய பணம் போக ஒரு பெருந்தொகை அவனிடம் இவ்வாறு எளிதாக வந்து சேர்ந்தது.
கெடுதலற்ற இக்குறும்புகளினால் முக்குறும்பனுக்குப் பணம் சேர்ந்தாலும், அவனுக்கு மனநிறைவு ஏற்படவில்லை. அவன் மேலும் பெருங் குறும்பாட்டத்துக்கான வழி வகைகளை எண்ணிச் சுற்றிக் கொண்டிருந்தான்.
வறுமையின் சோகச் சின்னமாகக் குருடர் பன்னிருவர் பிச்சை எடுத்துக் கொண்டு அவ்வழி வந்தார்கள். முக்குறும்பன் அவர்களை அணுகினான். ’அண்ணன்மாரே! நீங்கள் காலையில் என்ன சாப்பிட்டீர்கள்? என்று பேச்சுத் தொடங்கினான்.
’எங்களுக்குச் சாப்பாடேது, ஐயா! நாங்கள் நேற்றிலிருந்தே பட்டினியாய் அலைகிறோம். எந்த மகாராசாவாவது கொடுத்தால் தான் ஏதாவது வயிற்றைக் கழுவலாம்!" என்றனர்.
முக்குறும்பன் எல்லாரும் கேட்கும்படி ஒரு பெரு மூச்சு விட்டான்.
‘அதோ ஒரு பெரிய மாளிகை இருக்கிறது பாருங்கள். அது நல்ல அருந்தகம்தான். ஒரு நாளைக்காவது அங்கே போய் வயிறாரச் சாப்பிடுங்கள். இதோ ஆளுக்கு ஒரு வெள்ளியாகப் பன்னிரண்டு வெள்ளிகள்!’ என்றான்.
‘பொன்னு மகாராசா! நீங்கள் நீடுழி வாழ வேண்டும்’ என்று அவர்கள் நன்றியுடன் வாழ்த்தினார்கள். ஆனால், அவன் பணம் கொடுத்ததை எவரும் பார்க்கவில்லை. எல்லாரும் குருடர்கள் ஆனதால், ஒவ்வொருவரும் வேறொருவரிடம் அந்தத் தொகை கொடுக்கப்பட்டதாக எண்ணிக் கொண்டார்கள்.
பன்னிருவரும் அருந்தகம் சென்றார்கள். அருந்தக முதல்வன் முதலில் அவர்களை மனையிலேற்றவே மறுத்தான். ஆனால், அவர்கள் ஒரு நகரச் செல்வனிடமிருந்து பன்னிரு வெள்ளி பெற்று வந்ததாகக் கேள்விப்பட்டவுடனே, அரச மதிப்புத் தந்தான்.
அனைவரும் வயிறார உண்டார்கள்.
அருந்தகப் புறக்கூடத்தில் இளைப்பாறி மாலையே செல்வதாக அவர்கள் கூறினார்கள். முதல்வன் இதற்கும் இசைந்தான். மாலைச் சிற்றுண்டிக்கும் அவன் ஏற்பாடு செய்தான். ஆனால், மாலைச் சிற்றுண்டி முடிந்து அவர்கள் வெளியே புறப்படத் தொடங்கியதும் அவன் ‘எங்கே பணம்?’ என்று கேட்டான்.
குருடர் ஒருவர் பக்கமாக ஒருவர் முகந்திருப்பினர். ‘பணம் யாரிடம் இருக்கிறது. கொடு அண்ணேன்!’ என்றார்கள்.
ஒருவரிடமும் பணம் இல்லை என்பது அப்போதுதான் அந்த அப்பாவிக் குருடர்களுக்குத் தெரிந்தது.
‘ஐயோ பாவி, இப்படியும் ஏமாற்றுவானா, சண்டாளன்! இனி என்ன செய்வோம்?’ என்று அவர்கள் கைகளைப் பிசைந்தார்கள்.
ஆனால், முதல்வன் இப்போது சீறியெழுந்தான். அவர்கள் சொன்ன கதையை அவன் நம்பவில்லை. கேட்கச் சித்தமாகவு மில்லை. அவனை, அவர்கள் ஏமாற்றுவதாக எண்ணினான். அவர்களில் ஒருவன் கைக்கோலைப் பறித்து அவன் எல்லாரையும் நையப் புடைத்தான், பின் எல்லாரையும் மாட்டுக் கொட்டிலில் தள்ளி அடைத்தான். ‘பணம் வந்தாலாயிற்று; இல்லையானால் காவல் துறையாருக்குச் சொல்லிச் சரியான தண்டனை தருவேன்’ என்று கறுவினான்.
முக்குறும்பன் இப்போது மெல்ல அருந்தகத்துக்குச் சென்றான். ‘அருந்தகத்தில் என்ன கலவரம்’ என்று கேட்டு முதல்வனிடமிருந்து செய்தி அறிவதாகப் பாவனை செய்தான்.
‘ஐயோ பாவம், குருடர்கள்! எந்த நல்லருளாளராவது அவர்களுக்கு உதவ முன் வராமலிருக்க முடியாது. கட்டாயம் யாராவது வரத்தான் போகிறார்கள். அப்படி யாராவது வந்து உங்கள் பன்னிரண்டு வெள்ளியைக் கொடுத்து விடுவதாக ஏற்றுக் கொண்டால், அந்தக் குருடர்களை விட்டு விடுவீர்களல்லவா?’ என்று அவன் கேட்டான்.
முதல்வன் தாராளமாக இதை ஏற்றான்.
முக்குறும்பன் இப்போது அவ்வூர்ப் பெரிய கோயில் குருக்கள் வீட்டுக்குச் சென்றான்.
‘அடிகளே! இந்த ஊர் அருந்தக முதல்வர் சார்பாகத்தான் நான் உங்களிடம் வந்திருக்கிறேன். அவர்கள் வீட்டில் அவர் தாயின் நினைவுநாளைச் சிறப்பாகக் கொண்டாட எண்ணுகிறார். பன்னிரண்டு குருக்கள்மாருக்கு அன்று தனி விருந்தும் ஆளுக்கு ஒரு வெள்ளி காணிக்கையும் சால்வையும் தர விரும்புகிறார். அதற்காகப் பன்னிரண்டு பேரைத் தேர்ந்து அழைத்து வரும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால், மற்றக் காரியங்களை அவர் கவனித்துக் கொள்வாராம். இது பற்றித் தங்கள் விருப்பம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்!’ என்றான்.
குருக்கள் மனமுவந்து இதை ஏற்றுக் கொண்டார்.
முக்குறும்பன் இப்போது முதல்வனிடம் வந்து, ‘இவ்வூர்ப் பெரிய குருக்கள் ஐயா இந்தப் பன்னிருவர் பொறுப்பையும் தாமே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இனி, நீங்கள் குருடர்களை விட்டு விடலாமல்லவா?’ என்று கேட்டான்.
முதல்வர் தம் ஏவலாளன் ஒருவனைக் குருக்கள் ஐயாவிடம் அனுப்பி இது செய்தி உறுதி செய்து கொள்ள விரும்பினான்.
‘பன்னிரண்டு பேர்களின் பொறுப்பையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லியனுப்பினீர்களே! அதைக் கேட்டு உறுதி செய்ய முதல்வர் என்னை அனுப்பினார்’ என்று ஏவலன் குருக்களிடம் சொன்னான்.
’ஆகா, பன்னிருவர் செய்தி என் பொறுப்பு! என்றார் அவர்.
குருடர்களை அன்றே முதல்வன் திறந்து விட்டான். தப்பினோம் பிழைத்தோம் என்று அவர்கள் திரும்பிப் பாராமல் வெளியேறினர்.
இரண்டு நாட்கள் கழித்து ‘அருந்தக முதல்வன் குருக்களிடம் ஏவலனை அனுப்பினான். பன்னிரண்டு வெள்ளிகளையும் முதல்வன் கேட்பதாக ஏவலன் போய்ச் சொன்னான்.’
குருக்கள் பதறிப் போனார்.
‘ஏது பன்னிரண்டு வெள்ளி? பன்னிரண்டு குருக்கள் மாருக்குக் காணிக்கையுடன் ’உணவும் தருவதாகத் தானே சொல்லியிருந்தார்? பன்னிரண்டு பேரைச் சித்தம் செய்வதாக மட்டும் தானே ஒப்புக் கொண்டிருந்தேன்?’ என்றார் அவர்.
இருவரிடையேயும் பலநாள் சூடான வாக்குவாதமும் பேச்சு எதிர் பேச்சுச் சண்டைச் சச்சரவுகளும் நடந்தன. இடையிலே ஒரு குறும்பனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர அவர்களுக்கு நெடுநாளாயிற்று.
முக்குறும்பன் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்தான்.
முக்குறும்பன் குறும்புகளில் ஏமாற்றைவிட நகைச்சுவையே மிகுதி என்பதை இதற்குள் பலர் கண்டு கொண்டனர். அவன் புகழ் எங்கும் பரந்தது. அப்புகழில் ஈடுபட்டுக் கயத்தாற்றரசன் அவனுக்குச் சிறப்பு அழைப்புவிடுத்தான். அவ்வரசனிடம் கொம்மன், பொம்மன் என்ற இருவர் அரசவை விகடர்களாய் இருந்தனர். அவர்களுள் குறும்புப் போட்டிக் கேளிக்கையில் கலந்து கொள்ள வேண்டுமென்று அரசன் விருப்பம் தெரிவித்தான்.
அரசன் கொலுவில் கொம்மன். பொம்மனுடன் முக்குறும்பனுக்கும் சரியிருக்கை தரப்பட்டது. அரசன் போட்டியைத் தொடங்கி வைத்தான்.
"பேரவையோர்களே!
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வள்ளுவர் வாய்மொழியைச் செயற்படுத்திக் காட்டுவதே இன்றைய போட்டி. உங்கள் மூவரில் உச்ச அளவான உயர் பேரவாவைத் தெரிவிப்பவருக்குத் தனிப் பரிசாக நான் அரசிளஞ் செல்வனுக்குரிய ஆடையணி மதிப்பு அளித்து நூறு பொன் பரிசும் தர இருக்கிறேன்.
“இப்போது மூவரும் உங்கள் திறமையைக் காட்டுங்கள்”. அரசன் இவ்வாறு அறிவித்தான்.
முதலில் கொம்மன் எழுந்தான்.
‘அரசே! எனக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்பதை நான் இலக்கத்தால் எழுதிக் காட்ட வேண்டுமானால், அதற்கு வானமே தாளாக, கடலே மைப் புட்டியாக அமைய வேண்டும். வான முழுவதும் தாளாகக் கொண்டு அது நிறைய இலக்கமிட்டெழுதிய அந்தத் தொகையளவான பணத்தை அரசர் என்மீது சொரிய வேண்டும் என்பது என் விருப்பம்!’ என்றான்.
இது கேட்டு அவையோர் ஆரவாரித்தனர். அரசனும் புன் முறுவல் பூத்தான்!
உடனே பொம்மன் எழுந்தான்.
‘அரசே! என் நண்பன் கொம்பன் விரும்பிய அதே தொகையளவு பணத்தைப் பொன்னாகக் கொடுத்து, அதே அளவான பவளம் முத்து வைரம் போன்ற ஒன்பது வகை மணிகளை அவற்றுக்குத் துணையாக அரசன் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம். அத்துடன் வானத்து விண்மீன்களின் அளவான தொகையுடைய அரண்மணை மாட மாளிகை களையும், அப்பணத்தைச் சேமித்து வைக்குமிடமாக அரசன் தந்தருள வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்றான்.
இது கேட்டு அவையோர் முன்னிலும் முழக்கமாக ஆரவாரித்தனர். அரசன் தலைகுலுக்கி மகிழ்ந்தான்.
இப்போது, முக்குறும்பன் முறை வந்தது. அவன் எழுந்தான்.
‘அரசே! என் நண்பர்கள் இருவரும் தங்கள் இருவர் செல்வங்களுக்கும் உரியவனாக என்னைத் தேர்ந்தெடுத்துப் பத்திரம் எழுதி வைக்க வேண்டும். உடனடியாகச் செல்வங்களை நான் பெறும்படி அரசர் தாமதியாது அவ்விருவரையும் தூக்கிலிட்டு விட வேண்டும். வானுலகத்திலிருந்து என் நண்பர்கள் இருவரும் அரசர் காண என்மீது மலர்மாரி பொழிந்து வாழ்த்தியருள வேண்டும். இது தான் என் விருப்பம்!’ என்றான்.
அவையோர் ஆரவாரம் இப்போது கொலு மண்டபத்தையே அதிர வைத்தது. அரசனோ குலுங்கக் குலுங்க நகைத்தான்.
பரிசு முக்குறும்பனுக்கே அளிக்கப்பட்டது.
முக்குறும்பனின் குறும்புகள் இப்போது தமிழக முழுமைக்கும் ஒரு வேடிக்கை வினோதமாகத் திகழத் தொடங்கி விட்டது. முக்குறும்பன் என்ற பெயர் இப்போது மூவேந்தர் நாட்டுக்கும் உரிய முடிசூடாக் குறும்பரசன் என்ற பொருளுடைய தாயிற்று. ஆனால், வீணையில் விழுந்த உட்கீறல் போல, இந்தக் குறும்பாட்சியின் புகழுடன் புகழாக, அதனால் கொதித்தெழுந்த பகைவர், பொறாமைக்காரர் தொகையும் பெருகலாயிற்று. கொம்மனும், பொம்மனும் இப்பகைக் கும்பலுக்குத் தலைமை தாங்கினர்.
பகைக் கும்பலின் விடாமுயற்சி, இறுதியில், மன்னன் மனத்தையும் கயத்தாற்றுப் பெருமக்கள் அவையினர் பெரும்பான்மையோரின் மனத்தையுமே மாற்றிற்று.
பொதுமக்கள் குடியுரிமைக்கும் வணிகப் பெருமக்கள் தனியுரிமைக்கும் கோமக்கள் ஆட்சியுரிமைக்கும் கேடுகள் பல சூழ்ந்ததாக அவன்மீது மன்றத்தில் குற்றச்சாட்டுகள் பல எழுந்தன. இவற்றுக்காகத் தூக்குமேடை ஏறும்படி தீர்ப்பும் விதிக்கப்பட்டது.
தூக்கை எதிர்நோக்கி அவன் சிறையிலிருந்தபோதும், தூக்கு மேடையில் தண்டனை எதிர்நோக்கி நின்றபோதும் குறும்புகள் யாவுமே அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டதாகவே தோன்றிற்று. அதே சமயம் அவன் முகத்தில் வெறுப்பில்லை; சோகமில்லை; அமைதியே உருக்கொண்டது போல அவன் தோற்றமளித்தான்.
தண்டனையடையுமுன் இறுதியாக விடைபெறும் கட்டம் வந்தது. அப்போது அவன் என்ன பேசுவானோ என்று பலர் கவலையுடன் நோக்கியிருந்தனர்.
ஆனால், அவன் பேச்சில் அமைதி மட்டுமன்றி, முற்றிலும் மாறுபட்ட ஓர் எதிர்பாராத தொனியே தென்பட்டது.
’மன்னர் பெருமானே! மன்பேரவையோரே! என் நாட்டுப் பெருமக்களே!
’எனக்கு இட்ட தண்டனை முழுவதும் நேர்மையானது. அதை நான் மனமார, மனமகிழ்வுடன் ஏற்கிறேன்.
’உங்களிடமிருந்து இறுதி விடை பெற்றுச் செல்லுமுன் நான் நாட்டுக்கு இப்போதாவது ஏதேனும் நன்மை செய்து விட்டுப் போக விரும்புகிறேன்.
’குற்றம் செய்பவர்கள் நாட்டுக்குத் தீங்கிழைத்ததனாலேயே தண்டனை பெறுகிறார்கள்; ஆனால், அந்தத் தண்டனையிலும் கூட நாட்டுக்கு அவர்கள் ஒரு தீமை செய்யும்படி நேர்கிறது.
’ஒவ்வொரு தூக்குத் தண்டனையிலும் ஒரு புத்தம் புதுத் தூக்குக் கயிறு ஏற்பாடு செய்யப்படுகிறது. தூக்கி லிடுவதற் கென்று தக்க சம்பளத்துடன் ஒரு தனி வேலையாளும் தேவைப்படுகிறது. இதனால் நாட்டுக்கு எவ்வளவு வீண் செலவாகிறது பாருங்கள்! குற்றஞ் செய்தவர்களுக்கான இந்தச் செலவெல்லாம் குற்றம் செய்யாத நாட்டு மக்களாகிய உங்கள் பேரிலேயே சுமப்பானேன்? இவற்றைக் குறைத்தால், உங்கள் வரிப்பளு அந்த அளவுக்குக் குறையாதா!
’இப்போது என் தண்டனையிலிருந்தாவது இந்தச் செலவைக் குறைத்துப் பொதுமக்கள் செலவை மிச்சப்படுத்தும் படி நான் கோருகிறேன்.
’என்னைத் தூக்கிலிடுவதற்குப் புத்தம் புதுக்கயிறு வேண்டாம். பழைய கயிறே போதுமென்று தெரிவித்துக் கொள்கிறேன்.
‘என்னைத் தூக்கிவிடுவதற்கென்று ஒரு சம்பள ஆள் வேண்டாம். நானே என்னைத் தூக்கிவிட்டுக் கொண்டு அந்தப் பணியை ஏற்றுக் கொள்கிறேன்.’
கயத்தாற்று மன்றத்தில் அப்போது ஆளும் கட்சி குடியாட்சிக் கட்சியாகவே இருந்தது. அக்கட்சியாளர் உள்ளத்தை முக்குறும்பனின் இந்தத் திட்டம் கவர்ந்துவிட்டது. பொதுமக்களும் மன்னனும்கூட இத்திட்டத்தை நிறைவேற்று வதில் தடங்கல் எதுவும் இருக்க முடியாதென்று ஒத்துக் கொண்டனர்.
புதுக்கயிறு போயிற்று. பழங்கயிறு ஒன்று கொடுக்கப் பட்டது.
தூக்கிலிடும் அலுவலர்க்கு உடனே விடுதலை கொடுக்கப் பட்டது. தூக்குக் கயிறு முக்குறும்பனிடமே ஒப்படைக்கப் பட்டது.
முக்குறும்பன் தன்னைத் தானே தூக்கிலிட்டுக் கொள்ளும் காட்சி காண எல்லாரும் ஆவலாக நின்றனர்.
பழைய கயிற்றின் உறுதி பார்ப்பவன் போல, முக்குறும்பன் அதை வலுவுடன் இரு கையாலும் இழுத்தான். கயிறு முதலில் இரு துண்டாயிற்று. அவன் அதை முடியிட்டான். பின் அதைக் கழுத்தைச் சுற்றி மாலை போல அணிந்தான்.
’மன்னவரே, மன் பேரவையோரே! பெருமக்களே, தாய்மார்களே!
’நானே என்னைத் தூக்கிட்டுக் கொள்ளும் உரிமை யளித்ததற்கு என் மனமார்ந்த நன்றி.
’இன்று இந்தக் கயிறு அறுந்துவிட்டது.
’இனி ஒரு கயிற்றுச் செலவைக்கூட நான் உங்களுக்கு அளிக்க விரும்பவில்லை.
’உங்கள் பொன்னான நேரத்தை, அலுவல்களைக் கெடுத்து உங்களை இங்கே மீண்டும் வரவழைக்கவும் போவதில்லை.
’நானே இனி என் சொந்தச் செலவில், சொந்தக் கயிறு கொண்டு, என் சொந்தக் கழுத்தில், என் சொந்த நேரத்தில் தூக்கிலிட்டுக் கொள்கிறேன்.
‘வணக்கம்’.
அவன் சொல்வது என்னவென்று பிறர் அறியு முன்பாகவே அவன் சரெலென்று மன்றத்திலிருந்து நழுவிக் கூட்டத்திடையே கலந்து மறைந்து விட்டான்.
மன்னனும் பெருமக்களும் மக்களும் விழித்து நின்றார்கள்.
முக்குறும்பன் தூக்கிலிடப்படவில்லை. ஆனால், அவன் குறும்பாட்சி அன்றே தூக்கிடப்பட்டுவிட்டது. அவனையோ அவன் குறும்பையோ பற்றி அதற்குப் பின் யாரும் எதுவும் கேள்விப்படவில்லை.
ஊறுகாய்ப் பட்டாளம்
குற்றால மலைச்சாரலில் தேனருவிக் கரையோரத்தில் எலுமிச்சம்பழத் தோட்டமொன்று பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்திருந்தது. அதன் ஒரு கோடியில் ஒரு தனி எலுமிச்ச மரம் ஒதுங்கி நின்றிருந்தது.
‘அருவியிலே சென்று குளிப்போம்!’ என்று கூறித் திரும்பியது போல, அது தேனருவியை நோக்கிச் சாய்ந்திருந்தது. ஆனால், அடுத்த கணமே, ‘ஏன் கசத்திலேயே சென்று பாய்ந்து குதித்தாடுவோமே!’ என்ற புதிய கருத்துக் கொண்டு பாய எழுந்தது போல, அதன் உச்சிக் கிளை கசத்தை நோக்கித் தலைகுப்புறச் சாய்ந்து கவிந்திருந்தது.
தோட்டத்தில் அந்த மரத்துக்கென்று ஒரு தனி உயிரே இருந்ததாகத் தோன்றிற்று. அது ஒரு தனி இயல்பும் தனி வளமும் உடையதாய் இலங்கிற்று.
மற்ற மரங்களில் காய்கள் பச்சையாகவும் கனிகள் மஞ்சளாகவும் இருந்தன. பெருமாங்காயின் அளவு கடந்து அவை வளரவில்லை. சுவையிலும் பொதுவாக எலுமிச்சம் பழத்துக்குரிய நறும்புளிப்புச் சுவையே அவற்றுக்கு இருந்தது. ஆனால் அருவிக்கரைத் தனி மரத்தில் மட்டும் காய்கள் பசு நீலமாகவும், கனிகள் செழும் பசும்பொன் வண்ணமாகவும் இருந்தன. அவை சிறு தேங்காய் அளவில் பருத்து வளர்ந்திருந்தன. அத்துடன் அவை எலுமிச்சம் பழத்துக்குரிய நறும்புளிச் சுவையுடன் நாரத்தைக்குரிய சிறு கசப்பும், கடாரங்காய்க்குரிய சிறுகார்ப்பும், நெல்லிக் கனிக்குரிய சிறு துவர்ப்பினிப்பும், கொடி முந்திரிப் பழங்களுக்குரிய சிறு புளிப்பினிப்பும் கலந்த கூட்டுச் சுவை நலம் உடையவையாய் அமைந்திருந்தன.
தனி மரத்தின் உச்சிக் கிளையிலே நெடுநாளாக ஒரு காய் தொங்கிற்று. பிஞ்சுப் பருவத்தில் இலைகளிடையே ஓர் இலை போல அது மறைந்து கிடந்தது. காய்ப் பருவத்திலே அது இலைக் கொத்துக்களிடையே ஓர் இலைக் கொத்தாகப் பறவைகளின் கண்ணுக்குத் தப்பி வளர்ந்தது. கொப்பு கிளைகளிடையே பதுங்கியிருக்கும் பறவை போல, தோட்டக்காரர் குத்தகைக்காரர் கண்களுக்குத் தப்பி அது பெரிதாயிற்று. சிறுவர் சிறுமியர் கல்லுக்கும் கோலுக்கும் கூடத் தப்பி அது தேங்காய் அளவு கடந்து ஒரு முழு இளநீரளவாகப் பெருத்து வளர்ச்சியுற்றது. கவிந்து கிடந்த உச்சிக் கிளையின் நுனியிலிருந்து அது தலைகீழாகத் தொங்கிற்று. கசத்தின் மையமான மடுவையே குறியாகக் கொண்டு நீள்தவம் கிடப்பது போல அது தோற்றமளித்தது.
தோட்டத்தின் உயிரெலாம் தனி மரத்திலும், தனி மரத்தின் உயிரெலாம் அவ்வுச்சிக் கிளையிலும், அவ்வுச்சிக் கிளையின் உயிரெலாம் அத்தனிப் பெருங்காயிலும் புகுந்து செறிந்து உருப்பெற்றதுபோல அக்காய் விளங்கிற்று. ஏனெனில், அது உண்மையிலேயே தோட்டத்தின் பல பருவ வாழ்க்கைச் செய்திகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கண்ணாரக் காணும் பேறு பெற்றிருந்தது.
அருவிக்கரைத் தோட்டத்தின் வளம் பெரிது. ஆனால், அதனைக் கொள்ளை கொள்ளாத உயிரினம் இல்லை எனலாம். தேனருவித் தென்றலிலே திவலைகளுடன் திவலைகளாக மிதந்து வந்த வண்டினங்கள் பூப்பருவத்திலே அதன் மணத்தைச் சூறையாடின; பிஞ்சுப் பருவத்திலே மாவடுப் போன்ற அதன் இளங்காய்களைப் புள்ளினங்கள் கொத்திக் கொத்தித் தின்றன. குறவர்குடிச் சிறுவர் சிறுமியர் அதன் உதிர் காய்களை அரித்துத் தின்றனர். உதிராக் காய்கனிகளையும் அவர்கள் கல்லெறிந்தும் கோலெறிந்தும் சிதைத்து வீழ்த்திக் கொக்கரித்தனர்.
தனி மரத்தின் பேரெலுமிச்சங்காய் இத்தனையையும் தொடர்ந்து கண்டு கண்கலங்கியிருந்தது. வண்டுகளின் முரல்வதிர்வில் அதன் உள்ளம் அதிர்வுற்றது. பறவைகளின் இறகுகள் சலசலத்தபோது அதன் உள்ளுயிரும் கலகலத்தது. இனிய தோற்றத்துடன் பசப்பி வந்த இந்த அழகுருவங்கள் தன் இனத்தை அழிக்கும் சிறிய எமன் வடிவங்களே என்பதை அது அறிந்திருந்தது. சிறுவர் சிறுமியரின் கல்லும் கோலும் தன் தோழர் தோழியர்களின் உடலைச் சிதைத்துக் குருதி கொப்பளிக்க வதைத்த காட்சியை அது என்றும் மறக்க முடியவில்லை.
இவ்வழிவுகள் எல்லாவற்றையும்விடக் கவலை தரும் செய்திகளையும் பெருங்காய் தன் இனத்தின் வாழ்வில் கண்டிருந்தது.
தோட்டத்தின் காய்கனிகளுக்குப் பொதுவாகவும், தனி மரத்துக் காய்கனிகளுக்குச் சிறப்பாகவும் தென்பாண்டி நாடெங்குமே பெருமதிப்பு இருந்து வந்தது. தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை முதலிய பல்வேறு நகரங்களின் சந்தைக் கடைகளில் அவற்றின் பருவ வருகைக்காகச் செல்வரும் வணிக மக்களும் ஏங்கிக் காத்துக் கிடந்தனர். வந்த காய்கனிகள் உடனுக்குடன் செலவாய்விடுவதால், பருவந்தோறும் அடுத்த பருவ வரவை எதிர்நோக்கி அவர்கள் தவமிருந்தனர். இந்நிலையில் குத்தகைக் காரர் ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து தடவை, சில சமயம் ஆண்டுக்கு ஆறு அல்லது ஏழு தடவை தோட்டத்தின் வளத்தை வாரித் திரட்டி வண்டி வண்டியாக அந்நகரங்களின் சந்தைகளுக்கு அனுப்பிய வண்ணமாக இருந்தார்கள்.
தன்னுடன் பிறந்து வளர்ந்த மற்றக் காய்கனிகள் இவ்வாறு பருவந்தோறும் ஆயிர நூறாயிரக்கணக்காக எங்கே அள்ளிக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பெருங்காய் அறிய முடியவில்லை. அவை என்ன ஆயின என்பதும் அதற்குத் தெரிய வழி இல்லாமல் போய்விட்டது. ஆனால், அவை எங்கே சென்றாலும் என்னவானாலும், அவற்றின் வழி மற்ற அழிந்த பழங்களுடனொத்த மீளா வழியே என்பதை அது அறிந்து கொள்ள நெடுநாளாகவில்லை.
அழிவுக்கு அது ஆளாகவில்லை. ஆனால், ஒவ்வொரு படியிலும் அது அழிவை எதிர்நோக்கித் துடிதுடித்திருந்தது. துடிப்பின்மேல் துடிப்பாக அதன் வாழ்வே ஓர் இனத் துடிப்பாயிற்று.
அதன் இனம் துடிக்கவில்லை. ஏனெனில், அது தன் அழிவை அறியாமலே அலையலையாக நாள்தோறும், பருவந்தோறும் அழிவுக்கு இரையாகிவந்தது. ஆனால், இன அழிவு கண்டு துடித்த பெருங்காய், தான் அழியாவிட்டாலும் அழிந்த தன் இனத்தோழர் தோழியர்களுக்காக அலையலை யாகத் துடி துடித்தது. இனத்துடிப்பே அதன் உயிர்த் துடிப்பாக, இன அழிவலைகள் கடந்த அதன் வாழ்வே அதன் உள்ளமாக, உள்ளத்துடிப்பாக, அவற்றின் அனுபவங்களே அதன் உள்ளறிவுரமாக வளர்ந்தது. இன உயிர் அதன் உள்ளே கருக்கொன்டு, எப்படியாவது இன அழிவுச் சூழலிலிருந்து தப்பிப் புதிய இன வாழ்வுக்குரிய ஒரு காப்பிடம் காண வேண்டுமென்று அவாக் கொண்டது.
சிறுவர், சிறுமியர், குத்தகைக்காரர் பேச்சுக்களை அது நீண்டநாள் உற்றுக் கேட்டிருந்தது. அதன் மூலம் காய்கனிகளைக் கொன்றுண்ணும் கொடு விலங்கும், புட்களும், கொடியோர்களும் உலகில் உண்டு என்றும்; அதுபோலவே அவற்றைக் கொன்றுண்ணாத அருள் உள்ளங் கொண்ட உயிர்களும் அருளாளர்களும் உண்டு என்றும் அறிந்து கொண்டது. எப்படியாவது கொடியோர் சூழல்களிலிருந்தும் கொடிய உயிர்களின் சூழலிலிருந்தும் தப்பி ஒதுங்கி இனவாழ்வு வாழவே அது கனவு கண்டது. தவம் புரிந்தது.
இறுதியில் ஒருநாள் அதன் கனவும் தவமும் ஈடேறும் காலம் வந்தது. அது, அன்று, கிளையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தது. ஆயினும், அது நிலத்தில் விழுந்து பகைச் சூழலுக்கு ஆளாகவில்லை. நீரில் விழுந்து அமிழவுமில்லை. நீரில் விழுந்த ஒரு தேக்கிலை அதைத் தன் மீது தாங்கிக் கொண்டது. அதையே புணையாகக் கொண்டு. அது தேனருவிக் கசத்தில் சிறிது நேரம் வளைய வளையச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்தது. பின் அது சிற்றாற்றின் நேர் நீரோட்டத் திலேயே புகுந்து பெருமிதக் கோலத்துடன் இறுமாந்து விரைந்து மிதந்தோடிற்று.
சிற்றாற்றின் ஓரத்திலே கரையுடன் கரையாக வண்டல் படிந்த நிலங்கள் இருந்தன. இவற்றில் பள்ளமான இடங்களில் வெங்காயப் பாத்திகளும், சற்று மேடான இடங்களில் வெள்ளைப் பூண்டுப் பாத்திகளும் வெண்பசுங்கோலமிட்டு இழை இழையாக வளர்ந்திருந்தன. நீர்க் கால்கள் அவற்றிடையே நெளிந்தோடி ஆற்றில் வந்து கலந்த காட்சி பெருங்காய்க்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆயினும், அது, அதன் அழகில் மட்டும் ஈடுபடவில்லை. அங்குள்ள உயிர்களின் வாழ்வுக்காகவே அங்கு வாய்த்தது. ’அந்தோ, கொப்புகள்மீது வளரும் காய்கனிகளையே மனிதர் பறித்துச் சிதைக்கிறார்களே! நிலத்துடன் நிலமாகக் கிடக்கும் இச்சிறு பயிர்களை அவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்?" என்று பெருங்காயின் உள்ளம் உருகிற்று.
அச்சமயம், நீர்க்கால்கள் மூலம் ஏற்பட்ட சிறு மண் கரைவினால், ஒரு பெரிய வெங்காயப் பூண்டும், ஒரு பருத்த வெள்ளைப் பூண்டும் ஆற்றருகே மிதந்து வந்தன. தேக்கிலைப் படகிலே ஒய்யாரமாகச் செல்லும் எலுமிச்சங்காயைப் பார்த்தவுடனே அவை ஒரு சிறிது அச்சத்துடன் அதனருகாக ஒதுங்கி ஒதுங்கி வந்தன.
‘எங்கே செல்கிறீர்கள், தம்பிமார்களே?’ என்று பேரெலுமிச்சங்காய் கனிவாகக் கேட்டது.
‘முழுதும் பெரிதாக வளர்ந்துவிட்டால் மனிதர்கள் எங்களை அரிந்து அரிந்து பாழ் பண்ணிவிடுகிறார்கள். அதற்கு முன் தப்பிப் பிழைத்தோட எண்ணித்தான் இப்பக்கமாக வந்தேன். எலுமிச்ச அண்ணா!’ என்றது வெங்காயம்.
அதன் முடியிலுள்ள இளந்தாள்கள் காற்றலைவில் மிதந்தாடின.
‘எலுமிச்சம்பழ அண்ணா! நானும் வெங்காய அண்ணனைப் போலவே தப்பியோடிப் பிழைக்கவே வருகிறேன்’ என்று அடங்கிய குரலில் கூறிற்று வெள்ளைப் பூண்டு,
கனிவுடன் நோக்கியிருந்த எலுமிச்சம் பழத்தின் முகத்தில் இப்போது புதிய தெம்பு ஏற்பட்டது.
‘அப்படியா, சரி! தாராளமாக என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள். நாம் ஒன்று சேர்ந்தால், தப்பிப் பிழைத் தோடித்தான் வாழ வேண்டுமென்றில்லை. தேவைப்பட்டால் நம் பகைவரை எதிர்த்து நின்றே போராடி நாம் வெற்றி வீறுடன் வாழலாம்’ என்று அது இறுமாப்புடன் பேசிற்று.
இவ்வளவு சீரிய துணையும் தலைமையும் கிடைத்த பெருமையில் வெங்காயமும் வெள்ளைப் பூண்டும் தலை தூக்கி நின்றன. படைத் தலைவனைப் பின்பற்றிச் செல்லும் மெய்க்காப்பாளர்போல அவை வீறு நடையிட்டுத் தலைவனைப் பின்பற்றின.
ஆற்றின் ஒரு வளைவிலே ஒரு சாதிக்காய் மரமும் மிளகாய்த் தோட்டமும் இருந்தன. சாதிக்காய் மரத்திலிருந்து முதிர்ந்த விளைந்த ஒரு சாதிக்காய் கீழே விழுந்து உருண்டோடி ஆற்றுநீரில் மிதந்து வந்தது. அதனைத் தொடர்ந்து செக்கச் செவேலென்று முற்றிப் பழுத்த ஒரு மிளகாயும் மிதந்தோடி வந்தது. எலுமிச்சம்பழப் படைவீரர் அவற்றையும் தம்முடன் சேர்த்துக் கொள்ளலாமா என்று தமக்குள் பேசிக் கொண்டனர். ஆனால், புதிய வீரர்கள் அவர்கள் அழைப்புக்குக் காத்திருக்க வில்லை. தேக்கிலையில் ஆளுக்கு ஒரு கோடியைப் பிடித்துக் கொள்ள பெருமையில் எலுமிச்சங்காய் பொருமிதத்துடன் தலையசைத்தது. வெங்காயமும் வெள்ளைப்பூண்டும் கைகொட்டி ஆர்ப்பரிக்க விரும்பின. ஆனால், அவற்றின் தலையிலுள்ள தாள்கள்தான் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டன. தமக்குரிய பெருமை மதிக்கப்பட்டதென்ற இறுமாப்புடன் மிளகாய் துப்பாக்கிப் படை வீரன் போலப் பின்னோக்கி விறைப்பாகச் சாய்ந்தமர்ந்து கொண்டது. சாதிக்காயோ இரண்டு குட்டிக்கரணங்களிட்டுக் குதித்துத் தேக்கிலை மீதே கும்மாளமிட்டு அமர்ந்தது.
வளைவின் ஒரு மேட்டில் சில கடுகுச் செடிகள் நின்றிருந்தன. எலுமிச்சங்காய்ப் பட்டாளம் செல்லும் இறுமாந்த போக்கைக்கண்டு அவை சிரித்தன. ஆனால், முற்றிய ஒரு நெற்றியிலுள்ள கடுகு விதைகள் சிரிப்பின் வேகத்தில் தெறித்துத் தேக்கிலையிலேயே போய் விழுந்தன. எலுமிச்சங்காய்ப் படைவீரர் இந்தக் கடுகு விதைகள் மீது சீறி, அவற்றை வெளியேற்ற முனைந்தனர். ஆனால் கடுகுகள் உருண்டுருண்டு அவர்கள் பிடியில் விழாமல் வழுகிக்கொண்டே அவர்கள் காலடிகளை வருடின.
மிளகாய்க்கு அவற்றின்மீது பாசம் ஏற்பட்டது.
‘என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. ஆனால் இப்படி வெடித்தோடும் இரவைக் குண்டுகள் இல்லை. இவை நம்முடனேயே வரட்டுமே’ என்றது
எலுமிச்சம்பழத் தலைவன் தலையசைக்க, மற்ற வீரரும் உடலசைத்து இணக்கம் தெரிவித்தனர்.
கடுகுகளும் படைவீரருடன் படை வீரர்களாக உடன் சென்றன.
எலுமிச்சங்காய்ப் பட்டாளத்தின் தேக்கிலைப் படகுக்குரிய இறுமாப்பைக் குலைக்க வருவதுபோல, அதன் எதிராக ஒரு பெரிய படகு தண்டோச்சி வந்தது. தேக்கிலையின் அருகாகப் படகு செல்லும் போது தண்டுகளில் ஒன்று தேக்கிலையைக் கவிழ்த்து விடுமோ என்று தோன்றிற்று. எலுமிச்சங்காயும் அதன் மெய்காப்பளர்களும் படை வீரர்களும் இப்புதிய பகையை எதிர்த்துப் போரிட முனைந்து குதித்து நின்றார்கள். ஆயினும், அவர்கள் தலைக்கு வந்த பேரிடர் போராட்டமில்லாமலே தலைப்பாகையுடன் ஏகிற்று. தண்டு தேக்கிலையை அமிழ்த்தி விடாமல், அதனை இன்னும் வேகமாகவே பின்னோக்கித் தள்ளி விட்டுச் சென்றது.
படகிலிருந்து உப்பு மூடைகளில் ஒன்றின் துளையிலிருந்து இச்சமயம் ஒரு குத்து உப்புத் தேக்கிலையின் மீது சிதறிற்று.
உப்பு மணிகளில் ஒன்றிரண்டு எலுமிச்சங்காயின் தலைமீது தாக்கின. மீந்தவை அதனைச் சூழக் குளியலாகக் கிடந்தன. படைவீரர் இது கண்டு ஆரவாரித்தனர். ஏனெனில் இது, தம் தலைவனுக்குக் காட்டப்பட்ட உயர் மதிப்பு என்று அவர்கள் கருதினர். உப்பு மணிகளும் உண்மையில் மிகவும் மகிழ்ச்சி கொண்டன. படகிலுள்ள மனிதப் பகைவரிடமிருந்தும், ஆற்று நீரிலிருந்தும் தம்மைக் காத்த தேக்கிலையினிடமும், அதன் எலுமிச்சங்காய்த் தலைவனிடமும் அவை தலைதாழ்த்தி நன்றியும் வணக்கமும் தெரிவித்தன. பேரெலுமிச்சங்காயின் அகன்ற அருளுள்ளமும் மற்றப் படைவீரரின் ஆதரவும் எளிதில் உப்பு மணிகளையும் பட்டாளத்துடன் சேர்த்துக் கொண்டன.
இவ்வாறு அருவிக்கரைத் தோட்டத்தில் தன் இனத்தவரை விட்டுப் பிரிந்து வந்த பேரெலுமிச்சங்காய் தன் பயணத்திடையே ஒரு பட்டாளமே திரட்டி அதன் தலைவனாகச் செம்மாப்புடன் முன்னேறிற்று. புதிய வரவேற்புகள், புதிய ஆள் வலிமை ஆகியவற்றின் பெருமித மகிழ்ச்சி தோன்றப் பட்டாளத்து வீரர் நிரோட்டத்தில் சுழன்று சுழன்று குதித்தாடிச் சென்றனர்.
மலைப்பாங்கான இடங்கள் தாண்டி, நாட்டுப் பகுதியில் புகும் இடத்தில் சிற்றாற்றின் நடுவே ஒரு பெருந்திடல் உண்டு. அதன் பெரும்பகுதியிலும் மூங்கிற் காடுகளும் முட்புதர்களும் வளர்ந்திருந்தன. ஆனால், அதன் ஒரு பகுதி மணற்பாங்காகவும் புற்பரப்புச் சூழ்ந்ததாகவும் இருந்தது. ஒரு பெரிய படரால மரம் அப்பகுதிக்கு நிழலும் குளிர்ச்சியும் அளித்தது. இனிய பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கி இசை பரப்பின. திடலின் முகட்டில் உள்ள ஒரு பாறை இருபுற நீரோட்டங்களுடனும் கைகலந்து நின்று. திடலின் இப்பகுதிக்குரிய அழகுக்கு அழகு செய்தது.
எலுமிச்சங்காய்ப் பட்டாளமும் இத்திடலையே தமக்குரிய நல்ல காப்பிடமாகக் கொண்டு, மணற் பாங்காயிருந்த இடத்தருகேயுள்ள ஒரு முட்புதரிடைய ஒதுங்கிற்று.
சிற்றாற்றுத் திடலில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அடிக்கடி வந்து ஆடி விளையாடிப் பொழுது போக்கிச் செல்வதுண்டு, முட்புதரின் மறைவிலிருந்த தேக்கிலை அவர்கள் கண்களில்படவில்லை. எலுமிச்சங்காய்ப் படைவீரரும் அவர்களிடம் நீடித்து அச்சங் கொள்ளவில்லை. ஏனெனில், தம்மையும் அறியாமல் அப்படைவீரர்கள் கள்ளங்கபடமற்ற அம் மாணவ மாணவியர் பேச்சுக்களிலும் குறும்பாட்டங்களிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.
மாணவன் ஒருவன் ஒரு சிறுமியைக் கையில் எடுத்து, ‘என் எலுமிச்சம்பழமே!’ என்று கொஞ்சினான். சிறுமி அவன் கன்னத்தைக் கிள்ளவே, அதைக் கண்ட மற்றொரு மாணவன் ‘ஏதேது, கடுகு சிறுத்தாலும் காரத்துக்குக் குறைவில்லை’ என்றான்.
மாணவி ஒருத்தி ஒரு சிறுவன் காதைப்பிடித்துத் திருகி, என் சாதிக்காய்ப் பெட்டியே! இப்படி வந்து உன் அக்காமார் மனமகிழ ஓர் ஆட்டம் ஆடிக் காட்டு, பார்க்கலாம்’ என்று அழைத்தாள்.
தங்கள் பேரும் புகழும் இவ்வாறு மாணவ உலகில் அடிபடுவது கேட்டுப் படைவீரர் எல்லையிலா மகிழ்ச்சி கொண்டார்கள். தம் ஒளிவிடத்திலிருந்து வெளியேறித் தாமும் அவர்களுடன் சேர்ந்து விளையாடலாமா என்று கூடக் கடுகு கருத்துத் தெரிவித்தது.
‘எதற்கும் அவசரப்படக்கூடாது. பொறுத்துப் பார்க்கலாம்’ என்றது மிளகாய், மிளகாயின் கருத்தையே பேரெலுமிச்சங்காய் ஆதரித்தது.
மாணவர் தலை கோதிக் கொள்ளுவதற்குக் கொண்டு வந்திருந்த எண்ணெய் புட்டியொன்றை மறதியாக ஒரு நாள் வைத்துவிட்டுப் போயினர். மற்றொருநாள் மாணவியர் மஞ்சள் பொடி வைத்த தாள் மடக்கொன்றை விட்டுச் சென்றனர். இவ்விரண்டும் மெல்லத் தேக்கிலைப் படைவீரர் பக்கம் வந்து அவற்றுடன் உரையாடி நட்புக் கொண்டன.
படைவீரர் வரலாறும் நோக்கமும் கேட்டறிந்த போது, புதிய நண்பர்கள் அவர்களிடம் முன்னிலும் மிகுதியான பரிவும் பாசமும் காட்டினர். தாமும் பல இடர்களுக்கு ஆளாகித் தற்செயலாய்த் தப்பி வந்ததை எடுத்துரைத்து அவர்களும் படை வீரர்களுடன் சேர்ந்து கொள்வதாய் வாக்களித்தனர். ஆயினும் மாணவ மாணவியர்களிடம் அவ்வளவு நம்பிக்கை கொள்வது தவறு என்றும், அந்த இடத்தை விட்டு நகர்வதே நல்லது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
திடலை விட்டுத் தேக்கிலை மீண்டும் பயணம் புறப்பட்டது. ஆனால், இத்தடவை பயணம் முன்போல் இடையூறற்றதாக இல்லை. பாறைகளிடையே நீர் பல விடங்களில் கழிந்தோடிற்று. சில இடங்களில் ஆறு சிறுசிறு நீர் வீழ்ச்சிகளில் தாண்டிக் குதித்துச் சென்றது. இச்சூழிகளாலும் நீர் வீழ்ச்சிகளாலும் தேக்கிலைப் படகு பலவகை அவதிகளுக்கு ஆளாயிற்று. இனி, தேக்கிலை நீடித்த பயணம் தாங்காது என்று பேரெலுமிச்சங்காய் கண்டது. அது ஆவலுடன் மீண்டும் ஒரு தங்கிடம் தேடிற்று.
ஆறு இப்போது வரவர வேகம் குறைந்தது. ஆயினும் அது அகலமும் ஆழமும் வேக ஆற்றலும் உடையதாயிற்று. அதன் நடு நீரோட்டத்தின் குறுக்காக இப்போது மற்றொரு திடல் தென்பட்டது. இது மாணவர் மாணவியர்கள் அணுக முடியாத படி நாற்புறமும் நெடுந்தொலை நீரால் குழப்பட்டிருந்தது. அத்துடன் கிட்டத்தட்ட முழுதும் முட்காடாகவே இருந்தது. நடுவே இங்கும் ஒரு மரம் இருந்ததாயினும் இது பாலை மரமாயிருந்ததனால், விலங்கு, பறவை, மக்களுக்குக் கவர்ச்சியற்றதாக அமைந்திருந்தது.
வாழ்க்கை அனுபவத்துடன் இப்போது பயண அனுபவமும் மிகப் பெற்ற பேரெலுமிச்சங்காய் தேக்கிலைப் படகை இத்திடலிலேயே செலுத்திற்று. படகு இப்போது மிகவும் சின்னாபின்னப்பட்டுப் போயிருந்தாலும், பேரெலுமிச்சங்காய் அதை, முன்னிலும் ஆழ்ந்த முட்புதர்களிடையே செலுத்திப் பாதுகாப்புத் தேடிற்று.
புதிய திடலில் படைவீரர் வாழ்க்கை நெடுநாள் அமைதியாகக் கழிந்தது. ஏனெனில் அத்திடலை எவரும் அணுகியது கிடையாது. அப்படி ஒரு திடல் இருக்கிறது என்பதே சூழ்புல மக்களுக்குத் தெரியாது.
பேரெலுமிச்சங்காய் இப்போது பேரெலுமிச்சம் பழமாகிச் செழும்பசும்பொன் வண்ணம் பெறத் தொடங்கிற்று. வெங்காயம் முதலிய மற்றப் படை வீரர்களும் திடலின் வறட்சியில் வறண்டு தம் காரம் மேலும் காரமாகப் பெற்றனர்.
இச்சமயம் தென்காசிப் பாண்டியர்கள் தம் முன்னோர் பழம் புகழையெல்லாம் புதுப்பித்துத் திருமகளும் விறல் மகளும் கலைமகளும் தனித்தனியே குடைபிடிக்க முத்தமிழ்த் தவிசிருந்து முக்குடைக் கீழ் ஆண்டு வந்தனர். ஆண்டவன் திருப்பணியில் ஒரு கையும், ஆண்டியர் திருப்பணியில் ஒரு கையும் ஈடுபட்ட போதிலும், ஆண்டகைப் புலவர்க்கு அவர்கள் இரு கையாலும் வாரிக் கொடுத்து வந்தனர் என்னும் பெயர் தென்றலுடன் தென்றலாகத் தென் பாண்டி நாடெங்கும் வீசிற்று. குறவர்குடிப் பெருமக்கள் இதில் பங்கு கொள்ள நினைத்து, அதற்கென ஒரு முத்தமிழ்ச் சங்கமே அமைத்திருந்தனர். முப்பதாண்டு உழைப்பின் பேரில், குறவர் பெருமக்களின் முத்தமிழார்வத்துக்கும் முத்தமிழ்ப் புலமைக்கும் இலக்காக ஒரு முத்தமிழ்க் குறவஞ்சி உருவாக்கப் பட்டது. முப்பது ஊர்க்குடியாண்மை மக்கள் திரண்டு அதனைத் தென்காசிப் பாண்டியனிடம் சென்று ஆடிப்பாடி நடித்து அரங்கேற்றினர்.
பாண்டியனளித்த பரிசல்களை எல்லாம் கரை வழியே வண்டிகளிலும் ஆனை குதிரைகளிலும் ஏற்றிக் கொண்டு குறவர் பெருமக்கள் தம் மலைநாடு நோக்கி மீண்டார்கள்.
வஞ்சியாடிய வஞ்சியர்கள் மட்டும் ஆனை குதிரை வண்டிகளில் செல்ல ஒருப்படவில்லை. சிறிது கட்டுச் சோற்றுடன் படகிலேறிச் சிற்றாறெல்லாம் ஒரு குறவஞ்சி யாறாக்கி அதன் நீரோட்டத்தை எதிர்த்துத் தண்டுகைத்துச் சென்றனர்.
ஒருநாள் பொழுது விடியுமளவில் அவர்கள் பேரெலுமிச்சங்காய்ப் படைவீரர் தங்கியிருந்த திடலுக்கே வந்து, அதிலேயே பகல் நேரம் கழிக்க எண்ணினர். மனிதர் சுவடுபடாத அத்திடலில் அன்று விறலியரின் ஆடிய பாதங்கள் தாளத்துடன் மிதித்து நிலம் துவைத்தன; பறவைகள் தாளத்துடன் மிதித்து நிலம் துவைத்தன; பறவைகள் பாட்டைக் கேட்டறியாத திடல், அன்று, பறவைகளும் கேட்டறியாத இன்னிசைக் கீத அலைகளில் மிதந்தது.
உலகை வெறுத்தாலும் படைவீரர் தமிழிசை வெறுத்தறியாதவர்கள். அந்த ஆட்டத்திலும் பாட்டிலும் அவர்கள் முழுதும் சொக்கியிருந்தனர். ‘வாழ்ந்தால் இம்முத்தமிழ் முழக்கில் வாழ வேண்டும். மாண்டாலும் இம் முத்தமிழ் முழக்கினிடையே மாள்வது விரும்பத்தக்கதேயாகும்’ என்றது கடுகு. மிளகாய் சீறி ‘ஏன் இப்படி அபசகுனமாகப் பேசுகிறாய்’ என்று கண்டித்தது.
உச்சிவேளை சாய்ந்ததும் வஞ்சியர் ஓடியாடிப் பாடி ஓய்ந்து உணவுக்காக அமர்ந்தனர். அங்கே மறைந்து கிடந்த தேக்கிலையைக் குவித்து ஒருத்தி சிற்றாற்று நீரை அள்ளி வந்தாள். மற்றொருத்தி கட்டுச் சோறவிழ்த்து ஆளுக்கு ஒரு கூறாக அள்ளிக்கொடுத்தாள். அவர்கள் உண்ணத் தொடங்கினர் ஆனால், ஒரு சிறுமி வெறுஞ் சேற்றை எப்படி உண்பது என்று சிணுங்கினாள். பரிமாறிய நங்கை கட்டுச் சோற்றுடன் இருந்த மாங்காயில் ஒரு துண்டு கொடுத்தாள். ஆனால், சிறுமி அப்போதும் அடம் பிடித்தாள். ‘எனக்கு மாங்காய் எதற்கு? எங்கம்மா வந்திருந்தால் எலுமிச்சங்காய் ஊறுகாய் கொண்டு வந்து தந்திருப்பாளே, எவ்வளவோ அமுதமாயிருக்குமே’ என்று அவள் அழுதாள்.
இதுகேட்ட எலுமிச்சங்காய்க்கு ஒருபுறம் தன்னை யறியாமல் பெருமித மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், அடுத்த கணம் மாண்ட தன் இனத்தவர் உருவமெல்லாம் அதன் கண்முன் வந்து நிழலாடிற்று.
சிறுமியின் அழுகையை அமர்த்த எண்ணிய நங்கை ‘இவளுக்கு எங்கிருந்தாவது யாராவது எலுமிச்சங்காய் ஊறுகாய் செய்து கொண்டு வரப்படாதா?’ என்று கேட்டுச் சிரித்தாள்.
மற்றொரு நங்கை ஏதோ நினைத்தவளாய்த் திடுமென எழுந்து சென்றான்.
தேக்கிலையை எடுத்த இடத்தில் அதனடியில் ஏதோ ஒரு பெரிய காய் கிடந்ததை அவள் கவனித்திருந்தாள். இப்போது அவள் ஓடிச் சென்று அதை எடுத்து வந்தாள். அதைக் கையில் வைத்துப் புரட்டி மோந்து பார்த்தாள். ‘அடியம்மா, நம்ம இராசாத்திக்கேற்ற இராச எலுமிச்சங்காய் பார்த்தாயாடி!’ என்றாள்.
தமிழகத்தின் தலைசிறந்த எலுமிச்சம்பழத்தை அக்காட்டுத் திடலிலே காண மங்கையர் யாவரும் வியப்படைந்தனர். ஆனால், அழுத சிறுமி அழுகை நிறுத்தவில்லை அழுகையிடையே சிரித்தாள். ’பார்த்தாயா, இவ்வளவு நல்ல எலுமிச்சங்காய் இருக்க, எனக்கு மாங்காயைத் தந்து ஏமாற்றப் பார்த்தீர்களா! எங்க அம்மா இருந்தால்….!
நங்கை அவள் வாயைப் பொத்தினாள்.
’என்னடி, எந்த அம்மாவும் உனக்கு இத்தனை பெரிதான நல்ல எலுமிச்சங்காய் தேடித் தரமாட்டாளடி! நான் எப்படியாவது ஊறுகாய் பண்ணித் தருகிறேன். நீ சற்றுப் பொறு என்றாள்.
எதையும் எதிர்பாராமலே அவள் எலுமிச்சங்காய் இருந்த இடத்தைச் சுற்றுமுற்றும் பார்த்தாள்.
எலுமிச்சம் பழத்தை எலுமிச்சம்பழ ஊறுகாயாக்கு வதற்குரிய ஒவ்வொரு பொருளையும் நினைத்துக் கொண்டே அவள் முட்புதர் களிடையே கிளறினாள்.
‘இதோ உப்புக் கற்கள்!’
‘இதோ மிளகாய்!’
‘இதோ வெங்காயம், வெள்ளைப்பூண்டு!’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகத் தேடிக் கொண்டு வந்தனர்.
‘ஆகா, இதோ தாளிக்கக் கடுகும் எண்ணெயும்கூட உன் அம்மா எடுத்து வைத்திருக்கிறாள் பார்’ என்று பரிமாறிய நங்கை சிறுமியிடம் அவற்றைக் காட்டிக் கேலி செய்தாள்.
’ ஏன், மணமாயிருக்கச் சாதிக்காய் இதோ வைத்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்று சிறுமியும் இவ்வேட்டை யில் தனக்குரிய பங்கினை மேற்கொண்டாள்.
எலுமிச்சம்பழப் படைவீரர் இப்போது ஒன்றுபட்ட ஒரே ஊறுகாய்ப் பட்டாளமாய் நின்று போராடினர்.
சாதிக்காய் தன்னை அறுத்த நங்கையின் கை மீதே கத்தியைத் திருப்பிவிட்டது. ஊறுகாய்க்கு ஆசைப்பட்ட அவள் நாக்கு. ஊறுகாய் காணுமுன் தன் குருதிச் சுவை காண நேர்ந்தது.
வெள்ளைப் பூண்டு நெடு நேரம் உரிபட மறுத்தது.
வெங்காயம் தன்னை அரிந்தவர் கண்களில் பீறிக் கண்ணீர் வருவித்தது.
கடுகு உருண்டு உருண்டு வழுக்கியோடிற்று. எண்ணெய் ஆங்காரத்துடன் கொதித்தது. ஆனால், கடுகு அந்த ஆங்காரத் துக்குத் தவறாய் இரையாகிற்று. ஆயினும், அது சடமடவென வெடித்துச் சிறுமியின் கன்னத்தைக் கடித்து விட்டது. ஊறுகாய்க்குக் கும்மாளமிட்ட சிறுமி இப்போது ஊறுகாயையே மறந்து ‘ஆ! ஊ!’ என்று கத்தினாள்.
மிளகாய் அரிந்தவர் கைகளுக்குக் காந்தல் கொடுத்தது.
அருவிக்கரைப் பேரெலுமிச்சம்பழம் தன் இனமாள்வைக் கண்டு துடித்த பழைய துடிப்பிலும் மிகுதியாகத் தன் புதிய படைவீரத் தோழர் மாள்வது கண்டு துடித்தது. தோழரை மாய்த்த கத்தி தன் மீது பாய்ந்த போது அது தன் குருதியாலேயே அப்படைக்கலத்தை அரித்தும் கரைக்க முனைந்தது. அருகே இருந்த ஒரு நங்கை கண்ணில் அக்குருதி பாய அவள் வீறிட்டுக் கண்கலங்கிக் கரைந்தாள். மற்றொருவர் கையில் கத்திபட, அதன்மீது எலுமிச்சம் பழத்தின் சாறுபட்டுத் தீயில் இட்ட எண்ணெயாய் எரிந்தது.
படைவீரரும் படைத் தலைவனும் பட்டபின் அவர்களை, ஊறுகாயாக்கும் பணியில் இறுதியாக மஞ்சள் பொடி ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், ஊறுகாய்க்கு அலைந்த சிறுமி இந்த மஞ்சள் பொடியில் மட்டும் சிறிது எடுத்து வைத்துக் கொண்டாள். ‘இது குளிப்பதற்கும் உதவும்’ என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.
களத்தில் தன் வீரர்களுடன் பட்டு வீழ்ந்து பேரெலுமிச் சங்காய் தன் இறுதி மூச்சுடன் கடுகின் பக்கம் சிறிதே நகை முகத்துடன் திரும்பிற்று. ‘வாழ்ந்தாலும் முத்தமிழ் முழக்குடன் வாழ வேண்டும். மாண்டாலும் முத்தமிழ் முழக்குடனே மாள வேண்டும். கடுகா! உன் விருப்பப்படி வாழ்வும் கிடைத்தது. மாள்வும் கிடைத்து விட்டது’ என்று கூறித் தலை சாய்த்தது.
எலுமிச்சம்பழத்தின் பேச்சைக் கேட்டுத்தானோ என்னவோ, ஊறுகாய் குலுக்கிய நங்கை குறவஞ்சியின் ஒரு பாடலைப் பாடிக் கொண்டே குலுக்கினாள்.
தற்செயலாக அது குற்றாலமலை, அருவிக்கரைத் தோட்டம், பேரெலுமிச்சங்காய் ஆகியவற்றை வருணித்த முத்தமிழ்ப் பாடலாகவே அமைந்தது.
குற்றால மலையமர்ந்தான் கொற்றவன் ஏன் அம்மானை?
குற்றாலத் தேனருவி குளிப்பதற்கே அம்மானை!
குற்றாலத் தேனருவி குளித்திருந்தா ராமாயின்,
குளிர் அருவிக் கரைத்தோட்டம் கூடாரோ அம்மானை!
பொற்றாலத் தெலுமிச்சம் பழஞ் சுவைப்பார் அம்மானை!
வானருவிக் கரையமர்ந்தார் வானவர்ஏன் அம்மானை?
வான்தருவின் தேங்கனிச்சா றருந்துதற்கே அம்மானை!
வான்தருவின் தேங்கனிச்சா றவாவினா ராமாயின்,
வளர்அருவிக் கரைத்தோட்டம் தேடுவரோ அம்மானை,
வான்தோய் பெருமாங்காய் விடுவரோ அம்மானை!
இயற்கையின் படைப்பில் தோன்றும் எந்த ஒன்றும், மன்னுயிர்கள் துய்ப்பதற்கே என்பதிலுள்ள உண்மையை மானுடம் உணரும் நாளில், அதுவே மகத்தான வாழ்க்கையாய் மலரும்….
மணிப்பாறை
பெர்த் நகரத்திலிருந்து டண்டிநகரம் நோக்கிப் பாய்ந்து கொண்டேயிருந்தது வெள்ளம், மனிதவெள்ளம்! வெள்ளத்தில் மிதந்துசெல்லும் குடங்களைப் போலப் பெரிய காணிக்கைப் பெட்டிகளைத் தலையில் சுமந்துகொண்டு தொண்டர்கள் அங்குமிங்கும் திரிந்தனர். பெட்டிகளின் சிறு துளைகளில் காசுகள் ‘டங், டங்’ என்று விழுந்தவண்ணம் இருந்தன. பலர் பொன் வெள்ளிக்காசுகளையும் பத்து நூற்றுக்கணக்கான காசு முறிகளையும் அவற்றினுள் ஆர்வத்துடன் திணித்தனர். டண்டிநகர் என்றும் காணாத ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நகர்ப் பொதுவில் கூடிற்று.
காற்றில் தானே அடிக்கும் மணி ஒன்றைக் காலன் பாறைமீது கட்ட வேண்டும் என்ற திட்டத்திற்காகவே இவ்வூர் வலமும், பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
‘டே கடற்கூம்பை’ நோக்கிச் செல்லும் எந்தக் கப்பலும் அந்தப் பாறை கடந்தே செல்லவேண்டும் புயல் காலங்களில் அப்பாறையருகே அலைகளும் சுழல்களும் பேயலைகளாகவும் பேய்ச்சுழல்களாகவும் தறிக் கப்பல்களை விழுங்கி ஏப்பமிட்டன. ஸ்காட்லாந்தின் அப்பகுதியில் அந்தப் பாறைக்கு இரையாகாத ஒரு தந்தையையோ மகளையோ, அண்ணனையோ, தம்பியையோ, கணவனையோ பிற சுற்றத்தாரையோ இழக்காத ஆண் பெண் பாலார் எவரும் இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். மக்கள் அதனைக் காலன் பாறை என்று அழைத்தது இதனாலேயே.
’காவலன் பாறை’யில் ஒரு மணிகட்டி அதை மணிப்பாறை யாக்கும் முயற்சிக்குப் பொதுக்கூட்டம் பேராதரவு தந்தது. மணி புயலில் தானே அடித்து நெடுந்தூரம் கேட்கத் தக்க அளவில் பெரிதாகவும், எளிதில் இயங்கவல்லதாகவும் இருக்க வேண்டி யிருந்தது. இந்த இலக்கணங்களெல்லாம் பொருந்திய மணி ஹாலந்து நாட்டில் ஒரு வணிகன் வசம் இருந்த பேர்போன யூட்ரெக்ட்மணியே என்று அனைவரும் கருதினர். அது மிகவும் விலையேறியது. ஆயினும், அதை வாங்கப் போதிய அளவு பெருந்தொகை ஊர்வலத்திலும், பொதுக் கூட்டத்திலும் திரண்டிருந்தது. அதை வாங்கும் பொறுப்பையும், வாங்கிப் பாறையில் கட்டும் பொறுப்பையும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேரார்வத்துடன் பேசிய இளைஞன் மெக்ளிஸினிடமே விடப்பட்டது.
ஆண்ட்ரு மெக்ளிஸ் மிக இளவயதிலேயே வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தவன். அவ்வகையில் அவன் அடிக்கடி ஹாலந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் சென்றதுண்டு. அப்போதெல்லாம் அவன், வாண்டர் மரக்களின் என்ற யூத வாணிகனில்லத்தில் தங்கி இருப்பது வழக்கம். வாண்டர்மாக்ளின் ஆண்ட்ரூவின் சுறுசுறுப்பையும் நல்ல தோற்றத்தையும் கண்டு, அவனிடம் மிகுதி ஈடுபாடுடையவனானான். மனைவியிழந்த மரக்களினும் ஆண்ட்ரூவும் அடிக்கடி ஒருங்கே விடுதி சென்று உணவுண்டு, வீட்டில் இரவு நடுயாமம் வரை புகை குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள். ஆண்ட்ரூவைப் போலத் தனக்கு ஒரு மகனிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் என்று அச்சமயங்களில் வாண்டர்மாக்ளின் எண்ணுவான். ஏனென்றால், அவனைப் போன்ற செட்டும் சுறுசுறுப்பும் உடைய இளைஞன் தன் பெருஞ்செல்வத்தைப் பாதுகாப்பதுடன் அதைப் பெருக்கவும் வகை தேடுவான் என்று வாண்டர்மாக்ளின் கருதினான்.
டண்டிப்பகுதியில் உள்ளவர்கள் காலன்பாறைக்காக வாங்க எண்ணிய யூட்ரேக்ட் மணியும் அதனையொத்த புகழ்மிக்க மணிகளும் வரண்டர்மாக்ளினின் மாமணி இல்லத்திலேயே இருந்தன. ஆகவே, ஆண்ட்ரூமக்ளிஸ் ஆம்ஸ்டர்டம் சென்றபோது மீட்டும் நேரே அவனிடமே விருந்தினனானான்.
முன், மெக்ளிஸ் வந்தபோது வாண்டர்மாக்ளின் வீட்டில் இல்லாத ஒரு புது உயிர் இப்போது அங்கே இருந்தது. அதுவே அவன் புதல்வி கதரினா. முன்பெல்லாம் தாயற்ற நிலையில் அவள் பள்ளி இல்லங்களிலேயே தங்கித் தன் படிப்பில் கவனமா யிருந்தாள். இப்போது அவள் படிப்பும் முடிந்துவிட்டது. மணவினை பற்றிக் கவனிக்க வேண்டிய பருவமும் அவளை அணுகிற்று.
வாண்டர்மாக்ளின் தன் நண்பன் மெக்ளிஸை முகமலர்ச்சி யுடன் வரவேற்றான். “ஆ….! வருக….! ஆண்ட்ரூ மெக்ளிஸ், வருக! புகழ்மிக்க யூட்ரேக்டின் மணியை வாங்க வந்திருக்கிறீர்களென்று அறிகிறேன். காலன் பாறையின் காரிடர்களையெல்லாம் இதற்கு முன் நீரே என்னிடம் எத்தனையோ தடவை கூறியிருக்கிறீர். இப்போது அந்தக் காரிடர்களை அகற்றுவதற்கரிய கருவியாக இம் மணியைக் கோரி வந்திருக்கிறீர். நானும் அந்தப் பாறையின் இன்னல்களைச் சிறிது அறிந்தவன்தான். ஆகவே, உம் முயற்சியை நானும் வரவேற்கிறேன்.” என்று அவன் முகமன் உரைத்தான்.
சிறிது நேரம் சென்றபின் மீண்டும் மணிபற்றிய பேச்சு வந்தது. இத்தடவை அது வெறும் பொழுது போக்குப் பேச்சு அல்ல. தொழில்முறைப் பேச்சு.
“எல்லாம் சரிதான், தம்பி! மணி மிகவும் விலை பிடிக்குமே! மணியின் தரம் உயர்ந்தது என்பது மட்டுமல்ல, பளுவும் மிகக் கூடுதலாயிருக்கிறதே! நன்கு ஆய்ந்தமைந்து பார்த்துக் கேளுங்கள்.”
"நாங்கள் உரிய விலை கொடுத்துத்தான் கேட்கிறோம், அன்பரே!’
“அப்படியா! நன்று. பயனீடும் பொதுப் பயனீடா யிருக்கிறது. நானும் இதில் மிகவும் விலையேற்றம் செய்வதற் கில்லை. ஆகவே, மணியின் தனிச் சிறப்புக்குரிய வேலைப் பாட்டையும் கலைத்திறத்தையும்பற்றி நான் அவ்வளவாக வற்புறுத்தப்படாது. அடக்கப் பொருளாகிய உலோக விலையையே கூறுகிறேன். அது உண்மையில் நான் அதற்குக் கூறும் விலைகூட அல்ல. மணிவாணிகள் கிராஃவட் நான்கு மாதங்களுக்குமுன் கெஞ்சிக் கூத்தாடிக் கொடுத்துவிடும்படி கேட்ட விலைதான்; அது சிறு தொகையே-பதினாயிரம் பொன்-ஆனால், உன் கையில் அவ்வளவு இருக்குமா?”
’என் கையில் இருப்பதைப் பற்றிக் கவலை வேண்டாம்; கையில் அதுவும் இருக்கிறது. அதற்கு மேலும் இருக்கிறது."
’சரி அப்படியானால் சரி; என் விலை பதினாயிரம் பொன்தான். அதற்குமேல் ஒரு காசுகூட நான் கேட்க மாட்டேன்."
’சரி, அந்த விலையே உறுதிசெய்வோம். மணியை நான் பெற்றுக் கொள்கிறேன்."
’மகிழ்ச்சி, பேரம் முடிந்தது; இனி, நாம் வீட்டுக்குள் செல்வோம். உணவு உட்கொண்டு வழக்கம் போலப் புகையருந்து வோம். நேரமாயிற்று; அத்துடன் நான் உங்களுக்கு என் புதல்வி கதரினாவை அறிமுகம் செய்துவைக்கவும் வேண்டும்".
கதரினா நடுத்தர உயரமுடையவன், அவள் அழகு பவளத்தையும், நடை ஓர் இளவரசியையும் நினைவூட்ட வல்லதாயிருந்தது. அவள் முகத்தில் கவர்ச்சியுடன் உறுதியும் கலந்து, காண்போர் உள்ளத்தை ஈர்த்தது. கள்ளங் கபடமற்ற பள்ளிப் படிப்பினால் அவள் கன்னித் தன்மை முழுதும் முதிர்ந்து, ஈடிலா வனப்பையும் இம்மியும் பிழையிலா வடிவமைதியையும் தந்திருந்தது. அவள் இப்போது பதினெட்டே வயதுடைய இள மங்கையாய் இலங்கினாள்.
ஆண்ட்ரூமெக்ஸூக்கு இப்போது வயது கிட்டத்தட்ட இருபத்தாறு. அவன் சற்று உயரமானவன். அவன் நடை வீறுடையதாகவும், முகம் பொலிவுடையதாகவும் இருந்தது. அவன் பார்வையில் கபடமோ வஞ்சகமோ இல்லை. ஆனால், விழிகள் எவர் உள்ளத்தையும் துளைத்தறியும் கூர்விழிகளா யிருந்தன. பண்பும் திறமையும், உணர்ச்சியும் அறிவும் அவனிடம் சரி நிகராயிருந்தன.
முதற்சந்திப்பிலேயே அவர்கள் ஒருவர் உள்ளத்தை ஒருவர் முற்றிலும் மாற்றியமைத்துவிட்டனர். அவர்கள் தமக்குள் வாய்திறந்து ஒரு சொல் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் கண்கள் பேசின. அவர்கள் தனியாகச் சந்திக்கவில்லை. ஆனால், ஒருவர் உள்ளம் ஒருவர் உள்ளத்தில் நிழலாடிற்று.
பணம் எண்ணிக் கொடுத்தாயிற்று. மணியை வாங்கிப் போதிய முன்னெச்சரிக்கைகளுடன் கப்பலில் ஏற்றியாயிற்று. வாண்டர் மாக்ளினிடம் விடை பெற்றாயிற்று-மீண்டும் மீண்டும் விடைபெற்றாயிற்று. இனி தாமதிக்க வழியில்லை. போகும் போக்கில் ‘போய் வருகிறேன்’ ’என்ற சொல்லுடன் ஒரு கண்வீச்சையும் தூதனுப்பிவிட்டுப் பறப்பட்டான், மெக்ளிஸ்!
ஆனால், அவன் உடல்தான் கப்பலிலேறிற்று; உடல் தான் கடல் கடந்து ஸ்காட்லாந்து சென்றது; தன் உயிரையும் உள்ளத்தையும் ஆம்ஸ்டர்மிலேயே அவன் ஊடாட வீட்டிருந்தான்.
கதரினாவும் மூன்று நான்கு நாட்களுக்கு முன்னிருந்த கதரினாவாயில்லை. திடுமென அவள் பேதைப் பருவமும் நங்கைப் பருவமும் தாண்டி முதிர்ந்த மங்கையாய்விட்டாள். ஒன்றிரண்டு நாட்களுக்குள், தன்னையே பறி கொடுத்துவிட்ட நிலையில், உள்ளம் எதிலும் பதியாமல், எதையும் உணராமல், அவள் நடைப்பிணமாய் இயங்கினாள்.
மாதங்கள் சென்றன. ஆர்வத்துடன் மக்கள் உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய வீர இளைஞன் மெக்ளிஸ் இப்போது ஆர்வமிழந்து கருவிகளுடன் கருவியாயிருந்து காலன்பாறையில் மணியை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டு உழைத்தான்.
இறுதியில் நிலைநாட்டும் வேலை கிட்டத்தட்ட முடிந்தது. இப்போது மீட்டும் ஓர் ஊர்வலம்! இத்தடவை ஊர்வலம் நீர்வலமாக நடந்தது; அது நிலத்தில் மனித வெள்ளமாகப் பாயவில்லை; நீரில் படகுக் கொடியாகப் படர்ந்தது! ‘அபெர் பிராத்விக்’ என்ற இடத்திலிருந்து புறப்பட்டு அது பாம்புபோல் நீண்டு வளைந்து சென்று, கர்லன் பாறையில் புயலற்ற வேளை பார்த்துத் தலையைச் சாய்த்தது. படகுகளில் சென்ற இன்னிசைக் கருவிகள் காற்றலையுடன் இசையலைகளை இயக்கி, நீரலை களின் மீது தவழவிட்டன. யூட்ரெக்ட் மணியைச் சுமந்துவந்த பெரும்படகு தலையாக அமைந்திருந்தது. தலையிலுள்ள மணியைப் பூசனைக்குரிய இடத்தில் உமிழ்ந்து வைக்கும் பாம்புபோல, படகுப்பாம்பு தலைதாழ்த்தி மணியை இறக்கிற்று. அப்படகில் அமர்ந்துசென்ற மெக்ளிஸூம் இறங்கினான்.
மணியைப் பூட்டும் வினைமுறையும், இயங்க வைக்கும் வினை முறையும் பெரிய திருவிழாவாக நடைபெற்றன.
விழாவின் நடுவில் கடலின் அடிவயிறு பொறுமிற்று. காற்று வெளி மூச்சுவிடுவதற்குமுன் உள் மூச்சு வாங்கிற்று. புதிதாகப் பூட்டப்பட்ட மணி உடனே கணகணவென அடிக்கத் தொடங்கிற்று. மணி சரியாகப் பூட்டப்பட்டது என்பதற்கு அது ஒரு நற்சான்று. அதே சமயம் புயல் வருகிறது என்பதற்கும் அது ஒரு அறிகுறியாய் அமைந்தது. மணியைக் கொண்டு வந்து பூட்டியவர்களுக்கே மணியின் முதல் எச்சரிக்கை பயன்பட்டது. அவர்கள் விரைந்து படகுகளை உதைத்துப் பாறையிலிருந்து புறப்பட்டுக் கரை சேர்ந்தனர்.
மெக்ளிஸின் உள்ளம் இதுவரையில் தன் வேலையில் இல்லை. உடல் மட்டுமே அதில் இயங்கியிருந்தது. வேலை முடிந்ததே அவன் ஒருசிறிதும் காலம் தாழ்த்தாமல், ஆம்ஸ்டர்டாம் சென்றான். மீட்டும் ஒருமுறை அவன் வாண்டர் மாக்ளினின் விருந்தினனானான். ஒன்றின் நினைவில் ஒன்று அழுந்திக்கிடந்த இரு உள்ளங்கள்; அருகருகே வந்துவிட்ட இரு உள்ளங்கள்; அருகருகே வந்துவிட்ட இரு எதிர்மின்சார முனைகள் அதிர்வது போல அதிர்ந்தன.
மெக்ளிஸ் தன் வீட்டில் வருவதனால், தன் புதல்வியிடம் எத்தகைய மாறுதலாவது உண்டாக்கக்கூடும் என்று வாண்டர் மாக்ளின் எதிர்பார்க்க வில்லை. இருவரும் மனிதர் என்பதையும், இருவரும் இளம்பருவத்தின் பிடியிலிருந்தனர் என்பதையும் அவன் பெரிதாய் எண்ணவில்லை. ஏனென்றால் அவன் மெக்ளிஸினிடம் கொண்ட பற்று; ஆண்டை அடிமையிடம் செல்வன் ஏழையிடம் கொண்ட பற்று; அதில் பாசம் இருக்கலாம்; நேசம் இருக்க முடியாது. எனவே வெவ்வேறு உலகத்தவராகிய அந்த இளைஞ னிடமும் நங்கையிடமும், சமத்துவம் உடையவர்களிடையே எழும் உணர்ச்சிகள் எழமாட்டா என்று அவன் எண்ணினான்.
தன் எண்ணம் தவறு என்பதை வாண்டர் மாக்ளின் விரைவில் உணர்ந்தான். மெக்ளிஸ் அவனிடம், தன் காதலைக் கூறித் திருமணம் செய்து தரும்படியும் கோரினான். அவன் துணிச்சல் கண்டு வாண்டர் மாக்ளினின் உள்ளம் சீறி எழுந்தது. ஆண்ட்ரூ தன் பாசத்தைத் தவறாகப் பயன்படுத்தினான் என்று அவன் உள்நாடிகள் படபடத்தன. ஆனால், அவன் யூதன். வாணிகப் பண்பு அவனிடம் ஊறியிருந்தது. காதலைப் போலவே சீற்றமும் வெறுப்பும் சரிநிகரானவருக்கு இடையே மட்டுந்தான் கொள்ளத்தக்கவை என்று கருதியவன் அவன், ஆகவே அடங்கிய குரலில், ஆனால் கண்டிப்பாகப் பேசினான்.
“திரு மெக்ளிஸ், நீங்கள் எட்டாத உயரக்கொப்பை எட்டி அண்ணாந்து பார்க்கிறீர்கள். ஒருவன் திருமணம் செய்துகொள்ள எண்ணுமுன் மனைவியை வைத்துக் குடும்பம் நடத்துவதற்குப் போதிய பணத்துக்கு வகை செய்திருக்க வேண்டும். உம் உயர்ந்த எண்ணத்துக்குப் போதிய பணம் உம்மிடம் இருக்கிறதா?”
மெக்ளிஸின் முகம் சிறிது குன்றிற்று.
‘தற்போது முழுதும் இல்லை; ஆனால், பணம் இருக்கிறது. விரைவில் என்னால் சேர்க்கமுடியும். நான் இளைஞன். உழைத்து ஈட்டமுடியும் அது இருக்கட்டும், உம் புதல்வியை நான் மனைவியாக அடைவதற்குமுன் என்னிடம் எவ்வளவு பணம் இருக்கவேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை நான் அறியலாமா?’
“ஒரு பன்னிரண்டாயிரம் பொன்னை நான் காணட்டும். கண்டபின் நீர் அவளை அடையலாம்!”
“என்னிடம் தற்போது மூவாயிரம் இருக்கிறது”
“அப்படியானால் கதரினாவின் பெயரைக் கூறவும் நீர் நாவெடுக்க வேண்டாம். ஆய்ந்தோய்ந்து பாராத இக்காதலை நீர் விரைவில் மறந்துவிடவேண்டும். அவளும் மறந்துவிட வேண்டியவளே. மறப்பதற்கு எளிதானவழி சந்திக்காமல் இருப்பதுதான். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். மற்றப்படி நான் உம்மிடம் நல்லெண்ணமுடையவனாகவே இருப்பேன். போய் வருக.”
நயமான சொற்கள். ஆனால் கண்டிப்பு; அத்துடன் கதவடைப்பு! மேக்ளிஸ் உள்ளத்தில் பொங்கிவந்த நம்பிக்கை அத்தனையும் அடங்கிற்று. அவன் தலை சுழன்றது.
தன் காதல், தன் முயற்சி, அதற்குக் கிடைத்த மறுமொழி ஆகியவற்றைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றைக் கதரினாவுக்கு அனுப்ப அவன் ஏற்பாடு செய்தான்.
மெக்ளிஸின் நடவடிக்கை வாண்டர் மாக்ளினுக்குத் தெரியவந்தது. அவனும் எதிர் நடவடிக்கை எடுத்தான். மேக்ளிஸ் கப்பலேறும்வரையும் மகளை ஒரு நண்பர் வீட்டில் இருக்கும்படி அவன் அனுப்பிவைத்தான். அதோடு டண்டி நகரிலுள்ள தன் வாடிக்கைக்காரருக்கும் வாணிக நண்பர்களுக்கும் எழுதி, தம் சரக்குகளை அனுப்பும்போது, மேக்ளிஸ் தலைவனாயிருக்கும் எந்தக் கப்பலிலும் அனுப்பவேண்டாம் என்று ஏற்பாடுசெய்தான்.
நம்பிக்கை உட்கதவும்கூட அடைபட்டு விட்டது என்று மெக்ளிஸ் கண்டான். இனி ஆம்ஸ்டர்டாமில் இருந்து பயனில்லை என்று உணர்ந்தும், அவன் அங்கேயே சுற்றித் திரிந்தான். கடலோடிகளிடையே காலத் திட்பத்துக்கும் சுறுசுறுப்புக்கும் பேர் வாங்கியிருந்த அவன், இப்போது தன் ஆடைகள் அழுக்கடைவதைக்கூட அறியாமல் சுற்றித் திரிந்தான்.
கதரினா அனுப்பப்பட்டிருந்த வீட்டை அறிந்த பின்னும், அதைச் சுற்றிச் சுற்றித் திரியமுடிந்ததே தவிர, வேறு பயன் காணமுடியவில்லை. அவள் முகத்தைக் காணவோ அவளைப் பற்றிய செய்தி அறியவோ ஒரு சிறிதும் கூடவில்லை. அவன் கப்பல் மூட்டைகளை ஏற்றியாய்விட்டது. மறுநாள் கப்பலில் ஏறியாக வேண்டும். நம்பிக்கையிழந்தவனாய்த் தன் உயிரைத் தன்னகங் கொண்ட மதில்களை இறுதியாக ஒருமுறை ஏறிட்டுப்பார்த்தான். அவன் முன் ஒரு கல்பொதிந்த தாள் தொப்பென்று விழுந்தது. கல்லுடன் தாள் பட்டுக்கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது. அதை ஆவலோடு எடுத்து வாசித்தான். அது கதரினாவின் கைவேலை. அது, அவள் கையெழுத்து என்பதை ஐயமின்றி அறிந்து அவன் நெஞ்சு புது நம்பிக்கையுடன் படபடத்தது. ஆனால், அதில் இரண்டே சொற்கள் கொண்ட தொடர்தான் எழுதப்பட்டிருந்தது. யூட்ரேக்ட்மணி என்பதுதான் அது.
மேக்ளிஸ் ஒரு கணநேரத்தான் விழித்து நின்றான். மறுகணம் மின்னல்போலக் கதரினாவின் கருத்து அவன் உள்ளத்தில் மின்னிட்டது. ஆம், அந்த மணிக்கு அவனே பதினாயிரம் பொன் கொடுத்ததுண்டு. வாணிகன் கிராஃவ்ட் அதற்குமுன்பே பதினாயிரம் பொன் விலை கூறிக் கேட்டதுண்டு. ‘இப்போதும் யாராவது மணியைக் கொண்டுகொடுத்தால் மூச்சுப்பேச்சின்றிப் பத்தாயிரம் பொன்னைக் கொடுப்பான். யார் கொடுத்தது? எப்படி வந்தது? என்று கூறமாட்டான்.’ இந்த எண்ணம் தனக்கு ஏன்வரவில்லைஎன்று வியப்புற்றான்.
ஆனால்…. ஆனால்…. அவன் மனம் இன்னொரு வகையில் திடுக்கிட்டது. கொலைக்குற்றம் ஒரு பெரிய குற்றம் அல்ல. அதில் ஓர் ஆளின் உயிர்தான் போகும். போர் ஒரு குற்றம் அல்ல, அதில் சிலகாலம் சிலர் உயிர்தான் போகும் ஆனால், மணி- பொதுமக்கள் எத்தனையோ பேர் ஆர்வத்துடன் கொடுத்த சிறு பொருள் தொகுப்பின் சின்னம். எத்தனை காலமோ எத்தனைபேர் உயிரையோ அது காக்க இருக்கிறது. மணியைக் கைப்பற்றி விற்றால், பொதுமக்கள் அத்தனைபேர் பொருளையும் திருடிய குற்றம், எல்லையில்லாக் காலம் எண்ணற்ற மக்களைக் கொலை செய்த பழி, எண்ணற்ற பெண்டு பிள்ளைகளைத் துணையற்றவராகச் செய்த படுதீம்பு-இத்தனைக்கும் அவன் ஆளாக வேண்டும்; சேச்சே! அதிலும், பொது மக்கள் தொண்டில் ஈடுபட்டிருந்த அவனா? வாணிகத்தில் கூட நேர்மை தவறாத அவனா? எத்தனையோபேரின் மதிப்பையும் நல்லெண்ணத்தையும் பெற்ற அவனா? அதைச் செய்வது?
அவன் மனம் அலைகடலில் பட்ட துரும்பாக அனலில் பட்ட மெழுகாக, அடங்கொண்ட புயலில் சிக்கிய கலமாக அல்லோலகல்லோலப்பட்டது.
பழி செய்தால் காதலுக்கு ஒரு வழி உண்டு; பழி செய்யாவிட்டால் காதலுக்கு விடைதர வேண்டும்; இரு புறமும் செல்ல முடியாத இடர்ப்பொறியில் அவன் அகப்பட்டுத் தத்தளித்தான்!
குற்றத்தின் கொடுமை ஒரு சமயம் அவன் முன் கோர உருவில் நின்று அச்சுறுத்தித் தடுக்கும்! மற்றொரு சமயம் தந்தையின் கண்டிப்பு என்னும் சிறைக்கூடத்தில், பணப் பேரவாவாகிய கழுமரத்தில் கட்டுண்டு, வாய்விடா உயிரினம் போல் கதரினா கண் கலங்கும் காட்சி எழும்! அவன் இளங்குருதி யோட்டமாகிய போர்க்களத்தில் பிந்திய காட்சியே இறுதி வெற்றி கண்டது.
அவன் தான் ஏற்றி வைத்த விளக்கை அவிக்கக் கை நீட்டினான்.
ஆண்ட்ரூமெக்ளிஸ் ஆம்ஸ்டர்டம் விட்டுச் சென்றதே கதரினாவுக்குப் புறவிடுதலை கிடைத்தது. ஆனால், ஒரு திருமணமூலம் அவன் அகத்தையும் மெக்கிளிஸின் நினைவி லிருந்து விடுவிக்க வாண்டர் மாக்ளின் முயன்றான். ஏற்கெனவே அவள் மென் கைக்காக முன் கை நீட்டிக் கோரிக்கையிட்டவர் பலர் இருந்தனர். அவள் தந்தையின் குறிப்பறிந்து, கைகள் இன்னும் பல முன் வந்தன.
மெக்ளிஸைவிடப் பணத்திலும் பதவியிலும் உயர்ந்த இடத்தைத்தான் வாண்டர்மாக்ளின் விரும்பினான். ஆனால், அவை கிடைக்குமிடத்தில், மெக்ளிஸின் குண நலனையும் அவன் எதிர்பார்த்தான். இது பொன்னால் செய்த பூவில் மணத்தையும் எதிர்பார்ப்பது போலத்தான் இருந்தது. ஆகவே, அவன் எளிதாக எத்தகைய முடிவுக்கும் வராமல் தயங்கினான். இதற்குள் கதரினா அவனிடம் வந்தாள். “அப்பா, நீங்கள்தான் எனக்குத் தாயும் தந்தையும்! உங்கள் மனம்போலத்தான் நான் எல்லாச் செயல்களிலும் நடக்கப்போகிறேன். ஆனால், என் மனம் உங்களுக்குத் தெரியும். பணம் தவிர மற்ற வகைகளில் மெக்ளிஸிடம் உங்களுக்குப் பற்றும் மதிப்பும் உண்டு என்பதையும் நான் அறிவேன். இந்நிலையில் நீங்கள் அவருக்குக் கொடுத்த வாக்கை மறந்துவிடாதிருக்கக் கோருகுகிறேன்.”பன்னிரண்டாயிரம் பொன்னைக் காட்டு, கதரினாவை நீ அடைவாய்’ என்பதே உங்கள் கடைசி வாக்கு" என்றாள்.
வாண்டர் மாக்ளின் முகம் சற்றுக் கடுமையாயிற்று. ஆனால், மகள் சொல்லுக்கு அவன் சிறிது மதிப்புக் கொடுத்தான். அவன் செல்வத்தின் பாதுகாப்புக்கான ஒரு மகனோ, இன்னொரு மகளோ இருந்திருந்தால், அந்த மதிப்புக்கூடக் கொடுத்திருக்க மாட்டான். ’நீ கேட்பதனால், அவனுக்கு இரண்டு ஆண்டு தவணை கொடுக்கிறேன். அதற்குள் குறிப்பிட்ட தொகையுடன் வராவிட்டால், நீ அதற்குமேல் என் விருப்பப்படிதான் நடக்க வேண்டி வரும். என்றான்.
கதரினா தலை குனிந்தாள். தந்தை சென்றதும், அவள் கண்கள் மேலெழுந்தன. இறைவனை நோக்கி யூட்ரெக்ட்மணி, யூண்ரெக்டமணி என்று முணு முணுத்துக் கொண்டாள்.
காலன்பாறை இப்போது காலன் பாறையாயில்லை, எல்லாராலும் அது மணிப்பாறை என்றே வழங்கப்பட்டு வந்தது. மணி பெரியதாக இருந்தாலும் அது புயலின் கருவிலுள்ள சின்னஞ்சிறு காற்றதிர்ச்சியிலும் கணகணவென்றொலித்துக் கப்பலோட்டிகளுக்கு எச்சரிக்கை தந்துதவிற்று. அம்மணியோசை கேட்ட அனைவரும் அம்மணியை அங்கு கட்டக் காரணரா யிருந்த பொதுமக்களையும், அதற்குத் தலைத்தூண்டுதல் தந்து மணியைக் கொண்டுவந்து கட்டிய ஆண்ட்ரூ மெக்ளிஸையும் வாழ்த்தாமலிருப்பதில்லை. அங்ஙனம் வாழ்த்துபவர் எவரும் அந்த மணியைக் கட்டிய கையே அதை அறுத்தெடுத்துக் கவரும் என்று கனவு கண்டிருக்க மாட்டார்.
மெக்ளிஸ், ஸ்காட்லாந்து வந்து சேர்ந்தவுடனே தன் கப்பலோட்டும் தொழிலைத் தற்காலிகமாகக் கைதுறந்தான். சிலநாள் அருமுயற்சி செய்து கடற்கொள்ளைக்காரர்கள், கள்ளவாணிகக்காரர்கள் ஆகிய சிலரைத் திரட்டினான். மணிப்பாறையிலுள்ள மணியைத் திருடி அதை ஆம்ஸ்டர்டம் கொண்டுபோக உதவினால், அவர்களிடையே ஆயிரம் பொன் பகிர்ந்து தருவதாகக் கூறினான். அத்தகைய தொழிலில் கைதேர்ந்தவர்களாதலால், அவர்கள் ஒத்துக்கொண்டனர். மணியைப் பூட்டியவன் மெக்கிளிசேயாதலால், பூட்டவிழ்த் தெடுப்பது அவனுக்கு எளிதாயிருந்தது. மணி மீண்டும் ஆமஸ்டர்டம் வந்து சேர்ந்தது.
ஆம்ஸ்டர்மில் கிராஃவ்ட்டின் வணிகமனையை உசாவியறிந்து மெக்ளிஸ் அவனிடம் சென்றான். ஓளிவு மறைவாகத் தான் விலைக்குக் கொண்டுவந்திருக்கும் பொருளையும், அதற்குரிய விலையையும் அவன் கூறியதே கிராஃவ்ட் எல்லையிலா மகிழ்ச்சியடைந்தான். ஏனென்றால் அவ்விலைக்குப் பல ஆயிரம் பொன்னுக்குமேல் அது மதிப்புடைதாயிருந்தது. மணியை அவன் கைப்பற்றிக் கொண்டு கேட்டபடி பத்தாயிரம் பொன்னை எண்ணித் தந்தான்.
மெக்ளிஸ் காலந் தாழ்த்தாமல் பொன்னுடன் வாண்டர்மாக்ளினிடம் செல்லவிருந்தான். அவன் உள்ளம் அவனுக்கு முன்பே அத்திசையில் விரைந்தோடிற்று. ஆனால், அதற்கிடையே அவன் சிறிதும் எதிர்பாராத இக்கட்டு ஒன்று ஏற்பட்டது. அவனுக்கு உதவி செய்த கப்பலோட்டிகள் அனைவரும் உடனடியாகத் தமக்கு வாக்களிக்கப்பட்ட ஆயிரம் பொன்னையும் கேட்டார்கள். கதரினாவை மணந்து கொண்டதும் தருவதாக அவன் எவ்வளவு வாதாடியும் அவர்கள் கேட்கவில்லை. தராவிட்டால் அவன் செயலை வெளிப்படுத்தி விடுவதாகவும் அவனைத் தாக்குவதாகவும் அச்சுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இப்போது, அவனுக்கு ஒரு வழிதான் தோன்றிற்று. செய்த ஒரு பழியை மறைக்க இன்னும் பல பழிகளை மேற்கொள்வது என்று அவன் துணிந்தான். அப்போதே பணம் தருவதாக வாக்களித்து அவர்களனைவரையும் ஒரு தனியிடத்துக்குக் குடிக்க இட்டுச் சென்றான். குடியில் நஞ்சு கலந்திருந்தது. அனைவரும் குடிமயக்கத்துடன் நஞ்சையருந்திச் சாய்ந்தனர். மெக்கிளிஸ் அவர்கள் உடல்களுடன் கல்லைச் சேர்த்துக்கட்டி அருகிலிருந்து கடற்கால்வாயில் தாழ்த்தினான். அதன்பின் கப்பலின் அறைகள் பலவற்றை உடைத்துவிட்டு, கப்பலோட்டிகள் தன் கப்பலைக் கொள்ளையிட்டுவிட்டு ஓடியதாகக் காவலரிடம் முறையிட்டான். காவலர்கள் தேடிப்பார்த்து, கப்பலோட்டிகள் தப்பி விட்டதாகக் கருதி வாளா இருந்தார்கள்.
இங்ஙனம் பழிமேல் பழி சூழ்ந்து தேடிப்பெற்ற பொன்னுடன் மெக்ளிஸ்வாண்டர் மாக்ளினிடம் சென்று பன்னீராயிரம் பொன்னையும் காட்டி வாக்களித்தபடி கதரினாவை மணஞ் செய்து தரும்படி கோரினான். மகள் வாடிய முகத்தில் மலர்ச்சியூட்டக் கருதி வாண்டர் மாக்ளின் இணங்கினான். தான் ஏறிவந்த கப்பல் கொள்ளைவிடப் பட்டது. என்ற கதையை அவனிடமும் மெக்ளிசு கூறியிருந்தான். இங்கிலாந்தில் கப்பலுக்கு உரியவனிடம் விரைவில் செய்தி தெரிவிக்கவேண்டும் என்று கூறி வற்புறுத்தித் திருமணத்தை உடனடியாக முடித்துக் கொண்டு அவன் ஆம்ஸ்டர்டமிலிருந்து, புறப்பட்டான். மகளும் மருமகனும் வாண்டர்மாக்ளினிடம் விடை பெற்றுக் கொண்டனர்.
பிரியும் போது வாண்டர்மாக்ளின் மனம் மட்டும் ஆறாய்த்துயரின் ஆழ்ந்திருந்தது. இனி, மகளை நான் என்று காணப்போகிறேனோ என்று எக்காரணத்தாலோ அவன் கலங்கினான். மெக்ளிஸின் உள்ளத்திலும் ஒரு பெரும் பளு ஏறி அமர்ந்தது போலிருந்தது. கதரினாவை அடையும்வரை அவளுக்காக அவன் எத்தனை பழிபாவங்களைச் செய்யவுங் கூசவில்லை. ஆனால், விரும்பியது கிட்டியபின் அதற்காக அவன் செய்த தீம்புகளை எண்ணி அவன் மிக இரங்கினான். கதரினா உள்ளம் ஒன்றுமட்டும் மாசுமறுவில்லா முழுநிறை மதியம்போல இன்பஒளி ததும்பி நின்றது. காதலன் தான் எதிர்பார்த்ததைவிடக் கடும் பழிகளால் சூழ்ந்திருந்தான். ஆனால் அத்தனை பழிகளுமே அவனை அவளுக்கு முழுதும் உரியவனாக்கியிருந்தன. அத்தனை பழிகளுமே அவள் காதலுக்கு அவள் அளித்த காணிக்கை களாதலால். அவற்றினளவால் அவன் கண்ணில் அவன் இன்றும் உயர்காதலுக்கு உரியவனானான். அவன் பழிகளை எண்ணி மாழ்கியதுபோல், அவள் மாழ்கவில்லை. அவற்றை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
இரண்டு புயல்கள் இடிமின்னல்களுடன் ஆர்த்தெழுந்து அடித்தன ஒன்று கடலில்; ஒன்று மெக்கிளிஸின் உள்ளத்தில்! அவற்றினிடையே ஒரே ஓரிடத்தில் மட்டும் முழுநிறை நிலவும் தென்றலும் யாழிசையும் நிலவின. அது கதரினாவின் உள்ளத்தில் புறப்புயல் ஒன்றிலேயே கருத்தழிந்து பொறிகலங்கி நின்றனர். கப்பலோட்டிகளும் கடல்வழிச் செல்பவர்களும் ஆனால், மெக்ளிஸ், கதரினா இருவர் மட்டும் தத்தம் அகப்புயலிலும், அகத்தென்றலிலுமே முழுதும் ஈடுபட்டு, மற்றெல்லாவற்றையும் மறந்திருந்தனர்.
திருமணத்துக்குப்பின் மெக்ளிஸின் உள்ளத்தில் எழுந்த மாறுபட்ட போக்கின் தன்மையைக் கதரினா உணரவில்லை. செய்த பழிகளுக்காகக் கணவன் வருந்துகிறான் என்பதைமட்டும் அவள் உணர்நதாள். அப்பழிகளுக்குத் தானும் தன் காதலுமே காரணமானதால் ஆறுதல் கூறுவதும் தனது கடமை என்று அவள் கருதினாள். இவ் எண்ணத்துடன் அவள் தன் அறையிலிருந்து மேல்தளத்துக்கு வந்தாள். கடலில் மூன்று நாளாக விடாதடித்த புயல் அப்போது உச்சநிலை அடைந்திருந்தது. மெக்ளிஸ் உள்ளத்திலும் வெறுப்புத் தலையோங்கி இருந்தது. அவன் முகத்தைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள்.
"ஆண்ட்ரூ, என்னால் நீங்கள் இல்லாமல் நீண்ட நேரம் கீழே இருக்க முடியவில்லை. புயலால் ஒன்றும் இடையூறு வராதே!
அவனுக்கு எரிச்சலாயிருந்தது. ஆனால், அவன் ஒன்றும் வாய்திறக்கவில்லை.
“ஒன்றிரண்டு நாளில் போய்விடலாம் என்று சொன்னீர்கள். மூன்று நாளாய்விட்டதே! புயலும் நின்றபாடில்லையே!”
“நான் சொன்னேன், ஆனால், இப்போது இயற்கையின் சீற்றத்தின்முன் சாவு எல்லாரையும் எதிர் நோக்கியிருக்கிறது!”
“சாவா?….உங்களுடன் சாவதாயிருந்தால், சாவு கண்டு நான் அஞ்சவில்லை.”
அவன் இதுவரை அடக்கிவைத்திருந்த கடுஞ்சினம் திடீரென வீறிட்டெழுந்தது. ‘பழிசெய்தவள் அவள். இத்தனை பேர் சாகிறார்களே என்று வருந்தவில்லை, பழிகாரி! நீலி!’ என்று கொதித்தது அவன் உள்ளம்.
“போ, என்முன் நில்லாதே நின்றால் நான் உன்னைப் பழிக்க வேண்டிவரும்.”
“நீங்கள் என்னைப் பழித்தாலென்ன, உங்களையே பழித்தாலென்ன? என் பழி உங்கள் பழிதானே!”
வேறுபாடறியாத அக் காதல் உறுதிச்சொல் அச்சமயம் அவன் காதில் நாராசமாயிருந்தது. ’கொலைகாரி, இத்தனை பேரைக் கொன்ற உன்னுடன், சாகும் இந்த நேரத்தில் என்ன பேச்சு? கீழேபோய்த் தொலை!" என்று இரைந்தான்.
தனக்காகப் பல பழிகளையும் சுமந்த காதலன் இப்படித் தன்னை வெறுக்க என்ன காரணம் என்று அறியாமல், அவள் தரைமீது விழுந்து புலம்பி அழுதாள்.
அவன் மனம் இரங்கவில்லை. மேலும் கல்லாய்ச் சமைந்தது. அவன் புறப்புயலிலேயே கண்ணாயிருந்துவிட்டான். அவளைக் கவனிக்கவில்லை. அவள் மனம் முற்றிலும் இடிந்தது. காதலே கரையாகக்கொண்ட அவள் வாழ்க்கையின் ஆர்வம், அந்தக் கரை உடைந்து பொடியானபின் மண்ணில் வழிந்தோடி மண்ணுடன் கலந்தது.
மெக்ளிஸ் சுக்கானைப் பிடித்துக்கொண்டு நெடுநேரம் நின்றான். புயல் சிறிது சிறிதாக அமைந்தது. அவன் உள்ளம் ஓரளவு தன்னிலைக்கு வந்தது. தனக்காகத் தந்தையின் செல்வந் துறந்து தனியே வந்த காதல் துணைவியிடம், தான் அளவுமீறிக் கடுமையாக நடந்துவிட்டது அப்போதுதான் அவனுக்குப் பட்டது. அவனால் நேர்ந்த பழியாயிருக்கலாம். ஆனால், அதன் விலையாகக் கிட்டிய காதலையும் பழிப்பதால் செய்த பழிகள், குறையுமா? அவன் சிறிது மனமாற்றத்துடன் கீழே சென்றான்.
அவள் ஒடிந்து கிடந்தாள். அவன் அவளை ஊக்கித் தன் பிழைக்குக் கழுவாய் செய்ய முயன்றான்.
‘நாம் தப்பினோம், கதரினா! எழுந்திரு! என்றான்.’
அவள் அசையவில்லை.
‘இடையூறு நீங்கிவிட்டதே கதரினா, அதற்காக மகிழாமல் வருந்துவதா? எழுந்திரு’
‘அது நீங்காமல் நாம் அழிந்திருந்தால் கூட நன்றாயிருக்கும். அது நீங்கியதற்காக நான் மகிழவில்லை.’
‘அப்படிச் சொல்லாதே, கண்ணே! உன் ஆண்ட்ரூ உன்னைத் தேற்ற வந்திருக்கும்போது, நீ மனம் உடையலாமா?’
‘நான் ஒருநாளும் மறக்கமாட்டேன், உங்கள் பழியை; நான் சாவுக்கு வருந்தவில்லை. உங்கள் காதலை இழந்ததற்கு வருந்துகிறேன்’.
‘காதலை இழக்கவா? ஒருநாளுமில்லை..’
"வேண்டாம், அன்பரே! பழிகள் பெரிதல்ல; காதல் பெரிதாயிருந்தது. அக்காதலுடன் நான் இறந்திருந்தால் நல்ல தாயிருக்கும். காதலைவிடப் பழி பெரிதானபின். வாழ்வையும் நான் விரும்பவில்லை; காதலையும் நான் துய்க்கப் போவதில்லை.
அவள் சோர்ந்து வதங்கினாள்; நுடங்கி விழுந்தாள்; அவன் அவளைத் தாங்கி எடுக்கக் குனிந்தான்.
‘மணிப்பாறையைக் கவனிக்கும்படி உத்தரவிடுங்கள். ஐயா? இப்போது வேறு எதற்கும் நேரமில்லை!’ என்று யாரோ கூவினார்கள்.
‘மணிப்பாறையா?’
காதலி - இங்கே இப்படி! பழி - அங்கே மீண்டும் கோர உருவெடுத்து விழுங்க வருகிறது.
‘மணிப்பாறையா?’ அவன் கலங்கினான்.
திடுமெனக் கப்பல் துள்ளிற்று. அவனும் கதரினாவுடன் தளத்தில் விழுந்தான்.
கப்பலின் இருபுறமும் நொறுங்கிற்று.
அடித்தளம் பிளந்தது.
நாற்புறமும் நீரின் இரைச்சல், மக்களின் இரைச்சல்,
அடுத்தகணம் இருவரும் காதலுக்காகப் பழிசெய்த காதலனும், காதலுக்கிருந்த ஒரே வழியை ஏற்று அதுவே உயிராகக் கொண்டிருந்த காதலியும்-இருவரும் மிதந்தனர்.
மணிப்பாறையில் மணி இல்லாத செய்தி படிப்படியாகத் தான் கரையோர மக்களறிய எங்கும் பரவிற்று. மீண்டும் அது காலன் பாறையாய்விட்ட செய்தி யறியுமுன்பே, பாறைக்கு எத்தனையோ கப்பல்களும் கப்பலோட்டிகளும் இரையாயினார்.
ஆனால், புயல் எழும்போது, கடற்காகங்கள் கரை நோக்கி அணி அணியாய்ப் பறக்கும்போது, கார்முகில்களிலுமிருந்து மணிப்பாறைக்கு இன்றும் மெக்ளிஸின் உருவில் ஒரு கருமுகில் இறங்கி வருகிறதென்றும், யூட்ரெக்ட் மணி போன்ற ஒரு திண்ணிய முகில்கீற்று அவ்வுருவைக் கீழே இழுத்துவந்து மணிப்பாறை அருகே கடலுள் அழுத்துகிற தென்றும் கரையோர மக்களிடையே அடிக்கடி பேசப்படுகிறது!
அதுபோலவே நல்ல அமைதி நிலவும்போது, முழு நிலா எறிக்கும்போது, அலையற்ற கடலில் தென்றல் மெல்லச் சிற்றலை எழுப்பும்போது. கதரினாவின் உருவம் பாறை மீதமர்ந்து. தன் தந்தைக்குக் கடிதம் எழுதுவதுபோலத் தோன்றுகிறதென்றும் கரையோர நங்கையர்கள் கதை கூறுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக